தமிழ் பக்தி இலக்கியத்தில்- ஸ்ரீ ஆழ்வார்களுக்கும் ஸ்ரீ நாயன்மார்களுக்கும்- நாயக – நாயகி பாவம்–

ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ நாயன்மார்களும் தத்தம் தெய்வத்தின் மீது பக்திப் பாடல்கள் பல பாடி,
பக்தி இயக்கத்திற்கு உயிர் கொடுத்தனர் என்றால் அது மிகையன்று.
நாயன்மார்களும் ஆழ்வார்களும் சங்க அகத்துறை மரபினைப் பின்பற்றி, பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்.
இவர்கள் சங்க அகத்துறையில் இடம் பெறும் பாத்திரங்களான தலைமகன், தலைமகள், தோழி, செவிலி, நற்றாய்
முதலியோரைக் கொண்டு, அவர்களுடைய கூற்றுகளாகத் தம்மைப் பாவித்துக் கொண்டு, பாடுகின்றனர்.

இந்த மரபினையே ஆச்சர்ய ஹிருதம், ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு என்கின்றது.

நாயக – நாயகி பாவம்

ஸ்ரீ நாயன்மார்களும் ஸ்ரீ ஆழ்வார்களும் இறைவன் மீது அதிகமான பற்றுக்கொண்டு,
தம்மை நாயகியாகவும் அஃதாவது தலைமகளாகவும், இறைவனை நாயகனாகவும் அஃதாவது தலைமகனாகவும்
பாவித்துப் பாடுவதையே நாயக – நாயகி பாவம் என்கின்றோம்.
இறைவன் ஒருவனே ஆண்மகன். பிற உயிர்கள் எல்லாம் பெண்மை உடையவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு
நாயக – நாயகி பாவம் நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் புனையப்படுவதைக் காண்கின்றோம்.

நாயன்மார்களும் நாயக – நாயகி பாவமும்

அடியவர்கள் தம்மை இறைவனின் அடிமையாகவோ, இறைவனைத் தந்தையாகவோ மகனாகவோ கொண்டு
இறைவன் மீது அன்பு செலுத்துவர். இதனை ஒரு கற்பனைக் கூறு எனலாம்.

சம்பந்தரும் நாயக – நாயகி பாவமும்

சம்பந்தர் பாடல்கள் திருக்கோவில்களை மையமாகக் கொண்டு எழுந்தவை. இவர் இறைவனைத் தந்தை உறவில் பாவித்தார்.
அவ்வாறு இருப்பினும் இறைவனின் திருவுருவம் மற்றும் அருட்செயல்கள் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்தன.
எனவே, தன் காதல் உணர்வை வெளிப்படுத்த இவ்வாறு பாடுகின்றார்.

நலன் இழந்து ஆற்றாமை மிக்க தலைமகள், தன் தலைமகனுக்குப் பல பொருட்களைத் தூதாக விடுக்கின்றாள்.
வண்டு, குருகு, நாரை, அன்னம், அன்றில், குயில், கிளி முதலிய அஃறிணைப் பொருட்களைத் தூது விடுக்கின்றாள்.
இத் தூதினைக் காணும்போது சங்க காலத் தலைமகளின் நிலைமைப் புலப்படக் காணலாம்.

சம்பந்தர் தம்மை நாயகியாகப் பாவித்துக் கொண்டு, இறைவனாகிய நாயகன் மீது தும்பியைத் தூது விடுக்கின்றார்.

“வண்டரங்கப் புனற்கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதியத்
துண்டரங்கப் பூண் மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென் நிலைமை பரிந்தொரு கால் பகராயே” (60:645:1-4)

அடுத்து சம்பந்தர் தான் விரும்பும் தலைமகனை அடைய மாட்டாத நிலையில் அவன் பெயரையாவது
கேட்டுக் கொண்டிருக்க ஆசைப்படுவதாகக் கிளியை நோக்கிப் பாடுகின்றார்.

“சிறையாரு மடக் கிளியே இங்கே வா தேனொடு பால்
முறையாலே உணத் தருவன் மொய்ப்பவளத் தொடு தரளம்
துறையாரும் கடல் தோணி புரத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொரு காற் பேசாயே” (60:654:1-4)

சம்பந்தருக்கும் இறைவனுக்கும் இருக்கும் உறவு மகன் – தந்தை உறவு என்றாலும்
திருத்தோணிபுரம் என்னும் பதிகமானது, இறைவன் மீது காதல் கொண்ட தலைமகள் பாடுவதாக அமைகின்றது.

அப்பரும் நாயக – நாயகி பாவமும்

இறைவனின் திருவுரு ஈடுபாடு, இறைவனிடத்தில் காதல் உணர்வைப் பிறப்பிக்க, அகத்துறைப் பாடல்களாக
வெளிவருவதை அப்பர் தேவாரதத்தில் காணலாம். அகத்துறையில் அமைந்த பதிகங்கள் சம்பந்தர் பாடியவற்றினும்
அப்பர் தேவாரத்தில் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. இருந்த போதிலும் அப்பரின் உணர்ச்சி வேகம்
அகத்துறைப் பாடல்களிலும் தெளிவாக வெளிப்படக் காணலாம்.

“சொன் மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன் மாலை வரி வண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கு முடி சென்னிப்
பொன் மாலை மார்பன் என் புதுநலமுண் டிகழ்வானோ” (4.12:114)

மேலும் இவர் தலைமகள் உணர்வில் நின்று தலைமகனிடம் தூதுவிடும் பாங்கிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

பக்தி இலக்கியப் பாடல்களிலேயே சிறந்த கவிதையாகக் கருதத்தக்க அகத்துறைப் பாடல் ஒன்று
அப்பர் பாடலாக அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் தாளே” (திருவாரூர் பதிகம்,7:1-4)

இப்பாடலே அப்பரின் நாயக – நாயகி பாவத்தைப் புலப்படுத்தக் காணலாம்.
இதன் அடிக்கருத்துப் பின்வருமாறு அமையக் காணலாம்.

இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய
தலைவி ஒருத்தியின் தன்மையை அவள் தோழி விளங்க உரைத்து,
செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது.

சுந்தரரும் நாயக – நாயகி பாவமும்

திருப்பைஞ்ஞீலி என்னும் பதிகத்தில் சுந்தரர், தம்மைத் தலைமகளாகப் பாவித்துப் பாடுவதாக உள்ளது.

“குரவம் நாறிய குழலினார் வளை
கொள்வதே தொழிலாகி நீர்
இரவும் இம்மனை அறிதிரே இங்கே
நடந்து போகவும் வல்லீரே” (7:36:6) -என்றும்

“நீறு நும்திரு மேனி நித்திலம்
நீள் நெடுங் கண்ணி னாளொடு
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து
இடுகிலோம் பலி நடமினோ” (7:36:5) -என்றும் பாடுகின்றார்.

சுந்தரர் தம்மை தலைமகளாகப் பாவித்து, ஐயம் கேட்டு வரும் இறைவனுக்குப் பலி தர மாட்டோம் என்கின்றார்.
அதற்கான காரணத்தையும் கூறுவதாக அமைகின்றது இப்பதிகம்.

மாணிக்கவாசகரும் நாயக – நாயகி பாவமும்

சங்க அக இலக்கியங்களில் பிரிவு பற்றிய பாடல்களே அதிகம். புணர்வு பற்றிய பாடல்கள் அதற்கு
அடுத்த நிலையிலேயே உள்ளன. பிரிவும் பிரிவாற்றாமையே காதல் பற்றிய உணர்வுகளை மிகுவிக்கும்.
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் மகளிர் விளையாட்டுகளாக,

1. திருவெம்பாவை
2. திருவம்மானை
3. திருப்பொற்சுண்ணம்
4. திருக்கோத்தும்பி
5. திருத்தெள்ளேனம்
6. திருச்சாழல்
7. திருப்பூவல்லி
8. திருவுந்தியார்
9. திருத்தோள் நோக்கம்
10. திருப்பொன்னூசல்–முதலியவை இடம்பெறுகின்றன.
இவ் விளையாட்டுகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கின்றார் மாணிக்கவாசகர்.

“மாடு நகை வாள் நிலா எறிப்ப
வாய் திறந் தம் பவளம் துடிப்பப்
பாடு மின் நம் தம்மை ஆண்டாறும்
பணி கொண்ட வண்ணமும் பாடிப் பாடி
தேடுமின் எம்பெருமானைத் தேடிச்
சித்தம் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடு மின் அம்பலத்து ஆடினானுக்கு
ஆடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே” (திருப்பொற்சுண்ணம்:205:1-4)
என்று திருப்பொற்சுண்ணத்தில் பாடுகின்றார் மாணிக்கவாசகர்.

அகப்பொருளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மாணிக்கவாசகரின் மற்றொரு படைப்பு திருக்கோவையார் ஆகும்.
இந்நூலைத் திருச்சிற்றிலம்பக்கோவை என்றும் அழைப்பர்.
இந்நூல் 400 அகத்துறையில் அமைந்த கோவைப் பாடல்களையும் கொண்டது.

இயற்கையின் காரணமாகத் தலைமகனும் தலைமகளும் சேர்வதை இயற்கைப் புணர்ச்சி என்பர்.
தன்னுடைய பாங்கர்களோடு தலைமகன் வேட்டையாடுதல் போன்ற தொழில் காரணமாகச் செல்லுகின்ற போது,
ஊழின் காரணமாக, அவர்களை விட்டுப் பிரிந்து, தனி வழியில் செல்ல இவனைப் போலவே,
தலைமகளும் தன் தோழியரை விட்டு நீங்கி தனியே நிற்க அவளை அவன் காண்பதே காட்சி ஆகும். இதனை மாணிக்கவாசகர்,

“திருவளர் தாமரை சீர் வளர்
காவிகள் ஈசர் தில்லை
குருவளர் பூங்குமிழ் கோங்கு பைங்
காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ
மருவளர் மாலை யொர் வல்லியின்
ஒல்கி அனநடை வாய்ந்து
உருவளர் காமன் தன் வென்றிக்
கொடி போன்று ஒளிர்கின்றதே ”–என்று பாடுகின்றார்.

ஆழ்வார்களும் நாயக – நாயகி பாவமும்

வைணவத்தில் பகவானுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள தொடர்பில்
தலைமகன் – தலைமகள் உறவு மிகச்சிறந்தது என்று கூறுவர். இறைவனுடைய தோற்றம் ஆற்றலும் பேரழகும் வாய்ந்தது.
இந்த நிலையில் பரமாத்மாவாகிய நாயகனை, ஜீவாத்மாவாகிய தலைமகள் விழைந்து பற்றுவதாகப் பாடுவர்.
தலைமகன் மீது சென்ற மனதை அகப்பொருளில் அமைத்து
நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், ஆண்டாள் ஆகியோர் பாசுரங்கள் அமைத்துள்ளனர்.
பகவான் மீது கொண்ட காதலை, வைணவ உரைக்காரர்கள் ‘பகவத் காமம்’ என்றழைக்கின்றனர்.

நம்மாழ்வாரும் நாயக – நாயகி பாவமும்

சங்க அகப்பொருள் மரபினைத் தழுவி அமைந்த நம்மாழ்வாரின் பாடல்களில், இறைவனாகிய தலைமகனையும்
ஆன்மா – தலைமகளாகிய பராங்குச நாயகியையும் தவிர, தாய், தோழி, பாங்கன் ஆகிய
மூன்று பாத்திரங்கள் மட்டுமே அமைந்துள்ளன. அகப்பொருள் துறையில் அமைந்துள்ள நம்மாழ்வார் பாசுரங்களில்,
எல்லாவற்றிலுமே உள்ளுறைப் பொருளும் வெளிப்படைப் பொருளும் அமைந்துள்ளன.

நம்மாழ்வார் தன்னைப் பெண்ணாக அதாவது பராங்குச நாயகியாகப் பாவித்து, எம்பெருமானைத்
தோழி, தாய், மகள் ஆகிய நிலைகளில் நின்று அனுபவிக்கின்றார்.
(பராங்குச நாயகி – பிற சமயங்களாகிய யானைகளுக்கு அங்கசமாக நம்மாழ்வார் திகழ்தல்).
திருமாலாகிய நாயகனின் பிரிவைப் பொறுக்கமாட்டாத பராங்குச நாயகியின் நிலையை அவளது
தாய் கூறுவதாக அமைந்துள்ள திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றைக் காண்போம்.

“கோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்ந்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய் அவன் கிடக்கையீ தென்னும்
ஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே” (3151:1-4)

தலைமகனைப் பிரிந்த தலைமகள் காம மயக்கத்தால் அஃறிணைப் பொருட்களையும் உயர்திணைப் பொருட்களையும்
தூது விடுப்பது அகப்பொருள் துறையில் மரபு.
அஃறிணைப் பொருட்களை அங்ஙனம் விளித்துக் கூறுவதைக் ‘காமம் மிக்க கழ்படர் கிளவி’ என்பர்.

திருவாய்மொழியில் வைகல் பூங்கழிவாய் நாராய், பொன்னுலகாளீரோ, அஞ்சிறைய மடநாராய், எம்கானல் அகம்கழிவாய்
ஆகியவை தூது விடும் பாசுரங்களாக அமைந்துள்ளன. இந்த நான்கு பாசுரங்களும் ‘மகள் பாசுரங்களாகவே’ அமைந்துள்ளன.
நம்மாழ்வார், தலைமகளாகிய பராங்குச நாயகியின் நிலைமையை ஏற்றிக் கொண்டு இப்பாசுரங்களைப் பாடியுள்ளார்.
பராங்குச நாயகி இப்பாசுரங்களில்
நாரை, குயில், அன்னம், கிரௌஞ்சப்பறவை, குருகு, வண்டு, கிளி, நாகணவாய்ப்புள், தும்பி, காற்று, மேகம்
ஆகியவற்றைத் தலைமகனாகிய எம்பொருமானிடம் தூது அனுப்புகின்றாள்.

“அஞ்சிறைய மடநாராய் அளியத்தாய் நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆஆ என்றுஎனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்தாற்கு என் விடுதூதாய் சென்றக்கால்
வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என்செயுமோ” (2932:1-4)

திருமங்கை ஆழ்வாரும் நாயக – நாயகி பாவமும்

திருமங்கை ஆழ்வார் பாடும் திருநெடுந்தாண்டகப் பாசுரங்கள் பரகால நாயகியின் தெய்வீகக் காதலை
அறிவிக்கும் தன்மையுடையனவாகத் திகழ்கின்றன. இப்பிரபந்தம் 30 பாசுரங்களைக் கொண்டது.
தலைமகள், எம்பெருமாளாகிய திருமால் மேல்கொண்ட காதலை, திருநெடுந்தாண்டகப் பாசுரங்களில் ஆழ்வார் பாடுகின்றார்.

“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின்தாழ
மகரம் சேர்குழை இருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம்போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழீ
அவரை நாம் தேவரென்று அஞ்சினோமே” (2072:1-4)

தலைமகனாகிய, கண்ணபுரத்தில் உறையும் பெருமானின் திருவருள் கிடைக்கப் பெறாத ஆழ்வார்,
தன்னைப் பரகால நாயகியாகப் பாவித்துக் கொண்டு, தலைமகனின் அன்பை நினைத்து ஏங்கும்
தலைமகளைப் போல் தனது ஏக்கத்தைத் தெரியப்படுத்துகின்றார்.

தன்னை நாயகியாகவும் எம்பெருமானை நாயகனாகவும் பாவித்துக் கொண்ட திருமங்கை ஆழ்வார்
தனக்கு எம் பெருமான் முகம் காட்டாமல் இருந்தால், தான் மடலூர்ந்து, பெருமான் தன்னைக் கைவிட்ட செய்தியை
ஊரறியச் சொல்லுவேன் என்கின்றார். இதன் காரணமாக அவர் பாடியவையே பெரிய திருமடலும் சிறிய திருமடலும்.

பெரியாழ்வாரின் காதல்

கண்ணன் ஆண்டாளுக்குக் காதலானாகத் தோன்றியது போல்
பெரியாழ்வார்க்குப் பிள்ளையாகவே தோன்றினான் என்று கூறமு டியாது.
நாயக – நாயகி பாவத்திலும் இவர் பாடியுள்ளார். அக உணர்வில் நின்று பாடும் போதும்
தம்மை நாயகியாகக் கொண்டே பாட வேண்டும் என்பதல்ல.
தலைமகள் பாசுரம், தாய்ப்பாசுரம், தோழி பாசுரம் எனப் பல நிலைகளில் பாடியுள்ளார்.

“வலங்காதின் மேல் தோன்றிப் பூவணிந்து
மல்லிகை வனமாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழவிட்டு
தீங்குழல் வாய்மருந்து ஊதிஊதி
அலங்காரத்தால் வரும் ஆயப்பிள்ளை
அழகுகண்டு என்மகள் ஆசைப்பட்டு
விலகி நில்லாது எதிர்நின்று கண்டீர்
வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே” (4:262:1-4)

இப்பாடல் தாய்ப் பாசுரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆய்ப்பாடிப் பெண்ணொருத்தி கண்ணனிடம் தன்னை இழக்கின்றாள்.
மகளின் மேனி வாட்டம் கண்டு தாய் வருந்திப் பாடுவதாக உள்ளது இப்பாடல்.
தலைமகனைக் கண்டு கன்னியர் காமுறுதல், நற்றாய் இரங்கல், தலைவன் பின்சென்ற மகளைக் குறித்துத்
தாய் பலபட எண்ணி ஏங்குதல் என்னும் துறைகளில் அமைந்திருப்பினும்
இப்பாடல் நாயகன் – நாயகி உணர்வில் எழுந்தவையே.
பெரியாழ்வார் கண்ணனிடம் கொண்ட பக்தியே இவ்வாறு வெளிவருகின்றது.

நிறைவாக

1. நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாயக – நாயகி பாவத்தில் பல பாடல்கள் பாடியுள்ளனர்.
இவ்வாறு பாடுவதால், அவர்களின் பக்தித்திறமும் இறைவன் மீது கொண்ட காதலும் புலப்படுத்துகின்றன.
2. நாயக – நாயகி பாவத்தை ஓர் இலக்கிய உத்தியாகப் பயன்படுத்தியுள்ளனர்.
3. சங்க அகத்துறை மரபினை நாயன்மார்களும் ஆழ்வார்களும் பின்பற்றினர் என்றாலும்
சில விதிவிலக்குகளும் (பெண் மடலூர்தல்) காணப்படுகின்றன.
4. நாயன்மார்களின் பாடல்களில் காதல் உணர்வு மிகுந்த அகத்துறைப் பாடல்களைக் காணலாம்.
5. மாணிக்கவாசகர் மகளிர் விளையாட்டுகளைக் கூறுவதன் வழி, தன்னையும் ஒரு பாத்திரமாகப் படைத்துக் கொள்கின்றார்.
இவருடைய திருக்கோவையார் அகத்துறையில் அமைந்த பாடல்களின் ஒட்டு மொத்தமே.
6. ஆழ்வார்களுள் நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் தம்மை நாயக – நாயகியாகப் பாவித்துக் கொண்டு
முறையே பராங்குச நாயகியாகவும் பரகால நாயகியாகவும் வலம் வருகின்றனர்.

—————

நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே என்றார் ஸ்ரீ நம்மாழ்வார்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்றார் ஸ்ரீ திருஞானசம்பந்தர்.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம் என்றார் ஸ்ரீ திருநாவுக்கரசர்.

———–

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார், அடியார் தம் அடியார் எம் அடிகேளா–என்று பாடுகிறார் ஸ்ரீ நம்மாழ்வார்.

இதே போன்றதொரு கருத்தினை ஸ்ரீ திருநாவுக்கரசரின் பாடல்

ஒன்றிலும் காணலாம். ஆவுரித்துத தின்றுழலும்
புலையராயினும் சிவபிரானுக்கு அன்பராகில் அவரேயாம்
வணங்கும் கடவுள் என்கிறார் அப்பர். இத்தகைய கருத்துகள்
அக்காலத் தமிழ் மக்களை ஈர்த்ததில் வியப்பில்லை.

————–

செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகிய தென்னன் தமிழை, வடமொழியை என்று திருமங்கையாழ்வாரும்,
பன்னிய நூற்றமிழ்மாலை பாடுவித்து என் சிந்தை மயக்கறுத்த திருவருளினானை என்று அப்பரும்,
செந்தமிழர் தெய்வமறை நாவர் என்று திருஞானசம்பந்தரும்,
திணைகொள் செந்தமிழ் என்று சுந்தரரும் பாடியிருத்தல் நினைக்கத்தகும்.

—————–

ஸ்ரீ திருவாய்மொழிப் புலவர் என்று இரும் தமிழ் புலவர் என்று ஸ்ரீதிருமங்கை ஆழ்வார்
தம்மையே சொல்லிக் கொள்கிறார்
திருப்பாவை ஜீயர் ஸ்ரீ எம்பெருமானார்
திரு நெடும் தாண்டகம் -ஸ்ரீ பராசர பட்டர்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading