முன்னடிகட்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு.
கீழ்ப்பாட்டில் காம புருஷார்த்தத்தை நிந்தித்தார்: விஷய போகங்கள் கர்ம புருஷார்த்தத்தைச் சேர்ந்தவையாதலால்
அவற்றை ஹேயமென்பது காம புருஷார்த்தத்தை ஹேயமென்ற வாறாம். இப்பாட்டில் அர்த்த புருஷார்த்தத்தை நிந்திக்கிறார்.
விசேஷமாகப் பொருள்களை ஸம்பாதித்து அவற்றால் யஜ்ஞாயாகங்களைப் பண்ணி அவற்றின் பலனாக
ஸ்வர்க்கலோகத்தை யடைந்து ஸுகிப்பது – என்றொரு வழியுண்டே; அவ்வழியையும் மேற்கொள்ளவேண்டா வென்கிறது.
பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–
பதவுரை
அமருலகம்–சுவர்க்க லோகத்தை
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்கு இயலல் ஆகாது–போய்ச் சேர முயல்வது தகாது;
அருளான்–பரம தயாளுவான எம் பெருமான்
அறம்–புண்யத்தின் பயனான சுவர்க்க லோகத்தை
அருளும் அன்றே–தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே–கிருபையினாலே
மா மறை யோர்க்கு–மஹர்ஷிகளுக்கு
ஈந்த–முக்தி யளித்த
மணி வண்ணன் பாதமே-நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல்–நெஞ்சே! நீ மறவாதே
நினை–தியானித்துக் கொண்டிரு.
பொருளால் அமருலகம் புக்கியலாகாது = அர்த்த புருஷார்த்த மென்கிற திரவியங்களைக் கொண்டு ஸ்வர்க்கலோகத்தைப்
பெறுவோமென்று அதற்கு முயற்சி செய்யலாகாது என்றபடி.
அன்றியே, பொருளால் = இது நமக்குப் புருஷார்த்தம் என்னும் புத்தியோடே, ஸ்வர்க்கலோக ப்ராப்தியை விரும்பி
அதற்காக நீங்கள் எம் பெருமானையே அடிபணிந்தால் அவன் கருத்தறிந்து காரியஞ்செய்யுமவனாகையால்
‘நம்மை அடுத்திருக்கு மிவர்களுக்கு ஸ்வர்க்கத்தில் நசையாகில் அதையும் அநுபவித்துத் தீரட்டும்’ என்று கிருபை பண்ணியருள்வன்;
அதற்காக நீங்கள் தனிப்பட ஒரு ப்ரயாஸங்கொள்ள வேண்டா; எது வேணுமானாலும் மணிவண்ணன் பாதமே நினைக்கத்தகும் – என்கிறார்.
“நெஞ்சே!- நீ மறவேல்” என்று தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாயிருந்தாலும்
இதை அந்யாப தேசமாகக் கொள்ளவேணும்;
பிறரைக் குறித்துச் சொல்ல வேண்டுவதையும் தம்மை நோக்கிச் சொல்லிக்கொள்வதுண்டு:
திருவாய்மொழியில் (8- 3 -2) “சரணமாகிய நான்முறை நூல்களுஞ் சாராதே, மரணந்தோற்றம் வான்பிணி
மூப்பொன்றி வைமாய்த்தோம்” என்றவிடங்காண்க.
இங்கு, முன்னிலையாகச் சொல்ல வேண்டியதைத் தன்மையாகச் சொல்லியிருத்தல் உணர்க.
அமருலகம் – ‘அமரருலகம்’ என்பதன் விகாரம். ‘அறம்’ என்பது தர்மத்துக்குப் பேராயினும் தர்மத்தினால் ஸாத்யமான
புண்யலோகத்தைச் சொல்லுகிறது. இங்கு அருளும் = செய்யுமென்முற்று.
மூன்றாமடியில் “மாமறையோர்க்கு” என்றும் “மாமறையோற்கு” என்றும் பாடபேதமுண்டு;
முந்தின பாடத்தில் பன்மை; பிந்தின பாடத்தில் ஒருமை, பன்மையாகில் தண்காரண்ய வாஸிகளான முனிகளைச் சொல்லுகிறது;
சுகர், வாமதேவர் முதலிய ரிஷிகளைச் சொல்லவுமாம்; ஒருமையாகில், மார்க்கண்டேயனைச் சொல்லுகிறதாம்.
முத்தி யளிக்கவல்ல முகுந்தன் பாதமே பற்றினால் முதலில் ஸ்வர்க்கத்தையும் பெறலாம்;
காலக் கிரமத்தில் முத்தியையும் பெற்று வாழலாம் என்பதும் இதில் தொனிக்கும்.
முதலடியில் ‘அமருலகம்’ என்றதும் இரண்டாமடியில் ‘அறம்’ என்றதும் மோஷலோகத்தையே சொல்லுவதாகவும் ஒரு யோஜநையுண்டு.
அப்போது, ‘பொருளால்’ என்றது – ஸாதநாநுஷ்டதத்தினால் என்றபடி;
ஆக, மோக்ஷத்துக்காக ஒரு ஸாதநாநுஷ்டாநம் பண்ணவேணுமென்பதில்லை;
பரம தயாளுவான எம்பெருமான் அதை நிர்ஹேதுக கிருபையினாலே தந்தருள்வன்;
அப்படியே பல வைதிகர்களுக்கு அவன் அருளியிருக்கிறான்; இப்படியாகில் எல்லார்க்கும் மோக்ஷமளிக்க வேண்டிவருமே யென்னில்,
இந்த ஸர்வமுக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக அந்த மணிவண்ணனது திருவடிகளைச் சிந்தித்தல் வேண்டும் – என்பதாகக் கருத்துக் கொள்ளலாம்.
————————————————————————–
ஸம்ஸார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்களே பிறவிகளை அடியறுக்க வல்லவரென்கிறார்.
நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–
பதவுரை
திருமாலை–லக்ஷ்மீநாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பான்–(அவனது) சிறந்த திருத்தோள் களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார்–இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார்–ஒருவகை யோனிப் பிறப்பையும் அடைய மாட்டார்கள்
அத்தோள்–அந்தத் திருத்தோள்களை
தொழுதார்–தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம துறந்தார்–ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால்
அடையக்கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்.
திருமாலை நீண்ட தோள் காண நினைப்பன் – ஐச்வரிய மளிக்க வேணுமென்றும் ஸந்தான மளிக்க வேணுமென்றும்
பல பல கோரிக்கைகளை முன்னிட்டு எம்பெருமானைப் பலர் அடிபணிவ ராகிலும்
நான் அப்படி ஒரு கோரிக்கையும் கருதினவனல்லேன்,
“தோள் கண்டார் தோளே கண்டார்“ என்னும் படியான அவனது தோளழகை ஸேவிக்கப்பெற வேணுமென்பது தவிர
வேறோராசையும் எனக்கில்லை என்றவாறு,
இப்படி எம்பெருமானுடைய திவ்யாவயவத்தை ஸ்லயம் போக்யமாக நினைப்பவர்கள்
“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்பு மிந்நின்ற நீர்மை இனியாமுறாமை“ என்று
ஆழ்வார் பிரார்த்தித்த பிறப்பின்மையைப் பெற்று நித்ய முக்தராய் வாழ்ந்திடுவர்.
இனிமேல் பிறக்கமாட்டார்களென்பதுந்தவிர, இப்பிறவியிலும் ஸம்ஸாரிகள் உகக்கிற சிற்றின்பங்களை உகவாதே
அவற்றைக் காறியுமிழ்ந்து கைவிடும்படியான விரக்தியும் பெறுவார்கள்
அவனது திருத்தோள்களை ஸேவிக்குமவர்கள் – என்கிறார் பின்னடிகளில்.
பின்னடிகளை இரண்டு வகையாக யோஜிக்கலாம். அத்தோள் தொழுதார் (எவரோ அவரே) மனைப்பால் பிறந்தார்
பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தாராவர், மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார்
எவரோ அவரே அத்தோள் தொழுதாராவர் – என்று. சிற்றின்பங்களை வெறுத்தவர்களே எம்பெருமானுடைய
வடிவழகில் ஈடுபட்டவராவர், எம்பெருமானுடைய வடிவழகில் ஈடுபட்டவர்களே சிற்றின்பங்களை வெறுக்க வல்லவராவர் – என்றவாறு.
மனைப்பால் – பால –ஏழனுருபு. சிற்றின்பத்தைப் பேரின்பம் என்றுசொல்லாற் சொன்னது எதிர்மறை யிலக்கணையாம்,
ஸம்ஸாரிகளுடைய நினைவாலே பேரின்ப மென்கிறது.
எம்பெருமானார் ஒரு நாள் உச்சிப் போதில் திருக் காவிரியிலே மாத்யாஹ்நிகம் அநுஷ்டித்துக் கொண்டிருக்கையில்
ஒருகாமுகன் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு அக்கரையில் நின்றும் ஆற்றிலே வரும்போது
வெய்யிலின் கடுமையினால் அவளுக்கு வாட்டம் வாராமைக்காக அவன் அவளுக்கு நடைபாவாடை போட்டுக்கொண்டும்
குடைபிடித்துக் கொண்டும் மற்றும் பல உபசாரங்கள் செய்து கொண்டும் மிக்க ஆதரந்தோற்ற அழைத்துக் கொண்டு
வருவதை எம்பெருமானார் கண்டு ‘அப்படி! இவ்வளவு உபசாரங்கள் பண்ணுகிறாயே, என்ன விசேஷம்?‘ என்று கேட்டருள,
இவளுடைய கண்ணழகிலே நான் மிகவும் ஈடுபட்டிருப்பேன், அதற்கொரு குறைபாடு நேராமைக்காக
உபசாரங்களைப் பண்ணி வருகிறேன். என்று அவன் விடையளிக்க, அதை எம்பெருமானார் கேட்டு
‘இதனிலும் விஞ்சிய அழகுவாய்ந்த கண்களை நீ கண்டதில்லையோ?‘ என்ன,
‘எங்குங் கண்டதில்லை‘ என்று அவன் சொல்ல,
‘அப்படிப்பட்ட கண்களைக்காட்டினால் என்ன செய்வாய?‘ என்று உடையவர் கேட்க,
‘இங்ஙனே ஸகல உபசாரங்களும் அங்கே பண்ணக்கடவேன்‘ என்று விடையளிக்க,
அப்போதே நம்பெருமாள் ஸ்ந்நிதியி னுள்ளே அழைத்துக்கொண் டெழுந்தருளி
“அரங்கத்தமலன் முகத்துக் கரியவாகிப்புடை பேதைமை செய்தனவே“ என்னப்பட்ட திருக்கண்களை ஸேவிக்கப் பண்ணினவாறே
அத் தம்பதிகளிருவரும் அத்திருக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தனர் என்றொரு இதிஹாஸம் ப்ரஸித்தம்
இதனை இப்பாட்டின் பின்னடிகளுக்குப் பொருத்தமாக அநுஸந்திப்பது.
————————————————————————–
எம்பெருமானுடைய திருத்தோள்களைத் தொழுவதைப் புருஷார்த்தமாகக் கீழ்ப்பாட்டி லருளிச்செய்தார், ‘
அவனுடைய திருத்தோள்களைத் தொழவேணுமென்னும் நிர்ப்பந்தம் எனக்கில்லை,
அவனுடைய திருவடிகளைத் தொழுமவர் எவரோ அவருடைய திருவடிகளைத் தொழுவதே எனக்குப் புருஷார்த்தம் என்கிறார்.
இப்பாட்டில் எம்பெருமானிடத்து அன்பு செய்வதிற்காட்டிலும பாகவதர்களிடத்து அன்பு செய்வதே
சிறந்த தென்னும் நூற் கொள்கை இதில் தழுவப்பட்டதென்க.
“ஸித்தர் பவதிவா நேதி ஸம்சயோ ச்யுதஸேவிநாம் நஸம் கியோ ஸ்தி தத்பக்தபரிசர்யாதாத்மநாம்“
எம்பெருமானை அடிபணிந்தவர்களுக்குப் பேறு தப்பாமல் கிடைக்குமென்று துணிந்து சொல்லமுடியாது, ஸந்தேஹமுண்டு.
பாகவதர்களை அடிபணிந்தவர்களுக்கு அப்படிப்பட்ட ஸந்தேஹத்திற்கிடமில்லை. பேறு கை புகுந்தே தீரும்“ என்று
சாஸ்த்ரங்களிற் சொல்லியிருப்பது
தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-
பதவுரை
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்–இருபது தோள்களும்
வீழ–முடியும்படி
சரம் துரந்தான்–அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும்–இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர்–தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)
முடி அனைத்தும்–(பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும்–இரண்டு கால்களும்
பாதம் அவை–திருவடிகளை
தொழுவது அன்றே–ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–எனது அழகிய தோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் வீழ–இருபது தோள்களும் முடியும்படி
ஆக இப்படி சித்திரவதம் செய்தமையைத் தெரிவிக்கிறபடி.
என்சீர்கெழுதோள் செய்யுஞ் சிறப்பு – உலகத்தில் எல்லா மனிதர்களுக்கும் பொருளைக் கவர்தல், நல்லாரைக் கொல்லுதல்
முதலிய தொழில்களைச் செய்து கொள்வர் எனது கைகள் அப்படிப்பட்ட தொழில்களில் எனக்கு உதவிபுரிய வேண்டா,
பாகவதர்களைத் தொழுவதற்கு உறுப்பாகுமேல் இதுவே எனக்குச் செய்த மஹோபகாரமென்கிறார்.
————————————————————————–
சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44–
பதவுரை
சிறந்தார்க்கு–ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழுதுணை ஆம்–உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற
நாமம்–திருநாமத்தை
மறந்தாரை–மறப்பவர்களை
மானிடம் ஆ–மநுஷ்ய யோனியிற் பிறந்தவர்களாக
வையேன்–என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து–“தர்ம ஸ்தாபநம் பண்ண வல்ல திருமாலே!“ என்று கூவியழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால்–செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று–மேலும்
அவன் பேர்–அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே–நாவினால் சொல்லுவதையே
உள்ளு–(ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)
‘சிறந்தார்‘ என்றது – பகவத்கீதையில் “ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம் – ஞானியானவ் எனக்கே உயிராயிருப்பன்” என்று
கீதாசார்யனான தானே அருளிச்செய்யும்படி அவனுடைய உகப்புக்கு இலக்கான மாஞானிகளை.
அப்படிப்பட்டவர்கள் உஜ்ஜீவிப்பதற்கு உரிய துணையான எம்பெருமானுடைய திருநாமத்தை
ஸர்வகாலமும் ஸ்மரிக்கவேண்டியது கடமையாயிருக்க, எவர்கள் மறந்திருக்கின்றார்களோ, அவர்களை
மநுஷ்யகோடியில் இட்டு எண்ணமாட்டேன் – என்கிறார் முன்னடிகளில்
“ஆன்விடையேழன்ற டர்த்தாற்கு ஆளானாரல்லாதார், மானிடவரல்லரென்று என் மனத்தே வைத்தேனே“ என்றார் திருமங்கை யாழ்வாரும்.
தாம் இருக்க வேண்டும்படியைத் தம்முடைய நெஞ்சுக்கு உரைக்கிறார் பின்னடிகளில்.
“நெஞ்சே“ என்னும் விளி வருவித்துக்கொள்வது. நெஞ்சே! தர்ம ஸம்ஸ்தாபநம் பண்ணுவதற்காக அவதரிக்கிறேன் என்று
தானே சொல்லிக் கொண்டபடி வேண்டியபோது திருவவதரித்துக் தருமநெறியைத் தாங்குகின்ற மாதவனே! என்று சொல்லி
எம்பெருமானுடைய தன்மைகளையே அநுஸந்திக்கும்படியான உறுதிக்கொண்டு
அவனது திருநாமங்களை ஓதுவதே உரியதென்று கொண்டிரு – என்று உபதேசித்தாராயிற்று.
————————————————————————–
பாகவதர்களின் பெருமையைப் பேசுகிறார். ஸகல வேதங்களினாலும் பரம்பொருளாகப் பிரதிபாதிக்கப்பட்டவனும்,
அந்த மேன்மை விளங்குமாறு திருமலையில் வந்து நித்ய ஸ்ந்நிதி பண்ணியிருப்பவனும்,
அங்கே நித்யஸூரிகளும் வந்து அடிபணிய நிற்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளிற் பழகுகின்ற
பாகவதர்கள் செல்வம் படைத்தாலும் ‘நாம் செல்வம் படைக்கப் பெற்றோம், நம்மோடு ஒத்தாரும் மிக்காருமில்லை‘ என்று
செருக்குக் கொள்ளமாட்டார்கள்,
இருந்த செல்வம் அழிந்து போனாலும் ‘ஐயோ! ஏழைமை வந்து விட்டதே!‘ என்று சிறிதும் தளர்ச்சியடையமாட்டார்கள்
“களிப்புங் கவர்வுமற்று“ என்ற பாசுரத்திற் சொன்னபடி லாபநஷ்டங்களில் ஒருபடிப்பட்ட சிந்தை நிலைமையை யுடையராயிருப்பர்
“முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினுங் கனியார் மனம்… எங்களிராமாநுசனை வந்தெய்தினர்“ என்ற
ஸ்ரீ ராமாநுஜபக்தர்களைப் போன்றிருப்பர்களாம் பகவத் பக்தர்களும்.
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-
பதவுரை
அளவு அரிய வேதத்தான்–அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான்–திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று–பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார்–தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று–(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடிதோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் முடிகள் பணியப் பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார்–தளர்ச்சி யடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.
உண்டில்லை யென்று – செல்வம் அடியோடு இல்லாதவர்களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது,
சிலநாள் இருந்து கழிந்தவர்களுக்கு அளவற்ற தளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே அப்படிப்பட்ட நிலைமையிலும்
தளரமாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று“ என்றார்.
‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது‘ என்று தளரமாட்டார்கள் என்கை.
அளவரிய வேதத்தான் – வேதங்களுக்கு அளவில்லை யென்பது வேதத்திலேயே விளங்கக் காட்டப்பட்டுள்ளது.
க்ருஷ்ண யஜுர் வேதத்தின் ப்ராஹமணத்தில் ஒரு பகுதியான ‘கடாகம்‘ என்னும் சாகையில்
முதல் ப்ரச்நத்தில் பதினோராவது அநுவாகத்தில் ஓர் உபாக்கியானம் ஓதப்பட்டிருக்கின்றது, அதாவது –
முன்பொரு கால் ‘பரத்வாஜர்‘ என்னும் மஹர்ஷியானவர் ஸகலவேதங்களையும் ஓதி முடிக்க வேணுமென்ற முயற்சிகொண்டு
அதற்குரிய ஆயுஸ்ஸைப் பெறுவதற்காக இந்திரனைக் குறித்து உபாஸநைசெய்து அவனை ப்ரஸந்நனாக்கி
அவனுடைய அநுக்ரஹத்தால் ஒரு புருஷாயுஸ்ஸுக்கு நூறாண்டு விழுக்காடு முந்நூறாண்டுகொண்ட மூன்று ஆயுஸ்ஸுக்களை
வரம்பெற்று அந்த வாழ்நாளில் குருகுலவாஸஞ் செய்து வேதமோதிவந்தார். முந்நூறாண்டும் முடிந்து ஜீர்ண சரீரராய்
கிழத்தனமடைந்து சரமகாலமணுகிப் படுத்திருக்கும் அம்முனிவரை இந்திரன் வந்துகிட்டி
‘ஓ பரத்வாஜ் முனிவரே! மீண்டும் ஒரு நூறாண்டுகொண்ட ஆயுளை உமக்கு நான் கொடுப்பேனாகில் அந்த வாழ்நாளை நீர்
எவ்விதமாகக் கழிக்க உத்தேசிக்கிறீர்? அந்த ஆயுஸ்ஸில் நீர் ஸாதிக்கவிரும்பும் புருஷார்த்தம் யாது? என்று கேட்க,
முனிவர் ‘வேறு நான் என்ன செய்யப் போகிறேன்? அந்த ஆயுஸ்ஸிலும் வேதாத்யயநமே செய்யக்கடவேன் என்றார்.
அதைக் கேட்ட இந்தரன் ‘ஓ‘ இவர் இதுவரை கழிந்த மூன்று ஆயுஸ்ஸில் மூன்று வேதங்களையும் பூர்த்தியாக ஓதிவிட்டதாகவும்
இன்னமும் ஒரு வேதம் குறைபட்டிருப்பதாகவும், அதையும் இந்த நான்காவது ஆயுஸ்ஸில் ஓதிவிட்டால் சதுர்வேதீ என்று
விருது பெற்றுவிடலாமென்றும் இவர் ஆசைப்படுகிறார் போலும், இவருடைய ப்ரமத்தை நீக்குவோம்‘ என்றெண்ணி,
ருக்வேதம், யஜுர் வேதம், ஸாமவேதம் என்ற மூன்று வேதங்களையும் தம்முடைய யோக ஸாமர்த்தியத்தினால் மூன்று மலைகளாக்கி
இதற்கு முன் அம்முனிவர் கண்டறியாத மலைவடிவமான அந்த வேதங்களை அவருக்குக் காட்டினான்.
பிறகு அவற்றுள் ஒவ்வொரு மலையினின்றும் ஒவ்வொரு முஷ்டியால் தூள்களையெடுத்து அங்ஙனம் மூன்று முஷ்டிகளெடுத்துக் காட்டி
‘ஓ முனிவரே! இம்மூன்று மலைகளும் வேதங்களை அதில் ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு வேதமாதலால்
வேதங்களுக்கு எல்லையே கிடையாது‘ என்றான் இவ் வார்த்தையைக் கேட்ட முனிவர்
‘இப்படியாகில் இன்றளவும் நாம் செய்த வேதாத்யயநம் எவ்வளவாயிருக்கும்‘ எனச் சிந்தை கொண்டபடியேக் குறிப்பாலறிந்த இந்திரன்
‘முன்வரே! இம்மூன்று முஷ்டிகளில் அடங்கியுள்ள வேதராசிமைத்தான் நீர் இதுவரை முந்நூறாண்டுகளாக் குருகுல வாஸஞ்செய்து ஓதினிர்,
இதோ மலைமலையாகக் கிடக்கும் வேதங்கள் உம்மால் ஓதப்படவில்லை‘ என்றானாம்.
————————————————————————–
பாகவதர்கள் லாப நஷ்டங்களில் உகப்பும் வெறுப்புங் கொள்ளாதிருக்கும்படி எம்பெருமான் பல திவ்யதேசங்களில்
ஸந்நிதி பண்ணி க்ருஷி பண்ணினானாகையாலே அப்படிப்பட்ட திவ்ய தேசங்களில் சிலவற்றைப் பேசி அநுபவிக்கிறார்.
திருவரங்கம் பெரிய கோவில், திருக்கோட்டியூர், திருவேங்கடம் திருநீர்மலை என்னுமித் திருப்பதிகளிலே
எம்பெருமான் நெடுங்காலமாக வாழ்கின்றானென்கிறார்.
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-
பதவுரை
மணி திகழும்–நீல மணிபோல் விளங்குமவனும்
வண் தடக்கை–உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால்–எம்பெருமான்
பயின்றது–நித்ய வாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி–திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள்–அநாதி காலம்
பயின்றதுவும்-நித்ய வாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே–திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை–அழகு விளங்குகின்ற சோலைகளை யுடைத்தாய்
அணி–இந் நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை–திருநீர்மலையாம்.
ஆச்ரிதர்கள் திருந்துவதற்காக எம்பெருமான் உகந்து வர்த்திக்கும் திருப்பதிகள் இங்ஙனே பல்லாயிரமுள்ளன,
அவற்றுக்கு ஓர் வரையறையில்லை – என்றவாறு.
“அணிதிகழுஞ் சோலை“ என்றதை நீர்மலைக்கு விசேஷணமாக்காமல்
தனி விசேஷயமாகக் கொண்டு திருமாலிருஞ்சோலை யென்றுரைத்தலு மொக்கும்.
————————————————————————–
மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-
பதவுரை
ஞாலம்–பூமி முழுவதையும்
அளந்து–ஒரு கால் அளந்தும்
இடந்து–மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு–(பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த–பிறகு வெளிப்படுத்தியும்
இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த
அண்ணலை–ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால்–கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல்–(அன்பருடைய நெஞ்சை உருக்கிக்கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து–அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை–மாலைப் பொழுதிலே
அரி உருவன்–நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
மலர்–புஷ்பங்களாலே
அணிந்து–அலங்கரித்து
காலை–சிற்றஞ சிறுகாலையில்
கைகோலி தொழுது–கைகூப்பிவணங்கி
எழுமின்–உஜ்ஜீவியுங்கள்
கீழ்ப்பாட்டிற் கூறியபடியே பல திருப்பதிகளில் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்குமவனுடைய திருவடிகளிலே
புஷ்பார்ச்சனை பண்ணி “சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும்“ என்கிற
படியிலும் ஒவ்வொரு விபவாவதாரத் திருமேனியோடே ஸேவை ஸாதித்தருளுகின்ற னாகையால் உபலக்ஷணமாக
ஒரு திருமேனியை யெடுத்துக் கூறுகின்றார்
‘அரியுருவன்‘ என்று. எம்பெருமானை ஆராதிக்கும்போது ‘இது நமக்கு ஸ்வரூப ப்ராப்தம்‘ என்றே
ஆராதிக்க வேண்டுமாயினும் குணைர்தாஸ்ய முபாகத“ என்கிறபடியே திருக்குணங்களுக்குத் தோற்று அடிமை செய்யும்
முறைமையும் ஒன்றுண்டாகையாலே அத்திருக்குணங்களுக்கு ப்ரகாசமாக அப்பெருமான் செய்தருளின
பெரு நன்றிகளைப் பாராட்டிக் கொண்டே அடி பணிய வேணுமென்கைக்காக ஞாலமளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலை‘ என்கிறார்.
மாவலியைச் செருக்கடக்கி மண்ணளந்த மஹாகுணத்தையும் ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியைமீட்டுக் கொணர்ந்த
மஹோபகாரத்தையும் பிரளயங்கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே அடக்கிக் காத்தருளின
பெரு நன்றியையும், பிறகு வெளிப்படுத்தின குணத்தையுமு வாய்வெருவிக்கொண்டு தொழுதெழுங்கள் என்றவாறு.
இப்படி நாட்டுக்குப் பொதுவாகச் செய்த உபகாரங்கள் மாத்திரமன்றியே –
“மருவித்தொழும் மனமேதந்தாய்“ –
“என்னைத் தீமனங்கெடுத்தாய்“ என்றிப்படி பெரியார் மனமுருகி அநுஸந்திக்கும் ஐகாந்திகமான
உபகாரங்களும் பலவுண்டாகையால் அப்படிப்பட்ட மஹோபகாரங்களையுங்கூட அநுஸந்திக்கவேணு மென்கிறது ஈற்றடி.
“எத்திறம்! உரலினோ மணைந்திருந் தேங்கிய வெளிவே!“ என்றும்
“பிறந்தவாறும் வளர்ந்தவாறும்!“ என்றும் மிக ஈடுபட்டு அநுஸந்திக்கும் குண சேஷ்டிதங்களும் ஈற்றடிக்குப் பொருளாம்.
————————————————————————–
கீழ்ப் பாட்டில் “உளங்கிடந்த வாற்றாலுணர்ந்து“ என்றதை விவரிப்பது போலும் இப்பாட்டு.
‘அன்பர் மறக்க முடியாதபடி அவர்களுடைய நெஞ்சைக் கொள்ளை கொண்டிருக்கு முபகாரம் நான் என்ன செய்திருக்கிறேன்?‘
என்று எம்பெருமான் கேட்பதாகக் கொண்டு, பிரானே! நீ செய்தருளின மஹோபகாரங்கள் சொல்லாற் கூறும் பரமோ?
கண்ணில்லாதவர்களுக்குக் கண் கொடுத்தாற்போலே வேதங்களையெல்லாம் வெளியிட்டருளினாய்.
அந்த வேதங்களின் அரும்பெரும் பொருள்களை விவரிப்பனவாய் வேதோபப்ரும்ஹணமென்று பேர்பெற்றனவான்
ஸ்ம்ருதீதிஹாஸ புராணதிகளையும் முனிவர்களைக் கொண்டு பிரவசதும் செய்தருளினாய்,
ஆச்ரீதர்களுடைய குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பெரிய பிராட்டியான ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதிருக்கின்றாய்,
திருமலை முதலிய திருப்பதிகளிலே படுகாடு கிடக்கின்றாய்,
இப்படியாக நீ செய்தருளும் பெருநன்றிகளுக்கு எல்லையுண்டோ, என்றாராயிற்று.
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-
பதவுரை
மாலே–ஸர்வேச்வரனே!
மறை நான்கும்–நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய்–(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்
நீதி–அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய்–(மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய்
மலர் மகள்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள்–திருத் தோளோடே
மணந்தாய்–கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல்–மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
இரு ஞாலம் சூழ்–பரந்த இப் பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோல மலை போய்–திருமாலிருஞ் சோலை மலையிலே வந்து
மணந்தாய்–திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்
உணர்ந்தாய் மறைநான்கும் – வேதங்கள் எம்பெருமானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டனவென்று சிலர் மயங்கிக்கிடப்பதுண்டு,
ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் எம்பெருமான் நான்முகனுக்கு வேதோபதேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறதே,
ஸ்ருஷ்டிக்கு முன்பு வேதம் இருக்கமுடியாதே, ஆதலால் ஈச்வரனால்தான் வேதம் செய்யப்பட்டிருக்கவேணும் என்று
சில வைதிகர்களுங்கூட மயங்குவதுண்டு. உண்மை யாதெனில்,
வேதத்துக்கு நாம் எப்படி கர்த்தாக்களல்லவோ அப்படியே எம்பெருமானும் கர்த்தாவல்லன், உலகத்தின் ஸ்ருஷ்டியானது
ஒன்றன்பின் ஒன்றாக ஆநாதிகாலமாய் நடந்து வருகிறது. ஒவ்வொரு கல்பத்தின் ஆரம்பத்திலும்
ஈச்வரன் நான்முகனுக்கு வேதத்தை உபதேசிக்கிறான், ஆனால் முன்கல்பத்தில் வேதம் எவ்விதமான ஆநுபூர்வியோடு இருந்த்தோ,
அவ்விதமேயான ஆநுபூர்வியுடையதாகவே மறுகல்பத்தின் ஆரம்பத்திலும் உபதேசிக்கிறான்.
பூர்வபூர்வ அநுபூர்விகளே அப்படியே எம்பெருமான் திருவுள்ளத்தில் ஸ்மரித்துக்கொண்டிருந்து எவ்விதமான மாறுதலும் செய்யாமல்
இப்படியே அநாதிகாலமாக உபதேசித்து வருகிறான்.
இவ்வர்த்தம் விளங்கவே இங்கு ஆழ்வார் “மறை நான்கும் உர்ந்தாய்“ என்கிறார்.
ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரசதகத்தில் “ஸம்ஸ்காரம் ப்ரதிஸ்ஞ்சரேஷு நிததத் – வேதா. ப்ரமாணம் தக“ என்ற
ச்லோகத்தில் இவ்விஷயம் ஸாரமாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.
“மாயிருஞ் சோலைமலை“ என்றது
திருமாலிருஞ்சோலைமலையை என்றாவது திருவேங்கடமலையை என்றாவது கொள்ளலாம்.
————————————————————————–
நெஞ்சே! எம்பெருமான் செய்தருளின மஹோபகாரங்களை எடுத்துரைக்கக் கேட்டாயன்றோ,
இப்படிப்பட்ட மஹோபகாரங்களை அநுஸந்தித்தால் நாம் வாயடைத்துக் கிடக்கக் கூடுமோ?
உலகங்களெல்லாம் அதிரும்படி அப்பெருமான் திருநாமங்களைச் சொல்லிக் கதறவேண்டாவோ,
மிகபெரியோனான் அவனை மிக நீசரான நாம் எப்படி வாய்கொண்டு பேசலாம் என்று நீ அஞ்சியிருக்கிறாய் போலும்,
அச்சத்தை ஒழித்திட்டு உரக்கக் கூப்பிட்டழை என்கிறார்.
மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-
பதவுரை
என் நெஞ்சே–எனது மனமே!
மலை ஏழும்–ஸப்த குல பர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும்–ஸப்த த்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்–கரையாலே சூழப்பட்டு ஒலி செய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர–அதிரும்படியாக
நாவன் என்று-திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை–“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையை யுடைய (பூதனை யென்னும்) பேய் மகளை
நவின்று–(முலையுண்ணும்போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக் கொண்டே
உணட–உண்டுமுடித்த
அஞ்சாது–கூசாமல்
அழை–வாய் விட்டுக் கூப்பிடு-
‘மலையேழும் மாநிலங்களேழும் குலைசூழ் குலைகடல்களேழும் அதிர‘ என்ற விது
‘அழை‘ என்ற வினைமுற்றிலே அந்வயிக்கும். “விண்ணெல்லாங் கேட்க அழுதிட்டாய்“ என்றாற்போலே
ஸப்த லோகமுங்கேட்கக் கூப்பிடவேணுமென்கிறார். நாடு நகரமும் நன்கறிய பகவத் கீர்த்தநம் பண்ணவேணுமென்கை.
மலையேழும் – ஸப்தகுல பர்வதங்களாவன – “இமயம், மந்தரம், கைலை, வடவிந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரியெனக்,
குலவரையேழுங் கூறுமென்ப“ என்று திவாகரத்திற் சொல்லப்பட்டவை.
மாநிலங்களேழும் – ஸப்தத்வீபங்களைச் சொல்லுகிறது அவையாவன –
“நாவலந்தீவே இறலித்தீவே, குசையின்தீவே கிரவுஞ்சத்தீவே, சான்மலித்தீவே தெங்கின்தீவே, புட்கரத்தீவே யெனத்தீவேழே.“ எனப்பட்டவை.
குரைகடல்களேழும் – “உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல் மா கடலேழென வகுத்தனர் புலவர்.“
நவின்றுண்ட நாவன் – சிறுபிள்ளைகள் தாயினிடத்து முலையுண்ணும்போது ஸந்தோஷமிகுதியினால் இடையிடையே
குதலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு முலையுண்பதுபோல், கண்ணபிரானும் பூதனையை மெய்த்தாயாகவே பாவித்து
மகிழ்ச்சியுடன் முலையுண்பதாகக் காட்டிக்கொள்ள மழலைச் சொற்களைச் சொன்னமையை
‘நவின்று‘ என்றதனால் வெளியிடுகிறார். நாவன் – அண்மைவிளி, நாவனே என்கை.
————————————————————————–
கீழ்ப் பாட்டில் “முலைசூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்டநாவன்“ என்று திருவாய்ப்பாடியில் நடந்த
பேய்ச்சி முலைசுவைத்த கதையைப் பேசினபடியால் இப்பாட்டில் “ஆங்கு அவர்கள்“ என்றதற்கு
அத் திருவாய்ப்பாடியிலுள்ள ஆய்ச்சிகள் என்று பொருளாகக் குறையில்லை பிரகரண பலத்தினாலென்க-
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-
பதவுரை
இழைப்பு அரிய–ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும்–கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும்–(குண சேஷ்டிதங்களினால்) ஆச்சரிய பூதனே என்றும்!
மதித்து–அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன–அத் திருவாய்ப் பாடியிலுள்ளவர்கள் சொல்லி யழைத்த யது குலத்தில்
யாதவனே என்றும்–(வஸுதேவர் மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல்பெரு பெயரே பேசி–குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும்–எல்லாரெதிலும்
திருமாலை அவனை–திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன்–கூப்பிடா நின்றேன்.
ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயர்களாவன –
கற்றினம் மேய்த்தவன். வெண்ணெய்த்திருடன், தாம்பாலாப்புண்டவன்,
உரலிடைக்கட்டுண்டவன் என்றிவைபோன்ற திருநாங்களாம்.
இவை பெரும்பெயர்களாகுமோ, சிறுபெயர்களன்றோ இவை என்று சிலர் நினைப்பர்.
அவதாரத்தில் எளிமைக் குணத்தைக் காட்டி நிறும்பெற நினைத்த கண்ணபிரானது திருவுள்ளத்தால்
நாராயணாதி நாமங்களே சிறுபேர் என்றும் கோவிந்த, நவநீதசோராதி நாமங்களே பெரும்பேரென்றும். நிச்சயிக்கத்தகும்.
திருப்பாவையில் ஆய்ச்சிகள் கண்ணபிரானை நோக்கி அடிக்கடி ‘நாராயணன்‘ என்று சிறு பேரையிட்டுச் சொன்னதற்கு
அநுதபித்து உன்றன்னைச் சிறுபே ரழைத்தனவுஞ் சிறியருளாதே“ என்று பொறுப்பித்துக்கொண்டது காண்க.
அவன் திருவுள்ளமுகக்குந் திருநாமமேயன்றோ பெரும்பேர் ஆவது!
“திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே“ என்னப்படுகின்ற எம்பெருமான்
திருவுள்ளமுகக்குந் திருநாமம் நாராயணாதி நாமங்களாக எப்படியாகும்? கோவிந்த கோபாலாதி நாமங்களேயாகுமென்க.
பிழைப்பு இல் பெரும் பெரே – ‘பிழைப்பு‘ என்பதற்கு ‘ஜீவித்தல்‘ என்றும் பொருள் கொள்ளலாம்,
விட்டு உயிர்தரிக்க முடியாத பெரும்பெயர் என்றவாறு.
“ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாய் ஒளித்துவளர“ என்கிறபடியே
யதுகுலத்திற் பிறந்து இடைக்குலத்தில் வளர்ந்ததற்கேற்ப “யாதவனே! ஆயவனே! என்றது.
————————————————————————–
இப்பாட்டில் ‘நெஞ்சே!‘ என்று நெஞ்சை மாத்திரம் விளிப்பதாயிருந்தாலும். நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கையும்,
வாக்குக்கு அடுதத்தான உடலையும் விளிப்பதாகவுங் கொள்ளவேணும்
“யத் மநஸா த்யாயதி தத் வரிசா வததி தத் கர்மணா கரோதி“ என்று வேதமுரைத்த கட்டளையிலே
மன மொழி மெய்களுக்கு ஒரு சேர்த்தியுண்டு. அம்மூன்று கரணங்களுக்கும் காரியம் விதிக் கிறாரிப்பாட்டில்.
மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51–
பதவுரை
நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளே
மதி கண்டாய்–அநுஸந்திக்கக்கடவாய்
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப்பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-
‘மதிக்கண்டாய்‘ என்பதே மூன்றிடத்தும் க்ரியாபதமாயினும் இடத்துக்குத் தக்கபடி பொருள் வாசி கொள்ள வேணும்
மனமே! நீராழிவண்ணனது திருமேனி நிறத்தையே நீ சிந்திக்கக்கடவாய்
வாக்கே! மணிவண்ணன் திருநாமங்களையே நீ சொல்லிக் கொண்டிருக்கக் கடவாய்,
தலையே! மணி வண்ணன் திருவடிகளையே நீ அணிந்து கொண்டிருக்கக் கடவாய் என்று இங்ஙனே யோஜிப்பது அழகியதாம்.
பேராழிநின்று பெயர்ந்து கடல்கடைந்த
“அறிதுயி லலைகடல் நடுவே ஆயிரஞ்சுடர்வாய் அரவணைத்துயின்றான்“ என்கிறப்படியே
திருப்பாற்கடலில் சேஷசயனத்தின் மீது திருக்கண்வளர்ந்தருளுமழகைக்கண்டு
“ஏரார்கோலநதிகழக கிடந்தாய் கண்டேனெம்மானே! “என்றும்.
“அம்மாமலர்க்கண் வளாகின்றானே என்னான செய்கேனே“ என்றும் ஈடுபட்டு
மங்களாசாஸ்நம் பண்ணவேண்டியிருக்க அது செய்யாது.
“பேணலமில்லாவரக்கர் முந்நீர பெரும்பதிவாய் நீண்கர் நிளொரிவைத்தருளா யென்று,
நின்னை விண்ணோர் தாள் நிலைத்தோய்ந்து தொழுவர் நிர்மூர்த்தி பலகூற்றிலொன்று காணுலுமாங்கொலென்றே?“ என்று
நம்மாழ்வார் வயிறுபிடித்துப் பேசினபடியே
தேவதைகள் சென்று பெருமானே! எழுந்திருந்து உடம்புநோவாக் காரியஞ்செய்து எங்கட்கு ஆகவேண்டியதைத்
தலைக்கட்டிக்கொடு என்று பிரார்த்திப்பவர்களேயன்றி
ஸ்வப்ரயோஜநத்தோடுகூட எம்பெருமான் திருமேனியிலும் சிறிது கண் வைப்பவர்களேயல்லர்,
அமுதமளிக்கக் கடல்கடைந் தருளுங்காலத்தில் ‘உப்புச்சாறு எப்போது கிளரப்போகிறது!‘ என்று
தேவதைகள் கண்ணைக் கவிந்துகொண்டு அதைக் கண்டு கொண்டிருந்தார்களே யன்றி,
தோளுந் தோள்மாலையுமாக எம்பெருமான் கடல் கடைந்தருளுமழகைச் சற்றேனும் உற்று நோக்கினவர்களல்லர்
அக்குறைதீர அப்போதைய அழகை நெஞ்சே! இன்று நீ சிந்தியாய் என்கிறார்.
————————————————————————–
கொடியவர்களிடத்தும் ஈரநெஞ்சுடையனாயிருக்கை யென்னுங்குணம் ஆந்ருசம்ஸ்யம்‘ எனப்படும்,
அதாவது ஒருவர்க்குத் தீங்கு செய்யாமை. இக்குணம் எம்பெருமானிடத்தில் அமைந்திருக்கும்படியை
ஒரு த்ருஷ்டாந்த முகத்தாற் கூறுகின்றாரிதில்.
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–
பதவுரை
நிறம் கரியன்–(காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப்பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திருமார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட்கையனான இராவணன் போன்ற மஹாபலியை
(இராவனைப் போலவே தலையறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம்போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்டகாலம் வாழும்படியாக
உய்த்தான்–செலுத்தின அப்பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ளவல்லர்?
காளமேகத்திருவுருவனாயும். அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கையுரை மார்பனாயுமிருக்கிற ஸர்வேச்வரன்.
அறம் பெரியன் –‘ஆந்ருசம்ஸ்யம்‘ (தயை) என்னுங் குணம் பெரிது முடையான். இஃது எங்ஙனே தெரிகின்ற தென்னில்,
கேண்மின், எம்பெருமான் ஸர்வபூதஸு ஹ்ருத்தாகையாலே அவனுக்கு நேரே ஒருவனும் பகைவனல்லன்,
ஆச்ரிதர்களுக்கு எவன் விரோதியோ, அவனையே எம்பெருமான் தனக்கு விரோதியாகக் கருதுவன்.
கண்ணபிரானாய்த் தூதுபோமிடத்துத் துரியோதனை நோக்கிச் சொல்லும்போது எனது உயிர்நிலையான பாண்டவர்களுக்கு நீ
விரோதியாகையாலே எனக்கு நீ விரோதியாகின்றாய், என்றருளிச் செய்துள்ளது குறிக்கொள்ளத்தக்கது.
ஆகவே, ஆச்ரிதனான அம்முகத்தாலே எம்பெருமானுக்கும் விரோதியாயினன்.
இப்படிப்பட்ட மாவலியை இராவணனைப்போலவே தலையறுத்து ஒழிக்கவேண்டியது ப்ராப்தமாயிருந்தும்
ஔதார்யமென்னும் ஒரு குணத்தைக் கைக்கொண்டிருந்தானென்று இதனை ஒரு வியாஜமாக்கி அவனைத் தலைதுணித்திடாது
நெடுங்காலம் பாதாளத்தில் குடிசெய்து வாழுமாறு விட்டருளின பெருங்குணத்தை நோக்குங்கால்
ஸ்ரீமந்நாராயணனில் விஞ்சின தயாளு இல்லை‘ என்பது விளங்குமே என்கிறார்.
“வானவர்கோன் தானத்து“ – வானவர்கோன் தானமென்று ஸ்வர்க்கலோகத்திற்குப் பெயராயினும்,
அதுபோல் விலக்ஷணமான பாதாளலோகமென்பது இவ்விடத்திற்குப் பொருள்.
————————————————————————–
திருவேங்கடமலையை ஒரு சமத்காரம் பொலிய வருணிக்கிறார்.
நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைக்கும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–
பதவுரை
நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றியிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தியென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்யவாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜலஸம்ருத்தியை யுடைத்தான திருமலையென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்படவுரிய
வெற்பு–திருமலையாகும்.
திருமலை யாத்திரையாக வருகின்ற மஹான்கள் பலர்
‘வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல், நெறியாய் கிடக்கும் நிலையுடையேனாவேனே” என்று
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் விரும்பினபடியே திருமலையேறும் வழியிலே மிக்க ஆதரம் வைத்து,
திருமலைமேற்சென்று வாழ்வதிற்காட்டிலும் திருமலைவழியிற் கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்கொண்டு
அவ்வழியிலே வீற்றிருந்து எம்பெருமானைச் சிந்தை செய்கின்றனர்.
அப்போது, மூச்சுவிடுதல் உடம்பு அசைத்தல் முதலியன ஒன்றுஞ் செய்யாதே வால்மீகி முதலிய மஹர்ஷிகளைப்போலே
யோக நிலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அன்னவர்களது கூந்தல் ‘கற்றையானது முன்னின்று பின் தாழ்ந்திருப்பதைக் கண்ட
பூங்கொடிகளானவை சில மனிதர்கள் வீற்றிருக்கின்றார்கள்‘ என்றும் ‘அவர்களுடைய சூழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது‘ என்றும்
தெரிந்து கொள்ளாமல் வான்மீகிமுனிவர் மீது புற்று மூடினாற்போலே
இந்த பக்தர்களின் மேலும் பூங்கொடிகள் படர்ந்திருப்பது அற்புதமானவொரு காட்சியாயமைந்தது.
இப்படிப் பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம் விரும்பத்தக்க மலையாம் என்றாராயிற்று
கிரி – வடசொல்.
————————————————————————–
எம்பெருமான் திருவுள்ளமுவந்து வாழுந் திருப்பதிகளில் எவர் விருப்பம் பண்ணுக்கின்றனரோ,
அவர்களுடைய நெஞ்சிலே எம்பெருமான் உவந்து வந்து எழுந்தருளியிருப்பனன்றோ,
அப்படியே திருமலை முதலிய திருப்பதிகளில் ஆதரம் விஞ்சப்பெற்ற இவ்வாழ்வாருடைய திருவுள்ளத்தில்
எம்பெருமான் வந்து சேர்ந்து “தென்னனுயர் பொருப்புந் தெய்வவடமலையும்“ என்னப்படுகிற
திருமாலிருஞ சோலைமலை திருவேங்கட மலைகளில் தான் பண்ணிப்போந்த விருப்பத்தை
இவர் தம்முடைய திருவுள்ளத்திலே செய்து போருகிறபடியே ஒரு சமத்காரமாக வெளியிடுகிறார்.
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-
பதவுரை
வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இள கோவில்–திருப்பாற்கடலாகிற பாலாலயத்தை
கைவிடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.
ஸ்ரீவசநபூஷணத்தில் –“கல்லுங்கனைகடலு மென்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும்.
இளங்கோயில் கைவிடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாயிருக்கும்“
என்றருளிச் செய்தது இப்பாசுரத்தை உட்கொண்டதேயாம்.
திருமாலிருஞ் சோலைமலையென்றும் திருவேங்கடமலை யென்றுஞ் சொல்லப்படுகிறது இரண்டு திருமலைகளில்
நீ எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றாயோ அவ்வளவு மகிழ்ச்சியோடே என்னுடைய ஹ்ருதபமாகிற கோயிலிலும் வாழ்கின்றாய்
என்று கண்டறிந்த அடியென் “வெள்ளத் திளங்கோயில் கைவிடேல்“ என்று பிரார்த்திக்கின்றேனென்கிறார்.
இதன் கருத்துயாதெனில் –
திருப்பாற்கடலானது எல்லா அவதாரங்களுக்கும் மூலக்கிழங்கு எனப்படும்
“ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந நாகபர்யங்க முதஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
திருப்பாற்கடல் நாதனான ஸ்ரீமந்நாராயணன் சேஷசயனத்தை விட்டிட்டு வடமதுரையில் வந்து பிறந்தான்“ என்றாற்போலே
ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களும் மற்றும் அர்ச்சசாவதாரங்களுமெல்லாம் திருப்பாற்கடல் மூலமாகவே
நிகழ்வதாகக் கொள்ளுங்கொள்கை வைதிகர்களுக்கு உள்ளது.
இக்காரணம்பற்றித் திருப்பாற்கடல் இளங்கோவில்“ எனப்படும்.
(அதாவது – பாலாலயம் என்றபடி, இக்காலத்தும் திருகோயில்களில் எம்பெருமான் திருமேனியை ஜீர்ணோத்தாரணம் செய்ய
நேரும்போது பாலாலயப்ரதிஷ்டை செய்வது வழக்கமாயிருப்பது காண்க. வேறொரு பெருங்கோயிலிற் சென்று சேர்வதற்கு
உறுப்பாக (பூர்வமாக) சிறுகக் கொள்ளுங் கோயிலை பாலாலய மென்கிறது)
திருமலை முதலிய திவ்யதேசங்களும் அன்பருடைய ஹ்ருதயமுமாகிற பெருங்கோயில்களிற்சென்று சேர்ந்து வாழ்வதற்குப்
பூர்வாங்கமாகவே எம்பெருமான் திருப்பாற்கடலில் வாழ்வதாக ஆழ்வார்கள் அநுஸந்திப்பர்களாதலால்
இந்த அநுஸந்தானத்திற்கு இணங்க. திருப்பாற்கடலை இளங்கோயில் (பாலாலயம்) ஆகச் சொல்லுதல் பொருத்தமுடைத்தே
பெருங் கோயிலிற்சென்று சேர்ந்த பின்பு இளங்கோயிலில் ஆதரம் இருக்க ப்ரஸக்தியில்லாமையாலே எம்பெருமானுக்கும்
தமது திருள்ளமாகிற பெருங்கோயிலில் வாழ்ச்சி அமைந்தபின்பு இளங்கோயிலாகிய திருப்பாற்கடலில் ஆதரம்
குறைந்துவிடுமென்றறிந்த ஆழ்வார். ‘பிரானே! அவ்விளங்கோயிலில் நீ ஆதரத்தைக் குறைத்துக் கொள்ளலாகாது.
என்னுள்ளத்தில் வந்து சேர்வதற்கு அவ்விடம் பூர்வாங்கமாயிருததனால் அதுதன்னில் அடியேன் நன்றி பாராட்டக் கடவனாதலால்
அந்த நன்றியறிவின் காரியமாகப் பிரார்த்திக்கின்றேன் – அவ்விடத்தை நீ ஒரு நாளும் கைவிடலாகாது‘ என்று – என்கிறார்.
இதனால் “பனிக்கடலிற் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்தென் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ!“ என்னுமாபோலே
திருப்பாற்கடைலையும் உபேக்ஷித்துவிட்டுத் தம் ஹ்ருதயத்திலே வந்து சேரும்படியான வ்யாமோஹம் எம்பெருமானுக்கு
விளைந்தமை வெளியிடப்பட்டதாயிற்று. ப்ரஸக்தியுள்ளதற்கே ப்ரதிஷேதங்கூடும்“ என்பது சாஸ்த்ரஜ்ஞர் வார்த்தையாகையால், ‘
வெள்ளத்திளங் கோயில் கைவிடேல்‘ என்று ஆழ்வார் பிரதிஷேதிக்கும் போது
எம்பெருமான் திருப்பாற்கடலைக் கைவிடத் தொடங்கினான் என்பது அவசியம் விளங்குகின்றமையால்
இப்படி திருப்பாற்கடலையும் கைவிடும்படியான விபாமோஹம் அவனுக்கு உண்டாயிற்றென்பதைத் தெரிவிப்பதே
இப்பாசுரத்தின் பரமதாற்பரியமாகுமென்க.
————————————————————————–
பிரானே! இவ்விருள் தருமா ஞாலத்தில் உன்னை நினைப்பதென்பது எளிதில் கைகூடாத காரியம்,
ஆனாலும் “எதிர்சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பு மெனக்கே யருள்கள் செய்ய,
விதிசூழ்ந்ததா லெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே“ என்றாற்போலே எப்படியாவது என்னை
அகப்படுத்திக் கொள்ள வேணுமென்று நீ நெடு நாளாகவே க்ருஷி பண்ணிப் போகையாலே உன்னுடைய நினைவு
என்மேல் இடையறாது இருப்பதனாலே என்னுடைய நினைவும் உன்மேல் நிரந்தரமாக இருக்கின்றது.
ஆனால் இவ்வளவோடு நான் திருப்தியடைபவ வல்லேன்.
“அந்தமில் பேரின்பத்து அடியரோருந்தமை“ என்னப்படுகிற இன்பக் கடலையும் அவாஹிக்கப் பெறவேணுமென்று
ஆவல் கொண்டிருக்கும்படியேனை அந்த இன்பக் கடலிலும் அழுந்தச் செய்தருளாய் – என்கிறார்.
என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-
பதவுரை
வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.
“இன்பக்கடல்“ என்னுமளவே போதுமாயிருக்க “கடலாழி“ என்றது அப்பரமாநந்தத்தின் அளவில்லாமையை நன்கு காட்டுதற்கென்க.
“இன்பம் ஆழிகடல்“ என்று இயைத்து, இன்பமாகிற ஆழ்கடல் என்று முரைக்கலாம் உன்னையே எப்போதும்
சிந்தித்துக் கொண்டிருக்கு மடியேனை உன் திருவடிகளிற் சேர்த்துக் கொள்ளவேணு மென்றதாயிற்று இப்பாட்டால்.
“நின்று நினைப்பொழியா நீர்மையால்“ என்றது –எம்பெருமான் இவ்வாழ்வார்தம்மையே நினைத்துக் கொண்டிருக்கிற
படியைக் கூறுவதாக உரைக்கப்பட்டது. இனி இவ்வாழ்வார் எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருப்பதைக்
கூறுவதாகவே உரைக்கவுமாம். எல்லாப் பிறவிகளிலும் அடியேன் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும்படியான
தன்மை எனக்கு வாய்ந்திருப்பதனால் உன்னை யொருகாலும் மறந்தறியேன் என்றவாறு.
வென்றியடலாழிகொண்ட அறிவனே! – நீ ஸர்வ சக்தனாயும் ஸர்வஜ்ஞனாயுமிருக்கையாலே என் காரியத்தைச் செய்து
தலைக்கட்டுகை உனக்கு அரிதன்றேன் என்று குறிப்பிடுகிறார்போலும்.
“வென்றியிடலாழிகொண்ட“ என்றது – ஸர்வ சக்தி யுக்தனென்றபடி
அருளிக்காண் அருள்செய் என்கை.
————————————————————————–
கீழ்ப்பாட்டில் “இன்பக்கடலாழி நீயருளிக்காண்“ என்று பிரார்த்தித்தார்,
எல்லாப்பாட்டிலும் பாரதந்திரியமே வடிவாயிருக்குமவர் “எம்பெருமான் திருவுள்ளமானபடி செய்கிறான்“ என்று
ஆறியிருக்க வேணுமே யன்றி இன்னது நீ செய்ய வேணுமென்று அவனை நிர்ப்பந்திப்பது தகுதியோ என்று
ஒரு சங்கை பிறக்குமாதலால் அந்த சங்கைக்குப் பரிஹாரமாக இப்பாசுர மருளிச்செய்கிறாரென்க.
காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-
பதவுரை
திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப்பம என்றால்–மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?
கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பன்
அவனைப் பரிபூர்ணமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்க வேணுமென்னுங்காதல் கிளராதிருக்குமாயின்
நம்முடைய பாரதந்திரியம் ஜீவிக்கும் அக்காதல் அளவற விஞ்சிவிட்டால் ஸ்வரூபத்தை நோக்கி
அடங்கியிருக்கவேணுமென்றால் யாரால் அடங்கியிருக்க முடியும்?
ஸ்வரூவுணர்ச்சியினால் எவர் பதறாது அடங்கியிருக்கின்றனரோ, அவர்க்குக் காதல் உண்டாக வில்லையென்று
கொள்ளவேணுமேயன்றி காதலுள்ளவர்கள் ஸ்வரூபவுணர்ச்சியினால் அடங்கியிருக்கிறார்களென்பது
ஒருநாளுமில்லை. – என்பது முன்னடிகளின் கருத்து.
காதலின் கனத்தால் நீர் பதறினாலும் அப்பெருமான் தானாகவே நிர்ஹேதுகமாக அருள்செய்து தனது திருமேனியைக்
காட்டிக் கொடுத்தாலன்றோ நீர்கண்டு அநுபவிக்கலாம், உம்முடைய பதற்றத்தினால் என்ன ஆகும்?
வனத் திடரை ஏரியாம் வண்ணமியற்றுமிதுவல்லால், மாரியார்பெய்கிற்பார் மற்று“ என்று நீர் தாமே சொல்லிவைத்திருக்கிறீரே‘
என்று சிலர் சொல்ல, எம்பெருமான் தனது திருமேனியைத் தானே காட்டிக்கொடாவிடினும்.
ஸகல லோகமர்தாவாயிருக்கிற முறைமையினாலும், நிக்ரஹம் கலசாது அநுக்ரஹமே வடிவாயிக்குந் தன்மையினாலும்.
அபராதங்களைப் பார்த்துச் சீறியிருக்கு மெம்பெருமானுடைய திருவுள்ளத்தையும் திருத்திச் சேதநர்களை அங்கீகரிப்பிக்கும்
புருஷகார பூதையான பிராட்டியானவள் தானே அவனைக் காட்டித் தருவள், அதிலொருகுறையில்லை – என்கிறார் பின்னடிகளில்
“காணக்கழிகாதல்“ என்றவிடத்து ‘கழி‘ என்பதை உரிச்சொல்லாகக் கொண்டால் அதிகமா காதல் என்று பொருள்படும்.
அன்றி, ‘கழிகாதல்‘ என்று வினைத்தொகையாகக் கொண்டால் ‘கண்டே கழியக்கடவதான காதல்‘ என்று பொருள்படும்.
“கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும்“ என்றது காண்க.
நாணுதல் – அடங்குதல், கருமால் பொன்மேனியை, அக்கருமால் காட்டாமுன் நங்கள் திரு காட்டும்.
————————————————————————–
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-
பதவுரை
திரு மங்கை–பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம்–நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம்–நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம்–திருவடிகளையும்
பேர்–திருநாமங்களையும்
உரிமையால்–ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம்–போற்றுமவர்களாயிராநின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர்–உறுதியாகப் பற்றுங்கள்
நாம்–நாமோவென்றால்
இரும் தடக்கை எந்தை–மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ்விஷயத்தை)
நால் திசையும்–நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே–கேட்டீர்களோ?
எந்த தெய்வத்தை ஸ்ரீமஹாலக்ஷமி விரும்புகின்றாளோ அதுவே பரதத்துவம் என்பது வேதாந்த ஸிந்தாந்தம்,
ஸ்ரீகுணரத்நகோசத்திலே பட்டர் “வேதாந்தாஸ் தத்வசிந்தாம் முரபிதுரஸி யத்பாதசிஹ்நைஸ் தரந்தி“
(அதாவது, இன்னது பரதத்துவம் என்று நிஷ்கர்ஷிக்கமாட்டாமல் கவலை கொண்டிருந்த வேதாந்தங்கள்
ஸ்ரீமந்நாராயணனுடைய திருமார்பில் பிராட்டியின் அடிச்சுவடுகண்டு இவனே பரதத்துவமென்று நிர்ணயித்துக் கவலை தீர்ந்தன“)
என்றருளிச் செய்த்துங்காண்க. ஆகப் பிராட்டி ஸம்பந்தத்தாலே மேன்மை பெற்ற தைவம் யாதொன்றுண்டு –
ஸ்ரீமந்நாரயணன், அவனை நாவினால் வாழ்த்துந் தொழிலையே உறுதியாகக் கைப்பற்றுங்கோளென்கிறார் முன்னடிகளில்.
பிறர்க்கு உபதேசிப்பவர் தாம்முந்துற அநுஷ்டித்துக் காட்டவேணுமே, ஆதலால் ஸ்வாநுஷ்டானத்தை வெளியிடுகிறார் பின்னடிகளில்
உரிமையால் –சேஷ சேஷித்வமாகிற ஸம்பந்த முறைமை கொண்டு என்றபடி.
நாற்றிசையுங் கேட்டீரே – இதனை எல்லாருமறியவேணுமென்றவாறு.
————————————————————————-
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-
பதவுரை
வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதியானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து
எம்மை–நீர்மைக் கொண்டு
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.
“எனக்குத் தேனே பாலே நன்னலேயமுதே திருமாலிருஞ்சோலைக் கோனோகி“ என்று மஹான்களுக்கு
எம்பெருமான் பரம போக்யனாயிருப்பனாயினும் அரஸகனான பாவியேனுக்கு வேம்பாயிப்பன்,
ஆயினும் “இந்த பகவத் விஷயத்தை நீ பாடக்கடவை“ என்று எம்பெருமான் தானாகவே திருவருள் கூர்ந்து நியமித்ததன்
பலனாகவே ஸரஸ்வதியானவள் நம்முடைய ஹருதயத்திலே வீற்றியிருந்து சப்தாரிகளைத் தொடுக்கச் செய்தாளென்கிறார்.
நாமங்கை – நாவில் வாழும் பெண், ஸரஸ்வதி,
பொன்னாழிபாடு –பொன்னாழியைப்பாடு எனினும், பொன்னாழியையுடைய எம்பெருமானைப்பாடு எனினும் ஒக்கும்.
———-
எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்தையே பேசுகிறார் –
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-
பதவுரை
அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே
இருள் இரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படியுள்ள அத்திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத்திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.
தாய் தந்தையர்க்கு மக்களிடத்தில் இயற்கையாக வாத்ஸல்யமிருப்பது போல எம்பெருமானும் அடியவராகிய நம்மிடத்து
ஸஹஜமான வாத்ஸல்யத்தை நிலை நிறுத்தி அபதார்த்தமாய்க் கிடந்த நம்மைப் பதார்த்தமாக்கிக் கடாக்ஷித்தருளின படியாலே.
எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள அநாதி ஸம்பந்தத்தை அறிய வொட்டாமல் தடையாய்க் கிடந்த அஜ்ஞான விருள் தொலையப் பெற்று
ஸ்வரூப ஜ்ஞாநம் பெற்று அவனுடைய திருவடித் தாமரைகளை அநுஸந்திக்கப் பெற்றேன்,
அத் திருவடிகளிலேயே ஆத்ம ஸமர்ப்பணமும் பண்ணப் பெற்றேன் என்றாராயிற்று.
“அடியார்மேல் வைத்து“ என்று படர்க்கையாயிருந்தாலும் தன்மையில் நோக்கென்று கொள்க‘
அடியேன்மேல் வைத்து‘ என்பதே கருத்தாகும்.
“பொருள் தெரிந்து“ – “பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி யடிமைகொண்டாய் என்றவாறு.
இனி, “பொருள் தெரிந்து“ என்பதற்கு –
அர்த்த பஞ்சகத்தை நாங்கள் தெரிந்துகொள்ளுமாறு என்றும் பொருள் கொள்ளலாம்.
நம்மால் அடையத்தக்க எம்பெருமானுடைய ஸ்வரூபம் எம்பெருமானை அடையுமவனான சேதநனுடைய ஸ்வரூபம்,
அடைவதற்கான உபாயம், அடைந்து பெறும்பேறு அப்பேற்றை அடையவொட்டாமல் நடைசெய்கிற விரோதிகளின் தன்மை –
ஆகிய இவை ஐந்தும் அர்த்தபஞ்சகமெனப்படும்.
இவற்றை நாங்கள் தெரிந்து கொள்ளும்படி கடாக்ஷித்தருளினமையாலே அகவிருள் நீங்கி அடியவரானோம் என்கை.
இரண்டாமடியின் தனிச்சீர் “இருள் திரிந்து“ என்று ஓதப்பட்டு வருமாயினும் இருளிரிந்து என்ற பாடமே புராதமும் சிறந்ததுமாம்.
ஒண் கமலம் – ஒண் கமலம் போன்ற திருவடி என்றபடி, முற்றுவமை.
————————————————————————–
கீழ்பாட்டிற் கூறியபடி எம்பெருமான் தன் பெருமையைப் பாராமல் எளிமையையே பிரகாசப்படுத்தித்
தம்மை விஷயீகரித்த நீர்மையை அநுஸந்திக்கையாலே, எம்பெருமானுக்கு ஸ்வாதத்திரியமே வடிவு என்று
நினைத்திருக்கும் நினைவு தவிர்ந்து அவனுக்கு ஆச்ரித பாரதந்திரியமே வடிவு என்று
அனைவரும் நினைக்க வேணு மென்கிறாரிதில்.
ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-
பதவுரை
ஓர் உருவம் அல்லை–(எம்பெருமானே) பரத்வமே வடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம்–ஆச்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம்–உனது வடியாம் (இப்படி ஆச்ரித பாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர்–இப் பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர்–பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம்–ஆச்ரித பாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம்–எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர்–தெரிந்து கொள்ளுமவர்களே
நீதியால்–நியாயப்படி
நின்று–நிலைத்து நின்று
மண் காப்பார்–உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.
இப்பாட்டு எம்பெருமானை நோக்கிக் கூறுவதாம். விளி வருவித்துக் கொள்க
நீ ஒருருவனல்லை – உனக்குப் பரத்வமே வடிவு என்று சாஸ்த்ரங்களைக்கொண்டு பலர் பேசுவர், அஃது அப்படியன்று.
பரத்வத்தையே நீ வடிவாக வுடையை யல்லை யென்றபடி. இதில் ஓருரு என்றது பரத்வமாகிற வடிவைக் கருதினபடி
எனக்குப் பரத்வம் வடிவன்றாகில், பின்னை எது வடிவு என்கிறாயோ?
ஒளியுருவம் நின்னுருவம் –இருட்டறையில் விளக்குப்போலே இவ்விருள் தருமா ஞாலத்தில் ஒளிபெற்று விளங்குமதான
உனது ஸௌப்ய குணமே உனக்கு வடிவாயிருக்கும். நீ ஸ்வதந்திரனன்று, ஆச்ரிதபரதந்திரன் என்கை.
ஆழ்வீர் எனக்கு ஆச்ரித பாரதந்திரியமே ஸ்வருபமென்று நீர் சொல்லுகின்றீரே,
இது நீரொருவர்மாத்திரம் சொல்லுகிறவார்த்தையா? மற்றுள்ளாரெல்லாரும் இப்படியே கருதியிருக்கின்றார்களா?
என்று எம்பெருமான் கேட்டருள,
அதற்கு உத்தரமுரைக்கின்றார் ஈருருவனென்ப ரிருநிலத்தோர் என்று,
உன்னுடைய ஸௌப்யகுணம் என்மேல் ஏறிப் பாய்ந்தபடியாலே இவ்வுண்மையை நானொருவன் தெரிந்து
சொல்லுகிறேனத்தனை இக்குணத்தைக் கனவிலுங் கண்டறியாத உலகத்தவர்கள்
உன்னைப் பரத்வமே வடிவாக வுடையனாகத்தான் சொல்லுகின்றனர் என்கை.
இதில் ஈருருவன் என்றவிடத்து ஈர் என்றது ‘இரண்டு‘ என்னும் பொருளில் வந்த்தன்று,
‘பெருமை‘ என்னும் பொருளில் வந்தது. பரத்வமாகிற பெரிய வடிவுள்ளவனாக இவ்வுலகத்தவர் உன்னைச் சொல்லுகின்றனர் என்கை.
ஸௌலப்ய குணத்திலீடுபடாத உலகத்தவர்கள் கிரஸித்திருக்கிறபடி யல்லாமல் அக்குணத்தை அநுபவித்த
தாம் அறிந்திருக்கிறபடியே ‘எம்பெருமானுக்கு ஆச்ரிதரிட் வழக்காயிருக்குந் தன்மையே நிலைநின்ற வடிவு‘ என்று
எவர் தெரிந்து கொள்வரோ அவர்களே இவ்வுலகில் மேம்பட்டிருப்பர் என்கிறார் பின்னடிகளில்.
இப்பாட்டுக்கு மற்றொருவதையாகவும் பொருள் கொள்ளலாம் –
ஒருருவனல்ல – “உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தா யிமையோர் தலைவா!“ என்கிறபடியே
அடியவர்களைக் காத்தருள்வதற்காக நீ பலபல யோதிகளில் திருவவதரித்தாயாதலால் பரவாஸுதேவனாயிருக்கையாகிற
ஒரு உருவத்தையே நீ உடைமையல்லை
ஒளியுருவம் நின்னுருவம் – மீனாகவும், ஆமையாகவும் பன்றியாகவும் பலவுருக்கள் நீ கொண்டாலும்
அவை அழுக்குடம்பு அல்ல, நீ பிறக்கு முருவங்களும் சுத்த ஸத்வமயமாய்க் கொண்டு நிரவதிகதே ஜோரூபமாகவே யிருக்கும்.
ஈருருவனென்ப நிருநிலத்தோர் – ஆக விப்படி அஸாதாரண விக்ரஹம், அவதார விக்ரஹம் என்று இருபடிப்பட்ட
திருமேனியையுடையனாக உன்னை இவ்வுலகத்தவர் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
ஆயினும் அஸாதாரண விக்ரஹத்திற் காட்டிலும் அவதார விக்ரஹமே ஸகல லோக உஜ்ஜீவந ஹேது என்று
அறிந்து கொள்வதே சிறப்பு என்கிறார் பின்னடிகளில்.
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply