16. மாயா சனகப் படலம்
793.
இம் மொழி அரக்கன் கூற, ஏந்திழை இரு காதூடும்
வெம்மை சேர் அழலின் வந்த வே ……………………….
………..ல் வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள்; மீட்டும்
விம்முறும் உளத்தினோடும் வெகுண்டு, இவை
விளம்பலுற்றான்:
(54-1)
794.
மங்கையை, குலத்துளாளை, தவத்தியை முனிந்து, வாளால்
சங்கை ஒன்று இன்றிக் கொன்றான், குலத்துக்கே தக்கான்
என்று
கங்கை அம் சென்னியாலும் கண்ணனும் கமலத்தோனும்
செங்கைகள் கொட்டி உன்னைச் சிரிப்பரால், சிறுமை என்னா.
(72-1)
795.
அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற,
நொந்து, ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினன் ஆய்,
சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின்
உந்தா, உளம் கொதித்து, ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான்.
(89-1)
17. அதிகாயன் வதைப் படலம்
796.
முதிர் போர் உறு மொய்ம்பன், முனைத்தலையில்
சதிர் ஏறிய தானை தழைத்திட, அங்கு
எதிர் தேரிடை ஏறினன்; மற்று ஒரு வெங்
கதிரோன் இகல் கண்டிட ஏகினனால்.
(20-1)
797.
தேர் வெள்ளம் அளப்பு இல; திண் புரவித்
தார் வெள்ளம் அளப்பு இல; தந்திஇனக்
கார் வெள்ளம் அளப்பு இல; கண்டகராம்
பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால்.
(20-2)
798.
மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து
எல் ஏறிய வாள், எழு, வல் முசலம்,
வில்லோடு அயில், வெங் கதை, வேல் முதலாம்
பல் ஆயுத பத்தி பரித்து உடையார்.
(25-1)
799.
என, வந்த நிசாசரன், இவ் உரையைத்
தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும்,
சனகன் மகள்தன் ஒரு நாயகன் ஆம்
அனகன் அது கேட்டு, இது அறைந்திடுவான்.
(50-1)
800.
என்றே உலகு ஏழினொடு ஏழினையும்
தன் தாமரைபோல் இரு தாள் அளவா –
நின்றான் உரை செய்ய, நிசாசரனும்
பின்றா உரை ஒன்று பிதற்றினனால்.
(52-1)
801.
வெங் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம்
துங்க நீள் வரைப் புயத்து அரக்கர் தூண்டினார்;
வெங் கணை இலக்குவன் வெகுண்டு, உகாந்தத்தில்
பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான்.
(103-1)
802.
முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின்
விடு கணை மழை நெடுந் தாரை, வெம் மதக்
கட களிறு அடங்கலும் கழிய, கால், கரம்,
குடல், தலை, குறைத்தமை கூறல் ஆவதோ?
(103-2)
803.
அறுந்தன, தலை, கழுத்து; அறுந்த, தாள், கரம்
அறுந்தன, செவி, முகம்; அறுந்த, வால், மருப்பு;
அறுந்தன, குடல், உடல்; அறுந்த, வாய், விழி;
அறுந்தன, கட களிறு ஆய நாமமே.
(103-3)
804.
அறுத்தன, சில கணை; அறுத்த கூறுகள்
செறுத்தன, சில கணை; சின்னபின்னமாய்
ஒறுத்தன, சில கணை; உம்பர் ஊர் புகத்
தெறித்தன, சில கணை; செப்பல் ஆவதோ?
(103-4)
805.
மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற,
முதிர் சினத்து இலக்குவன், கடிகை மூன்றினில்,
கொதி கொள் வெஞ் சர மழை கொழிப்பக் கண்டு, தாள்
அதிர்வுறு பொலன் கழல் அரக்கர் அண்மினார்.
(103-5)
806.
அடுத்தனர் ஆனை, தேர், புரவி, ஆழியை;
தொடுத்தனர் அணி படச் சூழ்ந்து, வள்ளல்மேல்
விடுத்தனர் படைக் கலம்; வெகுண்டு வீரனும்
தடுத்தனன், ஒரு தனித் தனுவின் வன்மையால்.
(103-6)
807.
பெருங் கடை யுக மழை பிறழ, தன் ஒரு
கரம் படு சிலையினின் கான்ற மாரியின்,
சரம் படச் சரம் பட, தாக்கு இராக்கதக்
கருங் கடல் வறந்தது கழறல் ஆகுமோ?
(103-7)
808.
இலக்குவக் கடவுள்தன் ஏவின் மாரியால்,
விலக்க அருங் கரி, பரி, இரதம், வீரர் என்று
உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற
நிலப் படச் சாய்ந்தமை நிகழ்ந்த போதிலே.
(119-1)
809.
காந்திய அரக்கனும் கணையின் மாரிகள்
பாய்ந்திட, பருஞ் சிலை விசையின் பற்றினான்;
மாய்ந்தது குரங்கு; அது கண்டு, மா மறை
வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே.
(121-1)
810.
கார்முக விசை உறும் கணையின் மாரியால்
பார வெஞ் சிலை அறுத்து, அவன்தன் பாய் பரித்
தேரினைப் பாகனோடு அழியச் சிந்தி, மற்று
ஓர் கணை அவன் சிரம் உருளத் தூண்டினான்.
(121-2)
தாருகன் எனும் படைத் தலைவன் தன் வயப்
போர் அழிந்தவன் உயிர் பொன்றினான்’ என,
கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே,
வீரனை வளைத்தனர், வெகுளி மிக்குளார்.
(122-1)
812.
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே
விழ உற்றன, வெறி வெங் கணை நிமிரப் பொறி சிதற,
முழை உற்றன முகில் சிந்தின முன்பு ஏறில முடிய,
உழை உற்றன உலவும்படி உலவுற்றன-கரிகள்.
(140-1)
813.
துள்ளிக் களி வய வானரர் ஆர்த்தார்; அவை தோன்றக்
கள்ளக் கடு நிருதக் குலம் கண்டப்படக் கண்டே,
உள்ளக் கடு வேகத்தொடு தேவாந்தகன், உளத்தே
கொள்ளைப் படை அனையஃது ஒரு கொடுஞ் சூலம் கைக்
கொண்டான்.
(169-1)
814.
ஆங்கு அது நிகழக் கண்ட அடல் அதிகாயன் சீறி,
தாங்கு பல் அண்ட கோடிதான் பிளந்து உடைய, தன் கை
வாங்கினன் சிலை; நாண் ஓசை படைத்தபின், வாளி மாரி
பாங்குறு கவியின் சேனைக் கடல்மிசைப் பரப்பி ஆர்த்தான்.
(186-1)
815.
ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும்
தூர்த்து, அடல் கவியின் சேனை துகள் படத் துணிந்து
சிந்தப்
பேர்த்தனன் சிலை நாண் ஓதை; பிறை முகப் பகழி
பின்னும்
கோத்தனன், அனந்த கோடி கோடியின்-கொதித்து
வெய்யோன்.
(186-2)
816.
உருத்து, அதிகாயன், மேன்மேல் ஒண் சுடர்ப் பகழி மாரி
நிரைத்தலின், இடைவிடாது நெடுங் கவிச் சேனை வெள்ளம்
தரைத் தலம்அதனில் பட்டுத் தலை உடல் சிதற, சோரி
இரைத்து எழு கடலின் பொங்க, இமையவர் அலக்கணுற்றார்.
(186-3)
817.
கரடியின் சேனையோடு கவிக் குலத் தானை எல்லாம்
தரைப் பட, சரத்தின் மாரித் தசமுகன் சிறுவன்-சீறா,
கரை அறு கவியின் சேனைத் தலைவர்கள் கனலின் பொங்கி,
வரையொடு மரமும் கல்லும் வாங்கினர், விரைவின் வந்தார்.
(186-4)
818.
வானரத் தலைவர் பொங்கி வருதலும், அரக்கன் மைந்தன்,
போன திக்கு அறிவுறாமல், பொழிந்திடும் பகழிதன்னால்
ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன்; குருதி பொங்க,
தான் அறிவு அழிந்து, யாரும் தனித் தனி தலத்தின
வீழ்ந்தார்.
(186-5)
819.
திசை முகம் கிழிய, தேவர் சிரம் பொதிர் எறிய, திண் தோள்
தசமுகன் சிறுவன், பின்னும், தடஞ் சிலை குழைய வாங்கி,
விசை கொள் நாண் எறிந்து, மேன்மேல் வெங் கவித் தானை
வெள்ளம்
பசை அறப் புலர்ந்து போகப் பொழிந்தனன், பகழி மாரி.
(186-6)
820.
‘வீரருக்கு ஒருவரான விறல், அதிகாயன் வெம் போர்
ஆர்இனித் தடுக்க வல்லார்?’ எனப் பதைத்து, அமரர்
எல்லாம்,
சோர்வுறத் துளங்கி, நில்லாது ஓடினர்; சுடரும் வை வேல்
போர் வலி அரக்கன் சேனை புகுந்தது, கடலின் பொங்கி.
(186-7)
821.
அங்கதன் தோளில் நின்ற அண்ணல், ஆங்கு அதனைக்
கண்டே,
செங் கையில் பிடித்த வீரச் சிலையை நாண் எறிந்து, தீரா,
வெங் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி,
துங்க வேல் நிருதர் சேனை துணி படச் சொரிந்தான், வாளி.
(186-8)
822.
உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து, ஏழு
கரு முகில் பொழிவதென்னக் கணை மழை சொரிந்து, காலாள்
இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்தி,
பொரு திறல் அரக்கனோடும் புகுந்து, அமர் கடிதின்
ஏன்றான்.
(186-9)
823.
புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம்
திரிதர, அரக்கன் சீறி, திண் சிலை குழைய வாங்கி,
எரி முகப் பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி
சொரிதர, அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார்.
(195-1)
824.
வில்லினுக்கு ஒருவன் ஆகி, உலகு ஒரு மூன்றும் வென்ற
வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஒயான்,
கல் இடும் மாரி என்னக் கணை மழை பொழியக் கண்ட
வில்லியும், விடாது, வெய்ய கணை மழை விலக்கி
நின்றான்.
(203-1)
825.
விறல் அதிகாயன் வீழ, வெந் திறல் அரக்கன் மைந்தர்
குறுகினர், மும்மையான ஆயிர கோடி உள்ளார்;
எறி கடற் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து,
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர், தெழிக்கும்
சொல்லார்.
(207-1)
826.
வருதலும் அரக்கன், மற்று(அவ்) வானரச் சேனை பின்னும்
பொரு சினம் திருகி முற்றா, பொங்கு அழல் என்னப்
பொங்கி,
மரமொடு மலைகள் ஏந்தி, மாதிரம் மறைய, வல்லே
உரும் எனச் சொரிய வீசி உடற்றினர், ஒழிவு இலாதார்.
(209-1)
827.
மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும்,
கொற்றம் கொள் இராவணன் மைந்தர் குலைந்தே
முற்றும்படி மோதினர்; மோத முடிந்தே
அற்று, அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார்.
(250-1)
828.
அளப்பு இல் மைந்தர் எல்லாம், ஆனை, தேர், பரி, ஆள்
என்னும்
வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய, தாமும்
களத்திடைக் கவிழ்ந்தார் என்ற மொழியினைக் காதில் கேளா.
துளக்கம்இல் அரக்கன், மேருத் துளங்கியது என்ன,
சோர்ந்தான்.
(261-1)
18. நாகபாசப் படலம்
829.
எரி முகப் பகழி மாரி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
எரி முகப் பகழி மாரி தொடுத்து, அவை இறுத்தான், எந்தை,
உரும்இனப் பகழி மாரி உருத்து விட்டு, அரக்கன்
ஆர்த்தான்;
உரும்இனப் பகழி மாரி உருத்து விட்டு, இளவல் கொன்றான்.
(106-1)
830.
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங்
கணை அரக்கன் கோத்தான்;
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங்
கணை நிமலன் மாய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக்
கணை அரக்கன் மொய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக்
கணை முடித்தான், மொய்ம்பன்.
(106-2)
831.
சிந்து வாளி செறிதலும், சேவகன்
ஐந்து நூறு கடுங் கணையால்; அவன்
உந்து தேரை ஒறுத்தனன்; வெய்யவன்
வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான்.
(128-1)
832.
அழித்தனன் தடத் தேர் என்று அழன்று, தீ
விழித்தனன்; கடு நெஞ்சம் வெகுண்டு எழத்
தெழித்தனன்; சிலையால் திறல் வாளிகள்
கொழித்தனன்; இமையோர் மெய் குலுங்கினார்.
(148-1)
833.
அங்கதன் தடந் தோளினும் மார்பினும்
புங்க வாளி புகப் புக, தேர் எதிர்,
சிங்கஏறு அனையான் திரள் தோள்வரை
மங்க, வேறொர் மராமரம் வீசினான்.
(148-2)
834.
மல் திண் தோளின் அடித்த மராமரம்
இற்று நூறு திறத்தது, இமைப்பிலோர்
பொன் திண் தேர்மிசைத் தாவினன் பொங்கெலி
முற்று நாளில் முயற்சி முரஞ்சவே.
(148-3)
835.
கண்ட வாலிதன் காதலனும், கனல்
விண்டதாம் என வெஞ் சினம் உற்றவன்
மண்டு தேர்மிசையில், குதியா வலி
கொண்டு, வான் இடிஏறு எனக் குத்தினான்.
(148-4)
836.
குத்தி, மற்று அவன் கொய் உளை மாப் பரி
பத்தி பத்தியின் வீழ, பரிந்து எதிர்
தத்தி, வல் வில் தடக் கையினால், சரம்
வித்துராமுனம் வீழ்த்தினன், தேர்அரோ.
(148-5)
837.
மாறு ஓர் தேரின் மடங்கல் என, கனன்று
ஏறினான், சரம் எண்-இரண்டு ஏவினான்;
ஊறு சோரி சொரிய, உயக்கம் உற்று,
ஆறினான் கடிது, அங்கதன் ஆண்மையான்.
(148-6)
838.
கோல் கொள் ஆளும் பரியும் குழம்பதாய்,
காலின் நூறி, கரங்களின் மற்று அவன்
தாலு மூலத்து அடிப்ப, தனு வலான்,
மால் உழந்தவர் போல மயங்கினான்.
(148-7)
839.
பல்ஆயிரத்தின் முடியாத டக்கம் அவை வீச வந்த படர்
கால்
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல, உடல் நின்ற வாளி
சிதறுற்று,
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி, அறனே
விளைக்கும் உரவோன்,
வல்லான் ஒருத்தன், இடையே படுத்த வடுஆன, மேனி
வடுவும்.
(264-1)
840.
பறவை நாயகன்தான் ஏக, படர் உறு துயரம் நீங்கி,
கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி,
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்;
மறை ஒரு நான்கும், மண்ணும், வானமும், மகிழ்ந்த மாதோ,
(270-1)
841.
இரு நிலம் கிழிய, பாயும் எறி கடல் இரைப்புத் தீர,
பரவும் எண் திசையைத் தாங்கும் பகட்டினம் இரியல் போக,
கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ,
அரு வரை அண்ட கோளம் பிளக்க, நின்று, அனுமன்
ஆர்த்தான்.
(273-1)
19. படைத் தலைவர் வதைப் படலம்
842.
‘அளப்ப அரும் வெள்ளச் சேனை நமர் திறத்து அழிந்தது
அல்லால்,
களப்படக் கிடந்தது இல்லை, கவிப் படை ஒன்றதேனும்;
இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும், என்னே
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது, விறலின்
மிக்கீர்!
(1-1)
843.
‘இகல் படைத் தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல்
தொகைப்பட நின்றோர் யாரும் சுடர்ப் படை கரத்தின் ஏந்தி,
மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்-ஐந்தோடு ஏகி, வெம்
போர்ப்
பகைப் பெருங் கவியின் சேனை படுத்து, இவண் வருதிர்’
என்றான்.
(1-2)
844.
‘மன்னவர் மன்னவ! மற்று இது கேண்மோ!
துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று, ஆங்கு
அந் நரன் அம்பினில் ஆவி அழிந்தார்.
(16-1)
845.
மத்த மதக் கரியோடு மணித் தேர்
தத்துறு வாசி, தணப்பு இல காலாள்,
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம்,
வித்தக மானிடன் வாளியின், வீந்த.
(16-2)
846.
இப் படையோடும் எழுந்து இரவின்வாய்
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை
எப் புறமும் செவிடு உற்றதை எண்ணி,
துப்புறு சிந்தையர் (வீரர்) தொடர்ந்தார்.
(20-1)
847.
தேர் நிரை சென்றது; திண் கரி வெள்ளக்
கார் நிரை சென்றது; கால் வய வாசித்
தார் நிரை சென்றது; தாழ்வு அறு காலாள்
பேர் நிரை சென்றது; பேசுவர் யாரே?
(22-1)
848.
‘ஐய! கேள்; சிவன் கை வாள் கொண்டு, அளப்ப அரும்
புவனம் காக்கும்
வெய்யவன் வெள்ளச் சேனைத் தலைவன் விழுமம் பெற்றோர்,
கை உறும் சேனையோடும், கடுகினர் கணக்கிலாதோர்,
மொய்படைத் தலைவர்’ என்று, ஆங்கு அவர் பெயர்
மொழியலுற்றான்.
(29-1)
849.
‘இன்னவர் ஆதியர் அளப்பிலோர்; இவர்
உன்ன அருந் தொகை தெரிந்து உரைக்கின், ஊழி நாள்
பின்னரும் செல்லும்’ என்று ஒழியப் பேசினான்;
அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார்.
(35-1)
850.
கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்கக்
கடிகை உற்றதில் களைந்தது கண்டு, விண்ணவர்கள்,
‘விடியலுற்றது நம் பெருந் துயர்’ என வியந்தார்.
(58-1)
851.
வெற்றி வெம் படைத் தலைவர் என்று உரைத்திடும்
வெள்ளத்து
உற்ற போர் வலி அரக்கர்கள், ஒரு தனி முதல்வன்
கொற்ற வெஞ் சரம் அறுத்திட, அளப்பு, இலர் குறைந்தார்;
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித் தனி மலைந்தார்.
(67-1)
852.
தேர் போய் அழிவுற்றது எனத் தெளியா,
போர் மாலி பொருந்து தரைப்பட, முன்
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு
ஏர் மார்பிடை போக எறிந்தனனால்.
(81-1)
853.
அப் போது அழல் வேள்வி அடல் பகைஞன்
வெப்பு ஏறிய வெங் கனல் போல வெகுண்டு,
‘இப் போர் தருக!’ என்ற இலக்குவன் மேல்
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால்.
(85-1)
854.
சொரி வெங் கணை மாரி தொலைத்து, இரதம்
பரி உந்திய பாகு படுத்து, அவன் வெம்
பொரு திண் திறல் போக, இலக்குவன் அங்கு
எரி வெங் கணை மாரி இறைத்தனனால்.
(85-2)
855.
முடிவுற்றனன். மாருதி மோதுதலால்,
கொடு வச்சிர, எயிற்றன் எனும் கொடியோன்;
விடம் ஒத்த பிசாசன் விறற் பனச-
னொடும் உற்று, இருவோரும் உடன்றனரால்.
(92-1)
856.
பொர நின்ற பணைப் புயவன் பனசன்
நிருதன் களமீது நெருக்கி, அதில்
பரி வெள்ளம் அளப்பு இல பட்டு அழியத்
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால்.
(92-2)
857.
பனசன் அயர்வுற்று ஒருபால் அடைய,
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெங்
கனல் என்ன வெகுண்டு, கவிப் படையின்
இனம் எங்கும் இரிந்திட, எய்தினனால்.
(93-1)
858.
விசை கண்டு உயர் வானவர் விண் இரிய,
குசை தங்கிய கோள் என, அண்டமொடு எண்
திசை எங்கணும் நின்று திரிந்துளதால்-
பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே.
(96-1)
859.
மற்றும் படை வீரர்கள் வந்த எலாம்
உற்று அங்கு எதிரேறி உடன்று, அமர்வாய்
வில் தங்கும் இலக்குவன் வெங் கணையால்,
முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால்.
(100-1)
20. மகரக்கண்ணன் வதைப் படலம்
860.
இந்திரியத்தை இகழ்ந்தவன், அந்தோ!
மந்திர வெற்றி வழங்க வழங்கும்
இந்திரம் அற்றது எனக் கடிதிகொல்?
வந்தது என், வில் தொழிலைக் கொலை மான?
(5-1)
861.
அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,
தம்பிதன் கவசமீதே இரட்டி சாயகங்கள் தாக்கி,
வெம்பு இகல் அனுமன்மீதே வெங் கணை மாரி வித்தி,
உம்பர்தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான்.
(19-1)
862.
‘இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன்;
தந்திரக் குரக்குச் சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான்;
எந்திரம் ஆகிப் பார்த்த இடம் எலாம் தானே ஆனான்;
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர்?’ என அமலன்
சொன்னான்.
(29-1)
863.
மற்று அவன் இறத்தலோடும், மறைகளும் தேடிக் காணாக்
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ளப்
பற்றி, அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும்
பாரில்
அற்றவை அழிந்து சிந்த அறுத்து, ஒரு கணத்தில்
மாய்த்தான்.
(31-1)
864.
மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிரத் தோளான்;
தொடர்ந்தனர் அரக்கர், பின்னும்; தொடர்ந்தவர் தம்மை
எல்லாம்
கடந்தனர், கவியின் வீரர்; களத்திடைக் கணத்தில்
மாய்த்தார்;
நெடுந் திரைப் பரவைமீது நிறைந்தது, குருதி நீத்தம்.
(38-1)
21. பிரமாத்திரப் படலம்
865.
தலைகளை நோக்கும்; தான் தன் சரங்களை நோக்கும்;
தன்கைச்
சிலையினை நோக்கும்; செம் பொன் தேரினை நோக்கும்;
செய்த
கொலைகளை நோக்கும்; கொன்ற கொற்றவர் தம்மை
நோக்கும்;
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய
நோக்கும்.
(25-1)
866.
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய,
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய,
தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினைத் தொடர்ந்தான்.
(77-1)
867.
இன்னது இவ் வழி நிற்க, மற்று இருஞ் சமர்க்கு உடைந்தே,
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்,
பொன்னின் வார் சிலைக் கரத்தொடும் பொருக்கெனப்
புகுந்து,
தன்னை ஈன்றிடும் ஒரு தனித் தந்தையைக் கண்டான்.
(88-1)
868.
மாண்டனன் அகம்பன், மண்மேல்; மடிந்தன, நிருதர் சேனை;
மீண்டனர், குரக்கு வீரர்; விழுந்தன, சினக் கை வேழம்;
தூண்டின், கொடித் தேர்; அற்றுத் துணிந்தன, தொடுத்த
வாசி:-
ஆண்தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால்.
(137-1)
869.
அருந் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு, அளவு இல்
ஆற்றல்
பொரும் திறல் களிறு, காலாள், புரவி, தேர், அளப்பு இல்
கோடி,
இரிந்திடக் கொன்று, தான் அங்கு ஒரு திசை, யாரும்
இன்றிப்
பொருந்திய இருளின் பொம்மல் பொலிய, மாருதியும்
நின்றான்.
(140-1)
870.
தொடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்துமின்’
என்னச்சொன்னான்;
ஓடினார் சாரர்; வல்லை உணர்த்தினார்; துணுக்கம் எய்தா,
ஆடவர் திலகன், ‘யாண்டையான் இகல் அனுமன்? ஏனோர்,
வீடணன், யாங்கண் உள்ளார்? உணர்த்துமின்’ விரைவின்
என்றான்.
(157-1)
871.
தந்தை இறந்தும், தாயர் பிரிந்தும், தலம் விட்டும்,
பின் தனி மேவும் மாது பிரிந்தும், பிரிவு இல்லா
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன்; இது காணேன்;
வந்தனென், எம்பி! வந்தனென், எந்தாய்! இனி வாழேன்!
(202-1)
22. சீதை களம் காண் படலம்
872.
அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன்,
வியன் கர நேமி அம் படை அவ் வெற்பினை
நியங்கொடு தாங்கி விண் நின்றதால்; அதில்
இயங்கிய ஊதை வெங் களத்தின் எய்தவே.
(99-1)
873.
வந்த நல் மருந்தினை மருத்து வானவன்
சிந்தையில் பெரு மகிழ் சிறப்பச் சேர்ந்து உறீஇ,
அந்தரத்து அருக்கன் மா மகனொடு ஆயவர்
வந்து இரைத்து, ஆர்த்து, எழும்வகை செய்தான்அரோ.
(99-2)
23. மருத்துமலைப் படலம்
874.
மூன்று அரத் தாவொடும் புல்லின் முன்னம் வந்து,
ஊன்றின நிலத்து அடி, கடவுள் ஓங்கருள்;
வான் தனி நின்றது; வஞ்சர் ஊர் வர,
ஏன்றிலது; ஆதலால், அனுமன் எய்தினான்.
(97-1)
24. களியாட்டுப் படலம்
875.
வடித்திடும் அமுதத் தேறல் மாந்தினர் எவரும்; உள்ளம்
பிடித்தது களிப்பின் பெற்றி; பிறந்தது காம வேகம்;
எடுத்தனர், மகர யாழின் இன் இசை இனிமையோடு;
நடித்தனர், நங்கைமார்கள் நாடகத் தொகையின் பேதம்.
(3-1)
25. மாயா சீதைப் படலம்
876.
அரக்கரில் சிறந்த வீரர், ஆயிர வெள்ளம் என்னும்
திரைக் கடல் அரக்கர் யாரும் சிதைந்தனர்; திண் தேர்,
யானை,
சுருக்கம்இல் இவுளி, காலாள் எனும் தொகை அளப்பு இல்
வெள்ளம்,
உரைக்கு அடங்காதது எல்லாம், உலந்தது, அங்கு இருவர்
வில்லால்.
(5-1)
877.
என்று மாலியவான் கூற, பிறை எயிற்று எழிலி நாப்பண்
மின் தெரிந்தென்ன நக்கு, வெருவுற, உரப்பி, பேழ் வாய்
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து, ‘நீ உரைத்த மாற்றம்
நன்று, நன்று!’ என்று சீறி, உரைத்தனன், நலத்தை ஓரான்.
(8-1)
878.
என்றனன் மாருதி; இந்திரசித்தும்,
‘ஒன்று உரை கேள்; எனது எந்தையும் ஊரும்
பொன்றுதல் தீரும்; இதின் புகழ் உண்டே?
நன்று உரை!’ என்று, பின் நக்கு, உரைசெய்தான்.
(35-1)
879.
‘எந்தை உவந்த இலங்கு இழையாளைத்
தந்திடில், இன்று தரும் புகழ் உண்டோ?
சிந்துவென்; எந்தை தியங்கிய காம
வெந் துயர் தீரும் விழுப்பமும் உண்டால்?
(36-1)
880.
‘“எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை
இடந்து, என் தோள்மேல்
தழுவுற வைத்து, இன்று ஏகு” என்று
உரைத்தியேல், சமைவென், தக்கோய்!
பொழுது இறை தாழ்ப்பது, என்னோ?
புட்பகம் போதல் முன்னம்,
குழுவொடும் கொண்டு போவென்,
கணத்தினின், குதிப்பென், கூற்றின்.’
(83-1)
881.
கண்டு, தன் கருத்தில் கொண்ட கவலையைக் கடந்து, அங்கு
ஆவி
உண்டு எனத் தெளிந்து, தேறும் வீடணன், உற்றது எல்லாம்
கொண்டு தன் அகத்தில் உன்னி, குலவிய உவகை தூண்ட,
தொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும்
தொழுது நின்றான்.
(91-1)
26. நிகும்பலை யாகப் படலம்
882.
நூறு ஆகிய வெள்ளம் நுனித்த கணக்கு
ஆறாதன சேனை அரக்கர் உடற்கு
ஏறாதன இல்லை-இலக்குவன் (வில்)
தூறா நெடு வாளி துரந்திடவே.
(42-1)
883.
சிர நிரை அறுத்து, அவர் உடலைச் சிந்தி, மற்று
உர நிரை அறுத்து, அவர் ஒளிரும் வெம் படைக்
கர நிரை அறுத்து, வல் அரக்கர் கால் எனும்
தர நிரை அறுப்பது, அங்கு இலக்குவன் சரம்.
(51-1)
884.
ஆயின பொழுதில் அங்கு அளவு இல் மந்திரம்
ஓய்வு இலது உரைத்தனன்; ஓம ஆகுதித்
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல்
தீயவன், ‘என்!’ எனத் திகைத்து நோக்கினான்.
(52-1)
885.
‘ஆங்கு அது கிடக்க, நான் மனிதர்க்கு ஆற்றலேன்,
நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற,
சங்கு நின்று யாவரும் இயம்ப, என் குலத்து
ஓங்கு பேர் ஆற்றலும் ஒழியும்; ஒல்குமால்.
(64-1)
886.
‘நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய்;
சானகிதன்னை வாளால் தடிந்ததோ? தனதன் தந்த
மானமேல் சேனையோடும் வடதிசை நோக்கி மீது
போனதோ?-கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்!
(69-1)
887.
சூர் எலாம் திரண்ட பொன்-தோள் தாபதர்க்கு இளைய
தோன்றல்
நீர் எலாம் மறந்தீர் போலும்; யான் செரு ஏற்று நின்று,
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின்
வெள்ளம்
போர் எலாம் மடிந்து நூறி, இறத்தலும் இருகால் பெற்றீர்.
(84-1)
888.
‘விடு வாளிகள் கடிது ஓடுவ; வீற்று ஆகுவ; வீயா
நெடு நாணிடை சிதையாதவர், நேர் ஏவிய விசிகம்,
தொடு கார் விசை நுழையா, எதிர் மீளாது, இடை சோரா,
எடு பாணமும் அழியா, முதுகு இடு தூணியை அறுத்தான்.’
(126-1)
889.
அரு ஆகியும், உரு ஆகியும், அழியா முழுமுதல் ஆம்
கரு ஆகியும், எமை ஆளுறு கருணாகர வடிவாம்
பொருள் ஆகியும், இருள் ஆகியும், ஒளி ஆகியும், பொலியும்
திருமார்பிளன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார்?
(142-1)
890.
ஈது அங்கு அவை நெடு வானிடை நிகழ்கின்றது; இப்பாலில்
காதும் கொலை அரக்கன் அது கண்டான்; ‘தகை மலர்மேல்
போதன தரு படை போக்கினன் போலாம்’ எனப்
புகைந்தான்;
எது இங்கு இவன் வலி நன்று; மற்று இது காண்பென்’ என்று
இசைப்பான்.
(144-1)
891.
உமை பற்றிய பாகன் முதல் இமையோர் பல உருவம்
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே
அமைவுற்றது பகிரண்டமும் அழிகாலம் இது எனவே
குமைவுற்றிட, வடவைப் பொறி கொழிக்கின்றது, எவ்உலகும்.
(145-1)
27. இந்திரசித்து வதைப் படலம்
892.
என்று அவன் இகழ்ந்தது எல்லாம் இந்திரசித்து கேளான்,
நன்று நம் ஆணை என்னா, நகைசெய்யா, அவனைப் பார்த்து,
‘கொன்று நான் இருவர்தம்மைக் குரக்குஇனத்தோடும் மாய்த்து,
வென்று நான் வருவன,-எந்தாய்!-கேள்’ என, விளம்பலுற்றான்.
(10-1)
893.
‘வாசக் குழலாள் மயில் சீதையை நீ
ஆசைப்படுகின்றது நன்று அல காண்;
நாசத்தை உறும், உயிர் போய்; நானே
நேசப்படுகின்றனன்ட என்றனனே.
(10-2)
894.
‘சிறியோர் செயல் துன்மதி செய்தனை நீ;
வெறி ஆர் குழல் சீதையை விட்டு அகல,
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு, நின்
அறியாமையினால் அழிவானதுவே.
(10-3)
895.
‘வண்டு ஆர் குழலார் மலர்மாதினை நீ
கண்டே மனம் வைப்பது கற்பிலகாண்;
விண்டே எதிர் வாலிதன் மார்பு உருவக்
கண்டோன் அவனே, கணை ஒன்றதனால்.
(10-4)
896.
‘ஆரே, பிறர் தாரம் உறுப்புஅதனில்
நேரே நினைகின்றவர்? நீ நினைவாய்;
பாரே இழிவு ஆனது; தான் நிலையின்
பேரே ஒழிவு ஆனது’ என்று சொன்னான்.
(10-5)
897.
‘வட்ட மா மதி முகத்து எம் மங்கையை மூக்கு அரிந்த
கட்ட மானிடவர் தங்கள் கை வலி காட்டினாலும்,
இட்ட நாள் எல்லைதன்னை யாவரே விலக்க வல்லார்?
பட்டு, நான் விழுந்தால் அன்றி, பாவையை விடுவது
உண்டோ?
(11-1)
898.
‘பழுது இலா வடிவினாளை, பால் அன்ன மொழியினாளை,
தழுவினால் அன்றி, ஆசை தவிருமோ? தவம் இலாதாய்!
முழுதும் வானவரை வென்றேன்; மூவர் என் முன்
நில்லார்கள்;
அழிவுதான் எனக்கும் உண்டோ? ஆண் அலாய்; பேடி!’
என்றான்.
(11-2)
899.
சிறு தொழிற்கு உரியர் ஆகி, தீவினைக்கு உறவாய் நின்ற
எறி படை அரக்கர் என்னும் எண் இலா வெள்ளச் சேனை
மறி திரைக் கடலின் போத, வான் முரசு இயம்ப, வல்லே,
தெறு சினத்து அரக்கன், வானோர் திகைத்து உளம் குலைய,
சென்றான்.
(16-1)
900.
அச்சு எனலாக முன்பின் தோன்றலும், அறாத மெய்யன்
தச்சன பகழி மாரி எண்ணல்ஆம் தகவும் தத்தி,
பச்செனும் மரத்தவாறு பெருக்கவும், பதையாநின்றான்,
நிச்சயம் போரில் ஆற்றல் ஓய்வு இலன்; நெஞ்சம் அஞ்சான்.
(30-1)
901.
‘வான் தலை எடுக்க, வேலை மண் தலை எடுக்க, வானோர்
கோன் தலை எடுக்க, வேதக் குலம் எடுக்க, குன்றாத்
தேன் தலையெடுக்கும் தாராய்! தேவரை வென்றான் தீய
ஊன் தலை எடுத்தாய், நீ’ என்று உரைத்தனர், உவகை
மிக்கார்.
(62-1)
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply