ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -ஐந்தாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-பிரவேசம் –

ஒரு கால் ஓர் இடத்தே நசை பண்ணிப் பெறா விட்டால் கிடைத்தது அல்லை என்று மீளலாம் படி அன்று இறே
இவர் நசை இருப்பது –
நசை பண்ணாமல் இருக்க ஒண்ணாத படி இருக்கும் இறே விஷய ஸ்வபாவத்தை பார்த்தாலும் –
இனித்தான்
உகந்து அருளின நிலங்களில் வந்து நிற்கிறது
தன் பக்கலில் ருசி உடையாரோடே நினைத்த படிகளில் எல்லாம் பரிமாற விறே
ராஜாக்கள் தோப்புக்கள் பல சமைத்தால்-இன்ன தோப்பிலே இன்னானுக்கு முகம் கொடுக்கக் கடவோம்
என்று அறுதி இட்டு இருக்குமா போலே
உகந்து அருளின நிலங்களில் பல இடங்களிலும் நிற்கிறது – ஓன்று அல்லா ஓர் இடத்திலே ஓர் ஒருத்தருக்கு
முகம் கொடுக்கைகாக –ஆன பின்பு நமக்கு இவ்விடத்திலே முகம் தர நினைத்திலன் ஆகில்
மற்று ஓர் இடத்திலே யாகிறது என்று உகந்து அருளின நிலங்கள் தோறும் புக்குத் திரிவர்
இன்ன இடத்திலே முகம் தரும் என்று அறியார் இறே –

ஆகையால்
ஸ்ரீ திரு புள்ளம் பூதங்குடியிலே சந்நிஹிதன் ஆனான்
அங்கு நிற்கிறவன் தான் ஆஸ்ரிதருக்கு தானே அர்த்தியாய்க் கொண்டு
கார்யம் செய்யும் ஸ்வபாவன் ஆவான் -மாண் உருவாகிய- பாசுரம் –
ஆஸ்ரிதரோடு ஸ்ரீ பிராட்டியோடு வாசி அற முகம் கொடுப்பான் ஒருத்தன் -வெற்பால் மாரி -பாசுரம் –
தன்னை அறிக்கைக்கு ஈடான ஸூஹ்ருதம் பிறக்கைக்கும் தான் பிரவர்தகன் ஆவான் -அன்னமாகி அருமறைகள்
அருளிச் செய்த அமலன் பாசுரம்
அதுக்கு மேலே
நிரதிசய போக்யனும் ஆவான் என்று -கூத்தன் -நேமி யங்கை மாயன் -பாசுரங்கள் –
அவன் படிகளைப் பேசி அனுபவிக்கிறார் –

————————

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே –5-2–1-பிரவேசம் –

வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் -என்றார் கீழில் திரு மொழியில்
பிறர் ஆஸ்ரயிக்க விரைந்து அருள் செய்வான் -என்று இது ஒரு பழம் கதை சொல்ல வேணுமோ
தானே வந்து என் ஹிருதயத்தில் புகுந்து விரைந்து அருள் செய்தவன் -அன்றோ -என்று
அவன் படிகளை அனுசந்தித்து
இப்படிப் பட்டவன் தான் ஸ்ரீ திருக் கூடலூரிலே வந்து சன்னிஹிதன் ஆனான் –
அவன் ஆகிறான்-சர்வாதிகனாய் இருந்து வைத்து-தன் மேன்மை பாராதே
ஆஸ்ரிதர்க்காக தாழ நின்று கார்யம் செய்யும் ஸ்வபாவன்
அவன் வர்த்திக்கிற தேசம் தான் நிரதிசய போக்கியம் என்று அத்தை பேசி அனுபவிக்கிறார் –

————————-

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே —-5-3-1–பிரவேசம் –

அடியேன் உள்ளம் உருகப் புகுந்த ஒருவரூர் போல் -என்று தம்முடைய ஹிருதயத்தில் புகுந்திருந்த
உபகாரத்தை அனுசந்தித்து ஹிருஷ்டரானார் -கீழில் திரு மொழியிலே –
அவ்விருப்புத் தான் பேறாய்த் தோற்றுகிறது -திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தைப் பண்ணி வார்த்திகப் பெறில் இறே-
அது பெறாமையாலே-கிலேசத்துக்கு உடலாய் தோற்றிற்று-
குறைவறச் செய்தது அல்ல-ஒரு வாசி செய்தருளப் பார்த்தால் அது முடியச் செய்து தலைக் கட்ட வேண்டாவோ –
ஆன பின்பு த்வத் ப்ராப்தி பிரதிபந்தகத்தைப் போக்கி தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்தை
நான் பெறுவேனாம்படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் – என்கிறார் –

————————–

உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-பிரவேசம் –

நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே என்றார் கீழில் திரு மொழியிலே
அருள் புரியே என்று நீர் இங்கன் இழவாளராய் பிரார்த்திக்கிறது என்
நாமும் உமக்கு என்றும் உபகரித்திலோமோ
உபகரிக்க வன்றோ நாம் ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதர் யாய்த்து -என்று
இங்கனே சந்நிஹிதன் ஆனபடியைக் காட்டிக் கொடுத்தான் –
அத்தை அனுசந்தித்து ஹிருஷ்டராய்
இனித் தான் அறிவுடையார் அடங்கலும் பிராப்ய புத்தி பண்ணி விடாதே வர்த்திக்கிற தேசம் என்று
அது தன்னைப் பேசி இனியர் ஆகிறார் –

———————

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1- பிரவேசம் –

தன்னைப் பேணாதே ரஷிக்குமவன் சந்நிஹிதனாய் இருக்க
அபேஷை உண்டாய் இருக்க
அபிமதமான கைங்கர்யம் பெறாமையாலே தமக்குப் பிறந்த அவஸாத அதிசயத்தை
பகவத் விரஹத்தால் வந்த ஆற்றாமை யோடே இருக்கிறாள் ஒரு பிராட்டி தசையை அனுசந்தித்து –
அவனை இவளோடு கூட்ட மாட்டு கிறிலேன்-
நோவு படாத படி பண்ண மாட்டு கிறிலேன் –
என்று நோவு படுகிறாள் ஒருத் திருத் தாயார் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

———————-

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1- பிரவேசம் –

மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாள் -என்று
திரு நாமங்களைப் பல காலும் தானே சொல்லியும்
திருத் தாயார் அவற்றை அனுபாஷித்து கேட்டும்
ஆக-இப்படி திரு நாமங்களிலே வாசனை பிறந்தது –
சத்தா தாரகமாய் இறே திரு நாமங்கள் தான் இருப்பது – அத்தாலே உணர்ந்து தரித்தார் –
தரித்த அநந்தரம்
நீர் இங்கனே கிடந்து படுகிறது என் –ஸ்ரீ பரம பதம் கலவிருக்கையாய் இருக்க
நாம் இங்கே வந்து ஸூலபர் ஆகிறது உமக்காக அன்றோ -என்று
அவதார சௌலப் யங்களையும் காட்டி-அங்கன் காதாசித்கமாக அன்றிக்கே
ஸ்ரீ கோயில்களில் வந்து சந்நிஹிதர் ஆகிறதும் உமக்காக
அந்தப் பொதுவும் அன்றிக்கே விசேஷித்து ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதர் ஆய்த்ததும் உமக்காக –
நம்முடைய சந்நிதியால் உள்ள பலம் தானே நீர் பெறுவதும் செய்தீர் –
நாமே உம்முடைய கார்யத்துக்குக் கடவோம் என்று நம் தலையிலே ந்யச்த பரராய் இருக்கப் பெற்றீர் இறே
இனி அலமாக்கிறது என் -என்ன –

ஸ்ரீ கௌசலையையார் பெருமாள் காடேறப் போகிற போது
ஏக புத்ரையாய் இருக்கிற நான் உம்மை விட்டு இருக்க மாட்டேன் -என்று புறப்பட
ஒரு கால் அவர் முகத்தைப் பார்த்து-ஆச்சீ நீர் சொல்லுகிறது தர்ம ஹானி கிடீர்
இனி பர்த்தா இருக்க புத்ரனை அநுவிதானம் பண்ணவும் கட்வதல்ல-ஆன பின்பு இனி மீளும் -என்ன
அவள் காப்பிட்டு மீண்டாள் இறே
அப்படியே இவர்-அவ்வார்த்தையாலே ஹ்ருஷ்டராய்-பெற்றதிலே லாப அம்சத்தைச் சொல்லி
க்ருதாரத்தராகிறார் –

————————–

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-பிரவேசம்

ஜகத் காரண பூதனாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் ஆஸ்ரயநீயனாய்-சகல சேதனர்க்கும் துக்க நிவர்த்தகனாய்
ஆஸ்ரிதர்க்கு அபேஷித சமயங்களிலே வந்து உதவும் ஸ்வபாவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
அவ்வவதாரங்களில் பண்ணி அருளுகிற காலங்களிலும் உதவாதாருக்கு இழக்க வேண்டாதபடி
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே ஸ்ரீ கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணி யருள
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்று இனியராய்ப் பேசுகிறார் –

———————–

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1- பிரவேசம் –

இவ்வாழ்வார் ஆகிறார்-சாஸ்திர வாசனை யாலே யாதல்-தபஸாலே யாதல் அன்றிக்கே
ஸ்ரீ பகவத் பிரசாதத்தாலே தத்வ த்ரயத்தையும் யதா தர்சனம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆய்த்து –
பர ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகையாவது ஏது என்றால் –
ஸ்ரீயபதியாய் –அகில ஹேய ப்ரத்ய நீகனாய் –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
அந்த குணங்களுக்கும் பிரகாசகமாய் –
சௌந்தர்ய சௌகுமார்யாத்யாகரமாய் இருந்துள்ள -திவ்ய விக்ரஹத்தை உடையனாய் –
உபய விபூதி நாதனாய் – நிரதிசய போக்யனாய் – இருக்கும் என்று அறிகை –

ஸ்வ ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகை யாவது –
அனந்யார்ஹமாய்- ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இன்றிக்கே பர தந்த்ரமாய் இருக்கும் என்று அறிகை –

அசித் ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகை யாவது
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை யதா தர்சனம் பண்ண ஒண்ணாத் படி
இடைச் சுவராய்க் கொண்டு விரோதித்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்று அறிகை –

இவ் விரோதியைக் கழித்து இச் சேதனன் விலஷண வஸ்துவை லபிக்கும் போது
அதுக்கு அநு ரூபமாய் இருப்பதொரு உபாய பரிக்ரஹம் பண்ணிக் கொள்ள வேணும் இறே

இம் மூன்றின் உடைய ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் அவனையே பற்ற வேணும்
விரோதி பிரபலம் ஆகையாலே அவனைக் கொண்டே கழித்துக் கொள்ள வேணும் –
ஸ்வ ஸ்வரூபத்தைப் பார்த்தால் ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத படி
பர தந்த்ரம் ஆகையாலே அவனையே பற்ற வேணும்
அவ் வஸ்து தான் அநந்ய சாத்யம் ஆகையாலும் அவ் வஸ்துவையே பற்ற வேணும் –

இப்படி அவனே உபாயமாகப் பரிக்ரஹிக்கும் இடத்தில்
பரத்வம் -தேச விப்ரக்ருஷ்டமாய் கழிந்தது
வியூஹம் -தத் ப்ராப்யமாய் சம்சாரிகள் உடைய சிறுமையாலும் பகவத் வைபவத்தாலும் கழிந்தது
ஆபத்து உண்டான போது ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயநீயம் ஆதல்
சனகாதிகளுக்கு காதாசித்கமாக ஆஸ்ரயநீயம் ஆதல் அத்தனை இறே
விபவமும் -கால விப்ரகர்ஷத்தாலே மண்டல வர்ஷம் போலேயாய்க் கழிந்தது
அக்குறைகள் தீர
ஸ்வ சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளும்-ஆஸ்ரித அதீனமாம்படி பண்ணிக் கொடு நிற்கிற நிலை இறே அர்ச்சாவதாரம்
அதாவது
ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய விசேஷத்தையே திரு மேனியாய்க் கொண்டு நிற்கையும்
தன் கிருஹத்தில் ஒரு பிரதேசத்தில் திருப் பள்ளி யறை யாக்கி-இங்கே எழுந்து அருளி இருக்க வேணும்
அமுது செய்து அருள வேணும் -என்றால் அப்போதே அமுது செய்து அருளுகையும்
அவற்றை இவன் அநாதாரிக்கும் போது தானும் அநாதாரிக்கையும்
அவதாரங்களில் போலே அஜஹத் ஸ்வ பாவனாய்
ஆஸ்ரிதர்க்கு அபிமத பல பிரதானம் பண்ணுகைக்கும்
ஆஸ்ரயநீயன் ஆகைக்கும் உண்டான ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் உடன் ஆஸ்ரித பராதீனன் ஆகையுமாய் இறே இருப்பது –

ஆகையாலே அர்ச்சாவதாரத்தை யாய்த்து இவர் ஆஸ்ரயநீய ஸ்தலமாக நினைத்து இருப்பது –
முதல் தன்னிலே
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும்
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி -என்றும் இறே இவர் இழிந்தது –
ஆகையாலே
தம்முடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு சரண்யரான ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

இவர் தாயே தந்தையே தொடங்கி பல இடங்களிலும் சரணம் புக்குப் போந்தார்

பகவல் லாபத்துக்கு சக்ருத் க்ருதம் அமைந்து இருக்கச் செய்தே பல காலும் சரணம் புகுகிறது த்வரா திசயத்தாலே இறே
இப் பிரபந்தத்துக்கு ஏற்றம்
நீர்மையை உடைய பெரிய பெருமாள் சரண்யர் ஆகையும் –
ஆழ்வார் அனுஷ்டாதாவாகையும்
சர்வாதிகாரமான திராவிட பாஷையாலே அருளிச் செய்கையும்

திருப்த பிரபன்னரான நமக்கு இவ்வார்த்தி இல்லை யாகிலும் இவர் பாசுரத்தைச் சொல்லவே
இவர் அளவிலே இவருக்கு இரங்கினால் போலே ஸ்ரீ பெரிய பெருமாள் இரங்குவர் -என்கிறதும் –
பிரயோஜனாந்தரத்துக்காகவும்-துக்க நிவ்ருத்திகாகவும்
சரணம் புகுகிறவர்கள் பாசுரத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் –
அதுக்கடி என் என்னில்
அவ்வோ பிரயோஜனங்களில் அவர்களுக்கு உள்ள ஆதரம் இவ் விஷயத்தே தமக்கு உண்டாகையாலும்
அவர்களுக்கு அகப்பட இரங்குமவர் தமக்கு இரங்காமை இல்லை என்று நினைத்து இருக்கையாலும் –

ஸ்ரீ திரு மாலையில் -பிராப்ய பிராபகங்கள் சொல்லிற்று
ஸ்ரீ அமலனாதி பிரானில் -பிராப்யம் சொல்லிற்று
இத் திரு மொழியில் பிராபகம் சொல்லுகிறது –

——————————–

கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1-பிரவேசம்

———————

தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-1- பிரவேசம்

தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி -என்று இறே இவர் பாரிப்பு –
சர்வான் காமான் -என்னக் கடவது இறே –
சர்வ அந்தராத்மாவாய்-சர்வ ஆபத்துக்களையும் போக்கி உதவுமவனாய்
ஆஸ்ரிதருக்கு அபுநாராவ்ருத்தி லஷணமான மோஷத்தைக் கொடுக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ திரு நந்தி புர விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
அங்கே போய் அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading