ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்து மாலை –76-112-

அந்தர்யாமி வைபவம்

தெள்ளும் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் சிலாகிக்குமாறு
எள்ளும் கரந்து உரை எண்ணெயும் போல் எண் இல் கோடி அண்டத்து
உள்ளும் புறம்பும் ஒழியாது நின்றும் உகங்கள் தொறும்
கொள்ளும் திரு உரு எல்லாம் அவர் அறி கோலங்களே –76-

சேதன அசேதனங்கள் அனைத்துடன் பிரியாமல் உடன் உறைகின்றான்
யுகங்கள் தொறும் சாது ரஷணத்துக்கும் துஷ்ட நிரசனத்துக்கும் தர்ம சமஸ்தானத்துக்கும் இச்சையினால் எடுத்த திருவவதாரங்களே-

—————————————————————————

தத்துவ உண்மை

உம்பர்க்கு அரிய பெருமாள் அரங்கர் தம் உண்மை எல்லாம்
இம்பர்க்கு உலகில் வெளியிட்டவே சரண் இல்லை என்று ஓர்
கும்பக் கட கயம் கூப்பிடச் சென்றதும் கோளரியாய்த்
தம்பத்து உதித்ததும் தாழிக்கு வீட்டினைத் தந்ததுமே –77-

ஓர் கும்பக் கட கயம் சரண் இல்லை என்று கூப்பிடச் சென்றதும் -குடம் போன்ற மஸ்தகத்தை யுடைய
ஒப்பற்ற கஜேந்திர ஆழ்வான்-தடாகத்தில் முதலையால் பிடிப்புண்டு நினது உபய சரணம் அல்லால் வேறு சரண் இல்லை என்று அழைக்க
சென்றதும் -பெரிய திருவடியின் மேல் ஏறி அத்தை ரஷித்து அருள போனதும்
கோளரியாய்த் -வலி மிக்க நரசிங்கமாய்
தம்பத்து உதித்ததும் -கம்பத்தில் திருவவதரித்ததும்
தாழிக்கு வீட்டினைத் தந்ததுமே -தயிர் பாண்டனது தயிர் தாழிக்கு பரம பதத்தை கொடுத்து அருளியதும்
உம்பர்க்கு அரிய பெருமாள் அரங்கர் தம் உண்மை எல்லாம் இம்பர்க்கு உலகில் வெளியிட்டவே-
தேவர்களுக்கும் காணுதற்கு அரிய பெரிய பெருமாளது தத்துவத்தின் இரகசியங்களை எல்லாம் இவ் வுலகத்தார்க்கு வெளிப்படுத்தி விட்டன –
இவனே பரம் பொருள் என்றும் -அந்தர்யாமித்வமும் -மோஷ பிரதத்வமும் அன்பர்க்கு எளிய பெருமாள் -என்பதும்
வெள்ளிடை மலை போல் தெள்ளியதாக புலன் ஆனதே

————————————————————————–

எம்பெருமானது பரிகாரங்கள் -ஏவல் செய்வோர் –

பொங்கு அரவு எனபது மெல் அணை ஊர்தி வெம் புள் அரசு
பங்கய மின்னொடு பார்மகள் தேவி படைப் பவன் சேய்
கிங்கரர் விண்ணவர் சாதக நாடு இறை கேடில் ஒன்றாய்
அம் கண் நெடும் புவி எல்லாம் இடந்த அரங்கருக்கே –78-

சாதக நாடு இறை-பரம பதம் வீற்று இருக்கும் இடம் -உபாசனையால் பெறுதற்கு உரிய நாடு -என்றவாறு –

—————————————————————-

இதுவும் அது –

சிங்காதனம் பொற் கிரி திரு மஞ்சனம் தெய்வ விண் நீர்
கொங்கு ஆர் தொடை உடுத் தாமம் சுடர் உடைக் கோள் விளக்கம்
பொங்கு ஆழி மண் திருப் போனகம் ஆக்கினர் புண்டரிகை
தம் காதலர் நம் பெருமாள் அரங்கர் தமக்கு முன்னே –79-

புண்டரிகை தம் காதலர் நம் பெருமாள் அரங்கர் தமக்கு முன்னே-முற்காலத்தில் திருமகள் கேள்வராகிய நம்பெருமாள் அரங்கர்
சிங்காதனம் பொற் கிரி-மேரு மலையை சிங்கா சனமாயும்
திரு மஞ்சனம் தெய்வ விண் நீர் -கங்கையை திரு அபிஷேகமாயும்
கொங்கு ஆர் தொடை உடுத் தாமம் -நஷத்ரங்களின் வரிசையை வாசனை நிறைந்த மாலையையும்
சுடர் உடைக் கோள் விளக்கம் -ஒளியை யுடைய கிரகங்களை தீப்மாகவும் -சூரிய சந்த்ரர்கள் என்றுமாம் –
பொங்கு ஆழி மண் திருப் போனகம் ஆக்கினர்-பொங்குகின்ற கடல் சூழ்ந்த பூமியை இனிய உணவாகவும் செய்து கொண்டார்-

——————————————————————

தேவிமார்களின் சிறப்பு –

தேமா மலர்க்கயம் சூழ் கோயில் மேவும் திரு அரங்கர்
தாம் ஆதரித்த திருத்தேவி மாரில் தரங்க உடைப்
பூ மாது நாளும் புரத்தே சுமந்து புரக்கும் மலர்
மா மாது செல்வம் கொடுத்தே உயிர்களை வாழ்விக்குமே –80-

தேமா மலர்க்கயம் சூழ் கோயில் மேவும் திரு அரங்கர்
தாம் ஆதரித்த திருத்தேவி மாரில்
தரங்க உடைப் பூ மாது -கடலை உடுக்கும் ஆடையாக யுடைய நில மகள்
நாளும் -எந்நாளும்
புரத்தே சுமந்து புரக்கும் -தனது உடம்பின் மேலே தாங்கி காப்பாற்றுவாள்
மலர் மா மாது செல்வம் கொடுத்தே உயிர்களை வாழ்விக்குமே –
தாமரையில் தோன்ற திரு மகள் அவ் உயிர்கட்கு செல்வம் கொடுத்து காப்பாற்றுவாள்
ஸ்ரீ தேவியும் பூ தேவியும் விட்டுப் பிரியாமல் உடன் உறைவர் -அவனது காக்கும் தொழிலுக்கு ஏற்ற செயல்களை செய்து அருள்வார்கள் –

——————————————————————

திருவெட்டு எழுத்து -பெரிய திருமந்திரம்

நம் பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் புரோகிதர் சூழ் வினை தார் அணிவாள்
வெம்படை மாசுணம் மா மத வேழம் விடம் தழல் கால்
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே –81-

மகா மாயாவியான சம்பாசுரன் செய்த மாயைகளை எல்லாம் திரு வாழி யாழ்வான் தகித்து சாம்பராக்கி விட்டதனால் சம்பரன் மாயமும்
புரோகதர் உண்டாக்கி மேலே ஏவின கிருத்யை வந்து ஒன்றும் செய்ய மாட்டாதே திரும்பிப் போய் அந்த புரோகிதர் மேலே விழுந்து
தகிக்க ஆரம்பித்ததனால் புரோகிதர் சூழ் வினையும்
அங்கு இருந்த அசுரர்கள் ஆயுதங்களை எடுத்து பிரயோகிக்க அதனால் வேதனை உறாமல் விளங்கியதால் தாரணி வாள் வெம்படையும்
கொடிய மகா சர்ப்பங்கள் -மா சுணமும் – மா மத வேழமும் -விஷமும் -தழல் கால் அம்பரம் முதலானவை என்றதால் பர்வதம் முதலியனவையும்-என்றவாறு –
சர்வ வேதாந்த சாரார்த்தஸ் -சம்சார ஆர்ணவ தாரக –கதி அஷ்டாஷர உன்ரூணா மபுநர்ப்பவ காங்ஷிணாம்-
குலம் தரும் செல்வம் தந்திடும் இத்யாதி

————————————————————-

துவாதசாஷர மகா மந்திரம் –

அத்தா அரங்கத்து அமர்ந்தவனே எழுத்து ஆறு இரண்டின்
வித்து ஆய நின் அருள் கொண்டு அல்லவோ -விளைவு ஓன்று அறிய
உத்தான பாதன் மகன் சலியாது உலகு உள்ளளவும்
எத்தார கைக்கும் முனிவர்க்கும் மெல் சென்று இருக்கின்றதே –82-

சூரிய குலத்தில் உத்தானபாக மகாராசன் குமாரன் துருவன் சஞ்சலம் இல்லாமல் லோகம் உள்ளவரையிலும்
மேல் ஸ்தானம் சென்று அடைந்து இருப்பது -ஸ்ரீ த்வாதச அஷர விதையாகிய உனது அருள் கொண்டே –
விளைவு ஓன்று அறியா -துருவனுக்கும் உத்தான பாதனுக்கும் இயையும்-இளையாள் மேல் பஷபாதம்
காட்டியதால் பெரும் தீங்கு விளைய காரணம் ஆனான் என்றவாறு –

————————————————————————————

திருவாயுதங்கள்-

புடைக்கும் குடமுலைப் பூ மகளார் தம் பொருட்டு முந்நீர்
அடைக்கும் பெரிய பெருமாள் அரங்கர் அவர் கரத்துப்
படைக்கும் கமலம் அளிக்கும் மின் ஆழிப்படை படைக்கும்
துடைக்கும் கதை முத்தி மாற்றாது நல்கும் சுரி சங்கமே –83-

புடைக்கும் குடமுலைப் பூ மகளார் தம் பொருட்டு –
மேன் மேல் பருக்கின்ற குடம் போன்ற தனங்களை யுடைய -இராவணனால் அபகரிக்கப் பட்ட ஜானகிப் பிராட்டியை மீட்பதற்காக
பூ மகள் -தாமரைப் பூ வில் உள்ள திருமகள்-சீதா பிராட்டி இலக்குமியின் அம்சம் – -பூமியின் மகள் ஜானகி என்றுமாம்
முந்நீர் அடைக்கும்-கடலை திரு வணை கட்டி அருளிய
பெரிய பெருமாள் அரங்கர் அவர்
கரத்துப் படைக்கும் -திருக்கரத்திலே தரிக்கின்ற
கமலம் அளிக்கும் -தாமரை மலர் காக்கும்
மின் ஆழிப்படை படைக்கும் -மின்னல் போல் விளங்கும் சக்ராயுதம் உலகங்களை சிருஷ்டிக்கும்
துடைக்கும் கதை -கதாயுதம் அழிக்கும்
முத்தி மாற்றாது நல்கும் சுரி சங்கமே -உள்ளே சுழியை யுடைய வலம் புரி சங்கம் பரம பதத்தை கைம்மாறு கருதாமல் கொடுக்கும் –

—————————————————————-

திருச் சக்கரப்படை –

ஞாலத் திகிரி முது நீர்த் திகிரி நடாத்தும் இந்தக்
காலத் திகிரி முதலான யாவும் -கடல் கடைந்த
நீலத் திகிரி அனையார் அரங்கர் நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலை நாளினில் கொண்ட கோலங்களே –84-

ஞாலத் திகிரி-பூ சக்கரமும்
முது நீர்த் திகிரி -ஜல சக்கரமும்
நடாத்தும்-இவற்றை நடாத்துகின்ற
இந்தக் காலத் திகிரி -இந்தக் காலச் சக்கரமும்
முதலான யாவும் -மற்றும் சிம்சுமார சக்கரம் போன்றவை
கடல் கடைந்த நீலத் திகிரி அனையார் -திருப் பாற் கடலைக் கடைந்து அருளிய நீல மலையை ஒத்தவராகிய
அரங்கர் நிறைந்த செங்கைக் -திருவரங்கரது உத்தம இலக்கணங்கள் அமைந்த சிவந்த வலது திருக் கையிலே தரித்த
கோலத் திகிரி -அழகிய சக்கரம்
தலை நாளினில் கொண்ட கோலங்களே –முக்காலத்திலே எடுத்த திரு உருவங்கள் ஆகும் –

——————————————————————–

இதுவும் அது –

மோதித் திரை தவழ் நல் நீர் அரங்கர் முடி முதலாம்
சாதிக் கதிர் மணிப் பேர் அணி ஆகி தனஞ்செயன் போர்
பேதித்து இரவு பகல் ஆக விண்ணில் பிறழ்ந்து செங்கேழ்ச்
சோதித் திகிரி திருமேனி எங்கும் சுடர் விடுமே –85-

மோதித் திரை தவழ் நல் நீர் அரங்கர் -அலை எறிந்து வருகின்ற நல்ல காவேரி நதியால் சூழப் பட்ட திரு வரங்க நாதரது
செங்கேழ்ச் சோதித் திகிரி -சிறந்த நிறம் அமைந்த ஒளியை உடைய சக்கரமானது
தனஞ்செயன் போர்-அர்ஜுனன் உடைய பதினான்காம் நாள் யுத்தத்திலே
ராஜ ஸூ யா யாகத்துக்கு அரசர்களை வென்று தனம் கொண்டு வந்ததால் தனஞ்செயன்-பெயர் பெற்றான் –
இரவு பகல் ஆக பேதித்து
முடி முதலாம் சாதிக் கதிர் மணிப் பேர் அணி ஆகி
இரத்தினங்களால் ஆகிய பெரிய ஆபரண கோடியிலே யாய்
விண்ணில் பிறழ்ந்து திருமேனி எங்கும் சுடர் விடுமே –
ஆகாயத்தில் விளங்கி அவரது திருமேனி முழுவதும் ஒளி வீசும் –

—————————————————————–

திரு வநந்த வாழ்வான் –

ஓல் ஆழி சூழ் புவி உச்சியில் ஏந்தும் உகக் கடையில்
கால் ஆன நற்குண மூர்த்தியைக் காலும் அக்காலம் எல்லாம்
மேலா விளங்கும் புவி மீதில் என் தன் விழுத்துணை ஆம்
மால் ஆம் அரங்க மணவாளர் கண் துயில் மாசுணமே –86-

என் தன் விழுத்துணை ஆம் -எனது சிறந்த துணை யாகிய
மால் ஆம் அரங்க மணவாளர் கண் துயில் மாசுணமே —
ஆச்சர்ய குண சேஷ்டிதரான திருவரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் அழகிய மணவாளப் பெருமாள் யோக நித்தரை செய்வதற்கு இடமாகிய ஆதி சேஷன்-
ஓல் ஆழி சூழ் புவி -ஆரவாரத்தை யுடைய கடல் சூழ்ந்த பூமியை
உச்சியில் ஏந்தும் -தனது முடி மேல் தாங்கும்
உகக் கடையில் -யுகாந்த காலத்தில்
கால் ஆன நற்குண மூர்த்தியைக் காலும் –
தன் சுவாசத்தின் நின்றும் பொருந்திய நல்ல குணங்களை யுடைய காலாக்னி ருத்ர மூர்த்தியை யுண்டாக்கும்
அக்காலம் எல்லாம் -அந்த பிரளய காலம் முழுவதும்
மேலா விளங்கும் புவி மீதில்-பூமியின் மேல் வந்து விளங்கும்
பிரளயம் பொழுது அனைத்தையும் தகிக்கும் என்றவாறு

——————————————————————

இதுவும் அது –

சென்றால் குடை ஆம் கடல் புணை ஆம் திருத் தீவிகை ஆம்
நின்றால் இரு திருப் பாதுகை ஆம் நித்திரைக்கு அணை ஆம்
குன்றா மணி ஒளி ஆசனம் ஆம் புனை கோசிகை ஆம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசற்கு அரவு -அரசே –87-

சென்றால் குடை ஆம் கடல் புணை ஆம் -திருப் பள்ளி மேத்தையாம்
திருத் தீவிகை ஆம் -விளக்கு இட்டுக் காண அபேஷிதம் ஆன பொழுது மங்கள தீபம் ஆகும்
நின்றால் இரு திருப் பாதுகை ஆம்
நித்திரைக்கு அணை ஆம்
குன்றா மணி ஒளி ஆசனம் ஆம்
புனை கோசிகை ஆம் -பும்ச்த்வ அவஹமாகிய அழகிய திருப் பரிவட்டமாம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசற்கு அரவு -அரசே —
சென்றால் குடையாம் இத்யாதி -நிவாசா செய்யா ஆசன இத்யாதி
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதை யதோ உசிதம் சேஷ இதீர்ய தேஜ நை

——————————————————————————–

பெரிய திருவடி

சிரம் சேதனன் விழி தேகம் சிறை பின் சினை பதம் கந்
தரம் தோள்கள் ஊரு வடிவம் பெயர் எசுர் சாமமும் ஆம்
பரந்தே தமது அடியார்க்கு உள்ள பாவங்கள் பாற்றி அருள்
சுரந்தே அளிக்கும் அரங்கர் தம் ஊர்திச் சுவணனுக்கே–88-

பரந்தே தமது அடியார்க்கு உள்ள பாவங்கள் பாற்றி அருள் சுரந்தே அளிக்கும் அரங்கர் தம் ஊர்திச் சுவணனுக்கே
தமது பக்தர்களுக்கு பரவி இருக்கின்ற தீ வினைகளை அழியச் செய்து கருணை பொழிந்து அருள்கின்ற நம் பெருமாளது வாகனமாகிய பெரிய திருவடிக்கு
சிரம் சேதனன்-தலை உயிர்
விழி தேகம்-கண்கள் உடல்
சிறை பின் சினை -சிறகுகள் பின் புறம்
பதம் கந்தரம் -பாதங்கள் கழுத்து -தலையைத் தரித்து இருப்பதால் கழுத்துக்கு காரணப் பெயர் கந்தரம்
தோள்கள் ஊரு -தோள்கள் தொடை
வடிவம் பெயர் -வடிவம் திருநாமம்
இவைகள் எல்லாம் -எசுர் சாமமும் ஆம் -யஜூர் சாம வேத ஸ்வரூபங்கள் ஆம்
வேதாத்மா விஹகேச்வர
வன்னாதப் புள்
ஸூ பரணன் -அழகிய சிறகுகளை யுடையவன்

————————————————————————

சேனை முதலியார் –

ஆளில் அமரர் அரங்கேசர் சேவைக்கு அணுகும் தொறும்
கோளின் திரளை விலக்கும் பிரம்பின் கொனை படலால்
தோளில் அடித் தழும்பு உண்டு அச்சுரர்க்கு அச்சுரர் தொழலால்
தாளில் முடித் தழும்பு உண்டு நம் சேனைத் தலைவருக்கே –89-

ஆளில் அமரர் -தேவர்கள் அடிமை செய்வதற்காக
அரங்கேசர் சேவைக்கு அணுகும் தொறும்-சமீபிக்கும் பொழுது எல்லாம்
கோளின் திரளை விலக்கும்-வலிமையை யுடைய கூட்டத்தை விலக்குகின்ற
பிரம்பின் கொனை படலால் -திருப் பிரம்பின் நுனி தாக்குதலால்
தோளில் அடித் தழும்பு உண்டு அச்சுரர்க்கு -அச்சுரர் தொழலால்
அந்த தேவர்களுக்கு -அத்தேவர் வணங்குதலால் -தோளில் அடித் தழும்பு காயம் உண்டு
தாளில் முடித் தழும்பு உண்டு நம் சேனைத் தலைவருக்கே —
நமது சேனை முதலியார்க்கு திருவடிகளிலே அத்தேவர்கள் உடைய கிரீடங்கள் பட்ட காயம் உண்டு –

———————————————————-

சிறிய திருவடி –

ஆதித் திரு எழுத்து ஐந்து உடைத்தாயும் அரா அணிந்தும்
சோதித் திருக் கண்கள் மூன்றுடன் தோன்றும் சுருதி சொன்ன
நீதிக்கு இசைய நடவா மனிதரை நேமி கொண்டு
வாதித் தருளும் பெருமாள் அரங்கர் தம் வாகனமே –90-

ஆதித் திரு எழுத்து ஐந்து உடைத்தாயும் -முதன்மையாகிய பஞ்சாஷர மகாம் மந்த்ரத்தை யுடைத்தாயும் –
அரா அணிந்தும் -சர்ப்பங்களை ஆபரணமாக அணிந்தும்
சோதித் திருக் கண்கள் மூன்றுடன் தோன்றும் -சூரிய சந்திர அக்னிகள் ஆகிய மூன்று கண்கள் உடனும் தோன்றும்
சுருதி சொன்ன நீதிக்கு இசைய நடவா மனிதரை-வேதங்கள் கூறிய விதி விலக்குகளுக்கு பொருந்தும்படி நடவாத மனிதரை
நேமி கொண்டு வாதித் தருளும் பெருமாள் அரங்கர் தம் வாகனமே –

பரமசிவன் அம்சம் -பஞ்சாஷரம் சிவா மந்த்ரம் -புராரி மற்றியானே வாத சேய் எனப் புகன்றான் -கம்பர் –

———————————————————–

இதுவும் அது –

வல் ஆம் முலைத் திருவின் பெருமான் விட்ட வாகனம் போய்
தொல் ஆழி நீரைக் கடந்தது தாளின் சுடர் இரண்டும்
செல்லாத ஊரைத் திரி புரம் கண்டது சேனை வெள்ளம்
எல்லாம் உயக் கொண்டது மருந்து ஆர் கிரி ஏந்தி வந்தே –91-

வல் ஆம் முலைத் திருவின் பெருமான் விட்ட வாகனம் போய்
சூதாடு கருவியை ஒத்த தனங்களை யுடைய திரு மகளுக்கு தலைவனான நம் பெருமாள் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் பிராட்டியை தேட அனுப்பிய தமது வாகனம் ஆகிய சிறிய திருவடி போய்
தொல் ஆழி நீரைக் கடந்தது தாளின் -பழைய சமுத்திர ஜலத்தை தனது பாதங்களால் தாண்டிற்று
சுடர் இரண்டும் செல்லாத ஊரைத் திரி புரம் கண்டது –
சூர்ய சந்த்ரர்கள் இருவரும் இராவண ஆஜ்ஞ்ஞையால் நுழைந்தும் அறியாத இலங்கையை திரி புரங்களைப் போலே எறியச் செய்தது
யுத்தம் நடந்த பொழுது
சேனை வெள்ளம் எல்லாம் உயக் கொண்டது மருந்து ஆர் கிரி ஏந்தி வந்தே –
சஞ்சீவி என்னும் ஔஷதி உள்ள துரோணம் என்னும் மலையை எடுத்துக் கொண்டு வந்து
ஸ்ரீ இராமபிரானது எழுபது வெள்ளம் சேனைகளையும் பிழைக்கச் செய்தது

————————————————————–

ஸ்ரீ வைகுண்டம் –

தொல்லைக் கமடத் தலம் நவ கண்டம் தொடு கடல் நீர்
எல்லைக் கிரி தனக்கு இப்புறத்து எண் கிரி அப்புறத்தின்
மல்லைப் பரிதியின் மண்டலம் நாகம் அவ்வான் முகட்டூ ஊர்
அல் அப்புறத்து வைகுந்தம் பொற் கோயில் அரிக்கு இடமே –92-

தொல்லைக் கமடத் தலம் -ஆதி கூர்மம் தாங்குகின்ற கீழ் உலகம்
நவ கண்டம் -அதன் மேல் ஒன்பது கண்டங்கள்
தொடு கடல் நீர் -அவற்றைச் சூழ்ந்த சமுத்திர ஜலம் –
எல்லைக் கிரி -அவற்றைச் சூழ்ந்த சக்கர வாழ பர்வதம்
தனக்கு இப்புறத்து எண் கிரி-அதற்கு இப்புறத்திலே அஷ்ட குல பர்வதங்கள்
அப்புறத்தின்
மல்லைப் பரிதியின் மண்டலம் -வட்டமாகிய சூர்ய மண்டலம்
நாகம் -அதன் மேல் ஸ்வர்க்க லோகம்
அவ்வான் முகட்டூர் -அதன் மேல் அம மேல் உலகங்களின் உச்சியில் உள்ள சத்ய லோகம்
அல் -அதற்கு வெளியில் அந்தகாரம்
அப்புறத்து
வைகுந்தம் பொற் கோயில் அரிக்கு இடமே –மேல் உள்ள ஸ்ரீ வைகுந்தம் நம் பெருமாள் பரத்வம் தோன்றும்படி எழுந்து அருளி இருக்கும் இடமாகும்
வி குண்டா -ஞான சக்திகளில் குறை இல்லாத நித்ய ஸூ ரிகள் –

———————————————————–

இதுவும் அது

எந்த உலகத்தும் மேலது நித்திய இன்பத்தது
பந்தம் நசிப்பது நித்தரும் முத்தரும் பாரிப்பது
முந்தை மறையின் நின்று அல்லாது எத்தேவர்க்கும் முன்ன அரிது
அந்தம் இலது அரங்கன் மேவு வைகுண்ட மானதுவே –93-

முன்ன அரிது -நினைத்தற்கு அரியது -சிந்தையும் மொழியும் செல்லா நிலைமை –

————————————————————–

திருப் பாற் கடல் –

காவும் சுரபியும் சிந்தா மணியும் கடிக் கமலப்
பூவும் பணிலமும் பொங்கு இள மாவும் புகர்த்தடக்கைம்
மாவும் பிறையும் அமுதமும் எங்கன் மதில் அரங்கர்
மேவும் தரங்கக் கடல் இல்லை யாகில் இவ் விண்ணகர்க்கே –94-

காவும் சுரபியும் சிந்தா மணியும் கடிக் கமலப் பூவும்
கற்பகச் சோலையும் -காம தேனுவும் -வாசனை யுடைய தாமரை மலைந பேர் கொண்ட பதும நிதியும் –
பணிலமும் -சங்க நிதியும்
பொங்கு இள மாவும்-விளங்கும் இளைய உச்சைசசிரவம் என்னும் குதிரையும்
புகர்த்தடக்கைம் மாவும் -செம்புள்ளிகளை யுடைய பெரிய துதிக்கை யுடைய ஐராவதம் என்னும் யானையும்
பிறையும் அமுதமும்-சந்திரனும் அமிர்தமும்
எங்கன் மதில் அரங்கர் மேவும் தரங்கக் கடல்-
வியூக நிலையில் பள்ளி கொண்டு அருளும் அலைகளை யுடைய திருப் பாற் கடல்
இல்லை யாகில் இவ் விண்ணகர்க்கே —
தேவ லோக செல்வங்கள் எல்லாம் அமிர்தம் கடையும் பொழுது வந்தவையே –

————————————————————————

ஏழு மதில்களும் திருவரங்க விமானமும்

அருமறை ஓதிய ஓர் எட்டு எழுத்தும் அயன் படைத்த
இரு நில மீதினில், யாவரும் காண இலங்குதுத்திக்
குரு மணி நாகத்தில் எம் கோன் விழி துயில் கொண்டருள
திரு மதில் ஏழும் விமானமும் ஆகிச் சிறக்கின்றவே –95-

பிரணவாகார விமானம் இங்கேயே அனைவரும் காணும் படி -எழுந்து அருளி இருப்பதனால் -இரு நில மீதினில் –யாவரும் காண சிறக்கின்ற -என்கிறார் –

———————————————————————-

இதுவும் அது –

தாழாது இபம் சொல்ல வந்தார் அரங்கர் தயங்கு செம் பொற்
கேழா விமானம் கிளர் செம் பொன் மேரு கிரி -நிகர்த்த
ஏழ் ஆ வரணத்து இடை இடைத் தீவுகள் இவ் அனைத்தும்
சூழ் ஆறு மா கடல் எவ்வாறு நாம் இனிச் சொல்லுவதே –96-

தாழாது இபம் சொல்ல வந்தார் அரங்கர் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆதி மூலமே என்ன
அரை குலைய தலை குலைய விரைந்து எழுந்து அருளி காத்து அருளிய நம்பெருமாள்
தயங்கு செம் பொற் கேழா விமானம் -விளங்கும் செம்பொன் மயமாகிய விமானம்
கிளர் செம் பொன் மேரு கிரி –
நிகர்த்த ஏழ் ஆ வரணத்து இடை இடைத் தீவுகள் -சப்த த்வீபங்களை ஒத்த ஏழு மதில்கள்
இவ் அனைத்தும் சூழ் ஆறு மா கடல் -சொந்த காவேரி கடலை ஒத்தது
எவ்வாறு நாம் இனிச் சொல்லுவதே –பூ லோக வைகுண்ட மகிமையை வருணித்துச் சொல்ல இயலாது -என்றவாறு

—————————————————————————

சயனத் திருக் கோலம்

ஞாலத் திகிரி பகல் இரவு ஆக நடத்தும் இந்தக்
காலத் திகிரி நடக்க வற்றோ வெங்கனல் உமிழ்வாய்
ஆலப் பணி அணை மீதே அரங்கத்து அமர்ந்து உறையும்
நீலக் கடல் கண் விழித்து உறங்கா விடின் நிச்சமுமே –97–

அனைத்தும் நம் பெருமாள் சங்கல்பத்தாலே நடக்கும் என்றவாறு
ஜகத் ரஷண சிந்தை உடன் யோக நித்தரை செய்து அருள்கிறான் -உறங்குவான் போல் யோக நித்தரை செய்து அருள்கிறான்

————————————————————————

இதுவும் அது –

தாம் அக் கடை யுகத்துள்ளே விழுங்கி தரித்த பழம்
சேமப் புவனம் செரிக்கும் என்றே சிவன் மா முடிக்கு
நாமப் புனல் தந்த பொற்றாள் அரங்கர் நலம் சிறந்த
வாமத் திருக்கரம் மேலாகவே கண் வளர்வதுவே –98-

தாம் அக் கடை யுகத்துள்ளே-யுகாந்த காலத்திலேயே
விழுங்கி தரித்த பழம்சேமப் புவனம் செரிக்கும் என்றே
சிவன் மா முடிக்கு
நாமப் புனல் -பரிசுத்தமான கங்கா தீர்த்தத்தை
தந்த பொற்றாள் -உண்டாக்கிக் கொடுத்து அருளிய அழகிய திருவடிகளை யுடைய
அரங்கர் நலம் சிறந்த வாமத் திருக்கரம் மேலாகவே கண் வளர்வதுவே —
ஜாடராக்னியின் ஜ்வாலை பட்டு விழுங்கிய உலகங்கள் ஜீரணம் ஆகக் கூடாது என்று
வலக்கை கீழ் கொடுத்து இடது திருக்கை தமக்கு மேலாக கொண்டு கண் வளர்ந்து அருளுவதே

————————————————————-

திருக்கைகள் –

கதிர் ஆரும் நீள் முடி சேர்ந்த கைப்போது எக்கடவுளர்க்கும்
அதிராசன் ஆனமை காண்மின் என்றே சொல்லும் ஆய பொன்மா
மதில் ஆர் அரங்கர் பொற்றாள் ஆர் திருக்கரம் மற்று இதுவே
சதுரானன் முதல் எல்லா உயிர்க்கும் சரண் என்னுமே –99-

திருமுடியைச் சேர்ந்த முடக்கி வைத்த வலத் திருக்கை -எல்லா தேவர்க்கும் இவனே இறைவன் -என்பதையும்
திருவடியைச் சேர்ந்த நீட்டி வைத்த இடத் திருக்கை பிரமன் முதலிய எல்லா உயிர்கட்கும் இத்திருவடிகளே புகல் இடம் என்பதையும் காட்டி அருளும்
கதிர் ஆகு பெயரால் ஆயிரம் கிரணங்களைக் கொண்ட ஆதித்யனைக் காட்டும் -சூரியனை ஒத்து விளங்கும் நீண்ட கிரீடம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் நீண் முடியன் –

—————————————————————

வியூக மூர்த்தியே ஸ்ரீ ரெங்க நாதன் –

மோகத் துயில் புரி மெய் போலக் கண்ட முறையினுக்கு இங்கு
ஏகத் திரு உரு என்று அறிந்தேன் இந்திரியை அன்போடு
ஆகத்து வைத்தருள் தென் அரங்கா அங்கும் இங்கும் ஒக்கப்
போகத்துக் கொண்ட பண நாகம் ஓன்று பொறுத்த பின்னே –100-

மோகத் துயில் -பொய்த் துயில் யோக நித்தரை
புரி மெய் போலக் கண்ட -மெய்யாகச் செய்கின்ற துயிலைப் போலே செய்து அருள்கின்ற
முறையினுக்கு-தன்மைக்கு
இங்கு ஏகத் திரு உரு என்று அறிந்தேன்-அதுவும் இதுவும் ஒரு ரூபமே என்று அறிந்தேன்
இந்திரியை அன்போடு ஆகத்து வைத்தருள்-அன்புடனே பிராட்டியை திரு மார்பில் வைத்து அருள்கின்ற
தென் அரங்கா
அங்கும் இங்கும் ஒக்கப் -திருப் பாற் கடலிலும் திரு வரங்கத்திலும் ஒக்க
போகத்துக் கொண்ட பண நாகம் ஓன்று
-தனது உடலின் மேல் கொண்ட படங்களை யுடைய திரு வனந்த ஆழ்வான் -போகம் -ஆதி சேஷன் உடல் –
பொறுத்த பின்னே –தாங்கிய பின்பு –

————————————————————–

எம்பெருமானது திருமேனியின் நிறம் நீல நிறம்

சோதித் திரு உரு ஆகாயம் ஆக சுருதி நன்னூல்
சாதித்து நின்று தெளிந்து விட்டேன் மிக்க தானவரைச்
சேதித்த நேமித் திரு அரங்கா சங்கை தீர உன் தன்
ஆதித் திரு உருவின் பேர் அணி நிறம் ஆன பின்னே –101-

சோதித் திரு உரு ஆகாயம் ஆக சுருதி நன்னூல் சாதித்து நின்று -சங்கை தீர -தெளிந்து விட்டேன்
சிறந்த வேத சாஸ்திரங்களைப் பழகி நின்று உனது தேஜோ மயமான அழகிய ரூபம் ஆகாசம் போன்றது என்று ஐயம் அற தெளிந்து கொண்டேன்
மிக்க தானவரைச் சேதித்த -பெரும் கூட்டமான அசுரர்களை அழித்த
நேமித் திரு அரங்கா
உன் தன் ஆதித் திரு உருவின் -உன்னுடைய முதன்மையான திரு உருவத்தினது
பேர் அணி நிறம் ஆன பின்னே –பெரிய அழகிய நிறம் ஆகிய பின்பு
ஆகாயமும் சர்வ வியாபி -எம்பெருமான் பேர் ஒளி போலேவே

—————————————————————-

இது முதல் ஐந்து பாசுரங்கள் ஆனந்த அனுபவம்

ஓங்கார வட்டத்து மாசுணப் பாயில் உலோகம் உண்ட
பூங்கார் விழிக்குப் புலப்பட்டதால் எப்பொழுதும் என்னை
நீங்காது இடர் செய்யும் தீ வினை காள் இனி நின்று நின்று
தேங்காது நீர் உமக்கு ஆன இடத்தே சென்று சேர்மின்களே –102-

பிரணவாகார விமானத்துள் ஆதி சேஷன் ஆகிய சயனத்தில் லோகங்களை வயிற்றிலே வைத்து அருளிய அழகிய கார் மேகம்
எனது கண்களுக்கு புலப்பட்டது -ஆதலால் நீங்கள் எல்லாரும் இங்கு நிரைந்து நிற்காமல் அந்த காட்டிநிடத்தே சென்று சேர்மின்
நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் -பாசுரத்தை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

—————————————————————

விண் இட்ட சோலை அரங்கத்து மேவிய மெய்ப் பொருளை
கண்ட இட்ட பார்வையின் கட்டி என் கண் வரக் கண்டு உடலாம்
புண் இட்ட வண்ணக் குழியுள் பொதிந்து புறத்து வெள்ளை
மண் இட்டு இலச்சினை இட்டு விள்ளாது உள்ளம் வைத்தேனே –103-

பரதத்வம் திருவரங்கத்தில் என்னிடம் வரப் பார்த்து கண் வைத்த பார்வையினால்- ஊன் பொருந்திய சரீரம் ஆகிய
அழகிய சீலை யுள்ளே வைத்து மூடி வெளியே வெண்மையாக மண்ணை அப்பி முத்திரை வைத்து விட்டு நீங்காத படி மனத்திலே வைத்திட்டேன்
கட்டிப்பொன்னை கிழிச்சீரையில் வைத்து பத்திரப்படுத்தி பார்த்துக் கொண்டு இருப்பது போலே –
உடலின் மேல் புறம் திருமண் காப்பு சாத்தி -திரு இலச்சினை தரித்து இருப்பதால் -உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் -போலே
திரு வரங்க நாதனே மெய்ப்பொருள் –

——————————————————————

கைத்து பழ வினை தித்திக்க என் தன் கருத்தினுள்ளே
பைத்துத்தி மெத்தையின் மீதேயிலும் பைங்கேழ் எறிந்து
மைத்து குளிர்ந்து மதுரித்து மெத்தென்று மா மணத்து
நெய்த்து புகர்ந்து நிகர்க்கும் பொன் மேனி நெடுங்கடலே –104-

பைங்கேழ் எறிந்து மைத்து குளிர்ந்து மதுரித்து மெத்தென்று மா மணத்து
பசிய ஒளியை வீசி -கறுத்து குளிர்ந்து -இனியதாகி -மிருதுவாய் -மிக்க வாசனையும் வீசப் பெற்று –
சர்வ கந்த சர்வரச
நெய்த்து புகர்ந்து நிகர்க்கும் பொன் மேனி நெடுங்கடலே —
பளபளத்துக் கொண்டு -கபில நிறம் யுடையதாய் -இத்தன்மை எல்லாம் ஒத்து இருக்கின்ற பொன் போன்ற
திருமேனியை யுடைய பெரிய கடல் போன்ற நம் பெருமாளே –
கைத்து பழ வினை -பழைய இரு வினைகளையும் போக்கி
தித்திக்க என் தன் கருத்தினுள்ளே -என் மனத்துக்குள்ளே இனிக்கும் படி
பைத்துத்தி மெத்தையின் மீதேயிலும் -படங்களையும் புள்ளிகளையும் உடைய திரு வனந்த ஆழ்வான் -ஆகிய
சயனத்தின் மேலே யோக நித்தரை செய்து அருளுகிறார்
என் தன் கருத்தின் உள்ளே பொன்மேனி நெடும் கடல் துயிலும் –
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலுள் வாழ வல்ல மாய மணாளா நம்பி
உகந்து அருளின நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரத்தில் ஏக தேசத்தில் பண்ணும் –
அங்குத்தை வாசம் சாதனம் -இங்குத்தை வாசம் சாத்தியம் –

—————————————————————–

கருட சேவை –

தெள்ளா வரும் பொன்னி சூழ் அரங்கா ஒரு தேவரையும்
உள்ளாது எனது உள்ளம் யான் என் செய்வேன் விண்ணில் ஓர் உவணப்
புள் ஆகி வேதப் பொருள் ஆகி உன்னைத் தன் பொற் கழுத்தில்
கொள்ளா வருகின்ற கோலம் உள்ளே கண்டு கொண்ட பின்னே –105–

தெள்ளா வரும் பொன்னி சூழ் அரங்கா
விண்ணில் ஓர் உவணப்புள் ஆகி வேதப் பொருள் ஆகி உன்னைத் தன் பொற் கழுத்தில்
கொள்ளா வருகின்ற கோலம் உள்ளே கண்டு கொண்ட பின்னே —
ஒரு தேவரையும் உள்ளாது எனது உள்ளம் யான் என் செய்வேன்
கருட சேவை சேவித்த பின்பு வேறு ஒரு தேவரையும் தெய்வமாக என் மனம் மதியாது -தமது அநந்ய சரண்யத்வம் வெளியிடுகிறார்
தெளிவில்லாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கு ஒளியுளார்

————————————————————————-

முன்பு ஆலிலை மகவு ஆகிய போது இந்த மூதண்டங்கள்
உன்பால் ஒடுங்கி இருந்தது போலும் உத்தி மங்கைக்கு
அன்பா அரங்கத்து என் ஆர் அமுதே அணுவாய் இருந்தும்
என் பால் அகண்டமும் ஆகிய நீ வந்து இருக்கின்றதே –106-

உத்தி மங்கைக்கு அன்பா-திருப் பாற் கடலில் தோன்றிய திரு மகளுக்கு கேள்வனே –
உத்தியால் சூழ்ந்த மங்கை -நில மகள் கேள்வன் என்றுமாம்
அரங்கத்து என் ஆர் அமுதே
அணுவாய் இருந்தும் -என் மனம் அணுவாய் சிறுமையாய் இருந்தும்
என் பால் அகண்டமும் ஆகிய நீ வந்து இருக்கின்றதே —
சர்வ வியாபியாய் -எல்லாமுமாகிய நீ வந்து எழுந்து அருளி இருக்கின்ற தன்மை
முன்பு ஆலிலை மகவு ஆகிய போது-சிறிய குழந்தையாய் கிடந்தது அருளின போது
இந்த மூதண்டங்கள் உன்பால் ஒடுங்கி இருந்தது போலும்

————————————————————————–

பகவானைப் பிரார்த்தித்தல் –

வலைப்பால் விடம்பிணைக் கண்ணியர் போகத்தில் மாலுரும் என்
தலைப்பால் கழல் அருள் -தார் அரங்கா பல தாயார் தந்த
முலைப்பாற் கடல் உன் திருக் கழல் ஆணி வெண் முத்து எறியும்
அலைப்பாற் கடலில் அளவு ஆம் எனின் மற்று அதுவும் அன்றே –107–

தலைப்பால் கழல் அருள் –
தார் அரங்கா-திருத் துழாய் மாலையை யுடைய அரங்கா
பல தாயார் தந்த-முலைப்பாற் கடல்- -பல அவதாரங்களிலும் பல அன்னையர் கொடுத்த முலைப்பால் வெள்ளம் –
உன் திருக் கழல் ஆணி வெண் முத்து எறியும்
உனது திருவடிகளிலே மென்மையான வெள்ளிய முத்துக்களை வீசுகின்ற
அலைப்பாற் கடலில் அளவு ஆம் எனின் மற்று அதுவும் அன்றே –
அலைகளை யுடைய திருப் பாற் கடலின் அளவு ஆம் -என்றால் அதுவும் ஒப்பாக மாட்டாது
ஆதலால் இனி அப்பால் குடிக்கும் படி பிறவாதபடி
வலைப்பால் விடம்பிணைக் கண்ணியர் போகத்தில் மாலுரும் என்
வலையும்-ஆடவர்களை கவரும் வலையும் – அமிர்தமும் விஷமும் பெண் மான் கண்ணும் -ஆகிய இவை போன்ற கண்களை யுடைய மகளிரது
சிற்றின்பத்தில் பெரு மயக்கம் அடைகின்ற எனது தலையின் மேல் உனது திருவடிகளை வைத்து அருள்வாய்
பாலும் அமிர்தமும் விடமும் -என்றதால் பாற் கடலில் வந்த தேவாம்ருதமும் ஆலகால விஷமும் சொன்ன படி

—————————————————————————–

இதுவும் அது –

தொடை மாறனும் தமிழ் சொல் மாறனும் தொழ துத்தி வெள்ளைக்
குடை மா சுணத்தில் துயில் அரங்கேச குலவு வை வேல் படைமாறு
கொண்ட மைக் கண்ணியர் பால் வைத்த பாச நெஞ்சை
மடை மாறி உந்தன் திருவடிக்கே வர வைத்தருள் –108-

தொடை மாறனும் -வெப்பம் பூ மாலையை யுடைய பாண்டியனும் -ஸ்ரீ வல்லப தேவன் -பகைவருக்கு மாறாமல் இருந்தவன்
தமிழ் சொல் மாறனும் தொழ
துத்தி -படப் புள்ளி யுடைய
வெள்ளைக் குடை மா சுணத்தில் துயில் அரங்கேச-சென்றால் குடையாகுமே
குலவு வை வேல் படைமாறு கொண்ட மைக் கண்ணியர் பால் வைத்த பாச நெஞ்சை
மடை மாறி உந்தன் திருவடிக்கே வர வைத்தருள் —நெஞ்சு விஷயங்களில் பாய்ந்து செல்லுமே -அந்த பெருக்கை மடை மாற்றி -என்றபடி –

———————————————————————–

அநந்ய கதித்வமும் பிரார்த்தனையும் –

கரணம் தவிர்ந்து விழி போய்ச் சுழன்று கலங்கும் என் தன்
மரணம் தனில் வந்து உதவு கண்டாய் கொற்ற வாளி ஒன்றால்
அரணம் கடந்தவன் காணா அரங்க என் ஆர் உயிர்க்கு உன்
சரணம் சரணம் ஒழிந்து இல்லை வேறு இத் தராதலத்தே –109-

கரணம் தவிர்ந்து விழி போய்ச் சுழன்று கலங்கும் என் தன்
மரணம் தனில் வந்து உதவு கண்டாய்
கொற்ற வாளி ஒன்றால் அரணம் கடந்தவன் காணா அரங்க
வெற்றியை யுடைய பாணத்தினால் திரிபுரம் எரித்த பரமசிவனும் கண்டு அறியாத அரங்க
என் ஆர் உயிர்க்கு
உன் சரணம் சரணம் ஒழிந்து இல்லை வேறு இத் தராதலத்தே —
ஆதலால் நீ –
கரணம் தவிர்ந்து விழி போய்ச் சுழன்று கலங்கும் என் தன்
மரணம் தனில் வந்து உதவு கண்டாய் –
கரணங்கள் நிலை குலைந்து -கண் பார்வை மழுங்கி -மனம் சுழன்று -கலங்கும் -என் தன்- மரண காலத்தில் எழுந்து அருளி வந்து காத்து அருள்வாய்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் போலே -பிரபன்னனுக்கு அந்திம ஸ்ம்ருதி வேண்டாவே

————————————————————————

ஒன்றிலும் விருப்பம் இன்மை -நைரபேஷ்யம்-

நீடும் திகிரிப் படையாய் உனைக்கற்று நின்னை என்றும்
பாடும் படித் தமிழ்ப் பாடல் தந்தாய் பழ நான் மறை நூல்
தேடும் திரு அரங்கா அடியேன் உயிர் செல்லும் அந்நாள்
வீடும் தர இருந்தாய் எனக்கு எது இனி வேண்டுவதே –110–

ஜாயமான கடாஷத்தால் நிர்ஹேதுகமாக அருள் செய்தவற்றை அருளிச் செய்கிறார்
உனைக் கற்று -உனது திரு நாமங்களையும் வைபவங்களையும் கற்று
பாடல் தருதல் -பாசுரம் அனுக்ரகித்தல்
பேறு தப்பாது என்று துணிந்து அருளுகிறார் –

——————————————————————-

பிற தேவர்க்கு அடிமைப் பட்டு இராமை -அந்ய சேஷத்வ வ்ருத்தி-

ஆவைக் கல் ஆவை எதிர் என்று சொல்லி அழுக்கு அடைந்த
நாவைப் பரிசுத்தம் பண்ணியவே கஞ்ச நஞ்சன் விட்ட
கோவை சகட்டை பகட்டை பொருதிய கோயிலில் வாழ்
தேவைப் பகர்ந்த செஞ்சொல் திரு நாமங்கள் சிற் சிலவே –111-

கஞ்ச நஞ்சன் விட்ட
கோவை -எருதுவை
சகட்டை -சகடாசுரன்
பகட்டை -குவலயாபீடம் யானையையும்
பொருதிய கோயிலில் வாழ் -கொன்று வென்ற திருவரங்கம்
தேவைப் பகர்ந்த செஞ்சொல் திரு நாமங்கள் சிற் சிலவே —
ஆவைக் -உண்மையான பசுவையும்
கல் ஆவை-கல்லினால் செய்யப்பட பசுவையும்
எதிர் என்று சொல்லி அழுக்கு அடைந்த -ஒப்பு என்று கூறி அழுக்கு அடைந்த
நாவைப் பரிசுத்தம் பண்ணியவே –
திருநாம வைபவத்தால் அந்ய சேஷத்வம் கழிந்ததே

———————————————————————–

மனிதக் கவி மொழியா மங்கை வாள் மணவாள வள்ளல்
புனிதக் கவி கொண்டு மாலை செய்தான் புயல் போல் முழங்கும்
தொனி தக்க சங்கம் திருச் சக்கரம் சுடர் வாள் முசலம்
குனி தக்க சார்ங்கம் தரித்தார் அரங்கர் பொற் கோயிலுக்கே –112-

நர ஸ்துதி கவி பாடாத திருமங்கையில் வாழும் அழகிய மணவாள தாசன்
பரிசுத்தமான பாக்களால் இந்த திருவரங்க மாலையை அருளிச் செய்தார் –

——————————————————————————————————————————————

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading