ஸ்ரீ மஹாபாரதம் -சல்லிய பர்வம்-ஹிரதப் பிரவேச பர்வம்-கதா யுத்த பர்வம்-

தடாகத்திற்குள் நுழைந்த துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 29-(சம்ஸ்க்ருதத்தில் ஹ்ரதம் என்றால் பெரிய நீர்நிலை என்ற பொருளாம். எனவே, தடாகநுழைவு என்று இந்த உபபர்வத்திற்குப் பொருள் கொள்ளலாம்.)தன் படையைத் தூண்டிய துரியோதனன்; எஞ்சியிருந்த கௌரவர்களை அழித்த பாண்டவர்கள்; பாண்டவர்களிடம் எஞ்சியிருந்த துருப்புகளின் எண்ணிக்கை; சஞ்சயனைக் கொல்ல எத்தனித்த சாத்யகி; சாத்யகியைத் தடுத்த வியாசர்; துரியோதனனைக் கண்ட சஞ்சயன்; தடாகத்தில் நுழைந்த துரியோதனன்; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனைச் சந்தித்த சஞ்சயன்; கௌரவர்களுக்கு ஏற்பட்ட அழிவைக்கேட்டு முகாமில் இருந்த அரசகுடும்பத்து மகளிர் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது; யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஹஸ்தினாபுரம் சென்ற யுயுத்சு; விதுரனைச் சந்தித்த யுயுத்சு; யுயுத்சுவின் அமைதியின்மை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதன்பிறகு, ஓ! ஏகாதிபதி, சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்கள் சினத்தால் நிறைந்தனர். அந்தப் பயங்கரப் போரில் அவர்கள், தங்கள் உயிர்களையும் விட ஆயத்தமாகி, பாண்டவர்களைத் தடுக்கத் தொடங்கினர்.(1) சகாதேவனின் வெற்றிக்குத் துணை சேர்க்க விரும்பிய அர்ஜுனனும், பெரும் சக்தி கொண்ட பீமசேனனும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புக்கு ஒப்பாக அந்தப் போர்வீரர்களை வரவேற்க {எதிர்க்கத்} தொடங்கினர்.(2) தனஞ்சயன் {அர்ஜுனன்}, சகாதேவனைக் கொல்ல விரும்பியவர்களும், ஈட்டிகள், வாள்கள் வேல்கள் ஆகியவற்றைத் தரித்திருந்தவர்களுமான அந்தப் போர்வீரர்களின் நோக்கத்தைத் தன் காண்டீவத்தால் கலங்கடித்தான்.(3) அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, கையில் ஆயுதங்களுடன் விரைந்து வந்த அந்தப் போராளிகளின் குதிரைகளையும், கரங்களையும், சிரங்களையும் தன் அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} வெட்டி வீழ்த்தினான்.(4) பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரர்களின் குதிரைகள் சவ்யசச்சினால்{அர்ஜுனனால்} தாக்கப்பட்டுப் பூமியில் விழுந்து தங்கள் உயிரை விட்டன.(5)தன் துருப்புகளின் பேரழிவைக் கண்ட மன்னன் துரியோதனன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்தவனானான். இன்னும் பல நூறுகளாக இருந்த அவனது எஞ்சிய தேர்களையும்,(6) மேலும் தன் யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்களையும் ஒன்றாகத் திரட்டிய உமது மகன் {துரியோதனன்}, அந்தப் போர்வீரர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(7) “நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் கூடிய பாண்டவர்கள் அனைவரோடும், தன் துருப்புகளுடன் கூடிய பாஞ்சால இளவரசனோடும் {திருஷ்டத்யும்னனோடும்} மோதி வேகமாக அவர்களைக் கொன்றுவிட்டுப் போரில் இருந்து திரும்புவீராக” என்றான்.(8) அவனது ஆணையை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள், உமது மகனுடைய ஆணையின் பேரில் அந்தப் போரில் பார்த்தர்களை எதிர்த்து மீண்டும் சென்றனர்.(9) எனினும், பாண்டவர்கள், கௌரவப்படையில் எஞ்சியிருப்பவர்களும், அந்தப் பயங்கரப் போரில் தங்களை எதிர்த்து இவ்வாறு வேகமாக விரைந்து வந்தவர்களுமான அந்தப் போர்வீரர்களை, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தங்கள் கணைகளால் மறைத்தனர்.(10)

போரிட வந்த அந்தப் படையினர், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, ஒரு பாதுகாவலனை அடையத் தவறியவர்களாக, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களால் ஒரு கணத்தில் அழிக்கப்பட்டனர்.(11) அந்தப் படையால் எழுப்பப்பட்ட புழுதியுடன், (கௌரவக்) குதிரைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததன் விளைவால், முக்கிய மற்றும் துணைத் திசைகளுக்கிடையில் வேறுபாட்டைக் காண முடியவில்லை.(12) பாண்டவ வியூகத்தில் இருந்து வெளியே வந்த பல போர்வீரர்கள், ஓ! பாரதரே, அந்தப் போரில் ஒரு கணத்தில் உமது துருப்பினரைக் கொன்றனர்.(13) ஓ! பாரதரே, உமது மகனால் {துரியோதனனால்} பதினோரு  {11} அக்ஷௌஹிணி துருப்புகள் திரட்டப்பட்டிருந்தன. ஓ! தலைவா, அவையனைத்தும் பாண்டுக்களாலும், சிருஞ்சயர்களாலும் கொல்லப்பட்டன.(14) உமது தரப்பைச் சேர்ந்த பல்லாயிரம் உயர் ஆன்ம மன்னர்களில், ஓ! ஏகாதிபதி, இப்போது துரியோதனன் மட்டுமே அதிகக் காயங்களுடன் உயிரோடு காணப்பட்டான்.(15)

துரியோதனன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் சுழலவிட்டு, பூமி வெறுமையாக இருப்பதையும், துருப்புகள் அனைத்தையும் தான் இழந்து நிற்பதையும், அதே வேளையில், பாண்டவர்கள் தங்கள் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியதன் விளைவால் உரக்க முழங்கிக் கொண்டு அந்தப் போரில் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதையும் கண்டு, ஓ! ஏகாதிபதி, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களால் ஏவப்பட்ட கணைகளின் விஸ் ஒலிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திகைத்து நின்றான். துருப்புகளையும், விலங்குகளையும் இழந்த அவன், தன் இதயத்தைக் களத்தில் இருந்து பின்வாங்குவதில் நிலைநிறுத்தினான்” {என்றான் சஞ்சயன்}.(16-18)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் துருப்புகள் கொல்லப்பட்டு, நமது முகாம் முற்றிலும் வெறுமையானபோது, ஓ! சூதா {சஞ்சயா}, பாண்டவர்களிடம் எஞ்சியிருந்து துருப்புகளின் பலம் என்ன? நான் இஃதை அறிய விரும்புகிறேன். எனவே, ஓ! சஞ்சயா, (உரைப்பதில்) திறன்மிக்கவனான நீ எனக்கு அதைச் சொல்வாயாக.(19) மேலும், ஓ! சஞ்சயா, பூமியின் தலைவனும், பலரில் எஞ்சியிருக்கும் ஒரே ஒருவனும், எனது மகனுமான அந்தத் தீயத் துரியோதனன், தன் படை அழிக்கப்பட்டபோது என்ன செய்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களின் வலிமைமிக்கப் படையில் எஞ்சியிருந்தது இரண்டாயிரம் {2000} தேர்களும், எழுநூறு {700} யானைகளும், ஐயாயிரம் {5000} குதிரைகளும், பத்தாயிரம் {10,000} காலாட்படை வீரர்களும் ஆகும். திருஷ்டத்யும்னன், இந்தப் படையைக் கவனித்துக் கொண்டு, அந்தப் போரில் காத்திருந்தான்.(21,22) அதேவேளையில், ஓ! பாரதர்களின் தலைவரே, தேர்வீரர்களில் முதன்மையானவனான மன்னன் துரியோதனனோ, எந்தவொரு போர்வீரனையும் தன் தரப்பில் காணவில்லை.(23) பூமியின் தலைவனான அந்தத் துரியோதனன், ஓ! ஏகாதிபதி, தன் எதிரிகள் உரக்க முழங்குவதையும, தன் படையின் அழிவையும் கண்டு, எந்தத் துணைவனும் இல்லாதவனாக, கொல்லப்பட்ட தன் குதிரையைக் கைவிட்டுவிட்டு, களத்தைவிட்டுக் கிழக்குத் திசையை நோக்கித் தப்பி ஓடினான்.(24) பதினோரு அக்ஷௌஹிணிகளின் தலைவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் துரியோதனன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஒரு தடாகத்தை நோக்கி காலாளாகத் தப்பி ஓடினான்.(25)

காலாளாக அதிகத் தொலைவைக் கடப்பதற்கு முன், அம்மன்னன் {துரியோதனன்}, புத்திசாலியும், அறவோனுமான விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(26) ’பெரும் ஞானம் கொண்டவரான விதுரர், க்ஷத்திரியர்களுக்கும், நமக்கும் போரில் ஏற்படப்போகும் இந்தப் பேரழிவை முன்னறிந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை’(27) என்று நினைத்தவாறே, தன் படையின் அழிவைக் கண்டு துயரில் இதயம் எரிந்து கொண்டிருந்த அந்த மன்னன் {துரியோதனன்}, அத்தடாகத்தின் ஆழங்களுக்குள் ஊடுருவ விரும்பினான்.(28)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனைத் தங்கள் தலைமையில் கொண்ட பாண்டவர்கள், ஓ! மன்னா, சினத்தால் நிறைந்து, (எஞ்சியிருக்கும் மிகச்சிறிய) உமது படையை எதிர்த்து விரைந்தனர்.(29) தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் காண்டீவத்தைக் கொண்டு, ஈட்டிகள், வாள்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு உரத்து முழங்கிக் கொண்டிருந்த (கௌரவத்) துருப்புகளின் நோக்கத்தைக் கலங்கடித்தான்.(30) தன் கூரிய கணைகளால் அந்தத் துருப்புகளையும், அதன் கூட்டாளிகளையும், சொந்தங்களையும் கொன்ற அர்ஜுனன், வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் தேரில் நின்று கொண்டிருந்தபோது, மிக அழகானவனாகத் தெரிந்தான்.(31) குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு சுபலனின் மகனும் {சகுனியும்} வீழ்ந்த பிறகு, உமது படையானது, (காற்றால்) வீழ்த்தப்பட்ட பெரும் காட்டைப் போலத் தெரிந்தது.(32) லட்சக்கணக்கான போர்வீரர்கள் இருந்த அந்தத் துரியோதனனின் படையில், துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன், கௌதமரின் மகனான கிருபர் மற்றும் பூமியின் தலைவனான உமது மகன் {துரியோதனன்} ஆகியோரைத் தவிர மற்றொரு பெருந்தேர்வீரன் எவனையும் உயிரோடு காண முடியவில்லை.(34)

{சஞ்சயனான} என்னைக் கண்ட திருஷ்டத்யும்னன், சாத்யகியிடம் சிரித்துக் கொண்டே, “இவனைப் பிடித்து வைப்பதால் யாது பயன்? இவனை உயிரோடு வைத்திருப்பதால் எவ்வொன்றையும் ஈட்ட முடியாது” என்றான்.(35) திருஷ்டத்யும்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் தேர்வீரனுமான சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கூரிய வாளை உயர்த்திக் கொண்டு, என்னைக் கொல்ல ஆயத்தமானான்.(36) சரியாக அதே நேரத்தில், பெரும் ஞானியும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் (கருப்பு நிறம் கொண்ட வியாசர்), அங்கே வந்து “சஞ்சயன் உயிரோடு செல்லட்டும். எவ்வகையிலும் அவன் கொல்லப்படக்கூடாது” என்றார்.(37) அந்தத் தீவில் பிறந்தவரின் {துவைபாயனரின்} வார்த்தைகளைக் கேட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கரங்களைக் கூப்பிக் கொண்டு, என்னை விடுவித்துவிட்டு, “ஓ! சஞ்சயா, உனக்கு அமைதியுண்டாகட்டும், நீ எங்கும் செல்லலாம்” என்றான்.(38) அவனால் அனுமதிக்கப்பட்ட நான், என் கவசத்தைக் கழற்றிவிட்டு, என் ஆயுதங்களையும் கைவிட்டுவிட்டு, குருதியில் குளித்திருந்த என் அங்கங்களுடன், நகரத்தை நோக்கிச் செல்லும் சாலையில் மாலைவேளையில் புறப்பட்டேன்.(39)

இரண்டு மைல்கள் {ஒரு குரோசம்} தொலைவுக்கு வந்த பிறகு, ஓ! ஏகாதிபதி, கையில் கதாயுதத்துடனும், அதிகமாகச் சிதைக்கப்பட்ட உடலுடனும் தனியொருவனாக நிற்கும் துரியோதனனை நான் கண்டேன்.(40) அவனது கண்கள், கண்ணீரால் நிரம்பியிருந்ததால், அவனால் என்னைப் பார்க்க முடியவில்லை. நான் அவன் முன்னிலையில் உற்சாகமற்றவனாக நின்றிருந்தேன். அவனும் அதேபோலவே என்னை {இன்னாரென} அறிந்து கொள்ளாமலேயே பார்த்துக் கொண்டிருந்தான்.(41) களத்தில் தனியொருவனாக நின்று துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அவனைக் கண்டு, கவலையில் மூழ்கிய என்னால், சிறிது நேரத்திற்கு ஒரே ஒரு வார்த்தையைக் கூடப் பேச முடியவில்லை.(42) பிறகு, கைப்பற்றப்பட்டு, துவைபாயனரின் {வியாசரின்} அருளால் நான் விடுவிக்கப்பட்டது குறித்த அனைத்தையும் அவனிடம் சொன்னேன்.(43) ஒரு கணம் சிந்தித்த அவன் {துரியோதனன்}, தன் உணர்வுகள் மீண்டதும், அவனது சகோதரர்கள் மற்றும் அவனது துருப்புகளைக் குறித்து என்னிடம் விசாரித்தான்.(44) என் கண்களால் அனைத்தையும் நான் கண்டிருந்ததால், அவனது தம்பிமார் அனைவரும் கொல்லப்பட்டது, அவனது துருப்புகள் முற்றாக அழிக்கப்பட்டது என அனைத்தையும் அவனுக்குச் சொன்னேன்.(45) (பாண்டவர்கள் இருந்த இடத்தில் இருந்து) நான் புறப்பட்டபோது, துவைபாயனர் {வியாசர்} என்னிடம் சொன்னது போலவே, அந்நேரத்தில் எங்களில் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு இருப்பதாக மன்னனிடம் நான் சொன்னேன்.(46)

ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியே, மீண்டும் மீண்டும் என்னைப் பார்த்த உமது மகன் {துரியோதனன்}, தன் கரத்தால் என்னைத் தீண்டி,(47) “ஓ! சஞ்சயா, இந்தப் போரில் ஈடுபட்டவர்களில், உன்னைத் தவிர வேறு எவரும் உயிரோடில்லை. உயிரோடிருக்கும் தங்கள் கூட்டாளிகளுடன் பாண்டவர்கள் இருக்கையில், (என் தரப்பில்) நான் ஒருவனையும் {உயிரோடு} காணவில்லை.(48) தலைவரான குருட்டு மன்னர் திருதராஷ்டிரரிடம், அவரது மகன் துரியோதனன், தடாகத்தின் ஆழங்களுக்குள் நுழைந்துவிட்டதாகச் சொல்வாயாக.(49) நண்பர்கள், மகன்கள், சகோதரர்கள் ஆகியோரை இழந்து, பாண்டவர்களால் தன் நாடு எடுத்துக் கொள்ளப்பட்டதையும் கண்டு, உயிரோடு வாழ விரும்புவதற்கு என்னைப் போன்ற எவன் இருக்கிறான்?(50) இவை அனைத்தையும் மன்னரிடம் சொல்லிவிட்டு, அந்தப் பயங்கரப் போரில் இருந்து நான் உயிரோடு தப்பியதையும், அதிகமாகக் காயமடைந்திருந்தாலும், இந்தத் தடாகத்தின் ஆழங்களுக்குள் உயிரோடு ஓய்ந்திருக்கப் போகிறேன் என்பதையும் அவருக்குச் சொல்வாயாக” என்றான்.(51)

இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் அந்தத் தடாகத்திற்குள் நுழைந்தான். அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்}, தன் மாய சக்தியைக் கொண்டு, அத்தடாகத்தின் நீரைக் கட்டி, அதற்குள் தனக்கென ஓர் இடைவெளியை உண்டாக்கிக் கொண்டான்.(52) அந்தத் தடாகத்திற்குள் அவன் நுழைந்த பிறகு, என் தரப்பில் எவரும் இல்லாத நான், (எங்கள் படையைச் சேர்ந்த) அந்த மூன்று தேர்வீரர்களும், களைத்துப் போன தங்கள் விலங்குகளுடன் ஒன்றாக வருவதைக் கண்டேன்.(53) சரத்வான் மகனான கிருபர், தேர்வீரர்களில் முதன்மையானவனான வீர அஸ்வத்தாமன், போஜர் குலத்தின் கிருதவர்மன் ஆகியோரே அவர்கள். கணைகளால் சிதைக்கப்பட்டிருந்த அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தனர்.(54)

என்னைக் கண்ட அவர்கள் அனைவரும், தங்கள் குதிரைகளை வேகமாகத் தூண்டி என்னிடம் வந்து, “ஓ! சஞ்சயா, நற்பேறாலேயே நீ இன்னும் வாழ்கிறாய்” என்றனர்.(55) பிறகு அவர்கள் அனைவரும் மனிதர்களின் ஆட்சியாளனான உமது மகனை {துரியோதனனைக்} குறித்து விசாரிக்கும் வகையில், “ஓ! சஞ்சயா, நமது மன்னன் துரியோதனன் உயிருடன் இருக்கிறானா?” என்று கேட்டனர்.(56) மன்னனின் உடல்நலம் நன்றாக இருப்பதை நான் அவர்களுக்குச் சொன்னேன். மேலும், துரியோதனன் என்னிடம் சொன்ன அனைத்தையும் அவர்களிடம் சொன்னேன். துரியோதனன் நுழைந்த தடாகத்தையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன்.(57) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, என் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன், அந்தப் பரந்தத் தடாகத்தின் மீது தன் கண்களைச் செலுத்தி, “ஐயோ, ஐயோ, நாங்கள் உயிரோடிருப்பதை மன்னன் அறிந்தானில்லை. அவனுடன் நாங்களும் இருந்தால், நம் எதிரிகளுடன் போரிடும் வல்லமை இன்னும் நமக்கிருக்கிறது” என்று சொல்லித் துயரத்தால் புலம்பத் தொடங்கினான்.(59) நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பாண்டுவின் மகன்களைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர்.(60) நமது எஞ்சிய படையைச் சேர்ந்தவர்களான அந்த மூன்று தேர்வீரர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கிருபரின் தேரில் என்னை ஏற்றிக் கொண்டு, குரு முகாமுக்குச் சென்றனர்.(61)

சூரியன் சற்று முன்பே மறைந்தான். முகாமின் புறக்காவலில் இருந்த துருப்பினர், உமது மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டதை அறிந்து உரக்க அழுதனர்.(62) பிறகு, ஓ! ஏகாதிபதி, அரசகுடும்பத்தின் மகளிரைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த முதிர்ந்த மனிதர்கள், அந்த இளவரசிகளை அழைத்துக் கொண்டு நகரத்தை நோக்கிச் சென்றனர்.(63) மொத்த படையின் அழிவையும் கேட்டு அழுது கொண்டிருந்த மங்கையர், மேலும் உரக்க ஓலமிட்டு அழுதனர்.(64) ஓ! மன்னா, இடையறாமல் அழுதுகொண்டிருந்த பெண்கள், பெண் அன்றில்கூட்டங்களைப் போலத் தங்கள் குரல்களைப் பூமியில் எதிரொலித்தனர்.(65) அவர்கள் தங்கள் நகங்களால் தங்கள் உடல்களைக் கிழித்துக் கொண்டும், தங்கள் கரங்களால் தங்கள் தலைகளில் அடித்துக் கொண்டும், தங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொண்டும் உரக்க அழுது கொண்டே இருந்தனர்.(66) “ஓ!” மற்றும் “ஐயோ!” என்ற ஒலிகளால் காற்றை நிறைத்து, தங்கள் மார்புகளை அடித்துக் கொண்ட அவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உரக்க அழுது கதறினர்.(67)

அப்போது, ஆழமாகப் பீடித்திருந்தவர்களான துரியோதனனின் நண்பர்கள் {அமைச்சர்கள்}, தங்கள் கண்ணீரால் குரலற்றவர்களாகி, அரசகுல மங்கையரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர்.(68) முகாமின் காவலர்கள், விலைமதிப்பு மிக்க விரிப்புகளால் மூடப்பட்ட பல வெண் படுக்கைகளை எடுத்துக் கொண்டு, நகரத்தை நோக்கி வேகமாகச் சென்றனர்.(69) வேறு சிலர், பெண்கோவேறு கழுதைகளால் இழுக்கப்பட்ட தேர்களில் தங்கள் மனைவியரை அமர்த்திக்கொண்டு, நகரத்தை நோக்கிச் சென்றனர். வீடுகளில் இருக்கும்போது சூரியனாலும் காணப்படாத அந்த மங்கையர், ஓ! ஏகாதிபதி, இப்போது நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்பட்டனர்.(71) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மிக மென்மையானவர்களாக இருந்த அந்தப் பெண்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களையும், உறவினர்களையும் இழந்து, இப்போது நகரத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தனர்.(72) மாட்டிடையர்களும், ஆட்டிடையர்களும், பொதுமக்களும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் பீதியால் நிறைந்து, நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(73) இவர்களும் கூடப் பார்த்தர்களிடம் கொண்டிருந்த பேரச்சத்தால் நிறைந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(74)

அச்ச சூழ்நிலையில் அவர்கள் தப்பி ஓடும்போது, துயரத்தால் தன் உணர்வுகளை இழந்தவனான யுயுத்சு, வந்திருக்கும் ஆபத்துக் காலத்தில் செய்யப்பட வேண்டியது என்ன என்பது குறித்துச் சிந்தித்தான்.(75) “பயங்கர ஆற்றலைக் கொண்ட பாண்டவர்களால் போரில் துரியோதனன் வெல்லப்பட்டான். அவன் தன்னிடம் பதினோரு அக்ஷௌஹிணிகளைக் கொண்டிருந்தான். அவனது சகோதரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(76) பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். விதியின் ஆதிக்கத்தால் நான் மட்டுமே காக்கப்பட்டிருக்கிறேன்.(77) குரு முகாமிலிருந்த அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். ஐயோ, சக்தியை இழந்து, பாதுகாவலர்களையும் இழந்து அவர்கள், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகின்றனர்.(78) இத்தகு காட்சியை இதற்கு முன்பு ஒருபோதும் கண்டதில்லை. கவலையால் பீடிக்கப்பட்டுள்ள அவர்கள், அஞ்சும் கண்களுடன், மான் கூட்டங்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகிறார்கள்.(79) துரியோதனனின் ஆலோசகர்களில் {அமைச்சர்களில்} உயிரோடிருப்பவர்கள், அரச குடும்பத்தின் மகளிரைக் கூட்டிக் கொண்டு நகரத்தை நோக்கித் தப்பி ஓடுகின்றனர்.(80) ஓ! தலைவா[1], யுதிஷ்டிரன் மற்றும் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு நானும் அவர்களுடன் நகரத்தில் நுழைய வேண்டிய நேரம் வந்துவிட்டதென நான் நினைக்கிறேன்” என்று நினைத்தான் {யுயுத்சு}. இக்காரணத்திற்காகவே அந்த வலிய கரங்களைக் கொண்ட இளவரசன் {யுயுத்சு}, அந்த வீரர்கள் இருவரிடமும் {யுதிஷ்டிரன் மற்றும் கிருஷ்ணனிடம்} சென்று, தன் நோக்கத்தை வெளிப்படுத்தினான்.(81)எப்போதும் கருணை கொண்டவனான மன்னன் யுதிஷ்டிரன், அவனிடம் மிகவும் மனநிறைவு கொண்டான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, வைசியத் தாய்க்குப் பிறந்த அந்தப் பிள்ளையை {யுயுத்சுவைத்} தழுவி கொண்டு, பாசத்துடன் அவனை அனுப்பிவைத்தான்.(82) தன் தேரைச் செலுத்திய அவன் {யுயுத்சு}, தன் குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டினான். பிறகு அவன் {யுயுத்சு}, அரச குடும்பத்தின் மகளிர் நகரத்துக்குச் செல்வதை மேற்பார்வையிட்டான்.(83) சூரியன் மறைந்து கொண்டிருந்தான். அந்தப் பெண்களுடன் சேர்ந்து, கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரால் தடைபட்ட குரலுடனும் யுயுத்சுவும் ஹஸ்தினாபுர நகரத்திற்குள் நுழைந்தான்.(84)

அப்போது அவன் {யுயுத்சு} பெரும் ஞானியான விதுரன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான். பெரும் சோகத்தால் இதயம் பீடிக்கப்பட்டதால், அவன் திருதராஷ்டிரனிடம் இருந்து அகன்று வந்திருந்தான்.(85) அவன் {யுயுத்சு}, விதுரனை வணங்கிவிட்டு, அவனது முன்னிலையில் நின்றான். உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் விதுரன் அவனிடம் {யுயுத்சுவிடம்}, “ஓ! மகனே, குருக்களின் அழிவுக்கு மத்தியில் நீ உயிருடன் இருப்பது நற்பேறாலேயே.(86) எனினும், நீ துரியோதனனை உடன் அழைத்து வராதது ஏன்? இதன் காரணத்தை எனக்கு விரிவாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(87)

அப்போது யுயுத்சு {விதுரனிடம்}, “ஓ! ஐயா, சகுனியும், அவரது உறவினர்களும், நண்பர்களும் வீழ்ந்த பிறகு, மன்னன் துரியோதனன், தான் செலுத்திய குதிரையைக் கைவிட்டுவிட்டு, அச்சத்தால் கிழக்குத் திசையை நோக்கி தப்பி ஓடினான்.(88) மன்னன் தப்பி ஓடிய பிறகு, (கௌரவ) முகாமில் இருந்த மக்கள் அனைவரும், அச்சத்தால் கலக்கமடைந்து நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(89) பிறகு, பெண்களின் பாதுகாவலர்கள், மன்னனுடைய {துரியோதனனின்} மனைவியரையும், அவனது தம்பிகளின் மனைவியரையும் வாகனங்களில் அமர்த்திக் கொண்டு, அச்சத்தால் தப்பி ஓடினர்.(90) இவ்வாறு தப்பி ஓடும் மக்களைப் பாதுகாப்பதற்காகவே, மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, நான் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டு வந்தேன்” என்றான் {யுயுத்சு}.(91)

திருதராஷ்டிரனுடைய வைசிய மனைவியின் மகன் {யுயுத்சு} சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், அனைத்து நடைமுறைகளையும் அறிந்தவனுமான விதுரன், அந்த நேரத்திற்கு எது முறையானது என்பதை உணர்ந்து, சொல்திறமிக்க யுயுத்சுவைப் பாராட்டினான்.(92) மேலும் அவன் {விதுரன்}, “பாரதர்கள் அனைவருக்கும் நேர்ந்த இந்த அழிவைக் கருத்தில் கொண்டு, நீ முறையாகவே செயல்பட்டிருக்கிறாய். கருணையினால் நீ உனது குலத்தின் கௌரவத்தையும் தக்க வைத்திருக்கிறாய்.(93) சுடர்மிக்க மகிமை கொண்ட சூரியனைக் காணும் உயிரினங்களைப் போல[2], வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் பெரும்போரில் இருந்து நீ மீண்டு வந்ததை நாங்கள் காண்பது எங்கள் நற்பேறாலேயே.(94) ஓ! மகனே, முன்னறிதிறனை இழந்தவரும், பேரிடரால் பீடிக்கப்பட்டவரும், விதியால் தாக்கப்பட்டவரும், மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும், தன் தீய கொள்கையைத் தொடர்வதை நிறுத்த முடியாதவருமான குருட்டு மன்னருக்கு {திருதராஷ்டிரருக்கு}, இப்போது அனைத்து வகையிலும் நீ ஒருவனே ஒரே ஊன்றுகோலாக இருக்கிறாய்.(95) இந்த நாள் இங்கு ஓய்ந்திருப்பாயாக. நாளை நீ யுதிஷ்டிரனிடம் திரும்பலாம்” என்றான் {விதுரன்}.இவ்வார்த்தைகளைச் சொன்ன விதுரன், கண்ணீர் நிறைந்த கண்களுடன்,(96) யுயுத்சுவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, துயரால் பீடிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் கிராமவாசிகள், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் செய்த கூச்சல்களை எதிரொலித்த மன்னனின் {திருதராஷ்டிரனின்} வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்.(97) உற்சாகமற்ற அந்த மாளிகை, அதன் அழகனைத்தையும் இழந்ததாகத் தெரிந்தது; வசதிகளும், மகிழ்ச்சியும் அம்மாளிகையைக் கைவிட்டதாகத் தெரிந்தது. முழுவதும் வெறுமையாக இருந்த அம்மாளிகை முழுமையாகவே சீர்கெட்டிருந்தது. ஏற்கனவே சோகத்தால் நிறைந்திருந்த விதுரனின் துயரம், அக்காட்சியால் இன்னும் அதிகரித்தது.(98) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான விதுரன், நீண்ட பெருமூச்சுகளைவிட்டபடியே, சோகம் நிறைந்த இதயத்துடன் அரண்மனைக்குள் நுழைந்தான்.(99) யுயுத்சுவைப் பொறுத்தவரை, அவன் அந்த இரவைத் தன் வசிப்பிடத்திலேயே கழித்தான். துயரால் பீடிக்கப்பட்டிருந்த அவன் {யுயுத்சு}, துதிகளால் வரவேற்கப்பட்ட போது, எந்த மகிழ்ச்சியையும் அடையவில்லை. ஒருவரின் கரங்களால் மற்றவர்களுக்கு நேர்ந்த பாரதர்களின் பயங்கர அழிவை நினைத்துக் கொண்டே அவன் காலத்தைக் கடத்தினான்” {என்றான் சஞ்சயன்}.(100)

துரியோதனனைக் கண்டுபிடித்த வேடர்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 30-தடாகத்தில் மறைந்திருந்த துரியோதனனிடம் பேசிய கிருபர் முதலானோர்; ஓரிரவு ஓய்ந்திருக்கப் போவதாகச் சொன்ன துரியோதனன்; இந்நிகழ்வை மறைந்திருந்து கவனித்த வேடர்கள், அதைப் பீமசேனனிடம் தெரிவித்தது; துரியோதனன் இருந்த இடத்திற்கு வந்த பாண்டவர்கள்; பாண்டவர்கள் வருவதை அறிந்து தப்பி ஓடிய அஸ்வத்தாமன் முதலானோர் ஓர் ஆலமரத்தை அடைந்து ஓய்ந்திருப்பது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “போர்க்களத்தில் பாண்டு மகன்களால் கௌரவத் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, என் படையில் பிழைத்திருந்தவர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் என்ன செய்தனர்? மேலும், தீய ஆன்மா கொண்ட மன்னன் துரியோதனன் அப்போது என்ன செய்தான்?” என்று கேட்டான்.(1,2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் மகளிர் தப்பி ஓடி, (கௌரவ) முகாம் முற்றிலும் வெறுமையான பிறகு, (நீர் குறிப்பிட்ட) அந்த மூன்று தேர்வீரர்களும் கவலையில் நிறைந்தனர்.(3) பாண்டு மகன்களின் வெற்றிக் கூச்சல்களைக் கேட்டும், மாலைவேளையில் முகாம் கைவிடப்பட்டதைக் கண்டும், மன்னனைக் காக்க விரும்பியும், களத்தில் நிற்க முடியாமலும், நமது தரப்பின் அந்த மூன்று தேர்வீரர்களும் அந்தத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(4) வெற்றி ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், அந்தப் போரில் தன் சகோதரர்களுடன் சேர்ந்து பெரும் மகிழ்ச்சியை உணர்ந்து, துரியோதனனைக் கொல்லும் விருப்பத்தில் களமெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(5) கோபத்தால் நிறைந்தவர்களும், வெற்றியை விரும்பியவர்களுமான பாண்டவர்கள் உமது மகனைத் தேடினர். அவர்கள் மிகக் கவனமாகத் தேடிய போதிலும் அவர்களால் (குரு) மன்னனை {துரியோதனனைக்} கண்டுபிடிக்க முடியவில்லை.(6)

கையில் கதாயுதத்துடன், பெரும் வேகத்துடன் போர்க்களத்தில் இருந்து தப்பிச் சென்ற அவன் {துரியோதனன்}, தனது மாய சக்திகளின் உதவியால் தடாகத்தின் நீரைக் கட்டி அதற்குள் ஊடுருவினான்.(7) இறுதியாகப் பாண்டவர்களின் விலங்குகள் மிகவும் களைத்தபோது, அவர்கள் தங்கள் முகாமுக்குச் சென்று அங்கே தங்கள் படைவீரர்களுடன் ஓய்வெடுத்தனர்.(8) பார்த்தர்கள் முகாமுக்குச் சென்ற பிறகு, கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மெதுவாகத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(9) மன்னன் இருந்த அந்தத் தடாகத்தை அணுகிய அவர்கள், நீருக்குள் உறங்கிக் கொண்டிருந்தவனும், வெல்லப்பட முடியாதவனுமான அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா, எழுவாயாக. எங்களோடு சேர்ந்து யுதிஷ்டிரனிடம் போரிடுவாயாக. வெற்றியை அடைந்து பூமியை அனுபவிப்பாயாக, அல்லது, ஓ! துரியோதனா, கொல்லப்பட்டு சொர்க்கத்திற்குச் செல்வாயாக.(11) ஓ! துரியோதனா, பாண்டவர்களின் படைகள் அனைத்தும் கூட உன்னால் கொல்லப்பட்டிருக்கின்றன. அவர்களில் உயிரோடிருப்பவர்களும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர்.(12) ஓ! ஏகாதிபதி, அவர்களால் உனது வேகத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது. அதிலும் குறிப்பாக எங்களால் நீ பாதுகாக்கப்படும்போது அவர்களால் தாங்கிக் கொள்ளவே இயலாது. எனவே, ஓ! பாரதா, எழுவாயாக” என்றனர்.(13)

துரியோதனன், “மனிதர்களில் காளைகளே, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடந்த இந்த அழிவைத் தரும்போரில் உயிரோடு நீங்கள் வந்திருப்பதை நற்பேறாலேயே நான் காண்கிறேன்.(14) நாம் சற்றே ஓய்ந்து, நம் களைப்பகன்றதும், எதிரியோடு மோதி நாம் அவனை வெல்வோம். நீங்களும் களைப்பாக இருக்கிறீர்கள். நானும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கிறேன். பாண்டவர்களின் படையோ வலிமையில் பெருகியிருக்கிறது. இக்காரணங்களுக்காவே நான் இப்போது போரிட விரும்பவில்லை.(15) வீரர்களே, உங்களது உன்னத இதயங்களின் காரணமாக உங்கள் பங்கிற்கு நீங்கள் சொல்லும் இந்த அறிவுரைகள் உங்களுக்கு {உங்கள் தரத்திற்கு} அற்புதமானவையல்ல. என்னிடம் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்புணர்வும் பெரியதே. எனினும், இஃது ஆற்றலை வெளிக்காட்டும் நேரமில்லை.(16) இந்த ஓரிரவில் நான் ஓய்ந்திருந்து, நாளை உங்களுடன் சேர்ந்து எதிரியோடு போரிடுவேன். இதில் எவ்வையமும் கிடையாது” என்றான்.”(17)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வாறு சொல்லப்பட்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, போரில் வெல்லப்பட முடியாத அம்மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா, எழுவாயாக, நீ அருளப்பட்டிருப்பாயாக. இப்போதும் நாம் எதிரியை வெல்லலாம்.(18) என் அறச்செயல்கள் அனைத்தின் மீதும், உண்மையில் நான் கொடுத்துள்ள கொடைகள் அனைத்தின் மீதும், என் மௌனத் தியானங்களின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், ஓ! மன்னா, நான் இன்று சோமகர்களைக் கொல்வேன்.(19) நான் போரில் பாண்டவர்களைக் கொல்லாமல் இவ்விரவு கழியுமேயானால், வேள்விகள் செய்வதன் மூலம் விளையும் மகிழ்ச்சியும், பக்திமான்கள் அனைவராலும் உணரப்படும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்காமல் போகட்டும்.(20) ஓ! தலைவா, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்லாமல் நான் எனது கவசத்தைக் களைய மாட்டேன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, என்னை நம்புவாயாக” என்றான்.(21)

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, சில வேடர்கள் அங்கே வந்தனர். தாங்கள் சுமந்து வந்த இறைச்சியின் கனத்தால் களைத்துப் போயிருந்த அவர்கள், குறிப்பிட்ட எந்தக் காரியத்திற்காகவும் இல்லாமல் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக அங்கே வந்தனர்.(22) ஓ! தலைவா, ஓ! மன்னா, அந்த வேடர்கள் தினந்தோறும் பெரும் மதிப்புடன் பீமசேனனுக்காகக் கூடைகூடையாக இறைச்சியைக் கொண்டு வந்து கொடுப்பவர்களாவர்.(23) அத்தடாகத்தின் கரையில் மறைவாக அவர்கள் அமர்ந்தபோது, துரியோதனனுக்கும், அந்தப் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டனர்.(24) போரிட விரும்பாத குரு மன்னனைக் கண்டவர்களும், போரிட விரும்பியவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகள், தங்கள் ஆலோசனைகளைப் பின்பற்றும்படி அவனைப் பெரிதும் தூண்டத் தொடங்கினர்.(25)

அந்த வேடர்கள், கௌரவப்படையைச் சேர்ந்த அந்தத் தேர்வீரர்களைக் கண்டும், போரிட விரும்பாத மன்னன் {துரியோதனன்} நீருக்குள் இருப்பதைப் புரிந்து கொண்டும்,(26) அந்தப் போர்வீரர்களுக்கும், தடாகத்தின் ஆழங்களுக்குள் இருக்கும் அவர்களது தலைவனுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலைக் கேட்டும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையில், தடாகத்திற்குள் இருப்பவன் துரியோதனனே என்பதைத் தெளிவாகக் கண்டும் ஒரு தீர்மானத்தைச் செய்தனர்.(27) சிறிது நேரத்திற்கு முன்புதான், மன்னனைத் தேடிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, இம்மனிதர்களைச் சந்தித்து, அவர்களிடம் துரியோதனன் இருக்கும் இடத்தைக் குறித்த விசாரித்திருந்தான்.(28) பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} சொன்ன அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்த அந்த வேடர்கள், ஓ! மன்னா, ஒருவொருக்கொருவர் கிசிகிசுத்தபடியே,(29) “(பாண்டவர்களிடம்) துரியோதனனை வெளிப்படுத்துவோம். அந்தப் பாண்டுவின் மகன் நமக்குச் செல்வத்தைத் தருவான். கொண்டாடப்படும் மன்னன் துரியோதனன் இங்கிருப்பது நமக்குத்தெளிவாகத் தெரிகிறது.(30) பழியுணர்ச்சி கொண்ட துரியோதனன் இந்தத் தடாகத்தின் நீருக்குள் மறைந்திருப்பதைச் சொல்வதற்காக மன்னன் யுதிஷ்டிரன் இருக்குமிடத்திற்கு நாம் அனைவரும் செல்வோம்.(31) மேலும், நாம் அனைவரும் சென்று, பெரும் வில்லாளியும், புத்திசாலியுமான பீமசேனனிடமும், திருதராஷ்டிரன் மகன் இந்தத் தடாகத்தின் நீருக்குள் மறைந்திருக்கிறான் என்பதைச் சொல்வோம்.(32) நம்மிடம் மனநிறைவு கொள்ளும் அவன் {பீமன்}, நமக்கு இன்னும் அதிகச் செல்வத்தைக் கொடுப்பான். பிறகு, இவ்வளவு கடினமாக உழைத்து, நாளுக்கு நாள் இறைச்சியை அடைந்து, இப்படிக் களைப்படைய வேண்டிய தேவை நமக்கு என்ன இருக்கிறது?” என்றனர்.(33)

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வேடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, செல்வத்துக்காக ஏங்கி, தங்கள் இறைச்சிக்கூடைகளை எடுத்துக் கொண்டு (பாண்டவ) முகாமை நோக்கிச் சென்றனர்.(34) இலக்கில் துல்லியமும், தாக்குவதில் திறனும் கொண்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி, அப்போது மறைந்திருந்த துரியோதனனைக் களத்தில் காணாது, தங்கள் முகாமில் ஓய்ந்திருந்தனர்.(35) அந்தப் பொல்லாத பாவியின் தீய கொள்கைக்கு ஒரு முடிவை அடைய விரும்பிய அவர்கள், போர்க்களத்தின் அனைத்துத் திசைகளுக்கும் ஒற்றர்களை அனுப்பிக் கொண்டிருந்தனர்.(36) எனினும், அக்காரியத்திற்காக அனுப்பப்பட்ட படைவீரர்கள் அனைவரும், ஒன்றாக முகாமுக்குத் திரும்பி வந்து, மன்னன் துரியோதனன் குறித்த எத்தடயத்தையும் காண முடியவில்லை என்று நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தனர்.(37) திரும்பி வந்த தூதர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, பெரும் கவலையால் நிறைந்து, கடும் மூச்சு விடத் தொடங்கினான்.(38)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் இவ்வாறு உற்சாகமற்றிருந்தபோது, ஓ! தலைவா, தடாகக் கரையில் இருந்து பெரும் வேகத்துடன் வந்த அந்த வேடர்கள்,(39) துரியோதனனைக் கண்டுபிடித்திருந்ததால் மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக முகாமை அடைந்தனர். முகாமுக்குள் நுழைய தடுக்கப்பட்டாலும், பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் உள்ளே நுழைந்தனர்.(40) பாண்டுவின் வலிமைமிக்க மகனான பீமசேனனை அடைந்த அவர்கள், தாங்கள் கண்டது மற்றும் கேட்டது அனைத்தையும் சொன்னார்கள்.(41) பிறகு எதிரிகளை எரிப்பவனான விருகோதரன் {பீமன்}, அவர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் அனைத்தையும் சொல்லும் வகையில்,(42) “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எனக்கு இறைச்சி கொடுக்கும் வேடர்களால் துரியோதனன் கண்டுபிடிக்கப்பட்டார். ஓ! மன்னா, யாருக்காக நீர் இவ்வளவு கவலைப்படுகிறீரோ, அவன் {துரியோதனன்} இப்போது தடாகத்தின் நீரைக்கட்டி அதற்குள் இப்போது கிடக்கிறான்” என்றான்.(43)

பீமசேனனின் இந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்டவனும், குந்தியின் மகனுமான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, தன் தம்பியர் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(44) வலிமைமிக்க வில்லாளியான துரியோதனன், தடாகத்தின் நீருக்குள் ஊடுருவியிருப்பதை அறிந்த அம்மன்னன், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தன் தலைமையாகக் கொண்டு, பெரும் வேகத்துடன் அந்த இடத்திற்குச் சென்றான்.(45) அப்போது, ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியால் நிறைந்திருந்த பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவருக்கும் மத்தியில் ஆரவாரவொலி எழுந்தது.(46) ஓ! பாரதக் குலத்தின் காளையே, போர்வீரர்கள் சிங்க முழக்கங்களைச் செய்து உரக்கக் கூச்சலிட்டனர். க்ஷத்திரியர்கள் அனைவரும், ஓ! மன்னா, துவைபாயனம் {த்வைபாயனஹ்ரதம்} என்றழைக்கப்பட்ட அந்தத் தடாகத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றனர்.(47) மகிழ்ச்சியடைந்த சோமகர்கள், “பாவியான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} கண்டுபிடிக்கப்பட்டான்” என்று சுற்றிலும் மீண்டும் மீண்டும் கூச்சலிட்டனர்.(48) ஓ! ஏகாதிபதி, பெரும் வேகத்துடன் வந்த அந்த மூர்க்கமான தேர்வீரர்களின் தேர்களால் உண்டான பேரொலி சொர்க்கங்களையே எட்டியது.(49) அவர்கள் அனைவரின் விலங்குகளும் களைத்திருந்தாலும், துரியோதனனைக் கண்டுபிடிப்பதில் முனைப்புடன் இருந்த மன்னன் யுதிஷ்டிரனின் பின்னால் அவர்கள் வேகமாகத் தொடர்ந்து சென்றனர்.(50)

அர்ஜுனன், பீமசேனன், பாண்டுவுக்கும் மாத்ரிக்கும் பிறந்த இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், வெல்லப்பட முடியாதவனான சிகண்டி,(51) உத்தமௌஜஸ், யுதாமன்யு, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), பாஞ்சாலர்களில் இன்னும் உயிரோடு எஞ்சிருந்தவர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், அவர்களது யானைகளும், நூற்றுக்கணக்கான காலாட்படை வீரர்களும் யுதிஷ்டிரனுடன் சென்றனர்.(52) பெரும் வீரம் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி, அப்போது துரியோதனன் எதற்குள் இருந்தானோ அந்தத் துவைபாயனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தடாகத்தை வந்தடைந்தான். பெருங்கடலைப் போலப் பரந்திருந்த அதன் {அத்தடாகத்தின்} தன்மை இனிமையானதாகவும், அதன் நீர் தெளிவானதாகவும், குளுமையானதாகவும் இருந்தது.(53) உண்மையில், அற்புத வழிமுறையான தனது மாய சக்தியால் அதன் நீரைக் கட்டிய உமது மகன் துரியோதனன், ஓ! பாரதரே, அந்தத் தடாகத்திற்குள்ளேயே இருந்தான்.(54) உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! தலைவா, எம்மனிதனாலும் வெல்லப்பட முடியாதவனான அம்மன்னன் {துரியோதனன்} தன் கதாயுதத்துடன் அந்த நீருக்குள்ளேயே கிடந்தான்.(55) அத்தடாகத்தின் நீருக்குள் இருந்த மன்னன் துரியோதனன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பாக (பாண்டவப் படை உண்டாக்கிய) அந்த ஆரவாரப் பேரொலியைக் கேட்டான்.(56) அப்போது யுதிஷ்டிரன், ஓ! மன்னா, துரியோதனனைக் கொல்லும் விருப்பத்துடன் தன் தம்பிகளோடு அந்தத் தடாகத்திற்கு வந்தான்.(57) அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் தேர்ச்சக்கரங்களின் ஒலியாலும், தன் சங்கின் உரத்த முழக்கத்தாலும் பூமியை நடுங்கச் செய்தபடியே அடர்த்தியான புழுதியை எழுப்பினான்.(58)

யுதிஷ்டிரனின் படையால் உண்டாக்கப்பட்ட அவ்வொலியைக் கேட்ட பெரும் தேர்வீரர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், அந்தக் குரு மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(59) “மகிழ்ச்சியால் நிறைந்தும், வெற்றிக்கான ஏக்கத்துடனும் பாண்டவர்கள் இங்கே வருகின்றனர். எனவே, நாங்கள் இந்த இடத்தை விட்டகல்கிறோம். இதை நீ அறிவாயாக. {எங்களுக்கு விடை கொடுப்பாயாக}” என்றனர்.(60) பெரும் சுறுசுறுப்புடைய அவ்வீரர்கள் வார்த்தைகளைக் கேட்ட அவன், “அப்படியே ஆகட்டும்” என்று அவர்களுக்குப் பதிலளித்து, (முன்பு போலவே) தன் மாயசக்தியால் நீரைக் கட்டி அதற்குள்ளேயே இருந்தான்.(61) கிருபரின் தலைமையிலான அந்தத் தேர்வீரர்கள், துயரால் நிறைந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனிடம் {துரியோதனனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து தொலைவான ஓரிடத்திற்குச் சென்றுவிட்டனர்.(62)

தொலைவாகச் சென்ற அவர்கள், ஓ! ஐயா, ஓர் ஆலமரத்தைக் கண்டு, அதன் நிழலில் நின்றனர். மிகவும் களைத்துப் போய், மன்னனைக் குறித்த கவலையில் இருந்த அவர்கள், இத்தகு சிந்தனைகளில் ஈடுபட்டனர்:(63) ‘வலிமைமிக்கத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தடாகத்தின் நீரைக் கட்டி அதன் அடியில் கிடக்கிறான். பாண்டவர்களோ போரிடும் விருப்பத்துடன் அந்த இடத்தை அடைந்திருக்கின்றனர்.(64) போர் எவ்வாறு நடைபெறும்? மன்னனுக்கு {துரியோதனனுக்கு} என்ன ஆகும்? குரு மன்னனைப் பாண்டவர்களால் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?’ {என்று நினைத்தனர்}.(65) இவற்றை நினைத்த கிருபர் முதலான அந்த வீரர்கள், தங்கள் தேர்களில் இருந்து தங்கள் குதிரைகளை விடுவித்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க ஆயத்தமாகினர்” {என்றான் சஞ்சயன்}.(66)

துரியோதனனிடம் பேசிய யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 31-துவைபாயனத் தடாகத்தின் கரைக்கு வந்து யுதிஷ்டிரனும், கிருஷ்ணனும் பேசிக்கொண்டது; நீரிலிருந்து வெளியே வருமாறு துரியோதனனைக் கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரன்; ஓய்வைக் கேட்ட துரியோதனன்; மறுத்த யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த மூன்று தேர்வீரர்களும் அவ்விடத்தைவிட்டு அகன்ற பிறகு, பாண்டவர்கள், துரியோதனன் ஓய்ந்திருந்த அந்தத் தடாகத்திற்குப் வந்தனர்.(1) அந்தத் துவைபாயனத் தடாகத்தின் கரையை அடைந்த அவர்கள், ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உமது மகனால் கவர்ந்திழுக்கப்பட்ட அந்த நீர்க்கொள்ளிடத்தைக் கண்டனர். அப்போது யுதிஷ்டிரன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(2) “இந்த நீரில் துரியோதனன், தன் மாய சக்தியைப் பயன்படுத்தியிருப்பதைப் பார். நீர்நிலையைக் கவர்ந்திழுத்து {ஸ்தம்பனம் செய்து} அதனுள் அவன் கிடக்கிறான். இப்போது அவனுக்கு மனிதர்களிடம் இருந்து எந்த அச்சமும் இல்லை.(3) அவன் {துரியோதனன்}, தெய்வீக மாயை இருப்புக்கு அழைத்து இப்போது இந்த நீர்நிலைக்குள் இருக்கிறான். அனைத்து வஞ்சகச் செயல்களையும் அறிந்தவனான அந்தப் பொல்லாதவன், இந்த வஞ்சச் செயலால் இப்படிப்பட்ட புகலிடத்தை அடைந்திருக்கிறான். எனினும், அவனால் உயிருடன் தப்ப முடியாது.(4) போரில் அவனது உதவிக்கு வஜ்ரதாரியே {இந்திரனே} வந்தாலும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, இன்று அவன் கொல்லப்படுவதை மக்கள் காண்பார்கள்” என்றான்.(5)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உமது மாயசக்தியைப் பயன்படுத்தி, மாயாவியான துரியோதனனின் இந்த மாயை அழிப்பீராக. மாயையை அறிந்த ஒருவனை அந்த மாயையைக் கொண்டே கொல்ல வேண்டும். ஓ! யுதிஷ்டிரரே, இதுவே உண்மையாகும் {சத்தியமாகும்}.(6) ஓ! பாரதர்களின் தலைவரே, செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டும், இந்நீர்நிலையில் உமது மாயசக்தியைப் பயன்படுத்தியும் மாய ஆன்மாவேயான அந்தச் சுயோதனனைக் கொல்வீராக.(7) செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டுதான் தைத்தியர்களையும், தானவர்களையும் இந்திரன் கொன்றான். பலியும் {பலி சக்கரவர்த்தியும்} கூடப் பல செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டே அந்த உயரான்மாவால் (உபேந்திரனால்) கட்டப்பட்டான்.(8) பெரும் அசுரனான ஹிரண்யாக்ஷனும், மற்றுமொருவனான ஹிரண்யகசிபுவும் பல செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியைக் கொண்டே கொல்லப்பட்டனர்.(9) 

அதேபோலவே தான், புலஸ்திய குலத்தைச் சேர்ந்த ராட்சசன் ராவணனும், அவனது சொந்தங்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்து ராமனால் கொல்லப்பட்டான். நடைமுறைகள் மற்றும் சூழ்ச்சித்திட்டங்களைக் கொண்டு நீரும் உமது ஆற்றலை வெளிப்படுத்துவீராக.(10) பெரும் பலம் கொண்டவர்களும், பழங்காலத்து தைத்தியர்களுமான தாரகன் மற்றும் விப்ரசித்தி ஆகிய இருவரும், ஓ! மன்னா, செயல்கள் மற்றும் வழிமுறைகளின் துணையைக் கொண்டே பழங்காலத்தில் கொல்லப்பட்டனர்.(11) அதே போலவே, வாதாபி, இல்வலன், திரிசரஸ், அசுரர்களான சுந்தன் மற்றும் உபசுந்தன் ஆகிய அனைவரும், ஓ! தலைவா, வழிமுறைகளின் துணைகொண்டே கொல்லப்பட்டனர்.(12) இந்திரனே கூட, செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியால்தான் சொர்க்கத்தை அனுபவிக்கிறான். ஓ! யுதிஷ்டிரரே செயல்களே விளைவுகளைத் தரவல்லவை. அவற்றைப் போல வேறெதுவும் விளைவைத் தராது.(13) தைத்தியர்கள், தானவர்கள், ராட்சசர்கள் மற்றும் மன்னர்கள் ஆகியோர் செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே நீர், செயல்களின் உதவியை நாடுவீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(14)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வாசுதேவனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சிரித்துக் கொண்டே, ஓ! ஏகாதிபதி, அந்தத் தடாகத்தின் நீருக்குள் இருந்தவனும், பெரும் வலிமைமிக்கவனுமான உமது மகனிடம் {துரியோதனனிடம்} பேசினான்,(15) “ஓ! சுயோதனா, க்ஷத்திரியர்கள் அனைவரையும் அழியச் செய்து, உனது குலத்தையே அழிவடையச் செய்துவிட்டு, ஓ! மன்னா, இந்நீரை ஏன் நீ இவ்வாறு செய்திருக்கிறாய்?(16) இன்று நீ உனது உயிரைக் காத்துக் கொள்ள விரும்பி ஏன் இத்தடாகத்திற்குள் நுழைந்திருக்கிறாய்? ஓ! மன்னா, ஓ! சுயோதனா, எழுந்து எங்களுடன் போரிடுவாயாக.(17) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இந்நீரைக் கவர்ந்திழுத்து அதற்குள் இப்போது கிடக்கிறாயே, உன் செருக்கும், கௌரவமும் இப்போது எங்கே சென்றன?(18) சபைகளில் மனிதர்கள் அனைவரும் உன்னை வீரன் என்று சொல்கிறார்கள். எனினும், நீ இந்த நீருக்குள் மறைந்திருப்பதால் அது முற்றான பொய்மை என்று நான் நினைக்கிறேன்.(19) ஓ! மன்னா, உன்னதக் குலத்தில் பிறந்த க்ஷத்திரியனாக எழுந்து போரிடுவாயாக. அதிலும் குறிப்பாக நீ ஒரு கௌரவேயனும் ஆவாய். உன் பிறப்பை நினைவுகூர்வாயாக.(20)

அச்சத்தால் போரில் இருந்து ஓடி இந்தத் தடாகத்தின் ஆழத்திற்குள் மறைந்து கொண்டு, குரு குலத்தில் பிறந்ததைக் குறித்து நீ எவ்வாறு தற்பெருமை பேச முடியும்?(21) ஒரு க்ஷத்திரியனின் நித்திய கடமையானது போரில் இருந்து விலகியிருப்பதல்ல. மதிக்கத்தக்கவர்களின் நடைமுறையானது போரில் இருந்து ஓடுவதல்ல; அது சொர்க்கத்திற்கும் வழிவகுக்காது.(22) வெற்றியில் விருப்பமுள்ளவனும், மகன்கள், சகோதரர்கள், தந்தைமார், உறவினர்கள், நண்பர்கள், தாய்மாமன்கள் மற்றும் சொந்தங்கள் கொல்லப்படுவதைக் கண்டவனுமான நீ, இப்போது இந்தப் போரின் முடிவை எட்டாமல் இந்தத் தடாகத்தில் எவ்வாறு இருக்கிறாய்?(23,24) வீரனாக இல்லாவிட்டாலும், உனது துணிவைக் குறித்து எப்போதும் தற்பெருமை பேசுகிறாய். ஓ! பாரதா, ஓ! தீய புரிதலைக் கொண்டவனே, மனிதர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கையில் உன்னை நீ வீரன் என்று பொய்யாகச் சொல்லிக் கொள்கிறாய்.(25)

எதிரிகள் பார்த்துக் கொண்டிருக்கையில் வீரர்கள் ஒருபோதும் தப்பி ஓடமாட்டார்கள். அல்லது, ஓ! வீரா, நீ போரில் இருந்து தப்பியதன் விளைவாக உனக்கு உண்டான துணிவைக் குறித்து எங்களுக்குச் சொல்வாயாக.(26) ஓ! இளவரசனே, உன் அச்சங்களைக் கைவிட்டு எழுந்து போரிடுவாயாக. உனது துருப்புகள் மற்றும் உனது தம்பிகள் அனைவரும் கொல்லப்படக் காரணமாக இருந்த நீ, ஓ! சுயோதனா,(27) நியாயமான நோக்கங்களைக் கொண்டிருந்தாயானால், உன் உயிரைக் காத்துக் கொள்ள நினைக்க மாட்டாய். ஓ! சுயோதனா, க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றும் உன்னைப் போன்ற ஒருவன், இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.(28) கர்ணன் மற்றும் சுபலனின் மகனான சகுனி ஆகியோரை நம்பி, மூடத்தனத்தால் உன்னை அழிவற்றவனாகக் கருதிக் கொண்ட நீ, உன்னை நீயே புரிந்து கொள்ளத் தவறிவிட்டாய்.(29) இவ்வளவு பயங்கரமான பாவத்தைச் செய்தவனான நீ, ஓ! பாரதா, இப்போது போரிடுவாயாக.(30)

ஓ! ஐயா உனது ஆண்மை எங்கே? ஓ! சுயோதனா, உன்னால் பேணப்பட்ட அந்தச் செருக்கு எங்கே? இப்போது உனது ஆற்றல் எங்கே? உன்னில் பெருகியிருந்த அந்தப் பெருஞ்சக்தி எங்கே?(31) உன் ஆயுத சாதனைகள் எங்கே? நீ ஏன் இப்போது இந்தத் தடாகத்திற்குள் கிடக்கிறாய்? ஓ! பாரதா, க்ஷத்திரியக் கடமைகளை நோற்று எழுந்து போரிடுவாயாக.(32) எங்களை வென்று இந்தப் பரந்த பூமியை ஆள்வாயாக, அல்லது, ஓ! பாரதா, எங்களால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்குவாயாக.(33) இதுவே சிறப்புமிக்கப் படைப்பாளனாலேயே விதிக்கப்பட்ட உயர்ந்த கடமையாகும். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி உண்மையாக நடந்து கொள்வாயாக. ஓ! பெரும் தேர்வீரா, மன்னனாகச் செயல்படுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}”.(34)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி, தர்மனின் புத்திசாலி மகனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, நீருக்குள் இருந்தவாறே இவ்வார்த்தைகளைச் சொல்லி பதிலளித்தான்.(35)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, வாழும் உயிரினங்களின் இதயங்களில் அச்சம் நுழைவது ஒருபோதும் ஆச்சரியமானதில்லை. எனினும், ஓ! பாரதா, என்னைப் பொறுத்தவரை, என் உயிரின் மீது கொண்ட அச்சத்தால் தூண்டப்பட்டு போர்க்களத்தைவிட்டு நான் தப்பி ஓடி வரவில்லை.(36) என் தேர் அழிக்கப்பட்டது, என் அம்பறாத்தூணிகளும் இல்லை, என் பார்ஷினி தேரோட்டிகளும் கொல்லப்பட்டனர். நான், போரில் ஒரே ஒரு தொண்டனுமின்றி தனியொருவனாக  இருந்தேன். அதற்காகவே நான் சிறிது ஓய்வெடுக்க விரும்பினேன்.(37) ஓ! மன்னா நான் இந்த நீருக்குள் புகுந்தது, என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக அல்ல, அச்சத்தாலுமல்ல, துயராலுமல்ல. களைப்பின் விளைவால் மட்டுமே நான் அப்படிச் செய்தேன்.(38) ஓ! குந்தியின் மகனே, உன்னைப் பின்தொடர்பவர்களுடன் நீ சற்று ஓய்ந்திருப்பாயாக. இந்தத் தடாகத்தில் இருந்து எழுந்து, நிச்சயம் உங்கள் அனைவருடனும் நான் போரிடுவேன்” என்றான்.(39)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “நாங்கள் அனைவரும் போதுமான அளவுக்கு ஓய்ந்திருக்கிறோம். நீண்ட நேரமாக நாங்கள் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஓ! சுயோதனா, இப்போதே எழுந்து எங்களுக்குப் போரைத் தருவாயாக.(40) பார்த்தர்களைக் கொன்று செழிப்பான இந்த நாட்டை உனதாக்கிக் கொள்வாயாக, அல்லது போரில் எங்களால் கொல்லப்பட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலகங்களை அடைவாயாக” என்றான்.(41)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குரு குலத்தோனே, ஓ! மன்னா, குருக்களில் நான் யாருக்காக அரசுரிமையை விரும்பினேனோ அந்தச் சகோதரர்கள் அனைவரும் களத்தில் இறந்து கிடக்கின்றனர்.(42) செல்வத்தை இழந்து, மேன்மையான க்ஷத்திரியர்களற்று, விதவையைப் போல இருக்கும் இந்தப் பூமியை இனிமேலும் நான் அனுபவிக்க விரும்பவில்லை.(43) எனினும், ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உன்னை வென்று, பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டுக்களின் செருக்கை அடக்குவேன் என இன்னும் நம்புகிறேன்.(44) இருப்பினும், துரோணரும், கர்ணனும் ஒழிக்கப்பட்டு, நமது பாட்டன் பீஷ்மரும் கொல்லப்பட்ட பிறகு போருக்கான எந்தத் தேவையும் இல்லை.(45) ஓ! மன்னா, வெறுமையாய் இருக்கும் இந்தப் பூமி இப்போது உனக்காகவே இருக்கிறது. நண்பர்களும், கூட்டாளிகளும் அற்ற நாட்டை ஆள எந்த மன்னன்தான் விரும்புவான்?(46)

என்னைப் போன்ற நண்பர்களைக் கொல்லச் செய்து, மகன்கள், தம்பிகள் மற்றும் தந்தைமாரையும் கொல்லச் செய்து, என் நாடும் உன்னால் பறிக்கப்பட்ட பிறகு, என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு உயிர்வாழ விரும்புவான்?(47) மான் தோலுடுத்திக் கொண்டு நான் காட்டுக்குச் செல்வேன். ஓ! பாரதா, நண்பர்களையும், கூட்டாளிகளையும் இழந்திருக்கும் எனக்கு நாட்டின் மீது எந்த விருப்பமுமில்லை.(48) ஓ! மன்னா, நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோரையும், குதிரைகள், யானைகள் ஆகியவற்றையும் கிட்டத்தட்ட மொத்தமாக இழந்திருக்கும் இந்தப்பூமி உனக்காகவே இருக்கிறது.(49) என்னைப் பொறுத்தவரை, மான்தோலுடுத்திக் கொண்டு நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன். ஓ! தலைவா, நண்பர்களற்றவனான எனக்கு உயிர்வாழ எந்த விருப்பமும் இல்லை.(50) செல்வாயாக, ஓ! ஏகாதிபதி, தலைவர்களற்றதும், போர்வீரர்கள் இல்லாததும், செல்வத்தை இழந்ததும், கோட்டைகள் இல்லாததுமான பூமியை நீ தேர்ந்தெடுத்தவாறே ஆள்வாயாக” என்றான்”.(51)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கடும் வருத்தத்துடன் கூடிய இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், சிறப்புமிக்கவனுமான யுதிஷ்டிரன், இன்னும் நீருக்குள்ளேயே இருந்த உமது மகன் துரியோதனனிடம்,(52) “ஓ! ஐயா, நீருக்குள் இருந்து கொண்டு இவ்வாறு துயரில் பிதற்றாதே. இத்தகு வார்த்தைகளைக் கேட்கும் நான், ஓ! மன்னா, சகுனியைப் போல உன்னிடம் இரக்கமேதும் கொள்ள மாட்டேன்.(53) ஓ! சுயோதனா, இப்போது நீ இந்தப் பூமியை எனக்குக் கொடையளிக்க விரும்பலாம். இருப்பினும், இவ்வாறு உன்னால் கொடுக்கப்படும் பூமியை ஆள நான் விரும்பவில்லை.(54) உன்னிடம் இருந்து இந்தப் பூமியைக் கொடையாகப் பெற்று என்னால் பாவம் செய்ய முடியாது. ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனுக்குக் கொடையை ஏற்பது கடமையாக விதிக்கப்படவில்லை.(55) எனவே, உன்னால் இவ்வாறு கொடுக்கப்படும் இந்தப் பரந்த பூமியைப் பெற நான் விரும்பவில்லை. மறுபுறம், போரில் உன்னை வென்ற பிறகு அதை நான் அடைவேன்.(56)

இப்போது நீ பூமியின் தலைவனில்லை. உன் ஆட்சிப்பகுதியாக இல்லாத ஒன்றை நீ ஏன் கொடையாகக் கொடுக்க விரும்புகிறாய்? ஓ! மன்னா, நீதியின் விதிகளை நோற்று, நம் குலத்தின் நன்மையை விரும்பி உன்னிடம் எங்கள் பங்கை நாங்கள் இரந்து கேட்ட போது, இந்தப் பூமியை நீ ஏன் எங்களுக்குத் தரவில்லை?(57) வலிமைமிக்கக் கிருஷ்ணனின் கோரிக்கையை முதலில் மறுத்துவிட்டு, இப்போது நீ ஏன் பூமியைக் கொடுக்க விரும்புகிறாய்? உனக்கு ஏன் இந்த மூடத்தனம்?(58) எதிரியால் தாக்கப்பட்ட எந்த மன்னன்தான் தன் நாட்டைக் கொடுக்க விரும்புவான்? ஓ! குரு குலத்தின் மகனே, நீ இன்று பூமியைக் கொடுப்பதற்குத் தகுந்தவனல்ல.(59) உனக்கு அதிகாரம் இல்லாத ஒன்றை நீ ஏன் கொடையளிக்க விரும்புகிறாய்? போரில் என்னை வென்று இந்தப் பூமியை ஆள்வாயாக.(60) ஊசியின் முனையில் மறைக்கப்படும் அளவு நிலத்தை எனக்குக் கொடுப்பதைக்கூட நீ முன்பு ஏற்கவில்லை.(61) ஓ! ஏகாதிபதி, பிறகு எப்படி நீ முழுப் பூமியையும் எனக்குக் கொடையாகக் கொடுக்கிறாய்? ஊசியின் முனை மறைக்கக்கூடிய அளவு நிலத்தைக் கூட முன்பு கைவிட முடியாத நீ, இப்போது மொத்த பூமியையும் கைவிட எவ்வாறு விரும்புகிறாய்?(62) இத்தகு செழிப்பையடைந்து மொத்த பூமியையையும் ஆண்ட எவன்தான், தன் எதிரிகளுக்கு அந்தப் பூமியைக் கொடையளிக்கும் அளவுக்கு மூடனாக இருப்பான்?(63) 

மடமையினால் மலைத்திருக்கும் நீ, இதில் ஒழங்கற்ற முறைமையைக் காணவில்லை. நீ இந்தப் பூமியைக் கொடுத்துவிட விரும்பினாலும் உன்னால் உயிரோடு தப்ப முடியாது.(64) எங்களை வென்று இந்தப் பூமியை ஆள்வாயாக, அல்லது எங்களால் கொல்லப்பட்டு அருள் உலகங்களை அடைவாயாக.(65) நான், நீ என நாமிருவரும் உயிரோடிருந்தால், வெற்றியானது யாருக்குச் சொந்தம் என்பதில் உயிரினங்கள் அனைத்தும் ஐயங்கொள்ளும்.(66) ஓ! குறைந்த முன்னறிதிறன் கொண்டவனே, இப்போது உன் உயிரானது என்னை நம்பியே இருக்கிறது. நான் விரும்பினால் உன்னை உயிரோடு விடலாம், ஆனால் நீயோ உன்னைக் காத்துக் கொள்ள இயன்றவனில்லை.(67) நீ எங்களை எரித்துக் கொல்லவும், பாம்புகளைக் கொண்டு, பிற வகை நஞ்சுகள் மூலம், நீரில் எங்களை மூழ்கச் செய்து எனப் பலமுறை எங்கள் உயிரை எடுக்கவும் முயற்சி செய்தாய்.(68) ஓ! மன்னா, எங்கள் நாட்டைப் பறித்ததன் மூலமும், உன்னால் பேசப்பட்ட கொடுஞ்சொற்கள் மூலமும், திரௌபதியை முறையற்ற வகையில் நீ நடத்தியதன் மூலமும் உன்னால் நாங்கள் தீங்கிழைக்கப்பட்டோம்.(69) ஓ! இழிந்தவனே, இக்காரணங்களுக்காக உனது உயிர் பறிக்கப்பட வேண்டும். எழு, எழுந்து, எங்களுடன் போரிடுவாயாக. உனக்கான நன்மையை அதுவே தரும்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(70)

சஞ்சயன் தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியில் கொழித்த பாண்டவர்கள் அங்கே இவ்வாறே (துரியோதனனை கடிந்துரைத்தவாறும், கேலிசெய்தவாறும்) மீண்டும் மீண்டும் பேசினார்கள்” {என்றான் சஞ்சயன்}.(71)

நீரிலிருந்து எழுந்த துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 32-ஒவ்வொருவராகத் தன்னோடு போரிடலாம் என்று நீருக்குள் மறைந்திருந்தபடியே பாண்டவர்களை அழைத்த துரியோதனன்; பலர் சேர்ந்து அபிமன்யுவைக் கொன்றதைத் துரியோதனனுக்குச் சுட்டிக் காட்டிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரன் கொடுத்த வரங்கள்; நீரிலிருந்து எழுந்த துரியோதனன், பாண்டவர்களை ஒவ்வொருவர் பின் ஒருவராகப் போரிட வரும்படி அழைத்தது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “இவ்வாறு (தன் எதிரிகளால்) கடிந்துரைக்கப்பட்ட போது, எதிரிகளை எரிப்பவனும், கோபம் நிறைந்த இயல்பைக் கொண்டவனும், வீரனுமான என் அரச மகன் {துரியோதனன்} எவ்வாறு நடந்து கொண்டான்?(1) அவன் இதற்குமுன் ஒருபோதும் இதுபோன்ற கடிந்துரைகளைக் கேட்டதில்லை. மேலும் அவன், மன்னனுக்குரிய மரியாதையுடனேயே பிறரால் நடத்தப்பட்டிருக்கிறான்.(2) ஒரு குடையின் நிழலில் நின்றால், பிறரின் புகலிடத்தை எடுத்துக் கொண்டதாகிவிடும் என்று நினைத்து, அதில் நிற்க முன்பு துயரப்பட்டவனும், தன்னுணர்வுமிக்கச் செருக்கின் விளைவால் சூரியனின் பிரகாசத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான அவனால், தன் எதிரிகளின் வார்த்தைகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடிந்தது?(3) மிலேச்சர்கள் மற்றும் நாடோடி இனங்களுடன் கூடிய மொத்த பூமியும் அவனுடைய அருளை நம்பி இருந்ததை நீயே உன் கண்களால் கண்டிருக்கிறாய்.(4) தொண்டர்கள் மற்றும் பணியாட்களை இழந்து ஒரு தனிமையான இடத்தில் மறைந்து கிடக்கையில், அந்த இடத்தில் வைத்து, குறிப்பாகப் பாண்டு மகன்களால் இவ்வாறு நிந்திக்கப்பட்ட போது, ஐயோ, அவன், வெற்றியாளர்களான தன் எதிரிகளால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட கசப்பான குற்றச்சாட்டுகளைக் கேட்டு, அவர்களுக்கு என்ன பதிலைச் சொன்னான்? ஓ! சஞ்சயா, அது குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(5,6)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “யுதிஷ்டிரனாலும், அவனது தம்பிகளாலும் இவ்வாறு நிந்திக்கப்பட்ட உமது அரச மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நீர்நிலைக்குள் கிடந்தபடியே அந்தக் கசப்பான வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த அவலமான நிலையை அடைந்தான். சூடான நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்டுக்கொண்டிருந்த அம்மன்னன் {துரியோதனன்}, தன் கரங்களை மீண்டும் மீண்டும் அசைத்து, போரில் தன் இதயத்தை நிலைக்கச் செய்து, நீருக்குள் இருந்தவாறே பாண்டுவின் அரச மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} இவ்வாறு பதிலளித்தான்.(7-9)

துரியோதனன், “பார்த்தர்களே, நீங்கள் அனைவரும் நண்பர்களையும், தேர்களையும், விலங்குகளையும் கொண்டுள்ளீர்கள். எனினும் நானோ, ஒரு தேரும், ஒரு விலங்கும் கூட இல்லாமல் உற்சாகமற்றவனாகவும், தனியொருவனாகவும் இருக்கிறேன்.(10) ஆயுதங்களை இழந்து, தனியொரு காலாளாக நிற்கும் நான், நன்கு ஆயுதம் தரித்தவர்களும், தேர்களை உடையவர்களுமான எண்ணற்ற எதிரிகளை எதிர்த்து எவ்வாறு போரிடத் துணிவேன்?(11) எனினும், ஓ! யுதிஷ்டிரா, நீங்கள் ஒவ்வொருவராக என்னுடன் போரிடலாம். துணிச்சலுடன் கூடிய பலருடன் ஒருவன் போரிடுவது முறையாகாது,(12) அதிலும் குறிப்பாகக் கவசமில்லாமல், களைத்தவனாக, பேரிடரால் பீடிக்கப்பட்டவனாக, அங்கங்கள் மிகவும் சிதைந்தவனாக, விலங்குகள் மற்றும் துருப்புகள் ஆகிய இரண்டையும் இழந்தவனாக இருக்கும் ஒருவனுக்கு அது முறையாகாது.(13) நான் உன்னிடமோ, பிருதையின் மகனான விருகோதரனிடமோ {பீமனிடமோ}, பல்குனனிடமோ {அர்ஜுனனிடமோ}, வாசுதேவனிடமோ {கிருஷ்ணனிடமோ}, பாஞ்சாலர்கள் அனைவரிடமோ, இரட்டையரிடமோ {நகுலன் மற்றும் சகாதேவனிடமோ}, யுயுதானானிடமோ {சாத்யகியிடமோ},(14) பிற துருப்புகள் அனைத்திடமோ போரிட சற்றும் அஞ்சவில்லை. போரில் தனியொருவனாகவே நின்று, உங்கள் அனைவரையும் நான் தடுப்பேன்.(15)

ஓ! மன்னா, அறவோரனைவரின் புகழுக்கும், அறமே அடிப்படையாகும். அறம் மற்றும் புகழ் ஆகியவற்றை நோற்கும் உன்னிடம் நான் இவை யாவற்றையும் சொல்கிறேன்.(16) நான் (இத்தடாகத்தில் இருந்து) எழுந்து உங்கள் அனைவருடனும் போரிடுவேன். பருவங்கள் அனைத்தையும் அடுத்தடுத்தாகச் சந்திக்கும் ஒரு வருடத்தைப் போல, நான் உங்கள் அனைவரையும் போரில் சந்திப்பேன்.(17) பாண்டவர்களே காத்திருப்பீராக. அதிகாலையில் விண்மீன்கள் {நட்சத்திரங்கள்} அனைத்தின் ஒளியையும் தன் சக்தியால் அழிக்கும் சூரியனைப் போல, இன்று ஆயுதமற்றவனாக, தேரற்றவனாக நான் இருப்பினும், தேர்களையும், குதிரைகளையும் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் நான் அழிப்பேன்.(18) சிறப்புமிக்க க்ஷத்திரியர்களான பாஹ்லீகர், துரோணர், பீஷ்மர், உயர் ஆன்மக் கர்ணன், வீர ஜெயத்ரதன், பகதத்தன், மத்ரர்களின் ஆட்சியாளரான சல்லியர், பூரிஸ்ரவஸ், என் மகன்கள், ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, சுபலரின் மகனான சகுனி, என் நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அனைவருக்கும் நான் பட்டிருக்கும் கடனிலிருந்து இன்று நான் விடுபடப் போகிறேன்.(19-21) உன்னையும், உனது சகோதரர்களையும் கொன்று, நான் பட்டிருக்கும் கடனிலிருந்து இன்று நான் விடுபடுவேன்” என்று சொன்னான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த (குரு) மன்னன் {துரியோதனன்} பேசுவதை நிறுத்திக் கொண்டான்.(22)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! சுயோதனா, நற்பேறாலேயே ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நீ அறிந்து வைத்திருக்கிறாய். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நற்பேறாலேயே உன் இதயம் போரிட விரும்புகிறது.(23) நற்பேறாலேயே நீ வீரனாயிருக்கிறாய், ஓ! குரு குலத்தோனே, நற்பேறாலேயே போரிட நீ அறிந்திருக்கிறாய். தனியொருவனாய் இருந்தாலும் நற்பேறாலேயே எங்கள் அனைவரோடும் நீ போரிட விரும்புகிறாய்.(24) நீ விரும்பும் ஆயுதம் எதையும் எடுத்துக் கொண்டு, எங்களில் யாருடன் வேண்டுமானாலும் நீ போரிடலாம். நாங்கள் அனைவரும் இங்கே பார்வையாளர்களாக நிற்போம்.(25) ஓ! வீரா, (இன்னும்) உன் இதயத்தில் இருக்கும் மற்றொரு விருப்பத்தையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். எங்களில் எவரொருவரை கொன்றாலும் நீ மன்னனாகலாம். அல்லது எங்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வாய்” என்றான்.(26)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “உங்களில் ஒருவனுடன் மட்டும் போரிடும் உகப்பைக்[1] கொடுத்தால் நீ துணிச்சல்மிக்கவனே, நான் கையில் கொண்டிருக்கும் இந்தக் கதாயுதமே நான் தேர்ந்தெடுத்திருக்கும் ஆயுதமாகும்.(27) எனக்கு இணையானவன் என்று உங்களில் எவன் தன்னை நினைப்பானோ, அவன் என் முன்னே வந்து, கதாயுதந்தரித்து, காலாளாக என்னுடன் போரிடட்டும். தேர்களைக் கொண்டு பல அற்புதமான தனிப்போர்கள் நேர்ந்தன. அற்புதமானதும், பெரியதுமான இந்தக் கதாயுதப் போர் இன்று நடைபெறட்டும்.(29) மனிதர்கள் (போரிடும்போது) ஆயுதங்களை மாற்றிக் கொள்ள விரும்புவார்கள். அப்படிப் போரிடும் தன்மையானது, உன் அனுமதியுடன் இன்று மாற்றப்படட்டும்.(30) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இன்று என் கதாயுதத்தைக் கொண்டு உன்னையும், உன் தம்பிகள் அனைவரையும், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அனைவரையும், இன்னும் நீ கொண்டிருக்கும் பிற துருப்புகள் அனைத்தையும் என்னால் வெல்ல முடியும். ஓ! யுதிஷ்டிரா, சக்ரனிடம் {இந்திரனிடம்} கூட நான் சிறிதும் அச்சமடைவதில்லை” என்றான்.(31)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “எழு, ஓ! காந்தாரியின் மகனே, ஓ! சுயோதனா, எழுந்து என்னுடன் போரிடுவாயாக. தனியொருவனாக இருக்கும் நீ, ஓ! பெரும் வலிமை கொண்டவனே, கதாயுதம் தரித்துக் கொண்டு, ஒரு நேரத்தில் ஒருவரோடு மோதும் வகையில் {ஒருவர் பின் ஒருவராக} எங்களோடு போரிடுவாயாக.(32) ஓ! காந்தாரியின் மகனே, ஆண்மையுடனும், நல்ல கவனத்துடனும் போரிடுவாயாக. இன்று இந்திரனே உன் கூட்டாளியாக வந்தாலும் நீ உன் உயிரை விடுவாய்” என்றான்”.(33)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மனிதர்களில் புலியான உமது மகனால் {துரியோதனனால்} யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொந்துக்குள் இருக்கும் வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போல அந்த நீருக்குள் இருந்தபடியே அவன் நீண்ட கடும் மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தான்.(34) உயர்ந்த குலத்தில் பிறந்த ஒரு குதிரையால் சாட்டை அடியைப் பொறுத்துக் கொள்ள முடியாததைப் போலவே, இவ்வாறாக மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட அவனால் அந்த வார்த்தை அங்குசங்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(35)

தண்ணீரைப் பெரும் வேகத்தோடு கலங்கடித்த அந்தப் போர்வீரன், தடாகத்திலிருந்து எழும் யானைகளின் இளவரசனைப் போல, சினத்தால் பெருமூச்சுவிட்டபடியே, வஜ்ரம் போன்று பலமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கனத்த கதாயுதத்துடன் எழுந்தான்.(36) உமது மகன் {துரியோதனன்}, கட்டப்பட்டிருக்கும் அந்த நீரைத் துளைத்துக் கொண்டும், முழுக்க இரும்பாலான தன் கதாயுதத்தைத் தோளில் தாங்கியபடியும், கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல எழுந்தான்.(37) பெரும் பலமும், பெரும் நுண்ணறிவும் கொண்ட உமது மகன், இரும்பாலானதும், தாங்கு கயிறுடன் கூடியதுமான தன் கனத்த கதாயுதத்தைக் கையாளத் தொடங்கினான்.(38) சிகரத்துடன் கூடிய மலைக்கோ, வாழும் உயிரினங்களின் மேல் தன் கோபப்பார்வையைச் செலுத்தும் திரிசூலபாணியான ருத்ரனுக்கோ ஒப்பாகக் கதாயுதத்துடன் இருக்கும் அந்தப் பாரதத் தலைவனைக் கண்ட அவர்கள், வானத்தில் உள்ள தகிக்கும் சூரியனைப்போலத் தன்னைச் சுற்றி பிரகாசத்தைப் பொழிந்தான். உண்மையில், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அவன், தோளில் கதாயுதத்துடன் நீரில் இருந்து எழுந்து நின்ற போது, உயிரினங்கள் அனைத்தும் தண்டத்துடன் கூடிய அந்தகனைப் போல அவனைக் கண்டன.(39-41)

உண்மையில் அப்போது, பாஞ்சாலர்கள் அனைவரும், வஜ்ரதாரியான சக்ரனையோ {இந்திரனையோ}, திரிசூலபாணியான ஹரனையோ போல உமது அரச மகனை {துரியோதனனைக்} கண்டன.(42) எனினும், நீரில் இருந்து எழும் அவனைக் கண்ட பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், தங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு மகிழ்ச்சியுறத் தொடங்கினர்[1].(43) உமது மகன் துரியோதனன், பார்வையாளர்களின் அந்தச் செயல்பாட்டைத் தனக்கு எதிரான அவமதிப்பாகக் கருதினான். பார்வையாலேயே பாண்டவர்களை எரித்துவிடுபவனைப் போலக் கோபத்தால் தன் விழிகளை உருட்டி, தன் புருவ அசைவால் நெற்றியை மூன்றாகச் சுருக்கி, மீண்டும் மீண்டும் தன் கீழுதட்டைக் கடித்தபடியே,(44,45) “பாண்டவர்களே, இந்தப் பரிகாசத்திற்கான கனியை நீங்கள் சுமப்பீர்கள். என்னால் இன்று கொல்லப்படும் நீங்கள், பாஞ்சாலர்களுடன் சேர்ந்து யமனின் வசிப்பிடத்தை அடைவீர்கள்” என்றான்.”(46)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “நீரில் இருந்து எழுந்த உமது மகன் துரியோதனன், கதாயுதத்தைத் தரித்து, குருதியால் குளித்த அங்கங்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்.(47) குருதியால் மறைக்கப்பட்டு, நீரில் நனைந்திருந்த உடலுடன் கூடிய அவன், நீர்ப்பெருக்குடன் கூடிய {அருவிகளைக் கொண்ட} ஒரு மலையைப் போலத் தெரிந்தான்.(48) கதாயுதத்துடன் அவன் நின்று கொண்டிருந்தபோது, பாண்டவர்கள், கிங்கரம்[2] என்றழைக்கப்படும் தண்டாயுதம் தரித்தவனும், கோபக்காரனுமான சூரியனின் மகனை {யமனைப்} போலவே அவனைக் கருதினர்.(49) பெரும் ஆற்றலைக் கொண்டவனான துரியோதனன், தன் கதாயுதத்தைத் தரித்துக் கொண்டு, மேகங்களையோ, அல்லது மகிழ்ச்சியுடன் முழங்கும் ஒரு காளையையோ போன்ற ஆழ்ந்த குரலுடன் பார்த்தர்களைப் போருக்கழைத்தான்.(50)(யமதண்டத்தின் பெயரே கிங்கரம்)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, நீங்கள் ஒவ்வொருவராகவே என்னுடன் மோத வேண்டும். ஒரு வீரன், ஒரே நேரத்தில் பலரோடு மோதுவது முறையாகாது,(51) அதிலும் குறிப்பாகக் கவசமிழந்து, முயற்சியால் களைத்து, நீரால் நனைக்கப்பட்டு, அங்கங்கள் மிகவும் சிதைக்கப்பட்டு, தேர்கள், விலங்குகள் மற்றும் துருப்புகளையும் இழந்திருக்கும் ஒருவனுக்கு {பலரோடு மோதுவது} முறையாகாது.(52) எந்தக் கருவியுமற்றவனாக, கவசம் மற்றும் ஆயுதங்களை இழந்தவனாக இருந்தும் தனியொருவனாகப் போரிடும் என்னைச் சொர்க்கத்தில் இருக்கும் தேவர்கள் காணட்டும்.(53) நான் நிச்சயம் உங்கள் அனைவருடனும் போரிடுவேன். அனைத்தின் முறைமை மற்றும் முறையின்மைகளைக் குறித்த தேவையான தகுதிகளைக் கொண்டிருக்கும் நீ நடுவராக இருப்பாயாக” என்றான்.(54)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, பெருந்தேர்வீரர்கள் பலர் ஒன்றுசேர்ந்து போரில் அபிமன்யுவைக் கொன்றபோது இந்த அறிவு உனக்கு இல்லாமல் போனது எவ்வாறு?(55) எதையும் கருத்தில் கொள்ளாத, சிறு கருணையும் இல்லாத க்ஷத்திரியக் கடமைகள் மிகக் கொடூரமானவையாகும். இல்லையெனில், அந்தச் சூழ்நிலையில் அபிமன்யுவை நீங்கள் எவ்வாறு கொன்றிருக்க முடியும்?(56) நீங்கள் அனைவரும் நீதியை அறிந்தவர்களாவீர். நீங்கள் அனைவரும் வீரர்களுமாவீர். நீங்கள் அனைவரும் போரில் உங்கள் உயிர்களைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தீர்கள். நேர்மையாகப் போரிடுபவர்களுக்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உயர்ந்த முடிவானது சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை அடைவதேயாகும்.(57) ஒருவன் பலரால் ஒருபோதும் கொல்லப்படலாகாது என்பது உங்கள் கடமையாக இருந்தால், உன் ஆலோசனைகளின்படி செயல்பட்ட பலரால் அபிமன்யு ஏன் கொல்லப்பட்டான்?(58) கடினமான காலத்தில் அனைத்து உயிரினங்களும் அறக் கருத்துகளை மறக்கின்றன. பிறகு மறுவுலகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதை அவை காண்கின்றன.(59) ஓ! வீரா {துரியோதனா}, உன் கவசத்தைப் பூட்டுவாயாக, உன் குழல்களை {கேசத்தைக்} கட்டுவாயாக. ஓ பாரதா, உனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள்வாயாக.(60) ஓ! வீரா, மேலும் கூடுதலாக, பாண்டவர்கள் ஐவரில் நீ மோத விரும்பும் ஒருவனை உன்னால் கொல்ல முடிந்தால்கூட, நீயே மன்னனாகலாம் என்ற உனது மற்றொரு விருப்பத்தையும் உனக்கு நான் அளிக்கிறேன். அல்லது (அவனால்) கொல்லப்படும் நீ சொர்க்கத்திற்குச் செல்வாய். ஓ! வீரா, உனது உயிரைத் தவிர எங்களால் கொடுக்க இயலும் எந்த வரத்தையும் நீ எங்களிடம் கேட்கலாம்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(61,62)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தாலான கவசத்தைத் தன் உடலில் பூட்டிக் கொண்டு, பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கிரீடம் ஒன்றையும் அணிந்து கொண்டான்.(63) பிரகாசமான தங்கக்கவசத்தைப் பூண்டிருந்த அவன், அந்தத் தலைக்கவசத்தையும் சூட்டிக் கொண்டான். உண்மையில், ஓ! மன்னா, உமது மகன் ஒரு தங்கச் சிகரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(64) கவசம்பூட்டி, கதாயுதம் தரித்து, பிற கருவிகளுடன் போர்க்கோலம் பூண்ட உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா, களத்தில் நின்றபடியே பாண்டவர்கள் அனைவரிடமும்,(65) “சகோதரர்களில் (ஐவரில்), கதாயுதம் தரித்துக் கொண்டு எவனொருவனும் என்னோடு போரிடலாம். என்னைப் பொறுத்துவரை, நான் சகாதேவனோடோ, பீமனோடோ, நகுலனோடோ,(66) பல்குனனோடோ {அர்ஜுனனோடோ}, உன்னோடோ இன்று போரிடவே விரும்புகிறேன். ஏற்றுக் கொண்ட மோதலின்படி உங்களில் ஒருவனோடு போரிடும் நான் இக்களத்தில் வெற்றியையடைவேன் என்பது உறுதியானதாகும்.(67)

தங்கத்துணியால் போர்த்தப்பட்டிருக்கும் என் கதாயுதத்தின் துணையுடன் அடைவதற்கரிதான இந்தப் பகைமைகளின் முடிவை இன்று நான் அடைவேன்.(68) கதாயுத மோதலில் எனக்கு இணையானவனாக ஒருவனையும் நான் நினைக்கவில்லை. என் கதாயுதத்தைக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக நான் உங்கள் அனைவரையும் கொல்வேன்.(69) உங்கள் அனைவரிலும் என்னோடு நியாயமாகப் போர் செய்யத் தகுந்தவன் ஒருவனுமில்லை. என்னைக் குறித்து இத்தகு செருக்கு நிறைந்த வார்த்தைகளைப் பேசுவது எனக்கு முறையாகாது. இருப்பினும், என் இந்த வார்த்தைகளை உங்கள் முன்னிலையில் நான் உண்மையாக்குவேன்.(70) இந்த நேரத்திற்குள்ளாகவே {முகூர்த்தத்திற்குள்ளாகவே} அந்த வார்த்தைகள் உண்மையாகவோ, பொய்யாகவோ ஆகலாம். உங்களில் கதாயுதத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவன் என்னோடு போரிடுவானாக” என்றான் {துரியோதனன்}.(71)

பீம துரியோதன வாக்குவாதம்! – சல்லிய பர்வம் பகுதி – 33-யுதிஷ்டிரனிடம் கோபடைந்த கிருஷ்ணன்; துரியோதனனை வெல்வது கடினமானது என்று சொன்ன கிருஷ்ணன்; எளிதில் வெல்வேன் என்று சொன்ன பீமன்; பீமனைப் புகழ்ந்த கிருஷ்ணன்; பீமனுக்கும் துரியோதனனுக்கு இடையில் நடந்த வாக்குவாதம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் இந்தத் தொணியிலேயே மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தபோது, கோபத்தால் நிறைந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, “எங்களில் ஒருவரைக் கொன்று குருக்களின் மத்தியில் மன்னனாவாயாக” என்று ஆராயாமால் என்ன வார்த்தைகளைச் சொல்லிவிட்டீர். உண்மையில், ஓ! யுதிஷ்டிரரே, துரியோதனன், உம்மையோ, அர்ஜுனனையோ, நகுலனையோ, சகாதேவனையோ தேர்ந்தெடுத்தால் (விளைவதென்ன)?(2,3) ஓ! மன்னா, பீமசேனரைக் கொல்லும் விருப்பத்தால் துரியோதனன் இரும்புச் சிலையுடன் இந்தப் பதிமூன்று வருடங்களாகக் கதாயுதப்பயிற்சி செய்திருக்கிறான்[1].(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே, பிறகு நம் காரியத்தை எவ்வாறு நம்மால் அடையமுடியும்? ஓ! மன்னர்களில் சிறந்தவரே, கருணையால் தகாத பெருந்துணிவுடன் செயல்படுகிறீர்.(5)இக்கணத்தில், பிருதையின் மகனான விருகோதரரை {பீமரைத்} தவிர (துரியோதனனுக்கு) இணையான வேறொருவரை நான் காணவில்லை. மேலும் அவரது {பீமரது} கதாயுதப் பயிற்சியும் மிகப் பெரிதாக இல்லை.(6) எனவே, ஓ! ஏகாதிபதி, முன்பு உமக்கும், சகுனிக்கும் இடையில் நடைபெற்றதுபோல மீண்டும் வாய்ப்பைக் கொடுக்கும் ஓர் இழிந்த விளையாட்டுக்கு நீர் அனுமதி கொடுத்திருக்கிறீர்.(7) பீமர் வலிமையையும், ஆற்றலையும் கொண்டிருக்கிறார். எனினும் மன்னன் சுயோதனனோ திறமையைக் கொண்டிருக்கிறான். ஓ! மன்னா, வலிமைக்கும், திறமைக்கும் இடையிலான போட்டியில், திறனுடையவனே எப்போதும் வெல்வான்.(8) ஓ! மன்னா, இப்படிப்பட்ட ஒரு பகைவனை உமது வார்த்தைகளால் சுகமான, வசதியான இடத்தில் நிறுத்திவிட்டீர். எனினும், உமது நிலையையோ கடினமாக்கிக் கொண்டீர். இதன் விளைவாக நாம் பேராபத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.(9) எதிரிகள் அனைவரையும் வென்று, துயரங்களில் மூழ்கியிருக்கும் ஒரே ஓர் எதிரி மட்டுமே களையப்படவேண்டியவனாக இருக்கும் நேரத்தில் கைப்பிடியில் கிடைத்த அரசுரிமையை எவன்தான் கைவிடுவான்?(10)

இன்று உலகில் தேவனாகவே இருப்பினும் கூட, போரில் கதாயுதந்தரித்த துரியோதனனை வெல்லத்தகுந்த எந்த மனிதனையும் நான் காணவில்லை.(11) நீரோ, பீமரோ, நகுலனோ, சகாதேவனோ, பல்குனனோ {அர்ஜுனனோ} நேர்மையான போரில் துரியோதனனை வெல்லவல்லவர்களல்ல. மன்னன் துரியோதனன் பெருந்திறமையைக் கொண்டவனாக இருக்கிறான்.(12) ஓ! பாரதரே, “கதாயுதத்தை ஆயுதமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, எங்களில் ஒருவனைக் கொன்றால் நீ மன்னனாகலாம்” என்ற வார்த்தைகளை எவ்வாறு உம்மால் சொல்ல முடிந்தது?(13) துரியோதனன், நமக்கு மத்தியில் நேர்மையான போரை விரும்பி, விருகோதரரோடு {பீமரோடு} மோதினாலும் கூட, நமது வெற்றியானது ஐயத்திற்கிடமானதேயாகும். துரியோதனன் பெரும் வலிமையும், பெரும் திறமையும் கொண்டவனாவான்.(14) “எங்களில் ஒருவனைக் கொன்று மன்னனாவாயாக” என்று உம்மால் எவ்வாறு சொல்ல முடியும்? பாண்டு மற்றும் குந்தியின் வாரிசுகள் அரசாள விதிக்கப்பட்டவர்களில்லை என்பதில் ஐயமில்லை. காட்டு வாழ்வைத் தொடரவோ, பிச்சையெடுத்து வாழ்ந்து தங்கள் நாட்களைக் கடத்தவோதான் அவர்கள் பிறப்பை அடைந்திருக்கிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(15)

பீமசேனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா, ஓ! யதுக்களை மகிழ்விப்பவனே, கவலைப்படாதே. எவ்வளவு கடினமானதாக இருப்பினும், இந்தப் பகைமையின் முடிவை இன்று நான் அடைவேன்.(16) போரில் சுயோதனனைக் கொல்வேன் என்பதில் ஐயமில்லை. ஓ! கிருஷ்ணா, நீதிமானான யுதிஷ்டிரரின் வெற்றி உறுதியானது என்றே தோன்றுகிறது.(17) இந்த எனது கதாயுதமானது, துரியோதனனுடைய கதாயுதத்தைவிட ஒன்றரைமடங்கு கனமானதாகும். ஓ! மாதவா, கவலை அடையாதே.(18) கதாயுதத்தையே ஆயுதமாகக் கொண்டு நான் அவனோடு போரிடத் துணிவேன். ஓ! ஜனார்த்தனா, நீங்கள் அனைவரும் அம்மோதலில் பார்வையாளர்களாக நிற்பீர்களாக.(19) அனைத்து வகை ஆயுதங்களைக் கொண்ட தேவர்களை உள்ளடக்கி மூவுலகத்தோடும் என்னால் போரிட முடியும் எனும்போது, துரியோதனனைக் குறித்து நீ என்ன சொல்வாய்?” என்றான்”.(20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “விருகோதரன் {பீமன்} இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மகிழ்ச்சியால் நிறைந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, உயர்வாக மெச்சியபடியே அவனிடம்,(21) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உம்மை நம்பியிருக்கும் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர், தன் எதிரிகள் அனைவரையும் கொன்று, மீண்டும் தன் சுடர்மிக்கச் செழிப்பை அடைவார் என்பதில் ஐயமில்லை.(22) போரில் நீர் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் கொன்றுவிட்டீர். உமது கைகளால் மன்னர்கள் பலரும், இளவரசர்களும், யானைகளும் தங்கள் விதியைச் சந்திக்க நேர்ந்தது.(23) ஓ! பாண்டுவின் மகனே, கலிங்கர்கள், மகதர்கள், கௌரவர்கள், மேற்கத்தியர்கள், காந்தாரர்கள் ஆகியோர் அனைவரும் இந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்டனர்.(24) ஓ! குந்தியின் மகனே, துரியோதனனைக் கொன்று, விஷ்ணு (மூவுலகங்களின் அரசுரிமையையும்) சச்சியின் தலைவனுக்கு {இந்திரனுக்குக்} கொடுத்ததைப் போல, கடல்களுடன் கூடிய பூமியை நீதிமானான யுதிஷ்டிரருக்கு அளிப்பீராக.(25) பொல்லாத திருதராஷ்டிரர் மகனோ {துரியோதனனோ}, போரில் உம்மை எதிரியாக அடைந்து, தன் விதியைச் சந்திப்பான் என்பதில் ஐயமில்லை. அவனது எலும்புகளை நொறுக்கி உமது உறுதிமொழியை நிச்சயம் நீர் நிறைவேற்றுவீர்.(26) எனினும், ஓ! பிருதையின் மகனே, திருதராஷ்டிரன் மகனுடன் எப்போதும் கவனமாகப் போரிடுவீராக. அவன், திறன் மற்றும் பலம் ஆகிய இரண்டையும் பெற்று எப்போதும் போரில் திளைப்பவனாக இருக்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(27)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு சாத்யகி அந்தப் பாண்டுவின் மகனைப் பாராட்டினான்.(28) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் பீமசேனனின் அவ்வார்த்தைகளைப் பாராட்டினர்.(29) பிறகு, பயங்கர வலிமையைக் கொண்டவனான பீமன், சுடர்மிக்கச் சூரியனைப் போலச் சிருஞ்சயர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம், (30) “இந்தப் போரில் நான் இவனோடு {துரியோதனனோடு} மோதத் துணிவேன். மனிதர்களில் இழிந்தவனான இவன், போரில் என்னை வெல்லத் தகுந்தவன் இல்லை.(31) காண்டவ வனத்தில் நெருப்பை வீசிய அர்ஜுனனைப் போல, இன்று திருதராஷ்டிரர் மகனான இந்தச் சுயோதனன் மேல் என் இதயத்தில் நான் வளர்த்து வந்த கோபத்தைக் கக்கப் போகிறேன்.(32) ஓ! பாண்டுவின் மகனே, உமது இதயத்தில் தைத்திருக்கும் ஈட்டியை நான் இன்று பிடுங்கப் போகிறேன். ஓ! மன்னா, என் கதாயுதத்தைக் கொண்டு இந்த இழிந்தவனை வீழ்த்தியபிறகு, நீர் மகிழ்ச்சி அடைவீராக.(33) எனினும், ஓ! பாவமற்றவரே, உமது மகிமை நிறைந்த மாலையை {கீர்த்திமாலையை} நான் இன்று மீட்டெடுப்பேன். இன்று சுயோதனன் தனது உயிர் மூச்சையும், செழிப்பையும், நாட்டையும் கைவிடுவான்.(34) இன்று மன்னர் திருதராஷ்டிரரும் கூட, தன் மகனின் கொலையைக் கேட்டுவிட்டு, சகுனியின் பரிந்துரைகளில் இருந்து எழுந்த (நமக்கு அவர் இழைத்த) தீமைகள் அனைத்தையும் நினைவுகூர்வார்” என்றான் {பீமன்}.(35)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தப் பாரதக் குல இளவரசன் {பீமன்}, விருத்திரனை (மோதலுக்கு) அழைக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலப் போரிடுவதற்காக நின்று கொண்டிருந்தான்.(36) அந்த அழைப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் {துரியோதனன்}, மதங்கொண்ட யானையைத் தாக்கச் சொல்லும் மற்றொரு யானையைப் போல அம்மோதலுக்குச் சென்றான்.(37) பாண்டவர்கள், கதாயுதத்துடன் வந்த உமது மகனை, சிகரம் கொண்ட கைலாச மலையைப் போலக் கண்டனர்.(38) உண்மையில், மந்தையில் இருந்து பிரிந்து தனியாக நிற்கும் யானைகளின் இளவரசனைப் போல உமது வலிமைமிக்க மகனைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(39) போரில் சிங்கத்தைப் போலவே நின்று கொண்டிருந்த துரியோதனன், எந்த அச்சத்தையும், திகைப்பையும், வலியையும், கவலையையும் அடையவில்லை.(40)

சிகரம் கொண்ட கைலாச மலையைப் போன்ற கதாயுதத்தை உயர்த்தி நின்ற அவனை {துரியோதனனைக்} கண்ட பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனிடம்,(41) “மன்னர் திருதராஷ்டிரரும், நீயும் எங்களுக்குச் செய்த தீமைகள் அனைத்தையும் மனத்தில் நிறுத்துவாயாக. வாரணாவதத்தில் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்வாயாக.(42) திரௌபதி தன் பருவ {மாதவிடாய்} காலத்தில் சபைக்கு மத்தியில் வைத்து தவறாக நடத்தப்பட்டதையும், சகுனியின் பரிந்துரையால் மன்னர் யுதிஷ்டிரர் எவ்வாறு வீழ்த்தப்பட்டார் என்பதையும் நினைவுகூர்வாயாக.(43) ஓ! தீய ஆன்மாவே, அந்தச் செயல்கள் மற்றும் அப்பாவி பார்த்தர்களுக்கு நீ செய்த பிற தீங்குகள் ஆகியவற்றின் பயங்கர விளைவை இப்போது காண்பாயாக.(44) பாரதர்களின் சிறப்புமிக்கத் தலைவரும், நம் அனைவருக்கும் பாட்டனுமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உன் காரணமாக (எங்களால்) தாக்கி வீழ்த்தப்பட்டு இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(45)

துரோணரும் கொல்லப்பட்டார், கர்ணனும் கொல்லப்பட்டான். பெரும் வீரம் கொண்ட சல்லியரும் கொல்லப்பட்டார். அதோ பகைமைகளின் வேராக இருந்த அந்தச் சகுனியும் போரில் அங்கே கொல்லப்பட்டிருக்கிறான்.(46) உனது வீரச் சகோதரர்களும், உனது மகன்களும், உன் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்டிருக்கின்றன. பெரும் வீரம் கொண்டவர்களும், போரில் இருந்து பின்வாங்காதவர்களுமான வேறு பிற மன்னர்களும் கொல்லப்பட்டனர்.(47) இவர்களும், பிற க்ஷத்திரியக் காளைகள் பலரும், திரௌபதியின் குழல்களைப் பற்றிய அந்த இழிபிறவியான பிராதிகாமினும் கொல்லப்பட்டனர்.(48) குலத்தை அழித்தவனும், மனிதர்களில் இழிந்தவனுமான நீ மட்டுமே இன்னும் உயிருடன் இருக்கிறாய். உன்னையும் இன்று என் கதாயுதத்தால் கொல்லப்போகிறேன். இதில் ஐயமேதும் இல்லை.(49) ஓ! மன்னா, இன்றைய போரில் நான் உன் செருக்கைத் தணிப்பேன். அரசுரிமை குறித்த உன் நம்பிக்கை அனைத்தையும் அழித்து, ஓ! மன்னா, பாண்டுவின் மகன்களுக்கு இழைக்கபட்ட குற்றச் செயல்களுக்காகப் பழிதீர்ப்பேன்” என்றான் {பீமன்}.(50)

துரியோதனன் {பீமனிடம்}, “வார்த்தைகள் பலவற்றால் என்ன பயன்? என்னுடன் இப்போது போரிடுவாயாக. ஓ! விருகோதரா {பீமா}, போருக்கான உன் விருப்பத்தை உன்னில் இருந்து இன்று நான் விரட்டுவேன்.(51) ஓ! இழிந்தவனே {பீமா}, மோதலுக்காகக் கதாயுதத்துடன் நின்று கொண்டிருக்கும் என்னை நீ ஏன் காணவில்லையா? இமய மலையின் பாறையைப் போலத் தெரியும் உறுதிமிக்கக் கதாயுதத்தை நான் தரித்திருக்கவில்லையா?(52) ஓ! இழிந்தவனே, இவ்வாயுதத்தைத் தரித்திருக்கும் என்னை வெல்ல எந்த எதிரிதான் துணிவான்? இது நேர்மையான போராக இருந்தால், தேவர்களில் புரந்தரனே ஆனாலும் கூட அந்த எல்லைக்கு {துணிவுறத்} தகுந்தவன் இல்லை.(53) நீ குறிப்பிட்ட என் தீச்செயல்கள் அனைத்திருக்காகவும் (இப்போதும் கூட) உன்னால் எனக்குச் சிறு காயத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.(54) நான், என் பலத்தைப் பயன்படுத்தி உங்கள் அனைவரையும் காட்டில் வசிக்கவும், தலைமறைவாக மாறுவேடங்களில் இருக்கவும் செய்தேன்.(55) உங்களின் நண்பர்களும், கூட்டாளிகளும்கூடக் கொல்லப்பட்டிருக்கின்றனர். எங்கள் இழப்பும் அதற்கு இணையானதே. இப்போது இந்தப் போரில் நான் வீழ்ந்தாலும் அஃது உயர்வாகப் புகழத்தக்கதாகவே இருக்கும். ஒருவேளை காலமேகூட அதற்குக் காரணமாக அமையலாம்.(56) இந்த நாள் வரை, போர்களத்தில் நேர்மையான போரில் ஒருபோதும் நான் வீழ்த்தப்பட்டதில்லை. வஞ்சகத்தால் என்னை நீ வீழ்த்தினால், உனக்குப் புகழ்க்கேடு எப்போதும் நிலைதிருக்கும் என்பது நிச்சயம். அந்த உனது செயல் நியாயமற்றதும், இழிவானதுமாகும் என்பதில் ஐயமில்லை.(57) ஓ! குந்தியின் மகனே, நீரில்லா கூதிர்கால மேகத்தைப் போல இவ்வாறு கனியில்லாமல் {பலனில்லாமல்} முழங்காதே. உன் பலமனைத்தையும் இப்போது போரில் காட்டுவாயாக” என்றான் {துரியோதனன்}.(58)

அவனது இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும் வெற்றியில் உள்ள விருப்பத்தால் உந்தப்பட்டவர்களுமான பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் அவற்றை உயர்வாக மெச்சினார்கள்.(59) கரங்களைத் தட்டி மதங்கொண்ட யானையைத் தூண்டும் மனிதர்களைப் போல, அவர்கள் (தங்கள் புகழுரைகளாலும், உற்சாகமூட்டல்களாலும்) மன்னன் துரியோதனனை மகிழ்வுறச் செய்தனர்.(60) அங்கே இருந்த யானைகள் மீண்டும் மீண்டும் பிளிறவும், குதிரைகள் மீண்டும் மீண்டும் கனைக்கவும் தொடங்கின. வெற்றியடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட பாண்டவர்களின் ஆயுதங்கள் தன்னொளியாலேயே ஒளிர்ந்து கொண்டிருந்தன” {என்றான் சஞ்சயன்}.(61)

பலராமன் வருகை! – சல்லிய பர்வம் பகுதி – 34-கதாயுத்தம் தொடங்குமுன் அங்கே வந்த பலராமன்; பலராமனை முறையாக வரவேற்ற பாண்டவர்கள்; அனைவரும் அமர்ந்ததும் கதாயுதப் போர் தொடங்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்த பின்னர், உண்மையில் அந்தக் கடும்போர் தொடங்கப்போகும் தருணத்தில்,(1) பனைமரக் கொடியைக் கொண்டவனும், கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான ராமன் {பலராமன்}, தன் சீடர்களான அந்த இரு வீரர்களுக்கிடையில் நடக்கப்போகும் போரைக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு வந்தான்.(2) கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடிய பாண்டவர்கள், அவனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை நோக்கி விரைந்து முறையான சடங்குகளுடன் அவனை {பலராமனை} வழிபட்டு வரவேற்றனர்.(3) அவர்களது வழிபாடு முடிந்ததும், ஓ! மன்னா, அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள், “ஓ! ராமரே, உமது சீடர் இருவரின் போர்த்திறன்களைக் காண்பீராக” {என்றனர்}.(4)

அப்போது ராமன் {பலராமன்}, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, அங்கே கதாயுதத்துடன் நின்றிருந்த குருகுலத்து துரியோதனனையும் கண்டு,(5) “நான் வீட்டைவிட்டுச் சென்றதிலிருந்து நாற்பத்திரண்டு நாட்கள் கடந்திருக்கின்றன. புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் புறப்பட்ட நான் சிரவணத்தில் {திருவோணம்} திரும்பியிருக்கிறேன்[1]. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நான், என் சீடர்கள் இருவருக்கிடையிலான மோதலைக் காண விரும்புகிறேன்” என்றான்.(6) அந்நேரத்தில் வீரர்களான துரியோதனன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கதாயுதங்களுடன் களத்தில் பிரகாசமாக நின்று கொண்டிருந்தனர்.(7) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனை {பலராமனைத்} தழுவிக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், அவனது நலத்தை விசாரித்து, அவனை வரவேற்றான்.(8)

இரு பெரும் வில்லாளிகளான அந்தச் சிறப்புமிக்கக் கிருஷ்ணர்கள் {அதாவது கருப்பர்களான வாசுதேவன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} இருவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரனை {பலராமனை} உற்சாகமாக வணங்கி அவனைத் தழுவிக் கொண்டனர்.(9) அதேபோலவே, மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, திரௌபதியின் மகன்கள் ஐவரும், பெரும்பலம் கொண்டவனான அந்த ரோகிணியின்மகனை {பலராமனை} வழிபட்டு, (மரியாதையுடன் ஒரு குறிப்பிட்ட தொலைவில்) நின்றனர்.(10) பெரும் பலத்தைக் கொண்டவனான பீமசேனனும், உமது மகனும் {துரியோதனன்}, (தங்கள் கரங்களில் இருந்த) கதாயுதங்கள் இரண்டையும் உயர்த்தி, அந்தப் பலதேவனை {பலராமனை} வழிபட்டனர்.(11) பிற மன்னர்கள் அனைவரும் ராமனுக்கு {பலராமனுக்கு} மரியாதை செலுத்தி வரவேற்று, அவனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இம்மோதலைக் காண்பீராக” என்றனர். இவ்வாறே அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயர் ஆன்மா கொண்டவனான ரோகிணியின் மகனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்.(12)

அளவிலா சக்தி கொண்டவனான ராமனும், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சர்களைத் தழுவிக் கொண்டு, (பிற) மன்னர்கள் அனைவரின் நலத்தையும் குறித்து விசாரித்தான். அதேபோலவே, அவனை அணுகிய அவர்கள் {பிற மன்னர்கள்} அனைவரும் அவனது நலத்தைக் குறித்து விசாரித்தனர்.(13) கலப்பையைக் கொண்ட அந்த வீரன், அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் வயதுக்கேற்ப மரியாதையாக விசாரித்துப் பதிலுக்கு வணங்கி,(14) ஜனார்த்தனனையும், சாத்யகியையும் அன்புடன் தழுவிக் கொண்டான். அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்த அவன், அவர்களது நலனையும் விசாரித்தான்.(15) ஓ! மன்னா, அவர்கள் இருவரும், தேவர்களின் தலைவனான பிரம்மனை வழிபடும் இந்திரனையும், உபேந்திரனையும் போலத் தங்களுக்கு மூத்தவனான அவனை முறையாகப் பதிலுக்கு வழிபட்டனர்.(16)

அப்போது தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! பாரதரே, எதிரிகளைத் தண்டிப்பவனான ரோகிணியின் மகனிடம், “ஓ! ராமா {பலராமா}, இரு சகோதரர்களுக்கிடையில் நடக்கும் இந்த அஞ்சத்தக்க மோதலைக் காண்பாயாக” என்றான்.(17) இவ்வாறு அந்தப் பெரும் தேர்வீரர்களால் வழிபடப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களும், பேரழகும் கொண்ட அந்தக் கேசவனின் அண்ணன் {பலராமன்}, அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டான்.(18) நீல நிற ஆடை அணிந்தவனும், வெண்ணிற மேனி கொண்டவனுமான ராமன் {பலராமன்}, அம்மன்னர்களுக்கு மத்தியில் அமர்ந்தபோது, ஆகாயத்தில் பல்லாயிரம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(19) அப்போது உமது மகன்கள் இருவருக்குமிடையில் {துரியோதனன் மற்றும் பீமனுக்கிடையில்}, (பல வருடங்களாகத் தொடரும்) சச்சரவை முடித்து வைப்பதற்காக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் பயங்கரமான மோதல் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(20)

சந்திரனும், ரோஹிணியும் – பிரபாஸத் தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 35-பலராமனின் புனிதப்பயணத்தைக் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பிரபாஸத்தின் பெயர்க்காரணத்தைச் சொன்ன வைசம்பாயனர்; தக்ஷன் தன் மகள்களைச் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தது; ரோகிணியுடன் மட்டும் அதிக அன்புடன் இருந்த சந்திரன்; சந்திரனைச் சபித்த தக்ஷன்; தக்ஷனிடம் பரிகாரம் கேட்ட தேவர்கள்; பிரபாஸத்தை அடைந்து பிணிதீர்ந்த சந்திரன்; உதபானத்தில் மறைந்த சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் ஓடிக் கொண்டிருப்பதைச் சொல்லும் குறிப்பு…

ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்}, “(குருக்களுக்கும் பாண்டுக்களுக்கும் இடையில் நடந்த) அந்தப் பெரும்போர் தொடங்குவதற்கு முன்பு, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} விடைபெற்றுக் கொண்ட தலைவன் ராமன் {பலராமன்}, விருஷ்ணிகள் பலருடன் (துவாரகையிலிருந்து) புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் கேசவனிடம், “நான் திருதராஷ்டிரன் மகனுக்கோ, பாண்டுவின் மகன்களுக்கோ என் ஆதரவைத் தரமாட்டேன், மாறாக நான் விரும்பும் இடங்களுக்குச் செல்லப்போகிறேன்” என்று சொன்னான்.(2) இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, எதிரிகளைத் தடுப்பவனான ராமன் {பலராமன்} அங்கிருந்து சென்று விட்டான். ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, அவனது வருகை குறித்த அனைத்தையும் எனக்கு நீர் சொல்வதே தகும்.(8) ராமன் {பலராமன்} அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தான், அந்தப் போரை எவ்வாறு கண்டான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் கருத்தின்படி நீர் உரைப்பதில் நல்ல திறம் பெற்றவராக இருக்கிறீர்” என்றான் {ஜனமேஜயன்}.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உயர் ஆன்மப் பாண்டவர்கள் உபப்லாவ்யத்தில் நிலைகொண்ட பிறகு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயா}, அமைதி நோக்குடனும், அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதற்காகவும் மதுசூதனனை {கிருஷ்ணனை} திருதராஷ்டிரன் முன்னிலைக்கு அனுப்பினர்.(5) ஹஸ்தினாபுரம் சென்று திருதராஷ்டிரனைச் சந்தித்த கேசவன் {கிருஷ்ணன்}, உண்மையான, அதிலும் குறிப்பாக நன்மையை விளைவிக்கும் வார்த்தைகளைச் சொன்னான்.(6) எனினும் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, நான் ஏற்கனவே சொன்னது போலவே அந்த ஆலோசனைகளைக் கேட்கவில்லை.(7) அமைதியை ஏற்படுத்த இயலாதவனும், மனிதர்களில் முதன்மையானவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணன், ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயனே}, தன் தூது தோல்வியுற்றதும், (பாண்டவ முகாமுக்குத்) திரும்பி, பாண்டவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) “விதியால் உந்தப்படும் கௌரவர்கள் என் வார்த்தைகளை அலட்சியம் செய்கின்றனர். பாண்டவர்களே, என்னுடன் (போர்க்களத்திற்கு) வந்து, புஷ்ய {பூசம்} நட்சத்திரத்தின் கீழ் புறப்படுங்கள்” {என்று கிருஷ்ணன் சொன்னான்}.(10)

அதன்பிறகு, (இரு தரப்பின்) துருப்புகளும் திரட்டப்பட்டு, அணிவகுக்கப்பட்டபோது, மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையைக் கொண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான ரோகிணியின் மகன் {பலராமன்}, தன் தம்பியான கிருஷ்ணனிடம்,(11) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுசூதனா, நாம் குருக்களுக்கு ஆதரவளிப்போமாக” என்றான். எனினும் கிருஷ்ணனோ அவனது வார்த்தைகளைக் கேட்கவில்லை.(12) (இதனால்) இதயம் நிறைந்த சினத்துடன் கூடியவனும், கலப்பைதாரியுமான அந்த யதுகுலத்தின் சிறப்புமிக்க மகன் {பலராமன்}, சரஸ்வதிக்குப் {சரஸ்வதி ஆற்றுக்கு} புனிதப் பயணம் புறப்பட்டான்.(13) யாதவர்கள் அனைவரின் துணையுடன் கூடிய அவன், மைத்ரம்[1] என்றழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் புறப்பட்டான். எனினும் போஜத் தலைவன் (கிருதவர்மன்) துரியோதனன் தரப்பை அடைந்தான். யுயுதானனின் {சாத்யகியின்} துணையுடன் கூடிய வாசுதேவன் பாண்டவர்களை அடைந்தான்.(14) புஷ்ய நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் அந்த ரோகிணியின் வீரமகன் {பலராமன்} புறப்பட்ட பிறகு, அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களை முன்னணியில் நிறுத்திக் கொண்டு, குருக்களை எதிர்த்துச் சென்றான்.(15)அப்படிச் சென்றபோது ராமன் {பலராமன்} வழியில் தன் பணியாட்களிடம், “புனித பயணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், பயன்படக்கூடிய ஒவ்வொரு பொருளையும் கொண்டு வருவீராக. துவாரகையில் இருக்கும் (புனித) நெருப்பையும், நமது புரோகிதர்களையும் கொண்டு வருவீராக. தங்கம், வெள்ளி, பசுக்கள், ஆடைகள், குதிரைகள், யானைகள், தேர்கள், கோவேறுகழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் பிற இழுவை கால்நடைகளையும் கொண்டு வருவீராக.(17) புனித நீர்நிலைகளில் தற்காலிகமாகத் தங்கும் போது தேவைப்படும் அனைத்தையும் கொண்டு வந்து, சரஸ்வதியை நோக்கிப் பெரும் வேகத்துடன் செல்வோமாக.(18) ரித்விக்குகளையும், நூற்றுக்கணக்கான முதன்மையான பிராமணர்களையும் அழைத்துவருவிராக” என்று பணியாட்களுக்கு ஆணைகளையிட்ட வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்},(19) குருக்களுக்குப் பேரிடர் நேர்ந்த அந்நேரத்தில் புனிதப் பயணத்துக்குப் புறப்பட்டான். சரஸ்வதியை நோக்கிப் புறப்பட்ட அவன் {பலராமன்}, அவளது {சரஸ்வதி ஆற்றின்} போக்கில் உள்ள புண்ணியத்தலங்கள் அனைத்துக்கும்,(20) புரோகிதர்கள், நண்பர்கள், பிராமணர்களில் முதன்மையானோர் பலர் ஆகியோருடனும், தேர்கள், யானைகள், குதிரைகள், பணியாட்கள் ஆகியவற்றுடனும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மாடுகள், கோவேறு கழுதைகள் மற்றும் ஒட்டகங்களால் இழுக்கப்பட்ட பல வாகனங்களில் சென்றான்.(21)

பல்வேறு நாடுகளில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, களைத்திருந்தவர்களுக்கும், உடல் இளைத்திருந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வாழ்வுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் பெரும் அளவில் {தானமாகக்} கொடுக்கப்பட்டன.(22) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்கள் விரும்பிய எந்த உணவுவகைகளும் எங்கும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.(23) ரோகிணி மகனின் {பலராமனின்} ஆணைக்கிணங்க, பயணத்தின் வேறு வேறு நிலைகளில், உண்ணத்தக்கவையும், குடிக்கத்தக்கவையும் பெரும் அளவில் சேமிக்கப்பட்டன.(24) விலையுயர்ந்த ஆடைகள், படுக்கைகள், விரிப்புகள் ஆகியன சுகத்தையும், வசதியையும் விரும்பும் பிராமணர்களின் மனநிறைவுக்காக {தானமாகக்} கொடுக்கப்பட்டன.(25) எந்த ஒரு பிராமணனோ, எந்த ஒரு க்ஷத்திரியனோ கேட்ட எந்த ஒரு பொருளும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மனவெறுப்பில்லாமல் அவனுக்குக் கொடுக்கப்படுவது காணப்பட்டது.(26) அந்தக் குழுவில் இருந்த அனைவரும் பெரும் மகிழ்ச்சியோடு சென்று, மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். (பலராமனைத் தொடர்ந்து சென்ற) மனிதர்கள், பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு வாகனங்களையும், தாகத்திலிருந்தோருக்கு பானங்களையும், பசித்தவர்களுக்கு ருசியான உணவுவகைகளையும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பலருக்கு அடைகளையும், ஆபரணங்களையும் {தானமாகக்} கொடுத்தனர்.(27,28)

அந்தக் குழு பயணம் செய்த சாலையானது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிரகாசமானதாக, ஓ! வீரா, அனைவருக்கும் உயர்ந்த வசதியை அளிப்பதாக, சொர்க்கத்துக்கு ஒப்பானதாக இருந்தது.(29) அதில் {அந்த சாலையில்} எங்கும் மகிழ்ச்சி இருந்தது, எங்கும் கொள்ளத்தக்க சுவையான உணவு வகைகளும் இருந்தான. அங்கே கடைகளும், சிறு கடைகளும், இருந்தன, விற்பனைக்குரிய பல்வேறு பொருட்களும் இருந்தன. மேலும் அந்த மொத்த வழியும் {சாலையும்} மனிதர்களால் நிரம்பியிருந்தது. மேலும் அது பல்வேறு வகையான மரங்கள், உயிரினங்கள் மற்றும் பல்வேறு வகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(30) கடும் நோன்புகளை நோற்பவனான அந்த உயர்ஆன்ம பலதேவன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பல்வேறு புண்ணியத்தலங்களில் பிராமணர்களுக்கு அபரிமிதமான வேள்விப் பொருட்களையும், அதிகமான செல்வத்தையும் {தானமாக} அளித்தான்.(31) அந்த யது குலத் தலைவன் {பலராமன்}, சிறந்த துணிகளால் மறைக்கப்பட்டவையும், தங்கத்தால் பூட்டப்பட்ட கொம்புகளைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கறவைப்பசுக்களையும்,(32) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குதிரைகளையும், பல வாகனங்களையும், பல அழகிய பணியாட்களையும் {தானமாக} அளித்தான்.(33) இவ்வாறே அந்த உயர் ஆன்ம ராமன் {பலராமன்}, சரஸ்வதியில் இருந்து பல்வேறு சிறந்த தீர்த்தங்களில் செல்வத்தை {தானமாகக்} கொடுத்தான். ஒப்பற்ற சக்தியும், பெருந்தன்மையுடன் கூடிய நடத்தையையும் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, தன் பயணத்தின் போக்கில் இறுதியாகக் குருக்ஷேத்திரத்தை வந்தடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(34)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, சரஸ்வதியில் உள்ள பல்வேறு தீர்த்தங்களின் குணங்களையும், தோற்றங்களையும், தகுதிகளையும் {புண்ணியப் பலன்களையும்}, தற்காலிகமாக ஆங்காங்கே இருக்கும்போது நோற்கப்பட்ட விதிகளையும் எனக்குச் சொல்வீராக.(35) ஓ! சிறப்புமிக்கவரே, அவற்றை, அவற்றின் வரிசையிலேயே எனக்குச் சொல்வீராக. ஓ! பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, என் ஆவல் அடக்கமுடியாததாக இருக்கிறது” என்று கேட்டான்.(36)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, இந்தத் தீர்த்தங்கள் அனைத்தின் குணங்களும், தோற்றங்களும் பற்றிய கருத்து மிகப்பெரியதாகும். இருப்பினும் நான் உனக்கு அவற்றை விவரிப்பேன். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் புனித விவரிப்பை முழுமையாகக் கேட்பாயாக.(37) பலதேவன், தன்புரோகிதர்கள் மற்றும் நண்பர்களின் துணையுடன் முதலில் பிரபாஸம்[2] என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான். காசநோயால் {க்ஷயரோகத்தால்} பாதிக்கப்பட்டிருந்த நட்சத்திரக்கூட்டங்களின் தலைவன் (சோமன்), அங்கே தன் பாவத்தில் இருந்து விடுதலை அடைந்தான். அங்கே சக்தியை மீண்டும் பெற்ற அவன், ஓ! மன்னா, இப்போது அண்டத்திற்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கிறான். பூமியில் முதன்மையானதான அந்தத் தீர்த்தம், முன்பு (பிரகாசத்தை இழந்திருந்த) சோமனுக்கு {சந்திரனுக்குக்} காந்தியை அளித்ததால், அது பிரபாஸம் என்று அழைக்கப்படுகிறது” {என்றார் வைசம்பாயனர்}.(38,39)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “புகழப்படும் சோமன் {சந்திரன்} காசநோயால் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? மேலும் அவன் {சந்திரன்} அந்தத் தீர்த்தத்தில் எவ்வாறு நீராடினான்?(40) அந்தப் புனித நீரில் நீராடிய அவன், எவ்வாறு தன் சக்தியை மீண்டும் பெற்றான்? ஓ! முனிவரே, இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்றான்.(41)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, தக்ஷனுக்கு இருபத்தேழு {27} மகள்கள் இருந்தனர். அவர்கள் (திருமணத்திற்காக) சோமனுக்கு அளிக்கப்பட்டனர்.(42) மங்கலமான செயல்களைக் கொண்டவ சோமன் {சந்திரன்}, பல்வேறு நட்சத்திரக்கூட்டங்களான அந்த மனைவியருடன் தொடர்பு கொண்டு மனிதர்கள் காலத்தைக் கணக்கிட தொண்டாற்றினான்.(43) அகன்ற விழிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும் இவ்வுலகில் அழகில் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களாக இருந்தனர். எனினும், ரோகிணியானவள் அழகெனும் செல்வத்தில் அவர்கள் அனைவரிலும் முதன்மையானவளாக இருந்தாள்.(44) புகழத்தக்கவனான சோமன் அவளிடம் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தான். அவள் அவனுக்கு இனிமையானவளானதால், அவளையே இன்பத் துணையாக (பெரும்பாலும்) அவன் அனுபவித்தான்.(45) அந்தப் பழங்கால நாட்களில், ஓ! ஏகாதிபதி, சோமன் ரோகிணியுடன் (அதிக) காலம் வாழ்ந்தான். நட்சத்திரக்கூட்டங்கள் என்றழைக்கப்பட்ட அவனது பிற மனைவியர் இதனால் அந்த உயர் ஆன்மாவிடம் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர்.(46)

படைப்புத் தலைவனான அவர்களது தந்தையிடம் (தக்ஷனிடம்) வேகமாகச் சென்ற அவர்கள், அவனிடம், “சோமன் எங்களுடன் வாழவில்லை. அவன் எப்போதும் ரோகிணியுடனேயே இருக்கிறான்.(47) எனவே, ஓ! உயிரினங்களின் தலைவரே, கட்டுப்படுத்தப்பட்ட உணவுமுறை மற்றும் கடும் நோன்புகளை நோற்றபடியே நாங்கள் அனைவரும் உமது தரப்பிலேயே வசிக்கப் போகிறோம்” என்றனர்.(48) அவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தக்ஷன் (சோமனைக் கண்டு) அவனிடம், “உன் மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வயாக. பெரும்பாவம் உன்னைக் களங்கப்படுத்தாமல் இருக்கட்டும்” என்றான். பிறகு தக்ஷன் தன் மகள்களிடம், “நீங்கள் அனைவரும் சசினிடம் (சந்திரனிடம்} செல்லுங்கள். என் ஆணையின் பேரில் சந்திரமாஸ் உங்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வான்” என்றான்.(50)

அவனால் {தக்ஷனால்} அனுப்பப்பட்ட அவர்கள் குளிர்ந்த கதிர்களைக் கொண்டோனின் {சந்திரனின்} வசிப்பிடத்திற்குச் சென்றனர். அதன்பிறகும் அந்தத் துதிக்கத்தக்க சோமன், ஓ! பூமியின் தலைவா, ரோஹிணியிடம் மட்டுமே நிறைவுகொண்டு, முன்பு போலவே அவளுடனேயே அதிகமாக வாழ்வதைத் தொடர்ந்தான்.(51) அவனது மற்ற மனைவியர் மீண்டும் தங்கள் தந்தையிடம் {தக்ஷனிடம்} சென்று அவனிடம், “உமக்குத் தொண்டு செய்து, உமது ஆசிரமத்திலேயே நாங்கள் வசிக்கப் போகிறோம். சோமன் எங்களோடு வாழவில்லை, உமது ஆணைகளையும் மனத்தில் கொள்ளவில்லை” என்றனர்.(52) அவர்களது வார்த்தைகளைக் கேட்ட தக்ஷன் மீண்டும் சோமனிடம், “உன் மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வாயாக. ஓ! விரோசனா, நான் சபிக்காதிருக்கும்படி நடந்து கொள்வாயாக” என்றான்.(53) எனினும், போற்றுதலுக்குரிய சோமன், அந்தத் தக்ஷனின் வார்த்தைகளை அலட்சியம் செய்து, ரோஹிணியுடன் மட்டுமே வாழ்வதைத் தொடர்ந்தான். இதனால் அவனது பிற மனைவியர் மீண்டும் அவனிடம் கோபமடைந்தனர்.(54) தங்கள் தந்தையிடம் சென்று, தங்கள் சிரங்களைத் தாழ்த்தி வணங்கி, அவனிடம், “சோமன் எங்களுடன் வாழவில்லை. எங்களுக்கு உமது பாதுகாப்பைத் தருவீராக.(55) போற்றுதலுக்குரிய சந்திரமாஸ் எப்போதும் ரோஹிணியுடனேயே அதிகமாக வாழ்கிறார். அவர் உமது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தராமல், எங்களிடம் எந்த அன்பையும் காட்ட விரும்பவில்லை. எனவே, எங்கள் அனைவரையும் சோமன் ஏற்றுக் கொள்ளும் வகையில் எங்களைக் காப்பீராக” என்றனர்.(56)

போற்றுதலுக்குரிய தக்ஷன், இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கோபமடைந்து, அதன் விளைவாகச் சோமனின் {சந்திரனின்} மீது காசநோயை {க்ஷயரோகத்தைச்}[3] சாபமாக வீசினார். இவ்வாறு நட்சத்திரங்களின் தலைவனுக்கு அந்நோய் ஏற்பட்டது.(57) காசநோயால் {க்ஷயரோகத்தால்} பீடிக்கப்பட்ட சசின் {சந்திரன்} நாளுக்கு நாள் மெலிந்தான் {தேய்ந்தான்}. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவன் அந்நோயில் இருந்து விடுபடுவதற்காகப் பல்வேறு வேள்விகளைச் செய்வதன் மூலம் பல முயற்சிகளைச் செய்தான். எனினும் அந்த இரவைச் செய்பவனால் {சந்திரனால்} அச்சாபத்திலிருந்து விடுபட முடியவில்லை. மறுபுறம் அவன் மெலிந்து தேய்ந்து கொண்டே வந்தான்.(58,59) எனினும், சோமன் தேய்ந்து வருவதன் விளைவால், மூலிகைகள் வளரத் தவறின. அவற்றின் சாறுகள் வற்றி, சுவையற்றதாகின. அவை அனைத்தும் தங்கள் தன்மைகளை இழந்தன.(60) மூலிகைகளின் இந்த நலிவின் விளைவால், உயிரினங்களும் சிதைவடையத் தொடங்கின. உண்மையில் சோமன் தேய்ந்து வந்ததன் விளைவால், உயிரினங்கள் அனைத்தும் மெலியத் தொடங்கின.(61)அப்போது தேவர்கள் அனைவரும் சோமனிடம் வந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, “ஏன் உன் வடிவம் (முன்பு போல) அவ்வளவு அழகாகவோ, பிரகாசமாகவோ இல்லை? இந்தப் பேரிடர் எங்கிருந்து வந்தது என்ற காரணத்தை எங்களுக்குச் சொல்வாயாக.(62) உன் பதிலைக் கேட்ட பிறகு, உன் அச்சத்தைப் போக்கத் தேவையானதை நாங்கள் சொல்கிறோம்” என்றனர். இவ்வாறு சொல்லப்பட்டதும், முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தேவன் {சந்திரன்}, சாபத்தின் காரணத்தையும், அதனால் காசநோயால் தான் பாதிக்கப்பட்டதையும் அவர்களுக்குச் சொன்னான்.(63) அவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், தக்ஷனிடம் சென்று, “ஓ! போற்றுதலுக்குரியவரே, சோமனிடம் நிறைவு கொள்வீராக. உமது இந்தச் சாபம் விலக்கிக் கொள்ளப்படட்டும்.(64) சந்திரமாஸ் {சந்திரன்} மிகவும் மெலிந்துவிட்டான். அவனது சிறு பகுதி மட்டுமே இப்போது காணப்படுகிறது. ஓ! தேவர்களின் தலைவரே, அவன் தேய்ந்து வருவதால், உயிரினங்கள் அனைத்தும் சிதைவையடைகின்றன.(65) பல்வேறு வகையான மூலிகைகளும் சிதைவையடைகின்றன. அவை சிதைவடைவதால் நாங்களும் சிதைவையடைகிறோம். நாங்கள் இல்லாமல் இந்த அண்டம் என்னவாகும்? ஓ! அண்டத்தின் தலைவரே, இஃதை அறிந்து கொண்டு (சோமனிடம்) மனநிறைவடைவதே உமக்குத் தகும்” என்றனர்.(66)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்த உயிரினங்களின் தலைவன் (தக்ஷன்), தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “என் வார்த்தைகளை வேறு வகையில் ஆகச் செய்வது இயலாது.(67) எனினும், அருளப்பட்டவர்களே சில சூழ்ச்சிகளால் என் வார்த்தைகள் விலக்கப்படலாம். சசின் {சந்திரன்} தனது மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ளட்டும். தேவர்களே, முயலைத் தன் அடையாளமாகக் கொண்டவன் {சந்திரன்}, சரஸ்வதியில் இருக்கும் அந்த முதன்மையான தீர்த்தத்தில் நீராடினால் மீண்டும் வளர்வான். இந்த என் வார்த்தைகள் உண்மையானவையாகும்.(69) சோமன் {சந்திரன்} அரைமாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் தேய்வான், (தொடர்ந்து வரும் அடுத்த) அரை மாத காலத்தில் ஒவ்வொரு நாளும் வளர்வான். இந்த என் வார்த்தைகள் உண்மையானவையாகும்.(70) மேற்குப் பெருங்கடலுடன் சரஸ்வதி சந்திக்கும் இடத்தில் உள்ள அந்த நீர்க்கொள்ளிடத்தில் {பிரபாஸத்தில்}, தேவர்களுக்குத் தேவனை (மகாதேவனை) அவன் துதிக்கட்டும். மீண்டும் அவன் தன் வடிவையும், அழகையும் அடைவான்” {என்றான் தக்ஷன்}.(71)

அந்த (தெய்வீக) முனிவரின் ஆணைக்கிணங்க சோமன் சரஸ்வதிக்கு {சரஸ்வதி ஆற்றுக்குச்} சென்றான். அவன், தீர்த்தங்களில் முதன்மையானதும், சரஸ்வதிக்குச் சொந்தமானதுமான பிரபாஸம் என்று அழைக்கப்படும் அந்தத் தீர்த்தத்தை அடைந்தான்.(72) பெரும் சக்தி கொண்டவனும், பெரும் பிரகாசம் கொண்டவனுமான அந்தத் தேவன் {சந்திரன்}, புதுநிலவில் {அமாவாசையில்} அங்கே நீராடி, தன் குளுமையான கதிர்களை மீண்டும் அடைந்து, உலகங்களுக்கு ஒளியூட்டுவதை மீண்டும் தொடர்ந்தான்.(73) பிரபாஸைக்குச் சென்ற அனைத்து உயிரினங்களும், சோமனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டு, தக்ஷன் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தன.(74) அந்த உயிரினங்களின் தலைவன் {தக்ஷன்}, (அவர்களை முறையாக வரவேற்று), அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினான்.

போற்றுதலுக்குரிய தக்ஷன், சோமனிடம் மனநிறைவு கொண்டு, மீண்டும் அவனிடம்,(75) “ஓ! மகனே, பெண்களை அலட்சியம் செய்யாதே, பிராமணர்களை ஒருபோதும் அவமதிக்காதே. செல்வாயாக, கவனமாக என் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவாயாக” என்று சொன்னான்.(76) அவனால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட சோமன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான். அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியால் நிறைந்து முன்பு போலவே வாழத் தொடங்கின.(77) இவ்வாறே, இரவைச் சமைப்பவன் {சந்திரன்} எவ்வாறு சபிக்கப்பட்டான் என்பதையும், தீர்த்தங்கள் அனைத்திலும் பிரபாஸம் எவ்வாறு முதன்மையடைந்தது என்பதையும் குறித்த அனைத்தையும் சொல்லிவிட்டேன்.(78) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட தேவன் {சந்திரன்}, அடுத்தடுத்த ஒவ்வொரு புதுநிலவிலும் {அமாவாசையிலும்} அந்தச் சிறந்த தீர்த்தமான பிரபாஸத்தில் நீராடி தன் வடிவத்தையும், அழகையும் மீண்டும் அடைகிறான்.(79) ஓ! பூமியின் தலைவா, சந்திரமாஸ் நீராடி தன் பெரும் பிரகாசத்தை (பிரபையை) மீண்டும் அடைந்த காரணத்தினாலேயே அந்தத் தீர்த்தம் பிரபாஸம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(80)

அதன்பிறகு சிதைவிலா மகிமை கொண்ட வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்}, சமஸோத்பேதம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(81) கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, விலையுயர்ந்த பல கொடைகளை அந்த இடத்தில் கொடுத்து, தூய்மைச் சடங்குகளை முறையாகச் செய்து ஓரிரவை அங்கே கடத்தினான்.(82) பிறகு அந்தக் கேசவனின் அண்ணன் {பலராமன்}, உதபானத்திற்கு {உதபானம் என்ற இடத்திற்கு} வேகமாகச் சென்றான். அங்கே சரஸ்வதி தொலைந்துபோனவளாகத் தெரிந்தாலும், அந்த இடத்தில் தாங்கள் அடைந்த பெரும் புண்ணியம் மற்றும் பேரருளின் விளைவால், தவத்தில் வெற்றி மகுடம் சூட்டிக் கொண்ட மனிதர்கள் {சித்தர்கள்}, அங்கே இருந்த மூலிகைகளாலும், அந்த நிலத்தாலும் குளுமையை {நிதானத்தை} அடைந்து, பூமியின் குடல்களுக்குள், கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஓடையாக அந்த ஆற்றை அறிகிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}[4].(83,84)

திரித முனிவரின் மனோவேள்வி – உதபானத் தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 36-ஏகதன், துவிதன் மற்றும் திரிதன் என்ற மூன்று சகோதரர்களின் கதை; பேராசையால் திரிதரை வஞ்சிக்க நினைத்த அவரது சகோதரர்கள்; கிணற்றுக்குள் விழுந்த திரிதர்; சோமரசத்திற்காக மனோவேள்வி செய்த திரிதர்; அவரிடம் நிறைவடைந்த தேவர்கள்; உதபானத் தீர்த்தத்தில் நீராடுவதால் கிடைக்கும் பலன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(ஏற்கனவே சொன்னது போல) பலதேவன் {பலராமன்}, முன்பொரு சமயம் சிறப்புமிக்க (முனிவரான) திரிதரின் வசிப்பிடமாக இருந்ததும், சரஸ்வதியில் {சரஸ்வதி நதிக்கரையில்} இருப்பதுமான உதபானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(1) கலப்பையை ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, பெரும் செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்களை வழிபட்டு, அங்கே நீராடி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(2) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பெரும் தவசி திரிதர் அங்கேதான் வாழ்ந்திருந்தார். அந்த உயர் ஆன்மா கொண்டவர் {திரிதர்} ஒரு குழியில் {கிணற்றில்} இருந்த போது, சோமச்சாற்றைப் பருகினார்.(3) அவரது சகோதரர்கள் இருவரும், அவரை அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} விட்டுவிட்டுத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர். பிராமணர்களில் முதன்மையானவரான அந்தத் திரிதர், அவர்கள் இருவரையும் சபித்தார்”.(4)ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உதபானத்தின்[1] {உபதானம் என்ற அந்தக் கிணற்றின்} தோற்றம் என்ன? அந்தப் பெரும் தவசி அங்கே அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} எவ்வாறு விழுந்தார்? அந்தப் பிராமணர்களில் முதன்மையனவர் ஏன் தமது சகோதரர்களால் குழிக்குள் விடப்பட்டார்?(5) குழிக்கள் அவரை விட்டு வந்த அவரது சகோதரர்கள் எவ்வாறு தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர்? திரிதர் தன் வேள்வியை எவ்வாறு செய்தார்? அவர் எவ்வாறு சோமத்தைக் குடித்தார்? ஓ! பிராமணரே, இவை யாவற்றையும் நான் கேட்பது முறையென நீர் நினைத்தால் அவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, இதற்கு முந்தைய யுகத்தில், தவசிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் ஏகதன், துவிதன், திரிதன் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டிருந்தனர்.(7) படைப்பின் தலைவர்களைப் போல இருந்த அவர்கள், பிள்ளைகளுடன் அருளப்பட்டிருந்தனர். பிரம்மத்தை உச்சரிப்பவர்களான அவர்கள், தங்கள் தவங்களால் (இறப்புக்குப் பிறகு) பிரம்மலோகத்தை அடையும் தனிச்சலுகையைப் பெற்றனர்.(8) அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புக் கொண்ட அவர்களது தந்தையான கௌதமர், அவர்களது தவங்கள், நோன்புகள், தற்கட்டுப்பாடு ஆகியவற்றால் அவர்களிடம் மிகவும் மனநிறைவு கொண்டவராக இருந்தார்.(9)

போற்றுதலுக்குரிய கௌதமர், தன் மகன்களால் பெரும் மகிழ்வை அடைந்து, அங்கேயே தன் நீண்ட வாழ்நாளைக் கழித்து, இறுதியாகத் தனக்குத் தகுந்த உலகத்தை அடைந்தார்.(10) எனினும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கௌதமரின் யஜமானர்களாக {சீடர்களாக} இருந்த மன்னர்கள், அவர் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டாலும், கௌதமரின் மகன்களைத் தொடர்ந்து வழிபட்டனர்.(11) அவர்களில் திரிதர், தன் செயல்கள் மற்றும் (வேத) கல்வியால், அவரது தந்தையான கௌதமரைப் போலவே முதன்மையானவராகத் திகழ்ந்தார்.(12) அறத்தன்மையும், உயர்ந்த அருளையும் கொண்ட தவசிகள் அனைவரும், முன்பு அவரது தந்தையான கௌதமரைத் எவ்வாறு வழிபட்டனரோ அவ்வாறே திரிதரையும் வழிபடத் தொடங்கினர்.(13)

ஒரு சமயம், சகோதரர்களான ஏகதன் மற்றும் துவிதன் ஆகிய இருவரும் செல்வத்தில் ஆவல் கொண்டு ஒரு வேள்வியைச் செய்ய நினைத்தனர்.(14) ஓ! எதிரிகளை எரிப்பவனே, திரிதரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, தேவையான எண்ணிக்கையில் விலங்குகளைத் {கால்நடைகளைத்} திரட்டிக் கொண்டால்,(15) தாங்கள் இன்பமாகச் சோமச்சாற்றைப் பருகி, வேள்வியின் பெரும் தகுதிகளை {புண்ணியங்களை} அடையலாம் என்பதே அவர்கள் தீட்டிய திட்டமாகும். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த மூன்று சகோதரர்களும் அத்தீர்மானத்தின் படியே செய்தனர்.(16)

உயர் ஆன்மா கொண்ட அந்தப் பெரும் முனிவர்கள், விலங்குகளுக்காக (அவற்றை அடைவதற்காகத்) தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, அவர்களின் வேள்விகளில் துணையாக இருந்து, தாங்கள் செய்த புரோகிதத் தொண்டின் விளைவால், பெரும் எண்ணிக்கையிலான விலங்குகளைக் முறையான கொடையாகப் பெற்றுக் கிழக்கை நோக்கிச் சென்றனர்.(17,18) ஓ! மன்னா {ஜனமேஜயா}, திரிதர் உற்சாகமிக்க இதயத்துடன் அவர்களுக்கு முன்பு நடந்து சென்றார். ஏகதனும், துவிதனும் அவருக்குப் பின்னால் விலங்குகளுடன் வந்தனர்.(19) அந்தப் பெரும் விலங்கு மந்தையைக் கண்ட அவர்கள் இருவரும், திரிதருக்கு உரிய பங்கைக் கொடுக்காமல், அதைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதெவ்வாறு என்று சிந்திக்கத் தொடங்கினர்.(20) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இழிந்த பாவிகளான அந்த ஏகதன் மற்றும் துவிதன் ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டதைக் கேட்பாயாக.(21)

அவர்கள், “திரிதன் வேள்விகளில் துணைபுரிவதில் திறம்பெற்றவனாக இருக்கிறான். திரிதன் வேதங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்கிறான். திரிதன், இன்னும் பல பசுக்களை ஈட்டவல்லவனாவான்.(22) எனவே, நாம் இருவரும் {அவனது பங்கான} பசுக்களை எடுத்துக் கொள்வோம். திரிதன் நம் துணையில்லாமல், தான் தேர்ந்தெடுக்கும் ஓர் இடத்திற்குச் செல்லட்டும்” என்றனர்.(23) அப்படி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, வழியிலேயே இரவும் வந்தது. அவர்கள் அப்போது தங்கள் முன்பு ஓர் ஓநாயைக் கண்டனர். அந்த இடத்திற்கு அருகிலேயே சரஸ்வதியின் கரையில் ஆழமான குழி {கிணறு} ஒன்று இருந்தது.(24) தன் சகோதரர்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தவரான திரிதர், ஓநாயைக் கண்ட அச்சத்தால் ஓடிச் சென்று அந்தக் குழிக்குள் விழுந்தார்.(25)

அந்தக் குழியானது அடியற்றதாகவும், பயங்கரமானதாகவும், அனைத்துயிரினங்களையும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. தவசிகளில் சிறந்தவரான அந்தத் திரிதர், அந்தக் குழிக்கள் இருந்தபடியே துன்ப ஓலமிடத் தொடங்கினார். அவரது இரு சகோதரர்களும் அவருடைய கதறலைக் கேட்டனர்.(26) அவரது சகோதரர்களான ஏகதனும், துவிதனும், அவர் குழிக்குள் விழுந்ததை அறிந்தும்கூட, ஓநாயிடம் கொண்ட அச்சத்தாலும், பேராசையினாலும் தங்கள் சகோதரனைக் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.(27) விலங்குகளை அடையும் பேராசையால் உந்தப்பட்டவர்களான அவரது இரு சகோதரர்களாலும் இவ்வாறு கைவிடப்பட்ட அந்தப் பெரும் தவசியான திரிதர், ஓ! மன்னா, புழுதியாலும்,(28) செடிகொடிகளாலும் நன்கு மறைக்கப்பட்டுத் தனியாக அந்தக் குழிக்குள் இருந்தபோது, ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, ஓர் இழிந்த பாவியைப் போல நரகத்திற்குள் மூழ்கியிருப்பவராகத் தம்மை நினைத்துக் கொண்டார்.(29) தாம் இன்னும் சோமச்சாற்றைக் குடிக்கும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டாததல் இறப்பதற்கு அவர் அஞ்சினார். பெரும் ஞானம் கொண்ட அவர், அங்கேயே இருந்து சோமத்தைக் குடிப்பதெவ்வாறு என்று தன் நுண்ணறிவின் துணை கொண்டு சிந்திக்கத் தொடங்கினார்.(30)

அந்தப் பெரும் தவசி {திரிதர்}, அதைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டே அந்தக் குழியில் நின்றிருந்தபோது, வளர்ந்து வரும் கொடியொன்று அங்கே குழிக்குள் {கிணற்றுக்குள்} தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.(31) அந்தக் குழி வறண்டிருந்தாலும், அந்தத் தவசி அதில் நீர் இருப்பதாகவும், வேள்வி நெருப்பு இருப்பதாகவும் கற்பனை செய்தார். தன்னையே ஹோத்ரியாக அமைத்து {கற்பனை செய்து)(32) கொண்ட அந்தப் பெரும் தவசி, தான் கண்ட அந்தக் கொடியைச் சோமச்செடியாக {ஸோமலதையாகக்} கற்பனை செய்தார். பிறகு அவர் (வேள்வி நடத்துவதற்குத் தேவையான) ருக்குக்களையும், யஜுஸுகளையும், சாமங்களையும்[2] மனத்தாலேயே சொன்னார்.(33) திரிதர், (அந்தக் கிணற்றுக்கடியில் கிடக்கும்) கூழாகற்களை (கற்பனையால்) சர்க்கரையாக்கினார். பிறகு அவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, (மனத்தாலேயே) தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தார். அவர், (தான் கற்பனை செய்து வைத்திருந்த) நீரை தெளிந்த நெய்யாகக் கண்டார்.(34) (அந்த வேள்விக் கொடையில்) தேவர்களுக்கு அவரவருக்குரிய பங்கை ஒதுக்கினார். அடுத்ததாக அவர், (மனத்தால்) சோமத்தைப் பருகியபடியே உரத்த ஒலியெழுப்பத் தொடங்கினார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேள்வி செய்த அந்த முனிவர் முதலில் உதிர்த்த அவ்வொலிகள் சொர்க்கத்தை அடைந்தன. பிரம்மத்தை உச்சரிப்பவர்கள் விதித்துள்ள முறையின் படியே திரிதர் அவ்வேள்வியை நிறைவும் செய்தார்.(35)உயர் ஆன்ம திரிதர், அந்த வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது, தேவலோகம் முழுமையும் கலக்கமடைந்தது. எனினும், எவரும் அதன் காரணத்தை அறியவில்லை. (தேவர்களின் ஆசானான) பிருஹஸ்பதி, (திரிதரால் உண்டான) அந்தப் பேரொலியைக் கேட்டார். அந்தத் தேவர்களின் புரோகிதர் {பிருஹஸ்பதி}, தேவர்களிடம், “திரிதன் ஒரு வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறான். தேவர்களே நாம் அங்கே செல்ல வேண்டும்.(37) பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவன் {திரிதன்}, கோபமடைந்தால், வேறு தேவர்களையே உண்டாக்கத் தகுந்தவனாகிவிடுவான்” என்றார்.(38) பிருஹஸ்பதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, திரிதரின் வேள்வி நடந்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர்.(39) அவ்விடத்திற்குச் சென்ற தேவர்கள், அங்கே அந்த வேள்வியில் நிறுவப்பட்டிருக்கும் உயர் ஆன்ம திரிதரைக் கண்டனர்.(40)

பிரகாசமிக்க அழகுடன் கூடிய அந்த உயர் ஆன்மாவைக் கண்ட தேவர்கள் அவரிடம், “(உமது காணிக்கைகளில்) எங்கள் பங்கைப் பெறுவதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்” என்றனர்.(41) அந்த முனிவர் அவர்களிடம், “சொர்க்கவாசிகளே, என் புலனுணர்வைக் கிட்டத்தட்ட இழந்த நிலையில் இந்தப் பயங்கரக் கிணற்றுக்குள் கிடக்கும் என்னைப் பாருங்கள்” என்றார்.(42) பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திரிதர், உரிய மந்திரங்களுடன் தேவர்களுக்கு அவர்களுடைய பங்கை முறையாகக் கொடுத்தார். தேவர்கள், அதைப் பெற்றுக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(43) அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை முறையாகப் பெற்று, அவரிடம் மனநிறைவுகொண்டு, அவர் விரும்பிய வரங்களை அவருக்கு அளித்தனர்.(44) அவர், (கிணற்றுக்குள் இருக்கும்) தமது துயர்நிறைந்த நிலையிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் எனும் வரத்தைத் தேவர்களிடம் கேட்டார்.(45)

மேலும் அவர் {திரிதர்}, “இந்தக் கிணற்றில் எவன் நீராடுவானோ, அவன், சோமத்தைப் பருகிய மனிதர்கள் அடையும் முடிவை {கதியை} அடையட்டும்” என்றும் கேட்டார்.(46) இந்த வார்த்தைகளைச் சொன்னதும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கிணற்றுக்குள் சரஸ்வதியே தன் அலைகளுடன் தோன்றினாள். அவளால் உயர்த்தப்பட்ட திரிதர், {கிணற்றுக்கு} மேலே வந்து, அந்தச் சொர்க்க வாசிகளை வழிபட்டார்.(47) அப்போது தேவர்கள் அவரிடம், “நீர் விரும்பியபடியே ஆகட்டும்” என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர். திரிதரும் மகிழ்ச்சியால் நிறைந்து, தன் வசிப்பிடத்திற்குச் சென்றார்.(48)

அங்கே தன் சகோதரர்களான இரு முனிவர்களையும் சந்தித்த அவர், அவர்களிடம் பெருங்கோபம் கொண்டார். பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர் {திரிதர்}, அவர்களிடம் கடுஞ்சொற்களைப் பேசி,(49) “பேராசையால் என்னைக் கைவிட்டு ஓடிய உங்கள் பாவச்செயல்களுக்காக என்னால் சபிக்கப்படும் நீங்கள், கூரிய பற்களுடைய கடும் ஓநாய்களாய் மாறி காட்டில் திரிவீர்களாக.(50) மேலும், உங்கள் சந்ததிகள் சிறுத்தைப்புலிகளையும், கரடிகளையும், கருங்குரங்குகளையும் கொண்டவையாக இருக்கும்” என்று சபித்தார். திரிதர் அவ்வார்த்தைகளைச் சொன்னதும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த உண்மை நிறைந்த முனிவரின் வார்த்தைகளின் விளைவால், அவரது சகோதரர்கள் இருவரும் மிக விரைவாக அந்த வடிவங்களுக்கு {ஓநாய்களாக} மாற்றமடைந்தனர்.(51)

அளவிலா ஆற்றலைக் கொண்ட பலதேவன் {பலராமன்}, உதபானத்தின் {உதபானம் என்ற அந்த இடத்தின்} நீரைத் தீண்டினான். அவன் பல்வேறு வகைகளிலான செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்கள் பலரை வழிபட்டான்.(52) உதபானத்தைக் கண்டு அதை மீண்டும் மீண்டும் புகழ்ந்த பலதேவன், அடுத்ததாக, சரஸ்வதியிலேயே இருந்த விநாசனத்திற்குச் {விநாசனம் என்ற இடத்திற்குச்} சென்றார்” {என்றார் வைசம்பாயனர்}.(53}

நைமிசத்தில் நுழைந்த சரஸ்வதி! – சல்லிய பர்வம் பகுதி – 37- விநாசனை,ஸுபூமிகை, கந்தர்வம், கர்க்கஸ்ரோதம், சங்கம், துவைதத்தடாகம், நாகதன்வானம் ஆகிய தீர்த்தங்களை அடைந்து, நீராடி, தானமளித்த பலராமன்; கர்க்கரைக் குறித்த சிறு விளக்கம்; நைமிசவனத்தில் நுழைந்த சரஸ்வதி; சரஸ்வதி நதிக்கரையை முழுமையாக ஆக்ரமித்த தவசிகள்; சரஸ்வதி ஆறு திடீரெனக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து, மீண்டும் மேற்கில் பாய்வதற்கான காரணம்; சப்தசாரஸ்வதத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூத்திரர்கள் மற்றும் ஆபிரர்களின் மேல் சரஸ்வதி கொண்ட வெறுப்பினால் கண்ணுக்குத் தெரியாமல் எங்கு மறைந்து போனாளோ, அந்த விநாசனத்திற்குப் பலதேவன் {பலராமன்} சென்றான்.(1) இத்தகு வெறுப்பின் விளைவால், சரஸ்வதி அந்த இடத்தில் தொலைந்து போனவளாக இருப்பதால், ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் எப்போதும் அந்த இடத்தை விநாசனை {விநாசனம்} என்ற பெயரால் அழைக்கின்றனர்[1].(2) சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில் நீராடிய வலிமைமிக்கப் பலதேவன், அதே ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சுபூமிகத்திற்கு {சுபூமிகம் என்ற இடத்திற்குச்} சென்றான்.(3) நல்ல நிறத்தையும், அழகிய முகத்தையும் கொண்ட பல அப்சரஸ்கள், எந்த இடைவேளையும் இல்லாமல் தூய தன்மை கொண்ட விளையாட்டுகளில் அங்கே எப்போதும் ஈடுபடுகின்றனர்.(4)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, தேவர்களும், கந்தர்வர்களும், பிரம்மனின் ஓய்விடமான அந்தப் புனிதமான தீர்த்தத்திற்கு ஒவ்வொரு மாதமும் செல்கின்றனர்.(5) ஓ! மன்னா, கந்தர்வர்களும், பல்வேறு அப்சரஸ் இனங்களும் ஒன்றாகக் கூடி, தாங்கள் விரும்பியவாறு மகிழ்ச்சியாகத் தங்கள் நேரத்தைக் கடத்துவதை அங்குக் காணலாம்.(6) அங்கே தேவர்களும், பித்ருக்களும், தங்கள் மேல் பொழியப்படும் புனிதமான, மங்கலமான மலர்களுடன் இன்பமாக விளையாடுவர்,(7) அங்கே செடிகொடிகள் அனைத்தும் மலர்க்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ! மன்னா, சரஸ்வதியின் அற்புத ஆற்றங்கரையில், அப்சரஸுகளின் அழகிய விளையாட்டுக் களமாக அந்தத் தீர்த்தம் இருப்பதால், அது சுபூமிகை {ஸுபூமிகை} என்று அழைக்கப்படுகிறது.(8) மதுகுலத்தின் பலதேவன், அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிராமணர்களுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடையளித்து, அந்தத் தெய்வீகப் பாடல்கள் மற்றும் இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்டான்.(9) மேலும் அவன், தேவர்கள், கந்தவர்கள் மற்றும் ராட்சசர்கள் பலரின் நிழல்களையும் அங்கே கண்டான்.

பிறகு அந்த ரோகிணியின் மகன் {பலராமன்}, கந்தர்வர்களின் தீர்த்தத்திற்குச் சென்றான்.(10) விஸ்வாவசுவின் தலைமையிலானவர்களும், தவத்தகுதியைக் கொண்டவர்களும் கந்தர்வர்கள் பலரும், மிக அழகானவகையில் ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் அங்கே இருக்கின்றனர்.(11) அங்கே பல்வேறு வகையான செல்வங்களையும், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பசுக்கள், கோவேறுகழுதைகள், ஒட்டகங்கள், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றையும் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்து,(12) பிராமணர்கள் பலருக்கு உணவளித்து, அவர்கள் விரும்பிய விலையுயர்ந்த பல பரிசுகளைக் கொடுத்து அவர்களை நிறைவு செய்த மதுகுலத்தின் பலதேவன் {பலராமன்}, பல பிராமணர்கள் சூழ, அவர்களால் துதிக்கப்பட்டபடியே அங்கிருந்து சென்றான்.(13)

ஒரே காது குண்டலத்தைக்[2] கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவன், கந்தர்வத் தீர்த்ததிலிருந்து புறப்பட்டு, கர்க்கஸ்ரோதம் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற தீர்த்தத்திற்குச் சென்றான்.(14) அங்கே அந்தப் புனிதமான சரஸ்வதியின் தீர்த்தத்தில், வயதால் மதிப்புமிக்கவரும், தவத்துறவுகளால் ஆன்மத் தூய்மையடைந்தவருமான சிறப்புமிக்கக் கர்க்கர், காலம் மற்றும் அது செல்லும் பாதை, (ஆகாயத்தின்) ஒளிக்கோள்களுடைய மாறுதல்கள், மங்கல மற்றும் அமங்கல சகுனங்கள் அனைத்தின் அறிவையும் அடைந்தார்.(15,16) இந்தக் காரணத்தினாலே அந்தத் தீர்த்தம், அவரது பெயரையே கொண்டு கர்க்கஸ்ரோதம் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, சிறந்த நோன்புகளையும், உயர்ந்த அருளையும் கொண்ட முனிவர்கள், ஓ!தலைவா, காலத்தின் அறிவை அடைந்திருந்த கர்க்கருக்காக அங்கே எப்போதும் காத்திருந்தனர் {பணிவிடை செய்தனர்}[3].(17) வெண்சந்தனக் குழம்பைத் தன் மேனியில் பூசிக்கொண்டு அந்தத் தீர்த்தத்திற்குச் சென்ற பலதேவன், தூய ஆன்மாக்களைக் கொண்ட பல தவசிகளுக்குச் செல்வத்தை முறையாகத் தானமளித்தான்.(18)

நீல ஆடை உடுத்தியிருந்த அந்தச் சிறப்புமிக்கவன், பல வகைகளிலான விலையுயர்ந்த உணவுவகைகளைப் பிராணர்களுக்குக் கொடுத்த பிறகு, சங்கம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(19) பனைமரக் கொடியைக் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன், அங்கே அந்தச் சரஸ்வதியின் ஆற்றங்கரையில், மஹாசங்கம் என்று அழைக்கப்பட்டதும், மேருவைப் போல நெடிதுயர்ந்ததும், வெண்மைலையைப் போலத் தெரிந்ததும், பல முனிவர்களால் அடையப்பட்டதுமான ஒரு பெரும் மரத்தைக்[4] கண்டான்.(20) அங்கே ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், வித்யாதரர்களும், அளவிலா சக்தி கொண்ட ராட்சசர்களும், அளவிலா வலிமை கொண்ட பிசாசங்களும், சித்தர்களும் வசித்தனர்.(21) பிற வகை உணவுகளைக் கைவிட்ட அவர்கள் அனைவரும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நோன்புகளையும், ஒழுங்கு கட்டுப்பாடுகளையும் நோற்று, உரிய காலங்களில் அந்தக் கானகத் தலைவனின் {அந்தப் பெரும் மரத்தின்} கனிகளை உண்டு, மனிதர்களால் காணப்படாதவாறு, தனித்தனி குழுக்களாகத் திரிந்து வந்தனர். ஓ! மன்னா, அந்தக் கானகத்தின் ஏகாதிபதி {அந்தப் பெரும் மரம்} இதற்காகவே உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறான்.(22,23) சரஸ்வதியில் இருக்கும் அந்தத் தீர்த்தமானது {சங்கத் தீர்த்தம்} இக்காரணத்திற்காகவே புனிதமானதாகக்[5] கொண்டாடப்படுகிறது. கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனும், யதுகுலத்தின் புலியுமான அந்தப் பலதேவன், அந்தத் தீர்த்தத்தில் பல கறவை பசுக்களையும், தாமிர மற்றும் இரும்பு பாத்திரங்களையும், பல்வேறு வகைகளிலான பிற பாத்திரங்களையும் தானமளித்து, பிராமணர்களை வணங்கி, பதிலுக்கு அவர்களாளும் வணங்கப்பட்டான்.-பிறகு அவன் {பலராமன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துவைதத் தடாகத்திற்கு {நைஸர்க்கிகத் தீர்த்தத்திற்குச்}[6] சென்றான்.(24,25) அங்கே வந்த பலன் {பலராமன்}, பல்வேறு வகைகளிலான ஆடைகளில் பல்வேறு வகையான தவசிகளைக் கண்டான். அவன், அதன் நீரில் நீராடி, பிராமணர்களை வழிபட்டான்.(26) மகிழ்ச்சிக்குரிய பல்வேறு பொருட்களைப் பிராமணர்களுக்கு அபரிமிதமாகக் கொடையளித்த பலதேவன், பிறகு சரஸ்வதியின் தென் கரைவழியாகச் சென்றான்.(27)மங்கா மகிமையையும், வலிய கரங்களையும், அற ஆன்மாவையும் கொண்ட அந்தச் சிறப்புமிக்க ராமன் {பலராமன்}, அடுத்ததாக நாகதன்வானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(28) எண்ணற்ற பாம்புகள் நிறைந்த அது, பெரும் காந்தியைக் கொண்ட பாம்புகளின் மன்னன் வாசுகியின் வசிப்பிடமாகும். அங்கே பத்தாயிரத்து நான்கு முனிவர்கள் தங்கள் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருந்தனர்.(29) (பழங்காலத்தில்) அங்கே வந்த தேவர்கள், சிறந்த பாம்பான {நாகமான} வாசுகியை அனைத்துப் பாம்புகளின் அரசனாக நிறுவினர். ஓ! குரு குலத்தோனே, அவ்விடத்தில் பாம்புகளால் எந்த அச்சமும் கிடையாது.(30) பிறகு மதிப்புமிக்கப் பல பொருட்களைப் பிராமணர்களுக்குத் தானமளித்த பலதேவன், கிழக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அடுத்தடுத்த ஒவ்வொரு அடியிலும் தோன்றிய நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற தீர்த்தங்களை அடைந்தான்.(31) அந்தத் தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடி, முனிவர்களால் சொல்லப்பட்ட நோன்புகளையும், நியமங்களையும் நோற்று, அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்து,(32) அங்கே தங்கள் வசிப்பிடங்களைக் கொண்ட தவசிகள் அனைவரையும் வணங்கிய பலதேவன், கிழக்குத்திசையில் சரஸ்வதி திரும்பும் இடத்தை அடைவதற்காக, காற்றின் செயல்பாட்டால் வழிநடத்தப்படும் மழைத்தாரைகளைப் போல அந்தத் தவசிகளால் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் சென்றான். அந்த நதியானது, நைமிசவனத்தில் வசிக்கும் உயர் ஆன்ம முனிவர்களைக் காண்பதற்காக அவ்வழியில் சென்றது.(33,34) எப்போதும் வெண்சந்தனக் குழம்பைப் பூசியிருந்தவனும், கதாயுதத்தைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான பலன் {பலராமன்}, ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} தன் பாதையை மாற்றிக் கொள்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(35)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே, ஏன் சரஸ்வதி தன் பாதையைக் கிழக்குத் திசையை நோக்கி திருப்பிக் கொண்டாள்? ஓ! அத்வர்யுக்களுள் சிறந்தவரே, இது குறித்த அனைத்தையும் நீர் எனக்குச் சொல்வதே தகும்.(36) யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {பலராமன்} எக்காரணத்தால் வியப்படைந்தான்? உண்மையில், ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} இவ்வாறு தன் பாதையை மாற்றிக் கொண்டது ஏன்?” என்று கேட்டான்.(37)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொரு காலத்தில், கிருதயுகத்தில், ஓ! மன்னா, நைமிச வனத்தில் வசிக்கும் தவசிகள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் மகத்தான வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.(38) ஓ! மன்னா, அந்த வேள்விக்கு வந்த முனிவர்கள் பலராவர். முறையான சடங்குகளுடன் அந்த வேள்வியை நடத்தித் தங்கள் நாட்களைக் கழித்து வந்த பேரருளாளர்கள்,(39) நைமிசத்தில் நடந்த வேள்வியின் அந்தப் பனிரெண்டு வருடங்களையும் நிறைவு செய்து, தீர்த்தயாத்திரை {புனிதநீர்நிலைகளுக்குப் பயணம்} செய்யப் புறப்பட்டனர்.(40) ஓ! மன்னா, முனிவர்களின் எண்ணிக்கையின் விளைவால், சரஸ்வதியின் தென்கரையில் இருந்த தீர்த்தங்கள் அனைத்தும், நகரங்களைப் போலத் தோன்றின.(41) ஓ! மனிதர்களில் புலியே, அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர்கள், தீர்த்தங்களின் தகுதிகளை {புண்ணியங்களை} அனுபவிக்கும் ஆவலின் விளைவால் சமந்தபஞ்சகம் வரை அந்நதியின் கரைகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டனர்.(42)

வேள்வி நெருப்புகளில் ஆகுதிகளை ஊற்றிக் கொண்டிருந்த தூய ஆன்மா கொண்ட முனிவர்களால் ஓதப்பட்ட வேதப் பேரொலியானது அந்த மொத்தப் பகுதிகளிலும் எதிரொலிப்பதாகத் தெரிந்தது.(43) அந்த உயர் ஆன்ம தவசிகளால் தெளிந்த நெய்யானது ஆகுதியாக ஊற்றப்பட்டதன் விளைவாகச் சுடர்விட்ட ஹோம நெருப்புகளால் அந்த ஆறுகளில் முதன்மையானவள் மிக அழகானவளாகத் தெரிந்தாள்.(44) வாலகில்யர்கள், அஸ்மகுட்டர்கள், தந்தோலூகலினர்கள், சம்பிராக்ஷியானர்கள்,[7] பிற தவசிகள்,(45) காற்றை உண்டு வாழ்ந்தவர்கள், நீரை உண்டு வாழ்ந்தவர்கள், மரங்களின் உலர்ந்த இலைகளை உண்டு வாழ்ந்தவர்கள், பல்வேறு வகையான நோன்புகளை நோற்றவர்கள், படுக்கையைத் துறந்து வெறுந்தரையை ஏற்றுக் கொண்டவர்கள்,(46) ஆகியோர் அனைவரும் சரஸ்வதிக்கு அருகில் இருந்த அந்த இடங்களுக்கு வந்தனர். அவர்கள், மந்தாகினி என்றழைக்கப்படும் தெய்வீக ஓடையை (தங்கள் இருப்பால்) அழகாக்கிய தேவர்களைப் போல அந்த முதன்மையான ஆற்றை {சரஸ்வதி ஆற்றை} மிக அழகானதாக்கினார்கள்.(47)வேள்விகளைச் செய்யத் தங்களை அர்ப்பணித்தவர்களான முனிவர்கள் நூற்றுக்கணக்கில் அங்கே வந்தனர். எனினும், உயரந்த நோன்புகளைப் பயில்பவர்களான அவர்கள் சரஸ்வதி ஆற்றங்களையில் போதுமான இடத்தை அடைவதில் தவறினார்கள்.(48) அவர்கள், தங்கள் புனிதமான நூல்களை {யஜ்ஞோபவீதங்களைக்} கொண்டு, நிலத்தின் சிறு பகுதிகளை அளந்து தங்கள் அக்னிஹோத்ரங்களையும், பல்வேறு பிற சடங்குகளையும் செய்தனர்.(49) தங்கள் சடங்குகளைச் செய்வதில் (அகன்ற தீர்த்தம் வேண்டி) கவலையில் மூழ்கியிருந்த பெரும் எண்ணிக்கையிலான முனிவர்களை அந்தச் சரஸ்வதி கண்டாள். அவர்களின் நிமித்தமாகவே,(50) புனித தவத்தைச் செய்யும் அந்த முனிவர்களிடம் கருணை கொண்ட அந்த முதன்மையான ஓடை {சரஸ்வதி}, ஓ! ஜனமேஜயா, அவ்விடங்களில தனக்கான பல்வேறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டாள் {திரும்பினாள்}.(51) இவ்வாறு ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி, அவர்களின் நிமித்தமாகத் தன் வழியைத் திருப்பிக் கொண்டு, மீண்டும் மேற்கு திசை நோக்கிப் பாய்ந்தாள்.(52)

{அப்படி அவள் மீண்டும் திரும்பும்போது}, “இந்த முனிவர்களின் வருகை பலனற்றுப்போவதைத் தவிர்த்துவிட்டேன், இனி நான் செல்ல வேண்டும்” என்று அவளே சொல்வது போல இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இந்த அற்புதம் நிறைந்த அருஞ்செயல் அந்தப் பெரும் நதியால் அங்கே நிறைவேற்றப்பட்டது.(53) இவ்வாறே, ஓ! மன்னா, அந்த நீர்க்கொள்ளிடங்கள் நைமிசத்தில் {நைமிசவனத்தில்} உண்டாகின. ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அங்கே அந்தக் குருக்ஷேத்திரத்தில் நீயும் மகத்தான வேள்விகளையும், சடங்குகளையும் செய்வாயாக.(54) நீர்க்கொள்ளிடங்கள் பலவற்றையும், அந்த முதன்மையான நதி தன் பாதையைத் திருப்பிக் கொண்டதையும் கண்ட அந்த உயர் ஆன்ம ராமன் {பலராமன்} ஆச்சரியத்தால் இதயம் நிறைந்தான்.(55) யது குலத்தை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் அவன் {பலராமன்}, அத்தீர்த்தங்களில் முறையாக நீராடி, செல்வத்தையும், மகிழ்ச்சிக்குரிய பல்வேறு பிற பொருட்களையும் பிராமணர்களுக்குத் தானமளித்து,(56) மேலும் அவர்களுக்குப் பல்வேறு வகைகளிலான உணவையும், அவர்களின் விருப்பத்துக்குகந்த பல்வேறு பொருட்களையும் கொடுத்தான்.

அந்த மறுபிறப்பாளர்களால் {பிராமணர்களால்} வழிபடப்பட்ட அந்தப் பலன் {பலராமன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சரஸ்வதியிலுள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் முதன்மையான (சப்த சாரஸ்வதம் என்ற) தீர்த்ததிற்குப் புறப்பட்டான். இறகு படைத்த எண்ணற்ற உயிரினங்கள் அங்கே தங்கள் இல்லங்களைக் கொண்டுள்ளன. அங்கே அந்தச் சரஸ்வதி ஆற்றங்கரையில் பதரி {இலந்தை}, இங்குதம், காஸ்மாரியம் {ஸ்யாமாகம்}, பிலக்ஷம், அஸ்வதம் {அரசம்}, விபிதகம் {தான்றி}, கக்கோலம் {கங்கோலம்}, பலாசம், கரீரம் {இளமூங்கில்}, பீலு ஆகிய மரங்களும், பல்வேறு பிறவகை மரங்களும் நிறைந்திருந்தன.(57-59) மேலும் அது கரூசகம், வில்வம், ஆம்ராதகம், அதிமுக்தகம், காஷந்தம், பாரிஜாதம் ஆகிய மரங்களைக் கொண்ட காடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(60) காட்சிக்கு இனிமையானதாக, மிக அழகியதாக இருந்த அதில் வாழைத் தோப்புகள் நிறைந்திருந்தன. காற்றையுண்டு வாழும் சிலர், நீரில் வாழும் சிலர், கனியில் வாழும் சிலர், இலைகளில் வாழும் சிலர், உமிநீக்கப்படாத தானியங்களை வெறும் கற்களின் துணை கொண்டு உமி நீக்கி உண்டு வாழும் சிலர் வானேயர்கள் என்று அழைக்கப்பட்ட சிலர் ஆகியோரைக் கொண்ட பல்வேறு தவசிகள் வந்து செல்லும் இடமாக அஃது இருந்தது. மேலும் அது வேதமோதலை எதிரொலித்தபடியே பல்வேறு வகையான விலங்குகள் நிறைந்ததாக இருந்தது.(61-62) அப்பழுக்கற்றவர்களும், அறத்திற்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களுக்குப் பிடித்தமான இடமாக அஃது இருந்தது. கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட பலதேவன், பெரும் தவசியான மங்கணகர் எங்குத் தன் தவத்தைச் செய்து வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டாரோ அந்தச் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்தை வந்தடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(63)

சப்தசாரஸ்வதம்! – சல்லிய பர்வம் பகுதி – 38-சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை என ஏழு வடிவங்களாக வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தோன்றிய சரஸ்வதி ஆறு; அந்த ஏழு ஆறுகளும் ஒன்று கலந்த சப்தசாரஸ்வதத் தீர்த்தம்; மங்கணகர் வரலாறு; சிவனின் அருள்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஏன் அந்தத் தீர்த்தம் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்டது? யாரந்தத் தவசி மங்கணகர்? எவ்வாறு அந்தப் போற்றுதலுக்குரியவர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார் {எவ்வாறு சித்தரானார்}? அவரது நோன்புகளும், நியமங்களும் என்ன?(1) அவர் யாருடைய குலத்தில் பிறந்தவராவார்? மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான அவர் எந்தெந்த புத்தகங்களைப் படித்தார் {எவற்றை அத்யயனம் செய்தார்}? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இவையாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, இந்த அண்டத்தை ஏழு சரஸ்வதிகள் மறைக்கின்றன. பெரும் சக்தி மிக்க மனிதர்களால் அந்தச் சரஸ்வதி எங்கெல்லாம் அழைக்கப்பட்டாளோ, அங்கெல்லாம் அவள் தோன்றினாள்.(3) சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை ஆகிய இவையே சரஸ்வதியின் ஏழு வடிவங்களாகும்.(4)

ஒரு காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஒரு பெரும் வேள்வியைச் செய்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிலத்தில் அந்த வேள்வி நடந்து கொண்டிருந்தபோது, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மறுபிறப்பாளர்கள் {பிராமணர்களால்} பலர் அங்கே வந்தனர்.(5) அங்கே பாடப்பட்ட புனிதமான பாடல்களும், ஓதப்பட்ட வேதங்களும் அந்த இடத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அந்த வேள்விச் சடங்குகளில், தேவர்கள் தங்கள் நிதானத்தை இழந்தனர் (அந்த அளவுக்கு ஆயத்தங்கள் நடந்தன).(6) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தப் பெரும்பாட்டன் வேள்வியில் நிறுவப்பட்டு, செல்வத்தையும், அனைத்து விருப்பங்களையும் அளிக்கவல்ல அந்த மகத்தான விழாவை நடத்திக் கொண்டிருந்தபோது,(7) அறம், பொருள் குறித்த அனைத்தையும் அறிந்த குறிப்பிட்ட சிலர் அங்கே இருந்தனர். ஓ! ஏகாதிபதி, அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்கள் நினைத்தவுடன், அவர்களுக்கு முன்பு அவை உடனே தோன்றின.(8) கந்தர்வர்கள் பாடினர், அப்சரஸ்களில் பல்வேறு இனத்தவர் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் பல்வேறு தெய்வீக இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருந்தனர்.(9) அந்த வேள்வியில் கொணரப்பட்ட பொருட்செல்வத்தில் தேவர்களேகூட மனம்நிறைந்தனர். அப்படியிருக்கையில் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வது? தேவர்களே கூட ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(10)அந்த வேள்வி புஷ்கரையில் பெரும்பாட்டனின் முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா, முனிவர்கள், “ஆறுகளில் முதன்மையான சரஸ்வதி இங்கே காணப்படாமையால், உயர்ந்த தன்மைகளைக் கொண்ட வேள்வியாக இதைச் சொல்ல முடியாது” என்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட பிரம்மன் உற்சாகமாகச் சரஸ்வதியை நினைத்தான்.(11,12) புஷ்கரையில் வேள்வியைச் செய்து கொண்டிருந்த பெரும்பாட்டனால் {பிரம்மனால்} இவ்வாறு அழைக்கப்பட்ட சரஸ்வதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சுப்ரபை {ஸுப்ரபை} என்ற பெயரில் அங்கே தோன்றினாள். சரஸ்வதி அந்தப் பெரும்பாட்டனுக்கு விரைவாகச் செலுத்திய அம்மரியாதையைக் கண்ட முனிவர்கள் அந்த வேள்வியை உயர்வாக மதித்தனர்.(14) இவ்வாறே ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி, பெரும்பாட்டனின் {பிரம்மனின்} நிமித்தமாகவும், அந்த முனிவர்களை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காகவும் புஷ்கரையில் தோன்றினாள்.(15)(மற்றொரு நேரத்தில்) ஓ! மன்னா, நைமிசத்தில் பல முனிவர்கள் ஒன்றாகக் கூடி அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். அங்கே வேதங்களைக் குறித்து அவர்களுக்குள் ஆய்வுக்குரிய பல இனிமையான விவாதங்கள் நடந்தன.(16) பல்வேறு சாத்திரங்களை அறிந்தவர்களான அம்முனிவர்கள் வசித்த இடத்தில் அவர்கள் சரஸ்வதியைக் குறித்துச் சிந்தித்தனர்.(17) வேள்வியைச் செய்யும் அம்முனிவர்களால் இவ்வாறு நினைக்கப்பட்டதும், உயர்ந்த அருளைக் கொண்டவளும், புனிதமானவளுமான சரஸ்வதி, அவர்களுக்கு உதவி செய்வதற்காக அந்த உயர் ஆன்ம முனிவர்கள் ஒன்றுதிரண்டிருந்த நைமிசத்தில் தோன்றி காஞ்சனாக்ஷி என்று அழைக்கப்பட்டாள்.(18,19) ஓ! பாரதா, இவ்வாறே அனைவராலும் வழிபடப்பட்ட முதன்மையான ஆறான அவள் அங்கே வந்தாள்.கயாவில் (மன்னன்) கயன் ஒரு பெரும் வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது, ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி அந்தக் கயனின் வேள்வியில் அழைக்கப்பட்டாள் (அவ்வாறே அங்கே தோன்றவும் செய்தாள்). அங்கே இருந்தவர்களான கடும் நோன்புகளை நோற்கும் முனிவர்கள் கயாவில் தோன்றிய அவளது அந்த வடிவத்துக்கு விசாலை என்று பெயரிட்டனர்.(21) அந்த ஆற்றின் வேகமான நீரோட்டம் இமயத்தின் சாரலில் இருந்து பாய்கிறது.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஔத்தாலகர் என்பவரும் ஒரு வேள்வியைச் செய்தார்.(22) உயர் ஆன்ம ஔத்தாலகரின் வேள்வி கோசலத்தின் வட பாகத்தில் உள்ள புனிதமான பகுதியில் நடைபெற்றது.(23) முனிவர்களின் பெருங்கூட்டம் அங்கே திரண்டது. ஔத்தாலகர் தன் வேள்வியைத் தொடங்கும் முன்னர்ச் சரஸ்வதியை நினைத்தார். ஆறுகளில் முதன்மையான அவள், அந்த முனிவர்களின் நிமித்தமாக அந்தப் பகுதிக்கு வந்தாள்.(24) மரவுரிகளையும், மான்தோல்களையும் உடுத்தியிருந்த அம்முனிவர்கள் அனைவராலும் வழிபடப்பட்ட அவள், அம்முனிவர்கள் தங்கள் மனத்தால் அழைத்தபடியே மனோரமை என்ற பெயரில் அறியப்படலானாள்.(25)

மேலும் உயர் ஆன்ம குரு, குருக்ஷேத்திரத்தில் ஒரு வேள்வியைச் செய்தபோது, ஆறுகளில் முதன்மையானவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளுமான சரஸ்வதி அங்கே தோன்றினாள்.(26) ஓ! ஏகாதிபதி, (குருவின் வேள்வியில் உதவி செய்து கொண்டிருந்த) உயர் ஆன்ம வசிஷ்டரால் அழைக்கப்பட்டவளும், தெய்வீக நீர் நிரம்பியவளுமான சரஸ்வதி, அந்தக் குருக்ஷேத்திரத்தில் ஓகவதி எனும் பெயரில் தோன்றினாள்.(27)

ஒரு சமயம் தக்ஷன், கங்கை தோன்றும் இடத்தில் {கங்கோத்ரியில்} ஒரு வேள்வியைச் செய்தான். வேகமாகப் பாயும் சுரேணு எனும் பெயரில் சரஸ்வதி அங்கே தோன்றினாள்.(28)

பிரம்மன் புனிதமான இமயமலைக் காட்டில் மீண்டும் ஒரு வேள்வியைச் செய்தபோது, (அவனால் {பிரம்மனால்}) அழைக்கப்பட்டவளான போற்றுதலுக்குரிய சரஸ்வதி {விமலோதகை என்ற பெயரில்} அங்கே தோன்றினாள்.(29)

இந்த ஏழு வடிவங்கள் அனைத்தும், பலதேவன் {பலராமன்} வந்திருந்த அந்தத் தீர்த்தத்தில் {சப்த சாரஸ்வத்ததில்} ஒன்று கலந்தது. அவ்விடத்தில் {சரஸ்வதியின்} ஏழு வடிவங்கள் ஒன்று கலந்ததால் அந்தத் தீர்த்தப் இப்பூமியில் சப்தசாரஸ்வதம் என்ற பெயரில் அறியப்படுகிறது.(30) இவ்வாறே ஏழு சரஸ்வதிகளையும், அவர்களின் பெயர் வரிசையில் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். மேலும் நான் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்படும் அந்தப் புனிதமான தீர்த்தம் குறித்தும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(31)

இப்போது இளமையில் இருந்தே பிரம்மச்சரிய வாழ்வுமுறையை ஏற்று வாழ்ந்த மங்கணகரின் அருஞ்செயலைக் குறித்துக் கேட்பாயாக. அவர், (ஒரு நாள்) ஆற்றில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தபோது,(32) களங்கமற்ற அங்கங்கள் மற்றும் அழகிய புருங்களைக் கொண்ட ஒரு பெண், திறந்த மேனியுடன் அந்நதியில் நீராடிக் கொண்டிருந்தாள். அதைக் கண்டதும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்முனிவரின் உயிர்நீர் சரஸ்வதியில் {சரஸ்வதி நதியில்} விழுந்தது.(33) அந்தப் பெரும் தவசி அஃதை எடுத்து தனது மண்குடத்திற்குள் வைத்தார். அந்தப் பாத்திரத்திற்குள் வைக்கப்பட்ட அந்த உயிர்நீர் ஏழுபகுதிகளாகப் பிரிந்தது.(34) அந்த ஏழு பகுதிகளில் இருந்து ஏழு முனிவர்கள் பிறந்தனர். அவர்களில் இருந்து (நாற்பத்தொன்பது) மருத்துக்கள் தோன்றினர். அந்த ஏழு முனிவர்களும், வாயுவேகன், வாயுபலன் வாயுஹன், வாயுமண்டலன்,(35) வாயுஜாதன் {வாயுஜ்வாலன்}, வாயுரேதஸ், பெரும் சக்தி கொண்ட வாயுசக்கிரன் எனப் பெயரிடப்பட்டனர். இவ்வாறே பல்வேறு மருத்துக்களின் தந்தைமார் தோன்றினர்.(36)

அந்தப் பெரும் முனிவரின் நடத்தை குறித்ததும், பூமியில் மிக அற்புதமானதும், மூவலங்களாலும் நன்கு அறியப்பட்டதுமான ஒரு ஆச்சரியமான காரியத்தை இப்போது கேட்பாயாக.(37) பழங்காலத்தில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த மங்கணகர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், குசப்புல்லால் {தர்ப்பையால்} அவரது கை துளைக்கப்பட்டது. அதன்பேரில் அந்தக் காயத்தில் இருந்து (சிவப்பான இரத்தம் வராமல்) காய்கறிச்சாறு {சாகரசம் – மூலிகைச்சாறு} வந்தது.(38) அந்த மூலிகைச் சாற்றைக் கண்ட அந்த முனிவர், மகிழ்ச்சியால் நிறைந்து, அந்த இடத்தில் நர்த்தனம் {நடனம்} செய்தார். அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும், அவர் ஆடுவதைக் கண்டு, அவரது சக்தியால் மயக்கமடைந்து ஆடத் தொடங்கின.(39)

அப்போது பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் மகாதேவனிடம் சென்று, ஓ! மன்னா, அந்த (மங்கணக) முனிவரின் செயலைக் குறித்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம் {மகாதேவனிடம்}, “ஓ! தேவா, அம்முனிவரை ஆடுவதிலிருந்து தடுப்பதே உனக்குத் தகும்” என்றனர்.(40) பெரும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும் அம்முனிவரைக் கண்ட மகாதேவன் {சிவன்}, தேவர்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில், அவரிடம் {மங்கணகரிடம்},(41) “ஓ! பிராமணரே, உமது கடமைகளைக் குறித்த அறிந்த நீர் ஏன் இவ்வாறு நர்த்தனம் செய்கிறீர்? ஓ! தவசியே, ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அறப்பாதையில் நடப்பவரும், தவசியுமான நீர் இவ்வாறு செயல்படும் அளவிற்கு என்ன முக்கியக் காரணத்தால் இவ்வளவு மகிழ்ச்சியை அடைந்திருக்கிறீர்?” என்று கேட்டான்.(42)

அம்முனிவர் {மங்கணகர்}, “ஓ! பாஹ்மணா {சிவனே}[1] என் காயத்தில் இருந்து மூலிகைச் சாறு பாய்வதை நீ காணவில்லையா? ஓ! தலைவா, இதைக் கண்டே நான் பெரும் மகிழ்ச்சியில் நர்த்தனம் செய்கிறேன்” என்றார்.(43) அந்தத் தேவன், அதிக விருப்பத்தால் மயங்கியிருந்த அந்த முனிவரிடம் சிரித்துக் கொண்டே, “நான் இஃதில் எந்த அதிசயத்தையும் காணவில்லை. என்னைப் பார்ப்பீராக” என்றான்.(44) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான மகாதேவன், அந்த முதன்மையான முனிவரிடம் இதைச் சொல்லி, தன் விரல்களின் நுனியைக் கொண்டு தன் கட்டைவிரலை அடித்தான்.(45) அதன்பேரில், ஓ! மன்னா, அக்காயத்தில் இருந்து சாம்பலும், வெண்பணியும் வெளிவந்தன. ஓ! ஏகாதிபதி, இதைக் கண்ட அம்முனிவர் நாணமடைந்து, அந்தத் தேவனின் காலில் விழுந்தார்.(46) வந்தது மகாதேவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அவர் அறிந்து கொண்டார்-ஆச்சரியத்தால் நிறைந்த அவர்{மங்கணகர்}, “பெரியவனும், பரம்பொருளுமான ருத்ரனையன்றி நீ வேறு எவனுமில்லை என நான் நினைக்கிறேன்.(47) ஓ! திரிசூலபாணியே, தேவர்களும், அசுரர்களும் அடங்கிய இந்த அண்டத்தின் புகலிடம் நீயே. இந்த அண்டத்தைப் படைத்தவன் நீயே என ஞானியர் சொல்கின்றனர்.(48) அண்ட அழிவின் {பிரளயத்தின்} போது, மீண்டும் அனைத்தும் உன்னுள் நுழைகின்றன. தேவர்களாலேயே அறியப்பட முடியாதவனான உன்னை நான் மற்றும் அவ்வாறு அறிந்து கொள்வேன்?(49) இந்த அண்டத்தில் உள்ள வடிவங்கள் அனைத்தும் உன்னில் தெரிகின்றன. ஓ! பாவமற்றவனே, பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் வரமருள்பவனான உன்னையே வழிபடுகின்றனர்.(50) அனைத்தும் நீயே. தேவர்களைப் படைத்தவன் நீயே, அவர்கள் படைக்கப்படக் காரணமானவனும் நீயே. தேவர்கள் தங்கள் காலத்தை மகிழ்ச்சியாகவும், முற்றிலும் அச்சமற்ற நிலையிலும் கடத்துவது உன் அருளாலேயே” என்றார். இவ்வாறு அந்த முனிவர் மகாதேவனைத் துதித்து வணங்கினார்.(51)

மேலும், “ஓ! தேவா, நான் வெளிப்படுத்திய இந்த மிக அற்பமான பணிவின்மை என் தவத்தகுதியை அழித்துவிட வேண்டாம். இதற்காக நான் உன்னிடம் வேண்டுகிறேன்” என்று கேட்டார்.(52) அந்தத் தேவன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், மீண்டும் அவரிடம், “ஓ! பிராமணரே, என் அருளால் உமது தவத்தகுதி ஆயிரம் மடங்காக அதிகரிக்கட்டும். நான் எப்போதும் உம்மோடு இந்த ஆசிரமத்தில் வசித்திருப்பேன்.(53) சப்த சாரஸ்வதம் எனும் இந்தத் தீர்த்தத்தில் என்னை வழிபடும் ஒரு மனிதனால், இவ்வுலகிலும் {இம்மையிலும்}, அடுத்தவுலகிலும் {மறுமையிலும்} அடையமுடியாதது எதுவுமில்லை. அப்படிப்பட்ட ஒருவன் இறந்ததும் (சொர்க்கத்தில்) சாரஸ்வதம் என்றழைக்கப்படும் பகுதிக்குச் {சாரஸ்வதலோகத்துக்குச்} செல்வான் என்பதில் ஐயமில்லை” என்றான் {சிவன்}.(54) இதுவே, அபரிமிதமான சக்தி கொண்டவரான மங்கணகரின் வரலாறாகும். அவர் சுகன்யையிடத்தில் காற்றுத் தேவனால் {வாயுவால்} பெறப்பட்ட மகனாவார்” {என்றார் வைசம்பாயனர்}[2].(55)

மஹோதர ருசங்க முனிகள்! – சல்லிய பர்வம் பகுதி – 39-கபாலமோசனத் தீர்த்தத்தை அடைந்த பலராமன்; முனிவர் மஹோதரரின் வரலாறு; தசரதராமன் வெட்டிய ராட்சசனின் தலை; மஹோதரர் விடுபட்டது; ருசங்கு முனிவரின் தீர்மானம்; பிருதூதகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனான ராமன் {பலராமன்}, அங்கே {சப்தசாரஸ்வதத்தில்} ஓரிரவைக் கழித்து, அந்தத் தீர்த்தத்தில் வசிப்போரை வழிபட்டு, மங்கணகரிடம் தான் கொண்ட மரியாதையைக் காட்டினான்.(1) கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, செல்வத்தைப் பிராமணர்களுக்குத் தானமளித்து, முனிவர்களால் வழிபடப்பட்டு அந்த இரவை அங்கே கடத்தினான்.(2) காலையில் எழுந்து தவசிகள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட அவன் {பலராமன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, புனித நீரைத் தீண்டி பிற தீர்த்தங்களை நோக்கி வேகமாகப் புறப்பட்டான்.(3)-பலதேவன் பிறகு உசனஸ் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தத்துக்குச் சென்றான். அது கபாலமோசனம் என்றும் அழைக்கப்படுகிறது. முன்பொரு காலத்தில் (தசரதனின் மகனான) ராமன், ஒரு ராட்சசனைக் கொன்று, அவனது தலையைப் பெரும் தொலைவில் எறிந்தான். அந்தத் தலையானது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மஹோதரர் என்ற பெயருடைய பெரும் தவசி ஒருவரின் தொடையில் விழுந்து, அதனுடன் ஒட்டிக் கொண்டது {தொடையைக் கவ்விக் கொண்டது}. அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்}, அந்தத் தீர்த்தில் நீராடி, அந்தச் சுமையில் இருந்து விடுபட்டார். உயர் ஆன்ம கவி (சுக்கிரன்) இங்கே தன் தவத்தைச் செய்துள்ளார்.(4,5) அங்கேதான் (சுக்கிரனின் பெயரால் அறியப்படும்) அரசியல் மற்றும் நெறிகள் ஆகியவற்றின் மொத்த அறிவியலும் அவருக்கு {சுக்கிரனுக்கு} உள்ளொளியில் தோன்றியது. சுக்கிரன் அங்கே வசித்தபோது, (தேவர்களுடன்) தைத்திய தானவப் போரைக் குறித்துத் தியானித்தார்.(6) தீர்த்தங்களில் முதன்மையான அந்தத் தீர்த்தத்திற்கு வந்த பலதேவன், ஓ! மன்னா, உயர் ஆன்ம பிராமணர்களுக்கு முறையாகத் தானமளித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(7)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “(ராட்சசன் தலையிடமிருந்து) அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்} விடுபட்ட இடம் கபாலமோசனம் என்று ஏன் அழைக்கப்படுகிறது? எந்தக் காரணத்திற்காக, எவ்வாறு அந்தத் தலை அவரிடம் ஒட்டிக் கொண்டது” என்று கேட்டான்.(8)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொருசமயம், ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, (தசரதன் மகனான) உயர் ஆன்ம ராமன், ராட்சசர்களைக் கொல்லும் விருப்பத்தோடு தண்டக வனத்தில் வாழ்ந்தான்.(9) ஜனஸ்தானத்தில் அவன் அந்தத் தீய ஆன்மா கொண்ட ராட்சசனின் தலையைப் பெரும் கூர்மை கொண்ட ஒரு கத்தித் தலைக் கணையால் வெட்டினான். அந்தத் தலையானது ஆழ்ந்த கானகத்தில் சென்று விழுந்தது.(10) மஹோதரர் காட்டில் சென்று கொண்டிருந்தபோது (ஆகாயத்தின் ஊடாக) வந்த அந்தத் தலை அவரது தொடையில் விழுந்தது. ஓ! மன்னா, அவரது தொடையைத் துளைத்து, அதனுடன் ஒட்டிக் கொண்டு அங்கேயே நீடித்திருந்தது.(11) அந்தத் தலை இவ்வாறு அவரது தொடையில் ஒட்டிக் கொண்டதன் விளைவால், பெரும் ஞானம் கொண்ட அந்தப் பிராமணரால் (மஹோதரரால்} தீர்த்தங்களுக்கும், பிற புண்ணியத்தலங்களுக்கும் (எளிதாகச்) செல்ல முடியவில்லை.(12) பெரும் வலியால் பீடிக்கப்பட்டும், தொடையில் அழுகிய ஊனீர் வழிந்து கொண்டும் அவர் {மஹோதரர்} பூமியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திற்கும் (ஒன்றன்பின் ஒன்றாகச்) சென்றார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(13)

அவர் {மஹோதரர்} ஆறுகள் அனைத்திற்கும், பெருங்கடலுக்கும் கூடச் சென்றார். (எந்த நிவாரணத்தையும் காணாத) அந்தப் பெரும் தவசி, தூய ஆன்மாக்களைக் கொண்ட முனிவர்கள் பலரிடம் தனது பாடுகளைக் குறித்தும்,(14)அனைத்துத் தீர்த்தங்களில் நீராடியும் தான் வேண்டிய நிவாரணத்தை அடைய முடியாதது குறித்தும் பேசினார். அப்போது அந்த முதன்மையான பிராமணர், அந்தத் தவசிகளிடம் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகளைக் கேட்டார்.(15) சரஸ்வதியில், முதன்மையான தீர்த்தமாக அமைந்திருப்பதும், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கவல்லதும், உசனாஸம் என்ற பெயரில் அறியப்படுவதும், (தவ) வெற்றியை அடைய சிறந்த இடமுமான அந்தத் தீர்த்தத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார்.(16) பிறகு அந்த ஔசனஸ {உசனஸ} தீர்த்தத்திற்குச் சென்ற அந்தப் பிராமணர் அங்கே அதன் நீரில் நீராடினார். அதன் பேரில் அந்த ராட்சசனின் தலையானது, அவனது தொடையை விட்டகன்று நீரில் விழுந்தது.(17) அந்த (உயிரில்லா) தலையிடம் இருந்து விடுபட்ட அந்த முனிவர் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தார். அந்தத் தலையைப் பொறுத்தவரால், அஃது அந்த நீரில் தொலைந்து போனது.(18)ஓ! மன்னா {ஜனமேஜயா}, ராட்சசனின் தலையிடம் இருந்து விடுபட்ட அந்த மஹோதரர், தூய்மையாக்கப்பட்ட ஆன்மாவோடும், தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டும், வெற்றியை அடைந்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(19) இவ்வாறு விடுபட்ட அந்தப் பெரும் தவசி, தன் புனிதமான ஆசிரமத்திற்குத் திரும்பியதும், தூய ஆன்மாக்களைக் கொண்ட அந்த முனிவர்களிடம் என்ன நடந்தது என்பதைக் குறித்துப் பேசினார்.(20) அங்கே கூடியிருந்த முனிவர்கள், அவரது வார்த்தைகளைக் கேட்டு, அந்தத் தீர்த்தத்திற்குக் கபாலமோசனம் என்ற பெயரை அளித்தனர்.(21) அந்தப் பெரும் முனிவர் மஹோதரர், மீண்டும் அந்த முதன்மையான தீர்த்தத்திற்கு {ஔசனஸம் [அ] உசனஸம் என்ற தீர்த்ததிற்குச்} சென்று, அதன் நீரைப் பருகி, பெரும் தவ வெற்றியை அடைந்தார்.(22)

அந்த மதுகுலத்தோன் {பலராமன்}, பிராமணர்களுக்குப் பெரும் செல்வத்தைத் தானமளித்து, அவர்களை வழிபட்ட பிறகு, ருசங்குவின் {உசங்குவின்} ஆசிரமத்திற்குச் சென்றான்.(23) முன்பொருகாலத்தில் அங்கே, ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்துவந்தார். அங்கேதான் (முன்பு க்ஷத்திரியராக இருந்த) பெரும் முனிவரான விஷ்வாமித்திரர் பிராமணரானார்.(24) அந்தப் பெரும் ஆசிரமம், அனைத்து விருப்பங்களுக்கும் கனியை அருளவல்லதாகும். ஓ! தலைவா, அஃது எப்போதும் முனிவர்கள் மற்றும் பிராமணர்களின் வசிப்பிடமாக இருந்தது.(25) பிராமணர்களால் சூழப்பட்டவனும், பேரழகனுமான பலதேவன் {பலராமன்}, முன்பொரு காலத்தில் ருசங்கு எங்குத் தன் உடலை விட்டாரோ அங்கே அந்த இடத்திற்குச் சென்றான்.(26)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, ருசங்கு, எப்போதும் கடுந்தவத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஒரு முதிய பிராமணராவார். தன் உடலைக் கைவிடத் தீர்மானித்த அவர், நீண்ட காலமாக அதுகுறித்து ஆலோசித்திருந்தார்.(27) பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர், தன் மகன்கள் அனைவரையும் அழைத்து, நீரானது அபரிமிதமாக இருக்கும் இடத்திற்குத் தன்னைக் கொண்டு போகச் சொன்னார்.(28) தங்கள் தந்தை மிகவும் முதிர்ந்துவிட்டதை அறிந்த அந்தத் தவசிகள், அவரைச் சரஸ்வதியில் இருக்கும் ஒரு தீர்த்தத்திற்குக் கொண்டு சென்றனர்.(29) நூறு தீர்த்தங்களைக் கொண்டவளும், உலகுடன் தொடர்பில்லாத முனிவர்கள் வசித்த கரைகளைக் கொண்டவளுமான புனிதமான சரஸ்வதியிடம் தம் மகன்களால் கொண்டுவரப்பட்டவரும், கடுந்தவங்களைச் செய்தவரும், தீர்த்தங்களின் தகுதிகளை {புண்ணியங்களைக்} குறித்து அறிந்தவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி {ருசங்கு}, முறையான சடங்குகளின்படி அந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஓ! மனிதர்களில் புலியே, கடமையுணர்வுடன் தமக்காகக் காத்திருந்த தமது மகன்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகளை உற்சாகமாகச் சொன்னார்:(30,31) “புனிதமான மந்திரங்களை மனத்தில் ஓதிக் கொண்டிருக்கும்போது, அபரிமிதமான நீரைக் கொண்ட சரஸ்வதியின் வடகரையில் தன் உடலைக் கைவிடும் ஒருவன், மீண்டும் ஒருபோதும் இறப்பால் பீடிக்கப்படமாட்டான் {மறுபிறவி அடையமாட்டான்}” என்றார்.(32)

அற ஆன்மா கொண்ட பலதேவன் அத்தீர்த்தத்தின் {ருசங்கு} நீரைத் தீண்டி, அதில் நீராடி, பிராமணர்களிடம் அர்ப்பணிப்புக் கொண்டவனான அவன் அவர்களுக்கு மிகுதியான செல்வத்தைக் கொடுத்தான்.(33) பெரும் வலிமையையும், பெரும் ஆற்றலையும் கொண்ட அந்தப் பலதேவன், போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் {பிரம்மன்} எங்கு லோகாலாகம் என்ற மலைகளை உண்டாக்கினானோ, கடும் நோன்புகளைக் கொண்டவரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்து எங்குப் பிராமணத் தன்மையை அடைந்தாரோ, அரசமுனியான சிந்துத்வீபனும், பெரும் தவசியான தேவாபியும், போற்றுதலுக்குரியவரும், கடுந்தவத்தையும், கடும் சக்தியையும் கொண்டவருமான சிறப்புமிக்க முனிவர் விஷ்வாமித்திரரும் எங்கு அதே நிலையை {பிராணத்தன்மையை} அடைந்தனரோ அந்தத் தீர்த்தத்திற்கு {பிருதூதகத் தீர்த்தத்திற்குச்} சென்றான்[1]” {என்றார் வைசம்பாயனர்}.(34-36)

பிராமணரான க்ஷத்திரியர்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 40-பிருதூதகத் தீர்த்ததிற்கு வரமருளிய ஆர்ஷ்டிஷேணர்; க்ஷத்திரியர்களான சிந்துத்வீபர், தேவாபி மற்றும் விஷ்வாமித்திரர் ஆகியோர் பிருதூதகத் தீர்த்தில் தவம் செய்து நீராடி பிராமண நிலையை அடைந்தது; அங்கிருந்து பக தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் ஏன் கடுந்தவங்களைச் செய்தார்? சிந்துத்வீபர் எவ்வாறு பிராமணத் தன்மையை அடைந்தார்?(1) ஓ! பிராமணரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, தேவாபியும், விஷ்வாமித்திரரும் எவ்வாறு அதே நிலையை அடைந்தனர்? ஓ! போற்றுதலுக்குரியவரே, இவையாவற்றையும் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது” என்று சொன்னான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொரு சமயம், கிருதயுகத்தில், ஓ! மன்னா, ஆர்ஷ்டிஷேணர் என்றழைக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர் ஒருவர் இருந்தார். அவர், தமது ஆசானின் இல்லத்தில் வசித்து, தினமும் பாடங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவர் தமது ஆசானின் இல்லத்தில் நெடுங்காலம் வசித்திருந்தாலும், ஓ! ஏகாதிபதி, வேதங்களிலும், அறிவின் எந்தத் துறையிலோ திறன் எதையும் அடைய முடியவில்லை.(4) ஓ! மன்னா, இதனால் பெரும் ஏமாற்றமடைந்த அந்தத் தவசி மிகக் கடுமையான தவங்களைச் செய்தார். அவர் தமது தவத்தின் மூலம் ஒப்புவமையற்ற வேதங்களில் தேர்ச்சி பெற்றார்.(5) பெரும் கல்வியையும், வேதங்களில் தேர்ச்சியையும் அடைந்த அந்த முனிவர்களில் முதன்மையானவர் {ஆர்ஷ்டிஷேணர்}, அந்தத் தீர்த்தத்தில்தான் {பிருதூதகத் தீர்த்தத்தில் தான்} வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார். அந்த இடத்தில் அவர் மூன்று வரங்களை அளித்தார்.(6) அவர், “இன்று முதல், இந்தப் பெரும் நதியின் (சரஸ்வதியின்) இந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், குதிரை வேள்வியின் {அஸ்வமேதயாகத்தின்} பெருங்கனியை {பெரும்பலனை} அடைவானாக.(7) இன்று முதல், இந்தத் தீர்த்தத்தில் பாம்புகளினாலோ, காட்டு விலங்குகளாலோ எந்த அச்சமும் ஏற்படாது. {மேலும் இங்கே வந்து தவம் செய்யும்} சிறு முயற்சிகளிலேயே ஒருவன் இந்தப் பெரும் விளைவை இங்கே அடையலாம்” என்று வரமளித்தார் {ஆர்ஷ்டிஷேணர்}.(8) பெரும் சக்தியைக் கொண்ட அந்த முனிவர் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றார். இவ்வாறே போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார்.(9)

கிருதயுகத்தில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட சிந்துத்வீபரும், தேவாபியும் கூட உயர்ந்த நிலையான பிராமணத் தன்மையை இந்தத் தீர்த்தத்திலேயே அடைந்தனர். அதே போல, புலன்களை அடக்கிக் கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த குசிகரின் மகனும் {விஷ்வாமித்திரரும்} கூட, நல்ல தவம் பயின்று பிராமணத் தன்மையை அடைந்தார்.(11) காதி என்ற பெயரில் அறியப்பட்டு உலகத்தில் கொண்டாடப்பட்ட பெரும் க்ஷத்திரியர் ஒருவர் இருந்தார். அவருக்கு விஷ்வாமித்திரர் என்ற பெயரில் பேராற்றல் படைத்த மகனொருவர் பிறந்தார்.(12) அந்த மன்னன் கௌசிகர் {காதி} பெரும் தவசியாக ஆனார். பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர், தம்முடலைக் கைவிடத் தீர்மானித்து, தமது மகனான விஷ்வாமித்திரரை அரியணையில் நிறுவ விரும்பினார்.(13) அவரது குடிமக்கள் அவரை {காதியை} வணங்கி, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பேரசச்சத்திலிருந்து எங்களைப் பாதுகாப்பீராக. எங்களை விட்டுச் செல்லாதீர்” என்றனர்.(14) இவ்வாறு சொல்லப்பட்ட காதி, தன் குடிகளிடம், “என் மகன் {விஷ்வாமித்திரன்}, இந்தப் பரந்த அண்டத்தின் பாதுகாவலனாக இருப்பான்” என்றார்.(15)

இவ்வார்த்தைகளைச் சொன்ன காதி, (விஷ்வாமித்திரரை) அரியணையில் அமர்த்தி, சொர்க்கத்திற்குச் சென்றார், விஷ்வாமித்திரரும் மன்னனானார். இருப்பினும், அவர் சிறப்பாக முயன்றும்கூட அவரால் உலகத்தைக் காக்க முடியவில்லை.(16) அப்போது அந்த மன்னன் {விசுவாமித்திரர்}, (தன் நாட்டில்) ராட்சசர்களால் ஏற்படும் பேரச்சத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார். அவர், தமது நால்வகைப் படைகளுடன் தமது தலைநகரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.(17) அவர்  {விசுவாமித்திரர்}, தமது வழியில் வெகு தூரம் சென்று வசிஷ்டரின் ஆசிரமத்தை அடைந்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவரது துருப்புகள் அங்கே அதிக முறைகேடுகளைச் செய்தனர்.(18) போற்றுதலுக்குரிய பிராமணரான வசிஷ்டர், தமது ஆசிரமத்திற்கு வந்தபோது, அந்தப் பரந்தகாடு அழிக்கப்படுவதைக் கண்டார்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, முனிவர்களில் சிறந்தவரான அந்த வசிஷ்டர், விஷ்வாமித்திரரிடம் கோபம் கொண்டார்.

அவர் {வசிஷ்டர்} தமது (ஹோமப்) பசுவிடம், “பெரும் எண்ணிக்கையிலான சபரர்களை உண்டாக்குவாயாக” என்று ஆணையிட்டார்.(20) இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பசு, அச்சந்தரும் முகத்தோற்றங்களையுடைய பெரும் மனிதக்கூட்டத்தை உண்டாக்கியது. அவர்கள் விஷ்வாமித்திரரின் படையுடன் மோதி, எங்கும் பேரழிவை ஏற்படுத்த தொடங்கினர்.(21) இதைக் கண்ட துருப்புகள் அங்கிருந்து தப்பி ஓடின. எனினும், காதியின் மகனான விஷ்வாமித்திரர், துறவும், தவமும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தருவதாகக் கருதி, அவற்றின் மேல் தமது இதயத்தை நிலைநிறுத்தினார்.(22) சரஸ்வதியின் இந்த முதன்மையான தீர்த்தத்தில்தான், ஓ! மன்னா {ஜனமேஜயா} அவர், நோன்புகள் மற்றும் உறுதியான தீர்மானத்துடன் கூடிய உண்ணாநோன்புகள் ஆகியவற்றால் தமது உடல் மெலியத் தொடங்கினார்.(23) அவர் {விஷ்வாமித்திரர்} நீரையும், காற்றையும், மரங்களின் (மரங்களில் இருந்து விழுந்த) இலைகளையும் தன் உணவாக்கிக் கொண்டார். அவர் வெறுந்தரையில் உறங்கி (தவசிகளுடன் சேர்ந்து) பிற நோன்புகளையும் நோற்றார்.(24)

அவரது நோன்புகள் நோற்பதைத் தடுக்கத் தேவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தனர். எனினும் அவரது இதயம் (தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட) நோன்புகளில் இருந்து பிறழவில்லை.(25) அப்போது, பெரும் அர்ப்பணிப்புடன் பல்வேறு வகையான தவங்களைப் பயின்ற அந்தக் காதியின் மகன் {விஷ்வாமித்திரர்} சூரியனைப் போலப் பிரகாசமிக்கவரானார்.((26) வரமருள்பவனான பெரும்பாட்டன் {பிரம்மன்}, தவத்தகுதி கொண்ட விஷ்வாமித்திரர் வேண்டிய வரத்தை அருளத் தீர்மானித்தான்.(27) விஷ்வாமித்திரர், தாம் ஒரு பிராமணராக அனுமதிக்கபட வேண்டும் என்ற வரத்தை] வேண்டினார். அனைத்து உலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மன், அவரிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னான்[1].(28) தமது கடுந்தவத்தால் பிராமணத்தன்மையை அடைந்த சிறப்புமிக்க விஷ்வாமித்திரர், தன் விருப்பம் நிறைவேறியதும், ஒரு தேவனைப் போல மொத்த உலகிலும் திரிந்து கொண்டிருந்தார்.(29)ராமனும் {பலராமனும்}, அந்த முதன்மையான தீர்த்தத்தில் பல்வேறு வகையான செல்வங்களைத் தானமளித்து, பிராமணர்களில் முதன்மையான பலரை முறையாக வழிபட்டு, அவர்களுக்குக் கறவைமாடுகளையும், வாகனங்களையும், படுக்கைகளையும், ஆபரணங்களையும், உணவையும், சிறந்த பானங்களையும் உற்சாகமாகக் கொடுத்தான்.(30,31) பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ராமன் அங்கிருந்து {பிருதூதகத் தீர்த்தத்தில் இருந்து}அதிக தொலைவில் இல்லாததும், தால்பிய-பகர் கடுந்தவம் பயின்ற இடமுமான பக ஆசிரமத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

யாயாத தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 41-அவாகீர்ணத் தீர்த்ததிற்குச் சென்ற பலராமன்; முனிவர் பகரின் வரலாறு; பகரை அவமதித்த பாஞ்சால திருதராஷ்டிரன்; பாஞ்சாலத்தின் வீழ்ச்சி; பகரிடம் கருணை வேண்டிய திருதராஷ்டிரன்; யாயாத தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; யாயாத தீர்த்ததில் வேள்வி செய்த யயாதி; வேள்விக்குத் துணை புரிந்தோருக்குச் செல்வத்தைப் பெருக்கிய சரஸ்வதி ஆறு; அடுத்ததாக வசிஷ்டாபவாகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, அந்த யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {பலராமன்}, வேதமோதும் ஒலியை எதிரொலிக்கும் (பக) ஆசிரமத்திற்குச் சென்றான். அங்கே {அவாகீர்ணத் தீர்த்தத்தில் இருந்த பக ஆசிரமத்தில்} தால்பிய பகர் என்ற பெயருடைய பெருமுனிவர் ஒருவர்,(1) விசித்திரவீரியனின் மகனான திருதராஷ்டிரனின் நாட்டை ஆகுதியாக (வேள்வி நெருப்பில்) ஊற்றினார்[1]. அவர் {தால்பியபகர்}, மிகக் கடுமையான தவம் பயின்று தன் உடலை மெலியச் செய்தார். பெரும் சக்தியும் கொண்டவரும், அறவோருமான அந்த முனிவர் பெரும் கோபத்தில் நிறைந்தார் {பெருங்கோபத்தில் நிறைந்து (அச்செயலைச் செய்தார்]}.(2) பழங்காலத்தில் நைமிசவாசிகளான முனிவர்கள் பனிரெண்டு வருடங்களுக்கு நீளும் வேள்வி ஒன்றைச் செய்தனர். அந்த வேள்வி நடந்து கொண்டிருந்த போது, அதிலும் குறிப்பாக விஸ்வஜித் என்றழைக்கப்பட்ட வேள்வியின் நிறைவில், அந்த முனிவர்கள், பாஞ்சாலர்களின் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(3) அங்கே சென்ற அவர்கள், (தாங்கள் நிறைவு செய்த அந்த வேள்விக்கு) தக்ஷிணையாக, நல்ல வலுவான இருபத்தோரு பசுக் கன்றுகளை {பாஞ்சால} மன்னனிடம் வேண்டிக் கேட்டனர்.(4)தால்பிய-பகர், (அம்முனிவர்களை அழைத்து) அவர்களிடம், “(என்னுடைய) விலங்குகளை உங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். (உங்களுக்கு) இவற்றைக் கொடுத்துவிட்டு, அந்தப் பெரும் மன்னனிடம் (இன்னும் சிலவற்றைக்) கேட்கப் போகிறேன்” என்றார்.(5) பெரும் சக்தி கொண்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான {முனிவர்} பகர், அம்முனிவர்கள் அனைவரிடமும் இவ்வாறு சொல்லிவிட்டு, திருதராஷ்டிரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார்.(6) அந்தத் தால்பியர், மன்னன் திருதராஷ்டிரனின் முன்னிலையை அடைந்தது, தனக்காகச் சில விலங்குகளை இரந்து கேட்டார். எனினும், அந்த மன்னர்களில் சிறந்தவன் {திருதராஷ்டிரன்}, எக்காரணமும் இன்றித் தனது பசுக்களில் சில இறந்ததைக் கண்டு, அவரிடம் கோபத்துடன், “இழிந்த பிராமணரே, நீர் விரும்பினால், (இறந்திருக்கும்) இந்த விலங்குகளை எடுத்துச் செல்வீராக” என்றான்.(7,8) கடமைகளை நன்கறிந்தவரான அந்த முனிவர், இவ்வார்த்தைகளைக் கேட்டு, “ஐயோ, சபையில் வைத்து என்னிடம் சொல்லப்பட்ட வார்த்தைகள் கொடூரமானவையாக இருக்கின்றன” என்று நினைத்தார்.(9) இவ்வாறு நினைத்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், கோபத்தால் நிறைந்து, மன்னன் திருதராஷ்டிரனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினார்.(10)

இறந்த போன அந்த விலங்குகளின் சதைகளை வெட்டியெடுத்த அந்தத் தவசிகளில் சிறந்தவர், சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில் {அவாகீர்ணத் தீர்த்தத்தில்} (வேள்வி) நெருப்பை மூட்டி, மன்னன் திருதராஷ்டிரனுடைய நாட்டின் அழிவுக்காக அந்தச் சதைத் துண்டுகளை ஆகுதியாக ஊற்றினர் {அச்சதைகளைக் கொண்டு ஹோமம் செய்தார்}. கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பெரும் தால்பிய-பகர், அந்த இறைச்சித் துண்டுகளின் உதவியால், திருதராஷ்டிரனின் நாட்டையே அந்நெருப்பில் ஆகுதியாக ஊற்றினார்[2].(11,12) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, முறையான சடங்குகளுடன் அந்தக் கடும் வேள்வி தொடங்கப்பட்டதும், திருதராஷ்டிரனின் நாடானது அழிவடையத்தொடங்கியது.(13) உண்மையில், ஓ! தலைவா {ஜனமேஜயா}, மனிதர்கள் கோடரியைக் கொண்டு வெட்டுவதால் பெருங்காடு காணாமல் போவதைப் போலவே அந்த ஏகாதிபதியின் நாடும் அழிவடையத் தொடங்கியது. பேரிடரில் மூழ்கிய அந்த நாடு, தனது செழிப்பையும், வாழ்வையும் இழக்கத் தொடங்கியது.(14)இவ்வாறு பீடிக்கப்பட்ட தனது நாட்டைக் கண்ட அந்தப் பலமிக்க ஏகாதிபதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, உற்சாகமற்றவனாகச் சிந்தனையில் மூழ்கினான்.(15) பிராணமர்களுடன் ஆலோசித்த அவன், (அத்துன்பத்திலிருந்து) தனது ஆட்சிப்பகுதிகளை விடுவிக்கப் பெருமுயற்சி செய்யத் தொடங்கினான்.(16) மன்னன் தன் உற்சாகத்தை இழந்தான். ஓ! பாவமற்றவனே, பிராமணர்களும் துயரால் நிறைந்தனர். இறுதியாகத் தன் நாட்டைக் காக்க மன்னன் {திருதராஷ்டிரன்} தவறிய நிலையில்,(17) ஓ! ஜனமேஜயா, அவன் தன் அமைச்சர்களிடம் (தீர்வுகளைக் குறித்து) கேட்டான். அந்த அமைச்சர்கள் இறந்த பசுக்களுடன் தொடர்புடைய அந்தத் தீமையை அவனுக்கு நினைவுறுத்தினர்.(18) அவர்கள், “தவசியான பகர், (அவ்விலங்குகளின்) சதையின் மூலம் நெருப்பின் உன் நாட்டை ஆகுதியாக ஊற்றுகிறார். அதனால் தான் எனது நாட்டுக்குப் பேரழிவு ஏற்படுகிறது.(19) இவை தவச்சடங்குகளின் விளைவாலேயே நடைபெறுகின்றன. அதனால்தான் இந்தப் பேரிடர் நேர்ந்திருக்கிறது. ஓ! மன்னா, சரஸ்வதியின் கரையில் உள்ள நீர்க்கொள்ளிடத்திற்கு அருகில் இருக்கும் அந்த முனிவரிடம் சென்று அவரை மனநிறைவு கொள்ளச் செய்வாயாக” என்றனர்.(20)

பிறகு அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, சரஸ்வதியின் கரைக்குச் சொன்று அவரது பாதங்களில் வீழ்ந்து, அவற்றை {பாதங்களைத்} தன் தலையால் தீண்டி, ஓ! பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, தன் கரங்களைக் கூப்பி இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! புகழத்தக்கவரே, நான் உம்மை மனம் நிறைவுறச் செய்வேன், என் குற்றத்தை மன்னிப்பீராக.(21) பேராசையால் ஈர்க்கப்பட்ட இழிந்தவனான நான் அறிவற்ற மூடனாவேன். நீரே என் புகலிடம், நீரே என் பாதுகாவலர், எனக்கு உமது கருணையைக் காட்டுவதே உமக்குத் தகும்” என்றான்.(22) இவ்வாறு துயரில் மூழ்கி, இதுபோல ஒப்பாரி செய்ய்யும் அவனைக் {மன்னன் திருதராஷ்டிரனைக்} கண்ட பகர், அவனிடம் இரக்கம் கொண்டு, அவனது நாட்டை விடுவித்தார்.(23) அந்த முனிவர், தன் கோப உணர்வை விட்டகன்று, அவனிடம் மனநிறைவு கொண்டார். அவனது நாட்டை விடுவிப்பதற்காக அந்தத் தவசி மீண்டும் நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினார்.(24) அந்நாட்டை (பேரிடரில் இருந்து) விடுவித்து, பல விலங்குகளைக் கொடையாகப் பெற்ற அவர் {முனிவர் பகர்}, இதயம் மகிழ்ந்தவராக மீண்டும் நைமிச வனத்திற்குச் சென்றார்.(24) தயாள மனமும், அற ஆன்மாவும் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனும், உற்சாகமிக்க இதயத்துடன், செழிப்பால் நிறைந்து தன் தலைநகருக்குச் சென்றான்.(26)

அந்தத் தீர்த்தத்தில்தான் பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருஹஸ்பதியும், அசுரர்களின் அழிவுக்காகவும், சொர்க்கவாசிகளின் செழிப்புக்காகவும்,(27) சதையின் உதவியுடன் வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான். இதன்காரணமாக போரில் நலிவடைந்த அசுரர்களை,  வெற்றியின் மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டிருந்த தேவர்கள் அழித்தனர்.(28) பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, குதிரைகள், யானைகள் மற்றும் கோவேறுகழுதைகள் பூட்டப்பட்ட வாகனங்கள், பெரும் மதிப்பிலான தங்கம், அதிகச் செல்வம், அதிகத் தானியம் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் பிராமணர்களுக்குக் கொடுத்த ராமன் {பலராமன்} அடுத்ததாக யாயாதம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(29,30)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அங்கே நகுஷனின் மைந்தனான உயர் ஆன்ம யயாதி நடத்திய வேள்வியில்தான், சரஸ்வதி பாலையும், தெளிந்த நெய்யையும் பெருக்கினாள்.(31) மனிதர்களில் புலியான மன்னன் யயாதி, அங்கே {யாயாதத் தீர்த்தத்தில்} வேள்வி செய்து, உற்சாகமாகச் சொர்க்கத்திற்குச் சென்று, பல அருள் உலகங்களை அடைந்தான்.(32) அந்தச் சரஸ்வதி ஆறானவள், (அந்த வேள்விக்கு அழைக்கப்பட்ட) பிராணர்களின் பெரும் ஆன்மப் பெருந்தன்மையையும், அவளிடம் அவர்கள் கொண்ட மாற்றமுடியாத அர்ப்பணிப்பையும் கண்டு, அவர்களின் இதயங்கள் விரும்பிய அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்தாள்.(33) அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் எங்கிருந்தனரோ, அங்கேயே அவர்களுக்கு வீடுகளையும், படுக்கைகளையும், ஆறு வெவ்வேறு வகைச் சுவைகளைக் கொண்ட உணவையும், பல்வேறு பிற வகைப் பொருட்களையும் அந்த ஆறுகளில் முதன்மையானவள் கொடுத்தாள்.(34) அந்தப் பிராமணர்களோ, அவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்புமிக்கப் பரிசுகள் அனைத்தையும் மன்னர் கொடுத்ததாகக் கருதிக் கொண்டனர். அவர்கள் அந்த ஏகாதிபதியை உற்சாகமாகப் புகழ்ந்து, அவனுக்குத் தங்கள் மங்கலமான ஆசிகளை வழங்கினர்.(35) தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் அனைவரும் அவ்வேள்வியில் இருந்த அபரிமிதமான பொருட்களால் மனநிறைவை அடைந்தனர். மனிதர்களைப் பொருத்தவரையில் அந்த அபரிமிதமான பொருட்களைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(36)

பனைமரக் கொடி கொண்டவனான அந்தச் சிறப்புமிக்கப் பலதேவன், வென்று, கட்டுப்படுத்தித் தூய்மையடைந்த ஆன்மாவுடனும், பேரறத்தின் தனித்தன்மையுடனும், மதிப்புமிக்கப் பொருட்களைத் தானமளித்து, அடுத்ததாக, வேகமான ஊற்றைக் கொண்ட வசிஷ்டாபவாகம் என்ற தீர்த்தத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(37)

வசிஷ்டாபவாஹத் தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 42-விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையிலான பகை; வசிஷ்டரைக் கொல்ல நினைத்த விஷ்வாமித்திரர் சரஸ்வதியை ஏவியது; விஷ்வாமித்திரரை வஞ்சித்த சரஸ்வதி; சரஸ்வதி பெற்ற சாபம்; வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின் பெயர்க்காரணம்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “வசிஷ்டாபவாகத்தின் (என்ற பெயரில் அறியப்பட்ட தீர்த்தத்தின்) ஓட்டம் ஏன் பயங்கரமான வேகம் கொண்டதானது? என்ன காரணத்தினால் அந்த முதன்மையான ஆறு வசிஷ்டரைக் கொண்டு {இழுத்துச்} சென்றது?(1) ஓ! தலைவரே {வைசம்பாயனரே}, வசிஷ்டருக்கும், விஷ்வாமித்திரருக்கும் இடையிலான சச்சரவின் காரணம் என்ன? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, என்னால் கேட்கப்படும் இவை அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வீராக. நீர் சொல்வதைக் கேட்டு என்னால் தணிவை அடையமுடியவில்லை” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, கடுந்தவம் குறித்த போட்டாபோட்டியால் விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில் பெரும் பகை எழுந்தது. வசிஷ்டரின் உயர்ந்த வசிப்பிடம் சரஸ்வதியின் கிழக்குக்கரையில் ஸ்தாணு என்றழைக்கப்பட்ட தீர்த்தத்தில் இருந்தது. எதிர்க்கரையில் நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரின் ஆசிரமம் இருந்தது.(4) ஓ! ஏகாதிபதி, அந்தத் தீர்த்தத்தில் ஸ்தாணு (மஹாதேவன்) கடுந்தவம் பயின்றான். தவசிகள் இன்னும் அந்தக் கடுஞ்சாதனைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.(5) அங்கே ஒரு வேள்வியைச் செய்த ஸ்தாணு, அங்கே அந்தத் தீர்த்தத்தை நிறுவி அந்தச் சரஸ்வதி ஆற்றை வழிபட்டான். எனவே, ஓ! தலைவா, அது ஸ்தாணு தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(6) பழங்காலத்தில் தேவர்கள், ஓ! மன்னா, தேவர்களின் எதிரிகளைக் கொல்பவனான ஸ்கந்தனைத் தங்கள் படைத்தலைவனாக அத்தீர்த்தத்தில் வைத்தே நிறுவினர்.(7)

சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில்தான் பெரும் முனிவரான விஷ்வாமித்திரர், தன் கடுந்தவத்தின் துணையால் வசிஷ்டரைக் கொண்டு {இழுத்து} வந்தார். அந்த வரலாற்றைக் கேட்பாயாக.(8) தவசிகளான விஷ்வாமித்திரர் மற்றும் வசிஷ்டர் ஆகியோர் இருவரும், தங்கள் தவங்களின் மேன்மை குறித்த மெய்யுறுதியுடன் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் எதிர்த்தனர்.(9] பெருமுனிவரான விஷ்வாமித்திரர், வசிஷ்டரின் சக்தியைக் கண்டு (பொறாமையால்) எரிந்து, அந்தக் காரியம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(10) அவர் தன் கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்தாலும், “இந்தச் சரஸ்வதி, தன் ஓட்டத்தின் சக்தியால் தவசிகளில் முதன்மையான வசிஷ்டரை என் முன் வேகமாகக் கொண்டு {இழுத்து} வர வேண்டும். இங்கே கொண்டுவரப்படும் அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரை {வசிஷ்டரை} நான் கொல்வேன் என்பதில் ஐயமில்லை”, என்ற இந்தத் தீர்மானத்தை எட்டினார்.(11,12)

இதைத் தீர்மானித்துக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கப் பெருமுனிவர் விஷ்வாமித்திரர், கண்கள் சிவந்த கோபத்துடன், அந்த ஆறுகளில் முதன்மையானவளை {சரஸ்வதியை} நினைத்தார்.(13) இவ்வாறு அந்தத் தவசியால் நினைக்கப்பட்டதும் அவள் {சரஸ்வதி} மிகவும் கலக்கமடைந்தாள். எனினும், அந்த அழகான மங்கை {சரஸ்வதி}, பெரும் சக்தியும், பெரும் கோபமும் கொண்ட அம்முனிவரிடம் {விஷ்வாமித்திரரிடம்} சென்றாள்.(14) அந்தச் சரஸ்வதி, நிறம் மங்கியவளாக, கூப்பிக் கரங்களுடன் உடல் நடுங்கிக் கொண்டே அந்த முதன்மையான தவசியின் முன் தோன்றினாள்.(15) உண்மையில், துயரால் அதிகம் பீடிக்கப்பட்டிருந்த அந்த மங்கை, வலிமைமிக்கத் தன் தலைவனை இழந்துவிட்ட ஒரு பெண்ணைப் போல இருந்தாள். அவள் அந்தச் சிறந்த முனிவரிடம் {விஸ்வாமித்திரரிடம்}, “நான் உமக்குச் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டாள்.(16) சினம் நிறைந்த அந்தத் தவசி அவளிடம், “வசிஷ்டரை நான் கொல்லும் வகையில், தாமதமில்லாமல் அவரை இங்கே கொண்டு வருவாயாக” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த {சரஸ்வதி} ஆறானவள் மிகவும் கலக்கமடைந்தாள்.(17) தாமரைக் கண்களைக் கொண்ட அந்த மங்கை, காற்றால் அசைக்கப்பட்ட கொடியைப் போலக் கூப்பிய கரங்களுடன், அச்சத்தால் மிகவும் நடுங்கினாள்.(18) அந்தப் பெரும் ஆற்றின் அந்த அவலநிலையைக் கண்ட அந்தத் தவசி {விஷ்வாமித்திரர்}, அவளிடம் {சரஸ்வதியிடம்}, “எந்த ஐயுணர்வுமின்றி வசிஷ்டரை என் முன் கொண்டு வருவாயாக” என்றார்.(19)

அவரது இந்த வார்த்தைகளைக் கேட்டவளும், அவர் {விஷ்வாமித்திரர்} செய்ய நினைக்கும் தீமையை அறிந்தவளுமான அவள் {சரஸ்வதி}, பூமியில் ஒப்பற்றவரான வசிஷ்டரின் ஆற்றலை அறிந்து,(20) அவரிடம் சென்று, நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரர் தன்னிடம் சொன்னதைத் தெரிவித்தாள்.(21) அவள், அந்த இருவரின் சாபம் குறித்தும் அஞ்சி மீண்டும் மீண்டும் நடுங்கினாள். உண்மையில், (அவர்களில் எவரேனும் ஒருவர் தனக்கு அளிக்கப்போகும்) துயர் நிறைந்த சாபத்திலேயே அவளது இதயம் நிலைத்திருந்தது. அவள் இருவரிடமும் கொண்ட அச்சத்துடன் நின்று கொண்டிருந்தாள்.(22) அற ஆன்மா கொண்டவரும், மனிதர்களில் முதன்மையானவருமான அந்த வசிஷ்டர், நிறம் மங்கியவளாகவும், கவலையில் மூழ்கியவளாகவும் அவளைக் கண்டு, அவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(23) வசிஷ்டர் {சரஸ்வதியிடம்}, “ஓ! நதிகளில் முதன்மையானவளே, உன்னைக் காத்துக் கொள்வாயாக. ஓ! வேகமாக ஓடையைக் கொண்டவளே, என்னைக் கொண்டு {இழுத்து} செல்வாயாக, இல்லையெனில் விஷ்வாமித்திரர் உன்னைச் சபிப்பார். எந்த ஐயமும் கொள்ளாதே” என்றார்.(24)

இரக்க குணம் கொண்ட அம்முனிவரின் {வசிஷ்டரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த ஆறானவள் {சரஸ்வதி}, ஓ! கௌரவ்யா {ஜனமேஜயா}, தான் பின்பற்ற வேண்டிய சிறந்த வழியைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள்.(25) அவள் மனத்தில், “வசிஷ்டர் என்னிடம் பெருங்கருணையை வெளிப்படுத்துகிறார். அவருக்குத் தொண்டாற்றுவதே எனக்கு முறையானது” என்ற எண்ணமே எழுந்தது.(26) அந்தச் சரஸ்வதி, தன் கரையில் மௌனமாக (மந்திரங்களை) ஓடிக்கொண்டிருந்த அந்தச் சிறந்த முனிவரை {வசிஷ்டரைக்} கண்டும், ஹோமத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குசிகரின் மகனை (விஷ்வாமித்திரரைக்) கண்டும்,(27) “இதுவே எனக்கான வாய்ப்பு {தக்க சமயம் இதுவே}” என்று நினைத்தாள். அப்போது அந்த ஆறுகளில் முதன்மையானவள் {சரஸ்வதி} தன் கரைகளில் ஒன்றைத் தன் {வேகமான} ஓட்டத்தால் இடித்துத் தள்ளினாள்.(28) அப்படி அந்தக் கரையை இடித்தபடியே அவள் வசிஷ்டரையும் கொண்டு {இழுத்துச்} சென்றாள்.

அப்படிக் கொண்டு செல்லப்படும்போது, ஓ! மன்னா, வசிஷ்டர் அந்த ஆற்றை இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார்:(29) “ஓ! சரஸ்வதி, அந்தப் பெரும்பாட்டனின் (மானஸத்) தடாகத்தில் நீ உதித்தாய். இந்த மொத்த அண்டமும் உன் சிறந்த நீரால் நிறைந்திருக்கிறது.(30) ஓ! தேவி, ஆகாயத்தில் பாய்ந்து மேகங்களுக்கு உனது நீரைப் புகட்டுகிறாய். நீர்கள் அனைத்தும் நீயே. உன் மூலமாகவே நாங்கள் எங்கள் சிந்தனைத் திறன்களைப் பயன்படுத்துகிறோம்.(31) நீயே புஷ்டி, தியுதி {காந்தி}, கீர்த்தி {புகழ்}, சித்தி {வெற்றி}, உமை {பார்வதி}[1] ஆவாய். நீயே பேச்சும், நீயே சுவாஹாவும்[2] ஆவாய். மொத்த அண்டமும் உன்னை நம்பியே இருக்கிறது. அனைத்து உயிரினங்களிலும் நான்கு வடிவங்களில் வசிப்பவள் நீயே” {என்று துதித்தார்}.(32)

[1] “வளர்ச்சி, காந்தி, புகழ் மற்றும் வெற்றியின் பொருத்தமான வடிவங்கள் இவை. இறுதியில் உள்ள உமை என்பது சிவனின் மனைவியான பரமேஸ்வரியைக் குறிப்பதாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] “பெரும் செயல்திறனைக் கொண்ட ஒரு மந்திரமாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவ்வாறு அந்தப் பெருமுனிவரால் புகழப்பட்ட அந்தச் சரஸ்வதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பிராமணரை {வசிஷ்டரை} வேகமாக விஷ்வாமித்திரரின் ஆசிரமத்தை நோக்கி கொண்டு {இழுத்துச்} சென்று, முன்னவர் {வசிஷ்டர்} வந்திருப்பதைக் குறித்துப் பின்னவரிடம் {விஷ்வாமித்திரரிடம்} மீண்டும் மீண்டும் சொன்னாள்.(33) இவ்வாறு சரஸ்வதியால் தன் முன் கொண்டு வரப்பட்ட வசிஷ்டரைக் கண்ட விஷ்மாத்திரர், சினத்தால் நிறைந்து, அந்தப் பிராமணரைக் {வசிஷ்டரைக்} கொல்வதற்கு ஓர் ஆயுதத்தைத் தேடத் தொடங்கினார்.(34) அவர் கோபத்தால் நிறைந்திருப்பதைக் கண்ட அந்த ஆறானவள், ஒரு பிராமணரின் கொலையின் மீது (கொலை செய்வதைக் காண்பதிலும், அதற்கு உதவுவதிலும்) கொண்ட அச்சத்தால், மீண்டும் வசிஷ்டரைத் தனது கிழக்குக் கரைக்கே வேகமாகக் கொண்டு சென்றாள். இவ்வாறு தன் செயலால் காதியின் மகனை {விஷ்வாமித்திரரை} வஞ்சித்தாலும், அவள், இருவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தவளானாள்.(35)

பழியுணர்ச்சி கொண்ட விஷ்வாமித்திரர், முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர் {மீண்டும்} கொண்டு செல்லப்பட்டதைக் கண்டு, கோபத்தால் நிறைந்து சரஸ்வதியிடம்,(36) “ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, நீ என்னை வஞ்சித்துச் சென்றதால், உன் ஓடையானது, ராட்சசர்களுக்கு ஏற்புடைய குருதியாக மாறிப் போகட்டும்” என்றார்.(37) பிறகு, நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் சபிக்கப்பட்ட சரஸ்வதி, இரத்தம் கலந்த நீரைச் சுமந்தபடியே ஒரு வருடம் முழுவதும் பாய்ந்து கொண்டிருந்தாள்.(38) தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர், அந்த அவலநிலைக்குக் குறைக்கப்பட்ட சரஸ்வதியைக் கண்டு, பெருங்கவலையில் நிறைந்தனர்.(39) இதன் காரணமாகவே, ஓ! மன்னா, அந்தத் தீர்த்தம், வசிஷ்டாபவாஹம் என்று பூமியில் அழைக்கப்பட்டது. எனினும், அந்த முதன்மையான நதியானவள், மீண்டும் தன் முறையான நிலையை அடைந்தாள்” {என்றார் வைசம்பாயனர்}.(40)

நமுசியின் தலையைக் கொய்த இந்திரன்! – சல்லிய பர்வம் பகுதி – 43-தவத்தினால் சரஸ்வதியைத் தூய்மைப்படுத்திய தவசிகள்; அங்கே வேள்வி செய்து பிரம்மஹத்தியைப் போக்கிக் கொண்ட இந்திரன்; அங்கிருந்து சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; பெரும் அரச மரத்தைக் கொண்டிருந்த சோம தீர்த்தம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் கோபத்தில் சபிக்கப்பட்ட சரஸ்வதி, அந்த மங்கலமான சிறந்த தீர்த்தத்தின் {வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின்}, நீரோட்டத்தில் இரத்தத்தைச் சுமந்தபடி பாய்ந்தாள்.(1) பிறகு, ஓ! மன்னா!, ஓ பாரதா {ஜனமேஜயா}, ராட்சசர்கள் பலர் அங்கே வந்து, அங்கே பாய்ந்து கொண்டிருந்த குருதியைக் குடித்து, அங்கேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(2) அவர்கள், அந்தக் குருதியால் நிறைவடைந்து, உற்சாகத்தால் நிறைந்து, எந்த வகைக் கவலையுமில்லாமல், (புண்ணியத்தால்) சொர்க்கத்தை அடைந்த மனிதர்களைப் போல, அங்கே ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர்.(3) சில காலம் கழிந்ததும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட சில முனிவர்கள், சரஸ்வதியின் தீர்த்தங்களுக்குப் பயணிக்கும்போது அங்கேயும் {அந்த வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்திற்கும்} வந்தனர்.(4) அந்த முனிவர்களில் முதன்மையானவர்கள், அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி, பெரும் மகிழ்ச்சியை அடைந்து, மேலும் புண்ணியத்தை அடைய விரும்பினர்.(5)

இறுதியாக, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கல்விமான்கள் இரத்த ஓடையாகப் பாய்ந்து கொண்டிருந்த சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்திற்கும் {வசிஷ்டாபவாஹத்திற்கும்} வந்தனர். உயர்ந்த அருளைக் கொண்ட அவர்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அச்சந்தரும் அந்தத் தீர்த்தத்திற்கு வந்து சேர்ந்து,(6) இரத்தத்துடன் கலந்திருக்கும் சரஸ்வதியின் நீரையும், அதை எண்ணற்ற ராட்சசர்கள் குடித்துக் கொண்டிருப்பதையும் கண்டனர்.(7) ஓ! மன்னா, கடும் நோன்புகளைக் கொண்ட அந்தத் தவசிகள் அந்த ராட்சசர்களைக் கண்டு, சரஸ்வதியை அந்த அவல நிலையில் இருந்து மீட்கப் பெரும் முயற்சிகளைச் செய்தனர்.(8) உயர்ந்த நோன்புகளைக் கொண்ட அந்த அருளாளர்கள், அங்கே வந்து, அந்த நதிகளில் முதன்மையானவளை {சரஸ்வதியை} இருப்புக்கு அழைத்து, அவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(9) “ஓ! மங்கலமான மங்கையே {கல்யாணி}, உன்னில் இருக்கும் இந்தத் தடாகம் ஏன் இவ்வாறு பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வாயாக. அதைக் கேட்டு, (அத்தடாகத்தை முறையான நிலைக்கு மீட்க) நாங்கள் முயற்சி செய்வோம்” {என்றனர்}.(10)

இவ்வாறு கேட்கப்பட்ட சரஸ்வதி, பேசும்போது நடுங்கிக் கொண்டே, நேர்ந்த அனைத்தையும் அவர்களிடம் சொன்னாள். துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அவளைக் கண்ட அந்தத் தவசிகள், அவளிடம்,(11) “நாங்கள் காரணத்தைக் கேட்டுவிட்டோம். ஓ! பாவமற்ற மங்கையே, நீ பெற்ற சாபத்தைக் குறித்தும் கேட்டோம். நாங்கள் அனைவரும் இனி முயற்சி செய்வோம்” என்றனர்.(12) அந்த ஆறுகளில் முதன்மையானவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அவர்கள், அவர்களுக்குள் கலந்தாலோசித்தபடி, “நாம் அனைவரும் சேர்ந்து சரஸ்வதியை அவளது சாபத்திலிருந்து விடுவிப்போமாக” என்றனர்.(13) அந்தப் பிராமணர்கள் அனைவரும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அண்டத்தின் தலைவனும், உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனுமான மஹாதேவனை வழிபட்டு, தவங்கள், நோன்புகள், உண்ணா நோன்புகள், பல்வேறு பொருட்களைத் தவிர்த்தல், வலிநிறைந்த நோன்புகள் ஆகியவற்றை நோற்று, ஆறுகளில் முதன்மையான அந்தத் தெய்வீக சரஸ்வதியை {அந்த அவலநிலையில் இருந்து} விடுவித்தனர்.(14-16)

அம்முனிவர்களால் சரஸ்வதியின் நீர் தூய்மையாக்கப்பட்டதைக் கண்ட (அங்கே வசித்து வந்த) ராட்சசர்கள், பசியால் பீடிக்கப்பட்டு, அந்த முனிவர்களின் பாதுகாப்பையே நாடினர்.(17) பசியால் பீடிக்கப்பட்ட அந்த ராட்சசர்கள், கூப்பிக் கரங்களுடன், கருணை நிரம்பிய அந்தத் தவசிகளிடம் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்:(18) “நாங்கள் அனைவரும் பசித்திருக்கிறோம். நித்திய அறத்தில் இருந்து நாங்கள் விலகியிருக்கிறோம். பாவம் நிறைந்த எங்களின் இந்நடத்தை, நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டது கிடையாது.(19) உங்கள் அருள் இல்லாமையாலும், எங்கள் சொந்த தீய செயல்களாலும், எங்கள் பெண்களின் பாலியல் பாவங்களாலும் எங்கள் குற்றங்கள் {பாவங்கள்} அதிகரித்து, இவ்வாறு பிரம்ம ராட்சசர்களானோம். வைசியர்கள், சூத்திரர்கள், க்ஷத்திரியர்கள் ஆகியோரில் சிலரும், பிராமணர்களை வெறுப்பவர்களும், அவர்களுக்கு {பிராமணர்களுக்குக்} காயமேற்படுத்துபவர்களும் ராட்சசர்களாகின்றனர்.(20,21) பிராமணர்களில் சிறந்தவர்களே, எங்கள் துயர்துடைப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வீராக. நீங்கள் அனைத்து உலகங்களின் துயரையும் துடைக்கத் தகுந்தவர்களாவீர்கள்” என்றனர்.(23) அவர்களது இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தவசிகள், அந்தப் பெரும் நதியைப் புகழ்ந்தனர்.

அந்த ராட்சசர்களை மீட்பதற்காக, ஆழமான சிந்தனையில் ஆழ்ந்த அந்தத் தவசிகள்,(24) “தும்மலில் எச்சில் தெறித்த உணவு, புழு பூச்சிகளைக் கொண்டது, பிறர் உண்ட எச்சங்களின் கலவை, முடி {மயிர்} கலந்தது, அழுகியது {கெட்டுப் போனது}, கண்ணீர் கலந்தது ஆகிய உணவுகள் இந்த ராட்சசர்களின் பங்காகட்டும்.(25) இவையனைத்தையும் அறிந்த ஒரு கல்விமான், இவ்வகை உணவுகளைக் கவனமாகத் தவிர்ப்பானாக. அத்தகு உணவை உண்பவன் ராட்சசர்களின் உணவை உண்டதாகக் கருதப்படுவான்” என்றனர்.(26) அந்தத் தீர்த்தத்தைத் தூய்மைப்படுத்திய அந்தத் தவசிகள், அந்த ராட்சசர்களின் துயர் துடைப்புக்காக அந்த ஆற்றிடம் இவ்வாறு வேண்டினர்.(27) அந்தப் பெரும் முனிவர்களின் நோக்கத்தை அறிந்து கொண்ட அந்த ஆறுகளில் முதன்மையானவள் {சரஸ்வதியானவள்}, தன் உடலை, அருணை என்றழைக்கப்படும் புதிய வடிவில் ஏற்றுக் கொண்டாள்.(28) (சரஸ்வதியின் கிளையான) அந்தப் புதிய ஆற்றில் நீராடிய ராட்சசர்கள், தங்கள் உடல்களை விட்டுச் சொர்க்கத்தை அடைந்தனர்.(29) நூறு வேள்விகளைச் செய்தவனான தேவர்களின் தலைவன் (இந்திரன்), இவை யாவையும் உறுதிசெய்து கொண்டு, அந்த முதன்மையான தீர்த்தத்தில் {அருணசங்கத் தீர்த்தத்தில்} நீராடி, மிகப் பயங்கரமான பாவத்தில் இருந்து தூய்மையடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(30)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “என்ன காரணத்தால் இந்திரன் பிராமணரைக் கொன்ற {பிரம்மஹத்தி} பாவத்தால் களங்கமடைந்தான்? எவ்வாறு அவன் {இந்திரன்} அந்தத் தீர்த்தத்தில் நீராடி தூய்மையடைந்தான்?” என்று கேட்டான்.(31)

வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, அந்த வரலாற்றைக் கேட்பாயாக. அந்த நிகழ்வுகளை, அவை நிகழ்ந்தவாறே கேட்பாயாக. பழங்காலத்தில் வாசவன் {இந்திரன்}, நமுசியிடம் தான் செய்து கொண்ட உடன்படிக்கையை எவ்வாறு உடைத்துக் கொண்டான் என்பதைக் கேட்பாயாக.(32) (அசுரன்) நமுசி, வாசவனின் மீது கொண்ட அச்சத்தால், சூரியனின் ஒரு கதிருக்குள் நுழைந்து {ஒளிந்து} கொண்டான். பிறகு இந்திரன் {அந்தப் போர் நடந்து கொண்டிருதபோதே} நமுசியோடு நட்பு கொண்டு, ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு,(33) “ஓ! அசுரர்களில் முதன்மையானவனே, ஓ! நண்பா, ஈரமடைந்த, அல்லது உலர்ந்த எப்பொருளினாலும் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். இரவிலோ, பகலிலோ நான் உன்னைக் கொல்ல மாட்டேன். இதையே உண்மை {சத்தியம்} என உறுதிகூறுகிறேன்” என்று சொன்னான்.(34) இந்த உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட தலைவன் இந்திரன், {போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது} ஒரு நாள் மூடுபனியைக் கண்டான். அப்போது {பகலும் இரவுமற்ற அந்தச் சந்திப் பொழுதில்} அவன் நீரின் {கடலின்} நுரையை (தனது ஆயுதமாகக்) கொண்டு நமுசியின் தலையைக் கொய்தான்.(35)

வெட்டப்பட்ட அந்த நமுசியின் தலையானது, இந்திரனைப் பின்தொடர்ந்து சென்று, அவனருகில் இருந்து, “ஓ! நண்பனைக் கொன்றவனே, ஓ! இழிந்தவனே” என்ற இந்த வார்த்தைகளைச் சொன்னது.(36) அந்தத் தலையால் இடைவிடாமல் {இவ்வாறு} தூண்டப்பட்ட இந்திரன், பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, என்ன நடந்தது என்பதைத் துயருடன் சொன்னான்.(37) அண்டத்தின் அந்த உயர்ந்த தலைவன் {பிரம்மன்}, அவனிடம் {இந்திரனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, ஒரு வேள்வியைச் செய்து, முறையான சடங்குகளுடன் அருணையில் {அருணசங்கமத் தீர்த்தத்தில்} நீராடினால், அந்தத் தீர்த்தம் பாவம் குறித்த அச்சத்தில் இருந்து உன்னைக் காக்கும்.(38) ஓ! சக்ரா {இந்திரா}, முனிவர்களால் அந்த ஆற்றின் நீர் புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்பொரு சமயம், அவ்விடத்தில் அந்த ஆறு மறைந்தே இருந்தது.(39) தெய்வீகமான சரஸ்வதி, அருணையிடம் சென்று, அதில் தனது நீரைப் பாயவிட்டாள். சரஸ்வதி மற்றும் அருணையின் இந்தச் சங்கமம் {அருண சங்கமம்}, மிகப் புனிதமானதாகும்.(40) ஓ! தேவர்களின் தலைவா, அங்கு ஒரு வேள்வியைச் செய்வாயாக. அபரிமிதமான கொடைகளை அளிப்பாயாக. அங்கே உன் தூய்மைச் சடங்கைச் செய்து, உனது பாவத்தில் இருந்து விடுபடுவாயாக” என்றான் {பிரம்மன்}.(41)

இவ்வாறு சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, ஓ! ஜனமேஜயா, பிரம்மனின் அந்த வார்த்தைகளின்பேரில் சரஸ்வதியின் அந்த வசிப்பிடத்தில் பல்வேறு வேள்விகளைச் செய்தான்.(42) பலனைக் கொன்றவனான அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, கொடைகள் பலவற்றைக் கொடுத்து, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, குறிப்பிட்ட வேள்விகளை முறையாகச் செய்து, அருணையில் மூழ்கினான்.(43) அப்போது அவன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட்டவனாக வெளியே எழுந்து வந்தான்[1]. பிறகு அந்தச் சொர்க்கத்தின் தலைவன் {இந்திரன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றான்.(44) ஓ! பாரதா, அந்த நமுசியின் தலையும் அவ்வோடையில் {அருணையில்} விழுந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்த அசுரனும் {நமுசியும்}, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற வல்ல நித்திய பகுதிகள் பலவற்றை அடைந்தான்.”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பல வகையிலான தானங்களை அளித்து, பெரும் புண்ணியத்தை அடைந்தான். அறச்செயல்களையே செய்யும் அவன்{பலராமன்}, அடுத்ததாகச் சோமனின் பெரும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(46) ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில் அங்கேதான் சோமன் {சந்திரன்}, ராஜசூய வேள்வியைச் செய்தான். பிராமணர்களில் முதன்மையானவரும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவருமான உயர் ஆன்ம அத்ரியே அந்த மகத்தான வேள்வியின் ஹோத்ரியாக இருந்தார். அவ்வேள்வியின் நிறைவில், (ஒரு தரப்பில் இருந்த) தேவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) தானவர்கள், தைத்தியர்கள் மற்றும் ராட்சசர்களுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நடந்தது. அந்தக் கடும்போரானது, (அசுரன்) தாரகனின் பெயரால் {தாரகம் என்றே} அறியப்பட்டது. அந்தப் போரில் ஸ்கந்தன் {முருகன்} அந்தத் தாரகனைக் கொன்றான்.(47,48) அந்தச் சந்தர்ப்பத்தில் தைத்தியர்களை அழிப்பவனான மஹாசேனன் (என்றும் ழைக்கப்பட்ட ஸ்கந்தன்), தேவர்களின் படைத்தலைமை பொறுப்பை அடைந்தான்[2]. அந்தத் தீர்த்தத்தில்தான் ஒரு பெரும் அஸ்வத {அரச} மரம் இருக்கிறது. குமாரன் என்றும் அழைக்கப்பட்ட கார்த்திகேயன், {சோம தீர்த்தத்தில் உள்ள} அதன் {அந்த அரச மரத்தின்} நிழலில் தான் எப்போதும் வசித்திருக்கிறான்” {என்றார் வைசம்பாயனர்}.(49)

கார்த்திகேயன் பிறப்பு! – சல்லிய பர்வம் பகுதி – 44-சிவனிடம் உண்டாகி அக்னியில் விழுந்த ஸ்கந்தன்; ஸ்கந்தனைக் கங்கையில் விட்ட அக்னி; ஸ்கந்தனை இமயத்தில் விட்ட கங்கை; கார்த்திகைப் பெண்டிர் ஸ்கந்தனுக்கு முலையூட்டியது; சிவனைக் கண்டு அணுகிய ஸ்கந்தன்; பூதகணங்களின் தோற்ற வேறுபாடுகள்; நான்கு வடிவங்களாகத் தன்னைப் பிரித்துக் கொண்ட ஸ்கந்தன்; ஸ்கந்தனுக்கு ஆட்சியுரிமை கோரிய நால்வர்; ஸ்கந்தனைத் தேவர்களின் படைத்தலைவனாக்கிய பிரம்மன்; சமந்தபஞ்சகத்துக்கு வந்த தேவர்கள்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, சரஸ்வதியின் தகுதிகளைக் குறித்து விவரித்தீர். குமாரன் {முருகன்}, ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, (தேவர்களின் மூலம்) {படைத் தலைவனாக} பதவியேற்றுக் கொண்டதை விளக்குவதே உமக்குத் தகும்.(1) நான் என்னுள் பெரிய ஆவலை உணர்கிறேன். எனவே, போற்றுதலுக்குரியவனும், பலமிக்கவனுமான தலைவன் ஸ்கந்தன், (தேவர்களின் படைத்தலைவனாக) பதவியேற்ற காலம், இடம் மற்றும் தன்மை குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அவனைப் பதவியேற்கச் செய்தது யார்? உண்மையான சடங்குகளைச் செய்தது யார்? அந்தத் தேவர்களின் படைத்தலைவன் {முருகன்} எவ்வாறு தைத்தியர்களுக்குப் பேரழிவை உண்டாக்கினான்?” என்று கேட்டான்.(2,3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்த ஆவலை நீ உணர்வது, உனது குருக் குலப் பிறப்புக்குத் தகுந்ததே. ஓ! ஜனமேஜயா, நான் சொல்லப்போகும் வார்த்தைகள் உனக்கு இன்பத்தை உண்டாக்கும்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, நீ கேட்க விரும்புவதால், குமாரனின் பதவியேற்பையும், அந்த உயர்ஆன்மாவின் ஆற்றலையும் நான் சொல்லப் போகிறேன்.(5)

பழங்காலத்தில், மஹேஸ்வரனின் {சிவனின்} உயிர் வித்து வெளியேறி சுடர்மிக்க நெருப்பில் {அக்னியில்} விழுந்தது. அனைத்தையும் எரிப்பவனும், போற்றுதலுக்குரியவனுமான அக்னியால் அந்த அழிக்கப்பட முடியாத வித்தை எரிக்க முடியவில்லை.(6) மறுபுறம், வேள்விக் காணிக்கைகளைச் சுமப்பவனான அவன் {அக்னி}, அந்த வித்தின் விளைவால் பெரும் சக்தியையும், காந்தியையும் பெற்றான். பெருஞ்சக்தி கொண்ட அந்த வித்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(7) பிரம்மனின் ஆணைக்கிணங்க தலைவன் அக்னி, கங்கையை (கங்கை ஆற்றை) அணுகி, சூரியப்பிரகாசத்தைக் கொண்ட அந்தத் தெய்வீக வித்தை அவளுக்குள் வீசினான்.(8) கங்கையாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாததால், அவள், தேவர்களால் வழிபடப்படும் இமயத்தின் அழகிய சாரலில் அதை விட்டாள்.(9) அதன்பேரில், அக்னியின் மகன் {ஸ்கந்தன்}, தன் சக்தியில் அனைத்துலகையும் மூழ்கச் செய்து அங்கேயே வளரத் தொடங்கினான். அதே வேளையில், கார்த்திகைகள் (அறுவர்), கடும் பிரகாசம் கொண்ட அந்தப் பிள்ளையைக் கண்டனர்.(10)

ஒரு மகனை விரும்பியவர்களான அந்தக் கிருத்திகைகள் அறுவரும், அக்னியின் உயர்ஆன்ம மகனான அந்தப் பலமிக்கத் தலைவன் {ஸ்கந்தன்}, நாணற்கொத்தில் கிடப்பதைக் கண்டு, “இவன் என் பிள்ளை, இவன் என் பிள்ளை” என்று உரக்கக் கதறினர்.(11) போற்றுதலுக்குரிய தலைவனான ஸ்கந்தன், அந்த ஆறு தாய்மாரின் மனோநிலையைப் புரிந்து கொண்டு, ஆறு வாய்களால் அவர்கள் அனைவரின் முலைகளையும் பருகினான்.(12) போற்றுதலுக்குரிய அந்தப் பிள்ளை கங்கையாற்றால் இமயத்தின் உச்சியில் விடப்பட்டதால், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, தங்கமாக மாறிய அந்த மலை அழகாகத் தெரிந்தது.(14) வளர்ந்துவரும் அந்தப் பிள்ளையால் மொத்த பூமியும் அழகானது, இதன் காரணமாகவே (அக்காலத்தில் இருந்து) மலைகள் தங்கத்தை உண்டாக்கின.(15)

பெருஞ்சக்தி கொண்ட அந்தப் பிள்ளை கார்த்திகேயன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான். முதலில் அவன் காங்கேயன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அவன் உயர்ந்த தவச் சக்திகளையும் அடைந்தான்.(16) ஓ! ஏகாதிபதி, சுயக்கட்டுப்பாடு, தவம், பெரும் சக்தி ஆகியவற்றுடன் கூடிய அந்தப் பிள்ளை, சோமனைப் போலவே ஏற்புடைய உயர்ந்த தன்மைகளுடன் வளர்ந்தான்.(17) தங்கமயமான சிறந்த நாணற்கொத்தில் பேரழகுடன் கிடந்த அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, கந்தர்வர்களாலும், தவசிகளாலும் போற்றித் துதிக்கப்பட்டான்.(18) தெய்வீக இசையையும், நர்த்தனத்தையும் அறிந்தவர்களும், மிக அழகிய தன்மைகளைக் கொண்டவர்களுமான ஆயிரக்கணக்கான தேவமங்கையர், அவனைப் {ஸ்கந்தனைப்} புகழ்ந்து, அவனுக்கு முன்பாக நர்த்தனம் செய்தனர்.(19) ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளான கங்கை அந்தத் தேவனுக்காகக் காத்திருந்தாள். பூமாதேவியும் பேரழகை ஏற்று, அப்பிள்ளையைத் (தனது மடியில்) தாங்கினாள்.(20) தெய்வீகப் புரோகிதரான பிருஹஸ்பதி, பிறப்புக்குப் பின்பு செய்யப்படும் வழக்கமான சடங்குகளை அந்தப் பிள்ளைக்குச் செய்தார். வேதங்கள் நான்கு வடிவங்களை ஏற்று, கூப்பிய கரங்களுடன் அந்தப் பிள்ளையை அணுகின. நான்கு பிரிவுகளுடன் கூடிய ஆயுத அறிவியலும், ஆயுதங்கள் அனைத்தும், அனைத்து வகைக் கணைகளும் அவனிடம் {ஸ்கந்தனிடம்} வந்தன.(22)

ஒரு நாள், பெருஞ்சக்தி கொண்ட அப்பிள்ளை {ஸ்கந்தன்}, தேவர்களுக்குத் தேவனான அந்த உமையின் தலைவன் {சிவன்}, பூதகணங்களின் கூட்டத்திற்கு மத்தியில், இமயத்தின் மகளுடன் {உமையுடன்} அமர்ந்திருப்பதைக் கண்டான்.(23) மெலிந்த உடல்களைக் கொண்ட அந்தப் பூதகணங்கள், அற்புதத்தன்மைகளைக் கொண்டிருந்தன. அழகற்றவையும், அழகற்ற தன்மைகளைக் கொண்டவையுமான அவை {பூதகணங்கள்}, விகாரமான ஆபரணங்களையும் அடையாளங்களையும் அணிந்திருந்தன.(24) புலிகள், சிங்கங்கள், கரடிகள், பூனைகள் மகரங்கள் ஆகியவற்றின் முகங்களைப் போல அவற்றின் முகங்கள் இருந்தன. வேறு சிலவற்றுக்குத் தேள்கள், யானைகள், ஒட்டகங்கள், ஆந்தைகள் ஆகியவற்றைப் போன்ற முகங்களும் இருந்தன. சில கழுகுகள் மற்றும் நரிகளின் முகங்களையும் கொண்டிருந்தன.(25)

அங்கே இருந்த சிலவற்றின் முகங்கள் நாரைகள், புறாக்கள் மற்றும் ருருக்களை {ஒருவகை மான்களைப்} போலவும் இருந்தன. அவற்றில் பலவற்றுக்கு நாய்கள், முள்ளம்பன்றிகள், உடும்புகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், மாடுகள் ஆகியவற்றைப் போன்ற உடல்களைக் கொண்டிருந்தன. சில மலைகளுக்கு ஒப்பாக இருந்தன, சில கடல்களுக்கு ஒப்பாக இருந்தன, சில உயர்த்தப்பட்ட சக்கரங்களுடனும், கதாயுதங்களைத் தங்கள் ஆயுதமாகக் கொண்டும் நின்றிருந்தன. அவற்றில் சில கரிய மைக் குவியலைப் போலவும், சில வெண்மலையைப் போலவும் தெரிந்தன. ஓ ஏகாதிபதி, ஏழு மைத்ரிகளும் {சப்த மாதர்களும்} அங்கே இருந்தனர்.(26,27) சத்யஸ்கள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள், வசுக்கள், பித்ருக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், சித்தர்கள், தானவர்கள், பறவைகள் ஆகியவையும்,(28) சுயம்புவும், போற்றுதலுக்குரியவனுமான பிரம்மன் தன் மகன்களுடனும், விஷ்ணு, சக்ரன் ஆகியோரும் என அனைவரும் மங்கா மகிமை கொண்ட அந்தப் பிள்ளையினைக் கண்டு அங்கே சென்றனர்.(29) தேவர்களில் முதன்மையானோர் பலர், நாரதரின் தலைமையிலான கந்தர்வர்கள், தெய்வீக முனிவர்கள் பலர், பிருஹஸ்பதியின் தலைமையிலான சித்தர்கள்,(30) முதன்மையானோரான அண்டத்தின் தந்தைமார், தேவர்களுக்கே தேவர்களாகக் கருதப்பட்டோர், யாமர்கள் மற்றும் தாமர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே சென்றனர்.(31)

பெரும் பலமும், பெரும் தவச் சக்தியும் கொண்ட அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, திரிசூல, பினாகைபாணியான அந்தத் தேவர்களின் தலைவனிடம் (மஹாதேவனிடம்) சென்றான்.(32) அந்தப் பிள்ளை வருவதைக் கண்ட சிவனின் மனத்தில், இமயத்தின் மகள் {உமை}, கங்கை, அக்னி ஆகியோர் எண்ணியது போலவே, ’தங்கள் நால்வரில் எவரைக் கௌரவிக்க அந்தப் பிள்ளை, அவனிடமோ, அவளிடமோ வருவான்’ என்ற எண்ணம் உண்டானது. அவர்கள் ஒவ்வொருவரும், “அவன் தன்னிடம்தான் வருவான்” என்று நினைத்தனர்.(33,34) அந்த நால்வரின் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்ட அவன், தன் யோக சக்தியால் ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு வடிவங்களை ஏற்றான்.(35) உண்மையில், போற்றுதலுக்குரிய அந்தப் பலமிக்கத் தலைவன் {ஸ்கந்தன்} ஒரு கணத்தில் அந்த நான்கு வடிவங்களையும் ஏற்றான். அவனுக்குப் பின்னால் நின்ற மூன்று வடிவங்ககளும் சாகன், விசாகன், நைகமேயன் என்ற பெயருடையவையாகும்.(36)

போற்றுதலுக்குரியவனும், பலமிக்கவனுமான அவன் {ஸ்கந்தன்} தன்னையே நான்கு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டு (தன்னை எதிர்பார்த்து அமர்ந்திருந்த அந்த நால்வரை நோக்கிச் சென்றான்). ஸ்கந்தன் என்றழைக்கப்படும் அற்புத தோற்றத்தைக் கொண்டவன், ருத்திரன் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்றான்.(37) விசாகன், இமயத்தின் தெய்வீக மகள் {உமை} இருந்த இடத்திற்குச் சென்றான். கார்த்திகேயனின் வாயு வடிவமான போற்றுதலுக்குரிய சாகன், அக்னியை நோக்கிச் சென்றான். நெருப்பின் காந்தியைக் கொண்ட பிள்ளையான நைகமேயன், கங்கையிடம் சென்றான்.(38) தோற்றத்தில் ஒன்றாகவே தெரிந்த இந்த நான்கு வடிவங்களும் பெரும் காந்தியுடன் கூடியவையாக இருந்தன. அந்த நான்கு வடிவங்களும் அமைதியாக (ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள) அந்த நான்கு தேவதேவிகளிடம் சென்றன. இவையாவும் மிக அற்புதமானவையாகத் தெரிந்தன.(39) மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் இந்த மிக அற்புதமான நிகழ்வைக் கண்ட தேவர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோர் பேரொலியை எழுப்பினர்.(40)

அப்போது ருத்திரன், உமாதேவி, அக்னி மற்றும் கங்கை ஆகியோர் அனைவரும், அண்டத்தின் தலைவனான பெரும்பாட்டனை வணங்கி, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கார்த்திகேயனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(42) “ஓ! தேவர்களின் தலைவா {ருத்திரா}, எங்கள் மகிழ்ச்சிக்காக இந்த இளைஞனுக்கு {ஸ்கந்தனுக்கு}, அவனுக்குத் தகுந்ததும், அவனுக்கு விருப்பமானதுமான ஏதோ ஒரு வகை ஆட்சியுரிமையை வழங்குவதே உமக்குத் தகும்” என்றனர்.(43) போற்றுதலுக்குரியவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அந்த இளைஞனுக்கு {ஸ்கந்தனுக்கு} எதைக் கொடுப்பது என்று தனது மனத்திற்குள் நினைக்கத் தொடங்கினான். அவன் {பிரம்மன்} ஏற்கனவே, உயர் ஆன்மா தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோர் மற்றும், பூதங்கள், யக்ஷர்கள், பறவைகள், பாம்புகள் ஆகியற்றின் ஆட்சிப்பகுதிகளில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் வடிவங்களற்றோருக்கு (தேவர்களுக்கு) வழங்கிவிட்டான். எனவே, (தேவர்களுக்கு அளிக்கப்பட்ட) அந்த ஆட்சிப்பகுதி முழுமைக்கும் அந்த இளைஞனே உரிமையுடையவன் என்று கருதினான்.(45,46)

தேவர்களின் நன்மையில் எப்போதும் மனம் நிறைந்திருப்பவனான அந்தப் பெரும்பாட்டன் ஒரு கணம் சிந்தித்து, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அனைத்து உயிரினங்களின் படைத்தலைவன் என்ற நிலையை அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} அளித்தான்.(47) மேலும் அந்தப் பெரும்பாட்டன், தேவர்கள் மற்றும் வடிவமற்ற பிறர் அனைவருக்கும் தலைவர்களாகக் கருதப்படும் தேவர்கள் அனைவரும் அவனுக்காக {ஸ்கந்தனுக்காகக்} காத்திருக்க வேண்டும் {ஸ்கந்தனுக்குப் பணிசெய்ய வேண்டும்} என்று ஆணையிட்டான்.(49) பிறகு பிரம்மனின் தலைமையிலான தேவர்கள் அந்தப் பிள்ளையைத் {ஸ்கந்தனை} தங்களுடன் அழைத்துக்கொண்டு ஒன்றாக இமயத்திடம் வந்தனர்.(49) அவர்கள் தேர்ந்தெடுத்த இடமானது, புனிதமானவளும், தெய்வீகமானவளும், ஆறுகளில் முதன்மையானவளும், இமயத்தில் இருந்து உதித்து வருபவளும், மூவுலகங்குளாலும் கொண்டாடப்படுபவளுமான சரஸ்வதியின் கரையிலிருக்கும் சமந்தபஞ்சகமாகும்.(50) அங்கே, தேவர்களும், கந்தர்வர்களும், தங்கள் விருப்பங்கள் நிறைவேறியதன் விளைவால் மகிழ்ச்சியான இதயங்களுடன் அனைத்து தகுதியும் கொண்ட அந்தப் புனிதமான சரஸ்வதியின் கரையில் அமர்ந்திருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(51)

தேவசேனாதிபதியானான் கந்தன்! – சல்லிய பர்வம் பகுதி – 45-ஸ்கந்தனை தேவர்களின் படைத்தலைவனாக முடிசூட்டிய பிருஹஸ்பதி, ஸ்கந்தனுக்குத் துணைவர்களைக் கொடுத்த தேவர்கள்; அந்தத் துணைவர்களின் பெயர்கள், தன்மைகள் மற்றும் உடற்கூறுகள்; அவர்கள் பேசிய மொழிகள்; அந்தத் துணைவர்களின் மகிழ்ச்சிக்கூத்து…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிருஹஸ்பதி, பதவியேற்பு விழாவுக்கெனச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேகரித்து, சுடர் மிக்க நெருப்பில் ஆகுதிகளை முறையாக ஊற்றினார்.(1) இமவான் {இமயமலை}, விலைமதிப்புமிக்க ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை ஒன்றைக் கொடுத்தான். சிறந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், மங்கலமானதுமான அந்தச் சிறந்த ஆசனத்தில் கார்த்திகேயன் அமர வைக்கப்பட்டான்.(2) தேவர்கள், அவ்வகை விழாவுக்குத் தேவையான அனைத்து மங்கலப் பொருட்களையும் உரிய சடங்குகள் மற்றும் மந்திரங்களுடன் அங்கே கொண்டு வந்தனர்.(3)

பெருஞ்சக்தி கொண்ட இந்திரன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும், சூரியன், சந்திரமாஸ், தாத்ரி, விதாத்ரி, வாயு, அக்னி,(4) பூஷன், பகன், அர்யமான், அம்சன், விவஸ்வான், பெரும் நுண்ணறிவைக் கொண்ட ருத்திரன், மித்திரன்,(5) (பதினோரு) ருத்திரர்கள், (எட்டு) வசுக்கள், (பனிரெண்டு) ஆதித்தியர்கள், (இரட்டையர்களான) அஸ்வினிகள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள் ஆகிய பல்வேறு தேவர்களும், சாத்யர்கள், பித்ருக்கள்,(6) கந்தர்வர்கள், அப்சரஸ்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள் ஆகியோரும், எண்ணற்ற தெய்வீக முனிவர்களும்,(7) வைகானஸர்கள், வாலகில்யர்கள் ஆகியோரும், பிற முனிகளில் காற்றை மட்டுமே உண்டு வாழ்வோர் மற்றும் சூரியக்கதிர்களை மட்டுமே உண்டு வாழ்வோருமாகிய பிருகு மற்றும் அங்கீரஸின் வழித்தோன்றல்களும், உயர் ஆன்ம யதிகள் பலரும்,(8) வித்யாதர்கள் அனைவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அனைவரும்,(9) பெரும்பாட்டன் {பிரம்மன்}, புலஸ்தியர், பெரும் தவத்தகுதியைக் கொண்ட புலஹர், அங்கிரஸ், கசியபர், அத்ரி, மரீசி, பிருகு, கிரது, ஹரன், பிரசேதஸ், மனு, தக்ஷன் ஆகியோரும்,(10) காலங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவையும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, வடிவமேற்றுக் கொண்ட ஆறுகள் அனைத்தும், நித்திய வேதங்களும்,(11) கடல்கள், தடாகங்கள், பல்வேறு தீர்த்தங்கள், பூமி, வானம், முக்கிய மற்றும் துணைத்திசைகள் ஆகியவையும், மரங்கள் அனைத்தும், ஓ! மன்னா {ஜனமேஜயா},(12) தேவர்களின் தாயான அதிதி, ஹ்ரீ, ஸ்ரீ, சுவாஹா, சரஸ்வதி, உமை, சச்சி, சினீவாலி, அனுமதி, குஹு ஆகியோரும்,(13) புதுநிலவின் நாள் {அமாவாசையின்} வடிவமும், முழு நிலவின் நாள் {பௌர்ணமியின்} வடிவமும், சொர்க்கவாசிகளின் மனைவியரும், இமவான் {இமயமலை}, விந்தியம், பல முகடுகளைக் கொண்ட மேரு ஆகியவையும், தன் தொண்டர்களுடன் கூடிய ஐராவதனும், கலை, காஷ்டை, மாதம், அரைமாதம் {பிறைநாட்கள்}, ருது, இரவு, பகல் என்றழைக்கப்படும் காலத்தின் பிரிவுகளும், ஓ! மன்னா,(15) குதிரைகளின் இளவரசனான உச்சைஸ்ரவம், பாம்புகளின் மன்னனான வாசுகி, அருணன், கருடன் ஆகியோரும், மரங்கள் மற்றும் மூலிகைகளும்,(16) போற்றுதலுக்குரிய தர்மன் ஆகியோர் அனைவரும் ஒன்றாக அங்கே வந்தனர். காலன், யமன், மிருத்யு மற்றும் யமனின் தொண்டர்களும் அங்கே வந்தனர்.(17) பட்டியல் இன்னும் பெருகும் என்ற அச்சத்தால், அங்கே வந்த இன்னும் பல்வேறு தேவர்களைக் குறித்து நான் இங்கே சொல்லவில்லை. படைத்தலைவனாகக் கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொள்ளும் அவ்விழாவிற்கு இவர்கள் அனைவரும் வந்தனர்.(18)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, சொர்க்கவாசிகள் அனைவரும், அவ்விழாவுக்குத் தேவையான மங்கலப் பொருட்கள் அனைத்தையும் அங்கே கொண்டு வந்தனர்.(19) மகிழ்ச்சியால் நிறைந்த சொர்க்கவாசிகள், அக்காரியத்திற்குத் தேவையான புனிதமான பொருட்களுடன் கூடிய தங்கக் குடங்களில், சரஸ்வதியின் சிறந்த, புனிதமான நீரை, அசுரர்களுக்குப் பயங்கரனான அந்த உயர்ஆன்ம இளைஞனின் {ஸ்கந்தனின்} தலையில் ஊற்றி, அவனைத் தேவர்களின் படைத்தலைவனாக்கினர்.(20,21) உலங்கங்களின் பெரும்பாட்டனான பிரம்மன், பெரும் சக்தி கொண்டவரான கசியபர், இங்கே (குறிப்பிடப்பட்ட மற்றும்) குறிப்பிடப்படாத வேறு சிலர் ஆகியோர் அனைவரும், நீர்நிலைகளின் தலைவனாக வருணனை அமர்த்துவதற்காக, அவனது தலையில் நீரை ஊற்றியதுபோலவே ஸ்கந்தனின் தலையிலும் நீரை ஊற்றினர்.(22) அப்போது இதயம் நிறைந்தவனான தலைவன் பிரம்மன், பெரும் வலிமையைக் கொண்டவர்களும், காற்றின் வேகத்துடன் கூடியவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், நினைத்தமாத்திரத்தில் பெருகும் சக்தியைக் கொடையாகக் கொண்டவர்களுமான நான்கு துணைவர்களை ஸ்கந்தனுக்கு அளித்தான்.(23) அவர்கள் நந்திசேனன், லோஹிதாக்ஷன், கண்டாகர்ணன், குமுதமாலி என்ற பெயர்களைக் கொண்டவர்களாவர்.(24)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தலைவன் ஸ்தாணு, நூறு மாயைகளை உண்டாக்கவல்லவனும், பெரும் வேகம் கொண்டவனும், பெருகக்கூடியவையான பெரும் வலிமையும், சக்தியும் கொண்டவனுமான ஒரு துணைவனை[1] ஸ்கந்தனுக்குக் கொடுத்தான். அவன், அசுரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துபவனாக இருந்தான்.(25) தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான பெரும்போரில், ஸ்தாணுவால் கொடுக்கப்பட்ட இந்தத் துணைவன், கோபத்தால் நிறைந்து, கடுஞ்செயல்களைப் புரிபவர்களான பதினான்கு லட்சம் {14,00,000} தைத்தியர்களைத் தன் வெறுங்கரத்தினாலேயே கொன்றான்.(26) அதன்பிறகு தேவர்கள், வெல்லப்பட முடியாததும், தெய்வீகத் துருப்புகள் நிறைந்ததும், தேவர்களின் எதிரிகளை அழிக்கவல்லதும், விஷ்ணுவைப் போன்ற வடிவங்களைக் கொண்டதுமான தேவர்களின் படையை ஸ்கந்தனிடம் ஒப்படைத்தனர்.(27) அப்போது, வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களும், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், முனிவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர் அனைவரும், “(ஸ்கந்தனுக்கு} வெற்றி” என்று கூச்சலிட்டனர்.(28)

யமன், பெரும் சக்தி, பெரும் காந்தி ஆகியவற்றைக் கொண்டவர்களும், காலனுக்கே ஒப்பானவர்களுமான உன்மாதன் மற்றும் பிரமாதன் ஆகிய இருவரையும் அவனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(29) பெரும் ஆற்றலைக் கொண்டவனான சூரியன், தன் தொண்டர்களான சுப்ராஜன் மற்றும் பாஸ்வரன் என்ற பெயர்களைக் கொண்ட இருவரை, நிறைந்த இதயத்துடன் கார்த்திகேயனுக்குக் கொடுத்தான்.(30) சோமன் {சந்திரன்}, கைலாச மலைச் சிகரங்களைப் போலத் தெரிந்தவர்களும், எப்போதும் வெண்மாலைகளையும், வெண்களிம்புகளையும் {சந்தனத்தையும்} பயன்படுத்துபவர்களான மணி மற்றும் சுமணி ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாக அளித்தான்.(31) அக்னி, பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவர்களும், ஜ்வாலாஜிஹ்வன், ஜோதி {ஜ்யோதிஸ்} என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான வீரத் துணைவர்கள் இருவரை அவனுக்கு {ஸ்கந்தனுக்குக்} கொடுத்தான்.(32) அம்சன், பயங்கரப் பலத்தைக் கொண்டவர்களான பரிகன், வடன், பீமன் ஆகியோரையும், கடுஞ்சீற்றமும், பெரும் சக்தியும் கொண்டவர்களான தஹதி, தஹனன் ஆகிய இருவரையும் சேர்த்து, அந்த ஐவரையும் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான ஸ்கந்தனுக்குத் துணைவராக கொடுத்தான்.(33) பகைவீரர்களைக் கொல்பவனான வாசவன் {இந்திரன்}, முறையே வஜ்ரத்தையும், கதாயுதத்தையும் ஆயுதங்களாகக் கொண்டவர்களான, உத்கிரோசன் மற்றும் பஞ்சகன் {ஸ்தகரன்} ஆகியோர் இருவரையும் அக்னியின் மகனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(34) சிறப்புமிக்க விஷ்ணு, பெரும் வலிமையைக் கொண்டவர்களான சக்ரன், விக்ரமன், சங்கிரமன் என்ற மூன்று துணைவர்களை ஸ்கந்தனுக்குக் கொடுத்தான்.(35)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அஸ்வினிகளோ, அறிவியல்கள் அனைத்திலும் திறம்பெற்றவர்களான வர்த்தனன் மற்றும் நந்தனன் ஆகிய இருவரையும் ஸ்கந்தனுக்குத் துணைவர்களாக இதய நிறைவுடன் கொடுத்தனர்.(36) சிறப்புமிக்கத் தாத்ரியோ {பிரம்மனோ}, குந்தன், குசுமன், குமுதன், டம்பரன், ஆம்பரன் ஆகிய ஐவரையும் ஸ்கந்தனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(37) தாஷ்டிரி {விஸ்வகர்மன்}, பெரும் பலம் கொண்டவர்களான {ஆட்டு முகத்தைக் கொண்டோரான} சக்ரன் {வக்ரன்} மற்றும் அனுசக்ரன் {அனுவக்ரன்} ஆகியோர் இருவரையும், அந்த உயர் ஆன்மாவுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(38) தலைவன் மித்ரன், பெரும் கல்வி, தவத் தகுதி, ஏற்புடைய குணங்கள் ஆகியவற்றைக் கொண்டவர்களும், வரங்களை அருளவல்லவர்களும், மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவர்களுமான சுவிரதன், சத்தியசந்தன் ஆகிய இருவரையும் அந்த உயர்ஆன்ம குமாரனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(39) விதாத்ரி, பெரும்புகழைக் கொண்டவர்களான உயர் ஆன்ம சுப்பிரபன் மற்றும் சுபகர்மன் ஆகிய இருவரையும் அந்தக் கார்த்திகேயனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(40)

பூஷன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெரும் மாயசக்திகளைக் கொண்டவர்களான பாணீத்ரகன், காலிகன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(41) வாயு, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, பெரும் பலம் கொண்டவர்களும், மிகப் பெரிய வாயைக் கொண்டவர்களுமான பலன், அதிபலன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(42) உண்மையை உறுதியாகப் பின்பற்றுபவனான வருணன், திமியின் வாயைப் போன்ற வாய்களைக் கொண்டவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களுமான கூடியவர்களான கசன், அதிகசன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(43) இமவான் {இமயமலை}, ஓ! மன்னா, சுவர்ச்சஸ், அதிவர்ச்சஸ் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(44) மேரு, ஓ! பாரதா, காஞ்சனன், மேகமாலி ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(45) மனுவும், பெரும் பலத்தையும் ஆற்றலையும் கொண்டவர்களான ஸ்திரன், அஸ்திரன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(46) விந்தியன் {விந்திய மலை}, பெரும் கற்களைக் கொண்டு போரிடுபவர்களான உச்சிருங்கன், அக்னிசிருங்கன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(47) சமுத்திரன் {பெருங்கடல்}, பெரும் வலிமைமிக்கவர்களும், கதாயுதம் தரித்தவர்களுமான சங்கிரஹன், விக்ரஹன் ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(48) அழகிய பண்புகளைக் கொண்டவளான பார்வதி, அந்த அக்னியின் மகனுக்கு, உன்மாதன், புஷ்பதந்தன், சங்குகர்ணன் ஆகிய மூவரைத் துணைவர்களாகக் கொடுத்தாள்(49) பாம்புகளின் மன்னனான வாசுகி, ஓ! மனிதர்களில் புலியே, ஜயன், மஹாஜயன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(50)

அதேபோலவே, பெரும் வலிமை கொண்டவர்களான சாத்யர்கள், ருத்திரர்கள், வசுக்கள், பித்ருக்கள் ஆகியோரும், கடல்கள், ஆறுகள், மலைகள் ஆகியவையும், வேல்கள் மற்றுப் போர்க்கோடரிகளைத் தரித்தவர்களும், பல்வேறு வகை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான துணைவர்களை அந்தப் படைத்தலைவனுக்குக் கொடுத்தனர்.(52) ஸ்கந்தனால் அடையப்பட்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களும், பல்வேறு வகை ஆடைகள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான வேறு போராளிகளின் பெயர்களை இப்போது கேட்பாயாக.(53) அவர்கள், சங்குகர்ணன், நிகும்பன், பத்மன், குமுதன், பனிரெண்டு கைகளுடன் கூடிய அநந்தன், கிருஷ்ணன், உபகிருஷ்ணன்,(54) கிராணஸ்வரன், கபிஸ்கந்தன், காஞ்சனாக்ஷன், ஜலந்தமன், அக்ஷசந்தர்ஜனன், குணதீகன், தமோந்தக்ருதன்,(55) ஏகாக்ஷன், துவாதசாக்ஷன், ஏகஜடன், சஹஸ்ரபாகு, விகடன், வியாக்ராக்ஷன், க்ஷிதிகம்பனன்,(56) புண்யநாமன், சுநாமன், சுசக்ரன், பிரயதர்சனன், பரிஸ்ருதன், {யவனான} கோகநதன், பிரியமால்யானுலேபணன்,(57) அஜோதரன், கஜசிரன், ஸ்கந்தாக்ஷன், சதலோசனன், ஜ்வாலாஜிஹ்வன், கராளன், சிதகேசன், ஜடி, ஹரி,(58) {பரிஸ்ருதன், கோகநதன்}, கிருஷ்ணகேசன், ஜடாதரன், சதுர்த்தம்ஷ்டிரன், அஷ்டஜிஹ்வன், மேகநாதன், பிருதுஸ்ரவன்,(59) வித்யுதாக்ஷன், தனுர்வக்தரன், ஜாதரன், மாருதாசனன், உதாராக்ஷன், ரதாக்ஷன், வஜ்ரநாபன், வசுப்பிரபன்,(60) சமுத்திரவேகன், சைலகம்பி, விருஷன், மேஷப்பிரவாஹன், நந்தன், உபநந்தகன்,(61) தூம்ரன், சுவேதன், கலிங்கன், சித்தார்த்தன், விரதன், பிரயகன், நந்தன், கோநந்தன்,(62) ஆநந்தன், பிரமோதன், சுவஸ்திகன், திருவகன், க்ஷேமவாஹன், சுவாஹன், சித்தபாத்திரன்,(63) கோவ்ரஜன், கனகாபீடன், {மஹாபாரிஷதேஸ்வரன்}, காயனன், ஹஸனன், பாணன், கட்கன்,(64) வைதாலி, அதிதாலி, கதகன், வாதிகன், ஹம்ஸனன், பக்ஷதிக்தாங்கன், சமுத்ரோன்மாதனன்,(65) ரணோத்கடன், பிரஹாஸன், சுவேதசித்தன், நந்தகன், காலகண்டன், பிரபாஸன், கும்பாண்டகன்,(66) காலகக்ஷன், சிதன், பூதலோன்மதனன், யஜ்ஞவாஹன், பிரவாஹன் {சுவாஹன்}, தேவயாஜி, சோமபன்,(67) மஜ்ஜானன், {மஹாதேஜன்}, கிரதன், கிராதன், துஹரன், துஹாரன், சித்திரதேவன்,(68) மதுரன், சுப்ரசாதன், கிரீடி, {மகாபலன்}, வத்சலன், மதுவர்ணன், கலசோதரன்,(69) தர்மதன், மன்மதகரன், சூசீவக்தரன், சுவேதவக்தரன், சுவக்தரன், சாருவக்தரன், பாண்டுரன்,(70) தண்டபாகு, சுபாகு, ரஜன், கோகிலகன், அசலன், கனகாக்ஷன், பாலகரக்ஷகன்,(71) சஞ்சாரகன், கோகநதன், கிருதபத்திரன், ஜம்புகன், லோஹஜவக்தரன், ஜவனன், கும்பவக்தரன், கும்பகன்,(72) முண்டக்ரீவன் {சுவர்ணக்ரீவன்}, கிருஷ்ணௌஜஸ், ஹம்சவக்திரன், சந்திரபன், பாணிகூர்ச்சன், சம்பூகன், பஞ்சவக்தரன், சிக்ஷகன், சாஷவக்தரன், ஜாம்பூகன், காரவக்தரன் {சாகவக்தரன்}, குஞ்சகன், {யோகயோக்தன்} ஆவர்.(73)

இவர்களைத் தவிரக் கடுந்தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களும், உயர் ஆன்மா கொண்டோருமான மதிப்பிற்குரிய பிராமணர்கள் பலரும் பெரும்பாட்டனால் அவனுக்கு {ஸ்கந்தனுக்குக்} கொடுக்கப்பட்டனர். அவர்களில் சிலர் இளைஞர்களாகவும், சிலர் முதிர்ந்தவர்களாகவும், ஓ! ஜனமேஜயா, சிலர் வயதால் மிக இளையவர்களாகவும் இருந்தனர். இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கானோர் அந்தக் கார்த்திகேயனிடம் வந்தனர்.(75)

அவர்கள் பல்வேறு வகைகளிலான முகங்களைப் பெற்றிருந்தனர். ஓ! ஜனமேஜயா, அவற்றைச் சொல்கிறேன் கேட்பாயாக. அவர்களில் சிலர் ஆமைகளைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர், சிலர் சேவல்களைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர். ஓ! பாரதா, சிலரின் முகங்கள் மிக நீளமானவையாக இருந்தன.(76) மேலும் சிலரின் முகங்கள், நாய்கள், ஓநாய்கள், முயல்கள், ஆந்தைகள், கழுதைகள், ஒட்டகங்கள், காட்டுப்பன்றிகளைப் போலிருந்தன.(77) சிலருக்கு மனித முகங்களும், சிலருக்கு, ஆடுகள் மற்றும் நரிகளைப் போன்ற முகங்களும் இருந்தன. சிலர் மகரங்கள் மற்றும் முள்ளம்பன்றிகளின் முகங்களுடன் மிகப் பயங்கரமாக இருந்தனர்.(78) சிலருக்குப் பூனைகளைப் போன்ற முகங்கள் இருந்தன, சிலர் பூச்சிகளைப் போன்ற முகத்தைக் கொண்டிருந்தனர். சிலரின் முகங்கள் மிக நீண்டவையாக இருந்தன. சிலர், கீரிப்பிள்ளை, ஆந்தை மற்றும் காக்கைகளின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(79) சிலர், எலி, மயில், மீன், செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமைகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(80)

சிலரின் முகங்கள், கரடிகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் சிங்கங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன. சிலர் யானைகள் மற்றும் முதலைகளின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(81) சிலரின் முகங்கள் கருடன், காண்டாமிருகம், ஓநாய்கள் ஆகியவற்றைப் போல இருந்தன. சிலர், பசுக்கள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், பூனைகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(82) வயிறு, கால்கள் மற்றும் அங்கங்கள் பெருத்தவர்களான சிலரின் கண்கள் நட்சத்திரங்களைப் போல இருந்தன. சிலரின் முகங்கள் புறாக்கள் மற்றும் காளைகளைப் போல இருந்தன.(83) சிலரின் முகங்கள் கோகிலங்கள் {குயில்கள்}, பருந்துகள், தித்திரிகள், பல்லிகள் ஆகியவற்றைப் போல இருந்தன. சிலர் வெள்ளுடை உடுத்தியிருந்தனர்.(84) சிலர் பாம்புகளைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர். சிலரின் முகங்கள் முள்ளம்பன்றிகளுக்கு ஒப்பானதாக இருந்தன. உண்மையில், சிலர் பயங்கர முகங்களையும், சிலர் இனிய முகங்களையும் பெற்றிருந்தனர். சிலர் பாம்புகளையே தங்கள் ஆடையாக உடுத்தியிருந்தனர். சிலரின் முகங்களும், மூக்குகளும் மாடுகளுக்கு ஒப்பானவையாக இருந்தன.(85)

சிலர் துருத்திக் கொண்டிருக்கும் பெரிய வயிறுகளையும், ஆனால் மிக மெலிந்த அங்கங்களையும் கொண்டிருந்தனர். சிலர் பெரிய அங்கங்களையும், ஆனால் மிக மெலிந்த வயிற்றையும் கொண்டிருந்தனர். சிலரின் கழுத்துகள் குட்டையாக இருந்தன. சிலரின் காதுகள் மிகப் பெரியனவாக இருந்தன. சிலர் பல்வேறு வகைப் பாம்புகளைத் தங்கள் ஆபரணங்களாகக் கொண்டிருந்தனர்.(86) சிலர் பெரிய யானைகளின் தோல்களையும், சிலர் கருப்பு மான்தோல்களையும் உடுத்தியிருந்தனர். சிலரின் வாய்கள் அவர்களின் தோள்களில் இருந்தன.(87)சிலருக்குத் தங்கள் வாய்களை வயிற்றிலேயேயும், சிலர் முதுகிலேயும், சிலர் கன்னங்களிலேயும், சிலர் தங்கள் கணுக்கால்களிலும், சிலர் இடையிலேயும், கொண்டிருந்தனர். மேலும் பலரின் வாய்கள் அவர்களின் உடலுடைய பிற பகுதிகளில் இருந்தன.(88) அந்தத் துருப்புகளின் தலைவர்களுக்கு மத்தியில் பலரின் முகங்கள் புழு மற்றும் பூச்சிகளைப் போல இருந்தன. அவர்களில் பலரின் வாய்கள், இரைதேடும் பல்வேறு விலங்குகளின் வாய்களைப் போல இருந்தன. சிலர் பல கரங்களையும், சிலர் பல தலைகளையும் பெற்றிருந்தனர்.(89) சிலரின் கரங்கள் மரங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன, சிலரின் முகங்கள் சிங்கங்களின் முகங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன. சிலரின் முகங்கள் பாம்புகளின் உடல்களைப் போல வழுவழுப்பானவையாக இருந்தன. அவர்களில் பலரின் வசிப்பிடங்கள் பல்வேறு வகைச் செடிகள் மற்றும் மூலிகைகளில் இருந்தன.(90)

சிலர் மரவுரியை உடுத்தியிருந்தனர், சிலர் பல்வேறு வகை எலும்புகளை உடுத்தியிருந்தனர், பல்வேறு வகைகளில் ஆடையுடுத்தியிருந்தனர். சிலர் பல்வேறு வகை மாலைகளாலும், பல்வேறு வகைச் சந்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர்.(91) பல்வேறு வகைகளில் ஆடையுடுத்தியிருந்த அவர்களில் சிலர் தோல்களையே தங்கள் ஆடையாகக் கொண்டிருந்தனர். சிலர் தலைக்கவசங்களை அணிந்திருந்தனர். சிலரின் புருவங்கள் சுருங்கி நெற்றியில் கோடுகள் இருந்தன. சிலரின் கழுத்துகளில் சங்குகளில் காணப்படும் குறிகள் தென்பட்டன. சிலர் பெரும் பிரகாசத்தைக் கொண்டிருந்தனர்.(92) சிலர் கிரீடங்களைத் தரித்திருந்தனர். சிலர் தங்கள் தலைகளில் ஐந்து குடுமிகள் வைத்திருந்தனர், சிலர் முரட்டு மயிரைக் கொண்டிருந்தனர். சிலர் இரண்டு குடுமிகளையும், சிலர் மூன்றையும், சிலர் ஏழு குடுமிகளையும் கொண்டிருந்தனர்.(93) சிலரின் தலைகளில் இறகுகளைக் கொடிருந்தனர், சிலர் மகுடங்களைக் கொண்டிருந்தனர். சிலரின் தலைகள் முற்றிலும் வழுக்கையாக இருந்தன. சிலர் சடாமுடி தரித்திருந்தனர். சிலர் அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். சிலரின் முகங்களில் மயிர் அடர்த்தியாக இருந்தது.(94) போர் ஒன்றே அவர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்வைக் கொடுத்தது. அவர்கள் அனைவரும் தேவர்களில் முதன்மையானோராலும் வெல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர். அவர்களில் பலர், பல்வேறு வகைத் தெய்வீக ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் போரில் விருப்பம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(95)

சிலர் கரிய நிறம் கொண்டவர்களாக இருந்தனர். சிலரின் முகங்களில் சதையே இல்லாமல் இருந்தது. சிலர் மிக நீண்ட முதுகுகளைக் கொண்டிருந்தனர், சிலருக்கு வயிறுகளே இல்லை. சிலரின் முதுகுகள் பெரியனவாக இருந்தன, சிலருக்கு மிகக் குறுகியவையாக இருந்தன. சிலர் நீண்ட வயிறுகளையும், சிலர் நீண்ட அங்கங்களையும் கொண்டிருந்தனர்.(96) சிலரின் கரங்கள் மிக நீண்டவையாக இருந்தன, அதேவேளையில் சிலரின் கரங்கள் குட்டையாகவும் இருந்தன. சிலர் குட்டையான அங்கங்களையுடைய குள்ளர்களாக இருந்தனர். சிலர் கூன்முதுகு கொண்டவர்களாக இருந்தனர். சிலர் குறுகிய இடை கொண்டவர்களாக இருந்தனர். சிலரின் காதுகளும், தலைகளும் யானைகளைப் போல இருந்தன.(97) சிலர் ஆமைகளைப் போன்ற மூக்குகளைக் கொண்டிருந்தனர். சிலருக்கு {மூக்குகள்} ஓநாய்களைப் போல இருந்தன. சிலருக்கு நீண்ட உதடுகள் இருந்தன, சிலருக்கு நீண்ட இடை இருந்தது. சிலர் பயங்கரமான தோற்றத்துடனும், கீழ்நோக்கிய முகங்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.(98) சிலர் மிக நீண்ட பற்களைக் கொண்டிருந்தனர், சிலர் குட்டையான பற்களைக் கொண்டிருந்தனர். சிலருக்கு நாலே பற்கள்தான் இருந்தன. அவர்களில் ஆயிரக்கணக்கானோர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, மதங்கொண்ட பெருவடிவ யானைகளைப் போல மிகப் பயங்கரமாக இருந்தனர்.(99) நல்ல உடற்கட்டைக் கொண்ட சிலர், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுப் பெருங்காந்தியுடன் திகழ்ந்தனர். சிலருக்கு மஞ்சள் கண்கள் இருந்தன. சிலருக்கு அம்புகளைப் போன்ற காதுகள் இருந்தன. ஓ! பாரதா, சிலருக்குக் கங்கை நீர் முதலைகளைப் போன்ற {சிவந்த} மூக்குகள் இருந்தன.(100)

சிலர் அகன்ற பற்களையும் சிலர் அகன்ற உதடுகளையும், சிலர் பச்சை மயிர்களையும் கொண்டிருந்தனர். பல்வேறு வகையான பாதங்கள், உதடுகள், பற்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த அவர்கள், பல்வேறு வகைக் கரங்களையும், தலைகளையும் கொண்டிருந்தனர்.(101) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பல்வேறு வகைத் தோல்களை உடுத்தியிருந்த அவர்கள், பல்வேறு வகை மொழிகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.அந்தப் பலமிக்கவர்கள் அனைத்து மாகாணங்களின் வட்டாரப் பேச்சுமொழிகளிலும் திறனுடன் கூடியவர்களாக ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்தனர்.(102) வலிமைமிக்கவர்களான அந்தத் துணைவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, (கார்த்திகேயனைச் சுற்றிலும்) முட்செடிகளை வெட்டிக் கொண்டு, அங்கே குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். சிலர் நீண்ட கழுத்துகளையும், சிலர் நீண்ட நகங்களையும், சிலர் நீண்ட கால்களையும் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் பெரிய தலைகளையும், சிலர் பெரிய கரங்களையும் கொண்டிருந்தனர்.(103) சிலரின் கண்கள் மஞ்சளாக இருந்தன, சிலரின் தொண்டைகள் நீலமாக இருந்தன, ஓ! பாரதா, சிலரின் காதுகள் மிக நீண்டவையாக இருந்தன. சிலரின் வயிறுகள் கரிய மைக்குவியலைப் போல இருந்தன.(104) சிலரின் கண்கள் வெண்மையாக இருந்தன, சிலரின் கழுத்துகள் சிவப்பாக இருந்தன, ஓ! மன்னா, சிலரோ பழுப்பு நிறக் கண்களைக் கொண்டிருந்தனர். கரிய நிறம் கொண்ட பலரும், ஓ!பாரதா, பல்வேறு நிறங்களைக் கொண்ட பலரும் அங்கே இருந்தனர்.(105) சிலர் வெண்சாமரங்களைப் போன்ற ஆபரணங்களைத் தங்கள் மேனியில் தரித்திருந்தனர். சிலர் தங்கள் உடல்களில் வெண்கோடுகளையும் {ரேகைகளையும்}, சிலர் சிவப்பு கோடுகளையும் கொண்டிருந்தனர். பல்வேறு நிறங்களில் சிலரும், தங்க நிறத்தில் சிலரும், மயில்களைப் போன்ற காந்தியுடன் கூடியவர்களாகச் சிலரும் இருந்தனர்.(106)

இறுதியாகக் கார்த்திகேயனிடம் வந்தோர் தரித்திருந்த ஆயுதங்களைக் குறித்துச் சொல்கிறேன். கேட்பாயாக.(107) சிலர் தங்கள் உயர்த்தப்பட்ட கரங்களில் சுருக்குக் கயிறுகளைக் கொண்டிருந்தனர். அவர்களது முகங்கள் புலிகளைப் போன்றும், கழுதைகளைப் போன்றும் இருந்தன. அவர்கள் கண்கள் கரியனவாகவும், அவர்களது தொண்டைகள் நீலமாகவும், அவர்களது கரங்கள் முள்பதித்த தண்டாயுதங்களுக்கு {பரிகங்களுக்கு} ஒப்பானவையாகவும் இருந்தன.(108) சிலர் சதக்னிகளையும், சக்கரங்களையும் கொண்டிருந்தனர், சிலர் கனத்த குறுங்கதாயுதங்களைக் கொண்டிருந்தனர். ஓ! பாரதா, சிலர் வாள்களையும், உலக்கைகளையும், தண்டாயுதங்களையும் கொண்டிருந்தனர்.(109) பெரும் வடிவமும், பெரும்பலமும் கொண்ட சிலர், வேல்களையும், வாள்களையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் கதாயுதங்களையும், புசுண்டிகளையும், சிலர் சூலங்களையும் கொண்டிருந்தனர்.(110) உயர் ஆன்மாவும், பெரும்பலமும், பெரும் வேகமும், மூர்க்கமும் கொண்ட அந்த வலிமைமிக்கத் துணைவர்கள், தங்கள் கரங்களில் பல்வேறு வகையான பயங்கர ஆயுதங்களைக் கொண்டிருந்தனர்.(111)

வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், போரில் திளைப்பவர்களுமான அவர்கள், கார்த்திகேயனின் பட்டமேற்பைக் கண்டு, கிங்கிணி மணி வரிசைகளைத் தங்கள் மேனியில் தரித்துக் கொண்டு, அவனை {ஸ்கந்தனைச்} சுற்றிலும் ஆடிக் கொண்டிருந்தனர்.(112) ஓ! மன்னா, இவர்களும், இன்னும் பல வலிமைமிக்கத் துணைவர்களும், உயர் ஆன்மா கொண்டவனும், சிறப்புமிக்கவனுமான கார்த்திகேயனிடம் வந்தனர்.(113) சிலர் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் வானத்தைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் பூலோகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் காற்றின் வேகத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அவர்கள், தேவர்களால் ஆணையிடப்பட்டுக் கார்த்திகேயனின் துணைவர்களானார்கள்.(114) ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான இத்தகையோர் உயர் ஆன்ம கார்த்திகேயனின் பட்டமேற்புக்கு வந்து, அவனைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(115)

கிரௌஞ்ச மலையைப் பிளந்த கந்தன்! – சல்லிய பர்வம் பகுதி – 46-ஸ்கந்தனின் போர்த்துணைவர்களாக இருந்த தாய்மாரின் பெயர்கள்; மயிலையும், சேவலையும் அடைந்த ஸ்கந்தன்; தாரகாசுரன், மஹிஷன், திரிபாதன், ஹிரதோததரன் மற்றும் பாணன் ஆகியோரை ஸ்கந்தன் கொன்றது; கிரௌஞ்ச மலையைப் பிளந்த ஸ்கந்தன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! வீரா, எதிரிகளைக் கொல்பவர்களும், குமாரனின் துணைவர்களானவர்களுமான தாய்மாரின் பெருங்கூட்டத்தில் அடங்கியோரின் {மாத்ருகணங்களின்} பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தச் சிறப்புமிக்கத் தாய்மாரின் பெயர்களைக் கேட்பாயாக. இவ்வண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றில் இந்த மங்கலமானவர்கள் படர்ந்தூடுருவியிருக்கிறார்கள்.(2)

அவர்கள், பிரபாவதி, விசாலாக்ஷி, பாலிதை, கோனாசி {கோஸ்தனி}, ஸ்ரீமதி, பகுலை, பகுபுத்திரிகை,(3) அப்சுஜாதை, கோபாலி, பிருஹதம்பாலிகை, ஜயாவதி, மாலதிகை, திருவரத்னை, பயங்கரி,(4) வசுதாமை, சுதாமை, விசோகை, நந்தினி, ஏகசூடை, மஹாசூடை, சக்ரநேமி,(5) உத்தேஜனை, ஜயத்ஸேனை, கமலாக்ஷி, சோபனை, சத்ருஞ்சயை, குரோதனை, சலபி, கரி,(6) மாகதி {மாதவி}, சுபவக்தரை, தீர்த்தசேனி, கீதப்பிரியை, கல்யாணி, கோத்ருரோமை {ருத்ரரோமை}, அமிதாசனை,(7) மேகஸ்வனை, போகவதி, சுப்ரு, கனகாவதி, அலாதாக்ஷி, வீர்யவதி, வித்யுஜ்ஜிஹ்வை,(8) பத்மாவதி, சுநக்ஷத்ரை, கந்தரை, பகுயோஜனை, சந்தாநிகை, கமலை, மஹாபலை,(9) சுதாமை, பகுதாமை, சுப்ரபை, யசஸ்விநி, நிருத்யப்பிரியை, சதோலூகலமேகலை,(10) சதகண்டை, சதாநந்தை, பகநந்தை, பாவிநி, வபுஷ்மதி, சந்திரசீதை, பத்ரகாளி,(11) ஜங்காரிகை {ருக்ஷாம்பிகை}, நிஷ்குந்திகை {நிஷ்குடிகை}, வாமை, சத்வரவாஸிநீ, சுமங்கலை, ஸ்வஸ்திமதி {ஸ்வஸ்திமி}, பிருத்திகாமை {புத்திகாமை}, ஜயப்பிரியை,(12) கனதை {தனதை}, சுப்ரசாதை, பவதை, ஜலேஸ்வரி, ஏடீ, பேடீ, சமேடீ, வேதாளோஜநநி,(13) கண்டூதி, காலிகை, தேவமித்திரை, தம்புசி {வசுஸ்ரீ}, கேதகி {கோடரை}, சித்திரசேனை, அசலை,(14) குக்குடிகை, சங்கலிகை, சகுனிகை, குண்டாரிகை, கோகுலிகை {கௌகுலிகை}, கும்பிகை, சதோதரி,(15) உத்கிராதினி, ஜலேலை, மஹாவேகை, கங்கணை, மனோஜவை, கண்டகினி, பிரஹஸை, பூதனை {பீதனை},(16) கேசயை {கேசயந்தரி}, அந்தர்கதி {த்ருடி}, வாமை, குரோசனை, தடித்பிரபை, மந்தோதரி, துஹுண்டி {முண்டி}, கோடரை, மேகவாஹிநி,(17) சுபாகை {சுபிகை}, லம்பினி, லம்பை, வசுசூடை {தாம்ரசூடை}, விகாதினி {விகாசினி}, ஊர்த்வவேணிதரை, பிங்காக்ஷி, லோஹமேகலை,(18) பிருதுவக்தரை {பிருதுவஸ்திரை}, மதுலிகை, மதுகும்பை, யக்ஷாலிகை, மத்சுனிகை {மத்குலிகை}, ஜராயு, ஜர்ஜராநனை,(19) கியாதை, தஹதஹை, தமதமை, கண்டகண்டை, பூஷணை, மணிகுட்டிகை,(20) அமோகை, லம்பபயோதரை, வேணுவீணாதரை, பிங்காக்ஷி, லோஹமேக்ஷலை,(21) சசோலூகமுகி, கிருஷ்ணை, கரஜங்கை, மஹாஜவை, சிசுமாரமுகி, ஸ்வேதை, லோஹிதாக்ஷி, விபீஷணை,(22) ஜடாலிகை, காமசரி, தீர்க்கஜிஹ்வை, பலோத்கடை, காலேஹிகை, வாமனிகை, முகுடை,(23) லோஹிதாக்ஷி, மஹாகாயை, ஹரிபிண்டை, ஏகத்வசை, சுகுசுமை, கிருஷ்ணகர்ணி,(24) க்ஷுரகர்ணி, சதுஷ்கர்ணி, கர்ணப்பிராவரணை, சதுஷ்பதநிகேதை, கோகர்ணி, மஹிஷாநனை,(25) கரகர்ணி, மஹாகர்ணி, பேரீஸ்வனமஹாஸ்வனை, சங்ககும்பஸ்ரவை, பகதை,(26) {மஹாபலை}, கணை, சுகணை, பீநி, காமதை, சதுஷ்பதரதை, பூதிதீர்த்தை, அந்யகோசரை,(27) பசுதை, வித்ததை, சுகதை, மஹாயசை, பயோதை, கோமஹிஷதை, ஸவிசாலை,(28) பிரதிஷ்டை, சுப்ரதிஷ்டை, ரோசமானை, சுரோசனை, நௌகர்ணி {கௌகர்ணி}, முககர்ணி, வசிரை, மந்தினி, ஏகவக்தரை {ஏகசந்திரை}, மேகரவை {மேககர்ணை}, மேகமாலை, விரோசனை ஆகியோர் ஆவர்.(29) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இவர்களும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட இன்னும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் பலரும் கார்த்திகேயனின் தொண்டர்களானார்கள்.(30)

அவர்களது நகங்கள் நீளமானைவையாக இருந்தன, ஓ! பாரதா, அவர்களின் பற்களும், உதடுகளும் அகன்றனவையாகத் துருத்திக் கொண்டு இருந்தன. நேரான வடிவங்களும், இனிய பண்புகளைக் கொண்டு இளமையுடன் இருந்த அவர்கள் அனைவரும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.(31) தவத் தகுதியைக் கொண்ட அவர்கள் அனைவரும் விரும்பிய வடிவை ஏற்றுக்கொள்ளவல்லவர்களாகவும் இருந்தனர். அவர்கள், தங்கள் அங்கங்களில் அதிகச் சதைப்பற்றில்லாதவர்களாகவும், நல்ல நிறத்தைக் கொண்டவர்களாகவும், தங்கத்தின் காந்தியையும் கொண்டிருந்தனர்.(32) அவர்களில் கருப்பாக இருந்த சிலர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மேகங்களின் வண்ணத்தில் இருந்தனர், சிலர் புகையின் வண்ணத்தில் இருந்தனர். காலைச் சூரியனின் காந்தியைக் கொண்டிருந்த சிலர் உயர்ந்த அருள் கொண்டவர்களாக இருந்தனர். நீண்ட குழல்களை {கேசத்தைக்} கொண்டிருந்த அவர்கள் வெள்ளுடை உடுத்தியிருந்தனர்.(33) சிலரின் சடை மேல் நோக்கிப் பின்னப்பட்டிருந்தது, சிலரின் கண்கள் பழுப்பு நிறத்தில் இருந்தன, சிலரது இடுப்புக் கச்சைகள் மிக நீண்டவையாக இருந்தன. சிலர் நீண்ட வயிறுகளையும், நீண்ட காதுகளையும், நீண்டு தொங்கும் முலைகளையும் கொண்டிருந்தனர்.(34) சிலர் தாமிரக் கண்களையும், தாமிர நிறத்தையும், பச்சைக் கண்களையும் கொண்டிருந்தனர். அவர்கள், வரங்களை அருளவல்லவர்களாகவும், விருப்பப்படி திரிபவர்களாகவும் எப்போதும் உற்சாகத்துடன் கூடியவர்களாகவும் இருந்தனர்.(35)

ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, பெரும் பலம் கொண்ட சிலர், யமனின் இயல்பையும், சிலர் ருத்திரனின் இயல்பையும், சிலர் சோமன், சிலர் குபேரன், சிலர் வருணன், சிலர் இந்திரன், சிலர் அக்னி என அவரவர் இயல்புகளிலும் பங்கு கொண்டனர்.(36) ஓ! பாரதக்குலத்தின் காளையே, சிலர், வாயு, குமாரன், பிரம்மன், விஷ்ணு, சூரியன், வராஹன் ஆகியோரின் இயல்புகளிலும் பங்கு கொண்டனர்.(37) இனிய அழகிய பண்புகளைக் கொண்ட அவர்கள் அப்சரஸ்களைப் போன்ற அழகுடையவர்களாக இருந்தனர். குரலில் கோகிலத்தை {குயிலைப்} போலவும், செழிப்பில் பொக்கிஷத் தலைவனை {குபேரனைப்} போலவும் அவர்கள் இருந்தனர்.(38)

போரில், அவர்களது சக்தி சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானதாக இருந்தது. காந்தியில் அவர்கள் நெருப்புக்கு ஒப்பானவர்களாக இருந்தனர். போரில் அவர்கள் எப்போதும் தங்கள் எதிரிகளைப் பீதியடையச் செய்தனர்.(39) விரும்பிய வடிவத்தை ஏற்க வல்லவர்களாகவும், காற்றின் வேகத்தைக் கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்தனர். கற்பனைக்கெட்டாத வலிமையும், சக்தியும் கொண்ட அவர்களின் ஆற்றலும் கற்பனைக்கெட்டாத வகையிலேயே இருந்தது.(40) மரங்கள், திறந்தவெளிகள் மற்றும் சாலைகளின் நாற்சந்திகள் ஆகியவற்றில் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருந்தனர். குகைகள், சுடலை {சுடுகாடு}, மலைகள் மற்றும் அருவிகளிலும் அவர்கள் வாழ்ந்தனர்.(41) அவர்கள் பல்வேறு வகையிலான ஆபரணங்களைப் பூண்டிருந்தனர், பல்வேறு வகையான ஆடைகளை உடுத்தியிருந்தனர், பல்வேறு மொழிகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.(42) எதிரிகளை அச்சத்தில் ஆழ்த்தவல்ல இவர்களும், (தாய்மாரின்) இன்னும் பிற இனங்களும்  சேர்ந்து, தேவர்களின் தலைவனுடைய {இந்திரனுடைய} ஆணைக்கிணங்க உயர் ஆன்ம கார்த்திகேயனைப் பின்பற்றினர்.(43)

பகனைத் தண்டித்த போற்றுதலுக்குரியவன் {இந்திரன்}, ஓ! மனிதர்களில் புலியே அந்தக் குஹனுக்கு (கார்த்திகேயனுக்கு), தேவர்களின் எதிரிகளை அழிக்கவல்ல ஓர் ஈட்டியை {வேலைக்} கொடுத்தான்.(44) விஸ் என்ற பேரொலியை உண்டாக்கும் அந்த ஈட்டி பல பெரிய மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரும் காந்தியைக் கொண்டிருந்த அஃது, ஒளியால் சுடர்விடுவதாகத் தெரிந்தது. மேலும் இந்திரன் அவனுக்குக் காலைச் சூரியனைப் போன்ற ஒரு பிரகாசமான கொடியையும் கொடுத்தான்.(45)

சிவன், கடுஞ்சீற்றமிக்கதும், பல்வேறு வகை ஆயுதங்களைத் தரித்திருப்பதும், தவத்தால் பெறப்பட்ட பெருஞ்சக்தியைக் கொண்டதுமான ஒரு பெரும் படையை அவனுக்குக் {கார்த்திகேயனுக்குக்} கொடுத்தான்.(46) ஒரு நல்ல படைக்குண்டான நல்ல குணங்கள் அனைத்தையும் கொண்டதும் வெல்லப்பட முடியாததுமான அந்தப் படை தனஞ்சயம் என்ற பெயரால் அறியப்பட்டது. ருத்திரனுக்கு இணையான வலிமையைக் கொண்ட முப்பதாயிரம் {30,000} போர்வீரர்களால் அது பாதுகாக்கப்பட்டது. அந்தப் படைக்குப் போரில் இருந்து தப்பி ஓடுவது எவ்வாறு என்பது தெரியாது.(47)

விஷ்ணு, சூடிக் கொள்பவரின் வலிமையை அதிகரிக்கவல்ல ஒரு வெற்றிமாலையை அவனுக்குக் {கார்த்திகேயனுக்குக்} கொடுத்தான். உமை, சூரியனுக்கு ஒப்பான இரண்டு துண்டு துணிகளைக் கொடுத்தாள்.(48) கங்கை, அமுதத்தைக் கொண்ட ஒரு தெய்வீக நீர்க்குடத்தை அந்தக் குமாரனுக்குப் பெரும் மகிழ்வுடன் கொடுத்தாள். பிருஹஸ்பதி ஒரு புனிதமான தடியை {தண்டத்தை} அவனுக்குக் கொடுத்தான்.(49) கருடன், தனக்குப் பிடித்தமான மகனும், அழகிய இறகுகளையுடையதுமான ஒரு மயிலை அவனுக்குக் கொடுத்தான்.(50) அருணன், கூரிய அலகுகளைக் கொண்ட ஒரு சேவலை அவனுக்குக் கொடுத்தான். அரசன் வருணன், பெரும் சக்தியும், வலிமையும் கொண்ட ஒரு பாம்பை அவனுக்குக் கொடுத்தான்.(51) தலைவன் பிரம்மன், பிரம்மத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்தத் தேவனுக்கு {ஸ்கந்தனுக்கு} ஒரு கருப்பு மான்தோலைக் கொடுத்தான். உலகங்கள் அனைத்தையும் படைத்தவனான அவன் {பிரம்மன்}, போர்கள் அனைத்திலும் வெற்றியையும் கொடுத்தான்.(52)

தெய்வீகப் படைகளின் தலைமைப் பொறுப்பை அடைந்த ஸ்கந்தன், பிரகாசமான தழல்களுடன் கூடிய ஒரு சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(53) அந்தத் துணைவர்கள் மற்றும் தாய்மாரின் துணையுடன் கூடிய அவன், தேவர்களில் முதன்மையான அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம், தைத்தியர்களை அழிக்கச் சென்றான்.(54) மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டதும், பேரிகைகள், சங்குகள், முரசுகள் ஆகியவற்றைக் கொண்டதும், கொடிகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான தேவர்களின் அந்தப் பயங்கரப் படையானது, கோள்களும், நட்சத்திரங்களும் சிதறிக் கிடக்கும் கூதிர்கால ஆகாயம் போல மிக அழகாகத் தெரிந்தது.(55)

பிறகு, தேவர்களின் அந்தப் பெருங்கூட்டமும், பல்வேறு வகையிலான உயிரினங்களும், ஆயிரக்கணக்கான பேரிகைகளை இசைத்துத் தங்கள் சங்குகளை முழக்கினர்.(56) அவர்கள், படகங்கள் {தம்பட்டங்கள்}, ஜர்ஜரங்கள், கிரகசங்கள், மாட்டுக் கொம்புகள் {கோவிஷாணிகங்கள்}, ஆடம்பரங்கள், கோமுகங்கள் டிண்டிமங்கள் ஆகியவற்றைப் பேரொலியுடன் முழக்கினர்.(57) வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரும் அந்தக் குஹனைப் {கார்த்திகேயனைப்} புகழ்ந்தனர். தேவர்களும், கந்தர்வர்களும் பாடினர், அப்சரஸ்கள் நர்த்தனம் புரிந்தனர்.(58) (இந்தக் கவனிப்புகளால்) மிகவும் மகிழ்ந்த ஸ்கந்தன், தேவர்கள் அனைவருக்கும் ஒரு வரம் தரும் வகையில், “உங்களைக் கொல்ல விரும்பும் உங்கள் எதிரிகள் அனைவரையும் நான் கொல்வேன்” என்றான்.(59) அந்தத் தேவர்களில் சிறந்தவனிடம் {ஸ்கந்தனிடம்} இருந்து இவ்வரத்தை அடைந்த சிறப்புமிக்கத் தேவர்கள், தங்கள் எதிரிகள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகக் கருதினர்.(60)

ஸ்கந்தன் அவ்வரத்தை அருளிய பிறகு, மகிழ்ச்சியடைந்த அந்த உயிரினங்கள் அனைத்திடமிருந்தும் மூவுலகங்களையும் நிறைக்கும் வகையில் பேரொலி எழுந்தது.(61) அந்தப் பரந்த படையுடன் கூடிய ஸ்கந்தன், சொர்க்கவாசிகளைப் பாதுகாக்க, தைத்தியர்களை அழிக்கப் புறப்பட்டான்.(62) ஓ! மன்னா {ஜனமேஜயா}, (உடல் கொண்டு வந்தவையான) முயற்சி, வெற்றி, அறம், நிறைவு, செழிப்பு, துணிவு மற்றும் சாத்திரங்கள் ஆகியவை கார்த்திகேயனின் படைக்கு முன்னணியில் சென்றன.(63) வேல்கள், முத்கரங்கள், எரிகொள்ளிகள், கதாயுதங்கள், உலக்கைகள், நாராசங்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியவற்றைத் தரித்ததும், செருக்கில் கொழுத்த சிங்கம் போல முழங்கிக் கொண்டிருந்ததுமான அந்தப் பயங்கரப் படையோடு தெய்வீகக் குஹன் புறப்பட்டான்.(64,65)

தைத்தியர்கள், ராட்சசர்கள் மற்றும் தானவர்கள் அனைவரும் அவனைக் கண்டு, அச்சத்தால் கவலையடைந்து, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(66) பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த தேவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். சக்தியும், வலிமையும் கொண்டவனான ஸ்கந்தன், இதை (எதிரிகள் தப்பி ஓடுவதைக்) கண்டு கோபத்தால் தூண்டப்பட்டான்.(67) அவன் (அக்னியிடம் இருந்து பெற்றிருந்த) பயங்கர ஆயுதமான ஈட்டியை {வேலை} மீண்டும் மீண்டும் ஏவினான். அப்போது அவன் வெளிப்படுத்திய சக்தியானது, தெளிந்த நெய்க் காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்புக்கு ஒப்பானதாக இருந்தது.(68) அளவிலா சக்தி கொண்டவனான ஸ்கந்தனால், அந்த ஈட்டி மீண்டும் மீண்டும் ஏவப்பட்டபோது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பூமியில் நெருப்புக் கீற்றுகள் விழுந்தன.(69) பேரொலியுடன் கூடிய இடிகளும், பூமியில் விழுந்தன. ஓ! மன்னா, அண்ட அழிவு நாளில் {பிரளயத்தின் போது) ஏற்படும் பீதியை அனைத்தும் அடைந்தன.(70)

அக்னியின் மகனால் {கார்த்திகேயனால்} அந்தப் பயங்கர ஈட்டி ஒரு முறை ஏவப்பட்டபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, அதிலிருந்து லட்சக்கணக்கான ஈட்டிகள் வெளிவந்தன.(71) இறுதியாக, பலமிக்கவனும், போற்றுதலுக்குரியவனுமான ஸ்கந்தன், மகிழ்ச்சியால் நிறைந்து, (அந்தப் போரில்) லட்சக்கணக்கான, வலிமைமிக்க வீர தைத்தியர்களால் சூழப்பட்டவனும், பெரும் வலிமையும், ஆற்றலும் கொண்டவனும், தைத்தியர்களின் தலைவனுமான தாரகனைக் கொன்றான்.(72) பிறகு அவன், எட்டுப் பத்மம் எண்ணிக்கையிலான தைத்தியர்களால் சூழப்பட்டவனான மஹிஷனை அந்தப் போரில் கொன்றான். அடுத்ததாக, ஆயிரம் ஆஜுதங்கள் எண்ணிக்கையிலான தைத்தியர்களால் {நூறு லட்சம் பேரால்} சூழப்பட்ட திரிபாதனைக் கொன்றான்.(73) பிறகு அந்தப் பலமிக்க ஸ்கந்தன், பத்து நிகர்வ எண்ணிக்கையிலான தைத்தியர்களால் {லட்சம் கோடி பேரால்} சூழப்பட்ட ஹிரதோததரனை, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த அவனுடைய தொண்டர்களுடன் சேர்த்துக் கொன்றான்.(74) ஓ! மன்னா, அந்தத் தைத்தியர்கள் கொல்லப்பட்டபோது, திசைகளின் பத்து புள்ளிகளும் நிறையும்படி பேரொலி எழுப்பிய குமாரனின் தொண்டர்கள், ஆடி, குதித்து, மகிழ்ச்சியுடன் சிரத்துக் கொண்டிருந்தனர்.(75)

ஓ! மன்னா, ஸ்கந்தனின் ஈட்டியில் இருந்து வெளிப்பட்ட தழல்களில் ஆயிரக்கணக்கான தைத்தியர்கள் எரிந்தனர், அதே வேளையில் ஸ்கந்தனின் முழக்கங்களால் பீதியடைந்த சிலர், தங்கள் இறுதி மூச்சையும் விட்டனர்.(76) ஸ்கந்தனுடைய படைவீரர்களின் கொட்டாவிகளில் மூவுலகங்களும் பீதியடைந்தன. ஸ்கந்தனால் உண்டாக்கப்பட்ட தழல்களில் எதிரிகள் எரிந்தனர். பலர், அவனது வெறும் முழக்கங்களிலேயே கொல்லப்பட்டனர்.(77) தேவர்களின் எதிரிகளில் சிலர், கொடிகளால் தாக்கப்பட்டு உயிரை இழுந்தனர். சிலர், மணிகளின் ஒலியால் பீதியடைந்து பூமியின் பரப்பில் விழுந்தனர். சிலர், ஆயுதங்களால் சிதைக்கப்பட்டுக் கீழே விழுந்து உயிரை விட்டனர்.(78) இவ்வகையில், வீரனும், வலிமைமிக்கவனுமான கார்த்திகேயன், தன்னோடு போரிட வந்த பெரும் பலம் கொண்டவர்களான தேவர்களின் எதிரிகளில் எண்ணிலடங்காதோரைக் கொன்றான்.(79)

பெரும் வலிமை கொண்டவனும், பலியின் மகனுமான பாணன், கிரௌஞ்ச மலையில் ஏறி அந்தத் தேவர்களின் படையுடன் போரிட்டான்.(80) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பெரும் படைத்தலைவனுமான ஸ்கந்தன், தேவர்களின் அந்த எதிரியை {பாணனை} எதிர்த்து விரைந்து சென்றான். கார்த்திகேயனிடம் அச்சம் கொண்ட அவன், அந்தக் கிரௌஞ்ச மலைக்குள் பதுங்கினான்.(81) சினத்தால் நிறைந்தவனும், போற்றுதலுக்குரியவனுமான அந்தக் கார்த்திகேயன், அக்னியால்[1] அவனுக்கு அளிக்கப்பட்ட ஈட்டியைக் கொண்டு அம்மலையை {கிரௌஞ்ச} மலையைப் பிளந்தான். அம்மலை வெளியிடும் ஒலியானது நாரைக்கு {கிரௌஞ்சத்திற்கு} ஒப்பானதாக இருந்ததால் அது கிரௌஞ்சம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.(82) சால மரங்களுடன் கூடிய அம்மலை பலவண்ணங்களைக் கொண்டிருந்தது. அதிலிருந்த {அம்மலையிலிருந்த} குரங்குகளும், யானைகளும் பீதியடைந்தன. அதில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டிருந்த பறவைகள் எழுந்து, ஆகாயத்தில் சுற்றிக் கொண்டிருந்தன. பாம்புகள், அதன் சாரலில் வெளியேற தொடங்கின.(83) அச்சத்தால் அங்கேயும், இங்கேயும் ஓடிக்கொண்டிருந்த சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் ஓலத்தை அஃது எதிரொலித்தது. அதில் இருந்த பிற காடுகளும், நூற்றுக்கணக்கான விலங்குகளின் ஓலத்தை வெளியிட்டன.(84) திடீரெனச் சரபங்களும், சிங்கங்களும் வெளியே ஓடின. அம்மலை இந்த அவலநிலைக்குக் குறைக்கப்பட்டாலும், இவையனைத்தின் விளைவால் அஃது அழகிய தன்மையை ஏற்றது.(85)அதன் சிகரங்களில் வசித்த வித்யாதரர்கள் காற்றில் பறந்து சென்றனர். கின்னரர்களும், ஸ்கந்தனின் ஈட்டி பாய்ந்த அச்சத்தால் கலக்கமடைந்து கவலையில் மூழ்கினர்.(86) அழகிய ஆபரணங்களும், மாலைகளும் அணிந்திருந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தைத்தியர்கள், அந்தச் சுடர்மிக்க மலையில் இருந்து வெளியே வந்தனர். அந்தப் போரில் அவர்களை விஞ்சிய குமாரனின் தொண்டர்கள், அவர்கள் அனைவரையும் கொன்றனர்.(87) போற்றுதலுக்குரிய ஸ்கந்தன், சினத்தால் நிறைந்து, (பழங்காலத்தில்) விருத்திரனைக் கொன்ற இந்திரனைப் போலவே, அந்தத் தைத்திய தலைவனின் (பலியின்) மகனை, அவனுடைய தம்பியுடன் சேர்த்துக் கொன்றான்.(88) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த அக்னியின் மகன், சிலநேரங்களில் தன்னைப் பலராகவும், சில நேரங்களில் தன் அனைத்துப் பகுதிகளை ஒன்றாகத் திரட்டியும், தன் ஈட்டியால் அந்தக் கிரௌஞ்ச மலையைப் பிளந்தான்.(89) அவனது கரங்களில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவப்பட்ட அந்த ஈட்டியானது, மீண்டும் மீண்டூம் அவனிடமே திரும்பி வந்தது. இவ்வாறே போற்றுதலுக்குரிய அக்னியின் மகனுடைய வலிமையும், மகிமையும் இருந்தது.(90)

இரட்டிப்பான வீரம், சக்தி, ஆற்றல், நிறைவு ஆகியவற்றைக் கொண்ட அந்தத் தேவன் {ஸ்கந்தன்}, அம்மலையை {கிரௌஞ்ச மலையைப்} பிளந்து, நூற்றுக்கணக்கான தைத்தியர்களைக் கொன்றான்.(91) இவ்வாறு தேவர்களின் எதிரிகளைக் கொன்ற அந்தப் போற்றுதலுக்குரிய தேவன், தேவர்களால் வழிபடப்பட்டு, கௌரவிக்கப்பட்டுப் பெரும் மகிழ்வை அடைந்தான்.(92) கிரௌஞ்ச மலை பிளக்கப்பட்டு, சந்தனின் மகன் கொல்லப்பட்ட பிறகு பேரிகைகள் முழக்கப்பட்டன.(93) யோகிகளின் அந்தத் தெய்வீகத் தலைவன் {ஸ்கந்தன்} மீது, தெய்வீக மாதர்கள் அடுத்தடுத்து மலர்மாரியைப் பொழிந்தனர்.(94) தெய்வீக நறுமணத்தைச் சுமந்து வந்த மங்கலமான தென்றல் அங்கே வீசத் தொடங்கியது. கந்தர்வர்களும், வேள்வி செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களான பெரும் முனிவர்களும் அவனைத் துதித்துப் பாடினர்.(95)

சிலர் அவனை {ஸ்கந்தனை} பெரும்பாட்டனின் பலமிக்க மகனும், பிரம்மனின் மகன்கள் அனைவரிலும் மூத்தவனுமான சனத்குமாரன் என்று சொல்கின்றனர்.(96) சிலர் அவனை மகேஸ்வரனின் {சிவனின்} மகன் என்று சொல்கின்றனர். சிலரோ அக்னியின் மகன் என்று சொல்கின்றனர். மேலும் சிலர் அவனை உமையின் மகனென்றோ, கிருத்திகைகள், அல்லது கங்கையின் மகனென்றோ சொல்கின்றனர்.(97) அவர்களில் ஒருவரின் மகனென்றோ, அவர்களில் இருவரின் மகனென்றோ, நால்வரில் ஒருவரின் மகன் என்றோ, சுடர்மிக்க வடிவமும், பெரும் வலிமையும் கொண்ட அந்த யோகியரின் தலைவனைக் குறித்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் சொல்கின்றனர்.(98)

ஓ! மன்னா {ஜனமேஜயனிடம்}, இவ்வாறே கார்த்திகேயனின் பட்டமேற்பு குறித்த அனைத்தையும் உனக்கு நான் சொல்லிவிட்டேன். இப்போது சரஸ்வதியின் தீர்த்தங்களில் முதன்மையான, புனிதமான தீர்த்தத்தின் {சோம தீர்த்தத்தின்} வரலாற்றைக் கேட்பாயாக.(99) ஓ! ஏகாதிபதி, தேவர்களின் எதிரிகள் கொல்லப்பட்ட பிறகு அந்த முதன்மையான தீர்த்தம் {சோம தீர்த்தம்}, இரண்டாவது சொர்க்கமானது.(100) அக்னியின் பலமிக்க மகன் {ஸ்கந்தன்}, தேவர்களில் முதன்மையானோர் ஒவ்வொருவருக்கும், பல்வேறு வகையான ஆட்சிப்பகுதிகள், வளங்கள் மற்றும் இறுதியாக மூவுலகங்களின் அரசுரிமையையும் கொடுத்தான்.(101) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வாறே தைத்தியர்களை அழித்தவனான அந்தப் போற்றுதலுக்குறியவன், தேவர்களால் தங்கள் படைத்தலைவனாக நிறுவப்பட்டான்.(102) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பழங்காலத்தில் தேவர்களால் நீர்நிலைகளின் தலைவனாக வருணன் நிறுவப்பட்ட மற்றொரு தீர்த்தம் தைஜஸம் {ஔசனம்} என்ற பெயரால் அறியப்படுகிறது.(103) அந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஸ்கந்தனைப் போற்றிய ராமன் {பலராமன்}, தங்கம், துணிகள், ஆபரணங்கள் மற்றும் பிற பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடுத்தான்.(104) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த மாதவன் {பலராமன்}, அங்கே ஓரிரவைக் கழித்து, அந்த முதன்மையான தீர்த்தத்தைத் துதித்து, அதன் நீரைத்தீண்டி, உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அடைந்தான்.(105) தேவகூட்டத்தால் எவ்வாறு தெய்வீக ஸ்கந்தன் {படைத்தலைவனாக} நிறுவப்பட்டான் என்பது குறித்து நீ கேட்ட அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன்” {என்றார் வைசம்பாயனர்}.(106)

அக்னி, குபேரத் தீர்த்தங்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 47-நீர்நிலைகளின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள்; அக்னி தீர்த்தம் மற்றும் கௌபேர தீர்த்தம் ஆகியவற்றுக்குச் சென்ற பலராமன்; அத்தீர்த்தங்களின் மகிமை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, முறையான சடங்குகளுடன் ஸ்கந்தன் பட்டமேற்றதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்ட இந்த வரலாறு மிக அற்புதமானதாகும்.(1) ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, இந்த விவரிப்பைக் கேட்டதனால் தூய்மையடைந்தவனாக என்னை நான் கருதுகிறேன். என் மனம் மிகவும் உற்சாகமடைவதால், எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.(2) குமாரனின் பட்டமேற்பையும், தைத்தியர்களின் அழிவையும் கேட்ட பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனினும், எனக்கு மற்றொரு காரியம் குறித்து மிகுந்த ஆவல் ஏற்படுகிறது.(3) பழங்காலத்தில் நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} எவ்வாறு அந்தத் தீர்த்ததில் வைத்து பட்டமேற்கச் செய்யப்பட்டான்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, பேரறிவையும், உரைப்பதில் திறனையும் கொண்டுள்ள நீர் அவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, உண்மையில் முந்தைய கல்பத்தில் நடந்தவாறே இந்த அற்புத வரலாற்றைக் கேட்பாயாக. பழங்காலத்தில், கிருத யுகத்தில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, வருணனை முறையாக அணுகிய தேவர்கள் அனைவரும், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(5) “தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்}, அனைத்து அச்சங்களில் இருந்தும் எங்களை எப்போதும் பாதுகாப்பதைப் போல, நீயும் ஆறுகள் அனைத்தின் தலைவனாக இருப்பாயாக.(6) ஓ! தேவா, நீ எப்போதும் மகரங்களின் வீடான பெருங்கடலில் வசிக்கிறாய். ஆறுகளின் தலைவனான இந்தப் பெருங்கடல் உனது ஆட்சிப்பகுதியாகட்டும்.(7) சோமனுடன் சேர்ந்து நீ வளர்ந்து, தேய வேண்டும்” என்றனர். (இவ்வாறு சொல்லப்பட்ட) வருணன், அவர்களிடம், “அப்படியே ஆகட்டும்” என்றான்.(8)

பிறகு, ஒன்றாகச் சேர்ந்த தேவர்கள் அனைவரும், பெருங்கடலையே தன் வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் வருணனை, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி, நீர்நிலைகள் அனைத்தின் தலைவனாக நிறுவினார்கள்.(9) நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள், முறையாக அவனை வழிபட்டுத் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(10) தேவர்களால் நிறுவப்பட்டவனான சிறப்புமிக்க வருணன், தேவர்களைக் காக்கும் சக்ரனைப் போலவே, கடல்கள், தடாகங்கள், ஆறுகள் மற்றும் பிற நீர்க்கொள்ளிடங்களை முறையாகக் காக்கத் தொடங்கினான்.(11) பிரலம்பனைக் கொன்றவனும், பெரும் அறிவைக் கொண்டவனுமான பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்திலும் நீராடி, பல்வேறு வகையான தானங்களைச் செய்து, அடுத்ததாக, தெளிந்த நெய்யை உண்பவனான அக்னி, வன்னிமரத்திற்குள் ஒளிந்து கொண்டு, காட்சிக்குப் புலனாகாதபடி எந்த இடத்தில் மறைந்து போனானோ, அந்த அக்னி தீர்த்தத்திற்குச் சென்றான்.(12) உலகங்கள் அனைத்தின் ஒளியும் இவ்வாறு மறைந்தபோது, ஓ! பாவங்களற்றவனே, தேவர்கள் அண்டத்தின் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(13) அவர்கள், “போற்றுதலுக்குரிய அக்னி மறைந்துவிட்டான். தன் காரணத்தை நாங்கள் அறியவில்லை. அனைத்து உயிரினங்களும் அழிக்கப்படாமல் இருக்கட்டும். ஓ! பலமிக்கத் தேவா, நெருப்பை உண்டாக்குவீராக” என்றனர்”.(14)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “எக்காரணத்தினால் உலகங்கள் அனைத்தையும் உண்டாக்குபவனான அக்னி மறைந்து போனான்? மேலும் தேவர்களால் அவன் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டான்? இவை அனைத்தையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்றான்.(15)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெருஞ்சக்தி கொண்ட அக்னி, பிருகுவின் சாபத்தால் பெரும்பீதியை அடைந்தான். அதனால் வன்னிமரத்திற்குள் ஒளிந்து கொண்டு, அந்தப் போற்றுதலுக்குரிய தவன் காட்சியில் இருந்து மறைந்து போனான்.(16) அக்னி மறைந்ததும், வாசவனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும், பெரும் துன்பத்தை அடைந்து, காணாமல் போன அந்தத் தேவனைத் தேடினார்கள்.(17) அவர்கள் அக்னியைக் கண்டுபிடித்த போது, அந்தத் தேவன் வன்னிமரத்திற்குள் கிடப்பதைக் கண்டனர்.(18) ஓ! மனிதர்களில் புலியே, பிருஹஸ்பதியைத் தங்கள் தலைமையாக் கொண்ட தேவர்கள், அந்தத் தேவனைக் கண்டுபிடிப்பதில் வெற்றியை அடைந்து, வாசவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியை அடைந்தனர்.(19) பிறகு அவர்கள் எங்கிருந்து வந்தனரோ அந்த இடத்திற்கே திரும்பி சென்றனர். அக்னியும், பிருகுவின் சாபத்தினால், பிரம்மத்தை உச்சரிப்பவரான அந்தப் பிருகு சொன்னது போலவே அனைத்தையும் உண்பவனானான்.(20)

நுண்ணறிவு கொண்ட பலராமன், அங்கே நீராடிய பிறகு, உலகங்கள் அனைத்தின் போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் {பிரம்மன்} எங்குத் தன் படைப்பு வேலைகளைச் செய்தானோ அந்தப் பிரம்மயோனிக்குச் சென்றான்.(21) பழங்காலத்தில், தலைவன் பிரம்மன், அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து அங்கே நீராடிய பிறகு, முறையான சடங்குகளைச் செய்து தேவர்களுக்காகத் தீர்த்தங்கள் அனைத்தையும் படைத்தான்.(22) பலதேவன் அங்கே நீராடி, பல்வேறு வகைத் தானங்களைச் செய்த பிறகு, ஓ! மன்னா, பலமிக்க ஐலபிலன் {குபேரன்} கடுந்தவங்களைச் செய்து எங்கே பொக்கிஷங்கள் அனைத்தின் தலைமையை அடைந்தானோ அந்தக் கௌபேரம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(23) அவன் {குபேரன்} (தவத்தில் ஈடுபட்டபடி) அங்கே வசித்தபோது அனைத்து வகைச் செல்வங்களும், அனைத்து விலைமதிப்புமிக்க ரத்தினங்களும் தாமாகவே அவனிடம் வந்தன. பலதேவன், அந்தத் தீர்த்தத்திற்குச் சென்று, அதன் நீரில் நீராடி, பிராமணர்களுக்கு முறையே அதிகச் செல்வத்தைக் கொடுத்தான்.(24)

அந்த இடத்தில் ராமன் {பலராமன்}, குபேரனின் சிறந்த நந்தவனத்தைக் கண்டான். பழங்காலத்தில், யக்ஷர்களின் தலைவனான உயர் ஆன்ம குபேரன், அங்கே கடுந்தவங்களைச் செய்து, பல வரங்களை அடைந்தான்.(25) பொக்கிஷங்களின் தலைமைப் பொறுப்பு, அளவிலா சக்தி கொண்ட ருத்ரனிடம் நட்பு, தேவன் என்ற நிலை, குறிப்பிட்ட திசைப் புள்ளியில் (வடக்குத் திசையின்) ஆதிக்கப் பொறுப்பு, நளகுபேரன் என்ற பெயரைக்கொண்ட ஒரு மகன் ஆகியவற்றை அங்கேதான் பெற்றான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவை யாவையும் அங்கேதான் அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} வேகமாக அடைந்தான்.(26) அங்கே வந்த மருத்துக்கள், அவனை (ஆட்சிப்பொறுப்பில்) முறையாக நிறுவினர். மேலும் அவன், தன் வாகனமாக நன்கு ஆயத்தம் செய்யப்பட்டதும், மனோ வேகம் கொண்டதுமான தெய்வீகத் தேர் ஒன்றையும், தேவர்களின் செல்வங்கள் அனைத்தையும் அடைந்தான்.(27) வெண்சந்தனத்தைப் பயன்படுத்துபவனான அந்தப் பலன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, அதிகச் செல்வத்தைத் தானமளித்து, வேகமாக மற்றொரு தீர்த்தத்திற்குச் சென்றான்.(28) அனைத்து வகை உயிரினங்களையும் கொண்ட அந்தத் தீர்த்தம் பதரபாசனை என்ற பெயரால் அறியப்படுகிறது. அங்கே ஒவ்வொரு பருவகாலத்தின் கனிகளும் எப்போதும் காணப்படும், மேலும், மலர்களும், அனைத்து வகைக் கனிகளும் எப்போதும் அபரிமிதமாகக் கிடைக்கும்” {என்றார் வைசம்பாயனர்}.(29)

சுருவாவதியும், அருந்ததியும்! – சல்லிய பர்வம் பகுதி – 48- பதரபாசனத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; பரத்வாஜரின் மகளான சுருவாவதி, இந்திரனை நினைத்துக் கடுந்தவம் இயற்றியது; அருந்ததியிடம் இலந்தைப் பழங்களைச் சமைத்துத் தரக் கேட்ட சிவன்; இமயத்தில் தவம்செய்வோர் அடையும் புண்ணியத்தை அடைந்த அருந்ததி; பதரபாசனத் தீர்த்தத்தின் மகிமை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(முன்பு சொன்னதைப் போலவே) ராமன் {பலராமன்}, தவசிகள் மற்றும் சித்தர்கள் பலரும் வசிக்கும் பதரபாசனம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான். அங்கே, பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவளும், சுருவாவதி {சுருதாவதி} என்ற பெயரைக் கொண்டவளுமான பரத்வாஜரின் மகள் கடுந்தவம் செய்து கொண்டிருந்தாள். அவள், ஒரு பிரம்மச்சாரினியின் வாழ்வை நோற்று வந்த கன்னிகையாவாள்.(1,2) அந்த அழகிய காரிகை {சுருதாவதி}, தேவர்களின் தலைவனை {இந்திரனைத்} தன் கணவனாக அடையும் விருப்பத்தால், பல்வேறு வகை நோன்புகளை நோற்று, கடுந்தவத்தைப் பயின்று வந்தாள்.(3) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பெண்கள் பயில மிகக் கடுமையான பல்வேறு நோன்புகளைத் தொடர்ச்சியாக அவள் நோற்றாள். பல வருடங்களும் கடந்து சென்றன.(4) இறுதியாக, பகனைத் தண்டித்தவனான போற்றுதலுக்குரியவன் {இந்திரன்}, அவளது அந்நடத்தை மற்றும் தவம் ஆகியவற்றின் விளைவாக அவளிடம் மனம் நிறைந்து, அவளை உயர்வாகக் கருதினான்.(5)

பலமிக்க அந்தத் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவரான உயர் ஆன்ம வசிஷ்டரின் வடிவத்தை ஏற்று, {சுருவாவதி இருந்த} அந்த ஆசிரமத்திற்கு வந்தான்.(6) தவசிகளில் முதன்மையானவரும், கடுந்தவங்களைக் கொண்டவருமான வசிஷ்டரைக் கண்ட அவள், ஓ! பாரதா {ஜனமேஜயா}, தவசிகளால் நோற்கப்படும் முறையான சடங்குகளின் படி அவரை வழிபட்டாள்.(7) நோன்புகளை அறிந்தவளும், மங்கலமானவளும், இனிய பேச்சுடையவளுமான அந்தக் காரிகை, அவரிடம் {வசிஷ்டரின் வடிவத்திலிருந்த இந்திரனிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவரே, ஓ! தவசிகளில் புலியே, ஓ! தலைவா, உமது ஆணைகளை எனக்குச் சொல்வீராக.(8) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, என் வலிமைக்குத்தக்கவாறு நான் உமக்குத் தொண்டாற்றுவேன். எனினும், சக்ரன் மீது கொண்டுள்ள மதிப்பின் {பக்தியின்} விளைவாக நான் {திருமணம் செய்து கொள்வதற்காக} உமக்கு என் கரத்தைத் தர மாட்டேன்.(9) என் நோன்புகள், நியமங்கள், கடும் தவம் ஆகியவற்றின் மூலம் மூவுலகங்களின் தலைவரான சக்ரனை, மனநிறைவு கொள்ளச் செய்வேன்” என்றாள்.(10)

அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {இந்திரன்}, அவளது நோன்புகளை அறிந்து கொண்டு, சிரித்துக்கொண்டே அவள் மீது தன் கண்களைச் செலுத்தி, ஓ! பாரதா {ஜனமேஜயனிடம்}, அவளிடம் இனிமையாக,(11) “நீ கடும் வகையிலான தவத்தைப் பயில்கிறாய். ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே {சுருதாவதியே}, அதை நான் அறிவேன். ஓ! மங்கலமானவளே, உன் இதயத்தில் இருக்கும் நோக்கமும், ஓ! அழகிய முகத்தைக் கொண்டவளே, எதை அடைய நீ முயல்கிறாயோ, அதுவும் உன்னால் அடையப்படும். தவங்களாலாயே அனைத்தும் அடையப்படுகின்றன. அனைத்தும் தவங்களைச் சார்ந்தே இருக்கின்றன.(12,13) ஓ! அழகிய முகத்தைக் கொண்டவளே, தேவர்களுக்குச் சொந்தமான அருள் உலகங்கள் அனைத்தையும் தவங்களால் அடைய முடியும். பெரும் மகிழ்ச்சியின் வேராகத் தவங்களே இருக்கின்றன.(14) ஓ! மங்கலமானவளே, கடுந்தவங்களைச் செய்து, தங்கள் உடலைக் கைவிட்ட மனிதர்கள், தேவர்களின் நிலையை அடைகிறார்கள். இந்த என் வார்த்தைகளை மனத்தில் கொள்வாயாக.(15) ஓ! அருளப்பட்ட காரிகையே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, இப்போது நீ எனக்கு இந்த ஐந்து இலந்தைப்பழங்களையும் சமைத்து {பக்குவம் செய்து) தருவாயாக” என்றான் {வசிஷ்டரின் வடிவில் இருந்த இந்திரன்}.

{அசுரன்} பலனைக் கொன்றவனான போற்றுதலுக்குரியவன், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குறிப்பிட்ட மந்திரங்களை மனத்தால் உரைப்பதற்காக அந்த ஆசிரமத்தின் அருகில் இருக்கும் சிறந்த தீர்த்தத்திற்குச் சென்றுவிட்டான். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {ஜனமேஜயா}, அந்தத் தீர்த்தமானது, இந்திரனின் பெயராலேயே மூன்று உலகங்களிலும் அறியப்படுகிறது.(16,17) உண்மையில், அந்தத் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, அந்தக் காரிகையின் {சுருவாவதியின்} அர்ப்பணிப்பைச் சோதிக்கும் காரியத்திற்காகவே அந்த இலந்தைப் பழங்களைச் சமைப்பதைத் தடுக்கும் வழியில் அவ்வாறு செயல்பட்டான்.(18) அந்தக் காரிகை, ஓ! மன்னா, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பேச்சைத் துறந்து, அதில் {சமைப்பதில்} கவனத்தை நிலைக்கச் செய்து, தன் பணியைச் செய்யத் தொடங்கி, களைப்பெதையும் உணராதவளாக அப்பணியைச் செய்து கொண்டிருந்தாள்.(19) ஓ! மன்னர்களில் புலியே, இவ்வாறே உயர்ந்த நோன்புகளைக் கொண்ட அந்தக் காரிகை, அந்த இலந்தைகளைச் சமைக்கத் தொடங்கினாள். ஓ! மனிதர்களில் காளையே, தன் பணியில் அமர்ந்திருந்த அவளுக்கு, பகல்வேளை முடியப் போனாலும், மென்மையானதற்கான எந்த அறிகுறிகளையும் அந்த இலந்தைகள் காட்டவில்லை.(20)

அங்கே அவள் வைத்திருந்த எரிபொருள் {விறகு} அனைத்தும் எரிக்கப்பட்டுவிட்டது. எரிபொருளில்லாமல் நெருப்பு அணையப் போவதைக் கண்ட அவள் {சுருதாவதி}, தன் அங்கங்களையே எரிக்கத் தொடங்கினாள்.(21) அந்த அழகிய காரிகை முதலில் தன் கால்களை நெருப்புக்குள் நுழைத்தாள். அந்தப் பாவமற்ற காரிகை, தனது கால்கள் எரியும்போது அசையாமல் அமர்ந்திருந்தாள்.(22) அந்தக் களங்கமற்ற பெண், தன் கால்கள் எரிவதைக் கருத்தில் கொள்ளவே இல்லை. செய்வதற்குக் கடினமான அதை {அக்காரியத்தை}, (விருந்தினராக வந்த) அந்த முனிவருக்கு {வசிஷ்டரான இந்திரனுக்கு} நன்மை செய்யும் விருப்பத்தால் செய்தாள்.(23) வலி நிறைந்த அந்தச் செய்கையின் போது, அவளது முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அக்காரியத்தால் அவள் உற்சாகத்தையும் இழக்கவில்லை. நெருப்புக்குள் தன் அங்கங்களைத் திணித்த அவள், ஏதோ அவற்றைக் குளிர்ந்த நீருக்குள் முக்கியிருப்பதைப் போலப் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தாள்.(24) ஓ! பாரதா, “இந்த இலந்தைகளை நன்றாகச் சமைப்பாயாக” என்ற அம்முனிவரின் வார்த்தைகளை மட்டுமே அவள் தன் மனத்தில் சுமந்திருந்தாள்.(25)

அந்தப் பெரும் முனிவரின் வார்த்தைகளை மனத்தில் சுமந்த அந்த மங்கலமான காரிகை, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இலந்தைகள் மென்மையாவதற்கு எந்த அறிகுறியையும் காட்டவில்லையெனினும் சமைத்துக் கொண்டேயிருந்தாள்.(26) போற்றுதலுக்குரிய அக்னி, அவளது கால்களை உண்டான் {எரித்தான்}. எனினும் இக்காரியத்தில் அந்தக் கன்னிகை சிறு வலியையும் உணரவில்லை.(27) மூவுலகங்களின் தலைவன் {இந்திரன்}, அவளது இச்செயல்பாட்டைக் கண்டு பெரிதும் மனநிறைவடைந்தான். பிறகு அவன், அந்தக் காரிகைக்குத் தன் சொந்த வடிவத்தை வெளிப்படுத்தினான்.(28)

அப்போது தேவர்களின் தலைவன் , கடும் நோன்புகளைக் கொண்ட அந்தக் கன்னிகையிடம் {இந்திரன் சுருவாவதியிடம்}, “உன் அர்ப்பணிப்பு, தவம் மற்றும் நோன்புகளால் நான் நிறைவடைந்தேன்.(29) எனவே, ஓ! மங்கலமானவளே{சுருதாவதியே}, நீ பேணிவளர்க்கும் விருப்பமானது நிறைவை அடையும். ஓ! அருளப்பட்டவளே, உன் உடலைத் துறந்து, சொர்க்கத்தில் நீ என்னோடு வாழ்வாய்.(30) இந்த ஆசிரமமானது, அனைத்துப் பாவங்களையும் அகற்றவல்லதாக உலகத்தில் முதன்மையான தீர்த்தமாக இருக்கும். ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, இது பதரபாசனம் என்ற பெயரில் அறியப்படும். இது மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டுப் பெரும் முனிவர்களால் புகழப்படும்.(31)

ஓ! மங்கலமானவளே {சுருதாவதியே}, பாவமற்றவளே, உயர்ந்த அருளைக் கொண்டவளே, ஒரு சந்தர்ப்பத்தில் ஏழு முனிவர்களும் இமயமலைக்குச் செல்லும் போது, (அவர்களில் ஒருவரின் {வசிஷ்டரின்} மனைவியான) அருந்ததியை இந்தத் தீர்த்தத்தில்தான் விட்டுச் சென்றனர்.(32) கடும் நோன்புகளைக் கொண்டோரான அந்த உயர்ந்த அருளாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கான கனிகளையும், கிழங்குகளையும் சேகரிக்கச் சென்றனர்.(33) தங்கள் வாழ்வாதாரத்தை அடைவதற்காக இமயமலையின் காடொன்றில் அவர்கள் வாழ்ந்து வந்தபோது, பனிரெண்டு வருடங்களுக்கு நீடித்த பஞ்சம் ஏற்பட்டது.(34) அந்தத் தவசிகள் தங்களுக்கென ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு, அங்கேயே வாழத் தொடங்கினர். அதேவேளையில் அருந்ததியானவள், (தான் விட்டுச் செல்லப்பட்ட அந்த இடத்திலேயே) கடுந்தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தாள்.(35) வரமளிப்பவனான முக்கண் தேவன் (மஹாதேவன்), கடும் நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அருந்ததியைக் கண்டு மிகவும் மகிழ்ந்து அங்கே வந்தான்.(36)

அந்தச் சிறப்புமிக்க மஹாதேவன், ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்று, அவளிடம் வந்து, “ஓ! மங்கலமானவளே, நான் பிச்சையை விரும்புகிறேன்” என்றான்.(37) அதற்கு அந்த அழகிய அருந்ததி, அவனிடம், “ஓ! பிராமணரே, சேகரித்து வைத்திருந்த எங்கள் உணவு தீர்ந்துவிட்டது. இந்த இலந்தைகளை உண்பாயாயாக” என்றாள்.(38) மஹாதேவன், “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, இந்த இலந்தைகளைச் சமைப்பாயாக” என்று பதிலுரைத்தான். இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, அந்தப் பிராமணருக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக அவள் அந்த இலந்தைகளைச் சமைக்கத் தொடங்கினாள்.(39) கொண்டாடப்பட்டவளான அருந்ததியானவள், அந்த இலந்தைகளை நெருப்பிலிட்டு, (மஹாதேவனின் உதடுகளில் இருந்து) பல்வேறு அற்புதமான, அழகிய, புனிதமான உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். (ஏதோ அஃது ஒரு நாள் என்பதைப் போல) அந்தப் பனிரெண்டு வருட பஞ்சம் கழிந்துவிட்டது.(40)

உணவில்லாமல், சமைப்பதிலும், அந்த மங்கலமான உரைகளைக் கேட்பதிலும் ஈடுபட்டிருந்த அவளுக்கு {அருந்ததிக்கு}, அந்தப் பனிரெண்டு வருடங்களும், ஒரு நாளை போலக் கடந்து சென்றன.(41) பிறகு அந்த ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, மலையில் இருந்து கனிகளை அடைந்து அந்த இடத்திற்குத் திரும்பி வந்தனர். போற்றுதலுக்குரிய மஹாதேவன், அருந்ததியிடம் மிகவும் நிறைவடைந்து, அவளிடம்,(42) “ஓ! அறமறிந்தவளே, இந்த முனிவர்களை முன்பு போலவே அணுகுவாயாக. உன் தவங்களாலும், நோன்புகளாலும் நான் நிறைவடைந்தேன்” என்றான்.(43) போற்றுதலுக்குரிய ஹரன், அப்போது தன் சொந்த வடிவை ஏற்று நின்று கொண்டிருந்தான். நிறைவடைந்தவனான அவன், அவர்களிடம் உன்னத நடத்தை கொண்ட அருந்ததியைக் குறித்து (இவ்வார்த்தைகளில்),(44) “மறுபிறப்பாளர்களே {பிராமணர்களே}, இந்த மங்கை ஈட்டியிருக்கும் தவத்தகுதியானது, இமயத்தின் சாரலில் நீங்கள் ஈட்டியதைவிட மிகப் பெரியது என நான் கருதுகிறேன்.(45) இவள், பனிரெண்டு வருடங்களாக உண்ணாமல், சமைத்துக் கொண்டே பனிரெண்டு வருடங்களைக் கடத்தி, கடுமையான தவத்தைச் செய்திருக்கிறாள்” என்றான்.(46) பிறகு, அருந்ததியிடம் பேசிய அந்தத் தெய்வீக மஹாதேவன், அவளிடம், “ஓ! மங்கலமான பெருமாட்டியே, உன் இதயத்தில் இருக்கும் வரத்தைக் கேட்பாயாக” என்று சொன்னான்.(47)

அப்போது சிவந்த நிறத்தில் அகன்ற கண்களைக் கொண்டிருந்த அந்த மங்கை, ஏழு முனிவர்களுக்கு மத்தியிலும் வைத்து, அந்தத் தேவனிடம், “ஓ! தெய்வீகமானவனே, நீ என்னிடம் நிறைவுகொண்டிருந்த இந்த இடமானது சிறந்த தீர்த்தமாகட்டும். பதரபாசனம் என்ற பெயரில் இஃது அறியப்படட்டும். இது சித்தர்கள் மற்றும் தெய்வீக முனிவர்களுக்குப் பிடித்தமான ஓய்விடமாக இருக்கட்டும்.(48) மேலும், ஓ! தேவர்களின் தேவா, எவன் தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, நோன்பை நோற்று மூன்று இரவுகள் இங்கே தங்கியிருக்கிறானோ, அவன் பனிரெண்டு வருடங்கள் நோன்பிருந்ததற்கான கனியை அடையட்டும்” என்று கேட்டாள்.(49) அந்தத் தேவன் {மகாதேவன்}, “அப்படியே ஆகட்டும்” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அந்த ஏழு முனிவர்களாலும் புகழப்பட்டு, சொர்க்கத்திற்குச் சென்றான்.(50) உண்மையில், அம்முனிவர்கள், அந்தத் தேவனைக் கண்டும், களைப்படையாமல், நிறம் மாறாமல், பசி தாகத்தைத் தாங்கவல்லவளாக இருந்த அருந்ததியைக் கண்டும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(51) ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, இவ்வாறே பழங்காலத்தில் தூய ஆன்மா கொண்ட அருந்ததியானவள், ஓ! கடும் நோன்புகளைக் கொண்ட காரிகையே {சுருதாவதியே}, என் நிமித்தமாக நீ அடைந்தது போலவே உயர்ந்த வெற்றியை அடைந்தாள்.(52)

எனினும், ஓ! இனிய கன்னிகையே {{சுருதாவதியே}, நீ இன்னும் கடுமையான தவத்தைச் செய்திருக்கிறாய். உன் நோன்புகளால் நிறைவடைந்த நான், ஓ! மங்கலமானவளே, அருந்ததிக்கு அருளப்பட்ட வரத்தைவிட மேம்பட்ட வரத்தை உனக்குத் தருவேன். ஓ! இனிமையானவளே, அருந்ததிக்கு வரத்தை அருளிய அந்த உயர் ஆன்ம தேவனின் சக்தியின் மூலமும், உனது ஆற்றலின் மூலமும் நான் உனக்கு, “இந்தத் தீர்த்தத்தில் ஓரிரவு மட்டுமே வசித்து, (தியானத்தில்) ஆன்மாவை நிலைக்கச் செய்பவன், தன் உடலைக் கைவிட்டு, (வேறு வழிகளில்) அடைவதற்குக் கடினமான பல அருள் உலகங்களை அடைவான்” என்ற மற்றொரு வரத்தையும் இப்போது கொடுப்பேன்” என்றான் {இந்திரன்}.(53-55)

பிறகு, பெரும் சக்தியைக் கொண்டவனான ஆயிரங்கண் சக்ரன் {இந்திரன்}, தூய்மையடைந்த சுருவாவதியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றான்.(56) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வஜ்ரதாரி சென்றதும், அங்கே இனிய நறுமணமிக்க தெய்வீக மலர்மாரி பொழிந்தது.(57) தெய்வீகத் துந்துபிகளும் பேரொலியுடன் அங்கே முழங்கின. ஓ! ஏகாதிபதி, மங்கலமான நறுமணமிக்கத் தென்றலும் அங்கே வீசியது.(58) அந்த மங்கலமான சுருவாவதி, தன் உடலைக் கைவிட்டு, இந்திரனின் மனைவியானாள். கடுந்தவத்தால் அந்நிலையை அடைந்த அவள், எப்போதும் அவனுடன் {இந்திரனுடன்} விளையாடிக் கொண்டு தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினாள்” {என்றார் வைசம்பாயனர்}.(59)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “சுருவாவதியின் தாயார் யார்? அந்த அழகிய சுருவாவதி எவ்வாறு வளர்ந்தாள்? ஓ! பிராமணரே, என் ஆவல் அதிகமாக இருப்பதால், இதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(60)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒரு காலத்தில், மறுபிறப்பாளரும், உயர் ஆன்மா கொண்ட முனிவருமான பரத்வாஜருக்கு, அகன்ற கண்களையுடையவளான கிரிடாச்சி {கிருதாசி} என்ற அப்சரஸ் கடந்து செல்வதைக் கண்டு உயிர்நீர் வெளியேறியது.(61) அதன்பேரில் அந்தத் தவசிகளில் முதன்மையானவர் {பரத்வாஜர்} அதைத் தன் கைகளில் ஏந்தினர். மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட ஒரு குடுவையில் அது வைக்கப்பட்டது. அந்தக் குடுவையிலேயே சுருவாவதி என்ற பெண் பிறந்தாள்.(62) தவத்தை செல்வமாகக் கொண்ட பரத்வாஜர், பிறப்புக்குப் பிறகு நடத்தப்படும் சடங்குகளைச் செய்து அவளுக்கு ஒரு பெயரைச் சூட்டினார்.(63) அறஆன்மா கொண்ட அம்முனிவர் {பரத்வாஜர்}, தேவர்களுக்கு முன்னிலையில் வைத்து சுருவாவதி என்ற பெயரைச் சூட்டினார். பரத்வாஜர், அப்பெண்ணைத் தன் ஆசிரமத்தில் வைத்து இமயத்தின் காடுகளுக்குச் சென்றார்.(64) யாதவர்களில் முதன்மையானவனும், பெரும் கண்ணியமும் மிக்கப் பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு அதிகச் செல்வத்தைக் கொடுத்து, ஆன்மாவைத் தியானத்தில் நிலைக்கச் செய்து, சக்ரனின் {இந்திரனின்} தீர்த்தத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(65)

தீர்த்தங்களில் புனிதநீராடல்! – சல்லிய பர்வம் பகுதி – 49-இந்திர, ராம, யமுனா, ஆதித்திய தீர்த்தங்களுக்குச் சென்ற பலராமன்; இந்திரன், பரசுராமர், வருணன், சூரியன் ஆகியோர் செய்த வேள்விகள்; மதுகைடபர்களைக் கொன்று ஆதித்தியத் தீர்த்தத்தில் நீராடிய விஷ்ணு; யோகசக்திகளை அடைந்த வியாசர் மற்றும் அசிததேவலர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “’அந்த யதுக்களின் வலிமைமிக்கத் தலைவன் {பலராமன்}, இந்திரனின் தீர்த்தத்திற்குச் சென்று, அங்கே உரிய சடங்குகளுடன் நீராடி, பிராமணர்களுக்குச் செல்வத்தையும், ரத்தினங்களையும் கொடுத்தான்.(1) தேவர்களின் தலைவன் {இந்திரன்} அங்கே நூறு வேள்விகளைச் செய்து, பிருஹஸ்பதிக்கு அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்தான்.(2) உண்மையில், அந்தச் சக்ரன் {இந்திரன்}, வேதங்களை அறிந்தோரான பிராமணர்களின் உதவியுடனும், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்டுள்ள சடங்குகளுடனும் அவ்வேள்விகள் அனைத்தையும் செய்தான். அந்த வேள்விகளில் அனைத்தும் தடங்கலற்றவையாக இருந்தன. அனைத்து வகைக் குதிரைகளும் அங்கே கொண்டுவரப்பட்டன. பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் அபரிமிதமாக இருந்தன.(3) ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் காந்தியைக் கொண்ட சக்ரன் அந்த நூறு வேள்விகளையும் முறையாக முடித்ததும், சதக்ரது என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(4) அனைத்துப் பாவங்களையும் துடைக்கவல்லதும், மங்கலமானதுமான அந்தப் புனிதத் தீர்த்தம், இதன் காரணமாகவே இந்திரத் தீர்த்தம் என்று அவன் பெயரால் அழைக்கப்பட்டது.(5)

அங்கே முறையாக நீராடிய பலதேவன், சிறந்த உணவும் மற்றும் ஆடைகளைத் தானமளித்துப் பிராமணர்களை வழிபட்டான். பிறகு அவன், ராமரின் {பரசுராமரின்} பெயரால் அழைக்கப்பட்டதும், மங்கலமானதுமான முதன்மையான தீர்த்தத்திற்குச் சென்றான்.(6) உயர்ந்த அருளையும், பெரும் தவத் தகுதியையும் கொண்ட பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, மீண்டும் மீண்டும் பூமியைப் பணியச் செய்து, க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் அனைவரையும் கொன்றார்.(7) (அத்தகு அருஞ்செயல்களைச் செய்த) ராமர், முனிவர்களில் சிறந்தவரும், தன் ஆசானுமான கசியபரின் துணையுடன் ஒரு வாஜபேய வேள்வியையும், நூறு குதிரை வேள்விகளையும் அந்தத் தீர்த்தத்தில்தான் செய்தார். அங்கே ராமர் {பரசுராமர்}, தன் ஆசானுக்குக் கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் வேள்விக்கூலியாகக் கொடுத்தார்.(8) ஓ! ஜனமேஜயா, அந்தப் பெரும் ராமர் {பரசுராமர்}, அங்கே முறையாக நீராடி, பிராமணர்களுக்குத் தானமளித்து அவர்களை வழிபட்டார்.(9) அவர், பல்வேறு வகை ரத்தினங்கள், பசுக்கள், யானைகள், பெண் பணியாட்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் ஆகிய பல்வேறு தானங்களை அளித்த பிறகு காட்டுக்குள் ஓய்ந்து சென்றார்.(10)

தேவர்களும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் வந்து போகும் இடமானதும், புனிதமானதுமான அந்த முதன்மையான தீர்த்தத்தில் நீராடிய பிறகு, பலதேவன் {பலராமன்}, அங்கே இருந்த தவசிகளை முறையாக வழிபட்டு, யமுனா என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(11) ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், பெரும்பிரகாசத்தைக் கொண்டவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனும், அதிதியின் மகனுமான வருணன், அந்தத் தீர்த்தத்தில்தான் ராஜசூய வேள்வியைச் செய்தான்.(13) ஓ!மன்னா {ஜனமேஜயா}, போரில் மனிதர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் ராட்சசர்களை அடக்கியவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான வருணன், அந்தத் தீர்த்தத்தில்தான் தன் மகத்தான வேள்வியைச் செய்தான். அந்த முதன்மையான வேள்வி தொடங்கியதும், மூவுலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் போர் மூண்டது.(14) வேள்விகளில் முதன்மையான (வருணனின்) ராஜசூயம் நிறைவடைந்ததும், ஓ! ஜனமேஜயா, க்ஷத்திரியர்களுக்கிடையில் ஒரு பயங்கரமான போர் தொடங்கியது.(15)

எப்போதும் தயாளமாக இருப்பவனும், பலமிக்கவனுமான பலதேவன், அங்கே முனிவர்களை வழிபட்டு, தானத்தை விரும்பியோருக்கு பல தானங்களை அளித்தான்.(16) மகிழ்ச்சியால் நிறைந்தவனும், பெரும் முனிவர்களால் புகழப்பட்டவனும், காட்டு மலர் மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட வீரனுமான அந்தப் பலதேவன் அடுத்ததாக ஆதித்தியம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(17) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, போற்றுதலுக்குரியவனும், பெருங்காந்தியைக் கொண்டவனுமான சூரியன் அங்கே ஒரு வேள்வியைச் செய்து, (அண்டத்தின்) ஒளிக்கோள்கள் அனைத்தின் மீதான அரசுரிமையையும், தனக்கான பெரும் சக்தியையும் அடைந்தான்.(18)

அந்த ஆற்றின் {சரஸ்வதி ஆற்றின்} கரையில் அமைந்துள்ள அந்தத் தீர்த்தத்தில், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்கள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள்,(19) தீவில் பிறந்தவர் (வியாசர்), சுகர், மதுசூதனனான கிருஷ்ணன், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா},(20) ஆயிரக்கணக்கான பலர் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் ஆகியோர் எப்போதும் வசிக்கின்றனர். உண்மையில், பழங்காலத்தில் விஷ்ணுவானவன், மது, கைடபன் என்ற அசுரர்கள் இருவரைக் கொன்று, மங்கலமானதும், புனிதமானதுமான அந்தச் சரஸ்வதியின் தீர்த்தத்தில் நீராடி {பாவம் விலகுவதற்காகத்} தனக்கான தூய்மைச் சடங்குகளைச் செய்தான்.(21,22) அற ஆன்மா கொண்டவரான தீவில் பிறந்தவரும் ((துவைபாயனரான} வியாசரும்) அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பெரும் யோக சக்திகளையும், உயர்ந்த வெற்றியையும் அடைந்தான்.(23) பெரும் தவத் தகுதியை உடையவரான முனிவர் அசித தேவலரும், உயர்ந்த யோகத் தியானத்தில் தன் ஆன்மாவை நிலைக்கச் செய்து அந்தத் தீர்த்தத்தில் நீராடியே பெரும் யோக சக்திகளை அடைந்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

அசிததேவலரும், ஜைகிஷவ்யரும்! – சல்லிய பர்வம் பகுதி – 50-தேவலர் மற்றும் ஜைகிஷவ்யர் வரலாறு; இல்லறம் நோற்ற அசிததேவலர்; யாசகம் கேட்டு வந்த ஜைகிஷவ்யர்; ஐயமிட்டு நிறைவையடைந்த தேவலர்; ஜைகிஷவ்யர் அடைந்த தகுதிகளை எண்ணி பொறாமை கொண்ட தேவலர்; தேவலருக்கு யோகம் போதித்த ஜைகிஷவ்யர்; இருவரும் முக்தியை அடைந்தது; சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பழங்காலத்தில், அறஆன்மா கொண்டவரும், இல்லறம் சார்ந்த கடமைகளை நோற்பவரும், அசிததேவலர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு முனிவர் அந்தத் தீர்த்தத்தில் {ஆதித்திய தீர்த்தத்தில்} வாழ்ந்து வந்தார்.(1) அவர், அறத்திற்குத் தம்மை அர்ப்பணித்து, சுயக்கட்டுப்பாடுடைய தூய்மையான வாழ்வை மேற்கொண்டார். பெரும் தவத் தகுதியை உடைய அவர் {அசிததேவலர்}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவராகவும், எவருக்கும் தீங்கிழைக்காதவராகவும் இருந்தார். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சொல், செயல், எண்ணம் ஆகியவற்றில் அனைத்து உயிரினங்களிடமும் அவர் {அசிததேவலர்} சமமாகவே நடந்து கொண்டார்.(2) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கோபமற்றிருந்த அவருக்கு, நிந்தனையும், புகழும் சமமாகவே இருந்தன. ஏற்புடையவை {இனியவை} மற்றும் ஏற்பில்லாதவையிடம் சமமான மனப்பாங்கைக் கொண்டிருந்த அவர், யமனைப் போலவே முற்றிலும் பாரபட்சமற்றவராக {நடுநிலைமை கொண்டவராக} இருந்தார்.(3) அந்தப் பெரும் தவசி, தங்கத்தையும், கூழாங்கற்களின் குவியலையும் சமமான கண்களுடனேயே கண்டார். அவர் தினமும், தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் (தம்மிடம் வரும்) பிராமணர்கள் ஆகியோரை வழிபட்டார். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்த அவர், எப்போதும் பிரம்மச்சரிய நோன்பையே நோற்றுவந்தார்.(4)

ஒரு காலத்தில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, யோகத்திற்குத் தம்மை அர்ப்பணித்திருந்தவரும், ஆழ்ந்த தியானத்தைக் கொண்டவரும், பிச்சைக்காரர்களின் வாழ்வை வாழ்பவருமான {சந்நியாசியுமான} ஜைகிஷவ்யர் என்ற பெயரையுடைய நுண்ணறிவுமிக்க ஒரு தவசியானவர், தேவலரின் ஆசிரமத்திற்கு வந்தார்.(5) யோகத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவரும், பெருங்காந்தியைக் கொண்டவருமான அந்தப் பெருந்தவசி {ஜைகிஷவ்யர்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தேவலரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார்.(6) உண்மையில் அந்தப் பெரும் முனிவரான ஜைகிஷவ்யர் அங்கே வசித்து வந்தபோது, தேவலர், எந்தக் காலத்திலும், ஒருபோதும் அவரைப் புறக்கணிக்காமல் அவர் மீதும் தம் கண்களை நிலைக்கச் செய்திருந்தார்.(7) ஓ! ஏகாதிபதி, இவ்வாறு பழங்காலத்தில் இந்த இருவரும் நீண்ட காலத்தைக் கழித்தனர். ஒரு சந்தர்ப்பத்தில், தவசிகளில் முதன்மையானவரான அந்த ஜைகிஷவ்யரைத் தேவலரால் காண முடியவில்லை.(8) எனினும், ஓ! ஜனமேஜயா, அறம் சார்ந்தவரும், பிட்சாடன {பிச்சை எடுத்து வாழும்} வாழ்வை நோற்பவருமான அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி {ஜைகிஷவ்யர்}, இரவுணவுக்கான நேரத்தில் ஐயம்வேண்டி {யாசகம் வேண்டி} தேவலரை அணுகினார்.(9) அந்தப் பெரும் தவசி {ஜைகிஷவ்யர்}, ஆண்டியின் கோலத்தில் மீண்டும் தோன்றியதைக் கண்ட தேவலர், அவருக்குப் பெரும் கௌரவங்களை அளித்து, மிகுந்த மனநிறைவைக் கொண்டார்.(10)

அந்தத் தேவலர், முனிவர்களால் விதிக்கப்பட்ட சடங்குகளுடனும், பெருங்கவனத்துடனும் தம்மால் இயன்ற அளவுக்குத் தமது விருந்தினரைப் பல வருடங்களாக வழிபட்டார்.(11) எனினும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு நாள் உயர் ஆன்ம தேவலரின் இதயத்தில், அந்தப் பெரும் முனிவரைக் கண்டு பெருங்கவலை உண்டானது.(12) அவர் {அசிததேவலர்} தனக்குள்ளேயே, “நான் இந்தத் தவசியைப் {ஜைகிஷவ்யரைப்} பல வருடங்களாக வழிபட்டு வருகிறேன். எனினும், அலட்சியமாக இருக்கும் இந்த ஆண்டி என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லையே” என்று நினைத்தார்.(13) அருள்நிறைந்த தேவலர், இவ்வாறு நினைத்துக் கொண்டு, கையில் மண்குடத்துடன் ஆகாயமார்க்கமாகப் பெருங்கடலின் கரைக்குச் சென்றார்.(14) ஆறுகளின் தலைவனான பெருங்கடலின் கரையை அடைந்த உயர் ஆன்ம தேவலர், ஓ! பாரதா, அங்கே தனக்கு முன்பே வந்திருந்த ஜைகிஷவ்யரைக் கண்டார்.(15)

இதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்த தலைவர் அசிதர், தனக்குள்ளேயே, “எனக்கு முன்பே பெருங்கடலை அடைந்து, தூய்மைச் சடங்குகளைச் செய்ய இந்த ஆண்டியால் எவ்வாறு முடிந்தது” என்று நினைத்தார்.(16) இவ்வாறே அந்தப் பெருமுனிவரான அசிதர் நினைத்தார். தூய்மைச் சடங்குகளை முறையாகச் செய்து, அதன்மூலம் தூய்மையடைந்த அவர் {அசிததேவலர்}, அமைதியாகப் புனிதமான மந்திரங்களை உரைக்கத் தொடங்கினார்.(17) தூய்மைச்சடங்குகளையும், மௌன வேண்டுதல்களையும் நிறைவு செய்த அந்த அருளப்பட்ட தேவலர், தமது மண் குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு தமது ஆசிரமத்திற்குச் சென்றார். அந்தத் தவசி தமது ஆசிரமத்திற்குள் நுழைந்தபோதே அங்கே அமர்ந்திருந்த ஜைகிஷவ்யரைக் கண்டார்.(18,19) தேவலரிடம் ஒரு வார்த்தையும் பேசாத பெரும் தவசியான ஜைகிஷவ்யர், அவரது ஆசிரமத்தில் ஒரு மரக்கட்டையைப் போல வாழ்ந்து வந்தார்.(20)

தவங்களின் பெருங்கடலான அந்தத் தவசி {ஜைகிஷவ்யர்} (தான் செல்வதற்கு முன்பாகவே) கடலுக்குச் சென்று நீராடியதைக் கண்ட அசிதர், இப்போது தாம் வருவதற்கு முன்பாகவே அவர் அசிரமத்திற்கும் வந்துவிட்டதைக் கண்டார்.(21) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அசிததேவலர், ஜைகிஷவ்யரின் தவங்களால் யோகத்தின் மூலமாக அடையப்பட்ட இந்தச் சக்தியைக் கண்டு, அக்காரியம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(22) உண்மையில், அந்தச் சிறந்த தவசி {தேவலர்}, “எவ்வாறு இவர் எனக்கு முன்பே பெருங்கடலிலும், மீண்டும் என் ஆசிரமத்திலும் காணப்பட்டார்?” என்று மிகவும் ஆச்சரியமடைந்தார்.(23) மந்திரங்களை அறிந்தவரும், தவசியுமான அந்தத் தேவலர், இவ்வாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஓ! ஏகாதிபதி, ஆண்டியின் வாழ்வை வாழும் இந்த ஜைகிஷவ்யர் உண்மையில் யார் என்பதை அறிய தமது ஆசிரமத்தில் இருந்து எழுந்து வானத்தில் உயர்ந்தார்.(24) தேவலர், வானத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சித்தர்களின் கூட்டத்தையும், அந்தச் சித்தர்களால் மரியாதையுடன் வழிபடப்படும் ஜைகிஷவ்யரையும் கண்டார்.(25)

தமது நோன்புகளில் உறுதியுடனும், (முயற்சிகளில்) விடாமுயற்சியுடனும் இருந்த தேவலர், அக்காட்சியைக் கண்டு கோபத்தால் நிறைந்தார். பிறகு அவர் {அசிததேவலர்} அந்த ஜைகிஷவ்யர் சொர்க்கத்திற்குப் புறப்பட்டுச் செல்வதைக் கண்டார்.(26) அடுத்ததாக அவர் பிதுருக்களின் உலகத்திற்குச் செல்வதை அவர் கண்டார். அதன் பிறகு அவர் யமலோகத்திற்குச் செல்வதையும் அவர் கண்டார்.(27) அந்தப் பெரும்தவசியான ஜைகிஷவ்யர் யமலோகத்தில் இருந்து, சோமலோகத்திற்குப் பறந்து செல்வதைக் கண்டார். பிறகு அவர் (ஒன்றன்பின் ஒன்றாக) குறிப்பிட்ட கடுமையான வேள்விகளைச் செய்தவர்கள் செல்லும் அருள் உலகங்களுக்குச் செல்வதைக் கண்டார்.(28) அங்கிருந்து அக்னிஹோத்ரிகளின் உலகத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்து தர்ச மற்றும் பௌர்ணமாச வேள்விகளைச் செய்தோரின் உலகத்திற்குச் சென்றார்.(29) நுண்ணறிவைக் கொண்டவரான தேவலர், தேவர்களாலேயே வழிபடப்படுவதும், விலங்குகளைக் கொன்று வேள்வி செய்தோர் அடைவதுமான தூய்மையான உலகத்திற்கு அவர் செல்வதைக் கண்டார்.(30)

அடுத்ததாக அவர், சாதுர்மாஸ்யம் என்றழைக்கப்படுவதும் மற்றும் அதே போன்ற பலவேறு வேள்விகளையும் செய்த தவசிகளின் இடத்திற்குச் செல்வதைத் தேவலர் கண்டார். அங்கிருந்து அவர், அக்னிஷ்டோம வேள்வியைச் செய்தவர்களுக்குச் சொந்தமான உலகதிற்குச் சென்றார்.(31) அடுத்ததாகத் தேவலர், அக்னிசுடம் என்றழைக்கப்படும் வேள்வியைச் செய்தோரின் உலகத்திற்கத் தமது விருந்தினர் {ஜைகிஷவ்யர்} செல்வதைக் கண்டார்.(32) உண்மையில், அவர் வாஜபேயம் என்றழைக்கப்படும் முதன்மையான வேள்வியையும், அபரிமிதமான தங்கம் தேவைப்படும் பிற வேள்விகளை {பகுஸுவர்ணகம் போன்றவற்றைச்} செய்த உயர்ந்த ஞானியரின் உலகங்களுக்குச் செல்வதைத் தேவலர் கண்டார்.(33) பிறகு அவர், ராஜசூயம் மற்றும் பௌண்டரிகம் ஆகியற்றைச் செய்தோரின் உலகத்திற்கு ஜைகிஷவ்யர் செல்வதைக் கண்டார்.(34) குதிரை வேள்வி {அஸ்வமேதம்} மற்றும் மனிதர்கள் கொல்லப்படும் வேள்வி {நரமேதம்} ஆகியவற்றைச் செய்த முதன்மையான மனிதர்களின் உலகங்களில் அவரைக் கண்டார்.(35)

உண்மையில் தேவலர், சௌத்ராமணி என்றழைக்கப்படும் வேள்வி மற்றும் அடைவதற்கு மிகக் கடினமானதும், அனைத்து விலங்குகளின் இறைச்சியும் தேவைப்படுவதுமான வேள்வியையும் {சர்வமேதம்} செய்தோரின் உலகத்தில் ஜைகிஷவ்யரைக் கண்டார்.(36) துவாதசாகம் என்றழைக்கப்படும் வேள்வி மற்றும் அதே தன்மை கொண்ட பல்வேறு வேள்விகளைச் செய்தோரின் உலகத்தில் ஜைகிஷவ்யர் காணப்பட்டார்.(37) அடுத்ததாக அசிதர், தமது விருந்தினர், மித்ராவருணன் மற்றும் ஆதித்தியர்களின் உலகங்களுக்குச் செல்வதைக் கண்டார்.(38) அடுத்ததாக அசிதர், தன் விருந்தினர் {ஜைகிஷவ்யர்} ருத்திரர்கள், வசுக்கள் மற்றும் பிருஹஸ்பதியின் உலகங்களைக் கடந்து செல்வதைக் கண்டார்.(39) கோலோகம் என்றழைக்கப்படும் அருள் உலகத்திற்குப் பறந்து சென்ற ஜைகிஷவ்யர், அடுத்ததாகப் பிரம்மசத்ரம் செய்தோரின் உலகத்தைக் கடக்கும்போது காணப்பட்டார்.(40)

தமது சக்தியால் மேலும் மூன்று உலகங்களைக் கடந்த அவர் {ஜைகிஷ்வ்யர்}, கணவர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோரும், கற்புடையவர்களுமான பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட உலத்தில் அவர் காணப்பட்டார்.(41) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அந்த இடத்தில், ஆழ்ந்த யோகம் கொண்டவரும், தவசிகளில் முதன்மையானவருமான ஜைகிஷவ்யர் தன் பார்வையில் இருந்து மறைந்துவிட்டதை அசிதர் கண்டார்.(42) அப்போது உயர்ந்த அருளைக் கொண்டவரான அந்தத் தேவலர், ஜைகிஷவ்யரின் சக்தி, அவரது நோன்புகளின் சிறப்பு, ஒப்பிலாத அவரது யோக வெற்றி ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்தார்.(43) பிறகு சுயக்கட்டுப்பாடு கொண்டவரான அசிதர், மரியாதையுடன் தமது கரங்களைக் குவித்து, பிரம்மசத்ரம் செய்தோரின் உலகத்தில் இருந்த முதன்மையான சித்தர்களிடம்,(44) “நான் ஜைகிஷவ்யரைக் காணவில்லை. பெரும் சக்தி கொண்ட அந்தத் தவசி எங்கே இருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வீராக. என் ஆவல் அதிகமாக இருப்பதால் இதை நான் கேட்க விரும்புகிறேன்” என்று விசாரித்தார்.(45)

அதற்குச் சித்தர்கள் {அசிததேவலரிடம்}, “ஓ! கடும் நோன்புகளைக் கொண்ட தேவலரே, நாங்கள் சொல்லும் உண்மையைக் கேட்பீராக. ஜைகிஷவ்யர் அழிவில்லாத பிரம்மலோகத்திற்குச் சென்றுவிட்டார்” என்றனர்”.(46)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிரம்மசத்ரியின் பகுதிகளில் வசித்த சித்தர்கள் சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட அசிதர், உயரப் பறக்க முயற்சித்து விரைவில் கீழே விழுந்தார்.(47) அப்போது சித்தர்கள், மீண்டும் தேவலரிடம், “ஓ! தேவலரே, ஜைகிஷவ்யர் சென்றிருக்கும் பிரம்ம லோகத்திற்கு நீர் செல்லத் தகுந்தவரல்ல” என்றனர்”.(48)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சித்தர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவலர், முறையான வரிசையில் ஒவ்வொரு உலகமாகத் தாண்டி கீழே வந்தார்.(49) உண்மையில், சிறகு படைத்த ஒரு பூச்சியைப் போல அவர் வேகமாகத் தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார். தமது வசிப்பிடத்திற்குள் நுழையும் போதே அங்கே அமர்ந்திருக்கும் ஜைகிஷவ்யரைக் கண்டார்.(50) ஜைகிஷவ்யரின் தவ யோகத்தின் மூலம் அடையப்பட்ட சக்தியைக் கண்ட தேவலர், அதுகுறித்து நேர்மையான அறிவோடு சிந்தித்து,(51) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பணிவுடன் அந்தப் பெரும் தவசியை அணுகி, அந்த உயர் ஆன்ம ஜைகிஷவ்யரிடம், “ஓ! போற்றுதலுக்குரியவரே, மோட்ச (விடுதலையின்) அறத்தை {மோக்ஷதர்மத்தைப்} பின்பற்ற நான் விரும்புகிறேன்” என்றார்.(52) அவரது வார்த்தைகளைக் கேட்ட ஜைகிஷவ்யர், அவருக்குப் பாடங்களைக் கொடுத்தார். அவர் {ஜைகிஷவ்யர்}, யோகம் மற்றும் அழியாத உயர்ந்த கடமைகளையும், அவற்றின் நேர்மாறான தன்மைகளையும் அவருக்கு {தேவலருக்குப்} போதித்தார்.(53) அந்தப் பெருந்துறவி {ஜைகிஷவ்யர்}, உறுதியான தீர்மானத்தில் இருக்கும் அவரைக் கண்டு, (அவ்வறத்திற்குள் அவர் நுழைவதற்காக) விதிக்கப்பட்டிருக்கும் செயல்களனைத்தையும் முறையான சடங்குகளுடன் செய்தார்.(54) அப்போது பித்ருக்களுடன் சேர்ந்த உயிரினங்கள் அனைத்தும், மோட்ச அறத்தைப் பின்பற்றத் தீர்மானத்திருக்கும் தேவலரைக் கண்டு, “ஐயோ, இனி நமக்கு யார் உணவளிப்பார்?” என்று அழத் தொடங்கின.(55)

{திசைகளின்} பத்து புள்ளிகளிலும் எதிரொலித்த அவ்வுயிரினங்களின் இந்தப் புலம்பல்களைக் கேட்ட தேவலர், மோட்ச அறத்தை {துறவறத்தைக்} கைவிடுவதில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தார்.(56) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு அனைத்து வகையிலான புனித கனிகளும், கிழங்குகளும், மலர்களும், இலையுதிர்க்கும் மூலிகைகளும், “தீய இதயம் கொண்டவனும், அற்பனுமான இந்தத் தேவலன், மீண்டும் நம்மை வெட்டிப் பிடுங்கப் போகிறான் என்பதில் ஐயமில்லை. ஐயோ, அனைத்துயிர்களுக்கும் முற்றான தீங்கிழையாமையை உறுதிசெய்துவிட்டு, அவன் செய்யப்போகும் தீங்கை அவன் அறியவில்லை” என்றன.(57,58) இதனால், அந்தச் சிறந்த தவசி, தன் அறிவின் துணையுடன் சிந்திக்கத் தொடங்கி, “மோட்ச அறம், அல்லது இல்லறம் ஆகிய இரண்டில்[1] எனக்கு எது சிறந்தது?” என்று நினைத்தார்.(59) இதுகுறித்துச் சிந்தித்த தேவலர், ஓ மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, இல்லறத்தைக் கைவிட்டு, மோட்ச அறத்தை {துறவறத்தைப்} பின்பற்றினார்.(60)

இவ்வாறு சிந்தித்த தேவலர், அந்தத் தீர்மானத்தின் விளைவால், ஓ! பாரதா {ஜனமேஜயா}, உயர்ந்த வெற்றியையும், உயர்ந்த யோகத்தையும் அடைந்தார்.(61) அப்போது, பிருஹஸ்பதியின் தலைமையிலான தேவர்கள், ஜைகிஷவ்யரையும், அந்தத் தவசியின் தவங்களையும் புகழ்ந்தனர்.(62) தவசிகளில் முதன்மையானவரான நாரதர், அந்தத் தேவர்களிடம், “அசிதரை ஆச்சரியத்தில் நிறைத்த ஜைகிஷவ்யரிடம் கடுந்தவம் இல்லை” என்றார்.(63) அப்போது அந்தச் சொர்க்கவாசிகள், இந்த அச்சந்தரும் வார்த்தைகளைச் சொன்ன நாரதரிடம், “பெரும் தவசியான ஜைகிஷவ்யரைக் குறித்து அவ்வாறு சொல்லாதீர்.(64) ஆற்றல், தவம் மற்றும் யோக சக்தியில் இந்த உயர் ஆன்மாவுக்கு மேன்மையான, அல்லது இணையான எவரும் இல்லை. ஜைகிஷவ்யர் மற்றும் அசிதரின் சக்தி இவ்வாறானதே. அந்த இருவரின் இடமும், அந்த உயர் ஆன்மாக்கள் இருவரின் தீர்த்தமும் இதுதான் {ஆதித்திய தீர்த்தம் தான்}.(66) உயர் ஆன்மா கொண்டவனும், உன்னதச் செயல்களைச் செய்பவனுமான அந்தக் கலப்பைதாரி {பலராமன்}, அங்கே நீராடி, பிராமணர்களுக்குச் செல்வத்தைத் தானமளித்து, பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டிய பிறகு, சோம தீர்த்தத்தை நோக்கிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(67)

ததீசரும், சாரஸ்வதரும்! – சல்லிய பர்வம் பகுதி – 51-ததீச, சாரஸ்வத முனிவர்களின் வரலாறு; ததீச முனிவரை மயக்கிய அலம்புசை; சரஸ்வதி ஆற்றிடம் பிறந்த சாரஸ்வதர்; ததீசரின் எலும்புகளால் ஆயுதம் செய்து அசுரர்களை வென்ற இந்திரன்; பனிரெண்டு வருடங்கள் நீடித்த பஞ்சம்; சரஸ்வதியாற்றின் மீன்களை உண்டு வாழ்ந்த சாரஸ்வத முனிவர்; அறுபதாயிரம் முனிவர்களுக்கு வேதங்களைக் கற்பித்த சாரஸ்வதர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா, அந்தத் தீர்த்தத்தில்தான் {சோம தீர்த்தத்தில்தான்}, பழங்காலத்தில், நட்சத்திரங்களின் தலைவன் {சந்திரன்}, தாரகனைத் தீமையின் வேராகக் கொண்ட ஒரு பெரும்போரில் ஈடுபட்டு, ராஜசூய வேள்வியைச் செய்தான்.(1) தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அறவோனான பலன் {பலராமன்}, அத்தீர்த்தத்தில் நீராடி, தானங்கள் பலவற்றைச் செய்து, சாரஸ்வதர் என்ற பெயர் கொண்ட முனிவரின் தீர்த்தத்திற்குச் சென்றான்.(2) அங்கே முன்பொரு காலத்தில், பனிரெண்டு {12} வருட பஞ்சம் நீடித்தபோது, தவசியான அந்தச் சாரஸ்வதர், பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு வேதங்களைக் கற்பித்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(2,3)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! தவத் தகுதியைக் கொண்டவரே, அந்தத் தவசியான சாரஸ்வதர், பனிரெண்டு வருடகாலப் பஞ்சத்தின் போது, ஏன் வேதங்களைக் கற்பித்தார்?” என்று கேட்டான்.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில், நுண்ணறிவும், பெரும் தவத்தகுதியும் கொண்ட ஒரு தவசி இருந்தார். அவர் ததீசர் {ததீசி} என்ற பெயரால் கொண்டாடப்பட்டார். தமது புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்ட அவர், ஒரு பிரம்மச்சாரியின் வாழ்வை நோற்றார்.(5) அவரது மிகக் கடுமையான தவங்களின் விளைவால், சக்ரன் {இந்திரன்} பேரச்சத்தால் பீடிக்கப்பட்டான். பல்வேறு வகை வெகுமதிகளைக் கொடுக்க முன்வந்தும், அந்தத் தவசியை (அவரது தவத்திலிருந்து) விலக்க முடியவில்லை.(6) இறுதியாக அந்தப் பகனைத் தண்டித்தவன் {இந்திரன்}, அந்தத் தவசியை ஆசையில் மயக்கமடையச் செய்ய, பேரழகுடையவளும், அலம்புசை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு தெய்வீக அப்சரஸை அவரிடம் அனுப்பி வைத்தான்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த உயர் ஆன்ம தவசி, தேவர்களை நிறைவு செய்யும் செயலை {தவத்தை} எங்கே செய்து வந்தாரோ, அந்தச் சரஸ்வதியின் கரையில் மேற்கண்ட {அலம்புசை என்ற} பெயரையுடைய தெய்வீகக் காரிகை தோன்றினாள்.(8) அழகிய அங்கங்கள் கொண்ட அந்தக் காரிகையைக் {அலம்புசையைக்} கண்டதும், அந்தத் தூய ஆன்மா கொண்ட தவசியின் {ததீசரின்} உயிர் வித்து வெளிப்பட்டது. சரஸ்வதியில் விழுந்த அஃதை அவர் கையில் ஏந்தினார்.(9) உண்மையில், ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, அவ்வித்தைக் கண்ட அந்த ஆறானவள் {சரஸ்வதி}, அதைத் தன் கருவறையில் தாங்கினாள். சரியான காலத்தில் அது கருவாக வளர்ந்தது. அந்தப் பேராறும், உயிர் கொண்ட பிள்ளையாவதற்காக அதைத் தாங்கிக் கொண்டாள்.(10)

ஓ! தலைவா {ஜனமேஜயா}, காலம் வந்தபோது, அந்தப் பிள்ளையை ஈன்ற அந்த முதன்மையான ஆறானவள் {சரஸ்வதியானவள்}, அப்பிள்ளையை எடுத்துக் கொண்டு அம்முனிவரிடம் {ததீசரிடம்} வந்தாள்.(11) அந்த முனிவர்களில் சிறந்தவர் {ததீசர்}, {முனிவர்களின்} சபையில் இருப்பதைக் கண்ட சரஸ்வதி, அவரிடம் {ததீசரிடம்} பிள்ளையைக் கொடுக்கும்போது,(12) “ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பினால், நான் உமது மகனைத் தாங்கினேன். அலம்புசை என்ற அப்சரஸைக் கண்டதும் வெளிப்பட்ட உமது வித்தைக் கண்டு, உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பினாலும், உமது சக்திக்கு எந்த அழிவும் ஏற்படாது என்பதை அறிந்தும், அஃதை என் கருவறையில் தாங்கினேன்.(13,14) என்னால் கொடுக்கப்படும் உமது களங்கமற்ற பிள்ளையை ஏற்றுக் கொள்வீராக” என்றாள். இவ்வாறு அவளால் {சரஸ்வதியால்} சொல்லப்பட்ட அம்முனிவர் {ததீசர்}, அப்பிள்ளையை ஏற்றுக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தார்.(15)

அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {ததீசர்}, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, பாசத்தால் தன் மகனின் தலையை முகர்ந்து, சில காலத்திற்கு அவனைத் தன் நெருக்கமான அரவணைப்புக்குள் வைத்திருந்தார்.(16) அந்த ஆற்றிடம் {சரஸ்வதியிடம்} மனம் நிறைந்தவரும், பெரும் தவசியுமான அந்தத் ததீசர், அவளுக்கு ஒரு வரத்தைக் கொடுக்கும் வகையில், “ஓ! அருளப்பட்டவளே, இதுமுதல், உன் நீரைக் கொண்டு விஸ்வதேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்களின் அனைத்து இனங்கள், அப்சரஸ்கள் ஆகியோருக்குப் பலியுணவு {திருப்படையல்} கொடுக்கப்படும்போது, அதனால் அவர்கள் பெரும் மகிழ்வை அடைவார்கள்” என்றார்.(17) அந்தப் பேராற்றிடம் {சரஸ்வதியிடம்} இவ்வாறு சொன்ன அந்தத் தவசி, நிறைவை அடைந்து, மகிழ்ச்சியால் நிறைந்து, இவ்வார்த்தைகளால் அவளைப் புகழ்ந்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவற்றை முறையாகக் கேட்பாயாக.(18)

{ததீசர் சரஸ்வதியிடம்}, “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, பழங்காலத்தில் பிரம்மத் தடாகத்தில் இருந்து நீ எழுந்து வந்தாய். ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள் அனைவரும் உன்னை அறிவார்கள்.(19) எப்போதும் ஏற்புடைய {இனிமையான} குணத்தைக் கொண்ட நீ, எனக்குப் பெரும் நன்மையைச் செய்திருக்கிறாய். ஓ! அழகிய நிறத்தைக் கொண்டவளே, இந்த உனது பெரும்பிள்ளை, சாரஸ்வதன் என்ற பெயரில் அறியப்படுவான்.(20) புதிய உலகங்களையே உண்டாக்கவல்லவனான இந்த உனது மகன், உன் பெயராலேயே அறியப்படுவான். உண்மையில், அந்தப் பெருந்தவசி சாரஸ்வதன் என்ற பெயரால் அறியப்படுவான்.(21) ஓ! அருளப்பட்டவளே, பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் பஞ்சம் ஏற்படும்போது, இந்தச் சாரஸ்வதன், பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு வேதங்களைக் கற்பிப்பான்.(22) ஓ! அருளப்பட்ட சரஸ்வதியே, ஓ அழகியே, என் அருளால் நீ எப்போதும் புனிதமான நதிகள் அனைத்திலும் முதன்மையானவளாக இருப்பாய்” என்றார் {ததீசர்}.(23)

அந்தத் தவசியால் {ததீசரால்} வரங்கள் அருளப்பட்ட பிறகு, அந்தப் பேராறானவள் இவ்வாறே புகழப்பட்டாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பிறகு அந்த ஆறானவள் தன் பிள்ளையை எடுத்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் சென்றாள்.(24) அதேவேளையில், தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் போர் நேர்ந்த தருணத்தில், சக்ரன் {இந்திரன்}, ஆயுதங்களைத் தேடி மூவுலகங்களிலும் திரிந்து கொண்டிருந்தான்.(25) எனினும், அந்தப் பெருந்தேவன் {இந்திரன்}, தேவர்களின் எதிரிகளைக் கொல்லத்தக்க ஆயுதங்களைக் கண்டடைவதில் தோல்வியுற்றான்.(26) பிறகு அந்தச் சக்ரன் தேவர்களிடம், “இந்தப் பேரசுரர்களை என்னால் சந்திக்க முடியவில்லை. உண்மையில், ததீசரின் எலும்புகள் இல்லாமல் நமது எதிரிகளை நம்மால் கொல்ல முடியாது.(27) எனவே தேவர்களே, அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் {ததீசரிடம்} சென்று, அவரிடம், “ஓ! ததீசரே, உமது எலும்புகளைத் தாரும். அவற்றைக் கொண்டு நாங்கள் எங்கள் எதிரிகளைக் கொல்வோம்” என்று வேண்டிக் கொள்ளுங்கள்” என்றான்.(28) அவர்களால் மன்றாடிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த முனிவர்களில் முதன்மையானவர் {ததீசர்}, எந்தத் தயக்கமுமின்றித் தம்முயிரைக் கொடுத்தார். தேவர்களுக்கு ஏற்புடையதைச் செய்த அந்தத் தவசி, வற்றாத தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்ட பல உலகங்களை அடைந்தார்.(29)

அதேவேளையில் சக்ரன் {இந்திரன்}, அவரது எலும்புகளைக் கொண்டு, வஜ்ரம், சக்கரம், கனத்த கதாயுதங்கள், பலவகையிலான தண்டங்கள் மற்றும் தடிகள் போன்ற பல்வேறு ஆயுதங்களை மகிழ்ச்சியாக உண்டாக்கினான். படைப்பாளனுக்கே இணையானவரான ததீசர், அனைத்துயிர்களுடைய தலைவனின் {பிரம்மனின்} மகனும், பெரும் முனிவருமான பிருகுவால் கடுந்தவங்களின் துணைகொண்டு பெறப்பட்டவராவார்[1].(31) பருத்த அங்கங்களும், பெரும் சக்தியும் கொண்டவரான ததீசர், உலகின் உயிரினங்களில் பலமிக்கவராகப் படைக்கப்பட்டார். மகிமைக்காகக் கொண்டாடப்படுபவரான அந்தப் பலமிக்கத் ததீசர், மலைகளின் மன்னனைப் போன்ற உயரத்தை அடைந்தார். பகனைத் தண்டித்தவன் {இந்திரன்}, அவரது {ததீசரது} சக்தியால் எப்போதும் கவலையடைந்திருந்தான்.(32) பிரம்ம சக்தியில் பிறந்த வஜ்ரத்தை, மந்திரங்களால் ஈர்த்த இந்திரன், ஓ! பாரதா, அதை ஏவியபோது பேரொலியை எழுப்பி, தைத்தியர்களின் தொண்ணூற்றொன்பது வீரர்களைக் கொன்றான்.(33) பயங்கரமான நீண்ட காலம் சென்றதும், ஓ! மன்னா, பனிரெண்டு ஆண்டுகளுக்கு நீடித்த பஞ்சம் ஏற்பட்டது.(34) பனிரெண்டாண்டு காலம் அந்தப் பஞ்சம் நீடித்த போது, ஓ! ஏகாதிபதி, பெரும் முனிவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(35)அனைத்துத் திசைகளிலும் அவர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டவரும், தவசியுமான சாரஸ்வதரும், தப்பி ஓடுவதிலேயே தன் இதயத்தை நிலைநிறுத்தினார். அப்போது சரஸ்வதி ஆறானவள், அவரிடம் {சாரஸ்வதரிடம்}, “ஓ! மகனே, இங்கிருந்து நீ செல்ல வேண்டாம். இங்கேயே எப்போதும் பெரிய மீன்களை உனக்கு நான் உணவாகக் கொடுப்பேன். எனவே, இங்கேயே இருப்பாயாக” என்றாள்.(37) (அந்த ஆற்றால்) இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் தவசி {சாரஸ்வதர்}, முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் உணவுக் காணிக்கைகளைக் கொடுத்து அங்கேயே வாழ்ந்து வந்தார். தமது தினசரி உணவை அடைந்த அவர், இவ்வாறே தன் உயிரையும், தேவர்களையும் தொடர்ந்து தாங்கி வந்தார்.(38) பனிரெண்டு வருட பஞ்சம் கடந்த பிறகு, வேதங்களின் உரைகளைக் குறித்துப் பெருமுனிவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.(39) அம்முனிவர்கள், பசித்த வயிறுகளுடன் திரிந்து கொண்டிருந்ததில், தங்கள் வேத அறிவை இழந்திருந்தனர். உண்மையில், அவர்களில் எவரும் சாத்திரங்களைப் புரிந்து கொள்ளக்கூடியவராக இல்லை.(40)

அவர்களில் எவரோ ஒருவர், குவிந்த கவனத்தோடு முனிவர்களில் முதன்மையான சாரஸ்வதர், வேதங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவரைச் சந்திக்க நேர்ந்தது.(41) முனிவர்களின் சபைக்குத் திரும்பிய அவர் {அந்த ஒருவர்}, ஒப்பற்ற ஒளியையும், தேவர்களைப் போன்ற மேனியையும் கொண்டிருந்த சாரஸ்வதர், தனிமையான காட்டில் வேதங்களைப் படித்துக் கொண்டிருப்பதைக் குறித்து அவர்களிடம் {அந்தச் சபையில் இருந்த முனிவர்களிடம்} சொன்னார்.(42) பிறகு அந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்து, அந்தத் தவசிகளில் சிறந்த சாரஸ்வதரிடம், “ஓ!தவசியே, எங்களுக்குக் கற்பிப்பீராக” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள். அந்தத் தவசியும் {சாரஸ்வதரும்} அவர்களிடம், “முறையாக என் சீடர்கள் ஆவீர்களாக” என்று மறுமொழிகூறினார்.(43,44)

அதற்கு அந்தத் தவசிகளின் சபையானது {சாரஸ்வதரிடம்}, “ஓ! மகனே, நீ வயதால் மிகவும் இளையவனாக இருக்கிறாய்” என்றது. அதற்கு அவர் அந்தத் தவசிகளிடம், “என் அறத்தகுதி அழிவடையாமல் இருக்க நான் அத்தகு வழியிலேயே செயல்பட வேண்டும்.(45) எவன் முறையில்லாமல் கற்பிப்பிப்பானோ, எவன் முறையில்லாமல் கற்பானோ, அவர்கள் இருவரும் வெகு விரைவில் {அறிவின்} அழிவையடைந்து ஒருவரையொருவர் வெறுப்பார்கள்.(46) வருடங்கள் {வயது}, மூப்பு {தலைமயிர் நரைத்தல்}, செல்வம், சொந்தங்கள் ஆகியவற்றால் முனிவர்கள் தங்கள் தகுதியை அடைவதில்லை. நம்மில் எவர் வேதங்களைப் படித்துப் புரிந்து கொள்ளவல்லவரோ அவரே பெரியவர்” என்றார்.(47) அவரது இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்முனிவர்கள், முறையாக அவரது சீடர்களாகி, அவரிடம் இருந்து வேதங்களை அடைந்து, மீண்டும் தங்கள் சடங்குகளைப் பயின்றனர்.(48) மறுபிறப்பாள {பிராமண} முனிவரான சாரஸ்வதரிடம் இருந்து வேதங்களை அடைவதற்காக {இவ்வாறு} அறுபதாயிரம் {60,000} முனிவர்கள் அவரது சீடர்களானார்கள்.(49) ஏற்புடைய அம்முனிவர் சிறுவனாயிருப்பினும், அவருக்குக் கீழ்ப்படிந்த அம்முனிவர்கள் ஒவ்வொருவரும், அவர் அமர்வதற்கான ஆசனமாகக் கைநிறைந்த புற்களை {தர்ப்பைப் புற்களைக்} காணிக்கை அளித்தனர்.(50)

ரோகிணியின் வலிமைமிக்க மகனும், கேசவனின் {கிருஷ்ணனின்} அண்ணனுமானவன் {பலராமன்}, அத்தீர்த்தத்தில் {சாரஸ்வதத் தீர்த்தத்தில்} செல்வத்தைத் தானமளித்து, பழங்காலத்தில் முதிர்ந்த பெண்ணொருத்தி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த மற்றொரு தீர்த்தத்திற்கு {விருத்தகன்யாஸ்ரமத்திற்கு} மகிழ்ச்சியாகச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(51)

முதிர்கன்னியும், சிருங்கவானும்! – சல்லிய பர்வம் பகுதி – 52-குணிகர்க்கர் உண்டாக்கிய மகள்; திருமணத்தில் விருப்பமில்லாமல் கடுந்தவம் செய்து முதிர் கன்னியாகியது; திருமணம் செய்யாததால் அருள் உலகங்கள் கிடைக்காது என்று அவளிடம் சொன்ன நாரதர்; ஓர் ஒப்பந்தத்தின் பேரில் அவளைத் திருமணம் செய்து கொண்ட சிருங்கவான்; விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்திற்குண்டான பலன்; சல்லியனின் மறைவை அறிந்த பலராமன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, பழங்காலத்தில் அந்தக் கன்னிகை ஏன் தவத்தில் ஈடுபட்டாள். என்ன காரணத்திற்காக அவள் தவத்தில் ஈடுபட்டாள்? அவளது நியமம் என்ன?(1) நான் ஏற்கனவே உம்மிடம் கேட்ட உரையானது ஒப்பற்றதாகவும், புதிர் நிறைந்ததாகவும் இருக்கிறது. (இப்போது) அந்தக் கன்னிகை எவ்வாறு தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டாள் என்ற விபரங்கள் அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குணி-கர்க்கர் என்ற பெயரில் பெரும் சக்தியையும், பெரும் புகழையும் கொண்ட ஒரு முனிவர் இருந்தார். அந்தத் தவசிகளில் முதன்மையானவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, கடுந்தவங்களைச் செய்து, தம் விருப்பத்தின் ஆணையால் அழகிய புருவங்களைக் கொண்ட ஒரு மகளை[1] உண்டாக்கினார். கொண்டாடப்பட்ட தவசியான அந்தக் குணிகர்க்கர் அவளைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார். பிறகு அவர், ஓ! மன்னா, தன் உடலைக் கைவிட்டு, சொர்க்கத்திற்குச் சென்றார்.(3,4) களங்கமற்றவளும், இனிமையானவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், அழகிய புருவங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, தொடர்ந்து மிகக் கடுமையான தவங்களைச் செய்துவந்தாள். அவள் தன் உண்ணாநோன்புகளால் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டாள்.(5)இத்தகு கடும் தவங்களைப் பயில்வதிலேயே நீண்ட காலம் கடந்து சென்றது. அவளது தந்தை {குணி-கர்க்கர்} அவளை ஒரு கணவனுக்குக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தாலும், தனக்குத் தகுந்த ஒரு கணவனை அவள் காணாததால் திருமணத்தில் அவள் விருப்பம் கொள்ளவில்லை.(6) கடுந்தவங்களால் தொடர்ந்து தன் உடலை மெலியச் செய்த அவள், அந்தத் தனிமையான காட்டில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வளவு கடுமையான முயற்சியாலும், வயதாலும், தவங்களாலும் தன்னை மெலியச் செய்திருந்தாலும், அவள் தன்னை மகிழ்ச்சி நிறைந்தவளாகவே கருதினாள்.(8) இறுதியாக எந்த ஒருவரின் துணையுமின்றி ஓரடியும் நகர முடியாத (மிக முதிர்ந்த வயதான) நிலையை அவள் அடைந்ததும், அடுத்த உலகத்திற்குச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினாள்.(9)

அவள், தன் உடலைக் கைவிடப்போவதைக் கண்ட நாரதர், அவளிடம், “ஓ! பாவமற்றவளே, திருமணச் சடங்கால் நீ தூய்மையடையாததன் விளைவால், உனக்கு எந்த அருள் உலகமும் கிடைக்காது.(10) ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவளே, இதை நாங்கள் சொர்க்கத்தில் கேட்டிருக்கிறோம். உன் கடுந்தவங்கள் பெரியவாயினும், அருள் உலகங்களில் உனக்கு உரிமையேதும் கிடையாது” என்றார்.(11) நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த முதிர்ந்த மங்கை, முனிவர்களின் சபைக்குச் சென்று, “எவர் திருமணத்தில் என் கரங்களை ஏற்பாரோ, அவருக்கு என் தவத்தில் பாதியை நான் அளிப்பேன்” என்றாள்.(12) அவள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், காலவரின் மகனும்[2], சிருங்கவான் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு முனிவர், ஓர் ஒப்பந்ததை முன்மொழிந்து அவளது கரங்களை ஏற்றார். {அந்த சிருங்கவான்},(13) “ஓ! அழகிய பெண்ணே, நீ என்னுடன் ஓரிரவு மட்டுமே வாழ்வாய் என்ற இந்த ஒப்பந்தத்தின் மூலம், நான் உன் கரத்தை ஏற்கிறேன்” என்றார். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட அவள், தனது கரத்தை அவரிடம் கொடுத்தாள்.(14) உண்மையில், அந்தக் காலவரின் மகன் {சிருங்கவான்}, விதிக்கப்பட்டிருந்த விதிகளின்படி நெருப்பில் முறையாக ஆகுதிகளை ஊற்றி அவளது கரத்தை ஏற்று, அவளைத் திருமணம் செய்து கொண்டார்.(15)அவ்விரவில் அவள், தெய்வீக ஆடையை உடுத்திக் கொண்டு, தெய்வீக ஆபரணங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக களிம்புகள் {சந்தனம்} மற்றும் நறுமணப் பொருட்களைப் பூசப்பட்ட, அழகிய நிறம் கொண்ட இளம்பெண்ணாக மாறினாள்.(16) சுடர்மிக்க அவளது அழகைக் கண்ட காலவரின் மகன் {சிருங்கவான்}, மிகவும் மகிழ்ச்சியடைந்து அவளது துணையுடன் ஓரிரவைக் கழித்தார். காலையில் அவள் அவரிடம்,(17) “ஓ! பிராமணரே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உம்மிடம் நான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் நிறைவடைந்தது. நீர் அருளப்பட்டிருப்பீராக, நான் இப்போது உம்மைவிட்டுச் செல்கிறேன்” என்றாள்.(18) அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவள், மீண்டும், “நீர்க்காணிக்கைகளுடனும், ஆழ்ந்த கவனத்துடனும் சொர்க்கவாசிகளை {தேவர்களை} நிறைவுசெய்தபிறகு, இந்தத் தீர்த்தத்தில் {விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்தில்} எவன் ஓரிரவைக் கழிப்பானோ, அவன், ஐம்பத்தெட்டு வருடங்கள் பிரம்மச்சரிய நோன்பை நோற்றதன் தகுதியை அடைவான்” என்றாள்.(20)

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கற்புடைய மங்கை சொர்க்கத்திற்குச் சென்றாள். அவளது தலைவனான முனிவர் {சிருங்கவான்}, அவளது அழகை நினைத்து நினைத்து மிகவும் உற்சாகமற்றவராக ஆனார்.(21) அவர் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவால் அவர் அவளுடைய பாதித் தவத்தையும் சிரமத்துடன் ஏற்றுக் கொண்டார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அவளது அழகால் கவலையில் ஆழ்ந்த அவர் {சிருங்கவான்}, தன்னுடலைக் கைவிட்டு விரைவில் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.(22) நான் உனக்குச் சொன்ன இதுவே அந்த முதிர்ந்த கன்னிகையின் {விருத்தகன்யையின்} மேன்மைபொருந்திய வரலாறாகும். இதுவே அவளது பிரம்மச்சரியம் மற்றும் சொர்க்கத்திற்கான அவளது மங்கலப் புறப்பாடு ஆகியவற்றைக் குறித்த விவரிப்பாகும்.(23) அங்கே இருந்தபோதுதான், சல்லியனின் படுகொலையைக் குறித்துப் பலதேவன் {பலராமன்} கேள்விப்பட்டான். அங்கே பிராமணர்களுக்குத் தானமளித்த அவன், ஓ! எதிரிகளை எரிப்பவனே, போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்ட சல்லியனின் நிமித்தமாகத் துயரத்தை அடைந்தான்.(24) பிறகு அந்த மதுகுலத்தோன் {பலராமன்}, சமந்தபஞ்சகத்தின் {வாயிலை விட்டு வெளியே} சுற்றுப்புறத்திற்கு வந்து, குருக்ஷேத்திரப் போரின் விளைவுகளைக் குறித்து முனிவர்களிடம் விசாரித்தான்.(25) குருக்ஷேத்திரப் போரின் விளைவுகள் குறித்து அந்த யதுகுலத்தின் சிங்கத்தால் கேட்கப்பட்ட அந்த உயர் ஆன்மாக்கள், நடந்தது அனைத்தையும் குறித்து அவனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்”.(26)

குருக்ஷேத்திரமே உயர்ந்த புண்ணியத்தலம்! – சல்லிய பர்வம் பகுதி – 53-பலராமனுக்குக் குருக்ஷேத்திரத்தின் வரலாற்றைச் சொன்ன முனிவர்கள்; மண்ணை உழுது கொண்டிருந்த குரு மன்னன்; குரு மன்னனை மீண்டும் மீண்டும் கேலி செய்த இந்திரன்; விடாமுயற்சியுடன் களத்தை உழுத குரு; குருக்ஷேத்திரத்தில் இறப்பவர்கள் பாவிகளாயிருப்பினும் சொர்க்கத்தை அடைவார்கள் என்ற வரத்தை அளித்த இந்திரன்; அவ்வரத்தை அங்கீகரித்த பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன்…

அம்முனிவர்கள், “ஓ! ராமா {பலராமா}, உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மனின் அழிவிலா வடவேள்விப்பீடம் {உத்தரவேதி} என்று சமந்தபஞ்சகம் சொல்லப்படுகிறது. பெரும் வரங்களை அளிப்பவர்களான சொர்க்கவாசிகள் பழங்காலத்தில் அங்கே பெரும் வேள்வி ஒன்றைச் செய்தனர்.(1) அரசமுனிகளில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவும், அளவிலா சக்தியும் கொண்டவனான உயர் ஆன்ம குரு, இந்தக் களத்தில் பல வருடங்கள் உழுதான் {களத்தைச் சமப்படுத்தினான்}. எனவே இது குருக்ஷேத்திரம் (குருவின் களம்) என்று அழைக்கப்படுகிறது” என்றனர்.(2)

ராமன் {பலராமன்}, “அந்த உயர் ஆன்ம குரு இந்தக் களத்தை என்ன காரணத்திற்காக உழுதான்? தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களே இஃது உங்களால் உரைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(3)

அதற்கு அம்முனிவர்கள் {பலராமனிடம்}, “பழங்காலத்தில், ஓ! ராமா {பலராமா}, குருவானவன் இந்தக் களத்தின் மண்ணை விடாமுயற்சியுடன் உழுதுகொண்டிருந்தான். சொர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்த சக்ரன், அவனிடம் அதன் காரணத்தைக் கேட்கும் வகையில்,(4) “ஓ! மன்னா {குருவே}, இத்தகு விடாமுயற்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய்? ஓ! அரசமுனியே, எதை அடையும் நோக்கிற்காக நீ மண்ணை உழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.(5) அதற்குக் குரு, “ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, இந்தச் சமவெளியில் இறப்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவர்களாக அருள் உலகங்களை அடைய வேண்டும்” என்று மறுமொழி கூறினான்.(6) தலைவன் சக்ரனோ, அதைக் கேலி செய்து விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். எனினும், அரசமுனியான குரு, எந்தத் தளர்வையும் அடையாமல், தொடர்ந்து மண்ணை உழுது கொண்டிருந்தான்.(7)

அவனிடம் மீண்டும் திரும்பி வந்த சக்ரன், மீண்டும் மீண்டும் அவனைக் கேலி செய்துவிட்டுச் சென்றான். எனினும் குரு அக்காரியத்தில் எந்தத் தளர்ச்சியையும் உணரவில்லை.(8) தளராத விடாமுயற்சியுடன் மன்னன் {குரு} மண்ணை உழுவதைக் கண்ட சக்ரன் {இந்திரன்}, தேவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த ஏகாதிபதியின் தொழிலைக் குறித்துச் சொன்னான். இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், ஆயிரங்கண்களைக் கொண்ட தங்கள் தலைவனிடம், “ஓ! சக்ரா, உன்னால் முடியுமாகையால் அந்த அரசமுனி கேட்கும் வரத்தை அளித்து அவனை நிறுத்துவாயாக.(10) நமக்கான வேள்விகளைச் செய்யாமல், அங்கே இறப்பதால் மட்டுமே மனிதர்கள் சொர்க்கத்தை அடையமுடியுமென்றால், நம் இருப்பே ஆபத்துக்குள்ளாக நேரிடும்” என்றனர்.(11)

இவ்வாறு உற்சாகமளிக்கப்பட்ட சக்ரன், அந்த அரசமுனியிடம் திரும்பி வந்து, “மேலும் உழாதே. என் வார்த்தைகளின்படி செயல்படுவாயாக. ஓ! மன்னா {குரு மன்னா}, தங்கள் புலன்கள் அனைத்தும் விழிப்புடன் இருக்கையில் உணவைத் துறந்து இங்கே இறப்பவர்களும், இங்கே போரில் அழிவடைவோரும் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். ஓ! பேரான்மா கொண்டவனே, ஓ! ஏகாதிபதி, அவர்கள் சொர்க்கத்தின் அருளை அனுபவிப்பார்கள்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் குரு, “அப்படியே ஆகட்டும்” என்று சக்ரனுக்குப் பதிலளித்தான்.(14) பலனைக் கொன்றவனான சக்ரன், குருவிடம் விடைபெற்றுக் கொண்டு இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் விரைவாகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15)

ஓ! யது குலத்தில் முதன்மையானவனே {பலராமா}, இவ்வாறே அந்த அரசமுனியானவன் {குரு} பழங்காலத்தில் நிலத்தை உழுததால், இங்கே தங்கள் உயிர் மூச்சை விடுபவர்களுக்குச் சக்ரன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} உறுதியளித்தான்.(16) உண்மையில், பிரம்மனின் தலைமையிலான தேவர்களில் முதன்மையானோர் அனைவராலும், புனிதமான முனிவர்களாலும், பூமியில் இதைவிடப் புண்ணியத்தலம் வேறில்லை என்று {குருக்ஷேத்திரம்} அங்கீகரிக்கப்பட்டது.(17) இங்கே கடுந்தவங்களைச் செய்வோர், தங்கள் உடல்களைக் கைவிட்ட பிறகு பிரம்மனின் வசிப்பிடத்திற்குச் செல்கின்றனர்.(18) மேலும் இங்கே தங்கள் செல்வத்தைத் தானமளிக்கும் தகுதிவாய்ந்த மனிதர்கள் {புண்ணியவான்கள்}, விரைவில் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வார்கள்.(19) மேலும் நன்மையை எதிர்பார்த்து இங்கேயே நிரந்தரமாக வசிப்போர் யமலோகத்தை எப்போதும் காணமாட்டார்கள்.(20)

இங்கே பெரும் வேள்விகளைச் செய்யும் மன்னர்கள், இந்தப் பூமி நீடித்திருக்கும் வரை சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள்.(21) தேவர்களின் தலைவனான சக்ரனே இது குறித்து ஒரு வரியை இங்கே தொகுத்துப் பாடியிருக்கிறான். ஓ! பலதேவா, அதைக் கேட்பாயாக. {இந்திரன்},(22) “குருக்ஷேத்திரத்தில் இருந்து காற்றால் சுமந்து செல்லப்படும் புழுதியும் கூடத் தீச்செயல் புரிவோரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவர்களைச் சொர்க்கத்திற்குச் சுமந்து செல்லும்” {என்று பாடியுள்ளான்}.(23) தேவர்களில் முதன்மையானோரும், பிராமணர்களில் முதன்மையானோரும், நிருகனைப் போன்ற பூமியின் மன்னர்களில் முதன்மையானோர் பலரும், பிறரும், விலைமதிப்புமிக்க வேள்விகளை இங்கே செய்து, தங்கள் உடல்களைக் கைவிட்டபிறகு சொர்க்கத்திற்குச் சென்றனர்.(24)

தரந்துகை, அரந்துகை {என்ற இரு நதிகள்}, {பரசு}ராமத் தடாகங்களுக்கும், சமசக்ரம் {மசக்ருக தீர்த்தம்} ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வெளியே குருக்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. சமந்தபஞ்சகமானது, அனைத்துயிர்களின் தலைவனான பிரம்மனின் வட (வேள்விப்) பீடம் என்றழைக்கப்படுகிறது.(25) மங்கலமான, மிகப் புனிதமான, சொர்க்கவாசிகளாலும் மிகவும் மதிக்கப்பட்ட இந்த இடமானது {சொர்க்கத்திற்குரிய} அனைத்து குணநலன்களையும் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இங்கே போரில் கொல்லப்படும் க்ஷத்திரியர்கள் அழிவிலா அருளைக் கொண்ட புனிதமான உலகங்களை அடைகின்றனர்.(26) குருக்ஷேத்திரத்தின் உயர்ந்த அருளைக் குறித்த இதுவும் சக்ரனாலேயே சொல்லப்பட்டது. சக்ரனால் சொல்லப்பட்டதனைத்தும், பிரம்மன், விஷ்ணு மற்றும் மஹேஸ்வரனாலும் அங்கீகரிக்கப்பட்டது” {என்றனர் அம்முனிவர்கள்}.(27)

சரஸ்வதியை எப்போதும் நினைக்க வேண்டும்! – சல்லிய பர்வம் பகுதி – 54-சாண்டில்யரின் மகளான ஸ்ரீமதியின் ஆசிரமத்திலிருந்து பிலக்ஷப்பிரஸ்ரவணத் தீர்த்தத்திற்கும், அடுத்ததாகக் காரபவனத் தீர்த்தத்திற்கும், மித்ராவருண ஆசிரமத்திற்கும், பிறகு அங்கிருந்து யமுனா தீர்த்ததிற்குச் சென்ற பலராமன்; அங்கே யமுனா தீர்த்தத்தில் கூடிய முனிவர்களின் சபையில் நாரதரைக் கண்ட பலராமன்; பீம துரியோதன கதாயுத்தத்தைக் குறித்துப் பலராமனுக்குச் சொன்ன நாரதர்; தன் சீடர்களுக்கிடையிலான மோதலைக் காண விரும்பி களத்திற்கு விரைந்து சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்ஷேத்திரம் சென்று, அங்கே தானமளித்த அந்தச் சாத்வத குலத்தோன் {பலராமன்}, பேரழகுடன் கூடிய மிகப்பெரிய ஓர் ஆசிரமத்திற்குச் சென்றான்.(1) அந்த ஆசிரமத்தில் மதுக {இலுப்பை} மரங்கள், மாமரங்கள், பிலாக்ஷ {ஆல} மரங்கள், நியகிரோத {புங்க} மரங்கள், வில்வ மரங்கள், சிறப்பான பலா மரங்கள், அர்ஜுன {மருத} மரங்கள் நிறைந்திருந்தன.(2) புனிதக் குறியீடுகள் பலவற்றைக் கொண்ட அந்த நல்ல ஆசிரமத்தைக் கண்ட பலதேவன், அது யாருடையது என்று முனிவர்களிடம் கேட்டான்.(3)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர் ஆன்மாக்கள் அந்தப் பலதேவனிடம் {பலராமனிடம்}, “ஓ! ராமா, பழங்காலத்தில் இந்த ஆசிரமம் யாருடையதாக இருந்தது என்பதை விவரமாகக் கேட்பாயாக.(4) பழங்காலத்தில் இங்கே தேவன் விஷ்ணு கடுந்தவத்தைச் செய்தான். நித்தியமான வேள்விகள் அனைத்தையும் அவன் இங்கே செய்தான்.(5) இங்கே ஒரு பிராமணக் கன்னிகை, இளமையிலிருந்து பிரம்மச்சரிய நோன்பிருந்து, தவ வெற்றியை அடைந்தாள். மாற்றமில்லா யோக சக்திகளைக் கொண்ட தவசியான அந்தப் பெண் சொர்க்கத்திற்குச் சென்றாள்.(6) உயர் ஆன்ம சாண்டில்யர்[1], ஓ! மன்னா, கடும் நோன்புகளை நோற்பவளும், கற்புடையவளும், சுயக்கட்டுப்பாடு கொண்டவளும், பிரம்மச்சரியத்தை நோற்பவளுமான ஓர் அழகிய மகளைப் {ஸ்ரீமதி} பெற்றார். பெண்களால் செய்ய முடியாத கடுந்தவங்களையும் செய்த அந்த அருளப்பட்ட மங்கை, இறுதியில் தேவர்களாலும், பிராமணர்களாலும் வழிபடப்பட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றாள். பலதேவன், அம்முனிவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(8) முனிவர்களிடம் விடைபெற்றுக் கொண்டவனும், மங்கா புகழைக் கொண்டவனுமான பலதேவன், இமயத்தின் சாரலில் மாலை வேளைக்கான அனைத்து சடங்குகளையும் செய்து, அம்மலையின் மீது ஏறினான்.(9) பனைமரக்கொடியைக் கொண்ட அந்த வலிமைமிக்கப் பலராமன், அம்மலையில் ஏறிக் கொண்டிருக்கையில் அருகிலேயே ஒரு நல்ல புனிதமான தீர்த்தத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.(10)சரஸ்வதியின் மகிமையையும், பிலக்ஷப்பிரஸ்ரவணம் என்றழைக்கப்பட்ட அந்தத் தீர்த்தத்தின் மகிமையையும் கண்ட பலன் {பலராமன்}, அடுத்ததாகக் காரவபனம் {காரபசனம்} என்றழைக்கப்படும் மற்றுமொரு சிறந்த, முதன்மையான தீர்த்தத்தை அடைந்தான்.(11) பெரும் பலத்தையும், கலப்பையையும் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, அங்கே தானமளித்த பிறகு, குளுமையானதும், தெளிவானதும், புனிதமானதும், பாவங்களை அகற்றுவதுமான (அந்தத் தீர்த்தத்தின்) நீரில் நீராடினான்.(12) அங்கே தவசிகளுடனும், பிராமணர்களுடனும் ஓரிரவைக் கழித்த ராமன், அடுத்ததாக மித்ராவருணர்களின் புனிதமான ஆசிரமத்திற்குச் சென்றான்.(13) அவன் {பலராமன்}, காரவபனத்திலிருந்து, பழங்காலத்தில் இந்திரன், அக்னி, அர்யமன் ஆகியோர் எங்கு பெரும் மகிழ்ச்சியை அடைந்தோர்களோ, அந்த யமுனையின் இடத்திற்குச் சென்றான்.(14) அற ஆன்மா கொண்ட அந்த யதுகுல காளை {பலராமன்} அங்கே நீராடி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான். பிறகு அந்த வீரன், முனிவர்கள் மற்றும் சித்தர்களின் சிறந்த பேச்சைக் கேட்பதற்காகக் கீழே அமர்ந்தான்.(15)எங்கே ராமன் {பலராமன்} அமர்ந்தானோ, அந்தச் சபைக்கு மத்தியில் அங்கே போற்றுதலுக்குரிய நாரதர் (தம் உலவல்களின் போது) வந்தார்.(16) சடாமுடியால் மறைக்கப்பட்டும், தங்கக் கதிர்களை உடுத்திக் கொண்டும் இருந்த அவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, தமது கைகளில் தங்கத்தாலான ஒரு தண்டத்தையும், அதே விலைமதிப்புமிக்க உலோகத்தாலான ஒரு நீர்க்குடத்தையும் {கமண்டலத்தையும்} கொண்டிருந்தார்.(17) பாடுவதிலும், ஆடுவதிலும் சாதித்தவரும், தேவர்கள் மற்றும் பிராமணர்களால் போற்றப்படுபவருமான அவர் {நாரதர்}, ஆமை ஓட்டினாலானதும், இனிய இசையை எழுப்பக்கூடியதுமான அழகிய வீணை ஒன்றையும் வைத்திருந்தார்.(18) சச்சரவுகளைத் தூண்டுபவரும், சச்சரவுகளை எப்போதும் விரும்புபவருமான அந்தத் தெய்வீக முனிவர் {நாரதர்}, அழகிய ராமன் {பலராமன்} ஓய்ந்திருந்த அந்த இடத்திற்கு வந்தார்.(19) ராமன் எழுந்து நின்று, நெறிப்படுத்தப்பட்ட நோன்புகளைக் கொண்ட அந்தத் தெய்வீக முனிவரைத் தகுந்தவாறு வணங்கி, குருக்களுக்கு நேர்ந்தது அனைத்தையும் குறித்து அவரிடம் கேட்டான்.(20) கடமைகள் மற்றும் நடைமுறைகளை நன்கறிந்தவரான நாரதர் அவனுக்குக் குருக்களின் துயரகரமான பேரழிவு குறித்து நடந்தது அனைத்தையும் நடந்தவாறே சொன்னார்.(21) அப்போது அந்த ரோகிணியின் மகன் {பலராமன்} சோகம் நிறைந்த வார்த்தைகளில் அம்முனிவர்களிடம், “களத்தில் நிலை என்ன? அங்கே கூடியிருக்கும் மன்னர்கள் இப்போது எவ்வாறிருக்கிறார்கள்??(22) ஓ! தவச் செல்வத்தைக் கொண்டவரே, நான் அனைத்தையும் ஏற்கனவே கேட்டுவிட்டேன். இருப்பினும் அதை விவரமாக அறிய எனக்கு அதிக ஆவல் ஏற்படுகிறது” என்று கேட்டான்.(23)

நாரதர் {பலராமனிடம்}, “பீஷ்மர், துரோணர் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் ஏற்கனவே வீழ்ந்துவிட்டனர். வைகர்த்தனின் மகனான கர்ணனும், பெரும் தேர்வீரர்களான அவனது மகன்களுடன் வீழ்ந்துவிட்டான்.(24) ஓ! ரோகிணியின் மகனே {பலராமா}, பூரிஸ்ரவஸும், மத்ரர்களின் வீரத் தலைவனும் {சல்லியனும்} வீழ்ந்துவிட்டனர். இவர்களும், அங்கே கூடியிருந்த இன்னும் பல வலிமைமிக்க வீரர்களும், துரியோதனனின் வெற்றிக்காகத் தங்கள் அன்புக்குரிய உயிரையே விடத்தயாரானவர்களும், போரில் இருந்து திரும்பாதவர்களுமான மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் ஆகியோர் அனைவரும் வீழ்ந்துவிட்டனர்.(25,26) ஓ! மாதவா {பலராமா}, உயிரோடு இருப்பவர்களைக் குறித்து இப்போது சொல்கிறேன், கேட்பாயாக. திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படையில் இப்போது படைகளைக் கலங்கடிக்கும் மூவர் மட்டுமே உயிருடன் எஞ்சியுள்ளனர்.(27) அவர்கள் கிருபர், கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோராவர். அவர்களும், ஓ! ராமா, அச்சத்தால் திசைகளின் பத்து புள்ளிகளை நோக்கித் தப்பி ஓடிவிட்டனர்.(28)

சல்லியன் வீழ்ந்து, கிருபரும் மற்றவர்களும் ஓடிய பிறகு, பெரும் துயரத்தில் இருந்த துரியோதனன், துவைபாயனத் தடாகத்தின் ஆழங்களுக்குள் புகுந்து கொண்டான்.(29) அத்தடாகத்தின் நீரைக் கட்டி அதனடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துரியோதனன், கிருஷ்ணனுடன் கூடிய பாண்டவர்களால் அணுகப்பட்டு, அவர்களது கொடும் வார்த்தைகளால் துளைக்கப்பட்டான்.(30) அந்த வார்த்தை ஈட்டிகளால் அனைத்துப் பக்கங்களிலும் துளைக்கப்பட்டவனும், வலிமைமிக்கவனுமான அந்த வீரத் துரியோதனன், ஓ! ராமா {பலராமா}, கனமான தன் கதாயுதத்துடன் அத்தடாகத்தில் இருந்து எழுந்தான்.(31) தற்போது அவன் பீமனோடு போரிடப் போகிறான். ஓ! ராமா, அந்தப் பயங்கர மோதல் இன்று நடைபெறப் போகிறது.(32) உனக்கு ஆர்வமிருந்தால், ஓ! மாதவா {பலராமா}, இங்கே தாமதிக்காமல் அங்கே விரைந்து செல்வாயாக. உன் சீடர்கள் இருவருக்குள் நடக்கப் போகும் பயங்கரப் போரை நீ காண விரும்பினால் செல்வாயாக” என்றார் {நாரதர்}.(33)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ராமன் {பலராமன்}, அந்தப் பிராமணர்களில் முதன்மையானோரிடம் மரியாதையுடன் விடை பெற்றுக் கொண்டு, (தன் புனிதப் பயணத்தில்) தனக்குத் துணையாக வந்தோர் அனைவரையும் அனுப்பி வைத்தான்.(34) உண்மையில் அவன், தன் பணியாட்களிடம், “துவாரகைக்குத் திரும்புவீராக” என்று ஆணையிட்டான். பிறகு அவன் அந்த மலைகளின் இளவரசனிடம் இருந்தும், பிலக்ஷப்பிரஸ்ரவணம் என்று அழைக்கப்படும் அந்த அழகிய ஆசிரமத்தில் இருந்தும் இறங்கினான்.(35) தீர்த்தங்களின் பெரும் தகுதிகளை {புண்ணியங்களைக்} குறித்த தவசிகளின் உரையாடலைக் கேட்டவனும் மங்கா மகிமை கொண்டவனுமான அந்த ராமன் {பலராமன்}, பிராணர்களின் மத்தியில் இந்த வரியைப் பாடினான்:(36) “சரஸ்வதியின் அருகில் வசிப்பதால் ஏற்படும் இத்தகு மகிழ்வு வேறு எங்கே இருக்கிறது? சரஸ்வதியின் அருளில் வசிப்போரிடமுள்ள இத்தகு தகுதிகள் {புண்ணியங்கள்} வேறு எங்கே இருக்கின்றன? சரஸ்வதியை அணுகிய மனிதர்கள் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கின்றனர். அனைவரும் எப்போதும் சரஸ்வதியை நினைக்க வேண்டும். சரஸ்வதியே ஆறுகள் அனைத்திலும் மிகப் புனிதமானவளாவாள்.(37) சரஸ்வதி எப்போதும் மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறாள். சரஸ்வதியை அடைந்த மனிதர்கள், இங்கேயும் {இம்மையிலும்}, இதற்குப் பிறகும் {மறுமையிலும்} தங்கள் பாவங்களைக் குறித்து வருந்த வேண்டாம்” என்றான்.(38) மகிழ்ச்சி நிறைந்த கண்களுடன் மீண்டும் மீண்டும் சரஸ்வதியைப் பார்த்த அந்த எதிரிகளை எரிப்பவன், பிறகு நல்ல குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சிறந்த தேரில் ஏறிக் கொண்டான்.(39) யது குலத்தின் காளையான அந்தப் பலதேவன் {பலராமன்}, தன் சீடர்கள் இருவருக்கிடையில் எதிர்வரப்போகும் மோதலைக் காணும் விருப்பத்தால் பெரும் வேகம் கொண்ட அந்தத் தேரில் பயணித்து அந்தக் களத்தை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(40)

கதாயுத்தத் தொடக்கம்! – சல்லிய பர்வம் பகுதி – 55- களத்திற்கு வந்த பலராமனை வணங்கிய யுதிஷ்டிரன்; சமந்தபஞ்சகத்தில் போரிட வேண்டும் என்று கேட்ட துரியோதனன்; களர்மண்ணற்ற பகுதியில் போரிடத் தீர்மானித்து, இடத்தைத் தேர்ந்தெடுத்து பீமனையும், துரியோதனனையும் போரிட விட்டு அவர்களைச் சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டது; சொற்போர் நடத்திய பீமனும் துரியோதனனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா இவ்வாறு அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றபோது, பெருஞ்சோகத்தில் இருந்த மன்னன் திருதராஷ்டிரன், இவ்வார்த்தைகளில் அதைச் சுட்டிக் காட்டினான்”.(1)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “கதாயுதப் போர் தொடங்கப்படும்போது, அவ்விடத்திற்கு வந்த ராமனை {பலராமனைக்} கண்ட என் மகன் {துரியோதனன்}, எவ்வாறு பீமனோடு போரிட்டான்?” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், போரை விரும்பியவனுமான உமது வீரமகன் துரியோதனன், ராமன் வந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தான்.(3) அந்தக் கலப்பை வீரனை {பலராமனைக்} கண்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியடைந்து, எழுந்து நின்று முறையாக அவனைக் கௌரவித்தான். அவனுக்கு இருக்கையையும் அளித்து, அவனது நலத்தைக் குறித்தும் விசாரித்தான்.(4)

அப்போது ராமன் {துரியோதனன்}[1], வீரர்களுக்கு உயர்ந்த நன்மையைத் தருபவையும், இனியவையுமான இந்த நீதிமிக்க வார்த்தைகளை யுதிஷ்டிரனுக்குப் பதிலாக அளித்தான். {துரியோதனன்},(5) {அவன்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, மிகப் புனிதமான, பாவங்களைப் போக்கவல்ல, சொர்க்கத்திற்கு இணையான இடம் என்று தேவர்கள், முனிவர்கள், உயர் ஆன்மப் பிராமணர்கள் ஆகியோரால் போற்றப்படுவது குருக்ஷேத்திரமே என்று முனிவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.(6) இக்களத்தில் போரில் ஈடுபட்டுத் தங்கள் உடல்களைக் கைவிடும் மனிதர்கள், ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, சொர்க்கத்தில் சக்ரனுடன் {இந்திரனுடன்} வசிக்கப்போவது உறுதியாகும்.((7) இதற்காகவே, ஓ! மன்னா, நான் வேகமாக சமந்தபஞ்சகத்திற்குச் செல்வேன். தேவர்களின் உலகத்தில் அந்த இடமானது, அனைத்துயிர்களின் தலைவனான பிரம்மனின் வட (வேள்விப்) பீடமாக அறியப்படுகிறது.(8) மூவுலங்குகளிலும் அழிவில்லாத மிகப் புனிதமான அந்த இடத்தில் போரிட்டு இறப்பவன் சொர்க்கத்தை அடையப் போவது உறுதி” என்றான்[1].(9) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குந்தியின் துணிச்சல் மிக்க மகனான தலைவன் யுதிஷ்டிரன், “அப்படியே” ஆகட்டும் என்று சொல்லி சமந்தபஞ்சகத்தை நோக்கிச் சென்றான்.(10)

மன்னன் துரியோதனனும், கோபத்துடன் தனது பெரும் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, பாண்டவர்களுடன் கால்நடையாக நடந்து சென்றான்.(11) கவசம் தரித்து கதாயுதத்துடன் அவன் அவ்வாறு சென்ற போது,  வானத்தில் இருந்த தேவர்கள், “நன்று நன்று” என்று சொன்னார்கள். காற்றைப் போன்ற வேகம் கொண்ட சாரணர்கள்[2], குரு மன்னனைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.(12) பாண்டவர்களால் சூழப்பட்டவனும், உமது மகனுமான குரு மன்னன் {துரியோதனன்}, மதங்கொண்ட யானையின் நடையை ஏற்றுச் சென்றான்.(13) குறித்த இடத்திற்கு மேற்கு நோக்கி (தங்களுக்கு மத்தியில்) உமது மகனுடன் சென்ற அவர்கள், அந்த இடத்தை அடைந்ததும் அனைத்துப் பக்கங்களிலும் பரவினர்.(15) அது சரஸ்வதியின் தென் பக்கம் உள்ள சிறந்த தீர்த்தமாகும். அங்கே இருந்த தரையானது களர்மண் அற்றதாக இல்லாததால் அது மோதலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.(16)கவசம் தரித்து, தடித்த பெரும் கதாயுதத்துடன் கூடிய பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க கருடனின் வடிவை ஏற்றான்.(17) தன் தலையில் தலைக்கவசத்தைப் பூட்டிக் கொண்டு, தங்கத்தால் ஆன கவசத்தைத் தரித்துக் கொண்டு, கடைவாயை நாவால் நனைத்தபடி, கோபத்தால் கண்கள் சிவந்து, பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னா, தங்க சுமேருவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(18) பெரும் சக்தி கொண்ட மன்னன் துரியோதனன், தன் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, பீமசேனன் மீது தன் பார்வைகளைச் செலுத்தி, ஒரு யானையானது, மற்றொரு எதிரி யானையை மோதலுக்கு அழைப்பது போல அறைகூவி அழைத்தான்.(19) அதேபோலவே, வீர பீமனும், கடினமான தன் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தை அழைப்பதைப் போல அம்மன்னனை {துரியோதனனை} அறைகூவி அழைத்தான்.(20)

கதாயுதங்களை உயர்த்திய துரியோதனனும், பீமனும், அந்தப் போர்க்களத்தில் உயர்ந்த சிகரங்களைக் கொண்ட இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.(21) அவர்கள் இருவரும் மிகுந்த கோபத்துடன் இருந்தனர்; பயங்கர ஆற்றலைக் கொண்டிருந்தனர்; கதாயுத மோதல்களில் அவர்கள் நுண்ணறிவு கொண்டவனான ரோகிணியின் மகனுடைய {பலராமனுடைய} சீடர்களாக இருந்தனர்;(22) சாதனைகளில் ஒப்பானவர்களாக இருந்த, அவர்கள் மயனையும், வாசவனையும் {இந்திரனையும்} போல இருந்தனர். பெரும் பலத்தைக் கொண்ட அவர்கள் இருவரும் சாதனைகளில் வருணனுக்கு ஒப்பானவர்களாக இருந்தனர்.(23) வாசுதேவன் {கிருஷ்ணன்}, அல்லது ராமன், அல்லது விஸ்ரவணனின் மகன் (ராவணன்) ஆகியோருக்கு ஒப்பானவர்களான அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மது மற்றும் கைடபனைப் போல இருந்தனர்.(24) சாதனைகளில் ஒப்பாக இருந்த அவர்கள், சுந்தன் மற்றும் உபசுந்தன் போலவோ, ராமன் மற்றும் ராவணன் போலவோ, வாலி மற்றும் சுக்ரீவன் போலவோ தெரிந்தனர்.(25)

எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும் காலனையும், மிருத்யுவையும் போலத் தெரிந்தனர். அப்போது அவர்கள் இருவரும், செருக்கில் பெருகி கூதிர்காலத்தின் ஆசையால் வெறிகொண்ட இரு யானைகள், பருவ காலத்தில் இருக்கும் பெண் யானையின் மீது கொண்ட ஏக்கத்தால் எதிர்ப்பது போல ஒருவரையொருவர் எதிர்த்தோடினர். சீற்றமிக்க இரு பாம்புகள் கோபத்தால் தங்கள் நஞ்சை மற்றொரு பாம்பின் மேல் கக்குவதைப் போல அவர்கள் இருவரும் தெரிந்தனர்.(26,27) எதிரிகளைத் தண்டிப்போரான அவ்விருவரும், ஒருவர் மீது ஒருவர் தங்கள் கோபப் பார்வைகளைச் செலுத்தினர். பாரதக் குலத்தின் புலிகளான அவ்விருவரும், பேராற்றலைக் கொண்டவர்களாக இருந்தனர்.(28) எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும், கதாயுதமோதலில்  வெல்லப்பட முடியாத சிங்கங்களைப் போல இருந்தனர். உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட அவ்விருவரும், மதங்கொண்ட இரு யானைகளைப் போலவே தெரிந்தனர்.(29) பற்களையும், நகங்களையும் கொண்டு போர்க்கோலம் பூண்ட இரு புலிகளைப்போல அவர்கள் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவர்களாக இருந்தனர். உயிரினங்களை அழிக்கும் நோக்குடன் சீற்றத்துடன் பொங்கும் இரு கடக்கமுடியாத பெருங்கடல்களைப் போலவோ,(30) அனைத்தையும் எரிப்பதற்காக எழும் கோபக்கார சூரியன்கள் இரண்டைப் போலவோ அவர்கள் இருந்தனர்.

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் காற்றால் கலங்கடிக்கப்பட்டு, பயங்கரமாக முழங்கிக் கொண்டு, மழைக்காலத்தில் மழைத்தாரைகளைப் பொழியும் கிழக்கு மற்றும் மேற்குப்புற மேங்களைப் போலத் தெரிந்தனர். உயர் ஆன்மாவும், வலிமையும் கொண்ட அவ்விரு வீரர்களும், அண்ட அழிவின் போது எழும் இரு சூரியன்களைப் போலப் பெரும் ஒளியுடனும், பிரகாசத்துடனும் இருந்தனர். சினங்கொண்ட இரு புலிகளைப் போலவோ, முழங்கிக் கொண்டிருக்கும் இரு மேகத் திரள்களைப் போலவோ தெரிந்த அவர்கள்,(31-33) பிடரி கொண்ட இரு சிங்கங்களைப் போல மகிழ்ச்சியை அடைந்தனர். கோபக்கார யானைகள் இரண்டையோ, சுடர்மிக்க  நெருப்புகள் இரண்டையோ போல இருந்த அந்த உயர் ஆன்மாக்கள்,(34) உயர்ந்த சிகரங்களைக் கொண்ட இரு மலைகளைப் போலத் தோன்றினர். சினத்தில் பெருகிய உதடுகளுடன் ஒருவரையொருவர் நோக்கிக் கூரிய பார்வைகளைச் செலுத்திய உயர் ஆன்மா கொண்ட அவ்விரு சிறந்த மனிதர்களும், கதாயுதங்களுடன் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள் இருவரும், அடுத்தவரைத் தனக்குத் தகுதியான எதிராளியாகக் கருதினர்.(35,36)

அப்போது துரியோதனனும், விருகோதரனும் {பீமனும்} ஒன்றையொன்று நோக்கி கனைத்துக் கொள்ளும் இரு நல்ல குதிரைகளுக்கோ, பிளிறிக் கொள்ளும் இரு யானைகளுக்கோ ஒப்பாக இருந்தனர்.(37) மனிதர்களில் முதன்மையானோரான அவ்விருவரும், அப்போது வலிமையில் பெருகியிருக்கும் தைத்தியர்கள் இருவரைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். அப்போது துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சகோதரர்கள், உயர் ஆன்மக் கிருஷ்ணன், அளவிலா சக்தி கொண்ட ராமன் {பலராமன்} ஆகியோருக்கு மத்தியில் இருந்த யுதிஷ்டிரனிடம் செருக்குமிக்க இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(39,39) “கைகேயர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் உயர் ஆன்மப் பாஞ்சாலர்கள் ஆகியோரால் பாதுகாக்கப்பட்டு, இங்கே இருக்கும் இந்த மன்னர்களில் முதன்மையானோர் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து, எனக்கும், பீமனுக்கும் இடையில் நடக்கப் போகும் இந்தப் போரைக் காண்பீராக” என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அந்த வேண்டுகோளின்படியே அவர்கள் நடந்து கொண்டனர்.(40,41)

பெரிதாக இருந்த மன்னர்களின் கூட்டம் அமர்ந்த போது, அந்த இடம் சொர்க்கத்தில் உள்ள தேவர்களின் சபையைப் போல இருந்தது.(42) அந்த வலிமைமிக்க கரங்களைக் கொண்டோரின் கூட்டத்திற்கு மத்தியில், கேசவனின் {கிருஷ்ணனின்} அண்ணன் {பலராமன்} அமர்ந்த போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனைச் சுற்றிலும் இருந்த அனைவராலும் வழிபடப்பட்டான்.(43) அந்த மன்னர்களுக்கு மத்தியில், நீல ஆடை உடுத்தியவனும்,  அழகான நிறத்தைக் கொண்டவனுமான பலதேவன், இரவில் ஆயிரம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட முழு நிலவைப் போல அழகாகத் தெரிந்தான்.(44) அதேவேளையில் கதாயுதம் தரித்தவர்களும், எதிரிகளால் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவர்களுமான அவ்விரு வீரர்களும், ஓ! ஏகாதிபதி, அங்கே நின்று கொண்டு ஒருவரையொருவர் நோக்கி சீற்றத்துடன் பேசிக்கொண்டனர்.(45) இனிமையற்ற கசந்த வார்த்தைகளால் ஒருவரோடொருவர் பேசிக் கொண்ட அந்தக் குரு குலத்தின் முதன்மையான வீரர்கள் இருவரும், போரில் சக்ரனையும் {இந்திரனையும்}, விருத்திரனையும் போல ஒருவர் மீதொருவர் தங்கள் கோபப் பார்வைகளை வீசிக் கொண்டனர்” {என்றான் சஞ்சயன்}”.(46)

பீம, துரியோதனச் சொற்போர்! – சல்லிய பர்வம் பகுதி – 56-திருதராஷ்டிரனின் புலம்பல்; பீமனைப் போருக்கழைத்த துரியோதனன்; களத்தில் தென்பட்ட தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி உற்சாகமூட்டிய பீமன்; துரியோதனனுக்கு அவனது பழைய குற்றங்களை நினைவுப்படுத்திய பீமன்; வீண்தற்புகழ்ச்சி வேண்டாம் எனப் பீமனை நிந்தித்த துரியோதனன்; துரியோதனனை நோக்கிச் சீற்றத்துடன் விரைந்த பீமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, தொடக்கத்திலேயே அவ்விரு வீரர்களுக்கும் இடையில் சீற்றமிக்க ஒரு சொற்போர் நடந்தது. அதனால் துயரமடைந்த மன்னன் திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்},(1) “ஓ! இத்தகு முடிவைக் கொண்ட மனிதன் நிந்திக்கத்தக்கவன் ஆவான். ஓ! பாவமற்றவனே {சஞ்சயா}, என் மகன் {துரியோதனன்} பதினோரு சமுக்களின்[1] தலைவனாக இருந்தான்.(2) அவன் தன் ஆணையின் கீழ் மன்னர்கள் அனைவரையும் வைத்துக் கொண்டு, மொத்த பூமியின் அரசுரிமையையும் அனுபவித்தான். ஐயோ, அப்படி இருந்த அவன் இப்போது காலாளாகத் தோளில் கதாயுதத்துடன் ஒரு போர் வீரனாகப் போரிடப் போகிறான்.(3) முன்பு இந்த அண்டத்தின் பாதுகாவலனாக இருந்த பாவப்பட்ட என் மகன் {துரியோதனன்}, இப்போது தானே பாதுகாவலன் இல்லாதவனாக இருக்கிறான். ஐயோ, இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் தோளில் கதாயுதத்துடன் காலாளாகச் செல்கிறான். இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(4) ஐயோ, ஓ! சஞ்சயா, இப்போது என் மகனால் உணரப்படும் துயரம் பெரிதாக இருக்கிறது” என்றான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {திருதராஷ்டிரன்}, பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டு அமைதியை அடைந்தான்.(5)(மூன்று சமுக்கள் சேர்ந்தது ஓர் அனீகினி, பத்து அனீகினி சேர்ந்தது ஓர் அக்ஷௌஹிணி. அதாவது முப்பது சமுக்கள் சேர்ந்தது ஓர் அக்ஷௌஹிணியாகும்)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துரியோதனன், மேகம் போன்ற ஆழ்ந்த குரலுடனும், ஒரு காளைமாட்டைப் போல இன்பமாகவும் முழங்கினான். பெரும் சக்தியைக் கொண்ட அவன் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனை {பீமனை} போருக்கு அறைகூவி அழைத்தான்.(6) குருக்களின் அந்த உயர் ஆன்ம மன்னன் {துரியோதனன்} இவ்வாறு பீமனை மோதலுக்கு அழைத்தபோது, பயங்கர வகையிலான பல்வேறு சகுனங்கள் தென்பட்டன.(7) இடைவேளைகளில் பேரொலியுடன் கடுங்காற்று வீசத் தொடங்கி, புழுதி மாரியைப் பொழிந்தது. திசைகளின் அனைத்துப் புள்ளிகளும் அடர்த்தியான இருளில் மறைக்கப்பட்டன.(8) பேரொலியுடன் கூடிய இடிகள் அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து பெருங்குழப்பத்தை உண்டாக்கி, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தின. நூற்றுக்கணக்கான எரிக்கோள்கள் பேரொலியுடன் வெடித்தபடியே ஆகாயத்தில் இருந்து விழுந்தன.(9) ஓ! ஏகாதிபதி, ராகு, சூரியனின் பெரும்பகுதியை காலந்தவறி விழுங்கினான். காடுகளுடனும், மரங்களுடனும் கூடிய பூமியானவள் பெரிதும் நடுங்கினாள்.(10)

தரையில் இருந்து கடினமான கூழாங்கற்களைச் சுமந்து பொழியும் வகையில் சூடான காற்றுகள் வீசின, மலைகளின் சிகரங்கள் பூமியின் பரப்பில் விழுந்தன.(11) பல்வேறு வடிவங்களைக் கொண்ட விலங்குகள் அனைத்துப் பக்கங்களிலும் ஓடுவது தெரிந்தது. பயங்கரமான, சீற்றமிக்க நரிகள், சுடர்மிக்க வாய்களுடன் எங்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.(12) மயிர்க்கூச்சம் ஏற்படும் வகையில் அனைத்துப் பக்கங்களிலும் பயங்கரமான பேரொலிகள் கேட்டன. நான்கு பக்கங்களும் எரிவதாகத் தெரிந்தது, தீய சகுனங்களைத் தெரிவிக்கும் பலவிலங்குகள் தென்பட்டன.(13) கிணறுகளில் இருந்த நீர் தானாகப் பெருகியது. ஓ! மன்னா, காணப்படாத உயிரினங்களின் பேரோலிகள் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டன.(14)

இவற்றையும், இன்னும் பிற சகுனங்களையும் கண்ட விருகோதரன் {பீமன்}, தன் அண்ணனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(15) “தீய ஆன்மா கொண்ட இந்தச் சுயோதனன், போரில் என்னை வீழ்த்தத்தகுந்தவன் இல்லை. காண்டவ வனத்தின் மீது நெருப்பை வீசிய அர்ஜுனனைப் போல, என் இதயத்தில் கமுக்கமாக நீண்ட நாட்களாகப் பேணிக் காத்த கோபத்தை, இந்தக் குருக்களின் ஆட்சியாளன் {துரியோதனன்} மீது நான் இன்று கக்கப் போகிறேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, உமது இதயத்தைத் துளைத்திருக்கும் ஈட்டியை நான் இன்று பிடுங்கப் போகிறேன்.(16,17) இந்தக் குரு குலத்தின் இழிந்த பாவியை என் கதாயுதத்தால் கொன்று, நான் இன்று புகழ் மாலையை உமது கழுத்தில் சூட்டப்போகிறேன்.(18) பாவ காரியங்களைச் செய்யும் இந்தப் பொல்லாதவனை என் கதாயுதத்தால் கொல்லப்போகிறேன். இந்த என் கதாயுதத்தைக் கொண்டே நான் இவனது உடலை நூறு துண்டுகளாகப் பிளக்கப் போகிறேன்.(19) யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} அவன் மீண்டும் நுழைய மாட்டான்.(20)

தூங்கிக் கொண்டிருந்தபோது நம் மீது பாம்பை ஏவியும், உண்ணும்போது நமக்கு நஞ்சைக் கொடுத்தும், பிரமாணகோடியின் நீரில் நம் உடலை வீசியும், அரக்கு வீட்டில் வைத்து நம்மை எரிக்க முயிற்சித்தும்,(21) சபையில் நம்மை அவமதித்தும், நம் உடைமைகள் அனைத்தையும் களவாடியும், ஒரு முழு வருடம் நம்மைத் தலைமறைவாக வாழச் செய்தும்,(22) நாடுகடந்து நம்மைக் காட்டில் வாழ வைத்தும் என, ஓ! பாவமற்றவரே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, {இவனால்} நமக்கு ஏற்பட்ட வேதனைகளுக்கெல்லாம் ஒரு முடிவை நான் இன்று எட்டுவேன். ஒரே நாளில் இந்த அற்பனைக் கொன்று, நான் இவனுக்குப் பட்டிருக்கும் கடனையெல்லாம் அடைக்கப் போகிறேன்.(23)

ஓ! பாரதர்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, தூய்மையற்ற ஆன்மாக் கொண்ட இந்தத் தீய திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} வாழ்வுக்காலம் இன்று முடிவை நெருங்கிவிட்டது. இந்த நாளுக்குப் பிறகு அவன் தனது தந்தையையும், தாயையும் மீண்டும் காணமாட்டான்.(24) ஓ! ஏகாதிபதி, குருக்களின் இந்தத் தீய மன்னனுடைய மகிழ்ச்சி இன்று ஒரு முடிவை எட்டுகிறது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இந்நாளுக்குப் பிறகு இவன் மீண்டும் பெண்ணழகின் மேல் தன் கண்களைச் செலுத்தமாட்டான்.(25) சந்தனு குலத்தின் இழுக்கான இவன், இன்று தன் உயிர் மூச்சு, செழிப்பு மற்றும் நாட்டைக் கைவிட்டு வெறுந்தரையில் உறங்குவான்.(26) இன்று மன்னர் திருதராஷ்டிரரும், தமது மகனின் வீழ்ச்சியைக் கேட்டு, சகுனியின் மூளையில் பிறந்த தீசெயல்கள் அனைத்தையும் நினைவுகூர்வார்” என்றான் {பீமன்}.(27)

ஓ மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, கதாயுதந்தரித்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான விருகோதரன், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அசுரன் விருத்திரனை அறைகூவியழைக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலப் போரிட நின்றான்.(28)

சிகரத்துடன் கூடிய கைலாச மலையைப் போல உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் நிற்கும் துரியோதனனைக் கண்ட பீமசேனன், கோபத்தால் நிறைந்து, மீண்டும் அவனிடம், “வாரணாவதத்தில் உன்னாலும் மன்னர் திருதராஷ்டிரராலும் செய்யப்பட்ட தீச்செயலை உன் மனத்தில் நினைப்பாயாக.(30) பருவகாலத்தில் இருந்த திரௌபதி சபைக்கு மத்தியில் வைத்து முறைகேடாக நடத்தப்பட்டதை நினைவுகூர்வாயாக. உன்னாலும், சுபலனின் மகனாலும் {சகுனியாலும்} பகடையின் மூலமாக மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} கையறுநிலையை ஏற்படுத்தியதை நினைவுகூர்வாயாக.(31) காட்டிலும், விராடனின் நகரத்திலும் கருவறைக்குள் மீண்டும் நுழைந்தவர்களைப் போல உன்னால் நாங்கள் அனுபவித்த பெரும் வேதனைகளை நினைவுகூர்வாயாக. அவை அனைத்திற்கும் நான் இன்று வஞ்சம் தீர்ப்பேன். ஓ! தீய ஆன்மா கொண்டவனே, நற்பேறாலேயே இன்று நான் உன்னைக் காண்கிறேன்.(32)

தேர்வீரர்களில் முதன்மையானவரும், பேராற்றலைக் கொண்டவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உன் நிமித்தமாகவே யக்ஞ்சேனன் {துருபதன்} மகனால் {சிகண்டியால்} தாக்கி வீழ்த்தப்பட்டு, கணைப்படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.(33) துரோணர், கர்ணன் மற்றும் பேராற்றலைக் கொண்ட சல்லியன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இந்தப் பகை நெருப்பின் வேரும், சுபலனின் மகனுமான சகுனியும் கூடக் கொல்லப்பட்டுவிட்டான்.(34) திரௌபதியின் குழல்களைப் பற்றி இழுந்த அற்பன் பிராதிகாமினும் கொல்லப்பட்டான். பெரும் வீரத்தோடு போரிட்ட உனது சகோரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(35) இவர்களும், இன்னும் பல மன்னர்களும் உன் குற்றத்திற்காகவே கொல்லப்பட்டனர். இன்று கதாயுதத்துடன் கூடிய உன்னையும் நான் கொல்லப் போகிறேன். இதில் மிகச் சிறிய ஐயமும் கிடையாது” என்றான்.(36)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெருங்குரலுடன் இவ்வார்த்தைகளை விருகோதரன் {பீமன்} சொல்லிக் கொண்டிருந்தபோது, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான உமது அச்சமற்ற மகன் {துரியோதனன்},(37) “இந்தப் பெரும் தற்புகழ்ச்சியால் என்ன பயன்? ஓ! விருகோதரா {பீமா}, என்னோடு போரிடுவாயாக. உன் குலத்தில் இழிந்தவனே {குலாதம}, இன்று நான் உனது போரிடும் விருப்பத்தை அழிப்பேன்.(38) சாதாரண மனிதனை அச்சுறுத்துவதைப் போல, உன்னைப் போன்ற மனிதனால் துரியோதனனை அச்சுறுத்த முடியாது என்பதை அற்ப பலமுள்ளவனான நீ அறிந்து கொள்வாயாக.(39) இந்த விருப்பத்தை நீண்ட காலமாக நான் பேணி வளர்த்திருக்கிறேன். இந்த விருப்பமானது நீண்டகாலமாக என் இதயத்தில் இருந்தது. இறுதியில் நற்பேறாலேயே தேவர்கள் உன்னுடனான இந்தக் கதாமோதலை ஏற்படுத்தியிருக்கின்றனர்.(40) ஓ! தீய ஆன்மா கொண்டவனே, நீண்ட பேச்சுகளாலும், வெறும் தற்புகழ்ச்சியாலும் யாது பயன்? இந்த உன் வார்த்தைகளைச் செயலில் சாதிப்பாயாக. சற்றும் தாமதிக்காதே” என்றான்.(41)

அங்கிருந்தவர்களான சோமகர்களும், பிற மன்னர்களும் அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டு அவனை உயர்வாக மெச்சினார்கள்.(42) அனைவராலும் புகழப்பட்டதால் மகிழ்ச்சியால் மயிர்க்கூச்சமேற்பட்ட துரியோதனன், போரில் தன் இதயத்தை உறுதியாக நிலைநிறுத்தினான்.(43) மீண்டும் அங்கிருந்த மன்னர்கள், மோதலுக்குச் செல்லும் மதங்கொண்ட யானையைத் தூண்டிவிடுவோரைப் போலக் கோபக்காரனான உமது மகனுக்குக் கைத்தட்டி உற்சாகமூட்டினர்.(44) பாண்டுவின் மகனான உயர் ஆன்ம விருகோதரன் {பீமன்}, தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு உமது உயர் ஆன்ம மகனை {துரியோதனனை} நோக்கி சீற்றத்துடன் விரைந்தான்.(45) அங்கே இருந்த யானைகள் உரக்கப் பிளிறின, குதிரைகளும் மீண்டும் மீண்டும் கனைத்தன. வெற்றிக்காக ஏங்கிய பாண்டவர்களின் ஆயுதங்கள் தாமாகவே சுடர்விட்டுப் பிரகாசித்தன” {என்றான் சஞ்சயன்}.(46)

பீமனைச் சாய்த்த துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 57-பீமனின் விலாவைத் தாக்கிய துரியோதனன்; பீமனின் தலையைத் தாக்கிய துரியோதனன்; கவனத்துடன் பொறுமைகாத்த பீமன்; பீமனின் வீச்சைத் தவிர்த்த துரியோதனன்; பீமனின் மார்பைத் தாக்கிய துரியோதனன்; துரியோதனனின் விலாவைத் தாக்கிய பீமன்; அந்த அடியால் மலைப்படைந்து முழங்கால் மடக்கிக் கீழே விழுந்த துரியோதனன். பீமனின் நெற்றியைத் தாக்கிய துரியோதனன்; பீமனின் எதிர்த்தாக்குதலால் மயக்கமடைந்து விழுந்த துரியோதனன்; துரியோதனனின் தாக்குதலால் நிலைகுலைந்து பலவீனமடைந்த பீமன்; பீமனின் கவசத்தைப் பிளந்த துரியோதனன்; மீண்டும் எழுந்து நின்ற பீமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனச்சோர்வடையாத இதயம் கொண்டவனான துரியோதனன், பீமசேனனை அந்நிலையில் கண்டு, பெரு முழக்கம் செய்து, சீற்றத்துடன் அவனை எதிர்த்து விரைந்தான்.(1) அவர்கள் இருவரும், தங்கள் கொம்புகளால் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் இரு காளைகளைப் போல மோதிக் கொண்டனர். அவர்களது கதாயுத வீச்சுக்கள் இடியொலிகளைப் போலப் பேரொலியை எழுப்பின.(2) வெற்றிக்கான ஏக்கத்துடன் கூடிய அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற போரானது, இந்திரனுக்கும், பிரகலாதனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியது.(3) பெருஞ்சக்தி படைத்தவர்களும், கதாயுதம் தரித்திருந்தவர்களுமான அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள் இருவரும், அங்கமெலாம் குருதியில் நனைய, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தெரிந்தனர்.(4) பயங்கரமான அந்தப் பெரும்போர் நடந்து கொண்டிருந்தபோது, விட்டிற்பூச்சிகளால் நிறைந்திருப்பதைப் போல ஆகாயம் மிக அழகாகத் தெரிந்தது.(5)

கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் சிறிது நேரம் நீடித்தபிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் இருவரும் களைப்பையடைந்தனர்.(6) எதிரிகளை எரிப்பவர்களான அவர்கள் இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, மீண்டும் தங்கள் அழகிய கதாயுதங்களை எடுத்துக் கொண்டு, ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(7) உண்மையில், பெருஞ்சக்தி கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், பெரும் வலிமைமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், சிறிது ஓய்வெடுத்த பிறகு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது, பருவகாலத்தில் பெண் யானையின் துணையை அடைவதற்காக ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் இரு யானைகளைப் போல அவர்கள் தெரிந்தனர்.(8) கதாயுதம் தரித்திருந்தவர்களும், இணையான சக்தி கொண்டவர்களுமான அவ்விரு வீரர்களையும் கண்டு, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோர் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(9) கதாயுதம் தரித்திருந்தவர்களான துரியோதனன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரையும் கண்ட உயிரினங்கள் அனைத்தும், அவர்களில் எவன் வெற்றியடைவான் என்பதில் ஐயங்கொண்டன.(10)

சகோதரர்களும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானோருமான அவ்விருவரும், அடுத்தவரின் தாமதத்தில் பயன்பெற விரும்பி, காத்திருந்து அவர்களைக் கண்காணித்து ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(11) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கனமானதும், கடுமையானதும், யமனின் தண்டம், அல்லது இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதும், கொலைகாரக் கருவியுமான தங்கள் கதாயுதங்களை அவ்விருவரும் உயர்த்தியிருப்பதைப் பார்வையாளர்கள் கண்டார்கள்.(12) பீமசேனன் தன் ஆயுதத்தைச் சுழற்றிய போது, அது பயங்கரமான பேரொலியை உண்டாக்கியது.(13) தன் எதிரியான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, இவ்வாறு தன் கதாயுதத்தை ஒப்பற்ற வேகத்துடன் சுழற்றுவதைக் கண்ட துரியோதனன், ஆச்சரியத்தால் நிறைந்தான்.(14) உண்மையில் வீர விருகோதரன், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, பல்வேறு வழிகளில் {கதிகளில்} திரிந்த போது {சுழன்ற போது} மிக உயர்வான அழகிய காட்சியை வெளிப்படுத்தினான்.(15)

தங்களைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்த அவ்விருவரும், இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் இரு பூனைகளைப் போல ஒருவரையொருவர் அணுகி அடுத்தவரை மீண்டும் மீண்டும் சிதைத்தனர்.(16) பீமசேனன், பல்வேறு வகையான பரிமாணங்களைச் செய்தான். முன்னேறியும், பின்வாங்கியும் அழகிய வட்டங்களில் அவன் திரிந்தான்.(17) அவன் {பீமன்} ஆச்சரியமான செயல்பாட்டால், அடிகளைக் கொடுத்தும், தன் எதிராளியின் அடிகளில் இருந்து விலகவும் செய்தான். (தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்காக) அவன் பல்வேறு வகையான நிலைகளை எடுத்தான். அவன் தாக்கவும் செய்தான், தன் எதிராளியின் தாக்குதலைத் தவிர்க்கவும் செய்தான். ஒருநேரம் வலமாகவும், ஒருநேரம் இடமாகவும் திரும்பி அவன் தன் எதிரியை நோக்கி ஓடினான்.(18) அவன் நேராகத் தன் எதிரியை எதிர்த்துச் சென்றான். அவன்{பீமன்} தன் எதிரியை இழுப்பத்காகச் சில தந்திரங்களையும் செய்தான். அவன் தன் எதிரி தன்னைத் தாக்க வெளிப்படும் வரை அசையாமல் நின்று, அவனைத் தாக்குவதற்குத்தயாராக இருந்தான். அவன் தன் எதிரியை வலம் வந்து, தன்னை வலம் வருவதில் இருந்து எதிரியைத் தவிர்த்தான். அவன் தன் எதிரியின் தாக்குதல்களைக் குனிந்தோ, உயரக் குதித்தோ, நகர்ந்தோ தவிர்த்தான்.(19) அவன் தன் எதிரியுடன் முகமுகமாக வந்து தாக்கினான், அல்லது அவனிடம் இருந்து நகர்ந்து சென்று அவனைத் தள்ளினான். கதாயுத மோதல்களில் சாதித்தவர்களான பீமன் மற்றும் துரியோதனன் ஆகிய இருவரும், இவ்வாறு போரிட்டு திரிந்தபடியே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்[1].(20)

குரு குலத்தில் முதன்மையானோரான அவ்விருவரும் இவ்வாறு திரிந்து, தங்கள் ஒவ்வொருவரின் அடிகளையும் தவிர்த்து வந்தனர். உண்மையில் அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும் இவ்வாறு வட்டமாகச் சுழன்றுகொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரோடொருவர் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(21) அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களான இருவரும், அம்மோதலில் தங்கள் போர்த்திறனை வெளிப்படுத்துவதற்காகச் சிலநேரங்களில், இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலத் திடீரெனத் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். குருதியால் நனைந்திருந்த அவர்கள், ஓ! ஏகாதிபதி, அந்தக் களத்தில் மிக அழகாகத் தெரிந்தனர்.(23) இவ்வாறே அந்தப் போரானது, நாளின் முடிவில் பெரும் கூட்டத்தின் பார்வைக்கு முன்னிலையில் விருத்திரனுக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற போரைப் போல அச்சத்தையேற்படுத்துவதாக இருந்தது. கதாயுதங்களைத் தரித்திருந்த அவ்விருவரும் வட்டங்களில் சுழலத் தொடங்கினர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் வல மண்டலத்தையும், பீமசேனன் இட மண்டலத்தையும் பின்பற்றினர்[2].(25)

இவ்வாறு அந்தப் போர்க்களத்தில் பீமன் வட்டமாகச் சுழன்று வந்தபோது, துரியோதனன் திடீரென ஒரு கடும் வீச்சால் அவனது {பீமனது} விலாப்புறத்தைத் தாக்கினான்.(26) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் தாக்கப்பட்ட பீமன், அந்த அடியைத் திருப்பிக் கொடுப்பதற்காகக் கனமான தன் கதாயுதத்தைச் சுழற்றத் தொடங்கினான்.(27) பார்வையாளர்கள், ஓ! ஏகாதிபதி, பீமசேனனின் அந்தக் கதாயுதத்தை, இந்திரனின் வஜ்ரத்தையோ, யமனின் உயர்த்தப்பட்ட தண்டத்தையோ போன்று பயங்கரமானதாகக் கண்டார்கள்.(28) பீமன் தன் கதாயுதத்தைச் சுழற்றுவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} தன் பயங்கரமான ஆயுதத்தை உயர்த்தி மீண்டும் அவனைத் தாக்கினான்.(29) ஓ! பாரதரே, உமது மகன் இறக்கிய கதாயுதத்தின் ஒலி பேரொலியாக இருந்தது. ஆகாயத்தில் {காற்றுவெளியில்} தீப்பொறி உண்டாகும் அளவுக்கு அந்த இறக்கம் அவ்வளவு வேகமானதாக இருந்தது.(30)

பெருஞ்சக்தி கொண்ட சுயோதனன் {துரியோதனன்}, பல்வேறு வகையான வட்டங்களில் சுழன்று, சரியான நேரத்தில் ஒவ்வொரு அசைவையும் பின்பற்றி மீண்டும் பீமனை விஞ்சியிருப்பதைப் போலத் தெரிந்தது.(31) அதேவேளையில், பீமசேனனின் பருத்த கதாயுதமானது, முழுச் சக்தியுடன் சுழந்து, பேரொலியையும், புகையையும், தீப்பொறிகளையும், தழல்களையும் உண்டாக்கியது.(32) பீமசேனன் தன் கதாயுதத்தைச் சுழற்றுவதைக் கண்ட சுயோதனன், கனமானதும், கடினமானதுமான தன் ஆயுதத்தைச் சுழற்றி மிக அழகிய தன்மையை வெளிப்படுத்தினான்.(33) துரியோதனனின் கதாயுதச் சுழற்சியில் உண்டான காற்றின் மூர்க்கத்தைக் குறித்துக் கொண்ட பாண்டுக்கள் மற்றும் சோமகர்கள் அனைவரின் இதயங்களிலும் பேரச்சம் நுழைந்தது.(34) அதேவேளையில், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், போரின் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் திறனை வெளிப்படுத்தி, தந்தங்களைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்ள அணுகும் இரு யானைகளைப் போலத் தங்கள் காதாயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஓ! ஏகாதிபதி, குருதியால் நனைந்திருந்த அவர்கள் இருவரும் மிக அழகாகத் தெரிந்தனர்.(35,36) இவ்வாறே ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்க, விருத்திரனுக்கும், வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற கடுமையான போரைப் போல அப்போர் அந்த நாளில் முடிவு வரை நடந்து கொண்டிருந்தது.(37)

பீமன் களத்தில் உறுதியாக நிற்பதைக் கண்ட உமது வலிமைமிக்க மகன் {துரியோதனன்}, இன்னும் அழகான அசைவுகளைச் செய்து அந்தக் குந்தியின் மகனை {பீமனை} நோக்கி விரைந்தான்.(38) கோபத்தால் நிறைந்த பீமன், தங்கத்தால் அலங்கரிக்கபட்டதும், பெரும் மூர்க்கம் கொண்டதுமான கோபக்கார துரியோதனனின் கதாயுதத்தைப் பெரும் வேகத்தோடு தாக்கினான்.(39) எதிர் திசைகளில் வந்த இரு வஜ்ரங்களின் மோதலைப் போன்ற அந்த இரண்டு கதாயுதங்களின் மோதலால், தீப்பொறிகளுடன் கூடிய பேரொலி எழுந்தது.(40) பீமசேனனால் வீசப்பட்டு, வேகமாக விழுந்த கதாயுதம் பூமியையே நடுங்கச் செய்தது.(41) அந்தத் தாக்குதலில் தன் கதாயுதம் இவ்வாறு கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட அந்தக் குரு இளவரசனால் {துரியோதனனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அவன், பகை யானைக் கொண்ட மதங்கொண்ட யானையைப் போலச் சினத்தால் நிறைந்தான்.(42) ஓ! ஏகாதிபதி, இடது மண்டலத்தைப் பின்பற்றித் தன் கதாயுதத்தைச் சுழற்றிய சுயோதனன், உறுதியான தீர்மானத்துடன், பயங்கர சக்தியைக் கொண்ட தன் ஆயுதத்தைக் கொண்டு அந்தக் குந்தியின் மகனுடைய {பீமனின்} தலையைத் தாக்கினான்.(43) உமது மகனால் தாக்கப்பட்டவனான பாண்டுவின் மகன் பீமன் நடுங்காததால், ஓ! ஏகாதிபதி, பார்வையாளர்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.(44) ஓ! மன்னா, மிகப் பலமாகத் தாக்கப்பட்டாலும், மிகுந்த பொறுமையுடன், ஓர் அங்குலமும் கலங்காத பீமசேனனை அங்கிருந்த போராளிகள் அனைவரும் பாராட்டினர்.(45)

அப்போது பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், கனமானதும், சுடர்மிக்கதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கதாயுதத்தைத் துரியோதனன் மீது வீசினான்.(46) வலிமைமிக்கவனும், அச்சமற்றவனுமான துரியோதனன் அந்த வீச்சைத் தன் செயல்பாட்டால் தவிர்த்தான். இதைக்கண்ட பார்வையாளர்கள் பேராச்சரியத்தை உணர்ந்தனர்.(47) பீமனால் வீசப்பட்ட கதாயுதம், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, செயலிழந்து கலங்கிக் கீழே விழுந்தபோது, இடியைப் போன்ற பேரொலியை எழுப்பிப் பூமியை நடுங்கச் செய்தது.(48) கௌசிகம் என்றழைக்கப்படும் திறன்மிக்கச் செயல்முறையைப் பின்பற்றி, மீண்டும் மீண்டும் உயரக் குதித்த துரியோதனன், சரியாகப் பீமனுடைய கதாயுதத்தின் இறக்கத்தைக் கவனித்து, அதைக் கலங்கடித்து,(49) பெரும் பலத்தைக் கொண்டவனான அந்தக் குரு மன்னன், இவ்வாறு பீமசேனனைக் கலங்கடித்து, இறுதியாகச் சினத்துடன் அவனது {பீமனது} மார்பைத் தாக்கினான்.(50)

அந்தப் பயங்கரப் போரில் உமது மகனால் {துரியோதனனால்} பலமாகத் தாக்கப்பட்ட பீமசேனன் மலைப்பையடைந்து சற்று நேரத்திற்கு என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(51) அந்த நேரத்தில், ஓ! மன்னா, சோமகர்களும் பாண்டவர்களும் பெரும் ஏமாற்றமடைந்து, உற்சாகத்தை இழந்தனர்.(52) அந்த அடியால் சினமடைந்த பீமன், யானையொன்று மற்றொரு யானையை எதிர்த்து விரைவதைப் போல உமது மகனை நோக்கி விரைந்தான்.(53) உண்மையில் பீமன், உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன், சிங்கமொன்று காட்டுயானையை எதிர்த்து விரைவதைப் போலத் துரியோதனனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(54) கதாயுதப் பயன்பாட்டில் சாதனை செய்தவனான அந்தப் பாண்டுவின் மகன், குரு மன்னனை அணுகி, உமது மகனை இலக்காகக் கொண்டு, தன் ஆயுதத்தைச் சுழற்றத் தொடங்கினான்.(55)

பிறகு பீமசேனன் துரியோதனனின் விலாப்புறத்தைத் தாக்கினான். அந்த அடியால் மலைப்பையடைந்த அவன் {துரியோதனன்}, முட்டியால் தன்னைத் தாங்கிக் கொண்டு பூமியில் விழுந்தான்.(56) குரு குலத்தின் முதன்மையான அவன், முழங்கால் மடிந்து மண்டியிட்டு விழுந்ததும், ஓ! உலகத்தின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்களுக்கு மத்தியில் பேராரவாரம் எழுந்தது.(57) ஓ! மனிதர்களில் காளையே, சிருஞ்சயர்களின் அவ்வாரவாரத்தைக் கேட்ட உமது மகன் சினத்தால் நிறைந்தான்.(58) அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரன், எழுந்து நின்று ஒரு பெரும்பாம்பைப் போலப் பெருமூச்சு விடத் தொடங்கி, பீமசேனனை எரித்துவிடுபவனைப் போல அவன் மீது தன் பார்வைகளைச் செலுத்தினான்.(59) பிறகு அந்தப் போரில், அந்தப் பாரதக் குலத்தில் முதன்மையானவன், அந்நேரத்தில் தன் எதிராளியின் தலையை நொறுக்கிவிடுபவனைப் போலப் பீமசேனனை நோக்கி விரைந்து சென்றான்.(60)

அப்போது, பயங்கர ஆற்றலைக் கொண்டவனான உயர் ஆன்ம துரியோதனன், அந்த உயர் ஆன்ம பீமசேனனின் நெற்றியைத் தாக்கினான். எனினும் அவன் ஓரங்குலமும் அசையாது மலையெனவே நின்றிருந்தான்.(61) அந்தப்போரில் இவ்வாறு தாக்கப்பட்ட அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, அபரிமிதமாகக் குருதி சிந்திய போது, மதநீர் வழியும் யானையைப் போல அழகானவனாகத் தெரிந்தான்.(62) தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அண்ணனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அவன், இரும்பாலானதும், வஜ்ரத்தைப் போன்ற ஒலியை உண்டாக்குவதும், வீரர்களைக் கொல்வதுமான தன் கதாயுதத்தை எடுத்து, தன் எதிராளியைப் பெரும் பலத்துடன் தாக்கினான்.(63) பீமசேனனால் தாக்கப்பட்ட உமது மகன், காட்டில் சூறாவளியின் பலத்தால் வேரோடு முறிக்கப்பட்டதும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பெரும் சால மரத்தைப் போல மேனியெங்கும் நடுங்கியபடியே கீழே விழுந்தான்.(64) உமது மகன் {துரியோதனன்} பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட பாண்டவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து, பேராரவாரம் செய்தனர். பிறகு உமது மகன், தடாகத்தில் இருந்து எழும் யானை ஒன்றைப் போலச் சுயநினைவு மீண்டு எழுந்தான்.(65)

எப்போதும் கோபம் நிறைந்தவனும், பெரும் தேர்வீரனுமான அந்த ஏகாதிபதி, பெருந்திறனுடன் திரிந்து, தன் முன் நிற்கும் பீமசேனனைத் தாக்கினான். இதில் அந்தப் பாண்டுவின் மகன் அங்கங்கள் பலவீனமடைந்து பூமியில் விழுந்தான்.(66) அந்தக் குரு இளவரசன், தன் சக்தியால் பீமசேனனைத் தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழச் செய்து சிங்க முழக்கம் செய்தான். இடியின் பலத்துக்கு ஒப்பாக இறங்கிய தனது கதாயுதத்தால் அவன் பீமனின் கவசத்தைப் பிளந்தான்.(67) அப்போது, சொர்க்கவாசிகளாலும், அப்சரஸுகளாலும் உண்டாக்கப்பட்ட பேராரவாரமானது ஆகாயத்தில் கேட்கப்பட்டது. பெரும் நறுமணத்தை வெளியிடும் மலர்மாரி தேவர்களால் பொழிப்பட்டு விழுந்தது.(68) பீமன் நெடுஞ்சாண் கிடையாகப் பூமியில் கிடப்பதையும், அவனது பலம் குறைந்ததையும், அவனது கவசம் பிளக்கப்பட்டதையும் கண்டு நமது எதிரிகளின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(69) ஒரு கணத்தில் தன் உணர்வுகளை மீண்டும் அடைந்த விருகோதரன் {பீமன்}, குருதியால் கறைபடிந்திருந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, பெரும் முயற்சியுட்ன தன்னை உறுதியடையச் செய்து கொண்டு, உருளும் கண்களுடன் எழுந்து நின்றான்” {என்றான் சஞ்சயன்}.(70)

தொடை முறிக்கப்பட்ட துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 58-பீமனுக்கும், துரியோதனனுக்கும் இடையில் கடும்போர் நடந்தது; அவ்விரு போராளிகளுக்கிடையில் உள்ள தகுதிகளைக் குறித்துக் கிருஷ்ணனிடம் விசாரித்த அர்ஜுனன்; கிருஷ்ணன் சொன்ன பதில்; பீமனுக்கு அவனது சபதத்தை நினைவூட்டுவதற்காகத் தன் தொடையைத் தட்டிக் காட்டிய அர்ஜுனன்; துரியோதனனின் தொடையை முறித்த பீமன்; துரியோதனனின் வீழ்ச்சியின் போது நேர்ந்த சகுனங்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குருகுலத்தின் முதன்மையான வீரர்களான அந்த இருவருக்கிடையில் இவ்வாறு நடைபெற்று வந்த போரைக் கண்ட அர்ஜுனன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(1) “உன் கருத்தில் இவர்கள் இருவருக்கிடையில் மேன்மையானவர் யார்? அவர்கள் எவர் எந்தத் தகுதியை {குணத்தைக்} கொண்டிருக்கின்றனர்? ஓ! ஜனார்த்தனா, இஃதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “அவர்கள் பெற்ற கல்வி இணையானதே, எனினும், பீமரின் வலிமை மிகப் பெரியது, அதே வேளையில் திருதராஷ்டிரர் மகனோ {துரியோதனனோ} மிகப் பெரும் திறனையும், பயிற்சியையும் கொண்டிருக்கிறான்.(3) பீமசேனர் நியாயமாக {முறையாகப்} போரிட்டால், அவர் வெற்றியை அடையமாட்டார். எனினும் அநியாயமாக {முறையில்லாமல்} போரிட்டால், அவரால் நிச்சயம் துரியோதனனைக் கொல்ல முடியும்.(4) தேவர்கள் வஞ்சத்தின் {மாயையின்} துணைகொண்டே அசுரர்களை வென்றனர். இதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். விரோசனன், வஞ்சத்தின் {மாயையின்} துணைகொண்டே சக்ரனால் {இந்திரனால்} வெல்லப்பட்டான்.(5) பலனைக் கொன்றவன் {இந்திரன்}, வஞ்சச் செயல் {மாயம்} ஒன்றாலேயே விருத்திரனை சக்தியிழக்கச் செய்தான். எனவே, வஞ்சத்தின் துணை கொண்டே பீமசேனர் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.(6)

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, சூதாட்டத்தின் போது, பீமர், போரில் தமது கதாயுதத்தால் சுயோதனனின் {துரியோதனனின்} தொடைகளை நொறுக்குவேன் எனச் சூளுரைத்திருக்கிறார்.(7) எனவே இந்த எதிரிகளை நொறுக்குபவர், தமது சபதத்தை இப்போது நிறைவேற்றட்டும். அவர், முழு வஞ்சகனான இந்தக் குரு மன்னனை, வஞ்சத்தாலேயே கொல்லட்டும்.(8) தமது பலத்தை மட்டுமே சார்ந்து பீமர் நியாயமாகப் போரிட்டால், மன்னர் யுதிஷ்டிரர், பேராபத்தை அடையக்கூடும்.(9) நான் உனக்கு மீண்டும் சொல்கிறேன், ஓ! பாண்டுவின் மகனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. மன்னர் யுதிஷ்டிரரின் தவறால் மட்டுமே இப்போது மீண்டும் நமக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.(10)

பீஷ்மர் மற்றும் பிற குருக்களைக் கொன்று பெரும் சாதனைகளை அடைந்த மன்னர் {யுதிஷ்டிரர்}, வெற்றியையும், புகழையும் அடைந்து, கிட்டத்தட்ட பகைமையின் முடிவையும் எட்டிவிட்டார்.(11) இவ்வாறு வெற்றியை அடைந்த அவர், ஐயத்திற்கும், ஆபத்தும் கொள்ளும் நிலையில் தன்னை மீண்டும் நிறுத்திக் கொண்டார். ஓ! பாண்டவா {அர்ஜுனா}, ஒரே போர்வீரனின் வெற்றி அல்லது தோல்வியில் போரின் விளைவை அமைத்துக் கொண்டதில் யுதிஷ்டிரரின் பங்குக்கு இது பெரும் மூடச் செயலாகும். சுயதோதனன் சாதித்தவனும், வீரனும், உறுதியான தீர்மானமும் கொண்டவனாவான்.(12,13) உசனஸால் {சுக்கிராச்சாரியரால்} சொல்லப்பட்ட பழைய வரியொன்றை நாம் கேட்டிருக்கிறோம். உண்மை பொருளுடன் அதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(14) “பகைவரின் படையில் எஞ்சியோரில் பிளக்கப்பட்டு, உயிருக்காகத் தப்பி ஓடி, மீண்டும் அணிதிரண்டு திரும்பிப் போரிட வருவோர், உறுதியான தீர்மானத்துடனும், ஒரே நோக்கத்துடனும் வருவதால் அவர்களைக் கண்டு எப்போதும் நாம் அஞ்சவேண்டும்” {என்பதே அந்த வரி}.(15)

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உயிரில் கொண்ட நம்பிக்கை அனைத்தையும் கைவிட்டு சீற்றத்துடன் விரைந்து வருவோரின் முன் சக்ரனாலேயே நிற்க முடியாது.(16) இந்தத் துரியோதனன் முறியடிக்கப்பட்டுத் தப்பி ஓடியவனாவான். அவனது துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்டுவிட்டன. அவன் தடாகத்தின் ஆழங்களுக்குள் நுழைந்தான். எனவே, அவன் வீழ்த்தப்பட்டு, தன் நாட்டைத் தக்க வைத்துக் கொள்வதில் நம்பிக்கையை இழந்து, காட்டுக்குள் ஓய்ந்து செல்லவும் விரும்பினான். அத்தகு மனிதனை, ஞானம் கொண்ட எந்த மனிதன்தான் தனிப் போருக்கு அறைகூவி அழைப்பான்?(17) ஏற்கனவே நமதாகிவிட்ட நாட்டைப் பறிப்பதில் துரியோதனன் வெல்லமாட்டானா? இல்லையா? என்பதை நான் அறியமாட்டேன். முழுமையாகப் பதிமூன்று வருடங்களாக அவன் பெரும் தீர்மானத்துடன் அந்தக் கதாயுதத்தில் பயிற்சி செய்திருக்கிறான். இப்போதும் கூட அவன், பீமசேனரைக் கொல்வதற்காக உயரக் குதிக்கிறான்; குறுக்காகவும் தாண்டுகிறான்.(18) வலிய கரங்களைக் கொண்ட பீமர், அநியாயமாக அவனைக் கொல்லவில்லையெனில், திருதராஷ்டிரர் மகனே நிச்சயம் மன்னனாக நீடிப்பான்” என்றான் {கிருஷ்ணன்}.(19) அந்த உயர் ஆன்மக் கேசவனின் {கிருஷ்ணனின்} அவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, பீமசேனனின் கண்களுக்கு முன்பாகத் தன் இடது தொடையை அடித்தான்.(20)

அந்தக் குறியீட்டைப் புரிந்து கொண்ட பீமன், உயர்த்தப்பட்ட தன் கதாயுதத்துடன், அழகிய வட்டமாகவும், யமகம் மற்றும் இன்னும் பிற நகர்தல் முறைகளிலும் {கதிகளிலும்} நகர்ந்து திரிந்து கொண்டிருந்தான்.(21) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சில நேரங்களில் வலது மண்டலத்தையும், சில நேரங்களில் இடதும் மண்டலத்தையும், சில நேரங்களில் கோமூத்ரகம் {கோமூத்ரி} என்றழைக்கப்படும் அசைவையும் பின்பற்றித் திரியத் தொடங்கித் தன் எதிரியை மலைக்கச் செய்தான்.(22) அதேபோலவே, ஓ! ஏகாதிபதி, கதாயுதப் போரை நன்கறிந்தவனான உமது மகனும், பீமசேனனைக் கொல்வதற்குப் பெருஞ்சுறுசுறுப்புடன் அழகாகத் திரிந்து கொண்டிருந்தான்.(23) அந்த வீரர்கள் இருவரும், பகைமையின் முடிவை அடைய விரும்பி, சந்தனக் குழம்பு மற்றும் நறுமணக் களிம்புகளால் பூசப்பட்டிருந்த தங்கள் பயங்கரக் கதாயுதங்களைச் சுழற்றியபடியே இரு கோபக்கார யனைகளைப் போல அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தனர்.(24) ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், பெரும் வீரத்தைக் கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும், பாம்பைப் பிடிக்க விரும்பும் இரு கருடர்களைப் போலப் போரிட்டனர்.(25)

அம்மன்னனும், பீமனும் அழகிய வட்டங்களில் சுழன்று அவர்களது கதாயுதங்கள் மோதிக் கொண்டபோது, அவ்வாறு மீண்டும் மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் தீப்பொறிகள் உண்டாகின.(26) வீரமிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், அந்தப் போரில் இணையாகவே தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள், ஓ! ஏகாதிபதி, சூறாவளியால் கலங்கடிக்கப்பட்ட இரண்டு பெருங்கடல்களுக்கு ஒப்பாக இருந்தனர்.(27) மதங்கொண்ட இரு யானைகளைப் போல இணையாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட அவர்களின் கதாயுதங்கள் மோதிக் கொண்டபோது, அவை இடியின் பேரொலியை உண்டாக்கின.(28) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நெருக்கமான இடத்திற்குள் நடந்து கொண்டிருந்தபோது, அந்த எதிரிகளைத் தண்டிப்போரான இருவரும் போரினால் களைப்பையடைந்தனர்.(29) எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும், சிறிது நேரம் ஓய்வெடுத்து, சினத்தால் நிறைந்து, தங்கள் கதாயுதங்களை உயர்த்திக் கொண்டு, மீண்டும் ஒருவரோடொருவர் போரிடத் தொடங்கினர்.(30)

அவர்களது கதாயுதங்கள் மீண்டும் மீண்டும் இறங்கி அவர்கள் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் செய்த போரானது, மிகப் பயங்கரமானதாகவும், முற்றிலும் தடுக்கப்பட முடியாததாகவும் ஆனது.(31) காளைகளைப் போன்ற கண்களைக் கொண்டவர்களும், பெருஞ்சுறுசுறுப்பைக் கொண்டவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், அம்மோதலில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்து, சகதியிலுள்ள இரு காட்டெருமைகளைப் போல மூர்க்கமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(32) அங்கங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, தலைமுதல் கால் வரை குருதியால் மறைக்கப்பட்டு இருந்த அவர்கள், இமயத்தின் சாரலில் உள்ள இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தெரிந்தனர்.(33) அம்மோதல் நடந்து கொண்டிருந்த போது, விருகோதரன் {பீமன்} (ஓர் உத்தியுடன்) துரியோதனனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பதுபோல் தெரிந்த போது, சிரித்துக் கொண்டே அவன் {துரியோதனன்} சிறிது முன்னே சென்றான்.(34) போரில் நன்கு திறம் படைத்தவனும், வலிமைமிக்கவனுமான விருகோதரன், தன் எதிராளி அருகில் வருவதைக் கண்டு திடீரென அவன் மீது தன் கதாயுதத்தை வீசினான்.(35)

தன் மீது வீசப்படும் கதாயுதத்தைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவ்விடத்தில் இருந்து நகர்ந்து சென்றதால் அந்த ஆயுதம் கலங்கடிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தது.(36) குரு குலத்தில் முதன்மையானவனான உமது மகன், அந்த வீச்சைத் தவிர்த்து, தன் ஆயுதத்தால் வேகமாகப் பீமசேனனைத் தாக்கினான்.(37) அந்த வீச்சின் பலத்தால் வழிந்த பெரும் அளவிலான குருதியின் விளைவால், அளவிலா சக்தி கொண்ட பீமசேனன் மலைப்படைந்ததாகத் தெரிந்தது.(38) எனினும் துரியோதனன், அந்தக் கணத்தில் பீமன் அவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அறியாதிருந்தான். பீமன் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருந்தாலும், தன் பொறுமையனைத்தையும் திரட்டிக் கொண்டு அதைத் தாக்குப்பிடித்தான்.(39) எனவே துரியோதனன், அசைவில்லாதவனாகவும், அடியைத் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருப்பவனுமாகவே அவனைக் கண்டான். அதன் காரணமாகவே உமது மகன் மீண்டும் அவனைத் தாக்காதிருந்தான்.(40)

சற்று ஓய்ந்திருந்த வீரப் பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அருகிலேயே நின்றிருந்த துரியோதனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(41) அளவிலா சக்தி கொண்ட பீமசேனன், சினத்தால் நிறைந்து, தன்னை நோக்கி விரைந்து வருவதைக் கண்ட உமது உயர் ஆன்ம மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவனது வீச்சைக் கலங்கடிக்க விரும்பி, அவஸ்தானம் என்றழைக்கப்படும் திறன் நடையில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தான். எனவே அவன், விருகோதரனை {பீமனை} வஞ்சிப்பதற்காக உயரக் குதிக்க விரும்பினான்.(42,43) பீமசேனன் தன் எதிராளியின் நோக்கத்தை முற்றிலும் புரிந்து கொண்டான். எனவே, சிங்க முழக்கத்தோடு அவனை நோக்கி விரைந்த அவன் {பீமன்}, தனது முதல் இலக்கைக் கலங்கடிக்க அந்தக் குருமன்னன் {துரியோதனன்} உயரக் குதித்த போது, அவனது தொடைகளில் தன் கதாயுதத்தை வீசினான்.(44,45)

இடியின் சக்தியைக் கொண்டதும், பயங்கரச் செயல்களைப் புரியும் பீமனால் வீசப்பட்டதுமான அந்தக் கதாயுதம், துரியோதனின் அழகிய தொடைகள் இரண்டையும் முறித்தது.(46) மனிதர்களில் புலியான உமது மகன், பீமசேனனால் தன் தொடைகள் முறிக்கப்பட்டதும், தன் வீழ்ச்சியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடியே கீழே விழுந்தான்.(47) மீண்டும் மீண்டும் இடைவேளைவிட்டு பேரொலியுடன் கூடிய கடுங்காற்று வீசத் தொடங்கியது. புழுதி மாரி பொழிந்தது. மரங்கள், செடிகள், மலைகள் ஆகியவற்றுடன் கூடிய பூமாதேவி நடுங்கத் தொடங்கினாள்.(48) பூமியின் ஏகாதிபதிகள் அனைவருக்கும் தலைவனான அந்த வீரர் வீழ்ந்தபோது, அடிக்கடி விழுந்த இடியுடன் சேர்ந்து பேரொலியுடன் கூடிய கடுங்காற்று வீசியது. உண்மையில், அந்தப் பூமியின் தலைவன் வீழ்ந்தபோது, வானத்தில் இருந்து பெரிய எரிநட்சத்திரங்கள் விழுவது தெரிந்தது.(49) ஓ! பாரதா அங்கே குருதிமாரியும், புழுதிமாரியும் பொழிந்தது. உமது மகனின் வீழ்ச்சியின் காரணமாக மகவத்தால் {இந்திரனால்} இவை பொழியப்பட்டன.(50)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யக்ஷர்கள், ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களால் உண்டாக்கப்பட்ட பேரொலி ஆகாயத்தில் கேட்கப்பட்டது.(51) அந்தப் பயங்கர ஒலியால் ஆயிரக்கணக்கான பறவைகளும், விலங்குகளும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீதிநிறைந்த ஒலிகளை வெளியிடத் தொடங்கின.(52) (பாண்டவப்) படையில் (கொல்லப்படாமல்) எஞ்சியிருந்த குதிரைகள், யானைகள் ஆகியவையும், மனிதர்களும், உமது மகன் {துரியோதனன்} வீழ்ந்ததும் பேரொலியை எழுப்பினர். சங்கு முழக்கங்களும், பேரிகைகளின் பேரொலிகளும், மிருதங்களின் ஒலிகளும் உரக்கக் கேட்டன.(53) பூமியின் ஆழங்களில் இருந்து ஒரு பயங்கர ஒலி வருவதாகத் தெரிந்தது. உமது மகனின் வீழ்ச்சியால், ஓ! ஏகாதிபதி, அச்சந்தரும் வடிவங்களைக் கொண்ட தலையற்ற உயிரினங்களும், பல கால்கள் மற்றும் கரங்களைக் கொண்டிருந்தவையும், அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், ஆடத்தொடங்கிப் பூமியின் அனைத்துப் பக்கங்களையும் மறைக்கத் தொடங்கின.(54) ஓ! மன்னா, கரங்களில் கொடிமரங்கள், அல்லது ஆயுதங்களுடன் இருந்த போராளிகள், ஓ! மன்னா, உமது மகனின் வீழ்ச்சிக்குப் பிறகு நடுங்கத் தொடங்கினர்.(55)

ஓ! மன்னர்களில் சிறந்தவரே, தடாகங்களும், கிணறுகளும் இரத்ததைக் கக்கின. வேகமான நீரோட்டத்தைக் கொண்ட ஆறுகள் எதிர்த்திசைகளில் ஓடத் தொடங்கின.(56) உமது மகனான துரியோதனன் வீழ்ந்த நேரத்தில், ஓ! மன்னா, ஆண்கள், பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் தெரியத் தொடங்கினர்.(57) இந்த அற்புதச் சகுனங்களைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனக்கலக்கத்தால் நிறைந்தனர்.(58) தேவர்களும், கந்தர்வர்களும், உமது மகன்களுக்கிடையே நடைபெற்ற அந்த அற்புதப் போரைக் குறித்துப் பேசிக் கொண்டே தாங்கள் விரும்பிய உலகத்திற்குச் சென்றனர்.(59) அதே போல, வேகமாகச் செல்பவர்களான சித்தர்களும், சாரணர்களும், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரையும் புகழ்ந்தபடியே, தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அவ்விடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(60)

பீமனைக் கண்டித்த யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 59- தொடை முறிந்து கிடந்த துரியோதனன்; பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, துரியோதனனை நிந்தித்து, அவனது தலையைக் காலால் மிதித்த பீமன்; பீமனைக் கண்டித்து, துரியோதனனுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் புலம்பல்…

சஞ்சயன் சொன்னான், “(சூறாவளியால்) வேராடு முறிந்த விழுந்த பெரும் சால மரத்தைப் போலப் பூமியில் விழுந்து கிடந்த துரியோதனனைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(1) மயிர்க்கூச்சத்தை அடைந்த சோமகர்களும், சிங்கத்தால் வீழ்த்தப்பட்ட மதங்கொண்ட யானையொன்றைப் போல வீழ்ந்து கிடக்கும் அந்தக் குரு மன்னனை {துரியோதனனைக்} கண்டனர்.(2) துரியோதனனைக் கீழே வீழ்த்திய வீர பீமசேனன், அந்தக் குரு தலைவனை {துரியோதனனை} அணுகி,(3) “ஓ இழிந்தவனே, முன்பு சபைக்கு மத்தியில் ஆடையிழந்திருந்த திரௌபதியைக் கண்டு சிரித்து, ஓ மூடா, எங்களை, “மாடு, மாடு” என்று நீ அழைத்தாய்.(4) அந்த அவமதிப்பின் கனியை {பலனை} இப்போது நீ தாங்கிக் கொள்வாயாக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன், வீழ்ந்துவிட்ட தன் எதிரியின் தலையைத் தன் இடது காலால் தீண்டினான்.(5)

கோபத்தால் கண்கள் சிவந்திருந்தவனும், பகைவரின் படையைக் கலங்கடிப்பவனுமான பீமசேனன் மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான். ஓ ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே} அவற்றைக் கேட்பீராக,(6) “எங்களை அவமதிக்கும் வகையில் “மாடு, மாடு” என்று சொல்லி ஆடியவர்கள் எவரோ, அவர்களைக் கண்டு, “மாடு, மாடு” என்ற அதே வார்த்தைகளைச் சொல்லி இப்போது நாங்கள் ஆடுவோம்.(7) எங்களிடம் வஞ்சனையோ, நெருப்போ, பகடையாட்டமோ {சூதாட்டமோ} ஏதும் இல்லை. எங்கள் கரங்களின் வலிமையை நம்பியே நாங்கள் எங்கள் எதிரிகளைத் தடுத்துப் பீடிக்கிறோம்” என்றான்.(8) பகைமையின் மறுகரையை அடைந்தவனான விருகோதரன் மீண்டும் சிரித்துக் கொண்டே, யுதிஷ்டிரன், கேசவன் {கிருஷ்ணன்}, சிருஞ்சயர்கள், தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் ஆகியோரிடம் மெதுவாக இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9) {அவன்}, “திரௌபதி நோயுற்றிருந்தபோது, சபைக்கு இழுத்து வந்து அவளை ஆடையிழக்கச் செய்தவர்கள் எவரோ[1], அந்தத் தார்தராஷ்டிரர்கள், யக்ஞசேனன் மகளின் {திரௌபதியின்} தவத்தின் மூலம் பாண்டவர்களால் கொல்லப்பட்டதைக் காண்பீராக.(10) எங்களை எள்ளுப் பதர்கள் என்றழைத்த மன்னர் திருதராஷ்டிரரின் தீய இதயம் கொண்ட மகன்கள் அனைவரும், அவர்களது உறவினர்கள் மற்றும் தொண்டர்களுடன் எங்களால் கொல்லப்பட்டனர். (அச்செயல்களின் விளைவால்) ஒன்று நாம் சொர்க்கத்திற்குச் செல்வோமா, அல்லது நகரகத்தில் வீழ்வோமா என்பது சிறிய காரியமே[2]” என்றான்.(11)

மீண்டும் தன் தோளில் கிடந்த கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த அந்த ஏகாதிபதியின் தலையைத் தன் இடது காலால் தாக்கி, வஞ்சகம் நிறைந்த துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(12) நீதிமிக்க ஆன்மாக்களைக் கொண்ட சோமகர்களில் முதன்மையான வீரர்கள் பலரால், அந்தக் குரு குலத்தில் முதன்மையானவனின் தலையில், குறுகிய இதயத்தோடு இன்புற்றிருந்த பீமசேனனின் காலைக் கண்டு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.(13) விருகோதரன் உமது மகனைத் தாக்கி வீழ்த்தி இவ்வாறு தற்பெருமை பேசி, வெறிகொண்டு கூத்தாடியபோது, மன்னன் யுதிஷ்டிரன் அவனிடம்,(14) “நீ உன் பகைமையைத் தீர்த்துக் கொண்டாய், நியாமாகவோ, அநியாயமாகவோ உன் சபதத்தையும் நிறைவேற்றிக் கொண்டாய். ஓ பீமா, இப்போது நிறுத்துவாயாக.(15)

உன் காலால் இவனது தலையை நசுக்காதே. பாவகரமாகச் செயல்படாதே. துரியோதனன் ஒரு மன்னனாவான். மேலும் இவன் உன் சொந்தக்காரனுமாவான். இவன் வீழ்ந்துவிட்டான். ஓ பாவமற்றவனே, இந்த உனது நடத்தை முறையானதில்லை.(16) துரியோதனன் பதினோரு அக்ஷௌஹிணிகளின் தலைவனாக இருந்தான். இவன் குருக்களின் மன்னனாகவும் இருந்தான். ஓ பீமா, மன்னனும், உறவினனுமான இவனை உன் காலால் தீண்டாதே.(17) இவனது உறவினர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவனது நண்பர்களும், அமைச்சர்களும் சென்றுவிட்டனர். இவனது துருப்புகளும் அழிக்கப்பட்டுவிட்டன. போரில் இவன் வீழ்த்தப்பட்டுவிட்டான். அனைத்து வகையிலும் இவன் அனுதாபத்திற்குரியவன். இவன் மன்னன் என்பதை நினைவுகூர்ந்தால், இவன் அவமதிக்கப்படத் தகுந்தவனில்லை.(18) இவன் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டான். இவனது நண்பர்களும், சொந்தங்களும் கொல்லப்பட்டுவிட்டனர். இவனது சகோதரர்களும், மகன்களும் கூடக் கொல்லப்பட்டுவிட்டனர். இவனது ஈமப்பிண்டம் எடுக்கப்பட்டுவிட்டது. இவன் நமது சகோதரனாவான். இதை அவனுக்கு நீ செய்வது முறையாகாது.(19) “பீமசேனன் நீதிமிக்க நடத்தை கொண்டவனாவான்” என்று முன்பு உன்னைக் குறித்து மக்கள் சொன்னார்கள். ஓ பீமசேனா, நீ ஏன் இம்மன்னனை இவ்வழியில் அவமதிக்கிறாய்?” என்று கேட்டான்.(20)

இவ்வார்த்தைகளைப் பீமசேனனிடம் சொன்ன யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைபட்ட குரலுடனும், துன்பத்தால் பீடிக்கப்பட்டும், எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனனை அணுகி, அவனிடம்,(21) “ஓ ஐயா, நீ கோபப்படவோ, உனக்காகத் துன்பப்படவோ கூடாது. உனது முந்தைய செயல்களின் பயங்கர விளைவுகளையே நீ சுமக்கிறாய் என்பதில் ஐயமில்லை.(22) ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, நாங்கள் உன்னைக் காயப்படுத்த வேண்டும், நீ எங்களைக் காயப்படுத்த வேண்டும் என்ற இந்தச் சோகமான தீய முடிவு படைப்பாளனாலேயே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் ஐயமில்லை.(23) ஓ பாரதா, பேராசை, செருக்கு, மடைமை ஆகிய உன் குற்றங்களாலேயே இந்தப் பேரிடர் உனக்கு நேர்ந்திருக்கிறது.(24) உன் தோழர்கள், சகோதரர்கள், தந்தைமார்கள், மகன்கள், பேரர்கள் மற்றும் அனைவரையும் கொல்லச் செய்து, இப்போது நீ உன் மரணத்தை நெருங்கியிருக்கிறாய்.(25)

உன் குற்றத்தின் விளைவாலேயே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான உன் சகோதரர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் எங்களால் கொல்லப்பட்டனர். இவை யாவும் தடுக்கப்பட முடியாத விதியின் செயல்பாடு என்றே நான் நினைக்கிறேன்.(26) நீ பரிதாபத்திற்குரியவன் அல்ல. மறுபுறம், ஓ பாவமற்றவனே, உன் மரணம் பொறாமை கொள்ளத்தக்கதாகும். ஓ கௌரவா, அனைத்து வகையிலும் நாங்களே பரிதாபத்திற்குரியவர்கள். எங்கள் அன்புக்குரிய நண்பர்களும், சொந்தங்களும் இல்லாமல் நாங்கள் பரிதாபகரமான வாழ்வை இழுக்கப் போகிறோம்.(27) ஐயோ, என் சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரர்களைக் குறித்த சோகத்தில் உணர்வுகளை இழந்து துக்கத்தில் மூழ்கியிருக்கும் கைம்பெண்களை நான் எவ்வாறு காணப் போகிறேன்.(28) ஓ மன்னா, நீ இந்த உலகத்தில் இருந்து செல்லப் போகிறாய். நீ சொர்க்கத்தில் நிச்சயம் வசிப்பிடத்தைக் கொள்ளப் போகிறாய். மறுபுறம் நாங்களோ, நரகில் வாழும் உயிரினங்களாகக் கருதப்பட்டு, கடுந்துக்கத்தைத் தொடர்ந்து அனுபவிக்கப் போகிறோம்.(29) திருதராஷ்டிரர் மகன்கள் மற்றும் பேரர்களின் மனைவியர் துன்பத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். சோகத்தால் நொறுங்கியிருக்கும் அந்தக் கைம்பெண்டிர், எங்கள் அனைவரையும் சபிப்பார்கள் என்பதில் ஐயமில்லை” என்றான்.(30)

இவ்வார்த்தைகளைச் சொன்ன தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, துயரால் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, கடும் மூச்சு விடத் தொடங்கி, புலம்பல்களில் ஈடுபட்டான்” {என்றான் சஞ்சயன்}.(31)

பலராமனை வளைத்துப் பிடித்த கேசவன்! – சல்லிய பர்வம் பகுதி – 60-கதாயுத்த விதிமுறைகளை மீறி, துரியோதனனின் உந்திக்குக் கீழே தாக்கிய பீமனைக் கண்டு கோபமடைந்த பலராமன் தன் கலப்பையை ஓங்கியபடியே பீமனை நோக்கி விரைந்து சென்றது; பலராமனைப் பிடித்துத் தடுத்த கிருஷ்ணன்; பீமன் தரப்பு நியாயத்தைச் சொன்ன கிருஷ்ணன்; கிருஷ்ணனின் உரையைக் கேட்டு வெகுண்ட பலராமன், துரியோதனனைப் புகழ்ந்து, பீமனை இகழ்ந்து துவாரைகைக்குப் புறப்பட்டுச் சென்றது; நாட்டின் அரசுரிமையை ஏற்குமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன பீமன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா, வலிமைமிக்கவனும், மது குலத்தில் முதன்மையானவனுமான பலதேவன் {பலராமன்}, நியாயமற்ற வகையில் (குரு) மன்னன் {துரியோதனன்} தாக்கி வீழ்த்தப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்?(1) ஓ! சஞ்சயா, கதாயுத மோதல்களில் நல்ல திறம் கொண்டவனும், அதன் விதிமுறைகளை நன்கறிந்தவனுமான அந்தத ரோகிணியின் மகன் {பலராமன்}, அச்சந்தர்ப்பத்தில் என்ன செய்தான் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தாக்குபவர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான ராமன் {பலராமன்}, உமது மகன் {துரியோதனன்} தொடைகளில் தாக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபத்தை அடைந்தான்.(3) தன் கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, அம்மன்னர்களுக்கு மத்தியில் தன் கரங்களை உயர்த்தி, ஆழ்ந்த சோகக் குரலில், “ஓ!, பீமனுக்கு ஐயோ, பீமனுக்கு ஐயோ.(4) ஓ!, ஒரு வீச்சால் உந்திக்கு {தொப்புளுக்குக்} கீழே தாக்கப்பட்ட இத்தகு நியாயமற்ற போருக்கு ஐயோ. கதாயுதப்போரில் விருகோதரன் {பீமன்} செய்தது போன்ற ஒரு செயலை இதற்கு முன்பு எப்போதும் பார்க்கப்பட்டதில்லை.(5) உந்திக்குக் கீழே உள்ள எந்த அங்கமும் தாக்கப்படலாகாது. இதுவே ஆய்வுகளில் {சாத்திரங்களில்} விதிக்கப்பட்ட விதியாகும். எனினும், ஆய்வுகளின் உண்மைகளை அறியாதவனான இந்தப் பீமன் அறியாமை கொண்ட இழிந்தவனாவான். எனவேதான் இவன் {பீமன்} தன் விரும்பியபடி நடந்து கொண்டான்” என்றான்[1].(6)இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ராமன் {பலராமன்} பெரும் கோபம் கொண்டான். அப்போது, அந்த வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்}, தன் கலப்பையை உயர்த்திக் கொண்டு பீமசேனனை நோக்கி விரைந்தான்.(7) உயர்த்தப்பட்ட கரங்களுடன் கூடிய அந்த உயர் ஆன்மப் போர்வீரனின் வடிவமானது, பல்வேறு வகை உலோகங்களுடன் பல வண்ணங்களில் இருக்கும் பெரும் கைலாச மலையைப் போல இருந்தது[2].(8) எனினும், எப்போதும் பணிவுடன் இருப்பவனான வலிமைமிக்கக் கேசவனோ {கிருஷ்ணனோ}, விரைந்து சென்ற அந்த ராமனை {பலராமன}, பருத்துருண்டிருந்த தன் கரங்களால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டான்.(9) நிறத்தில் ஒருவன் கருப்பாகவும் {கிருஷ்ணன்}, மற்றவன் வெளுப்பாகவும் {பலராமன்} இருந்த அந்த யது குல வீரர்களில் முதன்மையான இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாலை நேர வானில் {ஒரே நேரத்தில்} இருக்கும் சூரியனையும் சந்திரனையும் போல அக்கணத்தில் மிக அழகானவர்களாகத் தெரிந்தனர்.(10)ராமனின் {பலராமனின்} கோபத்தைத் தணிக்கும் வகையில் கேசவன் {கிருஷ்ணன்} அவனிடம், “ஒருவனின் சொந்த வளர்ச்சி, ஒருவனுடைய நண்பனின் வளர்ச்சி, ஒருவனுடைய நண்பனது நண்பர்களின் வளர்ச்சி,, ஒருவனுடைய எதிரியின் சிதைவு, ஒருவனின் எதிரியுடைய நண்பனின் சிதைவு, ஒருவனின் எதிரியுடைய நண்பர்களின் நண்பர்களுடைய சிதைவு ஆகிய ஆறு வகை வளர்ச்சியையும் ஒரு மனிதன் தன் வளர்ச்சியாகக் கொள்ளலாம்.(11) இவை ஒருவனுக்கு இதற்கு மாறாக நடக்கும்போதோ, ஒருவனுடைய நண்பர்களுக்கு அவ்வாறு நடக்கும்போதோ, அவன் தன் வீழ்ச்சி அருகில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அத்தகு நேரங்களின் அவன் தீர்வை அடைவதற்கான வழிகளைத் தேட வேண்டும் {பகைமையைத் தணித்துக் கொள்ள வேண்டும்}.(12) மாசில்லா ஆற்றலைக் கொண்டவர்களான பாண்டவர்கள் இயல்பாகவே நம் நண்பர்களாவர். அவர்கள் நமது அத்தையின் {குந்தியின் -நம் தந்தையின் சகோதரியுடைய} பிள்ளைகளாவர். அவர்கள் தங்கள் பகைவர்களால் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.(13) தன் சபதத்தை நிறைவேற்றுவது ஒருவனது கடமையாகும். முன்பு பீமர், பெரும்போர் ஒன்றில் இந்தத் துரியோதனனின் தொடைகளைத் தமது கதாயுதத்தால் நொறுக்குவதாகச் சபைக்கு மத்தியில் வைத்து சபதமேற்றார்.(14) மேலும், பெரும் முனிவரான மைத்திரேயரும் கூட, ஓ எதிரிகளை எரிப்பவரே, “பீமன் தன் கதாயுதத்தால் உன் தொடைகளை நொறுக்குவான்” என்று முன்பே துரியோதனனைச் சபித்திருக்கிறார்.(15) இவை யாவற்றின் விளைவால், நான் பீமரிடம் எக்குற்றத்தையும் காணவில்லை. ஓ! பிரலம்பனைக் கொன்றவரே {பலராமரே}, கோபத்திற்கு வசப்படாதீர். பாண்டவர்களுடனான நமது உறவு, பிறப்பாலும், குருதியாலும், இதயங்களின் ஈர்ப்பாலும் ஏற்பட்டதாகும்.(16) இவர்களது வளர்ச்சியே நம் வளர்ச்சியாகும். எனவே, ஓ! மனிதர்களில் காளையே, கோபத்திற்கு வசப்படாதீர்” என்றான் {கிருஷ்ணன்}.

அறநெறிகளை அறிந்தவனான அந்தக் கலப்பைதாரி {பலராமன்}, வாசுதேவனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, “நல்லோரால் அறநெறி {அறம்} நன்றாகப் பயிலப்படுகிறது. எனினும், பெரும் பேராசையுள்ளோருக்குப் பயனில் {பொருளில்} விருப்பமும், காரியங்களில் பெரும்பற்று கொண்டோருக்கு இன்பத்தில் விருப்பமும் என இவ்விரு காரியங்களால், அறநெறியானது {அறமானது} எப்போதும் பீடிக்கப்படுகிறது.(18) அறம் மற்றும் பொருளையோ, அறம் மற்றும் இன்பத்தையோ, இன்பம் மற்றும் பொருளையோ பீடிக்காமல் {பாதிப்படையச் செய்யாமல்}, அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் முறையே பின்பற்றுபவர்கள், பெரும் மகிழ்ச்சியை அடைவதில் எப்போதும் வெல்கிறார்கள்.(19) நீ என்னிடம் என்ன சொன்னாலும், பீமசேனனால் அறம் பீடிக்கப்பட்டதன் விளைவால், என்னால் இப்போது சொல்லப்பட்ட இந்த {அறம், பொருள் மற்றும் இன்பத்தின்} ஒத்திசைவு நிலைகுலைகிறது” என்று சொன்னான்.(20)

கிருஷ்ணன் {பலராமரிடம்}, “கோபமில்லாதவராகவும், அற ஆன்மாகக் கொண்டவராகவும், அறத்திற்கு அர்ப்பணிப்பு கொண்டவராகவும் நீர் எப்போதும் சொல்லப்படுகிறீர். எனவே, அமைதியடைவீராக, கோபத்திற்கு வசப்படாதீர்.(21) கலிகாலம் அருகில் இருக்கிறது என்பதை அறிவீராக. பாண்டுவின் மகன் {பீமன்} செய்த சபதத்தையும் நினைவுகூர்வீராக. எனவே, இந்தப் பாண்டுவின் மகன், தமது சபதத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது பகைமைக்கான கடனைத் தீர்த்தவராகவே கருதப்பட வேண்டும்” என்றான்”.(22)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இருந்து இந்தத் தவறான உரையை {கபட தர்மத்தைக்}[3] கேட்ட ராமன் {பலராமன்}, தன் கோபத்தைத் தணித்துக் கொள்ளவும், உற்சாகங்கொள்ளவும் தவறினான். பிறகு அவன் அந்தச் சபையில்,(23) “அற ஆன்மா கொண்ட மன்னன் சுயோதனனை நியாயமற்ற முறையில் கொன்ற இந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, இவ்வுலகில் வஞ்சகப் போர்வீரனாக {கபடயுத்தவீரனாக்} கருதப்படுவான்.(24) மறுபுறம், அற ஆன்மா கொண்ட துரியோதனனோ, அழிவில்லா அருளை அடைவான். இவ்வாறு தாக்கப்பட்டவனும், திருதராஷ்டிரரின் அரச மகனுமான இந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்} நல்ல போர்வீரனாவான்.(25) போர் வேள்விக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, களத்தில் தொடக்க விழாக்களையும் செய்து, இறுதியாகத் தன் எதிரிகள் காட்டிய நெருப்பில் தன் உயிரையே ஆகுதியாக ஊற்றிய துரியோதனன், மகிமையை அடைந்து தன் இறுதி காணிக்கைகளைச் செலுத்தி தன் வேள்வியை நல்ல முறையில் நிறைவு செய்தான்” என்று சொன்னான்.(26) வெண்மேகத்தின் முகட்டைப் போலத் தெரிந்தவனான அந்த ரோகிணியின் வீர மகன் {பலராமன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தன் தேரில் ஏறி துவாரகையை நோக்கிச் சென்றான்.(27) ராமன் துவாராவதிக்குப் புறப்பட்டதும், பாஞ்சாலர்கள், விருஷ்ணிகள் மற்றும் பாண்டவர்கள் உற்சாகத்தை இழந்தனர்.(28)அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, பெரும் துன்பத்தில் இருந்தவனும், கவலையில் நிறைந்தவனும், தலையைத் தொங்கப் போட்டிருந்தவனும், ஆழ்ந்த துன்பத்தின் விளைவால் என்ன செய்வது என்று அறியாதிருந்தவனுமான யுதிஷ்டிரனை அணுகி, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(29) வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! நீதிமானான யுதிஷ்டிரரே, உறவினர்களும், நண்பர்களும் கொல்லப்பட்டவனும், உணர்வற்று வீழ்ந்து கிடப்பவனுமான துரியோதனனின் தலையானது, பீமரின் காலால் தாக்கப்பட அனுமதித்து, இந்த நியாயமில்லாத செயலை ஏன் நீர் அங்கீகரித்தீர். அறநெறிகளின் வழிகளை அறிந்தவரான நீர், ஓ! மன்னா, இந்தச் செயலை ஏன் அலட்சியமாகப் {பாரபட்சத்துடன்} பார்த்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.(30,31)

யுதிஷ்டிரன், “ஓ! கிருஷ்ணா, விருகோதரன் கோபத்தால் உந்தப்பட்டு, தன் காலால் மன்னனின் தலையைத் தீண்டிய இந்தச் செயல் எனக்கு ஏற்புடையதில்லை, என் குலத்தின் இவ்வழிவிலும் எனக்கு மகிழ்ச்சியில்லை.(32) திருதராஷ்டிரர் மகன்களின் வஞ்சகத்தால் {கபடத்தால்} நாங்கள் எப்போதும் வஞ்சிக்கப்பட்டோம். அவர்கள் எங்களிடம் பல கொடூர வார்த்தைகளைப் பேசினர். மேலும் அவர்கள் எங்களைக் காடுகளுக்கு நாடு கடத்தினர்.(33) அச்செயல்கள் அனைத்தின் காரணமாகவும் பீமசேனனின் இதயம் பெருந்துயரை அடைந்தது. ஓ! விருஷ்ணி குலத்தோனே, இவையாவையும் சிந்தித்தே நான் அலட்சியமாகப் பார்த்திருந்தேன்.(34) ஞானத்தை இழந்தவனும், ஆசைகளுக்கு அடிமையானவனும், பேராசை கொண்டவனுமான அந்தத் துரியோதனனைக் கொன்ற இந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, நீதியினாலோ {தர்மத்தினாலோ}, அநீதியினாலோ {அதர்மத்தினாலோ}, தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும்” என்றான்”.(35)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “யுதிஷ்டிரன் இதைச் சொன்ன பிறகு, யது குலத்தைத் தழைக்கச் செய்பவனான வாசுதேவன், “அப்படியே ஆகட்டும்” என்று சிரமத்துடன் சொன்னான்.(36) உண்மையில் வாசுதேவனிடம், யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பீமனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எப்போதும் விரும்பிய அவன் {கிருஷ்ணன்}, போரில் பீமன் செய்த அச்செயல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டான்.(37) போரில் உமது மகனைத் தாக்கி வீழ்த்திய கோபக்கார பீமசேனன், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், கூப்பிய கரங்களுடனுன் யுதிஷ்டிரனின் முன்பு நின்று, முறையான வடிவில் அவனை வணங்கினான்.(38) பெருஞ்சக்தி கொண்ட விருகோதரன் {பீமன்}, மகிழ்ச்சியால் விரிந்த கண்களுடனும், தான் வென்ற வெற்றியின் செருக்குடனும், ஓ! மன்னா, தன் அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்},(39) “ஓ! மன்னா, பூசல்கள் என்ற இடைஞ்சல் இல்லாதவளும், முட்கள் அனைத்தும் நீக்கப்பட்டவளுமான பூமாதேவி இன்று உம்முடையவனாள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அவளை ஆட்சி செய்து உமது வகைக்கு {க்ஷத்திரியனுக்கு} உண்டான கடமைகளை நோற்பீராக.(40) இந்தப் பகைமைகளுக்குக் காரணமானவனும், தனது கபடவழிகளால் அதை வளர்த்தவனும், வஞ்சகத்தை விரும்பியவனும் இழிந்தவனுமான அந்தப் பொல்லாதவன் {துரியோதனன்}, ஓ! பூமியின் தலைவா, தாக்கி வீழ்த்தப்பட்டு {இதோ} வெறுந்தரையில் கிடக்கிறான்.(41) கொடூர வார்த்தைகளைச் சொல்பவர்களும், ராதையின் மகன் {கர்ணன்} மற்றும் சகுனி ஆகிய உமது எதிரிகளும், துச்சாசனனின் தலைமையிலான இழிந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.(42) ரத்தினங்கள் அனைத்தாலும் நிரம்பியவளும், காடுகள் மற்றும் மலைகளுடன் கூடியவளுமான பூமாதேவி, ஓ! ஏகாதிபதி, உயிரோடுள்ள எந்த எதிரியுமற்றவளாக மீண்டும் உம்மிடம் வருகிறாள்” என்றான்.(43)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “பகைமைகள் முடிவுக்கு வந்துவிட்டன. மன்னன் துரியோதனனும் வீழ்ந்துவிட்டான். கிருஷ்ணனின் ஆலோசனைகளின் படி நடந்து கொண்ட நம்மால், இந்தப் பூமாதேவி வெல்லப்பட்டிருக்கிறாள்.(44) உன் தாய்க்கும், உன் கோபத்திற்கும் பட்ட கடனை நற்பேறாலேயே நீ அடைத்திருக்கிறாய். ஓ! வெல்லப்பட முடியாத வீரனே, நற்பேறாலேயே நீ வெற்றியாளனானாய், நற்பேறாலேயே உன் எதிரியும் கொல்லப்பட்டான்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(45)

தெய்வீகப் பூமாரி! – சல்லிய பர்வம் பகுதி – 61-துரியோதனன் வீழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பாண்டவ வீரர்கள்; அவர்களால் புகழப்பட்ட பீமன்; துரியோதனன் அவமதிக்கப்படுவதைத் தடுத்த கிருஷ்ணன்; அநியாயங்கள் அனைத்துக்கும் கிருஷ்ணனையே குற்றஞ்சாட்டிய துரியோதனன்; துரியோதனனின் தீச்செயல்களை நினைவூட்டி, அவனது பரிதாபகரமான முடிவு தவிர்க்கமுடியாதது என்று சொன்ன கிருஷ்ணன்; தன் மகிமையைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்த துரியோதனன்; தெய்வீக மலர்மாரி பொழிந்தது; பெருந்தேர்வீரர்களை அநியாயமாகக் கொன்றதற்கான காரணங்களைச் சொன்ன கிருஷ்ணன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, போரில் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்ட துரியோதனனைக் கண்டு, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கிருஷ்ணனோடு கூடிய பாண்டவர்கள், சிங்கத்தால் கொல்லப்பட்ட காட்டு யானையைப் போலப் போரில் பீமசேனனால் கொல்லப்பட்ட துரியோதனனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்} வீழ்ந்த போது, பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும்,(2,3) தங்கள் மேலாடைகளை (காற்றில்) அசைத்து, சிங்க முழக்கம் செய்தனர். அந்தப் போர் வீரர்களின் மகிழ்ச்சியானது, பூமியால் பொறுத்துக் கொள்ள முடியாததாகத் தெரிந்தது.(4) சிலர் தங்கள் விற்களை வளைத்தனர்; சிலர் தங்கள் நாண்கயிறுகளை இழுத்தனர். சிலர் தங்கள் பெரும் சங்குகளை முழக்கினர்; சிலர் தங்கள் துந்துபிகளை ஒலித்தனர்.(5) சிலர் விளையாடிக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருந்தனர்; உமது பகைவர்களில் சிலர் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

பல வீரர்கள் பீமசேனனிடம் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்,(6) “பெரும் போர்வீரரனான குரு மன்னனை {துரியோதனனை}, உன் கதாயுதத்தால் தாக்கி வீழ்த்தியதன் மூலம், மிகக் கடினமானதும், பெரியதுமான அருஞ்செயலை போரில் இன்று நீ செய்திருக்கிறாய்.(7) இந்திரனால் விருத்திரன் கொல்லப்பட்டதைப் போன்றே எதிரி உன்னால் கொல்லப்பட்டதாக இம்மனிதர்கள் அனைவரும் கருதுகின்றனர்.(8) ஓ! விருகோதரா {பீமா}, பல்வேறு வகை அசைவுகளைச் செய்து கொண்டும், (இத்தகு மோதல்களின் சிறப்பியல்புகளான) மண்டலகதிகளைச் செய்துகொண்டும் வீரத் துரியோதனனைக் கொல்ல உன்னைத் தவிர வேறு யாரால் முடியும்?(9) அடைவதற்கு அரிதான பகைமையின் அடுத்தக் கரையை இப்போது நீ அடைந்துவிட்டாய். நீ அடைந்திருக்கும் இந்தச் சாதனையானது, வேறு எந்தப் போர்வீரனாலும் அடைய முடியாததாகும்.(10)

ஓ! வீரா {பீமா}, ஒரு மதங்கொண்ட யானையைப் போலப் போர்க்களத்தில் துரியோதனனின் தலையை உன் காலால் நீ நொறுக்கியது நற்பேறாலேயே.(11) ஓ! பாவமற்றவனே {பீமனே}, எருமையின் குருதியைக் குடிக்கும் சிங்கம் ஒன்றைப் போல, ஓர் அற்புதப் போரில் துச்சாசனனின் குருதியை நீ குடித்ததும் நற்பேறாலேயே.(12) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தீங்கிழைத்தோர் அனைவரின் தலையிலும் நீ உன் சக்தியால் கால் வைத்ததும் நற்பேறாலேயே.(13) நற்பேற்றால் உன் எதிரிகளை வென்று, துரியோதனனைக் கொன்றதன் விளைவால், ஓ! பீமா, உன் புகழ் உலகங்கெங்கும் பரவப் போகிறது.(14) விருத்திரன் வீழ்ந்ததும் சக்ரனைப் புகழ்ந்த வந்திகளையும், பாணர்களையும் போல, ஓ! பாரதா {பீமா}, இப்போது உன் எதிரிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, நாங்கள் உன்னைப் புகழ்கிறோம்.(15) ஓ! பாரதா {பீமா}, துரியோதனன் கொல்லப்பட்டபோது எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி {மயிர்ச்சிலிர்ப்பு} இன்னும் தணியவில்லை என்பதை அறிந்து கொள்வாயாக” என்றனர். அச்சந்தர்ப்பத்தில் அங்கே கூடிய துதிபாடிகளால் பீமசேனனிடம் இவ்வார்த்தைகளே சொல்லப்பட்டன.(16)

மனிதர்களில் புலிகளான பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்து இத்தகு மொழியில் பேசிக் கொண்டிருந்தபோது, மதுசூதனன் {கிருஷ்ணன்} அவர்களிடம்,(17) “மனிதர்களின் ஆட்சியாளர்களே, கொல்லப்பட்ட எதிரியை இத்தகு கொடூரப் பேச்சுகளால் மீண்டும் மீண்டும் கொல்வது முறையாகாது.((18) பாவம் நிறைந்தவனும், வெட்கங்கெட்டவனும், பேராசை கொண்ட இழிந்தவனுமான இவன் {துரியோதனன்}, பாவம் நிறைந்த அமைச்சர்களால் சூழப்பட்டு, நல்ல நண்பர்களின் அறிவுரை அலட்சியம் செய்தபோதே இறந்துவிட்டான்.(19) பாண்டவர்கள் அவனிடம் வேண்டிக் கொண்ட அவர்களது தந்தை வழி நாட்டின் {பாண்டுவின்} பங்கைக் கொடுத்துவிடுமாறு விதுரர், துரோணர், கிருபர், சஞ்சயன் ஆகியோர் மீண்டும் மீண்டும் சொல்லியும் மறுத்த போதே இவன் {துரியோதனன்} இறந்துவிட்டான்.(20) இந்த இழிந்தவன் இப்போது நண்பனாகவோ, எதிரியாகவோ கருதப்படத்தகுந்தவனல்ல. வெறும் மரக்கட்டையாகிவிட்டவனிடம் கசந்த மூச்சைச் செலவிட்டு {கசந்த மொழிகளைப் பேசி} என்ன பயன்?(21) மன்னர்களே, நாம் இந்த இடத்தைவிட்டுச் செல்லவேண்டும், எனவே உங்கள் தேர்களில் ஏறுவீராக. இந்த இழிந்த பாவி, தனது அமைச்சர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொல்லப்பட்டது நற்பேறாலேயே” என்றான் {கிருஷ்ணன்}.(22)

கிருஷ்ணனின் நிந்தனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு எழும்ப முயற்சி செய்தான்.(23) பின்தட்டில் அமர்ந்து, தன்னிரு கைகளாலும் தன்னைத் தாங்கிக் கொண்ட அவன் {துரியோதனன்}, தன் புருவங்களைச் சுருக்கித் தன் கோபப்பார்வைகளை வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது செலுத்தினான்.(24) பாதி உயர்ந்திருந்த அந்தத் துரியோதனனுடைய உடலின் வடிவமானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வாலில்லா நஞ்சுமிக்கப் பாம்பைப் போலத் தெரிந்தது.(25) எரிச்சலூட்டும்படியும், தாங்கிக் கொள்ளமுடியாதபடியும் இருந்த தன் வலிகளை அலட்சியம் செய்த அந்தத் துரியோதனன், கூரிய, கசந்த வார்த்தைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைப்} பீடிக்கத் தொடங்கினான்.(26)

{துரியோதனன்}, “ஓ! கம்சனுடைய அடிமையின் {வசுதேவரின்} மகனே {கிருஷ்ணா}, கதாயுத மோதல்களில் நீடித்திருக்கும் விதிகளின் தீர்மானத்தின்படி, நான் மிகவும் நியாயமற்ற {மிக அநியாயமான} முறையில் தாக்கி வீழ்த்தப்பட்டிருப்பதை மறந்ததால் நீ வெட்கமில்லாதவன் என்பது தெரிகிறது. என் தொடைகளை முறிக்குமாறு குறிப்பால் உணர்த்தி, பீமனுக்கு நினைவூட்டி நீயே இந்த நியாயமற்ற செயலைச் செய்தாய். அர்ஜுனன், (உன் ஆலோசனையின் பேரில்) பீமனுக்குக் குறிப்பால் உணர்த்தியதை நான் கவனிக்கவில்லை என்று நினைத்தாயா?(27,28) எப்போதும் நியாயமாகப் போரிட்ட ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பல்வேறு வகையான நியாயமற்ற வழிகளில் கொன்ற நீ அச்செயல்களுக்கான பொறுப்பையோ, வெட்கத்தையோ உணரவில்லையா?(29) நாளுக்குநாள் வீரம் நிறைந்த போர்வீரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய நீயே, சிகண்டியை முன்னிலையில் நிறுத்தி பாட்டனையும் {பீஷ்மரையும்} கொன்றாய்.(30)

அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானையைக் கொன்றுவிட்டு, ஓ! தீய புரிதல் கொண்டவனே {கிருஷ்ணா}, ஆசானை {துரோணரைத்} தன் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு நீயே செய்தாய். இஃது எனக்குத் தெரியாது என்று நீ நினைக்கிறாயா?(31) மேலும் வீரஞ்செறிந்த அவ்வீரர் {துரோணர்}, கொடூரனான இந்தத் திருஷ்டத்யும்னனால் கொல்லப்படும்போது, நீ அவனை எதிர்த்து தடுக்கவில்லையே.(32) அர்ஜுனனைக் கொல்வதற்காகக் கர்ணனால் (சக்ரனிடம் வரமாக) இரந்து பெறப்பட்ட ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} கடோத்கசன் மூலம் நீயே கலங்கடித்தாய். உன்னை விட வேறு எவன் பாவம் நிறைந்தவனாக இருக்க முடியும்?(33) அதே போலவே, வலிமைமிக்கவனும், தனது ஒரு கரம் வெட்டப்பட்டவனுமான பூரிஸ்ரவஸ், பிராய விரதத்தை நோற்றுக் கொண்டிருந்தபோது, உயர் ஆன்ம சாத்யகியின் மூலம் உன்னாலேயே கொல்லலப்பட்டான்.(34)

பார்த்தனை {அர்ஜுனனை} வெல்வதற்காகக் கர்ணன் அருஞ்செயல் புரிந்தான். எனினும், நீயோ, பாம்புகளின் இளவரசனுடைய (தக்ஷகனுடைய) மகனான அஸ்வசேனனின் நோக்கம் நிறைவேறுவதைக் கலங்கடித்தாய்.(35) மேலும் கர்ணனின் தேர்ச்சக்கரம் புழுதியில் புதைந்து, பேரிடரில் பீடிக்கப்பட்டு, அக்காரணத்தினாலேயே அந்த மனிதர்களில் முதன்மையானவன் கிட்டத்தட்ட வெல்லப்பட்டவனாக இருந்தபோது, உண்மையில், அவன் தன் சக்கரத்தை விடுவிக்கும் ஆவலில் இருந்தபோது, நீ அந்தக் கர்ணனைக் கொல்லச் செய்தாய்.(36) நியாயமான முறையில் என்னுடனும், கர்ணன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோருடனும் நீ போரிட்டிருந்தால், வெற்றி ஒருபோதும் உனதாகியிருக்காது என்பதில் ஐயமில்லை.(37) தங்கள் கடமைகளை நோற்பவர்களான மன்னர்கள் பலரையும், எங்களையும், மிகவும் நேர்மையற்ற, நியாயமற்ற வழிகளைப் பின்பற்றி நீயே கொல்லச் செய்தாய்” என்றான் {துரியோதனன்}.(38)

வாசுதேவன் {கிருஷ்ணன் துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனனே}, பாவம் நிறைந்த பாதையில் நீ நடந்ததன் விளைவாகவே, உன் தம்பிகள், மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்து நீ கொல்லப்பட்டிருக்கிறாய்.(39) உன் தீச்செயல்களின் மூலமே பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய அவ்விரு வீரர்களும் கொல்லப்பட்டனர். கர்ணனும், உன் நடத்தையையே பின்பற்றியதால் கொல்லப்பட்டான்.(40) ஓ! மூடா, பாண்டவர்களின் தந்தை வழி பங்கைக் கொடுத்துவிடு என்று என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டும், பேராசை கொண்ட நீ அந்தச் சகுனியின் ஆலோசனையின்படி நடந்து கொண்டாய்.(41) பீமசேனருக்கு நீ நஞ்சூட்டினாய். ஓ! தீய புரிதல் கொண்டவனே, அரக்கு மாளிகையில் வைத்து, தங்கள் தாயோடு கூடிய பாண்டவர்கள் அனைவரையும் நீ எரிக்க முயன்றாய்.(42) சூதாட்ட நிகழ்வின்போது, தனது பருவகாலத்தில் இருந்த யக்ஞசேனன் மகளை {திரௌபதியைச்} சபைக்கு மத்தியில் வைத்து நீ துன்புறுத்தினாய்.(43) பகடையை நன்கறிந்தவனான சுபலனின் மகனை {சகுனியைக்} கொண்டு, சூதாட்டத்தில் திறமற்றவரும், அறவோருமான யுதிஷ்டிரரை நியாயமற்ற வகையில் நீ வென்றாய். அதற்காகவே நீ கொல்லப்படுகிறாய்.(44)

மற்றொரு சந்தர்ப்பத்தில், கிருஷ்ணையின் {திரௌபதியின்} தலைவர்களான பாண்டவர்கள் திருணபிந்துவின் ஆசிரமத்தை நோக்கி வேட்டையாடச் சென்றிருந்தபோது, பாவம் நிறைந்த ஜெயத்ரதன் மூலம் நீ அவளைத் துன்புறுத்தினாய்.(45) சிறுவனும், தனியனுமான அபிமன்யுவைச் சுற்றிலும் பல வீரர்களைச் சூழச் செயது, நீயே அவ்வீரனைக் கொல்லச் செய்தாய். ஓ! இழிந்த பாவியே, அந்தக் குற்றத்தின் விளைவாலேயே நீ கொல்லப்படுகிறாய்.(46) நாங்கள் செய்த நியாயமற்ற செயல்கள் என்று நீ சொல்லும் அனைத்தும், உண்மையில், பாவம் நிறைந்த உனது இயல்பின் விளைவால் உன்னால் செய்யப்பட்டவையே ஆகும்.(47) பிருஹஸ்பதி மற்றும் உசனஸின் {சுக்ராச்சாரியரின்} ஆலோசனைகளை நீ ஒருபோதும் கேட்டதில்லை. முதிர்ந்தவர்களுக்காக நீ ஒருபோதும் காத்திருந்ததில்லை {அவர்களுக்குப் பணிவிடை செய்ததில்லை}. நல்ல வார்த்தைகளை நீ ஒருபோதும் கேட்டதில்லை.(48) அடக்கமுடியாத பேராசைக்கும், பலனில் உள்ள தாகத்திற்கும் அடிமையாக இருந்த நீயே நியாயமற்ற செயல்கள் பலவற்றைச் செய்தவனாவாய். அந்த உன் செயல்பாடுகளின் விளைவை நீ இப்போது தாங்கிக் கொள்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(49)

துரியோதனன் {கிருஷ்ணனிடம்}, “நான் கல்வி கற்றவனாக, விதிப்படி தானம் செய்தவனாக, கடல்களுடன் கூடிய பரந்த பூமியை ஆட்சி செய்தவனாக, என் எதிரிகளின் தலைக்கு மேலேயே {உயர்ந்து} இருந்திருக்கிறேன்.(50) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் க்ஷத்திரியர்களால் விரும்பப்படும் போர்க்கள மரணம் என்ற முடிவு இப்போது எனதாகியிருக்கிறது. எனவே, என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(51) தேவர்களுக்குத் தகுந்ததும், பிற மன்னர்களால் சிரமத்துடன் அடையப்படுவதுமான மனித இன்பங்கள் {அனைத்தும்} எனதாகவே இருந்திருக்கின்றன. உயர்ந்த வகைச் செல்வம் என்னால் அடையப்பட்டிருந்தது. என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(52) ஓ! மங்கா மகிமை கொண்டவனே {கிருஷ்ணா}, என் நலவிரும்பிகள், என் தம்பிகள் ஆகியோர் அனைவருடனும் நான் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, உங்கள் காரியம் நிறைவேறாமல், துயரால் {மனம்} கிழிக்கப்பட்டு, மகிழ்ச்சியற்ற இவ்வுலகில் நீங்கள் வாழப்போகிறீர்கள்” என்றான் {துரியோதனன்}”.(53)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “குருக்களின் அந்தப் புத்திசாலி மன்னனுடைய {துரியோதனனுடைய} இவ்வார்த்தைகளின் நிறைவின்போது, நறுமணமிக்க மலர்களின் அடர்த்தியான மழை வானத்தில் இருந்து பொழிந்தது.(54) கந்தர்வர்கள் இனிய இசைக்கருவிகளை முழக்கினார்கள். அப்சரஸ்கள் மன்னன் துரியோதனனின் மகிமையைக் கூட்டமாகப் பாடினர்.(55) சித்தர்கள், “மன்னன் துரியோதனன் புகழப்படுவான்” என்ற ஒலியை எழுப்பினர். அனைத்துப் பக்கங்களிலும் நறுமணமிக்க இனிய தென்றல் மென்மையாக வீசியது. அனைத்துப் பகுதிகளும் தெளிவடைந்து, ஆகாயமானது வைடூரியத்தைப் போன்ற நீலத்தை அடைந்தது.(56) இந்த அற்புதமான காரியங்களையும், துரியோதனனுக்குச் செய்யப்பட்ட வழிபாடுகளையும் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தலைமையிலான பாண்டவர்கள் வெட்கத்தை அடைந்தனர்.(57) பீஷ்மர், துரோணர், கர்ணன், பூரிஸ்ரவஸ் ஆகியோர் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டனர் என்று (கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களால் உரக்கச் சொல்லப்பட்டதைக்) கேட்ட அவர்கள் துயரால் பீடிக்கப்பட்டுக் கவலையால் அழுதனர்.(58)

கவலையிலும், துயரத்திலும் மூழ்கியிருந்த பாண்டவர்களைக் கண்ட கிருஷ்ணன், மேகங்கள், அல்லது துந்துபியைப் போன்ற ஆழ்ந்த குரலுடன் அவர்களிடம்,(59) “அவர்கள் அனைவரும் பெருந்தேர் வீரர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டில் வேகம் கொண்டவர்களாகவும் இருந்தனர். நீங்கள் உங்கள் ஆற்றல் முழுவதையும் வெளியிட்டிருந்தாலும், நியாயமான முறையில் போரிட்டு அவர்களை ஒருபோதும் கொன்றிருக்க முடியாது.(60) நியாயமான போரில் மன்னன் துரியோதனனும் கொல்லப்பட முடியாதவனே ஆவான். பீஷ்மரின் தலைமையிலான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரின் காரியமும் அதேதான்.(61) நான், உங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலேயே போரில் மீண்டும் மீண்டும் என் மாய சக்திகளையும், பல்வேறு வழிமுறைகளையும் பயன்படுத்தி அவர்களைக் கொல்லச் செய்தேன்.(62) போரில் அத்தகு வஞ்சிக்கும் வழிகளை நான் பின்பற்றவில்லையென்றால், வெற்றியோ, நாடோ, செல்வமோ ஒருபோதும் உங்களுடையதாகி இருக்காது.(63)

உயர் ஆன்மப் போர்வீரர்களான அவர்கள் நால்வரும், உலகத்தால் அதிரதர்களாகக் கருதப்பட்டனர். நியாயமான போரில் அவர்களை லோகபாலர்களாலேயே கொல்ல முடியாது.(64) அதேபோலவே, களைப்பை அறியாதவனும், கதாயுதம் தரித்தவனுமான திருதராஷ்டிரன் மகனும் {துரியோதனனும்}, தண்டந்தரித்த யமனாலேயேகூட நியாயமான போரில் கொல்லப்பட முடியாது.(65) உங்கள் எதிரிகள் வஞ்சகத்தாலேயே கொல்லப்பட்டனர் என்பதை நீங்கள் உங்கள் இதயம் வரை கொண்டு செல்லாதீர். ஒருவனின் எதிரிகளுடைய எண்ணிக்கை பெரிதாகும்போது, சூழ்ச்சிகள் மற்றும் வழிமுறைகளின் மூலமே அவர்களுக்கு அழிவை உண்டாக்க வேண்டும்.(66) தேவர்களே கூட அசுரர்களைக் கொல்வதில் இதே வழியிலேயே நடந்திருக்கின்றனர். எனவே, தேவர்கள் நடந்த அந்த வழியில் அனைவரும் நடக்கலாம்.(67) நாம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறோம். இது மாலை வேளை. நாம், நமது பாசறைகளுக்குத் திரும்புவதே சிறந்தது. மன்னர்களே, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களுடன் நாம் அனைவரும் ஓய்வெடுப்போமாக” என்றான்.(68)

வாசுதேவனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மகிழ்ச்சியால் நிறைந்து, சிங்கங்கள் பலவற்றைப் போல முழக்கம் செய்தனர்.(69) அவர்கள் அனைவரும் தங்கள் சங்குகளை முழக்கினர், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, மாதவனும் {கிருஷ்ணனும்}  மகிழ்ச்சியால் நிறைந்து, போரில் தாக்கிவீழ்த்தப்பட்ட துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாஞ்சஜன்யத்தை முழக்கினான்” {என்றான் சஞ்சயன்}.(70)

அர்ஜுனனின் தேர் சாம்பலானது! – சல்லிய பர்வம் பகுதி – 62-முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கௌரவ முகாமுக்குச் சென்ற பாண்டவர்கள்; அர்ஜுனனைத் தேரைவிட்டு இறங்கச் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனின் தேர் எரிந்தது; அதன் காரணத்தை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; யுதிஷ்டிரனின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய கிருஷ்ணன்; கிருஷ்ணனே அதற்குக் காரணம் என்று சொன்ன யுதிஷ்டிரன்; கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் பாண்டவர்களும், சாத்யகியும் முகாமுக்கு வெளியே தங்கியது; கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய பாண்டவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பரிகங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அம்மன்னர்கள் அனைவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, வழியில் சங்குகளை முழக்கிக் கொண்டே தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர்.(1) பாண்டவர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது முகாமை நோக்கிச் சென்றனர். பெரும் வில்லாளியான யுயுத்சு, சாத்யகி, திருஷ்டத்யும்னன், சிகண்டி, மற்றும் திரௌபதியின் ஐந்து மகன்களும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். பெரும் வில்லாளிகள் பிறரும் நமது பாசறைகளை நோக்கிச் சென்றனர்.(2,3) ஒளியை இழந்து, தன் தலைவனை இழந்து, கேளிக்கைக்குப் பிறகு பார்வையாளர்களால் கைவிடப்பட்ட அரங்கத்தைப் போல இருந்த துரியோதனனின் பாசறைக்குள் பார்த்தர்கள் நுழைந்தனர்.(4) உண்மையில், அந்த அரங்கமானது, கொண்டாட்டங்களை இழந்த ஒரு நகரத்தைப் போலவோ, யானையில்லாத ஒரு தடாகத்தைப் போலவோ தெரிந்தது. அப்போது அது பெண்களாலும், அலிகளாலும், முதிர்ந்த வயதுடைய குறிப்பிட்ட சில அமைச்சர்களாலும் நிறைந்திருந்தது.(5) முன்பெல்லாம் துரியோதனனும், மஞ்சள் சாயம் பூசப்பட்ட உடைகளை உடுத்திய பிற வீரர்களும் அந்த முதிர்ந்த அமைச்சர்களிடம் கரங்களைக் கூப்பி வணங்கி, அவர்களுக்காகக் காத்திருப்பார்கள்[1].(6) தேர்வீரர்களில் முதன்மையானோரான அந்தப் பாண்டவர்கள், குரு மன்னனின் {துரியோதனனின்} கூடாரத்தை அடைந்து தங்கள் தேர்களில் இருந்து இறங்கினர்.(7)அந்நேரத்தில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் நண்பனின் நன்மையிலேயே எப்போதும் ஈடுபடுபவனான கேசவன் {கிருஷ்ணன்}, காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்},(8) “உன் காண்டீவத்தையும், வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டையும் {இரண்டு அக்ஷயதூணீரங்ககையும்} எடுத்துக் கொண்டு இறங்குவாயாக. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நான் உனக்குப் பின்பு இறங்குவேன்.(9) ஓ! பாவமற்றவனே, உன் நன்மைக்காக நீ கீழே இறங்குவாயாக” என்றான். பாண்டுவின் வீரமகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, தனக்குச் சொல்லப்பட்டதைப் போலவே செய்தான்.(10) நுண்ணறிவு கொண்ட கிருஷ்ணன், குதிரைகளின் கடிவாளங்களைக் கைவிட்டு, பிறகு தனஞ்சயனின் தேரில் இருந்து கீழே இறங்கினான்.(11) உயிரினங்கள் அனைத்தின் தலைவனான உயரான்மா {கிருஷ்ணன்}, அந்தத் தேரில் இருந்து இறங்கியதும், அர்ஜுனனின் வாகனக் கொடிமரத்தின் உச்சியில் இருந்த தெய்வீகக் குரங்கு அங்கேயே அப்போதே மறைந்து போனது.(12) முன்பு துரோணர் மற்றும் கர்ணனின் தெய்வீக ஆயுதங்களால் எரிக்கப்பட்ட அந்தப் பெரும் வாகனம், ஓ! மன்னா, கண்ணுக்குத் தெரிந்த எந்த நெருப்பும் ஊட்டப்படாமலே, வேகமாகத் தழல்களுடன் சுடர்விட்டெரிந்தது.(13) உண்மையில், அம்பறாத்தூணிகள், கடிவாளங்கள், குதிரைகள், நுகத்தடி, ஏர்க்கால் ஆகியவற்றுடன் கூடிய தனஞ்சயனின் தேரானது, சாம்பலாகக் குறைக்கப்பட்டுக் கீழே விழுந்தது {எரிந்து சாம்பலானது}.(14) அந்த வாகனம் இவ்வாறு சாம்பலாகக் குறைக்கப்பட்டதைக் கண்ட பாண்டுவின் மகன்கள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஆச்சரியத்தால் நிறைந்தனர்.

மேலும் அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கரங்களைக் கூப்பிக் கிருஷ்ணனை வணங்கி, அன்பான குரலுடன், “ஓ! கோவிந்தா, ஓ! தெய்வீகமானவனே, என்ன காரணத்தினால் இந்தத் தேர் நெருப்பால் எரிக்கப்பட்டது?(15,16) நம் கண் முன்பே நடைபெறும் இந்த மிக ஆச்சரியமான நிகழ்ச்சியானது யாது? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, எந்தத் தீங்குமின்றி என்னால் கேட்க முடியும் என்று நீ நினைத்தால், அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(17)

அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! அர்ஜுனா, அந்தத் தேரானது முன்பே பல்வேறு வகை ஆயுதங்களால் எரிக்கப்பட்டிருந்தது. ஓ! எதிரிகளை எரிப்பவனே, போரின்போது நான் அதில் அமர்ந்திருந்ததால், அது துண்டுகளாகச் சிதறாமல் இருந்தது.(18) பிரம்மாயுதங்களின் சக்தியால் முன்பே எரிக்கப்பட்டிருந்த அஃது, உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்னால் கைவிடப்பட்டதால் சாம்பலாகக் குறைக்கப்பபட்டது” என்றான்.(19)

பிறகு, எதிரிகளைக் கொல்பவனான தெய்வீகக் கேசவன் {கிருஷ்ணன்} சற்றே செருக்குடன் மன்னன் யுதிஷ்டிரனைத் தழுவி கொண்டு, அவனிடம்,(20) “ஓ! குந்தியின் மகனே, நீர் வெற்றியை அடைந்தது நற்பேறாலேயே, உமது எதிரிகள் வெல்லப்பட்டது நற்பேறாலேயே. வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் போரில் இருந்து காண்டீவதாரி {அர்ஜுனன்}, பாண்டுவின் மகனான பீமசேனர், நீர் மற்றும் மாத்ரியின் இரு மகன்கள் ஆகியோர் உயிரோடு தப்பியதும், உங்கள் எதிரிகள் அனைவரையும் கொன்றதும் நற்பேறாலேயே.(21,22) ஓ! பாரதரே, உம்மால் என்ன செய்யப்பட வேண்டுமோ அதை விரைவாகச் செய்வீராக.(23) நான் உபப்லாவ்யத்துக்கு வந்த போது, காண்டீவதாரியின் துணையோடு என்னை அணுகிய நீர், தேனையும், சில வழக்கமான பொருள்களையும் கொடுத்து, “ஓ! தலைவா,(24) ஓ! கிருஷ்ணா, இந்தத் தனஞ்சயன் உனது சகோதரனும், நண்பனுமாவான். எனவே, இவன் {அர்ஜுனன்} அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டியவன்” என்ற வார்த்தைகளைச் சொன்னீர்.(25) நீர் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், நான், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} என்னால் பாதுகாக்கப்பட்டான், வெற்றியும் உமதானது.(26) ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையான ஆற்றலைக் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் பயங்கரப் போரிலிருந்து தன் சகோதரர்களுடன் {பாதுகாப்பாக} வெளியே வந்திருக்கிறான்” என்று சொன்னான் {கிருஷ்ணன்}.(28)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மயிர்க்கூச்சத்துடன் கூடியவனாகி அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(28) யுதிஷ்டிரன், “ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே, துரோணர் மற்றும் கர்ணனால் ஏவப்பட்ட பிரம்மாயுதங்களைத் தாங்கிக் கொள்ள இந்திரனாலும் முடியாது எனும்போது வேறு எவரால் முடியும்?(29) சம்சப்தகர்கள் உன் அருளாலேயே வெல்லப்பட்டார்கள். கடுமைநிறைந்த மோதல்களிலும் உன் அருளாலேயே பார்த்தன் ஒருபோதும் புறமுதுகிடவில்லை.(30) அதேபோலவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நானும் என் சந்ததியும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு செயல்களை நிறைவேற்றி ஆற்றலும் சக்தியும் கொண்ட ஒரு மங்கல முடிவை உன் அருளாலேயே அடைந்தோம்.(31) உபப்லாவ்யத்தில் என்னிடம், பெருமுனிவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, “எங்கே அறம் இருக்கிறதோ அங்கே கிருஷ்ணன் இருப்பான். எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றியிருக்கும்” என்று சொன்னார்” என்றான் {யுதிஷ்டிரன்}”[2].(32)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த உரையாடலுக்குப் பிறகு உமது முகாமுக்குள் நுழைந்த அவ்வீரர்கள், இராணுவக் கருவூலத்தையும், பல நகைகளையும், பல செல்வத்தையும் அடைந்தனர்.(33) மேலும் அவர்கள் வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், முத்துக்கள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பல்வேறு ஆபரணங்கள், விரிப்புகள் தோல்கள்,(34) எண்ணற்ற ஆண், பெண் பணியாட்கள், மேலும் அரசுரிமைக்குத் தேவையான பிற பொருட்கள் பலவற்றையும் அடைந்தனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே, எவருடைய எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனரோ அந்த உயர் ஆன்மாக்கள் {பாண்டவர்கள்} உமக்குச் சொந்தமான அந்த வற்றாத செல்வத்தை அடைந்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(35) தங்கள் விலங்குகளைப் பூட்டுகளில் இருந்து விடுவித்த பாண்டவர்களும், சாத்யகியும், ஓய்வு கொள்வதற்காகச் சற்று நேரம் அங்கே இருந்தனர்.(36) அப்போது பெரும்புகழைக் கொண்ட வாசுதவேன் {கிருஷ்ணன்}, “அருளின் தொடக்கச் செயலாக இவ்விரவு நாம் நமது முகாமை விட்டு வெளியே இருப்போம்” என்றான்[3].(37) “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பாண்டவர்கள், சாத்யகியும், எது மங்கலக் காரியம் என்று கருதப்படுகிறதோ, அதைச் செய்ய வாசுதேவனின் துணையுடன் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(38)எதிரிகளற்றவர்களான அந்தப் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புனித ஓடையான ஓகவதியின் கரைக்கு வந்து, அவ்விரவிற்காக அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(39) பிறகு அவர்கள் யது குலத்தின் கேசவனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். பெரும் ஆற்றலைக் கொண்டவனான வாசுதேவன், தாருகனைத் தன் தேரை எடுத்து வரச் செய்து, அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்} இருந்த இடத்திற்கு மிக வேகமாக் சென்றான்.(40) சைவியம், சுக்ரீவம் (மற்றும் பிற குதிரைகள்) ஆகியவை பூட்டப்பட்ட அவனது தேர் புறப்பட்டபோது, (பாண்டவர்கள்) அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “தன் மகன்கள் அனைவரையும் இழந்து ஆதரவற்றவளாக இருக்கும் காந்தாரிக்கு ஆறுதலளிப்பாயாக” என்றனர்.(41) பாண்டவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சாத்வதர்களின் தலைவன் {கிருஷ்ணன்}, ஹஸ்தினாபுரத்தை நோக்கிச் சென்று, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவளான காந்தாரியின் முன்னிலையை அடைந்தான்” {என்றான் சஞ்சயன்}”.(42)

காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்! – சல்லிய பர்வம் பகுதி – 63-காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதற்காகக் கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்து அவனுக்கு ஆறுதலளித்த கிருஷ்ணன்; காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்; காந்தாரியின் மறுமொழி; திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரியிடம் இருந்து விரைவாக விடைபெற்றுக் கொண்ட கிருஷ்ணன்; அஸ்வத்தாமனிடமிருந்து பாண்டவர்களைப் பாதுகாக்குமாறு கிருஷ்ணனிடம் சொன்ன திருதராஷ்டிரனும், காந்தாரியும்; பாண்டவர்களிடம் திரும்பி வந்த கிருஷ்ணன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “மன்னர்களில் புலியும், நீதிமானுமான யுதிஷ்டிரன், எதிரிகளை எரிப்பவனான வாசுதேவனை {கிருஷ்ணனைக்} காந்தாரியிடம் அனுப்பிய காரணமென்ன?(1) கிருஷ்ணன், அமைதியை நிறுவுவதற்காக ஏற்கனவே கௌரவர்களிடம் சென்றிருந்தான். {அப்போது} அவன் தன் விருப்பத்தின் பலனை அடையவில்லை. அதன் விளைவாகவே இந்தப் போர் நடைபெற்றது.(2) போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, துரியோதனன் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்தப் போரின் விளைவால் பாண்டுமகனின் {யுதிஷ்டிரனின்} பேரரசு முற்றிலும் எதிரிகளற்றதான பிறகு,(3) (குரு) முகாம்கள் அனைத்தும் வெறுமையாகி, அதில் இருந்தோர் அனைவரும் தப்பி ஓடிய பிறகு, அந்தப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} பெரும்புகழ் வெல்லப்பட்ட பிறகு, ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே வைசம்பாயனரே}, கிருஷ்ணன் மறுபடியும் (ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்ல வேண்டிய காரணமென்ன?(4) ஓ! பிராமணரே, அளவிலா ஆன்மா கொண்ட ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} அப்படிப் பயணம் செய்யப் போகிறவன் எனும்போது அதன் காரணம் எளிமையானதாக இருக்காது.(5) அத்யர்யுக்கள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, இத்தகைய தூதுக்கான காரணம் என்ன என்பதை எனக்கு விவரமாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில், நீ கேட்கும் இந்தக் கேள்வி உனக்குத் தகுந்ததே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, உண்மையில் நேர்ந்தவாறே அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன்.(7) திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகனான துரியோதனன், நேர்மையான போர் விதிகளுக்கு முரண்பட்டுப் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டதைக் கண்டவனும்,(8) உண்மையில், அந்தக் குரு மன்னன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கண்டவனுமான யுதிஷ்டிரன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, தவத்தகுதி கொண்டவளான உயர் ஆன்ம காந்தாரியின் நினைப்பால் பேரச்சத்தில் நிறைந்தான். “அவள் கடுந்தவங்களைச் செய்திருக்கிறாள், எனவே மூவுலகங்களையும் அவளால் {காந்தாரியால்} எரித்து விட முடியும்”(9,10) என்றே அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} நினைத்தான்.

கிருஷ்ணனை அனுப்புவதால், கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் காந்தாரி, யுதிஷ்டிரன் அங்குச் செல்வதற்கு முன்பே ஆறுதலை அடையக்கூடும்.(11) “நம்மால் இத்தகு அவல நிலைக்குக் கொண்டு வரப்பட்ட அவளது மகனின் {துரியோதனனின்} மரணத்தைக் கேட்டுக் கோபமடையும் அவளால், தன் மனத்தில் உள்ள நெருப்பைக் கொண்டு நம்மைச் சாம்பலாகக் குறைத்துவிட முடியும்.(12) எப்போதும் நியாயமாகப் போரிட்டவனான அவளது மகன் {காந்தாரியின் மகன் துரியோதனன்}, நியாயமற்ற முறையில் நம்மால் கொல்லப்பட்டான் என்று அவள் கேள்விப்பட்ட பிறகு, எரிச்சலையூட்டும் இத்தகு துயரத்தைக் காந்தாரியால் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலும்?” {என்று நினைத்தான்”.(13) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நீண்டநேரமாக இவ்வாறே சிந்தித்து, அச்சத்தாலும், துயராலும் நிறைந்தவனாக, வாசுதேவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(14)

{யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம்}, “ஓ! கோவிந்தா, உன் அருளால் என் நாடு முட்களற்றதானது. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, கற்பனையாலும் நாங்கள் அடைய முடியாத ஒன்று இப்போது எங்களுடையதாகியிருக்கிறது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, போரில் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கடுமையான தாக்குதல்களை நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(15,16) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், தேவர்களுடைய எதிரிகளின் அழிவுக்கு நீ உதவினாய், அவ்வெதிரிகளும் கொல்லப்பட்டனர்.(17) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவேனே, ஓ! மங்கா மகிமை கொண்டவனே, அதே வழியிலேயே நீ எங்களுக்கும் உன் உதவியைத் தந்திருக்கிறாய். ஓ! விருஷ்ணி குலத்தோனே, எங்கள் சாரதியாக இருக்கச் சம்மதித்து, காலமெல்லாம் நீ எங்களைப் பாதுகாத்திருக்கிறாய்.(18) இந்தப் பயங்கரப் போரில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} பாதுகாவலனாக இல்லாவிடில், கடலெனும் இத்துருப்புகளை எவ்வாறு {நாங்கள்} வென்றிருக்க இயலும்?(19) மேலும், கதாயுத வீச்சுகள் பலவற்றையும், பரிகங்கள், ஈட்டிகள் {சக்திகள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, வேல்கள் {தோமரங்கள்}, போர்க்கோடரிகள் ஆகியவற்றின் தாக்குதல்கள் பலவற்றையும் {இப்போரில்} நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(20) ஓ! கிருஷ்ணா, போராயுதங்களில் வஜ்ரத்திற்கு ஒப்பான கடுஞ்சொற்கள் பலவற்றை எங்களின் நிமித்தமாக நீ கேட்கவேண்டியிருந்தது; அவற்றைப் பொறுத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது.(21) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இவையனைத்தும், துரியோதனனின் படுகொலையின் விளைவால் கனியற்றதாகிவிடவில்லை {துரியோதனனின் படுகொலையால் இவ்வாறு நீ பட்ட துன்பமெல்லாம் வீணாகிவிடவில்லை}. அந்தச் செயல்கள் அனைத்தின் கனிகளும் {பலன்களும்} அழிந்துவிடாமல் இருக்கும் வகையில் நீ மீண்டும் செயல்படுவாயாக.(22)

ஓ! கிருஷ்ணா, வெற்றி நமதானாலும், நமது இதயம் இன்னும் ஐயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஓ! மாதவா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, காந்தாரியின் கோபம் தூண்டப்பட்டிருக்கிறது என்பதை அறிவாயாக.(23) உயர்ந்த அருளைக் கொண்ட அம்மங்கை {காந்தாரி}, கடுந்தவங்களால் தன்னை எப்போதும் மெலியச் செய்து வருகிறாள். அவள், தனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளின் படுகொலையைக் கேட்டு, நம்மை எரித்துவிடுவாள் என்பதில் ஐயமில்லை. ஓ! வீரா {கிருஷ்ணா}, அவளை அமைதிப்படுத்துவதற்கான நேரமிது என்று நான் நினைகிகறேன்.(24) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தாமிரம் போல் கண்கள் சிவந்தவளும், தன் பிள்ளைகளுக்கு நேர்ந்த தீங்கால் மிகவும் பீடிக்கப்பட்டிருப்பவளுமான அம்மங்கையைக் காண இயன்றவன் இங்கே உன்னைத் தவிர வேறு எவன் இருக்கிறான்?(25) ஓ! மாதவா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் காந்தாரியை அமைதிப்படுத்துவதற்கு நீ அங்கே செல்வதே முறையானது என நான் நினைக்கிறேன். நீயே அழிவற்றவனானதால், உலகங்கள் அனைத்தின் முதல் காரணமாக நீயே இருக்கிறாய்.(26) காலத்தின் விளைவுகளான, புலப்படும் மற்றும் புலப்படாத[1] அனைத்துக் காரணங்களும் நிறைந்த வார்த்தைகளால் உன்னாலேயே விரைவில் காந்தாரியை அமைதிப்படுத்த இயலும்.(27) எங்கள் பாட்டனும், புனிதருமான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, அங்கே இருப்பார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன் சக்திக்கு அடங்கிய அனைத்து வழிகளிலும் காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதே உன் கடமையாகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(28)அந்த யதுகுலத்தைத் தழைக்கச் செய்பவன் {கிருஷ்ணன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தாருகனை அழைத்து, “என் தேர் ஆயத்தம் செய்யப்படட்டும்” என்றான்.(29) கேசவனின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட தாருகன், மிக விரைவாகத் திரும்பி, தன் உயர் ஆன்மத் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} தயாராக இருக்கும் தேரைக் காட்டினான்.(30) எதிரிகளை எரிப்பவனும், யதுகுலத்தின் தலைவனுமான தலைவன் கேவசன், அந்தத் தேரில் ஏறி, குருக்களின் நகரத்திற்கு மிக விரைவாகச் சென்றான்.(31) அப்போது போற்றுதலுக்குரியவனான அந்த மாதவன், தன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்து, அதனுள் நுழைந்தான்.(32) அதற்குள் நுழைகையிலேயே தனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் அந்நகரை எதிரொலிக்கச் செய்த அவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனுக்கு ஒரு வார்த்தையைச் சொல்லியனுப்பி, தன் வாகனத்தில் இருந்து இறங்கி, அந்த முதிர்ந்த மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(33)

அங்கே அவன் {கிருஷ்ணன்}, தனக்கு முன்பே வந்திருந்த முனிவர்களில் சிறந்தவரை (துவைபாயனரைக்) கண்டான். வியாசர் மற்றும் திருதராஷ்டிரன் ஆகிய இருவரின் பாதங்களையும் தழுவிக் கொண்ட ஜனார்த்தனன்,(34) அமைதியாகக் காந்தாரியையும் வணங்கினான். பிறகு யாதவர்களில் முதன்மையானவனான அந்த விஷ்ணு {அதோக்ஷஜன்} {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் கரங்களைப் பற்றிக் கொண்டு, இனிமையாக அழத் தொடங்கினான்.(35) கவலையால் சிறிது நேரம் கண்ணீர் சிந்திய அவன்,(36) நீரைக் கொண்டு விதிப்படி தன் கண்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன், மென்மையாக வெளிவந்த இவ்வார்த்தைகளைத் திருதராஷ்டிரனிடம் சொன்னான்.(37)

{கிருஷ்ணன்}, “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடந்த காலம், எதிர்காலம் என நீர் அறியாதது எதுவுமில்லை. ஓ! தலைவா, காலத்தின் வழியைக் குறித்து நீர் நன்கறிந்தவராவீர்.(38) ஓ! பாரதரே, பாண்டவர்கள் உம்மீது கொண்டிருந்த மதிப்பால், தங்கள் குலத்தின் அழிவையும், க்ஷத்திரியர்களின் முற்றான அழிவையும் தடுப்பதற்கு முயற்சி செய்தனர்.(39) தன் தம்பிகளுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட அறவோனான யுதிஷ்டிரர் அமைதியாகவே வாழ்ந்துவந்தார். அவர் {யுதிஷ்டிரர்}, நியாமற்ற வகையில் பகடையில் வீழ்த்தப்பட்டு, நாடு கடந்தும் {வனவாசம்} சென்றார்.(40) பல்வேறு மாறுவேடங்களில் ஆடைகளை உடுத்திக் கொண்டு, தமது தம்பியரோடு தலைமறைவு வாழ்வையும் வாழ்ந்தார். அவர்கள் தினமும் சந்தித்த தங்கள் பல்வேறு இன்னல்களைக் கிட்டத்தட்ட ஆதரவற்றவர்களாகவே பொறுத்துக் கொண்டனர்.(41) போர் தொடங்குவதற்கு முன், அனைத்து மனிதர்களுக்கும் முன்னிலையில் நானே வந்து, ஐந்து கிராமங்களை மட்டுமே {உங்களிடம்} இரந்து கேட்டேன்.(42) காலத்தால் பீடிக்கப்பட்டும், பேராசையால் உந்தப்பட்டும், என் வேண்டுகோளை நீர் அருளவில்லை. ஓ! மன்னா, உமது குற்றத்தாலேயே, அனைத்து க்ஷத்திரிய குலங்களும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.(43)

பீஷ்மர், சோமதத்தர், பாஹ்லீகர், கிருபர், துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்}, ஞானியான விதுரர் ஆகியோர் உம்மிடம் எப்போதும் அமைதியையே வேண்டினர். எனினும் நீர் அவர்களது ஆலோசனைகளைப் பின்பற்றவில்லை.(44) ஓ! பாரதரே, நீரே கூட இக்காரியத்தில் மடமையுடன் செயல்பட்டதால், ஓ! மன்னா, காலத்தால் பீடிக்கப்படும்போது அனைவரும் மலைப்பையே அடைகின்றனர் என்றே தெரிகிறது.(45) காலத்தின் விளைவைத் தவிர இது வேறென்னவாக இருக்க முடியும்? உண்மையில், விதியே உயர்ந்தது. ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பாண்டவர்கள் மீது எக்குற்றத்தையும் சுமத்தாதீர்.(46) ஓ! எதிரிகளை எரிப்பவரே, அறநெறிவிதிகளின்படியோ, காரணத்தின்படியோ {அறிவின்படியோ}, பாசத்தின்படியோ, உயர் ஆன்ம பாண்டவர்களின் மிகச் சிறு மீறலையும் கூடத் தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை.(47) இவையாவும் உமது குற்றத்தின் கனியே என்பதை அறிந்து, பாண்டவர்கள் மீது எந்தத் தீய உணர்வையும் வளர்ப்பது உமக்குத் தகாது.(48)

குலம், பரம்பரை, ஈமப்பிண்டம் மற்றும் எவையெல்லாம் வாரிசைச் சார்ந்திருக்கின்றனவோ, அவையெல்லாம் உமக்கும் காந்தாரிக்கும் இப்போது பாண்டவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(49) ஓ! குருக்களில் புலியே, நீரும், புகழ்பெற்ற காந்தாரியும் பாண்டவர்களிடம் எந்தக் கெடுநோக்கமும் கொள்ள வேண்டாம்.(50) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவையனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, உமது சொந்த மீறல்களையும் நினைத்துப் பார்த்து, பாண்டவர்களிடம் நல்லுணர்வுகளையே வளர்க்க வேண்டும் என்று உம்மை நான் வணங்கிக் கேட்கிறேன்.(51) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! மன்னர்களில் புலியே, மன்னர் யுதிஷ்டிரர் உம்மிடம் கொண்ட பாசத்தையும், அர்ப்பணிப்பையும் {பக்தியையும்} நீர் அறிவீர்.(52) தமக்குத் தீங்கிழைத்த எதிரிகளைக் கொன்ற அவர், மன அமைதியை அடைவதில் வெல்லாமல் பகலும், இரவும் எரிந்து கொண்டிருக்கிறார்.(53) அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரர்}, உமக்காகவும், காந்தாரிக்காகவும் துயரமடைந்து எந்த மகிழ்ச்சியையும் அடைவதில் தவறுகிறார்.(54) உமது பிள்ளைகளின் நிமித்தமாகத் துயரில் எரிந்து கொண்டிருப்பவரும், அந்தத் துன்பத்தால் அறிவும், புலன்களும் கலக்கப்பட்டிருப்பவருமான உம்மைக் காண வெட்கமடைந்தே அவர் உம் முன்னிலைக்கு வராமல் இருக்கிறார்” என்றான் {கிருஷ்ணன்}.(55)

திருதராஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த யது குலத்தின் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி, துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம் இந்த உன்னதமான வார்த்தைகளைச் சொன்னான்:(56) “ஓ! சுபலரின் மகளே {காந்தாரியே}, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மங்கலக் காரிகையே, இப்போது இவ்வுலகில் உன்னைப் போன்ற ஒரு பெண் கிடையாது.(57) ஓ! ராணி, என் முன்னிலையில் வைத்து நீ சபையில் பேசியவையும், நீதி நிறைந்தவையும், இருதரப்புக்கும் நன்மை செய்பவையுமான, உமது மகன்கள் கீழ்ப்படியாதவையுமான உனது அந்த வார்த்தைகளை நினைவுகூர்வாயாக.(58,59) வெற்றியில் பேராசை கொண்ட துரியோதனனிடம் நீ இந்தக் கசந்த வார்த்தைகளைச் சொன்னாய். அப்போது நீ அவனிடம், “ஓ! மூடா {துரியோதனனிடம்}, எங்கே அறமிருக்கிறதோ {நீதியிருக்கிறதோ} அங்கே வெற்றியிருக்கும் என்ற என் இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக” என்றாய்.(60) ஓ! இளவரசி, அந்த உன் வார்த்தையே இப்போது நிறைவேறியிருக்கிறது. ஓ! மங்கலமான பெண்ணே, இவையாவற்றையும் அறிந்து கொண்டு, உன் இதயத்தைக் கவலையில் நிலை கொள்ளச் செய்யாதே.(61) பாண்டவர்களின் அழிவை உன் இதயம் நாடாதிருக்கட்டும். உன் தவவலிமையின் விளைவால், ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, சினத்தால் தூண்டப்பட்ட உன் கண்களைக் கொண்டே, அசையும், அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த மொத்த உலகத்தையும் நீ எரித்துவிட இயன்றவளாவாய்” என்றான் {கிருஷ்ணன்}.(62)

வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி, “ஓ! கேசவா, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது.(63) எனினும், ஓ! ஜனார்த்தனா, உன் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அந்த இதயம் ஒரு நிலையை அடைந்திருக்கிறது. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, முதிந்தவரும், பார்வையற்றவருமான இந்த மன்னனைப் {திருதராஷ்டிரனைப்} பொறுத்தவரையில், பிள்ளைகளற்றவரான இவருக்கு, பாண்டுவின் மகன்களான அவ்வீரர்களுடன் கூடிய நீயே புகலிடமாக இருக்கிறாய் {அவருக்கு நீயே கதி}” என்றாள்.(65)

இவ்வளவும் சொன்ன காந்தாரி, தன் மகன்களின் மரணத்தால் உண்டான துயரில் எரிந்து, துணியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, உரக்க அழத் தொடங்கினாள்.(66) பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தலைவன் கேசவன், புலப்பட்ட மற்றும் புலப்படாத நிகழ்வுகளில் இருந்து பெறப்பட்ட காரணங்கள் நிறைந்த வார்த்தைகளால், துயரால் பீடிக்கப்பட்ட அவ்விளவரசிக்கு ஆறுதலை அளித்தான்.(67) காந்தாரியையும், திருதராஷ்டிரனையும் தேற்றிய அந்த மதுகுலத்துக் கேசவன், துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்) தியானிக்கப்படும் தீமையை (தன் உள்ளுணர்வால்) அறியவந்தான்.(68)

அந்தக் கேசவன், தலைவணங்கி வியாசரின் பாதத்தை வழிபட்ட பிறகு, விரைவாக எழுந்து, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திருதராஷ்டிரனிடம்,(69) “ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, நான் உம்மிடம் இருந்து விடைபெறுகிறேன். உமது இதயத்தைத் துயரத்தில் நிலைகொள்ளச் செய்யாதீர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, ஒரு தீய நோக்கத்தைக் கொண்டுள்ளார். இதன் காரணமாகவே நான் இவ்வளவு விரைவாக எழுந்தேன்.(70) அவர் இரவு வேளையில் பாண்டவர்களை அழிக்கும் திட்டத்தை அமைத்திருப்பதாகத் தெரிகிறது” என்றான்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோர் இருவரும், கேசியைக் கொன்றவனான அந்தக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, இவ்வார்த்தைகளில், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, வேகமாகச் சென்று பாண்டவர்களைக் காப்பாயாக.(71,72) ஓ! ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் உன்னைச் சந்திக்க வேண்டும்” என்றனர்.

பிறகு, மங்கா மகிமை கொண்டவனான அந்தக் கேசவன், தாருகனுடன் சேர்ந்து அங்கிருந்து சென்றான்.(73) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வாசுதேவன் புறப்பட்டுச் சென்றதும், மொத்த உலகத்தாலும் போற்றப்படுபவரும், கற்பனைக்கெட்டா ஆன்மாவைக் கொண்டவருமான வியாசர், மன்னன் திருதராஷ்டிரனுக்கு ஆறுதலளிக்கத் தொடங்கினார்.(74) அற ஆன்மா கொண்டவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தூதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டு, முகாமையும், பாண்டவர்களையும் காண்பதற்காக ஹஸ்தினாபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றான்.(75) அவன் முகாமை அடைந்து, பாண்டவர்களின் முன்னிலைக்குச் சென்றான். அவன், (நகரத்திற்குத் தூது சென்ற போது நடந்த) அனைத்தையும் அவர்களிடம் சொல்லி அவர்களோடு அமர்ந்து கொண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(76)

“சார்வாகர் நிச்சயம் பழிதீர்ப்பார்” என்ற துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 64-தொடைகள் முறிந்து களத்தில் கிடக்கும் துரியோதனனுடைய புலம்பல்களைத் திருதராஷ்டிரனிடம் உரைத்த சஞ்சயன்; துரியோதனன் தன் பெற்றோருக்குச் சொல்லியனுப்பிய செய்தி; கௌரவப் படையில் எஞ்சியிருந்த மூவருக்கு தெய்திதாங்கிகளின் மூலம் அவன் சொல்லியனுப்பிய செய்திகள்; தன் நண்பனான சார்வாகனிடம் தன் மரணச் சூழ்நிலையைச் சொல்லுமாறு சொன்ன துரியோதனன்; துரியோதனனின் இறுதி வார்த்தைகளை அஸ்வத்தாமனிடம் சொன்ன தூதர்கள்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, தலையில் மிதிக்கப்பட்டுத் தன் தொடைகள் முறிக்கப்பட்டு, தரையில் நெஞ்சாண்கிடையாகக் கிடந்தவனும், மிகவும் செருக்குடையவனுமான என் மகன் {துரியோதனன்} அப்போது என்ன சொன்னான்?(1) மன்னன் துரியோதனன் மிகவும் கோபம் நிறைந்தவனாகவும், பாண்டு மகன்களிடம் ஆழமாக வேர் விட்டிருந்த பகைமை கொண்டவனாகவும் இருந்தான். எனவே, அவனுக்கு இந்தப் பேரிடர் நேர்ந்தபோது, அந்தக் களத்தில் அடுத்து என்ன சொன்னான்?” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நான் உமக்குச் சொல்லும்போதே கேட்பீராக. ஓ! மன்னா, பேரிடர் நேர்ந்தபோது, துரியோதனன் என்ன சொன்னான் என்பதைக் கேட்பீராக.(3) ஓ! ஏகாதிபதி, தொடைகள் முறிந்திருந்த அம்மன்னன், புழுதியால் மறைக்கப்பட்டவனாகக் கலைந்த தன் தலைமயிரைக் கோதிவிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்திக் கொண்டிருந்தான்.(4) சிரமத்துடன் குழலை {கேசத்தைத்} திரட்டிய அவன் {துரியோதனன்}, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவன் சினத்தால் நிறைந்தவனாக, தன் கண்களில் இருந்து வேகமாகக் கண்ணீர் பெருகியவனாக {சஞ்சயனான} என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிறிது நேரம் ஒரு மதங்கொண்ட யானையைப் போலப் பூமியில் தன் கரங்களை அடித்துக் கொண்டிருந்தான்.(5)

தளர்ந்திருந்த தலைமயிரை அசைத்துக் கொண்டும், பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டும், பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரனை} அவன் நிந்திக்கத் தொடங்கினான். பிறகு அவன், பெருமூச்சுவிட்டுக்கொண்டே,(6) “ஐயோ, என் பாதுகாவலரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கர்ணன், கௌதமர் மகன் {கிருபர்}, சகுனி, ஆயுததாரிகள் அனைவரிலும் முதல்வரான துரோணர்,(7) அஸ்வத்தாமன், வீர சல்லியன், கிருதவர்மன் ஆகியோரும் நானும் கூட இந்த அவலநிலையை அடைந்துவிட்டோம். காலம் தடுக்கப்பட முடியாததாகத் தெரிகிறது.(8) நான் பதினோரு சமுக்களின் தலைவனாக இருந்தும், இந்த அவல நிலையை அடைந்திருக்கிறேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {சஞ்சயா}, காலத்திற்கு மேல் மேன்மையாக எழ எவராலும் முடியாது.(9) இப்போரில் என் தரப்பில் உயிரோடு தப்பியவர்களிடம், நியாயமான போர்விதிகளுக்கு முரணாக நான் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டிருக்கிறேன் என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.(10)

பூரிஸ்ரவஸ், பீஷ்மர், பெருஞ்செழிப்பைக் கொண்ட துரோணர் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட பாவம் நிறைந்த, நியாயமற்ற செயல்கள் பலவாகும்.(11) பாண்டவர்களால் இழைக்கப்பட்ட மற்றுமொரு மிக இழிந்த செயலான இது, நல்லோர் அனைவரின் நிந்தனைக்கும் உள்ளாகும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.(12) நியாயமற்ற வகையில் நடந்து கொண்டு ஈட்டப்பட்ட வெற்றியால் அறவோன் ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி ஏற்பட முடியும்? மேலும், நியாயவிதிகளுக்கு முரண்படும் ஒரு மனிதனை எந்த ஞானிதான் ஏற்பான்?(13) இழிந்த பாவியான பாண்டுவின் மகன் விருகோதரனை {பீமனைப்} போல, எந்தக் கல்விமான அநீதியினால் வெற்றியடைந்து இவ்வாறு மகிழ்வான்?(14) தொடைகள் முறிந்து கிடக்கும் என்னைப் போன்ற ஒருவனின் தலையைப் பீமசேனன் கோபத்துடன் தன் காலால் தீண்டியதைவிட ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?(15) ஓ! சஞ்சயா, மகிமையும், செழிப்பும் கொண்டவனும், நண்பர்களுக்கு மத்தியில் வாழ்பவனுமான ஒரு மனிதனிடம் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடிய ஒருவன் மரியாதைக்குத் தகுந்தவனா?(16)

என்னைப் பெற்றோர் போர்க்கடமைகளைக் குறித்து அறியாதவர்களல்ல. ஓ! சஞ்சயா, துன்பத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக:(17) “நான் வேள்விகளைச் செய்திருக்கிறேன், பெரும் எண்ணிக்கையிலான பணியாட்களை முறையாக ஆதரித்திருக்கிறேன், கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் ஆட்சி செய்திருக்கிறேன். உயிரோடு இருக்கும் என் எதிரிகளின் தலைக்கு மேலேயே நான் நிலைத்திருக்கிறேன்.(18) என் ஆற்றலை விரிவுபடுத்த என் சொந்தங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்தேன், நண்பர்களுக்கு ஏற்புடையதை {இனிமையானதைச்} செய்தேன். என் எதிரிகள் அனைவரையும் நான் தாக்குப்பிடித்தேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(19) பகைவரின் நாடுகளில் முன்னேறி, மன்னர்களை அடிமைகளைப் போல நான் ஆணையிட்டிருக்கிறேன். நான் விரும்பிய மற்றும் அன்புடன் இருந்த அனைவரிடமும் நல்ல முறையில் நடந்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(20)

நான் என் சொந்தங்கள் அனைவரையும் மதித்திருக்கிறேன் மற்றும் என்னைச் சார்ந்திருந்தோர் அனைவரின் நன்மையையும் கவனித்திருக்கிறேன். மனித இருப்பின் எல்லைகளான அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய மூன்றையும் நான் கவனித்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(21) பெரும் மன்னர்களுக்கு நான் ஆணையிட்டேன், பிறரால் அடைய முடியாத கௌரவம் என்னுடையதானது. நான் எப்போதும் என் பயணங்களை மிகச் சிறந்த குதிரைகளிலேயே செய்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(22) நான் வேதங்களைக் கற்றிருக்கிறேன், விதிப்படி தானங்களையும் அளித்திருக்கிறேன். என் வாழ்வு மகிழ்ச்சியிலேயே கழிந்தது. என் வகைக்காகக் கடமைகளை நோற்ற நான், இதன் பிறகு பல அருள் உலகங்களை அடைவேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(23) போரில் வெல்லப்பட்டு, என் எதிரிகளைத் தலைவர்களாகக் கொண்டு தொண்டு புரியும் நிலை எனக்கு ஏற்படாதது நற்பேறாலேயே. ஓ! தலைவா, பெருகியிருக்கும் செழிப்பானது, என் மரணத்திற்குப் பிறகு மட்டுமே என்னைக் கைவிட்டு மற்றொருவனுக்காகக் காத்திருக்கப் போகிறது.(24) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் நல்ல க்ஷத்திரியர்களால் விரும்பப்படும் மரணத்தையே நான் அடைந்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(25)

பகைமையின் பாதையில் இருந்து விலகாமலும், சாதாரண மனிதனைப் போல வெல்லப்படாமலும் நான் இருப்பது நற்பேறாலேயே. சில வம்புகள் செய்திருந்தாலும் நான் வெல்லப்படாமல் இருப்பது நற்பேறாலேயே.(26) நியாயமான போர்விதிகளுக்கு முரணாக நியாயமற்ற வகையில் நான் கொல்லப்பட்டிருப்பதால், என் படுகொலையானது உறங்கிக் கொண்டிருப்பவனையோ, கவனமில்லாமல் இருப்பவனையோ கொல்வதைப் போன்றதோ, நஞ்சூட்டிக் கொல்லப்படுவதைப் போன்றதோ ஆகும்.(27) உயர்ந்த அருளைக் கொண்டவர்களான அஸ்வத்தாமர், சாத்வத குலத்தின் கிருதவர்மன் மற்றும் சரத்வான் மகனான கிருபர் ஆகியோரிடம்,(28) “விதிகளை மீறியவர்களும், அநீதிமிக்கச் செயல்களைச் செய்தவர்களுமான பாண்டவர்கள் மீது ஒருபோதும் நம்பிக்கை வைக்காதீர்கள்” என்ற இந்த என் வார்த்தைகள் சொல்லப்பட வேண்டும்” என்று {சஞ்சயனிடம் துரியோதனன்} சொன்னான்.(29)

அதன்பிறகு, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான உமது அரச மகன் {துரியோதனன்} செய்தி தாங்கிகளிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,: “போரில் நான் பீமசேனனால் மிக அநியாயமாகக் கொல்லப்பட்டேன்.(30) ஏற்கனவே சொர்க்கத்திற்குச் சென்று விட்டவர்களான துரோணர், கர்ணன், சல்லியன், பெரும் சக்தி கொண்ட விருஷசேனன், சுபலனின் மகனான சகுனி, பெரும் வீரம் கொண்ட ஜலசந்தன், சோமதத்தர் மகனான மன்னர் பகதத்தர், வலிமைமிக்க வில்லாளியான சிந்துமன்னன் ஜெயத்ரதன், துச்சாசனன் தலைமையிலானவர்களும், எனக்கு இணையானவர்களுமான என் தம்பிகள் அனைவர், பேராற்றலைக் கொண்டவனான துச்சாசனன் மகன், என் மகன் லக்ஷ்மணன், மற்றும் என்னுடன் சேர்ந்து போரிட்ட ஆயிரக்கணக்கானோரின் வழியைப் பின்பற்றிப் பணமற்ற வழிப்போக்கனைப் போல நான் இப்போது செல்லப் போகிறேன்.(31-34)

ஐயோ, துன்பத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் என் தங்கையானவள், அவளது சகோதரர்கள் மற்றும் கணவனின் படுகொலையைக் கேட்டுக் கவலை நிறைந்தவளாக எவ்வாறு வாழ்வாள்?(35) ஐயோ, காந்தாரி மற்றும் மருமகள்கள், மற்றும் பேரர்களின் மனைவிமார்கள் ஆகியோருடன் கூடியவரும், என் தந்தையுமான முதிர்ந்த மன்னர் {திருதராஷ்டிரர்} எவ்வளவு அவலநிலையில் இருக்கப் போகிறார்?(36) அழகியும், அகன்ற கண்களைக் கொண்டவளும், மகன்களற்று, கணவனற்றுப் போனவளுமான லக்ஷ்மணனின் தாய் {பானுமதி}, விரைவில் தன் மரணத்தைச் சந்திப்பாள் என்பதில் ஐயமில்லை.(37) பேச்சில் வல்லவரும், அர்ப்பணிப்பு கொண்டவரும், துறவியுமான சார்வாகர்[1]அனைத்தையும் அறிந்தால், அந்த அருளப்பட்ட மனிதர் நிச்சயம் என் மரணத்திற்காகப் பழிதீர்ப்பார்.(38) மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் புனிதக் களமான சமந்தபஞ்சகத்தில் இறப்பதால், நான் நிச்சயம் அழிவில்லாத உலகங்களை அடைவேன்” என்றான் {துரியோதனன்}.(39)அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மன்னனின் இந்தப் புலம்பல்களைக் கேட்டு, ஆயிரக்கணக்கான மனிதர்கள் கண்கள் நிறைந்த கண்ணீருடன் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(40) காடுகள், கடல்கள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த உலகமும், பேரொலியை உண்டாக்கியபடியே பயங்கரமாக நடுங்கத் தொடங்கியது. திசைகளின் புள்ளிகள் அனைத்தும் இருளடைந்தன.(41) அந்தத் தூதர்கள் {செய்திதாங்கிகள்} துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} சென்று, கதாயுத மோதல் நடந்த விதம், மன்னனின் {துரியோதனனின்} வீழ்ச்சி ஆகியவை அனைத்தையும் {நடந்தவாறே} சொன்னார்கள்.(42) அவர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகனிடம் அனைத்தையும் சொன்னபிறகு, நீண்ட நேரத்திற்குச் சிந்தித்தவாறே அங்கிருந்த பிறகு, துயரால் பீடிக்கப்பட்டு, தாங்கள் எங்கிருந்து வந்திருந்தனரோ அங்கேயே சென்றுவிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(43)

படைத்தலைவனானான் அஸ்வத்தாமன்! – சல்லிய பர்வம் பகுதி – 65-துரியோதனன் கிடந்த இடத்திற்குக் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் வந்தது; விழுந்திருக்கும் துரியோதனனைக் கண்டு அஸ்வத்தாமன் புலம்பியது; துரியோதனனின் மறுமொழி; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகச் சபதமேற்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைப் படைத்தலைவனாக்குமாறு கிருபரிடம் கேட்டுக் கொண்ட துரியோதன்; மூன்று வீரர்களும் துரியோதனனைத் தனிமையில் விட்டு அகன்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கூரிய கணைகள், கதாயுதங்கள், வேல்கள் மற்றும் ஈட்டிகளால் மிகவும் காயமடைந்தும், கொல்லப்படாமல் கௌரவப் படையில் எஞ்சியிருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மூவரும், துரியோதனனின் வீழ்ச்சியைக் கேட்டு,(1,2) தங்களின் வேகமான குதிரைகளில் ஏறி விரைவாகப் போர்க்களத்திற்கு வந்தனர். அங்கே அவர்கள், காட்டில் சூறாவளியால் வீழ்த்தப்பட்ட பெரும் சால மரத்தைப் போல அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டனர். அவர்கள், காட்டில் வேடனால் வீழ்த்தப்பட்ட ஒரு வலிமைமிக்க யானையைப் போலக் குருதியில் நனைந்து, வெறுந்தரையில் கிடந்து துடித்துக் கொண்டிருக்கும் அவனைக் கண்டனர். அவன், அபரிமிதமான இரத்த ஓடையில் குளித்தவனாக, வேதனையில் உருண்டு புரண்டு கொண்டிருப்பதைக் கண்டனர்.(3-5)

உண்மையில் அவர்கள், அவனைப் {துரியோதனனைப்} பூமியில் விழுந்த சூரியனைப் போலவோ, பெருங்காற்றால் வற்றிய பெருங்கடலைப் போலவோ, ஆகாயத்தில் மூடுபனியால் வட்டில் மறைக்கப்பட்ட முழு நிலவைப் போலவோ கண்டனர். ஆற்றலில் யானைக்கு இணையானவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனுமான அந்த மன்னன், புழுதியால் மறைக்கப்பட்டுப் பூமியில் கிடந்தான்.(6,7) ஒரு நாட்டின் ஏகாதிபதியைச் சுற்றி, செல்வத்தில் ஆசை கொண்டோர் இருப்பதைப் போல அவனைச் சுற்றிலும் ஊனுண்ணும் பல்வேறு பயங்கர விலங்குகளும், உயிரினங்களும் இருந்தன.(8) அவனது நெற்றி சினத்தால் ஆழ்வடுக்களைப் போலச் சுருங்கியிருந்தது, அவனது கண்கள் கோபத்தால் உருண்டு கொண்டிருந்தன. மனிதர்களில் புலியான அந்த மன்னன், (வேடர்களால்) வீழ்த்தப்பட்ட புலியைப் போலச் சினம் நிறைந்தவனாக இருப்பதைக் கண்டனர்.(9) பெரும் வில்லாளிகளான கிருபரும், பிறரும், பூமியில் வீழ்ந்து கிடந்த அந்த ஏகாதிபதியைக் கண்டு திகைப்படைந்தனர்.(10)

அவர்கள் தங்கள் தேர்களில் இருந்து இறங்கி மன்னை {துரியோதனனை} நோக்கி ஓடினர். துரியோதனனைக் கண்ட அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி பூமியில் அமர்ந்தனர்.(11) அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீர் நிறைந்த கண்களுடன், ஒரு பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டு, பூமியில் கிடப்பவனும், மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாரதக் குலத் தலைவனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(12) “ஓ! மனிதர்களில் புலியே, புழுதிக்கறை படிந்து வெறுந்தடையில் நீ கிடப்பதால், மனிதர்களின் உலகில் நிலையானது ஏதுமில்லை என்பது உண்மையே.(13) மொத்த உலகிற்கும் ஆணை பிறப்பிக்கும் மன்னனாக நீ இருந்தாய். பிறகு ஏன், ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இத்தகு தனிமையான காட்டில் வெறுந்தரையில் தனியனாக நீ கிடக்கிறாய்?(14) உன் அருகில் துச்சாசனனையோ, பெரும் தேர்வீரனான கர்ணனையோ, உன் நூற்றுக்கணக்கான நண்பர்களையோ நான் காணவில்லை. ஓ! மனிதர்களில் காளையே, இஃது என்ன?(15)

ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவனே {துரியோதனனே}, புழுதிக் கறைபடிந்து வெறுந்தரையில் நீ இவ்வாறு கிடப்பதால், யமனின் {விதியின்} வழிகளை அறிவது கடினம் என்பதில் ஐயமில்லை.(16) ஐயோ, மணிமுடிசூட்டுவிழாவில் புனித நீர் தெளிக்கப்பட்ட கேசங்களைக் கொண்ட க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் தலைமையில் இந்த எதிரிகளை எரிப்பவன் {இந்தத் துரியோதனன்} செல்வான். ஐயோ இப்போது அவன் புழுதியை உண்கிறான். காலம் அதன் வழியில் கொண்டு வரும் முரண்களைப் பாருங்கள்.(17) தூய்மையான உன் வெண்குடை எங்கே? ஓ! மன்னா {துரியோதனா}, காற்றை வீசும் வெண்சாமரம் எங்கே? ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, உனது பரந்த படையானது இப்போது எங்கே?(18) உலகின் தலைவனாக இருந்த நீ, இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், புத்தகம் {சாத்திரங்களைச்} சாராத காரணங்களைக் கொண்ட நிகழ்வுகளின் வழிகள் புதிர் நிறைந்தவையே என்பது நிச்சயம்.(19) சக்ரனுக்கு இணையான நீ, பரிதாபகரமான இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், மனிதர்கள் அனைவரின் செழிப்பும் நிலையில்லாததே என்பதில் ஐயமில்லை” என்றான் {அஸ்வத்தாமன்}.(20)

அஸ்வத்தாமனின் இந்தக் கவலைநிறைந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, அச்சந்தர்ப்பத்திற்குத் தகுந்த இந்த வார்த்தைகளை அவனுக்குப் பதிலாக அளித்தான்.(21) அவன் தன் கரங்களால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, மறுபடியும் சோகத்தால் கண்ணீர் சிந்தினான். பிறகு அந்த மன்னன், கிருபர் தலைமையிலான அந்த வீரர்களிடம்,(22) “(உயிரினங்கள் அனைத்தின்) மரணக்கட்டுப்பாடு படைப்பாளனால் விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. காலத்தின் வழியில் அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் நேர்கிறது.(23) அந்த மரணமே இப்போதும் உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாக எனக்கு நேர்கிறது. மொத்த உலகையும் ஆட்சி செய்த நான் இந்த அவல நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேன்.(24) என்ன பேரிடர் நேரிட்டாலும், நான் போரில் இருந்து ஒருபோதும் புறமுதுகிடாதது நற்பேறாலேயே. குறிப்பாக வஞ்சகத்தின் துணையைக் கொண்டு அந்தப் பாவிகளால் நான் கொல்லப்பட நேர்ந்ததும் நற்பேறாலேயே.(25)

பகைமையில் ஈடுபட்டபோதும், நான் வீரத்தையும், விடாமுயற்சியையும் எப்போதும் வெளிப்படுத்தியது நற்பேறாலேயே. நான் என் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் போரில் கொல்லப்பட்டதும் நற்பேறாலேயே.(26) இந்தப் பெரும்படுகொலையில் உயிரோடு தப்பியவர்களாக, பாதுகாப்பாக, உடல்நலத்துடன் இருப்பவர்களாக உங்களை நான் காண்பதும் நற்பேறாலேயே.(27) இஃது எனக்கு மிகவும் ஏற்புடையதாகும் {இனிமையானதாகும்}.(27) பாசத்தால் என் மரணத்திற்காக வருந்தாதீர்கள். வேதங்களுக்கு அதிகாரம் இருக்குமானால், நான் நிச்சயம் அழிவில்லாத பல உலகங்களை அடைந்திருக்கிறேன்.(28) அளவிலா சக்தி கொண்ட கிருஷ்ணனின் மகிமையை நான் அறியாதவனல்ல. அவன், க்ஷத்திரியக் கடமைகளை முறையாக நோற்று என்னை விழச் செய்யவில்லை.(29) நான் அவனை அடைந்துவிட்டேன். எக்காரணத்திற்காகவும், எவரும் எனக்காக வருந்தக்கூடாது. உங்களைப் போன்ற மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதையே நீங்கள் செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் வெற்றிக்காக எப்போதும் முயற்சி செய்தீர்கள். எனினும், விதி கலங்கடிக்கப்பட முடியாததாகும்” என்றான் {துரியோதனன்}.(30)

இவ்வளவே சொன்ன அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் அலைமோதும் கண்களுடன், மரணவேதனையால் கலக்கமடைந்து அமைதியை அடைந்தான்.(31) மன்னனின் கண்ணீரையும், துயரத்தையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அண்ட அழிவின்போது காணப்படும் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(32) சினத்தில் மூழ்கிய அவன் {அஸ்வத்தாமன்} தன் கரங்களைப் பிசைந்து கொண்டே, கண்ணீரால் கரகரப்பான குரலுடன் மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(33) “ஒரு கொடூர சதியின் மூலம் அந்த இழிந்தவர்களால் என் தந்தை {துரோணர்} கொல்லப்பட்டார். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, இந்த அவலநிலைக்கு நீ குறைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது எரிக்கப்படுவதைப் போல அச்செயல் கூட என்னை இவ்வளவு அதிகமாக எரிக்கவில்லை.(34) ஓ! தலைவா, உண்மையின் மீதும், என் பக்திச் செயல்கள் அனைத்தின் மீதும், என் தானங்கள், என் அறம், நான் வென்ற அறத்தகுதிகள் அனைத்தின் மீதும் ஆணையிட்டு நான் சொல்லப் போகும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக.(35) நான் இன்று, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து, என் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், பாஞ்சாலர்கள் அனைவரையும் யமலோகம் அனுப்பிவைப்பேன். ஓ! ஏகாதிபதி, எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {அஸ்வத்தாமன்}.(36)

துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சொன்னதும், தன் இதயத்திற்கு மிகவும் ஏற்புடையதுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரு மன்னன், கிருபரிடம், “ஓ! ஆசானே, ஒரு குடம் நிறைந்த நீரைத் தாமதமில்லாமல் என்னிடம் கொண்டு வாரும்” என்றான்.(37) மன்னனின் இந்த வார்த்தைகளின் பேரில் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {கிருபர்}, ஒரு பாத்திரம் நிறைந்த நீரை விரைவாகக் கொண்டு வந்து, மன்னனை அணுகினார்.(38) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, அந்தக் கிருபரிடம், “ஓ! பிராணர்களில் முதன்மையானவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக, நீர் எனக்கு நன்மையை விரும்பினால், என் உத்தரவின் பேரில் இந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} படைத்தலைவனாக நிறுவப்படட்டும்.(39) மன்னனின் உத்தரவின் பேரில், ஒரு பிராமணன் கூடப் போரிடலாம், அதிலும் குறிப்பாக க்ஷத்திரியப் பயிற்சிகளைப் பின்பற்றுபவர்கள் {நிச்சயம்} போரிடலாம். சாத்திரங்களைக் கற்றோர் இதைச் சொல்கின்றனர்” என்றான் {துரியோதனன்}.(40)

சரத்வான் மகனான கிருபர், மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அம்மன்னனின் உத்தரவின் பேரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} படைத்தலைவனாக நிறுவினார்.(41) பட்டஞ்சூட்டல் முடிந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்களில் சிறந்தவனை ஆரத்தழுவிக் கொண்ட அஸ்வத்தாமன், தன் சிங்க முழக்கங்களால் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கச் செய்து அந்த இடத்தை விட்டு அகன்றான்.(42) மன்னர்களில் முதன்மையானவனான துரியோதனன், அபரிமிதமான குருதியால் மறைக்கப்பட்டு, அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அவ்விரவை அங்கேயே கழிக்கத் தொடங்கினான்.(43) போர்க்களத்தில் இருந்து விரைவாகச் சென்ற அவ்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துயரத்தால் கலங்கிய இதயங்களுடன், கவலையுடனும், மெய்யுறுதிப்பாடுடனும் சிந்திக்கத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.(44)

கதாயுத்த உப பர்வம் முற்றும்

சல்லியபர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading