ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ விராட பர்வம்-ஸ்ரீ  கீசகவத பர்வம்–

திரௌபதியை அணுகிய கீசகன்! – விராட பர்வம் பகுதி 14-சைரந்திரியைக் கண்ட கீசகன் அவளைக் குறித்துத் தனது சகோதரியிடம் விசாரிப்பது; கீசகன் திரௌபதியிடம் தனது ஆசையைக் கூறுவது; திரௌபதி அவனுக்குப் புத்தி சொல்வது; காமத்தில் மூழ்கிய கீசகன் திரௌபதியிடம் மீண்டும் விண்ணப்பிப்பது; கீசகனை நிந்தித்த திரௌபதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மாறுவேடத்தில் வாழ்ந்து வந்த வலிமைமிக்க வீரர்களான பிருதையின் {Pritha-குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, மத்ஸ்யர்கள் நகரத்தில் பத்து மாதங்களை இப்படியே கழித்தனர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மற்றவர்களின் பணிவிடைகளை ஏற்கும் தகுதி படைத்த யக்ஞசேனன் மகள் {திரௌபதி}, ஓ! ஜனமேஜயா, சுதேஷ்ணைக்குப் பணிவிடை செய்து தனது நாட்களைப் பெரும் துயரத்துடன் கழித்தாள். சுதேஷ்ணையின் மாளிகையில் தங்கியிருந்த பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அந்த மங்கையையும் {சுதேஷ்ணையையும்}, அந்தப்புரத்தில் உள்ள பிற பெண்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தாள். அந்த வருடம் முடிவடையும் தருணத்தில், விராடனின் படைகளுக்குத் தளபதியான பேராற்றல் படைத்த கீசகன், துருபதன் மகளைக் {திரௌபதியைக்} காண நேர்ந்தது. தேவர்களின் மகளைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த அந்த மங்கை {திரௌபதி}, பூமியில் தேவதையைப் போல நடந்து வருவதைக் கண்ட கீசகன், காமனின் கணைகளால் துன்புற்று, அவளை {திரௌபதியை} அடைய விரும்பினான்.

ஆசை நெருப்பில் எரிக்கப்பட்ட விராடனின் தளபதி {கீசகன்} (தனது சகோதரியான) சுதேஷ்ணையிடம் வந்து புன்னகையுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னான். “மன்னர் விராடரின் வசிப்பிடத்தில் இந்த அழகிய மங்கையை இதற்கு முன் நான் கண்டதில்லையே. புதிய மது, தனது வாசத்தால் ஒருவனைப் பித்தடைய வைப்பது போல, இந்தக் காரிகை தனது அழகால் என்னை வெறிகொள்ளச் செய்கிறாள். தேவதையைப் போன்ற அழகைக் கொண்ட இந்த வசீகரமான அழகி யார்? யாருடையவள்? எங்கிருந்து வந்திருக்கிறாள்? என் இதயத்தை அரைத்துக் கொண்டிருக்கும் இவள், நிச்சயமாக என்னை அவளது அடிமையாக்கிவிட்டாள். என் நோய்க்கு (இவளைத்தவிர) வேறு எந்த மருந்தும் இல்லை என எனக்குத் தோன்றுகிறது. ஓ! {சகோதரி-சுதேஷ்ணை}, உனது இந்த அழகிய கையாள், தேவதையைப் போன்ற அழகைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. நிச்சயமாக, இவளைப் போன்ற ஒருத்தி உனக்குச் சேவை செய்வது பொருத்தமானதன்று. இவள் என் மீதும், என்னுடையவை மீதும் ஆட்சி செலுத்தட்டும். எண்ணற்ற யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களைத் தவிர, பலவிதமான தங்க ஆபரணங்கள், தாராளமான பலகாரங்கள் மற்றும் பானங்கள், சிறந்த தட்டுகள் போன்ற அனைத்துவகைப் பொருட்களும் அபரிமிதமாக இருக்கும் எனது பரந்த அழகிய அரண்மனையை இவள் விளங்கச் செய்யட்டும்” என்றான் {கீசகன்}.

சுதேஷ்ணையுடன் கலந்தாலோசித்த கீசகன் பிறகு, ஒரு பெண் சிங்கத்திடம் செல்லும் ஒரு குள்ளநரி போன்று இளவரசி திரௌபதியிடம் சென்று, அந்தக் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} வெற்றிக் குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னான். “ஓ! அழகானவளே, நீ யார்? யாருடையவள்? ஓ! அழகிய முகம் கொண்டவளே, எங்கிருந்து இந்த விராட நகரத்திற்கு வந்திருக்கிறாய்? ஓ! அழகிய பெண்ணே இவை யாவையும் எனக்குச் சொல். உனது அழகும் நயமும் முதல் தரத்தில் இருக்கின்றன. உனது இயல்புகளில் உள்ள அழகு இணையற்றதாக இருக்கிறது. உனது முகம் பிரகாசமிக்கச் சந்திரனைப் போல எப்போதும் அழகுடன் மிளிர்கிறது. ஓ! அழகிய புருவங்கள் கொண்டவளே, தாமரை இதழ்களைப் போல அகன்றிருக்கும் உனது கண்கள் அழகாக இருக்கின்றன. ஓ! அழகிய அங்கங்கள் கொண்டவளே, உனது பேச்சு குயிலின் இசையை ஒத்திருக்கிறது. ஓ! அழகிய இடைகள் கொண்டவளே, ஓ! குற்றமற்ற இயல்புகள் கொண்டவளே, உன்னைப் போன்ற அழகுடையவளை இதற்கு முன்னர் நான் இந்த உலகத்தில் கண்டதேயில்லை.

நீ தாமரைகளின் மத்தியில் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கும் லட்சுமியா? அல்லது, ஓ! கொடியிடையாளே, பூதி [1] {செழிப்பின் தேவதை} என்ற பெயர் கொண்டவளா? அல்லது, ஓ! அழகிய முகம் கொண்டவளே ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி, காந்தி ஆகியவர்களில் ஒருத்தியா? அல்லது, காம தேவனின் அணைப்புக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் பெரும் அழகு படைத்த ரதியா? ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, சந்திரனின் அழகிய ஒளியைப் போல அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறாயே. உன் முகம் கண்ட பிறகும், ஆசையின் தாக்கத்தில் சிக்காதிருப்பவன் இந்த முழு உலகிலும் யார் இருப்பான்? ஒப்பற்ற அழகும், மிகக் கவர்ச்சியான வகையில், தெய்வீக அருளுடன் இருக்கும் உனது முகம் முழு நிலவைப் போன்று இருக்கிறது. அதன் {உனது முகத்தின்} தெய்வீகப் பிரகாசம், அவனது {சந்திரனின்} பிரகாசமான முகத்தை ஒத்திருக்கிறது. அதன் {உனது முகத்தின்} புன்னகை, அவனது {சந்திரனின்} மென்மையான ஒளியை ஒத்திருக்கிறது. அதன் {உனது முகத்திலிருக்கும்} கண்ணிமைகள் அவனது {சந்திரனின்} வட்டில் உள்ள ஆரங்களைப் போல இருக்கின்றன.(பூதி, ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி, காந்தி என்பவை முறையே செழுமை, அடக்கம், அழகு, புகழ் மற்றும் அழகுடைமை உள்ளடங்கிய பெண்மையின் உருவங்களாகும்”)

மிகுந்த அழகோடு, நன்கு வளர்ச்சி பெற்று, ஒப்பற்ற அருள் கொண்டு, ஆழமாக, வட்டமாக, இடைவெளியற்று இருக்கும் உனது இரு முலைகளும், தங்கத்தாலான மாலைகளைத் தாங்க நிச்சயம் தகுதி பெற்றவையே. ஓ! அழகிய கண்புருவங்கள் கொண்டவளே, அழகிய தாமரை மொட்டுகள் போல இருக்கும் உனது முலைகள், காமனின் சவுக்கால் உந்தப்பட்ட என்னை முன்னோக்கி அழைக்கின்றன. ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, ஓ! கொடியிடை காரிகையே, ஓ! அழகிய பெண்ணே, உனது முலைகளின் பாரம் தாங்க முடியாததால் சற்று முன் நகர்ந்து வளைந்திருப்பதும், நான்கு மடிப்புகளின் குறிகளைக் கொண்டதும், அகன்ற ஆற்றங்கரையைப் போல இருப்பதும், ஒரு சாண் அளவு கொண்டதுமான உனது வசீகரமான இடுப்பைக் காண்பதால் ஏற்பட்ட ஆசையெனும் தீரா நோய், என்னை மிகவும் வாட்டுகிறது.

உன்னோடு சேர முடியும் என்று, எனது இதயம் கொள்ளும் நம்பிக்கையால் தூண்டப்பட்டு எரியும் காட்டைப் போல, கடுமையாகச் சுடர்விட்டெரியும் ஆசைத்தீ {காமத்தீ} என்னைத் தீவிரமாக எரிக்கிறது. ஓ! பெரும் அழகு கொண்டவளே, உன்னுடன் இணைவது என்பது மழை நிறைந்த மேகமாகும். உன்னை நீ எனக்கு அளிப்பது, அந்த மேகத்தில் இருந்து பொழியும் துளியாகும். மன்மதனால் மூட்டப்பட்டுச் சுடர்விட்டெரியும் நெருப்பை நீ தணிப்பாயாக. ஓ! நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, உன்னுடனான சேர்க்கை எனும் ஆசையால் கூராக்கப்பட்டு அடிக்கப்பட்ட மன்மதனின் கடும் கணை, வெறிகொள்ளச் செய்யும் தனது மூர்க்கமான போக்கில், இந்த எனது இதயத்தைத் துளைத்து, அதன் மையத்தில் ஊடுருவிவிட்டது.

ஓ! கருங்கண் பெண்ணே, அந்த மூர்க்கமான, கொடூரமான கணைகள் எனது சகிப்புத்தன்மைக்கும் அப்பால் என்னை வெறிகொள்ளச் செய்கின்றன. உன் அரவணைப்பால் என்னை ஆதரித்து, உன்னை எனக்கு ஒப்படைத்து, என்னை இந்த நிலைமையில் இருந்து விடுவிப்பதே உனக்குத் தகும். அழகான மாலைகள் மற்றும் ஆடைகளால் சிங்காரித்துக் கொண்டும், அனைத்து ஆபரணங்களாலும் உன்னை அலங்கரித்துக் கொண்டும், ஓ! இனிய காரிகையே, உன் மனம் நிறையும்வரை என்னுடன் நீ விளையாடுவாயாக. ஓ! மதம் கொண்ட யானையின் நடை கொண்டவளே, இன்பத்துக்குத் தகுந்தவள் நீயென்றாலும், அதை இப்போது இழந்திருக்கிறாய். துயரத்துடன் இங்கு நீ வசிப்பது உனக்குத் தகாது. நிகரற்ற செழுமை உனதாகட்டும். பல்வேறு வகையான வசீகரமான, சுவையான, அமுதம் போன்ற மதுவகைகளைக் குடித்து, மகிழ்ச்சி தரும் பல்வேறு பொருட்களுடன் இன்பத்துடன் விளையாடிக் கொண்டு, ஓ! அருளப்பட்ட மங்கையே, நீ மங்களகரமான செழிப்பை அடைவாயாக. இந்த உனது அழகும், இளமையின் உச்சமும், ஓ! இனிய பெண்ணே, இப்போதும் பயனில்லாமல் இருக்கின்றன. ஓ! கற்புள்ள அழகிய காரிகையே, இத்தகு அழகு கொண்ட நீ, பயன்படுத்தப்படாத, அணிந்து கொள்ளளப்படாத, வசீகரமான மாலை போலப் பிரகாசிக்காமல் இருக்கிறாயே. நான் என் பழைய மனைவியர் அனைவரையும் விட்டுவிடுவேன். ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, அவர்கள் உனது அடிமைகளாகட்டும். ஓ! அழகிய காரிகையே, ஓ! மிக அழகான முகத்தைக் கொண்டவளே, உனக்கு எப்போதும் கீழ்ப்படியும் அடிமையாக நானும் உன்னுடனேயே வசிப்பேன்” என்றான் {கீசகன்}.

அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி {கீசகனிடம்}, “சிகை அலங்காரம் செய்யும் அவலமான அலுவலில் {வேலையில்} ஈடுபடும் தாழ்ந்த குலத்தைச் சார்ந்த பணிப்பெண்ணான என்னை விரும்புவதால், ஓ! சூதனின் மகனே {கீசகனே}, அந்த மதிப்புக்குத் தகாத ஒருத்தியையே விரும்புகிறாய். மேலும் நான் பிறரின் மனைவியாவேன். எனவே, இந்த உனது நடத்தை சரியானதன்று. உனக்கு மங்களம் உண்டாகட்டும். மனிதர்கள் தாங்கள் மணந்த மனைவியரிடமே இன்பம் கொள்ள வேண்டும் என்ற அறநெறியின் கட்டளையை நினைவு கூர்வாயாக. எனவே, எந்த வகையிலும் முறைபிறழ்புணர்ச்சியை {விபச்சாரத்தை} நோக்கி உன் இதயம் செல்லாதிருக்கட்டும். முறையற்ற செயல்களில் இருந்து விலகியிருப்பதே நல்லவர்களின் நித்திய படிப்பினையாகும். அறியாமையில் மூழ்கும் பாவிகள், ஆசையின் ஆதிக்கத்தால், புகழ்கேட்டையும், பயங்கரமான பேரிடரையும் சந்திக்கின்றனர்” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி அந்தச் சைரந்திரியால் சொல்லப்பட்ட அந்தத் தீய கீசகன், கற்பின்மையால் {வேசித்தனத்தால்} ஏற்படும் எண்ணற்ற தீமைகளையும், சில நேரங்களில் உயிரின் அழிவுக்கே வழிவகுக்கும் என அனைவராலும் கண்டிக்கப்படும் தீமைகளையும் அறிந்திருந்தாலும், தனது புலன்கள் மீது இருந்த கட்டுப்பாட்டை இழந்து, காமத்தில் மூழ்கி, திரௌபதியிடம், “ஓ! அழகிய பெண்ணே, ஓ! வசீகரமான இயல்புகள் கொண்டவளே, உன் நிமித்தமாக மன்மதனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் என்னை, ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, இப்படி நீ அவமதிப்பது உனக்குத் தகாது. ஓ! அச்சமுள்ளவளே, இப்போது உனது ஆதிக்கத்தின் கீழ் இருந்து, உன்னிடம் இவ்வளவு அழகாகப் பேசும் என்னை அவமதித்தால், ஓ! கருங்கண் காரிகையே, அதற்காக நீ பின்னர் வருந்த வேண்டியிருக்கும்.

ஓ! வசீகரமான கண் புருவங்கள் கொண்டவளே, ஓ! கொடியிடை மங்கையே, இந்த முழு நாட்டின் உண்மைத் தலைவன் நானே. என்னை நம்பியே இந்த நாட்டில் உள்ள மக்கள் வாழ்கின்றனர். சக்தியிலும், பராக்கிரமத்திலும், நான் இந்தப் பூமியில் ஒப்பற்றவனாக இருக்கிறேன். அழகு, இளமை, செழுமை, இன்பம் நுகர் பொருட்களின் உடைமையைக் கொண்டிருக்கும் எனக்கு நிகரான வேறு மனிதன் இந்தப் பூமியில் இல்லை. ஓ! மங்களகரமான பெண்ணே, நிகரில்லாத வசதியையும், அனைத்து ஆடம்பரங்களையும், ஆசைக்குகந்த அனைத்துப் பொருட்களையும் உனது சக்திக்குள் கொண்டு அனுபவிக்காமல், அடிமைத்தனத்தைத் நீ ஏன் தேர்ந்தெடுக்கிறாய்? ஓ! அழகிய முகம் கொண்டவளே, , ஓ! அழகானவளே, என்னை ஏற்று, நான் உனக்கு அளிக்கும் நாட்டுக்குத் தலைவியாகி, ஆசைக்குகந்த அனைத்து சிறந்த பொருட்களையும் பெற்று மகிழ்வாயாக” என்றான் {கீசகன்}.

சபிக்கப்பட்ட வார்த்தைகளாலான கீசகனின் வார்த்தைகளைக் கேட்ட கற்புள்ள துருபதன் மகள் {திரௌபதி}, அவனை {கீசகனை} நிந்தித்துப் பதிலளிக்கும் வகையில், “ஓ! சூதனின் மகனே {கீசகா}, மூடனாக இப்படி நடக்காதே. உனது உயிரை விடாதே. நான் எனது ஐந்து கணவர்களால் காக்கப்பட்டு வருகிறேன் என்பதை அறிந்து கொள். நீ என்னை அடைய முடியாது. நான் கந்தர்வர்களைக் கணவர்களாகக் கொண்டிருக்கிறேன். அவர்கள் கோபம் கொண்டால், உன்னைக் கொன்றுவிடுவார்கள். எனவே, உனக்கு நீயே அழிவைக் கொண்டு வந்துவிடாதே. மனிதர்களால் நடக்க முடியாத பாதையில் நடக்க நீ முனைகிறாய். ஓ! தீயவனே {கீசகா}, கடலின் ஒரு கரையில் நின்றுகொண்டு, அடுத்தக் கரைக்குச் செல்ல நினைக்கும் ஒரு முட்டாள் சிறுவனைப் போன்றவன் நீ.

நீ பூமிக்கடியில் பாதாளத்தில் நுழைந்தாலும், ஆகாயத்தில் பறந்தாலும், கடலின் அடுத்தக் கரைக்கு விரைந்தாலும், அனைத்து எதிரிகளையும் வதைக்கவல்ல, விண்ணதிகாரிகளான தேவர்களுடைய வாரிசுகளின் கையில் இருந்து உன்னால் தப்ப முடியாது. ஓ! கீசகா, தனது இருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கப் போகும் இரவை எதிர் நோக்கும் நோயாளியைப் போல, நீ ஏன் இன்று விடாப்பிடியாக என்னிடம் கோரிக் கொண்டிருக்கிறாய்? தாயின் மடியில் கிடக்கும் குழந்தை நிலவைப் பிடிக்க விரும்பியதைப் போல நீ ஏன் என்னை விரும்புகிறாய்? அவர்களது அன்பிற்குரிய மனைவியான என்னிடம் இப்படிக் கேட்கும் உனக்கு, பூமியிலோ வானத்திலோ புகலிடம் இல்லை. ஓ! கீசகா, உனது உயிரைக் காத்துக் கொண்டு உனக்கான நன்மைக்கு வழிவகுக்கும் புத்தி உன்னிடம் இல்லையா?” என்று கேட்டாள் {திரௌபதி}.

கீசகனிடம் சென்றாள் திரௌபதி! – விராட பர்வம் பகுதி 15-கீசகன் சுதேஷ்ணையிடம் பேசுவது; கீசகனிடம் இரக்கம் கொண்ட சுதேஷ்ணை அவனுக்கு ஒரு திட்டத்தைச் சொல்வது; அத்திட்டத்தின் படியே திரௌபதியை கீசகனிடம் சுதேஷ்ணை அனுப்பியது …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி அந்த இளவரசியால் {திரௌபதியால்} நிராகரிக்கப்பட்ட கீசகன், வெறிகொண்ட காமத்தால் தாக்குண்டு, உடைமைத்தன்மை குறித்த உணர்வுகளை மறந்து சுதேஷ்ணையிடம், “கேகேயன் மகளே {சுதேஷ்ணையே}, உனது சைரந்திரி {மாலினி என்ற திரௌபதி} எனது கரங்களுக்குள் வருவது போல நீ செயல்படு. ஓ! சுதேஷ்ணை, யானை நடை கொண்ட அந்தக் காரிகை என்னை ஏற்கும் வழிகளைக் கடைப்பிடி; {என் உயிரை} உறிஞ்சிக் கொண்டிருக்கும் ஆசையால் நான் செத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் {கீசகன்}”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனின் {கீசகனின்} பயங்கரப் புலம்பல்களைக் கேட்ட விராடனின் புத்திசாலி மனைவியான அந்த மென்மையான பெண் {சுதேஷ்ணை} அவனிடம் இரக்கம் கொண்டாள். தனக்குள்ளேயே ஆலோசித்து, கீசகனின் நோக்கத்தையும், கவலையோடு இருக்கும் கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} நினைத்துப் பார்த்த சுதேஷ்ணை அந்தச் சூதனின் மகனிடம் {கீசகனிடம்}, “ஏதாவதொரு விழாவின் போது, நீ எனக்காகப் பலகாரங்கள் மற்றும் மது வகைகளைக் கொள்வன செய். அதன் பின்னர் நான் அந்த மதுவைக் கொண்டு வரும் பாசாங்கில், எனது சைரந்திரியை {மாலினி என்ற திரௌபதியை} உன்னிடம் அனுப்புகிறேன். அவள் {சைரந்திரி) அங்கே தனிமையில் வரும்போது, குறுக்கீடு ஏதும் இல்லாமல், நீ விரும்பியவாறு அவளிடம் {சைரந்திரியிடம்} நகைச்சுவை செய். இப்படி அமைதிப்படுத்துவதன்மூலம், அவள் தனது மனதில் உன்னை விரும்பலாம்” என்றாள் {சுதேஷ்ணை}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்டதும் அவன் {கீசகன்}, தனது சகோதரியின் {சுதேஷ்ணையின்} அறையில் இருந்து வெளியேறினான். விரைவில் ஒரு மன்னனுக்குத் தகுந்த வகையில் நன்கு வடிகட்டப்பட்ட மதுவைக் கொள்முதல் செய்தான். பிறகு திறன் கொண்ட சமையற்கலைஞர்களை நியமித்து, தேர்வு செய்யப்பட்ட பல்வேறு வகைகளிலான பலகாரங்களையும், சுவையான பானங்களையும் மற்றும் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்ட பல வகைகளிலான இறைச்சிகளையும் தயார் செய்தான். இவை அனைத்தும் முடிந்த பிறகு, மென்மையான பெண்ணான சுதேஷ்ணை, ஏற்கனவே கீசகனுடன் ஆலோசித்தபடி, தனது சைரந்திரியை கீசகனின் வசிப்பிடத்திற்கு அனுப்ப விரும்பி, அவளிடம் {மாலினி என்ற திரௌபதியிடம்}, “ஓ! சைரந்திரி, நான் தாகத்தால் துன்புறுவதால், எழுந்து, மதுவைக் கொண்டு வர கீசகன் வசிப்பிடம் செல்” என்றாள் {சுதேஷ்ணை}.

அதற்குச் சைரந்திரி {திரௌபதி சுதேஷ்ணையிடம்}, “ஓ! இளவரசி {சுதேஷ்ணையே}, என்னால் கீசகனின் அறைக்குச் செல்ல இயலாது. ஓ! ராணி {சுதேஷ்ணையே}, அவன் {கீசகன்} எப்படிப்பட்ட வெட்கங்கெட்டவன் என்பதை நீயே அறிவாய். ஓ! களங்கமற்ற அங்கங்கள் கொண்டவளே, ஓ! அழகான பெண்ணே, உனது அரண்மனையில் எனது கணவர்களுக்கு விசுவாசமற்றவளாகி காம வாழ்வை என்னால் வாழ முடியாது. ஓ! மென்மையான பெண்ணே, ஓ! அழகானவளே, உனது வீட்டுக்குள் நுழையும் முன்னர் நான் வைத்த நிபந்தனைகளை நினைத்துப் பார். ஓ! வசீகரமான சுருள் முனைகளுடைய கேசம் கொண்டவளே, காம தேவனால் தாக்கப்பட்ட மூடனான கீசகன் என்னைப் பார்த்தால், என்னை அவமதிப்பான்.

எனவே, நான் அவன் {கீசகன்} இருக்கும் இடத்திற்குச் செல்லமாட்டேன். ஓ! இளவரசி {சுதேஷ்ணையே}, உனக்குத்தான் நிறையப் பணிப்பெண்கள் இருக்கிறார்களே. உனக்கு மங்களம் உண்டாகட்டும். என்னை நிச்சயம் கீசகன் அவமதிப்பானாதலால், அவர்களில் ஒருத்தியை அனுப்பு” என்றாள் {திரௌபதி}. அதற்கு சுதேஷ்ணை, “எனது வசிப்பிடத்தில் இருந்து என்னால் அனுப்பப்படுவதால், அவன் உனக்குத் தீங்கிழைக்க மாட்டான்” என்றாள். இப்படிச் சொன்ன அவள் {சுதேஷ்ணை}, அவளது கையில் ஒரு மூடியுடன் கூடிய ஒரு தங்கப் பாத்திரத்தைக் கொடுத்தாள். பயம் நிறைந்து, அழுது கொண்டு, பாதுகாப்புக்காகத் தேவர்களிடம் மனதுக்குள்ளேயே வேண்டுதல் செய்த திரௌபதி, மதுவைப் பெறுவதற்காகக் கீசகன் வசிப்பிடத்திற்குக் கிளம்பினாள். அவள் {மாலினி என்ற திரௌபதி}, “எனது கணவர்களைத் தவிர வேறொரு மனிதரை நான் அறியாததால், அந்த அறத்தின் உண்மைத்தன்மையால் {சத்தியத்தால்}, நான் கீசகனின் முன்னிலைக்குச் சென்றாலும், அவனால் {கீசகனால்} என்னை வீழ்த்த முடியாது போகட்டும்” என்று சொன்னாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த ஆதரவற்ற காரிகை {திரௌபதி} பிறகு, ஒரு நொடி சூரியனைப் புகழ்ந்தாள். அவள் வேண்டிக்கொண்ட அனைத்தையும் கருத்தில் கொண்ட சூரியன், காட்சிக்குப் புலப்படாமல் அவளை {திரௌபதியை} பாதுகாக்க ஒரு ராட்சசனுக்குக் கட்டளையிட்டான். அந்த நேரத்தில் இருந்து அந்த ராட்சசன் அந்தப் பழியற்ற மங்கையை எந்தச் சூழ்நிலையிலும் காக்க ஆரம்பித்தான். பயந்த புறாவைப் போலத் தன் முன்னிலையில் இருந்து கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} கண்ட அந்தச் சூதன் {கீசகன்}, தனது ஆசனத்தில் இருந்து எழுந்து, அடுத்தக் கரைக்குச் செல்ல விரும்பும் ஒருவன், ஒரு படகை அடைந்தால் எவ்வளவு மகிழ்வானோ அவ்வளவு மகிழ்ந்தான்.”

உதைக்கப்பட்டாள் திரௌபதி! – விராட பர்வம் பகுதி 16-கீசகன் திரௌபதியிடம் காதல் மொழி பேசுவது; திரௌபதி கீசகனை நிந்திப்பது; ஓட எத்தனித்த திரௌபதியை கீசகன் பற்றுவது; கீசகனை திரௌபதி முட்டித் தள்ளி விட்டுச் சபை நோக்கி ஓடுவது; திரௌபதியைத் தொடர்ந்து வந்த கீசகன் அவளது தலைமுடியைப் பற்றிக் கீழே இழுத்துப் போட்டு எட்டி உதைப்பது; சூரியனால் பணிக்கப்பட்ட ராட்சசன் கீசகனைக் கீழே தள்ளுவது; கீசகன் மயங்கி விழுவது; இதைக் கண்ட பீமன் கோபம் கொள்வது; யுதிஷ்டிரன் பீமனை வெளியே அனுப்புவது; விராடனிடமும், யுதிஷ்டிரனிடமும் திரௌபதி நீதி கேட்பது; யுதிஷ்டிரன் திரௌபதியை சுதேஷ்ணையிடம் அனுப்புவது; சுதேஷ்ணை திரௌபதியைத் தேற்றுவது …

கீசகன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய சுருள் முனை கொண்ட தலைமுடி கொண்டவளே, உனக்கு நல்வரவு. கழிந்த இரவு எனக்கு ஒரு மங்கள நாளை கொண்டு வந்திருக்கிறது. ஏனெனில், நான் இன்று உன்னை எனது வீட்டின் தலைவியாகப் பெற்றிருக்கிறேன். எனக்கு ஏற்புடையதைச் செய்வாயாக. பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட தங்க ஆரங்கள், சங்குகள், தங்கத்தாலான காது வளையங்கள், அழகான மாணிக்கங்கள் மற்றும் கற்கள், பட்டாடைகள் மற்றும் மான் தோல்கள் உனக்குத் தரப்படட்டும். நான் உனக்காகச் சிறந்த மெத்தையையும் தயாரித்து வைத்திருக்கிறேன். வா, அதில் அமர்ந்து, மலரில் இருந்து பெறப்பட்ட தேனில் தயாரிக்கப்பட்ட மதுவை என்னுடன் சேர்ந்து பருகு” என்றான் {கீசகன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி {கீசகனிடம்}, “மதுவைக் கொண்டு செல்வதற்காக இளவரசி {சுதேஷ்ணை} என்னை உன்னிடம் அனுப்பினாள். விரைந்து மதுவைக் கொண்டு வா, அவள் {சுதேஷ்ணை} மிகவும் தாகமாக இருப்பதாக என்னிடம் சொன்னாள்” என்றாள். அதற்குக் கீசகன் {திரௌபதியிடம்}, “ஓ! மென்மையான பெண்ணே, இளவரசி {சுதேஷ்ணை} வேண்டியதை மற்றவர்கள் கொண்டு செல்வார்கள்” என்று சொன்னான். இப்படிச் சொன்ன அந்தச் சூதனின் மகன் {கீசகன்}, திரௌபதியின் வலக்கரத்தைப் பற்றினான். திரௌபதி {கீசகனிடம்}, “புலன்களில் மயக்கத்தால் நான் ஒரு போதும், என் கணவர்களுக்கு மனதளவில் கூடத் துரோகமிழைத்ததில்லை. ஓ! பாதகனே {கீசகா}, அந்த உண்மையால் {சத்தியத்தால்}, நீ இழுக்கப்பட்டு, சக்தியற்றுத் தரையில் கிடப்பதை நான் காண்பேன்” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அகன்ற கண்கள் கொண்ட அந்தப் பெண் {திரௌபதி} தன்னை நிந்திப்பதைக் கண்ட கீசகன், அவள் {திரௌபதி} ஓடிப்போக எத்தனிக்கையில் தீடீரென அவளது மேலாடையின் நுனியைப் பற்றி அவளைப் {திரௌபதியைப்} பிடித்தான். பலவந்தமாகக் கீசகனால் பிடிக்கப்பட்ட அந்த அழகிய இளவரசி {திரௌபதி}, அதைத் தாங்க மாட்டாமல், கோபத்தால் தனது உடல் நடுங்க, விரைவாக மூச்சுவிட்டு, அவனைத் தரையில் முட்டித் தள்ளினாள். அப்படித் தரையில் முட்டித் தள்ளப்பட்ட அந்த இழிந்த பாவி வேர் அறுக்கப்பட்ட மரம் விழுவது போல விழுந்தான். கீசகன் தன்னைப் பற்றிய போது, அவனைத் தரையில் தள்ளிய அவள் {திரௌபதி}, பாதுகாப்பு பெறுவதற்காக, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த சபைக்கு நடுங்கிக் கொண்டே விரைந்தாள். தனது வேகமனைத்தையும் திரட்டி ஓடிக்கொண்டிருந்த அவளைத் (தொடர்ந்து வந்த) கீசகன், அவளது தலைமுடியைப் பற்றி, தரையில் தள்ளி, மன்னன் பார்த்துக் கொண்டிருந்த போதே அவளை {திரௌபதியை} எட்டி உதைத்தான்.

அதன் பிறகு, திரௌபதியைப் பாதுகாப்பதற்காகச் சூரியனால் நியமிக்கப்பட்டிருந்த ராட்சசன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, காற்று போன்ற வலிமையுடன் அவனைத் {கீசகனைத்} தள்ளினான். ராட்சசனின் சக்திக்கு ஆட்பட்ட கீசகன், திகைத்துப் போய், வேரறுந்த மரம் போல உணர்வற்றுத் தரையில் விழுந்தான். கீசகன் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} காட்டிய சீற்றத்தைக் அங்கே அமர்ந்திருந்த யுதிஷ்டிரனும், பீமசேனனும் வெஞ்சினக் கண்களோடு கண்டனர். துன்மார்க்கனான கீசகனின் அழிவுக்கு வழிகோல விரும்பிய ஒப்பற்ற பீமன், கோபத்தில் தனது பற்களைக் கடித்தான். அவனது நெற்றி வியர்வையால் மூடியது, அதன் மேல் பயங்கரச் சுருக்கங்கள் தோன்றின. அவனது {பீமனின்} கண்களில் இருந்து புகை வெளிப்பட்டது; அவனது கண்ணிமைகள் அப்படியே நிலைத்து நின்றன. எதிரி வீரர்களைக் கொல்லும் அந்த வீரன் {பீமன்}, தன்  நெற்றியைத் தனது கைகளால் அழுத்தினான். ஆத்திரத்தால் உந்தப்பட்ட அவன் {பீமன்}, {கீசகனைக் கொல்ல} வேகமாகக் கிளம்ப எத்தனித்தான். மன்னன் யுதிஷ்டிரன், தான் குறிப்பறிந்ததில் பயம் கொண்டு, அவனது {பீமனின்} கட்டைவிரலைப் பிடித்து அழுத்தி, பொறுத்துக் கொள்ளுமாறு பீமனைப் பணித்தான். மதங்கொண்ட யானை ஒரு பெரிய மரத்தைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்த பீமன், தனது அண்ணனால் {யுதிஷ்டிரனால்} இப்படித் தடுக்கப்பட்டான். பிறகு அவன்  {யுதிஷ்டிரன்}, “ஓ சமையற்காரா, எரிபொருளுக்காக நீ சென்று மரங்களைத் தேடு. உனக்கு விறகுகள் தேவை என்றால், வெளியே சென்று மரங்களை வெட்டுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

அழுது கொண்டிருந்த அழகிய இடை கொண்ட திரௌபதி, சபையின் நுழைவாயிலை அணுகி, வாக்குறுதியால் கடமைக்குக் கட்டப்பட்டு, மாறுவேடத்தைக் கலைக்க விரும்பாது, துக்கத்துடன் இருக்கும் தன் தலைவர்களை, நெருப்பு போல எரியும் தனது கண்களால் கண்டு, மத்ஸ்யர்களின் மன்னனிடம் {விராடனிடம்} இந்த வார்த்தைகளைப் பேசினாள், “ஐயோ, யாருடைய எதிரிகள், தங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நான்கு நாடுகள் குறுக்கிட்டாலும் அமைதியாகத் தூங்க முடியாதோ, அத்தகையவர்களின் பெருமைமிக்க அன்புக்குரிய மனைவியை இன்று இந்தச் சூதனின் மகன் {கீசகன்} எட்டி உதைத்துவிட்டான். ஐயோ, அந்தணர்களுக்குத் தங்களை அர்ப்பணித்து, யார் எப்போது கேட்டாலும் பரிசு கொடுத்து, யாரிடமும் எந்தப் பொருளையும் பரிசாகக் கேட்காதவர்களின் பெருமைமிக்க அன்புக்குரிய மனைவியை இன்று இந்தச் சூதனின் மகன் {கீசகன்} எட்டி உதைத்துவிட்டான். ஐயோ, வில்லின் நாணொலிகளையும், பேரிகைகளின் ஒலிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து கேட்பவர்களின் பெருமைமிக்க அன்புக்குரிய மனைவியை இன்று இந்தச் சூதனின் மகன் {கீசகன்} எட்டி உதைத்துவிட்டான்.

ஐயோ, பெரும் சக்தியைக் கொண்டவர்களும், கொடையளிப்பதில் தாராளவாதிகளும், கண்ணியத்தில் பெருமை கொள்பவர்களும் ஆன அவர்களின் {என் கணவர்களின்} பெருமைமிக்க அன்புக்குரிய மனைவியை இன்று இந்தச் சூதனின் மகன் {கீசகன்} எட்டி உதைத்துவிட்டான். ஐயோ, கடமைகளில் கட்டப்பட்டுப் பணிபுரியவில்லையென்றால், யாரால் இந்த முழு உலகத்தையும் அழிக்க முடியுமோ, அத்தகையவர்களின் பெருமைமிக்க அன்புக்குரிய மனைவியை இன்று இந்தச் சூதனின் மகன் {கீசகன்} எட்டி உதைத்துவிட்டான்.

அந்தோ, மாறுவேடத்தில் வாழ்ந்துவந்தாலும், பாதுகாப்புக் கோரப்படும்போதெல்லாம், அதை வழங்கும் அந்த வலிமைமிக்க வீரர்கள் இன்று எங்கே போனார்கள்? பலமும் அளவிடமுடியாத சக்தியும் கொண்ட அந்த வீரர்கள், அன்புக்குரிய தங்கள் கற்புள்ள மனைவி ஒரு சூத மகனால் {கீசகனால்} அவமதிக்கப்படும்போதும், அண்ணகர்களைப் {அரவாணிகளைப்} போல ஏன் இன்று அமைதியாக இருக்கிறார்கள்? ஓ, தங்கள் மனைவி ஓர் இழிந்த பாவியால் அவமதிக்கப்படும்போது, அதை அமைதியாகத் தாங்கிக் கொள்ளும் அவர்களது பராக்கிரமம், சக்தி, சினம் ஆகிய அனைத்தும் எங்கே போயின?

ஓர் இழிந்த பாவி {கீசகன்}, அப்பாவியான எனக்கு அநீதியிழைக்கும்போது, அறம் குறைந்த விராடன், நிதானத்துக்கு இடம் கொடுக்கையில் (பலம் குறைந்த பெண்ணான) நான் என்ன செய்ய முடியும்? ஓ! மன்னா {விராடரே}, கீசகனிடம் நீர் மன்னர் போல நடந்து கொள்ளவில்லை. திருடனைப் போன்ற நடத்தை கொண்ட உம்மால் சபையில் ஒளிரமுடியவில்லை. ஓ! மத்ஸ்யரே {விராடரே}, உமது முன்னிலையிலேயே நான் இப்படி அவமதிக்கப்படுவது, பெரிதும் முறையற்றதாகும். ஓ! இங்கே இருக்கும் சபை உறுப்பினர்கள் அனைவரும் கீசகனின் இந்தப் பலவந்தத்தைக் கண்டார்கள். கீசகன் கடமையையும், அறநெறியையும் அறியாதிருக்கிறான். மத்ஸ்யனும் {விராடனும்} அவனுக்குச் சமமாக இருக்கிறான். இத்தகு மன்னனுக்குச் சேவை செய்யும் சபை உறுப்பினர்களும் அறம் குறைந்தவர்களே” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதையும், இதே போன்ற சொற்களையும் பேசிய அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, கண்ணீர் நிறைந்த கண்களுடன், மத்ஸ்யர்களின் மன்னனை {விராடனைக்} கடிந்து கொண்டாள். அவள் {திரௌபதி} சொன்னதைக் கேட்ட விராடன், “எங்கள் பார்வைக்கு அப்பாற்பட்ட உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியாது. உண்மையான காரணத்தை அறியாது, நான் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்?” என்றான். பிறகு அனைத்தையும் அறிந்த சபை உறுப்பினர்கள், “நன்றாகச் சொன்னாய்!”, “நன்றாகச் சொன்னாய்” என்று கிருஷ்ணையைப் {திரௌபதியைப்} பாராட்டி, கீசகனை நிந்தித்தனர். அந்தச் சபை உறுப்பினர்கள், “அகன்ற கண்களும், அனைத்து உறுப்புகளிலும் அழகையும் கொண்ட இந்தப் பெண்ணை மனைவியாகக் கொண்டவன், அதிக மதிப்புக் கொண்ட ஒருத்தியையேப் பெற்றிருக்கிறான், எனவே அவன் வருத்தப்பட எந்தச் சந்தர்ப்பமும் இருக்காது. மேம்பட்ட அழகும், களங்கமற்ற முறையான உறுப்புகளும் கொண்ட இந்தக் காரிகை மனிதர்கள் மத்தியில் அரிதானவளாவாள். உண்மையில் இவள் எங்களுக்குத் தேவியைப் {பெண் தெய்வத்தைப்} போலத் தெரிகிறாள்” என்றனர் {அந்த சபை உறுப்பினர்கள்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(இத்தகு சந்தர்ப்பத்தில்) அந்தச் சபை உறுப்பினர்கள் கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்டு, பாராட்டிக் கொண்டிருந்தபோது, கவலையில் யுதிஷ்டிரனின் நெற்றி வேர்வையால் மூடப்பட்டது. தனது அன்புக்குரிய மனைவியான அந்த இளவரசியிடம் {திரௌபதியிடம்} அந்தக் குரு குலக் காளை {யுதிஷ்டிரன்}, “ஓ! சைரந்திரி, நீ இங்கே இருக்காதே; சுதேஷ்ணையின் அறைக்குச் செல். வீரர்களின் மனைவிகள், தங்கள் கணவர்களுக்காக, துக்கத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும், தங்கள் தலைவர்களுக்கு ஊழியஞ்செய்யக் கடுமையாக உழைத்து, இறுதியாகத் தங்கள் கணவர்கள் செல்லும் பகுதிக்கே அவர்களும் போக வேண்டும். சூரியனைப் போன்ற பிரகாசமிக்க உனது கந்தர்வக் கணவர்கள், இவ்வளவுக்குப் பிறகும், உனது உதவிக்கு விரைந்து வராததால், இத்தருணத்தில் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்த கருதவில்லை என நான் நினைக்கிறேன். ஓ! சைரந்திரி, மத்ஸ்யரின் சபையில் நடைபெறும் பகடை விளையாட்டுக்கு இடைஞ்சல் செய்தது மட்டுமல்லாமல், பொருட்களின் காலப்பொருத்தத்தையும் நீ அறியாதிருக்கிறாய். அதன் காரணமாகவே, நீ நடிகையைப் போல அழுகிறாய். ஓ! சைரந்திரி, செல். கந்தர்வர்கள் உனக்கு ஏற்புடையதைச் செய்வார்கள். உனது துன்பத்தை நிச்சயம் கண்டு, உனக்கு அநீதியிழைத்தவனின் உயிரை எடுப்பார்கள்” என்றான் {யுதிஷ்டிரன்}. இந்தச் சொற்களைக் கேட்ட சைரந்திரி {திரௌபதி}, “நான் யாருக்கு திருமணத்தால் இணைந்த மனைவியாக இருக்கிறேனோ, அவர்கள் மிகக் கருணை கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். அவர்களில் மூத்தவர் பகடைக்கு அடிமையானதினாலேயே, அவர்கள் அனைவரும் ஒடுக்குதலுக்கு ஆளாகின்றனர்” என்றாள் {சைரந்திரியான திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன அந்த அழகிய இடுப்புக் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, கலைந்த கேசத்துடன், கண்கள் சிவக்க சுதேஷ்ணையின் அறையை நோக்கி ஓடினாள். நீண்ட நேரம் அழுததன் விளைவாக, அவளது {திரௌபதியின்} முகம் மேகங்களில் இருந்து ஆகாயத்தில் வெளிப்பட்ட சந்திர வட்டிலைப் போல இருந்தது. அவளது நிலையைக் கண்ட சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய பெண்ணே {மாலினி}, உன்னை யார் அவமதித்தது? ஓ! அழகிய காரிகையே, நீ ஏன் அழுகிறாய்? மென்மையானவளே, யார் உனக்குத் தீங்கிழைத்தது? யாரால் உனக்கு இந்தத் துயரம் ஏற்பட்டது?” எனக் கேட்டாள்.

இப்படிக் கேட்கப்பட்ட திரௌபதி {சுதேஷ்ணையிடம்}, “நான் உனக்காக மதுவைக் கொண்டு வரச் சென்றேன். தனிமையான காட்டுக்கு மத்தியில் இருப்பதைப் போல, சபையில், மன்னரின் {விராடரின்} முன்னிலையிலேயே கீசகன், என்னை அடித்தான்” என்றாள். இதைக் கேட்ட சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய சுருள் முனை கொண்ட தலைமுடி கொண்டவளே, காமத்தால் வெறிக் கொண்ட கீசகன், அவனால் அடைய முடியாத உன்னை அவமதித்ததால், நீ விரும்பினால் அவனைக் கொல்லச் செய்கிறேன்” என்றாள். அதற்குத் திரௌபதி {சுதேஷ்ணையிடம்}, “அவன் {கீசகன்} யாருக்கு அநீதியிழைத்தானோ, அந்தப் பிறர் {கந்தர்வர்கள்} அவனைக் {கீசகனைக்} கொல்வார்கள். இன்றே அவன் {கீசகன்} யமனின் வசிப்பிடம் செல்வான் என்பது உறுதி என நான் நினைக்கிறேன்” என்றாள் {திரௌபதி}.

பீமசேனரே, மரித்தவர் போல் ஏன் கிடக்கிறீர்? – விராட பர்வம் பகுதி 17-சுதேஷ்ணையிடம் இருந்து விடைபெற்ற திரௌபதி, தனது இருப்பிடம் செல்வது; துன்பத்தில் இருந்த அவள் இரவில் எழுந்து, பீமன் இருந்த மடைப்பள்ளிக்குச் சென்றது; அங்கே தூங்கிக் கொண்டிருந்த பீமனை எழுப்பியது; திரௌபதி தன்னை எழுப்பிய காரணத்தைப் பீமன் கேட்பது …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சூதனின் மகனால் {கீசகனால்} இப்படி அவமதிக்கப்பட்ட சிறப்புமிக்க இளவரசியான அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, விராடனுடைய தளபதியின் {கீசகனின்} அழிவை ஆவலோடு விரும்பி, தனது இருப்பிடத்திற்குச் சென்றாள். பிறகு, கரிய நிறமும், கொடியிடையும் கொண்ட அந்தத் துருபதன் மகள் {திரௌபதி}, தன்னை {முறைப்படி} சுத்தம் செய்து கொண்டாள். தனது உடலையும், ஆடைகளையும் நீரால் கழுவிய கிருஷ்ணை {திரௌபதி}, தனது வருத்தத்தை அகற்றும் வழிவகைகளை அழுது கொண்டே சிந்திக்கத் தொடங்கினாள். அவள் தனக்குள்ளேயே, “நான் என்ன செய்ய வேண்டும்? நான் எங்கே செல்வது? எனது நோக்கத்தை எப்படி நினைவேற்றுவது?” என்று நினைத்தாள். அப்படி அவள் {திரௌபதி} சிந்தித்துக் கொண்டிருந்த போதே, பீமனை நினைவு கூர்ந்த அவள், “எனது இதயத்தில் இருக்கும் நோக்கத்தை இன்று நிறைவேற்றக்கூடியவர், பீமரைத் தவிர வேறு எவரும் இல்லை” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

பெரும் துயரத்தால் பாதிக்கப்பட்டவளும், வலிமைமிக்கப் பாதுகாவலர்களை {பாண்டவர்களைக்} கொண்டவளும், அகன்ற கண்களையுடையவளுமான புத்திசாலி கிருஷ்ணை {திரௌபதி}, இரவில் எழுந்து, தனது படுக்கையைவிட்டு அகன்று, தனது தலைவனைக் காண விரும்பி, பீமசேனன் இருக்கும் இடம் நோக்கி வேகமாகச் சென்றாள். அறிவுக்கூர்மை கொண்ட அந்தத் துருபதனின் மகள் {திரௌபதி}, “இன்று இதை (குற்றச்செயலை) இழைத்த பிறகும், எனது எதிரியான விராடப்படையின் இழிந்த தளபதி {கீசகன்} வாழ்கிறானே! எப்படி உம்மால் தூங்க முடிகிறது?” என்று சொல்லிக்கொண்டே தனது கணவன் இருக்கும் இடத்திற்குள் நுழைந்தாள்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிம்மத்தைப் போலக் கடினமாக மூச்சுவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த பீமன் இருந்த கூடம் {Chamber}, துருபதன் மகளின் {திரௌபதியின்} அழகால் நிறைந்து, உயர் ஆன்ம பீமனால் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இனிய புன்னகை கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, பீமசேனனை மடைப்பள்ளியில் {சமையலறையில் – in cooking apartment} கண்டு, காட்டில் வளர்ந்த மூன்று வயதுள்ள ஒரு பசு, தனது முதல் பருவகாலத்தில், வலிமைமிக்கக் காளையை அணுகுவது போலவோ, நீர்நிலைக்கு அருகே வாழும் பெண் கொக்கு இணைசேரும் காலத்தில் தனது துணையை அணுகுவது போலவோ அவனை {பீமனை} அணுகினாள்.

கோமதி நதிக்கரையில் பெரிதாக வளர்ந்திருக்கிற ஓர் ஆச்சா மரத்தை ஒரு கொடி அணைத்துக் கொள்வதைப் போல, பாஞ்சால இளவரசி {திரௌபதி} பாண்டுவின் இரண்டாவது மகனை {பீமனை} அணைத்துக் கொண்டாள். தனது கரங்களால் அவனை {பீமனை} அணைத்துக் கொண்ட களங்கமற்ற குணங்கள் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, பாதைகளற்ற வனத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சிம்மத்தை எழுப்பும் பெண் சிங்கத்தைப் போல அவனை {பீமனை} எழுப்பினாள். வலிமைமிக்கத் தனது பெரும் இணையை அணைத்துக் கொள்ளும் பெண் யானையைப் போல, பீமசேனனை அணைத்துக் கொண்ட களங்கமற்ற பாஞ்சாலி, தந்தி வாத்தியத்தின் காந்தாரவொலி போன்ற இனிய குரலில் அவனிடம் {பீமனிடம்} பேசினாள். அவள் {திரௌபதி}, “எழும், எழும்! ஓ! பீமசேனரே, மரித்தவர் போல ஏன் கிடக்கிறீர்? இறக்காதவன், தனது மனைவியை அவமதித்த இழிந்த பாவி வாழ நிச்சயம் பொறுக்கமாட்டான்” என்றாள் {திரௌபதி}.

அந்த இளவரசியால் {திரௌபதியால்} எழுப்பப்பட்ட பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பீமன், எழுந்திருந்து, அந்த ஆடம்பர படுக்கையில் விரிக்கப்பட்டிருந்து மெத்தையில் அமர்ந்தான். பிறகு அந்தக் குரு குலத்தவன் {பீமன்}, தனது அன்புக்குரிய மனைவியான அந்த இளவரசியிடம் {திரௌபதியிடம்}, “என்ன நோக்கத்திற்காக, நீ இவ்வளவு அவசரமாக இங்கே வந்தாய்? உனது நிறம் போய்விட்டதே {மங்கிவிட்டதே}. மெலிந்து வெளிறிப்போயல்லவா காணப்பப்படுகிறாய்! அனைத்தையும் விவரமாகச் சொல். மகிழ்ச்சிகரமானதோ, வலிநிறைந்ததோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ, அஃது எதுவாக இருப்பினும் அனைத்தையும் என்னிடம் சொல். நான் உண்மையை அறிய வேண்டும். அனைத்தையும் கேட்ட பிறகு, நான் தீர்வை ஏற்படுத்துவேன். ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, நானே உன்னை அபாயத்தில் இருந்து மீண்டும் மீண்டும் காக்கிறேன். எனவே, அனைத்து வகையிலும் உனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் நானே. உனது விருப்பம் என்னவென்பதையும், நீ கருத்தில் கொண்டிருக்கும் நோக்கம் என்னவென்பதையும் என்னிடம் விரைவாகச் சொல்லி, பிறர் விழிக்கும் முன்னே உனது படுக்கைக்குத் திரும்பிச் செல்வாயாக” என்றான் {பீமன்}.

பீமனிடம் புலம்பிய திரௌபதி! – விராட பர்வம் பகுதி 18-யுதிஷ்டிரனைக் குறித்துப் பீமனிடம் திரௌபதி புலம்புவது…

திரௌபதி {பீமனிடம்} சொன்னாள், “யுதிஷ்டிரரைக் கணவனாகக் கொண்டவள் என்ன துயரத்தைத்தான் அடையமாட்டாள்? எனது துயரங்களனைத்தையும் அறிந்தும், ஏன் என்னிடம் கேட்கிறீர்? “அடிமையே” என்று அழைத்து, கூடியிருந்த சபை உறுப்பினர்களுக்கு மத்தியில் என்னைப் பிராதிகாமின் [1] இழுத்துச் சென்றான். ஓ! பாரதா {பீமரே}, என்னை அத்துயரம் {இன்னும்} எரித்துக் கொண்டிருக்கிறது. திரௌபதியைத் தவிர வேறு எந்த இளவரசி இத்தகு கடுந்துன்பங்களை அனுபவிப்பாள்? காட்டில் வசித்து வந்த போது, தீய சைந்தவனால் {ஜெயத்ரதனால்} இரண்டாம் முறையும் அவமானப்படுவதை, என்னைத் தவிர வேறு எவரால் தாங்கிக் கொள்ள முடியும்? மத்ஸ்யர்களின் தீய மன்னன் {விராடன்} கண்ணெதிரிலேயே, கீசகனால் உதைக்கப்பட்டும், எனது தகுதிக்குத் தக்கவர்களில் என்னைத்தவிர வேறு யாரால் உயிரோடு இருக்க முடியும்?

ஓ! பாரதா {பீமரே}, ஓ! குந்தியின் மகனே {பீமரே}, இத்தகு துயரங்களில் நான் பாதிக்கப்பட்டாலும், நான் துயரத்தில் இல்லை என நீர் நினைத்தால் எனது உயிருக்குத்தான் என்ன மதிப்பிருக்கிறது? ஓ! பாரதா {பீமரே}, மன்னன் விராடனுக்கு மைத்துனனும், அவனது படைகளுக்குத் தளபதியும், இழிந்தவனும், கீசகன் என்ற பெயரில் அறியப்படுபவனுமான பொல்லாத பாதகன், ஓ! மனிதர்களில் புலியே {பீமரே}, அரண்மனையில் சைரந்திரியாக வசித்துவரும் என்னிடம், “நீ எனது மனைவி ஆவாயாக” என்று கோருகிறான். ஓ எதிரிகளைக் கொல்பவரே {பீமரே}, கொல்லத்தக்க அந்த இழிந்தவனால் {கீசகனால்} இப்படிக் கேட்கப்படும் போது, பருவத்தால் முதிர்ந்த பழம் வெடிப்பது போல, எனது இதயம் வெடிக்கிறது.

மோசமானப் பகடைக்கு அடிமையான உமது அண்ணனை {யுதிஷ்டிரரைக்} கண்டிப்பீராக! அவரது செய்கையின் விளைவாக மட்டுமே நான் இத்தகு துன்பத்தை அனுபவிக்கிறேன். அவரைத்தவிர வேறு எந்தத் தீவிரச் சூதாடி, நாட்டையும், தன்னுடன் கூடிய அனைத்தையும் கைவிட்டு, காட்டில் வாழும்படி, விளையாடுவான்? ஆயிரக்கணக்கில் நிஷ்கங்களையும் {தங்கம்}, கணிசமான மற்ற வகைச் செல்வங்களையும் காலையும் மாலையும் எனப் பலவருடங்கள் சேர்ந்தாற்போல, பந்தயமாக வைத்துச் சூதாடினாலும், அவரது {அவர் கொண்டிருந்த} வெள்ளியும், தங்கமும், ஆடைகளும், வாகனங்களும், அணிகளும், வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும், திரளான குதிரைகளும், கோவேறு கழுதைகளும் எவ்விதத்திலும் குறைந்திருக்காதே. ஆனால், இப்போதோ பகடைப்பகைமையின் மூலம் செழிப்பிழந்து, தனது சொந்தத் தவறுகளை நினைத்துக் கொண்டே மூடனைப் போல ஊமையாய் அமர்ந்திருக்கிறாரே. ஐயோ, யார் செல்லும்போது, தங்க மாலைகள் பூண்ட பத்தாயிரம் யானைகள் பின் தொடருமோ, அப்படிப்பட்டவர் இன்று பகடை வீசி தன்னைத் தாங்கிக் கொள்கிறாரே.

எவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தபோது, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட மன்னர்களால் புகழப்பட்டாரோ அந்த யுதிஷ்டிரர்; எவருடைய மடைப்பள்ளியில் {சமையலறையில்} ஒரு லட்சம் {1,00,000} பணிப்பெண்கள், கையில் தட்டுகளுடன், இரவும் பகலும் எண்ணிலடங்கா விருந்தினருக்கு உணவு படைத்தனரோ அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரர்}; (தினமும்) எவர் ஆயிரம் நிக்ஷங்கள் தானமளித்தாரோ அந்தத் தாராளவாதிகளில் சிறந்தவர் {யுதிஷ்டிரர்}; ஐயோ, தீமைக்கு வேரான சூதாட்டத்தின் விளைவாக, துன்பத்தில் மூழ்கி, இப்போது பகடை வீசி தன்னைத் தாங்கிக் கொள்கிறாரே!

பிரகாசமான ரத்தினங்கள் மின்னும், காது வளையங்களைப் பூண்டவர்களும், இனிமையான குரலைக் கொடையாகக் கொண்டவர்களுமான ஆயிரக்கணக்கான புலவர்களும், துதிபாடிகளும், காலையிலும், மாலையிலும் அவரை {யுதிஷ்டிரரை} வணங்குவார்கள். ஐயோ, தவத்தகுதி படைத்தவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான ஆயிரம் தவசிகள் சபை உறுப்பினர்களாக இருந்து யாருக்காகத் தினமும் காத்திருந்தனரோ அந்த யுதிஷ்டிரர்; எண்பத்தெட்டாயிரம் {88,000} இல்லற ஸ்நாதகர்களையும், அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நியமிக்கப்பட்டிருந்த முப்பது பெண் பணியாட்களையும், எந்தக் கொடையும் பெறாது, தங்கள் உயிர்வித்தை உயர் நோக்கச் செய்யும் பத்தாயிரம் யதிகளையும் பராமரித்த அந்த யுதிஷ்டிரர்; ஐயோ, அப்படிப்பட்ட வலிமைமிக்க மன்னன் {யுதிஷ்டிரர்} இன்று மாறுவேடத்தில் வாழ்கிறாரே.

கருணை நிறைந்தவரும், ஒவ்வொரு உயிரினத்துக்கும் முறையாகக் கொடுப்பவரும், அற்புத குணங்களைக் கொண்டவரும், கெடுநோக்குகள் ஏதுமற்றவருமான அந்த யுதிஷ்டிரர், ஐயோ, இப்படி மாறுவேடத்தில் வாழ்கிறாரே. உறுதியும், கலங்கடிக்கப்படாத பராக்கிரமமும், அனைத்துயிருக்கும் முறையாகக் கொடுக்கும் குணம் கொண்டவருமான மன்னர் யுதிஷ்டிரர், இரக்கம் கொண்டு, தன் நாட்டில் வாழ்ந்த குருடர்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள், பெற்றோரற்றவர்கள் மற்றும் ஆட்சிகுட்பட்ட ஏனைய பிறரையும் இது போன்ற துயரங்களில் இருந்து தொடர்ச்சியாகப் பராமரித்தாரே. ஐயோ, அந்த யுதிஷ்டிர், மத்ஸ்யனைச் {விராடனைச்} சார்ந்து, அவனுக்குப் பணியாளாகி, அவனது சபையில் பகடை வீசுபவராகி, இப்போது தன்னைக் கங்கன் என்று அழைத்துக் கொள்கிறாரே.

இந்திரப்பிரஸ்தத்தில் வசித்துவந்தபோது, பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் காலத்திற்குத் தக்க யாரிடம் கப்பம் கட்டுவார்களோ, ஐயோ அப்படிப்பட்டவர் வாழ்வாதாரத்திற்காக அடுத்தவர் கரங்களில் இப்போது பிச்சை எடுக்கிறாரே. யாரை அண்டி பூமியின் மன்னர்கள் இருந்தனரோ, ஐயோ, அந்த மன்னர் {யுதிஷ்டிரர்}, தனது சுதந்திரத்தை இழந்து, அடுத்தவரை அண்டி வாழ்கிறாரே. தனது சக்தியால் சூரியனைப் போல முழு உலகத்தையும் பளிச்சிட வைத்த அந்த யுதிஷ்டிரர், ஐயோ, இப்போது மன்னன் விராடனுக்குச் சபை உறுப்பினராக இருக்கிறாரே.

ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, மன்னர்களாலும், துறவிகளாலும் தாங்கப்பட்ட மரியாதைக்குரிய அந்தப் பாண்டவர் {யுதிஷ்டிரர்}, வேறொருவருக்காகக் காத்திருப்பதைப் {சேவகம் செய்வதைப்} பாரும்.

ஐயோ, அடுத்தவர் பக்கத்தில் உட்கார்ந்து, அடுத்தவரிடம் பல்லைக் காட்டிப் பேசும் சபை உறுப்பினராக யுதிஷ்டிரரைக் கண்டு வருத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு யாரால் உதவ முடியும்? வாழ்வாதாரத்திற்காக அடுத்தவரை அண்டி வாழும் உயர்ந்த விவேகியும், அறம் சார்ந்தவருமான யுதிஷ்டிரரைக் கண்டு வருத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு யாரால் உதவ முடியும்? உண்மையில், ஓ! வீரரே {பீமரே}, சபையில், முழுப் பூமியாலும் வழிபடப்பட்டவர், அடுத்தவரை வழிபடுவதைப் பாரும். ஓ! பாரதா {பீமரே}, கேவலமானவளைப் போல, துன்பக்கடலில் மூழ்கி, பல்வேறு கவலைகளால் பாதிக்கப்பட்டவளாக என்னை ஏன் கருதாமல் இருக்கிறீர்?” என்று கேட்டாள் {திரௌபதி}.

கணவர்களால் துயரடைந்த திரௌபதி! – விராட பர்வம் பகுதி 19-விராடனின் நாட்டில் பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அடைந்த நிலையைச் சொல்லி திரௌபதி பீமனிடம் வருந்துவது

திரௌபதி {பீமனிடம்} சொன்னாள், “ஓ! பாரதரே, நான் சொல்லப்போகும் இஃது, எனது மற்றொரு துயரமாகும். எனது இதயத்தின் துயரத்தால் நான் இதைச் சொல்வதால், நீர் இதில் பழி கூறலாகாது. ஓ! பாரதகுலத்தின் காளையே {பீமரே}, முழுமையிலும் உம்மைக் கீழானவர் என்றும், வல்லவ சாதியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லிக்கொண்டு, இழிந்த சமையல் அலுவலில் ஈடுபட்டுவரும் உம்மைக் கண்டு துயரடையாதவர்கள் யார் இருக்க முடியும்? வல்லவன் என்ற பெயரில் விராடனின் சமையற்காரனாக உம்மை மக்கள் அறிவது, அதனால் அடிமைத்தனத்தில் மூழ்குவது என்பதை விடச் சோகமானது என்ன இருக்க முடியும்?

ஐயோ, மடைப்பள்ளியில் {சமையலறையில்} உமது வேலைகள் முடிந்ததும், விராடனின் அருகே அடக்கமாக அமர்ந்து கொண்டு, உம்மை நீரே சமையற்காரனான வல்லவன் என்று அழைத்துக் கொள்ளும்போது, விரக்தி எனது இதயத்தை ஆட்கொள்கிறது. அந்த மன்னர் மன்னன் {விராடன்} உம்மை யானைகளுடன் மோதச்செய்யும்போதும், (அரண்மனையின்) அந்தப்புர மகளிர் அதைக்கண்டு எப்போதும் சிரிக்கும்போதும் நான் மிகவும் வருந்துவேன். அந்தப்புரத்தில் சிங்கங்கள், புலிகள், எருமைகள் ஆகியவற்றுடன் நீர் போரிடுவதை இளவரசி கைகேயி காணும்போது, கிட்டத்தட்ட நான் மயங்கி விடுவேன்.

அப்போது அந்தக் கைகேயியும், பணிப்பெண்களும் தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்து எனக்குத் துணை செய்ய வந்து, என் அங்கங்களில் காயம் ஏதுமில்லையென்பதையும் வெறும் மயக்கம் மட்டும்தான் என்பதையும் காணும்போது, அந்த இளவரசி {கைகேயி}, தனது பெண்டிரிடம், “பெரும் வலிமைமிக்கச் சமையற்காரன் {வல்லவன்} விலங்குகளுடன் போரிடும்போது, இந்த இனிய புன்னகை கொண்ட மங்கை {மாலினி}கலவியினால் ஏற்பட்ட கடமையாலும், பாசத்தாலுமே துயரடைகிறாள் என்பது நிச்சயம். இந்தச் சைரந்திரி பெரும் அழகு கொண்டவளாக இருக்கிறாள். வல்லவனும் சிறந்த அழகனாக இருக்கிறான். பெண்ணின் இதயத்தை அறிவது கடினம். அவர்கள் ஒருவருக்கொருவர் {ஏற்றுக்கொள்ள} தகுதியுடையவர்களே என்று நான் கருதுகிறேன். இதன் காரணமாகவே, (இத்தகு சமயங்களில்), தனது காதலனுடன் கொண்ட தொடர்பின் காரணமாகச் சைரந்திரி தவிர்க்க முடியாமல் அழுகிறாள். அந்த இருவரும் இந்த அரச குடும்பத்துக்குள் ஒரே சமயத்தில் நுழைந்தவர்கள் ஆவர்” என்று சொல்கிறாள் {இளவரசி கைகேயி}. இத்தகு வார்த்தைகளால் அவள் {இளவரசி கைகேயி} எப்போதும் என்னைக் கடிந்து கொள்கிறாள். இதன் காரணமாகக் கோபமடையும் என்னை உம்முடன் இணைத்துச் சந்தேகிக்கிறாள். அவள் {இளவரசி கைகேயி} இப்படிப் பேசும்போது நான் அடையும் துயரம் பெரிதாக இருக்கிறது. ஓ! பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பீமரே, ஏற்கனவே யுதிஷ்டிரரின் விஷயத்தில் துயரத்தில் இருக்கும் நான், இந்தப் பேரிடரில் துன்புறும் உம்மைக் காணும்போது உண்மையில் உயிர்வாழ விரும்பவில்லை.

தனித்தேரில் சென்று தேவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் வென்ற இளைஞர் {அர்ஜுனர்}, ஐயோ, இப்போது, மன்னன் விராடனின் மகளுக்கு ஆடலாசிரியராக இருக்கிறாரே. காண்டவ வனத்தை எரித்து அக்னியை மனநிறைவுகொள்ளச் செய்த அளவிடமுடியா ஆன்மா கொண்ட அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்}, கிணற்றுக்குள் மறைத்துவைக்கப்பட்ட நெருப்பு போல (அரண்மனையின்) அந்தப்புரத்தில் இப்போது வாழ்கிறாரே. ஐயோ, மனிதர்களில் காளையும், எதிரிகளுக்குப் பயங்கரருமான அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்}, இப்போது, அனைவரும் நம்பிக்கையற்றுப் போகும் வகையில் {அலியாக} மாறுவேடத்தில் வாழ்கிறாரே. ஐயோ, வில்லின் நாணைச் சுண்டுவதால் ஏற்பட்ட தழும்புகளைக் கொண்ட தண்டாயுதம் போன்ற கரங்களைக் கொண்ட அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்}, ஐயோ தனது மணிக்கட்டுகளைக் கடகங்கள் கொண்டு மறைத்துத் துயரத்தில் தனது நாட்களைக் கடத்துகிறாரே.

ஐயோ, எந்தத் தனஞ்சயரின் {அர்ஜுனரின்} வில்லின் நாணொலியும், தோலுரைகளின் ஒலியும் எதிரிகள் ஒவ்வொருவரையும் நடுங்கச் செய்யுமோ, அப்படிப்பட்டவர் இப்போது தனது பாடல்களால் மகிழ்ச்சியடையும் பெண்களுக்கு, மகிழ்வூட்டிக் கொண்டிருக்கிறாரே. ஓ!, சூரிய பிரகாசம் கொண்ட கீரீடம் தரித்த தலையில், அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்} இப்போது விகாரமாகச் சுருண்டிருக்கும் பின்னல் சடையை அணிந்திருக்கிறாரே. ஓ! பீமரே, பயங்கர வில்லாளியான அந்த அர்ஜுனர், இப்போது பெண்களுக்கு மத்தியில் பின்னல் அணிந்திருப்பதைக் காண்பது, எனது இதயத்தைத் துயர் கொள்ளச் செய்கிறது. தெய்வீக ஆயுதங்கள் அனைத்திலும் முதிர்வடைந்தவரும், அனைத்து அறிவியல்களுக்கும் களஞ்சியமாகவும் இருப்பவரான அந்த உயர் ஆன்ம வீரர் {அர்ஜுனர்}, இப்போது (அழகிய பெண்களைப் போல) காது வளையங்களை அணிந்திருக்கிறாரே.

கண்டங்களை மீற முடியாத பெருங்கடலின் நீரைப் போல, ஒப்பிலா பராக்கிரமம் கொண்ட மன்னர்களாலும் போரில் வீழ்த்த முடியாத அந்த இளைஞர் {அர்ஜுனர்}, இப்போது மன்னன் விராடனின் மகள்களுக்கு ஆடலாசிரியராக இருந்து, மாறுவேடத்தில் அவர்களுக்குச் சேவகம் புரிகிறாரே. ஓ! பீமரே, மலைகள், காடுகள் கொண்ட முழுப் பூமியையும் அதன் அசையும் மற்றும் அசையா பொருட்களுடன் சேர்த்து எந்த அர்ஜுனரின் தேர்ச்சக்கரச் சடசடப்பு குலுங்கச் செய்ததோ! யாருடைய பிறப்பால் குந்தியின் துயரங்கள் அனைத்தும் அகன்றதோ, அந்த உயர்ந்த வீரரான உமது தம்பி {அர்ஜுனர்}, ஓ! பீமசேனரே, இப்போது என்னை அழச்செய்து கொண்டிருக்கிறாரே.

தங்கத்தாலான காது வளையங்களும், பிற ஆபரணங்களும் பூண்டு, சங்கு வளையல்களை மணிக்கட்டில் அணிந்து, என்னை நோக்கி வரும் அவரை {அர்ஜுனரை} நான் காணும்போது, எனது இதயம் விரக்தியால் துயருறுகிறது. இந்தப் பூமியில், பராக்கிரமத்தில் தனக்கு இணையில்லாத வில்லாளியான தனஞ்சயர் {அர்ஜுனர்}, மகளிர் சூழ பாடிக் கொண்டு தனது நாட்களை இப்போது கடத்திக் கொண்டிருக்கிறாரே. அறம், வீரம், சத்தியம் ஆகிவற்றால் உலகத்தால் மிகவும் ரசிக்கப்படும் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்}, பெண்ணின் உருவில் இப்போது வாழ்ந்து வருவதைக் காணும்போது எனது இதயத்தைத் துயரம் பீடிக்கிறது. தேவனைப் போன்ற அந்தப் பார்த்தர் {அர்ஜுனர்}, பெண் யானைகளால் சூழப்பட்ட மதங்கொண்ட {ஆண்} யானை போல, மகளிருக்கு மத்தியில் இருந்து கொண்டு, மத்ஸ்யர்ளின் மன்னனான விராடனின் முன்பு இசைச்சபையில் காத்திருக்குப்பதைக் காணும்போது, திசைகளின் உணர்வையே நான் இழந்துவிடுகிறேன். தனஞ்சயர் {அர்ஜுனர்} இப்படிப்பட்ட அதீத துயரத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை எனது மாமியார் {குந்தி} அறியமாட்டாள் என்பது நிச்சயம். குருகுலத்தின் வழித்தோன்றலான அஜாதசத்ரு {யுதிஷ்டிரர்}, பேரழிவைக் கொடுக்கும் பகடைக்கு அடிமையாகி, பெருந்துன்பத்தில் மூழ்கியிருக்கிறார் என்பதையும் அவள் {குந்தி} அறியமாட்டாள்.

ஓ! பாரதரே {பீமரே}, உங்கள் அனைவரிலும் இளையவரான சகாதேவர், இடையர் வேடத்தில் மாடுகளை மேற்பார்வையிடுவதைக் காணும்போது, நான் வெளிறிப் போகிறேன். எப்போதும் சகாதேவரின் அவல நிலையை நினைத்துக் கொண்டிருப்பதால், ஓ! பீமசேனரே, என்னால் உறங்க முடியவ
வில்லையெனும்போது, நீர் ஓய்வைக் குறித்துச் என்ன சொல்வீர்? ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {பீமரே}, கலங்கடிக்கப்பட இயலாத அந்த வீரர் {சகாதேவர்} இத்தகு துயரத்தால் பீடிக்கப்பட என்ன பாவம் செய்தாரோ? ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {பீமரே}, மத்ஸ்யனால் {விராடனால்} தனது பசுக்களைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்ட உமது தம்பியைக் {சகாதேவரைக்} காணும்போதெல்லாம் நான் துயரத்தில் மூழ்குகிறேன். கர்வமிக்க அந்த வீரர் {சகாதேவர்} விராடனை மனநிறைவு கொள்ளச் செய்து, அவனது {மன்னன் விராடனது} இடையர்களுக்குத் தலைவராகச் சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடை அணிந்திருப்பதைக் காணும்போதெல்லாம் நான் நோயால் தாக்கப்படுகிறேன் {மனம் கொதிக்கிறேன்}.

உயர்ந்த குணங்களும், சிறந்த நடத்தையும், நன்னெறிகளும் கொண்ட வீரரான சகாதேவரை எனது மாமியார் {குந்தி} எப்போதும் பாராட்டுவாள். அவர் {சகாதேவர்} பெருங்காட்டுக்கு {வனவாசத்துக்குப்} (நம்முடன்) புறப்படும்போது, மகன்களிடம் பெரும் பிணைப்புடைய குந்தி, அழுது கொண்டே சகாதேவரை அணைத்துக் கொண்டாள். பிறகு அவள் {குந்தி} என்னிடம், “நாணமும், இனிய பேச்சும், அறமும் கொண்டவன் சகாதேவன். அவனே {சகாதேவனே} எனக்குப் பிடித்தமான மகன். எனவே, ஓ! யக்ஞ்சேனி {திரௌபதி}, இரவும் பகலும் காட்டில் அவனை {சகாதேவனைக்} கவனித்துக் கொள். மென்மையும், துணிச்சலும் கொண்டு, மன்னருக்கு {யுதிஷ்டரருக்கு} அர்ப்பணிப்புடனும், தனது அண்ணனை {யுதிஷ்டிரரை} எப்போதும் வழிபடுபவனுமான அவனுக்கு {சகாதேவனுக்கு}, நீயே உணவூட்டு” என்றாள் {குந்தி}. ஓ! பாண்டவரே {பீமரே}, வீரர்களில் முதன்மையானவரான சகாதேவர், மாடுகளைக் கவனிப்பதில் ஈடுபடுவதையும், இரவில் கன்றின் தோலில் படுத்து உறங்குவதையும் கண்டு என்னால் எப்படி உயிரைத் தாங்கிக் கொள்ள முடியும்?

அழகு, வலிமை, புத்திக்கூர்மை ஆகிய மூன்று குணங்களால் முடிசூட்டப்பட்டவர் {நகுலர்}, விராடனின் குதிரைகளைக் கண்காணிப்பவராக இப்போது இருக்கிறாரே. காலம் கொண்டு வந்திருக்கும் மாற்றத்தைப் பாரும். போர்க்களத்தில் யாரைக் கண்டால் எதிரிப் படைகள் {அஞ்சி} ஓடுமோ, அந்தக் கிரந்திகர் {நகுலர்}, மன்னரின் {விராடரின்} முன்னிலையில் குதிரைகளைப் பழக்கிக் கொண்டு, அவற்றை விரைந்து ஓட்டிச் செல்கிறாரே. ஐயோ, இப்போது அந்த அழகான இளைஞர் {நகுலர்}, அலங்காரமாகச் சிங்காரிக்கப்பட்ட மத்ஸ்யர்களின் மன்னனான சிறந்த விராடனின் முன்பு, அவனது குதிரைகளைக் காட்டிக் கொண்டு அவனுக்காக {விராடனுக்காகக்} காத்திருக்கிறாரே.

ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே- பீமரே}, யுதிஷ்டிரரின் காரணமாக இதுபோன்ற நூறு வகையான துயரங்களால் பீடிக்கப்பட்டிருக்கும் என்னை, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, மகிழ்ச்சியாக இருப்பதாக எப்படி நீர் நினைக்கிறீர்? ஓ! குந்தியின் மகனே {பீமரே}, இவற்றையெல்லாம் விஞ்சும் பிற சோகங்களைச் சொல்கிறேன் கேளும். நீங்கள் உயிரோடிருக்கும் போதே, என்னை மெலிவடையச் செய்யும் இதுபோன்ற பலதரப்பட்ட துயரங்களை விட என்ன கொடுமை எனக்கு இருக்க முடியும்?”, என்றாள் {திரௌபதி}.

மனைவியைக் கண்டு அழுத பீமன்! – விராட பர்வம் பகுதி 20-திரௌபதி பீமனிடம் தனது துயர் நிறைந்த நிலையை எடுத்துரைப்பது; அரசியான தான் அடிமை நிலையை அடைந்து கீழானவர்களுக்குச் சேவகம் செய்யும் நிலை வந்ததை எடுத்துரைப்பது; தனது மனைவியின் தழும்பேறிய கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பீமன் அழுவது…

திரௌபதி {பீமனிடம்} சொன்னாள், “ஐயோ, அந்த வெறிகொண்ட சூதாடியின் {யுதிஷ்டிரரின்} நிமித்தமாக, சைரந்திரி என்ற ஒரு வேடத்தில் அரண்மனையில் வாழ்ந்து கொண்டு, இப்போது, சுதேஷ்ணையின் கட்டளைக்குக் கீழ் {அடிமையாக} இருக்கிறேனே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, ஓர் இளவரசியான நான் இப்போது அடைந்திருக்கும் சோகம் நிறைந்த கசப்பான நிலையைப் பாரும். குறித்த இந்தக் காலம் முடிவதை எதிர்பார்த்து நான் வாழ்ந்து வருகிறேன் [1]. எனவே, அதீத துயரம் என்னுடையதே {எனக்கே}.

மனிதர்களைப் பொறுத்தவரை நோக்கம் நிறைவேறுவது, வெற்றி, தோல்வி ஆகியன தோன்றி மறைவனவாகும் {நிலையற்றனவாகும்}. இந்த நம்பிக்கையின் காரணமாகவே, எனது கணவர்களின் செழுமை திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் நான் வாழ்ந்து வருகிறேன். செழுமையும், வறுமையும் சக்கரத்தைப் போலச் சுழல்கின்றன. இந்த நம்பிக்கையின் காரணமாகவே, எனது கணவர்களின் செழுமை திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் நான் வாழ்ந்து வருகிறேன். வெற்றியைக் கொண்டு வரும் அதே காரணமே தோல்வியையும் கொண்டு வரலாம். நான் இந்த நம்பிக்கையில்தான் வாழ்கிறேன். {அப்படியிருக்கும்போது}, ஓ! பீமசேனரே, நீர் ஏன் இறந்தவளாக என்னைக் கருதக்கூடாது? தானமளித்த மனிதர்கள் பிச்சையெடுத்ததையும், கொல்பவர்கள் கொல்லப்படுவதையும், பிறரை வீழ்த்துபவர்கள், எதிரிகளால் வீழ்ந்து போவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விதிக்கு எதுவும் கடினமானது அல்ல. எவராலும் விதியை வெல்ல முடியாது. இதன் காரணமாகவே நான் சாதகமான நற்பேறு திரும்புவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். காய்ந்த குளம் மீண்டும் நிறையும்; எனவே, சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துச் செழுமை திரும்பும் என நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றாக இருக்கும் ஒருவனின் தொழில் கலங்கிப் போவதைக் {அழிந்து போவதைக்} கண்டு வருவதால், எப்போதும் ஒரு விவேகி நற்பேறை மீண்டும் கொண்டுவர போராடக்கூடாது. {நன்றாக முயற்சி செய்தாலும், தெய்வத்தால் தொழில் அழிக்கப்பட்டால், விவேகமுள்ளவன் தெய்வத்தின் அருளைப் பெற எப்போதும் முயற்சிக்க வேண்டும்}. நான் துயரத்தில் இருக்கிறேன். நான் பேசும் வார்த்தைகளின் நோக்கத்தை நீர் கேட்டாலும், கேட்காவிட்டாலும், நான் அனைத்தையும் உமக்குச் சொல்வேன். இத்தகு துயரத்தில் விழுந்த பிறகும், பாண்டு மகன்களின் ராணியான துருபதனின் மகளைத் தவிர {திரௌபதியான என்னைத் தவிர} வேறு யார் வாழ விரும்புவார்கள்? ஓ! எதிரிகளை நசுக்குபவரே {பீமரே}, எனவே, எனக்கு நேரிட்ட பெருந்துன்பம், உண்மையில், மொத்த குரு குலத்தையும், பாஞ்சாலர்களையும், பாண்டுவின் மகன்களையும் தான் சிறுமைப்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சிக்கான காரணங்களான – எண்ணிலடங்கா சகோதரர்களும், மாமனாரும், மகன்களும் சூழ்ந்தபடி இருந்தும், என்னைத்தவிர வேறு எந்தப் பெண் இத்தகு துயரத்தால் பீடிக்கப்படுவாள்? என் பிள்ளைப்பருவத்தில் நான் தத்ரிக்கு {பிரம்மனுக்கு} விருப்பமில்லாத பெருங்குற்றத்தை நிச்சயமாகச் செய்திருக்க வேண்டும். அதனால்தான், ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீமரே}, அவனுடைய {பிரம்மனுடைய} வெறுப்பால் நான் இத்தகு விளைவுகளைச் சந்திக்கிறேன். ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, பெரும் துயரத்தில் கழிக்கப்பட்ட கானக வாழ்வு கூடக் கொடுக்காத மாற்றமான எனது தோல்நிறமிழப்பை நீர் குறித்துக் கொள்ளும்.

ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே, பீமரே}, முன்பு எனது மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை நீர் அறிவீர். அப்படிப்பட்ட நான் கூட அடிமைத்தனத்தில் இப்போது மூழ்கிவிட்டேன். மிகுந்த மன உளைச்சல் அடைந்திருப்பதால், என்னால் ஓய்வைப் பெற {மன அமைதி காண} முடியவில்லை. வலிய கரங்கள் கொண்டவரும், பயங்கர வில்லாளியுமான பிருதையின் மகன் தனஞ்சயர் {குந்தியின் மகன் அர்ஜுனர்}, அணைந்த நெருப்பைப் போல இப்போது வாழ நேர்வதால், இவை அனைத்தும் விதியால் ஏற்பட்டதே என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில், ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே, பீமரே}, (இவ்வுலகின்) உயிரினங்களின் விதியை மனிதர்கள் புரிந்து கொள்வது இயலாததாகும். எனவே, உங்களுடைய இந்த வீழ்ச்சி முன்யோசனையால் தவிர்க்கப்பட முடியாதது என்றே நான் நினைக்கிறேன்.

ஐயோ, இந்திரர்களை நிகர்த்த உங்கள் அனைவரின் வசதிகளைக் கவனித்து வந்த கற்புடைய, மேன்மையானவளே கூட {திரௌபதியான நானே கூட}, தன்னைவிட {என்னைவிட} தகுதியில் குறைந்தவர்களின் வசதிகளைக் கவனிக்கும் நிலையை அடைய நேரிட்டதே. ஓ! பாண்டவரே {பீமரே} எனது நிலைமையைப் பாரும். இதற்கு நான் தகுதியானவள் இல்லை {இது எனக்குத் தகுந்ததன்று}. நீங்கள் உயிரோடு இருந்தாலும், காலம் கொண்டு வந்த தலைகீழ் மாற்றத்தை இதோ பாரும். கடல் நுனிவரையுள்ள மொத்த பூமியையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவள், சுதேஷ்ணையின் கட்டுப்பாட்டில், அவளுக்கு அஞ்சி இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறாள். முன்னும் பின்னும் தொடர்ந்து வரும் பணியாட்களைக் கொண்டிருந்தவள், ஐயோ, இப்போது சுதேஷ்ணைக்கு முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்கிறாள்.

ஓ! கௌந்தேயரே {பீமரே}, இது தாங்க முடியாத எனது மற்றொரு துயரமாகும். ஓ! அதைக் கேளும். உமக்கு நன்மை விளையட்டும். குந்திக்கு அல்லாது, தனது பயன்பாட்டுக்குக் கூட வாசனைத் தைலங்களைச் அரைக்காதவள், இப்போது, (பிறருக்காக) சந்தனத்தை அரைத்துக் கொண்டிருக்கிறாள். எனது இந்தக் கரங்களைப் பாரும். அவை இதற்கு முன்னர் இப்படி இருந்ததில்லை.” என்று சொல்லியவள் {திரௌபதி} ஆணிகளால் தன் கரங்களில் ஏற்பட்ட தழும்புகளைக் காட்டியபடி தொடர்ந்தாள். “மத்ஸ்யன் பிறரால் அரைக்கப்படும் சந்தனத்தை விரும்புவதில்லை என்பதால், குந்திக்கோ, உமக்கோ, உமது சகோதரர்களுக்கோ பயப்படாதவள், வாசனைத் தைலங்களின் தயாரிப்பைக் குறித்து அந்த மன்னர் மன்னன் {விராடன்} என்ன சொல்வானோ என்று நினைத்துக் கொண்டே, விராடனின் முன்பு அடிமையாகப் பயத்துடன் இப்போது நின்று கொண்டிருக்கிறாள்” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர்  {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது துயரங்களைப் பீமசேனனிடம் இப்படி உரைத்த கிருஷ்ணை {திரௌபதி}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனது பார்வையைப் பீமன் மீது செலுத்தியவண்ணம் அமைதியாக அழத்தொடங்கினாள். பிறகு கண்ணீரால் தடைபட்ட குரலுடன், மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடி, அவனது {பீமனது} இதயத்தைப் பலமாகக் கிண்டும்படி பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னாள். “ஓ! பீமரே, முற்காலத்தில் தேவர்களுக்கு நான் ஏதாவது குற்றமிழைத்திருக்க வேண்டும் என்பதையே பேறற்ற எனது நிலை குறிக்கின்றது. ஓ! பாண்டவரே {பீமரே}, நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே, நான் எப்போது சாவது?” என்று கேட்டாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு எதிரி வீரர்களைக் கொல்பவனான விருகோதரன் {பீமன்}, ஆணித்தழும்புகளைக் கொண்ட தனது மனைவியின் {திரௌபதியின்} மென்மையான கரங்களால் தனது முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கினான். பிறகு, குந்தியின் வலிமைமிக்க மகன் {பீமன்}, திரௌபதியின் கரங்களைத் தனது கரங்களில் பற்றிக் கொண்டு  பெரும் கண்ணீர் வடித்தான். பிறகு, பெருந்துயரத்திற்கு ஆட்பட்ட அவன் {பீமன்} {பின்வரும்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.

“கீசகனைக் கொல்வீர்!” என்ற திரௌபதி – விராட பர்வம் பகுதி 21-பீமன் தனது சகோதரர்களை நிந்திக்க வேண்டாம் என்று திரௌபதியைக் கேட்டுக் கொண்டது; கீசகனால் எற்படும் துன்பங்களைத் திரௌபதி பீமனிடம் சொல்லி, அவனைக் கொல்லச் சொல்வது…

பீமன் {திரௌபதியிடம்}  சொன்னான், “உனது இந்தக் கரங்கள் முன்பு சிவந்திருந்தன, இப்போதோ அவற்றில் ஆணித்தழும்புகள் பரவியிருக்கின்றன. எனது கரங்களின் வலிமைக்கு இகழ்ச்சி; பல்குனனின் {அர்ஜுனனின்} காண்டீவத்துக்கு இகழ்ச்சி. விராடனின் அவையில் நானொரு படுகொலையைச் செய்திருப்பேன், (ஆனால் அதைத் தடுக்கும் வண்ணம்) குந்தியின் மகன் {யுதிஷ்டிரர்} வலிமைமிக்க யானையைப் போல என்னைப் பார்த்தார். இல்லையெனில் அரசு அதிகாரம் கொடுத்திருக்கும் கர்வத்தால் போதையிலிருக்கும் கீசகனின் தலையைச் சந்தடியில்லாமல் நசுக்கியிருப்பேன்.

ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, கீசகனால் நீ உதைக்கப்பட்டதை நான் கண்ட அந்தச் சமயத்தில் மத்ஸ்யர்கள் அனைவரையும் மொத்தமாகப் படுகொலை செய்ய நினைத்தேன். எனினும் யுதிஷ்டிரர் தனது பார்வையால் என்னைத் தடுத்துவிட்டார். ஓ! அழகிய பெண்ணே {திரௌபதி}, அவரது {யுதிஷ்டிரனின்} நோக்கத்தைப் புரிந்து கொண்ட நான் அமைதியடைந்தேன். நாம் நாட்டை இழந்திருக்கிறோம், நான் இன்னும் குருக்களைக் கொல்லவில்லை. கர்ணன், சுயோதனன் {துரியோதனன்}, சுபலனின் மகன் சகுனி, தீய துச்சாசனன் ஆகியோரின் தலைகளை நான் இன்னும் எடுக்கவில்லை. ஓ! பெண்ணே {திரௌபதி}, இந்தச் செயல்களும், விடுபட்ட செயல்களும் எனது ஒவ்வொரு அங்கத்தையும் எரித்துக் கொண்டிருக்கின்றன. எனது இதயத்தில் பதிந்த எறிவேலாக இந்த எண்ணம் இருப்பதாக நான் கருதுகிறேன். ஓ! அழகிய இடைகள் கொண்டவளே {திரௌபதி}, அறத்தைத் துறக்காதே. ஓ! உன்னத இதயம் படைத்த பெண்ணே {திரௌபதி}, உனது கோபத்தை அடக்கு. இதுபோன்ற உனது கடிந்துரைகளை மன்னர் யுதிஷ்டிரர் கேட்டால், நிச்சயம் தனது உயிருக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துக் கொள்வார். நீ இப்படிப் பேசுவதை, தனஞ்சயனோ {அர்ஜுனனோ}, இரட்டையரோ {நகுல சகாதேவனோ} கேட்டால், அவர்களும் தங்கள் உயிரைத் துறப்பார்கள். ஓ! கொடியிடை கொண்ட பெண்ணே {திரௌபதி}, அவர்கள் தங்கள் உயிரை விட்டால், என்னால் எனது உயிரைத் தாங்கிக் கொள்ள இயலாது.

பழங்காலத்தில் சர்யாதியின் மகளான அழகிய சுகன்யை, தவத்திலும் தியானத்திலும் ஈடுபட்டு சியவனரைச் சுற்றி எறும்புகள் புற்றைக் கட்டிய போதும், மனதை முழுமையாகக் கட்டுப்படுத்தியிருந்த அந்தப் பிருகு குலத்தவரைக் காட்டில் தொடர்ந்து சென்றாள். அழகில் நாராயணியைப் போன்ற இருந்த இந்திரசேனை {நளாயனி} ஆயிரம் வயது கொண்ட தனது கணவரைத் தொடர்ந்து சென்றாள் என்பதைக் கேள்விப்பட்டிருப்பாய். விதேக இளவரசியும், ஜனகனின் மகளுமான சீதை தனது தலைவனை {ராமனைப்} பின்பற்றிச் சென்று அடர்ந்த காட்டில் வாழ்ந்தாள் என்பதை நீ கேள்விப்பட்டிருப்பாய். அந்த அழகிய இடைகொண்ட பெண்ணான ராமனின் அன்புக்குரிய மனைவி {சீதை} துயரங்களால் பீடிக்கப்பட்டு, ராட்சசர்களால் துன்புறுத்தப்பட்டு நீண்ட காலத்திற்குப் பிறகே ராமனை அடைந்தாள். ஓ! அச்சமுள்ளவளே {திரௌபதி}, இளமையும் அழகும் கொண்ட லோபாமுத்திரை மனிதர்களால் அடையத்தக்க அனைத்து இன்பநுகர் பொருட்களையும் துறந்து அகத்தியரைத் தொடர்ந்து சென்றாள். புத்திக்கூர்மையும், களங்கமற்ற குணமும் கொண்ட சாவித்ரி, தியுமத்சேனனின் மகனான வீரன் சத்யவானைத் தொடர்ந்து சென்று, யமனின் உலகத்திற்கே தனியாகச் சென்றாள். ஓ! அழகிய பெண்ணே {திரௌபதி}, இந்தக் கற்புடைய அழகிய பெண்களைப் போலவே நீயும் அனைத்து அறங்களிலும் மலர்ந்திருக்கிறாய் என்று நான் சொல்கிறேன். அளவிட்டால் பாதி மாதம் கூட இல்லாத இந்தக் குறுகிய காலத்தைக் கழித்துவிடு. பதிமூன்றாம் வருடம் முடிந்ததும், (மீண்டும்] நீ மன்னனின் பட்டத்தரசியாவாய்” என்றான் {பீமன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி {பீமனிடம்}, “ஓ! பீமரே, என்னால் எனது துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துயரத்தின் காரணமாக மட்டுமே நான் இந்தக் கண்ணீரைச் சிந்தினேன். நான் யுதிஷ்டிரரை நிந்திக்கவில்லை. கடந்த காலத்திலேயே வசிப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஓ! வலிமை கொண்ட பீமரே, இந்த மணிநேரத்தின் வேலையை எதிர்கொள்ள விரைந்து வாரும். ஓ! பீமரே, மன்னன் {விராடன்} என்னிடம் மயங்கிவிடக்கூடாது என்று {நினைத்துக் கொண்டு}, எனது அழகில் பொறாமை கொண்டுள்ள கைகேயி {சுதேஷ்ணை} எடுக்கும் முயற்சிகள் எனக்கு எப்போதும் வலியைத் தருகின்றன. அவளது நிலையைப் புரிந்து கொண்ட தீய ஆன்மா கொண்ட முறைகேடனான கீசகன் விடாமல் என்னிடம் கோரிக்கை வைத்துக் கொண்டேயிருக்கிறான்.

இதனால் அவனிடம் கோபமடைந்த நான் எனது கோபத்தை அடக்கிக் கொண்டு, காமத்தால் புத்தியிழந்த அந்த இழிந்தவனிடம், “ஓ! கீசகா, உன்னைப் பாதுகாத்துக் கொள். நான் ஐந்து கந்தர்வர்களின் மனைவியும், அவர்களின் அன்புக்குரிய ராணியுமாவேன். அந்த வீரர்கள் கோபமடைந்தால், தீயவனான உன்னைக் கொன்று போடுவார்கள்” என்று பதிலளித்தேன். இப்படிச் சொல்லப்பட்ட தீய ஆன்மாகக் கொண்ட கீசகன், என்னிடம், “ஓ! இனிய புன்னகை கொண்ட சைரந்திரி {மாலினி}, கந்தர்வர்களிடம் எனக்கு எந்தப் பயமும் கிடையாது. போர்க்களத்தில் அவர்களுடன் மோதும் நான் ஒரு லட்சம் கந்தர்வர்களைக் கூடக் கொல்வேன். எனவே, ஓ! அச்சமுள்ளவளே, நீ ஒப்புதல் அளிப்பாயாக!” என்று மறுமொழி கூறினான் {கீசகன்].

இவை யாவற்றையும் கேட்ட நான் காமத்தால் பீடிக்கப்பட்ட அந்தச்சூதனிடம் {கீசகனிடம்} மீண்டும், “ஒப்பற்ற அந்தக் கந்தர்வர்களுக்கு நீ {திறனில்} தகுந்தவன் கிடையாது. மரியாதைக்குரிய நல்ல நிலையில் இருக்கும் நான், எப்போதும் அறத்தைக் கடைப்பிடிப்பவளாவேன். நான் யாருடைய மரணத்தையும் விரும்புவதில்லை. இதற்காகவே நான் உன்னைப் பொறுத்துக் கொள்கிறேன்” என்றேன். அதற்கு அந்தத் தீய ஆன்மா கொண்ட பாதகன் {கீசகன்} சத்தம்போட்டு வெடித்துச் சிரித்தான். இதற்கெல்லாம் முன்பே, தன் சகோதரனிடம் பாசம் கொண்ட கைகேயி {சுதேஷ்ணை} என்னிடம், “ஓ! சைரந்திரி, கீசகனிடத்தில் இருந்து மதுவைக் கொண்டு வா” என்று சொல்லி என்னை அவனிடத்திற்கு அனுப்பி வைத்தாள். என்னைக் கண்ட அந்தச் சூதனின் மகன் {கீசகன்}, முதலில் என்னிடம் இனிமையான சொற்களில் பேசினான். தோல்வியுற்றபிறகு, மிகவும் கோபமடைந்து, வன்முறையைக் கைக்கொண்டான்.

தீய கீசகனின் நோக்கத்தை அறிந்த நான், விரைந்து மன்னர் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக வந்தேன். என்னைத் தரையில் வீழ்த்திய அந்த இழிந்தவன், மன்னன்{விராடனின்} முன்னிலையிலும், கங்கரின் {யுதிஷ்டிரரின்} கண்களுக்கு முன்பும், தேரோட்டிகள், அரசனுக்குப் பிடித்தமானவர்கள், யானைப் பாகன்கள், குடிமக்கள், இன்னும் பிறர் முன்பும் என்னை எட்டி உதைத்தான். நான் மன்னனையும், கங்கரையும் நிந்தித்தேன். எனினும் மன்னன் {விராடன்}, கீசகனைத் தடுக்கவோ, தண்டிக்கவோ இல்லை. போரில் விராட மன்னனுக்கு முக்கியக் கூட்டாளியும், அறமற்றவனுமான அந்தத் தீய கீசகன், மன்னன் மற்றும் ராணி ஆகிய இருவருக்கும் அன்புக்குரியவனாக இருக்கிறான். ஓ! மேன்மையானவரே {பீமரே}, துணிச்சல், கர்வம், ஒழுக்கங்கெட்டத்தனம் {விபச்சாரம்}, அனைத்து இன்ப நுகர் பொருட்களிலும் மூழ்குதல் ஆகிய குணங்களைக் கொண்ட அவன் {கீசகன்}, (மன்னனிடம் இருந்து) பெரும் செல்வத்தை ஈட்டியும் கூட, பிறர் துயரத்தால் அழுதாலும் கூட அவர்களின் உடைமைகளைத் திருடிச் செல்கிறான்.

அவன் எப்போதும் அறத்தின் பாதையில் நடப்பதில்லை. எந்த ஓர் அறச்செயலையும் அவன் செய்தது கிடையாது. தீய ஆன்மாவும், தீய மனநிலையும், கர்வமும், வில்லத்தனமும், எப்போதும் காமனின் கணைகளால் பீடிக்கப்பட்டவனுமான அவனை {கீசகனை} மீண்டும் மீண்டும் தடுத்து விரட்டி விட்டாலும், மீண்டும் அவன் {கீசகன்} என்னைப் பார்த்தால், என்னிடம் சீற்றமடைவான். அப்போது நிச்சயம் நான் எனது உயிரை விட்டுவிடுவேன். அறத்தை அடைய முயன்றாலும் (எனது மரணத்தால்) உங்கள் உயர்தகுதி கொண்ட செயல்கள் அனைத்துப் பலனற்றுப் போகும். இப்போது உங்கள் வாக்குறுதிக்குப் பணிந்து நடக்கும் நீங்கள், உங்கள் மனைவியை இழக்க நேரிடும். ஒருவனது மனைவியைக் காப்பதால், ஒருவன் தனது வாரிசுகளைக் காக்கிறான். வாரிசுகள் காக்கப்படுவதால் ஒருவன் தன்னையே காத்துக் கொள்கிறான். ஒருவன் தன்னையே தன் மனைவியிடம் பெற்றுக் கொள்வதால்தான் மனைவி ஜெயா [1] என்று அழைக்கப்படுகிறாள். “எனது கருவறையில் அவர் எப்படிப் பிறவியை அடைவார்?” என்று நினைத்து ஒரு மனைவியும் தனது கணவனைக் காக்க வேண்டும்.

பல்வேறு பிரிவினரின் கடமைகளை விரித்துச் சொல்லும் அந்தணர்கள், க்ஷத்திரியர்களுக்குக் கடமை எதிரிகளை அடக்குவது என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். ஐயோ, கீசகன் நீதிமானான யுதிஷ்டிரர் முன்னிலையிலும், பெரும் பலமிக்கப் பீமசேனரான உமது முன்னிலையிலும் என்னை உதைத்தானே. ஓ! பீமரே, பயங்கரமான ஜடாசுரனிடம் இருந்து நீரே என்னைக் காத்தீர். உமது சகோதரர்களுடன் சேர்ந்து நீரே ஜெயத்ரதனை வீழ்த்தினீர். இப்போது என்னை அவமதித்த இந்தப் பாவியைக் கொல்லும். மன்னனுக்கு {விராடனுக்கு} பிடித்தமானவனாகத் தன்னை ஊகித்துக் கொள்ளும் கீசகன், ஓ! பாரதரே {பீமரே}, எனது துயரத்தையே மேம்படுத்தியிருக்கிறான். எனவே, மண் குடத்தைத் தரையில் மோதி உடைப்பது போல இந்தக் காமாந்தகப் பாதகனை நொறுக்கும். ஓ! பாரதரே {பீமரே}, எனது துயரங்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் அவன் {கீசகன்} மேல் நாளைய சூரியக் கதிர் படுமேயானால், நான் நிச்சயம் (எந்தப் பானத்திலாவது) நஞ்சைக் கலந்து குடித்துவிடுவேன். என்னால் கீசகனை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஓ! பீமரே, அதற்குப் பதில் நான் உம் முன்னிலையில் இறந்து போவதே சிறந்தது” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன கிருஷ்ணை {திரௌபதி}, பீமனின் மார்பில் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள். பிறகு பீமன் அவளை அணைத்துக் கொண்டு, தனது சக்திக்குத் தக்க அவளுக்குச் சமாதானம் கூறினான். துருபதன் மகளான அந்தக் கொடியிடையாளுக்கு {திரௌபதிக்கு}, கடும் வார்த்தைகளின் மூலம் பெரும் ஆறுதல் அளித்த அவன் {பீமன்}, தனது கரங்களைக் கொண்டு, அவளது முகத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தான். கீசகனைக் குறித்து நினைத்துக் கொண்டே, கடைவாய் ஓரத்தை நக்கிய கோபம் கொண்ட பீமன் அந்தப் பெண்ணிடம் {திரௌபதியிடம்} பேசத் தொடங்கினான்.” {என்றார் வைசம்பாயனர்}.

கீசகனை அழைத்த திரௌபதி – விராட பர்வம் பகுதி 22அ-கீசகனை ஆடற்கூடத்திற்கு அழைக்குமாறு பீமன் திரௌபதிக்கு வழிகாட்டுவது; திரௌபதி கீசகனை ஆடற்கூடத்திற்கு அழைப்பது; கீசகன் மகிழ்ந்து இல்லம் திரும்புவது; மீண்டும் திரௌபதி பீமனை மடைப்பள்ளியில் சந்தித்து ஆலோசிப்பது…

பீமன் {திரௌபதியிடம்} சொன்னான், “ஓ! அச்சமுள்ளவளே {திரௌபதி}, நீ சொல்வதைப் போலவே நான் செய்வேன். நான் தற்சமயம் கீசகனை அவனது நண்பர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்வேன். ஓ! இனிய புன்னகை கொண்ட யக்ஞசேனி {திரௌபதி}, துன்ப துயரங்களைக் கைவிட்டு, நாளை மாலை வேளையில் கீசகனைச் சந்திக்க முயற்சி செய். மத்ஸ்ய மன்னன் {விராடன்} கட்டியிருக்கும் ஆடற்கூடத்தைப் பகல் நேரங்களில் பெண்கள் பயன்படுத்துகின்றனர். எனினும் இரவு வேளையில் அவர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். அந்தக் கூடத்தில் மரத்தாலான சிறந்த படுக்கை நல்ல முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இறந்து போன அவனது {கீசகனின்} முப்பாட்டன்களின் ஆவிகளை அங்கே அவனைப் {கீசகனைப்} பார்க்கச் செய்கிறேன். ஆனால், ஓ! அழகியே {திரௌபதியே}, நீ அவனிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது, மற்றவர்கள் அதை வேவு பார்க்காதவாறு பார்த்துக் கொள்” என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதே போல மற்றவர்களிடமும் {மற்ற பாண்டவர்களிடமும்} உரையாடிவிட்டு, துயரத்தில் கண்ணீர் விட்டபடி பொறுமையின்மையினால் ஏற்படும் வலியுடன் அந்த இரவின் விடியலுக்காக அவர்கள் காத்திருந்தனர். இரவு கடந்ததும், காலையில் எழுந்த கீசகன் அரண்மனைக்குச் சென்று திரௌபதியை முதலில் சந்தித்து, “சபையின் தரையில் வீசி மன்னனுக்கு {விராடனுக்கு} முன்பாகவே உன்னை நான் உதைத்தேன். பலமிக்க என்னால் நீ தாக்கப்பட்டால், நீ பாதுகாப்பை அடைய முடியாது. இந்த விராடர் பெயரளவுக்கே மத்ஸ்யர்களின் மன்னனாக இருக்கிறார். இவ்வாட்சியின் படைகளுக்குக் கட்டளையிடும் {நிலையில் இருக்கும்} நானே மத்ஸ்யத்துக்கு உண்மையான தலைவன்.

ஓ! அச்சமுள்ளவளே {மாலினி}, நீ என்னை உற்சாகமாக ஏற்றுக் கொள். நான் உனது அடிமையாக இருப்பேன். ஓ! அழகிய இடைகள் கொண்டவளே, நான் உனக்கு நூறு நிஷ்கங்களை [1] {தங்க நாணயங்களை} உடனே தருவேன். (உன்னைக் கவனித்துக் கொள்வதில்) நூறு ஆண் பணியாட்களையும், நூறு பெண் பணியாட்களையும் ஈடுபடுத்துவேன். பெண் கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேர்களையும் நான் உனக்கு அளிப்பேன். ஓ! அச்சமுள்ள பெண்ணே {மாலினி} நமது கூடுகை {கலவி} நடந்தேறட்டும்” என்றான் {கீசகன்}. அதற்குத் திரௌபதி {கீசகனிடம்}, “ஓ! கீசகரே, எனது நிலையும் அதுதான் என்பதை அறிந்து கொள்ளும். என்னுடனான உமது கலவியை உமது நண்பர்களோ, சகோதரர்களோ அறியக்கூடாது. அந்த ஒப்பற்ற கந்தர்வர்கள் கண்டறிந்துவிடுவார்களோ என்ற பயத்தில் நான் இருக்கிறேன். இந்த வாக்குறுதியை எனக்குக் கொடும். நான் உமக்கு இசைகிறேன்” என்றாள் {திரௌபதி}.(நூற்று எட்டுப் பலம் {பலம் என்றால் கிராம் போன்ற அளவீடாக இருக்க வேண்டும்} நிறைந்த தங்கநாணயம் ஒரு நிஷ்கமாகும்.)

இதைக் கேட்ட கீசகன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய இடைகள் கொண்டவளே {மாலினி}, நீ சொல்வதைப் போலவே நான் செய்வேன். காமதேவனால் பீடிக்கப்பட்டிருக்கும் நான், ஓ! அழகிய காரிகையே {மாலினி}, உன்னுடனான கூடுகைக்காக உனது வசிப்பிடத்திற்குத் தனியே வருவேன். ஓ! வாழைத்தண்டுகளைப் போன்று உருண்டு கூராகச் செல்லும் அழகிய தொடைகள் கொண்டவளே {மாலினி}, அதனால், சூரியனைப் போன்ற பிரகாசமிக்க அந்தக் கந்தர்வர்களுக்கு, இந்த உனது செயல் தெரியவராமல் போகும்” என்றான் {கீசகன்}. அதற்குத் திரௌபதி {கீசகனிடம்}, “மத்ஸ்யர்கள் மன்னரால் {விராடரால்} கட்டப்பட்ட ஆடற்கூடத்திற்கு {நர்த்தன மண்டபத்திற்கு} இருட்டிய பிறகு செல்வீராக. பகலில் அங்கே பெண்கள் ஆடுவதற்காக வருவார்கள், இரவில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள். கந்தர்வர்கள் அந்த இடத்தை அறியமாட்டார்கள். நாமும் அனைத்துக் கண்டனங்களில் இருந்தும் ஐயமின்றித் தப்பலாம்” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கீசகனுடனான தனது உரையாடலை நினைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு}, அரை நாள் கூட ஒரு முழு மாதத்தைப் போல நீண்டதாக இருந்தது. மரணமே சைரந்திரி {திரௌபதி} என்ற உருவமெடுத்து வந்திருக்கிறது என்பதை அறியாத மூடனான கீசகன், வீடு திரும்பி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான். காமத்தால் உணர்விழந்த கீசகன், நறுமணத் தைலங்களாலும், மாலைகளாலும், ஆபரணங்களாலும் தன்னை விரைவாக அலங்கரித்துக் கொண்டான். அகன்ற கண்களைக் கொண்ட காரிகையை {மாலினியை, மனதில்} நினைத்துக் கொண்டே இவற்றையெல்லாம் செய்து கொண்டிருந்த அவனுக்கு {கீசகனுக்கு}, அந்த நாள் முடிவற்றதாகத் தெரிந்தது.

தனது அழகை இனி எப்போதும் கைவிடப்போகும் கீசகனின் அழகு, எரியும் விளக்கின் திரியைப் போல அன்று உயர்வாக இருந்தது. திரௌபதியின் மேல் முழு நம்பிக்கை கொண்ட கீசகன், காமத்தால் உணர்வுகளை இழந்து, எதிர்பார்த்திருக்கும் சந்திப்புக் குறித்த சிந்தனையில் மூழ்கி, அந்த நாள் {கரைந்து} கழிவதைக்கூட உணராமல் இருந்தான். அதேவேளையில், அழகிய திரௌபதி தனது கணவனான குருகுலத்தின் பீமனை அணுகி, மடைப்பள்ளியில் {சமையலறையில்} அவன் {பீமன்} முன்பு நின்றாள்.

அழகிய சுருள் முனைகள் கூடிய கேசம் கொண்ட அந்த மங்கை {திரௌபதி}, அவனிடம் {பீமனிடம்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, நீர் வழிகாட்டியது போலவே, எங்கள் சந்திப்பு ஆடற்கூடத்தில் {நர்த்தனமண்டபத்தில்} நடைபெறும் என்பதை நான் கீசகனுக்குப் புரியும்படி சொல்லியிருக்கிறேன். ஒருவருமில்லாத கூடத்திற்கு இரவில் தனிமையில் அவன் {கீசகன்} வரப்போகிறான். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {பீமரே}, அவனை அங்கேயே கொல்லும். ஓ! குந்தியின் மகனே {பீமரே}, அந்த ஆடற்கூடத்திற்குச் சென்று, ஓ! பாண்டவரே {பீமரே}, தற்பெருமையில் போதை கொண்ட அந்தச் சூத மகனான கீசகனின் உயிரை எடுப்பீராக. தற்பெருமையின் காரணமாக மட்டுமே அந்தச் சூத மகன் {கீசகன்} கந்தர்வர்களை ஏளனமாக நினைக்கிறான். ஓ! அடிப்பவர்களில் சிறந்தவரே {பீமரே}, கிருஷ்ணன் நாகனை (காளியனை) யமுனையில் இருந்து தூக்கியது போல, அவனைப் பூமியில் இருந்து தூக்கும். ஓ! பாண்டவரே {பீமரே}, துன்பத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் எனது கண்ணீரைத் துடைத்து, உமது பெருமையையும், உமது குலத்தின் பெருமையையும் பாதுகாத்து அருளப்பட்டிருப்பீராக” என்றாள் {திரௌபதி}.

அதற்குப் பீமன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய பெண்ணே {திரௌபதி}, உனக்கு நல்வரவு. நீ கொண்டு வரும் நற்செய்தியைத் தவிர, ஓ! அதீத அழுகுடையவளே {திரௌபதி}, எனக்கு வேறு எந்தத் துணையும் தேவையில்லை. ஓ! பேரழகியே {திரௌபதி}, கீசகனுடன் நேரிடப்போகும் மோதலைக் கேட்டு, ஹிடிம்பனை கொன்ற போது உணர்ந்த ஆனந்தத்திற்கு ஈடான மகிழ்ச்சியை நான் அடைகிறேன். உண்மை {சத்தியம்}, எனது சகோதரர்கள், அறம் {தர்மம்} ஆகியவற்றின் மீது ஆணையாக {உறுதியாக}, தேவர்களின் தலைவன் {இந்திரன்}, விருத்திரனைக் கொன்றதைப் போல நான் கீசகனைக் கொல்வேன் என்று உறுதி கூறுகிறேன். கமுக்கமாகவோ {ரகசியமாகவோ}, வெளிப்படையாகவோ நான் கீசகனை நசுக்குவேன். அவன் நிமித்தமாகப் பிற மத்ஸ்யர்கள் மோதலுக்கு வந்தால், அவர்களையும் நான் கொல்வேன். பிறகு துரியோதனனையும் கொன்று, மீண்டும் பூமியை வெல்வேன். குந்தியின் மகனான யுதிஷ்டிரர், மத்ஸ்ய மன்னனுக்கு {விராடனுக்கு} தொடர்ந்து மரியாதை செலுத்தட்டும்” என்றான் பீமன்.

பீமனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி {பீமனிடம்}, “ஓ! தலைவா {பீமரே}, நீர் என்னிடம் ஏற்கனவே உறுதியளித்திருக்கும் உண்மையைக் கைவிடாதிருக்கும் பொருட்டு, ஓ! வீரரே {பீமரே}, கீசகனை கமுக்கமாகக் {ரகசியமாக} கொல்லும்” என்றாள் {திரௌபதி}. அவளுக்கு {திரௌபதிக்கு} உறுதி கூறும் வகையில் பீமன், “கீசகனையும், அவனுடன் சேர்ந்த அவனது நண்பர்களையும் இன்றே, பிறரறியாமல் இரவின் இருட்டில் கொல்வேன். ஓ! களங்கமற்ற பெண்ணே {திரௌபதி}, யானை கூவிளம்பழத்தை [2] {வில்வம்பழம் = vela fruit} நசுக்குவது போல, கிடைத்தற்கரியதை {உன்னை} விரும்பும் தீய கீசகனின் தலையை நசுக்குவேன்” என்றான் {பீமன்}.-வில்வம் நாகவியௌதராஒரு யானை வில்வம்பழத்தைத் தூக்குவது போல”-யானை உண்ட விளாம்பழம்” என்று ஒரு பழமொழி நம்மிடம் உண்டு. யானை ஒரு விளாம்பழத்தை உண்டு, அதைத் தனது கழிவோடு வெளியேற்றினால், அந்த விளாம்பழம் உடையாமல் முழுதாகவே இருக்கும். அந்த பழத்தை எடுத்து உடைத்துப்பார்த்தால் உள்ளே சதையே இருக்காது. அந்த விளாம்பழத்தின் சத்து முழுவதையும் யானை உறிஞ்சிவிட்டிருக்கும்.-கீசகனைப் பீமன் கொல்வதும், கொன்ற பின்பும் யாருக்கும் தெரியவாய்ப்பில்லை என்பதும், வெளியே மாறுபாடு ஏற்படுத்தாமலே உள்ளே உயிர் இருக்காது என்பதுதான் அது)

கீசகனைக் கொன்ற பீமன்! – விராட பர்வம் பகுதி 22ஆ-கீசகனுக்கும் பீமனுக்கு இடையில் நடந்த கைச்சண்டை; பீமன் கீசகனைக் கொன்றது; திரௌபதிக்குச் சமாதானம் கூறி தனது வசிப்பிடம் திரும்பியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வேடம் மாற்றிக் கொண்ட பீமன், இரவில் குறித்த இடத்திற்கு முன்கூட்டியே சென்று அமர்ந்து கொண்டான். தான் தேர்ந்தெடுத்த வகைபோல் தன்னை அலங்கரித்துக் கொண்ட கீசகன், பாஞ்சாலியைச் {திரௌபதியைச்} சந்திக்கும் நம்பிக்கையோடு, குறித்த நேரத்தில் ஆடற்கூடத்திற்கு வந்தான். குறித்த செய்திகளை நினைத்துக் கொண்டே அவன் {கீசகன்} அந்த மண்டபத்துக்குள் நுழைந்தான். ஆழ்ந்த இருளில் மூழ்கி இருந்த அந்தக் கூடத்திற்குள் நுழைந்த தீய ஆன்மா கொண்ட அந்த இழிந்தவன் {கீசகன்}, சற்று முன் அங்கு வந்து ஒரு மூலையில் காத்திருந்த ஒப்பிலா பராக்கிரமம் கொண்ட பீமனின் அருகில் வந்தான்.

கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} இழைக்கப்பட்ட அவமானத்தால் கோபத்தில் எரிந்து கொண்டு, தானே அந்தச் சூதனின் {கீசகனின்} மரணவுரு என்று நினைத்துக் கொண்டு படுக்கையில் படுத்திருந்த பீமனை, சுடர்விட்டெரியும் நெருப்பைப் பூச்சி அணுகுவது போலவோ, சிங்கத்தை அணுகும் மெலிந்த விலங்கைப் போலவோ கீசகன் அணுகினான். காமத்தால் பீடிக்கப்பட்டு, ஆன்மாவும், இதயமும் குதூகலித்து, {திரௌபதி என்று நினைத்துக் கொண்டு} பீமனை அணுகிய கீசகன் புன்னகையுடன், “ஓ! மெலிய கண் புருவங்கள் கொண்டவளே {மாலினி}, நான் ஈட்டியிருந்த பலதரப்பட்ட எண்ணிலடங்கா செல்வங்களை எனது காப்பகத்தில் இருந்து, ஏற்கனவே உனக்குக் கொடுத்துவிட்டேன். நூறு பணிப்பெண்களையும், பல அழகிய ஆடைகளையும் {உனக்காகக்} கொடுத்துவிட்டேன். இவை யாவையும் தவிர, இளமை நிரம்பிய அழகிய பணிப்பெண்களால் அலங்கரிக்கப்பட்டதும், அனைத்து வகை விளையாட்டுகளும் கேளிக்கைகளும் கொண்ட அந்தப்புரத்துடன் கூடிய மாளிகை ஒன்றையும் உனக்காகக் கொடுத்த பிறகே, நான் இங்கே விரைந்து வந்தேன். தீடீரெனப் பெண்கள் அனைவரும், “அழகிலோ ஆடையிலோ உமக்கு நிகரானவர் வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை” என்று என்னைப் புகழ ஆரம்பித்தனர்” என்றான் {கீசகன்}.

இதைக் கேட்ட பீமன் {கீசகனிடம்}, “நீ அழகாய் இருப்பது நன்று; உன்னை நீயே புகழ்ந்து கொள்வதும் நன்று! எனினும், இத்தகு மகிழ்ச்சிகரமான தொடுதலை நீ ஒரு போதும் பெற்றிருக்க மாட்டாய் என்று நான் நினைக்கிறேன். நீ தீவிரத் தொடுதலை அடையப் போகிறாய். மேலும் வீரதீரச் செயல்களுக்கான வழிகளை நீ அறிந்திருக்கிறாய். காதற்கலையில் நீ கைதேர்ந்தவனாக இருக்கிறாய். நீ பெண்களுக்குப் பிடித்தமானவனாகவும் இருக்கிறாய். உன்னைப் போன்றவன் இந்த உலகத்தில் வேறு யாரும் கிடையாது” என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன பயங்கரப் பராக்கிரமம் கொண்ட அந்தக் குந்தியின் மகன் பீமன், திடீரென எழுந்து பெருஞ்சிரிப்புச் சிரித்துக் கொண்டே, “ஓ இழிந்தவனே {கீசகா}, பெரும் மலையைப் போன்ற ஒரு பலமிக்க யானை சிங்கத்தால் தரையில் இழுத்துச்செல்லப்படுவதைப் போல, இன்று உன்னை நான் தரையில் இழுத்துச் செல்வதை உனது சகோதரி {சுதேஷ்ணை} காண்பாள். நீ கொல்லப்பட்டால் சைரந்திரி {திரௌபதி} அமைதியாக வாழ்வாள். அவளது கணவர்களான நாங்களும் அமைதியுடன் வாழ்வோம்” என்று சொன்ன பெரும் பலமிக்கப் பீமன், {மலர்} மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கீசகனின் தலைமுடியைப் பற்றினான். இப்படித் தலைமுடியைப் பிடித்துப் பலமாக இழுக்கப்பட்ட பெரும் பலம் கொண்ட மனிதர்களில் முதன்மையான கீசகன், தனது முடியை விரைவாக விடுவித்துக் கொண்டு, பீமனின் கரங்களைப் பற்றினான்.

பிறகு கோபத்தால் எரிந்த மனிதர்களில் சிங்கங்களான அந்த இருவருக்குள்ளும், வசந்த காலத்தில் பெண்யானைக்காகச் சண்டையிடும் இரு பலமிக்க யானைகள் போலவோ, குரங்குகளில் சிங்கங்களும் சகோதரர்களுமான வாலிக்கும் சூக்ரீவனுக்கும் இடையில் பழங்காலத்தில் நடந்த மோதலைப் போலவோ, கீசக குலத்தின் தலைவனுக்கும் {கீசகனுக்கும்}, மனிதர்களில் சிறந்தவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் கைச்சண்டை நடந்தது. சமமாக வெறியூட்டப்பட்டு, வெற்றியில் ஆவலுடைய அந்தப் போட்டியாளர்கள் இருவரும் ஐந்து தலை பாம்புகளைப் போன்ற தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் நகங்களாலும், பற்களாலும் வேகம் கொண்ட கோபத்தோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பலமிக்கக் கீசகனால், அந்த மோதலில் அவசரமாகத் தாக்கப்பட்டாலும் உறுதிமிக்கப் பீமன் ஓர் அடியேனும் தடுமாறாமல் இருந்தான்.

ஒருவர் அணைப்பில் ஒருவர் கட்டுண்டு, ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டு, பலமிக்கக் காளைகளைப் போல அவர்கள் இருவரும் சண்டையிட்டனர். நகங்களையும், பற்களையும் ஆயுதமாகக் கொண்ட அவர்கள் இருவருக்கிடையில் நடந்த அந்தக் கடும் போர், சீற்றமிகு இரு புலிகளுக்கிடையில் நடந்த மோதலைக் கண்டது போலப் பயங்கரமாக இருந்தது. கோபத்தால் ஒருவரை ஒருவரே கீழே தள்ளிய இருவரும், மதங்கொண்ட இரு யானைகள் போல மோதிக் கொண்டனர். பிறகு பலமிக்கப் பீமன் கீசகனைப் பிடித்தான். அப்போது பலமிக்க மனிதர்களில் முதன்மையான கீசகன், பீமனை வன்முறையுடன் கீழே தள்ளினான். அந்த இரு போட்டியாளர்களும் தங்கள் கரங்களின் மோதலால் மூங்கிலைப் பிளக்கும் பெரும் ஒலியை ஏழுப்பினர்.

பிறகு விருகோதரன் {பீமன்} பெரும் பலத்துடன் கீசகனை அறைக்குள் கீழே தள்ளி, புயற்காற்று மரத்தைத் தூக்கி வீசுவது போல, அவனை {கீசகனை} மூர்க்கமாகத் தூக்கி எறிய ஆரம்பித்தான். இப்படி அந்தப் போரில் பலமிக்கப் பீமனால் தாக்கப்பட்ட கீசகன் பலமிழந்து போய் நடுங்கத் தொடங்கினான். எனினும், அவன் {கீசகன்}, தனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு அந்தப் பாண்டவனிடம் {பீமனிடம்} {சிக்காமல்} இழுபறி செய்தான். பிறகு, பீமனைத் தாக்கி, அவனை லேசாக அசையச் செய்த பலமிக்கக் கீசகன், தனது முட்டிகளால் தாக்கி அவனைத் {பீமனைத்} தரையில் சாய்த்தான். பலமிக்கக் கீசகனால் {தரையில்} சாய்க்கப்பட்ட பீமன், கையில் கதாயுதம் கொண்ட யமனைப் போல விரைவாக எழுந்தான்.

இப்படியே அந்தப் பலமிக்கச் சூதனும் {கீசகனும்}, அந்தப் பாண்டவனும் {பீமனும்}, தங்கள் பலத்தால் போதையுண்டு, ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்து, நள்ளிரவில், அந்தத் தனிமையான இடத்தில் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு சண்டையிட்டனர். அப்படி அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபத்தால் கர்ஜித்த போது, வலுவான அந்தச் சிறந்த மாளிகை ஒவ்வொரு நொடியும் குலுங்கத்தொடங்கியது. பலமிக்கப் பீமனால் மார்பில் அறையப்பட்ட கீசகன் கோபத்தால் நிறைந்தாலும் ஓர் அடியும் நகர இயலவில்லை. பூமியால் தாங்கிக் கொள்ள முடியாது அந்தத் தாக்குதலை ஒரு நொடி தாங்கிய அந்தச் சூதன் {கீசகன்}, பீமனின் பலத்துக்கு அடங்கிக் கட்டுப்பட்டான்.

அவன் {கீசகன்} பலவீனமடைவதைக் கண்ட பெரும் பலம் கொண்ட பீமன் அவனைப் பலவந்தமாகத் தனது மார்பை நோக்கி இழுத்து, கடுமையாக அழுத்தத் தொடங்கினான். கோபத்தால் கடும் மூச்சு விட்டபடியே அந்த வெற்றியாளர்களில் சிறந்தவனான விருகோதரன் {பீமன்}, கீசகனின் தலைமயிரைப் பலவந்தமாகப் பற்றினான். அப்படிக் கீசகனைப் பிடித்த பீமன், பெரும் விலங்கைக் கொன்ற பசிகொண்ட புலியைப் போலக் கர்ஜித்தான். மிகவும் களைப்படைந்த அவனைக் {கீசகனைக்} கண்ட விருகோதரன், ஒரு விலங்கைக் கயிறால் கட்டுவதைப் போலத் தனது கரங்களால் கடுமையாகக் கட்டி அணைத்தான். பிறகு, உடைந்த எக்காளத்தைப் [1] போலப் பயத்தால் கதறிய கீசகன் உணர்வற்றதும், பீமன் அவனை நீண்ட நேரம் சுழற்றினான்.

கிருஷ்ணையின் {திரௌபதியின்} கோபத்தைத் தணிக்கும்பொருட்டு, விருகோதரன் {பீமன்}, கீசகனின் தொண்டையைத் தனது கைகளால் பிடித்து நசுக்கத் தொடங்கினான். பிறகு தனது முட்டிகளைக் கொண்டு கீசகர்களில் இழிந்த அவனை {கீசகனை} இடுப்பில் தாக்கினான். அவனது {கீசகனின்} உடலில் இருந்த அங்கங்கள் எல்லாம் துண்டுகளாக நொறுங்கின. அவனது {கீசகனின்} கண் இமைகள் மூடிக் கொண்டன. ஒருவன் விலங்கைக் கொல்வதைப் போல விருகோதரன் {பீமன்} அவனைக் {கீசகனைக்} கொன்றான். முழுவதும் அசைவற்றிருந்த கீசகனைக் கண்ட பாண்டுவின் மகன் {பீமன்} அவனைத் தரையில் உருட்டத் தொடங்கினான்.

“சைரந்திரியின் {திரௌபதியின்} அருகில் இருந்த இந்த முள்ளை {கீசகனை}, எங்கள் மனைவியைக் களங்கப்படுத்த எண்ணிய இந்தப் பாவியைக் கொன்றதால், நான் எனது சகோதரர்களுக்குப் பட்ட கடனில் இருந்து விடுபட்டு முழு அமைதியை அடைந்தேன்” என்றான். இதைச் சொன்ன அந்த மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்} கோபத்தில் கண்கள் சிவக்க, மேனியில் இருந்து ஆடைகளும் ஆபரணங்களும் வீசி எறியப்பட்டு, கண்கள் உருள, இன்னும் உடல் நடுங்கிக் கொண்டிருந்த கீசகன் மீதிருந்த தனது பிடியை விட்டான்.

பிறகு பலமிக்க மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்}, தனது கரங்களைப் பிசைந்து கொண்டும், கோபத்தால் தனது உதடுகளைக் கடித்துக் கொண்டும், எதிரியை {கீசகனை} மீண்டும் மீண்டும் தாக்கி, பினகையைத் தாங்கியிருப்பவன் {சிவன்}, வேள்விக்காக மானை உருவமற்ற ஒன்றாக்க, அது தனது கோபத்தில் இருந்து தப்புவதற்காக எப்படிக் குறைத்தானோ, அதே போலக் கீசகனின் கரங்கள், கால்கள், கழுத்து தலை ஆகியவற்றை அவனது {கீசகனின்} உடலுக்குள்ளேயே அழுத்தித் திணித்தான் {பீமன்}. அனைத்து உறுப்புகளையும் அப்படித் திணித்து, அவனை {கீசகனை} வெறும் சதைப் பிண்டமாக்கிய வலிமைமிக்கப் பீமன், அதைக் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} காட்டினான்.

பிறகு பெரும் சக்தி கொண்ட அந்த வீரன் {பீமன்}, அனைத்துப் பெண்களிலும் முதன்மையான திரௌபதியிடம், “பாஞ்சால இளவரசியே {திரௌபதியே} வா, வந்து இந்தக் காமாந்தகனான இழிந்தவன் எப்படி ஆனான் என்பதைப் பார்!” என்றான். இப்படிச் சொன்ன பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பீமன் தனது காலால் அந்த இழிந்த பாதகனின் {கீசகனின்} உடலை அழுத்தினான். பிறகு ஒரு பந்தத்தை ஏற்றி திரௌபதியிடம் கீசகனின் உடலைக் காட்டிய அந்த வீரன் {பீமன்} அவளிடம் {திரௌபதியிடம்}, “ஓ! அழகான சுருள் முடி கொண்டவளே {திரௌபதி}. சிறந்த நிலையில் அனைத்து அறங்களுடன் இருக்கும் உன்னிடம் கோரிக்கை வைக்கும் அனைவரும் கீசகன் கொல்லப்பட்டது போலவே, ஓ! அச்சமுள்ளவளே, என்னால் கொல்லப்படுவார்கள்” என்றான் {பீமன்}.

கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} ஏற்புடைய அந்தக் கடினமான பணியைச் சாதித்தவன் {பீமன்}, கீசகன் கொல்லப்பட்டதும் தனது கோபத்தைத் தணித்துக் கொண்டு, துருபதன் மகளான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} விடைபெற்றுக் கொண்டு விரைந்து மடைப்பள்ளிக்குத் திரும்பினான். பெண்களில் சிறந்த திரௌபதியும், கீசகனைக் கொல்லச்செய்த பிறகு துக்கம் அகன்று பெரும் மகிழ்ச்சியை அடைந்தாள்.

பிறகு அந்த ஆடற்கூடத்தின் காவலாளிகளிடம் சென்று {திரௌபதி}, “வாருங்கள், பிற மனிதர்களின் மனைவியைக் களங்கப்படுத்தியக் கீசகன், எனது கந்தர்வக் கணவர்களால் கொல்லப்பட்டுக் கீழே கிடப்பதைப் பாருங்கள்” என்றாள். இந்த வார்த்தைகளைக் கேட்ட காவலாளிகள் கையில் தீப்பந்தங்களுடன், ஆயிரக்கணக்கில், அந்த ஆடற்கூடத்திற்கு வந்தனர். பிறகு அந்த அறையை அடைந்து, ரத்தத்தில் நனைந்து தரையில் வீசப்பட்டுக் கிடக்கும் உயிரற்ற கீசகனைக் கண்டனர்.

கரங்களற்றும், கால்களற்றும் இருக்கும் அவனைக் {கீசகனைக்} கண்டு அவர்கள் அனைவரும் துயரம் கொண்டனர். அப்படி அவர்கள் கீசகனைக் கண்டபோது அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். கீசகனை வீழ்த்திய மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலைக் கண்ட அவர்கள், “இவனது கழுத்து எங்கே? இவனது கால்களெங்கே?” என்று கேட்டனர. இந்த நிலையில் கிடந்த அவனைக் {கீசகனைக்} கண்ட அவர்கள், அவன் {கீசகன்} கந்தர்வனால் கொல்லப்பட்டான் என்றே தீர்மானித்தனர்.

கீசகர்களைக் கொன்ற பீமன்! – விராட பர்வம் பகுதி 23-கீசகனின் உறவினர்கள் வந்து கீசகனின் உடலைக் கண்டு அழுவது; திரௌபதியின் மீது கோபம் கொண்டு, கீசகனோடு சேர்த்து அவளையும் தகனம் செய்வது என்று முடிவு செய்வது; விராடனிடம் அனுமதி பெற்று திரௌபதியைக் கட்டி சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்வது; திரௌபதி தனது கணவர்களைச் சங்கேத மொழியில் அழைப்பது; பீமன் வந்து திரௌபதியைக் காப்பது; பீமனால் கீசகர்கள் கொல்லப்படுவது

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு கீசகனின் உறவினர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்து, அவனைக் {கீசகனைக்} கண்டு, எல்லாப்புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டு உரத்த ஒலி கொண்டு அழுதனர். காய்ந்த நீர் நிலையில் இருந்து இழுத்துவரப்பட்ட ஆமையைப் போன்று, அனைத்து அங்கங்களும் சிதைக்கப்பட்ட கீசகனைக் கண்ட அவர்கள் அனைவரும் மிகுந்த அச்சமடைந்தனர். அவர்களது உடல் முடிகள் நுனி வரை எழும்பி நின்றன. இந்திரனால் நசுக்கப்பட்ட தானவனைப் போல, பீமனால் நசுக்கப்பட்ட அவனைக் {கீசகனைக்} கண்டனர். இறுதிச் சடங்குகளுக்காக அவனை {கீசகனை} வெளியே கொண்டு வர முனைந்தனர்.

இப்படி ஒன்றாகக் கூடிய சூத குலத்தைச் சேர்ந்த அந்த மனிதர்கள், தூணின் மீது சாய்ந்து கொண்டிருந்த களங்கமற்ற அங்கங்கள் கொண்ட கிருஷ்ணையைத் {திரௌபதியை} தங்கள் கடுங்கண்ணால் கண்டார்கள். அங்குக் கூடியிருந்த கீசகர்கள் அனைவரும், “எவளுக்காகக் கீசகன் தனது உயிரை இழந்தானோ, அந்தக் கற்பற்ற இவள் {மாலினி} கொல்லப்படட்டும். அல்லது இவளை இங்கே கொல்லாமல், இவள் மீது காமுற்ற அவனுடன் {கீசகனுடன்} சேர்த்து இவளையும் தகனம் செய்வோம். இறந்து போன அந்தச் சூதனின் மகனுக்கு {கீசகனுக்கு}, அனைத்து வகையிலும் ஏற்புடைய இக்காரியத்தை நாம் செய்வதே நமக்குத் தகும்” என்றனர்.

பிறகு அவர்கள் விராடனிடம் {சென்று}, “இவள் {சைரந்திரியான மாலினி} பொருட்டே கீசகன் உயிரை இழந்தான். எனவே, இவளோடு {இந்த மாலினியோடு} சேர்த்து அவன் {கீசகன்} தகனம் செய்யப்படட்டும். இதற்கு அனுமதி அளிப்பதே உமக்குத் தகும்” என்றனர். இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் விராடன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தச் சூதர்களின் பராக்கிரமத்தை நன்கு அறிந்ததால், சூத மகனுடன் {கீசகனுடன்} சேர்த்து சைரந்திரியை எரிப்பதற்கு அனுமதி கொடுத்தான். அதன்பிறகு, உணர்வை இழந்து பயத்துடனும் தாமரை போன்ற கண்களுடனும் இருந்த கிருஷ்ணையை {திரௌபதியை} அணுகி அவளை வன்முறையுடன் அவர்கள் {கீசகர்கள்} பற்றினர். மெல்லிய இடுப்புக் கொண்ட அந்தப் பெண்ணைக் {திரௌபதியைக்} கட்டி, பாடையில் ஏற்றி, சுடுகாட்டை நோக்கி பெரும் சக்தியுடன் புறப்பட்டனர்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி அந்தச் சூத குலத்தின் மகன்களால், சுடுகாட்டை நோக்கி பலவந்தமாகத் தூக்கிச் செல்லப்பட்டவளும், தனது தலைவர்களின் {பாண்டவர்களின்} பாதுகாப்பின் கீழ் வாழ்பவளுமான களங்கமற்ற கற்புடைய கிருஷ்ணை {திரௌபதி} தன் கணவர்களின் உதவியை நாடி உரத்த ஒலியுடன், “ஓ!, ஜயரும், ஜயந்தரும், விஜயரும், ஜயத்சேனரும், ஜயத்பாலரும் எனது வார்த்தைகளைக் கேட்பீராக. இந்தச் சூதர்கள் என்னைக் கொண்டு போகிறார்கள். யாருடைய தேர் சக்கரச் சடசடப்பு உரத்த ஒலி கொண்டதாகவும், யாருடைய வில்லின் நாணொலி பெரும்போருக்கு மத்தியிலும் இடியெனக் கேட்கப்படுவதாகவும் இருக்குமோ, கரங்களில் வேகம் கொண்ட அத்தகைய சிறப்புமிக்கக் கந்தர்வர்களே, என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள். இந்தச் சூதர்கள் என்னைக் கொண்டு போகிறார்கள்!” என்று கதறினாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணையின் {திரௌபதியின்} இந்தச் சோகமான வார்த்தைகளையும், புலம்பலையும் கேட்ட பீமன், ஒரு நிமிடமும் சிந்தித்துப் பார்க்காமல் தனது படுக்கையில் இருந்து எழுந்து, “ஓ! சைரந்திரி, நீ பேசிய வார்த்தைகளை நான் கேட்டுவிட்டேன். எனவே, ஓ! அச்சமுற்றவளே, அந்தச் சூதர்களிடம் இனி உனக்கு அச்சம் தேவையில்லை” என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன பெரும்பலமிக்கக் கரங்கள் கொண்ட பீமன் அந்தக் கீசகர்களைக் கொல்ல விரும்பி, தனது உடலைப் பெருக்கினான். பிறகு கவனமாகத் தனது ஆடையை மாற்றிக் கொண்டு, {நேர்வழியல்லாத} குறுக்கு வழியில் {wrong way = தவறான வழியில்} அரண்மனையிலிருந்து வெளியே சென்றான். ஒரு மரத்தின் உதவியைக் கொண்டு மதில் சுவர் ஏறிய அவன் {பீமன்}, கீசகர்கள் சென்ற சுடுகாட்டை நோக்கிச் சென்றான். சுவரைத் தாண்டி வெளியே இருந்த அந்தச் சிறந்த நகரத்திற்குள் வந்த பீமன், அந்தச் சூதர்கள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சிதையை நோக்கிச் சென்ற அவன் {பீமன்}, பெரிய கிளைகளைக் கொண்டு, மேலே வாடிப் போய், பனைமர உயரமிருந்த ஒரு பெரிய மரத்தைக் கண்டான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்} பத்து வியாமங்கள் அளவு கொண்ட அந்த மரத்தைத் தனது கரங்களால் பற்றி, யானையைப் போல அதை வேரோடு பிடுங்கி, தனது தோள்களில் வைத்துக் கொண்டான். பிறகு பத்து வியாமங்கள் [1] அளவு கொண்ட கிளைகளும் தண்டும் கொண்ட அந்த மரத்தை எடுத்துக் கொண்ட அந்தப் பெரும் வீரன் {பீமன்}, கையில் கதாயுதத்துடன் செல்லும் யமனைப் போலச் சூதர்களை நோக்கி விரைந்தான். அப்படி அவன் மூர்க்கமாக விரைந்ததால் [2] ஆலமரங்களும், அரச மரங்களும், பலாச மரங்களும் முறிக்கப்பட்டுப் பூமியில் கொத்துக் கொத்தாக விழுந்தன.(வியாமம் என்பது கையின் நுனியில் இருந்து (கை நடு விரலின் நுனியில் இருந்து) தோள் முடிவு வரை உள்ள ஒரு அளவீடாகும். ஒரு வியாமம் 84 அங்குலங்கள் என்றும், 5 அடி 3 அங்குலங்கள் நீளம் கொண்டது என்றும் கூட சொல்வார்கள்.)

சீற்றத்துடன் வரும் சிங்கத்தைப் போலத் தங்களை நோக்கிவரும் கந்தர்வனைக் {பீமனைக்} கண்ட அந்தச் சூதர்கள் அனைவரும் மிகவும் கவலை கொண்டு, பயத்தால் நடுங்கி பீதியடைந்தனர். பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர், “அதோ, கையில் மரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பலமிக்கக் கந்தர்வன் கோபத்துடன் இங்கே வருகிறான். எனவே, யாரால் நமக்கு இந்த ஆபத்து எழுந்திருக்கிறதோ, அந்தச் சைரந்திரியை விடுவிப்போம்” என்று சொன்னார்கள். அந்த மரம் பீமசேனனால் வேரோடு பிடுங்கப்பட்டதைக் கண்ட அவர்கள், திரௌபதியை விடுவித்துவிட்டு, நகரத்தை நோக்கி மூச்சுவிடாமல் ஓடினர்.

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேயனே}, அப்படி அவர்கள் ஓடுவதைக் கண்ட வாயுத்தேவனின் பெரும்பலமிக்க மகனான பீமன்,  அந்த மரத்தைக் கொண்டு, தானவர்களைக் கொல்லும் வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரனைப்} போல அவர்களில் நூற்றைந்து {105} பேரை யமனின் வசிப்பிடத்துக்கு அனுப்பினான். பிறகு திரௌபதியை அவளது கட்டுகளில் இருந்து விடுவித்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளுக்கு {திரௌபதிக்கு} ஆறுதல் கூறினான். கவலையுற்றுக் கண்ணீரில் குளித்த {நனைந்த} முகத்துடன் இருந்த பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்}, பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான கட்டுக்கடங்காத விருகோதரன் {பீமன்}, “ஓ! அச்சமுற்றவளே {திரௌபதி}, “எந்தக் காரணமுமின்றி உனக்குத் தீங்கிழைப்பவர்கள் இப்படியே கொல்லப்படுவார்கள். ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நீ நகரத்திற்குத் திரும்பு. இனி உனக்கு எந்தப் பயமும் வேண்டாம். நான் வேறு வழியில் விராடனின் மடைப்பள்ளிக்குச் செல்கிறேன்” என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த நூற்றைந்து கீசகர்கள் கொல்லப்பட்டனர். தரையில் கிடந்த அவர்களது சவங்களைக் காண, புயலால் வேரோடு பிடுங்கப்பட்டு மரங்கள் பெருங்காட்டில் கிடப்பது போலத் தெரிந்தது. இப்படியே நூற்றைந்து கீசகர்கள் வீழ்ந்தனர். ஏற்கனவே கொல்லப்பட்ட விராடனின் தளபதியோடு {கீசகனோடு} சேர்த்து, கொல்லப்பட்ட சூதர்களின் எண்ணிக்கை நூற்றாறு {106} ஆகும். கூடியிருந்த ஆண்களும் பெண்களும் இந்த அற்புத சாதனையைக் கண்டு மலைப்பால் நிறைந்தனர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அங்கு நின்ற ஒவ்வொருவரும் {அந்நேரத்தில்} பேசும் சக்தியை இழந்தனர்.” {என்றார் வைசம்பாயனர்}.

சைரந்திரியை விசாரித்த பிருஹந்நளை! – விராட பர்வம் பகுதி 24-சைரந்திரியை அரண்மனைக்குள் சேர்க்க வேண்டாம் என்றும், அவளை நாட்டை விட்டு விரட்டுங்கள் எனவும் குடிமக்கள் விராடனிடம் சொன்னது; விராடன் சுதேஷ்ணையிடம் சைரந்திரியை அவள் விரும்பும் இடத்திற்குச் செல்லச் சொல்லுமாறு கட்டளையிட்டது; திரௌதி விராடனின் சமையலறையில் பீமனைக் கண்டு பேசுவது; பிருஹந்நளையாக இருந்த அர்ஜுனன் சைரந்திரியாக இருந்த திரௌபதியிடம் அவள் எப்படி விடுதலை அடைந்தாள் என்பதைக் கேட்பது; சுதேஷ்ணை சைரந்திரியிடம் அவள் விரும்பிய இடத்திற்குச் செல்லச் சொல்வது; சைரந்திரி பதிமூன்றுநாள் பொறுக்குமாறு கேட்பது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சூதர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட குடிமக்கள் மன்னனிடம் {விராடனிடம்} சென்று நடந்தது அத்தனையும் சொன்னார்கள். அவர்கள், “ஓ! மன்னா, பலம்பொருந்திய சூதர் மகன்கள் அனைவரும் கந்தர்வர்களால் கொல்லப்பட்டனர். உண்மையில், அவர்கள் அனைவரும் இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போலப் பூமியில் சிதறிக் கிடக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட சைரந்திரியும் {மாலினியும்}, நகரத்தில் இருக்கும் உமது அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள்.

ஐயோ, ஓ! மன்னா {விராடா}, அந்தச் சைரந்திரி வருவது உமது மொத்த நாட்டுக்கும் ஆபத்தாகும். சைரந்திரியோ பெரும் அழகு படைத்தவளாக இருக்கிறாள்; கந்தர்வர்களும் அதீத பலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் இயற்கையாகவே மனிதர்கள் {அவளிடம்} காமங்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! மன்னா {விராடா}, சைரந்திரிக்குச் செய்யப்பட்ட அநீதிகளின் விளைவாக உனது நாடு அழிவைச் சந்திக்கமால் இருக்கத் தாமதமில்லாமல் நடவடிக்கை எடு” என்றனர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கூட்டத்தின் தலைவன் விராடன் அவர்களிடம், “அந்தச் சூதர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள்! ரத்தினங்கள் மற்றும் தாராளமான நறுமணத்தைலங்களுடன் கீசகர்கள் அனைவரும் சுடர்வெட்டெரியும் ஒரே சிதையில் தகனம் செய்யப்படட்டும்!” என்றான்.

பிறகு அச்சம் நிரம்பிய மன்னன் {விராடன்} தனது ராணியான சுதேஷ்ணையிடம், “சைரந்திரி திரும்பி வரும்போது, அவளிடம் நீ “ஓ! அழகிய முகம் கொண்ட சைரந்திரி, உனக்கு மங்களம் உண்டாகட்டும். நீ எங்கு விரும்புகிறாயோ அங்குச் செல்லலாம். ஓ! அழகிய இடை கொண்டவளே {சைரந்திரி}, ஏற்கனவே கந்தர்வர்கள் கரங்களில் பெற்ற தோல்வியால் மன்னர் அச்சமுற்றிருக்கிறார். நீ கந்தர்வர்களின் பாதுகாப்பில் இருக்கும்போது, உன்னிடம் தனிப்பட்ட முறையில் இதைச் சொல்ல எனக்குத் துணிவில்லை. எனினும் ஒரு பெண் உன்னைப் புண்படுத்த முடியாது என்பதால் தான், நான் ஒரு பெண்ணின் மூலம் உன்னிடம் இவற்றைச் சொல்கிறேன். {அதாவது பெண்கள் உன்னிடம் சொல்வதில் குற்றமில்லை. அதனால் பெண்ணான என் மனைவி மூலம் உன்னிடம் சொல்கிறேன்}” என்ற எனது இந்த வார்த்தைகளை அவளிடம் சொல்” என்றான் {விராடன் சுதேஷ்ணையிடம்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சூதர்களைக் கொன்ற பிறகு பீமசேனனால் விடுவிக்கப்பட்டவளும், புத்திக்கூர்மையும் இளமையும் கொண்டவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, தன் அனைத்து அச்சங்களில் இருந்தும் விடுபட்டு, தன் அங்கங்களையும் ஆடைகளையும் நீரில் கழுவிக் கொண்டு, புலியால் பயமுறுத்தப்பட்ட வெள்ளாடு போல நகரத்தை நோக்கிச் சென்றாள். அவளைக் கண்ட குடிமக்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, கந்தர்வர்கள் மேல் கொண்ட பயத்தின் காரணமாக அனைத்துத் திசைகளிலும் ஓடினர். சிலர் தங்கள் கண்களை மூடிக் கொள்ளும் அளவுக்குச் சென்றனர்.

பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மடைப்பள்ளியின் வாயிலில் மதங்கொண்ட பெரும் யானை போல இருக்கும் பீமசேனனை, அந்தப் பாஞ்சால இளவரசி {திரௌபதி} கண்டாள். ஆச்சரியத்தால் அகன்ற விழிகளுடன் அவனை {பீமசேனனைக்} கண்ட திரௌபதி, தங்கள் இருவருக்கு மட்டுமே புரியும் வார்த்தைகளில், “என்னைக் காப்பாற்றிய கந்தர்வர்களின் இளவரசரை வணங்குகிறேன்” என்றாள். அவளது {திரௌபதியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட பீமன், “இதுவரை யாருக்குக் கீழ்ப்படிந்து இந்த நகரத்தில் அம்மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அவளது {உனது} இந்த வார்த்தைகளைக் கேட்டு, தங்கள் கடனில் இருந்து அவர்கள் விடுபட்டத்தாகக் கருதி இனி இங்கே இருப்பார்கள்” என்றான். [1]

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அவள் {திரௌபதி}, ஆடற்கூடத்தில் மன்னன் விராடனின் மகள்களுக்கு ஆடற்கலை கற்பித்துக்கொண்டிருந்த வலிய கரங்கள் கொண்ட தனஞ்சயனைக் {பிருஹந்நளையாக இருந்த அர்ஜுனனைக்} கண்டாள். அப்பாவியாக இருந்தாலும் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி} அங்கே வந்தபோது, ஆடற்கூடத்தில் இருந்து அர்ஜுனனுடன் வெளியே வந்த காரிகைகள், அவளை {திரௌபதியை} அணுகினர். பிறகு அவர்கள், “ஓ! சைரந்திரி {மாலினி}, நற்பேறாலேயே நீ உனது ஆபத்துக்களில் இருந்து வெளியேறினாய். நற்பேறாலேயே நீ பாதுகாப்பாகத் திரும்பியிருக்கிறாய். மேலும், நீ அப்பாவியாக இருந்தாலும் உனக்குத் தீங்கிழைத்த சூதர்கள் உனது நற்பேறாலேயே கொல்லப்பட்டனர்” என்றார்கள்.

இதைக் கேட்ட பிருஹந்நளை {அர்ஜுனன் – திரௌபதியிடம்}, “ஓ! சைரந்திரி, நீ எப்படி விடுவிக்கப்பட்டாய்? அந்தப் பாவிகளான இழிந்தவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர்? இவை அனைத்தையும் நடந்தவாறே உன்னிடம் அறிய விரும்புகிறேன்” என்று கேட்க, அதற்குச் சைரந்திரி {திரௌபதி – அர்ஜுனனிடம்}, “ஓ! அருளப்பட்ட பிருஹந்நளையே, எப்போதும் பெண்களின் அறைகளில் மகிழ்ச்சியாக நாட்களைக் கடத்தும் உனக்கு, சைரந்திரியின் விதியில் கவலை கொள்ளச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என்ன இருக்கிறது? சைரந்திரி தாங்கிக் கொள்ள வேண்டிய கவலைகள் ஏதும் உனக்கில்லை! அதனால்தான் துக்கத்திலிருக்கும் என்னிடம் பரிகாசத்துடன் நீ இப்படிக் கேட்கிறாய்” என்றாள் {திரௌபதி}.

அதற்குப் பிருஹந்நளை {அர்ஜுனன் திரௌபதியிடம்}, “ஓ! அருளப்பட்டவளே, பிருஹந்நளைக்கும் தனக்கேயுரிய இணையற்ற துக்கங்கள் இருக்கின்றன. அவள் விலங்கைப் {[அ] அறிவிலியைப்} போலத் தாழ்ந்த நிலையை அடைந்திருக்கிறாள். ஓ! பெண்ணே {திரௌபதி}, இதை நீ புரிந்து கொள்ள வில்லை. நான் உன்னுடன் வாழ்ந்திருக்கிறேன். நீயும் எங்களுடன் வாழ்ந்திருக்கிறாய். எனவே, நீ துன்பத்தால் பாதிக்கப்பட்டால், ஓ! அழகான இடைகள் கொண்டவளே {திரௌபதி}, யார்தான் அதை உணரமாட்டார்கள்? ஆனால் எவராலும் மற்றவரின் இதயத்தை முழுமையாகப் படிக்க முடியாது. எனவே, ஓ! இனிமையாளனவளே {திரௌபதி}, நீ எனது இதயத்தை அறியவில்லை” என்றாள் {பிருஹந்நளை}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு திரௌபதி அந்தப் பெண்களுடன் அரச வசிப்பிடத்துக்குள் நுழைந்து சுதேஷ்ணையின் முன் தோன்ற விரும்பினாள். ராணியின் {சுதேஷ்ணையின்} முன்பு அவள் {திரௌபதி} வந்தபோது, அந்த விராடனின் மனைவி {சுதேஷ்ணை}, மன்னனுடைய கட்டளையின் பேரில், “ஓ! சைரந்திரி, நீ எங்குச் செல்ல விரும்புகிறாயோ அங்கே செல். உனக்கு மங்களம் உண்டாகட்டும், கந்தர்வர்கள் கைகளில் ஏற்பட்ட இந்தத் தோல்வியைக் கண்டு மன்னர் {விராடர்} அஞ்சுகிறார். ஓ! அழகிய கண் புருவங்கள் கொண்டவளே {மாலினி}, நீ இளமையுடனும், பூமியில் இணையற்ற அழகுடனும் இருக்கிறாய். மறுபுறம் ஆண்களின் விருப்பத்துக்குகந்த பொருளாகவும் இருக்கிறாய். கந்தர்வர்களும் அதீதக் கோபக்காரர்களாக இருக்கிறார்கள்” என்றாள்.

அதற்குச் சைரந்திரி {திரௌபதி சுதேஷ்ணையிடம்}, “ஓ! அழகான பெண்ணே {சுதேஷ்ணை}, இன்னும் பதிமூன்று {13} நாட்களுக்கு மட்டும் மன்னர் {விராடர்} என்னைப் பொறுத்துக் கொள்ளட்டும். கந்தர்வர்களும் இதற்கு மிகவும் இணக்கமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. பிறகு, அவர்கள் {கந்தர்வர்கள்} தங்களை வெளிப்படுத்திக் கொண்டு, விராடருக்கு ஏற்புடையதைச் செய்வார்கள். இப்படிச் செய்வதால், தனது நண்பர்களுடன் கூடிய மன்னர் {விராடர்} பெரிய நன்மை அடைவார் என்பதில் சந்தேகமில்லை” என்றாள் {திரௌபதி}.

துரியனைச் சந்தித்த ஒற்றர்கள்! – விராட பர்வம் பகுதி 25-துரியோதனனால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் பாண்டவர்களைக் கண்டடைய முடியாமல் ஹஸ்தினாபுரம் திரும்புவது; குருக்களின் எதிரியான கீசகன் கந்தர்வர்களால் கொல்லப்பட்டான் என்ற செய்தியை ஒற்றர்கள் துரியோதனனுக்குச் சொல்வது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, கீசகனும் அவனது தம்பிகளும் கொல்லப்பட்டதைப் பயங்கரமான சாதனையாக நினைத்த மக்கள் ஆச்சரியத்தில் நிறைந்தனர். மேலும், நகரம் மற்றும் மாகாணங்களில், மன்னனின் வல்லவன் {பீமன்} மற்றும் கீசகன் ஆகிய இரு வலிமைமிக்க வீரர்களின் வீரத்தைக் குறித்துப் பொதுவாக வதந்திகள் பரவியிருந்தன. “எனினும், தீய கீசகன், மனிதர்களை எப்போதும் ஒடுக்குபவனே! பிற மனிதர்களின் மனைவிகளை அவமதிப்பவனே! அதற்காகவே அந்தத் தீய பாவகர ஆன்மா {கீசகன்} கந்தர்வர்களால் கொல்லப்பட்டான்”. இப்படியே, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பகைவர் கூட்டத்தைக் கொல்பவனான ஒப்பற்ற கீசகனைக் குறித்து மாகாணத்துக்கு மாகாணம் மக்கள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்.

அதே வேளையில், திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} நியமிக்கப்பட்டிருந்த ஒற்றர்கள், பல்வேறு கிராமங்களையும், நகரங்களையும், நாடுகளையும், தங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்த பல இடங்களையும் குறித்தபடி தேடி முடித்து, தாங்கள் அறிந்த ஒரே ஒரு செய்தியில் மனநிறைவு கொண்டு நாகரூபத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினார்கள்.

பிறகு திருதராஷ்டிரன் மகனான குரு குலத்தின் மன்னன் துரியோதனன் தனது அவையில் துரோணர், கர்ணன், கிருபர், உயர் ஆன்ம பீஷ்மர், தனது தம்பிகள், பெரும் வீரர்களான திரிகார்த்தர்கள் ஆகியோரோடு அமர்ந்திருந்த போது, அவனிடம் {துரியோதனனிடம் அவனது ஒற்றர்கள்}, “ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனரே}, பெரும் வனத்தில் பாண்டுவின் மகன்களைத் தேடுவதில் நாங்கள் மிகுந்த அக்கறை செலுத்தினோம். மான்கள் மற்றும் பிற விலங்குகள் நிறைந்ததும், மரங்கள் மற்றும் வித்தியாசமான வகைகளிலான கொடிகள் நிறைந்ததுமான ஏகாந்தமான வனாந்தரங்களில் நாங்கள் {அவர்களைத்} தேடினோம்.

படர்ந்த காடுகள், தாவரங்கள், அனைத்து வகைக் கொடியினங்கள் ஆகியவை நிறைந்த சூழல் கொண்ட இடங்களில் தேடினோம். ஆனால், அடக்க முடியாத சக்தி கொண்ட பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்} சென்ற பாதையைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்றோம். இந்த இடங்களிலும், மேலும் பல இடங்களிலும் அவர்களது பாதச்சுவடுகளைத் தேடினோம். ஓ! மன்னா {துரியோதனா}, அடைவதற்கரிதான காடுகளிலும், பல்வேறு நாடுகளிலும், மக்கள் நிறைந்த மாகாணங்களிலும், நாற்சந்திகளிலும், நகரங்களிலும் நாங்கள் நெருக்கமாகத் தேடினோம். பாண்டுவின் மகன்களைக் {பாண்டவர்களைக்} குறித்த எந்தத் தடயமும் இன்னும் {எங்களுக்குக்} கிடைக்கவில்லை.

உமக்கு மங்களம் உண்டாகட்டும். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனரே}, எந்தத் தடயத்தையும் விட்டுவைக்காமல் அவர்கள் {அந்த பாண்டவர்கள்} அழிந்துவிட்டதாகவே தெரிகிறது. ஓ! வீரர்களில் முதன்மையானவரே {துரியோதனரே}, நாங்கள் அவர்களது பாதையிலேயே தொடர்ந்து சென்றாலும், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {துரியோதனரே}, விரைவில் அவர்களது காற்தடங்களைத் தொலைத்தோம். {எங்களுக்கு அவர்களது கால்தடங்கள் தெரியவில்லை}. இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை {நாங்கள்} அறியவில்லை.

ஓ! மனிதர்களின் தலைவா, சில காலம் நாங்கள் அவர்களின் தேரோட்டிகளைத் தொடர்ந்து சென்றோம். முறையாக விசாரித்ததில் நாங்கள் அறிய விரும்பியதை உண்மையில் உறுதி செய்து கொண்டோம். ஓ! எதிரிகளைக் கொல்பவனே, அந்தத் தேரோட்டிகள் தங்கள் மத்தியில் பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்} இல்லாமலேயே துவாராவதியை {துவாரகையை} அடைந்தனர். ஓ! மன்னா {துரியோதனரே}, பாண்டுவின் மகன்களோ {பாண்டவர்களோ}, கற்புள்ள கிருஷ்ணையோ {திரௌபதியோ} யாதவர்களின் நகரத்தில் இல்லை.

ஓ! பாரதகுலத்தின் காளையே {துரியோதனரே}, அவர்கள் தற்சமயம் எங்கு வசிக்கிறார்கள் என்பதையோ, அவர்களது பாதையையோ எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. உமக்கு வந்தனம், அவர்கள் அழிந்து விட்டார்கள். பாண்டு மகன்களின் மனநிலையை நாங்கள் அறிந்தவர்கள். அவர்களது சாதனைகளில் சிலவற்றையும் அறிந்திருக்கிறோம். எனவே, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, பாண்டு மகன்களைத் தேடும் விவகாரத்தில் அடுத்து நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்று, ஓ! ஏகாதபதி {துரியோதனரே} எங்களுக்கு உத்தரவு அளியும்.

ஓ! வீரரே, உமக்கு நம்பிக்கைத் தரக்கூடிய ஏற்புடைய எங்களது {வேறு} வார்த்தைகளைக் கேளும். மன்னர் மத்ஸ்யரின் {விராடரின்} தளபதியும், திரிகார்த்தர்களை மீண்டும் மீண்டும் வீழ்த்தி, பெரும்பலத்தால் அவர்களைக் கொன்றவனும், தீய ஆன்மாவுமான கீசகன், ஓ! ஏகாதிபதி {துரியோதனரே}, கண்ணுக்குப்புலப்படாத கந்தர்வர்களால் இருள் சூழ்ந்த நேரத்தில், ஓ! மங்காப்புகழ் கொண்டவரே {துரியோதனரே} தனது தம்பிகள் அனைவருடனும் சேர்த்து கொல்லப்பட்டான். நமது எதிரிகளின் {இந்த} நிலைமை பற்றிய மகிழ்ச்சிகரமான செய்தியைக் கேள்விப்பட்டு, ஓ! கௌரவ்யரே {துரியோதனரே}, நாங்கள் மிகுந்த மனநிறைவு கொண்டோம். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது சொல்வீராக”, என்றனர் {ஒற்றர்கள்}.

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading