திருமகளும் மண்களும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர் கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தர்யாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னி நடுப் பின் துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே-
திருமகளும் – பெரிய பிராட்டியாரும்,
மண்மகளும் பூமிப் பிராட்டியாரும்,
சிறக்க வந்தோன் – மேன்மை அடையும்படி வந்த நம்பெருமாள்,
வாழியே – வாழ வேண்டும்;
செய்ய இடைத்தாய்மகளார் – செப்பமான நேர்மையான இடையர் குலத்தில் பிறந்த ஸ்ரீ கும்பன் மகளான நப்பின்னையால்,
சேவிப்போன் – சேவிக்கப் படுமவன்;
இரு விசும்பில் – பெருமை பொருந்திய பரம பதத்தில், –
வீற்றிருக்கும்,
இமையவர் கோன் – இமை கொட்டாதவர்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனானவன்;
இடர்கடிய- துன்பங்கள் அகல,
பாற்கடலை – திருப் பாற்கடலை,
எய்தினான் – அடைந்தவன்;
அரிய – அருமையான
தயரதன் – தசரதன் என்னும் அரசன்,
மகனாய் -மகனான இராமனாய்,
அவதரித்தான் – அவதரித்தவன்;
அந்தர்யாமித்வமும் ஆயினான் – எல்லார் மனத்திலும் உறையும் தன்மையும் உடைவனானவன்;
பெருகி வரும் – வற்றாது ஆற்றொழுக்காகப் பொங்கி வரும்,
பொன்னி – பொன்னி என்னும் காவிரி ஆற்றின்,
நடுப்பின் – நடுவில்,
துயின்றான் – பள்ளி கொண்டவன்;
பெரிய பெருமாள் கோயிலில் உள்ள பெருமை மிக்க மூலமூர்த்தியான பெரிய பெருமாள்,
எங்கள் பிரான் – எங்களுக்கு உதவி செய்த பிரானானவன்,
அடிகள் – திருவடிகள் வாழி-வாழியவே
(திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன்)
திருவாகிய மகள் திருமகள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்தான். கடைந்த போது தோன்றியவள் தாமரை மலரில் வாழ்கின்ற பெரிய பிராட்டியாரான திருமகள். பாற்கடலைக் கடையும் எம்பெருமானுக்கு சிரமம் நீங்குவதற்காக, புன் சிரிப்பு, கருணை இவைகளாகிற அமுதங்களாலே நனைத்துக் கொண்டு சந்திரனுடைய நிலவு போலே சுழன்று வருகின்ற அமுத அலைச் சுழல்களிலிருந்து பிராட்டி தோன்றினாள் என்று கூறும் ஸ்ரீ குணரத்னகோசம் (49).
ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே –-கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின.-இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.-இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய். இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து, வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?“உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.-இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.-உத்தர சதகத்தில் -உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம –என்று-ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –
அரங்கனுக்கு திருமகளும் மண்மகளும் பத்னிகள் என்று புருஷஸுக்தம் (2-5) கூறும். திருமகளுக்கும் மண் மகளுக்கும் சிறப்பாவது நம்மாழ்வார் “என் திருமகள் சேர் மார்பன்” என்றும், “நின் திருவெயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வன்” என்றும் அருளியது காண்க. இது தன்னையே திருமழிசை யாழ்வாரும் “மன்னு மாமலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்” என்று திருச்சந்த விருத்தத்தில் (55) அருளியபடியே சிறந்த தாமரைப்பூவில் பிறந்த பிராட்டிக்கும் மண்மகளுக்கும் வல்லபனானவன் அரங்கன் என்று அருளுவர். நம்பெருமாளுக்கு வலது பக்கத்திலும் இடதுபக்கத்திலும் விளையாடவல்ல அன்ன பேடை போன்றுள்ள திருமகளும், மேன்மேலும் வளர்த்தியை உடைய நிழல் போன்றவளான மண்களும் திகழ்வதை பட்டர் ஸ்ரீ ரங்கராஜ பூர்வ சதகத்தில் (63) அருளியதும், “கமலயா ஷமயா ச ஸிம்ஹாஸநே நிஷண்ணம்” (66) என்கிறபடியே திருமகளோடும் நிலமகளோடும் சிங்காசனத்தில் அரங்கனை எப்போதும் விட்டப்பிரியாது வீற்று இருப்பதை அருளியதும் அநுபவிக்கத் தக்கவை.
திருமகளுக்குச் சிறப்பாவது – திருவாகிய பெரிய பிராட்டியாரை திவ்ய மஹிஷியாக பெரிய பெருமாள் கொண்டமை. இது பற்றியே பெரியாழ்வார் “திருவாளன்” என்கிறார். மேலும், ஏழு உலகங்களையும் படைத்தவுடன் தளிர் விடுவதாகவும், அவற்றின் நிர்வாகத்தினால் மொட்டு விடுவதுமாகிற கடைக்கண் பார்வை உடையவளும், திருவரங்க மாளிகைக்கு ஒரு மங்கள தீபக்கொழுந்து போலிருப்பவளுமான ஸ்ரீரங்கராஜனுடைய திவ்ய மஹிஷீயுமானவள் என்று பட்டர் ஸ்ரீ குணரத்னகோசத்தில் உரைப்பர். அரங்கனுடைய கருணைக்கோர் இருப்பிடமானவளாய், ஞானம், சக்தி முதலான ஆறு குணங்கள் நிரம்பப் பெற்ற வளாய், மேலான பிரிகிருதியாகச் சொல்லப்படுமவளான திருமகள் எம்பெருமானுடைய மேலான ஒரு சக்தியாவாள் என்று ஸநத் குமார ஸம்ஹிதை கூறும். திருமங்கையாழ்வாரும் ‘“ஒலிதிரை நீர்ப்பெளவம் கொண்ட திருவாளன்” என்பதற்குச் சேர ஒலிக்கின்ற அலைகளோடு கூடிய ஜலத்தையுடைய கடலிலே பிறப்பையுடையவளான பெரிய பிராட்டியாரான திருவுக்கு வல்லபனானவன் என்கிறார். எல்லாவற்றாலும் உயர்ந்தவனாய் பரமபுருஷனான எம்பெருமான், மங்களத்தை உண்டு பண்ணுபவளான இவளுக்கு அநுரூபமான பதி ஆவான். “உனக்கு ஏற்கும்” என்று ஆழ்வார் அருளியபடியே இவள் அவனுக்கு ஒப்பாய் இருக்குமாபோலே எம்பெருமானும் திருத்தக்கச் செல்வனாய் இருப்பவன் என்பர். பிராட்டியின் வால்லப்யத்தாலே அவன் திருமகள் கேள்வனானான். ஸ்ரீ ய:பதி என்பர். இங்ஙனே பல உள.
மண்மகளுக்கு சிறப்பாவது –-திருமதிள்கள், திருமண்டபங்கள், இடைகழி முதலான தன் பரிவாரங்களோடு கூடிய ஸ்ரீ ரங்கவிமானத்தை சேவிப்பதற்காகவே பூமிப்பிராட்டி இங்கு வந்து சேர்ந்ததுபோல இருக்கிறது என்று பட்டர் ஸ்ரீரங்கராஜ பூர்வ சதகத்தில் (35) அநுபவிப்பர். பிரளயம் கொண்ட காலத்திலே பாசி பற்றிக் கிடந்த மண் மகளை உத்தரிப்பதற்காக வராக அவதாரம் செய்து, அதனால் வந்த ஒளியுடையவனாய் திருவரங்கத்தில் பள்ளி கொண்டான் என்பதற்குச் சேர ஆண்டாள் “பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு… திருவரங்கச் செல்வனார்” (நாச்.திரு. 11-8) என்று அருளியது காண்க. இதனால் மண்மகள் சிறப்பு சொல்லப்பட்டதாயிற்று-
(செய்ய விடைத் தாய்மகளார் சேவிப்போன்) – செய்ய – நேர்மையான, இடைத் தாய்மகள் – இடையர் குலத்தில் ஸ்ரீ கும்பனுக்கு பிறந்த நப்பின்னை. இடையரால் பெற்று வளர்க்கப்பட்ட மகளாக- அன்பிற்குரிய தேவி நப்பின்னை என்னும் நீளா தேவி. இவளுக்கு மணவாளர் நம்பெருமாள். அவளால் சேவிக்கப்படுபவன் நம்பெருமாள். நம்மாழ்வார் அருளியபடியே ‘“அன்று உருவு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பன்” என்று கண்ணனாய் ஏழு எருதுகளை அடக்கி தாய்மகளான நப்பின்னைப் பிராட்டிக்கு அன்பன் என்று அவளால்தொழப்பட்டவன் இன்று அரங்கனாய் இருக்கிறான் என்றபடி. பின்னும் “ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து” என்கிற படியே கோபாலரான ஸ்ரீ கும்பனுடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய தோளோடே கலந்தவன் அரங்கன் என்று சுவை பட திருமழிசையாழ்வார் (திருச். வி.55) அநுபவிப்பர். பின்னைக்கு இனிய பெருமாள் அரங்கர் என்றும் திருவரங் கத்து மாலையில் (21) அருளியது காண்க.
(இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர் கோன்) “அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே” என்று திருமங்கையாழ்வார் அருளியதற்கு ஏற்ப நித்ய ஸுரிகளுக்கும் தலைவனானவன் அரங்கன் என்கிறார். மேலும் பிறவியின் தொடுதலாகிற வாசனை இல்லாத நித்ய ஸுரிகளுக்கு தலைவனான அரங்கன் பள்ளி கொண்ட இடம் தென்னரங்கம் என்பதற்குச் சேர இமையோர்கள் தாதைக்கு இடம்” என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார். “அமரரேறே என்று தொண்டரடிப்பொடிகளும், “விண்ணோர் முதல் என்னும்” என்று நம்மாழ்வாரும், “விண்ணவர் கோன்” என்று திருப்பாணாழ்வாரும் அனுபவித்தனர்
(இடர் கடியப் பாற்கடலை எய்தினான்) எம்பெருமான் எழுந்தருளிய நிலைகளில் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நிலை வியூகம் எனப்படும். வியூகமாவது படைப்பு, காப்பு, அழிவு முதலானவற்றுக்குக் கடவனாய், ஸம்ஸாரிகளின் இடர்களைப் போக்கி விருப்பத்தைக் கொடுப்பவனாய் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நிலை. பாற்கடல் போலே வியூகம் என்பர் பிள்ளைலோகாசார்யர். “ஆயிரம் பெயரால் அமரர் சென்றி றைஞ்ச அறிதுயில் அலைகடல் நடுவே ஆயிரம் சுடர்வாய் அரவணைத் துயின்றான் அரங்கமாநகருளானே”‘ என்று திருமங்கையாழ்வார் அருளியபடியே, தேவர்கள் எல்லாரும் தங்களுக்கு ஏற்பட்ட இடரைப் போக்க அவர்கள் கூக்குரலைக் கேட்க பாற்கடலில் பள்ளி கொண்டவன் இன்று அரங்கத்தில் துயிலுகிறான் என்று உரைப்பர் -பெரியாழ்வாரும்-பையரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம் மூர்த்தி” என்று கூறுவர். இதற்கு உரையிட்ட மணவாள மாமுனிகள், திருப்பாற்கடலிலே தன் தொடுதலாலே விரிந்ததான பணங்களை யுடையவனாய், மென்மை, குளிர்த்தி, நாற்றங்களைத் தன்மையாகவுடைய திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே ஸம்ஸாரிகளான ஆத்மாக்களை உய்விக்கும் பொருட்டு பல உபாயங்களை மனத்திலே சிந்தித்துக் கொண்டு படுத்திருப்பதாக அநுபவிப்பர். நம்மாழ்வாரும் “கடலிடம் கொண்ட கடல் வண்ணா” என்று அநுபவிப்பர். திருப்பாற்கடலானது முப்பத்திரண்டு லக்ஷம் யோசனை யுள்ளது. அதன் நடுவே உள்ள திருவனந்தாழ்வானுடைய உடலானது மூன்று லக்ஷம் யோசனை, அவன் மேலே யோக நித்ரை செய்யும் திருவரங்கனின் திருமேனியானது இரண்டரை லக்ஷம் யோசனை (யோசனை என்பது 7, 8 மைல்) என்று அஷ்ட ப்ரபந்த நூலில் திருவரங்கத்து மாலையில் அருளிச் செய்துள்ளார் –
(அந்தர்யாமித்துவமும் ஆயினான்) – அந்தர்யாமித்வம் – உள்ளே உறையும் தன்மை. எம்பெருமானின் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை ஆகிய ஐந்து நிலைகளில் அந்தர்யாமி என்பது ஒவ்வொரு வஸ்துவிலும் எம்பெருமான் உள்ளே உறையும் நிலை.-“பூதத ஜலம் போலே அந்தர்யாமித்வம்”” என்பர் பிள்ளை லோகாசார்யர். பிரம்மாண்ட புராணத்தில் (5வது அத்யா. 4-5 சுலோகம்) சொல்லியபடியே பெரியபெருமாள் தெய்வீகத் தன்மை கொண்டு திருமேனியுடன் எங்கும் வியாபித்துள்ளான் என்றும் எங்கும் பரந்துள்ள எம்பெருமான் அடியார்கள் பொருட்டு ஆசை கொண்டவனாக அர்ச்சாமூர்த்தியாக திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிறான் என்றதும் காண்க, பூதத்தாழ்வார் நல்லவர்கள் உள்ளத்தில் இருக்கும் எம்பெருமான்களைச் சொல்லும் வரிசையில் “தலை அரங்கம்” என்று திருப்பதிகளில் ப்ரதானமான கோயில் என்று உரைப்பர். தொண்டரடிப் பொடியாழ்வாரும் தம் நெஞ்சைப் பார்த்து “மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பதல்லால் பேசத் தானாவதுண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்” என்று மாசற்ற மனத்தில் அரங்கன் இருப்பைத் தெரிவிக்கிறார். திருப்பாணாழ்வாரும் “என்னைத் தன் வாரமாக்கி வைத் தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்” என்று அரங்கன் அந்தர்யாமியாய் இருப்பதை அநுபவிக்கிறார். நம்மாழ் வாரும் தாம் அருளிய திருவாய்மொழியில்,“மூவுல காளியே என்னும்”, கடிகமழ் கன்றைச் சடையனே-என்னும், “நான்முகக்கடவுளே என்னும்” என்று இந்திரன், சிவன், நான்முகன் ஆகியோர்க்கு அந்தர்யாமியாய் இருக்கிறான் திருவரங்கன் என்றதும் காணலாம் –
(அரிய தயரதன் மகனாய் அவதரித்தான்) அருமையான தசரதனுக்கு மகனாகப் பிறந்தான். “மயா | ராகவேரூபேண”: என்று ஸ்ரீரங்க மஹாத்மியத்திலும் | (அத்யாய. 8-30 சுலோகம்) எம்பெருமான் தான் இராமனாக அவதரிப்பேன் என்றது காண்க. தொண்டரடிப் பொடியாழ்வாரும் தாம் அருளிய திருப்பள்ளியெழுச் சியில் “அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா”” என்கிறார். அதாவது சக்கரவர்த்தி திருமகனாய் அவதரித்தவன் இந்த அரங்கனே என்றபடி. இராமனாய் அவதரித்து இராவணனைக் கொன்று தேவர்கள் ரிஷிகள் முதலானோர் கார்யம் நிறைவேற்றிய பின்பும், அந்த அவதாரத் துக்குப் பிற்பட்டவர்களுக்கும் உதவுவதற்காக திருவரங்கத்தில் படுத்துள்ளான் என்பர். திருவரங்கப்பதிகத்தை (4-9) அநுபவிக்கும்போது “மூவுருவில் இராமனாய்” என்று அருளியதற்கு ஏற்ப, இராவணன் பொருட்டு தசரதாத்மஜ ராமாவதாரம் செய்தான் என்று மணவாள மாமுனிகள் உரையிடுவர்.நம்மாழ்வாரும் நாயகி பாவத்தில் தாய்ப் பாசுரமாகச் சொல்லும்போது அரங்கனை “காகுத்தா” என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் காணலாம். பராசர பட்டரும் ஸ்ரீ ரங்கராஜஸ்தவ உத்தர சதகத்தில் (70) “ஹே நாத மநுஜஸமயம் க்ருத்வா பத்மயா லஹ” என்று அரங்கனே இராமனாய் அவதரித்தான் என்றது காண்க –
(பெருகிவரும் பொன்னி நடுப்பின் துயின்றான்) – பொன்னி என்பது காவிரி நதியின் மறு பெயராகும். மிகப் பழமையான காவிரி பாய்ந்து வளம் சிறக்கும் நாடுகளிலெல்லாம் பொன் கொழிக்கும். இது பற்றியே காவிரிக்குப் பொன்னி என்ற பெயரும் உண்டு. காவிரித் தாயும் அரங்கன் வருவதற்கு முன்னமேயே அவனுக்கு தன்னையே ஒரு மாலை போல் இட்டு ஒரு மணல் திட்டை ஏற்படுத்தியவள். இதன் நடுவில் அரங்கன் துயின்ற வரலாறு பின்வருமாறு–விந்திய மலையின் அடிவாரத்தில் எல்லா களும் சேருகின்ற இடம் ஒன்று முன்பு இருந்தது. விச்வாவசு என்ற கந்தர்வன் ஒரு நாள் வந்தான். அவன் வந்தவுடன் தென் திசையைப் பார்த்துக் கைகூப்பி அத் திசையை நோக்கிச் சென்றான். அப்போது அந்த நதிகளுக்கு இடையே விவாதம் வந்தது. ஒவ்வொரு நதியும் தனக்கே அந்த கந்தர்வன் வணக்கம் செலுத்தினான் என்று போட்டி யிட்டன. தெற்கு நோக்கிச் சென்ற அந்த கந்தர்வன் தெற்கில் உள்ள கடல் வரை சென்றான். அங்கு பற்பநாபன் தனது உறக்கம் நீங்கி எழுந்த தைக் கண்டான். அப்போது உத்தராயண காலம் தொடங்கியது. கந்தர்வன் வடக்கு நோக்கிச் சென்றான். அங்கு சென்ற போது மீண்டும் அந்த நதிகளைக் கண்டு வணங்கினான். அந்த நதிகள் நீர் யாரை வணங்கினீர்? என்று கேட்டன-
அதற்கு அவன் உங்களில் உயர்ந்தவர் யாரோ அவரை வணங்கினேன்” என்றான் உடனே அந்த நதிகளுக்கு நடுவில் யார் உயர்ந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் அந்த நதிகள் தாங்கள் உயர்ந்தவர்கள் அல்லர் என்று முடிவுக்கு வந்து அமைதியாயின. ஆனால், கங்கையும் காவிரியும் தங்களுக்குள் தானே உயர்ந்தவள் என்று பல காரணங்களைக் காட்டியபடி இருந்தன. அந்த இரு நதிகளும் நான்முகனிடம் சென்று கேட்டன. அவரும் “கங்கையே உயர்ந்தவள் அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று சொன்னார். இதைக்கேட்ட காவிரி துக்கப்பட்டு நான்முகனைக் குறித்து, தான் கங்கைக்குச் சமமாக ஆக வேண்டும் என்று தவம் இருந்தாள். நான்முகனும் “கங்கைக்கு நிகராக காவிரி இருப்பாள்” என்று வரம் தந்தான், ஆனால் கங்கையைக் காட்டிலும் காவிரி உயர்ந்தவள் என்று வரம் தர மறுத்தான். அப்போது காவிரி ஸ்ரீ ரங்கநாதன் விக்ரகத்தை திருச் சேறையில்
பிரதிஷ்டை செய்தாள். நீண்ட காலம் வழிபட்டதன் பொருட்டு அரங்கன் அவளை வரம் கேட்கச் சொன்னார். காவிரியும் கங்கையைக் காட்டிலும் உயர்ந்தவளாக விரும்பினாள். உடனே எம்பெருமான் தன் ஸம்பந்தம் மூலமாக கங்கை அடைந்த உயர்வை யாரும் அடைய முடியாது என்றும், ஆனால் தன் கருணை மூலமாக காவிரி கங்கையைக் காட்டிலும் மேன்மை அடைவாள் என்றான். அரங்கன் காவிரியை பார்த்து “ஸ்ரீரங்க விமானம் உன் நடுவே வந்து அமையும் அங்கு வந்து நான் வசிப்பேன்” என்று கூறினார்.-மேலும் நான் உன் நடுவிலே வசித்து வருவதால் நீ எப்போதும் என் சம்பந்தம் பெற்று கங்கையைக் காட்டிலும் உயர்ந்தவளாவாய் என்றான் -ப்ரஹ்மாண்ட புராணம் ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் -9-22-38-ஸ்லோகங்கள்
இது பற்றியே தொண்டரடிப் பொடி யாழ்வாரும் தாம் அருளிய திருமாலை என்னும் பிரபந்தத்தில் “கங்கையில் புனிதமாய காவிரி நடுவுபாட்டு ” என்றும், “வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள் கள்வனார் கிடந்தவாறும்” என்றும் பாடினார். மேலும் குலசேகராழ்வாரும் “திருவரங்கப்பெருநகருள் தெண்ணீர்ப்பொன்னி திரைக் கையால் அடி வருட” என்று அருளியதற்கு ஏற்ப திருவரங்க மாநகரத்திலே தெளிந்த நீரையுடைய காவிரி திரைகளாகிற கைகளாலே அரங்கன் திருவடிகளை வருட பள்ளி கொண்டுள்ளான் என்பர். இவ் வாழ்வாரே அரங்கன் காவிரியின் நடுவே பள்ளி கொண்டதை “திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டு” என்கிறார். அதாவது திட்டுக்கள் விளங்கும்படியான கரையை யுடைய காவிரியின் நடுவே எம்பெருமான் பள்ளி கொண்டபடி-திருமழிசை ஆழ்வாரும் பரந்து பொன் நிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்” என்பதற்குச் சேர காவிரியானவள் அரங்கனிடம் தனக்குள்ள பெரிய அபிமாநத்தாலே இருபுறமும் சுற்றிலும் பரந்து நின்று என்றும் -ஊற்று மாறாமல் பெருகி வருகிறாள் என்று அநுபவிப்பர் – பெரியவாச்சான் பிள்ளை. மேலும், பெருகி வரும் காவிரி யைப் பற்றிச் சொல்லும் போது இவ்வாழ்வாரே – குலைத் தலைத்து இறுத்தெறிந்த குங்குமக் கழம்பினொடு அலைத் தொழுகு காவேரி என்கிறார், அதாவது -குங்குமப் படர் கொடியை நீர் வந்து குலைத்துச் சுற்றும் அலைத்து முறித் தெறிந்த குங்குமத் துகள்களைக் குழம்பாக்கி அத்தோடு கூட அலைத்துக் கொண்டு பெருகி வருகிறாள் என்றபடி – இவ்வாறு மற்ற ஆழ்வார்களும் தாங்கள் அருளிய பிரபந்தங்களிலே பொன்னி என்றும் காவேரி பெருகி வரும் தன்மையைப் போற்றி உள்ளனர் –
( பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள்) பெரிய பெருமாள்- மூலவர். நம்பெருமாள்- அழகிய மணவாளன் – உற்சவர். ஆழ்வார்கள் பதின்மராலும், ஆண்டாளாலும் 247 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற திவ்யதேசம் ஸ்ரீ ரங்கமாகும். ஸ்ரீரங்கத்தில் கோயில் பெரிய கோயில், மதிள் பெரிய மதிள், பிராட்டியார் பெரிய பிராட்டியார். பெண் கொடுத்த ஆழ்வார் பெரியாழ்வார், மண்டபம் பெரிய திருமண்டபம் திருநாள்,-பெரிய திருநாள் -திருப்பாவடை – பெரிய திருப்பாவாடை, , ஆசார்யர் -பெரிய மணவாளமாமுனிகளான பெரிய ஜீயர், எனவே பெருமாள் பெரிய பெருமாளானார்.
இந்த திவ்யதேச எம்பெருமானான பெரிய பெருமாள் வைபவம் புராணங்களில் பேசப்பட்டுள்ளன. ஸூர்ய வம்சத்தில் அயோத்யையை ஆண்டு வந்த இக்ஷ்வாகு மன்னன், நான்முகனால் சத்ய லோகத்தில் திருவாராதனம் செய்து வந்த ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்றுக் கொண்டான். அயோத்திக்கு வந்தான். அயோத்யையின் வடகரையில் சுமார் 3500 அடி தூரத்தில் ஸரயூ மற்றும் தபஸா நதிகளின் நடுவில் அயோத்யை நகரத்தைப் பார்க்கும் விதமாக சுப நேரத்தில் சாஸ்த்ரங்களில் கூறியபடி பிரதிஷ்டை செய்தான். பங்குனி மாதம் ரோகிணி நக்ஷத்ரத்தில் பிரம்மோத்ஸவத்தை மிகவும் நேர்த்தியாகத் தன் புத்ரர்கள் பேரன்கள் புடை சூழ நடத்தினான் என்று பிரம்மாண்ட புராணத்தில் ஸ்ரீரங்க மஹாத்மியத்தில் எட்டாவது அத்யாயத்தில் (3-7 ஸ்லோகங்கள்) கூறப் பட்டுள்ளது. இதனை அறியும் வகையில் இன்றும் திருவரங்கத்தில் பங்குனி ரோகிணி அன்று ஆதி பிரம்மோற்சவம் ஆரம்பமாகிக் கொண்டாடப்படுகிறது அறியலாம். உற்சவர் நம்பெருமாள் அழகிய மணவாளன். “சைத்ரே ரேவதி ஸஞ்ஜாதம் ஸெளம்ய ஜாமாதரம் ப்ரபும்” என்கிறபடியே சித்திரை ரேவதியில் அவதரித்தவர் நம்பெருமாள் என்னும் அழகிய மணவாளர் ஆவர். அவ்வாறே தர்மவர்மன் அரசனாய் இருந்த போது விபீஷணனால் கொண்டு வரப்பட்ட ஸ்ரீரங்க நாதனோடு கூடிய ஸ்ரீ ரங்கவிமானம் பங்குனி மாதம், சுக்ல பக்ஷம், ரோகிணி நக்ஷத்ரம் ஞாயிற்றுக் கிழமை அன்று சுபமான லக்னத்தில் காவிரிக் கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதையும் அதே அத்யாயத்தில் (ஸ்லோகம் 60) கூறப்பட்டுள்ளது அறியலாம். கலி யுகத்தில், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு காவிரி வெள்ளப் பெருக்கால் மணலில் புதை யுண்ட ஸ்ரீ ரங்க விமானத்தை கிளிச் சோழன் என்னும் அரசன் மீண்டும் மேலே கொண்டு வந்து பல மண்டபங்கள் எழுப்புதல் முதலான கைங்கர்யம் செய்தான். இதனை அறியும் வகையில் இன்றும் சித்திரையில் விருப்பன் திரு நாளாக பிரம்மோத்ஸவம் துவஜாரோஹணம் தொடங்கி ரேவதியில் ரதோற்சவம் காணும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி பெரிய பெருமாளும், உபய நாச்சிமார்களுடன் நம்பெருமாளும் அர்ச்சா மூர்த்தி யாய் எல்லாரும் உய்யும் பொருட்டு எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி அடியார்கள் சேவிப்பதற்காக வந்து உதவி செய்தது பற்றி“பிரான்” என்கிறார்.
(எங்கள் பிரான் அடிகள்) இப்படிப்பட்ட பிரானான திருவரங்கன் திருவடிகளைச் சரணமாகப் பற்றும் போது, திருமங்கையாழ்வரர், “ஆழி வண்ண நின்டியிணை அடைந்தேன்”, “எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடியிணை அடைந்தேன்”, “உன் அடியனேனும் வந்து அடியிணை அடைந்தேன், அஞ்சி வந்து நின் அடியிணை அடைந்தேன்”, “எனக்கும் ஆக வேண்டும் என்று அடியிணை அடைந்தேன்”, “அன்னமதாகும் என்று அடியிணை அடைந்தேன்”, “ஆதலால் வந்து உன்னடியிணை அடைந்தேன்”, “உலகமளந்த பொன்னடியே அடைந்து வந்தேன்” (பெரிய திருமொழி 5-8) என்று ஒருகால் மட்டுமின்றி ஒன்பதின் கால் திருவடிகளை வேண்டியது காணலாம்.
நம்மாழ்வாரும் பெரிய பெருமாளை “முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்’‘ என்று அருளியது காண்க. திருவரங்கப் பெருமாள் அரையர் என்னும் ஆசார்யர் திருமாலைக்கு அருளிய தனியனில் -“கற்றினம் மேய்த்த கழலிணை” என்கிற படியை, அடியாரைக் காப்பதற்கு உறுப்பாக மிகவும் எளிமையான திருவடிகள் என்றும் அந்தத் திருவடிகளுக்கு திருமாலை என்னும் பிரபந்தத்தை தொண்டரடிப்பொடியாழ்வார் பாடி திருவடிகளிலே சூட்டினார் என்றும் உரைப்பர் பிள்ளைலோகம் சீயர். இவ்வாழ்வார் அருளியபடியே “குணதிசை பாதம் நீட்டி” என்பதற்குச் சேர எல்லா உலகங்களும் வாழ்ச்சி பெறுவதற்கு இழியும் துறையான திருவடிகளைக் கிழக்கு திக்கு வாழும்படியாக நீட்டி உள்ளான் என்பர் திருப் பாணாழ்வாரும். “திருக்கமலபாதம்” என்பதற்குச் சேர பிராட்டிமார் திருமுலைத் தடங்களிலும் திருக்கண்களிலும் ஒற்றிக்கொள்ளும் திருவடிகள் என்பர் பெரிய வாச்சான் பிள்ளை. அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும் இந்தத் தொடருக்குப் பெரிய பெருமாள் திருவடியானது பெரும் காற்றிலே இழிவார் தெப்பம் கொண்டு இழியுமாபோலே, செவ்வி, குளிர்த்தி, மணம், விகாஸம் இவை அமைந்த ஒரு தாமரைப் பூவைப் போலே இருக்கும் திருவடிகள் என்கிறார்.
அந்தத் தாமரையானது சூரிய ஒளி பட்டு மலரும். பெரிய பெருமாள் திருவடியானது அடியார் ஸந்நிதியிலே அலரும் தாமரை யாய்த்து என்று சுவைபட உரைப்பர். வேதாந்த தேசிகரும் தாம் அருளிய முனி வாகன போகத்தில் நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லையானவனான அரங்கன் திருவடியானது உபாயம் உபேயம் ஆகியவற்றில் உரைப்புண்டானவை என்று அநுபவிப்பர். திருவுக்கு லீலா கமலம் போலே இருக்கிற பாதம் என்றும் உரைப்பர். மேலும், “தமுப்பரிய சந்தனங்கள் தடவரை வாயீர்த்துக்கொண்டூ தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும்”: என்று பெரியாழ்வார் அருளியதற்கு ஏற்ப, பெரிய மலையிடத்திலே வளர்ந்து, ஒருவரிருவரால் தழுவ அரிதாம்படி இருக்கிற சந்தன மரங்களை வேரோடே அகழ்ந்து இழுத்துக்கொண்டு “இத்தைக் கைக் கொண்டருள வேணும்” என்னுமாபோலே இருக்கிற முழங்கின ஒலியை யுடைய காவிரியானவள் ஆதரத்தோடே வந்து, தான் கொண்டு வந்த சாத்துப்படியையும் பெரிய பெருமாளுக்கு சமர்ப் பித்துத் திருவடிகளை தொழுகிறாள் என்று சுவை யாக உரைப்பர் மாமுனிகள். இப்படி பிரானாய் உதவி செய்யும் பெரிய பெருமாள் திருவடிகளைப் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று வாழ்த்துவோமாக.
—
பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலதமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனை மன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச்செய்ய அரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே–
பங்கயப்பூவில் தாமரைப்பூவில்,
பிறந்த- அவதரித்த,
பாவை நல்லாள் – சிறந்த பெண்ணான
பெரிய பிராட்டியார் வாழியே – வாழ வேண்டும்.
பங்குனியில் – பங்குனி மாதத்தில்,
உத்திர நாள் – உத்திர நக்ஷத்ரத்தில்,
பாருதித்தாள் – இவ் வுலகில் அவதரித்தாள்;
மங்கையர்கள் – பெண்களுக்குள்,
திலதமென – திலகம் என்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு,
வந்த செல்வி – தோன்றின பிராட்டி;
மால் அரங்கர் – பெருமை பொருந்திய திருவரங்கர்,
மணி மார்பை – அழகான மார்பை,
மன்னுமவள் – பொருந்தி இருப்பவள்;
எங்கள் எழில் – எங்கள் அழகான,
மன்னர் – தலைவரான,
சேனை மன்னர்க்கு- சேனை முதலியாருக்கு,
இதம்-நன்மை,
உரைத்தாள் – சொன்னவள்;
இருபத்தஞ்சு பொருள் — இருபத்தி ஐந்து எழுத்து கொண்ட துவயப் பொருளை,
மால் – பெருமையுடன்,
இயம்புமவள் உபதேசம் செய்தவள்;
செங்கமலம் – சிவந்த தாமரை போன்ற,
செய்ய அரங்கம் – அழகான திருவரங்கம்,
செழிக்க வந்தாள் – வளர்ச்சி பெற வந்தவள்;
சீ ரங்க நாயகியார் – திருவரங்கத்துத் தலைவியான ஸ்ரீரங்க நாச்சியார், திருவடிகள் – அழகான திருவடிகள்,
வாழியே – பல்லாண்டு வாழ வேண்டும்
(பங்கயப்பூவில் பிறந்த பாவை நல்லாள்) பங்கயம் – “பங்கஜம்” என்ற வடசொல் “பங்கயம்” ஆயிற்று. “பங்க” வடமொழியில் சேறு என்று பொருள். சேற்றில் தோன்றுவது – தாமரைப் பூ. பங்கயப்பூ – தாமரைப்பூ. பாவை – பதுமை, அழகிய உருவம். கருவிழி, பெண், நல்லாள் குணத்தில் சிறந்த பெண். தக்கவள். பனி மலராள் குளிர்ந்த தாமரைப் பூவை பிறப்பிடமாக உடையவள் -பாவை- நாணம், மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் பெண்மை குணங்கள் நிறைந்த பெரிய பிராட்டியார். “அரவிந்தப் பாவை” (பெரியா. திரு.5-2-10) என்று பெரியாழ்வார் அருளியதற்கு ஏற்ப செந்தாமரை மலரைப் பிறப்பிடமாக உடைய பிராட்டி என்றும், எல்லையற்ற அழகை யுடையவளாய் இயற்கையான பெண்மையை உடையவள் என்றும் உரைப்பர் மாமுனிகள். “பாவை பனி மலராள்’ (பெரிய. திரு.2.2.9) என்று திருமங்கையாழ்வார் அருளியது காண்க.
(பங்குனியில் உத்திர நாள் பாருதித்தாள்) – பங்குனி தமிழ் மாதங்களில் 12 வது மாதம். உத்திரம் – 12 வது நக்ஷத்ரம். “பால்கு நோத்தர பல்குந்யாம் ஸம் பூதாம் ஸ்ரியமாஸ்ரயே] விஷ்ணோர் திவ்ய பதாம்போஜ கடகாம் தத் பதாஸ்ரிதாம்।।” என்கிற தனியன் படியே ஸ்ரீ ரங்க நாச்சியாரான பெரிய பிராட்டியார் பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தில் அவதரித்தாள் என்றும், அவள் எம்பெருமானுடைய திருவடியில் சேதனர்களைச் சேர்த்து வைப்பவள் என்றும் அறியப்படுகிறது. ஸ்ரீ ப்ரஸ்ன ஸம்ஹிதையில் பெரிய பிராட்டியார் அவதாரம் பற்றி சொல்லும் போது “பால்குனே மாஸி நக்ஷத்ரே உத்தரே பூர்ணிமாதிதெள” (33) என்கிற படியே திருப்பாற்கடல் கடையும் போது கடலரசன் கன்னியான பிராட்டியார் பங்குனி மாதம் உத்திர நக்ஷத்ரம் பெளர்ணமி அன்று தோன்றினாள் என்றது காண்க. பார் பூமி. ஸ்ரீரங்க நாச்சியாரான பெரிய பிராட்டியார் பங்குனி மாதம் உத்திர நக்ஷத்ரத்தில் இப்பூமியில் அவதரித்தாள். பங்குனி உத்திர நாளுக்குச் சிறப்பாவது – தர்ம சாஸ்த்ரத்தில் ஒரு மஹாராணி பிறந்தநாளன்று வரம் வேண்டி வந்தவர்களுக்கு அவர்கள் கேட்பதைத் தப்பாமல் அவள் கொடுப்பாளாம். அந்த வகையில் எம்பெருமானார் இந்த உலக மக்கள் பிறவித் துயர் அகல ஸ்ரீரங்க மஹிஷியான பெரிய பிராட்டியை வேண்டினார். அதாவது பிராட்டி பிறந்த நாளான பங்குனி உத்திரத்தன்று பிரதி வருடமும் ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரங்க நாச்சியார் சேர்த்தி உண்டு. ஒரு (பங்குனி) உத்திரத் திருநாளிலே, பெருமாளும் நாச்சியாருமாகப் புறப்பட்டு ஒரே ஸிம்மாஸனத்தில் எழுந்தருளி இருக்கும் போது எம்பெருமானார் அந்த திவ்ய தம்பதியைத் திருவடி தொழ எழுந்தருளினார். அந்த சமயத்தில் மனத்தில் ஸம்ஸார மண்டல வாழ்க்கையில் பயம் விளைந்து திருவடிகளில் சரணம் புகுந்து மூன்று கத்யங்களை விண்ணப்பித்தார் என்று பெரியவாச்சான் பிள்ளை கத்யத்ரய வ்யாக்யான அவதாரிகையில் அருளியது காண்க. சரணாகதி கத்யத்தில் முதல் சூர்ணையில் பிராட்டி திருவடிகளிலே சரணம் புகுகிறார் எம்பெருமானார். இதனால் பங்குனி உத்திர திருநாள் சிறப்புற்றது. அன்று இருவருமான சேர்த்தியிலே பெரிய பெருமாள் வாழித் திருநாமமும் பெரிய பிராட்டியார் வாழித் திருநாமமும் சேவிப்பது வழக்கம்.
(மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள்) : “மால்”- மையல், கருமை, பெருமை இத் தன்மைகள் அனைத்தையும் அடியார்களிடம் காட்டும வன் அரங்கன். இது பற்றியே “மாலரங்கர்” என்ற படி. “மணி” – ஸ்ரீ கெளஸ்துபம். அரங்கன் திருவரங்கத்திற்கு வரும் முன்னமேயே ஸ்ரீரங்க நாயகித் தாயார் எழுந்தருளி அரங்கன் அமர்ந்த பின் வெளிப்பட்டவள். “மார்பை மன்னுமவள்–காசாந்யா த்வாம் ருதே தேவி” என்ற விஷ்ணு புராண ஸ்லோகத்தில் (1-9-122) இந்திர துதியில், “பிராட்டியைத் தவிர வேறு யாராலும் எம்பெருமான் திருமேனியில் இருக்க முடியாது” அந்த வகையில் ஸ்ரீ ரங்க மஹாத்மியத்தில் பிரமன் ஸ்ரீரங்க விமானத்தைச் சேவிக்கும் போது ஸ்ரீ ரங்கநாதனுடைய பரந்த திருமார்பில் கருணையே வடிவான ஸ்ரீ ரங்க நாச்சியாருக்கான இருப்பிடம் காணப்பட்டது (ஸ்ரீ ர. மஹா.4-15) என்றும் பிரமன் துதிப்பதும் காண்க.
“இந்திராயா:'(ஸ்ரீ குணரத்ந) என்று பட்டர் அருளியபடியே “இந்ததீதி இந்திரா’‘ என்று
கொண்டு எம்பெருமானுக்கும் ஈஸ்வரியாக அவனது மார்பில் ஏறியிருக்கையே பிராட்டியின் கண் உள்ள சிறந்த ஐஸ்வர்யம் என்பர். நம்மாழ்வாரும் பிராட்டி எம்பெருமான் மார்பில் மன்னி இருப்பதைக் கண்டு “உன் திருமார் வத்து மாலை நங்கை” என்கிறார். இதற்குச் சேர வாதிகேசரி சீயரும் பிராட்டி ஆனவள் “அகலகில்லேன்” என்று விரும்பும்படியான திருமார்புக்குப் பரபாகமாக இருப்பவள் என்கிறார்.-திருமார்புக்கு அலங்காரமான மாலையாயிருப்பவள் எம்பெருமான் என்பர் நஞ்சீயர். கேவலம் ஸம்பத்தி யாயிருக்கை யன்றிக்கே திருமார்புக்கு அலங்காரமுமா யிருக்கை என்றும் மார்வுக்கு அலங்காரம் அவள். அவளுக்கு அலங்காரம் மார்வு என்றும் நம்பிள்ளை சுவை பட உரைப்பர். “அல்லி மாதரமரும் திருமார்பன் அரங்கன்” (பெரிய திரு 5.4.10) என்பர் திருமங்கையாழ்வார். மேலும், “மின் னொத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில் மன்னத்தான் வைத்து உகந்தான்” (பெரிய திரு. 6.9.6) என்பதற்குச் சேர மின்னோடு ஒப்பானதாய் மிக நுண்ணியதான இடையை உடையவளாய் ஸெளகுமார்யத்தை ஸ்வபாவ பெரிய பிராட்டியை அழகிய திருமார்பில் பொருந்தும் படி வைத்து உகந்தவன் என்று உரைப்பர். ஸ்ரீ துதியில் வஷ பீடீம் மதுவிஜயிநோ பூஷயந்தீம் ஸ்வகாந்த்யா”(1) என்கிறபடியே தன் காந்தியினால் ஸ்ரீ ரங்கராஜனுடைய திருமார்பை அலங்கரித்துக் கொண்டிருப்பவள் என்பர். பட்டர் ஸ்ரீ ரங்கராஜ பூர்வ சதகத்தில், “அநந்தபோகிந: உத்வாந்தம் சிந்தாமணி இவ” (8)என்கிறபடியே ஆதிசேஷனு டைய மடியிலே கோக்கப்பட்ட சிந்தா மணி போன்றது போல இருப்பவர் என்றும், இந்த மணியானது பெரிய பிராட்டியாருடைய மார்பில் ஆபரணமாயிருக்கும்.
மேலும், அவள் திருமுலைத் தடத்திலே அழிந்தின மணியாக இருக்கும் என்பர். அப்படிப்பட்ட மணி மார்பை உடைய பெரிய பெருமாளுக்குப் பொருந்தினவள் என்றபடி.
வேதாந்த தேசிகரும் பகவத் த்யான ஸோபானத்தில் “ஸ்ரீ பதந் யாஸ தந்யம்… ஸ்ரீரங்கதாம்ந” (6) என்று பிராட்டி திருவடியால் தீண்டும்படியான பாக்கியம் பெற்றது ஸ்ரீரங்க ராஜனுடைய திரு மார்பு என்கிறார்
“தேன் பூத்த தாமரையாள் மார்பில் ஆட ” என்று அஷ்ட ப்ரபந்தத்தில் ஸ்ரீ ரங்கநாயகர் ஊசலில் (8) அருளியபடியே தேன் நிறைந்த செந்தாமரை மலரில் வாழ்கின்ற பெரிய பிராட்டியார் அரங்கன் மார்பில் அசையாது நிற்கிறாள் என்பர் –திருமால் திருவுள்ளம் உவந்து வந்து எழுந்தருளிய இடமானது பற்றி “ரங்கம்” என்று அந்த விமானத்துக்குப் பெயர். “ரங்கம்” என்னும் வடசொல் “அகரம்” மொழி முதலாக வரப் பெற்று “அரங்கம்” என்றாயிற்று. விமானத்தின் பெயரான இது ஆகு பெயராய் “திருவரங்கம்” என்று ஊருக்கு ஆயிற்று. திருமகளார் திருநர்த்தனம் செய்யும் இடமாயிருந்ததாலும் இப்பெயர் பெற்றது எனலாம்–
(மங்கையர்கள் திலதமென வந்த செல்வி) திலதம் – திலகம் – நெற்றிப் பொட்டு, ஆபரணம். மங்கையர்களுக்கு ஆபரணம் என்று சிறப்பாகத் தோன்ற வந்த லக்ஷ்மி. செல்வி – தலைவி, லக்ஷ்மி, செல்வ முள்ளவள், புதல்வி. திலகம் – சிறந்தது என்ற பொருளில் பிராட்டியானவள் கருணைக்கோர் இருப்பிடமானவள். ஞானம் முதலான ஆறு குணங்கள் நிரம்பப் பெற்றவள், மேலான பிரகிருதி யாகச் சொல்லப்படுபவள் மற்றும் எம்பெருமானின் மேலான ஒரு சக்தி என்று ஸநத்குமார ஸம்ஹிதை எண் 109 அருளுவது காணலாம்.
(எங்கள் எழில் சேனை மன்னர்க்கு இதமுரைத்தாள்) எல்லா உலகங்களையும் நெறிபட நிர்வகிக்கும் கடமை எம்பெருமானுடையதானாலும் அதனை சேனை முதலியார் ஏற்றுக் கொண்டு தமது திருவிரல் முத்திரையினாலேயே உலகங்களை அடக்கி ஆளுபவராகையாலே “எழில் சேனை மன்னர்” என்றபடி. திருவிரல் முத்திரையை இன்றும் திருவரங்கத்தில் சேனை மன்னர் திருக் கோலங்களில் காணலாம். பிரம்மோற்சவ திருநாள்களில், திருமுளையின் போது தாயார் ஸந்நிதிக்கு சேனை முதலியார் மண் எடுக்க எழுந்தருளுவர்.
“வானவர் வானவர் கோன்” (திருவா. 3.3.2) என்று ஆழ்வார் அருளியதற்கு ஏற்ப பரமபத வாஸிகளுக்குத் தலைவர் என்பர் வாதி கேசரி சீயர். “ஹிதம்” தமிழில் “இதம்” ஆயிற்று. நன்மை என்று பொருள். நன்மை யாவது எம்பெருமானே உபாயம். இதனை துவய மந்திரத்தின் முதல் வாக்யம் உணர்த்துகிறது. குருபரம்பரா விவரணத்தில் அருளியபடியே ஹரிக்கு எப்போதும் இனியவரான சேனை மன்னருக்குத் தாபம் புண்ட்ரம் முதலான ஸம்ஸ்காரங்களை முன்னிட்டுக் கொண்டு மூல மந்த்ரம், துவயம் முதலான இதத்தைப் பெரிய பிராட்டியார் உரைத்தது காணலாம்.
மேலும், “லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம்’‘ என்ற தனியனுக்கு உரை வழங்கிய பிள்ளை லோகம் ஜீயர், “ஸமாரம்பாம்”” என்று இவர்கள் தொடக்கமாக குரு பரம்பரையைச் சொல்லுகையாலே, ஸ்ரீவிஷ்வக்சேந ஸம்ஹிதையிலே பகவானாலே ப்ரபத்தி உபதேசம் பண்ணப்பட்டதாகச் சொல்லப்படுமவர் என்றும், பூவளரும் திருமகளாலே அருள் பெற்று அத்தாலே “ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே” என்னும்படி கைங்கர்யமுயையுடைய சேனை முதலியார் என்பர். எனவே சேனை முதலியாருக்கு இதம் உரைத்தவள் பெரிய பிராட்டியார் என்றதாயிற்று.
இருபத்தஞ்சுட்பொருள் மால் இயம்புமவள்) மூன்று ரகசியங்களுள் துவயம் என்பது (ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே| ஸ்ரீமதே நாராயணாய நம:।। என்று இரண்டு வாக்யமாய், இருபத்தைந்து எழுத்துக்கள் கொண்டதாகும். அதன் உட்பொருளாவது “திருமகளோடு கூடிய நாராயண னுடைய திருவடிகளைச் சரணமாகப் பற்றுகிறேன்” என்ற முதல் வாக்ய பொருளுக்குச் சேர ஸ்ரீமந் நாராயணனே உபாயமாவான் என்பதாகும். இதனை சேனை முதலியாருக்கு பெருமையுடன் உபதேசம் செய்தாள் என்றபடி. மால் – இங்கு பெருமை என்று பொருள்.
(செங்கமலச்செய்ய அரங்கம் செழிக்க வந்தாள்) செங்கமலம் – செந்தாமரை, செய்ய – சிவப்பு. தாமரைக்கு சிவப்பானது “திருமுகமாய்ச் செங்கமலம்” (பெரியா. திரு.4.8.3) என்று பெரியாழ்வார் அருளி யதற்கு ஏற்ப பெரிய பெருமாளுடைய திருமுகத்துக்குப் போலியாய் இருக்கிறது என்று மாமுனிகள் மேலும் புது நாண் மலர்க் கமல எம்பெருமான்” (பெரியா.திரு.4.9.4) என்பதற்கு ஏற்ப அப்போது அலர்ந்த செவ்வித் தாமரைப் பூவானது உலகுக்குக் காரணமான ஸர்வேஸ்வரனுடைய விரும்பத் தக்கதான திரு வயிற்றில் உள்ள தாமரைக்கு ஒப்பானது என்பர் மாமுனிகள். திருவரங்கமானது “ஓரம் பெற்ற மலர்க் கமலம் உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட” (பெரிய.திரு.4.9.8) என்பதற்குச் சேர சேற்று வாய்ப்பாலே உரம் பெற்றிருக்கிற தாமரைப் பூவானது திரு வுலகளந்தருளின போது மேலே எடுத்த திருவடிகளைப் போலே கிளர வளர்ந்து பிரகாசிக்கிறது என்று மாமுனிகள் சுவைபட உரைப்பர். அது மட்டுமின்றி அன்னமானது புருஷ அன்னத்தோடே சிவந்த தாமரைப் பூவின் மேலே ஏறி இருந்து அசைத்து ஊசலாடுகின்றன என்பதற்குச் சேர “சேவலொடு பெடை அன்னம் செம்கமலமலர் ஏறி ஊசல் ஆடி” (பெரியா.திரு.4.9.9) என்கிறார் பெரியாழ்வார். இத்தகைய செழுமை தங்கிய அரங்கத்தில் செரு வாளும் புள்ளாளனாய், மண்ணாளனாய், கொற்ற வாளை யுடையவனாய், நான்கு வேதங்களையும் ஆளுமவனாய், கொடையாளனாய், இரவு பகலாகிய காலங்களுக்குத் தலைவனாய் இருக்கும் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியாரை திவ்ய மஹிஷி யாக உடையவர் என்றபடி.
மேலும், பட்டர் “ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி” (ஸ்ரீ குண. ர.33) என்று அருளுபவர். அதாவது ஸ்ரீ ரங்கத்தில் நன்மைகளை செழிப்புறச் செய்யும் கொடி போன்றவள் பிராட்டி என்றபடி.-(அரங்கம் செழிக்க வந்தாள்) பட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில் (23) ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லக்ஷ்மி’” என்று அருளியதற்கு ஏற்ப பிராட்டியானவள் ஸ்ரீ ரங்கநாதன் கோயிலை அழகு படுத்துபவள் என்றது காண்க. இல்லாள் இன்றேல் இல்லம் வெறியாடுமாதலின் “கேஹ லக்ஷ்மி” என்று விளித்ததாகக் கூறுவர் உரையாசிரியர்.
(ஸ்ரீ ரங்க நாயகியார் திருவடிகள்) பட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில் பிராட்டியின் திருவடிகளைப் பல ஸ்லோகங்களில் பல படியாக அநுபவிக்கிறார் – “மாலதீம்ருதுபதம்” (53) என்கிறபடியே ஜாதிப்பூ போல மெல்லிய திருவடி என்றும், வேதாந்தங்கள் பேசும் சிறப்பை உடையது பிராட்டியின் திருவடிகள் என்றும் உரைப்பர். மேலும், பிராட்டி திருவடிகள் துகைத்தாலும் எம்பெருமான் வைஜயந்தி என்னும் வனமாலை வாடுவதில்லையாம். அப்படிப் பட்ட திருவடிகள். அடிக்கடி பனிநீர் தெளித்தாற் போலே தேனே மலரும் திருப் பாதத்தால் துகைக்கத் துகைக்கப் புதுமை பெற்று மேலும் சோபிக்கின்றனவாம் என்றும் சுவைபட உரைப்பர்.தாமரையில் இருப்பவளாகையால் அதன் துகள் பாதத்தின் அடித் தலத்தை உறுத்தக் கூடியதாகவே இருக்கும் தாமரை இதழின் ப்ரகாரம் மணம் மென்மை முதலியன.-அவற்றைப் பிராட்டியின் இணை அடிகள் உடையனவா யிருக்கின்றன. தாமரை இதழை ஒத்த இணை யடி என்றவாறு. சேர்த்தி அழகு கருதி “பாத யுக்மம்” என்கிறார். பிராட்டி திருவடியின் இருப்பைச் சொல்லும் போது “ஏகம் பாதாம்புஜம் ந்யஞ்ச்ய பரம் ஆகுஞ்ச்ய” என்று பட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில் (38) அருளிய படியே வலது திருவடியை தொங்க விட்டும், இடது திருவடியை மடித்தும் வைத்து வீற்றிருக்கிறாள்.-தாம் வணங்குவதற்கே பிராட்டி இவ்வாறு வீற்றிருக்கிறாள் என்பதற்குச் சேர “மம நதிகூஷமம்” என்று பட்டர் அருளியது காண்க.-இப்படிப்பட்ட பெருமைகளை யுடைய பெரிய பிராட்டியாரைத் தினந்தோறும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுஸந்திக்கும் குரு பரம்பரையில் ஆரோஹண க்ரமத்தில் பெரிய பெருமாளுக்கு அடுத்ததாக “ஸ்ரீயை நம:”’ என்று அருளுவது வழக்கம். அத்தகைய பெரிய பிராட்டியாரான ஸ்ரீ ரங்கநாச்சியார் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவோமாக.–
—
ஓங்கு துலாப் பூராடத்து உதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்திரவதி உறை மார்பன் வாழியே
ஈங்கு உலகில் சடகோபற்கு இதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்கு புகழ் அரங்கனையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே–ஜப்பசி பூராடத்தில் திருவவதாரம் –
ஓங்கு துலா – உயர்ந்த துலா மாதத்தில்,
பூராடத்து – பூராட நக்ஷத்திரத்தில்,
உதித்த அவதரித்த,
செல்வன் – கைங்கர்யமாகிற செல்வத்தைப் பெற்ற சேனை முதலியார்,
வாழியே வாழ வேண்டும்;
ஒண்தொடியாள் – முன் கைவளை கழலா இருக்குமவளான,
சூத்திரவதி – சூத்திரவதி என்னும் பத்னியை,
உறை மார்பன் – நெஞ்சில் இருப்பிடமாகக் கொண்டவர்;
ஈங்கு – இங்கு,
உலகில் – உலகத்தில்,
சடகோபற்கு – நம்மாழ்வாருக்கு,
இதம் – நன்மையை,
உரைத்தான் – உபதேசித்தவர்;
எழில் அழகான,
பிரம்பின் – பிரம்பினாலான,
செங்கோலை – அரசாட்சி சின்னமாகிய நேர்கோலை,
ஏந்துமவன் கையிலே வைத்திருப்பவர்; பாங்குடன் – அழகுடன்,
முப்பத்து மூவர் – முப்பத்து மூன்று தேவர்களால்,
பணியுமவன் – வணங்கப்படுபவர்; பங்கயத்தாள் தாமரைப்பூவில் பிறந்த பெரிய பிராட்டியார்,
திருவடியை – திருவடிகளை,
பற்றினான் – பற்றுபவர்;
தேங்கு புகழ் – நிறைந்த புகழை யுடைய
அரங்கனையே – ரங்கநாதனையே,
சிந்தை செய்வோன் – மனத்தில் எண்ணுமவர்;
சேனையர் கோன் – சேனையர்களுக்குத் தலைவனானவர்,
செங்கமலம் – சிவந்ததாமரை போன்ற, திருவடிகள் -திருவடிகள்,
வாழியே – வாழ வேண்டும்
ஓங்கு துலாப்பூராடத்து உதித்த செல்வன்” ஓங்கு துலா – உயர்ந்த துலா மாதம். துலா மாதத்துக்கு உயர்வாவது – அசுவனி நக்ஷத்ரமும் பெளர்ணமியும் கூடிய நாள் துலா மாதப் பிறப்பாகும். ஆஸ்வயுஜ மாதமாகும். அத்தகைய மாதத்தில் ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரைக்கு ப்ரதானரான சேனை முதலியார் பூராட நக்ஷத்ரத்தில் அவதரித்தார். அதனால் “ஓங்கு துலா பூராடம்” என்று கொண்டாடப் படுகிறது. மேலும் இம் மாதம் முதலாழ்வார்கள் மூவரும் அடுத்தடுத்த நக்ஷத்ரத்தில் தோன்றிய பெருமை யுடையதாகும். ஆசார்யர்களில் பிள்ளை லோகாசார்யர், மணவாளமாமுனிகள் ஆகியோர் அவதரித்த உயர்வாகும். சேனை முதலியாருக்குச் செல்வமாவது – எம்பெருமானுடைய அமுது செய்து மிகுந்த மிச்சத்தை உண்பதாகும். இது இவருக்கு தாரகம். எல்லாருக்கும் அன்பன். இது பற்றியே ஆளவந்தார் “த்வதீய… ப்ரியேண ஸேநாபதி” என்று ஸ்லோகமிடுகிறார் (ஸ்தோ.ர.42). இராமாநுசர் ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் “ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்த ஆத்மைஸ்வர்யம்” என்று அருளிய படியே கைங்கர்யச் செல்வத்திற்கு இட்டுப் பிறந்த சேனை முதலியாரிடத்தில் எம்பெருமான் தம்முடைய எல்லா நியமனச் செல்வத்தையும் வைத்திருப்பவர் என்று அருளியது காண்க. மேலும், மற்றுமுள்ள திருவனந்தாழ்வான், கருடன் போலே நியமமில்லாமல், ஸர்வேஸ்வரன் அமுது செய்த மிச்சம் ஒழிய அமுது செய்யாத நியமத்தைக் குறித்து சேஷாசனர் என்று சேனை முதலியாரை நிரூபிக்கிறது என்று தத்வ த்ரய வியாக்யானத்தில் (சூ.45) உரைப்பர் மாமுனிகள்.- கூரத்தாழ்வான் ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் (72) “வந்த்நிநாதஸ்ய ஸுஸுந்தரஸ்ய ப்ரபுக்த சிஷ்டாசீ ஸந்’” என்று அருளியதற்கு ஏற்ப அர்ச்சாவதாரத்தில் திருமாலிருஞ்சோலை அழகருடைய போனகத்தின் மிகுந்த மிச்சத்தை உண்பாராய் சேனை முதலியாருக்கு சேஷாசநன் என்றே திருநாமமாயிற்று என்பர்.–
(ஒண்டொடியாள் ஸூத்ரவதி ௨றை மார்பன்) ஒண்டொடியாள் – தொடி என்பது முன் கை வளை. அதுக்கு ஒண்மையாவது – கையிலிருந்து கழலாதிருக்கை. ஒண்மை – அழகு. அழகிய கை வளையை உடையவள். மேலும் பட்டர் ஸ்ரீரங்க ராஜஸ்தவ பூர்வ சதகத்தில் (54) சூத்ரவதியானவள் பெரிய பிராட்டி யாருடைய திருவடியிலே இட்ட செம்பஞ்சுக் குழம்பினால் அடையாளம் இடப் பெற்றதாய், கைங்கர்ய உபயோகியான திருவொற்று ஆடையினால் விளங்குமதான கொடி போன்ற அழகை யுடையவள் என்றும், சேனை முதலியாரின் பிரிய பத்தினியுமாக இருப்பவள் என்றும் உரைப்பர். அப்படிப்பட்டவளை நெஞ்சில் இருப்பிடமாக உடையவர் சேனை முதலியார் என்றபடி. மார்பு – நெஞ்சு, உறை இருப்பிடம்.
வேதாந்த தேசிகரும் யதிராஜ சப்ததியில் (3) “வைகுண்ட ஸேநாந்யம் தேவம் ஸூத்ரவதீ ஸகம்” என்கிறபடியே ஸுத்ரவத துணைவனான வைகுண்ட ஸேநாதிபதி என்பர். திருமாலிருஞ் சோலையில் ஸுத்ரவதியோடு சேனை முதலியார் அர்ச்சா விக்ரகமாய் எழுந்தருளி சேவை சாதிப்பது குறிப்பிடத்தக்கதாகும்
(ஈங்கு உலகில் சடகோபர்க்கு இதமுரைத்தான்) – ஈங்கு – இங்கு, இவ்விடம். இந்த உலகில் “ஸேநேச கருணா லப்த திவ்ய மந்த்ர த்வய முதா” என்று குருபரம்பரா ப்ரபாவத்தில் அருளியபடியே நம்மாழ்வாரான சடகோபருக்கு சேனை முதலியார் கருணையினால் துவயம் என்னும் திவ்ய மந்த்ரத்தை உபதேசித்தவராவர். மேலும் பரமபதநாதனுடைய நியமனத்தால் சேனை முதலியார் வந்து மந்த்ரம். மந்த்ரத்தின் பொருள், எல்லா புருஷார்த்தங்கள், திராவிட வேதங்கள் முதலானவற்றை பிறர் காதில் படாதபடி உபதேசித்து திவ்விய ஞான ஸம்பந்தராக்கினார் என்றும் கூறும்
—
ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே
பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டு இசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகமும் நாதமுனி நற்பதங்கள் வாழி –ஸ்ரீமந்நாதமுனிகள் ஆனி மாதம் அனுஷ நஷத்ரத்தில் காட்டுமன்னார் கோயிலில் அவதரித்தார். இவர் சேனை முதலியாருடைய முக்கியமான படைத் தலைவரான கஜானரநர் என்னும் யானை முகமுடைய நித்ய ஸூரிகள் அம்சர் என்பர்-
ஆனிதனில் – ஆனி மாதத்தில்,
அனுடத்தில் – அனுஷ நக்ஷத்ரத்தில்,
அவதரித்தான் – தோன்றினவர்,
வாழியே வாழ வேண்டும்.
ஆளவந்தார்க்கு – தன் பேரனான ஆளவந்தார் என்னும் ஆசார்யருக்கு,
உபதேசம் – நல் வார்த்தைகளை,
அருளி வைத்தான் – சொல்லி வைத்தவர்,
பானு – பாஸ்கரரான நம்மாழ்வாரை,
தெற்கில் கண்டவன் தெற்குத்திக்கிலே கண்ட மதுரகவியாழ்வார்,
சொல் – சொல் லான கண்ணிநுண் சிறுத்தாம்பை,
பல உரைத்தான் பன்னிரண்டாயிரம் தடவை சொன்னவர்.
பராங்குசனார் – பரரான பிற மதங்களுக்கு அங்குசம் போன்றவரான நம்மாழ்வாருடைய,
சொல் பிரபந்தம் வாய்மொழியான பிரபந்தங்கள்,
பரிந்து கற்றான் நம்மாழ்வார் மூன்று நாள் கனவில் சொல்ல கற்றுக் கொண்டவர்.
கானமுற – தேவ கானம் நிலைக்க,
தாளத்தில் – தாளத்தில் கண்டு
இசைத்தான் இடுவித்தவர்.
கருணையினால் – தன் மிக்க கருணையினால்,
உபதேசக் கதி – உபதேசமாக பரம்பரையை,
அளித்தான் – கொடுத்தவர்.
நானிலத்தில் நல்ல இந்த உலகில்,
குருவரையை – குருவை நிர்ணயித்து,
நாட்டினான் – நிலை நிறுத்தியவர்.
நலம் திகழும்-நன்மை விளங்குகிற,
நாதமுனி – ஸ்ரீமந்நாதமுனிகள்,
நற்பதங்கள் – நன்மை தரும் திருவடிகள்,
வாழியே – வாழ வேண்டும்.
(ஆனிதனில் அனுடத்தித்தில் அவதரித்தான்) பன்னிரண்டு மாதங்களில் மூன்றாவது மாதம் ஆனி மாதமாகும். வடமொழியில் ஜ்யேஷ்டா எனப்படும். நக்ஷத்ர வரிசையில் அனுஷம் பதினேழாவதாகும். இதற்கு வடமொழியில் அநுராதா என்று பெயர். “அநுராதா நக்ஷத்ரம் மித்ரோ தேவதா” என்று வேதம் கூறும்.ஆழ்வார்கள் காலத்துக்குப் பிறகு அவர்கள் அருளிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் மேல் பக்தி, நம்பிக்கை இல்லாமல் தீய சக்திகளின் மேலீட்டால் அவை இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. அந்த சமயத்தில் பொதிய மலையில் கும்ப ஸம்பவர், ஆங்கீரஸர் முதலான முனிவர்கள் திருமலைக்குச் சென்று திருவேங்கடவனைத் தொழுது ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் நிலையை மீட்டு உருவாக்கம் செய்து உலகை வாழ்விக்க வேண்டினர். திருவேங்கடவனும் வீரநாராயணபுரத்தில் மன்னனார் ஸந்நிதியில் நித்ய வாஸம் செய்யும் ஈஸ்வர பட்டாழ்வானுக்கு கஜானனர் அம்சமாக நாத முனிகள் என்பவராக அவதரித்து திராவிட வேதத்தை கொடுத்தருளுவர் என்று அருளியதற்கு ஏற்ப, முனிவர்கள் வீர நாராயணபுரம் சென்று ஈஸ்வர பட்டராழ்வாரை ஸேவித்து திருவேங்கடவன் அருளியதை விண்ணப்பித்தனர்.அவ்வாறே கலியுகத்தில் 3224 வருடங்கள் கழித்த பிறகு சோபக்ருது வருடம் ஆனி மாதம் பெளர்ணமி அன்று அனுஷ நக்ஷத்ரத்தில் புதன்கிழமையில் சேனை முதலியாரின் மந்திரியான கஜானனருடைய அம்சமாக ஈஸ்வர பட்டர் என்னும் அந்தணருக்கு பிறந்தவராவர் என்று ப்ரபந்நாம்ருதம் கூறும்.
(ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான்) ஸ்ரீ மந் நாதமுனிகளின் குமாரரான ஈஸ்வரமுனிக்குப் பிறந்தவர் யமுனைத் துறைவராவர். இவர் ஆக்கியாழ்வான் என்னும் வித்வானோடு வாதப் போர் செய்து, அதனைக் கண்ட அந்த தேசத்து ராஜ மஹிஷி “என்னை ஆளவந்தீரோ” என்று அழைத்ததனால் ஆளவந்தார் என்ற பெயர் கொண்டார்.-ஸ்ரீமந்நாதமுனிகள் தம் குமாரரான ஈஸ்வர முனியிடம், அவருக்கு ஒரு பிள்ளை பிறக்க இருப்பதாகவும் அவருக்கு யமுனைத் துறைவர் என்ற பெயரும் இடச் சொன்னார். மேலும் ஸ்ரீமந்நாதமுனிகள் தம் சீடர்களான உய்யக்கொண்டாரிடம் தாம் அருளிய தர்சன தாத்பர்யங்களையும், குருகை காவலப்பனிடம் தாம் அருளிய யோக ரகஸ்யங்களின் பொருள் விசேஷத்தையும் யமுனைத் துறைவனுக்கு உபதேசிக்கச் சொன்னார். இது பற்றியே “அருளி வைத்தான்” என்றபடி.
(பானு தெற்கில் கண்டு அவன் சொல் பல உரைத்தான்) பானு- சூரியன். மதுரகவிகள் வடதேச யாத்ரையின் போது அயோத்யையிலிருந்து வகுள பூஷண பாஸ்கரரான நம்மாழ்வாரை ஒரு திவ்ய ஒளியாகக் கண்டவர். எனவே “பானு தெற்கில் கண்டவன்” என்றபடி. அந்த மதுரகவிகள் அந்த திவ்ய ஒளியைக் கண்டு ஏதேனும் கிராமமோ நகரமோ வேகிறதோ, காட்டுத்தீயோ என்று சந்தேகித்து இரண்டு மூன்று நாள் அப்படியே கண்டு, பகலில் தூங்கி இரவில் அந்த ஒளி வரும் திக்கை நோக்கி நடந்து வழியில் வரும் திருத் தலங்க ளெல்லாம் ஆராய, இறுதியில் திருக்குருகூரில் வந்து அங்கு உறங்காப்புளி நிழலிலே நம்மாழ்வாரைக் கண்டு அவரைப் பேச வைத்து, அவர் அருள் பெற்று, அவரைப் பற்றி “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்னும் பிரபந்தமருளினது பற்றி “அவன் சொல்” என்றபடி –ஸ்ரீ மந் நாதமுனிகள் ஆழ்வார் திருநகரியில் பராங்குச தாஸரிடம் இருந்து மதுரகவிகள் சொல்லான கண்ணி நுண் சிறுத்தாம்பைப் பெற்று பன்னீராயிரம் தடவை அநுஸந்தித்ததனால் “சொல் பல உரைத்தான்” என்றவாறு-
(பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான்) பராங்குசன் – நம்மாழ்வார் திருநாமம். தடை யற்ற சுதந்த்ரனான எம்பெருமானை தம்முடைய பாசுரங்களாலே வஸீகரிக்க வல்லவர். கல்வி, செல்வம், குடிப்பிறப்பு ஆகிய வற்றால் உண்டான மும்மதச் செருக்கால் திரியுமவர்கள் தலை வணங்கும்படி உபதேசமாகிற அங்குசத்தை இட்டவர் என்பர். பராங்குசனார் சொன்ன பிரபந்தமாவது திருவாய் மொழியும் மற்ற மூவாயிரமுமாகும். இவற்றைப் பரிந்து கற்கையாவது – ஒரு சமயம் மேல் நாட்டிலிருந்து சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வீரநாராயணபுரத்தில் மன்னனாரைச் சேவிக்கும் போது “ஆராவமுதே” (5-8) என்கிற திருவாய் மொழியை அநுளந்தித்தார்கள்.-அதனைக் கேட்ட ஸ்ரீமந் நாதமுனிகள் மிகவும் சந்தோஷ மடைந்தவராய் அவர்களிடம் “ஆயிரத்துள் இப்பத்தும்” என்று சேவித்தர்களே, இப்பிரபந்தம் முழுவதும் தெரியுமா உங்களுக்கு” என்றார். அவர்கள் “இப்பத்துப் பாட்டு மட்டுமே தெரியும்” என்றனர். உடனே அவர்களுக்கு தீர்த்த ப்ரஸாதம் கொடுத்து அனுப்பினார். இந்த பிரபந்தம் சடகோபர் அவதரித்த திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி திவ்ய தேசத்திலே இருக்க வேண்டும் என்று நினைத்து ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். ஆழ்வாரையும் பொலிந்து நின்ற பிரானையும் சேவித்தார்.அங்கே மதுரகவிகளின் சீடரான ஸ்ரீபராங்குச தாஸரை சேவித்து, “இவ்விடத்தில் திருவாய்மொழி ஓதினவர்கள் உண்டோ? ஸ்ரீ கோசங்கள் உண்டோ?” என்று கேட்டார். அவரும் “அவையெல்லாம் மறைந்து போயிற்று. இப்போது மதுரகவிகள் அருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற திவ்ய பிரபந்தம் உள்ளது. இதனை பன்னீராயிரம் தடவை ஏக சிந்தையராய் ஆழ்வார் திருவடிகளை தியானித்து அநுஸந்தித்தால், ஆழ்வார் மனக் கண்ணிலே தென்படுவார் என்று அருளினார். ஸ்ரீமந் நாதமுனிகளும் இப்படி நம்மாழ்வார் விஷயமாக மதுரகவிகள் அருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பை பன்னீராயிரம் உரு சொல்லவே, நம்மாழ்வாரும் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு அறியாமையைப் போக்கி பக்தியையும் ஞானத்தையும் அருளி, திவ்யமான கண்ணைக் கொடுத்து, மூன்று இரகசியங்களையும், திருவாய்மொழியையும், மற்றுமுள்ள மூவாயிரப் பிரபந்தங்களையும், எல்லா தர்சன கருத்துக்களையும் அஷ்டாங்க யோக ரகசியத்தையும் உபதேசித்தார் -என்று குரு பரம்பரா ப்ரபாவம் கூறுவது அறியற்பாலதாகும். மேலும் இவருடைய தனியனில் “ய: ஸ்ரீசடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்தம் அகிலம் குரோ:”‘ என்று அருளியதற்கு ஏற்ப நம்மாழ்வாரை ஆசார்யராகப் பற்றி திவ்ய பிரபந்தம் முழுவதையும் கேட்டவர் என்று அருளியது காண்க. இதற்குச் சேர, தமிழ்க் கண்ணி நுண் சிறுத் தாம்பைப் பண்டை உருவால் பன்னீராயிரம் உரு உரை செய்ய, ஒண் தமிழ் மாறன் திருவுள்ளமுகந்து திவ்ய ஞானம் நாதமுனிக்கு நயந்தருள் புரிந்தாரன்றோ” என்று உரைப்பர் பிள்ளைலோகம் சீயர். இவற்றை விரும்பி ஸ்ரீமந் நாதமுனிகள் கற்றதனால் “பரிந்து கற்றான்” என்றபடி.
(கானமுறத் தாளத்தில் கண்டு இசைத்தான்) கானம் உற – கானம் நிலைக்க, தாளம் – கைத்தாளக் ஸ்ரீமந்நாதமுனிகள் தம்முடைய திவ்ய ஸ்தலமான வீரநாராயணபுரத்துக்கு வந்து, அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானான மன்னனாரிடம் தமக்கு திவ்ய பிரபந்தங்களை அருளினதைச் சொன்னார் -மன்னனாரும் மிக்க உகப்புடனே இவர் கனவில் வந்து இந்த திவ்வியப் பிரபந்தங்களை ஒருரு நாதமுனிகளுடன் அருளிச் செய்து, “இவ்வுலக மக்களைத் திருத்த நீர் இந்த பிரபந்தங்களை இயலும் இசையுமாக்கும்” என்று அர்ச்சகர் வாயிலாக நியமித்தார். தம்முடைய மருமக்களான கீழை அகத்தாழ்வாரையும் மேலை அகத்தாழ்வாரையும் கூட்டிக் கொண்டு இத் திவ்வியப் பிரபந்தங்களை, வேத வியாஸர் வேதங்களை நான்கு ஸ்வரங்களோடு உச்சரிப்பது போல, ஸ்ரீமந்நாதமுனிகளும் இவற்றை திவ்ய தேவ கானத்திலே சேர்த்து நன்கு இசைக்கும்படி செய்வித்தார்.பின்னர் இருவரும் இனிய குரலை யுடையவர்களாய், முற்காலத்திலே குசலவர்கள் இராமனுக்கு முன்னால் ஸ்ரீராமாயணத்தைப் பாடியது போல, வீரநாராயணபுரம் ஸ்ரீராஜகோபாலன் ஸந்நதியில் திவ்ய பிரபந்தங்களை ஆர்வத்துடன் பாடினார்கள்.
தாளத்தில் கண்டு இசைத்தலாவது -ஸ்ரீ மந்நாதமுனிகள் காலத்தில் சோழ ராஜாவின் அரண்மனை வாசலிலே தேவ கானம் பாடுவாள் ஒருத்தியும், மனுஷ்ய கானம் பாடுவாள் ஒருத்தியும் சேர்ந்து தங்கள் தேவ கானமே உயர்ந்தது என்று ஒருத்தி சொல்ல மற்றொருத்தி மனுஷ்ய கானமே உயர்ந்தது என்று சொல்ல, இதனால் வாதம் முற்றி ராஜாவிடம் அறிவிக்க, அவனும் வித்வான்௧ளைத் திரட்டி இவ்விருவரையும் பாடுவித்து, மனுஷ்ய கானம் செய்தவளை பாராட்டி வெகுமதி அளித்தான்.-தேவகானம் பாடுபவள் மிகவும் மனம் நொந்து இந்த கானத்தை தேவர்களே அறிவர். மனிதர்கள் அறியார் என்று எண்ணி, கோயில் தோறும் சென்று பாடி, இறுதியில் மன்னனார் கோயிலிலே பெருமாள் முன் பாடினாள்-மன்னனார் கோயிலிலே பெருமாள் முன் தேவகானம் பாடுவதைக் கேட்ட ஸ்ரீ மந்நாதமுனிகள் அவளுக்கு மன்னனார் தீர்த்த பிரசாதம் முதலான வற்றைக் கொடுத்து கெளரவித்தார். அவளும் இவரை வணங்கி அரசனிடம் சென்று தாம் பாடுகிற தேவ கானத்தை அறிந்த ஒருவர் வீரநாராயணபுர மன்னனார் கோயிலில் இருக்கும் ஸ்ரீ மந்நாதமுனிகள் என்கிற பெரியவர் தான். அவரைத் தவிர உலகில் வேறு யாரும் இல்லை என்று சொன்னாள். உடனே அரசனும் ஸ்ரீ மந்நாதமுனிகளை வரவழைத்து, அவரை உபசரித்து தேவ கானத்தை அறிந்தபடியை விளக்கிச் சொல்லச் சொன்னார். ஸ்ரீமந்நாதமுனிகள் நாற்பது நூறு தாளத்தைக் கொண்டு வரச் சொன்னார்.அவற்றைச் சேர ஒத்தச் சொன்னார். அந்த ஓசையைக் கேட்டு இது இவ்வளவு எடை, இது இவ் வளவு எடை உள்ளது என்று ஒவ்வொன்றினுடைய அளவையும் சொன்னார். அரசனும் தனித் தனியே அவற்றை சோதித்து நிறுத்து, அவற்றில் முந்திரி அளவாவது ஏற்றம் குறைவில்லாமல் இருப்பதைக் கண்டு வியப்படைந்தான். அரசனை ஆசிர்வதித்து மன்னனார் கோயில் வந்தார். பின்னர், ஸ்ரீமந்நாத முனிகள் நியமனத்தாலே ஸ்ரீரங்கத்தில் மிகச் சிறந்ததான அரையர் சேவை என்ற பெயரில் இந்த திவ்ய கானம் தடையின்றி அரையர்களால் அபிநயனத்துடன் அத்யயன உற்சவங்களில் இன்றளவும் பாடப்படுகிறது.-திருப்பல்லாண்டு தொடக்கமாக திருநெடுந் தாண்டகம் வரை பகல் பத்து நாட்களிலும், திருவாய் மொழியை இராப்பத்து நாட்களிலும் சேவிப்பர் -இயற்பாவை இயலாக சேவிப்பது ஸ்ரீமந்நாதமுனிகள் ஏற்படுத்திய முறையாகும். இந்த அரையர் சேவை ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ வில்லிபுத்தூர் மற்றும் மேலக் கோட்டை ஆகிய திவ்ய தேசங்களில் இன்றும் பிரசித்தமாக நடந்து வருகிறது. இது பற்றியே தாளமுடன் இசைத்தவர் ஸ்ரீமந்நாதமுனிகள் என்றபடி-
(கருணையினால் உபதேசக் கதி அளித்தான்) கதி- வழி, புகலிடம். உபதேசமாவது தாம் நம்மாழ்வாரிடம் இருந்து பெற்ற ரகஸ்ய தாத்பர்யங்களும் திவ்வியப் பிரபந்தங்களும் மற்றும் அஷ்டாங்க யோக ரகஸ்யமுமாகும். இவற்றை தம் கருணையினால் உய்யக் கொண்டார், குருகை காவலப்பன், நம்பி கருணாகர தாஸர், ஏறு திருவுடையார், திருக் கண்ண மங்கை ஆண்டான், வானமாமலை தேவியாண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை மற்றும் சோகத் தூராழ்வான் ஆகிய எண்மருக்கு உபதேசித்ததாகக் குருபரம்பரா ப்ரபாவம் கூறும்.மேலும் கருணைக்கு எடுத்துக்காட்டாக குருகை காவலப்பனுக்கு அஷ்டாங்க யோக க்ரமத்தை உபதேசித்தார். உய்யக் கொண்டாருக்கு சாஸ்த்ரங்களையும் திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களையும் உபதேசித்து அவற்றை வளர்க்கச் சொன்னார். தம் குமாரரான ஈஸ்வர முனிக்குப் பிறக்கும் குமாரருக்கு யமுனைத் துறைவர் என்று பெயரிடச் சொன்னார். உய்யக்கொண்டாரையும் குருகை காவலப்பனையும் பார்த்து அவர்களுக்கு உபதேசித்தவற்றை யமுனைத் துறைவருக்கு உபதேசிக்கச் சொல்லி வழி காட்டினார் ஸ்ரீமந் நாதமுனிகள். இது பற்றியே உபதேச கதி அளித்தவன்-என்றபடி-
(நானிலத்தில் குரு வரையை நாட்டினான்) நானிலமாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகைப் பட்ட இந்த பூமி. குரு வரையை நாட்டுதலாவது – நானிலமாகிய இந்த உலகில் குரு பரம்பரையை நிர்ணயித்தல், முதன் முதலாக கூரத்தாழ்வான் அனைவருக்கும் குருபரம்பரை அநுஸந்தாநத்தின் மூலம் உய்வு பெற அருளிய தனியன் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுநமத் யமாம்” என்பதாகும். இந்தத் தனியனில் திருமகள் கேள்வனான எம்பெருமானுக்கு அடுத்ததாக நாதமுனிகளை அருளியுள்ளார்.-மதுரகவிகளினுடைய திவ்ய ப்ரபந்தத்தை நாத முனிகள் தான் அநுஸந்தித்து நம்மாழ்வாருடைய அருள் பெற்ற நாதமுனியானார். அந்த ஸ்ரீமந் நாதமுனிகள் அருளாலே அவர் திருப் பேரனான யமுனைத் துறைவர் நம் தர்சனத்தை ஆள வந்தது. இந்த தனியனில் நாதமுனிகளை நடுவில் சொன்னது. இராமாநுசருக்கும் உபலக்ஷணமாகும் என்பர். ஏனெனில் உடையவர் தாம் குருபரம்பரைக்கு நடு நாயகமாகத் திகழ்பவர். வியாசர் முதலானவர்கள் மூலமாக பகவத் ப்ரஸாதம் காரணமாக வளர்ந்து வந்த சாஸ்த்ரங்களைக் காட்டில், நேராக பகவத் ப்ரஸாதம் காரணமாக ஆழ்வாராலே அவதரிக்க ஏற்றத்தை உடைய திருவாய்மொழியை அவர் க்ருபையாலே பெற்ற ஏற்றத்தைச் சொல்லுகிறது.-சாஸ்த்ரம் பரப்புவதற்கு காரணம் வியாஸர் கருணையாகையாலே வேதம் மூலமிருக்கும் அது. அதன் கருத்தான இதுக்கு “நாதம் பங்கஜ நேத்ர…” என்று மாமுனிகள் அருளியபடி ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமாக நடந்து செல்லுகிற ஆசார்ய பதத்தில் இருப்பவராய், அருளிச் செயலை விரும்பி வளர்த்துக் கொண்டு வருமவர்கள் தான். மேலும் ஸ்ரீமந் நாத முனிகள், உய்யக்கொண்டார் என்று தொடங்கி தேவராஜர் என்னுமளவிலும் காட்டப்பட்ட ஆசார்யர்கள் என்றும் “திருவருள்மால்… அருள் பெற்ற நாதமுனி முதலாம் நம் தேசிகர்” என்று ஆசார்யர்கள் பரம்பரையை அருளியது காணலாம். மேலும் “சேனைநாதன் அருள் மாறன் நாதமுனி தாமரைக் கண்ணி ராமர் வா…” என்ற தனியன் மூலமாகவும் அறியலாகும்.
(நலந்திகழும் நாதமுனிநற்பதங்கள் வாழியே) நலமாவது நன்மை. திகழ்வதாவது – விளங்குவது -நாத முனிகளுக்கு நன்மையாவது -ஆளவந்தார் தாம் அருளிய ஸ்தோத்ர ரத்னத்தில் “நமோ… ஸிந்தவே” என்கிறபடியே நாதமுனிகளுடைய ஞான, வைராக்ய பக்திகளினுடைய உயர்வைச் சொல்லுகிறார்.-இவருடைய ஞானம் முதலானவை இன்னாருடையது என்று நினைக்க முடியாது. இவ்வளவு என்று அறிவிற் சிறந்தவராலும் அளவிட முடியாது என்கிறார். மேலும் உண்மை அறிவினுடையவும் அன்பினுடையவும் பெரு மேன்மையின் முடிவே எல்லையா யிருப்பவருமானவர் என்பர். அளவற்ற பகவத் பக்தி என்ன, உண்மை அறிவு என்ன, பக்தியின் பரம பர்யோஜனமாயும் இருப்பவர் என்கிறார்.
முநி: – பகவானை நினைக்கிலுண்டான ஆனந்தத்தினால் நிலை நின்றவர். அதாவது தியானிக்கத் தக்க வஸ்துவான எம்பெருமானை எப்போதும் மனக் கண்ணாலே காண்கை. சலங்கொள் நாதமுனி. நாதன் அருளுருவானவ ராகையாலே இவருக்கு நாதமுனிகள் என்று பெயர். ஸ்ரீரங்கநாதர் என்னும் திருநாமத்தை உடையவர். நம்மாழ்வாரை நாதராக உடையவராய், அந்த ஆழ்வாருடைய அருள் பெற்ற நாதமுனி என்பர். அருள் பெற்ற நாதமுனி – அருள் மாறன் அருளைப் பெற்றவர். அல்லது ஆழ்வார் அருளையாவது அதற்குக் காரணமான மன்னனாருடைய அருளையாவது பெற்றவர் என்பர் பிள்ளை லோகம் சீயர்.
வேதாந்த தேசிகர் அருளிய ஸம்ப்ரதாய பரி ஸூத்தி என்னும் ரஹஸ்யத்திலே வேதாந்த ஸம்ப்ர தாயத்துக்கு இந்த யுக ஆரம்பத்திலே பிரம்மநந்தி முதலானோர்க்குப் பிறகு நம்மாழ்வார் ப்ரவர்த்த கரானார் என்றும் குருபரம்பராஸாரத்திலும் இவ் வாசார்யர்களில் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு மதுரகவிகள் முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும் திருவாய்மொழி முகத்தாலும் யோக தசையிலே ஸாக்ஷாத் க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் என்றும் உள்ளமை காண்க.ஸ்ரீ மந்நாதமுனிகள் திருவடியானது “நாதஸ்ரீபாத பங்கஜே” என்கிறபடியே தம் ஸர்வ பாரங்களையும் வைத்து அவர்தம் சீடரான உய்யக்கொண்டார் வணங்குவதாகக் கூறுவர். அவ்வாறே நாமும் அவர் தம் திருவடிகளை வணங்குவோமாக. வாழி
—
வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழு மலர்ப் பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மாலரங்க மணவாளர் வளமுரைப்போன் வாழியே
வையமுய்யக் கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே–பராபவ வருடம் (886) சித்திரை மாதத்தில் வெள்ளிக்கிழமை, பெளர்ணமி அன்று கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர் உய்யக் கொண்டார் என்னும் ஆசார்யர். இவர் திருவரங்கத்துக்கு வடக்கே உள்ள திருவெள்ளறையில் பூர்வசிகை ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்தில் அவதரித்தவர். இவருக்கு புண்டரீகாக்ஷர், பத்மாக்ஷர், ராஜீவாக்ஷர், அரவிந்தாக்ஷர் என்று பல திருநாமங்கள். இவருடைய சீடர்கள் ஸ்ரீராமன் என்னும் மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்காரதாஸர், ஸ்ரீபுண்டரீகதாஸர், கோமடம் திரு விண்ணகரப்பன் மற்றும் உலக பெருமாள் நங்கை ஆகியோராவர். இவர் ஆண்டாள் அருளிய திருப் பாவைக்குத் தமிழில் இரண்டு தனியன்கள் அருளியுள்ளார்–
வாலவெய்யோன்தனை – உதய கால சூரியனை,
வென்ற வடிவழகன் – வென்ற திருமேனி அழகையுடையவர்,
வாழியே – வாழ வேண்டும்;
மால் – பெருமை பொருந்திய, –
மணக்கால் நம்பி, தொழும் வணங்கும்,
மலர்ப் பதத்தோன் – மலர் தலை யுடைய திருவடிகளை உடையவர்;
சீலமிகு – நல்ல குணம் மிக்க,
நாதமுனி – ஸ்ரீமந் நாதமுனிகள்
சீர் – குணங்களை,
உரைப்போன் – சொல்லுபவர்;
சித்திரையில் சித்திரை மாதத்தில்,
கார்த்திகை நாள் – கார்த்திகை நட்சத்திரத்தில்,
சிறக்க வந்தோன் – பெருமை பெற தோன்றியவர்;
நாலிரண்டும் – எட்டு எழுத்து மந்திர மான திருமந்திரத்தையும்,
ஐயைந்தும் – இருபத்து ஐந்து எழுத்தான துவய மந்திரத்தையும்,
நமக்கு உரைத்தான் – நமக்காக வழிவழியாகப் பரம்பரை யாக வரும்படி செய்தவர்;
நாலெட்டின் – முப்பத்து இரண்டு எழுத்தான சரம ச்லோகத்தின்,
உட் பொருளை – ஆழ்ந்த பொருளை,
நடத்தினான் – வழி வழியாக உபதேசித்தவர்;
மால் – பெருமை தங்கிய,
அரங்க மணவாளர் – திருவரங்கனான நம்பெருமாள்,
வளம் – அழகை,
உரைப்போன் – உரைப்பவர்;
வையம் – உலகம்,
உய்யக் கொண்டவர் – உயர்ந்த ஜீவனம் பெற விரும்பியவர்,
தாள் – திருவடிகள்,
வையகத்தில் – இவ் வுலகில் வாழ பல்லாண்டு பாடு வோமாக.
வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன்) வால வெய்யோன் – உதய கால சூரியன். தன்னை என்பது தனை ஆயிற்று. உதயகால சூரியனையும் வென்ற வடிவழகை உடையவர் உய்யக்கொண்டார் என்றபடி. **ஸுத்தஸத்த்வமயம் செளரேரவதார மிவாபரம்” என்று வேதாந்த தேசிகர் யதிராஜ சப்ததி யில் (6) அருளியதற்கு ஏற்ப உய்யக் கொண்டார் சுத்த ஸத்வ மயமாயும் எம்பெருமானுடைய திவ்ய அவதாரங்கள் போல் சுத்த ஸத்வ குணமயமாக விளங்கி இருப்பவர் என்பதனால் உதயகால சூரியனைக் காட்டிலும் வடிவழகன் என்றபடி.-இந்த சுலோகம் பெரிய திருமுடி அடைவிலும், யதிராஜ ஸப்ததியிலும் காணலாம். பெற்றோர்கள் அவருடைய தூய ஸத்வ மயமான திருமேனியையும் தாமரை போன்ற திருக் கண்களையும் கண்டு திருவெள்ளறை எம்பெருமானான அப் புண்டர் காக்ஷணே அவதரித்துள்ளான் போலும் என்று எண்ணி புண்டரீகாக்ஷர் என்று பெயரிட்டனர்.“அவர் தாம் புண்டரீகாக்ஷரன்றோ. “புண்டரீக த்ருசே நம!:”’ என்றாயிற்று என்பர் பிள்ளைலோகம் சீயர். இது பற்றியே ஒன்றான எம்பார் ஜீயர் ஸ்வாமி, எம்பெருமானார் அவயவ சுலோகத்தில் புண்டரீகாக்ஷ ரான இவரை “நேத்ரயுக்மம் ஸரோஜாச்ஷ:”’ என்கிற படியே எம்பெருமானாருக்கு இரு கண்களாகத் திகழ்பவர் உய்யக் கொண்டார் என்று உரைப்பர்.-
(மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப் பதத்தோன்)-மால்- பெருமை. மணக்கால் நம்பி- உய்யக் கொண்டாரின் சீடர். மணக்கால் நம்பிக்கு பெருமை யாவது பன்னிரெண்டு வருடம் தம் ஆசார்யரான உய்யக் கொண்டார் திருவடிகளில் எல்லா வித கைங்கர்யங்களையும் செய்தவர். ஒரு நாள் உய்யக்கொண்டார் தேவிகளான ஆண்டாளம்மா பரமபதிக்க, திருமாளிகை கைங்கர்யமெல்லாம் மணக்கால் நம்பி தமக்கே பரமாய் நடத்திக் கொண்டு வரும்போது, தம் ஆசார்யரின் பெண் பிள்ளைகள் இருவரையும் நீராட்டி அழைத்து வரும் வழியிலே வாய்க்கால் சேறாயிருக்கக் கண்டு அவர்கள் திகைக்க, நம்பிகள் படியாய்க் கிடந்து அவர்களைத் தம் முதுகிலே அடியிட்டு அழைத்துக் கொண்டு போனார்.-உய்யக் கொண்டாரும் இந்த விஷயத்தைக் கேட்டு “இப்படி செய்வதே” என்று மிகவும் ப்ரீதி அடைந்தவராய், நம்பிகள் தலையை தம் திருவடித் தாமரைகளாலே அலங்கரித்தார். பொன்னடிப்பூ முடிசூட்டி “உமக்கு நாம் செய்ய வேண்டுவது என்ன” என்று கேட்க, நம்பியும் “உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன்” என்றார்.-மேலும் இரண்டாவது தடவை துவய மந்த்ரத்தை உபதேசித்தார். ஆசார்ய பெண் பிள்ளைகளின் மணக்கால் பொலிய நின்ற திருமேனியை உடையவராய் இருந்ததால் அன்று முதல் “ராம மிச்ரர்” என்ற இயற் பெயரையுடையரான இவருக்கு “மணக்கால் நம்பி” என்ற திருநாமம் உடையவரானார். அவர் தலையில் உய்யக்கொண்டார் திருவடிகள் அலங்கரிக்கப் பட்டது பற்றி “நம்பி தொழும் மலர்ப் பதத்தோன்” என்றபடி-
(சீலமிகு நாதமுனி சீருரைப்போன்) சீலமாவது நல்ல குணம். அதை மிகுதியாக உடையவர் ஸ்ரீமந்நாத முனிகள். சீராவது பெருமை. ஸ்ரீமந்நாதமுனிகளுக்குப் பெருமையாவது உய்யக் கொண்டாரைக் கொண்டு திவ்வியப்பிரபந்தத்தை உலகம் முழுவதும் பரவச் செய்ததாகும். மேலும் “குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம், வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விளையும்” என்று ஸ்ரீமந்நாதமுனிகளும் தம் சீ லகுணத்தால் உய்யக் கொண்டாருக்கு திவ்வியப் பிரபந்தத்தை அருளிச் செய்தார்.-அதாவது ஒரு மாட்டின் குளம்பின் அடியிலே மழைநீர் தேங்கும் போது சில குருவிகள் குடிக்க உதவும். அதே மழைநீர் வீரநாராயணபுரத்து ஏரியில் தேங்கினால் அந்நாட்டிலுள்ள வயலெல்லாம் விளைந்து நாடே வாழும்.-எம்பெருமானாருடைய சீடரான எம்பார் அருளிய “லக்ஷ்மீ நாதாக்ய ஸிந்தெள” என்ற ஸ்லோகத்தில் லக்ஷ்மீநாதனாகிற பெருங்கடலில் சடகோபராகிய மேகம், கருணை நீரைப் பருகி ஸ்ரீமந்நாதமுனிகளாகிற மலையில் பொழிந்து, அந்நீர் புண்டரீகாக்ஷர் என்னும் உய்யக்கொண்டார், ராம மிச்ரர் என்னும் மணக்கால் நம்பி ஆகிய இரு அருவி களின் மூலம் மேலும் பாய்ந்து கொண்டு வந்தது என்று அருளியது காணலாம்-
ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!
ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல். நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
லக்ஷ்மீ நாதாக்ய ஸிந்தௌ சடரிபு வஹநாத்போத வாஹைர் விபக்தோநாதேநாரோபிதோ ய: ப்ரணதி குணவசாத் யாமுநா க்யேந பூய:தேநாம்போதேந முக்தோ அம்ருதமிவ பவபாகே குலோத்பாஸி பூய:தஸ்மை நமோ அஸ்து ராமாய மஹா முநயே…
லக்ஷ்மீ நாதாக்ய ஸிந்தௌ: ஸ்ரீமன் நாராயணன் (லக்ஷ்மி நாதன்) என்னும் பிரம்மாண்டமான கருணைக்கடலில் இருந்து,சடரிபு வஹநாத்: நம்மாழ்வார் (சடகோபன்) என்னும் மேகம் ஞானமாகிய நீரை முகந்து கொள்கிறது.நாதேநாரோபிதோ: நாதமுனிகள் அந்த ஞானத்தை உலகிற்கு மழையாகப் பொழிகிறார்.யாமுநா க்யேந: ஆளவந்தார் (யாமுனாசாரியர்) அதை ஒழுங்குபடுத்தி கால்வாயாக மாற்றுகிறார்.ராமாநுஜர்: இந்த ஞானாமிர்தத்தை உலக மக்கள் அனைவரும் பருகும்படிச் செய்து, சம்சாரக் கடலில் தவிப்பவர்களின் துயரத்தைத் துடைக்கிறார்.
(சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன்) தமிழ் மாதங்களில் சித்திரை மாதம் முதன்மையானதாகும். “சைத்ர ஸ்ரீமாந் அயம் மாஸ”. (அ.கா.3-3) என்று இராமாயணத்தில் சித்திரை மாதத்தைக் கொண்டாடியபடியே இந்தச் சித்திரை மாதமானது மிகச்சிறந்ததாகும். இந்த மாதத்தில் கார்த்திகை நக்ஷத்ரத்துக்கு சிறப்பாவது நித்ய ஸுரிகளில் ஜயத்ஸேநர் என்பவரின் அம்சமாக உய்யக்கொண்டார் அவதரித்த சிறப்பாகும். இவர் அவதரித்தது பராபவ வருஷம் சித்திரை மாதம் வெள்ளிக்கழமை பெளர்ணமி கார்த்திகை நக்ஷத்திரமாகும்.
(நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான்) நாலிரண்டு – எட்டு எழுத்து மந்திரமான “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரம் ஆகும். இதனை பதரிகாச்ரமத்தில் நரனுக்கு நாராயணன் உபதேசித்தான். ஐயைந்தாவது – இருபத்து ஐந்து எழுத்து கொண்ட “ஸ்ரீமந்நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம:” என்ற துவய மந்திரமாகும். இதனை ஸ்ரீவிஷ்ணு லோகத்தில் விஷ்ணுவானவர் பெரிய பிராட்டிக்கு உபதேசித்தார். இவ்விரண்டு மந்திரங்களையும் சீடர்களான மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், ஸ்ரீ புண்டரீகதாஸர் முதலான சீடர்கள் மூலமாக நம் ஆசார்யர் வரை வாழையடி வாழையாக சொல்லும்படி உரைத்தார் உய்யக் கொண்டார். எட்டு எழுத்தான திருமந்திரத்தின் பொருளாவது “எம்பெருமானுக்கே உரியேனான நான் எனக்கு உரியன் அன்றிக்கே ஒழிய வேணும். எல்லோரையும் காட்டிலும் தலைவனான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும்” என்பதாகும். இருபத்து ஐந்து எழுத்தாய் இரண்டு வாக்யமாக அமைந்த துவயத்தின் பொருளாவது “பிராட்டியோடு கூடிய ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளையே தஞ்சமாகப் பற்றுகிறேன். பிராட்டியோடு கூடிய நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் இருவருமான சேர்த்தியிலேயே ஆக வேணும்” என்பதாகும். மந்த்ர ரத்னமான துவய மந்த்ரமானது வீர்யம், பலம், மங்களத்தை அளிப்பது, வேத ஸாரமாயிருப்பது, பழையதாயிருப்பது. மேலும் துவயத்தின் பெருமையைப் பற்றிச் சொல்லும் போது “ப்ரமாண ஸாரமாகையாலே துவயம் ப்ரமாணம் அதற்கு விஷயம் ஆகையாலே அதுவே உண்மையாய் அறியத் தக்கது துவயத்தின் அறிந்து உபதேசிப்பவன் ஆசார்யனாகையாலே அவனே என்றும், அர்ச்சாவதாரம் என்றும் பொருளை ஞானமுள்ளவர்” என்றும் வார்த்தா மலையில் (136) உய்யக் கொண்டார் அருளியது காண்க.
(நாலெட்டின் உட்பொருளை நடத்தி னான்) நாலெட்டாவது-முப்பத்திரண்டு எழுத்துக்கள் கொண்ட சரம சுலோகமாகும். ஸர்வ தர்மாந் பரித்பஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ -அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக் ஷயிஷ்யாமி மாசுச:” என்று “எல்லா தருமங்களையும் விட்டு என்னை ஒருவனையே தஞ்சமாகப் பற்று. நான், உன் எல்லா பாபங்களையும் போக்கி மோக்ஷத்தைக் கொடுக்கிறேன்”. இதனை கண்ணன் அர்ச்சுனனுக்கு திருத் தேர்த் தட்டில் நின்றும் உபதேசித்த பகவத் கீதையில் பதினெட்டாம் அத்யாயத்தில் வரும் 66வது சுலோகமாகும். சரம ச்லோகத்தின் உட்பொருளாவது எல்லா தருமங்களையும் (உபாயமாக நினையாமல்) விட்டு எம்பெருமான் ஒருவனையே உபாயமாகப் பற்றுவதாகும்.–
(மாலரங்க மணவாளர் வளமுரைப்போன்) மால்- பெருமை. மால் அரங்க மணவாளர்- பெருமை பொருந்திய அரங்கத்தில் உள்ள பெரிய பெருமாள். வளம் – வண்மை – செழுமை. வளம் – நன்மை. மணவாளனுக்கு நன்மையாவது – ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு அமைந்த இரு தனியனில், உய்யக்கொண்டார், “அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல் பதியம்” என்று ஆண்டாள் அரங்கனுக்கு திருப்பாவை பாடினாள் என்கிறார். அதாவது ஆண்டாள் திருப்பாவை என்னும் பிரபந்தம் மூலமாக பாட்டுக்களை இனிய இசையுடன் பாடி அவற்றை ஸ்ரீ ரங்கநாதனுக்கு விலக்ஷணமான பாமாலையாக ஸமர்ப்பித்தாள் என்று வாசிக கைங்கர்யம் செய்தபடி. இதற்கு உரையிட்ட பிள்ளைலோகம் சீயர், “பூமிப் பிராட்டியாரான ஆண்டாள் விரும்பும் ஸ்ரீவராக நாயனார் தன்மையும், ஆண்டாள் அநுகாரத்தாலே விரும்புகிற கோபாலர் தன்மையும் பண்பின் ஒன்றாம் தன்மையாலும் அடியாரிடம் மையல் குணத்தாலும் பெரிய பெருமாளிடத்திலே காணலாயிருக்கும்” என்றும் அருளியது காண்க.
(வையமுய்யக் கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே) வையம் – உலகம். பிறவித் துயரிலிருந்து உய்யும் பொருட்டு ஸ்ரீமந் நாதமுனிகளிடம் இருந்து திவ்வியப் பிரபந்தத்தைப் பெற்று உலகுய்யக் கொண்டவனார் உய்யக் கொண்டார். அதாவது ஸ்ரீமந்நாதமுனிகளிடம் இரு நிதிகள் இருந்தன. ஒன்று எம்பெருமானை அடைவதற்கு பக்தி யோகம் -மற்றொன்று எம்பெருமானுடைய ஸ்வரூபம், ரூபம், குணம், உறுப்பான யோகம். செல்வங்கள் ஆகியன பற்றிப் பேசும் ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமாகும். சரீரம், பொருள், அறிவு, வசிக்கும் இடம், செயல்கள், குணங்கள், பிராணன்கள் ஆகியவற்றை ஆசாரியனுக்காக எவன் தரிக்கிறானோ அவனே சிஷ்யன் ஆவான் என்பதற்கு ஏற்ப இருந்த சிஷ்யர்களில் ஒருவரான உய்யக் கொண்டாரைப் பார்த்து ஸ்ரீமந்நாதமுனிகள், “நீரும் குருகைக் காவலப்பன் விரும்பினாற் போல பக்தி யோகத்தைப் பெற்றுப் போகிறீரா” என்று கேட்க, அவரும் “பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ? என்கிறபடியே “உலகம் ஆத்ம நாசம் அடைந்து பிணக்காடாய் இருக்கும் போது அடியேன் ஒருவன் மட்டும் எம்பெருமானோடு ஆத்ம விவாகம் செய்து கொண்டு மோக்ஷமடைவது சரியாகுமோ” என்கிறார்.
ஆதலால் “அடியேன் எப்படியானாலும் பரவா யில்லை. உலகம் உய்யும்படி திவ்வியப் பிரபந்தங்களை உபதேசிக்க வேணும்” என்று ப்ரார்த்தித்தார். இதனைக் கேட்ட ஸ்ரீமந் நாதமுனிகள் அவரை வாரி அணைத்து, “நீரே உலகையும், உலகைப் படைத்த நாராயணனையும், அவனைச் சொல்லும் திவ்வியப் பிரபந்தங்களையும், அதனைப் பெற்ற என்னையும் உய்யக் கொண்டவர். உம்மாலன்றோ நாம் மிகவும் அரும்பாடுபட்டு மாறன் அருள் பெற்று, பெற்ற அருளிச் செயல்கள் உலகெங்கும் பரவி அனைவரையும் உய்விக்கப் போகின்றன. எனவே நீர் உய்யக் கொண்டார் என்னும் பெயராலே கொண்டாடப்படுவீர்” என்று அருளி, திவ்வியப் பிரபந்தங்களை உபதேசித்தார் -ஒரு முறை ஸ்ரீமந்நாதமுனிகளின் மாமனார் வங்கிபுரத்து தம் மகளான ஸ்ரீமந்நாதமுனிகளின் தர்மபத்னியான அரவிந்தப்பாவையைத் தம் இல்லத்துக்கு சில நாள் அனுப்பி வைக்க வேண்டினார். ஸ்ரீமந்நாதமுனிகளும் இசைந்து வழித் துணையாக புண்டரீகாக்ஷரை அனுப்பி வைத்தார். ஸ்ரீமந்நாதமுனிகளுடைய தர்ம பத்னியை விட்டு விட்டு திரும்பி வந்த அவரை அங்கு நடந்ததை வினவினபோது அவரை உணவு வகையில் உபசரித்த தம் மாமனார் திருமாளிகையில் உள்ளவர்களின் அச்ரத்தையை புரிந்து கொண்டார்.“நீர் எப்படி இதனை பொறுத்திருந்தர்” என்று கேட்க, “போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” (திருமாலை 41) என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரத்தைச் சுட்டிக் காட்டினார். இதற்கு மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீமந்நாதமுனிகள் அவரைத் தழுவிக் கொண்டு “நீரன்றோ எம்மை உய்யக் கொண்டீர்” என்று கொண்டாடினார். அதனால் உய்யக்கொண்டார் என்ற திருநாமம் ஏற்பட்டது. இவ்வாறு ஆட்கொண்டவில்லி கோவிந்த ஆசார்யர் இயற்றிய நூலில் அமைந்தது காணலாம். உய்யக் கொண்டாருடைய சுயநலம் பேணாத பரந்த மனப்பான்மையாலே இன்று நாம் அருளிச் செயல்களாலே உய்ந்து போகிறோம்.
ஸ்ரீமந் நாத முனிகளின் சீடர்களில் குருகைக் காவலப்பன் ஸமாதி நிலையில் ஆழ்ந்து விட்ட படியால் உய்யக்கொண்டார் ஸ்ரீமந்நாதமுனிகளிடம் பெற்ற அர்த்தங்களைப் பிரசாரம் செய்தார் என்று திவ்ய ஸுரி சரிதம் கூறும். இதனாலேயே ஸ்ரீ வைஷ்ணவ சமூகம் முழுவதற்கும் இவர் பரமாசார்யராய் வாக்ய குருபரம்பரையிலும் ச்லோக குருபரம்பரையிலும் ஸ்ரீமந்நாத முனிகளுக்கு முன் அநுஸந்திக்கப்படுகிறார். மேலும் ஈடு முப்பத்தாறு ஆயிரப்படியின் ஸம்ப்ரதாய தனியன்களில் திருவாய்மொழிப் பிள்ளை “பங்கஜநேத்ர” என்றும், மணவாள மாமுனிகள் “சீர் உய்யக் கொண்டார்” என்றும் நாதமுனிகளுக்கு அடுத்தவராகக் காட்டுவது அறியற்பாலதாகும். பராசரபட்டரும் தாம் அருளிய ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் குருபரம்பரை வணக்க ச்லோகத்தில் “பத்மாக்ஷம் ப்ரேக்ஷிஷீய” என்கிற படியே “புண்டரீகாக்ஷரான உய்யக் கொண்டாரைப் பார்க்கக் கடவேன்” என்கிறார். இப்படிப்பட்ட ஆசார்யர் திருவடிகள் வையகத்தில் வாழ பல்லாண்டு பாடுவோமாக –
—
மகரமதில் விசாகம் நாள் வந்துதித்தான் வாழியே
மாறன் தாள் நாதமுனி மலரடியோன் வாழியே
நிகரில் நன் ஞான யோகம் நீண்டு செய்வோன் வாழியே
நிர்ணயமாய் ஐந்து பொருள் நிலை யறிவோன் வாழியே
அகமறுக்கும் இராமர் பதம் ஆசை யுள்ளோன் வாழியே
ஆழ்வார்கள் மறையதனை ஆய்ந்துரைப்போன் வாழியே
செகதலத்தில் குருகூரில் செனித்த வள்ளல் வாழியே
செய்(ய) குருகைக் காவலப்பன் திருவடிகள் வாழியே--பாண்டிய தேசத்தில் ஆழ்வார் திருநகரியில் தை மாதம் விசாக நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் குருகைக் காவலப்பன். இவர் இருப்பிடம் ஸ்ரீமந்நாத முனிகளுடைய திருப்பள்ளி. அது அன்றைய சோழ தேசத்தில் திருக் காவேரிக் கரையில் கங்கை கொண்ட சோழ புரம் அருகில் குருகைக் காவலப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆசாரியார் ஸ்ரீமந்நாதமுனிகளிடம் அடி பணிந்து ஞானம் யோகம் முதலான செல்வங்களைப் பெற்றவர். இவருக்கு கல்வி அஷ்டாங்க யோகம். இவர் நூற்றைம்பத்தொரு ஆண்டுகள் எழுந்தருளி இருந்தார் என்று பெரியதிருமுடி அடைவு கூறும் –
மகரமதில் – மகர மாதமான தை மாதத்தில்,
விசாகநாள் – விசாக நக்ஷத்ரத்தில்,
வந்து உதித்தான் வந்து அவதரித்தவர்,
வாழியே – வாழ வேண்டும்.
மாறன் தாள் – நம்மாழ்வாரின் திருவடியைப் பற்றின,
நாதமுனி – ஸ்ரீமந்நாதமுனிகள்,
மலரடியோன் – மலர்ந்த திருவடிகளைப் பற்றியவர்,
நிகரில் – ஒப்பில்லாத,
நன் ஞான யோகம் – பகவத் விஷயமாகிற நல்ல ஞான யோகத்தை,
நீண்டு செய்வோன் – நீண்ட கால அனு பவத்தில் கொண்டவர்,
நிர்ணயமாய் – நிர்ணயிக்கப் பட்டதாய்,
ஜந்து பொருள் – அர்த்த பஞ்சகத்தின்,
நிலை அறிவோன் – நிலைமையை அறிந்தவர்.
அக மறுக்கும் – அகங்காரத்தை அறுக்கும்,
இராம பதம் – இராமபிரான் திருவடிகளில்,
ஆசையுள் ளோன் – ஆசை உடையவர்.
செகதலத்தில் இவ்வுலகில்,
குருகூரில் – ஆழ்வார் திருநகரியில் அப்பன் கோயில் என்ற தேசத்தில்,
செனித்த வள்ளல் – அவதரித்த வள்ளல்.
செய்ய குருகைக் காவலப்பன் திருவடிகள் – நேர்மை யான குருகைக் காவலப்பன் திருவடிகள்,
வாழியே – வாழ வேண்டும்
(மகரமதில் நாள் வந்துதித்தான்) குருகைக் காவலப்பன் “ம்ருகே விசாக ஸம்பூதம்” என்று தனியனில் அருளியபடி-பெளர்ணமியும் மிருகசீரிஷ நக்ஷத்ரமும் கூடிய மகர மாதத்தில் விசாக நக்ஷத்ரத்தில் அவதரித்தார். இந்த மாதத்தில் மக நக்ஷத்ரத்தில் திருமழிசை ஆழ்வாரும், வைசாகி விசாக நக்ஷத்ரத்தில் நம்மாழ்வாரும் அவதரித்த பெருமை யுடையதாகும். இந்த ஆசார்யருக்கு திருமழிசை ஆழ்வார் பிறந்த மாதத்திலும், நம்மாழ்வார் அவதரித்த நக்ஷத்ரத்திலும் அவதரித்த பெருமை ஒரு சேரப் பெற்றது காணலாம்.
(மாறன் தாள் நாத முனி மலரடியோன்) மலரடி- தாமரை போன்ற திருவடி “நாதமெளநி பதாச்ரிதம்” என்ற தனியனில் அருளியபடியே ஸ்ரீமந் நாத முனிகளுடைய திருவடியில் ஈடுபட்டவர் குருகைக் காவலப்பன். ஸ்ரீமந் நாதமுனிகளும் மாறனான நம்மாழ்வாரிடம் உபதேசம் பெற்று நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தைப் பெற்று, பவிஷ்ய தாசார்யரான எம்பெருமானாரை ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பித்துப் பெற்றதனாலும், குருபரம்பராநு ஸந்தானத்திலே “ஸுமதே பராங்குசாய நம:” என்பதற்கு பிறகு ஸ்ரீமந்நாதமுநயே நம என்பதாலும் மாறன் தாளாக நாதமுனிகள் திகழ்கிறார் என்பது பொருத்த முடையதாகும்–அத்தகைய நாத முனிகள் மலரடியை வணங்குபவர் அப்பன் ஆதலால் “மலரடியோன்” என்றபடி. மேலும் அஷ்டாங்க யோகத்தில் ஈடுபட்டவரான குருகைக் காவலப்பன் யோகிகளில் சிறந்தவராய், பெரும் புகழாளராய் ஸ்ரீமந் நாதமுனிகள் வாழ்ந்த வீர நாராயண புரத்திலேயே ஆசார்ய கைங்கரியம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் என்றும் பிரபந்நாம்ருதம் கூறுவதால் “நாதமுனி மலரடியோன்” என்று கொண்டாடத் தக்கதாகும்.
(நிகரில் நன் ஞான யோகம் நீண்டு செய்வோன்) நன் ஞானம் – பகவத் விஷயமாகிய விலக்ஷணமான ஞானம். யோகம் – ஸம்பந்தம். திருவிருத்தத்தில் (பாடல்-93) “நன் ஞானத்து” என்பதற்குச் சேர பெரியவாச்சான் பிள்ளை, “ஞான மாகில் பகவத் விஷயத்தைக் குறித்தன்று வேறு இராது” என்றும், “ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்று முதலாழ் வாரும் அருளியது காண்க. திருவாய்மொழியில் (13-10) “துயக்கறு மதியில் நன் ஞானத்துள்” என்று அருளியதற்கு ஏற்ப நன் ஞானமாவது நன்றான ஞானம் என்பர் நம்பிள்ளை. அதாவது, ஆத்ம யாதாத்ம ஞானம். பரமாத்ம ஞானம் என்றபடி. அத்தகைய ஞான யோகம் கைவந்தவர் அப்பன் என்றபடி. மேலும் ஸ்ரீமந் நாத முனிகளிடம் ஒப்பற்ற நன்மை தரும் அஷ்டாங்க யோகத்தை உபதேசமாகப் பெற்று, அவரிடம் பக்தியை காட்டும் வகையில் அவர் பரமபதித்த இடத்திலேயே ஆயுள் உள்ள வரையில் தம் ஆசார்ய திருவடியைத் தியானம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் என்றும் பிரபந்நாம்ருதம் கூறுவதனாலும் “நீண்டு செய்வான்” என்றபடி.
(நிர்ணயமாய் ஐந்துபொருள் யறியோன்) மோக்ஷத்திலே இச்சை உடையவர்களுக்கு அறிய வேண்டிய ரகசியம் மூன்று என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது முதல் ரகசியமான திருமந்திரத்தில் ஐந்து பொருட்கள் அறிய வேண்டி யவை. அவை யாவன, இறை இயல்பு, ஆத்மாவின் இயல்பு, ஆத்மா இறையைப் பற்ற உபாய இயல்பு, அந்த உபாயத்துக்கு வரும் தடையான விரோதி இயல்பு, அந்த விரோதி நீங்கி பெறும் பேற்றின் இயல்பு என ஐந்து நிலைகளாகும். இதனை அப்பன் தன் ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளிடமிருந்து அறிந்தவர் ஆகையாலே ஐந்து பொருள் நிலை அறிவோன் என்றபடி –
(அகமறுக்கும் இராமர் பதம் ஆசை உள் ளோன் ) குருகைக் காவலப்பனுடைய திருவாரதனப் பெருமாள் சக்ரவர்த்தி திருமகன். இராமர் அருளிய சரம ஸ்லோகங்கள் இரண்டு. அதில் சக்ரவர்த்தி திருமகனான “மித்ரபாவநே ஸம்ப்ராப்தம்” (யு.கா.183) என்ற ஸ்லோகத்தின் படியே அகங்காரமுடையவன் ஆயினும் பகையின்மை அநுகூலமாயிருக்கை ஆகியவற்றால் நெருங்கி வந்தவனை ஒரு படியாலும் என் பிராணனுக்குக் கேடு வருவதாயிருந்தாலும் அவனை விடமாட்டேன் என்று விரதம் பூண்ட இராம பிரானுடைய திருவடிகளில் அப்பன் ஆசை உடையவரான படியால் அகமறுக்கும் இராமர் பதம் எனப்பட்டது காணலாம்.
(ஆழ்வார்கள் மறையதனை ஆய்ந்து உரைப்போன்) நம்மாழ்வார் அருளிய திருவிருத்தத்தில் (38) “கடமாயினகள் கழித்து” என்ற பாடலில் குருகைக் காவலப்பன் ஆய்ந்துரைத்த ஒரு ஐதிகத்தை நம்பிள்ளை காட்டி உரைப்பர். ஒருவன் உலகுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள ஸம்பந்தம் எப்படிபட்டது என்று கேட்டான். அதற்கு அப்பன் இந்த உலகுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள தொடர்பை நீயா கேட்பது என்றார். அதாவது “ஈஸ்வரனான இந்த ஜீவாத்மா பிறக்கும் போது எந்த உடலைப் பெற்று மரணத்தின் போது எந்த ஒரு உடலிலிருந்து கிளம்புகிறதோ” என்று பகவத் கீதையில் (15-8) கூறியபடி உறுப்புக்களோடு கூடியிருக்கும் இந்த உடலாகிற இந்த உலகுக்கு ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச் சொல்லிற்று.இந்த உடலுக்கும் இதற்கு ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பாகிற உடல் உயிர் தன்மையே உலகுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள தொன்றாகும் என்பர். மேலும் அந்த மனிதன் அப்பனைப் பார்த்து “எம்பெருமானை எப்போதும் நினத்துக் கொண்டிருக்கும் நீர், அவனை நினைக்க எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்” என்றான். உடனே அப்பன் “நான் உனக்கு எம்பெருமானை நினைக்க வழி சொல்கிறேன். நீ அவனை மறக்க ஒரு வழி சொல்வாயாக” என்றார்.-அதாவது ஒரு பொருளானது பொருளாயிருப்பதும் அதற்கு ஒரு பெயர் உண்டாவதும் எம்பெருமான் அதன் உள்ளே உறைதலாலேயே ஆகும். அவ்வாறு இருக்கும் போது அவன் உள்ளுறை நிலையாய் அடைமொழியாய் எந்தப் பொருளைப் பார்த்தாலும் உடலாய் அடை கொளியான எம்பெருமானுடைய நினைவும் வந்தே தரும். எனவே நினைக்க ஒரு வழி சொல்ல வேண்டுமோ என்றபடி.
மேலும் திருவாய்மொழியில் “சிக்கெனச் சிறிதோரிடமும்” (2-6-2) என்ற பாசுரத்தில் “எங்கும் பக்கம் நோக்கி அறியான்” என்பதற்குச் சேர ஆழ்வார் பக்கல் எம்பெருமானுக்கு உண்டான மிக்க அன்பைத் தவிர்க்க வேணும் என்ற நாச்சிமார் திருமுலைத் தடத்தாலே நெருக்கிலும் அவர்கள் பக்கல் கண் வைக்க வில்லை என்பர்.-இந்த இடத்தில் ஆளவந்தாருக்குக் குருகைக் காவலப்பன் அருளிச் செய்ததைக் காட்டி உரைப்பர். ஆளவந்தாரின் ஆசார்யரான மணக்கால் நம்பி அருளியபடியே குருகைக் காவலப்பனிடத்தில் ஒரு ரகசிய விசேஷம் அறியவேண்டி , ஆளவந்தார் அதனை அறிய கங்கைகொண்ட சோழபுரம் சென்றார். அங்கே குருகைக் காவலப்பன் ஒரு குட்டிச்சுவரில் யோகத்தில் எழுந்தருளி யிருந்தார். இவரை இப்போது தடங்கல் செய்யக்கூடாது என்றெண்ணி ஆளவந்தார் சுவருக்கு பின்பு நின்றார். அப்போது குருகைக் காவலப்பனும் திரும்பிப் பார்த்து சொட்டைக் குலத்தில் ஆரேனும் வந்தாருண்டோ? என்று கேட்டார்.-ஆச்சரியப்பட்ட ஆளவந்தார் அடியேன் பின்னே இருப்பது எப்படி தெரிந்தது என்று கேட்க, அப்பனும் “நானும் எம்பெருமானுமாக அனுபவித்திருந்தால் பெரிய பிராட்டி திருமுலைத் தடத்தாலும் நெருக்கி அணைத்தாலும் அவள் முகம் கூடப்பாராத எம்பெருமான், என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தடவை அங்கே எட்டிப் பார்த்தான். இப்படி அவன் பார்த்த போது தான் நான் சொட்டைக் குலத்தில் சிலர் வந்திருக்க வேணும்” என்று அறிந்தேன் என்றாராம்.-இதனால் அப்பன் ஆழ்வார் பால் கொண்ட பக்தியின் பெருக்கால் ஆழ்வார் சொன்ன பாசுரத்திற்கு ஏற்ப, ஆய்ந்து சொல்லும் அநுபவம் அறியலாகும். இதுபற்றியே “ஆய்ந்துரைப்போன்” என்று அருளியது காணலாம். பேயாழ்வாரிடம் பக்தி கொண்டவராய் அவர் அருளிய மூன்றாம் திருவந்தாதிக்கு ஆழ்வார் திருவடிகளைப் போற்றி “சீரான் கழலே உரைக் கண்டாய் நெஞ்சே உரை” என்று நெஞ்சைப் பார்த்து அருளுவது காணலாம்.
செக தலத்தில் குருகூரில் செனித்த வள்ளல்) செக தலம் – உலகம். பாண்டியநாட்டில் தாமிரபரணி என்ற பொருநை யாற்றங்கரையில் அமைந்த திருக் குருகூர் நம்மாழ்வாரால் பாடப்பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்று. அந்த நாட்டைத் தலைநகராகக் கொண்டு குருகன் என்னும் அரசன் நீதி தவறாமல் ஆண்டு வந்ததால் திருக்குருகூர் என்று அழைக்கப் பட்டது. வள்ளலான நம்மாழ்வார் அவதரித்த அந்த குருகூருக்கு உட்பட்ட தேசமான அப்பன் கோவிலில் இந்த ஆசார்யார் அவதரித்ததனால் இவரும் வள்ளல் என்று கொண்டாடப்படுவர்.
செய்ய குருகைக் காவலப்பன் திருவடிகள்)– குருகை – பிரம்மன் தவம் செய்து எம்பெருமானை வேண்ட தாமிரபரணி தென் கரையிலுள்ள ஆதி க்ஷேத்திரத்தைக் காட்டிக் கொடுத்து “குரு ச அத்ர மதர்சனம்” என்கிறபடியே “ஆதிநாதனான எனக்கு இங்கு அர்ச்சனை செய்” என்று நாராயணன் அருளியதால் பிரமனும் பெருமானை நோக்கி-குருக அத்ர மதர்சனம்” என்கிறபடியே தங்களுக்கு தரிசனம் கொடுத்த அந்த ஆதி க்ஷேத்ரத்துக்கு குருகபுரி என்று மற்றொரு பெயர் வைக்க விரும்பினான். எம்பெருமானும் இசைந்ததால் அது குருகை ஆயிற்று. இதில் அவதரித்தவர் குருகைக் காவலப்பன் ஆவார். இத்தகைய பெருமைப் பெற்ற குருகைக் காவலப்பன் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவோமாக-
—
அன்புடனே நாதமுனி அடி பணிந்தோன் வாழியே
ஆனி தனில் திருவோணத்தில் அவதரித்தான் வாழியே
இன்பமுடன் கண்ண மங்கை வந்து உதித்தான் வாழியே
எழிலுடனே நாதனாக ஆட்சி செய்தான் வாழியே
துன்பமென தன் முயற்சி நீத்த செல்வன் வாழியே
தூமணி வண்ணன் தாள் கதி என்றான் வாழியே
அன்பால் உலகாரியனார் போற்ற நின்றான் வாழியே
அழகாரும் திருக்கண்ணமங்கை யாண்டான் வாழியே –
திருக்கண்ணமங்கையாண்டான் என்னும் ஆசார்யர் பத்தாம் நூற்றாண்டில் ஆனி மாதம் திருவோணம் நக்ஷத்ரத்தில் தமிழ் நாட்டில் கொடை வாசல் அருகிலுள்ள திருக் கண்ண மங்கை என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தவர். ஸ்ரீ க்ருஷ்ண லக்ஷ்மி நாதாசார்யர் என்ற இயற்பெயர் கொண்ட இவ்வாசாரியர், ஸ்ரீமந்நாதமுனிகளின் தேக ஸம்பந்தம் பெற்றவராய், அவருடைய எட்டு சீடர்களில் ஒருவருமாவார் –
அன்புடனே-அன்போடு,
நாதமுனி-ஸ்ரீமந்நாத முனிகளின்,
அடி பணிந்தோன்-திருவடிகளைப் பற்றினவர்,
வாழியே-வாழ வேண்டும்.
ஆனி தனில்-ஆனிமாதத்தில்,
திருவோணத்தில்-திருவோண நக்ஷத்திரத்தில்,
அவதரித்தவர்-தோன்றியவர்.
இன்பமுடன் மகிழ்ச்சியுடன்,
திருக்கண்ண மங்கை -திருக் கண்ணமங்கை என்னும் திவ்ய தேசத்தில், வந்து உதித்தான்-வந்து தோன்றியவர். எழிலுடனே-அழகுடனே,
நாதனாக-தலைவராக
ஆட்சி செய்தான்-கைங்கர்யம் செய்தவர்.
துன்பமென- இந்தப்பிறவித் துன்பம் என்று,
தன்முயற்சி-தான் முயல்வதை,
நீத்த-விட்ட,
செல்வன்-சிறப்புடையவர்.
தூமணி வண்ணன் தூய மணி போன்ற பெருமாள்,
தாள்-திருவடி,
கதி-புகல்,
என்றான்-என்று இருந்தவர்.
அன்பால்-அன்புடனே,
உலகாரியனார்-பிள்ளை லோகாசார்யரால்,
போற்ற நின்றான்-புகழும்படி இருந்தவர். அழகாரும்-அழகு நிறைந்த திருக் கண்ண மங்கையாண்டான்,
வாழியே- பல்லாண்டு வாழ வேண்டும்-
(அன்புடனே நாதமுனி அடி பணிந்தோம்) ஸ்ரீ மந்நாதமுனிகளின் சீடர்களில் ஒருவர் திருக்கண்ண மங்கையாண்டான் ஆவர். சீடருக்கு உரிய குண நிறைவை உடையவர். தம் ஆசார்யரிடம் அன்பு கொண்டதால், அவ்வாசிரியரும் இவருக்கு துவய மந்திர உபதேசம் செய்தார். மேலும் திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை கற்பித்தார். திருவாய்மொழியில் ஐந்தாம் பத்தில் “பொலிக பொலிக” என்ற பதிகத்தை உபதேசிக்கும் போது ஸ்ரீமந்நாதமுனிகள் ஆழ்வார் தமக்குக் கனவில் அருளிய திவ்ய ஸுக்திகளையும் தாம் உடனே கனவில் நேராகக் கண்ட தேவரீரோடே கண்ட கனவு பற்றியும் அருளினார். திருக்கண்ணமங்கை யாண்டானும் வ்யக்தியை ஸம்பந்தம் உள்ள அடியேனுக்கு ஒரு குறைகளும் இல்லை” என்று பெருமிதமடைந்தார். ஸ்ரீமந்நாத முனிகள் சம்பந்தத்தால் வேதாந்தங்கள் அனைத்தும் கற்ற திருமழிசையாழ்வாரைப் போல குற்றமற்றவர். வேதார்த்தங்களை நிர்ணயிப்பதிலும் பேச்சு வன்மையிலும் பிரஹஸ்பதியைப் போன்றவர். பிரகலாதனைப் போல பக்தி மிகுந்தவர். நாதமுனிகள் போல எம்பெருமானுடைய திருநாமங்களை ஸங்கர்த்தனம் செய்பவர். உபய வேதாந்த ஸாரத்தை அறிந்தவர். இதுபற்றியே “அன்புடனே நாதமுனி அடி பணிந்தவன்” என்றது காண்க –
(ஆனி தனில் திருவோணத்தில் அவதரித் தான்) ஆனி-வடமொழியில் ஜ்யேஷ்ட மாதம் எனப்படும். திருவோணம்-விஷ்ணு நக்ஷத்திரம். இத் திருவோணம்தான் நக்ஷத்ர பெருமையில் மீன், ஆமை, வராகம் ஆகிய அவதாரங்களைச் செய்த விஷ்ணுவானவர் ஐப்பசி மாதம் அவதரித்ததாக பாஞ்சராத்ர ஆகமம் கூறும். இப்படிபட்ட பெருமை கொண்ட திருவோணத்தில் ஆனி மாதம் கிருஷ்ண பக்ஷத்தில் அவதரித்தவர் திருக்கண்ண மங்கை யாண்டான் ஆவார். இவர் பராத்ரர் என்ற நித்ய ஸுரியின் அம்சமாவார்.
இன்பமுடன் கண்ண மங்கை வந்துதித்தான்) ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதியில் ஒன்றானது திருக்கண்ணமங்கை என்னும் திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வாரால் இன்பம் பயக்க 14 பாசுரங் களால் பாடப்பெற்ற திருத்தலமாகும். கண்ண மங்கைக்கு “கழுநீர் மலரும் வயல்” (பெரி.திரு.7-10-6) என்றும், “களிவண்டறையும் பொழில்” (பெரி.திரு.710-7) என்றும், “கருநெல் சூழ்” (பெரி.திரு.10-1-1) என்றும், “கன்னமதில் சூழ்” (பெரி.மடல் 116) என்றும் திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றது.மேலும், அங்கு நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை, “பெரும்புறக்கடலை”, “அடலேற் றினை” , “இன்சுவைக் கரும்பினை” என்று பலபடியாக பெரியதிருமொழி ஏழாம் பத்து, பத்தாம் பதிகத்தில் 97 திருநாமங்களைக் கொண்டு ஆழ்வார் அழைக்கும் அழகு, இன்பம் பயப்பதாகுவது பற்றி “இன்பமுடன் கண்ணமங்கை” என்றபடி. இத்தகைய திருத்தலத்தில் உதித்தவர் ஆண்டான் ஆவார். உதித்தலாவது சூரியன் உதிக்கும் போது ஒளி அமைந்தது போல ஆண்டானும் அந்தணர் தலைவராக அவதரித்து தந்தையால் உபநயனம் செய்விக்கப் பெற்று ஒரு விஜாய மாத்ரத்தினால் ஆசார்யருடைய திருமுகத்தில் இருந்து எல்லா வேதங்களையும் அத்யயனம் செய்தவராவார். இதுவன்றோ உதித்ததின் பெருமை-
எழிலுடன் நாதனாக ஆட்சி செய்தான் எழில்- அழகு, நாதன் – தலைவன் என்று சொல்லுகிறபடியே நம் வைணவ தர்சனத்துக்குத் தலைவராவார். ஸ்ரீ பாகவத புராணம் பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில், பன்னிரண்டாம் அத்தியாயத்தில், பதினாறு நாதர்களுடைய விஷயம் சொல்லப் பட்டுள்ளது காணலாம். தலைமையாம் தன்மைக் கேற்ப தம் ஆசார்யரான ஸ்ரீமந்நாதமுனிகளைப் போல ஞானம், பக்தி,வைராக்கியம் முதலான நற் குணங்களுக்கு ஓர் கொள்கலமானவர் –ஐந்தாவது உபாயமான ஆசார்யனே உபாயம் என்ற ஊற்றத்தை உடையவர். தமிழ் வேதம் வட மொழி வேதம் ஆகியவற்றின் ஸாரத்தை அறிந்தவர். ஆட்சியாவது எம்பெருமானுக்குக் கைங்கர்யம். கைங்கர்யமாவது ஸ்ரீமந்நாதமுனிகள் நியமனத்தினால் திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தை அடைந்து ஊக்கத்துடன் ஸ்ரீ கிருஷ்ண துளசி மாலைகளை ஸமர்ப்பிக்கும் கைங்கர்யத்தில் ஈடுபடுத்திக் கொண்டதாகும். மேலும் ஆழ்வார்களைப் போல பகவத் கைங்கர்யமாகிற சுவையை பருகுபவராய் இருந்தார்-கண்ணமங்கையில் துளசி தோட்டத்தை உண்டாக்க, தினமும் துளசி இதழ்களைத் தொடுத்து, மாலையாக்கி, பக்தியுடன் கண்ணமங்கை பக்தவத்ஸலப் பெருமாள் உகப்புக்கு ஏற்ப ஸமர்ப்பித்து வந்தவர். ஆண்டாளிடமும், அவள் அருளிய நாச்சியார் திருமொழியிலும் மிக்க பக்தி உடையவராகையாலே வாசிக கைங்கர்யமாக “அல்லி நாள்…” என்ற ஒரு தனியன் மூலம் அப்போது அலர்ந்த தாமரைப் பூவில் பொருந்தி இருக்கும் தெய்வப் பெண்ணான பெரிய பிராட்டியாருக்கு இனிமையான துணைவி என்றும், மல்லிநாட்டை தன் குணத்தாலே ஈடுபடுத்தி ஆண்ட அழகிய மயில் போன்றவள் என்றும், மென்மைத் தன்மையுடையவளான ஆண்டாள் கண்ணன் திருமேனியில் பொருத்த முடையள் என்றும், அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் வேயர் குலத்தில் பெரியாழ்வாராலே பெறப்பட்ட விளக்கு என்றும் அருளியது காணலாம். இதனால் காயிக வாசிக கைங்கர்யமாகிற ஆட்சி நடத்தினபடி-
துன்பமென தன் முயற்சி நீத்த செல்வன் –-கைம்மாறு கருதாது பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வரும் ஆண்டாள் ஒருநாள் இரண்டு சேவகர்கள் கையில் கத்தியை ஏந்தியவர்களாய், செருப்பு அணிந்துக் கொண்டு நாயை ஒவ்வொருவரும் அழைத்துக் கொண்டு வந்தனர். பெருமாள் பெருமையைக் கேட்டு அவர்கள் இருவரும் பெருமாளை சேவிக்க கோயிலுக்குள் சென்றனர். தங்கள் செருப்புக்களை கோயில் வாசலில் விட்டு, அவற்றை பாதுகாக்க தங்கள் நாயை காவலாக வைத்துச் சென்றனர். அதற்குள் ஒரு நாய் மற்றொரு சேவகன் செருப்பை கவ்வவே நாய்கள் சண்டையிட்டன.-ஒரு சேவகனுடைய நாயை ஒரு சேவகன் அடிக்க, அவன் அதை பொறுக்காது அடித்தவனோடு எதிர்த்த பொழுது அவனையும் கொன்று தானும் குத்திக் கொண்டு இறப்பதைக் கண்டார் ஆண்டான்.-உடனே ஒரு தாழ்ந்த சேதனன் தன் அபிமானத்திலே நாய் ஒதுங்கினது என்னும் இவ்வளவுக்காகத் தன்னை அழிய மாறினபடியைக் கண்டால், பரம சேதனான பெருமாள் அபிமானத் திலே ஒதுங்கினால் அவன்என்படுமோ? என்று தன் முயற்சிகளை முழுவதும் விட்டு, அந்த நாயைப் போல தம்மை நினைத்துக் கொண்டு திருக்கண்ண மங்கையில் அப்போதே வாசல்படியின் மேல் கட்டையிலிருந்து குதித்து பத்தராவிப் பெருமாள் கோபுர வாசலுள் உள்ளிருக்கிற ஒட்டுத்திண்ணையில் இருந்து வாழ் நாளைக் கழித்தார்.-பகவத் பக்தராய் தனது பொறுப்பு முழுவதையும் ஸ்ரீய:பதியான பக்தவத்ஸல பெருமாளிடம் ஒப்படைத்தார். தனக்காக தான் முயல்வதை விட்டு எல்லா நித்ய நைமித்திக கர்மாநுட்டானங்களையும் விட்டு நாயைப் போல இரண்டு கைகளையும் கால்களாக்கிக் கொண்டு நான்கு கால்களாலே திரியலானார். பெருமாள் கோயிலில் ஒரு மகிழ மரத்தடியில் மெளனமாக இருப்பவராய், பெருமாள் பிரசாதத்தை உண்டு வாழ்ந்தார். இது கொண்டு திருக்கண்ண மங்கையில் “தன் முயற்சி நீத்த செல்வன்” என்று சொல்லப்பட்டது. இதுபற்றியே ஸ்ரீ வசனபூஷணத்தில் (82) பிள்ளை லோகாசார்யார்–திருக்கண்ணமங்கை ஆண்டான் ஸ்வ வ்யாபாரத்தை விட்டான் என்று அருளினார். ஸ்வவ்யாபாரமாவது – தன் முயற்சி யால் தன்னைக் காத்துக் கொள்ளுதல். இதனால் ஆண்டானுடைய அரிய விச்வாஸம் சொல்லப் பட்டது. பெரியவாச்சான் பிள்ளையும் தாம் அருளிய மாணிக்க மாலையில் “…… திருக்கண்ண மங்கை யாண்டானைப் போல பரபரப்பற்று வகுத்தவன் எம்பெருமான் வாசலிலே தன்னைப் பேணாது ஒதுங்கும்” என்று உரைப்பார்-மேலும் தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலையில் முப்பத்து எட்டாவது பாசுரத்தில் “உன் கடைத்தலை இருந்து” என்ற தொடருக்குச் சேர திருக்கண்ண மங்கையாண்டான் எம்பெருமான் திருவாசலைப் பற்றிக் இடந்ததை எடுத்து உரைப்பர். இந்த விச்வாஸத்தினால் தூமணி வண்ணனான பத்தராவிப் பெருமாளையே கதியாகப் பற்றினார் என்க –
(அன்பால் உலகாரியனார் போற்ற நின்றான்) உலகாரியான் – வடக்குத் திருவீதிப் பிள்ளையின் குமாரருக்கு நம்பிள்ளை இட்டபெயர் பிள்ளை லோகாசார்யார் என்பதாகும். இவர் அருளிய ஸ்ரீ வசன பூஷணம் என்னும் நூலில் மூன்றாம் பிரகணத்தில் (80) ஆண்டானிடம் அன்பு கொண்டு “உபாயத் துக்கு…. திருக்கண்ணமங்கை ஆண்டானைப் போல இருக்க வேணும்” என்று ஸூத்திரமிடுகிறார். இதற்கு மாமுனிகளும் அற்புதமான வியாக்கியானம் வழங்கியுள்ளார். இதனால் இவருக்கு ஆண்டான் பால் கொண்ட அன்பின் வெளிப்பாடாக போற்றுவது காணலாம்-
(அழகாரும் திருக்கண்ணமங்கை யாண்டான்)அழகு- அவயவ அழகு, பராத்பரர் என்ற நித்யஸுரி அம்சமாகப் பிறந்தவராதலால் அழகு மிக்கிருந்தவர். இதனால் கல்வி, ஒழுக்கம், நிரம்பப் பெற்றவரானார். அதாவது தந்தையால் உபநயனம் செய்வித்த பிறகு பிரம்மசரிய விரதத்தில் ஊன்றியவர்; ஆசாரியனிடத்தில் வேதங்களையும் எல்லா அத்யயனம் செய்தவர். விடியற்காலையில் நீராடி சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களை செய்தவர். வைதக ஆசாரங்களோடு கூடியவர். பஞ்ச மஹா வேள்வி களைச் செய்பவர். வேத வேதாந்தங்களை அர்த்தத்துடன் கற்றவர். நல்லோர்களின் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவர். ஸ்ரீமந்நாதமுனிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யப் பெற்றவர். ஸ்ரீ வைஷ்ணவர்களில் சிறந்தவர். அறிவாளி. பெரும் புகழாளராய் விளங்கினார். இத்தகைய பெருமைப் பெற்ற திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கு பல்லாண்டு பாடுவோமாக–
–
தேசம் உய்யக்கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே
நீணிலத்தில் பதின்மர்கலை நிறுத்தினான் வாழியே
மாசி மகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே-மணக்கால் நம்பி என்னும் ஆசார்யர் சோழ தேசத்தில் திருக்காவேரி தீரத்தில் கோயில் பிரதேசம் மணக்கால் என்னும் கிராமத்தில் விரோதிக்ருத் வருடம் மாசி மாதம் மக நக்ஷத்ரத்தில் அவதரித்தார். இவர் குமுதாக்ஷர் அம்ஸராய், ராமமிச்ரர் என்ற இயற்பெயரைக் கொண்டவர். ஆளவந்தார், திருவரங்கப்பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சிறுபுள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ்சோலை, வங்கிபுரத்து ஆச்சி ஆகியோர் சீடர்கள் ஆவர்-
தேசம் – ஒளியுடைய,
உய்யக் கொண்டவர் தாள் – உய்யக் கொண்டார் என்னும் ஆசார்யர் திருவடியில்,
சென்னி வைப்போன் – தலையை வைத்து வணங்கும்
மணக்கால் நம்பி, வாழியே-வாழ வேண்டும்.
தென்னரங்கர் – தெற்குத் திக்கிலுள்ள திருவரங்கர்,
சீர்-சீரியதான,
அருளை – அருளை,
சேர்ந்திருப் போன் – பெற்றவர்.
தாசரதி – தசரதன் மகனான இராமன்,
திருநாமம் – பெயரை யுடைய ராம மிஸ்ரர் –
தழைக்க வந்தோன் – சிறப்பாக வாழ்ந்தவர்.
தமிழ் நாதமுனி – தமிழ் பிரபந்தத்தை வளர்த்த,
நாதமுனி ஸ்ரீமந்நாதமுனிகள் என்னும் ஆசார்யர்,
உகப்பை மகிழ்ச்சியை,
தாபித்தான் – நிலை நிறுத்தியவர்.
நேசமுடன் – அன்புடன்,
ஆரியனை – ஆசார்யரான ஆளவந்தாரை,
நியமித்தான் – தன் சொல்படி கேட்கச் செய்தவர்.
நீணிலத்தில் – பெருமை பொருந்திய உலகில்,
பதின்மர் – பத்து ஆழ்வார்களின்,
கலை அருளிச் செயலை,
நிறுத்தினான் – நிலை பெறச் செய்தவர்.
மாசி மகந்தனில் – மாசி மாதம் மகம் நக்ஷத்ரத்தில்,
விளங்க – பிரகாசிக்க,
வந்துதித்தான் வந்து அவதரித்தவர்.
மால் – பெருமை பொருந்திய
மணக்கால் நம்பி, பதம் – திருவடிகள்,
வையகத்தில் உலகில்,
வாழியே – வாழ வேண்டும் –
(தேசம் உய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன்) “தேசு” என்ற வடசொல், தேசம் என்றாயிற்று. “தேசம் உடையாய்” (திருப்பாவை 7) என்று ஆண்டாள் திருப்பாவையில் அருளியது காண்க. தேசு – ஒளி, ஞானம், பெருமை என்று பல பொருள். ஸ்ரீமந்நாதமுனிகள் அருளைப் பெற்றதனால் உய்யக் கொண்டார் தேசுடையவரானார்.-மேலும், ஸ்ரீமந்நாத முனிகளிடம் தமிழ் ஞானமாகிற திவ்ய ப்ரபந்தத்தைப் பெற்றதனால் தேசமுடையவரானார். அவற்றை மணக்கால் நம்பி உள்ளிட்ட தம் சீடர்களுக்கு அருளியதால் பெருமை படைத்து தேசமுடையவரானார்.அத்தகைய பெருமை படைத்த உய்யக் கொண்டார் திருவடிகளைத் தம் தலையில் சேர்த்துக் கொண்டவர் மணக்கால் நம்பி -எங்ஙனே என்னில் – பன்னிரண்டு வருடம் தம் ஆசார்யரான உய்யக் கொண்டார் திருவடிகளிலே இளைய பெருமாளைப் போலே எல்லாவித கைங்கர்யங்களையும் செய்தவர். ஆசார்யருடைய தேவிகள் பரமபதித்த பிறகு, திருமாளிகை கைங்கர்யமெல்லாம் தமக்கே பொறுப்பாய் நடத்தி வந்தவர் நம்பி. ஒரு சமயம் தம் ஆசார்யர் புத்ரிகளை நீராட்டி அழைத்துக் கொண்டு வருகிற வழியிலே வாய்க்கால் சேறா யிருக்கக் கண்டு, தாம் குறுக்கே பாலமாகப் படுத்துக் கொண்டு படியாய்க் கிடந்து அவர்களைத் தம் முதுகிலே அடி இட்டு அழைத்துக் கொண்டு போனார் -உய்யக்கொண்டார் இந்த விஷயம் அறிந்து “இவர் இப்படிச் செய்யாதே” என்று மிகவும் அன்புடை யவராய், நம்பி சென்னியைத் தம் திருவடித் தாமரை களாலே அலங்கரித்தார். ப்ரமேய ரத்னம் என்னும் நூலில் மூன்றாவது பிரகரணத்தில் “ஆசார்ய கைங் கர்யத்துக்குப் படிமா வடுகநம்பியோடு மணக்கால் நம்பி” என்றது காண்க. இதுபற்றியே “(ஆசார்யர்) தாள் சென்னி வைப்போன்” என்று அருளியபடி –
(தென்னரங்கர் சீர் அருளைச் சேர்ந்திருப்போன்)-ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரரான ஆளவந்தார் ராஜ போகத்தில் சுகமாக இருந்த போது மணக்கால் நம்பி அவருக்கு விருப்பமான தூதுளை கீரையை தினமும் திருமடப் பள்ளிக்குக் கொடுத்து வந்தார். ஆளவந்தாரும் அதனை அமுது செய்து வந்தார். அவர் இதனை விசாரியாமல் இருக்கவே, நம்பி நான்கு நாளைக்குத் தூதுளைக் கொடுப்பதை தவிர்த்தார். ஆளவந்தாரும் தூதுளை இன்றியே இருக்கவே, அதனைக் கொடுப்பவரைத் தாம் காண நினைத்து, மறுநாள் வந்த போது அவரை ஆளவந்தாரிடம் அழைத்துச் சென்றனர்.“தூதுளை கொடுப்பதின் நோக்கம் என்ன?” என்று கேட்க, நம்பியும் “அவரைக் காண இது தான் வழி” என்று சொன்னார். மேலும், அவருடைய பாட்டனாரான ஸ்ரீமந்நாதமுனிகள் தேடி வைத்த பொருளும், அந்நிதி கிடக்கிற இடமும் அதனை ஸமர்ப்பிக்கவும் தான் வந்ததாகக் கூறுவர். ஆளவந்தாரும் மிக்க ஆர்வத்துடன் அப்பொருளைச் சொல்லும்படி கேட்க, நம்பிகளும் அன்று முதல் கதையின் செம்மைப் பொருள் தெரியும்படி பதினெட்டு அத்தியாயத்தையும் அருளிச் செய்தார்.-நெல்லுக்குப் பால் கட்டக் கட்டத் தலை வணங்குமா போலே, ஆளவந்தாருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஸம்ஸாரத்தில் ருசி யில்லாமை பிறந்தது. நம்பிகளும் ஆளவந்தாரைக் கூட்டிக் கொண்டு திருவரங்கம் சென்று அழியாத மகா நிதியான பெரிய பெருமாளுடைய முடிவில்லாத எழிலைக் காணச் செய்தார். ஸ்ரீமந்நாதமுனிகள் காட்டிக் கொடுத்த அர்த்தங்கள் எல்லாம் திருவரங்கனின் சீர் அருளால் ஆளவந்தாருக்கு மணக்கால் நம்பி அருளாலே சேர்ந்தது. இதனால் “சீர் அருளைச் சேர்ந்து இருப்போன்” என்றபடி.–
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் –அயோத்தி மன்னனான தசரத சக்கரவர்த்தி திருமகன் இராமன் தாசரதி என்று அழைக்கப்பட்டார். நம்பிகளுக்கு அமைந்த தனியனில், “பரசு ராமனைப் போல பொறுமையை (பூமியை) விடாதவராய், இராமனைப் போல புண்ய ஜனங்களை (ராக்ஷஸர் களை) பாதிக்காதவராய், பலராமனைப் போல மது பான மதம் இல்லாதவரான நாலாவது இராமனான மணக்கால் நம்பியை உபாஸிக்கிறோம்” என்று அருளியதற்கு ஏற்ப, தாசரதி திருநாமம் தழைத்தபடி.-வேதாந்த தேசிகரும் யதிராஜ ஸப்ததியில் (7) “அநுஜ்ஜித க்ஷமா” என்ற சுலோகத்தின் மூலம் மணக்கால் நம்பியை மறக்காமல் இருப்போம் என் றது காண்க. மேலும் “பகவத் பக்தியாகிற பாற்கடலில் குடைந்தாடப் பெற்றவராய், அதனால் தாப த்ரயம் என்று சொல்லப்படும் ஆத்மாவைப் பற்றி வருவது ஜுரம், தலைவலி, மனக்கஷ்டம் முதலானவை. காற்று, மழை, இடி, மின்னல் முதலானவற்றால் வரும் துன்பம், பசு, பறவை முதலானவற்றால் வரும் துன்பம் என்னும் மூன்று தாபங்களும் நீங்கப் பெற்றவரான ஸ்ரீராமன் என்னும் மணக்கால் நம்பியைப் பற்றுகிறேன்” என்ற தனியன் மூலமும் தாசரதி என்ற திருநாமம் தழைத்தபடியாகும் –
தமிழ் நாதமுனி உகப்பைத் (ஸ்)தாபித்தான்) தமிழ் நாதமுனி – சேதநரோடு செறிந்து ஆராயப் படுமதான த்ராவிடமான தமிழையே அடையாளமாக உடையவர் நம்மாழ்வார் என்று பிள்ளை லோகம் சீயர் திருவாய்மொழி நூற்றந்தாதியில் 26 “பன்னுதமிழ் மாறன்” என்பதற்குச் சேர உரைப்பர். அந்த தமிழ் மாறன் அருளால் ஸ்ரீமந்நாதமுனிகள் நாலாயிர திவ்விய ப்ரபந்தத்தைப் பெற்றார். அதனால் தமிழ் நாதமுனியானார் என்றபடி. அவர் அருளால் ஆசார்யரான உய்யக் கொண்டார் பரமபதித்த பின்பு, அவர் சொல்லியபடியே சொட்டைக் குலத்தினவரான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு திருப்பேரனார் அவதரித்து, அவருக்கு யமுனைத் துறைவர் என்று திருநாமமிட்டு நம் தர்சனம் வளரச் செய்யும்படி எல்லா தர்சன ரகசியங்களையும் உபதேசித்தருளினார். அதுவரை மணக்கால்நம்பி தர்சனத்தை நிர்வகித்து வந்தார். ஆர்வத்தோடு ஸ்ரீமந்நாத முனிகள் நியமனத்தை தம் ஆசார்யரான உய்யக் கொண்டார் சொல்லியபடி, ஆளவந்தாரை நம் தர்சன ஆசார்யனாக ஆக்கி ீஸ்ரீமந்நாதமுனிகள் உகப்பை நிலை நிறுத்தியதால் (ஸ்தாபித்ததால்) ஆசார்ய ஞான பரிபாலனம் மிகவும் செய்யத்தக்கது என்றபடி.
(நேசமுடன் ஆரியனை நியமித்தான்) நேசம் அன்பு. ஆரியன் – ஆர்ய: என்ற வடசொல் தமிழில் ஆர்யன் ஆயிற்று. பல பொருள்களில் ஒன்றான வித்வான் என்று பொருள். திருவாய்மொழியை ஓதுவித்தல், அதனுடைய அர்த்தத்தை அருளிச் செய்தல் ஆகிய இரண்டையும் வளர்த்தவர் நம்பி.
ஆதலால் இவரை ஆசார்ய பதம் ஏறிப் போந்தவர் என்று ப்ரமேய ரத்னம் இரண்டாம் பிரகரணத்தில் கூறியது காண்க. அத்தகைய ஆசார்ய பதத்தை மணக்கால் நம்பி தம் இறுதிக் காலத்தில் ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரனாரான ஆளவந்தாரைப் பார்த்து “ஸ்ரீமந்நாதமுனிகளோடு ஞானம் மற்றும் வம்ச ஸம்பந்தமுடையவரான “நீர் அவர் திருவடிகளே தஞ்சமாக எண்ணி இரும்” என்றும் கூறியதற்கு ஏற்ப “இரந்து சொல்லுகைக்கு மணக்கால் நம்பியோடு ஒப்பர்” என்று பகவத் விஷயத்தில் 9-3-5 யில் அருளியது காண்க. திருவாய் மொழி அதன் பொருள் ஆகியவற்றை உபதேசித்து நம் தரிசனத்துக்கு ஆசார்ய பதமான ஆரியனாக நியமித்தார் என்பர்-
(நீணிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் நீள் * நிலம் – நீளுதல் – பெருமையாதல். பெருமை பொருந்திய இடம் – ஸ்ரீ ரங்கம். ஸ்ரீ ரங்கத்தில் பதின்மர் கலையான திவ்ய ப்ரபந்தத்தை தன் சீடர்களான ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத் திருவிண்ணகரப்பன், சிறுப்புள்ளுடைப் பிள்ளை, வங்கிபுரத்து ஆச்சி ஆகியோர்க்கு பதின்மர் கலை யில் அமைந்த தர்சன தாத்பர்ய விசேஷங்களைக் கற்பித்ததனால் “பதின்மர்கலை நிறுத்தினான்” என்றபடி.
வேதாந்த தேசிகர் அருளிய குருபரம்பரா ஸாரத்தில் மணக்கால் நம்பி சீடர்கள் ஐவர் என்றது காண்க. அதுமட்டுமன்றி, “திருவாய்மொழி துவய மந்த்ரத்தின் விரிவாக்கமாதலால், ஸம்ஸாரமாகிற விஷம் தீண்டப் பெற்றவனுக்கு துவயம் விஷம் தீர்க்கும் மருந்தாய் இருக்கும்” என்பர் நம்பி. மேலும் பத்து ஆழ்வார்கள் அருளிச் செயலில் ஆழ்ந்த ஞானம் கொண்டு திருவாய்மொழி ஈடு என்னும் வியாக்யானத்தில் நம்பிள்ளை என்னும் ஆசார்யர் நம்பியின் ஐதிகங்களையும் நிர்வாகத்தையும் காட்டி உரைப்பர். நம்பியின் நிர்வாகத் திறனை திருமாலை 37ஆம் பாட்டு, திருவாய்மொழி 2-6-2, 6-5-5, 6-6-1, 6-8-1, 9-3-5 ஆகிய இடங்களில் காணலாம். இதனால் நம்பிகள் பதின்மர் கலையைப் பரப்பினபடி.–
மாசி மகந்தணில் விளங்க வந்துதித்தான் ) தமிழ் மாதங்களில் பதினோறாவது மாதம் மாசி மாதமாகும். இம் மாதமானது பிரிதொன்றுக்கில்லாத சிறப்புடையதாய் கொள்ளத் தக்கதானது என்பர். மாசி மகம் சேர்ந்த பெளர்ணமி முழுமை பெற்ற தாகும். வருடத்தில் இந்த மாசி மக பெளர்ணமி சிறப்புடையதாகும். பெருமாள் கோயில்களில், மாசி மகம் என்பது மாசி மாத பெளர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாளில் பெருமாளை கருட வாகனத்தில் கடற்கரைக்கு எழுந்தருளப் பண்ணி தீர்த்தவாரி கண்டருளுவது காணலாம். மாசி மகத்தைக் “கடலாடும் நாள்” என்றும், “தீர்த்தமாடும் நாள்” என்றும் அழைப்பர். ஆண்டாளும் தைமாதம் முழுவதும் காமன் வரும் இடத்தை அலங்கரிப்பதைச் சொல்லும்போது “தையொரு திங்களும் தரை மண்டலமிட்டு மாசி முன்னாள் ஐய நுண் மணல் கண்டு தெருவணிந்து அழகினக்கு அலங்கரித்து அணங்க தேவா” (நாச்.திரு.1-1) என்கிறாள். “மாசி முன்னாள்” என்றால் மாசியில் பூர்வ சுக்ல பக்ஷமாகிற முதல் பதினைந்து நாள். அத்தகைய சிறப்பு பெற்ற மாசி மாதத்தில் சுக்ல பக்ஷ சதுர்தசியோடு கூடிய மக நக்ஷத்ரத்தில், அந்த நக்ஷத்ரம் புகழ் பெற, புதன் கிழமையில் உதித்தவர் மணக்கால் நம்பி ஆவர்–
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே மால் – மையல், பெருமை, கருமை என்று பல பொருள். பெருமை என்பதற்குச் சேர நித்ய ஸுரிகளில் ஒருவரான குமுதாக்ஷரின் அம்சமாக அவதரித்தவர். இங்கு மணக்கால் நம்பியின் மையலானது தம் ஆசார்யரான உய்யக் கொண்டார் திருமாளிகையில் 12 ஆண்டு சேவை பண்ணிப் படியாய்க் கிடந்து மணக்கால் நம்பி என்னும் திருநாமம் பெற்றதாகும். மேலும் நம்பிக்குப் பெருமையாவது எம்பார் என்னும் ஆசார்யர் அருளியபடியே லக்ஷ்மி நாதனாகிற பெருங்கடலில், நம்மாழ்வாராகிய மேகம், கருணை என்னும் நீரைப் பருகி, ஸ்ரீமந்நாதமுனிகளாகிற மலையிலே பொழிந்தது.அந்நீர் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி ஆகிய இரு அருவிகள் மூலம் ஆளவந்தாராகிய பெரிய ஆற்றை அடைந்து மேலும் சென்றதை அருளுவர். அவ்வாறே பகவத் ராமாநுஜ அவயவ பிரபாவத்தில் இராமாநுசருக்கு “ராகவ கபோலெள” என்கிறபடியே ஸ்ரீராமமிச்ரர் என்னும் மணக்கால் நம்பிகள் இரண்டு கன்னங்களாகத் திகழ்கிறார் என்று கூறுவர். அப்படிப்பட்ட பெருமையுடைய மணக்கால் நம்பி பதமான திருவடிகள் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் –
—
மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஒருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே
கச்சிநகர் மாயன் இருகழல் பணிந்தோன் வாழியே
கடக உத்திராடத்துக் காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே–சேனை முதலியாருடைய கணங்களில் ஒருவரான ஸிம்ஹாந்நர் என்ற நித்ய ஸுரியின் அம்சமாக அவதரித்தவர் ஆளவந்தாராவர். இவர் திருவவதார ஸ்தலம் சோழ தேசத்தில் திருக்காவேரி தீரத்தில் வீரநாராயணபரம். திருநக்ஷத்ரம் கலியுகம் 3077க்கு மேல் தாது வருடம், ஆடி மாதம் பெளர்ணமி வெள்ளிக்கிழமை, உத்தராடம் விஷ்கம்பம் பவ கரணம். திருத்தகப்பனார் ஈஸ்வர முனிகள். திருப் பாட்டனார் ஸ்ரீமந்நாதமுனிகள். இவருக்கு ஸ்ரீமந்நாத முனிகள் இட்ட திருநாமம் யமுனைத் துறைவர். இவர் அருளிய நூல்கள் எட்டு – 1. ஆத்ம ஸித்தி, 2. ஸம்வித்ஸித்தி, 3.ஈச்வர ஸித்தி என்னும் ஸித்தி த்ரயம், 4. கதார்த்த ஸங்க்ரஹம், 5. ஆகம ப்ராமாண் யம், 6. மஹாபுருஷ நிர்ணயம், 7.ஸ்தோத்ர ரத்னம், 8. சதுஸ்லோகி .
வாழ் வித்தான் -சுகமாக இருக்கும்படி செய்தவர்,
வாழியே வாழ வேண்டும்;
மறைநான்கும்- ருக், யஜுர், ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதத்தை,
ஒருருவில் ஒரு தடவை சொன்னபோதே,
மகிழ்ந்து கற்றான் சந்தோஷத்துடன் கற்றவர்;
பச்சையிட்ட – தூதுவளை கீரை அளித்து உபகரித்த,
ராமர் பதம் – இராமன் என்னும் மணக்கால் நம்பி திருவடிகளை,
பகருமவன் – சொல்லுபவர்;
பாடியத்தோன் – ஸ்ரீ பாஷ்யத்தை அருளிய ராமாநுஜர்,
ஈடேற – உய்வு பெற,
பார்வை செய்தோன் – கடாக்ஷித்தவர்,
கச்சிநகர் – காஞ்சிமா நகரம்,
மாயன் – வியப்பான வரதராஜப் பெருமாள்,
இருகழல் – பெருமை பொருந்திய திருவடிகள்,
பணிந்தோன் சேவித்தவர்;
கடக உத்திராடத்து கால் -கடக மாதமான ஆடியில் உத்திராட நக்ஷத்ர முதல் பாதத்தில்,
உதித்தான் – தோன்றியவர்;
அச்சமற பயமின்றி,
மனமகிழ்ச்சி – (ராமாநுஜரைக் கொண்டு தர்சனம் வளரச் செய்தமையால்) மனம் மகிழ்ச்சி கொண்டு,
அணைந் திட்டான் – அடைந்தவராவர்;
ஆளவந்தார் – ஆளவந்தார்,
தாளிணைகள் – இரு திருவடிகள்,
அனவரதம் – எப்போதும்,
வாழியே வாழ வேண்டும்.
(மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான்)“மச்சணி மாட மதிளரங்கர்” (11-4 நா.தி) என்று ஆண்டாள் அருளியபடியே மச்சணி – மேல் தளங்களாலே அலங்கரிக்கப் பெற்ற மாட மாளிகைகளையும் விரோதிகள் நுழையாதபடி அரணாயிருக்கும் மதிள்களையும் உடையது திருவரங்கம் -திருப்பாணாழ்வார் “நீள் மதிள் அரங்கத்து” என்பதற்குச் சேர திருவரங்கத்தைக் காப்பதையே நோக்காகக் கொண்டு மதிள் விளங்குகிறது என்பர். மதிள் அரங்கம் என்பதனால் ஏழு மதிள்களால் சூழப்பட்ட தாகும். “மதிள் திருவரங்கம்” என்பதற்கு ராம அவதாரம் போலே இங்கும் சில ஆபத்து விளையுமோ என்று அஞ்சித் திருமங்கையழ்வார் போல்வார் காப்பாக இட்ட மதிளையுடையது திருவரங்கம் என்பர். “மதிள் திருவரங்கத்தானே” (திருமாலை 42) என்று தொண்டரடிப்பொடியாழ்வார் மதிளே அரணாகக் கொண்டிருக்கும் திருவரங்கன் என்றது காண்க.-திருமங்கையாழ்வாரும் “செம்பொனாரும் மதிள் சூழ்ந்த தென்னரங்கம்” என்று அருளியதற்கு ஏற்ப தேவர்களுக்குத் தலைவனான பிரமனும் அவனாலே படைக்கப்பட்ட உலகிலுள்ளாரும் திரண்டு பற்றும்படியாய், அழகியதாய், உள்ளே சாய்ந்திருக்கும் அரங்கனுக்கு அரணாகத் தகும்படி யான மதிள் என்பர் பெரியவாச்சான் பிள்ளை. மற்றும் கல்லின் மன்னு மதிள்” (பெரி.திரு.5.5.10) என்கிறார் ஆழ்வார். அதாவது கல்லாலே கட்டப்பட்ட திண்ணியதான ப்ராகாரம் என்றபடி. இப்படிப்பட்ட பெருமையுடைய அரங்கத்தை வாழ்வித்தவர் ஆளவந்தார். எங்ஙனேயென்னில் – யமுனைத் துறைவர் ராஜ புரோகிதனான வாதத்திலே ஆக்கியாழ்வான் வாயை அடக்குகையாலே ஆளவந்தார் என்ற திருநாமத்தை உடையவர் ஆனார். நம் தரிசனத்தை ஆளவந்தவராய் இருக்கை யாலே, மணக்கால்நம்பி இத்தைக் கேள்விப்பட்டு இவரைத் திருத்தி ஸ்ரீமந்நாதமுனிகள் கொடுத்த நிதியை இவருக்குக் காட்ட எண்ணி, இவர் பக்கல் பல தடவை தூதுவளை கீரையைக் கொடுத்து உபகரித்து இவரை திருவரங்கம் அழைத்துச் சென்று பச்சை மாமலைபோல் திருமேனியையுடைய அரங்கனிடம் உண்டு இதனால் ஆளவந்தார் பெருமாள் கடாக்ஷத்தாலே பரம விரக்தராய் ஐச்வர்யம் முதலானவற்றை விட்டுவிட்டு ஸந்யாஸ ஆச்ரம ஸ்வீகாரம் பண்ணி பெரிய பெருமாள் ஸாம்ராஜ்யத்துள் புகுந்து, ஸ்ரீ கார்யம் நிர்வஹித்து வந்தார். அந்தக் காலத்திலே “ஆகம ப்ராமாண்யம்” என்ற நூலை எழுதி பிற மதத்தவர்களைத் தோற்கடித்து திருவரங்கம் திருப்பதியிலே அவர்கள் இருப்பையும் போக்கினார். பின்னர், பல க்ரந்தங்கள் வாயிலாக தர்சன நிர்வாகம் செய்தருளினார் என்று கோயில் ஒழுகு கூறும். பராசர பட்டர் தாம் அருளிய ஸ்ரீரங்கராஜ ஸ்தவ பூர்வ சதகத்தில் (4) “விதாய வைதிகம் … யாமுநம் மநவாமஹை” என்ற ஸ்லோகம் மூலமாக ஆளவந்தார் அவதரிப்பதற்கு முன் வைதிக மார்க்க மானது தவறான வாதங்கள் என்னும் முள்செடிகள் நிறைந்திருந்தது. அந்த வழியிலுள்ள முள் செடி களை நீக்கி, பகவத் பக்தியை ஸ்ரீரங்கத்தில் நன்கு வளரச் செய்தவர் ஆளவந்தார் என்கிறார். இது பற்றியே “மதிளரங்கம் வாழ்வித்தான்” என்றபடி
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான்) உபநயனம் செய்விக்கப்பட்ட பிறகு, ஆளவந்தார் வேதமோதும் அந்தணரான ஆசார்யரிடம் வேதங் களை ஓதினார். இவர் செய்த வேதாத்யயனம் மிகவும் வியப்பை விளைவித்தது. ஆசார்யரிடம் ஓதியது அனைத்தும் ஒரு முறை கேட்டதனாலேயே கற்றுக் கொண்டார். வேதமோதும் ஆசார்யரும் இவரை அழைத்து “நீர் இன்று ஏன் வேத அத்யயனத்துக்கு வரவில்லை” என்று கேட்டார்.-ஆசார்யருடைய அந்த வார்த்தையைக் கேட்டு, “ஐயா தேவரீர் நேற்று வேதத்தின் எந்த வாக்கியங் களை ஓதச் சொன்னீரோ அந்த வாக்கியங்களையே முன்பு போலவே இன்றும் ஓதச் சொல்லுகிறீர் அரைத்த மாவையே அரைப்பது போல சொன்னதை சொல்லும் இதனால் பயனில்லை என்று நான் வரவில்லை என்றார். இதனைக் கேட்ட ஆசார்யர் மிகவும் வியப்புற்றவராய், அவரை அணைத்துக் கொண்டு கொண்டாடினார். சிம்ஹாநனர் என்னும் நித்யஸுரிகள் அம்சமான இவர் சிறுமாமனிசராய் பதம், ஜடை, வர்ண க்ரமம், கனம் ஆகியவற்றோடு கூடிய எல்லா வேதங்களையும் ஆறு வேதாங்கங் களையும் ஆர்வமுடன் கற்றார் என்று பிரபந்நாம் ருதம் கூறும். இதுபற்றியே “ஓருருவில் மறை அனைத்தும் மகிழ்ந்து கற்றான்” என்றபடி.–
(பச்சையிட்ட ராமர் பதம் பகரும வன்) பச்சை – பச்சை இலை, தூது வளை கீரை. பச்சை – உதவி. தூது வளை கீரையை இட்டு யாமுனாசார்யரான ஆளவந்தாரைத் திருத்தினவர் ராமர் என்ற பெயருடைய மணக்கால் நம்பி ஆவர். அதாவது ஆளவந்தார் ராஜ புரோகிதனான ஆக்கியாழ்வானோடு வாதப்போர் செய்து வெற்றி கொண்டதை அறிந்த மணக்கால் நம்பி ஆளவந்தாரைக் காண ஆசைப்பட்டார்.-அரண்மனையில் கட்டும் காவலு மாய் இருப்பதைக் கண்டு நம்பி திருமடப்பள்ளில் புகுந்தார். ஆளவந்தாருக்கு உணவு செய்பவர் களைக் கண்டு, “ஆளவந்தார் விரும்பி உண்ணும் கறியமுது எது?” என்று கேட்டார். அவர்களும் அவர் விரும்புவது “தூதுவளை” என்று சொன்னார்கள். உடனே நம்பியும் அன்று முதல் ஆறு மாத காலம் மடைப்பள்ளிக்குத் தூதுவளை (கீரை வகை) இட்டு வந்தார்.-மேலும், இவருக்கு புருஷார்த்தங்களும், பகவத் விஷயமும், நாலாயிரமும், நான்காவது ஆச்ரம ஸ்வீகாரம் முதலான அர்த்த விசேஷங்கள் எல்லாம் அருளினவர் ஸ்ரீராம மிச்ரர் என்னும் மணக்கால் நம்பியாவார். இது பற்றியே “பச்சை இட்ட ராமர் பதம்” என்று மணக்கால் நம்பியைக் கொண்டாடுகிறார் –
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன்) “பாஷ்யம்” என்ற சொல் தமிழில் பாடியம் என்று ஆயிற்று. பாஷ்யமாவது விரிவாய்ப் பொருள் விளக்கம் செய்யும் உரை நூலாகும். ப்ரஹ்ம ஸுத்ரத்துக்கு ஸ்ரீ பாஷ்யம் என்னும் உரை எழுதியவர் இராமாநுசராவர். அவரே பாஷ்யகாரர் ஆவர்.-அந்த பாஷ்யகாரர் உய்வு பெற ஆளவந்தார் அவரைப் பார்வை செய்தார். எங்ஙனேயென்னில்- காஞ்சியிலுள்ள இராமாநு சருடைய பெருமையை இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாயிலாகக் கேட்ட ஆளவந்தார், உடனே அவரைக் காண வேண்டும் என்று எண்ணி திருவரங்கத்தில் இருந்து காஞ்சி புரத்துக்கு வந்தார்.-அவர் சீடரான திருக்கச்சி நம்பி மூலமாக பேரருளாளன் பெருந்தேவித் தாயாரைத் திருவடி தொழுதார். பிரதக்ஷிணமாக வரும் போது பாடசாலை குருவான யாதவப்ரகாசன் என்பவர் தம் சீடர்களோடு பேரருளாளனைச் சேவித்து வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆளவந்தாரும் “இவர்களிலே இளையாழ்வாரான இராமாநுஜர் யார்?” என்று திருக்கச்சி நம்பிகளைக் கேட்க, நம்பியும், “சிவந்து நெடுகி வலியராய் நீண்ட வாயும், உருண்டிருப்பவையும், இரும்பு உலக்கை போல் விளங்குபவையும், எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கத் தக்கவையுமான ஸ்ரீராமனுடைய திருக்கைகள் போல் ஆஜாநுபாஹுவாய் நடுவே வருகிறவர்” தான் இராமாநுஜர் என்று சுட்டிக் காட்டினார். ஆளவந்தாரும் அவரைத் தமது மலர்ந்த மதுரமான கம்பீர கண்களாலே செவ்வரியோடப் பார்த்தார்.-தம்மிடமுள்ள பவிஷ்யதாசார்ய விக்ரஹத்துக்கும் இவருக்கும் அவயவங்கள் எல்லாம் ஒரு அச்சில் வார்த்தது போல இருக்கக் கண்டு “ஆம் முதல்வன் இவன்” என்று நம்மாழ்வார் அருளியதை நினைவில் கொண்டு விசேஷ பார்வை செய்தார். இதைக் குறித்தே இராமாநுஜரும் ஆளவந்தார் விஷயமாக தாம் அருளிய“யத் பதாம்போருஹ த்யான…” என்னும் தனியனில் உபகார ஸ்மிருதியாக தம்மை பார்வை செய்து வஸ்து வாக்கியமைக்கு வணங்குகிறார். இது பற்றியே “பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன்” என்றபடி.இதற்கு ஏற்ப இராமாநுஜரின் அவயவங்களின் அம்சமாக உள்ள ஆசார்யர்களைச் சொல்லும் போது ஒன்றான எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் “வக்ஷஸ்தலம் யாமுநார்ய:” என்று இராமாநுஜரின் திருமார்பாக ஆளவந்தாரைக் குறிப்பர். இதனால் இராமாநுஜர் மனத்தில் ஆளவந்தார் நீங்காத இடம் பெற்றுள்ளார் என்று சொன்னபடி.
(கச்சிநகர் மாயன் இருகழல் பணிந்தோன்) கச்சி-முக்தி தரும் ஏழு நகரங்களுள் ஒன்று காஞ்சிபுரம். தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. மாயன் வியப்பான குணம். திருவிளையாடல்களை உடைய வன். இராமாநுசரைக் கண்ட ஆளவந்தார் காஞ்சியில் பெருமாளை நோக்கி, “எந்த மாயனான பேரருளாளனுடைய அருளால் செவிடன் கேட்கும் சக்தி உடையவன் ஆகிறானோ, காலில்லாதவன் வேகமாக நடக்க வல்லவனாகிறானோ, ஊமை பேச வல்லவனாகிறானோ, குருடன் காண வல்லவன் ஆகிறானோ, மலடியும் பிள்ளை பெறுகிறாளோ, அந்த தேவப் பெருமாளான வரதராஜனை சரணமடைகிறேன்” என்று நம் தர்சனம் வளர ஆளவந்தார் மாயன் இரு கழல் பணிந்தார். “தாம் வேண்டும் காமமே காட்டும் கடிது” என்கிற படியே தேவப் பெருமாள் அவ்வவர்களுடைய விருப்பங்களைத் தந்தருளுகிறவர். ஆகையாலே ஆளவந்தாரும் இராமாநுசன் ஆகிற மகாநுபாவரை நம் தரிசனம் வளர விசேஷ அருள் புரிய சரணமடைவதாகச் சொன்ன படியால் “மாயன் இருகழல் பணிந்தோன்” என்றவாறு-
(கடக உத்திராடத்துக் காலுதித்தான்) கடகம் ஆடி மாதம். உத்திராட நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் ஆளவந்தார். கால் – முதல் பாதம். அதாவது உத்திராட நக்ஷத்ரத்தில் முதல் பாதத்தில் அவதரித்தவராவர். “உத்திராடம் முதல் பாதத்தில் ஒரு பிள்ளையும் ஊர் கோழியில் ஒரு நிலமும் இருந்தால் உயர்வானது” என்பது முதியோர் வாக்கு. அதற்கு ஏற்ப ஆளவந்தார் தனுர் ராசியில் உத்திராடம் முதல் பாதத்தில் அவதரித்தார். அதனால் இராமாநுசருக்கு மானஸ ஆசார்யரான உயர்வைப் பெற்றார். ஆளவந்தாருடைய முக்கியமான ஐந்து சீடர்கள் இராமாநுசருக்கு ஆசார்யரானார்கள். இவரை பரமாசார்யர் என்று கொண்டாடுவர். இவர் சேனை முதலியார் அம்சம் என்று குரு பரம்பரா ப்ரபாவம் கூறும். இது பற்றியே “கடக உத்திராடத்துக் கால் உதித்தான்” என்றபடி.–
(அச்சமற மன மகிழ்ச்சி அணைந்திட்டான்) அணைதல் – அடைதல், பொருந்துதல் ஆளவந்தாருக்கு அச்சமாவது – திருவரங்கத்தில் தாமும் தம் சீடர்களுமாக இருந்து தர்சனத்தை நடத்தி வந்த போது “இனி மேல் நம் தர்சனத்தை வளர்ப்பவர் யார்?” என்று விசாரம் உண்டாய், ஒருவரையும் காணாமல் முசித்துச் சிந்தித்திருந்தாராம். சில நாள் கழித்து இராமாநுசரின் பெருமை அறிந்து அவரைக் காண காஞ்சி வந்து திருக்கச்சி நம்பிகளின் மூலமாக இராமாநுசரை யாதவ பிரகாசன் திரளில் கண்டு மகிழ்ச்சி அடைந்து “ஆம் முதல்வன் இவன்” என்று விசேஷ அருள் புரிந்து தேவப் பெருமாளிடம் சரணாகதி செய்து திருவரங்கம் வந்து சேர்ந்தார். பின்னர் திருவரங்கத்தில் ஒருநாள் கால க்ஷேபம் செய்யும் போது “இலிங்கத்திட்ட புராணத்தீரும்”” என்ற திருவாய்மொழி (4.10.3) பாசுரத்திற்கு பொருள் சொல்லும் போது “நமக்குப் பின்பு இந்த தர்சனம் நிர்வகிக்க ஒருவரையும் காணப் பெற்றிலோமே” என்கிற விசாரத்தாலே “முன்பு காஞ்சியில் கண்ட இராமாநுஜரை நினைவில் கொண்டு அவரை யாதவப் பிரகாசனோடு உறவறுத்து நம் பக்கல் சேர்க்கும் உபாயம் உண்டோ” என்று எண்ணி தேவப் பெருமாளிடம் “முன்பு செய்த சரணாகதியை பயனுடையதாக்க வேணும்” என்று வேண்டினார். இப்படி இராமாநுசனை நம் தர்சனத்தை நிர்வகிக்க வேண்டினது பற்றி “மன மகிழ்ச்சி அணைந்திட்டான்” என்றவாறு.–
(ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம்) ராஜ புரோகிதனான ஆக்கி யாழ்வானோடு வாதப் போர் செய்து ஆக்கி யாழ்வான் வாயை அடக்குகையாலே “ஆளவந்தார்” என்ற திரு நாமத்தை உடையவராய் தர்சனத்தை ஆளவந்தார் என்பர். அனவரதம் – இடை வீடின்றி எப்போதும். ஆளவந்தார் தாளிணையின் பெருமை அவர் தம் சீடர்கள் தொடங்கி இன்று வரை விளங்கி வருவது காணலாம்.ஆளவந்தார் இறுதிக் காலத்தில் அவர்தம் சீடர்களான பெரிய நம்பியும் திருக் கோட்டியூர் நம்பியும் ஆளவந்தாருடைய திருவடிகளைச் சேவித்து தங்களுக்குத் தஞ்சமான வார்த்தை அருள வேண்டினர். அவரும் “கோயிலாழ்வாரே உங்களுக்கு உயிர் நிலை” என்றும், “பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாய் ஸேவித்திருக்கும் திருப்பாணாழ்வார் திரு மேனியை பாதாதி கேசமாக ஸேவித்துக் கொண்டிருங்கோள்” என்றும் காட்டிக் கொடுத்தார். இது பற்றியே பெரிய நம்பிகளை “ஆளவந்தார் தாளிணையை அடைந்து உய்ந்தோன்” என்று போற்றுவது காணலாம். பெரிய திருமலை நம்பிகளை “அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடி தொழுவோன்” என்றும், திருக் கோட்டியூர் நம்பியை “ஏற்றமாம் ஆளவந்தார் இணை யடியோன்” என்றும், “அல் பகலும் ஆளவந்தார் அடி நினைவோன் ” என்றும், “ஏராரும் ஆளவந்தார் இணை யடியோன்” என்றும், “ஏராரும் ஆளவந்தார் இணை யடிகள் மறவாத எங்கள் திருக்கோட்டியூர் நம்பி” என்றும் அருளுவது காண்க. மேலும் திருக்கோட்டியூர் நம்பியும் பெரிய நம்பியும் ஆளவந்தார் திருவடிகளைத் தியானித்துக் கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினர் என்று குருபரம்பரா ப்ரபாவம் கூறும். திருவரங்கப் பெருமாள் அரையரும் திருவடிகளை வணங்கிப் பேறு பெற்றார். இது பற்றியே “தீதில் யமுனைத் துறைவன் சேவடியோன்” என்று புகழ்ந்தது காணலாம்.
திருமாலை யாண்டானையும் ““அம்புவியி ஆளவந்தார் அடியிணையோன்”” என்று போற்றுவது காணலாம். மாறனேரி நம்பிகளையும் “ஆளவந்தார் திருவடிகள் ஆஸ்ரயித்தான் வாழியே” என்று வாழ்த்தியது காணலாம். திருக்கச்சி நம்பிகளை “தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன்” என்பர்.
இராமாநுசரையும் “எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமாநுசன்” என்று திருவரங்கத்தமுதனார் அருளியபடி இராமாநுசருக்கு நேரே ஆசார்யர் ஆளவந்தாராவர். வேதாந்த தேசிகர் குரு பரம்பரா ஸாரத்தில் “என் உயிர் தந்து” என்ற பாட்டில் “ஆளவந்தார் என்று இவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே” என்று அருளியது காண்க. மேலும், யதிராஜ ஸப்ததியில் (8) “விகாஹே யாமுநம் தீர்த்தம்” என்கிற படியே தீதில்லாது நல்லோர் திரளைக் காக்கும் பணியில் பிருந்தாவனம் ஸம்பந்தம் உடையவராய், காளியன் முதலான பாம்புகள் தொடர்பில்லாதவராய், கண்ணன் அருளுக்கு இலக்கானவரான யமுனையின் துறை போலுள்ள யமுனைத் துறைவனான ஆளவந்தாரை அடைந்து களிப்போம் என்றதும் காண்க. மணவாளமாமுனிகள் தாம் அருளிய யதிராஜ விம்சதியில் (15) “சுத்தாம யாமுந…’” என்று ஆத்மாவுக்கு சுத்தியாவது தாம்தாம் தம்தம் நூல்களில் (அதாவது ஆளவந்தார் தமது ஸ்தோத்ர ரத்னத்தில் (62) கூறிய குற்றங்கள் தம்மிடம் உள்ளதாகக் கூறுவர்) தம்மிடமுள்ளனவாகக் கூறிக் கொண்ட குற்றங்களில் ஒன்றுகூட ஆளவந்தாரிடம் இல்லாமை யாகும். அப்படிப்பட்ட சுத்தாத்மாவான ஆளவந்தார் திருவடிகளை அனவரதம் வாழ்த்துவோமாக –
—
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply