ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/4-நகர் நீங்கு படலம்–

பொருளடக்கம்
1 இராமன் கோசலை உரையாடல்
2 இராமன் காட்டிற்கு செல்லவேண்டும் எனக் கேட்ட கோசலையின் துயரம்
3 துயருற்ற கோசலையை இராமன் தேற்றி ஆறுதல் கூறுதல்
4 தன்னையும் உடன் காட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கோசலை வேண்டுதல்
5 கோசலையின் வேண்டுதலை இராமன் மறுத்து உரைத்தல்
6 இராமன் காடு செல்வதை தடுக்க எண்ணி கோசலை தயரதனிடம் செல்லுதல்
7 இராமன் சுமித்திரையின் மாளிகைக்குச் செல்லுதல்
8 கைகேயின் மாளிகையில் தயரதன் நிலை கண்டு கோசலை மயங்கி விழுதல்
9 கோசலையின் புலம்பல்
10 கோசலை புலம்பலை பிறர் சொல்லக் கேட்ட வசிட்டனின் வருகை
11 நிலைமையைக் கண்ட வசிட்டனின் மனக் கருத்து
12 வசிட்டனிடம் கைகேயி நிகழ்ந்தவற்றை கூறுதல்
13 வசிட்டன் தயரதனை தெளிவித்தல்
14 வசிட்டனின் தேறுதல் வார்த்தைகள்
15 வசிட்டனிடம் தயரதன் வேண்டுகோள்
16 வசிட்டனின் அறிவுரையும் கைகேயின் மறுப்பும்
17 வசிட்டன் கைகேயியை கடிந்துரைத்தல்
18 தயரதன் வருத்தத்துடன் கைகேயியை பழித்துக் கூறுதல்
19 கைகேயி, பரதன் இருவரையும் தயரதன் துறத்தல்
20 தயரதன் நிலை கண்ட கோசலையின் துயர்நிலை
21 தயரதனை கோசலை தேற்றுதல்
22 கோசலையின் பெருந்துயர்
23 இராமன் காட்டிற்கு செல்வது நினைத்து தயரதன் புலம்புதல்
24 புலம்பும் தயரதனை வசிட்டன் தேற்றுதல்
25 வசிட்டன் மொழி கேட்டு தயரதன் சிறிது தெளிதல்
26 தயரதன் நிலை கண்டு கோசலை வருந்துதல்
27 தயரதனை கோசலை தேற்றுதல்
28 இராமன் வருவானா எனத் தயரதன் கோசலையிடம் கேட்டு வருந்துதல்
29 தயரதன் கைகேயின் கொடுமையைக் கூறி வருந்துதல்
30 தயரதன் தான் சாபம் பெற்ற வரலாற்றை கோசலையிடம் கூறுதல்
31 வசிட்டன் அரசவை சேர்தல்
32 இராமன் காடு செல்வது பற்றி கேட்டோரின் துன்ப நிலை
33 ஊர் மக்களின் துயரம்
34 நகரத்தவரின் வருத்தம்
35 இலக்குவனின் கோபம்
36 இலக்குவனின் ஆவேச உரை
37 அயோத்தி மாநகரில் இலக்குவன் கோபத்தோடு அலைதல்
38 இலக்குவனின் நாணொலி கேட்டு இராமன் தேடி வருதல்
39 இலக்குவனிடம் போர்க்கோலம் பூண்டதற்கான காரணத்தை இராமன் வினவுதல்
40 இலக்குவனின் பதில் உரை
41 இப்போது சினம் கொள்ளாது எப்போது சினம் கொள்வது என இலக்குவன் கூறல்
42 இராமன் சினம் கூடாது என்பதற்கு ஏற்ற காரணம் இயம்புதல்
43 இலக்குவன் சினந்து பதில் கூறுதல்
44 இராமன் இலக்குவனின் கோபம் தணித்தல்
45 இலக்குவனின் பிடிவாதம்
46 இராமன் மீண்டும் இலக்குவனுக்கு அறிவுரை கூறுதல்
47 இராமன் அறிவுரை கேட்டு இலக்குவன் சினம் அடங்கல்
48 இராமனின் சமாதான உரை
49 இராமன் உரையால் இலக்குவன் சீற்றம் தணிதல்
50 இராம இலக்குவனர் சுமித்திரை அரண்மனை அடைதல்
51 வனம் செல்லும் தன் மக்களைக் கண்ட சுமித்திரையின் வருத்தம்
52 இராமன் சுமித்திரையின் துயரை போக்குதல்
53 கைகேயி தோழியர் மூலம் மரவுரி அனுப்புதல்
54 மரவுரியைக் காட்டுமாறு இலக்குவன் கூறுதல்
55 இலக்குவன் வனம் செல்ல தாயிடம் விடைபெறுதல்
56 இலக்குவனுக்கு சுமித்திரையின் அறிவுரை
57 இராம இலக்குவனர் சுமித்திரையிடம் விடைபெற்று மரவுரி தரித்து செல்லுதல்
58 மரவுரி தரித்த இலக்குவனை பெற்றோருடம் இருக்க இராமன் கூறுதல்
59 இலக்குவனின் மறுமொழி
60 இராமன் உள்ளம் நெகிழ்தல்
61 வசிட்ட முனிவனின் வருகை
62 வசிட்ட முனிவன் வருத்தம்
63 இராமன் வனவாசம் குறித்து வசிட்ட முனிவன் சிந்தனை
64 இராமன் காட்டிற்கு செல்வதை வசிட்டன் தடுத்தல்
65 வசிட்ட முனிவனுக்கு இராமனின் மறுமொழி
66 கானகம் செல்ல கூறுதல் மன்னன் பணி அன்று என வசிட்டன் கூறுதல்
67 இராமனின் விளக்க உரை
68 வசிட்டனை வணங்கி இராமன் மன்னன் மாளிகை வாயில் அடைதல்
69 மக்களின் துயரம்
70 சிந்தின அணிமணி சிதறி வீழ்ந்தன;
71 தயரதனின் அரசியர் அடைந்த துயரம்
72 இராமன் தன் மாளிகைக்குச் செல்லுதல்
73 இராமன் வீதியில் சென்ற காட்சி
74 வீதியில் இராமனைக் கண்டோர் அடைந்த வருத்தம்
75 அயோத்தி நகரில் பொழிவு அழிதல்
76 இராமன் சீதை இருக்குமிடம் சேர்தல்
77 மாமியார் இருவரும் சீதையைத் தழுவி நிற்க, சீதை இராமனை காரணம் வினாவுதல்
78 இராமன் நடந்தது இயம்புதல்
79 இராமன் சொல் கேட்ட சீதையின் துயர்
80 இராமன் தன் கூற்றுக்கான காரணத்தை இயம்புதல்
81 சீதை தன் மன உறுதியை இராமனுக்கு உரைத்தல்
82 சீதையின் மன உறுதியை அறிந்து இராமன் சிந்தனை வயப்படுதல்
83 சீதை மரவுரி தரித்து இராமன் அருகில் வந்து நிற்றல்
84 சீதையைக் கண்டோர் கொண்ட துயரம்
85 இராமன் சீதை உரையாடல்
86 சீதையை அழைத்துக் கொண்டு இராமன் புறப்படுதல்
87 இராமன், சீதை மற்றும் இலக்குவனுடன் செல்லுதல்
88 மக்கள் யாவரும் இராமனைத் தொடர்ந்து செல்லுதல்
89 இராமன் தாயரை வணங்கி மன்னன் தயரதனுக்கு ஆறுதல் கூறுமாறு கூறுதல்
90 தாய்மார்கள் மூவரையும் வாழ்த்துதல்
91 வசிட்டனை வணங்கி பின் மூவரும் தேர் ஏறிச் செல்லுதல்
92 மிகைப் பாடல்கள்

———

இராமன் கோசலை உரையாடல்

குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி
இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையாள் மௌலி கவித்தனன் வருமென்று என்று
தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன் ஒரு தமியன் சென்றான். 1-

‘மழைக்குன்றம் அனையான் – மேகத்தால் மூடப்பெற்ற மலையை
ஒத்தவனாகிய இராமன்; மௌலி கவித்தனன் வரும்’ என்று என்று –
மகுடம் சூடிக்கொண்டு வருவான் என்று நினைத்துநினைத்து; தழைக்கின்ற
உள்ளத்து அன்னாள் முன் – மகிழ்ச்சியால் செழித்தமனம்
உடையவளாகிய அக்கோசலையின் முன்பு; குழைக்கின்ற கவரி இன்றி –
பக்கங்களில்வீசுகின்ற வெண்சாமரை இல்லாமல்; கொற்ற வெண்குடையும்
இன்றி – வெண் கொற்றக்குடையும் இல்லாமல்; இழைக்கின்ற விதி முன்
செல்ல – நன்மை தீமைகளை மெல்ல மெல்லச்செல்லச் செல்லக் காட்டி
நடத்துகின்ற விதி முன்னே அழைத்துச் செல்ல; தருமம் பின்இரங்கி ஏக-
அறக்கடவுள் வருந்திப் பின்னே தொடர்ந்து வர; ஒரு தமியன் சென்றான்-
தன்னந் தனியனாய்ச் சென்றான்.

—————–

‘புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?’ என்றாள். 2

‘மௌலி புனைந்திலன் – மகுடம் சூடவில்லை; குஞ்சி – தலைமுடி;
மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன் – அபிடேகமாகிய தூய நதிகளின்
தண்ணீரால் நனையப்பெற்றான்இல்லை; என்கொல்?’ – என்ன காரணம்;
என்னும் ஐயத்தாள் -என்கின்ற சந்தேகத்தை உடையவளாக இருக்கின்ற
கோசலைத்தாயின்; நளின பாதம் -தாமரையாகிய அடிகளை; வனைந்த
பொன் கழற்கால் வீரன் வணங்கலும் – பொன்னாற்செய்யப்பெற்ற
வீரக்கழல் அணிந்த இராமன் வணங்கிய அளவில்; குழைந்து வாழ்த்தி –
மனம் உருகி ஆசி கூறி; ‘நினைந்தது என்?’ – சக்கரவர்த்தி எண்ணிய
செயல்என்னாயிற்று; நெடுமுடி புனைதற்கு இடையூறு உண்டோ? –
உயர்ந்த மகுடத்தைச் சூடுதற்குஏதேனும் தடை உளதோ;’ என்றாள் –
என்று கேட்டாள்.

——–

மங்கை அம்மொழி கூறலும், மானவன்
செங்கை கூப்பி , ‘நின் காதல் திரு மகன்,
பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,
துங்க மா முடி சூடுகின்றான்’ என்றான். 3-

மங்கை – கோசலை; அம்மொழி கூறலும் – ‘நெடுமுடி புனைதற்கு
இடையூறுஉண்டோ?’ என்ற அந்த வார்த்தையைச் சொல்லிய உடன்;
மானவன் – பெருமை குறையாதஇராமன்; செங்கை கூப்பி – (தாயைச்)
சிவந்த கைகளைக் கூப்பித் தொழுது; ‘நின்காதல் திருமகன் –
உன்னுடைய அன்பிற்குரிய சிறந்த புதல்வன்; பங்கம் இல் குணத்து
எம்பி – குற்றமற்ற குணநலன்களை உடைய என் தம்பி; பரதனே -;
துங்க மாமுடி சூடுகின்றான்’ – பரிசுத்தமான சிறந்த முடியைச்
சூடப்போகிறான்;’ என்றான் -.

———-

‘முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக் கூறினாள் – நால்வர்க்கும்
மறு இல் அன்பினில், வேற்றுமை மாற்றினாள். 4-

நால்வர்க்கும் – இராமலக்குமண பரத சத்துருக்கனர்களாகிய
நால்வரிடத்தும்; மறு இல் அன்பினில் – குற்றம் அற்ற அன்பு
செலுத்துவதில்; வேற்றுமை மாற்றினாள் -வேறுபாட்டை நீக்கி ஒரே
தன்மையளாய் உள்ள கோசலை; ‘முறைமை அன்று என்பது ஒன்று
உண்டு- மூத்தவன் இருக்கும் போது இளையவன் அரசாளுவது முறைமை
அன்று என்ற ஒரு குறை உண்டு; மும்மையின்நிறை குணத்தவன் –
மூன்று மடங்கு எல்லாரினும் மேம்பட்டு நிறைந்த குணத்தினை உடையவன்;
நின்னினும் நல்லன் – உன்னையும்விட நல்லவன்; குறைவு இலன் –
கல்வி, இளமை, வீரம், குணம் முதலிய யாவற்றாலும் யாதொரு குறைவும்
இல்லாதவன்;’ எனக்கூறினாள் – என்று சொன்னாள்.

———–

என்று, பின்னரும், ‘மன்னன் ஏவியது
அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்
நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து
ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள். 5-

என்று – என்று கூறி; பின்னரும் – பிறகும்; ‘ மகனே! –
இராமகனே; மன்னவன் ஏவியது – சக்கரவர்த்தி ஆணையிட்டது
எதுவாயினும்; அன்றுஎனாமை – நீதியன்று என்று மறுக்காமல் அப்படியே
ஏற்றுச் செய்வது; உனக்கு அறன் -உனக்குரிய தருமம் ஆகும்; நன்று –
நல்லது; நீ – ; நும்பிக்கு – உன்தம்பியாகிய பரதனுக்கு; நானிலம்
கொடுத்து – இவ்வுலகை ஆளும் உரிமையைத் தந்து; (அவனுடன்) ஊழி
பல – பல நெடுங்காலங்கள்; ஒன்றி வாழுதி – ஒன்றுபட்டுவாழ்வாயாக;’
என்றாள்-.

———-

தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,
‘நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு, ஓர் பணி’ என்று இயம்பினான். 6-

தாய் உரைத்த சொல் கேட்டு – தாயாகிய கோசலை கூறிய
சொற்களைக் கேட்டு; தழைக்கின்ற – மகிழ்ச்சி அடைகின்ற; தூய சிந்தை-
தூய்மையான மனம் உடைய; அத் தோம் இல் குணத்தினான் – அந்தக்
குற்றம் இல்லாத குணத்தை உடைய இராமன்; (அவளைநோக்கி) ‘நாயகன்-
தயரதச் சக்கரவர்த்தி; எனை நல்நெறி உய்ப்பதற்கு – என்னை நல்ல
வழியில் செலுத்துவதற்கு; ஏயது – ஏவிய; ஓர் பணி உண்டு’ – ஒரு
கட்டளை உள்ளது; என்று இயம்பினான் – என்று சொன்னான்.

———–

“ஈண்டு உரைத்த பணி என்னை?” என்றவட்கு,
‘”ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ், அகல் கானிடை
மாண்ட மாதவத் தோருடன் வைகிப்பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்” என்றான்’ என்றான். 7-

‘ஈண்டு – இவ்விடத்தில்; உரைத்த – (சக்கரவர்த்தி உனக்குச்)
சொல்லிய; பணி என்னை’ – கட்டளை யாது; என்றவட்கு – என்று
கேட்டகோசலைக்கு; ஓர் ஏழினோடு ஏழ் ஆண்டு – ஒரு பதினான்கு
ஆண்டுக் காலம்; அகன்கானிடை – அகன்ற காட்டிடத்தில்; மாண்ட –
மாட்சிமை பொருந்திய; மாதவத்தோருடன் – முனிவர்களுடன்; வைகி –
தங்கி; பின் – பிறகு; நீ மீண்டு வரல் வேண்டும் – நீ திரும்பி வருதல்
வேண்டும்; என்றாள்’ – என்று கூறினான்; என்றான் -.

————–

இராமன் காட்டிற்கு செல்லவேண்டும் எனக் கேட்ட கோசலையின் துயரம்

ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்
வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ. 8-

ஆங்கு – அப்பொழுது; அவ் வாசகம் என்னும் அனல் – (இராமன்
காடு செல்லவேண்டும் என்று தயரதன் கூறிய) அந்த வார்த்தை என்கிற
நெருப்பு; குழை தூங்கு தன் செவியில்தொடராமுனம் – காதணி
அசைகின்ற தன்னுடைய காதுகளில் வந்து விழுதற்கு முன்னமே (கோசலை);
ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள் – இரங்கி, மெலிந்து, தடுமாறி;
மனம்வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் – மனம் வீங்கி, வருந்தி,
மயக்கமுற்றுக்கீழே விழுந்தாள்.

———–

‘வஞ்சமோ, மகனே! உனை, “மா நிலம்
தஞ்சம் ஆக நீ தாங்கு” என்ற வாசகம்?
நஞ்சமோ! இனி, நான் உயிர் வாழ்வெனோ?
அஞ்சும்; அஞ்சும்; என் ஆர் உயிர் அஞ்சுமால்!’ 9-

‘மகனே! – ; உனை ‘மாநிலம் தஞ்சம் ஆக நீ தாங்கு’ என்ற
வாசகம் – உன்னைநோக்கி (தசரத சக்கரவர்த்தி) நீ இந்தப் பூமியைப்
பற்றுக்கோடாக இருந்து காப்பாற்றுவாயாக என்று சொல்லிய வார்த்தை;
வஞ்சமோ? – வஞ்சனையோ?; நஞ்சமோ? – விடம் போலக் கொடியதோ?;
நான் இனி உயிர் வாழ்வெனோ? – நான்இனிமேல் உயிர்வாழ
மாட்டுவேனோ?; என் ஆர் உயிர் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் – என்
அரிய உயிர் மிகவும் பயப்படும்.’

—————-

கையைக் கையின் நெரிக்கும்; தன் காதலன்
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினைப்
பெய் வளைத் தளிரால் பிசையும்; புகை
வெய்து உயிர்க்கும்; விழுங்கும், புழுங்குமால். 10-

(கோசலை), கையைக் கையின் நெரிக்கும் – கையை மற்றொரு
கையால் நெரிப்பாள்;தன்காதலன் வைகும் – தன் மகளாகிய இராமன்
தங்கிய; ஆல் இலை அன்ன வயிற்றினைப்பெய் வளைத்தளிரால்
பிசையும் – ஆல் இலை போன்ற தன் வயிற்றைத் தனது வளையல்
அணிந்ததளிர் போன்ற கைகளால் விசைவாள்; புகை வெய்து
உயிர்க்கும் – உள் நெருப்பால்புகையோடு கூடிய வெப்ப மூச்சு விடுவாள்;
விழுங்கும் – அவ் உயிர்ப்பை அடக்குவாள்; புழுங்கும் – வெம்பிப்
போவாள்.

———–

‘நன்று மன்னன் கருணை’ எனா நகும்;
நின்ற மைந்தனை நோக்கி, ‘நெடுஞ் சுரத்து
என்று போவது?’ எனா எழும்; இன் உயிர்
பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே. 11-

‘மன்னன் கருணை நன்று’ எனா நகும் – ‘சக்கரவர்த்தி உன்பால்
காட்டிய இரக்கம்மிக நன்றாய் இருந்தது’ என்று சிரிப்பாள்; நின்ற
மைந்தனை நோக்கி – தன் எதிரேநின்ற இராமனைப் பார்த்து; ‘நெடுஞ்
சுரத்துப் போவது என்று’ எனா எழும் – நீண்டகாட்டு வழியில்
போவது எப்போது என்று சொல்லி எழுந்திருப்பாள்; இன் உயிர்
பொன்றும்போது உற்றது – இனிய உயிர் போகும்போது அடைகின்ற
மரண வேதனையை; உற்றனள் போலும் – தற்போது அடைந்தாள் போல
ஆனாள்.

———

‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு, நீ
என் பிழைத்தனை?’ என்று, நின்று ஏங்குமால்முன்பு
இழைத்த வறுமையின் முற்றினோர்,
பொன் பிழைக்கப் புலம்பினர் போலவே. 12-

‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு – உன்னிடத்துப் பேரன்பு
செய்துவந்து மனத்தை உடையதயரத சக்கரவர்த்திக்கு; நீ என்
பிழைத்தனை’ – நீ என்ன தவறு செய்தாய்;’ என்றுநின்று – என்று
சொல்லிக் கொண்டு; முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர் –
முற்பிறவியிற் செய்த வினையால் இப்போது வறுமையில் வாடியவர்கள்; பொன் பிழைக்க-
எதிர்பாராமல்கிடைத்த பொன்னானது தவறியதால்; புலம்பினர் போல-
புலம்பியவர்களைப் போல; ஏங்கும் – வருந்து வாள் ஆயினள்.

———–

‘அறம் எனக்கு இலையோ?’ என்னும்; ‘ஆவிநைந்து
இற அடுத்தது என், தெய்வதங் காள்?’ என்னும்
பிற உரைப்பது என்? கன்று பிரிந்துழிக்
கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள். 13-

‘எனக்கு அறம் இலையோ’ எனும் – எனக்குத் தருமம் துணையாக
இல்லையோ என்பாள்; தெய்வதங்காள் – தெய்வங்களே!; ஆவி நைந்து
இறவு அடுத்தது என்? எனும் – உயிர்தேய்ந்து சாகும்படி வந்து நேர்ந்தது
என்ன காரணம் என்பாள்; பிற உரைப்பது என்? -கோசலையின்
அப்போதைய மனநிலைக்கு வேறு உவமை சொல்வது என்ன பயனுடைத்து;
கன்று பிரிந்துழி கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள் – தன் கன்று
பிரிந்த பொழுது கறவை ஒப்பக்பசு துடிப்பதுபோல மனம் உருகித் கலங்கித்
துடித்தாள்.

—————-

துயருற்ற கோசலையை இராமன் தேற்றி ஆறுதல் கூறுதல்

இத் திறத்தின் இடர் உறு வாள்தனைக்
கைத்தலத்தின் எடுத்து, “அருங் கற்பினோய்!
பொய்த் திறத்தினன் ஆக்குதியோ? புகல் –
மெய்த்திறத்து நம் வேந்தனை, நீ” என்றான். 14-

(இராமன்) இத் திறத்தின் இடர் உறுவாள்தனை – இவ்வாறு
சொல்லிப் புலம்பித்துன்பம் அடைகின்றவளாகிய கோசலைத் தாயை;
கைத்தலத்தின் – கைகளால் தூக்கி; ‘அருங் கற்பினோய்! – பெண் டிர்க்கு அரிய கற்பினை உடையவளே; மெய்த்திறத்துத நம் வேந்தனை-
உண்மைக் கூற்றில்ஒரு சிறிதும் பிறழாத நம் சக்கரவர்த்தியை; நீ பொய்த்
திறத்தினன் ஆக்குதியோ? புகல்’ – சொன்ன சொல்லை மாற்றிக்
கொள்ளும் பொய்த்தன்மை உடையவனாக நீசெய்துவிடுவாயோ,
சொல்வாயாக; என்றான் -.

———-

பொற்பு உறுத்தன, மெய்ம்மை பொதிந்தன!
சொற்பு உறுத்தற்கு உரியன, சொல்லினான்-
கற்பு உறுத்திய கற்புடை யாள் தனை
வற்புறுத்தி, மனங்கொளத் தேற்றுவான். 15-

கற்பு உறுத்திய கற்பு உடையாள்தனை – கற்பு என்பது இப்படிப்
பட்டது என்பதைஉலகிற்கு உணர்த்தி நிறுத்திய பெருங் கற்பினை உடைய
கோசலையை; வற்புறுத்தி – மனஉறுதிப்படுத்தி; மனம் கொள –
மனத்தில் படும்படி; தேற்றுவான் – தெளியப்பண்ண வேண்டி; பொற்ப
உறுத்தன -அழகு பொருந்தியனவும்; மெய்ம்மை பொதிந்தன -உண்மை
நிரம்பியனவும்; சொற்புறுத்தற்கு உரியன – தாய்க்கு மகன் சொல்லுதற்குத்
தகுந்தனவுமாகிய சொற்களைச்; சொல்லினான் – சொன்னான்.

————-

சிறந்த தம்பி திருவுற எந்தையை
மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின்,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? 16-

‘சிறந்த தம்பி திரு உற – (என்னிலும்) சிறந்த தம்பியாகிய பரதன்
அரசச்செல்வம் பெற; எந்தையை – என் தந்தையாகிய தயரதனை;
மறந்தும் பொய் இலன்ஆக்கி – மறப்பினாலும் பொய் சொல்லாத சத்திய
வாக்கினனாகச் செய்து; வனத்திடை -காட்டில்; உறைந்து தீரும் உறுதி
பெற்றேன் – வசித்துத் திரும்பி வருகின்ற நன்மையைஅடைந்தேன்;
இதின் – இதைக்காட்டிலும்; யான் பிறந்து பெறும் பேறு என்பது யாவதோ?’ – யான் பிறவி எடுத்துப் பெறுகின்ற
பாக்கியம் என்பது வேறு என்ன இருக்கிறது; (இல்லை).

———–

‘விண்ணும் மண்ணும், இவ் வேலையும், மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும்,
அண்ணல் ஏவல் மறுக்க, அடியனேற்கு
ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல்’ என்றான். 17-

‘விண்ணும் – ஆகாயமும்; மண்ணும் – பூமியும்; இவ்வேலையும் –
இந்தக் கடல்களும்; மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம்- வேறாகிய தீ,
காற்று முதலாகிய மூலப்பொருள்களும்; அழிந்து ஏகினும் – மாறுபட்டுக்
கெட்டுப் போனாலும்; அண்ணல் – தயரதனது; ஏவல் – கட்டளையை;
மறுக்க – மறுப்பதற்கு; அடியனேற்கு ஒண்ணுமோ – அடியேனுக்குத்
தகுமோ; இதற்கு -; உன் அழியேல்’ -(நீ) மனம் வருந்தாதே;’
என்றான் -.

——————

தன்னையும் உடன் காட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கோசலை வேண்டுதல்

‘ஆகின், ஐய! அரசன் தன் ஆணையால்
ஏகல் என்பது யானும் உரைக்கிலென்;
சாகலா உயிர் தாங்க வல்லேனையும்,
போகின், நின்னொடும் கொண்டனை போகு’ என்றாள். 18-

ஐய! – இராமனே!; ஆகின் – அப்படியானால்; அரசன்தன்
ஆணையால் -அரசன் இட்ட கட்டளை என்பதால்; யானும் ஏகல்
என்பது உரைக்கிலென் – நானும் நீ வனம் போகாதே என்பதைச்
சொல்லவில்லை; போகின் – (நீ) வனம் போவதாயின்; சாகலா உயிர்
தாங்க வல்லேனையும் – சாகாத இவ்வியிரத் தூக்கமாட்டால்
சுமக்கின்றவளாகிய என்னையும்; நின்னொடும் கொண்டனை போகு’ –
உன்னோடு அழைத்துக்கொண்டு போவாயாக;’ என்றான் -.

————

கோசலையின் வேண்டுதலை இராமன் மறுத்து உரைத்தல்

‘என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன்
துன்னும் கானம் தொடரத் துணிவதோ?
அன்னையே! அறம் பார்க்கிலை ஆம்’ என்றான். 19-

‘அன்னையே! – தாயே; என்னை நீங்கி – என்னைப் பிரிந்து;
இடர்க்கடல் வைகுறும் – துன்பக்கடலில் தங்கியுள்ள; மன்னர்
மன்னனை -சக்கரவர்த்தியை; வற்புறுத்தாது – மன உறுதி செய்து
தைரியப்படுத்தாமல்; உடன் -என்னோடு; துன்னு கானம் – நெருங்கிய
காட்டிற்கு; தொடர – பின்பற்றிவர; துணிவதோ? – மனத்தில் நிச்சயிப்பது
தகுமோ; அறம் பார்க்கிலை ஆம்! – மனைவிக்குள்ள தருமத்தை
ஆராய்ந்து கருதவில்லை போலும்;’ என்றான் -.

————–

‘வரிவில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு
உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன்
திருவின் நீங்கித் தவம் செயும் நாள், உடன்,
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே! 20-

‘வரிவில் எம்பி – கட்டமைந்த வில்லினை உடைய என்தம்பி பரதன்;
இம் மண்அரசு ஆய் – இந்தக் கோசல நாட்டுக்கு அரசன் ஆகி;
அவற்கு – அந்தப் பரதனுக்கு; மாநிலம் உரிமை உற்றபின் – பெரிய
இராச்சியத்தின் உரிமை நிலைப்பட்ட பிறகு; கொற்றவன் – தயரதன்;
திருவின் நீங்கி – அரச போக வாழ்க்கையிலிருந்துவிலகி; தவம்
செய்யும் நாள் – தவம் செய்கின்ற காலத்தே; உடன் – அவனோடு
சேர்ந்து; அருமை நோன்புகள் – செயற்கரிய விரதங்களை; ஆற்றுதி
ஆம் -செய்வாயாக.’

————–

‘சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே?
எத்தனைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை
பத்தும் நாலும் பகல் அலவோ?’ என்றான். 21-

‘நீ சித்தம் திகைக்கின்றது என்? – தாயே, நீ மனம் தடுமாறுவது
எதனால்; தேவரும் – தேவரும்; ஒத்த – தம் நிலைக்குப் பொருந்திய;
மாதவம் செய்து -சிறந்த தவத்தைச் செய்து; உணர்ந்தார் அன்றே? –
தம் நிலைக்கு மேலாகஉயர்ந்தார்கள் அல்லவா; ஆண்டுகள் எத்தனைக்கு
உள – (நான் பிரிந்து செல்கிற)ஆண்டுகள் எவ்வளவு உள்ளன; அவை
பத்தும் நாலும் பகல் அல்லவோ? – அந்தப் பதினான்குஆண்டுகளும்,
பதினான்கு நாள்கள் அல்லவா? (இதற்கு வருந்துவானேன்.)

————

‘முன்னர் கோசிகன் என்னும் முனிவரன்
தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும்
பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ?
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே. 22-

‘முன்னர் – தந்தையார் விசுவாமித்திர முனிவனிடம் வேள்விகாக்க
அனுப்பிக்கையடை கொடுத்த போது; கோசிகன் என்னும் முனிவரன் –
விசுவாமித்திரனாகிய கௌகிசமுனிவனது; அருள்தலை – கருணையினால்;
தாங்கிய – (நாங்கள்) பெற்ற; விஞ்சையும் – மந்திர வித்தைகளும்;
பின்னர் எய்திய பேறும் – பிறகு அடைந்ததிருமணப் பேறும்;
பிழைத்தவோ? – தவறியவோ; அவர் ஏறிய செய்தல் – வனம்சென்று
அத்தகைய முனிவர்கள் ஏவிய காரியங்களைச் செய்து முடித்தல்; இன்னம்
நன்று -இன்னமும் நல்லதையே தரும்.

————–

‘மாதவர்க்கு வழிபாடு இழைத்து, அரும்
போதம் முற்றி, பொரு அரு விஞ்சைகள்
ஏதம் அற்றன தாங்கி, இமையவர்
காதல் பெற்று, இந் நகர் வரக் காண்டியால். 23-

‘மாதவர்க்கு வழிபாடு இயற்றி – சிறந்த முனிவர்களுக்குப் பணி
விடைகளைச் செய்து;அரும் போதம் முற்றி – (அவரால்) பெறுதற்கு
அரிய ஞானம் நிரம்பப் பெற்று; பொருஅரு விஞ்சைகள் – ஒப்பற்ற
வித்தைகள்; ஏதம் அற்றன – குற்றம் இல்லாதனவற்றை; தாங்கி – பெற்று;
இமையவர் காதல் பெற்று – தேவர்களின் அன்பை அடைந்து; இந்நகர்
வரக் காண்டி- (யான்) இந்நகரத்துக்குத் திரும்பி வருதலைப் பார்ப்பாயாக.’

————-

‘மகர வேலைமண் தொட்ட, வண்டு ஆடுதார்ச்
சகரர்; தாதை பணிதலை நின்று, தம்
புகரில்யாக் கையின் இன்னுயிர் போக்கிய
நிகரில் மாப்புகழ் நின்றது அன்றோ?’ எனா. 24-

‘மகர வேலை மண் தொட்ட – சுறாமீன்களை உடைய கடலாற்
சூழப்பெற்ற இப்பூமியைத்தோண்டிய; வண்டு ஆடு தார்ச் சகரர் –
வண்டுகள் தேனுண்டு ஆடுகின்ற மாலை அணிந்த சகரபுத்திரர்கள்; தாதை
பணிதலை நின்று – தம் தந்தை சொல்லைத் தம் தலைமீது கொண்டு
சென்று; தம் புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய – தமது
குற்றமற்றஉடம்பின்கண் உள்ள இனிய உயிரை இழந்ததனால் உண்டாகிய;
நிகர் இல் மார்புகழ் -சமானம் இல்லாத பெரும்புகழ்; நின்றது
அன்றோ – இவ் வுலகத்தில் இன்றும் நிலைபெற்றுள்ளது அல்லவா;’
எனா – என்று சொல்லி.

————

‘மான் மறிக் கரத்தான் மழு ஏந்துவான்,
தான் மறுத்திலன் தாதைசொல்; தாயையே,
ஊன் அறக்குறைத்தான்; உரவோன் அருள்
யான் மறுப்பது என்று எண்ணுவதோ?’ என்றான். 25-

‘மான் மறிக் கரத்தான் – மான் குட்டியைக் கையிலே ஏந்திய சிவ
பெருமானடைய; மழு – கோடரிப் படையை; ஏந்துவான் தான் –
சுமந்துள்ள பரசுராமன் ஆனவன்; தாகை சொல் மறுத்திலன் –
தந்தையாகிய சமதக்கினியின் ஆணையை மறுக்கவில்லை; தாயையே. ஊன்
அறக் குறைத்தான்- தன் தாயாகிய இரேணுகையைத் தந்தை கட்டளைப்படி
உடம்புதுண்டாகும்படி வெட்டினான்; (அவ்வாறே) உரவோன் – தசரதனது;
அருள் – ஆணையை; யான் மறுப்பது என்று எண்ணுவதோ? –
நான் மறுப்பதாக நினைத்தலும் தகுமோ;’ என்றான்-.

ஊனில் வாழ்
உயிரே”என்ற திருவாய்மொழி (திவ்ய. 3031) யிலும் ‘ஊன்’ உடம்பு என்னும்
பொருளில் வருதல் காண்க.

————-

இராமன் காடு செல்வதை தடுக்க எண்ணி கோசலை தயரதனிடம் செல்லுதல்

இத் திறத்த எனைப் பல வாசகம்
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா,
‘எத் திறத்தும் இறக்கும் இந் நாடு’ எனா,
மெய்த் திறத்து விளங்கிழை உன்னுவாள். 26-

மெய்த் திறத்து விளங்கிழை – சத்தியமாகிய அணிகலனை அணிந்த
கோசலை; இத்திறத்து எனைப் பல வாசகம் உய்த்து உரைத்த மகன்
உரை – மேற் கூறியவாறு பலவார்த்தைகளைக் கொண்டு வந்து சொல்லித்
தேற்றிய இராமனது சொற்களை; உட்கொளா -மனத்தில் கொண்டு; ‘எத்
திறத்தும் இந்நாடு இறக்கும்’ எனா – எப்படியும் இவன்இந்நாட்டைக்
கடந்து காடு செல்வான் என்று; உன்னுவாள் – மனத்தில் கருதுபவளாகி,

———

‘அவனி காவல் பரதனது ஆகுக;
இவன் இஞ் ஞாலம் இறந்து, இருங் கானிடைத்
தவன் நிலாவகைக் காப்பென், தகைவினால்,
புவனி நாதன் தொழுது’ என்று போயினாள். 27-

‘அவனி காவல் பரதனது ஆகுக – இந்த உலகத்தை ஆளும்
அரசாட்சி பரதனுடையதுஆகட்டும்; இவன் – இராமன்; இஞ்ஞாலம்
இறந்து – இக் கோசல நாட்டைத்தாண்டி; இருங் கானிடை – பெரிய
காட்டிடத்தே; தவன் நிலாவகை – தவத்தில்நில்லாதபடி; தகவினால் –
நடுவு நிலைமையால்; புவனி நாதன் தொழுது – தயரதனைவணங்கி
வேண்டி; காப்பென் – ‘காப்பாற்றுவேன்; என்று போயினாள் – என்று
(தயரதன் இருக்கும் கைகேயி அரண்மனைக்கு) சென்றாள்.

———

இராமன் சுமித்திரையின் மாளிகைக்குச் செல்லுதல்

போகின்றாளைத் தொழுது, ‘புரவலன்
ஆகம் மற்று அவள் தன்னையும் ஆற்றி, இச்
சோகம் தீர்ப்பவள்’ என்று, சுமித்திரை
மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான். 28-

(இராமன்) போகின்றானைத் தொழுது – செல்கின்ற கோசலையை
வணங்கி; புரவலன்ஆகம் மற்று அவள் தன்னையும் – தயரதனது
உடம்பையும் கோசலையையும்; ஆற்றி -துன்பத்திலிருந்து ஆறுதல்
அடையச் செய்து; இச்சோகம் தீர்ப்பவள்’ – இந்தத் துயரநிலையை
நீக்கக்கூடியவள்; என்று – எனக் கருதி; சுமித்திரை -சிற்றன்னையாகிய
சுமித்திரையின்; மேகம் தோய் தனிக்கோயிலை – மேகம்தங்குகின்ற
உயர்ந்த ஒப்பற்ற மாளிகையை; மேயினான் – அடைந்தான்.

———–

கைகேயின் மாளிகையில் தயரதன் நிலை கண்டு கோசலை மயங்கி விழுதல்

நடந்த கோசலை, கேகய நாட்டு இறை
மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன்
கிடந்த பார்மிசை வீழ்ந்தனள் – கெட்டு உயிர்
உடைந்த போழ்தின் உடல் விழுந்தென்னவே. 29-

நடந்த கோசலை – தயரதன் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்ற
கோசலை; கேகயநாட்டு இறை மடந்தை – கேகய நாட்டு மன்னனுக்கு
மகளாகிய கைகேயியின்; கோயிலை -மாளிகையை; எய்தினள் –
அடைந்தாள்; மன்னவன் கிடந்த பார்மிசை – தயரதன்விழுந்து
கிடக்கின்ற மண்ணில்; உயிர் கெட்டு உடைந்த போழ்தின் – உயிர்
கெட்டுச்சிதறிய காலத்து; உடல் விழுந்து என்னவே – உடலானது கீழே
விழுந்தாற் போல; வீழ்ந்தனள் – விழுந்தாள்.

————

கோசலையின் புலம்பல்

‘பிறியார் பிரிவு ஏது?’ என்னும்; ‘பெரியோய் தகவோ!’ என்னும்;
‘நெறியோ, அடியேன் நிலை? நீ நினையா நினைவு ஏது?’ என்னும்;
‘வறியோர் தனமே!’ என்னும்; ‘தமியேன் வலியே!’ என்னும்;
‘அறிவோ; வினையோ?’ என்னும்; ‘அரசே! அரசே!’ என்னும். 30-

(கோசலை தயரதன் நிலை கண்டு) ‘பிறியார் பிரிவு எது?’ என்னும்-
பிரியக்கூடாதவர்களுடைய பிரிவுக்குக் காரணம் என்ன என்பாள்;
பெரியோய்! தகவே’ என்னும் – பெருமை உடையவனே! இது உனக்குத்
தகுதியோ என்பாள்; நெறியோ, ‘அடியேன்நிலை – அடியோங்களாகிய
எங்கள் தற்போதைய நிலை நீதியாகுமா?; நீ நினையா நினைவுஏது’
என்னும் – இந்த நிலையை நீ நினையாமல் இருப்பது என்ன காரணம்
என்பாள்; ‘வறியோர் தனமே!’ என்னும் – வறுமையுற்றவர்களுக்குச்
செல்வமானவே என்பாள்; ‘தமியேன் வலியே!’ என்னும் – தனியளான
எனக்கு வலிமையான துணையே என்பாள்; ‘அறிவோ,வினையோ’
என்னும் – இது உனக்கு அறிவு தானோ, அறிந்து செய்யாது
ஊழ்வினையால்ஏற்பட்டதோ என்பாள்; ‘அரசே! அரசே!’ என்னும் –
மன்னனே மன்னனே என்றுபுலம்புவாள்.

—————-

‘இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி
உருளைத் தனி உய்த்து, ஒரு கோல் நடையின் கடை காண் உலகம்
பொருள் அற்றிட முற்றுறும் அப் பகலில் புகுதற்கு என்றோ,
அருளக் கருதிற்று இதுவோ? அரசர்க்கு அரசே!’ என்னும். 31-

‘அரசர்க்கு அரசே!’ – சக்கரவர்த்தியே; இருள் அற்றிட உற்று
ஒளிரும்இரவிக்கு – இருள் ஒழியும்படி பொருந்தி விளங்குகின்ற
சூரியனுக்கு; எதிரும் திகிரி -ஒப்பாகிய ஆணைச் சக்கரத்தை;
உருளத்தனி உய்த்து – உலகெங்கும் செல்லும்படி ஏகசக்ராதிபதியாகச்
செலுத்தி; ஒரு கோல் நடையின் – ஒப்பற்ற செங்கோல் செலுத்தப்
படுதலின்; கடைகாண் உலகம் – யாதொரு இடையூரும் இன்றி முடிவு
அழியும்படி; முற்றுறும் அப்பகலில் – முடிவடைகின்ற அந்த
ஊழிக்காலத்தில்; புகுதற்கு என்றோ அருளக்கருதிற்று – செல்லும்படி
நுழைதற்காகவோ நீ அருள்கொண்டு செய்யக் கருதிய செயல்; இதுவோ? –
இதுதானோ; என்னும் – என்பாள்.

———-

‘திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே! திருவின் திருவே!
நிரை ஆர் கலையின் கடலே! நெறி ஆர் மறையின் நிலையே!
கரையா அயர்வேன்; எனை, நீ, கருணாலயனே! “என்?” என்று
உரையா இதுதான் அழகோ? உலகு ஏழ் உடையாய்!’ என்னும். 32-

‘திரை ஆர் கடல்சூழ் உலகின் தவமே! – அலை பொருந்திய
கடலாற் சூழப்பெற்றஉலகம் செய்த தவத்தின் பயனே; திருவின்
திருவே! -செல்வங்களுக்கெல்லாம் மேலான செல்வமே; நிரை ஆர்
கலையின் கடவே! – ஒழுங்குபொருந்திய கல்விக்கலையில் கடல்
ஆனவனே; நெறி ஆர் மறையின் நிலையே! – நீதிபொருந்திய
வேதத்தின் உன்மைப் பொருளே; கருணாலயனே! – அருட்கோயிலாக
உள்ளவனே; உலகு ஏழ் உடையாய்! – ஏழ் உலகங்களையும் உடையவனே;
கரையா அயர்வேன் எனை -மனம் உருகிச் சோர்வடைகின்ற என்னை;
நீ என் என்று உரையா இதுதான் அழகோ’ – நீஏன் வருந்துகிறாய்
என்று ஆறுதல் கூறாது இப்படிக் கிடப்பதுதான் அழகாகுமோ; என்னும்-

———-

‘மின் நின்றனைய மேனி, வெறிதாய் விட நின்றது போல்
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான்;
என் என்று உரையான்; என்னே? இதுதான் யாது என்று அறியேன்;
மன்னன் தகைமை காண வாராய்; மகனே!’ என்னும். 33-

மகனே! – இராமனே; மின் நின்றனைய மேனி – மின்னல்
மறையாது ஒருபடித்தாக நின்றால் ஒத்த ஒளிவீசும் உடம்பு; வெறிதாய்
விட நின்றது போல் – உள்ளே உயிரற்றுக் கிடப்பது போல; உன்னும்
தகைமைக்கு அடையா உறுநோய் – நினைக்கும்தன்மைக்கும் வாராத
பெரும் பிணியை; உறுகின்ற உணரான் – அடைகின்றதையும் உணர
முடியாதவனாய்; என்என்று உரையான் – அழுகின்ற என்னைப் பார்த்து
ஏன் புலம்புகிறாய் என்றும் சொல்லாதவனாய்உள்ளான் உன் தந்தை;
என்னே! – என்ன காரணமோ; இதுதான் யாது என்று அறியேன் -இது
எதனால் ஆகியது என்று அறியாதவளாக இருக்கின்றேன்; மன்னன்
தகைமை காண -அரசனாய் தயரதனது நிலைமையைப் பார்க்க;
வாராய்’ – வருவாயாக; என்னும் –

————-

கோசலை புலம்பலை பிறர் சொல்லக் கேட்ட வசிட்டனின் வருகை

இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையாமுன்னம்,
‘ஒவ்வாது, ஒவ்வாது’ என்னா, ஒளிவாள் நிருபர், முனிவர்,
‘அவ் ஆறு அறிவாய்’ என்ன, வந்தான் முனிவன்; அவனும்,
வெவ் வாள் அரசன் நிலை கண்டு. ‘என் ஆம் விளைவு?’ என்று உன்னா. 34-

இவ்வாறு அழுவாள் இரியல் குரல்சென்று இசையாமுன்னம் –
இப்படிச் சொல்லிப்புலம்புகிற கோசலையின் கூக்குரல் போய் மன்னர்கள்
கூடியிருக்கும் அவையை அடைந்த அளவில்; ஒளிவாள் நிருபர், முனிவர்-
ஒளி பொருந்திய வாள் உடைய அரசர்களும் முனிவர்களும்; ‘ஒவ்வாது
ஒவ்வாது’ என்னா – இது இக்கால இயல்புக்குப் பொருந்தாது என்று
தம்முள் கூறி;(வசிட்டனை நோக்கி); அவ் ஆறு அறிவாய் என்ன – இந்த
அழுகையின் காரணத்தை உடனேசென்று அறிக என்று சொல்ல; முனிவன்
வந்தான் – வசிட்ட முனிவன் அங்கு வந்து சேர்ந்தான்; அவனும் –
வசிட்டனும்; வெவ்வாள் அரசன் நிலை கண்டு- கொடியவாளை உடைய
தசரதன் நிலைமையைப் பார்த்து; விளைவு என்னாம்’ என்று உன்னா –
நடந்ததுஎன்னவோ என்று கருதி.

——–

நிலைமையைக் கண்ட வசிட்டனின் மனக் கருத்து

‘இறந்தான் அல்லன் அரசன்; இறவாது ஒழிவான் அல்லன்;
மறந்தான் உணர்வு’ என்று உன்னா, ‘வன் கேகயர்கோன் மங்கை
துறந்தாள் துயரம் தன்னை; துறவாது ஒழிவாள் இவளே;
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ?’. 35-

‘அரசன் இறந்தான் அல்லன் – தசரத மன்னன் உண்மையில் இறப்பு
அடையவில்லை; இறவாது ஒழிவான் அல்லன் – இனிச் சாவாமல்
இருப்பவனும் இல்லை; உணர்வு மறந்தான்’ -நினைவு இழந்து
மூர்ச்சித்தான்; என்று உன்னா – என்று தன் மனத்தில் கருதி;
வன் கேகயர் கோன் மங்கை துயரம் தன்னைத் துறந்தாள் -வலிய
கேகய நாட்டு அரசன் மகளாகிய கைகேயியோ துன்பம் இல்லாமல்
இருக்கிறாள்; இவளேதுறவாது ஒளிவாள் – இக்கோசலையோ துன்பத்தால்
விடாமல் அழுகிறாள்; பிறந்தார்பெயரும் தன்மை – உலகத்துப்
பிறந்தவர்கள் நிலை வேறுபடுகின்ற இயல்பு; பிறரால்அறிதற்கு எளிதோ?-
மற்றொருவரால் அறியக் கூடியதோ (இல்லை என்றபடி).

———

வசிட்டனிடம் கைகேயி நிகழ்ந்தவற்றை கூறுதல்

என்னா உன்னா, முனிவன், ‘இடரால் அழிவாள் துயரம்
சொன்னாள் ஆகாள்’ என்முன் தொழுகே கயர்கோன் மகளை,
‘அன்னாய்! உரையாய்; அரசன் அயர்வான் நிலை என்?’ என்ன,
தன்னால் நிகழ்ந்த தன்மை தானே தெரியச் சொன்னாள். 36-

முனிவன் என்னா உன்னா – வசிட்டன் இவ்வாறு கருதி; ‘இடரால்
அழிவாள்துயரம் சொன்னாள் ஆகாள்’ என – துன்பத்தால்
வருந்துபவளாகிய கோசலை துயர்க்குரியகாரணத்தைச் சொல்லுதற்கு
இயலாள் எனக் கருதி; முன் தொழு கேகயர் கோன் மகளை -தன்னை
முன்வந்து வணங்குகின்ற கைகேயியை; ‘அன்னாய்! – தாயே; அயர்வான்
அரசன்நிலை என்? உரையாய்’ என்ன – மூர்ச்சித்துச் சோர்ந்துள்ள
வனாகிய சக்கரவ்ர்த்தியின்நிலைக்குக் காரணம் என்ன, சொல்வாயாக என்று
கேட்க; தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானேதெரியச் சொன்னாள் –
(அவள்) தன்னால் உண்டாகிய செயல்கள் எல்லாவற்றையும் தானே
(முனிவனுக்கு) நன்கு விளங்கும்படி சொன்னாள்.

———-

வசிட்டன் தயரதனை தெளிவித்தல்

சொற்றாள், சொல்லாமுன்னம், சுடர்வாள் அரசர்க்கு அரசை,
பொன் – தாமரை போல் கையால், பொடி சூழ் படிநின்று எழுவி,
‘கற்றாய், அயரேல்; அவளே தரும், நின் காதற்கு அரசை;
எற்றே செயல் இன்று ஒழி நீ’ என்று என்று இரவா நின்றான். 37-

சொற்றாள் – (கைகேயி) சொன்னாள்; சொல்லாமுன்னம் – அவள்
சொல்லிய அளவிலே (வசிட்டன்); சுடர்வாள் அரசர்க்கு அரசை – ஒளி
பொருந்திய வாளைஉடைய சக்கரவர்த்தியை; பொன் தாமரை போல்
கையால் – தன்னுடைய பொற்கமலம் போன்றகைகளால்; பொடி சூழ் படி
நின்ற எழுவி – புழுதி சூழப்பெற்ற மண்ணிலிருந்து தூக்கி; ‘கற்றாய்!
அயரேல் – எண்ணில் பல்நூல் ஆய்ந்து கடந்த அறிவாளனே,
சோர்வடையாதே; அவளே நின் காதற்கு அரசைத் தரும் – அந்தக்
கைகேயியை நின் அன்பு மகனாகிய இராமனுக்குஅரசாட்சியைத் தருவாள்;
செயல் எற்று? – வருந்தும் செயல் எத்தன்மைத்து; நீ இன்றுஒழி’ – நீ
இவ்வருத்தத்தை இப்பொழுதே ஒழிப்பாயாக; என்று என்று இரவா
நின்றான் -என்று பலமுறை சொல்லி வேண்டி நின்றான்.

—————-

சீதப் பனி நீர் அளவி, திண் கால் உக்கம் மென் கால்
போதத்து அளவே தவழ்வித்து, இன்சொல் புகலாநின்றான்;
ஓதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய,
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான். 38-

(இவ்வாறு வேண்டி மேலும்) சீதப் பனிநீர் அளவி – குளிர்ச்சியை
உடைய பனிநீரைக்கலந்து; திண்கால் உக்கம் – வலிய கைப்பிடி உடைய
விசிறியினது; மென்கால் -மெல்லிய காற்றை; போதத்து அளவே
தவழ்வித்து – மூர்ச்சை தெளிந்து அறிவுண்டாகும்அளவில் நிகழச் செய்து;
இன்சொல் புகலாநின்றான் – இனிய சொற்களைச்சொல்லுகின்றவன்;
ஒதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒரு வாறு அவிய –
கடலின்கண்எழுந்த விடம் போன்ற கைகேயியின் வரம் என்னும்
வார்த்தையாகிய விடம் ஓரளவுக்கு நீங்க; காதற் புதல்வன் – அன்பு
மகனாகிய இராமனது; பெயரே புகல்வான் – பெயரையேசொல்லிக்
கொண்டிருக்கும் தயரதனது; உயிரும் கண்டான் – உயிரையும் பார்த்தான்.

——————-

வசிட்டனின் தேறுதல் வார்த்தைகள்

காணா, ‘ஐயா! இனி, நீ ஒழிவாய் கழி பேர் அவலம்;
ஆண் நாயகனே, இனி, நாடு ஆள்வான்; இடையூறு உளதோ?
மாணா உரையாள், தானே தரும்; மா மழையே அனையான்
பூணாது ஒழிவான் எனின், யாம் உளமோ? பொன்றேல்’ என்றான். 39-

காணா – அரசன் மூர்ச்சை தெளிந்தது கன்டு; ‘ஐயா! – ஐயனே; நீ
இனிகழிபோர் அவலம் ஒழிவாய் – நீ இனிமேல் இம்மிகப் பெரிய
துன்பத்தை நீக்கிக்கொள்வாயாக; ஆண் நாயகனே இனி நாடு
ஆள்வான் – புருஷோத்தமனாகிய இராமனே இனிஇந்நாட்டை ஆட்சி
செய்வான்; இடையூறு உளதோ? – அதற்கு வேறு இடையூறு ஏதேனும்
இருக்கின்றதா, இல்லை; மாணா உரையாள் – மாட்சியை இல்லாத
வார்த்தையாகியவரத்தைக் கேட்ட கைகேயியானவள்; தானே தரும் –
(அரசைத்) தானே இராமனக்குத்திருப்பித் தருவாள்; மாமழையே
அனையான் – பெரிய மேகத்தை ஒத்தவனாகிய இராமன்; பூணாது
ஒழிவான் எனின் – அரசை மீண்டும் மேற் கொள்ளாது போவானாயின்;
யாம் உளமோ?- நாங்களும் இருக்கப் போகிறோமா; பொன்றேல்! –
மனம் அழியாதே; என்றான் –

———-

வசிட்டனிடம் தயரதன் வேண்டுகோள்

என்ற அம் முனிவன் தன்னை, ‘நினையா வினையேன், இனி, யான்
பொன்றும் அளவில் அவனைப் புனை மா மகுடம் புனைவித்து,
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து, என் உரையும்,
குன்றும் பழி பூணாமல், காவாய்; கோவே!’ என்றான். 40-

என்ற அம்முனிவன் தன்னை – என்று ஆறுதல் கூறிய அவ்வசிட்ட
முனிவனை நோக்கி(தயரதன்); ‘கோவே! – ஆசார்யத் தலைவனே!;
நினையா வினையேன் யான் இனிப்பொன்றும் அளவில் – நினைக்க
இயலாத கொடிய வினையுடைய யாம் மேல் இறந்துபடுவதற்குமுன்னால்;
அவனைப் புனைமா மகுடம் புனைவித்து – அந்த இராமனை
அணிதற்குரிய முடியைச் சூடும்படி செய்து; ஒன்றும் வனம் என்று –
காட்டுக்குப் போவோம் என்று; (அவன் தன்மனத்தில்) உன்னா
வண்ணம் செய்து – நினையாதபடி செய்து; என் உரையும் – என்
வாக்கும்; குன்றும் பழி பூணாமல் – இழிவாகிய பழி மேற் கொள்ளாதபடி;
காவாய் -காப்பாற்றுவாயாக! என்றான் –

———–

வசிட்டனின் அறிவுரையும் கைகேயின் மறுப்பும்

முனியும், முனியும் செய்கைக் கொடியாள் முகமே முன்னி,
‘இனி, உன் புதல்வற்கு அரசும், ஏனையோர்க்கு இன் உயிரும்
மனுவின் வழிநின் கணவற்கு உயிரும் உதவி, வசைதீர்
புனிதம் மருவும் புகழே புனைவாய்; பொன்னே! என்றான். 41-

முனியும் – வசிட்ட முனிவனும்; முனியும் செய்கைக் கொடியாள் –
வெறுக்கும்செயலைச் செய்த கொடியவளாகிய கைகேயியின்; முகமே
முன்னி – முகத்தை நோக்கி; ‘பொன்னே! – பொன்னெனச் சிறந்தவளே;
இனி – இப்பொழுது; உன் புதல்வற்குஅரசும் – உன் மகனாகிய
இராமனுக்கு அரசாட்சியையும்; எனையோர் உயிர்க்கு உயிரும் –
மற்றவர்களது உயிர்க்கு உயிர்ப்பையும்; மனுவின் வழி நின் கணவற்கு
உயிரும் – வைவஸ்வத மனுவின் வமிசத்திற் பிறந்த உன்னுடைய நாயகனான
தசரதனுக்கு உயிரையும்; உதவி -கொடுத்து; வசை தீர் -பழிநீங்கிய;
புனிதம் மருவும் – தூய்மை பொருந்திய; புகழே புனையாய்! – புகழை
அணிகலனாக அணிந்து கொள்வாய்; என்றான் –

————–

மொய்ம் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியாமுன்னம்
விம்மா அழுவாள், ‘அரசன் மெய்யின் திரிவான் என்னில்,
இம் மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன்; என்சொல்
பொய்ம் மாணாமற்கு, இன்றே, பொன்றாது ஒழியேன்’ என்றாள். 42-

மொய்ம் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் –
நெருங்கிய ஆற்றல் அமைந்தவினைகளை அடியோடு போம்படி வெற்றி
கொண்டு தவத்தால் உயர்ந்த வசிட்டன்; மொழியாமுன்னம் – சொல்லிய
அளவில் (கைகேயி); விம்மா அழுவாள் – விம்மி அமுது; ‘அரசன்
மெய்யின் திரிவான் என்னின் – சக்கரவர்த்திதான் கொடுத்தவரமாகிய
சத்தியத்திலிருந்து மாறுபடுவானாயின்; இம் மாண் உளகத்து உயிரோடு
இனி வாழ்வு உகவேன் -இந்தப் பெருமை பொருந்திய உலகத்தில்
உயிரோடு இனிமேல் வாழ்தலை விரும்பமாட்டேன்; என்சொல் பொய்ம்
மாணாமற்கு – என் வார்த்தை பொய்யாகாமைக்காக; இன்றே-இன்றைக்கே;
பொன்றாது ஒழியேன் – இறந்து படாமல் இருக்க மாட்டேன்; என்றாள்-.

————–

வசிட்டன் கைகேயியை கடிந்துரைத்தல்

‘கொழுநன் துஞ்சும் எனவும், கொள்ளாது உலகம் எனவும்,
பழி நின்று உயரும் எனவும், பாவம் உளது ஆம் எனவும்,
ஒழிகின்றிலை; அன்றியும், ஒன்று உணர்கின்றிலை; யான் இனிமேல்
மொழிகின்றன என்?’ என்னா, முனியும், ‘முறை அன்று’ என்பான். 43-

முனியும் – வசிட்டனும் (கைகேயியை நோக்கி); ‘கொழுநன் துஞ்சும்
எனவும் -கணவன் இறந்துபடுவான் என்றும்; உலகம் கொள்ளாது
எனவும் – உலகம் இக்கருத்தைஏற்றுக்கொள்ளாது என்றும்; பழி நின்று
உயரும் – (இம்மையில்) பழிச்சொல்நின்பால் தங்கி ஓங்கும் என்றும்;
பாவம் உளது ஆம் எனவும் – (மறுமைக்குப்) பாவமும்இதனால்
உண்டாகும் என்றும்; ஒழிகின்றிலை – (கருதி உன் கருத்தை)
நீக்கிக்கொள்வாயல்லை; அன்றியும் ஒன்று உணர்கின்றிலை – அதன்
மேலும் நான் சொல்லுகிற ஒன்றையும் உணர்வாய் அல்லை; யான் இனிமேல்
மொழிகின்றன என்?’ – நான்இனிமேல் உனக்குச் சொல்கின்ற
வார்த்தைகளால் என்ன பயன்;’ என்னா – என்றுசொல்லி; ‘முறை அன்று’
என்பான் -‘நீ செய்யும் செயல் நேர்மையானது அல்ல’என்பானானான்.

———-

‘கண்ணோடாதே, கணவன் உயிர் ஓடு இடர் காணாதே,
“புண்ணூடு ஓடும் கனலோ? விடமோ?” என்னப் புகல்வாய்;
பெண்ணோ? தீயோ? மாயாப் பேயோ? கொடியாய்! நீ; இம்
மண்ணோடு உன்னோடு என் ஆம்? வசையோ வலிதே!’ என்றான். 44-

‘கண்ணோடாதே – இரக்கம் இல்லாமல் கணவன் – தயரதனது; உயிர்
ஓடு இடர்காணாதே – உயிர் உடலைவிட்டுச் செல்லும் துன்பத்தையும்
அறியாமல்; ‘புண்ணூடு ஓடும்கனலோ; விடமோ’ என்னப் புகல்வாய்-
புண்ணிற் புகும் நெருப்போ, விடமோ என்று கருதும்படி பேசுகிறாய்;
பெண்ணோ? – அல்லது என்றும் அழியாத பேயோ; நீகொடியாய்! – நீ
கொடியவள்; இம்மண்ணோடு உன்னோடு என்னாம் – இந்த மண்ணோடு
உனக்கு என்ன உறவு இருக்கிறது; வசையோ வலிது- உனக்கு வர இருக்கும்
பழியோமிகவலிது; என்றாள்-.

———

‘வாயால், மன்னன், மகனை, “வனம் ஏகு” என்னா முன்னம்,
நீயோ சொன்னாய்; அவனோ, நிமிர் கானிடை வெந் நெறியில்
போயோ புகலோ தவிரான்; புகழோடு உயிரைச் சுடு வெந்
தீயோய்! நின்போல் தீயார் உளரோ? செயல் என்?’ என்றான். 45-

‘புகழோடு உயிரைச் சுடு வெந்தீயோய்! – புகழையும் உயிரையும்
எரிக்கும் கொடுநெருப்பானவளே; மன்னன் – தயரதன்; வாயால் – தன்
வாயால்; மகனை -இராமனை; ‘வனம் ஏகு’ – காட்டிற்குச் செல்; என்னா
முன்னம் – என்றுசொல்வதற்கு முன்னாலேயே; நீயோ சொன்னாய் –
நீதான் சொன்னாய்; அவனோ -அந்த இராமனோ; நிமிர் கானிடை –
உயர்ந்த காட்டில்; வெந் நெறியில் -கொடிய வழியில்; போயோ
புகலோ தவிரான் – போவதையோ புகுவதையோ ஒழியான்; நின்போல்
தீயார் உளரோ? – உன்னைப் போல் கொடியவர்கள் இருக்கிறார்களா?;
செயல் என்?’ – இதைக் காட்டிலும் கொடிய செயல் வேறு என்ன
இருக்கிறது;’ என்றான் -.

————-

தயரதன் வருத்தத்துடன் கைகேயியை பழித்துக் கூறுதல்

தா இல் முனிவன் புகல, தளராநின்ற மன்னன்,
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி,
‘பாவி! நீயே, “வெங் கான் படர்வாய்” என்று, என் உயிரை
ஏவினாயோ? அவனும் ஏகினானோ?’ என்றான். 46-

தா இல் முனிவன் புகல – குற்றமற்ற வசிட்டமுனிவன்இவ்வாறு
சொல்ல; தளராநின்ற மன்னன் – வருத்தத்தால் தளர்கின்ற சக்கரவர்த்தி;
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – நாக்கிலே விடம்
உடைய பெண்ணாகியகைகேயியைப் பார்த்து; ‘பாவி! நீ என் உயிரை
வெங்கான் படர்வாய்’ என்று-பாவியாகிய நீ என் உயிராகிய இராமனைக்
கொடிய காட்டிற்குச் செல்க என்று; ஏவினாயோ! -கட்டளையிட்டாயோ;
அவனும் ஏகினானோ?- அந்த இராமனும் காட்டிற்குச்சென்றுவிட்டானோ;’
என்றான்-.

————–

‘கண்டேன் நெஞ்சம்; கனிவாய்க் கனிவாய் விடம், நான் நெடுநாள்
உண்டேன்; அதனால், நீ என் உயிரை முதலோடு உண்டாய்;
பண்டே, எரிமுன், உன்னை, பாவி! தேவி ஆகக்
கொண்டேன் அல்லேன்; வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன். 47-

‘பாவி! – பாவியே; நெஞ்சம் கண்டேன் – உன் மனக்கருத்தை
இப்போது அறிந்தேன்; நான் கனிவாய்க் கனி வாய் விடம் நெடுநாள்
உண்டேன் – நான் அன்போடு பழம்போன்ற உன்னுடைய வாயிலிருந்த
விடத்தை நீண்ட நாள் சாப்பிட்டுவிட்டேன்; அதனால்-; நீ என் உயிரை
முதலோடு உண்டாய் – நீ என்னுடைய உயிரை அடியோடு
சாப்பிட்டுவிட்டாய்; உன்னைப் பண்டே எரிமுன் தேவியாகக்
கொண்டேன் அல்லேன் – உன்னை முன்பு வேள்வித் தீயின்முன்
மனைவியாக (நான்) கொள்ளவில்லை; வேறு ஓர் கூற்றம்தேடிக்
கொண்டேன்’-(எனக்கு) வேறு ஒரு தனியான யமனைத் தேடித் திருமணம்
என்ற பெயரில் செய்து கொண்டேன்.’

———–

‘விழிக்கும் கண்வேறு இல்லா, வெங்கான், என் கான்முளையைச்
சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய்; என்னைப் போழ்வாய்;
பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி, என் பல? உன்
கழுத்தின் நாண், உன் மகற்குக் காப்பின் நாண் ஆம்’ என்றான். 48-

‘விழிக்கும் கண் வேறு இல்லா என் கான்முளையை – விழித்துப்
பார்க்கும் கண்இராமனையன்றி வேறாகப் பெற்றிராத என்னுடைய
மகனாகிய இராமனை; வெங் கான் – கொடியகாட்டிற்கு; சுழிக்கும்
வினையால் – சூழ்வினையால்; ஏக – போகும்படி; சூழ்வாய்! – தீய
ஆலோசனை செய்தவளே; என்னைப் போழ்வாய் – என்னைப்
பிளப்பவளே; பழிக்கும் நாணாய் – வருகின்ற பழிக்குச் சிறிதும்
நாணமுறாதவளே; மாணாப் பாவி – மாட்சிமை இல்லாத பாவியே; இனி
என் பல? – இனிப் பல பேசிப்பயன் என்ன; உன் கழுத்தின் நாண் –
உன் கழுத்தில் நான் கட்டிய மங்கலக் கயிறு; உன் மகற்கு – உன்
பிள்ளையாகிய பரதனுக்கு; காப்பின் நாண் ஆம்! -பட்டாபிஷேக
காலத்தில் கையில் கட்டுகின்ற ரக்ஷாபந்தனமாகிய காப்புக் கயிறாக ஆகும்;’
என்றான் – .

———-

கைகேயி, பரதன் இருவரையும் தயரதன் துறத்தல்

இன்னே பலவும் பகர்வான்; இரங்கா தாளை நோக்கி,
‘சொன்னேன் இன்றே; இவள் என் தாரம் அல்லள்; துறந்தேன்;
மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகனென்று
உன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு’ என்றான். 49-

இன்னே – இவ்வாறு; பலவும் பகர்வான் – பல சொற்களையும்
சொல்பவனாயதயரதன்; இரங்காதாளை நோக்கி – சிறிதும் மனம் இளகாத
கைகேயியைப் பார்த்து; முனிவா! – முனிவரே; இன்றே சொன்னேன்,
இவள் என் தாரம் அல்லள், துறந்தேன் -இப்பொழுதே
சொல்லிவிட்டேன்; இவள் இனி என் மனைவி என்னும் தகுதிக்கு
உரியவள்அல்லள் – இவளை நான் கைவிட்டேன்; மன்னே ஆவான்
வரும் அப்பரதன்தனையும் -அரசனாக முடி சூடுதற்கு வருகின்ற இவள்
மகனாகிய அந்தப் பரதனையும்; மகன் என்று உன்னேன் -என் மகன்
என்ற கருதேன்; அவனும் உரிமைக்கு ஆகான் – அப்பரதனும் எனக்குச்
செய்யவேண்டிய இறுதிக்கடன்களுக்கு உரியவனாகான்;’ என்றான்-.

————–

தயரதன் நிலை கண்ட கோசலையின் துயர்நிலை

‘என்னைக் கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான்
உன்னைக் கண்டும் இலனோ?’ என்றான், உயர் கோசலையை;
பின்னைக் கண்தான் அனையான் பிரியக் கண்ட துயரம்,
தன்னைக் கண்டே தவிர்வாள்; தளர்வான் நிலையில் தளர்வாள். 50-

(தயரதன்) உயர் கோசலையை – உயர்ந்த கோசலையைப் பார்த்து;’
என்னைக்கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான் – என்னைப்
பார்த்துப் போகாதவாறு இடையூறு உடையஇராமன்; உன்னைக் கண்டும்
இலனோ? – உன்னையும் பார்த்துப் போகவில்லையோ;’ என்றான் – ;
பின்னை – பிறகு; கண்தான் அனையான் – தசரதனின் கண்ணை ஒத்த இராமன்; பிரியக் கண்ட துயரம்- தன்னைப்
பிரியஅதனால் தயரதன்பால் ஏற்பட்ட துன்பத்தை; கண்டே – பார்த்து;
தவிர்வாள் -(இராமனைக் கான் ஏகாதபடி தயரதன்பால் சொல்லித் தடுக்க
வேண்டும் என்று எண்ணி வந்தகருத்தை) ஒழிவாளானாள்; தளர்வான்
நிலையில் தளர்வாள் – சோர்கின்ற தயரதனைப்போலவே அவளும்
சோர்வாளானாள்.

————

மாற்றாள் செயல் ஆம் என்றும், கணவன் வரம் ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும், அறிந்தாள்; அவளும், அவனைத்
தேற்றா நின்றாள்; மகனைத் திரிவான் என்றாள்; ‘அரசன்
தோற்றான் மெய்’ என்று, உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள். 51-

மாற்றாள் செயல் ஆம் என்றும்- (இது) மாற்றாளாகிய கைகேயியின்
செயலாகும் என்றும்; கணவன் வரம் ஈந்து உள்ளம் ஆற்றாது
அயர்ந்தான் என்றும் – கணவனாய தயரதன்கைகேயிக்கு வரம் கொடுத்து
அதனால் மனம் பொறுக்கமாட்டாமல் சோர்வடைந்தான் என்றும்;
அறிந்தாள் – அறிந்துகொண்ட; அவளும் – கோசலையும்; அவனைத்
தேற்றாநின்றாள் – தசரதனைத் தெளிவித்த வண்ணமிருந்தாள்; மகனைத்
திரிவான்என்றாள் – தன் மகனாகிய இராமனைப் பற்றி அவன்
காட்டகத்தே திரிவான் (வேறு வழிஇல்லை)எனத் தன்னுள் சொல்லிக்
கொள்வாள்; ‘அரசன் மெய் தோற்றான்’ என்று – தசரதன்சத்தியத்தில்
தவறினான் என்று; உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – உலகத்தார்
சொல்லும் பழிச்சொல் கருதியும் மனம் சோர்கின்றவளானாள்.

————–

தயரதனை கோசலை தேற்றுதல்

‘தள்ளா நிலைசால் மெய்ம்மை தழுவா வழுவா வகைநின்று
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால், உரவோய்!
விள்ளா நிலைசேர் அன்பால் மகன்மேல் மெலியின், உலகம்
கொள்ளா தன்றோ?’ என்றான், கணவன் குறையக் குறைவாள். 52-

‘உரவோய்! – வலியவனே; தள்ளா நிலை சால் மெய்ம்மை –
தவறக் கூடாததன்மை பொருந்திய சத்தியத்தை; தழுவா – ஏற்று;
வழுவாவகை நின்று – அது சிறிதும் தவறுபடாத வகையில் நிலைத்து
நின்று; என்னா நிலைகூர் பெருமைக்கு இழிவு ஆம்என்றால் –
இகழப்படாத தன்மை பொருந்திய நினது பெருந்தன்மைக்கு இழிவை
உண்டாக்கும் என்றால்; விள்ளா நிலை சேர் அன்பால் – விண்டுரைக்க
முடியாத தன்மை பொருந்தியகாதலால்; மகன்மேல் மெலியின் –
பிள்ளையைக் கருதித் தளர்ந்தால்; உலகம்கொள்ளாது அன்றோ –
உலகோர் அதனை ஏற்றுக் கொள்ளார்கள் அல்லவா;’ என்றாள் -என்று
சொல்லி; கணவன் குறையக் குறைவாள் – கணவனாகிய தயரதன்
மெலிவடையத் தானும்மெலிவடைவாளானாள்.

———

கோசலையின் பெருந்துயர்

‘போவாது ஒழியான்’ என்றாள், புதல்வன் தன்னைக் கணவன்
சாவாது ஒழியான் என்று என்று, உள்ளம் தள்ளுற்று அயர்வாள்;
‘காவாய்’ என்னாள் மகனைக் கணவன் புகழுக்கு அழிவாள்;
ஆ! ஆ! உயர்கோ சலையாம் அன்னம் என்னுற் றனளே! 53-

புதல்வன்தன்னை – மகனாகிய இராமனை; ‘போவாது ஒழியான்’
என்றாள் – வனம் போகாமல் இருக்கமாட்டான் என்று சொன்னாள்;
கணவன் ‘சாவாது ஒழியான்’ என்று என்று- (அப்படி இராமன் காடு
செல்லின்) கணவனாய தயரதன் சாகாமல் இருக்க மாட்டான் என்று கருதி;
உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – மனம் தடு மாறிச் சோர்வாள்; ‘மகனைக் காவாய்’ என்னாள் – வனம் போகாமல்
இருந்து தந்தையின் உயிரைக் காப்பாற்றுவாய் என்று மகனைப் பார்த்துச்
சொல்லமாட்டாள்; கணவன்புகழுக்கு அழிவாள் – தயரதனது புகழுக்குக்
கேடு வருமோ என்று மனம் வருந்துவாள்; ஆ! ஆ!- ; உயர் கோசலை
ஆம் அன்னம் – உயர்ந்த கோசலையாகிய அன்னம் போல்வாள்; என்
உற்றனள் – என்ன துன்பப்பட்டாள்.

———–

இராமன் காட்டிற்கு செல்வது நினைத்து தயரதன் புலம்புதல்

உணர்வான், அனையாள் உரையால், ‘உயர்ந்தான் உரைசால் குமரன்
புணரான் நிலமே, வனமே போவானே ஆம்’ என்னா; –
இணரார் தருதார் அரசன் இடரால் அயர்வான்; ‘வினையேன்
துணைவா! துணைவா’ என்றான்; ‘தோன்றால், தோன்றாய்!’ என்றான். 54

இணர் ஆர்தரு தார் அரசன்- பூங்கொத்துகள் பொருந்திய மாலை
அணிந்த தயரதமன்னன்; அனையாள் உரையால்- அந்தக் கோசலையின்
வார்த்தையால்; ‘உயர்ந்தான் உரைசால் குமரன் – உயர்ந்தவனாகிய புகழ்
பெற்ற இராமன்; நிலமேபுணரான் – நிலத்தை ஆள மாட்டான்; வனமே
போவானே ஆம்! – காட்டிற்குப்போபவனே ஆவான்; என்னா – எனக்
கருதி; இடரால் அயர்வான் – துன்பத்தால் சோர்கின்றவன்; ‘வினையேன்
துணைவா! துணைவா’ என்றான் – தீவினையேனாகிய என்னுடைய
தோழனே தோழனே என்றான்; ‘தோன்றால்! தோன்றாய் – மகனே
என்முன் வருவாயாக; என்றான் -.

———–

‘கண்ணும் நீராய், உயிரும் ஒழுக, கழியாநின்றேன்;
எண்ணும் நீர் நான்மறையோர், எரிமுன் நின்மேல் சொரிய,
மண்ணும் நீராய் வந்த புனலை, மகனே! வினையேற்கு
உண்ணும் நீராய் உதவி, உயர் கான் அடைவாய்!’ என்றான். 55-

‘மகனே! – இராமனே; கண்ணும் நீராய் – கண்கள் இரண்டும்
நீராகி; உயிரும் ஒழுக – உயிரும் உடலை விட்டு வெளியில் செல்ல;
கழியாநின்றேன் -இறந்துகொண்டுள்ளேன்; வினையேற்கு – இப்படித்
தீவினையுடைய எனக்கு; எண்ணும் நீர்நான் மறையோர் – மதிக்கப்படும்
தன்மையுடைய வேதம் வல்ல அந்தணர்; எரி முன்நின்மேல் சொரிய –
மூடிசூட்டு விழாவிற்கு முன்னர் உண்டாக்கப்பட்ட வேள்வித்தீயின் முன்னால்
உன்மேல் அபிடேகம் செய்யவேண்டி; மண்ணும் நீராய் வந்த புனலை –
அபிடேகசுத்த நீராக வந்த தீர்த்த நீரை; (இனி அதற்குத் தேவை
இன்மையால்) உண்ணும் நீராய்உதவி – நான் இறந்த பிறகு எனக்குச்
செய்யப்பெறும் பிரேத தாகசாந்தி நீராகக் கொடுத்து (பிறகு); உயர்கான்
அடைவாய்’ – உயர்ந்த காட்டை அடைவாயாக; என்றான்-

————-

‘படைமாண் அரசைப் பல கால் பழுவாய் மழுவால் எறிவான்,
மிடை மா வலி தான் அனையான், வில்லால் அடுமா வல்லாய்!
“உடைமா மகுடம் புனை” என்று உரையா, உடனே கொடியேன்
சடை மா மகுடம் புனையத் தந்தேன்; அந்தோ!’ என்றான். 56-

படைமாண் அரசை – சேனைகளினது மாட்சிமையுடைய அரசர்களை;
பல கால் -இருபத்தொரு தலைமுறை; பழுவாய் மழுவால் – பழுக்கக்
காய்ச்சிக் கூர்மையாக்கப்பட்டமழுப்படையால்; எறிவான் – வெட்டி
அழித்தவனும்; மிடை மா வலி தான் அனையான் -செருக்கிய மிக்க
பலத்தில் தன்னைத் தானே ஒத்தவனும் ஆகிய பரசுராமனை; வில்லால்
அடுமாவல்லாய்! – வில்லாலே வெல்லும் ஆற்றல் வல்லவனே; (உன்னை)
‘உடைமா மகுடம் புனை’ என்று உரையா – உன்னுடைய பெரிய
முடியைச் சூடிக்கொள் என்று சொல்லி; உடனே-அப்பொழுதே; சடை மா
மகுடம் புனையத் தந்தேன் அந்தோ’ – சடையாகிய பெரியமகுடத்தை
அணிந்துகொள்ளும்படி தந்துவிட்டேனே ஐயகோ; என்றான்-

———-

‘கறுத்தாய் உருவம்; மனமும் கண்ணும் கையும் செய்யாய்;
பொறுத்தாய் பொறையே; இறைவன் புரம்மூன்று எரித்த போர்வில்
இறுத்தாய், ‘தமியேன்’ என்னாது, என்னை இம்மூப்பு இடையே
வெறுத்தாய்; இனி நான் வாழ்நாள் வேண்டேன்! வேண்டேன்!’ என்றான். 57-

உருவம் கறுத்தாய்! – திருமேனி கறுத்திருப்பவனே; மனமும்
கண்ணும் கையும்செய்யாய்! – உள்ளமும் கண்ணும் கையும் செம்மையாக
இருப்பவனே; பொறையேபொறுத்தாய்! – பொறுமையையே
தரித்திருப்பவனே; இறைவன் – சிவபிரான்; மூன்று புரம் எரித்த
போர்வில் இறுத்தாய்! – முப்புரங்களை எரித்த காலத்துப் பிடித்த
போர்க்குரிய வில்லை (சீதா கல்யாணத்துக்கு முன்) ஒடித்தவனே; ‘தமியேன்’
என்னாது -தனித்துத் துணையின்றி உள்ளேன் என்ற கருதாது; என்னை
இம் மூப்பிடையே வெறுத்தாய் – என்னை இம்முதுமைக் காலத்தில்
வெறுத்திட்டாய்; இனி நான் வாழ்நாள் வேண்டேன்வேண்டேன்’ –
இனிமேல் நான் வாழும் நாளை விரும்பமாட்டேன்; என்றான் – .

———-

‘பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! புகழின் புகழே!
மின்னின் மின்னும் வரிவில் குமரா! மெய்யின் மெய்யே!
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு, எளியேன் அல்லேன்;
உன்னின் முன்னம் புகுவேன், உயர்வானகம்யான்’ என்றான். 58-

பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! – பொன்னுக்கு
மேற்பட்டுப்பிரகாசிக்கின்ற பொன் போன்றவனே; புகழின் புகழே! –
புகழுக்குப் புகழானவனே!; மின்னில் மின்னும் வரிவில் குமரா! – மின்னலைப் போல் விட்டு விளங்கும் கட்டமைந்தவில்லை உடைய
குமரனே; மெய்யின் மெய்யே! – உண்மையின் நிலைபேறே; என்னின்
முன்னம் – எனக்கு முற்பட்டு; நீ வனம் அடைதற்கு- நீ காடு புகுவதற்கு;
யான்எளியேன் அல்லேன் – நான் எளிமை உடையவன் அல்லன்;
உன்னின் முன்னம் – உனக்குமுன்னால்; உயர் வானகம் புகுவேன்!-
உயர்ந்த விண்ணை அடைவேன்;’ என்றான்-.

‘கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும்,
வானகமே மிக விரும்பிப்போகின்றேன். மனுகுலத்தார் தங்கள் கோவே’
என்ற (திவ்ய.738) குலசேகராழ்வார் பாசுரமும்

————-

‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி
உகுதற்கு ஒத்த உடலும், உடையேன்; உன்போல் அல்லேன்;
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிப்
புகுதக் கண்ட கண்ணால், போகக் காணேன்’ என்றான். 59-

நெகுதற்கு ஒத்த நெஞ்சும் – உருகுதற்குப் பொருந்திய மனமும்;
நேயத்தாலே-அன்பினால்; ஆவி உகுதற்கு ஒத்த உடலும் உடையேன்-
உயிர் விடுதற்குப் பொருந்தியஉடலையும் உடையவன் யான்; உன்போல்
அல்லேன் – உன்னைப்போல் வன்மனமும், வலியஉடலும்
உடையேனல்லேன்; தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றி –
தகுதிக்கு ஒத்தசனக ராசனுக்கு மகளாகிய சானகியின் கையைப் பிடித்துக்
கொண்டு; புகுதக் கண்ட கண்ணால் -அயோத்தி நகருக்குள் (நீ)
புகுவதைப் பார்த்த கண்களால்; போகக் காணேன்’-(அயோத்தியைவிட்டுக்)
காடு செல்வதைக் காண மாட்டேன்;’ என்றான்-.

————–

‘எற்றே பகர்வேன், இனி, யான்? என்னே! உன்னின் பிரிய
வற்றே உலகம் எனினும், வானே வருந்தாது எனினும்,
பொன்-தேர் அரசே! தமியேன் புகழே! உயிரே உன்னைப்
பெற்றேன்; அருமை அறிவேன்; பிழையேன்! பிழையேன்!’ என்றான். 60-

உன்னின் பிரியவற்றே உலகம் எனினும் – (இராமா!)
உன்னிடத்திருந்து உலகம் பிரியும் வல்லமை உடையதாயினும்; வானே
வருந்தாது எனினும் – தேவர்களும் மனம்வருந்தார் ஆனாலும்;
பொன்தேர் அரசே! – பொன் மயமான தேரில் ஏறி வரும் அரசனே;
தமியேன் புகழே! – துணையில்லாத எனது புகழே; உயிரே! – என்
உயிரே; உன்னைப் பெற்றேன், அருமை அறிவேன் – உன்னைப் பெற்று
உன் அருமையை அறிந்துள்ளேன்; இனி யான் எற்றே பகர்வேன்- இனி
மேல் நான் என்ன சொல்லுவேன்; என்னே-; பிழையேன் பிழையேன் –
பிழைக்க மாட்டேன்; என்றான்-

————

‘அள்ளற் பள்ளம் புனல்சூழ் அகல்மா நிலமும், அரசும்,
கொள்ளக் குறையா நிதியின் குவையும், முதலாம் எவையும்
கள்ளக் கைகேசிக்கே உதவி, புகழ் கைக்கொண்ட
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும்! மாய்க்கும்!’ என்றான். 61-

அள்ளல் பள்ளப் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் –
குழைந்த சேறுடைய பள்ளங்கள் நிறைந்த நீரால் சூழப்பெற்ற அகன்ற
கோசல நாடும் ஆட்சியும்; கொள்ளக் குறையாநிதியின் குவையும் –
கொடுக்கக் குறைவுபடாத செல்வக் குவியலும்; முதலா எவையும்-மற்றுள்ள
எல்லாவற்றையும்; கள்ளக் கைகேசிக்கே உதவி – வஞ்சகமுள்ள
கைகேசிக்குக்கொடுத்து; புகழ் கைக்கொண்ட- புகழைப் பெற்றுக்கொண்ட;
வள்ளல்தனம் -உன்னுடைய உதாரகுணம்; என் உயிரை மாய்க்கும்
மாய்க்கும்’ – என் உயிரைப் போக்கடிக்கவல்லதாய் நின்றது; என்றான்-.

———-

‘ஒலியார் கடல்சூழ் உலகத்து, உயர்வான் இடை, நா கரினும்
பொலியா நின்றார் உன்னைப் போல்வார் உளரோ? பொன்னே!
வலியார் உடையார்? என்றான்; ‘மழுவாள் உடையான் வரவும்,
சலியா நிலையாய் என்றால், தடுப்பார் உளரோ?” என்றான். 62-

‘பொன்னே! – பொன் போலச் சிறந்தவனே; ஒலிஆர் கடல்சூழ்
உலகத்து -ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற இப்பூமியில்; உயர் வானிடை-
உயர்ந்தவிண்ணுலகத்தில்; நாகரினும் – நாகலோகமாகிய பாதலத்திடத்தும்;
பொலியாநின்றார் – சிறந்து நின்றவர்கள்; உன்னைப் போல்வார்
உளரோ? – உன்னைஒத்தவர்கள் வேறு இருக்கின்றார்களோ?; ‘வலி
உடையார் யார்’ என்றான் – வலிமைஉடையவர்கள் யார் உளர் என்று
சொல்லி; மழுவாள் உடையான் வரவும் – மழுப்படைஉடைய பரசுராமன்
வரவும்; (அது கண்டு) சலியா நிலையாய் – (சிறிதும்) தளராத நிலை
உடையவனாய் இருந்தாய்; என்றால்-; தவிர்வார் உளரோ? – (நீ ஒன்று
செய்தால்)உன்னைச் செய்யாதே என்று தடுப்பார் இருக்கின்றார்களா;’
என்றான்-.

———

‘கேட்டே இருந்தேன் எனினும், கிளர் வான் இன்றே அடைய
மாட்டேன் ஆகில் அன்றோ, வன்கண் என்கண்? மைந்தா!
காட்டே உறைவாய் நீ! இக் கைகேசியையும் கண்டு, இந்
நாட்டே உறைவேன் என்றால், நன்று என் நன்மை!’ என்றான். 63-

மைந்தா! – இராமா!; கேட்டு இருந்தேன் எனினும் – நீ காட்டுக்குச்
செல்வதைக் கேட்டுவைத்தும் இங்கிருந்தேன் ஆனாலும்; கிளர்வான் –
ஒளிபடைத்தவானுலகத்தை; இன்றே அடையமாட்டேன் ஆகில்
அன்றோ – இன்றைக்கே சென்று சேராமல்இருந்தால் அல்லவா; என்கண்
வன்கண் – என்னிடம் கொடுமைத்தன்மை உள தாகும்; நீ காட்டே உறைவாய் – நீ வனத்தில் வசிப்பாய்; இக்
கைகேசியையும் கண்டு- இந்தக் கைகேயியையும் பார்த்துக்கொண்டு;
இந்நாட்டே உறைவேன் என்றால்-இந்த நாட்டிலேயே (நான்) வசிப்பேன்
ஆனால்; என் நன்மை நன்று – எனதியல்புநன்றாயிருந்தது;’ என்றான்-

————

“மெய் ஆர் தவமே செய்து, உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற
செய்யாள் என்னும் பொன்னும், நிலமாது என்னும் திருவும்,
உய்யார்! உய்யார்! கெடுவேன்; உன்னைப் பிரியின், வினையேன்,
ஐயா! கைகேசியை நேராகேனோ நான்?’ என்றான். 64-

ஐயா! – ஐயனே; மெய் ஆர் தவமே செய்து- உண்மை பொருந்திய
தவத்தைச்செய்து; உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – உன்னுடைய
வலிய மார்பைக் கிடைத்தற்கருமையாகப் பெற்ற; செய்யாள் என்னும்
பொன்னும்- திருமகள் என்னும் பெண்ணும்; நிலமாது என்னும் திருவும்-
நிலமகள் என்னும் செல்வியும்; உய்யார் உய்யார் – நீவனம் செல்லப்
பிழைக்கமாட்டார்; கெடுவேன் – பாவியாகியவனும்; வினையேன் நான் –
தீவினை உடையவனுமாகிய நான்; உன்னைப் பிரியின் – உன்னைப்
பிரிந்து (உயிர்வாழ்ந்தால்); கைகேசியை நேராகேனோ’ – கைகேயிக்கு
ஒப்பாகிவிட மாட்டேனா;’ என்றான்-

——————-

‘பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,
சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,
மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்
காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்? 65-

‘பூண் ஆர் அணியும் – அணிதற்குப் பொருந்திய அணிகலன்களும்;
பொன் ஆசனமும்- பொன்மயமான சிங்காதனமும்; குடையும் –
வெண்கொற்றக் குடையும்; சேண் ஆர்மார்பும் – அகன்று பொருந்திய
மார்பும்; திருவும் – அங்கே வீற்றிருக்கும்திருமகளும்; தெரியக் காணக்
கடவேன் நான் – விளங்கப் பார்த்தற்குக் கடமைப்பட்ட யான்; மாணா மர
வற்கலையும் – மாட்சிமை இல்லாத மரவுரியும்; மானின் தோலும் –
மேனியில் போர்த்துக்கொள்ள மான் தோலும்; அவை – ஆகிய அவற்றை;
காணாது ஒழிந்தேன் என்றால் – பாராமல் (விண்ணுலகு) சென்றுவிட்டேன்
என்றால்; கருமம் நன்றுஆய்த்து அன்றோ? – என் செயல் நல்லதாக
ஆய்விடும் அல்லவா?

பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில்சேர்
அல்குற், காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது அங்கங்கள்
அழகுமாறி, ஏ மருதோள் என் புதல்வன் யான் இன்று செலத்தக்க வனம்
தான் சேர்தல், தூமறையீர் இது தகவோ, சுமந்திரனே வசிட்டனே சொல்லீர்
நீரே’ என்ற குலசேகர ஆழ்வார் பாசுரம் (திவ்ய.735.) இங்கு ஒப்பு
நோக்கத்தக்கது.

————

புலம்பும் தயரதனை வசிட்டன் தேற்றுதல்

ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து, அரசன், ‘உயிரும்
சென்றான் இன்றோடு’ என்னும் தன்மை எய்தித் தேய்த்தான்,
மென் தோல் மார்பின் முனிவன், ‘வேந்தே! அயரேல்; அவனை,
இன்று ஏகாத வண்ணம் தகைவென் உலகோடு’ என்னா. 66-

அரசன் – தயரத மன்னன்; ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா
உரை தந்து -ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் புலம்பி; ‘உயிரும்
இன்றோடு சென்றான்’ என்னும்தன்மை எய்தித் தேய்ந்தான் –
உயிரும் இன்றோடு போகப் பெற்றான் என்கின்ற நிலைஅடைந்து
அழிந்தான்; மேன் தோல் மார்பின் முனிவன் – மெல்லிய தோல்
போர்த்திய மார்பினை உடைய வசிட்டன்; ‘வேந்தே – தசரத மன்னனே;
அயரேல் -சோர்வடையாதே; அவனை – இராமனை; இன்று –
இன்றைக்கு; ஏகாத வண்ணம் -காடு செல்லாதபடி; உலகோடு
தகைவென்’ – நாட்டு மக்களோடு சேர்ந்து தடுப்பேன்; என்னா – என்று.

———-

வசிட்டன் மொழி கேட்டு தயரதன் சிறிது தெளிதல்

முனிவன் சொல்லும் அளவில், ‘முடியும்கொல்?’ என்று, அரசன்
தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான்; ‘இந்தப்
புனிதன் போனால், இவனால் போகாது ஒழிவான்’ என்னா,
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான். 67-

முனிவன் சொல்லும் அளவில் – முனிவன் இவ்வாறு (இராமனை
வனம்போகாது தடுப்பேன்)என்று சொல்லுகின்ற போது; ‘முடியும் கொல’-
(இது இவனால்) முடியும்போலும்; என்று-எனக் கருதி; அரசன்- தயரதன்;
தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான்- தனியாக நின்று
(வருந்துகிற) போவது வருவதாய் உள்ள தன்னுடைய உயிரைச் சிறிதளவு
தடுத்து நிறுத்தி; இந்தப் புனிதன் போனால் – இந்த வசிட்டன் போய்ச்
சொன்னால்; இவனால் போகாது ஒழிவான்’ என்னா – இவன்
சொற்கேட்டு இராமன்வனம் போகாமல் தங்குவான் என்று கருதி; மனிதன்
வடிவம் கொண்ட மனுவும் – மானுடவடிவம் தாங்கியுள்ள வைவஸ்வத
மனுச் சக்கரவர்த்தியாகிய தயரதனும்; தன்னை மறந்தான் –
நினைவிழந்தான்.

———–

தயரதன் நிலை கண்டு கோசலை வருந்துதல்

‘மறந்தான் நினைவும் உயிரும், மன்னன்’ என்னா மறுகா,
‘இறந்தான் கொல்லோ அரசன்?’ என்னை இடருற்று அழிவாள்,
‘துறந்தான் மகன் முன் எனையும்; துறந்தாய் நீயும்; துணைவா!
அறம் தான் இதுவோ? ஐயா! அரசர்க்கு அரசே!’ என்றாள். 68-

மன்னன் நினைவும் உயிரும் மறந்தான்’ என்ன மறுகா – அரசன்
ஞாபகமும் உயிரும்மறக்கப்பெற்றான் என்ற கருதி மனம் கலங்கி; ‘அரசன் இறந்தான் கொல்லோ’ என்னா இடர் உற்று
அழிவாள் – அரசன் இறந்தான் போலும் என்று துன்பமுற்று வருந்தும்
கோசலை;’ மகன் முன்எனையும் துறந்தான்’ – மகனாகிய இராமனும்
முன்னால் என்னைக் கைவிட்டான்; ‘நீயும்துறந்தாய்’ – கணவனாகிய
நீயும் என்னைக் கைவிட்டாய்; துணைவா! – என்துணைவனே!; ஐயா! –
ஐயனே!; அரசர்க்கு அரசே! – இராச இராசனே!; அறம்தான்
இதுவோ’ – அறம் என்பது இதுதானோ; என்றாள் -.

————

தயரதனை கோசலை தேற்றுதல்

‘மெய்யின் மெய்யே! உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே!
உய்யும் வகைநின் உயிரை ஒம்பாது இங்ஙன் தேம்பின்,
வையம் முழுதும் துயரால் மறுகும்; முனிவன் உடன்நம்
ஐயன் வரினும் வருமால்; அயரேல்; அரசே!’ என்றாள். 69-

மெய்யின் மெய்யே! – சத்தியத்தின் சத்தியமே; உலகின் வேந்தர்க்
கெல்லாம் வேந்தே! – உலகில் உள்ள அரசர்க்கெல்லாம் அரசனே; நின்
உயிரை உய்யும் வகை ஓம்பாது – உன்னுடைய உயிரைப் பிழைக்கும்
வகையில்பாதுகாக்காமல்; இங்ஙன் தேம்பில் – இவ்வாறு வாடினால்;
வையம் முழுதும் துயரால்மறுகும் – இவ்வுலகம் முழுதும் துன்பத்தால்
கலங்கிச் சுழலும்; அரசே! – ; நம் ஐயன் -நம் மகன்; முனிவனுடன்
வரினும் வரும் – வசிட்டனுடன் (கான் ஏகாது) திரும்பி வந்தாலும்
வருவான்; அயரேல் – சோர்வடையாதே;’ என்றாள் –

————–

இராமன் வருவானா எனத் தயரதன் கோசலையிடம் கேட்டு வருந்துதல்

என்று என்று, அரசன் மெய்யும், இரு தாள் இணையும், முகனும்,
தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை,
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன், மெள்ள,
‘வன் திண் சிலை நம் குரிசில் வருமே? வருமே?’ என்றான். 70-

என்று என்று – என இவ்வாறு கூறி; அரசன் மெய்யும் –
அரசனது உடம்பையும்; இருதாள் இணையும் முகனும் தன்தன் செய்ய
கையால் தைவந்திடு கோசலையை -இரண்டு அடிகளையும் முகத்தையும்
தன்னுடைய சிவந்த கைகளால் தடவிக் கொடுக்கின்ற கோசலையைப்பார்த்து;
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் – ஒரு செய்தியும் அறியாது
மயங்கிய மனம் உடைய தசரதன்; மெள்ள – மெதுவாக; ‘வன் திண் சிலை
நம் குரிசில்வருமே? வருமே? – வலிய கட்டமைந்த வில்லை உடைய
நம்முடைய இராமன் வருவானா, வருவானா;’ என்றான்-.

———–

தயரதன் கைகேயின் கொடுமையைக் கூறி வருந்துதல்

‘வன் மாயக் கைகேசி வரத்தால், என்றன் உயிரை
முன்மாய் விப்பத் துணிந்தாளேனும் கூனி மொழியால்,
தன்மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி
என்மா மகனைக் “கான் ஏகு” என்றாள்; என்றாள்; என்றான். 71-

வன் மாயக் கைகேசி, வாக்கால் என்தன் உயிரை முன்
மாய்விப்பத் துணிந்தாளேனும் -வலிய வஞ்சனை உள்ள கைகேயி தன்
சொல்லால் என் உயிரை முன்னால் அழிக்கத் துணிந்தாள்ஆனாலும்;
கூனி மொழியால் – கூனியின் துர்ப் போதனையால்; தன் மா மகனும்
தானும்தரணி பெறுமாறன்றி – தன் சிறந்த மகனாகிய பரதனும்,
அவளும் ஆட்சியைப் பெறுவது அல்லாமல்; என் மா மகனை – என்
சிறந்த மகனாகிய இராமனை; ‘கான் ஏகு’ என்றாள்; என்றாள் –
காட்டிற்குச் செல் என்று சொன்னாள்;’ என்றான் -.

—————–

தயரதன் தான் சாபம் பெற்ற வரலாற்றை கோசலையிடம் கூறுதல்

‘பொன் ஆர் வலயத் தோளான், கானோ புகுதல் தவிரான்;
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை கேள்;
முன் நாள், ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது’ என்று,
அந் நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான். 72-

‘கோசலை! – கோசலையே; பொன் ஆர் வலயத் தோளான் –
பொன்னாற்செய்யப் பெற்ற வாகுவலயம் அணிந்த தோளை உடைய
இராமன்; கான் புகுதல் தவிரான் -காட்டிற் செல்லுதலைக் கை விடான்;
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது – என்னுடையஅரிய உயிரோ
போகாமல் நிற்காது; இது கேள் – இதனைக் கேட்பாயாக; ‘ஒருமா
முனிவன் முன்நாள் மொழியும் சாபம் உளது’ என்று – ஒரு சிறந்த
தவசி முன்னொரு காலத்து(என்னை நோக்கிக்) கூறிய சாபம் உண்டு’ என்று;
அந்நாள் உற்றது எல்லாம் – அந்தநாளில் நடந்த நிகழ்ச்சிகள்
எல்லாவற்றையும்; அவளுக்கு – அந்தக் கோசலையிடம்; அரசன் –
தயரதன்; அறைவான் – கூறுவான் ஆனான்.

————–

‘வெய்ய கானத் திடையே, வேட்டை வேட்கை மிகவே,
ஐய, சென்று கரியோடு அரிகள் துருவித் திரிவேன்,
கையும் சிலையும் கணையும் கொடு, கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன். 73-

‘வேட்டை வேட்கை மிக – வேட்டையாடுதலில் விருப்பம்
மேற்செல்ல; வெய்யகானத்திடையே சென்று – கொடிய காட்டின்கண்
போய்; ஐய கரியோடு அரிகள் துருவித்திரிவேன் – அழகிய
யானையோடு சிங்கங்களைத் தேடிச் சுற்றுகின்ற யான்; கார் மிருகம்வரும்-
கரிதான விலங்காகிய யானை முதலிய வருகின்ற; ஓர் செய்ய நதியின்
கரைவாய்- ஒரு துறையொழுங்கு உடைய ஆற்றின் கரைக்கண்; கையும்
சிலையும் கணையும் கொடு – கையில் வில்லும் அம்பும் கொண்டு;
சென்று மறைய நின்றேன் – சென்று மறைவாகநின்றேன்.

———–

‘ஒரு மா முனிவன் மனையோடு, ஒளியன்று இலவாய் நயனம்
திருமா மகனே துணையாய்த் தவமே புரிபோழ் தினின்வாய்,
அருமா மகனே, புனல் கொண்டு அகல்வான் வருமாறு, அறியேன்,
பொரு மா கணை விட்டிடலும், புவிமீது அலறிப் புரள. 74-

‘ஒரு மா முனிவன் – ஒப்பற்ற சிறந்த முனிவன்; மனையோடு –
தன்மனைவியோடு; நயனம் ஒளி ஒன்றிலவாய் – கண்கள் பார்வை ஒளி
இழந்தனவாகி; திருமா மகனே – அழகிய சிறந்த மகனே; துணையாய் –
தனக்கு உதவியாகக் கொண்டு; தவமே புரி போழ்தினின்வாய் – தவம்
செய்துகொண்டிருக்கின்ற காலத்தின்கண்; அரு மாமகனே – அரிய சிறந்த
அம்மகனே; புனல் கொண்டு அகல்வான் – நீர் எடுத்துக்கொண்டு
செல்வதற்காக; வருமாறு அறியேன் – வரும் தன்மையை அறியாதவனாய்;
பொரு மா கணை விட்டிடலும் – அழிக்கின்ற சிறந்த அம்பை விட்ட
அளவில்; புவிமீது அலறிப்புரள – (அம்பு பட்டு அம்மகன்) மண்ணின்
மீது புரண்டு அலற.

——-

‘புக்குப் பெருநீர் நுகரும் பொரு போதகம் என்று, ஒலிமேல்
கைக்கண் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன்,
அக் கைக் கரியின் குரலே அன்று ஈது’ என்ன வெருவா,
‘மக்கள்-குரல்’ என்று அயர்வென், மனம் நொந்து, அவண் வந்தனெனால். 75-

‘(அது கேட்டு) புக்கு – ஆற்றில் நுழைந்து; பெரு நீர் நுகரும் –
மிகுதியானநீரைக் குடிக்கும்; பொரு போதகம் என்று – போரிடும் யானை
என்று கருதி (அவ்ஓசைவழியே); கைக்கண் கணை சென்றது அலால் –
கையின்கண் இருந்த அம்பு சென்றதேஅல்லாமல்; கண்ணின் தெரியக்
காணேன் – கண்ணால் நன்கு விளங்கப் பார்க்காத நான்; (அலறும் ஒலி
வந்தவுடன்); ‘ஈது அக் கைக்கரியின் குரல் அன்று’ என்ன வெருவா –
இதுநாம் நினைத்த துதிக்கை உடைய யானையின் ஒலி அன்று என்று
கருதிப் பயந்து; ‘மக்கள் குரல்’ என்று அயர்வேன் – மனிதக் குரல்
என்று கருதிச் சோர்ந்து; மனம் நொந்து -மனம் வருந்தி; அவண்
வந்தனென் – நீர் முகக்கும் துறைக்கு வந்தேன்.’

—————

கையும் கடனும் நெகிழக் கணையோடு உருள்வோன் காணா,
மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிடமேல் வீழா,
“ஐய! நீதான் யாவன்? அந்தோ! அருள்க” என்று அயரப்
பொய்யன்று அறியா மைந்தன், “கேள் நீ” என்னப் புகல்வான். 76-

‘கையும் கடனும் நெகிழ – கையும் குடமும் நெகிழ்ந்து விலக;
கணையோடுஉருள்வோன் காணா – அம்போடு தரையில் உருளுகின்ற
முனிமகனைக் கண்டு; மெய்யும் தனுவும்மனனும் வெறிது ஏகிட – (என்)
உடலும் வில்லும் மனமும் வெறுமையாகிச் செல்ல; மேல்வீழா – மேலே
விழுந்து; ‘அந்தோ! – ஐயோ; ஐய! – ஐயனே; நீ தான்யாவன் – நீ
யார்; அருள்க’ – சொல்வாயாக;’ என்று அயர – என்றுகேட்டுச்
சோர்வடைய; பொய் ஒன்று அறியா மைந்தன் –

————

‘”இருகண்களும் இன்றிய தாய் தந்தைக்கும், ஈங்கு, அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன்; பழுது ஆயினதால்;-
இரு குன்று அனைய புயத்தாய்!- இபம் என்று, உணராது எய்தாய்;
உருகும் துயரம் தவிர், நீ; ஊழின் செயல் ஈது!” என்றே. 77-

இரு குன்று அனைய புயத்தாய்! – இரண்டு மலைகளைப் போன்ற
தோளை உடையவனே!; ‘ஈங்கு இரு கண்களும் இன்றிய தாய்
தந்தைக்கும் – இப்பொழுது இரு கண்களும் இல்லாத தாய்தந்தை
இருவர்க்கும்; பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் –
உண்ணுகின்றநீரை முகந்து கொண்டு செல்ல வேண்டி வந்தேன்; பழுது
ஆயினது – அச்செயல் பழுது ஆய்விட்டது; உணராது – அறியாமல்;
இபம் என்று எய்தாய் – யானை என்று கருதி(என்மீது) அம்பு
தொடுத்தாய்; ஈது ஊழின் செயல் – இது விதியினது தொழில் (என்று
நினைந்து); நீ உருகும் துயரம் தவிர்’ – நீ மனம் கரைகின்ற துன்பத்தை
விடு; என்று- எனச் சொல்லி.

—————-

‘”உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு, ஒரு நீ,
தண்ணீர் கொடு போய் அளித்து, என் சாவும் உரைத்து, உம் புதல்வன்
விண்மீது அடைவான் தொழுதான்’ எனவும், அவர்பால் விளம்பு” என்று,
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட, ஏகினனால். 78-

‘நீர் உண் வேட்கை மிகவே – நீர் உண்ணுகின்ற விருப்பம்
மிகுதலால்; உயங்கும் எந்தைக்கு – வருந்துகின்ற என் தந்தைக்கு; ஒரு
நீ – ஒப்பற்ற நீ; தண்ணீர் கொடுபோய் அளித்து – குளிர்ந்த நீரைக்
கொண்டுபோய்க் கொடுத்து; என் சாவும் உரைத்து – என் இறப்பையும்
அவர்களுக்குத் தெரிவித்து; ‘உம் புதல்வன்விண்மீது அடைவான்
தொழுவான்’ எனவும் விளம்பு – உம் மகன் இறந்து சுவர்க்கம்
செல்கின்றவன் உம்மை வணங்கினான் என்கின்ற செய்தியையும்
அறிவிப்பாயாக; என்று -எனச் சொல்லி; எண் நீர்மையினான் –
புகழத்தக்க நற்குண நற் செயல்களால்; விண்ணோர் எதிர்கொண்டிட –
தேவர்கள் வரவேற்க; ஏகினன் -(பரலோகத்திற்குச்) சென்றான்.

—————

‘மைந்தன் வரவே நோக்கும்; வளர்மா தவர்பால், மகவோடு
அந்தண் புனல்கொண்டு அணுக, “ஐயா, இதுபோது அளவு ஆய்
வந்திங்கு அணுகாது என்னோ வந்தது? என்றே நொந்தோம்;
சந்தம் கமழும் தோளாய் தழுவிக் கொளவா” எனவே. 79-

‘மைந்தன் வரவே நோக்கும் – மகனது வருகையையே எதிர்
பார்த்துக்கொண்டிருக்கின்ற; வள மாதவன்பால் – மிக்க தவத்தை உடைய
முனிவனிடம்; மகனோடு – (இறந்த) மகனோடு; அம் தண்புனல் கொண்டு
அணுக – அழகிய குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு நெருங்கிச் செல்ல;
‘ஐயா! – மகனே; இது போது அளவாய் -இவ்வளவு நேரமாய்; வந்து
இங்கு அணுகாய் – இங்கு வந்து சேராமையால்; என்னோ வந்தது? –
உனக்கு என்ன நேர்ந்ததோ; என்றே – என்று நினைத்து; நொந்தேம்-
வருந்தினோம்; சந்தம் கமழும் தோளாய்! – சந்தனம் மணக்கின்ற
தோளைஉடைய மகனே; தழுவிக் கொள வா’ – நாங்கள் தழுவிக்
கொள்ளும்படி (அருகில்) வா; என – என்று சொல்லி.

———

‘”ஐயா! யான் ஓர் அரசன்; அயோத்தி நகரத்து உள்ளேன்;
மை ஆர் களபம் துருவி, மறைந்தே வதிந்தேன், இருள்வாய்;
பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல்,
கை ஆர் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன். 80-

‘ஐயா! – சுவாமி; யான் அயோத்தி நகரத்து உள்ளேன் ஓர்
அரசன் -அயோத்தி நகரத்தில் உள்ள ஓர் அரசனாவேன்; மைஆர்
களபம் துருவி மறைந்து வதிந்தேன்- கருமை பொருந்திய யானையைத்
தேடி மறைந்து தங்கியிருந்தேன்; இருள்வாய் -இருட்டில்; பொய்யா
வாய்மைப் புதல்வன் – சத்திய வாக்கினை உடைய உங்கள் மகன்; புனல்
மொண்டிடும் ஓதையின்மேல் – நீரை முகக்கும் ஓசையினிடமாக; கை
ஆர் கணைசென்றது அலால் – கையில் உள்ள அம்பு சென்றதே
அல்லாமல்; கண்ணில் தெரியக்காணேன்’ – (நீர் முகப்பாரைக்) கண்ணில்
விளங்கப் பார்த்தறியேன்’ ஆயினேன்.

———-

‘”வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா, ‘நீ யார்?’ என, உற்ற எலாம் உரையா,
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண்ணிடையே. 81-

‘வீட்டு உண்டு – அம்பு விடுதலால் அடிபட்டு; அலறும் குரலால் –
கதறுகின்றசப்தத்தால்; வேழக் குரல் அன்று எனவே – யானையின் குரல்
அன்று என்று கருதி; ஓட்டந்து – ஓடி; எதிரா – (உங்கள் மகனைச்)
சந்தித்து; ‘நீ யார்’ என -நீ யார் என்று (நான் கேட்க குமரன்); உற்ற
எலாம் உரையா – நடந்தவை அனைத்தையும்சொல்லி; வாட்டம் தரு
நெஞ்சினனாய் – வாடிப் போன மனம் உடையவனாகி; வணங்கா
நின்றான்- உங்களிருவருக்கும் வணக்கம் தெரிவித்து, பேச்சு அடங்கினான்;
வானோர் ஈட்டம் எதிர் வந்திட -தேவர்கள் கூட்டம் எதிர்வந்து வரவேற்க; இறந்து விண்ணிடை – இறந்து
மேல்உலகத்தின்கண்; ஏகினன் – சென்றான்:

———-

‘”அறுத்தாய் கணையால் எனவே, அடியேன் தன்னை, ஐயா!
கறுத்தே அருளாய், யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்,
மறுத்தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்;
பொறுத்தே அருள்வாய்!” என்னா, இரு தாள் சென்னி புனைந்தேன். 82-

‘ஐயா! – ஐயனே; கணையால் அறுத்தாய் எனவே – (என் மகனை)
அம்பால்எய்து அழித்தாய் என்று; அடியேன் தன்னை – அடியேனை;
கறுத்தே அருளாய் -கோபித்து விடாமல் இருப்பாயாக; மறுத்தான்
இல்லான் – களங்கம் சிறிதும் இல்லாதவனாயநின்மகன்; வனம்
மொண்டிடும் ஓதையின் – நீரை முகக்கின்ற ஓசையினால்; எய்தது
அலால் – அம்பு எய்தது அல்லாமல்; யானோ கண்ணில் கண்டேன்
அல்லேன் – யான்கண்ணால் பார்த்து (அம்பு எய்தேன் அல்லேன்);
பொறுத்து அருள்வாய்’ – (இந்த எனதுபிழையைப்) பொறுத்தருள்வாயாக;
என்னா – என்று; இரு தாள் – (அம்முனிவனது) இரு திருவடிகளையும்;
சென்னி புனைந்தேன் – (விழுந்து வணங்கி) என் தலைமேல்
சூடிக்கொண்டேன்.

———–

‘வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; “விழி போயிற்று, இன்று” என்றார்;
ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; “ஐயா! ஐயா!” என்றார்;
“போழ்ந்தாய் நெஞ்சை” என்றார்; “பொன்நாடு அதனில் போய், நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே.” 83-

(மகன் இறந்தான் என்பது கேட்ட அவ் இரு முதுகுரவரும்) ‘வீழ்ந்தார்
அயர்ந்தார்புரண்டார் – தரையில் விழுந்து சோர்வு அடைந்து
புரண்டார்கள்; ‘இன்று விழிபோயிற்று’ என்றார் – இன்றைக்கு எங்கள்
கண்கள் போயின என்றார்; துன்பக் கடலுள்ஆழ்ந்தார் – துன்பம் எனும்
பெருங்கடலுள் மூழ்கினர்; ‘ஐயா! ஐயா’ என்றார் -(மகனை நினைத்து)
ஐயனே ஐயனே என்றார்; ‘நெஞ்சைப் போழ்ந்தாய்’ என்றார் -(எங்கள்)
மனத்தைப் பிளந்துவிட்டாய் என்றார்; ‘நீ பொன்நாடு அதனில் போய்
வாழ்ந்தே இருப்பத் தரியேம்’ – நீ பொன்னுலகம் சென்று அங்கு
வாழ்ந்து இருப்ப நாங்கள்தனித்திருக்க மாட்டேம்; இனியே வந்தேம்,
வந்தேம் – இப்பொழுதே வந்துவிட்டோம், வந்து விட்டோம் (என்ற
புலம்பினர்.)

—————

‘என்று என்று அயரும் தவரை, இருதாள் வணங்கி, “யானே
இன்று உம் புதல்வன்; இனி நீர் ஏவும் பணிசெய்திடுவேன்;
ஒன்றும் தளர்வுற்று அயரீர்; ஒழிமின் இடர்” என்று இடலும்,
“வண் திண் சீலையாய்! கேண்மோ” எனவே, ஒரு சொல் வகுத்தான். 84-

‘என்று என்று – இவ்வாறு பலபடியாகப் புலம்பி; அயரும் –
சோர்வடைகிற; தவரை – முனிவரை; இருதாள் வணங்கி – திருவடிகளில்
வணங்கி; யானே இன்றுஉம் புதல்வன் – நான் இன்று முதல் உங்கள்
மகன் ஆவேன்; இனி நீர் ஏவும்பணிசெய்திடுவேன் – இனி மேல்
நீங்கள் இடும் கட்டளையைச் செய்து முடிப்பேன்; ஒன்றும்தளர்வுற்று
அயரீர் – சிறிதும் சோர்வடையாதீர்; இடர் ஒழிமின்’- துன்பம்நீங்குங்கள்;
என்றிடலும் – என்று சொல்லவும்; ‘வன் திண் சிலையாய்! -வலிய
கட்டமைந்த வில்லை உடையவனே; கேண்மோ’ – கேட்பாயாக; எனவே –
என்று; ஒரு சொல் வகுத்தான் – (அம்முனிவன்) ஒரு வார்த்தை
சொன்னான்.

———–

‘”கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர் காதலியா,
உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என் என்று உரையார்?
விண்ணின் தலை சேருதும்; யாம் எம் போல் விடலை பிரிய
பண்ணும் பரிமா உடையாய்! அடைவாய், படர்வாள்” என்னா. 85

கண் உள் மணி போல் மகவை இழந்தும் – கண்ணிற்குள்ளே
உள்ள கருமணிப் பாவைபோன்ற சிறந்த மகனை இழந்த பிறகும்; உயிர்
காதலியா – உயிர்மேல் ஆசை வைத்து; உண்ண எண்ணி இருந்தால் –
உண்பதற்கு நினைத்து (உலகில் வாழ்ந்து) இருந்தால்; உலகோர் என்
என்று உரையார்? – உலகில் உள்ளவர்கள் (எங்களை) என்னவென்று
பழியார்; யாம் விண்ணின்தலை சேருதும் – நாங்களும் (இறந்து) மேல்
உலகம் சேர்கிறோம்; பண்ணும் பரிமா உடையாய் – அலங்கரிக்கப்
பெற்ற குதிரையை உடைய மன்னனே; எம்போல் – எங்களைப் போல;
விடலை பிரிய – மகன் பிரிந்து செல்ல; படர்வான் அடைவாய்’ –
அகன்ற வானுலகை அடைவாயாக; என்னா – என்று சொல்லி.

————

‘”தாவாது ஒளிரும் குடையாய்! ‘தவறு இங்கு இது, நின் சரணம்,
காவாய்’ என்றாய்; அதனால் கடிய சாபம் கருதேம்;
ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடருற்றனை நீ
போவாய், அகல்வான்” என்னா, பொன் நாட்டிடைப் போயினரால். 86-

தாவாது ஒளிரும் குடையாய்! – கெடாது ஒளிவீசும் வெண்குடை
வேந்தே; ‘இங்குஇது தவறு, நின் சரணம், காவாய்’ என்றாய் – இங்கு
நான் செய்த இச்செயல் என் தவறே,நின் திருவடியைப் புகலாக
அடைந்தேன், என்னைக் காப்பாற்று என்று சொன்னாய்; அதனால் –
(குற்றத்தை ஒப்புக்கொண்டு) சரணம் அடைந்தமையால்; கடிய சாபம்
கருதேம் -கொடிய சாபம் கொடுக்கக் கருதவில்லை; ஏவா மகவைப்
பிரிந்து – கட்டளை இடவேண்டாது குறிப்பறிந்து செய்யும் நன்மகனைப்
பிரிந்து; இன்று எம்போல் – இன்று நாங்கள் துன்பப்படுவது போல்; இடர் உற்றனை – துன்பம் அடைந்தனையாய்; நீ
அகல் வான்போவாய் – நீ அகன்ற வானத்தை அடைவாய்; என்னா –
என்று சாபம் தந்து; பொன் நாட்டிடை போயினர் – விண்ணுலகம்
சென்றார்கள்.

——————

‘சிந்தை தளர்வுற்று, அயர்தல் சிறிதும் இலெனாய், “இன் சொல்
மைந்தன் உளன்’ என்றதனால், மகிழ்வோடு இவண் வந்தனெனால்;
அந்த முனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும்,
எம் தம் உயிர் வீகுதலும், இறையும் தவறா’ என்றான். 87-

சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் – மனம்
தளர்ந்து சோர்வடைதல்சிறிதும் இல்லாமல்; இன் சொல் மைந்தன்
உளன்’ என்றதனால் – இனிய சொற்களைப்பேசும் மகன் பிறப்பான்’
என்பது அவன் சாபத்தால் ஏற்பட்டதனால்; இவண் -நகரத்துக்கு;
மகிழ்வோடு வந்தனென் – மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தேன்; அந்த முனி
சொற்றமையின் – அந்த முனிவன் சொன்னபடியால்; அண்ணல் வனம்
போகுதலும் -இராமன் (என்னைப்) பிரிந்து காடு செல்லுதலும்; எம்தம்
உயிர் வீகுதலும் – என்னுடைய உயிர் போவதும்; இறையும் தவறா’ –
சிறிதளவும் மாறா; என்றான் –

————

வசிட்டன் அரசவை சேர்தல்

உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல்,
புரைசை மத களிற்றான் பொற் கோயில் முன்னர்,
முரைசம் முழங்க, முடி சூட்ட மொய்த்து, ஆண்டு
அரைசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான். 88-

உரைசெய் பெருமை – புகழப்படும் பெருமை உடைய; உயர்
தவத்தோர் ஓங்கல் – உயர்ந்த முனிவர்களுக்கெல்லாம் மலைபோல
உயர்ந்த வசிட்டன்; புரைசை மத களிற்றான்பொன் கோயில் மன்னர்-
மணிகட்டிய கயிற்றை உடைய மத யானையை உடைய மன்னனது
அரண்மனைமுன்றிலில்; முரைசம் முழங்க – முரச வாத்தியம் ஒலிக்க;
முடி சூட்ட மொய்த்து- இராமனுக்குப் பட்டாபிடேகம் செய்ய நெருங்கி;
ஆண்டு – அவ்விடத்தே; அரைசர் – மன்னர்கள்; இனிது இருந்த நல்
அவையின் ஆயினான் – இனிமையாக வீற்றிருந்த நல்லசபாமண்டபத்தை
வந்து அடைந்தான்.

————-

செய்தியை தெரிவிக்குமாறு அரசர்கள் வசிட்டனை வேண்டுதல்

வந்த முனியை முகம் நோக்கி வாள்வேந்தர்,
‘எந்தை! புகுந்த இடையூறு உண்டாயதோ?
அந்தமில் சோகத்து அழுத குரல் தான் என்ன?
சிந்தை தெளிந்தோய்! தெரி எமக்கு ஈது’ என்று உரைத்தார். 89-

வாள் வேந்தர் – வாள் உடைய அரசர்; வந்த முனியை முகம்
நோக்கி -வந்த வசிட்டனைப் பார்த்து; ‘சிந்தை தெளிந்தோய்! – மனம்
தெளிந்த மாமுனிவனே; எந்தை! – எம் தந்தை போல்பவனே; புகுதற்கு
இடையூறு உண்டாயதோ? – இராமன்முடிசூட்டு விழாவிற்கு வருதற்கு
ஏதேனும் தடை உண்டாகியதா; அந்தம் இல் சோகத்து அழுதகுரல்தான்
என்ன? – முடிவில்லாத துன்பத்துடன் கூடிய அழுகையொலி எதனால்
ஆகியது; எமக்குஈது தெரி’ – எங்களுக்கு இதனைத் தெரிவிப்பாயாக;’
என்று உரைத்தார் -.

———-

முடிசூட்டு விழா தடைபட்டதை வசிட்டன் உரைத்தல்

‘கொண்டாள் வரம் இரண்டு, கேகயர்கோன் கொம்பு; அவட்கு
தண்டாத செங்கோல் தயரதனும் தானளித்தான்;
‘ஒண்தார் முகிலை வனம்போகு’ என்று ஒருப்படுத்தாள்;
எண்தானும் வேறில்லை; ஈது அடுத்தவாறு’ என்றான். 90-

‘கேகயர் கோன் கொம்பு – கேகய நாட்டு அரசன் மகளாகிய
கைகேயி; இரண்டுவரம் கொண்டாள் – இரண்டு வரங்களைப்
(தசரதன்பால்) பெற்றுக் கொண்டாள்; தண்டாதசெங்கோல் – தடைபடாத
செங்கோலாட்சியிற் சிறந்த; தயரதனும்தான் – தயரதமன்னனும்; அவட்கு-
கைகேயிக்கு; அளித்தான்- (அவ்வரங்களைக்)கொடுத்தான் (அவ்வரங்களில்
ஒன்றால்); ‘ஒண்தார் முகிலை வனம் போகு’ என்று ஒருப்படுத்தாள் –
ஒள்ளிய மாலை அணிந்த மேகம் போன்ற இராமனைக் காட்டிற்குச் செல்’
என்று சொல்ல (அரசனை) உடன்பட வைத்தாள்; எண் தானும் வேறு
இல்லை – எண்ண வேண்டிய வேறு துன்பம் ஏதும் இல்லை; அடுத்த
ஆறு ஈது’ – நடந்த நிகழ்ச்சி இதுவே; என்றான்-

—————

‘வேந்தன் பணியினால், கைகேசி மெய்ப் புதல்வன்,
பாந்தள்மிசைக் கிடந்த பார் அளிப்பான் ஆயினான்;
ஏந்து தடந் தோள் இராமன், திரு மடந்தை
காந்தன், ஒரு முறை போய்க் காடு உறைவான் ஆயினான்’. 91-

‘வேந்தன் பணியினால் – சக்கரவர்த்தியின் கட்டளையால்; கைகேசி
மெய்ப்புதல்வன் – கைகேயியின் சத்திய மைந்தனாகிய பரதன்;
பாந்தள்மிசைக் கிடந்தபார் – ஆதிசேடன் தலைமேல் தங்கிய
இப்பூமியை; அளிப்பான் ஆயினான் – காப்பாற்றும் அரசுரிமையை
எய்தியவன் ஆனான்; ஏந்து தடந்தோள் இராமன் திருமடந்தை
காந்தன் – உயர்ந்த அகன்ற தோள்களை உடைய இராமனாகிய திருமகள்
கணவன்; ஒருமுறைகாடுபோய் உறைவான் ஆயினான் – ஒருமுறையாகக்
காடு சென்று தங்குவான் ஆனான், (என்றான்முனிவன்.)

————–

இராமன் காடு செல்வது பற்றி கேட்டோரின் துன்ப நிலை

வாரார் முலையாரும், மற்றுள்ள மாந்தர்களும்,
ஆறாத காதல் அரசர்களும், அந்தணரும்,
பேராத வாய்மைப் பெரியோன் உரைசெவியில்
சாராத முன்னம், தயரதனைப் போல் வீழ்ந்தார். 92-

பேராத வாய்மைப் பெரியோன் உரை – பிறழ்ந்து போகாத உண்மைக்கு உறைவிடமான வசிட்ட முனிவனது வார்த்தை; செவியில்
சாராத முன்னம் -(தங்கள்) காதுகளில் சேர்வதற்கு முன்னமே; ஆராத
காதல் அரசர்களும்- (இராமனதுமுடிசூட்டு விழாவில்) அடங்காத அன்பை
உடைய அரசர்களும்; அந்தணரும் – வேதியரும்; மற்று உள்ள
மாந்தர்களும் – வேறு உள்ள மனிதர்களும்; வார் ஆர் முலையாரும் –
கச்சணிந்த தனத்தையுடைய மகளிரும்; தயரதனைப் போல் வீழ்ந்தார்-

————–

புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப,
மண் உற்று அயர்ந்து மறுகிற்று, உடம்பு எல்லாம்,
கண் உற்ற வாரி கடல் உற்றது; அந் நிலையே,
விண் உற்றது, எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை. 93-

உடம்பு எல்லாம் -மக்கள் உடல்கள் எல்லாம்; புண் உற்ற தீயின்-
புண்ணில் பட்ட நெருப்புப் போல; புகை உற்று – அனல் மூச்சு விட்டு;
உயிர் பதைப்ப- உயிர் துடிதுடிக்க; மண் உற்று – நிலத்தில் பொருந்தி;
அயர்ந்து -சோர்ந்து; மறுகிற்று – சுழன்று புரண்டது; கண் உற்ற வாரி –
கண்ணிலிருந்து வந்தநீர்ப்பெருக்கு; கடல் உற்றது – கடலாகப் பெருகியது;
எம் மருங்கும் – எப்பக்கத்திருந்தும்; விட்டு அழுத பேரோசை –
(எல்லோரும்) வாய்விட்டு அழுத குரல் ஒலி;விண் உற்றது – வானத்தை
அடைந்தது.

—————-

மாதர் அருங் கலமும் மங்கலமும் சிந்தித் தம்
கோதை புடைபெயர, கூற்று அனைய கண் சிவப்ப,
பாத மலர் சிவப்ப, தாம் பதைத்துப் பார் சேர்ந்தார் –
ஊதை எறிய ஒசி பூங் கொடி ஒப்பார். 94-

மாதர்தாம் – மகளிர்; அருங்கலமும் மங்கலமும் சிந்தி – அரிய
அணிகலன்களும் மங்கலநாணும் கீழே விழ; தம் கோதை புடை பெயர –
தம்முடைய கூந்தல்பக்கத்தில் குலைந்து விழ; கூற்று அனைய கண்
சிவப்ப – யமனை ஒத்த கண்கள்சிவக்க; பாதமலர் சிவப்ப – அடிமலர்
சிவக்க; ஊதை எறிய – பெருங்காற்று வீசுவதனால்; ஒசி – ஒடிந்து
வீழ்கின்ற; பூங்கோடி ஒப்பார் – பூங்கொடியைஒத்தவர்களாய்; பதைத்துப்
பார் சேர்ந்தார் – துடித்துப் பூமியில் விழுந்தார்கள்.

—————–

‘ஆ! ஆ! அரசன் அருள் இலனே ஆம்’ என்பார்;
‘காவா, அறத்தை இனிக் கைவிடுவோம் யாம் என்பார்;
தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்;
மா வாதம் சாய்த்த மராமரம் போல்கின்றார். 95-

தாவாத மன்னர் – (வலி) அழியாத அரசர்; ஆ! ஆ! – அந்தோ!
அந்தோ; அரசன் – தசரதன்; அருள் இலன்ஆம்’ – இரக்கம்
இல்லாதவன்; என்பார்-; யாம் இனி அறத்தைக் காவா கைவிடுவேம்’-
நாங்கள் இனிமேல் தருமத்தைப்பாதுகாக்காமல் கைவிட்டு விடுவோம்;
என்பார்-; மா வாதம் சாய்த்த மராமரமேபோல்கின்றார் – பெருங்
காற்றால் வீழ்த்தப்பட்ட ஆச்சா மரத்தைப் போன்றவராய்;தலைத் தலை-
மண்மேல்; வீழ்ந்து ஏங்கினார் – விழுந்து அழுதார்.

————–

கிள்ளையடு பூவை அழுத; கிளர்மாடத்து
உள்ளுறையும் பூசை அழுத; உருவறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை என்சொல்ல?-
‘வள்ளல் வனம்புகுவான்’ என்றுரைத்த மாற்றத்தால். 96-

வள்ளல் – இராமன்; ‘வனம் புகுவான் – காடு செல்வான்;’ என்று
உரைத்த மாற்றத்தால் – என்று சொல்லிய சொல்லால்; கிள்ளையொடு
பூவை அழுத -கிளியும், நாகணவாய்ப் பறவையும் அழுதன; கிளர்
மாடத்து உள் உறையும் பூசை அழுத -விளங்குகின்ற மாளிகையின்
உள்ளே வசிக்கின்ற வீட்டுப் பூனைகள் அழுதன; உரு அறியாப்பிள்ளை
அழுத – வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத சிறு குழந்தைகள் அழுதன;
பெரியோரை என் சொல்ல? – பெரியோர்கள் அழுதமைமையப் பற்றி
என்னவென்று சொல்வது?

—————–

சேதாம்பல் போது அனைய செங் கனி வாய் வெண் தளவப்
போது ஆம் பல் தோன்ற, புணர் முலைமேல் பூந் தரளம்
மா தாம்பு அற்றென்ன மழைக் கண்ணீர் ஆலி உக,
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார். 97-

நா தாம் பற்றா மழலை நங்கைமார் – நாவின் கண் பிடிப்புப்
பொருந்தாத மழலைச்சொற்களைப் பேசுகின்ற இனிய இளமகளிர்;
சேதாம்பல் போது அனைய செங்கனிவாய் -செவ்வல்லிப் பூவை ஒத்த
சிவந்த பழம் போன்ற வாயிலிருந்து; வெண் தளவப் போது ஆம்பல்
தோன்ற – வெண்மையான முல்லையின் மலர் அரும்பு ஆகிய பல் வெளித்
தெரிய; புணர்முலைமேல் – இரண்டாகச் சேர்ந்த மார்பகங்களின் மேல்;
மழைக் கண்ணீர் ஆலி -மழை போன்ற கண்ணீர்த் துளி; பூந்தரளம் – அழகிய முத்து; மா தாம்பு அற்று என்ன – சிறந்த
கயிறுஅறுந்து ஒவ்வொன்றாக விழுவது போல; உக – சிந்த; ஏங்கினார் –
அழுதார்கள்.

————

ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர்
மாவும் அழுத;-அம் மன்னவனை மானவே. 98-

அம் மன்னவனை மான – (இராமன் பிரிவால் துயர் உறும்)
தசரதனை ஒப்ப; ஆவும்அழுத – பசுக்கள் அழுதன; அதன் கன்று
அழுத – அப் பசுக்களின் கன்றுகள் அழுதன; அன்று அலர்ந்த பூவும்
அழுத – அப்போது மலர்ந்த பூக்களும் அழுதன; புனல் புள் அழுத-
நீர்வாழ் பறவை இனங்கள் அழுதன; கள் ஒழுகும் காவும் அழுத – தேன்
சிந்தும் மலர்ச்சோலைகள் அழுதன; களிறு அழுத – யானைகள் அழுதன;
கால் வயப் போர் மாவும் அழுத- காற்றை ஒத்த வலிய போர் வல்ல
குதிரைகளும் அழுதன.

——–

‘ஞானீயும் உய்கலான்’ என்னாதே, நாயகனைக்
‘கானீயும்’ என்றுரைத்த கைகேசியுங், கொடிய
கூனீயும் அல்லால், கொடியார் பிறருளரோ?
மேனீயும் இன்றி வெறுநீரே ஆயினார். 99-

‘ஞானீயும் உய்கலான்’ என்னாதே – உலகில் பிறந்தார்க்குப் பிரிவும்
சிறப்பும் இயல்பானவை என்பதைத் தெளிய உணர்ந்த ஞானியும்கூட இராமன்
பிரிவால் பிழைக்க மாட்டான் என்று கருதாமல்; நாயகனைக் ‘கான் ஈயும்’
என்று உரைத்த கைகேசியும் – தன் கணவனைப் பார்த்து (இராமனுக்குக்)
காட்டைக் கொடும் என்று சொல்லிய கைகேயியும்; கொடிய கூனீயும்
அல்லால் – அவளுக்குத் துர்ப்போதனை செய்த கூனியும் தவிர; பிறர்
கொடியார் உளரோ? – வேறு யாரேனும் மிகக் கொடியவர்கள்
இருக்கின்றார்களோ (மற்றவர்கள் அனைவரும்); மேனீயும் இன்றி –
உடம்பும் இல்லாமல்; வெறு நீரே ஆயினார் – வெறுமைத் தன்மை
அடைந்தவர் ஆயினர்.

————

ஊர் மக்களின் துயரம்

தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார்? தேர் ஓட
நீறு ஆகி, சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம்,
ஆறு ஆகி ஓடின கண்ணீர்; அரு நெஞ்சம்
கூறு ஆகி ஓடாத இத்துணையே குற்றமே. 100-

(இராமனது பிரிவால்) தேறாது – தெளியாமல்; அறிவு அழித்தார் – அறிவு நீங்கப் பெற்றவர்கள்; எங்கு உலப்பார்? – எவ்விடத்து எந்நிலைமையால் கணக்கில் அடங்குவர்; தேர் ஓட நீறு ஆகிச் சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் – தேர் ஓடுவதனால் புழுதி ஆகி மண் பொடி நிறைந்திருந்த தெருக்களில் எல்லாம்; கண்ணீர் – மக்கள் அழுத கண்ணீர்; ஆறு ஆகி ஓடின – ஆறு போலச் சென்று ஓடின; அரு நெஞ்சம் – அவர்களது அரிய மனம்; கூறு ஆகி ஓடாத இத் துணையே குற்றம் – பிளந்து பிரிந்து நீங்காத இவ்வளவே குற்றம்.

————-

நகரத்தவரின் வருத்தம்

‘மண் செய்த பாவம் உளது’ என்பார்; ‘மா மலர்மேல்
பெண் செய்த பாவம் அதனின் பெரிது’ என்பார்;
‘புண் செய்த நெஞ்சை, விதி’ என்பார்; ‘பூதலத்தோர்
கண் செய்த பாவம் கடலின் பெரிது’ என்பார். 101-

(நகர மாந்தர்) ‘மண்செய்த பாவம் உளது’ என்பார் – ‘நிலமகள்
செய்த தீவினை மிகுதியாக உள்ளது’ என்பர்; ‘ மாமலர் மேல் பெண்
செய்த பாவம் அதனின் பெரிது’- சிறந்த தாமரை மலர்மேல் வீற்றிருக்கும்
திருமகள் செய்த தீவினை அதைக்காட்டிலும் மிகுதி; ’ என்பார்-; ‘புண்
செய்த நெஞ்சை விதி – புண்பட்ட மனத்தைப் பார்த்து இது விதியால்
விளைந்தது;’ என்பார் – ; பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலின்
பெரிது’ – இப்பூமியில் உள்ளவர்களின் கண் செய்த தீவினை
கடலைக்காட்டிலும் மிகுதி;’ என்பார் – .

————–

‘ஆளான் பரதன் அரசு’ என்பார்; ‘ஐயன், இனி
மீளான்; நமக்கு விதிகொடிதே காண்’ என்பார்;
‘கோள் ஆகி வந்தவா, கொற்ற முடிதான்’ என்பார்;
‘மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்?’ என்பார். 102-

‘பரதன் அரசு ஆளான் – பரதன் அரசாட்சியை ஏற்கமாட்டான்;’
என்பார் – ; ‘ ஐயன் இனி மீளான் – இராமன் இனிமேல் நாடு திரும்ப
மாட்டான்; நமக்கு விதி கொடிதே காண்’ – நமக்கு ஊழ் வினை மிகவும்
கொடுமையானது;’ என்பார் – ; ‘ கொற்ற முடிதான் – வெற்றியுடைய
மகுடம்; கோள் ஆகி வந்தவா‘ – தீய இடையூறாகி வந்து சேர்ந்தபடி
என்னே;’ என்பார் – ; மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்?’ –
(இத்தனையும் கேட்டு வைத்தும் கண்டு வைத்தும் ) இறந்துபடாத நம்மைக்
காட்டிலும் உலகில் கொடுமனம் உடையவர்கள் யார் உளர்;’ என்பார் -.

———

‘ஆதி அரசன் அருங்கே கயன்மகள்மேல்
காதல் முதிர, கருத்து அழிந்தான் ஆம்’ என்பார்;
‘சீதை மணவாளன் தன்னோடும் தீக் கானம்
போதும்; அது அன்றேல், புகுதும் எரி’ என்பார். 103-

‘ஆதி அரசன் – மூல முதல் வேந்தனான தயரதன்; அருங்கேகயன்
மகள்மேல் -அரிய கைகேயிமாட்டு; காதல் முதிர – அன்பு முற்றுதலால்;
கருத்து அழிந்தான் ஆம்- மனம் மயங்கி அறிவு
தடுமாறிவிட்டான்போலும்;’ என்பார்-; ‘சீதை மணவாளன்தன்னோடும்
தீக்கானம் போதும் – (நாம்) சீதைக்கு நாயகனான இராமனோடு கொடிய
காட்டிற்குப் போவோம்; அது அன்றேல் – அது முடியாமற் போகுமானால்;
எரி புகுதும் – நெருப்பில் வீழ்ந்து உயிர் விடுவோம்;’ என்பார் – .

—————

கையால் நிலம் தடவி, கண்ணீர் மெழுகுவார்
‘உய்யாள் போல் கோசலை’ என்று, ஓவாது வெய்து உயிர்ப்பார்;
‘ஐயா! இளங் கோவே! ஆற்றுதியோ நீ’ என்பார்;
நெய் ஆர் அழல் உற்றது உற்றார், அந் நீள் நகரார். 104-

அந்நீள் நகரார் – அந்தப் பெரிய அயோத்தி நகரத்தில் உள்ளவர்கள்;
கையால் நிலம் தடவிக் கண்ணீர் மெழுகுவார் – கையால் தரையைத்
தடவித் தம் கண்ணீர்கொண்டு அதனை மெழுகுவாராயினர்; ‘கோசலை
உய்யாள்’ என்று – ‘இனிக் கோசலை பிழைக்கமாட்டாள்’ என்று சொல்லி;
ஓவாது வெய்து உயிர்ப்பார் – இடைவிடாமல் வெப்பப் பெருமூச்சு விடுவார்கள்; ‘ஐயா! இளங்கோவே! நீ
ஆற்றுதியோ? – ‘ஐயனே இளைய அரச குமாரனாகிய இலக்குவனே நீ
இதனைப் பொறுத்துக் கொள்வாயோ; ’ என்பார் -; நெய் ஆர் அழல்
உற்றது உற்றார் – நெய் பொருந்திய நெருப்பில் விழுந்தால் ஒத்த
தன்மையை அடைந்தார்கள்.

———–

‘தள்ளூறு வேறு இல்லை; தன் மகற்குப் பார் கொள்வான்,
எள்ளூறு தீக் கருமம் நேர்ந்தாள் இவள்’ என்னா,
கள் ஊறு செவ் வாய்க் கணிகையரும், ‘கைகேசி,
உள் ஊறு காதல் இலள்போல்’ என்று, உள் அழிந்தார். 105-

கள் ஊறு செவ்வாய்க் கணிகையரும் – எப்பொழுதும் குடிப்பதால்
கள் ஊறுகின்றசிவந்த வாயை உடைய பரத்தையரும்; ‘இவள் – இக்கைகேயி;
தள்ளூறு வேறு இல்லை -தள்ளுவதற்கு வேறு காரணம் இல்லை; தன்
மகற்குப் பார்கொள்வான் – தன் மகனாகியபரதனுக்கு அரசு கொள்ள
ஆசைப்பட்டு; எள்ளூறு தீக்கருமம் நேர்ந்தாள் – உலகரால்
இகழப்படுகின்ற தீச்செயலைச் செய்ய உடன்பட்டாள்; என்னா – என்று
சொல்லி; கைகேசி உள் ஊறு காதல் இலள் – மன்னன் மாட்டு அகம்
பொருந்தி எழும் அன்புடையாள்இல்லை; என்று – ; உள் அழிந்தார் –
மனம் கெட்டு வருந்தினர்.

————-

‘நின்று தவம் இயற்றித் தான் தீர நேர்ந்ததோ?
அன்றி, உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரைக்
கொன்று களையக் குறித்த பொருள் அதுவோ?
நன்று! வரம் கொடுத்த நாயகற்கு, நன்று!’ என்பார். 106-

‘தான் – சக்கரவர்த்தி; தவம் இன்றி – (காடு சென்று) தவம் செய்து;
தீர நேர்ந்ததோ? – இவ்வுலகினின்று விடுதலை பெற உடன் பட்டதோ;
அன்றி -அதுவல்லாமல்; உலகத்துள் – இப்பூமியின்கண்; ஆர் உயிர்
ஆய்- அரியஉயிரோடு கூடி; வாழ்வாரை – வாழ்கின்ற மக்களையெல்லாம்;
கொன்று களையக்குறித்த பொருளதுவோ? – கொன்று அடியோடு அழிக்க மனத்தில் கருதிய காரியமோ; நன்று!- நன்றாயிருந்தது; வரம் கொடுத்த நாயகற்கு – வரம் கொடுத்த தயரதனுக்கு; நன்று! – வரம் கொடுத்த செயல் மிக நன்றாயிருந்தது;’ என் பார் -.

————–

‘பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து, பிறந்து உலகம்
முற்றுடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி,
உற்று உறைதும்; யாரும் உறையவே, சில் நாளில்
புற்றுடைய காடெல்லாம் நாடாகிப் போம்’ என்பார். 107-

‘பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து- (வரத்தால்) பெற்றுத் தனக்குச்
சொந்தமாகிக்கொண்ட இராச்சியத்தைக் கைகேயிக்குக் கொடுத்து; பிறந்து –
(மூத்தவனாகப்) பிறந்து; உலகம் முற்றுடைய கோவை – உலகம் முழுதும்
தனக்கு உரியதாகப்பெற்ற இராமனை; பிரியாது – பிரிந்து நகரத்தில்
வாழாது; யாரும் மொய்த்து ஈண்டி உற்று உறைதும் – எல்லாரும்
நெருங்கிச் சென்று (அவனுடைய) தங்கி வசிப்போம்; உறையவே – (அவ்வாறு நாம் எல்லாம் சென்று தங்கி)
வசிக்கவே; புற்று உடைய காடு எல்லாம் நாடு ஆகிப்போம்’ – பாம்புப்
புற்றுகளை உடைய காடுகள் மக்கள்வசிக்கும் நாடாகிவிடும்;’ என்பார்-.

——————-

‘என்னே நிருபன் இயற்கை இருந்தவா!
தன் நேர் இலாத தலைமகற்குத் தாரணியை
முன்னே கொடுத்து, முறை திறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்?’ என்பார். 108-

‘நிருபன் – சக்கரவர்த்தியின்; இயற்கை இருந்தவா என்னே! –
இயல்பு இருந்த விதம் என்னவாய்உள்ளது; தன் நேர் இல்லாத
தலைமகற்குத் தாரணியை முன்னே கொடுத்து -தனக்குச்சமானமில்லாத
மூத்த மகனுக்குப் பூமியை முன்னர் ஆளக் கொடுப்பதாக அவையில்
சொல்லிவிட்டு; முறை திறம்ப – அச் சொல் முறை மாறு்படும்படி;
பின்னே – பிறகு (கைகேயியின்அந்தப்புரத்தில்); தம்பிக்குக் கொடுத்தால்-
பரதனுக்குக் கொடுத்தால்; மெய் பிழையதோ?’ – சத்தியம் தவறுபடாதோ;’
என்பார் -.

———-

கோதை வரி வில் குமரன் கொடுத்த நில
மாதை ஒருவர் புணர்வராம்? வஞ்சித்த
பேதை சிறுவனைப் பின் பார்த்து நிற்குமே,
சீதை பிரியினும் தீராத் திரு?’ என்பார். 109-

கோதை வரிவி்ல் குமரன் கொடுத்த நிலமாதை – வெற்றி மாலை
சூடிய கட்டமைந்தகோதண்டத்தை உடைய இராமனுக்குப் பேரவையில்
கொடுக்கப் பெற்ற நிலமகளை; ஒருவர்புணர்வார்- வேறு ஒருவர் (பரதன்)
கூடுவார்; (அப்படிக் கூடினால்); சீதை பிரியினும் -சீதாபிராட்டி காடு
சென்றாலும்; தீராத் திரு – தானும் காடு செல்லாமல்தங்கிவிட்ட
செல்வமகள்; வஞ்சித்த பேதை – வஞ்சனை செய்த கைகேயியின்;
சிறுவனை- மகனாகிய பரதனை; பார்த்துப் பின் நிற்குமே?’ –
பார்த்துக்கொண்டுஏற்றுக்கொண்டு நிற்பாளா;’ என்பார்-.

—————-

உந்தாது, நெய் வார்த்து உதவாது, கால் எறிய
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்,
‘செந்தாமரைத் தடங் கண் செவ்வி அருள் நோக்கம்
அந்தோ! பிரிதுமோ? ஆ! விதியே! ஓ!’ என்பார். 110-

‘உந்தாது – தூண்டப்படாமல்; நெய்வார்த்து உதவாது – நெய்ஊற்றி
உதவிசெய்யாமல்; கால் எறிய – காற்று வீசுதலால்; நந்தா விளக்கின் –
(நடுங்குகின்ற) கெடாத விளக்குப் போல; நடுங்குகின்ற நங்கைமார் –
துடிக்கின்றமகளிர்; ‘செந்தாமரைத் தடங்கண் – (இராமரை) செந்தாமரை
மலர் போன்ற விசாலமானகண்களாற் பெறும்; செல்வி அருள் நோக்கம்-
தக்க பருவத்தே விளையும் அருள்பார்வையை; பிரிதுமோ? – பிரியப்
போகிறோமோ; அந்தோ! ஆ! விதியே! ஓ!’என்பார் -.

————–

இலக்குவனின் கோபம்

கேட்டான் இளையோன்; கிளர் ஞாலம் வரத்தினாலே
மீட்டாள்; அளித்தாள் வனம் தம் முனை, வெம்மை முற்றித்
தீட்டாத வேல் கண் சிறுதாய்’ என யாவராலும்
மூட்டாத காலக் கடைத்தீயென மூண்டு எழுந்தான். 111-

இளையோன் – இளைய பெருமாளாகிய இலக்குமணன்; ‘தீட்டாத
வேல் கண்சிறு தாய் – (இயல்பில் கூர்மை உடைய) தீட்டப் படாத வேல்
போன்ற கண்ணை உடையசிற்றன்னையாகிய கைகேயி; வெம்மை முற்றி –
கொடுமை மிகுந்து; கிளர் ஞாலம் -விளங்குகின்ற பூமியை; வரத்தினாலே
மீட்டாள் – அரசனிடம் பெற்ற வரத்தால்(தன்மகன் பரதன் பக்கமாக)
திருப்பிக்கொண்டாள்; தம்முனை – தன் அண்ணனாகியஇராமனுக்கு;
வனம் அளித்தாள்.’ காட்டைக் கொடுத்தாள்; என – என்று;கேட்டான் –
கேள்விப்பட்டு; யாவராலும் மூட்டாத – ஒருவராலும் உண்டாக்கப்படாத
(இயற்கைச் சீற்றம் ஆகிய); காலக் கடைத்தீ என – ஊழி இறுதியில்
உண்டாகும் பெருநெருப்பு என்று சொல்லும்படி; மூண்டு எழுந்தான் –
சீற்றம் மிகுந்து எழுந்தான்.

————–

கண்ணின் கடைத் தீயுக, நெற்றியில் கற்றை நாற,
விண்ணிற் சுடரும் சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப,
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க, நின்ற
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான். 112-

கணணின் கடைத் தீ உக – கண் முனையிலிருந்து நெருப்புப் பொறி
சிந்த; நெற்றியில் கற்றை நாற – அந்நெருப்புப் பட்டு நெற்றி மயிர் சுருஏறி நாற; விண்ணில் சுடரும் சுடர் தோன்ற – வானத்தில்
ஒளிவீசும் சூரியன்இலக்குமணனிடமாகித் தோன்ற; மெய்ந்நீர் விரிப்ப –
உடம்பு வியர்வைத் துளிகளைஎங்கும் பரவச் செய்ய; உள் நிற்கும்
உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க -உடம்பின் உள்ளே உள்ள நெடு மூச்சு
என்னும் காற்று வெளித் தோன்ற; நின்ற அண்ணல்பெரியோன் – சீறி
நின்ற தலைமைப்பாடு உடைய இலக்குமணன்; தனது ஆதியின் மூர்த்தி
ஒத்தான் – தனது பூர்வ வடிவமாகிய (ஆயிரம் தலை உடைய) ஆதி
சேடனைப் போன்றிருந்தான்.

————-

சினங்கொண்ட இலக்குவன் கைகேயியை இகழ்ந்துரைத்தல்

‘சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!
நங்கைக்கு அறிவின் திறம்! நன்று, இது! நன்று, இது!’ என்னா,
கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான். 113-

‘சிங்கக் குருளைக்கு இடு தீம்சுவை ஊனை – சிங்கக் குட்டிக்குக்
கொடுத்தற்குரிய இனிய சுவையுடைய மாமிசத்தை; வெங்கண்நாயின் சிறு
குட்டனை – கொடிய கண்ணை உடைய நாயின் சிறு குட்டிக்கு; ஊட்ட
விரும்பினாளே! -உண்பிக்க ஆசைப்பட்டாளே; நங்கைக்கு – கைகேயிக்கு;
அறிவின் திறம் நன்று இது!நன்று இது’ – புத்தி வன்மையாகிய இது
நன்றாயிருந்தது;’ என்னா – எனச் சொல்லி; கங்கைக்கு இறைவன் –
இலக்குவன்; கடகக் கை – கடகம் அணிந்ததன்னுடைய கையை;
புடைத்து – தட்டி; நக்கான் – சிரித்தான்.

கங்கைவரை உள்ள
நாடு கோசலம் ஆதலின் இலக்குவன் ‘கங்கைக்கிறைவன்’எனப்பட்டான்.
இனி சரயு நதிக்கு ‘இராமகங்கை’ எனும் பெயருண்மையின் அதுபற்றிக்
‘கங்கைக் கிறைவன்’ எனப்பட்டான்-

———

இலக்குவன் போர்க் கோலம் மேற்கொளல்

சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து,
வில் தாங்கி, வாளிப் பெரும் புட்டில் புறத்து வீக்கி,
பற்று ஆர்ந்த செம் பொன் கவசம், பனி மேரு ஆங்கு ஓர்
புற்று ஆம் என ஓங்கிய தோளடு, மார்பு போர்க்க. 114-

சுற்று ஆர்ந்த கச்சில்- இடையைச் சுற்றி அமைந்த இடைக்கச்சிலே;
கரிகை -வாளை; புடை தோன்ற ஆர்த்து – வெளியில் தெரியும்படி
கட்டி; வில் தாங்கி -வில்லைச் சுமந்து; வாளிப் பெரும்புட்டில் புறத்து
வீக்கி – அம்புகள் அமைந்த பெரியதூணியை முதுகுப்புறத்தில்
கட்டியமைத்து; பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் – நன்றாகப்பிடிப்புப்
பொருந்திய செம்பொன்னாலாகிய கவசம்; பனிமேரு ஆங்கு ஓர் புற்று
ஆம் என -குளிர்ந்த மேரு மலை ஒரு புற்று ஆகும் என்று சொல்லும்படி;
ஓங்கிய தோளொடு -உயர்ந்துள்ள தோளோடு; மார்பு போர்க்க –
மார்பையும் மூடிக்கொள்ள.

—————

அடியில் சுடர்பொன்கழல் ஆர்கலி நாண ஆர்ப்பப்
பொடியில் தடவும் சிலைநாண் பெரும்பூசல் ஓசை,
இடியின் தொடரக் கடலேழும் மடுத்து, ஞாலம்
முடிவில் குமிறும் மழை மும்மையின் மேல் முழங்க. 115-

அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப –
பாதங்களில் ஓளிவீசும்பொன்னால் ஆகிய வீரக்கழலை கடல் வெட்கமுறும்
படி பேரொலி செய்ய; பிடியில் தடவும் -கைப்பிடியால் தடவப் பெறுகின்ற;
சிலை நாண் பெரும் பூசல் ஓசை – வில்லினதுகயிற்றைத் தெறிப்பதால்
உளதாகும் பெரிய ஆரவார ஒலி; இஞ்ஞால முடிவில் – இந்த உலக
முடிவில்; கடல் ஏழும் மடுத்து – ஏழு கடல்களையும் குடித்து; இடியின்
தொடர -இடிகளோடு தொடர்ந்து; குமுறும்-முழங்குகின்ற; மழை – மழையைக்காட்டிலும்; மும்மையின் மேல் முழங்க-
மூன்று மடங்கு அதிகமாக ஒலிக்க.

———

வானும் நிலனும் முதல் ஈறு இல் வரம்பு இல் பூதம்
மேல் நின்று கீழ்காறும் விரிந்தன வீழ்வபோல,
தானும், தன தம்முனும் அல்லது, மும்மை ஞாலத்து
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க. 116-

தானும் தன தம் முனும் அல்லது – இலக்குமணனும், அவனுக்குத்
தமையனாகிய இராமனும்அல்லாமல்; மும்மை ஞாலத்து – மூன்று
உலகங்களிலும் உள்ள; ஊனும் உயிரும்உடையார்கள்- உடம்பும் உயிரும்
உடைய அனைவரும்; வானும் நிலனும் முதல் ஈறு இல் மேல்நின்று
கீழ்காறும் விரிந்தன – வானும், நிலமும் முதலிய, அழிவற்ற, மேலிருந்து
கீழ்வரை விரிந்துள்ளனவாகிய; வரம்பில் பூதம் – கணக்கில்லாத பூதங்கள்;
வீழ்வ போல – விழுகின்றன போலக் கருதி; உளைந்து ஒதுங்க –
வருந்தி விலக.

————

இலக்குவனின் ஆவேச உரை

‘புவிப்பாவை பரம் கெடப் போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும், அவித்தவர் ஆக்கையை அண்ட முற்றக்
குவிப்பானும், இன்றே என கோவினைக் கொற்ற மௌலி
கவிப்பானும், நின்றேன் இதுகாக்குநர் காமின்’ என்றான். 117-

‘புவிப் பாவை பரம் கெட – உலகம் என்னும் மகள்தன் சுமை நீங்க; போரில் வந்தோரை எல்லாம் – என்னோடு போர்க்கண்
வந்தவர்களைஎல்லாம்; அவிப்பானும் – அழிப்பதற்காகவும்; அவித்து –
அழித்து; அவர் ஆக்கையை- அவர்களின் உடல்களை; அண்டம்
முற்றக் குவிப்பானும்- உலகஅண்டமெல்லாம் நிறையக் குவிப்பதற்காகவும்;
எனக்கு ஒரு கோவினை – எனக்கு ஒப்பற்றதலைவனாக உள்ள
இராமனுக்கு; கொற்ற மௌலி – வெற்றி பொருந்திய மகுடத்தை;
கவிப்பானும் – சூட்டுதற்காகவும்; நின்றேன் – (இப்போது ஆயத்தமாக)
நிற்கின்றேன்; இது காக்குநர் காமின்’ – இதைத் தடுத்துக் காத்துக்கொள்ளக்
கூடியவர்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்;’ என்றான்.

———-

விண் நாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர், மற்றும்
எண் நாட்டவர், யாவரும் நிற்க; ஓர் மூவர் ஆகி,
மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர் வந்தபோதும்,
பெண் நாட்டம் ஒட்டேன், இனிப் பேர் உலகத்துள்’ என்னா. 118-

‘விண் நாட்டவர் – தேவர் உலகத்துள்ளவர்; மண்ணவர் –
மண்னுலகில் உள்ளவர்; விஞ்சையர் – வித்தியாதரர்; நாகர் – பாதல
உலகத்தில் வசிப்போர்; மற்றும் – வேறாக; எண் நாட்டவர் –
எண்ணப்படும் நாட்டில் உள்ளவர்; யாவரும் – அனைவரும்; நிற்க –
கிடக்கட்டும்; (அவரினும் மேம்பட்டு) ஓர் மூவர்ஆகி – மூன்று பேராக
இருந்து; மண் நாட்டுநர் – உலகத்தை நிலை நிறுத்திக்காக்கின்ற
திருமாலும்; காட்டுநர் – படைக்கின்ற பிரமனும்; வீட்டுநர் – அழிக்கின்ற
உருத்திரனும் ஆகிய மூவர் (துணையாக); வந்த போதும் – வந்தாலும்;
இனிப் பேர் உலகத்துள் பெண் நாட்டம் – இனி இவ்வுலகில் பெண்ணின்
மனக்கருத்துக்கு; ஒட்டேன் – உடன்படேன்; என்னா – என்று சொல்லி.

————

அயோத்தி மாநகரில் இலக்குவன் கோபத்தோடு அலைதல்

காலைக் கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி,
ஞாலத்தவர் கோ மகன், அந் நகரத்து நாப்பண்,
மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை
வேலைத் திரிகின்றதுபோல், திரிகின்ற வேலை,- 119-

ஞாலத்தவர் கோ மகன் – சக்கரவர்த்தியின் இளைய மகனாகிய
இலக்குவன்; காலைக் கதிரோன் – காலை இள ஞாயிறு; நடு உற்றது ஓர்
வெம்மை காட்டி -உச்சிக்கு வந்தாற்போன்ற ஒரு வெப்பக் கடுமையைக்
காட்டி; முந்தை – முன்காலத்தில்; மாலைச் சிகரத் தனி மந்தர மேரு –
ஒழுங்கான குடுமிகளை உடைய ஒப்பற்ற மந்தர மலை; வேலைத்
திரிகின்றது போல – கடலின் கண் (மத்தாக) சுழல்கின்றது போல;
அந்நகரத்து நாப்பண் – அவ் அயோத்தி நகர நடுவில்; திரிகின்ற
வேலை -சுழன்று வருகின்ற நேரத்தில்.

————–

இலக்குவனின் நாணொலி கேட்டு இராமன் தேடி வருதல்

வேற்றுக் கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மித்
தேற்றத் தெளியாது அயர்சிற்றவை பால் இருந்தான்,
ஆற்றல் துணைத்தம்பிதன் வில்-புயல் அண்ட கோளம்
கீற்றுஒத்து உடைய, படும் நாண் உரும் ஏறு கேளா. 120-

வேற்றுக் கொடியாள் – மனம் வேறுபட்ட கொடியவளான கைகேயி;
விளைவித்தவினைக்கு – உண்டாக்கிய துன்பச் செயலுக்கு; விம்மி –
கலங்கி; தேற்ற – ஆறுதல் கூறவும்;தெளியாது – மனம் சமாதானம்
அடையாமல்; அயர் – சோர்கின்ற; சிற்றவைபால்இருந்தான் –
சுமித்திரையாகிய சிற்றன்னையிடத்தே இருந்தவனாகிய இராமன்; ஆற்றல்-
வலியிற் சிறந்த; துணைத் தம்பிதன்- தனக்குத் துணையாகிய இலக்குவனது;
வில்புயல் – வில் என்கிற மேகத்திருந்து; அண்ட கோளம் – உலக உருண்டை; கீற்று ஒத்து உடைய- கீறு
கீறாகப் பிளவுபட்டுத் தரும்படி; படும் – உண்டாகிய; நாண் உரும் ஏற –
நாணொலியாகிய இடியேற்றொலியை; கேளா – கேட்டு.

———-

வீறாக்கிய பொற்கலன் வில்லிட, ஆரம், மின்ன,
மாறாத் தனிச்சொல் துளிமாரி வழங்கி வந்தான்;
கால்தாக்க நிமிர்ந்து, புகைந்து, கனன்று, பொங்கும்
ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன; 121-

வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட – அழகிற் சிறந்த பொன்னால்
ஆகிய அணிகலன்ஒளி வீச; ஆரம் மின்ன – (மார்பில்) முத்துவடம்
ஒளிவிட்டு விளங்க; கால்தாக்க – புயற்காற்று வீச; நிமிர்ந்து –
மேல்நோக்கி; புகைந்து – புகைபொங்கி; கனன்று – எரிந்து; பொங்கும் –
மேலும் மிகுகின்ற; ஆறாக்கனல் – அணையாத நெருப்பை; ஆற்றும் –
அணைக்கின்ற; ஓர் அஞ்சன மேகம் என்ன- ஒரு மை போலும் கரிய
மேகம் போல; மாறா – மாறுபடாத; தனிச் சொல் மாரித்துளி – ஒப்பற்ற
சொல்லாகிய மழைத் துளியை; வழங்கி – சொல்லிக்கொண்டு; வந்தான்-

————

இலக்குவனிடம் போர்க்கோலம் பூண்டதற்கான காரணத்தை இராமன் வினவுதல்

மின்னொத்த சீற்றக் கனல்விட்டு விளங்க நின்ற,
பொன்னொத்த மேனிப் புயலொத்த தடக்கை யானை,
‘என்னத்த! என், நீ இறையோரை முனிந்திலாதாய்,
சன்னத்தன் ஆகித் தனுஏந்துதற்கு ஏது?’ என்றான். 122-

மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற – மின்னலைப்
போன்று கோபநெருப்பு விட்டுப் பிரகாசிக்கும்படி நின்றுகொண்டிருந்த;
பொன் ஒத்த மேனி -பொன்னிறமான திருமேனியையும்; புயல் ஒத்த
தடக் கையானை – மேகம் போன்றவாரிவழங்கும் வண்மையுடைய பெரிய
கையினையும் உடைய இலக்குவனை (நோக்கி); ‘என் அத்த- என்
தலைவனே!; இமையோரை முனிந்திலாதாய் – (இவ்வாறு நிகழ்தற்கு
மூலமாகிய -ஏதுவாகிய) தேவர்களைக் கோபிக்காதவனாகிய; நீ -;
சன்னத்தன் ஆகி – யுத்தமுனைப்புடையவனாய்; தனு ஏந்துதற்கு ஏது
என்?’ – வில்லை ஏந்துதற்குக் காரணம் என்ன; என்றான் –

————-

இலக்குவனின் பதில் உரை

‘மெய்யைச் சிதைவித்து, நின் மேல் முறை நீத்த நெஞ்சம்
மையில் கரியாள் எதிர், நின்னை அம் மௌலி சூட்டல்
செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவர் ஏனும்;
துய்யைச் சுடுவெங்கனலின் சுடுவான் துணிந்தேன்; 123-

‘மெய்யைச் சிதைவித்து – சத்தியத்தை அழியச் செய்து; நின் மேல்
முறை- உன்னுடைய சிறப்பான அரசு முறைமையை; நீத்த – நீக்கின;
நெஞ்சம் மையின்கரியாள் எதிர் – மனத்தால் மை போலக் கரியவளான
கைகேயியின் எதிரே; நின்னை- உன்னை; அம் மௌலி சூட்டல்
செய்யக் கருதி – அந்த மகுடத்தை அணிந்து கொள்ளுதல்செய்ய
நினைத்து; தடை செய்குநர் தேவரேனும் – தடை செய்பவர்கள்
தேவராயினும்; துய்யைச் சுடு – பஞ்சை எரிக்கின்ற; வெங்கனலின்- கொடு நெருப்புப் போல; சுடுவான் – எரித்திட; துணிந்தேன்-
உறுதிசெய்தேன்.’

———-

‘வலக்கார் முகம் என் கையது ஆக, அவ்வானுளோரும்
விலக்கார்; அவர்வந்து விலக்கினும் என்கை வாளிக்கு
இலக்கா எரிவித்து உலகுஏழினொடு ஏழும், மன்னர்
குலக்கா வலும், இன்று உனக்கு யான் தரக் கோடி’ என்றான். 124-

வலக் கார்முகம் – வலிமை படைத்த வில்; என் கையது ஆக –
என்கையின்கண் இருப்பதாக; அவ்வானுளோரும் – அந்தத் தேவர்களும்;
விலக்கார் -என்னைத் துணிந்து தடுக்கமாட்டார்; அவர் வந்து
விலக்கினும் – (ஒருவேளை) அவர் வந்து தடுத்தாலும்; என் கை வாளிக்கு-
என் கையில் உள்ள அம்புக்கு; இலக்கா -குறியாகும்படி; எரிவித்து –
(அவர்களை) எரியச் செய்து; உனக்கு -; உலகு ஏழினோடுஏழும் –
பதினான்கு உலகங்களும்; மன்னர் குலக் காவலும் – அரசர் குலத்துக்
காவல்தொழிலாகிய சக்கரவர்த்தியாம் தன்மையும்; இன்று – இப்பொழுதே;
யான் தர- நான் கொடுக்க; கோடி’ – கொள்வாய்;’ என்றான்-

———-

இலக்குவனிடம் கோபம் வரக் காரணத்தை இராமன் கேட்டல்

இளையான் இதுகூற, இராமன், ‘இயைந்த நீதி
வளையாவரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே?
உளையா அறம் வற்றிட, ஊழ் வழுவுற்ற சீற்றம்,
விளையாத நிலத்து, உனக்கு எங்ஙன் விளைந்தது?’ என்றான். 125-

இளையான் – இலக்குவன்; இது கூற – இதனைச் சொல்ல; இராமன்-;
‘இயைந்த நீதி வளையாவரும் நல்நெறி நின் அறிவு ஆகும் அன்றே?-
அரசர்க்குப் பொருந்தியநீதிக்குச் சிறிதும் மாறுபடாத நல்ல வழியிற்
செல்லுவது நின் அறிவாகும் அல்லவா; ஊழ் வழுவுற்ற சீற்றம் –
முறைமைக்கு மாறாக உள்ள கோபம்; விளையாத நிலத்து -உண்டாகாத
உன் மனத்தில்; அறம் உளையா வற்றிட – தருமம் மனம் வருந்திக்
கெடும்படி; உனக்கு விளைந்தது எங்ஙன்? – உனக்கு உண்டாகியது
எவ்வாறு; ’என்றான்-.

——-

இப்போது சினம் கொள்ளாது எப்போது சினம் கொள்வது என இலக்குவன் கூறல்

நீண்டான் அது உரைத்தலும், நித்திலம் தோன்ற நக்கு,
‘”சேண்தான் தொடர் மாநிலம் நின்னது” என்று, உந்தை செப்பப்
பூண்டாய்; “பகையால் இழந்தே, வனம் போதி” என்றால்,
யாண்டோ, அடியேற்கு இனிச்சீற்றம் அடுப்பது?’ என்றான். 126-

நீண்டான் – நெடியோனாய இராமன்; அது உரைத்தலும் – அச்சொற்
கூறுதலும்; நித்திலம் தோன்ற நக்கு – (இலக்குவன்) பற்கள் வெளி்த்
தோன்றச்சிரித்து; ‘சேண்தான் தொடர் மாநிலம் நின்னது’ என்று
உந்தை செப்ப – நெடுந்தூரம்பற்றியுள்ள அகன்ற பெரிய கோசல அரசு
உன்னுடையது என்று உன் தந்தை சொல்ல; பூண்டாய்- சரி என்று
அதனை மேற்கொண்டாய்; பகையால் – பகைவர்களால்;’ இழந்து வனம்
போதி என்றால் – அரசை இழந்து காட்டிற்குச் செல்’ என்று சொன்னால்;
அடியேற்கு- அடியேனுக்கு; சீற்றம் அடுப்பது – கோபம் உண்டாவது;
இனி யாண்டோ’ -இனி எந்த இடத்திலோ;’ என்றான்-

————-

‘நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க,
புன்கண் பொறி யாக்கை பொறுத்து, உயிர் போற்றுகேனோ-
என் கட்புலமுன் உனக்கு ஈந்துவைத்து, “இல்லை” என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல்?’ என்றான். 127-

‘என் கண்புல முன் உனக்கு ஈந்து வைத்து – என் கண் எதிரே
உனக்கு அரசைக்கொடுத்து; ‘இல்லை’ என்ற- பிறகு உனக்கு அரசு இல்லை
என்று சொல்லிய; வன் கண் புலம்தாங்கிய மன்னவன் காண்கொல்?-
கொடுந் தன்மை உடைய தயரதனோ யானும்; நின்கண்பரிவு இல்லவர்?-
உன்னிடத்து அன்பு இல்லாதவர்கள்; நீள்வனத்து – நீண்டகாட்டில்;
உன்னை நீக்க – உன்னை அனுப்ப (அதன் பிறகும்); புன்கண் கொறி
யாக்கை பொறுத்து – பொலிவழிந்த ஐம்பொறிகளை உடைய உடம்பைச்
சுமந்து; உயிர் போற்றுகேனோ?’ – உயிரைப் பாதுகாத்து (தயரதன்
போல்) வாழ்வேனா;’ என்றான். –

———–

இராமன் சினம் கூடாது என்பதற்கு ஏற்ற காரணம் இயம்புதல்

‘”பின், குற்றம் மன்னும் பயக்கும் அரசு” என்றல், பேணேன்;
முன், கொற்ற மன்னன், “முடி கொள்க” எனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ?-
மின்குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்! 128-

மின் குற்று ஒளிரும் வெயில் தீக் கொடு அமைந்த வேலோய்!-மின்னலை வென்று விளங்குகின்ற வெயிலையும் நெருப்பையும் கொண்டு
செய்யப் பெற்ற வேலை உடைய இலக்குவனே; கொற்ற மன்னன் –
வெற்றியுடைய தயரதன்; முன் -; ‘முடிகொள்க’ என – மகுடத்தைச்
சூடி அரசு ஏற்க எனச் சொல்ல; ‘அரசு பின் மன்னும்குற்றம் பயக்கும்’
என்றல் பேணேன் – அரசாட்சி பிறகு மிகுதியும் நமக்குக் குற்றங்களை
உண்டாக்கும் என்று கருதாமல்; கொள்ள மூண்டது – ஏற்றுக்கொள்ள
முயன்றது; என்குற்றம் அன்றோ? – (இதில்) பகைவன்மை அழிக்கும்
தயரதனாகிய மன்னவனது தவறு யாதுளது.’

————

‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். 129-

மைந்த! – மகனே!; நறும் புனல் இன்மை – (என்றும் நீர் உள்ள
ஆற்றிலே ஒரு சில காலங்களில்) நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது;
நதியின் பிழைஅன்று -அவ் ஆற்றின் குற்றம் அன்று; அற்றே – அது
போலவே; பதியின் பிழைஅன்று – (என்னைக் காடு செல்லும்படி
சொன்னது) தந்தையின் குற்றம் அன்று; பயந்துநமைப் புரந்தாள் –
(காடு செல்லும்படி வரம் வாங்கியது) பெற்று நம்மைக்காப்பாற்றிவளர்த்தவள்
ஆகிய கைகேயியின்; மதியின் பிழை அன்று – அறிவினது குற்றமும்
அன்று; மகன் பிழை அன்று – அவள் மகனாகிய பரதனது குற்றம் அன்று;
விதியின் பிழை- விதியால் (நமது ஊழ்வினையால்) விளைந்த குற்றமே
ஆகும். இங்ஙனம் இதனை ஆராயாது; நீஇதற்கு வெகுண்டது
என்னை?’ – நீ இந்தச் செயலுக்கு இவர்களைக் காரணமாக்கிக் கோபித்தது
ஏன்?’ என்றான் -.

————–

இலக்குவன் சினந்து பதில் கூறுதல்

உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க,
‘கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்,
விதிக்கும் விதி ஆகும், என் வில் – தொழில் காண்டி’ என்றான். 130-

உலையுள் உதிக்கும் உறு தீ என ஊதை பொங்க – (கொல்லன்)
உலைக்களத்துள்பிறக்கின்ற மிக்க நெருப்பைப் போல வெப்பமான
பெருமூச்சு மேலே பொங்கிவர; ‘கொதிக்கும் மனம் – வெம்புகின்ற
மனத்தை; எங்ஙனம் ஆற்றுவென் – எவ்வாறுதணியச் செய்வேன்;
கோள் இழைத்தாள் – தீங்கு செய்தவளாகிய கைகேயியின்; மதிக்கும் மதி
ஆய் – அறிவுக்கும் அறிவு தருவதாய்; முதல் வானவர்க்கும் – மும்
மூர்த்திகளாய தேவர்களுக்கும்; வலிது ஆம் – வலிமையான; விதிக்கும்
விதி ஆகும் – (நீ சொல்லிய) ஊழ்வினையையும் வென்று மாற்ற வல்ல
ஊழ் ஆகிய; என் வில் தொழில்காண்டி’ – எனது வில்லின் செயலைப்
பார்ப்பாயாக;’ என்றான் -.

———–

இராமன் இலக்குவனின் கோபம் தணித்தல்

ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், ‘ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?’ 131-

அவன் – இலக்குவன்; ஆய்தந்து – ஆராய்ந்து; அவ் உரை
கூறலும் -அந்தச் சொற்களைச் சொன்ன அளவில் (இராமன் அவனை
நோக்கி); ‘ஐய! – தம்பி; மறை தந்த நாவால் – வேதங்களைச் சொன்ன
நாக்கினால்; நின்தன் வாய்தந்தனகூறுதியோ? – உன் வாயில்
வந்தவைகளைக் கூறுகின்றாயோ, நீ தந்தது – நீஇப்பொழுது (உன் வாயால்)
தந்த சொல்; நெறியோர்கண் நிலாதது அன்றே? -நல்நெறியில்
நடப்பவர்கள் இடத்தில் நிற்கத்தகாத சொல் அல்லவா; ஈன்ற தாய் தந்தை
என்றால் – (உன் கருத்திற்கு மாயாக நடப்பவர்) பெற்ற தாயும் தந்தையும்
ஆனால்; அவர் மேல் சலிக்கின்றது – அவரிடத்தில் கோபிப்பது;
என்னோ?’ – எப்படிப்பொருந்தும்.

———-

இலக்குவனின் பிடிவாதம்

‘நல் தாதையும் நீ; தனி நாயகன் நீ; வயிற்றில்
பெற்றாயும் நீயே; பிறரில்லை; பிறர்க்கு நல்கக்
கற்றாய்! இது காணுதி இன்று’ எனக் கைம் மறித்தான்;
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான். 132-

முற்றா மதியம் மிலைந்தான் – இளம்பிறை அணிந்த சிவபெருமான்;
முனிந்தானை- சினங் கொண்ட நிலையடைந்தானை; அன்னான் –
ஒத்தவனாகிய இலக்குவன் (இராமனைநோக்கி); ‘நல்தாதையும் நீ –
(எனக்கு) நல்ல தந்தையும் நீ; தனி நாயகன் நீ- ஒப்பற்ற தலைவனும் நீ;
வயிற்றில் பெற்றாயும் பிறர் இல்லை நீயே – (என்னைப் )பெற்றெடுத்த
தாயும் பிறர் யாரும் இல்லை நீயே; பிறர்க்கு நல்கக் கற்றாய் –
(எல்லாவற்றையும்) மற்றவர்களுக்குக் கொடுத்து விடக் கற்றவனே; இன்று
இது காணுதி -இன்று (நான் உனக்கு அரசைப் பெற்றுத் தருவதாகிய)
இதனைப் பார்ப்பாயாக;’ என -என்று சொல்லி; கைம் மறித்தான் –
(இராமனைத் ) தடுத்தான்.

————

இராமன் மீண்டும் இலக்குவனுக்கு அறிவுரை கூறுதல்

வரதன் பகர்வான்: ‘வரம் பெற்றவள்தான் இவ் வையம்
சரதம் உடையான்; அவள், என் தனித் தாதை, செப்பப்
பரதன் பெறுவான்; இனி, யான் படைக்கின்ற செல்வம்
விரதம்; இதின் நல்லது வேறு இனி யாவது?’ என்றான். 133-

வரதன் – இராமன்; பகர்வான் – கூறுவான்; ‘வரம் பெற்றவள்
தான்- (அரசனுக்குச் சாரதியாய் இருந்து ) வரம் வாங்கிக் கொண்டவளாகிய
கைகேயியை; இவ்வையம் சரதம் உடையாள் – இவ் வுலக ஆட்சியை
மெய்யாகப் பெறுதற்கு உரிமை உடையவளாவாள்; அவள், என் தனித்
தாதை செப்பப் பரதன் பெறுவான் – அவளும், என்ஒப்பற்ற
தந்தையாகிய தயரதனும் சொல்லப் பரதன் (இவ்வரசாட்சியைப் ) பெறுவான்;
இனி- அடுத்து; யான் படைக்கின்ற செல்வம் – நான் பெறுகின்ற
செல்வம்; விரதம் – தவம் ஆகும்; இதின் நல்லது – இத்தவத்தினும்
நன்மையானது; இனி வேறு யாவது?- இனி வேறு என்ன உள்ளது;’
என்றான் -.

——-

ஆன்றான் பகர்வான் பினும்; ‘ஐய! இவ் வைய மையல்
தோன்றா நெறி வாழ் துணைத் தம்முனைப் போர் தொலைத்தோ?
சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ?
ஈன்றாளை வென்றோ, இனி, இக் கதம் தீர்வது?’ என்றான். 134-

ஆன்றான் – குணங்களால் உயர்ந்து அமைந்தவனாகிய இராமன்;
பினும்பகர்வான் – மேலும் சொல்வான்; ‘ஐய! – ஐயனே; இவ் வைய
மையல் தோன்றா நெறிவாழ் – இந்த உலக அரசாட்சி என் கின்ற மயக்கம் அற்ற நன்னெறியில் இருந்து கொண்டுள்ள; துணைத்
தம்முனைப் -உன்னுடைய துணையாகிய அண்ணனைப் (பரதனை)ப்;
போர் தொலைத்தோ? – சண்டையில்தோல்வியடையச் செய்தோ;
சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ? –
பெரியோர்களாற் புகழப்பெறும் ஒப்பற்ற நம் தந்தையாகிய தயரதனை
வெற்றி கொண்டோ; ஈன்றாளை வென்றோ?- பெற்ற தாயை (கைகேயியை)
வெற்றி கொண்டோ; இக்கதம் -(உனக்கு வந்துள்ள) இக் கோபம்; இனித்
தீர்வது?’ – இனி நீங்குவது;’ என்றான்-.

———-

இராமன் அறிவுரை கேட்டு இலக்குவன் சினம் அடங்கல்

செல்லும் சொல் வல்லானெதிர், தம்பியும் ‘தெவ்வர் சொல்லும்
சொல்லும் சுமந்தேன்; இருதோளெனச் சோம்பி ஓங்கும்
கல்லும் சுமந்தேன்; கணைப்புட்டிலும் கட்டு அமைந்த
வில்லும், சுமக்கப் பிறந்தேன்; வெகுண்டு என்னை?’ என்றான். 135-

செல்லும் சொல் வல்லான் எதிர் – (குறித்த செயலை) நிறைவேற்ற
வல்லசொற்களைக் கூறுதல் வல்ல இராமன் எதிரே; தம்பியும் –
இலக்குவனும்; ‘தெவ்வர்சொல்லும் சொல்லும் சுமந்தேன் – உன்
பகைவர்களாகிய கைகேயி முதலியவர்கள் சொல்கின்றசொல்லையும்
தாங்கினேன்; இரு தோள் எனச் சோம்பி ஏங்கும் கல்லும் சுமத்தேன்-
(அப் பகைவர்களை அழிக்க முயலாது) இரண்டு தோள்எனப் பெயர்பெற்று
வேலையின்றி ஓய்ந்து கிடக்கும் மலைகளையும் தாங்கியுள்ளேன்; கணைப்
புட்டிலும், கட்டு அமைந்த வில்லும் -அம்பு அறாத் தூணியும், நன்கு
கட்டிச் செய்யப்பெற்ற வில்லும் ஆகியவற்றையும்; சுமக்கப்பிறந்தேன் –
பயனின்றித் தூக்கிக்கொண்டு கிடக்கப் பிறவி எடுத்தேன் (இத்தகைய
துர்ப்பாக்கியனாகிய யான்); வெகுண்டு என்னை?’ – கோபிப்பதால் என்ன
பயன்;’ என்றான் -.

———–

இராமனின் சமாதான உரை

‘நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?’ என்றான் –
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான். 136-

தென்சொல் கடந்தான் – தமிழ் மொழியின் எல்லை கண்டவனாம்;
வடசொல்கலைக்கு எல்லை தேர்ந்தான் – வடமொழிச் சாத்திரங்களின்
முடிவிடத்தை ஆராய்ந்து அறிந்தவனும் ஆகிய இராமன் (இலக்குணனை
நோக்கி); ‘நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும்வளர்த்த தாதை
தன் – இன் மொழிகள் பேசி என்னைப் பாதுகாத்து என்னை நாளும்
வளர்த்துவந்த தந்தை தயரதனது; சொல் கடந்து – சொற்களை மீறி; அரசு
ஆள்வது- அரசு ஆட்சி செய்வது என்பது; எற்கு – எனக்கு; தக்கது
அன்று – தகுதியானசெயல் அன்று; (ஆனால் உனக்கோ) என் சொல்
கடந்தால் – (நீ தந்தையும் தாயும் என்றகருதும் ) என்னுடைய சொல்லை
மீறினால்; யாது உளது ஊற்றம்?’ – என்ன நன்மைவந்துவிடும் (ஒன்றும்
வராது); என்றான் –

———–

இராமன் உரையால் இலக்குவன் சீற்றம் தணிதல்

சீற்றம் துறந்தான்; எதிர்நின்று தெரிந்து செப்பும்
மாற்றம் துறந்தான்; மறை நான்கு என வாங்கல் செல்லா
நால் தெண் திரை வேலையின், நம்பி தன் ஆணையாலே,
ஏற்றம் தொடங்காக் கடலின், தணிவு எய்தி நின்றான். 137-

(இலக்குவன்) மறை நான்கு என வாங்கள் செல்லா நால்
தெண்திரை வேலையின் நம்பிதன்ஆணையால் – வேதங்கள் நான்கு
என்று என்றும் குறைவுபடாத நான்கு கடல்களை உடைய ஆடவர்
திலகமாகிய இராமனது கட்டளையால்; சீற்றம் துறந்தான் – சினத்தைக்
கைவிட்டான்; எதிர் நின்று – (இராமன் ) எதிரில் இருந்து; தெரிந்து –
ஆராய்ந்து; செப்பும் – கூறுகின்ற; மாற்றம் – (தர்க்கவாத) வார்த்தைகளை;
துறந்தான் – கைவிட்டான்; ஏற்றம் தொடங்காக் கடலின் – கரையைக்
கடவாத கடல் போல; தணிவு எய்தி நின்றான்- (சினம்) அடங்கி நின்றான்.

————–

இராம இலக்குவனர் சுமித்திரை அரண்மனை அடைதல்

அன்னான் தனை, ஐயனும் ஆதியடு அந்தம் என்று
தன்னாலும் அளப்பருந் தானும், தன் பாங்கர் நின்ற
பொன் மான் உரியானும் தழீஇ எனப் புல்லி, பின்னை,
சொல் மாண்புடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான். 138-

ஐயனும் – இராமனும்; ஆதியொடு அந்தம் ஒன்றாம் தன்னாலும்
அளப்ப அருந் தானும் – முதலும் முடிவும் ஒன்றாக உள்ள தன்னாலும்
வரையறுத்துக் கூறமுடியாதுள்ள திருமாலாகிய தானும்; தன் பாங்கர்
பொன்னிறமான மான் தோலை உடைய சிவபிரானும்; தழீஇ என –
தழுவிக் கொண்டாற் போல; அன்னான் தனை – அந்த இலக்கு வனை; புல்லி – தழுவி; பின்னை – பிறகு; மாண்பு உடை சொல்
அன்னை- மாட்சிமை உடைய சொற்களை உடையளாகிய சுமித்திரைத்
தாயின்; கோயில் புக்கான் -மாளிகையை அடைந்தான்.

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி, உரை
நூல் மறை உறையும்கோயில் – வரைநீர், கருமம் அழிப்பு அளிப்புக்
கையது வேல் நேமி, உருவம் எரி கார்மேனி ஒன்று’ (திவ்ய. 2086) ‘தாழ்
சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும், துழாயும்பொன்னாணும்
தோன்றுமால் – சூழம், திரண்டு அருவிபாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து’ (திவ்ய. 2344.) என்ற முதலாழ்வார்
பாசுரங்களை இங்கேகாண்க.

———

வனம் செல்லும் தன் மக்களைக் கண்ட சுமித்திரையின் வருத்தம்

கண்டாள், மகனும் மகனும் தன கண்கள் போல்வார்,
தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள் தம்மை;
புண்தாங்கு நெஞ்சத்தனளாய்ப் படிமேல் புரண்டாள்;
உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள். 139-

(சுமித்திரை) தண்டா வனம் செல்வதற்கே சமைந்தார்கள் –
தடைபடாத காட்டுக்குச்செல்வதற்கு உறுதி செய்தவர்களாகிய; மகனும்
மகனும் – இராமனும் இலக்குவனும்; ஆகிய தன கண்கள் போல்வார்
தம்மை – தன் இரண்டு கண்களையும் போன்றவர்களை; கண்டாள் –
பார்த்தாள்; புண்தாங்கு நெஞ்சத்தனளாய் – புண்பட்ட மனம்
உடையவளாய்; உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள்-
தோன்றிய துன்பம்எனும் கடலுக்கு முடிவு காண மாட்டாது; படிமேல் –
மண்ணின் மேல்; புரன்டாள் -விழுந்து புரண்டாள்.

————-

இராமன் சுமித்திரையின் துயரை போக்குதல்

சோர்வாளை, ஓடித் தொழுது ஏந்தினன்; துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி, மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்;
‘போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன்;
கார்வான்நெடுங் கான் இறை கண்டு, இவன் மீள்வென்’ என்றான். 140-

சோர்வாளை – தளர்கின்ற சுமித்திரையை; தொழுது – (இராமன்) மத
வணங்கி ஓடி ஏந்தினன் – விரைந்து சென்று தாங்கிக்கொண்டான்; துன்பம்
என்னும் ஈர்வாளை வாங்கி – (அவளது) துயர் என்கிற மனத்தை
அறுக்கும் வாளை வெளியே எடுத்து; மனம்தேறுதற்கு – மனம்
தெளிவடைவதற்கு; ஏற்ற செய்வான் – தக்க செயல்களைச்செய்பவனாய்;
‘போர் வாள் அரசர்க்கு இறை – போர் செய்வதில் வல்லவாளை
உடையசக்கரவர்த்தியை; பொய்த்தனன் ஆக்ககில்லேன் – சத்தியம்
தவறியவனாகச் செய்யமுடியாதவனாய் உள்ளேன்; கார்வான் நெடுங்கானம்-
கரிய மேகம் சூழ்ந்த பெரியகாட்டை; இறைகண்டு – சிறிது பார்த்துவிட்டு;
இஙன் மீள்வென்’ -இவ்விடத்தே திரும்புவேன்; என்றான் -.

—————

‘கான் புக்கிடினும், கடல் புக்கிடினும், கலிப்பேர்
வான் புக்கிடினும், எனக்கு அன்னவை மாண் அயோத்தி
யான் புக்கது ஒக்கும்; எனை யார் நலிகிற்கும் ஈட்டார்?
ஊன் புக்கு, உயிர் புக்கு, உணர் புக்கு, உலையற்க!’ என்றான். 141-

(அம்மா!) ‘கான் புக்கிடினும் – காட்டில் சென்றாலும்; கடல்
புக்கிடினும்- கடலிற் சென்றாலும்; கலிப் பேர் வான் புக்கிடினும் -ஆரவாரத்தையும் பெருமையையும் உடைய தேவலோகத்தை அடைந்தாலும்;
எனக்கு -; அன்னவை- அந்த இடங்கள்; யான் மாண் அயோத்தி
புக்கது ஒக்கும் – யான் சிறந்தஅயோத்தி நகரத்துக்குள் இருப்பதைப்
போலவே ஆகும்; எனை நலிகிற்கும் ஈட்டார் யார்?- என்னைத்
துன்புறுத்தும் ஆற்றல் உடையவர் யார் உளர்; ஊன்புக்கு, உயிர்புக்கு,
உணர்புக்கு உலையற்க’ – உடம்பு, உயிர், உணர்வு ஆகியவற்றுக்குள்
(துயரம்) ஊடுருவித்தளரா தொழிக; என்றான் -.

—————-

கைகேயி தோழியர் மூலம் மரவுரி அனுப்புதல்

தாய், ஆற்றுகில்லாள்தனை ஆற்றுகின்றார்கள் தம்பால்
தீ ஆற்று கிலார், தனி சிந்தையின் நின்று செற்ற,
நோய் ஆற்று கில்லா உயிர் போல நுடங்கு இடையார்
மாயாப் பழியாள்தர, வற்கலை ஏந்தி வந்தார். 142-

ஆற்றுகிலாள் தாய்தனை – துயரத்தை ஆற்றமாட்டாதவளாய் உள்ள
தாய் சுமித்திரையை;ஆற்றுகின்றார்கள் தம்பால் – தேற்றித்
தெளிவிக்கின்ற அந்த இராமலக்குவர்கள் இடத்தில்; தீ ஆற்றுகிலார் –
பிரிவுத் தீயை அணைக்கமாட்டார்; தனிச்சிந்தையினின்று செற்ற நோய் –
துணையற்ற தனித்த மனத்திலிருந்து கொல்லுகின்ற வேதனையை
ஆற்றுகில்லார் – ஆற்ற மாட்டாத; உயிர் போல நுடங்கு இடையார் –
நுண்ணியதாகிய உயிர்போலத் துவளுகின்ற இடையை உடைய மகளிர்;
மாயாப் பழியாள் தர -என்றும் அழியாத பழியை உடைய
கைகேயியானவள் கொடுத்தனுப்ப; வற்கலை ஏந்தி வந்தார்- மரவுரியைச்
சுமந்து வந்தார்கள்.

—————-

கார்வானம் ஒப்பான் தனைக்காண் தொறும்காண் தொறும்போய்
நீராய் உகக் கண்ணினும் நெஞ் சழிகின்ற நீரார்,
பேரா இடர்ப்பட்டு அயலார் உறுபீழை கண்டும்
தீரா மனத் தாள்தர, ‘வந்தன சீரம்’ என்றார். 143-

கார் வானம் ஒப்பான்தனை – மழை மேகத்தை ஒத்த கருமையும்
தண்மையும் உடையஇராமனை; காண்தொறும் காண்தொறும் – பார்க்கப்
பார்க்க; கண்ணினும் போய் – பார்க்கின்ற கண்ணைக் காட்டிலும் போய்;
நீர் ஆய் உக – நீராகிச் சிந்த; நெஞ்சு அழிகின்ற நீரார் – மனம்
கெட்டு வருந்துகின்ற தன்மையுடைய ஏவல் மகளிர்(இராமனைப் பார்த்து)
‘பேரா இடர்ப்பட்டு – நீங்க முடியாத துன்பப் பட்டு; அயலார் உறு
பீழை கண்டும் – அயலார்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு வைத்தும்;
தீரா மன்த்தாள் – தன் கொள்கையிலிருந்து நீங்காத மனம் உடைய
கைகேயி; தர -கொடுத்தனுப்ப; வந்தன சீரம் – வந்தனவாகிய மரவுரி
இவை; என்றார் –

————

மரவுரியைக் காட்டுமாறு இலக்குவன் கூறுதல்

வாள் நித்தில வெண் நகையார் தர, வள்ளல் தம்பி,
‘யாணர்த் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம்
பூணப் பிறந்தானும் நின்றான்; அவை போர் விலோடும்
காணப் பிறந்தேனும் நின்றேன்; அவை காட்டும்’ என்றான். 144-

வாள் நித்தில வெண் நகையார் தர- ஒளியுடைய முத்துப் போலும்
வெள்ளிய பற்களை உடையாராய ஏவல் மகளிர் கொடுக்க; வள்ளல் –
இராமன் தம்பியாயஇலக்குவன்; ‘யாணர்த் திருநாடு இழப்பித்தவர் –
புதிய வருவாய்களைச் சிறந்த கோசல நாட்டை இழக்கும்படி செய்த கைகேயி; ஈந்த எல்லாம் – கொடுத்த எல்லாப்
பொருளையும்; பூணப் பிறந்தானும் நின்றான் – அணிந்து கொள்ளப்
பிறந்தவனாகிய என் தமயனும்இருக்கின்றான்; அவை- அந்தக் காட்சிகளை;
போர் விலோடும் – போரில்ஆற்றல் காட்டும் வில்லைச் சுமந்து
கொண்டே; காணப் பிறந்தேனும் நின்றேன் -காண்பதற்குப் பிறந்த
நானும் இருக்கின்றேனே; அவை காட்டும்’ – அவற்றைக்காண்பியுங்கள்;
‘என்றான் –

————

இலக்குவன் வனம் செல்ல தாயிடம் விடைபெறுதல்

அன்னான், அவர் தந்தன, ஆதரத்தோடும் ஏந்தி,
இன்னா இடர் தீர்ந்து, “உடன் ஏகு” என, எம்பிராட்டி
சொன்னால், அதுவே துணை ஆம்’ என, தூய நங்கை
பொன் ஆர் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள்: 145-

அன்னான் – அந்த இலக்குவன்; அவர் தந்தன – அவ் ஏவல்
மகளிர் கொடுத்தனவாகிய மரவுரியை; ஆதரத்தோடும் ஏந்தி – அன்போடு
பெற்றுக்கொண்டு ; ‘இன்னா இடர் தீர்ந்து – துன்பத் துயரம் நீங்கி;
உடன் ஏகு’ என – இலக்குவ! இராமனுடன் நீயும் துணையாக வனம்
செல்க என்று; எம்பிராட்டி சொன்னால் – என் தாய்சுமித்திரை
சொல்வாளாயின்; அதுவே துணை ஆம்’ – அதுவே எனக்குப் பற்றுக்
கோடாகஆகும்; என – என்று நினைத்து; ***தூய மனம் உடைய
சுமித்திரையின்; பொன் ஆர்அடி மேல் – பொன் போலப் பொலிந்த
பாதத்தின் மேல்; பணிந்தான் -வணங்கினான்; அவளும் புகன்றாள் –
அவளும் சில சொற்கள் கொன்னாள்;

————–

இலக்குவனுக்கு சுமித்திரையின் அறிவுரை

‘ஆகாதது அன்றால் உனக்கு; அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை-என்றே
ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்’ என்றாள். 146-

(இராமனுக்கு ஆகிய) அவ்வனம் – அந்தக் காடு; உனக்கு ஆகாதது
அன்றால் -நீ செல்லுதற்குத் தகாதது அன்று; இவ் அயோத்தி – இந்த
அயோத்தி மாநகர் போன்றதேஆகும்; மா காதல் இராமன் நம்
மன்னவன் – சிறந்த அன்பினை உடைய இராமனே (உனக்குஇனி) நம்
மன்னனாகிய தயரதன் ஆம்; நம் பூங்குழல் சீதை – நம்முடைய பூக்கள்
அணிந்தகூந்தலை உடைய சீதையே; வையம் ஈந்தும் – இராமன் பூமியைப்
பரதனுக்குக் கொடுத்துக்காடு செல்லத் துணிந்த பின்னும்; போகா உயிர்த்
தாயர் – போகாத உயிரையுடையதாய்மார்கள் ஆவர்; என்று – எனக்
கருதி; ஏகாய் – வனத்திற்கு இராமனுடன்செல்வாயாக; இனி இவ்வயின்
நிற்றலும் ஏதம்’ – இனிமேல் இங்கே நீ நின்றுதாமதிப்பதும் குற்றமாகும்;
என்றாள் –

—————-

பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன் பின் செல்; தம்பி
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்
முன்னம் முடி’ என்றனள், வார் விழி சோர நின்றாள். 147-

பின்னும் – மேலும்; பகர்வான் – கூறுவாள்; ‘மகனே! -;
இவன்பின்செல் – இந்த இராமன் பின்னால் செல்வாயாக; தம்பி
என்னும்படி அன்று – இவன்தம்பி என்கின்ற முறையில் நடந்துகொள்ள
அன்று; அடியாரினின் ஏவல் செய்தி – இவன்தொண்டர்களைப் போல
இவன் இட்ட பணிகளைச் செய்; மன்னும் நகர்க்கே – நிலைபெற்ற
அயோத்தி நகரத்துக்கு; இவன் வந்திடின் வா – இவன் திரும்பி
வருவானாயின் நீயும்வருக; அது அன்றேல் – இவன் அயோத்திக்கு
வரமுடியாமல் போகுமானால்; முன்னம் முடி’- இவனுக்கு முன்னம் நீ
உயிரைத் துறந்துவிடு;’ என்றனள் – என்று கூறி வார் விழி சோர நின்றாள்- நீண்ட கண்களிலிருந்து நீர் பெருக
நின்றாள்.

———–

இராம இலக்குவனர் சுமித்திரையிடம் விடைபெற்று மரவுரி தரித்து செல்லுதல்

இருவரும் தொழுதனர்; இரண்டு கன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள்;
பொரு அருங் குமரரும் போயினார் – புறம்
திரு அரைத் துகில் ஒரீஇ, சீரை சாத்தியே. 148-

இருவரும் தொழுதனர் – இராம இலக்குவர்கள் இருவரும் (தாயை)
வணங்கினர்; தாயும் -சுமித்திரையும்; இரண்டு கன்று ஒரீஇ வெருவரும்
ஆவினின் – இரண்டு கன்றுகளை நீங்கிஅஞ்சுகின்ற பசுப்போல;
விம்மினாள் – மனம் கலங்கித் துடித்தாள்; பொரு அரும்குமரரும் –
ஒப்பற்ற மைந்தர்களும்; புறம் திரு அரைத் துகில் ஒரீஇ, சீரைசாத்திப்
போயினார் – உடம்பின் வெளியே அழகிய இடுப்பில் அணிந்திருந்த
மெல்லிய ஆடைகளை நீக்கிமரவுரியைத் தரித்துக் கொண்டு சென்றார்கள்.

—————

மரவுரி தரித்த இலக்குவனை பெற்றோருடம் இருக்க இராமன் கூறுதல்

தான் புனை சீரையைத் தம்பி சாத்திட,
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்;
‘வான் புனை இசையினாய்! மறுக்கிலாது, நீ
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள்’ எனா. 149-

தான் புனை சீரையை – (இராமன்) தான் அணிந்துள்ளது போன்ற
மரவுரியை; தம்பி சாத்திட – தம்பியாகிய இலக்குவனும் அணிந்துகொள்ள;
தேன் புனை தெரியலான்செய்கை நோக்கினான் – தேன் நிறைந்த
மாலை அணிந்த இலக்குவனின் செயலை இராமன் பார்த்து; ‘வான்புனை இசையினாய்! – தேவருலகம் புகழும் புகழினை
உடையாய்; நீ மறுக்கிலாது – நீ மறுக்காமல்; யான் புகழ் – நான்
சொல்லுகின்ற; இனையது ஓர் உறுதி – இத்தகைய ஒரு நல்ல சொல்லை;
கேள்’ – கேட்பாயாக; ’ எனா – என்று சொல்லி.

—————

‘அன்னையர் அனைவரும், ஆழி வேந்தனும்
முன்னையர் அல்லர்; வெந் துயரின் மூழ்கினார்;
என்னையும் பிரிந்தனர்; இடர் உறாவகை,
உன்னை நீ என்பொருட்டு உதவுவாய்’ என்றான். 150-

‘அன்னையர் அனைவரும் – (தம்பி!) தாய்மார்கள் எல்லோரும்;
ஆழி வேந்தனும் – தயரதனும்; முன்னையர் அல்லர் – முன்பிருந்த
நிலைமையில் இருக்கின்றாரல்லர்; வெந் துயரின் மூழ்கினார் – கொடிய
துன்பத்தில் முழுகியிருக்கிறார்கள்; என்னையும் பிரிந்தனர்-(இந்நிலையில்)
என்னையும் பிரிய உள்ளார்கள். இடர் உறா வகை -இவர்கள் துன்பம்
அடையாதபடி; என்பொருட்டு நீ உன்னை உதவுவாய்’ – எனக்காக நீ
உன்னையே உதவுவாயாக;’ என்றான் -.

—————

இலக்குவனின் மறுமொழி

ஆண்தகை அம்மொழி பகர, அன்பனும்,
தூண் தகு திரள் புயம் துளங்க, துண்ணெனா,
மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான்,
‘ஈண்டு, உனக்கு அடியனேன் பிழைத்தது யாது?’ என்றான். 151-

ஆண் தகை அம்மொழி பகர – ஆடவருள் சிறந்தோனாகிய
இராமன் அந்த வார்த்தைசொல்ல; அன்பனும் – இலக்குவனும்; தூண்தரு
திரள் புயம்-தூணுக்கு ஒப்பாகியதிரண்ட தோள்; துளங்க – நடுங்கும்படி;
துண் எனா – திடுக்கென்று அஞ்சி; மீண்டது ஒர் உயிர் இடைவிம்ம விம்முவான் – திரும்பிவந்ததாகிய ஓர் உயிர் இடையில்
மீண்டும் கலங்குமாறு துடிப்பவனாய் (இராமனை நோக்கி); ‘உனக்கு -;
அடியனேன் – யான்; ஈண்டுப் பிழைத்தது யாது?’- இங்கே செய்த தவறு
என்ன; என்றான் –

————–

‘நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;
பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்,
நார் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய்!’ என்றான். 152-

‘நார் உள தனு உளாய்! – நாணை உடைய வில்லை ஏந்தியவனே;
பார்ப்புறின் ஆராய்ந்து பார்த்தால்; நீர் உள எனின் – தண்ணீர்
இருக்குமானால்; மீனும்நீலமும் உள – மீன்களும், கருங்குவளையும்
உள்ளனவாம்; பார் உள எனின் – இந்தப்பூமி இருக்கும் எனில்; யாவம்
உள – எல்லாப் பொருளும் உள்ளனவாம் (அவை போலவே); நானும்
சீதையும் -; ஆர் உளர் எனின் உளம் – யார் இருந்தால்
இருக்கின்றவர்கள்ஆவோம்; அருளுவாய் ’ – கூறுவாயாக;’ என்றான்-.

————

‘பைந்தொடி ஒருத்தி சொல் கொண்டு, பார்மகள்
நைந்து உயிர் நடுங்கவும், “நடத்தி கான்” எனா,
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்
மைந்தன் என்று, இனைய சொல் வழங்கினாய்?’ எனா. 153-

‘பைந்தொடி ஒருத்தி சொல் கொண்டு – பசிய பொன்னால் ஆகிய வளையல்களை அணிந்த ஒரு கைகேயியின் வார்த்தையை வைத்து;
பார்மகள் -நிலமகள்; நைந்து உயிர் நடுங்கவும் – தேய்ந்து உயிர்
தடுமாறவும் (அது கருதாது); ‘கான் நடத்தி எனா’ – காட்டிற்குச் செல்
என்று (உன்னை ஏவி); உய்ந்தனன்இருந்தனன் உண்மை காவலன் –
பிழைத்து உயிர்வாழும் சத்தியத்தைக் காக்கின்ற மன்னனது; மைந்தன்
என்று – மகன் தானே என்று கருதி; இனைய சொல்வழங்கினாய்?’ –
(என்னைப் பிரிந்து அயோத்தியில் இரு என) இத்தகைய கொடுஞ்
சொல்லைச் சொன்னாய்;’ எனா- என்று சொல்லி,

———

‘”மாறு இனி என்னை? நீ வனம் கொள்வாய்” என
ஏறின வெகுளியை, யாதும் முற்றுற
ஆறினை, தவிர்க’ என, ‘ஐய! ஆணையின்
கூறிய மொழியினும் கொடியது ஆம்’ என்றான். 154-

‘ஐய! – இராமனே; ‘நீ வனம் கொள்வாய்’ என- நீ காடு செல்வாய்
என்பது கேட்டு; ஏறின வெகுளியை – எனக்கு மேல் மிகுந்த சினத்தை;
“யாதும் முற்றுற – சிறிதும் இல்லாதபடி போக; ஆறினை, தவிர்க்க’ –
அடங்கிநீங்குக;” என – என்று; ஆணையின் – கட்டளையாக; கூறிய
மொழியினும் – (நீ) முன்பு கூறிய சொல்லைக் காட்டிலும்; கொடியது ஆம்-
(இப்போது கூறியஇச்சொல்) கொடுமை உடையது ஆகும்; இனி மாறு
என்னை?- இனி இச்சொல்லுக்கு ஒப்பாகச்சொல்லத்தக்கது வேறு என்ன
உள்ள;’ என்றான் –

—————

‘செய்துடைச் செல்வமோ, யாதும் தீர்ந்து, எமை,
கை துடைத்து ஏகவும் கடவையோ?-ஐயா!
நெய் துடைத்து, அடையலர் நேய மாதர் கண்
மை துடைத்து, உறை புகும் வயம் கொள் வேலினாய்!’ 155-

‘ஐயா!-; நெய் துடைத்து – நெய்யால் துடைக்கப்பட்டு; அடையலர்-
பகைவரது; நேய மாதர் – அன்புடை மனைவியரது; கண் மை துடைத்து-
கண்ணில்எழுதிய மையை அழித்து; உறை புகும் – உறையின்கண்
தங்குகின்ற; வயம் கொள் -வலிமை கொண்ட; லேலினாய்! – வேலை
உடையவனே; செய்துடைச் செல்வமோ-நின் முன்னோர்களால் தேடப்பெற்றுப் பரம்பரை முறையால் நினக்குரியதாகி
உள்ளசெல்வமாகிய; யாதும் தீர்ந்து – எல்லாவற்றையும் நீங்கி; எமைக்
கை துடைத்து- எங்களையும் கைவிட்டு; ஏகவும் கடவையோ? –
(காட்டிற்குப்) போவதற்கும் கடவாயோ.

—————

இராமன் உள்ளம் நெகிழ்தல்

உரைத்தபின், இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன்;
வரைத் தடந் தோளினான் வதனம் நோக்கினான்;
விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்க நீர்
நிரைத்து இடை இடை விழ, நெடிது நிற்கின்றான். 156-

உரைத்தபின் – (இவ்வாறு இலக்குவன்) உரைத்த பிறகு; இராமன்-;
ஒன்று உரைக்க நேர்ந்திலன் – ஒரு வார்த்தையும் சொல்ல
முடியடாதவனாகி; வரைத் தடந்தோளினான் வதனம் – மலை போன்ற
அகன்ற தோள்களை உடைய இலக்குவனது முகத்தை நோக்கினான் –
பார்த்து; விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்க நீர் – வரும்நீரானது;
நிரைந்து இடை இடை விழ – ஒழுங்காய் இடை இடையே விழும்படி;
நெடிது -நீண்ட நேரம்; நிற்கின்றான் – நிற்பவன் ஆனான்.

————–

வசிட்ட முனிவனின் வருகை

அவ்வயின், அரசவை நின்றும், அன்பினன்
எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான்;
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்;
கவ்வையம் பெருங்கடல் முனியும் கால்வைத்தான். 157-

எவ்வம் இல் அருந்தவ முனிவன் – துன்பமற்ற அரிய தவத்தைச்
செய்த முனிவனாயவசிட்டன்; அரசவை நின்றும் – அரச சபை
மண்டபத்திலிருந்தும்; அன்பினன் -இராமனிடத்து அன்பை உடையனாய்;
அவ்வயின் – அச் சுமித்திரை மாளிகையின்கண்; எய்தினன் –
அடைந்தான்; செவ்விய குமரரும் – நேரிய மைந்தர்களாய
இராமலக்குவர்களும்; சென்னி தாழ்ந்தனர் – தலையால் வணங்கினார்கள்;
முனியும் – வசிட்டனும்; கவ்வை அம் பெருங்கடல் – துன்பம் என்னும்
பெரிய கடலில்; கால்வைத்தான் – இறங்கத் தொடங்கினான்.

————-

வசிட்ட முனிவன் வருத்தம்

அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்;
பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்;
என் இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால்,
தன்னையும் உணர்ந்திலன், உணரும் தன்மையான். 158-

உணரும் தன்மையான் – எல்லாவற்றையும் உணரும் மகா
ஞானியாகிய வசிட்டன்; அன்னவர் – இராமலக்குவர்களின்; முகத்தினோடு
அகத்தை நோக்கினான் -முகத்தையும் மனத்தையும் கண்ணாலும்
நெஞ்சத்தாலும் நோக்கினான்; பொன் அரைச் சீரையின்பொலிவு
நோக்கினான் – அழகிய இடையின்கண் அணிந்துள்ள மரவுரியின்
பொலிவையும்பார்த்தான். எடுத்த துன்பத்தால் – மேல் ஏறிய துயரத்தால்;
தன்னையும் உணர்ந்திலன் – தன்னையும் மறந்தான்; இனி உணர்த்துவது
என்? – இனி அவன்துன்பத்தைப்பற்றி சொல்வது எவ்வாறு?

——————

இராமன் வனவாசம் குறித்து வசிட்ட முனிவன் சிந்தனை

‘வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்,
தாழ் வினை அது வர, சீரை சாத்தினான்;
சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும்,
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற்பாலதோ! 159-

‘வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள் – மகுடம் தரித்து அரச
வாழ்வு வாழக்கருதப்பெற்ற அதே மங்கல நல் நாளிலே; தாழ்வினை அது
வர – தாழ்த்துகின்றவினையானது வருதலால்; சீரை சாத்தினான்; –
இராமன் மரவுரியை அணிந்தான்; சூழ்வினை நான்முகத்து ஒருவன்- விதியை வகுத்து அளிக்கும் பிரம தேவனே; சூழினும் –
தவிர்க்கும் வழியைஆலோசித்தாலும்; ஊழ்வினை – (செய்தவனைச் சென்று
அடையும்) அந்த ஊழ்வினை; ஒருவரால் -; ஒழிக்கற்பாலதோ? –
நீக்கிக்கொள்ளும் தன்மை உடையதோ? இல்லைஎன்றபடி.

———–

‘வெவ்வினை யவள்தர விளைந்த தேயும் அன்று;
இவ்வினை இவன்வயின் எய்தற் பாற்றும் அன்று;
எவ்வினை நிகழ்ந்ததோ? ஏவர் எண்ணமோ?
செவ்விதின் ஒருமுறை தெரியும் பின்’ என்றான். 160-

இவ்வினை – இச்சீரை சுற்றிக் காடுபோதலாகிய செயல்;
வெவ்வினையவள் தரவிளைந்ததேயும் அன்று – கொடு வினை படைத்த
கைகேயி கொடுக்க அவளால் உண்டாகியதும்அன்று; இவன் வயின்
எய்தற்பாற்றும் அன்று – வேறொரு வகையால் சத்துவகுண வடிவனாகிய
இவன்பால் வரக்கடவதும் அன்று; எவ்வினை நிகழ்ந்ததோ? – எந்தச்
செயலால் இப்படிநடைபெற்றதோ?; ஏவர் எண்ணமோ? – யாருடைய
மனக்கருத்தால் நடந்ததோ; பின்ஒருமுறை – பிற்காலத்தில் ஒரு படியாக;
செவ்விதின் தெரியும்’ – நன்குவிளங்கும்; என்றான் – என மனத்துள்
சொல்லிக்கொண்டான்.

———–

இராமன் காட்டிற்கு செல்வதை வசிட்டன் தடுத்தல்

வில் தடந் தாமரைச் செங் கண் வீரனை
உற்று அடைந்து, ‘ஐய! நீ ஒருவி, ஓங்கிய
கல் தடம் காணுதி என்னின், கண் அகல்
மல் தடந் தானையான் வாழ்கிலான்’ என்றான். 161-

(வசிட்டன்) வில் தடந் தாமரைக் செங்கண் வீரனை – வில் ஏந்திய
பெரிய தாமரைமலராகிய சிவந்த கண்களையுடைய இராமனை; உற்று
அடைந்து – நெருங்கி வந்து; ‘ஐய!-; நீ ஒருவி – அரண்மனையை
விட்டு நீங்கி; ஓங்கிய கல் தடம் காணுதி என்னின் – உயர்ந்த மலை
வழியில் செல்லக் காணுவாய் எனில்; கண் அகல் – இட மகன்ற; மல் தடந்
தானையான்- வலிமிக்க பெருஞ்சேனையையுடைய தசரதன்; வாழ்கிலான்’-
வாழ மாட்டான்; (இறந்துபடுவான்); என்றான் -.

———-

வசிட்ட முனிவனுக்கு இராமனின் மறுமொழி

‘அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன்; அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன்; இது நெறியும்’ என்றனன் –
பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான். 162-

பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான் – ஆதிசேடனாகிய
படுக்கையில் அறிதுயில்செய்தல் நீங்கி அயோத்தி வந்த இராமன்
(முனிவனை நோக்கி); ‘அன்னவன் -தயரதனது; பணி தலை ஏந்தி
ஆற்றுதல் என்னது கடன் – கட்டளையைச் சிரமேற் கொண்டுசெய்தல்
எனது கடமையாகும்; அவன் இடரை நீக்குதல் நின்னது கடன் –
அத்தயரதனது துன்பத்தைப் போக்கி ஆற்றுவித்தல் உனது கடமையாகும்;
இது நெறியும்’ – இது நீதியும்ஆகும்;’ என்றனன் -.

————–

கானகம் செல்ல கூறுதல் மன்னன் பணி அன்று என வசிட்டன் கூறுதல்

‘”வெவ் வரம்பை இல் சுரம் விரவு” என்றான் அலன்;
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு,
அவ் அரம் பொருத வேல் அரசன், ஆய்கிலாது,
“இவ் வரம் தருவென்” என்று ஏன்றது உண்டு’ என்றான். 163-

(அது கேட்ட வசிட்டன் இராமனை நோக்கி) ‘வெவ் – கொடிய;
வரம்பை இல் – எல்லை இல்லாத; சுரம் – காட்டை; விரவு’ – சேர்வாய்;
என்றான்அலன்’ – என்று உன்னைப் பார்த்து அரசன் சொன்னானில்லை;
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு – பகைவரது
கணையை ஒத்த கொடிய வார்த்தையை மேலும் கொடுமையாகச் சொன்ன
கைகேயிக்கு; அவ் அரம் பொருத வேல் அரசன் – அந்த அரத்தால்
அராவிக் கூர்மை செய்யப்பெற்ற வேலை உடைய தசரதன்;ஆய்கிலாது –
ஆராயாமல்; ‘இவ் வரம் தருவென்’ என்று ஏன்றது உண்டு – இந்த
வரத்தைத் தருவேன் என்று ஒப்புக்கொண்டது உண்டு அவ்வளவே;
என்றான்-

————

இராமனின் விளக்க உரை

‘ஏன்றனன் எந்தை இவ் வரங்கள்; ஏவினாள்
ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்;
சான்று என நின்ற நீ தடுத்தியோ?’ என்றான் –
தோன்றிய நல்லறம் நிறுத்தத் தோன்றினான். 164-

தோன்றிய நல் அறம் நிறுத்தத் தோன்றினான் – விளங்கிய நல்ல
தருமத்தை உலகில் நன்கு நிலைபெறுத்த அவதாரம் செய்த இராமன்
(வசிட்டனை நோக்கி); ‘எந்தை – என் தந்தையாகிய தசரதன்;
இவ்வரங்கள் – இந்த இரண்டு வரங்களையும்; ஏன்றனன் – தருவதாக –
தந்ததாக ஒப்புக்கொண்டான்; ஈன்றவள் – என் தாய்; ஏவினாள் –
ஆணை இட்டாள்; அது – அந்த உத்தரவை; யான் -; சென்னி
ஏந்தினேன் – தலைமேல் தாங்கினேன்; சான்று என நின்ற நீ –
இவற்றுக் கெல்லாம் சாட்சியாக இருந்த நீ; தடுத்தியோ? – இதனை
விலக்குகிறாயோ?’ என்றான் -.

————–

வசிட்டனை வணங்கி இராமன் மன்னன் மாளிகை வாயில் அடைதல்

என்றபின், முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்;
நின்றனன், நெடுங் கணீர் நிலத்து நீர்த்து உக;
குன்றன தோளவன் தொழுது, கொற்றவன்
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான். 165-

என்றபின்- இராமன் இவ்வாறு கூறிய பிறகு; முனிவன் – வசிட்டன்;
ஒன்று இயம்ப நேர்ந்திலன் – ஒரு வார்த்தையும் சொல்ல இயலாது;
நெடுங்கண் நீர்நிலத்து நீர்த்து உக – நீண்ட தன் கண் நீரானது
நிலத்தில் ஈரம் செய்து சிந்த; நின்றனன்-; குன்றன தோளவன் – மலை
போன்ற தோள்களை உடைய இராமன்; தொழுது- (முனிவனை) வணங்கி;
கொற்றவன் பொன் திணி நெடுமதில் வாயில் – அரசனது பொன்னாற
செய்யப் பெற்ற அரண்மனை மதிலின் வாயிலில்; போயினான் – போய்ச்
சேர்ந்தான்.

————–

மக்களின் துயரம்

சுற்றிய சீரையன், தொடரும் தம்பியன்,
முற்றிய உவகையன், முளரிப் போதினும்
குற்றம் இல் முகத்தினன், கொள்கை கண்டவர்
உற்றதை ஒருவகை உணர்த்துவாம் அரோ. 166-

சுற்றிய சீரையன் – இடையில் கட்டிய மரவுரி உடையனாய்;
தொடரும் தம்பியன் – தன்னைப் பின்பற்றிவரும் தம்பியோடு; முற்றிய
உவகையன் – நிரம்பியமகிழ்ச்சியுடன்; முளரிப் போதினும் – தாமரை
மலரைவிட; குற்றம் இல்முகத்தினன் – குற்றமற்ற முகமலர்ச்சி கொண்டு
செல்கின்ற இராமனின்; கொள்கை- மனக் கருத்தை; கண்டவர் –
அறிந்த அந்நகர மக்கள்; உற்றதை – அடைந்ததுன்பத்தை; ஒருவகை –
ஓரளவுக்கு; உணர்த்துவாம் – சொல்லுவோம்.

————

ஐயனைக் காண்டலும், அணங்கு அனார்கள் தாம்,
மொய் இளந் தளிர்களால் முளரி மேல் விழும்
மையலின் மதுகரம் கடியும் ஆறு எனக்
கைகளின் மதர்நெடுங் கண்கள் எற்றினார். 167-

அணங்கு அனார்கள் தாம் – தெய்வ மகளிரை ஒத்த அயோத்தி
நகர மகளிர்; ஐயனைக் காண்டலும் – (வனம் புகும் மரவுரி அணிந்த)
இராமனைக் கண்டவுடன்; மொய்இளந்தளிர்களால் – நெருங்கி
இளமையான தளிர்களைக் கொண்டு; முளரிமேல் விழும் -தாமரை
மலர்மேல் வந்து விழுகின்ற; மையலின் – கள்ளுண்ட மயக்கமுடைய;
மதுகரம் – வண்டுகளை; கடியுமாறு என – ஒட்டும் தன்மை போல;
கைகளின் – தம் கைகளால்; மதல்நெடுங்கண்கள் – செருக்கிய நீண்ட
கண்களை; எற்றினார் – மோதினார்கள்.

—————

தம்மையும் உணர்ந்திலர் தணப்பில் அன்பினால்
அம்மையின் இருவினை அகற்றவோ அன்றேல்,
விம்மிய பேருயிர் மீண்டி லாமைகொல்?
செம்மல் தன் தாதையிற் சிலவர் முந்தினார். 168-

சிலவர்த – சிலர்; தணிப்பு இல் அன்பினால் – அடக்க முடியாத
அன்பால்;தம்மையும் உணர்ந்திலர் – தம் நிலையையும் அறியாதவர் கள்
ஆயினராய்; செம்மல்தன் தாதையின் – இராமபிரானது தந்தையாகிய
அயரதனைவிட ; முந்தினார் -முற்பட்டு இறந்து விண் சென்றனர்;
அம்மையின் – வருகின்ற பிறப்பில்; இருவினைஅறுக்கவோ? –
இருவினைகளையும் இல்லாமல் நீக்கிக்கொள்ளவா; அன்றேல் – அப்படி
இல்லாமற்போனால்; விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை கொல் –
பிரிவினால் துடித்தஅரிய உயிர் வெளிப் போனது திரும்ப மீளாமையாலோ.

———-

விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மிமேல்
எழுந்தனர்; சிலர்முகத்து இழிகண் ணீரிடை
அழுந்தினர்; சிலர்பதைத்து, அளக வல்லியின்
கொழுந்து எரி உற்றுஎனத் துயரம் கூர்கின்றார். 169-

சிலர் விழுந்தனர் -; சிலர் மேல் விம்மி விம்மி எழுந்தனர் –
சிலர் மேலும்மேலும் அழுதழுது எழுந்தார்கள்; சிலர் -; முகத்து இழி
கண்ணீரிடை அழுந்தினர் -முகத்திலிருந்து இறங்குகின்ற கண்ணீரினிடத்து
அழுந்திப் போனார்கள்; சிலர்-; பதைத்து- துடித்து; அனகவல்லியின் –
மயிர்க் கொடியின்; கொழுந்து எரி உற்றென – நுனிதீப்பற்றியது போல;
துயரம் கூர்கின்றார் – துன்பம் மிகுகின்றார்.

———-

கரும்பு அன மொழியினர், கண் பனிக்கிலர்,-
வரம்பு அறு துயரினால் மயங்கியேகொலாம்,
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்!-
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார். 170-

கரும்பு அன மொழியினர் – கரும்பு போன்ற பேச்சினை உடைய
மகளிர்; கண்பனிக்கிலர் – கண்ணீர் அரும்பாதவராய்; பெரும் பொருள்
இழந்தவர் போலும்பெற்றியர் – பெரிய செல்வத்தை இழந்து
விட்டவர்களது தன்மையை உடையவராகி; இரும்புஅளமனத்தினர்
என்ன நின்றனர் – இரும்பை ஒத்த மனம் உடையவர் என்று கண்டோர்
சொல்லும்படி நின்றார்கள்; வரம்பு அறு துயரினால் மயங்கியே கொல் –
(இவ்வாறுஆனது) அளவற்ற துன்பத்தால் திகைத்ததாலோ?

—————–

நெக்கன உடல்; உயிர் நிலையில் நின்றில;
‘இக் கணம்! இக் கணம்!’ என்னும் தன்மையும்
புக்கன; புறத்தன; புண்ணின் கண் மலர்
உக்கன, நீர் வறந்து, உதிர வாரியே! 171-

உடல் நெக்கன – (சிலர்) உடல்கள் உடைந்தன; உயிர் நிலையில்
நின்றில- உயிர் இருப்பில் நிலையாக இல்லாமல் போயின; இக்கணம்!
இக்கணம்! என்னும்தன்மையும் புக்கன, புறந்தன – இந்தக் கணம்
போய்விடும் என்னும் தன்மையும் உடையவாய்உயிர்கள் உள்ளே
நுழைந்தன, வெளியே போயின; கண் மலர் – மலர்க்கண்கள்; நீர்வறந்து-
நீர்வற்றி; புண்ணின் – புண்ணைப் போல; உதிர வாரி -இரத்தப்
பெருக்கை; உக்கன – சிந்தின.

————–

இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர்,
பெருகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணலர்,
ஒரு கையில் கொண்டனர், உருட்டுகின்றனர்;
சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார். 172-

இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர் – இரண்டு கைகளை
உடைய யானையை ஒத்த கணக்கற்ற வீரர்கள்; பெருகு ஐயில் – பெரிய
கைவாளினால்; தலையைப் பேணலர் – தலையை விரும்பாதவர்களாய்;
பெயர்த்தனர் – பேர்த்து எடுத்து; ஒரு கையில் கொண்டனர் – ஒரு
கையில் வைத்துக் கொண்டு; உருட்டுகின்றனர் – உருள விடுகின்றார்
(வேறுசிலர்); சுரிகையின் -குற்றுடைவாளால்; கண் மலர் ?- மலராகிய
கண்ணை; துன்று – குடைந்து; நீக்கினார் – போக்கினார்.

———-

சிந்தின அணிமணி சிதறி வீழ்ந்தன;
பைந்துணர் மாலையின் பரிந்த, மேகலை;
நந்தினர், நகையளி விளக்கம்; நங்கைமார்
சுந்தர வதனமும், மதிக்குத் தோற்றவே. 173-

நங்கைமார் – மகளிரின்; அணி சிந்தின – ஆபரணங்கள் எங்கும்
சிதறின; மணி சிதறி வீழ்ந்தன – அவற்றில் பொதிதந்த மணிகள் எங்கும்
உதிர்ந்து விழுந்தன; மேகலை – அவர் இடையில் அணிந்த மேகலாபரணம்;
பைந்துணர் மாலையின்பரிந்த – பசிய பூங்கொத்தால் ஆகிய மாலை
அறுந்து விழுவது போல அறுந்து விழுந்தன; நகைஒளி விளக்கம் –
புன்சிரிப்பாகிய முக ஒளி மலர்ச்சி; நந்தின- கெட்டன; சுந்தர வதனமும் –
அவர்கள் அழகிய முகமும்; மதிக்குத் தோற்ற – நிலவுக்குத்தோற்றன.

————-

தயரதனின் அரசியர் அடைந்த துயரம்

அறுபதினாயிரர் அரசன் தேவியர்,
மறு அறு கற்பினர், மழைக் கண்ணீரினர்,
சிறுவனைத் தொடர்ந்தனர்; திறந்த வாயினர்;
எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார். 174-

மறு அறு கற்பினர் – குற்றமற்ற கற்பினை உடைய; அறுபதினாயிரர்
அரசன்தேவியர் – அறுபதினாயிரம் பேராகிய தசரதனுடைய மனைவியர்;
மழைக் கண் நீரினர் – மழை போன்ற கண்ணீரை உடையவராய்;
சிறுவனைத் தொடர்ந்தனர் – இராமனைப் பின்தொடர்ந்து; திறந்த
வாயினர் – வாய் திறந்து; எறி திரைக்கடல் என இரங்கிஏங்கினார் –
அலை வீசும் கடல் போல அழுது வருந்தினார்கள்.

————-

கன்னி நல் மயில்களும், குயில் கணங்களும்,
அன்னமும், சிறை இழந்து அவனி சேர்ந்தன
என்ன, வீழ்ந்து உழந்தனர் – இராமன் அல்லது,
மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார். 175-

இராமன் அல்லது – இராமனை அல்லாமல்; மற்றும் – வேறு; மன்
உயிர்ப் புதல்வரைப் பெற்றிலார் – நிலைபெற்ற உயிராக உள்ள
புத்திரர்களைப்பெறாதவர்களாகிய அத்தேவியர்; கன்னி நல்மயில்களும் –
இளமையான நல்ல மயில்களும்; குயில் கணங்களும்- குயிற் கூட்டங்களும்;
அன்னமும் – அன்னப் பறவைகளும்; சிறை இழந்து -இறக்கைகளை
இழந்து; அவனி சேர்ந்தன என்ன – பூமியை அடைந்தவை போல;
வீழ்ந்து உழந்தனர் .- தரையில் விழுந்து வருந்தினார்கள்.

—————

கிளையினும், நரம்பினும், நிரம்பும் கேழன,
அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்,
தொளைபடு குழலினோடு, யாழ்க்குத் தோற்றன
இனையவர் அமுதினும் இனிய சொற்களே. 176-

இளையவர் அமுதினும் இனிய சொற்கள்- இளைய அத்தேவியரின்
அமுதத்தைக் காட்டிலும்இனிமையான சொற்கள்; அளவு இறந்து உயிர்க்க
விட்டு அரற்றும் தன்மையால் -அளவில்லாமல் பெருமூச்சு விட்டு
அழுகின்ற காரணத்தால்; கிளையினும் நரம்பினும் நிரம்பும்கேழன –
மூங்கிலாலும், நரம்பாலும் செய்யப் பெற்றனவாகிய; தொளைபடு
குழலினோடுயாழ்க்குத் தோற்றன – உள்தொளை உடைய
புல்லாங்குழலோடு யாழிசைக்குத் தற்போது தோற்றுப்போயின.

———-

‘புகல் இடம், கொடுவனம் போலும்’ என்று, தம்
மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்,
அகல்மதில் நெடுமனை, அரத்த ஆம்பல்கள்
பகலிடை மலர்ந்ததொர் பழனம் போன்றதே. 177-

‘புகல் இடம் கொடு வனம் போலும் என்று’- இராமனுக்கு இனித்
தங்கும் இடம்கொடிய வனம் என்று சொல்லி; தம் மகன் வயின் –
தம்முடைய மகனாகிய இராமனிடம்; இரங்குறும் – அவலிக்கின்ற; மகளிர்
வாய்களால் – அத்தேவியரது அமுது மேலும்சிவந்த வாய்களால்; அகல்
மதில் நெடு மனை – அகன்ற மதிலை உடைய பெரிய அரண்மனை;
அரத்த ஆம்பல்கள் – செவ்வாம்பற் பூக்கள்; பகலிடை – பகற்காலத்தில்;
மலர்ந்தது – மலர்ந்துள்ளதான; ஓர் பழனம் போன்ற – ஒரு வயலைப்
போன்று ஆயின.

—————

திடர் உடைக் குங்குமச் சேறும், சாந்தமும்,
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;
மிடை முலைக் குவடுஒரீஇ, மேகலைத்தடம்
கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ. 178-

கண் கலுழி ஆறு – (அம் மகளிரது) கண்ணீர்ப் பெருக்காகிய
கலங்கிய ஆற்றுவெள்ளம்; திடர் உடைக் குங்குமச் சேறும்,
சாந்தமும் இடை இடை வண்டல் இட்டு -திட்டுத் திட்டாகப் பொருந்திய
(மார்பகத்தில் பூசப்பெற்ற) குங்குமச் சேறும் செஞ்சாந்தமும்ஆகியவற்றை
நடுநடுவே சேற்றுக் குழம்பாகக் கொண்டு; ஆரம் ஈர்த்தன – (அவர்கள்
மார்பில் அணிந்துள்ள) முத்துமாலையை இழத்துக்கொண்டு; மிடைமுலைக்
குவடு ஒரீஇ -நெருங்கியுள்ள முலைச் சிகரங்களிலிருந்து கீழ் இறங்கி;
மேகலைத் தடங் கடலிடைப் புகுந்த- மேகலையாகிய அகன்ற
கடலுக்குள் நுழைந்து பாய்ந்தன.

—————-

தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக்
கண்டனன் இரவியும், கமல வாள் முகம் –
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்,
உண்டு இடர் உற்ற போது என் உறாதன? 179-

தண்டலைக் கோசலத் தலைவன் மாதரை- சோலை சூழ்ந்த கோசல நாட்டுக்குத் தலைவனாய தயரதன் தேவியரை; இரவியும் –
சூரியனும் (இப்போது); கமல வாள்முகம் கண்டனன் – தாமரை மலர்
போன்ற ஒளியுடைய முகத்தை (இது காறும் ஒருபொழுதும் காணாதவன்)
கண்டான்; விண் தலத்து உறையும் நல்வேந்தற்கு ஆயினும் –
விண்ணின் கண் தங்கியுள்ள தேவ அரசனுக்கு ஆனாலும்; இடர்
உற்றபோது – துன்பம் வந்தபோது; உறாதன என் உண்டு? – எவைதாம்
வராதவை உண்டு.

—————–

தாயரும், கிளைஞரும் சார்ந்துளார்களும்,
சேயரும், அணியரும், சிறந்த மாதரும்,
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர்;
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர். 180-

தாயரும் – தாய்மார்களும்; கிளைஞரும் – உறவினர்களும்;
சார்ந்துளார்களும் – சார்ந்து பற்றுக்கோடாய் எண்ணித்
தங்கியுள்ளவர்களும்; சேயரும்அணியரும்- சேய்மையிலும் அண்மையிலும்
உள்ளாரும்; சிறந்த மாதரும் – அழகிற்சிறந்த மகளிரும்; காய் எரி
உற்றனர் அனைய – சீறும் நெருப்பில் விழுந்தாற்போன்ற; கவ்வையர் –
துன்பமுற்று; வாயிலும் முன்றிலும் மறைய – அரண்மனைவாயிலும்
முற்றமும் மறையும்படி; மொய்த்தனர் – நெருங்கினார்கள்.

———–

இராமன் தன் மாளிகைக்குச் செல்லுதல்

இரைத்தனர், இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும்,
திரைப்பெருங் கடலெனத் தொடர்ந்து பின்செல,
உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன்,
வரைப்புயத்து அண்ணல்தன் மனையை நோக்கினான். 181-

(அனைவரும் ) இரைத்தனர் – அழுதனர்; இரைத்து எழுந்து
ஏங்கி – அமுது மெல்ல எழுந்து புலம்பி; எங்கணும் – எவ்விடத்தும்;
திரைப் பெருங்கடல் என- அலை வீசுகின்ற பெருங்கடல் (தொடர்வது)
போல; தொடர்ந்து பின் செல -(இராமனைப்) பின்பற்றித் தொடர்ந்து
செல்ல; வரைப்புயத்து அண்ணல் – மலைபோன்றதோளை உடைய
தலைவனாகிய இராமன்; உரைப்பதை உணர்கிலன் – (அவர்களுக்கு)
ஆறுதல்சொல்வதை அறியாமலும்; ஒழிப்பது ஓர்கிலன் – (அவர்களை)
வராமல் தடுப்பதுபற்றிஆராயாமலும்; தன் மனையை நோக்கினான் – தன்
இல்லத்தை நோக்கிச் சென்றான்.

———–

இராமன் வீதியில் சென்ற காட்சி

நல் நெடு நளிர் முடி சூட, நல் மணிப்
பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன்,
துன் நெடுஞ் சீரையும் சுற்றி, மீண்டும், அப்
பொன் நெடுந் தெருவிடைப் போதல் மேயினான். 182-

நல் நெடு நளிர் முடி சூட – சிறந்த பெரிய பெருமை உடைய
மகுடத்தைச்சூடிக்கொள்ள; நல் மணிப் பொன் நெடுந் தேரொடும்
பவனி போனவன் – நல்ல மணிகள்கட்டப்பெற்ற பொன்னால் ஆகிய
பெரிய தேரின்மீது உலாச் சென்ற இராமன்; மீண்டும் – திரும்பவும்; அப்
பொன் நெடுந் தெருவிடை – பொலிவுபெற்ற அதே பெருவீதியில்; துன்
நெடுஞ் சீரையும் சுற்றி – நெருங்கிய பெரிய மரவுரியைச் சுற்றிக்
கொண்டு; போதல் மேயினான் – போவதைப் பொருந்தினான்.

————–

வீதியில் இராமனைக் கண்டோர் அடைந்த வருத்தம்

அந்தணர், அருந்தவர், அவனி காவலர்,
நந்தல் இல் நகருளார், நாட்டுளார்கள், தம்
சிந்தை என் புகல்வது? தேவர் உள்ளமும்
வெந்தனர், மேல் வரும் உறுதி வேண்டலர். 183-

அருந்தணர்-; அருந்தவர் – அரிய முணிவர்கள்; அவனிகாவலர்-
பூமிஅரசர்கள்; நந்தல் இல் நகருளார் – கெடுதலில்லாத அயோத்தி
நகரில் உள்ளவர்கள்; நாட்டுளார்கள் – கோசல நாட்டில் உள்ளவர்கள்;
தம் சிந்தை புகல்வது என்?- மனம்பட்ட துன்பத்தைச் சொல்வது
எவ்வாறு; மேல்வரும் உறுதி வேண்டலர் – (இராமன்காடு செல்வதால் தங்களுக்கு) எதிர்காலத்தில் வரும் நன்மையும்
விரும்பாதவர்களாய்; தேவர்உள்ளமும் வெந்தனர் – (இராமனது மரவுரிக்
கோலம் கண்டும்) தேவர்களும் உள்ளம் வெந்துபோனார்கள்.

————-

‘அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய
வஞ்சனை கண்டபின், வகிர்ந்து நீங்கலா
நெஞ்சினும் வலிது உயிர்; நினைப்பது என் சில?
நஞ்சினும் வலிய, நம் நலம்’ என்றார் – சிலர். 184-

சிலர்-; ‘அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய – மை போன்ற
உடம்பினை உடையஇந்த எழிலையுடைய இராமனுக்குப் பொருந்திய;
வஞ்சனை – பொல்லாங்கை; கண்டபின் – பார்த்த பிறகும்; வகிர்ந்து
நீங்கலா நெஞ்சினும் – பிளவுண்டு போகாத மனத்தைக்காட்டிலும்; உயிர்
வலிது – நம் உயிர் வலிமையாக இருக்கிறது; சில நினைப்பது என்? –
வேறு சில நினைப்பதனால் பயன் என்ன; நம் நலம் – நமது நன்மை;
நஞ்சினும் வலிய’ – விடத்தினும் வலியதாயிராநின்றது;’ என்றார்-.

—————–

‘”மண்கொடு வரும்” என, வழி இருந்த, யாம்,
எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ?
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில்,
கண்கொடு பிறத்தலும் கடை’ என்றார் – சிலர். 185-

சிலர்-; ‘மண் கொடு வரும்’ என – இராமன் அரசாட்சி கொண்டு
முடி புனைந்துவருவான் என (அக்காட்சி காண); யாம் வழியிருந்தது –
வழியில் காத்திருந்தது; எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ? –
நினைக்கக் கொடிய வெப்பமுள்ள காட்டில்செல்லுதலைப் பார்ப்பதற்கோ?;
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் – பெண்கொடுந்தொழில்
செய்யப் பொருந்திய நாட்டில்; கண் கொடு பிறத்தலும் கடை -(அந்தக்
கொடுமைகளைக் காண) கண் உடையவர்களாகிப் பிறத்தலும் கீழ்த்தரமானது;’
என்றார் -.

——-

முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன்,
“உழுவை சேர் கானகத்து உறைவென் யான்” என
எழுவதே? எழுதல்கண்டு இருப்பதே? இருந்து
அழுவதே? அழகிது இவ் அன்பு!” என்றார் சிலர். 186-

சிலர் -; பிறந்து உலகு முழுவதே உடைய மொய்ம்பினோன் –
மூத்தவனாகப் பிறந்துஉலகம் முழுவதையும் தனக்கு உடைமையாகப்
பெற்ற வலிமை உடைய இராமன்; ‘உழுவை சேர்கானகத்து உறைவெற்
யான்’ என எழுவதே? – புலி உள்ள காட்டில் தங்குவேன் யான் என்று
சொல்லிப் புறப்படுவதா; எழுதல் கண்டு இருப்பதே? – அவன்
புறப்படுவதைப் பார்த்தும்(உடன் செல்லாமல்) நாம் இங்கு சும்மா இருப்பதா;
இருந்து அழுவதே?-; இவ் அன்பு அழகிதே?- (நாம் இவனிடத்தில்
வைத்த அன்பு அழகாயிருந்தது;’ என்றார்-.

————-

வலம் கடிந்து, ஏழையர் ஆய மன்னரை
‘நலம் கடிந்து, அறம் கெட, நயக்கலீர்கள்; நும்
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை,
நிலம் கடிந்தாளடு நிகர்’ என்றார் – சிலர். 187-

சிலர் -; வலம் கடிந்து – வலிமை போக்கி; ஏழையர் ஆய
மன்னரை -(ஏதும் செய்யாமல்) அறிவீனர்களாய் இருக்கும் அரசரைப்
பார்த்து; ‘நலம் கடிந்து அறம் கெட நயக்கலீர்கள் – நன்மை நீக்கி,
தருமம் அழியும்படி செயல் செய்ய விரும்பாதீர்கள்(அப்படிச் செய்தால்);
நும் குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை- உம்முடையஅரசர்
குலத்தை (இருபத்தொரு தலைமுறை) கருவறுத்தவனாகிய பரசுராமனது
பலிமையை வெற்றி கொண்டமேகவண்ண இராமனை; நிலம்
கடிந்தானொடு – அரசாட்சி நிலவுரிமையிலிருந்து நீக்கியகைகேயியோடு;
நிகர்’ – நீங்களும் ஒப்பாவீர்;’ என்றார் -.

—————

‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன்,
பொருவருந் துயரினன், தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ, இவற்கு இவ்வூர் உறவு?’ என்றார்-சிலர். 188-

சிலர் -; ‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன் – அழகிய
இடுப்பின்கண் கட்டிய மரவுரி உடையை உடையவனாய்; பொரு
அருந்துயரினன் – ஒப்பற்ற பெரும் துன்பத்தோடு; தொடர்ந்து
போகின்றான் – (இராமனைப் ) பின்பற்றித் துணையாகச் செல்கின்ற;
இருவரைப் பயந்தவள் – (இலக்குமண சத்துருக்கனராகிய) இரு
பிள்ளைகளைப் பெற்றசுமித்திரையானவள்; ஈன்ற – பெற்றெடுத்த;
கான்முளை – மகனாகிய இலக்குவன்; ஒருவனோ? – ஒருவன்
மட்டும்தானா?; இவற்கு இவ்ஊர் உறவு’ – இராமனுக்கு இந்தஊரில்
உறவாக இருப்பவர் (வேறு யாரும் இலரோ);’ என்றார் -.

———–

‘முழுக்கலின் வலியநம் மூரி நெஞ்சினை,
மழுக்களின் பிளத்தும்’ என்று ஓடு வார்; வழி
ஒழுக்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை
இழுக்கலில் வழுக்கிவீழ்ந்து, இடர் உற்றார்-சிலர். 189-

சிலர் -; “முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை – பெரிய
கல்லைப் போலவலியதாக உள்ள நமது கடு மனத்தை; மழுக்களின்
பிளத்தும்’ – கோடரியால்இரண்டாக்குவோம்;’ என்று ; ஓடுவார் –
ஓடுகின்றார்கள்; வழி ஒழுக்கியகண்ணின் நீர்க் கலுழி ஆற்றிடை –
வழியில் ஒழுகவிடப்பட்ட கண்ணீராகிய கலங்கியநீர்ப்பெருக்காகிய
ஆற்றின்கண்; இழுக்கலில் – சேற்றில்; வழுக்கி வீழ்ந்து- சறுக்கி
விழுந்து; இடர் உற்றார் – துன்பம் அடைந்தார்.

————-

பொன்னணி, மணியணி, மெய்யின் போக்கினர்,
மின்னென, மின்னென விளங்கும் மெய் விலைப்
பன்னிறத் துகிலினைப் பறித்து நீக்கினர்,
சின்னநுண் துகிலினைப் புனைகின்றார்-சிலர். 190-

சிலர்-; மெய்யின் – தம் உடம்பிலிருந்து; பொன் அணி, மணி
அணிபோக்கினர் – பொன்னாலும் மணியாலும் இயன்ற அணிகலன்
களைக் கழற்றி எறிந்தனராகி; மின் என விளங்கும் மெய் – மின்னலைப்
போல விட்டுவிளங்கும் தமது உடம்பில்; மீன் என விலைப் பல்நிறத்
துகிலினை – விண்மீனைப்போன்ற சிறந்த விலை படைத்த பல நிறமுள்ள
உயர்ந்த ஆடைகளைப்; பறித்து நீக்கினர் – பிடித்திழுத்து அப்பால் வீசி
எறிந்து; சின்ன நுண்துகிலினைச் செறிக்கின்றார் -சிறிய நுண்ணிய
ஆடையை இறுகக் கட்டுகின்றார்.

———-

‘நிறைமக உடையவர், நெறி செல் ஐம்பொறி
குறை மகக் குறையினும், கொடுப்பராம் உயிர்
முறை மகன் வனம் புக, மொழியைக் காக்கின்ற
இறைமகன் திருமனம் இரும்பு’ என்றார்-சிலர். 191-

சிலர்-; ‘நிறை மக உடையவர் – பல பிள்ளைகளை உடையவர்கள்;
நெறி செல்ஐம்பொறி குறை – மனத்தின் வழியில் செல்கின்ற
ஐம்பொறிகளில் ஒன்றிரண்டு குறைந்து ஊனமுற்ற; மக – பிள்ளை;
குறையினும் – அழிந்தாலும்; உயிர் கொடுப்பர் – தங்கள் உயிரைப்
போக்கிக்கொள்வர் (இது உலக வழக்கமாகவும்); முறைமகன் வனம் புக-
அரச உரிமைக்கு முறையாக உரிய மூத்த பிள்ளை காடு செல்ல;
மொழியைக் காக்கின்ற இறைமகன் – வாய்மையைக் காத்து வரம்
கொடுத்துள்ள சக்கரவர்த்தியின்; திருமனம்இரும்பு’ – அழகிய மனம்
இரும்பாகும்;’ என்றார் –

————

வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்,
பூங்கொடி ஒதுங்குவபோல், ஒதுங்கினர்;
ஏங்கிய குரலினர்; இணைந்த காந்தளின்
தாங்கிய செங் கை தம் தலையின்மேல் உளார். 192-

வாங்கிய மருங்குலை – உள்வாங்கிய மெலிந்து வளையும் இடையை;
வருத்தும்கொங்கையர் – தமது பாரத்தால் வருத்துகின்ற தனங்களை
உடைய அழகிய மகளிர்; பூங்கொடி ஒதுங்குவபோல் ஒதுங்கினர் – மலர்
பூத்த கொடி அசைவது போல் ஒதுங்கி; ஏங்கிய குரலினர் – அழுத குரல்
உடையதாய்; இணைந்த காந்தனின் – இரட்டையானகாந்தள் மலர்போல்;
செங்கை – சிவந்த கையை; தம் தலையின் மேல் தாங்கியஉளார் – தம்
தலைகளின் மேல் தாங்கியவராய் உள்ளனர்.

——–

தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகை
நிலைக் குவட்டு இடை இடை நின்ற நங்கைமார்,
முலைக் குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக,
மலைக் குவட்டு அகவுறு மயிலின் மாழ்கினார். 193-

தலைக்குவட்டு அயல் – உச்சிச் சிகரத்துக்குப் பக்கத்தில்;
மதிதவழும்மாளிகை – சந்திரன் தவழ்ந்து செல்லும் உயர்ந்த
மாளிகையினது; நிலைக் குவட்டு இடைஇடை – மேல் நிலை என்னும்
உப்பரிகை இடங்கள்தோறும்; நின்ற நங்கைமார் -நின்ற மகளிர்; இழி
கணீர். ஆலி முலைக் குவட்டு மொய்த்து உக – இறங்குகின்ற
கண்ணீ்ர்த் துளி தமது முலைச் சிகரங்களில் நெருங்கிச் சிந்த; மலைக்
குவட்டு -மலைச் சிகரத்தில்; அகவுறு மயிலின் – அகவுகின்ற மயிலைப்
போல; மாழ்கினார் – மயங்கினர்.

————-

மஞ்சு என அகிற் புகை வழங்கும் மாளிகை
எஞ்சல் இல் சாளரத்து, இரங்கும் இன் சொலார்
அஞ்சனக் கண்ணின் நீர் அருவி சோர்தர,
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார். 194-

மஞ்சு என அகிற் புகை வழங்கும் மாளிகை – மேகம் போன
அகிற் புகையானது சஞ்சரிக்கும் மாளிகையினது; எஞ்சல் இல்சாளரத்து –
குறைதல் இல்லாத (காற்று வழங்கும்) பலகணி வழியாக (இராமனைக் கண்டு);
இரங்கும் இன்சொலார் – வருந்தும் இனியசொல்லினை உடைய மகளிர்;
அஞ்சனக் கண்ணின் – மை தீட்டப் பெற்ற கண்ணிலிருந்து; நீர் அருவி
சோர்தர – நீர் அருவியாக வழிய; பஞ்சரத்து இருந்து அழும் கிளியின்-
கூட்டின்கண் இருந்து அழுகின்ற கிளியைப் போல; பன்னினார் –
சொன்னதையே சொல்லிச் சொல்லிப் புலம்பினார்.

————

நல் நெடுங் கண்களின் நான்ற நீர்த் துளி-
தன் நெடுந் தாரைகள் தளத்தின் வீழ்தலால்,
மன் நெடுங் குமரன்மாட்டு அழுங்கி, மாடமும்
பொன் நெடுங் கண் குழித்து, அழுவ போன்றவே. 195-

நல் நெடுங் கண்களின் நான் நீர்த்துளிதன்ற – (மேல்மாடத்திருந்து
இராமனைக்கண்ட மகளிர்) நல்ல நீண்ட கண்களிலிருந்து விழுந்த
நீர்த்துளியினது; நெடுந் தாரைகள்- நீண்ட நீர்ப்பெருக்கு; தளத்தின்
வீழ்தலால்- மேல் தளத்திலிருந்து கீழேவிழுகின்ற தன்மையால்; மாடமும்-
மாளிகையும்; மன் நெடுங் குமரன் மாட்டு அழுங்கி- அரச
குமாரனிடத்தில் வருந்தி; பொன் நெடுங் கண் குழித்து – அழகிய பெரிய
இடத்தைக் குழி செய்து; அழுவ போன்றவே – அழுகின்றன போல்வன.

————-

மக்களை மறந்தனர் மாதர்; தாயரைப்
புக்கிடம் அறிந்திலர் புதல்வர்; பூசலிட்டு
உக்கனர்; உயங்கினர்; உருகிச் சோர்ந்தனர்;
துக்கநின்று அறிவினைச் சூறை ஆடவே. 196-

துக்கம் நின்று – துயரம் நிலைத்து நின்று; அறிவினைச் சூறையாட-
அறிவைக் கொள்ளையிட்டுச் செல்ல (அதனால் உணர்வு மயங்கி); மாதர் –
தாய்மார்கள்; மக்களை மறந்தனர் – தங்கள் பிள்ளைகளை
மறந்துபோனார்கள்; புதல்வர் – பிள்ளைகள்; தாயரைப் புக்க இடம்
அறிந்திலர் – தாய்மார்கள்புகுந்த இடத்தை அறியாதவர் ஆயினர்; பூசல்
இட்டு – அழுது ஆர்ப்பரித்து; உக்கனர் – மனம் உடைந்து; உயங்கினர் –
வாடி; உருகி – கரைந்து; சோர்ந்தனர் – சோர்வடைந்தார்கள்.

——–

காமரங் கனிந்தெனக் கனிந்த மென்மொழி
மாமடந் தையர் எலாம் மறுகு சேர்தலால்,
தேமரு நறுங்குழல் திருவின் நீங்கிய
தாமரை ஒத்தன-தவள மாடமே. 197-

காமரம் கனிந்து என – காமரம் என்னும் பண் முற்றிப்
பழுத்தாற்போல; கனிந்த மென் மொழி – இனிய மென்மையான பேச்சினை
உடைய; மா மடந்தையர் எலாம் – பெருமயுற்ற மகளிர் எல்லாரும்; மறுகு
சேர்தலால் – வீதியை அடைந்தபடியால்; தவளமாடம் – வெண்ணிற
மாளிகைகள்; தே மரு நறுங்குழல் திருவின் நீங்கிய தாமரை ஒத்தன-
தேன் பொருந்திய நறுமணம் வீசும் சுடர் தலை உடைய திருமகளை விட்டுப்
பிரிந்த தாமரைமலர்போல் ஆயின.

————–

மழைக்குலம் புரைகுழல் விரிந்து மண்ணுறக்
குழைக்குலம் முகத்தியர் குழாங்கொண்டு ஏகினர்
இழைக்குலம் சிதறிட, ஏவுண்டு ஓய்வுறும்
உழைக்குலம் உழைப்பன ஒத்து, ஓர் பால் எல்லாம். 198-

ஓர் பால் எலாம் – ஒரு பக்கத்தில் எல்லாம்; ஏ உண்டு – அம்பு
பட்டு; ஒய்வுறும் – சோர்வடைந்து இறக்கும் நிலை எய்திய; உழைக்குலம் –
மான்கூட்டம்; உழைப்பன ஒத்து – துடித்து வருந்துவன போல்;
இழைக்குலம் சிதறிட- அணிகலன்கள் கீழே சிந்த; மழைக்குலம் புரை
குழல் – மேகக் கூட்டம் ஒத்த கூந்தல்;விரிந்து மண் உற – அவிழ்ந்து
தரையில் புரள; குழாம் கொண்டு – கூட்டமாகி; ஏகினார் – சென்றார்கள்.

————–

அயோத்தி நகரில் பொழிவு அழிதல்

கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு
இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்;
படி அடங்கலும், நிமிர் பசுங் கண் மாரியால்,
பொடி அடங்கின, மதிற் புறத்து வீதியே. 199-

மனைக்குன்றம் – மனைகளாகிய மலைகளில்; கொடி அடங்கின –
கொடிகள் அடங்கிப் போயின; கோ முரசு- அரச முரசம்; இடி அடங்கின-
ஒலித்தல்இல்லாமற் போயின; பல் இயம் – பல வாத்தியங்கள்; முழக்கு
இழந்த – ஒலியைஇழந்தன; படி அடங்கலும் – பூமி முழுவதிலும்; மதில்புறத்து வீதி – மதிலின் புறம்பே உள்ள வீதிகள;
நிமிர்பசுங்கண் மாரியால் – பெருகுகின்ற கண்ணீர் மழையால்; பொடி
அடங்கின – புழுதிஅடங்கப் பெற்றன.

———-

அட்டிலும் இழந்தன புகை; அகிற் புகை
நெட்டிலும் இழந்தன; நிறைந்த பால், கிளி
வட்டிலும் இழந்தன; மகளிர்-கால் மணித்
தொட்டிலும் இழந்தன, மகவும்-சோரவே. 200-

அட்டிலும் புகை இழந்தன – சமையற்கட்டுகள் (சமைத்தல்
இல்லாமையால்) புகையைஇழந்தன; நெட்டிலும்- உயர்ந்த மேல் மாடங்கள்;
அகில் புகை இழந்தன -(பெண்கள் கூந்தலைப் புகை செய்யாமையால்)
அகில் புகைகளை இழந்தன; கிளி -கிளிகள்; பால் நிறைந்த வட்டிலும்
இழந்தன- (ஊட்டுவார் இன்மையால்) பால்நிரம்பிய கிண்ணத்தை இழந்தன;
மகளிர் சோர – தாய்மார்கள் துயரத்தால்சோர்ந்தபடியால்; மகவும் –
பிள்ளைகளும்; கால் மணித் தொட்டிலும் இழந்தன – கால் உடைய
மணிகள் அழத்திச் செய்யப்பெற்ற தொட்டிலை இழந்தன.

————–

ஒளி துறந்தன முகம், உயிர் துறந்தென;
துளி துறந்தன, முகில் தொகையும்; தூய நீர்த்
தளி துறந்தன பரி; தான யானையும்
களி துறந்தன, மலர்க் கள் உண் வண்டினே. 201-

உயிர் துறந்தென – உயிர் போனார் போல; முகம் –
எல்லோருடையமுகமும்; ஒளி துறந்தன – ஒளி மழுங்கின; முகில்
தொகையும் – மேகக்கூட்டமும்; துளி துறந்தன – மழைத் துளி
துளிர்த்தலைக் கைவிட்டன; பரி -குதிரைகள்; தூய நீர்த் தளி துறந்தன-
தூய்மையான நீர்ச் சாலைகளை இழந்தன; தானயானையும் – மதப்
பெருக்கையுடைய யானைகளும்; மலர்க் கள் உண் வண்டின் – மலரில்
தேன் உண்ணும் வண்டைப் போல; களி துறந்தன – களித்தலைக் கை
விட்டன.

————–

நிழல் பிரிந்தன குடை; நெடுங் கண் ஏழையர்
குழல் பிரிந்தன மலர்; குமரர் தாள் இணை
கழல் பிரிந்தன; சினக் காமன் வாளியும்
அழல் பிரிந்தன; துணை பிரிந்த, அன்றிலே. 202-

குடை- குடைகள்; நிழல் பிரிந்தன- நிழல் செய்தலைக் கைவிட்டன;
நெடுங்கண் ஏழையர் குழல் – நீண்ட கண்ணை உடைய மகளிர்
கூந்தல்கள்; மலர்பிரிந்தன – மலர் சூடுதலை விட்டன; குமரர்தாள்
இணை கழல் பிரிந்தன -வீரர்களது அடிகள் கழல் அணிதலைக்
கைவிட்டன; சினக் காமன் வாளியும் – கோபம் உடைய மன்மதனது
மலர் அம்புகளும்; அழல் பிரிந்தன – காம வெப்பத்தை உண்டாக்குதலை
ஒழித்தன; அன்றில் – (என்றும் பிரியாது ஒன்றியிருக்கும்) அன்றிற்
பறவைகள்; துணை பிரிந்த- தம் துணையைப் பிரிந்து தனித்திருப்பவாயின.

————–

தாரொலி நீத்தன, புரவி; தண்ணுமை
வாரொலி நீத்தன; மழையின் விம்முறும்
தேரொலி நீத்தன, தெருவுந் தெண்திரை
நீரொலி நீத்தன நீத்தம் போலுமே. 203-

புரவி – குதிரைகள்; தார் ஒலி நீத்தன – கழுத்திற் கட்டிய
கிண்கிணிமாலையின் ஓசையைக் கையிட்டன; தண்ணுமை – மத்தளம்; வார்
ஒலி நீத்தன -வாரை இழுத்துக் கட்டலால் விளையும் ஓசையைக்
கைவிட்டன; தெருவும் – வீதிகளும்; தெண்திரை நீர் ஒலி நீத்தன
நீத்தம் போல – தெளிந்த அலை நீர் ஒலியை விட்ட கடல் போல;
மழையின் – மேகம் போல; விம்முறும் தேர் ஒலி நீத்தன – ஒலிக்கின்ற
தேர்களின் ஒலியை இழந்தன.

———-

முழவு எழும் ஒலி இல; முறையின் யாழ் நரம்பு
எழ எழும் ஒலி இல; இமைப்பு இல் கண்ணினர்
விழவு எழும் ஒலி இல; வேறும் ஒன்று இல,
அழ எழும் ஒலி அலது – அரச வீதியே. 204

அரச வீதி – அரசர்களுக்குரிய வீதிகள்; முழவு எழும் ஒலி இல –
தண்ணுமையிலிருந்து உண்டாகும் ஒலிகள் இல; முறையின் – இசை
முறைப்படி; யாழ் நரம்புஎழ – யாழின் கண் நரம்பு எழுப்ப; எழும் ஒலி
இல – எழுகின்ற ஒலிகள் இல; இமைப்பு இல் கண்ணினர் – இமையாக்
கண்ணினராய தேவர்களது; விழவு -விழாவிற்காக; எழும் ஒலி இல –
உண்டாகின்ற ஒலிகளும் இல; அழ எழும் ஒலி அலது வேறும் ஒன்று
இல – அழுவதனால் உண்டாகின்ற கூக்குரல் ஓசை அல்லாமல் வேறு ஓர்
ஒலிஇலவாயின.

———

தெள் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன் மனை
நள் ஒலித்தில; நளிர் கலையும் அன்னவே;
புள் ஒலித்தில, புனல்; பொழிலும் அன்னவே;
கள் ஒலித்தில, மலர்; களிறும் அன்னவே. 205-

தென் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன்மனை – தெளிந்த
ஒலியையுடைய காற்சிலம்புகள் இடையறாது ஒலிக்கின்ற அழகிய வீடுகள்
(இப்போது); நள் ஒலித்தில -நள்ளென்ற ஓசை உடையவாய்
ஒலிக்கவில்லை; நளிர் – செறிந்த; கலையும் அன்ன- மேகலை
அணிகளும் ஒலிக்கா ஆயின; புனல் – நீரில்; புள் ஒலித்தில -பறவைகள்
ஒலிக்கவில்லை; பொழிலும் – சோலைகளும்; அன்ன – அதுபோலப் புள்
ஒலிக்கா ஆயின; மலர் – பூக்களில்; கள் – வண்டுகள் ஒலித்தில; களிறும்-
யானைகளும் (மதநீர் படாமையால்); அன்ன – அதுபோல வண்டுகள்
ஒலிக்காவாயின.

————

செய்ம் மறந்தன புனல்; சிவந்த வாய்ச்சியர்
கைம் மறந்தன, பசுங் குழவி; காந்து எரி
நெய்ம் மறந்தன; நெறி அறிஞர் யாவரும்
மெய்ம் மறந்தனர்; ஒலி மறந்த, வேதமே. 206-

புனல் – நீரை; செய்ம் மறந்தன – வயல்களை மறந்து விட்டன;
பசுங்குழவி – இளங் குழந்தைகளை; சிவந்த வாய்ச்சியர் கை – சிவந்த
வாயுடையதாய் மகளிர் கைகள்; மறந்தன்- மறந்து போயின; காந்து எரி-
விளங்கும்வேள்வித் தீ; நெய்ம் மறந்தன – நெய்யை மறந்து போயின;
நெறி அறிஞர் யாவரும்- சாத்திரம் அறிந்த ஞானிகள் அனைவரும்; மெய்- தத்துவப் பொருளை; மறந்தனர்-மறந்து போயினர்;
வேதம்-, ஒலி மறந்த- ஒலித்தலை மறந்து போயின.

———

ஆடினர் அழுதனர்; அமுத ஏழ் இசை
பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர்,
ஊடினர் அழுதனர்; உயிரின் அன்பரைக்
கூடினர் அழுதனர் – குழாம் குழாம்கொடே. 207–

குழாம் குழாம் கொடு-கூட்டம் கூட்டமாகத் திரண்டு; ஆடினர்-
நடனம்ஆடிக் கொண்டிருந்தவர்கள்;அழுதனர்-; அமுத ஏழ் இசை-
அமுதம் போன்ற இனியஏழு சுரங்களை;பாடினர் அமுதனர்-
பாடிக்கொண்டிருந்தவர்கள் அழுதனர்;பரிந்தகோதையர் ஊடினர்-
அறுத்து வீசிய மாலையராய் ஊடிக்கொண்டிருந்தவர்கள்;அழுதனர்-;
உயிரின் அன்பரைக் கூடினர்- உயிர்போலச் சிறந்த காதலரைக் கூடிய
மகளிர்; அழுதனர்-.

————

நீட்டில, களிறு கை நீரின்; வாய் புதல்
பூட்டில, புரவிகள்; புள்ளும், பார்ப்பினுக்கு
ஈட்டில இரை; புனிற்று ஈன்ற கன்றையும்
ஊட்டில, கறவை; நைந்து உருகிச் சோர்ந்தவே. 208-

களிறு- யானைகள்; நீரின்- நீரில்; கை நீட்டில-துதிக்கையை
நீட்டவில்லை; புரவிகள்- குதிரைகள்; வாய்- வாயில்; புதல்- புல்;
பூட்டில- பூட்டப்பெறவில்லை;புள்ளும்- பறவைகளும்; பார்ப்பினுக்கு-
தம் குஞ்சுகளுக்கு;இரை ஊட்டில- இரை உண்பிக்கவில்லை;கறவை-
பசுக்கள்;புனிற்று- ஈன்றணிமையான; ஈன்ற கன்றையும்- தாம்பெற்ற
கன்றையும்;ஊட்டில-பால் ஊட்ட விடவில்லை;நைந்து உருகிச்
சோர்ந்த- தேய்ந்து இரங்கிச் சோர்ந்தன.

—————

மாந்தர்தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கையாம்
ஏந்துஇள நீர்களும் வறுமை எய்தின;
சாந்தம் அம் மகிழ்நர் தம் முடியில் தையலார்
கூந்தலின், வறுமைய மலரின் கூலமே. 209-

மாந்தர்தம் மொய்ம்பினின் – ஆடவர்களது வலிய தோளில்;
சாந்தம் -பூசப்பெற்ற சந்தனத்தை; மகளிர் கொங்கை ஆம் ஏந்து
இளநீர்களும் – பெண்களது தனங்களாகிய உயர்ந்துள்ள இளநீர்களும்;
வறுமை எய்தின – இல்லாமை அடைந்தன; அம் மகிழ்நர்தம் முடியின்-
அவ் ஆடவர்களது முடியில் உள்ள; மலரின்கூலம் -பூக்களின் திரட்சியை;
தையலார் கூந்தலும் – மகளிரது கூந்தலும்; வறுமைய -இல்லாமை
அடைந்தன.

———-

ஓடை நல்லணி முனிந்தன, உயர்களிறு உச்சிச்
சூடை நல்லணி முனிந்தன, தொடர்மனை; கொடியின்
ஆடை நல்லணி முனிந்தன, அம்பொன் செய் இஞ்சி;
பேடை நல்லணி முனிந்தன, மென்னடைப் புறவம். 210-

உயர்களிறு – பெரிய யானைகள்; ஓடை நல் அணி முனிந்தன –
முகபடாம்ஆகிய நல் அணியை வெறுத்தன; தொடர்மனை – வரிசையான
மாளிகைகள்; உச்சிச் சூடைநல்லணி முனிந்தன – தம் சிகரத்தில்
அணிதற்குரிய சூடா என்னும் நல்லணிகளை அணியாமல்வெறுத்தன;
அம்பொன் செய் இஞ்சி – அழகிய பொன்னாற் செய்த மதில்கள்;
கொடியின் ஆடை நல் அணி முனிந்தன – கொடிச் சீலை ஆகிய நல்ல
அழகினை வெறுத்தன; மென் நடைப் புறவம் – மென்மையான
நடையினையுடைய புறாக்கள்; பேடை நல்லணி முனிந்தன- பேடையொடு
கூடிய நல்ல அணியை வெறுத்தன.

—————–

‘திக்கு நோக்கிய தீவினைப் பயன்’ எனச் சிந்தை
நெக்கு நோக்குவோர், ‘நல்வினைப் பயன்’ என நேர்வோர்,
பக்கம் நோக்கல் என்? பருவரல் இன்பம் என்று இரண்டும்
ஒக்க நோக்கிய யோகரும், அருந் துயர் உழந்தார். 211-

பருவரல் இன்பம் என்று இரண்டும் – துன்பம், இன்பம் என்ற
இரண்டையும்; ஒக்க நோக்கிய யோகரும் – சமமாகப் பார்க்கின்ற ஞான
யோகிகளும்; அருந்துயர்உழந்தார் – அரிய துன்பத்தில் வருந்தினார்
(என்றால்); ‘திக்கு நோக்கிய தீவினைப்பயன்’ எனச் சிந்தை நெக்கு
நோக்குவோர் – தம் இடத்தை நோக்கி வந்த தீவினையின்பயன் இது
என்று மனம் உடைந்து துன்புற்றுப் பார்ப்பவர்; ‘நல்வினைப் பயன்’ என
நேர்வோர் – இது நல்வினையால் விளைந்த பயனாகும் என்று உடன்பட்டு
மகிழ்வோராகிய; பக்கம் நோக்கல் என் உலக மக்களிடத்து – ஆராய்ந்து
கூற என்ன உள்ளது?

————-

ஓவுஇல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய,
மேவு தொல் அழகு எழில் கெட, விம்மல் நோய் விம்ம,
தாவு இல் ஐம்பொறி மறுகுற, தயரதன் என்ன
ஆவி நீக்கின்றது ஒத்தது – அவ் அயோத்தி மா நகரம். 212-

அவ் அயோத்தி மா நகரம் -; ஓவு இல் நல் உயிர் – ஒழிதல்
இல்லாத நல்ல உயிர்; உயிர்ப்பினோடு – பெரு மூச்சோடு; உடல்
பதைத்து – உடலில் துடித்து; உலைய – அங்கும் இங்குமாய் வருந்த;
மேவு – பொருந்திய; தொல் எழில்அழகு கெட – பழைய வளரும்
அழகு கெட; விம்மல் நோய் விம்ம – அழுகைநோய் மிக; தாவு இல்
ஐம்பொறி மறுகுற – கெடுதல் இல்லாத ஐம்பொறிகள் சுழன்று கலங்க;
தயரதன் என்ன – தயரதனைப் போல; ஆவி நீக்கின்றது ஒத்தது –
உயிர் விடுவதைத்போல் உள்ளது.

————

இராமன் சீதை இருக்குமிடம் சேர்தல்

உயங்கி அந் நகர் உலைவுற, ஒருங்கு, உழைச்சுற்றம்
மயங்கி ஏங்கினர்; வயின்வயின் வரம்பு இலர் தொடர,
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன்
தயங்கு பூண் முலைச் சானகி இருந்துழிச் சார்ந்தான். 213-

அந்நகர் – அந்த அயோத்தி நகரம்; உயங்கி – வாடி; உலைவுற-
வருந்த; ஒருங்கு – ஒருசேர; உழைச் சுற்றம் – ஏவல் செய்வோர்;
மயங்கிஏங்கினர் – அறிவு கலங்கி அழுது; வயின் வயின்- அங்கங்கே;
வரம்பிலர்தொடர – அநேகர் பின்பற்றி வர; இயங்கு பல் உயிர்க்கு
ஓர் உயிர் என நின்றஇராமன் – சஞ்சரிக்கின்ற பல உயிர்களையும்
உடலாகக் கொண்டு அவற்றுக்கு ஒப்பற்ற உயிராக இருக்கின்ற இராமன்;
தயங்கு – விளங்குகின்ற; பூண் முலைச் சானகி -அணிகலன் அணிந்த
தனங்களை உடைய சீதை; இருந்துழிச் சார்ந்தான் – இருந்த
அரண்மனையை அடைந்தான்.

———-

இராமனின் கோலம் கண்டு சீதை திடுக்கிடுதல்

அழுது, தாயரோடு அருந்தவர், அந்தணர், அரசர்,
புழுதி ஆடிய மெய்யினர், புடை வந்து பொரும,
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா,
எழுது பாவை அன்னாள், மனத் துணுக்கமொடு எழுந்தாள். 214-

அந்தணர் – வேதியர்; அருந்தவர் – அரிய முனிவர்; அரசர் -;
(ஆகிய அனைவரும்) அழுது -; புழுதி ஆடிய மெய்யினர் – புழுதிபடிந்த உடம்பு உடையவராய்; புடை வந்து பொரும – பக்கத்தில் வந்து
விம்மியழ; பழுது சீரையின் உடையினன் – அழகற்ற மரவுரி உடை
உடையவனாய்; வரும்படி -(இராமன்) வரும்தன்மையை; பாரா – பார்த்து;
எழுது பாவை அன்னாள் -சித்திரத்தில் எழுதப் பெற்ற பாவையை ஒத்த
சீதை; துணுக்கமொடு – மனத்தில்வெருவுதலுடனே; எழுந்தாள் -.

———

மாமியார் இருவரும் சீதையைத் தழுவி நிற்க, சீதை இராமனை காரணம் வினாவுதல்

எழுந்த நங்கையை, மாமியர் தழுவினர்; ஏங்கிப்
பொழிந்த உண் கண் நீர்ப் புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப,
அழிந்த சிந்தையள் அன்னம், ‘ஈது இன்னது’ என்று அறியாள்;
வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி. 215-

எழுந்த நங்கையை – (கணவனை நோக்கி) எழுந்த சீதையை;
மாமியர் -; தழுவினர் – தழுவிக்கொண்டு; ஏங்கி – அவலித்து;
பொழிந்த உண்கண் நீர்ப்புதுப்புனல் ஆட்டி – சிந்திய மையுண்ட
கண்களிலிருந்து வரும் நீராகிய புதிய நீரில்நீராட்டி; புலம்ப – வருந்த;
அழிந்த சிந்தையள் அன்னம் – அதனால்கெட்டழிந்த மனம்
உடையளாய சீதை; ஈது இன்னது என்று அறியாள் – இதற்குக்காரணம்
இன்னது என்று அறியாதவளாய்; வழிந்த நீர் நெடுங் கண்ணினள் –
வழிகின்ற நீரினை உடைய நீண்ட கண்களோடு; வள்ளலை நோக்கி –
இராமனைப் பார்த்து,

———–

‘பொன்னை உற்ற பொலங் கழலோய்! புகழ்மன்
னை உற்றது உண்டோ, மற்று இவ் வன் துயர்
என்னை உற்றது? இயம்பு’ என்று இயம்பினாள்
மன்னை உற்ற நடுக்கத்து மேனியாள். 216-

மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள் – மின்னலை ஒத்த
நடுங்குகின்ற உடம்பினைஉடையளாகிய சீதை; ‘பொன்னை உற்ற
பொலங்கழலோய்! – பொன்னால் செய்த பொலிவானவீரக்கழலை
அணிந்தவனே; புகழ் மன்னை – கீர்த்தி உடைய சக்கரவர்த்தியை;
உற்றது உண்டோ? – நேரிட்ட துன்பம் ஏதேனும் உளதோ; மற்று –
அப்படிஇல்லையாயின்; இவ் வன்துயர் உற்றது என்னை – இக் கொடிய
துன்பம் வந்தது எதனால்; இயம்பு – சொல்லுக;’ என்று இயம்பினாள் –
என்று கேட்டாள்.

————

இராமன் நடந்தது இயம்புதல்

‘பொரு இல் எம்பி புவிபுரப் பான்; புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்று போய்க்
கருவி மாமழைக் கல்-கடம் கண்டு, நான்
வருவென் ஈண்டு; ‘வருந்தலை நீ’ என்றான். 217-

‘பொரு இல் எம்பி புவி புரப்பான் – ஒப்பற்ற என் தம்பியாகிய
பரதன் பூமியைக்காப்பாற்றி அரசாள்வான்; புகழ் – புகழ்தற்குரிய; இருவர்
ஆணையும் ஏந்தினென் -தந்தை, தாய் இருவரது கட்டளையையும்
தலைமேல் தாங்கினேன்; நான் இன்று போய் -நான் – இன்றே
புறப்பட்டுச் சென்று; கருவி மாமழைக் கல்தடம் கண்டு – தொகுதியான
சிறந்த மேகம் நிரம்பிய மலை வழிகளை உடைய காட்டைப் பார்த்து;
ஈண்டு வருவென் -இங்கே வருவென்; நீ வருந்தலை’ – நீ
வருத்தமுறாதே; என்றான்-.

————-

இராமன் சொல் கேட்ட சீதையின் துயர்

நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
மேய மண் இழந்தான் என்றும், விம்மலன்;
‘நீ வருந்தலை; நீங்குவென் யான்’ என்ற
தீய வெஞ் சொல் செவி சுடத் தேம்புவாள். 218-

(அது கேட்ட சீதை) நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்-
தன் கணவன் இராமன்காடு செல்லப்போகிறான் என்றும்; மேய மண்
இழந்தான் என்றும் – தனக்குரிமையாகப்பொருந்திய இராச்சியத்தை
இழந்துவிட்டான் என்றும் (கருதி); விம்மலள் -வருந்தினாள் அல்லள்;
‘யான் நீங்குவென், நீ வருந்தலை’ என்ற தீய வெஞ்சொல் -யான்
காடு செல்வேன் நீ வருத்தமுறாதே என்று சொல்லிய மிகக் கொடிய சொல்;
செவி சுடத்தேம்புவாள் – தன் காதுகளைச் சுட்டெரிக்க அதனால்
வாடுவாள் ஆனாள்.

————

‘துறந்து போம்’ எனச் சொற்ற சொல் தேறுமோ-
உறைந்த பாற்கடற் சேக்கை உடன் ஒரீஇ,
அறம் திறம்பும் என்று ஐயன் அயோத்தியில்
பிறந்த பின்பும், பிரியலள் ஆயினாள்? 219-

(நாமும் உடன் அவதரிக்காவிட்டால்) ‘அறம் திறம்பும்’ என்று –
தருமம் நிலைகெடுமே என்று கருதி; உறைந்த பாற்கடல் சேக்கை தாம்-
வசித்த பாற்கடலில் உள்ளஆதிசேடனாகிய படுக்கையை; உடன் ஓரீஇ –
ஒன்றாக விட்டு நீங்கி; ஐயன்-திருமால்; அயோத்தியில் பிறந்தபின்பும் –
அயோத்தியில் அவதரித்த பிறகும்; பிரியலள் ஆயினாள் – அவனைப்
பிரியாது உடன் உறைய வந்தவள் ஆகிய சீதை; துறந்துபோம் எனச்
சொற்ற சொல் – தன்னைப் பிரிந்து விட்டுப் போவேன்’ எனப்
பொருள்படுமாறுஅவன் சொன்ன சொல் கேட்டு; தேறுமோ? –
ஆற்றவளோ?

————

அன்ன தன்மையள், ‘ஐயனும், அன்னையும்,
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே;
என்னை, என்னை, “இருத்தி” என்றான்?’ எனா,
உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள். 220-

அன்ன தன்மையள் – அத்தகைய இயல்பினை உடைய சிதை;
‘ஐயனும் அன்னையும்சொன்ன- தந்தையும் தாயும் இட்ட கட்டளைகளை;
செய்யத் துணிந்தது தூயதே -நடந்த முடிவு செய்தது தூய்மை
உடையதே (ஆயினும்); என்னை-; என்னை இருத்தி என்றான்?’-
எதனால் அரண்மனையிலேயே இரு என்று சொன்னான்;
எனா -என்று; உன்னி உன்னி – நினைத்து நினைத்து; உயிர் உமிழா
நின்றாள் – உயிர் துடிப்ப இருந்தாள்.

——–

இராமன் தன் கூற்றுக்கான காரணத்தை இயம்புதல்

‘வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து,
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்ல-நின்
சில் அரக்குண்ட சேவடிப் போது’ என்றான். 221-

(இராமன்) ‘நின் – (சீதையே!) உனது; சில் அரக்கு உண்ட –
குளிர்ந்தசெம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற; சேவடிப் போது – சிவந்த
அடிமலர்கள்; வல்அரக்கரின் – கொடிய அரக்கர் போலத் (தோன்றும்);
மால் வரை – பெரியமலையில்; போய் விழுந்து – சென்று பரவி; அல்-
இரவிலும்; அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – அரக்கினை
உருக்கினாற்போல வெப்பத்தைச்செய்கின்ற காட்டு வழியில் உள்ள; கல் –
கற்கள்; அரக்கும் -உராய்கின்ற; கடுமைய அல்ல’ – கடுமையுடையன
அல்ல;’ என்றான் -.

———–

சீதை தன் மன உறுதியை இராமனுக்கு உரைத்தல்

‘பரிவு இகந்த மனத்தொடு பற்றிலாது
ஒருவு கின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டுநின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள். 222-

பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது – இரக்கம் அற்ற
மனத்தில் ஒரு சிறிதும்விருப்பம் இல்லாமல்; ஒருவுகின்றனை – என்னை
விட்டு விலகிச் செல்கின்றாய்; ஊழி அருக்கனும் – பிரளய காலத்துச்
சூரியனும்; எரியும் என்பது – கடுவான்என்பது; யாண்டையது? –
எவ்விடத்துள்ளது? ஈண்டு – இவ்விடத்து (என்திறத்தில்);
நின் பிரிவினும் -உன் பிரிவு சுடுவதைக் காட்டிலும்; பெருங்காடு –
உன்னுடன் நான் வரும் அப்பெரிய காடு; சுடுமோ?’ – என்னைச் சுடுமோ;’
என்றாள் -.

———-

சீதையின் மன உறுதியை அறிந்து இராமன் சிந்தனை வயப்படுதல்

அண்ணல், அன்னசொல் கேட்டனன்; அன்றியும்,
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணில் நீர்க்கடல் கைவிட நேர்கிலன்,
எண்ணு கின்றனன், ‘என்செயல் பாற்று?’ எனா. 223-

அண்ணல் – இராமன்; அன்ன சொல் கேட்டனன் – அவள்
சொன்ன அத்தகையவார்த்தையைக் கேட்டான்; அன்றியும் – அதன்
மேலும்; உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் – அவள் மனத்தில்
தலை எடுத்த நினைவையும் உணர்ந்துகொண்டான்; கண்ணின்நீர்க்கடல்-
உடன்படாதவனாய்; ‘என்செயற்பாற்று’ எனா – செய்தற்குத்தகுதியானது
யாது என்று; எண்ணுகின்றனன் – சிந்திப்பானானான்.

——

சீதை மரவுரி தரித்து இராமன் அருகில் வந்து நிற்றல்

அனைய வேலை, அகல்மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினையும் வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்,
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள். 224-

அனைய வேலை – அப்பொழுது; அகமனை எய்தினள் –
மாளிகைக்குள்ளேசென்றாள்; புனையும் சீரம் – உடுத்தற்குரிய மரவுரியை;
துணிந்து – (செய்யத்தக்கது இதுதான் என எண்ணி) உறுதிசெய்துகொண்டு;
புனைந்தனள் – உடுத்திக் கொண்டு; நினைவின் – உடன் போம்
கருத்தோடு; வள்ளல் பின் வந்து – இராமனுக்குப்பின்புறமாக வந்து;
அயல் – அருகிலே; பனையின் நீள்கரம் பற்றிய கையினாள் –
பனைபோன்று நீண்ட இராமனது கையைப் பற்றிக் கொண்ட செயலினளாய்;
நின்றனள்-

————-

சீதையைக் கண்டோர் கொண்ட துயரம்

ஏழை தன் செயல் கண்டவர் யாவரும்,
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர்; வீந்திலர்;
வாழும் நாள் உள என்றபின் மாள்வரோ?-
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே! 225-

ஏழை தன் செயல் – சீதையின் மரவுரி உடுத்த செயலைக்;
கண்டவர் யாவரும் -பார்த்த எல்லோரும்; வீழும் மண்ணிடை
வீழ்ந்தனர் – இறத்தற்கு இடமான நிலத்தில்விழுந்தார்கள்; வீந்திலர் –
இறக்கவில்லை; வாழும் நாள் உள என்றபின் -ஆயுள் நாள் இன்னும்
இருக்குமானால் அவர்கள்; மாள்வரோ? – இறப்பார்களோ; ஊழி
பேர்கினும் – பிரளயமே நேரிட்டாலும்; உய்குநர் உய்வர் – பிழைக்கும்
விதி உள்ளவர் பிழைப்பர்.

———

தாயர், தவ்வையர், தன் துணைச் சேடியர்,
ஆய மன்னிய அன்பினர், என்றிவர்
தீயில் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான்
தூய தையலை நோக்கினன், சொல்லுவான். 226-

தாயர் -; தவ்வையர் – தமக்கைமார்கள்; தன்துணைச் சேடியர் –
சீதைக்குத் துணையாகிய தோழிப் பெண்கள்; ஆயம் மன்னிய அன்பினர்-
தோழியர்கூட்டமாக உள்ள அன்பினை உடையவர்கள்; என்று இவர் -;
தீயில் மூழ்கினர் ஒத்தனர் -நெருப்பில் விழுந்து முழுகியவர்களைப்
போன்று ஆனார்கள்; செங்கணான் – சிவந்தகண்களை உடைய இராமன்;
தூய தையலை நோக்கினன் சொல்லுவான் – கற்பிற் சிறந்தசீதையைப்
பார்த்துச் சொல்லுகின்றான்;

————

இராமன் சீதை உரையாடல்

‘முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்,
வெல்லும் வெண்ணகை யாய்! விளைவு உன்னுவாய்
அல்லை; போத அமைந்தனை ஆதலின்
எல்லை அற்ற இடர்தரு வாய்’ என்றான். 227-

‘முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும் – முல்லை அரும்பும்,
கடலில் விளைந்தமுத்தும் போட்டியிட்டாலும்; வெல்லும் வெண்நகையாய்!-
அவற்றை வெல்லுகின்ற வெள்ளியபற்களை உடையவளே; விளைவு
உன்னுவாய் அல்லை – (உடன் வருதலால்) உண்டாகக் கூடியதீமையைக்
கருதுகின்றாயில்லை; போத அமைந்தனை – உடன் வருதற்குச்
சித்தமாய்விட்டாய்; ஆதலின் -; எல்லை அற்ற – அளவற்ற; இடர்
தருவாய்’ – துன்பங்களை உண்டாக்குவாய்;’ என்றான் -.

———–

கொற்றவன் அது கூறலும், கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள்,
‘உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே?
என் துறந்த பின், இன்பம் கொலாம்?’ என்றாள். 228-

கொற்றவன் – அரசனாகிய இராமன்; அது கூறலும் – அச்சொல்
சொல்லுதலும்; கோகிலம் செற்றது அன்ன குதலையள் – குயில் கோபம்
கொண்டது போன்றகுதலைப் பேச்சினை உடைய சீதை; சீறுவாள் –
கோபித்து; ‘உற்ற நின்ற துயரம் இது ஒன்றுமே? – உம்மை அடைந்து
நின்ற துன்பம் நான் உடன் வருவதாகிய இது ஒன்றுதானோ; என் துறந்த
பின் இன்பம் கொல்’ – என்னை இங்கேயே விட்டு விட்டுப் போனபிறகு
காட்டில் உங்களுக்கு இன்பமே உண்டாகும் போலும்;’ என்றாள் -.

———–

சீதையை அழைத்துக் கொண்டு இராமன் புறப்படுதல்

பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்;
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும்
செறுவின் வீழ்ந்த நெடுந் தெருச் சென்றனன் –
நெறி பெறாமை அரிதினின் நீங்குவான். 229=

பெருந்தகை – இராமன்; பிறிது ஓர் மாற்றம் பேசலன் – வேறு
ஒருவார்த்தையும் பேசாதவனாய்; மைந்தரும் மாதரும் மறுகி வீழ்ந்து
அழ – ஆடவரும் மகளிரும் மனங்கலங்கி விழுந்து அழுதலால்; (அவர்
கண்ணீரால் சேறாகி) செறுவின் வீழ்ந்த- வயல் போலக் கிடக்கின்ற;
நெடுந் தெரு – பெரிய தெருவின்கண்; நெறிபெறாமை – வழி கிடைக்கப்
பெறாமையால்; அரிதினின் – சிரமப்பட்டு; நீங்குவான் சென்றனன் –
நீங்கிச் சென்றான்.

————

இராமன், சீதை மற்றும் இலக்குவனுடன் செல்லுதல்

சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரி விற்கை இளையவன் முன்செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? 230-

திருமகள் – சீதை; சீரை சுற்றி – மரவுரி அணிந்து; பின்செல –
பின்னால் வர; மூரி விற்கை – வலிய வில் ஏந்திய கையை உடைய;
இளையவன் -இலக்குவன் முன்னே செல்ல; காரை ஒத்தவன் – கார்
மேக வண்ணனாய இராமன்; போம்படி – போகும் தன்மையை; கண்ட –
பார்த்த; அவ் ஊரை – அந்தநகரத்தவரை; உற்றதை – அடைந்த
துன்பத்தை; உணர்த்தவும் ஒன்ணுமோ? -எடுத்துக் கூறவும் இயலுமோ
(இயலாது என்றபடி).

————

மக்கள் யாவரும் இராமனைத் தொடர்ந்து செல்லுதல்

ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்;
சோரும் சிந்தையர், யாவரும் சூழ்ந்தனர்;
‘வீரன் முன் வனம் மேவுதும் யாம்’ எனா,
போரென்று ஒல்லொலி கைம்மிகப் போயினார். 231-

ஆரும் – எவரும்; பின்னர் – பிறகு; அழுது அவலித்திலர் –
அழுது துன்பம் உறவில்லை; சோரும் சிந்தையர் – தளர்ந்த மனத்தோடு;
யாவரும் சூழ்ந்தனர் – அனைவரும் ஆலோசித்து; ‘வீரன்முன் –
இராமனுக்கு முன்னே; யாம் வனம் மேவுதும்’ – நாம் காட்டிற்குச்
செல்வோம்; எனா -என்று; போர் என்று ஒல்லொலி கைம்மிக –
‘போர்’ என்று ஒல்லென்ற ஒலி அளவு கடக்க;போயினார் – புறப்பட்டுச்
சென்றார்கள்.

————

இராமன் தாயரை வணங்கி மன்னன் தயரதனுக்கு ஆறுதல் கூறுமாறு கூறுதல்

தாதை வாயில் குறுகினன் சார்தலும்,
கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா,
‘ஆதி மன்னனை ஆற்றுமின் நீர்’ என்றான்;
மாதராரும் விழுந்து மயங்கினார். 232-

கோதை வில்லவன் – மாலை அணிந்த வில்லை உடைய இராமன்;
தாதை -தந்தையது; வாயில் – மாளிகை வாயிலை; குறுகினன் சார்தலும்-
அணுகிச்சேர்ந்தவுடன்; தாயரைக் கும்பிடா – உடன்வந்த தாய்மார்களை
வணங்கி; ‘ஆதி மன்னனை – சக்கரவர்த்தியை; நீர் ஆற்றுமின் –
நீங்கள் இங்கேயிருந்து தேற்றுங்கள்;’ என்றான் -; மாதராரும் – அம்
மகளிரும்; விழுந்து மயங்கினார் -தரையில் விழுந்து மயங்கினார்கள்.

————-

தாய்மார்கள் மூவரையும் வாழ்த்துதல்

ஏத்தினார், தம் மகனை, மருகியை;
வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார்,
‘காத்து நல்குமின், தெய்வதங்காள்!’ என்றார்-
நாத் தழும்ப அரற்றி நடுங்குவார். 233-

நாத் தழும்ப – நா காய்ப்பு ஏறும்படி; அரற்றி – அழுது;
நடுங்குவார் – நடுங்கும் அத்தாயர்; தம் மகனை, மருகியை – தம்
மகனாகிய இராமனையும் மருகியாகியசீதையையும் ; இளையோனை –
இலக்குவனை; வாழ்த்தினார் – வாழ்த்தினார்கள்; ஏத்தினார் –
புகழ்ந்தார்கள்; வழுத்தினார் – துதித்தார்கள்; ‘காத்து நல்குமின்
தெய்வதங்காள்!’ – காப்பாற்றிக் கொடுங்கள் தெய்வங்களே;’ என்றார்-.

————-

வசிட்டனை வணங்கி பின் மூவரும் தேர் ஏறிச் செல்லுதல்

அன்ன தாயர் அரிதின் பிரிந்தபின்,
முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா,
தன்னது ஆர் உயிர்த் தம்பியும், தாமரைப்
பொன்னும், தானும், ஒர் தேர்மிசைப் போயினான். 234-

அன்ன தாயர் – அத்தகைய தாய்மார்கள்; அரிதின் – சிரமப்பட்டு;
பிரிந்த பின் – பிரிந்து சென்ற பிறகு; முன்னர் நின்ற முனிவனைக்
கைதொழா -முன்னே நின்ற வசிட்ட முனிவனைக் கைகூட்பி வணங்கி;
தன்னது ஆர் உயிர்த் தம்பியும்- தன்னுடைய அரிய உயிர் போலச்
சிறந்த தம்பியாகிய இலக்குவனும்; தாமரைப்பொன்னும் – தாமரையில்
வீற்றிருக்கும் திருமகளாய சீதையும்; தானும் – ஓர்தேர்மிசைப்
போயினான் – ஒரு தேர்மேல் ஏறிச்சென்றான்.

———

மிகைப் பாடல்கள்

விழுந்து பார்மிசை, வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து,
எழுந்து, ‘என் நாயகனே! துயர் ஏது எனாத்
தெளிந்திலேன்; இது செப்புதி நீ’ எனா,
அழுந்தினாள்; பின்னர் அரற்றத் தொடங்கினாள். 29-1

அன்னாள் இன்ன பன்னி அழியத் துயரால், மன்னர்
மன்னானவனும் இடரின் மயங்கி, ‘மைந்தா! மைந்தா!
முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ? முதல்வா! முறையோ?
என்னே, யான் செய் குறைதான்?’ என்றே இரங்கி மொழிவான்: 53-1

உணர்வு ஏதும் இலாள் உரையால் உரைசால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம்; மா வனமே போவானேயாம்; என்னில்,
இணரே பொலி தார் நிருபா; இடரால் அயர்வாய்; இதுவும்
துணையோ?- துணைவா!’ என்றாள்; ‘துயரேல்! துயரேல்!’ என்றான். 53-2

‘சேலா கியமா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின்-
மேலா கியநான் முகனால், வேதங் களின் மா முறையின்ப
லா கியயோனிகளின் பலவாம் வருணம் தருவான்,
நாலா கியதாம் வருணன் தனின், முன் எமை நல்கினனால். 76-1

‘”அந்நான் மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன்
மின்னார் புரிநூல் மார்பன் விருத்தே சனன்மெய்ப் புதல்வன்,
நன்னான் மறைநூல் தெரியும் நாவான் சலபோ சன் எனச்
சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான்” என்றான். 76-2

‘தாவாத அருந்தவர் சொல் தவறாததனால், தமியேன்
சாவாதவரும் உளரோ? தண்டா மகவு உண்டு’ என்றே
ஓவாதார் முன் நின்றே; ஒரு சொல் உடையாது அவரும்,
பூவார் அனலுள் பொன்றி, பொன் – நாடு அதனில் புக்கார். 86-1

இம்மா மொழிதந்து அரசன் இடருற்றிடும் போழ்தினில், அச்
செம்மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய்,
மெய்ம்மாண் நெறியும், விதியின் விளைவும், தளர்வின்றி உணரும்
அம்மா தவனும் விரைவோடு அவலம் தருநெஞ் சினனாய். 87-1

என்று என்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடாமுன்,
கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலைக் கைம் மனு என்னும் வயங்கு சீர்த்திக்
குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான்: 127-1

ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினன், சேய் அரிக் கண்கள் தேம்ப,
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப-
தாய், ‘நிந்தை இன்றிப் பல ஊழி தழைத்தி!’ என்றாள். 147-1

‘வானமே அனையதோர் கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன், உலகம் யாவையும்,
கானமே புகும் எனில் காதல் மைந்தனும்
தானுமே ஆளும்கொல் தரை?’ என்றார் சிலர். 191-1

போயினான் நகர் நீங்கி-பொலிதரு
தூய பேர் ஒளி ஆகி, துலங்கு அருள்
ஆய மூவரும் ஆகி, உயிர்த் தொகைக்கு
ஆயும் ஆகி, அளித்தருள் ஆதியான். 234-1

————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading