ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் ஸேனை முதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான
கஜாநநர் என்னும் யானை முகமுடைய நித்யஸூரியின் அம்சமாய், சோழ தேசத்தில் வீரநாராயண புரத்தில்
(காட்டுமன்னார் கோயிலில்) (கி.பி. 823) சோபக்ருத்-வருடம், ஆனி மாதம், 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி
அனுஷ நக்ஷத்ரத்தில் ஈச்வர பட்டாழ்வாருக்குக் குமாரராக க்ஷடமர்ஷண கோத்ரத்திலே (சொட்டைக் குலத்திலே) அவதரித்தார்.
இவருக்குத் திருத் தகப்பனார் இட்ட திருநாமம் ஸ்ரீரங்கநாதன் என்பது.
இவர் யோகாப்யாஸம் கைவந்தவராகையாலே ஸ்ரீரங்கநாதமுனிகள் என்றும், சுருக்கமாக நாதமுனிகள் என்றும் வழங்கப்பட்டார்.
தன்னுடைய மருமகன்களான கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான் ஆகிய இருவருக்கும்
திவ்யப் பிரபந்தங்களை இசையுடன் பயிற்றுவித்தார்.
அவர்கள் பரம்பரையில் வந்தவர்களே அரையர்களாவர்.
ஸ்ரீமந் நாதமுனிகளுடைய சிஷ்யர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் உய்யக் கொண்டாரும், குருகைக் காவலப்பனும் ஆவர்.
தாது வருஷம் (கி.பி. 917) மாசி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியன்று இவர் பரமபதித்தார்.
சுமார் தொண்ணுற்று மூன்று (93) திருநக்ஷத்ரங்கள் எழுந்தருளியிருந்தார்.
இவர் அருளிச் செய்த க்ரந்தம், ந்யாய, தத்வம் என்பது.
இதிலிருந்து சில பகுதிகள் எம்பெருமானார், ச்ருத ப்ரகாசிகா பட்டர், ஸ்ரீவேதாந்த தேசிகர் முதலான ஆசார்யர்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
இந்த க்ரந்தம் தற்போது கிடைக்க வில்லை.
யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம் என்னும் இரு க்ரந்தங்களையும் இவர் செய்ததாகப் பெரிய திருமுடியடைவில் உள்ளது.
இவையும் தற்போது அச்சுவடிவில் இல்லை.
————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ,ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீமந்நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply