கீழ் திருவாய் மொழி போலே இதுவும் தாய் பாசுரமாகச் செல்கிறது –
விரஹ தாபத்துக்கு உப சாரங்கள் பண்ணிக் கொண்டு இருந்த திருத் தாயார்
இவளைக் காணாமையாலே
திருக் கோளூர் எம்பெருமான் இடம் உள்ள ஆவலின் மிகுதியை அறிந்தவள் ஆகையால் அத திருப்பதிக்கே சென்று இருக்க வேண்டும்
என்று அறுதி இட்டுச் சொல்லும் திருவாய் மொழி –
ஆழ்வார் உடைய நித்ய சம்ச்லேஷம் பண்ண வேண்டும் என்கிற விருப்பம் இத் திருவாய் மொழியாக பரிணமித்து விட்டது போலும்
பேற்றுக்கு த்வரிக்கையும் பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் உண்டு இ றே
கள்வன் கொல் –பரகால நாயகி வயலாலி மணவாளன் திருக்கை பற்றி செல்வதை திருத்தாயார் கண்ணாலே கண்டு சொன்னது பொலொஎ
கள்வன் கொல்லில் இருவராய் போனமை சொல்கிறது
உண்ணும் சோறில் மகள் தனியே போனமை சொல்கிறது
இருவராய் போனவர்களுக்கு வயிறு எரிய வேண்டுவது அத்தனை அவசியம் அன்றே
தனியே வழி போனவளுக்கு அன்றோ அதிகம் வயிறு எரிய வேண்டுவது -என்று
முதலிகள் ஆளவந்தார் இடம் சொல்ல
அங்கன் அன்று காண்மின்
தனியே போனவளைப் பற்றி ஒரு பயமும் இல்லை
இருவராய் போன விடத்தில் தானே வயிறு எரிய வேணும் -என்று அருளினாராம்
இருவராய் போனவிடத்தில் பரஸ்பரம் வ்யாமோஹத்துக்கு ஊற்றுவாய் ஆகையாலே
ஒருவரால் ஒருவர் மயங்கி விழுந்து என்னாகுமோ -என்று வயிறு எரிய வேண்டிற்றாம் –
ஆனாலும் எங்கேனும் போகிலும்
இருவராய் அல்லாது இராது அங்கு –
தனியே போனவள் என் படுகிறாளோ என்று
மிகவும் நொந்து கூப்பிடுகிறாள்
இவளுடைய திருத் தாயார் -ஈடு
————————————————————————————————————————————————————————————————————————————-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க
மண்ணினுளவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என்னிளமான் புகுமூர் திருக் கோளூரே –6-7-1-
ரிஷிகளுக்கு காயோடு என்னும் இவையே தாரகாதிகள்
இவர்க்கு எல்லாம் கண்ணன் இ றே -நாயனார்
காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து -என்றும்
வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து -என்றும்
க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வ மிவோதிதம் -என்னும் இவர்க்கு உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான்-யாம் -என்றபடி
நிறைய உண்டவனுக்குகிடைத்த சோறு இல்லை பெரும் பசியனுக்கு கிடைத்த சோறு தானே உண்ணும் சோறு –
பெரு விடாயனுக்கு கிடைத்த நீர் -பருகும் நீர்
அது போன்ற அபி நிவேசம் ஆழ்வாருக்கு -என்பதால் அடை மொழிகள்
எல்லாம் கண்ணன் –
வாசுதேவஸ் சர்வமிதி ச மகாத்மா து துர்லப-கீஎதாச்சார்யன் -இழவு தீர வகுளாபரண மகாத்மாவ தோன்றினார்
பலகால் சொல்லி கண்ணநீர் மல்கும் இயல்பாக உள்ள பராங்குச நாயகி வழி கேட்டுக் கொண்டே
திண்ணமாக திருக் கோளூர் புகுந்து இருப்பாள்
புகுமூர் –
காட்டுத் தீயில் அகப்பட்டவன்
பொய்கையையும் பொழிலையும் தேடித் புகுமா போலே
சம்சாரம் ஆகிற பாலை நிலத்திலே காட்டுத் தீயிலே
அகப்பட்டவனுக்கு உகந்து அருளின நிலங்களானவை
பொய்கையும் பொழிலும் போலே இ றே –
புகுமூர் என்கையாலே புக்கார் போகுமூர் அன்று என்கை-ஈடு
எம்பெருமானார் -அவ் ஊரில் புக்க பெண்களும் வெளிய
போகக் கடவராய் இருப்பார்களோ –
திருக் கோளூர் அம்மாள் திரு வார்த்தைகள் பிரசித்தம் இ றே-
——————————————————————————————————————————————————————————————————————–
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வானிடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போரும் கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-
பூவைகளை -பராங்குச நாயகி உடைய லீலா உபகரணம் பறவைகளை நோக்கி திருத் தாயார் வினவுகிறாள்
அக்றிணை என்று அறிந்தும் மதி கலங்கி கேட்கிறபடி –
வான் கற்பு -சிறந்த ஸ்த்ரீத்வம்
இவ்விருப்பில் என்ன குறையுண்டு
இங்கே ஒரு குறை உண்டாய்
அது அங்கே தீரப் போனாளோ
இங்கே போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு ஆளில்லாமல்
ஒரு தேச விசேஷம் தேடித் போனாளோ -ஈடு
பிதற்ற -பிதற்றும் படி பண்ணி -என்றவாறு
திரு நாமங்களையும் திவ்ய சிஹ்னங்களையுமே சொல்லிக்
கூப்பிடும்படியாக கூப்பிடும் இவள் -ஆறாயிரப்படி
சொல்லும்படி பண்ணி -ஈடு
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே போரும் கொல் உரையீர்-
நீர் நிலம் மற்ற வளங்கள் உள்ள இடங்களில் ஈடு பட்டு கிடப்பாளா
அன்றிக்கே உங்களையாவது நினைத்து மீண்டு வருவாளா -என்றபடி
ஊரும் நாடும் உலகமும்
ஸ்வா பதேசார்த்தம் -ஊரார்-ஆத்மபிராப்தி காமரான கேவலர்
நாட்டார் -புத்ரபசு அந்நாதி ரூப இஹ லோக ஐஸ்வர்யகாமரை
உலகோர் -ஸ்வர்க்காதி பரலோக ஐஸ்வர்யகாமரான ஸ்வதந்த்ரரை
ஊரார் நாட்டார் உலகர் கேவல ஐஸ்வர்யகாம ஸ்வதந்த்ரர் -நாயனார் —
——————————————————————————————————————————————————————————————————————————-
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போயினித் தண் பழனத் திருக் கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு என் செய்யும் கொலோ –6-7-3-
தூதை -சிறு சோறு சமைக்கும் பானைகள்
பூ புட்டில்கள் -பூ விடும் குடலைகள்
வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க வேண்டும் பருவத்திலும்
திரு நாமத்தையே கொண்டு ஜீவித்து இருக்குமவள் கிடீர் போனாள்
இங்கு இருந்த நாள் மற்று ஓன்று தாரகமாய்
அங்கே போனால் அவனாலே தரிக்கப் போனாளோ
பூவை தொடக்கமான லீலா உபகரணங்களால் பிறக்கும் ஹர்ஷம் எல்லாம்
ஸ்ரீ யபதி என்கிற திரு நாமத்தைச் சொல்லி அத்தாலே உண்டாகா நின்றது -ஈடு
போன விடத்திலே குறை அற அனுபவிக்க வேணுமே
ஒரு பேச்சுப் பேச வாய் எடுத்தவாறே வாய் விட்டுப் பேச மாட்டாதே உதடு நெளிக்குமே
கண்ணநீர் வெள்ளமிட்டு பெருகுமே
இப்படி என்ன பாடு படுகிறாளோ -தடுமாறுகிறாள் திருத் தாயார்-
——————————————————————————————————————————————————————————————-
கொல்லை என்பர் கொலோ குணம் மிக்கநல் என்பர் கொலோ
சில்லை வாய்ப் பெண்டுகள் அயற்சேரி யுள்ளாரும்எல்லே
செல்வம் மல்கியவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே–6-7-4-
சில்லைவாய் -வம்பு வாயாரான
பேறு தப்பாது என்று துணிந்த அத்யாவசாயம் உள்ளோர் -இப்படி படி கடந்து செல்லுகை என் -என்று வெறுக்கக் கூடும்
பேற்றுக்கு த்வரிக்கவும் வேணும் -என்று இருக்குமவர்கள் உகக்கக் கூடும்
கொல்லை -வரம்பு இல்லாததுக்கு பெயர் -மரியாதை குலைந்தாள்-வரம்பு அழிந்த செயல் செய்தாள்
அயற்சேரி யுள்ளாரும்-
நாலயலார் அயற் சேரியார்
உபாய சதுஷ்ட அந்தர்யாமித்வ பரர்நாயனார்
அர்ச்சாவதாரங்களில் ஊற்றம் அற்று
தேவதாந்த்ராமித்வத்திலே ஊன்றி இருக்குமவர்களை
அதாவது
அவன் கடைத்தலை இருந்து வாழாதே
குளக் கரையிலே போது போக்கித் திரியுமவர்களை
அயற் சேரியர்-என்கிறது
இளமான் சென்றாள் என்னாமல் -இளமான் செல்ல மேவினளே-என்றது
செல்லுகைக்கு முன்னம் இச்சை இருந்து தீர வேண்டும் ஆதலால்
அந்த இச்சையை சொன்னது
தத் கார்யமான போக்கைச் சொன்னபடி-
——————————————————————————————————————————————————————————————–
மேவி நைந்து நைந்து விளையாடல் உறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமுமவன் கோயிலும் கண்டு
ஆவியுள் குளிர எங்கனே யுகக்கும் கொல் இன்றே –6-7-5-
அந்தோ அந்த உகப்பை நான் காணக் கொடுத்து வைக்க வில்லையே
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
இளமையே தொடங்கி பகவத் விஷயத்தில் ஈடுபட்ட இவள்
திருக் கோளூர் சென்றாள்
சாமான்யமான ஸ்தலமோ
பூஞ்சோலைகளும் தடாகங்களும் மதிளும் மாட மாளிகைகளும் மண்டபங்களும்
சந்நிவேசங்கள் ஆச்சர்யமான காட்சி தருமே
இவள் கண்டு ஆவியுள் குளிர உகக்கும் அழகு அத்விதீயமாய் இருக்குமே
அவன் கோயிலும் கண்டு
ஐதிகம் -பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டருமாக உள்ளே பிரதஷிணம் பண்ணா நிற்க
இட்டவடி மாறி இட மாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து
ஆழ்ந்து கொடு போகிறபடியை பின்னே நின்று கண்டு அனுபவித்தேன் என்று
நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஆச்சானும் ஆண்டானுமாக கிழக்கே நடக்கிற போது திருப்பேருக்கு கிழக்கே போகவும் மாட்டாதே
ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே
திருப் பேர் நகரான் கோயிலைப் பார்த்துக் கொண்டு இருந்தார்களாம்
ஆவியுள் குளிர -சந்தையை மேல் எழுந்த வாறு சொல்லாமல்
உள் குளிர என்று ஆழ்ந்து ஊற்றத்துடன் உறைப்பாக அனுசந்திக்க வேணும் என்பர் –
———————————————————————————————————————————————————————————–
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்
தென் திசைத் திலதமனைய திருக் கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே –6-7-6-
அவள் உகக்கும் படியை அருளிச் செய்கிறாள் இதில்
பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு
உதவுகைக்கு அன்றோ
தன்னைப் பிரிந்த இந்தத் தனிமைக்கும்
இத்தசைக்கும் மேற்பட எனக்கு ஓர் ஆபத்து உண்டோ
இன்று எனக்கு உதவாது ஒழிவதோ -ஈடு
என்னையும் கூட்டிப் போகலாதோ -அயலாக நினைத்து போகலாமோ –
தென் திசைத் திலதமனைய திருக் கோளூர்க்கே சென்று-
தெற்கு திக்கு என்று கொண்டு ஆர்யர்கள் இகழ்ந்த மிலேச்ச பூமி இ றே
இங்கனே இருக்கச் செய்தே ஒரு ஆபரணம் தானே
எல்லா ஆபரணங்களுக்கும் நிறம் கொடுக்க வற்றாம் போலே
திருக் கோளூர் உண்டாகையாலே திக்காக ஸ்லாக்யமான படி-
தஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா – என்னுமா போலே -ஈடு
தன் திருமால் திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே
தன் மகள் அங்கே இருக்கும் படி இதுவாயிற்று
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் என்று
தன்னை விசேஷித்து விஷயீ கரித்த திருக் கண்களை முதலிலே நோக்குவாள்
அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தாலே அர்ச்சா சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற
அவ்யக்த மதுர மந்த ஹாச விலாசம் பொங்கும் இடமான செவ்வாயை பிறகு காண்பாள்
ஆக இரண்டு திவ்ய அவயவங்களையும் கண்டு
மகா பிரவாஹத்திலே இளகின கரை போலே உடைகுலை பட்டு நைந்து கொண்டு இருப்பாள்
இதுவன்றோ அவள் படி
நான் காணப் பெற்றிலேனே-
——————————————————————————————————————————————————————————————-
மல்கு நீர் கண்ணோடு மையலுற்ற மனத்தளாய்
அல்லும் நன்பகலும் நெடுமால் என்று அழைத்து இனிப் போய்
செல்வம் மல்கியவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்கனே புகும் கொலோ ஒசிந்தே –6-7-7-
அத்தனை தூரம் வழி நடந்து முடிந்து சென்று சேர்ந்த பிறகு
நடக்கக் கூடியதை இப்போது சிந்திக்க இடம் ஏது
மல்கு நீர் கண்ணோடு மையலுற்ற மனத்தளாய்-போக கண்ணும் மனமும் சாதனம் -இரண்டுமே ஒழுங்காக இல்லையே
அல்லும் நன்பகலும் நெடுமால் என்று அழைத்து-என்னை இப்படி பிச்சேற்ற பண்ணின சர்வேஸ்வரனே
இங்கே இருந்தே இரவும் பகலும் கூப்பிடலாமே
அங்கே எதற்கு போக யத்தனித்தாள்
செல்வம் மல்கியவன் கிடந்த திருக் கோளூர்க்கே-தான் இருந்த இடத்தில் பொலிந்து நின்ற பிரான்
நின்ற அழகு காணலாம் இத்தனை போக்கி
கிடந்ததோர் கிடக்கை காண விரகு இல்லையே
அக்கிடை அழகை காண போனாள் போலும்
ஒடுங்கி ஒடுங்கி துவண்டு நடந்து போமவள் அங்கே சென்று சேர சம்பாவனை இல்லையே
என்னாய் முடிந்து இருக்குமோ –
——————————————————————————————————————————————————————————————–
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லும் கொல்
ஒசிந்த வொண் மலராள் கொழுநன் திருக் கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினாய் எம்மை நீத்த வெம் காரிகையே –6-7-8-
பிராட்டியார் உடைய புருஷகார பலத்தால் நமக்கு ஒரு குறை இராது என்றோ
சேர்த்தி அழகை சேவிப்போம் என்று நினைத்தோ சென்றாள்
வழி நடந்து செல்ல வல்லளோ
சிரமத்தை சஹித்துக் கொண்டு சென்றாலும்
நெஞ்சு கசிந்தும்
கண்ணநீர் துளும்ப நிற்குமவள்
எங்கனே வழி தெரிந்து போக வல்லள்
தானும் நானுமான சேர்த்தி தவிர்ந்து பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தி அழகை காண வேண்டி போனாள் –
———————————————————————————————————————————————————————————————-
காரியம் நல்லனகளவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள் இதி எல்லாம் கிடக்க வினிப் போய்
சேரியல் பழி தூயிரைப்பத் திருக் கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை யொன்றும் நினைத்திலளே -6-7-9-
பழி மொழிக்கு அஞ்சாதே
எங்களை பொருளாக நினைக்காமல்
நல்லவற்றைக் கண்டால் என் கண்ணனுக்கே
பெருமாள் -த்ருஷ்ட்வா பலம் வா புஷ்பம் வா யத்வான்யத் ஸூ மநோஹரம்
பஹூசோ ஹா ப்ரியேத்யேவம் ச்வசன் த்வாம் அபிபாஷதே -என்றால் போலே
இது எல்லாம் கிடக்க
உண்ணும் சோறு –பேசிக் கொண்டு கண்கள் நீர் மல்க இங்கேயே இருக்கல் ஆகாதோ
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் பூல் ஆக்கிக் கொண்டு இங்கேயே இருக்கல் ஆகாதோ
இங்கு இருப்பில் என்ன குறை
இவை எல்லாம் விட்டு அங்கே போவது எதற்காக
தத் தஸ்ய தத்ருசம் பவேத் -இருக்காமல் போனாளே பழி தூற்றுவார்கள் உண்டே
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் -பரம பூஷணம் ஆதலால் தாயின் உள்ளத்திலே உகப்பே உள்ளது
நேரிழை நடந்தாள்
சௌகுமார்யத்தை அனுசந்தித்து எவ்வாறு நடந்தாளோ
முன்னும் பின்னும் ஆபரண சந்நிவேச சௌந்தர்ய அதிசயத்தை காணப் பெற்றோம் இல்லையே
எழுந்து அருளினாள் -என்பதற்கு பர்யாயமாய் நடந்தாள் என்கிறாள் –
தன் பிள்ளையே யாகிலும் திருக் கோளூர் போக வென்று
நாலடி இட்ட அவளை
இங்கன் அல்லது சொல்ல ஒண்ணாது இ றே
தன் மகளை எங்கனே கனக்க நினைத்து இருக்கிறாள் தான்
வயிற்றில் பிறக்கவுமாம் -சிஷ்யர்கள் ஆகவுமாம் –
பகவத் விஷயத்தில் பிரத்யாசன்னர் உத்தேச்யராம் இத்தனை
ஐதிகம் -ஒரு நாள் நம்பிள்ளையை ஜீயர் கோஷ்டியிலே வைத்து போரக் கொண்டாடி அருளி
தன் சிஷ்யனை தான் கொண்டாடா நின்றான் என்று இராதே கிடி கோள்
கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே என்று
பண்டு சொன்னாரும் உண்டு கிடி கோள் -என்று அருளிச் செய்தார்
மற்று ஒரு ஐதிகம் -அம்முணி ஆழ்வான் தன் சிஷ்யனை தான் தெண்டன் இடா நிற்குமாம்
இது என் என்று கேட்க
அல்லாத வைஷ்ணவர்களை வ்ருத்தத்தால் அறிய வேணும்
இவர்கள் நான் அறிய வைஷ்ணவர்கள் என்று ஆதரிப்பேன் -என்றான் –
எம்மை ஒன்றும் நினைத்து இலளே
த்ருணீ கரித்தாள் மேல் எழுந்த பொருள்
இப்படிப் பட்ட மகானுபாவி உடைய அபிமானம் இல்லாமல் போயிற்றே
எம்மைப் பற்றி நெஞ்சில் கொஞ்சமாவது நினைத்து இருந்தால் குறை இல்லையே என்றவாறு-
—————————————————————————————————————————————————————————————–
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனனை
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்குவான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே –6-7-10-
ஆகாசம் நோக்கி தெய்வங்களைப் பார்த்து சொல்கிறாள்
பழி சொல்ல மாட்டார்கள் இவர்கள் என்று உறவு கொண்டாடுகிறாள்
ஹ்ருதயம் சூன்யமாகி விட்டதே
நெடும் கண் இளமான்-அரவிந்த லோசனனையும் ஒரு மூலையில் அடக்கும்படி பரப்புடைத்த்யான கண்கள்
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனனை -இவ்வளவே கிடீர் அவன் கண்ணுக்கு தோற்றி இருப்பது
ஒரு உபய விபூதி மாத்ரம் கிடீர் காண் கண்ணுக்கு ஈடு பட்டு இருப்பது
அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் இ றே இவளது
அவன் தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும் படியாய் இருக்கை -ஈடு-
————————————————————————————————————————————————————————————————————-
வைத்த மாநிதியம் மது சூதனையே யலற்றி
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன்னுலகாள்வாரே –6-7-11-
இவர்கள் இட்ட வழக்காய் திருநாடு இருக்கும்
யோவேத நிஹதாம் குஹாயாம் -நெஞ்சிலொஎ புதைத்து ஆளத் தக்கவன் -வைத்த மா நிதி பெருமாள் –
நிதி உடையார் கண் உறங்க மாட்டார்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதலே
சதாபச்யந்தி முன்னும் பின்னும் உறக்கம் இல்லை
பக்தி சித்தாஞ்சனம் பெற்ற ஆழ்வார்கள் தான் நிதியை காண்பர்
மாறுளதோ இம்மண்ணின் மிசையே இல்லை எனக்கு எதிர் என்னப் பண்ணும்
உலகம் எல்லாம் அனுவர்த்திக்கும்
பழுதே பல பகலும் போயின -கதறி அழுவார்
இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே
எழில் கோள் நின் திருக் கண் நோக்கினையும் இழந்தேன் இழந்தேனே
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன்
நிதி உள்ள இடம் விரோதிகள் சேருவர்
அவற்றைப் போக்க வல்ல சக்தன் மது சூதன்
பல ஒற்றுமைகள் உண்டே –
——————————————————————————————————————————————————————————————————-
திருவாய்மொழி நூற்றந்தாதி –
உண்ணும் சோறாதி ஒரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நம் தமக்குப் பொன் –57-
————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply