ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 85–(நிகும்பப்ரப்ருதீனாம் வதம்)–அசுரர்களின் தோல்வி |–

ஜயந்தனிடம் வீழ்ந்த நிகும்பன்; நிகும்பனின் வரலாற்றை ஸ்ரீ அர்ஜுனனுக்குச் சொன்ன ஸ்ரீ கிருஷ்ணன்; சக்கரத்தால் உயிரிழந்த நிகும்பன்; ஷட்புரத்தை பிரம்மதத்தருக்குக் கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணன்-

வைஷ²ம்பாயந உவாச
ருத்³தே⁴ஷு பூ⁴மிபாலேஷு ஸானுகே³ஷு விஷா²ம்பதே |
ஆவிவேஷா²ஸுராம்ஷ்²சாத² கஷ்²மலம் ஜனமேஜய ||2-85-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பேரரசே, ஜனமேஜயா, மன்னர்களும், அவர்களின் தொண்டர்களும் சிறைபிடிக்கப்பட்டதும் அசுரர்களின் மனத்தில் அச்சம் நுழைந்தது.

தி³ஷ²꞉ ப்ரதஸ்து²ஸ்தே வீரா வத்⁴யமானா꞉ ஸமந்தத꞉ |
க்ருஷ்ணானந்தப்ரப்⁴ருதிபி⁴ர்யது³பி⁴ர்யுத்³த⁴து³ர்மதை³꞉ ||2-85-2

கிருஷ்ணன், அனந்தன் {பலராமன்} ஆகியோராலும், போரில் பயங்கரர்களான பிற யாதவர்களாலும் முற்றாக முறியடிக்கப்பட்ட அந்த வீரர்கள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.

நிகும்ப⁴ஸ்தானதோ²வாச ருஷிதோ தா³னவோத்தம꞉ |
பி⁴த்த்வா ப்ரதிஜ்ஞாம் கிம் மோஹாத்³ப⁴யார்தா யாத விஹ்வலா꞉ ||2-85-3

தானவர்களில் முதன்மையான நிகும்பன் இதைக் கண்டு கோபத்தில் நிறைந்தவனாக, “அச்சத்தால் பீடிக்கப்பட்டும், அறியாமையால் கலக்கமடைந்தும், உங்கள் உறுதிமொழியை உடைத்தும் ஏன் தப்பி ஓடுகிறீர்கள்?

ஹீனப்ரதிஜ்ஞா꞉ காம்ˮல்லோகான்ப்ரயாஸ்யத பலாயிதா꞉ |
அக³த்வாபசிதிம் யுத்³தே⁴ ஜ்ஞாதீனாம் க்ருதநிஷ்²சயா꞉ ||2-85-4

உங்கள் உற்றார் உறவினரின் அழிவுக்குப் பழிதீர்ப்பதாக உறுதியளித்தீர்களே. இப்போது உங்கள் உறுதிமொழியை உடைத்துத் தப்பி ஓடினால் நீங்கள் எந்த உலகத்தை அடைவீர்கள்?

ப²லம் ஜித்வேஹ போ⁴க்தவ்யம் ரிபூன்ஸமரகர்கஷா²ன் |
ஹதேன சாபி ஷூ²ரேண வஸ்தவ்யம் த்ரிதி³வே ஸுக²ம் ||2-85-5

போரில் தடுக்கப்பட முடியாதவர்களான உங்கள் பகைவரை வீழ்த்தினால் நீங்கள் பலனை அறுவடை செய்வீர்கள். போர்க்களத்தில் கொல்லப்பட்ட வீரர்களோ தேவலோகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

பலாயித்வா க்³ரூஹம் க³த்வா கஸ்ய த்³ரக்ஷ்யத² ஹே முக²ம் |
தா³ரான்வக்ஷ்யத² கிம் சாபி தி⁴க்³தி⁴க்கிம் கிம் ந லஜ்ஜத² ||2-85-6

எனினும், நீங்கள் தப்பி ஓடினால் உங்கள் வீட்டில் யாரிடம் உங்கள் முகத்தைக் காட்டுவீர்கள்? உங்கள் மனைவியர் என்ன சொல்வர்? ஐயோ, ச்சீ, ச்சீ உங்களுக்குக் கிஞ்சிற்றும் வெட்கமில்லையே” என்றான் {நிகும்பன்}

ஏவமுக்தா நிவ்ருத்தாஸ்தே லஜ்ஜமானா ந்ருபாஸுரா꞉ |
த்³விகு³ணேன ச வேகே³ன யுயுது⁴ர்யது³பி⁴꞉ ஸஹ ||2-85-7

ஓ! மன்னா, இவ்வாறு சொல்லப்பட்ட அசுரர்கள், வெட்கத்தால் நிறைந்தவர்களாக, இருமடங்கு சீற்றத்துடன் திரும்பி வந்து யாதவர்களுடன் மீண்டும் போரிட்டனர்.

உத்ஸவே யுத்³த⁴ஷௌ²ண்டா³னாம் நானாப்ரஹரணைர்ந்ருப |
யே யாந்தி யஜ்ஞவாடம் தம் தான்னிஹந்தி த⁴னஞ்ஜய꞉ ||2-85-8

யமௌ பீ⁴மஷ்²ச ராஜா ச த⁴ர்மபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர꞉ |
த்³யாம் ப்ரயாதாஞ்ஜகா⁴னைந்த்³ரி꞉ ப்ரவரஷ்²ச த்³விஜோத்தம꞉ ||2-85-9

தனஞ்சயன் {அர்ஜுனன்}, பீமன், நகுலன், சகாதேவன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய வீரர்கள், வீரத்திருவிழா நடைபெற்ற அந்த வேள்விக்களத்திற்குச் சென்றோர் அனைவரையும் தங்களுடைய பல்வேறு ஆயுதங்களால் அழித்தனர். வானத்தில் உயர்ந்து எழுந்தோர் இந்திரனின் மகனாலும் {ஜயந்தனாலும்}, இருபிறப்பாளர்களில் முதன்மையான பிரவரனாலும் கொல்லப்பட்டனர்.(8,9)

அதா²ஸுராஸ்ருக்தோயாட்⁴யா கேஷ²ஷை²வலஷா²ட்³வலா |
சக்ரகூர்மரதா²வர்தா க³ஜஷை²லானுஷோ²பி⁴னீ ||2-85-10

ஓ! ஜனமேஜயா, அந்தப் போர்க்களத்தில், அசுரர்களின் குருதியை நீராகக் கொண்ட ஆறு பாயத் தொடங்கியது. அவர்களின் தலைமுடிகளே அதன் பாசியும், புல்லுமாக இருந்தன. சக்கரங்கள் ஆமையாகவும், தேர்கள் நீர்ச்சுழியாகவும் இருந்தன. அது யானைகளெனும் பாறைகளால் அழகூட்டப்பட்டது.

த்⁴வஜகுந்ததருச்ச²ன்னா ஸ்தனிதோத்க்ருஷ்டநாதி³னீ |
கோ³விந்த³ஷை²லப்ரப⁴வா பீ⁴ருசித்தப்ரமாதி²னீ ||2-85-11

கோவிந்த மலையில் உற்பத்தியாகி, கொடிகளெனும் மரங்களால் மறைக்கப்பட்டிருந்த அவ்வாறு கோழைகளின் இதயங்களைத் துன்புறுத்தியது.

அஸ்ருக்³பு³த்³பு³த³பே²னாட்⁴யா அஸிமத்ஸ்யதரங்கி³ணீ |
ஸுஸ்ராவ ஷோ²ணிதநதீ³ நதீ³வ ஜலதா³க³மே ||2-85-12

அங்கு எழுந்த கதறல்கள் பாய்ந்து செல்லும் அவ்வோடையின் ஒலியாகின, குருதியின் நுரைகள் குமிழிகளாகின. வாள்களே மீன்களாகின. மழைக்கால நீரால் நிறைந்த ஓடையைப் போல அந்தக் குருதியாறு பாயத் தொடங்கியது

தாந்த்³ருஷ்ட்வைவ நிகும்ப⁴ஸ்து வர்த்³த⁴மானம்ஷ்²ச ஷா²த்ரவான் |
ஹதான்ஸர்வான்ஸஹாயாம்ஷ்²ச வீர்யாதே³வோத்பபாத ஹ ||2-85-13

தன் தோழர்கள் அனைவரும் கொல்லப்படுவதையும், பகைவர்கள் சக்தியில் பெருகுவதையும் கண்ட நிகும்பன், தன் சக்தியால் திடீரென உயரக் குதித்தான் {வானத்தில் உயர்ந்தான்}.

ஸ வாரிதோ ஜயந்தேன ப்ரவரேண ச பா⁴ரத |
ஷ²ரை꞉ குலிஷ²ஸங்காஷை²ர்னிகும்போ⁴ ரணகர்கஷ²꞉ ||2-85-14

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அங்கே ஜயந்தனும், பிரவரனும் போரில் தடுக்கப்பட முடியாத நிகும்பனை இடிகளுக்கு ஒப்பான கணைகளால் தடுத்தனர்.

ஸந்நிவ்ருத்யாத² த³ஷ்டோஷ்ட²꞉ பரிகே⁴ண து³ராஸத³꞉ |
ப்ரவரம் தாட³யாமாஸ ஸ பபாத மஹீதலே ||2-85-15

தீயவனான நிகும்பன் அங்கிருந்து விலகியும், தன் உதடுகளைக் கடித்துக் கொண்டும், தன் பரிகத்தைக் கொண்டு பிரவரனைத் தாக்கி, அவனைப் பூமியில் விழச் செய்தான்.

ஐந்த்³ரிஸ்தம் பதிதம் பூ⁴மௌ பா³ஹுப்⁴யாம் பரிஷஸ்வஜே |
விதி³த்வா சைவ ஸப்ராணம் ஹித்வாஸுரமபி⁴த்³ருத꞉ ||2-85-16

அவன் விழுந்த உடனேயே இந்திரனின் மகன் {ஜயந்தன்} அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, தன் கரங்களால் அவனைத் தழுவிக் கொண்டான். அவன் உயிரோடிருப்பதை அறிந்த உடனே அவனை விட்டுவிட்டு அந்த அசுரனை நோக்கி ஓடினான்.

அபி⁴த்³ருத்ய நிகும்ப⁴ம் ச நிஸ்த்ரிம்ஷே²ன ஜகா⁴ன ஹ |
பரிகே⁴ணாபி தை³தேயோ ஜயந்தம் ஸமதாட³யத் ||2-85-17

ஜயந்தன், நிகும்பனை நெருங்கி நிஸ்திரிங்ஷத்தால் {வாளால்} அவனைத் தாக்கினான். அந்தத் தைத்தியனும் அவனைப் பரிகத்தால் தாக்கினான்.

ததக்ஷ ப³ஹுலம் கா³த்ரம் நிகும்ப⁴ஸ்யைந்த்³ரிராஹவே |
ஸ சிந்தயாமாஸ ததா³ வத்⁴யமானோ மஹாஸுர꞉ ||2-85-18

அடுத்தக் கணத்திலேயே இந்திரனின் மகன் நிகும்பனின் மேனியை எண்ணற்ற கணைகளால் புண்ணாக்கினான்.

க்ருஷ்ணேன ஸஹ யோத்³த⁴வ்யம் வைரிணா ஜ்ஞாதிகா⁴தினா |
ஷ்²ராவயாமி கிமாத்மானமாஹவே ஷ²க்ரஸூனுனா ||2-85-19

இவ்வாறு அந்தப் பயங்கரப்போரில் காயமடைந்த பேரசுரன் {நிகும்பன்}, “என் உற்றார் உறவினரைக் கொன்றவனும், என்னுடைய பகைவனுமான கிருஷ்ணனுடன் போர்க்களத்தில் நான் போரிட வேண்டும். இந்திரனின் மகனுடன் போரிடுவதன் மூலம் நான் ஏன் களைப்படைய வேண்டும்? {அதனால் என்ன புகழடைவேன்?}” என்று நினைத்தான்.

ஏவம் ஸ நிஷ்²சயம் க்ருத்வா தத்ரைவாந்தரதீ⁴யத |
ஜகா³ம சைவ யுத்³தா⁴ர்த²ம் யத்ர க்ருஷ்ணோ மஹாப³ல꞉ ||2-85-20

இவ்வாறு தீர்மானித்த நிகும்பன் அந்த இடத்தில் இருந்து மறைந்து, பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன் இருக்குமிடத்திற்குச் சென்றான்.

தம் த்³ருஷ்ட்வைராவதஸ்கந்த⁴மாஸ்தி²தோ ப³லநாஷ²ன꞉ |
த்³ரஷ்டுமப்⁴யாக³தோ யுத்³த⁴ம் ஜஹ்ருஷே ஸஹ தை³வதை꞉ ||2-85-21

பலனைக் கொன்றவனான அறம்சார்ந்த வாசவன் {இந்திரன்}, தன்னுடைய ஐராவதத்தில் அமர்ந்து கொண்டு, போரைக் காண்பதற்காகத் தேவர்களுடன் அங்கே வந்திருந்தான். தன் மகன் வெற்றியாளனாகத் திகழ்வதில் நிறைவடைந்தான்

ஸாது⁴ ஸாத்⁴விதி புத்ரம் ச பரிதுஷ்ட꞉ ஸ ஸஸ்வஜே |
ப்ரவரம் சாபி த⁴ர்மாத்மா ஸஸ்வஜே மோஹவர்ஜிதம் ||2-85-22

அவர்களின் செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் புகழ்ந்து, அவனையும் {ஜயந்தனையும்}, அந்நேரத்தில் மயக்கத்தில் இருந்து விடுபட்ட பிரவரனையும் ஆரத்தழுவினான்.

தே³வது³ந்து³ப⁴யஷ்²சாபி ப்ரணேது³ர்வாஸவாஜ்ஞயா |
ஜயமானம் ரணே த்³ருஷ்ட்வா ஜயந்தம் ரணது³ர்ஜயம் ||2-85-23

பயங்கரம் நிறைந்த போரில் வெற்றியடைந்த ஜயந்தனைக் கண்டும், தேவர்களின் மன்னனுடைய ஆணையின் பேரிலும் தேவதுந்துபிகள் முழக்கப்பட்டன

த³த³ர்ஷா²த² நிகும்ப⁴ஸ்து கேஷ²வம் ரணது³ர்ஜயம் |
அர்ஜுனேன ஸ்தி²தம் ஸார்த⁴ம் யஜ்ஞவாடாவிதூ³ரத꞉ ||2-85-24

மறுபுறம் அந்தப் பயங்கரப் போரில், வேள்விக்களத்தின் அருகில் அர்ஜுனனுடன் கேசவன் இருப்பதைக் கண்ட நிகும்பன்,

ஸ நாத³ம் ஸுமஹான்க்ருத்வா பக்ஷிராஜமதாட³யத் |
பரிகே⁴ண ஸுகோ⁴ரேண ப³லம் ஸத்யகமேவ ச ||2-85-25

சிங்க முழக்கம் செய்து கொண்டே தன்னுடைய பரிகத்தால் பறவைகளின் மன்னனான கருடன், பலதேவன், சத்யகன் {சாத்யகி} ஆகியோரைத் தாக்கினான்.

நாராயணம் சார்ஜுனம் ச பீ⁴மம் சாத² யுதி⁴ஷ்டி²ரம் |
யமௌ ச வாஸுதே³வம் ச ஸாம்ப³ம் காமம் ச விர்யவான் ||2-85-26

மேலும், நாராயணன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன், பீமன், யுதிஷ்டிரன், சகாதேவன், நகுலன் ஆகியோரையும், வாசுதேவனின் மகன்களான சாம்பனையும், காமனையும் {பிரத்யும்னனையும்} தாக்கினான்.

யுயுதே⁴ மாயயா தை³த்ய꞉ ஷீ²க்⁴ரகாரீ ச பா⁴ரத |
ந சைனம் த³த்³ருஷு²꞉ ஸர்வே ஸர்வஷ²ஸ்த்ரவிஷா²ரதா³꞉ ||2-85-27

வேகமாகச் செல்லக்கூடிய அந்தத் தைத்தியன், அனைத்து வகை ஆயுதங்களிலும் திறன்மிக்க அந்த வீரர்களில் எவராலும் தன்னைக் காண முடியாதவாறு தன் மாய சக்தியைப் பயன்படுத்திப் போரிட்டான்.

யதா³ து நைவாபஷ்²யம்ஸ்தம் ததா³ பி³ல்வோத³கேஷ்²வரம் |
த³த்⁴யௌ தே³வம் ஹ்ருஷீகேஷ²꞉ ப்ரமதா²னாம் க³ணேஷ்²வரம் ||2-85-28

அங்கே அவனைக் காணாத ரிஷிகேசன் (கிருஷ்ணன்), கணங்களின் தலைவனான வில்வோதகேஷ்வரனை {சிவனை} தியானித்தான்.

ததஸ்தே த³த்³ருஷு²꞉ ஸர்வே ப்ரபா⁴வாத³திதேஜஸ꞉ |
பி³ல்வோத³கேஷ்²வரஸ்யாஷு² நிகும்ப⁴ம் மாயினாம் வரம் ||2-85-29

பெருஞ்சக்திவாய்ந்த வில்வோதகேஷ்வரனைக் கிருஷ்ணன் தியானித்த உடனேயே, அவனுடைய {சிவனின்} சக்தியால் கைலாச சிகரத்தைக் காண்பதைப் போல மாய சக்திகளைக் கொண்டோரில் முதன்மையான நிகும்பனை அவர்கள் அனைவராலும் காண முடிந்தது

கைலாஸஷி²க²ராகாரம் க்³ரஸந்தமிவ தி⁴ஷ்டி²தம் |
ஆஹ்வயந்தம் ரணே க்ருஷ்ணம் வைரிணம் ஜ்ஞாதிநாஷ²னம் ||2-85-30

அந்த நேரத்தில் அந்த வீரன் {நிகும்பன்} அவர்கள் அனைவரையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவனைப் போலத் தன் உற்றார் உறவினரைக் கொன்ற பகைவனான கிருஷ்ணனை அழைத்துக் கொண்டிருந்தான்.

ஸஜ்ஜகா³ண்டீ³வமேவாத² பார்த²ஸ்தஸ்ய ரதே²ஷுபி⁴꞉ |
பரிக⁴ம் சைவ கா³த்ரேஷு விவ்யாதை⁴னமதா²ஸக்ருத் ||2-85-31

பார்த்தன் {அர்ஜுனன்} ஏற்கனவே தன்னுடைய காண்டீவத்தில் நாண் பூட்டியிருந்தான். அவன் அவனை {அர்ஜுனன் நிகும்பனைக்} கண்ட போது, பரிகத்தாலும், கணைகள் பிறவற்றாலும் அவனுடைய {நிகும்பனின்} உடலைத் தாக்கினான்

தே பா³னாஸ்தஸ்ய கா³த்ரேஷு பரிகே⁴ ச ஜனாதி⁴ப |
ப⁴க்³னா꞉ ஷி²லாஷி²தா꞉ ஸர்வே நிபேது꞉ குஞ்சிதா க்ஷிதௌ ||2-85-32

ஓ! மன்னா, கல்லில் கூராக்கப்பட்ட அந்தப் பரிகமும், பிற கணைகளும் அவனுடைய உடலைத் தீண்டியதும் பூமியில் நொறுங்கி விழுந்து சிதறின

விப²லானஸ்த்ரயுக்தாம்ஸ்தாந்த்³ரூஷ்ட்வா பா³ணாந்த⁴னஞ்ஜய꞉ |
பப்ரச்ச² கேஷ²வம் வீர꞉ கிமேததி³தி பா⁴ரத ||2-85-33

ஓ! பரதனின் வழித்தோன்றலே, தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் இவ்வாறு கலங்கடிக்கப்படுவதைக் கண்ட தனஞ்சயன், கேசவனிடம், “என்ன இது?

பர்வதானபி பி⁴ந்த³ந்தி மம வஜ்ரோபமா꞉ ஷ²ரா꞉ |
கிமித³ம் தே³வகீபுத்ர விஸ்மயோ(அ)த்ர மஹான்மம ||2-85-34

ஓ! தேவகியின் மகனே, வஜ்ரங்களுக்கு ஒப்பான என்னுடைய கணைகள் மலைகளையும் துளைக்கவல்லவை. ஆனால் இங்கே அவை பயனற்றுப் போனதேன்? இதில் எனக்குப் பேராச்சரியம் உண்டாகிறது” என்று கேட்டான்

தமுவாச தத꞉ க்ருஷ்ண꞉ ப்ரஹஸன்னிவ பா⁴ரத |
மஹத்³பூ⁴தம் நிகும்போ⁴(அ)யம் கௌந்தேய ஷ்²ருணு விஸ்தராத் ||2-85-35

ஓ! தேவகியின் மகனே, வஜ்ரங்களுக்கு ஒப்பான என்னுடைய கணைகள் மலைகளையும் துளைக்கவல்லவை. ஆனால் இங்கே அவை பயனற்றுப் போனதேன்? இதில் எனக்குப் பேராச்சரியம் உண்டாகிறது” என்று கேட்டான்

புரா க³த்வோத்தரகுரூம்ஸ்தபஷ்²சக்ரே மஹாஸுர꞉ |
ஷ²தம் வர்ஷஸஹஸ்ராணாம் தே³வஷ²த்ருர்து³ராஸத³꞉ ||2-85-36

தடுக்கப்பட முடியாதவனும், தேவர்களின் பகைவனுமான இந்தப் பேரசுரன் {நிகும்பன்}, உத்தரகுரு மாகாணத்திற்குச் சென்று நூறாயிரம் {ஒரு லட்சம்} ஆண்டுகள் கடுந்தவம் பயின்றான்.

அதை²னம் ச²ந்த³யாமாஸ வரேண ப⁴க³வான்ஹர꞉ |
ஸ வவ்ரே த்ரீணி ரூபாணி ந வத்⁴யானி ஸுராஸுரை꞉ ||2-85-37

இதில் நிறைவடைந்த தலைவன் ஹரன் {சிவன்}, அவனுக்கு வரமளிக்க இருந்தபோது, அவன் தேவர்களாலும், அசுரர்களாலும் கொல்லப்பட முடியாத மூன்று வடிவங்களை வேண்டினான்

தமுவாச மஹாதே³வோ ப⁴க³வான்வ்ருஷப⁴த்⁴வஜ꞉ |
மம வா ப்³ராஹ்மணானாம் வா விஷ்ணோர்வா ப்ரியமாசரன் ||2-85-38

கொடியில் காளைச் சின்னத்தைக் கொண்ட தலைவன் மஹாதேவன், “ஓ! பேரசுரா, என்னையோ, விஷ்ணுவையோ, பிராமணர்களையோ எதிர்த்து செயல்பட்டால் நீ ஹரியால் கொல்லத்தக்கவன் ஆவாய்.

ப⁴விஷ்யஸி ஹரேர்வத்⁴யோ ந த்வன்யஸ்ய மஹாஸுர |
ப்³ரஹ்மண்யோ(அ)ஹம் ச விஷ்ணுஷ்²ச விப்ராணாம் பரமா க³தி꞉ ||2-85-39

வேறு எவராலும் உன்னைக் கொல்ல முடியாது. ஓ! நிகும்பா, நானும், விஷ்ணுவும் பிராமணர்களின் பெரும்புகலிடம் என்பதால் நாங்கள் பிராமணர்களுக்கும், விப்ரர்களுக்கும் நன்மையைச் செய்வோம்” என்றான்.

ஸ ஏவ ஸர்வஷ²ஸ்த்ராணாமவத்⁴ய꞉ பாண்டு³நந்த³ன |
த்ரிதே³ஹோ(அ)திப்ரமாதீ² ச வரமத்தஷ்²ச தா³னவ꞉ ||2-85-40

ஓ! பாண்டுவின் மகனே, அந்தத் தானவனே பெருஞ்சக்திவாய்ந்தவனான இந்த நிகும்பன். வரத்தால் அடையப்பட்ட அவனது மூன்று உடல்களும் அதன்படியே அனைத்து வகை ஆயுதங்களாலும் வெல்லப்பட முடியாதவை

பா⁴னுமத்யாபஹரணே தே³ஹோ(அ)ஸ்யைகோ ஹதோ மயா |
அவத்⁴யம் ஷட்புரம் தே³ஹமித³மஸ்ய து³ராத்மன꞉ ||2-85-41

இவன் பானுமதியை அபகரித்துச் சென்ற போது நான் அவனுடைய உடல்களில் ஒன்றை அழித்தேன்; இவனுடைய மற்றொரு அழிவற்ற உடல் இதோ ஷட்புரத்தில் வாழ்கிறது,

தி³திம் ஷு²ஷ்²ரூஷதி த்வேகோ தே³ஹோ(அ)ஸ்ய தபஸான்வித꞉ |
அன்யஸ்து தே³ஹோ கோ⁴ரோ(அ)ஸ்ய யேனாவஸதி ஷட்புரம் ||2-85-42

தவச் சக்தியுடன் கூடிய மூன்றாவது உடல், {தன் அன்னையான} திதிக்குத் தொண்டாற்றுகிறது. ஓர் உடலால் அவன் எப்போதும் ஷட்புரத்தில் வாழ்கிறான்.

ஏதத்து ஸர்வமாக்²யாதம் நிகும்ப⁴சரிதம் மயா |
த்வரயாஸ்ய வதே⁴ வீர கதா² பஷ்²சாத்³ப⁴விஷ்யதி ||2-85-43

ஓ! வீரா, இவ்வாறே நான் நிகும்பனின் கதை முழுவதையும் உனக்குச் சொல்லிவிட்டேன்; இனி அவனுடைய அழிவுக்கு வழிவகுக்க வேண்டும்; அவனுடைய வரலாற்றில் எஞ்சியதைப் பின்னர்ச் சொல்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}

தயோ꞉ கத²யதோரேவம் க்ருஷ்ணயோரஸுரஸ்ததா³ |
கு³ஹாம் ஷ²ட்புரஸஞ்ஜ்ஞாம் தாம் விவேஷ² ரணது³ர்ஜய꞉ ||2-85-44

ஓ! குருவின் வழித்தோன்றலே, அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, போரில் வெல்லப்பட முடியாதவனான அந்த அசுரன் ஏற்கனவே சொல்லப்பட்ட ஷட்புரக் குகைக்குள் நுழைந்துவிட்டான்

அன்விஷ்ய தஸ்ய ப⁴க³வான்விவேஷ² மது⁴ஸூத³ன꞉ |
தாம் ஷட்புரகு³ஹாம் கோ⁴ராம் து³ர்த⁴ர்ஷாம் குருநந்த³ன ||2-85-45

தெய்வீகனான மதுசூதனன் அதைக் கண்டதும், அந்தப் பயங்கரம் நிறைந்த ஷட்புரக் குகைக்குள் அவனைத் தேடி நுழைந்தான்

சந்த்³ரஸூர்யப்ரபா⁴ஹீனாம் ஜ்வலந்தீம் ஸ்வேன தேஜஸா |
ஸுக²து³꞉கோ²ஷ்ணஷீ²தானி ப்ரயச்ச²ந்தீம் யதே²ப்ஸிதம் ||2-85-46

அது தன்னொளியால் ஒளியூட்டப்பட்டிருந்தது, சூரியனும், சந்திரனும் தங்கள் கதிர்களை அங்கே பொழியவில்லை. விரும்பியபடியே வெப்பம், குளிர், இன்பதுன்பங்களைக் கொடுக்கவல்லதாக அந்தக் குகை இருந்தது.

தத்ர ப்ரவிஷ்²ய ப⁴க³வானபஷ்²யத ஜனாதி⁴பான் |
யுயுதே⁴ ஸஹ கோ⁴ரேண நிகும்பே⁴ன ஜனாதி⁴ப ||2-85-47

தெய்வீகனான ஜனார்த்தனன் அந்தக் குகைக்குள் நுழைந்ததும், {ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த} யாதவ மன்னர்களைக் கண்டான், பிறகு பயங்கரம் நிறைந்த நிகும்பனுடன் போரில் ஈடுபட்டான்

க்ருஷ்ணஸ்யானுப்ரவிஷ்டாஸ்து ப³லாத்³யா யாத³வாஸ்ததா³ |
ப்ரவிஷ்டாஷ்²ச ததா² ஸர்வே பாண்த³வாஸ்தே மஹாத்மன꞉ ||2-85-48

பலதேவனின் தலைமையில் இருந்த பிற யாதவர்களும், பாண்டவர்களும் சேர்ந்து கிருஷ்ணனின் அனுமதியின் பேரில் குகைக்குள் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்

ஸமேதாஸ்து ப்ரவிஷ்டாஸ்தே க்ரூஷ்ணஸ்யானுமதேன வை |
யுயுதே⁴ ஸ து க்ருஷ்ணேன ரௌக்மிணேய꞉ ப்ரசோதி³த꞉ |
அனயத்³யாத³வான்ஸர்வான்யானயம் ப³த்³த⁴வான்புரா || 2-85-49

நிகும்பன் கிருஷ்ணனுடன் போரிடத் தொடங்கினான். ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, தன் தந்தையின் {கிருஷ்ணனின்} விருப்பத்தின் பேரில் அந்தத் தானவனால் அங்கே அடைக்கப்பட்டிருந்த நண்பர்களை விடுவித்தான்.

தே முக்தா ரௌக்மிணேயேன ப்ராப்தா யத்ர ஜனார்த³ன꞉ |
ப்ரஹ்ருஷ்டமனஸ꞉ ஸர்வே நிகும்ப⁴வத⁴காங்க்ஷிண꞉ ||2-85-50

ருக்மிணியின் மகனால் விடுவிக்கப்பட்ட அவர்கள் நிகும்பன் கொல்லப்படுவதைக் காணும் நோக்குடன் மகிழ்ச்சியாக ஜனார்த்தனன் இருந்த இடத்திற்கு வந்தனர்.

ராஜானோ வீர முன்சேதி புன꞉ காமம் யதா²ப்³ருவன் |
முமோச சாத² தான்வீரோ ரௌக்மிணேய꞉ ப்ரதாபவான் ||2-85-51

அப்போது கிருஷ்ணன் மீண்டும், “ஓ! வீரா, உன்னால் அடைக்கப்பட்ட மன்னர்களையும் விடுவிப்பாயாக” என்றான். வீரனும், பலம்வாய்ந்தவனுமான ருக்மிணியின் மகன், இதைக் கேட்டு அவர்கள் அனைவரையும் விடுவித்தான்.

அதோ⁴முக²முகா²꞉ ஸர்வே ப³த்³த⁴மௌனா நராதி⁴பா꞉ |
லஜ்ஜயாபி⁴ப்லுதா விராஸ்தஸ்து²ர்நஷ்டஷ்²ரியஸ்தத்தா³ ||2-85-52

செழிப்பை இழந்திருந்த அந்த வீர மன்னர்கள், வெட்கத்தினால் எதுவும் சொல்லாதிருந்தனர். அவர்கள் முகம் கவிழ்ந்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தனர்.

நிகும்ப⁴மபி கோ³விந்த³꞉ ப்ரயதந்தம் ஜயம் ப்ரதி |
யோத⁴யாமாஸ ப⁴க³வான்கோ⁴ரமாத்மரிபும் ஹரி꞉ ||2-85-53

கோவிந்தன், வெற்றிக்காக மிகச் சிறப்பாக முயன்று கொண்டிருந்தவனும், பயங்கரப் பகைவனுமான நிகும்பனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.

பரிகே⁴ணாஹத꞉ க்ருஷ்ணோ நிகும்பே⁴ன ப்⁴ருஷ²ம் விபோ⁴ |
க³த³யா சாபி க்ருஷ்ணேன நிகும்ப⁴ஸ்தாடி³தோ ப்⁴ருஷ²ம் ||2-85-54

ஓ! தலைவா, அப்போது கிருஷ்ணன் நிகும்பனின் பரிகத்தால் தாக்கப்பட்டான், நிகும்பனும் கிருஷ்ணனின் கதாயுதத்தால் தாக்கப்பட்டான்

தாவுபௌ⁴ ப்ரோஹமாபன்னௌ ஸுப்ரஹாரஹதௌ ததா³ |
தத꞉ ப்ரவ்யதி²தாந்த்³ருஷ்ட்வா பாண்ட³வாம்ஷ்²சாத² யாத³வான் ||2-85-55

ஜேபுர்முனிக³ணாஸ்தத்ர க்ருஷ்ணஸ்ய ஹிதகாம்யயா |
துஷ்டுவுஷ்²ச மஹாத்மானம் வேத³ப்ரோக்தைஸ்ததா² ஸ்தவை꞉ ||2-85-56

இவ்வாறு ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்ட அவர்கள் இருவரும் தங்கள் நினைவை இழந்தனர். இதனால் பாண்டவர்களும், யாதவர்களும் துன்புறுவதைக் கண்ட முனிவர்கள், கிருஷ்ணனுக்கு நன்மை செய்ய விரும்பி, வேதங்களில் விதிக்கப்பட்ட துதிகளால் அவனைத் துதித்து மந்திரங்களை உரைக்கத் தொடங்கினர்.(55,56)

தத꞉ ப்ரத்யாக³தப்ராணோ ப⁴க³வான்கேஷ²வஸ்ததா³ |
தா³னவஷ்²ச புனர்வீராவுத்³யதௌ ஸமரம் ப்ரதி ||2-85-57

அதன் பிறகு நினைவு மீண்டவர்களான அந்தத் தானவனும், கிருஷ்ணனும் மீண்டும் தங்களைப் போரில் ஈடுபடுத்திக் கொண்டனர்

வ்ருஷபா⁴விவ நர்த³ந்தௌ க³ஜாவிவ ச பா⁴ரத |
ஷா²லாவ்ருகாவிவ க்ருத்³தௌ⁴ ப்ரஹரந்தௌ ரணோத்கடௌ ||2-85-58

ஓ! பரதனின் வழித்தோன்றலே, போரில் பயங்கரர்களான அவ்விரு வீரர்களும் மதங்கொண்ட இரண்டு காளைகளையோ, யானைகளையோ, சிறுத்தைகளையோ போல ஒருவரையொருவர் தாக்கினர்.

அத² க்ருஷ்ணம் ததோ³வாச ந்ருபம் வாக³ஷ²ரீரிணீ |
சக்ரேண ஷ²மயஸ்வைனம் தே³வப்³ராஹ்மணகண்டகம் ||2-85-59

அப்போது, ஓ! மன்னா, புலப்படாத குரலொன்று {ஓர் அசரீரி}, கிருஷ்ணனிடம், “ஓ! பெரும்பலம் கொண்டோனே, பிராமணர்களின் பாதையில் முள்ளாக இருக்கும் இவனை உன் சக்கரத்தால் கொன்று,

இதி ஹோவாச ப⁴க³வாந்தே³வோ பி³ல்வோத³கேஷ்²வர꞉ |
த⁴ர்மம் யஷ²ஷ்²ச விபுலம் ப்ராப்னுஹி த்வம் மஹாப³ல ||2-85-60

பெரும்புகழையும் அறத்தையும் ஈட்டுமாறு தலைவன் வில்வோதகேஷ்வரன் {சிவன்} உனக்கு ஆணையிட்டிருக்கிறான்” என்றது.

ததே²த்யுக்த்வா நமஸ்க்ருத்வா லோகநாத²꞉ ஸதாம் க³தி꞉ |
ஸுத³ர்ஷ²னம் முமோசாத² சக்ரம் தை³த்யகுலாந்தகம் ||2-85-61

நல்லோரின் புகலிடமும், உலகைப் பாதுகாப்பவனுமான ஹரி, இதைக் கேட்டு, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னான். பிறகு மஹாதேவனை வணங்கிவிட்டு, தைத்திய குலத்தை அழிக்கும் சுதர்சன சக்கரத்தை ஏவினான்

தன்னிகும்ப⁴ஸ்ய சிச்சே²த³ ஷி²ர꞉ ப்ரவரகுண்ட³லம் |
நாராயணபு⁴ஜோத்ஸ்ருஷ்டம் ஸூர்யமண்ட³லவர்சஸம் ||2-85-62

சூரிய வட்டிலைப் போன்று பிரகாசித்த அந்தச் சக்கரம், நாராயணனின் கரத்தில் இருந்து விடுபட்டு, மிக அழகிய காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிகும்பனின் தலையைத் துண்டித்தது.

உத்பபாத ஷி²ரஸ்தஸ்ய பூ⁴மௌ ஜ்வலிதகுண்ட³லம் |
மேக⁴மத்தோ கி³ரே꞉ ஷ்²ருங்கா³ன்மயூர இவ பூ⁴தலே ||2-85-63

{மேகங்களைக் கண்ட ஆவலால்} மலைமுகட்டில் இருந்து பூமியில் விழும் மயிலைப் போலவே காது குண்டலங்களால் அழகூட்டப்பட்ட அவனது தலையும் பூமியில் விழுந்தது.

நிகும்பே⁴ நிஹதே தஸ்மிந்தே³வோ பி³ல்வோத³கேஷ்²வர꞉ |
துதோஷ ச நரவ்யாக்⁴ர ஜக³த்த்ராஸகரோ விபு⁴꞉ ||2-85-64

ஓ! மன்னா, உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த பெரும்பலம்வாய்ந்த நிகும்பன் கொல்லப்பட்டதில் தலைவன் வில்வோதகேஷ்வரன் நிறைவடைந்தான்.

பபாத புஷ்பவ்ருஷ்டிஷ்²ச ஷ²க்ரஸ்ருஷ்டா நப⁴ஸ்தலாத் |
தே³வது³ந்து³ப⁴யஷ்²சைவ ப்ரணேது³ரரிநாஷ²னே ||2-85-65

ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயா}, இந்திரனால் பொழியப்பட்ட மலர்மாரி வானத்தில் இருந்து பொழிந்தது, தேவதுந்துபிகள் முழங்கின

நனந்த³ ச ஜக³த்க்ருத்ஸ்னம் முனயஷ்²ச விஷே²ஷத꞉ |
தை³த்யகன்யாஷ்²ச ப⁴க³வான்யது³ப்⁴ய꞉ ஷ²தஷோ² த³தௌ³ ||2-85-66

மொத்த உலகமும், குறிப்பாக முனிவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, கதனின் அண்ணனான தலைவன் கேசவன், நூற்றுக்கணக்கான தைத்தியக் கன்னியரை மகிழ்ச்சியுடன் யாதவர்களுக்குக் கொடுத்தான்

க்ஷத்ரியாணாம் ச ப⁴க³வான்ஸாந்த்வயித்வா புன꞉ புன꞉ |
ரத்னானி ச விசித்ராணி வாஸாம்ஸி ப்ரவராணி ச ||2-85-67

க்ஷத்திரியர்களை மீண்டும் மீண்டும் தேற்றி விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் அவர்களுக்குக் கொடுத்தான்.

ரதா²னாம் வாஜியுக்தானாம் ஷ²ட்ஸஹஸ்ராணி கேஷ²வ꞉ |
அத³தா³த்பாண்ட³வேப்⁴யஷ்²ச ப்ரீதாத்மா க³த³பூர்வஜ꞉ ||2-85-68

அவன், பாண்டவர்களுக்குக் குதிரைகளுடன் கூடிய ஆறாயிரம் தேர்களைக் கொடுத்தான்

ததே³வ சாத² ப்ரவரம் ஷட்புரம் புரவர்த⁴ன꞉ |
த்³விஜாய ப்³ரஹ்மத³த்தாய த³தௌ³ தார்க்ஷ்யவரத்⁴வஜ꞉ ||2-85-69

நகரங்களை எப்போதும் பெருகச் செய்பவனான அந்தத் தார்க்ஷியவரத்வஜன் {கருடனை வாகனமாகக் கொண்ட கிருஷ்ணன்}, பிராமணரான பிரம்மதத்தருக்கு ஷட்புர நகரத்தைக் கொடுத்தான்.

ஸத்ரே ஸம்அப்தே ச ததா³ ஷ²ங்க²சக்ரக³தா³த⁴ர꞉ |
விஸர்ஜயித்வா தத்க்ஷத்ரம் பாண்ட³வாம்ஷ்²ச மஹாப³ல꞉ ||2-85-70

பெருஞ்சக்திவாய்ந்தவனும், சங்கு, சக்கர, கதாதாரியுமான கோவிந்தன், பிரம்மதத்தரின் யஜ்ஞம் நிறைவடைந்தபிறகு, பாண்டவர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் விடைகொடுத்தனுப்பி,

பி³ல்வோத³கேஷ்²வரஸ்யாத² ஸமாஜமகரோத்ப்ரபு⁴꞉ |
மாம்ஸரூபஸமாகீர்ணம் ப³ஹ்வன்னம் வ்யஞ்ஜனாகுலம் ||2-85-71

வில்வோதகேஷ்வரன் முன்பு போதுமான அரிசி, குழம்பு, இறைச்சி, பருப்பு ஆகியவற்றைப் படைத்துப் பெருவிழா எடுத்தான்.

நியுத்³த⁴குஷ²லான்மல்லாந்தே³வோ மல்லப்ரியஸ்ததா³ |
யோத⁴யித்வா த³தௌ³ பூ⁴ரி வித்தம் வஸ்த்ராணி சாத்மவான் ||2-85-72

மற்போரை விரும்புபவனும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனுமான தலைவன் ஹரி {கிருஷ்ணன்}, அவ்விழாவில் திறன்மிகு மற்போர்வீரர்களைக் கொண்டு விளையாடச் செய்து அவர்களுக்கு {அந்த மற்போர் வீரர்களுக்குச்} செல்வங்களையும், ஆடைகளையும் கொடுத்தான்.

மாதாபித்ருப்⁴யாம் ஸஹிதோ யது³பி⁴ஷ்²ச மஹாப³ல꞉ |
அபி⁴வாத்³ய ப்³ரஹ்மத³த்தம் யயௌ த்³வாரவதீம் புரீம் ||2-85-73

அதன்பிறகு பிரம்மதத்தரை வணங்கிவிட்டு, தன் தந்தை, தாய் ஆகியோருடனும், யாதவர்கள் பிறருடனும் துவாராவதி நகருக்குப் புறப்பட்டுச் சென்றான்.

ஸ விவேஷ² புரீம் ரம்யாம் ஹ்ருஷ்டபுஷ்டஜனாகுலாம் |
புஷ்பசித்ரபதா²ம் வீரோ வந்த்³யமானோ நரை꞉ பதி² ||2-85-74

அந்த வீரன் {கிருஷ்ணன்}, தான் சென்ற வழியெங்கும் மக்களால் வழிபடப்பட்டவனாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளைக் கொண்டதும், மனநிறைவுடன் கூடிய அழகிய மக்கள் நிறைந்ததுமான அழகிய நகருக்குள் நுழைந்தான்

இமம் ய꞉ ஷட்புரவத⁴ம் விஜயம் சக்ரபாணின꞉ |
ஷ்²ருணுயாத்³வா படே²த்³வாபி யுத்³தே⁴ ஜயமவாப்னுயாத் ||2-85-75

சக்கரபாணியால் {கிருஷ்ணனால்} ஷட்புரம் வெல்லப்பட்டதைக் கேட்பவர்களும், படிப்பவர்களும் போரில் வெற்றியை அடைவார்கள்

அபுத்ரோ லப⁴தே புத்ரமத⁴னோ லப⁴தே த⁴னம் |
வ்யாதி⁴தோ முச்யதே ரோகீ³ ப³த்³த⁴ஷ்²சாப்யத² ப³ந்த⁴னாத் ||2-85-76

மகனற்றவன் இதைக் கேட்பதனாலும், படிப்பதனாலும் மகனைப் பெறுவான், வறியவன் செல்வத்தை அடைவான், பிணியுற்றவன் பிணிகளில் இருந்து குணமடைவான், கட்டுண்டவன் தளைகளில் இருந்து விடுபடுவான்.

இத³ம் பும்ஸவனம் ப்ரோக்தம் க³ர்பா⁴தா³னம் ச பா⁴ரத |
ஷ்²ராத்³தே⁴ஷு படி²தம் ஸம்யக³க்ஷய்யகரணம் ஸ்ம்ருதம் ||2-85-77

புஞ்சவனம்[ஒரு தாய் கருவுற்றிருப்பதற்கான முதல் அறிகுறிகளைக் கண்டதும் வீட்டில் நடைபெறும் அறச்சடங்கு இஃது” ], கர்ப்பதானம்[“கருவுறுவதற்கு முன் செய்யப்படும் சடங்கு”], சிராத்தம் ஆகியவற்றில் இந்தக் கதை சொல்லப்பட்டால் அது முழுமையான வெற்றியைக் கொண்டு வரும் {அழிவற்ற பலனை கொடுக்கும்}.

இத³மமரவரஸ்ய பா⁴ரதே
ப்ரதி²தப³லஸ்ய ஜயம் மஹாத்மன꞉ |
ஸததமித³ம் ஹி ய꞉ படே²ன்னர꞉
ஸுக³திமிதோ வ்ரஜதே க³தஜ்வர꞉ ||2 85-78

ஓ! ஜனமேஜயா, ஒப்பற்ற பலம் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனுமான அந்த உயரான்ம தேவனின் {கிருஷ்ணனின்} வெற்றிக் கதையை எப்போதும் படிக்கும் மனிதன், தொல்லைகளில் இருந்து விடுபட்டு, இங்கிருந்து மிகச் சிறந்த உலகத்தை அடைவான்

மணிகனகவிசித்ரபாணிபாதோ³
நிரதிஷ²யார்ககு³ணோரிஹாதி³நாத²꞉ |
சதுருத³தி⁴ஷ²யஷ்²சதுர்விதா⁴த்மா
ஜயதி ஜக³த்புருஷ꞉ ஸஹஸ்ரநாமா ||2-85-79

ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட உள்ளங்கைகளையும், பாதங்களையும் கொண்டவனும், எரியும் பெருஞ்சூரியனைப் போலப் பிரகாசிப்பவனும், பகைவரை அடக்குபவனும், முதன்மையான தலைவனும், நான்கு கடல்களையும் படுக்கையாக்கிக் கிடப்பவனும், நான்கு ஆத்மாக்களைக் கொண்டவனும்[வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு ஆன்மாக்கள்.], ஆயிரம் பெயர்களை {சஹஸ்ரநாமங்களைக்} கொண்டவனுமான புருஷன் {ஹரி}, எப்போதும் சிறந்த இடத்திலேயே {வெற்றியாளனாக} வசிக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஷ்²ரீமஹாப்⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷட்புரவதோ⁴ நாம பஞ்சாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading