“கண்களுக்குப் பார்க்கும் ஆற்றல் எதனிடமிருந்து பிறக்கிறதோ,
செவிகளுக்குக் கேட்கும் திறமை எதனால் கிடைக்கிறதோ,
மூக்கின் முகரும் சக்தி எதை மூலமாகக் கொண்டுள்ளதோ,
நாவிற்கு சுவைக்கும் தன்மை எதனால் நிலைபெறுகிறதோ,
தோல் எதனால் தொடு உணர்வைத் தெரிந்துக்கொள்ள முடிகிறதோ, அந்த பொருளே பரம்பொருள்.
அத்தகைய புரிதற்கரிய பரம்பொருளை நீ மேற்கூறிய ஐம்புலன்களாலும் (ஞானேந்திரியங்களாலும்) அறியமுடியாது”
என்று உபநிடதங்களில் சுருதி வாக்கியங்களாக அறுதியிட்டனர்.
கேன உபநிடதம் கண்ட முடிவு இது.
“அந்த மனத்தாலும் அறிய முடியாத ஒன்றாக, வாக்காலும் வருணிக்க முடியாத ஒன்றாக அன்றோ
இந்தப் பரம்பொருள் உள்ளது!” என்பது தைத்திரீய உபநிடதமாகிய வேதத்தின் முடிவு.
ஸ்ரீ ஆதிசங்கரர், “பிரம்மம் என்பது அளவற்ற வலிமையை உடைய பகவானையே குறிக்கிறது.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அவனே செய்கிறான்.
பிரபஞ்சமானது ஒன்றுமில்லாச் சூன்ய நிலையிலிருந்தோ, ஒரு ஜடப்பொருளிலிருந்தோ, வெறும் அணுக்களைக்
காரணமாகக் கொண்டோ, பாப-புண்யங்களுக்கு ஆட்பட்ட ஒரு ஜீவனிடமிருந்தோ உண்டாவது
சாத்தியமில்லை (பிரம்மசூத்ர பாஷ்யம், 1.1.2)… சர்வ வலிமை மிக்கவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும்,
மிகப்பெரியவனாகவும் உள்ள அந்த இறைவனைப் பற்றி என்னவென்று உரைப்பது! (பிரம்மசூத்ர பாஷ்யம், 1.1.3)” என்று அறுதியிட்டார்.
சங்கரர் தாம் எழுதிய கீதை விளக்கவுரை நூலின் முன்னுரையில், “பிரபஞ்சம் முழுதும் ‘அவ்யக்தம்’ என்னும்
மூலப்பிரக்ருதியாகிய மாயைக்குள் வசப்பட்டிருக்க, பரமனாகிய நாராயணன் அம்மாயைக்கு அப்பாற்பட்டவன்” என்று முழங்குகிறார்.
பிறகு, ஆதி கர்த்தாவாகிய ‘நாராயணன்’ என்ற பெயரை உடைய விஷ்ணுவானவன், சனாதன தர்மத்தைப் பேணிப் பாதுகாக்க
தேவகி அம்மையாருக்கும், வசுதேவருக்கும் ‘கிருஷ்ணன்’ என்ற பெயரை உடைய மகனாக அவதரித்தான்.
தனக்கென்று தனியாக எந்த ஒரு ஆசையும் நோக்கமும் இல்லாத அவன், அருச்சுனனுடைய துயர் துடைக்க
பூலோகத்தில் உபதேசம் புரிந்தான்.” என்று கிருஷ்ணாவதாரப் பெருமையை மிகச்சிறப்பாக விளக்குகிறார்.
சங்கரர் இங்கு எடுத்துள்ள “நித்ய-சுத்த-புத்த-முக்தாத்மா” என்ற இலக்கணத்தைப் பரம்பொருளாகிய பிரம்மத்திற்கு உரியதாகத்
தம் பிரம்மசூத்ர-உபநிஷத் விளக்கவுரைகளில் உபயோகித்திருக்கிறார்.
(உதாரணமாக, பிரம்மசூத்ர பாஷ்யம் 1.1.1-4, 2.1.22, 2.3.40; ஐதரேய உபநிஷத் முதல் மந்திரத்தின் பாஷ்யம்;
பிருகதாரண்யக உபநிஷத் பாஷ்யம் 1.4.7 முதலிய இடங்களில் கண்டு கொள்ளலாம்).
அவதாரத்தின் முடிவிலும் நம்மைப் போல மரணம் அடையாமல், யாருடைய உந்துதலும் இல்லாமல் தன்னிச்சையால் எடுக்கப்பட்ட
ஆச்சரியமான திருமேனியுடன் வைகுண்டத்திற்குத் தானே எழுந்தருளுகிறான் என்பது பாகவதபுராண வசனங்களிலிருந்து விளங்கும்.
இதன் விளக்கத்தை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இப்போதைக்கு,
“மரணமற்ற உடலைப் பெற்றுள்ளதால் ‘அம்ருதவபு‘ எனப்படுகிறான்”
என்று ஆதி சங்கரர் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையில் இட்டுள்ள விளக்கம்
சங்கத் தமிழ்ப் புலவர்களும், “தோலாக் கோட்ட… திருவின் கணவ!”
[தோல்வியற்ற கோரைப்பற்களை உடைய வராகப் பெருமானே! திருமகளாகிய இலக்குமிப் பிராட்டியின் கணவனே!]
என்று (பரிபாடல் மூன்றாம் பாடலில்) உணர்த்தியுள்ளனர்.
ஆதி சங்கரரும்,
“தன்னுடைய அவதாரங்களில் ஒன்றில் கூட தோல்வியைக் கண்டதில்லையாதலால், திருமால் ‘அஜிதன்‘ எனப்படுகிறான்”
எதுவே யாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்,
மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே?
பிறந்த மாயா! பாரதம் பொருத மாயா! நீயின்னே,
சிறந்த கால்,தீ,நீர்,வான்,மண் பிறவுமாய பெருமானே!
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் –
இறந்து நின்ற பெருமாயா! உன்னை எங்கே காண்கேனே?
“ஒரு முறை கண்ணனுக்கு அன்புடன் நமஸ்காரம் செய்தால், நூறு யாகங்கள் செய்திருந்தும் பெறுதற்கரியதான
பலனையும் பெறலாம்” என்று ஆதி சங்கரர் ஸ்ரீ்விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் கூறுகிறார்.
யஸ்மாத்விச்’வம் உதேதி யேன விவிதம் ஸஞ்ஜீவ்யதே லீயதே
யத்ராந்தே ககனே கனா இவ மஹாமாயின்யஸங்கே த்வயே |
ஸத்யஜ்ஞான ஸுகாத்மகே அகில மனோ வஸ்தானுபூத்யாத்மனி
ஸ்ரீராமே ரமதாம் மனோ மம ஹேமாம்புஜே ஹம்ஸவத் ||”
இந்த சமஸ்கிருத சுலோகமானது, ஸ்ரீ ராமதீர்த்தர் என்னும் பண்டைய அத்வைதத் துறவியரால் எழுதப்பட்ட
“அன்வயார்த்த பிரகாசிகை” என்னும் விளக்க நூலில் உள்ள மங்கள சுலோகமாகும். இச்சுலோகத்தின் பொருள்,
“எவரிடத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றுகிறதோ, எவரால் (ஜீவராசிகள்) அனைத்தும் உயிர்வாழ்கின்றனவோ,
பிரளயத்தில் எவரிடம் போய்ச் சேருகின்றனவோ, எவரை மேகம் வானத்தைத் தொடாதது போல்
(ஸத்வம், ரஜஸ், தமஸ்ஸாகிய முக்குணங்களைக் கொண்ட) மாயை தொடாதோ, மெய்ப்பொருளாய், ஞானமாய், ஆனந்தமாய்
விளங்கி, உயிருக்கு உயிராய் இருந்து, பிரமாணங்களால் அறியப்படும் அந்த இராமபிரான் கண்
என் மனம் தாமரை மலரை விரும்பும் அன்னப்பறவை போல இன்புறுகிறது” என்பதாகும்.
ஆக, இராமாவதாரம் என்பது, பிரபஞ்சம் முழுவதையும் படைத்துக் காத்தழிக்கும் முழுமுதற்பொருளின் சற்றும் குறையாத,
சற்றும் வேறுபடாத உருவமே என்று இச்சுலோகம் கூறுகிறது.
கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார் பண்ணிய
“உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.”–என்னும் கம்பராமாயணப் பாயிரப் பாடலுடன் ஒப்பிடத்தக்கது.
“இயன்றவெல்லாம் தன்னுள்ளே பயின்று அடக்கி, வேத முதல்வனாய்த் தீதற விளங்கிய
திகிரியோனாகிய” [நற்றிணை கடவுள் வாழ்த்து] திருமாலானவன், அனைத்துயிர்களையும் பேணுதற்பொருட்டு
இப்பூவுலகில் அவதாரங்களை எடுக்கிறான்.
ஆதிசங்கர பகவத்பாதரும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் “அமூர்த்திமான், அனேகமூர்த்திஹி” என்ற இடத்திற்கு,
“கர்மநிபந்தனா மூர்த்திரஸ்ய ந வித்யத இதி அமூர்த்திமான் | அவதாரேஷு ஸ்வேச்சயா லோகானாம் உபகாரிணீஹி
பஹ்வீர்மூர்த்தீர் ப4ஜத இதி அனேகமூர்த்திஹி |”–என்று விளக்கியுள்ளார்.
இவ்வாக்கியங்களின் அர்த்தம் “கர்ம நிபந்தனையால் விளையும் உடல் அவனுக்கு இல்லாமையால் அவன்
‘அமூர்த்திமான்‘ எனப்படுகிறான். உலகத்தில் உள்ளோர்களுக்கு நன்மை செய்தருளும் பொருட்டு தன்னிச்சையாகப்
பல உருவங்களை எடுப்பதால் ‘அனேகமூர்த்தி‘ எனப்படுகிறான்.” என்பதாகும்.
இதுவும் “பிறவாப் பிறப்பு இலை, பிறப்பித்தோர் இலையே” [பரிபாடல் – 3] என்ற சங்கப்புலவர் வாக்குடனும்
“பிறப்பில் பல்பிறவிப் பெருமான்” [திருவாய்மொழி, 2.9.5] என்ற நம்மாழ்வார் வாக்குடனும் உடன்படுகிறது.
இப்படித் தன்னிச்சையாக அவதாரம் எடுக்க, அவனைப் பிறப்பிக்கச் செய்யும் கர்ம நிபந்தனையோ,
வேறு எவரோ கிடையாது என்பதே பொருள்.
நம் நாட்டில் பண்டிதர்கள், ஆச்சாரியார்கள் முதல் பாமரர் வரை அனைவரும் “மரியாதா புருஷோத்தம் ராம்” என்று
இராகவனையே விரும்பி அழைப்பர். இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவனன்றோ!
நாட்டிலுள்ள இந்துக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்த அயோத்தி ராம் ஜன்ம பூமி இயக்கத்தின் கோஷமே
“மரியாதா புருஷோத்தம் ராம்” என்பதாயிற்றே. பரமனாகிய திருமாலுக்கு “புருஷோத்தமன்” என்பது தனிப்பெரும் பெயர்.
திருமாலே “அதோ அஸ்மி லோகே வேதே3 ச ப்ரதிதஹ புருஷோத்தம”
[லோகத்திலும் வேதாந்தத்திலும் நான் “புருஷோத்தமன்” என்று அழைக்கப்படுகிறேன் — பகவத்கீதை 15.18 ] என்று செப்பியுள்ளான்.
சிவபக்தனாகிய காளிதாசனும், இராமனால் மனம் கவரப்பட்டு “ஹரிர்யதைகஹ் புருஷோத்தமஹ் ஸ்ம்ருதோ”
[ஹரி ஒருவனே புருஷோத்தமன் என்று கூறப்படுவதைப் போல — ரகுவம்சம், 3.49 ] என்று காவியம் படைத்தான்.
“இராமன்” என்ற திருநாமத்திற்கு, “ஸ்வேச்சயா ரமணீய வபுர்வஹன்வா தாச’ரதி ராம” என்று சங்கரர்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் (394-ஆவது நாமத்திற்கு) விளக்கியுள்ளார். இதன் பொருள்,
“மனதைக் கவரும் திவ்யமான ரூபத்தைத் தன்னிச்சையாலே எடுக்கவல்ல தசரத புத்திரனாகிய இராமன்” என்பதாகும்.
இத்துடன், வேதாந்தத்தின் அடிப்படை நூல்களில் ஒன்றாகிய “உபநிடதங்களின் சாரம்” என்று ஆதிசங்கரர் முதலிய
வேதாந்திகளால் போற்றப்பட்ட கீதை கூறும் விளக்கம் ஒன்றை இங்கு நினைவுப் படுத்த வேண்டும் [கீதை 4.14]:
“ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம பலே ஸ்ப்ருஹா |
இதி மாம் யோ அபிஜானந்தி கர்மபி4ர் ந ஸ பத்யதே ||”
இச்சுலோகத்தில் கண்ணன், “என்னைக் கன்மங்கள் (வினைகள்) தீண்டுவதில்லை, எனக்கு ஒன்றைச் செய்ய வேண்டும்
என்ற தனிப்பட்ட சுயநலமான ஆர்வமும் இல்லை. என்னைப்பற்றிய இவ்வுண்மையை எவனொருவன் உள்ளபடி அறிகிறானோ,
அவன் கன்மங்களின் பிடியிலிருந்து மீட்கப்படுகிறான்.” என்கிறார்.
ஆக, சற்றும் கன்ம சம்பந்தமற்ற முழுமுதற் பொருளின் நேரிடையான தோற்றமே இராமன் என்று அறிகிறோம்.
“ஸர்வஜ்ஞாத்ம முனி” என்பவர். இவருடைய நூல்களில் தம்மை “தேவேச்வரருடைய சீடர்” என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.
இவர் காலம் CE 10-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறது. ஸர்வஜ்ஞாத்ம முனிகள் எழுதிய அத்வைத விளக்க நூல்களில்
ஒன்று “ஸங்க்ஷேப சாரீரகம்“. (“சுருக்கமான பிரம்ம சூத்திர விளக்க நூல்” என்று பொருள்).
இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட சமஸ்கிருத சுலோகத்தைக் கொண்ட “அன்வயார்த்தப் பிரகாசிகை” என்னும் நூலானது,
ஸங்க்ஷேப சாரீரகத்திற்கு ஸ்ரீ ராமதீர்த்தர் எழுதிய விளக்கவுரை நூலாகும்
முழுமுதற் பொருளானது, சொரூபத்தாலேயே எல்லா ஆற்றல்களையும் குறைவறப் பெற்ற எல்லாம் அறிந்த இறைவனே என்று
வேதமும் பிரம்ம சூத்திரமும் கூறியிருக்க, இராமன் சீதையைப் பிரிந்துத் துன்புற்றது முதலிய நிகழ்ச்சிகள் எப்படிப் பொருந்தும்
என்ற கேள்விக்கு ஸ்ரீ ஸர்வஜ்ஞாத்ம முனிகள் ஸாங்க்ஷேப சாரீரகத்தில் விளக்கம் கூறுகிறார் [ஸங்க்ஷேப சாரீரகம், 2.182]:
“ஸங்கல்ப பூர்வகம் அபூத் ரகுநந்தனஸ்ய
நாஹம் விஜான இதி கம் சன காலம் ஏதத் |
ப்ரஹ்மோபதேச’ம் உபலப்ய நிமித்தமாத்ரம்
தச்ச உத்ஸஸர்ஜ ஸ க்ருதே ஸதி தேவகார்யே ||”
இதன் பொருள்: “தன்னுடைய சுய சங்கல்பத்தால் இரகுநந்தனன் சிறிது காலம் “நான் அறிகிலேன்” என்று
(வெளியுலகத்திற்குத்) காட்சியளித்தான். பிரம்மாவின் உபதேசத்தை வெறும் கருவியாகக் கொண்டு,
அந்த வேஷத்தையும் தானே கலைத்துக் கொண்டான். இப்படிச் செய்தது (தீய அரக்கர்களைக் கொல்வதாகிய)
தேவர்கள் வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக.”
“இராம! நீயே பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமாய் உளாய்! ஜகன்மாதாவாகிய சீதையை இப்படி நீ
சாதாரண மனிதனைப் போல பரீட்சிக்கலாமா?” என்று வினவினர். அப்பொழுது இராமன் அவர்களைக் கண்டு கைகூப்பி,
“ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் த3ச’ரதா2த்மஜம் |
ஸோஹம் யஸ்ய யதச்’சாஹம் ப4க3வம்ஸ்தத்3 ப்3ரவீது மே ||”[இராமாயணம், யுத்த காண்டம், 117.11]
அதாவது, “நான் என்னை தசரதன் புத்திரனாக, ‘இராமன்’ என்னும் பெயரை உடைய மனிதனாகத்தான் கருதுகிறேன்.
நான் யார், எத்தகையவன் என்று தேவர்களாகிய நீங்களே எனக்கு விளக்குங்கள்.” என்று மொழிந்தான்.
“நான் என்னை மனிதனாகத் தான் கருதுகிறேன்” என்று இராமன் கூறியதை மாத்திரம் வைத்துக்கொண்டு
“இராமன் ஒரு மனிதனே. கண்ணன் தான் கடவுள் என்று கீதையில் தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறார்” என்று சிலர் சொல்லக்கூடும்.
உண்மை என்னவென்றால், கண்ணனும் ஓரிடத்தில் இராமனைப் போலத்தான் கூறியுள்ளான் [விஷ்ணு புராணம், 5.13]:
பால்ய பருவக் கண்ணன், “ஆயர்களே! நான் உங்களுடைய குலத்திலேயே பிறந்த உங்கள் உறவினன்.
நானும் உங்களில் ஒருவன் தான். என்னை யக்ஷன் என்றோ, தேவன் என்றோ, ஒதுக்கிவிடாதீர்கள்.” என்று
ஆச்சரியமாக பதில் கூறினனன்றோ.
“பக்தவத்சலனாகிய இறைவன், தன்னுடைய பக்தனாகிய பிருகுவின் சாபத்தைப் பேணுதற்பொருட்டு
தானே மனிதனைப் போல அவதாரம் எடுத்து, துன்பப்படுவது போல நடித்தார்”
[பக்தவத்ஸலஸ்ய பகவதோ பக்த ப்ருகு சா’ப பரிபாலனாய ஸங்கல்பபூர்வகமேவ] என்று.
(அப்பைய தீட்சிதரும் “சித்தாந்த லேச சங்க்ரஹம்” என்னும் அத்வைத விளக்க நூலில்
இதே நியாயத்தை முன்வைத்து இராமாவதாரத்தை விளக்கியுள்ளார்).
“நல்லார்க டம்மை நலம்புரிந்து காத்தற்கும்
பொல்லாரைப் பொன்றுநெறி போக்கற்குஞ் – சொல்லாரு
முந்தை யறநாட்ட முய்த்தற்கு நான்பிறப்ப
னிந்தவுகந் தோறு மிசைந்து.”
இவ்வரிகள் “பகவத் கீதை வெண்பா” என்னும் செய்யுள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
இதனை இயற்றியவர் ஸ்ரீ அழகிய மணவாள ஜீயர் என்னும் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியர்.
இந்நூலில் இவர் சமஸ்கிருத மூலத்தில் உள்ள கீதை சுலோகங்களை அழகிய தமிழ் வெண்பாக்களாக மொழிபெயர்த்துள்ளார்.
மேற்கண்ட வெண்பாவானது,
“பரித்ராணாய ஸாதூனாம் வினாசா’ய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்னும் கீதை (4.8) சுலோகத்திற்கான தமிழாக்கமாகும்.
இதன் பொருள், “சாதுக்களாகிய நல்லோர்களையும் அறவோர்களையும் பேணுதற் பொருட்டும், தீயோர்களை அழிப்பதற்கும்,
தருமத்தை நிலைநாட்டவும் நான் எந்த யுகத்திலும் பிறக்கிறேன்.” என்பதாகும்.
இவ்விடத்தில் கீதாசார்யனான கண்ணன் தன்னுடைய அவதாரத்திற்கான முக்கியக் காரணங்களை அர்ஜுனனுக்கு விளக்கிக் கூறுகிறான்.
முதலையின் பிடியிலிருந்து மீள முடியாமல் கஜேந்திரன் இறைவனைத் துதிக்கிறான்.
இந்நிகழ்ச்சியை, பாகவதத்தைத் தமிழில் பாடிய ஆரியப்பப் புலவர், எட்டாம் கந்தத்தில் கசேந்திர அத்தியாயத்தில்
வாரண மாற்ற லோய்ந்து வானுறைத் தடக்கை நீட்டிப்
பூரண வுலக மெல்லாம் பூத்தளித் தழித்து நின்ற
காரண பரமா னந்தக் கடலிடைக் குளிப்போர் நெஞ்சும்
ஆரண முடிவு மேய வமலவோ வென்றரற்றும். … 28
வேதநூ லொருங்கு ணர்ந்து விரியுமெய் யறிஞ ருள்ளப்
போதுசேர் சோதி பொன்னிற் பொலியொளி போல வெங்கும்
தீதுறா தருளின் யார்க்குந் தெரிவுறா துறைந்து நின்ற
ஆதிகா ரணன்வந் தின்னே யளிக்கவென் றழைத்த தன்றே. …29 என்னும் விருத்தங்களின் வழியாகக் காட்டியுள்ளார்.
கஜேந்திரன் “ஆதிமூலமே! பரம் சோதியே! உலகத்திற்கெல்லாம் காரணப் பொருளாக இருப்பவனே” என்று
அருவநிலையைத் தான் துதித்தான். ஆனால் காக்க வந்தவனோ,
“வெய்ய படர் சிறைக் கலுழன் ஊர்ந்து, தீப்பொழிந்திலங்கு கூர்வாய்த் திகிரிகைத் தாங்கி” வந்ததாக
அடுத்த பாடலில் புலவர் பாடுகிறார். முன்பு நாம் கேட்டவண்ணம் “எதற்கிப்படி உருவத்துடன் வர வேண்டும்,
எங்கும் வியாபித்திருப்பதால் அருவமாகவே நின்று முதலையைக் கொன்றிருக்கலாமே?” என்று இங்கும் கேட்கலாம்.
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே?–[திருவாய்மொழி, 3.1.9]
கம்ப ராமாயணத்தின் ஆரணிய காண்டத்தைச் சேர்ந்த விராதன் வதைப் படலத்தில், விராதன் சாபம் நீங்கிய
பிறகு செய்யும் மெய்சிலிர்க்க வைக்கும் துதியின் முடிவில்
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந்தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இரு வினையும்
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால் துடைத்தாய் நீ. என்ற பாடல் உள்ளது.
விராதன் தான் செய்த தவப் பயனால் பாற்கடலில் பாம்பணையில் விரும்பி யோக நித்திரையில் உள்ள திருமால்
(“முன் உவந்து உறையும் அப்பு உறையுள்”) அதனைத் துறந்து, இராமனாய் அவதரித்துத் தனக்குக் காட்சியளித்ததில்
தன் கொடிய சாபம் மட்டுமின்றி, “போய பிழையும் புகுதருவான் நின்றனவும்” [திருப்பாவை – 5] ஆகிய
முன் வினைகள் நீங்கப் பெற்று மோட்ச நிலையைத் தான் எய்தியதை உவகையோடு உரைக்கிறான்.
பள்ளிகொண்ட பரமன் தான் விழைந்து அவதாரமெடுக்கும் இச்செய்தியைக் கம்பர், இராமானுஜர் தம் கீதை விளக்கத்தில் எடுத்துள்ள
“ஏஷ நாராயண: ஸ்ரீமான் க்ஷீரார்ணவ நிகேதன:
நாகபர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகதோ மதுராம் புரீம்”
எனும் கண்ணனைப் பற்றிய மகாபாரத வரிகளின் எதிரொலியாகவே இராமனைக் குறித்துச் செய்துள்ளாரோ என்று வியக்க இடமுண்டு.
ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே
வேத சா`ஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேச`வாத் பரம்’
தர்மம் வேறல்ல, கண்ணன் வேறல்ல; “க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்பது மகாபாரதத்தில் முனிவர்களின் கூற்று.
கண்ணனையே நாடி கண்ணனுக்கே சேவை செய்து கண்ணனையே அனுபவிப்பதைத் தான் “தர்மம்” என்று சொல்கிறோம்.
பட்டர் கூறும் தர்மத்தை ‘பாகவத தர்மம்’ என்று கொள்ளலாம். பாகவத தர்மம் என்றால் என்ன?
பூரி ஜகன்னாத க்ஷேத்திரத்தில் 15/16-ஆம் நூற்றாண்டு குடிகொண்டிருந்த அத்வைத ஆச்சாரியாராகிய
ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி தம் நூலாகிய கூடார்த்த தீபிகையில் (Gudhartha Dipika) கீதை 18.65-க்கு விளக்கம் கூறுகையில்,
“ச்’ரவணம் கீர்த்தனம் விஷ்ணோஸ் ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தா3ஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்”[ஸ்ரீமத் பாகவதம், 7.5.23-24]
என்று பிரகல்லாத ஆழ்வான் பாகவதத்தில் கூறும் நவ வித பக்தியையே ‘பாகவத தர்மம்‘ என்று கூறுகிறார்.
இக்காரணம் பற்றியே, நிர்விசேஷ பிரம்ம வாதியாக – பழுத்த அத்வைதவாதியாக இருந்த போதும்
ஸ்ரீ மதுசூதன சரஸ்வதியும், சர்வஞாத்ம முனிகளின் சங்க்ஷேப சாரீரகம் என்ற வேதாந்த நூலில் வரும்
“… ப்ரபோ4: ஸகல லோக ஹிதாவதார
ஸ்வேச்சா2வினிர்மித வபுர் வரம் அந்தரேண”–[சங்க்ஷேப சாரீரகம், 2.179]
என்ற இடத்திற்கு, அந்நூற்குத் தாம் எழுதிய ‘ஸார ஸங்க்ரஹம்‘ என்னும் விளக்கவுரையில் முதலில்,
“கம்சன் முதலான அசுரர்களையோ, இராவணாதிகளையோ வதைப்பதனால் சகல லோகங்களுக்கும் நன்மையை
அளிக்கும் அழகிய திருமேனிகளாகிய அவதாரப்பெருமையையே ’ஸ்வேச்சயா… வபுர் வரம்’ என்று விவரிப்பது.”
என்று விளக்கிய பிறகு, அவ்விடத்தை ஒட்டியே
“தன்னுடையவர்களாகிய பக்தர்களின் இச்சைக்கு இணங்க, என்றுமாம். அவியக்த பிரம்மமாகிய அக்ஷரமாக இருக்கும்
பரமாத்மாவை உபாசிப்பது அதி துர்லபம் ஆகையாலே தன்னுடைய பக்தர்களுடைய வேண்டுதலைப் பூர்த்தி செய்யும்
வண்ணம் பகவானால் எடுக்கப்படும் அவதாரம்.” என்று கூறுகிறார்.
ஸங்க்ஷேப நூலில் முனிகளுடைய வாக்கியத்தில் “ஸ்வேச்சயா” [தன்னிச்சையாக (அ) சுதந்திரமாக] என்று இருப்பினும்,
“தன்னுடையவர்களாகிய பக்தர்களின் இச்சைக்கு இணங்க” என்று மதுசூதனர் பாஷ்யமிட்டிருப்பது
அருமையான விஷயமாகும் (ஸ்ரீ ராமதீர்த்தரும் அன்வயார்த்தபிரகாசிகையில் இப்படியே உரையிட்டுள்ளார்).
தமது ’கூடார்த்த தீபிகை’ (Gudhartha Dipika) என்னும் பகவத்கீத உரையில் ஆங்காங்கு மெய்சிலிர்க்க
வைக்கும் அர்த்தங்களைக் கொண்ட பல சுலோகங்களை பாடியுள்ளார்:
“த்யாநாப்யாஸ வசீ’க்ருதேன மநஸா தந் நிர்குணம் நிஷ்க்ரியம்
ஜ்யோதி: கிம் ச, ந யோகிநோ யதி பரம் பச்’யந்தி பச்’யந்து தே |
அஸ்மாகம் து தத் ஏவ லோசன-சமத்காராய பூயாச் சிரம்
காலிந்தீ புலிநோதரே கிம் அபி யந் நீலம் மஹோ தாவதி ||“
[தம்முடைய யோக பலத்தினால் மனதை அடக்கிக் குணமற்ற ஆன்ம ரூபத்தைச் சில ஞானிகள் கண்டால்
கண்டுகொள்ளட்டும். நமக்கோ, யமுனைக்கரையில் துள்ளி விளையாடும் அந்த நீலநிற ஒளிவடிவம் ஒன்றே
நம் நமது கண்கவர எப்போதும் நிலைத்திருக்கட்டும் – கூடார்த்த தீபிகை, 13-ஆம் அத்தியாய அவதாரிகை]
“காருண்யதோ நரவதாசரத: பரார்த்தாந்
பார்த்தாய போதிதவதோ நிஜமீச்‘வரத்வம் |
ஸச்சித்ஸுகைகவபுஷ: புருஷோத்தமஸ்ய
நாராயணஸ்ய மஹிமா ந ஹி மாநமேதி ||”
“கேசிந்நிக்ருஹ்ய கரணாநி விஸ்ருஜ்ய போகம்
ஆஸ்தாய யோகமமலாத்மதியோ யதந்தே |
நாராயணஸ்ய மஹிமாநம் அநந்த பாரம்
ஆஸ்வாதயந்ந் அம்ருதஸாரம் அஹம் து முக்த: ||”
[மனிதனைப் போலக் காட்சியளித்து, ஆழ்ந்த மெய்ப்பொருளியலையும் தன்னுடைய உண்மையான ஈசுவர சொரூபத்தையும்
பார்த்தனுக்கு உரைத்தும் காட்டியும் விளக்கிய கருணைவள்ளலாகிய புருடோத்தமனாம் நாராயணனுடைய மகிமை
பெருவியப்பை அளிக்கின்றதன்றோ! சிலர் தம் ஐம்பொறிகளை அடக்கி, போக பலன்களைக் கைவிட்டு,
யோகத்தைக் கடைபிடித்து அடையும் சித்த சுத்தியினாலேயே மோட்சம் அடைய முயற்சி செய்கின்றனர்.
யானோ, நாராயணனுடைய மகிமையாகிய எல்லையற்ற அமுதக்கடலைச் சிறிது சுவைத்ததினாலேயே
முக்தனானேன். – கூடார்த்த தீபிகை, 15.18]
இப்படி ஞானிகள் பாமரர்கள் என்ற பாகுபாடின்றித் திருமாலின் எளிமையைப் புகழ்ந்துள்ளமை
அவன் அவதாரப் பெருமையையும் அதனால் நாம் அடையும் பயனையும் நன்கு உணர்த்தும்.
இறுதியாக, நாம் இதுவரை கண்ட அவதாரப் பெருமைகளையெல்லாம் ஒன்று சேர்த்து ஓரிடத்தில் அர்ஜுனன்
வாய்மொழியாக (கீதை மூலத்தில் இல்லாவிடினும், உரையில்) கவிதை நயம்பட ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி விளக்கியுள்ளார்.
அவ்விடத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:
“கண்ணா, நீயோ பிறக்கும் பொழுதே யோகிகளால் விரும்பப்படும் ரூபமாகிய, வைகுண்டமென்னும் உயர்ந்த நல்வீட்டில்
குடிகொண்டுள்ள அந்த திவ்ய மங்கள ரூபத்தை வெளிப்படுத்தினாய்.
அத்துடன் ஸ்ரீவத்சம், கௌஸ்துபம், பாதம் வரை நீண்டிருக்கும் வைஜயந்தி மாலை முதலானவையோடும்,
வெண்சங்கம், தாமரை மலர், கௌமோதகி என்னும் கதை, சக்கரம் ஆகியவற்றை ஏந்திய நான்கு கரங்களுடனும்,
கருட வாகனத்துடனும், அண்டமெல்லாம் உன்னை ராஜாதிராஜன் என்று முடிசூட்டப்பட்டிருப்பதாகிய சிறந்த பெருமையுடனும்,
சகல தேவர்களையும் அசுரர்களையும் வெற்றிகொண்டும் விளங்குகிறாய். பல அரிய இலீலைகளைப் புரிகிறாய்.
அவதாரங்களுக்குச் சூடாமணியாக விளங்கியும் வைகுண்டத்திற்கு அரசாகவும் இருக்கிறாய்.
இஞ்ஞாலம்வாழ் மக்களுடைய துயர் அனைத்தையும் தீர்க்கும் வண்ணம் அவதரித்துள்ளாய்;
பிரமனுடைய படைப்பில் எங்குமே காணப்படாத, ஒப்பற்ற சௌந்தரியங்களைக் குறைவறப் பெற்றுள்ளாய்.
உன்னுடைய குழந்தைப் பருவ விளையாட்டாக பிரமனையே தலைகுனியச் செய்தாய்.
ஆயிரம் சூரிய கிரணங்களை ஒத்த பொன்னிற ஆடையையும் கண்கவரும் அழகிய கார்முகில் உருவத்தையும் பெற்றுள்ளாய்;
இந்திரனை ஜயித்து பாரிஜாதத்தைப் பெற்றாய். வாணாசுரனுடன் போர் புரிகையில் சிவனையும் வென்றாய்.
தேவர்களையெல்லாம் நடுங்க வைத்த நரகாசுரனைக் கொன்று அவனிடமிருந்த எல்லாவற்றையும் அரக்கர்களது உயிர்களோடு சேர்த்து அபகரித்தாய்.
அதே சமயம் ஒன்றும் இல்லாமல் திண்டாடிய சுதாமாவைச் செல்வந்தன் ஆக்கினாய்.
பதினாறாயிரம் திவ்விய உருவங்களை எடுத்தாய்; அளவற்ற சிறப்பை உடைய குணங்களைப் பெற்றுள்ளாய்;
திசை எங்கும் பரவிய கீர்த்தியை உடையாய். நாரத மார்க்கண்டேயாதி ரிஷிகளுடைய வந்தனங்களுக்குப் பாத்திரமானாய்.
இப்படிப்பட்ட உன்னை சீவன் என்று பகுத்து அறியாதவன் கூட எண்ணுவதற் கிடமில்லையே?”[கூடார்த்த தீபிகை, 7.24]
அச்சுதனின் அவதாரப் பெருமை (ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்த சாரம்) வள்ளல் அருணகிரிநாதர் வாக்குப் படி
மருகன் எனாமல் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
வரவிடு மாயப் பேய்முலை பருகா மேல்
வருமத யானைக் கோடவை திருகிவிளாவிற் காய்கனி
மதுகையில் வீழச்சாடியச் சதமாபுள்
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப்போதொரு
சகடுதையா மற்போர்செய்து விளையாடி
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுத
புரம் அதில் மாபுத் தேளிர்கள் பெருமாளே
மருமகன் என்றும் பாராமல் கம்ஸன் அனுப்பிய பூதனையின் ஸ்தனத்திலிருந்து பாலொடு உயிரை எடுத்தும்
குவலயா பீட யானையை வதம் செய்தும் விளாமர ரூபமாயும் கன்று ரூபமாயும் னின்ற கபிஸ்தாசுரன் மற்றும்
தேனுகாசுரன் இவர்களை வதம் செய்தும் இரு பெரு மருத மரங்களுக்கிடையில் போய் அவற்றை முறித்தும்
சகடாசுரனை உதைத்தும் (வதைத்தும்) சாணூர முஷ்டிக மல்லர்களுடன் மற்போர் செய்தும் இடைச்சேரியில்
வளர்ந்த கண்ணனின் மருகோனே என்று புகழ்கிறார்.
இஃது யதார்த்தம்.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா ஸஹித கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply