நியாயங்கள் —

அஜாதபுத்ர நாமகரண நியாயம்
அஜாதபுத்ர – பிறக்காத பிள்ளை நாமகரணம் – பெயர் சூட்டல்
பிறக்காத ஒரு பிள்ளைக்குப் பெயர் வைக்கும் நியாயம் இது.
பயனற்ற முட்டாள்தனமான காரியம் ஒன்றைச் செய்பவனைச் சுட்டிக் காட்டப் பயன்படும் நியாயம் இது.

————

அந்த தர்பண நியாயம்
அந்த- அந்தகன்; தர்பணம் – கண்ணாடி
குருடனும் அவனது கண்ணாடியும் என்பது இந்த நியாயம்.
பயனற்ற ஒரு பொருளை ஒருவன் வைத்திருக்கும்போது இந்த நியாயம் வழங்கப்படுகிறது.

——–

உஷ்ட்ர லகுட நியாயம்
ஒட்டகமும் தடியும் என்னும் நியாயம் இது.
ஒட்டகத்தின் முதுகில் சுமந்து செல்லப்படும் தடியாலேயே அது அடிக்கப்படுகிறது.
அதேபோல ஒரு முட்டாள் அவனது முட்டாள்தனமான செய்கையாலேயே துன்பப்படுவான் என்பதை
இந்த நியாயம் சுட்டிக் காட்டும்.

————

சிந்தாமணிம் பரித்யஜ்ய காசமணிக்ரஹண நியாயம்
சிந்தாமணியை தியாகம் செய்து விட்டு செயற்கை கண்ணாடிக் கல்லை வாங்கினாற் போல
என்னும் நியாயம் இது.
எவ்வளவு அரிய மணி சிந்தாமணிக் கல்! அதைக் கொடுத்து விட்டு சாதாரண கண்ணாடியால் ஆன
ஒரு செயற்கைக் கல்லை ஒருவன் வாங்கினால் அவனை என்னவென்று சொல்வது!
வெறும் பளபளப்பை நம்பி கண்ணாடிக் கல்லை சிந்தாமணிக்குப் பதில் பெறுவதைப் போல
முட்டாளான ஒருவன் அரும் மதிப்பை உணராது மதிப்பற்ற ஒன்றை நாடுவதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது பழமொழி.
All that glitters is not gold என்பது இதே கருத்தைச் சொல்லும் ஆங்கிலப் பழமொழி.

பிரம்ம ஞானம் அடைவதை விட்டு விட்டு சாதாரண உலகியல் புலன் இன்பங்களில் ஒருவன் மூழ்குவதை
இந்த நியாயத்தைச் சுட்டிக் காட்டி ரகுநாதர் விளக்குகிறார்.
ரகுநாத சிரோமணி -பெரும் அறிஞரான இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நவத்வீபத்தில் பிறந்தவர்.
இவரது காலம் கி.பி 1477-1547).

—————-

தித்திப நியாயம்
தித்திப நியாயம் என வழங்கப்படும் இது தித்திப பறவை பற்றிய அற்புத நியாயம்.
இந்த நியாயம் எழுந்ததற்கு அடிப்படையான கதை ஒன்று உண்டு.
தித்திபம் என்னும் பறவை ஒன்று கடற்கரை ஓரத்தில் கூடு ஒன்று கட்டி முட்டை ஒன்றை இட்டுக் காத்து வந்தது.
ஒரு நாள் கடற்கரை பொங்கி எழ, அந்தக் கூடு அலைகளால் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் மனம் கலங்கிய பறவை சமுத்திரத்தின் மீது போர் தொடுத்தது.
தன் மூக்கால் நீரை எடுத்ததோடு தன் சிறகுகளை கடலில் நனைத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து கரையில் உதறியது.
இப்படியே மீண்டும் மீண்டும் அது செய்ய ஆரம்பித்தது. சமுத்திரத்தை வற்ற வைக்கும் தன் முயற்சியை அது கைவிடவே இல்லை!
பறவையின் உறுதியைக் கண்ட சமுத்திர ராஜன் வியந்து பறவையிடம் அதன் முட்டையைத் திருப்பித் தந்தான்.
எவ்வளவு தான் கஷ்டம் ஒருவனுக்கு இருந்த போதிலும் மனதில் உறுதி இருந்தால்
அது கரைந்து வெற்றி கிடைத்து விடும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

விடாமுயற்சி வெற்றி தரும் என்பது பழமொழி.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். –திருக்குறள் 619
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் —- திருக்குறள் 611
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் –
செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார்

———-

தக்த தஹன நியாயம்
தக்த – எரிபட்டதை; தஹன – எரிப்பது
எரித்ததை எரிப்பது என்னும் இந்த நியாயம் தீயில் எரிபட்டுப் போன ஒரு பொருளை தீ மீண்டும் எரிக்காது
என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. முடியாத ஒரு காரியத்தையோ அல்லது பயனற்ற ஒரு காரியத்தையோ
வீணாக ஒருவன் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.

————

அந்த பரம்பர நியாயம்
அந்த(கன்) – குருடன்
குருடனைக் குருடன் பின்பற்றும் இந்த நியாயம் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஒன்று.
குருட்டுத்தனமாக, அறிவற்று, சுய சிந்தனையற்று ஒருவனைப் பின்பற்றும்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
ஒரு குருடனை வழிகாட்டியாகக் கொண்டு ஒருவன் சென்றால் அவன் விழுவதோடு அடுத்தவனையும் கிணற்றில் தள்ளி விடுவான்.
நல்ல குருவினைப் பின்பற்றாமல் தீய ஒருவனைக் குருவாகப் பாவித்து ஒருவன் பின்பற்றுவது குருடனைக் குருடன் பின்பற்றியது போல ஆகும்

———-

அஷ்ம லோஷ்ட நியாயம்
அஷ்ம- கல்; லோஷ்ட – மண்ணாங்கட்டி,
கல்லும் மண்ணாங்கட்டியும் என்னும் நியாயம் இது. மண்ணாங்கட்டி ஒன்று பஞ்சை விடக் கெட்டியானது தான்;
ஆனால் அதைக் கல்லுடன் ஒப்பிட்டால் அது மிகவும் மிருதுவானது தானே! உடைத்து உதிரக் கூடிய ஒன்று அது!
அது போலவே ஒரு மனிதன் அவனது கீழ் வேலை பார்ப்போரை ஒப்பிட்டால் மிகவும் முக்கியமானவன் தான்!
ஆனால் அதே சமயம் அவனை விட மேல் நிலையில் உள்ளோரை ஒப்பிடுகையில் அவன் சிறிய நிலையில் உள்ளவன் தான்!
ஒரு விஷயத்தை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில் எதை எத்துடன் ஒப்பிடுகிறோம் என்பதில் ஏற்படும்
முக்கியத்துவத்தை இந்த நியாயம் விளக்குகிறது.

————

அஹி நிர்-ல்வயனி நியாயம்
பாம்பு தன் சட்டையை உரித்து விடுவது பற்றிய நியாயம் இது.
எப்படி ஒரு பாம்பானது தன் சட்டையை உரித்து விட்டவுடன், அதை இனிமேல் தன் உடலில் ஒரு பகுதியாக்க்
கருதுவதில்லையோ அதே போல ஒருவன் உண்மையான வித்யாவை ( மெய் கல்வி) அடைந்தவுடன் –
தன்னை ஆன்மா என்று அறிந்தவுடன் -உடலை இனியும் தனதாக எண்ண மாட்டான்.
உயர்ந்த ஆன்மீகக் கருத்தைச் சொல்லும் நியாயம் இது.

———–

அஹி குண்டல நியாயம்
பாம்பு சுருண்டு படுத்திருக்கும்போது அதன் சுருள்களைச் சொல்லும் நியாயம் இது.
எப்படி சுருண்டு படுப்பது பாம்பின் இயற்கையோ (அதன் சுருள்கள் அதன் இயற்கையோ) அதே போல
கெட்டவன் ஒருவனின் வழிகளும் அவனுடன் இயற்கையாக இருக்கும் ஒன்றே!
இயல்பாகத் தீயவரிடம் அமைந்திருக்கும் கெட்ட செயல்களையும் தீய எண்ணங்களையும் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

————

தேஹலி தீப நியாயம்
வீட்டு வாயிற்படியில் வைக்கும் தீப நியாயம் காலம் காலமாக வழங்கி வரப்படும் ஒரு நியாயம்.
வீட்டு வாயிற்படியில் வைக்கும் விளக்கானது வீட்டிற்கு உள்ளேயும் வெளிச்சம் தரும்.
வீட்டை நோக்கி வருவோருக்கும் வெளியே வெளிச்சம் தரும். அதனால் ஒரே சமயத்தில் இரு நன்மைகள்!
ஒரே சமயத்தில் இரு நன்மைகளைத் தரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூற இந்த நியாயம் பயன்படுகிறது.

ராமநாம மணி தீப தரு, ஜிஹ தேஹரி த்வாரா I
துளஸி பிடாரா பஹேரிஹி ஜா சாஹஸி உஜியாரா II–துளஸிதாஸரின் தோஹா-

வீட்டு வாயிலில் வைக்கப்படும் விளக்கு போல நாக்கில் வைக்கப்படும் ராம நாமம்
உள்ளேயும் வெளியேயும் நலம் தரும். ஆத்மாவுக்கும் நலம். வெளி உலகிலும் நலம் தரும்.

இந்த நியாயமே இன்னும் இரு நியாயங்களாகப் பெயரிடப்பட்டு இப்படிப் பரிமளிக்கிறது.
அந்தர்தீபிகா நியாயம்
மத்யதீப நியாயம்

————

அந்த கோ லாங்கூல நியாயம்
அந்த: – குருடன்’; கோ-காளை; லாங்கூலம் – வால்
ஒரு குருடன் பார்த்த காளையின் வால் என்ற நியாயம் இது.
இது எப்படி எழுந்த து என்பதை விளக்கும் கதை இது.முன்னொரு காலத்தில் ஒரு குருடன் தனது கிராமத்திலிருந்து
கிளம்பி அருகில் உள்ள ஒரு நகருக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் சென்று கொண்டிருக்கும் போது மற்றவர்கள்
படும் கஷ்ட்த்தைக் கண்டு மகிழும் ஒரு கொடூரமான ஆசாமியைச் சந்தித்தான்.
அந்த ஆசாமி குருடன் அடுத்துள்ள நகருக்குச் சென்று நிறைய தானம் பெறலாம் என்ற அவனுடைய எண்ணத்தை அறிகிறான்.
உடனே அவனது சுபாவப்படி அவனிடம் அவனுக்கு தகுந்த ஒரு வழிகாட்டியைக் காண்பிப்பதாகக் கூறுகிறான்.
அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு காளையின் வாலை அவன் கையில் தந்து,
“இதோ பார்! இதைப் பிடித்துக் கொண்டு செல்! நகரம் வந்து சேரும் என்கிறான்.
குருடனும் அவன் சொற்களை நம்பி காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறான்.
பிறகு என்ன நடந்தது என்பதை யாரும் விளக்கவே வேண்டாம்! வெகுண்ட காளை அவனை முட்புதருக்குள் தள்ளி விட்டது!

நம்பக்கூடாத ஒருவனை நம்பிக் கெடுவதை இந்த நியாயம் விளக்குகிறது.
இதை ஆதி சங்கரர் வேதாந்த சூத்திரத்தில் போலி குருவை அண்டி சரியான வழிகாட்டுதலின்றிக் கெடும்
சீடனைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்துகிறார்.

————-

கூப மண்டூக நியாயம்
கூபம் – கிணறு மண்டூகம் – தவளை
கிணற்றுத் தவளை நியாயம் என்று அழைக்கப்படும் இது பெரும்பாலும் உலக வழக்கில்
அன்றாடம் வழங்கப்பட்டு வரும் ஒரு நியாயம்.
சிறிதே படித்து கொஞ்சம் அனுபவமே கொண்டிருக்கும் ஒருவன் பரந்த உலக அனுபவத்தையும் ஆழ்ந்த அறிவையும்
பற்றித் தெரிந்திருக்க முடியாது என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.
அவன் வெறும் கிணற்றுத் தவளை என்பது உலக வழக்கு!

———

கண்டசாமீகர நியாயம்
கண்டசாமீகரம் – கழுத்தில் அணியும் நெக்லஸ்
கழுத்தில் நெக்லஸை அணிந்து கொண்டு ஊர் முழுவதும் தேடிய கதை என்று சொல்லப்படும் நியாயம் இது.
ஒரு பெண்மணி தன் கழுத்தில் நெக்லஸை அணிந்து கொண்டிருந்தாள்.
ஆனால் தன் நெக்லஸைக் காணோம் என்று தேட ஆரம்பித்தாள். இன்னொருத்தியிடம் அவள் என் நெக்லஸ் எங்கே
என்று கேட்ட போது அந்தப் பெண்மணி, உங்கள் கழுத்திலேயே அதை அணிந்திருக்கிறீர்களே,
கழுத்திலே பாருங்கள் என்று பதில் சொன்ன போது அவள் நாணினாள்.
இந்த நியாயம் வேறு எங்கேயோ ஒன்றைத் தேடப் போகும் ஒருவன் அது தன்னிடமே இருப்பதை அறியாமல்
இருக்கும் போது சுட்டிக் காட்டப்படும் நியாயம்.

———–

கரவிந்யஸ்த பில்வ நியாயம்

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்று அறியப்படும் நியாயம் இது.
கரத்தில் உள்ள வில்வப்பழம் போல என என்று வழங்கப்படுகிறது.

——–

கும்ப தான்ய நியாயம்
தானியம் நிரம்பி உள்ள ஜாடி எனப்படும் நியாயம் இது. ஒரு பெரிய குதிர் முழுவதும் தானியம் வைத்திருக்கும்
ஒருவனுக்கு தானியம் வழங்கி என்ன பயன்?
தானம் செய்வதை அது தேவையாய் உள்ள ஏழைகளுக்குச் செய்ய வேண்டும். பணக்காரனுக்கு தானம் செய்து பயன் என்ன?
ஆங்கிலத்தில் TO SEND COAL TO NEW CASTLE என்று வழங்கப்படுவதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

———

காஷகுஷாவலம்பன நியாயம்
வைக்கோல்போரைப் பிடித்த நியாயம்.
ஒரு கப்பல் உடைந்து விடவே அதில் மூழ்க ஆரம்பித்த போது அதில் இருக்கும் ஒருவன் தன் உயிரைக் காக்க
எதையேனும் பிடிக்க முயல்கிறான். அவன் கையில் ஒரு சிறு வைக்கோல்போரின் பகுதி தான் கிடைக்கிறது.
இருந்தாலும் அதைப் பிடித்துக் கொள்கிறான். எப்படியேனும் தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதே
அப்போதைய முனைப்பாக இருக்கும் அல்லவா! அது பயனற்ற வீணான முயற்சி என்றாலும் கூட அதைச் செய்கிறான் அவன்.
அது போல பயனற்ற முயற்சி என்று தெரிந்தும் கூட ஒரு விவாதத்தில் சிறிய விஷயத்தைப் பிடித்துக் கொண்டு
தனது தரப்பு வாதத்தை முன் வைக்க முயலும் ஒருவனைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது.

————-

கூபகானக நியாயம்
கிணறு வெட்டும் நியாயம் இது.
ஒரு கிணறை வெட்டும் போது முதலில் வெட்டுபவனுடைய உடலில் சேறு, சகதி ஆகியவை படியும்.
ஆனால் நேரம் செல்லச் செல்ல தண்ணீர் பீறிட்டு எழும் போது அந்த சேறும் சகதியும் அதிலிருந்து வரும்
தண்ணீராலேயே கழுவப்பட்டு அவன் சுத்தமாவது போல ஒருவன் முதலில் செய்யும் பாவங்கள் எல்லாம்
பின்னால் அவன் செய்யும் புண்ய காரியங்கள் மூலம் கழுவப்பட்டு அவன் பாவமற்றவனாகிறான்.

———–

அந்த கஜ நியாயம்
அந்த: – குருடன் ; கஜ – யானை
குருடன் யானையைப் பார்த்த கதை என்று பரவலாக அறியப்படும் நியாயம் இது.
சில குருடர்கள் யானை எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பினர். ஒருவன் துதிக்கையைத் தொட,
இன்னொருவன் யானையின் காதைத் தொட, இன்னொருவன் யானையின் காலைத் தொட
அடுத்தவன் யானையின் வாலைத் தொட்டான்.பின்னர் தாங்கள் கண்ட்தை ஒவ்வொருவரும் விவரிக்க ஆரம்பித்தனர்.
முதலாமவன் யானை ஒரு கொழுத்த பாம்பு போல இருக்கிறது என்கிறான்.
அடுத்தவன் அது ஒரு முறம் போல இருக்கிறது என்கிறான். அடுத்தவன் அது தூணைப் போல இருக்கிறது என்கிறான்
வாலைத் தொட்டவனோ அது ஒரு கயிறு போல இருக்கிறது என்கிறான். ஒருவர் சொன்னதை இன்னொருவர் மறுக்க
பெரிய சண்டையே வருகிறது. தான் சொன்னது தான் சரி என்று ஒவ்வொருவனும் நம்பியதால் ஏற்பட்ட குழப்பம் இது.

இந்த நியாயம் ஒரு விஷயத்தின் ஒரு பகுதியையே ஒருவன் பார்க்கும் போது ஏற்படும் தவறை விளக்குகிறது.
ஒரு பக்கம் சார்புடைய, சரி இல்லாத, ஒரு பக்க பார்வையைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுகிறது.

————

அந்த சடக நியாயம்
அந்த: – குருடன் சடக – குருவி
இது ஒரு குருடன் குருவியைப் பிடித்ததைச் சொல்கிறது. குருடனால் குருவியை எப்படிப் பிடிக்க முடியும்?
திடீரென்று எதிர்பாராமல் தற்செயலாக நிகழ்ந்தவற்றையும் தெய்வீகத்தால் நிகழும் தற்செயல் ஒற்றுமைகளையும்
இந்த நியாயம் விளக்குகிறது. தற்செயலாக ஒருவன் ஒரு அரிய காரியத்தைச் செய்து விட்டால்
அது அவனது சாமர்த்தியத்தினால் அல்ல; தெய்வீகத்தால் நிகழ்ந்த ஒன்று.

—–

அரண்ய ரோதன நியாயம்
அரண்யம் – காடு ரோதனம் – அழுதல்
காட்டில் உரக்க அழுவதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.
ஒருவன் சிலரிடமிருந்து உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். அதுவோ வரவில்லை.
அப்போது அவன் மனநிலையைச் சுட்டிக் காட்டுகிறது இது.
காட்டில் அழுது என்ன பிரயோஜனம்? உதவியோ வரப்போவதில்லை!
அந்த நிலையை சுட்டிக் காட்ட இந்த நியாயம் பிரயோகிக்கப்படும்.

———-

அசோக வனிகா நியாயம்
அசோக வன நியாயம் என அழைக்கப்படும் நியாயம் இது.
சீதையை அசோகவனத்தில் ராவணன் சிறை வைக்கிறான். சீதையை அசோகவனத்தில் ஏன் வைக்க வேண்டும்.
வேறு இடங்கள் இல்லையா? எத்தனையோ இடங்கள் இருக்கிறதே, லங்கையில்!

ஒரு விஷயத்தைச் செய்ய ஏராளமான வழிகள் இருக்கும் போது அத்தனை வழிகளும் நல்ல வழிகளாகவே
இருக்கும் போது ஏதோ ஒரு குறிப்பிட்ட வழி சிறந்தது என்றோ உகந்தது என்றோ சொல்ல முடியாமல்
இருக்கும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.

——–

அஜா க்ருபானக நியாயம்
அஜ – ஆடு க்ருபானகம் – கூரிய கத்தி
ஆடும் கூரிய கத்தியும் என்ற இந்த நியாயம் ஆபத்தான விஷயங்களில் ஈடுபடக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்ட எழுந்த ஒன்று.
ஆடு ஒன்று கூரிய கத்தி முனையில் தன் கழுத்தை வைத்துச் சொறிந்து கொள்கிறது.
இதன் விளைவாக கழுத்து அறுபட்டு இறக்கிறது.
இதே போல ஆபத்தான விஷயங்களில் தலையைக் கொடுத்து அழிந்து போவதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது.
ஆபத்தான விஷயங்களில் வலிய ஈடுபடுதல் கூடாது.

———–

துலோன்னமன நியாயம்

தராசுத் தட்டை அடிப்படையாக க் கொண்டு எழுந்த நியாயம் இது.
ஒரு தராசின் இரு தட்டுகளில் ஒன்று கீழே இறங்கும் போது மற்றொரு தட்டு மேலே எழுகிறது.
தராசு இரண்டும் சமமாக இருக்க வேண்டும் எனில் அதில் உள்ளவையும் சமமாக இருக்க வேண்டும்.
அது போல நம்முடைய முன்னேற்றமும் கூட சமமாக சீராக அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டும்.
ஒன்றில் மட்டும் இருந்தால் இன்னொரு தட்டு உயரத்தானே செய்யும்! ஒன்றில் மட்டும் உயர்ந்திருந்தால் போதாது,
அனைத்திலும் சீரான முன்னேற்றம் வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

————–

காகாக்ஷிகோலக நியாயம்
காக்கைக்கு ஒரு கண் தான் உண்டு. ஆனால் அது கண்ணை ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை
தேவைப்பட்ட போது சுழற்றிப் பார்க்கும். இதே போல ஒரு சொல்லோ அல்லது சொற்றொடரோ ஒரு வாக்கியத்தில்
ஒரு முறைதான் பிரயோகிக்கப்பட்ட போதிலும் கூட அது தேவைப்பட்டால் இரண்டு காரணங்களுக்காக உபயோகிக்கப்படலாம்

——————

காரண குண ப்ரக்ரம நியாயம்
காரண காரிய விளைவைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.
ஒரு காரணத்திற்குரிய சில அம்சங்கள் அதன் விளைவில் ஏற்படுவதை இது சுட்டிக் காட்டுகிறது.

——-

காக தந்த பரீக்ஷா நியாயம்
ஒரு காகத்தின் பல்லைப் பரிசோதிப்பது பற்றிய நியாயம் இது. பயன்படாத ஒரு விஷயத்தை ஆராய்ந்தால்
அல்லது செய்தால் யாருக்கு என்ன லாபம்!
அதைச் செய்ய முயலும்போது இந்த காக தந்த பரிக்ஷா நியாயம் சுட்டிக் காட்டப் படுகிறது.

———-

இக்ஷு ரஸ நியாயம்–(இக்ஷு ரஸம் – கரும்புச் சாறு)
கரும்புச் சாறை அடிப்படையாகக் கொண்ட நியாயம் இது. கரும்பைச் சாறை எடுப்பதற்காக கரும்பை நசுக்கி
ஒரு உருளையில் விட்டி கடைசிச் சொட்டு சாறு வரை எடுத்து விடுகிறோம்.
அது போல சில சமயங்களில் சில விஷயங்களில் ஒரு பலனைப் பெற கடுமையான திடமான வலுவான
நடவடிக்கையை எடுத்தால் தான் எண்ணிய பலன் கிடைக்கும்.

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading