முதலில் வேளுக்குடி, அப்புறம் காபி குடி’ என்பது பல்லாயிரக்கணக்கானோருக்குப் பழக்கமாகவே ஆகி இருக்கிறது. வேளுக்குடி கிருஷ்ணன் ‘பொதிகை’ தொலைக்காட்சியில் மூன்று வருடங்களாக காலை 6 மணிக்கு வழங்கிய இருப்பினும் கீதையும் – இப்போது வரும் பாகவதமும் அவ்வளவு பிரசித்தம்! அவரை சந்தித்தோம்.
”திருவாரூர் அருகில் உள்ள சிறு கிராமம் வேளுக்குடி. எனது தந்தை வரதாச்சாரி ஸ்வாமிகள் இங்கே பிறந்தவர். இருப்பினும் சென்னை தம்பு செட்டித் தெரு, லிங்கி செட்டித் தெரு போன்றவற்றின் நீண்டகாலவாசி. 70 வயது வரை உபன்யாசம் செய்தவர். ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசிக்கப் போனவர் அங்கே பரமபதம் அடைந்தார்” என்று தனது தந்தையாரின் நினைவுகளில் ஆழ்ந்து போகிற வேளுக்குடி கிருஷ்ணனின் தாயார் பெயர் ஜானகி அம்மாள்.
தந்தையின் மறைவுக்குப் பின் மயிலாப்பூர்வாசியான வேளுக்குடி கிருஷ்ணன், விவேகானந்தா கல்லூரி மாணவர். பிறகு சி.ஏ. முடித்து பின், ஒரு கம்பெனியில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். உபன்யாசம் செய்ய எப்படி வந்தார். அவரே சொல்கிறார்.

”என் தகப்பனாரைப் பொறுத்தவரை அவர் என்னென்ன விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாரோ அதை நான் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்பாவின் மறைவுக்குப் பின், அவரது உபன்யாசம் கேட்டவர்கள் என்னைச் சொல்லக் கேட்டார்கள். அவ்வளவு பழக்கம் இல்லையெனத் தயங்கினேன். இருந்தும் 1991 நவம்பர் முதல் உபன்யாசத்துக்கு வந்தேன்.
முதலில், ஆபீஸ்.. மீட்டிங்.. வேலை – உபன்யாசம் என்று மாறி மாறி ரொம்ப கஷ்டமாக இருந்தது. பிறகு ஆபீஸ் வேலையை விட்டுவிடுவது என்று முடிவெடுத்தேன். தந்தையின் ஆசைப்படி முழுநேர ஆன்மீக பிரசாரம் என்றாகிவிட்டது! ஆபீஸ் வேலை என்றால் 9 tஷீ 5 வீட்டுக்கு வந்துவிடலாம். இது அப்படியில்லை – இப்போது எப்போதும் வேலைதான். யார் வந்தாலும் பார்க்கணும்; அவர்கள் கேட்கிற சந்தேகத்தைத் தீர்க்கணும்” என்கிற இவர், உலகப் பயணம் போன உபன்யாசகர்களில் ஒருவர். அதுபற்றி அவரே சொன்னார்:
”வெளிநாடுகளைப் பொறுத்தவரை.. அங்கிருப்பவர்களுக்கு ஆன்மீகத்தில் இருந்து வெகுதூரம் விலகி இருக்கிறோம் என்ற ஏக்கம் இருக்கிறது. மாம்பலத்தில் இருக்கிறவர்களால் தினந்தோறும் உபன்யாசம் கேட்க முடியும். ஆனால், அந்நிய தேசத்தில் எதையோ இழந்த தாபத்தில் இருக்கிறார்கள் அவர்கள்! அதனால் எப்போது போனாலும் திரளாக வந்து கேட்கிறார்கள்!
நம்ம ஊருக்கும் அந்த நாட்டுக்கும் ஒரு வித்தியாசம்.. நாம் நிகழ்ச்சி முடிந்ததும் இங்கே எழுந்து போய்விடுவோம். அங்கே நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒரு மணி நேரம் ‘கேள்வி நேரம்’ என்று நிறைய கேட்டு தெளிவடைகிறார்கள்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை மாலையில் ஆங்கிலத்தில் – காலையில் தமிழில் சொற்பொழிவு! மாலைச் சொற்பொழிவுக்கு அந்த நாட்டுக்காரர்களும் வருகிறார்கள். பல்கலைக்கழகத்தினர், மாணவர்கள், நூலகத்துக்கு வருவோர் என்று எல்லோரும் மாலையில்தான் வருகிறார்கள்.
வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை என் ஆன்மீகச் சொற்பொழிவுக்கு எந்தத் தடையும் இல்லை. லேபர் மினிஸ்ட்ரியில் முதலில் அனுமதி பெற்றுவிட வேண்டும். அவர்கள் சொல்லியிருக்கும் விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும்.
நான் இந்த வேஷ்டியையும், இட்டுக்கொண்டிருக்கும் ‘திருமண்’ என எதையும் மாற்றிக் கொண்டு எங்கேயும் போனதில்லை. அங்கே திறந்த மனதோடு இருக்கிறார்கள்.ரொம்ப கஷ்டமான கட்டுப்பாடுகள் உள்ள நாடுகளுக்கு நான் போகவே இல்லை! நான் போனதெல்லாம் கோயில்கள் இருக்கும் நாடுகள். நான் உபன்யாசம் செய்ததே கோயில்களில்தான்” என்கிறார் வேளுக்குடி.
6500 அங்கத்தினர்களைக் கொண்ட ‘கிஞ்சித்காரம் டிரஸ்ட்’ என்ற ஒன்றை ஏற்படுத்தி இதன் மூலம் நூல்கள் வெளியிடுதல், இளைஞர்களின் படிப்பு உதவி, மருத்துவ முகாம்கள் நடத்துதல், சரித்திர – சமயத் தலங்களை திருப்பணி செய்தல், திவ்யதேசங்களுக்கு எல்லோரையும் யாத்திரை அழைத்துப்போய் வருதல் என்று பல்வேறு பணிகளையும் இவர் செய்து வருகிறார்.
”இதுவரை மூன்று முறை திவ்யதேசப் பயணங்களை ஏற்பாடு செய்து போய் வந்துள்ளோம். 2006-ம் ஆண்டு, 400 பேர் கொண்ட குழுவோடு பயணம் புறப்பட்டு ராமாயணத் தலங்கள் – அது தொடர்புடைய நிகழ்விடங்கள் காடு மேடு என்று எங்கெல்லாம் உண்டோ, அங்கே போய் வந்தோம்.
2008-ல் பிருந்தாவனத்தில் ஏழு நாட்கள் தங்கி பாகவதத்தில் சொன்னபடி 90 இடங்களுக்குப் போனோம். கண்ணன் தொடர்புடைய அத்தனை இடங்களுக்கும் போய் பார்த்து வந்தோம்.
2009ல் மொத்தம் மூவாயிரம் பேர் பயணம் போனோம். துவாரகைக்கு, குருக்ஷேத்திரத்திற்கு, பிருந்தாவனத்துக்கு என்று! வந்த அனைவரது பெயர், வயது குறிப்பிட்டு சராசரி வயது என்ன என்று கம்ப்யூட்டரில் அடித்தால் வந்த சராசரி வயது என்ன தெரியுமா? 67. அதிகபட்ச வயது 84. கோமதி துவாரகாவில் படகில் போய் கடலில் வழிபட்டு வரவேண்டும். இதில் 30-40 பேர் பை பாஸ் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள். அத்தனைபேரும் நலமோடு போய் நலமோடு வந்தோம்.
இந்த வயதான காலத்தில் நாம் தனிமைப்பட்டு விட்டோம் என்று ஒரு எண்ணம் வரா வண்ணம் இத்தனை பேரோடு ஒரு பதினைந்து நாட்கள் பயணம் திருப்தியை தந்ததே.. இந்த அனுபவம் எனக்கு ஆனந்தமானது!” என்கிறார்.
”இந்த திவ்யதேச பயணத்தின் அடிப்படை நோக்கமென்ன?” கேட்டோம்; சொன்னார்:
”பாகவதத்திலே ‘சுகர்’ ஒன்று கேட்கிறார்.
வீடு கட்டிக்கொண்டு வாழ்கிறோம்; துணிமணிகளை போதுமா, போதுமா என்று போர்த்திக் கொள்கிறோமே; சமைத்த உணவும், அதை சாப்பிட விதவிதமான பாத்திரங்களும் தேடுகிறோமே; நிறைய சேர்த்து சேர்த்து வைக்கிறோமே.. என்றைக்காவது கங்கையோ, காவிரியோ நாங்கள் இனி தண்ணீர் தரமாட்டோமென்று சொல்லிவிட்டதா? எப்போதாவது மரங்கள் பழங்களை நாங்களே சாப்பிட்டுவிடப் போகிறோம் என்று சொல்லிவிட்டதா? என்றைக்காவது பூமித்தாய் என்மீது படுக்காதே, மெத்தையில் படுத்துக்கொள் என்று சொன்னதுண்டா?
எத்தனை வயதானாலும் ஒரு குழந்தையை தாய் தன் மடியில் கிடத்திக் கொள்ளவே ஆசைப்படுவாள்! பூமித்தாய்க்கு நாமெல்லாம் குழந்தைகள்தானே! கட்டில் போட்டு மெத்தையில் நாம் படுப்பதானால் இந்த பூமித்தாயோடு நமக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது?
தாராளமாக இயற்கை காற்று வீசும்போது காற்று வாங்க நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்?’
அன்றைக்கு சுகர் கேட்டது இது!
ஆனால் இன்று, உலகளாவிய அளவில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்துப்போய், இன்றைக்கு 170 நாடுகள் சேர்ந்து பேசி, ‘எப்படி இந்த நிலையை மாற்றுவது என்று தெரியவில்லை’ என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டோம்தானே!
இது ஏதோ புராணத்தில் சொல்லப்பட்ட பழைய கட்டுக்கதையல்ல.
கங்கை தண்ணீர் மாசுபட்டிருக்கிறது. தரையில் படுக்க முடியலே – மாசு கிருமிகள்! ஓஸோன் லேயரை உடைத்துவிட்டோம் என்கிறார்கள். காற்று வாங்க ஏ.ஸி.யை போட்டதே காரணம் என்கிறோம். அதனால் நாம் இயற்கையிலிருந்து விலகியே இருக்கிறோம்.
ஒரு வருடத்தில் இருபது நாளோ, பதினைந்து நாளோ இதைப்போல் இருக்கும் சுகங்களை – வசதிகளை குறைத்துக் கொண்டு நம்மாலேயும் இந்த இயற்கையின் பக்கம் நெருங்கி வாழ முடியும்! மொபைல் போன் அடிக்காமல் இருக்க முடியும்? சாப்பாட்டை கையிலே ஏந்தி சாப்பிட முடியும்! டி.வி. அது இதென்று ராத்திரியில் சீரியலில் மூழ்காமல், நாம சங்கீர்த்தனம் பண்ணி வாழ முடியும். ஒன்றாக இருந்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, கஷ்டப்படுகிறவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட்டு.. சின்னச் சின்ன விஷயங்களில் சங்கமிக்க முடியும் என்று சிந்தித்ததன் விளைவே இந்த திவ்யதேசப் பயணம். நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ளவே இந்தப் பயணம்!” என்கிறார் வேளுக்குடி.
”தொலைக்காட்சியில் உங்கள் தொடர் நிகழ்ச்சி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்….?” என்று அடுத்த கேள்வியை வைத்தோம்.
”சேலத்திலிருந்து ஏழு நாள் உபன்யாசம் முடித்து புறப்பட்டேன். சென்னை வர ரயில் நிலையம் வருகிறேன். யாரோ இரண்டு போர்ட்டர்கள் ‘கிடுகிடு’வென்று என் பெட்டிகளைத் தூக்கினார்கள்.
‘யாருப்பா நீங்க… உங்களிடம் பேசவே இல்லையே.. அப்படி இருக்க என் லக்கேஜை நீங்க ஏன் எடுக்கிறீங்க?’ என்றேன்.
‘நாங்க உங்ககிட்டே போர்ட்டராக தூக்க வரல்லே. தினமும் காலையில் ‘பொதிகை’யில் கீதையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த சமயம் வண்டி வந்தால்கூட தூக்கப் போக மாட்டோம். இப்படி நாங்கள் பத்து பேர் இங்கே இருக்கோம்’ என்றார்கள்.
மாதச் சம்பளம் வாங்குகிறவர் சொன்னதில்லை இது! போர்ட்டர்கள் கீதையைக் கேட்பதாகச் சொன்னதும் பூரித்துப்போனேன்”.
”சாதி, இனம், மொழி – வைணவத்தில் வடகலை, தென்கலை என்று இத்தனை பிரிவுகள் தேவைதானா?” என்ற கேள்வியை எடுத்து வைத்தோம்.
”பகவான் இத்தனை வேறுபாடுகளை உருவாக்கவில்லை. அவர் ஏற்படுத்தியது நான்கு; அதுவும் தொழில் ரீதியாக! இதுவே கீதையிலும் வேதத்திலும் இருக்கிறது; ஆனால், இதை நான்காயிரம் பிரிவாக்கியது அவரல்ல. ஒவ்வொருத்தரும் நமக்கு சுதந்திரம் வேண்டுமென்று புதுக்கட்சி மாதிரி புதுசு புதுசா ஏற்படுத்திவிட்டனர். அரசியல் கட்சி நடத்துவதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. அப்படிக் கூடாது. அது தேவையும் இல்லை. பகவானிடத்தில் பக்தி செலுத்துவது என்பது யாருக்காயினும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். இப்போது எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி வைத்து வடகலை – தென்கலை – ஸ்மார்த்தர்கள் – வைணவர்கள் எல்லோரும் ஒன்றுபட முயற்சி எடுத்தால் இது நடக்குமா என்று தெரியாது. நாம அதில் ஈடுபட்டால் நமது வாழ்க்கையும் போய், நாமும் பக்தி பண்ண முடியாமல் இரண்டும் கெட்டான் நிலைக்குப் போய்விடும். ஆக, நாம் எதைச் சேர்ந்தவர்களோ அதை நன்கு தெரிந்து, பின்பற்றி பக்தி செய்ய வேண்டும். அடுத்த சமயத்தை எக்காரணம் கொண்டும் தூஷிக்கக் கூடாது.
நிறைவாக ஒன்று… ஆன்மிகம் என்பது 60 வயதில் ரிடையர் ஆனபிறகு வருவதல்ல. முதியோரைப் பார்த்து ‘கிருஷ்ணா, ராமா என்று இருக்கக் கூடாதா, காசி, ராமேஸ்வரம் என்று போய் வரக்கூடாதா?’ என்று கேட்டுப் பழகிவிட்டோம். ஆனால் ராமானுஜர், ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர், ‘வயதான பின்தான் ஆத்மா பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை.
அவர்கள் அத்தனை பேரும் தங்கள் சின்ன வயதில் தெரிந்துகொண்டு பெரியவர்கள் ஆனபின் பேசினார்கள். அதனால் சிறுவயதிலிருந்தே ஆத்மாவைப் பற்றிய ஆய்வு மக்கள் மனதில் வரவேண்டும். அது புத்தகம் மூலமாகவோ, ஊடகங்கள் மூலமாகவோ, உபன்யாசங்கள் மூலமாகவோ இருக்கலாம். இளைஞர்கள் இப்போது ஆன்மிகம் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இது நம் தேசத்தின் அற்புத அடையாளம்!”
– அன்பான குரலில் அவர் கூறியவை.
August 24, 2010 at 2:18 pm |
3ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் காலை 6-20க்கே பொதிகை டீவி முன்பு அமர்ந்து ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகளின் கீதை, தற்போது ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றை விடாமல், நானும் என் மனைவியும் கேட்டு வருகிறோம்.
அவரைப் பற்றி இன்னும் விவரங்கள் உஙள் மூலம் அறிந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி.