ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை வைபவம் –
திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.
ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்
வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்
தனியன்
துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே
ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும்
ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “நலந்திகழ் நாராயண தாஸர் என்ற விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.
மற்றொரு தனியன்
ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா
ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதாரவிந்தங்களில் மறைப்பொருள் அனைத்தையும் பெற்றவரும்
அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவரும்,
ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும்
ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.
ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லி தாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்தது போல்,
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து
ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.
இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய்மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும்
அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.
ஸ்ரீமத் பகவத் கீதையில் அமைந்துள்ள ஸ்லோகங்களுள் சரம ஸ்லோகம் சிறப்பெய்தினது போல,
ஸ்ரீ வசனபூஷணத்தில் அமைந்துள்ள ப்ரகரணங்களுள் சரம பர்வ நிஷ்டா ப்ரகரணம் சிறப்புற்றது.
ஆகையால் இந்த ப்ரகரணத்தில் அருளிச்செய்யப்பட்ட அர்த்த விசேஷங்களை எல்லாம் திரட்டி
ஒரு பிரபந்தம் அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டு திருவாசிரியம் போலே
ஏழு பாசுரம் கொண்ட ஸப்தகாதை என்னும் நூலை அருளிச்செய்தார் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை என்று பெரியோர் பணிப்பர்.
ஸ்ரீ வசனபூஷண ரஹஸ்ய அர்த்தத்தை ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவருடைய திருவரசு திருவனந்தபுரம் எம்பெருமானின் கர்பக்ரஹம் (அநந்த பத்மநாப பெருமாள் திருவடி).
——————-
பிள்ளைலோகாசாரியாரின் சிஷ்யர் ஒருவரின் பெயர் ’விளாஞ்சோலைப் பிள்ளை’.
விளாம் சோலை நிறைந்த தோட்டத்தில் வசித்து வந்ததால் இவருக்கு இந்த பெயர்.
இவர் கேரளாவில் திருவனந்தபுரம் பக்கம் ஆறனூர் என்ற கிராமத்தில் ஈழவர் என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்.
தாழ்ந்த குலம் என்பதால் பத்மனாப பெருமாளை சேவிக்க ( திருப்பாணாழ்வார் காவிரிக்கரையில் இருந்தே சேவித்தது போல )
இவர் கோயிலுக்குள் செல்லாமல், விளா மரங்கள் நிறைந்த சோலையில் இருந்த ஒரு உயர்ந்த தென்னை மரம் மீது தினமும் ஏறி
அங்கிருந்து அனந்தபத்மனாபனின் விமானம் தெரிய அதை தரிசனம் செய்வது வழக்கம்.
ஸ்ரீவைஷ்ணவ நெறியை ஏற்க குலப்பிறப்பு தடை இல்லை. இவர் திருவரங்கம் வந்து பிள்ளைலோகாசாரியாரிடம் அடி பணிந்தார்.
இவருக்குப் பிள்ளைலோகாசாரியார் ’நலம் திகழ் நாராயண தாஸர்’ என்ற திருநாமத்தை சூட்டினார்.
‘விளாம் சோலை பிள்ளை’ சேர தேசத்தவர்(கேரளா).
குலசேகர ஆழ்வாரும் அதே தேசம் அதனால் பெருமாள் திருமொழியில் வரும் “நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே” என்ற
பாசுர வரிகளில் வரும் பெயரையே அவருக்குச் சூட்டினார்
நலம் திகழ் நாராயண தாஸர் பிள்ளைலோகாசாரியாரின் சிஷ்யராக அவருடைய காலஷேப கோஷ்டியில் இடம்பெற்று,
அவர் உபதேசித்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு இவர் ஒருவரே அதிகாரியாகவும் ஆனார்.
பிள்ளைலோகாசாரியார் துலுக்க படையிடமிருந்து நம்பெருமாளைக் காத்து ஜ்யோதிஷ்குடிக்கு சென்று
அங்கே பரமபதிக்கும் முன் ஸ்ரீவசன பூஷணத்தை திருவாய்மொழி பிள்ளைக்கு பிற்காலத்தில் உபதேசிக்குமாறு பணித்தார்.
ஆசாரியரின் ஆசையை நிறைவேற்றுவது தானே சிஷ்யரின் கடமை. மீண்டும் சேர நாட்டுக்கு சென்று
திருவாய்மொழி பிள்ளையின் வருகைக்கு பல காலம் அங்கே விளாம் சோலையில் காத்துக்கொண்டு இருந்தார்.
பல காலம் கழித்து திருவாய்மொழிப் பிள்ளை திருவனந்தபுரத்துக்கு அனந்தபத்மனாபனை சேவித்து,
விளாஞ்சோலைப் பிள்ளையின் திருவடி தொழ அவரை தேடிக்கொண்டு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை வியக்கச் செய்தது.
விளாஞ்சோலை பிள்ளை தன் ஆசாரியரான பிள்ளைலோகாசாரியாரை தன் மனத்தில் நிறுத்தி தியானித்துக்கொண்டு இருக்க,
அவருடைய திருமேனியில் சிலந்திகள் வலை பின்னி சமாதி நிலையில் காட்சி கொடுத்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை அவர் திருவடிகளில் தண்டம் சமர்பித்து கைகூப்பி எதிரே நின்றார்.
விளாஞ்சோலைப் பிள்ளை கண்களை திறந்த போது அவருடைய கடாக்ஷத்துடன் மனதில் வீற்றியிருந்த
பிள்ளை லோகாசாரியார் கடாக்ஷமும் திருவாய்மொழிப் பிள்ளைக்கு கிடைத்தது.
வெகுகாலமாக திருவாய்மொழிப் பிள்ளையின் வருகைக்காக காத்துக்கொண்டு விளாஞ்சோலை பிள்ளை உள்ளம் பூரித்து
அவருக்கு ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்த விசேஷங்களை உபதேசித்து அருளினார்.
ஞான பரிமாற்றத்துக்கு குலம் தடை இல்லை என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்
திருமாலை “கொடுமின் கொண்மின்” என்ற பாசுர விளக்கம் அங்கே நடந்தேறியது.
இராமானுச நூற்றந்தாதியில் அமுதனார் கூறும் வஞ்ச முக்குறும்பு பிராமணர்களுக்கு ஒரு இடராக இருக்கிறது.
இவை சிறிதும் இல்லாத தம்மை தாழ்ந்தவர்களாக நினைத்துக்கொள்பவர்கள் உயர்ந்த பிறப்பினர் என்பதற்கு
ஆழ்வார்களில் திருப்பாணாழ்வாரும், ஆசாரியர்களில் விளாஞ்சோலைப் பிள்ளை, மாறநேரி நம்பியும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
விளாஞ்சோலைப் பிள்ளையிடம் உபதேசம் பெற்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டு திருவாய்மொழிப் பிள்ளை
ஆழ்வார் திருநகரியை அடைந்து தன் பிள்ளைலோகாசாரியாரின் ஆசைகளை நிறைவேற்றினார்.
அதே சமயம் திருவனந்தபுரத்தில் ஒர் அதிசயம் நடந்தது. ஒரு நாள் நம்பூதிரிமார்கள் அனந்தபத்மநாபனுக்கு திருவாராதனம்
செய்து கொண்டு இருக்க, விளாஞ்சோலைப் பிள்ளை கோபுரம் வாசல் வழியாக உள்ளே நுழைந்து
பெருமாள் கர்பகிரஹத்தில் இருக்கும் மூன்று வாசலில், திருவடிக்கு முன் இருக்கும் வாசல் பக்கம் வந்து நின்றார்.
இதைக் கண்ட நம்பூதிரிகள், ஒரு தாழ்ந்த குலத்தவர் கோயில் உள்ளே வந்துவிட்டார் என்று அந்த கால வழக்கப்படி
சந்நிதி கதவுகளை தாழிட்டு கோவிலை பூட்டிவிட்டு வெளியே வந்தார்கள்.
கோயில் வாசலில் விளாஞ்சோலைப் பிள்ளை சிஷ்யர்கள் சிலர் காத்துக்கொண்டு இருந்தார்கள்.
விசாரித்ததில் விளாஞ்சோலைப் பிள்ளை பிள்ளைலோகாசாரியாரின் திருவடியில் சேர்ந்துவிட்டார்.
அவருடைய சரம திருமேனிக்கு கோயில் மாலை திருப்பரியட்டம் வேண்டி நின்று கொண்டு இருந்தார்கள்.
இதைக் கண்ட நம்பூதிரிகளுக்கு வியப்பு. சற்றுமுன் கோயிலில் உள்ளே நடந்த அதிசயத்தை விவரித்தார்கள்.
திருவரங்கம் பெரியபெருமாள் திருவடியில் திருப்பாணாழ்வார் சேர்ந்தது போல,
அனந்தபத்மநாபனின் திருவடியில் ‘நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவரே!’ என்ற குலசேகரரின் திருவாக்கு
ஆசாரியரான பிள்ளைலோகாசாரியாரின் அருளால் நிறைவேறியது!
இந்த செய்தியை கேள்விப்பட்ட திருவாய்மொழிப் பிள்ளை விளாஞ்சோலைப் பிள்ளைக்கு சரம கைங்கரியங்களை
பெரியநம்பி எப்படி மாறநேரி நம்பிக்கு நிறைவேற்றினாரோ அது போல நிறைவேற்றினார்.
———-
மாதங்களிலே முதல் மாதம் எது என்று யாரையேனும் கேட்டால் – சித்திரை மாதம் என்று கூறுவார்கள்.
அதே போன்று நமது பரம வைதிக மதமான ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திலே முதலாவது மாதமாக
பூருவர்களால் கொண்டாடப்பட்டது ஐப்பசி மாதமாகும்.
ஸ்ரீவைஷ்ணவ மதத்திற்கு புத்துயிர் ஊட்டிய முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் அவதரித்த தினம் ஐப்பசித் திருவோணம்.
அதே போன்று சத்சம்ப்ரதாய இரகசிய அர்த்தங்களை சம்சாரி சேதனர்களுக்கு அனுக்ருஹிக்க
திருவவதாரம் பண்ணின சுவாமி பிள்ளை உலகாரியனின் திருநக்ஷத்திரமும் ஐப்பசித் திருவோணம் ஆகும்.
ஸ்ரீ வசனபூஷன அர்த்தத்தை எளிமையாக பிரசாதித்த ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளையின் திருவவதாரம் நிகழ்ந்ததும்
ஐப்பசித் திங்களிலே ஆகும்(ஐப்பசி உத்திரட்டாதி).
மேலும் பெரிய ஜீயர் சுவாமி உட்பட பல ஸ்ரீவைஷ்ணவ வித்வான்கள் இந்தத் திங்களிலே அவதரித்திருக்கிறார்கள்.
பெரிய ஜீயர் அருளிச் செய்த உபதேசரத்தினமாலை என்னும் ஆசார்ய ரத்ன ஹார பிரபந்தத்திலே
ஸ்ரீ பிள்ளை உலகாரியன் அருளிச் செய்த ஸ்ரீ வசனபூஷனம் என்னும் சம்பிரதாய இரகசிய பிரபந்தத்தின்
பெருமையை எடுத்துக் காட்டியபோது, அதிலே சுவாமி சாதித்த விஷயங்களை ஒருவர் அனுஷ்டித்தாலும்
ஜகத்தே வாழ்ந்து போகும் என்ற மேன்மையையும் தெளிவாக அனுக்ருஹிக்கிறார்.
சுவாமி விளாஞ்சோலைப்பிள்ளையும் ஆசார்யன் இட்ட வழக்காக வாழ்ந்து,
ஆசார்யன் சுவாமி உலகாரியன் அருளிச் செய்த ரத்தினம் போன்ற ஸ்ரீ வசன பூஷணம் என்னும் ரகச்யத்திலே ஊன்றினவராயும்,
அதில் உள்ள அர்த்த விஷேங்களை அனுபவிப்பதைத் தவிர வேறு ஒன்று அறியாதவராகவும் வாழ்ந்து வந்தார் என்பதும் பிரசித்தம் ஆகும்.
ஸ்ரீ மதுரகவிகளும், சுவாமி வடுகநம்பியும் தங்கள் சரம பர்வ நிஷ்டையை அனுஷ்டானத்தாலே காட்டியது போல
இந்த சுவாமியும் காட்டினர் என்பதும் ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்கள் அறிந்ததே.
————-
திருநக்ஷத்ரம் : ஐப்பசி மாதம் – உத்திரட்டாதி
அவதார ஸ்தலம் : திருவனந்தபுரத்தின் அருகில் கரைமணை ஆற்றின் கரையில் உள்ள அரனூர் என்ற கிராமம்.
ஆசார்யன் : பிள்ளை லோகாசார்யர்
இவரின் தாஸ்ய நாமம் “ நலம் திகழ் நாராயணதாஸர் “ என்பது.
ஈழவ குலத்தில் அவதரித்த இவரால் அக்காலத்தில் கோயிலின் உள்ளே சென்று சேவிக்க முடியவில்லை.
அவருடைய கிராமத்தில் உள்ள விளா மரத்தின் உச்சியில் ஏறி திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோவில்
கோபுர தரிசனம் செய்து அங்கிருந்தே மங்களாசாஸனம் செய்வது வழக்கம்.
விளாஞ்சோலைப் பிள்ளையைப் பற்றி சில விவரங்கள்:
இவர் பிள்ளை லோகாசார்யரின் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்யரிடம்
ஈடு, ஸ்ரீபாஷ்யம், தத்வத்ரயம் மற்றும் பல ரகஸ்ய க்ரந்தங்களைக் கற்றார்.
ஸ்ரீவசனபூஷணத்தைத் தன் ஆசார்யரான ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரிடமிருந்து கற்றுக் கொண்டார்.
அதன் அர்த்தங்களை மிக நேர்த்தியாக கற்று அதற்கே அவர் அதிகாரியானார்.
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை “ஸப்த காதை” என்கிற நூலை எழுதினார்.
இது இவருடைய ஆசார்யரின் ஸ்ரீ வசனபூஷணத்தின் சாராம்சம் ஆகும்.
விளாஞ்சோலைப் பிள்ளையின் மிகப்பெரிய கைங்கர்யம், தனது ஆசார்யரின் சரம தசையின் போது
ஆசார்யர் கூறிய ஆணையை நிறைவேற்றியது. ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் அவருடைய சிஷ்யர்களை அழைத்து
(திருமலை ஆழ்வார்) திருவாய்மொழிப் பிள்ளையிடம் சென்று ,
ஆசார்ய வம்சாவளியின் அடுத்த ஆசார்யராக பொறுப்பேற்பதற்குத் தயாராக்கியது.
மேலும் விளாஞ்சோலைப் பிள்ளையை ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்தங்களைத் திருமலை ஆழ்வாருக்கு உபதேசிக்கும்படி கூறினார்.
விளாஞ்சோலைப் பிள்ளையும் திருவாய்மொழிப் பிள்ளையும் :
திருவாய்மொழிப் பிள்ளை திருவனந்தபுரத்திற்கு வந்தபோது அங்குள்ள நம்பூதிரிகள் அவரை வரவேற்றனர்.
இவர் அனந்தபத்மநாபரை மூன்று வாயில்கள் வழியாக சென்று தரிசித்து மங்களாசாஸனம் செய்துவிட்டு
விளாஞ்சோலைப் பிள்ளையைத் தேடிச் சென்றார்.
அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அடைந்தபோது அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது!
அங்கு விளாஞ்சோலைப் பிள்ளை யோகமார்க்கத்தில் தன் ஆசார்யர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் திருமேனியையும்,
அவருடன் இருந்த சிஷ்யர்களின் பெருமையையும் அவர்களுடன் திருவரங்கத்தில் கழித்த நாட்களை எண்ணி த்யானத்தில் அமர்ந்திருந்தார்.
அவரின் திருமேனி முழுவதும் சிலந்தி வலைகளால் மூடப் பட்டிருந்தது .
திருவாய்மொழிப் பிள்ளை விளாஞ்சோலைப் பிள்ளையின் திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து
ஒன்றும் பேசாமல் அவர் முன்னே நின்று கொண்டிருந்தார். விளாஞ்சோலைப் பிள்ளை விழித்த உடனே
அவரின் அருட்கடாட்ஷம் திருவாய்மொழிப் பிள்ளையின் மேல் விழுந்தது. சிஷ்யன் காத்திருப்பதை அறிந்து மிகவும் ஆனந்தமடைந்தார்.
ஸ்ரீ வசன பூஷணத்தின் ஆழ்ந்த அர்த்தங்களை திருவாய்மொழிப் பிள்ளைக்கு அருளினார்.
மேலும் அவர் இயற்றிய ஸ்ரீவசன பூஷணத்தின் சாரமாகிய சப்த காதையையும் திருவாய்மொழிப் பிள்ளைக்கு விளக்கினார்.
“கொடுமின் கொண்மின்” என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரத்தின் மிகச் சிறந்த உதாரணம் –
ஈழவ குலத்தைச் சேர்ந்த விளாஞ்சோலைப் பிள்ளையிடம் இருந்து ஸ்ரீ வைஷ்ணவத்தின் சாரத்தை
பிராமண குலத்தைச் சேர்ந்த திருவாய்மொழிப் பிள்ளை பெற்றுக்கொண்டது.
சிறிது காலத்திற்குப் பின் விளாஞ்சோலைப் பிள்ளையிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு,
ஸ்ரீ ராமானுஜ தர்சனத்தின் தர்சன ப்ரவர்த்தகராகத் திருவாய்மொழிப் பிள்ளை காலத்தைக் கழித்தார்.
விளாஞ்சோலைப் பிள்ளையின் சரம காலம்:
ஒருநாள் திருவனந்தபுரத்தில் உள்ள நம்பூதிரிகள் அனந்தபத்மநாபருக்குத் திருவாராதனம் செய்து கொண்டிருக்கும் போது
விளாஞ்சோலைப் பிள்ளை கோயிலின் கிழக்கு வாசல் வழியாக நுழைந்து த்வஜ ஸ்தம்பத்தைக் கடந்து நரசிம்மரையும் தாண்டி
கர்ப்ப க்ருஹத்தின் வடக்கு வாசல் வழியாக படிகளில் ஏறி உரைகல் மண்டபம் அருகில் சென்று
பெருமானை சேவிக்கும் மூன்று வாயில்களில் ஒன்றான பகவானின் திருவடித் தாமரைகளைக் காணும் வாயிலின் முன் சென்று நின்று விட்டார்.
இதைக் கண்ட நம்பூதிரிகள், விளாஞ்சோலைப் பிள்ளையின் குலத்தின் காரணத்தால் அக்காலத்தில் இருந்த நடைமுறையின் படி
கர்ப்ப க்ருஹத்திலிருந்து வெளியேறி சன்னதி கதவுகளை தாழிட்டு கொண்டு கோவிலை விட்டு வெளியில் சென்று விட்டனர்.
அதே சமயத்தில் விளாஞ்சோலைப் பிள்ளையின் சிஷ்யர்கள் சிலர் கோயிலை அடைந்து அவர்களுடைய ஆசார்யர் ,
பிள்ளை லோகாசார்யரின் திருவடியை அடைந்து விட்டார்.
அதனால் பகவானின் திருப்பரிவட்டமும், பூமாலையும் சரம திருமேனியில் சாற்றுவதற்கு வேண்டும் என்று அறிவித்தனர்.
அவர்கள் கோவிலின் வாசலில் நின்று கொண்டு இராமானுச நூற்றந்தாதி இயல் பலவற்றையும் ஓதிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த நம்பூதிரிகள் ஆச்சர்யப்பட்டு கோயில் கர்ப்ப க்ருஹத்தில் சற்று முன் நடந்த அதிசயத்தை எல்லோரிடமும் விவரித்தனர்.
திருப்பாணாழ்வார் எவ்வாறு பெரிய பெருமாளின் திருவடிகளை அடைந்தாரோ
அதுபோல் விளாஞ்சோலைப் பிள்ளையும் அனந்தபத்மநாபரின் திருவடிகளை அடைந்தார்.
இந்தச் செய்தியைக் கேட்ட திருவாய்மொழிப் பிள்ளை ஆசார்யனுக்கு ஒரு சிஷ்யன் எவ்வாறு சரம கைங்கர்யங்களைச் செய்வார்களோ
அதுபோல் இவரும் செய்து திருவத்யயனமும் பூரணமாகச் செய்து முடித்தார்.
இது நமக்கு பெரிய நம்பி, மாறனேரி நம்பிக்குச் செய்த கைங்கர்யத்தை நினைவுபடுத்துகிறது.
பின்வரும் ச்லோகமானது திருவாய்மொழிப் பிள்ளை விளாஞ்சோலைப் பிள்ளையிடம் கொண்ட சிஷ்ய பாவத்தை சிறப்பித்து,
திருவாய்மொழிப் பிள்ளையின் சிஷ்யர்கள் அருளிச் செய்தது.
பற்றாத வெங்கள் மணவாள யோகி பதம் பணிந்தோன்
நற்றேவராசனலந்திகழ் நாரண தாதருடன்
கற்றாரெங்கூரகுலோத்தமதாதன் கழல் பணிவோன்
மற்றாருமொவ்வாத் திருவாய்மொழிப் பிள்ளை வாழியவே.
விளாஞ்சோலைப் பிள்ளையைப் பற்றி திருவாய்மொழிப் பிள்ளை அருளிச் செய்த வாழித்திருநாமம்:
வாழி நலம் திகழ் நாரண தாதன் அருள்
வாழி அவன் அமுத வாய்மொழிகள் – வாழியவே
ஏறு திருவுடையான் எந்தை உலகாரியன் சொல்
தேறு திருவுடையான் சீர்.
தனியன்கள்:
துலாSஹிர்பு3த்4ந்யஸம்பூ4தம் ஸ்ரீலோகார்ய பதா3ஸ்ரிதம் |
ஸப்தகா3தா2 ப்ரவக்தாரம் நாராயணமஹம் ப4ஜே ||
ஸ்ரீலோகார்ய பதா3ரவிந்த3மகி2லம் ஸ்ருத்யர்த்த2 கோஸாம்ஸ்ததா2
கோ3ஷ்டீ2ஞ்சாபி ததே3கலீநமநஸா ஸஞ்சிதயந்தம் முதா3 |
ஸ்ரீநாராயண தா3ஸமார்யமமலம் ஸேவே ஸதாம் ஸேவதி4ம்
ஸ்ரீவாக்3பூ4ஷண கூ3ட4பா4வவிவ்ருதிம் யஸ்ஸப்தகா3தா2ம் வ்யதா4த் ||
—————————————————————–
அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தங் காட்டித் தடை காட்டி – உம்பர்
திவமென்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவனன்றோ ஆசாரியன்–1-
இந்த பாசுரத்தால் ஆசாரியன் படியைப் பேசுகிறார். ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவோடே நவவித சம்பந்தம் உள்ளன.
பிதா புத்திர பாவம், ரக்ஷ்ய ரக்ஷக பாவம், சேஷ சேஷி பாவம், பர்த்ரு பார்யா பாவம், ஜ்ஞாத்ரு ஜஞேய பாவம்,
ஸ்வத் ஸ்வாமி பாவம், ஆதார ஆதேய பாவம், சரீர ஆத்ம பாவம், போக்த்ரு போக்ய பாவம் என்கிற
ஒன்பது விதமான சம்பந்தங்கள் திருமந்திரமானது காட்டும்.
அது மட்டும் இல்லாமல் நம: என்கிற பதத்தாலே
மூன்று விரோதிகளான ஸ்வரூப விரோதி, உபாய விரோதி மற்றும் ப்ராப்யவிரோதி ஆகியவற்றையும்,
ப்ராப்யமான புருஷார்தத்தையும், ப்ராபகமான உபாயத்தையும் காட்டும்.
இதை நமக்குக் காட்டி உணர்த்துபவனே ஆசார்யன் என்று அருளிச் செய்கிறார்.
—————
அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிகக் கொடியர் நாம் சொன்னோம் – நஞ்சு தான்
ஊனை முடிக்கும் துயிர் முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை–2-
அஞ்சு பொருள் என்ற சொல் அர்த்த பஞ்சகத்தைக் குறிக்கும்–அர்த்த பஞ்சகமானது
ஸ்வ ஸ்வரூபம், பர ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம் மற்றும் உபேய ஸ்வரூபம் ஆகியவை ஆகும்.
“மிக்க இறை நிலையும் மொய்யாம் உயிர்நிலையும் தக்கநெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும்” என்னும் திருவாய்மொழித் தனியனில் அர்த்த பஞ்சகம் இன்னவை என்று
நிரூபிக்கப்பட்டிருகின்றமையை உணர வேணும் இங்கே.
இப்படிப் பட்ட அஞ்சு பொருள்களை அளித்தவனான ஆசார்யன் பக்கலிலே அன்பு இல்லாதவர்கள் நஞ்சை விட மிக கொடியவர்கள் என்கிறார்.
நஞ்சானது வெறும் தேக நாசத்தையே விளைவிக்கும், ஆனால் ஆசார்யன் பக்கல் அன்பில்லாமை ஆனது
ஆத்ம நாசத்தையே விளைவிக்கும் என்றது ஸ்ரீ வசன பூஷணம். இதனையே இந்த பாசுரத்தால் உறுதி படுத்துகிறார்.
ஸ்ரீ வசன பூஷண சூத்ரம்: ” இவனுக்கு சரீராவசானத் தளவும் ஆச்சார்ய விஷயத்தில்,
” என்னைத் தீ மனம் கெடுத்தாய்”, “மருவித் தொழும் மனமே தந்தாய்” என்று உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும்.
—————————
பார்த்த குருவின் அளவில் பரிவின்றிச்
சீர்த்த மிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் – கார்த்த கடல்
மண்ணின் மேல் துன்புற்றும் அங்குமே தேங்காமல்
நண்ணுமே கீழா நரகு.
எத்தனை ஞான விகாசம் உடையவனாய் இருந்தாலும், விசேஷ கடாக்ஷம் செய்து அருளினவனான ஆசார்யன் இடத்தில்
பரிவு இல்லையாகில் அதோ கதியே என்று ஸ்திரமாகச் சொல்கிறார் இப்பாசுரத்தில்.
அதாவது சம்ஸ்க்ருத வேதாந்த ஞானம், திராவிட வேதாந்த ஞானம் மற்றும் ரஹஸ்யார்த்த ஞானம் இவற்றை அறிந்தவனாயினும்,
பார்த்த குருவின் அளவில் பரிவில்லையாகில் இந்த கடல் சூழ்ந்த மண்ணுலகில் அனுபவிக்கக்கூடிய க்லேசங்களை எல்லாம்
அனுபவித்துக் கொண்டு நித்ய சம்சாரியாய்க் கிடந்து உழல நேரிடும் என்பதை
” தேங்காமல் நண்ணுமே கீழா நரகு” என்பதனால் தெளிவு படுத்துகிறார் ஸ்வாமி.
————————-
தன்னை இறையைத் தடையைச் சர நெறியை
மன்னு பெரு வாழ்வை ஒரு மந்திரத்தின் – இன்னருளால்
அஞ்சிலுங் கேடோட வளித்தவன் பாலன்பிலார்
நஞ்சிலும் கேடு என்றிருப்பன் நான்*–4-
பிராப்யஸ்ய பிரம்மனோ ரூபம், ப்ராப்துச்ச்ச ப்ரத்யகாத்மந:, ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா,
ப்ராப்தி விரோதிச என்கிற ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகக் கிராமமே இங்கு விரிவாகக் கூறுகிறார்.
இந்த அர்த்தபஞ்சகமும் திரு அஷ்டாக்ஷர மகாமந்திரத்திலிருந்து ஆசார்யானாலே உபதேசிக்கப்படும்.
அதாவது பிரணவத்தில் மகாரத்தாலும், லுப்த சதுர்த்தியாலும், உகாரத்தாலும் ஸ்வ ஸ்வரூபம்,
அகாரத்தாலே பர ஸ்வரூபம், நமஸ்சில் ம: என்பதாலே விரோதி ஸ்வரூபமும், நம: என்பதால் உபாய ஸ்வரூபமும்,
நாராயணாய என்பதனாலே உபேய ஸ்வரூபமும் ஆகும்.
ஆக ஆச்சார்யன் பக்கலிலே அன்பிலாதார் நஞ்சிலும் கேடு என்கிறார் இந்த பாசுரத்தில்.
————————–
என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வும்
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் – மன் பக்கல்
சேவிப்பார்க் கன்புடையோர் சன்ம நிருபணமும்
ஆவிக்கு நேரே அழுக்கு.–5-
கீழ் பாசுரத்தால் சிஷ்யனுக்குண்டான குறைகளைப் பேசினார். இந்த பாசுரத்தில் ஆசாரியனுக்கு நேரக் கூடிய அவத்யத்தைப் பேசுகிறார்.
உபதேசிக்கும் ஆசார்யன் ஆனவன் உபதேச சமயத்திலே தன்னுடைய ஆசார்யனே இவனுக்கும் உபதே சகர்த்தா என்றும்,
தான் அவ்வாசார்யனுக்கு கரண பூதனாகவும் பிரதிபத்திப் பண்ணிக் கொண்டும் உபதேசிக்க வேண்டுமாம்,
அப்படிச் செய்யாது தன்னை இவனுக்கு ஆசார்யன் என்று நினைப்பது தவறு என்று முதல் அடியில் தெரிவிக்கிறார்.
மேலும் உபதேச பாத்ர பூதனானவனையும் தன்னைப் போல தன்னுடைய ஆசாரியனுக்கு சிஷ்யனாக
பிரதிபத்திப் பண்ணிக் கொண்டு உபதேசிக்க வேண்டுமாம்.
அதைச் செய்யாமல் இவன் தனக்கு சிஷ்யன் என்று நினைப்பதும் தன்னிடத்தில் ஆசார்யத்வம் உள்ளது என்று
நினைப்பதும் தவறு என்கிறார் அடுத்த அடியாலே.
மகா பாகவதர்களிடத்தில் பகவத் சம்பந்த பிரயுக்தமான சிறப்பைப் பாராதே அவரவர்களுடைய ஜன்மங்களை நிரூபிக்கையாவது
மகா அபசாரம் என்பதை அடுத்த அடியில் தெரிவிக்கிறார்.
இவை எல்லாம் ஆவிக்கு நேரே அழுக்கு என்றும் உறுதிபடுத்துகிறார் அடுத்த அடியில்.
————————
அழுக்கென்று இவை அறிந்தேன் எம் பொன் அரங்கா
ஒழித்தருளாய் உள்ளில் வினையைப் – பழிப்பிலா
என்னாரியர்காக எம்பெருமானார்க்காக
உன்னா ரருட்க்காக உற்று.–6-
ஆவிக்கு அழுக்காகத் தெரிவிக்கப்பட்ட விஷயங்களைப் பலர் அழுக்கென்று அறிந்திருந்தும்,
பிரகிருதி வாசனையாலே இவ்வழுக்குகளில் சிக்கி நசிக்கிரார்களே என்று நினைத்து,
அது தமக்கு நேராது இருக்க வேணும் என்று எம்பெருமான் திருவடிகளில் பிரார்த்தனை செய்கிறார் இப்பாட்டில்.
மேலும் அஸ்மதாசார்யரான பிள்ளை உலகாரியனுக்காகவும், உலகுக்கு ஓர் உயிரான ஸ்வாமி எம்பெருமானாருக்காகவும்
இத் திருவருளை அடியேனுக்கு அளிக்க வேணும் என்றும் பிரார்த்திக்கிறார்.
————————-
தீங்கேது மில்லாத தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவுடையோர் – ஓங்காரத்
தேரின் மேல் ஏறிச் செழுங்கதிரின் ஊடு போய்
சாருவரே அந்தாமந் தான்.-7-
தீங்கு ஏதும் இல்லாதவனும், மகா உபகாரகனுமான ஆசார்யனுடைய திருவுள்ளத்திற்கு அனுகூலமாகவும்,
அவருடைய திருமேனியைப் பேணிக் கொண்டு உண்மையான அன்புடையவர்களாகவும் இருப்பவர்களான
சத் சிஷ்யர்கள் பெரும் பேற்றை இந்த பாசுரத்தால் விவரிக்கிறார்.
வையம் மன்னி வீற்றிருந்து என்று சொல்லும் படி, இருக்கும் நாட்களிலே உபய வேதாந்த கால க்ஷேப கோஷ்டியோடும்,
ததியாராதன ஸ்ரீயோடும், உகந்தருளின நிலங்களில் மங்களாசாசன ஸ்ரீயோடும், தத் கைங்கர்ய ஸ்ரீயோடும்
ஸ்வாமி எம்பெருமானாரைப் போல நெடும் காலம் வாழ்ந்திருந்து சரீராவசானத்தில் பரம பக்தி தலையெடுத்து,
பிரணவமாகிற தேரின் மேல் ஏறி சாச்வதச்தானமாகிய திருநாடே கிடைக்கப் பெறுவார்களாம்.
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply