ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியானதொகுப்பு–-ஸ்ரீ திருவாய் மொழியின் தசாவதாரம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

கர விசும்பு எரி வளி நீர்நிலம் இவை மிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற
பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே–1-1-11-இவை பத்தும் பரன் அடிமேல் சமர்ப்பிக்கப்பட்டன-வீட்டை விளைக்கும் என்றபடியாய், மோக்ஷத்தைக் கொடுக்கும்-

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து, ஓர்த்த இப் பத்தே–1-2-11-சேதனர்க்கு ஹிதமாவது – நன்மையாவது ஏது என்று நிரூபித்துச் சொல்லப்பட்டவை;-ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது –

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே
–1-3-11-ஸ்ரீ நித்திய ஸூரிகளோடு ஒத்த உயர்வினையுடையராய்த் தங்களுடைய பிறவியாகிற விலங்கு அறப் பெறுவர்கள்-ஸ்ரீ ஆதி வாஹிகரோடே விரஜையிலே சென்று ஸூஷ்ம சரீரமும் விதூநம் நீங்கப் பெறுவர்-த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’
என்கிறார்.

அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே–1-4-11-
சப்த மாத்திரம் அப்யஸிக்கவே -‘சொற்களை மாத்திரம் கற்றலே அமையும், திருநாட்டினைப் பெருகைக்கு,-சங்குசிதமான- குறைவான நிலை போய், பரமபதத்தில் சென்று, தன் ஸ்வ ரூபத்தைப் பெற்று –விஸ்த்ருதன் -விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம்,

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-
அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில் தூது விட்டு, ஸ்ரீ இறைவன்-சம்ஸ்லேஷ உன்முகன் ஆனவாறே வந்து காட்சி அளித்தவாறே அயோக்கியன் -‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-உபதேசம் இல்லாமலே நிரபேஷமாக- -சம்சார சம்பந்தம் அற்று ஸ்ரீ பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப் பெறுவர்கள்

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஓடு விக்குமே–1-7-11-
பிராப்தி பிரதிபந்தகங்களை பலத்திற்குத் தடையாக உள்ளவற்றை உன்மீலிதமாக்கும்- வேரோடு அழித்து விடும்-சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் வேறு இடத்திற் சென்று சேரினும் –மறுமுட்டப் பெறாதபடி-தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’ அல்லாதனவாகக் கெடும்-

நீர் புரை வண்ணன், சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து, ஓர்தல் இவையே–1-8-11-அவனுடைய ஆர்ஜவ குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து- சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை நினைந்து, அத்தால் இழக்க வேண்டாதபடி அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்து அருளிச் செய்யப் பட்டவை – சம்சாரிகள் ஓரப்படுமவை என்று கூறலுமாம்.-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–பொரு
-என்று ஒப்பாய் ஒப்பாவது -சேருகையாய் -சேரும் என்றபடி –தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்-ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு இது கற்றார்க்கு முதல் அடியிலே உண்டாம்

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே–1-10-11-
தணிவு – முயற்சி அற்று இருத்தல்;
அதாவது, ‘வரில் போகடேன், கெடில் தேடேன்’ என்றிருக்கை அன்றி, சிரத்தை மாறாமல் கற்பராகில் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான ஸ்ரீ பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்-‘ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே,-ஞானமாகில் பகவத் விஷயத்தைப் பற்றியல்லது இராமையாலே, இதனைக் கற்க,-இதற்குப் பலமாகத் தொண்டினை இது தானே தரும்.-இனி, இதற்குக் கல்வி தானே பயன்’ என்று பொருள் கூறலும் ஒன்று.

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–2-1-11-
இவ்விருப்பை விட்டுக் கண்ணால் கண்டார் அடங்கலும் ஸ்ரீ பகவானைப் பெற்றமையால் களிக்கும் நித்திய விபூதியை விடாமல் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்கள்.‘கண்டீர்’ என்று கையெழுத்துக் கூப்பிடுகிறார்.‘திண்ணன்’ என்றது, -ஸூ நிச்சிதம் -ஐயமின்மையைக் குறிக்க வந்தது.

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே–2-2-11-
இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது –அபர தேவதைகள் பக்கல் – இறைவர் அல்லாதாரை- ஸ்ரீ பரத்வ புத்தி பண்ணுகையும் இறைவர் என்று எண்ணுதலும், ஸ்ரீ பர தேவதை பக்கல் -ஸ்ரீ இறைவனை -பரத்வ பிரதிபத்தி பண்ணாமையும் -ஸ்ரீ இறைவன் என்று எண்ணாமையும். இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-
அவன் பக்கலிலே நிக்ஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும் நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே, நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.-ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து, ‘இதர உபாயங்களுக்கு அனுஷ்டாதாக்கள் பலராய் இருக்க, இதற்கு அநுஷ்டாதாக்கள் மிகச் சிலராய் இருத்தற்குக் காரணம் யாது?’ என்று கேட்க, ‘உலகத்தில் இருந்ததே குடியாக அனைவரும் சமுசாரிகளாக இருக்க, அதில் நாலிரண்டு பேர் உத்தம ஆஸ்ரமிகளானால் சமுசாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சந்யாசிகளுக்கு ஒரு அபகர்ஷமுமே உண்டோ?
சுவர்க்க அனுபவத்துக்கு ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களைச் சாதனமாகச் சாஸ்திரங்கள் விதிக்கின்றன; ஓர் ஊரில் ஒரவனன்றோ யாகம் செய்தான் என்று கேள்விப்படுகிறோம்? ஆதலால், இதற்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது?’ என்று ஸ்ரீ நம்பிள்ளைக்கு ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தார் –

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11
-பித்ரு தனம் -தமப்பன் செல்வம் புத்திரனுக்குக் கிடைக்க வேண்டியது முறையாமாறு போன்று, இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவர்-‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே–2-5-11
-‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்-இவருடைய அனுபவத்தைப் பரமபதத்திலே அனுபவிக்கப் பெறுவர்.-

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத் தன்மையாலே அவர்கள் ஸ்ரீ பகவதீயர் -ஸ்ரீ பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும–2-7-13-
ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளோடே சேர்த்து விடும்;-‘இத் திருவாய்மொழியின் சம்பந்தந்தானே ஸ்ரீ கேசவன் தமராக்கி விடும்,‘

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-
இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்-ஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார்-

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே–2-9-11-
‘தனக்கேயாக வேணும்’ இவர் பிரார்த்தித்தபடியே இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்திற்குத் தகுதியான-அனுரூபமான பேற்றினைச் செய்து கொடுக்கும்.

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே–2-10-11-
அருளைக் கொண்டே ஸ்ரீ பரம் பொருளை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘அருளையுடையவன்’ என்கிறார்.
அது செய்யுமிடத்துச் சம்சார சம்பந்தத்தை வாசனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும்.-ஒரு ஞான லாபத்தைப் பண்ணித் தந்து விடுதலே அன்றி, அர்த்த கிரியாகாரியாய் இருக்குமாதலின், ‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து அருளிச் செய்கிறார்-

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–
அராஜகமான தேசத்திலே ராஜ புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே , ஸ்ரீ அழகர் திருவடிகளிலே செய்யும் கைங்கர்யத்தில் அந்வயிப்பித்துப் பின்பு தத் விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார்,’

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-
கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.-இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று;‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்ற போதே ஸ்ரீ ஈஸ்வரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான்.‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின், பாதிதாநுவ்ருத்தியாலே அருளிச் செய்கிறார்.-ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே?-இவரோடு சம்பந்த முடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-
ஸ்ரீ ஆழ்வார் பிரார்த்தித்த படியே ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்யப்பெறுவர்,’-கைங்கரியத்தை மநோ ரதித்து விடுகை அன்றி இவருடைய மநோ ரதமே மநோ ரதமாக
கைங்கரியமாகிற சம்பத்தைப் பிராபித்து அனுபவிக்கப் பெறுவர்கள்.-இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.-

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே–3-4-11-
நித்ய கைங்கரியத்தைப் பெற்று, ஸ்ரீ அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’-இவ்வுலகத்தே இருந்து வைத்தும் இப்படி இருப்பதொரு ஞான விசேஷம் பிறந்து அநுசந்திப்பதே!’என்று ஸ்ரீ ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேம அதிசயத்தாலே, அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, ஸ்ரீ சர்வேஸ்வரனை விட்டு இவர்களை மொய்த்து விரும்புவர்-நெருங்கி ஆதரிப்பார்கள்-

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-மஹாபாவத்தை இது தானே-நிஸ் சேஷமாக அடியோடு போக்கும்-ஸ்ரீ பகவானுடைய குணங்களைக் கேட்டால் விக்ருதாராகாமல் -வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹா பாவங்களைச் சாம்பல் ஆக்கும்.-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-ஸ்ரீ பரத்வ ஞானத்துக்கு அடியான -ஸூஹ்ருதம் -புண்ணியமாதல்,சாஸ்திர ஞானமாதல்,
ஸ்ரீ சதாச்சார்ய -நற்குருவின் உபதேசமாதல், ஸ்ரீ பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் -ஸ்ரீ பகவத் கடாக்ஷம் –இவையனைத்தும் இல்லாதார்க்கும் ஸ்ரீ அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே ஸ்ரீ பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்கிறார்.

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே–3-7-11-
பாகவதசேஷத்வ ப்ரதிபாதகமான இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள், இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான சம்சாரத்தைக் கடப்பர்கள்,’

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-
-சப்த மாத்ரத்தாலே இதில் பிரார்த்தித்த படியே அனுபவிக்கலான -பரமபதத்தைச் செல்லப் பெறுவர்-ச ஏகதா பவதி -என்றபடியே -அநேக சரீரங் களைப் பரிக்ரஹித்து அவ்வோ சரீரங்களிலும் கரணங்களும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து பூர்ண அனுபவம் பண்ணலாம் படி தேசத்திலே பெறப் பெறுவர் 

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-
இயல் மாத்திரத்தை அப்யசித்தார்களுக்கு பிறரைக் கவி பாட யோக்கியமான ஜென்மம் இல்லை,’ -ஸ்ரீ நித்ய ஸூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே?-பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?-பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் -செல்வத்திலே நடத்தி,மேலே ஸ்ரீ பரமபதத்திலே சென்றால் தன் ஐஸ்வர்யம் -செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ -தன் ஐஸ்வர்யத்திலே அந்தர்பூதமாம் -அடங்கியதாகும் -படி பண்ணிக் கொடுக்கும் –-என்கிறார்.

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே–4-1-11-
அஃகல் – சுருங்கல்.-இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம் எனப்படுகின்ற ஷூத்ர – சிறிய புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, ஸ்ரீ பகவானுடைய கைங்கரியத்தையே -ஏக போக –புருஷார்த்தமாகப் பெற்றவர் ஆவர்,-காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர் என்றபடி.

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நற் கோவையே–4-2-11-
ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு சத்ருசர் -ஒத்தவர் ஆவர்,’-வானவரோடு நல்ல சேர்த்தி ஆவர்.-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே–4-3-11-
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய உபய விபூதியும் திருவாய்மொழியை அப்யசித்தவர்கள் இட்ட வழக்கு,’ -பூமியிலே ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து. இங்கே இருக்கச் செய்தே ஸ்ரீ பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்-பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே ‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே,
தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று ஸ்ரீ சீயர் உருத்தோறும் அருளிச் செய்வர்.

வல் வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சட கோபன்
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே–4-4-11-
-வீற்று -வேறுபாடு.-சம்சார துரிதமும் போய், ஸ்ரீ பகவத் விஸ்லேஷம் கந்தம் இல்லாத திருநாட்டிலே எல்லாரும்-சிரஸா வஹிக்கும் – தலைமேல் தாங்கும்படி மேன்மையோடே இருக்கப்பெறுவர்,’-இவர் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கற்றவர்களைத் தொழுது ஸ்ரீ நித்ய ஸூரிகள் உய்வு பெறும்படி.
அவன் சேஷித்வத்துக்கு முடிசூடி இருக்குமா போலே இவர்களும் சேஷத்வ சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-
இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் பிரசாத அதிசயத்தாலே -கருணையின் மிகுதியாலே,
சர்வேஸ்வரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி,‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே -பரமாக -பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, பலம் கொடுக்கும்.-‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே–4-6-11-
இவ்வாத்மாவுக்கு ஞாதவ்யமான -அறிய வேண்டிய அர்த்தங்களில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன வெறி விஷயமான இப்பத்தும். வெறி விலக்கு’ என்று ஒரு துறை உண்டு; அதாவது, விரஹ சுரத்தாலே நோவுபடுகிறவளுக்கும் ஆடு அறுப்பது, கள் உகுப்பது, பலியிடுவதாகப் பரிஹரிக்கப் புக, தோழியானவள்,இது ஒரு விஷயத்தில் பாவபந்தம் அடியாக வந்த நோயாயிற்று; மற்று ஒன்றால் அன்று,’ என்று அவர்கள் செய்கின்றவற்றை விலக்குவது.-தொழுது ஆடிப் பாட வல்லார் -பெண் பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’ என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.-துக்க சீலம் இலர்களே – மோஹித்தவிடத்து தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும், பாகவத ஸ்பர்சம் -சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது. அஃது இல்லாமையே ஸ்வபாவமாகவே தன்மையாக உடையர் ஆவர். சீலம் – ஸ்வபாவம் -தன்மை.

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே–4-7-11-
ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி -மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ? அதிலே சிறிது அணைய நின்றாகிலும் இதனைக் கற்க -அப்யஸிக்க வல்லவர்கள்-பாரவசயத்தாலே விக்ருதராய் ஆட வல்லவர்கள் -காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற சம்சாரத்தை -இவ் வுலகத்தைக் கழித்து, எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப் பெறுவர்.–

உயிரினால் குறைஇல்லா உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம்சேர் பிறப்புஅறுத்து வைகுந்தம் நண்ணுவரே–4-8-11-
இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து.-ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு, ச ஏகதா பவதி த்ரிதா பவதி -அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, அவனுடைய சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும் அஃது அடியான தன் சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்- அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி – பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம் படியான தேசத்திலே போய்ப் புகப் பெறுவர். என்றது, ‘பல படிகளாலும் -‘பல சரீரங்களாலும், பல விதங்களாலும்’–விரும்பின விதம்’ ‘விரும்பின திருமேனி’ அடிமை செய்யப் பெறுவர்-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-
அவன் திருவடிகளிலே சொன்ன தமிழ் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;-நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.-அவன் திருவடிகளிலே கிட்டக் கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல்,
அடிசிற்பானை போலே அவன் திருவடிகளிலே நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-
தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.-இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம்.-இப்பொருளில் ‘மற்றது’ என்பது அவ்யயமாய் -இடைச்சொல்.
அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மா நகருக்கு அடைமொழியாக்கி, ‘ மற்றையதான – அதாவது, சம்சாரத்துக்கு -இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான
வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.-அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்;-அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரமபதமும் இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-
 நிரவதிக -தனக்கு மேல் ஒன்று இல்லாததான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப் பெறுவர் -நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,
ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து,
பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்
.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-இத்திருவாய்மொழி கற்றார்க்கு, தேவதாந்த்ரங்கள் -மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையும்,
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல், அபாகவத ஸஹவாசம் -பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல், ஸ்ரீ எம்பெருமான் பக்கல் ப்ரயோஜனாந்தர பரதையுமான –வேறு பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் 

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகும் தம் மூரெல்லாம்–5-3-11-
இருந்த தேசத்தே
அவ் வெம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் –எப்பொழுதும் சேர்ந்திருப்பான்-நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல்,
இவர்கள் இருந்த இடம் தானே ஸ்ரீ பரம பதமாம்-அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-
இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் அஸ்தமியாத -மறைதலில்லாத ஸூரியனும் அஸ்தமியாத மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர்-பிரகிருதி விஸ்லேஷ அநந்தரம் -சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் ப்ராப்யமாக -பேறாக நினைத்திருக்கும்- ஸ்ரீ தேச பிராப்தி – தேசத்தின் சம்பந்தம் தப்பாது –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே ஸ்ரீ வைஷ்ணவர்கள்-மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்
ஸ்ரீ உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே–5-6-11-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப் பெறுவர்கள்-ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய வ்ருத்தி – கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-
இத் திருவாய் மொழியைப் பொருள் அறிவோடு -சாபிப்ராயமாக –கற்குமவர்கள் நித்ய ஸூரிகளுக்கு என்றும் போக்யர் -இனிய பொருளாவர்-ஸ்ரீ நித்ய ஸூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘ஆராவமுதே’ என்கிறார்-

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-
இப் பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யர் -இனியர் ஆவர்-இது கற்றாரை ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள்-

நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே ஸ்ரீ பகவானுடைய குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள்-இவர்களுடைய ஜன்மங்கள் கர்மம் காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே முக்தர்களுடைய சரீரத்தைக் காட்டிலும் ஸ்லாக்கியம்.-ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களின் பொருட்டு அவதரித்த ஸ்ரீ பகவானுடைய அவதாரம் போலே ஸ்லாக்கியம் என்கை –

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே–5-10-11-
ஸ்ரீ பரம பதத்திலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்-சம்சாரத்தைவிட்டு, ஸ்ரீ பகவானுடைய அநுபவத்துக்கு விச்சேதம் -நழுவுதல் ஒரு நாளும் இல்லாத ஸ்ரீ பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே–6-1-11-
-இத் திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் போக்யமாமா –இனிய பொருளாயிருக்குமாறு – போலே, ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் –விரும்பத் தக்க பொருளாவர்

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-
இத் திருவாய் மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்கு ஸ்ரீ பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை-தூது விட்டு, அவன் வரக் கொண்டு ‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் பட வேண்டா-அவன் தானே வந்து மேல் விழ நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11
-இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நாள் தோறும் கௌரவிக்கத் தக்கவராவர்-சம்சாரத்தே இருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று கொண்டாடி இருப்பார்கள்-ஸ்ரீதரனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே-வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11--ஸ்ரீ கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே தூய்மையை யுடைத்தான இப் பத்தும் கற்றார், தம்மைப் போன்றே ஸ்ரீ கிருஷ்ண பக்தராவர்

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-இதனைக் கற்றவர்கள் இதற்குத் தகுதியான அனுரூபமான -கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள்-ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் சேர இருக்க ஸ்ரீ இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே,
விசிஷ்ட வேஷத்தில் சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் –

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-
இத் திருவாய் மொழியினை வல்லவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் அநுபவிக்கின்ற இன்பத்தினை -போகத்தை புஜிக்க பெறுவர் -அநுபவிப்பார்கள்-நீர்மைக்கு எல்லையான ஸ்ரீ திருமலை ஆஸ்ரயணீய -பற்றுதற்குரிய ஸ்தலம்;-மேன்மைக்கு எல்லையான ஸ்ரீ பரம பதம் -அனுபவ அநுபவத்திற்குரிய ஸ்தானம் .

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-
இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு ஸ்ரீ திரு நாடு என்கிறார்.-ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே, நித்யாநுபவம் பண்ணலாம் ஸ்ரீ நிலத்திலே புகப் பெறுவர்.தனி வழி போகாதே, ஸ்ரீ அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான ஸ்ரீ தேசத்தே போய்ப் புகப் பெறுவர்-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே–6-8-11-
இத் திருவாய்மொழியில் ஸ்ரீ ஆழ்வாருடைய ஆர்த்தியை -துன்பத்தை –அனுசந்திப்பார் -நினைத்தவர்கள் தாமும் உருகுவர்-ஸ்ரீ பகவானுடைய குணங்களிலே ஈடுபட்டவர்கள்-குண வித்தகர் – பாசுரம் கேட்டு அழிகையும் பேற்றிலே சேர்ந்த தாகையாலே இது தானே பலம் என்கிறது.

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே–6-9-11-
இப் பத்தும் கற்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கமான கிங்கரர் -தொண்டராவர்-சர்வ ரக்ஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.-சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விட மாட்டாதவர் களாதலின் உரிய தொண்டர்’ என்கிறார்.-குண க்ருத தாஸ்யத்திலும் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே பிரதானம்” -ஸ்ரீ வசன பூஷணம்,

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-
ஸ்ரீ பரம பதத்திலே சென்று தாஸ்யத்தில் அபி ஷிக்தராய் -அடிமையிலே முடி சூடினவராய் அடிமை செய்யப் பெறுவர்கள்-நற் கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து இப் பத்துங் கற்றார் பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.

கொண்ட மூர்த்தி ஓர் மூவ ராய்க் குணங்கள் படைத் தளித்துக் கெடுக்கு மப்
புண்டரிகக் கொப் பூழ்ப் புனற் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே–7-1-11-
இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு இந்திரியங்களால் ஆத்மாவுக்கு வரும் நலிவு போம்

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே–7-2-11-
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல் ஸ்ரீ திரு நாட்டிலே பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், ஸ்ரீ நித்ய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-
இத் திருவாய் மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே மிகவும் அவகாஹித்தார் -மூழ்கினாரேயாவர்,’ -அடிமைக் கூட்டத்தில் திரு வாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;-அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட் புகுவர் என்னுதல்.

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-
இத் திருவாய் மொழியைக் அப்யசித்தவர்களுக்கு இது தானே விஜயத்தைக் கொடுக்கும்-எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்-ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக்கொடுக்கும்-கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்-பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ –முமுக்ஷூப்படி.

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே–7-5-11-
இத் திருவாய் மொழி அப்யசித்தார் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்-ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான ஸ்ரீ பரமாத்மாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவராய் இருப்பர்-

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டி சைத்துக் கவரி செய்வர் ஏழையரே–7-6-11-
இத் திருவாய் மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித் ஸ்ரீ திருப் பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,-நெடு நாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே–7-7-11-
இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் பகவத் விஸ்லேஷத்தால் கிலேசப்படாதே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடே -ஒரு கோவையாய்-உருவு வெளிப் பாட்டாலே நோவு படாமல்-கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ 

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே–7-8-11-
இத் திருவாய் மொழியை யதா சக்தி -தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார் என்றைக்கும் கிருத்தியர்-அவர்களுக்கு இவ் வாத்மா உள்ளதனையும், ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா;-ஸ்ரீ ஆழ்வார் பரிக்ரஹம் – அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும்.-என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே–7-9-11-
இத் திருவாய் மொழி, ஏதேனும் ஒரு படி சொல்லிலும் ஆனந்தத்தை உண்டாக்கும்-இவர் தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஸ்ரீ ஈஸ்வரன் இவர்களைக் கடாஷிப்பது? இல்லையாகில், இவர் தம்மைப் போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய் அனுபவிக்கப் பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற் றத்தனை-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-
இத் திருவாய் மொழி கற்றவர்கள் ஸ்ரீ அயர்வறும் அமரர்களுக்குச் ஸ்லாகிக்கத் தக்கவர்கள்,-நாள் தோறும் பவித்ர பூதர் -தூயர் ஆவார்’ என்று ஆதரித்துக் கொண்டு போந்து. தங்கள் மஹிஷிகளை -மனைவி மார்களைச் ஸ்னேகித்துக் கொண்டாடும் தசையிலே சொல்லுவார்கள்.

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-இதனை அப்யசிப்பார்க்கு -கற்கின்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனை அடைந்து உஜ்ஜீவிக்கலாம்

பாத மடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையு மோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-
‘இத் திருவாய் மொழி வல்லார் அவித்யாதி சகல தோஷங்களும் –அறிவின்மை முதலிய எல்லா குற்றங்களும் நீங்கி-இஹ லோக இவ் உலகத்திலும்-பர லோகங்களிலும் மேல் உலகத்திலும்
தாங்களே கிருதக்ருத்யர் ஆவார் -நான் எல்லா அடிமைகளும் செய்வேன் -என்று குறைவு அற்று இருப்பார்கள் –ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டா-உபய விபூதியிலும் தாங்களே பிரதானர் -முதன்மை பெற்றவர்கள் ஆவார்கள்

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-
இத் திருவாய் மொழி அப்யசிப்பார் -கற்பவர்கள் அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார்-ஸ்ரீ சர்வேஸ்வரன் தனிமைக்கு பரிய ஒருவரைக் கிடைக்காத இத் தேசத்தில் பிறவார்கள் ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப் பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-
இத் திருவாய்மொழியை அப்யசிப்பார்க்கு -கற்றவர்கட்கு இது தானே முதலில் ஸ்ரீ பரம பதத்து ஏறக் கொடுபோய் பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும்-அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே இப் பத்து தானே முந்துற ஸ்ரீ பரம பதத்தைக் கொடுத்து-பின்பு சம்சாரம் ஆகிற மகா நாடகத்தை அறுக்கும் –

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-
இத் திருவாய் மொழி வல்லார் தாம் பட்ட துக்கம் படாதே-இஹ -இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே-அவனைப் பெற்று -ஸ்ரீ பகவத் அனுபவம் பண்ணி-எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர்

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11-
இத் திருவாய் மொழி கற்றவர்களை இது தானே ஸ்ரீ திரு நாட்டில் கொடு போய் விடும்-சம்சாரத்தில் இதனைக் கற்பவன் அப்யசிப்பான் – ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு -ஆச்சர்யப் பட்டு-
சர்வாதிகமான -எல்லா உலகங்கட்கும் மேலான ஸ்ரீ பரம பதத்தில் கொடு போய் வைக்கும் -என்றது-மாயக் கூத்தா -என்ற ஸ்ரீ திருவாய் மொழியில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து-ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும்

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-
இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் -இப் பத்துக்கும் பிறவிக்கும் சஹா நவஸ்தா லக்ஷண -ஒரே இடத்தில் இருக்கக் கூடிய தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி 

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்துள் இப் பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-
இப் பத்தும் கற்றாரை-தம்மை விஷயீகரித்தாப் -அங்கீகரித்தாப் போலே விஷயீகரித்து -அங்கீகரித்து
தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்ளும்-ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே அருள் செய்து
தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் –இத் திருவாய் மொழி அப்யசித்தாருக்கு -கற்றார்க்கு தாம் பெற்ற பேறு என்கிறார் –

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -தகுதியான கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-
இத் திருவாய் மொழி வல்லார் இதில் சொன்ன ஸ்ரீ பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலைப் பெற்று-
ச பரிகரமாக –-பெண்டு பிள்ளைகளோடு வாழப் பெறுவர் என்கிறார்

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11-
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார் -கற்பவர்கள் எனக்கு ப்ரியகரர் -பிரியத்தை செய்கின்றவர்-என்கிறார்-இதனைக் கற்பதற்கு அப்யசிக்கைக்கு ஈடான தகுதியான தன்மை உள்ளவர் பிறவி தொடக்கி நமக்கு ஸ்ரீ நாதர்

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-
இத் திருவாய்மொழி கற்றார் அவனை நிரந்தரமாக -எப்பொழுதும் நினைக்கப் பெறுவார் என்கிறார்-ஆஸ்ரித அடியவர்கட்கு ஸூலபன் ஆனவனுடைய திருவடிகளை ஹ்ருதயத்தில் மனத்தால் நிரந்தரமாக –எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுவார் இத்தனை போதும் இவர் தாம் -இவற்றைப் பெற வேண்டும் -என்னும் அபேஷையோடே ஆசையோடு திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்-திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்-தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும் உலாவும்படி காண வேண்டும்
ஸ்மிதம் புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும் என்று ஆசைப் பட்ட இவருக்கு
அப்போதே கிடையாமையாலே இவற்றைப் பெற வேண்டும் என்னும் மநோ ரதம் -எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று-இதனைக் கற்றவர்களுக்கும் அப்யசித்தவர்களும் -இந்த மநோ ரதம் -எண்ணம் மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்-

சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-
இத் திருவாய் மொழி கற்றார் ஸ்ரீ பரம பதத்தே செல்லுதல் ஆச்சர்யம் அன்று –ப்ராப்தமே தக்கதே -இயல்பாகவே இருக்கும் –-–என்கிறார் –இப் பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது-யுக்தி மாத்திரம் -இப் பாசுரங்களை ஒரு கால் சொல்லுதல்-பாட தாரணம் -இவற்றைப் பாடம் செய்தல்-அர்த்த அனுசந்தானம் -இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் – என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பிராப்தம் – தாய பாகமாக அடைய வேண்டியதாகவே இருக்கும் அன்றோ –

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-
இத் திருவாய்மொழி தன் போக்யத்தையால் -இனிமையினால் ஸ்ரீ நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் –
ஹ்ருதயம் ஈர்க்கப் பண்ணும் -என்கிறார்-அன்றிக்கே-ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு ஏறான ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11-
இத் திருவாய்மொழி பாசுரங்கள் ஹிருதயத்திலே -நெஞ்சில் படில் ஆரேனுமாகிலும் தரியார்-என்கிறார்-என்னுடைய ஆர்த்த நாதத்தாலே –துக்க ஒலியைக் கேட்டு நாடு அழியலாகாது என்றவர்க்கு பின்னையும் நாட்டில் உள்ளார்க்கு ஸைதில்யமே -நலிந்து வருந்துவதே பலித்து விட்டது-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார்க்கு – கற்பார்க்கு பிறவி முடிந்து-அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –இங்கே பிறக்க இருக்காமல்- ஸ்ரீ பகவான் உடைய குணங்களை அனுசந்திக்கும்
அனுசந்தானம் சாத்மிக்கும் -பொறுக்கக் கூடிய தேசத்திலே புகுவார்கள் –என்கிறார் –

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11- பிரிவுக்கு அடியான -சம்சார துரிதத்தை –பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்துக் கொடுக்கும் –ஸ்ரீ பகவானைப் பிரிதல்-விஸ்லேஷம் – ஆகிற நோயை அறுக்கும் -என்றது-கலந்து பிரிந்து துக்கம் பட வேண்டா-கலந்து பிரிந்து திர்யக்குகளின் காலிலே விழுந்து கிளேஸிக்க வேண்டா –
விஸ்லேஷம் -பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-
ஐஹிக ஆமுஷ்மிக சகல போகங்களையும் புஜிக்கப் பெறுவர்-இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும் எல்லா இன்பங்களையும் அனுப்பிக்கப் பெறுவர் –சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–
9-9-11–அவன் பக்கல் சாபல்யம் -ஆசை உடையார் இத் திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் -ப்பாசுரத்தை அப்யசிப்பாருக்கு -கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –என் சொல்லி உய்வன் -என்று-ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –என்கிறார்-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-
உங்களுடைய துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக வேண்டி இருக்கில் இத் திருவாய் மொழியில் ப்ரீதி பூர்வகமாக -முன்னாகச் சொல்லிக் கொண்டு அவன் திருவடியைப் பற்றுங்கோள்-ஆஸ்ரயியுங்கோள் –இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்-தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-
பரம உதாரமான -மேலான வண்மையை உடைய ஸ்ரீ திரு மோகூருக்கு கொடுத்த இத் திருவாய் மொழியை அப்யஸிக்க கற்க வல்லார்க்கு துக்க நிவ்ருத்தி யுண்டாம்–சரீர அவசானத்திலே –உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே வழித் துணை இல்லை என்று கிலேசப்பட – வருந்த வேண்டாதபடி ஸ்ரீ காளமேகம் வழித் துணையாம்-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ திரு நாட்டில் உள்ளாருக்கு போக்யர் -இனியர் ஆவார்-அங்குத்தை அப்சரஸ் ஸூக்களுடைய ஆதரத்துக்கு விஷய பூதராய் – விருப்பத்துக்குப் பொருளாக இருப்பார்-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே இது கற்றாரும் அவனோடு நித்ய சம்ச்லேஷம் -நீங்காத கலவியைப் பெறுவார் -அவனை பசு நிரைமேய்க்க போக வேண்டாம் என்று நிஷேதித்த -விலக்கிய பாசுரமான இத் திருவாய் மொழியும் மற்றைய திருவாய் மொழியைப் போன்று ஒரு திருவாய் மொழியே -என்று விஸ்மிதராகிறார் – 

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-
இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகள் ஸூலபமாம்-அவ்வருகு போய் ஓன்று தேடித் பற்ற வேண்டாதபடியான பற்றாகும்-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11–அப்யசித்தவர்களை -கற்றவர்களை ஸ்ரீ ஆழ்வார் தம்மைப் போலே பகவான் உடைய விஷயீகார பாத்ரம் -திருவருளுக்குப் பாத்ரமாக்கும்

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-
-செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே-இத் திருவாய் மொழியை கற்க -அனுபவிக்க -உரியவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் ஆவார்கள் என்கிறார்-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
மஹான் அஹங்காரம் இவை முதலானவற்றின் விஷயமான இத் திருவாய் மொழி திரு மால் இரும் சோலை மலையிலே சொல்லிற்று –ஸ்ரீ திருமலை விஷயமாய ஆயிற்று சொல்லிற்று –
ஸ்ரீ அழகரைச் சொன்ன இடம் உண்டாகில் அதில் கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று-ஸ்ரீ திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
இத் திருவாய் மொழியினை அப்யஸிக்க -கற்க வல்லவர்கள் இட்ட வழக்கு பரம பதம் –ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று அங்கு உள்ளார் சொல்லுவது-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-இத் திருவாய் மொழியைக் கற்றவர்-அப்யசித்தவர்கள் – நித்ய ஸூரிகளோடு ஒப்பர்-அப் பரம பதத்திலே ஸ்ரீ பகவான் உடைய குணங்களை அனுபவித்து அவற்றிலே வித்தராய் -ஈடுபட்டவராய் அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–
-பரம பக்தியாலே –
ஸ்ரீ பகவானுடைய பிரசாதம் -திருவருள் பாதியும் தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு
சரீரத்தின் அவசானத்திலே -முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின – கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற -அனுக்ருஹீதையான -பக்தியினுடைய இடத்திலே ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க அது அடியாக பிறந்த
பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது – இதனை அறிந்தவர்கள்-சம்சாரத்திலே -இவ் உலகத்தில் பிறந்து வைத்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒப்பர் – ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம் இவர்களுடைய பிறப்பும் –

—————

கம்பர் தெய்வப் பனுவலான திருவாய்மொழியைக் ‘கண்ணன் உண்ணும் அறுசுவை உணவு’ (7) பக்திக்கு மூலப்பனுவல் (8) திருமாலின் 11ஆவது அவதாரம் (78), நான்கு வேதத்தின் சாரம் (71) எனப் பலவாகக் காண்கின்றார்.

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான்
சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-திருமால் அமுது செய்து அருளும்படி பரிமாறுபவர்

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-ஆஸ்திகர்களுடைய பக்திக்கு காரணமுமாம்-மற்றத் திவ்ய பிரபந்தங்களும் மூலம் -முதல் நூல்-முமுஷுக்களுக்கு முத்தி சாதனம்

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளும்-மேலோட்டமாக பார்ப்பவர் தமிழ் பதிகங்கள் என்பர்கள்-ஆழ்ந்து நோக்குபவர்கள் நான்கு வேதங்களே இவை என்பர்கள்-நிலத்தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -தொண்டர்க்கு அமுதமாய் அருளினான்-

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–-அத்ரி ஜமதக்கினி ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில் சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும் வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும் கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை
வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –திருமாலது பதினொன்றாவதாகிய திருவவதாரமே என்று அறிந்து கொள்ளாத படி-வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்

————————

ஸ்ரீ எம்பெருமானுடைய அவதாரங்களுக்கு என்ன என்ன ப்ரயோஜனங்களோ அவை யெல்லாம்‌ திருவாய்மொழியின்‌ திருவவதாரத்தினாலும்‌ நன்கு தேறுகின்‌ றன வென்றும்‌ அறியக் கிடக்கின்றது. இவ் விஷயம்‌ ஆழ்வாருடைய திவ்ய ஸூத்திகளைக்‌ கொண்டே இங்கு நிரூபிக்கப் படுகின்றது.

1-2--ஸாது பரித்ராண துஷ்க்ருத விநாசனங்கள்‌ -பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாசாய ச  துஷ்க்ருதாம்‌ சம்பவாமி யுகே யுகே -*சாதுசனத்தை லியுங்‌  கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு ஆதியஞ்‌ சோதி யுருவை அங்கு வைத்திங்குப்‌  பிறந்த வேத முதல்வன்‌*-*நண்ணாவசுரர்‌  நவிவெய்த  நல்லவமரர்‌ பொலிவெய்த-பண்ணார்‌ பாடல்‌ இன்கவிகள்‌ யானாய்த்‌ தன்னைத்‌ தான்‌ பாடி”-ஸ்துத்யனுடைய அவதாரம்‌ 
போலேயாயிற்று ஸ்துதியினுடைய அவதாரமும்‌
.”-திருவாய்மொழி யென்றும்‌ ஸ்ரீராமாயண மென்றும்‌ இரண்டு வலிய மதிள்கள்‌ என்று மழியமாட்டாதபடி யன்றோ வுள்ளன, அந்த மதிள்‌களை இவன்‌ அசைக்கவும்‌ முடியாதவனன்றோ-ஆகவே திருவாய்‌
மொழியானது எம்பெருமானுக்குப்‌ பெரிய திரு மதிள்‌ போலே யிருந்து ஸாது பரித்ராணமும்‌ துஷ்க்ருத் விநாசநமும்‌ செய்யுமதென்றறிக.


3-4--மயர்வையறுத்து மதிநலமளித்தல்‌ -1. அஜ்ஞாந நிவர்த்தகத்வம்‌, 2. ஜ்ஞாந ப்ரதத்வம்‌. -3. பக்தி ப்ரதத்வம்‌ ஆகிற. இம் மூன்றும்‌ திருவாய்மொழிக்குமுண்டு. மாறன்‌ சடகோபன்‌ ஒலி புகழாயிரத்திப்‌ பத்து உள்ளத்தை மாசறுக்குமே என்கிற பாசுரத்தினால்‌ அஜ்ஞாந நிவர்த்தகத்வமும்‌ “வண் சடகோபன்‌ தெருள் கொள்ளச்‌ சொன்ன வோராயிரம்‌!” என்ற பாசுரத்தினால்‌ ஜ்ஞாந ப்ரதத்வமும்‌, “குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன, தூய வாயிரத்திப் பத்தால்‌ பத்தராவர்‌ துவளின்‌றியே”' என்ற பாசுரத்தினால்‌ பக்தி ப்ரதத்வமும்‌ திருவாய்‌ மொழிக்கு முண்டென்பது அறியத்தக்கது,

5-எம்பெருமானுக்கு உரிய தொண்டராக்குதல்‌ -எம்பெருமான்‌ நம்மைத்‌ தனக்கு அநந்யார்ஹ சேஷமாக அங்கீ கரிப்பவன்‌ என்பது “வெறித் துளப முடியானே ! வினையேனை உனக் கடிமை அறக் கொண்டாய்‌'' என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ நம்மை எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கு மென்னுமிடம்‌ “தொண்டன்‌ சடகோபன்‌ தெரியச்‌ சொன்ன ஓராயிரத் துளிப்பத்து உரிய தொண்டராக்கு முலக முண்டாற்கே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌-

6-நோய்களறுக்கும்‌ மருந்தாதல்‌ -எம்பெருமான்‌ ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்தா யிருப்பவன்‌ என்னுமிடம்‌ அறிந்தனரெல்லாம்‌ அரியை வணங்கி அறிந்தனர்‌ நோய்களறுக்கும்‌ மருந்தே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌ -திருவாய்மொழியும்‌ ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களையும்‌ உரு மாய்ந்து போம்படி பண்ணு மென்னுமிடம்‌ *தென் குருகூர்ச்‌ சடகோபன்‌ மிடைந்த சொல் தொடை ஆயிரத்துளிப்பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்குமே'” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

7-வானின் மீதேற்றி யருள்‌ செய்தல்‌ -எம்பெருமான்‌ பக்தர்கட்குப்‌ பரமபதத்தை யளிப்பன்‌ என்னுமிடம்‌ “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ நமக்கு ஆற்றல்‌ மிக்கான்‌ பெரிய பரஞ்சோதி புக்க வரியே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.திருவாய்மொழியும்‌ பரமபத ப்ராப்தியைப்‌ பண்ணி வைக்கு மென்னுமிடம்‌ “கோனை வண் குருகூர்‌ வண் சடகோபன்‌ சொன்ன வாயிரத்‌துளிப்பத்தும்‌ வானின் மீதேற்றி யருள் செய்து'” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

6-அருளி யடிக்கீ ழிருத்துதல்‌ -எம்பெருமான்‌ நம்மைத்‌ திருவடிகளின் கீழ்ச்‌ சேர்த்துக்‌
கொள்ளுமென்னுமிடம்‌ “பெருந் துன்பம்‌ வேரற நீக்கித்‌ தன் தாளின்‌ கீழ்ச்‌ சேர்த்து அவன் செய்யும்‌ சேமம்‌” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.-திருவாய்மொழியும்‌ அவன்‌ திருவடிகளின் கீழே சேர்த்து வைக்குமென்னுமிடம்‌-திருமாலா லருளப்பட்ட சடகோபன் சொல்லாயிரத்துளிப்‌ பத்தால்‌ அருளி யடிக் கீழிருத்தும்‌'-என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

9-இன்பக் கதி பயக்குந் தன்மை -எம்பெருமான்‌ தன்னோடு அந்வயித்தவர்களுக்குத்‌ தன்னுடைய அநுபவமாகிற நிரதிசய ஆநந்த யுக்தமான ப்ராப்யத்தைக்‌ கொடுப்பன்‌ என்னுமிடம்‌ “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்‌ தெளிவுற்ற கண்ணன்‌” என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ தன் பால்‌ அந்வயித்தார்க்கு பகவதநுபவ ஆனந்தத்தை யுண்டாக்கு மென்னுமிடம்‌ **வண் குருகூர்ச் சடகோபன்‌ இங்ஙனே சொன்ன வோராயிரத்துளிப்‌ பத்து எங்ஙனே சொல்லிலு மின்‌பம்‌ பயக்குமே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

10-நீராயுருக்குந்‌ தன்மை -எம்பெருமான்‌ தன்னை யனுபவிக்க இழிந்தவர்களை த்ரவ த்ரவ்யமாம்படி உருக்கு வனென்னுமிடம்‌ ““ஊடு புக்கு என தாவியை யுருக்கி யுண்டிடுகின்ற நின்றன்னை” என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ தன்னை யநுபவிக்க இழிந்தாரை நீர்ப் பண்டமாக உருக்கு மென்னுமிடம்‌ “தென் குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்லாயிரத் துள்ளிவை ஒன்பதோ டொன்றுக்கும்‌ மூவுலகு முருகுமே” என்கிற பாசுரத்தினாலும்‌' தோற்றங்களா யிரத்துள்‌ இவையுமொரு பத்தும்‌ வல்லார்‌ ஊற்றின் கண்‌ நுண் மணல் போல்‌ உருகா நிற்பர்‌ நீராயே!” என்கிற பாசுரத்தினாலும்‌ விளங்கும்‌,

ஆக இப்படி பத்து ப்ரகாரங்களாலே எம்பெருமானோடு ஸாம்யத்தை யுடைத்தாகையாலே, வாஸ்யனான அந்த ஸர்வேஸ்வரனுடைய *பத்தினாய தோற்றம்‌!” என்கிற பத்து அவதாரம் போலே “தோற்றங்களாயிரம்‌'! என்கிற இதனுடைய பத்துப் பத்தான ஆவிர்ப்பாவமும்‌-என்று அறியத்தக்கது-எம்பெருமான்‌ லோக ரஷணார்த்தமாக அவதரித்தது போலே திருவாய்மொழியும்‌ லோக ரக்ஷணார்த்தமாகவே அவதரித்த தென்‌றதாயிற்று.
———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading