ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -78-நலியும் நரகனை வீட்டிற்றும் –இன்பம் பயக்க-7-10–

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கண்ணன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்போட்டு கிடையாமல்-இன்பம் பயக்க-7-10–திருவாறன் விளை -வலம் செய்து கை கூப்பும் காலம்-துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –ப்ராக்ஜோதி புரத்தில் நரகாசூர நிரஸனம் -ஸத்யபாமை உடன் சென்று -முராசூரனை அழித்து முராரி -நரகாந்தன் பெயர் –சோணித புரத்தில் -பாணாசுரன் தோள்களை துணித்த சரிதம்-வலிமையையும் பெருமையும் வாசா மகோசரம் -வலியின் பெருமை என்றுமாம் – அஞ்சன கிரி போன்ற திருமேனி -சாத்திய திருத் துழாயில் ஆசைப்பட்டு -நெஞ்சு கொடுத்த வேதனை-அது அவன் குற்றம் அல்ல -நானே தான் ஆயிடுக –

அவதாரிகை – இதில் கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தை பெற வேண்டும் என்று ஆசைப் பட்டாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலைக் கருதி நெஞ்சு அழிந்து இரங்கல் —

இப்படி ஆர்த்தரான இவ்வாழ்வாருடைய –விரோதி நிரசன ஸ்வபாவங்கள் உண்டாகச் செய்தே
நம்முடைய பிரதிபந்தகங்கள் போய் அவனுடைய போக்யதையை அனுபவிக்கப் பெறாமல்
(இவ்வாழ்வாருடைய )திரு உள்ளம் தளும்பி அத்தாலே கிலேசித்த பிரகாரத்தை நாயகனான ஈஸ்வரன் சக்தனாய் இருக்கக் கிட்டப் பெறாமையாலே நெஞ்சு அழிந்து இரங்கின நாயகி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

நலியும் நரகனை வீட்டிற்றும்  வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல  மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே
– 78–பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –

(எமது நாயகனார்)
நலியும்நரகனை வீட்டிற்றும்–(உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும்
வாணன் திண்தோள் துணிந்த வலியும்–பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும்–(அப்போரில் வெளிக்காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல–(எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரைபோல் பொலியும் உருவின் பிரானார்–அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தையுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே–சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப்பெறுவதற்காகவே
மெலியும்–ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார்–(எமது) பேதைநெஞ்சு
தந்து போயின–(தான் எம்மைவிட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்துவிட்டுப் போனவை
வேதனை–இத் துன்பங்கள்.

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு 
—70-தாம் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கேட்கைகாக ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் பேர் ஒலக்கமாக ஸ்ரீ திரு வாறன்விளையிலே அவன் வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்தித்து நாம் அங்கே சென்று ஸ்ரீ திருமாலவன் கவி -என்ற வாயோலைப் படியே அவனும் அவளுமான சேர்த்தியிலே ஸ்ரீ திருவாய் மொழியை அவர்கள் இருவரும் உகந்து திருச் செவி சாத்தும்படி கேட்ப்பித்து அடிமை செய்யப் பெறுவது எப்போதோ – என்று மநோ ரதிக்கிற -இன்பம் பயக்க -வில் அர்த்தத்தை இன்பக் கவி பாடுவித்தோனை -என்று அருளிச் செய்கிறார் –தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே-திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –ஸ்ரீ ஆழ்வாரும் வேண்டா – நமக்கு உத்தேச்யம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே -அமையும்
அன்றிக்கே – மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு-திருட அத்யாவசாய உக்தரான ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் – மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார் -எல்லாருக்கும் குல தைவம் என்றாகவுமாம் — அவன் விட்டாலும் அவள் விடாள் -அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் – வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாருக்கும் -நம் போலே அத்யாவச்யம் இல்லாதவர்களுக்கும் –உபகார ஸ்ம்ருதியோடே தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் ஸ்ரீ தேவ பிரான் அறிய மறந்தவர்–என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனார் அருளிச் செய்தது –

நலியும் நரகனை –சர்வேஸ்வரன் பரிகிரகைக்கு யோக்யதைகளாய் இருக்குமவர்களை கொண்டு
வந்து சிறை செய்தான் இறே –நலியும் –அந் நலிவு  தம்மதாம் படி இருத்த படி –வீட்டிற்றும் –-வீழ்த்ததும்
முடித்ததும் –வாணன் இத்யாதி –உஷையும் அநித்ருதனையும் சேர ஒட்டாதே சிறை வைத்த வாணனுடைய–திண் தோள் –தேவதாந்திர சமாஸ்ரயணம்  பண்ணி திண்ணிய தோள் உடையனாக நினைத்து இருந்தான் –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவன் –நபிபேதி குதஸ் சன –என்றும் –ஏஷஹ்யேவா சநந்த -இத்யாதி -இறே –அத்தால் வந்த தைரியத்தாலே தான் புத்தி  பூர்வம் பண்ணினவற்றையும் மதியாது இருக்கும் இறே –அவன் திண்ணிய தோளை துணித்த வலியும் பெருமையும் -என்னுதல்–வலியின் பெருமை என்னுதல் –மிடுக்கும் மேன்மையும் — அன்றிக்கே வலியினுடைய பெருமையும் –யான் சொல்லும் நீர்த்தல்ல –நாம் இப்போது சொல்லும் அளவோ –நீர்த்தல்ல –தன்மை உடைத்ததல்ல – ஸ்வபாவத்தை உடைத்ததல்ல –அவனுடைய விரோதி நிரசன சீலத்தையும்    –ஆண் பிள்ளைத் தனத்தையும் –மேன்மையையும் – நாம் இன்று இருந்து சொல்லும் அளவோ –அவன் வாராமையால் படுகிற நலிவால் வந்த குறை-அத் தலையில் இட ஒண்ணாத படி இறே அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருப்பது –ஆனால் பின்னை இதரராலே  வந்தது ஆகாதோ என்ன –மைவரை -இத்யாதி – நமக்கு சாத்மிக்கும் விஷயம் சாத்மியாத விஷயம் என்று ஆராயாதே ஆசைப்பட்ட நம் நெஞ்சு தந்து போன ஐஸ்வர்யம் இறே இது எல்லாம் என்கிறார் –மை வரை போல் –அஞ்சன கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது –பொலியுமுரு – ஒரு த்ருஷ்டாந்தத்தை சொல்லிற்று என்ன –அவ்வளவாய் இராதே –ஸர்வதா ஸாத்ருச வஸ்து இல்லாமையால்- உள்ளத்தில் உரு செய்த ஒன்றை போலியாக சொல்லப் புக்கு – பின்னையும் அது தானும் போராதே இறே இருப்பது –பிரானார் –பக்தாநாம் -என்று இறே இவர் படி –புனை இத்யாதி –
அவர் சாத்தின அழகிய திருத் துழாய் மலர்க்கே –மெலியும் மட நெஞ்சினார் – சாத்மிக்கும் விஷயத்தில் ஆசைப்பட்டு கிடையா விட்டால் படும் அதைப்பட்டு கிடையாது என்று இருந்தாலும் – பற்றிற்று விடாதே நிற்கிற நம் நெஞ்சு தந்து  போன-கிலேசம் இறே இது எல்லாம் –

ஆழ்வார் திரு உள்ளம் அவன் திருத் துழாய் மாலையைப் பெற ஆசைப்பட்டு கிடையாமையாலே இவருக்கு வருத்தம் விளைவித்து அவன் இடம் தான் போய் அடைந்ததே-இவரே தேவாதி தேவன் என்பதை நரகாசுர வத – பாணாசூர விருத்தாந்தங்களால் வெளியிட்டு –-வருணன் குடை -மந்தரகிரி சிகரம் ரத்னா கிரி -அதிதி உடைய குண்டலங்கள் -ஐராவத யானை -கவர்ந்து போக -சத்யாபாமை தேவி யுடன் கருட வாகனத்தில் வந்து முரனை அழித்து-நாயகனையும் அழித்து 16100 — தேவ கன்னிகைகளையும் -கொண்டு பாரிஜாதம் கொணர்ந்து துவாரகையில் சத்யா பாமை வீட்டுப் புழக்கடையில் நாட்டினானே-அவனது விரோதி நிரசன வல்லமை பரத்வம் நம் போல்வாருக்கும் வேதங்களுக்கும் கூட சொல்ல முடியாதே-அவனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாமல் அவனது போக்யத்தையிலே மனம் செலுத்துவதும் ஆற்றாமையையே விளைவிக்கும் -என்றவாறு–பிரிவாற்றாத தலைவி தலைவனது ஆற்றலைக் கருதிநெஞ்சழிந்து இரங்கும் பாசுரம் இது.-நானோ வென்னில் எனது நாயகருடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் ப்ரபுத்வத்தையும் நோக்கி ‘நமக்கு அவர் துர்லபர்’ என்று கருதி ஒருவாறு காதலையடக்கி ஆறியிருக்குந் தன்மையுடையேன்;-எனது மனமோ அங்ஙனம் ஆறியிராமல் அவனது மாலையைப் பெறுதற்கு ஆசைப்பட்டு அது கிடையாமையால் எனக்கு இப்படிப்பட்ட வருத்தத்தை வினைத்துத்தான் அவனிடம் போய்விட்டது என்று இரக்கத்தோடு உரைத்தானாயிற்று.-நரகாஸுரனைக் கொன்று பதினாறாயிரத்தொருநூறு கன்னிகைகளை மணஞ்செய்து கொண்டவரும், பாணாஸுரனது தோள்களைத் துணித்து ஆவன் மகனான உஷை தனது போனான அநிருத்தனை வெளிப்படையாக மணஞ் செய்துகொண்டு கூடி வாழும்படி செய்தவருமான தலைவர் அவர் பக்கற்காதலியாகிய என்னை வந்து அடைந்து இன்பமடைவிக்க வேண்டாவோ வென்பால் அவ் விரண்டு வரலாறுகளையும் எடுத்துக் கூறினாள்.-தாமே தேவாதிதேவ ரென்று தோன்றும்படி வெளியிட்ட வீர்ய சக்தியை ‘பெருமை’ என்றது.-வீட்டிற்று உயிர் விடுவித்தது; இறந்த காலத் தொழிற்பெயர். விடு என்பதன் விகாரமாகிய வீடு என்பதனை பிறவினையான ‘வீட்டு’- பகுதி;
று- விகுதி. இனி, வீழ்த்திற்கு என்பது வீட்டிற்று என மரூஉ வாயிற்றென்பாருமுளர்.
-நீர்த்து = நீர்மை என்னும் பண்பின் அடியாய்ப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புமுற்று. மை வரை = மேகம் படிந்த மலை என்னவுமாம்.-பாட்டின் முடிவில் ‘வேதகா’ என்னும் வடசொல் ஐயீறாகத் திரித்தது. வலியின் பெருமையும், என்றும் பாடமுண்டாம்.-ஆஸ்ரித விரோதிகளை அழிக்குங்குணம் எம்பெருமானுக்கு இயல்பாயிருக்கவும் தாம் அவனருளால் தமது பிரதிபந்தங்கள் ஒழிய அவனது போக்யத்தையை அநுபவிக்கப் பெறாமல் மனங்கலங்கி அதனால் வருந்துகிறபடியை ஆழ்வார் அருளிச் செய்தல் இதற்கு உள்ளுறை பொருள்.-எம்பெருமானது விரோதி நிரஸந் சக்தியும் பரத்வ மஹிமையும் எம்போலியர்க்கு வரையறுத்துச் சொல்லக் கூடியவையல்ல; தேவங்களுக்கும் எட்டாதவை; அப்படிப்பட்ட ஸர்வேஸ்வரனைக் கிட்டி அநுபவிக்கப் பெறாத வளவில் அவனது யோக்யதையில் மனஞ் செலுத்துதலும் ஆற்றாமை துயரையே மூட்டுகின்ற தென்றவாறு.

நலியும் நரகனை வீட்டிற்றும்-மேலிட்டு நலிந்து வருகிற நரகா ஸூரனை ஸத்யபாமைப் பிராட்டி வார்த்தைக்காக விழப் பண்ணினதும்–வாணனை திண் தோள் துணித்த வலியும்-உஷையையும் அநிருத்தரையும் கொண்டு போய் இருக்கைக்காக பாணனுடைய யுத்த ஆகாங்ஷியான திண்ணிய ஆயிரம் தோளையும் அறுத்து விழவிட்ட ஆயுத பலமும்–பெருமையும் அந்த பாண யுத்தத்தில் ஈஸ்வர அபிமானியான ருத்ரனை முதுகு புறம் கொண்ட சர்வேஸ்வரத்வமும்-யான் சொல்லும் நீர்த்தல்ல-வேதங்கள் அகப்பட எல்லை காண மாட்டாத இக்குணங்கள் அல்ப ஞானனான நான் சொல்லும்படியான நீர்மையை யுடையது அல்ல–மைவரை போல் பொலியும் உருவில் பிரானார்-அஞ்சன கிரி போலே வளர்ந்த வடிவை யுடையராய் இருக்கிற உபகாரகர் ஆனவர்–புனை பூம் துழாய் மலர்க்கே-வெற்றிக்கும்
அழகுக்கும் சூட்டின அழகிய திருத் துழாய்த் தாருக்காக-மெலியும் மட நெஞ்சினார்-ஈடுபட்டு பற்றிற்று விட மாட்டாத நெஞ்சினாரானவர்-தந்து போயின வேதனையே –அத் தார் நசையாலே நம்மை விட்டுப் போகிற போது நமக்குத் தந்து போனவை கிலேசங்களாய் இருந்தன விறே என்று அழிந்து உரைத்தாள் யாயிற்று-இத்தால் ஈஸ்வரனுடைய விரோதி நிரசன சக்தி அபரிச்சிந்னையாய் இருக்கச் செய்தேயும்
அநுபவ ஸித்தி பிறவாத அளவிலே அதிசயித போக்யதை ஆர்த்தியைப் பிறப்பிக்கும் என்றதாயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-திவ்ய ஆயுதாதிகளை நமக்கு அனுபாவ்யமாக்கி உபகரிக்குமவரால் தம் அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் அநு குணமாகச் சாத்திக் கொள்ளப்பட்ட
அழகிய திருத்துழாய் மாலையில் உள்ள குஸூ மங்களுக்கே ஆசைப்பட்டு கிலேசிக்கும் எனக்கு பவ்யமான பெருமையுள்ள மனஸ்ஸாகிறவர் தாம் என்னை விட்டு அவன் இடத்தில் போம் போது தந்து போன வேதனை இது என்று அறியுங்கோள் என்கிறாளாய் அருளிச் செய்தார் –

தாத்பர்யம்–கிருஷ்ணாவதார திருத்துழாய் மேல் ஆசைப்பட்டு அவன் அப்பொழுதே வந்து தந்து ஆஸ்வாசப் படுத்தாமல் போனது அவர் தோஷம் இல்லை-கிடைக்காத ஒன்றை ஆசைப்பட்ட நெஞ்சு –
அதன் தோஷம் தான் இது என்று-மனதை வெறுத்து நாயகி பாசுரம்-மணம் செய்ய யோக்யதை கொண்ட தேவ மஹிஷிகள் -16108 -சிறை வைத்த நரகாசுரனை சத்யபாமை கூட்டிச் சென்று சம்ஹரித்த மஹா உபகாரகன் உஷை அநிருத்த சேர விட்ட வலிமையையும் பெருமையும் -வேதமே சொல்ல முடியாத பெருமை அன்றோ-மஹா குணங்களை யுடையவன்-எட்டா நிலத்தில் அஞ்சன கிரி போன்ற அவனது திருத்துழாயில் ஆசைப்பட்டு அரியதை ஆசைப்பசுடாதே என்று சொன்னாலும் கேளாத மனம் தந்து போன நலிவே இது

7-10-இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும்-ப்ரவேஸம்-

சர்வேஸ்வரன் தம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட மஹோபகாரத்துக்குப் பிரதியுபகாரம்
தேடிக் காணாமை தடுமாறினார், மேல் திருவாய்மொழியிலே;
இவர் தாம் தம்முடைய மயக்கத்தாலே பிரதியுபகாரந்தேடித் தடுமாறினார்த்தனை போக்கி
இவர் தம்மால் கொடுக்கலாவது ஒன்றும் இல்லை;
அவன் ஒன்று கொண்டு குறைதீர வேண்டும் விருப்பமுடையன் அல்லன்;
இவர் தம்முடைய உபகார ஸ்மிருதி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே செய்தது ஒன்றே அன்றோ?

ஆனாலும், ஆறி இருக்கமாட்டாரே! இனி, நாமும் அவனுக்கு ஒன்று கொடுத்தோமாய்,
அவனும் நம் பக்கல் ஒன்று பெற்றானாகச் செய்யலாவது ஒன்று உண்டு.
அவன், தனக்கு வகுத்த கைங்கரியத்தைச் செய்யவே,
அதனைத் தனக்குப் பிரதியுபகாரம் செய்ததாக நினைத்திருக்கும் தன்மையனாய் இருந்தான்;
ஆன பின்பு, உம்முடைய சொரூபத்திற்குத் தகுந்ததான ஆத்துமா உள்ள அளவு உளதான அடிமையிலே அதிகரிப்போம்’ என்று பார்த்தார்.

இனித்தான் வேத வாக்கியங்களும் ‘தனது இயல்பான வடிவினை அடைகிறான்’ என்று
சொரூபத்தின் அடைதல் அளவும் சொல்லவே, அதற்கு அப்பால் கைங்கரியமானது அவகாத ஸ்வேதம் போலே
தன்னடையே வரும் என்று ப்ரஹ்மத்தினை அடைதல் அளவும் சொல்லிவிடும்.
ஸவேந ரூபேண அபிநிஷ்பத்யதே’-என்பது, சுருதி.
அவகாத ஸ்வேதம் – நெல் முதலியவற்றைக் குற்றும் போது சரீரத்தில் தோன்றும் வியர்வை.

ஆழ்வார்கள் ‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’ என்று அது தன்னையே சொல்லா நிற்பார்கள்;
அடைந்தன் பலமான கைங்கரியத்தில் ருசியாலே.
‘சம்சாரம் தியாஜ்யம்; சர்வேஸ்வரன் உத்தேசியன்’ என்கிற ஞானம் பிறந்து, பகவானை அடைந்தவர்கள்,
‘பகவானை அடைதல் (பிறவிப் பிணிக்கு) மருந்து’ என்று பகவானை அடைதல் அளவிலே நின்றார்கள்;
பேஷஜம் பகவத் ப்ராப்தி:’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 59.-

அவர்களைக் காட்டிலும்’ மயர்வற மதிநலம் அருளினன்’ என்கிறபடியே, பகவானுடைய திருவருளாலே
அடைந்த ஞானத்தையுடையரான இவர்களுக்கு வாசி இதுவாயிற்று.
இனி, அடிமை செய்யுமிடந்தன்னில் ‘சரீர சம்பந்தம் அற்றுப் பரமபதத்தை அடைந்தால் பின்பு செய்யுகிறோம்’ என்று
அவ்வளவும் ஆறியிருக்கும்படியன்றே, செய்ந்நன்றி நினைவு இவரை நலிகிறபடி?

ஆகையாலே, ‘ஸ்ரீவால்மீகி பகவான் பாடின ஸ்ரீராமாயணம் கேட்கைக்குத் திருவயோத்தியையிலே
திருத்தம்பிமாரும் தாமுங்கூடப் பெருமாள் பேரோலக்கம் இருந்தாற்போலே,
சர்வேஸ்வரனும் நாம் பாடின திருவாய்மொழி கேட்கைக்காகத் திருவாறன்விளியிலே
பரியங்க வித்தியையிற்சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வான் மேலே நாய்ச்சிமாருடனே கூடி
நித்திய பரிஜனங்களோடே கூட எழுந்தருளியிருந்தான்’
அங்கே சென்று திருவாய்மொழி கேட்பித்து அடிமை செய்வோம்,’ என்று எண்ணுகிறார்.

(அயோத்யையில் கேட்டதாக இங்கு தெளிவாக
வால்மீகி ஆஸ்ரமம் அருகில் -நைமிசாரண்யத்தில் கேட்டு அருளினார் என்பாரும் உண்டு
முக்காலும் அறிந்த வால்மீகி அயோத்யைக்கு வந்ததாக சொல்லலாம் )

அங்ஙனம் எண்ணுமிடத்திலும், சர்வேஸ்வரன் அடையத் தக்கவனானால் அர்ச்சிராதி கதியோடு
தேசவிசேடத்தோடு வாசி அற அடையத்தக்கதில் சேர்ந்த தேயாமன்றோ? என்றது,
‘முன்பு அடையப்படாதனவாய்ப் பின்பு உபாயத்துக்குப் பலமாய் வருவன யாவை சில?
அவையெல்லாம் அடையத்தக்கதில் சேரக் கடவனவாம் அன்றோ?’ என்றபடி.அப்படியே,
‘திருவாறன்விளையிலே எழுந்தருளியிருக்கிற சர்வேஸ்வரன் திருவடியிலே போய் அடிமை செய்யக் கடவோம்.
அதுதானும் வேண்டா;
அந்தத் தேசத்தை அடைதல்தானே அமையும். அதுதானும் வேண்டா;
இங்கே, இருந்தே அங்கு ஏறப்போவதாக எண்ணுகிற அவ்வெண்ணந்தானே அமையும்.

இனி, நாம் அத்தேசம் அடையத் தக்கது என்று புத்தி பண்ணிப் போருவதைப் போன்று,
அவனும் நாம் இருந்த தேசத்தைக் குறித்து வரக்கடவன்:
அவ்வளவிலும் நாம் அவனைத் தொடர்ந்து சென்று விட்டு நாம் அத்தேசத்திலே போய்ப் புகக்கடவோம்;
அத்தேசமே நமக்கு அடையத் தகுந்தது; அங்கே போய்ப் புகவே, நம்முடைய கைங்கரிய விரோதிகள் அனைத்தும் கழியும்.
இனி, நான் வேறு ஒன்றிலே இச்சை பண்ணினாலும், என் நெஞ்சமானது அத்தேசத்துக்கு ஒழிய ஒரு தேசத்துக்கு ஆளாக மாட்டாது;

‘என்னுடைய மனமானது வேறு ஒன்றிலும் செல்லுவது இல்லை’ என்கிறபடியே.
’ பாவோ நாந்யத்ர கச்சதி’ என்பது, ஸ்ரீராமா. உத்தர. 40 : 15
ஆக, திருவாறன்விளையிலே புக்கு அடிமை செய்யக்கூடிய படிகளை எண்ணி இனியர் ஆகிறார்.
ஸ்ரீ ராமாயணத்தைக்காட்டிலும் இதற்கு வாசி, பாடினாரே கேட்பிக்கையும், பாட்டுண்டாரே கேட்கையுமாயிற்று.

சீதையின் மஹத்தான சரிதம்’ என்னா நிற்கச் செய்தே,
கவி பாட்டுண்டவளை ஒழியத் தானே அன்றோ கேட்டது?
பாடினான் ஸ்ரீவால்மீகி பகவான்; கேட்பித்தாரும் குசலவர்கள் அல்லரோ?

7-2-கங்குலும் பகலும் -அடுத்த 7-3-நிகரில் முகில் வண்ணன் பின்பு ஆறு திருவாய் மொழிகளும்
திவ்ய தேச பதிகங்கள் இல்லையே
இதில் மீண்டும் திவ்ய தேசம்
வன்னி பழம்-அர்ஜுனன் சம்பந்தம் -பாம்பை ஆற்றங்கரை -இன்றும் இங்கே பிரசாதம் –
ஆகிஞ்சன்யம் இவருக்கு -அவனுக்கு பூர்த்தி -அவாப்த ஸமஸ்த காமன் -பிரதியுபகாரம் இங்கும் அங்கும் இல்லை என்றவர்
வகுத்த கைங்கர்யம் உண்டு என்று கண்டு பிடித்தார்
ஸ்வரூப சித்திக்கு செய்வதை பிரதியுபகாரம் என்று அவன் திரு உள்ளம் பித்தன் அன்றோ-
துணைக் கேள்வி -இங்கு -நம்மைப் பார்க்கும் வேகத்தில் பாசுரம்விடாதீர் -திருக் குறள் அப்பன் –
32 நாள் லவ குசர் ஸ்ரீ ராமாயணம் அருளி -சிலர் நைமிசாரண்யத்தில் என்பர் -இங்கு ஈட்டில் திரு அயோத்யையில் என்று தெளிவாக உள்ளதே –

பத்தாம் திருவாய் மொழியில்
கீழ் இப்படி தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரத்தால் தம்முடைய விரோதி அஸத் சமமாம்படி
ஹ்ருஷ்டரானவர் -அவன் உபகாரத்துக்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே
சேஷியானவனுக்கு அதிசய ஜனகமான சேஷ வ்ருத்தி ஒழிய இல்லை என்று அறுதி இட்டு -பிரதி சம்பந்தியான அவனுடைய
அசேஷ சேஷித்வ ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்தவ பூர்த்தியையும்
அநந்யார்ஹ சேஷத்வ அபதானத்தையும்
ஆஸ்ரித ரக்ஷண ஆகாரத்தையும்
அனுபாவ்யமான விக்ரஹ யோகத்தையும்
அனுபவ அர்த்தமான அவதாரத்துக்கு மூலமாயுள்ள அனந்த சயனத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி விசிஷ்டமான அபிமத சயாகத்வத்தையும்
பிரபல விரோதி பஞ்சநத்வத்தையும்
ஆந்திர துக்க நிவர்த்தகதத்தையும்
பாபம் நிவ்ருத்தமாய் ப்ராப்ய தேசம் சித்திக்கிலும் உத்தேசியமான ஆஸன்ன தேச யோகத்தையும்
நிரதிசய வ்யவசாய ஜனகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான அவன் நம்மை விரோதியைக் கழித்து அடிமை கொள்ளுகைக்காக ஆசன்னமான
திரு வாறன் விளையிலே ஸந்நிஹிதனான அவன் திருவடிகளிலே அடிமை செய்யக் கடவோம் என்று மநோ ரதித்து
இப்படி நிவர்த்திய விரோதி பல நிரூபண பூர்வகமாக அதனுடைய சரண்ய நிவர்த்யத்வத்தை நிஷ்கர்ஷித்து நிகமிக்கிறார் –

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–
7-10-1-

இன்பம் பயக்க – எப்பொழுதும் துக்கத்தையே அடைந்து கொண்டிருக்கிற சம்சாரி சேதனனுக்குத் தன்னுடைய சேர்த்தியாலே ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று பிராட்டியுடைய சேர்த்தியாலே
‘ஆநந்த மய:’ என்கிற வஸ்துவான அவன் தனக்கும் ஆனந்தம் உண்டாம்படியும்;
‘அல்லி மலர் மகள் போக மயக்குகளாகியும் நிற்கும் அம்மான்’ திருவாய். 3. 10 : 8.என்று
பிராட்டியுடைய சேர்த்தியாலே பிச்சு ஏறி இருக்குமாயிற்று.-இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான் ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’-இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக, அச் சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக,
அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பர்களாயிற்று.

இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற – தன் சந்நிதியாலே உலகம் அடையத் தளிரும் முறியுமாம்படி இருக்கிறவன், தான் பெறாப் பேறு பெற்றாற்போலே, ‘திருவாய்மொழி கேட்கைக்குத் தகுதியாக இருப்பது ஒரு தேசம் பெற்றோம்’ என்று விரும்பி வசிக்கிற தேசமாயிற்று.-

அன்புற்று –‘திருவாய்மொழி கேட்கலாய் இருப்பது ஒரு தேசம் பெறுவோமே!’ என்று அங்கே அன்பினை வைத்து.-அமர்ந்து – அந்தத் தேச வாசத்துக்கு மேற்பட ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாதே விரும்பி.-உறைகின்ற – அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே, நித்திய வாசம் செய்கிற.

அணி பொழில் சூழ் திருவாறன்விளை –-‘பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருப்பதாய், அவன் தனக்கும்-விபூதியில் உள்ளாருக்கும் -உலகத்துள்ளார்க்கும் இருந்து
திருவாய்மொழி கேட்கைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய். காட்சிக்கு இனியதாய் இருக்கிற பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையை.

அன்புற்று – ‘திருவாய்மொழி கேட்கைக்குத் தக்கதான தேசம் பெற்றோம்’ என்று அவன் விருப்பத்தை வைத்தாற்போலே, ‘திருவாய்மொழி கேட்பிக்கைக்குத் தக்கதாய் இருப்பது ஒரு தேசத்தைப் பெறுவோமே!’ என்று அத் தேசத்திலே விருப்பத்தை வைத்து.-அமர்ந்து – அத் தேச வாசத்துக்கு அப்பால் ஒரு பிரயோஜத்தை -கணிசியாதே -விரும்பாமல்.-வலஞ்செய்து 
வலம் வருதல் முதலானவற்றைச் செய்து.-கை தொழும் நாள்களும் ஆகுங்கொலோ 
‘அந்தக் காலம் இந்த நாளாக வேண்டும்’ என்றாரே ஸ்ரீகௌசல்யையார்.
‘போய் வருகை தவிராராகில் மீண்டு புகுரும் நாள் இன்று ஆயிற்றாகிலோ’ என்றார் போலே,இந்த எண்ணத்திற்கு அடைத்த காலமே அனுபவத்துக்கு அடைத்த காலமாகப் பெற்றோம் ஆகிலோ?’ என்கிறார்.-

———-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?
–7-10-2-

அமர்ந்து உறையும் – இந்திரனுக்கு இராச்சியத்தை வாங்கிக் கொடுத்துத் திருப் பாற் கடலிலே போய்ச் சாய்கை அன்றிக்கே, அவன் வந்து நித்திய வாசம் செய்கிற.

மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை –-அவன் திருவடியால் அளந்த ஆகாசப் பரப்பு அடங்கலும் பரந்துள்ள கொடிகளை யுடைத்தான மாடங்களை,
ஓங்கி யிருந்துள்ள மதிள்களை யுமுடைத்தான திருவாறன் விளையை. -கொண்டைக் கோல் நாட்டிய இடம் இது

மா கந்தம் நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொல் –‘பூமியை அடங்கலும் பனி போன்ற குளிர் நீரால் நனைக்கட்டும்’ என்று ஸ்ரீ நந்திக் கிராமம் தொடங்கி
ஸ்ரீ பரத்துவாச பகவான் ஆஸ்ரமத்தளவும் வர, பனி நீராலே விடுவித்தான் ஸ்ரீசத்துருக்நாழ்வான் என்றது அன்றோ?-அப்படியே, மா கந்த நீர் கொண்டு தூவி அநுகூலமான காரியங்களைச் செய்து கை தொழக் கூட வற்றேயோ?-

———

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?
–7-10-3-

கோவிந்தனை மதுசூதனைக் கோள் அரியை – அங்கு நிற்கிறவனைக் கண்டால் மூன்று படி தொடை கொள்ளலாய் இருக்கும்.-1-ஆஸ்ரித வாத்சல்யம், 2-ஆஸ்ரித விரோதி நிரசின சீலதை, 3-அடியர் அல்லார்க்குக் கிட்டுதற்கும் அரியன் என்னும் இவை.

ஆடு பறவை மிசைக் கண்டு – வெற்றிப் புள்ளின் மேலே கண்டு. ஆடு – வெற்றி.
அன்றிக்கே,-சர்வேஸ்வரன் வாகனம் என்கிற உவகையின் மிகுதியாலே-மது பான மத்தரை-  கட் குடியர் போன்று களித்து ஆடா நின்றுள்ள திருவடி திருத் தோளிலே கண்டு என்னுதல்.
நாம் திருவாறன்விளையைப் பிராப்யம் என்று போகிறதைப் போன்று, அவனும் திருநகரியையே’உத்தேஸ்யமாம் என்று வாரா நிற்கும் அன்றோ?-கண்டு –-நடு வழியிலே கண்டால். கை தொழுது – காரியங் கொண்டிலோமே ஆகிலும், கிட்டினால் கை தொழுகைக்குச் சம்பந்தம் உண்டே அன்றோ? ஆகையாலே முறை தப்பாமல் பணிதல் செய்து.(நமஸ்கரித்து கிட்ட மாட்டோம் -கிட்டினால் நமஸ்கரிப்போம்)-போதயந்த பரஸ்பரம் -‘ஓருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு’ என்னும்படி, அவ்வூரிலுள்ளாரோடு சென்று கூடவேணும்–.வாய்க்குங்கொல் நிச்சலுமே – அங்குத்தை ஸ்ரீவைஷ்ணவர்களோடே கூடி நித்தியானுபவம் பண்ணக் கூடவற்றேயோ?-

————-

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?
–7-10-4-

நித்திய அக்நி ஹோத்திரம் போலே ஒரு கால விசேடத்திலேயாய்ப் போக ஒண்ணாது,
எல்லா நிலைகளிலும் உண்டாக வேணும்.-மனத்து ஈங்கு நினைக்கப் பெற – அங்குச் சென்று அனுபவிக்க வேண்டா. இங்கே இருந்து நெஞ்சாலே அங்குத்தைப் பரிமாற்றங்களை நினைக்கப்பெற அமையும்.-‘பெற’ என்கையாலே,-இந்த எண்ணத்துக்கு அவ்வருகு ஒரு பேறு இல்லை என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.-இதுக்கு மேலே யோக்யதை எதிர் பார்க்க மாட்டானே -ஆசை உடையார்க்கு எல்லாம் என்று இதனாலே எம்பெருமானார் வரம்பு அறுத்தார் –

முற்காலத்தில் இடையாற்றுக்குடி நம்பி என்பார் ஒருவர் இருந்தனர்;-அவர் திருநாள்கள் தோறும் வந்து பெருமாளைச் சேவித்துப் போனால், மறித்துத் திருநாள் வருந்தனையும் அதனையே போது போக்காக நினைத்துக் கொண்டு இருப்பாராயிற்று;
ஒருநாள் ஒரு திருநாளின் வைபவத்தை நினைத்திரா நிற்கச் செய்தே, ‘அமுது செய்கைக்குப் போது வைகிற்று’ என்றார்களாக, ‘ஆகில் வருகிற திருநாள் அணித்தாகிறது’ என்றாராம்.

அவர் நூறு வயதும் புகுகையாலே வலிமை குன்றித் திருமுளைத் திருநாளில் பெருமாள் புறப்பட்டருளுகைக்கு உதவ வந்து புகுரப் பெற்றிலர்:
பெருமாளும் தேடி யருளக் காணாமல், ‘நம் இடையாற்றுக்குடியான் வந்திலன்’ நங்கண்ணாலம் அல்லவோ!’ என்று திருவுள்ளமானாராம்.

அவர் தாம் ஆறாந்திருநாளிலே சேவித்திருக்கச் செய்தே, ‘நாம் உனக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று கேட்டருள,
‘தேவரீர் தந்தருளின சரீரத்தைக் கொண்டு போரக் காரியம் கொண்டேன்; இனிப் போக்குவரத்துக்குத் தகுதி இல்லாதபடி போர இளைத்தது’ என்ன,
‘வாராய், மெய்யே இளைத்தாயாகில்: இங்ஙனே இரு’ என்று அருளிச் செய்தார்;
பெருமாள் நடுவில் திருவாசலுக்கு அவ் வருகே எழுந்தருளுங்காட்டில் அவர் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.(திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தை–58– நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே)

அழகிய நீல மணி போன்ற திரு நிறத்தை யுடைய உபகாரத் தன்மையனான கிருஷ்ணனுடைய மலர்ச்சி பொருந்திய திருவடிகளாகிற செவ்விப் பூக்களை ஈங்கு மனத்து நினைக்கப் பெற வாய்க்குங்கொல். நிச்சலும் எப்பொழுதும்.-

————–

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.
–7-10-5-

பலரடியார் முன்பு அருளிய-ஸ்ரீ வேத வியாச பகவான், ஸ்ரீ வால்மீகி பகவான், ஸ்ரீ பராசர பகவான், ‘இன்கவி பாடும் பரமகவிகள்’ என்று சொல்லப்படுகிற
முதலாழ்வார்கள் எல்லாரும் உளராயிருக்க, என் பக்கல் விசேட கடாட்சம் செய்வதே!-கிழக்குத்தை இராசாக்கள் பொல்லாங்காலே இங்கே நலிவு பிறக்குமளவிற்செய்வது என்?’ என்று எம்பெருமானார் அதனை நினைந்தருளி, ‘இத் தேசத்தை விடாதே நோக்கிக்  கொண்டு கிடந்தோம்;-இவ் விடத்துக்கும் அழிவு வரும்படி ஆசுர வர்க்கம் மேலிடாநின்றது; மேல் செய்ய அடுப்பது என்?’ என்று பெரிய நம்பிக்கு அறிவிக்க,
‘நான் பெருமாளுடைய திரு எல்லையிலே ஒரு பிரதக்ஷணம் வரும்படியாக உம்முடைய சிஷ்யர்களிலே ஒருவரைப் போர விடுவது’ என்ன
‘அதற்கு ஆவார் ஆர்?’ என்ன, ‘என் பின்னே போராநின்றால் ‘ஒருவன் பின்னே போகாநின்றேன்’ என்று தன் நெஞ்சிற்படாதே சாயை போலே என்னைப் பின் செல்வான் ஒருவனாக வேணும்’ என்ன, கச்சதா மாதுல குலம்-உடை வாள்-அனகா- நித்ய சத்ருக்ந ப்ரீதி உடன் போனது போலே –
‘அதற்கு ஆவார் அர்?’ என்ன,‘ஆழ்வானைப் போக விடலாகாதோ?’ என்றாராம்.
ஆக, பல முதலிகள் இருக்க, ஆழ்வானைக் கொடுத்தாற்போலே

உலகம் மலி புகழ் பாட – ஈண்டின இடத்தில் வெள்ளம் போலே உலகத்தில் அடங்காதபடியான அவனுடைய கல்யாண குணங்களைப் பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்க் கொண்டு பாட.-நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும் –
பாபம் போகைக்காகத் தனித்து ஒரு முயற்சி செய வேண்டா; பால் குடிக்க நோய் தீருமாறு போலே நம்முடைய பாபங்கள் தாமே நசித்துப் போம்

—————

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–
7-10-6-

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை –இவன் தான் போக்கப் பார்க்கும் அன்று அன்றோ, புதுப் புடவை அழுக்குக் கழற்றுமாறு போலே சிறிது கிடக்கச் சிறிது போவது?
அங்ஙன் அன்றிக்கே, வரம்பில் ஆற்றலை யுடை இறைவன் போக்கும் அன்று வாசனையோடே போமே அன்றோ?

அங்கு –இவன் விரையா நின்றான், உடையவன் வந்து கைக் கொள்ளானோ என்று இருக்கிற அளவிலே, தூணிலே தோற்றினாற்போலே தோற்றினான் ஆயிற்று. -குண்டின புரம் -ருக்மிணி தேவி சந்நிதி உண்டு –தாருகன் தேரோட்டி –அங்கே அவன் வீயத் தோன்றியது போலே -மடுத்தூதிய சங்கு ஒலி கேட்டு மகிழ்ந்தாள் –இதனால், ‘விரும்பினவர்கள் விரும்பும் சமயத்திலே வந்து தோன்றுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.-

நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரமது –பிரகாசியா நிற்கச் செய்தேயும் கண்களுக்கு இலக்கு ஆகாதபடி இருக்கை அன்றிக்கே,‘இவன் நமக்கு உளன்’ என்று அச்சந் தீரும்படி கண்களாலே கண்டு அனுபவிக்கும்படி நிற்கிறஅழகிய திருவாறன்விளையாகிற மஹா நகரத்தை.-உள்ளித் தொழுமின் தொண்டீர்! –-‘தாம் அடிமை செய்ய நினைக்கிறாகில் ‘உள்ளித் தொழுமின்’ என்கிற பரோபதேசத்துக்குக் கருத்து என்?’ என்னில்,
இவர்க்குச் சுவானுபவந்தான் பரோபதேசத்தை ஒழிந்து இராது; நெஞ்சினை விளித்ததோடு ‘தொண்டீர்’ என்றதனோடு வாசி இல்லை.நெஞ்சு போல்வாரை தொண்டீர் -என்கிறார் -சுய அனுபவ ஹானி இல்லையே –

————-

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே
.–7-10-7-

திருவாறன்விளையே பிராப்பியம் என்னா நின்றீர்; அவன் அன்றோ பிராப்பியன்?’ என்ன,
‘அன்று என்ன வல்லேனோ? என் சித்தாந்தம் இருக்கும்படி கேட்கலாகாதோ?’ என்கிறார்.
‘உபாசனத்தின் பலமாய் வருமவை யெல்லாம் பிராப்பியத்திலே சேர்ந்தனவாகக் கடவன;(ஆஸ்ரயண பலமான அர்ச்சிராதிகதி தொடக்கமான எல்லாமே ப்ராப்ய அந்தர் கதம் தானே )-அன்றிக்கே,-‘சாத்தியத்தின் வளர்சிக்கு உடலாய் வருமவை யெல்லாம் பலத்துக்கு உடலாகக் கடவன,’ என்னுதல்,-ஆகையாலே, பிராப்பிய பூமி அந்தத் தேசமே; அங்கே கொடு போய்ச் சேர்க்கும் கடகன் அவன்;-இது என் சிந்தாந்தம் இருக்கும்படி’ என்கிறார்.

‘அவனுக்குக்கூடப் பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்குமாயிற்று.
ஸ்ரீ வைகுந்த நாதன் இத்தை பிராப்யம் என்று அன்றோ உகந்து நித்ய வாசம் செய்கிறான் –சரண் – அவன் கடகன்; திருவாறன்விளையே பிராப்பியம்.-பிராப்பியனானவன் வந்து எழுந்தருளி யிருக்கும் தேசம் ஆகையாலே அவனுடைய சம்பந்தத்தாலே
அத் தேசமும் பிராப்பியம் என்கைக்குத் தட்டு இல்லை.-ஓர் அறப் பெரியவன் உபாயமாய்ப் பலத்தைக் கொடுக்கிறவனாக வேணுமே: ஆகையாலே, அவன் உபாயம்; அத் தேசம் பிராப்பியம்.-அன்றி மற்று ஒன்று இலமே –இங்ஙன் அல்லது உபேய உபாயங்கள் மாறாடக் கடவோம் அல்லோம்.

———–

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே
.–7-10-8-

அவனைப் பார்த்தால் தானும் அல்லாதாரைப் போன்று புறம்பாய்க் கடக்க நிற்கும்படியாய் அன்றோ சம்பந்தம் இருக்கும்படி?-ஆகைச் சுட்டி அன்றோ பிரணவத்தில் நடுப் பதம் கிடக்கச் செய்தே அன்றோ திரு மந்திரத்தில் நடுப் பதம் ஜீவிக்கிறதும்?திருமந்திரத்தில் நடுப்பதம் ‘நம:’என்பது, ‘இத்தால் (உகாரத்தால்) தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது.’
‘நமஸ்ஸூ, ந என்றும், ம: என்றும் இரண்டு பதம்.’ ‘ம:என்கிற இத்தால் தனக்கு உரியன் என்கிறது. ‘ந’ என்று அத்தைத் தவிர்க்கிறது.’-65-
‘ஆக, நம: என்கிற இத்தால், தனக்குரியன் அன்று என்கிறது,’
ஈஸ்வரன் தனக்கே யாயிருக்கும்; அசித்துப் பிறர்க்கே யாயிருக்கும்;
ஆத்துமா தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருக்கும் என்னும் முற்பட்ட நினைவு;
அங்ஙனன்றிக்கே அசித்துப்போலே தனக்கேயாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமஸ்ஸால்’ –91.

ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் –துதிக்கை முழுத்தின இடரே அன்றோ? நீண்ட கை குறுகும் அளவுமன்றோ பார்த்து நின்றது?இவன் கை விட்டால் கைக் கொள்ளா நின்றானித்தனை அன்றோ?அன்றிக்கே, ‘நம் காரணமாகச் சர்வேஸ்வரனுக்கு ஒரு தாழ்வு வருகிறதோ?’ என்னும் இடராதல். என்றது, இவன் இப்படி வருந்த அவன் காத்தபடி அழகியதாய் இருந்தது! இவனையோ நாம் இப்படிக் காப்பவன் என்று நினைத்திருந்தது?’ என்று உலகத்தார் இவனை இப்படி நினைக்கின் செய்வது என்?’ என்று துன்புற்ற துன்பத்தைத் தெரிவித்தபடி.-இரண்டற்கும் இடர் வாராதபடி
கரையிலே கொண்டு ஏறி, பின்னர் முதலை வாயினைக் கிழித்து யானையின் இடரை நீக்கினானாயிற்று.

இங்கே, ‘இராச புத்திரனைச் சிறையிலே இட்டு வைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலுஞ்சோறும் இடுவாரைப் போலே காண்,’ என்று இதற்குப் பட்டர் அருளிச் செய்வர். இரண்டும் மோட்சத்தைப் பெற்றதே! முதலை சாப மோட்சமும், ஸ்ரீகஜேந்திராழ்வான் சாக்ஷாத் மோட்சமும் பெற்றமையைத் தெரிவித்தபடி.

பிரான் –யானையின் இடரைப் போக்கின இதுவும், அதற்கு அன்றித் தமக்கு உதவி செய்தானாக நினைத்திருக்கிறார் காணும் இவர்.-இவ் வெண்ணத்தை உடையவனாகை அன்றோ ஒருவன் வைஷ்ணவன் ஆகையாவது? என்றது,-அநுகூலரிலே ஒருவனுக்கு ஒரு நன்மை உண்டானால் அது தன்னதாக நினைத்திருக்கையும் கேடு வந்தால்
அதனைத் தனக்கு வந்ததாக நினைத்திருக்கையுமாகிற இவ்விரண்டும் உண்டானால் அன்றோ வைஷ்ணவத்துவம் உண்டாயிற்றாவது?’ என்றபடி.

சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ –இவன் உதவாத அன்று அவ் யானைக்கு உள்ள இடரைப் போன்று போருமாயிற்று.-அத் தேசத்தை அடையாத போது சர்வேஸ்வரனுக்கு உண்டான இடரும்.
அவன் வந்து தன் ஆதரம் எல்லாம் தோன்ற வசிக்கின்ற அழகிய பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையைக் கிட்டி-வலஞ்செய்தல் முதலானவற்றைச் செய்யக் கிட்டுமோ?

தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே –அப்போது தீவினை உள்ளத்தின் சார்வு ஆகாது.
‘ஒளியும் இருளும் சேர்ந்து இருத்தல் உண்டோ?’ என்றது,‘அவன் வந்து நித்திய வாசம் செய்யத் தீவினை ஒதுங்க இடம் உண்டோ?’ என்றபடி.-

————–

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.
–7-10-9-

‘எனக்கு ஸ்ரீவைகுண்டமும் திருவாறன்விளையும் இரண்டும் கிடைப்பதானால், ஸ்ரீவைகுண்டத்தை விட்டுத் திருவாறன்விளையே அமையும் என்னும் என் நெஞ்சம்’ -அங்கு உள்ளாரும் வந்து விரும்பும் திருவாறன் விளை யமையும் -.-மேவி வலஞ்செய்து –அத் தலத்தை நான் சென்று அடைந்து அநுகூலமான கைங்கரியத்தைச் செய்து-கைதொழக் கூடுங்கொல் என்னும் என் சிந்தனை –என் நெஞ்சு எனக்கு அடங்கியது அன்று; ‘வேறு ஒன்றிலும் என் மனம் செல்லுவது இல்லை,’ என்கிறபடியே.–பாவோ நான்யத்ர கச்சதி -போலே –

————

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.
–7-10-10-

இது தான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு பரம பதத்தை விரும்பினாலோ?’ என்ன,-‘அதனை. என் நினைவிற்கு வாய்த் தலையிலே-மூலம் – இருக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக் கொள்வது’ என்று இங்ஙனே அருளிச் செய்வர் சீயர்.
அன்றிக்கே,-‘நீர் திருவாறன்விளையை பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் ஸ்வதந்திரன் அல்லனோ?-அவன் பரம பதத்தைத் தரிலோ?’ என்ன,
‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;
புருஷார்த்தத்தைக் கொடுப்பவன் அல்லனோ? புருஷன் விரும்பியதனை யன்றோ கொடுப்பது?

யாரேனுமாகப் புக்காரை எல்லை இல்லாத ஆனந்தத்தை யுடையவர்களாகச் செய்யும் தேசம் ஆதலின், ‘சிந்தை, மகிழ் திருவாறன் விளை’ என்கிறார்.-இதனால், பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.

தீர்த்தனுக்கு அற்ற பின் –அவன் தன்னுடைய இனிமையின் மிகுதியாலே எனக்குப் புறம்பு உண்டான பற்றைத் தவிர்த்துத் தனக்கே அநந்யார்ஹனாம்படி செய்து கொண்ட அன்று தொடங்கி; உஜ்ஜீவிக்கப் பண்ணின அன்று தொடங்கி; நடுவே உஜ்ஜீவியாதே கிடந்து போந்ததே பல காலம்.விசேஷ கடாக்ஷத்துக்கு முன்புள்ள காலம் -உகாரார்த்தம் அர்த்தம் அறிந்த பின்பு -உ ஜீவியாத காலம்-

———

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே
.–7-10-11-

தீர்த்தன் –இன்னார்க்குத் தீர்த்தன் என்னாமையாலே தன்னினின்றும் வேறுபட்டவர்க்கு எல்லாம் தீர்த்தன் ஆயிற்று.-தீர்த்தமாவது,-தான் பரிசுத்தமுமாய், தன்னைத் தீண்டினாரையும் பரிசுத்தராம்படி செய்யுமதாயிற்று.-இத்திருவாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களால் ஸ்லாக நீயர் என்கிறார் –மஹீஷிகளை ஸ்நேஹித்து கொண்டாடும் தசையில் அவர்களுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணினார்களாகச் சொல்லுவார்கள் -நித்ய ஸூ ரிகள் மஹீஷிகளை கொண்டாடி இருக்கும் போது ஆகிறது -தாங்கள் கைங்கர்யத்தில் இழிந்தால் எடுத்துக் கை நீட்டும் போது-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading