ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்து மாலை -51-75-

கடிக்கும் கரளப் பிறை வாள் எயிற்று வெங்காளியன் மேல்
நடிக்கும் பெரிய பெருமாள் அரங்கர் நறை கமழ் பால்
குடிக்கும் களவுக்கு மாறு கொண்டே ஒரு கோபி பற்றி
அடிக்கும் பொழுதில் பதினால் உலகும் அடிபட்டவே –51-

கடிக்கும் கரளப் பிறை வாள் எயிற்று வெங்காளி யன் மேல்
கடிக்கின்ற விஷத்தை யுடைய -பிறையையும் வாளையும் போன்ற பற்களை யுடைய கொடிய காளியன் என்னும் சர்ப்பத்தின் மேல்
நடிக்கும் பெரிய பெருமாள் அரங்கர் நறை கமழ் பால் குடிக்கும்
கூத்தாடுகின்ற பெரிய பெருமாள் கிருஷ்ண அவதாரத்தில் இளம் பருவத்தில் வாசனை வீசும் பாலை ஒருவரும் அறியாதபடி குடிக்கும்
களவுக்கு மாறு கொண்டே ஒரு கோபி பற்றி -அடிக்கும் பொழுதில் பதினால் உலகும் அடிபட்டவே
கோபம் கொண்டு ஒரு இடைச்சி பிடித்து அடிக்கும் பொழுது
–பதினான்கு உலகத்தில் உள்ள சராசரங்களும் அடி பட்டன
அனைத்தும் அவனுக்கு சரீரம் தானே -ஜகத் சரீரதவம் -இடைச்சி தன்னைத் தானே அடித்துக் கொண்டாள் என்றுமாம் –
வேதம் யடி யுண்டன விரிந்த பலவாக மவிதங்கள் யடி யுண்டன-ஓர் ஐம் பூதம் அடி யுண்டன –
வி நாழிகை முகற்புகல் செய் பொழுதொடு சலிப்பில் பொருளின் பேதம் அடி யுண்டன
பிறப்பிலி இறப்பிலி பிறங்கல் அரசன் தன் மகளார் நாதன் அமலன் சமர வேத வடிவம் கொடு நரன் கை யடி யுண்ட பொழுதே –

—————————————————————

ஆரம் தரும் பொன்னி சூழ் அரங்கா உன் தன் ஆய்ச்சி வெகு
தூர நெடும் கயிறு எல்லாம் மிசை சேர்த்து வைத்தும் அவை
ஈர மருங்கின் குறைந்திட கண் பிசைந்து எங்கும் அவள்
வேர் அம்புய முகம் கண்டு அளவு ஆன விநோதம் என்னே –52-

ஆரம் தரும்-மாலையை ஒக்கின்ற
வேர் அம்புய முகம் கண்டு -வேர்வை யுடைய தாமரை மலர் போன்ற முகத்தை -வேரி வாசனை யுடைய என்றுமாம்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் -கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டு என்று இருந்தான் –
அகடிதகடநா சமர்த்தன்
சேர்த்து வைத்து -சுற்றி வைத்து பாட பேதம்

————————————————————

சிந்திக்க நெஞ்சு இல்லை நா இல்லை நாமங்கள் செப்ப நின்னை
வந்திக்க மெய் இல்லை வந்து இரு போதும் மொய்ம்மா மலர்ப்பூம்
பந்தித் தடம் புடை சூழ் அரங்கா ததி பாண்டன் உன்னைச்
சந்தித்த நாள் முத்தி பெற்றது என்னோ தயிர்த் தாழியுமே –53-

வந்திப்பதற்கு ஏற்ற உடம்பு இல்லை -தயிர்த் தாழி முக்தி பெற்றதே –

——————————————————

குன்றா விளைவுடன் வண்மை பருவம் குணங்கள் இவை
பொன்றாது இருந்த கண் மாயம் என்னோ -பொன்னி சூழ் அரங்கா
அன்று ஆயர் தம் குல மைந்தர்களாயும் அலகு இல் இளம்
கன்றாயும் நாள் தொறும் சென்று வந்து ஆடிய காலத்திலே -54-

குன்றா விளைவுடன் வண்மை பருவம் குணங்கள் இவை
பொன்றாது இருந்த கண் மாயம் என்னோ –
குறையாத வளர்ச்சியும் -வளவும் -பிராயமும் -குணங்களும் குறையப் பெறாமல் இருந்த ஜால வித்தை என்னோ –
அலகு இல் -அளவில்லாத
பிரமனாலும் காண முடியாமல் போன விருத்தாந்தம் அன்றோ
கண் மாயம் -கண்ணை மறைத்து ஒன்றை வேறாகத் தோற்றுவிக்கும் மாய வித்தை –

——————————————————————-

நெடும் கான் நிலத்து உடன் கோவலர் தாம் மிக நின்று நெஞ்சம்
நடுங்காது இமைத்திடும் கண்கள் எல்லாம் என்று நண்ணவர் மேல்
விடும் கால நேமி அம்கை அரங்கா கண் விழிக்கு முன்னே
சுடும் கான நல் அனல் துற்ற அம்மாயம் என் சொல்லுகவே –55–

நெடும் கான் நிலத்து -பெரிய காட்டினிடத்தில்
உடன் கோவலர் தாம் மிக -இடையர்கள் மிக திரண்டு இருக்க –
நின்று நெஞ்சம் -கோவைக் காக்க வல்லவர் என்றுமாம் –
நடுங்காது இமைத்திடும் கண்கள் எல்லாம் என்று
நண்ணவர் மேல் -பகைவர் மேல்
விடும் கால நேமி அம்கை அரங்கா -யமனை ஒத்த காலநேமி சக்கரத்தை ஏந்திய
கண் விழிக்கு முன்னே சுடும் கான நல் அனல் துற்ற அம்மாயம் என் சொல்லுகவே –
பெரும் காட்டுத்தீயை முழுதும் விழுங்கிய மாயம்
அக்னி பார்த்தும் விராட் ஸ்வரூபம் பார்த்தும் அஞ்சுவீர் என்று கண்களை மூடிக் கொள்ளச் சொல்லி

—————————————————————

வானாடரில் சிலர் சென்று கண்டாரில்லை மற்று அதனில்
போனாரில் மீளப் புவியில் வந்தாரில்லை பூவின் மங்கை
ஆனாத செல்வத் திரு அரங்கா கொச்சை ஆயர் எல்லாம்
மேனாள் பரம பதத்தினில் போய் எங்கன் மீண்டதுவே –56-

வானாடரில் சிலர் சென்று -தேவ லோகத்தவர்களுள் சிலரும் பரம பதத்தை சென்று
கண்டாரில்லை
மற்று அதனில் போனாரில் மீளப் புவியில் வந்தாரில்லை
பூவின் மங்கை -தாமரை மலரில் தோன்றிய திரு மகளது
ஆனாத செல்வத் -நீங்காத செல்வத்தை யுடைய
திரு அரங்கா
கொச்சை ஆயர் எல்லாம் -கீழ்மையுடைய இடையர் எல்லாம்
மேனாள் பரம பதத்தினில் போய் எங்கன் மீண்டதுவே –திரும்பி வந்தது எவ்வாறு
யமுனையில் தீர்த்தம் ஆடும் சமயத்தில் ஒரு அசுரனால் வருண லோகத்தில் கொண்டு போய் ஒழிக்கப் பட்ட நந்தகோபரை
அங்கே எழுந்து அருளி மீட்டு வந்த பொழுது தன்னைப் பூஜித்து உத்தம கதியை யுடைய விரும்பிய சகல கோபாலர்களுக்கும்
ஞானக் கண்ணைக் கொடுத்து தனது திவ்ய தேஜோ ரூபமான ஸ்வரூபத்தையும் பரமபதம் முதலிய
சர்வ புண்ணிய லோகங்களையும் காணும்படி கண்ணன் அருளிய வரலாற்றை அருளிச் செய்கிறார் –

————————————————————

கூன் நந்து உலாவயல் கோயில் உள்ளே பள்ளி கொள்ளும் எங்கள்
ஆனந்த வாரி திருக் குழல் ஊத அறத்தடிந்த
கானம் தழைத்தன கால் வரை நெக்கன கார் முகில் தோய்
வானம் அயர்த்தன வையம் எல்லாம் மெய்ம் மறந்தனவே –57-

கூன் நந்து உலாவயல் கோயில் உள்ளே-வளைவாகிய சங்கங்கள் உலாவுகிற கழனிகளை யுடைய திரு வரங்கத்தில்
பள்ளி கொள்ளும் எங்கள் ஆனந்த வாரி -ஆனந்த மயன்
திருக் குழல் ஊத
அறத்தடிந்த கானம் தழைத்தன -முற்றவும் வேரோடு உலர்ந்த காடுகள் தழைத்தன
கால் வரை நெக்கன -சாரல்களை யுடைய மலைகள் உருகின -கால் மலையைச் சுற்றிலும் உள்ள குன்றுகள் –
கார் முகில் தோய் வானம் அயர்த்தன -கரிய மேகங்கள் உலாவுகின்ற வானுலகம் சோர்ந்தன
வையம் எல்லாம் மெய்ம் மறந்தனவே -நிலவுலகம் முழுவதும் பரவசம் அடைந்தன –

————————————————————–

ஊரும் திரைப் பொன்னி நல் நீர் அரங்கா உருப்பல ஆய்
காரும் தடித்தும் கலந்தது போல் இடைக் கன்னியர்கள்
யாரும் களிக்க இடையிடையே கலந்து இன்ப நலம்
கூரும் திரு நடம் ஆடிய மாயம் என் கூறுகவே –58-

உருப்பல ஆய் -பல திரு வுருவம் கொண்டு
காரும் தடித்தும் கலந்தது போல் -மேகமும் மின்னலும் ஒரு சேரக் கலந்து தோன்றியது போல்-
குரவைக் கூத்தே கைகோத்து ஆடல் -காமமும் வென்றியும் பொருளாக பலரும் கூடி கை பிணைந்து ஆடுவது –

———————————————————

மின் போல் இடை இடை மாதர் எல்லாம் உன் தன் மெய் தழுவி
நன் போக சாகரத்துள்ளே முழுகவும் நாள் மலராள்
தன் போகமே மகிழ்ந்தார் அரங்கா அண்டர் தாம் அவரை
அன்போடு அணைத்துத் துயின்றது எம்மாயம் அறிந்திலமே –59-

தண்டகாரண்ய முனிவர்களே கோபிகளாக வந்தனர் என்பர் -தனது வாக்கின் படி தழுவிக் கொண்டான் -சரீரதயா இவர்கள் அனைவரும் அவனுக்கு –

————————————————————–

நீரில் புகும் கண்டு தேரினைப் பார்க்கும் நிறுத்திய பொன்
தேரில் தொழும் பின்னை நீரினில் காணும் சிறந்த பச்சைக்
காரின் திற மெய் அரங்கனும் சேடனும் கஞ்ச வஞ்சன்
ஊரில் செல உடன் போம் அக்குரூரன் தன் உள் மகிழ்ந்தே –60-

பச்சைக் காரின் திறம் -நீல மேகம் போன்ற தன்மையை யுடைய
சேடனும் -ஆதி சேஷ அவதாரமான பலராமனும்
அக்ரூரர் யமுனை நீரில் மாத்யானிக ஆராதனதுக்கு நீராடும் பொழுது நீரிலும் தேரிலும் மாறி மாறி கண்டு வியந்து வாயார வாழ்த்தினாரே

—————————————————————-

நாமம் மிகு புகழ் யாதவர் வாழும் நகரில் உம்பர்
தாம் மருவும் சவை தத்தம ஆய தளை அவிழும்
தேமரு பொங்கர் அரங்கேசர் உக்கிர சேனனுக்கு
மாமுடி வைக்கும் படி படி மேல் கொடு வா எனவே –61-

நாமம் மிகு புகழ் யாதவர் வாழும் நகரில்-பேர் மிக்க கீர்த்தியை யுடைய யது வம்சத்தவர் வாழ்கின்ற வட மதுரா நகரில்
உம்பர் தாம் மருவும் சவை -தேவர் வீற்று இருத்தற்கு இடமாகிய சுதர்மை என்கிற சபா மண்டபம்
தத்தம ஆய -தங்கள் தங்களது ஆயிற்று -யாதவர்கள் எல்லாருக்கும் உரியதாயிற்று
தளை அவிழும் தேமரு பொங்கர் அரங்கேசர் -அரும்புகள் கட்டவிழப் பெற்ற தேன் பொருந்திய சோலைகளை யுடைய திரு வரண்கத்து நாதர்
உக்கிர சேனனுக்கு மாமுடி வைக்கும் படி -பெரிய கிரீடத்தை சூட்டிப் பட்டாபிஷேகம் செய்து அருளும்படியாக
படி மேல் கொடு வா எனவே இப்பூமியின் மேல் கொண்டு வா என்று வாயு தேவனை நியமித்து அருள –
தளையினின்றும் விடுவிக்கப் பெற்ற உக்ர சேனன் என்றுமாம்-தளை -கால் விலங்கு –

————————————————————-

மறியா எழுந்திரை மா நீர் மதுரையில் மன்னவரைக்
குறியாதவன் படை வந்த அந்நாள் செழும் கோகனகப்
பொறி ஆடு அரவணைத் தென் அரங்கா ஒரு பூதரும் அங்கு
அறியா வகைத் துவரா பதிக்கே எங்ஙன் ஆக்கினையே –62-

மறியா எழுந்திரை-மடங்கி எழுகின்ற அலைகளை யுடைய
மா நீர் மதுரையில் -மிக்க நீர் வளத்தை யுடைய வட மதுரையில்
மன்னவரைக் குறியாதவன் படை வந்த அந்நாள்-வேற்று அரசர்களை ஒரு பொருளாக மதியாத காலயவனனது சேனை யுத்தம் செய்ய வந்த பொழுதில்
செழும் கோகனகப்பொறி -செழித்த செந்தாமரை மலரில் வீற்று இருக்கின்ற திரு மகளை யுடைய
ஆடு அரவணைத் தென் அரங்கா
ஒரு பூதரும் அங்கு அறியா வகைத் துவரா பதிக்கே எங்ஙன் ஆக்கினையே –
ஒருவரும் அறியாதபடி மதுரையில் இருந்த சகல பிரஜைகளையும் துவாரகா நகரில் எப்படி கொண்டு போய்ச் சேர்த்தாய் –
பன்னிரண்டு யோஜனை இடம் சமுத்திர ராஜன் இடம் கேட்டு ஸ்ரீ துவாரகா பதியை நிர்மாணித்து சத்ரு பயம் அற்றதாய் யாதவர்களை செய்து அருளினான்

————————————————————

நறைத்துள வம்புனை நம் பெருமாள் விறல் நாம் சொல்வதோ
மறைப் பரி பூட்டிய மா நிலத் தேர் இல்லை வாள் எயிற்றின்
கறைப் பணி நாண் உடை மேருவில் இல்லை கடும் பவனச்
சிறைத் தழல் அம்பு இல்லை ஒன்னார் அறு புரம் செற்றதற்கே –63-

ஒன்னார் -பகைவர்களுடைய
அறு புரம் செற்றதற்கே –ஆறு பட்டணங்களை அழித்ததற்கு
சிவபிரானது திரிபுர சங்கா ரத்துக்குப் போலே –
மறைப் பரி பூட்டிய -நான்கு வேதங்களாகிய குதிரைகளைக் கட்டிய
மா நிலத் தேர்-இல்லை -பெரிய பூமியாகிய இரதம் இல்லை –
வாள் எயிற்றின் -வாள் போலும் பற்களையும்
கறைப் பணி நாண் உடை -விஷத்தையும் யுடைய சர்ப்பம் ஆகிய நாணியை யுடைய
மேருவில் இல்லை -மகா மேரு பர்வதம் ஆகிய வில் இல்லை
கடும் பவனச் -சிறைத் தழல் அம்பு இல்லை –
கடிய காற்றுப் போன்ற வேகத்தை யுடைய இறகுகளை யுடைய நெருப்பைக் கக்குகின்ற அம்பு இல்லை
ஆதலால்
நறைத்துள வம்புனை நம் பெருமாள் விறல் நாம் சொல்வதோ
வாசனை யுடைய திருத் துழாய் மாலையைச் சூடிய நம் பெருமாளது வல்லமையானது நம்மால் சொல்லப் படும் தன்மை யன்று -என்றபடி

————————————————————

அருட்கொண்டல் அன்ன அரங்கர் சங்கு ஓசையில் அண்டம் எல்லாம்
வெருள் கொண்டு இடர் பட மோகித்து வீழ்ந்தனர் -வேகமுடன்
தருக் கொண்டு போகப் பொறாதே தொடரும் சதமகனும்
செருக் கொண்ட முப்பத்து முக்கோடி தேவரும் சேனையுமே –64-

தருக் கொண்டு போகப் பொறாதே -பாரிஜாத விருஷத்தை பெயர்த்து துவாரகைக்கு கொண்டு போக மனம் பொறாமல்
வேகமுடன் தொடரும் சதமகனும் -வேகத்தோடு பின் தொடர்ந்த
நூறு யாகங்களை யுடைய இந்திரனும்
செருக் கொண்ட -யுத்தம் செய்து நின்ற
முப்பத்து முக்கோடி தேவரும் சேனையுமே —
அருட்கொண்டல் அன்ன அரங்கர் சங்கு ஓசையில் அண்டம் எல்லாம் வெருள் கொண்டு இடர் பட மோகித்து வீழ்ந்தனர் –

——————————————————————

நிணக் கோல நேமித் திரு வரங்கேச நினைக்கினிய
குணக் கோனகையும் கண்டனளோ மணிக் குன்றில் வைகும்
கணக் கோதையர் பதினாயிர வரைக் கைப் பிடிக்க
மணக் கோல மும் பதினாறாயிரம் கொண்டு வாழ்ந்த வன்றே –65-

நிணக் கோல நேமித்-கொழுப்புத் தோய்ந்த அழகிய சக்கரத்தை யுடைய -விரோதி நிரசன சமர்த்தன் என்றபடி –
திரு வரங்கேச
மணிக் குன்றில் வைகும்-இரத்தின பர்வதத்தில் தங்கி இருந்த
கணக் கோதையர் பதினாயிர வரைக் -கூட்டமாகிய பதினாறாயிரம் கன்னிகளை தேவர் சித்தர் கந்தர்வர் போன்ற தேவ கணங்களின் கன்னிகையர்
கைப் பிடிக்க -பாணிக்கிரகணம் செய்து அருள
மணக் கோல மும் பதினாறாயிரம் கொண்டு -அத்தனை ஆயிரம் திருக் கல்யாண திருமேனியை எடுத்து அருளி
வாழ்ந்த அன்று -மகிழ்ந்து இருந்த அப்பொழுதே –
நினைக்கினிய குணக் கோனகையும் கண்டனளோ -உனது திரு உள்ளத்துக்கு உகப்பாகிய நற்குணத்தை யுடைய திரு மகளும் உன்னைப் பார்த்தாளோ
பதினாறாயிரத்து ஒரு நூற்றுவர் -என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்லும்

—————————————————————

விடம் தோய் அரவில் துயில் அரங்கேச விசும்பு முட்ட
நடந்து ஓகை தன்னுடன் நாரதன் காண நகைக்கும் முத்து
வடம் தோய் வனமுலை எண் இரண்டாயிரம் மாதர் தங்கள்
இடம் தோறும் நின்று எழில் வேறாய் இருந்தது அங்கு எவ்வண்ணமே –66-

நாரத பகவான் ஒரே முகூர்த்தத்தில் விவாகம் செய்ததை கேள்வி யுற்று அவரவர்கள் கிருகங்களில் சென்று
திவ்ய ஸ்வரூபம் வகித்து திருவிளையாடல் செய்து அருளுவதை கண்டு அதி ஆச்சர்யம் அடைந்து ஸ்துதித்து மகிழ்ந்தார்
அஸ்தானே பய சங்கையால் விடம் தோய அரவு -ஆங்கு ஆரவாரம் அது கேட்ட அழல் உமிழும் பூங்கார் அரவணையான்
நாரதன் -நாரம் தன் -மனிதர் கூட்டம் –அதனை -தன் -பேதிபபவன் -ஆத்ம ஞானத்தை உபதேசிப்பவர் –

——————————————————————–

பாவிக்க ஒணாத பெருமாள் விநோதம் பகருமதோ
வாவிக்குள்; நாரதன் நாரதி ஆய் ஒரு மன்னவன் தன்
ஆவிக் குலக் கொடி ஆய் நெடும் காலத்து அழிவு இல் இன்பம்
மேவி குடும்பத்து இடும்பை எல்லாம் எய்தி விட்டனனே –67-

பாவிக்க ஒணாத -எண்ண முடியாத -யதோ வாசோ நிவர்த்தந்தே –
பெருமாள் விநோதம் -நம் பெருமாள் உடைய திரு விளையாட்டு
பகருமதோ
வாவிக்குள்; நாரதன் நாரதி ஆய் ஒரு மன்னவன் தன்
ஆவிக் குலக் கொடி ஆய்
ஒரு குளத்தில் நாரத முனிவன் நாரதி என்னும் ஒரு மகளாகி ஓர் அரசனது உயிரை ஒத்த சிறந்த பூம் கொடி போன்ற மனைவியாய்
நெடும் காலத்து அழிவு இல் இன்பம் -பல நாள் குறைவில்லாத சிற்றின்பத்தை
மேவி குடும்பத்து இடும்பை எல்லாம் எய்தி விட்டனனே —
அடைந்து குடும்பங்களில் உண்டாகின்ற துன்பங்களை எல்லாம் அடைந்தான்

———————————————————————–

தண் துளவம் புனைதார் அரங்கா ஐவர் தையலுக்கு
வண் துகில் ஓன்று அவைக்கண் உற்ற போது தன் மன்னர் முன்னே
கண் துளி சோரத் தொழுது நின் பேர் கட்டுரைத்த பின்னை
ஒண் துகில் கோடி குவிந்தது எம்மாயம் உரிந்து உரிந்ததே –68-

ஸ்திரீகளுக்கு பர்த்தாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் தர்ம புத்ராதிகள் பக்கலிலும் நளன் பக்கலிலும் காணலாம் -பிரபன்ன பரித்ராணம்
அரை குலைய தலை குலைய அலமாக்கும் படியான முடி சூடின பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறாள்
தன் ஆஸ்ரிதரை நோவு பட விட்டிருக்கும் அவனையோ நாம் ஆஸ்ரயிக்கிறது
நீ கோவிந்த பட்டாபிஷேகம் பண்ணி கொப்தாவாய் இருக்க ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி இருப்பது என்
கோவிந்தா நீ ஆஸ்ரய ரஷணத்தில் தீஷித்து இருக்க -கிருஷ்ணாஸ்ரயா -என்று இருக்கிற என்னை கிருபை பண்ணாது ஒழிகிறது என்
நாராயணா என்று உன் சிறு பேரையோ நான் சொல்லிற்று
உன்னிலும் அதிகமான பேரை அன்றோ நான் சொல்லிற்று
கோவிந்தா என்னுடைய ரஷணத்துக்கு நீ மலை எடுக்க வேணுமோ -கண்ணாலே நோக்க அமையாதோ

—————————————————————-

இசை அளவிட்ட அரங்கேசர் ஐவர் தம் ஏவலின் போய்
வசை அளவிட்ட மகிபன் முன்னே வளரும் திரள் தோள்
திசை அளவிட்டன பார் அளவிட்டன சேவடி வான்
மிசை அளவிட்டன பொன் முடி மேல் என் விளம்புவதே –69-

இசை-கீர்த்தி யானது
அளவிட்ட -எல்லா உலகங்களிலும் சென்று சேரப் பெற்ற
அரங்கேசர்
ஐவர் தம் ஏவலின் போய் -பஞ்ச பாண்டவர்களின் கட்டளை படி தூது சென்று
வசை அளவிட்ட-இகழ்ச்சி சொற்களை மிகுதியாகச் சொல்லிய
மகிபன் முன்னே வளரும் -துரியோதனன் முன்பே மேன்மேலும் வளர்ந்த
திரள் தோள் -திரண்ட அவரது தோள்கள்
திசை அளவிட்டன -திக்குகளை அளாவின
பார் அளவிட்டன சேவடி வான் -சிவந்த திருவடிகள் பூமியை அளாவின
மிசை அளவிட்டன பொன் முடி
பொன் மயமான கிரீடம் அணிந்த தலைகள் மேலாக தேவ லோகத்தை அளவிட்டன
மேல் என் விளம்புவதே -இதனினும் மேலாக யான் எண்ண சொல்வது
பாண்டவ தூதன் உடைய விஸ்வரூபம் பற்றி அருள்கிறார்

——————————————————————-

மா இரு ஞாயிறு பாரதப் போரில் மறைய அங்கன்
பாய் இருள் நீ தந்தது என்ன கண் மாயம் -பவள நெற்றிச்
சேய் உயர் மா மதில் சூழ் அரங்கேச திரண்டு உதித்த
ஆயிர கோடி திவாகரன் போல் ஒளிர் ஆழி கொண்டே -70-

பவள நெற்றிச் சேய் உயர் மா மதில் சூழ் அரங்கேச
பாரதப் போரில் திரண்டு உதித்த ஆயிர கோடி திவாகரன் போல் ஒளிர் ஆழி கொண்டே
மா இரு ஞாயிறு மறைய அங்கன்பாய் இருள் நீ தந்தது என்ன கண் மாயம் -என்று அன்வயம்
ஸூ தர்சனம் பாஸ்கர கோடி துல்யம்
மம ப்ராணா ஹி பாண்டவ -சயத்திரனைத் தொலைக்க தனது வாக்கை பொய்ப்பித்து பீஷ்மர் வாக்கை காத்து அருளினான்-

———————————————————————-

நெட்டரவின் பெரு மூச்சு எழ வீசு நெருப்பில் வெந்து
பட்ட கடம்பும் தழைத்தது மீள பசும் துளவின்
மட்டு அவிழ் தொங்கல் பொற்றாள் பட வாளி வெந்தீச்
சுட்ட கருங்கட்டையும் பெற்றது அரு உயிர் சொல்வது என்னே –71-

பசும் துளவின் மட்டு அவிழ் தொங்கல் பொற்றாள் பட
நெட்டரவின் பெரு மூச்சு எழ வீசு நெருப்பில் வெந்து
பட்ட கடம்பும் மீள தழைத்தது
வாளி வெந்தீச் -அஸ்வத்தாமா ஏவிய அச்த்ரத்தின் கொடிய நெருப்பினால்
சுட்ட கருங்கட்டையும் பெற்றது -மீள -ஆர் உயிர் -அரு உயிர் சொல்வது என்னே -பரிஷித்து மகாராஜர் ஆனாரே –

——————————————————————

தாளால் சகம் கொண்ட தார் அரங்கா பண்டு சாந்திபன் சொல்
கேளா கடல் புக்க சேயினை மீட்டதும் கேதமுடன்
மாளாப் பதம் புக்க மைந்தரை மீட்டதும் மாறு அலவே
மீளாப் பதம் புக்க பாலரை நீ அன்று மீட்டதற்கே –72-

தாளால் சகம் கொண்ட தார் அரங்கா
பண்டு சாந்திபன் சொல் கேளா கடல் புக்க சேயினை மீட்டதும் –
கடலில் புக்க சாந்திபன் பிள்ளையை மீட்டுக் கொண்டு கொடுத்து அருளியதும்
கேதமுடன் மாளாப் பதம் புக்க-புகுதற்கு அறிய பாதாள லோகத்தை
மைந்தரை மீட்டதும்-இரணிய கசிபுவின் குமாரரும் தேவகியின் கர்ப்பத்தில் சேர்ந்தவரும் ஆகிய அறுவரையும்
தனது தாயான தேவகி காணும் படி கொண்டு வந்து கொடுத்ததும்
மீளாப் பதம் புக்க பாலரை நீ அன்று மீட்டதற்கே மாறு அலவே –
அந்நாளில் மீளா வைகுந்தம் அடைந்த விதிக்க புத்ரரை திரும்பவும் கொண்டு வந்து கொடுத்ததற்கு ஒப்பாக மாட்டா –

—————————————————————-

பொரும் கேதனப்படை மன்னரை மாய்த்து புவி மடந்தை
பெரும் கேதம் நீக்கி நடந்தது மீள பிறங்கு புள்ளின்
வரும் கேசவன் சக்கர மாயோன் அரங்கன் வரவிடுத்த
கருங்கேசம் ஓன்று தன் இச்சையிலே செய்த காரியமே –73-

பொரும் கேதனப்படை-மன்னரை மாய்த்துபொற் செய்கின்ற துவசங்களோடு கூடிய படையை யுடைய அரசரை அழித்து
புவி மடந்தை -நில மகளது
பெரும் கேதம் நீக்கி
கேதம் -அதிக பாரம் பொறுக்க மாட்டாமையால் விளைந்த துன்பம்
மீள நடந்தது- திரும்ப தன்னுடைச் சோதிக்கு நடந்த சேஷ்டிதம்
பிறங்கு புள்ளின் வரும் கேசவன் சக்கர மாயோன் அரங்கன்
பெரிய திருவடி மேல் எழுந்து அருள்கின்ற -திருமால்
வரவிடுத்த கருங்கேசம் ஓன்று தன் இச்சையிலே செய்த காரியமே –
வரும்படி அனுப்பி அருளிய கரிய உரோமம் ஓன்று தனது இச்சையின் படி செய்து அருளிய தொழிலாகும் –
பூமி பாரம் நீக்கி அருளி திருவவதாரம் முடித்ததை அருளிச் செய்து கிருஷ்ணாவதார பாசுரங்களை நிகமிக்கிறார் –

————————————————

ஸ்ரீ வேத வியாசாவதாரம்

அராவணையில் துயில் தென் அரங்கா மறை ஆயும் வண்ணம்
பராசரன் மா மகன் ஆகிய நீ பண்டு பாரதப் போர்
பொரா விழும் நூற்றுவர் சேனை எல்லாம் புனல் கங்கை வெள்ளத்
தராதல மேல் வரக் காட்டியவா தந்தை சந்திக்கவே –74-

அராவணை யில் துயில் தென் அரங்கா
மறை ஆயும் வண்ணம் -வேதங்களை ஆராய்ந்து சீர் திருத்தும் படி –பகுத்து அருளி
பராசரன் மா மகன் ஆகிய நீ
பண்டு பாரதப் போர் பொரா விழும் நூற்றுவர் சேனை எல்லாம்
போர் செய்து
இறந்து கிடந்த துரியோதனாதியர் நூற்றுவரது எல்லாச் சேனைகளையும்
தந்தை சந்திக்கவே –
அவர்களது தாதையாகிய திருதராட்டிரன் கூடிக் காணும் படி
புனல் கங்கை வெள்ளத் தராதல மேல் வரக் காட்டியவா
கங்கா ஜலத்தின் பிரவாக இடத்தின் மேல் வரும்படி காண்பித்த விதம் தான் என்னே –

————————————————————————

கல்கி திருவவதார வைபவம் –

தருமந்தவிர்ந்து பொறை கெட்டு சத்தியம் சாய்ந்து தயை
தெருமந்து தன் பூசனை முழுதும் சிதைய கலியே
பொரும் அந்தக் காலக் கடையினில் எம்பொன் அரங்கன் அல்லால்
அருமந்த கற்கி என்று ஆரே அவை நிலை ஆக்குவரே –75–

தருமந்தவிர்ந்து பொறை கெட்டு சத்தியம் சாய்ந்து
தயை தெருமந்து -அருள் நிலை கலங்கி
தன் பூசனை முழுதும் சிதைய -தன் திருவாராதனை முழுவதும் கெட
கலியே பொரும் -பாவமே வெல்லுகின்ற
அந்தக் காலக் கடையினில் -அந்தக் கலியுகத்தின் முடிவில்
எம்பொன் அரங்கன் அல்லால்
அருமந்த-கிடைத்தற்கு அரிய தேவாம்ருதத்தை ஒத்த
கற்கி என்று ஆரே அவை நிலை ஆக்குவரே –தர்மம் முதலியவற்றை வேறு யார் தான் நிலை பெறச் செய்வர் -ஒருவரும் இல்லை –
தர்ம சம்ச்தாபனமே முக்கிய காரணம் என்றவாறு –

————————————————————————-

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply