ஸ்ரீ அரங்கநாத ஸ்வாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்:-ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ,–ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள்–

நம்பெருமாள் திருவரங்கத்தை விட்டு அகன்று மீண்டும் 639 ஆண்டுகளுக்குப் பின்பு
திருவரங்கத்திற்கு வந்து சேர்ந்த நாள். அதைப் பற்றிய சில சிந்தனைகள்.
1) ஸ்ரீமந் நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பீடத்தை அலங்கரித்தவர்களில் மணக்கால் நம்பியும் ஒருவர்.
இவர் வாழ்ந்த காலம் கி.பி.929 -1006.
இவர் காலத்தில் ஏற்பட்ட கலகத்தின் போது (இதை ஒட்டியர் கலகம் என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.)
பாதுகாப்புக் கருதி அழகிய மணவாளன் திருமாலிருஞ்சோலையில் ஓர் ஆண்டு காலம் எழுந்தருளி யிருந்தார்.
2) திருமாலிருஞ்சோலை வைகானஸ அர்ச்சகர்கள் ஒரு வருட காலம் அழகிய மணவாளனை ஆராதித்து வந்தனர்.
திருவரங்கத்தில் ஒட்டியர் கலகம் ஒடுக்கப்பட்டவாறே மீண்டும் அழகிய மணவாளன் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார்.
ஆனால் முன்பு ஆராதனம் செய்து வந்த பாஞ்சராத்ரிகள் கலகத்தின் போது ஊரை விட்டு அகன்றதாலோ அல்லது கொல்லப் பட்டதாலோ,
ஆராதனங்களைச் செய்வதற்கு யாரும் இல்லாததால் வைகானஸ அர்ச்சகர்களே திருவரங்கத்தில் பெரியபெருமாளுக்கு ஆராதனம் செய்து வந்தனர்.
சுமார் 80 ஆண்டுகள் இவர்கள் திருவரங்கம் கோயிலில் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இராமானுசர் காலத்தில்தான் (கி.பி. 1017-1137) திருவரங்கத்தில் மீண்டும் பாஞ்சராத்ரிகள் ஆராதனத்தில் பங்கு கொண்டனர்.
3) கி.பி. 1310ஆம் ஆண்டு மாலிக்காபூர் படையெடுப்பின் போது அழகிய மணவாளனின் அர்ச்சா திருமேனி வடக்கே எடுத்து செல்லப்பட்டது.
உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின் சென்ற வல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து
டெல்லிவரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியோடு தொடர்புடையது தான் துலுக்க நாச்சியார் வைபவம்.
அழகிய மணவாளன் கொள்ளை யடிக்கப் பட்ட பிறகு ஆராதனத்தில் எழுந்தருளி யிருந்தவர்
அவரைப் போன்ற திருமேனி கொண்ட திருவரங்க மாளிகையார் ஆகும்.
அழகிய மணவாளன் ஆஸ்தானம் திரும்பிய பிறகு திருவரங்க மாளிகையார் யாக பேரராக கொள்ளப்பட்டார்.
4) கி.பி. 1323ஆம் ஆண்டு நிகழ்ந்த உலூக்கானின் படையெடுப்பின் போது அழகிய மணவாளன் தெற்கு நோக்கி
நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு திருமாலிருஞ்சோலை, கோழிக்கோடு, முந்திரி மலை பள்ளத்தாக்கு,
திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி, அழகியமணவாளம் கிராமம் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய பிறகு
கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்) திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார்.
5) கி.பி.2010 ஆம் ஆண்டு மே, 31ஆம் நாள் நம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பி 639 ஆண்டுகள் ஆகின்றன.
நம்பெருமாள் தென் தமிழகத்தில் பல பகுதிகளுக்குச் சென்று பல இன்னல்களை எதிர் கொண்டு
நம் போல்வார் உய்வடைவதற்காக 48 ஆண்டுகள் கழிந்து ஆஸ்தானம் திரும்பிய நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியை நாம் அதற்குரிய முறையில் கொண்டாடுவதில்லை.
இதற்கு என்ன காரணம் என்பதை உள்ளபடி அறிய இயலவில்லை. வரலாற்று உணர்வு நமக்கில்லை என்பதும் இதற்கொரு காரணமாகும்.
6) பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபம் எனப்படும்
தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில் தான் அழகிய மணவாளன் எழுந்தருளி யிருந்தார்.
(ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபத்தில் நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணி
நாம் மங்களாசாஸனம் செய்யலாமே. இதில் ஒன்றும் தவறில்லையே. ஏன் இதைச் செய்யக் கூடாது?
பொது மக்கள் ஒன்று கூடி அதிகாரிகளிடம் முறையிடலாமே?)
திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந் தருளியிருந்ததால் யார் உண்மையான அழகிய மணவாளன் என்பதைத்
தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை.
(ஆயிரக் கணக்கானோர் 1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டு
முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை.
அப்போது வயது முதிர்ந்த ஈரங்கொல்லி ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் ஈரவாடை தீர்த்தத்தை
(திருமஞ்சனம் செய்த பிறகு அழகிய மணவாளன் உடுத்தியிருந்த கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனித நீர்)
சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” என்று அழைத்தான்.
அவன் இட்ட பெயரே இன்று வரை வழங்குகிறது. நம்பெருமாள் என்ற பெயர் ஒரு பாமரன் அன்புடன் இட்ட பெயராகும்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ,–ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading