ஆறு மிகப் பெரிய உண்மைகள்
இந்துக்கள் உலக மக்களுக்கு ஆறு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–
1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்
2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்
3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்
4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு
5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.
2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய,
மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்
3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன்,
புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்
4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய,
ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்
5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன்,
காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன்,
மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.
———-
தூய்மை (சௌசம்) எதனால் ஏற்படும்?
1.சத்யம் – உண்மை
2.மன: – மனம்
3.இந்த்ரிய நிக்ரஹ – இந்திரியங்களை அடக்குதல்
4.தயா – தயை (அல்லது இரக்கம்)
5.ஜலம் – நீர்
ஆகிய இந்த ஐந்தால் தூய்மை ஏற்படும்.
சத்யசௌசம் மன: சௌசம் சௌசமிந்த்ரியாணிநிக்ரஹ: I
சர்வபூதே தயா சௌசம் ஜலசௌசம் ச பஞ்சமம் II—கருட புராணம் 113- 37
சத்யசௌசம் –வாய்மையால் தூய்மை
மன: சௌசம் மனத்தால் தூய்மை
சௌசமிந்த்ரியாணிநிக்ரஹ: -இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதால் தூய்மை
சர்வபூதே தயா சௌசம் – அனைத்து உயிர்களிடமும் தயையுடன் இருப்பதால் தூய்மை
ஜலசௌசம் – நீரினால் தூய்மை
ச பஞ்சமம் –ஆகிய இந்த ஐந்தும் தூய்மை (தரும்)
————
நான்கை வைத்து ஒரு மனிதனை எடை போடு!
ஸ்ருத – அறிவு
சீலம் – ஒழுக்கம்
குலம் – குலம்
கர்மம் – செய்கை
ஆகிய நான்கையும் வைத்து ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை எடை போடுங்கள்!
த தா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே
ஸ்ருதேன ஷீலேன குலேன கர்மணா,–கருட புராணம், 112-3
த தா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே – நான்கை வைத்து மனிதனை பரிட்சை செய்தல் வேண்டும்.
ஸ்ருதேன ஷீலேன குலேன கர்மணா – அறிவு, ஒழுக்கம், குலம், செய்கை (ஆகியவற்றின் மூலம் நிர்ணயித்து விடலாம்).
———–
அஹிம்சையின் உயர்வைத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது:-
அஹிம்சா பரமோதர்மோஹ்யஹிம்சவைவ பரம் தப: I
அஹிம்சா பரம்ம் தானமித்யாஹுர்முனஸ்ய: சதா II-– பத்ம புராணம் , ஸ்வர்க்க காண்டம், 31ஆம் அத்தியாயம் 26ஆம் ஸ்லோகம்
அஹிம்சையே தர்மங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தர்மம். அஹிம்சையே தவங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தவம்.
அஹிம்சையே தானங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தானம். என்று முனிவர்கள் எப்போதும் சொல்லி வருகின்றனர்.
————
சப்த ரிஷிகள் யார் யார்?
கஸ்யபர், அத்ரி.வசிஷ்டர். விஸ்வாமித்திரர்,கௌதமர். ஜமதக்னி,பரத்வாஜர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.
ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம்,வாமன புராணம், கூர்ம புராணம்
மரீசி, அங்கீரஸர், அத்ரி, புலஸ்த்யர், புலகர், க்ரது, வசிஷ்டர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.
வாயு புராணம், அக்னி புராணம்
மரீசி ஆகிய ஏழு ரிஷிகளும் பிரம்மாவின் புத்திரர்கள் என சிவ புராணம் கூறுகிறது.
சப்த ரிஷிகளின் ஒரு வருடமானது தேவர்களின் ஏழு வருடங்களுக்குச் சமமாகும் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
சப்த ரிஷிகளின் பெயர்கள் மாறி மாறி கூறப்படுகிறதே என்று பலரும் சந்தேகம் கொள்வர்.
ஆனால் ஒவ்வொரு கல்பத்திலும் சப்தரிஷிகள் மாறுவர் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த சந்தேகம் எழாது.
———–
மெதுவாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!
சில விஷயங்களில் நிதானம் தேவை. மெதுவாகச் செய்ய வேண்டிய காரியங்களை
‘சனை: கர்தவ்யானி’ (மெதுவாகச் செய்யவேண்டியவை) என்று குறிப்பிடுவர்.
வித்யா – கல்வி கற்பது
அர்த்தா – செல்வம் சேகரிப்பது
பர்வதாரோஹணா – பர்வதம் அதாவது மலையில் ஏறுவது
தர்மா – தர்மம்
காமம் – காமம்
ஆக இந்து ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது
இதைக் கூறும் கருட புராண ஸ்லோகம் இது:
சனைர்வித்யா சனைர் அர்த்தா சனை: பர்வதமாருஹேத் I
சனை: காமம் ச தர்மம் ச பஞ்சதானி சனை: சனை: II–கருட புராணம் 109ஆம் அத்தியாயம் 46ஆம் ஸ்லோகம்
கல்வியில் மெதுவாக முன்னேறு. பொருள் சேகரிப்பதில் மெதுவாக முன்னேறு.
மலை மீது ஏறுவதை மெதுவாகச் செய். காமத்திலும், அதே போல தர்மம் செய்வதிலும் மெதுவாகச் செய்!
இந்த ஐந்து விஷயங்களையும் மெதுவாகவே செய்ய வேண்டும்.
———–
ஏழு சிரஞ்சீவிகள்
அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ்ச சப்தை தே சிரஞ்சீவன:—பத்ம புராணம்
அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணன், க்ருபர், பரசுராமர் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகள்.
————–
துதி, வாணி, வீரம், விசயம், சந்தானம், துணிவு, தனம்,
அதி தானியம், சவு பாக்கியம், போகம், அறிவு, அழகு,
புதிதாம் பெருமை, அறம் குலம் நோயின்மை, பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே” — (காளமேகப் புலவர்)
பொருள்:மதுரையில் எழுந்தருளிய இறைவா! புகழ் , கல்வி, வீரம், வெற்றி, பிள்ளைப் பேறு, துணிவு, செல்வம்,
மிகுந்த நெல் முதலிய தானியம், நலம், போக, அறிவு, அழகு, புதிது புதிதாக ஏற்படும் சிறப்புகள்,
தர்ம சிந்தனையுடைய நல்ல குடிப்பிறப்பு, நோயில்லாத வாழ்வு, நீண்ட வயது
ஆகிய பதினாறு பெரும் பேறுகளையும் தந்தருள்வாயாக!
————
ரிக் வேதம் கூறும் ஒளியின் வேகம்
சூரிய ஒளியின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சத்தி எண்பத்தாறாயிரம் மைல்கள் என்பதை
நவீன அறிவியல் சென்ற நூற்றாண்டில் தான் உறுதிப்படுத்தியது.
ஆனால் இந்த வேகத்தை உலகின் ஆதி நூலான ரிக் வேத துதிப்பாடலில் (1:50) அப்படியே காண்கிறோம்.
“தரணிர் விஷ்வதர்ஷோ ஜ்யோதிஷ்க்ரதசி சூர்ய விஷ்வமா பாசிரோசணம்” என்ற இந்த மந்திரத்தின் பொருள்:
“வேகமாகவும் அழகாகவும் இருக்கும் ஓ சூரியனே, ஒளியை உருவாக்குபவனே,
அனைத்துலகையும் பிரகாசிக்க வைப்பவனே” என்பதாகும்.
இதற்கு புக்கர் ஸ்தாபித்த விஜயநகர சாம்ராஜ்யத்தில் அமைச்சராக இருந்த வேத விற்பன்னரான சாயனர்
உரை எழுதுகையில்,” ததா ச ஸ்மர்யதே யஞ்னானாம் ஸஹஸ்ரே த்வே த்வே சதே த்வே ச யோஜனே
ஏகேன நிமிஷார்தேன க்ரமமான்” என்று எழுதியுள்ளார்.
இதன் பொருள் : சூரியன் அரை நிமிஷ நேரத்தில் 2202 யோஜனை தூரம் செல்கிறான் என்பதை
ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
நிமிஷம் என்பது இமைக்கும் பொழுது ஆகும். அதில் பாதி நேரத்தில் 2202 யோஜனை தூரத்தை ஒளி கடக்கிறது!
சாந்தி பர்வத்தில் நிமிஷம் முதற் கொண்டு பல்வேறு கால அளவுகளைப் பற்றிய விளக்கம் வருகிறது.
இதன் படி கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு நிமிஷம் என்பது இன்றைய கால அளவீட்டின் படி 0.2112 வினாடிகள் ஆகும்.
அரை நிமிஷம் என்பது 0.1056 வினாடிகள் ஆகும்.
இனி யோஜனை என்ற தூரத்தைக் குறிக்கும் அளவு பற்றி விஷ்ணு புராணம் ஆறாவது அத்தியாயத்தில்
தெளிவாக விளக்கம் தரப்படுகிறது.
பரமாணுவிலிருந்து அளவுகள் ஆரம்பித்து யோஜனையில் முடிகிறது இந்த விளக்கம்.
இதன் படி ஒரு யோஜனை என்பது இன்றைய தூரத்தை அளக்கும் அளவீட்டின் படி 9.09 மைல்கள் ஆகும்.
இதை வைத்து இப்போது ஒளியின் வேகத்தைக் கணக்கிடலாம்
0.1056 வினாடியில் சூரிய ஒளி 9.09 மைல்கள் பயணப்படுகிறது.
அப்படியானால் ஒரு வினாடியில் 1,89,547 மைல்கள் பயணப்படுகிறது என்று ஆகிறது!
இது 1,86,000 மைல்கள் என்பதுடன் ஒப்பிட்டால் வரும் சிறிது வேறுபாடானது நாம் வேத கால அளவுகளைச்
சற்று மாற்றிக் கணக்கிடுவதானாலேயே.
வேத விற்பன்னர்களின் ஆய்வுகள்
இந்த சாயனரின் உரை 1890ஆம் ஆண்டிலேயே மாக்ஸ்முல்லரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதையும்
சாயனரின் கி.பி.1395 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட எழுத்துப் பிரதி இன்றும் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டும்
வேத அறிஞர் சுபாஷ் கக், இந்தக் காரணங்களால், இதை ‘’ஃப்ராடு ‘’ என்று சொல்ல வழியே இல்லை என்று நிரூபிக்கிறார்.
வேதங்களின் முழு அர்த்தமும் தெரிய வரும் போது பொன்னான உலகம் பிறக்கும் என்று
மஹரிஷி அரவிந்தர் அருளியுள்ளதை இங்கு நாம் நினைவு கூரலாம்.
வேத விஞ்ஞானத்தைத் துல்லியமாக அறியும் பணியில் ஏராளமான அறிஞர்கள் இன்று ஈடுபட்டு
ஆய்வு முடிவுகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர்,
இதைப் படித்து விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் பிரமிக்கின்றனர்.
நவகிரக நாயகனான சூரியனைப் பற்றிய வேத முழக்கத்தின் ஜய கோஷம் நம்மை பரவசப்படுத்துகிறது, இல்லையா!
———-
தமிழுக்குத் தான் எத்தனை பெயர்கள்?
தெய்வத் தமிழ், செந்தமிழ், முத்தமிழ், கன்னித் தமிழ், தென் தமிழ், தேன் தமிழ், பழந்தமிழ்,
ஞானத் தமிழ், திருநெறிய தமிழ், அமுதத் தமிழ், அருந்தமிழ், தண்டமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் இசைத் தமிழ்,
தன்னேரிலாத தமிழ், இயற்றமிழ், தீந்தமிழ், இருந்தமிழ், நாடகத் தமிழ், பசுந்தமிழ், கொழிதமிழ், பாற்றமிழ்,
சொற்றமிழ், பைந்தமிழ் – இப்படி எத்தனையோ பெயர்களை உடையது நம் தாய்த் தமிழ்.
ஆயினுமிவைகளில் இன்று பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் பாடல்கள் தெய்வத் தமிழ் பாடல்களே!
———-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply