மாணிக்கவாசகர் அருளியது திருவெம்பாவை. ஆண்டாள் அருளியது திருப்பாவை.
முன்னது திருவண்ணாமலையில் மலர்ந்தது. பின்னது ஸ்ரீவில்லிப்புத்தூரில் மலர்ந்தது.
இரண்டுமே இசைப் பூங்கொத்துக்கள். திருவெம்பாவையில் 20 செஞ்சொற்சித்திரங்கள் மிளிர்கின்றன.
திருப்பாவையில் 30 செஞ்சொற்சித்திரங்கள் ஒளிர்கின்றன.
மாணிக்கவாசகர் திருவாதவூர் தந்த அருட்செல்வர். பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணியாற்றியவர்.
கல்வியும் ஒழுக்கமும் மிக்கவர். மன்னரால் தென்னவன் பிரமராயன் என்னும் பட்டமும் பெற்றவர்.
ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த அருட்செல்வி. நந்தவனத் துளசியருகே விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாரால்
கண்டெடுக்கப் பட்ட அற்புதக் குழந்தை. இதயத் துடிப்பெல்லாம் கடவுட் தாகமாக வளர்ந்த சின்னஞ்சிறுமி.
பெருமை மிக்க பெரியாழ்வாரிடம் வளர்ந்தமையால் ஆழ்வார் திருமகளார் என்னும் நற்பெயரும் பெற்றார்.
மன்னருக்காகக் குதிரைகள் வாங்கச் சென்று திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவருள் பெற்றார் மாணிக்கவாசகர்.
குதிரைக்குரிய பணத்தை அறச்செயல் புரிந்து அரசுப் பணியில் பிழைபட்டார். கோதையோ கடவுளுக்குக் கட்டிய மாலையைத்
தானே சூடி அழகு பார்த்தபின் கோயிலுக்குத் தந்து சமயாசாரத்தில் பிழைபட்டாள். மாணிக்கவாசகரைச் சிவபிரான் ஆட்கொண்டார்.
சூடிக் கொடுத்த நாச்சியாரைப் பெருமாள் ஆட்கொண்டார். இருவருமே இறை ஒளியில் கலந்த பெருமையினர்.
இருவருமே இறை ஒளியைத் தம்தம் அழகிய பாடல்களில் வழங்கிய அற்புதமான திவ்ய ஞான தீபங்கள்.
திருவாசகத்தின் அங்கமாகப் பன்னிரு திருமுறையில் குடியேறியது திருவெம்பாவை.
நாச்சியார் திருமொழியுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் குடியேறியது திருப்பாவை.
பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழகத்தின் ஆன்மீகப் பண்பாட்டு விழிகள்.
பாவைப் பாட்டுகளோ அவ்விரு விழிகளின் ‘பாவைகளாக’ ஒளிர்பவை.
’உத்திஷ்டத ஜாக்ரத’ என்னும் உபநிடதக் குரல்:
துயில் நீக்கம் என்னும் ஆன்மீக மையம் கொண்ட ஆன்மீக அலைகள் இரு பாவைகளிலும் விரிகின்றன.
சிறுமியர் தம்மொத்த வயதினரை அதிகாலையில் எழுப்புகின்றனர். நீராட அழைக்கின்றனர்.
துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை.
துயில் எழுப்புதல் ஆன்மாவின் துயில் நீக்கம் உணர்த்துகின்றது. ஆன்மீக அருளாளர்கள் அனைவரும் அழைத்த அழைப்பின் சாரம் இதுவே.
‘உத்திஷ்டத ஜாக்ரத’ என்னும் உபநிடதக் குரலுக்கு மாணிக்கவாசரும் ஆண்டாளும் தந்த செந்தமிழ்ச் சொல்லோவியங்கள் இவை.
துயில் எழுப்புதல் என்னும் ஆன்ம விழிப்பூட்டல் உலக இலக்கிய அரங்கில் இத்துணை அழகியல் (aesthetic) நலத்துடன்
பதிவுற்றுள்ளதா என்பதனை அறிதல் வேண்டும். பாவைப் பாட்டுக்கள் நிச்சயம் தமிழ்ப் பெருமிதங்களில் முக்கியமானது.
வைகறை வாசலின் இன்சொற் கோலங்கள்:
‘எழுமின் விழுமின்’ என்னும் உபநிடதக் குரலுக்கு மணிவாசகரும், ஆண்டாளும் தந்த
இன்னமுதப் பாவைப் பாடல்களின் நுழைவாயில் நாடகப் பாங்கினது.
உள்ளே துயில்வோர்; வாசலில் எழுப்புவோர். நேரமோ இருள் நீங்கும் அதிகாலை. எழுப்பும் குரலிலோ நட்புரிமை.
சிலபோது எள்ளல், சிலபோது நகையாடல், சிலபோது செல்லக் கடிந்துரைகள்; ஆனால் எப்போதும் நேயமிகு நெருக்கம் (intimacy).
”வன் செவியோ நின் செவி தான்?” (1*) என்று கேட்பவள் திருவெம்பாவைத் தோழி.
“ஊமையோ அன்றிச் செவிடோ?” (9) என்று வினவுபவள் திருப்பாவைத் தோழி.
”ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?” (4) என்பது திருவெம்பாவைக் குரல்.
“எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?” (15) என்பது திருப்பாவைக் குரல்.
“நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றவள் நாணாமே போன திசை பகராய்!” (5) என்பது திருவெம்பாவையின் செல்லக் கடிந்துரை.
“கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?” (10) என்பது திருப்பாவையின் செல்லக் கடிந்துரை.
இவ்வழகிய உரையாடல் சித்திரங்கள் பாவைப் பாட்டுக்களின் நுழைவாயில் வரவேற்பு இனிமைகள்;
அழகியல் ஆர்வமும், ஆன்மீகத் தேடலும் உடையவர் தம் உள்ளத்தை எளிதில் பிணிக்கும் எழிலார்ந்த கோலங்கள்;
ஆழ்ந்து நோக்குவோர்க்கோ லௌகீகத் துயிலுணர்த்தும் அற்புதக் குரல்கள்!
நீராடல் சித்திரச் சோலையும் நோன் பின் சித்திர கூடமும்:
இரு பாவைப் பாடல்களுக்கும் அமைந்த பொது மையம் ஆழமானது. எனினும் அவற்றிடையே நுட்பமான
வேறுபட்ட பரிமாணங்களும் (dimensions) உள.
நீராடலின் சித்திரம் திருவெம்பாவையில் விரிகிறது.
நோன்பின் சித்திரம் திருப்பாவையில் விரிகிறது.
வாழ்க்கையை இனிய நோன்பின் புனித நீராடலாக அனுபவிக்கும் ஆழப் பார்வையின் விகசிப்பாகவே திருவெம்பாவை ஒளிர்கின்றது.
இயற்கை அரங்கின் அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது.
பொய்கையின் கருங்குவளையும் செந்தாமரையும், நீலமேனியாள் உமையையும் செந்தழல் வண்ணன் சிவனையும் நினைவூட்ட –
அங்கம் குருகினம் அம்மையின் கைவளையையும், பின்னும் அரவம் அப்பனின் பாம்பணியையும் நினைவூட்ட –
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தல் நீராடும் பொய்கையினையே பரம்பொருட்சுனை ஆக்குகின்றது.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடு ..–என ஆனந்தமடைகிறது பாடல்.
இப் பார்வையின் பரவசத்தில் இன்னும் ஆழங்காற்படும்போது வாழ்க்கை அரங்கே இறைத் தடாகமாகின்றது.
வாழும் வாழ்க்கையே பரமானந்த நீராடல் ஆகின்றது. பாய்ந்து பாய்ந்து – பாடிப் பாடி – குடைந்து குடைந்து – ஆடி ஆடி –
தோழியருடன் ஆனந்த நீராடும் வைகறை இனிமையே – திருவெம்பாவையின் ஞானமொழியில் –
ஆன்மீக வாழ்க்கையின் அற்புதக் குறியீடாகின்றது.
மாமத யானை மரத்தில் மறைந்திடும் அழகியல் நுட்பமிது; பார் முதல் பூதம் பரத்தில் மறைந்திடும் ஆன்மவியல் பரவசம் இது.
வாழ்க்கையை உன்னதமான இறைக் காதல் நோன்பின் சித்திர கூடமாகக் காணும் காட்சிக்கு இட்டுச் செல்கிறது திருப்பாவை.
”மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்” என்று தொடங்குகிறது கோதையின் பாவை.
நெய்யும் பாலும் நீக்கிடல், மலரும் மையும் ஒதுக்கிடல், செய்யத் தகாதன தவிர்த்திடல் – என்னும் விரத நெறிச் சித்திரங்களை அது தருகிறது.
“குள்ளக் குளிர்ந்து நீராடல்” இங்கு விரத அங்கமே. துயில் எழுப்பும் குரலே நீட்சி கொள்கிறது.
நந்தகோபன் மாளிகைக் காவலனை உணர்த்தி – நந்தகோபனைத் துயிலெழுப்பி – அன்னை யசோதையைத் துயிலெழுப்பி –
பூவைப்பூ வண்ணனைத் துயிலெழுப்பி – அவனைப் போற்றி மகிழ்கின்றது கோதையின் பாவை.
நோன்பின் நிறைவில் அவன் அருளால் பற்ற நல்லுடையும் பல்கலனும் அணிந்திடும் குதூகலம் அங்குண்டு.
“மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்து” உண்ணும் பேறு உண்டு.
அனைத்துக்கும் மேலாக, சிங்கமென நடந்துவந்து கண்ணன் சிங்காதனமிருந்து அருளும் பேரருட் காட்சியும்,
பறை பெற்றுய்தல் என்னும் கைங்கரியப் பிராப்தியின் பேரானந்தமும் சித்திரகூடச் சிகரக் காட்சியாகின்றன.
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று..–என்பதுவே வாழ்க்கையையே நோன்பாகக் காணும் கோதைப் பார்வை.
திருவெம்பாவையின் சிவ மணமும், திருப்பாவையின் மால் மணமும்:
இறை முகட்டின் புகழை இடையறாது ஒலிக்கும் இன் அருவி ஓசை பக்தி இலக்கியங்களின் பொதுமை.
இறைப்புகழ் ஒன்றே பக்தர் நோக்கில் ‘பொருள் சேர் புகழ்’. “போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யாதலே” நோக்கம்.
எனவே “என்னானாய் என்னானாய் என்னின் அல்லால் – ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே” என்னும் நெகிழ்வொலியை
அனைத்துப் பக்தி இலக்கியங்களிலும் பொதுப் பண்பாகவே காணலாம்.
மாணிக்கவாசகரின் திருப்பாவை சிவமணம் கமழ்வது. ஆண்டாளின் திருப்பாவை மால்மணம் கமழ்வது.
மத்திட்டுக் கடைந்த தயிரில் மிதக்கும் வெண்ணெய்த் திரட்சியாக இறைமுன்பு நின்று நெகிழும் போற்றித்
துதிகளை இரு பாவைகளும் ஏந்துகின்றன.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற் பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை யடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன் மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்—எனப் பாடித் துதிக்கின்றது திருவெம்பாவை.
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இறங்கேலோர் எம்பாவாய்—எனப் பாடித் துதிக்கின்றது திருப்பாவை.
நெஞ்சம் நெகிழ்தலே பக்தி வயல்களின் வளமை ஆதாரம். இறைப் புகழ்த் தொடர்களே நெஞ்சம் நெகிழ்தலின் ஊற்றுக் கண்கள்.
இறைப் புகழ்த் தொடர்கள் தத்துவக் களத்திலோ – புராணக் களத்திலோ – உரிமை கெழுமிய உறவுப் பிணைப்பிலோ –
அல்லது இவை மூன்றும் விரவிய இனிய சுரப்பிலோ கிளர்ந்தெழுகின்றன.
இரு பாவைகளும் இவ்வகையான இறைப்புகழ்த் தொடர்களால் மனம் பிணிக்கின்றன. மனம் நெகிழச் செய்கின்றன.
இரு பாவைகளின் சிவ மணமும், மால் மணமும் ஒன்றையொன்று வெல்லும் வண்ணம் உன்னதம் பெறுகின்றன.
”தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்து ஈசன்” (2) என்றும்,
“ஆரழல்போல் செய்யா, வெண்ணீறாடி – மையார் தடங்கண் மடந்தை மணவாளா” (11) என்றும்,
”செங்கமலப் பொற் பாதம் தந்தருளும் சேவகனை – அங்கண் அரசே அடியோங்கட்கு ஆரமுதே”(11) என்றும்,
“கண்ணார் அமுதமுமாய் நின்றான்” (18) என்றும், “என்னானை என்னரையன் இன்னமுது” (7) என்றும்,
இன்னும் பலவாறாகவும் தித்திக்கும் தொடர்களில் சிவமணம் தருகின்றது திருவெம்பாவை.
”ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் – கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்” (1) என்றும்,
“ஆழி மழைக்கண்ணா” (4) என்றும், “மாயன் மணிவண்ணன்” (16), ”சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்” (14)
என்றும் பலவாறு புகழ்கின்றது திருப்பாவை.
“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை – தூய பெருநீர் யமுனைத் துறைவனை – ஆயர் குலத்தினில் தோன்றும்
அணிவிளக்கை – தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை” (5) என வேகப் படிக்கட்டுகளேறித்
துரத்தித் தொட முயல்கிறது கோதை தமிழ்.
மழைக்காட்சி–
மழைக்காட்சியின் மனக் குளிர்ச்சியில் இரு பாவைகளும் பெறும் பரவசமும் குறிக்கத் தக்கது.
இறையருளின் சாசுவதக் குறியீடு மழை. விண்ணும் மண்ணும் இணையும் அழகிய மழைக்காட்சி
அழகியலாரின் கலைக்கண்களுக்கு என்றுமே பெரு விருந்து. எங்குமே பெரு விருந்து. உலகின் அனைத்து மொழிகளிலும்
இதன் ஈர்ப்பும் பதிவும் உண்டு. ஆன்மீகத் தளம் கொண்ட அகப்பார்வையிலும் மழைக்காட்சி அற்புத விருந்தேயாகும்.
உலக ஆன்மிக இலக்கியச் சொல்லோவிய அருங்காட்சியகத்துக்கு இரு பாவைகளும் தந்த அற்புதச் சித்திரங்கள் இவை.
கார் மேகத்தில் உமையவள் திருமேனி அழகையும், மின்னல் தெறிப்பில் அவளது இடையொளிக் கீற்றையும்,
இடி முழக்கில் அன்னையின் பொன்னஞ் சிலம்போசையினையும் காண்கிறது திருவெம்பாவை.
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். (16)–என்பது திருவெம்பாவைப் பாடல்.
திருப்பாவையோ மேக நிறத்தில் திருமாலின் திருமேனியினையும், மின்னல் சுழற்சியில் திருக் கைச் சக்கர அருள் சீற்றத்தையும்,
இடு முழக்கத்தில் பாஞ்சஜன்யத்தின் பேரொலியையும், வீசும் மழைச் சரங்களில் சார்ங்கக் கணைப் பொழிவையும் கண்டு பரவசங் கொள்கிறது.
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (4)—என்பது திருப்பாவைப் பாட்டு.
‘உவமை என்னும் தவலருங் கூத்தி’ பாங்குற ஆடும் பல் வண்ணக் கூத்தில் ஒன்றே இப் பாடல்களின் உத்தியாக மிளிர்கின்றது என்னும்
‘உத்தி ஆய்வு – மனச்சித்திர எல்லை’ தாண்டிய ஸஹ்ருதய நோக்குடைய அனுபூதித் தேடலார்க்கே
இப்பாடல்களின் விஸ்வ விசாலமும், ஆன்மிக ஆழமும் வசப்படும். பழகிய பாதையின் குறுகிய ஓடையில் சுழலும்
எந்திரச் சிந்தனைத் தளைப்பட்டு ஆன்மிகம் நிராகரிக்கும் நுனிப் புல்லர்க்கும், கலகப் பிரியச் சித்தாந்த
நிறக் கண்ணாடியர்க்கும் இங்கு நுழை திறம் வாய்ப்பதில்லை.
ரிச்சர்ட் பாக் எழுதிய ஜோனதன் லிவிங்ஸ்டன் ஸீகல் (Jonathan Livingston Seagull – Richard Bach) ஓர் அழகிய சுட்டு.
அலை தழுவும் கடற்கரையில் தாம் பறப்பதெல்லாம் ஊனும் மீனும் தேடவும் தின்னவுமே என்பது பெரும்பான்மைக் கடற்பறவைகளின் பார்வை.
ஊனும் மீனும் தின்பது வான் வெளி நீந்தலின் உயர் சுகத்துக்காக என்பது நாயகப் பார்வையின் பார்வை.
பசியாற்றும் தரையிறக்கம் இலட்சியமன்று; வான் ஏறும் உயர்பறப்பே இலட்சியம். இப்பார்வைத் தகுதியே பாவை மழைப்பாட்டுக்கும் தேவை.
எனில் படிப்பவர் பாட்டில் நுழைவர்; பாடல் படிப்பவருள் நுழையும்.
திருவெம்பாவையின் ஞானச் சிறகும், திருப்பாவையின் காதல் சிறகும்:
மாணிக்க வாசகரின் பக்தி நெகிழ்வில் ‘ஞானக் காட்சிகளே’ ததும்புகின்றன. ஞானப் பார்வையின் சொற்சித்திரங்களே
திருவெம்பாவையின் பரம் பொருட் காதல் அனுபவத்தை இனிமை செய்கின்றன.
“ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் – சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடங்கண் மாதே வளருதியோ?” (1)
என்னும் தொடக்கமே ஆதியந்தமில்லா அற்புதச் சோதியாகப் பரம்பொருளைச் சுவைக்கிறது.
“பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் – போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே” (10) என்னும் போது
(அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் எனப்) புராண மொழியில் தரப்படும் ஏழு நிலைத்
தாழ் மன மண்டலங்களிலும் ஊடுருவி நீளும் பாதமலர் அழகும்; எவ்வகைப் பொருள் முடிவிலும் நீட்சிகொண்டு நிமிரும்
போதார் புனைமுடி நலமும் ஞானச் சித்திரங்களாகவே அகம் நுழைகின்றன.
அடிமுடி தேடிய அண்ணாமலைப் புராணத்தின் அற்புதச் சுட்டாக உணரினும் இவ்வரிகளின் ஞான மணத்தை நன்கு உணரலாம்.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே (9)
என்னும் போதும் பரம்பொருளின் காலாதீதச் சித்திரமே மனம்கொள எடுத்துரைக்கப் படுகின்றது.
”விண்ணுக்கொரு மருந்தை வேதவிழுப்பொருளை” (4) என்னும் போதும்,
“ஆர்த்தபிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” (12) என்னும் போதும்,
“பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர் – விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி” (18) என்னும்
போதும் ஞானச் சுவையே காதற் சுவையாகின்றது.
ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம். பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம். அழகியல் மீதூர்ந்த அமுதச் சித்திரங்களும்,
புராணக் கால் வழி எழும் புனைவுச் சித்திரங்களும் அவள் ஆழ் மனம் உணர்ந்த அற்புத சத்தியங்கள்;
அவளது பாவனா சக்தியின் அற்புத தரிசனங்கள்.
கோதைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயர்பாடி ஆகின்றது. தோழியர் ஆயர் கன்னிகையர் ஆகின்றனர்.
வடபத்ரசாயி திருக்கோயில் நந்தகோபன் மாளிகை ஆகின்றது. அங்கு எழுந்தருளியவன் ஆயர்பாடிக் கண்ணனாகின்றான்.
‘இடைப் பேச்சும் இடை நடையும்’ இயல்பாகின்றன. தானே இடைச் சிறுமி ஆகின்றாள்.
கோதை வாழ்வது “சீர்மல்கும் ஆய்ப்பாடி” (1). அங்கு புழங்கும் நெய்யும் பாலும் விரத விலக்குப் பெறுகின்றன (2).
சூழ நிற்பவை “வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” (3).
“காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து” ஆய்ச்சியர் மத்தினால் எழுப்பும் தயிர் அரவம் (7)ஒலிக்கின்றது.
எருமைகளைப் பனிப்புல்லுக்குச் சிறுமேய்ச்சலிடும் காட்சியும் (8),
எருமை தன் கன்றுக்கிரங்கிப் பால்சோர நனைத்து இல்லம் சேறாகும் காட்சியும் (12) அங்கு காணலாம்.
”பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர்ந்து” (27) உண்ணல் என்னும் குதூகல மாட்சியும் அங்கு உண்டு.
இந்த ஆயர்பாடி நாயகன் கண்ணன். அவன் “ஆயர்குலத்து அணிவிளக்கு” (5).
அவனை “ஓங்கி உலகளந்த உத்தமன்” (3) என்றும்,
“பேய்முலை நஞ்சுண்டு – கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி – வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து” (6) என்றும்,
“புள்ளின் வாய் கீண்டான்” (13) என்றும், “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் – ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தான்” (25)
என்றும் பலவாறு புராணக் கீற்றுகளால் புனைந்து மகிழ்கிறாள் ஆண்டாள்.
புராணக் கீற்றுகள் மாணிக்க வாசகரிடம் ஞானச் சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும்.
இருவர் தம் பாவைப் பறவைகளும் ஆன்ம வெளியில் பறக்கும் உயரங்களோ ஒன்றுக்கொன்று தாழ்ந்ததன்று;
பறக்கும் எழிலோ ஒன்றுக்கொன்று குறைந்ததன்று.
வாதவூரரும், வில்லிப்புத்தூரியும் தந்த அழகிய பாவைப் பாடல்களில் நாம் காண்பதெல்லாம்.
நாம் ருசிப்பதெல்லாம் ஆன்மீக அமுத வளமே.
——————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply