ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – -49/50/51/52

சூரணை -49
ஏவம் பூதமான இது பகவத் பிரசாதத்தாலே ஆழ்வாருக்கு சித்தித்து ,
ஆழ்வார் பிரசாத்தாலே இவ் அருகு உள்ளாருக்கு உப ஜீவ்யமாய் ,
இவரை இட்டு நிரூபிக்கும் படியானமையை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் மேல்-

உறக்கம் தலை கொண்ட பின்னை மறை நான்கும் உணர்ந்த
தங்கள் அப்பனோடே ஓதின சந்த சதுமுகன்
சலம் கலந்த வெண்புரி நூல் மானுரி திரி தந்து உண்ணும் காமன் உடல் இருக்கு இலங்கு
ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப் போலே
ஆதுமில் காலத்து எந்தையான வாய் முதல் அப்பன் பிரம குருவாய் இராப் பகல் முன் சொல்ல
கற்றனமே என்ற இவரும்
நாவினால் நன்மையால் என்னும் ஓத வல்ல பிராக்களை கன்மின்கள் என்று சொல் பயிற்ற
வேதம் ஓதுவார் ஒத்து ஆகையாலே ஆதர்வணாதிகள் போலே இதுவும் பேர் பெற்றது-

அதாவது
உன்னிய யோகத்து உறக்கம் தலை கொண்ட பின்னை-பெரிய திருமடல் -8- -என்கிற படியே
சம்ஹ்ருதி சமயத்தில் நாம ரூப விவாகநர்ஹமாய் சதவஸ்தமாய் கிடந்த இத்தை
ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே
விபக்தம் ஆக்கி
மகதாதி சகல தத்வங்களையும் அண்டத்தையும் சிருஷ்டித்து
சதுர் முக சிருஷ்டிக்கு முன்னாக ஏகார்ணவத்திலே
-இவை நல் வழியாய் கரை சேரும் விரகு ஏதோ -என்று அனுசந்திக்கை யாகிற
யோக நித்தரை செய்த அனந்தரம் –

உணர்ந்தாய் மறை நான்கும் -இரண்டாம் திருவந்தாதி -48–என்கிற படியே
ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே ,சம்ஸ்கார கதமாய் கிடந்த நாலு வேதங்களையும்
ஆநு பூர்வி தப்பாத படி ஸ்மரித்த -திசை முகனார் தங்கள் அப்பன் -என்கிற படியே
தனக்கு ஜநகனான சர்வேஸ்வரனோடே-
யோ வை வேதாம்ச ப்ரஹனோதி தஸ்மை -ஸ்வேதாஸ்வர உபநிஷத்–என்னும் படி ஓதின –
சந்த சது முகன் -பெரியாழ்வார் திருமொழி-2-5-8–என்கிற படி சந்தசை நிரூபகமாக உடைய சதுர் முகன் –

சலம் கலந்த செஞ்சடை –திருச்சந்த –113-
வெண் புரி நூல் மார்வன் -முதல் திருவந்தாதி -46- –
மானுரிய தளம் உடையவர் –பெரிய திருமொழி-10-9-4-
பிறர் மனை திரிந்து உண்ணும் -திருக் குறும் தாண்டகம் -19-
காமன் உடல் கொண்ட தவத்தார் -நான்முகன்-78-
இருக்கிலங்கு திருமொழிவா எண் தோள் ஈசர் -பெரிய திருமொழி-6-6-8-
என்று நித்ய ஸ்நான உபவீத கிருஷ்ணாஜினதரான
பிஷான போஜன -இந்திரிய ஜெய -சதா அத்யயன – பரத்வங்களான
பிராமச்சர்ய லஷண யுக்தனாய் -ப்ரஹ்மண புத்ராயா சேஷ்டாய – என்கிற படியே
தனக்கு ஜேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கும் –
சரணாம் மறை பயந்த -முதல் திருவந்தாதி-60–என்கிற படியே
புருஷார்த்த தத் உபாய ஞான சாதனமான வேதத்தை ஒதுவித்தாப் போலே —

ஆதுமில் காலத்து எந்தை-திருவாய் -3-3-4- –என்றும் -ஒன்றும் தேவும்-திருவாய் -4-10-1- -இத்யாதிப் படியே
ஒன்றும் இல்லாத சம்ஹார காலத்திலே-நாம ரூபங்களை இழந்தவோ பாதி
சத்தையும் இழந்து போகாமே எந்தையான முறையாலே தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கி
மீளவும் கரணாதிகளை தந்து , ஞான விகாசத்தை பண்ணின –
வாய் முதல் அப்பன்-திருவாய் -7-9-3- -என்கிற வாய்த்த காரண பூதனான உபகாரகன்
பீதக வாடை பிரானார் பிரம குருவாக வந்து -பெரியாழ்வார் -5-2-8–என்கிற படியே தானே ஆசார்யனாய் –
இராப் பகல் ஓதுவித்து பெரியாழ்வார் -5-2-3–என்கிற படியே -திவாராத்ர விபாகம் அற
-என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2–என்கிற படியே – முன் உருச் சொல்ல –
திரு நாமச் சொல் கற்றனமே -திருவிருத்தம் -66–என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று
இப்படியே அவனோடு ஓதின இவரும்-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தொடங்கி–
குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்று ஸ்வாச்சார்ய பிரேமத்தையும்
நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாய் கருதும் படியான என்னை
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் -என்று
க்ருதக்ஜைதையை முன்னிட்டு கொண்டு –
ஓத வல்ல பிராக்கள்-திருவாய்-9-1-11- -என்று இத்தை அப்யசிக்க வல்ல உபகாரகர் என்னும் படி ..
ஸ்ரத்தா பூர்வகமாக ஓதும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை

கன்மின்கள் என்று உம்மை யான் -என்கிற படியே -இத்தை அப்யசி யுங்கோள்-
என்று சொல்லி ,-சொல் பயிற்றிய -திருவாய்-9-5-8–என்கிற படியே -இச் சப்தத்தை அப்யசிக்க
வேதமானது -ஓதுவார் ஒத்து -என்று அத்யேதாக்களை இட்டு நிரூபிக்கபடுமது
ஆகையாலே ,ஆதர்வணம் ,தைத்ரியம் காண்வம் என்று பேர் பெற்றால் போலே ,
இவர் இதுக்கு பிரதமாத்யேதாவனது கொண்டு -இதுவும் சடகோபன் சொல் -திருவாய்–1-2-11–என்று
பேர் பெற்றது என்கை ..

ஆக -அத்யயன -சூரணை-37-இத்யாதி வாக்யத்தில் சந்தங்கள் ஆயிரம் என்று
பிரஸ்துதமான திரு வாய் மொழியின் வேதத்வத்தை -எவ்வுலகத்து -சூரணை -39 -இத்யாதி
வாக்கியம் தொடங்கி இவ்வளவாக சாதித்தார் ஆய்த்து-

—————————————————————

சூரணை -50-

திரு வாய் மொழி ஒன்றுக்கும் அன்றே வேதத்வம் சாதித்தது .
இவருடைய பிரபந்தங்கள் நாலுக்கும் ஒக்கும் இறே –ஆகை இறே
வேத சதுஷ்டய -சூரணை 43–இத்யாதி வாக்யத்தில் இவர் பிரபந்தங்கள் நாலையும்
நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாக அருளிச் செய்தது –
-அதில் எந்த பிரபந்தம் எந்த வேதத்தின் உடைய ஸ்தானத்திலே என்ன அருளிச் செய்கிறார் .

இயற்பா மூன்றும் வேத த்ரயம் போலே
பண்ணார் பாடல் பண்புரை இசை கொள் வேதம் போலே-

அதாவது
இயற்பாவான திரு விருத்தம் திருவாசிரியம் , பெரிய திரு அந்தாதி
என்கிற பிரபந்தங்கள் மூன்றும் -அடைவே ருக், யஜுர், அதர்வணங்கள்
ஆகிற மூன்று வேதத்தின் உடையவும் ஸ்தானத்திலே ..

பண்ணார் பாடல்–திருவாய்-10-7-5-என்று -பண்ணோடு சேர்ந்து இருந்துள்ள இசையை உடைய திருவாய்மொழி –
பண்புரை வேதம்-திருவாய்-6-6-5–என்றும் -இசை கொள் வேதம்–பெரிய திருமொழி-5-3-2–என்றும்
பண்ணையும் இசையும் உடைத்தான சாம வேதம் போலே என்கை ..

வியாக்யானங்களில் -பண்புடை வேதம் -என்று ஒழிய -பண்புரை வேதம்-என்ற பாடமும் ,
இசை கொள் வேதம் என்கிறதுக்கு -சாம வேத பரத்வம் கண்டது இல்லை ஆகிலும் ,
ஆப்த தமரான இவர் ,இப் பிரபந்தத்திலே இப்படி அருளிச் செய்கையாலே ,இப்படியும் கொள்ள வேணும் ..
அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் சாம வேத வைலஷண்யத்தைப் பற்ற இத்தைச் சொன்னதே உள்ளது .
மற்றயவற்றுக்கும் இது உப லஷணம் என்று கொள்ளக் கடவது .

பண்புரை வேதம் என்றது -பண்ணை புரைந்து இருக்கிற வேதம் என்றதாய்
அப் பண்ணுக்கு ஆஸ்ரயமான வேதம் என்ற படி ..
இசை கொள் வேதம்-என்றது இசையை உடைத்தான வேதம் என்ற படி
பண்ணார் பாடல் என்று -திரு வாய் மொழி பண்ணையும் இசையையும் உடைத்தாய் –
ஆகையாலே சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் உண்டு என்னும் இடம் அறிவிக்கைக்காக வாய்த்து
சாம வேத பரமான சந்தைகள் வேண்டுவது உண்டாய் இருக்க ,இவற்றை இவர் இப்போது எடுத்தது-

—————————————————————

சூரணை-51-

ஆனால் அந்த சதுஷ்டயத்தில் ருக்கு சாம ரூபேண விஸ்த்ருதமாம் ஆகாரம் இங்கும் ஒக்குமோ என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் ..

ருக்கு சாமத்தாலே சரசமமாய்
ஸ்தோபத்தாலே பரம்புமா போலே
சொல்லார் தொடையல் இசை கூட்ட
அமர் சுவை ஆயிரம் ஆயிற்று-

அதாவது-
சாம ஸங்க்ரஹமான ருக்கானது ஸ்வ விவரணமாய் ருசஸ் சாம ரச -என்கிற படியே தனக்கு
ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ,
ரச சகிதமாய் ,-ஹாவு ஹாவு-இத்யாதியான ஸ்தோபத்தாலே விச்த்ருதமாமா போலே
ருக் வேத ஸ்தாநேயாய் இருக்கிற சொல்லார் தொடையலான–(தொடையல் -சப்த சந்தர்ப்பம் )திருவிருத்தம்-100-
திரு விருத்தம் நூறு பாட்டும்-
இசை கூட்டி-திருவாய்-2-4-11- என்கிற படியே -இசையிலே கூட்டினவாறே
சாம வேத ஸ்தாநேயாய் -அமர் சுவை ஆயிரம்–திருவாய்-1-3-11-என்கிற படியே
சரசமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாய் பரம்பின என்கை ..

—————————————————————

சூரணை-52-

இனி சாமம் தான் அநேக விதம் ஆகையாலே ,இது
எந்த சாமத்தொடு ஒக்கும் என அருளி செய்கிறார் மேல் ..

சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து
யாழ் பயில் கான ஸ்வரூபியை பாலையாகி என்று விசேஷிக்கையாலே
வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற
உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி
சரம கதி முடிவாக
தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி
மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்ன பாடுகையாலே
இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்..

சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து —
அதாவது -சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே–திருச்சந்த -14- –
திசை முகனார் தங்கள் அப்பன் சாமி அப்பன் – பெரிய திருமொழி –2-2-7-
சாமவேதோஸ்மி-ஸ்ரீ கீதை –10-22- -என்று
அபியுக்தரும் ,அவன் தானும் சொன்ன சாமம் சாமான்யம் ஆகாமல்
சாந்தோகன் ,பவ்ழியன்,ஐம் தழல் ஓம்பு தைத்ரியன் ,சாம வேதி –பெரிய திருமொழி-5-5-9-
என்ற இடத்தில் -சாம வேதி -என்று மேல் சொல்லா நிற்க –சந்தோகன் -என்று முதலில் பிரித்தது என்கை –
இது நினைவன்றாகில் -சாம வேதி -என்றதுக்குள்ளே
இந்த சாமமும் அந்தர் பவிக்குமாய் இருக்க இங்கன் பிரித்து சொல்ல வேண்டா விறே- என்ற கருத்து-

யாழ் பயில் கான ஸ்வரூபியை பாலையாகி என்று விசேஷிக்கையாலே–
அதாவது -யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவை திருவாய்-2-3-7–என்று
யாழ் விஷயமாக அப்யசிக்க படுவதான சாஸ்திரத்தில் சொன்ன
லஷணத்தை உடைய நரம்பிலே பிறந்த பண் பட்ட ரசம் என்னும் படி
கான ஸ்வரூபம் போலே இனியன் ஆனவனை -கான சாமான்யம் ஆகாமல்
-யாழ் நரம்பில் பெற்ற பாலை யாகி-(பாலையாகிய கான ஸ்வரூபி )-பெரிய திருமொழி-7-3-7–என்று
அந்த சாந்தோக சாமத்தின் நிறமான-பாலையாழ் என்கிற பண்ணை இட்டு விசேஷிக்கையாலே என்கை ..
இப்போது இது சொல்லிற்று –
சாம வேத கீதன் -என்கிற இடத்தில் வேதத்தோடு அன்றிக்கே , அதன் கீதத்தோடு சாமானாதி கரிக்கையாலே
அந்த கீதமும் சாந்தோக சாம வேதம் என்று அறிவிக்கைகாக —

வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற —
அதாவது –இப்படி விசேஷிக்கையாலே ,பச்வதி கரண ந்யாயத்தாலே ,
சாம வேத கீதன்–சாமி–சாம வேதோச்மி –என்று சொன்ன சாமான்யமான இஸ் சாம சப்தமும் ,
கீத சப்தமும் ,கீழ் சொன்ன சந்தோக தத் கீதங்கள் ஆகிற விசேஷத்தில் பர்யவசிக்கும் இறே –
ஆன பின்பு சாந்தோக சாமமே இத்தால் சொல்லப் பட்டது
ஆகையாலே இப்படி அப்யுக்தரும் தானும் தன்னோடு சாமானாதி கரிக்கும் படி
உத்க்ருஷ்டமாய் அவனுக்கு ஆதரீயணமான சாந்தோக சாமம் ஈது என்னும் இடம் தோன்றும் படியாக என்கை ..

உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி —
அதாவது –ஒரு சாமம் தனக்கே ,பிரஸ்தாபம், உத்கீதம் ,ப்ரதீஹாரம் ,உபத்ரவம் ,நிதநம்
என்று அஞ்சு பாகங்கள் உண்டாகையாலே ,அவற்றுக்குள் ஒன்றாக இருக்கச் செய்தே ,
சாம்ன உத்கீதோ ரச –சாந்தோக்யம்- என்று சாமத்துக்கு ரசமாக சொல்லப் படுமதாய் ,பிரணவ பூர்வமாக ,
கானம் பண்ணப் படுமதாய் ,இருப்பது ஓன்று இறே உத்கீதம் –
ஆகையால் அந்த உத்கீத அவயவமான பிரணவத்தை ,
ஓம் இத் ஏதத அஷரம் உத்கீதம் உபாசீத -என்று சாந்தோக்யம் தன்னில்
பிரதமத்தில் எடுத்தால் போலே ,இங்கும் பிரதமத்திலே எடுக்கிற அளவில் ,ஓம் என்று
சம்ஹிதா காரேன வெடுத்தால் அதிகிரிதா அதிகாரமாம் என்று அசம்ஹிதா காரேன
அஷர த்ரயத்தையும் பிரதம த்வதீய த்ருதீய பாதங்களில் எடா நிற்க செய்தே ,
பிரதம அஷரமான அ காரம் முதலாக எடாதே உ காரம் முதலாக எடுக்கையாலே
அஷர க்ரமத்தை மாறாடி என்கை-

இப்படி உ காரம் முதலாக எடுத்ததுக்கு பிரயோஜனம் அந்த
சாந்தோக்ய ரசமான உத் கீதத்துக்கு நோக்கான உத் -என்கிற
திரு நாமம் இதற்க்கு உள்ளுறை யானமை தோன்ற உ காராதியாக
எடுத்து -உயர்ந்தே -10-10-11–என்று தகாராந்தமாக முடிக்கை ….
இது தான் மேலில் சூர்ணையில் வியக்தம் ..
ஆக இப்படி அஷர த்ரய ரூபேண ,பிரணவத்தை பிரதமத்திலே கீர்த்தியா
நிற்கச் செய்தே ஏதத் அபிப்ரா யேன அஷர க்ரமத்தை மாறாடி-

சரம கதி முடிவாக —
அதாவது -சாந்தோக்ய மத்யே சொன்ன ,அர்சிராதியான சரம கதியை –
சூழ் விசும்பு அணி முகிலிலே-10-9-1- -பேசுகையாலே சரம கதியை முடிவாக கொண்டு என்கை ..
இத்தை சரம கதி என்கிறது -கர்ப்ப யாம்ய தூமாதிகள் போல் அன்றிக்கே எல்லை நிலமான முக்தி மார்க்கம் என்கையாலே —

தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி —
அதாவது -அந்த சாமம் -ஏதத் சாம காயன்னாச்தே–தைத்ரியம்–என்கிற படியே
பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக -ஹாவு ஹாவு -இத்யாதி
படியே சாம கானம் பண்ணி அஹம் அந்நாதா -என்று களிக்கும் நித்ய முக்தரான
தேவர்களுக்கு போக்யமாம் ஆம் போலே -தொண்டர்க்கு அமுது உண்ண -9-4-9–என்கிற படியே
இதுவும் பகவத் அனுபவ சபலர்க்கு போக்யமாம் படி ஆக்கி என்கை ..

மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்னப் பாடுகையாலே —
அதாவது –
சர்வேப்யோபிஹி வேதேப்ய சாமகோஷோ மகாநபூத் அன்வ கோஷாய
தத்யர்த்தம் தேன ப்ரஹ்மாண்ட மண்டப -என்றும்
பாடு நல் வேத ஒலி -திருவாய்-5-9-3–என்றும் சொல்லுகிற பெரிய கோஷத்தை உடைத்தான
சாம வேதம் போலே ,பெரிய திரு அத்யயனம் என்னப் பாடுகையாலே என்கை ..
இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்..

ஆக இப்படி கீழ் சொன்ன ஆகாரங்களை கொண்டு ,இத்தை
சாந்தோக சாமத்தில் உபநிஷத் பாகமான சாந்தோக்யத்துக்கு
சமம் என்று அபியுக்தர்கள் சொல்லுவார்கள் என்கை-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading