அருளாத நீர்அருளி அவர்ஆவி துவராமுன்
அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்என்று
அருள்ஆழி அம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி
யருள்ஆழி வரிவண்டே! யாமும்என் பிழைத்தோமே?
பொ-ரை : வட்டமான வரிகளையுடைய வண்டே! அருட்கடலான எம்பெருமானைக் கண்டால், ‘அருள் செய்யாத நீர் திருவருள் புரிந்து, தலைவியினுடைய உயிர் உலர்வதற்கு முன்னர், அருட்கடலான கருடப்பறவையினை அவர் வீதியில் ஒரு நாள் மட்டும் செலுத்துவீர்’ என்று இவ்வார்த்தைகளைச் சொல்லியருள்; வாராத தாமேயன்றி, யாமும் எக்குற்றத்தைச் செய்தோம்?
வி-கு : ‘அருளி’ என்பதனைக் ‘கடவீர்’ என்பதுடன் முடிக்க. கண்டக்கால்-வினையெச்சம். யாம் என்பது, தனித்தன்மைப் பன்மை. உம்மை-எச்ச உம்மை. ‘வண்டு’ தும்பியின் இனத்தைச் சார்ந்தது; நன்மணத்தேமட்டும் செல்லும் இயல்பினது என்பர் நச்சினார்க்கினியர். (சிந்தாமணி 893. செய். உரை.)
ஈடு : ஆறாம் பாட்டு. ‘எங்கள் ஆற்றாமை நீக்கிலராயினும், தம்முடைய நாராயணன் என்ற பெயர் குறைந்து போகாதபடி, நோக்கிக்கொள்ளச் சொல்லுங்கள்,’ என்றாள் முன், ‘தாம் அல்லாதாருடன் கலந்து வரும் தாழ்வினைக்காட்டிலும் நம்முடைய நாராயணன் என்ற பெயர் அழியினும் அமையும்’ என்பதனை இறைவன் திருவுள்ளமாகக் கொண்டு, மேல் செய்யத் தக்க செயலைக் கூறுகிறாள் இப்பாசுரத்தில். அதாவது, தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒருவழி உண்டு. தாம் 1அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே? அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது; நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்; இப்படி மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு, அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள். அருளாத நீர்-2‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர். 3‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேடம் என்று அறிகிலோம்; ‘அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள். இனி, ‘அருளாத நீர் அருளி’ என்பதற்கு, ‘திருவருள் செய்வதற்குப் பரிபக்குவமுள்ள உயிர்கள் கிடைக்காமை
யாலே அருள் 1குமரியிருந்து அருள் செய்யாதிருக்கிற நீர், அருள் செய்தற்குச் சமயம் வருமிடத்தில் அருள் செய்து’ என்று உரைத்தலுமாம். ‘அருளைக்கொண்டே நிரூபிக்க வேண்டும் தன்மை உம்மது; அருள் இல்லாதவர்க்கும் ‘அய்யோ’ என்ன வேண்டும் நிலை இவளது; அங்ஙனம் இருக்க, அருளாது ஒழிவது எங்ஙனே!’ என்பாள், ‘நீர் அருளி’ என்கிறாள்.
அவர் ஆவி துவரா முன் அவளுடைய உயிர் பசை அற உலர்வதற்கு முன் அருளப் பாரும். இனி, 2‘பின்னையும் அருள் செய்தற்குத் தவிரீர் அன்றே! ஆதலால், அவள், உயிர் அற்ற பொருளுக்குச் சமம் ஆவதற்கு முன்னர் அருளப் பாரும்,’ என்று பொருள் கூறலுமாம். 3‘கீர்த்தியையுடைய இராமன் என்னைப் பிழைத்து இருப்பவளாக எப்படிக் கௌரவிப்பாரோ, அப்படி உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது,’ என்றாள் பிராட்டியும். ‘நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது? அவன் அருள் செய்யப் போகின்றானோ?’ என்ன, ‘நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப்புள்-அருட்கடலான பறவை. 4‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே ‘அருளாழிப்புள்’ என்கிறாள். கடவீர் – ‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும் தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப் போகாதே 5பிசுகிச் சுழியாநிற்கும் ஆதலின், அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள், ‘கடவீர்’ என்கிறாள். ‘எங்கே?’ என்னில், அவர்வீதி – அவள் தெருவிலே. ‘அங்ஙனம் ஒண்ணுமோ? ஒரு தெருவில் பலகால் போகப் புக்கவாறே ‘இவ்வரவு ஒரு காரணமுடைத்து என்று கூறார்களோ?’ என்னில், ஒரு நாள்-நாங்கள் பிழைத்து கிடப்பதற்கு ஒரு நாள்-போக அமையும்.
அருள் ஆழி அம்மானை – 1‘தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார்,’ என்னும்படி அருட் கடலானவன். இதனால், பெரிய திருவடியும் மிகை என்கிறாள், இனி அருளை இறைவனுக்கு அடைமொழியாக்காது, ஆழிக்கு அடைமொழியாக்கி, ஆழி என்பதற்குச் சக்கரம் என்று கொண்டு, ‘அருளை நிரூபகமாகவுடைய திருவாழியைக் கையிலேயுடையவன்’ என்று பொருள் கூறலுமாம். ‘ஆயின், ஆழி அருளை நிரூபகமாக வுடையதாய் இருக்குமோ?’ எனின், 2‘அருளார் திருச்சக்கரம்’ என்ப ஆதலின், சர்வேஸ்வரனுக்கும் 3‘கைக்குறியாப்பை வாங்குவது இங்கேயன்றோ! சர்வேஸ்வரன்பக்கல் அருள் மறுத்தாலும் அருள் 4கூடு கட்டி நிற்கும் இடமன்றோ இது? இப்பொருளால், ‘பெரிய திருவடி ஒருவனுமேயோ! அங்குக் கையாளாக உள்ளார் அடைய நம் பரிகாரம் அன்றோ?’ என்று தெரிவிக்கிறாள்.
இது சொல்லியருள்-இத்தனையும் சொல்லியருளல் வேண்டும். ‘எது?’ என்னில், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்’ என்கிற வார்த்தையைச் சொல்லியருளல் வேண்டும். ஆழி வரி வண்டே-வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய் இருக்கிற வண்டே. இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும், ‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம். 5இதனால், இறைவனோடு சேர்க்கின்ற
ஆசாரியனுடைய ஆத்துமகுணத்தைப் போன்றே, உருவத்தின் குணமும் உட்கோள் என்கை, யாமும் என் பிழைத்தோம் – ‘நாங்கள் என்ன தப்புச் செய்தோம்? தாம் பிரிந்து துவளவிட்டு வைத்தது போன்று, 1நாங்களும் கிரமத்திலே பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ? 2விலங்கின் காலில் விழுவாரும், தூது விடுவாரும் தாமாக இருக்க, 3அத்தலை இத்தலையாகியும் வாராது இருக்கிற தம்மதோ, எங்களதோ குற்றம்?’ என்பாள், ‘யாமும் என் பிழைத்தோம்?’என்கிறாள்.
நாரயணத்வம் அழியாமல் நோக்கி கொள்ள சொன்னாள் கீழ்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply