கிருஷ்ணனின் மதிநுட்பப் பேச்சு! – உத்யோக பர்வம் பகுதி 1(சேனோத்யோக பர்வம்)விராடனின் அவைக்கு மன்னர்கள் வந்தது; பாண்டவர்கள் அனுபவித்த துயரையும், அவர்களுக்கு நேர்ந்த அநீதியையும் குறித்துக் கிருஷ்ணன் அந்த மன்னர்களுக்கு எடுத்துக் கூறி, ஒரு தூதுவரை அனுப்ப வேண்டும் என்று சொன்னது…
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, அந்தக் குருவின் வழித்தோன்றல்கள் {பாண்டவர்கள்}, தங்களைச் சேர்ந்தவர்களுடன் (விராடன் குடும்பத்தினருடன்), அபிமன்யுவின் திருமண விழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடி, இரவில் இளைப்பாறி, விடியற்காலையில் விராடனின் அவைக்கு மகிழ்ச்சியாக வந்து சேர்ந்தனர். பல வண்ணங்களிலான ரத்தினங்களாலும், பெரும் மதிப்புடைய கற்களாலும், வரிசையாக இருந்த இருக்கைகளாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, நறுமணம் நிறைந்ததாக இருந்த அந்த மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} அவை {அரசவை}, எல்லா வளங்களாலும் நிறைந்திருந்தது. மனிதர்களில் வலிமைமிக்க ஏகாதிபதிகளான அவர்கள் {அந்த மன்னர்கள்} அனைவரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
முகப்பில் இருந்த இருக்கைகளில் விராடன் மற்றும் துருபதன் ஆகிய இரு மன்னர்கள் அமர்ந்திருந்தனர். பூமியின் முதிர்ந்த அந்த ஆட்சியாளர்களும் {விராடனும், துருபதனும்}, தங்கள் தந்தையுடன் கூடிய பலராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரும், {மற்றும்} அனைவரும் அங்கே அமர்ந்திருந்தனர். பாஞ்சாலத்தின் மன்னனுக்கு {துருபதனுக்கு} அருகில் சினி குலத்தின் பெரும் வீரன் {சாத்யகி}, ரோகிணியின் மகனுடன் {பலராமனுடன்} அமர்ந்திருந்தான். மத்ஸ்ய மன்னனுக்கு {விராடனுக்கு} அருகருகே கிருஷ்ணன், யுதிஷ்டிரன், துருபத மன்னனின் அனைத்து மகன்கள், பீமன், அர்ஜுனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, போரில் வீரமிக்கப் பிரத்யும்னன், சாம்பன் ஆகிய இருவர், அபிமன்யு, விராடனின் மகன்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். வீரம், வலிமை, கருணை, பராக்கிரமம் ஆகியவற்றில் தங்கள் தந்தையருக்குப் போட்டியாக இருந்த இளவரசர்களான திரௌபதியின் மகன்கள், தங்கத்தாலான அற்புத இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
ஒளிரும் ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை அணிந்திருந்த அந்த வலிமைமிக்க வீரர்கள் அனைவரும் அமர்ந்ததும், அரசர்கள் நிறைந்த அந்தச் சபை, மின்னும் நட்சத்திரங்களால் நிறைந்த ஆகாயவிரிவைப் போன்று இருந்தது. அப்படி ஒன்றாகக் கூடியிருந்த வலிமை மிக்கவர்களான அவர்கள், ஒருவருடன் ஒருவர் பல்வேறு தலைப்புகளில் உரையாடி, கிருஷ்ணன் மீது தங்கள் நிலைத்த கண்களை வைத்து, சிந்தனையிலாழ்ந்த மனநிலையில் சிறிது நேரம் இருந்தனர். அவர்களது பேச்சின் முடிவில், பாண்டவர்கள் குறித்த காரியங்களில் அவர்களது கவனத்தைக் கிருஷ்ணன் ஈர்த்தான். அந்த வலிமைமிக்க மன்னர்கள் அனைவரும், கிருஷ்ணனின் பயனுள்ள, பொருள் பொதிந்த பேச்சைக் கேட்டனர்.
கிருஷ்ணன், “சுபலனின் மகனால் {சகுனியால்}, யுதிஷ்டிரர் எப்படி வஞ்சனையாக வெல்லப்பட்டார் என்பதையும், அவரது நாடு எப்படிப் பறிக்கப்பட்டது என்பதையும், காட்டில் தனது வனவாசம் குறித்த நிபந்தனை எப்படி அவரால் ஏற்கப்பட்டது என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தங்கள் சக்தியால் உலகை வெல்லும் திறனிருந்தும், அந்த அவலநிலையிலும் நம்பிக்கையில் உறுதியுடன் அவர்கள் {பாண்டவர்கள்} நீடித்தனர். அதன்படி, இந்த ஒப்பற்ற மனிதர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்தக் கொடூரமான காரியத்தை, இந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டனர். இறுதியான இந்தப் பதிமூன்றாவது வருடத்தைக் கழிப்பது இவர்களுக்கு மிகக் கடுமையானதாக இருந்தது. எனினும், நீங்கள் அறிந்தவாறே, தாங்கிக்கொள்ள முடியாத பல்வேறு கடினங்களையும் அனுபவித்து, ஒருவராலும் கண்டறியப்படாமல் இருந்தனர். இதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தச் சிறப்புமிக்க மனிதர்கள் {பாண்டவர்கள்}, பிறருக்கு அடிமைச்சேவகம் செய்யும் பணியில் இந்தப் பதிமூன்றாவது வருடத்தைக் கழித்தனர்.
இது இப்படி இருக்கையில், யுதிஷ்டிரன் மற்றும் துரியோதனன் ஆகிய இருவருக்கும் எது நன்மையானது என்பது குறித்தும், குருக்களையும் {கௌரவர்களையும்}, பாண்டவர்களையும் பொருத்தமட்டில், எது நீதியாகவும், பொருத்தமாகவும், அனைவருக்கும் இசைவானதாகவும் இருக்கும் என்பதைக் குறித்தும் நீங்கள் {இந்தச் சபை} கருத்தில் கொள்ள வேண்டும் {ஆலோசிக்க வேண்டும்}. அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரர், வானரசையும் {தேவலோக அரசையும்} அநீதியாக அடைய விரும்பமாட்டார். ஆனால், நீதியுடன் கிடைக்கும் ஒரு கிராமத்தின் ஆட்சியைக் கூட ஏற்றுக் கொள்வார். அவரது தந்தை {பாண்டுவின்} வழி அரசை, திருதராஷ்டிரன் மகன்கள் எவ்வாறு மோசடியான முறையில் கவர்ந்தார்கள் என்பதையும், தாங்க முடியாத கடின வாழ்வை அவர் எப்படி மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதையும், இங்கே கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரும் அறிவார்கள்.
பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனனை, பலத்தால் வெல்ல இயலாதவர்களாகத் திருதராஷ்டிரன் மகன்கள் இருக்கிறார்கள். {தங்கள் பலத்தால் இவர்களது நாட்டை அவர்கள் அடையவில்லை}. எனினும் மன்னன் யுதிஷ்டிரரும் அவரது நண்பர்களும், திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நன்மையையே விரும்புகின்றனர். குந்தியின் வீரமிக்க மகன்களும், மாத்ரியின் இரு மகன்களும், மன்னர்களை வீழ்த்தி, போரில் தாங்கள் வென்று அடைந்தவற்றை {தாங்கள் ஈட்டியவற்றை} மட்டுமே கேட்கின்றனர். பாண்டவர்களுடைய அந்த எதிரிகள் {கௌரவர்கள்}, நாட்டைத் தாங்களே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இவர்கள் {பாண்டவர்கள்} சிறுவர்களாக இருந்த போதே, இவர்களை அழிக்கப் பல்வேறு வகைகளில் முயன்றதை நீங்கள் அறிவீர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் இவ்வளவு தீயவர்களாகவும், வெறுப்புணர்ச்சி கொண்டவர்களாகவுமே இருந்தனர்.
அவர்கள் எப்படித் தன்னலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், யுதிஷ்டிரர் எப்படி அறம் சார்ந்தவராக இருக்கிறார் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். அவர்களுக்குள் {கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்குள்} நீடிக்கும் உறவின்முறையையும் கருத்தில் கொள்ளுங்கள். {இது குறித்து}, தனித்தனியாகவும், ஒன்றாகச் சேர்ந்தும் ஆலோசிக்கும்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
பாண்டவர்கள் எப்போதும் உண்மையைக் கருத்தில் கொள்பவர்கள். வாக்குறுதியில் உள்ள எழுத்துகள் முழுவதையும் இவர்கள் நிறைவேற்றிவிட்டனர். இப்போது திருதராஷ்டிரன் மகன்களால் அநீதி இழைக்கப்பட்டால், அவர்கள் அனைவரையும் இவர்கள் {பாண்டவர்கள்} மொத்தமாகக் கொல்வார்கள். பிறர் கைகளில் இவர்கள் {பாண்டவர்கள்} அடைந்த தீமை அறிவிக்கப்பட்டால், இவர்களின் அருகில் நின்று, இவர்களைத் துன்புறுத்தியவர்களுடன் போரிட்டு, தங்கள் உயிரே போனாலும் அவர்களைக் கொல்ல விரும்பும் நண்பர்களை இவர்கள் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மிகச் சிலராக இருக்கிறார்கள்; இவர்களால் தங்கள் எதிரிகளை வெல்ல முடியாது என்று நீங்கள் நினைத்தால், நண்பர்களால் தொடரப்படும் இவர்கள் ஒற்றுமையாக இணைந்து, சந்தேகமற, தங்களால் முடிந்த வரை {பெருமுயற்சியைசெய்து} தங்கள் எதிரிகளை அழிக்கவே முயல்வார்கள் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.
துரியோதனன் என்ன நினைக்கிறான், அல்லது அவன் என்ன செய்வான் என்பது {உள்ளபடி} சரியாகத் தெரியவில்லை. சிறந்ததே செய்யப்பட வேண்டும் எனும்போது, மறுபக்கத்தில் இருப்பவனின் எண்ணத்தை அறியாமல், உங்களால் என்ன கருத {ஆலோசிக்க} முடியும்? எனவே, யுதிஷ்டிரருக்கு பாதி நாட்டைக் கொடுக்கும்படி அவர்களை மென்மையாகத் தூண்ட {வேண்டிக்கொள்ள}, அறம், நேர்மை, மதிப்புக்குரிய பிறப்பு, எச்சரிக்கை {எச்சரைக்கையுணர்வு} ஆகியவற்றைக் கொண்ட தகுதி வாய்ந்த தூதர் ஒருவரைப் {இங்கிருந்து அங்கு} புறப்படச் செய்வீராக!” என்றான் {கிருஷ்ணன்}.
பிறகு, அமைதி மற்றும் பாரபட்சமற்ற உணர்வுடன் கூடிய கிருஷ்ணனின், மதிநுட்பமும், அறச்சார்பும் நிறைந்த பேச்சைக் கேட்ட அவனது அண்ணன் {பலராமன்}, தனது தம்பியின் {கிருஷ்ணனின்} சொற்களுக்கு அந்தச் சபையில் உயர்ந்த புகழுரை வழங்கினார்.
பலராமன் சொன்ன ஆலோசனை! – உத்யோக பர்வம் பகுதி 2-கிருஷ்ணனின் சொற்களைப் பலராமன் பாராட்டுவது; யாராவது ஒருவரை கௌரவர்களிடம் தூதுவராக அனுப்பவேண்டும் என்று சொல்வது; அப்படிச் செல்லும் தூதரின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது போல யுதிஷ்டிரனை இடித்துரைப்பது; சாத்யகி பலராமனின் பேச்சை இடைமறிப்பது…
பலதேவன் {Baladeva-பலராமன்} சொன்னான், “அறவுணர்வு, மதிநுட்பம், யுதிஷ்டிரனுக்கும் மன்னன் துரியோதனனுக்கும் நன்மை தரும் உணர்வு ஆகிய சொற்களில் அமைந்த, கதனின் அண்ணனுடைய {கிருஷ்ணனுடைய} பேச்சை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள். குந்தியின் இந்த வீரமிக்க மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் நாட்டில் பாதியைத் தர சித்தமாக இருக்கிறார்கள். இந்தத் தியாகத்தை அவர்கள் {பாண்டவர்கள்} துரியோதனனுக்காகவே செய்கிறார்கள். எனவே, திருதராஷ்டிரன் மகன்களும் பாதி நாட்டைக் கொடுத்து, சச்சரவை நிறைவாகத் தீர்த்து, நம்முடன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, {அவர்களும்} இன்பமாக இருக்க வேண்டும்.
எதிர்த்தரப்பு {கௌரவர் தரப்பு} முறையாக நடந்து கொண்டால், இந்த வலிமைமிக்கவர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் நாட்டை அடைந்து கோபம் தணிந்து இன்பமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களும் {கௌரவர்களும்} மக்கள் நன்மையைக் கருதி அமைதியடைய வேண்டும். குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவரையும் அமைதிப்படுத்தும் நோக்கம் கொண்ட மனிதர்களில் யாராவது ஒருவர், துரியோதனனின் மனதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் {அறிந்து கொள்ளவும்}, யுதிஷ்டிரனின் நோக்கங்களை {அவனுக்கு} விளக்கவும் இங்கிருந்து ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
குருகுலத்தின் வீரக்கொழுந்தான பீஷ்மர், விசித்திரவீரியனின் பெருமைமிக்க மகன் {திருதராஷ்டிரர்}, துரோணர் மற்றும் அவரது மகன் {அஸ்வத்தாமன்}, விதுரர், கிருபர், சூத மகனுடன் {கர்ணனுடன்} சேர்ந்த காந்தார மன்னன் {சகுனி}, ஆகியோரை அவர் {தூது செல்பவர்} மரியாதையுடன் வணங்கட்டும். காலத்தின் குறிகளை அறிந்தவர்களும், வீரர்களும், முறையான {தங்கள்} கடமைகளுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களும், கல்விக்காகவும், பலத்திற்காகவும் அறியப்பட்டவர்களுமான திருதராஷ்டிரரின் பிற மகன்கள் அனைவருக்கும், அவர் {அத்தூதர்}, தனது மரியாதையைச் செலுத்தட்டும். இந்த {மேற்கண்ட} மனிதர்கள் அனைவரும் ஒருங்கிணைந்திருக்கும்போது, மூத்த குடிமக்கள் அனைவரும் கூடியிருக்கும்போது, யுதிஷ்டிரனின் விருப்பங்களைச் சொல்ல விரும்பும் அவர் {அத்தூதர்}, பணிவான வார்த்தைகளால் அவற்றைச் சொல்லட்டும். அவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் வசம் அரசைக் கொண்டுள்ளதாலும், அவர்கள் {கௌரவர்கள்} தரப்பு வலுவாக இருப்பதாலும், எச்சந்தர்ப்பத்திலும் அவர்களது கோபம் தூண்டப்படாமல் இருக்கட்டும்.
யுதிஷ்டிரனிடம் அரியணை இருந்தபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டு, தன்னை மறந்ததால், இவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இருந்த நாட்டை அவர்கள் {கௌரவர்கள்} அபகரித்தனர். அஜமீட குல வழித்தோன்றலும், வீரமிக்கக் குருவுமான இந்த யுதிஷ்டிரன், தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், தனக்குப் பகடையில் திறமை இல்லையென்றாலும், சூதில் நிபுணனான காந்தார மன்னனை {சகுனியை} விளையாட்டில் சவாலுக்கழைத்தான். அப்போது அந்த இடத்தில், விளையாட்டில் {சூதில்} யுதிஷ்டிரன் வெல்லத்தக்க ஆயிரக்கணக்கான பகடையாட்டக்காரர்கள் {சூதாடிகள்} இருந்தனர். எனினும், அவர்களில் யாரையும் கவனிக்காத அவன் {யுதிஷ்டிரன்}, மற்ற ஆட்டக்காரர்களைத் தவிர்த்து சுபலனின் மகனுக்குச் {சகுனிக்குச்} சவால்விட்டான். பகடை அவனுக்கு எதிராக விழுந்தாலும், {பிடிவாதமாக} சகுனியையே தனது போட்டியாளனாகக் கொண்டிருந்தான். சகுனியுடன் விளையாடிய அவன் {யுதிஷ்டிரன்} படுதோல்வியை அடைந்தான். இதில் சகுனியைப் பழி சொல்ல எதுவுமில்லை.
விசித்திரவீரியன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} சமரசம் நோக்கம் கொண்ட சொற்களையும், பணிவான சொற்களையும் அத்தூதர் பயன்படுத்தட்டும். இப்படியே அத்தூதர் திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தனது நோக்கத்தின் பால் கொண்டு வரட்டும். குருக்களுடன் {கௌரவர்களுடன்} போரிடத் துணியாமல், துரியோதனனிடம் சமாதானமான தொனியிலேயே பேச வேண்டும். போரினால், நோக்கம் நிறைவடையாமல் போகலாம், ஆனால் சமரசத்தால், அது நிறைவடையும். இவ்வழிகளில் சென்றால்தான் நீடித்த நன்மையைப் பெற முடியும்” என்றான் {பலராமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மதுகுலத்தின் வீரக்கொழுந்து {பலராமன்}, இப்படித் தனது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்த போதே, சினி குலத்தின் வீர மகன் {சாத்யகி}, திடீரென ஆவேசமாக எழுந்து, முன்னவன் {பலராமன்} சொன்ன சொற்களுக்காக, அவனைக் {பலராமனைக்} கண்டித்தான்.
பலராமனைக் கண்டித்த சாத்யகி! – உத்யோக பர்வம் பகுதி 3-சாத்யகி பலராமனின் சொற்களைக் கண்டிப்பது; கௌரவர்கள் செய்த தீமையை எடுத்துரைப்பது; பாண்டவர்கள் உரிமையை மீட்க வேண்டும் என்று சொன்னது; பிச்சையெடுப்பதை விடப் போரே மேலானது என்று சொல்வது…
சாத்யகி {பலராமனிடம்} சொன்னான், “ஒரு மனிதனின் இதயம் எப்படி இருக்கிறதோ, அப்படியே அவன் பேசுகிறான்! நீர் உமது இதயத்தின் இயல்புக்கு ஏற்பக் கடுமையாகப் பேசுகிறீர். வீரர்களும் இருக்கிறார்கள், அதே போலக் கோழைகளும் இருக்கிறார்கள். நன்கு வரையறை செய்யப்பட்ட இந்த {வீரன் மற்றும் கோழை என} இரு பிரிவுகளில் மனிதர்களைப் பிரித்துவிடலாம். இரு கிளைகள் கொண்ட ஒரு பெரிய மரத்தில் ஒரு கிளை பழங்கள் தாங்குவதாகவும், மற்றது தாங்காமலும் இருப்பது போல, ஒரே குல வழியைக் கொண்டவர்களில் மனோதிடமற்றவர்களும் பெரும் {மனோ} பலம் வாய்ந்தவர்களும் பிறக்கிறார்கள். ஓ! கொடியில் கலப்பை சின்னத்தைத் தாங்கிக் கொள்பவரே {பலராமரே}, நீர் பேசிய இச்சொற்களை நான் கண்டிக்கவில்லை. ஆனால், ஓ! மதுவின் மகனே {பலராமரே}, உமது சொற்களைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களையே கண்டித்து ஆறுதலடைகிறேன்.
உண்மையில், அறம்சார்ந்த மன்னரான யுதிஷ்டிரர் மீது சிறு பழியைக்கூட ஒருவன் வெட்கமில்லாமல் இணைத்தாலும், சபையின் நடுவே பேசுவதற்கு அவனை எப்படி அனுமதிக்கலாம்? பகடையாட்டத்தில் புத்திசாலித்தனம் மிக்க நபர்கள், விளையாட்டில் பயிற்சிபெறாத பரந்த மனப்பான்மை கொண்ட யுதிஷ்டிரரை சவாலுக்கழைத்தனர். அவர்கள் மீது நம்பிக்கை வைத்ததால் இவர் {யுதிஷ்டிரர்} தோற்றார். அப்படிப்பட்ட மனிதர்கள், அறம் கொண்டு, விளையாட்டை {நேர்மையாக} வென்றார்கள் என்று சொல்ல முடியுமா? யுதிஷ்டிரர் இந்த வீட்டில் தனது தம்பிகளுடன் யுதிஷ்டிரர் {பகடை} விளையாடிக் கொண்டிருக்கையில், அவர்கள் {கௌரவர்கள்} வந்து வென்றிருந்தால் அவர்கள் நேர்மையாக வென்றார்கள் எனலாம். ஆனால் அவர்கள், போர்ச் சாதியின் {க்ஷத்திரியர்களின்} விதிகளைப் பின்பற்றி, மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட யுதிஷ்டிரரைச் சவாலுக்கு அழைத்தனர். அவர்களது தந்திரமும் வென்றது. அவர்களது இந்த நடத்தைகளில் என்ன நேர்மை இருக்கிறது? விளையாட்டு, பந்தயம் எனச்சொல்லி, பெரும் நிபந்தனைகளை ஏற்று, வாக்குறுதி தந்த கானக வாசத்தில் இருந்து விடுபட்டதால், தனது மூதாதையரின் அரியணைப் பெற உரிமை கொண்ட இந்த யுதிஷ்டிரர் இங்கே தன்னை எப்படித் தாழ்த்திக் கொள்ள முடியும்? {எதிரிகள் முன்பு எப்படிப் பணிந்து போக முடியும்?}
யுதிஷ்டிரர் பிறர் உடைமைகளை இச்சித்திருந்தால் கூட, பிச்சையெடுப்பது அவருக்குத் {யுதிஷ்டிரருக்குத்} தகாது! பாண்டவர்கள் தங்கள் கண்டறியப்படக்கூடாத வாழ்வை {அஞ்ஞாதவாசத்தை} நிறைவு செய்திருந்தாலும், அவர்கள் கண்டறியப்பட்டார்கள் என்று சொல்பவர்களை, அரியணை பறிக்கும் நோக்கம் இல்லா நேர்மையாளர்களாக எப்படிச் சொல்ல முடியும்? பீஷ்மர் மற்றும் பரந்த மனப்பான்மை கொண்ட துரோணர் ஆகியோர் வேண்டிக் கொண்ட பின்னும், பிறப்பினடிப்படையில் பாண்டவர்களுக்குச் சொந்தமான அரியணையைத் திருப்பித்தர அவர்கள் {கௌரவர்கள்} சம்மதிக்கவில்லை. கூர்மையான அம்புகளின் வாயிலாகவே நான் அவர்களுக்குப் புத்தி புகட்டுவேன். வலிய கரப் பலத்துடன் போரிடும் நான், அவர்களைக் {கௌரவர்களைக்} குந்தியின் ஒப்பற்ற மகனின் {யுதிஷ்டிரரின்} பாதத்தில் விழச் செய்வேன்.
எனினும், அவர்கள் விவேகியான யுதிஷ்டிரரின் பாதம் பணியவில்லையெனில், பின்னர், அவர்களும், அவர்களது கூட்டத்தாரும் யமனுலகே செல்ல வேண்டும். யுயுதானன் {சாத்யகியான நான்}, சீற்றம் கொண்டு, போரிடத் தீர்மானித்தால், இடியின் வேகத்தைத் தாங்க முடியாத மலைகளைப் போல, எனது வேகத்தைத் தாங்க முடியாதவர்களாக அவர்கள் இருப்பார்கள். போரில் அர்ஜுனனிடம் யாரால் நிலைக்க முடியும்? மரணத்தைக் கையாளும் யமனின் புத்திசாலித்தனம் கொண்டவர்களும், தங்களது விற்களை உறுதியாகப் பிடிப்பவர்களுமான இந்த இரட்டையர்கள் {நகுல, சகாதேவர்கள்} முன்னால் தனது உயிரை மதிக்கும் எவன் வரமுடியும்? துருபதனின் மகனான திருஷ்டத்யும்னனையோ, திரௌபதியின் பெயருக்கு காந்தியைக் கொடுத்து, வீரத்தில் தங்கள் தந்தையருக்குப் {பாண்டவர்களுக்குப்} போட்டியாகவும், {பாண்டவர்களுக்கு} எல்லாவகையிலும் இணையாகவும், போர்ப்பெருமையில் நிறைந்திருக்கும் பாண்டவர்களின் ஐந்து மகன்களையோ, தேவர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியாதவனும், பெரும் வில்லைக் கொண்டவனுமான சுபத்திரையின் மகனையோ {அபிமன்யுவையோ}, யமனுக்கோ, இடிக்கோ, நெருப்புக்கோ ஒப்பான கதன், பிரத்யும்னன், சாம்பன் ஆகியோரையோ யாரால் அணுக முடியும்?
திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சகுனி மற்றும் கர்ணன் ஆகியோரைப் போரில் கொன்று, இந்தப் பாண்டவரை {யுதிஷ்டிரரை}, நாம் அரியணையில் அமர்த்த வேண்டும். நம்மைக் கொல்ல முனையும் அவர்களைக் கொல்வதில் எந்தப் பாவமும் இல்லை. ஆனால், எதிரிகளிடம் பிச்சை எடுப்பது என்பது அநீதியும், இழிவும் ஆகும். யுதிஷ்டிரர் இதயப்பூர்வமாக விரும்பும் காரியத்தைச் செய்து, அவருக்கு {யுதிஷ்டிரருக்கு} ஊக்கமளிக்கும்படி நான் உங்களைக் {உங்கள் அனைவரையும்} கேட்டுக் கொள்கிறேன். பதவியில் இருந்து விலகும் திருதராஷ்டிரரின் நாட்டைப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அடையட்டும். இன்றே யுதிஷ்டிரர் தனது நாட்டைத் திரும்பப் பெற வேண்டும், அல்லது என்னால் கொல்லப்பட்ட நமது எதிரிகள் பூமியில் கிடக்க வேண்டும்!” என்றான் {சாத்யகி}.
துருபதன் ஆலோசனை! – உத்யோக பர்வம் பகுதி 4-துரியோதனன் குறித்துப் பலராமன் சொன்ன ஆலோசனை உதவாதென்று துருபதன் சொல்வது; படைதிரட்டுவது குறித்து ஆலோசனை வழங்கிய துருபதன்…
துருபதன் சொன்னான், “ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {சாத்யகி}, இது நீ சொன்னது போலவே நடக்கும். இதில் ஐயமில்லை. துரியோதனன், அமைதியான வழியில் நாட்டைக் கொடுக்க மாட்டான். மகன் {துரியோதனன்} மீது பாசம் கொண்ட திருதராஷ்டிரனும் அவனது {துரியோதனனின்} விருப்பத்தையே பின்பற்றுவான். மனோதிடம் அற்றதால் {imbecility = செழிப்பற்றதால் [அ] வறுமையால் என்றும் இங்கே பொருள் கொள்ளலாம்} பீஷ்மரும், துரோணரும், மூடத்தனத்தால் கர்ணனும், சகுனியும் அப்படியே {துரியோதனனைப்} பின்தொடர்வார்கள். எனது தீர்மானத்தைப் பலதேவனின் {பலராமனின்} சொற்களே தீர்மானித்திருக்க வேண்டும்; உண்மையில், அமைதியான ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்று விரும்பும் மனிதனிடமே, அவனால் {பலராமனால்} சுட்டிக்காட்டப்படும் வழி பின்பற்றப்பட வேண்டும். ஆனால் துரியோதனனிடம், மென்மையான வார்த்தைகளில் பேசக்கூடாது.
இயல்பிலேயே தீயவனான அவனை {துரியோதனனை}, மென்மை, {மென்மையான சொற்கள்} வழிக்குக் கொண்டுவராது என்றே நான் நினைக்கிறேன். கழுதையைப் பொறுத்தவரை, மென்மை அவசியம்தான்; ஆனால் பசு வகை விலங்கினங்களைப் {bovine species} பொறுத்தவரை, கடுமையே காட்டப்பட வேண்டும். யாராவது ஒருவர் துரியோதனனிடம் மென்மையாகப் பேசினால், இயற்கையிலேயே தீயவனான அந்தப் பொல்லாதவன் {துரியோதனன்}, அப்படிப் பேசுபவரை மனோதிடமற்றவராகக் {imbecile} கருதுவான். அவனிடம் மென்மையான முறைகள் கையாளப்பட்டால், தான் வென்று விட்டதாகவே அந்த முட்டாள் {துரியோதனன்} நினைத்துக் கொள்வான். நாம் இப்படிச் செய்யலாமே. நாம் தயாராவோம். நமக்காகப் படை திரட்ட நமது நண்பர்களுக்கு அழைப்பு கொடுப்போம்.
சல்லியன், திருஷ்டகேது, ஜயத்சேனன் மற்றும் கேகேயர்களின் இளவரசன் {பிருஹத்ஷத்ரன்} ஆகியோரிடம் வேகமான தூதர்கள் செல்லட்டும். தனது பங்குக்கு, துரியோதனனும், மன்னர்கள் அனைவருக்கும் தனது சொற்களை அனுப்புவான். எனினும், முதலில் வேண்டிக் கொள்பவர்களின் கோரிக்கைக்கே நேர்மையான நபர்கள் செவிசாய்ப்பார்கள். எனவே, உங்களுக்குத் தகுந்த இந்த மனிதர்களின் ஆட்சியாளர்களிடம் விரைந்து செல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு பெரிய பொறுப்பு நமக்காகக் காத்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். சல்லியனுக்கும் அவனுக்குக் கீழ் உள்ள மன்னர்களுக்கும், கிழக்குக் கடற்கரையில் வசிக்கும் அளவிடமுடியா வீரம் கொண்ட மன்னன் பகதத்தனுக்கும் {பிராக்ஜோதிஷ {இன்றைய அசாம்} நாட்டு மன்னன்}, (கோசலத்திற்கும் விதேஹத்திற்கும் இடையில் உள்ள நாடு )கடுமையான ஹார்த்திக்யன் {ஹிருதிகனின் மகனான கிருதவர்மன்}, ஆஹுகன், வலிய மனம் கொண்ட மள்ளர்கள் [1] மன்னன், ரோசமானான் ஆகியோருக்கும் விரைந்து சொல்லி அனுப்புங்கள்.
பிருஹந்தன், மன்னன் சேனாபிந்து, பாஹ்லீகன், முஞ்சகேசன், சேனஜித், சேதியின் ஆட்சியாளன், சுபார்ஸ்வன், சுபாஹு, பெரும் வீரனான பௌரவன், சகர்கள் {இந்நாட்டு மன்னன்சூராரி}, பாஹ்லவர்கள் [2] (பாஹ்லவம் என்பது அன்றைய ஈரானிய நாடாக இருக்க வேண்டும்){இந்நாட்டு மன்னன் நதீஜன்}, தரதர்களின் {கர்ணவேஷ்டன்} மன்னர்களாகிய, சூராரி, நதீஜன் மற்றும் மன்னன் கர்ணவேஷ்டன் ஆகியோர், நீலன், வீரமிக்க மன்னனான வீரதர்மன், துர்ஜயன், தந்தவக்கிரன், ருக்மி, ஜனமேஜயன், ஆஷாடன், வாயுவேகன், மன்னன் பூர்வபாலி, பூரிதேஜன், தேவகன், ஏகலாயன் {Ekalayan என்று இருக்கிறது, ஏகலவ்யனா என்று தெரியவில்லை} மற்றும் அவனது மகன்கள், காரூஷ குல மன்னர்கள், வீரமிக்க க்ஷேமதூர்த்தி, காம்போஜத்தின் மன்னர்கள், ரிசீக இனக்குழுக்கள், மேற்குக் கடலோரத்தில் உள்ள மன்னர்களான, ஜயத்சேனன், காசிமன்னன், ஐந்து நதிகள் பாயும் நிலத்தின் {பஞ்சாபின்} மன்னர்கள், கிராதனின் பெருமைமிக்க மகன், மலைப்பகுதிகளின் ஆட்சியாளர்களான ஜானகி, சுசர்மன், மணிமான், போதிமத்ஸகன், வீரமிக்கத் திருஷ்டகேது, பாம்சு நாட்டின் ஆட்சியாளன், பௌந்தரன், தண்டதாரன், வீரமிக்கப் பிருஹத்சேனன், அபராஜிதன், நிஷாதன், ஸ்ரேணிமான், வசுமான், பெரும் பலம் உடைய பிருஹத்பலன், எதிரி நகரங்களை வெல்லும் பாஹு, போர்க்குணமிக்க மன்னன் சமுத்ரசேனன் மற்றும் அவனது மகன், உத்பவன், ஷேகமகன், மன்னன் வாடதானன், ஸ்ருதாயு, த்ருடாயு, சால்வனின் கம்பீரமான மகன், கலிங்கர்கள் மன்னன், போரில் வெல்லப்பட முடியாத குமாரன் ஆகியோரை வரவழையுங்கள்.பாஹ்லவம் என்பது அன்றைய ஈரானிய நாடாக இருக்க வேண்டும்-இவர்களுக்கு விரைந்து சொல்லியனுப்புங்கள். இதுவே சரியென எனக்குப் படுகிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கற்ற அந்தணரான இந்த எனது புரோகிதர், திருதராஷ்டிரனிடம் செல்லட்டும். அவனிடம் இவர் சொல்ல வேண்டிய சொற்களையும், துரியோதனனிடம் சொல்ல வேண்டியதையும், பீஷ்மர் மற்றும் தேர்வீரர்களில் சிறந்த துரோணரிடம் பேச வேண்டிய முறையையும், இவரிடம் சொல்!” என்றான் {துருபதன்}.
கிருஷ்ணன் சொன்ன வழிமுறை! – உத்யோக பர்வம் பகுதி 5-துரியோதனனுக்குத் தூதனுப்புமாறு துருபதனுக்குச் சொன்ன கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பியது; பாண்டவர்கள் தரப்பிலிருந்து பல மன்னர்களுக்குத் தூது செல்வது; துரியோதனனும் படைதிரட்டுவது; துருபதன் தனது புரோகிதரை கௌரவர்களிடம் அனுப்பியது……
கிருஷ்ணன் {துருபதனிடம்} சொன்னான், “அளவிட முடியாத பலம் கொண்ட பாண்டு மகனுடைய {யுதிஷ்டிரருடைய} விருப்பங்களை ஊக்கப்படுத்தக் நினைக்கும், சோமகா குலத் தலைவருக்கு {துருபதனுக்கு} இந்த உலகங்களே தகும். நாம் ஓர் அரசியல் வழியை மேற்கொள்ள விரும்பும் இவ்வேளையில், அதற்கு மாறாக நடக்கும் மனிதன் பெரும் மூடனாவான். இதுவே {நிலையெடுப்பதே} நமது முதல் கடமை என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த இரு தரப்புகளான குருக்களும், பாண்டுக்களும் {பாண்டவர்களும்} தங்களுக்குள் எவ்வாறு நடந்து கொண்டாலும், நாம் இவர்களுடன் கொண்டுள்ள உறவுமுறை சமமானதே. நீரும், நாமும் இத்திருமண நிகழ்ச்சிக்காகவே இங்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்போது திருமணம் கொண்டாடப்பட்டுவிட்டமையால், மகிழ்ச்சியுடன் நாம் வீடு திரும்புவோமாக.
கல்வியிலும் வயதிலும் நீர் மன்னர்களில் முதன்மையானவர் ஆனபடியால், இங்கே இருக்கும் நாங்கள் அனைவரும் உமது சீடர்கள் {சீடர்களுக்குச் சமம்} என்பதில் ஐயமில்லை. திருதராஷ்டிரர் உம்மீது எப்போதும் பெரும் மதிப்புக் கொண்டிருக்கிறார்; ஆசான்களான துரோணரும், கிருபரும் உமது நண்பர்களாக இருக்கின்றனர். எனவே, பாண்டவர்கள் நலன் கருதி, நீர் (குருக்களுக்கு {கௌரவர்களிடம்}) ஒரு தூது அனுப்ப வேண்டும் என்று நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு நீர் செய்தி அனுப்ப வேண்டும் என்று {இங்கு கூடியிருக்கும்} நாங்கள் அனைவரும் ஒருசேரத் தீர்மானித்திருக்கிறோம். அந்தக் குரு குலத் தலைவன் {துரியோதனன்} சமத்துவமான நிபந்தனைகளின் படி சமாதானத்தைச் செய்தால், குருக்களுக்கும் பாண்டுக்களுக்கும் இடையில் உள்ள சகோதர உணர்வுகளுக்குப் பங்கம் நேராது. மறுபுறம், கர்வத்தாலும், மூடத்தனத்தாலும் அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} சமாதானமடைய மறுத்தானானால், மற்றவர்களை {தூதர்கள் மூலம்} அழைத்துவிட்டு, எங்களையும் அழையும். காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்} சினத்தால் நிறைவான், மந்தத் தலை கொண்ட தீய துரியோதனனும், அவனது தொண்டர்களும் மற்றும் அவனது நண்பர்களும் தங்கள் விதியைச் சந்திப்பார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு கிருஷ்ணனுக்கு மரியாதைகளைச் செய்த மன்னன் விராடன், அவனை {கிருஷ்ணனை}, அவனது தொண்டர்கள் மற்றும் உறவினர்களோடு சேர்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்தான். கிருஷ்ணன் துவாரகைக்குப் புறப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன், அவனது தொண்டர்கள் மற்றும் மன்னன் விராடன் ஆகியோர் போருக்கான தயாரிப்புகளைச் செய்யத் தொடங்கினர். விராடனும் அவனது உறவினர்களும் ஏகாதிபதிகள் அனைவருக்கும் செய்தி சொல்லி அனுப்பினர். துருபதனும் அதையே செய்தான். அந்தக் குருகுலத்தின் சிங்கங்களுடைய {பாண்டவர்களின்} வேண்டுதலின் படி மத்ஸ்யர்கள் மற்றும் பாஞ்சாலர்களின் இரு மன்னர்களும், பூமியின் பெரும் பலம் கொண்ட பல தலைவர்களும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் அந்த இடத்திற்கு வந்தனர்.
பாண்டவர்கள் பெரும்படையைச் சேகரித்திருக்கின்றனர் என்பதைக் கேள்விப்பட்ட திருதராஷ்டிரன் மகன்களும், பூமியின் பல ஆட்சியாளர்களைச் சேர்த்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, குருக்கள் அல்லது பாண்டவர்களுக்கு ஆதரவாக அணிவகுத்து சென்ற பூமியின் ஆட்சியாளர்களால் அந்த நிலம் நெருக்கப்பட்டது. அந்த நிலத்தில் நான்கு வகையான படைகளும் நிறைந்திருந்தன. நாற்புறங்களில் இருந்தும் படைகள் பாய ஆரம்பித்தன. அவர்களது நடையால் மலைகள் மற்றும் கானகங்களுடன் கூடிய பூமாதேவி நடுங்க ஆரம்பித்தாள். யுதிஷ்டிரனின் விருப்பங்களை ஆலோசித்த பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, வயதிலும், புரிதலிலும் முதிர்ச்சியான தனது புரோகிதரை குருக்களிடம் {கௌரவர்களிடம்} அனுப்பி வைத்தான்.
தூதரை அறிவுறுத்திய துருபதன்! – உத்யோக பர்வம் பகுதி 6-கௌரவர்களுக்கு மத்தியில் பாண்டவர்கள் அனுபவித்த சிரமங்களை எடுத்துச் சொல்லி அவர்களுக்குள் பேதத்தை உருவாக்க வேண்டும் என்று துருபதன் தனது புரோகிதரிடம் சொன்னது; புரோகிதர் கௌரவர்களை நோக்கிச் சென்றது…
துருபதன் சொன்னான், “உலகில் உள்ளவை அனைத்திலும் உயிருள்ளவையே மேன்மையானவை. உயிரினங்களில் புத்தியுள்ளவையே மேன்மையானவை. புத்தியுள்ள உயினினங்களில் மனிதர்களே மேன்மையானவர்கள். மனிதர்களில் இரு பிறப்பாளர்களே மேன்மையானவர்கள். இரு பிறப்பாளர்களில் வேதம் கற்கும் மாணவனே மேன்மையானவன். வேதம் கற்பவரில் பண்புடையவர்களே மேன்மையானவர்கள். பண்புடையோரில் நடைமுறை வாழ்வை அறிந்தவரே மேன்மையானவர். நடைமுறை வாழ்வை அறிந்த மனிதரில் பிரம்மத்தை அறிந்தவரே மேன்மையானவர்.
பண்பட்ட புரிதல் கொண்டோரில், உம்மை மிக உயர்ந்தவராக நான் கருதுகிறேன். வயதாலும், கல்வியாலும் நீர் சிறந்தவராக {மேன்மையானவராக} இருக்கிறீர். அறிவில் சுக்கிரனுக்கோ, அங்கீரசின் மகன் பிருகஸ்பதிக்கு இணையானவராக நீர் இருக்கிறீர். குரு குலத்தின் தலைவன் {துரியோதனன்} எவ்வகை மனிதன் என்பதையும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன் எவ்வகை மனிதன் என்பதையும் நீர் அறிவீர். திருதராஷ்டிரன் அறிந்தே பாண்டவர்கள் எதிரிகளால் ஏமாற்றப்பட்டனர்.
விதுரரால் அறிவுறுத்தப்பட்டாலும் அவன் {திருதராஷ்டிரர்} தனது மகனையே பின்தொடர்கிறான்! சூதாட்டத்தில் திறமைவாய்ந்த சகுனியோ, சூதில் திறமையற்ற யுதிஷ்டிரனுக்கு அறிவுறுத்துவது போல, சூதாட {அவனுக்கு} அறைகூவல் விடுத்தான். விளையாட்டில் {சூதில்} பயிற்சியற்றவனாக இருப்பினும், யுதிஷ்டிரன், போர் வகையினரின் {க்ஷத்திரியரின்} விதிகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்து கபடமற்றவனாக இருந்தான். இப்படி அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரனை ஏமாற்றியவர்கள், எவ்வகையிலும், தானாக முன்வந்து நாட்டைக் கொடுக்க மாட்டார்கள்.
நீதியின் சொற்களை நீர் திருதராஷ்டிரனிடம் பேசினால், அவனது {திருதராஷ்டிரனின்} போர் வீரர்களின் இதயங்களை நிச்சயம் நீர் வெல்வீர். விதுரர், உமது சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு, பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் பிறரது இதயங்களை வேறுபடுத்துவார் {அவர்களிடம் பேதத்தை உண்டாக்குவார்}. மாநிலத்தின் அதிகாரிகள் வேறுபட்டு, போர்வீரர்கள் பின்வாங்கும்போது, அவர்களின் இதயங்களை மீண்டும் வெல்வதே எதிரிகளுடைய {முக்கிய} பணியாக இருக்கும்.
அதே வேளையில், பாண்டவர்கள், தளவாடங்கள் திரட்டி, படையைத் தயார் செய்வதில் முழு இதயத்தோடு ஈடுபடுவார்கள். எதிரியின் ஆதரவாளர்கள் பிரிக்கப்பட்டு, நீர் பேசிக் கொண்டிருக்கும்போது, போருக்கான ஏற்பாடுகளை போதிய அளவில் அவர்களால் நிச்சயம் செய்ய முடியாது. இவ்வகையில் {நமக்கு} உகந்த சூழ்நிலையையே இவ்வழி ஏற்படுத்தும். திருதராஷ்டிரனை நீர் சந்திக்கும்போது, நீர் சொல்வதைத் திருதராஷ்டிரன் {கேட்டு, அதற்கேற்றாற்போலச்} செய்யவும் வாய்ப்பிருக்கிறது. நீர் அறம்சார்ந்தவராக இருப்பதால், அவர்களிடம் நீர் அறம்சார்ந்தே செயல்பட வேண்டும். கருணையுள்ளவர்களிடம், பாண்டவர்கள் தாங்கிக் கொண்ட பல்வேறு இன்னல்களை நீர் விரிவாக விளக்கிச்சொல்ல {descant} வேண்டும். முதிர்ந்த வயதுடையோரிடம், அவர்களது மூதாதையர்கள் பின்பற்றிய குடும்ப வழிமுறைகளை எடுத்துச் சொல்லி, அவர்களது இதயங்களில் நீர் வேறுபாட்டை உண்டாக்க வேண்டும்.
இக்காரியத்தில் நான் சிறு சந்தேகமும் கொள்ளவில்லை. அன்றியும், நீர் வேதங்களை அறிந்த அந்தணராக இருக்கிறீர்; அங்கே நீர் தூதராகச் செல்கிறீர்; மேலும் குறிப்பாக நீர் முதிர்ந்தவராக இருக்கிறீர் என்பதால் அவர்களிடம் ஆபத்து ஏற்படும் என்று நீர் அஞ்சத் தேவையில்லை. எனவே, பாண்டவர்களின் காரிய வெற்றியை நோக்கமாகக் கொண்டு, தாமதமில்லாமல் கௌரவர்களிடம் செல்வீராக. புஷ்ய {பூசம்} நட்சத்திரத்தில், ஜெயம் என்று அழைக்கப்படும் நாளின் அந்தப் பகுதியில் {ஜய முகூர்த்தத்தில்} உமது புறப்பாடு அமையட்டும்” என்றான் {துருபதன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார்,“மேன்மைமிக்க துருபதனால் இப்படி அறிவுறுத்தப்பட்ட அந்த அறம்சார்ந்த புரோகிதர், (யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரமான) ஹஸ்தினாபுறத்திற்குப் புறப்பட்டார். அரசியலின் கொள்கைகளை அறிந்த அந்தக் கல்விமான், தனது சீடர்கள் தன்னைப் பின்தொடர, பாண்டவர்களின் நன்மைக்காக குருக்களை {கௌரவர்களை} நோக்கிப் புறப்பட்டார்.
கிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்த அர்ஜுனன்! – உத்யோக பர்வம் பகுதி 7-கிருஷ்ணனிடம், போருக்கு ஆதரவு கேட்டு துரியோதனனும் அர்ஜுனனும் துவாரகைக்குச் செல்வது; துரியோதனன் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணனின் தலைமாட்டில் அமர்ந்தது; அர்ஜுனன் கரங்கூப்பி நின்றது; விழித்தெழுந்த கிருஷ்ணன் அர்ஜுனனை முதலில் பார்ப்பது; தனது படை ஒருபுறமும், ஆயுதம் ஏந்தாத தான் ஒரு புறமும் என இருவருக்கும் உதவுவதாகக் கிருஷ்ணன் சொல்வது; வயதில் இளையவனான அர்ஜுனன், முதல் வாய்ப்பைப் பெற்றுக் கிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்தது; மகிழ்ச்சியடைந்த துரியோதனன் நாராயணச் சேனையைப் பெற்றுக் கொண்டு பலராமனிடம் சென்றது; எத்தரப்புக்கும் தான் போரிடுவதில்லை என்று பலராமன் சொல்வது; தன்னைத் தேர்ந்தெடுத்த காரணத்தைக் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கேட்டது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் யுதிஷ்டிரனை அடைவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} புரோகிதரை அனுப்பிய பிறகு, அவர்கள் {பாண்டவர் தரப்பு} பல்வேறு நாட்டு மன்னர்களிடம் தூதுவர்களை அனுப்பினார்கள். பிற இடங்களுக்குத் தூதுவர்களை அனுப்பிய பிறகு, குரு வீரனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, துவாரகைக்குத் தானே புறப்பட்டுச் சென்றான். நூற்றுக்கணக்கான விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள் ஆகியோருடன் மதுவின் வழித்தோன்றல்களான கிருஷ்ணனும், பலதேவனும் சென்ற பிறகு, திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்}, தனது இரகசிய ஒற்றர்களை அனுப்பி, பாண்டவர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிந்து கொண்டான்.
கிருஷ்ணன் சென்றுவிட்டான் என்பதை அறிந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தன்னுடன் சிறு எண்ணிக்கையிலான துருப்புகளை அழைத்துக் கொண்டு, காற்றின் வேகம் கொண்ட நல்ல குதிரைகளில் துவாரகா நகரத்திற்குச் சென்றான். குந்தி மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அதே நாளில், அந்த அழகிய நகரமான ஆனர்த்த நிலத்திற்கு விரைவாக வந்து சேர்ந்தான். மனிதர்களில் புலிகளான குரு குலத்தின் அந்த இரு கொழுந்துகளும் {துரியோதனனும், அர்ஜுனனும்} அங்கே வந்து, துயிலில் இருக்கும் கிருஷ்ணனைக் கண்டு, படுத்திருந்த அவன் அருகே சென்றனர்.
கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அறைக்குள் நுழைந்த துரியோதனன், அந்தப் படுக்கையின் தலைமாட்டில் இருந்த அழகிய இருக்கையில் அமர்ந்து கொண்டான். கிரீடம் அணிந்தவனும், பரந்த மனப்பான்மை கொண்டவனுமான அர்ஜுனன், அவனுக்குப் {துரியோதனனுக்குப்} பின் நுழைந்தான். பிறகு, கரங்கள் கூப்பி, தலைவணங்கியபடி {அந்தப்} படுக்கையின் பின்புறம் நின்றான். {And stood at the back of the bed}. விருஷ்ணி வழித்தோன்றலான கிருஷ்ணன் விழித்த போது, முதலில் அர்ஜுனன் மீது தனது கண்களைச் செலுத்தினான். அந்த மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்}, அவர்களது பாதுகாப்பான பயணம் குறித்து விசாரித்து, முறையான வாழ்த்துகளைத் தெரிவித்த பிறகு, அவர்களது வருகையின் நோக்கத்தைக் குறித்துக் கேட்டான்.
பிறகு கிருஷ்ணனிடம் துரியோதனன், மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் “நடைபெறவிருக்கும் போரில் உனது உதவியை எனக்கு அளிப்பதே உனக்குத் தகும். அர்ஜுனனும் நானும் உனக்குச் சமமான நண்பர்களாகவே இருக்கிறோம். ஓ! மதுவின் வழித்தோன்றலே {கிருஷ்ணா}, ஒரே உறவுமுறையையே நீ எங்கள் இருவரிடமும் கொண்டிருக்கிறாய். இன்று, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா-கிருஷ்ணா}, உன்னிடம் முதலில் வந்தது நானே. நல்ல மனம் கொண்டவர்கள், தங்களிடம் முதலில் வருபவரின் காரணத்தையே எடுத்துக் கொள்கின்றனர். இதுவே முன்னோரின் நடைமுறையாகும். ஓ! கிருஷ்ணா, நீயே உலகத்தில் உள்ள நல்ல மனம் கொண்டோர் அனைவரை விடவும் மிக உயரத்தில் இருந்து, எப்போதும் மதிக்கப்பட்டு வருகிறாய். நல்ல மனம் கொண்ட மனிதர்கள் நோற்ற நடத்தைவிதிகளையே பின்பற்றுமாறு நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான் {துரியோதனன்}.
அதற்குக் கிருஷ்ணன் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா {துரியோதனா}, நீயே முதலில் வந்தாய் என்பதில் நான் ஐயங்கொள்ளவில்லை. ஆனால், ஓ! மன்னா {துரியோதனா}, குந்தியின் மகனான தனஞ்சயனே {அர்ஜுனனே} என்னால் முதலில் பார்க்கப்பட்டான். முதலில் வருகை தந்த உன்னையும், முதலில் காணப்பட்ட அர்ஜுனனையும் நான் கருத்தில் கொள்வதால், சந்தேகமில்லாமல், ஓ! சுயோதனா {துரியோதனா}, எனது உதவியை {உங்கள்} இருவருக்கும் அளிப்பேன். ஆனால், வயதில் இளையோருக்கே முதல் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, குந்தியின் மகனான தனஞ்சயனே {அர்ஜுனனே}, முதல் வாய்ப்பைப் பெறத் தகுந்தவன். அடர்ந்த {நெருக்கமான} போர்க்களத்தில் போரிட வல்லவர்களும், பலத்தில் எனக்குப் போட்டியானவர்களும், நாராயணர்கள் என்று அறியப்படுபவர்களும், எண்ணிக்கையில் பத்துக் கோடியாக {10,00,00,000} இருப்பவர்களுமான மாட்டு மந்தையாளர்கள் {கோபாலர்கள்} நிரம்பிய பெரும் அமைப்பு {படை} ஒன்று இருக்கிறது. போரில் வெல்லப்பட முடியாத அப்படைவீரர்கள், உங்களில் ஒருவருக்கு அனுப்பப்படுவார்கள். போர்க்களத்தில் போரிடுவதில்லை என்ற தீர்மானத்துடன், ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு தனியாளாக இருக்கும் நான் மற்றொருவனிடம் செல்வேன். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இவ்விரண்டில் உனக்கு வேண்டுமென எதை நீ மெச்சுகிறாயோ, அதை முதலில் நீயே தேர்ந்தெடுக்கலாம். விதிப்படி, முதல் வாய்ப்பைப்பெற நீயே தகுந்தவன்” என்றான் {கிருஷ்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, எதிரிகளைக் கொல்பவனும், க்ஷத்திரியர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தேவர்கள் மற்றும் தானவர்கள் அனைவரிலும் மேலானவனும், தன்விருப்பத்தின் பேரில் மனிதர்கள் மத்தியில் பிறந்தவனும், நாராயணனேயானவனும், படைக்கப்படாதவனுமான போர்க்களத்தில் போரிடாத கேசவனைத் {கிருஷ்ணனைத்} தேர்ந்தெடுத்தான். துரியோதனன் {நாராயணர்கள் அடங்கிய} அந்த முழுப் படையையும் தேர்ந்தெடுத்தான். ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, ஆயிரமாயிரம் எண்ணிக்கையிலான அந்தத் துருப்புகளை அடைந்த அவன் {துரியோதனன்}, தன் தரப்பில் கிருஷ்ணன் இல்லை என்பதை அறிந்தாலும், மிகவும் மகிழ்ந்தான். பயங்கரப் பராக்கிரமம் மிக்கப் படையை அடைந்த துரியோதனன், பெரும் பலமிக்க ரோகிணியின் மகனிடம் {பலராமனிடம்} சென்று, தனது வருகைக்கான நோக்கத்தை விளக்கினான்.
சூரனின் அந்த வழித்தோன்றல் {பலராமன்}, திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, தொடர்ந்து வரும் சொற்களைச் சொன்னான். அவன் {பலராமன் துரியோதனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே, விராடனால் கொண்டாடப்பட்ட திருமணத் திருவிழாவில் நான் சொன்ன அனைத்தையும் நீ எண்ணிப் பார்க்க வேண்டும். ஓ! குருகுலத்துக்கு மகிழ்ச்சி அளிப்பவனே {துரியோதனா}, உன் நிமித்தமாக நான் கிருஷ்ணனிடம் முரண்பட்டு, அவனது {கிருஷ்ணனின்} கருத்துகளுக்கு எதிராகப் பேசினேன். இரு தரப்பிடமும் நாங்கள் கொண்ட உறவுமுறை சமமானது என்று நான் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டேன். ஆனால், நான் கூறிய கருத்துகள் எதையும் கிருஷ்ணனும் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னாலும். ஒரு கணம் கூடக் கிருஷ்ணனிடம் இருந்து பிரிந்திருக்க முடியாது. கிருஷ்ணனுக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது என்பதைக் கண்டு நான் எடுத்திருக்கும் தீர்மானம் இதுதான். குந்தியின் மகன்களுக்காகவோ, உனக்காகவோ நான் போரிடமாட்டேன். ஓ! பாரதர்களில் காளையே {துரியோதனா}, மன்னர்கள் அனைவராலும் மதிக்கப்படும் பாரதக் குலத்தில் பிறந்த நீ, உனக்கு விதிக்கப்பட்ட விதிகளின் படி {போர்க்குல {க்ஷத்திரிய} அறத்தின் படி} போரிடுவாயாக. செல்” என்றான் {பலராமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட துரியோதனன், போர்க்களத்தில் ஆயுதமாகக் கலப்பையைத் தாங்கும் வீரனை {பலராமனை} அணைத்துக் கொண்டான். தனது தரப்பில் இருந்து கிருஷ்ணன் எடுத்துக்கொள்ளப்பட்டான் என்பதை அறிந்தும், ஏற்கனவே அர்ஜுனன் வீழ்ந்துவிட்டான் என்றே அவன் {துரியோதனன்} கருதினான். பிறகு திருதராஷ்டிரனின் அந்த அரச மகன் {துரியோதனன்}, கிருதவர்மனிடம் சென்றான். கிருதவர்மன் அவனுக்கு {துரியோதனனுக்கு} ஒரு அக்ஷௌஹிணி எண்ணிக்கையிலான படைத் துருப்புகளைக் கொடுத்தான். காணப் பயங்கரமான அந்தப் போர்ப்படை சூழ, தனது நண்பர்களுக்கு மகிழ்ச்சியூட்டியபடியே அந்தக் கௌரவன் {துரியோதனன்} அணிவகுத்துச் சென்றான்.
துரியோதனன் சென்ற பிறகு, மஞ்சள் ஆடை உடுத்தியிருக்கும் உலகத்தின் படைப்பாளனான கிருஷ்ணன், கிரீடியிடம் {அர்ஜுனனிடம்}, “போரிடவே மாட்டேன் என்ற என்னை நீ தேர்ந்தெடுத்ததற்கான காரணம் யாது?” என்று கேட்டான். அதற்கு அர்ஜுனன், “அவர்கள் அனைவரையும் நீ கொல்வாய் என்பதில் எனக்குக் கேள்வியே கிடையாது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, அவர்கள் அனைவரையும் தனியனாகக் கொல்ல நானும் தகுந்தவனே. ஆனால் நீ இந்த உலகின் ஒப்பற்ற மனிதனாவாய்; இந்தப் புகழ் உன்னைத் தொடர்ந்தே வரும். நானும் கூடப் புகழுக்குத் தகுந்தவனே; எனவேதான், நீ என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டாய். நீ எனக்குத் தேரோட்டியாக இருக்க வேண்டும் என்று எப்போதும் எனக்கு விருப்பம் இருந்து வந்திருக்கிறது. எனவே, எனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.
அதற்கு, வசுதேவனின் மகன் {கிருஷ்ணன்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உன்னை என்னுடன் அளவிட்டுக் கொள்கிறாய் என்பது உனக்கு ஏற்றதாகவே இருக்கிறது. நான் உனது தேரோட்டியாகச் செயல்படுவேன்; உனது விருப்பம் நிறைவேறட்டும்” என்றான் {கிருஷ்ணன்}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனையும், தாசார்ஹ குலத் தொண்டர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு யுதிஷ்டிரனை மீண்டும் அடைந்தான்.”
துரியோதனனின் தந்திரம்! – உத்யோக பர்வம் பகுதி 8-யுதிஷ்டிரனுக்கு ஆதரவாகத் தனது படைகளைக் கொண்டு வந்து கொண்டிருந்த சல்லியனை, துரியோதனன் ஆடம்பரமாக வரவேற்பது; யுதிஷ்டிரனே தன்னை வரவேற்கிறான் என்று நினைத்து சல்லியன் உபசரிப்பை ஏற்று மகிழ்வது; சல்லியன் வெகுமதி அளிக்க முன்வந்த போது துரியோதனன் வெளிப்பட்டது; துரியோதனன் சல்லியனிடம் வரம் கேட்டது; சல்லியன் துரியோதனன் பக்கம் நிற்பதாக வாக்களித்தது; சல்லியன் யுதிஷ்டிரனைச் சந்தித்தது; அர்ஜுனனுடன் போரிடும் போதும் கர்ணனை உற்சாகமிழக்கச் செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரன் சல்லியனிடம் கோரியது; அதைச் செய்வதாகச் சல்லியன் வாக்களித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, தூதுவர்களிடம் இருந்து செய்தியை அறிந்த சல்லியன், பெரும் அளவிலான துருப்புகளையும், போரில் வலிமைமிக்கவர்களான தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு பாண்டவர்களிடம் வந்து கொண்டிருந்தான். அவனது {சல்லியனது} முகாம், ஒன்றரை யோஜனை அளவு கொண்ட பகுதியை நிரப்பியது. அந்த மனிதர்களில் சிறந்தவனுக்கு {சல்லியனுக்குச்} சொந்தமான படை அவ்வளவு பெரியதாக இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் பராக்கிரமமும், வீரமும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணி படைக்கு அவன் {சல்லியன்} தலைவனாக இருந்தான். பல்வேறு விதமான கொடிகளையும், விற்களையும், ஆபரணங்களையும், தேர்களையும், விலங்குகளையும், பல வண்ணங்களிலான கேடயங்களையும் கொண்ட வீரர்கள் அவனது படையில் இருந்தனர். அவர்கள் {அந்தப் படைவீரர்கள்} அனைவரும் அற்புத மாலைகளையும், பல்வேறு ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்திருந்தார்கள். தாங்கள் சார்ந்த நிலத்திற்குரிய வகையில் உடுத்தி, அலங்கரித்திருந்த க்ஷத்திரியர்களில் முதன்மையான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வீரர்கள் அவனது துருப்புகளுக்குத் தலைவர்களாக இருந்தனர். அவன் {சல்லியன்} தனது துருப்புகளை இளைப்பாரச் செய்து, மெதுவாக அணிவகுத்த படி பாண்டவர்களின் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். பூமியின் உயிரினங்கள் தாங்கள் ஒடுக்கப்பட்டதாக உணர்ந்தன. அவனது {சல்லியனின்} துருப்புகளின் நடையால் பூமி நடுங்கியது.
பரந்த மனம் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன் {சல்லியன்} புறப்பட்டு வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட மன்னன் துரியோதனன், அவனை{சல்லியனை} நோக்கி விரைந்து, அவனுக்கு உரிய மரியாதைகள் செய்தான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவனை {சல்லியனை} வரவேற்பதற்காக, பல்வேறு அழகிய இடங்களில், அழகாக அலங்கரிக்கப்பட்ட கேளிக்கைத்தலங்களைக் கட்டச் செய்தான். {அந்த} விருந்தினர்களை உபசரிப்பதில் பல கலைஞர்களை ஈடுபடுத்தினான். மாலைகள், இறைச்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட பானங்கள் மற்றும் தின்பண்டங்கள், இதயத்திற்கு உற்சாகமூட்டும் வகையில் பல வடிவங்களிலான கிணறுகள், பல்வேறு உருவங்களிலான தண்ணீர்ப்பந்தல்கள், உணவு வகைகள், விரிந்த அறைகள் ஆகியவற்றை அந்த அரங்குகள் கொண்டிருந்தன.
அந்த அரங்குகளை அடைந்ததும், தெய்வத்துக்குக் காத்திருப்பது போலத் துரியோதனனின் பணியாட்கள் பல இடங்களில் அவனுக்காக {சல்லியனுக்காகக்} காத்திருந்தனர். தேவர்களின் ஓய்விடம் போன்ற பிரகாசமிக்க மற்றொரு கேளிக்கையில்லத்தைச் சல்லியன் அடைந்தான். மனிதர்களைவிட மேம்பட்ட உயிரினங்கள் அனுபவிக்கத்தக்க வசதியான தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களால் வரவேற்கப்பட்ட அவன் {சல்லியன்}, தன்னைத் தேவர்கள் தலைவனைவிட {இந்திரனை விட} மேம்பட்டவனாக நினைத்துக் கொண்டான். {அல்லது} இந்திரனே தனக்கு ஒப்பானவன் என்றும் நினைத்துக் கொண்டான். பிறகு, க்ஷத்திரியர்களின் முதன்மையான அவன் {சல்லியன்}, {அங்கிருந்த} பணியாட்களிடம், “இந்த உற்சாகத் தலங்களை ஏற்பாடு செய்த யுதிஷ்டிரனின் ஆட்கள் எங்கே? இவற்றைச் செய்த அம்மனிதர்கள் என் முன் அழைத்து வரப்படட்டும். நான் அவர்களை வெகுமதியடைத்தக்கவர்களாகக் கருதுகிறேன். நான் அவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்! குந்தியின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அது மகிழ்ச்சியை அளிக்கட்டும்” என்றான்.
ஆச்சரியமடைந்த பணியாட்கள், காரியங்கள் அனைத்தையும் துரியோதனனுக்குத் தெரிவித்தார்கள். மிகவும் மகிழ்ந்திருந்த சல்லியன், தனது உயிரையும் தரச் சித்தமாக இருந்த போது, அதுவரை மறைந்திருந்த துரியோதனன், முன்னே வந்து, தன்னைத் தனது தாய்மாமன் {சல்லியன்} முன்பு வெளிக்காட்டிக் கொண்டான். மத்ரர்கள் மன்னன் {சல்லியன்} அவனைக் கண்டு, தன்னை வரவேற்பதில் அனைத்துச் சிரமங்களையும் எடுத்துக் கொண்டவன் துரியோதனனே என்பதைப் புரிந்து கொண்டான். பிறகு சல்லியன் துரியோதனனை அணைத்துக் கொண்டு, “நீ விரும்பும் எதையாவது ஏற்றுக் கொள்” என்றான்.
அதற்குத் துரியோதனன் {சல்லியனிடம்}, “ஓ! மங்கலமானவரே {சல்லியரே}, உமது சொல் உண்மையாகட்டும். எனக்கு ஒரு வரத்தைத் தாரும். எனது படைகள் அனைத்திற்கும் நீர் தலைவராக வேண்டும் என்று நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைக்கேட்ட சல்லியன், “அப்படியே ஆகட்டும்! வேறு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான். அதற்குக் காந்தாரியின் மகன் {துரியோதனன்}, “{அனைத்தும்} செய்யப்பட்டுவிட்டது” என்று மீண்டும் மீண்டும் சொன்னான். சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நீ உனது நகரத்திற்குச் செல். எதிரிகளை அடக்குபவனான யுதிஷ்டிரனைச் சந்திக்க நான் புறப்படுகிறேன். ஓ! மன்னா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, நான் விரைந்து திரும்புவேன். மனிதர்களில் சிறந்தவனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரனை நான் எல்லாவகையிலும் அவசியம் பார்க்க வேண்டும்” என்றான்.
இதைப் பொறுத்துக் கொண்ட துரியோதனன் {சல்லியனிடம்}, “ஓ மன்னா, ஓ பூமியின் ஆட்சியாளரே {சல்லியரே}, பாண்டவனைப் {யுதிஷ்டிரனைப்} பார்த்த பிறகு, விரைந்து திரும்பி வாரும். ஓ! மன்னர்களுக்கு மன்னா {சல்லியரே}, நான் உம்மையே முழுதும் நம்பியிருக்கிறேன். நீர் எனக்கு அளித்திருக்கும் வரத்தை நினைவுகூரும்” என்றான். அதற்குச் சல்லியன் {துரியோதனனிடம்}, “உனக்கு நன்மையே விளையட்டும்! நான் விரைந்து திரும்பி வருவேன். ஓ! மனிதர்களின் காவலா {துரியோதனா}, நீ உனது நகரத்திற்குச் செல்” என்று பதிலுரைத்தான். பிறகு சல்லியன், துரியோதனன் ஆகிய அந்த இரு மன்னர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.
இப்படிச் சல்லியனை வரவேற்ற துரியோதனன், தனது நகரத்திற்குத் திரும்பினான். சல்லியனும் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைக் குந்தியின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} தெரிவிக்கச் சென்றான். உபப்லாவியத்தை அடைந்ததும், அம்முகாமுக்குள் நுழைந்த சல்லியன், அங்கே பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் கண்டான். வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்தச் சல்லியன் பாண்டவர்களைச் சந்தித்ததும், தனது பாதங்களைக் கழுவிக்கொள்ள நீரையும், ஒரு பசுவுடன் கூடிய சடங்கு நிமித்தமான கொடைகளையும் வழக்கம் போல ஏற்றுக் கொண்டான். பிறகு, எதிரிகளைக் கொல்பவனான, மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை முதலில் விசாரித்து, பிறகு பெருமகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் தனது தங்கையின் {மாத்ரியின்} மகன்களான அந்த இரட்டையர்கள் இருவர் {நகுலன், சகாதேவன்} ஆகியோரைத் தழுவி கொண்டான்.
அனைவரும் அமர்ந்ததும், சல்லியன், குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னர்களில் புலியே, ஓ! குரு குலத்திற்கு மகிழ்ச்சியளிப்பவனே {யுதிஷ்டிரா}, உன்னிடம் அனைத்தும் நலமாயிருக்கிறதா? ஓ! வெற்றியாளர்களில் சிறந்தவனே, நற்பேறாலேயே வனவாசத்தின் குறித்த காலத்தை நீ கழித்தாய். ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த உனது தம்பிகளுடனும், இந்த உன்னதமான மங்கையுடனும் காட்டில் வசிப்பது மிகக் கடினமானக் காரியமே. மறைந்திருந்த காலத்தில் நீ வசித்த நிலை கடினமானதும் மோசமானதும் ஆகும். ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அரியணையில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டவனுக்குக் கடுங்காலமே காத்திருக்கும் என்றாலும், அந்தப் பணியையும் முடித்தாய். {அப்போது}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா} உனக்கு என்ன மகிழ்ச்சி இருந்திருக்கும்!
ஓ! எதிரிகளை வாட்டுபவனே, திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} உனக்குச் செய்யப்பட்ட பெருந்தீங்குகளுக்குப் பதிலாக, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ உனது எதிரிகளைக் கொன்று அதற்கேற்ப {நீ அனுபவித்த துன்பத்திற்குச் சமமாக} நீ மகிழ்ச்சியை அடைவாய். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உலகத்தின் வழிகளை நீ அறிந்திருக்கிறாய். எனவே, ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நீ உனது செயல்பாடுகளில் தீமையால் எப்போதும் வழிநடத்தப்பட மாட்டாய். ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பழமையான அரச முனிகளின் வழியில் நீ நடப்பாயாக! எனது மகனே, யுதிஷ்டிரா, தாராளம், தன்னல மறுப்பு {சுயத் தியாகம்}, உண்மை {சத்தியம்} ஆகியவற்றின் வழியில் சீராக {உறுதியாகச்} செல்வாயாக!
ஓ! மன்னா, யுதிஷ்டிரா, கருணை, தற்கட்டுப்பாடு, உண்மை, உலகளாவிய பரிவு ஆகியனவும், இவ்வுலகில் அற்புதமான அனைத்தும் உன்னில் காணக் கிடைக்கின்றன. மிதமானவனாக, வாரிவழங்குபவனாக, அறம்சார்ந்தவனாக, தாராளவாதியாக இருக்கும் நீ, அறத்தையே உயர்ந்த நன்மையாகக் கருதுகிறாய். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் மத்தியில் புழங்கும் அறத்தின் விதிகள் பல இருக்கின்றன. அவை அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஓ! எனது மகனே, ஓ எதிரிகளை வாட்டுபவனே {யுதிஷ்டிரா}. உண்மையில் இவ்வுலகம் சார்ந்த அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உனது கடின காலத்தில் இருந்து வெளியே வந்திருக்கும் நீ பேறுபெற்றவனாவாய். ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, அறச்சார்பு மிகுந்த ஆன்மாவும், நேர்மையின் புதையலுமான நீ, உனது தொண்டர்களுடன் விடுபட்டிருப்பதைக் காணும் நானும் நற்பேறு பெற்றவனே” என்றான் {சல்லியன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அம்மன்னன் {சல்லியன்}, துரியோதனனுடனான தனது சந்திப்பையும், தனது உறுதிமொழியையும், தான் {அவனுக்கு} அளித்த வரம் ஆகியவற்றையும் விரிவாகப் பேசினான். அதற்கு யுதிஷ்டிரன், “ஓ! வீரமிக்க மன்னரே {சல்லியரே}, இதயம் மகிழ்ந்த நீர், துரியோதனனுக்கு உறுதியளித்து நன்றே செய்திருக்கிறீர். உமக்கு நன்மையே விளையட்டும். ஓ! பூமியின் ஆட்சியாளரே {சல்லியரே}, நான் உம்மிடம் ஒன்றை மட்டும் செய்யச் சொல்கிறேன். ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {சல்லியரே}, அது செய்வதற்குத் தகாதது என்றாலும், முழுவதும் எனக்காக மட்டுமே நீர் அதைச் செய்ய வேண்டும்.
ஓ! வீரரே {சல்லியரே}, நான் உம்மிடம் விண்ணப்பிப்பதைக் கேளும். ஓ பெரும் மன்னா {சல்லியரே}, போர்க்களத்தில் நீர் கிருஷ்ணனுக்கு நிகரானவர். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {சல்லியரே}, கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் தனிப்பட்ட மோதல் ஏற்படும்போது, நீரே கர்ணனின் தேரோட்டியாக இருப்பீர் என்பதில் எனக்கு ஐயமில்லை. அச்சந்தர்ப்பத்தில், நீர் எனக்கு நன்மையைச் செய்ய வீரும்பினால், அர்ஜுனனை நீர் காக்க வேண்டும். ஓ! மன்னா {சல்லியரே}, அதே போல, சூதனின் மகனான கர்ணன் உற்சாகமிழக்கும் வகையில் நீர் செயல்பட வேண்டும். {அப்படிச் செய்தால்} வெற்றியும் எங்களுடையதாகும். இது முறையற்றது என்பதில் சந்தேகமில்லை; ஆனால், ஓ! என் அம்மானே {மாமா}, அனைவருக்காகவும் நீர் அவற்றைச் செய்ய வேண்டும்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “உனக்கு நன்மையே விளையட்டும்! ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} கேள். சூதனின் தீய மகன் {கர்ணன்} போரில் உற்சாகமிழக்கும்படி செய்ய நீ என்னிடம் சொல்கிறாய். அவன் {கர்ணன்} என்னைக் கிருஷ்ணனுக்குச் சமமானவனாகக் கருதுவதால், போர்க்களத்தில் நான் அவனது தேரோட்டியாக ஆவேன் என்பது உறுதி. ஓ! புலியைப் போன்ற குருவின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, போரிட விரும்பி போர்க்களத்தில் இருக்கும் அவனிடம் {கர்ணனிடம்}, அவனது கர்வமும் வீரமும் அழிந்து எதிரியால் அவன் கொல்லப்படும் வகையில் முரண்பட்ட, தீங்கு நிறைந்த சொற்களை நான் அவனுக்குச் சொல்வேன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். உன்னால் கேட்கப்பட்டதால், ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நான் இதைச் செய்யத் தீர்மானித்துவிட்டேன்.
எவற்றையெல்லாம் என்னால் வெளிக்கொணர முடியுமோ, அவற்றையெல்லாம் உனது நன்மைக்காகவே நான் செய்வேன். ஓ! சிறப்புமிக்கவனே {யுதிஷ்டிரா} பகடையாட்டத்தின் போது திரௌபதியுடன் சேர்ந்து நீ அனுபவித்த துன்பம், சூத மகனால் {கர்ணனால்} உச்சரிக்கப்பட்ட மனிதத் தன்மையற்ற வார்த்தைகள், அசுரன் ஜடன் மற்றும் கீசகனால் ஏற்பட்ட பெருந்துன்பம், பழங்காலத்து தமயந்தி போல, திரௌபதியால் அனுபவிக்கப்பட்ட பெருந்துன்பங்கள் ஆகியவை அனைத்தும், ஓ! வீரா, இன்பத்திலேயே முடியும். இவ்வுலகத்தில் விதியே வலியது என்பதால், நீ இதற்காகக் கவலைக் கொள்ளக் கூடாது. ஓ! யுதிஷ்டிரா, உயர்ந்த மனம் கொண்ட மனிதர்கள் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவிக்கின்றனர். ஏன், தேவர்களே கூட, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கெடுபேறுகளால் துன்புற்றிருக்கின்றனர். உண்மையில், ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனான உயர்ந்த மனம் கொண்ட இந்திரன் கூட, தனது மனைவியுடன் சேர்ந்து பெருந்துன்பத்தை அனுபவிக்க நேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது” என்றான் {சல்லியன்}.
சல்லியன் சொன்ன விருத்திரன் கதை! – உத்யோக பர்வம் பகுதி 9-துவஷ்டிரியால் திரிசிரன் படைக்கப்பட்டது; திரிசிரன் தவத்தில் ஆழ்வது; திரிசிரன் தனது பதவியைக் குறி வைக்கிறான் என்றெண்ணி இந்திரன் அவனைக் கொல்வது; தனது மகனைக் கொன்ற இந்திரனைக் கொல்வதற்காக துவஷ்டிரி விருத்திரனை உண்டாக்குவது; விருத்திரன் இந்திரனை விழுங்குவது; தேவர்கள் கொட்டாவியைப் படைப்பது; விருத்திரன் வெளியிட்ட கொட்டாவியால் இந்திரன் வெளியே வந்தது; மீண்டும் போர் தொடங்கியது; இந்திரன் தோற்று ஓடியது; மந்தர மலையில் அமர்ந்து கொண்டு தேவர்கள் விஷ்ணுவை தியானித்தது..
யுதிஷ்டிரன் {சல்லியனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {சல்லியரே}, ஒப்பற்ற இந்திரன் தனது ராணியுடன் அனுபவித்த பெரிய இணையற்ற துயரம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”
அதற்குச் சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இந்திரன் மற்றும் அவனது மனைவிக்கும் துயரம் எப்படி நேர்ந்தது என்று, முன்நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட பழங்கதையை நான் சொல்கிறேன் கேள். ஒரு முறை உயிரினங்களின் தலைவரும், தேவர்களில் முதன்மையானவருமான துவஷ்டிரி{துவஷ்டா = விஸ்வகர்மா} [1] கடுமையான தவப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இந்திரன் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அவன் {துவஷ்டிரி} மூன்று தலை கொண்ட ஒரு மகனை {திரிசிரனைப்}[2] படைத்தான் என்று சொல்லப்படுகிறது. பெரும் காந்தியும், உலகளாவிய வடிவமும் கொண்ட அவன், இந்திரனின் இருக்கை {பதவி} மீது ஆவல் கொண்டான்.
சூரியன், சந்திரன், நெருப்பு ஆகியவற்றை ஒத்திருக்கும் பரிதாபகரமான மூன்று முகங்களைக் கொண்டிருந்த அவன், ஒரு வாயினால் வேதங்களைப் படித்தான், மற்றொரு வாயினால் மதுவைக் {சூரையைக்} குடித்தான், மூன்றாவதைக் கொண்டு எல்லாத் திக்குகளையும் உறிஞ்சிவிடுவதைப் {விழுங்குவதைப்} போலப் பார்த்தான். தவப் பயிற்சி, மென்மை, தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டு, அறப்பயிற்சிகளையும், தவத்தையும் செய்யும் வாழ்வு வாழ அவன் நோக்கம் கொண்டான். ஓ! எதிரிகளை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, அவனது தவப்பயிற்சி திடமானதாகவும், பயங்கரமானதாகவும், மிகக் கடுமையான தன்மை கொண்டதாகவும் இருந்தது. துணிவு, உண்மை, அளவிலா ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட தவத்தைக் கண்ட இந்திரன், தனது இடத்தை அடையவே அவன் இப்படிச் செய்கிறான் என்று அஞ்சினான். பிறகு இந்திரன், “இவனைச் சிற்றின்பத்திற்கு அடிமையாக்குது எவ்வாறு? இவன் செய்யும் இத்தகு கடும் தவப்பயிற்சியை நிறுத்துவது எவ்வாறு? இந்த மூன்று தலையன் {திரிசிரன்} பலத்தில் வளர்ந்தால், இந்த முழு அண்டத்தையுமே விழுங்கிவிடுவானே” என்று ஆலோசித்தான்.
இப்படியே இந்திரன் தனது மனதில் ஆலோசித்தான்; பிறகு, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பெரும் புத்திக்கூர்மையுடைய அவன் {இந்திரன்}, துவஷ்டிரியின் மகனை {விஸ்வரூபன் என்ற திரிசிரனை} மயக்க தேவ கன்னியருக்குக் கட்டளையிட்டான். அவன் அவர்களிடம், “விரைந்து தாமதமில்லாமல் சென்று, அந்த மூன்று தலையன் {திரிசிரன்} சிற்றின்பத்தின் எல்லைவரை மூழ்கும்படி அவனை மயக்குங்கள். வசீகரமான இடுப்புகளுடன், உணர்வைத்தூண்டும் ஆடைகளில் உங்களை வரிசைப்படுத்திக் கொண்டு, கவர்ச்சியான கழுத்தணிகளில் உங்களை அலங்கரித்துக் கொண்டு, காதற்கெஞ்சல்களுடன் கூடிய சைகைகளைக் காட்சிப்படுத்துவீர்களாக! அழகுடன் கூடி அவனை மயக்கி எனது பெரும் அச்சத்தைப் போக்குவீர்களாக! ஓ! அழகிய காரிகைகளே, என் இதயத்தில் ஓய்வின்மையை {நிம்மதியற்ற தன்மையை} உணர்கிறேன். பெண்களே, என் மீது தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அச்சந்தரும் ஆபத்தைத் தவிர்ப்பீர்களாக! உங்களுக்கு நன்மையே விளையட்டும்” என்றான் {இந்திரன்}.
அதற்கு அந்தத் தேவ கன்னியர் {இந்திரனிடம்}, “ஓ! இந்திரரே, ஓ! வலனைக் கொன்றவரே, அவனிடம் நீர் அச்சங்கொள்ள ஒன்றுமில்லை என்ற அளவுக்கு நாங்கள் அவனை {திரிசிரனை} மயக்க முயற்சிப்போம். ஓ! தேவரே, தவத்தின் நிதியான இவன், அனைத்தையும் தனது கண்களாலே எரிப்பவன்போல அமர்ந்திருக்கும் அவனை {திரிசிரனை} மயக்குவதற்காக நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செல்கிறோம். அவனை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து, உமது அச்சங்களுக்கு ஒரு முடிவை ஏற்படுத்துகிறோம்” என்றனர்.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்திரனால் கட்டளையிடப்பட்ட அவர்கள் அந்த மூன்று தலையனிடம் {திரிசிரனிடம்} சென்றார்கள். அங்கே வந்த அந்த அழகிய காரிகைகள், காதலின் பல்வேறு சைகளைகளைச் செய்து, தங்கள் அழகிய உருவங்களைக் காட்சிப்படுத்தி அவனை மயக்கினர். ஆனால், மிகக்கடுமையான தவத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவன் அவர்களைப் பார்த்தாலும், ஆசைக்கு ஆளாகவில்லை. அடக்கப்பட்ட புலன்களுடன் இருந்த அவன் ஈர்ப்பினால் விளிம்பு வரை முழுமையாக இருந்த கடலைப் போல இருந்தான். தங்கள் முயற்சிகளில் சிறந்ததைச் செய்த பிறகு, அந்தத் தேவ கன்னியர் இந்திரனிடமே திரும்பிச் சென்றனர்.
அவர்கள் அனைவரும், தேவர்கள் தலைவனிடம் {இந்திரனிடம்} கூப்பிய கரங்களுடன் சென்று, “ஓ!, அணுக முடியாத அவனை {திரிசிரனை} எங்களால் தொந்தரவு செய்ய இயலவில்லை. ஓ! உயர்ந்த கொடை கொண்டவரே, இப்போதும் உமக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்யும்” என்றனர். உயர்ந்த மனம் கொண்ட இந்திரன் அந்தத் தேவ கன்னியரைக் கௌரவித்து அனுப்பிவிட்டு, ஓ! யுதிஷ்டிரா, தனது எதிரியை அழிக்கும் பிற வகைகளை மட்டுமே சிந்திக்கலானான். இவ்வாறே கற்றல் ஆய்வில் பதியப்பட்டுள்ள பாடங்களைக் குறித்துச் சிந்தித்து, அவனைக் கொல்வது என உறுதியாகத் தீர்மானித்தான்.
பிறகு, கோபம் பெருகிய இந்திரன், நெருப்பைப் போன்றதும், காணப் பயங்கரமானதும், பேரச்சத்தை ஈர்ப்பதுமான தனது வஜ்ரத்தை அந்த மூன்று தலையன் மீது வீசினான். வலுவாக வஜ்ரத்தால் அடிக்கப்பட்ட அவன் {திரிசிரன்} கொல்லப்பட்டு, மலையில் இருந்து தளர்ந்து விழுந்த சிகரம் போலக் கீழே விழுந்தான். வஜ்ரத்தால் கொல்லப்பட்டு, மலைபோல் கீழே கிடப்பவனைக் கண்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, இறந்து கிடந்தவனின் தோற்றத்தின் பிரகாசத்தினால் எரிக்கப்பட்டு அமைதியடையவில்லை. கொல்லப்பட்டாலும், அவன் சுடர்விடும் பிரகாசத் தோற்றத்துடன் உயிருடன் இருப்பவன் போலவே இருந்தான். உயிரற்றவனாக இருந்தாலும், களத்தில் தரையில் கிடந்த அவனுடைய தலைகள் உயிருடன் இருப்பவைப் போலவே இருந்தன என்பதைச் சொல்ல ஆச்சரியமாகவே இருக்கிறது. அந்தக் காந்தியைக் கண்டு பெரும் அச்சம் கொண்ட இந்திரன் சிந்தனையில் ஆழ்ந்தபடியே இருந்தான்.
அந்த நேரத்தில், ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, தோளில் கோடரியைத் தாங்கிக் கொண்டு, அந்தக் காட்டுக்கு வந்த ஒரு தச்சன் [3], அது {அந்த மூன்று தலையன்} கிடந்த இடத்தை அடைந்தான். அச்சத்திலிருந்த சச்சியின் தலைவனான இந்திரன், தற்செயலாக அங்கே வந்த தச்சனைக் கண்டான். அந்தப் பகனைக் கொன்றவன் {இந்திரன்} அவனிடம் {தச்சனிடம்} உடனடியாக, “எனக்காக இதைச் செய். விரைவில் இவனது தலைகளைத் துண்டிப்பாயாக” என்றான். அதற்கு அந்தத் தச்சன், “இவனது தோள்கள் அகலமாக இருக்கின்றன; இந்தக் கோடரியால் இவற்றை வெட்ட முடியாது. அல்லது, நீதிமான்களால் கண்டிக்கப்பட்டவற்றை என்னால் செய்ய முடியாது” என்றான். அதற்கு இந்திரன், “அஞ்சாதே, நான் சொல்வதை விரைவாகச் செய். எனது உத்தரவின் பேரில் உனது கோடரி வஜ்ரத்துக்கு இணையாக இருக்கும்” என்றான்.
தச்சன் {இந்திரனிடம்}, “இந்தப் பயங்கரமான செயலைச் செய்த உன்னை நான் யாரென எடுத்துக் கொள்வது? இதை நான் அறிய விரும்புகிறேன். சரியான உண்மையை எனக்குச் சொல்” என்றான். அதற்கு இந்திரன், “ஓ! தச்சா, நான் தேவர்கள் தலைவனான இந்திரன். இதை நீ அறிவாயாக. நான் சொன்னதை மட்டும் நீ செய். ஓ! தச்சா, தயங்காதே!” என்றான். அதற்கு தச்சன் {இந்திரனிடம்}, “ஓ! இந்திரா, மனிதத்தன்மையற்ற இந்த உனது செயலுக்காக நீ எப்படி வெட்கப்படாமல் இருக்கிறாய்? ஒரு துறவியின் மகனைக் கொன்றதால் ஏற்பட்ட, அந்தணனைக் கொன்ற பாவத்தின் மீது பேரச்சம் கொள்ளாமல் எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.
இந்திரன், “பிறகு நான் சில கடுமையான அறச்சடங்குகளைச் செய்து இந்தக் களங்கத்தில் இருந்து என்னைச் சுத்திகரித்துக் கொள்வேன். எனது வஜ்ரத்தால் கொல்லப்பட்ட இவன் எனது வலிமை நிறைந்த எதிரியாவான். ஓ! தச்சா, இன்னும் நான் அமைதியடையவில்லை. இவனது தலைகளை விரைவாக வெட்டிவிடு. நான் உனக்கு அருட்கொடைகளை அளிப்பேன். வேள்விகளில், மனிதர்கள் அந்த வேள்வியின் விலங்குடைய தலையை உனது பங்காக அளிப்பார்கள். இதுவே நான் உனக்கு அளிக்கும் அருட்கொடையாகும். நான் விரும்புவதை விரைவாகச் செய்” என்றான் {இந்திரன்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “இதைக் கேட்ட அந்தத் தச்சன், பெரும் இந்திரனின் கோரிக்கையின் பேரில்,, அந்த மூன்று தலையனின் தலைகளைத் தனது கோடரியால் உடனே துண்டித்தான். அவனது தலைகள் வெட்டப்பட்ட போது, அதிலிருந்து கவுதாரிகள், காடைகள், குருவிகள் ஆகிய பல பறவைகள் பறந்து வெளியேறின. அவன் வேதங்களைச் சொல்லி, சோமச்சாற்றைக் குடிக்கும் வாயிலிருந்து கவுதாரிகள் வெளியேறின. ஓ! மன்னா, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அனைத்துத் திக்குகளையும் உறிஞ்சுவதுபோலப் பார்த்துக் கொண்டிருந்த வாயிலிருந்து பல காடைகள் வெளியே வந்தன. அந்த மூன்று தலையன் மது அருந்த பயன்படுத்திய வாயில் இருந்து, குருவிகளும் பருந்துகளும் பறந்து சென்றன. அந்தத் தலைகள் வெட்டப்பட்ட பிறகு, இந்திரன் தனது நடுக்கத்தில் இருந்து விடுபட்டு, இதயத்தில் மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்குச் சென்றான். அந்தத் தச்சனும் தனது வீட்டுக்குச் சென்றான். அந்த அசுரர்களைக் கொல்பவன் {இந்திரன்}, தனது எதிரியைக் கொன்ற பிறகு, தனது நோக்கம் நிறைவேறியதாகக் கருதினான்.
பிறகு உயிரினங்களின் தலைவனான துவஷ்ட்ரி {விஸ்வகர்மா}, தன் மகன் {விஸ்வரூபன் திரிசரன்} இந்திரனால் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டும் கோபத்தால் கண்கள் சிவந்து இவ்வார்த்தைகளைப் பேசினான். அவன் {துவஷ்டிரி}, “தொடர்ச்சியாகத் தவம் பயின்று, கருணையோடும், தற்கட்டுபாட்டோடும், ஆசைகளை அடக்கிக் கொண்டும் எக்குற்றமும் செய்யாதிருந்த எனது மகனை {திரிசரனை} இந்திரன் கொன்றதால், இந்திரனின் அழிவுக்காக நான் விருத்திரனை உண்டாக்குவேன். நான் கொண்டுள்ள சக்தியையும், தவப்பயிற்சியின் பலத்தையும் இந்த உலகங்கள் காணட்டும்! மனித்தன்மையற்ற, தீய மனம் கொண்ட தேவர்கள் தலைவன் இதைச் சாட்சியாகக் காணட்டும்!” என்றான்.
தன் தவத்திற்காக நன்கு அறியப்பட்ட அவன் {துவஷ்டிரி} கோபம் பெருகி இதைச் சொன்ன பிறகு, நீரால் தனது வாயைச் சுத்தம் செய்து கொண்டு, காணிக்கைகளை நெருப்பிலிட்டு, பயங்கரமான விருத்திரனை உண்டாக்கி, அவனிடம் {விருத்திரனிடம்}, “ஓ! இந்திரனைக் கொல்ல விதிக்கப்பட்டவனே, எனது தவச்சடங்குகளின் சக்தியால் நீ பலத்துடன் வளர்வாயாக!” என்றான். அந்த அசுரன் பலத்தால் வளர்ந்து ஆகாய விரிவில் கோபுரமாய் நின்று நெருப்பின் மகனைப் {முருகனைப்} போல இருந்தான். அவன் {விருத்திரன்}, “பிரளய நாளில் உதித்த சூரியனைப் போல நான் யாரைக் கொல்ல வேண்டும்?’ என்று கேட்டான். “இந்திரனைக் கொல்!” என்பதே மறுமொழியாக இருந்தது.
பிறகு அவன் தேவலோகத்திற்குச் சென்றான். பிறகு விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது. இருவரும் கோபத்தில் எரிந்தனர். ஓ! குரு குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா} அங்கே ஒரு பயங்கரமான மோதல் நடைபெற்றது. வீரனான விருத்திரன், நூறு வேள்விகளைச் செய்த தேவர்கள் தலைவனைப் பிடித்தான். பிறகு கோபத்தால் நிரம்பி, இந்திரனைச் சுழற்றி, தனது வாய்க்குள் தூக்கி எறிந்தான். இந்திரன் விருத்திரனால் விழுங்கப்பட்ட போது, பெரும்பலம் கொண்டவர்களான தேவர்களில் மூத்தவர்கள் அச்சங்கொண்டு, விருத்திரனைக் கொல்வதற்காகப் பெரும்பலமிக்க ஜிரிம்பிகாவை {கொட்டாவியின் அதிதேவதை} உண்டாக்கினார்கள்.
விருத்திரன் கொட்டாவி விட்டு தனது வாயைத் திறந்ததும், வலன் என்ற அசுரனைக் கொன்றவன் {இந்திரன்}, அவனது உடலின் பல பாகங்களைச் சுருக்கி, விருத்திரனின் வாயில் இருந்து வெளியே வந்தான். அது முதலே, மூன்று உலகங்களிலும் உள்ள அசையும் உயிரினங்களின் உயிர்மூச்சில் கொட்டாவி இணைந்துவிட்டது. இந்திரன் வெளியேறியதைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். கோபம் மிகுந்த இருவரான விருத்திரன் மற்றும் இந்திரனுக்குமிடையில் மீண்டும் அங்கே பயங்கரப் போர் மூண்டது. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அது {அந்தப் போர்} நீண்ட காலத்திற்கு நீடித்தது.
துவஷ்டிரியின் {படைப்பு தேவர்களில் ஒருவர்} பலமிக்க ஆவியை ஈர்த்தும், சுயமாகப் பலம் கொண்டும் இருந்ததால், விருத்திரனின் கையே போரில் ஓங்கியிருந்தது. இந்திரன் புறமுதுகிட்டான். அவனது பின்வாங்கலால் தேவர்கள் மிகுந்த துயரடைந்தனர். இந்திரனுடன் சேர்ந்த அவர்கள் அனைவரும் கூடத் துவஷ்டிரியின் பலத்தால் ஆட்கொள்ளப்பட்டனர். பிறகு, ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அவர்கள் அனைவரும் துறவிகளுடன் ஆலோசித்தனர். முறையாகச் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து ஆலோசித்து, அதீத அச்சத்தால் நிரம்பி வழிந்தனர். அவர்கள் மந்தர மலையின் மேல் அமர்ந்து கொண்டு, விருத்திரனைக் கொல்ல எண்ணி விஷ்ணுவை மனத்தால் அடைந்தார்கள்” என்றான் {சல்லியன்}
விருத்திரனைக் கொன்ற இந்திரன்! – உத்யோக பர்வம் பகுதி 10-தேவர்களும் முனிவர்களும் விஷ்ணுவிடம் ஆலோசிப்பது; விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் அவர்கள் விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தியது; அமைதி ஏற்பட விருத்திரன் சொன்ன நிபந்தனைகள்; விருத்திரன் வைத்த நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு, விஷ்ணுவின் உதவியோடு இந்திரன் விருத்திரனைக் கொன்றது; திரிசிரனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தியால் இந்திரன் நீருக்கடியில் மயங்கி கிடந்தது; இந்திரன் இல்லாத உலகம் அல்லலுற்றது; தங்களுக்கு ஒரு தலைவன் இல்லாமல் தேவர்களும் முனிவர்களும் திண்டாடியது…
இந்திரன் சொன்னான், “ஓ! தேவர்களே, அழிக்கப்படமுடியாத இந்த முழு அண்டத்திலும், விருத்திரன் பரவியுள்ளான். அவனை எதிர்க்கும் பணிக்கு நிகரான வேறு எதுவும் கிடையாது. பழங்காலத்தில் நான் இயன்றவனாக இருந்தேன். ஆனால் இப்போதோ இயலாதவனாக இருக்கிறேன். உங்களால் என்ன நல்லது நேரிடும்? நான் என்ன செய்ய முடியும்? அவன் அணுகப்பட முடியாதவன் என்பது எனது கருத்து. சக்தியுடன் பரந்திருக்கும் அவன், போரில் அளவிலா பலத்தைக் கொண்டிருக்கிறான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுடன் கூடிய மூன்று உலகங்களையும் அவன் {விருத்திரன்} விழுங்கிவிட வல்லவனாக இருக்கிறான். எனவே, சொர்க்கவாசிகளே கேளுங்கள், இதுவே எனது தீர்மானம். விஷ்ணுவின் வசிப்பிடம் சென்று, அந்த உயர் ஆன்மா கொண்டவருடன் {பரமாத்மாவுடன்} சேர்ந்து ஆலோசித்து, இந்த இரக்கமற்ற இழிந்தவனைக் கொல்லும் வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும்” என்றான் {இந்திரன்}.
சல்லியன் தொடர்ந்தான், “இப்படி இந்திரன் பேசிய நிலையில், முனிவர்கள் கூட்டத்துடன் சேர்ந்த தேவர்கள், அனைத்தையும் பாதுகாப்பவனின் {இந்திரனின்} பாதுகாப்பின் கீழ் தங்களைக் கொண்டு, வலிமைமிக்க தெய்வமான விஷ்ணுவிடம் சென்றார்கள். விருத்திரனிடம் கொண்ட பேரச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள், தெய்வங்களுக்குத் தலைமையான தெய்வத்திடம் {விஷ்ணுவிடம்}, “முற்காலங்களில் மூன்று உலகங்களையும் மூன்று காலடிகளில் நீ மூடினாய். ஓ! விஷ்ணு, நறுஞ்சுவையுடைய விண்ணுணவை {அமுதத்தை} கொள்வனவு செய்து {சேகரித்து}, போரில் அசுரர்களை அழித்தாய். பெரும் அசுரனான பலியைக் கட்டி, இந்திரனை சொர்க்கத்தின் அரியணைக்கு உயர்த்தினாய். தேவர்களுக்குத் தலைவனான நீ, இந்த அண்டம் முழுவதும் பரவியிருக்கிறாய். நீயே, மனிதர்கள் அனைவராலும் வணங்கப்படும் பலமிக்கத் தேவனான தெய்வம் {விஷ்ணு}. ஓ! தேவர்களில் சிறந்தவனே {விஷ்ணுவே}, இந்திரனுடன் கூடிய அனைத்து தேவர்களுக்கும் நீயே புகலிடம் ஆவாய்! ஓ! அசுரர்களைக் கொல்பவனே, அண்டம் முழுவதும் விருத்திரன் பரவியிருக்கிறானே” என்றார்கள்.
அதற்கு விஷ்ணு {தேவர்களிடம்}, “உங்களுக்கு நன்மையானவை எதற்கும் நான் கட்டுப்பட்டிருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. எனவே, அவனை {விருத்திரனை} அழிக்கக்கூடிய சூழ்ச்சியை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ரிஷிகளும், கந்தர்வர்களுமாகிய நீங்கள் அண்ட வடிவைத் தாங்கியிருக்கும் விருத்திரன் இருக்கும் இடத்திற்குச் சென்று அவனிடம் ஒரு சமரசங் கொள்ளுங்கள். இப்படியே நீங்கள் அவனைத் வீழ்த்துவதில் வெல்வீர்கள். தேவர்களே, காட்சிக்குப் புலப்படாமல் இருந்து, ஆயுதங்களில் சிறந்த இந்திரனின் வஜ்ரத்துக்குள் நான் நுழைவேன். எனது சக்தியின் அறத்தால், இந்திரன் வெற்றியை அடைவான். ஓ! தேவர்களில் முதன்மையானவர்களே, முனிவர்கள் மற்றும் கந்தர்வர்களுடன் புறப்படுங்கள். இந்திரனுக்கும் விருத்திரனுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவதில் தாமதம் இல்லாமலிருக்கட்டும்” என்றான் {விஷ்ணு}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவன் {விஷ்ணு} இப்படிப் பேசியதும், முனிவர்களும் தேவர்களும் இந்திரனைத் தலைமையாகக் கொண்டு ஒன்று சேர்ந்து சென்றனர். பிறகு இந்திரனை அணுகிய அவர்கள், பத்து திக்குகளையும் எரிக்கும் பிரகாசத்துடனும், மூன்று உலகங்களையும் விழுங்கி விடுவது போல, சூரியனையோ சந்திரனையோ ஒத்திருந்த விருத்திரனைக் கண்டார்கள். பிறகு, விருத்திரனிடம் வந்த முனிவர்கள், அவனிடம் சமரசமாக, “ஓ! வெல்லப்பட முடியாதவனே, இந்த முழு அண்டத்திலும் உனது சக்தி பரவியிருக்கிறது. எனினும், ஓ! வலிமைமிக்கவைகளில் சிறந்தவனே, உன்னால் இந்திரனை வீழ்த்த முடியவில்லை. நீ போரிட ஆரம்பித்து நீண்ட காலம் கடந்துவிட்டது. தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுடன் கூடிய அனைத்து உயிரினங்களும் இந்தப் போரின் விளைவுகளால் துன்புறுகின்றனர். உனக்கும் இந்திரனுக்கும் இடையில் நித்தியமான நட்பு விளையட்டுமாக. நீ மகிழ்ச்சி அடைந்து, இந்திரலோகங்களில் நித்தியமாக வசிப்பாயாக!” என்றனர்.
துறவிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வலிமைமிக்க விருத்திரன், அவர்களுக்குத் தலைவணங்கினான். பிறகு அந்த அசுரன் {விருத்திரன்}, “ஓ! உயர்ந்த கொடை பெற்றவர்களே, நீங்களும் இந்தக் கந்தர்வர்கள் அனைவரும் சொல்வதை நான் கேட்டேன். களங்கமற்றவர்களே, நான் சொல்லப் போவதையும் நீங்கள் கேளுங்கள். நான், இந்திரன் ஆகிய எங்கள் இருவருக்குள் எப்படி அமைதி ஏற்பட முடியும்? தேவர்களே, இரு பகை சக்திகளுக்குள் எப்படி நட்பிருக்க முடியும்?” என்று கேட்டான்.
அதற்கு அந்த முனிவர்கள் {விருத்திரனிடம்}, “நீதிமான்களுக்கிடையில் முதல் சந்திப்பிலேயே நட்பு ஏற்பட்டு விடும். அதுவே விரும்பத்தக்கதுமாகும். அதன் பின்னர், என்ன விதிக்கப்படுகிறதோ அதுவே நடக்கும். எனவே, நல்லோரின் நட்பு யாசிக்கப்பட வேண்டும். நல்லோருடனான நட்பு என்பது அற்புத செல்வமாகும் (செல்வத்தைப் போன்றதாகும்). ஏனெனில், தேவையேற்படும்போதெல்லாம் ஒரு விவேகி தனது ஆலோசனையை {ஒரு நண்பனுக்குக்} கொடுப்பான். நல்ல மனிதனிடம் கொள்ளும் நட்பு அதிகப் பயனுடையதாகும்; எனவே, விவேகிகள் நல்லோரைக் கொல்ல விரும்பலாகாது. நல்லோரால் மதிக்கப்படும் இந்திரன், பரந்த மனப்பான்மை கொண்ட மனிதர்களுக்குப் புகலிடமாக இருக்கிறான். வாய்மையுடையவனாக, குற்றமற்றவனாக, அறமறிந்தவனாக, நுண்ணிய நீதியை அறிந்தவனுமாக அவன் {இந்திரன்} இருக்கிறான். மேற்சொன்ன படி உனக்கும் இந்திரனுக்கும் இடையில் நித்தியமான நட்பு இருக்கட்டும். இவ்வழியில், {இந்திரனிடம்} நம்பிக்கை வை; உனது இதயத்தில் வேற்றுமை கொள்ளாதே”, என்றனர்”.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பெருமுனிவர்களின் இச்சொற்களைக் கேட்ட அந்த ஒப்பற்ற அசுரன் {விருத்திரன்} அவர்களிடம், இயல்புக்குமிக்க சக்திகளைக் கொண்ட முனிவர்கள் என்னால் மதிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. தேவர்களே, நான் சொல்லப் போகிறவை முழுமையாக நடத்தப்படட்டும்; பிறகு, நான் (இந்த) பிராமணர்களில் சிறந்தவர்கள் என்னிடம் சொன்னவாறு அனைத்தையும் செய்கிறேன். பிராமணக் குலத்தின் தலைவர்களே, உலர்ந்தவற்றினாலோ, ஈரமானவையினாலோ, கல்லினாலோ, மரத்தினாலோ, நெருக்கமான போரில் பயன்படும் ஆயுதங்களாலோ, ஏவுகணைகளாலோ, பகலிலோ, இரவிலோ, இந்திரனோ, தேவர்களோ என்னைக் கொல்லாத வகையில் அவர்களுக்குக் கட்டளையிடுவீராக! அந்த நிபந்தனைகளின் பேரிலேயே இந்திரனுடனான சமாதானம் என்னால் ஏற்கப்படும்” என்றான் {விருத்திரன்}. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அதற்கு அந்த முனிவர்கள் அவனிடம் “நல்லது” என்றனர்.
இப்படி அமைதி தீர்மானிக்கப்பட்டதும், விருத்திரன் மிகவும் மகிழ்ந்தான். விருத்திரனைக் கொல்லும் நினைவால் அடிக்கடி நிரப்பப்பட்டாலும் இந்திரனும் மகிழ்ச்சியடைந்தான். அந்தத் தேவர்கள் தலைவன் (மனதில்) அமைதியில்லாமல், தப்பும் வழி தேடி தனது நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான். ஒரு குறிப்பிட்ட நாளின் மாலைப்பொழுதில் பயங்கரமான நேரத்தில், கடற்கரையில் அந்தப் பலமிக்க அசுரனை அவன் {இந்திரன்} கண்டான். அந்த ஒப்பற்ற அசுரனுக்கு {விருத்திரனுக்கு} அருளப்பட்ட வரத்தை நினைத்துப் பார்த்து, “இஃது ஒரு பயங்கரமான மாலைப்பொழுது. இது பகலுமல்ல, இரவுமல்ல. என்னிடம் இருந்து அனைத்தையும் அபகரித்த இந்த விருத்திரன் எனது எதிரி. இவன் என்னால் கொல்லப்பட வேண்டியவன் என்பதில் சந்தேகமில்லை. ஏமாற்றியாவது பெரும் அளவில் இருக்கும் இந்தப் பெரும் பலமிக்க அசுரனை நான் கொல்லவில்லையானால், எனக்கு நன்மையுண்டாகாது” என்றான் {இந்திரன்}.
இப்படி நினைத்த இந்திரன், விஷ்ணுவை மனதில் நினைத்த மாத்திரத்தில் பெரும் மலையெனக் கடலில் நுரைக்குவியல் இருப்பதைக் கண்டான். பிறகு அவன், “இஃது {கடல் நுரை} உலர்ந்தோ, ஈரமாகவோ இல்லை. இஃது ஆயுதமும் அல்ல; நான் இதை விருத்திரன் மீது ஏவப் போகிறேன். அவன் உடனே இறந்துவிடுவான் என்பதில் ஐயமில்லை” என்று சொன்னான் {இந்திரன்}. பிறகு அவன் வஜ்ரத்தை {வஜ்ரத்தின் சக்தியை} அந்த நுரையில் கலந்து விருத்திரன் மீது வீசினான். அந்த நுரைக்குள் நுழைந்திருந்த விஷ்ணு, விருத்திரனின் உயிருக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தான். விருத்திரன் கொல்லப்பட்ட போது, திக்குகள் இருளற்றதாகின; அங்கே இனிய தென்றல் வீசியது; அனைத்து உயிர்களும் மகிழ்ந்தன. கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்களுடன் கூடிய தேவர்கள், பெரும்பாம்புகள், துறவிகள் ஆகியோர் பல்வேறு துதிப்பாடல்களால் வலிமைமிக்க இந்திரனைப் புகழ்ந்தனர்.
அனைவராலும் வணங்கப்பட்ட அந்த இந்திரன் அனைவருக்கும் ஊக்கம் தரும் சொற்களைப் பேசினான். அனைத்து தேவர்களையும் போலவே, தனது எதிரியைக் கொன்றதால் அவன் இதயமும் மகிழ்ந்தது. அந்த அறத்தின் இயல்பை அறிந்த அவன் {இந்திரன்}, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களைவிடவும் போற்றுதலுக்குரிய விஷ்ணுவை வணங்கினான். தேவர்களுக்குப் பயங்கரனான பலமிக்க விருத்திரன் கொல்லப்பட்டதும், பொய்மையினால் {அசத்தியத்தால்} மூழ்கடிக்கப்பட்ட இந்திரன் மிகுந்த துயரத்துக்குள்ளானான்; மேலும், துவஷ்டியரின் மகனான மூன்று தலையனைக் {திரிசிரனைக்} கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தியினாலும் மூழ்கடிக்கப்பட்டான். உலகங்களின் எல்லைகளுக்குள்ளே தஞ்சம்புகுந்து {உலகங்களின் கோடியை அடைந்து}, உணர்வுகளையும், சுயநினைவையும் இழந்தான். தனது பாவங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அவன் {இந்திரன்}, ஒருவராலும் அறியப்படாமல் இருந்தான். நெளிந்து கொண்டிருக்கும் பாம்பைப் போல அவன் நீருக்குள் மறைந்து கிடந்தான்.
பிரம்மஹத்தியினால் ஏற்பட்ட அச்சத்தினால் ஒடுக்கப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, காட்சியில் இருந்து இப்படி மறைந்து போன போது, அழிவைக் கடந்திருந்ததைப் போலப் பூமி காட்சியளித்தது. அது {பூமி} மரங்களற்று, காடுகளற்று, ஆறுகளின் ஓட்டங்கள் தடை செய்யப்பட்டுக் கிடந்தது; நீர்த்தேக்கங்கள் தங்கள் நீரனைத்தையும் இழந்தன; மழை நின்று போனதால், விலங்குகள் மத்தியில் துன்பமே நிலவியது. தேவர்களும், பெருமுனிவர்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்தனர்; மன்னனில்லாத உலகம், பேரழிவுகளால் மூழ்கடிக்கப்பட்டது. சொர்க்கத்தில் இருந்த தேவர்களும், தெய்வீக முனிவர்களும், தேவர்கள் தலைவனிடம் இருந்து பிரிந்ததால், அச்சமுற்று, தங்களுக்கு யார் மன்னன் என்று கவலைப்பட்டனர். ஒருவரும் தேவர்களின் மன்னனாகச் செயல்பட விரும்பவில்லை” என்றான் {சல்லியன்}
நகுஷனின் தீய எண்ணம்! – உத்யோக பர்வம் பகுதி 11-தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து நகுஷனைத் தேவலோக மன்னனாக்குவது; நல்லவனாக இருந்த நகுஷன் சிற்றின்பத்தில் மூழ்கித் திளைப்பது; தேவர்களும் பலரும் நகுஷனுக்குச் சேவை செய்வது; இந்திராணியைக் கண்ட நகுஷன், தனது இல்லத்திற்கு அவளை வரச்சொன்னது; இந்திராணி பிருஹஸ்பதியிடம் தஞ்சமடைந்தது; இதனால் நகுஷன் கோபமடைவது…
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு முனிவர்களும், மேன்மையான தேவர்களும், “அழகிய நகுஷன் {நஹுஷன், Nahusha}, தேவர்களின் மன்னனாக முடிசூடப்படட்டும். அவன் சக்திவாய்ந்தவனாகவும், புகழ்பெற்றவனாகவும், எப்போதும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவனாகவும் இருக்கிறான்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் அனைவரும் அவனிடம் {நகுஷனிடம்} சென்று, “ஓ! பூமியின் தலைவா, நீ எங்கள் மன்னனாக இருப்பாயாக!” என்றனர். தனது நலனின் நோக்கம் கொண்ட நகுஷன், (மனிதகுலத்தின்) மூதாதையர்களுடன் சேர்ந்திருந்த அந்தத் தேவர்களிடம், “நான் திடனற்றவனாக இருக்கிறேன்; எனக்கு உங்களைப் பாதுகாக்கும் திறன் இல்லை; பலமிக்க ஒருவனே உங்கள் மன்னனாக இருக்க வேண்டும்; அந்த வலிமையைப் பெற்றவனாக எப்போதும் இந்திரனே இருந்து வந்திருக்கிறான்” என்றான்.
அதற்குத் தேவர்கள் {நகுஷனிடம்}, “எங்கள் தவ அறத்தின் துணை கொண்டு நீ சொர்க்கத்தை ஆட்சி செய்வாயாக. எங்கள் அனைவருக்கும் அவரவருக்கென்று {தனித்தனி} அச்சங்கள் உண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஓ! ஏகாதிபதிகளின் தலைவா {நகுஷா}, சொர்க்கத்தின் மன்னனாக நீ முடிசூட்டிக் கொள்வாயாக. உன் பார்வையின் பரப்பில் நிற்பவன் எவனும், அவன் தேவனோ, அசுரனோ, யக்ஷனோ, துறவியோ, பித்ரியோ, கந்தர்வனோ, யாராக இருப்பினும், நீ அவர்களது சக்தியை உறிஞ்சி {கிரகித்து} (அதனால்) பலத்தில் வளர்வாய். (அனைத்துப் பொருள்களுக்கும்) முன்பாக அறத்தை நிறுத்தி நீ உலகங்களின் ஆட்சியாளனாவாயாக. பிரம்ம முனிவர்களையும் {பிரம்மரிஷிகளையும், பிராமணத் துறவிகளையும்}, சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களையும் நீ காப்பாயாக!” என்றனர்.
பிறகு, ஓ! ஏகாதிபதிகளின் தலைவா {யுதிஷ்டிரா}, நகுஷன், சொர்க்கத்தின் மன்னனாக முடிசூட்டப்பட்டான். (அனைத்துக்கும் முன்பாக) அறத்தை நிறுத்தி, அவன் அனைத்து உலகங்களின் ஆட்சியாளன் ஆனான். அவன் எப்போதும் அறம்சார்ந்த நிலை கொண்டவனாக இருந்திருந்தாலும், இந்த விலைமதிப்பில்லா வரத்தையும், சொர்க்கத்தின் அரசாட்சியையும் அடைந்ததால், அவனது {நகுஷனது} மனம் சிற்றின்பத்தை நோக்கித் திரும்பியது. நகுஷன், தேவர்களின் மன்னன் ஆனதும், தன்னைச் சுற்றி தேவ கன்னியரையும், தெய்வீக பிறப்புடைய காரிகையரையும் சூழ நிறுத்திக் கொண்டு, நந்தனத் தோப்புகளிலும், கைலாய மலையிலும், இமயத்தின் சிகரத்திலும், மந்தரத்திலும், வெண்மலையான சஹ்யத்திலும், மகேந்திரத்திலும், மலையத்திலும், கடல்களிலும், நதிகளிலும் பல்வேறு விதமான இன்பங்களில் ஈடுபட்டான். செவி, இதயம் ஆகிய இரண்டையும் கொள்ளை கொள்ளும் பல்வேறு தெய்வீக விளக்கவுரைகளையும், பல்வேறு வகையான இசைக்கருவிகளின் இசைப்பொலிகளையும், இனிய குரல் வேறுபாடுகளையும் அவன் செவிமடுத்தான்.
விஸ்வாவசு, நாரதர், தேவ கன்னியரின் படை, கந்தர்வர்களின் குழுக்கள், உயிர் வடிவங்களில் இருந்த ஆறு பருவ காலங்கள் ஆகியோர் தேவர்களின் மன்னனைக் கவனித்துக் கொண்டனர். உற்சாகமூட்டும் நறுமணமிக்கக் குளிர்ந்த தென்றல் அவனைச் சுற்றி வீசிக் கொண்டிருந்தது. அந்த இழிந்தவன் {நகுஷன்} அப்படி இன்புற்றிருந்த போது, ஒரு சந்தர்ப்பத்தில், இந்திரனுக்குப் பிடித்தமான ராணியும் தேவியுமானவள் {சச்சி, இந்திராணி} அவனது {நகுஷனது} பார்வையில் பட்டாள். அந்தத் தீய ஆன்மா {நகுஷன்}, அவளைப் பார்த்த பின்னர் {தனது} சபை உறுப்பினர்களிடம், “இந்திரனின் ராணியான, இந்தத் தேவி {சச்சி}, என்னை ஏன் கவனிக்கவில்லை? நான் தேவர்களின் ஏகாதிபதியும், உலகங்களின் ஆட்சியாளனுமாவேன். சச்சி விரைவாக என் வீட்டிற்கு வந்து என்னைச் சந்திக்கட்டும்!” என்றான் {நகுஷன்}.
இதைக்கேட்டு வருத்தப்பட்ட அந்தத் தேவி {சச்சி}, பிருஹஸ்பதியிடம் {பிரகஸ்பதியிடம்}, “ஓ! அந்தணரே, என்னை இந்த நகுஷனிடம் இருந்து காப்பாற்றும். என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நான் உம்மிடம் வந்திருக்கிறேன். ஓ! அந்தணரே, தெய்வீக மன்னனுக்கு {இந்திரனுக்குப்} பிடித்தமானவளாக இருக்கும் என்னிடம், அனைத்து மங்கலக் குறிகளும் இருப்பதாகவும், என் தலைவனுக்கு அர்ப்பணிப்புடன், கற்புடனும் இருக்கும் நான் விதவையாவதற்கான விதி இல்லை என்றும் நீர் எப்போதும் சொல்லி வந்துள்ளீர். இவை யாவையும் எனக்கு முன்னர்ச் சொல்லியிருக்கிறீர். உமது சொற்கள் உண்மையாகட்டும். ஓ! பெரும் சக்திகளைக் கொண்டவரே, ஓ! தலைவா {பிருஹஸ்பதியே}, வீணான சொற்களை நீர் பேசியதில்லை. எனவே, ஓ அந்தணர்களில் சிறந்தவரே, நீர் சொன்ன இவை யாவும் உண்மையாகட்டும்” என்றாள் {இந்திராணியான சச்சி}.
பிறகு, பிருஹஸ்பதி, தன்னருகில் அச்சத்துடன் இருந்த இந்திரனின் ராணியிடம் {சச்சியிடம்}, “ஓ! தேவி {சச்சி}, என்னால் உனக்குச் சொல்லப்பட்டதெல்லாம் உண்மையாகும் என்பது உறுதி. விரைவில் இங்கே திரும்பி வரும் தேவர்கள் தலைவனான இந்திரனை நீ காண்பாய். உனக்கு நகுஷனிடம் இருந்து எந்த அச்சமும் இருக்காது; இந்திரனுடன் நீ விரைவில் இணைவாய் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}. இப்போது, ஆங்கீரசின் மகனான பிருஹஸ்பதியிடம் இந்திரனின் ராணி {சச்சி} தஞ்சமடைந்தாள் என்பதை நகுஷன் கேள்விப்பட்டான். இதனால் அந்த மன்னன் {இந்திரனான நகுஷன்} கடுங்கோபம் கொண்டான்.
பிருஹஸ்பதியின் திட்டம்! – உத்யோக பர்வம் பகுதி 12-தேவர்கள் நகுஷனை அமைதிப்படுத்துவது; நகுஷன் தேவர்களிடம் இந்திரன் அகலிகையை அடைந்ததைச் சொல்லி அவர்களை நிர்ப்பந்தித்தது; தேவர்கள் பிருஹஸ்பதியிடம் சென்றது; இந்திராணியான சச்சி பிருஹஸ்பதியிடம் அழுதது; அண்டியவர்களைக் கைவிடக்கூடாது என்று பிரம்மன் சொல்லியிருப்பதைப் பிருஹஸ்பதி எடுத்துரைப்பது; தேவர்கள் இதற்கு ஒரு திட்டத்தை வகுக்குமாறு பிருஹஸ்பதியிடம் வேண்டுவது; பிருஹஸ்பதியின் திட்டம்; இந்திராணி நகுஷனிடம் சென்றது…
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “கோபம் கொண்ட நகுஷனைக் {நஹுஷனைக்} கண்ட தேவர்கள், துறவியர் தலைமையில், கடுமுகம் கொண்ட தங்கள் மன்னனான அவனிடம் {நகுஷனிடம்} சென்று, “ஓ! தேவர்களின் மன்னா {நகுஷா}, உனது கோபத்தை விடு. ஓ! தலைவா, நீ கோபமடைந்தால், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும்பாம்புகளுடன் இருக்கும் அந்த அண்டமே நடுங்கும். நல்லவனே, உனது கோபத்தை விடு. உன்னைப் போன்றவர்கள் இத்தகு நிலையை அடையக்கூடாது. அந்தத் தேவி {சச்சி} வேறொருவரின் {இந்திரனின்} மனைவியாவாள். ஓ! தேவர்களின் தலைவா, அமைதியடைவாயாக! அடுத்தவர் மனைவியை அடையும் பாவத்திலிருந்து உனது மனதைத் திருப்பு. நீ தேவர்களின் மன்னனாவாய், உனக்கு வளம் உண்டாகட்டும்! உனது குடிகளை அறம்தழுவி காப்பாயாக!” என்றனர். இப்படிச் சொல்லப்பட்டும், காமத்தில் உணர்விழந்திருந்த அவன் {நகுஷன்} {அவர்களால்} சொல்லப்பட்டதைக் கவனித்தானில்லை. பிறகு அந்த மன்னன் {நகுஷன்}, தேவர்களிடம் இந்திரனைச் சுட்டும்படி, “துறவியின் மனைவியான களங்கமற்ற அகலிகையை {அஹல்யையை}, அவளது கணவர் உயிரோடிருந்தபோதே அடைந்தானே. நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? முற்காலத்தில் இந்திரனால் செய்யப்பட்ட மனிதாபிமானமற்ற, அநீதியான, வஞ்சனையான செயல்கள் பலவாகும். நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? எனக்கு இன்பமானதை அந்தத் தேவி {சச்சி} செய்யட்டும்; அதுவே அவளுக்கு நிரந்தர நன்மையாகும். தேவர்களே, இதுவே உங்கள் பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும்” என்றான் {நகுஷன்}.
அதற்குத் தேவர்கள் {நகுஷனிடம்}, “ஓ! சொர்க்கத்தின் தலைவா {நகுஷா}! நீ கட்டளையிட்டதுபோலவே, நாங்கள் இந்திரனின் ராணியைக் {சச்சியை} கொண்டுவருகிறோம். ஓ! வீரமிக்க ஆன்மாவே {நகுஷா}, இந்தக் கோபத்தை விடு! ஓ! தேவர்கள் தலைவா, நீ அமைதியடைவாயாக!” என்றனர்.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி அவனிடம் {நகுஷனிடம்} பேசிய பிறகு, தேவர்களும் துறவிகளும் இச்செய்தியைத் தெரிவிப்பதற்காகப் பிருஹஸ்பதியிடமும் {பிரகஸ்பதியிடமும்}, இந்திரனின் ராணியிடமும் {சச்சியிடமும்} சென்றனர். அவர்கள், “ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {பிருஹஸ்பதியே}, இந்திரனின் ராணி {சச்சி} தனது பாதுகாப்புக்காக உமது வீட்டை தானே வந்து அடைந்தாள். ஓ! தெய்வீகத் துறவியரில் சிறந்தவரே {பிருஹஸ்பதியே}, நீரும் அவளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்திருக்கிறீர். ஆனால், ஓ! பெரும் காந்தி கொண்டவரே, இந்திரனின் ராணியை {சச்சியை} நகுஷனுக்கு அளிக்குமாறு தேவர்கள், கந்தர்வர்கள், துறவிகள் ஆகிய நாங்கள் உம்மிடம், வேண்டுகிறோம். தேவர்கள் மன்னனான பெரும் பிரகாசம் மிக்க நகுஷன், இந்திரனுக்கும் மேன்மையானவனாவான். தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமும் நிறமும் கொண்ட அந்த மங்கை {இந்திராணியான சச்சி}, அவனைத் தனது தலைவனாகத் தேர்ந்தெடுக்கட்டும்!” என்றனர். இப்படிச் சொல்லப்பட்டதும், அந்தத் தேவி, கண்ணீர் வடித்து, இரக்கப்படும்படியான பரிதாபகரமான சொற்களில் விண்ணப்பிக்கும் வகையில் அழுதாள். அவள் {சச்சி} பிருஹஸ்பதியிடம், “ஓ! தெய்வீகத் துறவியரில் சிறந்தவரே {பிருஹஸ்பதி}, நகுஷனை எனது தலைவனாக நான் விரும்பவிலை. ஓ! அந்தணரே, நான் உமது பாதுகாப்பில் இருக்கிறேன். இந்தப் பெரும் அபாயத்தில் இருந்து என்னைக் காப்பாற்றும்!” என்றாள் {சச்சி}.
அதற்குப் பிருஹஸ்பதி, “எனது பாதுகாப்பை அடைந்திருக்கும் ஒருவரை நான் கைவிடமாட்டேன். இதுவே எனது தீர்மானம். ஓ! களங்கமற்ற வாழ்வு கொண்டவளே {இந்திராணியான சச்சியே}, அறமும் உண்மையும் கொண்ட உன்னை நான் கைவிடேன். அறவிதிகளை அறிந்தவனும், உண்மையின் மீது மதிப்பு கொண்டவனும், அதிலும் குறிப்பாக நீதி எது என்பதை அறிந்தவனுமான ஓர் அந்தணனாக நான் இருப்பதால், ஒரு முறையற்ற செயலைச் செய்ய நான் விரும்பேன். நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்.
தேவர்களில் சிறந்தவர்களே நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம். இக்காரியம் குறித்து முன்பே பிரம்மன் பாடியிருப்பதைக் கேளுங்கள். அச்சத்தில் பாதுகாப்பை நாடி வரும் ஒருவரை எதிரியிடம் விடுபவன், தனக்குப் பாதுகாப்புத் தேவையாக இருக்கும்போது எந்தப் பாதுகாப்பையும் அடையமாட்டான். அவனது விதை {அவன் விதைத்த விதை} முளைக்க வேண்டிய காலத்தில் முளைக்காது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் அவனிடம் மழை வராது. அச்சத்தில் பாதுகாப்பை நாடி வரும் ஒருவரை எதிரியிடம் விடுபவன், தான் செய்யும் எந்தக் காரியத்திலும் வெல்லமாட்டான்; உணர்வற்ற அவன், அங்கங்கள் அசைவிழந்து சொர்க்கத்தில் இருந்து விழுவான்; அவனால் கொடுக்கப்படும் காணிக்கைகளை தெய்வம் மறுக்கும். அவனது சந்ததி அகால நேரத்தில் இறக்கும். அவனது முன்னோர்கள் எப்போதும் (தங்களுக்குள்} சண்டையிட்டுக் கொள்வார்கள். இந்திரனோடு கூடிய தேவர்கள் அவன் மீது வஜ்ரத்தை அடிப்பார்கள். இதுவும் {இந்தக் காரியமும்} அப்படிப்பட்டதே என்பதை அறிந்தும், இந்திரனுக்கு விருப்பமான மனைவி என உலகில் பிரபலமானவளும், அவனது {இந்திரனின்} ராணியுமான இந்தச் சச்சியை நான் {எதிரியிடம் [நகுஷனிடம்]} விட மாட்டேன்” என்றார் {பிருஹஸ்பதி}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு தேவர்களும், கந்தர்வர்களும், அந்தத் தேவர்களின் ஆசானிடம் {பிருஹஸ்பதியிடம்} இச்சொல்லைச் சொன்னார்கள், “ஓ! பிருஹஸ்பதி, தகுதியான ஏதாவதொரு உரத்த கொள்கையைத் திட்டமிடுவீராக! {வலுவான திட்டத்தை வகுப்பீராக!}” என்றனர். அதற்குப் பிருஹஸ்பதி {தேவர்களிடம்}, “மங்கலகரமான தோற்றம் கொண்ட இந்தத் தேவி {இந்திராணியான சச்சி}, {தன்னைக் கோரும்} அவனது {நகுஷனது} முன்மொழிவுக்கு {ஆசைக்குத்} தன்னைத் தயார் செய்வதற்காக நகுஷனிடம் சிறிது காலத்தை {அவகாசத்தைக்} கேட்கட்டும். இதுவே இந்திரனின் ராணிக்கும், நம் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். தேவர்களே, காலம் பல இடையூறுகளை எழுப்பும். {இந்தத் தேவியான சச்சி, கேட்கும்} காலமே {நகுஷனின்} காலத்தைக் கடத்தும். அவனுக்கு அருளப்பட்டுள்ள வரத்தின் அறத்தால் நகுஷன் கர்வம் உள்ளவனாகவும் பலவானாகவும் இருக்கிறான்!” என்றார் {பிருஹஸ்பதி}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிருஹஸ்பதி இப்படிப் பேசியதும், தேவர்கள் மகிழ்ந்து, “ஓ! அந்தணரே, நன்று சொன்னீர். இதுவே தேவர்கள் அனைவருக்கும் நன்மையைத் தரும். இதில் ஐயமில்லை. இந்தத் தேவி {சச்சி} அமைதியேற்படச் செய்யட்டும்” என்றனர். பிறகு அக்னியின் தலைமையிலான அந்தத் தேவர்களின் கூட்டம் அனைத்து உலகங்களின் நன்மைக்கான நோக்கத்துடன், இந்திரனின் ராணியிடம் {சச்சியிடம்} அமைதியான முறையில் பேசினர். அந்தத் தேவர்கள் {சச்சியிடம்}, “இந்த முழு அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிவற்றைத் தாங்குபவள் நீயே. கற்பும், உண்மையும் கொண்ட நீ, நகுஷனிடம் செல்வாயாக! உன்னிடம் காமங்கொண்டிருக்கும் அந்தத் தீயவன் {நகுஷன்}, விரைவில் விழுவான்; ஓ! தேவி {சச்சி}, இந்திரன் தேவர்களின் அரசாட்சியை {மீண்டும்} அடைவான்!” என்றனர். அந்த ஆழ்ந்த ஆய்வின் விளைவுகளை உறுதி செய்து கொண்ட இந்திரனின் ராணி {சச்சி}, தனது முடிவை அடைய விரும்பி, கடுமுகம் கொண்ட நகுஷனிடம் கூச்சத்துடன் சென்றாள். அந்தத் தீய நகுஷனும், காமத்தால் அறிவற்றவனாகி, அவள் {சச்சி} எப்படிப்பட்ட இளமையையும் அழகையும் கொண்டவள் என்பதைக் கண்டு மிகுந்த மனநிறைவு கொண்டான்.
மீண்டும் மறைந்த இந்திரன்! – உத்யோக பர்வம் பகுதி 13-சச்சி நகுஷனிடம் அவகாசம் கேட்பது; நகுஷன் சம்மதிப்பது; சச்சியின் நிலையைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்டுவது; விஷ்ணு இந்திரனுக்காக ஒரு குதிரை வேள்வியைச் செய்யச் சொன்னது; வேள்வி முடிந்ததும் இந்திரன் சுயநினைவை அடைவது; பலமிக்க நகுஷனைக் கண்ட இந்திரன் மீண்டும் ஒளிந்து கொள்வது; இதனால் துக்கமுற்ற இந்திராணி உபஸ்ருதி தேவியை வேண்டுவது…
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, தேவர்கள் மன்னனான நகுஷன் அவளை {இந்திரனின் மனைவியான சச்சியைப்} பார்த்து, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நான் மூன்று உலகங்களுக்கும் இந்திரனாவேன். ஓ! அழகிய தொடைகளும் அழகிய நிறமும் கொண்டவளே, என்னை உனது தலைவனாக ஏற்றுக் கொள்வாயாக!” என்றான். நகுஷனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய தேவி, பயந்து போய், தென்றல் {காற்று} வீசுமிடத்தில் இருக்கும் வாழைமரம் போல நடுங்கினாள். பிரம்மாவுக்குத் தலைவணங்கிய அவள் {சச்சி}, தனது கரங்களைக்கூப்பியபடி, தேவர்களின் மன்னனான கடுமுகம் கொண்ட நகுஷனிடம், “ஓ! தெய்வங்களின் தலைவா {நகுஷா}, நான் காலத்தைப் {அவகாசத்தைப்} பெற விரும்புகிறேன். இந்திரருக்கு என்ன நேர்ந்தது என்றும் அவர் எங்கிருக்கிறார் என்றும் அறியப்படவில்லை. அவரைக் குறித்த உண்மையை விசாரித்த பின், ஓ! தலைவா, அவரை {இந்திரரைக்} குறித்த எந்தச் செய்தியையும் அடையவில்லையென்றால், நான் உம்மைச் சந்திக்கிறேன்; இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றாள் {சச்சி}.
இந்திரனின் ராணி இப்படிச் சொன்னதும், நகுஷன் மகிழ்ந்தான். பிறகு நகுஷன் {சச்சியிடம்}, “ஓ! அழகிய இடை கொண்டவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். செய்திகளை உறுதி செய்து கொண்ட பின் நீ வருவாயாக. சாதகமற்ற உனது உண்மை நிலையை நீ நினைத்துப் பார்ப்பாய் என்று நான் நம்புகிறேன்” என்றான். நகுஷனால் அனுப்பப்பட்ட அந்த மங்கலகரமான பார்வை கொண்டவள் {சச்சி}, {அங்கிருந்து} வெளியே வந்தாள். அந்தப் புகழ்பெற்ற மங்கை {சச்சி} பிருஹஸ்பதியின் {பிரகஸ்பதியின்} இல்லத்திற்குச் சென்றாள். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அக்னியைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், அவளது {சச்சியின்} சொற்களைக் கேட்டதும், இந்திரனின் நலன்களை அறிய ஊக்கம் கொண்ட நோக்கத்துடன் {தங்களுக்குள்} கலந்தாலோசித்தனர். பிறகு அவர்கள் தேவர்களுக்குத் தேவனான வலிமைமிக்க விஷ்ணுவைச் சேர்ந்தனர் {சென்றடைந்தனர்}.
உரையாற்றுவதில் வல்லவர்களான தேவர்கள், அவனிடம் {விஷ்ணுவிடம்} வருத்தத்துடன், “தேவர்கள் அனைவருக்கும் தலைவனான இந்திரன், {பிராமணனைக் கொன்ற பாவத்தால் ஏற்பட்ட} பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்டான். ஓ! தேவர்களுக்குத் தலைவா {விஷ்ணுவே}, முதலில் பிறந்தவனும் {அனைத்திற்கும் முன்பு பிறந்தவனும்}, அண்டத்தின் ஆட்சியாளனும், எங்களின் புகலிடமும் நீயே. அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காகவே நீ விஷ்ணுவின் உருவை ஏற்றாய். உனது சக்தியால் விருத்திரன் கொல்லப்பட்டதும், இந்திரன் பிரம்மஹத்தி பாவத்தால் பீடிக்கப்பட்டான். ஓ! தேவர்களில் சிறந்தவனே, அவனை {இந்திரனை} விடுவிக்க வேண்டிய வழிகளைப் பரிந்துரைப்பாயாக!” என்றனர் {தேவர்கள்}.
அவர்களது சொற்களைக் கேட்ட விஷ்ணு {தேவர்களிடம்}, “இந்திரன் எனக்கு வேள்வியைக் காணிக்கையாக்கட்டும். அப்போது நான் அந்த வஜ்ரதாங்கியை {இந்திரனைச்} சுத்திகரிப்பேன். புனிதமான குதிரை வேள்வியைச் செய்யும் அந்தப் பகனைக் கொன்றவன் {இந்திரன்}, தேவர்கள் தலைவனாக மீண்டும் தனது கண்ணியத்தை அடைவான். தீய மனம் கொண்ட நகுஷன், தனது தீச்செயல்களால் அழிவை நோக்கி வழிநடத்தப்படுவான். தேவர்களே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அதே சமயம் விழிப்புடனும் இருக்க வேண்டும்” என்றார் {விஷ்ணு}.
உண்மையான சொற்களான, காதுகளுக்கு இனிமையான அமுதம் போன்ற அந்த விஷ்ணுவின் சொற்களைக் கேட்ட தேவர்கள், கவலையுடனும் அச்சத்துடனும் இந்திரன் இருந்த பகுதிக்குத் தங்கள் ஆசான் மற்றும் முனிவர்கள் ஆகியோருடன் சென்றனர். அங்கே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த மனம் கொண்ட பெரும் இந்திரனைச் சுத்திகரிப்பதற்காகப் பிரம்மஹத்தியை நீக்க வல்ல பெரும் குதிரை வேள்வி செய்யப்பட்டது. ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, மரங்கள், நதிகள், மலைகள், பூமி மற்றும் பெண்கள் ஆகியோருக்குப் பிரம்மஹத்தி என்ற பாவத்தைப் பகிர்ந்தளித்தான். இப்படி அந்த உயிரினங்களுக்கு அதைப் {பிரம்மஹத்தியைப்} பிரித்தளித்து, அதில் இருந்து விடுபட்ட இந்திரன், நோயில் இருந்து விடுபட்டான். இப்படியே அதை {பிரம்மஹத்தியை}, அந்த உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்தளித்து அதில் {பிரம்மஹத்தி என்ற பாவத்தில்} இருந்து விடுபட்ட அவன் {இந்திரன்}, நோயில் இருந்தும் விடுபட்டான். பாவத்தில் இருந்து விடுபட்ட அவன் {இந்திரன்}, தன்னிலையை அடைந்தான். பிறகு, அசையும் உயிரினங்கள் அனைத்தின் பலத்தை உறிஞ்சுபவனும், முனிவர்கள் அளித்த வரத்தின் அறத்தால் அணுகமுடியாதபடி இருந்தவனுமான நகுஷனைக் கண்டு வலாசுரனைக் கொன்றவன் {இந்திரன்} நடுங்கினான்.
பிறகு, அந்தச் சச்சியின் கணவன் {இந்திரன்}, மீண்டும் பார்வையில் இருந்து மறைந்து போனான். உயிரினங்கள் அனைத்தின் பார்வைக்கும் மறைந்தபடி, காலத்தை எதிர்பார்த்து அவன் {இந்திரன்} உலவி கொண்டிருந்தான். இந்திரன் மறைந்ததும், சச்சி {இந்திராணி} துயரத்தில் விழுந்தாள். பிறகு, பெரும் துன்பமடைந்த அவள் {சச்சி}, “ஐயோ! ஓ! இந்திரரே, நான் ஏதாவது கொடையளித்திருந்தால், தேவர்களுக்குக் காணிக்கை அளித்திருந்தால், எனது ஆன்மிக வழிகாட்டிகளை மனநிறைவு கொள்ளச் செய்திருந்தால், என்னில் ஏதாவது உண்மை இருந்தால், எனது கற்புக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என நான் வேண்டிக் கொள்வேன். புனிதமானவளும், தூய்மையானவளும், சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தில் [1] சென்று கொண்டிருப்பவளுமான {உத்தராயணக் காலத்தில் நடப்பவளும்} இந்த இரவின் தேவியை, எனது விருப்பம் நிறைவேற்றுவதற்காக வணங்குகிறேன்” என்றாள் {சச்சி}.இதைச் சொன்ன அவள் {சச்சி}, தன் உடலையும், ஆன்மாவையும் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இரவின் தேவியை வழிபட்டாள். தனது கற்பு மற்றும் உண்மையின் {சத்தியத்தின்} பெயரால் அவள் {சச்சி}, குறிசொல்பவளிடம் {சந்தேகத்தைத் தெளிவிக்கும் அந்தத் தேவியான உபஸ்ருதியிடம்} [2] கேட்டாள். அவள் {சச்சி}, “தேவர்களின் தலைவர் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுவாயாக. உண்மை உண்மையாலேயே சரிபார்க்கப்படட்டும்” என்றாள். இப்படியே அவள் {சச்சி}, குறிசொல்லும் தேவியிடம் {இரவின் தேவியான உபஸ்ருதியிடம்} பேசினாள்.
இந்திரனைக் கண்ட சச்சி! – உத்யோக பர்வம் பகுதி 14-உபஸ்ருதி தேவி இந்திராணியிடம் வருவது; உபஸ்ருதி தேவியைத் தொடர்ந்து சென்ற இந்திராணி; இமய மலைகளைத் தாண்டி வடக்கே செல்வது; கடலுக்கு நடுவில் ஒரு தீவைக் காண்பது; அந்தத் தீவுக்கு மத்தியில் ஒரு பெரிய தடாகத்தைக் காண்பது; அந்தத் தடாகத்தின் மத்தியில் பெரிய தாமரை மலர்களைக் காண்பது; தாமரைக்கூட்டத்திற்கு மத்தியில் இருந்த ஒரு பெரிய வெண்தாமரையினுள் உபஸ்ருதியும், இந்திராணியும் பிரவேசிப்பது; அங்கே அந்த மலர்த்தண்டின் இழைகளுக்குள் இந்திரன் ஒளிந்து கொண்டிருந்தது; இந்திரனிடம் பேசிய இந்திராணி…
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு அந்தக் குறிசொல்லும் தேவி {உபஸ்ருதி தேவி} அந்தக் கற்புடைய அழகிய மங்கையின் {இந்திராணியான சச்சி} அருகே நின்றாள். அழகும், இளமையும் கொண்ட அந்தத் தேவி தன்னெதிரே நிற்பதைக் கண்ட இந்திரனின் ராணி {சச்சி}, இதயத்தில் மகிழ்ந்து, அவளுக்கு {உபஸ்ருதி தேவிக்குத்} தனது மரியாதைகளைச் செலுத்தி, “ஓ! அழகிய முகம் கொண்டவளே, நீ யார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றாள். அதற்கு அந்தக் குறிசொல்லி {உபஸ்ருதி}, “ஓ! தேவி, உன்னருகே வந்திருக்கும் நான் ஒரு குறி சொல்லி {உபஸ்ருதி} ஆவேன். நீ உண்மையானவளாக இருப்பதால், ஓ! உயர்ந்த மனம் கொண்ட மங்கையே {சச்சி}, நான் உனக்குக் காட்சியளித்தேன். நீ உனது கணவனுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவளாகவும், தன்னடக்கத்துடன் இருப்பவளாகவும், அறச்சடங்குகள் பயில்வதில் ஈடுபடுபவளாகவும் இருப்பதால், விருத்திரனைக் கொன்ற தேவனான இந்திரனை, நான் உனக்குக் காட்டுவேன். என் பின்னே விரைந்து வா, உனக்கு நன்மையே விளையும்! நீ தேவர்களில் சிறந்தவனை {இந்திரனைக்} காண்பாய்” என்றாள் {உபஸ்ருதிதேவி}.
பிறகு அந்தக் குறிசொல்லி {உபஸ்ருதி} புறப்பட்டாள். இந்திரனின் தெய்வீக ராணியும் அவளுக்குப் பின்னே சென்றாள். இப்படியே அவள் {உபஸ்ருதி} தெய்வீகத் தோப்புகளையும், பல மலைகளையும், இமய மலைகளையும் கடந்து, அதன் {இமயமலைக்கு} வடபுறத்திற்கு வந்து சேர்ந்தாள். பிறகு பல யோஜனைகள் நீண்டிருந்த கடலை அடைந்த அவள், பல்வேறு மரங்களாலும், செடிகளாலும் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய தீவுக்கு வந்தாள். அங்கே, தெய்வீக தோற்றத்துடன் எண்ணூறு மைல்கள் {நூறு யோஜனைகள்} நீளமும், அதே போன்ற அளவு அகலமும் கொண்ட ஓர் அழகிய தடாகத்தைக் கண்டாள். அங்கே பறவைகள் நிறைந்திருந்தன. ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, முழுதும் மலர்ந்த தெய்வீகத் தோற்றமுடைய ஐவண்ணத்தாமரைகள் {பஞ்சவர்ணத் தாமரைகள்} அதில் {அந்தத் தடாகத்தில்} இருந்தன. அவற்றைச் {அந்தத் தாமரைகளைச்} சுற்றி ஆயிரக்கணக்கில் வண்டுகள் ரீங்காரமிட்டபடி இருந்தன. அந்தத் தடாகத்திற்கு மத்தியில் அழகிய, பெரிய தாமரைகளின் கூட்டம் ஒன்று இருந்தது. அதன் மத்தியில் ஒரு பெரிய வெள்ளைத் தாமரை, ஓர் உயர்ந்த தண்டில் நின்று கொண்டிருந்தது. அந்தத் தாமரைத் தண்டினுள் சச்சியுடன் ஊடுருவிய அவள் {உபஸ்ருதி}, {அத்தண்டின்} இழைகளுக்குள் {நூல்களுக்குள்} நுழைந்திருந்த இந்திரனைக் கண்டாள்.
நுண்ணிய உருவில் அங்கே கிடக்கும் தனது தலைவனை {இந்திரனைக்} கண்ட சச்சியும் நுண்ணிய உருவைக் கொண்டாள். அதே போல அந்தக் குறிசொல்லும் தேவியும் {உபஸ்ருதியும்} செய்தாள். அந்த இந்திரனின் ராணி {சச்சி}, பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட அவனது செயல்களை உரைத்து அவனைத் {இந்திரனைத்} துதிக்கத் தொடங்கினாள். இப்படித் துதிக்கப்பட்ட தெய்வீகமான புரந்தரன் {இந்திரன்}, சச்சியிடம், “என்ன காரியத்திற்காக நீ இங்கே வந்தாய்? நான் எப்படி உங்களால் கண்டுபிடிக்கப்பட்டேன்?” என்று கேட்டான். பிறகு அந்தத் தேவி நகுஷனின் செயல்பாடுகளைக் குறித்துப் பேசினாள். அவள் {சச்சி}, “ஓ! நூறு வேள்விகளைச் செய்தவரே, மூன்று உலகங்களின் அரசாட்சியை அடைந்த அவன் {நகுஷன்}, பலமும் கர்வமும், தீய ஆன்மாவும் கொண்டு, நான் அவனைச் சந்திக்க வேண்டுமெனக் கட்டளையிடுகிறான். அந்த இழிந்த கொடூரன் எனக்கு ஒரு திட்டவட்டமானக் காலத்தை நிர்ணயித்திருக்கிறான். நீர் என்னைப் பாதுகாக்கவில்லையெனில், ஓ! தலைவா, அவன் என்னைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்வான். இதன்காரணமாகவே, ஓ! இந்திரரே, அச்சத்தால் நான் உம்மிடம் வந்தேன். ஓ! வலிய கரங்கள் கொண்டவரே {இந்திரரே}, தீய ஆன்மாக் கொண்ட கொடூரனான நகுஷனைக் கொல்லும். ஓ! தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்றவரே {இந்திரரே}, உம்மை அறிவீராக. ஓ! தலைவா, உமது பலத்தை அடைந்து, தேவலோகத்தை ஆள்வீராக!” என்றாள் {சச்சி}
இந்திரனைத் தேடிய அக்னி! – உத்யோக பர்வம் பகுதி 15-நகுஷனின் பலம் குறித்து இந்திரன் சச்சியிடம் சொன்னது; சச்சி முனிவர்களால் இழுக்கப்படும் தேரில் நகுஷனை வரச்சொன்னது; நகுஷன் முனிவர்களைத் தேரில் பூட்டியது; சச்சி பிருஹஸ்பதியிடம் இந்திரனை விரைவாகத் தேடச் சொன்னது; பிருஹஸ்பதி அக்னியைக் கொண்டு இந்திரனைத் தேடியது; அக்னியால் இந்திரனைக் காண முடியாதது; அக்னி தனது இயலாமையைப் பிருஹஸ்பதியிடம் சொன்னது …
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “சச்சியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த ஒப்பற்ற தேவன் {இந்திரன்} அவளிடம் {சச்சியிடம்}, மீண்டும், “இது வீரத்தைக் காட்ட வேண்டிய நேரமன்று. நகுஷன் என்னைவிடப் பலவானாக இருக்கிறான். ஓ! அழகிய மங்கையே {சச்சி}, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் முனிவர்களால் கொடுக்கப்பட்ட காணிக்கைகளின் தகுதியால் {பலத்தால்} அவன் {நகுஷன்} பலமூட்டப்பட்டிருக்கிறான். இது சம்பந்தமாக நான் ஒரு கொள்கையை {தீர்மானத்தை} எட்டியிருக்கிறேன். ஓ! தேவி {சச்சி}, நீயே அதனைச் செய்ய வேண்டியிருக்கும். ஓ! மங்கையே {சச்சியே}, நீ அதைக் கமுக்கமாகச் செய்ய வேண்டும். மேலும் அதை யாரிடமும் நீ சொல்லக்கூடாது. ஓ! அழகிய இடை கொண்ட மங்கையே {சச்சியே}, நகுஷனிடம் தனிமையில் சென்று, அவனிடம், “ஓ! அண்டத்தின் தலைவா {நகுஷா}, முனிவர்களால் சுமக்கப்படும் அழகிய வாகனத்தில் ஏறி நீர் என்னைச் சந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் மகிழ்ந்து, என்னை உம்மிடம் கொடுப்பேன்” என்று நீ சொல்ல வேண்டும்” என்றான் {இந்திரன்}.
தேவர்கள் மன்னனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தாமரைக் கண் கொண்ட அவனது மனைவி {சச்சி}, அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்து நகுஷனிடம் சென்றாள். அவளை {சச்சியைக்} கண்ட நகுஷன், புன்னகையுடன் அவளிடம், “ஓ! அழகிய தொடைகளைக் கொண்ட மங்கையே {சச்சி}, உனக்கு நல்வரவு. ஓ! இனிய புன்னகை கொண்டவளே, உனக்கு இன்பமானது எது? ஓ! நற்பார்வை கொண்ட மங்கையே, உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட என்னை நீ ஏற்றுக் கொள்வாயாக. ஓ! உற்சாகமானக் காரிகையே {சச்சி}, உன் விருப்பம் என்ன? ஓ! நற்பார்வை கொண்ட மங்கையே, கொடியிடையாளே, நான் உனது விருப்பத்தையே செய்வேன். ஓ! அழகிய இடை கொண்டவளே, நீ வெட்கமடையத் தேவையில்லை. என்னிடம் நீ நம்பிக்கை வைப்பாயாக. ஓ! தேவி, உண்மையின் {சத்தியத்தின்} பேரால், நீ சொல்வதையே நான் செய்வேன்” என்றான் {நகுஷன்}.
அதற்குச் சச்சி {நகுஷனிடம்}, “ஓ! அண்டத்தின் தலைவா {நகுஷரே}, நீர் எனக்கு நிர்ணயித்திருக்கும் காலமே எனக்கு வேண்டியது. அதன்பிறகு, ஓ! தேவர்களின் தலைவா, நீர் எனது கணவனாகலாம். எனக்கு ஒரு விருப்பமிருக்கிறது. ஓ! தேவர்களின் மன்னா, அதைக் கவனித்துக் கேட்பீராக. ஓ! மன்னா, நான் சொல்வதை நீர் செய்ய வேண்டும் என்றே நான் சொல்வேன். நீர் என் மீது கொண்டிருக்கும் அன்பின் நிமித்தமாகவே இதை நான் கோருகிறேன். நீர் அதை அருளினால், நான் உம் வசம் இருப்பேன். இந்திரர் தன்னைச் சுமக்க, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களை வைத்திருந்தார். ஓ! தேவர்கள் மன்னா, விஷ்ணு, ருத்ரன் {சிவன்}, அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோர் யாரிடமும் இல்லாத புதுமையான ஒரு வாகனத்தை நீர் கொண்டிருக்க வேண்டும் என்று, ஓ! தலைவா, நான் விரும்புகிறேன். கண்ணியமிக்க உயர்ந்த முனிவர்கள் ஒன்றுகூடி, உம்மைப் பல்லக்கில் வைத்து சுமக்கட்டும். எனக்குத் தோன்றுவது இதுவே. அசுரர்களுக்கோ, தேவர்களுக்கோ சமமானவராக நீர் உம்மைக் கருதக்கூடாது. யாரையெல்லாம் நீர் பார்க்கிறீரோ அவர்களின் பலத்தையெல்லாம் நீர் கிரகித்துக் கொள்கிறீர். உம் முன்னிலையில் நிற்கும் பலமுடையவர் யாரும் இல்லை” என்றாள் {சச்சி}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொல்லப்பட்ட நகுஷன் மிகவும் மகிழ்ந்தான். பிறகு அந்தத் தேவர்கள் தலைவன் {நகுஷன்}, அந்தக் களங்கமற்ற மங்கையிடம் {சச்சியிடம்}, “ஓ! அழகிய நிறம் கொண்ட மங்கையே, இதற்கு முன் கேள்விப்படாத ஒரு வாகனத்தையே நீ சொல்லியிருக்கிறாய். ஓ! தேவி, நான் அதை மிகவும் விரும்புகிறேன். ஓ அழகிய முகம் கொண்டவளே, நான் உனது கட்டுப்பாட்டில் இருக்கிறேன். தன்னைத் தாங்குவதற்கு முனிவர்களை ஈடுபடுத்துபவன் பலவீனனாக இருக்க முடியாது. நான் தவங்கள் பயின்றவன், மேலும் நான் பெரும் பலமிக்கவனுமாவேன். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களுக்கு நானே தலைவன். நான் சினமுற்றால் இந்த அண்டமே இல்லாது போய்விடும். இந்த முழு அண்டமும் என்னிலேயே நிறுவப்பட்டுள்ளது. ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோர் ஒன்றுகூடியிருந்தாலும், ஆத்திரம் கொள்ளும் என்னை அவர்கள் அனைவராலும் சமாளிக்க முடியாது. எவனை நான் பார்த்தாலும், அவனது ஆற்றல் அவனிடம் இருந்து அகன்றுவிடும். ஓ! தேவி, உனது கோரிக்கை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் என்னைச் சுமக்கட்டும். ஓ! அழகிய நிறம் கொண்ட மங்கையே, எந்தன் பெருமையையும், காந்தியையும் நீ காண்பாய்” என்றான் {நகுஷன்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அழகிய முகம் கொண்ட அந்தத் தேவியிடம் {சச்சியிடம்} இப்படிப் பேசிய அவன் {நகுஷன்}, அவளுக்கு விடை கொடுத்தனுப்பி, தவப்பயிற்சிக்குத் தங்களை அர்ப்பணித்திருந்த எண்ணற்ற துறவிகளைத் தனது தெய்வீகத் தேரில் பூட்டினான். பலம் கொண்டவனும், கர்வத்தால் போதை கொண்டவனும், நிலையற்றவனும், இழிந்த ஆன்மா கொண்டவனும், அந்தணர்களை அலட்சியம் செய்பவனுமான அவன் {நகுஷன்}, தன்னைச் சுமக்கத் துறவியரை நியமித்தான். அதே வேளையில், நகுஷனால் அனுப்பப்பட்ட சச்சி, பிருஹஸ்பதியிடம் சென்று, “நகுஷன் எனக்கு அளித்திருக்கும் காலத்தில் சொற்பமே மீதம் இருக்கிறது. உம்மை மதிக்கும் என்னிடம் கருணை கொண்டு, இந்திரரை விரைவில் கண்டுபிடிப்பீராக!” என்றாள் {சச்சி}.
அதற்கு ஒப்பற்ற பிருஹஸ்பதி அவளிடம் {சச்சியிடம்}, “மிக்க நன்று. ஓ! தேவி, தீய ஆன்மா கொண்ட நகுஷனிடம் நீ அஞ்ச வேண்டாம். அவன் {நகுஷன்} தனது சக்தியை நீண்ட காலம் பெற்றிருக்க மாட்டான். ஓ! அழகிய காரிகையே, தன்னைச் சுமக்கப் பெரும் துறவியரை நியமித்த காரணத்தால், உண்மையில், அறத்தைக் கருதிப் பார்க்காத அந்த இழிந்தவன் ஏற்கனவே வீழ்ந்துவிட்டான். அந்த இழிந்த தீயவன் அழிவடைய, நான் ஒரு வேள்வியைச் செய்வேன். இந்திரனை நான் கண்டுபிடிப்பேன். அஞ்சாதே. உனக்கு நன்மையே விளையட்டும்” என்றார் {பிருஹஸ்பதி}.
அதன்பேரில் மதிப்புமிக்கத் தேவனான எரிந்த காணிக்கைகளை உண்பவன் {அக்னி}, தன்னுருவை விட்டு, பெண்ணுருக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து உடனே மறைந்து போனான். மனோ வேகம் கொண்ட அவன் {அக்னி}, மலைகள், காடுகள், பூமி, வானம் ஆகிய அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பிருஹஸ்பதியிடம் திரும்பி வந்தான்.
பிறகு அக்னி பிருஹஸ்பதியிடம், இவ்விடங்களில் எல்லாம் தேவர்களின் மன்னனை {இந்திரனை} என்னால் காண முடியவில்லை. நீர் கொள்ளிடங்கள் மட்டுமே தேட வேண்டியதில் மீதம் இருக்கின்றன. நீருக்குள் நுழைவதில் நான் எப்போதும் பின்தங்குவேன். அதற்குள் செல்வதற்கு எனக்கு வழி கிடையாது. ஓ! அந்தணரே, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அந்தத் தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, அவனிடம் {அக்னியிடம்}, “ஓ! ஒப்பற்ற தேவா {அக்னி}, நீருக்குள் நீ நுழைவாயாக” என்றார்.
அதற்கு அக்னி {பிருஹஸ்பதியிடம்}, “என்னால் நீருக்குள் நுழைய முடியாது. அங்கே எனக்கு அழிவு காத்திருக்கிறது. ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே, நான் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். நீர் எனக்கு நன்மையைச் செய்வீராக! கல்லில் இருந்து, இரும்பு பிறந்தது போலவும், புரோகித சாதியில் இருந்து, போர்ச்சாதி உதித்தது போலவும், நீரிலிருந்தே நெருப்பு உதித்தது. அனைத்துப் பொருட்களையும் ஊடுருவும் இவற்றின் சக்தி, தாங்கள் உதித்த தோற்றுவாயிடம் எடுபடுவதில்லை” என்றான் {அக்னி}.
வேள்விப் பங்கைப் பெற்ற அக்னி! – உத்யோக பர்வம் பகுதி 16-அக்னியைப் புகழ்ந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியின் துதியை ஏற்ற அக்னி, நீர்நிலைகளில் இந்திரனைத் தேடப் புறப்பட்டது; தாமரைத்தண்டின் இழைகளுக்குள் மறைந்து கிடந்த இந்திரனைக் கண்ட அக்னி, பிருஹஸ்பதியிடம் அதைத் தெரிவிப்பது; தேவர்களுடன் அந்த இடத்திற்கு விரைந்த பிருஹஸ்பதி, இந்திரனைத் துதிப்பது; துதியால் பலம் பெற்ற இந்திரன்; லோகபாலர்கள் இந்திரன் இருந்த இடத்திற்கு வருவது; அவர்களின் உதவியை இந்திரன் கோருவது; வேள்விப் பங்குகளையும், ஆட்சியுரிமைகளையும் அந்த லோகபாலர்களுக்கு இந்திரன் வழங்குவது …
பிருஹஸ்பதி {அக்னியிடம்} சொன்னார், “ஓ! அக்னியே, தேவர்கள் அனைவருக்கும் வாய் நீயே. புனித காணிக்கைகளைச் சுமப்பவன் நீயே. ஒரு சாட்சியைப் போல, அனைத்து உயிர்களின் அந்தரங்க ஆன்மாக்களை அணுகக்கூடியவன் நீயே. தனியன் என்றும், {கர்ஹபத்ய, ஆஹவநீய, தக்ஷிணாக்னி என்று} மூன்று விதங்களில் இருப்பவன் என்றும், புலவர்களால் சொல்லப்படுபவன் நீயே. ஓ! எரிந்த காணிக்கைகளை {ஹவிஸை} உண்பவனே {அக்னியே}, உன்னால் கைவிடப்பட்டால், இந்த அண்டம் உடனே அழிந்துவிடும். உன்னை வணங்குவதால், அந்தணர்கள், தங்கள் நற்செயல்களால் அடையப்பட்ட வெகுமதியைத் தங்கள் மனைவியரோடும், பிள்ளைகளோடும் நித்தியமான உலகத்தில் பெறுகிறார்கள். ஓ! அக்னியே, புனிதக் காணிக்கைகளைத் தாங்குபவன் நீயே.
ஓ! அக்னி, தன்னளவில் சிறந்த காணிக்கையானவன் நீயே. உயர்ந்த வகையிலான வேள்விச் சடங்கில், அபரிமிதமான பரிசுகளுடனும், காணிக்கைகளுடனும் வழிபடப்படுபவன் நீயே. ஓ! காணிக்கைகளைச் சுமப்பவனே, மூவுலகங்களையும் படைத்து, நேரம் வரும்போது, தூண்டப்படாத வடிவம் கொண்டு அவற்றை அழிப்பவனும் நீயே. இந்த முழு அண்டத்துக்கும் தாய் நீயே; அதே போலே, ஓ! அக்னி, அவற்றின் அழிவும் நீயே. ஞானிகள் உன்னை மேகங்களோடும் மின்னலோடும் ஒப்பிடுகின்றனர். உன்னிலிருந்து வெளியேறும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் தாங்குகின்றன. அனைத்து நீர்நிலைகளும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதே போல இந்த முழு உலகமும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஓ! பரிசுத்தம் செய்பவனே, மூவுலகங்களிலும் நீ அறியாதது எதுவும் இல்லை. தன் முன்னோடியை {முன்னோடியான உன்னை} அனைத்தும் அன்பாகவே ஏற்றுக் கொள்ளும். வேதங்களின் நித்திய பாடல்களால் உன்னை நான் பலமாக்குகிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}.
இப்படித் துதிக்கப்பட்டதால், எரிந்த காணிக்கைகளைத் தாங்குபவனான அந்தக் கவிகளிற்சிறந்தவன் {அக்னி}, மிகவும் மகிழ்ந்து, பாராட்டத்தக்க சொற்களைப் பிருஹஸ்பதியிடம் பேசினான். பிறகு அவன் {அக்னி பிருஹஸ்பதியிடம்}, “நான் இந்திரனை உமக்குக் காட்டுகிறேன். இதை நான் உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன்” என்றான் {அக்னி}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு அக்னி, கடல்களிலும் சிறு குளங்களிலும் நுழைந்து, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்தத் தடாகத்திற்கு வந்து, தாமரை மலர்களில் தேடிய போது, அங்கே ஒரு தாமரைத் தண்டின் இழையினுள் கிடக்கும் தேவர்கள் மன்னனை {இந்திரனைக்} கண்டான். பிறகு விரைந்து திரும்பிய அவன் {அக்னி}, நுண்ணிய வடிவம் கொண்டு தாமரைத் தண்டின் இழைகளில் எப்படி இந்திரன் தஞ்சமடைந்திருக்கிறான் என்பதைப் பிருஹஸ்பதியிடம் தெரிவித்தான். பிறகு தேவர்கள், துறவிகள், கந்தர்வர்கள் ஆகியோருடன் கூடிய பிருஹஸ்பதி அங்கே சென்று, வலனைக் கொன்றவன் {இந்திரன்} முன்பு செய்த செயல்களைச் சுட்டிக்காட்டி அவனை {இந்திரனை} மகிமைப்படுத்தினார்.
அவர் {பிருஹஸ்பதி இந்திரனிடம்}, “ஓ! இந்திரா, பெரும் அசுரனான நமுச்சி உன்னால் கொல்லப்பட்டான். பயங்கர வலிமை கொண்ட சம்பரன், வலன் என்ற அசுரர்கள் இருவரும் அப்படியே உன்னால் கொல்லப்பட்டார்கள். ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பலத்தில் வளர்ந்து, உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஓ! இந்திரா, எழு! இங்கே கூடியிருக்கும் தேவர்களையும் துறவியரையும் பார். ஓ! இந்திரா, ஓ! பெரும் தலைவா, அசுரர்களைக் கொன்று உலகங்களை விடுவிப்பவன் நீயே. விஷ்ணுவின் சக்தியைக் கொண்ட நீர் நுரைகளால் பலம் கொண்டு முன்பு விருத்திரனைக் கொன்றவன் நீயே. அனைத்து உயிர்களுக்கும் புகலிடமும், வணங்கத்தக்கவனும் நீயே. உனக்கு நிகரான எவனும் இல்லை. ஓ! இந்திரா, அனைத்து உயிர்களும் உன்னாலேயே தாங்கப்படுகின்றன. தேவர்களின் பெருமைகளை எழுப்பியவன் நீயே. ஓ! பெரும் இந்திரா, உனது சுயபலத்தை அடைந்து உலகங்களையும், {அதிலுள்ள} அனைவரையும் காப்பாயாக!” என்றார் {பிருஹஸ்பதி}.
இப்படித் துதிக்கப்பட்ட இந்திரன் சிறிது சிறிதாக வளர்ந்தான். பிறகு தனது சுய உருவை அடைந்து, பலத்தில் வளர்ந்த அவன் {இந்திரன்}, தன் முன்னிலையில் நின்ற ஆசான் பிருஹஸ்பதியிடம் பேசினான். அவன் {இந்திரன் பிருகஸ்பதியிடம்}, “பெரும் அசுரர்களான துவஷ்டிரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, மிகப்பெரிய வடிவம் கொண்டவனும் உலகங்களை அழித்தவனுமான விருத்திரனும் கொல்லப்பட்டுவிட்டனரே. உமக்கு இன்னும் வேறு என்ன காரியம் மீதமிருக்கிறது?” என்று கேட்டான் {இந்திரன்}. அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “மனிதனான நகுஷன் என்ற மன்னன், தெய்வீகத் துறவியருடைய சக்தியின் அறத்தால் சொர்க்கத்தின் அரியணையை அடைந்து, எங்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறான்” என்றார் {பிருகஸ்பதி}.
இந்திரன் {பிருகஸ்பதியிடம்}, “அடைவதற்கு அரிதான சொர்க்கத்தின் அரியணையை நகுஷன் அடைந்தது எப்படி? அவன் பயின்ற தவங்கள் என்னென்ன? ஓ! பிருஹஸ்பதி, அவனது வலிமை எவ்வளவு பெரியது?” என்று கேட்டான். அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சொர்க்கத்தின் ஆட்சியாளனுக்குரிய உயர்ந்த கண்ணியத்தை நீ இழந்ததால், அச்சமடைந்த தேவர்கள் சொர்க்கத்திற்கு ஒரு மன்னனை விரும்பினர். பிறகு, ஓ! இந்திரா, தேவர்களும், அண்டத்திலுள்ள பித்ருக்களும், துறவியரும், முக்கியமான கந்தர்வர்களும் ஒன்றுகூடி நகுஷனிடம் சென்று, “அண்டத்தைக் காப்பவனாகவும், எங்களுக்கு மன்னனாகவும் நீ ஆவாயாக!” என்று சொன்னார்கள். அவர்களிடம் நகுஷன், “நான் திறனற்றவனாக இருக்கிறேன். உங்கள் சக்தியாலும், உங்கள் தவங்களின் அறத்தாலும் என்னை நிரப்புங்கள்” என்று சொன்னான்.
இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், ஓ! தேவர்களின் மன்னா {இந்திரா}, அவனைப் {தங்கள் தவங்களின் அறத்தால்} பலவானாக்கினார்கள். பிறகு, நகுஷன் பயங்கரப் பலம் கொண்டவனாக ஆனான். இப்படியே மூன்று உலகங்களின் ஆட்சியாளனாக ஆன அவன் {நகுஷன்}, பெரும் துறவிகளைப் (தனது தேரில்} பூட்டினான். இப்படியே {முனிவர்களை வாகனமாகப் பயன்படுத்திய} அந்த இழிந்தவன் {நகுஷன்} உலகம் விட்டு உலகம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான். பயங்கரமான நகுஷனை நீ பார்த்துவிடாதே. அவன் தனது கண்களில் இருந்து நஞ்சை உமிழ்ந்து, அனைவரின் சக்தியையும் உறிஞ்சி விடுகிறான். தேவர்கள் அனைவரும் மிகவும் பயந்திருக்கின்றனர். அவன் மீது தங்கள் பார்வையைச் செலுத்தாமல் அவர்கள் {தேவர்கள்} மறைந்தே செல்கின்றனர்” என்றார்.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அங்கீரஸ் குலத்தில் சிறந்தவர் {பிருஹஸ்பதி} அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, உலகத்தின் காப்பாளர்களான {திக்பாலர்களான} குபேரனும், சூரியனின் மகனான யமனும், பழந்தேவனான சோமனும் {சந்திரனும்}, வருணனும் அங்கே வந்தனர். அங்கே வந்த அவர்கள் {திக்பாலர்கள்} பெரும் இந்திரனிடம், “நற்பேறாலேயே துவஷ்ட்ரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, விருத்திரனும் கொல்லப்பட்டனர். ஓ! இந்திரா, உனது எதிரிகள் கொல்லப்பட்ட பிறகும், பாதுகாப்பாகவும், பலமாகவும் நீ இருப்பதும் நற்பேறாலேயேதான்” என்றனர். உலகத்தின் காவலர்களான {லோகபாலர்களான} அவர்கள் அனைவரையும் வரவேற்ற இந்திரன், நகுஷன் தொடர்பாக அவர்களிடம் முறையான வடிவில் கோரிக்கை வைக்கும் நோக்கில், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களை வாழ்த்தினான். பிறகு, அவன் {இந்திரன்}, “கடுமுகம் கொண்ட நகுஷன் தேவர்களின் மன்னனாக இருக்கிறான். அதன் நிமித்தமாக உங்கள் உதவி எனக்குத் தாருங்கள்” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் {திக்பாலர்கள்}, “நகுஷன் கோர முகம் கொண்டவன்; ஓ! தேவா {இந்திரா}, நஞ்சே அவனது பார்வை. நாங்கள் அவனை அஞ்சுகிறோம். நீ நகுஷனை வீழ்த்தினால், ஓ! இந்திரா, வேள்விக் காணிக்கைகளில் எங்களுக்குரிய பங்குகளைப் பெற நாங்கள் உரிமையுடையவர்கள் ஆவோம்” என்றனர். அதற்கு இந்திரன், “அப்படியே ஆகட்டும். என்னுடன் சேர்த்து, நீரின் ஆட்சியாளனான நீயும் {வருணனும்}, யமனும், குபேரனும் இன்றே முடிசூட்டப்படுவீர்கள். தேவர்கள் அனைவரின் துணையுடன், பயங்கரப் பார்வை கொண்ட எதிரியான நகுஷனை நாம் வீழ்த்துவோமாக” என்றான். பிறகு அக்னி, இந்திரனிடம், “வேள்விக் காணிக்கைகளில் எனக்கும் ஒரு பங்கைத் தா. நான் எனது துணையை உனக்கு அளிப்பேன்” என்றான். அவனிடம் {அக்னியிடம்} இந்திரன், “ஓ அக்னி, பெரும் வேள்விகளில் நீயும் ஒரு பங்கைப் பெறுவாய். (அப்படிப்பட்ட நேரங்களில்), இந்திரன் அக்னி ஆகிய இருவருக்கும் ஒரே பங்கு கிடைக்கும்” என்றான்.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பகனைத் தண்டித்தவனும், வரங்களை அளிப்பவனுமான ஒப்பற்ற தலைவனான இந்திரன், இவ்விதம் ஆலோசித்து, யக்ஷர்கள் மீதான ஆட்சி மற்றும் உலகத்தின் அனைத்து செல்வங்களையும் குபேரனுக்கும்; பித்ருக்கள் மீதான ஆட்சியை யமனுக்கும், நீர்நிலைகள் மீதான ஆட்சியை வருணனுக்கும் அளித்தான்.
நகுஷனின் வீழ்ச்சி! – உத்யோக பர்வம் பகுதி 17-திக்பாலர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்த இந்திரனிடம் அகத்தியர் வந்தது; அகத்தியர் இந்திரனை வாழ்த்துவது; நகுஷன் சொர்க்கத்தில் இருந்து விழுந்ததை அகத்தியர் சொன்னது; இந்திரன் அக்கதையை விரிவாகக் கேட்டது; அகத்தியர் நடந்ததைச் சொன்னது; நகுஷன் வீழ்ந்ததால் அனைவரும் மகிழ்ச்சியடைவது ..
ல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “தேவர்கள் தலைவனான புத்திக்கூர்மையுள்ள பெரும் இந்திரன் லோகபாலர்களுடனும், பிற தேவர்களுடனும் நகுஷனைக் கொல்லும் வழிமுறைகளைக் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, பெரிதும் மதிக்கப்படும் தவசியான அகத்தியர் {அகஸ்தியர்} அங்கே அவ்விடத்தில் தோன்றினார். தேவர்கள் தலைவனால் மதிக்கப்பட்ட அகத்தியர், “அண்ட வடிவம் கொண்டவன் {திரிசிரன்} மற்றும் விருத்திரன் ஆகியோரின் அழிவுக்குப் பின்னரும் மலர்ச்சியுடன் இருப்பதற்கு நீ எப்படிப்பட்ட நற்பேறைப் பெற்றிருக்க வேண்டும். ஓ! புரந்தரா {இந்திரா}, சொர்க்கத்தின் அரியணையில் இருந்து நகுஷன் தூக்கியெறியப்பட்டது எவ்வளவு பெரிய நற்பேறு? ஓ! வலனைக் கொன்றவனே {இந்திரா}, உனது எதிரிகள் அனைவரையும் கொன்ற உன்னைக் காண நான் என்ன நற்பேறு செய்திருக்க வேண்டும்?” என்று கேட்டார் {அகத்தியர்}.
இந்திரன் {அகத்தியரிடம்}, “ஓ! பெருந்துறவியே, இங்கே வந்த உமது பயணம் இனிமையாக இருந்ததா? உம்மைக் காண்பதில் நான் மகிழ்கிறேன். பாதம் மற்றும் முகத்தைக் கழுவி கொள்ள நீரும், ஆர்க்கியாவும், பசுவையும் என்னிடம் இருந்து ஏற்றுக் கொள்ளும்” என்றான்.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மிகவும் மகிழ்ந்த இந்திரன், உரிய மரியாதையைப் பெற்று, இருக்கையில் அமர்ந்திருந்த அந்தத் துறவியரில் சிறந்தவரும், அந்தணர்களில் பெரியவரிடம் {அகத்தியரிடம்}, “ஓ! மதிப்புமிக்கத் துறவியே, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, தீய ஆன்மா கொண்ட நகுஷன் சொர்க்கத்தில் இருந்து எப்படி வீசப்பட்டான், என்பது உம்மால் உரைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றான்.
அகஸ்தியர் {இந்திரனிடம்} சொன்னார், “ஓ! இந்திரா, பலத்தில் கர்வம் கொண்ட தீயவனான நகுஷன் சொர்க்கத்தில் இருந்து எப்படி வீசப்பட்டான் என்ற இனிய உரையைக் கேள். தூய எண்ணம் கொண்ட அந்தணர்களும், தெய்வீகத் துறவிகளும், அவனைச் சுமந்து சென்றதால் களைப்படைந்திருந்த போது, ஓ! வெற்றியாளர்களில் சிறந்தவனே {இந்திரா}, அவர்கள் அத்தீயவனிடம் {நகுஷனிடம்}, “ஓ! இந்திரா {நகுஷா}, மாடுகள் மீது தெளிக்கும்போது ஓத வேண்டிய வேதங்களின் குறிப்பிட்ட சில பாடல்கள் இருக்கின்றன. அவை நம்பத்தக்கவையா? இல்லையா?” என்று கேட்டனர். தமஸ் செயல்பாடுகளால் {தமோ குணத்தால்} உணர்வுகளை இழந்திருந்த {அறிவு மழுங்கிய} நகுஷன் அவர்களிடம் அவை நம்பத்தக்கவை அல்ல என்று சொன்னான். பிறகு அந்தத் துறவிகள் {நகுஷனிடம்}, “அநீதியே உனக்கு உகந்ததாய் இருக்கிறது; நீ நீதியின் வழியைப் பின்பற்றவில்லை. ஓ! இந்திரா {நகுஷா}, அவை நம்பத்தக்கவை என்று பெரும் முனிவர்கள் முன்பு சொல்லியிருக்கின்றனர்” என்றனர்.
பொய்மையால் உந்தப்பட்ட அவன் {நகுஷன்}, தனது காலால் எனது தலையைத் தொட்டான். ஓ! சச்சியின் தலைவா {இந்திரா}, இதனால் அவன் {நகுஷன்} பலத்தையும், நல்ல பார்வையையும் இழந்தான். பிறகு அச்சத்தால் பீடிக்கப்பட்டு நடுங்கிக் கொண்டிருந்த அவனிடம் {நகுஷனிடம்} நான், “பிரம்ம முனிவர்களால் (அந்தணத் துறவிகளால்) உரைக்கப்பட்ட குற்றங்குறையற்ற வேதப் பாடல்கள் போலித்தனமானவை என்று நீ சொன்னதாலும், உனது காலால் எனது தலையைத் தொட்டதாலும், ஓ! இழிந்த மூடா {நகுஷா} பிரம்மனுக்கு நிகரான அணுக முடியாத இந்தத் துறவிகளை, உன்னைச் சுமப்பதற்காக விலங்குகளைப் போல மாற்றியதாலும், ஓ! இழிந்தவனே {நகுஷா}, நீ உனது காந்தியை இழந்து, உனது நற்செயல்கள் {நற்செயல்களின் பலன்கள்} அனைத்தும் தீர்ந்து போய்ச் சொர்க்கத்தில் இருந்து தலைகுப்புற விழுவாயாக. பெரும் பாம்பின் வடிவத்தில் நீ பத்தாயிரம் வருடங்கள் பூமியில் அலைவாயாக. அக்காலம் நிறைவடைந்ததும் நீ சொர்க்கத்திற்குத் திரும்பலாம்” என்று சொன்னேன். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {இந்திரா}, இப்படியே அந்த இழிந்தவன் {நகுஷன்} சொர்க்கத்தின் அரியணையில் இருந்து தூக்கி வீசப்பட்டான். ஓ! இந்திரா, இப்போது மலர்ச்சியுடன் இருக்கும் நாம் பேறு பெற்றவர்களே. அந்தணர்களுக்கு முள்ளாக இருந்தவனும் கொல்லப்பட்டான். ஓ! சச்சியின் தலைவா {இந்திரா}, சொர்க்கத்திற்குத் திரும்பி, உலகங்களைக் காத்து, புலன்களைக் கட்டுப்படுத்தி, உனது எதிரிகளை அடக்கி, பெரும் துறவிகளால் துதிக்கப்பட்டு இருப்பாயாக” என்றார் {அகத்தியர்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, தேவர்களும், பெரும் முனிவர்கள் கூட்டங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தனர். பித்ருக்களும், யக்ஷர்களும், பாம்புகளும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், தேவ கன்னியர் கூட்டங்களும் அப்படியே {மகிழ்ச்சியாக} இருந்தனர். குளங்களும், நதிகளும், மலைகளும், கடல்களும் கூட மகிழ்ந்தன. அவை அனைத்தும் {இந்திரனிடம்} வந்து, “ஓ! எதிரிகளைக் கொல்பவனே {இந்திரா}, நீ மலர்ச்சியுடன் செழித்து இருப்பது பெரும்பேறேயாகும். புத்திக்கூர்மையுள்ள அகத்தியர் தீயவனான நகுஷனைக் கொன்றதும் பெரும்பேறேயாகும். அத்தீயவன் {நகுஷன்} பாம்பாக மாறி உலகத்தில் திரிய வைக்கப்பட்டதும் பெரும்பேறேயாகும்” என்றன.
இந்திர விஜயம்! – உத்யோக பர்வம் பகுதி 18-இந்திரன் மீண்டும் மூவுலகுக்கும் தலைவன் ஆனது; இந்திரனைக் காண அங்கிரஸ் முனிவர் வந்தது; அதர்வ வேதத்தில் அங்கிரஸ் அதர்வாங்கிரஸ் என்ற பெயரில் அறியப்படுவார் என்று இந்திரன் சொன்னது; அங்கிரசுக்கு வேள்விகளில் ஒரு பங்கை இந்திரன் கொடுத்தது; இந்திர விஜயம் என்ற இந்தக் கதையைப் படிப்பதால் ஏற்படும் நன்மை; யுதிஷ்டிரன் வெற்றி பெறவே தான் இந்தக் கதையை அவனுக்குச் சொன்னதாகச் சல்லியன் சொன்னது; அர்ஜுனனைப் போற்றி, கர்ணனின் ஊக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று யுதிஷ்டிரன் மீண்டும் சல்லியனிடம் வேண்டுவது; சல்லியன் அதை ஏற்பது; சல்லியன் புறப்பாடு .
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, கந்தர்வர்கள் மற்றும் தேவகன்னியர் கூட்டங்களால் துதிக்கப்பட்ட இந்திரன், மங்கலக்குறிகளைக் கொண்ட யானைகளின் மன்னனான ஐராவதத்தின் மீது ஏறினான். ஒப்பற்ற அக்னி, பெரும் துறவியான பிருஹஸ்பதி, யமன், வருணன், செல்வங்களின் தலைவன் குபேரன் ஆகியோர் அவனுக்கு {இந்திரனுக்குத்} துணையாக இருந்தனர். விருத்திரனைக் கொன்றவனான தலைவன் சக்ரன் {இந்திரன்}, கந்தர்வர்கள் மற்றும் தேவகன்னியர்களுடன் கூடிய தேவர்கள் சூழ மூன்று உலகங்களுக்கும் சென்றான். நூறு வேள்விகளைச் செய்த அந்தத் தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தனது மனைவியுடன் {சச்சியுடன்} இப்படியே சேர்ந்தான். அதன்பிறகு, பெரும் மகிழ்ச்சியுடன் அவன் உலகங்களைப் பாதுகாக்க ஆரம்பித்தான்.
தெய்வீகத் துறவியான ஒப்பற்ற அங்கிரஸ் இந்திரனின் சபைக்கு வந்து, அதர்வப் பாடல்களை உரைத்து அவனைப் {இந்திரனைப்} போற்றினார். அந்தப் பெரும் இந்திரன் மனநிறைவு கொண்டு, அந்த அதர்வாங்கிரசுக்கு வரம் அளித்தான். இந்திரன் {துறவி அங்கிரஸிடம்}, “அதர்வ வேதத்தில் நீர் அதர்வாங்கிரஸ் என்ற பெயரால் அறியப்படுவீர். மேலும் வேள்விகளில் நீரும் ஒரு பங்கைப் பெறுவீர்” என்றான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி அதர்வாங்கிரசை மதித்த அந்த நூறு வேள்விகளைச் செய்த பெரும் தலைவனான இந்திரன், அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டான். பிறகு அவன் {இந்திரன்} தேவர்கள் அனைவருக்கும் மற்றும் தவத்தைச் செல்வமாகக் கொண்ட துறவிகள் அனைவருக்கும் மரியாதை செலுத்தினான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மிகவும் மகிழ்ந்த இந்திரன் மக்களை அறத்துடன் ஆண்டான். இவ்வாறே, தன் மனைவியுடன் {சச்சியுடன்} கூடியவனான இந்திரனின் துன்பம் இருந்தது. தனது எதிரிகளைக் கொல்லும் நோக்கத்தில் அவன் {இந்திரன்} கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மறைந்து வாழ வேண்டி இருந்தது {அஜ்ஞாதவாசம் செய்ய வேண்டி இருந்தது}. ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, திரௌபதியுடனும், உயர்ந்த மனம் கொண்ட உனது தம்பிகளுடனும் பெருங்காட்டில் துன்பப்பட வேண்டியிருந்ததை மனதில் நினைக்காதே {வருந்தாதே}. ஓ! மன்னர்களுக்கு மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே, ஓ! குருகுலத்தை மகிழ்விப்பவனே {யுதிஷ்டிரா}, விருத்திரனைக் கொன்ற பிறகு இந்திரன் அடைந்தது போலவே, நீயும் உனது அரசை மீண்டும் பெறுவாய். தீய மனம் கொண்டவனும், அந்தணர்களுக்கு எதிரியுமான தீய நகுஷன், அகத்தியரின் சாபத்தால், எல்லையற்ற வருடங்களுக்கு ஒன்றுமில்லாமல் போகுமாறு தூக்கிவீசப்பட்டான். அது போலவே, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, கர்ணன், துரியோதனன் மற்றும் பிற தீய ஆன்மாக்கள் விரைவில் அழிவார்கள். பிறகு, ஓ! வீரா {யுதிஷ்டிரா}, உனது தம்பிகள் மற்றும் இந்தத் திரௌபதியுடன், கடல் வரையுள்ள இந்த மொத்த உலகத்தையும் நீ அனுபவிப்பாய்.
இந்திரனின் இந்த வெற்றிக்கதை {இந்திர விஜயம்}, அதன் புனிதத்தன்மையில் வேதத்திற்கு நிகரானதாகும். போர்க்களத்தில் தனது படைகள் அணிவகுக்கப்பட்டிருக்கும் வேளையில், வெற்றியை விரும்பும் ஒரு மன்னன் இதைக் {இந்தக் கதையைக்} கேட்க வேண்டும். எனவேதான், ஓ! வெற்றியாளர்களில் சிறந்தவனே, ஓ! யுதிஷ்டிரா, இந்தக் கதையை நான் உனக்கு உரைத்தேன். உயர்ந்த ஆன்மா கொண்டவர்கள் போற்றப்படும்போது செழிப்பை அடைகிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, துரியோதனனின் குற்றங்களின் காரணமாகவும், பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தின் மூலமாகவும், உயர்ந்த ஆன்மா கொண்ட க்ஷத்திரியர்களின் அழிவு கையருகிலேயே இருக்கிறது.
இதயம் நிறைந்த சமய நம்பிக்கையுடன் {தர்மத்தில் கொண்ட நம்பிக்கையுடன்} எவன் இந்திரனின் வெற்றி {இந்திர விஜயம்} என்ற இந்தக் கதையைப் படிக்கிறானோ, அவன் தனது பாவங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, அருளுலகை அடைந்து, இவ்வுலகத்திலும், அடுத்த உலகத்திலும் மகிழ்ச்சியை அடைகிறான். அவனுக்கு {இந்திர விஜயத்தைப் படிப்பவனுக்கு} எதிரிகளிடம் அச்சமில்லை. அவன் மகனற்ற மனிதனாவதில்லை. எத்தகு துன்பத்தையும் சந்திக்காமல், அவன் நீண்ட வாழ்வை மகிழ்வான். எங்கும் அவனுக்கு வெற்றியே கிடைக்கும். தோல்வி என்பதை அவன் அறிவதில்லை” என்றான் {சல்லியன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயா}, நேர்மையான மனிதர்களில் சிறந்தவனான அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, சல்லியனால் இப்படி ஊக்குவிக்கப்பட்டதும், அவனுக்கு {சல்லியனுக்கு} முறையான வடிவத்தில் மரியாதை செலுத்தினான். வலிய கரங்கள் கொண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், சல்லியனின் சொற்களை ஏற்றுக் கொண்டு, மத்ர மன்னனிடம் {சல்லியனிடம்} பின்வரும் சொற்களைச் சொன்னான். யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, “நீர் கர்ணனின் தேரோட்டியாகச் செயல்பட வேண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. {அப்போது} அர்ஜுனனின் பெருமைகளைப் போற்றி விவரித்து, கர்ணனின் நம்பிக்கையை ஒடுக்க வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்குச் சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “அப்படியே ஆகட்டும். நீ சொல்வது போலவே நான் செயல்படுவேன். என்னால் செய்ய முடிந்த வேறு எதுவாக இருந்தாலும், நான் அவற்றை உனக்காகச் செய்வேன்” என்றான் {சல்லியன்}.
வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, மத்ர மன்னனான சல்லியன் குந்தியின் மகன்களிடம் பிரியா விடைபெற்றுக் கொண்டான். ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, பிறகு அந்த அழகிய மனிதன் {சல்லியன்} தனது படையுடன் துரியோதனனிடம் சென்றான்.
பாண்டியனின் ஆதரவு! – உத்யோக பர்வம் பகுதி 19-சாத்வத குல சாத்யகி, சேதி நாட்டு திருஷ்டகேது, மகத நாட்டு ஜெயத்சேனன், பாஞ்சால நாட்டின் துருபதன், மத்ஸ்ய நாட்டு விராடன் ஆகியோர் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணியுடனும், பாண்டிய மன்னன் பெரும்படையுடனும் என ஏழு அக்ஷௌஹிணி படைகள் பாண்டவர்களிடம் வந்தது; பிராக்ஜோதிஷ {காமரூப} நாட்டின் மன்னன் பகதத்தன், பால்ஹீக நாட்டுப் பூரிஸ்ரவஸ், மத்ர நாட்டு சல்லியன், அந்தகக் குலத்துக் கிருதவர்மன், சிந்து சௌவீர நாட்டின் ஜெயத்ரதன், காம்போஜத்தின் சுதக்ஷிணன், மாஹிஷ்மதீயின் மன்னன் நீலன், கேகய நாட்டு இளவரசர்கள் ஆகியோர் ஓர் அக்ஷௌணியோடும், அவந்தீ நாட்டின் அரசர்கள் இருவரும் இரண்டு அக்ஷௌஹிணிகளோடும் மற்றும் பிற மன்னர்கள் கொண்டு வந்த படைகள் எனப் பதினோரு அக்ஷௌஹிணி படைகள் கௌரவர்களிடம் வந்தது; படைகள் நிற்க இடமில்லாமல் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைகப்பட்டிருந்தது; துருபதனால் அனுப்பப்பட்ட புரோகிதர் கௌரவர்களின் படையைக் கண்டது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, சாத்வத குலத்தைச் சார்ந்த பெரும் வீரனான யுயுதனன் {சாத்யகி}, காலாட்படை, குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் படையுடன் யுதிஷ்டிரனிடம் வந்தான். பல்வேறு விதமான ஆயுதங்களைத் தாங்கி, பல்வேறு நிலங்களில் இருந்து வந்திருந்த பெரும் வீரம் கொண்ட அவனது {சாத்யகியின்} படையின் வீரர்கள், தங்கள் வீரக்களையால் பாண்டவப் படையை அழகுபடுத்தினர். சிறந்த நிலையில் உள்ள போர்க்கோடரிகள் {Battleaxes – பரசு}, ஏவுகணைகள் {Missiles – பிண்டிபாலங்கள்}, ஈட்டிகள் {Spears – சூலாயுதங்கள்}, வேல்கள் {lances – தோமரங்கள்}, சம்மட்டிகள் {mallets – இரும்பு உலக்கைகள்}, தண்டாயுதங்கள் {Clubs – பரிகங்கள்}, தடிகள் {Staves}, கயிறுகள் {cords – பாசங்கள்}, துருப்பிடிக்காத கைவாள்கள் {swords}, பட்டாகத்திகள் {daggers}, பல்வேறு வகையான கணைகள் {arrows} ஆகியவற்றின் காரணத்தால் அந்தப் படையைக் காண அற்புதமாக இருந்தது. அந்த ஆயுதங்களால் அழகுற்றதும், மேகம் போன்ற நிறத்தைப் பிரதிபலிப்பதுமான அந்தப் படை, மேகங்களின் பெருந்திரளுக்கு மத்தியில் இருக்கும் மின்னல் கீற்றுகளைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்றது. அந்தப் படையில் ஓர் அக்ஷௌஹிணி அளவு துருப்புகள் இருந்தன. பிறகு கடலுக்குள் நுழையும் சிறு நதியைப் போல, யுதிஷ்டிரனின் துருப்புகளுடன் அது {அந்தப்படை} கலந்த போது மொத்தமாக மறைந்தே போனது.
அதே போலச் சேதி நாட்டவரின் வலிமைமிக்கத் தலைவனான திருஷ்டகேது, ஓர் அக்ஷௌஹிணி படையின் துணையுடன், அளவிடமுடியாத சக்தி கொண்ட பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தான். மகத மன்னனான, பெரும்பலமிக்க ஜெயத்சேனன், யுதிஷ்டிரனுக்காகத் தன்னுடன் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளைக் கொண்டு வந்தான். அதே போல, கடல் அருகே கரையோர நிலத்தில் வசித்த பாண்டியன், மன்னர்களின் மன்னனான யுதிஷ்டிரனுக்காகப் பல்வேறு வகையான துருப்புகளுடன் வந்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, இந்தத் துருப்புகளெல்லாம் கூடிய போது, நன்கு உடுத்தி அதீத பலத்துடன் இருந்த அவனது {பாண்டியனின்} படை கண்ணுக்கு இனிய தோற்றத்தை அடைந்தது.
மேலும், துருபதனின் படையும், பல்வேறு நிலங்களில் {நாடுகளில்} இருந்து வந்திருந்த வீரர்களாலும், அவனது {துருபதனின்} மகன்களாலும் அழகு பெற்றிருந்தது. அதே போல, மத்ஸ்யர்கள் மன்னனும் துருப்புகளுக்குத் தலைவனுமான விராடனும், மலைப்பகுதிகளின் மன்னனுடன் சேர்ந்து பாண்டுவின் மகன்களிடம் வந்தான். உயர்ந்த ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன்களுக்காகப் பல்வேறு திசைகளில் இருந்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட பதாகைகள் நிறைந்த ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளும் இப்படியே அங்கே ஒன்று கூடின. குருக்களுடன் போரிட ஆவல் கொண்ட அவர்கள் பாண்டவர்களின் இதயங்களை மகிழ்வித்தனர்.
இதே போலவே, மன்னன் பகதத்தனும், திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} இதயத்தை மகிழ்வுறச்செய்யும் வகையில் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளை அவனிடம் {துரியோதனனிடம்} கொடுத்தான். மேலும், குறையற்ற நிறை கொண்ட அவனது துருப்புகளில், சீனர்களும் {chins}, வேடர்களும் {kiratas} நிறைந்திருந்தனர். பொன்னிற உருவம் கொண்ட அவர்கள் அனைவரும் சேர்ந்த போது, அந்தப் படை, கோங்கு {Karnikara} மரங்கள் நிறைந்த காட்டின் அழகைப் பெற்றது. அதே போல, வீரமிக்கப் பூரிஸ்ரவஸ்ஸும், சல்லியனும், ஓ! குருவின் மகனே {ஜனமேஜயா}, ஆளுக்கொரு அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்தார்கள். மேலும், ஹிருதிகனின் {ஹார்த்திகயனின்} மகனான கிருதவர்மனும், போஜர்கள், அந்தகர்கள், குகுரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்தான். அவனது {கிருதவர்மனது} துருப்புகளில் பலவண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிந்தவர்களான பெரும் பலமிக்க வீரர்களைப் பார்ப்பதற்குக் காடுகளில் விளையாடும் அருள்நிறைந்த யானைகளைப் போல இருந்தது.
ஜெயத்ரதனால் வழிநடத்தப்பட்டு வந்த சிந்துசௌவீர நிலத்தில் வசிப்பவர்களும், பிறரும், தங்கள் நடையால் மலைகளையே நடுங்கச் செய்தபடி வந்து கொண்டிருந்தனர். ஓர் அக்ஷௌஹிணி எண்ணிக்கை கொண்ட அவர்களின் படை, காற்றால் தள்ளப்படும் மேகத்திரள் போல நகர்ந்து வந்தது. மேலும், காம்போஜர்களின் மன்னான சுதக்ஷிணன், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, யவனர்கள், சகர்கள் ஆகியோர் அடங்கிய ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் குரு தலைவனிடம் {துரியோதனனிடம்} வந்தான். வெட்டுக்கிளிகள் {[அ] மின்மினிப்பூச்சிகள்} பறப்பதைப் போலப் பறந்து வந்த அவனது {சுதக்ஷிணனின்} துருப்புகள், குரு படையைச் சந்தித்ததும், அதற்குள் உறிஞ்சப்பட்டுக் காணாமல் போனது.
அதே போல, மாஹிஷ்மதீ {Mahishmati} நகரில் குடியிருப்பவனான மன்னன் நீலனும், தென்னாட்டைச் சேர்ந்த, அழகிய ஆயுதங்களை ஏந்திய பெரும்பலமிக்க வீரர்களுடன் வந்தான். பெரும் படைகளோடு கூடிய அவந்தீ நாட்டு மன்னர்கள் இருவரும், தனித்தனியே ஆளுக்கோர் அக்ஷௌஹிணி துருப்புகளைத் துரியோதனனுக்காகக் கொண்டு வந்தார்கள். மனிதர்களில் புலிகளைப் போன்ற ஐந்து அரசச் சகோதரர்களான கேகய இளவரசர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் விரைந்து வந்து, அவனது இதயத்தை மகிழச் செய்தனர். ஓ! பாரதக் குலத்திற்சிறந்தவனே {ஜனமேஜயா}, பிற பகுதிகளைச் சேர்ந்த ஒப்பற்ற மன்னர்களும், மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்ட துருப்புகளுடன் அங்கே வந்தன
பல்வேறு வடிவங்களிலான கொடிகள் சடசடக்கக் குந்தியின் மகன்களோடு {பாண்டவர்களோடு} போரிட விரும்பிய அனைவரும் அடங்கிய துரியோதனனின் படை, எண்ணிக்கையில் பதினோரு அக்ஷௌஹிணிகள் கொண்டதாகியது. ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அப்பொழுது, துரியோதனனுடைய படையின் முக்கியத் தலைவர்களுக்குக்கூட ஹஸ்தினாபுரம் நகரில் நிற்பதற்கு அங்கே இடமில்லாமல் இருந்தது. அதற்காக ஐந்து நதிகளைக் கொண்ட நிலத்திலும் {பஞ்சாபிலும்}, குருஜாங்கல நாடு முழுவதிலும், சீரான ரோஹிதம் என்கிற காட்டிலும், அஹிச்சத்ரம், காலகூடம், கங்கைக்கரை, வாரணம், வாடதானம், யமுனையை அடுத்த மலைத்தொடர்கள் ஆகியவற்றிலும் எனச் சோளமும், செல்வமும் அபரிமிதமாக இருந்த அனைத்து இடங்களிலும் கௌரவர்களின் படை நிரம்பியிருந்தது. பாஞ்சாலர்களின் மன்னனால் {துருபதனால்} குருக்களிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த புரோகிதர், இப்படி அணிவகுக்கப்பட்டிருந்த அந்தப் {கௌரவப்} படையைக் கண்டார்.
புரோகிதரின் தூது! – உத்யோக பர்வம் பகுதி 20-துருபதனின் புரோகிதர் தூதுவராக ஹஸ்தினாபுரம் சென்றது; வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு தான் வந்த நோக்கத்தைச் சொன்னது; பாண்டவர்கள் வஞ்சிக்கப்பட்டாலும் எப்படி அறம் காத்தனர் என்பதையும், பாண்டவர்களின் செல்வங்களை எப்படிக் கௌரவர்கள் வஞ்சித்தனர் என்பதையும் எடுத்துச் சொன்னது; படைகளின் எண்ணிக்கையைப் பார்த்துப் பாண்டவர்களைக் குறைத்து எடைபோட்டுவிட வேண்டாம் எனப் புரோகிதர் சொன்னது; பாண்டவர்களுக்கு உரியதைத் திருப்பித் தருமாறு புரோகிதர் கௌரவர்களைக் கேட்டுக் கொண்டது….
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, கௌரவர் தலைவனை {துரியோதனனை} அணுகிய துருபதனின் புரோகிதர், திருதராஷ்டின், பீஷ்மர் மற்றும் விதுரனால் மரியாதை செலுத்தப்பட்டார். முதலில் பாண்டவர்களின் நலம் குறித்த செய்தியை சொல்லிய அவர், பின்பு கௌரவர்களின் நலன் குறித்து விசாரித்தார். பிறகு, துரியோதனனின் படைத்தலைவர்கள் மத்தியில் இச்சொற்களில் பேசினார் {துருபதனின் புரோகிதர்}, “மன்னர்களின் நித்திய கடமைகள் குறித்து நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆனால், {அவற்றை} நீங்கள் அறிந்திருந்தாலும், நான் சொல்லப்போவதற்கு அறிமுக உரையாக அதைச் சொல்கிறேன் {கேளுங்கள்}.
திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு ஆகிய இருவரும் ஒரே தந்தையின் மகன்களாக அறியப்படுகிறார்கள். தந்தை வழி செல்வத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சமமான பங்கே என்பதில் ஐயமில்லை. திருதராஷ்டிரன் மகன்கள், தங்கள் தந்தை வழி செல்வத்தை அடைந்துவிட்டனர். {ஆனால்} பாண்டுவின் மகன்கள் தங்கள் தந்தை வழி பங்கை ஏன் அடையவே இல்லையே?
பாண்டு மகன்களுடைய {பாண்டவர்களுடைய} தந்தைவழி சொத்துகள் அனைத்தையும் திருதராஷ்டிரன் மகன்கள் {கௌரவர்கள்} முன்பே பறித்துக் கொண்டனர் என்பதனை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பின்னவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் கொலைகார சூழ்ச்சி வேலைகள் மூலம் பாண்டுவின் மகன்களைப் {பாண்டவர்களைத்} தங்கள் வழியில் இருந்து அகற்ற பல்வேறு வழிகளில் முயன்றனர்; ஆனால் விதிப்படி அவர்களின் வாழ்வு முற்றிலும் முடிவடையாததால், பாண்டுவின் மகன்களை {கௌரவர்களால்} யமனுலகு அனுப்ப முடியவில்லை.
பிறகு மீண்டும், அந்த உயர் ஆன்ம இளவரசர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் சொந்த பலத்தின் மூலம் ஒரு நாட்டைச் செதுக்கிக் கொண்ட போது, தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகன்கள், சுபலன் மகனின் {சகுனியின்} துணை கொண்டு அவர்களின் சொத்துகளை ஏமாற்றுகரமாக {பகடையாட்டத்தின் மூலம்} அபகரித்தனர். வழக்கம் போலவே, இந்தத் திருதராஷ்டிரன், தனது அனுமதியை அச்செயலுக்கும் அளித்தான். அதன்பிறகு, அவர்கள் {பாண்டவர்கள்} பதிமூன்று ஆண்டுகள் பெரும் காட்டுக்குள் திரிய அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீரமிக்கவர்களாக இருப்பினும், சபா மண்டபத்தில் தங்கள் மனைவியுடன் அவர்கள் பல்வேறு வகையான அவமதிப்புகளுக்கும் உள்ளாகினர். காட்டில் அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்த துன்பங்கள் கடுமையாக இருந்தன. அந்த அறம்சார்ந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்}, விராட நகரத்தில் சொல்லொணாத் துயரத்தை அனுபவிக்க நேர்ந்தது. தாழ்ந்த மனிதர்களின் வடிவத்தில் அவர்கள் தங்கள் ஆன்மாக்களைச் செலுத்தியதை {சாதாரணத் தாழ்ந்த மனிதர்களாக அவர்கள் வாழ்ந்ததை}, தீய மனிதர்களால் மட்டுமே தாங்கிக் கொள்ள முடியும். குருகுலத்தில் சிறந்தவர்களே, பழங்காலத்தில் {கடந்த காலத்தில்} நடந்த இத்தீங்குகள் அனைத்தையும் புறந்தள்ளி, குருக்களுடனான அமைதி ஒப்பந்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் விரும்பவில்லை.
அவர்களது நடத்தையையும், துரியோதனனின் நடத்தையையும் நினைவில் கொண்டு, பின்னவனின் {துரியோதனனின்} நண்பர்கள், அவனை {துரியோதனனை} அமைதியை ஏற்கும்படி செய்ய வேண்டும்! குருக்களுடன் போரிடுவதில் பாண்டுவின் வீர மகன்கள் உற்சாகங்கொள்ளவில்லை. அவர்கள் {பாண்டவர்கள்}, உலகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே, தங்கள் பங்கை மீண்டும் பெற விரும்புகிறார்கள். திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} போருக்கு ஆதரவாக {அவர்களைவிடப் படைபலம் அதிகம் இருக்கிறது என்ற} காரணத்தைத் தேடினால், அது சரியான கராணமாக இருக்க முடியாது. பாண்டுவின் மகன்கள் அதிகப் பலம் கொண்டவர்கள்.
யுதிஷ்டிரனுக்கு ஆதரவாக ஏழு அக்ஷௌஹிணி துருப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் குருக்களுடன் போரிட விரும்பி, அவனது {யுதிஷ்டிரனின்} சொல்லுக்காகக் காத்திருக்கின்றனர். மனிதர்களில் புலிகளான சாத்யகி, பீமசேனன், பெரும்பலமிக்க இரட்டைச் சகோதரர்கள் ஆகியோரும், இன்னும் பிறரும் ஆயிரம் அக்ஷௌஹிணிகளின் பலத்துக் சமமான சக்தியைப் பெற்றவர்களாவர்.
ஒருபுறத்தில் இந்தப் பதினோரு பிரிவுகள் {11 அக்ஷௌஹிணிகள்} அணிவகுத்திருப்பது உண்மையே, எனினும், மறுபுறத்தில் உள்ள பலவடிவத் திறன்களைக் கொண்ட வலிய கரங்களுடைய தனஞ்சயனால் {அர்ஜுனனால்} இவை சமமாக்கப்படுகிறது. இந்தத் துருப்புகள் அனைத்தையும் சேர்த்தாலும் கிரீடி {அர்ஜுனன்} பலத்தில் விஞ்சியவனாகவே இருப்பான். அதே போலப் பெரும்பிரகாசம் மிக்க வசுதேவரின் மகன் {கிருஷ்ணன்} பெரும் பலமிக்க அறிவாற்றலுடையவன் ஆவான். அர்ஜுனனின் வீரம், கிருஷ்ணனின் ஞானம் ஆகியவற்றையும், அந்த எதிர்ப்படையின் அளவையும் நோக்கில் கொண்டவன் எவன்தான் போரிட விரும்புவான்? எனவே, அறநெறிக்கு கட்டுப்பட்டு, எது கொடுக்கப்பட வேண்டுமோ அதைத் திருப்பிதருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள்” என்றார் {துருபதனின் புரோகிதர்}.
கோபத்துடன் பேசிய கர்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 21-புரோகிதரின் வார்த்தைகளைப் பீஷ்மர் ஏற்பது; பீஷ்மரின் பேச்சை இடைமறித்த கர்ணன் கோபத்துடன் துரியோதனனுக்கு ஆதரவாகப் பேசுவது; பீஷ்மர் கர்ணனை அதட்டுவது; திருதராஷ்டிரன் கர்ணனை அதட்டுவது; துருபதனின் புரோகிதரை மீண்டும் பாண்டவர்களிடம் திருதராஷ்டிரன் திருப்பி அனுப்புவது; சபா மண்டபத்துக்குச் சஞ்சயனை அழைத்துப் பேசிய திருதராஷ்டிரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஞானத்தில் மேன்மையானவரும், பெரும் பிரகாசமுடையவருமான பீஷ்மர், அவரது {புரோகிதரது} சொற்களைக் கேட்டு, அவருக்குத் தன் மரியாதைகளைச் செலுத்தி, அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற சொற்களைப் பேசினார். அவர் {பீஷ்மர்}, “நற்பேறினாலேயே அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் கிருஷ்ணனுடன் நலமாக இருக்கின்றனர். நற்பேறினாலேயே அவர்கள் உதவி பெற்றவர்களாகவும், அறத்தில் பற்றுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். நற்பேறினாலேயே அந்தக் குரு குலக் கொழுந்துகள் {பாண்டவர்கள்} தங்கள் சகோதரர்களுடன் அமைதியை விரும்புகிறார்கள்!
நீர் சொன்னது உண்மை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனினும், உமது சொற்கள் மிகக் கூர்மையாக {கடுமையாக} இருப்பதற்குக் காரணம் நீர் அந்தணராயிருப்பதே என என்று நான் நினைக்கிறேன். இங்கேயும், காட்டிலேயும் என இரண்டு இடங்களிலேயும் பாண்டுவின் மகன்கள் துன்புற்றனர் என்பதில் எந்த ஐயமுமில்லை. தங்கள் தந்தை வழி சொத்துகள் அனைத்தையும் அவர்கள் பெற சட்டப்படி தகுதிபெற்றவர்களே என்பதிலும் ஐயமில்லை. பலமான ஆயுதப் பயற்சி பெற்றவனும், பெரும் தேர்வீரனுமாவான் பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன். போர்க்களத்தில் யாரால் பாண்டுவின் மகனிடம் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} தாக்குப்பிடிக்க முடியும். வஜ்ரதாங்கியாலேயே {இந்திரனாலேயே} முடியாதெனும்போது, வேறு எந்த வில்லாளியையும் குறிப்பிடுவது கடினமே. மூன்று உலகங்களுக்கும் நிகரானவன் அவன் {அர்ஜுனன்} என்பது எனது நம்பிக்கை!” என்றார் {பீஷ்மர்}.
பீஷ்மர் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, கோபம் கொண்ட கர்ணன், அவரது {பீஷ்மரது} சொற்களைத் தடை செய்யும் வண்ணம், துரியோதனனைப் பார்த்தபடியே {துருபதன் புரோகிதரிடம்}, “ஓ! அந்தணரே, இவ்வுலகில் இந்த உண்மைகளைப் பற்றிய தகவல் அறியாத எந்த உயிரினமும் இல்லை. அதையே மீண்டும் மீண்டும் சொல்வதால் என்ன நன்மை ஏற்படும்? முன்பு, பகடையாட்டத்தில் சகுனி, துரியோதனன் சார்பாக வென்றான். பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் தான் ஏற்றுக் கொண்ட நிபந்தனையின்படி காட்டுக்குச் சென்றான். இப்போதோ அவன் {யுதிஷ்டிரன்} அந்த நிபந்தனையை மதிக்காமல் {குறிப்பிட்ட காலத்தைச் சரியாக நிறைவு செய்யாமல்}, மத்ஸ்யர்கள் மற்றும் பாஞ்சாலர்களின் துணையைப் பெற்றதால் நம்பிக்கை கொண்டு, தனது மூதாதையர் அரியணையைத் திரும்பப் பெற விரும்புகிறான்.
ஓ! கற்றவரே, நீர் துரியோதனனை அச்சுறுத்தினால், அவன் {துரியோதனன்} ஓர் அடி நிலத்தையும் தரமாட்டான். ஆனால், நீதிக்காக அவன் {துரியோதனன்}, முழு உலகத்தையும் ஓர் எதிரிக்குக்கூடக் கொடுத்துவிடுவான். அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் மூதாதையர் அரியணையை மீண்டும் பெற விரும்பினால், நிபந்தனையிலுள்ள படி அவர்கள் குறித்த காலத்தைக் காட்டில் {மீண்டும்} கழிக்க வேண்டும். பிறகு, துரியோதனனை அண்டி, பாதுகாப்பாகவும், வளமாகவும் அவர்கள் வாழலாம். எனினும், மந்த புத்தியினால், அவர்கள் முற்றிலும் அநீதியான வழியை நோக்கி மனதைச் செலுத்தாதிருக்கட்டும். எப்படியிருந்தாலும், அறத்தின் பாதையைக் கைவிட்டு, அவர்கள் {பாண்டவர்கள்} போரை விரும்பினால், பாராட்டுக்குத்தகுதியான இந்தக் குருக்களிடம் மோத வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் {பாண்டவர்கள்} எனது இந்தச் சொற்களை நினைவுகொள்ளட்டும்” என்றான் {கர்ணன்}.
பீஷ்மர் {கர்ணனிடம்}, “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உனது பேச்சால் ஏற்படும் பயன் யாது? அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தனியொருவனாகவே ஆறு தேர்வீரர்களை {அதிரதர்களை} போரில் வீழ்த்திய சந்தர்ப்பத்தை நீ நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த அந்தணர் சொன்னது போல நாம் செயல்படவில்லையென்றால், போரில் நாமனைவரும் அவனால் {அர்ஜுனனால்} கொல்லப்படுவோம் என்பது உறுதி!” என்றார் {பீஷ்மர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, திருதராஷ்டிரன், வேண்டிக் கொள்ளும் வகையான சொற்களில் பீஷ்மரை அமைதிப்படுத்தி, ராதையின் மகனை {கர்ணனை} அதட்டி பின்வரும் சொற்களைச் சொன்னான், “சந்தனுவின் மகனான பீஷ்மர் சொன்னது, நமக்கும் பாண்டவர்களுக்கும் எல்லா உலகத்திற்கும் நன்மையே. எனினும், ஆலோசனைக்குப் பிறகு நான் பாண்டுவின் மகன்களிடம் சஞ்சயனை அனுப்புவேன். {என்று கர்ணனிடம் சொல்லி, பிறகு, துருபதனின் புரோகிதரைப் பார்த்து} எனவே, நீர் காத்திருக்க வேண்டியதில்லை. பாண்டுவின் மகனிடம் இன்றே நீர் செல்லும்” என்றான். பிறகு துருபதனின் புரோகிதருக்கு மரியாதை செலுத்திய அந்தக் கௌரவத் தலைவன் {திருதராஷ்டிரன்}, அவரைப் பாண்டவர்களிடம் திருப்பி அனுப்பினான். பிறகு, சபா மண்டபத்திற்குச் சஞ்சயனை அழைத்த அவன் {திருதராஷ்டிரன்}, அவனிடம் {சஞ்சயனிடம்} பின்வரும் சொற்களைச் சொன்னான்.
இந்திரனுக்குச் சற்றும்குறையாத பாண்டியன்! – உத்யோக பர்வம் பகுதி 22-பாண்டவர்களிடமும், உபப்லாவியத்தில் கூடியிருக்கும் மன்னர்களிடமும் சஞ்சயன் என்ன பேச வேண்டும் என்பதைத் திருதராஷ்டிரன் சொல்வது; பாண்டவர்களின் நலனை விசாரிக்கச் சொன்னது; துரியோதனனின் அறியாமையை இகழ்வது; பாண்டவர்களின் செல்வத்தைக் கொடுப்பதே சிறந்தது என்று சொல்வது; அர்ஜுனன், கிருஷ்ணன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோரின் பலத்தைப் புகழ்வது; திருஷ்ட்டத்யும்னன், துருபதன், விராடன், கேகய இளவரசர்கள் ஆகியோரையும் வீரமிக்க மிலேச்ச குலத்தவரின் வீரத்தையும் புகழ்வது; இந்திரனுக்குச் சற்றும் குறையாதவன் பாண்டியன் என்று சொல்வது; சாத்யகியைப் புகழ்வது; சிசுபாலன் கொல்லப்பட்டதை நினைவுபடுத்துவது; கிருஷ்ணனின் பெருமையை மீண்டும் சொல்வது; கிருஷ்ணன் அர்ஜுனன் ஆகியோரைக் கண்டு அஞ்சுவதாகவும், ஆனால் இவர்கள் அனைவரை விடவும் யுதிஷ்டிரனை நினைத்தால்தான் தான் பெரிதும் அஞ்சுவதாகவும் சொல்வது; போரைத் தவிர்க்க, பாண்டவர்களின் கோபத்தைத் தணிக்க என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அனைத்தையும் சொல்லுமாறு திருதராஷ்டிரன் சஞ்சயனைப் பணித்தது…
திருதராஷ்டிரன் {சஞ்ஜயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, பாண்டவர்கள்உபப்லாவ்யத்திற்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கே சென்று அவர்களை விசாரிப்பாயாக. நீ அஜாதசத்துருவை {யுதிஷ்டிரனைப்} பின்வரும் சொற்களுடன் சந்திக்க வேண்டும், “நற்பேறாலேயே நீ (காட்டில் இருந்து வெளிவந்து) இத்தகு நகரை {உபப்லாவ்யத்தை} அடைந்திருக்கிறாய்” என்று சொல்லி, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரிடமும் ஓ! சஞ்சயா, இவ்வார்த்தைகளைச் சொல். “அத்தகு துன்பங்களுக்குத் தகுதியில்லாத நீங்கள், துன்பமிக்கதான அந்தச் சொற்பகால வாழ்வைக் கழித்துப் பிறகு நன்றாக இருக்கிறீர்களா?” என்று கேள்.
அவர்கள் {பாண்டவர்கள்} நீதிமான்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பதால், என்னதான் (எதிரிகளால்) அவர்களுக்குத் துரோகமிழைக்கப்பட்டாலும் குறுகிய காலத்தில் நம்மிடம் அவர்கள் அமைதியடைவார்கள். ஓ! சஞ்சயா, எச்சந்தர்ப்பத்திலும் நான் பாண்டவர்கள் தரப்பில் பொய்மையைக் கண்டதில்லை. தங்கள் சொந்த வீரத்தாலேயே அவர்கள் தங்கள் செழுமையை அடைந்தார்கள். இருப்பினும், அவர்கள் எப்போதும் என்னிடம் கடமை உணர்ச்சியுடனேயே இருந்தனர். அவர்களது நடத்தையை நான் ஆராய முற்பட்டாலும், அவர்களிடம் எந்த ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களைப் பழிக்கும் வண்ணம் ஒரு தவறையேனும் நான் அவர்களிடம் காணவில்லை. அவர்கள் எப்போதும் அறம், பொருளுக்கு இசைவான மனதுடனேயே செயல்பட்டு வருகின்றனர்; அவர்கள் எப்போதும் சிற்றின்பங்களிலோ, குளிர், பசி, தாகம் ஆகியவற்றால் ஏற்படும் இன்பங்களிலோ மூழ்கியதில்லை; தூக்கம், சோம்பல், கோபம், கவனமின்மை ஆகியவற்றை அடக்கியிருக்கின்றனர்.
அறம் பொருள் ஆகியவற்றில் கவனமாக இருப்பவர்களான பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, அனைவருக்கும் இனிமையானவர்களாகவே இருக்கின்றனர். சரியான சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் நண்பர்களுக்குச் செல்வத்தைப் பிரித்துக் கொடுக்கின்றனர். ஒவ்வொருவரின் தேவையறிந்து, செல்வத்தையும், மரியாதையையும் அளிப்பதால், அவர்களுக்குள் உள்ள நட்பு நீண்ட காலமானாலும் இதயப்பூர்வமாகவே இருக்கிறது. தீயவனும், நிலையில்லாதவனும், மந்த புத்தி கொண்டவனுமான துரியோதனனையும், அவனை விட இன்னும் அதிகமான குறுகிய மனம் கொண்ட கர்ணனையும் தவிர, அஜமீட குலத்தைச் சேர்ந்த எந்த ஆன்மாவும் அவர்களிடம் {பாண்டவர்களிடம்} வெறுப்படைவதில்லை. நண்பர்கள் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் இழந்த அந்த உயர் ஆன்மா கொண்டோரின் {பாண்டவர்களின்} சக்தியை {கோபத்தை} இவர்கள் இருவரும் {துரியோதனனும் , கர்ணனும் } எப்போதும் அதிகரிக்கவே செய்கின்றனர்.
அனைத்துவகையிலும் ஆவலுடனும் நல்ல முறையிலும் வளர்க்கப்பட்டதால், அந்த {துரியோதனன் தான் வாழும் விதம்} அனைத்தும் நன்றாகச் செய்யப்படுவதாகவே துரியோதனன் நினைக்கிறான். பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய நியாயமான பங்கை, அவர்கள் {பாண்டவர்கள்} உயிருடன் இருக்கும்போது அபகரிக்க இயலும் என்று நினைப்பது துரியோதனனின் சிறுபிள்ளைத்தனமாகும். யுதிஷ்டிரனைத் தொடர்ந்து அர்ஜுனன், கிருஷ்ணன், பீமன், சாத்யகி, மாத்ரியின் இருமகன்கள்{நகுலன், சகாதேவன்} மற்றும் சிருஞ்செய குலத்து வீரர்கள் ஆகியோர் வருவார்கள் என்பதால், போருக்கு முன்பே அவனுக்குச் {யுதிஷ்டிரனுக்குச்} சேர வேண்டிய பங்கை, அவனுக்குக் கொடுத்து விடுவதே விவேகமாகும்.
காண்டீவம் தாங்கிய சவ்யசச்சின் {அர்ஜுனன்}, தேரில் அமர்ந்து வந்தால், இந்த முழு உலகத்தையும் தனியாகவே அழித்துவிடுவான். அதே போல, வெற்றியாளனும், உயர்ந்த ஆன்மா கொண்டவனும், வீழ்த்தப்பட முடியாதவனும், மூன்று உலகங்களின் தலைவனுமான கிருஷ்ணனும் அதையே செய்வான். அனைத்து உலகங்களிலும் தகுதி வாய்ந்த மனிதனான அவன் {அர்ஜுனன்}, மேகங்களைப் போலக் கர்ஜிக்கும் பல கணைகளைச் சீறிப்பாயும் வெட்டுக்கிளிகளைப் போலப் பறக்கச் செய்து, அனைத்துப் புறங்களையும் மூடினால், அவன் முன்பு யாரால் நிற்க முடியும்?
அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, தனியனாகவே தேரில் வடபகுதி சென்று, வடக்குக் குருக்களை வீழ்த்தி, அவர்களுடைய செல்வங்களையெல்லாம் எடுத்து வந்தான். திராவிட நிலத்தைச் {Dravida land}சார்ந்த மக்களை, தனது படையின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்டான். காண்டீவத்தைத் தாங்குபவனான பல்குனன் {அர்ஜுனன்}, தேவர்கள் அனைவருடன் கூடிய இந்திரனைக் காண்டவ வனத்தில் தோற்கடித்து, அக்னிக்குக் காணிக்கைகள் அளித்து, பாண்டவர்களின் மதிப்பையும் புகழையும் மேம்படுத்தினான்.
கதாயுதம் தாங்குவோர் அனைவரிலும் பீமனுக்கு நிகரான வேறு எவனும் கிடையாது. யானைகளை ஓட்டுவதில் அவனக்கு நிகரான நிபுணன் எவனும் கிடையாது. தேரைப் பொருத்த வரை அர்ஜுனன் கூட அவனுக்கு {பீமனுக்கு} இணையில்லை என்றே சொல்கின்றனர். கரங்களின் பலத்தால் அவன் {பீமன்} பத்தாயிரம் {10000} யானைகளுக்கு நிகரானவனாக இருக்கிறான். நன்கு பயிற்சி செய்து, சுறுசுறுப்பாக இருக்கும் அவனிடம் {பீமனிடம்}, மீண்டும் கசப்பான பகைமை பாராட்டப்பட்டால், கோபத்தால் விரைவில் அவன் {பீமன்} தார்தராஷ்டிரர்களை {திருதராஷ்டிரர்களை} எரித்துவிடுவான். எப்போதும் கோபத்துடன் இருக்கும் அந்த வலிய கரங்கள் கொண்டவன் {பீமன்}, இந்திரனாலும் வீழ்த்தப்பட முடியாதவனாவான்.
பெரும் இதயமும், பலமும், கைலாவகமும் கொண்டவர்களும், அர்ஜுனனால் கவனமாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், மாத்ரியின் மகன்களுமான இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்}, பறவைகளின் பெரும் கூட்டத்தை வேட்டையாடும் இரு பருந்துகள் {ராஜாளிகள்} போல எதிரி எவனையும் உயிரோடு விடமாட்டார்கள். உனக்கு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்படி நிறைந்திருக்கும் நமது படை, அவர்களிடம் மோதினால் காணாமல் போய்விடும் {என்றே நினைக்கிறேன் என்றான் }.
அவர்கள் புறத்தில் இருக்கும் திருஷ்டத்யும்னன் பெரும் செயல்பாடுகளை உடையவனாவான். அவனும் {திருஷ்டத்யும்னனும்} பாண்டவர்களில் ஒருவனாகவே கருதப்படுகிறான். தனது தொண்டர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய சோமக குலத்தின் தலைவன் {துருபதன்}, பாண்டவர்களுடைய காரியத்தின் மீது கொண்ட அர்ப்பணிப்பால், தன் உயிரையும் விடத் தயாராக இருக்கிறான் என்று கேள்விப்படுகிறேன். விருஷ்ணி குலத்தின் சிறந்தவனை (கிருஷ்ணனைத்) தனது தலைவனாகக் கொண்டிருக்கும் யுதிஷ்டிரனை எதிர்த்து நிற்க யாரால் முடியும்? மத்ஸ்யர்கள் தலைவனான விராடனுடன் பாண்டவர்கள் சிறிது காலம் வாழ்ந்தனர்; அவனது {விராடனின்} விருப்பங்களை அவர்கள் {பாண்டவர்கள்} நிறைவேற்றினர்; வயது முதிர்ந்த அவன் {விராடன்}, பாண்டவர்களின் காரியத்தில் அர்ப்பணிப்புக் கொண்டு, தனது மகன்களுடன் சேர்ந்து யுதிஷ்டிரனைப் பின்பற்றுபவனாகிவிட்டான் என்று நான் கேள்விப்படுகிறேன்.
கேகய நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, பழைய நிலையை அடைய விரும்புபவர்களான அந்நிலத்தின் {கேகய நாட்டின்} ஐந்து பலமிக்கச் சகோதரர்கள் {கேகய இளவரசர்கள்}, போருக்குத் தயாராகப் பலமிக்க விற்களைத் தாங்கிக் கொண்டு, பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} இப்போது தொடர்ந்து வருகிறார்கள். பூமியின் தலைவர்களில் வீரமிக்க அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டுப் பாண்டவர்களின் காரியத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரனிடம் கூட்டணி அமைத்திருக்கும் அவர்கள் அனைவரும் துணிவுள்ள, தகுதியுள்ள, மரியாதைக்குரியவர்கள் என்றும், பாசத்தாலேயே அவர்கள் அவனுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்றும் நான் கேள்விப்படுகிறேன்.
மலைகள் மற்றும் அணுகவியலாத காடுகளிலும் வசிப்பவர்களும், உயர்ந்த வம்ச வழியும், வயதில் முதிர்ச்சியும் கொண்ட பல மிலேச்ச குல வீரர்கள் ஒன்றாகக் கூடி, பல்வேறு ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு, பாண்டவர்களின் காரியத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
போர்க்களத்தில் இந்திரனுக்குச் சற்றும் குறையாதவனும், போரிடும்போது வீரமிக்க எண்ணற்ற வீரர்களால் தொடரப்படுபவனுமான பாண்டியனும் அங்கே வந்திருக்கிறான். குறிப்பிடத்தக்க வீரம் கொண்டவனும், பராக்கிரமமிக்கவனும், ஒப்பற்ற சக்திமிக்கவனுமான அவன் {பாண்டியன்}, பாண்டவர்களின் காரியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறான்.
துரோணர், அர்ஜுனன், கிருஷ்ணன், கிருபர், பீஷ்மர் ஆகியோரிடம் ஆயுதங்களைப் பெற்றவனும், கிருஷ்ணனின் மகனுக்கு {பிரத்யும்னனுக்கு} நிகரானவனுமான சாத்யகி, பாண்டவ காரியத்தில் தன்னை அர்ப்பணிப்புடன் பிணைத்துக் கொண்டிருக்கிறான்.
அங்கே கூடியிருக்கும் சேதி மற்றும் கரூஷ {கரூசக} குல மன்னர்கள் அனைவரும் தங்கள் வளங்கள் அனைத்துடன் பாண்டவர்கள் தரப்பில் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில், சூரியனைப் போல அழகொளி வீசிக் கொண்டு, போர்க்களத்தில் அசைக்கமுடியாதவனாக அனைவராலும் கருதப்பட்டு, இந்தப் பூமியில் வில்லை இழுப்பவர்களில் மிகச் சிறந்தவனாக, தனது சொந்த பலத்தால் க்ஷத்திரிய மன்னர்கள் அனைவரின் துணிச்சல் மிக்க ஆவிகளையும் இல்லையென்று சொல்லுமளவுக்குச் செய்தவன் {க்ஷத்திரிய மன்னர்களின் துணிச்சலை சற்றும் எண்ணிப்பாராதவனான சிசுபாலன்}, கிருஷ்ணனால் ஒரு நொடிப்பொழுதில் கொல்லப்பட்டான். அந்தச் சிசுபாலன் மீது கண்களைச் செலுத்திய கேசவன் {கிருஷ்ணன்}, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} புகழையும், மதிப்பையும் மேம்படுத்தும் வண்ணம் அவனை {சிசுபாலனை} அடித்தான். கரூஷ குல மன்னன் தலைமையில் நின்ற மன்னர்களால் உயர்வாக மதிக்கப்பட்டவன் அதே சிசுபாலன்தான். சுக்ரீவம் மற்றும் பிற குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணன், தாக்கப்பட முடியாதவன் என்று கருதிய பிற மன்னர்கள், சிங்கத்தைக் கண்ட சிறு விலங்குகள் போலச் சேதிகள் தலைவனை {சிசுபாலனை} விட்டு ஓடினர். இப்படியே, தனது துடுக்கால், கிருஷ்ணனை எதிர்த்து அவனுடன் மோதி, காற்றால் வேரோடு சாய்க்கப்பட்ட கோங்கு மரம் போலக் கிருஷ்ணனால் கொல்லப்பட்டு உயிரற்று கீழே விழுந்தான் {சிசுபாலன்}.
ஓ! சஞ்சயா, ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டு மகன்களின் காரியத்திற்காகக் கிருஷ்ணனின் செயல்பாடுகள் குறித்து அவர்களால் எனக்குச் சொல்லப்பட்டதையும், அவனது {கிருஷ்ணனின்} கடந்த காலச் சாதனைகளையும் நினைத்துப் பார்த்தால், என் மனம் அமைதியடையவில்லை. விருஷ்ணி குல சிங்கத்தின் {கிருஷ்ணனின்} தலைமையின்கீழ் இருப்பவர்களை எந்த எதிரியாலும் தாங்கிக் கொள்ள முடியாது. இரு கிருஷ்ணன்கள் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன்}, ஒரே தேரில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, அச்சத்தால் எனது இதயம் நடுங்குகிறது.
மந்த புத்தியுடைய எனது மகன் {துரியோதனன்} அந்த இருவருடன் போரிடாமல் இருந்தால் நன்றாக இருப்பான். இல்லையேல், இந்திரனும், உபேந்திரனும் சேர்ந்து தைத்திய படையை எரித்தது போல, குரு குலம் அந்த இருவரால் பொசுக்கப்படும். தனஞ்சயனை {அர்ஜுனனை} நான் இந்திரனுக்கு நிகராகக் கருதுகிறேன். விருஷ்ணி குலத்தின் மிகப் பெரியவனான கிருஷ்ணனை, நான் நித்திய விஷ்ணுவாகவே கருதுகிறேன்.
அறமும் துணிவும் கொண்ட யுதிஷ்டிரன் பழி தரும் செயல்களைத் தவிர்ப்பவனாவான். ஓ! சூதா {சஞ்சயா}, நான் அந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} கோபத்துக்கு அஞ்சுவது போல அர்ஜுனனுக்கோ, பீமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ, இரட்டையர்களுக்கோ அஞ்சவில்லை. அவனது தவம் பெரிதானது; அவன் பிரம்மச்சரிய பயிற்சிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவனாவான். அவனது இதய விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். ஓ! சஞ்சயா, அவனுடைய கோபத்தையும், அவன் எப்படிப்பட்ட நீதிமான் என்பதையும் நினைக்கும்போதெல்லாம், நான் அச்சத்தால் நிறைகிறேன்.
என்னால் அனுப்பப்படும் நீ, ஒரு தேரில், பாஞ்சாலர்கள் மன்னனின் {துருபதனின்} துருப்புகள் தங்கியிருக்கும் இடத்திற்கு விரைந்து செல். யுதிஷ்டிரனின் நலத்தை விசாரி. நீ அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாசத்துடன் மீண்டும் மீண்டும் பேசுவாயாக. ஓ! குழந்தாய் {சஞ்சயா}, துணிச்சல் மிக்க அனைவரின் தலைவனும், பெருந்தன்மையுள்ள ஆன்மா கொண்டவனுமான கிருஷ்ணனையும் நீ சந்திக்க வேண்டும். எனது சார்பாக நீ அவனிடம் நலம் விசாரித்து, பிறகு அவனிடம் பாண்டு மகன்களுடன் {பாண்டவர்களுடன்} திருதராஷ்டிரன் அமைதியை விரும்புகிறான் என்று சொல்ல வேண்டும்.
ஓ! சூதா {சஞ்சயா}, கிருஷ்ணன் சொல்லும் சொற்களில் குந்தியின் மகனான யுதிஷ்டிரன் இதைச் செய்ய மாட்டான், என்பது எதுவும் கிடையாது. தங்கள் உயிரின் மேல் கொண்ட அன்பைப் போல, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அவர்கள் அன்பு கொண்டவர்கள். பெரும் கல்வியுடைய அவன் {கிருஷ்ணன்}, அவர்களது காரியத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடனேயே இருக்கிறான். அங்கே கூடியிருக்கும் பாண்டு மகன்கள், சிருஞ்சயர்கள், சாத்யகி, விராடன், திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோரின் நலத்தை எனது தூதனாக இருந்து விசாரிப்பாயாக. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவை என்றும், பாரதக் குலத்திற்கு நன்மையானவை என்றும் நீ கருதும் அனைத்தையும், ஓ! சஞ்சயா, உகந்ததல்லாததும், போர் செய்ய ஆத்திரமூட்டும் அனைத்தையும் தணிக்கும் வகையில் அந்த மன்னர்களுக்கு மத்தியில் நீ பேச வேண்டும்” என்றான் {திருதராஷ்டிரன்}
இந்திரனுக்குச் சற்றே குறைந்த யுதிஷ்டிரன்! – உத்யோக பர்வம் பகுதி 23-சஞ்சயன் யுதிஷ்டிரனை அடைந்து நலம் விசாரிப்பது; யுதிஷ்டிரனும் பதிலுக்குச் சஞ்சயனிடம் நலம் விசாரிப்பது? குருக்களின் உடல் நலம், பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், கிருபர், கர்ணன், யுயுத்சு ஆகியோரின் நலனை யுதிஷ்டிரன் விசாரிப்பது; தங்கள் மீது யாரும் எந்தக் குற்றத்தையும் சொல்கிறார்களா என்று கேட்பது; கோஷ யாத்திரையின் போது துவைதவனத்தில் துரியோதனனும், கௌரவர்களும் அடைந்த அவமானத்தையும் யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் நினைவுபடுத்துவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் திருதராஷ்டிரனின் இவ்வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட சஞ்சயன், அளவிட முடியாத சக்தி கொண்ட பாண்டவர்களைக் காண உபப்பிலாவியம் சென்றான். குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை அணுகி, தன் மரியாதையை முதலில் அவனுக்குச் செலுத்தி பிறகு பேச ஆரம்பித்தான்.
சஞ்சயன் என்ற பெயர் கொண்டவனும், சூத சாதியைச் சேர்ந்தவனுமான கவல்கணன் மகன், அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்} மகிழ்ச்சியாக இப்படிப் பேசினான், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் இந்திரனுக்குச் சற்றே குறைந்து, நண்பர்களால் உதவப்பட்டு நோயற்றவனாக இருக்கும் உன்னைக் காணும் நான் நற்பேறையே பெற்றிருக்கிறேன். அம்பிகையின் மகனும் முதிர்ந்த விவேகியுமான மன்னர் திருதராஷ்டிரர், உனது நலனை விசாரித்தார். பீமசேனன் நலமாக இருக்கிறான் என்றும் பாண்டவர்களில் முதன்மையான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, மாத்ரியின் இந்த இரு மகன்களும் {இந்த நகுலனும், சகாதேவனும்} நலமாக இருக்கின்றனர் என்றும் நான் நம்புகிறேன். வீரர்களின் மனைவியும், பெரும் சக்தி கொண்ட மங்கையும், உண்மையின் பாதையில் இருந்து எப்போதும் வழுவாதவளும், துருபதன் மகளுமாகிய இளவரசி கிருஷ்ணையும் {திரௌபதியும்} நலமாக இருக்கிறாள் என நம்புகிறேன். நீங்கள் விரும்பத்தக்க இன்பங்கள் எல்லாம் யாரை மையம் கொண்டிருக்கிறதோ, உங்களின் நலனுக்காக யார் தொடர்ச்சியாக வேண்டுவாளோ அவள் {திரௌபதி}, தனது மகன்களுடன் நலமாக இருக்கிறாள் என நான் நம்புகிறேன்” என்றான் {சஞ்சயன்}.
அதற்கு யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! கவல்கணர் மகனான சஞ்சயரே, உமது பயணம் பாதுகாப்பாக இருந்ததா? உம்மைக் கண்டதால் நாங்கள் மகிழ்ந்தோம். நீர் எப்படி இருக்கிறீர் என்று பதிலுக்கு நான் வினவுகிறேன். ஓ! கல்விமானே, எனது தம்பிகளுடன் கூடிய நான் அற்புத உடல்நலத்துடன் இருக்கிறேன். ஓ! சூதரே, நீண்ட காலத்திற்குப் பிறகு, பரதனின் வழித்தோன்றலான குருக்களின் முதிர்ந்த மன்னரிடம் {திருதராஷ்டிரரிடம்} இருந்து செய்தியைப் பெறுகிறேன். ஓ! சஞ்சயரே, உம்மைக் கண்டதால், மன்னரையே {திருதராஷ்டிரரையே} கண்டது போல மனநிறைவை உணர்கிறேன்.
ஓ! அய்யா {சஞ்சயரே}, பெரும் சக்தி கொண்டவரும், உயர்ந்த ஞானம் கொண்டவரும், எப்போதும், தனது வகைக்குரிய பயிற்சிகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவரும் குருவின் வழித்தோன்றலுமான எங்கள் முதிர்ந்த பாட்டன் {பிதாமகரான} பீஷ்மர் உடல்நலத்தோடு இருக்கிறாரா? அவரது அனைத்து பழக்க வழக்கங்களையும் அவர் இன்னும் தக்கவைத்திருப்பார் என நம்புகிறேன். விசித்திரவீரியன் மகனான உயர்ந்த ஆன்மா கொண்ட மன்னர் திருதராஷ்டிரரும் அவரது மகன்களும் உடல்நலத்துடன் இருப்பார்கள் என நம்புகிறேன். பெரும் கல்விபெற்றவரும், பிரதீபனின் மகனுமான பெரும் மன்னன் பாஹ்லீகர் உடல்நலத்துடன் இருப்பார் என நம்புகிறேன். ஓ! அய்யா {சஞ்சயரே}, அந்தச் சோமதத்தன் உடல்நலத்துடன் இருப்பான் என்றும், பூரிஸ்ரவஸ், சத்தியசந்தன், சலன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தணரான கிருபர் ஆகியோர் நலமாகவும் இருப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன். இந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும் நோயற்றவர்களாக இருப்பார்கள் என நான் நம்புகிறேன்.
ஓ! சஞ்சயரே, உயர்ந்த புத்திக்கூர்மை கொண்டவர்களும், எழுத்துகளை நன்றாக அறிந்தவர்களும், ஆயுதம் தாங்குவோரில் மிக மேன்மையான இடத்தில் இருப்பவர்களுமான இந்தச் சிறந்த பெரிய வில்லாளிகள் அனைவரும் தங்களைக் குருக்களுடன் {கௌரவர்களுடன்} பிணைத்துக் கொண்டுள்ளனர். அந்த வில்லாளிகள் அனைவரும் முறையான மதிப்பைப் பெறுகிறார்கள் என நான் நம்புகிறேன். பலமிக்கவரும், அழகிய வில்லாளியும், நல்ல நடத்தையுள்ளவருமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} எந்த நாட்டில் வசிக்கிறாரோ அங்கே வாழ்பவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள்? திருதராஷ்டிரருடைய வைசிய மனைவி மூலம், அவருடைய {திருதராஷ்டிரருடைய} மகனான உயர்ந்த புத்திக்கூர்மை கொண்ட யுயத்சு உடல்நலத்துடன் இருக்கிறான் என நம்புகிறேன். ஓ! அய்யா {சஞ்சயரே}, மந்தபுத்தியுள்ள சுயோதனன் {துரியோதனன்} யாருடைய ஆலோசனைகளைக் கேட்பானோ, அந்த ஆலோசகன் கர்ணன் உடல்நலத்துடன் இருக்கிறான் என நம்புகிறேன். திருதராஷ்டிரர் வீட்டைச் சார்ந்தவர்களும் பாரதக் குலத்தின் தாய்மார்களுமான முதிர்ந்த மங்கையர், மடைப்பள்ளிக் காரிகைகள் {பெண் சமையல் கலைஞர்கள்}, பணிப்பெண்கள், மருமகள்கள், மகன்கள், சகோதரிகளின் மகன்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் மகன்கள் ஆகியோர் அனைவரும் தொல்லையில்லாமல் இருக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.
ஓ! அய்யா {சஞ்சயரே}, அந்தணர்களின் பிழைப்பாதாரங்களை முன்பிருந்ததைப் போலவே மன்னர் {திருதராஷ்டிரர்} இன்னும் அனுமதிக்கிறார் என நம்புகிறேன். ஓ! சஞ்சயரே, அந்தணர்களுக்கு நான் அளித்த கொடைகளைத் {மானியங்களைத்} திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} கைப்பற்றவில்லை என நான் நம்புகிறேன். தனது மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர், அந்தணர்கள் தரப்பின் நடத்தையைப் பொறுமையுடன் சந்திக்கிறார் என நம்புகிறேன். சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரே நெடுஞ்சாலையான அவர்களுடைய {அந்தணர்களின்} தேவைகளைப் பூர்த்திச் செய்வதை எப்போதும் அவர் தவிர்ப்பதில்லை என நான் நம்புகிறேன். இவ்வுலகில் வாழும் உயிரினங்களுக்குப் படைப்பாளர் {பிரம்மா} தந்துள்ள தெளிந்த அற்புதமான ஒளி இதுவே. மந்த புத்தி கொண்டோரைப் போலக் குருவின் மகன்கள் அந்தணர்களைப் பொறுமையுடன் நடத்தவில்லையென்றால், முற்றான அழிவு அவர்களுக்கு ஏற்படும்.
மாநிலத்தின் செயல்பாடுகளுக்கு வேண்டியவற்றை மன்னர் திருதராஷ்டிரரும் அவரது மகனும் {துரியோதனனும்} கொடுக்க முயல்கிறார்கள் என நான் நம்புகிறேன். ஓ! அய்யா {சஞ்சயரே}, அவர்களது அழிவுக்காகச் சூழ்ச்சி செய்யும் எதிரிகள் யாரும் நண்பர்கள் என்ற போர்வையில் அவர்களிடம் இல்லை என நான் நம்புகிறேன். ஓ! அய்யா {சஞ்சயரே}, இந்தக் குருக்களில் யாரும் நாங்கள் ஏதாவது குற்றமிழைத்திருப்பதாகப் பேசுவதில்லை என நம்புகிறேன். நாங்கள் எவ்வகையிலேனும் குற்றமிழைத்தோம் எனத் துரோணரும், அவரது மகனும் {அஸ்வத்தாமனும்}, வீரரான கிருபரும் பேசுவதில்லை என நான் நம்புகிறேன். மன்னர் திருதராஷ்டிரரையும், அவரது மகன்களையும் குருக்கள் அனைவரும் தங்கள் குலத்தைக் காப்பவர்களாகப் பார்க்கிறார்கள் என நான் நம்புகிறேன்.
கொள்ளையர்க்கும்பலைக் காணும் போது, போர்க்களத்தின் அனைத்துத் துறைகளிலும் தலைமையில் நின்று அர்ஜுனன் செய்த செயல்களை அவர்கள் நினைவுகூர்வார்கள் என நான் நம்புகிறேன். அவனது {அர்ஜுனனது} கைவிரல்களின் தீண்டுதலுடன், காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்டு, நன்றாக இழுக்கப்பட்ட வில்லின் நாணுடைய விசையினால், இடியைப் போன்ற பேரொலியை எழுப்பியபடி, காற்றில் நேரான பாதையில் பறந்து செல்லும் கணைகளை அவர்கள் நினைவுகூர்வார்கள் என நான் நம்புகிறேன். கல்லில் தீட்டப்பட்டவையும், அற்புத இறகுகள் படைத்தவையுமான கூர்மையான அறுபத்தியோரு {61} கணைகளை ஒரே முயற்சியில் அடிக்கும் அர்ஜுனனுக்குச் சமமாகவோ, அவனை விஞ்சுபவனாகவோ நான் எந்த வீரனையும் கண்டதில்லை.
நாணல் நிறைந்த காட்டைக் {கோரைக்காடுகளைக்} கலங்கடிக்கும் மதங்கொண்ட யானையைப் போல, போர்க்களத்தில் அணிவகுத்திருக்கும் எதிரிப்படையினரை அச்சத்தால் நடுங்கச் செய்பவனான பீமனை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களா? இடது, வலது என இரு கைகளாலும் கணைகளை அடித்து, தந்தகூரத்தில் கலிங்கர்களை வீழ்த்திய மாத்ரியின் மகனான பலமிக்கச் சகாதேவனை அவர்கள் நினைவில் கொண்டுள்ளார்களா? ஓ! சஞ்சயரே, உமது பார்வையின் கீழ், சிபிக்களையும், திரிகார்த்தர்களையும் வென்று, மேற்குப் பகுதியை எனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த நகுலனை அவர்கள் நினைவில் கொண்டுள்ளார்களா?
தீய ஆலோசனையின் பேரில், துவைதவனத்தில் தங்கள் கால்நடைகளைக் கொண்டு செல்லும் பாசாங்கில் {கோஷயாத்திரையாக} வந்த அவர்கள் {கௌரவர்கள்} அடைந்த அவமானத்தை நினைவில் கொண்டுள்ளார்களா? அந்தத் தீயவர்கள் எதிரிகளிடம் அகப்பட்ட போது, பீமசேனனாலும், அர்ஜுனனாலும் பின்பு விடுவிக்கப்பட்டதையும், {அதற்கு முன்பு ஏற்பட்ட போரில்} அர்ஜுனனின் பின்புறத்தைப் பாதுகாத்து வந்த என்னையும், மாத்ரி மகன்களின் பின்புறத்தைப் பாதுகாத்து வந்த பீமனையும், அந்தப் போர்க்களத்தில் அழுத்தத்தில் எதிரி கூட்டத்தைக் கொன்றொழித்து, காயமில்லாமல் திரும்பி வந்த காண்டீவந்தாங்கியையும் {அர்ஜுனனையும்} அவர்கள் நினைவில் கொண்டுள்ளார்களா? ஓ! சஞ்சயரே, எங்கள் அனைத்து முயற்சிகள் மூலமும் நாங்கள் திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை} {அன்பால்} வெல்ல முடியாதபோது, ஒற்றை நல்ல காரியத்தால் இங்கே மகிழ்ச்சியை அடைய முடியாது!” என்றான் {யுதிஷ்டிரன்}.
சஞ்சயனின் பதிலுரை! – உத்யோக பர்வம் பகுதி 24-யுதிஷ்டிரன் விசாரித்தவற்றுக்குச் சஞ்சயன் பதிலளிப்பது; அந்தணர்களுக்கு யுதிஷ்டிரன் அளித்த தானத்தைத் துரியோதனன் திரும்பப் பெறவில்லை என்று சொன்னது; பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் திருதராஷ்டிரன் வருந்துவதாகச் சொன்னது; கௌரவர்கள், பாண்டவர்கள், மற்றும் அங்கே கூடியிருந்த அனைத்து மன்னர்களும் அமைதியடையும் வகையில் நல்ல வழியைத் தேர்வு செய்யுமாறு சஞ்சயன் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நீ சொல்வது போலத்தான் இஃது உள்ளது! குருக்கள் மற்றும் அவர்களில் முதன்மையானோரின் நலத்தைக் குறித்தா கேட்கிறாய்? நீ விசாரிக்கும் குருக்களில் முதன்மையானோர், ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, அனைத்து வகைப் பிணிகளில் இருந்தும் விடுபட்டு, நல்ல மன நிலையில் இருக்கிறார்கள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, குறிப்பிடத்தகுந்த நீதிமான்களும் முதிர்ந்தவர்களும் இருக்கும் அதே வேளையில், திருதராஷ்டிரர் மகனிடத்தில் {துரியோதனனிடத்தில்} பாவிகளும், தீயவர்களும் கூட இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்.
திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்}, தன் எதிரிகளுக்குக் கூடத் தானமளிப்பான்; எனவே, அந்தணர்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடைகளைத் திரும்பப் பெற வாய்ப்பில்லை. உங்கள் மீது தீய எண்ணம் இல்லாதவர்களுக்கும், தீங்கு செய்ய வழி வகுப்பதும், கசாப்புக்காரர்களுக்குப் பொருந்துவதுமான விதியைப் பின்பற்றும் உங்களைப் போன்ற க்ஷத்திரியர்களுக்கு இது {கொடுத்ததைப் பறிப்பது} வழக்கமே; என்றாலும், இது நடைமுறைக்கு நல்லதல்ல. நீதிமான்களான உங்களிடம், தீய மனிதனைப் போலப் பகைமை பாராட்டுவதால், தன் மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர், உறவினருக்குத் தீங்கு செய்த {குடும்பச் சச்சரவு – மித்ரதுரோகத்துக்கு Intestine dissensions} பாவம் செய்தவர் போலக் குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.
அவர் {திருதராஷ்டிரர்} (உங்களுக்கு இழைக்கப்பட்ட) தீங்கை அங்கீகரிக்கவில்லை; அவர் அதற்காக மிகவும் வருந்துகிறார்; ஓ! யுதிஷ்டிரா, அந்தணர்களுடன் தொடர்பு கொண்டு, உறவினருக்குத் தீங்கு {துரோகம்} செய்யத் தூண்டுவது {provoking Intestine dissensions} பாவங்கள் அனைத்திலும் பெரியது என்பதை அறிந்ததால், அந்தக் கிழவர் {திருதராஷ்டிரர்} மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறார். ஓ! மனிதர்களின் மன்னா, களத்தில் {சபையில்} உனது ஆற்றலையும், போர்க்களத்தில் தலைமையை ஏற்கும் அர்ஜுனன் ஆற்றலையும் அவர்கள் நினைக்கவே செய்கிறார்கள். சங்கு மற்றும் துந்துபி ஒலி உயர்ந்த சுதியை அடையும்போதெல்லாம், கதாதாரியான பீமனை அவர்கள் நினைக்கவே செய்கிறார்கள். போர்க்கள மத்தியில் எல்லாத் திக்குகளிலும் தடையின்றிச் செல்பவர்களும், கணைகளைத் தடையில்லாமல் எதிரிகள் மீது பொழிபவர்களும், போரில் நடுக்கம் என்பதை அறியாதவர்களும், பெரும் பலமிக்கத் தேர்வீரர்களுமான மாத்ரியின் இரண்டு மகன்களையும் {நகுல சகாதேவர்களையும்} அவர்கள் நினைக்கவே செய்கிறார்கள்.
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அனைத்து அறங்களையும் கொண்டவனான நீயே இதுபோன்ற தாங்க முடியாத துன்பத்தை அனுபவிக்க நேர்ந்ததென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எதிர்காலம், ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை அறியமுடியாது என்றே நான் நம்புகிறேன். ஓ! யுதிஷ்டிரா, இவையனைத்தையும், நீ உனது புத்திசாலித்தனத்தால் சரி செய்வாய் என்பதில் ஐயமில்லை. இந்திரனுக்கு நிகரான பாண்டுவின் மகன்களான நீங்கள் ஒவ்வொருவரும், இன்பத்திற்காக அறத்தை {காமத்துக்காகத் தர்மத்தை} எப்போதும் கைவிடமாட்டீர்கள். ஓ! யுதிஷ்டிரா, திருதராஷ்டிரர் மகன்களும், பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் மற்றும் இங்கே கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரும் அமைதியடையும் வகையில், நீயே உனது விவேகத்தினால் {நிலைமையைச்} சரி செய்வாயாக. ஓ! யுதிஷ்டிரா, உனது தந்தையான {பெரியதந்தையான} திருதராஷ்டிரர், தனது அமைச்சர்களுடனும், மகன்களுடனும் கூடி ஆலோசித்து என்னிடம் சொல்லி அனுப்பியதை மனதில் கொள்வாயாக. அவற்றைக் கவனமாகக் கேள்!” என்று சொன்னான் {சஞ்சயன்}
மன்னர் மற்றும் பீஷ்மரின் விருப்பம்! – உத்யோக பர்வம் பகுதி 25-மன்னர் சொல்லி அனுப்பிய அனைத்தையும் தங்களிடம் சொல்லும்படி யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் கோருவது; அனைவரையும் சஞ்சயன் வாழ்த்தியது; திருதராஷ்டிரன் அமைதியை விரும்புவதாகச் சஞ்சயன் சொன்னது; உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பாண்டவர்கள் தகாததைச் செய்யக் கூடாது என்று எச்சரிப்பது; வெற்றி தோல்வியால் எந்தப் பயனும் இல்லை என்பதைச் சொன்னது; இரத்த உறவினர்களைக் கொன்று கிடைக்கும் வாழ்வு மரணத்திற்கு ஒப்பானது என்பதைச் சொன்னது; பாண்டவர்கள் முன்பு பணிந்து சஞ்சயன் அமைதியை வேண்டியது; இதுவே திருதராஷ்டிரன் மற்றும் பீஷ்மரின் விருப்பம் என்று சொன்னது…
யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சூதர் கவல்கணரின் மகனே {சஞ்சயரே}, பாண்டவர்கள், சிருஞ்சயர்கள், கிருஷ்ணன், யுயுதனன் {சாத்யகி}, விராடர் ஆகியோர் இங்கே ஒன்றாகச் சேர்ந்து இருக்கிறோம். திருதராஷ்டிரர் உம்மை என்ன சொல்ல வழிநடத்தினாரோ, அவை அனைத்தையும் எங்களுக்குச் சொல்லும்” என்றான்.
சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்}, “யுதிஷ்டிரன், விருகோதரன் {பீமன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, சூரனின் வழித்தோன்றலான வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, பாஞ்சாலர்களின் முதிர்ந்த மன்னன் {துருபதன்}, பிருஷதனின் மகன் {பேரன்} திருஷ்டத்யும்னன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். குருக்களின் நலன் விரும்பி, நான் சொல்லும் வார்த்தைகளை அனைவரும் கேட்பீராக. அமைதிக்கான வாய்ப்பை ஆவலுடன் வரவேற்கும் மன்னர் திருதராஷ்டிரர், இங்கே வரும் எனது இந்தப் பயணத்திற்காக, என் தேரைத் தயார் செய்யத் துரிதப்படுத்தினார்.
தன் தம்பிகள், மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரனுக்கு, இஃது ஏற்புடையதாகட்டும். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} அமைதியை விரும்பட்டும். பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, உறுதி, மென்மை மற்றும் கபடற்ற தன்மையோடு கூடிய அனைத்து அறங்களையுந் தங்களிடம் கொண்டுள்ளனர். உயர்ந்த குடும்பத்தில் பிறந்த அவர்கள், மனிதாபிமானம், தாராளம், அவமானத்தைத் தரும் எந்தச் செயலையும் செய்ய ஆர்வமில்லாமை ஆகிய தன்மைகளைக் கொண்டவர்களாவர். எதைச் செய்வது சரி என்பதை அவர்கள் அறிவார்கள். நீங்கள் உயர்ந்த மனம் கொண்டோராகவும், பின்தொடரும் பயங்கரத் துருப்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பதால் தாழ்ந்த செயல்கள் உங்களுக்குப் பொருந்தாது.
நீங்கள் ஒரு பாவச் செயலைச் செய்தால், அது வெள்ளைத் துணியில் பட்ட மைத்துளி போல, உங்கள் நற்பெயரில் பட்ட கறையாக இருக்கும். ஒரு செயலைச் செய்தால், அது, பாவம் மற்றும் நரகத்திற்கு வழிவகுக்கும் என்றும், உலகளாவிய படுகொலையை விளைவிக்கும் என்றும், அது (மனிதர்களுக்கு) அழிவைக் கொண்டு வரும் என்றும், {அதில் கிடைக்கும்} வெற்றியோ தோல்வியோ, விளைவுகள் ஒரே மதிப்பைத்தான் தரும் என்றும் அறிந்த எவன் அச்செயலைச் செய்யும் குற்றவாளியாவான்? தங்கள் உறவினர்களின் காரியத்திற்குச் சேவையாற்றியவர்கள் {பாண்டவர்கள்} அருளப்பட்டவர்களே. பழிச்செயல்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய உயிரை குருக்களின் நன்மையை உத்தரவாதப்படுத்துவதற்காக விடுபவர்களே, {குருக்குலத்தின்} உண்மையான மகன்களும், நண்பர்களும், உறவினர்களும் ஆவர்.
பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, உங்கள் எதிரிகள் அனைவரையும் வீழ்த்தி, கொன்று, குருக்களை {கௌரவர்களை} நீங்கள் தண்டித்தால், அதற்கடுத்து வரும் உங்களது வாழ்க்கை மரணத்திற்கு ஒப்பானதாக இருக்கும். உண்மையில், இரத்த சம்பந்தமுடையவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, எதற்காக வாழ வேண்டும்?
ஒருவன், அனைத்து தேவர்களும் தன் பக்கம் நிற்கும் இந்திரனேயானாலும், அவனால், கேசவன் {கிருஷ்ணன்}, சேகிதானன், சாத்யகி ஆகியோரின் துணையுடன், திருஷ்டத்யும்னன் கரங்களால் பாதுகாக்கப்படும் உங்களை எப்படி வீழ்த்த இயலும்? மேலும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, துரோணர், பீஷ்மர், அஸ்வத்தாமன், சல்லியன், கிருபர், கர்ணன், {பிற} க்ஷத்திரிய மன்னர்களின் படைகள் ஆகியோரால் காக்கப்படும் குருக்களைப் போர்க்களத்தில் யாரால் வீழ்த்த முடியும்?
எனவே, வெற்றியோ, தோல்வியோ எதிலும் நான் எந்த நன்மையையும் காணவில்லை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த இழிந்த மனிதர்களைப் போலப் பிருதையின் {குந்தியின்} மகன்களால் {பாண்டவர்களால்} அநீதியான ஒரு செயலை எவ்வாறு செய்ய முடியும்? எனவே, கிருஷ்ணன் மற்றும் பாஞ்சாலர்களின் முதிர்ந்த மன்னன் {துருபதன்} ஆகியோர் முன்பு நான் அடிபணிந்து நின்று அமைதிப்படுத்துகிறேன். குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இருவரும் நன்மையடையும் வகையில் என் கரங்களைக் குவித்து நான் உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன். கிருஷ்ணனோ, தனஞ்சயனோ {அர்ஜுனனோ} இந்த எனது வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்பட முடியாது என்பதற்கு வாய்ப்பில்லை. (அவ்வாறு செய்ய) வேண்டிக் கொள்ளப்பட்டால், அவர்கள் இருவரும் தங்கள் உயிரையே கொடுப்பார்கள். {It is not likely that either Krishna or Dhananjaya will not act up to these my words. Either of them would lay down his life, if besought (to do so)}. எனவே, என் பணியின் வெற்றிக்காகவே நான் இதைச் சொல்கிறேன். உங்களுக்குள் (குருக்களிடம்) அமைதி உறுதிப்பட வேண்டும் என்பதே மன்னர் {திருதராஷ்டிரர்} மற்றும் அவரது ஆலோசகரான பீஷ்மரின் விருப்பமாகும்” என்றான் {சஞ்சயன்}.
தன் நாட்டைக் கேட்ட யுதிஷ்டிரன்! – உத்யோக பர்வம் பகுதி 26-போரை வெறுத்து அமைதியையே தான் விரும்புவதாகச் சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; ஆசையை மனிதர்கள் விடுவதில்லை; ஆசையை அனுபவிப்பதனால் அது தணிவதில்லை என்று சொல்வது; திருதராஷ்டிரன் விதைத்ததையே அறுப்பதாகச் சொல்வது; விதுரரைத் துரியோதனனும் திருதராஷ்டிரனும் தள்ளி வைத்ததைக் கண்டிப்பது; தனது மகனின் தீய செயல்களைத் திருதராஷ்டிரர் அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டுவது; அர்ஜுனனும் கர்ணனும் சமமல்ல என்று சொல்வது; இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுத்துவிட்டால் தான் அமைதியடைவதாக யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது…
யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “போரைச்சுட்டிக் காட்டும் விதமான என்னுடைய எந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! சஞ்சயரே, போரை நினைத்து ஐயுற்று நீர் அஞ்சுகிறீர். ஓ! அய்யா, போரைக்காட்டிலும் அமைதியே விரும்பத்தக்கது. ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, மாற்று இருக்கும்போது போரிட எவன் விரும்புவான்? ஓ! சஞ்சயரே, எதுவும் செய்யாமலே, ஒருவன் தன் இதய விருப்பம் அனைத்தையும் அடையலாம் என்றால், அவன், எதையும் செய்ய விரும்பமாட்டான். {போரிட்டாலும்கூட} சின்னப் பிரச்சனையைத் தான் அவன் சந்திக்க நேரிடும் என்றாலும் அவன் போரில் ஈடுபட விரும்பமாட்டான் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எப்போதானாலும், ஒரு மனிதன் ஏன் போருக்குச் செல்ல வேண்டும்? போரைத் தேர்ந்தெடுக்கும்படி தேவர்களால் சபிக்கப்பட்டவன் எவன்?
பிருதையின் {குந்தியின்} மகன்கள் தங்கள் சொந்த மகிழ்ச்சியை விரும்புகிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களின் நடத்தை எப்போதும் நீதியாலும், உலக நன்மைக்கு உகந்ததாலும் குறிக்கப்படுகிறது. அவர்கள் நீதியினால் விளையும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள். தனது புலன்களின் வழிகாட்டுதலை விருப்பத்துடன் தொடர்ந்து சென்று, துன்பத்தைத் தவிர்த்து மகிழ்ச்சியை அடைய விரும்புபவன், துன்பத்தின் சாரம் கொண்ட நடவடிக்கையைத் தவிர வேறு எதையும் மேற்கொள்வதில்லை. இன்பத்துக்குப் பின்னால் பேராவல் கொண்டு ஓடுபவன், தன் உடலுக்குப் பாதிப்பை உண்டாக்குகிறான்; இத்தகு பேராவலில் இருந்து விடுபட்டவன், துன்பம் என்பது என்ன என்பதை அறிவதில்லை. தூண்டப்பட்ட நெருப்பில் அதிக எரிபொருளை {விறகை} இடும்போது, மிகுந்த சக்தியுடன் அது மீண்டும் சுடர்விட்டு எரிகிறது. அதே போல, ஆசை, அதன் பொருளை அடைந்தாலும், தூண்டப்படாத நெருப்பில் தெளிந்த நெய்யைவிடுவது போல, அது {நெருப்பு போன்ற ஆசை} தணிவதில்லை, சக்தியே பெறுகிறது.
நாங்கள் கொண்டிருப்பவற்றோடு, மன்னர் திருதராஷ்டிரரிடம் உள்ள அபரிமிதமான மகிழ்ச்சியையும் நிதியையும் ஒப்பீடு செய்து பாரும். பேறற்றவன் வெற்றியடைவதில்லை. பேறற்றவன் இசையின் குரலை {இசை போன்ற குரலை} அனுபவிப்பதில்லை. பேறற்றவன் மலர்மாலைகளையும் நறுமணப் பொருட்களையும் அனுபவிப்பதில்லை. அதே போல பேறற்றவன், மணமிக்கக் குளிர்ந்த தைலங்களையும் அனுபவிப்பதில்லை. கடைசியாக, பேறற்றவன், நல்ல உடைகளை உடுத்துவதில்லை. இஃது இப்படி இல்லை என்றால், நாங்கள் குருக்களிடம் இருந்து விரட்டப்பட்டிருக்க மாட்டோம். இவை அனைத்தும் உண்மையே எனினும், இதுவரை யாரும் இதய வேதனைகளை அகற்றவில்லை.
மன்னர் {திருதராஷ்டிரர்}, தானே பிரச்சனையில் இருந்து கொண்டு, மற்றவர்களின் வலிமையில் பாதுகாப்பு தேடுகிறார். இது நல்லதில்லை. எனினும், பிறர் மீது அவர் {திருதராஷ்டிரர்} எந்த நடத்தையைக் கைக்கொள்கிறாரோ, அதையே அவர் மற்றவர்களிடமும் பெறட்டும்.
வசந்த காலத்தின் நடுப்பகல் வேளையில், புதர் நிறைந்த அடர்ந்த காட்டில் நெருப்பை வீசுபவன், காற்றின் துணையால் அந்நெருப்புச் சுடர்விட்டெரியும்போது, அத்தனைக்காகவும் வருத்தப்பட்டுத் தப்பிக்கவே விரும்புவான் என்பது நிச்சயம்.
ஓ! சஞ்சயரே, மன்னர் திருதராஷ்டிரர் இந்தச் செழிப்பனைத்தையும் கொண்டிருந்தும், ஏன் புலம்புகிறார்? ஏனென்றால், அவர் கோணலான வழிகளுக்கு அடிமையாகி, தீய ஆன்மா கொண்ட தனது தீய மகனின் அறிவுரைகளை முதலில் பின்பற்றி, தன் அறியாமையால் {மடத்தனத்தால்} அதை உறுதி செய்தார். தன் நலன்விரும்பிகளில் சிறந்தவரான விதுரரின் வார்த்தைகளைக் கேட்டு, ஏதோ அவர் தனக்கு எதிரி போல நினைத்துக் கொண்டு துரியோதனன் அவரை {விதுரரை} அலட்சியம் செய்தான்.
தனது மகன்களை மட்டுமே திருப்தி செய்ய விரும்பிய மன்னர் திருதராஷ்டிரர், தெரிந்தே அநீதியான பாதையில் நுழைபவராக இருந்தார். உண்மையில், தன் மகன் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவர் {திருதராஷ்டிரர்}, குருக்கள் அனைவரைவிடவும் ஞானவானும், தன் நலவிரும்பிகளில் சிறந்தவரும், பெரும் கல்வி உடையவரும், புத்திசாலித்தனமாகப் பேசுபவரும், நீதியின்படி செயல்படுபவருமான விதுரருக்குச் செவி சாய்க்கவில்லை.
பிறரிடம் மதிப்பை நாடுபவனும், பொறாமை கொண்டவனும், வெஞ்சினம் கொண்டவனும், அறம் பொருளை அடைவதற்கான விதிகளை மீறுபவனும், முறைமீறும் நாக்குடையவனும் {முறைமீறிப் பேசுபவனும்}, எப்போதும் தன் கோபத்தின் ஆணைகளையே செய்பவனும், புலன்நுகர் இன்பங்களில் மூழ்கிய ஆன்மா கொண்டவனும், பலரிடம் பகைமை கொண்டவனும், எந்த விதிக்கும் கீழ்ப்படியாதவனும், இணங்காத இதயம் கொண்ட தீய வாழ்வு வாழ்பவனும், தீய புரிதல் கொண்டவனுமான தனது மகனை மனநிறைவு கொள்ளச் செய்யவே மன்னர் திருதராஷ்டிரர் விரும்புகிறார். இது போன்ற ஒரு மகனுக்காக, மன்னர் திருதராஷ்டிரர் அறிந்தே அறத்தையும், இன்பத்தையும் கைவிட்டார்.
ஓ! சஞ்சயரே, நான் பகடையாடிக் கொண்டிருக்கையில், விதுரரின் ஞானம் நிறைந்த அற்புதமான வார்த்தைகள் திருதராஷ்டிரரின் பாராட்டைப் பெறாத போதே, குருக்களின் அழிவு அருகில் இருக்கிறது என நான் நினைத்தேன். ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பிறகு, விதுரரின் வார்த்தைகளை அவமதித்தபோதே, குருக்களைப் பிரச்சனை வந்தடைந்துவிட்டது. அவரது {விதுரரின்} ஞானத்தின் தலைமையின் கீழ் அவர்கள் இருந்த வரை, அவர்களது நாடு மலர்ச்சியடைந்த நிலையில் இருந்தது.
ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பேராசை கொண்ட துரியோதனுக்கு இப்போது யார் ஆலோசகர்கள் என்பதை என்னிடம் கேளும். துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி}, சூதரின் மகனான கர்ணனுமே அவர்கள்! ஓ கவல்கணரின் மகனே {சஞ்சயரே}, அவனுடைய இந்த அறியாமையைப் பாரும்!
திருதராஷ்டிரர் பிறரிடம் இருந்து அவர்களது அரியணையை எடுத்துக் கொண்டபிறகு, விதுரர் பிற இடங்களுக்குத் துரத்தப்பட்ட பிறகு, குருக்களிடமும், சிருஞ்சயர்களிடமும் எந்தச் செழுமையையும் எப்படிக் காண முடியும்? எனவே, நான் நினைத்தாலும் என்னால் அவற்றைக் காண முடியவில்லை. தன் மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர் இப்போது முழு உலகத்தின் பரந்த ஆட்சி உரிமையையும் பகையில்லாமல் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எனவே, முழுமையான அமைதி அடைய முடியாததாகும்.
ஏற்கனவே அவர் பெற்றிருப்பவற்றைத் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கருதுகிறார். போருக்காக அர்ஜுனன் தனது ஆயுதத்தை எடுக்கும்போது, அதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியும் எனக் கர்ணன் நம்புகிறான். இதற்கு முன்பு பல பெரிய போர்கள் நடைபெற்றன. அப்போதெல்லாம், ஏன் கர்ணனால் அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} எந்தப் பலனும் கிட்டவில்லை. கர்ணன், துரோணர், பாட்டனான பீஷ்மர் மற்றும் பிற குருக்களும், அர்ஜுனனுடன் ஒப்பிடத்தக்க வகையில் வில்லைத் தாங்குபவன் வேறு எவனும் இல்லை என்பதை அறிவார்கள். எதிரிகளை அடக்குபவனான அர்ஜுனன் உயிரோடு இருக்கும்போதே, துரியோதனன் ஆட்சியுரிமையை எப்படி அடைந்தான் என்பதை, பூமியில் கூடியிருக்கும் அனைத்து ஆட்சியாளர்களும் அறிவார்கள்.
போர்க்களத்திற்கு அவன் {துரியோதனன்} சென்ற போது, நாலு முழ வில்லைத்தவிர வேறு ஒன்றும் இல்லாத அர்ஜுனன், எப்படித் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டான் என்பதை அறிந்தும், பாண்டு மகன்களின் உடைமைகளை அவனால் {துரியோதனனால்} கொள்ளையடிக்க இயலும் என்று அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} தனக்குப் பொருத்தமாகவே {மடத்தனமாக} நம்புகிறான். நீட்டி இழுக்கப்பட்ட காண்டீவத்தின் நாணொலியைக் கேட்காததாலேயே திருதராஷ்டிரன் மகன்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். பீமனின் கோபத்தைக் காணாத வரையில், தனது நோக்கம் ஏற்கனவே ஈடேறிவிட்டதாகவே துரியோதனன் நம்புவான். ஓ! அய்யா {சஞ்சயரே}, பீமன், அர்ஜுனன், வீரனான நகுலன், அமைதியான சகாதேவன் ஆகியோர் உயிருடன் இருக்கும் வரை இந்திரனும் கூட எங்கள் உடைமைகளைக் கொள்ளையிட அஞ்சுவான்.
ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, தன் மகனுடன் கூடிய முதிர்ந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, ஓ! சஞ்சயரே, போர்க்களத்தில் பாண்டு மகன்களின் கோப நெருப்பில் எரியப் போகும் தன் மகன்கள் அழியமாட்டார்கள் என்றே கருதுகிறார். ஓ! சஞ்சயரே, நாங்கள் எத்தகு துன்பத்தை அனுபவித்தோம் என்பதையும் நீர் அறிவீர்! நான் உம் மீது கொண்டிருக்கும் மதிப்பால், அவர்கள் அனைவரையும் மன்னிப்பேன். எங்களுக்கும் குருவின் மகன்களுக்கும் இடையில் நடந்தது அத்தனையும் நீர் அறிவீர். திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் இதுவரை எப்படி நடந்திருக்கிறோம் என்பதையும் நீர் அறிவீர். பொருட்களின் நிலை இப்போது போலவே தொடரட்டும், நீர் அறிவுறுத்துவது போலவே நான் அமைதியை நாடுவேன். இந்திரப்பிரஸ்தம் எனது நாடாகட்டும், பாரதக் குலத்தின் தலைவனான துரியோதனன் எனக்கு இதைக் கொடுக்கட்டும்!” என்றான் {யுதிஷ்டிரன்}.
யுதிஷ்டிரனை எச்சரித்த சஞ்சயன்! – உத்யோக பர்வம் பகுதி 27-நற்குணம் மிக்க யுதிஷ்டிரன் போரைக் குறித்துச் சிந்திக்கக் கூடாது என்றும், சொத்துக்காகப் போர் செய்வதைவிட பிச்சையெடுத்து வாழலாம் என்றும் சஞ்சயன் யுதிஷ்டிரனிடம் சொன்னது; உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று விட்டு அதன் மூலம் கிட்டும் இன்பத்தால் மறுமைக்கு ஆகக்கூடியது என்ன என்று கேட்பது; போரிடுவதென்றால், காட்டுக்கு அனுப்பிய போதே போரிட்டிருக்க வேண்டும் என்றும், காலந்தாழ்ந்து இப்போது போரிடுவது முறையானது அல்ல என்றும் சொல்வது; நல்வினையும் தீவினையும் இவ்வாழ்வுக்குப் பிறகும் நம்மைத் தொடர்ந்து வருவதால் அறச்சார்புடன் நடந்து கொண்டு போரைத் தவிர்ப்பதே நல்லது என்றும் சஞ்சயன் யுதிஷ்டிரனிடம் சொன்னது…
சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, உனது நீதிமிக்க நடத்தையை இவ்வுலகம் கேள்விப்பட்டிருக்கிறது. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, நானும் அப்படியே காண்கிறேன். பெரும் கெடுபேறில் முடிவடையக்கூடிய இந்த வாழ்வு நிலையற்றதாகும்; இதைக் கருதி நீ அழிந்து போகலாகாது. போரில்லாமல் உனது பங்கைக் குருக்கள் கொடுக்கவில்லையெனினும், ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, அரசாட்சியை போரின் மூலம் அடைவதைவிட, அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளின் நாட்டில் நீ பிச்சை எடுத்து வாழ்வதே மிகவும் சிறந்தது என நான் நினைக்கிறேன். குறுகிய காலமே உள்ள இந்த மனித வாழ்வு, நிலையான துன்பத்திற்கும், நிலையற்ற தன்மைக்கும், பெரும் பழிக்கும் வழிவகுப்பதென்பதாலும், நல்ல பெயருக்கு {இணையாக} ஒருபோதும் ஒப்பிடப்படாதது என்பதாலும், ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, பாவத்தை நீ ஒருபோதும் புரிந்திடாதே.
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, மரணத்துக்குட்பட்ட மனிதர்கள் கடைப்பிடிக்கும் ஆசைகள், அறம்சார்ந்த வாழ்வுக்கு தடைகளாகும். எனவே, புத்தியுள்ள ஒரு மனிதன், ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, இவையனைத்தையும் {ஆசைகளை} முன்பே கொன்று, அதன் மூலம் இவ்வுலகில் கறைபடியாப் புகழைப் பெற வேண்டும். செல்வத்தின் மீது கொண்ட தாகம், இந்த உலகில் விலங்கைப் {கட்டுகளைப்} போன்றதே ஆகும். அதை {செல்வத்தை} நாடுவோரின் அறம் அதனால் பாதிக்கப்படுகிறது. அறத்தை மட்டுமே நாடுபவன் புத்திமானாவான்; ஓ! அய்யா {யுதிஷ்டிரா}, ஆசைகள் அதிகரித்தால், ஒரு மனிதன் உலகியல் சார்ந்த தன் கவலைகளை அனுபவித்தே ஆக வேண்டும். வாழ்வின் அனைத்து கவலைகளுக்கும் மேலாக அறத்தை ஏற்கும் ஒரு மனிதன், சூரியனைப் போல பெரும் பிரகாசத்துடன் ஒளிர்கிறான்.
அறமற்ற தீய ஆன்மாக் கொண்ட மனிதன், இந்த முழு உலகத்தையே அடைந்தாலும், அவன் அழிவை அடைகிறான். நீ வேதங்களைக் கற்று, அந்தணத் துறவியின் வாழ்வை வாழ்ந்து, வேள்விச் சடங்குகளைச் செய்து, அந்தணர்களுக்கு தானங்களை அளித்திருக்கிறாய். (உயிரினங்களால் அடையத்தக்க) உயர்ந்த நிலையை நினைவு கூர்ந்து, இன்பத்தை அடையும் நோக்கில், பல ஆண்டுகளாக உன் ஆத்மாவை அதற்காக அர்ப்பணித்திருக்கிறாய்.
அபரிமிதமான மகிழ்ச்சிக்கும், வாழ்வின் இன்பங்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தவப்பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தாமல் இருக்கும் ஒருவன், மிகவும் பரிதாபகரமான நிலையிலேயே இருக்க வேண்டும். அவனது பலமான உள்ளுணர்வு, இன்பம் பெறுவதை நோக்கியே அவனைத் தூண்டிவிடும். அவனது செல்வம் அவனைவிட்டுப் போன பிறகு, அவனது இன்பங்கள் அவனைக் கைவிட்டுவிடும். அதே போல, அடக்கமான வாழ்வு வாழாது, அறத்தின் பாதையைக் கைவிட்டு, பாவமிழைக்கும் ஒருவன், வரப்போகும் உலகத்தின் இருப்பில் {மறுமை உள்ளது என்ற} நம்பிக்கைக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட அந்த மனிதன், தான் இறந்த பிறகு, (நிறைய) வேதனைகளையே பெறுவான்.
நன்மையோ, தீமையோ, எதுவாக இருந்தாலும், எக்காரியத்தாலும் ஒருவனது செயல்கள் வரப்போகும் உலகத்தில் {மறுமையில்} அழிவடைவதில்லை. நல்லதும், தீயதுமான செயல்கள், அதைச் செய்பவனைத் (அடுத்த உலகத்திற்கான அவனது பயணத்தில்) தொடர்ந்தே செல்கின்றன; அது அவர்களது பாதையில் தொடர்ந்து செல்லும் என்பது நிச்சயம். அறச் சடங்குகளில், (அவற்றை நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு) அந்தணர்களுக்கு மரியாதையுடனும் பெருங்கொடையுடனும் அளிக்கப்படும் சுவை மிக்க உணவுக்கு ஒப்பாக, (இவ்வாழ்வில்) உனது வேலை அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இந்த உடல் நிலைத்திருக்கும் வரையே அனைத்து செயல்களும் செய்யப்படுகின்றன. இறப்புக்குப் பின் செய்ய வேண்டியது எதுவுமில்லை. நீதிமான்களால் போற்றப்படும் பலமிக்க {உயர்ந்த} செயல்களையே நீ செய்திருக்கிறாய். அது வரப்போகும் உலகில் {மறுமையில்} உனக்கு நன்மையைச் செய்யும். அங்கே (அடுத்த உலகில்) மரணம், முதுமை, அச்சம், பசி, தாகம், மனதிற்கு ஏற்பில்லாதவை ஆகியவற்றில் இருந்து ஒருவன் விடுபடுகிறான்; ஒருவனது புலன்களுக்கு இன்பத்தை அளிக்கவேண்டியன்றி, அவ்விடத்தில் செய்யத்தக்கது எதுவுமில்லை. ஓ! மனிதரின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, நமது செயல்களின் விளைவு இவ்வகையிலேயே இருக்க வேண்டும். எனவே, ஆசையின்பாற்பட்ட இனியும் இவ்வுலகில் எதையும் செய்யாதே.
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டு, அதன் மூலம் உண்மையையும் {சத்தியத்தையும்}, புகழையும், கபடற்றத்தன்மையையும், மனிதாபிமானத்தையும் விட்டுவிடாதே. ராஜசூய, அஸ்வமேத வேள்விகளைச் செய்த நீ, பாவத்தைத் தன்னகத்தே கொண்ட எந்தச் செயலின் அருகிலும் நெருங்கிவிடாதே. பிருதையின் மகன்களே, அறத்தின் நிமித்தமாக ஆண்டாண்டுகளாக இத்தகு துன்பத்துடன் நீங்கள் காடுகளில் வசித்ததெல்லாம் {வசித்ததற்கான பயனெல்லாம்}, இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு, இப்போது வெறுப்புக்கு வழிகொடுத்து, இந்தப் பாவகரச் செயலைச் செய்தால், வீணாகப் போகும். இந்தப் படைகளெல்லாம் அப்போதும் உங்கள் முழு கட்டுப்பாட்டிலேயே இருந்தன; இந்தப் படைகள் அனைத்தையும் பிரிந்து நீங்கள் வன வாசம் சென்றது எல்லாம் வீணாகப் போகும். {இப்படிச் செய்வதாயிருந்தால் நீ வனம் சென்றிருக்க வேண்டாமே}.
போர் வீரர்களின் தலைமையில் தன் மகனுடன் இருக்கும் தங்கத் தேர் கொண்ட மத்ஸ்ய நிலத்தின் விராடன், சாத்யகி, கிருஷ்ணன் ஆகியோர் எப்போதும் உனக்குக் கீழ்ப்படிபவர்களாவர்; அவர்களே இப்போது உனக்குத் துணையாக இருக்கின்றனர். உன்னால் முன்பு வீழ்த்தப்பட்ட மன்னர்கள் அனைவரும், உங்கள் காரியத்தை முதலிலேயே ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். அனைவரும் அஞ்சக்கூடிய வலிமைமிக்க வளங்களுடனும், படையுடனும், அவர்களைத் தொடர்ந்து கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கொண்டுள்ள நீ, போர்க்களத்தில் உனது எதிரிகளில் முதன்மையானவர்களைக் {சகுனி முதலானோரைக்} கொன்றிருக்கலாமே. (அப்படிச் செய்திருந்தால்) நீ துரியோதனனின் கர்வத்தை அடக்கியிருக்கலாமே.
ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, உனது எதிரிகள் இவ்வளவு பலமாக வளர ஏன் அனுமதித்தாய்? உனது நண்பர்கள் பலவீனமடையவும் ஏன் செய்தாய்? ஆண்டாண்டு காலமாக வனத்தில் எதற்காக வசித்தாய்? சரியான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டு இப்போது ஏன் போரிட விரும்புகிறாய்? அறிவில்லாத, அநீதியான மனிதன் போரின் மூலம் செழிப்பை வெல்லலாம்; ஆனால் நீதிமானான அறிவுள்ள மனிதன், (நல்ல உள்ளுணர்வுக்கு எதிராகப்) போராடும் கர்வத்தைத் தவிர்த்து, வளமான பாதையில் இருந்து விழ மாட்டான்.
ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, உனது புத்தி அநீதியான பாதையை விரும்பாது. கோபத்தால், நீ ஒருபோதும் பாவச்செயலைச் செய்ததில்லை. நல்ல ஞானத்திற்கு எதிரான இந்தக் காரியத்தைச் செய்வதற்கான நோக்கமும் காரணமும் தான் என்ன? ஓ! வலிமைமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, நோய்க்கு {பிரச்சனைக்கு} சம்பந்தமே இல்லையெனினும், கோபம் கசப்பான மருந்தேயாகும்; அது {கோபம்} தலைவலியை உண்டாக்குகிறது, நல்ல புகழைக் கெடுக்கிறது, ஒருவனை பாவச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. அது நீதிமான்களாலேயே (கட்டுப்படுத்தப்படுகிறது) குடிக்கப்படுகிறது, நேர்மையற்றவர்களால் {அநீதியானவர்களால்} அல்ல. அதை {கோபத்தை} விழுங்கி {கட்டுப்படுத்தி} போரில் இருந்து விலகுமாறு நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். பாவத்திற்கு வழிவகுக்கும் கோபத்தை எவன்தான் விரும்புவான்?
பீஷ்மர், தனது மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} கூடிய துரோணர், கிருபர், சோமதத்தனின் மகன், விகர்ணன், விவிம்சதி, கர்ணன், துரியோதனன் ஆகிய அனைவரையும் கொன்று விட்டு கிடைக்கும் இன்பங்களை விட, பொறுமையே உனக்கு மிகுந்த நன்மையைத் தரும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நீ பெறும் அருள் எத்தன்மை உடையதாக இருக்கும்? அதை எனக்குச் சொல்! கடலை எல்லையாகக் கொண்ட இந்த முழு உலகையும் வென்றாலும், முதுமை, மரணம், இன்பம், வலி, அருள், துன்பம் ஆகியவற்றில் இருந்து நீ விடுபட முடியாது.
இவையனைத்தையும் அறிந்தவனானதால், நீ {யுதிஷ்டிரா} போரில் ஈடுபடாதே. உன் ஆலோசகர்கள் விரும்புவதால், இந்த வழியை மேற்கொள்ள நீயும் விரும்புகிறாய் என்றால், (அனைத்தையும் {செல்வமனைத்தையும்}) அவர்களிடம் கொடுத்துவிட்டு ஓடிவிடு. தேவர்களின் உலகத்திற்குச் செல்லும் இந்தப் பாதையில் இருந்து நீ விழுந்துவிடாதே!” என்றான் {சஞ்சயன்}.
கிருஷ்ணனே பெரிய நீதிபதி ! – உத்யோக பர்வம் பகுதி 28-தன்னை சஞ்சயன் எப்படி நினைக்கிறான், நல்லவனாகவா? தீயவனாகவா என்று யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் வினவுவது; அறமும் மறமும் வழக்கமான காலங்களிலும் ஆபத்து காலங்களிலும் தங்கள் தன்மைகளை எப்படி மாற்றிக் கொள்கின்றன என்று சொல்வது; ஆபத்து காலத்திலும் விடாமல் தான் நினைப்பதே அறம் என்று இருப்பவன் மெச்சத்தகுந்தவன் அல்ல என்று சொல்வது; முன்னோர் சென்ற வழியையே தான் பின்பற்றுவதாக யுதிஷ்டிரன் உரைப்பது; கிருஷ்ணன் சொல்லும் எந்தக் கருத்தையும் தான் ஏற்பதாக சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொன்னது…
யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, நீர் சொல்வது போல, நமது செயல்கள் அனைத்திலும் நீதிமிக்க {நேர்மையான} செயல்களே முதன்மையானவை என்பதில் ஐயமில்லை. எனினும், நான் பயில்வது அறமா {தர்மமா?} அல்லது மறமா {அதர்மமா} என்பதில் நீர் முதலில் உறுதியடைய வேண்டும். மறம் {அதர்மம்}, அறத்தின் தன்மைகளை மேற்கொள்ளும்போது, அறமே மொத்தமாகத் தீமையாகப் பட்டுவிடும். {மறமாகத் தெரியும்} அறம் தன்னுடைய சுய உருவில் தோன்றும்போது, கற்றறிந்தவர்களே அதைத் தங்கள் புத்தியினால் கண்டறிவார்கள்.
நித்தியமானதும், முழுமையானதுமான அறம், மறம் ஆகிய இரண்டும், துன்ப {ஆபத்து} காலங்களில் தங்கள் பண்புகளை மாற்றிக் கொள்கின்றன. பிறப்பின் அடிப்படையில் ஒருவன் எந்த வகையைச் சார்ந்தவனோ, அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளையே அவன் வழுவாமல் பின்பற்ற வேண்டும். ஆனால், ஓ! சஞ்சயரே, துன்ப {ஆபத்து} காலங்களில் கடமைகள் வேறு வகைப்பட்டன என்பதை அறிந்து கொள்ளும். தனது வாழ்வாதாரங்கள் மொத்தமாகப் போன பிறகு, அனைத்தையும் இழந்த ஒரு மனிதன், தன் வகைக்குண்டான அங்கீகரிக்கப்பட்ட கடைமைகளை நிறைவேற்றுவதற்காக, வேறு வழிகளையே நிச்சயம் விரும்ப வேண்டும். தனது வாழ்வாதாரங்களை இழக்காத மனிதன், துயரத்தில் இருக்கும் மனிதன் ஆகிய இருவரும், ஓ! சஞ்சயா, தங்கள் நிலைகளை மாற்றிச் செயல்பட்டால், அவர்கள் நிச்சயம் பழிக்கப்படுவார்கள். {போதுமான செல்வத்தை வைத்துக் கொண்டு ஆபத்து கால அறத்தைப் பயில்வதும், ஆபத்தில் இருந்து கொண்டு செல்வநிலைக்கு ஏற்பட்ட அறத்தைக் கடைப்பிடிக்காதவனும், என இந்த இருவருமே நிந்திக்கத்தக்கவர்கள்}.
தங்களுக்கு அங்கீகரிக்கப்படாத செயல்களைக் கூட, தற்கொலையை {self-destruction = [சுய அழிப்பு]} விரும்பாத அந்தணர்களுக்குப் பரிகாரமாக படைப்பாளனே {பிரம்மனே} விதித்திருக்கிறான். தங்கள் வகைக்கு விதிக்கப்படாத காரியங்களையும், ஆபத்து காலங்களில், மக்கள் செய்யலாம் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. ஓ சஞ்சயரே, வழக்கமான காலங்களில் தங்கள் வகைக்குரிய செயல்களைச் செய்பவர்களைக் கருதுவது போலவே, ஆபத்து காலங்களில் தங்கள் வகைக்கு விதிக்கப்படாத செயல்களைச் செய்பவர்களையும் நீர் கருத வேண்டும். வழக்கமான காலங்களில்கூட மாறாக நடப்பவர்களையும், ஆபத்து காலங்களில் {தங்கள்} விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் {மட்டும்} பின்பற்றுபவர்களையும் நீர் நிந்திக்க வேண்டும்.
இதைப் போலவே, தங்கள் மனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் மனிதர்கள், தங்களை {சுயத்தைக்} குறித்த அறிவை {தன்னறிவை} அறிய முயலும் போது, சிறந்தவர்களுக்காக {அந்தணர்களுக்காக} விதிக்கப்பட்ட அப்பயிற்சிகள், அவர்களுக்கும் {அந்தணர்கள் அல்லாதோருக்கும்} சமமாகவே விதிக்கப்படுகிறது. எனினும், சுயத்தை அறியும் அறிவை அடைய {தன்னறிவைப் பெற – நான் யார் என்பதை அறிய} முயற்சிக்காத அந்தணரல்லாதோர், தங்கள் வகைக்கு விதிக்கப்பட்ட பயிற்சிகளையே ஆபத்து காலங்களிலும் மற்ற காலங்களிலும் செய்ய வேண்டும். இந்த வழியையே நமது தந்தைமாரும், பாட்டன்மாரும், அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களும் பின்தொடர்ந்தார்கள். இதே கருத்தின்படியே, ஞானமடைய விரும்புவோரும் மற்றும் செயல்களைத் தவிர்ப்போரும், இதே நோக்கத்தையே கொண்டு தங்களைப், புராதன நம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்களாகக் கருதிக் கொள்கின்றனர் {regard themselves as orthodox}.
எனவே, வேறு வழியேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஓ! சஞ்சயரே, இந்தப் பூமியில் என்ன செல்வமெல்லாம் உள்ளதோ, தேவர்களிடம் என்னவெல்லாம் உள்ளதோ, அவற்றையோ, அல்லது அவர்களாலும் அடைய முடியாத பிரஜாபதியின் உலகத்தையோ, சொர்க்கத்தையோ, பிரம்மலோகத்தையோ அநீதியான வழிகளில் அடைய நான் முயற்சிக்க மாட்டேன்.
அறத்தின் கனிகளைக் கொடுப்பவனும், புத்திசாலியும், மதிநுட்பமுடையவனும், அந்தணர்களுக்காகக் காத்திருந்தவனும், அனைத்தையும் அறிந்தவனும், பல்வேறு வலிமைமிக்க மன்னர்களுக்கு ஆலோசனைகள் வழங்குபவனுமான கிருஷ்ணன் இதோ இருக்கிறான். எனவே, அமைதிக்கான அனைத்து ஆலோசனைகளைத் தவிர்த்து, நான் போரிட நேர்ந்தால், நான் என் சாதிக்குரிய கடைமைகளைக் கைவிட்டவன் என்று நிந்திக்கப்படுவேனா என்பதை அந்தக் கொண்டாடப்படும் கிருஷ்ணனே சொல்லட்டும். கிருஷ்ணனே இருதரப்பு நன்மையையும் நாடுபவனாக இருக்கிறான்.
இந்தச் சாத்யகி, சேதிகள், அந்தகர்கள், விருஷ்ணிகள், போஜர்கள், குகுரர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் கிருஷ்ணனின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, தங்கள் எதிரிகளைக் கொன்று, நண்பர்களை மகிழ்விக்கின்றனர். உக்கிரசேனர் தலைமையைக் கொண்ட விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள், கிருஷ்ணனால் வழிநடத்தப்பட்டு, இந்திரனைப் போன்றோராகி, உயர்ந்த மனம் கொண்டவர்களாக, உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக, பெரும் பலசாலிகளாக, மகிழ்ச்சிமிக்கவர்களாக இருக்கிறார்கள். வெப்ப காலம் முடிந்ததும், பூமியின் உயிரினங்கள் மேல் எப்படி மேகங்கள் {மழையைப்} பொழியுமோ, அப்படி, காசியின் மன்னனான அந்தப் பப்ரு மேல் கிருஷ்ணன் அருள்மாரி பொழிந்தான். அவன் {பப்ரு}, தனது அண்ணனாக விருப்பங்களுக்கு பலனளிக்கும் கிருஷ்ணனை அடைந்து, உயர்ந்த வளத்தை அடைந்துவிட்டான். ஓ! அய்யா? அவ்வளவு பெரியவனாவான் கிருஷ்ணன். அனைத்து செயல்களின் நன்மை தீமையைத் தீர்மானிக்கும் பெரும் நீதிமானாக அவனை நீர் அறிய வேண்டும். கிருஷ்ணன் எங்களுக்கு அன்பானவனும், மனிதர்களில் மிகவும் ஒப்பற்றவனுமாவான். கிருஷ்ணன் சொல்வதை நான் எப்போதும் அலட்சியப்படுத்துவதில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}
சஞ்சயனைக் கண்டித்த கிருஷ்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 29இருதரப்பும் வளம்பெறவே தான் விரும்புவதாகக் கிருஷ்ணன் சொல்வது; பாண்டவர்கள் எவ்வளவு பொறுமையாக இருக்கிறார்கள் என்றும், கௌரவர்கள் எவ்வளவு பேராசையுடன் இருக்கிறார்கள் என்றும் சுட்டிக் காட்டியது; இப்படியெல்லாம் இருந்தும் யுதிஷ்டிரனை எப்படி நிந்திப்பீர் எனச் சஞ்சயனைக் கிருஷ்ணன் கண்டிப்பது; இந்திரன், பிருஹஸ்பதி ஆகியோர் எப்படிச் சிரமப்பட்டுத் தங்கள் நிலையை அடைந்தார்கள் என்பதைச் சொல்வது; தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் போரும் அறமே என நிறுவுவது; இந்தச் சச்சரவைத் தீர்த்து வைக்கத் தானே தனிப்பட்ட முறையில் கௌரவர்களைப் பார்க்கப்போவதாகச் சொல்வது; அமைதியேற்படவில்லையெனில் கௌரவர்களின் மரணம் நிச்சயம் என்று சொன்னது; இவை அத்தனையையும் திருதராஷ்டிரனிடம் தெரிவிக்குமாறு சஞ்சயனிடம் கிருஷ்ணன் சொன்னது…
கிருஷ்ணன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அழிந்து போகக் கூடாதெனவும், அவர்கள் வளம்பெற்று, தங்கள் விருப்பங்களை ஈடேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். அதே போல, பல மகன்களையுடைய மன்னர் திருதராஷ்டிரரும் வளம்பெற வேண்டும் எனவே விரும்புகிறேன். அதைவிட அதிகமாக, ஓ! சஞ்சயரே, அமைதியைத் தவிர வேறு எதுவும் மன்னர் திருதராஷ்டிரருக்கு தகுந்ததில்லை என நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இதுவே பாண்டுவின் மகன்களுக்கும் {பாண்டவர்களுக்கும்} முறையானது எனவும் நான் கருதுகிறேன்.
மிக அரிய குணமாகிய அமைதியான மனநிலையையே இக்காரியத்தில் பாண்டவர்கள் {இதுவரை} வெளிக்காட்டியிருக்கிறார்கள். எனினும், திருதராஷ்டிரரும், அவரது மகன்களும் இவ்வளவு பேராசை கொண்டோராக இருக்கும்போது, ஏன் பகை மிக வேகமாக வளராது என்பதற்கான காரணம் ஒன்றையும் நான் காணவில்லை. ஓ! சஞ்சயரே, சரி, தவறுக்குள் இருக்கும் நுண்ணிய ஒழுகலாறுகளை {நுட்பமான ஏற்புகளை} என்னை விடவோ, யுதிஷ்டிரரைவிடவோ அறிவீர் என்பது போல நீர் பாசாங்கு செய்ய முடியாது. {என்னை விடவோ, யுதிஷ்டிரரை விடவோ நீர் அதிகம் அறிவீர் என்பதாக நடிக்காதீர்}. எனில் {நீர் ஞானம் கொண்டவராக இருப்பின்}, தன் கடமையில் கவனமாக, ஆரம்பத்திலிருந்தே தன் குடும்பத்துக்கான நன்மையை மிகச்சிந்தித்து, (அறநெறி ஆய்வுகள்} தடை செய்பவற்றை ஏற்று நடந்து வரும் யுதிஷ்டிரரின் நடத்தையைக் குறித்து, நீர் ஏன் நிந்திக்கிறீர்?
இக்காரியத்தைப் பொறுத்தவரை, அந்தணர்கள் பல்வேறு வகையான கருத்துகளோடு இருந்துள்ளனர். சிலர், இவ்வுலகத்தில் வெற்றி {முக்தி} என்பது செய்யும் வேலையைப் பொருத்தே அடையப்படுகிறது என்கிறனர். {கர்மமே முக்தியை அளிக்கும் என்று சிலர் சொல்கின்றனர்}. சிலர், செயல் தவிர்த்து ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஞானத்தால் முக்தி {வீடுபேறு} அடையப்படுகிறது என்றும் தீர்மானிக்கின்றனர். {கர்மத்தைத் தவிர்த்து, ஞானத்தால் முக்தியை அடைய வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர்}. உண்ணும் பொருட்களின் அறிவை ஒருவன் பெற்றிருந்தாலும் கூட, உண்ணாதவரை அவனுக்குப் பசி அடங்குவதில்லை என்று அந்தணர்கள் சொல்கிறார்கள். செயலின் கனியே {பலனே}, காணத்தக்க விளக்கத்தை {சாட்சியம்} அளிக்கின்றன. எனவே, செயலாற்றுவதற்கு உதவும் ஞானக்கிளைகளே {ஞான வகைகளே} பலனளிக்கின்றன! பிறவகை அல்ல {செயலற்று இருக்கச் சொல்லும் ஞானக்கிளைகள் அப்படிப் பலனளிப்பதில்லை}. தாகம் கொண்ட மனிதன் தண்ணீரைக் குடிக்கிறான், அச்செயலால் அவனது தாகம் தணிகிறது. செயலாலேயே விளைவு உண்டாகிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது. அதில்தான் செயலின் ஆற்றல் இருக்கிறது. செயலைவிட வேறு எதுவும் சிறந்தது என்று எவனாவது நினைத்தால், அவனது செயலும் சொற்களுமே பொருளற்றவை {அர்த்தமற்றவை} என்றே நான் கருதுவேன்.
மறு உலகத்தில், செயலின் அறத்தாலேயே {செயலின் ஒழுக்கத்தாலேயே} தேவர்கள் மலர்ச்சியுடன் இருக்கிறார்கள். செயலின் அறத்தாலேயே {தன்மையாலேயே} காற்று வீசுகிறது. செயலின் அறத்தாலேயே உறக்கமற்ற சூரியன், தினமும் எழுந்து, பகல் இரவுக்குக் காரணமாகிறான், சோமன் {சந்திரன்}, மாதங்களையும், அழுவங்களையும் {பக்ஷங்களையும் {Fortnights}}, விண்மீன் கூட்டங்களையும் கடக்கிறான். செயலின் அறத்தாலேயே, தன்னைத் தூண்டிக் கொள்ளும் நெருப்பு {அக்னி}, மனிதர்களுக்கு நன்மையைச் செய்கிறது. உறக்கமற்ற பூமாதேவி, இந்தப் பெரும் சுமையைத் தன் சக்தியால் தாங்கிக் கொள்கிறாள். உறக்கமற்ற ஆறுகள் {நதிகள்}, அனைத்து உயிர்களுக்கும் மனநிறைவை அளித்தபடி, நீரைச் சுமந்து வேகமாக ஓடுகின்றன.
{செயலின் அறத்தாலேயே} பெரும் சக்தி படைத்த உறக்கமற்ற இந்திரன், திசைப்புள்ளிகளும், சொர்க்கமும் ஒலிக்கும்படி மழையைப் பொழிகிறான். தேவர்களில் பெரியவனாக விரும்பிய அவன் {இந்திரன்}, புனிதமான அந்தணன் மேற்கொள்ளும் கடும் தவ வாழ்வை மேற்கொண்டான். இன்பத்தையும், இதயத்துக்கு ஏற்புடைய அனைத்தையும் இந்திரன் கைவிட்டான். கடுமையான உழைப்புடன் அறம், உண்மை, தற்கட்டுப்பாடு, பொறுமை, பாகுபாடின்மை, மனிதநேயம் ஆகியவற்றை அவன் கடைப்பிடித்தான். செயலின் காரணமாகவே, அவன் (அனைவரை விடவும்) உயர்ந்த நிலையை அடைந்தான். மேற்கண்ட வழியில் வாழ்வைத் தொடர்ந்த இந்திரன், தேவர்களின் உயர்ந்த ஆட்சியுரிமையையும் அடைந்தான்.
தற்கட்டுப்பாட்டுடன் கருத்தூன்றிய பிருஹஸ்பதி, ஓர் அந்தணர் வாழும் தவ வாழ்வைச் சரியான முறையில் வாழ்ந்தார். இன்பத்தைக் கைவிட்ட அவர், தனது புலன்களை அடக்கி, தேவர்களின் ஆசான் என்ற நிலையை அதன் காரணமாகவே அடைந்தார். அதே போலவே, ருத்ரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், மன்னன் யமன், குபேரன், கந்தர்வர்கள், யக்ஷர்கள், தேவலோகக் கன்னியர், விண்மீன் கூட்டத்தினர் ஆகியோர் செயலின் அறத்தாலேயே தற்போதை நிலையை மறு உலகத்தில் அடைந்தனர்.
கல்வி, தவம், செயல் (ஆகியவை இணைந்த) வாழ்வை வாழும் தவசிகள் மறு உலகில் ஒளிர்கின்றனர். ஓ! சஞ்சயரே, அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரில் சிறந்தோர் பின்பற்றும் விதி இஃது என்பதை அறிந்தும், ஞானமுள்ளோரில் ஒருவராக இருக்கும் நீர், குருக்களின் மகன்கள் சார்பாக ஏன் {போரைத் தவிர்க்க யுதிஷ்டிரனை நிந்திக்கும்} இந்த முயற்சியை மேற்கொள்கிறீர்?
யுதிஷ்டிரர் நிலையானவராக வேத கல்வியில் ஈடுபடுகிறார் என்பதை நீர் அறிவீராக. குதிரை வேள்வியையும், ராஜசூயத்தையும் செய்ய அவர்கள் விரும்புகிறார். அனைத்து வகை ஆயுதங்களையும், வில்லையும் எடுத்துக் கொண்டு, தேரில் ஏறி, கவசம் பூண்டு, குதிரைகளையும் யானைகளையும் செலுத்துகிறார். குரு மகன்களின் படுகொலையில் ஈடுபட வேண்டாத ஒரு செயல்வழியை இந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} கண்டால், அவர்கள் நிச்சயம் அதையே இப்போது கடைப்பிடிப்பார்கள். அப்போதுதான் அவர்களது அறம் காக்கப்படும், ஓர் அறத்தகுதிக்கான செயலும் அவர்களால் அடையப்படும். மனிதத்தன்மைகளால் குறிக்கப்படும் நடத்தையைப் பின்பற்றச் சொல்லி அவர்கள் பீமனை நிர்பந்திக்கவும் வேண்டிவரும்.
மறுபுறம், தங்கள் மூதாதையர் செய்ததையே செய்தால் {பாண்டவர்கள் போரிட்டால்}, தங்கள் கடமையைப் பெருமுயற்சியுடன் செய்து கொண்டிருக்கும்போது, தவிர்க்கமுடியாத விதியின் காரணமாக, மரணத்தைத் தழுவ நேர்ந்தாலும், அப்படிப்பட்ட மரணமும் அவர்களுக்குப் புகழையே கொடுக்கும். அமைதியை மட்டுமே அங்கீகரிப்பீர் என நீர் சொல்வீரானால், அறவிதிகளின் படி ஒரு மன்னன் போரிடுவது சரியானதா? போரிடாமல் இருப்பது சரியானதா? என்ற கேள்விக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர் என்பதைக் கேட்க விரும்புகிறேன். ஓ! சஞ்சயரே, நான்கு சாதிகளின் பிரிவுகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கடமைகளையும் நீர் கருத்தில் கொள்ள வேண்டும். பாண்டவர்கள் செயல்படப்போகும் வழிமுறையை நீர் கேட்க வேண்டும். பிறகு அவற்றை உம் விருப்பப்படி புகழவோ நிந்திக்கவோ செய்யலாம்.
ஓர் அந்தணன் கல்வி கற்க வேண்டும், தானங்கள் அளிக்க வேண்டும், பூமியில் உள்ள அனைத்துப் புனிதமான இடங்களுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும்; (பிறருக்கு) அவன் {அந்தணன்} கற்பிக்க வேண்டும், பிறரால் செய்யப்படும் வேள்விக்குப் புரோகிதராகச் செயல்படுதல் மற்றும் அதற்குத்தகுந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும், அறிந்த மனிதர்களிடம் அவன் பரிசுகளை {தானம் [அ] பிச்சை]} ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதே போல, ஒரு க்ஷத்திரியன், மக்களை விதிகளின் படி பாதுகாக்க வேண்டும், தானமெனும் அறத்தைச் சுறுசுறுப்பாகப் பயில வேண்டும், வேதங்கள் முழுவதையும் கற்க வேண்டும், மனைவியைக் கொண்டு {மணந்து}, அறம்சார்ந்த இல்லற வாழ்வை வாழ வேண்டும். அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனாகவும், புனிதமான அறங்களைப் பயில்பவனுமாக இருந்துவிட்டால், அவன் பரமாத்மாவை எளிதில் அடைகிறான்.
ஒரு வைசியன் கல்வி பயில வேண்டும், வணிகம், உழவு {விவசாயம், கிருஷி} மற்றும் கால்நடை வளர்த்தல் மூலமாகச் செல்வத்தைத் திரட்டி, சுறுசுறுப்பாகப் பொருளீட்ட {சம்பாதிக்க} வேண்டும். அந்தணர்களும் க்ஷத்திரியர்களும் மகிழும் வண்ணம் செயல்பட்டு, நல்ல பணிகள் செய்யும், அறம் சார்ந்த இல்லறத்தானாக இருக்க வேண்டும்.
பழங்காலத்தில் இருந்து சூத்திரர்களுக்காகத் தீர்மானிக்கப்பட்ட கடமைகள் பின்வருபவை ஆகும். அவன் {சூத்திரன்} {அத்தியயனம் = வேதமோதல்} கல்லாமல், அந்தணர்களுக்குச் சேவை செய்து, அவர்களிடம் தங்களை ஒப்படைக்க வேண்டும். வேள்விகள் செய்ய அவனுக்கு மறுக்கப்பட்டுள்ளது; சுறுசுறுப்பாகவும், தனக்கு நன்மையைச் செய்யும் அனைத்து வகைச் செயல்களையும் அவன் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
{பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய} இவர்கள் அனைவரையும் மன்னன் (முறையாக) கவனித்து, தங்களுக்குரிய கடமைகளை, ஒவ்வொரு சாதியையும் சரியாகச் செய்ய வைக்க வேண்டும். அவன் புலனின்பங்களுக்கு அடிமையாகக் கூடாது. தனது குடிமக்களைச் சமமான அளவில் பாகுபாடின்றி நடத்த வேண்டும். நீதிக்கு எதிரான எந்த விருப்பங்களுக்கும், ஒரு மன்னன் கீழ்ப்படியக்கூடாது. நன்கு அறியப்பட்டவனாக, அனைத்து அறங்களையும் கொடையாகக் கொண்டவனாக, தன்னைவிடப் புகழத்தக்க வகையில் ஒருவன் இருந்தால், அவனைக் காணும்படி, ஒரு மன்னன், தனது குடிமக்களிடம் சொல்ல வேண்டும்.
எனினும், ஒரு தீயவன் {தீய மன்னன்}, இதைப் புரிந்து கொள்ள மாட்டான். பலத்தில் வளர்ந்து, மனிதத்தன்மையற்று, மனிதத்தன்மையற்று, விதியின் கோபத்துக்கு இலக்காகி, பிறரின் செல்வங்களின் மீது தனது பேராசை கொண்ட கண்களைச் செலுத்துவான். அப்போதே ஆயுதங்கள், கவசங்கள், விற்களுக்கான தேவை ஏற்பட்டு, போர் நிகழ்த்தப்படுகிறது. கொள்ளைக்காரர்களைக் கொல்வதற்காக, இந்திரனே, இந்தத் தந்திரத்தை புதிதாகக் கண்டுபிடித்தான். கவசங்கள், ஆயுதங்கள், விற்கள் போன்ற தந்திரங்களையும் அவனே {இந்திரனே} கண்டுபிடித்தான். கொள்ளையர்களைக் கொல்வதால், அறத்தகுதியே அடையப்படுகிறது. விதியையும் அறத்தையும் மனதிற்கொள்ளாத நீதியற்ற குருக்களாலேயே {கௌரவர்களாலேயே}, துன்பம் தரும் பல தீங்குகளை இவர்கள் {பாண்டவர்கள்} அனுபவிக்க நேர்ந்தது. ஓ! சஞ்சயரே, இது சரியல்ல {நல்லதல்ல}.
இப்போது, தனது மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர், பாண்டு மகனுக்குச் சொந்தமானவற்றைக் காரணமே இல்லாமல் அபகரித்துள்ளார். மன்னர்களால் நோற்கப்பட்ட மிகப்பழமையான விதியை {அனாதியான ராஜதர்மத்தை} அவர் எண்ணிப் பார்க்கவில்லை. குருக்கள் அனைவரும் கூட அதையே செய்கிறார்கள். ஓ! சஞ்சயரே, பிறர் காணாத வகையில் செல்வத்தைத் திருடும் திருடன் மற்றும் திறந்த பகல்வெளிச்சத்தில் வலுக்கட்டாயமாக அதையே {செல்வத்தை} அபகரிப்பவன் ஆகிய இருவரும் கண்டிக்கத்தக்கவர்களே! திருதராஷ்டிரர் மகன்களுக்கும், அவர்களுக்கும் {திருடனுக்கும், வலுக்கட்டாயமாக அபகரிப்பவனுக்கும்} இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? கோபத்தினால் தூண்டப்பட்டு, தான் செய்ய நினைப்பதே நீதி எனப் பேராசையில் இருக்கும் அவன் கருதிக் கொள்கிறான்.
பாண்டவர்களின் பங்கு நிர்ணயிக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. அவர்களது பங்கை அந்த மூடன் ஏன் அபகரிக்க வேண்டும்? பொருட்களின் நிலை இவ்வாறிருக்கையில், போரிட்டு மடிவது கூட எங்களுக்குப் புகழையே தரும். அந்நியனிடம் பெறும் அரசாட்சியை விட, தந்தை வழியில் கிடைக்கும் நாடே சிறந்தது. ஓ! சஞ்சயரே, காலத்தால் மதிக்கப்படும் இவ்விதிகளை, மன்னர்களின் சபைக்கு மத்தியில் நீர் குருக்களிடம் {கௌரவர்களிடம்} எடுத்துச் சொல்ல வேண்டும். அதாவது, திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} கூட்டப்படும் மந்த புத்தி கொண்டவர்களும், ஏற்கனவே மரணத்தில் பிடியில் அகப்பட்டிருப்பவர்களுமான அந்த மூடர்களின் கூட்டத்தையே அப்படிச் {மன்னர்களின் சபை} சொன்னேன்.
சபா மண்டபத்தில் குருக்கள் நடந்து கொண்ட நடத்தையே, அவர்கள் செயல்கள் அனைத்திலும் மிகத் தீமையானதாகும். அதை மீண்டும் ஒரு முறை எண்ணிப்பாரும். புகழத்தக்க நடத்தை கொண்டவளும், புனித வாழ்வு வாழ்பவளும், துருபதன் மகளுமான பாண்டு மகன்களின் அன்பிற்கினிய மனைவி {திரௌபதி}, அழுது கொண்டிருந்த நிலையில்}, {கௌரவர்கள்} காமத்திற்கு அடிமையாகி, அவளைப் பிடித்தபோது, குருக்களின் தலைமையில் நின்ற பீஷ்மர் அதில் தலையிடவில்லையே. குருக்களில் கிழவர்களும் இளைஞர்களுமான அனைவரும் அங்கே இருந்தனர். அவளை {திரௌபதியைக்} கண்ணியக்குறைவாக நடத்தியதை அவர்கள் தடுத்திருந்தால், நான் திருதராஷ்டிரரின் நடத்தையில் மகிழ்ந்திருப்பேன். அவரது மகன்களின் இறுதி நன்மைக்காகவே அப்படி நடக்கவில்லை போலும்.
அவளது {திரௌபதியின்} மாமனார் {திருதராஷ்டிரன்} அமர்ந்திருந்த பொதுச்சபையின் மத்தியில் *கிருஷ்ணையை {திரௌபதியை} வன்முறையுடன் பற்றினான் துச்சாசனன். அங்கே {சபைக்கு} தூக்கிச் செல்லப்பட்டதும், இரக்கத்தை எதிர்பார்த்த அவள், விதுரரைத் தவிர வேறு யாரும் தன் பக்கத்தில் இல்லாததைக் கண்டாள். அறிவிலிக் கூட்டமாதலால், அங்கிருந்த மன்னர்கள் யாரும் எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. கடமை உணர்வு கொண்ட விதுரர் மட்டுமே எதிர்த்துப் பேசினார். நீதி நிறைந்த சொற்களைச் சிறு புத்தி படைத்த அந்த மனிதனுக்குச் (துரியோதனனுக்குச்} சொன்னார். ஓ! சஞ்சயரே, அப்போதெல்லாம் விதி எதுவென்றும், அறநெறி எதுவென்றும் நீர் சொல்லவில்லையே, இப்போது இங்கே வந்து பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} ஏன் பாடம் எடுக்கிறீர்?
*கிருஷ்ணை=கருப்பி / கருப்பானவள்
எனினும், அந்தச் சபைக்கு வந்த கிருஷ்ணை {திரௌபதி}, {பாண்டவர்கள் துன்பம் என்ற} பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, படகாக வந்து பாண்டவர்களையும் தன்னையும் காத்துக் கொண்டு அனைத்தையும் சரி செய்தாள். அந்தச் சபையில் கிருஷ்ணை நின்ற போது, அந்தத் தேரோட்டியின் மகன் {கர்ணன்}, அவளிடம் {திரௌபதியிடம்} அவளது மாமனாருக்கு {திருதராஷ்டிரருக்கு} முன்னிலையிலேயே,“ஓ! துருபதன் மகளே {திரௌபதியே}, உனக்கு வேறு புகலிடம் கிடையாது. திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} வீட்டில் தாதியாக {பணிப்பெண்ணாக} இருப்பதே உனக்குச் சிறந்தது. உனது கணவர்கள் வெல்லப்பட்டார்கள். இனி அவர்கள் {உனக்குக் கணவர்கள்} இல்லை. இனிய ஆன்மா கொண்ட நீ, வேறு எவரையாவது கணவனாகத் தேர்ந்தெடுப்பாயாக” என்றான். நம்பிக்கை அத்தனையையும் அறுக்கும் வகையில், கர்ணனிடம் இருந்து வந்த இந்தக் கூரிய அம்பு போன்ற வார்த்தை, அந்தச் சபையின் மென்மையான பகுதிகளைத் தாக்கி, பயங்கரமாக்கியது. அது {கர்ணனின் அந்த வார்த்தைகள்} அர்ஜுனனுடைய இதயத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது.
பாண்டுவின் மகன்கள் கரிய மான்தோல்களை அணிய முற்பட்ட போது, துச்சாசனன், எரிச்சலூட்டும் இந்த வார்த்தைகளைப் பேசினான். “இவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் அலிகளைத் தவிர வேறில்லை; நெடுநாள் நரகத்தை அடைந்து, இவர்கள் அழிந்து போனார்கள்” என்றான். காந்தார நிலத்தின் மன்னன் சகுனி, பகடையாட்டத்தின்போது யுதிஷ்டிரனிடம் சூது நிறைந்த தந்திரமான வார்த்தைகளைச் சொன்னான், “உன்னிடம் இருக்கும் நகுலன் என்னால் வெல்லப்பட்டான். நீ வேறு என்ன வைத்திருக்கிறாய்? இப்போது நீ உனது மனைவியான திரௌபதியைப் பந்தயமாக வைப்பதே சிறந்தது” என்றான் அவன் {சகுனி}. ஓ! சஞ்சயரே, பகடையாட்டத்தின்போது சொல்லப்பட்ட இழிந்த வகையைச் சார்ந்த இந்தச் சொற்கள் அனைத்தையும் நீர் அறிவீர்.
நான் தனிப்பட்ட முறையில் குருக்களிடம் சென்று இந்தக் கடினமான காரியத்தை நேர் செய்ய விரும்புகிறேன். பெரும் அருள்களை விளைவாகத் தருவதும், அறத்தகுதியை வளர்ப்பதுமான இந்தச் செயல், பாண்டவ காரியத்திற்குத் தீங்கில்லாமல், குருக்களுடன் அமைதியைக் கொண்டு வந்ததாக ஆகட்டும். குருக்களும் மரண வலையில் இருந்து மீட்கப்பட்டதாக ஆகட்டும். மனிதாபிமானமற்ற அனைத்துப் போக்குகளில் இருந்தும் விடுபட்டு, அறிவு நிரம்பிய வார்த்தைகளையும், நீதியின் விதிகளுக்கடங்கிய ஞானத்தின் வார்த்தைகளையும் குருக்களிடம் நான் பேசும்போது, திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, என் முன்னிலையில் அவற்றுக்குச் செவிசாய்ப்பான் என்று நான் நம்புகிறேன்.
நான் வரும்போது, குருக்கள் எனக்கு உரிய மரியாதையை அளிப்பார்கள் என நான் நம்புகிறேன். இல்லையெனில், ஏற்கனவே தங்கள் தீயச் செயல்களின் மூலம் எரிக்கப்பட்டு வரும் திருதராஷ்டிரரின் தீய மகன்கள், போருக்குத் தயாராக இருக்கும் அர்ஜுனன் மற்றும் பீமரால் எரிக்கப்படுவார்கள் என்று நீர் நிம்மதியாக இருக்கலாம். பாண்டுவின் மகன்கள் ({பகடை} ஆட்டத்தில்) வீழ்த்தப்பட்ட போது, திருதராஷ்டிரரின் மகன்கள் அவர்களிடம் கடுமையான முரட்டு வார்த்தைகளைப் பேசினர். ஆனால், நேரம் வரும்போது, துரியோதனனின் அந்த வார்த்தைகளை அவனுக்கு நினைவு படுத்துவதில் பீமர் கவனம் கொள்வார் என்பதில் ஐயமில்லை.
துரியோதனன், தீய உணர்வுகளுள்ள ஒரு பெரிய மரமாவான்; கர்ணன் அதன் அடிமரமாக {மரத்தின் மையப்பெரும் பகுதியாக} இருக்கிறான்; சகுனி அதன் கிளைகளாக இருக்கிறான்; துச்சாசனன், ஏராளமான அதன் பூக்களாகவும், பழங்களாகவும் இருக்கிறான்; (அதே வேளையில்) ஞானமுள்ள மன்னரான திருதராஷ்டிரர் அதன் வேராக இருக்கிறார்.
யுதிஷ்டிரர் நீதி எனும் பெரிய மரமாக இருக்கிறார்; அர்ஜுனன் அதன் அடிமரமாக இருக்கிறான்; பீமர் அதன் கிளைகளாக இருக்கிறார்; மாத்ரியின் மகன்கள் ஏராளமான அதன் பூக்களாகவும், பழங்களாகவும் இருக்கின்றனர்; {கிருஷ்ணனாகிய} நானும், அறமும் {தர்மமும்}, அறம்சார்ந்த மனிதர்களும் அதன் வேர்களாக இருக்கிறோம்.
தன் மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர் ஒரு காடாக இருக்கிறார்; அதே வேளையில், ஓ! சஞ்சயரே, பாண்டுவின் மகன் புலிகளாக இருக்கின்றனர். ஓ!, புலிகளோடு கூடிய அந்தக் காட்டை வெட்டி விடாதீர்கள். அதே போல, காட்டில் இருந்து அந்தப் புலிகளும் விரட்டப்படாமல் இருக்கட்டும். காட்டை விட்டு வெளியிலிருக்கும் புலி எளிதாகக் கொல்லப்படும்; புலியில்லாத காடும், எளிதில் வெட்டப்பட்டுவிடும் {அழிக்கப்படும்}. எனவே, புலியே அந்தக் காட்டுக்குப் பாதுகாப்பு ஆகும். காடே புலியின் உறைவிடம் ஆகும். {புலி காட்டைப் பாதுகாக்க வேண்டும்; காடு புலியைப் பாதுகாக்க வேண்டும்}.
திருதராஷ்டிரர்கள் கொடிகளாக இருக்கின்றனர், அதே வேளையில், ஓ! சஞ்சயரே, பாண்டவர்களோ ஆச்சா {சால} மரங்களாக இருக்கின்றனர். ஒரு பெரிய மரத்தைச் சுற்றிப் படராமல் கொடியால் மலர்ச்சியடையவே {செழித்து வளரவே} முடியாது. எதிரிகளை அடக்குபவர்களான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, போருக்குத் தயாராக இருப்பதைப் போலவே, உண்மையில், திருதராஷ்டிருக்காகக் காத்திருக்கவும் {அவருக்காகப் பணிவிடை செய்யவும்} தயாராக இருக்கிறார்கள். இனி, எது அவருக்குச் சரியெனப் படுகிறதோ அதையே மன்னர் திருதராஷ்டிரர் செய்யட்டும். அறம்சார்ந்தவர்களும், உயர்ந்த ஆன்மா கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, போரிடத்தக்கவர்களாக இருந்தாலும், (தங்கள் சகோதரர்களிடம் {கௌரவர்களிடம்} இப்போதும் பொறுமையாகவே இருக்கிறார்கள். ஓ! கற்றவரே, இவை அனைத்தையும் (திருதராஷ்டிரருக்கு) உண்மையாகச் சொல்லும்” என்றான் {கிருஷ்ணன்}.
பங்கைக் கொடு அல்லது போரிடு! – உத்யோக பர்வம் பகுதி 30-தான் விடைபெற்றுக் கொள்வதாகச் சஞ்சயன் சொல்லி, தான் ஏதாவது குற்றமிழைத்திருந்தால் பொறுத்துக்கொள்ளுமாறு வேண்டுவது; சஞ்சயன் எக்குற்றமும் செய்யவில்லை என்று சொல்லி ஹஸ்தினாபுரத்தில் உள்ளோரை தான் நலம் விசாரித்ததாகச் சொல்லச் சொல்லி, யுதிஷ்டிரன் ஒரு நீண்ட பட்டியலைச் சொல்வது; துரியோதனன் ஆசையை அடைவதற்கு எந்தச் சாத்தியமும் இல்லையென்றும், அதில் எந்த நீதியும் இல்லை என்றும், இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுப்பது அல்லது போரிடுவது என்பதே தீர்வாகும் என்றும் யுதிஷ்டிரன் சஞ்சனிடம் சொல்வது…
சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மனிதர்களின் தெய்வீக ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, நான் உன்னிடம் விடைபெற்றுக் கொண்டேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நான் செல்கிறேன். வளமை உனதாகட்டும். நான், எனது இதய உணர்வுகளில் மெய்மறந்து தாக்கிப் பேசும் வகையில் எதையும் சொல்லவில்லை என நம்புகிறேன். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பீமன், அர்ஜுனன், மாத்ரியின் மகன், சாத்யகி, சேகிதானன் ஆகியோரிடமும் நான் விடைபெற்றுச் செல்கிறேன். அமைதியும் மகிழ்ச்சியும் உங்களுடையதாகட்டும். மன்னர்கள் அனைவரும் என்னைப் பாசமிக்கக் கண்களால் காணட்டும்” என்றான் {சஞ்சயன்}.
யுதிஷ்டிரன் {சஞ்சயரிடம்}, “ஓ! சஞ்சயரே, உமக்கு விடை கொடுக்க எங்களை அனுமதிப்பீராக. அமைதி உமதாகட்டும்! ஓ! கற்றவரே, எங்களை நீர் ஒருபோதும் தவறாக நினைத்ததில்லை. அவர்களும் {கௌரவர்களும்}, நாங்களும், சபையில் இருப்போர் மத்தியில், உம்மை (குருக்களின்) தூய்மையான இதயம் கொண்டவராகவே அறிந்திருக்கிறோம். அதுதவிர, ஓ! சஞ்சயரே, இப்போது தூதராக வந்திருப்பது மட்டுமல்லாமல், எங்களது அன்புக்குரிய நீர் நன்றியுடையவராகவும், ஏற்புடைய {இனிமையான} பேச்சுடையவராகவும், அற்புத நடத்தை கொண்டவராகவும், எங்களிடம் பாசம் கொண்டவராகவும் இருக்கிறீர். உமது மனம் எப்போதும் {அஞ்ஞானத்தால்} மறைக்கப்பட்டது கிடையாது. கடினமாகப் பேசப்பட்டால் நீர் கோபத்துக்கு ஆளாக மாட்டீர். ஓ! சூதரே, வெட்டும் வகையில் மூர்க்கமான பேச்சுகளையோ, தவறான மற்றும் கசந்த பேச்சுகளையோ நீர் ஒருபோதும் பேச மாட்டீர். உமது சொற்கள் வன்மத்திலிருந்து {தீய நோக்கத்திலிருந்து} விடுபட்டு, எப்போதும் அறநெறியும் சார்ந்தே இருக்கும்.
அரசாங்கப் பிரதிநிதிகளில் {தூதர்களில்} நீரே எங்களுக்கு மிகவும் அன்புக்குரியவர். உம்மைத்தவிர வேறொருவரும் இங்கே வரக்கூடும். அவர் விதுரரே. முன்பெல்லாம், நாங்கள் எப்போதும் உம்மைக் காண்போம். உண்மையில், நீர் தனஞ்சயனைப் போன்றே எங்களுக்கு அன்புக்குரிய நண்பராவீர். ஓ! சஞ்சயரே, இங்கிருந்து விரைந்து சென்று, தூய சக்தியும், பிரம்மச்சரிய வகையின்படியான கல்விக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும், அதிலும் குறிப்பாக வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்து, இரவலர் {பிச்சைக்கார} வாழ்வை மேற்கொண்டிருக்கும் அந்தணர்களுக்காகவும், காட்டில் வாழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் துறவிகளுக்காகவும், பிற வகுப்புகளைச் {க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வகுப்புகளைச்} சார்ந்த முதிர்ந்தவர்களுக்காகவும் காத்திருந்து, ஓ! சஞ்சயரே, எனது பெயரால் அவர்களது நலம் உம்மால் விசாரிக்கப்படட்டும்.
ஓ! சூதரே, மன்னர் திருதராஷ்டிரரின் புரோகிதரிடமும், அவரது ஆசான்களிடமும், ரித்விக்குகளிடமும் சென்று அவர்களது நலத்தை நீர் விசாரிப்பீராக. நல்ல பிறப்பு பிறக்காவிடினும், முதிர்ந்த வயதும், சக்தியும், நல்ல நடத்தையும், பலமும் உள்ளவர்கள் மற்றும் எங்களை நினைவுகூர்ந்து பேசுபவர்களிடமும், தங்கள் சக்திக்குத் தக்க சிறு அறத்தையேனும் பயில்பவர்களிடமும், எனது அமைதிக்கான செய்தியை முதலில் சொல்லிவிட்டு, ஓ! சஞ்சயரே, பிறகு அவர்களது நலத்தை நீர் விசாரிப்பீராக. வணிகம் செய்து நாட்டில் வாழ்பவர்களிடமும், நாட்டின் முக்கிய அலுவல்களைச் செய்து வாழ்பவர்களின் நலத்தை நீர் அவர்களிடம் விசாரிப்பீராக.
அறநெறிகளை முழுவதும் அறிந்தவரும், எங்களது ஆலோசகரும், வேதங்களில் நிபுணத்துவம் பெற்றுப் பிரம்மச்சரியம் நோற்பவரும், ஆயுத அறிவியலை மீண்டும் முழுமையாகவும் நிறைவாகவும் செய்தவரும், எங்களிடம் எப்போதும் அருள்கூர்ந்து இருப்பவரும், எங்கள் அன்புக்குரிய ஆசானுமான துரோணரிடம், எங்கள் பெயரால் நீர் வணக்கங்களைத் தெரிவிப்பீராக.
பெரும் கல்வி கற்றவரும், பிரம்மச்சரிய வகை வாழ்வை நோற்று வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவரும், பெரும் சுறுசுறுப்பு கொண்டவரும், கந்தர்வ குலத்தின் இளைஞனைப் போல இருப்பவரும், அதுவும் தவிர ஆயுத அறிவியலை மீண்டும் முழுமையாகவும் நிறைவாகவும் செய்தவருமான அஸ்வத்தாமரின் நலத்தை நீர் அவரிடம் விசாரிப்பீராக.
ஓ! சஞ்சயரே, பெரும் தேர்வீரரும், தன்னறிவு {சுயஞானம்} கொண்டவர்களில் முதன்மையானவரும் சரத்வானின் மகனுமான கிருபரின் வசிப்பிடத்திற்குச் சென்று, எனது பெயரால் வணங்கி, உமது கையால் அவரது பாதத்தைத் தொடுவீராக.
வீரமும், ஊறிழையாமையும் {அஹிம்சையும்}, தவமும், ஞானமும், நல்ல நடத்தையும், வேத கல்வியும், பெரும் சிறப்பும், உறுதியும் யாரிடம் உள்ளதோ, அந்தக் குருக்களில் முதன்மையான பீஷ்மரிடம், அவரது பாதங்களைத் தொட்டு நான் நலமாக இருப்பதாகச் சொல்வீராக.
ஞானமுள்ளவரும், பெருமைக்குரியவரும், பெரும் கல்வி கற்றவரும், முதியோராலும் மதிக்கப்படுபவரும், குருக்களின் தலைவருமான கண்பார்வையற்ற {குருட்டு} மன்னரையும் (திருதராஷ்டிரரையும்} நீர் வணங்குவீராக.
ஓ! சஞ்சயரே, தீயவனும், அறியாமை கொண்டவனும், ஏமாற்றுக்காரனும், சீர்கெட்டவனும், முழு உலகத்தையும் இப்போது ஆட்சி செய்பவனும், திருதராஷ்டிரர் மகன்களில் மூத்தவனுமான சுயோதனனின் {துரியோதனனின்} நலத்தையும், ஓ! அய்யா {சஞ்சயரே}, நீர் விசாரிப்பீராக.
வலிமைமிக்க வில்லாளியும், குருக்களில் வீரனும், துரியோதனனுக்கு இளையவனும், தனது அண்ணனைப் போன்ற குணத்தையே உடையவனுமான தீயவன் துச்சாசனனின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.
ஓ! சஞ்சயரே, பாரதர்கள் மத்தியில் எப்போதும் அமைதி நில வேண்டும் என்பதைத்தவிர வேறு விருப்பங்களைப் பேணாதவரான, பாஹ்லீகர்களின் ஞானமிக்கத் தலைவரையும் நீர் வணங்குவீராக.
எண்ணற்ற அற்புத குணங்களைக் கொண்டவரும், ஞானியும், இரக்கமிக்க இதயம் கொண்டவரும், குருக்களிடம் கொண்ட பாசத்தால், அவர்களிடம் கோபமடையாதவருமான சோமதத்தரையும் நீர் வழிபடுவீராக.
சோமதத்தரின் மகன், குருக்கள் மத்தியில் பெரும் மரியாதைக்குரிய தகுதி படைத்தவனாவான். அவன் எனக்கு நண்பனும், எங்களுக்குச் சகோதரனும் ஆவான். வலிமைமிக்க வில்லாளியும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அவன் அனைத்து வகையிலும் தகுதியுடையவனே. ஓ! சஞ்சயரே, அவனது நலத்தை விசாரித்த பிறகு, அவனது நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடைய நலத்தையும் விசாரிப்பீராக.
குருக்கள் {கௌரவர்கள்} மத்தியில் கருத்தில் கொள்ளத்தக்கவர்களும், இளவயது கொண்ட பிறரும், மகன்கள், பேரர்கள், சகோதரர்கள் போன்ற உறவுமுறையை எங்களிடம் கொண்டோரும் அங்கே இருக்கிறார்கள். ஓ! சூதரே, அவர்கள் ஒவ்வொருவரிடமும், தகுந்தது என்று நீர் கருதும் வார்த்தைகளைப் பேசி அவர்களது நலத்தை விசாரிப்பீராக.
பாண்டவர்களுடன் போரிடுவதற்காகத் திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} கூட்டப்பட்டிருக்கும் கேகயர்கள், வசாதிகள், சால்வகர்கள், அம்பஷ்டர்கள், திரிகார்த்தர்கள் ஆகியோரும், கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் இருந்து பெரும் வீரத்துடன் வந்திருப்பவர்களும், உண்மையில், இவர்கள் அனைவரைக் காட்டிலும், கொடுமையற்றவர்களும், நல்ல வாழ்வு வாழ்பவர்களுமான மலை நாட்டுக்காரர்களுடைய மன்னர்களின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.
யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றைச் செலுத்தும் யாவரும், தரைப்படையில் போரிடுவோரும் சேர்ந்த, மதிப்புமிக்க மனிதர்கள் நிறைந்த அந்த வலிமைமிக்கப் படையிடம், நான் நலத்துடன் இருப்பதாகச் சொல்லி விட்டு, பிறகு அவர்களது சொந்த நலத்தை விசாரிப்பீராக.
மன்னருக்கு, வருவாய்க்கான காரியங்களிலோ, அவரது {மன்னரின்} வாயில் காப்போராகவோ, அவரது துருப்புகளின் தலைவர்களாகவோ, அவரது வரவு செலவு கணக்குகளைக் கவனிப்பவர்களாகவோ, மற்ற முக்கிய விவகாரங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதில் ஈடுபடும் அலுவலர்களாகவோ சேவையாற்றுபவர்கள் அனைவரையும் நீர் விசாரிப்பீராக.
ஓ! அய்யா, பிழையில் விழாதவனும், பெரும் ஞானம் கொண்டவனும், அனைத்து அறங்களையும் கொண்டவனும், இந்தப் போரை ஒருபோதும் விரும்பாதவனும், வைசிய மனைவி மூலம் திருதராஷ்டிரனின் மகனானவனுடைய {யுயுத்சுவின்} நலத்தையும் விசாரிப்பீராக.
பகடையின் தந்திரங்களில் ஒப்பற்றவனும், பிறர் கண்டுபிடிக்க இயலாத தந்திரங்களை உடையவனும், பகடையைக் கையாளும் கலையில் நிபுணனும், போரிலன்றி விளையாட்டில் வீழ்த்தப்பட முடியாதவனுமான [1] சித்திரசேனனின் நலத்தையும் நீர் கேட்பீராக.
ஓ! அய்யா, காந்தாரர்கள் மன்னனும், மலைநாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவனும், ஏமாற்றுகரப் பகடையாட்டங்களில் ஒப்பற்றவனும், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} செருக்கை மேம்படுத்துபவனும், இயல்பாகவே பொய்மையை அடையும் அறிவுடையவனுமான சகுனியின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.
போரில் யாரும் தாக்கத் துணியாத பாண்டவர்களைத் எந்தத் துணையுமின்றி, தனது தேரில் ஏறித் தனியொருவனாகவே வீழ்த்தத் தயாராக இருப்பவனும், ஏற்கனவே தவறான வழியில் செல்பவர்களை மேலும் தவறாக வழிநடத்துவதில் ஒப்பற்றவனும், விகர்த்தனன் மகனுமான அந்தக் கர்ணனின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.
ஓ! அய்யா, எங்களிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒரே ஒருவரும், எங்கள் ஆசானும், எங்களை வளர்த்து உருவாக்கியவரும், எங்களுக்குத் தந்தையும், தாயும், நண்பருமாய் இருப்பவரும், எதிலும் தடங்கலற்ற புரிதல் கொண்டவரும், தொலைநோக்கு பார்வை கொண்டவரும், எங்கள் ஆலோசகருமான விதுரரின் நலத்தையும் நீர் விசாரிப்பீராக.
அனைத்து முதிர்ந்த சீமாட்டிகள், தகுதியுடையவர்களாக அறியப்பட்டவர்கள் {மாதர்}, எங்களுக்குத் தாயைப் போன்றோர் ஆகியோர் ஓரிடத்தில் கூடும்போது அவர்களைச் சந்தித்து நீர் வணங்குவீராக. ஓ! சஞ்சயரே, அவர்களிடம் முதலில் நீர், “வாழும் மகன்களுக்குத் தாயாக இருப்போரே, உங்கள் மகன்கள் உங்களிடம் அன்பாகவும், கவனமாகவும், தகுந்த வழியிலும் நடந்து கொண்டு, உங்களை வசதியாக வைத்திருக்கிறார்கள் என நம்புகிறேன்” என்று சொன்ன பிறகு, “யுதிஷ்டிரன் தனது மகன்களுடன் நன்றாக இருக்கிறான்” என்று அவர்களிடம் நீர் சொல்வீராக.
ஓ! சஞ்சயரே, எங்கள் மனைவிமார் என்ற தகுதியிலுள்ள மங்கையரிடம் {சகோதரர் முறைகொண்டோரின் மனைவியராக இருக்க வேண்டும்} {ராஜபாரியைகளிடம்}, அவர்களது நலத்தை விசாரிக்கும் நீர், இவ்வார்த்தைகளில், “நீங்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள் என நான் நம்புகிறேன். உங்கள் நற்புகழுக்கு எந்தக் களங்கமும் ஏற்படவில்லை என நான் நம்புகிறேன். பழிக்கு ஆளாகாமல், கவனமாக உங்கள் வசிப்பிடங்களுக்குள் வாழ்கிறீர்கள் என நான் நம்புகிறேன். உங்கள் மாமனாரிடம் அன்பாகவும், புகழத்தக்க வகையிலும், கவனமான வழியிலும் நடந்து கொண்டு உங்களை வசதியாக வைத்துக் கொண்டுள்ளீர்கள் என நான் நம்புகிறேன். உங்கள் கணவனின் அனுகூலம் கிட்டும்படி நிலையான நடைத்தையை நீங்கள் மேற்கொள்வீராக” எனச் சொல்வீராக.
உமக்கு மருமகள் என்பது போன்ற உறவை எங்களிடம் கொண்ட இளம் மங்கையரிடம் {எங்கள் மருமகள்கள் போன்றோரிடம்}, ஓ! சஞ்சயரே, அவர்களது நலத்தை என் சார்பாக நீர் கேட்பீராக. அவர்களிடம் நீர், “உங்கள் கணவர்கள் அன்பாகவும், ஏற்புடையவர்களாகவும் இருக்கட்டும்; நீங்கள் உங்கள் கணவர்களுக்கு ஏற்புடையவராக இருப்பீராக; ஆபரணங்கள், ஆடைகள், நறுமணப் பொருட்கள் தூய்மை ஆகிவற்றை நீங்கள் பெறுவீராக; மகிழ்ச்சியாக இருப்பீராக; உங்கள் விருப்பத்தின் பேரில் வாழ்வின் இன்பங்களை அனுபவிப்பீராக; உங்கள் பார்வை அழகாகவும், உங்கள் பேச்சு இனிமையாகவும் இருக்கட்டும்” என்று சொல்லி, ஓ! அய்யா {சஞ்சயரே}, வீட்டில் இருக்கும் பெண்களின் நலத்தை நீர் விசாரிப்பீராக.
குருக்களுடையவர்களாக இருப்பினும், பெண் பணியாட்களிடமும், ஆண் பணியாட்களிடமும், அவர்களில் இருக்கும் கூனர்கள் முடவர்கள் ஆகிய பலரிடமும், நான் நன்றாக இருப்பதாகச் சொல்லிய பிறகு, அவர்களது நலத்தை நீர் விசாரிப்பீராக. அவர்களிடம் நீர், “திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} இன்னும் உங்களுக்கு அதே வகையான பழைய வாழ்வாதாரங்களைக் கொடுத்துக் கவனிக்கிறான் எனவும் உங்கள் வாழ்வுக்குத் தேவையான வசதிகளையும் கொடுக்கிறான் என நம்புகிறேன்” என்று சொல்வீராக.
அங்கக்குறை உள்ளவர்களிடமும், பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர்களிடமும் மனிதாபிமானம் கொண்டு, திருதராஷ்டிரர் கொடுக்கும் ஆடைகளையும், உணவையும் பெறும் குள்ளர்களிடமும் {உடல் வளர்ச்சி குறைந்தோரிடமும்}, குருடர்களிடமும் {பார்வையற்றோரிடமும்}, முதிர்ந்தவர்கள் அனைவரிடமும், கால்களற்று கைகளை மட்டுமே பயன்படுத்துவோர் பலரிடமும், நீர், “நான் நன்றாக இருக்கிறேன்” என்றும், “நான் அவர்களது நலத்தை விசாரித்தேன்” என்றும் சொல்லி, பின்வரும் சொற்களால், “அஞ்சாதீர்கள், துன்பங்கள் நிறைந்த உங்கள் மகிழ்ச்சியற்ற வாழ்வைக் கண்டு உற்சாகம் இழக்காதீர்கள்; ஐயங்கொள்ளாதீர்கள், உங்கள் முற்பிறவியில் நீங்கள் பாவங்களைச் செய்திருக்கலாம். எனது எதிரிகளைத் தண்டித்து, நண்பர்களை நான் மகிழச் செய்யும்போது, உணவையும், ஆடைகளையும் பரிசளித்து, நான் உங்களை மனநிறைவு கொள்ளச் செய்வேன்” என்று சொல்வீராக.
ஓ! அய்யா {சஞ்சயரே}, தலைவனற்றவர்கள், பலமற்றவர்கள், பொருளீட்ட வாழ்வில் வீணாக முயல்பவர்கள், அறியாமையில் இருப்பவர்கள், உண்மையில், பரிதாபகரமான சூழ்நிலைகளில் இருக்கும் மக்கள் அனைவரிடமும், நீர் நலத்தை விசாரிப்பீராக. ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பல பகுதிகளில் {நாடுகளில்} இருந்து திருதராஷ்டிரர்களின் பாதுகாப்பை நாடி வந்திருப்பவர்கள், எங்கள் வணக்கங்களுக்கு உரியவர்கள் ஆகிய பிறரையும் சந்தித்து அவர்களது நலத்தையும் அமைதியையும் விசாரிப்பீராக.
குருக்களிடம் தானாகவோ, அழைக்கப்பட்டோ வந்தவர்களிடமும், அனைத்துத் தரப்புகளில் இருந்து வந்திருக்கும் அனைத்து தூதர்களிடமும் அவர்களது நலத்தை விசாரித்து, நான் நன்றாக இருப்பதாகச் சொல்வீராக.
திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} அடையப்பட்ட வீரர்களைப் பொறுத்தவரை, இந்தப் பூமியில் அவர்களுக்கு {அந்த வீரர்களுக்கு} நிகரானவர்கள் எவரும் இல்லை. எனினும், அறமே நித்தியமானது. எனது எதிரிகளை அழிப்பதற்கான எனது பலமும் அந்த அறமே.
ஓ! சஞ்சயரே, திருதராஷ்டிரர் மகனான சுயோதனனிடம் நீர், “பகையில்லாமல் குருக்களை ஆளவேண்டும் என்று உனது இதயத்தை வேதனைக்குள்ளாக்கும் அந்த விருப்பத்திற்கு நடைமுறைச்சாத்தியமே இல்லை. அதில் எந்த நீதியும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, உனக்கு ஏற்பில்லாத எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்! ஓ! பாரத வீரர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, எனக்குச் சொந்தமான இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுத்துவிடு, இல்லையேல் என்னோடு போரிடு!” என்று சொல்வீராக.
ஐந்து கிராமங்களையாவது கொடு! – உத்யோக பர்வம் பகுதி 31-திருதராஷ்டிரனை வணங்கி, அவனது நலத்தை விசாரிக்குமாறும், பாண்டவர்களிடம் அவன் பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்குமாறும் சஞ்சயனை யுதிஷ்டிரன் கேட்டுக் கொண்டது; பீஷ்மரிடம் பேரர்களின் ஒற்றுமையைப் பேணத் தீர்மானிக்கச் சொன்னது; விதுரரிடம் அமைதிக்காக ஆலோசிக்கச் சொன்னது; துரியோதனனிடம், அவன் செய்த தீங்குகள் அனைத்தையும் தாங்கள் மன்னித்து விடுவதாகவும், தங்களுக்கு ஐந்து கிராமத்தையாவது கொடுக்குமாறும் சஞ்சயனை யுதிஷ்டிரன் சொல்லச்சொன்னது; அமைதிக்கும், போருக்கும், மென்மைக்கும், கடுமைக்கும் தான் தகுந்தவனாகவே இருப்பதாகவும் சொன்னது…
யுதிஷ்டிரன் {சஞ்சயரிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, நீதிமிக்கவர்கள், நீதியற்றவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பலமற்றவர்கள், பலமிக்கவர்கள் ஆகியோர் அனைவரும் படைப்பாளனின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றனர். சிறுவருக்கு ஞானத்தையும், கற்றோருக்கு மூடத்தனத்தையும் தன்விருப்பப்படி அந்தப் பரம்பொருளான கடவுளே கொடுக்கிறான். எங்களது பலம் குறித்து உம்மிடம் திருதராஷ்டிரர் கேட்டால், இங்கிருப்போர் அனைவரிடமும் உற்சாகமாகக் கேட்டு, உண்மையை உறுதி செய்து கொண்டு, அவரிடம் அனைத்தையும் உண்மையாகச் சொல்லும்.
ஓ! கவல்கணர் மகனே {சஞ்சயரே}, குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்று, வலிமைமிக்க திருதராஷ்டிரரின் பாதங்களைத் தொட்டு வணங்கி, எங்கள் பெயரால் அவரது நலத்தை விசாரிப்பீராக. குருக்கள் மத்தியில் அமர்ந்திருக்கும்போது, அவரிடம் {திருதராஷ்டிரரிடம்}, “ஓ! மன்னா, பாண்டுவின் மகன்கள், உமது ஆற்றலின் விளைவாக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஓ! எதிரிகளை அடக்குபவரே, இளம் வயதுடைய அந்தப் பிள்ளைகள் {பாண்டவர்கள்} உமது கருணையினாலேயே ஒரு நாட்டை அடைந்தனர். முதலில் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஒரு நாட்டை அளித்துவிட்டு, எப்போதும் நீர் அவர்களிடம் பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக்கூடாது. அதனால் {அப்படி நடந்தால்} அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} அழிவு ஏற்படும்!” என்று எங்கள் சார்பாகச் சொல்லும்.
ஓ! சஞ்சயரே, இந்த முழு நாடும் ஒருவருக்கே சொந்தமென்பது பொருந்தாது. மீண்டும் அவரிடம் {திருதராஷ்டிரரிடம்}, “ஓ! அய்யா, நாங்கள் ஒற்றுமையுடன் வாழ விரும்புகிறோம். எதிரிகளால் வீழ்த்தப்படும் நிலைக்கு நீங்கள் பாதிப்படைய வேண்டாம்” என்று எங்கள் சார்பாகச் சொல்லும்.
ஓ சஞ்சயரே, பாரதர்களின் பாட்டனும் {பிதாமகரும்}, சந்தனுவின் மகனுமான பீஷ்மரிடம் என் பெயரால் நீர் தலைவணங்க வேண்டும். எங்கள் பாட்டனை {பீஷ்மரை} வணங்கிய பிறகு, அவரிடம், “சந்தனுவின் குலம் அழிவின் விளிம்பில் இருந்த போது, நீரே அதைப் புதுப்பித்தீர். எனவே, ஓ! அய்யா, உமது பேரர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் நல்லுறவுடன் வாழ, உமது தீர்மானத்தின்படியே வழிவகை செய்யும்” என்பது சொல்லப்பட வேண்டும்.
பிறகு, குருக்களின் ஆலோசகரான விதுரரிடம், “ஓ! இனிமையானவரே, யுதிஷ்டிரனுக்கு நன்மை செய்யும் விருப்பத்துடன் அமைதியை ஆலோசியும்” என்று நீர் சொல்லும்.
பொறுமையற்ற இளவரசனான துரியோதனனிடம், அவன் குருக்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும்போது, “குருக்கள் கொல்லப்படுவதைக் காண மனம் இல்லாத காரணத்தால், அப்பாவியும், ஆதரவற்றவளுமான திரௌபதிக்கு சபையின் மத்தியில் நீ செய்த அவமதிப்புகளை, நாங்கள் அமைதியாகப் பொறுத்துக் கொள்வோம்” என்று மீண்டும் மீண்டும் மன்றாடுவீராக.
பழிதீர்க்கும் வலிமையைப் பாண்டுவின் மகன்கள் பெற்றிருந்தாலும், அதற்கு முன்பும் பின்பும் இரு சமயங்களிலும் செய்யப்பட்ட பிற தீங்குகளையும் அமைதியாகப் பொறுத்துக் கொள்கிறார்கள். இவை அனைத்தையும், உண்மையில், கௌரவர்கள் அறிவார்கள். ஓ! இனிமையானவனே {துரியோதனா}, மான் தோலுடுத்தச் செய்து எங்களை நாடு கடத்தவும் செய்தாய். குருக்கள் கொல்லப்படுவதை விரும்பாத நாங்கள் அதையும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்.
குந்தியை அலட்சியம் செய்து, உனக்குக் கீழ்ப்படிந்தே கிருஷ்ணையைத் {திரௌபதியை} துச்சாசனன் இழுத்தான். அச்செயலையும் நாங்கள் மன்னிப்போம். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, நாட்டின் முறையான பங்கை நாங்கள் பெற வேண்டும். ஓ! மனிதர்களில் காளையே, பிறருக்குச் சொந்தமானவற்றில் இருந்து உனது பேராசை கொண்ட இதயத்தைத் திருப்பு. ஓ! மன்னா, அப்போதே மகிழ்ச்சி ஏற்பட்டு, நமக்கு மத்தியில் அமைதி நிலவும்.
நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்; {எனவே} பேரரசின் ஒரு மாகாணத்தையாவது எங்களுக்குக் கொடு. குசஸ்தலம் {அவிஸ்தலம்}, விருகஸ்தலம், மாகந்தி, வாரணாவதம் ஆகியவற்றையும், ஐந்தாவதாக நீ விரும்பும் ஏதாவதொன்றையும் கூடக் கொடு. இது கூட நமது சச்சரவை {வீண் சண்டையை} முடிவடையச் செய்யும். ஓ! சுயோதனா, உனது ஐந்து சகோதரர்களுக்கு ஐந்து கிராமங்களையாவது கொடு” என்று சொல்லி மீண்டும் மீண்டும் நீர் வேண்டிக் கொள்வீராக.
ஓ! சஞ்சயரே, ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எங்களுக்கும், எங்களது சகோதரர்களுக்கும் இடையில் அமைதி ஏற்படட்டும்.
அவனிடம் {துரியோதனனிடம்}, “சகோதரர்கள் சகோதரர்களைத் தொடரட்டும், தந்தையர் மகன்களுடன் ஒற்றுமையாக இருக்கட்டும். மகிழ்ச்சியானச் சிரிப்பில் குருக்களுடன் {கௌரவர்களுடன்} பாஞ்சாலர்கள் கலக்கட்டும். குருக்களையும், பாஞ்சாலர்களையும் மொத்தமாகவும் பலமாகவும் காணவே நான் விரும்புகிறேன். ஓ! பாரத குலத்தின் காளையே, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நாம் அமைதியடைவோமாக” என்றும் சொல்லும்.
ஓ! சஞ்சயரே, போருக்கும் அமைதிக்கும் சமத்திறன் கொண்டவனாக நான் இருக்கிறேன். நான் செல்வத்தை அடையவும், அறத்தை ஈட்டவும் தயாராக இருக்கிறேன். மென்மைக்கும் கடுமைக்கும் பொருத்தமானவனாகவே நான் இருக்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.
திருதராஷ்டிரனிடம் பேசிய சஞ்சயன்! – உத்யோக பர்வம் பகுதி 32-சஞ்சயன் ஹஸ்தினாபுரத்தின் அரண்மனை வாயிலை அடைந்து திருதராஷ்டிரன் அனுமதிக்காகக் காத்திருந்தது; அனுமதி பெற்று உள்ளே சென்று யுதிஷ்டிரனின் வணக்கங்களைத் திருதராஷ்டிரனிடம் சொன்னது; யுதிஷ்டிரன் நலமாக இருப்பதையும், அவனது நோக்கங்களையும் சொன்னது; பாண்டவர்களுக்குப் பாவமிழைத்தால் குருக்களின் அழிவு நிச்சயம் என்று சஞ்சயன் எச்சரித்தது; திருதராஷ்டிரன் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டியது; பாண்டவர்களிடம் இருந்து விரைந்து திரும்பி வந்ததால் களைப்படைந்திருப்பதாகவும், தான் உறங்கச் செல்ல அனுமதி கொடுக்குமாறும் சஞ்சயன் வேண்டுவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்களால் வணங்கப்பட்டு விடைகொடுத்தனுப்பப்பட்ட சஞ்சயன், சிறப்புமிக்கத் திருதராஷ்டிரனின் கட்டளைகள் அத்தனையும் நிறைவேற்றிவிட்டு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான். ஹஸ்தினாபுரத்தை அடைந்த அவன், அதனுள் விரைவாக நுழைந்து, அரண்மனையின் அந்தப்புர வாயிலுக்குச் சென்றான். வாயில்காப்போனிடம், அவன் {சஞ்சயன்}, “ஓ! வாயில்காவலனே, பாண்டுவின் மகன்களிடம் இருந்து சஞ்சயன் வந்திருக்கிறான் என்று திருதராஷ்டிரரிடம் சொல். தாமதிக்காதே. மன்னர் விழித்திருந்தால் மட்டும், ஓ! வாயில்காவலனே, அவரிடம் சொல். அவரிடம் முதலில் தெரிவித்த பிறகே நான் உள்ளே நுழைய விரும்புகிறேன். பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததைத் தெரிவிக்க வேண்டிய சூழலில் தற்சமயம் இருக்கிறேன்” என்றான்.
இதைக் கேட்ட வாயில்காவலன், மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} சென்று, அவனிடம், “ஓ! பூமியின் தலைவா, நான் உம்மை வணங்குகிறேன். உம்மைக் காண விரும்பி சஞ்சயன் உமது வாயிலில் இருக்கிறார். அவர், பாண்டவர்களின் செய்தியைத் தாங்கி வந்திருக்கிறார். ஓ! மன்னா, அவர் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவீராக” என்றான்.
அதற்கு மன்னன் {திருதராஷ்டிரன் வாயில் காவலனிடம்}, “நான் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருக்கிறேன் என்று சஞ்சயனிடம் சொல். அவன் உள்ளே வரட்டும். சஞ்சயனை வரவேற்பாயாக. நான் அவனை வரவேற்க எப்போதும் தயாராக இருக்கிறேன். அனுமதி தடை அவனுக்கு எப்போதுமில்லை எனும்போது, அவன் ஏன் வெளியே இருக்க வேண்டும்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, மன்னனின் அனுமதியுடன், கூப்பிய கரங்களுடன், அந்த அகன்ற அறைக்குள் நுழைந்த அந்தச் சூதனின் மகன் {சஞ்சயன்}, பல ஞானிகள், வீரர்கள், நேர்மையான நபர்களால் பாதுகாக்கப்பட்டு, தனது அரியணையில் அப்போது அமர்ந்திருந்த விசித்திரவீரியனின் அரசமகனை {திருதராஷ்டிரனை} அணுகினான்.
சஞ்சயன் அவனிடம் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நான் சஞ்சயன். உம்மை நான் வணங்குகிறேன். ஓ! மனிதர்களின் தலைவா, இங்கிருந்து சென்ற நான், பாண்டு மகன்களைக் கண்டேன். உமக்கான வணக்கங்களைத் தெரிவித்த பாண்டுவின் மகனான புத்திக்கூர்மையுடைய யுதிஷ்டிரன், உமது நலத்தை விசாரித்தான். மிகவும் மகிழ்ந்த அவன் {யுதிஷ்டிரன்}, உமது மகன்களையும் விசாரித்தான். நீர் உமது மகன்களுடனும், பேரர்களுடனும், நண்பர்களுடனும், ஆலோசகர்களிடமும், உம்மை நம்பியிருக்கும் அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறீரா என வினவினான்” என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! குழந்தாய் {சஞ்சயா}, அஜாதசத்ருவுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எனது வாழ்த்துகளை {ஆசிகளை} அளித்து உன்னைக் கேட்கிறேன். ஓ! சஞ்சயா, பிருதையின் {குந்தியின்} மகனான கௌரவர்கள் மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது மகன்கள், சகோதரர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் நலமாக இருக்கிறானா?” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது ஆலோசகர்களுடன் நலமாக இருக்கிறான். ஏற்கனவே தனக்குச் சொந்தமாக இருந்த உடைமைகளை, அவன் {யுதிஷ்டிரன்} அடைய விரும்புகிறான். புத்திக்கூர்மையும், பரந்துப்பட்ட கல்வியும் கொண்டிருக்கும் அவன் {யுதிஷ்டிரன்}, அதையும் தவிரத் தொலைநோக்குடனும், அற்புத மனநிலையுடனும், கண்டிக்கத்தக்க எதையும் செய்யாமல், அறத்தையும், செல்வத்தையும் அடைய முயற்சிக்கிறான். அந்தப் பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அறத்தைவிட ஊறிழையாமை {அஹிம்சை} இன்னும் அதிக மேன்மையானது, செல்வம் குவிப்பதை விட உயர்ந்தது அறம். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வாழ்வின் உயர்ந்த நோக்கத்திற்கும், அறத்திற்கும் உகந்த நடைமுறையிலும், மகிழ்ச்சியிலும், இன்பத்திலும், அவனது மனம் எப்போதும் உள்ளது.
தன் சக்தியால் அல்லாமல், நூலால் இப்படியும் அப்படியும் இழுக்கப்படும் பொம்மையென (இவ்வுலகில்) மனிதன் நகர்கிறான். யுதிஷ்டிரனின் துன்பங்களைக் கண்ட பிறகு, விதியின் சக்தி, மனித முயற்சியின் விளைவுகளைவிட மேன்மையானது என்றே நான் கருதுகிறேன். நிச்சயம் துன்பத்தில் அழியப்போவதும், பாவகரமானதும், பேசக்கூடாததுமான உமது தகாத செயல்களைக் கண்டால், தகுந்த எதிரி கொடுக்கும் காலம் வரைதான் உமது இயல்புகளில் ஒன்று, பாராட்டை வெல்லக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
பாவங்கள் அனைத்தையும் விடுத்து, இனியும் வைத்துக் கொள்ள முடியாத தேய்ந்து போன சட்டையை ஒரு பாம்பு கழற்றி விடுவதைப் போல, நீரே தாங்கிக் கொள்ளும் வகையில் {உம்மால் அவனுக்கு இழைக்கப்பட்ட} பாவ மூட்டைகளை விடும் வீரனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, தனது இயற்கையான நிறைநிலையால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டுக்கும் முரணான உமது நடவடிக்கைகளையும், நீதிமான்களின் நடத்தையையும் கருதிப் பாரும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் கெடுபுகழ் பெற்ற நீர், அடுத்ததில் {மறு உலகில்} துன்பங்களையே அறுவடை செய்வீர்.
உமது மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் நீர், அவர்களை {பாண்டவர்களை} விலக்கி வைத்துவிட்டு, ஐயத்திற்குரிய சொத்தை அனுபவிக்க நினைக்கிறீர். அநீதியான இந்தச் செயல், உலகத்தில் உரக்கப் பேசப்படுகிறது. எனவே, ஓ! பாரதர்களில் முதன்மையானவரே, இந்த உமது செயல் உமக்குத் தகுந்ததன்று. ஞானமற்றவன், பிறப்பால் தாழ்ந்தவன், கொடூரன், நீண்ட நாள் பகை கொள்பவன், க்ஷத்திரிய அறங்களில் உறுதியாக நிலைத்து நிற்காதவன், சக்தியற்றவன், தீய மனநிலை கொண்டவன் ஆகியோரையும், உண்மையில், இது போன்ற குறிகளைத் தன்னிடம் கொண்டவனையும் பெருந்துன்பமே பின்தொடர்கிறது.
ஒருவன் நல்ல குலத்தில் பிறப்பதும், பலவானாவதும், புகழ்பெறுவதும், பல்வேறு கதைகளை அறிவதும், வாழ்வின் சுகங்களை அனுபவிப்பதும், புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுவதும், எப்போதும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள அறம் மறம் ஆகியவற்றின் தெரிவுமுறை அறிவதும் ஒரு மனிதனின் நல்லூழின் அறத்தினாலேயே நிகழ்கிறது.
புத்திக்கூர்மையும், துன்ப காலங்களின் அறம் மற்றும் மறம் ஆகியவற்றைத் தெரிவு செய்யும் முறையையும், அறத்தின் சடங்குகளையும் அறிந்த ஆலோசகர்களில் முதன்மையானவர்களால் கவனிக்கப்படும் எந்த மனிதன், தன் துறைகள் அனைத்தின் பயன்பாடுகளையும் தக்க வைத்துக் கொண்டும், தீச்செயல்களை ஆற்ற முடியும்?
உமது வேலையில் என்றும் அர்ப்பணிப்புடன் இருக்கும் இந்த ஆலோசகர்கள் {அமைச்சர்கள்}, இங்கே ஒற்றுமையாகக் காத்திருக்கின்றனர். (பாண்டவர்கள் தங்கள் பங்கைத் திரும்பப் பெறப் போவதில்லை என்ற) இதுவே அவர்களது உறுதியான தீர்மானமாக இருக்கிறது. எனவே, சூழ்நிலையின் சக்தியால் குருக்களின் அழிவு நேரப்போகிறது என்பது உறுதி. குற்றங்களால் தூண்டப்பட்டால், யுதிஷ்டிரன் உங்களுக்குத் தீமையை வேண்டி, தன் பாவங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்து, குருக்களை முன்கூட்டியே அழித்துவிடுவான். அந்தச் செயலின் பழி இவ்வுலகில் உமதே ஆகும்.
உண்மையில், பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன் இவ்வுலகத்தை விட்டு சொர்க்கத்துக்கே உயர்ந்து, அங்கே பெரிதாக மதிக்கப்பட்டான் என்றால், இது தேவர்களின் விருப்பத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? தனிப்பட்டவரின் முயற்சியால் ஆவது ஒன்றுமில்லை என்பதையே இது நிறுவுகிறது. இந்தக் காரியத்தில் எந்த ஐயமும் இல்லை.
உயர்பிறப்பு, வீரம் ஆகிய குணங்களைக் கண்டு, வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ நம்பி, (மனிதர்களிடம் உள்ள) வளமை, வறுமை, உறுதி, உறுதியற்ற தன்மை ஆகியவற்றையும் கண்ட மன்னன் பலி {மஹாபலி}, இதன் காரணங்களைத் தேடி, (முற்பிறவிகளில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த பிறவிகளுடைய சங்கிலித்தொடரின்) தொடக்கத்தைக் கண்டடையத் தவறி, காலமே அனைத்துக்கும் காரணம் என்று கருதினான்.
கண், காது, மூக்கு, தீண்டல் {தோல்}, நாக்கு ஆகியனவே {ஐம்பொறிகளே} ஒரு மனிதனின் ஞானத்துக்கான கதவுகள். ஆசை ஒடுங்கினால், இவை தங்களையே திருப்தி செய்து கொள்ளும். எனவே, மகிழ்ச்சியாகவும், அலட்டிக் கொள்ளாமலும் ஒருவன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதில் வேறு விதமாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். சரியாகச் செய்யப்பட்டால், ஒரு மனிதனின் செயல்கள், அவை விரும்பிய விளைவை நிச்சயம் ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். இப்படியே தாய் மற்றும் தந்தையின் செயலால் பிறந்த குழந்தை, உணவும், நீரும் கொடுத்து முறையாகப் பராமரிக்கப்படும்போது வளர்கிறது. மனிதர்கள் இவ்வுலகில், அன்பு, வெறுப்பு, இன்பம், வலி, புகழ், பழி ஆகியவற்றுக்கு ஆட்படுகிறார்கள். ஒரு மனிதன் நேர்மையாக நடந்து கொள்ளும்போது புகழப்படுகிறான்.
கணக்கிலடங்கா உயிர்களின் அழிவை நிச்சயம் கொண்டு வரப்போகும் பாரதர்களின் மன வேறுபாடுகளுக்கு (அதற்கு நீரே வேர் என்பதால்), உம்மையே நான் குற்றஞ்சாட்டுவேன். அமைதி தீர்மானிக்கப்படவில்லையென்றால், {அந்த} உமது தவறால், காய்ந்த புற்குவியலை {வைக்கோலை} எரிக்கும் சுடர்மிகும் நெருப்பைப் போல அர்ஜுனன் குருக்களை எரித்துவிடுவான்.
ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, எந்தத் தடையையும் ஏற்காத உமது மகன் சொல் கேட்டு, பகடையாட்டத்தின் போது சச்சரவைத் தவிர்க்காமல், வெற்றி மகுடம் தரிக்கப்பட்டதாகக் கருதிக் கொள்பவர் அனைத்து உலகிலும் நீர் ஒருவரே. இப்போது அதன் (உமது பலவீனத்தின்) கனியைப் {பலனைப்} பாரும். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நன்றிமிக்க ஆலோசகர்களை {விதுரர் போன்றோரை} மறுத்து, நம்பத்தகாதவர்களை {சகுனி, கர்ணன் போன்றோரை} ஏற்று, ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, {அந்த} உமது பலவீனத்தின் காரணமாக, இந்தப் பரந்த செழிப்பான பேரரசை உம்மால் தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை.
எனது விரைந்த பயணத்தினால் களைப்பும் சோர்வும் அடைந்திருக்கும் நான், படுக்கைக்குச் செல்ல உமது அனுமதியைக் கேட்கிறேன். ஓ! மனிதர்களில் சிங்கமே {திருதராஷ்டிரரே}, நாளை காலை, சபா மண்டபத்தில் ஒன்றாகக் கூடும் குருக்கள், அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} வார்த்தைகளைக் கேட்பார்கள்” என்றான் {சஞ்சயன்}.
யார் ஞானி? – உத்யோக பர்வம் பகுதி 33அ-உறக்கமிழந்த திருதராஷ்டிரன் விதுரனை வரவழைப்பது; யார் யாருக்கு உறக்கமில்லாமல் போகும் என விதுரன் சொல்வது; தனக்கு நல்லதைச் சொல்லுமாறு விதுரனை திருதராஷ்டிரன் வேண்டுவது; ஞானி என்பவன் யார் என்று ஒரு பெரிய நீண்ட பட்டியலை விதுரன் சொல்வது; ஞானியிடம் {பண்டிதனிடம்} உள்ள குணங்களை விதுரன் திருதராஷ்டிரனிடம் எடுத்துரைப்பது …
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், வாயில் காப்போனிடம், “நான் விதுரனைக் காண விரும்புகிறேன். தாமதமில்லாமல் அவனை {விதுரனை} இங்கே அழைத்து வா” என்றான்.
திருதராஷ்டிரனனால் அனுப்பப்பட்ட அந்தத் தாதுன் க்ஷத்ரியிடம் {விதுரனிடம்} சென்று, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பலமிக்க மன்னனான நமது தலைவன் {திருதராஷ்டிரன்} உம்மைக் காண விரும்புகிறார்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட விதுரன் (புறப்பட்டு), அரண்மனைக்கு வந்து வாயில் காவலனிடம், “என் வரவை திருதராஷ்டிரருக்குத் தெரிவிப்பாயாக” என்றான். அந்த வாயில் காவலன் திருதராஷ்டிரனிடம் சென்று, “ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, உமது கட்டளையின் பேரில் விதுரர் இங்கே வந்திருக்கிறார். அவர் உமது பாதங்களைக் காண விரும்புகிறார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடுவீராக” என்றான்.
அதற்குத் திருதராஷ்டிரன் {வாயில்காப்போனிடம்}, “முற்போக்குப் பார்வையும், பெரும் ஞானமும் கொண்ட விதுரன் உள்ளே வரட்டும். விதுரனைக் காண நான் விரும்பாமலோ, தயார் நிலையில் இல்லாமலோ எப்போதும் இருந்ததில்லை” என்றான். பிறகு அந்த வாயில் காவலன் வெளியே சென்று விதுரனிடம் பேசினான். “ஓ! க்ஷத்ரி, ஞானமுள்ள மன்னனின் அந்தப்புரத்தில் நுழைவீராக. உம்மைக் காண எப்போதும் விரும்பாமலில்லை என்று மன்னர் சொல்கிறார்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திருதராஷ்டிரனின் அறையை அடைந்த விதுரன், சிந்தனையில் மூழ்கியிருந்த அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {திருதராஷ்டிரனிடம்}, கூப்பிய கரங்களுடன், “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, நான் விதுரன். உமது கட்டளையின் பேரில் இங்கு வந்திருக்கிறேன். {என்னால்} ஏதாவது செய்யப்படவேண்டுமானால் உத்தரவிடும். இதோ நான் இங்கே இருக்கிறேன்!” என்றான் {விதுரன்}.
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! விதுரா, சஞ்சயன் திரும்பிவிட்டான். என்னைக் கடிந்து கொண்டு அவன் {சஞ்சயன்} சென்றுவிட்டான். சபையின் மத்தியில், நாளை அவன் அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} செய்தியை வழங்குவான். அந்தக் குரு வீரன் {யுதிஷ்டிரன்} என்ன செய்தி அனுப்பியிருப்பான் என்பதை என்னால் இன்று உறுதி செய்ய இயலவில்லை. எனவே, எனது உடல் எரிகிறது {கொதிக்கிறது}, அது என்னைத் தூக்கமில்லாமல் செய்துவிட்டது. தூக்கமின்மையும், {உடல்} எரிச்சலும் {கொதிப்பும்} கொண்ட மனிதனுக்கு எது நன்மையானது என்பதை எங்களுக்குச் சொல். ஓ! குழந்தாய், நீ அறம் மற்றும் பொருளை {தர்மார்த்தங்களை} அறிந்திருக்கிறாய் .பாண்டவர்களிடமிருந்து சஞ்சயன் திரும்பி வந்ததிலிருந்து, எனது இதயம் அமைதியை அறியவில்லை. அவன் {சஞ்சயன்} என்ன சொல்லப்போகிறானோ என்ற அச்சத்தால் நிறைந்து இருக்கும் என் புலன்கள் அனைத்தும் குழம்பி இருக்கின்றன” என்றான் {திருதராஷ்டிரன்}.
{உறக்கமற்ற நிலை}
விதுரன் {திருதராஷ்டிரனிடன்}, “திருடன், காமுகன், தன் செல்வமனைத்தையும் இழந்தவன், வெற்றியடையத் தவறியவன், பலவீனமானவன், பலமான மனிதனால் தாக்கப்பட்டவன் ஆகியோரை உறக்கமின்மை ஆட்கொள்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பெரிய துயரங்களுக்கு நீர் ஆட்படவில்லை என நான் நம்புகிறேன். பிறர் பொருளின் மீது பேராசை கொண்டதால் நீர் வருந்தவில்லை எனவும் நான் நம்புகிறேன்” என்றான்.
{நன்மையானதும் அறநெறி நிரம்பியதும்}
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நன்மை தரக்கூடியதும், உயர்ந்த அறநெறிகள் நிறைந்தவையுமான வார்த்தைகளை நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். இந்த அரச முனிவர்களின் {ராஜரிஷிகளின்} குலத்தில், நீ மட்டுமே ஞானமுள்ளோரால் போற்றப்படுகிறாய்” என்றான்.
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “அனைத்து அறமும் அருளப்பட்ட மன்னன் (யுதிஷ்டிரன்), மூவுலகையும் ஆட்சி செய்யத் தகுந்தவனாவான்; இருப்பினும், ஓ! திருதராஷ்டிரரே, உம் தரப்பில் வைத்துக் கொள்ள அவன் எவ்வளவுதான் தகுந்தவனாக இருப்பினும், உம்மால் நாடுகடத்தப்பட்டான். அவன் கொண்டதுக்கெல்லாம் நேர்மாறான குணங்களையே நீர் கொண்டிருக்கிறீர்.
என்னதான் அறம் மற்றும் அறநெறியுடன் இருந்தாலும், நீர் பார்வையற்றவராக இருப்பதால் {குருடராக இருப்பதால்}, முறையான பங்கை இன்னும் கொடுக்காமல் இருக்கிறீர். குற்றமற்ற தன்மை, அன்பு, நீதி, உண்மை மற்றும் சக்தியில் கொண்ட விருப்பம் ஆகியவற்றின் விளைவாலும், உம்மீது வைத்திருக்கும் மரியாதையாலும், எண்ணிலடங்கா தீங்குகளை யுதிஷ்டிரன் பொறுமையாகத் தாங்கிக் கொண்டே வருகிறான்.
பேரரசின் பராமரிப்பைத் துரியோதனன், சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன், துச்சாசனன் ஆகியோரிடம் கொடுத்த பிறகு, செழிப்பில் நீர் எவ்வாறு நம்பிக்கை கொள்ளலாம்?
{ஞானத்தின் குறியீடுகள்}
வாழ்வின் உயர்ந்த நிலைகளில் பணியாற்றாமல் தன்னறிவு {ஆத்ம ஞானம், சுயஞானம்}, முயற்சி {உழைப்பு}, பொறுமை, அறத்தில் உறுதி ஆகியவற்றைக் கொண்டவன் ஞானி {wise man} எனப்படுகிறான். மேலும், செயல்களில் ஈடுபாடு, புகழ்ச்சிக்குத் தகுதி, பழியைத் தவிர்ப்பது, நம்பிக்கை, மதிப்பு ஆகியவை ஞானம் கொண்ட மனிதனின் குறிகளாகும் {அங்கலட்சணமாகும்}. கோபமோ, மகிழ்ச்சியோ, செருக்கோ {கர்வமோ}, போலிப்பணிவோ, மலைப்போ, மாயையோ, ஒருவனை வாழ்வின் விளிம்புகளிலிருந்து நழுவச் செய்யவில்லையென்றால் அவன் ஞானி என்றே கருதப்படுவான்.
ஒருவனது செயல்களின் நோக்கங்களும், பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளும், பகைவரிடம் மறைக்கப்பட்டே இருந்தாலும், செய்த பிறகு மட்டுமே ஒருவனது செயல் அறியப்பட்டாலும் அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். எவனது பரிந்துரைக்கப்பட்ட செயல்கள் வெப்பத்தாலோ, குளிராலோ, அச்சத்தாலோ, செல்வத்தாலோ, வறுமையாலோ தடைப்படாமல் இருக்கிறதோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். எவனுடைய தீர்மானங்கள் விருப்பத்தில் இருந்து விடுபட்டு அறம் செல்வம் ஆகிய இரண்டையும் பின்தொடர்கின்றனவோ, எவன் இன்பத்தை அலட்சியம் செய்து, இரு உலகுக்கும் தகுந்த சேவைகளைத் தேர்ந்தெடுக்கிறானோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி முயற்சி செய்பவர்களும் {உழைப்பவர்களும்}, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திச் செயல்படுபவர்களும், எதையும் முக்கியமற்றதாக அலட்சியம் செய்யாதவர்களும் ஞானி என்று அழைக்கப்படுகிறார்கள்.
விரைந்து புரிந்து கொள்பவனும், பொறுமையாகக் கேட்பவனும், விருப்பத்தால் அல்லாமல் {காரியங்களை} அறிந்து கொண்டு தன் நோக்கங்களைத் தொடர்பவனும் {ஆசையால் அடையாமல் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அடைபவனும்}, கேட்கப்படாமல் அடுத்தவர் காரியங்களில் தனது மூச்சைக்கூட விடாதவனும், ஞானத்தின் முதன்மையான குறியீட்டைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடைய முடியாத பொருட்களுக்காக முயற்சிக்காதவர்களும், தொலைந்தவற்றுக்காக வருந்தாமல் இருப்பவர்களும், பேராபத்துக்களுக்கு மத்தியில் இருள் சூழ்ந்த மனத்தால் பாதிக்கப்படாதவர்களும், ஞானம் கொண்ட அறிவினை உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு வேலையை ஆரம்பித்த பிறகு அது முடிவடையும் வரை பெருமுயற்சி செய்பவனும், தன் நேரத்தை எப்போதும் வீணாக்காதவனும், தனது ஆன்மாவை கட்டுப்படுத்தி வைத்திருப்பவனும் ஞானிகளாகக் கருதப்படுகின்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஞானமுள்ளோர் எப்போதும் நேர்மையான செயல்களில் மகிழ்ந்து, மகிழ்ச்சியானதையும், செழிப்பானதையுமே செய்வார்கள், எது நன்மையானதோ, அதை அவர்கள் வெறுப்பதில்லை.
கங்கையின் வழியில் இருக்கும் ஒரு தடாகத்தைப் போல, எவன் மரியாதைகளில் மகிழ்ச்சி அடையவில்லையோ, ஏளனங்களுக்காக வருந்துவதில்லையோ, கலங்காமல், குளிர்ச்சியாக நீடிக்கிறானோ, அவனே ஞானி என்று எண்ணப்படுகிறான். (அனைத்தும் அழிவுக்கு உட்பட்டதே என்று) அனைத்து உயிரினங்களையும் அறிந்தவனும், அனைத்துச் செயல்களின் இணைப்புகளையும் நன்கறிந்தவனும், (தங்களது பொருட்களை) அடைய மனிதர்கள் கைக்கொள்ளும் வழிகளைக் குறித்த அறிவில் நிபுணத்துவம் வாய்ந்தவனும், ஞானி என எண்ணப்படுகிறான். எவன் துணிவுடன் பேசுகிறானோ, பல்வேறு தலைப்புகளில் உரையாடுகிறானோ, பேச்சுக்கலை அறிவியலை {தர்க்க சாஸ்திரத்தை} அறிந்தவனும், மேதைமை உடையவனும், புனித நூல்களில் உள்ளவற்றுக்குப் பொருளை விளக்கிச் சொல்பவனும் ஞானி என எண்ணப்படுகிறார்கள். எவன், காரணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட கல்வியைக் கற்கிறானோ, எவனுடைய காரணங்கள் {கொள்கைகள்} சாத்திரங்களைப் பின்பற்றி வருகிறதோ, நல்லவர்களை மதிப்பதில் எவன் எப்போதும் தவறாதவனாக இருக்கிறோனோ, அவன் ஞானி என்று அழைக்கப்படுகிறான்.
மகிழ்ச்சி மற்றும் துயரைக் கொடுப்பவை! – உத்யோக பர்வம் பகுதி 33இ-விதுர நீதி – 3}வாழ்வில் மகிழ்ச்சியையும், துயரத்தையும் தரக்கூடிய இரண்டானவை முதல் ஒன்பதானவை வரை திருதராஷ்டிரனுக்கு விதுரர் விளக்குவது
{இரண்டானவை}
{விதுரன் சொன்னான்} “போரிடத் திறனற்ற மன்னன், புனித இடங்களுக்குப் பயணம் போகாத அந்தணன் ஆகிய இருவரையும் பொந்துகளில் வாழும் விலங்குகளை {எலிகளை} ஒரு பாம்பு விழுங்குவதுபோல, இந்தப் பூமி விழுங்கிவிடும். கடுஞ்சொல் தவிர்ப்பது, தீயவற்றைப் புறக்கணிப்பது ஆகிய இரண்டையும் செய்வதால் ஒரு மனிதன் உலகில் புகழடைகிறான்.
ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, தங்கள் பாலினத்தைச் சேர்ந்த பிறர் {பெண்கள்} ஆண்கள் மேல் ஆசை கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, வெறுமனே ஆண்களை விரும்பும் பெண்களும், பிறரால் ஒருவர் வழிபடப்படுகிறார் என்பதற்காக, வெறுமனே மற்றவரை வழிபடும் ஒருவன் ஆகிய இருவரும் தங்களுக்கென்று சுய விருப்பம் இல்லாதவர்கள் ஆவார்கள்.
ஏழையின் ஆசைகள், சக்தியற்றவன் கோபம் ஆகிய இரண்டும், உடலை வருத்தும் கூரிய முட்களைப் போன்றனவாகும். முயற்சியற்ற {உழைக்காத} இல்லறத்தான், வேலைகள் கொண்ட பிச்சைக்காரன் {சந்நியாசி} ஆகிய இருவரும் தங்களுடைய பொருந்தாச் செயல்களால் ஒளிருவதேயில்லை.
மன்னிக்கும் தன்மையோடிருக்கும் {பொறுமையோடிருக்கும்} சக்திமிக்க மனிதன், ஈகை குணம் கொண்ட ஏழை ஆகிய இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைவிட உயர்ந்த பகுதியில் {வாழ்வது போல, இவ்வுலகில்} வாழ்வார்கள். நியாயமாக அடைந்த பொருட்களில், தகுதியற்றவர்களுக்கு அளிக்கப்படும் கொடை, தகுந்தவர்களுக்கு மறுக்கப்படும் கொடை ஆகிய இரண்டும் தவறான பயன்பாடு கொண்டவை என்றே கருத வேண்டும். தானமளிக்காத செல்வந்தன், செருக்குடைய {கர்வமுடைய} ஏழை ஆகிய இருவரையும், கழுத்தில் பாரமிக்க கற்களைக் கட்டி நீருக்குள் எறிய வேண்டும். யோகத்தில் {யோகா} சாதித்த பிச்சைக்காரன் {சந்நியாச}, வெளிப்படையான போரில் விழுந்த {கொல்லப்பட்ட} வீரன், ஆகிய இருவரும், {சொர்க்கத்திற்கு வழியாக இருக்கக்கூடிய} சூரியனையே துளைத்துவிடக் கூடியவர்களாவர்.
{மூன்றானவை}
ஓ! பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வேதங்களை நன்கறிந்தவர்கள், மனிதர்களின் வழிகள் நன்மை [1], மத்திமம் [2], தீயவை [3] என்பவற்றைச் சார்ந்தவை {மூன்றானவை} என்று சொல்லியிருக்கின்றனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் [1]நல்லவர்களாகவும், [2]அக்கறையற்றவர்களாகவும், [3]தீயவர்களாகவும் {மூன்று வகையிலேயே} இருக்கின்றனர். எனவே, அவரவருக்குப் பொருந்தும் வகையிலான வேலைகளில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்.(1] அமைதி, [2] கொடுத்தல் மற்றும் மிரட்டல், [3] போரிடுவது {தண்டிப்பது} என்றும் கொள்ளலாம்.)
[1]மனைவி, [2]அடிமை, [3]மகன் ஆகிய மூவரும் தங்களுக்கு என்று சொத்து வைத்துக் கொள்ள முடியாது. அவர்களால் ஈட்டப்படும் அனைத்தும், அவர்களை உரியவர்களுக்கே சொந்தமாகும்.
[1]பிறர் பொருளைத் திருடுதல், [2]பிறர் மனைவி மீது மோகம் கொள்ளுதல், [3]நண்பனை மீறுதல் ஆகிய மூன்று குற்றங்களில் இருந்தும் பெரும் அச்சம் எழுகிறது.
ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் [1]காமம், [2]கோபம், [3]பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் வாயில்களாகும். எனவே, அனைவரும் இவற்றைத் {காமம், கோபம், பேராசை ஆகியவற்றைத்} துறக்க வேண்டும்.
பேராபத்தில் இருக்கும்போதுகூட, [1]தொண்டன், [2]“நான் உனதே” என்று சொல்லி உம் பாதுகாப்பை நாடும் ஒருவன், [3]உமது வசிப்பிடத்திற்கு வந்த ஒருவன் ஆகிய மூவரையும் கைவிடக்கூடாது.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, [1]வரம் அளிப்பது, [2]மன்னனாவது, [3]மகனைப் பெறுவது ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கணக்கில் எடுத்தாலும் ஆபத்திலிருக்கும் எதிரியை விடுவிப்பதே [4] தகுதியில் பெரியதாகும்(எதிரியான யுதிஷ்டிரன், தன் உறவினர்களைக் கொல்வதிலிருந்து அவனை விடுவிப்பது என்பதை மறைபொருளாக விதுரர் சொல்வதாக இங்கே விளக்கப்படுகிறது.)
{நான்கானவை}
ஒரு மன்னன் சக்திமிக்கவனாக இருப்பினும், [1]சிறுபுத்தி கொண்டோர், [2]காலந்தாழ்த்துவோர், [3]சோம்பேறி, [4]மேற்புகழ்ச்சி {முகத்துதி} செய்வோர் ஆகிய நான்கு பேரிடம் ஒருபோதும் ஆலோசனை செய்யக்கூடாது.
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, செழிப்பால் மகுடம்சூட்டப்பட்டு இல்லற வாழ்வு வாழ்பவனான உம்மிடம், [1]இரத்த உறவு கொண்ட முதியவர்கள், [2]உறவினர்கள், [3]வறுமையில் விழுந்த உயர் பிறப்பாளர்கள், [4]ஏழை நண்பர்கள் மற்றும் பிள்ளையற்ற சகோதரிகள் ஆகிய நால்வரையும் வசிக்கச் செய்வீராக.
ஓ! பலமிக்க மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} பிருஹஸ்பதி கேட்கப்பட்ட போது, தேவர்கள் தீர்மானம், அறிவார்ந்தவர்களின் புரிதல்கள் {அவர்கள் ஒரு காரியத்தைப் புரிந்து கொள்ளும் முறை}, கற்றோரின் பணிவு, பாவிகளின் அழிவு ஆகிய நான்கும் ஒரே நாளில் நிகழக்கூடியதும், உடனே பலனளிக்கக்கூடிய திறம் கொண்டவையுமாகும் {அவை நான்கும் உடனே பலிக்கும்} என்று தீர்மானித்தார்.
அச்சத்தை விலக்கவல்லவைகளான [1]அக்னி ஹோத்ரம், [2]பேசாநோன்பு {மௌன விரதம்}, [3]கல்வி மற்றும் [4](பொதுவான) வேள்வி ஆகிய நான்கும், முறையற்ற வகையில் செய்யப்பட்டால், அவை அச்சத்தையே தரும்.
{ஐந்தானவை}
ஓ! பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தந்தை, தாய், நெருப்பு {அக்னி}, ஆன்மா, குரு ஆகிய ஐந்து நெருப்புகளும் ஒரு மனிதனால் மரியாதையுடன் வழிபடப்பட வேண்டியவை.
தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள், பிச்சைக்காரர்கள், விருந்தினர்கள் ஆகிய ஐவருக்குச் சேவையாற்றுவதால் ஒரு மனிதன் இவ்வுலகில் பெரும்புகழை அடைகிறான்.
நண்பர்கள், எதிரிகள், பாகுபாடற்றவர்கள், {உம்மைச்} சார்ந்து {நம்பி} இருப்பவர்கள், {உம்மைப்} பராமரிக்க உரிமையுள்ளவர்கள் ஆகிய ஐயவர், நீர் எங்கே சென்றாலும் உம்மைத் தொடர்வார்கள்.
{கண், காது, மூக்கு, நாக்கு, உடல் [தோல்] ஆகிய} ஐம்பொறிகளில் ஒரு பொறி ஓட்டையானால்கூட {பற்றுடையதானால்}, தோலால் செய்யப்பட்ட ஓட்டைப் பாத்திரத்தில் இருந்து நீர் ஒழுகுவது போல, ஒருவனுடைய அறிவு அதன் {அந்தப் பொறியின் குறைபாடு} வழியாக வெளியே நழுவிவிடும்.
{ஆறானவை}
உறக்கம், அயர்வு {தூக்கக் கலக்கம்}, அச்சம், கோபம், சோம்பல், காலதாமதம் ஆகிய ஆறு குறைகளையும் செழிப்பை அடைய விரும்பும் மனிதன் தவிர்க்க வேண்டும்.
சாத்திரங்களுக்கு விளக்கமளிக்க இயலாத குரு, கல்லாத புரோகிதர், பாதுகாக்க இயலாத மன்னன், ஏற்கவியலா {இனிமையற்ற} வார்த்தைகள் பேசும் மனைவி, வயலுக்குச் செல்ல விரும்பா மாட்டு மந்தையாளன் {இடையன்}, காட்டுக்காக கிராமத்தை துறக்க விரும்பும் நாவிதர் ஆகிய அறுவரையும் உடைந்த படகை கடலில் தள்ளுவது போலத் துறக்க வேண்டும்.
உண்மை, ஈகை {தானமளித்தல்}, விடாமுயற்சி {தளர்விலா உழைப்பு}, இரக்கம், மன்னிக்கும் மனநிலை, பொறுமை ஆகிய ஆறு குணங்களையும் ஒரு மனிதன் ஒருபோதும் விடக்கூடாது.
பசுக்கள், தொண்டு, உழவு {விவசாயம்}, மனைவி, கல்வி, சூத்திரனின் செல்வம் ஆகிய ஆறும் புறக்கணிக்கப்பட்டால் உடனே அழிந்து விடும்.
கல்வி கற்ற சீடர்கள் தங்கள் குருக்களையும்; மணமானவர்கள் தங்கள் அன்னையரையும்; விருப்பங்கள் ஈடேறியவர்கள், பெண்களையும்; வெற்றியடைந்தவர்கள், உதவி செய்தவர்களையும்; ஆற்றைக் கடந்தவர்கள், {தங்களைச் சுமந்த} படகையும், பிணி குணமான நோயாளிகள், மருத்துவர்களையும் என இந்த ஆறு பேரும், தங்களுக்குக் கடமையாற்றியவர்களை மறந்து போவார்கள்.
உடல்நலன், கடன்படாநிலை, வீட்டில் வாழ்தல் {வெளிநாடு செல்லாமல் பிழைக்கக்கூடிய வாய்ப்பு உள்ள நிலை}, நன்மனிதர்களின் துணை, வாழ்வாதாரங்களுக்கான வழிகளில் உறுதி, அச்சமற்று இருத்தல் ஆகிய ஆறும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.
பொறாமையுள்ளோர், அருவருப்புள்ளோர், மனநிறைவற்றோர், கோபமுள்ளோர், எப்போதும் சந்தேகமுள்ளோர், பிறரின் நற்பேறைச் சார்ந்து இருப்போர் ஆகிய அறுவரும் எப்போதும் பரிதாப நிலையிலேயே {துக்கமாகவே} இருப்பர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, செல்வத்தை அடைதல், தடையற்ற உடல் நலன், இனிய பேச்சுடைய அன்பிற்குரிய மனைவி, கீழ்ப்படியும் மகன், இலாபகரமான அறிவு {செல்வம் ஈட்டக்கூடிய திறமை} ஆகிய ஆறையும் கொண்ட மனிதர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மனித இதயத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும் {காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸரியம் [அதாவது] ஆசை, கோபம், பேராசை, மோகம், வெறி, பொறாமை ஆகிய} அந்த ஆறையும் அடக்கியவன், தனது புலன்களை {பொறிகளை} வென்று, எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை. எனவே, அவன் ஆபத்துகளுக்கு இடம் கொடுப்பதில்லை.
திருடர்கள், பொறுப்பற்றவர்களாலும், மருத்துவர்கள், நோயாளிகளாலும், பெண்கள், காமத்தால் பாதிக்கப்பட்டவர்களாலும், புரோகிதர்கள், வேள்வி செய்பவர்களாலும், மன்னன், சண்டையிடுபவர்களாலும், கடைசியாக, கற்றோர், கல்லாதோராலும் என இந்த அறுவரும் மற்ற அறுவரால் வாழ்கின்றனர்.
{ஏழானவை}
உறுதியாக நிறுவப்பட்ட ஏகாதிபதிகளுக்குக் கூட அழிவை ஏற்படுத்தக் கூடியவையும், துயரத்தைத் அளிக்கக்கூடியவையுமான, பெண்கள், பகடை, வேட்டை, மது, கடுஞ்சொல், கடுந்தண்டனை, செல்வத்தை வீணடித்தல் ஆகிய ஏழு தீமைகளை ஒரு மன்னன் கைவிட வேண்டும்.
{எட்டானவை}
அந்தணர்களை வெறுப்பது, அந்தணர்களுடன் சச்சரவு, அந்தணர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்வது, அந்தணனின் உயிரைப் பறிப்பது, அந்தணர்களை நிந்திப்பதில் இன்பம் கொள்வது, அந்தணர்களின் புகழைக் கேட்டு வருந்துவது, {அறச்} சடங்குகளில் அவர்களை {அந்தணர்களை} மறப்பது, அவர்கள் {அந்தணர்கள்} எதையும் கேட்கும் போது, அவர்களைப் பழிவாங்குவது ஆகிய எட்டும் அழிவடைய விதிக்கப்பட்ட மனிதனின் உடனடி அறிகுறிகளாகும். அறிவுடைய மனிதன் இந்த வரம்புமீறல்களை அறிந்து கொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஓ! பாரதரே {திருதராஷ்டரரே}, நண்பர்களுடன் சந்திப்பு, அபரிமிதமான செல்வத்தை அடைவது, மகனின் அணைப்பு, கலவி, சரியான நேரங்களில் நண்பர்களுடன் உரையாடல், தன் தரப்பைச் சார்ந்த மனிதரின் முன்னேற்றம் {மேன்மை}, எதிர்பார்ப்பை {விரும்பியதை} அடைவது, சமூகத்தில் மரியாதை ஆகிய எட்டும் வாழ்வில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியின் சாரமேயாகும், இவை யாவையும் ஒருவனால் இங்கே {இவ்வுலகில்} மட்டுமே அடைய முடியும்.
அறிவு, உயர்பிறப்பு, தன்னடக்கம், கல்வி, ஆற்றல், நிதானமான பேச்சு, தன் சக்திக்குத் தக்க கொடை, செய்நன்றி அறிதல் ஆகிய எட்டு குணங்களும் ஒரு மனிதனைப் புகழடையச் செய்கின்றன.
ஒன்பதானவை
இந்த வீட்டுக்கு ஒன்பது வாயில்கள், மூன்று தூண்கள் மற்றும் ஐந்து சாட்சிகளாகும். அது ஆன்மாவால் நிரம்பியிருக்கிறது. இவையனைத்தையும் உண்மையில் அறிந்த ஞானமுள்ளவனே {கல்வி} கற்றவனாவான். [5]{மூச்சு விடும் செயல்பாடுகளான} இடகலை {இளை}, பிங்கலை {பிங்களை}, சுழிமுனை {சூஷுமனை} எனும்] மூன்று தூண்களில் நிற்கும் வீடான இந்த உடலுக்கு [இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்கு துவாரங்கள், ஒரு வாய், ஆசனவாய், குறி ஆகிய] ஒன்பது ஓட்டைகள் என்ற வாயில்களும், ஐம்பொறிகள் அந்த வீட்டில் வசித்து செயல்படுபவையாக – சாட்சிகளாக இருக்குன்றன. உடலாகிய அந்த வீட்டில் ஆன்மா என்ற தலைவன் வசிக்கிறான். அதை உண்மையில் அறிந்தவனே கல்விமானாவான் என்பதே பொருள்}.
ஆரியன் யார்? – உத்யோக பர்வம் பகுதி 33ஈ-பத்தானவை குறித்து விதுரன் திருதராஷ்டிரனிடம் சொல்வது; யாரைச் செழிப்பு அடையும்? மனிதர்களுக்கு அதிகாரியாகக் கருதப்படுபவன் யார்? எந்த மன்னனை செழிப்பு வந்து அடையும்? எவன் ஞானி? எவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்? எங்கும் புகழப்படுபவன் எவன்? அனைவராலும் எப்போதும் விரும்பப்படுபவன் எவன்? ஆரியர்களால் கருதப்படும் ஆரியர்களில் சிறந்தவன் எவன்? தேவர்கள் எவனுக்குச் செழிப்பைத் தருவார்கள்? கருத்தில் கொள்ளவும், பயன்படுத்தவும் ஏற்றவை எவை? எவனிடம் துயரங்கள் விலகி நிற்கின்றன? என்பது யாவற்றையும், பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிடுவதே சிறந்தது என்றும் விதுரன் திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொல்வது…
{பத்தானவை}-{விதுரன் சொன்னான்} “ஓ! திருதராஷ்டிரரே, 1.போதையில் இருப்பவன், 2.கவனம் குறைந்தவன், 3.உளறுபவன், 4.களைப்பாக இருப்பவன், 5.கோபம் கொண்டவன், 6.பசியோடு இருப்பவன், 7.அவசரப்படுபவன், 8.பேராசை கொண்டவன், 9.பயம் கொண்டவன், 10.காமம் கொண்டவன் ஆகிய பத்து பேரும் அறம் எது என்பதை அறிய மாட்டார்கள். இது தொடர்பாக, சுயோதனனுக்கும் {சூதந்வாவுக்கும்} அசுரர்கள் தலைவனுக்கும் (பிரஹலாதனுக்கும்) இடையில், பிந்தையவனின் {பிரஹலாதனின்} மகன் சம்பந்தமாக நடந்த பழங்கதை ஒன்று மேற்கோள் காட்டப்படுகிறது.
காமத்தையும், கோபத்தையும் துறந்து, தகுந்தவனுக்குச் செல்வத்தை அளித்து, பாகுபாட்டை அறிந்து, கல்வி கற்று, சுறுசுறுப்பாக இருக்கும் மன்னனே அனைத்து மனிதர்களுக்கும் அதிகாரியாகக் கருதப்படுகிறான். பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்பவனும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளிப்பவனும், தண்டனையின் சரியான அளவை அறிந்தவனும், கருணை எப்போது காட்டப்பட வேண்டும் என்பதை அறிந்தவனுமான மன்னனையே செழிப்பு அடைகிறது.
பலமற்ற எதிரியைக் கூட அலட்சியம் செய்யாதவனும், எதிரியைப் பொறுத்தமட்டில் சந்தர்ப்பத்திற்காக ஆவலாகக் காத்திருந்து புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனும்; தன்னைவிட பலமான மனிதர்களிடம் பகைமையை விரும்பாதவனும்; சரியான நேரத்தில் ஆற்றலை வெளிப்படுத்துபவனும் ஞானியாவான். ஏற்கனவே வந்துவிட்ட துயரத்துக்காக வருந்தாதவனும், தனது அனைத்துப் புலனங்களையும் குவியச் செய்து முயற்சிப்பவனும், துயரமான காலத்தைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனுமே நிச்சயமாக மனிதர்களில் முதன்மையானவன் ஆவன். அவனது எதிரிகள் அனைவரும் வீழ்த்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.
பயனில்லாத நம்பிக்கையுடன் வாழ்வைக் கழிக்காதவனும், பாவிகளுடன் நட்பு கொள்ளாதவனும், அடுத்தவன் மனைவியை சீரழிக்காதவனும், ஆணவத்தைக் காட்டாதவனும், திருடாதவனும், நன்றிமறக்காதவனும், குடியில் ஈடுபடாதவனும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். செருக்குடன் மனித நாட்டத்தின் மூன்று நோக்கங்களை அடைய முயலாதவனும் கேட்கப்படும்போது உண்மையைச் சொல்பவனும், நண்பர்களுக்காகக் கூட சச்சரவு செய்யாதவனும், அலட்சியப்படுத்தப் பட்டாலும் கோபம் கொள்ளாதவனும் ஞானி என்று கணிக்கப்படுகிறான்.
பிறருக்கு இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவனும், அனைவரிடமும் அன்பாக இருபவனும், பலமற்றவனாக இருப்பின் பிறருடன் பூசல் கொள்ளாதவனும், ஆணவமாகப் பேசாதவனும், சச்சரவை மறப்பவனும், எங்கும் புகழப்படுகிறான். கர்வம் கொண்ட முகத்தை எப்போதும் கொள்ளாதவனும், பிறரைக் கண்டித்து, தன்னைப் புகழாதவனும், தான் பெற வேண்டியவற்றுக்காக பிறரிடம் எப்போதும் கடுஞ்சொல் பேசாதவனும் அனைவராலும் எப்போதும் விரும்பப்படுவான். {அடங்கிய} பழைய பகைமை வளர்க்காதவனும், ஆணவத்துடனோ, மிகுந்த பணிவுடனோ நடந்து கொள்ளாதவனும், துயரத்தில் இருக்கும்போதும், முறையற்ற செயலைச் செய்யாதவனும், நன்னடத்தையுள்ளவன் {ஆரியர்களில் சிறந்தவன்} என்று மரியாதைக்குரியவர்களால் {ஆரியர்களால்} [1] கருதப்படுகிறான்.
தனது மகிழ்ச்சியில் மிகவும் மகிழாதவனும், அடுத்தவர் துயரைக்கண்டு மகிழாதவனும், கொடையளித்துவிட்டு அதற்காகவருந்தாதவனும், நல்ல இயல்பும் நடத்தையும் கொண்ட மனிதன் எனச் சொல்லப்படுகிறான். பல்வேறு நாடுகளின் சடங்குகளில் ஞானத்தை அடைய விரும்புபவனும், பல்வேறு நாடுகளின் மொழிகளை அறிய விரும்புபவனும், பல்வேறு வகைகளிலான மனிதர்களின் பயன்பாடுகளை {சாதி தர்மங்களை} அறிய விரும்புபவனும், ஏற்றத்தாழ்வு அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன், அவன் எங்கே சென்றாலும், மகிழ்ச்சியாக இருப்பவர்களை விட ஏறுமுகம் பெறுவது {அதிக மகிழ்ச்சியடைவது} நிச்சயம்.
செருக்கு, மடமை, {மரியாதையில்லாத} துடுக்குத்தனம், பாவச்செயல்கள், மன்னனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது, நடத்தையில் கோணல், பலருடன் பகைமை, குடிகாரர்கள், பைத்தியக்காரர்கள், தீயவர்கள் ஆகியோருடன் சச்சரவு ஆகியவற்றை விட்டுவிடும் புத்திசாலி மனிதன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான். தன்னடக்கம், தூய்மை, நல்ல சடங்குகள், தேவர்களை வழிபடுதல், பரிகார விழாக்கள் மற்றும் உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் பிற சடங்குகள் ஆகியவற்றைத் தினமும் பயிலும் மனிதனுக்கு தேவர்களே செழிப்பை அளிக்கின்றனர்.
தாழ்ந்தவர்களோடு அல்லாமல் சம நிலை உள்ள மனிதர்களிடம் மண உறவு கொள்பவனும், தன் முன் மேம்பட்ட தகுதியுடைவயர்களை அமர்த்துபவனும், சம நிலை மனிதர்களுடன் பேச்சும், நடத்தையும், நட்பும் கொள்பவனுமான கற்றறிந்த மனிதனின் செயல்கள், கருத்தில் கொள்ளவும், பயன்படுத்தவும் ஏற்றவை ஆகும்.
தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்துவிட்டு மிதமாக உண்பவனும், அளவற்ற வேலைகளைச் செய்துவிட்டு மிதமாக உறங்குபவனும், யாசிக்கப்பட்டால் எதிரிகளுக்கும் கொடுப்பவனும் {தானம் அளிப்பவனும்}, தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வான். அவனிடம் இருந்து துயரங்கள் விலகி நிற்கின்றன.
எவனுடைய ஆலோசனைகள் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ {கமுக்கமாக பாதுகாக்கப்பட்டு}, நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறதோ, எவனுடைய செயல்களின் விளைவுகள் பிற மனிதர்களைக் காயப்படுத்துவதில்லையோ, அவன், தனது சிறு நோக்கங்களை அடைவதில் கூட வெற்றியாளனாகவே இருப்பான். அனைத்து உயிர்களுக்கு தீங்கிழையாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டவனும், உண்மையுள்ளவனும், மென்மையானவனும், ஈகை குணம் கொண்டவனும், தூய மனம் கொண்டவனும், அற்புதமான சுரங்கத்தைத் தோற்றுவாயாகக் கொண்ட விலைமதிப்பற்ற ரத்தினத்தின் தூய கதிர் போல, தன் உறவினர்களுக்கு மத்தியில் பெரும் ஒளியுடன் ஒளிர்வான்.
தன்னைத்தவிர வேறு யாருக்கும் தனது குற்றங்கள் அறியப்படாமல் இருந்தாலும், அதற்காக {அக்குற்றங்களுக்காக} வெட்கப்படுபவன், அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுகிறான். தூய இதயத்துடனும், அளவிலா சக்தியுடனும், சித்தத்தில் நிலை பெற்றும் இருப்பவன் தனது சக்தியின் விளைவாக சூரியனைப் போலவே ஒளிர்கிறான்.
(அந்தண) சாபத்தால் எரிக்கப்பட்ட மன்னன் பாண்டு, ஐந்து இந்திரர்களைப் போன்ற மகன்களைக் காட்டில் பெற்றெடுத்தார். ஓ! அம்பிகையின் மகனே {திருதராஷ்டிரரே}, நீரே அவர்களை வளர்த்து, அனைத்தையும் கற்பித்தீர். அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்படிபவர்கள் ஆவர். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} நியாயமாகச் சேர வேண்டிய பங்கான நாட்டைக் கொடுத்து, இன்பத்தில் நிறைந்து, உமது மகன்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீராக. பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் தேவர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோரின் நம்பிக்கையைப் பெறுவீர்” என்றான் {விதுரன்}.
தன்னால் தன்னை அறிய வேண்டும்! – உத்யோக பர்வம் பகுதி 34-யுதிஷ்டிரனின் மனதில் என்ன ஓடுகிறது என்றும் இருவருக்கும் நன்மை எதுவோ அதைச் சொல்லுமாறும் திருதராஷ்டிரன் விதுரனிடம் கேட்பது; ஒப்பந்தங்களை மதித்து அறம் பொருள் ஆகியவற்றை அறிந்து செயல்படுபவன் தனது நாட்டைத் தக்க வைத்துக் கொள்வான் என்று விதுரன் சொல்வது; புலன்களிடம் தோற்கும் மனிதன் அனைத்திலும் தோற்பதைச் சொல்வது; புலன்களைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைப்பது; தன்னையே அடக்கமுடியாதவனால் எதிரிகளை வீழ்த்த முடியாது என்று சொல்வது; பாவிகளோடு தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படும் இயற்கை நீதியை எடுத்துச் சொல்வது; பேச்சைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும், அதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் சொல்வது; தோல்வியடைய விதிக்கப்பட்டவனே புலன்களில் மயக்கம் கொள்வான் என்றும், அதனால் அவன் வீழ்வான் என்றும் சொல்வது; யுதிஷ்டிரன் திருதராஷ்டிரனின் புகழைப் பாதுகாக்கும்பொருட்டே துன்பத்தை அனுபவித்தான் என்றும், அவனே மூவுலகங்களையும் ஆளும் தகுதி படைத்தவன் என்று விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னது…
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “உறக்கமற்று, துயரத்தால் எரிந்து கொண்டிருக்கும் மனிதன் என்ன செய்ய வேண்டும் என்பதை நீ எனக்குச் சொல். ஏனென்றால், நம்மில் நீ ஒருவனே, ஓ! குழந்தாய் {விதுரா}, அறம் மற்றும் பொருளை அறிந்திருக்கிறாய். ஓ! விதுரா, ஞானத்துடன் எனக்கு ஆலோசனை கூறுவாயாக. ஓ! மேன்மையான இதயம் கொண்டவனே {விதுரா}, எதிர்காலத் தீமைகளை அறிந்து கொண்டு, அஜாதசத்ருவுக்கு {யுதிஷ்டிரனுக்கு} நன்மையானவை என்றும், குருக்களின் நன்மையை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை என்றும் நீ கருதுவதைச் சொல்வாயாக. எனது முந்தைய குற்றத்தை நான் திரும்பிப் பார்க்கிறேன். பதட்டம் நிறைந்த இதயத்துடன் நான் உன்னைக் கேட்கிறேன், ஓ! கற்றவனே {விதுரா}, அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} மனதில் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சரியாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
{செயல்கள்}
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஒருவனின் தோல்வியை {அவமானத்தை} விரும்பாத ஒருவன், கேட்கப்படாத போதும், தனது வார்த்தைகள் நன்மையானவையாகவோ தீமையானவையாகவோ, வெறுப்புடனோ, இனியுடனோ இருக்குமேயானாலும் கூட உண்மையைச் சொல்ல வேண்டும். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் குருக்களுக்கு நன்மை எதுவோ அதையே சொல்வேன். எது நன்மை என்றும், எது அறநெறி சார்ந்தவை என்றும் இரண்டையும் நான் சொல்வேன். நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீதியற்ற முறையற்ற வெற்றியின் வழிகளில் உமது இதயத்தை நிலைநிறுத்தாதீர். நியாயமான, முறையான வழிவகைகளில் தனது நோக்கத்தின் பயன்பாடு நிற்கவில்லையென்றால், அதன் வெற்றியைக் குறித்து ஒரு புத்திசாலி மனிதன் வருந்தக்கூடாது. ஒருவன் ஒரு செயலில் ஈடுபடும் முன்னர், செயலைச் செய்பவரின் திறன், செயலின் இயல்பு, அதன் நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்துச் செயல்களும் இவற்றையே சார்ந்திருக்கின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டே ஒருவன் செயல்பட வேண்டும். திடீர் உந்துதலால் {ஆர்வக் கோளாறால்} எதையும் செய்யக்கூடாது.
ஞானமுள்ளவன், தனது சொந்த திறனையும், செயலின் இயல்பையும், வெற்றியினால் உண்டாகும் விளைவுகளையும் முழுதும் கருத்தில் கொண்டே செயல்படவோ, செயல்படாமலோ இருக்க வேண்டும். நாட்டைப் பொறுத்தவரை அதன் விகிதாச்சாரம், அளவு, ஆதாயம், இழப்பு, கருவூலம், மக்கள் தொகை, தண்டை ஆகியவற்றை அறியாத மன்னன் தனது நாட்டை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அதே வேளையில், மறுபுறம், ஒப்பந்தங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை அறிந்து, அறம் மற்றும் பொருளின் அறிவை அறிந்தவன் தனது நாட்டைத் தக்க வைத்துக் கொள்வான்.
{புலனடக்கம்}
கோள்களால் பாதிக்கப்படும் நட்சத்திரங்களைப் போல, இவ்வுலகம் புலன்களால் பாதிக்கப்படுகிறது. கட்டுத்தப்படாத அவை தங்களுக்குரிய பொருட்களின் மீது செலுத்தப்படும்போது இவ்வுலகம் பாதிப்படைகிறது. வளர்பிறை நாட்களில் இருக்கும் நிலவைப் போல, இயற்கையான நிலையில் உள்ள தங்கள் ஐம்புலன்களால் வீழ்த்தப்படும் மனிதனின் துயரங்கள் அதிகரிக்கவே செய்யும். அவை எப்போதும் அவனைப் பல்வேறு செயல்பாடுகளை நோக்கி இட்டுச் செல்லும்.
தனது சுயத்தைக் {தன்னைக்} கட்டுப்படுத்தாத ஒருவன் தனது ஆலோசகர்களைக் கட்டுப்படுத்த விரும்புபவனோ, தனது ஆலோசகர்களைக் கட்டுப்படுத்தாது தனது பகைவர்களை வீழ்த்துபவனோ, கடைசியில் வலிமையை இழந்து போக நேரும். எனவே, முதலில் தன்னையே எதிரி என்று நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவன், கடைசியின் தனது ஆலோசகர்களையோ, எதிரிகளையோ வெல்வதில் தோல்வியுற மாட்டான். தனது புலன்களை வெல்பவனுக்கோ, தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்துபவனுக்கோ, குற்றமிழைப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கும் திறன் பெற்றவனுக்கோ, நீதியுடன் செயல்படுபவனுக்கோ, பொறுமையால் அருளப்பட்டவனுக்கோ பெரும் செழுமை காத்திருக்கிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவனின் உடல் அந்த ஒருவனின் தேராகும்; அதற்குள் இருக்கும் ஆன்மாவே அதன் ஓட்டுநராகும்; புலன்கள் அதன் குதிரைகளாகும். அந்த நன்கு பழக்கப்பட்ட அந்த அற்புதமான குதிரைகளால் இழுக்கப்படும் ஞானி, தனது வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக நடத்தி, நிம்மதியாகக் கண் விழிக்கிறான். அடக்கப்படாத, கட்டுப்படுத்த இயலாத குதிரைகள், நிபுணத்துவம் இல்லாத ஓட்டுநரால் செலுத்தப்பட்டு, பயணத்தின் வழியில் அழிவடைய நேர்கிறது; எனவே அடக்கப்படாத ஒருவனின் புலன்கள் அழிவுக்கே வழிகோலுகின்றன. அனுபவமற்ற மனிதன் ஒருவன், இந்த அடக்கப்படாத புலன்களால் வழிநடத்தப்பட்டு, நன்மையில் இருந்து தீமையையும், தீமையில் இருந்து நன்மையையும் பெற்று மகிழ்ச்சியைத் துயரம் எனக் குழப்பிக் கொள்கிறான்.
அறம் பொருள் ஆகியவற்றைக் கைவிட்டவன், புலன்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, செழிப்பு, வாழ்வு, செல்வம் மனைவி ஆகியவற்றைத் தாமதமில்லாமல் இழக்கிறான். புலன்களுக்கல்லாமல் செல்வங்களுக்கு மட்டுமே தலைவனாக இருப்பவன், புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகத் தனது செல்வங்களை நிச்சயமாக இழக்கிறான். ஒருவன் தன்னைத் தன்னால் அறிய வேண்டும். {சுயத்தைச் சுயத்தால் அறியவேண்டும்}. தானே தனக்கு நண்பனாகவும் எதிரியாகவும் இருப்பதால், ஒருவன் தனது மனம், அறிவு மற்றும் புலனங்களைக் கட்டுப்படுத்தி, தன்னால் தன்னை அறிய வேண்டும். தானே தனக்கு நண்பனும், எதிரியும் ஆனதால், தன்னால் தன்னை வென்ற மனிதன், தன்னைத் தன் நண்பனாகக் கொள்கிறான்.
{ஆசையும் கோபமும்}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரிய மீன் ஒன்று வலையின் மெல்லிய கயிறுகளை அறுப்பது போல, ஆசையும் கோபமும் ஞானத்தை அறுக்கும். அறத்தையும் பொருளையும் இவ்வுலகில் மதித்து வெற்றியின் வழிவகைகளை அடைய முயல்பவன், தான் வேண்டுவது அனைத்தையும் அடைந்து மகிழ்ச்சியை வெல்கிறான். மனம்சார்ந்த தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்தாத ஒருவன், பிற புற எதிரிகளை வீழ்த்த விரும்பினால், உண்மையில் அவற்றால் {அந்த ஐந்து எதிரிகளால்} வீழ்த்தப்படுகிறான். தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தாத தீய மனம் கொண்ட மன்னர்கள், நாடாசையின் காரணமாகத் தங்கள் செயல்களாலேயே அழிவடைகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
{தீயோருடன் நட்பு}
ஈரவிறகு, காய்ந்த விறகோடு எரிவது போல, பாவிகளோடு நிலைத்த தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படுகிறான். எனவே, பாவிகளோடு ஏற்படக்கூடிய நட்பைத் தவிர்க்க வேண்டும்.
அறியாமையில் இருப்பவன், பேராசை கொண்ட தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்த தவறி, ஐந்து தனித்துவமான பொருட்களைக் கொண்டு பேரழிவில் மூழ்குகிறான். கபடமற்ற தன்மை, எளிமை, தூய்மை, மனநிறைவு, இனிமையான பேச்சு, தற்கட்டுபாடு {சுய கட்டுப்பாடு}, உண்மை, உறுதி ஆகியன எப்போதும் தீயவர்களின் குணங்களாகாது. தன்னறிவு {சுயஞானம்}, உறுதி, பொறுமை, அறத்தில் அர்ப்பணிப்பு, ஆலோசனைகளைக் கமுக்கமாக வைத்துக் கொள்வது, ஈகை ஆகியவை ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இழிந்த மனிதர்களிடம் இருப்பதில்லை.
தவறான நிந்தனைகள் {போலிக் குற்றச்சாட்டுகள்}, தீய உரைகள் மூலம் மூடர்கள் ஞானிகளுக்குத் தீங்கிழைக்கின்றனர். இதன் விளைவாக ஞானிகளால் செய்யப்பட்ட பாவங்களை அந்த மூடர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஞானிகள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு இப்படியே மன்னிக்கப்படுகின்றனர். தீய குணத்தாலேயே தீயவர்கள் பலம் பெறுகிறார்கள்; குற்றவியல் சட்டத்திலும், பலமற்றவர்களையும் பெண்களையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதிலுமே மன்னர்களின் பலம் இருக்கிறது. மன்னிக்கும் தன்மையிலேயே {பொறுமையிலேயே} அறம்சார்ந்தவர்களின் பலம் இருக்கிறது.
{பேச்சு [உரை]}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பேச்சைக் கட்டுப்படுத்தவதே மிகவும் கடினமானது என்று சொல்லப்படுகிறது. பொருள் நிறைந்த வார்த்தைகளுடன் கேட்பவர்களுக்கு இனிமையாக நீண்ட உரையை ஆற்றுவது என்பது எளிதானதல்ல. நன்கு பேசப்பட்ட பேச்சு, பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்; தீமையாகப் பேசப்பட்ட பேச்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தீமைகளுக்குக் காரணமாக இருக்கும். கணைகளால் துளைக்கப்பட்ட அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும் வளரலாம், ஆனால் காயப்படுத்தும் வகையில் தீய வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டுக் காயமடைந்த இதயம் மீண்டெழுவதில்லை {ஆறுவதில்லை}.(யினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு)
கணைகள், குண்டுகள், பராசங்கள் ஆகிய ஆயுதங்களை உடலில் இருந்து எளிதில் எடுத்துவிடலாம், ஆனால், இதயத்தின் ஆழத்தில் குத்தப்பட்ட வார்த்தைகளாலான குறுவாளை வெளி உருவி எடுப்பது இயலாதது. வார்த்தைக் கணைகள் வாயில் இருந்து அடிக்கப்படுகின்றன. அதனால் தாக்குண்ட ஒருவன் அல்லும் பகலும் வருந்துகிறான். பிறரது உயிரையே அது தொட்டுவிடுவதால், கற்ற மனிதன் அத்தகு கணைகளை அடிக்கக்கூடாது.
{தோல்வி விதிக்கப்படும்போது}
தேவர்களால் தோல்வி விதிக்கப்பட்ட ஒருவன் புலன்களில் மயக்கம் கொள்வதாலேயே, கீழான காரியங்கள் செய்வதில் விழுகிறான். அறிவு மங்கிப் போய், அழிவின் விளிம்பில் இருக்கும் போது சரியாகத் தெரியும் தவறு, அவனது இதயத்தை உறுதியாக அடிக்கும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நீர் அதைத் தெளிவாகக் காணவில்லை. பாண்டவர்களிடம் கொண்ட பகைமையின் விளைவால், அறிவை மூடும் அந்த மேகம் {புலன்மயக்கம்} இப்போது உமது மகன்களைப் பீடித்திருக்கிறது.
அனைத்து நற்குறிகளையும் பெற்று, மூவுலகங்களையும் ஆளும் தகுதி பெற்ற யுதிஷ்டிரன் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறான். ஓ! திருதராஷ்டிரரே, உமது மகன்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, உமது வாரிசுகள் அனைவரிலும் முதன்மையான யுதிஷ்டிரன் பூமியை ஆளும்படி செய்வீராக. சக்தி, ஞானம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு, அறம் பொருள் ஆகியவற்றின் உண்மைகளை அறிந்து, நீதிமிக்க மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், ஓ! மன்னர்கள் மன்னா {திருதராஷ்டிரரே}, உம்முடைய புகழைப் பாதுகாக்கும்பொருட்டே, இரக்கம் மற்றும் கருணையால் பெரும் துன்பத்தை அனுபவித்தான்” என்றான் {விதுரன்}.
பிரகலாதன் தீர்ப்பு! – உத்யோக பர்வம் பகுதி 35அ-விதுரன் திருதராஷ்டிரனிடம், கேசினியை மணந்து கொள்ள விரும்பிய விரோசனன் மற்றும் சூதன்வானுக்குள் நடந்த சர்ச்சை குறித்த பழங்கதையைச் சொன்னது; கேசினி தன் தலைவனைச் சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்க விரும்பியது; விரோசனன் கேசினியிடம் சென்றது; விரோசனனிடம் கேள்வி கேட்ட கேசினி; அடுத்த நாள் சூதன்வான் வந்தது; யார் பெரியவர் என்பதில் அவர்களுக்குள் ஏற்பட்ட சர்ச்சை; சர்ச்சையைத் தீர்க்க அவ்விருவரும் பிரஹலாதனிடம் சென்றது; சூதன்வானே வென்றான் எனப் பிரஹலாதன் அறிவித்தது; சூதன்வான் விரோசனனுக்கு உயிரைக் கொடுத்தது …
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “ஓ! பெரும் அறிவுடையவனே, அறத்திற்கும் பொருளுக்கும் ஏற்புடைய இத்தகு வார்த்தைகளை எனக்கு மீண்டும் சொல்வாயாக. அவற்றைக் கேட்கும் தாகம் எனக்கு அடங்கவில்லை. நீ சொல்வது அழகாக இருக்கிறது” என்றான்.
{பழங்காலக் கதை – சூதன்வானுக்கும் விரோசனனுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உரையாடல்}
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “புனித இடங்கள் அனைத்திலும் நீராடுவதும், அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுவதுமாகிய இரண்டும் சமமே. அனைத்து உயிரினங்களிடமும் அன்புகாட்டுவது முன்னதைவிட {புனித இடங்களில் நீராடுவதைவிட} ஒருவேளை விஞ்சியதாக இருக்கலாம். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரிடமும் அன்பைக் காட்டுவீராக. அதனால், இவ்வுலகில் பெரும் புகழை வெல்வீர், இதன்பிறகு {இவ்வுலகத்திற்குப் பிறகு} நீர் சொர்க்கத்தை அடைவீர்.
ஒரு மனிதனின் நற்செயல்கள் எவ்வளவு காலம் இவ்வுலகில் பேசப்படுமோ, ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அவ்வளவு காலம் அவன் சொர்க்கத்தில் மகிமைப்படுத்தப்படுகிறான். இது தொடர்பாக, கேசினியின் {Kesini}கரங்களைத் திருமணத்திற்காகக் கேட்ட விரோசனன் மற்றும் சூதன்வான் {Virochana and Sudhanwan} ஆகிய இருவருக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடலைக் குறித்த ஒரு பழங்கதை மேற்கோள் காட்டப்படுகிறது.
ஒரு காலத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒப்பற்ற அழகுடன் கூடிய கன்னிகை ஒருத்தி, கேசினி என்ற பெயரில் இருந்தாள். ஒரு நல்ல கணவனை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட அவள் {கேசினி}, தன்வரிப்பில் {சுயம்வரத்தில்} தனது தலைவனைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தாள்.
*திதியின் மகன்களில் {அசுரர்களில்} ஒருவனான விரோசனன் அந்தக் கன்னிகையை {கேசினியை} அடைய விரும்பி, அந்த இடத்திற்குச் சென்றான். தைத்தியர்களின் தலைவனைக் {விரோசனனைக்} கண்ட கேசினி, அவனிடம் {விரோசனனிடம்}, “ஓ! விரோசனரே, அந்தணர்கள் மேன்மையானவர்களா? திதியின் மகன்கள் {அசுரர்கள்} மேன்மையானவர்களா? சூதன்வான் ஏன் மஞ்சத்தில் அமரக்கூடாது?” என்று கேட்டாள்
(பிரம்மனுக்கு ஆறு {6} ஆன்மிக மகன்கள் இருந்ததாக அறியப்படுகிறது. அவர்கள் மரிச்சி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது ஆகியோர் ஆவர்.
மரிச்சியின் மகன் காசியபர் ஆவார். காசியபரிடமிருந்தே அனைத்து உயிர்களும் தோன்றின.–தக்ஷனுக்கு (பிராஜாபதிகளில் ஒருவர்) நற்பேறு பெற்ற பதிமூன்று {13} மகள்கள் இருந்தனர். {காசியபரே இந்த தக்ஷனின் 13 மகள்களுக்கும் கணவராவார்.} அந்த தக்ஷனின் மகள்களின் பெயர்கள் பின்வருமாறு: அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிராதா, விஸ்வா*, வினதை, கபிலா, முனி மற்றும் கத்ரு ஆவர்)
விரோசனன் {கேசினியிடம்}, “பிரஜாபதியிடம் இருந்து எழுந்த {அசுரர்களாகிய} நாங்களே சிறந்தவர்கள். ஓ! கேசினி, நாங்களே அனைத்து உயிர்களுக்கும் மேலானவர்கள், இவ்வுலகு எங்களுடையது என்பதில் ஐயமில்லை. தேவர்கள் யார்? பிராமணர்கள் யார்?” என்று கேட்டான். அதற்குக் கேசினி {விரோசனரிடம்}, “ஓ! விரோசனரே, நாம் இவ்விடத்திலேயே இருப்போமாக. நாளை இங்கே சூதன்வான் வருவார். நீங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காண என்னை அனுமதிப்பீராக” என்றாள். அதற்கு விரோசனன் {கேசினியிடம்}, “ஓ இனியவளே, அச்சமுடைய பெண்ணே {கேசினி}, நீ சொல்வதை நான் செய்வேன். காலையில் நானும் சூதன்வானும் சந்திப்பதை நீ காண்பாய்” என்றான்
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இரவு கடந்து, சூரிய வட்டில் எழுந்ததும், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கேசினியுடன் விரோசனன் காத்திருந்த அந்த இடத்திற்கு, ஓ! தலைவா, சூதன்வான் வந்தான். அங்கே பிரஹலாதன் மகனையும் {விரோசனனையும்}, கேசினியையும் கண்டான். அந்த அந்தணன் {சூதன்வான்} அங்கே வந்ததைக் கண்ட கேசினி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தனது இருக்கையில் இருந்து எழுந்து அவனுக்கு ஓர் இருக்கையை அளித்து, கால் கழுவ நீரும், ஆர்க்கியாவும் கொடுத்தாள்.
விரோசனனால் (தனது இருக்கையைப் பகிர்ந்து கொள்ளும்படி) கேட்கப்பட்ட சூதன்வான், அவனிடம் {விரோசனனிடம்} “ஓ! பிரஹலாதன் மகனே {விரோசனா}, நான் உனது அற்புதமான தங்க இருக்கையைத் தொட்டாலும், உனக்குச் சமமாக என்னைக் கருதிக் கொண்டு, உன்னுடன் அதில் அமர மாட்டேன்” என்றான். அதற்கு விரோசனன் “ஒரு பலகைத் துண்டு, ஒரு விலங்கின் தோல், புல்லாலோ வைக்கோலாலோ ஆன பாய், ஆகியவை மட்டுமே, ஓ! சூதன்வான், உமக்குப் பொருத்தமானவை. எனினும், ஒரே இருக்கையை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் தகுதி உமக்கில்லை” என்றான்.
அதற்குச் சூதன்வான் {விரோசனனிடம்}, “தந்தை மற்றும் மகன், ஒரே வயதும், சமமான கல்வியும் கொண்ட பிராமணர்கள், இரு க்ஷத்திரியர்கள், இரு வைசியர்கள், இரு சூத்திரர்கள் ஆகியோர் ஓர் இருக்கையில் ஒன்றாக அமரலாம். இவர்களைத் தவிர வேறு யாரும் ஒன்றாக அமரக்கூடாது. நான் அமர்ந்ததைவிடத் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, உன் தந்தை {பிரஹலாதன்} எனக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். நீயோ எல்லா ஆடம்பரங்களுடனும் வீட்டில் வளர்க்கப்பட்ட குழந்தை என்பதால், எதையும் உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான்.
விரோசனன் {சூதன்வானிடம்}, “அசுரர்கள் மத்தியில் இருக்கும் எல்லாத் தங்கத்தையும், பசுக்களையும், குதிரைகளையும், பிற வகைச் செல்வங்களையும் நான் பந்தயமாக வைக்கிறேன். ஓ! சூதன்வான், இந்தக் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிக்க வல்லவர்களிடம் சென்று நாம் கேட்போம். வாரும்” என்றான். அதற்குச் சூதன்வான், “உனது தங்கம், பசுக்கள், வீரர்கள் ஆகியவற்றை விடு, ஓ! விரோசனா, நமது உயிர்களை இழக்கும்படி {பந்தயம் வைத்து}, இக்கேள்விக்குத் தகுந்த பதிலளிக்க வல்லோரிடம் கேட்போம்” என்றான். விரோசனன், “நமது உயிர்களைப் பிணை வைத்து, நாம் எவ்விடம் செல்வோம்? தேவர்கள் முன்னிலையிலோ, மனிதர்களில் எவர் மத்தியிலோ நான் நிற்க மாட்டேன்” என்றான். அதற்குச் சூதன்வான் {விரோசனனிடம்}, “நமது உயிர்களைப் பிணையாக வைக்கும் நாம், உனது தந்தையை {பிரகலாதனை} அணுகுவோம். பிரஹலாதன், தன் மகனுக்காகக் கூடப் பொய்மையை ஒருபோதும் சொல்ல மாட்டான்” என்றான் {சூதன்வான்}.
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிப்பட்ட பிணையை ஏற்றுக் கொண்ட விரோசனன் மற்றும் சூதன்வான் ஆகிய இருவரும் கோபத்தால் உந்தப்பட்டு, பிரஹலாதன் இருக்குமிடத்திற்குச் சென்றனர். அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்ட பிரஹலாதன், “முன்பு ஒருபோதும் சேர்ந்து காணப்படாதவர்கள், இப்போது கோபம்கொண்ட இரு பாம்புகள் போல ஒரே சாலையில் ஒன்றாக வருகின்றனரே” என்று நினைத்து, “எப்போதும் சேராத நீங்கள், இப்போது சேர்ந்துவிட்டீர்களா? ஓ! விரோசனா, நான் உன்னைக் கேட்கிறேன். உனக்கும் சூதன்வானுக்கும் இடையில் நட்பேற்பட்டதா?” என்று கேட்டான் {பிரகலாதன்}.
அதற்கு விரோசனன் {பிரகலாதனிடம்}, “எனக்கும் சூதன்வானுக்கும் இடையில் எந்த நட்பும் கிடையாது. மறுபுறம் நாங்கள் எங்கள் உயிர்களைப் பிணையாக வைத்துள்ளோம். ஓ! அசுரர்களின் தலைவரே {தந்தையே}, நான் உம்மை ஒரு கேள்வி கேட்பேன், அதற்குப் பொய்யாகப் பதிலளிக்காதீர்!” என்றான். அதற்குப் பிரஹலாதன் {சூதன்வானிடம்}, “நீரும், தேனும், தயிர்க்கடைசலும் சூதன்வானுக்குக் கொண்டுவரப்படட்டும். ஓ! அந்தணா, நீ எங்களது வழிபாட்டுக்குத் தகுந்தவன். பருத்த ஒரு வெண்பசு உனக்குத் தயாராக இருக்கிறது” என்றான் {பிரகலாதன்}.
அதற்குச் சூதன்வான் {பிரஹலாதனிடம்}, “நீர், தேன் மற்றும் தயிர்க்கடைசல் ஆகியவை, இங்கே வரும் வழியிலேயே எனக்கு வழங்கப்பட்டன. நான் உன்னிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். பிரஹலாதா, அதற்கு உண்மையான பதிலளிப்பாயாக! பிராமணர்கள் மேன்மையானவர்களா? விரோசனன் {அசுரன்} மேன்மையானவனா?” என்று கேட்டான். அதற்குப் பிரஹலாதன், “ஓ! அந்தணா, இவன் எனது ஒரே மகன். நீயும் இங்கே இருக்கிறாய். {பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களும், நான் அறிந்தவர்களும், எனது அன்பிற்குரியவர்களுமான நீங்கள் இருவரும் இங்கே இருக்கும்போது, என்னால் எப்படிப் பதிலளிக்க முடியும்?} நீங்கள் இருவரும் சர்ச்சை செய்து வரும் இந்தக் கேள்விக்கு, என்னைப் போன்றோர் எவ்வாறு பதிலளிக்க முடியும்?” என்று கேட்டான்.
சூதன்வான் {பிரஹலாதனிடம்}, “உன்னிடம் இருக்கும் உன் பசுக்களையும் பிற விலைமதிப்பற்ற செல்வங்களையும் உனது மகனுக்குக் கொடு. ஆனால், ஓ! ஞானம் கொண்டவனே {பிரகலாதா}, இருவர் சர்ச்சை செய்து வரும்போது, அதில் உண்மையைத் தீர்மானிக்க வேண்டியவன் நீயே” என்றான். அதற்குப் பிரஹலாதன், “ஓ! சூதன்வான், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு உண்மையில்லாமல் பொய்யைச் சொல்லி, தனது நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் எப்படிப்பட்ட பாதிப்படைவான்? நான் இதை உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.
அதற்குச் சூதன்வான் {பிரகலாதனிடம்}, “இரவு நேரத்தில், தன் சக்காளத்தின் கரங்களில் துயிலும் தனது கணவனைக் காணும் ஒரு {கணவனைப் பிரிந்த} மனைவி ஏங்குவதைப் போலவும், பகடையில் தோற்ற ஒரு மனிதனைப் போலவும், சுமக்க முடியாத பெரும் துன்பச் சுமையால் கீழே விழுபவன் போலவும், நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் பாதிக்கப்படுவான். அப்படிப்பட்ட மனிதன், {நகரத்தின் வாயில்களைக் கடந்து} உள்ளே செல்ல தடை செய்யப்பட்டு நகரத்தின் வாயில்களுக்கு வெளியே பட்டினியுடன் தங்க வேண்டியிருக்கும். போலி சாட்சிகளைக் கொடுப்பவன், உண்மையில், எதிரிகளையே எப்போதும் கண்டடையும்படி விதிக்கப்படுகிறான்.
ஒரு விலங்கின் காரணமாகப் பொய் பேசுபவனது தலைமுறையினரில் ஏறுமுக வரிசையில் ஐந்து மூதாதையர் வானரசில் {சொர்க்கத்தில்} இருந்து கீழே தள்ளப்படுகின்றனர். ஒரு பசுவின் காரணமாகப் பொய் பேசுபவனது பத்து மூதாதையர் சொர்க்கத்தில் இருந்து கீழே தள்ளப்படுகின்றனர். ஒரு குதிரையின் காரணமாகப் பொய் சொன்னால் நூறு பேரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும், ஒரு மனிதனின் காரணமாகப் பொய் சொன்னால், தனக்கு முன் ஏறு வரிசையில் ஆயிரம் மூதாதையரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும் காரணமாக {அப்பொய்யைச் சொன்னவன்} இருப்பான். தங்கத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால், தனது குலத்தில் பிறந்த, பிறக்காத அனைத்து உறுப்பினர்களும் அழிவுக்குள்ளாகிறார்கள். நிலத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால் {ஒருவனுடைய} அனைத்தையும் அவன் பாழாக்கிக் கொள்கிறான். எனவே, நிலத்திற்காக ஒருபோதும் பொய் பேசாதே” என்றான் {சூதன்வான்}.
பிரஹலாதன் {தன் மகன் விரோசனனிடம்}, “ஓ! விரோசனா, அங்கிரஸ் என்னைக் காட்டிலும் மேன்மையானவர், அதே போல, சூதன்வான் உன்னைக் காட்டிலும் மேன்மையானவன். சூதன்வானின் தாய் உன் தாயைக் காட்டிலும் மேன்மையானவள். எனவே, ஓ! விரோசனா, நீ சூதன்வானால் வீழ்த்தப்பட்டாய். இந்தச் சூதன்வானே இப்போது உனது உயிருக்குத் தலைவனாவான் {எஜமானன் ஆவான்}. ஆனால், ஓ! சூதன்வான், நீ விரோசனனுக்கு அவனது உயிரைக் கொடுக்க வேண்டும் எனவே நான் விரும்புகிறேன்” என்றான் {பிரஹலாதன்}.
அதற்குச் சூதன்வான் {பிரஹலாதனிடம்}, “ஓ! பிரஹலாதா, அறத்தைத் தேர்ந்தெடுத்து, மோகத்தால் நீ பொய் சொல்லாதிருந்ததால், நான் உன் அன்பிற்குரிய மகனின் {விரோசனனின்} உயிரை அவனுக்கு அளிக்கிறேன். ஓ! பிரஹலாதா, என்னால் உனக்கு மீட்டளிக்கப்பட்ட உனது மகன் இதோ இருக்கிறான். எனினும், அவன், கன்னிகை கேசினியின் முன்னிலையில் எனது காலைக் கழுவ வேண்டும்” என்றான் {சூதன்வான்}.
உலகை எப்போதும் ஆள்பவர்கள் யார்? – உத்யோக பர்வம் பகுதி 35ஆ-பொய்மை பேசுவது தகாது என்றும், தேவர்கள் காக்க விரும்புவோருக்கு என்ன செய்கின்றனர் என்றும் விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; நீதியும் அறநெறிகளும் வெற்றியைக் கொடுக்கின்றன; மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவனை வேதங்கள் ஏன் கைவிடுகின்றன? பாவிகளின் செயல்கள், அந்தணர்களைக் கொன்ற இழிகுணம் கொண்டோர், மிளிர்வைத் தரும் எட்டு குணங்கள், நீதியின் பாதைகள், பாவம், அறம், உறுதிப்படுத்த முடியாதவை ஆகியவை குறித்து விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொல்வது.
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான் “இக்காரணங்களுக்காக, ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, நிலத்தின் {நிலத்தின் மீது கொண்ட ஆசையின்} காரணமாகப் பொய்மை பேசுவது உமக்குத் தகாது. உமது மகனின் மீது கொண்ட பாசத்தால் பொய் சொன்னால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது பிள்ளைகள், அமைச்சர்கள் ஆகிய அனைவருக்கும் அழிவு விரைந்து வரும். மாடு மேய்ப்பவர்களைப் போலக் கையில் தடிகளைக் கொண்டு தேவர்கள் பாதுகாப்பதில்லை; ஆனால், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவோருக்கு, அவர்கள் {தேவர்கள்} நல்ல புத்தியை அளிக்கின்றனர்.
ஒருவன் நீதி மற்றும் அறநெறிகள் ஆகியவற்றில் கொண்டுள்ள கவனத்தின் விகிதத்தின் படியே ஒருவன் தனது நோக்கங்களில் வெற்றியடைகிறான் என்பதில் ஐயமில்லை. பொய்மையில் வாழும் ஏமாற்றுகர மனிதனை, வேதங்கள், பாவத்தில் இருந்து மீட்பதே இல்லை. மறுபுறம், புதிதாய் சிறகு படைத்த பறவைகள் தங்கள் கூடுகளைக் கைவிடுவதைப் போல, அவன் {ஏமாற்றுகர மனிதன்} மரணப்படுக்கையில் கிடக்கையில், அவை {வேதங்கள்} அவனைக் கைவிடுகின்றன.
குடிப்பழக்கம், சண்டை, அதிக எண்ணிக்கையிலான மனிதர்களிடம் பகை, திருமணம் தொடர்பான அனைத்து மோதல்கள், கணவன் மனைவிக்கு இடையேயான உறவின் முறிவு, உட்பகை, மன்னனுக்குத் துரோகம் ஆகியவை அனைத்தும் பாவிகளின் செயலாகும். இவை தவிர்க்கப்பட வேண்டும்.
கைரேகை பார்க்கும் ஒருவன், வணிகராக மாறிய திருடன், வேடன், {யோகி வேடம் பூண்ட} மருத்துவன், எதிரி, நண்பன், இழிந்த தன்மை கொண்டவன் ஆகிய ஏழு பேரும் சாட்சி அளிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர். செருக்கின் காரணமாகச் செய்யப்படும் அக்னிஹோத்ரம், அதே போன்ற நோக்கத்துக்காக நோற்கப்படும் பேசாநிலை {மௌனம்}, அதே நோக்கத்திற்காகச் செய்யப்படும் கல்வி மற்றும் வேள்வி ஆகிய {அக்னிஹோத்ரம், பேசாநோன்பு, கல்வி, வேள்வி ஆகியவை} நான்கையும் {நான்கின் நோக்கத்தையும்} அறியாமல், தேவையில்லாமல் {அல்லது அளவுக்கு அதிகமாக} செய்தால் அவை தீங்கையே தரும்.
{அந்தணர்களைக் கொன்ற இழிகுணம் கொண்டவர்கள்}
வீட்டைக் கொளுத்துபவன், நஞ்சைக் கையாள்பவன், பரத்தமைத் தரகன் {விபச்சாரத் தரகன் a pander}, சோமச் சாறு {சோமலதை} விற்பனையாளன், அம்புகளைச் செய்பவன், கணியன் {ஜோதிடன்}, நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், பிறன்மனை நயப்பவன் {an adulterer}, கருக்கலைப்பு செய்பவன், தனது ஆசானின் படுக்கையை மீறுபவன், மதுவுக்கு அடிமையான பிராமணன், கூரிய சொல் கொண்டவன், பழைய புண்ணைக் கிளறுபவன், இறைமறுப்பாளன் {நாத்திகவாதி}, வேதங்களைத் தூற்றுபவன், கையூட்டு {இலஞ்சம்} பெறுபவன், பரிந்துரைக்கப்பட்ட வயதைத் தாண்டி புனித நூலைத் தரித்துக் {உபநயனம் செய்து} கொள்பவன், கமுக்கமாகக் கால்நடைகளைக் கொல்பவன் [1], பாதுகாப்பு வேண்டுபவனைக் கொல்வபவன் ஆகிய தார்மீக அடிப்படையில் இழிகுணம் கொண்ட இந்த அனைவரும், அந்தணர்களைக் கொன்றவர்களாகவே கருதப்படுவர்.
{சோதனை}
தங்கம் நெருப்பால் சோதிக்கப்படுகிறது; நல்ல பிறப்பு பிறந்தவன் தனது ஒழுக்கத்தாலும், நேர்மையானவன் தனது நடத்தையாலும் சோதிக்கப்படுகிறான். துணிச்சலுள்ளவன், அச்சம் நிறைந்த காலத்திலும்; தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு} உள்ளவன், வறுமையான காலத்திலும்; நண்பர்களும் எதிரிகளும் துயரம் மற்றும் ஆபத்தான காலங்களிலும் சோதிக்கப்படுகின்றனர். முதுமை அழகை அழிக்கும், இலக்கில் {இலட்சியத்தில்} நம்பிக்கை பொறுமையையும், மரணம் வாழ்வையும், பொறாமை நீதியையும், கோபம் செழிப்பையும், தாழ்ந்தவருடன் சேர்க்கை நன்னடத்தையையும், காமம் பணிவையும், செருக்கு அனைத்தையும் அழித்துவிடும்.
{இந்த எட்டுக் குணங்கள் ஒருவனுக்கு மிளிர்வைத் தருகின்றன}
நற்செயல்களில் செழிப்புப் பிறக்கிறது, செயல்பாட்டின் விளைவாக அது வளர்கிறது, திறனின் விளைவாக அஃது ஆழமாக வேர்விடுகிறது, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதால் {சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதால்} அஃது உறுதி பெறுகிறது. அறிவு, நல்ல குலத்தில் பிறப்பு, தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு}, சாத்திரங்களின் அறிவு, ஆற்றல், வம்பளப்பு இல்லாமை {மிதமான பேச்சு}, சக்திக்குத்தக்கபடி தானம், நன்றியறிதல் ஆகிய எட்டு குணங்களும் அதைக் கடைப்பிடிப்பவனை மிளிரச் செய்கின்றன. ஆனால், ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, இந்தக் குணங்கள் அனைத்தையும் ஒன்றுபடச்செய்யக் கூடிய அறக்கொடை ஒன்று மட்டுமே உள்ளது. உண்மையில், ஒரு மன்னன் ஒரு குறிப்பிட்ட மனிதனை மதிக்கும்போது, அந்த அரச உதவி, இந்தப் பண்புகள் அனைத்தையும் (உதவி பெற்றவனிடம்) மிளிரச் செய்யும். மனிதர்களின் உலகில், அந்த எட்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைக் குறிப்பதாகும்.
(கீழ்க்குறிப்பிட்ட) எட்டில், நான்கு, நன்மையுடன் பிரிக்கமுடியாதபடி தொடுக்கப்பட்டுள்ளது {இணைக்கப்பட்டுள்ளது}. மற்ற நான்கும் எப்போதும் நல்லவர்களால் பின்பற்றப்படுகிறது. நன்மையுடன் பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டுள்ள முதல் நான்கு, வேள்வி, கொடை, கல்வி மற்றும் தவம் ஆகியன ஆகும். அதேவேளையில், தன்னடக்கம், உண்மை, எளிமை, எவருக்கும் ஊறிழையாமை {அஹிம்சை} ஆகிய மற்ற நான்கும் எப்போதும் நல்லவர்களால் பின்பற்றப்படுகின்றன.
{நீதியின் எட்டு வெவ்வேறு பாதைகள்}
வேள்வி, கல்வி, ஈகை, தவம், உண்மை, மன்னிக்கும் மனநிலை {பொறுமை}, இரக்கம் {கருணை}, மனநிறைவு ஆகியன நீதியில் உள்ளடங்கிய எட்டு வெவ்வேறு பாதைகளாகும். இவற்றில் முதல் நான்கு பெருமைக்காகப் பயிலப்படலாம், ஆனால் கடைசி நான்கும் உண்மையில் உன்னதமானவர்களிடம் மட்டுமே இருக்கும்.
{சபை}
பெரியோரில்லாத சபையேதும் இல்லை {பெரியோரில்லாதது சபையாகாது}. அறநெறி எது என்பதைத் தீர்மானிக்காதவர்கள் பெரியோரல்ல {தர்மத்தைச் சொல்லாதவர் பெரியோரல்ல}. உண்மையில் இருந்து பிரிந்து இருப்பது அறநெறியல்ல {சத்தியம் இல்லாதது தர்மம் அல்ல}. வஞ்சனை நிறைந்தது உண்மையல்ல {கபடம் கொண்டது சத்தியம் அல்ல}. உண்மை, அழகு, சாத்திரம் அறிதல், அறிவு, உயர்பிறப்பு, நன்னடத்தை {ஒழுக்கம்}, வலிமை, செல்வம், துணிச்சல், பல்வேறு பேச்சுத்திறன்கள் ஆகிய பத்தும் சொர்க்கத்திற்கான காரணங்களாகும்.
{பாவம்}
பாவத்தை இழைக்கும் ஒரு பாவி, அனைத்து தீய விளைவுகளாலும் தாக்கப்படுகிறான். அறம் பயிலும் அறவோன் {நல்லவன்}, பெரும் மகிழ்ச்சியை அறுவடை செய்கிறான். எனவே, ஒரு மனிதன், கடுந்தீர்மானத்துடன் {கடும் விரதத்துடன்} பாவத்தில் இருந்து விலக வேண்டும், மீண்டும் மீண்டும் இழைக்கப்படும் பாவம், அறிவை அழிக்கிறது; அறிவை இழந்த மனிதன் மீண்டும் மீண்டும் பாவத்தைச் செய்கிறான்.
{அறம்}
மீண்டும் மீண்டும் பயிலப்படும் அறம் அறிவை மேம்படுத்துகிறது; அறிவு வளர்ந்த மனிதன் மீண்டும் மீண்டும் அறம் பயில்கிறான். அறத்தைப் பயிலும் அறவோன் அருள் நிறைந்த உலகங்களுக்குச் செல்கிறான். எனவே, ஒரு மனிதன் அறம் பயில உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும். பொறாமையுள்ளவன், பிறரை ஆழமாகக் காயப்படுத்துபவன், கொடூரன், தொடர்ச்சியாகச் சண்டையிடுபவன், வஞ்சகன் ஆகியோர் இந்தப் பாவங்களைப் பயில்வதால் விரைவில் பெருந்துன்பத்தைச் சந்திக்கின்றனர்.
பொறாமையில்லாதவனும், அறிவுடையவனும், எப்போதும் நன்மையைச் செய்வதால், பெருந்துன்பத்தை அவன் சந்திப்பதே இல்லை; மறுபுறம் அவன் எங்கும் ஒளிர்கிறான். ஞானிகளிடமிருந்து ஞானத்தைப் பெறுபவனே உண்மையில் கற்றவனும், ஞானியுமாவான். அறம், பொருள் ஆகிய இரண்டையும் கவனித்து, மகிழ்ச்சியை அடைவதில் வென்றவனே ஞானியாவான்.
இரவை மகிழ்ச்சியாகக் கடத்த உம்மைத் தகுந்தவராக்கும் காரியத்தைப் பகலில் செய்யும். மழைக்காலங்களை மகிழ்ச்சியாகக் கடத்த உம்மைத் தகுந்தவராக்கும் காரியங்களை வருடத்தின் எட்டு மாதங்களில் செய்வீராக. முதிர்ந்த வயதில் மகிழ்ச்சிக்கு எது உத்தரவாதம் அளிக்குமோ அதை இளமையில் செய்யும்; மறுமையில் மகிழ்ச்சியாக வாழத் தகுந்தவனாக்கும் எதையும் முழு வாழ்விலும் செய்யும்.
எளிதாகச் செரிக்கும் உணவையும், இளமை கடந்த மனைவியையும், வெற்றி பெற்ற வீரனையும், முயற்சிகளில் வெற்றி மகுடம் பெற்ற துறவியையும் ஞானிகள் புகழ்கின்றனர்.
அநீதியாக அடைந்த செல்வத்தால் ஏற்பட்ட இடைவெளி அடைபடாமலேயே நீடிக்கிறது. அதேவேளையில் புதியவற்றால் வேறு இடங்களிலும் {அடைபடாத இடைவெளிகள்} தோன்றுகின்றன. தங்கள் ஆன்மாக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போரை ஆசான் கட்டுப்படுத்துகிறார்; தீயோரை மன்னன் கட்டுப்படுத்துகிறான்; அதே வேளையில், கமுக்கமாகப் பாவமிழைப்போரை, விவஸ்வத்தின் மகனான யமன் கட்டுப்படுத்துகிறான்.
{ஆய்ந்து உறுதிபடுத்த முடியாதவை}
முனிவர்கள், நதிகள், நதிக்கரைகள், உயர் ஆன்ம மனிதர்கள் ஆகியவற்றின் பெருமைகளையும் பெண்களின் தீய குணங்களுக்கான காரணங்களையும் உறுதியாகச் சொல்ல முடியாது {அல்லது அவற்றின் மூலத்தை அறிய முடியாது}.
{உலகை எப்போதும் ஆள்பவர்கள் யார்?}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தணர்களின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், தானம் அளிப்பவனும், தன் உறவினர்களிடம் நீதியுடன் நடந்து கொள்பவனும், மேன்மையுடன் {உன்னதமாக} நடந்து கொள்ளும் க்ஷத்திரியனும் எப்போதும் உலகை ஆள்வான். துணிச்சல் உள்ளவனும், கல்வி உள்ளவனும், பிறரைப் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்தவனும் ஆகிய மூவரும், உலகத்தில் இருந்து தங்க மலர்களைச் சேகரிக்க {பொன்விளையும் பூமியை ஈட்ட} எப்போதும் இயன்றவர்களாவார்கள்.
அறிவால் சாதிக்கப்பட்ட செயல்களே முதன்மையானவை {சிறந்தவை}; கரங்களால் சாதிக்கப்பட்டவை இரண்டாம் {மத்திம} தரம்; தொடைகளாலும், தலையில் பாரஞ்சுமந்து செய்யப்பட்ட செயல்கள் மிக இழிந்தவை. துரியோதனன், சகுனி, மூடனான துச்சாசனன், கர்ணன் ஆகியோரிடம் உமது நாட்டின் பராமரிப்பைக் கொடுத்துவிட்டு, செழிப்பை நீர் எவ்வாறு நம்பலாம்? ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்து அறங்களையும் கொண்ட பாண்டவர்கள் தங்கள் தந்தை போல உம்மை நம்பி இருக்கிறார்கள். ஓ!, உமது மகன்களுக்கு அளித்தது போல அவர்களுக்கும் {நாட்டை} அளியும்” என்றான் {விதுரன்}.
தோழமை? – உத்யோக பர்வம் பகுதி 36அ-பழங்காலத்தில் ஆத்ரேயருக்கும் சாத்யர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலை விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; அவதூறுகளையும் நிந்தனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும்; கடுஞ்சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றும்; மௌனம் மற்றும் உண்மையின் சிறப்பையும், தோழமை குறித்தும் ஆத்ரேயர் சாத்யர்களுக்குச் சொன்னது…
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான் “இது தொடர்பாகப் பழங்கதையான அத்ரியின் மகனுக்கும் {ஆத்ரேயருக்கும்}, சாத்யர்கள் என்று அழைக்கப்பட்ட தேவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் மேற்கோள் காட்டப்படுகிறது. பழங்காலத்தில் சாத்யர்கள் என்ற பெயரில் அறியப்பட்ட தேவர்கள், வாழ்வாதாரத்திற்காக இரந்துண்டு உலாவி கொண்டிருந்த உயர்ந்த ஞானமும், கடுந்தவமும் கொண்ட பெரும் முனிவரிடம் (அத்ரியின் மகனிடம்} கேள்வி கேட்டனர்.
{ஆத்ரேயருக்கும் சாத்யர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல்}
சாத்யர்கள் {ஆத்ரேயரிடம்}, “ஓ! பெரும் முனிவரே, சாத்யர்கள் என்று அறியப்படும் தேவர்கள் நாங்கள். உம்மைக் கண்டு, நீர் யார் என்பதை அனுமானிக்க இயலாமல் இருக்கிறோம். எனினும், சாத்திர அறிவின் விளைவால் ஏற்பட்ட புத்திக்கூர்மையும், தற்கட்டுப்பாடும் உடையவர் நீர் என்று எங்களுக்குத் தெரிகிறது. எனவே, கல்வி அறிவு நிறைந்த, பரந்த மனம் கொண்ட வார்த்தைகளை எங்களிடம் பேசுவதே உமக்குத் தகும்” என்றனர்.
{அவதூறுகளும் நிந்தனைகளும்}
அதற்கு அந்தப் பிச்சைக்கார முனிவர் {ஆத்ரேயர் சாத்யர்களிடம்}, “இறவாதவர்களே {அமரர்களே/தேவர்களே}, அமைதியான நிலை, அனைத்து உணர்வுகளிலும் ஆற்றல் {கட்டுப்பாடு}, உண்மை அறம் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் துணையுடன், ஒருவன், தனது இதயத்தில் இருக்கும் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து, ஏற்புடையவை, ஏற்பில்லாதவை ஆகிய இரண்டையும் தன்னைப் {சுயத்தைப்} போன்றே {தனக்குச் சமமாகக்} கருத வேண்டும்.
பிறர் செய்யும் நிந்தனைகளையோ, பழியையோ ஒருவன் திரும்பச் செய்யக்கூடாது. அவற்றைப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டால், தன்னால் உணரப்படும் வலி, நிந்திப்பவனை எரித்துவிடும். மேலும், {பழியையோ, நிந்தனையையோ} தாங்கிக் கொள்பவன், நிந்திப்பவனின் நல்வினைப் பயன்களையும் {புண்ணியங்களை} தனதாக்கிக் கொள்வதில் வெல்கிறான். {எனவே}, அவதூறு கூறுவதிலோ, நிந்திப்பதிலோ ஈடுபடாதீர். பிறரை இழிவு படுத்தவும் அவமதிக்கவும் செய்யாதீர். நண்பர்களுடன் சண்டையிடாதீர். தீயவர்கள் மற்றும் இழிந்தவர்களின் தோழமையில் இருந்து விலகுவீராக. ஆணவ மற்றும் இழிந்த நடத்தை கொள்ளாதீர்.
கோபம் நிறைந்த கடுஞ்சொற்களைத் தவிர்ப்பீர். எலும்புகள், இதயம், மனிதர்களின் வாழ்வாதாரங்கள், ஏன் உயிரையே கூடக் கடுஞ்சொற்கள் எரித்துவிடும். எனவே, அறம் சார்ந்து இருப்பவன் {நல்லவன்}, கோபம் நிறைந்த கடுஞ்சொற்களை எப்போதுமே விலக்க வேண்டும். முள்ளெனும் வார்த்தைகளால் பிறரின் உயிரையே துளைக்கும் கோபம் நிறைந்த கடும் பேச்சுடைய இழிந்தவன், தனது நாவில் நரகத்தையே கொண்டிருக்கிறான். எப்போதுமே மனிதர்களுக்குத் துயரத்தை வழங்குபவன் அவன் என்று கருதப்பட வேண்டும்.
சூரியனைப் போன்றோ நெருப்பைப் போன்றோ வெப்பமுடையவையும், கூரிய முனை கொண்டவையுமான பிறரின் சொல்லம்புகளால், ஆழமான காயமடைந்து, வலியால் எரிந்தாலும், ஒரு ஞானம் கொண்ட மனிதன், {அப்படித் தன்னை} நிந்திப்பவனுடைய நற்தகுதிகள் {நல்வினைப்பயன்கள்} தன்னுடையதாகும் என்பதை நினைவில் கொண்டு, அவற்றைப் {அந்தச் சொல்லம்புகளைப்} பொறுமையாகத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
நல்லவனுக்காகக் காத்திருப்பவன் {பணி செய்பவன்}, தீயவனுக்காகக் காத்திருப்பவன், தவத்தகுதியுடையவனுக்காகக் காத்திருப்பவன், திருடனுக்காகக் காத்திருப்பவன் ஆகியோர், சாயத்தில் தோய்த்த துணியைப் போல, விரைவில் தனது தோழனின் நிறத்தையே அடைவார்கள்.
நிந்தையால் காயப்பட்டவன், தானும் திரும்ப நிந்திக்காமல், பிறரையும் ஏவாமலோ, அடிவாங்கிய பிறகு திரும்ப அடிக்காமல், பிறரையும் ஏவாமலோ, தன்னைக் காயப்படுத்தியவனுக்குச் சிறு காயத்தையும் விரும்பாமலோ இருக்கும்போது, அவனுடைய தோழமையைத் தேவர்களே கூட விரும்புகிறார்கள்.
{மௌனமும், உண்மையும்}
பேச்சைவிட மௌனமே சிறந்தத்து என்று சொல்லப்படுகிறது. பேசத்தான் வேண்டும் என்றால், உண்மையைச் சொல்வதே சிறந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அதை ஏற்புடைய வகையில் இனிமையாகச் சொல்வதே சிறந்தது. ஏற்புடையவை சொல்லப்பட வேண்டுமென்றால் அறநெறிக்கு இசைவானதைச் சொல்வதே சிறந்தது.
{துணை [அ] தோழமை [அ] நட்பு}
ஒரு மனிதன் யாருடன் வாழ்கிறானோ, சரியாக அவனைப் போலவே அவன் ஆகிறான். அல்லது அவன் யாரை மதிக்கிறானோ அவனைப் போல ஆகிறான். அல்லது, தான் யார் போல ஆக வேண்டும் என்று நினைக்கிறானோ அவனைப் போலவே ஆகிறான்.
ஒரு மனிதன் எந்தப் பொருட்களைத் விலக்குகிறானோ அவற்றில் இருந்து விடுபடுகிறான். ஒருவன் அனைத்தையும் விட்டுவிட்டால், அவனைச் சிறு துயரமும் பாதிக்காது. அப்படிப்பட்ட ஒரு மனிதன் பிறரை வீழ்த்துவதில்லை, அதே போலப் பிறரால் வீழ்த்தப்படுவதுமில்லை. அவன் பிறரை எதிர்க்கவோ அவர்களைக் காயப்படுத்துவதோ இல்லை. அவன் புகழுக்கும், பழிக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அவன் துயரப்படுவதுமில்லை மகிழ்வதுமில்லை.
அனைவருக்கும் செழிப்பை விரும்புபவனும், பிறருக்குத் துயரேற்படுத்த மனதில் நினையாதவனும், பேச்சில் உண்மையுள்ளவனும், நடத்தையில் அடக்கம் கொண்டவனும், தனது அனைத்து ஆசைகளையும் கட்டுக்குள் வைத்திருப்பவனுமான ஒரு மனிதன் தன் வகை இனங்களிலேயே முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்.
உண்மையல்லாதவற்றைச் சொல்லி ஆறுதல் கூறாதவனும், உறுதியளித்தபடி கொடுப்பவனும், பிறரின் பலவீனத்தில் ஒரு கண் வைத்திருப்பவனுமான மனிதன், நல்ல தன்மையில் {முதன்மையானவனுமல்லாமல், இழிந்தவனுமல்லாமல் இருக்கும்} நடுத்தர மனிதன் என்று கருதப்படுகிறான்.
கட்டுப்படுத்த இயலாமை, ஆபத்துகளால் பாதிப்படையக் கூடிய நிலை, கோபத்துக்கு வழிகொடுத்து, அதற்கு உள்ளாவது, நன்றிமறப்பது, பிறருக்கு நண்பனாக இயலாமை, தீய இதயம் ஆகியவை ஒரு தீய மனிதனின் குறியீடுகளாகும். பிறரிடம் இருந்து வரும் நன்மையில் மனநிறைவு கொள்ளாமல், தன்னையே கூடச் சந்தேகித்துக் கொள்பவன், தன்னிடம் இருந்து தன் உண்மையான நண்பர்களையே விரட்டி விடுபவன் மனிதர்களில் இழிந்தவனாவான்.
தனக்குச் செழிப்பை விரும்புபவன், நல்லவர்களுக்குக் காத்திருக்க {பணி செய்ய} வேண்டும். சில நேரங்களில் பாகுபாடற்றவருக்கும் காத்திருக்கலாம். ஆனால் தீயவர்களுக்காகக் காத்திருக்கவே கூடாது. தீயவன், தன் பலத்தாலும், தொடர் முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும், ஆற்றலாலும் செல்வம் ஈட்டுவான் என்பது உண்மையே, ஆனால், அவனால் நேர்மையான புகழை வெல்லவே முடியாது. அதே போல, (அவன் எக்குலத்தில் பிறந்திருந்தாலும்) அவனால், உயர் குடும்பங்களின் நடத்தைகளையோ அறங்களையோ அடையவே முடியாது” என்றார் {ஆத்ரேயர்}
உயர் குடும்பங்கள்? – உத்யோக பர்வம் பகுதி 36ஆ-உயர்ந்த குடும்பங்கள், நட்பு, துயரம் ஆகியவற்றின் இலக்கணங்களை விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; எவை உயர்ந்த குடும்பங்கள்? எவை தாழ்ந்த குடும்பங்கள்? உயர்ந்த குடும்பங்கள் எப்படி வீழ்ச்சியடைகின்றன; வீழ்ச்சியடையாமல் இருக்க எதைப் பேண வேண்டும்? எது நட்பு? நட்பை எப்போது அறிய முடியும்? சோகம் மனிதனை எந்நிலைக்கு ஆளாக்குகிறது? அறிவு எப்படிப் புலன்கள் வழியாக அழிவடைகிறது? போன்றவற்றை விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது …
{உயர்ந்த குடும்பங்கள் [அ] உயர்குலங்கள்}
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான், “அறம், பொருள் ஆகிய இரண்டிலும் இருந்து வழுவாமல், அந்த இரண்டையும் மதிப்போரும், பெரும் கல்வியறிவு உடையோரும், தேவர்களும் கூட உயர்ந்த குடும்பங்களைத் தாங்கள் விரும்புவதாகவே வெளிப்படுத்துகின்றனர். ஓ! விதுரா, உயர்ந்தவை {மகாகுலங்கள்} என எக்குடும்பங்கள் அழைக்கப்படுகின்றன? என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “தவம், தன்னடக்கம் {புலனடக்கம்}, வேத அறிவு, {பொறுமை} [1], வேள்விகள், தூயத் திருமணங்கள், அன்ன தானங்கள் ஆகிய ஏழும் அந்தக் {உயர்} குடும்பங்களில் இருக்கும்; அங்கே {அந்த உயர் குடும்பங்களில்} அவை முறையாகப் பயிலப்பட்டு, உயர்வாக மதிக்கப்படுகின்றன. எவை சரியான பாதையில் இருந்து வழுவாமல் இருக்கின்றனவோ, எவற்றில் இருந்த உயிர்நீத்த மூதாதையர் (தங்கள் வழித்தோன்றல்கள் தவறுகள் இழைப்பதைக் கண்டு) வலிக்கு உள்ளாவதில்லையோ, எவை அனைத்து அறங்களையும் உற்சாகமாகப் பயில்கின்றனவோ, எவற்றில் பிறந்தோர் தாங்கள் பிறந்த குலத்தின் தூய புகழை மேம்படுத்த விரும்பி, எந்த வகையான பொய்மையையும் தவிர்க்கின்றனரோ அவையே உயர்ந்த குடும்பங்களாகும் {மகா குலங்களாகும்}.
{உயர்ந்த நிலையில் இருந்து வீழ்ந்து இழிவடையும் குடும்பங்கள்}
வேள்விகள் செய்யாமை, தூய்மையற்ற திருமணங்கள், வேதங்களைப் புறக்கணித்தல், அந்தணர்களை அவமதித்தல் ஆகியவற்றைச் செய்யும் குடும்பங்கள் தங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து கீழே விழுந்து இழிந்தவை ஆகின்றன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குடும்பங்களின் உறுப்பினர்கள், அந்தணர்களைப் பற்றி அவதூறு பேசி, அவர்களை அவமதிப்பதாலோ, அவர்களிடம் {அந்தணர்களிடம்} உள்ளவற்றை மோசடி செய்து பறிப்பதாலோ அக்குடும்பங்கள் வீழ்ந்து இழிந்தவையாகின்றன. {குடும்ப} உறுப்பினர்களும், செல்வமும், பசுக்களும் கொண்டிருந்தாலும், நன்னடத்தை இல்லாவிட்டால் அவை குடும்பங்களாகக் கருதத்தக்கவையல்ல. அதே வேளையில், செல்வமற்றிருந்தாலும், தனித்துவக் குணங்களும், நன்னடத்தையும் கொண்ட குடும்பங்களே, குடும்பங்கள் என்று கருதப்பட்டுப் பெரும் புகழை வெல்கின்றன. எனவே, நல்ல குணங்களையும், நல்ல நடத்தையையும் கவனத்துடன் பேண வேண்டும். செல்வத்தைப் பொறுத்தவரை, அது வரும் அல்லது போகும். {செல்வம் இன்று வரும், நாளை போகும். அதனால் நன்னடத்தையையே எப்போதும் பேண வேண்டும்}.
செல்வமில்லாதவன் உண்மையில் குறைந்தவனல்ல. ஆனால், குணமோ, நடத்தையோ இல்லாதவன் உண்மையில் குறைந்தவனே {ஒன்றும் இல்லாதவனே}. பசுக்களும், கால்நடைகளும், உழவு உற்பத்தியும் நிறைந்து இருந்தாலும், நல்ல குணங்களும் நடத்தையும் இல்லாதிருந்தால், உண்மையில் அக்குடும்பங்கள் மதிப்புக்கும், புகழுக்கும் தகுந்தவை அல்ல.
சண்டைகளுக்கு வித்திடுபவனாகவோ, மன்னனுக்கு அமைச்சனாகவோ, பிறர் செல்வத்தைத் திருடுபவனாகவோ, குடும்பப் பகையைத் தூண்டுபவனாகவோ, ஏமாற்றுக்காரனாகவோ, பொய் நடத்தை கொண்டவனாகவோ, முனிவர்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர் ஆகியோரை உபசரிப்பதற்கு முன்பு உண்பவனாகவோ நமது குலத்தில் எவனும் இல்லாதிருக்கட்டும். அந்தணர்களைக் கொல்பவனோ, அவர்களிடம் வெறுப்பை ஊக்குவிப்பவனாகவோ, உழவைத் தடுப்பவனாகவோ, அதற்குத் தீங்கு விளைவிப்பவனாகவோ இருக்கும் ஒருவன் நமது குலத்தில் கலவாதிருக்கட்டும்.
(இருக்கைக்கு) வைக்கோலும் {புல்லும்}, (அமர்வதற்குத்) தரையும், (பாதம் மற்றும் முகம் கழுவ) நீரும், நான்காவதாக இனிய சொற்களும் நல்லோர் வீடுகளில் இல்லாதிருக்காது. நீதிமிக்கச் செயல்களைப் பயில்வதில் அர்ப்பணிப்போடு இருக்கும் அறம்சார்ந்த மனிதர்கள், மரியாதையுடன் கொடுத்து (விருந்தினர்களை) உபசரிக்க விரும்பி, {பாய், தரை, நீர், இனிய சொல் ஆகியவற்றை} எப்போதும் தயாராக வைத்திருப்பார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்தன மரம் மெலிதாக இருந்தாலும், (மிகத் தடிமனான) பிற மரங்கள் தாங்க முடியாத பாரத்தைத் தாங்குவது போல, உயர் குடும்பங்களில் உள்ளோர், சாதாராண மனிதர்களால் இயலாத காரியமான, பெரும் சுமையைச் சுமக்க இயன்றவர்களாக எப்போதும் இருக்கிறார்கள்.
{நட்பு}
எவனுடைய கோபம் பயத்தைக் கொடுக்கிறதோ, எவன் மீது கொண்ட பயத்தால் அவனுக்காக ஒருவன் காத்திருக்கிறானோ அவன் நண்பனல்ல. ஆனால், எவனிடம் ஒரு தந்தையிடம் கிடைக்கும் ஆறுதலை ஒருவன் பெறுகிறானோ, அவனே அவனுக்கு உண்மையான நண்பனாவான். பிற நட்புகள் சாதாரணத் தொடர்புகளே. பிறப்பால் இரத்தத் தொடர்பு இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆதரவளிப்பவனாகவும், பாதுகாப்பாளனாகவும் இருப்பவனே ஒருவனுக்கு உண்மையான நண்பனாக இருக்க முடியும். நிலையற்ற இதயம் கொண்டவனோ, பெரியோருக்காகக் காத்திருக்காதவனோ, மனநிலையில் உறுதியற்றவனோ நண்பர்களைப் பெறவே முடியாது.
நீர்வற்றிய குளங்களைக் கைவிடும் அன்னங்களைப் போல, (நோக்கங்களை அடைய விரும்பும்) நிலையற்ற இதயம் கொண்டவனையோ, மனதைக் கட்டுக்குள் வைக்காதவனையோ, புலன்களுக்கு அடிமையானவனையோ, வெற்றிக் கைவிடுகிறது. மனதளவில் பலமற்றவர்களே திடீரெனக் கோபத்தையோ, போதுமான காரணமே இல்லாமல் மனநிறைவையோ அடைகிறார்கள்; அவர்கள் நிலையற்ற மேகங்களைப் போன்றவர்களாவர்.
நண்பர்களால் உபசரிக்கப்பட்டும், {அவர்களால்} ஆதாயமடைந்தும்கூட, {அவர்களிடம்} நன்றிமறந்து இருப்பவர்களின் பிணங்களை, இரை தேடித் திரியும் பறவைகள் கூடத் தவிர்க்கின்றன. நீர் ஏழையாக இருந்தாலும், செல்வந்தனாக இருந்தாலும் உமது நண்பர்களை மதிப்பீராக. ஏதாவதொரு சேவை {உதவி} கேட்கப்படும் வரை, நண்பர்களின் நேர்மையையும், நேர்மையற்ற தன்மையையும் அறிய முடியாது.
{துயரம்}
சோகம் அழகைக் கொல்கிறது {அழிக்கிறது}; சோகம் பலத்தைக் கொல்கிறது; சோகம் புரிதலைக் கொல்கிறது; மேலும் சோகம் நோயைக் கொடுக்கிறது. துயரம் என்பது, ஒருவனின் நோக்கத்தை அடைய உதவாமல், {அவனது} உடலை வற்ற செய்து, எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எனவே, துயரத்திற்கு உம்மைக் கொடுக்காதீர் {துயரத்துக்கு ஆட்படாதீர்}.
மனிதர்கள் இறந்து மீண்டும் பிறப்பது அடிக்கடி நிகழ்கிறது; அவர்கள் அடிக்கடி வளர்ந்து உதிர்கின்றனர். அடிக்கடி அவர்கள் பிறர் உதவியைக் கேட்கிறார்கள், அவர்களது உதவியும் பிறரால் கேட்கப்படுகிறது; அடிக்கடி அவர்கள் புலம்புகிறார்கள், அவர்களிடமும் {பலர்} புலம்புகிறார்கள். மகிழ்ச்சி மற்றும் துயரம், நிறை மற்றும் குறை, ஆதாயம் மற்றும் இழப்பு {இலாபம் மற்றும் நஷ்டம்}, வாழ்வு மற்றும் மரணம், ஆகியவை முறையான வரிசையில் அனைவராலும் அனுபவிக்கப்படுகின்றன. எனவே, தற்கட்டுப்பாடு கொண்ட ஒருவன் இன்பத்தில் மகிழ்ச்சியடையவும், துன்பத்தில் துயரடையவும் கூடாது.
ஆறுபுலன்களும் {மனத்துடன் கூடிய ஐம்பொறிகளும்} எப்போதும் அமைதியற்றே இருக்கின்றன. பானையின் ஓட்டைகளின் வழியாக ஒழுகும் நீரைப் போல, அவற்றில் {ஆறு புலன்களில்} முக்கியமான ஒன்றின் வழியாக, தான் கொண்ட பலத்துக்குத் தக்க வகையில் அறிவு அழிவடைகிறது”, என்றான் {விதுரன்}.
தனி மரம் தோப்பாகாது! – உத்யோக பர்வம் பகுதி 36இ-நெருப்பு போல இருக்கும் யுதிஷ்டிரன் தனது மகன்களை அழித்துவிடுவான் என்று தான் அஞ்சுவதாகத் திருதராஷ்டிரன் சொல்வது; அச்சத்தைத் தவிர்க்கும் வழிவகைகளை விதுரன் சொல்வது; உறவினர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைச் சொல்வது; ஒற்றுமையின் வலிமை குறித்துச் சொல்வது; கொல்லத்தகாதவர்கள் யார்? உடல்நலத்தின் முக்கியத்துவம், சினத்தின் தன்மை ஆகியவற்றைச் சொல்லி வலிமை மற்றும் மென்மையுடன் கூடிய செழிப்பை அடைவதே உண்மையான கொள்கை எனச் சொல்வது; சூதாட்டத்தின் போது தான் எச்சரித்ததையும், திருதராஷ்டிரன் அதை ஏற்காததையும் சொல்லி, துரியோதனனை அவனது தீய வழிகளில் இருந்து திருப்பும்படி விதுரன் சொல்வது…
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “நெருப்புச்சுடர் போன்ற மன்னன் யுதிஷ்டிரன் என்னால் ஏமாற்றப்பட்டான். அவன் நிச்சயம் எனது மகன்களைப் போர்க்களத்தில் அடியோடு அழிப்பான். எனவே, அனைத்தும் ஆபத்து நிறைந்ததாகவே எனக்குத் தெரிகிறது. என் மனம் முழுவதிலும் கவலையே இருக்கிறது. ஓ! பெரும் புத்திசாலித்தனம் கொண்டவனே {விதுரா}, என் கவலைகளை அகற்றும் வகையிலான சொற்களை எனக்குச் சொல்வாயாக” என்றான்.
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, அறிவு மற்றும் தவத்தைத் தவிர, புலன்களை அடக்குவதைத் தவிர, பேராசையைக் கைவிடுவதைத் தவிர வேறு எதிலும் நான் நன்மையைக் காணவில்லை. தன்னறிவால் {ஆன்ம ஞானத்தால்}, அச்சம் அகலுகிறது; தவத்தால், பெரியதும் மதிப்புமிக்கதும் வெல்லப்படுகிறது; பெரியோருக்காகக் காத்திருப்பதால் {பெரியோருக்குப் பணிவிடை செய்வதால்}, கல்வி அடையப்படுகிறது, தன்னடக்கத்தால் {புலனடக்கத்தால்}, அமைதி பெறப்படுகிறது.
கொடையாலோ, வேதச் சடங்குகளைப் பயில்வதாலோ கிடைக்கும் தகுதியை அடையாமல், விடுதலையை {முக்தியை} விரும்புவோர், கோபம் மற்றும் வெறுப்பில் இருந்து விடுபட்டு வாழ்வைக் கடத்துவதில்லை. சிறந்த வழியில் கிடைக்கும் கல்வியாலும், அறம்சார்ந்த போராட்டத்தாலும், கடுமையாகச் செய்யப்பட்ட தவத்தாலும் கிடைக்கும் மகிழ்ச்சி, இறுதிக்காலம் வரை எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
{உறவினர்கள் 1}
தன் உறவினர்களுடன் அமைதியாக இல்லாதவர்கள், நன்கு தயாரிக்கப்பட்ட படுக்கைகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் உறக்கத்தைப் பெறுவதில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் {உறவினர்களுடன் அமைதியாக இல்லாதவர்கள்} பெண்களிடத்திலோ, புலவர்கள் {மாகதர்கள்} மற்றும் துதிபாடிகளின் {சூதர்களின்} துதி பாடல்களிலோ கூட மகிழ்ச்சியை அடைவதில்லை. அப்படிப்பட்ட மனிதர்கள் அறம் பயிலவே முடியாது. இவ்வுலகில் மகிழ்ச்சி அவர்களுடையதாக இருக்காது.
எந்தச் சிறப்பும் அவர்களுடையதாக இருக்க முடியாது. அமைதி அவர்களிடம் எந்த அழகையும் கொடுப்பதில்லை. தங்களுக்கு நன்மை தரும் ஆலோசனைகள் அவர்களுக்கு நிறைவைத் தருவதில்லை. அவர்களிடம் இல்லாததை அவர்கள் பெறுவதுமில்லை, தங்களிடம் உள்ளதையும் அவர்கள் தக்க வைத்துக் கொள்ளவும் இயலாது. ஓ! மன்னா, அத்தகு மனிதர்களுக்கு அழிவைத் தவிர வேறு எந்த முடிவும் கிடையாது.
{ஒற்றுமையின் வலிமை}
பசுக்களிடம் பாலும், அந்தணர்களிடம் தவமும், பெண்களிடம் நிலையாமையும் {உறுதியற்ற தன்மையும்} உண்டாவதைப் போல, உறவினர்களிடம் அச்சமும் உண்டாக வேண்டும். ஒன்றாகச் சேர்க்கப்பட்ட சம நீளம் கொண்ட, எண்ணற்ற மெல்லிய நூல்கள், தங்கள் எண்ணிக்கையின் பலத்தால், தங்கள் மேல் முன்னும் பின்னும் நிலையாக உருண்டு கொண்டிருக்கும் உருளையைத் தாங்க முடிகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நல்ல உறவினர்களின் காரியத்திலும் இதுவே வழக்கு. {அதாவது, நல்ல உறவினர்களுடன் ஒற்றுமையாக இருப்பதே, பெரும் பாரத்தைச் சுமக்கும் வலிமையைத் தரும்}.
ஓ! திருதராஷ்டிரரே, அந்தணர்கள், பெண்கள், உறவினர்கள், பசுக்கள் ஆகியோர் மீது கொடுங்கோன்மை செலுத்துபவர்கள், கனிந்த கனிகள் விழுவதைப் போல, தங்கள் நிலையில் இருந்து விரைவில் விழுகிறார்கள்.
தனியாக நிற்கும் ஒரு மரம், என்னதான் பெரியதாக, பலமாக, ஆழமான வேர்கள் உடையதாக இருந்தாலும், பலத்த காற்று வீசும்போது, அதன் அடிமரம் திசை திரும்பவும், நொறுங்கவும் செய்கிறது. எனினும், நெருக்கமாகவும், கச்சிதமாகவும் வளரும் மரங்கள், {பரஸ்பரம்} ஒன்றோடு ஒன்று சார்ந்து இருக்கும் தங்கள் தகுதியின் காரணமாக, மிகப் பெரிய கடுமையான காற்றையும் எதிர்த்து நிற்கின்றன.
எனவே, {யாரோடும் சேராமல்} தனியாக இருக்கும் ஒருவன், அனைத்து அறங்களுடனும் இருந்தாலும், காற்றால் வீழ்த்தப்படும் தனி மரம் போல, எதிரிகளால் வீழ்த்தப்படக் கூடியவனே என்று கருதப்படுகிறான். அதே போல, உறவினர்கள், ஒருவருக்கு ஒருவர் சார்ந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதன் விளைவாக, தடாகத்தில் இருக்கும் தாமரைத் தண்டுகளைப் போல இணைந்தே வளர்கின்றனர். {உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழ்பவன், அவர்களோடு சேர்ந்து தானும் வளர்கிறான்}.
{கொல்லத்தகாதவர்கள்}
அந்தணர்கள், பசுக்கள், உறவினர்கள், குழந்தைகள், பெண்கள், உணவிட்டோர், பாதுகாப்பு கோரி சரணடைந்தோர் ஆகியோர் {எப்போதும்} கொல்லப்படவே கூடாது.
{உடல் நலம்}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, செல்வமில்லாமல், ஒருவனுக்கு மேனியில் நல்ல தரம் இருக்காது. எனினும் நீர் உடல்நலத்தோடு இருந்தால், நீர் உமது நன்மையை அடைய முடியும். உடல்நலமற்று நோயாளியாய் இருப்பவன் பிணமே.
{சினம்}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபம், அதன் கசப்பு, காரம், உறைப்பு, சூடு ஆகியவற்றால் வலிநிறைந்த விளைவுகளையே கொடுக்கும். அது {கோபம்}, எந்த உடல் நோயாலும் உண்டாகாத ஒருவகைத் தலைவலியாகும். அறிவற்றவர்களால் அவற்றைச் செரிக்கவே முடியாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் {அறிவுள்ளவராகையால்} அதை விழுங்கி {கோபத்தைச் செரித்து = அடக்கி} அமைதி அடைவீராக. பிணியால் வதைக்கப்படுவோர் {துன்பப்படுவோர்} எந்த இன்பங்களையும் விரும்புவதில்லை, செல்வத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அவர்கள் விரும்புவதில்லை}. எனினும், நோய்வாய்ப்பட்டவர், கவலையால் நிறைந்து, மகிழ்ச்சி என்ன என்பதையோ, செல்வத்தால் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதையோ அறியமாட்டார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையில் திரௌபதி வெல்லப்படுவதைக் கண்டு, “நேர்மையானவர்கள், விளையாட்டில் ஏமாற்றுத்தனத்தைத் தவிர்ப்பார்கள். எனவே, துரியோதனனை நிறுத்தும்” என்ற சொற்களை முன்பே நான் உம்மிடம் சொன்னேன். எனினும், எனது சொற்களின் படி நீர் செயல்படவில்லை. வலிமை என்பது, மென்மைக்கு எதிரானது அல்ல. {மென்மையானவர்களை எதிர்ப்பவர்கள் பலசாலிகளல்ல}. மறுபுறம், வலிமையுடன் கலந்த மென்மையே, எப்போதும் பின்பற்றப்பட வேண்டிய உண்மையான கொள்கையைக் கொண்டுள்ளது.
{செழுமை}
நேர்மையற்றதனத்தை {கொடுமையை} மட்டுமே சார்ந்திருக்கும் செழுமை, அழிக்கப்படும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், வலிமை, மென்மை ஆகிய இரண்டையும் சார்ந்த செழுமை, {ஒருவனின்} மகன்கள் மற்றும் பேரர்களிடம் திறத்துடன் இறங்கிச் செல்கிறது. எனவே, உமது மகன்கள் பாண்டவர்களைப் பேணிக் காக்கட்டும். பாண்டவர்களும் உமது மகன்களைப் பேணிக் காக்கட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரே நண்பர்களையும், எதிரிகளையும் பெற்ற குருக்கள், பாண்டவர்கள் ஆகிய இருவரும், மகிழ்ச்சியுடனும் செழுமையுடனும் ஒன்றாக {ஒற்றுமையாக} வாழட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்று, குருக்களின் மகன்களுக்கு நீரே புகலிடம்.
உண்மையில், குருவின் குலம், ஓ! அஜமீடரே {திருதராஷ்டிரரே}, உம்மையே சார்ந்து {நம்பி} இருக்கிறது. ஓ! அய்யா, உமது புகழுக்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாத்து, கடுமையான வனவாச துன்பத்தை அனுபவித்த பாண்டுவின் பிள்ளைகளைப் பேணிக் காப்பீராக. உமது எதிரிகள் உம்மிடம் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடிக்காதிருக்கட்டும். ஓ! மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் உண்மைக்குத் {சத்தியத்துக்குத்} தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனை அவனது தீய வழிகளில் இருந்து திருப்புவீராக” ,என்றான் {விதுரன்}
சமூக அரசியல் முறைமை! – உத்யோக பர்வம் பகுதி 37அ-பதினேழு வகை மூடர்கள் யார் என்று விதுரன் சொன்னது; அந்தணனைக் கொன்ற பாவத்தைத்தரும் குற்றங்கள் குறித்தும், சொர்க்கம் யாரால் வெல்லப்படுகிறது என்றும்; பிறருக்கு இனிமையானதைப் பேசுவது எளிது, ஆனால் இனிமையற்றதாக இருந்தாலும் உண்மைய் சொல்வது கடினம் என்றும்; எது எதை எது எதற்காகத் தியாகம் செய்யலாம் என்றும்; செல்வத்தை ஏன் பாதுகாக்க வேண்டும் என்றும்; சூதாட்டம் எவ்வளவு தீங்கானது என்றும் விதுரன் திருதராஷ்டிரனிடம் சொல்வது…
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரரே}, ஓ! மன்னா, வெறும் வெளியில் தனது கை முட்டியை அடிப்பவர்களைப் போன்ற {ஆகாயத்தைத் தனது முட்டியால் உடைக்க நினைப்பவர்களைப் போன்ற}, வானத்தில் இருக்கும் ஆவி நிரம்பிய இந்திரவில்லை {வானவில்லை} வளைக்க முயல்பவர்களைப் போன்ற, சூரியனின் அருவக் கதிர்களைப் பிடிக்க விரும்புபவர்களைப் போன்ற பதினேழு வகையான மனிதர்களைக் குறித்துச் சுயம்புவின் மகனான மனு சொல்லியிருக்கிறார்.
{பதினேழு வகையான மூடர்கள்}
- கட்டுப்படுத்தப்பட இயலாதவனைக் கட்டுப்படுத்த முயல்பவன்.
- சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.
- எதிரிகளிடம் பணிவாகப் பணி செய்பவன்.
- பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி {அவர்களைக்} கட்டுப்படுத்த முயல்பவன். {பெண்களால் வரும் பொருளைக் கொண்டு பிழைப்பவன்}.
- கேட்கக்கூடாதவனிடம் தானம் கேட்பவன்.
- எதையும் செய்யாமலே, தன்னைப் புகழ்ந்து கொள்பவன் {தற்பெருமை பேசிக் கொள்பவன்}.
- உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
- பலமற்றவனாக இருந்து கொண்டு, பலமானவனிடம் எப்போதும் பகை பாராட்டி வருபவன்.
- ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் பேசுபவன்.
- அடைய முடியாததை அடைய விரும்புபவன்.
- மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிடம் கேலி செய்பவன்.
- தனது மருமகளால் தனது அச்சங்கள் அனைத்தும் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
- தனது வித்துகளை வேறு நிலத்தில் சிதற விடுபவன். {பிறர் மனைவியரை அடைபவன்}.
- தன் மனைவியைக் குறித்துத் தவறாகப் பேசுபவன்.
- பிறரிடம் இருந்து எதையும் பெற்றுக் கொண்டு, அது நினைவில்லையே என்று சொல்பவன்.
- புனித இடங்களில் தானமளித்துவிட்டு, வீட்டில் தன் வார்த்தைகளால் {அவற்றைச் சொல்லித்} தற்பெருமை பேசுபவன்.
- பொய்மையை உண்மை என்று நிறுவ முயல்பவன்
ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர்.
கரங்களில் சுருக்குக் கயிறுகளோடு {பாசங்களோடு} வரும் யமனின் தூதர்கள், அம்மனிதர்களை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றனர்.
தன்னிடம் மற்றவன் நடந்து கொள்ளும் விதத்திலேயே, ஒருவன் அவனிடம் நடந்து கொள்ள வேண்டும். இதுவே சமூக அரசியல் முறைமைக்கு இசைவானதாக இருக்கும்.
முதுமை, அழகைக் கொல்கிறது {அழிக்கிறது}; பொறுமை, நம்பிக்கையையும்; மரணம், வாழ்வையும்; அறப்பயிற்சி, உலகம் சார்ந்த இன்பங்களையும்; காமம், தன்மானத்தையும் {அடக்கத்தையும்}; தீயோர் தோழமை, நன்னடத்தையையும்; கோபம், செழுமையையும்; செருக்கு அனைத்தையும் கொல்லும் {அழிக்கும்}” என்றான் {விதுரன்}.
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நூறு ஆண்டுகள் வாழ்நாள் {ஆயுள்} கொண்டவன் என்று மனிதன் வேதங்களில் பேசப்படுகிறான். {அப்படி இருக்கையில்}, என்ன காரணத்தினால், மனிதர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட வயதை அடைவதில்லை {நூறு வயது வரை வாழ்வதில்லை}” என்று கேட்டான்.
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “அதிகமான செருக்கு, அதிகமான பேச்சு, அதிகமாக உண்ணுதல், கோபம், இன்பத்தில் விருப்பம், உட்பகை ஆகிய ஆறும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரினங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தை {ஆயுளை} அறுக்கும் {ஆறு} கூரிய வாட்களாகும். இவையே மனிதர்களைக் கொல்கின்றன; மரணமல்ல. இதை அறிந்து அருளப்பட்டிருப்பீராக!
{பரிகாரம் தேவைப்படும் தொடர்புகள்}
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}. தன் மேல் நம்பிக்கை கொண்ட ஒருவனுடைய மனைவியின் உதவியை நாடுபவன் {தன்னை நம்பியவனின் மனைவியை அடைபவன்}; தனது ஆசானின் படுக்கையில் அத்துமீறி நடப்பவன் {குருவின் மனைவியை அடைபவன்}, சூத்திரப் பெண்ணின் கணவனாகவோ, மது குடிப்பவனாகவோ உள்ள பிராமணன்; அந்தணர்களை நிந்திப்பவன், அல்லது அவர்களுக்குத் {அந்தணர்களுக்குத்} தலைவனாக ஆகிறவன் {வேறு வர்ணத்தைச் சார்ந்தவன்}, அல்லது அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் {அந்தணர்களின் வாழ்வாதாரங்களாக இருக்கும்} நிலங்களை அபகரிப்பவன்; தன்னிடம் சரணடைந்தவர்களின் உயிரை எடுப்பவன் ஆகியோர் அனைவரும் அந்தணர்களைக் கொன்ற பாவத்தைச் செய்த குற்றவாளிகளாவர். இது போன்ற மனிதர்களுடன் தொடர்பு ஏற்பட்டால் பரிகாரம் தேவை என்று வேதங்கள் தீர்மானிக்கின்றன.
{சொர்க்கம் அடைவதில் வெல்பவர்கள்}
ஞானிகளின் கற்பித்தல்களை {போதனைகளை} ஏற்றுக் கொள்பவன்; அறநெறிகளின் விதிகளை அறிந்தவன்; பரந்த மனமுடையவன் {தானமளிக்கும் தயாளன்}; முதலில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணித்த பிறகு உண்பவன்; யார் மேலும் பொறாமை கொள்ளாதவன்; பிறருக்குத் தீங்கை ஏற்படுத்தும் எதையும் செய்ய இயலாதவன்; நன்றி, உண்மை, எளிமை, கல்வி ஆகியவற்றுடன் இருப்பவன் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எப்போதுமே இனிமையான வார்த்தைகளைப் பேசுவோர் பலர் உண்டு. எனினும், இனிமையற்ற, ஆனால் மருத்துவக் குணம் கொண்ட வார்த்தைகளைப் பேசுவோரும், கேட்போரும் கிடைப்பதரிது. தனது தலைவனால் ஏற்கத்தக்கது, தகாதது எனக் கருதாமல், அறத்தை மட்டுமே {அகக்} காட்சியில் கண்டு, சுவையற்றதாக {கசப்பாக} இருப்பினும், மருந்தாக இருப்பவற்றைச் சொல்பவன், உண்மையில் அந்த மன்னனுக்குப் பலத்தையே சேர்க்கிறான்.
{தியாகம்}
ஒரு குடும்பத்துக்காக, அதன் உறுப்பினர் ஒருவரைத் தியாகம் செய்யலாம்; ஒரு கிராமத்துக்காக, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்; ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம்; ஒருவனது ஆன்மாவுக்காக, முழுப் பூமியையும் கூடத் தியாகம் செய்யலாம்.
{செல்வத்தைப் பாதுகாக்க}
தனக்கு {வருங்காலத்தில்} வரக்கூடிய துன்பங்களை நோக்கில் கொண்டு, ஒருவன் தனது செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்; தனது செல்வத்தைக் கொண்டு ஒருவன் தனது மனைவிகளைப் பாதுகாக்க வேண்டும். தனது செல்வம் மற்றும் மனைவிகளைக் கொண்டு ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
{சூதாட்டம்}-சூதாட்டம் சண்டைகளைத் தூண்டிவிடும் என்பது பழங்காலத்தில் இருந்தே காணப்படுகிறது. எனவே, ஞானமுள்ள ஒருவன், வேடிக்கைக்காகக் கூட அதில் {சூதாட்டத்தில்} ஈடுபடக்கூடாது. ஓ! பிரதீபனின் மகனே {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதாட்டத்தின் போது, ஓ! மன்னா, நான் உம்மிடம், “இது சரியல்ல” என்று சொன்னேன். ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரரே}, நோயாளி மருந்தை விரும்பாதது போல, எனது வார்த்தைகள் உமக்கு ஏற்புடையனவாக {இனிமையாக} இல்லை. ஓ! மன்னா, பலவண்ணத் தோகை கொண்ட மயில்களைப் போல இருக்கும் பாண்டுவின் மகன்களை நீர் வீழ்த்த விரும்புகிறீர். உமது மகன்கள் அனைவருமோ வெறும் காக்கைகளாக இருக்கின்றனர். சிங்கங்களைக் கைவிட்டு, நரிகளைப் பாதுகாக்கிறீர்! ஓ! மன்னா, நேரம் வரும்போது, இவை அனைத்துக்காகவும் நீர் வருந்த வேண்டி வரும்” {என்றான் விதுரன்}.
மரத்தில் பதுங்கியிருக்கும் தீ! – உத்யோக பர்வம் பகுதி 37ஆ-ஊழியர்களின் நம்பிக்கையை வெல்வதால் கிடைக்கும் பயன், விரட்டப்பட வேண்டிய ஊழியன் யார்? ஊழியனின் குணங்கள் என்ன? மனிதன் செய்யக்கூடாதவை எவை? எவர் பணப்பறிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது? மனிதனுக்குப் புகழைத் தரும் எட்டுக் குணங்கள் எவை? புனித நீராடலால் கிடைக்கும் நன்மைகள் யாவை? அளவான உணவால் கிடைக்கும் நன்மைகள் என்ன? யாருக்கு அடைக்கலம் அளிக்கக்கூடாது? யாரிடம் தானம் கேட்கக்கூடாது? யாரிடம் ஊழியம் செய்யக்கூடாது? பலங்களின் வகைகள் என்ன? நம்பத்தகாதவை எவை? புறக்கணிக்கப்படக்கூடாதவை எவை? ஆகியவற்றை விதுரன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொன்னது…
{ஊழியர்கள் [பணியாட்கள்]}
{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} “ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, ஆர்வத்துடன் தனக்கு நன்மைகள் செய்வதைத் தொடர்ந்து வரும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தாத தலைவன் {முதலாளி}, தன் ஊழியர்களின் நம்பிக்கையை வென்றவர்கள் பட்டியலில் சேர்கிறான். {அந்த முதலாளி, தனது ஊழியனின் மாறாப்பற்றைப் [விசுவாசத்தைப்] பெறுகிறான்}. உண்மையில் பின்னவர்கள் {ஊழியர்கள்} அவனது {முதலாளியின்} துயர்நிறைந்த காலங்களிலும் அவனைப் பின்தொடருவார்கள். தன் ஊழியர்களுக்குக் கிடைக்கும் மானியங்களைப் பறிமுதல் செய்வதாலோ, அவர்களின் ஊதியத்தை நிறுத்துவதாலோ, ஒருவன் தனது செல்வத்தைத் திரட்டக் கூடாது. {அப்படிச் செய்தால்}, தங்கள் வாழ்வு மற்றும் இன்பத்துக்குரிய வழிகள் அடைபட்டுப் போவதால், பாசம் நிறைந்த {அவனது} ஆலோசகர்களும்கூட, அவனுக்கு {அந்த ஒருவனுக்கு} எதிராகத் திரும்பி (அவனது துன்ப காலத்தில்) அவனை விட்டுப் பிரிந்துவிடுவார்கள்.
முதலில் செயல்களின் நோக்கங்கள் அனைத்தையும் ஆலோசித்து, தனது வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கில் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தையும், படிகளையும் சரிபார்த்து, {ஊழியர்களைக் கொண்ட} சரியான கூட்டணியை ஒரு மன்னன் உருவாக்க வேண்டும். {ஊழியர்களின்} கூட்டணிகளால் அடைய முடியாதது எதுவும் இல்லை.
தனது அரசத் தலைவனின் நோக்கங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு, அனைத்துக் கடமைகளையும் சுறுசுறுப்பாகச் செய்யும் ஓர் அலுவலர் {ஊழியன்}, மரியாதைக்குரியவனாக இருந்து, தனது தலைவனுக்கு அர்ப்பணிப்போடு இருந்து, தன் தலைவனின் நன்மையையே எப்போதும் சொல்லும் ஒருவன், தனது சொந்த பலத்தின் அளவை முழுமையாக அறிந்து, {ஒரு செயலில் தன்னோடு இணைந்து பணியாற்றப் போகும்} மற்றவர்கள் பலத்தையும் அறிந்து இருப்பவன் ஆகியோரை ஒரு மன்னன் தனது இரண்டாவது பாதி என்றே கருத வேண்டும்.
எனினும், (தனது தலைவனால்) கட்டளையிடப்பட்டும், அந்தத் தலைவன் சொன்ன தடைகளை அலட்சியம் செய்து, தன் அறிவில் செருக்குக் கொண்டு, {தன் தலைவனால்} அறிவுறுத்தப்பட்ட எதையும் ஏற்க மறுத்து, தனது தலைவனுக்கு எதிராகப் பேசும் ஊழியனைச் சிறு தாமதமும் இன்றி விரட்டி விட வேண்டும்.
{ஊழியனின் எட்டு குணங்கள்}
செருக்கில்லாமை, திறமை, தாமதம் செய்யாமை, அன்பு, தூய்மை, கறைபடியாமை, நோய்ச்சுவடு இல்லாத குடும்பத்தில் பிறப்பு, மதிப்புமிக்கப் பேச்சு ஆகிய எட்டுக் குணங்கள் ஓர் ஊழியனிடம் இருக்க வேண்டும் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள்.
{ஊழியன் செய்யக்கூடாதது}
முன்னறிவிப்புச் செய்திருந்தாலும், எந்த மனிதனும் அந்திப்பொழுதிற்குப் {மாலைநேரத்திற்குப்} பிறகு, நம்பிக்கையுடன், ஓர் எதிரியின் வீட்டில் நுழையக்கூடாது. இரவு நேரத்தில், மற்றவர் இடத்தின் முற்றத்தில், ஒருவன் பதுங்கக் கூடாது. மன்னனால் விரும்பப்படும் பெண்ணிடம் இன்பம் பெற முயலக்கூடாது. இழிந்தோர் சேர்க்கையும், தான் சந்திக்கும் அனைவரிடமும் ஆலோசிக்கும் பழக்கமும் கொண்ட ஒருவன் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக உம்மை அமைத்துக் கொள்ளாதீர். “நான் உன்னை நம்பவில்லை” என்று எப்போதும் அவனிடம் சொல்லாதீர்; மாறாக ஏதாவதொரு காரணத்தைக் கற்பித்து, சாக்குபோக்கு சொல்லி {அவனை} அனுப்பிவிடுவீராக.
{பணப் பறிமாற்றம்}
ஆதீத கருணை கொண்ட மன்னன், கீழ்த்தரமான நடத்தை கொண்ட பெண், மன்னனின் ஊழியன், மகன், தம்பி, ஓர் ஆண் குழந்தையுடைய {மகனுடைய} விதவை, படையில் ஊழியம் செய்பவன், பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்டவன் {பெரும் நஷ்டமடைந்தவன்}, ஆகியோர் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ கூடிய பணப்பரிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது.
{மனிதனைப் பிரகாசிக்கச் செய்யும் எட்டு குணங்கள்}
ஞானம், நற்குடி {நல்ல குலத்தில் பிறப்பு}, சாத்திரங்களறிதல், தன்னடக்கம், ஆற்றல், மிதமான உரை {பேச்சு}, தனது சக்தியின் அளவுக்குத்தக்க தானம், நன்றியறிதல் ஆகிய எட்டு குணங்களும் மனிதர்கள் மேல் மிளிர்வைச் சிந்தும். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தானத்தினால், இந்த உயர்ந்த குணங்கள் அத்தனையும் ஒருவனால் அவசியம் ஒன்றாகக் அடையப்படுகிறது. ஒரு மனிதனுக்கு மன்னன் உதவி செய்யும்போது, அந்த (அரச உதவி) நிகழ்வு அனைத்து குணங்களையும் ஒன்றாகக் கொண்டு வந்து, அவற்றை ஒன்றாகப் பிணைக்கிறது.
{[புனித] நீராடல்}
{புனித} நீராடாலைச் செய்வதன் மூலம் ஒருவன், பலம், அழகு, தெளிவான குரல், அகரவரிசை ஒலிகள் அனைத்தையும் உச்சரிக்கும் திறன், மென்மை, நறுமணம், தூய்மை, அருள்நிறைவு, உறுப்புகளின் நுண்ணயம், அழகிய பெண்கள் ஆகிய பத்தை {10} வெல்லலாம்.
{மித உணவு}
உடல்நலன், நீண்ட வாழ்நாள், சுகம், உடல்நலமுள்ள குழந்தைகள், பெருந்தீனிக்காரன் என்று எவராலும் நிந்திக்கப்படாமை ஆகியவற்றை அளவாக உண்பவன் வெல்கிறான் {அடைகிறான்}.
{அடைக்கலம்}
எப்போதும் முறையற்ற செயல் செய்பவன், அதிகமாக உண்பவன், எல்லோராலும் வெறுக்கப்படுபவன், பெரும் ஏமாற்றுக்காரன், கொடுமைபுரிபவன், காலம் இடம் ஆகியவற்றின் தன்மைகளை அறியாதவன், பண்பற்ற வகையில் {அநாகரிகமாக} உடுத்துபவன் ஆகியோருக்கு ஒருவன் தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கக்கூடாது.
{இவர்களிடம் தானம் கேட்கக் கூடாது}
ஒருவன் எவ்வளவுதான் துன்பத்தில் இருந்தாலும், பிச்சையிடாத கஞ்சன், பிறரை குறை பேசுபவன் {நிந்திப்பவன்}, சாத்திரங்களை அறியாதவன் {மூடன்}, காட்டில் வசிப்பவன், தந்திரம் செய்யும் வஞ்சகன், மதிப்புக்குரியோரை மதிக்காதவன், கொடூரமான மூர்க்கன், பிறருடன் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவன், நன்றிமறந்தவன் ஆகியோரிடம் தானம் கோரவே கூடாது.
{இந்த ஆறு பேரிடம் ஊழியஞ்செய்யக்கூடாது}
எதிரி, எப்போதும் தவறிழைப்பவன், பொய்மைக்கு இணக்கமானவன் {எந்நாளும் பொய் சொல்பவன்}, தேவர்களிடம் பக்தி இல்லாதவன், அன்பில்லாதவன், அனைத்தையும் செய்ய வல்ல திறமையுள்ளவனாகத் தன்னைக் கருதிக் கொள்பவன் ஆகிய இந்த ஆறு இழிந்த மனிதர்களுக்காகக் காத்திருக்கவே {இந்த ஆறு இழிந்த மனிதர்களிடம் ஊழியஞ்செய்யவே} கூடாது.
ஒருவனின் நோக்கங்கள், (தங்கள் வெற்றிக்கு) வழிவகைகளையே சார்ந்திருக்கின்றன. அதே போல வழிமுறைகளும், {தங்களால் சாதிக்கப்பட வேண்டிய) அந்த நோக்கங்களின் தன்மையையே {இயல்புகளையே} சார்ந்துள்ளன. ஒன்றை ஒன்று சார்ந்து பிணைப்புடன் இருக்கும் இவற்றைச் {வழிமுறைகளும், நோக்கங்களும்} சார்ந்தே வெற்றி இருக்கிறது. மகன்களைப் பெற்று, யாரையும் சார்ந்தில்லாமல் அவர்கள் இருப்பதற்கு, ஏதாவது ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, கன்னிகைகளான தனது மகள்களைத் தக்க மனிதர்களுக்கு அளித்துவிட்டு {மணமுடித்துக் கொடுத்துவிட்டு}, காட்டிற்கு {ஓய்ந்திருக்க} சென்று, முனிவனாக வாழவே ஒரு மனிதன் விரும்ப வேண்டும். தனது மகிழ்ச்சிக்குச் செய்து கொள்வது போலவே, பரமாத்மாவின் உதவிகளை அடைய, அனைத்து உயிர்களுக்கும் நன்மையைச் செய்ய வேண்டும். அதுவே {பிற உயிரினங்களுக்கு நன்மையைச் செய்வதே} ஒரு மனிதனின் நோக்கங்கள் அனைத்தும் வெற்றியடைவதற்கு வேராக இருக்கும்.
புத்திசாலித்தனம், சக்தி, ஆற்றல், பலம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவனுக்கு என்ன கவலை இருக்க முடியும்?
பாண்டவர்களிடம் {உமக்கு} முறிவு ஏற்படுவதால் சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய தேவர்களேகூடக் கவலை கொள்வார்கள். அதனால் உண்டாகும் தீமைகளைப் பாரும். முதலில், உமது மகன்களான அவர்கள் அனைவருடனும் {அந்த முறிவால்} பகைமை உண்டாகும்; இரண்டாவது, தொடர்ச்சியாகக் கவலை நிறைந்த வாழ்வு ஏற்படும்; மூன்றாவதாக, குருக்களின் {கௌரவர்களின்} நல்ல புகழுக்கு கேடு உண்டாகும். கடைசியாக, உமது எதிரிகளாக இருப்பவர்களுக்கு அது {பாண்டவர்களுடனான அந்த முறிவு} மகிழ்ச்சியை உண்டாக்கும்.
ஓ! இந்திரனைப் போன்ற பிரகாசம் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, பெரிய அளவிலான வால்நட்சத்திரம் பூமியின் மீது குறுக்காக விழுவதைப் போல, பீஷ்மர், துரோணர், மற்றும் மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரது கோபம் இந்த முழு உலகையும் எரித்துவிடும். உம்முடைய நூறு மகன்களும் {கௌரவர்களும்}, கர்ணனும், பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்களும்} ஒன்றாகச் சேர்ந்து கடல்களைக் கச்சையாகக் கொண்ட முழு உலகையும் ஆள முடியும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தார்த்தராஷ்டிரர்கள் {கௌரவர்கள்} காடென்றால், பாண்டவர்களை, நான் புலிகளாக நினைக்கிறேன். ஓ! காட்டை அதன் புலிகளைக் கொண்டு வெட்டிவிடாதீர்! ஓ! புலிகள் காட்டில் இருந்து விரட்டப்படாதிருக்கட்டும்! புலிகளில்லாத காடும், காடில்லாத புலிகளும் இருக்க முடியாது. காடு புலிகளுக்கு உறைவிடம். புலிகள் அக்காட்டைப் பாதுகாக்கும்!
பாவிகளாக இருப்பவர்கள், தங்கள் குறைகளை உறுதி செய்து கொள்ளாததைப் போலப் பிறருடைய நல்ல குணங்களையும் உறுதி செய்ய மாட்டார்கள். உலகம் சார்ந்த ஆதாயத்தோடு {இலாபத்தோடு} இணைந்திருக்கும் அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த வெற்றியை விரும்பும் ஒருவன், தொடக்க நிலையில் இருந்தே அறம் பயில வேண்டும். உண்மையான ஆதாயம் சொர்க்கத்தில் இருந்து பிரிந்திருப்பதில்லை. பாவங்களில் இருந்து விடுபட்ட ஆன்மா கொண்டவன், அறத்தில் உறுதியாக நிலைத்து நின்று, அனைத்துப் பொருட்களையும் அதன் இயல்பு மற்றும் இயல்பற்ற நிலைகளைப் புரிந்து கொண்டவனாக இருப்பான். அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பின்பற்றும் ஒருவன், அந்த மூன்றின் கலவையையும் இவ்வுலகிலும், மறு உலகிலும் சரியான காலங்களில் அடைகிறான். கோபம் மற்றும் மகிழ்ச்சியின் சக்தியைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவன், ஓ! மன்னா, பேரிடர் காலங்களிலும் தனது உணர்வுகளை இழக்காமல் செழிப்பை வெல்கிறான்.
{ஐந்து வகையான பலங்கள்}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் சொல்வதைக் கேளும். மனிதர்கள் ஐந்து வகையான வெவ்வேறு பலங்களைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில், கரங்களில் பலம் மிகத் தாழ்ந்த வகையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. நீர் அருளப்பட்டிப்பீராக. நல்ல ஆலோசகர்களை அடைவது இரண்டாவது வகைப் பலமாகக் கருதப்படுகிறது. செல்வம் அடைதலை மூன்றாவது வகைப் பலமாக ஞானிகள் கூறியுள்ளனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவனுடைய தந்தை, பாட்டன் மூலம் இயற்கையாக அடையப்படுவதான பிறப்பின் பலம் நான்காவது வகைப் பலமாகக் கருதப்படுகிறது. எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதைக் கொண்டு இவை அனைத்தையும் வெல்ல முடியுமோ, அனைத்து வகைப் பலங்களிலும் முதன்மையான அஃது, அறிவின் பலம் என்று அழைக்கப்படுகிறது.
சக உயிரின் மேல் பெரும் தீங்கை விளைவிக்க வல்ல ஒரு மனிதனின் எதிர்ப்பைத் தூண்டிவிட்ட பிறகு, அவன் தொலைவில்தான் இருக்கிறான் என்று நம்பக்கூடாது {நம்பி அமைதியாக இருக்கக்கூடாது}.
{நம்பத்தகாதவை}
பெண்கள், மன்னர்கள், பாம்புகள், தனது தலைவன் {முதலாளி}, எதிரிகள், இன்பங்கள், வாழ்வின் காலம் ஆகியவற்றில் எந்த ஞானிதான் {புத்திமான்தான்} நம்பி வைப்பான்? அறிவு என்ற கணையால் தாக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளோ மருத்துவர்களோ கிடையாது. அது போன்ற மனிதர்களைப் பொறுத்தவரை, ஹோம மந்திரங்களோ, மங்கள விழாக்களோ, அதர்வண வேத மந்திரங்களோ {ஆபிசார மந்திரங்களோ}, அல்லது விஷத்தினாலான மருந்துகளோ {ரசகுளிகைகளோ} பயனளிப்பதில்லை.
{புறக்கணிக்கக்கூடாதவை}
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாம்புகள், நெருப்பு, சிங்கங்கள், இரத்த உறவுகள் ஆகியவற்றில் ஒன்றையும் எந்த மனிதனும் புறக்கணித்துவிடக்கூடாது; இவை அனைத்துமே பெரும் வல்லமை கொண்டவை.
இவ்வுலகில் நெருப்பு என்பது பெரும் சக்தி வாய்ந்தது. மரத்தில் பதுங்கியிருக்கும் அது {நெருப்பு}, பிறர் தூண்டும் வரை அந்த மரத்தை எரிப்பதில்லை. அதே நெருப்பு, உராய்வினால் உண்டாக்கப்படும்போது, தன் சக்தியைக் கொண்டு அது {நெருப்பு தான்} பதுங்கியிருந்த மரத்தை மட்டுமல்ல, மொத்த காட்டையும், இன்னும் பல பொருட்களையும் சேர்த்தே எரித்துவிடுகிறது.
உயர்ந்த குலத்தில் பிறந்த மனிதர்களும் சக்தியில் நெருப்பைப் போன்றவர்களே. மன்னிக்கும் தன்மையோடு {பொறுமையோடு} இருக்கும் வரை, அவர்கள் கோபத்தின் எந்த வெளிப்புற அறிகுறிகளையும் காட்டிக் கொள்ளாமல், மரத்தில் உள்ள நெருப்பு போலவே அமைதியாக இருக்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களோடு கூடிய நீர், கொடிகளின் தன்மையைப் பெற்றிருக்கிறீர், பாண்டுவின் மகன்களோ சால மரங்களாகக் கருதப்பட்டார்கள். சுற்றிப் படரப் பெருமரம் இல்லாமல் கொடி வளர்வதில்லை. ஓ! மன்னா, ஓ! அம்பிகையின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்} காட்டைப் போன்றவன். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் அந்தக் காட்டின் சிம்மங்கள் என்று அறிந்து கொள்வீராக. அதன் சிங்கங்கள் இல்லாமல் அந்தக் காடு அழிக்கப்பட்டு விடும். அதே போல {தங்கள் புகலிடமான} காடு இல்லாமல் சிங்கங்களும் அழிவுக்குள்ளாகும்” என்றான் {விதுரன்}.
ஆட்சித் திறம்! – உத்யோக பர்வம் பகுதி 38-விருந்தினர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளை விதுரன் சொன்னது; விருந்தினராக வரும் எவரையும் அன்புடன் நடத்த வேண்டும் என்று சொன்னது; பிக்ஷு வகை யோகியர் யார்? எவற்றை அந்தணர்கள் விற்கக்கூடாது? சகோதரத்துவத்தில் முதன்மையானவன் யார்? யாரிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது? மனைவியரை ஏன் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும்? ஆட்சித்திறன்கள் என்னென்ன? நாட்டைப் பாதுகாக்கும் ஆறுவழிகள் எவை? மரணத்துக்குத் தகுந்தவர்கள் யார்? என்பன போன்றவற்றைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன், துரியோதனனிடம் நாட்டின் பொறுப்பைக் கொடுத்ததால் விரைவில் செல்வச்செழிப்பு வீழ்ச்சியடையும் என்று சொன்னது…
{விருந்தினர்}
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான் “வயது முதிர்ந்த ஒரு மதிப்பிற்குரிய நபர், தனது இல்லத்திற்கு (விருந்தினராக) வரும்போது, ஓர் இளைஞனின் இதயம் {அவர் மீது கொண்ட மதிப்பால்} உயர எழுகிறது. அவரை நோக்கி முன்னேறி {அவரை எதிர்கொண்டு அழைத்து), வணங்கிய பிறகே அவன் {அந்த இளைஞன்} மீண்டும் வருகிறான். தற்கட்டுப்பாடுடைய ஒருவன் {சுயக்கட்டுப்பாடு கொண்டவன்}, {விருந்தினருக்கு} இருக்கையை அளித்து, நீரைக் கொண்டு வந்து, அவரது காலைக் கழுவச் செய்து, வழக்கமான விசாரிப்புகளைச் செய்த பிறகே, தனது சொந்த விவகாரங்களைப் {அவரிடம்} பேச வேண்டும். அனைத்தையும் கருத்தில் கொண்ட பிறகு, அவருக்கு உணவு அளிக்க வேண்டும்.
ஒருவன் மீது கொண்ட பயத்தினாலோ, அவனது கஞ்சத்தனத்தாலோ, அவனது விருப்பமின்மையாலோ, எவனுடைய வீட்டில், மந்திரங்கள் அறிந்த அந்தணர் ஒருவர் நீர், தேன், தயிர்க்கடைசல் மற்றும் பசுக்கள் ஆகிய தானங்களைப் பெறவில்லையோ, அவன் வீணாக வாழ்பவன் என்று ஞானிகள் கூறியுள்ளனர்.
மருத்துவர், அம்புகள் {[அ] ஆயுதங்கள்} செய்பவர், காலம் முடியும் முன்னரே பிரம்மச்சரிய நோன்பைக் கைவிடுபவன், திருடன், கோணல்புத்திக்காரன், மதுவுண்ணும் பிராமணன், கருச்சிதைவை ஏற்படுத்துபவன், படைக்குச் சேவை செய்து வாழ்பவன், வேதங்களை விற்பவன் ஆகியோர் விருந்தினராக வந்தாலும், அவன் என்னதான் நீர் கொடுக்கத் தகுதியற்றவனாக இருப்பினும், (அந்த வீட்டின் உரிமையாளன்}, அவனை அன்பாகக் கருத {நடத்த} வேண்டும்.
{பிக்ஷு வகை யோகி}
உப்பு, சமைத்த உணவு, தயிர்க்கடைசல், பால், தேன், எண்ணெய், தெளிந்த நெய், எள் இறைச்சி, பழங்கள், கிழங்குகள், கீரைவகைகள், சாயமேற்றப்பட்ட துணிகள், அனைத்து வகைச் சந்தனக்கலவைகள் {நறுமணப்பொருட்கள்} மற்றும் {வெல்லம் போன்ற} பாகு ஆகியவற்றை விற்பனை செய்பவனாக {வியாபாரியாக} ஓர் அந்தணன் இருக்கக்கூடாது.
கோபவசப்படாதவன், துயரத்தைக் கடந்தவன், எப்போதும் நட்போ சண்டையோ தேவைப்படாதவன், புகழ் மற்றும் பழி ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்பவன், விருப்பு மற்றும் வெறுப்பு இரண்டையும் விட்டு விலகி நிற்பவன், இவ்வுலகில் இருந்து முழுமையாக விடுபட்டவனாக இருப்பின், அவனே உண்மையான பிக்ஷுவகை யோகியாவான்.
காட்டில் முளைக்கும் தினை {அரிசி போலப் புல்லில் முளைக்கும் சிறுதானியங்கள், உ-ம், கம்பு, சோளம், கேழ்வரகு,வரகு அரிசி, குதிரைவாலி அரிசி}, கிழங்குகள், கீரைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழ்ந்து, தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்கள் வைத்து, தனது வழிபாட்டுக்குரிய நெருப்பைக் கவனமாக வைத்து, விருந்தினர்களை எப்போதும் மதிப்புடன் கருதி, காட்டில் வசிக்கும் அறம்சார்ந்த தவசியே, உண்மையில் சகோதரத்துவத்தில் {சமூக ஒற்றுமை உணர்ச்சி கொண்டோரில்} முதன்மையானவன் ஆவான்.
{நம்பிக்கை}
ஒரு புத்திசாலி மனிதனுக்குத் தீங்கிழைத்துவிட்டு, அந்தத் தீங்குக்குள்ளானவன் உண்மையில் தொலைவில்தான் வாழ்கிறான் என்று உறுதிசெய்தாலும் ஒருவன் அமைதியடையக்கூடாது {சமாதானம் அடையக்கூடாது}. புத்திசாலி மனிதர்களின் கரங்கள் நீளமானவை. அவற்றைக் கொண்டு அவர்கள் அந்தத் தீங்குக்கான பதில் தீங்கைத் திரும்பச் செய்ய முடியும்.
நம்பத்தகாதவனிடம் ஒருவன் நம்பிக்கை கொள்ளக்கூடாது. அதே போல, நம்பத்தகுந்தவனிடமும் அதீத நம்பிக்கை கொள்ளலாகாது. நம்பிக்கையைப் பெற்றவனிடம் இருந்து எழும் ஆபத்து, ஒருவனது வேர்களையே அறுத்துவிடும்.
ஒருவன், பொறாமையைக் கைவிட வேண்டும், தனது மனைவிகளைக் காக்க வேண்டும், பிறருக்கு உரியதைச் சரியாகக் கொடுக்க வேண்டும், பேச்சில் இனிமையுடையவனாகவும் இருக்க வேண்டும். தனது மனைவிகளைப் பொறுத்தவரை, ஒருவன், இனிய நாக்கும், பேச்சும் கொண்டவனாக இருக்க வேண்டும். ஆனால் அவன் அவர்களது அடிமையாக இருக்கக்கூடாது. உயர்ந்த அருள் கொண்டவர்களாவும், அறம்சார்ந்தவர்களாகவும், வழிபடத்தகுந்தவர்களாகவும், தங்கள் குடும்பத்தின் ஆபரணங்களாகவும் திகழும் மனைவிகளே ஒருவனது இல்லச் செழிப்பின் உருவகம் {அந்த வீட்டின் லட்சுமிகள்} என்று சொல்லப்படுகிறது. எனவே, அவர்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
தந்தைக்கு அந்தப்புரத்தின் மேற்பார்வையை அளிக்கலாம். தாய்க்கு சமையலறையையும் {பாகசாலையையும்}, தன்னைப் போன்ற ஒருவனுக்குப் பசுக்களை மேற்பார்வையிடும் பொறுப்பையும் அளிக்கலாம். ஆனால், உழவைப் {வேளாண்மையைப்} பொறுத்தவை, தானே நேரடியாக அதை மேற்பார்வையிட வேண்டும்.
வியாபார சாதியைச் சேர்ந்த விருந்தினர்களுக்குப் பணியாட்களைக் கொண்டும், பிராமணச் சாதியைச் சேர்ந்தவருக்குத் தனது மகன்களைக் கொண்டும் பணிவிடை செய்ய வேண்டும்.
{ஆட்சித்திறம்}
நெருப்பு அதன் தோற்றத்தை {மூலத்தை} நீரில் கொண்டுள்ளது; க்ஷத்திரியர்கள், தங்கள் தோற்றத்தை பிராமணர்களில் கொண்டுள்ளனர், இரும்பு தனது தோற்றத்தை கற்களில் கொண்டுள்ளது. தங்கள் முன்னோடிகளுடன் தொடர்பு ஏற்படும்போது, அனைத்தையும் பாதிப்படையச் செய்யும் (நெருப்பு, க்ஷத்திரியர்கள் மற்றும் இரும்பு ஆகிய) அவற்றின் சக்தி, விரைவில் சமநிலை அடைந்துவிடும்.
நெருப்புத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மரத்தில் மறைந்திருக்கிறது. நெருப்பு சக்தி கொண்டவர்களான நற்குடியில் பிறந்த நல்லவர்களும், மன்னிக்கும் இயல்பு கொண்ட பொறுமைசாலிகளும், அவர்களுக்குள் இருக்கும் {நெருப்பு போன்ற} அறிகுறிகளை {சக்திகளை} வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
தன்னைச் சார்ந்தவர்களாலும், வெளியில் இருப்பவர்களாலும் தனது ஆலோசனைகள் அறியப்படாமல் இருக்கச் செய்யும் அதே வேளையில், பிறரின் ஆலோசனைகளை ஒற்றர்கள் மூலமாக எந்த மன்னன் அறிந்து கொள்கிறானோ, அவன் நீடித்த செழிப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
தான் செய்ய நினைப்பதை ஒருவன் பேசக்கூடாது. அறம், பொருள், இன்ப வகைகளில் நீர் செய்யும் எதுவும், அது நிறைவடையும் வரை அறியப்படாமல் இருக்கட்டும். {செய்யப்படும்} ஆலோசனைகள் பலரால் அறியப்படாதிருக்கட்டும்.
மலையின் உச்சிக்கோ, மாளிகையின் மேல்தளத்திற்கோ {உப்பரிகைக்கோ}, மரங்களோ செடிகளோ அற்ற காட்டுப்பகுதிக்கோ சென்று, கமுக்கமாக உமது ஆலோசனைகளில் முதிர்வீராக.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கல்வியறிவில்லாத நண்பன், கல்வியறிவுள்ள, ஆனால் புலனடக்கம் இல்லாத நண்பன் ஆகியோர், அரசாங்க இரகசியத்தின் களஞ்சியங்களாக இருக்கத் தகுதிற்றவர்களாவர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு மன்னனின் நிதிகள், அவனது ஆலோசனைகள் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் பொறுப்பு ஓர் அமைச்சனுடையது. எனவே, ஒருவனை நன்றாகச் சோதியாமல் உமது அமைச்சர்களில் ஒருவனாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்.
எவனுடைய அமைச்சர்கள், அவன் செய்யும் அறம், பொருள், இன்பம் சார்ந்த செயல்களை, அவை நிறைவேறிய பிறகு அறிகிறார்களோ, அந்த மன்னனே ஆட்சியாளர்களில் முதன்மையானவன் ஆவான்.
எவனுடைய ஆலோசனைகள் சந்தேகமில்லாமல் கமுக்கமாகப் பேணப்படுகிறதோ, அந்த மன்னனே வெற்றியடைவான்.
அறியாமையால் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்பவன், அந்தச் செயல்களின் விளைவால் தனது வாழ்வையே {உயிரையே கூட} இழக்கிறான்.
புகழத்தக்க காரியங்களைச் செய்யும்போது, அஃது எப்போதும் சுகத்தையே அளிக்கும். அத்தகு செயல்களைச் செய்யாமல் இருப்பதே மனவருத்தத்திற்கு வழிவகுக்கும்.
(பித்ருக்களை மதிக்கும் வண்ணம் {பித்ருக்களின் நினைவாகச்} செய்யப்படும்) சிரதங்களைச் செய்ய, வேதமறியாத பிராமணனுக்குத் தகுதியில்லாதது போல, (நாட்டைப் பாதுகாக்கும் வழிகளான) ஆறு வழிகளைக் [1] குறித்துக் கேள்விப்படாதவன் அரசியல் கருத்தரங்குகளில் {மந்திராலோசனைகளில்} பங்கு பெற தகுதியற்றவனாவான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, {வருவாய்} அதிகரித்தல், குறைதல், உபரி ஆகியவற்றில் ஒரு கண் கொண்டு, ஆறு வழிகளை [2] அறிந்து, தனது சுயத்தை அறிந்து, மெச்சத்தகுந்த நடத்தை கொண்டிருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான். விளைவை உண்டாக்கும் கோபத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு, எது செய்யப்பட வேண்டுமோ அதை நேரடியாகக் கண்காணித்து, தனது கருவூலத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான்.(படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு-1. படை, 2. குடிமக்கள், 3. குறையாத வளம் {செல்வம்}, 4. அமைச்சன், 5. நட்பு {அண்டை நாட்டு நட்பு}, 6. அரண் {காவல்} ஆகிய ஆறு அங்கங்களைக் கொண்டவனே மன்னர்களில் சிம்மமாவான்.)
தனது தலைக்கு மேல் பிடிக்கப்படும் குடையையும், தான் வென்ற பெயரையும் கொண்டு ஒரு மன்னன் மனநிறைவு கொள்ள வேண்டும். தனக்கு ஊழியம் செய்வோருடன் தனது நாட்டின் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தனியாக அனைத்தையும் அவன் {ஒரு மன்னன்} தீர்மானிக்கக்கூடாது. ஓர் அந்தணன், {மற்றொரு} அந்தணனை அறிவான், ஒரு கணவன், மனைவியைப் புரிந்து கொள்வான், ஒரு மன்னன் அமைச்சரை அறிவான், ஏகாதிபதிகளே ஏகாதிபதிகளை அறிவார்கள்.
……………………………………………………………………………………………….
{மரணத்திற்குத் தகுந்தவர்கள்}
மரணத்துக்குத் தகுந்த எதிரி ஒருவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்படும்போது, அவனை விடுவிடக்கக்கூடாது. {எதிரி} மரணத்திற்கே தகுந்தவனென்றாலும், பலம்நிறைந்த எதிரியிடம், பலவீனமாக இருக்கும் ஒருவன் வணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், பலத்தில் நிறைவடைந்தவுடனேயே, அவன், அந்த எதிரியைக் கொல்ல வேண்டும். அவன் கொல்லப்படவில்லையென்றால், அவனால் {அந்த எதிரியால்} விரைவில் ஆபத்து எழும். தேவர்கள், மன்னர்கள், அந்தணர்கள், முதிர்ந்தோர், குழந்தைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு எதிரான கோபத்தை ஒருவன் முயற்சியுடன் அடக்க வேண்டும்.
முட்டாள்கள் ஈடுபடுவது போல, ஆதாயமற்ற சண்டைகளில் ஒரு ஞானி ஈடுபடக்கூடாது. அதனால் {அப்படிப்பட்ட சண்டைகளில் ஈடுபடாமல் இருப்பதால்} அவன், இவ்வுலகில் பெரும் புகழை அடைந்து, ஆபத்து மற்றும் பெருந்துயரங்களைத் தவிர்க்கிறான். அலியாக இருக்கும் கணவனை விரும்பாத பெண்களைப் போல, பலனற்ற அருள், விளைவில்லாத கோபம் கொண்டோரைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள மக்கள் விரும்ப மாட்டார்கள்.
செல்வத்தை அடைய புத்தி காரணமல்ல, அதே போல, வறுமைக்கு மூடத்தனம் காரணமல்ல; இவ்வுலகில் உள்ள வேறுபாடுகளின் காரணங்களை ஞானிகள் மட்டுமே அறிவர்; பிறரல்ல.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வயதில் மூத்தோரையும், நடத்தை, அறிவு, புத்திசாலித்தனம், செல்வம், குலமரபு ஆகியவற்றில் தலைமையாக இருப்போரையும் மூடன் எப்போதும் அவமதிப்பான்.
தீய மனநிலை கொண்டோர், அறிவற்றவர்கள், பொறாமை கொண்டோர், பாவிகள், குற்றங்களையே பேசுபவர்கள், கோபமுடையவர்கள் ஆகியோர் விரைவில் துயரத்திற்கு உள்ளாகின்றனர்.
ஏமாற்றுத்தனமில்லாமை {சொல் தவறாமை}, தானம், நிறுவப்பட்டுள்ள புணர்வு விதிகளை நோற்பது, நன்கு அடக்கப்பட்ட பேச்சு ஆகியவை அனைத்து உயிர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
ஏமாற்றுத்தனமில்லாத, சுறுசுறுப்பான, நன்றியுணர்வு கொண்ட, புத்திசாலித்தனமுள்ள, கபடமற்ற ஒருவனது கருவூலம் வெறுமையாக இருப்பினும், நண்பர்கள், ஆலோசகர்கள், பணியாட்கள் ஆகியோரை அவன் அடைகிறான்.
புத்திக்கூர்மை, மன அமைதி, தற்கட்டுப்பாடு, தூய்மை, கடுஞ்சொல் பேசாமை, நண்பர்களுக்கு ஏற்பில்லாத எதையும் செய்யவிரும்பாமை {நண்பர்களுக்குத் துரோகம் செய்யாமை} ஆகிய ஏழும் ஒருவனுடைய செழிப்பு எனும் சுடருக்கு எரிபொருளாகக் கருதப்படுகின்றன.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறருக்கு உரியதைக் கொடுக்காத இழிந்தவன், தீய ஆன்மா கொண்டவன், நன்றிமறந்தவன், வெட்கங்கெட்டவன் ஆகியோரைத் தவிர்க்க வேண்டும். {குற்றமற்ற} அப்பாவியைப் பற்றி, அடுத்தவனிடம் தூண்டிவிடும் குற்றவாளி, ஒரே அறையில் பாம்புடன் இரவைக் கடத்தும் மனிதனைப் போல, இரவில் அமைதியாகத் தூங்க முடியாது.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எவன் கோபம் அடைந்தால், ஒருவனின் உடமைகளும், பொருள் கொள்ளும் வழிகளும் ஆபத்துக்குள்ளாகுமோ, அவனை, தேவர்களை அமைதிப்படுத்துவது போல அமைதிப்படுத்த வேண்டும். பெண்கள், பொறுப்பற்றவர்கள், தங்கள் சாதிக்குரிய கடமைகளில் இருந்து விழுந்தவர்கள், தீய மனநிலை கொண்டவர்கள் ஆகியோரை நம்பியிருக்கும் நோக்கங்களின் {இலக்குகளின்} வெற்றி சந்தேகத்திற்குரியதே. ஓ! மன்னா {திருதராஷ்டரரே}, பெண், ஏமாற்றுக்காரன், குழந்தை ஆகியோரைத் தனது வழிகாட்டியாகக் கொண்டிருப்பவன் கல் தோணியைப் போல ஆதரவற்று மூழ்குவான்.
வேலையின் பொதுவான நெறிமுறைகளில் திறமையுள்ளவர்கள், அவ்வேலையின் குறிப்பிட்ட வகைகளை அறியாதிருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட வகை வேலைகள் துணை வேலைகளே என்பதால், அவர்கள் கற்றவர்கள் என்றும், அறிவுள்ளவர்கள் என்றும் மனிதர்களால் கருதப்படுகிறார்கள்.
மோசடிக்காரர்கள், கூத்தாடிகள், கெடுபுகழ் கொண்ட மகளிர் {வேசிகள்} ஆகியோரால் புகழப்படும் மனிதன் உயிரோடிருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுகிறான்.
அளவிலா சக்தி கொண்ட பலமிக்க வில்லாளிகளான இந்தப் பாண்டு மகனை {யுதிஷ்டிரனை} விட்டுவிட்டு, ஓ! பாரதரே, பலமிக்கப் பேரரசின் பொறுப்பை நீர் துரியோதனனிடம் அளித்திருக்கிறீர். எனவே, மூவுலகங்களில் இருந்து விழுந்த பலியைப் {மகாபலியைப்} போலப் பரந்திருக்கும் இந்தச் செல்வச் செழிப்பு வீழ்ச்சியடைவதை விரைவில் நீர் காண்பீர்” என்றான் {விதுரன்}.
குலம் கண்டறியும் முறை! – உத்யோக பர்வம் பகுதி 39அ-பிறருக்கு ஏற்புடையவனாக மனிதன் எவ்வாறு ஆக முடியும்? எது ஆதாயம்? எது இழப்பு? பணிவுடன் இருப்பவன் என்ன செய்வான்? அனைத்திலும் குறை சொல்பவர்கள் என்ன செய்வார்கள்? நட்பை எப்படி ஏற்க வேண்டும்? யார் நட்பைத் தவிர்க்க வேண்டும்? உறவினர்களால் என்ன செய்ய முடியும்? என்பன போன்றவற்றைச் சொல்லி பாண்டவர்களுக்குச் சில கிராமங்களையாவது கொடுக்கும்படி திருதராஷ்டிரனிடம் விதுரன் வேண்டுதல்; அறநெறிகளுக்கு எதிரான செயல்களைச் செய்யாதவர்கள் எவரும் உண்டா? எவன் புகழை இழப்பதில்லை? எவன் செழிப்பில் எப்போதும் வளர்கிறான்? நேராமல் காக்க வேண்டிய ஆறு விஷயங்கள் என்ன? அறம், பொருளை யார் அறியமாட்டார்கள்? ஆசை எப்படிப்பட்டது? ஒருவனது குலத்தைக் கண்டுபிடிக்கும் முறைகள் போன்றவற்றையும் விதுரன் சொல்வது…
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “செழிப்புக்கோ, வறுமைக்கோ மனிதன் காரணமானவன் அல்ல. அவன், நூலால் அசைக்கப்படும் மரப்பாவை {பொம்மையைப்} போன்றவனே. உண்மையில், படைப்பாளனே {பிரம்மனே} மனிதனை விதிக்கு ஆட்படுத்துகிறான். நீ சொல்வதைக் கவனமாகக் கேட்டு வருகிறேன். மேலும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.
{ஏற்புடையவனாதல்}
பிருஹஸ்பதியே ஆனாலும், காலம் தவறி பேசுபவன், நிந்தனையையும், அறியாமையுடையவன் என்ற குற்றச்சாட்டையும் அடைகிறான். ஒருவன் தானத்தால் ஏற்புடையவன் {இனிமையானவன்} ஆவான், இன்னொருவன் இனிய சொற்களால் ஏற்புடையவன் ஆவான். மூன்றாமவன், மந்திர ஆற்றல் மற்றும் மருந்துகளின் சக்தியால் ஏற்புடையவன் ஆவான். எனினும் இயல்பாகவே ஏற்புடையவனாக இருப்பவன் அப்படியே நீடித்து வருவான். ஒருவனால் வெறுக்கப்படும் மற்றவன், அவனால் {வெறுப்பவனால்} நேர்மையானவனாகவோ, புத்திசாலியாகவோ, அறிவாளியாகவோ எப்போதுமே கருதப்படமாட்டான். தனக்கு நன்மை செய்யும் அனைத்தையும் ஒருவன் விரும்புகிறான்; {தனக்கு} தீமை செய்யும் அனைத்தையும் அவன் வெறுக்கிறான்.
{ஆதாயமும் இழப்பும்}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் பிறந்ததும், “இந்த ஒரு மகனை நீர் புறக்கணிக்க வேண்டும். அவனை {துரியோதனனைப்} புறக்கணித்தால் மற்ற நூறு மகன்களும் வளமையை அடைவார்கள். அவனை {துரியோதனனை உம்மிடமே} வைத்துக் கொண்டால், உமது நூறு மகன்களுக்கு அழிவு ஏற்படும்” என்றும் நான் உமக்குச் சொன்னேன்.
இழப்புக்கு வழிவகுக்கும் எந்த ஆதாயத்தையும் உயர்வாகக் கருதக்கூடாது. மறுபுறம், இழப்பேயானாலும் ஆதாயத்தைக் கொண்டு வரும் அந்த இழப்பை உயர்வாகவே கருத வேண்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆதாயத்தைக் கொண்டு வரும் அது இழப்பாகாது. எனினும், இன்னும் பெரிய இழப்பைக் கொண்டு வரப்போவதை இழப்பு என்றே கருத வேண்டும். [1](போர் என்ற இழப்புக்கு வழிவகுக்கும் துரியோதனனை, ஆதாயம் என்று நினைத்து உயர்வாகக் கருதக்கூடாது. துரியோதனனைப் புறக்கணித்து பாண்டவர்களை மீண்டும் கொண்டுவருவதால் உண்டாகப் போவது இழப்பாகாது. அதுவே பெரும் ஆதாயம். ஆனால், பாண்டவர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படப் போகும் போரால், துரியோதனனையும் இழந்து, பலரையும் இழக்கப் போவது பெரும் இழப்பே என்று பொருள்.)
சிலர் நல்ல குணங்களின் விளைவாகச் சிறந்தவர்களாகிறார்கள்; பிறர் செல்வத்தின் விளைவால் அப்படி {சிறந்தவர்கள்} ஆகிறார்கள். ஓ! திருதராஷ்டிரரே, செல்வம் நிறைந்திருந்தாலும், நல்ல குணங்களற்று இருப்பவர்களைத் தவிர்ப்பீராக” என்றான் {விதுரன்}.
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நீ சொன்ன அனைத்தும் ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், எனது எதிர்கால நன்மைக்கும் ஆனதே. எனினும், நான் எனது மகனை {துரியோதனனைப்} புறக்கணிக்கத் துணியேன். எங்கே நீதி இருக்கிறதோ அங்கே வெற்றி இருக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே {எனக்கு நன்றாகத் தெரியும்}” என்றான் {திருதராஷ்டிரன்}.
விதுரன், “அனைத்து அறங்களும் அருளப்பட்டு, பணிவுடன் இருப்பவன், வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் சிறு பாதிப்புகளையும் பாரபட்சமின்றி எப்போதும் பார்ப்பான். எனினும், பிறரை எப்போதும் குறை சொல்வதில் ஈடுபடுபவர்கள், அனைத்து விஷயங்களிலும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடவும், அடுத்தவருக்கு வலியைத் தரவுமே எப்போதும் முயல்கிறார்கள்.
{நட்பு ஏற்றல்}
யாரைப் பார்த்தாலே கெடுதல் உண்டாகுமோ, யாருடைய தோழமை ஆபத்து நிறைந்ததோ அவர்களுக்குத் தானமளிப்பதாலோ, அவர்களிடம் தானத்தைப் பெறுவதாலோ பாவம் ஏற்படுகிறது. சண்டைக்காரர்கள் {சண்டையிடுவதையே வழக்கமாகக் கொண்டவன் {அ} பிரிவை ஏற்படுத்துபவன்}, பேராசைக்காரர்கள், வெட்கமற்றவர்கள், ஏமாற்றுக்காரர்கள், அநீதியானவர்களாக அறியப்பட்டவர்கள் ஆகியோரது தோழமை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதே போன்ற குறைகளுடன், கொடும் இயல்பும் கொண்ட மனிதர்களையும் தவிர்க்க வேண்டும். நட்புக்குக் காரணமான நிகழ்வு முடிந்ததும், இழிந்தவர்களின் நட்பும் முடிந்துவிடுகிறது. அந்தத் தொடர்பால் ஏற்பட்ட நல்ல விளைவுகளும், அதனால் உண்டான மகிழ்ச்சி ஆகிய அத்தனையும் முடிவுக்கு வந்துவிடும். பின்னர் அவர்கள் {அந்த இழிந்த மனிதர்கள்}, தங்கள் (முன்னாள்} நண்பனை நிந்தித்து, அவனுக்கு இழப்பேற்படுத்த முயல்கிறார்கள். தாங்கள் அடைந்த இழப்பு மிகச் சிறியதாக இருப்பினும், தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு} இல்லாமையால், அமைதியை அனுபவிக்கத் தவறிவிடுகின்றனர். கற்றவனொருவன், இவை அனைத்தையும் கவனமாகப் பரிசோதித்து, நன்றாக ஆலோசித்து, கீழ்த்தரமானவர்கள் மற்றும் தீய மனம் கொண்டவர்களின் இது போன்ற நட்புகளைத் தூரத்தில் இருந்தே தவிர்த்துவிட வேண்டும்.
{உறவினர்கள் 2}
ஏழைகள், இழிந்தவர்கள், ஆதரவற்ற உறவினர்கள் ஆகியோருக்கு உதவும் ஒருவன், பிள்ளைகள், விலங்குகள் {கால்நடைச் செல்வம்} ஆகியவற்றை அடைந்து, முடிவிலாத செழிப்பை அனுபவிக்கிறான். தங்கள் நன்மையை விரும்புபவர்கள், எப்போதும் தங்கள் உறவினர்களுக்கு உதவ வேண்டும். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது குலத்தை வளர்க்க முயல்வீராக. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் உமது உறவினர்களிடம் நன்றாக நடந்து கொண்டால், செழிப்பு உமதாகும். நற்குணங்களற்ற உறவினர்களும் {ஒருவனால்} பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்து அறங்களையும் கொண்டு, உமது உதவிகளைப் பணிவுடன் எதிர்நோக்குபவர்களை {பாண்டவர்களை} எந்த அளவுக்குப் பாதுகாக்க வேண்டும்?
பாண்டுவின் வீர மகன்களுக்கு உதவி செய்வீராக, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களின் பராமரிப்பில் சில கிராமங்களைக் கொடுப்பீராக. இப்படிச் செய்வதால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் புகழ் உமதாகும். நீர் முதிர்ந்தவராக இருக்கிறீர்; எனவே, உமது மகன்களை நீர் கட்டுப்படுத்த வேண்டும். உமக்கு எது நன்மையோ, அதையே நான் சொல்ல வேண்டும். நீர் நலமாக இருக்க விரும்புபவர்களில் நானும் ஒருவன் என்பதை அறிவீராக. ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தனது நன்மையை விரும்பும் ஒருவன் தனது உறவினர்களுடன் சண்டையிடவே கூடாது.
இவ்வுலகில், உறவினர்களே ஒருவனை மீட்கிறார்கள் {காக்கிறார்கள்}. மேலும், உறவினர்களே {உறவினர்களை} அழிக்கவும் செய்கிறார்கள். நீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் {ஆபத்துகளில்} காக்கிறார்கள்; அதே வேளையில் அநீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் (தங்கள் சகோதரர்களை) {ஆபத்தில்) மூழ்கடிக்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! மரியாதைகளைக் கொடுப்பவரே, பாண்டுவின் மகன்களிடம் நீதியோடு நடப்பீராக. அவர்களால் சூழப்பட்டிருக்கும் நீர், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவராக இருப்பீர்.
கையில் கணைகளுடன் இருக்கும் வேடனைக் கண்ட மான் போல, செழிப்புடன் இருக்கும் ஒரு உறவினரின் முன்னிலையில் மற்றொரு உறவினன் {செழிப்பில்} சுருங்கிப் போனால் {வறுமை நிலை அடைந்தால்}, அவனது {அந்த வறியவனின்} பாவங்கள் அனைத்தையும் செழிப்புடன் இருக்கும் அந்த உறவினனே ஏற்றுக் கொள்ள வேண்டிவரும்.
ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, (தற்போதைய உமது செயல்பாடின்மையால்), எதிர்காலத்தில் பாண்டவர்களின் அல்லது உமது மகன்களின் இறப்பைக் கேள்விப்பட்டு, நீரே வருந்த வேண்டியிருக்கும். ஓ!, இவை யாவையும் சிந்திப்பீராக. வாழ்வே நிலையற்றதாக இருக்கும்போது, எதன் {எந்த செயலின் அல்லது செயலின்மையின்} விளைவால் ஒருவன் சோக அறைக்குள் நுழைந்து வருத்தத்தில் ஈடுபட வேண்டிவருமோ, அதை ஆரம்பத்திலேயே அவன் தவிர்த்துவிட வேண்டும்.
அறநெறிகளின் அறிவியலுக்கு {நீதி சாத்திரத்திற்கு} ஆசிரியரான பார்கவரைத் [2] {சுக்ராச்சாரியரைத்} தவிர, அறநெறிகளுக்கு எதிரான செயல்களை மேற்கொள்ளாதவர்கள் வேறு யாருமில்லை என்பதே உண்மை. {அறநெறிகளுக்கு எதிராகச் செயல்படாதவர்கள் யாருமே இல்லை என்பதே உண்மை}. எனினும், {நல்ல} விளைவுகளை உண்டாக்கும் நீதி மிக்கக் கருத்துகள், புத்திக்கூர்மையுள்ள அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறது என்பதும் காணப்படுகிறது.
நீர் குரு குலத்தின் கொழுந்துகளில் {குரு வம்சத்தவரில்} முதிர்ந்தவராவீர். துரியோதனன், பாண்டு மகன்களுக்கு இத்தீமைகளைச் செய்தால், ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தையும் நிவர்த்திச் செய்வது {தடுப்பது} உமது கடமையாகும். அவர்களை {பாண்டவர்களை}, மீண்டும் அவர்களது பொறுப்புகளில் அமர்த்தி, இவ்வுலகில் நீர் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களைப் போல வழிபடத்தகுந்தவர் ஆவீராக.
ஞானிகள் கண்ட விளைவுகள் படி அவர்களால் சொல்லப்பட்ட நல்ல வார்த்தைகளை நினைவில் கொண்டு, எவன் செயலில் ஈடுபடுகிறானோ, அவன் தனது புகழை இழப்பதில்லை. கல்வியும், திறமையும் கொண்ட மனிதர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் கூட ஞானமற்றவையாக {அறிவற்றவையாக} இருக்கின்றன. ஏனெனில், சொல்லப்பட்டவையைத் தவறாகப் புரிந்து கொண்டு, {மனதில் ஆழப்} பதிய வைக்கப்படுகிறது. அல்லது, புரிந்து கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் அவை {கற்றோரால் சொல்லப்படும் வார்த்தைகள்} சாதிக்கப்படுவதில்லை. பாவம், துன்பம் ஆகியவற்றை விளைவிக்கும் எக்காரியத்தையும் எப்போதுமே செய்யாத கற்ற மனிதன், எப்போதும் (செழிப்பில்) வளர்கிறான். எனினும், தீய ஆன்மா கொண்ட மனிதன், தனது மூடத்தனத்தால், பாவ வழியில் தொடர்ந்து செல்ல ஆரம்பித்து, சேறு நிரம்பிய ஆழமான பள்ளத்தில் விழுகிறான்.
{நேராமல் காக்க வேண்டிய ஆறு}
{செய்யப்படும்} ஆலோசனைகளைப் பகிரங்கப்படுத்தும் (பின்வரும்) ஆறு குழாய்களை {வழிகளை}, அறிவுள்ள ஒருவன் எப்போதும் பார்வையில் {கவனத்தில்} வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றியையும், நீண்ட மரபையும் விரும்பும் ஒருவன் இந்த ஆறில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். {1} மயக்கம் {குடி}, {2} உறக்கம், {3} ஒற்றர்களைக் கவனியாமை, {4} தன் இதயச் செயல்பாட்டைச் சார்ந்து, ஒன்றின் மேல் ஒன்றை வைக்கும் அணுகுமுறை {தன்னிடம் உண்டாகும் குறிப்பு}, {5} தீய ஆலோசகரிடம் வைக்கப்படும் நம்பிக்கை, {6} திறமையற்ற தூதர்கள் ஆகியவையே அவை {அந்த ஆறும்}.
{ஆலோசனைகள் மறைத்தல்}
அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒருவன், (ஆலோசனைகளைப் பகிரங்கமாக்கும்) இந்த ஆறு வாயில்களை {துவாரங்களை} அறிந்து, அவற்றைத் தவிர்ப்பதால் {செய்யப்படும் ஆலோசனைகளை அதன் மூலம் மறைப்பதால்}, எதிரிகளை அடக்குவதில் வெல்கிறான்.
சாத்திரங்கள் எதையும் அறியாமல், பெரியோருக்காகக் காத்திராமல் {பணிவிடை செய்யாமல்} இருக்கும் ஒருவன், பிருஹஸ்பதியின் அறிவையே பெற்றிருந்தாலும், அறத்தையோ, பொருளையோ அறியமாட்டான்.
கடலிலிட்ட பொருள் தொலைந்து போகும்; கேட்காதவனிடம் பேசப்படும் வார்த்தைகள் தொலைந்து போகும்; ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காத ஒருவனிடம் சாத்திரங்கள் {சாத்திர அறிவு} தொலைந்து போகும்; அணைந்த நெருப்பால் விடப்பட்ட சாம்பலில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யும் தொலைந்து போகும்.
புத்திசாலி ஒருவன், தனது புத்தியைப் பயன்படுத்தியும், தனது காதுகள், கண்கள் மூலம் {பிறர் மூலம் கேட்டும், தானே பார்த்தும்}. ஒரு தீர்மானத்தை எட்டி அறிவாளிகளுடன் {ஞானிகளுடன்} நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடக்கம், காதுகள் கேட்கும் அவதூறையும்; ஆற்றல், தோல்வியையும் அகற்றும். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கோபத்தை வெல்லும். மேலும், மங்களச் சடங்குகள் {ஆசாரங்கள்} தீய அறிகுறிகள் அனைத்தையும் அழிக்கும்.
ஒருவனது குலம், ஓ! மன்னா {திருதராஷ்டரரே}, இன்பத்தைக் கொடுக்கும் பொருள், பிறந்த இடம், வீடு, நடத்தை, உணவு, ஆடை ஆகியவற்றைக் கொண்டு சோதிக்கப்படுகிறது {அவற்றால் ஒருவனது குலம் அறியப்படுகிறது}.
இன்பத்தைக் கொடுக்கும் பொருள் கிடைக்கும்போது, துறவை {விடுதலையை} அடைந்த ஒருவன் கூட, அதை அனுபவிக்க விரும்பாமல் இருப்பதில்லை {அதை அனுபவிக்கவே விரும்புகிறான்}. அப்படியிருக்கும்போது, ஆசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனைக் குறித்து என்ன சொல்ல முடியும்? {ஆசையைத் துறந்த ஒருவனே காமத்தில் வீழும்போது, காமத்தில் ஆசை கொண்டவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்?}.
செழிப்பு தங்குமிடம்! – உத்யோக பர்வம் பகுதி 39ஆ-ஆலோசகனைப் பேணுதல்; நூறு உயர்பிறப்பாளர்களைவிட உயர்ந்தவன் எவன்? யாவருடைய நட்பு கெடுவதில்லை? புத்திசாலி ஒருவன் யாரைத் தவிர்க்க வேண்டும்? யாருடன் நட்பு கொள்ளக்கூடாது? யாருடன் நட்பு கொள்ள வேண்டும்? எவை வாழ்நாளை நீட்டிக்கின்றன? எவன் ஆண்மை நிறைந்தவன்? எவை செழிப்பைக் கொண்டுவரும்? எவன் பெரிய மனிதன்? யாரிடம் செழிப்பு தங்காது? செழிப்பின் வேர்கள் எவற்றில் இருக்கின்றது? இரக்கப்படத்தக்கவன் யார்? என்பன போன்றவற்றைச் சொல்லி பாண்டுவின் மகன்கள் மற்றும் தன் மக்களிடம் திருதராஷ்டிரன் பாரபட்சம் பார்க்கக்கூடாது என விதுரன் சொன்னது….
{ஆலோசகர்களைப் பேணுதல்}
{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} “கல்வியறிவு, அறம், ஏற்புடைய {இனிய} தோற்றம், நண்பர்கள், இன்சொல் {இனிய பேச்சு}, நல்ல இதயம் ஆகியவற்றைக் கொண்டு, அறிவாளிகளை {ஞானிகளை} வழிபடும் ஓர் ஆலோசகனை மன்னன் பேணிப் பாதுகாக்க வேண்டும். தாழ்ந்த பிறப்போ, உயர் பிறப்போ கொண்டிருந்தாலும், கண்ணிய தொடர்புகளின் விதிகளை மீறாமல் {மரியாதையைத் தாண்டாமல்}, அறத்தில் ஒரு கண் கொண்டு {தர்மத்தை விரும்பி}, பணிவும் அடக்கமும் கொண்ட ஒருவன், நூறு உயர் பிறப்பாளர்களை விட உயர்ந்தவனாவான். கமுக்கமான {இரகசிய} நோக்கங்கள், இன்பங்கள், ஈட்டல்கள் {சம்பாதனைகள்} {அறிவீட்டல்கள்} போன்ற அனைத்து காரியங்களிலும் யாவருடைய {எந்த இருவர் அல்லது பலரின்} இதயங்கள் உடன்படுகின்றனவோ, அவர்களுக்குள் உள்ள நட்புக்கு எப்போதும் கெடுதல் உண்டாவதில்லை.
புற்களால் மறைக்கப்பட்டிருக்கும் குழியின் வாய் போல, தீய ஆன்மா கொண்ட மூடனை ஒரு புத்திசாலி தவிர்க்க வேண்டும். ஏனெனில், அப்படிப்பட்ட மனிதனுடனான நட்பு நிலைக்காது.
செருக்குடையவன், மூடன், கடுமையானவன், மூர்க்கன், நீதி வழுவியவன் ஆகியோருடன் அறிவுள்ள ஒரு மனிதன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
நன்றி, அறம் ஆகியவற்றைக் கொண்டு, உண்மைநிறைந்து, பெரிய இதயம்கொண்டு, அர்ப்பணிப்புடன் இருந்து, தனது புலன்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன், தனது கண்ணியத்தைக் காத்துக் கொண்டு, எப்போதும் நண்பர்களைக் கைவிடாமல் இருக்கிறான். அப்படிப்பட்டவனையே நண்பனாகக் கொள்ள விரும்ப வேண்டும்.
தங்களுக்குரிய பொருட்களில் {புலன் நுகர் பொருட்களில்} இருந்து புலன்களை {முற்றிலும்} விலக்குதல், மரணத்திற்கே ஒப்பானதாகும். அதே போல, அந்தப் பொருட்களில் புலன்களின் ஆதீத ஈடுபாடு தேவர்களையே கூட அழித்துவிடும்.
பணிவு, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு {ஜீவகாருண்யம்}, மன்னிக்கும் குணம் {பொறுமை}, நண்பர்களிடம் மரியாதை ஆகியவை வாழ்நாளை {ஆயுளை} நீட்டிக்கின்றன என்று கற்றோர் கூறியுள்ளனர்.
ஒருமுறை கையறு நிலையைத் {விரக்தி} தந்த அறக் கொள்கை நோக்கங்களை {அநியாயத்தால் கெடுக்கப்பட்ட ஒரு பொருளை} உறுதியான தீர்மானத்துடன் {நல்ல நியாயத்தால்} முயன்று அடைபவனே உண்மையான ஆண்மை {உத்தம புருஷர்களின் விரதம்} கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.
{செழிப்பும் பொறுமையும்}
எதிர்காலத்தில் பயன்படுத்த வேண்டிய தீர்வுகளை அறிந்தவன், தற்காலத்தில் உறுதியான தீர்மானத்துடன் இருப்பவன், கடந்த காலத்தைக் கருத்தில் கொண்டு, தொடங்கப்போகும் ஒரு செயல் எப்படி முடியும் என்பதை {சரியாக} எதிர்பார்ப்பவன் தனது நோக்கங்கள் அனைத்தையும் அடைகிறான்.
சொல், செயல், எண்ணம் ஆகியவற்றால் எவற்றை ஒரு மனிதன் தொடர்கிறானோ, அவற்றைத் தானே அடைகிறான்; எனவே, ஒருவன் தனக்கு நன்மையைத் தரும் காரியங்களையே முயல வேண்டும். நன்மையை அடைந்த பிறகும் முயற்சி செய்வது {மங்களத் திரவியங்களைத் தொடுவது}, காலம், இடம், வழிவகைகள் {முறைகள்} ஆகியவற்றின் தன்மைகளை அறிவது {உதவியின் நிறைவை அறிவது}, சாத்திரங்களை அறிவது, செயல்பாடு, ஒளிவுமறைவற்ற தன்மை, நல்லவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகள் ஆகியன செழிப்பையே கொண்டு வரும். நன்மை, ஆதாயம், செழிப்பு ஆகியவற்றின் வேர் விடாமுயற்சியே.
விடாமுயற்சியுடன், மனவேதனைக்கு ஆளாகாமல், தனது நோக்கத்தைத் தொடர்ந்து செய்வதால், ஒரு மனிதன் முடிவிலாக மகிழ்ச்சியை அடைந்து, உண்மையில் பெரிய மனிதன் ஆவான்.
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, பலமும் சக்தியும் கொண்ட ஒரு மனிதனுக்கு, அனைத்து இடங்களிலும், எல்லாக் காலங்களிலும், மன்னிக்கும் தன்மையை {பொறுமையை} விட எதுவும் மிகுந்த மகிழ்ச்சியையும், நன்மையையும் தராது. பலவீனனோ அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடன் {மன்னிக்கும் தன்மையுடன்} இருக்க வேண்டும். சக்தியுள்ளவன், அறநோக்கத்தால் மன்னிப்பவனாக {பொறுமையுள்ளவனாக} வேண்டும்; வெற்றியையும், தோல்வியையும் சமமாகக் கருதுபவன் இயல்பாகவே மன்னிக்கும் தன்மையுடன் இருக்கிறான்.
அறத்திற்கும், பொருளுக்கும் பழுதேற்படுத்தாத நிறைவை அடைய, ஒருவன் இன்பத்தேடலை நிச்சயம் தொடரவேண்டும். எனினும், புலன்களில் முழுதாய் ஈடுபட்டுவிட்டு மூடனைப் போலவும் அவன் நடந்து கொள்ளக்கூடாது.
துயரத்தால் துன்புறுத்தப்படுபவன், தீய வழிகளுக்கு அடிமையாக இருப்பவன், இறைமையை {பரமாத்மாவை} மறுப்பவன் {நாத்திகன்}, சோம்பேறி, புலன்களைத் தனது கட்டுப்பாட்டில் வைக்காதவன், முயற்சியற்றவன் ஆகியோரிடம் எப்போதுமே செழிப்பு தங்காது.
அடக்கமாக இருக்கும் எளிமையான மனிதன், தனது பணிவால் பலவீனமானவனாகக் கருதப்பட்டு, தவறான அறிவு படைத்தவர்களால் துன்புறுத்தப்படுகிறான் {அவமதிக்கப்படுகிறான்}.
அளவுக்கதிகமான தயாளன், அளவில்லாமல் தானமளிப்பவன், மிதமிஞ்சிய துணிவுள்ளவன், கடுமையான நோன்புகளைப் பயில்பவன், அறிவில் செருக்குடையவன் ஆகியோரிடம் கொண்ட பயத்தினால், செழிப்பு {எனும் லட்சுமி தேவி} அவர்களை அணுகுவதேயில்லை.
அதிகக் குணம் கொண்டவனிடமும், {நற்} குணமே அற்றவனிடமும் செழிப்பு தங்குவதில்லை. அனைத்து அறங்களின் சேர்க்கையை அவ ள் விரும்புவதில்லை. அதே போல எந்த அறங்களும் அற்றவர்களிடமும் அவள் மகிழ்ச்சி கொள்வதில்லை. கண்பார்வையற்ற {குருட்டு} பசுப் போல, செழிப்பானவள், குறிப்பிடத்தக்கவனாக இல்லாதவனிடம் கூட தங்குகிறாள் {யாரிடம் தங்குவாள் எனத் தெரியாது}.
வேதங்களின் கனிகளே {பயன்களே} நெருப்பின் முன் செய்யப்படும் (ஹோமச்} சடங்குகள்; நல்ல மனநிலை மற்றும் நடத்தையின் கனிகளே சாத்திரங்களின் அறிவு. கலவி இன்பமும், வாரிசுகளும் பெண்களின் கனிகள்; இன்பமும் ஈகையும் செல்வத்தின் கனிகள். பாவத்தால் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு தனது செழிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செய்யும் ஒருவன், (அக்காரியத்திற்காக) பாவத்தால் விளைந்த பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவாக, அதன் {செழிப்பின்} கனிகளை {பயன்களை} அடுத்த உலகில் பெறமாட்டான்.
பாலைவனங்கள், அல்லது ஆழ்ந்த கானகங்கள், அல்லது அடைவதற்கரிதான கடுமை நிறைந்த இடங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், அனைத்துவிதமான அச்சங்கள் மற்றும் ஆபத்துகளின் மத்தியிலும், அல்லது தன்னைத் தாக்கப்போகும் மரண ஆயுதம் ஓங்கப்பட்டிருந்தாலும், மனோபலம் கொண்ட ஒரு மனிதன், அவற்றுக்கு முன்னிலையில் அச்சத்தை அடைவதில்லை.
{செழிப்பின் வேர்}
முயற்சி, தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு}, திறன், கவனம், உறுதி, நினைவு {ஞாபக சக்தி}, முதிர்ச்சியுடன் தீர்மானித்த செயல்களின் துவக்கம் ஆகியவையே செழிப்பின் வேர் என அறிவீராக.
தவங்களே துறவிகளின் பலம்; வேதங்களே அதை அறிந்தவர்களின் பலம்; பொறாமையே தீயவர்களின் பலம்; அதே போல, மன்னிக்கும் தன்மையே {பொறுமையே} அறம்சார்ந்தவர்களின் பலமாகும்.
நீர், கிழங்குகள், பழங்கள், பால், தெளிந்த நெய், அந்தணரின் விருப்பம், ஆசானின் உத்தரவு, மருந்து {ஔஷதம்} ஆகிய எட்டும் நோன்பை அழிக்காதவையாகும்.
எது தனக்குக் கெடுதலாக இருக்கிறதோ, அதை அவன் வேறு ஒருவனுக்குச் செய்யக்கூடாது. சுருக்கமாக, இதுவே அறம் எனப்படுவதாகும். பிற வகை அறங்களும் இருக்கின்றன. ஆனால், அவை உறுதியற்றவை. கோபத்தை, மன்னிக்கும் தன்மையால் {பொறுமையால்} வெல்ல வேண்டும்; தீயவர்களை நேர்மையால் வெல்ல வேண்டும்; கஞ்சனைக் கொடையாலும், பொய்யை உண்மையாலும் வெல்ல வேண்டும்.
பெண்கள், ஏமாற்றுக்காரன், சோம்பேறி, கோழை, மூர்க்கன், பலத்தில் செருக்குடையவன், திருடன், நன்றிமறந்தவன், இறைமறுப்பாளன் {நாத்திகவாதி} ஆகியோரை ஒருபோதும் நம்பக்கூடாது.
பெரியோரை மரியாதையாக வணங்கி, முதிர்ந்தவர்களுக்குப் பணிவிடை செய்பவனின் சாதனைகள், வாழ்நாளின் {ஆயுளின்} அளவு, புகழ், சக்தி ஆகிய நான்கும் எப்போதுமே பெருகுகிறது.
வலிநிறைந்த முயற்சியல்லால் அடைய முடியாத பொருட்களிலோ {நோகாமல் கிடைக்கும் அரிய பொருட்களிலோ}, நீதியைத் தியாகம் செய்வதிலோ, எதிரியிடம் தலைவணங்குவதிலோ உமது இதயத்தைச் செலுத்தாதீர்.
{இரக்கப்படத் தக்கவன்}
அறிவில்லாத மனிதன் இரக்கப்படத்தக்கவன்; கனியற்ற கலவி இரக்கப்படத்தக்கது; ஒரு நாட்டில் உணவற்று இருக்கும் மக்கள் இரக்கப்படத்தக்கவர்கள்; மன்னன் இல்லாத நாடு இரக்கப்படத்தக்கது. உடல் கொண்ட உயிரினங்களின் வலிக்கும், பலவீனத்திற்கும் தோற்றுவாய்களாகும் இவை.
குன்றுகள் மற்றும் மலைகளுக்குச் சிதைவை உண்டாக்கும் மழை; பெண்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்பமின்மை; இதயத்திற்குக் கணையாகும் கடுஞ்சொற்கள். வேதங்களின் களங்கமான கல்லாமை; அந்தணர்களிடம் நோன்பின்மை; பூமிக்கு {பூமியின் களங்கமான} வாஹ்லீகர்கள்; மனிதர்களின் {களங்கமான} பொய்மை; {அரிய பொருட்களின் மீது} கற்புடைய பெண்களின் ஆர்வம்; பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியேறுதல் களங்கம்}. தங்கத்தின் களங்கம் வெள்ளி; வெள்ளிக்கு ஈயம்; ஈயத்திற்குக் காரீயம்; காரீயத்துக்கு {களங்கமான} பயனற்ற கசடுகள் ஆகியவை ஒவ்வொன்றுக்கும் பலவீனத்தையும் வலியையும் தரும்.
படுப்பதால் உறக்கத்தையும்; ஆசையால் பெண்களையும்; எரிபொருளால் {விறகினால்} நெருப்பையும், குடிப்பதால் மதுவையும் ஒரு மனிதனால் வெல்ல முடியாது.
நண்பனை தானத்தாலும், எதிரிகளைப் போரினாலும், மனைவியை உணவு மற்றும் பானங்களாலும் வென்றவனுக்கு வாழ்வு பயனுள்ளதே. ஆயிரம் உள்ளவர்களும் வாழ்கிறார்கள்; நூறு உள்ளவர்களும் வாழவே செய்கிறார்கள்.
ஓ! திருதராஷ்டிரரே ஆசையைத் துறப்பீராக. ஏதாவதொரு வழியில் தங்கள் வாழ்வைப் பராமரிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை. இந்தப் பூமியில் இருக்கும் உமது நெல், கோதுமை, தங்கம், கால்நடைகள், பெண்கள் ஆகிய அனைத்தும் ஒரு மனிதனைக் கூட மனநிறைவு கொள்ளச் செய்யாது…
இதை நினைவில் கொண்டே, அறிவாளிகள் உலகளாவிய ஆளுகை இல்லை என்பதற்காக எப்போதுமே வருந்துவதில்லை.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் மீண்டும் உமக்குச் சொல்கிறேன். பாண்டுவின் மகன்கள் மற்றும் உமது மகன்கள் ஆகிய உமது பிள்ளைகளின் மீது சமமான நடத்தையைக் கடைப்பிடிப்பீராக. {அவர்களுக்குள் பாரபட்சம் பாராமல் இருப்பீராக}.” என்றான் {விதுரன்}.
அனைத்து கல்விகளிலும் உயர்ந்தது! – உத்யோக பர்வம் பகுதி 40-விரைவில் புகழ்பெறுபவன் எவன்? அந்தணரைக் கொன்ற பாவத்துக்கு நிகரானவை எவை? அறிவை அடைவதற்கு எதிரிகளாக இருப்பவை எவை? நிறைவடையாதவை எவை? எவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும்? அனைத்து கல்வியிலும் உயர்ந்தது எது? ஈமச்சிதையில் இடப்பட்டவனைத் தொடர்ந்து செல்பவை எவை? ஆன்மா எவ்வாறு நதியோடு ஒப்பிடப்படுகிறது? கட்டுப்படுத்தப்பட வேண்டியவை எவை? நால்வகையினரின் கடமைகள் எவை? என்பன போன்றவற்றைச் சொல்லி, யுதிஷ்டிரனை மன்னனாக்கும்படி திருதராஷ்டிரனிடம் விதுரன் சொல்வது…
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான் “நல்லவர்களால் வழிபடப்பட்டு, செருக்கைக் கைவிட்ட நல்ல மனிதன் ஒருவன், தனது சக்திக்கு மீறாமல், தனது நோக்கங்களைத் தொடர்ந்து சென்றால், அவன் விரைவில் புகழை வெல்வான். ஏனெனில், ஒரு மனிதனிடம் மனநிறைவு கொண்ட நல்லவர்கள், நிச்சயம் அவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள். அநீதி நிறைந்த ஒரு பெரும் பொருளை, தன் சொந்த விருப்பத்தின் பேரில் கைவிடும் ஒருவன், தோலை {சட்டையை} உரித்து வெளியேறும் பாம்பு போல, அனைத்து எதிரிகளையும் கைவிட்டு மகிழ்ச்சியாக வாழ்வான். பொய்மையால் ஈட்டப்பட்ட வெற்றி, மன்னனிடம் ஏமாற்றுகரமான நடத்தை, நோக்கங்களில் நேர்மையற்ற உணர்வுகளை ஆசான் முன்பு வெளிப்படுத்தல் ஆகிய மூன்றும் பிராமணனைக் கொன்ற பாவத்திற்கு நிகரானவை ஆகும்.
{மாணவர்கள்}
அதீத பொறாமை, மரணம், தற்புகழ்ச்சி ஆகியவையே செழிப்பின் அழிவுக்குக் காரணங்களாகும். ஆசானைக் கவனிப்பதில் கவனமின்மை, அவசரம், தற்பெருமையின்மை ஆகிய மூன்றும் அறிவுக்கு {ஞானத்திற்கு} எதிரிகளாகும்.
சோம்பல், கவனமின்மை, அறிவாற்றலில் குழப்பம் {மதிமயக்கம்}, அமைதியின்மை, நேரத்தை வீணடிக்கும் கூடுகை {கூட்டம்}, அகந்தை, பேராசை, ஆகிய ஏழும் கல்வி கற்கும் மாணவர்களுடைய குறைகள் என்று சொல்லப்படுகின்றன. இன்பத்தில் ஆசை கொண்டவர்களால் அறிவை {ஞானத்தை} எப்படி அடைய முடியும்? கல்வி கற்கும் மாணவர்கள், இன்பம் அனுபவிப்பது ஆகாது. {வித்தையை விரும்புகிறவன் சுகத்தை விட வேண்டும்}. இன்பத்தில் பற்றுடையோர் அறிவை விட்டு விட வேண்டும். அதே போல அறிவில் பற்றுடையோர் இன்பத்தை விட்டுவிட வேண்டும்.
விறகால் நெருப்பு நிறைவடைவதில்லை (ஆனால் அதைவிட எந்த அளவையும் அஃது உட்கொள்ளும்). தான் பெரும் நதிகளால் பெருங்கடல் நிறைவடைவதில்லை (ஆனால் எத்தனை நதிகளையும் அஃது உள்வாங்கிக் கொள்ளும்). வாழும் மொத்த உயிரினங்களாலும் மரணம் மனநிறைவைக் கொள்வதே இல்லை (வாழும் அனைத்தும் இறக்கவே செய்யும்). அதே போல, ஓர் அழகான மங்கை, {அவள் கொண்ட) எத்தனை ஆடவரிலும் மனநிறைவடைவதில்லை.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நம்பிக்கை பொறுமையைக் கொல்கிறது {அழிக்கிறது}; யமன் வளர்ச்சியைக் கொல்கிறான்; ஈயாமை {தானமளிக்காமை} புகழைக் கொல்கிறது; செய்நேர்த்திகள் இல்லாமை {பரிபாலனம் செய்யாமை} கால்நடைகளைக் கொல்கிறது; கோபக்கார அந்தணன் ஒருவன் மொத்த நாட்டையுமே அழிக்கிறான்.
ஆடுகள், வெண்கலம் {பாத்திரங்கள்}, வெள்ளி, தேன், நச்சுமுறிவு {விஷமுறிவு} மருந்துகள், பறவைகள், வேதங்களை அறிந்த அந்தணர்கள், முதிர்ந்த உறவினர்கள், உயர் பிறப்பு பிறந்து வறுமையில் மூழ்கியவர்கள் ஆகியோர் எப்போதும் உமது வீட்டில் இருக்கட்டும். ஓ! பாரதரே, ஆடுகள், காளைகள், சந்தனம், வீணைகள் {இசைக்கருவிகள்}, கண்ணாடிகள், தேன், தெளிந்த நெய், இரும்பு, தாமிரம், சங்குகள், சாளக்கிராமம் (உள்ளே பொன் கொண்ட விஷ்ணுவின் கல் உருவம்), கோரோசனை [1] ஆகியவற்றைத் தேவர்களை வழிபடுவதற்காக ஒரு வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று மனு கூறியிருக்கிறார்.
{கல்விகள் [போதனைகள்] அனைத்திலும் உயர்ந்தவை}
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, பெருங்கனிகளை {பெரும்பலன்களைக்} கொடுக்க வல்ல மற்றொரு புனித பாடத்தை நான் உமக்குச் சொல்கிறேன். காமத்தாலோ, அச்சத்தாலோ, நிலையற்ற உள்ளத்தாலோ, சபலத்தாலோ அறத்தைக் {தர்மத்தைக்} கைவிடக்கூடாது. வாழ்வுக்காக {உயிருக்காக} கூட அறத்தைக் கைவிடக்கூடாது. இந்தப் பாடமே அனைத்துக் கல்வியிலும் {போதனைகளிலும்} உயர்ந்ததாகும். அறம் நித்தியமானது; இன்பமும், வலியும் {துன்பமும்} மாறி மாறி வருவன; வாழ்வோ {உயிரோ} உண்மையில் நித்தியமானதே என்றாலும், குறிப்பிட்ட பகுதிகளில் அது மாறி மாறியே வரும். நிலையாதிருப்பவற்றைக் {மாறி மாறி வருவனவற்றைக்} கைவிட்டு, நித்தியமானதைக் கடைப்பிடிப்பீராக. மனநிறைவு உமதாகட்டும். ஏனெனில், அடையக்கூடிய அனைத்திலும் மனநிறைவே உயர்ந்ததாகும். சிறப்புமிக்கவர்களும், பலமிக்கவர்களுமான மன்னர்கள், செல்வமும் சோளமும் {corn} {தானியங்களும்} அபரிமிதமாக விளையும் நிலங்களை ஆண்டு, தங்கள் நாடுகளை விட்டு, பரந்த இன்ப ஊற்றுகளை விட்டு, உலகத்தை அழிப்பவனுக்கு {யமனுக்கு} இரையானதைப் பாரும்.
மிகக் கவனமாக வளர்த்த மகன் இறக்கும்போது, அவனை மனிதர்கள் (சுடுகாட்டுக்குத்) தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். கலைந்த மயிருடனும், இரங்கத்தக்க வகையில் அழுதும் அந்த உடலை, ஏதோ ஒரு மரத்துண்டு போல ஈமச்சிதையில் இடுகிறார்கள். இறந்தவனின் செல்வத்தைப் பிறரே அனுபவிக்கின்றனர். அதே வேளையில் அவனது {இறந்தவனது} உடலின் தாதுக்களைப் பறவைகளும் நெருப்பும் உண்கின்றன. மறு உலகத்துக்கு, தன்னுடனே வரும் தனது தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்கள் ஆகிய இரண்டை மட்டுமே அவன் {இறந்தவன்} கொண்டு செல்கிறான். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, உறவினர்கள், நண்பர்கள், மகன்கள் ஆகியோர் அந்த உடலைத் தூக்கி எறிந்துவிட்டு, பூக்களும் கனிகளுமற்ற மரத்தைத் துறந்து செல்லும் பறவைகளைப் போல, தங்கள் சுவடுகளை மீண்டும் பின்பற்றி {வந்த வழியே} செல்கிறார்கள். ஈமச்சிதையில் இடப்பட்டவனுடன் அவனது செயல்கள் {கர்மங்கள்} மட்டுமே செல்கின்றன. எனவே, மனிதர்கள் கவனமாகவும் படிப்படியாகவும் நீதிமிக்கத் தகுதிகளை {புண்ணியங்களை} ஈட்ட வேண்டும்.
இதற்கு மேலுள்ள உலகிலும், இதற்குக் கீழுள்ள உலகிலும், பெரும் பிரகாசமும், காரிருளும் உள்ள பகுதிகள் இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பகுதிகளில் தான் மனிதர்களின் புலன்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வீராக. ஓ!, அந்த இடங்கள் எதுவும் உமதாகாதிருக்கட்டும்.
இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு, அதன்படி உம்மால் நடந்து கொள்ள முடிந்தால், நீர் மனிதர்களின் உலகில் பெரும்புகழை அடைந்து, இம்மையிலும் மறுமையிலும் அச்சத்தை அடையாதிருப்பீர்.
{ஆன்மா}
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஆன்மா ஒரு நதியைப் போன்றது என்று சொல்லப்படுகிறது; அறத்தகுதிகளே {புண்ணியங்களே} அதன் புனித நீர்நிலைகள் {தீர்த்தங்கள்}; உண்மையே அதன் {ஆன்மா எனும் நதியின்} நீர்; தற்கட்டுப்பாடே அதன் {ஆன்மா என்ற நதியின்} கரைகள்; கருணையே அதன் அலைகள். ஆன்மா புனிதமானதென்பதாலும், ஆசையின்மையே உயர்ந்த தகுதி {புண்ணியம்} என்பதாலும், நீதிமான் அதில் நீராடுகிறான் {குளிக்கிறான்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐம்புலன்களை நீராய்க் கொண்ட நதியே உயிர். ஆசை மற்றும் கோபமே அதன் முதலைகளும், சுறாக்களும் ஆகும். உமது தற்கட்டுப்பாட்டைத் தோணியாகக் கொண்டு, {மீண்டும் மீண்டும் பிறக்கும்} பிறவிகள் என்ற மடுக்களைத் தாண்டுவீராக.
அறிவு, அறம், கல்வி, வயது ஆகியவற்றில் சிறப்பான நண்பர்களை வழிபட்டும் மனநிறைவு கொள்ளச் செய்தும் இருக்கும் ஒருவன், தான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் அவர்களது அறிவுரைகளை நாடுவதால் அவன் தவறாக வழிநடத்தப்படுவதே இல்லை.
ஒருவன் தனது காமத்தையும், வயிறையும் பொறுமையால் கட்டுப்படுத்த வேண்டும்; ஒருவனது கரங்களையும், பாதங்களையும் தனது கண்களாலும்; ஒருவனது கண்களையும் காதுகளையும் தனது மனதாலும்; ஒருவனது மனதையும் வார்த்தைகளையும் தனது செயல்களாலும் கட்டுப்படுத்த வேண்டும்.
தனது {புனித} நீராடல்களைத் தவிர்க்காமல், தனது புனித நூலை எப்போதும் அணிந்து, வேதகல்வியில் ஈடுபட்டு, சுத்தமற்ற உணவை எப்போதும் தவிர்த்து, உண்மையைப் பேசி, தனது குருவை மதித்துத் தனது செயல்களைச் செய்யும் ஓர் அந்தணன் பிரம்ம லோகத்தில் இருந்து எப்போதும் விழ மாட்டான்.
வேதங்களைக் கற்று, நெருப்பில் காணிக்கைகளைச் செலுத்தி, வேள்விகள் செய்து, குடிமக்களைக் காத்து, தனது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்தணர்களையும் பசுக்களையும் காக்கும் வகையில் தனது ஆயுதங்களைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் மாளும் ஒரு க்ஷத்திரியன் சொர்க்கத்தை அடைகிறான்.
வேதங்களைக் கற்று, சரியான நேரத்தில் பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பிரித்து வழங்கி, மூன்று வகை நெருப்புகளில் வரும் புனிதப் புகையைச் சுவாசித்து இருக்கும் வைசியன் ஒருவன் மறுமையில் எப்போதும் அருளையே அனுபவிக்கிறான்.
பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரை சரியான வகையில் முறையாக வழிபட்டு, அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்வதால் தனது பாவங்களை எரித்து, அமைதியாகத் தனது உடலைத் துறக்கும் ஒரு சூத்திரன் சொர்க்கத்தில் அருள்நிலை பெற்று இன்புறுகிறான்.
நால்வகையினரின் கடமைகளும் உம் முன்னே இப்படியே நிறுவப்பட்டுள்ளது. எனது பேச்சின் காரணத்தை நான் சொல்லும் போதே கேட்பீராக. பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், தனது க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து விழப் போகிறான். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னர்களின் கடமைகளைச் செய்யும் நிலையில் அவனை அமர்த்துவீராக” என்றான் {விதுரன்}.
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! இனிமையானவனே {விதுரே}, நீ கற்பித்தது போலவே அனைத்தும் இருக்கின்றன. நீ சொல்லும்படி செய்யவே எனது இதயம் விரும்புகிறது. எனினும், நீ கற்பித்ததைப் போலவே எனது மனம் பாண்டவர்களிடம் சென்றாலும், துரியோதனனிடம் தொடர்பு ஏற்பட்டதுமே நான் வேறு வழியில் திரும்பி விடுகிறேன். எந்த உயிரினத்தாலும் விதியைத் தவிர்க்க முடியாது. உண்மையில், விதியே பாதையைச் சமைக்கிறது என்பது உறுதி என்றே நான் நினைக்கிறேன்; தனிப்பட்டவர்களின் முயற்சிகள் வீணானவையே” என்றான் {திருதராஷ்டிரன்}.
(விதுர நீதி முற்றும்)
சேனோத்யோக பர்வம் முற்றும்
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply