துரியோதனனை வென்ற யுதிஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 152-பாஞ்சாலர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பயங்கரப் போர்; பாண்டவப் படைக்கு மத்தியில் ஊடுருவிச் சென்ற துரியோதனன்; துரியோதனனின் இயல்புக்கு மீறிய வீரம்; அவனால் ஏற்பட்ட பேரழிவு; துரியோதனனை மயக்கமடையச் செய்த யுதிஷ்டிரன்; துரியோதனனை மீட்கச் சென்ற துரோணர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பலத்தில் பெருகியிருந்த உமது யானைப்படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவப்படையை மீறி எங்கும் போரிட்டுக் கொண்டிருந்தது.(1) மறு உலகம் செல்லத் தீர்மானித்த பாஞ்சாலர்களும், கௌரவர்களும், பெருகிவந்த யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் நுழைவதற்காக ஒருவரோடொருவர் போரிட்டனர்.(2) துணிவுமிக்க எதிராளிகளுடன் மோதிய துணிவுமிக்கப் போர்வீரர்கள், கணைகளாலும், வேல்களாலும், ஈட்டிகளாலும் துளைத்து யமனின் வசிப்பிடத்திற்கு ஒருவரையொருவர் அனுப்பிக் கொண்டிருந்தனர்.(3) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தேர்வீரர்களுக்கிடையில் நடந்த போரானது குருதியின் கடும் பாய்ச்சலால் பயங்கரமாக இருந்தது.(4) மதங்கொண்ட எதிராளிகளுடன் மோதிய மதங்கொண்ட யானைகள், தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று பீடித்தன.(5)
புகழ் வேண்டிய குதிரை வீரர்கள் அந்தக் கடும் மோதலில் சூலங்களாலும், ஈட்டிகளாலும், போர்க்கோடரிகளாலும் {பகைவரணியைச் சேர்ந்த} குதிரைவீரர்களைத் துளைத்து வெட்டி வீழ்த்தினர்.(6) நூற்றுக் கணக்கான காலாட்படைவீரர்களும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, உறுதியான தீர்மானத்துடன் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(7) பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன இனம், குலம் மற்றும் தனிப்பட்ட பெயர்களைக் கேட்டு மட்டுமே எங்களால் வேறுபாட்டைக் காண முடிந்தது என்ற அளவுக்கு அங்கே பெருங்குழப்பம் நிலவியது.(8) கணைகளாலும், ஈட்டிகளாலும், கோடரிகளாலும் ஒருவரையொருவர் மறு உலகத்திற்கு அனுப்பியபடியே போர்வீரர்கள் அச்சமற்றவகையில் களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(9) எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்ததன் விளைவாக, போராளிகளால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பத்து திசைப்புள்ளிகளும் முன்பைப் போல ஒளிரவில்லை.(10)
பாண்டவர்கள் இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! பாரதரே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் படைகளுக்கு மத்தியில் துரியோதனன் ஊடுருவினான்.(11) சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதில் பெரும் கோபத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, தன் உயிரையே விடத் தீர்மானித்துப் பகைவரின் படைக்குள் ஊடுருவினான்.(12) உமது மகன் {துரியோதனன்}, தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நிறைத்து, அவளை {பூமியை} நடுங்கச் செய்தபடியே பாண்டவப் படையை அணுகினான்.(13) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கும் {துரியோதனனுக்கும்} அவர்களுக்கும் {பாண்டவப்படையினருக்கும்} இடையில் நடந்த பயங்கரமான போரானது, துருப்புகளுக்கு மத்தியில் பெரும் அழிவை உண்டாக்கியது.(14) நடுப்பகலில் தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல உமது மகன் {துரியோதனன்}, தன் கணைமாரியால் [1] பகைவரின் படையை எரித்தான்.(15) பாண்டவர்கள் தங்கள் சகோதரனை (துரியோதனனைப்) பார்க்கவும் இயலாதவர்களானார்கள். தங்கள் எதிரியை வெல்வதில் கையறு நிலையை {விரக்தியை} அடைந்த அவர்கள், களத்தைவிட்டு ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர்.(16)சுடர்மிக்க முனைகளுடனும், தங்கச் சிறகுகளுடனும் கூடிய கணைகளைக் கொண்டு, வில்தரித்த உமது சிறப்புமிக்க மகனால் {துரியோதனனால்} கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(17) அந்தக் கூரிய கணைகளால் பீடிக்கப்பட்ட பாண்டவத் துருப்புகள் கீழே தரையில் விழத் தொடங்கின. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது அரச மகன் {துரியோதனன்} அடைந்ததைப் போன்ற இத்தகு சாதனையை அடைவதில் பாண்டவர்கள் எப்போதும் வெல்லவில்லை [2].(18) ஒரு யானையினால் நசுக்கப்பட்டுக் கலக்கப்படும் தாமரைக் கூட்டத்தைப் போல அந்தப் போரில் உமது மகனால் பாண்டவப்படை நசுக்கப்பட்டுக் கலங்கடிக்கப்பட்டது [3].(19) மேலும், உமது மகனுடைய ஆற்றலின் விளைவால், சூரியனாலும், காற்றாலும் நீர் வற்றி அழகை இழந்த தாமரைக் கூட்டத்தைப் போலவே பாண்டவப் படையும் ஆனது.(20)ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} பாண்டவப்படைக் கொல்லப்படுவதைக் கண்டவர்களும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான பாஞ்சாலர்கள் அவனை {துரியோதனனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.(21) அப்போது அவன் {துரியோதனன்}, பீமசேனனைப் பத்து கணைகளாலும், மாத்ரியின் மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} ஒவ்வொருவரையும் மூன்றாலும், விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஆறாலும், சிகண்டியை நூறாலும், திருஷ்டத்யும்னனை எழுபதாலும், யுதிஷ்டிரனை ஏழாலும், கைகேயர்களையும், சேதிகளையும் எண்ணற்ற கூரிய கணைகளாலும், சாத்வதனை {சாத்யகியை} ஐந்தாலும், திரௌபதியின் மகன்கள் (ஐவரில்) ஒவ்வொருவரையும் மூன்றாலும், கடோத்கசனை சிலவற்றாலும் {சில கணைகளாலும்} துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(22-24) அந்தப் பெரும்போரில் நூற்றுக்கணக்கான பிற போர்வீரர்களையும், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும் தன் கடுங்கணைகளால் வெட்டி வீழ்த்திய அவன் {துரியோதனன்}, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கும் அந்தகனைப் போலவே நடந்து கொண்டான் [4].எனினும், தன் எதிரிகளை இப்படிக் கொல்வதில் அவன் {துரியோதனன்} ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்புறம் கொண்ட அவனது பெரிய வில்லை, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் இரண்டு பல்லங்களால் மூன்று துண்டுகளாக வெட்டினான். மேலும் யுதிஷ்டிரன் பத்து கணைகளைப் பெரும் பலத்துடன் ஏவி துரியோதனனையும் துளைத்தான்.(25-27) துரியோதனனின் முக்கிய அங்கங்களைத் துளைத்துக் கடந்த அவை, தொடர் கோடாகப் பூமிக்குள் நுழைந்தன. அப்போது சுற்றியிருந்த துருப்பினர் விருத்திரனைக் கொல்வதற்காகப் புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து நின்ற தேவர்களைப் போல யுதிஷ்டிரனைச் சூழ்ந்து நின்றனர். அப்போது எளிதாக வீழ்த்தப்பட முடியாத மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனை நோக்கி கடுங்கணை ஒன்றை ஏவினான். அதனால் ஆழத்துளைக்கப்பட்ட துரியோதனன் தன் சிறந்த தேரில் கீழே {தேர்த்தட்டில்} அமர்ந்தான்.(28-30) அப்போது பாஞ்சாலத் துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} “மன்னன் {துரியோதனன்} கொல்லப்பட்டான்” என்பதே அந்த மிகப் பெரிய ஆரவாரமாக இருந்தது.(31) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகளின் கடும் விஸ் ஒலிகளும் அங்கே கேட்கப்பட்டன.
அந்தப் போரில் துரோணர் விரைவாகத் தன்னை அங்கே வெளிப்படுத்திக் கொண்டார்.(32) அதே வேளையில் உணர்வுகள் மீண்ட துரியோதனன் வில்லை உறுதியாகப் பிடித்துக் கொண்டான். அப்போது அவன் {துரியோதனன்}, “நில், நில்” என்று சொல்லி பாண்டுவின் அரசமகனை {யுதிஷ்டிரனை} நோக்கி விரைந்து செல்பவனாகக் காணப்பட்டான்.(33) வெற்றியை வேண்டிய பாஞ்சாலர்களும் வேகமாக முன்னேறத் தொடங்கினர். குரு இளவரசனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் {எதிர்கொண்டார்}.(34) பிரகாசமான கதிர்களைக் கொண்டவனான நாளை உண்டாக்குபவன் {சூரியன்}, சூறாவளியால் கொந்தளிக்கும் மேகங்களை அழிப்பதைப் போல, ஆசான் {துரோணர்} அவர்களை அழிக்கத் தொடங்கினார். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடும் விருப்பத்தால் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட உம்மவர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் பெரும் படுகொலைகள் நிறைந்த ஒரு கடும் போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(35)
எனினும், தன் எதிரிகளை இப்படிக் கொல்வதில் அவன் {துரியோதனன்} ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்புறம் கொண்ட அவனது பெரிய வில்லை, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் இரண்டு பல்லங்களால் மூன்று துண்டுகளாக வெட்டினான். மேலும் யுதிஷ்டிரன் பத்து கணைகளைப் பெரும் பலத்துடன் ஏவி துரியோதனனையும் துளைத்தான்.(25-27) துரியோதனனின் முக்கிய அங்கங்களைத் துளைத்துக் கடந்த அவை, தொடர் கோடாகப் பூமிக்குள் நுழைந்தன. அப்போது சுற்றியிருந்த துருப்பினர் விருத்திரனைக் கொல்வதற்காகப் புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து நின்ற தேவர்களைப் போல யுதிஷ்டிரனைச் சூழ்ந்து நின்றனர். அப்போது எளிதாக வீழ்த்தப்பட முடியாத மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனை நோக்கி கடுங்கணை ஒன்றை ஏவினான். அதனால் ஆழத்துளைக்கப்பட்ட துரியோதனன் தன் சிறந்த தேரில் கீழே {தேர்த்தட்டில்} அமர்ந்தான்.(28-30) அப்போது பாஞ்சாலத் துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} “மன்னன் {துரியோதனன்} கொல்லப்பட்டான்” என்பதே அந்த மிகப் பெரிய ஆரவாரமாக இருந்தது.(31) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகளின் கடும் விஸ் ஒலிகளும் அங்கே கேட்கப்பட்டன.
அந்தப் போரில் துரோணர் விரைவாகத் தன்னை அங்கே வெளிப்படுத்திக் கொண்டார்.(32) அதே வேளையில் உணர்வுகள் மீண்ட துரியோதனன் வில்லை உறுதியாகப் பிடித்துக் கொண்டான். அப்போது அவன் {துரியோதனன்}, “நில், நில்” என்று சொல்லி பாண்டுவின் அரசமகனை {யுதிஷ்டிரனை} நோக்கி விரைந்து செல்பவனாகக் காணப்பட்டான்.(33) வெற்றியை வேண்டிய பாஞ்சாலர்களும் வேகமாக முன்னேறத் தொடங்கினர். குரு இளவரசனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் {எதிர்கொண்டார்}.(34) பிரகாசமான கதிர்களைக் கொண்டவனான நாளை உண்டாக்குபவன் {சூரியன்}, சூறாவளியால் கொந்தளிக்கும் மேகங்களை அழிப்பதைப் போல, ஆசான் {துரோணர்} அவர்களை அழிக்கத் தொடங்கினார். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடும் விருப்பத்தால் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட உம்மவர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் பெரும் படுகொலைகள் நிறைந்த ஒரு கடும் போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(35)
இரவுநேரப் போர்க்களம்! – துரோண பர்வம் பகுதி – 153-துரோணர் செய்த போர் குறித்துச் சஞ்சயனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; இரவு நேரப் போர்க்களத்தை வர்ணித்த சஞ்சயன்; பாண்டவத் தலைவர்கள் அனைவரையும் இயல்புக்கு மீறிய துணிவுடன் எதிர்கொண்ட துரோணர்.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகள் அனைத்தையும் சொல்லிவிட்டு, பெரும் பலம் கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியும் ஆசானுமான அந்த வீரத் துரோணர், கோபத்துடன் பாண்டவப் படைக்குள் ஊடுருவியபடி களத்தில் தன் தேரில் திரிந்து கொண்டிருந்த போது, அவரது பாதையைப் பாண்டவர்கள் எவ்வாறு தடுத்தனர்?(1, 2) அந்தப் பயங்கரப் போரில் ஆசானுடைய {துரோணருடைய} தேரின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தது யார்? எதிரியை அவர் {துரோணர்} கடுமையாகக் கொன்ற போது, அவரது இடது சக்கரத்தைப் பாதுகாத்தது யார்?(3) போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரரின் {துரோணரின்} பின்புறத்தில், அவரைத் தொடர்ந்து சென்ற துணிவுமிக்கப் போர்வீரர்கள் யாவர்? அந்தத் தேர்வீரருக்கு முன்பு நின்றவர்கள் யாவர்?(4) வெல்லப்படாத பெரும் வில்லாளியும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவருமான அவர், தன் தேரில் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்தபடியே பாண்டவப்படைக்குள் நுழைந்த போது, பருவகாலமற்ற மிதமிஞ்சிய குளிரை அவரது எதிரிகள் உணர்ந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். குளிர்கால வெடிப்புகளுக்கு வெளிப்பட்ட பசுவைப் போல அவர்கள் நடுங்கியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.(5, 6) பரவும் காட்டுத் தீயைப் போலப் பாஞ்சாலர்களின் துருப்புகள் அனைத்தையும் எரித்தவரும், தேர்வீரர்களில் காளையுமான அவர் {துரோணர்} தன் மரணத்தை எப்படிச் சந்தித்தார்?” என்று கேட்டான்.(7]
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மாலைப் பொழுதில் சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனையும், பெரும் வில்லாளியான அந்தச் சாத்யகியையும் சந்தித்த பிறகு, அந்த இருவரும் துரோணரை நோக்கிச் சென்றனர்.(8) அப்போது யுதிஷ்டிரன் மற்றும் பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோர் ஒரு தனிப் படைப்பிரிவுடன், துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போல, நுண்ணறிவு கொண்ட நகுலன், வெல்லப்பட முடியாத சகாதேவன், தன் சொந்தப் படைப்பிரிவுடன் கூடிய திருஷ்டத்யும்னன், விராடன், ஒரு பெரும்படையுடன் கூடிய சால்வர்களின் ஆட்சியாளன் ஆகியோர் போரில் துரோணரை எதிர்த்துச் சென்றனர். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்டவனும், திருஷ்டத்யும்னனின் தந்தையுமான மன்னன் துருபதனும், துரோணரை எதிர்த்துச் சென்றான். திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும் தங்கள் படைகளுடன் சேர்ந்து பெரும் பிரகாசம் கொண்ட துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(10, 12) திறனுடன் தாக்குபவர்களும், பலம் நிறைந்தவர்களுமான ஆறாயிரம் பிரபத்ரகப் பாஞ்சாலர்களும், சிகண்டியைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(13) மனிதர்களில் முதன்மையான பிறரும், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(14)
ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, வீரமிக்க அந்தப் போர்வீரர்கள் போரிடச் சென்ற போது, மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கும் வகையில் அந்த இரவானது மிகுந்த இருளடைந்தது.(15) அந்த இருண்ட நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரைவிட்ட போர் வீரர்கள் பலராவர்.(16) அந்த இரவில், பல யானைகள், குதிரைகள், மற்றும் காலாட்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். கும்மிருட்டான அவ்விரவில் ஒளிரும் வாய்களுடன் கூடிய நரிகள் பெரும் அச்சத்தைத் தூண்டும் வகையில் எங்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. கௌரவர்களின் கொடிமரங்களை அடைந்த ஆந்தைகள் {கோட்டான்கள்} அங்கிருந்து அலறி அச்சங்களை {ஆபத்துகளை} முன்னறிவித்தன. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகளுக்கு மத்தியில் ஒரு கடும் ஆரவாரம் எழுந்தது.(17-19) பேரிகைகள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் உரத்த ஒலியுடன் யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பொலிகள், குதிரைலாடங்களின் தடவொலிகள் ஆகியவையும் கலந்த அந்த ஆரவாரம் எங்கும் பரவியது.(20)
பிறகு, அந்த மாலை {இரவு} வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், சிருஞ்சயர்கள் அனைவருக்கும் இடையில் கடும்போரொன்று நடைபெற்றது.(21) உலகமே இருளில் மூழ்கியிருந்ததால் எதையும் பார்க்க முடியவில்லை.(22) போராளிகளால் எழுப்பப்பட்ட புழுதியால் ஆகாயம் மறைக்கப்பட்டது. மனிதன், குதிரை மற்றும் யானைகளின் குருதிகள் ஒன்றாகக் கலந்தன.(23) அப்போது பூமியின் புழுதி மறைந்து போனது. நாங்கள் அனைவரும் முற்றிலும் உற்சாகமற்றவர்களாக ஆனோம். மலையில் மூங்கில் காடு ஒன்று எரியும் ஒலியைப் போல, ஆயுத மோதல்களின் பயங்கர ஒலிகள் அந்த இரவு பொழுதில் கேட்கப்பட்டன.(24) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே} மிருதங்கங்கள், அனகங்கள், வல்லகிகள், படகங்கள் [1] ஆகியவற்றின் ஒலிகளோடு, (மனிதர்களின்) கூச்சல்களும், (குதிரைகளின்) கனைப்பொலிகளும் கலந்து எங்கும் பயங்கரக் குழப்பத்தை உண்டாக்கின.(25)அந்தக் களம் இருளில் மூழ்கியிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(26) அந்த இரவின் மதத்தையே {வெறியையே} அனைவரும் பூண்டு கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே எழும்பிய பூமியின் புழுதி இரத்த மழையால் தணிக்கப்பட்டது.(27) பிறகு தங்கக் கவசங்கள் மற்றும் போர்வீரர்களின் பிரகாசமான ஆபரணங்களின் விளைவால் அந்த இருள் அகன்றது. அப்போது தங்கத்தாலும் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்ததும், ஈட்டிகளும் கொடிமரங்களும் நிறைந்ததுமான அந்தப் பாரதப் படை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் இரவு வானத்தைப் போலத் தெரிந்தது. அப்போது அந்தப் போர்க்களம் நரிகளின் ஊளைகளையும், காகங்களின் கரைதல்களையும், யானைகளின் பிளிறல்களையும், போர்வீரர்களின் கூக்குரல்கள் மற்றும் கதறல்களையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலிகள் யாவும் ஒன்றாகக் கலந்து மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது.(28-30) இந்திரனின் வஜ்ரத்தைப் போல அந்தப் பேராரவாரம் அனைத்துத் திசைப்புள்ளிகளையும் நிறைத்தது.
அந்த நடு இரவில், அந்தப் பாரதப் படையானது, போராளிகளின் அங்கதங்கள், காது குண்டலங்கள், மார்புக் கவசங்கள் மற்றும் ஆயுதங்களால் ஒளிர்வதாகத் தெரிந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும் மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களைப் போல அந்த இரவில் தெரிந்தன. வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள், கத்திகள், தண்டாயுதங்கள், வேல்கள், கோடரிகள் ஆகியன விழுகையில், திகைப்பூட்டும் நெருப்புக் கீற்றுகளைப் போலத் தெரிந்தன. முன்னோடியாக இருந்த துரியோதனனே அதன் (புயல் போன்ற படையின்) பலமான காற்றாக இருந்தான். தேர்களும் யானைகளும் அதன் உலர்மேகங்களாகின.(31-34) பேரிகைகள் மற்றும் பிற கருவிகளின் உரத்த ஒலிகள் அதன் பெருத்த இடிமுழக்கங்களாகின. கொடிமரங்களும், விற்களும் அதன் மின்னல் கீற்றுகளாகின. துரோணரும், பாண்டவர்களும் அதன் {அந்தப் புயல் போன்ற படையின்} பொழியும் மேகங்களாகினர். வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள் அதன் இடிகளாகின.(35) கணைகள் அதன் மழைப்பொழிவாகின, (பிற வகைகளிலான) ஆயுதங்கள் அதன் வன்காற்றுகளாகின. மேலும் அங்கே வீசிய காற்றுகள் மிக வெப்பமாகவும், மிகக் குளிர்ந்ததாகவும் இருந்தன.
பயங்கரமானதும், அதிர்ச்சியளிப்பதும், கடுமையானதுமான அது {புயல் போன்ற அந்தப் பாரதப் படை} உயிரை அழிப்பதாக இருந்தது. {பாதுகாப்பான} உறைவிடமாகக் கொள்ள அதில் {அந்தப் படையில்} ஏதும் இல்லை.(36) மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதும், வீரர்களை மகிழ்ச்சிப்படுத்துவதும், பயங்கரமான ஒலிகளை எதிரொலிப்பதுமான அந்தப் பயங்கர இரவில் போரை விரும்பிய போராளிகள் அச்சந்தரும் அந்தப் படைக்குள் {பாரதப் படைக்குள்} நுழைந்தனர்.(37) இரவில் அந்தக் கடுமையான, பயங்கரமான போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டுக்களும், சிருஞ்சயர்களும் ஒன்றாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்து கோபத்துடன் விரைந்தனர்.(38) எனினும், சிறப்புமிக்கத் துரோணரை எதிர்த்துச் சென்ற அவர்கள் அனைவரும், ஒன்று புறமுதுகிடச்செய்யப்பட்டனர், அல்லது யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பபட்டனர்.(39) உண்மையில், அந்த இரவில், துரோணர் மட்டுமே தனியாகத் தன் கணைகளால், ஆயிரம் {1000} யானைகளையும், பத்தாயிரம் {10,000} தேர்களையும், பத்து லட்சம் {10,00,000} காலாட்படை வீரர்கள் மற்றும் குதிரைகளையும் துளைத்தார்” {என்றான் சஞ்சயன்}.(40, 41)
பீமசேனனின் ருத்ரதாண்டவம்! – துரோண பர்வம் பகுதி – 154-சிபியைக் கொன்ற துரோணர்; கலிங்கர்களின் இளவரசன், துருவன், ஜயராதன் ஆகியோரைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரன் மகன்களான துர்மதன், துஷ்கர்ணன் ஆகியோரைத் துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொன்ற பீமன்; குரு படையை விரட்டியடித்த பீமசேனன்
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட முடியாதவரும், அளவிலா சக்தி கொண்டவரும், (ஜெயத்ரதன் கொலையைப்} பொறுத்துக் கொள்ள முடியாதவருமான துரோணர், கோபத்துடன் சிருஞ்சயர்களுக்கு மத்தியில் நுழைந்த போது நீங்கள் யாவரும் என்ன நினைத்தீர்கள்?(1) அளவற்ற ஆன்மா கொண்ட அந்தப் போர்வீரர் {துரோணர்}, கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விட்டு, (பகைவரின் படையணிகளுக்குள்) நுழைந்த போது, பார்த்தன் {அர்ஜுனன்} என்ன நடவடிக்கைகளை எடுத்தான்?(2) வீர ஜெயத்ரதன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பின்னர், பெரும் சக்தி கொண்டவரும், வெல்லப்படாத போர்வீரரும், எதிர்களை எரிப்பவரும், வெற்றிகொள்ளப்பட முடியாதவருமான துரோணர் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற போது, அர்ஜுனன் என்ன நினைத்தான்? சந்தர்ப்பத்திற்குத் தக்க தான் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று துரியோதனனும் எவற்றை நினைத்தான்?(3, 4)
வரமளிக்கும் வீரரும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவருமான அவரை {துரோணரைப்} பின்தொடர்ந்து சென்றவர்கள் யாவர்? ஓ! சூதா {சஞ்சயா}, போரில் ஈடுபடும்போது, அந்த வீரருக்கு {துரோணருக்குப்} பின்னால் நின்ற வீரர்கள் யாவர்? போரில் எதிரிகளைக் கொல்வதில் அவர் {துரோணர்} ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு முன்னணியில் நின்று போரிட்டது யார்?(5) குளிர் கால வானத்தின் கீழ் நடுங்கிக் கொண்டிருக்கும் மெலிந்த பசுக்களைப் போல, ஓ! சூதா {சஞ்சயா}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் பாண்டவர்கள் அனைவரும் பீடிக்கப்பட்டிருப்பர் என்றே நான் நினைக்கிறேன்.(6) பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவிய பிறகு, மனிதர்களில் புலியும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்?(7)
அந்த இரவில் ஒன்றாகச் சேர்ந்திருந்த துருப்புகள் அனைத்தும், ஒன்று சேர்ந்திருந்த பெரும் தேர்வீரர்கள் அனைவரும், (துரோணரால்) தனித்தனியாகக் கலங்கடிக்கப்பட்ட போது, உங்களில் புத்திசாலியான எந்த மனிதர்கள் அங்கே இருந்தனர்?(8) என் துருப்புகள் கொல்லப்பட்டதாக, அல்லது ஒன்றாக நெருக்கப்பட்டதாக, அல்லது வெல்லப்பட்டனர் என்றும், அம்மோதல்களின் என் தேர்வீரர்கள் தேரிழந்தவர்களாகச் செய்யப்பட்டனர் என்றும் நீ சொல்கிறாய். பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட அந்தப் போராளிகள் உற்சாகமற்றவர்களாக ஆன போது, அந்த இருண்ட இரவில் இப்படிப்பட்ட துன்பத்தில் மூழ்கிய அவர்கள் என்ன நினைத்தனர்?(9,10) பாண்டவர்களை உற்சாகமானவர்களாகவும், நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், என்னுடையவர்களை மனச்சோர்வடைந்தவர்களாகவும், உற்சாகமற்றவர்களாகவும், பீதியால் தாக்கப்பட்டவர்களாகவும் நீ சொல்கிறாய்.(11) ஓ! சஞ்சயா, அந்த இரவில் குருக்களுக்கும், புறமுதுகிடாத பார்த்தர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எப்படி நீ அடையாளம் கண்டாய்?” என்றான் {திருதராஷ்டிரன்}.(12)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடுமையான இரவு போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டவர்களும் அவர்களோடு கூடிய சோமகர்கள் அனைவரும் துரோணரை எதிர்த்து விரைந்தனர்.(13) அப்போது துரோணர் வேகமாகச் செல்லும் தமது கணைகளால் கைகேயர்கள் அனைவரையும், திருஷ்டத்யும்னனின் மகன்களையும் ஆவிகளின் உலகத்திற்கு [1] அனுப்பி வைத்தார்.(14) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை எதிர்த்து வந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பூமியின் தலைவர்கள் அனைவரும் இறந்தோரின் உலகத்திற்குள் (அவரால்) அனுப்பப்பட்டனர்.(15) அப்போது பெரும் ஆற்றலைக் கொண்டவனான மன்னன் சிபி, சினத்தால் நிறைந்து, (பகைவர் தரப்பு போராளிகளை) இப்படிக் கலங்கடிப்பதில் ஈடுபட்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(16)பாண்டவர்களின் அந்தப் பெரும் தேர்வீரன் {சிபி} முன்னேறுவதைக் கண்ட துரோணர், முழுவதும் இரும்பாலான பத்து கணைகளால் அவனைத் துளைத்தார்.(17) எனினும் சிபி, கங்க இறகுகளாலமைந்த சிறகுகளைக் கொண்ட முப்பது கணைகளால் பதிலுக்குத் துரோணரைத் துளைத்தான். மேலும் சிரித்துக் கொண்டேயிருந்த அவன் {சிபி}, ஒரு பல்லத்தால், துரோணருடைய தேரின் சாரதியையும் வீழ்த்தினான்.(18) பிறகு துரோணர் சிறப்புமிக்க அந்தச் சிபியின் குதிரைகளைக் கொன்று, அவனது தேரின் சாரதியையும் கொன்று, தலைக்கவசத்துடன் கூடிய சிபியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினார்.(19) பிறகு துரியோதனன், துரோணரின் தேருக்கு ஒரு சாரதியை விரைவாக அனுப்பினான். அவரது குதிரைகளின் கடிவாளங்களைப் புதிய மனிதன் ஏற்றதும், துரோணர் தம் எதிரிகளை எதிர்த்து மீண்டும் விரைந்தார்.(20)
கலிங்கத்துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனுடைய [2] மகன், பீமசேனனால் தன் தந்தை கொல்லப்பட்டதால் சினத்தால் நிறைந்து பின்னவனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(21) ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்த அவன் {சுருதாயுஷின் மகன்}, ஏழால் {எழு கணைகளால்} மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான். மேலும் அவன் (பீமனுடைய தேரின் சாரதியான) விசோகனை மூன்று கணைகளாலும், பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தை ஒன்றாலும் தாக்கினான்.(22) அப்போது சினத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, தன் தேரில் இருந்து, எதிரியின் தேருக்குக் குதித்து, கலிங்கர்களின் அந்தக் கோபக்கார வீரனை {சுருதாயுஷின் மகனைத்} தன் கை முட்டிகளை மட்டுமே கொண்டு கொன்றான்.(23) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் {பீமனால்}, அவனது கை முட்டிகளை மட்டுமே கொண்டு இப்படிப் போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் எலும்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து தனித்தனியாகக் கீழே பூமியில் விழுந்தன.(24)கர்ணன் மற்றும் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் சகோதரன் ஆகியோரால், (இன்னும் பிறராலும்) பீமனின் அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கூரிய கணைகளால் பீமசேனனைத் தாக்கத் தொடங்கினர்.(25) (தான் நின்று கொண்டிருந்த) எதிரியின் தேரைக் கைவிட்ட பீமன், துருவனின் {துருமனின்} [3] தேருக்குச் சென்று, இடைவிடாமல் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த அந்த இளவரசனைத் {துருமனைத்} தன் கை முட்டியால் அடித்து நசுக்கினான்.(26) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் இப்படித் தாக்கப்பட்ட துருவன் கீழே விழுந்தான். அவனைக் {துருமனைக்} கொன்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்பலம்கொண்ட பீமசேனன், ஜெயராதனின் தேருக்குச் சென்று, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(27) முழங்கிக் கொண்டே தன் இடது கரத்தால் ஜெயராதனை இழுத்து வந்த அவன் {பீமன்}, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் உள்ளங்கையின் ஒரே அறையால் அந்தப் போர் வீரனை {ஜெயராதனைக்} கொன்றான்.(28)-அப்போது கர்ணன் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டியொன்றை அந்தப் பாண்டுவின் மகன் மீது வீசினான்.(29) எனினும் அந்தப் பாண்டவன் {பீமன்} சிரித்துக் கொண்டே தன் கரத்தால் அந்த ஈட்டியைப் பிடித்தான். வெல்லப்படாத விருகோதரன் {பீமன்}, அதே ஈட்டியை அந்தப் போரில் கர்ணன் மீதே திரும்ப வீசினான்.(30) அப்போது சகுனி, எண்ணெய் குடித்த கணையொன்றால் கர்ணனை நோக்கிச் சென்ற அந்த ஈட்டியை வெட்டினான். போரில் இந்த வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்தவனும், அற்புதமான ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் தேருக்கே திரும்பி வந்து, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தான்.(31)
சினத்துடன் கூடிய பீமன் யமனைப் போல (உமது துருப்புகளைக்) கொன்றபடியே அப்படி முன்னேறிச் செல்கையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்த வலிமைமிக்க வீரனை உமது மகன்கள் தடுக்க முயன்றனர்.(32) உண்மையில் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனை {பீமனை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தனர்.(33) அப்போது பீமன், சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் தன் கணைகளால் துர்மதனின் சாரதியையும், குதிரைகளையும் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(34) இதன் காரணமாகத் துர்மதன் வேகமாகத் துஷ்கர்ணனின் தேரில் ஏறிக் கொண்டான். அப்போது ஒரே தேரில் ஏறிச் சென்ற எதிரிகளை எரிப்பவர்களான அந்த இரு சகோதரர்களும், தைத்தியர்களில் முதன்மையான தாரகனை எதிர்த்து விரையும், நீர் நிலைகளின் தலைவன் {வருணன்} மற்றும் சூரியன் ஆகியோரைப் போலப் போரின் முன்னணியில் இருந்த பீமனை எதிர்த்து விரைந்தனர்.(35, 36)
அப்போது உமது மகன்களான துர்மதனும், துஷ்கர்ணனும், ஒரே தேரில் இருந்து கொண்டு கணைகளால் பீமனைத் துளைத்தனர்.(37) பிறகு, கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன், கிருபர், சோமதத்தன், பாஹ்லீகன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பாதத்தால் மிதித்தே வீரத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணனின் அந்தத் தேரை பூமிக்குள் மூழ்கச் செய்தான்.(38, 39) சினத்தால் நிறைந்த அவன் {பீமன்}, வலிமையும், துணிவும் மிக்க உமது மகன்களான துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைத் தன் கை முட்டிகளால் தாக்கி நசுக்கி உரக்க முழங்கினான் [4].(40) அப்போது துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன. பீமனைக் கண்ட மன்னர்கள், “தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் பீமனின் வடிவில் போரிட்டுக் கொண்டிருப்பது ருத்ரனே” என்றனர்.(41) இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து, தங்கள் விலங்குகளைப் பெரும் வேகத்தில் தூண்டி அங்கிருந்த தப்பி ஓடினர். உண்மையில், அவர்களில் இருவராகச் சேர்ந்து ஓடுவதாக எவரும் தென்படவில்லை {அனைவரும் தனித்தனியாகச் சிதறி ஓடினர்}.(42)அப்போது, அந்த இரவில் (கௌரவப்) படைக்கு மத்தியில் பேரழிவு உண்டான போது, முழுதும் மலர்ந்த தாமரையைப் போன்ற அழகான கண்களைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான விருகோதரன் {பீமன்}, மன்னர்களில் காளையர் பலரால் உயர்வாகப் புகழப்பட்டு யுதிஷ்டிரனிடம் சென்று அவனுக்குத் தன் மரியாதைகளைச் செலுத்தினான்.(43) அப்போது, இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), துருபதன், விராடன், கைகேயர்கள் ஆகியோரும், யுதிஷ்டிரனும் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர். மேலும் அவர்கள் அனைவரும், அந்தகன் கொல்லப்பட்ட பிறகு மகாதேவனைப் புகழ்ந்த தேவர்களைப் போலவே விருகோதரனுக்குத் தங்கள் துதிகளைச் செலுத்தினர்.(44) பிறகு வருணனின் மகன்களுக்கு ஒப்பானவர்களான உமது மகன்கள் அனைவரும், சினத்தால் நிறைந்து, சிறப்புமிக்க ஆசானின் {துரோணரின்} துணையுடன், பெரும் எண்ணிக்கையிலான தேர்கள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து போரிடும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(45) அப்போது, ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில், அனைத்தும் மேகத்தைப் போன்ற அடர்ந்த இருட்டில் மூழ்கியிருந்த போது, ஓநாய்கள், காகங்கள் மற்றும் கழுகுகள் ஆகியவற்றுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் அச்சந்தரும் போரொன்று அந்தச் சிறப்புமிக்க வீரர்களுக்கு மத்தியில் நடைபெற்றது” {என்றான் சஞ்சயன்}.(46)
சாத்யகியின் ஆண்மை! – துரோண பர்வம் பகுதி – 155அ-சாத்யகியிடம் சோமதத்தனின் பேச்சு; சாத்யகியின் ஆண்மைநிறைந்த மறுமொழி; சோமதத்தனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; மயங்கி விழுந்த சோமதத்தனைச் சுமந்து சென்ற அவனது தேரோட்டி; சாத்யகியைக் கொல்ல விரைந்த துரோணர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிராயத்தில் அமர்ந்திருந்த {பிராயோபவேசம் செய்த} தன் மகன் (பூரிஸ்ரவஸ்) சாத்யகியால் கொல்லப்பட்ட பிறகு, சினத்தால் நிறைந்த சோமதத்தன் சாத்யகியிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! சாத்வதா {சாத்யகி}, உயர் ஆன்ம தேவர்களால் விதிக்கப்பட்ட க்ஷத்திரியக் கடமைகளைக் கைவிட்டுக் கள்வர்களின் நடைமுறையை ஏன் நீ கைக்கொண்டாய்?(2) க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனும், விவேகியுமான ஒருவன், போரில் இருந்து திரும்புபவனையோ {பின்வாங்குபவனையோ}, ஆதரவற்றவனையோ, தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டவனையோ, இடத்தை வேண்டுபவனையோ போரில் தாக்குவானா?(3) உண்மையில், ஓ! சாத்யகி, விருஷ்ணிகளில் வலிமையும் சக்தியும் கொண்ட பிரத்யும்னனும், நீயும் பெரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்கள் என்று புகழ்பெற்றவர்கள்.(4) அப்படியிருக்கையில் பிராயத்தில் அமர்ந்தவனும், பார்த்தனால் {அர்ஜுனனால்} தன் கரம் வெட்டப்பட்டவனுமான ஒருவனிடம் பாவம் நிறைந்த கொடூரமாக ஏன் நீ நடந்து கொண்டாய்?(5)
ஓ! தீய நடத்தை கொண்டவனே, உனது அந்தச் செயலின் விளைவை இப்போது போரில் பெறுவாயாக. ஓ! இழிந்தவனே {சாத்யகி}, என் ஆற்றலை வெளிப்படுத்தும் நான், சிறகு படைத்த கணையொன்றால் உன் தலையை இன்று வெட்டப் போகிறேன்.(6) ஓ! சாத்வதா {சாத்யகி}, என்னிரு மகன்கள் மீதும், எனக்குப் பிடித்த எதன் மீதும், என் புண்ணியச் செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையாகச் சொல்கிறேன், ஓ! விருஷ்ணி குலத்தில் இழிந்தவனே {சாத்யகி}, இன்றிரவு கடப்பதற்குள், பிருதையின் {குந்தியின்} மகனான ஜிஷ்ணு {அர்ஜுனன்} உன்னைக் காக்கவில்லையெனில், வீரத்தில் செருக்குக் கொண்ட உன்னை, உன் மகன்கள், தம்பி ஆகியோரோடு சேர்த்துக் கொல்லாதிருந்தால் நான் பயங்கர நரகத்திற்குள் மூழ்குவேனாக” என்றான் {சோமதத்தன்}.(7,8) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கவனுமான சோமதத்தன், சினத்தால் நிறைந்து தன் சங்கை உரக்க முழங்கி சிங்க முழக்கம் செய்தான்.(9)
அப்போது, தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், சிங்கம் போன்ற பற்களையும், பெரும் பலத்தையும் கொண்ட சாத்யகி, சினத்தால் நிறைந்து, சோமதத்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(10) “ஓ! குரு குலத்தவரே {சோமதத்தரே}, உம்மோடு போரிட்டாலும், பிறரோடு போரிட்டாலும், என் இதயத்தில் கிஞ்சிற்றும் நான் அச்சத்தை உணர்வதில்லை.(11) ஓ! குரு குலத்தவரே {சோமதத்தரே}, துருப்புகள் அனைத்தாலும் பாதுகாக்கப்பட்டு நீர் என்னோடு போரிட்டாலும், உம்மால் எந்த வலியையும் நான் அடையமாட்டேன்.(12) நான் எப்போதும் க்ஷத்திரிய நடைமுறைகளேயே பயில்பவனாவேன். எனவே, போர்மணம் கொண்ட வார்த்தைகள், அல்லது நல்லோரை அவமதிக்கும் பேச்சுகள் ஆகியவற்றால் மட்டுமே உம்மால் என்னை அச்சுறுத்த முடியாது.(13) நீர் இன்று என்னோடு போரிட விரும்பினால், ஓ! மன்னா {சோமதத்தரே}, கூரிய கணைகளால் கொடூரமாக என்னைத் தாக்குவீராக, நானும் உம்மைத் தாக்குவேன்.(14) ஓ! மன்னா {சோமதத்தரே}, உமது மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டான். சலனும், விருஷசேனனும் என்னால் நசுக்கப்பட்டனர் [1].(15) உமது மகன்களுடனும், சொந்தங்களுடனும் கூடிய உம்மையும்கூட இன்று நான் கொல்வேன். ஓ! கௌரவரே {சோமதத்தரே}, பெரும் பலங்கொண்டவர் நீரென்பதால், போரில் உறுதியோடு இருப்பீராக.(16)கொடை, புலனடக்கம், இதயத் தூய்மை, கருணை, பணிவு, நுண்ணறிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவற்றையும், அழிவில்லாத அனைத்தையும் கொண்டவரும், முரசை {முரசு} கொடியில் கொண்டவருமான மன்னர் யுதிஷ்டிரரின் சக்தியால் நீர் ஏற்கனவே கொல்லப்பட்டவரே. நீர் கர்ணனோடும், சுபலனின் மகனோடும் {சகுனியோடும்} சேர்ந்து அழிவையே அடைவீர்.(17, 18) கிருஷ்ணனின் பாதங்களின் மீதும், என் நற்செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், சினத்தால் நிறையும் நான் உம்மையும் உமது மகன்களையும் என் கணைகளால் போரில் கொல்வேன்.(19) போரைவிட்டு ஓடிவிட்டால் மட்டுமே நீர் பாதுகாப்பாக இருக்கலாம்” என்றான் (சாத்யகி). கோபத்தால் சிவந்த கண்களுடன் ஒருவரோடொருவர் இப்படிப் பேசிக் கொண்டவர்களான அந்த மனிதர்களில் முதன்மையானோர் {சோமதத்தனும், சாத்யகியும்}, தங்கள் கணைகளை ஒருவரின் மீதொருவர் ஏவத் தொடங்கினர்.(20)
அப்போது துரியோதனன், ஆயிரம் தேர்களுடனும், பத்தாயிரம் குதிரைகளுடனும் வந்து சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான். சினத்தால் நிறைந்த சகுனியும், அனைத்து ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட தன் மகன்கள், பேரர்கள் மற்றும் தன் சகோதரர்கள் சூழ (அதையே செய்தான் {சோமதத்தனைச் சூழ்ந்து}) நின்றான்.(21, 22) வயதால் இளமையுடையவனும், வஜ்ரத்தைப் போன்ற உடலைக் கொண்டவனும், ஞானம் கொண்டவனுமான உமது மைத்துனன் {சகுனி} முதன்மையான தீரம் கொண்ட நூறாயிரம் {ஒரு லட்சம்} குதிரைகளைத் தன்னிடம் கொண்டிருந்தான். அவற்றுடனேயே அவன் {சகுனி}, வலிமைமிக்க வில்லாளியான சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான்.(23, 24) அந்த வலிமைமிக்கப் போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்ட சோமதத்தன் (கணை மேகங்களால்) சாத்யகியை மறைத்தான். நேரான கணைகளின் மேகங்களால் இப்படி மறைக்கப்பட்ட சாத்யகியைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஒரு பெரும் படையின் துணையுடனும் சினத்துடனும் அவனை {சாத்யகியை} நோக்கிச் சென்றான்.(25) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று தாக்கிக் கொண்ட அந்தப் பெரும் படைகள் இரண்டிலும் எழுந்த பேரோலியானது, பயங்கரச் சூறாவளியால் சீற்றத்துடன் தாக்கப்பட்டும் பெருங்கடல்களுக்கு ஒப்பாக இருந்தது.
அப்போது சோமதத்தன் ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்.(26, 27) பதிலுக்குச் சாத்யகி, ஒன்பது கணைகளாலேயே குரு போர்வீரர்களில் முதன்மையான அவனை {சோமதத்தனைத்} துளைத்தான். வலிமைமிக்கவனும், உறுதிமிக்கவனுமான அந்த வில்லாளியால் (சாத்யகியால்) ஆழத் துளைக்கப்பட்ட சோமதத்தன், மயக்கத்தால் உணர்வுகளை இழந்து தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(28) அவன் {சோமதத்தன்} உணர்வுகளை இழந்ததைக் கண்ட அவனது சாரதி, பெரும் தேர்வீரனான அந்தச் சோமதத்தனைப் போரில் இருந்து வெளியே பெரும் வேகத்துடன் சுமந்து சென்றான்.(29) யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்ட சோமதத்தன் தனது உணர்வுகளை இழந்ததைக் கண்ட துரோணர், அந்த யது வீரனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தால் பெரும் வேகத்துடன் விரைந்து சென்றார்.(30) ஆசான் {துரோணர்} முன்னேறுவதைக் கண்டவர்களும், யுதிஷ்டிரனின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவ வீரர்கள் பலர், யது குலத்தைத் தழைக்க வைப்பவனான அந்தச் சிறப்புமிக்கவனை {சாத்யகியைக்} காக்கும் விருப்பத்தால் அவனைச் சூழ்ந்து கொண்டனர்” {என்றான் சஞ்சயன்}.31
கடோத்கசன் அஸ்வத்தாமன் மோதல்! – துரோண பர்வம் பகுதி – 155ஆ-பாண்டவப் படையினரைக் கொன்ற துரோணர்; பாண்டவப்படை தப்பி ஓடியது; துரோணரை எதிர்த்த அர்ஜுனனும், பீமனும்; மீண்டும் திரண்ட பாண்டவப் படை; அஸ்வத்தாமனை நோக்கி விரைந்த கடோத்கசன்; கடோத்கசனின் தேர் குறித்த வர்ணனை; கடோத்கசனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்…
சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அப்போது துரோணருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில், மூவுலகங்களுக்கான ஆட்சி உரிமையில் உள்ள விருப்பத்தால் பலிக்கும் {மகா பலிக்கும்}, தேவர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பாக ஒரு போர் தொடங்கியது.(32) பெரும் சக்தி கொண்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கணை மேகங்களால் பாண்டவப்படையை மூழ்கடித்து, யுதிஷ்டிரனையும் துளைத்தார். மேலும் துரோணர் சாத்யகியைப் பத்து கணைகளாலும், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} இருபதாலும் துளைத்தார்.(33, 34) பிறகு அவர் பீமசேனனை ஒன்பது கணைகளாலும், நகுலனை ஐந்தாலும், சகாதேவனை எட்டாலும், சிகண்டியை நூறு கணைகளாலும் துளைத்தார்.(35) பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரர் {துரோணர்} திரௌபதியின் மகன்கள் (ஐவரில்) ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்தார். மேலும் அவர் {துரோணர்}, விராடனை எட்டு கணைகளாலும், துருபதனை பத்தாலும் துளைத்தார்.(36) பிறகு அவர் {துரோணர்} அம்மோதலில் யுதாமன்யுவை மூன்று கணைகளாலும், உத்தமௌஜஸை ஆறாலும் துளைத்தார். மேலும் பல போராளிகளையும் துளைத்த அவர் {துரோணர்}, பிறகு யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தார்.(37)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரால் கொல்லப்பட்ட பாண்டுமகனின் துருப்புகள் அச்சத்தால், உரத்த ஓலங்களுடன் அனைத்துத் திசைகளிலும் ஓடின.(38) துரோணரால் அப்படிக் கொல்லப்பட்ட அந்தப் படையைக் கண்டவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பல்குனன் {அர்ஜுனன்}, சற்றே கோபத்தால் தூண்டப்பட்டு, ஆசானை {துரோணரை} நோக்கி வேகமாகச் சென்றான்.(39) அந்தப் போரில் துரோணரும் அர்ஜுனனை நோக்கிச் செல்வதைக் கண்ட யுதிஷ்டிரனின் படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீண்டும் அணிதிரண்டது.(40) அப்போது துரோணருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் நேர்ந்தது.
உமது மகன்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பஞ்சுப்பொதியை எரிக்கும் நெருப்பைப் போலப் பாண்டவப் படையை எரிக்கத் தொடங்கினார்.(41) சூரியனைப் போல ஒளிர்ந்தவரும், சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசம் கொண்டவருமான அவர் {துரோணர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்ட தம் வில்லிலிருந்து கடுமையாகவும், தொடர்ச்சியாகவும், கதிர்களைப் போன்ற கணைகளை வெளியிட்டுக் கொண்டும், சூரியனைப் போலச் சுற்றிலும் உள்ள அனைத்தையும் எரித்தபடியே தமது எதிரிகளை எரிப்பதைக்கண்டும் கூட, அவரைத் {துரோணரைத்} தடுக்கக்கூடியவர் எவரும் அந்தப் படையில் இல்லை.(42, 43) துரோணரின் கணைகள், அவரது முகத்துக்கு நேரே அணுகத் துணிந்தோர், அனைவரின் தலைகளையும் வெட்டிவிட்டு, பூமிக்குள் நுழைந்தன. அந்தச் சிறப்புமிக்கப் போர் வீரரால் இப்படிக் கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படை, அர்ஜுனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் தப்பி ஓடியது.(44, 45) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் துரோணரால் இப்படி முறியடிக்கப்பட்ட அந்தப் படையைக் கண்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துரோணரின் தேரை நோக்கிச் செல்லுமாறு கோவிந்தனை {கிருஷ்ணனைக்} கேட்டுக் கொண்டான்.(46) அப்போது தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} வெள்ளி, அல்லது, பசுவின் பால், அல்லது குந்த {குறுக்கத்தி} மலர், அல்லது சந்திரனின் நிறம் கொண்ட அந்தக் குதிரைகளைத் துரோணரின் தேரை நோக்கித் தூண்டினான்.
பல்குனன் {அர்ஜுனன்} துரோணரை நோக்கிச் செல்வதைக் கண்டு, பீமசேனனும் தன் தேரோட்டியிடம்,(47, 48) “துரோணரின் படைப்பிரிவை நோக்கி என்னைச் சுமந்து செல்வாயாக” என்றான். பீமனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி விசோகன், துல்லியமான இலக்கைக் கொண்ட ஜிஷ்ணுவை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து செல்லும்படி தன் குதிரைகளைத் தூண்டினான்.(49) உறுதியான தீர்மானத்துடன் துரோணரின் படைப்பிரிவை நோக்கிச் செல்லும் அந்த இரு சகோதரர்களைக் கண்டவர்களும், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், சேதிகள், காருஷர்கள், கோசலர்கள் மற்றும் கைகேயர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(50, 51)
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் பயங்கரப் போர் ஒன்று நடைபெற்றது. வலிமைமிக்க இரு தேர்க்கூட்டங்களுடன் சென்ற பீபத்சுவும் {அர்ஜுனனும்}, விருகோதரனும் {பீமனும்}, முன்னவன் {அர்ஜுனன்} வலப்புறத்திலும், பின்னவன் {பீமன்} முன்புறத்திலும் என உமது படைகளைத் தாக்கினர் [2]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்த) மனிதர்களில் புலிகளான பீமசேனனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} கண்டவர்களான திருஷ்டத்யும்னனும், பெரும்பலமுடைய சாத்யகியும் அவர்களைப் பின்னால் தொடர்ந்து சென்றனர்.(52, 53) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் இரு படைகளின் விளைவாக அங்கே எழுந்த ஆரவாரமானது, புயலொன்றால் சீற்றத்துடன் தாக்கப்படும் பல கடல்களின் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது. போரில் சாத்யகியைக் கண்ட அஸ்வத்தாமன், சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவஸின்} கொலையால் சினத்தால் நிறைந்து, போரின் முன்னணியில் இருந்த அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.சினியின் பேரனுடைய {சாத்யகியின்} தேரை எதிர்த்து அந்தப் போரில் விரையும் அவனை {அஸ்வத்தாமனைக்} கண்டவனும், பீமசேனனின் மகனும், பெரும் ராட்சசனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான கடோத்கசன், கரடித் தோல்களால் மறைக்கப்பட்டதும், உருக்காலானதும், பெரியதுமான ஒரு பயங்கரத் தேரில் ஏறி அவனை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான். அந்தப் பெரிய தேரின் உயரம் மற்றும் அகலம் இரண்டும் அளவில் முப்பது நல்வங்கள் [3] இருந்தன. (ஒரு நல்வம் என்பது நானூறு முழம் )சரியான இடங்களில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த அதன் சடசடப்பொலி பெரும் மேகத்திரள்களுக்கு ஒப்பானதாக இருந்தது.(54-58) அதில் குதிரைகளோ, யானைகளோ பூட்டப்படவில்லை, ஆனால், யானைகளைப் போன்ற உயிரினங்கள் [4] பூட்டப்பட்டிருந்தன. அதன் நெடிய கொடிமரத்தில், சிறகுகளையும், கால்களையும் விரித்தபடியும், கண்களை அகல விரித்த படியும், பயங்கரமாகக் கூச்சலிட்டபடியும் கழுகுகளின் இளவரசன் அமர்ந்திருந்தான். மேலும் சிவப்புக் கொடிகளுடன் கூடிய அது பல்வேறு விலங்குகளின் உள்ளுறுப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(59, 60) அந்தப் பெரும் வாகனம் எட்டுச் சக்கரங்களை உடையதாக இருந்தது.
அதில் {அந்தத் தேரில்} ஏறிச் சென்ற கடோத்கசன், வேல்கள் {சூலங்கள்}, கனமான தண்டாயுதங்கள் {உலக்கைகள்}, பாறைகள் {மலைகள்}, மரங்கள் ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டிருந்தவர்களும், கடுந்தோற்றும் கொண்டவர்களும், முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி அளவுக்கு இருந்தவர்களுமான ராட்சசர்களால் சூழப்பட்டிருந்தான். பிரளய காலத்தில் தண்டாயுதத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பாக உயர்த்திப் பிடிக்கப்பட்ட வில்லுடன் முன்னேறி வரும் அவனை {கடோத்கசனைக்} கண்ட பகை மன்னர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். மலைச்சிகரத்தைப் போலத் தெரிந்தவனும், அச்சந்தரும் வகையில் பயங்கரத்தோற்றம் கொண்டவனும், பயங்கரப் பற்கள், கடும் முகம், அம்பு போன்ற காதுகள், உயர்ந்த தாடை எலும்புகள், மேல்நோக்கி நிற்கும் விறைப்பான முடி, பயங்கரக் கண்கள், சுடர்விடும் வாய், ஆழமான வயிறு, குறுகிய திறப்புக் கொண்ட ஆழமான பள்ளத்தைப் போல அகன்ற உணவுக்குழாய் ஆகியவற்றைக் கொண்டவனும், தலையில் கிரீடம் தரித்தவனும், அனைத்து உயிரினங்களையும் அச்சத்தால் பீடிக்கவல்லவனும், யமனைப் போல அகல விரிந்த வாய் கொண்டவனும், பெரும் காந்தி கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் கலங்கடிக்கவல்லவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அந்தக் கடோத்கசன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட உமது மகனின் {துரியோதனனின்} படையானது, காற்றினால் (அசைவால்) உண்டாகும் கடும் அலைகளால் கலங்கடிக்கப்படும் கங்கையின் ஓடையைப் போலப் பெரும் கலக்கமடைந்து அச்சத்தால் பீடிக்கப்பட்டது.(61-67) கடோத்கசனால் செய்யப்பட்ட சிங்கமுழக்கங்களால் பீதியடைந்த யானைகள் சிறுநீர் கழிக்கத்தொடங்கின, மன்னர்கள் நடுங்கத் தொடங்கினர்.(68)
இரவின் விளைவால் மிகப் பலமடைந்த ராட்சசர்களால் பொழியப்பட்ட அடர்த்தியான கற்களின் மழையொன்று அந்தப் போர்க்களத்தில் விழத் தொடங்கியது.(69) இரும்புச்சக்கரங்கள், புசுண்டிகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், சதாக்னிகள் மற்றும் கோடரிகள் ஆகியவற்றின் தடையற்ற மழை அங்கே பொழிந்தது.(70) அச்சந்தருவதும், கடுமையானதுமான அந்தப் போரைக் கண்ட மன்னர்கள், உமது மகன்கள் ஆகியோரும், கர்ணனும் கூட வலியை மிகவும் உணர்ந்து தப்பி ஓடினர்.(71) தன் ஆயுத வலிமையில் எப்போதும் தற்பெருமை கொண்டவனான துரோணரின் பெருமைமிக்க மகன் {அஸ்வத்தாமன்} மட்டுமே அச்சமில்லாமல் நின்றான். மேலும் அவன் {அஸ்வத்தாமன்} விரைவில் கடோத்கசனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயையை விலக்கினான்.(72)
தன் மாயை அழிக்கப்பட்டதும் சினமடைந்த கடோத்கசன், (அஸ்வத்தாமன் மீது) கடுங்கணைகளை ஏவினான். கோபக்காரப் பாம்புகள் எறும்புப்புற்று ஒன்றை வேகமாகத் துளைத்துச் செல்வதைப் போலவே அவை துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்தன.(73) அஸ்வத்தாமனின் உடலைத் துளைத்துச் சென்ற அக்கணைகள் குருதியால் நனைந்து, எறும்புப்புற்றுக்குள் செல்லும் பாம்புகளைப் போல வேகமாகப் பூமிக்குள் நுழைந்தன.(74) எனினும், வேகமான கரங்களையும், பெரும் ஆற்றலையும் கொண்ட அஸ்வத்தாமன், கோபத்தால் நிறைந்து, பத்து கணைகளால் கடோத்கசனைத் துளைத்தான்.(75) துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} தன் முக்கிய அங்கங்களில் ஆழத் துளைக்கப்பட்ட கடோத்கசன், பெரும் வலியை உணர்ந்து, ஆயிரம் ஆரங்களைக் கொண்ட சக்கரம் ஒன்றை எடுத்துக் கொண்டான்.(76)
உதயச் சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட அதன் {அந்தச் சக்கரத்தின்} முனை கத்தியைப் போன்று கூர்மையானதாக இருந்தது. மேலும் அது பல்வேறு ரத்தினங்களாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(77) அஸ்வத்தாமனைக் கொல்ல விரும்பிய பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அந்தச் சக்கரத்தை அவன் மீது வீசினான். அது வேகமாகத் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கிச் சென்ற போது, பின்னவன் {அஸ்வத்தாமன்}, தன் கணைகளால் அதைத் துண்டுகளாக வெட்டினான்.(78) இப்படிக் கலங்கடிக்கப்பட்ட அது, பேறற்ற மனிதனால் பேணிவளர்க்கப்பட்ட நம்பிக்கையைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. தன் சக்கரம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், சூரியனை விழுங்கும் ராகுவைப் போலத் தன் கணைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} வேகமாக மறைத்தான்” {என்றான் சஞ்சயன்}.(79)
கடோத்கசனின் மகனைக் கொன்ற அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 155இ-அஸ்வத்தாமனை எதிர்த்த கடோத்கசன் மகன் அஞ்சனபர்வன்; அஞ்சனபர்வனைக் கொன்ற அஸ்வத்தாமன்; கடோத்கசனுக்கும் அஸ்வத்தாமனுக்கு இடையில் நடந்த பேச்சு; அர்ஜுனனை எதிர்த்துச் செல்ல சகுனியைத் தூண்டிய துரியோதனன்…
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அதேவேளையில், பெரும் காந்தி கொண்டவனும், கரிய மைக்குவியலுக்கு ஒப்பானவனுமான கடோச்கசனின் மகன் {அஞ்சனபர்வன்}, முன்னேறி வந்து கொண்டிருந்த துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} காற்றின் வழியைத் தடுக்கும் மலைகளின் அரசனை (மேருவைப்) போலத் தடுத்தான்.(80) பீமசேனனின் பேரனான அஞ்சனபர்வனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அஸ்வத்தாமன், பெரும் மேகத்திலிருந்து கொட்டும் மழைத்தாரைகளைத் தாங்கிக் கொள்ளும் மேரு மலையைப் போலத் தெரிந்தான். ஆற்றலில் ருத்ரனுக்கோ, உபேந்திரனுக்கோ இணையான அஸ்வத்தாமன், அப்போது சினத்தால் நிறைந்தான்.(81,82) ஒரு கணையால் அவன் {அஸ்வத்தாமன்} அஞ்சனபர்வனின் கொடிமரத்தை வெட்டினான்; மேலும் இரண்டால் அவனது {அஞ்சனவர்வனின்} இரு சாரதிகளையும், மேலும் மூன்றால் அவனது திரிவேணுகத்தையும் [5] வெட்டினான்.(83) (தேர், வண்டி முதலியவற்றில் சாரதி அமர்வதற்கு உள்ள இடம்.)பிறகும் அவன் {அஸ்வத்தாமன்} அந்த ராட்சசனின் {அஞ்சனபர்வனின்} வில்லைத் தன் கணை ஒன்றாலும், நான்கு பிற கணைகளால் அவனது குதிரைகள் நான்கையும் வெட்டினான்.தேரற்றவனாகச் செய்யப்பட்ட அஞ்சனபர்வன் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டான். அந்த ராட்சசன் கைகளில் இருந்ததும், தங்க நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான அந்தக் கத்தியை மற்றொரு கூரிய கணையால் அஸ்வத்தாமன் இரண்டு துண்டுகளாக வெட்டினான். அப்போது அந்த ஹிடிம்பையின் பேரன் {அஞ்சனபர்வன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கதாயுதத்தைச் சுழற்றி அஸ்வத்தாமன் மீது வீசினான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அதைத் தன் கணைகளால் தாக்கி, பூமியில் விழச் செய்தான். உயரப் பறந்து வானத்தை அடைந்த அஞ்சனபர்வன், கரிய மேகம் ஒன்றைப் போல முழங்கத் தொடங்கினான்.(84-86) அங்கே ஆகாயத்தில் இருந்த படியே அவன் {அஞ்சனபர்வன்} தன் எதிரியின் மீது மரங்களைப் பொழிந்தான். மேகத் திரள்களைத் தன் கதிர்களால் துளைக்கும் சூரியனைப் போலவே, மாயைகளின் கொள்ளிடமாக ஆகாயத்தில் இருந்த அந்தக் கடோத்கசன் மகனை {அஞ்சனபர்வனை} அஸ்வத்தாமன் தன் கணைகளால் துளைத்தான். பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அந்த ராட்சசன் {அஞ்சனபர்வன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேருக்கு மீண்டும் கீழிறங்கி வந்தான்.(87,88) பிறகு அவன் {அஞ்சனபர்வன்} பூமியின் பரப்பில் உள்ள நெடிய அழகிய மை மலை ஒன்றை {மலை போன்ற மைக்குவியவலைப்} போலத் தெரிந்தான். அப்போது, பழங்காலத்தில் அசுரன் அந்தகனைக் கொன்ற மகாதேவனைப் போல, இரும்பு கவசத்துடன் கூடிய பீமனுடைய மகனின் {கடோத்கசனின்} மகனை {அஞ்சனபர்வனைத்} துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கொன்றான்.
வலிமைமிக்கத் தனது மகன் {அஞ்சனபர்வன்}, அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டதைக் கண்ட கடோத்கசன், துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} வந்து, காட்டுத்தீயைப் போலப் பாண்டவத் துருப்புகளை எரித்து வந்த அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} வீர மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(89-91) கடோத்கசன், “நில்லும், ஓ! துரோண மகனே {அஸ்வத்தாமா} நில்லும். என்னிடம் இருந்து நீர் உயிருடன் தப்ப முடியாது. கிரௌஞ்சனை அழித்த அக்னியின் மகனை {கார்த்திகேயனைப்} போல இன்று நான் உம்மைக் கொல்லப் போகிறேன்” என்றான்.(92) அதற்கு அஸ்வத்தாமன், “ஓ! மகனே {கடோத்கஜா}, செல்வாயாக, ஓ! தெய்வீக ஆற்றல் கொண்டவனே {கடோத்கசா}, பிறருடன் போரிடுவாயாக. ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, தந்தை மகனுடன் போரிடுவது முறையாகாது [6].(93) (“பாண்டவர்களும் அஸ்வத்தாமனும் துரோணரின் சீடர்கள் என்பதால் அவர்கள் சகோதரர்களைப் போன்றவர்களே. எனவே, கடோத்கசன் பீமனின் மகன் என்பதால், அவன் அஸ்வத்தாமனுக்குச் சகோதரனின் மகனாவான்”)ஓ! ஹிடிம்பையின் மகனே, நான் உன்னிடம் எந்தக் கோபமும் கொள்ளவில்லை. எனினும், ஒருவனது கோபம் தூண்டப்படும்போது, ஒருவன் தன்னையே கூடக் கொன்றுகொள்ளக் கூடும் [7]” என்றான் {அஸ்வத்தாமன்}.(94)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வார்த்தைகளைக் கேட்ட கடோத்கசன், தன் மகனின் வீழ்ச்சியால் துயரத்தில் நிறைந்து, கோபத்தால் தாமிரம் போல் கண்கள் சிவந்து, அஸ்வத்தாமனை அணுகி,(95) “ஓ! துரோண மகனே {அஸ்வத்தாமா}, நான் போருக்குப் பயந்த இழிந்தவன் என்பதைப் போல இவ்வார்த்தைகளால் என்னை அச்சுறுத்துகிறீரா? இந்த உமது வார்த்தைகள் முறையற்றனவாகும்.(96) உண்மையில், கொண்டாடப்படும் குருக்களின் குலத்தில் பீமரால் பெறப்பட்டவன் நான். போரில் ஒருபோதும் புறமுதுகிடாத வீரர்களான பாண்டவர்களின் மகன் நான்.(97) பலத்தில் பத்து கழுத்தோனுக்கு (ராவணனுக்கு) இணையான ராட்சசர்களின் மன்னன் நான். நில்லும், ஓ! துரோண மகனே நில்லும். நீர் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது.(98) நான் இன்றைய போர்க்களத்தில் போரிடும் உமது விருப்பத்தை அகற்றுவேன்” என்றான் {கடோத்கசன்}.
சினத்தால் கண்கள் சிவக்க அஸ்வத்தாமனுக்கு இப்படி மறுமொழிகூறிய அந்த வலிமைமிக்க ராட்சசன் {கடோத்கசன்}, யானைகளின் இளவரசனை எதிர்த்துச் செல்லும் சிங்கம் ஒன்றைப் போலத் துரோணரின் மகனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(99) பிறகு கடோத்கசன், போரில் பயன்படும் தேரொன்றின் அக்ஷத்தின் {ஏர்க்காலின்} அளவுடைய கணைகளை, தேர்வீரர்களில் காளையான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போலப் பொழிந்தான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணை மழை தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் விலக்கினான்.(100, 101) அந்நேரத்தில் ஆகாயத்தில் கணைகளுக்கிடைய (போராளிகளைப் போல) ஒரு மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அந்த இரவு ஆகாயம், விட்டில் பூச்சிகளைப்(கூட்டங்களைப்) போல அந்த ஆயுதங்களின் மோதலால் உண்டான பொறிகளால் பிரகாசமாக ஒளிர்ந்தது. அந்தப் போரில் தன் ஆற்றலில் செருக்குடைய துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} தன் மாயை விலக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், மீண்டும் தன்னைக் கண்களுக்குப் புலப்படாதவனாக ஆக்கிக் கொண்டு {மீண்டும்} ஒரு மாயையை உண்டாக்கினான்.(102,103) சிகரங்களும், மரங்களும் நிறைந்ததும், சூலங்கள், வேல்கள், வாள்கள், கனமான தண்டங்கள் ஆகியன தடையில்லாமல் பாயும்படியான ஓர் அருவியைக் கொண்டதுமான ஒரு மலையின் வடிவத்தை அவன் {கடோத்கசன்} ஏற்றான்.(104) கரிய மைத் திரளைப் போலிருந்த அந்த மலையையும், அதிலிருந்து பாயும் எண்ணற்ற ஆயுதங்களையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சற்றும் அசையவில்லை. அப்போது பின்னவன் {அஸ்வத்தாமன்} வஜ்ர ஆயுதத்தை {வஜ்ராஸ்திரத்தை} [8] இருப்புக்கு அழைத்தான்.(105,106) அவ்வாயுதத்தால் தாக்கப்பட்ட அந்த மலைகளின் இளவரசன் வேகமாக அழிந்தான்.பிறகு அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஆகாயத்தில் வானவில்லுடன் கூடிய நீல மேகங்களாகி அந்தப் போரில் துரோணரின் மகன் மீது கற்கள் மற்றும் பாறைகளாலான மழையை மூர்க்கமாகப் பொழியத் தொடங்கினான்.(107) அப்போது ஆயுதங்களை அறிந்த மனிதர்களில் அனைவரிலும் முதன்மையான அந்த அஸ்வத்தாமன், வாயவ்ய ஆயுதத்தைக் குறி பார்த்து, ஆகாயத்தில் எழுந்த அந்த நீல மேகத்தை அழித்தான்(108) மனிதர்களில் முதன்மையான அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்} திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் தன் கணைகளால் மறைத்து, நூறாயிரம் {100,000} தேர்வீரர்களைக் கொன்றான். பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, சிங்கங்கள், அல்லது புலிகள், அல்லது மதங்கொண்ட ஆற்றலைக் கொண்ட யானைகளுக்கு ஒப்பான ராட்சசர்களில், சிலர்கள் யானைகளில் ஏறியும், சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளிலும் எனப் பெரும் எண்ணிக்கையில் வந்தவர்களின் துணையுடன், வில்லை வளைத்துக் கொண்டு தன்னை நோக்கி வரும் கடோத்கசனைக் கண்டான்.(109-111) அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பயங்கர முகங்கள், தலைகள் மற்றும் கழுத்துகள் கொண்ட தன் தொண்டர்கள் துணையுடன் இருந்தான்.(112) அந்த ராட்சசர்களில் பௌலஸ்தியர்கள் மற்றும் யாதுதானர்களும் இருந்தனர் [9]. அவர்கள் ஆற்றலில் இந்திரனுக்கு இணையானவர்களாக இருந்தனர். அவர்கள் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏந்தியவர்களாகவும், பல்வேறு விதங்களிலான கவசங்களைப் பூண்டவர்களாகவும் இருந்தனர்.(113) பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்ட அவர்கள் சினத்தில் பெருகியவர்களாகவும் இருந்தனர். உண்மையில் போரில் எளிதில் வெல்லப்பட முடியாதவர்களான அந்த ராட்சசர்களின் துணையுடனேயே போருக்கு கடோத்கசன் வந்தான்.(114)அவர்களைக் கண்ட உமது மகன் துரியோதனன் மிகவும் உற்சாகமற்றவனாக ஆனான். அவனிடம் {துரியோதனனிடம்} துரோண மகன் {அஸ்வத்தாமன்}, “ஓ! துரியோதனா, பொறுப்பாயாக. உனக்கு அச்சம் தேவையில்லை.(115) உனது இந்த வீரச் சகோதரர்களுடனும், இந்திரனின் ஆற்றலைக் கொண்ட இந்தப் பூமியின் தலைவர்களுடனும் ஒருபுறமாக நிற்பாயாக. நீ தோல்வியடைய மாட்டாய். நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். அதே வேளையில் உன் துருப்புகளுக்கும் நீ உறுதியளிப்பாயாக {ஆறுதலளிப்பாயாக}” என்றான் {அஸ்வத்தாமன்}.(116) அதற்குத் துரியோதனன், “உமது இதயம் பெரியதென்பதால், நீர் சொல்வதை நான் அற்புதமாகக் கருதவில்லை. ஓ! கௌதமர் மகனின் {கிருபரின்} மகனே {அஸ்வத்தாமரே}, நீர் எங்களிடம் கொண்ட மதிப்பு பெரியதே” என்றான் {துரியோதனன்}.(117)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அஸ்வத்தாமனிடன் இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {துரியோதனன்}, பிறகு சுபலனின் மகனிடம் {சகுனியிடம்}, “பெரும் வீரமிக்க நூறாயிரம் தேர்வீரர்கள் சூழத் தனஞ்சயன் {அர்ஜுனன்} போரில் ஈடுபடுகிறான். அறுபதாயிரம் தேர்களுடன் நீர் அவனை எதிர்த்துச் செல்வீராக. கர்ணன், விருஷசேனன், கிருபர், நீலன், வடக்கத்தியர் {வடநாட்டு அரசர்கள்}, கிருதவர்மன், புருமித்ரனின் மகன்கள், துச்சாசனன், நிகும்பன், குண்டபேதி, புரஞ்சயன், திருடரதன், பதாகின், ஹேமபுஞ்சகன் {ஹேமகம்பனன், [ஹேமபுஷ்யகன்]}, சல்லியன், ஆருணி, இந்திரசேனன், சஞ்சயன், விஜயன், ஜெயன், கமலாக்ஷன், பரகிராதின், ஜெயதர்மன் {ஜெயவர்மன்}, சுதர்சனன் ஆகியோரும் [10] மேலும் அறுபதாயிரம் காலாட்படை வீரர்களுடன் உம்மைத் தொடர்ந்து வருவார்கள்.(118-122)அம்மானே {சகுனியே}, தேவர்களின் தலைவன் அசுரர்களைக் கொல்வதைப் போலவே, பீமன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} மற்றும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரை நீர் கொல்வீராக. உம்மிடமே வெற்றி குறித்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.(123) ஏற்கனவே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அவர்களின் அங்கங்கள் அனைத்தும் மிகவும் சிதைக்கப்பட்டுள்ளன. ஓ! மாமனே {சகுனியே}, அக்னியின் மகன் (கார்த்திகேயன்) அசுரர்களைக் கொன்றதைப் போலவே குந்தியின் மகன்களைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(124) உமது மகனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களை அழிப்பதற்காக வேகமாகச் சென்று, உமது மகன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்” {என்றான் சஞ்சயன்}.(125)
அனைவராலும் புகழப்பட்ட அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 155ஈ-அஸ்வத்தாமனின் வில்லை வெட்டிய கடோத்கசன்; கடோத்கசனின் தேரை அழித்த அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனின் தேரில் ஏறிய கடோத்கசன்; ராட்சசக் கூட்டத்தை அழித்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன் உண்டாக்கிய குருதிப்புனல்; துருபதன் மகன்களையும், குந்திபோஜன் மகன்களையும் கொன்ற அஸ்வத்தாமன்; மயக்கமடைந்த கடோத்கசனை வேறு தேரில் ஏற்றிய திருஷ்டத்யும்னன்; அனைவராலும் புகழப்பட்ட அஸ்வத்தாமன்..
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, பிரகலாதனுக்கும் இடையில் நடந்ததைப் போல அவ்விரவில், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்}, துரோணரின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்} இடையிலான போர் நடைபெற்றது.(126) சினத்தில் நிறைந்த கடோத்கசன், நஞ்சையோ, நெருப்பையோ போன்ற பத்து கடுங்கணைகளால் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} மார்பைத் தாக்கினான்.(127) பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} ஏவப்பட்ட அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட அஸ்வத்தாமன், புயலால் அசைக்கப்பட்ட நெடிய மரம் ஒன்றைப் போலத் தன் தேர்த்தட்டில் நடுங்கிக் கொண்டிருந்தான்.(128) கடோத்கசன் மீண்டும் ஒரு பல்லத்தைக் கொண்டு துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} கைகளில் இருந்த பிரகாசமான வில்லை வெட்டினான்.(129) பிறகு பெருங்கடினத்தைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவன் {அஸ்வத்தாமன்}, (தன் எதிரியின் மீது) மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கூரிய கணைகளைப் பொழிந்தான்.(130) பிறகு அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வானுலாவுபவையும், எதிரிகளைக் கொல்பவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைகள் பலவற்றை வானுலாவும் அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது ஏவினான்.(131)
அப்போது அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவையும், அகன்ற மார்பினரான ராட்சசர்களைக் கொண்டவையுமான அந்தப் பெரிய படை, சிங்கங்களால் பீடிக்கப்பட்ட மதயானைக் கூட்டத்தைப் போலத் தெரிந்தது.(132) குதிரைகள், சாரதிகள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்த ராட்சர்களைத் தன் கணைகளால் எரித்த அவன் {அஸ்வத்தாமன்}, யுக முடிவில் உயிரினங்களை எரிக்கும் புகழத்தக்க அக்னியைப் போலச் சுடர்விட்டெரிந்தான்.(133) தன் கணைகளால் ஒரு முழு அக்ஷௌஹிணி ராட்சசத் துருப்புகளை எரித்த அஸ்வத்தாமன், முந்நகரத்தை {திரிபுரத்தை} [11] எரித்த தெய்வீக மகேஸ்வரனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(134) வெற்றியாளர்களில் முதன்மையான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, உமது எதிரிகளை எரித்து, யுகமுடிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் யுக நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(135)அப்போது சினத்தால் நிறைந்த கடோத்கசன், “துரோணரின் மகனைக் கொல்வீராக” என்று சொல்லி அந்தப் பரந்த ராட்சசப் படையைத் தூண்டினான்.(136) பிரகாசமான பற்களையும், பெரிய முகங்களையும், பயங்கரத் தன்மைகளையும், அகன்ற வாய்களையும், நீண்ட நாக்குகளையும், கோபத்தால் சிவந்த கண்களையும் கொண்ட அந்தப் பயங்கர ராட்சசர்கள், கடோத்கசனின் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர்.(137) தங்கள் சிங்க முழக்கங்களால் பூமியை நிறைத்து, பல்வேறு வகை ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அவர்கள் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்வதற்காக அவனை எதிர்த்து விரைந்தனர்.(138) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசர்கள், கோபத்தால் கண்கள் சிவந்து, அஸ்வத்தாமனின் தலை மீது நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஈட்டிகள், சதக்னிகள், பரிகங்கள், அசனிகள், நீண்ட வேல்கள் {சூலங்கள்}, கோடரிகள், கத்திகள், கதாயுதங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, கனமான தண்டாயுதங்கள், போர்க்கோடரிகள், பராசங்கள், வாள்கள், வேல்கள் {தோமரங்கள்}, குணபங்கள், பளபளப்பான கம்பனங்கள், ஸ்தூலங்கள் {புசுண்டிகள்}, ஏவுகணைகள், கற்கள், (சூடான) பாகு நிறைந்த பாத்திரங்கள், எஃகால் ஆன ஸ்தூணங்கள் {தூண்கள்}, உலக்கைகள் மற்றும் பயங்கரமான வடிவத்துடன் கூடியவையும் எதிரிகளை அழிக்கவல்லவையான அனைத்தையும் வீசினார்கள்.(139-142)
துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலையில் விழுந்து கொண்டிருந்த, அந்த ஆயுதங்களின் அடர்த்தியான கணைமாரியைக் கண்ட உமது போர்வீரர்கள் மிகவும் துன்புற்றனர்.(143) எனினும், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஆகாயத்ததில் எழுந்த மேகத்தைப் போலத் தெரிந்ததும், இடியின் பலத்தைக் கண்டதுமான அந்தப் பயங்கர ஆயுத மழையைத் தன் கூரிய கணைகளால் அச்சமற்றவகையில் அழித்தான்.(144) பிறகு அந்த உயர் ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், தெய்வீக ஆயுதங்களின் சக்தியை மந்திரங்களால் ஈர்த்திருந்தவையுமான பிற ஆயுதங்களால் வேகமாக ராட்சசர்களில் பலரைக் கொன்றான்.(145) அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், அகலமான மார்பைக் கொண்டவர்களுமான அந்த ராட்சசர்களின் பெரும்படை, சிங்கங்களால் பீடிக்கப்பட்ட மதங்கொண்ட யானைகளின் கூட்டத்தைப் போலத் தெரிந்தது.(146)
அப்போது, துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்க ராட்சசர்கள், சீற்றத்தால் நிறைந்து, முன்னவனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தனர்.(147) அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்} பார்த்துக் கொண்டிருந்தபோதே, தன் சுடர்மிக்கக் கணைகளால் அந்த ராட்சசப் படையை எரித்தவனும், உயர்ந்த வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்தவனுமான அந்தப் போர்வீரன் {அஸ்வத்தாமன்}, தனியாகவும், ஆதரவற்றவனாகவும் இருந்து கொண்டே, உயிருடன் கூடிய வேறு எந்த உயிரினங்களும் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்ததால், அப்போது துரோணரின் மகனால் வெளிக்காட்டப்பட்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(148,149) ராட்சசப் படையை எரித்துக் கொண்டிருந்த போது, அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, யுகமுடிவில் அனைத்தையும் எரிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(150)
உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு மத்தியில், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால், அந்தப் போரில் அவர்களது படைகளை எரிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} பார்க்கவல்ல சக்தி, வலிமைமிக்க ராட்சச இளவரசனான அந்த வீர கடோத்கசனைத் தவிர வேறு எவனிடமும் இல்லை.(151,152) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் கண்களை உருட்டிக் கொண்டும், உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டும், தன் (கீழ்) உதட்டைக் கடித்துக் கொண்டும் இருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் தேரோட்டியிடம், “துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமரிடம்} என்னைச் சுமந்து செல்வாயாக” என்றான்.(153)
வெற்றிக் கொடிகளைக் கொண்ட அந்த உறுதிமிக்கத் தேரில் ஏறிச் சென்ற அந்த எதிரிகளைக் கொல்பவன் {கடோத்கசன்}, துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மீண்டும் ஒரு தனி மோதலை விரும்பி, பின்னவனை {அஸ்வத்தாமனை} எதிர்த்துச் சென்றான். பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சிங்க முழக்கமொன்றை முழங்கி, அந்த மோதலில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது, தெய்வீகக் கைவண்ணம் {வேலைப்பாடு} கொண்டதும், எட்டு மணிகளுடன் கூடியதுமான ஒரு பயங்கர அசனியை[12] ஏவினான்.(154-156) எனினும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் வில்லை விட்டுவிட்டுத் தேரில் இருந்து கீழே குதித்து, அதை {அந்த அசனியைப்} பிடித்து, மீண்டும் கடோத்கசன் மீதே அதைத் திருப்பி வீசினான். அதே வேளையில் கடோத்கசன், தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே இறங்கினான்.(157) பளபளக்கும் பிரகாசம் கொண்ட அந்த உறுதி மிக்க அசனியானது, குதிரைகள், சாரதி, கொடிமரம் ஆகியவற்றோடு கூடிய அந்த ராட்சசனின் வாகனத்தைச் சாம்பலாக்கி, பூமியைத் துளைத்து அவளுக்குள் {பூமிக்குள்} நுழைந்தது.(158) தன் தேரில் இருந்து கீழே குதித்து, தெய்வீகக் கைவண்ணம் கொண்ட அந்தப் பயங்கர அசனியைப் பிடித்த அந்தத் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அருஞ்செயலைக் கண்டு உயிரினங்கள் அனைத்தும் மெச்சின.(159)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் தேருக்குச் சென்ற அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, இந்திரனின் பெரிய வில்லுக்கு ஒப்பான ஒரு பயங்கர வில்லை எடுத்துக் கொண்டு, சிறப்புமிக்கத் துரோணரின் மகன் மீது கூரிய கணைகள் பலவற்றை ஏவினான்.(160) திருஷ்டத்யும்னனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான முதன்மையான கணைகள் பலவற்றை அஸ்வத்தாமனின் மார்பில் ஏவினான். பிறகு துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆயிரக்கணக்கான குறுங்கணைகளையும் {பிண்டிபாலங்களையும்}, நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} ஏவினான்.(161,162) எனினும், கடோத்கசன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகிய இருவரும், நெருப்பின் தீண்டலுக்கு ஒப்பான தங்கள் கணைகளால் அஸ்வத்தாமனின் கணைகளைத் தாக்கி அவற்றைக் கலங்கடித்தனர். (ஒரு புறத்தில்) மனிதர்களில் சிங்கங்களான அந்த இருவர், (மறுபுறத்தில்) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} என அவர்களுக்கு இடையில் மிகக் கடுமையாக நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! பாரதக் குலத்தவரே {திருதராஷ்டிரரே}, போராளிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது, ஆயிரம் தேர்கள், முன்னூறு யானைகள் மற்றும் ஆறாயிரம் குதிரைகள் ஆகியவற்றுடன் அந்த இடத்திற்குப் பீமசேனன் வந்தான்.(163, 164) எனினும், துரோணரின் அற மகன் {அஸ்வத்தாமன்}, களைப்பறியா ஆற்றலுடன் தொடர்ந்து பீமனின் வீர மகனுடனும் {கடோத்கசனுடனும்}, {பின் தொடர்ந்து வரும்} தொண்டர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனுடனும் போரிட்டான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில் அத்தகு அருஞ்செயல்களை உயிரினங்கள் அனைத்தில் எவையும் செய்ய முடியாது எனும் அளவுக்குத் துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} வெளிக்காட்டப்பட்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(165-167) பீமசேனன், ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, விஜயன் {அர்ஜுனன்} மற்றும் அச்யுதன் {கிருஷ்ணன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரைகள், சாரதிகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு முழு அக்ஷௌஹிணி ராட்சசத் துருப்புகளைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் கூரிய கணைகளால் அவன் {அஸ்வத்தாமன்} அழித்தான்.(168,169) நேராகச் செல்லும் (அஸ்வத்தாமனின்) கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட யானைகள், சிகரங்களற்ற மலைகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன. வெட்டப்பட்டு நடுங்கிக் கொண்டிருந்த துதிக்கைகளால் விரவிக் கிடந்த பூமியானது நெளியும் பாம்புகளால் நிறைந்திருப்பதைப் போல அழகாகத் தெரிந்தது. தங்கத் தண்டுகள் மற்றும் அரசக் குடைகளால் விரவிக் கிடந்த பூமியானது, யுக முடிவின் போது கோள்கள், நட்சத்திரங்கள், நிலவுகள் மற்றும் சூரியன்கள் பலவற்றால் விரவிக்கிடக்கும் ஆகாயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(170, 171)
அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வேகமான ஓடையுடன் கூடிய குருதிப்புனல் ஒன்றை அங்கே ஓடச் செய்தான். யானைகள், குதிரைகள் மற்றும் போராளிகளின் குருதியே அதன் {அந்த ஆற்றின்} நீரானது. நெடிய கொடிமரங்கள் அதன் தவளைகளாகின. பேரிகைகள் அதன் பெரும் ஆமைகளாகின; குடைகள் அதன் அன்ன {அன்னப்பறவை} வரிசையாகின; அபரிமிதமான சாமரங்கள் அதன் நுரைகளாகின; கங்கங்கள், கழுகுகள் ஆகியன அதன் முதலைகளாகின; அபரிமிதமான ஆயுதங்கள் அதன் மீன்களாகின; பெரும் யானைகள் கரையில் கிடக்கும் அதன் கற்கள் மற்றும் பாறைகளாகின; யானைகளும், குதிரைகளும் அதன் சுறாக்களாகின; தேர்கள் அதன் நிலையில்லாத கரைகளாகின; கொடிகள் அதன் அழகிய மர வரிசைகளாகின. கணைகளைத் தன் (சிறு) மீன்களாகக் கொண்ட அந்தப் பயங்கர ஆறு, வேல்கள், ஈட்டிகள், வாள்கள் ஆகியவற்றைத் தன் பாம்புகளாகக் கொண்டிருந்தது; மஜ்ஜை மற்றும் இறைச்சியைச் சேறாகவும், தலையற்ற உடல்களை மிதக்கும் தெப்பங்களாகவும் கொண்டிருந்தது. (மனிதர்கள் மற்றும் விலங்குகளின்) மயிர்களால் அடைக்கப்பட்ட அஃது அவற்றைப் பாசியாகக் கொண்டிருந்தது. மேலும் அது மருண்டோரை அச்சங்கொள்ளவும், உற்சாகமிழக்கவும் செய்தது. போராளிகளின் ஓலம் அதன் பயங்கர முழக்கமாக இருந்தது. இரத்த அலைகளே அதன் பரப்பில் தெரிந்தன.(172-177) காலாட்படை வீரர்களால் நிறைந்து பயங்கரமாக இருந்த அது, கடலான யமனின் வசிப்பிடத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.
ராட்சசர்களைக் கொன்ற துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிறகு, தன் கணைகளால் ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனைப்} பீடிக்கத் தொடங்கினான்.(178) மீண்டும் சினத்தால் நிறைந்தவனும், பலமிக்கவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கணைகள் பலவற்றால், விருகோதரன் {பீமன்} மற்றும் பிருஷதன் {துருபதன்} மகன்கள் உள்ளிட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தர்களைத் துளைத்த பிறகு, துருபதன் மகன்களில் ஒருவனான சுரதனைக் {சுருதனைக்} கொன்றான். பிறகும் அவன் {அஸ்வத்தாமன்}, சத்ருஞ்சயன் என்ற பெயர் கொண்ட சுரதனின் தம்பியையும் கொன்றான்.(179,180) மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, பலானீகன், ஜயானீகன், ஜயன் ஆகியோரையும் கொன்றான். சிங்க முழக்கம் செய்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மீண்டும் கூரிய கணையொன்றால் பிருஷத்ரனையும், அதன் பிறகு செருக்குமிக்கச் சந்திரசேனனையும் கொன்றான். பிறகும் அவன் {அஸ்வத்தாமன்} பத்து கணைகளால் குந்திபோஜனின் பத்து மகன்களைக் கொன்றான்.(181,182) மேலும் அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுருதாயுஷை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான். அவன் {அஸ்வத்தாமன்}, அழகிய சிறகுகளையும், கண்களையும் {!} கொண்ட மூன்று பிற கூரிய கணைகளால் வலிமைமிக்கச் சத்ருஞ்சயனைச் {!} சக்ரனின் {இந்திரனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பினான் [13].
பிறகு சினத்தால் நிறைந்த அஸ்வத்தாமன், கடுமையானதும், நேரானதுமான ஒரு கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(183,184) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, அந்த நாணைத் தன் காது வரை இழுத்து, கடுமையானதும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதுமான அந்தச் சிறந்த கணையால் கடோத்கசனைக் குறிபார்த்து வேகமாக ஏவினான்.(185) அழகிய சிறகுகளைக் கொண்ட அந்த வலிமைமிக்கக் கணை, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மார்பைத் துளைத்துக் கடந்து சென்று பூமிக்குள் நுழைந்தது. அதன்பேரில் கடோத்கசன் அந்தத் தேரிலேயே கீழே விழுந்தான். அவன் விழுவதைக் கண்டு, அவன் இறந்துவிட்டான் என்று நம்பியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} முன்னிலையில் இருந்து அவனை {கடோத்கசனை} அகற்றி, மற்றொரு தேரில் அவனைக் கிடத்தச் செய்தான்.(187)
இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரனின் தேர்ப்படையானது போரில் இருந்து புறமுதுகிட்டது. அப்போது, தன் எதிரிகளை வென்ற துரோணரின் வீர மகன் {அஸ்வத்தமான்} உரக்கச் சிங்க முழக்கமிட்டான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவராலும், மனிதர்கள் அனைவராலும் அவன் {அஸ்வத்தாமன்} வழிபடப்பட்டான்.(188) நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இறந்து கிடந்த ராட்சசர்களின் உடல்களால் விரவிக் கிடந்த பூமியானது, மலைச் சிகரங்களால் விரவிக் கிடப்பதைப் போலப் பயங்கரத் தோற்றத்தை அடைந்து கடக்கமுடியாததாக ஆனது.(189) சித்தர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், நாகர்கள், பறவைகள், பித்ருக்கள், அண்டங்காக்கைகள், அங்கே பெரும் எண்ணிக்கையிலான மனித ஊனுண்ணிகள், பேய்கள், அப்சரஸ்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} புகழ்வதில் ஒன்று சேர்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(190)
யுதிஷ்டிரனை வீழ்த்த முடியாத துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 156-சோமதத்தனை மயக்கமடையச் செய்த சாத்யகியும், பீமசேனனும்; சோமதத்தனின் தந்தையான பாஹ்லீகனைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரன் மகன்கள் பத்து பேரைக் கொன்றது; கர்ணனின் தம்பி விருகரதனைக் கொன்றது; காந்தார இளவரசர்களையும் சதசந்திரனையும் கொன்றது; நடுங்கத் தொடங்கிய கௌரவ மன்னர்கள்; எதிரி படையினரைக் கொன்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கும் துரோணருக்கும் இடையிலான மோதல்; பிரம்மாயுதத்தைப் பயன்படுத்திய துரோணர்; யுதிஷ்டிரனை வீழ்த்த முடியாத துரோணர் அவனைக் கைவிட்டது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துருபதனின் மகன்களும், குந்திபோஜனின் மகன்களும், ஆயிரக்கணக்கான ராட்சசர்களும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} கொல்லப்படுவதைக் கண்ட யுதிஷ்டிரன், பீமசேனன், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், யுயுதானன் {சாத்யகி} ஆகியோர் ஒன்றாகத் திரண்டு தங்கள் இதயங்களைப் போரில் உறுதியாக நிறுத்தினர்.(1,2) அப்போது அந்தப் போரில் சாத்யகியைக் கண்ட சோமதத்தன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மீண்டும் சினத்தால் நிறைந்து, பின்னவனை {சாத்யகியை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(3) வெற்றியை விரும்பிய இரு தரப்பினரான உமது போர்வீரர்களுக்கும், எதிரியுடைவர்களுக்கும் இடையில் கடுமையானதும், காண்பதற்கு மிக அற்புதமானதுமான ஒரு போர் நடந்தது.(4) சாத்யகியின் சார்பாகப் போரிட்ட பீமன், அந்தக் கௌரவ வீரனை {சோமதத்தனைப்} பத்து கணைகளால் துளைத்தான். எனினும் சோமதத்தன் பதிலுக்கு ஒரு நூறு கணைகளால் அந்த வீரனை {பீமனைத்} துளைத்தான்.(5)
அப்போது சினத்தால் நிறைந்த சாத்வதன் {சாத்யகி}, நகுஷனின் மகனான யயாதியின் உயரிய நற்குணங்கள் அனைத்தையும் கொண்டவனும், தன் மகனின் மரணத்தால் பீடிக்கப்பட்டிருந்தவனுமான அந்த முதிய போர்வீரனை {சோமதத்தனை}, இடியின் சக்தியைக் கொண்ட பத்து கூரிய கணைகளால், துளைத்தான். பெரும் பலத்துடன் அவனை {சோமதத்தனைத்} துளைத்த அவன் {சாத்யகி}, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் தாக்கினான்.(6,7) பிறகு சாத்யகிக்காகப் போரிட்ட பீமசேனன், புதியதும், கடினமானதும், பயங்கரமானதுமான பரிகம் ஒன்றை சோமதத்தனின் தலை மீது வீசினான்.(8) சாத்யகியும் சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் நெருப்புக்கு ஒப்பான காந்தியையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட ஒரு கூரிய கணையைச் சோமதத்தனின் மார்பில் ஏவினான்.(9) பரிகம் மற்றும் கணை ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வீர சோமதத்தனின் உடலில் பாய்ந்தன. அதன்பேரில் வலிமைமிக்க அந்தத் தேர்வீரன் கீழே விழுந்தான்.(10)
பாஹ்லீகன், தன் மகன் (சோமதத்தன்) மயக்கத்தில் வீழ்ந்ததைக் கண்டு, மழைக்காலத்து மேகத்தைப் போலக் கணை மாரிகளை இறைத்தபடி சாத்யகியை நோக்கி விரைந்தான்.(11) அப்போது பீமன், சாத்யகிக்காக ஒன்பது கணைகளால் சிறப்புமிக்கப் பாஹ்லீகனைப் பீடித்து, போரின் முன்னணியில் இருந்த அவனைத் {பாஹ்லீகனைத்} துளைத்தான்.(12) அப்போது, பிரதீபனின் வலிமைமிக்க மகன் (பாஹ்லீகன்) கோபத்தால் நிறைந்து, இடியை வீசும் புரந்தரனை {இந்திரனைப்} போலப் பீமனின் மார்பில் ஈட்டி ஒன்றை வீசினான். அதனால் தாக்கப்பட்ட பீமன் (தன் தேரில்) நடுங்கியபடியை மயக்கமடைந்தான். பிறகு, தன் உணர்வுகள் மீண்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, தன் எதிராளியின் {பாஹ்லீகனின்} மீது ஒரு கதாயுதத்தை வீசினான்.(14) பாண்டுவின் மகனால் {பீமனால்} வீசப்பட்ட அந்தக் கதாயுதம் பாஹ்லீகனின் தலையைக் கொய்ததால், மின்னல் தாக்கி வீழ்த்தப்பட்ட மரம் ஒன்றைப் போல அவன் {பாஹ்லீகன்} பூமியில் உயிரற்று கீழே விழுந்தான்.(15)
மனிதர்களில் காளையான அந்த வீரப் பாஹ்லீகன் கொல்லப்பட்டதும், ஆற்றலில் தசரதன் மகனான ராமனுக்கு இணையானவர்களான உமது மகன்களில் பத்து பேர் பீமனைப் பீடிக்கத் தொடங்கினர்.(16) அவர்கள் நாகதத்தன், திருதரதன் {த்ருடரதன்}, வீரபாகு {மஹாபாகு}, அயோபுஜன், திருதன் {த்ருடன்}, சுஹஸ்தன், விரஜஸ், பிரமாதன் {பிரமாதி}, உக்ரன், அனுயாயி ஆகியோராவர்.(17) அவர்களைக் கண்ட பீமசேனன் சினத்தால் நிறைந்தான். பிறகு அவன் {பீமன்}, பெரும் கடினத்தைத் தாங்கவல்ல கணைகள் பலவற்றை எடுத்துக் கொண்டான். அடுத்தடுத்து அவர்களில் ஒவ்வொருவரையும் குறிபார்த்த அவன் {பீமன்}, அவர்கள் மீது அந்தக் கணைகளால் ஏவி, அவர்கள் ஒவ்வொருவரின் முக்கிய அங்கங்களையும் தாக்கினான்.(18) அவற்றால் துளைக்கப்பட்ட அவர்கள், சக்தியையும் உயிரையும் இழந்து, சூறாவளியால் முறிக்கப்பட்டு மலையின் முகடுகளில் இருந்து விழும் நெடிய மரங்களைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர் [1].(19)
அந்தப் பத்து கணைகளால் உமது மகன்கள் பத்து பேரைக் கொன்ற பீமன், கணைகளின் மாரியால் கர்ணனுக்குப் பிடித்தமான மகனை {விருஷசேனனை} மறைத்தான்.(20) அப்போது கர்ணனின் தம்பியும், கொண்டாடப்படுபவனுமான விருகரதன், பீமனைப் பல கணைகளால் துளைத்தான். எனினும் அந்த வலிமைமிக்கப் பாண்டவன் {பீமன்} அவனை {விருகரதனை} வெற்றிகரமாக வெளியேற்றினான் {கொன்றான்}.(21) அடுத்ததாக உமது மைத்துனர்களில் {சகுனியின் சகோதரர்களில்} ஏழு தேர்வீரர்களைத் தன் கணைகளால் கொன்ற வீரப் பீமன், சதசந்திரனை பூமியில் நசுக்கினான் {கொன்றான்}.(22) வலிமைமிக்கத் தேர்வீரனான சதசந்திரனின் கொலையைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களான சகுனியின் சகோதரர்கள், கவாக்ஷன், சரபன், விபு, சுபகன், பானுதத்தன் ஆகிய ஐந்து வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பீமசேனனை நோக்கி விரைந்து, கூரிய கணைகளால் அவனைத் தாக்கினர். மழையால் தாக்கப்படும் மலை ஒன்றைப் போல இப்படி அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட பீமன் தன் ஐந்து கணைகளால் அந்த வலிமைமிக்க ஐந்து மன்னர்களையும் கொன்றான்.(24) அவ்வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னர்களில் முதன்மையானோர் பலர் நடுங்கத் தொடங்கினர்.(25)
அப்போது கோபத்தால் நிறைந்த யுதிஷ்டிரன், குடத்தில் பிறந்தவரும் (துரோணரும்), உமது மகன்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படையணிகளை அழிக்கத் தொடங்கினான்.(26) உண்மையில் யுதிஷ்டிரன், தன் கணைகளால், அம்பஷ்டர்கள், மாலவர்கள், துணிவுமிக்கத் திரிகர்த்தர்கள் மற்றும் சிபிக்கள் ஆகியோரை யமனின் உலகங்களுக்கு அனுப்பத் தொடங்கினான்.(27) அபிஷாஹர்கள், சூரசேனர்கள், பாஹ்லீகர்கள், வசாதிகள் ஆகியோரை வெட்டிய அவன் {யுதிஷ்டிரன்}, பூமியை சதையாலும், குருதியாலும் சகதியாக்கினான்.(28) மேலும் அவன் ஒரு நொடிப்பொழுதிற்குள்ளேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான யௌதேயர்கள், மாலவர்கள், மத்ரகர்கள் ஆகியோரைக் கணைகள் பலவற்றின் மூலம் யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் அனுப்பினான்.(29) அப்போது யுதிஷ்டிரனின் தேரருகே, “கொல்வீர், பிடிப்பீர், கைப்பற்றுவீர், துளைப்பீர், துண்டுகளாக வெட்டுவீர்” என்று எழுந்த உரத்த ஆரவராம் கேட்கப்பட்டது.(30)
இப்படி உமது துருப்புகளை முறியடித்துக் கொன்றுவரும் அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட துரோணர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டுக் கணை மாரியால் யுதிஷ்டிரனை மறைத்தார்.(31) பெருங்கோபத்தில் நிறைந்திருந்த துரோணர், வாயவ்ய ஆயுதத்தால் யுதிஷ்டிரனைத் தாக்கினார். எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அதே போன்ற தன் ஆயுதத்தால் அந்தத் தெய்வீக ஆயுதத்தைக் கலங்கடித்தான். தமது ஆயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபத்தால் நிறைந்து, பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்ல விரும்பி வாருணம், யாம்யம், ஆக்நேயம், துவாஷ்டரம், சாவித்ரம் ஆகிய பல்வேறு தெய்வீக ஆயுதங்களை யுதிஷ்டிரன் மீது ஏவினார். எனினும், அறநெறி அறிந்தவனான அந்த வலிய கரங்களைக் கொண்ட பாண்டவன் {யுதிஷ்டிரன்}, குடத்தில் பிறந்தவரால் {துரோணரால்} ஏவப்பட்டவையோ, அல்லது தன்னை நோக்கி ஏவப்பட இருந்தவையோவான அந்த ஆயுதங்கள் அனைத்தையும் அச்சமற்ற வகையில் கலங்கடித்தான். அப்போது தன் சபதத்தை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்த அந்தக் குடத்தில் பிறந்தவர் {துரோணர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகனின் {துரியோதனனின்} நன்மைக்காகத் தர்மனின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்ல விரும்பி ஐந்திரம், பிராஜாபத்ய ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார்.(32-36)
யானை, அல்லது சிங்கத்தின் நடையையும், அகன்ற மார்பையும், அகன்ற சிவந்த கண்களையும், (துரோணரின் சக்திக்கு) சற்றும் குறையாத சக்தியையும் கொண்ட அந்தக் குரு குலத்தில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, மாஹேந்திர ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். அதைக்கொண்டே துரோணரின் ஆயுதத்தை அவன் கலங்கடித்தான்.(37) தன் ஆயுதங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட துரோணர், கோபத்தால் நிறைந்து, யுதிஷ்டிரனின் அழிவை அடைய விரும்பி, பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்தார்.(38) அடர்த்தியான இருளில் மூழ்கி இருந்த எங்களால் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லை. அனைத்து உயிரினங்களும் கூட, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் அச்சத்தில் நிறைந்தன.(39) பிரம்மாயுதம் உயர்த்தப்படுவதைக் கண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பிரம்மாயுதத்தைக் கொண்டு அதைக் கலங்கடித்தான்.(40) அப்போது அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்த மனிதர்களில் காளையரான அந்தப் பெரும் வில்லாளிகள் துரோணர் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரையும் போர்வீரர்களில் முதன்மையான அனைவரும் பாராட்டினர்.(41)
பிறகு, சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்த துரோணர், யுதிஷ்டிரனைக் கைவிட்டு வாயவ்யா ஆயுதத்தால் துருபதனின் படைப்பிரிவை எரிக்கத் தொடங்கினார்.(42) பீமசேனனும், சிறப்புமிக்கப் பார்த்தனும் {அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருந்த போதே துரோணரால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், அச்சத்தால் தப்பி ஓடினர்.(43) அப்போது கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் (அர்ஜுனனும்), பீமசேனனும் தங்கள் துருப்புகள் ஓடுவதைத் தடுத்து, இரு பெரும் தேர்க்கூட்டங்களுடன் பகைவரின் படையோடு திடீரென மோதினர்.(44) பீபத்சு {அர்ஜுனன்} வலதை {வலது பக்கத்தைத்} தாக்க, விருகோதரன் {பீமன்} இடதை {இடது பக்கத்தைத்} தாக்க [2] எனப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, இரு வலிமைமிக்கக் கணை மாரிகளுடன் மோதினார்.(45)அப்போது கைகேயர்கள், சிருஞ்சயர்கள், பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ஸ்யர்கள் மற்றும் சாத்வதர்கள் ஆகியோரோடு கூடி அந்தச் சகோதரர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்றனர்.(46) பிறகு கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படை உறக்கத்தாலும், இருளாலும் பீடிக்கப்பட்டுப் பிளக்கத் தொடங்கியது.(47) துரோணரும் உமது மகனும் {துரியோதனனும்}, அவர்களை அணிதிரட்ட முயன்றனர். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓடிக்கொண்டிருந்த அந்தப் போராளிகள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(48)
“உமது நாவை அறுப்பேன்!” என்ற கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 157-பாண்டவர்களை வீழ்த்த கர்ணனைத் தூண்டிய துரியோதனன்; அர்ஜுனனைக் கொல்ல சபதமேற்ற கர்ணன்; கர்ணனைக் கண்டித்த கிருபர்; கர்ணனின் மறுமொழி; பாண்டவர்களின் பலத்தை எடுத்துரைத்த கிருபர்; இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தைக் கிருபருக்கு நினைவுப் படுத்திய கர்ணன்; கிருபரின் நாவை அறுப்பேன் என்று சொன்ன கர்ணன்; மேலும் கிருபரை நிந்தித்த கர்ணன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சினத்தில் பெருகியிருந்த பாண்டவர்களின் அந்தப் பரந்த படையைக் கண்டு, அதைத் தடுக்கப்பட முடியாததாகக் கருதிய உமது மகன் துரியோதனன், கர்ணனிடம் இவ்வார்த்தைகளில் பேசினான்:(1) “ஓ! நண்பர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனே, உன் நண்பர்களைப் பொறுத்தவரை இப்போது (உன் உதவி மிகவும் தேவைப்படும்) நேரம் வந்துவிட்டது. ஓ! கர்ணா, என் போர்வீரர்கள் அனைவரையும் போரில் காப்பாயாக.(2) சினத்தில் நிறைந்தவர்களும், சீறும் பாம்புகளுக்கு ஒப்பானவர்களுமான பாஞ்சாலர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் ஆகியோர் அனைவராலும் இப்போது நமது போராளிகள் அனைத்துப்பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கின்றனர்.(3) அதோ {பார்}, வெற்றியை விரும்பும் பாண்டவர்கள் மகிழ்ச்சியில் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். பாஞ்சாலர்களின் பரந்த தேர்ப்படையானது சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டுள்ளதாகும்” என்றான் {துரியோதனன்}.(4)
கர்ணன் {துரியோதனனிடம்}, “பார்த்தனை {அர்ஜுனனைக்} காப்பதற்காகப் புரந்தரனே {இந்திரனே} இங்கு வந்தாலும், வேகமாக அவனையும் {இந்திரனையும்} வென்று, அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நான் கொல்வேன்.(5) {இதை} நான் உண்மையாகவே சொல்கிறேன். ஓ! பாரதா {துரியோதனா}, உற்சாகங்கொள்வாயாக. பாண்டுவின் மகன்களையும், கூடியிருக்கும் அனைத்துப் பாஞ்சாலர்களையும் நான் கொல்வேன்.(6) பாவகனின் {அக்னியின்} மகன் {கார்த்திகேயன்} வாசவனுக்கு {இந்திரனுக்கு} வெற்றியைப் பெற்றுத் தருவதைப் போலவே நானும் உனக்கு வெற்றியைப் பெற்றுத் தருவேன். எதிர்வந்திருக்கும் இந்தப் போரில் உனக்கு ஏற்புடையது எதுவோ, அதையே நான் செய்வேன்.(7) பார்த்தர்கள் அனைவரிலும் பல்குனனே {அர்ஜுனனே} பலவானாவான். சக்ரனின் {இந்திரனின்} கைவண்ணம் {வேலைப்பாடு} கொண்ட மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} அவன் மீது வீசுவேன்.(8) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, அந்தப் பெரும் வில்லாளி {அர்ஜுனன்} இறந்ததும், அவனது சசோதரர்கள் உன்னிடம் சரணடைவார்கள், அல்லது மீண்டும் காட்டுக்குச் செல்வார்கள்.(9) ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நான் உயிரோடிருக்கையில் எந்தத் துயரிலும் ஒருபோதும் ஈடுபடாதே. ஒன்று சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும், ஒன்றுகூடியிருக்கும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரையும் போரில் நான் வெல்வேன். என் கணைமாரிகளின் மூலம் அவர்களை முள்ளம்பன்றிகளாக்கி, பூமியை நான் உனக்கு அளிப்பேன்” என்று மறுமொழி கூறினான் {கர்ணன்}.(11)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கர்ணன் இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சரத்வான் மகன் {கிருபர்}, சிரித்துக் கொண்டே சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(12) “ஓ! கர்ணா, உன் பேச்சு நன்றாக இருக்கிறது. வார்த்தைகள் மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றால், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன்னைப் பாதுகாவலனாகக் கொள்ளும் இந்தக் குருக்களில் காளை {துரியோதனன்}, போதுமான அளவு பாதுகாப்பு கொண்டவனாகவே கருதப்படுவான்.(13) ஓ! கர்ணா, குரு தலைவனின் {துரியோதனனின்} முன்னிலையில் நீ அதிகமாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய். ஆனால் உண்மையில் உன் ஆற்றலோ, (தற்புகழ்ச்சி நிறைந்த உனது பேச்சுகளின்) எந்த விளைவுகளோ எப்போதும் காணப்பட்டதில்லை.(14) பாண்டுவின் மகன்களுடன் போரில் நீ மோதுவதைப் பல நேரங்களில் நாங்கள் கண்டிருக்கிறோம். அந்தச் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும், ஓ! சூதனின் மகனே {கர்ணா}, பாண்டவர்களால் நீ வெல்லப்பட்டாய்.(15) கந்தர்வர்களால் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} (கைதியாகக்) கொண்டு செல்லப்பட்ட போது, அந்தச் சந்தர்ப்பத்தில் முதல் ஆளாக ஓடிய ஒரே ஆளான உன்னைத் தவிரத் துருப்புகள் அனைத்தும் போரிடவே செய்தன [1].(16)விராடனின் நகரத்திலும், நீயும், உன் தம்பியும் உள்பட ஒன்று சேர்ந்திருந்த கௌரவர்கள் அனைவரும் போரில் பார்த்தனால் வெல்லப்பட்டனர்.(17) பாண்டுவின் மகன்களில் பல்குனன் {அர்ஜுனன்} என்ற ஒரே ஒருவனுக்குக் கூடப் போர்க்களத்தில் நீ இணையாகமாட்டாய். அப்படியிருக்கையில், கிருஷ்ணனைத் தங்களின் தலைமையில் கொண்ட பாண்டு மகன்கள் அனைவரையும் நீ எவ்வாறு வெல்லத் துணிவாய்?(18) ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ மிகவும் அதிகமாகத் தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். எதையும் சொல்லாமல் நீ போரில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வாயாக. தற்பெருமையில் ஈடுபடாமல் ஆற்றலை வெளிப்படுத்துவதே நல்லோரின் கடமையாகும்.(19) ஓ! சூதனின் மகனே, ஓ! கர்ணா கூதிர்காலத்தின் வறண்ட மேகங்களைப் போல எப்போதும் முழங்கிக் கொண்டு, பொருட்படுத்தத் தகாதவனாகவே உன்னை நீ காட்டிக்கொள்கிறாய். எனினும், இதை மன்னன் {துரியோதனன்} புரிந்து கொள்ளவில்லை.(20)
ஓ! ராதையின் மகனே {கர்ணா}, பிருதையின் மகனை {அர்ஜுனனைக்} காணும்வரைதான் நீ முழங்கிக் கொண்டிருப்பாய். பார்த்தன் {அர்ஜுனன்} அருகில் வருவதைக் கண்டதும் உன் முழக்கங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.(21) உண்மையில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} கணைகள் அடையும் தொலைவுக்கு வெளியே இருக்கும் வரையே முழங்கிக் கொண்டிருக்கிறாய். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் நீ துளைக்கப்படும்போது, இந்த உனது முழக்கங்கள் மறைந்துவிடுகின்றன.(22) க்ஷத்திரியர்கள் தங்கள் கரங்களின் மூலம் தங்கள் மாண்பைக் காட்டுவர். பிராமணர்கள் பேச்சு மூலமாக {தமது மாண்பைக் காட்டுவர்}; அர்ஜுனன் தன் வில்லின் மூலமாக {தன் மாண்பைக்} காட்டுவான்; ஆனால் கர்ணனோ, ஆகாயத்தில் அவன் கட்டும் கோட்டைகளின் மூலம் {தன் மாண்பைக்} காட்டுவான்.(23) (போரில்) ருத்ரனையே மன நிறைவு கொள்ளச் செய்த அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைத்} தடுக்கவல்லவன் எவன் இருக்கிறான்?” என்றார் {கிருபர்}.
இப்படிச் சரத்வான் மகனால் {கிருபரால்} கோபம் தூண்டப்பட்டவனும், அடிப்பவர்களில் முதன்மையானவனுமான கர்ணன், கிருபருக்குப் பின்வரும் விதத்தில் பதிலளித்தான்:(24) “வீரர்கள் எப்போதும் மழைக்காலத்து மேகங்களைப் போல முழங்கி, நிலத்தில் இடப்பட்ட விதைகளைப் போல வேகமாகக் கனிகளை {பலன்களைத்} தருவார்கள்.(25) போர்க்களத்தில் பெரும் சுமைகளைத் தங்கள் தோள்களில் ஏற்கும் வீரர்கள், தற்புகழ்ச்சி நிறைந்த பேச்சுகளில் ஈடுபடுவதில் நான் எக்குறையும் காணவில்லை. சுமையைத் தாங்கிக் கொள்ள மனதால் தீர்மானிக்கும் ஒருவனது செயல் நிறைவேறுவதில் விதியே அவனுக்கு உதவி செய்கிறது.(26,27) பெரும் சுமையைச் சுமக்க இதயத்தால் விரும்பும் நான், போதுமான உறுதியை எப்போதும் ஒன்றுதிரட்டுகிறேன்.(28)
ஓ! பிராமணரே {கிருபரே}, போரில் கிருஷ்ணன் மற்றும் சாத்வதர்களுடன் கூடிய பாண்டுவின் மகன்களைக் கொன்ற பிறகு இத்தகு முழக்கங்களில் நான் ஈடுபட்டால் உமக்கென்ன?(29) வீரர்கள் எவரும் கூதிர்க்காலத்து மேகங்களைப் போலக் கனியற்ற {பலன்றற} வகையில் முழங்குவதில்லை. தன் சொந்த வலிமையை அறிந்தே விவேகிகள் முழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.(30) ஒன்றாகச் சேர்ந்து, உறுதியுடன் போரிட்டு வரும் கிருஷ்ணன் மற்றும் பார்த்தனை {அர்ஜுனனை} இன்றைய போரில் வெல்ல என் இதயத்தில் தீர்மானித்திருக்கிறேன். ஓ! கௌதமரின் மகனே {கிருபரே}, அதற்காகவே நான் முழங்குகிறேன்.(31) ஓ! பிராமணரே {கிருபரே}, என் இந்த முழக்கங்களின் கனியைப் பார்ப்பீராக. போரில் தங்களைப் பின்தொடர்பவர்கள் {தொண்டர்கள்}, கிருஷ்ணன் மற்றும் சாத்வதர்கள் ஆகிய அனைவரோடும் சேர்ந்த பாண்டுவின் மகன்களைக் கொன்று, ஒரு முள்ளும் {எந்த எதிரியும்} இல்லாத முழுப் பூமியை நான் துரியோதனனுக்கு அளிப்பேன்” என்றான் {கர்ணன்}. (32)
கிருபர் {கர்ணனிடம்}, “செயல்கள் இல்லாமல் உன் சிந்தனைகளையே கண்டுபிடித்துச் சொல்லும் உனது இந்தப் பிதற்றல்களை நான் சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை. நீ எப்போதும் கிருஷ்ணர்கள் {கருப்பர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் மதிப்பு குறைவாகவே பேசுகிறாய்.(33) ஓ! கர்ணா, போரில் திறம்பெற்ற அவ்விரு வீரர்களைத் தன் தரப்பில் எவன் கொண்டிருக்கிறானோ, அவன் வெற்றி அடைவது உறுதி. உண்மையில், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், நாகர்கள், பறவைகள் ஆகிய அனைவரும் கவசம் பூண்டு வந்தாலும், கிருஷ்ணனும், அர்ஜுனனும் வீழ்த்தப்பட முடியாதவர்களே. தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாவான். அவன் உண்மைநிறைந்த பேச்சு கொண்டவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும் இருக்கிறான். பித்ருக்களையும், தேவர்களையும் அவன் துதிக்கிறான். அவன் {யுதிஷ்டிரன்} உண்மை மற்றும் அறப்பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.
மேலும் அவன் {யுதிஷ்டிரன்} ஆயுதங்களில் திறம்பெற்றவனாகவும் இருக்கிறான். பெரும் நுண்ணறிவு கொண்ட அவன், நன்றியறிவுள்ளவனாகவும் இருக்கிறான்.(34-36) அவனது {யுதிஷ்டிரனது} தம்பியர் அனைவரும் பெரும் வலிமை கொண்டவர்களாகவும், அனைத்து ஆயுதங்களையும் நன்கு பயின்றவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூத்தோரின் சேவையில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். ஞானமும், புகழும் கொண்ட அவர்கள் தங்கள் செயல்பாடுகளில் நீதியுள்ளவர்களாக {அறவோராக} இருக்கின்றனர்.(37) அவர்களது சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இந்திரனின் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தாக்குவதில் திறமையான அவர்கள் அனைவரும் பாண்டவர்களிடம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.
திருஷ்டத்யும்னன், சிகண்டி, துர்முக்ஷன் மகனான ஜனமேஜயன் {தௌர்முகி}(38), சந்திரசேனன், மத்திரசேனன், கீர்த்திவர்மன், துருவன், தரன், வசுசந்திரன், சுதேஜனன்,(39) துருபதனின் மகன்கள், வலிமைமிக்க உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான துருபதன், மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, அவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} உறுதியுடன் போராடும் அவனது {விராடனின்} தம்பியர்(40) அனைவரும், கஜானீகன், சுருதானீகன், வீரபத்திரன், சுதர்சனன், சுருதத்வஜன், பலானீகன், ஜயானீகன், ஜயப்பிரியன்,(41) விஜயன், லப்தலாக்ஷன், ஜயாஸ்வன், காமராஷன், விராடனின் அழகிய சகோதரர்கள்,(42) இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), திரௌபதியின் மகன்கள் (ஐவர்), ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் அனைவரும் பாண்டவர்களுக்காகவே போரிடுகின்றனர். எனவே, பாண்டுவின் மகன்கள் அழிவைச் சந்திக்கமாட்டார்கள்.(43)
இவர்களும், இன்னும் பிற (வீரர்களின்) கூட்டத்தினர் பலரும் பாண்டுவின் மகன்களுக்காகவே போரிடுகின்றனர். தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடியதும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் குழுக்கள் அனைத்துடன் கூடியதும், யானைகள், பாம்புகள் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்துடன் கூடியதுமான மொத்த அண்டமே, பீமன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகியோரின் ஆயுத ஆற்றலில் அழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.(44,45) யுதிஷ்டிரனைப் பொறுத்தவரை, கோபம் நிறைந்த தன் கண்களால் மட்டுமே அவனால் மொத்த உலகையும் எரித்துவிட முடியும். ஓ! கர்ணா, அளவிலா வலிமை கொண்ட சௌரியே {கிருஷ்ணனே} யாவருக்காகக் கவசம் பூண்டானோ அந்த எதிரிகளை எவ்வாறு நீ வெல்லத் துணிவாய்? ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ எப்போதும் சௌரியுடன் {கிருஷ்ணனுடன்} போரில் மோதத் துணிகிறாய் என்பது உன் பங்குக்குப் பெரும் மடமையாகும்” என்றார் {கிருபர்}.(46,47)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “(கிருபரால்) இப்படிச் சொல்லப்பட்ட ராதையின் மகனான கர்ணன், ஓ! குரு குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே சரத்வானின் மகனான ஆசான் கிருபரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(48) “ஓ! பிராமணரே {கிருபரே}, பாண்டவர்களைக் குறித்து நீர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே. இவையும், இன்னும் பிற நற்குணங்களும் பாண்டு மகன்களிடம் காணப்படவே செய்கின்றன.(49) பார்த்தர்கள், வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும், தைத்தியர்களாலும், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.(50) ஆனாலும், வாசவன் {இந்திரன்} என்னிடம் கொடுத்துள்ள ஈட்டியின் {சக்தியின்} உதவியால் நான் பார்த்தர்களை வெல்வேன். ஓ! பிராமணரே {கிருபரே}, சக்ரனால் {இந்திரனால்} எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஈட்டியானது கலங்கடிக்கப்பட முடியாதது என்பதை நீர் அறிவீர்.(51) அதைக் கொண்டு போரில் நான் சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கொல்வேன். அர்ஜுனனின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிருஷ்ணனும், அர்ஜுனனோடு பிறந்த சகோதரர்களும், அர்ஜுனன் (அவர்களுக்கு உதவி செய்ய) இல்லாமல் பூமியை {பூமியின் அரசுரிமையை} அனுபவிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள்.(52) எனவே, அவர்கள் அனைவரும் அழிவையே அடைவார்கள். கடல்களுடன் கூடிய இந்தப் பூமியானவள், குருக்களின் தலைவன் {துரியோதனன்} எந்த முயற்சியையும் செய்யாமலேயே அவனுடைய உடைமையாகவே இருப்பாள்.(53) {நல்ல} கொள்கையால் இவ்வுலகில் அனைத்தும் அடையத்தக்கதே என்பதில் ஐயமில்லை.(54) ஓ! கௌதமரே {கிருபரே}, இதை அறிந்தே நான் இந்த முழக்கங்களில் {கர்ஜனைகளில்} ஈடுபடுகிறேன்.
உம்மைப் பொறுத்தவரை, நீர் முதியவராகவும், பிறப்பால் பிராமணராகவும், போரில் திறனற்றவராகவும் இருக்கிறீர்.(55) பாண்டவர்களிடம் நீர் மிகுந்த பாசம் கொண்டிருக்கிறீர். இதன் காரணமாகவே நீர் என்னை இப்படி அவமதிக்கிறீர். ஓ! பிராமணரே, மீண்டும் இதுபோன்ற வார்த்தைகளை என்னிடம் சொன்னீரெனில், ஓ! இழிந்தவரே {கிருபரே}, என் கத்தியை உருவி உமது நாவை அறுத்துவிடுவேன்.(56) ஓ! பிராமணரே {கிருபரே}, ஓ! தீய புரிதல் கொண்டவரே, துருப்புகள் அனைத்தையும், கௌரவர்களையும் அச்சுறுத்தவே நீர் பாண்டவர்களைப் புகழ விரும்புகிறீர்.(57) ஓ! கௌதமரே {கிருபரே}, இதைப் பொறுத்தவரை, நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேளும்.(58) போரில் திறனுடையவர்களான துரியோதனன், துரோணர், சகுனி, துர்முகன், ஜயன், துச்சாசனன், விருஷசேனன், மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியர்}, {கிருபராகிய} நீர், சோமதத்தர், பீமன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விவிம்சதி ஆகிய அனைவரும் இங்கே கவசமணிந்து நிற்கின்றனர்.(59,60) சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டிருந்தாலும், போரில் இவர்களை வெல்லத்தக்க எந்த எதிரி இருக்கிறான்? நான் பெயர் சொன்ன வீரர்கள் அனைவரும், ஆயுதங்களில் திறனுடையவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், சொர்க்கத்தில் அனுமதி வேண்டுபவர்களும் [2], அறநெறியறிந்தவர்களும், போரில் திறம்பெற்றவர்களுமாவர்.(61) போரில் அவர்கள் தேவர்களையே கொல்லவல்லவர்களாவர். வெற்றியை விரும்பும் துரியோதனனுக்காகக் கவசமணிந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் போர்க்களத்தில் தங்கள் நிலைகளை இவர்கள் ஏற்பார்கள்.(62) வலிமைமிக்க மனிதர்களின் வழக்கில் கூட வெற்றியென்பது விதியைச் சார்ந்தே இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.(63)வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மரே நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுக் கிடக்கிறார் எனும்போதும், விகர்ணன், ஜெயத்ரதன்,(64) பூரிஸ்ரவஸ், ஜயன், ஜலசந்தன், சுதக்ஷிணன், தேர்வீரர்களில் முதன்மையான சலன், பெரும் சக்தி கொண்ட பகதத்தன்(65) ஆகிய இவர்களும், தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களும், (பாண்டவர்களைவிட) வலிமைமிக்கவர்களுமான வீரர்கள் அனைவரும், பாண்டவர்களால் கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கின்றனர்(66) எனும்போதும், ஓ! மனிதர்களில் இழிந்தவரே, இவையாவும் விதியின் விளைவு என்பதைவிட நீர் வேறு என்ன நினைக்கிறீர்? ஓ! பிராமணரே, யாரை நீர் புகழுகிறீரோ, அந்தத் துரியோதனனின் எதிரிகளைப் பொறுத்தவரையும் கூட, அவர்களில் துணிச்சல்மிக்க வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(67) குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு படைகளும் எண்ணிக்கையில் குறைந்துவருகின்றன.(68) நான் இதில் பாண்டவர்களின் ஆற்றலைக் காணவில்லை. ஓ! மனிதர்களில் இழிந்தவரே, யாரை நீர் வலிமைமிக்கவர்களாக எப்போதும் கருதுகிறீரோ,(69) அவர்களுடன் நான் என் முழு வலிமையைப் பயன்படுத்தித் துரியோதனனின் நன்மைக்காகப் போரில் போராடுவேன். வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைச் சார்ந்ததே” என்றான் {கர்ணன்}.(70)
கோபம்நிறைந்த அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 158அ-சினம் கொண்ட அஸ்வத்தாமன் கத்தியை ஓங்கி கர்ணனை நிந்திப்பது; அஸ்வத்தாமனைத் தணிவடையச் செய்த துரியோதனன்; கர்ணனைச் சீற்றத்துடன் தாக்கிய பாண்டவர்கள்; தன் எதிரிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்திய கர்ணன்; கர்ணனுடன் மோத விரைந்து வந்த அர்ஜுனன்; கர்ணனைக் காக்க கௌரவர்களை ஏவிய துரியோதனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் மாமன் {கிருபர்}, கடுமையான மற்றும் அவமதிக்கும் வகையிலான வார்த்தைளில் சூதனின் மகனால் {கர்ணனால்} இப்படிச் சொல்லப்படுவதைக் கண்ட அஸ்வத்தாமன், தன் கத்தியை உயர்த்திக் கொண்டு, பின்னவனை {கர்ணனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(1) சீற்றத்தால் நிறைந்திருந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, குரு மன்னன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மதங்கொண்ட யானையை நோக்கிச் செல்லும் சிங்கம் ஒன்றைப் போலக் கர்ணனை நோக்கி விரைந்தான்.(2)
அஸ்வத்தாமன் {கர்ணனிடம்}, “ஓ! மனிதர்களில் இழிந்தவனே {கர்ணா}, அர்ஜுனனிடம் உண்மையில் உள்ள குணங்களையே கிருபர் சொல்லிக் கொண்டிருந்தார். எனினும், தீய புரிதல் கொண்டவனான நீ, துணிவுமிக்க என் மாமனை {கிருபரை} வன்மத்துடன் {கெட்ட நோக்கத்துடன்} நிந்திக்கிறாய்.(3) செருக்கும், துடுக்கும் கொண்ட நீ, உலகத்தின் வில்லாளிகள் எவரையும் போரில் கருதிப்பாராமல் {மதிக்காமல்} உன் ஆற்றலை இன்று தற்புகழ்ச்சி செய்கிறாய்.(4) போரில் உன்னை வென்ற அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, நீ பார்த்துக் கொண்டிருந்த போதே ஜெயத்ரதனைக் கொன்றபோது, உன் ஆற்றல் எங்கே சென்றது? உன் ஆயுதங்கள் எங்கே சென்றன?(5) ஓ! சூதர்களில் இழிந்தவனே, முன்னர்ப் போரில் மகாதேவனையே எதிர்த்தவனை {அர்ஜுனனை} வெல்லப்போவதாக உன் மனதில் வீணான நம்பிக்கை கொள்கிறாய்.(6) தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்டு வந்த போதும், கிருஷ்ணனை மட்டுமே தன் கூட்டாளியாகக் கொண்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனனை வெல்ல முடியவில்லை.(7) ஓ! சூதா {கர்ணா}, இந்த மன்னர்களுடன் கூடிய நீ, உலக வீரர்களில் முதன்மையானவனும், வெல்லப்படாதவனுமான அர்ஜுனனை போரில் வெல்வாய் என எவ்வாறு நம்பிக்கை கொள்கிறாய்?(8) ஓ! தீய ஆன்மா கொண்ட கர்ணா, இன்று (நான் உன்னை என்ன செய்யப் போகிறேன் என்பதைப்) பார். ஓ! மனிதர்களில் இழிந்தவனே, ஓ! இழிந்த அறிவு கொண்டவனே, நான் இப்போது உன் உடலிலிருந்து உன் தலையை வெட்டப் போகிறேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(9)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொன்ன அஸ்வத்தாமன் கர்ணனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அப்போது, பெரும் சக்தி கொண்ட மன்னனும் {துரியோதனனும்}, மனிதர்களில் முதன்மையானவரான கிருபரும் அவனை {அஸ்வத்தாமனைப்} பிடித்துக் கொண்டனர்.(10)
அப்போது கர்ணன் {துரியோதனனிடம்}, “தீய புரிதல் கொண்டவனான இந்த இழிந்த பிராமணன் {அஸ்வத்தாமன்}, தன்னைத் துணிச்சல்மிக்கவனாக நினைத்துக் கொண்டு, போரில் தன் ஆற்றல் குறித்துத் தற்புகழ்ச்சி செய்கிறான். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, அவனை {அஸ்வத்தாமனை} விடு. அவன் என் வலிமையைச் சந்திக்கட்டும்” என்றான்.(11)
அஸ்வத்தாமன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, ஓ! தீய புரிதல் கொண்டவனே, (உன் குற்றமான) இஃது எங்களால் மன்னிக்கப்படுகிறது. எனினும், உன்னில் எழுந்திருக்கும் இந்தச் செருக்கைப் பல்குனன் {அர்ஜுனன்} தணிப்பான்” என்றான்.(12)
துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்} , “ஓ! அஸ்வத்தாமரே, உமது கோபத்தைத் தணிப்பீராக. ஓ! கௌரவங்களை அளிப்பவரே, மன்னிப்பதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, சூதன் மகனிடம் {கர்ணனிடம்} நீர் கோபங்கொள்ளக் கூடாது.(13) உம் மீதும், கர்ணன், கிருபர், துரோணர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியர்}, சுபலனின் மகன் {சகனி} ஆகியோர் மீதும் பெரும் சுமை இருக்கிறது. ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {அஸ்வத்தாமரே}, உமது கோபத்தை விடுவீராக.(14) அதோ, ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} போரிட விரும்பி பாண்டவத் துருப்புகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், ஓ! பிராமணரே, அதோ நம் அனைவரையும் அறைகூவி அழைத்துக் கொண்டே அவர்கள் வருகின்றனர்” என்றான் {துரியோதனன்}.(15)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கடுஞ்சினம் கொண்டிருந்தவனும், இப்படி மன்னனால் தணிக்கப்பட்டவனுமான அந்த உயர் ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் கோபத்தை அடக்கிக் கொண்டு (கர்ணனை) மன்னித்தான்.(16) அமைதியான மனநிலையையும், உன்னத இதயத்தையும் கொண்ட கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மென்தன்மை கொண்டவராததால், மீண்டும் அவனிடம் {கர்ணனிடம்} வந்து இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(17) கிருபர், “ஓ! தீய இதயம் கொண்ட சூதன் மகனே {கர்ணா}, (உன் குற்றமான) இஃது எங்களால் மன்னிக்கப்படுகிறது. எனினும், உன்னில் எழுந்திருக்கும் இந்தச் செருக்கைப் பல்குனன் {அர்ஜுனன்} தணிப்பான்” என்றார்.(18)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது பாண்டவர்களும், ஆற்றலுக்காகக் கொண்டாடப்படுபவர்களான பாஞ்சாலர்களும் ஒன்று சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டபடியே ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருந்தனர்.(19) தேர்வீரர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனும், தேவர்களுக்கு மத்தியில் உள்ள சக்ரனைப் போல முதன்மையான குருவீரர்கள் பலரால் சூழப்பட்டவனுமான கர்ணனும், தன் கரங்களின் வலிமையை நம்பி வில்லை வளைத்துக் கொண்டு காத்திருந்தான். உரத்த சிங்க முழக்கங்களால் வகைப்படுத்தப்படுவதும், மிகப் பயங்கரமானதுமான ஒரு போர் கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் அப்போது தொடங்கியது.(20,21)
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், தங்கள் ஆற்றலுக்காகக் கொண்டாடப்படுபவர்களான பாஞ்சாலர்களும்,(22) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனைக் கண்டு, “அதோ கர்ணன் இருக்கிறான்”, “இந்தக் கடும் போரில் கர்ணன் எங்குப் போனான்”,(23) “ஓ! தீய புரிதல் கொண்டவனே, ஓ! மனிதர்களில் இழிந்தவனே, எங்களுடன் போரிடுவாயாக” என்று உரத்தக் கூச்சலிட்டனர். ராதையின் மகனை {கர்ணனைக்} கண்ட பிறர், கோபத்தால் தங்கள் கண்களை அகல விரித்துக் கொண்டு,(24) “சிறு மதியும், திமிரும் கொண்ட இழிந்தவனான இந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கூடியிருக்கும் மன்னர்களால் கொல்லப்பட வேண்டும். இவன் வாழ வேண்டிய அவசியம் இல்லை.(25) பாவம் நிறைந்த இந்த மனிதன், பார்த்தர்களுடன் எப்போதும் மிகுந்த பகையுடன் இருக்கிறான். துரியோதனனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும் இவனே இந்தத் தீமைகள் அனைத்திற்கும் வேராக இருப்பவன்.(26) இவனைக் கொல்வீராக” என்றனர்.
இத்தகு வார்த்தைகளைச் சொன்ன பெரும் க்ஷத்திரியத் தேர்வீரர்கள், பாண்டுவின் மகனால் தூண்டப்பட்டு, அவனைக் {கர்ணனைக்} கொல்வதற்காக அவனை நோக்கி விரைந்து, அடர்த்தியான கணைமாரியால் அவனை மறைத்தனர். வலிமைமிக்கப் பாண்டவர்கள் அனைவரும் வருவதைக் கண்ட சூதன் மகன் {கர்ணன்} அப்போது நடுங்காதவனாகவும், அச்சங்கொள்ளாதவனுமாக இருந்தான்.(27,28) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யமனுக்கு ஒப்பான துருப்புகளின் அற்புதக் கடலைக் கண்டவனும், வலிமைமிக்கவனும், வேகமான கரங்களைக் கொண்டவனும், போரில் வெல்லப்படாதவனும், உமது மகன்களுக்கு நன்மை செய்பவனுமான அந்தக் கர்ணன், கணைகளின் மேகங்களால் அந்தப் படையை அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கத் தொடங்கினான். பாண்டவர்களும், கணைமாரியை ஏவியபடி அந்த எதிரியுடன் போரிட்டனர்.(29-31) நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் தங்கள் விற்களை அசைத்து வந்த அவர்கள், பழங்காலத்தில் சக்ரனுடன் போரிட்ட தைத்தியர்களைப் போலவே அந்த ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} போரிட்டனர்.(32) எனினும், வலிமைமிக்கக் கர்ணன், அனைத்துப் பக்கங்களிலும் பூமியின் தலைவர்களால் பொழியப்பட்ட கணைகளை, அடர்த்தியான தன் கணைமாரியால் விலக்கினான்.(33) ஒவ்வொருவரின் அருஞ்செயல்களுக்கும் எதிர்வினையாற்றிய அந்த இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற பெரும்போரில் சக்ரனுக்கும் தானவர்களுக்கும் இடையிலான மோதலுக்கு ஒப்பாக இருந்தது.(34)
தன் எதிரிகள் அனைவரும் உறுதியுடன் போரிட்டாலும், போரில் அவனைத் {கர்ணனைத்} தாக்க முடியாத அளவுக்குப் போரிட்ட சூதனின் மகனிடம் அப்போது நாங்கள் கண்ட கரநளினம் மிக அற்புதமானதாக இருந்தது.(35) (பகை) மன்னர்களால் ஏவப்பட்ட கணைகளின் மேகங்களைத் தடுத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, (தன் எதிரிகளின்) நுகத்தடிகள், ஏர்க்கால்கள், குடைகள், கொடிமரங்கள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றின் மீது தன் பெயர் பொறிக்கப்பட்ட பயங்கரக் கணைகளை ஏவினான். பிறகு கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த மன்னர்கள் தங்கள் பொறுமையை இழந்து,(36,37) குளிரால் பீடிக்கப்பட்ட பசு மந்தையைப் போலக் களத்தில் திரியத் தொடங்கினர். பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், யானைகள் ஆகியவையும், தேர்வீரர்களும் கர்ணனால் தாக்கப்பட்டு உயிரையிழந்து கீழே விழுவது அங்கே காணப்பட்டது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புறமுதுகிடாத வீரர்களுடைய தலைகள் மற்றும் கரங்களால் அந்த மொத்தக் களமும் விரவி கிடந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இறந்தோர், இறந்து கொண்டிருந்தோர், ஓலமிடும் போர்வீரர்கள் ஆகியோருடன் கூடிய அந்தப் போர்க்களம், யமனின் ஆட்சிப் பகுதிக்குரிய தன்மையை ஏற்றது.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் ஆற்றலைக் கண்ட துரியோதனன்,(39-41) அஸ்வத்தாமனிடம் சென்று அவனிடம், “கவசம் பூண்ட கர்ணன், (பகை) மன்னர்கள் அனைவருடனும் போரில் ஈடுபடுவதைப் பாரும்.(42) கர்ணனின் கணைகளால் பீடிக்கப்படும் பகைவரின் படை, கார்த்திகேயனின் {முருகனின்} சக்தியால் மூழ்கடிக்கப்பட்ட அசுரர்களின் படையைப் போலவே முறியடிக்கப்படுவதைப் பாரும்.(43) நுண்ணறிவு கொண்ட கர்ணனால் போரில் தன் படை வெல்லப்படுவதைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்துடன் அதோ வருகிறான்.(44) எனவே, நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான இந்தச் சூதன் மகனை {கர்ணனைக்} கொல்வதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றான் {துரியோதனன்}.(45)
(இப்படிச் சொல்லப்பட்டவர்களான) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், பெரும் தேர்வீரனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோர் அனைவரும், தைத்திய படையை நோக்கிச் சக்ரன் {இந்திரன்} வருவதைப் போலவே (தங்களை நோக்கி) வரும் குந்தியின் மகனை {அர்ஜுனனைக்} கண்டு, சூதனின் மகனைக் {கர்ணனைக்} காப்பதற்காகப் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றனர். அதே வேளையில், பாஞ்சாலர்களால் சூழப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விருத்திராசுரனை எதிர்த்துச் சென்ற புரந்தரனை {இந்திரனைப்} போலவே கர்ணனை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(46,47)
துரியோதனனைத் தடுத்த அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 158ஆ-கர்ணனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று அவனையும் வில்லற்றவனாக்கிய அர்ஜுனன்; கிருபரின் தேரில் தஞ்சமடைந்த கர்ணன்; கர்ணனை வென்ற அர்ஜுனன்; அர்ஜுனனை எதிர்த்துச் சென்ற துரியோதனன்; துரியோதனனின் உயிரைக் காக்க அஸ்வத்தாமனைத் தூண்டிய கிருபர்; அர்ஜுனனுடன் மோதுவதிலிருந்து துரியோதனனைத் தடுத்த அஸ்வத்தாமன்; பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் கொல்ல அஸ்வத்தாமனைத் தூண்டிய துரியோதனன்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, யுக முடிவின்போது தோன்றும் அந்தகனைப் போலத் தெரிந்தவனும், வெறியால் தூண்டப்பட்டவனுமான பல்குனனை {அர்ஜுனனைக்} கண்ட பிறகு, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன் அடுத்து என்ன செய்தான்?(48) உண்மையில், வலிமைமிக்கத் தேர்வீரனும், வைகர்த்தனன் மகனுமான கர்ணன் எப்போதும் பார்த்தனை {அர்ஜுனனை} அறைகூவி அழைப்பவனாக இருக்கிறான். உண்மையில் அவன் {கர்ணன்}, பயங்கரமான பீபத்சுவை {அர்ஜுனனை} வெல்லத்தக்கவன் என்று எப்போதும் தன்னைச் சொல்லிக் கொள்கிறான். ஓ! சூதா, எப்போதும் தனக்குக் கொடிய எதிரியாக இருப்பவனை {அர்ஜுனனை} இப்படித் திடீரெனச் சந்தித்தபோது, அந்தப் போர்வீரன் {கர்ணன்} என்ன செய்தான்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(49,50)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “எதிரி யானையை நோக்கி வரும் மற்றொரு யானையைப் போலத் தன்னை நோக்கி வரும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட கர்ணன், அச்சமில்லாமல் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான்.(51) எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, இப்படிப் பெரும் வேகத்தோடு வரும் கர்ணனைத் தங்கச் சிறகுகள் கொண்ட நேரான கணைகளின் மழையால் விரைவாக மறைத்தான். கர்ணனும் தன் கணைகளால் விஜயனை {அர்ஜுனனை} மறைத்தான்.(52) பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீண்டும் கணை மேகங்களால் கர்ணனை மறைத்தான். அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், மூன்று கணைகளால் அர்ஜுனனைத் துளைத்தான்.(53) கர்ணனின் கர நளினத்தைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எதிரிகளை அழிப்பவனான அவன் {அர்ஜுனன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும், சுடர்மிக்க முனைகளைக் கொண்டவையுமான நேரான முப்பது கணைகளைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். பெரும் வலிமையையும், சக்தியையும் கொண்ட அவன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, மற்றொரு நீண்ட கணையால் அவனது {கர்ணனின்} இடக்கரத்தின் மணிக்கட்டையும் துளைத்தான். அப்போது, பெரும் பலத்துடன் இப்படித் துளைக்கப்பட்ட அந்தக் கரத்தில் இருந்து கர்ணனின் வில் விழுந்தது.(54-56) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த வில்லை எடுத்துக் கொண்ட வலிமைமிக்கக் கர்ணன், மீண்டும் பல்குனனை {அர்ஜுனனைக்} கணை மேகங்களால் மறைத்து பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தினான்.(57) அப்போது சிரித்தபடியே தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூதன் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட அந்தக் கணை மாரியைத் தன் கணைகளால் கலங்கடித்தான். ஒருவரையொருவர் அணுகிய பெரும் வில்லாளிகளான அவர்கள் இருவரும், ஒருவர் செய்த சாதனைகளுக்கு மற்றவர் எதிர்வினையாற்ற விரும்பி, தொடர்ந்து ஒருவரையொருவர் கணைமாரிகளால் மறைத்தனர்.(59) கர்ணன் மற்றும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகியோருக்கிடையில் நடைபெற்ற அந்தப் போரானது, பருவகாலத்தில் உள்ள பெண் யானைக்காக இரு காட்டு யானைகளுக்கு இடையில் நடக்கும் போரைப் போல மிக அற்புதமானதாக இருந்தது.(60)
அப்போது, வலிமைமிக்க வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு, விரைவாகப் பின்னவனின் {கர்ணனின்} வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான்.(61) மேலும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான பல்லங்களால் சூதன் மகனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் யமனுலகு அனுப்பிவைத்தான். பிறகும் அந்த எதிரிகளை எரிப்பவன் {அர்ஜுனன்}, கர்ணனுடைய தேரோட்டியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(62) பாண்டு மற்றும் பிருதையின் மகனான அவன் {அர்ஜுனன்}, வில்லற்றவனாக, குதிரையற்றவனாக, சாரதியற்றவனாக இருந்த கர்ணனை நான்கு கணைகளால் துளைத்தான்.(63) மனிதர்களில் காளையான அந்தக் கர்ணன், அக்கணைகளால் பீடிக்கப்பட்டு, குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்துக் கிருபருடைய தேரில் ஏறிக் கொண்டான்.(64)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ராதையின் மகன் {கர்ணன்} வெல்லப்பட்டதைக் கண்ட உமது போர்வீரர்கள், அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(65) அவர்கள் ஓடுவதைக் கண்ட மன்னன் துரியோதனன் அவர்களைத் தடுத்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(66) “வீரர்களே, ஓடாதீர். க்ஷத்திரியர்களில் காளையரே போரில் நிலைப்பீராக. போரில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக நானே இப்போது செல்லப் போகிறேன்.(67) கூடியிருக்கும் பாஞ்சாலர்களோடு சேர்த்துப் பார்த்தனை {அர்ஜுனனை} நானே கொல்லப் போகிறேன். காண்டீவதாரியோடு {அர்ஜுனனோடு} இன்று நான் போரிடும்போது,(68) யுக முடிவில் தோன்றும் யமனுக்கு ஒப்பான என் ஆற்றலைப் பார்த்தர்கள் காணப் போகின்றனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்திற்கு ஒப்பாக ஏவப்படும் என் ஆயிரக்கணக்கான கணைகளை இன்று பார்த்தர்கள் காண்பார்கள். கோடை காலத்தின் முடிவில் மேகங்களால் பொழியப்படும் மழைத்தாரைகளைப் போன்ற அடர்த்தியான கணைமாரிகளை ஏவியபடி, கையில் வில்லுடன் இருக்கும் என்னைப் போராளிகள் காணப் போகின்றனர். நான் இன்று பார்த்தனை {அர்ஜுனனை}, என் நேரான கணைகளால் வெல்லப் போகிறேன்.(69-71) வீரர்களே, பல்குனன் {அர்ஜுனன்} மீது நீங்கள் கொண்டுள்ள அச்சத்தை விட்டு விட்டுப் போரில் நிலைப்பீராக. மகரங்களின் வசிப்பிடமான கடலால், தன் கரைகளை மீற முடியாதததைப் போல, என் ஆற்றலுடன் மோதப் போகும் பல்குனனால் {அர்ஜுனனால்} அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது” என்றான் {துரியோதனன்}.(72) இப்படிச் சொன்ன மன்னன் {துரியோதனன்}, கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும் படையால் சூழப்பட்டு, பல்குனனை {அர்ஜுனனை} நோக்கிச் சினத்துடன் சென்றான்.
இப்படிச் சென்ற வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரியோதனனைக் கண்ட சரத்வான் மகன் {கிருபர்},(73,74). அஸ்வத்தாமனை அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னார்: “அதோ, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரியோதனன், கோபத்தால் தன் உணர்வுகளை இழந்து,(75) சுடர்மிக்க நெருப்பை நோக்கி விரைய விரும்பும் பூச்சி ஒன்றைப் போல, பல்குனனுடன் போரிட விரும்பி செல்கிறான். மன்னர்களில் முதன்மையான இவன் {துரியோதனன்}, நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} இந்தப் போரில் தன் உயிரை விடுவதற்கு முன் (மோதலுக்கு விரைவதில் இருந்து) அவனைத் தடுப்பாயாக. பார்த்தனின் கணைகள் செல்லும் தொலைவுக்குள் இல்லாதவரை மட்டுமே துணிவுமிக்க குரு மன்னனால் {துரியோதனனால்} இந்தப் போரில் உயிருடன் இருக்க முடியும். சற்று முன்பே சட்டையுரித்த பாம்புகளுக்கு ஒப்பான பார்த்தனின் {அர்ஜுனனின்} பயங்கரக் கணைகளால் சாம்பலாக எரிக்கப்படுவதற்கு முன் மன்னன் {துரியோதனன்} தடுக்கப்பட வேண்டும். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, நாம் இங்கே இருக்கும்போது, தனக்கெனப் போரிட எவரும் இல்லாதவனைப் போல மன்னனே {துரியோதனனே} போரிடச் செல்வது பெரிதும் முறையற்றதாகத் தெரிகிறது. புலியோடு மோதும் யானையைப் போல, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுடன் (அர்ஜுனனுடன்} போரில் ஈடுபட்டால், இந்தக் குரு வழித்தோன்றலின் {துரியோதனனின்} உயிரானது பெரும் ஆபத்துக்குள்ளாகும்.” என்றார் {கிருபர்}.
தன் தாய்மாமனால் {கிருபரால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(76-81) துரியோதனனிடம் விரைந்து சென்று அவனிடம் இந்த வார்த்தகளைச் சொன்னான்: “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, ஓ! குருவின் வழித்தோன்றலே {துரியோதனா}, நான் உயிரோடு இருக்கையில், உனது நன்மையை எப்போதும் விரும்புபவனான என்னை அலட்சியம் செய்துவிட்டு, போரில் நீ ஈடுபடுவது உனக்குத் தகாது. பார்த்தனை வெல்வது குறித்து நீ கவலைப்படத் தேவையில்லை. பார்த்தனை {அர்ஜுனனை} நான் தடுப்பேன். ஓ! சுயோதனா {துரியோதனா}, இங்கேயே நிற்பாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(82,83)
துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான், “ஆசான் (துரோணர்), பாண்டுவின் மகன்களைத் தமது மகன்களைப் போலவே எப்போதும் பாதுகாக்கிறார். நீரும் என் எதிரிகளான அவர்களிடம் எப்போதும் தலையிடுவதில்லை.(84) அல்லது, என் தீப்பேற்றால் கூடப் போரில் உமது ஆற்றல் எப்போதும் கடுமைடையாது இருந்திருக்கலாம். யுதிஷ்டிரன், அல்லது திரௌபதி மீது உமக்குள்ள பாசமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உண்மையான காரணத்தை அறியாதவனாக நான் இருக்கிறேன்.(85) என்னை மகிழ்விக்க விரும்பிய என் நண்பர்கள் அனைவரும் வெல்லப்பட்டுத் துயரில் மூழ்குவதால், பேராசை கொண்டவனான எனக்கு ஐயோ {என்னை நிந்திக்க வேண்டும்}.(86) ஓ! கௌதமர் மகளின் {கிருபியின்} மகனே {அஸ்வத்தாமரே}, ஆயுதங்களை அறிந்தவர்களுள் முதன்மையானவரும், போரில் மகேஸ்வரனுக்கு ஒப்பானவருமான உம்மைத் தவிர, எதிரியை அழிக்கத்தகுந்த போர்வீரன் வேறு எவன் இருக்கிறான்?(87) ஓ! அஸ்வத்தாமரே, என்னிடம் மகிழ்ச்சி {கருணை} கொண்டு, என் எதிரிகளை அழிப்பீராக. உமது ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்குள் நிற்க தேவர்களோ, தானவர்களோ கூடத் தகுந்தவர்களல்லர்.(88)
ஓ! துரோணரின் மகனே {அஸ்வத்தாமரே}, பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோருடன் சேர்த்துக் கொல்வீராக. எஞ்சியோரைப் பொறுத்தவரை, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள் அவர்களைக் கொல்வோம்.(89) ஓ! பிராமணரே, பெரும் புகழைக் கொண்ட சோமகர்களும், பாஞ்சாலர்களும் காட்டு நெருப்பைப் போல அதோ என் துருப்புகளுக்கு மத்தியில் திரிகின்றனர்.(90) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்டால், கைகேயர்கள் நம் அனைவரையும் அழித்துவிடுவார்கள் என்பதால் அவர்களையும் {கைகேயர்களையும்} தடுப்பீராக.(91) ஓ! அஸ்வத்தாமரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, வேகமாக அங்கே செல்வீராக. அந்த அருஞ்செயலை இப்போது நிறைவேற்றுவீரோ, பிறகு நிறைவேற்றுவீரோ, ஓ! ஐயா, அஃது உம்மால் நிறைவேற்றப்பட வேண்டும்.(92) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பாஞ்சாலர்களின் அழிவுக்காகவே பிறந்தவர் நீர். உமது ஆற்றலை வெளிப்படுத்தி, இவ்வுலகைப் பாஞ்சாலர்களற்றதாகச் செய்யப் போகிறீர்.(93) (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மரியாதைக்குரியவர்கள் இப்படியே {உம்மைக் குறித்துச்} சொல்லியிருக்கின்றனர். அவர்கள் சொன்னபடியே அஃது ஆகட்டும். எனவே, ஓ! மனிதர்களில் புலியே {அஸ்வத்தாமரே}, பாஞ்சாலர்களை, அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்வீராக.(94)
வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களே கூட, உமது ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்குள் வந்தால் நிலைக்க முடியாது எனும்போது, பார்த்தர்களையும், பாஞ்சாலர்களையும் குறித்து என்ன சொல்வது? இந்த எனது வார்த்தைகள் அனைத்தும் உண்மையே.(95) ஓ! வீரரே {அஸ்வத்தாமரே}, சோமகர்களுடன் சேர்ந்திருக்கும் பாண்டவர்கள், போரில் உமக்கு ஈடாக மாட்டார்கள் என்று நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(96) செல்வீர், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, செல்வீராக. எந்தத் தாமதமும் வேண்டாம். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டுப் பிளந்து ஓடும் நமது படையைப் பாரும்.(97) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {அஸ்வத்தாமரே}, தெய்வீக சக்தியின் துணையுடன் கூடிய நீர் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் பீடிக்கத் தகுந்தவராவீர்” என்றான் {துரியோதனன்}.(98)
திருஷ்டத்யும்னனை வென்ற அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 159-துரியோதனனுக்குப் பதிலுரைத்து நிந்தித்த அஸ்வத்தாமன்; பாஞ்சாலர்களை முறியடித்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை எதிர்த்து விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனும், அஸ்வத்தாமனும் கடுமொழியில் பேசிக் கொள்வது; திருஷ்டத்யும்னனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்; திருஷ்டத்யும்னனை வென்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனிடம் இருந்து தப்பி ஓடிய பாஞ்சாலர்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரியோதனனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், போரில் வீழ்த்த கடினமான போர்வீரனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தைத்தியர்களை அழிப்பதில் ஈடுபட்ட இந்திரனைப் போல எதிரியை அழிப்பதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(1) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அஸ்வத்தாமன் உமது மகனுக்குப் பதிலளிக்கும வகையில், “ஓ! குருவின் வழித்தோன்றலே {துரியோதனா}, இது நீ சொல்வதுபோலத்தான் இருக்கிறது.(2) எனக்கும், என் தந்தைக்கும் {துரோணருக்கும்} எப்போதும் பாண்டவர்கள் அன்புக்குரியவர்களே. அதே போல நாங்கள் இருவரும் அவர்களின் அன்புக்குரியவர்களே. எனினும் போரில் அவ்வாறு இல்லை.(3) எங்கள் உயிரைக் குறித்த கவலையில்லாமல் எங்கள் வலிமையின் அளவுக்கு நாங்கள் அச்சமற்ற வகையில் போரிடுகிறோம். என்னாலும், கர்ணன், சல்லியன், கிருபர், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோராலும்,(4) ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாண்டவர்ப்படையை அழித்துவிட முடியும். போரில் நாங்கள் இல்லையென்றால், ஓ! குருக்களில் சிறந்தவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, பாண்டவர்களாலும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் குரு படையை அழித்துவிட முடியும். நாங்கள் பாண்டவர்களுடன் எங்கள் சிறப்பான சக்தியைப் பயன்படுத்திப் போரிடுகிறோம், அதே போல அவர்களும், அவர்களுடையதில் சிறந்ததைப் பயன்படுத்தி எங்களோடு போரிடுகிறார்கள்.(5,6)
ஓ! பாரதா {துரியோதனா}, சக்தியோடு மோதும் சக்தி சமன்படுத்தப்படுகிறது {தணிவடைகிறது}. பாண்டு மகன்கள் உயிரோடுள்ள வரையும், பாண்டவப்படை வெல்லப்பட்ட இயலாததாகும்.(7) என்னால் உனக்குச் சொல்லப்படும் இஃது உண்மையானதாகும். பாண்டுவின் மகன்கள் பெரும் வலிமை படைத்தவர்களாவர். மேலும் அவர்கள் தங்களுக்காகப் போரிடுகின்றனர்.(8) ஓ! பாரதா {துரியோதனா}, {அப்படியிருக்கையில்}, ஏன் அவர்களால் உன் துருப்புகளைக் கொல்ல முடியாது. எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, நீ பேராசைமிக்கவனாக இருக்கிறாய். ஓ! கௌரவா {துரியோதனா}, நீ வஞ்சகனாகவும் இருக்கிறாய்.(9) வீணாகப் பிதற்றுபவனாகவும், அனைத்தையும் சந்தேகப்படுபவனாகவும் இருக்கிறாய். இதன் காரணமாகவே, நீ எங்களையும் சந்தேகிக்கிறாய். ஓ! மன்னா {துரியோதனா}, பாவம் நிறைந்த ஆன்மாவாகவும், பாவத்தின் வடிவமாகவும் நீ இருக்கிறாய் என்றே நான் நினைக்கிறேன்.(10) பாவம்நிறைந்த இழிந்த சிந்தனைகளைக் கொண்டிருப்பதாலேயே நீ எங்களையும், பிறரையும் சந்தேகிக்கிறாய். என்னைப் பொறுத்தவரை, உன் நிமித்தமாக உறுதியுடன் போரிடும் நான் என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்.(11)
ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, நான் இப்போதும் உனக்காகவே போரிடச் செல்கிறேன். நான் எதிரியுடன் போரிட்டு, பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொல்வேன்.(12) பாஞ்சாலர்கள், சோமகர்கள், கைகேயர்கள் ஆகியோருடனும், பாண்டவர்களுடனும், ஓ!எதிரிகளைத் தண்டிப்பவனே, உனக்கு ஏற்புடையதைச் செய்யவே நான் போரிடுவேன்.(13) இன்று என் கணைகளால் எரிக்கப்படும், சேதிகள், பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர், சிங்கத்தால் பீடிக்கப்படும் பசுமந்தையைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுவர்.(14) இன்று, தர்மனின் அரச மகனும் {யுதிஷ்டிரனும்}, சோமகர்கள் அனைவரும் என் ஆற்றலைக் கண்டு, மொத்த உலகமும் அஸ்வத்தாமன்களால் நிறைந்திருப்பதாகக் கருதுவார்கள்.(15) தர்மனின் மகனான யுதிஷ்டிரன், போரில் (என்னால்) கொல்லப்படும் பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் கண்டு உற்சாகமற்றவனாக ஆவான்.(16) ஓ! பாரதா {துரியோதனா}, போரில் என்னை அணுகும் அனைவரையும் நான் கொல்வேன். ஓ! வீரா {துரியோதனா}, என் கரங்களின் வலிமையால் பீடிக்கப்படும் அவர்களில் எவரும் இன்று என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது” என்றான் {அஸ்வத்தாமன்}.(17)
உமது மகன் துரியோதனனிடம் இவ்வாறு சொன்ன அந்த வலிய கரத்தோன் {அஸ்வத்தாமன்} போரிடச் சென்று வில்லாளிகள் அனைவரையும் பீடித்தான்.(18) உயிர்வாழும் அனைவரிலும் முதன்மையான அவன் {அஸ்வத்தாமன்} உமது மகன்களுக்கு ஏற்புடையதைச் செய்ய இப்படியே முயன்றான். அப்போது, கௌதமர் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, பாஞ்சாலர்களிடமும், கைகேயர்களிடம்,(19) “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, அனைவரும் என் உடலைத் தாக்குங்கள். உங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடி என்னுடன் உறுதியாகப் போரிடுங்கள்” என்று சொன்னான்.(20)
அவனால் {அஸ்வத்தாமனால்} இவ்வாறு சொல்லப்பட்ட போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது ஆயுதமழையைப் பொழிந்தனர்.(21) அம்மழையைக் கலங்கடித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, திருஷ்டத்யும்னனும், பாண்டுவின் மகன்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் போரில் துணிச்சல்மிக்க வீரர்களில் பத்து பேரை கொன்றான்.(22) அப்போது போரில் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கைவிட்டு விட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(23) துணிச்சல்மிக்கப் போர்வீரர்களான பாஞ்சாலர்களும், சோமகர்களும் தப்பி ஓடுவதைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தான்.(24) மழைநிறைந்த மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சக்கரச் சடசடப்பொலி கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான தேர்களில் ஏறிவந்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களுமான தேர்வீரர்கள் நூறு பேர் சூழச் சென்ற பாஞ்சால மன்னன் மகனான வலிமைமிக்கத் தேர்வீரன் திருஷ்டத்யும்னன், தனது போர் வீரர்கள் கொல்லப்படுவதைக் கண்டு துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(25,26) “ஆசானின் மூட மகனே [1], அற்பப் போராளிகளைக் கொல்வதில் யாது பயன்? நீர் வீரரென்றால், என்னோடு போரிடுவீராக.(27) நான் உம்மைக் கொல்வேன். தப்பி ஓடாமல் ஒரு கணம் காத்திருப்பீராக” என்றான்.
இதைச் சொன்னவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், பயங்கரமானவையும், கூரியவையும், முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லவையுமான கணைகள் பலவற்றால் ஆசானின் மகனை {அஸ்வத்தாமனைத்} தாக்கினான். வேகமாகச் செல்லவல்லவையும் தங்கச் சிறகுகளையும், கூரிய முனைகளையும் கொண்டவையும், ஒவ்வொரு எதிரியின் உடலையும் துளைக்கவல்லவையுமான அந்தக் கணைகள், சுதந்திரமாக உலவும் வண்டுகள், தேனைத்தேடி மலர்ந்திருக்கும் மரத்திற்குள் நுழைவதைப் போல, தொடர்ந்த சரமாகச் சென்று அஸ்வத்தாமனின் உடலுக்குள் ஊடுருவின.(28-30) ஆழத்துளைக்கப்பட்டுச் சினத்தில் பெருகி, மிதிக்கப்பட்ட பாம்பைப் போலச் செருக்குடனும், அச்சமற்றும் கையில் வில்லுடன் சென்ற துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} தன் எதிரியிடம் {திருஷ்டத்யும்னனிடம்} (31), “ஓ! திருஷ்டத்யும்னா, என் முன்பிருந்து விலகாமல் ஒருக்கணம் காத்திருப்பாயாக. என் கூரிய கணைகளால் விரைவில் நான் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்” என்றான்.(32)
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களை வெல்பவனுமான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தி, கணைகளின் மேகங்களால் அனைத்துப் பக்கங்களிலும் பிருஷதனின் மகனை {திருஷ்டத்யும்னனை} மறைத்தான்.(33) இப்படித் துரோணர் மகனால் {அஸ்வத்தாமனின்} (கணைகளால்) அம்மோதலில் மறைக்கப்பட்டவனும், போரில் வீழ்த்தக் கடினமானவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, துரோணர் மகனிடம்,(34) “ஓ! பிராமணரே, நீர் என் பிறப்பையோ, என் சபதத்தையோ அறியவில்லை. ஓ! தீய புரிதல் கொண்டவரே, துரோணரை முதலில் கொன்ற பிறகு, நான் உம்மைக் கொல்கிறேன்.(35) துரோணர் இன்னும் உயிரோடு இருப்பதால் நான் இன்று உம்மைக் கொல்ல மாட்டேன். ஓ! தீய புரிதல் கொண்டவரே, இந்த இரவு கடந்து, பொழுது நன்றாக விடிந்ததும், முதலில் உமது தந்தையைப் போரில் கொன்று, பிறகு உம்மையும் ஆவிகளின் உலகத்திற்கு [2] அனுப்புவேன். இதையே நான் விரும்புகிறேன்.(36-37) எனவே, என் எதிரே அதுவரை நின்று பார்த்தர்கள் மீது நீர் கொண்டிருக்கும் வெறுப்பையும், குருக்களிடம் நீர் கொண்ட அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டிக் கொண்டிருப்பீராக. உம்மால் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது(38) ஓ! மனிதர்களில் இழிந்தவரே, எந்தப் பிராமணன், பிராமண நடைமுறைகளைக் கைவிட்டு, க்ஷத்திரிய நடைமுறைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறானோ, அவன் க்ஷத்திரியர்கள் அனைவராலும் கொல்லத்தகுந்தவன் ஆகிறான்” என்று சொல்லி முழங்கினான் {திருஷ்டத்யும்னன்}.(39)அவமதிக்கும் வகையில் இப்படிக் கடுமொழியில் பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} சொல்லப்பட்ட அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் (அஸ்வத்தாமன்) தன் சினமனைத்தையும் திரட்டிக் கொண்டு, “நில், நிற்பாயாக” என்று சொல்லித்(40) தன் கண்களாலேயே பிருஷதன் மகனை எரித்துவிடுபவனைப் போல அவனைப் {திருஷ்டத்யும்னனைப்} பார்த்தான். ஒரு பாம்பைப் போல (சீற்றத்துடன்) பெருமூச்சு விட்ட அந்த ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, அப்போது அந்தப் போரில் திருஷ்டத்யும்னனை (கணைமாரியால்) மறைத்தான்.(41) எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தேர்வீரர்களில் சிறந்தவனும், பாஞ்சாலத் துருப்புகள் அனைத்தாலும் சூழப்பட்டவனுமான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, அந்த மோதலில் துரோணரின் மகனுடைய கணைகளால் இப்படித் தாக்கப்பட்டாலும், தன் சக்தியைச் சார்ந்திருந்து நடுங்காதிருந்தான். பதிலுக்கு அவன் {திருஷ்டத்யும்னன்} பல கணைகளை அஸ்வத்தாமன் மீது ஏவினான்.(42,43) உயிரைப் பணயமாகக் கொண்ட அந்தச் சூதாட்டத்தில் {போரில்} ஈடுபட்ட அந்த வீரர்கள், ஒருவரையொருவர் பொருத்துக் கொள்ள முடியாமல், ஒருவரையொருவர் தடுத்துக் கொண்டு, கணைமாரிகளையும் தடுத்தனர்.(44) மேலும் அந்தப் பெரும் வில்லாளிகள், சுற்றிலும் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தனர்.
துரோணர் மற்றும் பிருஷதன் மகன்களுக்கிடையில் அச்சத்தைத் தூண்டும் வகையில் நடைபெற்ற அந்தக் கடும்போரைக் கண்ட சித்தர்கள், சாரணர்கள் மற்றும் வானுலாவும் உயிரினங்கள் ஆகியோர் அவர்களை உயர்வாகப் பாராட்டினர். ஆகாயத்தையும், திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் கணை மேகங்களால் நிறைத்து,(45,46) அடர்த்தியான இருளை உண்டாக்கிய அந்த வீரர்கள் இருவரும் (எங்களால் காணப்படாத நிலையிலேயே) ஒருவரோடொருவர் தொடர்ந்து போரிட்டனர். போரில் நர்த்தனம் செய்பவர்களைப் போலத் தங்கள் விற்களை வட்டமாக வளைத்துக் கொண்டு,(47) ஒருவரையொருவர் கொல்லும் உறுதியான ஆவலோடு இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்கள், அனைவரின் இதயமும் அச்சங்கொள்ளும் வகையில், குறிப்பிடத்தகுந்த சுறுசுறுப்புடனும், திறனுடனும் அழகாகப் போரிட்டனர்.(48) அந்தப் போரில் ஆயிரக்கணக்கான முதன்மையான போர்வீரர்களால் பாராட்டப்பட்டுக் காட்டில் உள்ள இரு காட்டு யானைகளைப் போல இப்படி உறுதியாகப் போரிட்டுக் கொண்டிருந்த அவர்களைக் கண்ட படைகள் இரண்டும் மகிழ்ச்சியால் நிறைந்தன. சிங்க முழக்கங்கள் அங்கே கேட்கப்பட்டன, போராளிகள் அனைவரும் தங்கள் சங்குகளை முழக்கினர்.(49,50)
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இசைக்கருவிகள் இசைக்கத் தொடங்கின. மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கச் செய்யும் அந்தக் கடும் போரானது,(51) குறுகிய காலத்திற்கு மட்டுமே சமமாக இருந்ததைப் போலத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விரைந்து சென்று உயர் ஆன்மப் பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} வில், கொடிமரம், குடை, பார்ஷினி சாரதிகள், முதன்மைச் சாரதி மற்றும் குதிரைகள் நான்கையும் வெட்டினான்.(52,53) பிறகு அளவிலா ஆன்மாக் கொண்ட அந்தப் போர்வீரன் {அஸ்வத்தாமன்}, தன் நேரான கணைகளின் மூலம் பாஞ்சாலர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடச் செய்தான்.(54) போரில் வாசவனுக்கு ஒப்பான துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} சாதனைகளைக் கண்ட பாண்டவப் படையானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் நடுங்கத் தொடங்கியது.(55)
துருபதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, பல்குனனும் {அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நூறு பாஞ்சாலர்களை நூறு கணைகளாலும், மூன்று முதன்மையான மனிதர்களை மூன்று கூரிய கணைகளால் கொன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான பாஞ்சாலர்களைக் கொன்றான்.(56,57) அப்போது போரில் இப்படிக் கொல்லப்பட்டவர்களான பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கைவிட்டு விட்டுத் தங்கள் கிழிந்த கொடிகளுடன் தப்பி ஓடினர்.(58) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, போரில் தன் எதிரிகளை வென்றுவிட்டு, கோடை காலத்தின் முடிவில் வரும் மேகத் திரள்களைப் போல உரக்க முழங்கினான்.(59) பெரும் எண்ணிக்கையிலான எதிர்களைக் கொன்றுவிட்டு, யுக முடிவின் போது, உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல அஸ்வத்தாமன் பிரகாசமாகத் தெரிந்தான்.(60) போரில் ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்திய பிறகு கௌரவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளை வென்ற தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல அழகில் சுடர்விட்டெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.(61)
ஓடுபவர்களை அணிதிரட்ட முடியாத துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 160-அஸ்வத்தாமனுடன் மோதிய பாண்டவத் தலைவர்கள்; அஸ்வத்தாமனைக் காக்க துரியோதனனும், துரோணரும் விரைவது; இரு படைகளுக்கும் இடையில் நடைபெற்ற கடும்போர்; பின்வாங்கி ஓடிய தங்கள் துருப்புகளை ஒன்றுதிரட்டிய பீமனும் அர்ஜுனனும்; அர்ஜுனனுக்கு எதிரில் தப்பி ஓடிய கௌரவர்கள்; தங்கள் துருப்புகளைத் தடுக்க முடியாத துரியோதனனும் துரோணரும்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரனும், பாண்டுவின் மகனான பீமசேனனும் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்தனர்.(1) இதைக் கண்ட மன்னன் துரியோதனன், பரத்வாஜர் மகனின் {துரோணரின்} துணையுடன் அம்மோதலில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான். அப்போது, கடுமையானதும், பயங்கரமானதும், மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதுமான போரொன்று தொடங்கியது.(2) கோபத்துடன் கூடிய யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான அம்பஷ்டர்கள், மாலவர்கள், வங்கர்கள், சிபிக்கள் மற்றும் திரிகர்த்தர்களை இறந்தோரின் ஆட்சிப்பகுதிகளுக்கு அனுப்பத் தொடங்கினான். பீமனும், அபிஷாஹர்கள், சூரசேனர்கள், போரில் வீழ்த்தக் கடினமான மற்றும் பிற க்ஷத்திரியர்களைச் சிதைத்து, பூமியை இரத்தச் சகதியாக்கினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் ஆனவன் (அர்ஜுனன்), யௌதேயர்கள், மலையகத்தார், மத்ரகர்கள் மற்றும் மாலவர்களையும் இறந்தோரின் உலகங்களுக்கு அனுப்பினான்.
வேகமாகச் செல்லக்கூடிய கணைகளால் பலமாகத் தாக்கப்பட்ட யானைகள், இரு சிகரங்களைக் கொண்ட மலைகளைப் போலப் பூமியில் கீழே விழத் தொடங்கின.(3-6) நடுக்கத்துடன் நகர்ந்து கொண்டேயிருந்த வெட்டப்பட்ட யானைகளின் துதிக்கைகளால் விரவிக்கிடந்த பூமியானது, நெளியும் பாம்புகளால் மறைக்கப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(7) தங்கத்தில் அலங்கரிக்கப்பட்டவையும், விழுந்து கிடந்தவையுமான மன்னர்களின் குடைகளால் மறைக்கப்பட்ட பூமியானது, சூரியன்கள், சந்திரன்கள், நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருக்கும் ஆகாயத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(8)
அதே நேரத்தில், துரோணரின் தேரருகே கடும் ஆரவாரம் எழுந்து, “கொல்வீராக”, “அச்சமற்றுத் தாக்குவீராக”, “துளைப்பீராக”, “துண்டுகளாக வெட்டுவீராக” என்ற இந்த வார்த்தைகள் கேட்கப்பட்டன. எனினும் சினத்தால் நிறைந்த துரோணர், வலிமைமிக்கச் சூறாவளியானது, திரண்டு வரும் மேகத்திரள்களை அழிப்பதைப் போலத் தம்மை நோக்கி வந்த எதிரிகளை, வாயவ்ய ஆயுதத்தின் மூலம் அழிக்கத் தொடங்கினார். இப்படித் துரோணரால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், பீமசேனனும், உயர் ஆன்ம பார்த்தனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சத்தால் தப்பி ஓடினர்.(9-11)
அப்போது, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் (அர்ஜுனனும்), பீமசேனனும், ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் துருப்புகளைத் தடுத்து, பெரும் தேர்ப்படையின் துணையுடன் துரோணரின் பரந்தப் படையைத் தாக்கினர்.(12) பீபத்சு {அர்ஜுனன்} வலதையும், விருகோதரன் {பீமன்} இடதையும் எனத் தாக்கிய அவர்கள் இருவரும் [1], பரத்வாஜரின் மகன் {துரோணர்} மீது இரு கணைமாரிகளைப் பொழிந்தனர்.(13) சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மத்ஸ்யர்களுடனும், சோமகர்களுடனும் கூடி, (துரோணருடனான மோதலில்) ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த இரு சகோதரர்களையும் பின்தொடர்ந்து சென்றனர். அதே போல, உமது மகனை {துரியோதனனைச்} சேர்ந்தவர்களும், தாக்குவதில் திறம்பெற்றவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானோருமான பலர், பெரும் படையின் துணையுடன், (துரோணரை ஆதரிப்பதற்காக) துரோணரின் தேரை நோக்கிச் சென்றனர்.(14,15)அப்போது, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படையானது, உறக்கத்தால் வெல்லப்பட்டும், அந்த இருளால் பீடிக்கப்பட்டும் பிளக்கத் தொடங்கியது.(16) உமது மகன் {துரியோதனன்} மற்றும் துரோணர் ஆகிய இருவரும் அவர்களை அணிதிரட்ட பெருமுயற்சி செய்தனர்.(17) எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் துருப்புகள் ஓடுவதைத் தடுக்க முடியவில்லை. உண்மையில், அந்தப் பரந்த படையானது, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்டு, உலகமே இருளில் மூழ்கியிருந்த அந்த நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடத் தொடங்கியது.(18) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விலங்குகளையும், தாங்கள் ஏறிச் சென்ற வாகனங்களையும் கைவிட்ட மன்னர்கள் பலர், அச்சத்தால் வெல்லப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.19
சோமதத்தனைக் கொன்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 161-சோமதத்தனை நோக்கிச் சென்ற சாத்யகி, சாத்யகிக்கும், சோமதத்தனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; சோமதத்தனைக் கொன்ற சாத்யகி; துரோணரைத் தாக்கிய யுதிஷ்டிரன்; துரோணருடன் யுதிஷ்டிரன் போரிடுவதைத் தடுத்த கிருஷ்ணன்; பீமசேனனின் அருகில் நிலைகொண்ட யுதிஷ்டிரன்..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சோமதத்தன் தன் பெரிய வில்லை அசைப்பதைக் கண்ட சாத்யகி, தன் சாரதியிடம், “சோமதத்தனை நோக்கி என்னைக் கொண்டு செல்வாயாக.(1) ஓ! சூதா, குருக்களில் இழிந்தவனும், பாஹ்லீகன் மகனுமான அந்த எதிரியை {சோமதத்தனைக்} கொல்லாமல் நான் இன்று போரில் இருந்து திரும்புவதில்லை என்று உனக்கு நான் உண்மையாகவே சொல்கிறேன்” என்றான்.(2) இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, சிந்து இனத்தில் பிறந்தவையும், சங்கு போன்ற வெண்ணிறம் கொண்டவையும், அனைத்து ஆயுதங்களையும் தாங்க வல்லவையும், வேகமானவையுமான அந்தக் குதிரைகளைப் போருக்குத் தூண்டினான்.(3) காற்று, அல்லது மனோ வேகம் கொண்ட அந்தக் குதிரைகள், பழங்காலத்தில் தானவர்களைக் கொல்வதற்காக இந்திரனைச் சுமந்து சென்ற பின்னவனின் {இந்திரனின்} குதிரைகளைப் போல அந்தப் போரில் யுயுதானனை {சாத்யகியைச்} சுமந்து சென்றன.(4)
அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, போரிடுவதற்காக வேகமாக முன்னேறி வருவதைக் கண்ட சோமதத்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சமில்லாமல் அவனை நோக்கித் திரும்பினான்.(5) மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளை இறைத்த அவன் {சோமதத்தன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலச் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்தான்.(6) அம்மோதலில் சாத்யகியும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தக் குருக்களின் காளையை {சோமதத்தனை) கணைமாரிகளால் அச்சமில்லாமல் மறைத்தான்.(7) அப்போது சோமதத்தன், அறுபது {60} கணைகளால் அந்த மது குலத்து வீரனின் {சாத்யகியின்} மார்பைத் துளைத்தான். பதிலுக்குச் சாத்யகியும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் சோமதத்தனைத் துளைத்தான்.(8) ஒருவரையொருவர் கணைகளால் துளைத்துக் கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், வசந்தகாலத்தில் மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(9)
{மேனி} எங்கும் இரத்தக் கறை படிந்திருந்தவர்களும், குரு மற்றும் விருஷ்ணி குலங்களைச் சேர்ந்த சிறப்புமிக்கவர்களுமான அவ்விரு போர்வீரர்களும், தங்கள் கண்பார்வைகளாலேயே கொன்றுவிடுபவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(10) வட்டமாகச் சுழன்ற தங்கள் தேர்களில் இருந்தவர்களும், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டவர்களுமான அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களுக்கு ஒப்பானவர்களாகவே தெரிந்தனர்.(11) தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டு, {மேனி} எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அவர்கள் இரண்டு முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தனர்.(12) தங்கச் சிறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விட்டிற்பூச்சிகளால் மறைக்கப்பட்ட இரு நெடிய மரங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(13) அவர்களின் மேல் ஒட்டிக் கொண்டிருந்த சுடர்மிக்கக் கணைகளால் பிரகாசமாகத் தெரிந்த உடல்களுடன் கூடிய அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்தப் போரில் எரியும் பந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கோபக்கார யானைகளை போலத் தெரிந்தனர்.(14)
அப்போது அந்தப் போரில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான சோமதத்தன், அர்த்தச்சந்திரக் கணையொன்றால், மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை அறுத்தான்.(15) மிகத்தேவையான ஒன்றான வேகம் தேவைப்பட்ட அந்த நேரத்தில், பெரும் வேகத்துடன் கூடிய அந்தக் குருவீரன் {சோமதத்தன்}, இருபத்தைந்து கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மீண்டும் அவனைப் பத்தால் துளைத்தான்.(16) பிறகு சாத்யகி, மேலும் கடினமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து கணைகளால் சோமதத்தனை வேகமாகத் துளைத்தான்.(17) மேலும் ஒரு பல்லத்தை எடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே பாஹ்லீகன் மகனின் {சோமதத்தனின்} தங்கக் கொடிமரத்தை அறுத்தான்.(18) சோமதத்தன் தன் கொடிமரம் வெட்டப்பட்டதைக் கண்டாலும், அச்சமில்லாமல் இருபது கணைகளால் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைத்} துளைத்தான்.(19) சாத்வதனும் {சாத்யகியும்} சினத்தால் தூண்டப்பட்டு, அம்மோதலில் க்ஷுரப்ரம் ஒன்றால் சோமதத்தனின் வில்லை அறுத்தான்.(20) மேலும் அவன் {சாத்யகி}, விஷப்பற்களற்ற பாம்பொன்றைப் போல அப்போதிருந்த சோமதத்தனைத் தங்கச் சிறகுகள் கொண்ட நேரான நூறு கணைகளாலும் துளைத்தான்.(21) பெரும்பலங்கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சோமதத்தன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, (கணைமாரியால்) சாத்யகியை மறைக்கத் தொடங்கினான்.(22) சினத்தால் தூண்டப்பட்ட சாத்யகியும், சோமதத்தனைப் பல கணைகளால் துளைதான். பதிலுக்குச் சோமதத்தன், தன் கணை மாரியால் சாத்யகியைப் பீடித்தான்.(23)
அப்போது மோதலுக்கு வந்து சாத்யகியின் சார்பாகப் போரிட்ட பீமன், பத்து கணைகளால் பாஹ்லீகன் மகனை {சோமதத்தனைத்} துளைத்தான். எனினும், சோமதத்தன், கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் அச்சமில்லாமல் பீமசேனனைத் தாக்கினான்.(24) பிறகு சினத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, இடியைப் போலக் கடினமானதும், தங்கக் கைப்பிடி கொண்டதும், பயங்கரமானதுமான புதிய பரிகம் ஒன்றை சோமதத்தனின் மார்பைக் குறிபார்த்து ஏவினான்.(25) எனினும் அந்தக் குருவீரன் {சோமதத்தன்}, தன்னை எதிர்த்து வேகமாக வரும் அந்தப் பயங்கரப் பரிகத்தைச் சிரித்துக் கொண்டே இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(26) இரும்பாலான உறுதிமிக்க அந்தப் பரிகமானது, இப்படி இரண்டாக வெட்டப்பட்டதும், இடியால் பிளக்கப்பட்ட மலையொன்றின் பெரிய சிகரத்தைப் போலக் கீழே விழுந்தது.(27)
அப்போது சாத்யகி, ஓ! மன்னா, அம்மோதலில் ஒரு பல்லத்தால், சோமதத்தனின் வில்லை அறுத்து, மேலும் அவனது விரல்களுக்கு அரணாக இருந்த தோலுறைகளையும் ஐந்து கணைகளால் அறுத்தான்.(28) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் நான்கு கணைகளால் அந்தக் குரு போர்வீரனின் {சோமதத்தனின்} நான்கு சிறந்த குதிரைகளை யமனின் முன்னிலைக்கு அனுப்பினான். (29) மேலும் அந்தத் தேர்வீரர்களில் புலியானவன் {சாத்யகி} சிரித்துக் கொண்டே மற்றொரு நேரான கணையால், சோமதத்தனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினான்.(30) பிறகு அவன் {சாத்யகி}, நெருப்புபோன்ற பிரகாசம் கொண்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், எண்ணெயில் முக்கப்பட்டதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான ஒரு பயங்கரக் கணையைச் சோமதத்தன் மீது ஏவினான்.(31) சிநியின் பேரனால் {சாத்யகியால்} ஏவப்பட்ட அந்தச் சிறந்த கடுமையான கணை, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சோமதத்தனின் மார்பின் மீது ஒரு பருந்தைப் போல வேகமாகப் பாய்ந்தது.(32) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கச் சாத்வதனால் {சாத்யகியால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரன் சோமதத்தன், (தனது தேரில் இருந்து) கீழே விழுந்து இறந்தான்.(33) பெரும் தேர்வீரனான சோமதத்தன் அங்கே கொல்லப்பட்டதைக் கண்ட உமது போர்வீரர்கள், தேர்களின் பெருங்கூட்டத்துடன் யுயுதானனை எதிர்த்து விரைந்தனர்.(34)
அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிரபத்ரகர்கள் அனைவருடனும், பெரும் படையுடனும் கூடிய பாண்டவர்களும், துரோணரின் படையை எதிர்த்து விரைந்தனர்.(35) அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரன், பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் கணைகளால் பின்னவரின் {துரோணரின்} துருப்புகளைத் தாக்கவும், முறியடிக்கவும் தொடங்கினான்.(36) தமது துருப்புகளை இப்படிக் கலங்கடிக்கும் யுதிஷ்டிரனைக் கண்ட துரோணர், கோபத்தால் கண்கள் சிவந்து, அவனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தார்.(37) பிறகு அந்த ஆசான் {துரோணர்} ஏழு கூரிய கணைகளால் பிருதையின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரனும் பதிலுக்கு ஐந்து கணைகளால் ஆசானை {துரோணரைத்} துளைத்தான்.(38)
பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} ஆழத் துளைக்கப்பட்டவரான அந்த வலிமைமிக்க வில்லாளி (துரோணர்), ஒருக்கணம் தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, யுதிஷ்டிரனின் கொடிமரம் மற்றும் வில் ஆகிய இரண்டையும் வெட்டினார்.(39) பெரு வேகம் தேவைப்பட்ட அந்த நேரத்தில், வில்லறுபட்ட அந்த மன்னர்களில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, போதுமான அளவு உறுதியானதும், கடுமையானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(40) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓராயிரம் கணைகளால், துரோணரின் குதிரைகள், சாரதி, கொடிமரம், தேர் ஆகியவற்றுடன் சேர்த்து அவரையும் {துரோணரையும்} துளைத்தான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தன.(41) அந்தக் கணைகளின் தாக்குதல்களால் பெரும் வலியை உணர்ந்தவரும், பிராமணர்களில் காளையுமான அந்தத் துரோணர், கீழே தமது தேர்த்தட்டில் அமர்ந்தார்.(42) பிறகு தன் உணர்வுகள் மீண்டு, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டு, பெரும்சினத்தில் நிறைந்த அந்த ஆசான் {துரோணர்}, வாயவ்ய ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தார்.(43) பிருதையின் வீர மகன் {யுதிஷ்டிரன்}, கையில் வில்லுடன் அம்மோதலில் அச்சமில்லாமல், தான் கொண்டிருந்த அதே போன்ற ஆயுதத்தால் அவ்வாயுதத்தைக் கலங்கடித்தான்.(44) மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணரின் {துரோணரின்} பெரிய வில்லை இரண்டு துண்டுகளாகவும் வெட்டினான். அப்போது க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார். (45) குரு குலத்தின் காளை (யுதிஷ்டிரன்), பல கூரிய கணைகளால் அந்த வில்லையும் அறுத்தான்.
அப்போது குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}(46),“ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதர்களில் சிறந்தவரே, துரோணருடன் போரிடுவதை நிறுத்தும்.(47) துரோணர் உம்மைக் கைப்பற்றவே எப்போதும் முயன்று வருகிறார். நீர் அவருடன் போரிடுவது பொருந்தாது என்றே நான் நினைக்கிறேன்.(48) துரோணரின் அழிவுக்காக எவன் படைக்கப்பட்டானோ, அவனே அவரைக் கொல்வான் என்பதில் ஐயமில்லை. ஆசானை {துரோணரை} விட்டுவிட்டு, மன்னன் சுயோதனன் {துரியோதனன்} எங்கிருக்கிறானோ, அங்கே செல்வீராக.(49) மன்னர்கள் மன்னர்களுடனேயே போரிட வேண்டும், மன்னர்களல்லாத இது போன்றோருடன் அவர்கள் போரிட விரும்பக்கூடாது. எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, சிறு படையின் உதவியுடன் நானும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, மனிதர்களில் புலியான பீமனும் குருக்களுடன் எங்கே போரிட்டுக் கொண்டிருக்கிறோமோ, அங்கே யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவை சூழ வருவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(50,51)
வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஒருக்கணம் சிந்தித்து, அகல விரித்த வாய்களுடன் கூடிய யமனைப் போல உமது துருப்புகளைக் கொன்றபடி எதிரிகளைக் கொல்பவனான பீமன், எங்கே கடும்போரில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தானோ, அந்தப் போர்க்களப் பகுதிக்குச் சென்றான்.(52,53) கோடைகாலத்தின் முடிவில் முழங்கும் மேகங்களுக்கு ஒப்பாகத் தன் தேரின் சடசடப்பொலியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடி சென்றவனும், பாண்டுவின் (மூத்த) மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பீமனின் பக்கத்தில் நிலைகொண்டு, எதிரியைக் கொல்வதில் ஈடுபட்டான்.(54) துரோணரும், அந்த இரவில் தன் எதிரிகளான பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார்” {என்றான் சஞ்சயன்}.(55)
விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட படைகள்! – துரோண பர்வம் பகுதி – 162-படைகளின் உற்சாகமற்ற நிலை; தன் துருப்புகளிடம் விளக்குகளையும், பந்தங்களையும் எடுத்துக்கொள்ளச் சொன்ன துரியோதனன்; பாண்டவர்களின் படையும் விளக்குகளால் ஒளியூட்டப்படுவது; பிரகாசமான போர்க்களத்தின் வர்ணனை..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பூமியானது இருளாலும் புழுதியாலும் மறைக்கப்பட்டுக் கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},(1) களத்தில் நின்றிருந்த போராளிகளால் ஒருவரையொருவர் காண முடியவில்லை. அந்த க்ஷத்திரியர்களில் முதன்மையானோர், அனுமானத்தினாலும், (அவர்கள் சொன்ன), தனிப்பட்ட மற்ற பிற பெயர்களாலும் வழிநடத்தப்பட்டு ஒருவரோடொருவர் போரிட்டனர். தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரின் அந்தப் பயங்கரப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணர், கர்ணன், கிருபர், பீமன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சாத்வதன் {சாத்யகி}(2,3) ஆகியோர் {தங்களுக்குள்} ஒருவரையொருவரையும், இருதரப்பின் துருப்புகளையும் பீடித்தனர்.
அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோரால் சுற்றிலும் கொல்லப்பட்ட இரு படைகளின் போராளிகளும்,(4) அந்த இரவு நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர். உண்மையில், முற்றிலும் உற்சாகமற்ற இதயங்களுடன் கூடிய அந்தப் போர்வீரர்கள், அணி பிளந்து அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(5) அப்படி அவர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடிச் செல்லும்போதே பெரும் படுகொலைகளுக்கும் ஆட்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயிரக்கணக்கான முதன்மையான தேர்வீரர்களும் அந்தப் போரில் ஒருவரையொருவர் கொன்றனர்.(6) இருளில் எதையும் காணமுடியாத போராளிகள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். இவையாவும் உமது மகனின் {துரியோதனனின்} தீய ஆலோசனைகளின் விளைவாகவே நடக்கின்றன. உண்மையில், உலகமே இருளில் மறைக்கப்பட்டிருந்த அந்நேரத்தில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, முதன்மையான தேர்வீரர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், பீதியால் வெல்லப்பட்டு அந்தப் போரில் தங்கள் உணர்வுகளை இழந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(7)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அவ்விருளால் பீடிக்கப்பட்டும், பாண்டவர்களால் மூர்க்கமாகக் கலங்கடிக்கப்பட்டும், நீங்கள் {உங்கள்} சக்திகளை இழந்திருந்தபோது, உங்களது மனநிலைகள் எவ்வாறு இருந்தன?(8) ஓ! சஞ்சயா, அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தபோது, பாண்டவத் துருப்புகளும் என்னுடையவையும், மீண்டும் எவ்வாறு கண்களுக்குப் புலப்பட்டன?” என்று கேட்டான்.(9)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது (கௌரவர்களில்) கொல்லப்பட்டோரில் எஞ்சியோர், அவர்களது தலைவர்களின் உத்தரவுகளின் பேரில் மீண்டும் (கச்சிதமாக [அ] நெருக்கமாக) அணி வகுக்கப்பட்டனர்.(10) துரோணர், தம்மை முன்னணியிலும், சல்லியனைப் பின்புறத்திலும் நிலைநிறுத்தினார். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் சகுனி ஆகியோர் முறையே {அந்தப் படையின்} வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் தங்களை நிறுத்திக் கொண்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், அவ்விரவில் துருப்புகள் அனைத்தையும் பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டான்.(11)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காலாட்படை வீரர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்திய துரியோதனன், அவர்களிடம், “உங்கள் பெரும் ஆயுதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, நீங்கள் அனைவரும் உங்கள் கைகளில் சுடர்மிக்க விளக்குகளை எடுத்துக் கொள்வீராக” என்றான்.(12) இப்படி அந்த மன்னர்களில் சிறந்தவனால் {துரியோதனனால்} உத்தரவிடப்பட்டதும், அந்தக் காலாட்படை வீரர்கள் எரியும் விளக்குகளை மகிழ்ச்சியாக ஏந்தினர். வானத்தில் நின்று கொண்டிருந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், தெய்வீக முனிவர்கள், வித்யாதரர்கள் மற்றும் அப்சரசுகளின் பல்வேறு இனக்குழுக்கள்,(13) நாகர்கள், யக்ஷர்கள், உரகர்கள், கின்னரர்கள் ஆகியோரும் மகிழ்ச்சியால் நிறைந்து சுடர்மிக்க விளக்குகளை எடுத்துக் கொண்டனர்.
நறுமணமிக்க எண்ணெயால் நிரப்பப்பட்ட பல விளக்குகள், திசைகளின் புள்ளிகள் மற்றும் துணைப்புள்ளிகளின் பாதுகாவலர்களிடம் {லோகபாலர்களிடம்} இருந்து விழுவது தெரிந்தது.(14) துரியோதனனுக்காகக் குறிப்பாக நாரதர் மற்றும் பர்வதரிடம் இருந்து வரும் அத்தகு விளக்குகள் பல அந்த இருளை விலக்கி ஒளியேற்றுவதாகத் தெரிந்தது [1]. அப்போது நெருக்கமாக அணிவகுக்கப்பட்ட அந்த (கௌரவப்) படையானது, அவ்விரவில், அந்த விளக்குகளின் ஒளியாலும்,(15) (போராளிகளின் மேனியில் இருந்த) விலைமதிப்புமிக்க ஆபரணங்களாலும், ஏவப்படும், அல்லது வீசப்படும் சுடர்மிக்க தெய்வீக ஆயுதங்களாலும் மிகப் பிரகாசமாகத் தெரிந்தது. ஒவ்வொரு தேரின் மீதும் ஐந்து விளக்குகள் வைக்கப்பட்டன, மேலும் மதங்கொண்ட ஒவ்வொரு யானையின் மீதும் மூன்று வைக்கப்பட்டன.(16) ஒவ்வொரு குதிரையின் மீதும் ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டது. இப்படியே அந்தப் படையானது, குரு போர்வீரர்களால் ஒளியூட்டப்பட்டது. குறுகிய காலத்திற்குள் அதனதன் இடங்களில் வைக்கப்பட்ட அந்த விளக்குகள் உமது படைக்கு விரைவாக ஒளியூட்டின.(17)
தங்கள் கைகளில் எண்ணெய் விளக்குகளைக் கொண்ட காலாட்படை வீரர்களால் இப்படி ஒளியூட்டப்பட்ட துருப்புகள் அனைத்தும், இரவு வானில் மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்பட்ட மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(18) அந்தக் குரு படையானது இப்படி ஒளியூட்டப்பட்ட போது, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட துரோணர், சுற்றிலும் உள்ள அனைத்தையும் எரித்தபடி தமது தங்கக் கவசத்துடன், சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.(19) அவ்விளக்குகளின் ஒளியானது, தங்க ஆபரணங்கள், போராளிகளின் பிரகாசமான மார்புக் கவசங்கள், விற்கள், நன்கு கடினமாக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றால் பிரதிபலிக்கப்பட்டது.(20) இழைகளால் கட்டப்பட்டிருந்த கதாயுதங்கள், பிரகாசமான பரிகங்கள், தேர்கள், கணைகள், ஈட்டிகள் ஆகியன செல்லும்போது தங்கள் பிரதிபலிப்பால் விளக்குகளின் கூட்டங்களை {பல மடங்காக} மீண்டும் மீண்டும் உண்டாக்கின.(21)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குடைகள், சாமரங்கள், கத்திகள், சுடர்மிக்கப் பந்தங்கள், தங்க ஆரங்கள் ஆகியன சுழற்றவோ, அசைக்கவோ படும்போது, அவ்வொளியைப் பிரதிபலித்து மிக அழகாகத் தெரிந்தன.(22) அவ்விளக்குகளின் ஒளியால் ஒளியூட்டப்பட்டும், ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பால் ஒளிவீசிக் கொண்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையானது காந்தியுடன் சுடர்விட்டது.(23) நன்கு கடினமாக்கப்பட்டவையும், குருதியால் சிவப்பு நிறமடைந்தவையுமான அழகான ஆயுதங்கள், வீரர்களால் வீசப்படும்போது, கோடையின் முடிவில் வானத்தில் தோன்றும் மின்னலின் கீற்றுகளைப் போலச் சுடர்மிக்கப் பிரகாசத்தை உண்டாக்கின.(24) எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதற்காக அவர்களை மூர்க்கமாகத் தொடர்ந்து சென்றவர்களும், அவசரமாக விரையும்போது நடுங்கியவர்களுமான போர்வீரர்களின் முகங்கள், காற்றால் தூண்டப்பட்ட மேகத் திரள்களைப் போல அழகாகத் தெரிந்தன.(25) மரங்கள் நிறைந்த காடொன்று தீப்பற்றி எரிகையில், காந்திமிக்கச் சூரியன் உக்கிரமடைவதைப் போல அந்தப் பயங்கர இரவானது கடுமையானதும், ஒளியூட்டப்பட்டதுமான அந்தப் படையால் பிரகாசமடைந்தது.(26)
நமது படை இவ்வாறு ஒளியூட்டப்பட்டதைக் கண்ட பார்த்தர்களும், தங்கள் படைமுழுவதும் உள்ள காலாட்படை வீரர்களை எழுச்சியுறச் செய்து, நம்மைப் போலவே வேகமாகச் செயல்பட்டனர்.(27) ஒவ்வொரு யானையிலும் அவர்கள் ஏழு விளக்குகளை வைத்தனர், ஒவ்வொரு தேரிலும் பத்தை {பத்து விளக்குகளை} வைத்தனர்; ஒவ்வொரு குதிரையின் முதுகிலும் அவர்கள் இரு விளக்குகளை வைத்தனர்; (தங்கள் தேர்களின்) பக்கங்களிலும், பின்புறத்திலும், மேலும் தங்கள் கொடிமரங்களிலும் அவர்கள் பல விளக்குகளை வைத்தனர்.(28) அவர்களது படையின் பக்கங்களிலும், பின்புறத்திலும், முன்புறத்திலும், சுற்றிலும், உள்ளேயும் எனப் பல விளக்குகள் ஒளியூட்டப்பட்டன. குருக்களும் இவ்வாறே செய்ததால், அந்தப் படைகள் இரண்டும் இப்படியே ஒளியூட்டப்பட்டன.(29) அந்தப் படை முழுவதும், யானைகள், தேர்கள் மற்றும் குதிரைப்படை ஆகியவற்றுடன் காலாட்படை கலந்தது. பாண்டு மகனின் படையானது, (காலாட்படை வீரர்களைத் தவிர) தங்கள் கைகளில் சுடர்மிக்கப் பந்தங்களுடன் நின்று கொண்டிருந்த பிறராலும் ஒளியூட்டப்பட்டது.(30) அந்தப் படையானது, நாளை உண்டாக்குபவனின் {சூரியனின்} கண்கவரும் கதிர்களால் ஒளியூட்டப்படுவதைப் போல அந்த விளக்குகளால் இரு மடங்கு ஒளியூட்டப்படு சுடர்மிக்க நெருப்பைப் போலக் கடுமையாகப் பிரகாசித்தது.(31)
அந்த இரு படைகளின் காந்தியும் பூமி, ஆகாயம் மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்திலும் பரவி பெருகுவதாகத் தெரிந்தது. அந்த ஒளியால் உமது படையும் அவர்களுடையதை {அவர்களது படையைப்} போலத் தனித்தன்மையுடன் காணப்பட்டது.(32) வானத்தை எட்டிய அந்த ஒளியால் விழிப்படைந்த தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர்.(33) அப்போது, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அப்சரஸ்கள், தேவலோகத்திற்குள் நுழையப்போகும் கொல்லப்பட்ட வீரர்களின் ஆவிகள் ஆகியோரால் நிறைந்த அந்தப் போர்க்களமானது இரண்டாவது சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது.(34) விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட தேர்கள், குதிரைகள், யானைகள், கோபக்காரப் போராளிகள், கொல்லப்பட்ட, அல்லது மூர்க்கமாகத் திரியும் குதிரைகள் நிறைந்ததும், அணிவகுக்கப்பட்ட போர்வீரர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டதுமான அந்தப் பரந்த படையானது, பழங்காலத்தில் அணிவகுக்கப்பட்ட தேவர்கள் மற்றும் அசுரர்களின் படையைப் போலவே இருந்தது.(35)
தேவர்களைப் போன்ற மனிதர்களுக்கு இடையில் நடந்ததும், சூறாவளியைப் [2] போன்றதுமான அந்த இரவு போரானது, விரையும் ஈட்டிகளைக் கடுங்காற்றாகவும், பெருந்தேர்களை மேகங்களாகவும், குதிரைகள் மற்றும் யானைகளின் கணைப்பொலிகள் மற்றும் பிளிறல்களை முழக்கங்களாகவும், கணைகளை மழையாகவும், போர்வீரர்கள் மற்றும் விலங்குகளின் குருதியையே வெள்ளமாகக் கொண்டிருந்தது.(36) அந்தப் போருக்கு மத்தியில், பிராமணர்களில் முதன்மையான அஸ்வத்தாமன், மழைக்காலத்தின் முடிவில் தன் கடுங்கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பாகப் பாண்டவர்களை எரித்துக் கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்} [3].(37)
துரியோதனனின் ஆணை! – துரோண பர்வம் பகுதி – 163-கௌரவப் படையை அழிக்கத் தொடங்கிய அர்ஜுனன்; திருதராஷ்டிரன் விசாரணை; துரோணரைப் பாதுகாக்கத் தன் தம்பிகளைப் பணித்துத் தன் வீரர்களுக்கு ஆணையிட்ட துரியோதனன்; பயங்கரப் போர் தொடங்கியது…
ஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இருளிலும், புழுதியிலும் மறைக்கப்பட்டிருந்த அந்தப் போர்க்களம் இப்படி ஒளியூட்டப்பட்ட போது, ஒருவரையொருவர் உயிரை எடுக்க விரும்பிய வீரமான போர்வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் மோதிக் கொண்டவர்களும், வேல்கள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டவர்களுமான அந்தப் போராளிகள், சினத்தின் ஆளுகையால் ஒருவரையொருவர் {முறைத்துப்} பார்த்துக் கொண்டனர்.(2) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எங்கும் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்த ஆயிரக்கணக்கான விளக்குகளுடனும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கக் கொடிமரங்களில் நிறுவப்பட்டவையும், நறுமணமிக்க எண்ணெய் ஊற்றப்பட்டவையுமான தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் கண்கவரும் விளக்குகளுடனும் கூடிய அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்களால் மினுமினுக்கும் ஆகாயத்தைப்போல இருந்தது.(3,4)
பூமியானது, நூற்றுக்கணக்கான சுடர்மிக்கப் பந்தங்களால் மிக அழகாகத் தெரிந்தது. உண்மையில், அண்ட அழிவின் போது ஏற்படும் காட்டுத்தீயுடன் கூடியதாகவே அந்தப் பூமி தெரிந்தது.(5) சுற்றிலும் இருந்த அந்த விளக்குகளால் திசைப்புள்ளிகள் அனைத்தும் சுடர்விட்டெரிந்து, மழைக்காலத்தின் மாலை வேளையில் விட்டிற்பூச்சிகளால் மறைக்கப்பட்ட மரங்களைப் போலத் தெரிந்தன.(6) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்போராளிகள் வீரப்பகைவர்களுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கடும் இரவில், உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவுக்கிணங்க யானைகள் யானைகளோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும் மகிழ்ச்சியால் நிறைந்து போரில் ஈடுபட்டனர்.(7,8) நால்வகைப் படைப்பிரிவுகளையும் கொண்டவையான அந்த இரண்டு படைகளுக்கும் இடையில் நடந்த மோதல் பயங்கரமடைந்தது. அப்போது அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரையும் பலவீனமடையச் செய்தபடியே பெரும் வேகத்துடன் கௌரவப் படைப்பிரிவுகளை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(9)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட இயலாதவனான அந்த அர்ஜுனன், கோபத்தால் தூண்டப்பட்டு, (குருக்களின் சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள இயலாமல் என் மகனின் {துரியோதனனின்} படைக்குள் ஊடுருவியபோது, உங்கள் மனநிலைகள் எப்படி இருந்தன?(10) உண்மையில், அந்த எதிரிகளை அழிப்பவன் {அர்ஜுனன்} தங்களுக்கு மத்தியில் நுழைந்ததும், {என்} படைவீரர்கள் என்ன நினைத்தனர்? அப்போது பின்பற்றத் தகுந்த நடவடிக்கைகள் எனத் துரியோதனன் எவற்றை நினைத்தான்?(11) அந்த வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துப் போரிடச் சென்ற அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் யாவர்? உண்மையில், வெண்குதிரைகளைக் கொண்ட அந்த அர்ஜுனன் (நமது படைக்குள்) நுழைந்த போது, துரோணரைப் பாதுகாத்தவர்கள் யாவர்?(12) துரோணரின் வலது சக்கரத்தையும், இடது சக்கரத்தையும் பாதுகாத்தவர்கள் யாவர்? போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரரின் {துரோணரின்} பின்புறத்தைப் பாதுகாத்த வீரர்கள் யாவர்?(13)
உண்மையில் அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, (தன் பாதையில்) எதிரிகளைக் கொன்றபடி செல்கையில், அவருக்கு முன்னணியில் சென்றவர்கள் யாவர்? வலிமைமிக்கவரும், வெல்லப்படமுடியாத வில்லாளியும், பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவியவரும்,(14) மனிதர்களில் புலியும், பெரும் வீரம் கொண்டவரும், நர்த்தனம் செய்பவரைப் போலத் தன் தேரின் பாதையில் செல்பவரும், சீற்றமிக்கக் காட்டு நெருப்பைப் போலத் தன் கணைகளின் மூலம் பாஞ்சாலத் தேர்க்கூட்டங்களைப் பெருமளவில் எரித்தவருமான துரோணர்,(15) ஐயோ, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்? நிதானமானவர்களாகவும், வெல்லப்படாதவர்களாகவும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும், போரில் வலிமையில் பெருகுபவர்களாகவும் என் எதிரிகளை நீ எப்போதும் சொல்லி வருகிறாய். எனினும், என்னுடையவர்களைக் குறித்து நீ அத்தகு வார்த்தைகளில் சொல்வதில்லை. மறுபுறம், கொல்லப்படுபவர்களாகவும், ஒளி இழந்தவர்களாகவும், முறியடிக்கப்பட்டவர்களாகவும் விவரித்து, எப்போதும் தாங்கள் போரிடும் போர்களில் என் தேர்வீரர்கள் தங்கள் தேர்களை இழப்பதாகச் சொல்கிறாய்” என்றான் {திருதராஷ்டிரன்}.(16,17)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போரில் முனைப்போடிருந்த துரோணரின் விருப்பங்களைப் புரிந்து கொண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனக்குக் கீழ்ப்படியும் தம்பிகளான(18) விகர்ணன், சித்திரசேனன், [1] சுபார்சன், துத்தர்ஷமன், தீர்க்கபாகு ஆகியோரிடமும், அவர்களைப் பின் தொடர்ந்து வந்தோரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(19) “பெரும் வீரமிக்கவர்களே, வீரர்களே, உறுதியான தீர்மானத்தோடு போராடும் நீங்கள் அனைவரும் துரோணரைப் பின்புறத்தில் இருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும். ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவரது வலது சக்கரத்தையும், சலன் அவரது இடதையும் பாதுகாப்பார்கள்” என்றான்.(20) இதைச் சொன்ன உமது மகன் {துரியோதனன்}, முன்னோக்கி நகர்ந்து, எஞ்சியிருந்தவர்களும், துணிவும், வலிமையும் மிக்கவர்களுமான திரிகர்த்த தேர்வீரர்களை முன்னணியில் நிறுத்தியபடி, அவர்களிடம்,(21) “ஆசான் {துரோணர்} கருணைநிறைந்தவராக இருக்கிறார். பாண்டவர்களோ உறுதிமிக்கப் பெரும் தீர்மானத்தோடு போரிடுகின்றனர். போரில் எதிரிகளைக் கொல்லும்போது, ஒன்றாகச் சேர்ந்து அவரை {துரோணரை} நன்கு பாதுகாப்பீராக.(22) துரோணர் போரில் வலிமைமிக்கவராகவும், பெரும் கரநளினமும், பெரும் வீரமும் கொண்டவராக இருக்கிறார். போரில் தேவர்களையே அவரால் வெல்ல முடியும் எனும்போது, பாண்டவர்களையும், சோமகர்களையும் குறித்து என்ன சொல்வது?(23)எனினும், ஒன்றாகச் சேரும் நீங்கள் அனைவரும், இந்தப் பயங்கரப் போரில் பெரும் தீர்மானத்துடன் போராடி, வெல்லப்பட முடியாத துரோணரை அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனிடம் இருந்து பாதுகாப்பீராக.(24) போரில் துரோணரை வெல்ல பாண்டவப் போர்வீரர்கள் அனைவரிலும் திருஷ்டத்யும்னனைத் தவிர, வேறு எவனையும் நான் காணவில்லை.(25) எனவே, நாம் முழு ஆன்மாவோடு பரத்வாஜரின் மகனை {துரோணரைப்} பாதுகாக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். (நம்மால்) பாதுகாக்கப்படும் அவர், ஒருவர் பின் ஒருவராகச் சோமகர்களையும், சிருஞ்சயர்களையும் நிச்சயம் கொல்வார்.(26) (பாண்டவப்) படைக்குத் தலைமையில் நிற்கும் சிருஞ்சயர்கள் அனைவரும் கொல்லப்பட்டதும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்வார் என்பதில் ஐயமில்லை.(27) அதே போலவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனும், போரில் அர்ஜுனனை வெல்வான். பீமசேனனையும், கவசம் தரித்த பிறரையும் பொறுத்தவரை, அவர்கள் அனைவரையும் போரில் நானே அடக்குவேன்.(28) சக்தியை இழப்பவர்களான பாண்டவர்களில் எஞ்சியோர், பிற போர்வீரர்களால் எளிதாக வீழ்த்தப்படுவார்கள். அதன்பிறகு என் வெற்றி எப்போதும் நீடித்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.(29) இந்தக் காரணங்களுக்காக, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரைப் போரில் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}.
ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துரியோதனன்,(30) பயங்கர இருளைக் கொண்ட அந்த இரவில் தன் துருப்புகளைப் போரிடத் தூண்டினான். ஓ! பாரதர்களின் தலைவரே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போது, வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் இயக்கப்பட்ட அவ்விரு படைகளுக்கும் இடையில் ஒரு போர் தொடங்கியது.(31) பல்வேறு விதங்களிலான ஆயுதங்களால், அர்ஜுனன் கௌரவர்களையும், கௌரவர்கள் அர்ஜுனனையும் பீடிக்கத் தொடங்கினர். அந்தப் போரில் நேரான கணைகளின் மழையால், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பாஞ்சாலர்களின் ஆட்சியாளனையும் {துருபதனையும்}, துரோணர் சிருஞ்சயர்களையும் மறைக்கத் தொடங்கினர். (ஒரு புறத்தில்) பாண்டு மற்றும் பாஞ்சாலத் துருப்புகளும், (மறுபுறத்தில்) கௌரவத் துருப்புகளும் போரில் ஒருவரையொருவர் கொன்ற போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் களத்தில் சீற்றமிக்க ஆரவாரம் எழுந்தது. அந்த இரவில் நடைபெற்ற போரானது பயங்கரமானதாகவும், எங்களாலோ, எங்களுக்கு முன் சென்றவர்களாலோ இதற்கு முன் காணப்படாத வகையில் கடுமையானதாகவும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(32-35)
யுதிஷ்டிரனை வென்ற கிருதவர்மன்! – துரோண பர்வம் பகுதி – 164-துரோணரை மட்டுமே எதிர்த்துச் செல்லுமாறு தன் படைவீரர்களுக்கு உத்தரவிட்ட யுதிஷ்டிரன்; அந்தப் போரில் யார் யாரை எதிர்த்தது என்று சஞ்சயன் வர்ணிப்பது; கிருதவர்மனுக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நேர்ந்த மோதல்; யுதிஷ்டிரனை வென்ற கிருதவர்மன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கண்மூடித்தனமான படுகொலைகள் நிறைந்த அந்தப் பயங்கரமான இரவுப்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்களிடம் தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பேசினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், தேர்கள் மற்றும் யானைகளை அழிப்பதற்காகத் தன் துருப்புகளுக்கு உத்தரவிட்ட யுதிஷ்டிரன், அவர்களிடம், “துரோணரைக் கொல்வதற்காக அவரை மட்டுமே எதிர்த்து செல்வீராக” என்றான்.(1-3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில் பாஞ்சாலர்களும், சோமகர்களும், பயங்கரக் கூச்சலிட்டபடியே துரோணரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.(4) சினத்தால் தூண்டப்பட்ட நாங்கள், பதிலுக்கு முழங்கியவாறே, எங்கள் ஆற்றல், துணிவு, வலிமை ஆகியவற்றில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் அவர்களை எதிர்த்து விரைந்தோம்.(5)
ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், மதங்கொண்ட யானையை எதிர்த்து விரையும் மதங்கொண்ட பகை யானையைப் போலத் துரோணரை எதிர்த்துச் சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான்.(6)
சுற்றிலும் கணைமாரியை இறைத்தபடி சென்று கொண்டிருந்த சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் (எதிரிகளை) கலங்கடிக்கும் குரு போர்வீரனான பூரி விரைந்தான்.(7)
விகர்த்தனன் மகனான கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை அடைய சென்று கொண்டிருந்தவனும், வலிமைமிக்கப் போர்வீரனும், பாண்டுவின் மகனுமான சகாதேவனைத் தடுத்தான்.(8)
அந்தப் போரில் மன்னன் துரியோதனன், யமனைப் போலத் தன் தேரில் சென்று கொண்டிருந்தவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான பீமசேனனை எதிர்த்துத் தானே விரைந்தான்.(9)
சுபலனின் மகனான சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்தவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான நகுலனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(10)
சரத்வானின் மகனான கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையான சிகண்டி தன் தேரில் சென்று கொண்டிருந்த போது, அந்தப் போரில் பின்னவனை {சிகண்டியைத்} தடுத்தார்.(11)
தீவிரமாகப் போட்டியிடும் துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மயில்களைப் போலத் தெரிந்த குதிரைகளால் இழுக்கப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் (தன் தேரில்) சென்று கொண்டிருந்த பிரதிவிந்தியனைத் தடுத்தான்.(12)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமன், நூற்றுக்கணக்கான மாயைகளை அறிந்தவனான ராட்சசன் (கடோத்கசன்) முன்னேறிவந்த போது, பின்னவனை {கடோத்கசனைத்} தடுத்தான்.(13)
விருஷசேனன், அந்தப் போரில் துரோணரைக் கைப்பற்றச் சென்ற துருபதனை, பின்னவனின் {துருபதனின்} துருப்புகள் மற்றும் அவனைப் பின்தொடர்பவர்களுடன் சேர்த்துத் தடுத்தான்.(14)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட மத்ர மன்னன் {சல்லியன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரைக் கொல்வதற்காக வேகமாகச் சென்ற விராடனைத் தடுத்தான்.(15)
அந்தப் போரில் சித்திரசேனன், துரோணரைக் கொல்வதற்காகச் சென்று கொண்டிருந்த நகுலன் மகனான சதானீகன் மீது பல கணைகளை ஏவியும், பெரும் பலத்தைப் பயன்படுத்தியும் பின்னவனை {சதானீகனைத்} தடுத்தான்.
(16) ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனன் முன்னேறிக் கொண்டிருந்த போது, பின்னவனை {அர்ஜுனனைத்} தடுத்தான்.(17)
பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னன், பெரும் வில்லாளியான துரோணர் எதிரியைக் கொல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பின்னவரை {துரோணரை} மகிழ்ச்சியாகத் தடுத்தான்.(18) பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் அப்படி (துரோணரை எதிர்த்துச்) சென்ற பிறரைப் பொறுத்தவரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை உமது படையின் பிற தேர்வீரர்கள் பெரும் பலத்துடன் தடுத்தனர்.(19)
அந்தப் பயங்கரப் போரில் யானைப்பாகர்களோடு {வீரர்களோடு} மோதிய {வேறு} யானைப் பாகர்கள், ஆயிரக்கணக்கில் போரிடத் தொடங்கி, ஒருவரையொருவர் கலங்கடித்தனர்.(20) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் குதிரைகள் ஒன்றையொன்று நோக்கி மூர்க்கமாக விரைந்தபோது, சிறகுகளைக் கொண்ட மலைகளைப் போலத் தெரிந்தன.(21) ஓ! ஏகாதிபதி (திருதராஷ்டிரரே}, வேல்கள், ஈட்டிகள், வாள்கள் ஆகியவற்றுடன் கூடிய குதிரைவீரர்கள் உரக்கக் கூச்சலிட்டபடியே {வேறு} குதிரைவீரர்களுடன் மோதினர்.(22) கதாயுதங்கள், குறுந்தண்டங்கள் {உலக்கைகள்} மற்றும் பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களோடு கூடிய பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்தனர்.(23)
ஹிருதிகனின் மகனான கிருதவர்மன் கோபத்தால் தூண்டப்பட்டு, பொங்கும் கடலைத் தடுக்கும் கண்டங்களை {கரைகளைப்} போலத் தர்மனின் மகனான யுதிஷ்டிரனைத் தடுத்தான்.(24) எனினும் யுதிஷ்டிரன், ஐந்து கணைகளால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} துளைத்து, மீண்டும் இருபதாலும் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்து, அவனிடம் {கிருதவர்மனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(25) அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட கிருதவர்மன், ஒரு பல்லத்தைக் கொண்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை அறுத்து பின்னவனை {யுதிஷ்டிரனை} ஏழு கணைகளால் துளைத்தான்(26) வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பத்து கணைகளால் ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் துளைத்தான்.(27)
அப்போது மதுகுலத்தைச் சேர்ந்த அந்தப் போர்வீரன் {கிருதவர்மன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அந்தப் போரில் துளைக்கப்பட்டு, சினத்தால் நடுங்கியபடியே ஏழு கணைகளால் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(28) பிறகு அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, தன் எதிரியின் வில்லை அறுத்து, அவனது {கிருதவர்மனின்} கரங்களை மறைத்திருந்த தோலுறைகளயும் அறுத்து, கல்லில் கூராக்கப்பட்ட ஐந்து கூரிய கணைகளை அவன் {கிருதவர்மனின்} மீதும் ஏவினான்.(29) அந்தக் கடுங்கணைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் விலைமதிப்புமிக்கதுமான பின்னவனின் {கிருதவர்மனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று, எறும்புப்புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன.(30) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மற்றொரு வில்லை எடுத்த கிருதவர்மன், பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} அறுபது {60} கணைகளாலும், மீண்டும் பத்தாலும் துளைத்தான்.(31) அளவிலா ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் பெரிய வில்லைத் தேரில் வைத்துவிட்டு, பாம்புக்கு ஒப்பான ஈட்டி ஒன்றை கிருதவர்மனின் மீது ஏவினான்.(32) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், பாண்டு மகனால் {யுதிஷ்டிரனால்} ஏவப்பட்டதுமான அந்த ஈட்டி, கிருதவர்மனின் வலக்கரத்தைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தது.(33) அதே வேளையில், பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} உறுதிமிக்கத் தனது வில்லை எடுத்துக் கொண்டு நேரான கணைகளின் மழையால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} மறைத்தான்.(34)
அப்போது, விருஷ்ணிகளில் பெரும் தேர்வீரனும், துணிவுமிக்கவனுமான கிருதவர்மன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் யுதிஷ்டிரனைக் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான்.(35) அதன் பேரில் பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, ஒரு வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அப்போது அந்த மதுகுலத்தோன் {கிருதவர்மன்}, அந்தப் போரில் அவ்விரு ஆயுதங்களையும் வெட்டினான்.(36) பிறகு யுதிஷ்டிரன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட ஒரு கடும் ஈட்டியை எடுத்து, அந்தப் போரில் சிறப்புமிக்க ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மீது வேகமாக ஏவினான்.(37) எனினும், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} சிரித்துக் கொண்டே தன் பெரும் கரநளினத்தை வெளிக்காட்டியபடி, யுதிஷ்டிரனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அந்த ஈட்டி தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த போதே அதை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(38)
பிறகு அவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் ஒரு நூறு கணைகளால் தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} மறைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {கிருதவர்மன்}, கணைமாரிகளைக் கொண்டு, பின்னவனின் {யுதிஷ்டிரனின்} கவசத்தை அறுத்தான்.(39) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யுதிஷ்டிரனின் கவசமானது, ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கணைகளால் வெட்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் ஒரு நட்சத்திரக் கூட்டத்தைப் போல, அவனது உடலில் இருந்து கீழே விழுந்தது.(40) கவசம் அறுபட்டு, தேரையும் இழந்து, கிருதவர்மனின் கணைகளாலும் பீடிக்கப்பட்டட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, போரில் இருந்து விரைவாகப் பின்வாங்கினான்.(41) வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனை வென்ற பிறகு, மீண்டும் துரோணருடைய தேரின் சக்கரத்தைப் பாதுகாக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(42)
பீமனால் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 165-பூரியின் வில்லைச் சாத்யகியும், சாத்யகியின் வில்லைப் பூரியும் அறுத்தது; பூரியைக் கொன்ற சாத்யகி; சாத்யகியை எதிர்த்து விரைந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை எதிர்த்து விரைந்த கடோத்கசன்; கடோத்கசன் அஸ்வத்தாமனுக்கிடையில் நடந்த போர்; அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த கடோத்கசன்; உணர்வுகள் மீண்டு கடோத்கசனை மயக்கமடையச் செய்த அஸ்வத்தாமன்; பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையிலான மோதல்; பீமனின் விற்களை அடுத்தடுத்து வெட்டிய துரியோதனன்; பீமனால் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட துரியோதனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பூரி என்பவன், நீர் நிறைந்த தடாகத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் யானையைப் போல முன்னேறியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான சிநியின் பேரனை {சாத்யகியைத்} தடுத்தான்.(1) அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, ஐந்து கூரிய கணைகளால் தன் எதிரியின் {பூரியின்} மார்பைத் துளைத்தான். இதனால் பின்னவனுக்கு {பூரிக்கு} குருதி வழியத் தொடங்கியது.(2) அதே போல அம்மோதலில் அந்தக் குரு போர் வீரனும் {பூரியும்}, போரில் வீழ்த்தக் கடினமான வீரனான சிநியின் பேரனைப் பத்து கணைகளால் பெரும் வேகத்துடன் அவனது மார்பில் துளைத்தான்.(3) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் விற்களை முழு அளவுக்கு வளைத்த அந்த வீரர்கள், கோபத்தால் கண்கள் சிவந்து, அம்மோதலில் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(4) சினத்தால் தூண்டப்பட்ட அந்த இருவீரர்களின் கணைமாரிகள், யமனுக்கோ, கதிர்களை இறைக்கும் சூரியனுக்கோ ஒப்பாக மிகப் பயங்கரமாக இருந்தன.(5)
தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் மறைத்தபடியே அந்தப் போரில் அவ்விருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றனர். சிறிது நேரத்திற்கு அந்தப் போர் சமமாகவே நடந்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே சிறப்புமிக்க அந்தக் குரு வீரனின் {பூரியின்} வில்லை அந்தப் போரில் அறுத்தான்.(7) அவனது வில்லை அறுத்ததும், ஒன்பது கூரிய கணைகளால் அவனது {பூரியின்} மார்பைத் துளைத்த சாத்யகி, அவனிடம் {பூரியிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(8) வலிமைமிக்கத் தன் எதிரியால் {சாத்யகியால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {பூரி}, விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(9) மூன்று கணைகளால் சாத்வத வீரனைத் துளைத்த பூரி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே, கூரிய பல்லம் ஒன்றைக் கொண்டு தன் எதிரியின் {சாத்யகியின்} வில்லை அறுத்தான்.(10) தன் வில் அறுபட்டதும், சினத்தால் வெறிபிடித்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூர்க்கமான ஈட்டியொன்றை பூரியின் அகலமான மார்பின் மீது வீசினான்.(11) அந்த ஈட்டியால் துளைக்கப்பட்ட பூரி, ஆகாயத்தில் இருந்து விழும் சூரியனைப் போலக் குருதியால் நனைந்தபடியே தன் சிறந்த தேரில் இருந்து கீழே விழுந்தான்.(12)
இப்படி அவன் {பூரி} கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து மூர்க்கத்துடன் விரைந்தான்.(13) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியிடம் “நில், நிற்பாயாக” என்று சொன்ன அவன் {அஸ்வத்தாமன்}, மேருவின் மார்பில் {சாரலில்} மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல, கணை மாரிகளால் அவனை {சாத்யகியை} மறைத்தான்.(14) சிநியின் பேரனுடைய தேரை நோக்கி அவன் {அஸ்வத்தாமன்} விரைவதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரக்க முழங்கிய படியே அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! துரோணரின் மகனே {அஸ்வத்தாமரே}, நிற்பீர், நிற்பீராக. என்னிடம் இருந்து நீர் உயிருடன் தப்ப இயலாது. (அசுரன்) மஹிஷனைக் கொன்ற ஆறுமுகத்தோனை (கார்த்திகேயனைப்) போல நான் இப்போது உம்மைக் கொல்வேன்.(16) போருக்கான ஆசைகள் அனைத்தையும் நான் இன்று உமது இதயத்தில் இருந்து அகற்றுவேன்” என்றான் {கடோத்கசன்}.
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான அந்த ராட்சசன் (கடோத்கசன்), கோபத்தால் தாமிரமாகச் சிவந்த கண்களுடன்,(17) யானைகளின் இளவரசனை எதிர்த்து விரையும் சிங்கம் ஒன்றைப் போல, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்துச் சீற்றத்துடன் விரைந்தான். கடோத்கசன், தன் எதிரியின் மீது ஒரு தேருடைய அக்ஷத்தின் {அச்சின்} அளவுடைய கணைகளை ஏவி,(18) அதைக் கொண்டு, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தேர்வீரர்களில் காளையான அவனை {அஸ்வத்தாமனை} மறைத்தான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணைமழை தன்னை அடையும் முன்பே அந்தப் போரில், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற தன் கணைகளைக் கொண்டு அவற்றை விலக்கினான். பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைத் தண்டிப்பவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை, வேகமாகச் செல்பவையும் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் ஊடுருவ-வல்லவையுமான நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் துளைத்தான். அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் இப்படித் துளைகப்பட்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, அந்தப் போர்க்களத்தில்,(19-21) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் உடலில் முட்கள் விறைத்திருந்த முள்ளம்பன்றியைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.
பிறகு, பீமசேனனின் வீரமகன் {கடோத்கசன்}, சினத்தால் நிறைந்து,(22) இடியின் முழக்கத்துடன் காற்றில் “விஸ்” எனச் செல்லும் கடுங்கணைகள் பலவற்றால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைச்} சிதைத்தான். மேலும் அவன் {கடோத்கசன்}, கத்தி போன்ற தலை கொண்ட {க்ஷுரப்ரங்கள்} சிலவும், பிறை போன்ற தலை கொண்ட {அர்த்தச்சந்திர பாணங்கள்} சிலவும், நீளமாகவும், கூர்மையாகவும் {நாராசங்கள்} சிலவும், தவளை முகம் போன்ற தலை கொண்ட சிலவும், பன்றியின் காதுகளுக்கு ஒப்பான {வராஹகர்ணங்கள்} சிலவும், முள்கொண்ட {விகர்ணங்கள்} சிலவும், வேறு வகையைச் சேர்ந்த {நாளீகங்கள்} சிலவும் [1] எனப் பல்வேறு வகைகளிலான துல்லியமான கணை மாரிகளை அஸ்வத்தாமன் மீது பொழிந்தான். பெரும் மேகத் திரள்களை விலக்கும் காற்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் உணர்வுகள் கலங்காத துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கடுமையானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையும், இடியின் முழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்டவையும், தன் மீது தொடர்ச்சியாகப் பாய்ந்தவையுமான அந்த ஒப்பற்ற ஆயுதமழையை மந்திரங்களால் தெய்வீக ஆயுதங்களின் சக்திகளை ஈர்த்திருந்த தனது பயங்கரக் கணைகளால் அழித்தான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பயங்கரமானதும், போர்வீரர்களைப் பிரமிப்பில் நிரப்புவதுமான மற்றொரு மோதலொன்று (ஆயுதங்களே போராளிகளாக) ஆயுதங்களுக்கிடையில் ஆகாயத்தில் நடப்பதாகத் தெரிந்தது.(23-26) அவ்விரு போர்வீரர்களால் ஏவப்பட்ட ஆயுதங்களின் மோதலால் சுற்றிலும் உண்டான தீப்பொறிகளுடன்(27) கூடிய ஆகாயமானது, மாலைவேளையில் விட்டிற்பூச்சிகளின் கூட்டத்தால் ஒளியூட்டப்பட்டது போல அழகாகத் தெரிந்தது. அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, உமது மகன்களுக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகத் தன் கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து அந்த ராட்சசனை {கடோத்கசனை} மறைத்தான்.(28) அப்போது அடர்த்தியான இருள் கொண்ட அந்த இரவில், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, பிரகலாதனுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பாகத் துரோணரின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் மீண்டும் ஒரு போர் தொடங்கியது.(29)
அப்போது, சினத்தால் நிறைந்த கடோத்கசன், அந்தப் போரில், யுக நெருப்புக்கு ஒப்பான பத்து கணைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} மார்பில் தாக்கினான். ராட்சசனால் {கடோத்கசனால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, காற்றால் அசைக்கப்படும் நெடிய மரம் ஒன்றைப் போல அந்தப் போரில் நடுங்கத் தொடங்கினான். தன்னைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடிக்கம்பத்தைப் பிடித்த அவன் {அஸ்வத்தாமன்} அப்படியே மயங்கிப் போனான்.(30-32) அப்போது உமது துருப்புகள் அனைத்தும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கதறின. உண்மையில், ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் அனைவரும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கொல்லப்பட்டதாகவே கருதினர்.(33) அஸ்வத்தாமனை அந்த அவல நிலையில் கண்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும் அந்தப் போரில் உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(34)
பிறகு, எதிரிகளை நொறுக்குபவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன் தன் உணர்வுகள் மீண்டு, தன் இடது கையால் வில்லை வலிமையாக வளைத்து, தன் காது வரை வில்லின் நாணை இழுத்துக் கடோத்கசனைக் குறி பார்த்து, யமனுக்கு ஒப்பான பயங்கரக் கணை ஒன்றை விரைவாக ஏவினான்.(35,36) கடுமையானதும், நல்ல சிறகுகளைக் கொண்ட அந்தச் சிறந்த கணையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மார்பைத் துளைத்து கடந்து சென்று பூமிக்குள் நுழைந்தது.(37) போரில் தன் ஆற்றலில் செருக்குடைய துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஆழத் துளைக்கபட்டவனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, தன் தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.(38) ஹிடிம்பையின் மகன் தன் உணர்வுகளை இழந்ததைக் கண்டு அச்சமடைந்த அவனது {கடோத்கஜனது} தேரோட்டி, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} முன்னிலையில் இருந்து அவனை {கடோத்கசனை} சுமந்து சென்று, அவனைக் களத்தைவிட்டே விரைவாக அகற்றினான்.(39) இப்படி அந்த மோதலில் ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசனைத் துளைத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} உரக்க முழங்கினான்.(40) உமது மகன்களாலும், உமது போர்வீரர்களாலும் வழிபடப்பட்ட அஸ்வத்தாமனின் உடலானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நடுப்பகல் சூரியனைப் போலச் சுடர்விட்டெரிந்தது.(41)
துரோணரின் தேர் முன்பு போரிட்டுக் கொண்டிருந்த பீமசேனனைப் பொறுத்தவரை, மன்னன் துரியோதனன், கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் தானே அவனைத் {பீமனைத்} துளைத்தான்.(42) எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன், அவனை {துரியோதனனைப்} ஒன்பது கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். பிறகு துரியோதனன், இருபத்தைந்து கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(43) அந்தப் போர்க்களத்தில் கணைகளால் ஒருவரையொருவர் மறைத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஆகாயத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர்.(44) அப்போது மன்னன் துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிறகுபடைத்த ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்து, “நில், நிற்பாயாக” என்றான்.(45) பிறகு பீமன், கூரிய கணைகளால் குரு மன்னனுடைய {துரியோதனனுடைய} வில்லையும், அவனது கொடிமரத்தையும் அறுத்து, மேலும் நேரான தொண்ணூறு கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} துளைத்தான்.(46)
அப்போது சினத்தால் நிறைந்த துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, போரின் முன்னணியில் நின்று கொண்டிருந்த பீமசேனனைக் கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் பீடித்தான். துரியோதனனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் கலங்கடித்த பீமன், இருபத்தைந்து குறுங்கணைகளால் {க்ஷுத்ரகங்களால்} குருமன்னனை {துரியோதனனைத்} துளைத்தான்.(47,48) பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கத்தி முகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் பீமசேனனின் வில்லை அறுத்து, பத்து கணைகளால் பீமனைப் பதிலுக்குத் துளைத்தான். அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பீமசேனன், ஏழு கூரிய கணைகளால் மன்னனை வேகமாகத் துளைத்தான்.(49,50) பெரும் கரநளினத்தை வெளிக்காட்டிய துரியோதனன், அவனது அந்த வில்லையும் அறுத்தான்.(51) இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது எனப் பீமன் எடுத்த விற்களும் அதே போலவே வெட்டப்பட்டன. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியை விரும்பியவனும், தன் ஆற்றலில் செருக்குடையவனுமான உமது மகன் {துரியோதனன்}, பீமன் ஒரு வில்லை எடுத்ததுமே அதை வெட்டினான்.
தன் விற்கள் மீண்டும் மீண்டும் வெட்டப்படுவதைக் கண்ட பீமன், முழுக்க இரும்பாலானதும், வஜ்ரத்தைப் போன்ற கடினமானதுமான ஈட்டி ஒன்றை அந்தப் போரில் வீசினான்.(52,53) நெருப்பின் தழலைப் போலச் சுடர்விட்ட அந்த ஈட்டி, மிருத்யுவின் சகோதரிக்கு ஒப்பானதாக இருந்தது.(54) எனினும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீமனின் கண்களுக்கு முன்பாகவே, பெண்ணின் குழலைப் பிரிக்கும் வகுட்டைப் போல நேரான கோடாக நெருப்பின் காந்தியுடன் தன்னை நோக்கி ஆகாயத்தினூடாக வந்து கொண்டிருந்த அந்த ஈட்டியை மூன்று துண்டுகளாக வெட்டினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது பீமன், கனமானதும், சுடர்விட்டெரிவதுமான கதாயுதம் ஒன்றைச் சுழற்றி, அதைத் துரியோதனனின் தேர் மீது பெரும் பலத்தோடு எறிந்தான். அந்தக் கனமான கதாயுதமானது, அம்மோதலில் உமது மகனின் குதிரைகள், சாரதி மற்றும் தேரையும் விரைவாக நொறுக்கியது. பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமனிடம் அச்சங்கொண்டு, மிகக் குறுகலான இடத்தில் தன்னை ஒளித்துக் கொண்டு, சிறப்புமிக்க நந்தகனின் வேறொரு தேரில் ஏறிக் கொண்டான்.(55-58) அப்போது அந்த இருண்ட இரவுக்கு மத்தியில் சுயோதனன் {துரியோதனன்} கொல்லப்பட்டதாகக் கருதிய பீமன், கௌரவர்களை அறைகூவியழைத்து உரக்க சிங்க முழக்கம் செய்தான்.
உமது போர்வீரர்களும் மன்னன் {துரியோதனன்} கொல்லப்பட்டதாகவே கருதினர்.(59) அவர்கள் அனைவரும், “ஓ” என்றும், “ஐயோ” என்று உரக்கக் கதறினார். அச்சமடைந்த அந்தப் போர்வீரர்களின் ஓலங்களையும், உயர் ஆன்ம பீமனின் முழக்கங்களையும் கேட்ட மன்னன் யுதிஷ்டிரனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுயோதனன் கொல்லப்பட்டதாகவே கருதினான்.(61,62) மேலும் பாண்டுவின் அந்த மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்} இருந்த இடத்திற்கு வேகமாக விரைந்து சென்றான். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், கைகேயர்கள், சேதிகள் ஆகியோரும் தங்கள் பலம் அனைத்தையும் {திரட்டிக்} கொண்டு, துரோணரைக் கொல்லும் விருப்பதால் வேகமாக முன்னேறினர்.(63) அங்கே துரோணருக்கும் எதிரிக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது. இரு தரப்பின் போராளிகளும் அடர்த்தியான இருளில் மறைக்கப்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொன்றனர்” {என்றான் சஞ்சயன்}.(64)
சகாதேவனை வென்ற கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 166-சகாதேவனைத் தடுத்த கர்ணன்; கர்ணனுக்கும் சகாதேவனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகாதேவனைத் தன் வில்லால் தொட்ட கர்ணன்; சகாதேவனைப் பரிகசித்த கர்ணன்; தன் உயிர்மீது கொண்ட ஆசையைக் கைவிட்ட சகாதேவன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “விகர்த்தனன் மகனான கர்ணன் {வைகர்த்தனன்} [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரை அடையும் விருப்பத்தில் முன்னேறிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சகாதேவனைத் தடுத்தான்.(1) ராதையின் மகனை {கர்ணனை} ஒன்பது கணைகளால் துளைத்த சகாதேவன், மீண்டும் அந்தப் போர்வீரனை {கர்ணனை} ஒன்பது நேரான கணைகளால் துளைத்தான்.(2) பிறகு கர்ணன், ஒரு நூறு கணைகளால் சகாதேவனைப் பதிலுக்குத் துளைத்துத் தன் கர நளினத்தை வெளிக்காட்டியபடியே, நாண்பொருத்தப்பட்ட பின்னவனின் {சகாதேவனின்} வில்லை வெட்டினான்.(3) பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட மாத்ரியின் வீர மகன் {சகாதேவன்}, கர்ணனை இருபது கணைகளால் துளைத்தான். அவனது {சகாதேவனின்} இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4)அப்போது கர்ணன், நேரான கணைகள் பலவற்றால், சகாதேவனின் குதிரைகளைக் கொன்று, ஒரு பல்லத்தால் பின்னவனின் {சகாதேவனின்} சாரதியையும் விரைவாக யமனுலகுக்கு அனுப்பினான்.(5) தேரற்றவனான சகாதேவன் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். சிரித்துக் கொண்டேயிருந்த கர்ணனால் அந்த ஆயுதங்களும் வெட்டப்பட்டன.(6) அப்போது வலிமைமிக்கச் சகாதேவன், அம்மோதலில், கனமானதும், பயங்கரமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கதாயுதம் ஒன்றை விகர்த்தனன் மகனின் {கர்ணனின்} தேரை நோக்கி வீசினான்.(7) பிறகு கர்ணன், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், சகாதேவனால் வீசப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தைத் தன் கணைகளால் விரைவாக வெட்டி, அதைப் பூமியில் விழச் செய்தான்.(8) தன் கதாயுதம் வெட்டப்படதைக் கண்ட சகாதேவன், கர்ணனின் மீது ஈட்டி ஒன்றை வீசினான். அந்த ஈட்டியும் கர்ணனால் வெட்டப்பட்டது.(9)
அப்போது தன் சிறந்த தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துத் தன் எதிரே இருந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(10) எனினும், அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, உயர்த்தப்பட்ட காலச் சக்கரம் போலத் தன்னை நோக்கி வந்த அந்தச் சக்கரத்தைப் பல்லாயிரம் கணைகளால் வெட்டினான். அந்தச் சக்கரம் வெட்டப்பட்ட போது, கர்ணனைக் குறி பார்த்த சகாதேவன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் தேரின் அச்சு {ஏர்க்கால்}, தன் குதிரைகளின் கடிவாளங்கள், தேர்களின் நுகத்தடிகள் ஆகியவற்றையும், யானைகள், குதிரைகள் மற்றும் இறந்து கிடந்த மனித உடல்களின் அங்கங்கள் ஆகியவற்றையும் அவன் {கர்ணன்} மீது வீசினான்.(11,12) கர்ணன் அவையாவையும் தன் கணைகளால் வெட்டினான். ஆயுதங்கள் அனைத்தையும் தான் இழந்துவிட்டதைக் கண்ட மாத்ரியின் மகனான சகாதேவன், கணைகள் பலவற்றால் கர்ணனால் தாக்கப்பட்டுப் போரை விட்டகன்றான்.(13,14)
சிறிது நேரம் அவனை {சகாதேவனைப்} பின்தொடர்ந்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே},(15) சகாதேவனிடம் சிரித்துக் கொண்டே இந்தக் கொடூர வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! வீரா {சகாதேவா}, போர்க்களத்தில் உன்னைவிட மேம்பட்டவர்களுடன் போரிடாதே.(16) ஓ! மாத்ரியின் மகனே {சகாதேவா}, {உனக்கு} இணையானவர்களுடன் போரிடுவாயாக. என் வார்த்தைகளில் ஐயங்கொள்ளாதே” என்றான். பிறகு தன் வில்லின் நுனியால் அவனை {சகாதேவனைத்} தொட்ட அவன் {கர்ணன்}, மீண்டும் {சகாதேவனிடம்}(17) “அதோ அர்ஜுனன், போரில் உறுதியான தீர்மானத்தோடு குருக்களுடன் போரிடுகிறான். ஓ! மாத்ரியின் மகனே {சகாதேவா}, அங்கே செல்வாயாக, அல்லது நீ விரும்பினால் வீட்டுக்குத் திரும்புவாயாக” என்றான்.(18) அந்த வார்த்தைகளைச் சொன்னவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணன், சிரித்துக் கொண்டே, பாஞ்சாலர்களின் மன்னனுடைய துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(19)
வலிமைமிக்கத் தேர்வீரனும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனுமான அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்}, மாத்ரியின் மகனை {சகாதேவனைக்} கொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தும், குந்தியின் வார்த்தைகளை நினைவில் கொண்டு அவனைக் {சகாதேவனைக்} கொல்லாமல் விட்டான்.(20) பிறகு இதயம் நொந்த சகாதேவன், கணைகளால் பீடிக்கப்பட்டும், கர்ணனின் வார்த்தைகளெனும் ஈட்டிகளால் துளைக்கப்பட்டும், தன் உயிரின் மீதான ஆசையைக் கைவிட்டான்.(21) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சகாதேவன்}, பாஞ்சாலர்களின் சிறப்புமிக்க இளவரசனனான ஜனமேஜயனின் தேரில் வேகமாக ஏறிக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.(22)
விராடனை மயக்கமடையச் செய்த சல்லியன்! – துரோண பர்வம் பகுதி – 167-விராடனுடன் மோதிய சல்லியன்; சல்லியனால் தேரற்றவனாகச் செய்யப்பட்ட விராடன்; விராடனின் தம்பியான சதாநீகனைக் கொன்ற சல்லியன்; மீண்டும் சல்லியனை எதிர்த்து விரைந்த விராடன்; விராடனை மயக்கமடையச் செய்த சல்லியன்; அர்ஜுனனுக்கும் அலம்புசனுக்கும் இடையிலான மோதல்; அர்ஜுனனால் வெல்லப்பட்ட அலம்புசன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, துரோணரை அடைய வேகமாகச் சென்று கொண்டிருந்த விராடனையும், அவனது துருப்புகளையும் அனைத்துப் பக்கங்களிலும் கணைமேகங்களால் மறைத்தான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளிகளான அவ்விருவருக்கும் இடையில் நடைற்ற போரானது, பழங்காலத்தில் பலிக்கும் {மகாபலி}, வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.(2) பெரும் சுறுசுறுப்புடைய மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு பெரும்படையின் தலைவனான விராடனை நூறு{100} நேரான கணைகளால் தாக்கினான்.(3) பதிலுக்கு மன்னன் விராடன், ஒன்பது{9} கூரிய கணைகளால் மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} துளைத்து, மீண்டும் எழுபத்து மூன்றாலும் {73}, அதற்கு மேலும் ஒரு நூறாலும் {100} அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(4)
பிறகு, அந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, விராடனின் தேரில் பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகளைக் கொன்று, பின்னவனின் {விராடனின்} குடையையும், கொடிமரத்தையும் இரண்டு கணைகளால் வெட்டி வீழ்த்தினான்.(5) அந்தக் குதிரைகளற்ற தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மன்னன் {விராடன்}, தன் வில்லை வளைத்துக் கூரிய கணைகளை ஏவியபடியே நின்றான்.(6) தன் அண்ணன் குதிரைகளை இழந்ததைக் கண்ட {விராடனின் தம்பியான} சதாநீகன், துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் தேரில் ஏறிச் சென்று அவனை {சல்லியனை} விரைவாக அணுகினான்.(7) எனினும் மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, முன்னேறி வரும் சதாநீகனைப் பல கணைகளால் துளைத்து, அவனை {சதாநீகனை} யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(8)
வீரச் சதாநீகன் வீழ்ந்ததும், பெரும்படை ஒன்றின் தலைவனான அந்த விராடன், கொடிமரம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், வீழ்ந்த வீரனுடையதுமான {சதாநீகனுடையதுமான} அந்தத் தேரில் ஏறிக் கொண்டான்.(9) தன் கண்களை அகல விரித்து, கோபத்தால் ஆற்றல் இரட்டிப்படைந்த விராடன், சிறகுகள் படைத்த கணைகளால் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரை வேகமாக மறைத்தான்.(10) அப்போது சினத்தால் தூண்டப்பட்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, பெரும்படையொன்றின் தலைவனான விராடனை ஒரு நூறு நேரான கணைகளால் {அவனது} மார்பில் ஆழத் துளைத்தான்.(11) மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனால் {சல்லியனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், பெரும் தேர்வீரனுமான விராடன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயங்கிப் போனான்.(12) அம்மோதலில் கணைகளால் சிதைக்கப்பட்ட அவனைக் {விராடனைக்} கண்ட அவனது சாரதி {போர்க்களத்திற்கு} வெளியே கொண்டு சென்றான். பிறகு அந்தப் பரந்த படையானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்கள ரத்தினமான அந்தச் சல்லியனின் நூற்றுக்கணக்கான கணைகளால் கொல்லப்பட்டு அந்த இரவில் தப்பி ஓடின.(13)
துருப்புகள் ஓடிப்போவதைக் கண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சல்லியன் இருந்த அந்த இடத்திற்கு வேகமாக வந்தனர்.(14) அப்போது ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன் [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எட்டுக் குதிரைகளுடன் கூடியதும், குதிரை முகங்களைக் கொண்ட பயங்கரத் தோற்றமுடைய பிசாசங்கள் பூட்டப்பட்டதும், இரத்தச் சிவப்பான கொடிகளைக் கொண்டதும், உருக்கால் ஆனதும், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கரடித் தோலால் மறைக்கப்பட்டதும், புள்ளிகளுடன் கூடிய சிறகுகளையும், அகல விரித்த கண்களையும் கொண்டு, இடையறாமல் கூச்சலிட்ட பயங்கரமான, கடுந்தோற்றமுடைய கழுகு அமர்ந்திருந்த நெடிய கொடிமரத்தைக் கொண்டதுமான முதன்மையான தேரில் ஏறிக்கொண்டு, {சல்லியனை எதிர்த்து} முன்னேறி வரும் அந்த வீரர்களை {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} எதிர்த்துச் சென்றான்.(15-18) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கரிய மைக்குவியலைப் போலத் தெரிந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் தலைமீது கணைமாரிகளை இறைத்தபடி, சூறாவளியை எதிர்த்து நிற்கும் மேருவைப் போல, முன்னேறி வரும் அர்ஜுனனை எதிர்த்து நின்றான்.(19)அந்த ராட்சசனுக்கும் {அலம்புசனுக்கும்}, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(20) மேலும் அஃது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அங்கே இருந்த பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிரப்பியது. மேலும் அது, கழுகுகள், காக்கைகள், அண்டங்காக்கைகள், ஆந்தைகள் {கோட்டான்கள்}, கனகங்கள் {கங்கங்கள்}, நரிகள் ஆகியவற்றையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(21) அர்ஜுனன் ஆறு கணைகளால் அலம்புசனைத் தாக்கி, பத்து கூரிய கணைகளால் அவனது கொடிமரத்தை அறுத்தான்.(22) மேலும் வேறு சில கணைகளால் அவன் {அர்ஜுனன்}, அவனது சாரதியையும், வேறு சிலவற்றால் அவனது திரிவேணுவையும், மேலும் ஒன்றால் அவனது வில்லையும், வேறு நான்கால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி வீழ்த்தினான்.(23)
அலம்புசன் மற்றொரு வில்லில் நாண்பூட்டினாலும், அர்ஜுனன் அதையும் இரண்டு துண்டுகளாக வெட்டினான். அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்}, நான்கு கூரிய கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனைத்} துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்} அச்சத்தால் {அங்கிருந்து} தப்பி ஓடினான். அவனை வீழ்த்திய அர்ஜுனன், வேகமாகத் துரோணர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் மீது பல கணைகளை ஏவினான்.(24,25) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட போராளிகள், சூறாவளியால் கீழே விழும் மரங்களைப் போலக் கீழே தரையில் விழுந்தனர்.(26) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்} இப்படிக் கொல்லப்பட்ட போது, அச்சமடைந்த மான் கூட்டத்தைப் போல அவர்கள் அனைவரும் {அங்கிருந்து} தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(27)
துருபதனை மயக்கமடையச் செய்த விருஷசேனன்! – துரோண பர்வம் பகுதி – 168-சித்திரசேனனுக்கும், சதாநீகனுக்கும் இடையில் நடந்த மோதல்; சித்திரசேனனை வென்ற நகுலன் மகன் சதாநீகன்; கிருதவர்மனின் தேரில் தஞ்சமடைந்த சித்திரசேனன்; விருஷசேனனுக்கும், துருபதனுக்கும் இடையில் நடந்த மோதல்; துருபதனை மயக்கமடையச் செய்த விருஷசேனன்; பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளை நிகழ்த்திய விருஷசேனன்; துச்சாசனனால் வெல்லப்பட்ட பிரதிவிந்தியன், தன் சகோதரர்களால் காக்கப்படுவது; பிரதிவிந்தியனிடம் இருந்து துச்சாசனனை மீட்க விரைந்து வந்த கௌரவப் படையினர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகனான சித்திரசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தன் கணைகளால் எரித்துக் கொண்டிருந்தவனான (நகுலன் மகன்) சதாநீகனைத் தடுத்தான்.(1) நகுலனின் மகன் {சதாநீகன்} ஐந்து கணைகளால் சித்திரசேனனைத் துளைத்தான். பின்னவன் {சித்திரசேனன்} கூர்த்தீட்டப்பட்ட பத்து கணைகளால் முன்னவனை {சதாநீகனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(2) மீண்டும் சித்தரசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், ஒன்பது கூரிய கணைகளால் சதானீகனை மார்பில் துளைத்தான்.(3) பிறகு நகுலனின் மகன் {சதாநீகன்}, நேரான கணைகளால் பலவற்றால் சித்திரசேனனின் உடலில் இருந்து அவனது கவசத்தை அறுத்தான். அவனது இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4) தன் கவசத்தை இழந்த உமது மகன் {சித்திரசேனன்}, உரிய காலத்தில் சட்டையை உதிர்த்த பாம்பொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(5)
பிறகு அந்த நகுலனின் மகன் {சதாநீகன்}, அம்மோதலில் போராடிக் கொண்டிருந்த சித்திரசேனனின் கொடிமரத்தையும், அவனது வில்லையும் கூரிய கணைகள் பலவற்றால் வெட்டினான்.(6) அம்மோதலில் வில் அறுபட்டு, தன் கவசத்தையும் இழந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சித்திரசேனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து எதிரிகளையும் துளைக்கவல்ல மற்றொரு வில்லை எடுத்தான்.(7) பிறகு பாரதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சித்திரசேனன், நேரான கணைகள் பலவற்றால் நகுலனின் மகனை {சதாநீகனை} வேகமாகத் துளைத்தான்.(8) சினத்தால் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கவனுமான சதாநீகன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் நான்கு குதிரைகளையும், பிறகு அவனது சாரதியையும் கொன்றான்.(9) பெரும் பலம் கொண்ட சிறப்புமிக்கச் சித்திரசேனன், அந்தத் தேரில் இருந்து கீழே குதித்து, இருபத்தைந்து கணைகளால் நகுலனின் மகனை {சதாநீகனைப்} பீடித்தான். பிறகு நகுலனின் மகன் {சதாநீகன்}, அம்மோதலில் இப்படித் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த சித்திரசேனனின், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில்லை அர்த்தச்சந்திரக் கணையொன்றால் வெட்டினான்.(11) வில்லற்று, தேரற்று, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன சித்திரசேனன் விரைவாக ஹிருதிகனின் சிறப்புமிக்க மகனுடைய {கிருதவர்மனின்} தேரில் ஏறிக் கொண்டான்.(12)
விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முன்னணியில் நின்று துரோணரை எதிர்த்துச் சென்ற வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதனை எதிர்த்து நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே பெரும் வேகத்துடன் விரைந்தான்.(13) அம்மோதலில் யக்ஞசேனன் {துருபதன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் கர்ணன் மகனுடைய {விருஷசேனனின்} கரங்களையும், மார்பையும் அறுபது கணைகளால் துளைத்தான்.(14) பிறகு சினத்தால் தூண்டப்பட்ட விருஷசேனன், தன் தேரில் நின்று கொண்டிருந்த யக்ஞசேனனின் {துருபதனின்} நடு மார்பைப் பல கணைகளால் துளைத்தான்.(15) அந்தக் கணைகளாலும், தங்கள் உடல்களில் ஒட்டிக் கொண்டிருந்த கணைகளாலும் சிதைக்கப்பட்ட அவ்விரு போர்வீரர்களும், முள்விறைத்த இரண்டு முள்ளம்பன்றிகளைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(16) கூரிய முனைகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட அந்த நேரான கணைகளால் உண்டான காயங்களின் விளைவால் குருதியில் குளித்த அவர்கள், அந்தப் பயங்கர மோதலில் மிக அழகாகவே தெரிந்தனர்.(17) உண்மையில் அவர்கள் வழங்கிய காட்சியானது, அழகும், பிரகாசமும் கொண்ட கல்ப மரங்கள் இரண்டைப் போன்றோ, மலர்க்கொத்துகளால் செழித்திருக்கும் கின்சுகங்கள் {பலாச மரங்கள்} இரண்டைப் போன்றோ இருந்தது.(18)
அப்போது விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒன்பது கணைகளால் துருபதனைத் துளைத்து, மீண்டும் எழுபதாலும், பிறகு மேலும் மூன்று பிற கணைகளாலும் அவனை {துருபதனைத்} துளைத்தான்.(19) பிறகு ஆயிரக்கணக்கான கணைகளை ஏவிய அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகம் ஒன்றைப் போல அந்தப் போரில் மிக அழகாகத் தெரிந்தான். பிறகு சினத்தால் எரிந்த துருபதன், கூரியதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான ஒரு பல்லத்தைக் கொண்டு விருஷசேனனின் வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(21) பிறகு புதியதும், பலமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்து, பலமானதும், கூராக்கப்பட்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும் கூரியதுமான ஒரு பல்லத்தைத் தன் அம்பறாத்தூணியில் இருந்து எடுத்து, அதைத் தன் நாணில் பொருத்திய அவன் {விருஷசேனன்}, துருபதனை நோக்கிக் கவனமாகக் குறிபார்த்து, சோமகர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியபடி பெரும் சக்தியுடன் அதை {அந்த பல்லத்தை} விடுத்தான்.(22,23) துருபதனின் மார்பைத் துளைத்துக் கடந்த அந்தக் கணை {பல்லம்} பூமியின் பரப்பில் விழுந்தது. பிறகு அந்த (பாஞ்சாலர்களின்) மன்னன் {துருபதன்}, விருஷசேனனின் கணையால் இப்படித் துளைக்கப்பட்டு மயக்கமடைந்தான்.(24) தன் கடமையை நினைவு கூர்ந்த அவனது சாரதி, களத்தை விட்டு வெளியே அவனை {துருபதனைக்} கொண்டு சென்றான்.
பாஞ்சாலர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {துருபதன்} பின்வாங்கியதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில் அந்த (கௌரவப்) படையானது, எதிரியின் கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்ட துருபதனின் துருப்புகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து சென்றது.(25,26) போராளிகள் அனைவராலும் சுற்றிலும் போடப்பட்ட சுடர்மிக்க நெருப்புகளின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகங்களற்று, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருந்த ஆகாயத்துடன் கூடிய அந்தப் பூமியானது மிக அழகாகத் தெரிந்தது.(27) போராளிகளிடம் இருந்து விழுந்த அங்கதங்களால் பூமியானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மின்னலின் கீற்றுகளுடன் கூடிய மழைக்காலத்து மேகத்திரள்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(28) கர்ணனின் மகன் {விருஷசேனன்} மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த பெரும்போரில் இந்திரனைக் கண்ட தானவர்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(29)
போரில் இப்படி விருஷசேனனால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு மிக அழகாகத் தெரிந்தனர்.(30) போரில் அவர்களை வென்ற கர்ணனின் மகன் {விருஷசேனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நடுவானத்தை அடைந்த சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான்.(31) கிட்டத்தட்ட உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் அனைவருக்கு மத்தியில், ஒரே பிரகாசமான ஒளிக்கோளைப் போல வீர விருஷசேனன் தெரிந்தான்.(32) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்கள் பலரையும், சோமகர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் வீழ்த்திய அவன் {விருஷசேனன்}, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்கு வேகமாக விரைந்தான்.(33)
உமது மகன் துச்சாசனன், போரில் தன் எதிரிகளை எரித்தபடியே (துரோணரை எதிர்த்து) முன்னேறிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பிரதிவிந்தியனை எதிர்த்துச் சென்றான்.(34) அவர்களுக்கிடையில் நடைபெற்ற அம்மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகமற்ற ஆகாயத்தில் புதனுக்கும், வெள்ளிக்கும் இடையில் நடக்கும் மோதலைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(35) துச்சாசனன், போரில் கடுஞ்சாதனைகளைச் செய்துவந்த பிரதிவிந்தியனின் நெற்றியில் மூன்று கணைகளால் துளைத்தான்.(36) வலிமைமிக்க வில்லாளியான அந்த உமது மகனால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்ட பிரதிவிந்தியன், ஓ! ஏகாதிபதி, சிகரத்தைக் கொண்ட ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.(37) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பிரதிவிந்தியன், மூன்று கணைகளால் துச்சாசனனைத் துளைத்து, மேலும் ஏழால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(38) அப்போது உமது மகனோ {துச்சாசனனோ}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகள் பலவற்றால் பிரதிவிந்தியனின் குதிரைகளை வீழ்த்தியதால் மிகக் கடினமான சாதனை ஒன்றை அடைந்தான்.(39) மேலும் அவன் {துச்சாசனன்} ஒரு பல்லத்தைக் கொண்டு, பின்னவனின் {பிரதிவிந்தியனின்} சாரதியையும், பிறகு அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு அவன் {துச்சாசனன்} வில் தாங்கிய பிரதிவிந்தியனின் தேரை ஆயிரம் துண்டுகளாக வெட்டினான்.(40) சினத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, (தன் எதிராளியின் தேருடைய} கொடி, அம்பறாத்தூணிகள், நாண்கயிறுகள், கடிவாளங்கள் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் எண்ணற்ற துண்டுகளாக வெட்டினான்.(41)
தன் தேரை இழந்தவனும், நற்குணம் கொண்டவனுமான பிரதிவிந்தியன், கையில் வில்லுடன், எண்ணற்ற கணைகளை இறைத்தபடி, உமது மகனுடன் {துச்சாசனனுடன்} மோதினான்.(42) பிறகு தன் கரநளினத்தை வெளிக்காட்டிய துச்சாசனன், பிரதிவிந்தியனின் வில்லை அறுத்தான். மேலும் அவன் {துச்சாசனன்} வில்லற்ற தன் எதிராளியை {பிரதிவிந்தியனைப்} பத்து கணைகளால் பீடித்தான்.(43) தங்கள் அண்ணனின் (பிரதிவிந்தியனின்} அந்த அவல நிலையைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவனது சகோதரர்கள் அனைவரும், ஒரு பெரும்படையுடன் அந்த இடத்திற்கு மூர்க்கமாக விரைந்தனர்.(44) பிறகு அவன் {பிரதிவிந்தியன்}, {பீமனின் மகனான} சுதசோமனின் பிரகாசமிக்கத் தேரில் ஏறினான். மேலும் அவன் {பிரதிவிந்தியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு உமது மகனைத் துளைப்பதைத் தொடர்ந்தான்.(45) பிறகு உமது தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் பலர் ஒரு பெரும் படையின் துணையோடு மூர்க்கமாக விரைந்து உமது மகனை (அவனை மீட்பதற்காகச்} சூழ்ந்தனர். அப்போது, அந்த நடு இரவின் பயங்கர வேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யம அரசின் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், உமது துருப்புகளுக்கும் அவர்களது துருப்புகளுக்கும் இடையில் கடும்போரொன்று தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(47)
சகுனியை மயக்கமடையச் செய்த நகுலன்! – துரோண பர்வம் பகுதி – 169-சகுனிக்கும் நகுலனுக்கும் இடையில் நடந்த மோதல்; மயக்கமடைந்த நகுலன்; நினைவு மீண்டு சகுனியின் வில்லை அறுத்த நகுலன்; நகுலனால் துளைக்கப்பட்டுக் கீழே விழுந்து மயக்கமடைந்த சகுனி; சிகண்டிக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்; கிருபரின் வில்லை அறுத்த சிகண்டி; சிகண்டியை மயக்கமடையச் செய்த கிருபர்; சிகண்டிக்காகவும், கிருபருக்காகவும் திரண்ட போர்வீரர்களுக்கிடையில் நடந்த பயங்கரப் போர்; பயங்கரமான அந்த இரவு போரில் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளாமலே உறவினர்களைக் கொன்ற போர்வீரர்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படையைத் தாக்கிக் கொண்டிருந்த நகுலனை எதிர்த்து, கோபத்துடனும், பெரும் மூர்க்கத்துடனும் விரைந்து சென்ற சுபலனின் மகன் (சகுனி), அவனிடம் {நகுலனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(1) ஒருவர் மேல் ஒருவர் சினங்கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான அவ்விரு வீரர்களும், தங்கள் விற்களை முழுமையாக வளைத்து, கணைகளை ஏவி, ஒருவரையொருவர் தாக்கினர்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகன் {சகுனி}, கணைமாரி ஏவுவதில் நகுலன் வெளிப்படுத்திய அதே அளவு திறனை அம்மோதலில் வெளிப்படுத்தினான்.(3) அந்தப்போரில் கணைகளால் துளைத்துக் கொண்ட அவ்விருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்களது உடலில் முட்கள் விறைத்த இரு முள்ளம்பன்றிகளைப் போல அழகாகத் தெரிந்தனர்.(4)
நேரானமுனைகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்டவர்களும், குருதியில் குளித்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், அந்தப் பயங்கரப் போரில், அழகான, பிரகாசமான இரண்டு கல்ப மரங்களைப் போலவோ, அந்தப் போர்க்களத்தில் மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலவோ பிரகாசமாகத் தெரிந்தனர்.(5,6) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் கணைகளால் துளைத்த அவ்விரு வீரர்களும், முள் கொண்ட சால்மலி {இலவ} மரங்கள் இரண்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.(7) கண்கள் சினத்தால் விரிந்து, கடைக்கண் சிவந்து, ஒருவர் மேல் ஒருவர் சரிந்த பார்வைகளை வீசிய அவர்கள், அந்தப் பார்வையாலேயே ஒருவரையொருவர் எரிக்கப் போவதைப் போலத் தெரிந்தது.(8)
அப்போது உமது மைத்துனன் {சகுனி}, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே, கூர்முனைகொண்ட முள்கணை {கர்ணி} ஒன்றால் மாத்ரியின் மகனுடைய {நகுலனின்} மார்பைத் துளைத்தான்.(9) பெரும் வில்லாளியான உமது மைத்துனனால் {சகுனியால்} ஆழத்துளைக்கப்பட்ட நகுலன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தபடியே மயங்கிப் போனான்.(10) செருக்குமிக்கத் தன் எதிரியின் {நகுலனின்} அந்த அவல நிலையைக் கண்ட சகுனி, கோடை முடிவின் மேகங்களைப் போல உரக்க முழங்கினான்.(11) சுயநினைவு மீண்டவனான பாண்டுவின் மகன் நகுலன், வாயை அகல விரித்த காலனைப் போலவே மீண்டும் சுபலனின் மகனை {சகுனியை} எதிர்த்து விரைந்தான்.(12) சினத்தால் எரிந்த அவன் {நகுலன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அறுபது {60} கணைகளால் சகுனியைத் துளைத்து, மீண்டும் ஒரு நூறு நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அவனை {சகுனியை} மார்பில் துளைத்தான்.(13) பிறகு அவன் {நகுலன்}, கணை பொருத்தப்பட்ட சகுனியின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, இரண்டு துண்டுகளாக்கினான். கணப்பொழுதில் அவன் {நகுலன்}, சகுனியின் கொடிமரத்தையும் வெட்டி, அதைக் கீழே பூமியில் விழச் செய்தான்.(14)
பாண்டுவின் மகனான நகுலன், அடுத்ததாக, கூர்முனை கொண்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான கணை ஒன்றால் சகுனியின் தொடையைத் துளைத்து, வேடன் ஒருவன், சிறகு படைத்த பருந்தொன்றை பூமியில் விழச் செய்வதைப் போல, அவனை {சகுனியை} அவனது தேரில் கீழே விழச் செய்தான்.(15) ஆழத்துளைக்கப்பட்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காமவயப்பட்ட ஒரு மனிதன் {காமுகன் ஒருவன்} தன் தலைவியை {காமுகியைத்} தழுவிக் கொள்வதைப் போலக் கொடிக்கம்பத்தைத் தழுவி கொண்டு, தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(16) கீழே விழுந்து, சுயநினைவை இழந்த உமது மைத்துனனை {சகுனியைக்} கண்ட அவனது சாரதி, ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, விரைவாக அவனைப் போர் முகப்பை விட்டு வெளியே கொண்டு சென்றான்.(17) அப்போது, பார்த்தர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரும் உரக்க முழங்கினர்.(18) தன் எதிரிகளை வென்றவனும், எதிரிகளை எரிப்பவனுமான நகுலன், தன் சாரதியிடம், “துரோணரால் நடத்தப்படும் படைக்கு என்னைக் கொண்டு செல்வாயாக” என்று சொன்னான்.(19) மாத்ரி மகனின் {நகுலனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் இருந்த இடத்திற்குச் சென்றான்.(20)
துரோணரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வலிமைமிக்கச் சிகண்டியை எதிர்த்து, சரத்வானின் மகனான கிருபர், உறுதியான தீர்மானத்துடனும், பெரும் மூர்க்கத்துடனும் முன்னேறிச் சென்றார்.(21) எதிரிகளைத் தண்டிப்பவனான சிகண்டி, சிரித்துக் கொண்டே, துரோணரின் அருகாமையை நோக்கிச் செல்லும் தன்னை, இப்படி எதிர்த்து வரும் கௌதமர் மகனை {கிருபரை} ஒன்பது கணைகளால் துளைத்தான்.(22) உமது மகன்களுக்கு நன்மை செய்பவரான அந்த ஆசான் (கிருபர்), முதலில் சிகண்டியை ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் அவனை இருபதால் துளைத்தார்.(23) அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதலானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் {அசுரன்} சம்பரனுக்கும், தேவர்கள் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த மோதலைப் போல மிகப் பயங்கரமாக இருந்தது.(24) வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அவர்கள் இருவரும், கோடையின் முடிவில் ஆகாயத்தை மறைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைகளால் ஆகாயத்தை மறைத்தனர்.(25) பயங்கரமான அந்த இரவு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, போரிட்டுக் கொண்டிருந்த வீரப் போராளிகளால் மேலும் பயங்கரமடைந்தது.(26) உண்மையில், அனைத்து வகை அச்சங்களையும் தூண்டும் பயங்கரத்தன்மைகளைக் கொண்ட அந்த இரவு, (அனைத்து உயிரினங்களுக்குமான) மரண இரவாக {காலராத்திரி} ஆனது.
அப்போது சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கௌதமர் மகனின் {கிருபரின்} பெரிய வில்லை அறுத்து, கூர்த்தீட்டப்பட்ட கணைகளைப் பின்னவர் {கிருபரின்} மீது ஏவினான். கோபத்தால் எரிந்த கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டதும், கூர்முனையையும், தங்கக் கைப்பிடியையும் கொண்டதுமான கடுமையான ஓர் ஈட்டியைத் தன் எதிராளியின் {சிகண்டியின்} மீது ஏவினார். எனினும் சிகண்டி, தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியை}, பத்து கணைகளால் வெட்டினான்.(27-29) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஈட்டி (இப்படி வெட்டப்பட்டு) கீழே பூமியில் விழுந்தது. அப்போது மனிதர்களில் முதன்மையான கௌதமர் {கிருபர்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர்த்தீட்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் சிகண்டியை மறைத்தார்.(30) இப்படி அந்தப் போரில் கௌதமரின் சிறப்புமிக்க மகனால் {கிருபரால்} மறைக்கப்பட்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான சிகண்டி தன் தேர்தட்டில் பலவீனமடைந்தான்.(31) சரத்வானின் மகனான கிருபர் அவன் பலவீனமடைந்ததைக் கண்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனைக் {சிகண்டியைக்} கொல்லும் விருப்பத்தால் பல கணைகளால் அவனைத் துளைத்தார்.(32) (பிறகு சிகண்டி தன் சாரதியால் வெளியே கொண்டு செல்லப்பட்டான்). வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த யக்ஞசேனன் மகன் {துருபதன் மகனான சிகண்டி} போரில் பின்வாங்குவதைக் கண்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும் (அவனைக் காப்பதற்காக) அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(33) அதே போல உமது மகன்களும், பெரும்படையுடன் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரை (கிருபரைச்) சூழ்ந்து கொண்டனர்.(34) அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தேர்வீரர்களுக்கு இடையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மீண்டும் ஒரு போர் தொடங்கியது.(35)
ஒருவரையொருவர் தாக்கி வீழ்த்தி விரைந்து செல்லும் குதிரைவீரர்கள், யானைகள் ஆகியவற்றின் காரணமாக எழுந்த ஆரவாரமானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தைப் போலப் பேரொலி கொண்டதாக இருந்தது.(36) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களமானது மிகவும் கடுமையானதாகத் தெரிந்தது. விரைந்து சென்ற காலாட்படையின் நடையால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அச்சத்தால் நடுங்கும் ஒரு பெண்ணைப் போலப் பூமியானவள் நடுங்கத் தொடங்கினாள்.(37) தேர்வீர்கள் தங்கள் தேர்களில் ஏறி மூர்க்கமாக விரைந்து, சிறகு படைத்த பூச்சிகளைப் பிடிக்கும் காக்கைகளைப் போல, ஆயிரக்கணக்கான எதிராளிகளைத் தாக்கினர்.(38) அதே போல, தங்கள் உடல்களில் மதநீர் வழிந்த யானைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதே போன்ற யானைகளைப் பின்தொடர்ந்து அவற்றோடு சீற்றத்துடன் மோதின. அதே போலவே, குதிரைவீரர்கள், குதிரைவீரர்களோடும், காலாட் படை வீரர்கள், காலாட்படை வீரர்களோடும் கோபத்துடன் அந்தப் போரில் மோதிக் கொண்டனர்.(39,40)
அந்த நள்ளிரவில், பின்வாங்குபவை, விரைபவை மற்றும் மீண்டும் மோதலுக்கு வருபவை ஆகிய துருப்புகளின் ஒலி செவிடாக்குவதாக இருந்தது. தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றில் வைக்கப்பட்ட சுடர்மிக்க விளக்குகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் பெரிய விண்கற்களைப் போலத் தெரிந்தன.(41,42) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அந்த இரவானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் பகலைப் போலவே இருந்தது.(43) அடர்த்தியான இருளுடன் மோதி, அதை முற்றாக அழிக்கும் சூரியனைப் போலவே, அந்தப் போர்க்களத்தின் அடர்த்தியான இருளானது, அந்தச் சுடர்மிக்க விளக்குகளால் அழிக்கப்பட்டது.(44) உண்மையில், புழுதியாலும், இருளாலும் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம், பூமி, முக்கிய மற்றும் துணைத் திசைகள் ஆகியவை மீண்டும் அந்த வெளிச்சத்தால் ஒளியூட்டப்பட்டன.(45) ஆயுதங்கள், கவசங்கள், சிறப்புமிக்க வீரர்களின் ஆபரணங்கள் ஆகியவற்றின் ஒளி சுடர்மிக்க அந்த விளக்குகளின் மேலான வெளிச்சத்தில் மறைந்தது.
இரவில் அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போராளிகளில் எவராலும் தங்கள் தரப்பின் போர்வீரர்களையே அறிந்து கொள்ள முடியவில்லை.(46,47) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அறியாமையால், தந்தை மகனையும், மகன் தந்தையையும், நண்பன் நண்பனையும் கொன்றனர்.(48) உறவினர்கள், உறவினர்களையும், தாய்மாமன்கள் தங்கள் சகோதரிகளின் மகன்களையும், போர்வீரர்கள் தங்கள் தரப்பின் போர்வீரர்களையும் கொன்றனர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளும் கூடத் தங்கள் ஆட்களையே கொன்றனர்.(49) அந்தப் பயங்கர இரவு மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கருதிப்பாராமல் அனைவரும் சீற்றத்துடன் போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(50)
“நாம் அபிமன்யுவை கொன்றது போலவே…!” என்ற கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 170-துரோணரை எதிர்த்து விரைந்த திருஷ்டத்யும்னன்; தன் எதிரிகள் அனைவருடனும் போரிட்ட திருஷ்டத்யும்னன்; துருமசேனனைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; கர்ணனின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைக் காக்க விரைந்த சாத்யகி; விருஷசேனனை மயக்கமடையச் செய்த சாத்யகி; அர்ஜுனனின் நாணொலியையும், தேரொலியையும் கேட்டுக் கலங்கிய கர்ணன்; திருஷ்டத்யும்னனையும், சாத்யகியையும் கொல்ல துரியோதனனுடன் சேர்ந்து ஆலோசித்த கர்ணன்; சாத்யகி மற்றும் திருஷ்டத்யும்னனை அர்ஜுனன் காக்க முடியாதபடி அவனை எதிர்த்துச் செல்லுமாறு சகுனியிடம் சொன்ன துரியோதனன்; பெரும்படையுடன் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட கர்ணன் முதலானோர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், துரோணரை எதிர்த்துச் சென்றான்.(1) தன் உறுதிமிக்க வில்லைப் பற்றிக் கொண்டு, மீண்டும் மீண்டும் நாண்கயிறை இழுத்த அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட துரோணரின் தேரை நோக்கி விரைந்தான்.(2) திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்கச் சென்று கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் அவனைச் {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(3) ஆசான்களில் முதன்மையானவரான துரோணர் இப்படித் தாக்கப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், தீர்மானத்துடன் போரில் ஈடுபட்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரைக் காத்தனர்.(4) பிறகு, அந்த இரவில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட கடலெனும் இரு துருப்புகளும், சூறாவளியால் மூர்க்கமாகத் தாக்கப்படுபவையும், மிகவும் கலங்கடிக்கப்படும் உயிரினங்களுடன் கூடியவையுமான பயங்கரமான இரண்டு கடல்களைப் போலத் தெரிந்தன.(5)
அப்போது அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் துரோணரின் மார்பை விரைவாகத் துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(6) எனினும் துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இருபத்தைந்து கணைகளால் எதிரியைத் துளைத்து, மற்றொரு பல்லத்தால் அவனது {திருஷ்டத்யும்னனின்} பிரகாசமிக்க வில்லையும் அறுத்தார்.(7) துரோணரால் பலமாகத் துளைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் வில்லை விரைவாக வைத்துவிட்டு, சினத்தால் தன் (கீழ்) உதட்டைக் கடித்தான்.(8) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்க மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்.(9)
பகைவீரர்களைக் கொல்பவனும், பெருமழகுடன் கூடியவனுமான அந்தப் போர்வீரன் {திருஷ்டத்யும்னன்}, அந்த உறுதிமிக்க வில்லைத் தன் காதுவரை இழுத்து, துரோணரின் உயிரை எடுக்கவல்ல ஒரு பயங்கரக் கணையை ஏவினான்.(10) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் வலிமைமிக்க அந்த இளவரசனால் {திருஷ்டத்யும்னனால்} இப்படி ஏவப்பட்ட அந்தக் கணையானது, உதயச் சூரியனைப் போல மொத்தப்படைக்கும் ஒளியூட்டியது.(11) அந்தப் பயங்கரக் கணையைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “துரோணருக்குச் செழிப்புண்டாகட்டும் {மங்கலம் உண்டாகட்டும்}” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(12) எனினும் கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கரத்தின் பெரும் நளினத்தை வெளிக்காட்டியபடி, ஆசானின் {துரோணரின்} தேரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கணையைப் பனிரெண்டு துண்டுகளாக வெட்டினான்.(13) திருஷ்டத்யும்னனின் அந்தக் கணையானது, ஓ! மன்னா, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படிப் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, நஞ்சற்ற பாம்பொன்றைப் போலப் பூமியில் வேகமாக விழுந்தது.(14)
அந்தப் போரில், நேரான தன் கணைகளால் திருஷ்டத்யும்னனின் கணைகளை வெட்டிய கர்ணன், பிறகு, கூரிய கணைகள் பலவற்றால் திருஷ்டத்யும்னனையும் துளைத்தான்.(15) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஐந்தாலும், துரோணர் ஐந்தாலும், சல்லியன் ஒன்பதாலும், துச்சாசனன் மூன்றாலும் அவனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தனர்.(16) துரியோதனன் இருபது கணைகளாலும், சகுனி ஐந்தாலும் அவனை {திருதஷ்டத்யும்னனைத்} துளைத்தனர். உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரும், அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} வேகமாகத் துளைத்தனர்.(17) இப்படியே அவன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரைக் காக்க முயன்ற அந்த ஏழுவீரர்களாலும் அந்தப் போரில் துளைக்கப்பட்டான். எனினும் அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(18) உண்மையில் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் துரோணர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் உமது மகன் {துரியோதனன்} ஆகியோரை வேகமாகத் துளைத்தான்.(19) அந்த வில்லாளியால் {திருஷ்டத்யும்னனால்} இப்படித் துளைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், ஒன்றாகச் சேர்ந்து போரிட்டு, உரக்க முழங்கியபடியே மீண்டும் அம்மோதலில் திருஷ்டத்யும்னனைத் துளைத்தனர்.(20)
அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துருமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகு படைத்த கணை ஒன்றால் அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்து, மேலும் மூன்று பிற கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(21) அந்த இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} பேசிய அவன் {துருமசேனன்}, “நில், நிற்பாயாக” என்றான். பிறகு திருஷ்டத்யும்னன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணெயில் நனைக்கப்பட்டவையும், ஏவப்படுபவரின் உயிரையே எடுக்கவல்லவையுமான மூன்று நேரான கணைகளால் அம்மோதலில் துருமசேனனைப் பதிலுக்குத் துளைத்தான்.(22) பிறகு அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரகாசமான தங்க குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட துருமசேனனின் தலையை மற்றொரு பல்லத்தால் பின்னவனின் {துருமசேனனின்} உடலில் இருந்து வெட்டினான்.(23) (சினத்தால்) (கீழ்) உதடு கடிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்தத் தலையானது, பலமான காற்றின் செயல்பாட்டால், குலையில் இருந்து உதிர்ந்து விழும் பழுத்த பனம்பழத்தைப் போலத் தரையில் விழுந்தது.(24)
மீண்டும் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் துளைத்த அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, போர் முறைகள் அனைத்தையும் அறிந்த போர்வீரனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} வில்லைச் சில பல்லங்களால் அறுத்தான்.(25) கடுஞ்சிங்கம் ஒன்று தன் வால் அறுபட்டத்தைப் பொறுத்துக் கொள்ளாததைப் போல, கர்ணனால் தன் வில் அறுபட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(26) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட கர்ணன், சினத்தால் கண்கள் சிவந்து, பெருமூச்சு விட்டுக் கொண்டு, வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனைக் கணை மேகங்களால் மறைத்தான்.(27) சினத்தால் தூண்டப்பட்ட கர்ணனைக் கண்டவர்களும், தேர்வீரர்களில் காளையருமான அந்த ஆறு வீரர்கள், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கொல்லும் விருப்பத்தால் விரைவாக அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(28) உமது தரப்பின் முதன்மையான ஆறு தேர்வீரர்களுக்கு முன்பு நிற்கும் பின்னவனை {திருஷ்டத்யும்னனைக்} கண்ட துருப்புகள் அனைத்தும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவன் காலனின் கோரப் பற்களுக்கிடையில் விழுந்துவிட்டதாகவே கருதினர்.(29)
அதே வேளையில் தசார்ஹ குலத்தைச் சேர்ந்த சாத்யகி, தன் கணைகளை இறைத்தபடியே வீரத் திருஷ்டத்யும்னன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்தை அடைந்தான்.(30) சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத போர்வீரன் வருவதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் அவனைப் பத்து கணைகளால் துளைத்தான்.(31) பிறகு சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பத்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, அவனிடம் {கர்ணனிடம்}, “ஓடாமல் என் முன்னே நிற்பாயாக” என்றான்.(32) அப்போது வலிமைமிக்கச் சாத்யகிக்கும், வெல்லப்பட முடியாத கர்ணனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) பலிக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததற்கு ஒப்பாக இருந்தது.(33) க்ஷத்திரியர்களில் காளையான அந்தச் சாத்யகி, தன் தேரின் சடசடப்பொலியால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டே, தாமரைக் கண் கொண்ட கர்ணனை (பல கணைகளால்) துளைத்தான்.(34)
அந்த வலிமைமிக்கச் சூதன் மகன் {கர்ணன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாணொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சாத்யகியோடு போரிட்டுக் கொண்டிருந்தான்.(35) உண்மையில் கர்ணன், நீண்டவை {நாராசங்கள்}, முள்பதித்தவை {கர்ணிகள்}, கூர்முனை கொண்டவை {விபாண்டங்கள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்ஸதந்தங்கள்}, கத்தி போன்ற தலை கொண்டவை {க்ஷுரங்கள்} போன்ற கணைகளாலும், இன்னும் பிற நூற்றுக்கணக்கான கணைகளாலும் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(36) அதே போல விருஷ்ணி குலத்தில் முதன்மையான யுயுதானனும், அந்தப் போரில் கர்ணனைத் தன் கணைகளால் மறைத்தான். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அந்தப் போர் சமமாகவே நடந்தது.(37) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்ட உமது மகன்கள் அனைவரும் சாத்யகியை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் துளைத்தனர்.(38)
அவர்கள் அனைவரின் ஆயுதங்களையும், கர்ணனின் ஆயுதங்களையும் தடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனனை {கர்ணனின் மகனை} வேகமாக நடுமார்பில் துளைத்தான்.(39) அந்தக் கணையால் துளைக்கப்பட்டவனும், பெரும் காந்தி கொண்டவனுமான வீர விருஷசேனன், தன் வில்லை விட்டுவிட்டு வேகமாகத் தன் தேரில் விழுந்தான்.(40) வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன் கொல்லப்பட்டதாக நம்பிய கர்ணன், தன் மகன் இறந்த துயரால் எரிந்து, பெரும் பலத்துடன் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான்.(41) இப்படிக் கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் யுயுதானன் {சாத்யகி}, பெரும் வேகத்துடன், பல கணைகளால் கர்ணனை மீண்டும் மீண்டும் துளைத்தான்.(42) மீண்டும் கர்ணனைப் பத்து கணைகளாலும், விருஷசேனனை ஐந்தாலும் துளைத்த அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தந்தை, மகன் ஆகிய இருவரின் தோலுறைகளையும், விற்களையும் அறுத்தான்.(43) பிறகு அந்தப் போர்வீரர்கள் இருவரும், எதிரிகளை அச்சத்தால் தூண்டவல்ல வேறு இரண்டு விற்களுக்கு நாணேற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் யுயுதானனை {சாத்யகியைத்} துளைக்கத் தொடங்கினர்.(44)
வீரர்களுக்கு இப்படி அழிவை ஏற்படுத்திய அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து ஒலிகளையும் விஞ்சும்படி காண்டீவத்தின் ஒலி கேட்கப்பட்டது.(45) அர்ஜுனனுடைய தேரின் சடசடப்பொலியையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(46) “கௌரவ வீரப் போராளிகளில் முதன்மையானோரையும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரையும், நமது மொத்த படையையும் கொன்றபடியே அர்ஜுனன் தன் வில்லில் உரத்த நாணொலியை எழுப்புகிறான்.(47) இடியின் முழக்கத்திற்கு ஒப்பான அவனது {அர்ஜுனனின்} தேரின் சடசடப்பொலியும் கேட்கிறது. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனக்குத் தகுந்த சாதனைகளை அடைகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(48) பிருதையின் இந்த மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது பெரிய படையைக் கலங்கடித்துவிடுவான். நம் துருப்புகளில் பல ஏற்கனவே பிளந்து கொண்டிருக்கின்றன. எவரும் போரில் நிற்கவில்லை {நிலைக்க முடியவில்லை}.(49) உண்மையில், காற்றால் கலைக்கப்படும் மேகத்திரள்களைப் போல நமது படையும் கலைக்கப்படுகிறது. அர்ஜுனனோடு மோதும் நமது படை, கடலில் படகு பிளப்பதைப் போலப் பிளக்கிறது.(50)
ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கணைகளின் விளைவால் போர்க்களத்தில் இருந்து ஓடவோ, கீழே விழவோ செய்யும் முதன்மையான வீரர்களின் உரத்த ஓலங்கள் கேட்கப்படுகின்றன.(51) ஓ! தேர்வீரர்களில் புலியே {துரியோதனா}, ஆகாயத்தில் கேட்கப்படும் இடி முழக்கத்தைப் போல, இந்த நள்ளிரவில், அர்ஜுனனின் தேர் அருகில் துந்துபிகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலியைக் கேட்பாயாக.(52) அர்ஜுனனின் தேர் அருகே (பீடிக்கப்படும் போராளிகளால்) எழுப்பப்படும் உரத்த ஓலங்களையும், மகத்தான சிங்க முழக்கங்களையும், பல்வேறு பிற ஒலிகளையும் கேட்பாயாக.(53)
எனினும் இங்கே, நம் மத்தியில் சாத்வத குலத்தில் முதன்மையான இந்தச் சாத்யகி இருக்கிறான். இந்த நமது நோக்குப் பொருளை {சாத்யகியைத்} தாக்கி வீழ்த்த முடியுமேயானால், நம் எதிரிகளை அனைவரையும் நம்மால் வெல்ல முடியும்.(54) அதேபோலப் பாஞ்சால மன்னனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} துரோணரிடம் போரிட்டுக் கொண்டிருக்கிறான். அவன் {திருஷ்டத்யும்னன்}, தேர்வீரர்களில் முதன்மையான பல வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கிறான்.(55) நம்மால் சாத்யகியையும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனையும் கொல்ல முடிந்தால், ஓ! மன்னா {துரியோதனா}, வெற்றி நமதே என்பதில் ஐயமிருக்காது.(56)
சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்குச்} செய்ததைப் போலவே வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்த விருஷ்ணி குலமகனையும் {சாத்யகியையும்}, இந்தப் பிருஷதன் மகனையும் {திருஷ்டத்யும்னனையும்} சூழ்ந்து கொண்டு, வீரர்களான இவ்விருரையும் நாம் கொல்ல முயல்வோம் [1].(57) சாத்யகி, குருக்களில் காளையர் பலருடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து, ஓ! பாரதா {துரியோதனா}, சவ்யசச்சின் {அர்ஜுனன்}, நம் முன் துரோணரின் இந்தப் படைப்பிரிவை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.(58) பலரால் சூழப்பட்ட சாத்யகியைப் பார்த்தனால் {அர்ஜுனனால்} காக்க முடியாதவாறு, அங்கே {அர்ஜுனன் வரும் வழியில்} நமது முதன்மையான தேர்வீரர்களைப் பெருமளவில் அனுப்ப வேண்டும்.(59) மதுகுலத்தின் சாத்யகியை விரைவில் யமனுலகு அனுப்ப, இந்தப் பெரும் வீரர்கள், பெரும் பலத்துடன் கணை மேகங்களை ஏவட்டும்” என்றான் கர்ணன்.(60)
இதையே கர்ணனின் கருத்தாக உறுதிசெய்து கொண்ட உமது மகன் {துரியோதனன்}, விஷ்ணுவிடம் பேசும் இந்திரனைப் போல அந்தப் போரில் சுபலனின் மகனிடம் {சகனியிடம்},(61) “பின்வாங்காத பத்தாயிரம் யானைகள் மற்றும் பத்தாயிரம் தேர்களுடன் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வீராக.(62) துச்சாசனன், துர்விசாஹன், சுபாகு, துஷ்பிரதர்ஷணன் ஆகியோர் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையினர் சூழ உம்மைப் பின்தொடர்வார்கள்.(63) ஓ! அம்மானே {மாமனான சகுனியே}, பெரும் வில்லாளிகளான இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன்களையும்} மற்றும் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் மற்றும் பாண்டுவின் மகனான பீமனையும் கொல்வீராக.(64) தேவர்களின் வெற்றி இந்திரனைச் சார்ந்திருப்பதைப் போல எனது வெற்றி உம்மையே சார்ந்திருக்கிறது. ஓ! அம்மானே, பாவகனின் {அக்னியின்} மகன் (கார்த்திகேயன்) அசுரர்களைக் கொன்றதைப் போலவே நீர் குந்தியின் மகன்களைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(65)
இப்படிச் சொல்லி உமது மகனால் தூண்டப்பட்ட சகுனி, கவசம் தரித்துக் கொண்டு, பெரும்படையாலும், உமது மகன்களாலும் ஆதரிக்கப்பட்டு, பாண்டுவின் மகன்களை எரிப்பதற்காகப் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். அப்போது உமது படைக்கும், எதிரிக்கும் இடையில் ஒரு பெரும்போர் தொடங்கியது.(66,67) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி) சுபலனின் மகன் {சகுனி} பாண்டவர்களை எதிர்த்துச் சென்ற போது, சூதனின் மகன் {கர்ணன்} ஒரு பெரும்படையின் துணையுடன், பல நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே சாத்யகியை எதிர்த்து விரைவாகச் சென்றான். உண்மையில், உமது போர் வீரர்கள் ஒன்றாகக்கூடி சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(68,69) அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, அந்த நள்ளிரவில் திருஷ்டத்யும்னனின் தேரை எதிர்த்துச் சென்று, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துணிவுமிக்கத் திருஷ்டத்யும்னனுடனும், பாஞ்சாலர்களுடனும் அற்புதமானதும், கடுமையானதுமான ஒரு போரைச் செய்தார்” {என்றான் சஞ்சயன்}.(70)
கௌரவப்படையை முறியடித்த மூவர்! – துரோண பர்வம் பகுதி – 171-துரியோதனனைப் புறமுதுகிடச் செய்த சாத்யகி; தன்னுடன் மோதிய எதிரிகளை முறியடித்த சாத்யகி; சகுனியைத் தேரிழக்கச் செய்த அர்ஜுனன்; கௌரவப் படையை கொன்றழித்த அர்ஜுனன்; துரோணரின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன், துரோணரைத் தடுத்துப் பேரழிவை ஏற்படுத்திய திருஷ்டத்யும்னன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, எளிதில் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களும், உமது படையைச் சேர்ந்தவர்களுமான அந்த மன்னர்கள் அனைவரும், ({சாத்யகியின்} சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள முடியாமல் யுயுதானனின் {சாத்யகியின்} தேரை எதிர்த்து கோபத்துடன் சென்றனர்.(1) அவர்கள், {ஆயுதங்களால்} நன்கு தரிக்கப்பட்டவையும், தங்கம் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் தேர்களில் ஏறி, குதிரைப் படை மற்றும் யானைப்படை ஆகியவற்றின் துணையுடன் சென்று அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(2) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்த வீரனை {சாத்யகியை} அறைகூவியழைத்து சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(3) மதுகுலத்தோனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பிய அந்தப் பெரும் வீரர்கள், வெல்லப்படமுடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியின் மீது தங்கள் கூர்முனை கணைகளைப் பொழிந்தனர்.(4)
தன்னை நோக்கி இப்படி வேகமாக வந்து கொண்டிருந்த அவர்களைக் கண்டவனும், எதிரிப்படைகளைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி} பல கணைகளை எடுத்துக்கொண்டு அவற்றை ஏவினான்.(5) வீரனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், பெரும் வில்லாளியுமான அந்தச் சாத்யகி, நேரான தன் கடுங்கணைகளால் பலரின் தலைகளைத் துண்டித்தான்.(6) மேலும் அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, பல யானைகளின் துதிக்கைகளையும், பல குதிரைகளின் கழுத்துகளையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட போர்வீரர்கள் பலரின் கரங்கள் ஆகியவற்றையும் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} வெட்டினான்.(7) விழுந்து கிடந்த வெண்சாமரங்கள் மற்றும் வெண்குடைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்தப் போர்க்களம், ஓ! பாரதரே, கிட்டத்தட்ட நிறைந்து, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, விண்மீன்களுடன் கூடிய ஆகாயத்தைப் போல விளங்கியது.(8) யுயுதானனால் {சாத்யகியால்} போரில் இப்படிக் கொல்லப்பட்ட படையின் ஓலமானது, {நரகத்தில்) பிசாசுகளின் அலறலைப் போலப் பேரொலியாக இருந்தது.(9) அந்த ஆரவாரப் பேரொலியால் பூமி நிறைந்ததால், அந்த இரவானது மேலும் கொடூரமானதாகவும், மேலும் பயங்கரமானதாகவும் ஆனது.(10)
தன் படையானது, யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, பிளக்கப்படுவதைக் கண்டும், அந்த நள்ளிரவில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தப் பயங்கர ஆரவாரத்தைக் கேட்டும்,(11) வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன்{துரியோதனன்}, தன் தேரோட்டியிடம் மீண்டும் மீண்டும், “இந்த ஆரவாரம் எங்கிருந்து வருகிறதோ அந்த இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டுவாயாக” என்றான்.(12) பிறகு, உறுதிமிக்க வில்லாளியும், களைப்பினை அறியாதவனும், கரங்களில் பெரும் நளினம் கொண்டவனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமான மன்னன் துரியோதனன், யுயுதானனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்.(13) மாதவன் {சாத்யகி}, தன் வில்லை முழுமையாக வளைத்து, குருதி குடிக்கும் கணைகள் பனிரெண்டால் துரியோதனனைத் துளைத்தான்.(14) இப்படி யுயுதானனின் கணைகளால் முதலில் பீடிக்கப்பட்ட துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டு அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பத்துக் கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.(15) அதே வேளையில் பாஞ்சாலர்களுக்கும், உமது துருப்புகள் அனைத்திற்கும் இடையில் நடந்த போர் மிக அற்புமாகக் காட்சியளித்தது.(16)
அப்போது, சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு, வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனை {துரியோதனனை} எண்பது {80} கணைகளால் மார்பில் துளைத்தான்.(17) பிறகு அவன் வேறு பிற கணைகளால் துரியோதனனின் குதிரைகளை யமனுலகு அனுப்பி வைத்தான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {சாத்யகி}, விரைவாகத் தனது எதிராளியின் {துரியோதனனின்} சாரதியைத் தேரில் இருந்து வீழ்த்தினான்.(18) உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளற்ற தேரில் நின்று கொண்டே சாத்யகியின் தேரை நோக்கி பல கூரிய கணைகளை ஏவினான்.(19) எனினும், பெருங்கர நளினத்தை வெளிப்படுத்திய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனால் ஏவப்பட்ட அந்த ஐம்பது கணைகளையும் வெட்டினான்.(20) பிறகு மாதவன் {சாத்யகி}, அம்மோதலில் திடீரென ஒரு பல்லத்தால் உமது மகனின் {துரியோதனனின்} உறுதிமிக்க வில்லை, அதன் கைப்பிடியில் அறுத்தான்.(21) தன் தேர், வில் ஆகியவற்றை இழந்தவனும், பலமிக்க மனிதர்களின் ஆட்சியாளனுமான அவன் {துரியோதனன்}, கிருதவர்மனின் பிரகாசமிக்கத் தேரில் விரைவாக ஏறினான்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் பின்வாங்கியதும், அந்த நள்ளிரவில் சிநியின் பேரன் {சாத்யகி}, உமது படையைப் பீடித்து முறியடித்தான்.(23)
அதே வேளையில் சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்லாயிரம் தேர்களாலும், பல்லாயிரம் யானைகளாலும், பல்லாயிரம் குதிரைகளாலும் அனைத்துப் பக்கங்களிலும் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டு, தீர்மானத்துடன் போரிடத் தொடங்கினான். அவர்களில் பலர் அர்ஜுனனை நோக்கி பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களை ஏவினர்.(24,25) உண்மையில் அந்த க்ஷத்திரியர்கள் நிச்சயம் மரணமடைய {மரணமடைவோம் என்ற தீர்மானத்தோடே} அர்ஜுனனோடு போரிட்டனர். எனினும் சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அந்த ஆயிரக்கணக்கான தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைத் தடுத்து, இறுதியில் அந்த எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தான். சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்த சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளைக் கொல்பவனான அந்த அர்ஜுனனை இருபது கணைகளால ஆழத் துளைத்தான். மேலும் அவன் நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} பெருந்தேரின் முன்னேற்றத்தைத் தடுத்தான்.(26-28) பிறகு அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் இருபது கணைகளால் சகுனியைத் துளைத்தான். மேலும் அவன் {அர்ஜுனன்}, அந்தப் பெரும் வில்லாளிகளில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(29) தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் தடுத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியின் சக்தியைதக் கொண்ட அற்புதக் கணைகளால் உமது படையின் அந்தப் போர்வீரர்களைக் கொன்றான்.(30)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெட்டப்பட்ட கணைகள் மற்றும் ஆயிரக்கணக்கான (இறந்தோரின்) உடல்கள் ஆகியவற்றால் விரவிக் கிடந்த பூமியானது, மலர்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(31) உண்மையில், கிரீடங்களாலும், அழகிய மூக்குகளாலும், அழகிய காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், சினத்தால் (கீழ்) உதடுகளைக் கடித்துக் கொண்டிருந்தவையும், கண்களை அகல விரித்தவையும், சூடாமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், உயிரோடு இருந்தபோது, ரத்தினங்களால் மகுடம் சூட்டப்பட்டவையும், இனிய வார்த்தைகளைப் பேசியவையுமான க்ஷத்திரியர்களின் தலைகளால் விரவிக் கிடந்த அந்தப் பூமியானது, சம்பக {சம்பங்கி} மலர்கள் பரவிய குன்றுகளால் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(32,33) அந்தக் கடும் சாதனையை அடைந்து, ஐந்து நேரான கணைகளால் சகுனியை மீண்டும் துளைத்தவனும், கடும் ஆற்றல் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்டு அந்தப் போரில் உலூகனை மீண்டும் ஒருகணையால் தாக்கினான்.(34) அவனது {உலூகனது} தந்தையான சுபலனின் மகன் {சகுனியின்} முன்னிலையிலேயே இப்படி உலூகனைத் துளைத்த அர்ஜுனன், சிங்க முழக்கம் செய்து, அதனால் {அவ்வொலியால்} உலகத்தையே நிறைத்தான். பிறகு அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, சகுனியின் வில்லை அறுத்தான்.(36)
பிறகு அவன் {அர்ஜுனன்}, அவனது {சகுனியின்} நான்கு குதிரைகளையும் யமனுலகு அனுப்பினான். பிறகு அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து குதித்து,(37) விரைவாகச் சென்று {தன் மகனான} உலூகனின் தேரில் ஏறிக் கொண்டான். பிறகு வலிமைமிக்க இரு தேர்வீரர்களான அந்தத் தந்தையும், மகனும் ஒரே தேரில் சென்று,(38) மலையில் மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களைப் போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளால் அந்த இரு போர்வீரர்களையும் துளைத்து,(39) பீடித்து உமது துருப்புகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடச் செய்தான். காற்றால் அனைத்துப் பக்கங்களிலும் விரட்டப்படும் வலிமைமிக்க மேகத் திரள் ஒன்றைப் போல,(40) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படை அனைத்துப் பக்கங்களிலும் விரட்டப்பட்டது. உண்மையில் அந்தப் படையானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் இப்படிக் கொல்லப்பட்டு,(41) (அவர்களது) தலைவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது. தாங்கள் ஏறிச்சென்ற விலங்குகளைப் பலர் கைவிட்டனர், பிறரோ, தங்கள் விலங்குகளை அதிக வேகத்தில் தூண்டி,(42) கடுமையான அந்த இருண்ட நேரத்தில், அச்சத்தால் தூண்டப்பட்டுப் போரில் இருந்து பின்வாங்கினர். இப்படி உமது போர்வீர்ரர்களை வென்ற வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} மகிழ்ச்சிகரமாகத் தங்கள் சங்குகளை முழக்கினர்.(43)
திருஷ்டத்யும்னன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்ரரே}, மூன்று கணைகளால் துரோணரைத் துளைத்து, கூரிய கணை ஒன்றால் பின்னவருடைய வில்லின் நாணையும் விரைவாக அறுத்தான்.(44) க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான அந்த வீரத் துரோணர், அந்த வில்லைப் பூமியில் தூக்கி வீசிவிட்டு, பெரும் உறுதியும், பலமும் கொண்ட மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார்.(45) திருஷ்டத்யும்னனை ஐந்து கணைகளால் துளைத்த துரோணர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் அவனது சாரதியையும் துளைத்தார்.(46) தன் கணைகளால் துரோணரைத் தடுத்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், அசுரப் படையை அழிக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல அந்தக் கௌரவப் படையை அழிக்கத் தொடங்கினான்.(47)
உமது மகனின் {துரியோதனின்} படை கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, குருதியையே ஓடையாகக் கொண்ட ஒரு பயங்கர ஆறு அங்கே பாயத் தொடங்கியது.(48) மேலும் அது, இரண்டு படைகளுக்கும் இடையில் மனிதர்களையும், குதிரைகளையும், யானைகளையும் சுமந்து சென்றபடி ஓடிக் கொண்டிருந்தது.(49) அது {அந்த ஆறு}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனின் ஆட்சிப்பகுதிகளை நோக்கிப் பாயும் வைதரணீக்கு ஒப்பானதாக இருந்தது. உமது படையைக் கலங்கடித்து அதை முறியடித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான வீரத் திருஷ்டத்யும்னன், தேவர்களுக்கு மத்தியில் உள்ள சக்ரனை {இந்திரனைப்} போலச் சுடர்விட்டெரிந்தான்.(50) பிறகு திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் தங்கள் பெரிய சங்குகளை முழக்கினர், அதே போலவே, இரட்டையர்களும் (நகுலனும், சகாதேவனும்), யுயுதானனும் {சாத்யகியும்}, பாண்டுவின் மகனான விருகோதரனும் {பீமனும்} {தங்கள் சங்குகளை} முழக்கினார்கள்.(51) உமது தரப்பைச் சேர்ந்தவர்களும், பெரும் சக்தியையுடையவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான மன்னர்களை வென்ற கடும் போர்வீரர்களான பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, கர்ணன், வீரத் துரோணர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வெற்றியடையும் விருப்பத்தால் சிங்க முழக்கம் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.(52,53)
மூர்க்கமாகப் போரிட்ட துரோணரும், கர்ணனும்! – துரோண பர்வம் பகுதி – 172-துரோணர் மற்றும் கர்ணனிடம் கோபத்துடன் பேசிய துரியோதனன்; பாண்டவப் படையை மூர்க்கமாகத் தாக்கிய துரோணரும், கர்ணனும்; ஓடும் துருப்புகளை மீண்டும் அணிதிரட்டிய அர்ஜுனனும், கிருஷ்ணனும்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் கொல்லப்படும் தன் படையானது சிதறடிக்கப்படுவதைக் கண்டவனும், சொற்களை நன்கு அறிந்தவனுமான {பேசத்தெரிந்தவனுமான} உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனிடமும், போரில் வெல்வோர் அனைவரிலும் முதன்மையானவரான துரோணரிடமும் விரைவாகச் சென்று, கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1,2) “சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைக் கண்டு சினம் கொண்ட உங்கள் இருவராலேயே இந்தப் போர் {இந்த இரவுப் போர்} தொடங்கப்பட்டது.(3) உங்கள் இருவருக்கும் பாண்டவப்படைகளை வெல்லும் சக்தி முழுமையாக இருந்தும், அந்தப் படைகளால் என் படைகள் கொல்லப்படுகையில் நீங்கள் எந்த அக்கறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே.(4) நீங்கள் இருவரும் இப்போது என்னைக் கைவிடுவதாக இருந்தால், அதைத் தொடக்கத்திலே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். கௌரவங்களை அளிப்பவர்களே, “நாங்கள் இருவரும் போரில் பாண்டு மகன்களை வெல்வோம்” என்ற இந்த வார்த்தைகளையே அப்போது நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். இந்த உங்கள் வார்த்தைகளைக் கேட்டே நான் இந்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தேன். (நீங்கள் வேறு மாதிரியாக என்னிடம் சொல்லியிருந்தால்), வீரப்போராளிகளை இந்த அளவுக்கு அழிக்கவல்லவையான பார்த்தர்களுடனான இந்தப் பகைமைகளை நான் ஒரு போதும் தூண்டியிருக்க மாட்டேன்.(5,6) நான் உங்கள் இருவராலும் கைவிடத் தகாதவன் என்றால், மனிதர்களில் காளையரே, பெரும் ஆற்றலைக் கொண்ட வீரர்களே, நீங்கள் உங்கள் உண்மையான அளவு ஆற்றலுடன் போரிடுவீராக” என்றான் {துரியோதனன்}.(7)
உமது மகனின் {துரியோதனனின்} வார்த்தைக் குறடால் இப்படித் துளைக்கப்பட்ட அந்த வீரர்கள் இருவரும் {துரோணரும், கர்ணனும்}, தடிகளால் விரட்டப்பட்ட இரு பாம்புகளைப் போல மீண்டும் போரில் ஈடுபட்டனர்.(8) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், உலகின் வில்லாளிகள் அனைவரிலும் மேன்மையானவர்களுமான அவ்விருவரும், சிநியின் பேரனால் {சாத்யகியால்} தலைமை தாங்கப்பட்ட பார்த்தர்களையும், இன்னும் பிறரையும் எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போலப் தங்கள் துருப்புகள் அனைத்துடன் ஒன்றுசேர்ந்த பார்த்தர்களும், தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்த அந்த இரு வீரர்களையும் எதிர்த்து சென்றனர்.(10)
அப்போது, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் வில்லாளியுமான துரோணர், சினத்தால் தூண்டப்பட்டு, பத்து கணைகளால் அந்தச் சிநிக்களில் காளையை {சாத்யகியத்} துளைத்தார்.(11) கர்ணன் அவனைப் {சாத்யகியைப்} பத்து கணைகளாலும், உமது மகன் {துரியோதனன்} ஏழாலும், விருஷசேனன் பத்தாலும், சுபலனின் மகன் {சகுனி} ஏழாலும் {சாத்யகியைத்} துளைத்தனர்.(12) சிநியின் பேரனை {சாத்யகியைச்} சுற்றியிருந்த கௌரவர்களின் ஊடுருவப்பட முடியாத சுவரில், இவர்களும் நிலைகொண்டு அவனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தப் போரில் பாண்டவப்படையைக் கொன்றும் வரும் துரோணரைக் கண்ட சோமகர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவரைக் கணை மாரியால் துளைத்தனர்.(13) அப்போது துரோணர், இருளைத் தன் கதிர்களால் அழிக்கும் சூரியனைப் போல க்ஷத்திரியர்களின் உயிரை எடுக்கத் தொடங்கினார்.(14)
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரால் கொல்லப்படும்போது ஒருவரையொருவர் அழைத்த பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஆரவாரத்தை நாங்கள் கேட்டோம். சிலர் தங்கள் மகன்களைக் கைவிட்டும், சிலர் தந்தைகளை, சிலர் சகோதரர்களை, சில மாமன்களை, சிலர் தங்கள் சகோதரியின் மகன்களை, சிலர் நண்பர்களை, சிலர் தங்கள் உற்றார் உறவினரைக் கைவிட்டுவிட்டுத் தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள வேகமாக ஓடினர்.(15-17) மேலும் சிலர் தங்கள் உணர்வுகளை இழந்து துரோணரை எதிர்த்து ஓடினர். உண்மையில், அப்போது பாண்டவப்படையில் வேறு உலகத்திற்கு அனுப்பப்பட்ட போராளிகள் பலராக இருந்தனர்.(18) அந்தச் சிறப்புமிக்க வீரரால் {துரோணரால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாண்டவப் படையினர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரவில் பீமசேனன், அர்ஜுனன், கிருஷ்ணன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, யுதிஷ்டிரன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சுடர்மிக்கத் தங்கள் தீப்பந்தங்களைச் சுற்றிலும் எறிந்துவிட்டுத் தப்பி ஓடினர்.(19,20)
உலகம் இருளில் மூழ்கியிருந்ததால், எதையும் காண முடியவில்லை. கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்த விளக்குகளின் காரணமாக எதிரி ஓடுவதை உறுதிசெய்து கொள்ள முடிந்தது.(21) எண்ணற்ற கணைகளை இறைத்தபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரும், கர்ணனும், ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றனர்.(22) கொல்லப்பட்டு முறியடிக்கப்பட்ட பாஞ்சாலர்களைக் கண்டு உற்சாகத்தை இழந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(23) “பாஞ்சாலர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனும், சாத்யகியும், கணைகள் பலவற்றை ஏவியபடியே பெரும் வில்லாளிகளான துரோணரையும், கர்ணனையும் எதிர்த்து சென்றனர்.(24) இந்த நமது பெரும்படை (அவர்களின்) கணைமாரியால் பிளக்கப்பட்டு முறியடிக்கப்படுகிறது. அவர்கள் ஓடுவது தடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} அவர்களை மீண்டும் அணிதிரட்டுவது இயலாததாகும்” என்றான் {கிருஷ்ணன்}.(25)
அந்தப் படை ஓடுவதைக் கண்ட கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் அந்தத் துருப்புகளிடம், “அச்சத்தால் ஓடாதீர். பாண்டவ வீரர்களே உங்கள் அச்சங்களை விலக்குங்கள்.(26) படைகள் அனைத்தையும் நல்ல முறையில் அணிவகுத்துக் கொண்டு, உயர்த்திய ஆயுதங்களுடன் துரோணரையும், சூதனின் மகனையும் {கர்ணனையும்} எதிர்த்து நிற்பதற்காக நாங்கள் இருவரும் இப்போது செல்கிறோம்” என்றனர்.(27) அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, முன்னேறிச் செல்லும் விருகோதரனை {பீமனைக்} கண்டு, மீண்டும் பாண்டுவின் மகனான அர்ஜுனனிடம் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வது போல இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(28) “அதோ, போரில் மகிழ்ச்சி கொள்ளும் பீமர், சோமகர்கள் மற்றும் பாண்டவர்களால் சூழபட்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரையும் கர்ணனையும் எதிர்த்து வருகிறார்.(29) உன் துருப்புகள் அனைத்தும் உறுதிகொள்ளும் பொருட்டு, ஓ !பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவராலும் {பீமராலும்}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலராலும் ஆதரிக்கப்பட்டு இப்போது போரிடுவாயாக” என்றான் {கிருஷ்ணன்} [1].30 அப்போது மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, மதுகுலத்தோன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், துரோணரையும், கர்ணனையும் அடைந்து, போரின் முன்னணியில் தங்கள் நிலையை எடுத்துக் கொண்டனர்.”(31)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, யுதிஷ்டிரனின் அந்தப் பரந்த படையானது, போரில் துரோணரும், கர்ணனும் எந்த இடத்தில் தங்கள் எதிரிகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்தனரோ அங்கே மீண்டும் போரிடுவதற்காகத் திரும்பியது.(32) சந்திரன் உதிக்கும் வேளையில் பொங்கும் இரு கடல்களுக்கிடையில் நடப்பதைப் போல அந்த நள்ளிரவில் ஒரு கடும் மோதல் நடந்தது.(33) பிறகு உமது படையின் போர்வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த சுடர்மிக்க விளக்குகளை எறிந்துவிட்டு, அச்சமற்ற வகையில் வெறிகொண்டு பாண்டவர்களுடன் போரிட்டனர்.(34) இருட்டாலும், புழுதியாலும் உலகம் மறைக்கப்பட்டிருந்த அந்தப் பயங்கர இரவில், போராளிகள், தாங்கள் சொன்ன பெயர்களால் வழிநடத்தப்பட்டே ஒருவரோடொருவர் போரிட்டனர்.(35) போரிடும் மன்னர்களால் சொல்லப்பட்ட பெயர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒரு சுயம்வரத்தில் நடப்பதைப் போலவே கேட்கப்பட்டன.(36)
திடீரெனப் போர்க்களமெங்கும் அமைதி பரவி, அஃது ஒருக்கணம் நீடித்தது. பிறகு வென்ற, வெல்லப்பட்ட கோபக்கார போராளிகளால் உண்டாக்கப்பட்ட உரத்த ஆரவாரம் மீண்டும் கேட்டது.(37) எங்கே சுடர்மிக்க விளக்குகள் தென்பட்டனவோ, ஓ! குருக்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அங்கே (சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும்) பூச்சிகளைப் போல அந்த வீரர்கள் விரைந்தனர்.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களைச் சுற்றிலும் இரவின் இருள் அடர்த்தியடைந்திருந்தது” {என்றான் சஞ்சயன்}.(39)
கடோத்கசனைத் தூண்டிய கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 173-கர்ணனுக்கும், திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான மோதல்; திருஷ்டத்யும்னனைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன்; கர்ணனின் குதிரைகளைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; அர்ஜுனனின் தேரில் ஏறிக் கொண்ட திருஷ்டத்யும்னன்; பாஞ்சாலர்களை முறியடித்த கர்ணன்; கர்ணனின் ஆற்றலைக் கண்டு அஞ்சி அர்ஜுனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; கிருஷ்ணனின் ஆலோசனை; கடோத்கசனிடம் பேசிய கிருஷ்ணனும், அர்ஜுனனும்; கர்ணனை எதிர்த்து விரைந்த கடோத்கசன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனான கர்ணன், போரில் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைக்} கண்டு, முக்கிய அங்கங்களுக்குள் ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான்.(1) அந்தப் பெரும்போரில் திருஷ்டத்யும்னனும் பதிலுக்கு ஐந்து கணைகளால் கர்ணனை வேகமாகத் துளைத்து, அவனிடம், “நில், நிற்பாயாக” என்றான்.(2) அந்தப் பயங்கரப்போரில் ஒருவரையொருவர் கணைமாரிகளால் மறைத்த அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முற்று முழுதாக வளைக்கப்பட்ட தங்கள் விற்களில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால் மீண்டும் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(3) அப்போது அந்தப் போரில் கர்ணன், பாஞ்சாலப் போர்வீரர்களில் முதன்மையான திருஷ்டத்யும்னனின் சாரதியையும், நான்கு குதிரைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(4) பிறகு அவன் {கர்ணன்}, தன் முதன்மையான எதிரியின் வில்லைக் கூரிய கணைகளால் அறுத்து, மேலும் ஒரு பல்லத்தால் பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியைத் தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(5)
தேர், குதிரைகள் ஆகியவற்றையும் சாரதியையும் இழந்த வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்தான்.(6) கர்ணனின் நேரான கணைகளால் எப்போதும் தாக்கப்பட்டு வந்தாலும், கர்ணனை அணுகிய அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பின்னவனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான்.(7) படைகளைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பிறகு, வேகமாகத் திரும்பி தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரில் விரைவாக ஏறிக் கொண்டான். வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அந்தத் தேரில் ஏறி, கர்ணனை நோக்கிச் செல்லவே விரும்பினான்.(8) எனினும், தர்மனின் மகன் (யுதிஷ்டிரன்) அவனை {திருஷ்டத்யும்னனை} விலகிச் செல்லச் செய்தான் [1].அப்போது, பெரும் சக்தி கொண்ட கர்ணன், தன் சிங்கமுழக்கங்களுடன் கலந்த உரத்த நாணொலியைத் தன் வில்லில் எழுப்பி, பெரும் சக்தியுடன் தன் சங்கையும் முழக்கினான். பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} போரில் வெல்லப்பட்டதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான(9,10) பாஞ்சாலர்களும், சோமகர்களும், சினத்தால் தூண்டப்பட்டு, அனைத்து வகை ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, மரணத்தையே தங்கள் இலட்சியமாகக் கொண்டு, கர்ணனைக் கொல்லும் விருப்பத்தில் அவனை நோக்கிச் சென்றனர். அதே வேளையில், கர்ணனின் சாரதியானவன், சங்கு போல வெண்மையாக இருந்தவையும், பெரும் வேகம் கொண்டவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நல்ல பலம்கொண்டவையுமான வேறு பிற குதிரைகளைத் தன் தலைவனின் {கர்ணனின்} தேரில் பூட்டினான்.(11,12) துல்லியமான குறியைக் கொண்ட கர்ணன், வீரத்துடன் போராடி, மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பாஞ்சாலர்களைத் தன் கணைகளால் பீடித்தான். கர்ணனால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாஞ்சாலப் படையானது, சிங்கத்தால் அச்சமடைந்த பெண் மானைப் போல, அச்சத்துடன் தப்பி ஓடியது.(13,14)
குதிரைவீரர்கள் தங்கள் குதிரைகளில் இருந்து விழுவது அங்கே காணப்பட்டது, யானைப் பாகர்கள் தங்கள் யானைகளில் இருந்தும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும் சுற்றிலும் விழுந்து கொண்டிருந்தனர். அந்தப் பயங்கரப் போரில் கர்ணன், ஓடிக் கொண்டிருக்கும் போராளிகளின் கரங்கள் மற்றும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சிரங்கள் ஆகியவற்றைத் தன் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யானைகள், அல்லது குதிரைகளின் முதுகுகள், அல்லது பூமியில் இருந்த பிறரின் தொடைகளையும் அவன் {கர்ணன்} அறுத்தான்.(15-17) அந்தப் போரில் பல வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தாங்கள் ஓடுகையில் தங்கள் உறுப்புகளை இழந்ததையோ, தங்கள் விலங்குகள் காயமடைந்ததையோ கூட உணரவில்லை. பயங்கரக் கணைகளால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் (அவர்கள் கொண்ட பேரச்சத்தால்) அது கர்ணன் என்றே எடுத்துக் கொண்டனர்.(18,19) தங்கள் உணர்வுகளை இழந்த அந்தப் போர்வீரர்கள், ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் நண்பர்களையே கர்ணன் என்று நினைத்து, அவர்களிடம் இருந்து அச்சத்தால் விலகி ஓடினர். கர்ணன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அணிபிளந்து ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றான். உண்மையில், அந்தப் போரில் தங்கள் உணர்வுகளை இழந்து ஓடிக் கொண்டிருந்த போர்வீரர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.(20-22) சிறப்புமிக்க வீரனான அந்தக் கர்ணனின் வலிமைமிக்க ஆயுதங்களால் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களால் எந்த நிலையையும் ஏற்க {எங்கும் நிற்க} இயலவில்லை.(23) துரோணரால் பார்க்க மட்டுமே செய்யப்பட்ட பிறர், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர் {துரோணரின் பார்வையைக் கண்டே பிறர் ஓடிவிட்டனர்}.
அப்போது தன் படை ஓடுவதைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன்,(24) பின்வாங்குவதே அறிவுடைமை என்று கருதி பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, “வில்லுடன் கூடிய ருத்ரனைப் போல அங்கே நின்று கொண்டிருக்கும் வலிமைமிக்க வில்லாளியான கர்ணனைப் பார்.(25) உக்கிர காலமான இந்த நள்ளிரவில், சுடர்மிக்கச் சூரியனைப் போல அனைத்தையும் அவன் {கர்ணன்} எரித்துக் கொண்டிருப்பதைப் பார். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கர்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்டவர்களும், ஆதரவற்றவர்களுமான உன் நண்பர்களின் ஓலங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிபார்ப்பது மற்றும் தன் கணைகளை விடுவது ஆகிய கர்ணனின் இரண்டு செயல்களுக்கிடையில் எந்த இடைவெளியையும் காணமுடியவில்லை. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இவன் {கர்ணன்} நம் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிடுவான். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உன் தீர்மானத்தின் படி அடுத்து செய்யப்பட வேண்டியதும், செய்யப்படும் நேரம் வாய்த்துவிட்டதுமான கர்ணனின் கொலைக்குத் தேவையானவற்றை இப்போதே செய்வாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.
(யுதிஷ்டிரனால்) இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனிடம்,(26-29) “தர்மனின் அரசமகன் {யுதிஷ்டிரர்}, இன்று கர்ணனின் ஆற்றலைக் கண்டு அஞ்சுகிறார். கர்ணனின் படைப்பிரிவானது (நம்மிடம்) மீண்டும் மீண்டும் இப்படியே நடந்து கொள்ளும்போது, எவ்வழி பின்பற்றப்பட வேண்டுமோ அதை விரைவாகப் பின்பற்றுவாயாக. நமது படை ஓடுகிறது. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, துரோணரால் பிளக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், கர்ணனால் அச்சுறுத்தப்பட்டும் உள்ள நமது துருப்புகளால் நிற்கவும் இயலவில்லை. கர்ணன் அச்சமற்றுத் திரிவதை நான் காண்கிறேன்.(30-32) நமது தேர்வீரர்களில் முதன்மையானோர் ஓடுகின்றனர். கர்ணன் தன் கூரிய கணைகளை இறைக்கிறான். மனிதனால் உடலில் மிதிக்கப்பட்டு அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாம்பொன்றைப் போல, ஓ! விருஷ்ணி குலத்தின் புலியே {கிருஷ்ணா}, போரின் முன்னணியில் என் கண்களுக்கு முன்பாகவே இவன் {கர்ணன்} இப்படித் திரிவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, ஒன்று நான் அவனைக் {கர்ணனைக்} கொல்வேன், அல்லது அவன் {கர்ணன்} என்னைக் கொல்லட்டும்” என்றான் {அர்ஜுனன்}.(33,34)
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மனிதர்களில் புலியும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றலைக் கொண்ட போர்வீரனுமான கர்ணன், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவே போரில் திரிவதை நான் காண்கிறேன்.(35) ஓ! தனஞ்சயா, ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, உன்னையும், ராட்சசன் கடோத்கசனையும் தவிரப் போரில் அவனை {கர்ணனை} எதிர்த்துச் செல்ல வல்லவர் எவரும் இல்லை.(36) எனினும், ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, போரில் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} நீ மோதக்கூடிய நேரம் இன்னும் வாய்க்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.(37) வாசவனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும், பெரும் விண்கல்லுக்கு ஒப்பானதும், சூதன் மகனால் {கர்ணனால்} உனக்காகவே கவனமாக வைக்கப்பட்டிருப்பதுமான அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்னும் அவனிடம் {கர்ணனிடம்} இருக்கிறது.(38) தன்னிடம் அந்த ஈட்டியைக் கொண்டுள்ள அவன் {கர்ணன்}, இப்போது பயங்கர வடிவை ஏற்றிருக்கிறான் [2]. கடோத்கசனைப் பொறுத்தவரை, அவன் எப்போதும் உனக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், உன் நன்மையை விரும்புபவனுமாக இருக்கிறான்.(39) வலிமைமிக்கக் கடோத்கசனே {இப்போது} அந்த ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்லட்டும். தெய்வீக ஆற்றலைக் கொண்ட அவன் {ராட்சசன் கடோத்கசன்} வலிமைமிக்கப் பீமனால் பெறப்பட்டவனாவான்.(40) தெய்வீக ஆயுதங்களும், ராட்சசர்களும், அசுரர்களும் பயன்படுத்தும் ஆயுதங்களும் அவனிடம் {கடோத்கசனிடம்} இருக்கின்றன. அவன் {கடோத்கசன்} கர்ணனை வெல்வான். அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை” என்றான் {கிருஷ்ணன்}.(41)(கிருஷ்ணனால்) இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த ராட்சசனை {கடோத்கசனை} அழைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டரரே}, பின்னவன் {கடோத்கசன்}, கவசந்தரித்துக் கொண்டும், வாள், கணைகள் மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டும் விரைவில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்பு வந்து நின்றான்.(42) கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வணங்கிய அவன் {கடோத்கசன்} பெருமையுடன், “இதோ நான் இருக்கிறேன், எனக்கு ஆணையிடுவீராக” என்றான். அப்போது தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சுடர்மிக்க வாய் {முகம்}, நெருப்பு போன்ற கண்கள், மேகங்களின் நிறத்திலான உடல் ஆகியவற்றைக் கொண்டவனும், ஹிடிம்பையின் மகனுமான அந்த ராட்சசனிடம் {கடோத்கசனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) “ஓ! கடோத்கசா, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. {இப்போது} உன் ஆற்றலை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. வேறு யாருக்குமில்லை.(45) {துன்பக்கடலில்} மூழ்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களுக்கு இந்தப் போரில் நீ படகாவாயாக. பல்வேறு ஆயுதங்களும், பல வகைகளிலான ராட்சச மாயைகளும் உன்னிடம் இருக்கின்றன.(46) ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, மந்தையாளனால் {இடையனால்} அடிக்கப்படும் மாட்டு மந்தையைப் போல, போர்க்களத்தில் பாண்டவர்களின் படை கர்ணனால் அடிக்கப்படுகிறது.(47) அதோ, பெரும் நுண்ணறிவும், உறுதியான ஆற்றலும் கொண்ட வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரித்து வருகிறான்.(48)
வலிமைமிக்கக் கணைகளைப் பொழியும் அந்த உறுதிமிக்க வில்லாளியின் {கர்ணனின்} முன்பு, நெருப்பு போன்ற அவனது கணைகளால் பீடிக்கப்படும் பாண்டவ வீரர்களால் நிலைக்க முடியவில்லை.(49) இந்த நள்ளிரவில் சூதன் மகனின் {கர்ணனின்} கணை மழையால் பீடிக்கப்படும் பாஞ்சாலர்கள், சிங்கத்தால் பீடிக்கப்படும் மான் கூட்டத்தைப் போல ஓடுகின்றனர்.(50) ஓ! பயங்கர ஆற்றலைக் கொண்டவனே {கடோத்கசா}, போரில் இப்படி ஈடுபட்டுவரும் சூதன் மகனை {கர்ணனைத்} தாக்குப் பிடிக்க உன்னைத் தவிர வேறு எவனுமில்லை.(51) உன் சக்தி மற்றும் வலிமை ஆகியவற்றின் துணை கொண்டு, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கடோத்கசா}, உன் தாய்வழி குலத்திற்கும், உனது தந்தைமாரின் குலத்திற்கும் தகுந்ததைச் சாதிப்பாயாக.(52) இதற்காகவே, ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, இடுக்கண்களில் காக்கப்படவே மனிதர்கள் பிள்ளைகளை விரும்புகிறார்கள். இப்போது நீ உன் இரத்த உறவினர்களைக் காப்பாயாக.(53) ஓ! கடோத்கசா, தங்கள் நோக்கங்களை அடைவதற்காகவே தந்தைமார் மகன்களை விரும்புகின்றனர். நன்மையின் தோற்றுவாயான பிள்ளைகள், இங்கேயும், இதன் பிறகும் {இம்மையிலும், மறுமையிலும்} தங்கள் தந்தைமாரைக் காக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.(54) நீ சிறப்புமிக்கவன், போரில் உன் வலிமை பயங்கரமானதும் ஒப்பற்றதுமாகும். போரில் ஈடுபடுகையில் உனக்கு இணையானவர்கள் எவரும் இல்லை.(55)
ஓ! எதிரிகளை எரிப்பவனே {கடோத்கசா}, இவ்விரவில் கர்ணனின் நேரான கணைகளால் முறியடிக்கப்படுபவர்களும், தார்தராஷ்டிரக் கடலில் இப்போது மூழ்கிக் கொண்டிருப்பவர்களுமான பாண்டவர்கள் கரையைப் பாதுகாப்பாக அடைவதற்கு ஏதுவான வழியாக {படகாக} அவர்களுக்கு இருப்பாயாக.(56) இரவில் ராட்சசர்கள், அளவிலா ஆற்றல் கொண்டவர்களாகவும், பெரும் வலிமையும், பெரும் துணிவும் கொண்டவர்களாக இருக்கின்றனர். (அத்தகு நேரத்தில்) அவர்கள் பெரும் வீரமிக்கவர்களும், வீழ்த்தக் கடினமானவர்களுமான போர்வீரர்களாக ஆகின்றனர்.(57) இந்த நள்ளிரவில் உன் மாயைகளின் துணை கொண்டு போரில் கர்ணனைக் கொல்வாயாக. பார்த்தர்களும், திருஷ்டத்யும்னனும் துரோணரை அகற்றுவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(58)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான ராட்சசன் கடோத்கசனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(59) “ஓ! கடோத்கசா, நீயும், நீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, பாண்டுவின் மகனான பீமர் ஆகிய மூவரும், நம் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்கள் என்பது என் தீர்மானம்.(60) இந்த இரவில் சென்று கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடுவாயாக. வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி உனது பின்புறத்தைப் பாதுகாப்பான். (தேவர்ப்படைத் தலைவன்) ஸ்கந்தனின் {முருகனின்} துணையோடு, பழங்காலத்தில் தாரகனைக் கொன்ற இந்திரனைப் போல இந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைத்} துணையாகக் கொண்டு, போரில் துணிவுமிக்கக் கர்ணனை நீ கொல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(62)
கடோத்கசன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதரே {அர்ஜுனரே} கர்ணருக்கோ, துரோணருக்கோ, ஆயுதங்களில் சாதித்த சிறப்புமிக்க எந்த க்ஷத்திரியனுக்கோ நான் இணையானவனே.(63) இந்த இரவில் நான் சூதன் மகனுடன் {கர்ணருடன்} மோதப் போகும் போரானது, இவ்வுலகம் நீடித்து உள்ள வரையில் பேசத்தக்கதாக இருக்கும்.(64) இன்றிரவு, துணிச்சல் மிக்கவர் எவரையும், மருட்சியுடையோர் எவரையும், கூப்பிய கரங்களோடு வேண்டுவோர் எவரையும் விட்டு விடாமல், ராட்சச நடைமுறையைக் கைக்கொண்டு, அனைவரையும் கொல்வேன்” என்றான் {கடோத்கசன்}.(65)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, துருப்புகளை அச்சுறுத்தியபடியே அந்தப் பயங்கரப் போரில் கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(66) மனிதர்களில் புலியான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சுடர்மிக்க வாயையும் {முகத்தையும்}, சுடர்மிக்கக் குழல்களையும் {கேசத்தையும்} கொண்ட அந்தக் கோபக்காரப் போர்வீரனை {கடோத்கசனை} இன்முகத்துடன் வரவேற்றான்.(67) ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கிய கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) இந்திரனுக்கும், பிரகலாதனுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(68)
ஜடாசுரன் மகனைக் கொன்ற கடோத்கசன்! – துரோண பர்வம் பகுதி – 174-கௌரவ முகாமுக்கு ஜடாசுரன் மகன் அலம்புசனின் {அலம்பலனின்} வருகை; அலம்புசனுக்கும் கடோத்கசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனைக் கொன்ற கடோத்கசன், அலம்புசனின் தலையைத் துரியோதனனின் தேரின் மீது வீசியது; துரியோதனனிடம் பேசிய கடோத்கசன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கடோத்கசனானவன், சூதனின் மகனான கர்ணனைப் போரில் கொல்வதற்காக, அவனது தேரை நோக்கிச் செல்வதைக் கண்ட உமது மகன் துரியோதனன்,(1) {தன் தம்பியான} துச்சாசனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு அவனை எதிர்த்துப் போரிட வேகமாகச் செல்கிறான்.(2)
அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கடோத்கசனைத்} தடுப்பாயாக. விகர்த்தனன் {சூரியன்} மகனான வலிமைமிக்கக் கர்ணன், போரில் அந்த ராட்சசனுடன் எங்கே மோதுகிறானோ அந்த இடத்திற்குப் பெரும்படை சூழச் செல்வாயாக.(3) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துச்சாசனா}, துருப்புகள் சூழ மூர்க்கமாக முயன்று, போரில் கர்ணனைக் காப்பாயாக.(4) நமது கவனக்குறைவால் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனைக் கொல்லாதிருக்கட்டும்” என்றான்.(5)
அதே வேளையில், தாக்குபவர்களில் முதன்மையான ஜடாசுரனின் வலிமைக்க மகன் {அலம்புசன் / அலம்பலன்}, துரியோதனனை அணுகி, அவனிடம், “ஓ! துரியோதனா, உன்னால் ஆணையிடப்படும் நான், போரில் எளிதில் வெல்லப்பட முடியாத போர்வீரர்களும், புகழ்பெற்ற உன் எதிரிகளுமான பாண்டவர்களையும், அவர்களைப் பின்தொடர்வோரையும் கொல்ல விரும்புகிறேன். ராட்சசர்களில் முதன்மையானவரும் வலிமைமிக்கவருமான ஜடாசுரரே என் தந்தையாவார். முன்பொரு சமயம்,(6,7) பிருதையின் {குந்தியின்} அற்ப மகன்கள், ராட்சசர்களைக் கொல்லும் சில மந்திரங்களைச் சொல்லி அவரைக் {ஜடாசுரரைக்} கொன்றனர் [1]. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, இறந்து போன என் தந்தைக்கு {ஜடாசுரருக்கு}, அவரது எதிரிகளின் குருதியையும்,(8) இறைச்சியையும் காணிக்கையளித்து அவரை வழிபட விரும்புகிறேன். {என் தந்தையின் கொலைக்காக நான் பாண்டவர்களைப் பழி வாங்க விரும்புகிறேன்}. {இதற்கு} எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {அலம்புசன்}.இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {துரியோதனன்}, மிகவும் மகிழ்ந்து, அவனிடம் {அந்த ஜடாசுரன் மகனான அலம்புசனிடம்}, “துரோணர், கர்ணன் மற்றும் பிறரின் துணையுடன் என் எதிரிகளை வெல்லத்தக்கவனாகவே நான் இருக்கிறேன். எனினும், ஓ! ராட்சசா {அலம்புசா}, என்னால் உத்தரவிடப்படும் நீ, மனிதனுக்குப் பிறந்தவனும், கடுஞ்செயல்களைச் செய்யும் ராட்சசனும், பாண்டவர்களின் நலனில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், எப்போதும் ஆகாயத்தில் நின்று கொண்டு, எங்கள் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களைப் போரில் கொல்பவனுமான கடோத்கசனிடம் போரிட்டு, அப்போரில் அவனைக் கொல்வாயாக.(10,11) ஓ! அவனை {கடோத்கசனை} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவாயாக” என்றான் {துரியோதனன்}.
“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடோத்கசனைப் போருக்கு அழைத்த(12) அந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்}, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அந்தப் பீமசேனன் மகனை {கடோத்கசனை} மறைத்தான். எனினும், அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} தனியனாகவும், ஆதரவற்றவனாகவும் இருந்தாலும், மேகத்திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அலசம்புசனையும் [2], கர்ணனையும், பரந்த குரு படையையும் கலங்கடிக்கத் தொடங்கினான். (கடோத்கச) மாயையின் சக்தியைக் கண்ட அந்த ராட்சசன் அலம்புசன்,(13,14) பல்வேறு வகைகளிலான கணைமாரிகளால் கடோத்கசனை மறைத்தான். பீமசேனன் மகனை {கடோத்கசனைப்} பல கணைகளால் துளைத்த அலம்புசன்,(15) நேரம் எதையும் இழக்காமல், தன் கணைகளால் பாண்டவப் படையைப் பீடிக்கத் தொடங்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனால் {அலம்புசனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட பாண்டவத் துருப்புகள்,(16) சூறாவளியால் விரட்டப்படும் மேகங்களைப் போல அந்த நள்ளிரவில் அணிபிளந்து தப்பி ஓடின. அதே போலவே, கடோத்கசனின் கணைகளால் சிதைக்கப்பட்ட உமது படையும்,(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் தங்கள் தீப்பந்தங்களைக் கீழே வீசிவிட்டு ஆயிரக்கணக்கில் தப்பி ஓடினர்.அப்போது பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட அலம்புசன், யானையைத்தாக்கும் பாகனைப் போல, அந்தப் பயங்கரப் போரில் பீமசேனன் மகனை {கடோத்கசனைக்} கணைகள் பலவற்றால் தாக்கினான். பிறகு கடோத்கசன், தனது எதிரியின் {அலம்புசனின்} தேர், சாரதி, மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டி, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிரித்தான். அப்போது கடோத்கசன், மேருவின் மலைகளில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கர்ணன், அலம்புசன் மற்றும் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரின் மீதும் கணைமாரிகளைப் பொழிந்தான். அந்த ராட்சசனால் பீடிக்கப்பட்ட குரு {கௌரவப்} படையானது மிகவும் கலங்கிப் போனது.(18-21) நால்வகைப்படையணிகளையும் கொண்ட உமது படையானது, ஒன்றையொன்று நெருக்கி நசுக்கத் தொடங்கியது. அப்போது தேரற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் இருந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்},(22) கோபத்தால் நிறைந்து, அந்தப் போரில் தன் கைமுட்டிகளால் கடோத்கசனைத் தாக்கினான். இப்படித் தாக்கப்பட்ட கடோத்கசன்,(23) மரங்கள், கொடிகள், புற்களுடன் கூடிய மலையானது, நிலநடுக்கத்தின் போது நடுங்குவதைப் போல நடுங்கினான்.
பிறகு, சினத்தால் வெறிகொண்ட பீமசேனன் மகன் {கடோத்கசன்}, பரிகத்துக்கு {முட்களுடன் கூடிய கதாயுத்துக்கு} ஒப்பானதும், எதிரியைக் கொல்வதுமான தன் கரத்தை உயர்த்தி, அந்தச் ஜடாசுரன் மகனை {அலம்புசனைக்} கடுமையாகக் குத்தினான். சினத்தால் அவனை {அலம்புசனை} நசுக்கிய அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, விரைவாக அவனைக் கீழே தூக்கி எறிந்து,(24,25) இரண்டு கரங்களாலும் அவனைப் {அலம்புசனைப்} பற்றிக் கொண்டு, பெரும்பலத்துடன் அவனைப் பூமியில் அழுத்தத் தொடங்கினான். பிறகு, கடோத்கசனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்த அந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்},(26) பெரும் மூர்க்கத்துடன் கடோத்கசனைத் தாக்கினான். அந்த அலம்புசனும், ராட்சசனான கடோத்கசனை அந்தப் போரில் இழுத்து கீழே வீசியெறிந்து, சினத்துடன் அவனைப் பூமியின் பரப்பில் நசுக்கத் தொடங்கினான்.
முழங்கிக் கொண்டிருந்தவர்களும், ராட்சசப் போர்வீரர்களுமான கடோத்கசன் மற்றும் அலசம்புசன் ஆகிய அந்த இருவருக்கிடையில் நடந்த போரானது மிகக் கடும் நிலையை அடைந்து, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. தங்கள் மாய சக்திகளின் மூலம் ஒருவரையொருவர் விஞ்ச முயன்றவர்களும், செருக்குமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள்,(27-29) இந்திரனையும் விரோசனன் மகனையும் போலப் பெரும் சக்தியுடன் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். நெருப்பு மற்றும் கடலாகவும், மேலும், கருடன் மற்றும் தக்ஷகனாகவும்,(30) மேலும், மேகம் மற்றும் சூறாவளியாகவும், பிறகு இடி மற்றும் பெரும் மலையாகவும், மீண்டும் யானை மற்றும் புலியாகவும், பிறகு ராகு மற்றும் சூரியனாகவும்(31) மாறி மாறி, ஒருவரையொருவர் அழிக்க வேண்டி, இப்படியே நூறு வகைகளிலான மாயைகளை வெளிப்படுத்தினர். உண்மையில், அலம்புசனும், கடோத்கசனும், பரிகங்கள், கதாயுதங்கள், வேல்கள், உலக்கைகள், கோடரிகள், குறுகதைகள் {முத்கரங்கள்} மற்றும் மலைச்சிகரங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கி அற்புதமாகப் போரிட்டனர்.(32,33) பெரும் மாய சக்திகளைக் கொண்டவர்களான அந்த ராட்சசர்களில் முதன்மையானோர் இருவரும், குதிரையின் முதுகில் ஏறியோ, யானையிலோ, காலிலோ, தேரிலோ சென்று ஒருவரோடு ஒருவர் போரிட்டனர்.(34)
அப்போது அலம்புசனைக் கொல்ல விரும்பிய அந்தக் கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்துடன் உயரப் பறந்து, பிறகு ஒரு பருந்தைப் போலப் பெரும் வேகத்துடன் கீழே இறங்கினான்.(35) தன்னுடன் இப்படிப் போராடிக் கொண்டிருந்தவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்த ராட்சச இளவரசனான அலம்புசனைப் பிடித்து, போரில் (அசுரன்) மயனைக் கொன்ற விஷ்ணுவைப் போல அவனைப் பூமியில் நசுக்கினான்.(36) அளவற்ற ஆற்றலைக் கொண்ட கடோத்கசன், அற்புதத் தோற்றத்துடன் கூடிய ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு, சீற்றமும், வலிமையும் கொண்டவனான தன் எதிரியினுடையதும், பயங்கரமாக அலறிக் கொண்டே இருந்ததுமான அவனுடைய {அலம்புசனின்} பயங்கரத் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(37,38) குருதியில் நனைந்த அந்தத் தலையை மயிரோடு பற்றிக் கொண்ட கடோத்கசன், விரைவாகத் துரியோதனனின் தேரை நோக்கிச் சென்றான். (குரு மன்னனை) அணுகிய அந்த வலிமைமிக்க ராட்சசன் {கடோத்கசன்} சிரித்துக் கொண்டே, பயங்கர முகமும், மயிரும் கொண்ட அந்தத் தலையைத் துரியோதனனின் தேரில் வீசினான்.(40)
அப்போது, மழைக்கால மேகங்களைப் போல ஆழமான கடும் முழக்கம் செய்த அவன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் துரியோதனனிடம்,(41) “நீர் எவனுடைய ஆற்றலைப் பார்த்துக் கொண்டிருந்தீரோ அந்த உமது கூட்டாளி {அலம்புசன் [அலம்பலன்]} இப்போது கொல்லப்பட்டான். மேலும் கர்ணன் மற்றும் உமது கொலையையும் நீர் காண்பீர்.(42) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய இம்மூன்றையும் நோற்பவன் எவனும், மன்னன் ஒருவனையோ, பிராமணன் ஒருவனையோ, பெண் ஒருத்தியையோ வெறுங்கையுடன் காண {செல்லக்} கூடாது[3].(43) கர்ணனை நான் கொல்லும் வரையில் மகிழ்ச்சியாக வாழ்வீராக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {கடோத்கசன்} நூற்றுக்கணக்கான கூரிய கணைகளைக் கர்ணனின் தலையில் ஏவியபடியே அந்தக் கர்ணனை நோக்கிச் சென்றான்.(44) அதன் பிறகு, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {கர்ணனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மிக அற்புதமானதாகவும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(45)
கர்ண கடோத்கசக் கடும்போர்! – துரோண பர்வம் பகுதி – 175-கடோத்கசனின் மேனி, கவசம், ஆயுதங்கள் மற்றும் தேர் ஆகியவை குறித்த வர்ணிப்பு; கர்ணனுக்கும் கடோத்கசனுக்கும் இடையிலான கடும் மோதல்; கடோத்கசன் வெளிப்படுத்திய மாயாசக்திகள்; கடோத்கசனின் மாயையை அழித்த கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்த கடோத்கசன்; கடோத்கசனின் மாயையை மீண்டும் அழித்த கர்ணன்; கர்ணனைக் கொல்லப்போவதாகச் சொன்ன கடோத்கசன்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “உண்மையில், அந்த நள்ளிரவில், விகர்த்தனன் மகன் கர்ணனும், ராட்சசன் கடோத்கசனும் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்தப் போர் எவ்வாறு நடந்தது?(1) அப்போது அந்தக் கடும் ராட்சசன் {கடோத்கசன்} என்ன தன்மையைப் பெற்றிருந்தான்? என்ன வகைத் தேரில் அவன் ஏறி வந்தான்? மேலும் அவனது குதிரைகள் மற்றும் ஆயுதங்களின் இயல்பு யாவை?(2) அவனது குதிரைகள், அவனது தேரின் கொடிமரம் மற்றும் அவனது வில்லின் அளவுகள் யாவை? என்ன வகைக் கவசத்தை அவன் அணிந்திருந்தான்? மேலும் அவன் என்ன வகையில் தலைப்பாகையை அணிந்திருந்தான்? ஓ! சஞ்சயா, உரைப்பதில் திறனுள்ள நீ, நான் கேட்கும் இவை யாவற்றையும் விரிவாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(3)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரத்தச் சிவப்பான கண்களைக் கொண்ட கடோத்கசன், மிகப் பெரிய வடிவத்தைக் கொண்டிருந்தான். அவனது {கடோத்கசனது} முகம் தாமிரத்தின் நிறத்தைக் கொண்டிருந்தது. அவனது வயிறு ஒட்டி சரிந்திருந்தது. அவன் உடலின் மயிர்கள் அனைத்தும் மேல் நோக்கி விறைத்துக் கொண்டிருந்தன. அவனது தலை பச்சையாக இருந்தது [1] அவனது காதுகள் அம்புகளைப் போல இருந்தன. அவனது தாடை எலும்புகள் {மோவாய்} பருத்திருந்தன.(4) அவனது வாயானது, காதிலிருந்து {மற்றொரு} காதுவரை விரிந்திருந்தது. அவனது {கடோத்கசனது} பற்கள் கூர்மையாக இருந்தன, மேலும் அதில் நான்கு {பற்கள்} கூர்மையுடன் உயர்ந்திருந்தன. அவனது நாவும் உதடுகளும் மிக நீளமாகவும், தாமிர வண்ணத்திலும் இருந்தன. அவனது {கடோத்கசனது} புருவங்கள் நீண்டு பரந்திருந்தன. அவனது மூக்கு பருத்திருந்தது.(5) அவனது {கடோத்கசனது} உடல் நீலமாகவும், கழுத்து சிவப்பாகவும் இருந்தது. மலைபோல உயரமாக இருந்த அவன் {கடோத்கசன்} பார்ப்பதற்குப் பயங்கரமானவனாக இருந்தான். பெரும் உடற்கட்டு, பெரும் கரங்கள், பெரும் தலை ஆகியவற்றுடன் கூடிய அவன் பெரும் வலிமையைக் கொண்டிருந்தான்.(6)அழகற்றவனும், {தீண்டுவற்குக்} கடும் அங்கங்கள் கொண்டவனுமான அவனது {கடோத்கசனது} தலையில் இருந்த மயிர் பயங்கர வடிவில் மேல்நோக்கிக் கட்டப்பட்டிருந்தது. அவனது இடை பெருத்திருந்தது, அவனது நாபி ஒடுங்கியிருந்தது. பெரும் உடற்கட்டைக் கொண்டிருந்தாலும் அவனது {கடோத்கசனது} உடலின் சுற்றளவு பெரிதாக {அவன் பருமனாக} இல்லை.(7) அவனது {கடோத்கசனது} கரங்களின் ஆபரணங்கள் சரியான அளவுகளில் இருந்தன. பெரும் மாயாசக்திகளைக் கொண்டிருந்த அவன் அங்கதங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான். மலையின் சாரலில் ஒரு நெருப்புக் கோளத்தைப் போல, தன் மார்பில் அவன் மார்புக் கவசத்தை அணிந்திருந்தான்.(8) அவனது {கடோத்கசனது} தலையில், தங்கத்தாலானதும், பிரகாசமானதும், அழகானதும், அனைத்துப் பகுதிகளிலும் சரியான அளவுகளைக் கொண்டதும், ஒரு வளைவைப் போன்றதுமான ஓர் அழகிய கிரீடம் இருந்தது.(9) அவனது {கடோத்கசனது} காது குண்டலங்கள் காலைச் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தன, அவனது மாலையானது, தங்கத்தாலானதும், மிகப் பிரகாசமானதாகவும் இருந்தது. அவன் {கடோத்கசன்}, தனது உடலில் பெரும் பிரகாசமுடையதும், பெரிய அளவு உடையதுமான ஒரு வெண்கலக் கவசத்தைக் கொண்டிருந்தான்.(10)
அவனது {கடோத்கசனது} தேரானது, நூறு கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரத்தச் சிவப்புடைய எண்ணற்ற கொடிகள் அவனது கொடிமரத்தில் அசைந்து கொண்டிருந்தன. பிரம்மாண்ட அளவீடுகளைக் கொண்டதும், ஒரு நல்வம் {நானூறு சதுர முழம்} பரப்பளவு கொண்டதுமான அந்தத் தேர் கரடித் தோல்களால் மூடப்பட்டிருந்தது.(11) வலிமைமிக்க அனைத்து ஆயுதங்களையும் கொண்டிருந்த அது, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, ஓர் உயரமான கொடிமரத்தையும், எட்டு சக்கரங்களையும் கொண்டிருந்தது. அதன் சடசடப்பொலி மேகங்களின் கர்ஜனைக்கு ஒப்பாக இருந்தது.(12) சிவந்த கண்களைக் கொண்ட அவனது {கடோத்கசனது} குதிரைகள், மத யானைகளைப் போல இருந்தன. மேலும் பயங்கரத் தன்மை கொண்டு பல்வேறு வண்ணங்களில் இருந்த அவை பெரும் வேகமும் வலிமையும் கொண்டவையாக இருந்தன.(13) களைப்பு அனைத்துக்கும் மேம்பட்டு, நீண்ட பிடரிமயிர்களால் அலங்கரிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கனைத்துக் கொண்டே இருந்த அவை அந்த வீரனைப் {கடோத்கசனைப்} போருக்குச் சுமந்து சென்றன.(14) அவனது {கடோத்கசனது} சாரதியாகச் செயல்பட்ட ஒரு ராட்சசன், பயங்கரமான கண்கள், நெருப்பு போன்ற வாய், சுடர்மிக்கக் காதுகுண்டலங்கள் ஆகியவற்றைக் கொண்டு, அந்தப் போரில் சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான தனது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு அவற்றை {குதிரைகளைச்} செலுத்தினான்.(15) அருணனைச் சாரதியாகக் கொண்ட சூரியனைப் போல, அந்தச் சாரதியுடன் அவன் {கடோத்கசன்} போருக்கு வந்தான். பெரும் மேகங்களால் சூழப்பட்ட உயர்ந்த மலையைப் போலத் தெரிந்ததும், வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்ததுமான மிக உயரமான கொடிமரம் ஒன்று அவனது {கடோத்கசனது} தேரில் நிறுவப்பட்டிருந்தது.(16) இரத்தச் சிவப்பிலானதும், ஊனுண்ணுவதுமான பயங்கரக் கழுகொன்று அதில் அமர்ந்திருந்தது.(17)
இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான நாணொலி கொண்டதும், மிகக் கடினமான நாணைக் கொண்டதும் நீளத்தில் பனிரெண்டு முழங்களும்[2], அகலத்தில் ஒரு முழமும் கொண்டதுமான தன் வில்லைப் பலமாக வளைத்தபடியே அவன் {கடோத்கசன்} வந்தான்.(18) ஒரு தேருடைய அக்ஷத்தின் {ஏர்க்காலின்} அளவுடைய கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்த அந்த ராட்சசன் {கடோத்கசன்}, வீரர்களுக்குப் பெரும் அழிவை உண்டாக்கியபடியே அந்த இரவில் கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(19) தன் தேரில் செருக்குடன் நின்று கொண்டிருந்த அவன் {கடோத்கசன்}, தனது வில்லை வளைத்த போது, அந்த நாணொலியானது இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது.(20) அவனால் அச்சத்திற்குள்ளான துருப்புகள் அனைத்தும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பொங்கும் கடலின் அலைகளைப் போல நடுக்கத்தை அடைந்தன.(21) பயங்கரக் கண்களை உடையவனும், அச்சத்தை ஏற்படுத்துபவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்} தன்னை எதிர்த்து வருவதைக் கண்ட அந்த ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே அவனைத் தடுத்து எதிர்த்து நின்றான்.(22)அந்த ராட்சசனை எதிர்த்துச் சென்ற கர்ணன், யானையை எதிர்க்கும் மற்றொரு யானை போலவோ, காளையை எதிர்க்கும் மற்றொரு காளையைப் போலவோ அவனை மிக அருகில் இருந்து பதிலுக்குத் தாக்கினான்.(23) கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடந்த மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கும் சம்பரனுக்கும் இடையில் நடந்த மோதலைப் போலப் பயங்கரத்தை அடைந்தது.(24) அவர்கள் ஒவ்வொருவரும் உரக்க நாணொலியெழுப்பும், உறுதி மிக்க விற்களை எடுத்துக் கொண்டு {தங்களில்} மற்றவனைப் பலமிக்கக் கணைகளால் மறைத்தனர்.(25) முற்று முழுதாக வளைக்கப்பட்ட விற்களில் இருந்து நேரான கணைகளை ஏவிய அவர்கள், வெண்கலத்தால் ஆன அவர்களது கவசங்களைத் துளைத்து ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(26) தங்கள் பற்களைக் கொண்டோ, தந்தங்களைக் கொண்டோ சிதைத்த இரு புலிகளைப் போலவோ, வலிமைமிக்க யானைகளைப் போலவோ அவர்கள் அக்ஷங்களின் அளவைக் கொண்ட ஈட்டிகளாலும் கணைகளாலும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொள்வதைத் தொடர்ந்தனர்.(27)
ஒருவரையொருவர் கணைகளால் குறிபார்த்து, தங்கள் ஒவ்வொருவரின் உடல்களையும் சிதைத்துக் கொண்டும், கணை மேகங்களால் ஒருவரையொருவர் எரித்துக் கொண்டும் இருந்த அவர்கள், பார்க்கப்பட இயலாதவர்களானார்கள்.(28) கணைகளால் துளைத்துச் சிதைக்கப்பட்ட அங்கங்களுடன், குருதியோடையில் குளித்த அவர்கள், தங்கள் சாரல்களில் செஞ்சுண்ண சிற்றாறுகள் ஓடிக் கொண்டிருக்கும் இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.(29) இந்த இரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும் மூர்க்கமாகப் போராடினாலும், கூர்முனை கணைகளால் அங்கங்களைத் துளைத்தாலும், ஒருவரையொருவர் நடுங்கச் செய்வதில் தோல்வியே கண்டனர்.(30) உயிரையே பணயம் வைத்து ஆடப்படும் விளையாட்டாகத் தெரிந்ததும், கர்ணனுக்கும், ராட்சனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலானதுமான அந்த இரவு போரானது, நெடுநேரத்திற்குச் சமமாகவே தொடர்ந்து கொண்டிருந்தது. கூரிய கணைகளைக் குறிபார்த்து, அவற்றைத் தன் முற்று முழுதான பலத்துடன் ஏவிய கடோத்கசனுடைய வில்லின் நாணொலியானது நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் அச்சத்திற்குள்ளாக்கியது.(32)
அந்நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனால் கடோத்கசனை விஞ்ச முடியவில்லை. ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {கர்ணன்}, இதைக் கண்டு, தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தான்.(33) கர்ணனால் தன் மீது குறிபார்க்கப்படும் தெய்வீக ஆயுதத்தைக் கண்டவனும், ராட்சசர்களில் முதன்மையானவனுமான கடோத்கசன், தன் ராட்சச மாயையை இருப்புக்கு அழைத்தான்.(34) வேல்கள், பெரும்பாறைகள், மலைகள், தண்டங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தவர்களும், பயங்கரத் தோற்றங்களைக் கொண்டவர்களுமான ராட்சசர்களின் பெரும்படையால் சூழப்பட்டவனாக அவன் {கடோத்கசன்} தெரிந்தான்.(35) கடுமையான தன் மரணத்தண்டத்தை ஏந்திவருபவனும், உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவனான காலனைப் போலத் (தன் கரங்களில்) உயர்த்திப் பிடிக்கப்பட்ட வலிமைமிக்க ஆயுதத்துடன் முன்னேறி வருபவனுமான கடோத்கசனைக் கண்ட மன்னர்கள் அனைவரும் அச்சத்தால் தாக்கப்பட்டனர்.(36) கடோத்கசனால் செய்யப்பட்ட சிங்க முழக்கங்களால் அச்சமடைந்த யானைகள் சிறுநீரைக் கழித்தன; போராளிகள் அனைவரும் அச்சத்தால் நடுங்கினர்.(37)
அப்போது, அந்த நள்ளிரவின் விளைவால் பெரும் பலத்தை அடைந்த அந்த ராட்சசர்களால் இடையறாமல் பொழியப்பட்ட பாறைகள் மற்றும் கற்களின் அடர்த்தியான மழையானது அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தது[3].(38) இரும்புச் சக்கரங்கள், புசுண்டிகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், சதக்னிகள், கோடரிகள் ஆகியனவும் இடையறாமல் தொடர்ச்சியாக விழுத்தொடங்கின.(39). கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரைக் கண்ட மன்னர்கள் அனைவரும், உமது மகன்களும், பிற போராளிகளும் அச்சத்தால் தப்பி ஓடினர்.(40) அவர்களில், தன் ஆயுத சக்தியில் செருக்குடையவனும், உன்னதமான பெருமையை உணர்ந்தவனுமான கர்ணன் மட்டுமே நடுங்காதிருந்தான். உண்மையில் அவன் {கர்ணன்}, கடோத்சகசனால் இருப்புக்கு அழைக்கப்பட்ட அந்த மாயையைத் தன் கணைகளால் அழித்தான்.(41) தன் மாயை அகற்றப்பட்டதைக் கண்ட கடோத்கசன், சினத்தால் நிறைந்து, அந்தச் சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பி, மரணக் கணைகளை ஏவத் தொடங்கினான்.(42) குருதியில் குளித்த அந்தக் கணைகள், அந்தப் பயங்கரப் போரில் கர்ணனின் உடலின் ஊடாகத் துளைத்துச் சென்று, கோபக்காரப் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன.(43)பிறகு, சினத்தால் நிறைந்தவனும், பெரும் கரநளினத்தைக் கொண்டவனுமான அந்த வீரச் சூதமகன் {கர்ணன்}, கடோத்கசனை விஞ்சி, பத்து கணைகளால் பின்னவனை {கடோத்கசனைத்} துளைத்தான்.(44) அப்போது கடோத்கசன், இப்படிச் சூதன் மகனால் {கர்ணனால்} முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு, ஆயிரம் ஆரங்களைக் கொண்ட ஒரு தெய்வீகச் சக்கரத்தை எடுத்துக் கொண்டான்.(45) அந்தச் சக்கரத்தின் முனையானது கத்தியைப் போலக் கூர்மையாக இருந்தது. காலைச் சூரியனின் காந்தியைக் கொண்டவனும், ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அதிரதன் மகனுக்கு {கர்ணனுக்கு} ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பி அஃதை அவன் மீது வீசினான்.(46) அந்தச் சக்கரம் பெரும் சக்தி கொண்டதாக இருப்பினும், அது பெரும் வலிமையுடன் வீசப்பட்டு இருப்பினும், பேறில்லா மனிதனின் நம்பிக்கைகளையும், காரியங்களையும் போல நோக்கங்கள் கலங்கடிக்கப்பட்டு, கர்ணனின் கணைகளால் துண்டுகளாக வெட்டப்பட்டுக் கீழே விழுந்தது.(47) தன் சக்கரம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்த கடோத்கசன், சூரியனை மறைக்கும் ராகுவைப் போலக் கணைமாரியால் கர்ணனை மறைத்தான்.(48) எனினும், ருத்ரன், அல்லது இந்திரனின் தம்பி {விஷ்ணு}, அல்லது இந்திரனின் ஆற்றலைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சிறகுபடைத்த கணைகளால் கடோத்கசனின் தேரை அச்சமில்லாமல் ஒரு கணத்தில் மறைத்தான்.(49)
அப்போது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கதாயுதத்தைச் சுழற்றிய கடோத்கசன், அதைக் கர்ணனின் மீது வீசினான். எனினும் கர்ணன், தன் கணைகளால் வெட்டி அதைக் கீழே விழச் செய்தான்.(50) பிறகு வானத்திற்குப் பறந்து சென்று, மேகத்திரள்களைப் போல ஆழ முழங்கியவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஆகாயத்தில் இருந்து மரங்களின் மழையைச் சரியாகப் பொழிந்தான்.(51) பிறகு கர்ணன், மேகத்திரள்களைத் தன் கதிர்களால் துளைக்கும் சூரியனைப் போல, மாயைகளை அறிந்தவனும், வானத்தில் இருந்தவனும், பீமசேனனின் மகனுமான கடோத்கசனைத் தன் கணைகளால் துளைத்தான்.(52) பிறகு கடோத்கசனின் குதிரைகள் அனைத்தையும் கொன்று, அவனது தேரையும் நூறு துண்டுகளாக வெட்டிய கர்ணன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தன் கணைகளைப் பொழியத் தொடங்கினான்.(53) கர்ணனின் கணைகளால் துளைக்கப்படாத இடம் எனக் கடோத்கசனின் உடலில் இரண்டு விரல்கட்டை அகலம் கூட {இடம்} இல்லை. விரைவில் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் உடலில் முட்கள் விறைத்து நிற்கும் முள்ளம்பன்றி ஒன்றைப் போலத் தெரிந்தான்.(54) கடோத்கசனின் குதிரைகளோ, தேரோ, கொடிமரமோ, ஏன் கடோத்கசனோ கூட எங்களுக்குத் தெரியாத அளவுக்கு அவன் முழுமையாகக் கணைகளால் மறைக்கப்பட்டிருந்தான்.(55)
அப்போது, மாய சக்திகளைக் கொண்ட கடோத்கசன் தன் ஆயுதத்தால் கர்ணனின் தெய்வீக ஆயுதத்தை அழித்து, தன் மாயா சக்திகளின் துணையுடன், அந்தச் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடத் தொடங்கினான்.(56) உண்மையில், மாயா சக்தியின் துணையுடனும், பெரும் சுறுசுறுப்பை வெளிப்படுத்திக் கொண்டும் அவன் {கடோத்கசன்} கர்ணனோடு போரிடத் தொடங்கினான். ஆகாயத்தில் கண் காணா இடத்திலிருந்து கணைமாரி பொழிந்தது.(57) பிறகு, பெரும் மாயா சக்திகளைக் கொண்ட அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, ஓ! குருக்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, அந்தச் சக்திகளின் துணையோடு, கடும் வடிவை ஏற்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்களை மலைப்படையச் செய்யத் தொடங்கினான்.(58) அந்த வீர ராட்சசன் {கடோத்கசன்}, உக்கிரமான கடும் தலைகள் பலவற்றை ஏற்று {பல தலைகளுடையவனாக மாறி}, சூதன் மகனின் {கர்ணனின்} தெய்வீக ஆயுதங்களை விழுங்கத் தொடங்கினான்.(59) மீண்டும் விரைவில், அந்தப் பெரும் உடல் படைத்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் உடலில் நூற்றுக்கணக்கான காயங்களுடன், உற்சாகமற்றுக் கிடப்பவனைப் போலவும், களத்தில் இறந்து கிடப்பவனைப் போலவும் தெரிந்தான்.(60)
அப்போது கடோத்கசன் இறந்துவிட்டான் என்று கருதிய கௌரவக் காளையர், (மகிழ்ச்சியால்) உரக்க முழங்கினர். எனினும், விரைவில் அவன் {கடோத்கசன்}, புதிய வடிவங்களை ஏற்று, அனைத்துப் பக்கங்களிலும் திரிவது காணப்பட்டது.(61) பிறகு மீண்டும் அவன் நூறு தலைகளுடனும், நூறு வயிறுகளுடனும் கூடிய மகத்தான வடிவத்தை ஏற்று, மைநாக மலையைப் போலத் தெரிந்தான்[4].(62) மீண்டும் அவன் ஒரு கட்டை விரலின் அளவுக்குச் சிறிய வடிவத்தை எடுத்துப் பொங்கும் கடலின் அலைகளைப் போல முன்னும் பின்னும் நகரவும், உயரப் பறக்கவும் செய்தான்.(64) பிறகு ஆகாயத்தில் இருந்து கீழே இறங்கிய அவன், தன் மாயா சக்திகளின் துணையுடன் திசைகளின் அனைத்துப் புள்ளிகளிலும், வானத்திலும், பூமியிலும் திரிந்து, {பிறகு} கவசம் தரித்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நிற்பவனாகத் தெரிந்தான்.(65)பிறகு தன் காது குண்டலங்கள் அங்கும் இங்கும் ஆடக் கர்ணனின் தேரை அணுகிய கடோத்கசன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகனிடம் {கர்ணனிடம்} அச்சமற்ற வகையில்,(66) “ஓ! சூதனின் மகனே {கர்ணரே} சற்றும் பொறுப்பீராக. என்னைத் தவிர்த்துவிட்டு, உம்மால் உயிருடன் எங்கே செல்ல முடியும்? உமது போரிடும் ஆசையை நான் இன்று இந்தப் போர்க்களத்தில் தணிப்பேன்” என்றான்.(67) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், கொடூர ஆற்றலைக் கொண்டவனும், கோபத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்தவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, வானத்தில் பறந்து சென்று உரக்கச் சிரித்தான்.(68) ஒரு சிங்கமானது, யானைகளின் இளவரசனைத் தாக்குவதைப் போல அவன் {கடோத்கசன்} ஒரு தேருடைய அக்ஷத்தின் அளவிலான தன் கணைகளின் மழையைப் பொழிந்து கர்ணனைத் தாக்கத் தொடங்கினான்.(69) உண்மையில் அவன், மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தேர்வீரர்களில் காளையான அந்தக் கர்ணனின் மீது கணை மாரியைப் பொழிந்தான். கர்ணனோ அந்தக் கணைமாரியைத் தொலைவிலிருந்தே அழித்தான்.(70)
கர்ணனால் தன் மாயை அழிக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மீண்டும் ஒரு மாயையை உண்டாக்கி காணப்பட முடியாதவனாக மறைந்தான்.(71) பிறகு, நெடுமரங்கள் நிறைந்ததும், பல சிகரங்களைக் கொண்டதுமான ஓர் உயரமான மலையாக ஆனான். அந்த மலையில் இருந்து, வேல்கள், சூலங்கள், வாள்கள் மற்றும் கதாயுதங்களின் ஓடையானது இடையறாமல் பாய்ந்து கொண்டிருந்தது.(72) ஆகாயத்தில், கடும் ஆயுதங்களின் ஓடையுடன் கூடிய கரிய மை-குவியலுக்கு ஒப்பான அந்த மலையைக் கண்ட கர்ணன், அதனால் சற்றும் கலக்கமடையவில்லை.(73) சிரித்துக் கொண்டே இருந்த கர்ணன், ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். அந்த ஆயுதத்தால் வெட்டப்பட்ட அந்தப் பெரும் மலை அழிக்கப்பட்டது.(74) பிறகு சீற்றமிக்கக் கடோத்கசன், வானவில்லுடன் கூடிய ஒரு நீல மேகமாகி, அந்தச் சூதனின் மகன் {கர்ணனின்} மீது கற்களின் மழையைப் பொழியத் தொடங்கினான்.(75)
விருஷன் என்றும் அழைக்கப்பட்டவனும், ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்த விகர்த்தனன் மகன் கர்ணன், ஒரு வாயவ்ய ஆயுதத்தைக் குறி பார்த்து, அந்தக் காளமேகத்தை அழித்தான்.(76) பிறகு திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எண்ணற்ற கணைகளால் மறைத்த அவன் {கர்ணன்}, கடோத்கசனால் தன் மீது குறிபார்க்கப்பட்ட ஓர் ஆயுதத்தை அழித்தான்.(77) அப்போது பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்}, அந்தப் போரில் சிரித்துக் கொண்டே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்கு எதிராக மிகச் சக்தி வாய்ந்த ஒரு மாயையை மீண்டும் இருப்புக்கு அழைத்தான்.(78) சிங்கங்கள், புலிகள், மதங்கொண்ட யானைகள் ஆகியவற்றின் ஆற்றலுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவர்களும், யானைகளில் ஏறிய சிலரும், தேர்களில் சிலரும், குதிரைகளின் முதுகில் சிலரும்(79-80) எனப் பல்வேறு ஆயுதங்களையும், கவசங்களையும், பல்வேறு வகைகளிலான ஆபரணங்களையும் தரித்து வந்தவர்களுமான அந்தப் பெரும் எண்ணிக்கையிலான ராட்சசர்கள் சூழ, மருத்தர்களால் சூழப்பட்ட வாசவனை {இந்திரனைப்} போலத் தன்னை அச்சமில்லாமல் அணுகுபவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தக் கடோத்கசனை மீண்டும் கண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான கர்ணன் அவனுடன் {கடோத்கசனுடன்} மூர்க்கமாகப் போரிடத் தொடங்கினான்.(81) அப்போது கடோத்கசன், ஐந்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, மன்னர்கள் அனைவரையும் அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் உரக்க முழங்கினான்.(82)
மீண்டும் ஓர் அஞ்சலிகாயுதத்தை ஏவிய கடோத்கசன், கர்ணனால் ஏவப்பட்ட கணைமாரியுடன் சேர்த்து, பின்னவனின் {கர்ணனின்} கையில் இருந்த வில்லையும் விரைவாக அறுத்தான். பிறகு உறுதிமிக்கதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதும், இந்திரனின் வில்லைப் போன்று பெரிதாக இருப்பதுமான மற்றொரு வில்லை எடுத்த கர்ணன் அதைப் பெரும் பலத்துடன் வளைத்தான். அப்போது கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எதிரியைக் கொல்பவையுமான சில கணைகளை அந்த வானுலாவும் ராட்சசர்களின் மீது ஏவினான். அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், அகன்ற மார்புகளை உடையவர்களுமான அந்த ராட்சசர்களின் பெரும்படையானது, சிங்கத்தால் பீடிக்கப்படும் காட்டுயானைகளின் கூட்டத்தைப் போலக் கலக்கமடைவதாகத் தெரிந்தது.(83-86) குதிரைகள், சாரதிகள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்த ராட்சசர்களைத் தன் கணைகளால் அழித்த பலமிக்கக் கர்ணன், அண்ட அழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் தெய்வீக அக்னியைப் போலத் தெரிந்தான்.(87) அந்த ராட்சசப் படையை அழித்த சூதன் மகன் {கர்ணன்}, (அசுரர்களின்) முந்நகரத்தை {திரிப்புரத்தை} எரித்து விட்டு, சொர்க்கத்தில் இருக்கும் தேவன் மகேஸ்வரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(88)
பாண்டவத் தரப்பைச் சேர்ந்த அந்த ஆயிரக்கணக்கான மன்னர்களில், ஓ! ஐயா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே},(89) பயங்கர சக்தியும், பலமும் கொண்டவனும், சினத்தால் தூண்டப்பட்டு யமனைப் போலத் தெரிந்தவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அந்த வலிமைமிக்கக் கடோத்கசனைத் தவிர வேறு எவராலும் கர்ணனைக் {கண்ணால்} காணவும் முடியவில்லை. கோபத்தால் தூண்டப்பட்ட அவனது விழிகள், இரண்டு தீப்பந்தங்களில் இருந்து விழும் சுடர்மிக்க எண்ணெய்யைப் போல, நெருப்பின் தழல்களை வெளியிடுவதாகத் தெரிந்தது.(90,91) உள்ளங்கையால் உள்ளங்கையைத் தட்டி, தன் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டிருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்},(92) யானைகளைப் போலத் தெரிபவையும், பிசாசங்களின் முகத்தைக் கொண்டவையுமான எண்ணற்ற {கோவேறு} கழுதைகள் பூட்டப்பட்டதும், தன் மாயையால் உண்டாக்கப்பட்டதுமான அந்தத் தேரில் மீண்டும் காணப்பட்டான்.(93) கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {கடோத்கசன்} தன் சாரதியிடம், “சூதன் மகனிடம் {கர்ணனிடம்} என்னை அழைத்துச் செல்வாயாக” என்றான். பிறகு அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} மீண்டும் தனிப்போரில் ஈடுபடுவதற்காகப் பயங்கரமாகத் தெரிந்த அந்தத் தேரில் சென்றான்.(94)
அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சினத்தால் தூண்டப்பட்டு, ருத்ரனின் கைவண்ணத்தில் ஆனதும், பயங்கரமானதும், எட்டுச் சக்கரங்களைக் கொண்டதுமான அசனி ஒன்றை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(95) தன் வில்லைத் தன் தேரில் கிடத்திய கர்ணன், பூமியில் கீழே குதித்து அந்த அசனியைப் பிடித்து மீண்டும் அதைக் கடோத்கசனின் மீதே வீசினான்.(96) எனினும் பின்னவன் {கடோத்கசன்}, (அவ்வாயுதம் தன்னை அடையும் முன்பே) தன் தேரில் இருந்து வேகமாகக் குதித்தான். அதே வேளையில் பெரும் பிரகாசமுடைய அந்த அசனியானது, குதிரைகள், சாரதி மற்றும் கொடிமரத்துடன் கூடிய அந்த ராட்சசனின் தேரைச் சாம்பலாக்கி,(97) தேவர்களும் ஆச்சரியத்தால் நிறையும்படி பூமியின் குடல்களுக்குள் {ஆழத்திற்குள்} சென்று மறைந்தது. தன் தேரில் இருந்து குதித்து அந்த அசனியைப் பிடித்த கர்ணனை அனைத்து உயிரினங்களும் பாராட்டின. அந்தச் சாதனையை அடைந்த கர்ணன் மீண்டும் தனது தேரில் ஏறினான்.(98,99) பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்} தன் கணைகளை ஏவத் தொடங்கினான். உண்மையில், ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் கர்ணனால் சாதிக்கப்பட்ட சாதனையானது உயிரினங்கள் அனைத்திலும் எவராலும் சாதிக்க முடியாததாக இருந்தது.
மழைத்தாரைகளால் தாக்கப்படும் மலையைப் போலக் கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கடோத்கசன்,(100,101) வானத்தில் உருகும் ஆவி வடிவங்களைப் போலக் காட்சியில் இருந்து மீண்டும் மறைந்தான். இம்முறையில் போரிட்டவனும், பெரும் உடல்படைத்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் சுறுசுறுப்பின் மூலமாகவும், மாயா சக்திகளின் மூலமும், கர்ணனின் தெய்வீக ஆயுதங்களை அழித்தான். மாயா சக்திகளின் துணையுடன் அந்த ராட்சசனால் தன் ஆயுதங்கள் அழிக்கப்படுவதைக் கண்ட கர்ணன்,(102,103) அச்சத்தையடையாமல் அந்த மனித ஊனுண்ணியிடம் {கடோத்கசனிடம்} தொடர்ந்து போரிட்டான். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்க அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்},(104) தன்னையே பல பகுதிகளாப் பிரித்து (குரு படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். பிறகு அந்தப் போர்க்களத்தில் சிங்கங்களும், புலிகளும், கழுதைப்புலிகளும், {சிறுத்தைகளும்},(105) தீநாவுகளைக் கொண்ட பாம்புகளும், இரும்பு அலகுகளைக் கொண்ட பறவைகளும் வந்து சேர்ந்தன. கடோத்கசனைப் பொறுத்தவரை, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்பட்டவனும்,(106) மலைகளின் இளவரசனை (இமயத்தைப்) போலத் தெரிந்தவனுமான அந்தப் பெருவடிவ ராட்சசன் {கடோத்கசன்} அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(107)
பிறகு பல ராட்சசர்கள், பிசாசங்கள், யாதுதானர்களும்[5], பயங்கர முகங்களைக் கொண்டவையும் பெரும் எண்ணிக்கையிலானவையுமான நரிகளும், சிறுத்தைகளும் கர்ணனை விழுங்குவதற்காக அவனை நோக்கி விரைந்தன.(108) இவையாவும் சூதனின் மகனை {கர்ணனை} அச்சுறுத்துவதற்காகப் பயங்கரமாக அலறிக் கொண்டே அவனை {கர்ணனை} அணுகின. அந்தப் பயங்கரமானவைகள் ஒவ்வொன்றையும், அவற்றின் குருதியைக் குடிப்பவையும், வேகமாகச் செல்ல உதவும் இறகுகளைக் கொண்டவையுமான பயங்கரமான கணைகள் பலவற்றால் துளைத்தான். இறுதியாக அவன் {கர்ணன்} ஒரு தெய்வீக ஆயுதத்தைப் பயன்படுத்தி அந்த ராட்சசனின் மாயையை அழித்தான்.(109,110) பிறகு அவன் {கர்ணன்} நேரானவையும், கடுமையானவையுமான சில கணைகளால் கடோத்கசனின் குதிரைகளைத் தாக்கினான். உடைந்த சிதைந்த அங்கங்களுடன் கூடிய அவை {குதிரைகள்}, அந்தக் கணைகளால் தங்கள் முதுகுகள் வெட்டப்பட்டு,(111) கடோத்கசன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கீழே பூமியில் விழுந்தன. அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} தன் மாயை அகற்றப்பட்டதைக் கண்டு, மீண்டும் தன்னைக் காண முடியாதவனாக்கிக் கொண்டு, விகர்த்தனன் மகனான கர்ணனிடம், “நான் இப்போது உம்மை அழிக்கப் போகிறேன்” என்று சொன்னான்”{என்றான் சஞ்சயன்}.(112)
“ஹிடிம்பையைக் கற்பழித்தான் பீமன்!” என்ற அலாயுதன்! – துரோண பர்வம் பகுதி – 176-அலாயுதனின் வருகை; பகன், கிர்மீரன், ஹிடிம்பன் ஆகியோரின் கொலைக்காகப் பீமனைப் பழிவாங்கப் போவதாகத் துரியோதனனிடம் சொன்ன அலாயுதன்; அலாயுதனின் தோற்றம், ஆயுதங்கள் மற்றும் அலங்காரம் குறித்த விவரிப்பு…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணனுக்கும், ராட்சனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போர் நடந்து கொண்டிருந்தபோது, ராட்சசர்களின் இளவரசனான வீர அலாயுதன் (களத்தில்) அங்கே தோன்றினான்.(1) ஒரு பெரும் படையின் துணையுடன் அவன் {அந்த அலாயுதன்} துரியோதனனை அணுகினான். உண்மையில், பல்வேறு வடிவங்களையும், பெரும் வீரத்தையும் கொண்ட ஆயிரக்கணக்கான பயங்கர ராட்சசர்கள் பலரால் சூழப்பட்ட அவன் {அலாயுதன்}, (பாண்டவர்களுடனான) பழைய சச்சரவை நினைவு கூர்ந்து (அந்தக் களத்தில்) தோன்றினான்.(2) {முன்பொரு காலத்தில்} அவனது {அலாயுதனின்} உறவினனும், பிராமணர்களை உண்டுவந்தவனுமான {ராட்சசன்} வீர பகன், பெரும் சக்தி படைத்த கிர்மீரன், அவனது நண்பன் ஹிடிம்பன் ஆகியோர் {பீமனால்} கொல்லப்பட்டனர்[1]. அவன் {அந்த அலாயுதன்}, தன் பழைய சச்சரவை அடைகாத்தபடியே நீண்ட காலம் காத்திருந்தான்.(3,4) இரவு போரொன்று இப்போது நடைபெறுவதை அறிந்த அவன் {அலாயுதன்}, பீமனைக் கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டு, மதங்கொண்ட ஒரு யானையைப் போலவோ, கோபக்காரப் பாம்பைப் போலவோ அங்கே வந்தான்.(5)போரை விரும்பிய அவன் {அலாயுதன்}, துரியோதனனிடம், “ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, என் உறவினர்களான பகன், கிர்மீரன் மற்றும் ஹிடிம்பன் ஆகிய ராட்சசர்கள் பீமனால் கொல்லப்பட்டனர் என்பது நீ அறிந்ததே. முன்பு எங்களையும், பிற ராட்சசர்களையும் அலட்சியம் செய்த அவனால் {பீமனால்}, கன்னிப்பெண்ணான ஹிடிம்பை கற்பழிக்கப்பட்டாள்[2] எனும்போது இன்னும் நான் வேறு என்ன சொல்ல வேண்டும்?(6,7) ஓ! மன்னா {துரியோதனா} அந்தப் பீமனைப் பின்தொடர்பவர்கள் அனைவரையும், அவனது குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு சேர்த்து அவனையும் {பீமனையும்}, அந்த ஹிடிம்பையின் மகனையும் {கடோத்கசனையும்}, அவனது நண்பர்களையும் கொல்லவே நான் இங்கே வந்தேன். நான் இன்று குந்தியின் மகன்கள் அனைவரையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அவர்களுக்கு முன்பு நடந்து வருபவர்களையும் கொல்வேன், அவர்களைப் பின்தொடர்ந்து வருவோர் அனைவருடன் சேர்த்து அவர்களை நான் விழுங்கப் போகிறேன். உன் துருப்புகள் அனைத்தையும் போரில் இருந்து விலகிக் கொள்ள ஆணையிடுவாயாக. பாண்டவர்களோடு நாங்கள் போரிடப் போகிறோம்” என்றான் {அலாயுதன்}.(8-10)அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். தன் தம்பியர்கள் அனைவரும் சூழ இருந்த அந்த மன்னன் {துரியோதனன்}, ராட்சசனின் {அந்த அலாயுதனின்} வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு,(11) “உன்னை முன்னிலையில் நிறுத்திக் கொண்டு, நாங்களும் எதிரியோடு போர்புரிவோம். எனது துருப்புகளின் பகை உணர்ச்சி இன்னும் தணியாததால், அவர்கள் அக்கறையில்லாத பார்வையாளர்களாக நிற்க மாட்டார்கள்” என்றான்.(12) அந்த ராட்சசக் காளை {அலாயுதன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, மனித ஊனுண்ணும் தன் படையின் துணையுடன் பீமனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(13)
சுடர்மிக்க வடிவம் கொண்ட அந்த அலாயுதன், சூரியப் பிரகாசம் கொண்ட தேரில் ஏறி வந்தான். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தத் தேரானது, கடோத்கசனின் தேரைப் போன்றே இருந்தது.(14) அலாயுதனுடைய தேரின் சடசடப்பொலியும் கடோத்கசனுடையதைப் போலவே ஆழமானதாக இருந்தது; மேலும் அது பல வளைவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெரிய தேர் கரடித் தோல்களால் மறைக்கப்பட்டிருந்தது; மேலும் அஃது {அந்த தேர்} ஒரு நல்வம் {நானூறு முழம்} அளவைக் கொண்டிருந்தது.(15) அவனது குதிரைகள், கடோத்கசனுடையவையைப் போன்றே, பெரும் வேகம் கொண்டவையாகவும், வடிவில் யானைகளுக்கு, குரலில் கழுதைகளுக்கு ஒப்பானவையாகவும் இருந்தன. இறைச்சியும், குருதியும் உண்டு வாழ்பவையும் பெரும் வடிவைக் கொண்டவையுமான அவைகளைப் போன்ற நூறு உயிரினங்கள் அவனது {அலாயுதனின்} வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன.(16) உண்மையில் அந்தத் தேரின் சடசடப்பொலியானது, கடோத்கசனுடையதைப் போலவே பெருமேகத்தின் ஆழமான முழக்கத்தைக் கொண்டிருந்தது.
அவனது வில்லும், அவனது எதிராளியுடையதை {கடோத்கசனுடையதைப்} போலவே பெரியதாகவும், வலிமையானதாகவும் இருந்தது, மேலும் அதனுடைய நாண்கயிறும் கடினமானதாக இருந்தது.(17) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அவனது கணைகளும், கடோத்கசனுடையவையைப் போன்றே பெரிதானவையாகவும், {தேர்களுடைய} அக்ஷங்களின் அளவுள்ளவையாகவும் இருந்தன. வீர அலாயுதன், கடோத்கசன் அளவுக்கு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனாக இருந்தான்;(18) சூரியன் அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அவனது தேரின் கொடிமரத்தில், கடோத்கசனுடையதைப் போலவே கழுகுகளும், அண்டங்காங்ககைகளும் அமர்ந்திருந்தன[3]. வடிவில் அவன் கடோத்கசனைவிட அழகாக இருந்தான்; (கோபத்தில்) கலங்கியிருந்த அவனது முகமானது சுடர்மிக்கதாகத் தெரிந்தது.(19) சுடர்மிக்க அங்கதங்கள், சுடர்மிக்கக் கிரீடம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகள், தலைப்பாகை, வாள் ஆகியவற்றோடு, கதாயுதம், புசுண்டிகள், குறுங்கதாயுதங்கள் {உலக்கைகள்}, கலப்பைகள், வில், கணைகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, யானையைப் போன்ற கடினமான கருந்தோலுடன்,(20) நெருப்பின் காந்தி கொண்ட தேரில் ஏறி வந்த அவன் {அலாயுதன்}, பாண்டவப் படையைப் பீடித்து முறியடித்துக் கொண்டிருந்த போது, மின்னலின் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்டு வானத்தில் திரியும் மேகத்தைப் போலத் தெரிந்தான்.(21) (அந்த அலாயுதன் போரிட வந்த போது), பெரும் வலிமை கொண்டவர்களும், (வாள் மற்றும்) கேடயம் தரித்துக் கவசம் பூண்டவர்களுமான பாண்டவப் படையின் முக்கிய மன்னர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் போரில் ஈடுபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(22)
பீமன் அலாயுதன் மோதல்! – துரோண பர்வம் பகுதி – 177-கடோத்கசன் ஏற்படுத்திய அழிவைக் கண்டு, அவனோடு மோதுமாறு அலாயுதனைத் தூண்டிய துரியோதனன்; கர்ணனைக் கைவிட்டு, அலாயுதனை நோக்கிச் சென்ற கடோத்கசன்; அலாயுதனை எதிர்த்து விரைந்த பீமன்; பீமனுக்கும், அலாயுதனுக்கும் இடையில் நடந்த மோதல்; பீமசேனனைக் காக்க கடோத்கசனை அனுப்பிய கிருஷ்ணன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பயங்கரச் செயல்களைப் புரியும் அலாயுதன் போருக்கு வந்ததைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(1) அதே போலத் துரியோதனனைத் தங்கள் தலைமையில் கொண்ட உமது மகன்களும், கடலைக் கடக்க விரும்பும் தெப்பமற்ற மனிதர்கள், ஒரு தெப்பத்தைச் சந்திப்பதைப் போல (மகிழ்ச்சியால்) நிறைந்தனர்.(2) உண்மையில் குரு படையில் இருந்த மன்னர்கள், இறந்து மீண்டும் பிறந்தவர்களைப் போலத் தங்களைக் கருதிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அலாயுதனை மரியாதையுடன் வரவேற்றனர்.(3) பயங்கரமானதும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதும், கடுமையானதுமாக இருந்தாலும், காண்பதற்கு இனிமையானதுமான அந்தப் போர் அவ்விரவில் கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது,(4) பிற க்ஷத்திரியர்கள் அனைவருடன் கூடிய பாஞ்சாலர்கள் சிரித்துக் கொண்டே பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதே வேளையில் உமது படைவீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (தங்கள் தலைவர்களாலும்), துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிறரால் களம் முழுவதும் பாதுகாக்கப்பட்டாலும், “யாவும் தொலைந்தன” என்று உரக்க ஓலமிட்டனர்.(5) உண்மையில், ஹிடிம்பை மகனின் {கடோத்கசனின்} அந்தச் சாதனைகளைக் கண்ட உமது போர்வீரர்கள் அனைவரும் அச்சத்தால் கலங்கி, ஓலங்களிட்டு கிட்டத்தட்ட தங்கள் உணர்வுகளை {சுய நினைவை} இழந்தனர்.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் அனைத்தும் கர்ணன் உயிர்வாழ்வான் என்பதில் நம்பிக்கை இழந்தனர்.(7)
அப்போது துரியோதனன், பெரும் துன்பத்தில் வீழ்ந்த கர்ணனைக் கண்டு, அலாயுதனை அழைத்து, அவனிடம்:(8) “அதோ விகர்த்தனன் மகன் கர்ணன், ஹிடிம்பையின் மகனோடு {கடோத்கசனோடு} போரிட்டு, போரில் தன் வலிமைக்கும், ஆற்றலுக்கும் தகுந்த சாதனைகளை அடைந்து வருகிறான்.(9) அந்தப் பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் தாக்கிக் கொல்லப்பட்டு, யானையால் முறிக்கபட்ட மரங்களைப் போல (களத்தில் கிடக்கும்) துணிச்சல்மிக்க மன்னர்களைப் பார்.(10) இந்தப் போரில் என் அரசப் போர்வீரர்கள் அனைவரிலும், ஓ! வீரா {அலாயுதா}, உனது அனுமதியுடன் என்னால் ஒதுக்கப்படும் இந்தப் பங்கு {கடோத்கசனைக் கொல்லும் காரியம்} உன்னுடையதாக இருக்கட்டும். உன் ஆற்றலை வெளிப்படுத்தி, இந்த ராட்சசனைக் கொல்வாயாக.(11) ஓ! எதிரிகளை நசுக்குபவனே, இந்த இழிந்த கடோத்கசன், அவனை நீ முடிப்பதற்கு {கொல்வதற்கு} முன்பே, மாயா சக்திகளின் துணையுடன் விகர்த்தனன் மகனான கர்ணனைக் கொல்லாதிருக்கட்டும்” என்றான் {துரியோதனன்}.(12) மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், கடும் ஆற்றலையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட அந்த ராட்சசன் {அலாயுதன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடோத்கசனை எதிர்த்து விரைந்தான்.(13)
அப்போது பீமசேனன் மகன் {கடோத்கசன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கைவிட்டு விட்டு, தன்னை நோக்கி வரும் எதிரியைத் தன் கணைகளால் கலங்கடிக்கத் தொடங்கினான்.(14) பிறகு அந்தக் கோபக்கார ராட்சச இளவரசர்களுக்குள் நடந்த போரானது, பருவ காலத்தில் உள்ள பெண்யானைக்காகக் காட்டில் போரிட்டுக் கொள்ளும் மதங்கொண்ட இரு யானைகளுக்கு ஒப்பாக இருந்தது.(15) அந்த ராட்சசனிடம் இருந்து விடுபட்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணன், சூரியப்பிரகாசம் கொண்ட தன் தேரில் ஏறி பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.(16) சிங்கத்துடன் போரிடும் காளை பீடிக்கப்படுவதைப் போல அந்தப் போரில் கடோத்கசன், அலாயுதனுடன் போரிடுவதைக் கண்டவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான பீமன், முன்னேறி வரும் கர்ணனை அலட்சியம் செய்துவிட்டு, கணைமேகங்களை இறைத்தபடியே சூரியப்பிரகாசம் கொண்ட தன் தேரில் அலாயுதனை நோக்கி விரைந்தான்.(17,18) பீமன் முன்னேறுவதைக் கண்ட அலாயுதன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கடோத்கசனைக் கைவிட்டுவிட்டு, பீமனை எதிர்த்துச் சென்றான்.(19)
அப்போது ராட்சசர்களை அழிப்பவனான அந்தப் பீமன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனை} நோக்கி மூர்க்கமாக விரைந்து, கணைகளால் அவனை மறைத்தான்.(20) அதே போல எதிரிகளைத் தண்டிப்பவனான அலாயுதனும், கல்லில் கூராக்கப்பட்ட நேரான கணைகளால் அந்தக் குந்தியின் மகனை {பீமனை} மீண்டும் மீண்டும் மறைத்தான்.(21) பயங்கர வடிவங்களைக் கொண்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களும், உமது மகன்களின் வெற்றியை விரும்பியவர்களுமான வேறு ராட்சசர்கள் அனைவரும் கூடப் பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(22) இப்படி அவர்களால் தாக்கப்பட்ட வலிமைமிக்கப் பீமசேனன், ஐந்து கூரிய கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.(23) பிறகு, பீமசேனனால் இப்படி வரவேற்கப்பட்டவர்களும், தீய புரிதலைக் கொண்டவர்களுமான அந்த ராட்சசர்கள், உரத்த ஓலமிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(24) தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் பீமனால் அச்சுறுத்தப்பட்டதைக் கண்ட அந்த வலிமைமிக்க ராட்சசன் {அலாயுதன்}, பீமனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து, கணைகளால் அவனை மறைத்தான்.(25)
பிறகு பீமசேனன், கூர்முனை கணைகளால் அந்தப் போரில் தன் எதிரியை பலவீனமடையச் செய்தான். பீமனால் அவனை {அலாயுதனை} நோக்கி ஏவப்பட்ட கணைகளில், சிலவற்றை அப்போரில் வெட்டிய அலாயுதன், பிறவற்றை {கையில்} பிடித்தான். பிறகு பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனை} நிலையாகப் பார்த்து,(26,27) வஜ்ரத்தின் சீற்றத்தைக் கொண்ட கதாயுதம் ஒன்றைப் பெரும் பலத்துடன் அவன் {அலாயுதன்} மீது வீசினான். நெருப்பின் தழலைப் போன்ற அந்தக் கதாயுதமானது, அந்த மனித ஊனுண்ணியை {அலாயுதனை} நோக்கி சென்றபோது,(28) அவன் {அலாயுதன்} தன் கதாயுதம் ஒன்றால் அதைத் தாக்கினான். அதன்பேரில், (முன்னதைக் கலங்கடித்த) பின்னது {அலாயுதனின் கதாயுதமானது} பீமனை நோக்கிச் சென்றது. பிறகு அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனைக்} கணை மழையால் மறைத்தான்.(29) அந்த ராட்சசனோ, கூரிய தன் கணைகளால் பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான். பிறகு, பயங்கர வடிவங்களைக் கொண்ட அந்த ராட்சசப் போர்வீரர்கள் அனைவரும் (அணிதிரண்டு மீண்டும் போரிட வந்து),(30) தங்கள் தலைவனின் ஆணையின் பேரில் (பீமனுடைய படையின்) யானைகளைக் கொல்லத் தொடங்கினர். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், குதிரைகள், (பீமனுடைய படையின்) பெரும் யானைகள் ஆகியவை(31) அந்த ராட்சசர்களால் பெரிதும் பீடிக்கப்பட்டு மிகவும் கலக்கமடைந்தன.
அந்தப் பயங்கரப் போரை (பீமனுக்கும் அந்த ராட்சசர்களுக்கும் இடையிலான அம்மோதலைக்) கண்டவனும்,(32) மனிதர்களில் முதன்மையானவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} சொன்னான்: “அந்த ராட்சசர்களின் இளவரசனிடம் {அலாயுதனிடம்} வசப்படும் வலிமைமிக்கப் பீமரைப் பார்.(33) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஏதும் ஆலோசியாமல், விரைவாகப் பீமரைத் தொடர்ந்து செல்வாயாக. அதே வேளையில், திருஷ்டத்யும்னன், சிகண்டி, யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள்,(34) திரௌபதியின் மகன்களோடு சேர்ந்து கொண்டு கர்ணனை எதிர்த்துச் செல்லட்டும். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நகுலன், சகாதேவன், வீர யுயுதானன் {சாத்யகி} ஆகியோர்,(35) உனது உத்தரவின் பேரில் பிற ராட்சசர்களைக் கொல்லட்டும். உன்னைப் பொறுத்தவரை, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, துரோணரைத் தலைமையில் கொண்ட இந்தப் படைப்பிரிவைத் தடுப்பாயாக. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இப்போது நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆபத்தானது பெரியதாக இருக்கிறது” என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணன் இப்படிச் சொன்னதும், உத்தரவுக்கேற்றபடியே அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர்,(36,37) விகர்த்தனன் மகனான கர்ணனை எதிர்த்தும், (குருக்களுக்காகப் போரிடும்) பிற ராட்சசர்களை எதிர்த்தும் சென்றனர். பிறகு முற்று முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான சில கணைகளால்,(38) ராட்சசர்களின் அந்த வீர இளவரசன் {அலாயுதன்}, பீமனின் வில்லை அறுத்தான். அடுத்ததாக அந்த வலிமைமிக்க மனித ஊனுண்ணி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சில கூரிய கணைகளால் பின்னவனின் {பீமனின்} குதிரைகளையும், சாரதியையும் கொன்றான். குதிரைகளும், சாரதியும் அற்ற பீமன், தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கி,(39,40) உரக்க முழங்கியபடியே தன் எதிரியை நோக்கி ஒரு கனமான கதாயுதத்தை வீசினான். அந்தக் கனமான கதாயுதமானது, பயங்கர ஒலியுடன் அந்த மனித ஊனுண்ணியை {அலாயுதன்} நோக்கிச் சென்ற போதே,(41) அவன் {அலாயுதன்} தன் கதாயுதத்தால் அதைக் கலங்கடித்தான். பிறகு பின்னவன் {அலாயுதன்} உரக்க முழங்கினான்.
அந்த ராட்சசர்களின் இளவரசனுடைய {அலம்புசனுடைய} பயங்கரமான, வலிமைமிக்க அருஞ்செயலைக் கண்ட பீமசேனன்,(42) மகிழ்ச்சியால் நிறைந்து மற்றொரு கடும் கதாயுதத்தைப் பிடித்தான். அந்த மனிதப் போர்வீரனுக்கும் {பீமனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரத்தை அடைந்தது.(43) அவர்களது கதாயுத வீச்சுகளின் மோதலால் பூமியானது பயங்கரமாக நடுங்கியது. தங்கள் கதாயுதங்களைத் தூக்கி எறிந்த அவர்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர்.(44) அவர்கள் தங்கள் கைமுட்டிகளை இறுக பற்றிக் கொண்டு இடிமுழக்கம் போன்ற ஒலி கொண்ட குத்துகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சினத்தால் தூண்டப்பட்ட அவர்கள், தேர் சக்கரங்கள், நுகத்தடிகள், அக்ஷங்கள் {அச்சுகள்}, அதிஸ்தானங்கள் {ஆசனங்கள்}, உபஷ்கரங்கள் ஆகியவற்றையும், இன்னும் தங்கள் வழியில் இருந்த எதையும் எடுத்துகொண்டு ஒருவரோடொருவர் மோதினர். இப்படி ஒருவரோடொருவர் மோதி, குருதியில் நனைந்த அவர்கள் இருவரும், பெரும் வடிவங்களைக் கொண்ட மதங்கொண்ட இரண்டு யானைகளைப் போலத் தெரிந்தனர். அப்போது, பாண்டவர்களின் நன்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் கூடிய ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அம்மோதலைக் கண்டு, பீமசேனனைக் காப்பதற்காக ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} அனுப்பினான்” {என்றான் சஞ்சயன்}.(45-47)
அலாயுதனைக் கொன்ற கடோத்கசன்! – துரோண பர்வம் பகுதி – 178-அலாயுதனின் ராட்சசர்களைக் கொன்ற பாண்டவத் தலைவர்கள் கர்ணனை எதிர்த்து விரைந்தது; அலாயுதனுக்கும் கடோத்கசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலாயுதனின் தலையை வெட்டிய கடோத்கசன்; அலாயுதன் கொல்லப்பட்டதைக் கண்டு கவலையில் நிறைந்த துரியோதனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் போரில் பீமன், அந்த மனித ஊனுண்ணியால் {அலாயுதனால்} தாக்கப்படுவதைக் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, கடோத்கசனை அணுகி, அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பெரும் காந்தி கொண்டவனே, போரில் துருப்புகள் அனைத்தும், நீயும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீமர் அந்த ராட்சசர்களால் பலமாகத் தாக்கப்படுவதைப் பார்.(2) தற்சமயம் கர்ணனைக் கைவிட்டுவிட்டு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கடோத்கசா}, விரைவாக அலாயுதனைக் கொல்வாயாக. கர்ணனை நீ பிறகு கொல்லலாம்” என்றான் {கிருஷ்ணன்}.(3)
அந்த விருஷ்ணி குலத்தோனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட வீரக் கடோத்கசன், கர்ணனைக் கைவிட்டுவிட்டு, மனித ஊனுண்ணிகளின் இளவரசனும், பகனின் தம்பியுமான அந்த அலாயுதனுடன் மோதினான்.(4) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனித ஊனுண்ணிகளான அலாயுதன் மற்றும் ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} ஆகிய இருவருக்கிடையில் அந்த இரவில் நடந்த போரானது கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(5)
அதேவேளையில், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன் {சாத்யகி}, நகுலன், சகாதேவன் ஆகியோர் பயங்கரத் தோற்றம் கொண்டவர்களும், வில்தரித்துத் தங்களை நோக்கி மூர்க்கமாக விரைந்தவர்களும், அலாயுதனின் போர்வீரர்களுமான வீர ராட்சசர்களைக் கூரிய கணைகளால் துளைத்தனர்.(6,7) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடியே க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலரை வீழ்த்தத் தொடங்கினான்.(8) அதே வேளையில், அந்தப் போரில் கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் பலரையும், திருஷ்டத்யும்னன், சிகண்டி மற்றும் பிறரின் தலைமையிலான பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரையும் கலங்கடித்தான்.(9) (கர்ணனால்) கொல்லப்படும் அவர்களைக் கண்டவனும், பயங்கர ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், அந்தப் போரில் தன் கணைகளை ஏவியபடியே கர்ணனை நோக்கி வேகமாக விரைந்தான்.(10) பிறகு, நகுலன், சகாதேவன் ஆகிய அந்தப் போர்வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும், ராட்சசர்களைக் கொன்றுவிட்டு, சூதனின் மகன் {கர்ணன்} இருந்த இடத்திற்குச் சென்றனர்.(11) அவர்கள் அனைவரும் கர்ணனோடு போரிடத் தொடங்கிய அதே வேளையில், பாஞ்சாலர்கள் துரோணரோடு மோதினர்.
அப்போது சினத்தால் தூண்டப்பட்ட அலாயுதன், ஒரு பெரிய பரிகத்தைக் கொண்டு எதிரிகளைத் தண்டிப்பவனான கடோத்கசனை தலையில் தாக்கினான். பெரும் ஆற்றலைக் கொண்ட பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்},(12,13) அந்தப் பரிகத்தின் தாக்குதலால் குறை மயக்க நிலையில் காணப்பட்டு, அசைவற்றவனாகக் கீழே அமர்ந்தான். சுய நினைவு மீண்ட பின்னவன் {கடோத்கசன்}, பிறகு அம்மோதலில், தங்கத்தாலும், நூறு மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்ததுமான கதாயுதம் ஒன்றைத் தன் எதிரியின் மீது வீசினான். கடுஞ்சாதனைகளைச் செய்யும் அவனால் பலமாக வீசப்பட்ட அந்தக் கதாயுதம், அலாயுதனின் குதிரைகள், சாரதி மற்றும் உரத்த சடசடப்பொலி கொண்ட அவனது தேர் ஆகியவற்றை நொறுக்கியது. மாயையை அறிந்தவனும், குதிரைகள், சக்கரங்கள், அக்ஷங்கள், கொடிமரம் மற்றும் கூபரம் ஆகிய அனைத்தும் தூள்தூளாக நொறுக்கப்பட்டவனுமான பின்னவன் {அலாயுதன்}, தனது தேரில் இருந்து கீழே குதித்தான். தன் மாயையைப் பயன்படுத்திய அவன் அபரிமிதமான இரத்த மழையைப் பொழிந்தான்.(14-17)
அப்போது வானமானது, மின்னலின் கீற்றுகளுடன் கூடிய கார்மேகத் திரள்களால் பரவியிருப்பதாகத் தெரிந்தது. உரத்த வெடிச்சத்தங்கள் மற்றும் மேகங்களில் உரத்த முழக்கங்களுடன் கூடிய இடி மழையின் ஒலி ஆகியன அப்போது கேட்கப்பட்டன.(18) அந்தப் பயங்கரப் போரில் “சட சட” எனும் உரத்த ஒலியும் கேட்கப்பட்டது. ராட்சசன் அலாயுதனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயையைக் கண்ட ராட்சசன் கடோத்கசன்,(19) உயரப் பறந்து, தன் மாயையைக் கொண்டு அதை {அலம்புசனின் மாயையை} அழித்தான். மாயா சக்திகளைக் கொண்ட அலாயுதன், தன் மாயையானது தன் எதிரியினுடையதைக் கொண்டு அழிக்கப்பட்டதைக் கண்டு,(20) கடோத்கசன் மீது கனமான கல் மழையைப் பொழியத் தொடங்கினான். பிறகு அவர்கள் இரும்பு பரிகங்கள், சூலங்கள், கதாயுதங்கள், குறுந்தண்டங்கள் {உலக்கைகள்}, சம்மட்டிகள் {முத்கரங்கள்}, பினாகங்கள், வாள்கள், வேல்கள், நீண்ட சூலங்கள், கம்பனங்கள், நீளமாகவும், அகன்ற தலை கொண்டதாகவும் கூரிய கணைகள் {நாராசங்கள் மற்றும் பல்லங்கள்}, போர்க்கோடரிகள், அயாகுதங்கள் {இரும்புத் தடிகள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, பசுவைப் போன்ற தலைகள் கொண்ட ஆயுதங்கள் {கோசீர்ஷங்கள்} மற்றும் உலூகலங்கள் {உரல்கள்} போன்ற பல்வேறு ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(21-24) மேலும் அவர்கள் இங்குதி {வன்னி மரம்}, பதரி {இலந்தை}, மலர்ந்திருக்கும் கோவிதாரம், பல்க்ஸம் {பலாசம்}, அரிமேதம், பிலாக்ஷம் {கல்லிச்சி}, ஆலம், அரசம் போன்ற மரங்களாலும் மற்றும் பல்வேறு வகைகளிலான உலோகங்களால் {தாதுவகைகளால்} அலங்கரிக்கப்பட்ட பல்வேறு மலைச்சிகரங்களாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(25-27) அந்த மரங்கள் மற்றும் மலைச்சிகரங்களின் மோதலானது, இடிமுழக்கத்தைப் போலப் பேரொலியோடு இருந்தது.
உண்மையில், பீமனின் மகனுக்கும் அலாயுதனுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில், குரங்குகளின் இளவரசர்களான வாலி மற்றும் சுக்ரீவன் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்ததைப் போல மிகப் பயங்கரமானதாக இருந்தது.(28) பல்வேறு வகைகளிலானவையும், கூரிய கத்திகளைப் போன்ற கடுமையானவையுமான பிற ஆயுதங்கள் மற்றும் கணைகள் ஆகியவற்றால் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பிறகு ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த அந்த வலிமைமிக்க ராட்சசர்கள், தங்களில் மற்றவரின் மயிரைப் பிடித்தனர்.(29,30) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் உடல்படைத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் உடல்களில் உண்டான காயங்களோடும், வழிந்த இரத்தத்தோடும் மழையைப் பொழியும் இரண்டு மேகத் திரள்களைப் போல இருந்தனர்.(31) அப்போது வேகமாக விரைந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, அந்த ராட்சசனை {அலாயுதனை} உயரத் தூக்கிச் சுழற்றி தரையில் அடித்து, {பிறகு} அவனது பெரிய தலையை அறுத்தான்.(32) பிறகு, அந்த வலிமைமிக்கக் கடோத்கசன், இரு காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தலையை எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினான்.(33) எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்தப் பகனின் தம்பி {அலாயுதன்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் சிங்க முழக்கமிடத் தொடங்கினர்.(34)
அந்த ராட்சசனின் {அலாயுதனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் பாண்டவர்கள், ஆயிரக்கணக்கான பேரிகைகளையும், பதினாயிரக்கணக்கான சங்குங்களையும் அடித்து முழக்கினர்.(35) அப்போது அந்த இரவானது பாண்டவர்களின் வெற்றியைத் தெளிவாகக் குறிப்பிட்டது. சுற்றிலும் பந்தங்களால் ஒளியூட்டப்பட்டு, இசைக்கருவிகளால் எதிரொலிக்கப்பட்ட அந்த இரவனாது மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(36) பிறகு பீமசேனனின் அந்த வலிமைமிக்க மகன் {கடோத்கசன்} கொல்லப்பட்ட அலாயுதனின் தலையைத் துரியோதனன் முன்பாக வீசினான்.(37) வீர அலாயுதன் கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகள் அனைத்துடன் சேர்ந்து கவலையில் நிறைந்தான்.(38) முந்தைய சச்சரவை நினைவில் கொண்டு துரியோதனனிடம் தானாக வந்த அலாயுதன், அவனிடம் {துரியோதனனிடம்} பீமனைப் போரில் கொல்லப் போவதாகச் சொல்லியிருந்தான்.(39) அந்தக் குரு மன்னனும் {துரியோதனனும்}, பீமனின் கொலை உறுதியானது என்று கருதியும், தன் தம்பிகள் அனைவரும் நீண்ட வாழ்நாளோடு இருப்பார்கள் என்றும் நம்பினான்.(40) அந்த அலாயுதன், பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} கொல்லப்பட்டதைக் கண்ட மன்னன் {துரியோதனன்}, (தன்னையும், தன் தம்பிகளையும் கொல்வது குறித்த) பீமனின் சபதம் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகவே கருதினான்” {என்றான் சஞ்சயன்}.(41)
கடோத்கசனின் இறுதி மூச்சு! – துரோண பர்வம் பகுதி – 179-கர்ணனுடன் மீண்டும் மோதிய கடோத்கசன்; கர்ணனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று காட்சியில் இருந்து மறைந்த கடோத்கசன்; கடோத்கசனின் பயங்கரமான இறுதி மாயை; கடோத்கசனால் துரியோதனின் படைக்கு ஏற்பட்ட பேரழிவு; மீண்டும் கர்ணனின் குதிரைகளைக் கொன்ற கடோத்கசன்; வெல்லப்பட முடியாத சக்தி ஆயுதத்தை ஏவி கடோத்கசனைக் கொல்லுமாறு கர்ணனைத் தூண்டிய கௌரவர்கள் சக்தி ஆயுதத்தை ஏவிய கர்ணன்; கொல்லப்பட்டான் கடோத்கசன்; தன் பெருவுடலுடன் கீழே விழுந்த கடோத்கசன் தன் இறுதி மூச்சிலும் ஓர் அக்ஷௌஹிணி கௌரவத் துருப்புகளைக் கொன்றது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அலாயுதனைக் கொன்ற ராட்சசன் கடோத்கசன் மகிழ்ச்சியால் நிறைந்தான். படையின் முன்னணியில் நின்று கொண்டு பல்வேறு வகைகளில் அவன் {கடோத்கசன்} முழக்கமிடத் தொடங்கினான்.(1) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யானைகளையே நடுங்கச் செய்த அந்த உரத்த முழக்கங்களைக் கேட்ட உமது போர்வீரர்களின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(2) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணன், பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்} அலாயுதனுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, பாஞ்சாலர்களை எதிர்த்து விரைந்தான்.(3) தன் வில்லை முழுமையாக வளைத்த அவன் {கர்ணன்}, திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டி ஆகியோர் ஒவ்வொருவரையும் உறுதியான, நேரான பத்து கணைகளால் துளைத்தான்.(4) பிறகு, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பெரும் எண்ணிக்கையிலான வேறு பலமான கணைகளால் யுதாமன்யு, உத்தமௌஜஸ் மற்றும் பெரும் தேர்வீரனான சாத்யகி ஆகியோரை நடுங்கச் செய்தான்.(5)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்தப் போர்வீரர்கள் கர்ணனைத் தாக்கிக் கொண்டிருந்த போது, வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே அவர்களது விற்களும் காணப்பட்டன.(6) அந்த இரவில், அவர்களது நாண்கயிறுகளின் நாணொலியும், அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், (ஒன்றாகக் கலந்து) கோடையின் முடிவிலான மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமான பேரொலியாக இருந்தன.(7) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த இரவுப்போரானது மேகத் திரள்களின் குவியலுக்கு ஒப்பாக இருந்தது. நாண்கயிறுகளின் நாணொலியும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும் அதன் {மேகக்குவியலின்} முழக்கமாக இருந்தன. (போர்வீரர்களின்) விற்கள் அதன் மின்னல் கீற்றுகளாகவும்; கணைமாரிகள் அதன் மழைப்பொழிவாகவும் இருந்தன.(8) மலையைப் போல அசையாமல் நின்றவனும், மலைகளின் இளவரசனுடைய பலத்தைக் கொண்டவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனும், விகர்த்தனன் {சூரியனின்} மகனுமான அந்தக் கர்ணன், தன் மீது ஏவப்பட்ட அற்புதமான கணைமழையை அழித்தான்.(9) உமது மகன்களின் நன்மையில் அர்ப்பணிப்புக் கொண்ட அந்த உயர் ஆன்ம வைகர்த்தனன் {கர்ணன்}, அந்தப் போரில் இடியின் சக்தி கொண்ட வேல்களாலும், அழகிய தங்கச் சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகளாலும் தன் எதிரிகளைத் தாக்கத் தொடங்கினான்.(10) விரைவில் சிலரது கொடிமரங்கள் கர்ணனால் வெட்டப்பட்டன, வேறு சிலரின் உடல்கள் துளைக்கப்பட்டுக் கூரிய கணைகளைக் கொண்டு அவனால் {கர்ணனால்} சிதைக்கப்பட்டன; விரைவில் சிலர் சாரதிகளை இழந்தனர், சிலர் தங்கள் குதிரைகளை இழந்தனர்.(11)
அந்தப் போரில் சூதன் மகனால் {கர்ணனால்} மிகவும் பீடிக்கப்பட்ட பலர், யுதிஷ்டிரனின் படைக்குள் நுழைந்தனர். அவர்கள் அணிபிளக்கப்பட்டுப் புறமுதுகிடக் கட்டாயப்படுத்தப்படுவதைக் கண்ட கடோத்கசகன் சினத்தால் வெறிகொண்டவனானான்.(12) தங்கத்தாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தன் சிறந்த தேரில் ஏறிய அவன் {கடோத்கசன்} உரத்த சிங்க முழக்கம் செய்தபடியே, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணனை அணுகி, இடியின் சக்தி கொண்ட கணைகளால் அவனைத் துளைத்தான்.(13) அவர்கள் இருவரும், முள்பதித்த கணைகள் {கர்ணிகள்}, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, தவளைமுகக் கணைகள் {சிலீமுகங்கள்}, நாளீகங்கள், தண்டங்கள், அசனிகள், கன்றின் பல் {வத்ஸதந்தங்கள்}, அல்லது பன்றியின் காது போன்ற தலை கொண்ட கணைகள் {வராஹகர்ணங்கள்}, அகன்ற தலை கொண்ட கணைகள் {பல்லங்கள், விபாண்டங்கள்}, கொம்புகள் போன்ற கூரிய கணைகள் {சிருங்கங்கள்}, கத்திகளைப் போன்ற தலைகளைக் கொண்ட பிற கணைகள் {க்ஷுரப்ரங்கள்} ஆகியவற்றால் ஆகாயத்தை மறைக்கத் தொடங்கினர்.(14)
அந்தக் கணைமாரியால் மறைந்த ஆகாயமானது, அதனூடாகத் தங்கச் சிறகுகளையும், சுடரும் காந்தியையும் கொண்ட கணைகள் கிடைமட்டமாகச் சென்றதன் விளைவால், அழகிய மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போலக் காட்சியளித்தது.(15) சம ஆற்றல் கொண்ட அவர்கள் ஒவ்வொருவரும், பலமிக்க ஆயுதங்களால் சமமாகவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அந்தப் போரில் அவ்வீரர்கள் இருவரில் ஒருவரிடமும் {ஒருவர் மேல் ஒருவர்} ஆதிக்கமடைவதற்கான அறிகுறியை எவரும் காணவில்லை.(16) உண்மையில், சூரியன் மகனுக்கும் {கர்ணனுக்கும்}, பீமனின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது, அடர்த்தியான, கனமான ஆயுத மழையால் வகைப்படுத்தப்பட்டு மிக அழகாகத் தெரிந்தது. மேலும் ஆகாயத்தில் ராகுவுக்கும், சூரியனுக்கும் இடையில நடக்கும் கடும் மோதலைப் போன்ற ஒப்பற்ற காட்சியை அஃது அளித்தது.”(17)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயுதமறிந்தோர் அனைவரிலும் முதன்மையான அந்தக் கடோத்கசன், கர்ணனைத் தன்னால் விஞ்சமுடியவில்லை என்பதைக் கண்ட போது, கடுமையானதும், வலிமையானதுமான ஆயுதம் ஒன்றை அவன் {கடோத்கசன்} இருப்புக்கு அழைத்தான்.(18) அந்த ஆயுதத்தால், அந்த ராட்சசன் {கடோத்கசன்} முதலில் கர்ணனின் குதிரைகளையும், பிறகு பின்னவனின் {கர்ணனின்} சாரதியையும் கொன்றான். அந்தச் சாதனையை அடைந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} விரைவில் கண்ணுக்குப் புலப்படாதவனாகத் தன்னை ஆக்கிக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.(19)
அப்போது திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வஞ்சக வழிகளில் போரிட்டுக் கொண்டிருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்} இப்படி மறைந்த போது, ஓ! சஞ்சயா, என் படையின் போர்வீரர்கள் என்ன நினைத்தனர்?” என்று கேட்டான்.(20)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த ராட்சசன் மறைவதைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், “வஞ்சகமாகப் போரிடும் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, அடுத்துத் தோன்றும்போது நிச்சயம் கர்ணனைக் கொன்றுவிடுவான்” என்று உரக்கச் சொன்னார்கள்.(21) ஆயுதப் பயன்பாட்டில் அற்புத நளினத்தைக் கொண்ட கர்ணன், அப்போது கணைமாரிகளால் அனைத்துப் பக்கங்களையும் மறைத்தான். அந்த அடர்த்தியான கணைமாரியால் உண்டான இருளானது, ஆகாயத்தை மறைத்ததால் உயிரினங்கள் அனைத்தும் கண்களுக்குப் புலனாகாதவையாக ஆகின.(22) அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, எப்போது தன் விரல்களால் தனது அம்பறாத்தூணிகளைத் தீண்டினான்? எப்போது நாண்கயிற்றில் தன் அம்புகளைப் பொருத்தினான்? எப்போது குறி பார்த்து அவற்றை ஏவினான்? என்பனவற்றை எவரும் காணமுடியாத அளவுக்கு அவன் {கர்ணன்} வெளிப்படுத்திய கர நளினம் மிகப்பெரியதாக இருந்தது. அப்போது மொத்த ஆகாயமும் கணைகளால் மறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தது.(23)
பிறகு அந்த ராட்சசனால், கடுமையான, பயங்கரமான ஒரு மாயை ஆகாயத்தில் உண்டாக்கப்பட்டது. சுடர்மிக்க நெருப்பின் கடுந்தழலுக்கு ஒப்பாகத் தோன்றிய சிவப்பு மேகங்களின் திரளை நாங்கள் வானத்தில் கண்டோம்.(24) அந்த மேகத்திலிருந்து, ஓ! குரு மன்னா {திருதராஷ்டிரரே}, மின்னலின் கீற்றுகளும், சுடர்மிக்கப் பந்தங்கள் பலவும் வெளிவந்தன. ஆயிரம் பேரிகைகள் ஒரே சமயத்தில் முழக்கப்படுவதைப் போன்ற பிரம்மாண்டமான ஒலி அதனில் இருந்து வெளிவந்தது.(25) தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகள் பலவும், ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள், கனமான தண்டங்கள் {உலக்கைகள்}, அதே போன்ற பிற ஆயுதங்கள், போர்க்கோடரிகள், எண்ணெயில் கழுவப்பட்ட {எண்ணெயில் தீட்டப்பட்ட} கத்திகள், சுடர்மிக்க முனைகளைக் கொண்ட கோடரிகள், சூலங்கள்,(26) ஒளிரும் கதிர்களை வெளியிடும் முள்பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, இரும்பாலான அழகிய கதாயுதங்கள், கூர்முனைகளைக் கொண்ட நீண்ட ஈட்டிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, இழைகளால் சுற்றிலும் பின்னப்பட்ட கனமான கதாயுதங்கள், சதக்னிகள் ஆகியன அதனில் இருந்து சுற்றிலும் பாய்ந்தன.(27) பெரும் பாறைகள் அதனில் இருந்து விழுந்தன. உரத்த வெடிச்சத்தம் கொண்ட ஆயிரக்கணக்கான வஜ்ரங்களும், நெருப்பின் காந்தியைக் கொண்ட நூற்றுக்கணக்கான சக்கரங்களும், கத்திகளும் அதனில் இருந்து பாய்ந்தன.(28)
கணைமாரிகளை ஏவிக்கொண்டிருந்த கர்ணன், அடர்த்தியானதும், சுடர்மிக்கதுமான ஈட்டிகள், வேல்கள், வாள்கள் மற்றும் கதாயுதங்களின் மழையை அழிக்கத் தவறினான்.(29) அந்தக் கணைகளால் கொல்லப்பட்டு விழுந்த குதிரைகளாலும், வஜ்ரத்தால் தாக்கப்பட்ட வலிமைமிக்க யானைகளாலும், பிற ஆயுதங்களால் உயிரை இழந்த பெரும் தேர்வீரர்களாலும் ஏற்பட்ட பெரும் ஆரவாரமானது பேரொலியாக இருந்தது.(30) அந்தக் கணை மாரியைக் கொண்டு கடோத்கசனால் சுற்றிலும் பீடிக்கப்பட்ட துரியோதனின் படையானது, பெரும் வலியோடு களத்தில் திரிவது காணப்பட்டது.(31) மிகவும் உற்சாகமற்று, “ஓ”, “ஐயோ” என்ற கதறல்களுடன் திரிந்து கொண்டிருந்த அந்தப் படை அழிவடையும் தருணத்தில் இருப்பதாகத் தெரிந்தது. எனினும் தலைவர்கள் தங்கள் இதயத்தின் உன்னதத்தன்மையால், களத்தில் முகம் திருப்பித் தப்பி ஓடாமல் இருந்தனர்.(32) அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மாயையால் உண்டாக்கப்பட்டதும், மிகப் பயங்கரமானதும் அஞ்சத்தக்கதுமான அந்த வலிமையான ஆயுதங்களின் மழை களத்தில் பாய்வதைக் கண்டும், பரந்த தங்கள் படை இடையறாமல் கொல்லப்படுதவதைக் கண்டும் உமது மகன்கள் பேரச்சம் கொண்டனர்.(33)
நெருப்பைப் போன்ற சுடர்மிக்க நாக்குகளுடன், பயங்கரமாகக் கூச்சலிடும் நரிகள் ஊளையிடத் தொடங்கின. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூச்சலிடும் ராட்சசர்களைக் கண்ட (கௌரவப்) போர்வீரர்கள் உற்சாகத்தைப் பெரிதும் இழந்தனர்.(34) தீ நாவுகளையும், சுடர்மிக்க வாய்களையும், கூரிய பற்களையும், மலை போன்ற பெரிய வடிவங்களையும் கொண்டு ஆகாயத்தில் ஈட்டிகளைப் பிடித்து நின்ற அந்தப் பயங்கர ராட்சசர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தெரிந்தனர்.(35) அந்தக் கடுங்கணைகளாலும், ஈட்டிகள், வேல்கள், கதாயுதங்கள், சுடர்மிக்கக் காந்தி கொண்ட பரிகங்கள், வஜ்ரங்கள், பினாகங்கள், அசனிகள், சக்கரங்கள், சதக்னிகள் ஆகியவற்றாலும் அந்த (கௌரவத்) துருப்புகள் தாக்கப்பட்டு, நசுக்கப்பட்டு விழத் தொடங்கன.(36) அந்த ராட்சசர்கள், உமது மகனுடைய {துரியோதனனுடைய} போர்வீரர்களின் மீது நீண்ட ஈட்டிகளையும் {சூலங்களையும்}, பாகுகளையும், சதக்னிகளையும், உருக்காலானதும், சணல் இழைகளால் பின்னப்பட்டதுமான ஸ்தூணங்களையும் பொழியத் தொடங்கினர். அப்போது போராளிகள் அனைவரும் மலைப்பை அடைந்தனர்.(37) ஆயுதங்கள் உடைந்து, அல்லது தங்கள் பிடியில் இருந்து ஆயுதங்கள் தளர்ந்த நிலையை அடைந்த வீரப் போர்வீரர்கள், தங்கள் தலைகளை இழந்தும், அல்லது தங்கள் அங்கங்கள் உடைந்தும், போர்க்களத்தில் விழத்தொடங்கினர். பாறைகள் விழுந்ததன் விளைவால், குதிரைகள், யானைகள் மற்றும் தேர்கள் ஆகியன நசுங்கத் தொடங்கின.(38) கடோத்கசனின் மாயா சக்தியால் உண்டான பயங்கர வடிவிலான யாதுதானர்கள், பயந்தவர்களையோ, தஞ்சம் கேட்டவர்களையோ கூட விடாமல் [1] வலிமைமிக்க அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தனர்.(39)
காலனால் நடத்தப்பட்ட குருவீரர்களின் அந்தக் கொடூரமான படுகொலையின்போது, அந்த க்ஷத்திரியர்களின் அழிவின் போது, திடீரென அணிபிளந்து வேகமாகத் தப்பி ஓடிய கௌரவப் போர்வீரர்கள்,(40) “கௌரவர்களே ஓடுங்கள். யாவும் தொலைந்தன. இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களே பாண்டவர்களுக்காக நம்மைக் கொல்கின்றனர்” என்று உரக்கக் கூச்சலிட்டனர். அந்நேரத்தில் மூழ்கும் பாரதத் துருப்புகளைக் காக்க எவரும் இருக்கவில்லை.(41) அந்தக் கடும் ஆரவாரம், முறியடிப்பு மற்றும் கௌரவர்களின் அழிவின் போது, எத்தரப்பு என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு {படை} முகாம்கள் தங்கள் தனித்தன்மைகளை இழந்தன.(42) உண்மையில்,படைவீரர்கள் ஒருவருக்கொருவர் எந்தக் கருணையும் பார்க்காத அந்தப் பயங்கர அழிவின் போது, களத்தின் எந்தத் திசையைக் கண்டாலும், அது வெறுமையாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணன் மட்டுமே அந்த ஆயுத மழையில் மூழ்கிய நிலையில் அங்கே தெரிந்தான்.(43)
அப்போது கர்ணன் அந்த ராட்சசனின் தெய்வீக மாயையுடன் மோதி தன் கணைகளால் ஆகாயத்தை மறைத்தான். பணிவுள்ளவனும், மிகக் கடினமான சாதனைகளைச் செய்பவனும், உன்னதச் செயல்களைப் புரிபவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் தன் உணர்வுகளை இழக்காதிருந்தான்.(44) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் உணர்வுகளை நிலைக்கச் செய்த கர்ணனை, சைந்தவர்கள் மற்றும் பாஹ்லீகர்கள் அனைவரும் அச்சத்துடன் பார்த்தனர். ராட்சசனின் {கடோத்கசனின்} வெற்றியைக் கண்டவாறே {கண்டாலும்}, அவர்கள் அனைவரும் அவனை {கர்ணனை} வழிபட்டனர்.(45) பிறகு, கடோத்கசனால் ஏவப்பட்டதும், சக்கரங்களுடன் கூடியதுமான ஒரு சதக்னியானது, கர்ணனின் நான்கு குதிரைகளையும் அடுத்தடுத்துக் கொன்றது. உயிர், பற்கள், கண்கள் மற்றும் நாவுகளை இழந்த அவை, மூட்டுகள் மடங்கிப் பூமியில் விழுந்தன.(46) அப்போது குதிரைகளற்ற தன் தேரில் இருந்து கீழே குதித்த கர்ணன், கௌரவப் படை ஓடுவதையும், அந்த ராட்சச மாயையால் தன் தெய்வீக ஆயுதம் கலங்கடிக்கப்பட்டதையும் கண்டு, தன் உணர்வுகளை இழக்காமல், மனத்தை உள்முகமாகத் திருப்பி, அடுத்ததாக என்ன செய்யப்பட வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினான்.(47)
அந்த நேரத்தில் கர்ணனையும் (ராட்சசனால் உண்டாக்கப்பட்ட) அந்தப் பயங்கர மாயையையும் கண்ட கௌரவர்கள் அனைவரும், “ஓ! கர்ணா, உனது ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொண்டு இந்த ராட்சசனை விரைந்து கொல்வாயாக. இந்தக் கௌரவர்களும், தார்தராஷ்டிரர்களும் அழிவின் விளிம்பில் இருக்கின்றனர்.(48) பீமனும், அர்ஜுனனும், நம்மை என்ன செய்வார்கள்? இந்த நள்ளிரவில் நம் அனைவரையும் எரிக்கும் இந்தப் பொல்லாத ராட்சசனைக் கொல்வாயாக. இந்தப் பயங்கர மோதலில் இன்று தப்புபவர்களே போரில் பார்த்தர்களோடு போரிடுவார்கள்.(49) எனவே, வாசவன் {இந்திரன்} உனக்கு அளித்த அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} இந்தப் பயங்கர ராட்சசனை இப்போது கொல்வாயாக. ஓ! கர்ணா, இந்தப் பெரும்போர்வீரர்கள், இந்தக் கௌரவர்கள், இந்திரனுக்கு ஒப்பான இளவரசர்கள் ஆகியோர் அனைவரும் இந்த இரவு போரில் அழியாதிருக்கட்டும்” என்று கூச்சலிட்டனர்.(50) அந்த நள்ளிரவில், கர்ணன், அந்த ராட்சசன் {கடோத்கசன்} உயிரோடிருப்பதையும், குரு படை அச்சத்தில் பீடிக்கப்பட்டிருப்பதையும் கண்டும், பின்னவர்களின் உரத்த ஓலங்களையும் கேட்டும், தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏவுவதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(51)
கோபக்கார சிங்கம் ஒன்றைப் போலச் சினத்தால் தூண்டப்பட்டவனும், அந்த ராட்சசர்களின் தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான கர்ணன், கடோத்கசனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பி, வெற்றியைத் தரும் வெல்லப்பட முடியாத ஈட்டிகளில் {சக்திகளில்} முதன்மையான அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} எடுத்துக் கொண்டான்.(52) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக வருடக்கணக்கில் சூதன் மகனால் {கர்ணனால்} வழிபடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்ததும், ஈட்டிகளில் முதன்மையானதும், பின்னவனின் {கர்ணனின்} காது குண்டலங்களுக்கு மாற்றாகச் சக்ரனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும்,(53) இழைகளால் பின்னப்பட்டுச் சுடர்விடும் பயங்கரமான ஏவுகணையும், குருதி தாகம் கொண்டதாகத் தெரிந்ததும், அந்தகனின் நாக்கைப் போன்றதும், அல்லது மிருத்யுவின் சகோதரியைப் போன்றதும், பயங்கரமானதும், பிரகாசமானதுமான அந்த ஈட்டியையே {சக்தி ஆயுதத்தை}, இப்போது வைகர்த்தனன் {கர்ணன்}, அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மீது ஏவினான்.(54)அற்புதமானதும், சுடர்மிக்கதும், எதிரிகள் ஒவ்வொருவரின் உடலையும் துளைக்கவல்லதுமான அந்த ஆயுதத்தைச் சூதன் மகனின் {கர்ணனின்} கரங்களில் கண்ட ராட்சசன் {கடோத்கசன்}, விந்திய மலைகளின் காலைப் போன்ற பெரும் உடல் அளவை ஏற்று, அச்சத்துடன் தப்பி ஓடத் தொடங்கினான்.(55) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் கரங்களில் அந்த ஈட்டியைக் கண்டவையும், வானத்தில் இருந்தவையுமான உயிரினங்கள் அனைத்தும் உரக்கக் கூச்சலிட்டன. காற்று சீற்றத்துடன் பாயத் தொடங்கியது, உரத்த வெடிச்சத்தத்துடன் கூடிய இடிகள் பூமியின் மீது விழத் தொடங்கின.(56) கடோத்கசனின் சுடர்மிக்க மாயையை அழித்து, சரியாக அவனது மார்பைத் துளைத்துச் சென்ற அந்தப் பிரகாசமான ஈட்டியானது {சக்தி ஆயுதமானது}, அந்த இரவில் வானத்தில் உயரப் பறந்து வான்வெளியின் நட்சத்திரக்கூட்டங்களுக்குள் நுழைந்தது.(57) பல்வேறு அழகிய தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தி, ராட்சச வீரர்கள் பலருடனும், மனிதப் போர்வீரர்களுடனும் போரிட்ட அந்தக் கடோத்கசன், பயங்கரமாகப் பல்வேறு வகையில் அலறி, சக்ரனின் அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} உயிரிழந்து கீழே விழுந்தான்.(58)அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிரிகளின் அழிவுக்காக மற்றொரு அற்புத சாதனையைச் செய்தான்; அந்நேரத்தில், அந்த ஈட்டியால் இதயம் பிளக்கப்பட்ட அவன் {கடோத்கசன்}, ஒரு வலிமைமிக்க மலையைப் போன்றோ, மேகங்களின் குவியலைப் போன்றோ பிரகாசித்தான்.(59) உண்மையில், பயங்கரச் செயல்களைப் புரியும் அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அச்சந்தரும் அந்தப் பயங்கர வடிவை ஏற்ற பிறகே கீழே விழுந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அவன் மடிகையில் உமது படையின் ஒரு பகுதியின் மேல் விழுந்து, அந்தத் துருப்புகளைத் தன் உடலின் கனத்தால் நசுக்கினான்.(60) வேகமாகக் கீழே விழுந்தவனும், மேலும் விரிவடைந்து கொண்டிருந்த பெரும் உடலுடன் கூடியவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, பாண்டவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, தன் இறுதி மூச்சிலும் ஒரு முழு அக்ஷௌஹிணி அளவிலான உமது துருப்புகளைக் கொன்றான்.(61) அப்போது சிங்க முழக்கங்களாலும், சங்கு முழக்கங்களாலும், பேரிகைகள் மற்றும் முரசுகளின் ஒலியாலும் அங்கே உரத்த ஆரவாரம் எழுந்தது. உண்மையில், கௌரவர்கள், அந்த ராட்சசனின் மாயை அழிக்கப்பட்டதையும், ராட்சசன் கொல்லப்பட்டதையும் கண்டு மகிழ்ச்சியால் பேராரவாரம் செய்தனர்.(62) பிறகு கர்ணன், (அசுரன்} விருத்திரனைக் கொன்ற சக்ரன் {இந்திரன்} மருத்தர்களால் வழிபடப்பட்டது போலக் குருக்களால் வழிபடப்பட்டு, உமது மகனின் {துரியோதனனின்} தேரில் ஏறி, அனைவராலும் பார்க்கப்பட்டவாறே குரு படைக்குள் நுழைந்தான்” {என்றான் சஞ்சயன்}.(63)
கிருஷ்ணசூழ்ச்சிகள்! – துரோண பர்வம் பகுதி – 180-பாண்டவர்களின் துக்கம்; கிருஷ்ணனின் மகிழ்ச்சி; தகாத தருணத்தில் மகிழ்வதன் காரணத்தைக் கிருஷ்ணனிடம் கேட்ட அர்ஜுணன்; கிருஷ்ணனின் பதில்; கிருஷ்ணன், பாண்டவர்களின் எதிரிகள் அனைவரையும், எவ்வாறு படிப்படியாகக் கொல்லச் செய்தான் என்பதை அவனே அர்ஜுனனுக்குச் சொல்வது; சூழ்ச்சியுடன் கொல்லப்பட்ட ராட்சசர்களின் பட்டியலில் கடோத்கசனையும் இணைக்கும் கிருஷ்ணன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிளக்கப்பட்ட மலையைப் போலக் கொல்லப்பட்டுக் கிடக்கும் ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனைக்} கண்ட பாண்டவர்கள் அனைவரும் துயரால் நிறைந்து, கண்ணீரைச் சொரியத் தொடங்கினர்.(1) வாசுதேவன் {கிருஷ்ணன்} மட்டுமே மகிழ்ச்சியான போக்கைக் கடைப்பிடித்துப் பாண்டவர்களைத் துயருறச் செய்யும் வகையில், சிங்க முழக்கங்கள் செய்யத் தொடங்கினான்.(2) உண்மையில் அவன் {கிருஷ்ணன்}, உரக்க முழங்கிக் கொண்டே அர்ஜுனனைத் தழுவி கொண்டான். குதிரைகளின் கடிவாளங்களைக் கட்டிவிட்டு, சிங்க முழக்கங்களைச் செய்தபடியே(3) அவன் {கிருஷ்ணன்}, புயலால் அசைக்கப்பட்ட மரத்தைப் போல மகிழ்ச்சியான போக்கில் கூத்தாடத் தொடங்கினான். பிறகு மீண்டும் அர்ஜுனனைத் தழுவிக் கொண்டும், மீண்டும் மீண்டும் தன் கக்கங்களைத் தட்டிக் கொண்டும் இருந்தவனும்,(4) பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான அச்யுதன் {கிருஷ்ணன்}, தேர்த்தட்டில் நின்று கொண்டு மீண்டும் முழங்கத் தொடங்கினான்.
கேசவன் {கிருஷ்ணன்} வெளிப்படுத்திய அந்த மகிழ்ச்சிக் குறிகளைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்},(5) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதயத் துயரத்துடன் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உண்மையில், சற்றும் தகாத இந்நேரத்தில், அதுவும் ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} இறந்ததால் கவலையில் இருக்கும் இத்தருணத்தில், பெரும் மகிழ்ச்சியை நீ காட்டுகிறாயே.(6) கடோத்கசன் கொல்லப்பட்டதைக் கண்ட நமது துருப்புகள் அனைத்தும் ஓடுகின்றன.(7) நாங்களும், ஹிடிம்பை மகனின் {கடோத்கசனின்} வீழ்ச்சியால் துயரத்தில் நிறைந்திருக்கோம். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இத்தகு நேரத்தில் நீ இத்தகு மகிழ்ச்சியை அடைவதால், அதற்கு மிக முக்கியக் காரணமேதும் இருக்க வேண்டும்.(8) எனவே, ஓ! உண்மைநிறைந்த மனிதர்களில் முதன்மையானவனே, என்னால் கேட்கப்படும் நீ, (எது காரணம் என்பதில்} எனக்கு உண்மையைச் சொல்வாயாக. உண்மையில், அது ரகசியம் இல்லை என்றால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அதை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(9) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இன்று உன் கனத்தை {பெருமையை [அ] குணத்தை} அழிப்பது எது என்பதை எனக்குச் சொல்வாயாக. உனது இச்செயலானது, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்த உனது இதய மகழ்ச்சியானது, வறண்ட கடலைப் போலவோ, இடம்பெயர்ந்த மேருவையைப் போலவோ எனக்குத் தெரிகிறது” என்றான் {அர்ஜுனன்}.(10)
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “நான் உணரும் மகிழ்ச்சி பெரியதாக இருக்கிறது. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} கேட்பாயாக. நான் உனக்குச் சொல்லப் போவது உன் துயரத்தை உடனே விலக்கி, உன் இதயத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.(11) ஓ! பெருங்காந்தி கொண்டவனே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கடோத்கசனின் மூலம் தன் ஈட்டி {சக்தி ஆயுதம்} கலங்கடிக்கப்பட்ட அந்தக் கர்ணன், போரில் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டான் என்பதை அறிந்து கொள்வாயாக.(12) அந்த ஈட்டியுடன் {சக்தி ஆயுதத்துடன்}, போரில் கார்த்திகேயனைப் {முருகனைப்} போலத் தெரியும் அந்தக் கர்ணனின் எதிரில் நிற்கக் கூடிய மனிதன் எவனும் இவ்வுலகில் இல்லை[1].(13) அவனது {கர்ணனது} (இயற்கையான) கவசம் வாங்கப்பட்டது நற்பேறாலேயே. பொய்க்காத அவனது ஈட்டி {சக்தி ஆயுதம்} கடோத்கசனின் மூலம் இப்போது கலங்கடிக்கப்பட்டதும் நற்பேறாலேயே.(14) (இயற்கையான) தனது கவசத்தைப் பூண்டவனும், (இயற்கையான) தனது காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தன் புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவனுமான கர்ணனால், தேவர்களுடன கூடிய மூன்று உலகங்களையும் தனியாகவே வென்றுவிட முடியும்.(15) வாசவனோ {இந்திரனோ}, குபேரனோ, நீர்நிலைகளின் தலைவனான வருணனோ, யமனோ கூட அவனை {கர்ணனை} அணுகத் துணிய முடியாது.(16) உண்மையில், அந்த மனிதர்களில் காளை {கர்ணன்}, தனது கவசத்தையும், காது குண்டலங்களையும் கொண்டிருந்தால், காண்டீவத்தை வளைக்கும் உன்னாலோ, சுதர்சனம் என்றழைக்கப்படும் என் சக்கரத்தை உயர்த்தும் என்னாலோ கூடப் போரில் அவனை {கர்ணனை} வெல்ல முடியாது[2].(17)
மாயையின் உதவியோடு கூடிய சக்ரனால் {இந்திரனால்}, உனது நன்மைக்காகவே, கர்ணன் காது குண்டலங்களை இழக்கச் செய்யப்பட்டான். அதுபோலவே பகை நகரங்களை அடக்குபவனான அவன் {கர்ணன்}, தனது (இயற்கை) கவசத்தையும் இழக்கச் செய்யப்பட்டான். உண்மையில், கர்ணன் தன் (இயற்கை) கவசத்தை வெட்டி எடுத்துச் சக்ரனிடம் {இந்திரனிடம்} கொடுத்ததாலேயே அவன் வைகர்த்தனன் என்று அழைக்கப்படலானான்[3].(19) இப்போது, மந்திரத்தால் கடும் நஞ்சு முறிக்கப்பட்ட கோபக்காரப் பாம்பைப் போலவோ, மென் தழல்களைக் கொண்ட நெருப்பைப் போலவோ கர்ணன் எனக்குத் தெரிகிறான்.(20) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, உயர் ஆன்ம சக்ரன் {இந்திரன்}, கர்ணனின் காதுகுண்டலங்களுக்கும், தெய்வீக கவசத்திற்கும் மாற்றாக {தற்போது} கடோத்கசனைக் கொன்ற அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} எப்போது பின்னவனுக்கு {கர்ணனுக்குக்} கொடுத்தானோ, எப்போது அதை விருஷன் {கர்ணன்} பெற்றானோ, அந்த நேரத்தில் இருந்து போரில் கொல்லப்பட்டவனாகவே நான் {அர்ஜுனனான} உன்னைக் கருதினேன்[4].(21,22) ஆனால், ஓ! பாவமற்றவனே, இப்போதும் அந்த வீரன் {கர்ணன்}, உன்னைத் தவிர வேறு எவனாலும் கொல்லத்தகாதவனாகவே இருக்கிறான் என்பதை நான் உனக்குச் சத்தியமாகச் சொல்கிறேன்.(23}
பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு, உண்மை நிறைந்த பேச்சு, தவ ஈடுபாடு, நோன்புகள் நோற்பு, எதிரிகளிடமும் அன்புடன் இருப்பது போன்ற இந்தக் காரணங்களுக்காகவே கர்ணன் விருஷன் என்று அழைக்கப்படுகிறான்.(24) போரில் வீரத்துடனும், வலிமைமிக்கக் கரங்களுடனும், எப்பொதும் உயர்த்தப்பட்ட வில்லுடனும் கூடிய கர்ணன், காட்டில் யானைக்கூட்டத்தின் தலைமை யானைகளைக் கொல்லும் சிங்கத்தைப் போல, எப்போதும் போர்க்களத்தில் பெரும் தேர்வீரர்களின் செருக்கை அழித்து, யாராலும் பார்க்க முடியாத நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பாக இருக்கிறான்.(25,26) உனது படையின் போர்வீரர்களில் முதன்மையானோர் மற்றும் சிறப்புமிக்கோர் அனைவருடனும் போரிடும் கர்ணன், ஓ! மனிதர்களில் புலியே, தன் கணை மாரியை ஏவுகையில் ஆயிரம் கதிர்களைக் கொண்ட கூதிர்காலத்துச் சூரியனைப் போலத் தெரிகிறான்.(27) உண்மையில், கோடையின் முடிவில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தன் கணைமாரிகளை இடையறாமல் பொழியும் கர்ணன், தெய்வீக ஆயுதங்களைப் பொழியும் மேகத்தைப் போலத் தெரிகிறான்.(28) அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரியைப் பொழியும் அவன் {கர்ணன்}, போரில் தேவர்களாலேயே வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். அவன் {கர்ணன்}, தேவர்களுடன் போரிட்டால், அவர்களின் சதையும், இரத்தமும் களத்தில் அபரிமிதமாக விழும் அளவுக்கு அவர்களைச் சிதைத்துவிடுவான்.(29)
எனினும் ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, தன் கவசங்களையும், காதுகுண்டலங்களையும் இழந்து, வாசவனால் {இந்திரனால்} அவனுக்கு அளிக்கப்பட்ட ஈட்டியையும் {சக்தி ஆயுதத்தையும்} இழந்து இருக்கும் கர்ணன் இப்போது ஒரு {சாதாரண} மனிதன் போன்றவனே (இனியும் அவன் தேவனைப் போன்றவன் அல்ல).(30) அவனைக் {கர்ணனைக்} கொல்வதற்கான ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும். அவனது {கர்ணனது} தேர்ச்சக்கரங்கள் பூமியில் புதையும் போது, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நீ, கவனமாக முயன்று, மற்றொரு வேலையில் ஈடுபட்டிருக்கும் அவனை {கர்ணனை}, அந்தப் பரிதாபகரமான நிலையில் கொல்ல வேண்டும். முன்பாகவே நான் அதை உனக்குச் சைகையால் உணர்த்துவேன். அதனால் எச்சரிக்கையடைந்து {விழிப்படையும்} நீ செயல்பட வேண்டும்.(31) {அசுரன்}பலனை வென்றவனும், வஜ்ரத்தைத் தரிப்பவனுமான அந்த வீரர்களில் முதன்மையானவனே {இந்திரனே கூட}, கையில் ஆயுதத்துடன் நிற்பவனும் வெல்லப்பட முடியாதவனுமான கர்ணனைக் கொல்ல இயலாது. உண்மையில், ஓ! அர்ஜுனா, ஜராசந்தன், சேதிகளின் சிறப்புமிக்க ஆட்சியாளன் {சிசுபாலன்}, ஏகலவ்யன் என்ற பெயரும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட அந்த நிஷாதன் ஆகியோரைப் பல்வேறு சூழ்ச்சிகளின் துணை கொண்டு [5], உனது நன்மைக்காகவே ஒருவர்பின் ஒருவராக நான் கொன்றேன். {அப்படியே}, ஹிடிம்பன், கிர்மீரன், ராட்சசர்களில் முதன்மையான பகன், எதிரி துருப்புகளைக் கலங்கடிக்கும் அலாயுதன், எதிரிகளை நசுக்குபவனும், கடும் செயல்களைச் செய்பவனுமான கடோத்கசன் [6] ஆகிய பிற பெரும் ராட்சசர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்” என்றான் {கிருஷ்ணன்}.(32,33)
“கடோத்கசனை நானே கொன்றிருப்பேன்!” என்ற கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 181-முன்பே பலராமனால் ஜராசந்தனின் கதாயுதம் அழிக்கப்பட்டதையும், அவனது வளர்ப்புத்தாயான ஜரை கொல்லப்பட்டதையும் சொன்ன கிருஷ்ணன்; கபடமாக ஏகலவ்யன் கட்டைவிரல் இழக்கச் செய்யப்பட்டது, சிசுபாலன் கொல்லப்பட்டது, ஹிடிம்பன் முதலான ராட்சசர்கள் கொல்லப்பட்டது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன்; கடோத்கசன் செய்த தீமைகளைச் சொல்லி, தானே அவனைக் கொல்ல வேண்டியிருந்த அவசியத்தை அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன்.
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “எங்களுக்கு நன்மை செய்யும்பொருட்டு, ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பூமியின் தலைவர்களான அந்த ஜராசந்தனும், பிறரும் எந்த வழிமுறைகளில் எவ்வாறு கொல்லப்பட்டனர்?” என்று கேட்டான்.(1)
அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஜராசந்தன், சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, நிஷாத மன்னனின் {ஹிரண்யதனுசின்} வலிமைமிக்க மகன் {ஏகலவ்யன்} ஆகியோர் கொல்லப்பட்டாமல் இருந்திருந்தால், அவர்கள் {நமக்குப்} பயங்கரமானவர்களாக இருந்திருப்பார்கள்.(2) துரியோதனன், (தன் தரப்பைத் தழுவும்) அந்த முதன்மையான தேர்வீரர்களைத் தேர்ந்தெடுத்திருப்பான், என்பதில் ஐயமில்லை. அவர்கள் நம்முடன் எப்போதும் பகைமையுடனே இருந்தனர், மேலும் அவர்கள் அனைவரும் கௌரவர்களின் தரப்பையே அடைந்திருப்பார்கள்.(3) அவர்கள் அனைவரும், வீரர்களாகவும், ஆயுதங்களில் சாதித்த வலிமைமிக்க வில்லாளிகளாகவும், போரில் உறுதிமிக்கவர்களாகவும் இருந்தனர். (ஆற்றலில்) தேவர்களைப் போன்ற அவர்கள், திருதராஷ்டிரரின் மகனை {துரியோதனனைப்} பாதுகாத்திருப்பார்கள்.(4). உண்மையில், சூதன் மகன் {கர்ணன்}, ஜராசந்தன், சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, நிஷாதன் மகன் {ஏகலவ்யன்} ஆகியோர் சுயோதனனின் {துரியோதனனின்} தரப்பை அடைந்து, மொத்த உலகையும் வெற்றி கொண்டிருப்பார்கள்.(5) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, எந்த வழிமுறைகளால் அவர்கள் கொல்லப்பட்டனர் என்பதைக் கேட்பாயாக. உண்மையில் வழிமுறைகளுடன் {உபாயங்களுடன்} செயல்படாவிட்டால், தேவர்களே கூடப் போரில் அவர்களை வெல்ல முடியாது.(6) அவர்களில் ஒவ்வொருவரும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, லோகபாலர்களின் பாதுகாப்பில் இருக்கும் தேவர்களின் மொத்த படையுடனும் போரிடக் கூடியவர்கள் ஆவர்.(7)
(ஒரு சந்தர்ப்பத்தில்) பலதேவரால் {பலராமரால்} தாக்கப்பட்ட ஜராசந்தன், கோபத்தால் தூண்டப்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் கொல்லவல்ல கதாயுதம் ஒன்றை எங்களை அழிப்பதற்காக {எங்கள் மீது} வீசினான்.(8) நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தக் கதாயுதமானது, சக்ரனால் {இந்திரனால்} வீசப்பட்ட வஜ்ரத்தின் மூர்க்கத்துடன், பெண்களின் கூந்தலைப் பிரிக்கும் வகிட்டைப் போல ஆகாயத்தைப் பிரித்துக் கொண்டு, எங்களை நோக்கி {மூர்க்கமாக} வந்து கொண்டிருந்தது.(9) எங்களை நோக்கி அப்படி வந்து கொண்டிருந்த அந்தக் கதாயுதத்தைக் கண்ட ரோஹிணியின் மகன் {பலராமர்}, அதைக் கலங்கடிப்பதற்காக ஸ்தூணகர்ணம் என்று அழைக்கப்படும் ஆயுதத்தை வீசினார்.(10) பலதேவருடைய ஆயுதத்தின் சக்தியால் வலுவிழந்த அந்தக் கதாயுதம், பூமியில் விழுந்து மலைகளையே நடுங்கச் செய்தபடி (அதன் வலிமையால்) அவளை {பூமியைப்} பிளந்தது.(11)
அப்போது ஜரை என்ற பெயரில் பெரும் ஆற்றலைக் கொண்ட ஒரு பயங்கர ராட்சசி இருந்தாள். ஓ! இளவரசே {அர்ஜுனா}, அவளே {அந்த ஜரையே} அந்த எதிரிகளைக் கொல்பவனை {ஜராசந்தனை} ஒருங்கிணைத்தவளாவாள். எனவே, பின்னவன் ஜராசந்தன் என்று அழைக்கப்பட்டான்.(12) ஜராசந்தன் ஒரு குழந்தையின் இரு பாகங்களால் ஆனவனாவான். அந்த இரு பாகங்களையும் ஜரை ஒருங்கிணைத்தாள் என்பதாலேயே அவன் ஜராசந்தன்[1] என்று அழைக்கப்படலானான்.(13) அப்போது பூமிக்குள் இருந்த அந்த ராட்சசப் பெண் {ஜரை}, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்தக் கதாயுதம் மற்றும் ஸ்தூணகர்ணம் என்ற ஆயுதம் ஆகியவற்றின் மூலம், தன் மகன் மற்றும் சொந்தங்களுடன் சேர்த்துக் கொல்லப்பட்டாள்.(14) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அந்தப் பெரும்போரில் தன் கதாயுதத்தை இழந்த[2] ஜராசந்தன், பின்னர் உன் முன்னிலையில் பீமசேனரால் கொல்லப்பட்டான்.(15) அந்த வீர ஜராசந்தன் தன் கதாயுதத்துடன் நின்றால், ஓ! மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, இந்திரனின் தலைமையிலான தேவர்களாலேயே கூடப் போரில் அவனைக் {ஜராசந்தனைக்} கொல்ல முடியாது.(16)
கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட நிஷாதன் மகனும் {ஏகலவ்யனும்}, அவனது ஆசானின் நிலையை ஏற்ற துரோணரால் உனது நன்மைக்காகவே கபடமாகத் தனது கட்டைவிரல் இழக்கச் செய்யப்பட்டான்.(17) செருக்கும், நிலையான ஆற்றலும் கொண்ட அந்த நிஷாதன் மகன் {ஏகலவ்யன்}, கையில் தோலுறைகளைப் பூட்டிக் கொண்டு, இரண்டாவது ராமனை {பரசுராமனைப் போலப்} பிரகாசமாகத் தெரிந்தான்.(18) கட்டைவிரலை இழக்காத ஏகலவ்யன், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, {ஒன்றாகச் சேர்ந்திருக்கும்} தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், உரகர்கள் ஆகியோராலும் போரில் வெல்லப்பட முடியாதவனாவான்.(19) உறுதியான பிடி கொண்டவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், இரவும் பகலும் இடையறாமல் கணையேவக்கூடியவனுமான அவன் {ஏகலவ்யன்}, சாதாரண மனிதர்களால் பார்க்கப்படக்கூட முடியாதவனாக {பார்க்கப்பட முடியாத அளவுகு சக்தியைக் கொண்டு} இருந்தான்.(20) உனது நன்மைக்காவே போர்க்களத்தில் என்னால் அவன் {ஏகலவ்யன்} கொல்லப்பட்டான்.
பெரும் ஆற்றலைக் கொண்ட சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, உன் கண் முன்பாகவே என்னால் கொல்லப்பட்டான்.(21) அவனும் {சிசுபாலனும்}, ஒன்றுசேர்ந்த தேவர்களாலும், அசுரர்களாலும் போரில் வெல்லப்பட முடியாதவனாகவே இருந்தான். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, உலகத்தின் நலனை விரும்பி, அவனையும் {சிசுபாலனையும்}, தேவர்களின் பிற எதிரிகளையும் உன் உதவியுடன் கொல்லவே நான் பிறப்பை எடுத்தேன். ஹிடிம்பன், பகன், கிர்மீரன் ஆகியோர் அனைவரும் பீமசேனரால் கொல்லப்பட்டனர்.(23) அந்த ராட்சசர்கள் அனைவரும் ராவணனின் பலத்தைக் கொண்டவர்களாகவும், பிராமணர்கள் மற்றும் வேள்விகளை அழிப்பவர்களாகவும் இருந்தனர். அதே போல, பெரும் மாயா சக்திகளைக் கொண்ட அலாயுதனும் ஹிடிம்பையின் மகனால் {கடோத்கசனால்} கொல்லப்பட்டான்.(24)
ஈட்டியுடன் {சக்திஆயுதத்துடன்} கூடிய கர்ணனின் மூலம் நானே வழிமுறைகளுடன் செயல்பட்டு ஹிடிம்பையின் மகனையும் {கடோத்கசனையும்} கொன்றேன். இந்தப் பெரும்போரில் தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொண்டு கர்ணன் அவனைக் {கடோத்கசனைக்} கொல்லாதிருந்தால்,(25) பீமசேனர் மகனான கடோத்கசனை நானே கொல்ல வேண்டி இருந்திருக்கும். உனக்கு நன்மை செய்ய விரும்பியே நான் முன்பே அவனை {கடோத்கசனைக்} கொல்லாதிருந்தேன்.(26) அந்த ராட்சன் {கடோத்கசன்}, பிராமணர்களுக்கும், வேள்விகளுக்கும் எதிரியாக இருந்தான். அவன் {கடோத்கசன்} வேள்விகளை அழிப்பவனாகவும், பாவகர ஆன்மாக் கொண்டவனாகவும் இருந்த காரணத்தால் தான் இவ்வாறு கொல்லப்பட்டான்.(27) ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, அந்தச் செயல்பாட்டையே {கடோத்கசனின் கொலையையே ஒரு} வழிமுறையாகக் கொண்டு, சக்ரனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்ட ஈட்டியும் {சக்தி ஆயுதமும்} பயனற்றதாகச் செய்யப்பட்டது.
ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீதியை {அறத்தைக்} கொல்பவர்கள் யாவரும் என்னால் கொல்லத்தக்கவர்களாவர்.(28) நீதியை {அறத்தை} நிலைநிறுத்துவதற்காகவே என்னால் அச்சபதம் செய்யப்பட்டது. வேதங்கள், உண்மை {சத்தியம்}, தற்புலனடக்கம், தூய்மை, நீதி {அறம்}, பணிவு, செழுமை, அறிவு {ஞானம்}, பொறுமை ஆகியவற்றை எங்கே எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறதோ,(29) அங்கே எப்போதும் நான் இருப்பேன். கர்ணனைக் கொல்வது குறித்து நீ கவலைகொள்ளத் தேவையில்லை. அவனை {கர்ணனை} நீ கொல்லும் வழிமுறைகளை நான் உனக்குச் சொல்வேன். விருகோதரும் {பீமரும்} சுயோதனனைக் {துரியோதனனைக்} கொல்வதில் வெல்வார்.(31) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அதை அடைய வேண்டிய வழிமுறைகளையும் நான் உனக்குச் சொல்வேன். அதே வேளையில் {இதோ பார்}, பகைவரின் படையால் உண்டாக்கப்படும் ஆரவாரமானது அதிகரித்து வருகிறது.(32) உனது துருப்புகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகின்றன. தங்களது நோக்கங்கள் நிறைவேறிய கௌரவர்கள் உன் படையை அழித்து வருகின்றனர். உண்மையில், தாக்குபவர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர் போரில் நம்மை எரித்து வருகிறார்” என்றான் {கிருஷ்ணன்}” {என்றான் சஞ்சயன்}.(33)
உறக்கமற்ற கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 182-அர்ஜுனன் மீது அந்த மரண ஈட்டியை கர்ணன் ஏன் முன்பே ஏவவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; கிருஷ்ணனின் கொள்கை உறுதியே அதற்குக் காரணம் எனச் சொன்ன சஞ்சயன்; சிறு எதிரிக்கு எதிராக அந்த ஈட்டியைப் பயன்படுத்திய கர்ணன் மற்றும் துரியோதனனின் மடமையால் துயருற்ற திருதராஷ்டிரன்; மரண ஈட்டியை ஏவ கௌரவர்கள் இரவில் தீர்மானித்திருந்தாலும், காலையில் அதை மறந்தனர் என்பதைச் சொன்ன சஞ்சயன்; இதே கேள்வியைக் கிருஷ்ணனிடம் கேட்ட சாத்யகி; கிருஷ்ணனின் பதில்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நிச்சயம் ஒருவரைக் கொல்லவல்ல ஓர் ஈட்டியை அந்தச் சூதன் மகன் {கர்ணன்} கொண்டிருந்தபோது, பிறர் அனைவரையும் விட்டுவிட்டு, பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏன் அவன் அஃதை ஏவவில்லை?(1) அந்த ஈட்டியால் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்ட பிறகு, சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். அப்படியிருக்கையில், பல்குனன் {அர்ஜுனன்} இறந்த பிறகு, ஏன் வெற்றி நமதாகாது?(2) போரிட அழைக்கப்பட்டால், அந்த அறைகூவலைத் தான் ஒருபோதும் மறுப்பதில்லை என்ற அளவுக்கு அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறான். எனவே, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பல்குனனை நிச்சயம் போருக்கு அழைத்திருக்க வேண்டும்.(3)
ஓ! சஞ்சயா, விருஷன் {கர்ணன்}, அந்தப் பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} தனிப்போரில் ஈடுபட்டாலும், சக்ரனால் {இந்திரனால்} தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} அவனை {அர்ஜுனனை} ஏன் கொல்லவில்லை என்பதை எனக்குச் சொல்வயாக.(4) என் மகன் {துரியோதனன்}, நுண்ணறிவு மற்றும் ஆலோசகர்கள் ஆகிய இரண்டும் அற்றவன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பொல்லாத பாவி {துரியோதனன்}, தொடர்ச்சியாக எதிரியால் கலங்கடிக்கப்படுகிறான். அப்படியிருக்கையில், தன் எதிரிகளை அவனால் எவ்வாறு வெல்ல முடியும்?(5) உண்மையில், அத்தகு வலிமைகொண்டதும், வெற்றியைத் தரவல்லதுமான அந்த ஈட்டி, ஐயோ, கடோத்கசன் மூலம் வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பலனற்றதாகச் செய்யப்பட்டதே.(6) உண்மையில், கை முடமான ஒரு முடவனின் கரத்தில் உள்ள கனி {பழம்} பலமிக்கவனால் பறிக்கப்படுவதைப் போலவே, கர்ணனின் கரத்தில் இருந்து அது {அந்த ஈட்டி} பறிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே அந்த மரண ஈட்டி {சக்தி ஆயுதம்} கடோத்கசனால் கனியற்றதாகச் செய்யப்பட்டது.(7)
பன்றிக்கும் நாய்க்கும் இடையிலான சண்டையில் அவ்விரண்டும் இறந்து போன பிறகு, வேடனே ஆதாயத்தை அடைவதைப் போல, ஓ! கற்றவனே {சஞ்சயா}, கர்ணனுக்கும், ஹிடிம்பையின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போரில் ஆதாயமடைந்தத்து வாசுதேவனே {கிருஷ்ணனே} என்று நான் நினைக்கிறேன்.(8) போரில் கடோத்கசன் கர்ணனைக் கொன்றால், அது பாண்டவர்களுக்குப் பெரும் ஆதாயத்தைக் கொடுக்கும். மறுபுறம், கர்ணன் கடோத்கசனைக் கொன்றால், கர்ணனின் ஈட்டி {சக்தி ஆயுதம்} இழக்கப்படுவதன் விளைவால் அதுவும் அவர்களுக்கே பெரும் ஆதாயத்தையே கொடுக்கும். பெரும் ஞானம் கொண்டவனும், மனிதர்களில் சிங்கமுமான அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் நன்மைக்கு ஏற்புடையதைச் செய்ய இவ்வழியில் சிந்தித்து, போரில் கர்ணனால் கடோத்கசன் கொல்லப்படும்படி செய்தான்” என்றான் {திருதராஷ்டிரன்}.(9,10)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணன் அடைய விரும்பிய சாதனையை அறிந்து கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை அழைத்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {அவனைக்} கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடச் செய்து, பின்னவனின் {கர்ணனின்} மரண ஈட்டியைக் கனியற்றதாகச் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையால் விளைந்தனவே.(11,12) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணன், கர்ணனின் கரங்களில் இருந்து வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், நாம் நிச்சயம் வெற்றியை அடைந்திருப்போம்.(13)
உண்மையில், ஓ! திருதராஷ்டிரரே, யோகியரின் தலைவனான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், தன் குதிரைகள், கொடிமரம், தேர் ஆகியவற்றோடு கூடிய அவன் {அர்ஜுனன்} போரில் அழிவை அடைந்திருப்பான்.(14) பல்வேறு வழிகளில் காக்கப்பட்டு, கிருஷ்ணனின் நல்ல துணையுடன் கூடிய அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை அணுகி அவர்களை வென்று வருகிறான்.(15) உண்மையில், கிருஷ்ணனே பார்த்தனை {அர்ஜுனனை} அந்த மரண ஈட்டியில் இருந்து பாதுகாத்தான், இல்லையெனில், மரத்தை அழிக்கும் மின்னலை {இடியைப்} போல அவ்வாயுதம் {அந்த சக்தி ஆயுதம்} குந்தியின் மகனை {அர்ஜுனனை} அழித்திருக்கும்” {என்றான் சஞ்சயன்}.(16)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் மகன் {துரியோதனன்}, சச்சரவில் விருப்பம் கொண்டவனாவான். அவனது ஆலோசகர்கள், மூடர்களாகவே இருக்கிறார்கள். அவனது {துரியோதனனது} ஞானமும் வீணானதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே, அர்ஜுனனின் நிச்சய மரணத்திற்கான இந்த உறுதியான வழிமுறைகள் கலங்கடிக்கப்பட்டிருக்கின்றன.(17) ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனனோ, ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான கர்ணனோ, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது அந்த மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏன் வீசவில்லை?(18) ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, பெரும் ஞானம் கொண்ட நீயும் இந்தப் பெரும்பொருளை {சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்துதல் என்ற நோக்கத்தைக்} கர்ணனுக்கு நினைவூட்டாமல் ஏன் மறந்தாய்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(19)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு இரவும், துரியோதனன், சகுனி, நான் மற்றும் துச்சாசனன் ஆகியோர் {ஆலோசனையின் போது} கவனமாகக் கருத்தில் கொள்ளும் பொருளாக அதுவே {அந்த ஈட்டியே} இருந்தது.(20) (நாங்கள் கர்ணனிடம்), “ஓ! கர்ணா, பிற போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டுத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக. பிறகு நாம் பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் நம் அடிமைகளாகக் கொள்ளும் தலைவர்களாவோம்.(21) அல்லது, பார்த்தன் {அர்ஜுனன்} வீழ்ந்த பிறகு, விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பாண்டு மகன்களில் ஒருவரை (அவனுடைய {அர்ஜுனனுடைய} இடத்தில் நிறுத்திப் போரிட) நியமித்தானென்றால், அந்தக் கிருஷ்ணனே கொல்லப்பட வேண்டும்.(22)
கிருஷ்ணனே பாண்டவர்களின் ஆணிவேராவான். பார்த்தன் அதனில் {அந்த ஆணி வேரில்} வளர்ந்த மரம் போன்றவனாவான். பிருதையின் {குந்தியின்} பிற மகன்கள் அதன் கிளைகளாவர், அதே வேளையில் பாஞ்சாலர்கள் அதன் இலைகள் என்று அழைக்கப்படலாம்.(23) பாண்டவர்கள் கிருஷ்ணனையே தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளனர்; கிருஷ்ணனையே தங்கள் வலிமையாகவும், கிருஷ்ணனையே தங்கள் தலைவனாகவும் அவர்கள் கொண்டுள்ளனர். உண்மையில், நட்சத்திரக்கூட்டங்களுக்கு ஒரு சந்திரனைப் போல, கிருஷ்ணனே அவர்களது மைய ஆதாரமாக இருக்கிறான். எனவே, ஓ! சூதன் மகனே {கர்ணா}, இலைகள், கிளைகள், மரம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, எங்கும், எக்காலத்திலும் கிருஷ்ணனையே பாண்டவர்களின் ஆணிவேர் என்று அறிந்து கொள்வாயாக” என்று {கர்ணனிடம் நாங்கள்} சொன்னோம்.(25)
உண்மையில், கர்ணன், யாதவர்களை மகிழ்விக்கும் அந்தத் தசார்ஹ குலத்தோனை {கிருஷ்ணனைக்} கொன்றிருந்தால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மொத்த உலகமும் உமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.(26) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாதவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் மகிழ்விக்கும் அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, உயிரை இழந்து பூமியில் கிடக்கும்படி செய்யப்பட்டால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலைகள், கடல்கள் காடுகள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த உலகமும் உமது மேலாதிக்கத்தைக் கொண்டதாக நிச்சயம் ஆகியிருக்கும்.(27) தேவர்களின் தலைவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான அந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைக்} குறித்த இத்தகு தீர்மானத்துடனேயே நாங்கள் ஒவ்வொரு காலையிலும் எழுந்தோம். எனினும், போரின் போது நாங்கள் எங்கள் தீர்மானத்தை மறந்தோம்.(28)
கேசவனே {கிருஷ்ணனே} குந்தியின் மகனான அர்ஜுனனை எப்போதும் பாதுகாக்கிறான். அவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனைப் போரில் ஒரு போதும் சூதன் மகன் {கர்ணன்} முன்பு நிறுத்தவில்லை [1].(29) உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அச்யுதன் {கிருஷ்ணன்}, நம்மைக் கொண்டே நமது மரண ஈட்டியை எவ்வாறு கனியற்றதாக்குவது என்று சிந்தித்து, பிற முதன்மையான தேர்வீரர்களையே கர்ணனுக்கு முன்பாக நிறுத்தினான் [2].(30) மேலும், உயர் ஆன்ம கிருஷ்ணன், கர்ணனிடம் இருந்து {அர்ஜுனனை} இவ்வகையில் காக்கும்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்} தன்னைத் தானே ஏன் காத்துக் கொள்ள மாட்டான்?(31) நன்றாகச் சிந்தித்தால், கையில் சக்கரம் தாங்கிய வீரனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வெல்ல இயன்ற எவனும் மூவுலகிலும் இல்லை என்பதையே நான் காண்கிறேன்”.(32)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தேர்வீரர்களில் புலியும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான சாத்யகி, பெரும் தேர்வீரனான கர்ணனைக் குறித்து, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம், “ஓ! ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, அளவில்லா சக்தி கொண்ட அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தைப்} பல்குனர் {அர்ஜுனர்} மீது ஏவ வேண்டும் என்பதே கர்ணனின் உறுதியான தீர்மானமாகும். எனினும், அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அஃதை ஏன் அவர் {அர்ஜுனர்} மீது ஏவவில்லை” என்று கேட்டான்.(34)
அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன் – சாத்யகியிடம்}, “துச்சாசனன், கர்ணன், சகுனி, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அவர்களின் தலைமையில் நின்ற துரியோதனன் ஆகியோர் அடிக்கடி (இதைக் குறித்துக் கர்ணனிடம் பேசி),(35) “ஓ! கர்ணா, ஓ! பெரும் வில்லாளியே, ஓ! போரில் அளவிலா ஆற்றலைக் கொண்டவனே, ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணனே}, பெரும் தேர்வீரனான குந்தியின் மகன் பார்த்தன், அல்லது தனஞ்சயன் {அர்ஜுனன்} மீதன்றி வேறு எவர் மீதும் இந்த ஈட்டி ஏவப்படக்கூடாது. தேவர்களுக்கு மத்தியில் வாசவனை {இந்திரனைப்} போல அவனே அவர்களில் {பாண்டவர்களில்} மிகவும் கொண்டாடப்படுபவன் ஆவான்.(36,37) அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுவிட்டால், சிருஞ்சயர்களுடன் கூடிய பிற பாண்டவர்கள் அனைவரும் நெருப்பற்ற தேவர்களைப் போல[3] உற்சாகமற்றவர்களாவார்கள்” என்றனர்.(38) “அப்படியே ஆகட்டும்” என்று அஃதை ஏற்றான் கர்ணன். ஓ! சிநிக்களில் காளையே {சாத்யகி}, காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்வதே கர்ணனின் இதயத்தில் எப்போதும் இருந்தது.(39) எனினும் நான், ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, எப்போதும் ராதையின் மகனை {கர்ணனை} மலைக்கச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதன் காரணமாகவே அவன் {கர்ணன்}, வெண்குதிரைகள் கொண்ட பாண்டு மகனின் {அர்ஜுனனின்} மீது அந்த ஈட்டியை வீசவில்லை.(40)ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, பல்குனனின் {அர்ஜுனனின்} மரணத்திற்கு ஏதுவான வழிமுறைகளைக் கலங்கடிக்காதவரை {என் விழிகளில்} உறக்கத்தையோ, என் இதயத்தில் மகிழ்ச்சியையோ நான் கொள்ளவில்லை.(41) எனவே, கடோத்கசனின் மூலம் அந்த ஈட்டி பயனற்றதானதைக் கண்ட பிறகே, ஓ! சிநிக்களில் காளையே {சாத்யகி}, மரணத்தின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து தனஞ்சயன் {அர்ஜுனன்} இன்று மீட்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.(42) போரில் பீபத்சுவுடைய {அர்ஜுனனுடைய} பாதுகாப்பின் அளவுக்கு என் தந்தை, என் தாய், நீங்கள் {யாதவர்கள்}, என் சகோதரர்கள் ஆகியோரையும், ஏன் என் உயிரையே கூடத் தகுந்ததாக நான் கருதவில்லை.(43)
மூவுலகங்களின் அரசுரிமையை விட மதிப்புமிக்க ஏதாவது இருந்தாலும் கூட, ஓ! சாத்வதா {சாத்யகி}, (என்னோடு அதைப் பகிர்ந்து கொள்ள) பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} இல்லாமல் அதை நான் (அனுபவிக்க) விரும்பவில்லை.(44) எனவே, மரணத்தில் இருந்து மீண்டவனைப் போலத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு, ஓ! யுயுதானா {சாத்யகி}, இந்த மகிழ்ச்சிப் போக்கு எனதானது {இப்படி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறேன்}.(45) இதற்காகவே கர்ணனோடு போரிட நான் அந்த ராட்சசனை {கடோத்கசனை} அனுப்பினேன். இரவில் கர்ணனோடு போரிட்டு தாக்குப்பிடிக்கவல்லவன் {கடோத்கசனைத் தவிர வேறு} எவனும் இருக்கவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(46)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நன்மையிலும், அவனுக்கு ஏற்புடையதிலும் எப்போதும் அர்ப்பணிப்புள்ள அந்தத் தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, அந்தச் சந்தர்ப்பத்தில் சாத்யகியிடம் இப்படியே பேசினான்” {என்றான் சஞ்சயன்}.(47)
யுதிஷ்டிரனுக்கு ஆறுதலளித்த வியாசர்! – துரோண பர்வம் பகுதி – 183-: விதி, தங்கள் சொந்த மடமை மற்றும் கிருஷ்ணனின் கொள்கை ஆகியவையே கௌரவர்களின் தோல்விக்குக் காரணம் எனத் திருதராஷ்டிரன் சொல்வது; கடோத்கசனின் வீழ்ச்சியில் யுதிஷ்டிரனின் துயரம்; கர்ணனை எதிர்த்து கோபத்துடன் விரைந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை அணுகி ஆறுதலளித்த வியாசர்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! ஐயா {சஞ்சயா}, கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரின் இந்தச் செயல்பாட்டையும், குறிப்பாக உனது செயல்பாட்டையும் கொள்கை விதிகளுக்கு முரணானதாக {அநீதியாக} நான் காண்கிறேன்.(1) உண்மையில் அந்த ஈட்டியானது {சக்தி ஆயுதமானது}, போரில் ஒருவனை எப்போதும் கொல்லும் என்பதையும், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களாலும் அது தாங்கிக்கொள்ளப் பட முடியாதது, அல்லது கலங்கடிக்கப்பட முடியாதது என்பதையும் நீங்கள் அறிந்திருந்தாலும்,(2) ஓ! சஞ்சயா, தேவகியின் மகனுடனோ {கிருஷ்ணனுடனோ}, பல்குனனுடனோ {அர்ஜுனனுடனோ} முன்பே கர்ணன் போரிட்ட போது, ஏன் அவன் {கர்ணன்} அஃதை ஏவவில்லை?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(3)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஒவ்வொரு நாளும் போரில் இருந்து நாங்கள் அனைவரும் திரும்பியதும், ஓ! ஏகாதிபதி, ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, இரவில் விவாதித்து, கர்ணனிடம், “ஓ! கர்ணா, நாளை காலையில், ஓ! கர்ணா, இந்த ஈட்டியானது கேசவன் {கிருஷ்ணன்} மீதோ, அர்ஜுனன் மீதோ ஏவப்பட வேண்டும்” என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம் [1].(4,5) எனினும், காலை விடிந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விதியின் காரணமாகக் கர்ணனும், பிற தேர்வீரர்களும் அந்தத் தீர்மானத்தை மறந்தனர்.(6) கைகளில் அந்த ஈட்டியைக் கொண்டிருந்தும், பார்த்தனையோ {அர்ஜுனனையோ}, தேவகியின் மகனான கிருஷ்ணனையோ கர்ணன் கொல்லவில்லை என்பதால் விதியே உயர்ந்தது என நான் நினைக்கிறேன்.(7) உண்மையில், விதியால் அவனது {கர்ணனின்} அறிவு பீடிக்கப்பட்டதாலேயே, வாசவனின் {இந்திரனின்} மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தைத்} தன் கையில் கொண்டிருந்தாலும், தேவர்களின் மாயையில் மயங்கிய அவன் {கர்ணன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தேவகியின் மகனான கிருஷ்ணனின் அழிவுக்காக அவன் {கிருஷ்ணன்} மீதோ, இந்திரனின் ஆற்றலைக் கொண்ட பார்த்தனின் மீதோ அதை வீசவில்லை” {என்றான் சஞ்சயன்}.(8,9)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “விதியாலும், உங்கள் சொந்த புத்தியாலும், கேசவனாலும் {கிருஷ்ணனாலும்} நீங்கள் அழிவை அடைந்தீர்கள். துரும்பைப் போன்று முக்கியத்துவமற்ற கடோத்கசனைக் கொல்லச் செய்து வாசவனின் {இந்திரனின்} ஈட்டியைத் தொலைத்துவிட்டீர்கள்.(10) இந்தப் பெரும் விவேகமற்ற செயலின் மூலமாக, பிற மன்னர்களைப் போலவே கர்ணனும், என் மகன்களும் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குள் நுழைந்துவிட்டார்கள்.(11) ஹிடிம்பை மகனின் {கடோத்கசனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் எவ்வாறு போர் நடைபெற்றது என்பதை எனக்கு இப்போது சொல்வாயாக.(12) துரோணரை எதிர்த்து விரைந்தவர்களும், தாக்குவதில் நல்ல திறன் பெற்றவர்களுமான சிருஞ்சயர்களும், பாஞ்சாலர்களும் போரிடுவதற்காக எவ்வாறு அணிவகுத்தனர்?(13)
பூரிஸ்ரவஸ் மற்றும் தன் உயிரையே துச்சமாக மதித்த ஜெயத்ரதன் ஆகியோரின் கொலையால் கோபத்தால் தூண்டப்பட்டு, கொட்டாவி விடும் புலியைப் போன்றோ, வாயை அகல விரித்திருந்த காலனுக்கோ ஒப்பாக அவர்களை எதிர்த்து, அவர்களது படைக்குள் ஊடுருவிய துரோணரின் தாக்குதலை, பாண்டுக்களும், சிருஞ்சயர்களும் எவ்வாறு தாக்குப் பிடித்தனர்?(14,15) ஓ! ஐயா {சஞ்சயா}, துரோணரைப் பாதுகாத்தவர்களான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், கிருபர் மற்றும் துரியோதனன் தலைமையிலான பிறர் ஆகியோர் என்ன செய்தனர்?(16) ஓ! சஞ்சயா, பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல வேண்டிய தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகியோரின் கணைகளை எனது போர்வீரர்கள் அந்தப் போரில் எவ்வாறு மறைத்தனர்?(17) தங்கள் தரப்பு இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மரணத்தால் கோபமடைந்தவர்களும், கடோத்கசனின் மரணத்தால் கோபமடைந்தவர்களுமான ஒவ்வொருவரும் அந்த இரவுப்போரை எவ்வாறு போரிட்டனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(18)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் ராட்சசன் கடோத்கசன் கர்ணனால் கொல்லப்பட்டதும், மகிழ்ச்சியால் நிறைந்த உமது துருப்பினர் அனைவரும் உரக்க முழங்கினர்.(19) இரவின் அந்த இருட்டு வேளையில் அவர்கள், பாண்டவத் துருப்புகள் மீது மூர்க்கமாகப் பாய்ந்து அவர்களைக் கொல்லத் தொடங்கினர். இவை யாவற்றையும் கண்ட மன்னன் யுதிஷ்டிரன் பெரிதும் உற்சாகத்தை இழந்தான்.(20)
பிறகு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டு மகன் {யுதிஷ்டிரன்}, பீமசேனனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பீமா}, தார்தராஷ்டிரப் படையைத் தடுப்பாயாக.(21) ஹிடிம்பை மகன் {கடோத்கசன்} கொல்லப்பட்டதன் விளைவால், பெரும் மயக்கம் என்னை ஆட்கொள்கிறது” என்றான் {யுதிஷ்டிரன்}. இப்படி அவன் {யுதிஷ்டிரன்}, பீமசேனனிடம் ஆணையிட்டுவிட்டுத் தன் தேரில் அமர்ந்தான்.(22) கண்ணீர் நிறைந்த முகத்துடன் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு பெரிதும் உற்சாகத்தை இழந்தான்.(23)
இந்த அளவுக்குப் பீடிக்கப்பட்ட அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட கிருஷ்ணன் இந்த வார்த்தைகளை {அவனிடம்} சொன்னான்: “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, இத்தகு துயரம் உமதாக வேண்டாம். ஓ! பாரதர்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, சாதாரணமானவனைப் போல இப்படி நீர் உற்சாகத்தை இழப்பது உமக்குத் தகாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எழுவீராக, போரிடுவீராக. ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, கனமான சுமையைச் சுமப்பீராக {பெரும் பொறுப்பை ஏற்பீராக}.(24,25) உற்சாகமற்ற நிலை உம்மை மூழ்கடித்தால், நமது வெற்றி உறுதியற்றதாகவிடும்” என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தர்மனின் மகன் யுதிஷ்டிரன்,(26) தன் கரங்களால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கிருஷ்ணனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, கடமையின் சிறந்த பாதையை நான் அறியாதவனல்ல.(27) பிறர் கரங்களில் பெற்ற சேவைகளை {உதவிகளை} மறந்தவன், பிராமணனைக் கொன்றதால் ஏற்படும் கொடும் விளைவுகளை அடைவான். நாங்கள் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த போது, ஹிடிம்பையின் உயர் ஆன்ம மகன் {கடோத்கசன்} வெறும் குழைந்தையே எனினும்,(28) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவன் எங்களுக்குப் பல சேவைகளைச் செய்தான். வெண்குதிரைகளைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைவதற்காகச் சென்றுவிட்டான் என்பதை அறிந்த(29) அந்தப் பெரும் வில்லாளி (கடோத்கசன்), ஓ! கிருஷ்ணா, காம்யகத்திலிருந்த என்னிடம் வந்தான். தனஞ்சயன் {அர்ஜுனன்} திரும்பி வரும் வரை அவன் {கடோத்கசன்} எங்களோடே வசித்தான்.(30)
அடைவதற்கரிய காடுகளுக்குச் சென்ற போது, களைத்துப் போயிருந்த பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} தன் முதுகில் அவனே {கடோத்கசனே} சுமந்து வந்தான்.(31) ஓ! தலைவா {கிருஷ்ணா}, அவன் அடைந்த சாதனைகள், அவன் போர்முறைகள் அனைத்திலும் திறம்பெற்றவன் என்பதைக் காட்டுகின்றன. உண்மையில், அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கடோத்கசன்}, என் நன்மைக்காகவே பல கடினமான சாதனைகளை அடைந்தான்.(32) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சகாதேவனிடம் நான் இயல்பாகக் கொண்டுள்ளதைப் போன்று, இரு மடங்கு பாசத்தை நான் ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசன் மீது கொண்டிருந்தேன்.(33) அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் என்னிடம் அர்ப்பணிப்புடன் இருந்தான். நான் அவனது அன்புக்குரியவனாக இருந்தேன். அவனும் எனக்கு அன்புக்குரியவனாக இருந்தான். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, இதற்காகவே துயரால் எரிந்து நான் இப்படி உற்சாகத்தை இழந்திருக்கிறேன்.(34)
ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நம் துருப்புகள் கௌரவர்களால் பீடிக்கப்பட்டு முறியடிக்கப்படுவதைப் பார்ப்பாயாக. வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரும், கர்ணனும் போரில் ஊக்கத்தோடு போரிடுவதைப் பார்ப்பாயாக.(35) மதங்கொண்ட இரு யானைகளால் பரந்த புதர்க்காடு நசுக்கப்படுவதைப் போல இந்த நள்ளிரவில் பாண்டவப்படை நசுக்கப்படுவதைப் பார்ப்பாயாக.(36)
ஓ! மாதவா {கிருஷ்ணா}, பீமசேனனுடைய கரங்களில் வலிமையையும், பார்த்தன் {அர்ஜுனன்} கொண்டிருக்கும் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களையும் அலட்சியம் செய்தபடியே கௌரவர்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகின்றனர் {அல்லவா?}.(37) அதோ, போரில் அந்த ராட்சசனை {கடோத்கசனைக்} கொன்றுவிட்டு, துரோணர், கர்ணன் மற்றும் மன்னன் துரியோதனன் ஆகியோர் உரக்க முழங்குகின்றனர்.(38) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நாங்களும், நீயும் உயிரோடிருக்கும்போதே, சூதன் மகனோடு {கர்ணனோடு} போரிட்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} கொல்லப்பட்டான்.(39) சவ்யசச்சின் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கம்போதே, நமக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி, பெரும்பலம் மிக்கப் பீமசேனன் மகனான ராட்சசன் கடோத்கசனைக் கர்ணன் கொன்றுவிட்டான்.(40)
தீய தார்தராஷ்டிரர்களால் அபிமன்யு கொல்லப்பட்ட போது, ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்கத் தேர்வீரனான சவ்யசச்சின் {அர்ஜுனன்} போர்க்களத்தில் இருக்கவில்லை.(41) நாங்கள் அனைவரும் சிந்துக்களின் சிறப்புமிக்க ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} தடுக்கப்பட்டிருந்தோம். தன் மகனுடன் (அஸ்வத்தாமனுடன்) கூடிய துரோணரே, அந்தச் செயலுக்குக் காரணமாக அமைந்தார்.(42) ஆசானே {துரோணரே} கர்ணனிடம் அபிமன்யுவைக் கொல்வதற்கான வழிமுறைகளைச் சொன்னார். அபிமன்யு வாளுடன் போராடிக் கொண்டிருந்த போது, ஆசானே அந்த ஆயுதத்தை வெட்டினார்.(43) {அபிமன்யு} அத்தகு பரிதாப நிலையில் வீழ்ந்திருந்த போது, கிருதவர்மன், (அந்தப் பிள்ளையின்) குதிரைகளையும், இரண்டு பார்ஷினி சாரதிகளையும் மிகக் கொடூரமாகக் கொன்றான்.(44) அதன்பிறகே பெரும் வில்லாளிகளான பிறர் சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றனர். ஓ! கிருஷ்ணா, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சிறு குற்றத்திற்காகக் காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான்.
ஓ! யாதவர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, அச்செயல் {ஜெயத்ரதனின் கொலை} எனக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கவில்லை. எதிரிகளைக் கொல்வது நியாயமென்றால், அது பாண்டவர்களால் அடையப்பட வேண்டுமென்றால்,(46) இதற்கு {அதாவது ஜெயத்ரதனைக் கொல்வதற்கு} முன்பாகத் துரோணரும், கர்ணனும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இதையே நான் நினைக்கிறேன். நம் துன்பங்களுக்கு அவ்விருவரே ஆணிவேராக இருக்கின்றனர்.(47) போரில் அவ்விருவரையும் (தன் கூட்டாளிகளாக) அடைந்த சுயோதனன் {துரியோதனன்}, நம்பிக்கையை அடைந்தான் {தைரியமடைந்தான்}. உண்மையில், துரோணரோ, தன்னைப் பின்தொடர்பவர்களுடன் கூடிய சூதன் மகனோ {கர்ணனோ}(48) கொல்லப்பட வேண்டிய போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்விவகாரத்தில் மிகத் தொலைவான தொடர்பைக் கொண்ட {அதாவது நெருங்கிய தொடர்பற்றச்} சிந்து மன்னனை {ஜெயத்ரதனைக்} கொன்றான். சூதன் மகனை {கர்ணனை} நிச்சயம் நான் தண்டிக்க வேண்டும்.(49) எனவே, ஓ! வீரா {கிருஷ்ணா}, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல இப்போது நான் போரிடப் போகிறேன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன் இப்போது துரோணரின் படைப்பிரிவுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான்” என்று மறுமொழி கூறினான் {யுதிஷ்டிரன்}.(50)
கிருஷ்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன யுதிஷ்டிரன், கர்ணனை எதிர்த்து வேகமாகச் சென்று, உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்து, தன் சங்கைக் கடுமையாக முழக்கினான்.(51) பிறகு, ஆயிரம் தேர்கள், முன்னூறு யானைகள், ஐயாயிரம் குதிரைகள் ஆகியவற்றுடன் கூடிய பாஞ்சால மற்றும் பிரபத்ரகப் படையொன்றால் சூழப்பட்ட சிகண்டி, அம்மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றான். யுதிஷ்டிரனின் தலைமையிலான கவசம் பூண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், தங்கள் பேரிகைகளையும், சங்குகளையும் முழக்கினர். அந்த நேரத்தில் வலிய கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(52-54) “அதோ யுதிஷ்டிரர், கோபத்தால் நிறைந்து, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பி, பெரும் வேகத்தோடு செல்கிறார். இதில் நீ அவரை {யுதிஷ்டிரரைச்} சார்ந்திருப்பது முறையாகாது” என்றான்.(55) இதைச் சொன்ன ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, குதிரைகளை வேகமாகத் தூண்டினான். உண்மையில் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மன்னனை {யுதிஷ்டிரனைத்} தொடர்ந்து சென்ற போது அவன் {யுதிஷ்டிரன்} மிகத்தொலைவை அடைந்திருந்தான்.(56)
அந்த நேரத்தில் துயரில் பீடிக்கப்பட்டிருந்த மனத்தைக் கொண்டிருந்தவனும், நெருப்பால் எரிக்கப்பட்டது போலத் தெரிந்தவனும், சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பி வேகமாக விரைந்தவனுமான தர்மனின் மகனான யுதிஷ்டிரனைக் கண்டு, அவனை {யுதிஷ்டிரனை} அணுகிய வியாசர் அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(57) வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “போரில் கர்ணனுடன் மோதியிருப்பினும் பல்குனன் {அர்ஜுனன்} இன்னும் வாழ்வது நற்பேறாலேயே. உண்மையில் கர்ணன், சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கொல்லும் விருப்பத்திலேயே தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தை}வைத்திருந்தான்.(58) ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, ஜிஷ்ணு {அர்ஜுனன்} கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடாதது நற்பேறாலேயே. அந்நிலையில் ஒருவரையொருவர் அறைகூவி அழைக்கும் அவர்கள் தங்கள் தெய்வீக ஆயுதங்களை அனைத்து பக்கங்களிலும் ஏவி இருப்பார்கள்.(59) சூதன் மகனுடைய {கர்ணனுடைய} ஆயுதங்களை அர்ஜுனன் அழித்திருப்பான். பின்னவனால் {அர்ஜுனனால்} பீடிக்கப்படும் முன்னவன் {கர்ணன்}, ஓ! யுதிஷ்டிரா, அந்தப் போரில் நிச்சயம் இந்திரனின் ஈட்டியை வீசியிருப்பான்.(60) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, (இது நடந்திருந்தால்) உனது துயரம் இன்னும் பெரிதாக இருந்திருக்கும். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {யுதிஷ்டிரா}, சூதன் மகனால் {கர்ணனால்} போரில் அந்த ராட்சசன் {கடோத்கசன்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே.(61) உண்மையில், வாசவனின் {இந்திரனின்} ஈட்டியைக் கருவியாக மட்டுமே கொண்டு காலனே கடோத்கசனைக் கொன்றான். ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, போரில் அந்த ராட்சசன் {கடோத்கசன்} உனது நன்மைக்காகவே கொல்லப்பபட்டான்.(62)
ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கோபவசப்படாதே, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாதே. ஓ! யுதிஷ்டிரா, இதுவே இவ்வுலகின் உயிரினங்கள் அனைத்திற்குமான முடிவாகும்.(63) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உன் தம்பிகளுடனும், (உனது படையின்) சிறப்புமிக்க மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து கௌரவர்களுடன் போரிடுவாயாக.(64)
இன்றிலிருந்து ஐந்தாம் நாளில் பூமி உனதாகும். ஓ! மனிதர்களில் புலியே, எப்போதும் அறம் குறித்தே {நல்லதையே} நினைப்பாயாக.(65) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மகிழ்ச்சியான இதயத்துடன் (அனைத்து உயிரினங்களிடமும்) அன்பு, தவம், ஈகை, பொறுமை மற்றும் உண்மை ஆகியவற்றைப் பயில்வாயாக. நீதி {அறம், தர்மம்} எங்கிருக்குமோ, அங்கே தான் வெற்றியிருக்கும்” என்றார் {வியாசர்}. பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன வியாசர், அப்போதே அங்கேயே மறைந்து போனார்” {என்றான் சஞ்சயன்}.(66)
கடோத்கசவத பர்வம் முற்றும்
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply