ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ சபா பர்வம்-ஸ்ரீ  சபா கிரியா பர்வம்–

“அரண்மனை கட்டிக் கொடு!” என்றான் கிருஷ்ணன் – சபாபர்வம் பகுதி 1-(சபா கிரியா பர்வம் – 01)மயன் அர்ஜுனனிடம் பதிலுதவி செய்வதாகக் கேட்பது; அர்ஜுனன் அதை மறுத்து கிருஷ்ணனுக்குச் செய்யச் சொன்னது; கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனுக்கு அழகான அரண்மனைக் கட்டித்தரக் கேட்டது; யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும் அர்ஜுனனும் செய்தியைச் சொல்வது; யுதிஷ்டிரன் மயனை வரவேற்பது; கட்டுமானப் பணி ஆரம்பமாவது…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாதேர் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் [ஜயா] என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}

வைசம்பாயனர் சொன்னார், “பிறகு, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில், அர்ஜுனனை வழிபட்ட மய தானவன் {Maya Danava}, கரங்கள் கூப்பி இனிமையான வார்தைகளால் தொடர்ந்து அவனிடம் {அர்ஜுனனிடம்},(1) “ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நான், கிருஷ்ணன் எனும் பிரவாகத்திலிருந்தும் {ஆற்று வெள்ளம்}, என்னை உட்கொள்ள விரும்பிய பாவகனிடமிருந்தும் (நெருப்பிடமிருந்தும்) உன்னால் காக்கப்பட்டேன். நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்” என்று கேட்டான் {மயன்}.(2)

அர்ஜுனன், “ஓ பெரும் அசுரனே {மயனே}, ஏற்கனவே உன்னால் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன (இந்த உனது சலுகையுடன் சேர்த்து). நீ அருளப்பட்டிரு. நீ விரும்பிய இடத்திற்கு செல். நாங்கள் உன்னிடம் எப்படி அன்பாகவும், திருப்தியுடனும் இருக்கிறோமோ, அதே போல நீ என்னிடம் அன்பாகவும் திருப்தியுடனும் இரு!” என்றான் {அர்ஜுனன்}.(3)

மயன், “ஓ மனிதர்களில் காளையே {அர்ஜுனனே}, ஓ மேன்மையானவனே, நீ என்ன சொன்னாயோ அதற்கு நீ தகுதி உடையவனே, ஆனால் ஓ பாரதா {அர்ஜுனா}, உனது மகிழ்ச்சிக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.(4) நான் அசுரர்களில் விஸ்வகர்மாவான ஒரு பெரும் கலைஞன். ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, எனது நிலைக்கேற்ப, நான் உனக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்” என்றான் {மயன்}.(5)

அர்ஜுனன், “ஓ பாவமற்றவனே {மயனே}, “உடனடி மரணத்திலிருந்து நீ (என்னால்) காக்கப்பட்டதாக கருதுகிறாய். அது அப்படியே இருந்தாலும், நான் எனக்காக உன்னை எதையும் செய்ய வைக்க முடியாது.(6) அதே வேளையில், ஓ தானவா, நான் உனது நோக்கங்களை சலிப்பூட்ட {நிராகரிக்க} விரும்பவில்லை. நீ கிருஷ்ணனுக்கு ஏதாவது செய். அதுவே நான் உனக்கு செய்த சேவைகளுக்கு போதுமான பதிலுதவியாக இருக்கும்” என்றான் {அர்ஜுனன்}.(7)

வைசம்பாயனர் சொன்னார், “பிறகு ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மயனால் உந்தப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, மயனிடம் என்ன சாதனையைச் செய்யச் சொல்வது என்று சிறிது நேரம் சிந்தித்தான்.(8) பிரபஞ்சத்தின் தலைவனும், அனைத்து பொருட்களின் படைப்பாளியுமான கிருஷ்ணன், தனது மனத்தில் ஒரு முடிவுக்கு வந்து மயனிடம்,(9) “ஓ திதியின் மகனே {மயனே}, கலைஞர்களில் முதன்மையானவனே, நீதிமானான யுதிஷ்டிரனுக்கு நீ நன்மை செய்ய விரும்பினால், நீ தேர்ந்தெடுக்கும்படி, ஒரு சிறப்பு வாய்ந்த {அரண்மனை போன்ற} சபை (கூட்டமன்றம்-Meeting hall) (உன்னால்) கட்டப்படட்டும்.(10) உண்மையில், இந்த மனித உலகில் உள்ள மனிதர்கள் அங்கே அமர்ந்திருக்கும் போது, கவனத்துடன் பரீட்சித்துப் பார்க்கப்பட்டாலும் போலி செய்ய முடியாதவாறு அந்த அரண்மனையை நீ கட்ட வேண்டும்.(11) மேலும், ஓ மயனே, அந்த மாளிகை தேவ, அசுர, மனித வடிவமைப்புகளின் கலவையாக இருக்குமாறு நீ அதைக் கட்ட வேண்டும்” என்று கேட்டான் {கிருஷ்ணன்}.(12)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட மயன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன், பாண்டுவின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காக}, தேவர்களின் அரண்மனையைப் போன்ற ஒரு உன்னதமான அரண்மனையை உடனடியாக {மனத்தில்} கட்டினான்.(13) பிறகு, இந்த அனைத்து காரியங்களையும் நீதிமானான யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும், பார்த்தனும் (அர்ஜுனனும்) தெரிவித்து, அவனுக்கு மயனை அறிமுகப்படுத்தி வைத்தனர்.(14) யுதிஷ்டிரன் மயனை உரிய மதிப்புடன் வரவேற்று, அவனுக்குத் {மயனுக்குத்} தகுந்த மரியாதையைச் செய்தான். மேலும், ஓ பாரதா {ஜனமேஜயா}, மயன் அந்த வரவேற்பை உயர்வாகக் கருதி அதை ஏற்றுக் கொண்டான்.(15) ஓ பாரத குலத்தின் ஏகாதிபதியே {ஜனமேஜயா}, திதியின் பெருமைக்குரிய மகனான அவன் {மயன்}, பாண்டுவின் மகன்களுக்கு, தானவ விருஷபர்வனின் கதையை உரைத்தான்.(16) பிறகு அந்த கலைஞர்களில் முதன்மையானவன் {மயன்}, சிறிது நேரம் ஓய்வு கொண்டு, பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்களுக்கு அரண்மனையைக் கட்ட திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான்.(17) கிருஷ்ணன் மற்றும் பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் அனுமதி பெற்ற பெரும் வீரம் கொண்ட சிறப்பு வாய்ந்த தானவன் {மயன்}, ஒரு அதிர்ஷ்டமான நாளில் அடித்தளத்திற்கான {அஸ்திவாரத்திற்கான} ஆரம்பக்கட்ட சடங்குகளைச் செய்து,(18) நன்கு கற்ற ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு இனிமையான பாலும் அரிசியும் {பாயாசமும்}, பல வகையான ஆடம்பரப் பரிசுகளையும் கொடுத்து நிறைவை ஏற்படுத்தினான்.(19) பிறகு, பார்ப்பதற்கு அழகாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவும் கட்டடம் கட்டுவதற்கு ஏற்ற வகையில், அனைத்து பருவ காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள நிலத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் ஐயாயிரம் சதுர முழத்தைக் கட்டடத்திற்காக அளந்து எடுத்தான் {மயன்}” {என்றார் வைசம்பாயனர்}.(20)

துவாரகையை அடைந்த கிருஷ்ணன்! – சபாபர்வம் பகுதி 2-(சபா கிரியா பர்வம் – 02)-தந்தையைக் காணும் ஆவல் கொண்ட கிருஷ்ணன், துவாரகை கிளம்புவது; யுதிஷ்டிரனும் மற்ற பாண்டவர்களும் கிருஷ்ணனைத் தொடர்ந்து செல்வது; அவர்களைத் திரும்பிச் செல்லும் படி கிருஷ்ணன் கேட்டுக் கொள்வது; யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் தலைநகர் திரும்புவது; கிருஷ்ணனும் துவாரகையைச் சென்றடைவது…

வைசம்பாயனர் சொன்னார், “அனைவரின் வழிபாட்டையும் ஏற்கத் தகுதி வாய்ந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காண்டவப் பிரஸ்தத்தில் மகிழ்ச்சியாக சில காலம் வாழ்ந்தான். அங்கு பிருதையின் {குந்தியின்} மகன்களால் மரியாதை கலந்த அன்புடனும், பாசத்துடனும் நடத்தப்பட்டான்.(1) ஒரு நாள் அவனுக்குத் {கிருஷ்ணனுக்குத்} தனது தந்தையைக் {வசுதேவரை} காணும் ஆவல் வந்தது. பிறகு, பிரபஞ்சத்தின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள தகுதி வாய்ந்த அந்தப் பெரிய கண் உடையவன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனையும் பிருதையையும் {குந்தியையும்} வணங்கினான் பிறகு, தனது தந்தையின் {வசுதேவரின்} சகோதரியான குந்தியின் பாதங்களில் தனது தலையை வைத்து வணங்கினான். கேசவனால் {கிருஷ்ணனால்} இப்படி மரியாதை செலுத்தப்பட்ட பிருதை, அவனது தலையை முகர்ந்து பார்த்து, வாரி அணைத்துக் கொண்டாள்.(2,3) அந்தச் சிறப்பு வாய்ந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்} தனது தங்கையான சுபத்திரையைக் கண்களில் நீர் நிறைந்து ததும்ப, பாசத்துடன் அணுகி, அவளிடம் விடைகூற முடியாமல் சரியானவையும், நல்லவை நிறைந்தவையுமான அற்புதமான உண்மையான வார்த்தைகளைச் சொன்னான்.(4,5) அந்த இனிமையான பேச்சு கொண்ட சுபத்திரையும், தலையைத் தாழ்த்தி வணங்கி, தனது தந்தை வழி உறவினர்களுக்குத் தான் சொல்லி அனுப்ப நினைத்த அத்தனையும் சொன்னாள்.(6) அவன் {கிருஷ்ணன்} தனது அழகான தங்கைக்கு {சுபத்திரைக்கு} நல்ல வாழ்த்துகளைச் சொல்லி அவளிடம் விடைபெற்றான். பிறகு அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்} திரௌபதியையும், தௌமியரையும் {பாண்டவர்களின் புரோகிதரையும்} கண்டான்.(7) அந்த மனிதர்களில் சிறந்தவன் {கிருஷ்ண்ன்} தௌமியரைத் தகுந்த முறையில் வணங்கி, திரௌபதிக்கு ஆறுதல் சொல்லி, அவளிடம் இருந்து விடைபெற்றான்.(8) கல்விமானும், பெரும் பலம் வாய்ந்தவனுமான கிருஷ்ணன், பிருதையுடன் {குந்தியிடம்} சேர்ந்து தனது மைத்துனர்களிடம் சென்றான்.

அந்த ஐந்து சகோதர்களால் சூழப்பட்ட கிருஷ்ணன், தேவர்களுக்கு மத்தியில் இருந்த சக்ரன் {இந்திரன்} போல இருந்தான்.(9) கருடனின் உருவத்தைக் கொடியில் கொண்டவன் {கிருஷ்ணன்}, பயணத்திற்கு உண்டான ஆரம்பச் சடங்குகளைச் செய்ய எண்ணி, நீராடி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தனது மேனியில் ஆபரணங்கள் பூண்டுகொண்டான்.(10) அந்த யதுகுலக் காளை {கிருஷ்ணன்}, தேவர்களையும் பிராமணர்களையும் பூக்களாலும், மந்திரங்களாலும், தலை வணங்குதலாலும், அற்புதமான நறுமணப் பொருட்களாலும் வணங்கினான்.(11) சடங்குகளை முடித்து, உறுதியான அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, புறப்பட எண்ணி வெளியே வந்தான்.(12) அந்த யது குல தலைவன் {கிருஷ்ணன்}, உள்ள அறையில் இருந்து முற்றத்திற்கு வந்து, பிராமணர்களை வணங்கி அவர்களுக்கு, பாத்திரம் நிறைந்த தயிரும், பழங்களும் மற்றும் வறண்ட தானியங்களையும் கொடுத்தான். இதனால் அந்த பிராமணர்கள் அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஆசிகள் வழங்கினர். அவர்களுக்கு மேலும் செல்வங்களைக் கொடுத்து அவர்களை வலம் வந்தான் {கிருஷ்ணன்}.(13) பிறகு தனது அற்புதமான தங்கத் தேரில் ஏறிக் கொண்டான்.

அந்த தேரில் அவனது சாரங்க வில்லும், வாளும், சக்கரமும் கதாயுதமும், மற்ற ஆயுதங்களும் இருந்தன. மேலும் அந்த தேர் தர்க்கியனின் {கருடனின்} கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த தேரில் சைப்பியன் மற்றும் சுக்ரீவன் என்ற குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. தாமரைகள் போன்ற கண்களை உடையவன் {கிருஷ்ணன்}, நல்ல நட்சத்திரமும் அற்புதமான நேரமும் நிறைந்த ஒரு சந்திர நாளில் தனது பயணத்தைத் தொடங்கினான்.(14,15) குருக்களின் மன்னன் யுதிஷ்டிரன் பாசத்தால் கிருஷ்ணனின் தேரில் ஏறி தேரோட்டியான தாருகனை அருகில் நிற்க வைத்துக் கொண்டு, தானே கடிவாளத்தைப் பிடித்தான். நீண்ட கரங்கள் கொண்ட அர்ஜுனனும் அந்த தேரில் ஏறி கிருஷ்ணனை வலம் வந்து, தங்கப் பிடி கொண்ட வெள்ளை சாமரத்தை எடுத்து வீசினான்.(16-18) இரட்டைச் சகோதரர்களான நகுல சகாதேவர்களுடன் பீமசேனனும், புரோகிதர்களும், குடிமக்களாகிய அனைவரும் கிருஷ்ணனைத் தொடர்ந்து பின்னே சென்றனர். அனைத்து சகோதரர்களாலும் தொடரப்பட்டவனும், எதிரி வீரர்களைக் கொல்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்},(19) சீடர்களால் தொடரப்படும் குருவைப் போலப் பிரகாசித்தான்.

பிறகு கோவிந்தன் {கிருஷ்ணன்} அர்ஜுனனுடன் பேசி, அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். பிறகு யுதிஷ்டிரனை வழிபட்டு, பீமனையும் இரட்டையர்களையும் வாரி அணைத்துக் கொண்டான்.(20) மூத்த பாண்டவர்கள் மூவராலும் {யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனனாலும்} பதிலுக்கு கட்டி அணைக்கப்பட்டு, இரட்டையர்களால் {நகுலன் சகாதேவன் ஆகியோரால்} மரியாதையுடன் வணங்கப்பட்டான் {கிருஷ்ணன்}.(21) அரை யோஜனை {இரண்டு மைல்கள்} இப்படியே சென்றது, எதிரி நகரங்களை அடக்குபவனான கிருஷ்ணன், ஓ பாரதா {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனை மரியாதையுடன் தன்னைத் தொடர்ந்து வருவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.(22) அனைத்து கடமைகளையும் உணர்ந்த கோவிந்தன் {கிருஷ்ணன்}, பிறகு யுதிஷ்டிரனை மரியாதையுடன் வணங்கி, அவனது {யுதிஷ்டிரனது} பாதங்களைப் பற்றிக் கொண்டான். ஆனால் யுதிஷ்டிரன் கேசவனை உடனே எழுப்பி, அவனது தலையை முகர்ந்து பார்த்தான்.(23) பாண்டுவின் மகனான நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய, யது குலத்தில் முதன்மையான கிருஷ்ணனை எழுப்பி, அவனிடம் “நலமுடன் சென்று வா” என்று சொல்லி, அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினான் {யுதிஷ்டிரன்}.(24)

பிறகு மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்}, அவர்களுடனான அடுத்த சந்திப்பை {திரும்பி வரும்போது} சரியான வார்த்தைகளால் உறுதி செய்து, பாண்டவர்கள் தன்னைத் தொடர்ந்து நடத்து வருவதைத் தவிர்த்து,(25) அமராவதியை நோக்கி செல்லும் இந்திரன் போல மகிழ்ச்சியாக தனது சொந்த நகரத்தை நோக்கிச் சென்றான். அவன் {கிருஷ்ணன்} மேல் இருந்த அன்பாலும் பாசத்தாலேயும் அவனை அவ்வளவு நேரம் பாண்டவர்கள் தாங்கினர். பின்பு அவன் {கிருஷ்ணன்} தங்கள் பார்வையில் இருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டே இருந்தனர். அவன் பார்வையில் இருந்து மறைந்ததும், அவர்களது {பாண்டவர்களது} மனங்கள் அவனைப் {கிருஷ்ணனைப்} பின் தொடர்ந்து சென்றன. மனத்திற்குகந்த நபரான கேசவன் {கிருஷ்ணன்} விரைவாக அவர்களது பார்வையில் இருந்து மறைந்தான். ஆனால், அவர்களது தெவிட்டாத மனங்கள் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தன.(26,27) கோவிந்தனை மனத்தில் நிலைநிறுத்தி வைத்திருந்த அந்த மனிதர்களில் காளைகளான பிருதையின் {குந்தியின்} மைந்தர்கள், (மேலும் தொடர்வதை நிறுத்தி) சிறிது நேரம் அங்கேயே நின்று, பிறகு மனமில்லாமல் தங்கள் நகரத்தை நோக்கி விரைவாக சென்றனர். வீரனான சாத்யகியால் தொடரப்பட்ட கிருஷ்ணன், விரைவாக துவாரகையை நோக்கிச் சென்றான்.(28,29) பிறகு, தேவகியின் மகனான சௌரி {Sauri-கிருஷ்ணன்}, தனது தேரோட்டியான தாருகனுடன் சார்ந்து, கருடனின் வேகத்தில் துவாரகையை அடைந்தான்”.(30)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அதே வேளையில், தனது தம்பிகளுடன் கூடியவனும், மங்காத புகழைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன், நண்பர்கள் சூழ தனது தலைநகருக்குள் {இந்திரப்பிரஸ்த்தத்திற்குள்} நுழைந்தான்.(31) பிறகு அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்}, தனது உறவினர்கள், சகோதரர்கள், மகன்கள் ஆகியோரை அனுப்பிவிட்டு, திரௌபதியின் துணையுடன் இன்புற்றிருந்தான்.(32) கேசவனும் {கிருஷ்ணனும்}, உக்கிரசேனர் உள்ளிட்ட முக்கியமான யாதவர்களால் வழிபடப்பட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அற்புதமான தனது சொந்த நகருக்குள் நுழைந்தான்.(33) தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்}, தனது முதிர்ந்த தந்தையையும் {வசுதேவரையும்}, சிறப்பு வாய்ந்த தாயையும் {தேவகியையும்}, (தனது அண்ணன்) பலதேவனையும் {பலராமனையும்} வணங்கிய பிறகு தனது இருக்கையில் அமர்ந்தான்.(34) பிரத்யும்னன், சம்பன், நிஷதன், சாருதேஷ்ணன், கதன், அநிருத்தன், பானு ஆகியோரை வாரி அணைத்து, மூத்த மனிதர்களிடம் விடைபெற்ற ஜனார்த்தனன் ருக்மிணியின் அறைக்குள் {அந்தப்புரத்திற்குள்} நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(35)

அரண்மனையை முடிக்க பதினான்கு மாதம்! – சபாபர்வம் பகுதி 3-(சபா கிரியா பர்வம் – 03)-அர்ஜுனனின் அனுமதி பெற்ற மயன் வடகிழக்கு திசையில் சென்றது; கைலாசத்துக்கு வடக்கே சென்று அங்கிருந்து பல செல்வங்களை எடுத்து வந்து பாண்டவர்களுக்கு மாளிகை கட்ட ஆரம்பித்தது. அந்த அரண்மனைக்குள்ளேயே ஒரு குளத்தை அமைத்தது; வேலை நிறைவை மயன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தது…

வைசம்பாயனர் சொன்னார், “பிறகு மய தானவன், வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனனிடம், “நான் இப்போது உன்னிடம் விடை பெற்றுக் கொண்டு, விரைவில் திரும்பி வருகிறேன்.(1) கைலாச மலைக்கு வடக்கில் மைநாகம் என்ற மலைக்கு அருகில் உள்ள பிந்து நதியின் {பிந்துசரஸின்} கரையில், தானவர்கள் வேள்வி செய்தார்கள். அப்போது நான், காண்பதற்கினிய பல வண்ண ரத்னங்களாலும், தங்கத்தாலும் ஆன பண்டா[1] என்ற பொருளை (ஒரு வகை கரடு முரடான பொருள்)அங்கே பெரும் அளவில் சேகரித்து வைத்தேன். அவை எப்போதும் தன்னை உண்மைக்கு அர்ப்பணித்திருந்த விருஷபர்வனின் மாளிகையில் வைக்கப்பட்டது.(2,3) அவை இப்போதும் அங்கே இருக்குமானால், ஓ பாரதா {அர்ஜுனா}, நான் அவற்றுடன் திரும்பி வருகிறேன். அதன் பிறகு, நான் அனைத்து வகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், உலகத்தால் கொண்டாடப்படப் போவதுமான பாண்டவர்களின் அரண்மனையை கட்டத் தொடங்குவேன். ஓ குரு குலத்தில் வந்தவனே, (தானவ} மன்னனால் எதிரிகளைக் கொல்லப் பயன்படுத்துப்பட்ட ஒரு கொடும் கதாயுதமும் அந்த நதியில் இருப்பதாக நினைக்கிறேன். வலுவும் எடையும் நிறைந்ததான அது, பல வண்ணங்களிலான தங்கக் குமிழ் கொண்டிருந்தது. அது பெரும் எடையைத் தாங்க வல்லதாகவும், எதிரிகளைக் கொல்ல வல்லதாகவும், நூறு கதாயுதங்களுக்கு சமமானதாகவும் இருந்தது. உனக்கு காண்டீபம் பொருந்தியிருப்பதைப் போல, அந்த ஆயுதம் பீமனுக்குப் பொருந்துவதாக இருக்கும்.(4-7) அங்கு, வருணனிடம் இருந்து வந்ததும், தேவதத்தம் {Devadatta} என்ற பெயரைக் கொண்டதும், பெருத்த ஒலியை எழுப்பவல்லதுமான பெரிய சங்கு ஒன்றும் இருக்கிறது. நான் இவை அனைத்தையும் உனக்குத் தருவேன் என்பதில் ஐயமில்லை” என்றான்.(8)

இப்படி பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய அந்த அசுரன் {மயன்} வட கிழக்கு திசையில் புறப்பட்டு சென்றான். கைலாசத்துக்கு வடக்கில் மைநாக மலையில்,(9) ஹிரண்யசிருங்கம் என்ற பெயரைக் கொண்ட ரத்தினங்களால் ஆன ஒரு பெரிய சிகரம் இருக்கிறது. அந்த சிகரத்திற்கு அருகில்தான் பிந்து என்ற பெயரில் இனிமையான ஒரு தடாகமும் இருக்கிறது. அங்கே, அதன் கரையில், முன்பொரு சமயம் பகீரதன் என்ற மன்னன்,(10) தெய்வீக கங்கையைக் காண விரும்பி, பல வருடங்களாக அங்கு வசித்தான். அதனாலேயே அதற்கு {கங்கைக்கு}, அந்த மன்னனின் பெயரை ஒட்டி பாகீரதி என்ற பெயரும் உண்டு.(11) அங்கே அதன் கரையில், ஓ பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு வாய்ந்த தலைவனான இந்திரன், நூறு வேள்விகளைச் செய்தான். அங்கே விதிப்படி அல்லாமல் வெறும் அழகுக்காக ரத்தினங்களால் ஆன கம்பங்களும், தங்கத்தாலான பலிபீடங்களும் வைக்கப்பட்டிருந்தன. அங்கே அந்த வேள்விகளைச் செய்த ஆயிரம் கண் கொண்டவனான சச்சியின் தலைவன் வெற்றி மகுடம் சூட்டப்பட்டான் {சித்தி அடைந்தான்}.(12,13)

அங்கே, அனைத்து உயிர்களுக்கும் நிலைத்த தலைவனான கடும் மஹாதேவன் {சிவன்}, அனைத்து உலகங்களையும் படைத்துவிட்டு, பல ஆயிரக்கணக்கான ஆவிகளால் {கணங்களால்} வழிபடப்பட்டு, தனது வசிப்பிடத்தை இங்கே அமைத்துக் கொண்டான்.(14) நரனும் நாராயணனும், பிரம்மனும், யமனும், ஐந்தாவவதாக ஸ்தாணுவும் அங்கே ஆயிரம் யுகங்களின் முடிவில் தங்கள் வேள்விகளைச் செய்தனர்.(15) அங்கே, வாசுதேவன் {கிருஷ்ணன்}, அறத்தையும் நல்லொழுக்கத்தையும் நிறுவ, நேர்மையான அர்ப்பணிப்புடன், பல பல வருடங்களுக்கு நீண்ட தனது வேள்விகளைச் செய்தான்.(16) அங்கே கேசவனால் {கிருஷ்ணனால்} ஆயிரக்கணக்கிலும் பத்தாயிரக் கணக்கிலும் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வேள்விக் கம்பங்களும், பெரும் பிரகாசமுடைய வேள்விப்பீடங்களும் வைக்கப்பட்டன.(17)

ஓ பாரதா {ஜனமேஜயா}, அங்கே சென்ற மயன் கதாயுதத்தையும், சங்கையும், மன்னன் விருஷபர்வனுக்குச் சொந்தமான பளிங்கினாலான கண்ணாடி போன்ற பல்வேறுவகை பொருட்களையும் கொண்டு வந்தான்.(18) அந்தப் பெரும் அசுரனான மயன், அங்கே சென்று யக்ஷர்களாலும் ராட்சசர்களாலும் காக்கப்பட்டு வந்த பெரும் செல்வத்தைக் கொண்டு வந்தான்.(19) அப்படிக் கொண்டு வந்த அனைத்துப் பொருட்களையும் வைத்து, பெரும் அழகுடனும், தெய்வீகக் கலையம்சத்துடனும், ரத்தினங்களாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்ட இணையற்ற ஓர் அரண்மனையைக் கட்டினான்.(20) அவன் அந்தச் சிறந்த கதாயுதத்தைப் பீமசேனனிடம் கொடுத்தான். அற்புதமான அந்த சங்கை {தேவதத்தம் என்ற சங்கைக்} அர்ஜுனனிடம் கொடுத்தான்.(21) அதன் ஒலியைக் கேட்ட மாத்திரத்தில் அனைத்து உயிரினங்களும் நடுங்கத் தொடங்கின.

மயன் கட்டிய அந்த அரண்மனை தங்கத் தூண்கள் கொண்டிருந்தது. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அது ஐயாயிரம் சதுர முழத்திற்கான[2] பகுதியைப் பிடித்துக் கொண்டது. (கும்பகோணம் பதிப்பில், “சுற்றிலும் பதினாயிர முழம் விஸ்தாரமுள்ளதாகவிருந்தது” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “பத்தாயிரம் கிஷ்குவின் அளவுக்குச் சுற்றளவைக் கொண்டிருந்தது” என்றிருக்கிறது. கிஷ்கு என்பது முழமாக இருக்க வேண்டும்.)மிகுந்த அழகான வடிவம் கொண்ட அந்த அரண்மனை அக்னியைப் போலவும், சூரியனைப் போலவும், சோமனை {சந்திரனைப்} போவலவும், பிரகாசத்தில் ஒளிர்ந்து, சூரியனையே கருத்துவிட்டது போலத் தெரியச் செய்தது.(22-24) அது வெளிப்படுத்திய பிரகாசம், ஆகாயம் மற்றும் பாதாளத்தின் ஒளிகளைக் கலந்து, நெருப்பைப் போல இருந்தது. வானத்தில் தெளிவாய்த் தெரிகிற மேகத்திரள் போல, அந்த மாளிகை அனைவரும் பார்க்க எழுந்து நின்றது. திறமை வாய்ந்த மயனால் கட்டப்பட்ட அந்த அரண்மனை, மிகுந்த அகலமாக, இனிமையானதாக, அற்புதமான பொருட்களால் ஆனதாக. தங்கச் சுவர்களும், வளைவுகளும் கொண்டு, பல வித்தியாசமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து செல்வங்களும் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட போது,(25,26) அது தசார்ஹ குலத்தைச் சேர்ந்த சுதர்மாவைக் {சுதர்மம் என்ற சபையைக்} காட்டிலும், பிரம்மனின் வசிப்பிடத்தைக் காட்டிலும் விஞ்சி இருந்தது.

பெரும் உடலும், பெரும் பலமும் கொண்டவர்களும், தாமிரம் போலச் சிவந்த கண்களைக் கொண்டவர்களும், அம்புகள் போலக் காதுகள் நீண்டவர்களும், கடுமையானவர்களும், விண்ணில் செல்லும் சக்தியும் கொண்டவர்களும், அனைத்து ஆயுதங்களையும் தரிந்திருந்தவர்களும், கின்னரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுமான எட்டாயிரம் ராட்சசர்கள், அந்த அரண்மனையைப் பாதுகாத்து வந்தனர்.(27-29) மயன், அந்த அரண்மனைக்குள்ளேயே ஓர் இணையற்ற குளத்தை உண்டாக்கினான். கரிய நிறம் கொண்ட ரத்தினங்களாலான இலைகள், பிரகாசமான நகைகளாலான தண்டுகள் ஆகியவற்றைக் கொண்ட தாமரைகளும், தங்க இலைகள் கொண்ட மற்ற மலர்களும் அந்தக் குளத்தில் இருந்தன. அதன் மார்பில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் விளையாடித் திரிந்தன. முழுதும் மலர்ந்த தாமரைகளுடனும், மீன்களும் நிறைந்து, தங்க நிற ஆமைகளும் கொண்டு வண்ணமயமாகக் காட்சி அளித்தது அந்தக் குளம். மண் கலவாமல் தெளிந்த நீரை அது கொண்டிருந்தது. அந்தக் குளத்தின் கரையில் இருந்து நீர் வரை பளிங்கினால் ஆன படிக்கட்டுகள் இருந்தன.(30,31) மிதமாக வீசிய தென்றல் அதன் {குளத்தின்} மார்புகளை மெதுவாகத் தழுவி, அங்கே நின்று கொண்டிருந்த மலர்களை குலுக்கி விட்டு சென்றது. அந்தக் குளத்தின் கரைகள் விலை மதிப்புமிக்க வெண்பளிங்கினாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(32)

இப்படி பல வித நகைகளாலும், மதிப்பு மிக்க கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த குளத்தைக் கண்ட மற்ற மன்னர்கள், தங்கள் கண்கள் அகலமாக விரிந்திருக்கும் போதே, தவறுதலாக நிலம் என்று நினைத்து, அதற்குள் விழுந்தனர்.(33) பல்வேறு வகையான மரங்கள் பலவும் அந்த அரண்மனையைச் சுற்றி நடப்பபட்டன. அடர்த்தியான பச்சை வண்ணத்துடன், குளிர்ந்த நிழலைக் கொடுத்துக் கொண்டு,(34) எப்போதும் மலர்ந்து கொண்டே இருந்த அந்த மரங்கள் பார்பதற்கு அழகாக இருந்தன. அங்கே அமைக்கப்பட்டிருந்த செயற்கை கானகம் {நந்தவனம்} எப்போதும் நறுமணத்தை வீசிக்கொண்டே இருந்தது. அங்கே இன்னும் பல குளங்களும இருந்தன. அதில் அன்னப் பறவைகளும், கறந்தவங்களும் {நீர்க்காக்கைகளும்}, சக்கரவாகப் பறவைகளும் இருந்தன. நீரில் மலர்ந்த தாமரையின் மணத்தைச் சுமந்து வந்த தென்றல், பாண்டவர்களின் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கூட்டியது.(35,36)  மயன் தெய்வீக சபை கொண்ட அத்தகையை அரண்மனையை பதினான்கு மாதங்களில் கட்டி முடித்து, அதன் நிறைவு குறித்து யுதிஷ்டிரனிடம் தெரிவித்தான் {மயன்}” {என்றார் வைசம்பாயனர்}.(37)

அந்தணர்களுக்குப் படைக்கப்பட்ட பன்றிக்கறியும் மான்கறியும்! – சபாபர்வம் பகுதி 4-(சபா கிரியா பர்வம் – 04)-மயனால் கட்டப்பட்ட அந்த தெய்வீக சபைக்குள் யுதிஷ்டிரன் நுழைதல்; பிராமணர்களுக்கு தானம் செய்தல்; அந்தச் சபையில் அமர்ந்திருந்த க்ஷத்திரியர்கள் மற்றும் முனிவர்களின் பெயர் வரிசை…

வைசம்பாயனர் சொன்னார், “பிறகு மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரன், பத்தாயிரம் பிராமணர்களுக்கு, பாலுடனும், நெய் கலந்த அரசியுடனும், தேன் கலந்த கனிகளுடனும், கிழங்குகளுடனும், பன்றியிறைச்சி மற்றும் மான் இறைச்சியுடனும் உணவு கொடுத்த பிறகு, அந்த தெய்வீக சபைக்குள் நுழைந்தான். பல நாடுகளில் இருந்து வந்திருந்த அந்த பிராமணர்களுக்கு, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} எள்ளால் பக்குவப்படுத்தப்பட்ட உணவையும், ஜிபந்தி {ஜீவநதிகை} என்ற காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட உணவையும், அரிசியுடன் தெளிந்த நெய்யைக் கலந்து {ஹவிஷ்யம்},(1,2) பல வகைகளில் தயாரிக்கப்பட்ட இறைச்சிகளுடன், மேலும் பல்வேறு உணவு வகைகளுடனும், உறிஞ்சத் தக்க வகையிலும், குடித்தக்கத்த வகையிலும் கொடுத்தான்.[1]  மேலும், பல ஆடைகளையும், சித்திர வேலைப்பாடு நிறைந்த அற்புத துணிகளையும் கொடுத்தான்.(3,4) மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} ஒவ்வொரு பிராமணனுக்கும் ஆயிரம் பசுக்களையும் கொடுத்தான்.(கும்பகோணம் பதிப்பில், “நெய்யும், பாலும், தேனும் சேர்ந்த அன்னத்தையும், பக்ஷணங்களையும், கிழங்குகளையும், கனிகளையும், எள்ளன்னத்தையும், ஜீவநதிகையென்னும் புஷ்டியைத் தரும் ஓர் உணவையும், ஹவிஷ்யமென்னும் உணவையும், பன்றிகள், மான்கள் முதலியவற்றின் பலவகை மாம்ஸங்களையும், கடித்து மெல்லத்தக்கவற்றையும், உறிஞ்சத்தக்கவற்றையும், குடிக்கத்தக்கவற்றையும் மிகுதியாகக் கொடுத்துப் பல தேசங்களிலிருந்து வந்த பிராமணோத்தமர்கள் பதினாயிரவரைப் புசிப்பித்து அனேக விதங்களான புதிய வஸ்திரங்களையும், புஷ்ப மாலைகளையும் அளித்து அவர்களைத் திருப்தி செய்வித்தார்” என்றிருக்கிறது. மேலும் அதன் அடிக்குறிப்பில், “ஜீவநதிகை என்பதை யவனர் விரிஞ்சியென்பர். சர்க்கரை போல் தித்திக்கும் புஷ்பமுள்ள ஒரு மூலிகையென்றும், சீந்திக் கொடியென்றும் சிலர் சொல்லுவர். ஹவிஷ்யமாவது பனிக்காலத்திலுண்டானவையும், புழுக்காதவையுமான வெள்ளைத் தானியத்தையும், பச்சைப்பயறு, எள், யவை, அரேணுகம், தினை, நீவாரம், குறுவையிவற்றையும், வாஸ்துகம், ஹிலமோசிகை, காலசாகம் என்னும் கீரைகளையும், கேமுகம் தவிர மற்ற கிழங்குவகைகளையும், இந்துப்பு, கடலுப்பு இவற்றையும், பசுவின் தயிர், நெய், ஆடையெடுக்காத பால், பாலப்பழம், மாம்பழம், கடுக்காய், புளி, ஜீரகம், நாகரங்கம், திப்பிலி, வாழைப்பழம், லவலிப்பழம், தான்றிக்காய் இவைகளையும், வெல்லம் தவிர்க்க கரும்பு ஸம்பந்தமான சர்க்கரை கற்கண்டு முதலியவற்றையும் சேர்த்துத் தைலபாகமில்லாமல் செய்யப்பட்டது. மேற்கூறியவற்றோடு தேங்காய், நெல்லிக்கனிகளையும் சேர்த்துக் கூறுவதுமுண்டு” என்று இருக்கிறது.)

பிறகு ஓ பாரதா {ஜனமேஜயா}, “என்ன அதிர்ஷ்டமான நாள் இது!” என்ற பேரொலியுடன் நிறைவடைந்திருந்த பிராமணர்களின் குரல் விண்ணுலகம் வரை கேட்டது.(5) அந்தக் குரு குல மன்னன் {யுதிஷ்டிரன்}, பலவகை இசையாலும், கணக்கிலடங்கா மதிப்புவாய்ந்த நறுமணப் பொருட்களாலும் தேவர்களை வழிபட்டு அந்த தெய்வீக சபைக்குள் நுழைந்தான்.(6) விளையாட்டு வீரர்களும், பரிசுக்காகப் போரிடும் வீரர்களும், பாடகர்களும், புகழ்மாலை சூட்டுபவர்களும் தங்கள் திறமைகளைக் காட்டி அந்த சிறப்பு வாய்ந்த தர்மனின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} நிறைவுசெய்தனர்.

இவ்வாறு கொண்டாட்டத்துடன் அரண்மனைக்குள் நுழைந்த யுதிஷ்டிரன், விண்ணுலகில் நுழையும் சக்ரனைப் {இந்திரனைப்} போலத் தனது தம்பிகளுடன் அந்த அரண்மனைக்குள் நுழைந்தான்.(8) அந்த அரண்மனையின் ஆசனங்களில் பாண்டவர்களுடன் சேர்ந்து, முனிவர்களும், பல நாட்டு மன்னர்களும் அமர்ந்தனர்.(9) அசிதர், தேவலர், சத்யர், சர்ப்பமாலி {ஸர்ப்பிர்மாலி}, மஹாசிரன் {மஹாசிரஸ்}, அர்வாவசு, சுமித்ரர், மைத்ரேயேர், சுனகர், பலி, பகர், தல்வியன் {தல்பாபுத்திரன்}, ஸ்தூலசிரன் {ஸ்தூலசிரஸ்}, கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, சுகர், வியாசரின் சீடர்களான சுமந்து, ஜைமினி, பைலர் ஆகியோரும் நாமும் {வைசம்பாயனனாகிய நானும்}; பிறகு தித்திரி, யக்ஞவல்கியர், தனது மகனுடன் {சௌதியுடன்} கூடிய லோமஹர்ஷணர் {ரோமஹர்ஷணர்}, அப்சுஹோமியர், தௌமியர், ஆணிமாண்டவ்யர், கௌசிகர், தாமோஷ்ணீஷர், த்ரைபலி, பரணாதர், பரயானுகர் {கடஜானுகர்}, மௌன்ஞாயனர், வாயுபக்ஷர், பாராசர்யர், சாரிகர், பலிவாகர், சிலீவாகர் {ஸினீவாகர்}, சத்யபாலர் {ஸ்ப்தபாலர்}, கிருதச்ரமர், ஜாதூகர்ணர், சிகாவத் {சிகாவான்}, ஆலம்பர், பாரிஜாதகர், மேன்மையான பர்வதர், பெரும் முனி மார்க்கண்டேயர், பவித்ரபாணி, சாவர்ணர், பாலுகி, காலவர், ஜங்காபந்து, ரைப்யர், கோபவேகர், பிருகு, ஹரிபப்ரு, கௌண்டின்யர், பப்ருமாலி, சனாதனர், கக்ஷீவத் {கக்ஷீவான்}, அஷிஜர், நசிகேதர், ஔஷிர், நாஸிகேதர், கௌதமர், பைங்கியர், வராஹர், சுனகர், பெரும் ஆன்மத் தகுதி கொண்ட சாண்டில்யர், குக்குரர், வேணுஜங்கர், கலாபர், கடர், மேலும், கல்விமான்களான பல முனிவர்களும், புலன்களையும் ஆன்மாவையும் முழு கட்டுக்குள் வைத்திருந்த முனிவர்களும், வேதம் மற்றும் வேதாங்கங்களை அறிந்த எண்ணிலடங்கா முனிவர்களும் சிறப்பு வாய்ந்த யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்து, அவனிடம் புனித கதைகள் பேசி அவனை மகிழ்ச்சியடையச் செய்தனர். எண்ணிலடங்கா க்ஷத்திரியர்களும் அங்கே வந்திருந்தனர்.(10-20)

சிறப்புவாய்ந்தவனும் அறம்சார்ந்தவனுமான முஞ்சகேது, விவர்த்தனன், சங்கிராமஜிதன், துர்முகன், பலம் வய்ந்த உக்ரசேனன், கக்ஷசேனன், ஒப்பற்ற க்ஷேமகன், காம்போஜ நாட்டு மன்னன் கமடன், காலகேயர்களென்ற அசுரர்களை நடுங்கச் செய்த வஜ்ரதாரி {இந்திரன்} போல, தனியொருவனாக யவனர்களை நடுங்கச் செய்தவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான கம்பனன்,(21-23) ஜடாஸுரன், மத்ரகர்களின் மன்னன், குந்தி {குந்திபோஜன்}, கிராதர்களின் மன்னன் புளிந்தன், அங்கம் {அங்கன்}, வங்கம் {வங்கன்}, பௌந்தரம் {புண்ட்ரகன்} ஆகிய நாட்டு மன்னர்களும், {பாண்டியன்}, ஒட்ர நாட்டு மன்னனும், அந்தகன் {ஆந்தரன்}, சுமித்ரன், எதிரிகளைக் கொல்லும் சைப்பியன், கிராதர்களின் மன்னன் சுமணன் {ஸுமனஸ்}, யவனர்களின் மன்னன் சாணூரன், தேவராதன், போஜன், பீமரதன், கலிங்க மன்னன் சுருதாயுதன், மகதமன்னன் ஜெயசேனன், சுகர்மன், சேகிதானன், எதிரிகளைக் கொல்லும் புரு, கேதுமான், வசுதானன், வைதேஹன் {விதேஹ நாட்டு மன்னன்}, கிருதாக்ஷணன், சுதர்மன், அனிருத்தன், பெரும் பலம் வாய்ந்த சுருதாயு, ஒப்பற்ற அனூபராஜன், அழகான க்ரமஜித், தனது மகனுடன் சேர்ந்த வந்த சிசுபாலன், காருஷ நாட்டு மன்னன், ஆகியோர் அங்கே வந்திருந்தனர். மேலும் விருஷ்ணி குலத்தின் ஒப்பற்ற இளைஞர்களான ஆஹுகன், விப்ருது, கதன், சாரணன், அக்ரூரன், கிருதவர்மன், சினியின் மகன் சத்யகன், பீஷ்மகன், அங்கிருதி {அக்ருதி}, சக்திவாய்ந்த த்யுமத்சேனன் சோமக குலத்தைச் சார்ந்த வில்வீரர்களில் முதன்மையான கைகேயர்கள், யக்ஞசேனன் ஆகிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் குந்தியின் மகன் யுதிஷ்திடிரனை மகிழ்ச்சிப்படுத்த விரும்பி அங்கே அந்த சபையில் காத்திருந்தனர்.(24-31)

பெரும்பலம் பொருந்தியவர்களும், நன்கு ஆயுதம் தரித்திருந்தவர்களும், செல்வந்தர்களுமான கேதுமான், வசுமனஸ் மற்றும் எண்ணற்ற பல க்ஷத்திரியர்களும் அந்த சபையில் காத்திருந்தனர். பெரும் பலம் பொருந்திய அந்த இளவரசர்கள் மான்தோலுடுத்தி அர்ஜுனனிடம் ஆயுத அறிவியல் பயின்று யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர். ஓ மன்னா, அர்ஜுனனுக்குக் கீழிருந்து ஆயுத அறிவியலைப் பயின்ற விருஷ்ணி குலத்தின் இளவரசர்களான,(32-34) பிரத்யும்னன் {ருக்மிணியின் மகன்}, சாம்பன், சாத்யகியின் மகன் யுயுதானன், சுதர்மன், அனிருத்தன், சைப்பியன் ஆகிய மனிதர்களில் முதன்மையானவர்களும் மற்றும் பல தேசத்து அரசர்களும் அங்கே அந்த சந்தர்ப்பத்தில் யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர்.(35) தனஞ்செயனின் நண்பனான தும்புருவும், தனது அமைச்சர்களுடன் கூடிய கந்தர்வன் சித்திரசேனனும், பல கந்தர்வர்களும், அப்சரஸ்களும், வாய்ப்பாட்டு மற்றும் ஒலி ஒழுங்கு இசைக்கருவிகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும், தேவர்களுக்காக இனிய குரலில் பாட்டுப்பாடும் கின்னரர்களும், அங்கே பாண்டுவின் மகன்களுக்காகவும் அந்தச் சபையில் வீற்றிருந்த முனிவர்களுக்காகவும் காத்திருந்தனர். அந்தச் சபையில் அமர்ந்திருந்த பெரும் நோன்புகள் நோற்று உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்த அந்த மனிதர்களில் காளைகள், பிரம்மனுக்காக காத்திருக்கும் தேவர்களைப் போல யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(36-40)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading