ஸ்ரீ ஜாபாலி என்ற பெயரில் நான்கு மஹரிஷிகள் இருப்பதை புராண, இதிஹாஸங்களில் காண்கிறோம்.
நாம் இங்கு ராமாயண காலத்து மஹரிஷியான ஜாபாலி குறித்து மட்டும் பார்ப்போம்.ஜாபாலி ராமரைப் பார்த்துக் கூறிய நாத்திக வாதம் வால்மீகி ராமாயணத்தில் மட்டுமே உள்ளது; கம்ப ராமாயணத்தில் கம்பன் இதைச் சொல்லவில்லை.
தசரதரின் அரசவையில் எட்டு ரிஷிகள் இருந்ததாக வால்மீகி ராமாயணம் பால காண்டம் 48ஆம் ஸர்கத்தில் காண்கிறோம். சுயக்ஞர், வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், வசிஷ்டர் போன்றோர் தசரதரின் அரண்மனையில் வசித்து வந்து அவருக்கு ஆலோசனைகள் கூறி வந்தனர்.
பரதன் ராமரை மீண்டும அயோத்திக்கு வருமாறு வேண்டிக் கொள்ள ஆரண்யம் சென்ற போது ஜாபாலியும் பரதனுடன் கூட வே சென்றார்.
அங்கு அவர் ராமரிடம் மீண்டும் அயோத்தி வருவதற்காகப் பல காரணங்களைக் கூறினார். இவையனைத்தும் ராமருக்கும் கோபத்தை உண்டு பண்ணின. ஒரு மஹரிஷியிடம் ராமர் கோபம் கொண்டது இந்த ஒரு தடவை தான் என்பதைப் பார்த்து வியக்க முடிகிறது.
ஏன் ராமர் கோபம் கொண்டார் எனில் ஜாபாலி ராமரிடம் கொண்ட அளவு கடந்த அன்பால் நாத்திக வாதம் பேச ஆரம்பித்தார்.
அதையெல்லாம் செவி மடுத்த ராமர் அஸத்தியத்தைப் பேசும் அவரது ஒரு வார்த்தையைக் கூடத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.
அது மட்டுமல்ல,
“விஷமபுத்தியைக் கொண்ட உம்மை எனது தந்தையார் தமது சேவையில் சேர்த்துக் கொண்டார் என குற்றம் சாட்டுகிறேன். இப்படிப்பட்ட தவறுதலான வழிகாட்டும் புத்தியால் உண்மையை விட்டு விலகும் நாஸ்திகத்தில் நீர் வீழ்ந்து விட்டீர்” என்று கடுமையான வார்த்தைகளையும் ராமர் கூறுகிறார்.
“நிந்தாம்யஹம் கர்ம பிது: கர்தும் த
த்யஸ்த்வாமாஹ்ரிநாத்ய விஷமஸ்த புத்திம்
புத்தயாநயைர்ஏவம் வித்யயா சரந்தம்
சுநாஸ்தீகம் தர்மர்பயாதபேதம் ||
33. aham = I; nindaami = accuse; tat = that; karma = act; kR^itam = done; pituH = by my father; tvam aagR^ihNaat = in taking you into his service; yaH = you; viSamastha buddhim = with your misleading intelligence; charantam = moving; evam vidhayaa = with this type; buddhyaa = of intelligence; sunaastikam = a firm atheist; apetam = fallen; dharma pathaat = from the true path.
“I accuse the act done by my father in taking you into his service, you with your misleading intelligence, a firm atheist fallen from the true path.”
இப்படி ராமரைக் கோபமுறை வைத்த அவர் பேசிய நாத்திக வாதம் என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
ஜாபாலி பற்றி மஹாபாரதம், அநுசாஸன பர்வத்தில் நான்காம் அத்தியாயத்தில் 55வது ஸ்லோகத்தில் ,”அவர் விஸ்வாமித்திரரின் புதல்வர்களில் ஒருவர்” என குறிப்பிடுகிறது.
ஆனால் அவர் வசிஷ்டரிடம் சிஷ்யராக இருந்து பாடம் கேட்டார். (வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் இடையே உள்ள போட்டி, பகையை நினைத்தால் இது சற்று ஆச்சரியமாகத் தான் இருக்கும்!)
வியாஸர் வேதத்தை நான்காக வகுத்து அதர்வண வேதத்தை சுமந்துவுக்குக் கற்பித்தார். சுமந்து தனது சிஷ்யர் கபந்தருக்குக் கற்பிக்க, அவர் அதை இரண்டு பகுதிகளாக்கி தமது இரண்டு சிஷ்யர்களான தேவதர்ஸருக்கும் பத்யருக்கும் கற்பித்தார்.
தேவதர்ஸர் தனது சிஷ்யர்களான மகதர், ப்ரஹ்மபாலி, சௌத்காயனி ஆகியோருக்கு இதைக் கற்பிக்க பத்யர் தமது பங்கிற்கு தான் கற்றதை ஜாபாலி, குமுதர், சௌனகர் ஆகிய மூவருக்குக் கற்பித்தார்.
ஆக ஜாபாலி அதர்வண வேதத்தில் நிபுணர் என்பது தெரியவருகிறது. இந்தத் தகவல்களை விஷ்ணுபுராணம் மூன்றாம் அம்சத்தில் தெரிவிக்கிறது.
வால்மீகி ராமாயணத்தில் பட்டாபிஷேக ஸர்க்கத்தில் (யுத்த காண்டம் 131வது ஸர்க்கம், 60ஆம் ஸ்லோகம்) ராமரின் பட்டாபிஷேகத்தின் போது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆசி கூறிய ரிஷிகள் எண்மர். வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், காத்யாயனர், சுயக்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய இந்த எண்மரில் ஜாபாலியும் ஒருவர். இவர் ராமரின் மீது கொண்ட பேரன்பாலேயே அவர் அயோத்திக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆசையினாலேயே நாத்திகவாதத்தை முன் வைத்தார் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.
ஜாபாலி வாதம் இன்றைய நாஸ்திகர்களுக்கு பெரிதும் பிடித்த வாதம்.
ஓ! ராமா! தனது தேசத்தின் ஒழுக்கங்களில் பற்றுடையவனும் குலதர்மானுஷ்டம் உடையவனுமான் உனக்கு பாமர மனிதனுக்கு ஏற்ற இந்த சமயத்திற்கொவ்வாத புத்தி நிச்சயம் கூடாது. (அயோத்யா காண்டம் அத்தியாயம் 108 ஸ்லோகம் 2)
யாருக்கு யார் பந்து? யாரால் யாருக்கு என்ன ஆக வேண்டும்? ஏனெனில் ஒரு ஜீவன் தனியாகவே பிறக்கிறது. தனியாகவே இறக்கிறது. (3)
ஒ! ராமா! எந்த மனிதன், “இவர் எனது தந்தை,இவள் எனது தாய்” என்று பாசம் வைக்கிறானோ அவன் முழுப் பித்தன் என்று அறி! எவனும் எவனுக்கும் எந்த உறவும் இல்லை. (4)
ஓ! ராமா! ஒரு மனிதன் ஒரு கிராமத்தைக் கடக்கும் போது ஓரிடத்தில் இரவைக் கழிக்கிறான். அடுத்த நாள் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி தனது பயணத்தைத் தொடர்கிறான். அதே போலத் தான் தாய், தந்தை, வீடு, உடைமைகள் எல்லாம்! அவை தங்குமிடமே! புத்திசாலி அவற்றின் மேல் பற்று கொள்வதில்லை. (5,6)
ஓ! புருஷோத்தம! தந்தையிடமிருந்து வந்த அந்த ராஜ்யத்தைத் துறந்து துன்பம் தருவதும் பல பீடைகளையுடையதுமான இதுவரை முன்னோர்களால் அனுஷ்டிக்கப்படாததுமான வக்ர வழியை நீ அனுஷ்டிக்கக் கூடாது. (7)
நகர தேவதையானது ஒற்றைப் பின்னலுடன் உன்னையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். உன்னை பாக்கியம் பெற்ற அயோத்தியில் அபிஷேகம் செய்து கொள். (8)
ஓ! சக்ரவர்த்தி குமாரா! தேவ லோக அரசனான இந்திரனுக்கு நிகராக அயோத்தியில் மிகச் சிறந்த அரச சுக போகங்களை அனுபவி. (9)
தசரதன் உமக்கு உறவினர் அல்லர்; அவருக்கு நீரும் உறவுமில்லை. அரசன் வேறு; நீர் வேறு. ஆகவே நான் சொல்வதைக் கேள். (10)
இவ்வுலகில் தந்தை ஒரு ஜீவனுக்கு நிமித்த மாத்திரமே. ஒருவனுக்கு ருது நீராடியுள்ள தாயால் சேகரிக்கப்பட்ட சுக்கிலம், சோணிதமே முழு முதற் காரணம். (11)
அந்த அரசன் அவர் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார். இதுவே மனிதர்களுக்கு இயல்பு. ஆகவே பொய்யான சம்பந்தத்தால் நீ துன்புற்றுக் கொள்கிறாய். (12)
பொருள், தர்மம் இவற்றில் எவரெல்லாம் பற்றுள்ளவர்களோ அவர்களைக் கண்டு நான் வருந்துகிறேன். மற்றவர்களைப் பற்றி நான் வருந்தவில்லை. ஏனெனில் அவர்கள் இவ்வுலகிலும் துன்பத்தை அடைந்து செத்தும் அழிந்தனர். (13)
இந்த மூட ஜனம் அஷ்டகா சிரார்த்தம் (எட்டாம் நாள் கிரியை), பிதிரு சிரார்த்தம் என்று இதுவே நோக்கமாக அனுஷ்டிக்கிறது. எவ்வளவு உணவு வீணாகிறது என்று நீயே பார்! செத்த மனிதன் எப்படி உண்ணுவான்? (14)
அன்னமானது ஒருவனால் இங்கு உண்ணப்பட்டு இன்னொரு உடலைச் சேருமானால், தூரப் பயணம் மேற்கொண்டு வேறு தேசம் செல்பவனுக்கு இவ்விடத்திலேயே சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். அப்போது அவர்களுக்கு வழியில் கட்டுச்சாதம் தேவையில்லை. (15)
யாகம் செய்; தானம் கொடு; தீக்ஷை மேற்கொள்; தவம் புரி; அனைத்தையும் துற என்று கூறும் இந்த நூல்கள் தானங்களில் ஆசை உண்டு பண்ணுவதற்காக புத்திமான்களால் செய்யப்பட்டவையே! (16)
ஓ! புத்திசாலியே! ஆகவே, இந்த உலகமன்றி பரலோகம் இல்லை என்றே தீர்மானி!! எது கண்களுக்கு புலன் ஆகின்றதோ அதை மட்டும் எடுத்துக் கொள்; கண்ணுக்குப் புலன் ஆகாததை விட்டு விடு. (17)
பரதனால் வேண்டப்பட்ட நீ,உலகத்தார் எல்லோரும் ஒப்புக் கொண்ட முன் சொன்ன நிச்சயத்தை முன்னிட்டு ராஜ்யத்தை ஏற்றுக் கொள். (18)
இப்படி ஜாபாலி நாத்திகர்களுக்குத் தலைவனாக இருந்து அந்தப் பழைய காலத்திலேயே நாத்திகத்தைச் சொல்லி இருக்கிறார். இதை ராமர் தூக்கி எறிந்து விட்டார்.
“அஸத்தியத்தைப் பேசாதீர்” என்று அவரை அடக்கி விட்டார். அவர் மீது சிறிது கோபமும் கொண்டார். ராமரின் பதிலையும் மஹரிஷி ஜாபாலி பற்றிய இதர சில விஷயங்களையும் அடுத்த கட்டுரையில் காண்போம்!
ஜாபாலி ராமரைப் பார்த்துக் கூறிய நாத்திக வாதத்தை, ராமர் வெறுத்து ஒதுக்குவதை வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 109வது ஸர்க்கம் விரிவாகச் சொல்கிறது. இந்த ஸர்க்கம் 40 ஸ்லோகங்களைக் கொண்டது.
அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
ஜாபாலியின் நாத்திக வாதத்தைக் கேட்ட ராமபிரான் தனது சுபுத்தியாலேயே இப்படிச் சொல்ல ஆரம்பித்தார் என்று முதல் ஸ்லோகம் கூறி இயல்பாகவே ராமர் ஆத்திகர் என்பதைக் கூறுகிறது. (இறைவன் ஒரு ஆத்திகன்!)
நீர் சொல்வது செய்யக் கூடாதது (அகார்யம்!), இதமளிக்காதது (அபத்யம்).
ஒருவன் சுசியா அல்லது அசுசியா என்பதை ஒழுக்கம் ஒன்றே உரைக்கின்றது. (சாரித்ரம் ஏவ வ்யாக்யாதி)
ராஜானுஷ்டானம் சத்யம் மட்டுமே தான்! (ராஜவிருத்தம் சத்யம் ஏவ!)
சத்யம் ஏவ பஜேத்! (ஒவ்வொருவனும் சத்யத்தையே சர்வமுமாகக் கொள்ள வேண்டும். சத்யத்தை மேற்கொண்ட நான் அதன்படியே நடப்பேன்!)
பரலோக நம்பிக்கை கொண்டவனாக இருந்து கொண்டு உலக வாழ்வை நடத்துவேன். (ச்ரத்ததான: சன் லோகயாத்ராம் ப்ரவர்த்தயே)
ஒரு புத்திமானானவன் ஜனங்களுக்கு நாத்திகவாதத்தால் சந்தேகப்படுபவனாக எவன் ஒருவன் இருக்கிறானோ அவனுக்கு முகமே கொடுக்க மாட்டான். (நாத்திகவாதியை முகத்தாலும் பார்க்க மாட்டான்!)
கோபத்துடன் (சரோஷம்) இப்படிக் கூறிய ராமரைப் பார்த்து தணிந்த குரலில் ஜாபாலி கூறினார் இப்படி : நான் நாத்திகர்களுடைய வசனத்தைச் சொல்லவில்லை. (அஹம் நாஸ்திகானாம் வசனம் வ்ரவீமி ந). நான் நாத்திகனும் இல்லை. (அஹம் நாஸ்திக: ச ந) எதுவும் இல்லை என்பதும் இல்லை (கிஞ்சன ந அஸ்தி ந). சமயத்திற்கேற்றபடி ஆத்திகனாய் இருப்பேன். (காலம் சமீக்ஷய ஆஸ்திக: பவேய). இச்சமயத்தில் சமயத்திற்கேற்றபடி நாஸ்திகனாய் இருந்தேன். (காலே புன: ஏவ நாஸ்திக: அபவம்)
இப்படி ஒரேயடியாக மாறிய (பல்டி அடித்த) மஹரிஷி ஜாபாலி ராமரை திருப்பி அழைத்துப் போவதன் பொருட்டே தனது வார்த்தைகள் சொல்லப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்.
இப்படியாக ஜாபாலியின் போலி வாதம் ஒரு முடிவுக்கு வந்தது.
அடுத்து ஜபல்பூர் நகரமே ஜாபாலி மஹரிஷியின் பெயரால் அமைந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நர்மதை நதிக் கரையில் ஜாபாலி வெகு காலம் தவம் புரிந்ததாகவும் நாம் காண்கிறோம்.
திருப்பதியில், கோவிலிலிருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் ஜாபாலி தீர்த்தம் என்று ஒரு அழகிய தீர்த்தம் உள்ளது. இந்த இடத்தில் தான் மஹரிஷி ஜாபாலி தவம் செய்து முக்தி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.
இங்கு ஒரு ஆஞ்சனேயர் ஆலயமும் அஞ்சனா தேவி தீரத்தமும் உள்ளன.
திருப்பதியில் உள்ள இன்னொரு பிரசித்தி பெற்ற தீர்த்தமான பாபவினாசன தீர்த்தமும் கூட ஜாபாலி மஹரிஷியுடன் தொடர்பு படுத்தப்பட்டு இங்கு ஜாபாலி தவம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் சிங்கப்பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் இது காடாக இருந்தது. அப்போது ஜாபாலி மஹரிஷி விஷ்ணு எடுத்த நரசிம்ம கோலத்தை இங்கு காண விரும்பியதாகவும் அதன்படி விஷ்ணு அவருக்கு அருள் பாலித்து தன் நரசிம்ம கோலத்தைக் காண்பித்ததாகவும் இந்தத் தலத்தின் தல வரலாறு கூறுகிறது.
இதே போல வட நாட்டிலும் ஜாபாலி மஹரிஷியை தொடர்பு படுத்திக் கூறப்படும் தலங்களும் உள்ளன.
மஹரிஷி ஜாபாலி விஷ்ணு பக்தர் என்பதையும் ராமரின் அரசவையில் இடம் பெற்றவர் என்பதையும் இராமாயணம் மற்றும் புராணங்கள், தல வரலாறுகள் ஆகியவற்றால் அறிந்து கொள்ள முடிகிறது.
பெரும் மஹரிஷிகளில் இடம் பெறும் ஜாபாலி வித்தியாசமான ஒரு மஹ ரிஷி!
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply