சனத்சுஜாதர் வருகை! – உத்யோக பர்வம் பகுதி 41-அறம் குறித்து மேலும் சொல்லுமாறு கேட்ட திருதராஷ்டிரனிடம், தான் சூத்திரன் என்பதால் இதற்கு மேல் சொல்ல முடியாதென்றும், அந்தணரான சனத்சுஜாதர் அவனது சந்தேகங்களைப் போக்குவார் என்றும் சொல்வது; விதுரன் தன்னை நினைப்பதை அறிந்த சனத்சுஜாதர் அங்கே வந்தது; திருதராஷ்டிரனின் சந்தேகத்தைப் போக்குவதே அவருக்குத் தகும் என விதுரன் சனத்சுஜாதரிடம் தெரிவித்தது…
திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “இன்னும் உன்னால் சொல்லப்பட வேண்டியது ஏதேனும் இருந்தால், ஓ! விதுரா, நான் கேட்கத் தயாராக இருக்கிறேன் சொல். இந்தச் சொற்பொழிவு, உண்மையில் அழகாகத்தான் இருக்கிறது” என்றான்.
அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! திருதராஷ்டிரரே, ஓ! பாரதக் குலத்தவரே, பழமையானவரும், இறப்பற்றவரும், நிலைத்த {நித்திய} பிரம்மச்சர்ய வாழ்வை வாழ்பவரும், அறிவாளிகளில் முதன்மையானவரும், “மரணம் என்பது இல்லை” என்று சொன்னவருமான சனத்சுஜாதர் {Sanatsujata}, வெளிப்படுத்தியும், வெளிப்படுத்தாமலும் உமது மனதில் நீர் கொண்டிருக்கும் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்துவார்” என்றான் {விதுரன்}.
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “அந்த இறப்பற்ற முனிவர் {சனத்சுஜாதர்} என்னிடம் என்ன சொல்வார் என்பதை நீ அறிவாயா? ஓ! விதுரா, உண்மையில் அந்த அளவுக்கு ஞானம் {அறிவு} உன்னிடம் இருந்தால் அதை நீ எனக்குச் சொல்லலாமே?” என்று கேட்டான்.
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “நான் சூத்திர வகையில் பிறந்தவன். எனவே, நான் ஏற்கனவே சொன்னதைவிட அதிகமாகச் சொல்ல என்னைத் துணிய வைக்காதீர். எனினும், பிரம்மச்சர்ய வாழ்வை மேற்கொள்ளும் அந்த முனிவரின் புரிதல் முடிவிலியானது என்றே என்னால் கருதப்படுகிறது. பிறப்பாலோ, ஆழமான புதிர்களைக்கூட {எளிதாக} உரையாடும் தகுதியாலோ பிராமணனான ஒருவரால் தேவர்களின் நிந்தனை நேர்வதில்லை. இதற்காக மட்டுமே இது குறித்து நான் உம்மிடம் உரையாடவில்லை {உமது சந்தேகத்திற்கு விடை எனக்குத் தெரியும். ஆனால், நான் சூத்திரன் என்பதால் அதைச் சொல்லத் துணியவில்லை}” என்றான் {விதுரன்}.
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! விதுரா, இந்த எனது உடலுடன் நான் எவ்வாறு அந்த இறப்பற்ற பழமையானவரைச் {சனத்சுஜாதரைச்-Sanatsujata} சந்திக்க இயலும்? அதை எனக்குச் சொல்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, விதுரன் அந்தக் கடும்நோன்புகள் கொண்ட முனிவரை {சனத்சுஜாதரைக்} குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தான். தான் நினைக்கப்படுவதை அறிந்த அந்த முனிவர் {சனத்சுஜாதர்-Sanatsujata}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அங்கே தன்னை வெளிப்படுத்தினார். பிறகு, விதிமுறைகள் பரிந்துரைக்கும் சடங்குகளைச் செய்து, விதுரன் அவரை வரவேற்றான்.
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, அந்த முனிவர் வசதியாக அமர்ந்ததும், விதுரன் அவரிடம் {சனத்சுஜாதரிடம்}, “ஓ! சிறப்பு மிக்கவரே, என்னால் விளக்க முடியாத சந்தேகமொன்று திருதராஷ்டிரரின் மனதில் இருக்கிறது. எனவே, அதைத் தெளிவுபடுத்துவதே உமக்குத் தகும். உமது உரையாடலைக் கேட்கும் இந்த மனிதர்களின் தலைவர் {திருதராஷ்டிரர்}, தனது சோகங்களைக் கடந்து, ஆதாயம் மற்றும் இழப்பு, ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை, முதுமை மற்றும் மரணம், அச்சம் மற்றும் பொறாமை, பசி மற்றும் தாகம், செருக்கு மற்றும் செழிப்பு, வெறுப்பு, உறக்கம், இச்சை {காமம்} மற்றும் கோபம், குறைவு மற்றும் அதிகரிப்பு ஆகிய அனைத்தையும் தாங்கிக் கொள்ளுமாறு செய்வீராக” என்றான் {விதுரன்}.
அறியாமையே மரணம்! – உத்யோக பர்வம் பகுதி 42அ-மரணம் குறித்த இரு கருத்துகளில் எது உண்மை எனத் திருதராஷ்டிரன் சனத்சுஜாதரிடம் கேட்பது; அறியாமையே மரணம் என்றும், ஆத்மாவின் தத்துவங்கள் குறித்தும் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு உரைப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார் “பிறகு, விதுரனின் வார்த்தைகளைப் பாராட்டிய சிறப்புமிக்கவனும், புத்திமானுமான மன்னன் திருதராஷ்டிரன், அறிவுகள் அனைத்திலும் உயர்ந்ததை {ஆத்ம ஸ்வரூபத்தை} அடைய விரும்பி சனத்சுஜாதரிடம் தனிமையில் பேசினான்”
மன்னன் {திருதராஷ்டிரன்}, முனிவரிடம் {சனத்சுஜாதரிடம்}, “ஓ! சனத்சுஜாதரே, மரணம் இல்லை என்ற கருத்தை நீர் கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே தேவர்களும், அசுரர்களும் தவம் பயில்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பின், இந்த இரு கருத்துகளில் எதுதான் உண்மை?” என்று கேட்டான்.
{அறியாமையே மரணம்}
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “சில குறிப்பிட்ட செயல்கள் {கர்மங்கள்} மரணத்தை நிவர்த்திசெய்ய வல்லைவை என்று சிலர் சொல்கிறார்கள்; பிறர் மரணம் இல்லை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்; எது உண்மை என நீ என்னிடம் கேட்கிறாய். ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, இதுகுறித்து நான் சொல்கிறேன் கேள். அதனால் உனது ஐயங்கள் அகலும். ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, இவை இரண்டுமே உண்மைதான் என அறிந்து கொள்வாயாக. அறியாமையின் விளைவே மரணம் எனக் கற்றோர் கருதுகின்றனர். நானோ, அறியாமையே மரணம் என்றும், அறியாமையின்மையே (அறிவே {ஞானமே}) இறவா {அமர} நிலை என்றும் சொல்கிறேன்.
அறியாமையினாலேயே அசுரர்கள் தோல்விக்கும் மரணத்துக்கும் ஆட்படுகிறார்கள். அறியாமையின்மையினாலேயே {அறிவாலேயே} தேவர்கள் பிரம்மனின் {பிரம்மத்தின்} இயல்பை அடைகிறார்கள். புலியைப் போல, மரணம் உயிரினங்களை விழுங்குவதில்லை; அதன் {மரணத்தின்} உருவம் அறியமுடியாததாக இருக்கிறது. இஃது ஒருபுறமிருக்க, சிலர் யமனே மரணம் எனக் கற்பனை செய்கிறார்கள். எனினும், இது {இந்த எண்ணம்} பலமற்ற {பலவீனமான} மனதினால் விளைவதே.
பிரம்மம் அல்லது தன்னறிவின் {சுய அறிவின்} நோக்கம், அழியா நிலையை {இறவா நிலையை} அடைவதே. நல்லவர்களுக்கு அருளின் ஊற்றுக்கண்ணாகவும், பாவிகளுக்குத் துன்பத்தின் ஊற்றுக்கண்ணாகவும் திகழும் பித்ருக்களின் உலகை, அந்தத் (கற்பனையான) தேவன் (யமன்) ஆட்சி செய்கிறான். அவனது {யமனின்} கட்டளையின் பேரில் கோபம், அறியாமை, பேராசை ஆகியவற்றின் உருவத்தை ஏற்று வரும் மரணம், மனிதர்கள் மத்தியில் ஏற்படுகிறது {அதனால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது}.
செருக்கில் தத்தளிக்கும் மனிதர்கள் அநீதியான பாதையிலேயே எப்போதும் நடக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இருப்பவன் எவனும் தனது உண்மையான இயல்பை அடைவதில் {ஆத்ம தரிசனத்தைப் பெறுவதில்} வெற்றி பெறுவதில்லை. புரிந்து கொள்ளும் தன்மை மறைக்கப்பட்டு {மோகம் கொண்டு}, ஆசைகளில் தத்தளித்து, தங்கள் உடல்களைத் துறக்கும் அவர்கள், மீண்டும் மீண்டும் நரகத்திற்குள்ளேயே விழுகிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் புலன்களால் தொடரப்படுகிறார்கள். {அவர்களது புலன்கள், தங்கள் செயல்களை ஒட்டியே சுற்றிக் கொண்டிருக்கின்றன}. இதற்காகவே, அறியாமை மரணம் என்ற பெயரைப் பெறுகிறது
செயல்பாடுகளின் கனிகளை {பலன்களை} விரும்பும் மனிதர்கள், அந்தக் கனிகளை {பலன்களை} அனுபவிக்கும் நேரம் வரும்போது தங்கள் உடல்களை விட்டு விட்டுச் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். எனவே, அவர்களால் மரணத்தைத் தவிர்க்க முடியாது. உருவம் கொண்ட உயிரினங்கள், பிரம்மத்தின் அறிவை அடையும் திறன் இன்மையாலும், உலகளாவிய இன்பங்களில் தாங்கள் கொள்ளும் தொடர்புகளாலும் மறுபிறவி எனும் சுழற்சியில் மேலாகவும், கீழாகவும், சுற்றியே உலவி கொண்டிருக்கும் கடமைக்கு ஆட்படுகின்றனர.
உண்மையற்றதை {பொய்மையை} நோக்கி நாட்டங்கொள்ளும் மனிதனின் இயற்கையான உந்துதலே, புலன்கள் தவறானவற்றை அடைய காரணமாக அமைந்து வழிகாட்டுகிறது. உண்மையற்ற பொருட்களில் தொடர்ந்து நாட்டங்கொள்வதால் பாதிப்படையும் ஆன்மா, எப்போதும் தான் ஈடுபட்டவைகளை {ஈடுபட்ட செயல்களை மட்டுமே} நினைவு கூர்ந்து, தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகளாவிய இன்பங்களை மட்டுமே வழிபடுகிறது.
{மூன்று}
இன்பங்களில் விருப்பமே {ஆசையே} முதலில் மனிதர்களைக் கொல்கிறது. இச்சையும் {காமமும்}, சினமும் {கோபமும்} விரைவில் அதன் பின்னேயே தொடர்ந்து வருகின்றன. இன்பங்களில் விருப்பம், காமம், கோபம் ஆகிய மூன்றும் மூடர்களை மரணத்திற்கு வழிநடத்துகின்றன. எனினும், தங்கள் ஆன்மாக்களை வென்றவர்கள், தன்னடக்கத்தில் வென்று, மரணத்தில் இருந்து தப்பிக்கிறார்கள்.
தனது குறிக்கோளின் மீது கொண்ட ஆசையால் உற்சாகமடைந்து, தான் பாதிக்காத வகையில் தனது ஆன்மாவை வென்றவன், தன்னறிவின் {சுயஞானத்தின்} உதவியால் இவற்றை {ஆசை, காமம், கோபம் ஆகியவற்றை} மதிப்பில்லாதவை எனக் கருதி இவையாவையும் வெல்கிறான்.
இம்முறையில் தனது விருப்பங்களை அடக்கியவனான கற்ற மனிதன் ஒருவனை, யமனின் உருவத்தை ஏற்று வரும் அறியாமையால் விழுங்க முடியாது. தனது விருப்பங்களைப் பின்தொடரும் மனிதன், தனது விருப்பங்களுடன் சேர்த்தே அழிக்கப்படுகிறான். எனினும், ஆசையையைத் துறக்க முடிந்தவனால் நிச்சயமாக அனைத்துவிதமான துன்பங்களை விரட்டிவிட முடியும்.
உண்மையில் ஆசையே அறியாமை. அனைத்து உயிரினங்களுக்கும் அதுவே இருளும் நரகமுமாகும். அதில் {அறியாமையில்} தத்தளிக்கும் உயிரினங்கள் தங்கள் அறிவை இழக்கின்றன. தெருவில் போதையில் நடக்கும் மனிதர்கள் மேடு பள்ளங்களில் விழுவதைப் போல, ஆசையால் பீடிக்கப்பட்ட மனிதர்கள், இன்பங்களில் ஏமாந்து தவறான வழியை அடைந்து அழிவை நோக்கி ஓடுகிறார்கள். ஆசையால் குழப்பப்படவோ, தவறாக வழிநடத்தப்படவோ முடியாத ஆன்மாவைக் கொண்ட மனிதனை மரணத்தால் என்ன செய்துவிட முடியும்? வைக்கோலாலான புலியைப் போல மரணம் அவனுக்குப் பயத்தை {எப்போதும்} அளிப்பதில்லை.
எனவே, ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, அறியாமையான ஆசையின் இருப்பு அழிக்கப்பட வேண்டுமானால், மிகச் சிறிய ஆசையாகவே இருந்தாலும், எந்த ஆசையும் மனதால் நினைக்கப்படவோ, தொடரப்படவோ கூடாது. கோபம், பேராசை ஆகியவற்றைக் கொண்டு, உனது உடலுக்குள் இருக்கும் ஆன்மா, அறியாமையில் நிறைந்தால் அதுவே மரணமாகும். மரணம் இப்படியே உண்டாகிறது என்பதை அறிந்தவன், அறிவைச் சார்ந்திருந்து, மரண அச்சத்தை ஊக்குவிப்பதில்லை. உண்மையில், மரணத்திற்கு ஆட்படும் உடல் அழிக்கப்படுவது போலவே, அறிவுக்கு {ஞானத்திற்கு} ஆட்படும் மரணமும் அழிகிறது.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “வேண்டுதல்கள் மற்றும் வேள்விகளால் மறுபிறப்பாள வர்க்கத்தினர் {பிராமண ஜாதியினர்} அடையத்தக்கவையும், விடுவிக்கும் திறன்பெற்றவையுமான மிகப்புனிதமான, அழிவற்ற பகுதிகளை {உலகங்களை} வேதங்கள் தீர்மானித்திருக்கின்றன. இதை அறிந்தும், ஒரு கற்ற மனிதர் (அறச்) செயல்களைச் செய்வதில்லையே [1]” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மையில், அறிவு இல்லாதவன் {ஞானம் இல்லாதவன்}, நீ குறிப்பிடும் பாதையிலேயே செல்கிறான். அங்கேதான் பேரின்பமும் விடுதலையும் இருக்கின்றன என்று வேதங்களும் சொல்கின்றன. ஆனால், தனது மனித உடலையே தானாகக் {சுயம் என்று} கருதும் ஒருவன், ஆசையைக் கைவிடுவதில் வென்றால், உடனே விடுதலையை {பிரம்மத்தை} அடைகிறான். எனினும், விடுதலைக்கு முயலும் ஒருவன், ஆசையைக் கைவிடாதிருந்தால், செயலுக்காகப் (பரிந்துரைக்கப்பட்ட) பாதையில் சென்று, தான் ஒரு முறை கடந்து சென்ற வழித்தடங்களின் வழியே திரும்பும் வாய்ப்புகளை அழிப்பதில் கவனம் கொள்ள வேண்டும்” என்றார் {சனத்சுஜாதர்} [2]
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “பிறப்பற்ற பழமையானவனைத் {பரமாத்மாவைத் (அ) பரம்பொருளைத்} தூண்டுவது யார்? அனைத்திற்குள்ளும் தானே நுழைந்திருப்பதன் விளைவால் (ஆசையில்லாமல் இருக்கும் அவன்) அனைத்திலும் தானாக இருக்கும் இந்த அண்டத்தில், அவனின் {பரமாத்மாவின்} செயல் என்றோ, அல்லது அவனது மகிழ்ச்சி என்றோ என்ன இருக்க முடியும்? ஓ! கற்ற தவசியே {சனத்சுஜாதரே}, இவை அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வீராக?” என்று கேட்டான். [3]
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “இரு வேறுபட்ட உயிரினங்களை (இங்கு இருப்பது போல) முழுமையாக அடையாளம் காண்பதில் ஏற்படும் பெரும் தடைகள், நிலைகளின் இணைப்புகளால் உருவாகின்றன (அவற்றின் சாரம் என்ன என்பது நிலைமைகளற்றது). இந்தப் பார்வை {தரிசனம்}, பிறப்பற்ற பழைமையானவனின் {பரமாத்மாவின் / பரம்பொருளின்} மேலாதிக்கத்தைக் குறைத்துவிடாது. மனிதர்களைப் பொறுத்தவரை, அவர்களும் நிலைமைகளின் இணைப்புகளாலேயே உற்பத்தியாகிறார்கள். தோன்றும் இவையனைத்தும் அழிவற்ற பரமாத்மாவே அன்றி வேறில்லை.
உண்மையில், உருமாற்றங்களுக்கு ஆட்படும் இந்த அண்டமே பரமாத்மாவால் படைக்கப்பட்டதுதான். அதன் சக்தி மற்றும் அதன் உடைமையாளர் ஆகியவற்றை அடையாளங்காண வேதங்கள் மற்றும் இன்னும் பிறவும் அதிகாரம் கொண்டிருக்கின்றன. [4]
அந்தணன் யார்? – உத்யோக பர்வம் பகுதி 42ஆ-அறம் மற்றும் செயல்பாடுகளின் திறன் குறித்துத் திருதராஷ்டிரன் சனத்சுஜாதரிடம் வினவுவது; அறப்பயிற்சி மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டுமே மனிதனுக்கு வெற்றியைத் தரும் என்று சனத்சுஜாதர் சொல்வது; மண்ணுலகச் செழிப்பு மற்றும் விண்ணுலகச் செழிப்பு ஆகியவற்றைச் சனத்சுஜாதர் சொல்வது …
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “இவ்வுலகில், சிலர் அறம் பயில்கிறார்கள், சிலர் செயல் அல்லது கர்மத்தைத் துறக்கிறார்கள் (சந்நியாச யோகம் என்று அழைக்கப்படுவதை மேற்கொள்கிறார்கள்). (அறம் பயில்வோரை மதித்து) நான் கேட்கிறேன். தீமையை அழிக்கும் திறன் அறத்திற்கு இருக்கிறதா? அல்லது தீமையால் அது {அறம்} அழிவுக்குள்ளாகிறதா?”
அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “அறத்தின் கனிகள் {பலன்கள்}, (முற்றான) செயலின்மை ஆகிய இரண்டும் அந்த வகையில் (விடுதலை பெறும் வகையில்) பயனுடையதே. உண்மையில், {இந்த} இரண்டும் விடுதலையை அடைவதற்கு உறுதியான வழிமுறைகளே. எனினும், அறிவுள்ள ஒருவன் {ஞானி}, அறிவால் (செயலின்மையால்) வெற்றியை அடைகிறான். மறுபுறம், ஒரு பொருள்முதல்வாதி (செயலால்) தகுதியை {புண்ணியத்தை} அடைந்து, அதன் விளைவால் விடுதலையை அடைகிறான். (அவனது நாட்டத்தின் போக்கில்) அவன் பாவத்துக்கும் ஆட்படுகிறான். நிலையற்றவையான அறம் மற்றும் மறம் {தீமை} ஆகிய இரண்டின் கனிகளையும் {பலன்களையும்} அடையும் செயல்பாடுள்ள ஒரு மனிதன் {செயலாற்றுபவன்}, (அறவோன் மற்றும் பாவி ஆகியோருக்குச் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டுக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பதால்), தனது முந்தைய அறங்கள் மற்றும் மறங்களின் விளைவால், மீண்டும் செயலுக்கு அடிமையாகிறான். எனினும், செயல்புரியும் ஒரு மனிதன் அறிவுடையவனாக இருந்தால், அவன் தனது பாவங்களை அறச்செயல்கள் மூலம் அழிக்கிறான். எனவே, அறம் வலிமையானதே. எனவே, செயல்பாடுள்ள மனிதனும் வெற்றியடைகிறான்” என்றார் {சனத்சுஜாதர்}.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “அறம் பயிலும் இருபிறப்பாளர்கள் {துவிஜர்கள்}, தங்கள் சொந்த அறச் செயல்களின் கனிகளால் {பலன்களால்} அடையத்தக்க அழிவற்ற உலகங்களை, அதனதன் படிநிலைகளின்படி {தரவரிசைப்படி} எனக்குச் சொல்லும். அதே போன்ற பிற உலகங்களையும் எனக்குச் சொல்லும். ஓ! கற்ற அய்யா {மேதையே} {வித்வானே}, (மனிதர்களின் இதயத்தால் இயல்பாக விரும்பப்படுவதும், எவ்வளவுதான் தலையிட்டாலும் பாவத்தைத் தருகின்ற) செயல்பாடுகளைக் {கர்மாவை} குறித்து நான் கேட்க விரும்பவில்லை!” என்றான் {திருதராஷ்டிரன்}
{தெய்வீக செழிப்பு}
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “பலமிக்கவர்கள் தங்கள் பலத்தில் பெருமை கொள்வதைப் போல, தங்கள் யோகப் பயிற்சிகளில் பெருமை கொள்ளும் இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, இங்கிருந்து விடைபெற்றுப் பிரம்மலோகத்தில் ஒளிர்கிறார்கள். வேள்விகளையும், வேதச் சடங்குகளையும் பெருமையுடன் செய்யும் இருபிறப்பாளர்கள், அதன் பலனாக அறிவை அடைந்து, அந்தச் செயலின் விளைவால் இந்த உலகத்தில் இருந்து விடுதலையடைந்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருக்கும் உலகத்திற்குச் செல்கிறார்கள். மேலும் வேதமறிந்தவர்களில் சிலர், (வேதங்களால் விதிக்கப்பட்ட) வேள்விளையும் சடங்குகளையும் செய்வது கட்டாயம் (அவற்றைச் செய்யாமல் விடுவது பாவம்) என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். அக வளர்ச்சிக்கு முயல்பவர்கள், வெளிப்புற வடிவங்களில் ஒன்றியிருப்பவர்கள், (அறத்தின் நிமித்தமாகவே இந்தச் சடங்குகளைச் செய்கிறார்கள், குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக இவற்றை அவர்கள் செய்வதில்லை என்பதால்), {இவர்களுக்குச் சில மரியாதைகள் அளிக்கப்பட வேண்டுமென்றாலும்} இவர்கள் மிக உயர்வாகக் கருதப்பட வேண்டியவர்கள் அல்ல.
மழைக்காலத்தில் ஓர் இடத்தில் உள்ள புல்லையும் நாணலையும் போல, ஓர் அந்தணனுக்குத் தேவையான உணவும், நீரும் எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்கே (சொற்பமான வழிமுறைகளையே கொண்ட இல்லறவாசிகளை வேதனைப்படுத்தாமல்) ஒரு யோகி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் அவன் பசி மற்றும் தாகத்தால் தனது சுயத்தை ஒடுக்காமல் இருக்க வேண்டும்.
ஒருவனின் மேன்மையைத் தெளிவு படுத்தும் இடத்தில், மற்றவனின் வெறுப்பைச் சம்பாதிக்கும் சிரமமும், ஆபத்தும் ஒருவனுக்கு இருந்தால், தனது மேன்மையை அறிவிக்காதவனே அறிவிப்பனை விடச் சிறந்தவனாவான். அடுத்தவன் தனது மேன்மையை வெளிப்படுத்தும்போது, அதைக் கண்டு துன்புறாதவன் அளிக்கும் உணவும், அந்தணர்களுக்கும், விருந்தினர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்காமல் உண்ணாதவன் அளிக்கும் உணவும் நீதிமிக்கவர்களால் அங்கீகரிக்கப்படுகிறது. எப்படி ஒரு நாய் பல சமயங்களில் தன் சொந்த வெளியேற்றங்களையே {கழிவுகளை} உண்கிறதோ, அதே போல அந்த யோகியர், தங்கள் முக்கிய நிலையை வெளிப்படுத்தாமல், தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கள் சொந்த வாந்தியையே {Vomit} உண்கின்றனர்.
{அந்தணன்}
இரத்த உறவுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு, தான் செய்யும் அறப் பயிற்சிகளை அவர்கள் {உறவுகள் கூட} எப்போதும் அறியாதிருக்க விரும்புபவனையே அந்தணன் என்று ஞானியர் அறிகிறார்கள். நிலையற்ற, குணங்களற்ற, மாற்றமற்ற, எந்த வகையான இருமையுமற்ற தனியனான பரமாத்மாவை அறிவதை விட ஓர் அந்தணன் வேறு எதை அறிய வேண்டும்? இத்தகு பயிற்சிகளின் விளைவாக ஒரு க்ஷத்திரியன் பரமாத்மாவை அறிந்து கொண்டு, தன்னைத் {அந்தப் பரமாத்மாவைத்} தனது சொந்த ஆன்மாவிலேயே காணலாம். ஆத்மா நடிப்பதாகவும் சுயத்தில் அதை உணர்வதாகவும் கருதி, ஆன்மாவிடமிருந்து அதன் குணங்களை அபகரிக்கும் ஒரு திருடன் என்ன பாவங்களைத்தான் செய்யமாட்டான்? {ஒரு விதமாக இருக்கும் ஆத்மாவை, மற்றொரு விதத்தில் இருப்பதாக அறிந்து, அந்த ஆத்மாவை அதன் குணங்களிடமிருந்து அபகரிக்கும் ஒரு திருடனால் எந்தப் பாவம் செய்யப்பட்டத்தகாது?}.
ஓர் அந்தணன் முயற்சி அற்றவனாக இருக்க வேண்டும், பரிசுகளை ஏற்கக்கூடாது, நீதிமான்களின் மதிப்பை வெல்ல வேண்டும், அமைதியாக இருக்க வேண்டும், வேதங்களை அறிந்திருந்தாலும் அறியாதவன் போல இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவனால் அறிவை {ஞானத்தை} அடைந்து பிரம்மத்தை அறிய முடியும். மண்ணுலக {மனித} செல்வத்தில் ஏழையாகவும், விண்ணுலக {தெய்வீக} செல்வம் மற்றும் வேள்விகளில் செல்வந்தனாகவும் இருப்பவர்கள் வெல்லப்பட முடியாதவர்களாகவும், அச்சமற்றவர்களாகவும் ஆகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பிரம்மத்தின் உருவம் {உடல்=சரீரம்} என்றே அவர்கள் கருதப்பட வேண்டும். (வேள்விகளைச் செய்வோர்) விரும்பும் அனைத்து வகையான பொருட்களையும் அளிக்கும் தேவர்களைச் சந்திப்பதில், (வேள்விகள் செய்வதால்) வென்றவனேயானாலும், பிரம்மத்தை அறிந்தவனுக்கு அவன் இணையாக முடியாது. ஏனெனில், வேள்விகளைச் செய்பவனோ முயற்சிக்கு ஆளாகிறான். (அதே வேளையில் பிரம்மத்தை அறிந்தவன் அத்தகு முயற்சிகள் ஏதுமில்லாமலே அவனை {அந்த தெய்வத்தை} அடைகிறானே). செயல்பாடுகள் அற்ற ஒருவன் தெய்வங்களால் மதிக்கப்பட்டால், அவனே உண்மையில் மதிப்படைந்தவனாகச் சொல்லப்படுகிறான். பிறரால் மதிக்கப்பட்டவன், தானே மதிக்கப்பட்டதாக எப்போதும் கருதக்கூடாது. எனவே, ஒருவன் பிறரால் மதிக்கப்படாத போதும் வருந்தக்கூடாது.
தங்கள் கண் இமைகளைத் திறந்து மூடுவதைப் போலவே, மக்கள் தங்கள் இயல்புக்கு ஏற்றவாறு செயல்படுகிறார்கள்; கற்றோர் மட்டுமே பிறருக்கு மரியாதை செலுத்துகிறார்கள். மதிப்பைப் {மரியாதையைப்} பெற்ற ஒருவன் இப்படியே {அதை} நினைத்துக் கொள்ள வேண்டும்.
பாவம் செய்பவர்களும், ஏமாற்றுத்தனமுள்ளவர்களுமாக இருக்கும் இவ்வுலகத்தின் மூடர்கள், மரியாதைக்குத் தகுந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை; மறுபுறம், அத்தகு மனிதர்களுக்கு அவர்கள் அவமரியாதையே செய்கிறார்கள். உலகின் மதிப்பும் தவமும் (மௌனப் பயிற்சிகளும்) ஒன்றாகச் சேர்ந்திருக்க முடியாது. மரியாதைக்குரியவர்களுக்கே இவ்வுலகம் என்றும், அதே வேளையில் தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவர்களுக்குப் பிற உலகம் என்றும் அறிவாயாக. ஓ க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, இவ்வுலகத்தில், மகிழ்ச்சி (உலகின் மதிப்பு) மண்ணுலகச் செழிப்பில் வசிக்கிறது. எனினும், பிந்தையது {மண்ணுலகச் செழிப்பு}, {தெய்வீக அருளை அடையத்} தடையாகும். மறுபுறம், உண்மையான ஞானமில்லாதவனால் தெய்வீகச் செழிப்பை அடையவே முடியாது. இந்த வகைச் செழிப்பை அடைய, காக்க கடினமான பல்வேறு வகையான வாயில்கள் இருக்கின்றன என்று நீதிமான்கள் சொல்கின்றனர். அவை {வாயில்கள்}, உண்மை, நேர்மை, பணிவு, தற்கட்டுப்பாடு, மனத்தூய்மை, நடத்தை, (வேத) அறிவு ஆகியனவாகும். இந்த ஆறும் மாயை அறியாமை ஆகியவற்றை அழிக்கவல்லவையாகும்” என்றார் {சனத்சுஜாதர்}.
தவத்தின் வேர்? – உத்யோக பர்வம் பகுதி 43அ-அமைதி மற்றும் விடுதலையை மௌனத்தால் அடைய முடியுமா? மௌனம் எப்படிச் செய்யப்பட வேண்டும்? வேதங்களை அறிந்தவன் பாவமிழைத்தால், அவன் பாவங்களால் பீடிக்கப்படுவானா? அறத்தின் துணையில்லாமல் மனிதனைக் காக்கும் திறன் இல்லாத வேதங்களின் மீது ஏற்பட்ட மாயை எப்படி வந்தது? தவங்கள் சில நேரங்களில் வெற்றி தருவதும், சில நேரங்களில் தராததும் எவ்வாறு? என்பது போன்ற திருதராஷ்டிரனின் கேள்விகளுக்குச் சனத்சுஜாதர் விடை பகர்ந்தது…
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “அந்தத் தவத்தின் (மௌனத்தின்) நோக்கம் என்ன? (பேசாமல் இருத்தல் மற்றும் தியானம் ஆகிய) இரண்டு வகை மௌனங்களில், எது உம்மால் அங்கீகரிக்கப்பட்டது? ஓ! கற்றவரே {சனத்சுஜாதரே}, மௌனத்தின் உண்மையான தன்மையைச் சொல்லும். கல்வியறிவு பெற்ற ஒருவன், அமைதி மற்றும் விடுதலை (மோட்சம்) நிலையை மௌனத்தால் அடைய முடியுமா? ஓ! முனிவரே, அந்தத் தவம் (மௌனம்) எப்படிச் செய்யப்பட வேண்டும்?” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “வேதங்கள், மனம் ஆகிய இரண்டும் பரமாத்மாவை {பிரம்மத்தை} ஊடுருவ இயலாத காரணத்தால், ஆன்மா மௌனம் என்று அழைக்கப்படுகிறது. எதிலிருந்து வேத அசையான {சொல்லான} ஓம் {என்ற சொல்}, இவை (சாதாரண ஒலிகள்) ஆகிய இரண்டும் எழுகிறதோ, அதுவே {அந்த ஆத்மாவே} சொல்லாக {சொல்லற்ற நிலையே சொல்லாக} காட்சிப்படுகிறது” என்றார். [1]
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ரிக், யஜூர் வேதங்களை அறிந்தவனும், சாம வேதத்தை அறிந்தவனும் பாவங்களைச் செய்யும்போது, அவன் பாவங்களால் கறைபடுவானா, இல்லையா?” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “தனது புலன்களை அடக்காத மனிதன், பாவச் செயல்களைச் செய்தால், அவன் சாம, ரிக், யஜூர் வேதங்களால் மீட்கப்பட மாட்டான் என்று நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஏமாற்றுத்தனத்தில் வாழும் ஏமாற்றுகர மனிதன் செய்யும் பாவத்தில் இருந்து அவனை வேதங்கள் விடுவிக்காது. மறுபுறம், கூட்டைக் கைவிட்டுச் செல்லும் புதிய இறகுபடைத்த பறவைகளைப் போல, முடிவில், வேதங்கள் அந்த மனிதனை கைவிட்டுச் செல்லும்” என்றார்.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ஓ! புலன்களை அடக்கியவரே {சனத்சுஜாதரே}, அறத்தின் துணையில்லாமல் ஒரு மனிதனைக் காக்கும் திறன் வேதங்களுக்கு இல்லை என்றால், பின்னர் வேதங்கள் பாவங்களை அழிக்கும் என்ற அந்தணர்களின் மாயை எப்படி வந்தது?”
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மேன்மைமிக்கவனே, பரமாத்மாவின் பெயர், உருவம் மற்றும் இன்னும் பிற குணங்கள் ஆகிய நிலைகளின் கலவையால் இந்த அண்டம் எழுந்தது {உருவானது}. அதை முறையாகக் குறிப்பிடும் வேதங்களும் அதையே தீர்மானித்து, பரமாத்மாவும், இந்த அண்டமும் வெவ்வேறானவை என்றும் ஒரே மாதிரியானவை அல்ல என்றும் கற்பிக்கின்றன. அந்தப் பரமாத்மாவை அடையவே, அந்தத் தவமும் {மௌனமும்}, வேள்விகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டால் தான் கல்வி கொண்ட மனிதன் அறத்தை ஈட்டுகிறான். அறம் கொண்டு பாவத்தை அழிப்பதால் அவனது ஆன்மா அறிவை {ஞானத்தை} உணர்கிறது. அறிவு {ஞானம்} கொண்ட மனிதன், அந்த அறிவின் துணை கொண்டு, பரமாத்மாவை அடைகிறான். இல்லையேல், நான்கு வகையான மனித நாட்டங்களில் ஆசை கொள்ளும் அவன், தன்னுடன் இங்கே இருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, தனது பலன்களை மறுஉலகத்தில் அனுபவித்து, அஃது (அந்தப் பலன்கள்) அழியாத் தன்மை கொண்டதல்ல என்பதால் (அவனது மகிழ்ச்சி முடிந்ததும்) மீண்டும் செயல்களின் உலகத்திற்கே திரும்பி வருகிறான்.
உண்மையில், இவ்வுலகில் செய்யப்படும் தவத் துறவுகளின் கனிகள் {அவற்றின் பலன்}, (தங்கள் ஆன்மாக்களில் தேர்ச்சி பெறாத நபர்களைப் பொறுத்தவரை) மறு உலகத்தில் அனுபவிக்கப்படுகிறது. துறவுப் பயிற்சிகளில் ஈடுபடும் (தங்கள் ஆன்மாக்களில் தேர்ச்சி பெற்ற) அந்தணர்களைப் பொறுத்தவரை, இந்தப் பகுதிகளும் கனிகளை விளைவிக்கும் {பலன்களை ஈட்டும்} திறன் கொண்டதாகவே உள்ளன” என்றார் {சனத்சுஜாதர்} [2](பலனை விரும்பாமல் செய்யப்படும் தவம் வளர்ந்து, வளர்ந்து மேலும் அதிகமாக வளர்கிறது)
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ஓ! சனத்சுஜாதரே, ஒரே வகையான அனைத்து தவத்துறவுகளும் சில நேரங்களில் வெற்றியைத் தருவதும், சில நேரங்களில் வெற்றியைத் தராததும் எவ்வாறு? நாங்களும் அறிந்து கொள்ளும்படி எங்களுக்கு அதைச் சொல்லும்!” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “(ஆசை மற்றும் பிறவற்றால்) {பயனில் விருப்பம் முதலிய} தவறுகளால் கறை படியாத துறவே விடுதலையைப் {முக்தியைப்} பெறும் திறம் கொண்டது என்று கூறப்படுகிறது. எனவே அது {அப்படி செய்யப்படும் துறவு} வெற்றியைத் தருகிறது. அதே வேளையில் பகட்டால் கறைபடும் துறவும், உண்மையான அர்ப்பணிப்பு இல்லாத துறவும் வெற்றியடையாது எனக் கருதப்படுகிறது. ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, உனது விசாரணைகள் அனைத்தும் துறவின் வேரையே தொடுகிறது. கற்றவர்கள் துறவினாலேயே பிரம்மத்தை அறிந்து அழியா {இறவா} நிலையை {பரமாத்மாவை} அடைகின்றனர்!” என்றார் {சனத்சுஜாதர்}.
ஆறு வகைத் துறவுகள்? – உத்யோக பர்வம் பகுதி 43ஆ-தவத்தின் தன்மைகள் குறித்துத் திருதராஷ்டிரன் வினவ, அதற்குரிய விளக்கத்தைச் சனத்சுஜாதர் அளிப்பது; ஆபத்தைத் தரக்கூடிய தீய குணங்கள் எவை? தீயவர்கள் யார்? உண்மை ஆதிக்கம் செலுத்தும் காரணிகள் எந்தப் பண்புகளில் இருக்கின்றன? சுயக்கட்டுப்பாடு எத்தனை பண்புகளைக் கொண்டது? ஆறு வகையான துறவுகள் எவை? அவை ஒவ்வொன்றுக்குமான விளக்கம் ஆகியவற்றைச் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது…
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “தவறுகளால் கறைபடியாத தவத்தைக் குறித்து நீர் சொன்னதை நான் கேட்டுவிட்டேன். அதனால் நிலைத்த மர்மம் ஒன்றை அறிந்து கொள்வதில் வென்றேன். ஓ! சனத்சுஜாதரே, இப்போது, தவறுகளால் கறைபடிந்த தவம் குறித்து எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரா} கோபத்துடன் கூடிய பனிரெண்டும் {12}, இன்னும் பதிமூன்றுவகைத் {13} தீய குணங்களும் தவத்தைக் கறை படுத்தும் தவறுகளாகும். கோபம், காமம், பேராசை, சரி தவறு அறியாத அறியாமை, நிறைவின்மை, கொடுமை, தீய குணம், மாயை, துக்கம், இன்பத்தில் நாட்டம், பொறாமை, பிறர் குறித்துத் தவறாகப் பேசுதல் [1] ஆகியவை(குரோதம், காமம், லோபம், மோஹம், விதிதஸை, அக்ருபை, அஸூயை, மானம், சோகம், ஸபருஹை, ராஷை, ஜுகுபஸை) மனிதர்களின் பொதுவான தவறுகளாகும். இந்தப் பனிரெண்டும் {12} மனிதர்களால் எப்போதும் விலக்கத்தக்கவையே. ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரா}, இவற்றில் ஏதாவது ஒன்று கூடத் தனியாகவே ஒரு மனிதனை அழிவுக்கு உள்ளாக்கத்தக்கதுதான். உண்மையில், மானை அடைய {கொல்ல} சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கும் வேடுவனைப் போல, இவற்றில் ஒவ்வொன்றும், மனிதர்களைப் பொறுத்தவரை, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன
தனது சொந்த மேன்மையை வலியுறுத்தும் முனைப்பு, பிறர் மனைவியிடம் இன்பம் கொள்ள நினைக்கும் ஆசை, அதீத செருக்கால் பிறரை அவமதிப்பது, சீற்றம் {கோபம்} நிறைந்திருத்தல், நிலையின்மை, தன்னால் பேணிக் காக்கப்பட வேண்டியவர்களைப் பேண மறுத்தல் ஆகிய தீய குணம் கொண்ட இந்த ஆறும் {6} செயல்களும் இவ்வுலகிலும் மறுஉலகிலும் நேரக்கூடிய ஆபத்துகளையெல்லாம் மீறி {பெரும் ஆபத்துகள் வரும் என்று தெரிந்தும் அதற்கு அஞ்சாமல்} பாவிகளால் எப்போதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. காமத்தைத் தணித்துக் கொள்வதே வாழ்வின் இலக்கு என்று கருதுபவன், ஆதீத செருக்குடையவன், கொடுத்ததற்காக வருந்துபவன், எப்போதுமே பணத்தைச் செலவு செய்யாதவன் {கஞ்சன்}, வெறுக்கத்தக்க வரிகளை {tax} வற்புறுத்துவதன் {கேட்பதன்} மூலம் தனது குடிமக்களைத் துன்புறுத்துபவன், பிறரை அவமதிப்பதில் இன்பம் காண்பவன், தன் சொந்த மனைவியரை வெறுப்பவன் ஆகிய இந்த ஏழு {7} பேரும் தீயவர்கள் என்று அழைக்கபடும் பிறராவர்.
நெறிசார்ந்திருக்கும் தன்மை {அறம் கடைப்பிடித்தல்}, உண்மை (தாக்காமல் பேசப்படும் உண்மை நிறைந்த பேச்சு), தற்கட்டுப்பாட்டு {சுயக்கட்டுப்பாடு}, தவம், பிறரின் மகிழ்ச்சியில் இன்புறுவது, அடக்கம், பொறுமை, பிறரிடம் அன்பு, வேள்விகள், பரிசுகள், விடாமுயற்சி, சாத்திர அறிவு ஆகிய பனிரெண்டும் {12} அந்தணர்களின் நடைமுறைகள் ஆகின்றன. இந்தப் பனிரெண்டையும் {12} அடைவதில் வெற்றி அடைபவன், இந்த முழுப் பூமியையும் ஆளும் திறன் பெற்றவன் ஆவான். இவற்றில் மூன்றையோ{3}, இரண்டையோ{2}, ஏன் ஒன்றையோ{1} கூடப் பெற்றிருப்பவனை தெய்வீகச் செழிப்புடையவன் {பாக்கியம் பெற்றவன்} என்று கருத வேண்டும். சுயக்கட்டுப்பாடு, துறவு, தன்னறிவு {சுயஞானம்} ஆகிய இவற்றில் தான் விடுதலை {முக்தி} இருக்கிறது. உண்மை {சத்தியம்} ஆதிக்கம் செலுத்தும் காரணிகள், இந்தப் பண்புகளிலேயே இருக்கின்றன’, என்று அறிவுள்ள அந்தணர்கள் {ஞானம் கொண்ட பிராமணர்கள்} சொல்கின்றனர்.
சுயக்கட்டுப்பாடு
பதினெட்டு{18} நல்லொழுக்கங்களைக் கொண்டது சுயக்கட்டுப்பாடு. அத்துமீறல்கள், விதிக்கப்பட்ட செயல்களைக் கடைப்பிடிக்காமல் தவிர்ப்பது, பொய்மை, கெடுநோக்கு, காமம், செல்வம், (புலன்) இன்பத்தில் விருப்பம், கோபம், துக்கம், தாகம், பேராசை, ஏமாற்றுத்தனம், பிறர் துயரில் மகிழ்வது, பொறாமை, பிறரைக் காயப்படுத்தல், வருத்தம், பக்திச் செயல்களை வெறுத்தல், கடமை மறத்தல், பிறர் மீது பழிகூறுதல், தற்பெருமை ஆகிய இந்த (பதினெட்டு-18) தீமைகளில் இருந்து விடுபட்டவன் தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு} உடையவன் என்று நெறிசார்ந்தவர்களால் சொல்லப்படுகிறான். (வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப்) பதினெட்டுத் தவறுகள் மதம் என்றோ செருக்கு என்றோ அழைக்கப்படும் ஒன்றில் இருக்கின்றன.
துறவு
துறவு ஆறு{6} வகைகளைக் கொண்டது. அவற்றுக்கு நேர் எதிரான ஆறும் மதம் என்று அழைக்கப்படும் தவறுகளாகும். (எனவே, {மேற்கண்ட} பதினெட்டும், {துறவுக்கு எதிரான இந்த} ஆறும் {அதாவது இந்த 24ம்} மதம் என்று அழைக்கப்படுபவை ஆகும். ஆறுவகையான துறவுகள் அனைத்துமே வரவேற்கத்தக்கவையாக இருக்கின்றன. அதில் மூன்றாவது வகை நடைமுறைக்குக் கடினமானதாகும், ஆனால் அதுவே துயரங்கள் அனைத்தையும் கடந்து செல்ல உறுதுணையாக இருக்கும். உண்மையில், அந்த வகையான துறவு நடைமுறையில் சாதிக்கப்பட்டால், அவன் உலகத்தில் உள்ள முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்துவிடுவான்.
ஆறுவகைத்{6) துறவுகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவையே. அவற்றில்
{1}முதலாவது, செழிப்புமிக்கச் சந்தர்ப்பங்களில் இன்பம் அனுபவிக்காமை.
{2}இரண்டாவது, வேள்விகள், துதிகள், பக்திச் செயல்கள் ஆகியவற்றைக் கைவிடல். ஓ! மன்னா {திருதராஷ்டிரா}
{3}மூன்றாவதாக அழைக்கப்படுவது யாதென்றால், ஆசையைத் துறத்தல் அல்லது உலகத்தில் இருந்து விடுபடுதல். உண்மையில், இன்பம் தரும் அனைத்துப் பொருட்களையும் (அவற்றை அனுபவியாமல்) கைவிடுதலால் அல்லாமல், அவற்றை நிறைவாக அனுபவித்துவிட்டு கைவிடமுடியாது என்பதும். அவற்றை அடைந்த பிறகு கைவிடுதலோ, பசியின்மையால் {தேவையின்மையால்} அவற்றை அனுபவிக்கும் திறனற்று கைவிடுதலோ முடியாது என்பதும் இந்த மூன்றாம் வகையான ஆசையைத் துறத்தலின் விளைவாகவே {அவற்றில் உள்ள ஆசையைத் துறக்க முற்படும்போதே} சாட்சியாகக் காணப்படுகிறது.
{4}நான்காம் வகைத் துறவில், ஒருவனுடைய செயற்பாடுகள் தோல்வியடையும்போது, அவனது அனைத்து அறங்கள் மற்றும் அனைத்து வகைச் செல்வம் ஆகியவற்றை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க இயலாமலோ அவன் துக்கப்படவோ, வேதனை கொள்ளவோ கூடாது. அல்லது ஏற்பில்லாத எது நடைபெற்றாலும், ஒருவன் வலியை உணரக்கூடாது.
{5}ஐந்தாவது வகைத் துறவானது தனக்கு மிகவும் அன்பான தனது மகன்கள், மனைவியர் மற்றும் இன்னும் பிறரையும் கேட்காமல் {யாசிக்காமல்} இருப்பதேயாகும்.
{6}ஆறாவது வகைத் துறவானது கேட்கும் {தன்னிடம் யாசிக்கும்} தகுதிவாய்ந்த மனிதனுக்குத் தானமளிப்பதே ஆகும். அந்தத் தானம் எப்போதும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும். மேலும், இவற்றால் ஒருவன் தன்னறிவை {சுய அறிவை} அடைகிறான். இந்தக் கடைசிப் பண்பைப் பொறுத்தவரை, இது எட்டுக்{8} குணங்களை உடையதாகும். அவை, உண்மை {சத்தியம்}, தியானம், பொருள்கள் மற்றும் கருத்தின் வேறுபாடு அறிதல், ஊகிக்கும் திறன், உலகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளல், பிறர் உடைமைகளை அபகரிக்காமை, பிரம்மச்சரிய நோன்புகளின் நடைமுறைகள், (பரிசுகள்) ஏற்காமை ஆகியவையே.
அதே போல (தமம் அல்லது தற்கட்டுப்பாட்டிற்கு {சுயக்கட்டுப்பாட்டுக்கு} எதிரான) மதத்தின் பண்புகளுடைய தவறுகள் அனைத்தும் (சாத்திரங்களில்) சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்தத் தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும். நான் (உன்னிடம்) துறவு மற்றும் தன்னறிவு {சுய அறிவு} ஆகியவற்றைக் குறித்துப் பேசியிருக்கிறேன். தன்னறிவு {சுய அறிவு) எட்டு{8} அறங்களைக் கொண்டிருப்பதைப் போல, தன்னறிவு இல்லாமையும் எட்டு{8} தவறுகளைக் கொண்டுள்ளது. அந்தத் தவறுகளும் தவிர்க்கப்பட வேண்டும். ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, இந்த ஐம்புலன்கள், மனம், கடந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் மகிழ்ச்சியடைகிறான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது ஆன்மா உண்மையில் {சத்தியத்தில்} அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்; அனைத்து உலகங்களும் உண்மையிலேயே நிறுவப்பட்டுள்ளன; உண்மையில், சுயக்கட்டுப்பாடு, துறவு மற்றும் தன்னறிவு ஆகியவை உண்மையையே தனது முதன்மையான பண்பாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. (இந்த) தவறுகளைத் தவிர்க்கும் ஒருவன், தவம் பயில வேண்டும். உண்மை {சத்தியம்} மட்டுமே நீதிமிக்கவர்களின் நோன்பாக இருக்க வேண்டும் என்று விதி சமைப்போன் {பிரம்மன்} விதித்திருக்கிறான். இந்தத் தவறுகளில் இருந்து விடுபட்டு, அந்த அறங்களைக் கைக்கொண்ட தவமே, பெருஞ்செழிப்பின் ஊற்றுக்கண்ணாகும். பிறப்பு, இறப்பு மற்றும் முதுமையில் இருந்து ஒருவனை விடுவிக்கும் திறன் பெற்றதும், பாவத்தை அழிப்பதும், புனிதமான கருத்துமான இதை நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {சனத்சுஜாதர்}.
நீயும் பிரம்மத்தைக் காணலாம்? – உத்யோக பர்வம் பகுதி 43இ-பிரம்மஞானம் கொண்டது எது என்று திருதராஷ்டிரன் சனத்சுஜாதரிடம் கேட்பது; எது பிரம்மம்? பல்வேறு இறைமைகள் இருப்பதாக ஏன் கருதப்படுகிறது? யார் வேத உரைகளின் உண்மையை நம்பி இருக்கிறார்கள்? வேள்விகள் எவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன? பேசா நோன்புகளை ஒருவன் ஏன் கைக்கொள்ள வேண்டும்? பிராமணனாக யார் அறியப்பட வேண்டும்? சந்தங்கள் என்றால் என்ன? வேதங்களைப் படித்தால் மட்டும் சந்தங்களை அறிய முடியுமா? பிரம்மத்தை அடையும் வழிமுறை எது? வேதங்களின் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா? பொருட்களின் தன்மைகளை யார் அறிவார்? எவனால் ஆத்மாவை அறிய முடியாது? முனிவன் என்பவன் யார்? வியாகரணம் என்பது என்ன? என்பது போன்றவற்றைச் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு விளக்குவது..
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “ஆக்யானங்களைத் (புராணங்களைத்) தங்களில் ஐந்தாவதாகக் கொண்ட வேதங்கள், அசைவன மற்றும் அசையாதன ஆகியவை அடங்கிய இந்த அண்டமே பரமாத்மா என்று தீர்மானிக்கின்றன. பிறர், நான்கு இறைமைகள் {கடவுள் தன்மைகள்} {வேதங்கள் என்றும் கொள்ளலாம்} உள்ளன என்றும், இன்னும் பிறர் மூன்று உள்ளன என்றும், மேலும் பிறர் இரண்டு என்றும்; இன்னும் பிறர் ஒன்றே ஒன்று என்றும், மேலும் பிறர், (சுய இருப்பு என்று வேறு ஏதும் இல்லாத) பிரம்மன் மட்டுமே ஒரே இருப்பு என்றும் கருதுகிறார்கள். இவற்றில் எதை நான் பிரம்மஞானம் கொண்டதாக அறிய வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மை என்ற ஒரே பிரம்மம்தான் இருக்கிறது. அந்த ஒன்றைக் குறித்த அறியாமையால்தான் பல்வேறு இறைமைகள் {வேதங்கள்} இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உண்மையின் சுயத்தையோ, பிரம்மத்தையோ அடைந்தவன் எவன் இருக்கிறான்? அறிவுப்பொருளான {ஞானப்பொருளான} அந்த ஒன்றை {பிரம்மத்தை} அறியாமலேயே ஒரு மனிதன் தன்னைத்தானே அறிஞன் {ஞானி} என்று கருதிக்கொள்கிறான். மகிழ்ச்சியின் மீது கொண்ட ஆசையால் அவன் கல்வியிலும், ஈகை மற்றும் வேள்வி நடைமுறைகளிலும் ஈடுபடுகிறான். (பிரம்மம்) என்ற உண்மையில் இருந்து விலகிய அவர்கள், (தங்கள் நிலையுடன்) தொடர்புடைய நோக்கங்களில் இன்புற வேத உரைகளின் உண்மையைச் சார்ந்து இருக்கிறார்கள். சிலர் வேள்விகளை மனதால் (தியானத்தின் மூலம்) செய்கிறார்கள் (அல்லது வேள்வியின் பொருளை அடைகிறார்கள்). சிலர் (குறிப்பிட்ட துதிகளை உரைப்பதாலும், அல்லது ஜபத்தின் மூலமும்} வார்த்தைகளாலும்; சிலர் செயல்களாலும் (யதிஸ்தோமத்தின் உண்மையான நிறைவாலும் மற்றும் பிற விலையுயர்ந்த சடங்குகளாலும்) செய்கிறார்கள்.
எனினும், உண்மையின் {சத்தியத்தின்} மூலம் பிரம்மத்தைத் தேடும் மனிதன், தனது ஆசைக்குகந்த பொருட்களைத் தனது வீட்டில் பெறுகிறான்.[1] இருப்பினும், ஒருவனது நோக்கங்கள் (தன்னறிவற்ற தனது நிலையின் காரணமாக) அழிகின்றன. ஒருவன் தீக்ஷவிரதம் போன்ற மௌன நோன்புகளைக் கைக்கொள்ள வேண்டும். உண்மையில் தீக்ஷை என்பது நோன்பு நோற்றல் என்ற பொருள் கொண்ட தீக்ஷையின் வேரில் இருந்தே வருகிறது. தன்னறிவு {சுயஞானம்} உடையவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உண்மையை {சத்தியத்தை} உயர்ந்த பொருளாகக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்களாவர்.
அறிவின் {ஞானத்தின்} கனிகள் {பலன்கள்} காட்சிக்குப் புலப்படுபவையே; அதற்கு மேல் தவமே கனிகளை {பலன்களை} விளையச் செய்யும். அதிகமாகப் படிக்க மட்டுமே செய்திருக்கும் (அறிவும் தவமும் அற்ற) ஓர் அந்தணன், பெரும் படிப்பாளியாக {வாசிப்பாளனாக} மட்டுமே அறியப்பட வேண்டும். எனவே, ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, சாத்திரங்களைப் படித்ததால் மட்டும் ஒருவனைப் பிராமணன் (பிரம்மத்தை அறிந்தவன்) என்று எப்போதும் எண்ணிவிடாதே. மறுபுறம், உண்மையில் இருந்து வழுவாமல் இருப்பவன் மட்டுமே பிரம்மத்தை அறிந்தவன் {பிராமணன்} என்று உன்னால் அறியப்பட வேண்டும். [2]
ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, பெரும் முனிவர்களின் கூட்டத்திற்கு அதர்வாவால் {அதர்வா என்ற முனிவரால்}, பழங்காலத்தில் உரைக்கப்பட்ட உரைகள் சந்தங்கள் [3] என்ற பெயரால் அறியப்படுகின்றன. வேதங்களின் மூலமாக அறியப்படுபவனின் {பரமாத்மாவின்} அறிவை அடையாமல், வேதங்களைப் படித்ததால் மட்டுமே அவர்களைச் சந்தங்களை அறிந்தவர்கள் என்று கருதமுடியாது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே {திருதராஷ்டிரா}, அந்நியமான எதன் தேவைகளும் இல்லாமல் முழு உரிமையுடன் {சுதந்திரமாக} பிரம்மத்தை அடையும் வழிமுறையாகச் சந்தங்கள் திகழ்கின்றன. வேதங்களில் கடமை என்று விதிக்கப்பட்டுள்ள வேள்விகளைச் செய்யும் முறைகளை மட்டுமே அறிந்தவர்களைச் சந்தங்களை அறிந்தவர்கள் என்று கருத முடியாது. மறுபுறம், வேதங்களை அறிந்தவர்களுக்குக் காத்திருக்கும் {பணிவிடை செய்யும்} நெறிசார்ந்தவர்கள், வேதங்களின் மூலம் அறிந்து கொள்ளத்தக்க பொருளை அடைந்ததில்லையா? வேதங்களின் உண்மையான உணர்வை {பொருளை} உணர்ந்தவர்கள் யாரும் இல்லை. அல்லது, அந்த உணர்வைப் பெற்றவர்கள் சிலரே இருக்கலாம்.
வேதங்களை மட்டுமே படித்தவர்கள், தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய பொருளை அறிவதில்லை. எனினும், உண்மையில் {சத்தியத்தில்} நிறுவப்பட்டுள்ள ஒருவன், வேதங்களால் அறியத்தக்க பொருளை அறிகிறான். உடல் உணர்வுகளுக்கு வழிவகுக்கும் செயல்படு பொருளாக இருக்கும் கல்விகளால், உண்மையான ஞானத்தை அடைந்தவன் என்று எவனும் இல்லை. மனத்தால் மட்டுமே ஒருவன் தன்னறிவையும் {சுயஞானத்தையும்} தானற்ற அறிவையும் {சுயமற்ற ஞானத்தையும்} அடைய முடியும். உண்மையில் தன்னறிவை அறிந்த ஒருவன், தானற்ற நிலையையும் அறியவே செய்கிறான். மறுபுறம், தானற்ற நிலையை மட்டுமே அறிந்த ஒருவன் உண்மையை அறிய மாட்டான்.
சான்றுகளை அறிந்த ஒருவன், எது மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் அறிவான். ஆனால், வேதங்களோ, வேதத்தை அறிந்தவர்களோ அறியாத {மெய்ப்பிக்கப்பட வேண்டிய} பொருட்களின் தன்மைகள் தான் என்ன இருக்கின்றன? எனினும், இவை யாவுக்குமாக, (உண்மையில்) வேதங்களை அறிந்த பிராமணர்கள், வேதங்களின் மூலமாக (வேதங்களால்) அறியப்பட வேண்டிய பொருளின் அறிவை அடைவதில் வெற்றி பெறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கிளை சில நேரங்களில் வளர்பிறையில் வரும் முதல்நாள் நிலவின் இலக்கத்தைச் {சந்திர கலையை} சுட்டிக்காட்டுவது [4] போலவே, வேதங்களும், பரமாத்மாவின் உயர்ந்த பண்புகளைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படுகின்றன.(அஃதாவது இருளில் மரம் தெரிந்தால் நிலவின் ஒளி அங்கே இருக்கிறது என்பதை நாம் அறிவது போல, வேதங்களின் துணை கொண்டு பரமாத்மாவை நாம் அறிய முடியும்)
தனது சொந்த ஐயங்கள் அனைத்தையும் தானே தீர்த்துக் கொண்டு, பிறரின் ஐயங்களுக்கு விளக்கமளிக்கும் (பிரம்ம ஞானம் கொண்டிருக்கும்) தன்னறிவு {சுயஞானம்} கொண்டவனையே நான் பிராமணன் என்று அறிந்து கொள்கிறேன். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்காகவோ, துணைத்திசைகளிலோ, கிடைமட்டமாகவோ தேடிக் கொண்டிருப்பவனால் ஆத்மா என்பது என்ன என்பதை அறிய முடியாது. இந்த உடலையே தான் என்று கருதும் ஒருவனால் மிக அரிதாகவே அதை {ஆத்மாவை} அறிய முடியும். வேதங்களின் கருத்துருக்களுக்கு அப்பால், யோக தியானம் கொண்ட மனிதனால் மட்டுமே பரமாத்மாவைக் காண முடியும். உனது புலன்கள் அனைத்தையும், உனது மனதையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி, உனது {அவனவனின்} சொந்த ஆத்மாவுக்குள் வசிப்பதாக அறியப்படும் பிரம்மத்தை நாடுவாயாக {பிரம்மத்தை அடைய முயல்வாயாக}.
யோக தியானத்தை மட்டுமே பயில்பவன் முனிவனாக மாட்டான்; அதே போல (உலகத்தில் இருந்து ஓய்ந்து {விடுபட்டு}) காட்டில் மட்டுமே வாழ்பவனும் முனிவனாக மாட்டான். எனினும், தனது சொந்த இயல்பை அறிந்த ஒருவனே முனிவனும் அனைவரிலும் மேன்மையானவனும் ஆவான். அனைத்து பொருட்களையும் {அர்த்தங்களையும்} விளக்கும் திறன் பெற்றதன் (வியாகரணத்தின்) விளைவால் {பொருட்களின் இலக்கணம் அறிந்த} ஒருவன் அண்ட அறிவை {உலகாளவிய அறிவை} (வையாகரணத்தை) அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான். ஒவ்வொரு பொருளையும் {அர்த்தத்தையும்} (பிரம்மம் என்று அறியப்படும்) அதன் வேர்வரை விளக்க வல்ல அறிவியலே வியாகரணம் {இலக்கணம்} என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உலகங்களும் தன் கண் முன்னே இருப்பது போலக் காணும் ஒரு மனிதனே அண்ட அறிவைப் பெற்றவனாகச் சொல்லப்படுகிறான். எவன் உண்மையில் நிலைத்திருக்கிறானோ, எவன் பிரம்மத்தை அறிகிறானோ அவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான். ஒரு பிராமணன் அண்ட அறிவைப் பெற்றவனாவான். இத்தகு அறங்களைப் பயிலும் ஒரு க்ஷத்திரியனாலும் பிரம்மத்தைக் காண இயலும். அந்த உயர்ந்த நிலையை அவன் {க்ஷத்திரியன்}, வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி படிப்படியாக அடையலாம். இதை உறுதியாக அறிந்ததாலேயே நான் இதை உனக்குச் சொல்கிறேன்” என்றார் {சனத்சுஜாதர்}.
பிரம்மச்சரியத்தின் படிநிலைகள்! – உத்யோக பர்வம் பகுதி 44-பிரம்மத்தைக் குறித்து இன்னும் அதிகம் சொல்லுமாறு திருதராஷ்டிரன் கேட்டது; அவசரத்தால் பிரம்மத்தை அடைய முடியாது என்றும், பற்றற்ற நிலையிலேயே பிரம்மத்தை அடையமுடியும் என்று சனத்சுஜாதர் பதிலளித்தது; எவற்றால் அறிவு வெளிப்படுகிறது? உடலில் இருந்து ஆத்மாவை எளிதாகப் பிரிக்க யாரால் முடியும்? குருவை ஏன் தந்தை தாயைப் போலக் கருத வேண்டும்? பிரம்மச்சரியத்தின் நான்கு படிநிலைகள் என்னென்ன? அந்த ஒவ்வொரு படிநிலையையும் எதனெதன் மூலம் அடையலாம்? பிரம்மச்சரியம் எத்தனை அறங்களைக் கொண்டது? பிரம்மதின் உண்மையான நிறமும் வடிவமும் என்ன? ஆகியவற்றைத் திருதராஷ்டிரனுக்குச் சனத்சுஜாதர் விளக்கிச் சொல்வது…
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “அருமை. ஓ! சனத்சுஜாதரே, இந்த உமது உரை பிரம்மத்தை அடைவதற்கும், அண்டத்தின் தோற்றத்தை அறிவதற்கும் உதவும். ஓ! கொண்டாடப்படும் முனிவரே, உலகத்தின் மீதான ஆசைக்குத் தொடர்பில்லாதவையும், மனிதர்கள் மத்தியில் அரிதானவையுமான இத்தகு வார்த்தைகளை எனக்கு இன்னும் சொல்ல வேண்டும் என்று நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.
அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “இத்தகு மகிழ்ச்சியுடன் எந்தப் பிரம்மத்தைக் குறித்து நீ என்னிடம் கேட்கிறாயோ, அது விரைவில் அடைய முடியாதது {அதை அவசரக்காரனால் அடைய முடியாது}. தூய அறிவில், ஆசை இணைந்த பிறகு (புலன்கள் அடக்கப்பட்ட பிறகு), உலகச் சிந்தனை முற்றிலும் இல்லாத அந்நிலையிலேயே ஒருவன் வெல்வான் {பிரம்மத்தை அடைவான்}. (பிரம்மத்தை அடைய வழிவகுக்கும்) அதுவே அறிவாகும் {ஞானமாகும்}. பிரம்மச்சரியம் பயில்வதால் மட்டுமே அதை {பிரம்மத்தை} அடைய முடியும்” என்றார் {சனத்சுஜாதர்}.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “பிரம்மச்சரியத்தால் மட்டுமே கண்டடையப்படும் பிரம்ம அறிவு மனதிலேயே வசிக்கிறது என்றும்; மனதிலேயே வசிக்கும் அது {பிரம்ம அறிவு} வெளிப்படுவதற்கு எந்த முயற்சியும் தேவையில்லை (எந்த வேலைக்கான அவசியமும் இல்லை) என்றும், (பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்துத்) தேடும்போது அது {அந்த பிரம்ம அறிவு} (தானே) வெளிப்படும் என்றும் சொல்கிறீர். பிறகு எப்படி இறவா {அழியா} நிலை, பிரம்மத்தை அடைவதோடு தொடர்புப்படுத்தப்படுகிறது?” என்று கேட்டான்.
அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “மனதில் உள்ளார்ந்து இருக்கும் பிரம்ம அறிவு {பிரம்ம ஞானம்}, அதனுள்ளேயே {மனதிலேயே} வசித்தாலும் வெளிப்படுத்த இயலாததாக {விவரிக்க இயலாததாக} இருக்கிறது. தூய அறிவு மற்றும் பிரம்மச்சரியம் ஆகியவற்றின் துணையுடனேயே அந்த அறிவு {ஞானம்} வெளிப்படுகிறது. உண்மையில், அந்த அறிவை {ஞானத்தை} அடைந்த யோகியர் உலகத்தைக் கைவிடுகின்றனர். இதுவே, எப்போதும் தலைமையான ஆசான்கள் மத்தியில் காணப்படுகிறது. இப்போது அந்த அறிவைக் குறித்து நான் உனக்கு உரைக்கிறேன்” என்றார் {சனத்சுஜாதர்}.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “பிரம்ம அறிவை சிரமமில்லாமல் அடையச்செய்யும் பிரம்மச்சரியத்தின் இயல்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? ஓ! இருபிறப்பாளரே {பிராமணரே}, இதை எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “தங்கள் ஆசான்களின் வசிப்பிடங்களில் வசித்து, நல்ல விருப்பங்களையும், நட்பையும் அடைந்து, பிரம்மச்சரிய துறவை பயில்பவர்கள், தங்கள் உடல்களைத் துறந்து பரமாத்மாவுடன் இணைந்து, இவ்வுலகில் பிரம்மத்தின் உருவமாகிறார்கள்.
இவ்வுலகில் பிரம்ம நிலையை அடைய விரும்பி, தங்கள் ஆசைகளை அடக்கி, நெறிசார்ந்து இருப்போர், அடர்த்தியான முஞ்சைப்புல்லில் துருத்திக் கொண்டிருக்கும் கத்தியைப் போல, உடலில் இருந்து ஆத்மாவை பிரித்தெடுப்பதில் வெல்கிறார்கள்.
ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, தந்தை மற்றும் தாயால் உடல் படைக்கப்படுகிறது; எனினும், ஆசானின் அறிவுறுத்தல்களின் காரணமாக அடையப்படும் (புதிய {மறு}) பிறவி, புனிதமானதும், பலவீனமற்றதும், அழிவற்றதுமாகும்.
{பிரம்மச்சரியத்தின் படிநிலைகள்}
பிரம்மத்தை உரைத்து, அழியா நிலையை அருளி, உண்மை (என்ற முக்காட்டால்) அனைத்து மனிதர்களையும் மறைக்கும் ஒருவர் {குரு} தந்தையாகவும் தாயாகவும் கருதப்பட வேண்டும்; அவர் {குரு} செய்யும் நன்மையை மனதில் கொண்டு, ஒருவன் குருவுக்கு எந்தவகையிலும் தீங்கிழைக்கக்கூடாது.
{1.பிரம்மச்சரியத்தின் முதல் படிநிலை}
ஒரு சீடன், தனது ஆசானை, மரியாதையுடன் வணங்குவதை வழக்கமாகக் கொண்டு, (உடல் மற்றும் மனத்) தூய்மையுடனும், நன்கு வழிநடத்தப்பட்ட கவனத்துடனும் கல்வி கற்க வேண்டும். அவன் {சீடன்} எந்தச் சேவையையும் இழிவாகக் கருதி கோபத்துக்கு ஆளாகக் கூடாது. இதுவே பிரம்மச்சரியத்தின் முதல் படிநிலை. தனது வர்க்கத்திற்கு {வர்ணத்திற்கு} விதிக்கப்பட்டுள்ள கடமைகளைக் கவனிப்பதன் மூலம் அறிவை {ஞானத்தை} அடையும் ஒரு சீடனின் நடைமுறைகளும் பிரம்மச்சரியத்தின் முதல் படிநிலை என்றே கருதப்படுகிறது.
{2.பிரம்மச்சரியத்தின் இரண்டாம் படிநிலை}
தனது வாழ்வையும் தனது உடைமைகள் அனைத்தையும் கொண்டு, ஒரு சீடன், எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் ஆசானுக்கு ஏற்புடையதையே செய்ய வேண்டும். இதுவே பிரம்மச்சரியத்தின் இரண்டாம் படிநிலையாகக் கருதப்படுகிறது. தனது ஆசானின் மனைவி மற்றும் மகனிடமும், அந்த ஆசானிடம் நடந்து கொள்ளும் அதே முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் இதுவும் பிரம்மச்சரியத்தின் இரண்டாம் படிநிலையாகக் கருதப்படுகிறது.
{3.பிரம்மச்சரியத்தின் மூன்றாம் படிநிலை}
தனது ஆசான் தனக்குச் செய்திருப்பதை நன்றாக மனதில் கொண்டு, அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் ஒரு சீடன், மகிழ்ச்சியான இதயத்துடன் “அவரால் {ஆசானால்} கற்பிக்கப்பட்டுப் பெரியவனாக்கப்பட்டிருக்கிறேன்” என்று நினைக்க வேண்டும். இதுவே பிரம்மச்சரியத்தின் மூன்றாவது படிநிலையாகும்.
{4.பிரம்மச்சரியத்தின் நான்காம் படிநிலை}
தனது ஆசானுக்கு இறுதி காணிக்கையான கட்டணத்தைக் கொடுக்காமல், ஒரு ஞானம் கொண்ட சீடன் {பிரம்மச்சாரி} மற்றொரு வகை {இல்லற} வாழ்க்கையைக் கைகொள்ளக்கூடாது; அல்லது ‘நான் இந்தக் காணிக்கையை அளிக்கிறேன்’ என்று சொல்லவோ, மனதால் நினைக்கவோ கூடாது. இதுவே பிரம்மச்சரியத்தின் நான்காவது படிநிலையாகும்.
ஒருவன், பிரம்மச்சரியத்துடைய நோக்கத்தின் (பிரம்ம அறிவை அடைதலின்) முதல் படிநிலையைக் காலத்தின் உதவியால் அடைகிறான்; இரண்டாம் படிநிலையை ஆசானின் {தேர்ந்தெடுக்கப்பட்ட} பாடங்களின் {Prelections} மூலம் அடைகிறான்: மூன்றாவதை, தனது சொந்த புரிதலின் சக்தியால் அடைகிறான்; இறுதியாக, நான்காவதை விவாதத்தின் {சாத்திர ஆராய்ச்சியின்} மூலம் அடைகிறான்.
பனிரெண்டு {12} அறங்களைக் கொண்டது பிரம்மச்சரியம் என்று கற்றோர் சொல்கின்றனர். யோகப் பயிற்சிகள் அதன் அங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. யோக தியானத்தில் விடாமுயற்சி வளம் என்று அழைக்கப்படுகிறது. ஆசானுடைய உதவி மற்றும் வேதங்களின் பொருளை புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றின் விளைவால் ஒருவன் {பிரம்மச்சரியத்தில்} வெற்றி மகுடம் சூட்டப்படுகிறான்.
இப்படி ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு சீடனால் ஈட்டப்படும் எந்தச் செல்வமும் ஆசானிடம் கொடுக்கப்பட வேண்டும். இப்படியே அந்த ஆசான் புகழ்மிக்க உயர்ந்த வாழ்வாதாரத்தை அடைய முடியும். இதுபோலவேதான் ஆசானின் மகனிடமும் ஒரு சீடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படி (பிரம்மச்சரியத்தில்) நிலைத்திருக்கும் சீடன், {பின்னர்} இந்த உலகத்தில் உள்ள அனைத்தின் மூலமும் செழித்து, பல சந்ததிகளையும் புகழையும் அடைகிறான்.
அனைத்து திக்குகளிலும் உள்ள மனிதர்கள் அவன் மீது செல்வத்தைப் பொழிவார்கள்; பிரம்மச்சரியம் பயில பலபேர் அவனது வசிப்பிடத்திற்கு வருவார்கள். இந்த வகைப் பிரம்மச்சரியத்தின் மூலமே தேவர்கள் தங்கள் தெய்வீகத்தன்மையையும், உயர்ந்த அருள் மற்றும் பெரும் ஞானம் கொண்ட தவசிகள் பிரம்ம லோகத்தையும் அடைந்தார்கள்.
இதன் காரணமாகவே கந்தர்வர்களும், அப்சரஸ்களுத் தங்கள் மேனி அழகை அடைந்தார்கள். பிரம்மச்சரியத்தாலேயே சூரியன் நாளை உண்டாக்க எழுகிறான் {இந்த பிரம்மச்சரியத்தாலேயே சூரியன் பகலைச் செய்பவனான்}. தத்துவஞானியின் கல்லைத் {Philosopher’s stone} {சிந்தாமணியைத்} [1] தேடுபவர்கள், மேலே குறிப்பிட்டிருபவர்களைப் போல (தேவர்கள் மற்றும் பிறரைப் போல) தங்கள் தேடலின் நோக்கத்தை அடைந்து, பெருமகிழ்ச்சியை அடைவதைப் போல, பிரம்மச்சரியத்தை நிறைவு செய்பவர்கள், தாங்கள் விரும்புபவற்றை அடையும் திறனைப் பெறுவதன் விளைவாகப் பெரும் மகிழ்ச்சியை அடைகிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, தவத்துறவுப் பயிற்சிகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, முழுமையாகப் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, அதன் மூலம் தனது உடலை தூய்மைப்படுத்திக் கொள்பவன் உண்மையில் ஞானியாகிறான். எனெனில், (தீய ஆசைகளில் இருந்து விடுபட்டு) அவன் குழந்தையைப் போல ஆவதால், இறுதியில் அவன் மரணத்தையே வெல்கிறான்.
எனினும், ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, செயலால் {கர்மத்தால்} ஒருவன் அழியக்கூடிய உலகங்களை மட்டுமே அடைகிறான்; இருப்பினும், அறிவு அருளப்பட்ட ஒருவன், அந்த அறிவின் துணையால் அழியாத பிரம்மத்தை அடைகிறான். முக்தியை {விடுதலையை} அடைய {அறிவையோ, பிரம்மத்தை அடைதலையோ தவிர} வேறு ஒரு பாதை இல்லை” என்றார் {சனத்சுஜாதர்}
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “பிரம்மத்தின் இருப்பை ஒரு ஞானி தனது சொந்த ஆன்மாவிலேயே காண்கிறான் என்று சொல்கிறீர். இப்போது, பிரம்மம் என்பது வெள்ளையா? சிவப்பா? கருப்பா? நீலமா? ஊதாவா? நீக்கமற்ற நித்திய பிரம்மத்தின் உண்மை வடிவமும், நிறமும் என்ன என்பதை எனக்குச் சொல்லும்?” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மையில் பிரம்மம், வெள்ளையாகவோ, சிவப்பாகவோ, கருப்பாகவோ, பழுப்பாகவோ, பிரகாசமாகவோ (காண்பது போலவே) தோன்றும். ஆனால், பூமியிலோ, வானத்திலோ, கடலின் நீரிலோ, அல்லது இவை போன்ற எவற்றிலோ, நட்சத்திரங்களிலோ, மின்னலிலோ, மேகங்களிலோ அதன் உருவத்தைக் காண இயலாது. வளிமண்டலத்திலோ, தெய்வங்களிலோ, நிலவிலோ சூரியனிலோ அது காணக்கிடைப்பது இல்லை. ரிக்குகளிலோ, யஜூர்களின் மத்தியிலோ, அதர்வண்களின் மத்தியிலோ, தூய சாமங்களின் மத்தியிலோ அது {பிரம்மம்} காணக்கிடைக்காது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, அது {பிரம்மம்} {சாமவேதத்தின்} ரதந்திரத்திலோ பிருஹத்ரதத்திலோ {Rathantara or Varhadratha}, பெரும் வேள்விகளிலோகூடக் காணக்கிடைக்காது. சுற்றிவளைக்கப்பட இயலாததாக, வரையறுக்கப்பட்ட அறிவின் தொடுதூரத்திற்கு வெளியே இருக்கும் அதில், பிரளயத்திற்குப் பிறகு, அண்டத்தை அழிப்பவனே {அந்தகனே} தொலைந்து {மறைந்து} போகிறான் {லயிக்கிறான்}. பார்க்க இயலாத அளவுக்கு அது {பிரம்மம்}, கத்தி முனையைவிட நுட்பமானதாகவும், மலைகளைவிடப் பெருந்திரள் கொண்டதுமாகும். காணக்கிடைக்கும் அனைத்திற்கும் அதுவே அடிப்படை ஆதாரம்; அதுவே மாற்றமில்லாதது; அதுவே காணக்கூடிய (எங்கு நிறைந்திருக்கும்} இந்த அண்டம்; அது பரந்துள்ளது; அது இன்பமானதாக இருக்கிறது; அனைத்து உயிரினங்களும் அதில் {பிரம்மத்திலிருந்தே}இருந்தே எழுகின்றன, மீண்டும் அதற்கே {பிரம்மத்திற்கே} திரும்புகின்றன.
அனைத்துவகை இரட்டைகளில் இருந்தும் விடுபட்டிருக்கும் அது அனைத்திலும் ஊடுருவியிருக்கும் அண்டமாக வெளிப்படுகிறது. அதை விளக்கிச் சொல்லும் மொழியைத் தவிர, அது மாற்றமில்லாமலே இருக்கிறது என்று கற்றோர் சொல்கின்றனர். எதற்குள் அண்டம் நிறுவப்பட்டுள்ளதோ, அதை {பிரம்மத்தை} அறிந்தவர்கள் முக்தியடைகிறார்கள்
நட்பின் ஆறு அறிகுறிகள்! – உத்யோக பர்வம் பகுதி 45-வாழ்வையே அழிக்கத்தக்க கொடுந்தவறுகள் எவை? புலன்களில் தொலைந்து பாவச்செயல்களைப் புரியும் மனிதர்கள் எவர்? செல்வத்தை அடையும்போது பிறரை யார் மரியாதையாக நடத்த மாட்டார்கள்? பாவம் நிறைந்த வழக்கங்கள் கொண்டவர்களாகக் கருதப்படும் தீய மனிதர்கள் யார்? முழு உலகத்தையும் ஆளும் திறன் பெற்றவன் யார்? அறிவுள்ள பிராமணர்களின் பண்புகள் எவை? மதத்தின் பதினெட்டுத் தவறுகள் எவை? நட்பின் ஆறு அறிகுறிகள் எவை? மறுமையின் அருள் நிறைந்த உலகங்களை வெல்லும் திறன் பெற்றது எது? வேள்விகள் செய்யப்படும் முறைகள் என்னென்ன? பிரம்மம் முழுமையாக யாரிடம் நிலைக்கிறது? யார் மரணத்திற்கு ஆட்படுவதில்லை? என்பன போன்றவற்றைச் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு விளக்குவது…
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், “கவலை, கோபம், பேராசை, காமம், அறியாமை, சோம்பேறித்தனம், கெடுநோக்கு, இறுமாப்பு, தொடர்ச்சியாக ஆதாயம் பெறும் ஆசை, பாசம், பொறாமை, தீய பேச்சு ஆகிய இந்தப் பனிரெண்டும்{12}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, மனிதர்களின் வாழ்வையே அழிக்கத்தக்க கொடுந்தவறுகளாகும். இவை ஒவ்வொன்றும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, மனித குலத்தைப் பீடிக்கச் சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அவற்றின் பாதிப்புக்கு உள்ளான மனிதர்கள் தங்கள் புலன்களில் தொலைந்து பாவச் செயல்களைப் புரிகின்றனர்.
{செல்வத்தை அடையும்போது பிறரை யார் மரியாதையாக நடத்த மாட்டார்கள்?}
பேராசை கொண்டவன், மூர்க்கமானவன், கடுஞ்சொல் பேசுபவன், அதிகமாகப் பேசுபவன் {அதிகப்பிரசங்கி}, மனதில் கோபத்தை வைத்திருப்பவன், தற்பெருமை பேசுபவன் ஆகிய ஆறு {6} தீய மனநிலை கொண்ட மனிதர்கள் செல்வத்தை அடையும்போது பிறரை மரியாதையாக நடத்த மாட்டார்கள்.
{பாவம் நிறைந்த வழக்கங்கள் கொண்டவர்களாகக் கருதப்படும் தீய மனிதர்கள் யார்?}
புலன் நிறைவே வாழ்வின் இறுதி எனக் கருதுபவன், ஆணவம் கொண்டவன், தானமளித்துவிட்டு அதைத் தற்பெருமையாகப் பேசுபவன், செலவு செய்யாதவன் {கஞ்சன்}, பலமற்ற மனதைக் கொண்டவன், தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவன், தனது மனைவியை வெறுப்பவன் ஆகிய இந்த ஏழு பேரும், பாவம் நிறைந்த வழக்கங்கள் கொண்ட தீய மனிதர்களாகக் கருதப்படுவார்கள்.
{முழு உலகத்தையும் ஆளும் திறன் பெற்றவன் யார்?}
நீதி, உண்மை, தவம், தற்கட்டுபாடு, மனநிறைவு, பணிவு, துறவு, பிறரிடம் அன்பு செலுத்தல், தானம், சாத்திரம் அறிதல், பொறுமை, மன்னிக்கும் மனநிலை ஆகிய பனிரெண்டும் பிராமணர்களின் நடைமுறைகளாகும். இந்தப் பனிரெண்டில் இருந்தும் வீழாதவன் இந்த முழு உலகத்தையும் ஆளும் திறன் பெறுவான். இவற்றில் மூன்றோ, இரண்டோ, அல்லது ஒன்றே ஒன்றோ கூடக் கொண்டிருந்தாலும் அவன், பிறரை விலக்கியபடி, எதையும் தனதாகக் கருதமாட்டான். [1]
{அறிவுள்ள பிராமணர்களின் பண்புகள் எவை?}
தற்கட்டுப்பாடு, துறவு, அறிவு ஆகிய இவற்றிலேயே முக்தி {விடுதலை [அ] மோட்சம்} வசிக்கிறது. இவையே, பிரம்மமே அடையத்தக்கதில் உயந்தது என்று கருதும் அறிவுள்ள அந்தணர்களின் பண்புகள்.
{மதத்தின் பதினெட்டுத் தவறுகள் எவை?}
உண்மையோ பொய்யோ, {அது எதுவாக இருந்தாலும்} பிறரைப் பழித்துப் பேசுதல் அந்தணனுக்கு மெச்சத்தகுந்ததல்ல. அதைச் செய்பவர்கள் நரகத்தையே தங்கள் வசிப்பிடமாகக் கொண்டிருப்பார்கள். மதம் [2] பதினெட்டு தவறுகளைக் கொண்டது. அதை இதுவரை நான் விவரிக்கவில்லை. பிறரிடம் பகைமை கொள்ளுதல், அறச்செயல்களின் வழிகளில் தடையேற்படுத்தல், இகழ்ச்சி, பேச்சில் பொய்மை, காமம், கோபம், சார்ந்திருத்தல், பிறரைப் பழித்துப் பேசுதல், பிறரின் குறை அறிந்து உரைத்தல், செல்வத்தை விரயமாக்கல், சச்சரவு, செருக்கு, வாழும் உயிரினங்களுக்குச் செய்யப்படும் கொடுமை, கெடுநோக்கு, அறியாமை, மதிக்கத்தக்கோரிடம் குறை காணுதல், நன்று தீதில் அறிவை இழத்தல், எப்போதும் பிறருக்குத் தீங்கிழைக்க முனைதல் ஆகியவையே அவை {அந்தப் பதினெட்டுத் தவறுகள் மேற்கண்டவையே}. எனவே, அறிவுள்ள மனிதன் ஒருவன், மதத்திற்கு [2] ஆட்படக்கூடாது. மதத்தைத் துணைக்கழைப்பது கண்டிக்கத்தக்கது.
[2] இங்கே மதம் என்பதற்கு வெறி என்று பொருள் கொள்ள வேண்டும்.
{நட்பின் ஆறு அறிகுறிகள் எவை?}
நட்பு ஆறு அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
1. முதன்மையானது, நண்பர்களின் செழிப்பில் இனிமை கொள்வது,
2. இரண்டாவது, அவர்களின் வறுமையில் வருந்துவது.
3. {மூன்றாவது}, தனது அன்புக்குரிய ஒன்றை ஒருவன் தன்னிடம் கேட்டால், உண்மையான நண்பன் ஒருவன் அதையும் கொடுத்துவிடுவான்.
4. நான்காவதாக, நெறிசார்ந்த மனநிலைகொண்ட உண்மையான நண்பன் ஒருவன், தனது செழிப்பையோ, தனது அன்புக்குரிய மகன்களையோ, ஏன் தனது சொந்த மனைவியைக் கேட்டாலும் கொடுத்துவிடுவான்.
5. ஐந்தாவதாக, ஒரு நண்பன், தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்த தனது நண்பனின் வீட்டில் வசிக்கக்கூடாது. ஆனால் தானே ஈட்டியதைக் கொண்டு இன்பமடைய வேண்டும்.
6. ஆறாவதாக, (தனது நண்பனுக்காக}, ஒரு நண்பன் தனது சொந்த நன்மையைத் தியாகம் செய்வதை நிறுத்த மாட்டான்.
{மறுமையின் அருள் நிறைந்த உலகங்களை வெல்லும் திறன் பெற்றது எது?}
செல்வம் கொண்ட ஒரு மனிதன் {man of wealth} ஒருவன், அந்த நல்ல குணங்களை அடைய முயன்றால், ஈகையாளனாகவும், நெறிசார்ந்தவனாகவும் மாறி, தனது ஐந்து புலன்களை அதனதன் நோக்கங்களில் {நுகர் பொருட்களில்} இருந்து காத்துக் கொள்வான். புலன்களின் அத்தகு கட்டுப்பாடே தவமாகும். அஃது அலகில் உயரும் போது, (வெற்றிக்கு வழிவகுக்கும் அறிவைப் போல அல்லாமல், இங்கே) மறுமையில் அருள் நிறைந்த உலகங்களை வெல்லும் திறன் பெற்றதாக அது {புலன்களைக் கட்டுப்படுத்தும் தவம்} இருக்கும்.
பொறுமையில் இருந்து வீழ்ந்தவர்கள் (அதனால், அறிவை அடைய திறனற்றவர்கள்), தாங்கள் உபசரிக்கும் நோக்கத்தின் {பயனில் ஆசை கொண்டதன்} விளைவாக, இதன் பிறகு அமையும் உயர்ந்த உலகங்களின் அருளை அடைவதற்கு இதே போன்ற தவத்தை அடைவார்கள்.
{வேள்விகள் செய்யப்படும் முறைகள் என்னென்ன?}
எதில் வேள்விகள் செழிப்படையுமோ, அந்த உண்மையை(பிரம்மத்தை) பற்றும் தனது திறனின் விளைவாக, ஒரு யோகி தன் மனதிலேயே வேள்விகளைச் செய்யும் திறன் பெற்றவனாகிறான். மற்றுமொருவன் வேள்விகளைச் சொற்களால் {ஜெபம்} செய்கிறான். வேறொருவன் வேலையால் {கர்மத்தால்} அதைச் செய்கிறான்.
{பிரம்மம் முழுமையாக யாரிடம் நிலைக்கிறது?}
பண்புகள் உள்ளடங்கிய பிரம்மத்தை அறிந்தவனிடம் உண்மை (பிரம்மம்) வசிக்கிறது. பண்புகளற்ற பிரம்மத்தை அறிந்தவனிடம் மேலும் முழுமையாக அது {பிரம்மம்) வசிக்கிறது.
இப்போது என்னிடம் இருந்து வேறு விஷயங்களைக் கேள். கொண்டாடப்படும் இந்த உயர்ந்த தத்துவம் (சீடர்களுக்கு) கற்பிக்கப்பட வேண்டும். மற்ற அமைப்புகள் அனைத்தும் சொற்களின் கதம்பம் மட்டுமே.
{யார் மரணத்திற்கு ஆட்படுவதில்லை?}
இவை (அண்டம்) முழுமையும் யோக தத்துவத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. இவற்றை {யோக தத்துவத்தினை} அறிந்தவர்கள் மரணத்திற்கு ஆட்படுவதில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, என்னதான் ஒருவன் வேலையால் {கர்மாவால்} நன்கு நிறைவு பெற்றிருந்தாலும், அவனால் உண்மையை (பிரம்மத்தை) அடைய முடியாது.
அறிவற்ற மனிதன், ஹோம காணிக்கைகளைச் செலுத்தினாலும், அல்லது வேள்விகளைச் செய்தாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, வேலையால் {கர்மத்தால்} அவன் அழியா நிலையை {முக்தியை} அடையவே முடியாது. அதே போல, இறுதியில் அவன் பேரின்பத்தையும் அனுபவிப்பதில்லை.
தனிமையில், வெளிப்புலன்கள் அனைத்தையும் அடக்கி, ஒருவன் பிரம்மத்தை நாட வேண்டும். வேலையைக் கைவிட்டு, ஒருவன் மனதால் முயற்சிக்கக்கூடாது [3]. (இப்படி ஈடுபட்டிருக்கும்போது) ஒருவன் புகழில் இன்பத்தையும், பழியில் கோபத்தையும் அடைவதைத் தவிர்க்க வேண்டும்.
ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடுத்தடுத்த படிநிலைகளின் படி அந்த வழியில் தன்னைச் செலுத்துபவன் இங்கேயே கூடப் பிரம்மத்தை அடைந்துவிடுவான். ஓ! கற்றவனே {திருதராஷ்டிரா}, இவற்றையே நான் உனக்குச் சொல்கிறேன்.
‘தத்’ எனும் விதை! – உத்யோக பர்வம் பகுதி 46அ-த்மா, பராமத்மா, தத் எனும் விதை குறித்து சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு உரைப்பது…
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், “மஹாயசஸ் என்று அழைக்கப்படும் (அண்டத்தின்) முதன்மை {ஆதி} விதை, விபத்துகளற்றதும், தூய அறிவானதும், சுடர்மிகும் பிரகாசம் கொண்டதுமாகும்.-அதுவே {ஆதி விதையே/ Cosmic egg} புலன்களை வழிநடத்துகிறது. அந்த விதையின் விளைவாலேயே சூரியனும் ஒளிர்கிறான். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) {Yogins (by their mental eye)} காணப்படுகிறான்.(இன்பத்தின் உருவமாக இருக்கும்) அந்த விதையின் விளைவாலேயே, பிரம்மம் படைப்புத் திறனைப் பெறுகிறது. அதன் வழியாகவே பிரம்மம் தன்னை விரிவு படுத்திக் கொள்கிறது. ஒளிரும் பொருட்களுக்குள் நுழையும் அந்த விதையே ஒளியையும், வெப்பத்தையும் கொடுக்கிறது. வேறு ஒரு பொருளில் இருந்து ஒளியையும் வெப்பத்தையும் பெறாத அந்தத் தன்னொளி {சுய ஒளி}, அனைத்து ஒளிரும் பொருட்களுக்கும் பயங்கரத்தை அளிக்கும் பொருளாக இருக்கிறது. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்
திரளான {நிலம், நீர், காற்று, பூமி, நெருப்பு ஆகிய} ஐம்பூதங்கள், ஐந்து நுட்பமானவற்றில் {நுட்பமான துகள்களில்} இருந்து உதித்திருக்கின்றன. பிந்தையவை {நுட்பமான துகள்கள்}, பிரம்மம் என்று அழைக்கப்படும் ஒரேவிதமான பொருளில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவை ஆகும். உணர்வு நிலையில், உயிருடன் கூடிய உயிரினத்தின் ஆத்மா மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டும் பிரம்மம் என்றே (உணரப்பட்டு) உறுதிப்படுத்தப்படுகிறது. (உறக்கத்தின் போதும், பிரளயத்தின் போதும், இவ்விரண்டும் உணர்வற்றுப் போகின்றன). மறுபுறம், பிரம்மமோ உணர்வற்றுப் போவதேயில்லை. சூரியனைச் சூரியனாக, பூமி மற்றும் சொர்க்கம் ஆகிய இரண்டும் உறுதிப்படுத்துகின்றன. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
பூமி மற்றும் சொர்க்கம், திசைகள் மற்றும் அண்டம் முழுமையும், ஆகியவற்றின் இரு தேவர்களை இந்த விதை உறுதிப்படுத்துகிறது. அந்த விதையில் இருந்தே திசைகளும், நதிகளும் உற்பத்தியாகின்றன. பரந்த கடல்களும் தங்கள் தோற்றத்தை அந்த விதையிலேயே பெறுகின்ற. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அழிவடைய விதிக்கப்பட்ட தேர் போன்றதே உடல். ஆனால் அதன் செயல்களோ அழிவற்றவையாகும். (கடந்த வாழ்வுகளின் {முன்ஜென்ம} செயல்களைக் குறிக்கும்) அந்தத் தேரின் சக்கரங்களில், புலன்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அவையே {புலன்களே} குதிரைகளாகி, உணர்வு என்ற பகுதியின் வழியாக ஞானம் கொண்ட மனிதனை பிறப்பற்ற, மாற்றமற்றவனை {பரமாத்மாவை} நோக்கி அழைத்துச் செல்கின்றன. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அந்த ஒருவனின் {நித்தியமானவனின்} வடிவத்தை எந்தவித ஒப்பீட்டினாலும் வெளிக்காட்ட முடியாது. யாரும் அவனைக் கண்ணால் கண்டதில்லை. ஆழ்ந்த மெய்மறந்த சிந்தனை, மனம், இதயம் மூலமாக அவனை அறிபவர்கள் மரணத்தில் இருந்து விடுபட்டவர்களாகிறார்கள் {முக்தியடைகிறார்கள்}. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
மாயையின் ஓடை கொடூரமாக இருக்கிறது; தேவர்களால் பாதுகாக்கப்படும் அது {மாயை}, பனிரெண்டு கனிகளை {பலன்களைக்} கொண்டது [1]. (1. சித்தம் , 2. நினைவு, 3. அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள் =மெய், வாய், கண், மூக்கு, செவி}, 4. ஞானம், 5. செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள் = வாய், கை, கால், மலவாய், கருவாய்}, 6. காரியம், 7. தன்மாத்திரைகள் {விஷயம் = சுவை, ஒளி, ஊறு, உணர்வு, ஓசை, நாற்றம்}, 8. ஐம்பூதங்கள், 9. பிராணன், 10. சுவாசம், 11. பழைய வாசனைக்கூட்டம், 12. பாவ புண்ணியங்கள்)அதன் {மாயையின்} நீரைப் பருகி, அதன் மத்தியில் உள்ள பல இனிமையான பொருட்களைக் கண்டு, மனிதர்கள் அதனுடனேயே முன்னும் பின்னுமாக நீந்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓடையும் அந்த விதையில் இருந்தே பாய்கிறது. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
முன்னும் பின்னும் செல்ல விதிக்கப்பட்ட ஓர் உயிரான்மா {ஜீவாத்மா}, (பிற உலகத்தின்) இன்பங்களை நினைத்துப் பார்த்து, தனது செயல்களின் பாதிக் கனிகளையே {பலன்களையே) அனுபவிக்கிறது. அந்த உயிராத்மா, அண்டத்தின் அனைத்திலும் ஊடியிருக்கும் ஈஸ்வரனாகவே இருக்கிறது. அந்த ஈஸ்வரனே வேள்விகளை விதித்திருக்கிறான். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
விபத்துகளற்ற ஆன்மாக்கள், தங்க இலைகள் கொண்ட மரத்தைப் போன்ற அவித்யையில் {கல்வியற்ற [அ] கல்வியல்லாதவற்றில்} ஈடுபட்டு, விபத்துகளை நினைத்து, தங்கள் பற்றுதலுக்கேற்றபடி {ஆசைக்கேற்றபடி} பல்வேறு வகைப் பிறப்புகளை எடுக்கின்றன. (யாரிடம் அனைத்து ஆன்மாக்களும் ஒன்றுபடுமோ, அந்தத்) தெய்வீகத்தன்மை கொண்ட நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
முழுமையாக இருக்கும் பிரம்மத்தால் பரிபூரணமடையும் அண்டத்தின் விளைவாக விபத்துகள் (பிரம்மத்தின் தொடர்பு ஏற்படுவதால் பல வடிவங்களைப் பெற்று) எழுகின்றன. அந்த விபத்துகளும், தங்கள் நிறைவால் பரிபூரணப் பிரம்மத்தில் இருந்து எழுகின்றன. ஒருவன், எப்போதும் பரிபூரணமாக இருக்கும் பிரம்மத்திடம் இருக்கும் அனைத்து விபத்தையும் வெல்லும்போது, பரிபூரணப் பிரம்மத்தில் எஞ்சியிருக்கும் தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அந்த விதையிலிருந்தே ஐம்பூதங்களும் உதித்தன. அவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி அவற்றின் உள்ளேயே இருக்கிறது. (அக்னி என்றும் சோமம் என்றும் அழைக்கப்படும்) நுகர்வோன் மற்றும் நுகர்பொருள் ஆகிய இரண்டும் இந்த விதையில் இருந்தே எழுந்தன. புலன்களுடன் கூடிய உயிரினங்கள் அதனுள்ளேயே ஓய்ந்திருக்கின்றன. அனைத்தும் இதில் இருந்து எழுந்தன எனவே கருதப்பட வேண்டும். வேதங்களில் தத் {THAT (Tad)} என்று அழைக்கப்படும் அந்த விதையை நாம் விளக்கும் திறனற்றவர்களாக இருக்கிறோம். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அபானன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்று, பிராணன் என்று அழைக்கப்படும் காற்றால் விழுங்கப்படுகிறது. பிராணன் விருப்பத்தால் {மனம் எனும் சந்திரனால்} விழுங்கப்படுகிறது, விருப்பம் {மனம்} அறிவாலும் {புத்தியான சூரியனாலும்}, அறிவு {புத்தி} பரமாத்மாவாலும் {பிரம்மத்தாலும்} விழுங்கப்படுகின்றன. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம், தூய உணர்வு {துரியம்} {Turiya} [2] ஆகியவற்றைத் தனது நான்கு கால்களாகக் கொண்ட பரமாத்மா, உலகளாவிய விவகாரங்கள் எனும் அளவிட முடியாத கடலின் மேல் நடந்து செல்லும் அன்னம் போலத் தனது கால்களில் ஒன்றை ஆழ மறைக்கிறான். மீதம் மூன்று கால்களை வழிநடத்தும் காரணத்திற்காக விடப்பட்ட (துரியம் என்ற) அந்தக் காலைக் காண்பவனுக்கு இறப்பும் முக்தியும் ஒன்றாகவே இருக்கும். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகியரால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
கட்டைவிரலளவு உள்ள அஃது, எப்போதும் பரிபூரணமாக இருந்து, அழியாத உயிரினங்களில் இருந்து வேறுபட்டு, உயிர் காற்றுகள் {வாயுக்கள்}, விருப்பம் {மனம்}, அறிவு {புத்தி}, பத்துப் புலன்கள் {அறிவுப் புலன்கள் 5 மற்றும் செயற்புலன்கள் 5} ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு, இங்கும் அங்கும் அசைகிறது. புகழத்தக்க பாடல்களுக்குத் தகுந்தவனும், அனைத்தையும் செய்யும் திறன்வாய்ந்தவனுமான பரமாத்மா, விபத்துகள் நேரும் போது, அனைத்துக்கும் காரணமாகியவன் {பரமாத்மா}, உயிரினங்களின் ஆன்மாக்களில் அறிவாக வெளிப்படுகிறான். முட்டாள்கள் மட்டுமே அவனைக் காண்பதில்லை; தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகியரால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அனைத்தும் நானே! – உத்யோக பர்வம் பகுதி 46ஆ-அனைவரினுள்ளும் பரமாத்மா சமமாகவே வசிக்கிறான் என்றும், முக்தி அடைந்தவர்கள் மட்டுமே அவனை அடைகிறார்கள் என்றும்; தூய அறிவு என்பது பரமாத்மாவின் மற்றொரு பெயர் என்றும்; மனதை அடக்கியவர்கள் மட்டுமே பரமாத்மாவை அடைகிறார்கள் என்றும்; அனைத்துப் பொருட்களும் பரமாத்மாவிடமே இறுதியில் இணைகின்றன என்றும்; பரமாத்மாவுக்குக் காணத்தக்க உருவம் கிடையாது என்றும்; தீயவர்களால் வழிநடத்தப்படுபவர்கள் நரகத்தை அடைகிறார்கள் என்றும்; பிரம்மத்தை அறிந்தவன் இரட்டைகளில் சம நிலையுடன் இருப்பான் என்றும்; ஒருவன் தன்னில் அனைத்தையும் காண வேண்டும் என்றும்; அனைத்திலும் நானே இருக்கிறேன் என்பதை உணர வேண்டும் என்றும் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனிடம் சொன்னது…
{சனத்சுஜாதர் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “தனி நபர்களுக்கு மத்தியில், தங்கள் மனங்களை அடக்க தேர்ச்சி அடைந்தவர்களும், அப்படி {தேர்ச்சி} அடையாதவர்களும் உண்டு. எனினும், பரமாத்மா மனிதர்கள் அனைவரிலும் சமமாகக் காணப்படுகிறான். உண்மையில், முக்தி அடைந்தவனிடமும், {முக்தி} அடையாதவனிடமும் அவன் {பரமாத்மா} சமமாகவே வசிக்கிறான் {இருக்கிறான்}. அவர்களுக்குள் இருக்கும் இந்தச் சிறு வேறுபாடான முக்தியை அடைந்தவர்கள் மட்டுமே அடர்த்தியான தேனூற்றை {பேரின்பத்தை} அடைகிறார்கள். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
வாழ்க்கைப்பயணத்தை மேற்கொள்ளும் ஒருவன், தான் மற்றும் தானற்றவற்றில் {சுயம் மற்றும் சுயமற்றவற்றில்} அறிவை {ஞானத்தை} அடைந்தால், அவனது அக்னி ஹோத்ரம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பது ஒரு பொருட்டே இல்லை.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, “நான் உனது அடிமை” என்பது போன்ற வார்த்தைகள் அவர்கள் {பரமாத்மாவை அடைய முயற்சிப்பவர்கள்} வாயில் இருந்து வராதிருக்கட்டும். தூய அறிவு {சுத்தஞானம்} என்ற மற்றொரு பெயரும் பரமாத்மாவுக்கு உண்டு. மனதை அடக்கியவர்கள் மட்டுமே அவனை {பரமாத்மாவை} அடைகின்றனர். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அவன் அப்படியே இருக்கிறான். நீக்கமற பரிபூரணமாய் நிறைந்திருக்கும் அவனிடம் {பரமாத்மாவிடம்}, அனைத்து உயிரினங்களும் இணைகின்றன. பரிபூரணத்தின் உருவகத்தை அறிபவன், தனது நோக்கத்தை (விடுதலை என்ற முக்தியை) இங்கேயே {இவ்வுலகிலேயே} அடைந்துவிடுகிறான். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
ஆயிரம் சிறகுகளை விரித்து மனோ வேகத்துடன் பறக்கும் ஒன்று {ஆத்மா}, வாழும் உயிரினத்திற்குள் உள்ள (வெகு தொலைவில் இருக்கும் பொருட்களும் எதன் உள்ளே வசிக்குமோ அந்த) மைய ஆவியிடமே {பரமாத்மாவிடமே} திரும்பி வர வேண்டும். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அவனது {பரமாத்மாவின்} உருவம் பார்க்கத்தக்க ஒரு பொருளாக இருக்க இயலாது. தூய இதயங்கள் கொண்டோர் மட்டுமே அவனைக் {பரமாத்மாவைக்} காண இயலும். அனைவரின் நன்மையையும் ஒருவன் நாடும்போது, {அவன்} தனது மனதைக் கட்டுப்படுத்துவதில் வெல்கிறான். அவனது மனம் எப்போதும் துயரத்திற்கு ஆட்படாது. அப்படியிருப்பவன் தனது இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த உலகத்தையும் அதன் பயன்களையும் கைவிடத்தக்கவர்கள் அழியா {இறவா} நிலையை அடைகிறார்கள். (இறப்புக்கு ஆட்படாத பரமாத்மாவான) தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
துளைகளில் தங்களை மறைத்துக் கொள்ளும் பாம்புகளைப் போல, {தீய} ஆசான்களின் ஆணைகளைப் பின்பற்றும் மனிதர்கள், தங்கள் தன்னடத்தையால், கூர்மையான ஆய்வுகளின் பார்வையில் இருந்து தங்கள் தீமைகளை மறைத்துக் கொள்கின்றனர். இவர்களால் சிறு மதி கொண்டோர் {மூடர்கள்} வஞ்சிக்கப்படுகிறார்கள். உண்மையில், எந்த ஒழுங்கு முறைகளுமின்றி வெளிப்படையாகத் தங்களைத் தாங்கிக் கொள்ளும் இவர்கள் {மூடர்கள்}, {யாரால்} பாதிப்படைந்தார்களோ அவர்களால் வஞ்சிக்கப்பட்டு நரகத்திற்கு வழிநடத்தப்படுகிறார்கள். (எனவே, இதற்கு நேர் எதிராக இருக்கும் மனிதர்களின் துணையை அடைபவர்கள் அவனை {பரமாத்மாவை} அடையலாம்). அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
“தோன்றி மறையும் {இயல்புடைய} உயிரினங்களால் {உடலால்} எனக்கு மகிழ்ச்சியையும் துயரத்தையும், அது தொடர்பான பிற பண்புகளையும் அளிக்க முடியாது; அதே போல எனது வழக்கிலும் இறப்புப் பிறப்பு போன்ற எதுவும் கிடையாது; மேலும், விரோதிக்க எந்த எதிர்ப்பு சக்தியும் அற்றதும், அனைத்து நேரங்களிலும், எல்லா இடங்களிலும் ஒரே போன்று இருப்பதுமான பிரம்மம், உண்மைகள் மற்றும் பொய்மைகள் ஆகிய இரண்டும் ஓய்ந்திருக்கும் இடத்தில் இருக்கும்போது, முக்தி எவ்வாறு எனதாகும்? அனைத்து காரணங்களுக்கும் விளைவுகளுக்கும் தோற்றமாக நானே இருக்கிறேன்” (நான் அல்லது சுய வடிவமாக {பிரம்மம் இருக்கிறது}) என்று முக்தியடைந்த ஒருவன் நினைக்கிறான். அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
பிரம்மத்தை அறிந்த, அந்தப் பிரம்மத்துக்கு நிகரான மனிதன் நற்செயல்களால் சிறப்படைவதோ, தீய செயல்களால் அசுத்தமடைவதோ இல்லை. சாதாரண மனிதர்களுக்கு {பிரம்மத்தை அறியாதவர்களுக்கு} மட்டுமே நல்ல அல்லது தீய செயல்கள் வேறுபட்ட விளைவுகளை உண்டாக்குகின்றன. பிரம்மத்தை அறிந்த மனிதன் அமிர்தத்துக்கு ஒப்பாகவோ, நன்மை அல்லது தீமைகளால் பாதிக்கப்படாத கைவல்யம் {Kaivalya} என்று அழைக்கப்படும், நிலையடைந்தவனாகக் கருதப்பட வேண்டும். எனவே, ஒருவன், சுட்டிக்காட்டப்பட்ட வழியில் மனதை அகற்றி, அந்தச் சாரத்தின் இனிமையை (பிரம்மத்தை) அடைய வேண்டும். அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
பிரம்மத்தை அறிந்த மனிதனின் இதயம், “நான் (வேதங்களைக்) கற்கவில்லை, அல்லது நான் அக்னி ஹோத்ரம் செய்ய வில்லை” என்ற நிந்தை எண்ணத்துக்கு வருந்தாது. மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் மட்டுமே அடையும் அறிவை {ஞானத்தை}, பிரம்ம அறிவு கொண்டவன் விரைவில் அடைகிறான். (துயரம் மற்றும் அறியாமையில் இருந்து ஆன்மாவை விடுவிக்கும் அந்தப் பிரம்மம் என்ற) அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
எனவே, தன்னில் அனைத்தையும் கண்ட ஒருவன் அதற்கு மேலும் வருந்த தேவையில்லை. பல்வேறு வகையான உலகத் தொழில்களில் ஈடுபடுவோரே வருந்த வேண்டியிருக்கும். பரந்த விரிவு அல்லது பெரிய நீர்த்தேக்கம் ஒருவனின் (தாகத் தணிப்பு முதலிய) நோக்கத்திற்கு உதவுவது போல, கிணற்றிலும் உதவி கிடைக்கிறது. அது போலவே, வேதங்களின் பல்வேறு நோக்கங்களும் ஆத்மாவை அறிந்தவனால் பெறப்படுகிறது
இதயத்தில் வசிக்கும் கட்டைவிரல் அளவுள்ளவனும், பரிபூரணத்தின் உருவகமும் ஆன அந்த ஒப்பற்றவன் பார்க்கத்தக்க ஒரு பொருளாக இருக்க மாட்டான். பிறப்பற்ற அவன் இரவும் பகலும் விழிப்பான நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறான். அவனை {பரமாத்மாவை} அறிந்தவர்கள், கற்றவர்களாகவும் இன்பம் நிறைந்தவர்களாகவும் ஆகிறார்கள். நானே தாய் என்றும் தந்தை என்றும் அழைக்கப்படுகிறேன். மேலும் நானே மகனாகவும் இருக்கிறேன். இருந்த அனைத்தும், இருக்கப்போகும் அனைத்தும் ஆத்மாவாக இருப்பவன் நானே. ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நானே பாட்டன், நானே தந்தை, நானே மகனுமாக இருக்கிறேன். நீங்கள் எனது ஆத்மாவிலேயே வசிக்கிறீர்கள், எனினும் நீங்கள் என்னுடையவர்களல்ல, நானும் உங்களுடையவன் கிடையாது!
பிறப்புக்கும், இனப்பெருக்கத்திற்கும் {வம்ச விருத்திக்கும்} எனது ஆன்மாவே காரணமாக இருக்கிறது. நானே இந்த அண்டத்தின் குறுக்கும் நெடுக்குமாகவும் {தொகுப்பாகவும்}, ஊடு இழையாகவும் இருக்கிறேன்.
நான் ஓய்ந்திருக்கும் இடம் அழிவற்றதாக இருக்கிறது. பிறப்பற்றவனான நான் பகலும் இரவும் விழித்திருக்கிறேன். என்னை அறிந்த ஒருவனே கற்றவனாகவும் இன்பம் நிறைந்தவனாகவும் ஆகிறான்.
நுட்பமானவற்றைவிட நுட்பமானவனாக, கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கும் திறன் பெற்ற அற்புதமான கண்களுடன் கூடி அனைத்து உயிர்களிலும் பிரம்மம் விழிப்புடன் இருக்கிறது. அவனை {பிரம்மத்தை} அறிந்தவர்கள், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் இதயத்திலும் வசிக்கும் அண்டத்தின் தகப்பனை {பரமாத்மாவை} அறிகிறார்கள்.
சபா மண்டபத்தில் சஞ்சயன்! – உத்யோக பர்வம் பகுதி 47-யானசந்தி பர்வம் -1}-சனத்சுஜாதருடனும், விதுரனுடனும் இரவெல்லாம் உரையாடிய திருதராஷ்டிரன் காலையில் சபைக்கு வந்தது; பல மன்னர்களும், இளவரசர்களும் அந்தச் சபையில் கூடியது; அந்தச் சபா மண்டபத்தின் அழகு குறித்த வர்ணனை; சஞ்சயன் வருகையை வாயில் காவலன் அறிவிப்பது; சபையில் நுழைந்த சஞ்சயன் அந்தச் சபையோருக்குப் பாண்டவர்கள் சொல்லியனுப்பியபடி வணக்கங்களைச் சொன்னது; திருதராஷ்டிரன் சொல்லியனுப்பியதைத் தான் எவ்வாறு பாண்டவர்களிடம் எடுத்துரைத்தான் என்பதைச் சொல்ல ஆரம்பிப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார் “இப்படிச் சனத்சுஜாதரிடமும், கற்றவனான விதுரனிடமும் உரையாடியபடி அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} அந்த இரவைக் கழித்தான். இரவு கடந்ததும் (திரும்பி வந்திருக்கும்) சூதனை {சஞ்சயனைக்} காண, அனைத்து இளவரசர்களும், தலைவர்களும் மகிழ்ச்சியான இதயங்களுடன் அந்தச் சபா மண்டபத்திற்குள் நுழைந்தனர். அறமும் பொருளும் {தர்மார்த்தங்கள்} நிரம்பிய பார்த்தனின் {அர்ஜுனனின்} செய்தியைக் கேட்கும் ஆவலுடன் அந்த அழகிய சபைக்கு அனைத்து மன்னர்களும் திருதராஷ்டிரனின் தலைமையில் சென்றனர்.
கறைபடியாத வெண்மையுடன், அகன்றிருந்த அது {சபா மண்டபம்}, தங்கத் தரையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சந்திரனைப் போன்ற பிரகாசத்துடனும், அதீத அழகுடனும் இருந்த அதில் {சபா மண்டபத்தில்} சந்தன நீர் தெளிக்கப்பட்டிருந்தது. அதில் தங்கத்தாலும், மரத்தாலும், பளிங்காலும், தந்தத்தாலும் ஆன அற்புத இருக்கைகள் பரந்திருந்தன. அனைத்து இருக்கைகளிலும் அற்புதமான விரிப்புகள் போர்த்தப்பட்டிருந்தன.
பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன், கிருதவர்மன், ஜயத்ரதன், அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன், பாஹ்லீகன், பேரறிஞனான விதுரன், பெரும் தேர் வீரனான யுயுத்சு ஆகிய வீர மன்னர்கள் அனைவரும் கூட்டாக, ஓ! பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் தலைமையை ஏற்று, அந்தப் பெரும் அழகுடைய சபைக்குள் நுழைந்தனர். துச்சாசனன், சித்திரசேனன், சுபலனின் மகனான சகுனி, துர்முகன், துஸ்ஸகன், கர்ணன், உலூகன் [1], (இவன் சகுனியின் மகன் )விவிம்சதி ஆகியோர் குருக்களில் கோபக்கார மன்னனான துரியோதனனைத் தலைமையாகக் கொண்டு, ஓ !ஏகாதிபதி {ஜனமேஜயா}, சக்ரனை {இந்திரனைப்} பின்தொடரும் தேவர்களைப் போலச் சபைக்குள் நுழைந்தனர்.
இரும்புக் கதாயுதங்கள் போன்ற கரங்களையுடைய வீரர்களால் நிறைந்த அந்தச் சபை, சிங்கங்கள் நிறைந்த மலைக்குகையைப் போலக் காணப்பட்டது. பெரும்பலமும், சக்தியும் சூரியனைப் போன்ற பிரகாசமும் மிக்க இந்த வில்லாளிகள் அனைவரும் சபைக்குள் நுழைந்ததும், அந்த அழகிய இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள். அந்த மன்னர்கள் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, “பாண்டவர்களிடம் அனுப்பப்பட்ட தேர் இங்கே வந்து கொண்டிருக்கிறது. நன்கு பழக்கப்பட்ட சிந்து இன குதிரைகளின் துணையால் நமது தூதர் {சஞ்சயன்} விரைவாகத் திரும்பி வருகிறார்” என்று அந்தச் சூத மகனின் {சஞ்சயனின்} வருகையை வாயில் காவலன் அறிவித்தான்.
காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சஞ்சயன், வேகமாக அந்த இடத்தை அடைந்து, தேரைவிட்டு இறங்கி, உயர்ஆன்ம மன்னர்கள் நிறைந்த அந்தச் சபைக்குள் நுழைந்தான். பிறகு அந்தச் சூதன் {சஞ்சயன்}, “கௌரவர்களே, பாண்டவர்களிடம் சென்ற நான், வந்து விட்டேன் என்பதை அறிவீர்களாக. ஒவ்வொருவர் வயதுக்குத் தக்கப்படி அனைவருக்கும் தங்கள் வாழ்த்துகளைப் பாண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். தங்கள் பதில் மரியாதைகளைத் தெரிவித்த பிருதையின் மகன்கள் {குந்தியின் பாண்டவர்கள்}, வயது முதிர்ந்தோரையும், தங்கள் வயதுக்கு இணையானோரையும், இளையோரையும், அவர் அவர்களுக்குத் தக்கப்படி தங்கள் வணக்கங்களைத் தெரிவித்தனர். மன்னர்களே, நான் இந்த இடத்தை விட்டு சென்ற பிறகு, முன்பே திருதராஷ்டிரர் சொல்லி அனுப்பிய படி, பாண்டவர்களிடம் என்ன சொன்னேன் என்பதைக் கேளுங்கள்” என்றான் {சஞ்சயன்}.
அர்ஜுனன் பேச்சு! – உத்யோக பர்வம் பகுதி 48அ({யானசந்தி பர்வம் – 2})-அர்ஜுனன் என்ன சொல்லியனுப்பினான் என்று திருதராஷ்டிரன் சஞ்சயனைக் கேட்பது; யுதிஷ்டிரன் அனுமதியின் பேரில், கிருஷ்ணனின் முன்னிலையில் அர்ஜுனன் பேசியதை சஞ்சயன் சொல்ல ஆரம்பித்தது? நாட்டைத் திருப்பிக் கொடாவிட்டால் போர் உறுதி என்றும், யுதிஷ்டிரன், பீமசேனன், நகுலன் சகாதேவன் ஆகியோரின் வீரத்தை நேரில் பார்க்கும்போது, நேரப்போகும் போரைக் குறித்துத் துரியோதனன் வருந்துவான் என்று அர்ஜுனன் சொன்னதாகச் சஞ்சயன் சொல்வது..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, அழிவிலா வலிமை கொண்டவனும், போர் வீரர்களின் தலைவனும், தீயோரின் உயிரை அழிப்பவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, என்ன வார்த்தைகளைச் சொன்னான் என்பதை என் பிள்ளை {துரியோதனன்} மற்றும் இந்த மன்னர்கள் முன்னிலையில் சொல்லும்படி நான் உன்னைக் கேட்கிறேன்” என்றான்.
அதற்குச் சஞ்சயன், “போர் செய்யும் ஆவலில் இருக்கும் உயர் ஆன்ம {மகாத்மாவான} அர்ஜுனன், கிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருக்கையில், யுதிஷ்டிரனின் அனுமதியின் பேரில் சொன்ன வார்த்தைகளைத் துரியோதனன் கேட்கட்டும். (போரிட) அஞ்சாதவனும், தனது கரங்களின் வலிமையை உணர்ந்தவனும், போரிட ஆவலுள்ள வீரனுமான கிரீடி {அர்ஜுனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் என்னிடம் இப்படியே பேசினான்.
“ஓ, சூதரே {சஞ்சயரே}, எப்போதும் எனக்கு எதிராகப் போரிட விரும்புபவனும், சிறுமதி கொண்டவனும், வாழ்நாள் எண்ணப்பட்டவனும், தீய பேச்சுடையவனும், தீய ஆன்மா கொண்டவனுமான சூத மகன் {கர்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில், குருக்கள் அனைவரின் முன்னிலையில், பாண்டவர்களுக்கு எதிராகப் போரிடக் கூடியிருக்கும் மன்னர்கள் கூடுகைக் கேட்டுக் கொண்டிருக்கையில், திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} இவற்றைச் சொல்வீராக. நான் இப்போது சொல்லும் அனைத்து வார்த்தைகளையும், ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய அம்மன்னன் {துரியோதனன்} நன்றாகக் கேட்கும்படி சொல்வீராக” என்று {அர்ஜுனன்} சொன்னான்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வஜ்ரத்தைத் தாங்கிய தங்கள் தலைவனின் {இந்திரனின்} வார்த்தைகளைக் கேட்க ஆவலுடன் இருக்கும் தேவர்களைப் போலவே, பாண்டவர்களும், ஸ்ரீன்ஜயர்களும் {ஸ்ருஞ்சயர்களும்}, கிரீடியால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட அந்தப் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்டனர். காண்டீவம் தாங்குபவனும், போரிடும் ஆவலுள்ளவனும், தாமரை மலரைப் போலக் கண்கள் சிவந்தவனுமான அர்ஜுனன் பேசிய வார்த்தைகளே இவையே!
“அஜமீட குலத்தைச் சேர்ந்தவரான மன்னன் யுதிஷ்டிரருக்கு, திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, அவருடைய நாட்டைத் திரும்ப ஒப்படைக்கவில்லையென்றால், ஏதோ சில பாவச் செயல்களுக்கான விளைவுகளை (உண்மையில்) திருதராஷ்டிரர் மகன்கள் இன்னும் அறுவடை செய்யவில்லை என்றே பொருள்.
ஏனெனில், சொர்க்கத்தையும் பூமியையும் எரிக்கவல்லவர்களான பீமசேனர், அர்ஜுனன், அசுவினிகள் {நகுல சகாதேவர்கள்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, சினியின் மகன் {சாத்யகி}, மற்றும் தவறிழைக்காத கரங்கள் கொண்ட திருஷ்டத்யும்னன், சிகண்டி, இந்திரனைப் போன்ற யுதிஷ்டிரர் ஆகியோருக்கு தீங்கிழைக்கும் நோக்கத்தில் அவர்களுடன் போரை விரும்புவது அத்தகையே நிலையையே {செய்த பாவங்களை அறுவடை செய்யும் நிலையையே} கொடுக்கும்.
திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} போரை விரும்பினால், பாண்டவர்களின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறியதாவே ஆகும். எனவே, பாண்டுவின் மகன்களுக்கு அமைதியை முன்மொழியாதீர். விரும்பினால் {அவர்களைப்} போரிடச் செய்யும்.
நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டிருந்த நாட்களில் அறம்சார்ந்த பாண்டுவின் மகனான யுதிஷ்டிரர், காட்டில் துயரப் படுக்கையில் கிடந்தார்; ஓ!, இப்போது, அதைவிட வலிமிகுந்த படுக்கையில் வெறும்பூமியில் {வெறுந்தரையில்} துரியோதனன் கிடக்கட்டும். உயிரிழந்து, தனது கடைசிப் படுக்கையாக அவன் {துரியோதனன்}அதில் {படுக்கையில்} கிடக்கட்டும்.
அநீதிமிக்கத் தீயவனான துரியோதனனால் ஆளப்படும் மனிதர்களை, அடக்கம், அறிவு, தவம், சுயக்கட்டுப்பாடு, வீரம் மற்றும் அறத்தால் கட்டுப்படுத்தப்பட்டும் வலிமை ஆகியவற்றைக் கொண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தம் பக்கத்திற்கு வென்றெடுப்பாராக.
ஏராளமாக ஏமாற்றப்பட்டாலும், பணிவு, நீதி, தவம், சுயக்கட்டுப்பாடு மற்றும் அறத்தால் கட்டுப்படுத்தப்படும் வீரம் ஆகியவற்றைக் கைக்கொண்டு எப்போதும் உண்மையே பேசும் எங்கள் மன்னன் {யுதிஷ்டிரர்}, அந்தப் பெரும் தவறுகளைப் பொறுமையுடன் தாங்கிக்கொண்டு, அவை யாவையும் மன்னித்தார்.
முறையான கட்டுப்பாட்டுக்குள் ஆன்மாவை வைத்திருக்கும் பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரர்}, ஆண்டாண்டு காலாமாகத் திரண்டிருக்கும் தனது பயங்கரமான கோபத்தை எப்போது கௌரவர்கள் மேல் எரிச்சலுடன் செலுத்துவோரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
கோபத்தால் அழற்சியடையும் யுதிஷ்டிரர், சுற்றி இருக்கும் உலர்ந்த புற்களை வெப்பகாலத்தில் எரிக்கும் சுடர்மிக்க நெருப்பு போல, திருதராஷ்டிரர் கூட்டத்தைத் தனது கண் பார்வையாலேயே எரித்துவிடுவார். தேரில் இருந்துகொண்டு, கைகளில் கதாயுதத்துடன் தனது கோபத்தின் நஞ்சை உமிழும், பயங்கர உந்துவேகம் கொண்ட கோபக்கார பாண்டவரான பீமசேனரைத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} எப்போது காண்பானோ, அப்போது துரியோதனன் இந்தப் போருக்காக வருந்துவான்.
எப்போதும் படையின் முன்னணியில் இருந்து போரிடுபவரும், கவசம் பூண்டவரும், பகை வீரர்களைச் சாய்கும்போது தன் தொண்டர்களாலேயே காணப்படாதவரும், எதிரியின் அணிகளுக்கு யமனைப் போல அழிவை உண்டாக்குபவருமான பீமசேனரை உண்மையில் எப்போது காண்பானோ, அப்போது பெரும் வீணனான துரியோதனன் எனது வார்த்தைகளை நினைவு கூர்வான். மலைச்சிகரங்களைப் போல இருக்கும் யானைகள், உடைந்த மிடாக்களில் {cask = பீப்பாய்} இருந்து பாயும் நீரைப் போல, தலைகள் உடைந்து இரத்தம் பாயும்படி பீமசேனரால் சாய்க்கப்படுவதை எப்போது பார்ப்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பயங்கர முகத்தோற்றதோடும், கைகளில் கதாயுதத்தோடும், பசுக்கூட்டத்தின் மீது விழும் பெரும் சிங்கத்தைப் போல, திருதராஷ்டிர மகன்கள் மீது உக்கிரமாய் விழும் பீமர், எப்போது அவர்களைக் கொல்வாரோ, அப்போது துரியோதனன் இந்தப் போருக்காக வருந்துவான்.
பெரும் ஆபத்திலும் பயமில்லாமல் போரிடுபவரும், ஆயுதங்களில் நிபுணரும், போரில் பகைவர் படையைக் கலங்கடிப்பவரும், தனது தேரில் தனியராக நின்று, எதிரியின் மேன்மைமிக்கத் தேர்க் கூட்டங்களையும், தரைப்படையினரையும் தனது கதாயுதத்தால் நசுக்குபவரும், இரும்பு போன்ற வலிமையான தனது சுருக்குகளால் எதிரிப்படையின் யானைகளைக் கைப்பற்றுபவருமான பீமர், துணிவுமிக்க வனவாசியொருவன் கோடரியால் காட்டை வெட்டிப்போடுவதைப் போல, திருதராஷ்டிரர்கள் கூட்டத்தை எப்போது வெட்டிப் போடுவாரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
நெருப்பினால் எரிக்கப்பட்ட கூரைவீடுகள் நிறைந்த கிராமத்தைப் போலவும், மின்னலால் எரிக்கப்பட்ட விளைந்த பயிரைப் போலவும், தார்த்தராஷ்டிரக் கூட்டம் எரிக்கப்படுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ, பரந்த தனது பெரிய படை சிதறிப் போவதையும், அதன் தலைவர்கள் கொல்லப்படுவதையும், அச்சத்தால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடுவதையும், அனைத்து வீரர்களும் புழுதியில் சாய்க்கப்படுவதையும் பீமசேனரால் தீய்க்கப்படுவதையும் உண்மையில் எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
அற்புத சாதனைகள் கொண்ட போர்வீரனும், தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், மிகச்சாதுர்யமாக நூற்றுக்கணகான கணைகளை அடிப்பவனுமான நகுலன், துரியோதனனின் தேர்வீரர்களை எப்போது சிதைப்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
வாழ்வின் அனைத்து வசதிகளையும் ஆடம்பரங்களையும் அனுபவித்துப் பழக்கப்பட்ட நகுலன், காடுகளில் நீண்ட காலம் தான் துன்பப்படுக்கையில் உறங்க நேர்ந்ததை நினைவுகூர்ந்து, கோபம் கொண்ட பாம்பைப் போல, தனது கோபமெனும் நஞ்சை எப்போது உமிழ்வானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
ஓ! சூதரே {சஞ்சயரே}, தங்கள் உயிர்களையே விடத் தயாராக இருக்கும் (கூட்டணியில் உள்ள) ஏகாதிபதிகள், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரால் தூண்டப்பட்டால், தங்கள் பிரகாசமிக்கத் தேர்களில் (பகை) படைகளை எதிர்த்து, உக்கிரமாய் முன்னேறி வருவார்கள். இதைக் காணும்போது, திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
ஆயுதங்களை நன்கு அறிந்தவர்களும், வயதில் இளையோராக இருந்தாலும், செயல்களால் அப்படி இல்லாதவர்களுமான (திரௌபதியின்) {எங்கள்} ஐந்து வீர மகன்கள், உயிருக்கு அஞ்சாமல் விரைந்து வருவதை குரு இளவரசன் {துரியோதனன்} எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
படுகொலை புரியும் நோக்கோடு, ஒலியற்ற சக்கரங்கள் கொண்டதும், தடுக்கமுடியாததும், தங்க நட்சத்திரங்கள் கொண்டதும், நன்கு பழக்கப்பட்ட குதிரைகளால் இழுக்கப்படுவதுமான தனது தேரில் ஏறிவருபவனும், ஆயுதங்களில் திறன்கொண்ட போர்வீரனுமான சகாதேவன், அச்சுறுத்தும் பேரழிவுக்கு மத்தியில் தனது தேரில் அமர்ந்து வருவதையும், இடதுபுறமும், வலதுபுறமும் திரும்பி, அனைத்துப் புறங்களிலும் எதிரிகள் மேல் விழுவதையும் எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பணிவுள்ளவனே ஆனாலும் பலமிக்கவனும், போரில் திறம் பெற்றவனும், உண்மையுள்ளவனும், அறநெறிகளின் அனைத்து வழிகளையும் அறிந்தவனும், பெரும் சுறுசுறுப்பும், இயற்கையான தூண்டலும் கொண்டவனுமான சகாதேவன், கடும் மோதலில் காந்தாரியின் மகன் {துரியோதனன்} மீது விழுந்து, அவனது தொண்டர்கள் அனைவரையும் உண்மையில் எப்போது நிர்மூலமாக்குவானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்” {என்றான் அர்ஜுனன்}.
அஞ்சாத சிங்கம் சாத்யகி! – உத்யோக பர்வம் பகுதி 48ஆ-திரௌபதியின் மகன்கள், சுபத்திரையின் மகன் அபிமன்யு, பிரபத்ரகர்கள், விராடன், துருபதன் ஆகியோரது வீரம் வெளிப்படும்போதும், பீஷ்மரை நோக்கிச் சிகண்டி விரையும்போதும், துரோணரை நோக்கித் திருஷ்டத்யும்னன் விரையும்போதும் துரியோதனன் வருந்த நேரிடும் என்றும், கிருஷ்ணனையும், திருஷ்டத்யும்னனையும் படையின் முன்னணியில் கொண்டோரை எதிரிகளால் எப்படி வீழ்த்த முடியும்? என்றும், எனவே, அரசாட்சியில் துரியோதனன் பேராசை கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்குமாறு சஞ்சயனிடம் அர்ஜுனன் சொன்னது; மேலும் சாத்யகியின் திறன்களைச் சொல்லி, சிங்கத்தைக் கண்ட பசுக்களைப் போல, சாத்யகியைக் கண்ட எதிரிகள் போர்க்களத்தை விட்டு ஓடிவிடுவார்கள் என்றும் அர்ஜுனன் எச்சரித்தது…
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “கடும் நஞ்சு கொண்ட பாம்புகள் போல, பெரும் வில்லாளிகளும், ஆயுதங்களில் திறன்மிக்கவர்களும், தேர்ச்சண்டைகளின் முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான திரௌபதியின் மகன்கள், எதிரிகளைத் தாக்குவதை எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பகை வீரர்களைக் கொல்பவனும், கிருஷ்ணனைப் போன்றே ஆயுதங்களில் திறன்மிக்கவனுமான அபிமன்யு, எதிரிகள் மீது அடர்த்தியான கணைகளை மேகங்களைப் போலப் பொழிந்து, எப்போது அவர்களை வீழ்த்துவானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
ஆயுதங்களில் திறன்மிக்கவனும், இந்திரனைப் போன்றவனும், வயதில் குழந்தையானாலும் சக்தியில் அப்படியல்லாதவனுமான {குழந்தையல்லாதவனுமான} சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, எதிரிகளின் மீது மரணத்தைப் போல விழுவதை எப்போது காண்பானோ, உண்மையில், அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பெரும் சுறுசுறுப்புடையவர்களும், போர்க்களத்தை நன்கு அறிந்தவர்களும்,சிங்கங்களின் சக்தியை உடையவர்களுமான பிரபத்ரகர்கள் {Prabhadrakas}, படைகளுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்களை எப்போது வீழ்த்துவார்களோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
மூத்த தேர்வீரர்களான விராடரும், துருபதரும், தங்கள் தங்களின் படைப்பிரிவுகளுக்குத் தலைமையேற்று, திருதராஷ்டிரர் மகன்களையும், அவர்களது படையணிகளையும் எப்போது தாக்குவார்களோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
தனது தேரில் அமர்ந்திருக்கும் ஆயுதங்களில் திறன்மிக்கத் துருபதர், இளம் போர்வீரர்களின் தலைகளைக் கொய்ய விரும்பி, தனது வில்லில் இருந்து அம்புகளை அவர்கள் {எதிரணிப் போர்வீரர்கள்} மீது கோபத்துடன் எப்போது அடிப்பாரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பகைவீரர்களைக் கொல்பவரான விராடர், வீரமிக்கத் தனது மத்ஸ்ய போர்வீரர்களின் துணை கொண்டு, எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவி, அவர்களை {எதிரணிப் போர்வீரர்களை} எப்போது கலங்கடிப்பாரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
சிறந்த முகம் கொண்டவனும், பெரும் வீரனுமான மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} மூத்த மகன் {உத்தரன்}, தனது தேரில் அமர்ந்து கொண்டு, பாண்டவர்களின் சார்பாகக் கவசம் பூண்டு, {எங்கள்} படையின் முன்னணியில் வருவதை எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
கௌரவ வீரர்களில் முதன்மையானவரான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, போர்க்களத்தில் சிகண்டியால் கொல்லப்படும்போது, எங்கள் எதிரிகள் அனைவரும் அழிந்து போவார்கள் என்பதில் ஐயமில்லை என்று நான் உமக்கு உண்மையாகச் சொல்கிறேன்.
நன்றாகப் பாதுகாக்கப்பட்ட தன் தேரில் அமர்ந்தபடி, எண்ணற்ற தேர்வீரர்களை வீழ்த்தி, வலிமைமிக்கத் தனது குதிரைகளைக் கொண்டு (பகையாளிகளின்) தேர்க்கூட்டங்களை நொறுக்கிபடி, பீஷ்மரை நோக்கி எப்போது சிகண்டி முன்னேறுவானோ, உண்மையில், அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
ஆயுத அறிவியலின் புதிர்களை யாருக்குத் துரோணர் அளித்தாரோ, அந்தத் திருஷ்டத்யும்னன், ஸ்ரீன்ஜயர் {ஸ்ருஞ்சயர்} படையணியின் முன்னணியில் பிரகாசத்துடன் இருப்பதை எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பாண்டவப் படையின் தலைவனும் {சேனாதிபதியும்}, அளவிலா ஆற்றல் கொண்டவனும், விரைந்து வரும் எத்தகு சக்தியையும் தாக்குப்பிடிக்கக்கூடிய திறன் கொண்டவனுமான அவன் {திருஷ்டத்யும்னன்}, தனது கணைகளால் திருதராஷ்டிரர் படையணிகளை நொறுக்கியபடி, போர்க்களத்தில் துரோணரை நோக்கி எப்போது விரைவானோ, உண்மையில், அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
“எளிமையானவனும், அறிவார்ந்தவனும், வலிமை கொண்டவனும், பெரும் சக்தி கொண்டவனும், அனைத்து வகைச் செழிப்புகளால் அருளப்பட்டவனுமான அந்தச் சோமகர்களின் தலைவனையும் {திருஷ்டத்யும்னனையும்}, விருஷ்ணி குலத்தின் சிங்கத்தையும் {சாத்யகியையும்}, தனது படையின் முன்னணியில் போரிடக்கூடியவர்களாகக் கொண்டிருக்கும் ஒருவனை எந்த எதிரியால் தாங்கிக் கொள்ளமுடியும்? என்பதையும், {எனவே}, (ஆட்சியின் மீது) பேராசை கொள்ளாதே” என்பதையும் (துரியோதனனுக்குச்) சொல்லும்.
ஆயுதங்களில் திறன் பெற்றவனும், உலகத்தில் தனக்கு நிகரற்றவனும், அச்சமற்றவனும், பெரும் பலமிக்கத் தேர்வீரனும், சினியின் பேரனுமான சாத்யகியை நாங்கள் எங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
அகன்ற மார்பு மற்றும் நீண்ட கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனும், போர்க்களத்தில் ஒப்பற்றவனும், சிறந்த ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனும், அவற்றில் திறன்பெற்றவனும், அச்சமற்றவனுமான {மிகுந்த துணிச்சல் கொண்டவனுமான} அந்தச் சினியின் பேரன் {சாத்யகி}, முழுதாக நான்கு முழ நீளம் கொண்ட வில்லைக் கொண்டிருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரனாவான்.
எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சினிகளின் தலைவன் {சாத்யகி}, என்னால் தூண்டப்பட்டு, எதிரியின் மீது தனது கணைகளை மேகம் போலப் பொழிந்து, அந்தப் பொழிவால் அவர்களது {எதிரிகளது} தலைவர்களை முழுவதுமாக எப்போது வீழ்த்துவானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
நீண்ட கரங்களுடையவனும், வில்லை உறுதியாகப் பிடிப்பவனுமான அந்த ஒப்பற்ற போர் வீரன் {சாத்யகி}, போருக்கான தீர்மானத்தை எப்போது திரட்டுவானோ, அப்போது, சிங்கத்தின் மணத்தை நுகர்ந்த பசுக்களைப் போல, போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே எதிரிகள் அவனிடம் {சாத்யகியிடம்} இருந்து ஓடிவிடுவார்கள். நீண்ட கரங்களையுடையவனும், வில்லை உறுதியாகப் பிடிப்பவனுமான அந்த ஒப்பற்ற போர்வீரன் {சாத்யகி}, மலைகளைப் பிளக்கவும், மொத்த அண்டத்தை அழிக்கவும் வல்லவனாவான்.
ஆயுதங்களைப் பயின்று, (போர்களத்தில்) திறன்பெற்று, மிகுந்த இலகுவான {வேகமான} கரங்களைக் கொண்ட அவன் {சாத்யகி}, வானத்தில் சூரியன் போல, போர்க்களத்தில் ஒளிர்பவனாவான். மேன்மையான பயிற்சி பெற்றவனும், யது பரம்பரையின் கொழுந்தும், விருஷ்ணி குலத்தின் சிங்கமுமான அவன் {சாத்யகி}, மாறுபட்ட, அற்புதமான மற்றும் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கிறான்.
உண்மையில், ஆயுதங்களைப் பயன்படுத்துவோரில் உயர்ந்த அற்புத நிலையை அடைந்திருப்போர் கொண்டிருக்கும் அறிவு அத்தனையையும் சாத்யகி கொண்டிருக்கிறான். நான்கு வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்படும் தங்கத் தேரில் மது குலத்தின் சாத்யகி வருவதை எப்போது பார்ப்பானோ, அப்போது, கட்டுப்பாடற்ற உணர்வுகளைக் கொண்ட இழிந்தவனான திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} வருந்துவான்.
வாசுதேவன் என் கூட்டாளி! – உத்யோக பர்வம் பகுதி 48இ-கிருஷ்ணனால் வழிநடத்தப்படும் தேரைக் காணும்போதும், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்கும்போதும், தன்னால் கணைகள் அடிக்கப்படும்போதும், தனது தம்பிகள் வீழ்வதைக் காணும்போதும் , கிருஷ்ணன், பாஞ்சஜன்யம், அர்ஜுனன், அம்பாறத்தூனிகள், தேவதத்தம், வெண்குதிரைகள் ஆகியவற்றைத் தனது தேரில் காணும்போதும் துரியோதனன் இந்தப் போருக்காக வருந்துவான் என்று அர்ஜுனன் சொன்னது…
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “தங்கம் மற்றும் ஒளி பொருந்திய ரத்தினங்களின் பிரகாசத்துடன் கூடியதும், வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்படுவதும், குரங்கு {அனுமன்} இலச்சனை பொறித்த பதாகை {கொடி} தாங்கியதும், கேசவனால் {கிருஷ்ணனால்} வழிநடத்தப்படுவதுமான எனது பயங்கரத் தேரை எப்போது காண்பானோ, அப்போது, கட்டுப்பாடற்ற உணர்வுகளைக் கொண்ட அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
தோலுறைகளால் பாதுகாக்கப்படும் விரல்களைக் கொண்டு, எப்போதும் வளைத்தே வைக்கப்பட்டிருக்கும் எனது வில்லான காண்டீவத்தின் நாண் கயிற்றில் இடி உருளுவது போன்று உரத்து உண்டாக்கும் பயங்கர ஒலியை எப்போது கேட்பானோ, பசுக்களைப் போலப் போர்க்களத்தின் எல்லாப்புறங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் தனது துருப்புகளால் தான் கைவிடப்பட்டதை எப்போது காண்பானோ, அப்போது எனது அம்பு மழையால் உண்டாகும் இருளில் மூழ்கும் அந்த இழிந்த துன்மார்க்கான அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} வருந்துவான்.
அழகிய இறகுகள் படைத்தவையும், உயிர்நிலையையே துளைக்கவல்லவையும், காண்டீவத்தின் நாணில் இருந்து அடிக்கப்படுபவையும், மேங்களில் இருந்து உமிழப்படும் பயங்கரமான கடுமையான மின்னல்க்கீற்றுகளைப் போன்றவையுமான எண்ணிலடங்கா கூரிய கணைகள், எதிரிகளை ஆயிரக்கணக்கில் அழித்தபடி, கவசம் பூண்ட யானைகளையும், எண்ணிலடங்கா குதிரைகளையும் விழுங்கியபடி செல்வதை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
எதிரியால் அடிக்கப்படும் கணைகள், எனது கணைகளால் அணைக்கப்பட்டோ, திருப்பப்பட்டோ, அல்லது எனது கணைகளால் குறுக்கு வெட்டாக வெட்டப்பட்டுத் துண்டுகளாக்கப்பட்டோ போவதை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது மூடனான அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
எனது கைகளால் அடிக்கப்படும் அகன்ற தலை கொண்ட கணைகள், மர உச்சிகளில் இருக்கும் கனிகளைப் பறவைகள் கொய்வதைப் போல, இளம் போர்வீரர்களின் தலைகளை எப்போது கொய்யுமோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
தங்கள் தேர்களில் இருந்தும், யானைகளில் இருந்தும், குதிரைகளில் இருந்தும் எனது அம்புகளால், களத்தில் உயிரற்று உருளும் அற்புத போர்வீரர்களை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
போரில் எதையும் சாதிக்காமலே, பகைவனின் {என்னுடைய} ஆயுத எல்லைக்குள் வரும் முன்பாகவே, சுற்றிலும் தனது தம்பிகள் இறந்து விழுவதை எப்போது காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
விரிந்த வாயுடைய மரணத்தைப் {காலனைப்} போன்ற எனது சுடர்மிகும் கணைகளைத் தடையில்லாமல் பொழிந்து, அனைத்துப் புறங்களிலும் உள்ள தேர்க்கூட்டங்களையும், காலாட்படை வீரர்களையும் எப்போது நான் அழிப்பேனோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
அனைத்துப்புறங்களிலும் உலவும் எனது தேர் எழுப்பும் புழுதியால் மூடப்பட்டும், எனது காண்டீவத்தால் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டும், தன் படைகள் மதிமயங்கி நிற்பதை எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
உறுப்புகள் சிதைக்கப்பட்டும், உணர்வுகள் இழந்தும், அச்சத்தால் தனது படைகள் எல்லாப்புறங்களிலும் ஓடுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ; தனது குதிரைகள், யானைகள் மற்றும் தனது வீரர்களில் முதன்மையானோர் கொல்லப்படுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ; தங்கள் விலங்குகள் அழிந்ததும், தாகத்துடன் பீதியடைந்தும், உரக்க அழுது, இறந்தும், இறந்து கொண்டும் இருக்கும் தனது படைகள், படைப்பாளனின் {பிரம்மனின்} முடிவடையாத வேலைகளைப் [1] போல, மயிர், எலும்புகள், மண்டையோடுகள் ஆகியன சுற்றிலும் குவியலாகக் கிடப்பதை எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.(பிரஜாபதியைத் தேவதையாகக் கொண்ட வாஜபேய வேள்வியில் பதினேழு பசுக்கள் [அதாவது குதிரை, மான் போன்ற வேள்வி விலங்குகள். இங்கே பசு என்பது விலங்கு என்றே பொருள்படும்] )
காண்டீவம், வாசுதேவன் {கிருஷ்ணன்}, தெய்வீகச் சங்கான பஞ்சஜன்யம், {அர்ஜுனனாகிய} நான், எனது இரு வற்றாத அம்பறாத்தூணிகள், தேவதத்தம் என்றழைக்கப்படும் எனது சங்கு, எனது வெண்குதிரைகள் ஆகியவற்றை என் தேரில் எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
யுகமுடிவில், மற்றொரு யுகத்தின் ஆரம்பத்தில், கூடியிருக்கும் எண்ணிலடங்கா தீய ஆன்மாக்களை எரிக்கும் அக்னி போல, கௌரவர்களை நான் எப்போது எரிப்பேனோ, அப்போது திருதராஷ்டிரர் தனது மகன்கள் அனைவருடனும் வருந்துவார்.
தனது தம்பிகளுடனும், படைகளுடனும், தொண்டர்களுடனும் கூடியவனும், கோபம் நிறைந்த தீய இதயம் கொண்டவனுமான திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, எப்போது செழிப்பை இழப்பானோ, அப்போது கர்வத்தை இழந்து, இதயம் {உற்சாகம்} இழந்து, மேனி முழுதும் நடுக்கம் கொள்ளும் அந்த மூடன் {துரியோதனன்} வருந்துவான்.
எனது நீர்ச்சடங்குகளையும், துதிகளையும் {பிரார்த்தனைகளையும்} முடித்த ஒரு காலைப்பொழுதில், ஓர் அந்தணர் என்னிடம் இந்த இனிமையான வார்த்தைகளில், “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ மிகக் கடினமான ஒரு பணியை நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, நீ உன் எதிரிகளுடன் போராட வேண்டியிருக்கும். போர்க்களத்தில் உனக்கு முன்பாக, வஜ்ரத்தைக் கையில் கொண்டு குதிரையில் வரும் இந்திரனோ, அல்லது சுக்ரீவத்தின் தலைமை கொண்ட குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் வரும் வசுதேவரின் மகனான கிருஷ்ணன், உனக்குப் பின்னால் இருந்தோ காப்பார்கள்” என்றான்.
அந்த வார்த்தைகளை நம்பிய {அர்ஜுனனாகிய} நான், இந்தப் போர்க்களத்தில் வஜ்ரதாங்கியான இந்திரனை விட்டுக் கடந்து, வாசுதேவனையே {கிருஷ்ணனையே} எனது கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்தேன். தீயோரை அழிக்கவே நான் கிருஷ்ணனை அடைந்தேன். இவை அனைத்திலும் தேவர்களின் கையை நான் காண்கிறேன். ஒரு மனிதனின் வெற்றிக் கிருஷ்ணனால் விரும்பப்பட்டால், பின்னவன் {அந்த கிருஷ்ணன்} உண்மையில் தன் சார்பாக ஆயுதத்தை எடுக்கவில்லையெனினும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாவே அந்த எதிரிகள் இருந்தாலும் கூட, அவர்கள் அனைவரையும் விட அவன் {அந்த மனிதன்} விஞ்சியே நிற்பான். அப்படியிருக்கையில், மனிதர்கள் காரியத்தில் கவலையே கிடையாது-
ஏகலவ்யன் இறந்தான்! – உத்யோக பர்வம் பகுதி 48ஈ-கிருஷ்ணனை வெல்ல விரும்புவன், அடைய முடியாததை விரும்புகிறான் என்று அர்ஜுனன் சொல்வது; மேலும், கிருஷ்ணன் ருக்மினியைக் கடத்தியது, சுதர்சனனை விடுவித்தது, பாண்டிய மன்னனைக் கொன்றது, கலிங்கர்களைக் கொன்றது, வாராணசி நகரத்தை எரித்தது, ஏகலவ்யனைக் கொன்றது, கம்சனைக் கொன்றது, சால்வனை வென்றது, அசுரர்களான நரகன் மற்றும் முரனைக் கொன்றது, அதன்காரணமாகத் தேவர்களிடம் கிருஷ்ணன் பெற்ற வரம் ஆகியவற்றையும் சொல்லி, அப்படிப்பட்ட கிருஷ்ணனை துரியோதனன் சிறையிலடைக்க நினைக்கிறான் என்றும், தனக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் பிளவை உண்டாக்கப் பார்க்கிறான் என்றும், அஃது எவ்வளவு தூரம் துரியோதனனால் ஆகும் என்பதைப் போரில் அவன் காண்பான் என்றும் அர்ஜுனன் சஞ்சயனிடம் சொன்னது…
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “பெரும் சக்தியுடையவனும், வீரர்களில் முதன்மையானவனும் வசுதேவரின் மகனுமான கிருஷ்ணனைப் போரில் வெல்ல விரும்புபவன், தன் இரு கரங்களின் உதவியை மட்டுமே கொண்டு, அளவிலா நீரைக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த பெரும் சமுத்திரத்தைக் கடக்க விரும்புபவன் ஆவான். உயர்ந்திருக்கும் கைலாச மலையைத் தன் உள்ளங்கையால் அடித்துப் பிளந்துவிட விரும்புபவன், தனது கைகளில் இருக்கும் நகங்கள் தேய்ந்து போனாலும், அந்த மலைக்குச் சிறு பாதிப்பையும் அவனால் ஏற்படுத்த இயலாது.
போரில் வாசுதேவனை வெல்ல விரும்புபவன், எரியும் தழலை தன் இரு கைகளால் அணைப்பவனாக, சூரியனையும் சந்திரனையும் தடுப்பவனாக, தேவர்களின் அமிர்தத்தைத் தன் வலிமையால் கவர்பவனாக இருக்க வேண்டும்.
ஒரே தேரில் சென்று, போரில் தன் பலத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, போஜ இனத்தின் அரச வீரர்களை {மன்னர்களை} வெட்டி வீழ்த்தி, பெரும் புகழ்பெற்ற ருக்மிணியைக் கடத்தித் தனது மனைவியாக்கி, பிறகு அவள் மூலமாக உயர் ஆன்ம பிரத்யும்னனைப் பெற்றவனே அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}.
காந்தார நாட்டை விரைந்து அழித்து, நக்னஜித்தின் மகன்கள் அனைவரையும் வென்று, அடைத்து வைக்கப்பட்டிருந்த மன்னன் சுதர்சனனை, {தன்} பெரும் சக்தியை வெளிப்படுத்தி, விடுவித்தவனே இந்தத் தேவர்களுக்குப் பிடித்தமானவன் {கிருஷ்ணன்}.
தன் மார்பால் மன்னன் பாண்டியன் [1] மார்பை மோதி அவனை {பாண்டியனைக்} கொன்றவனும், கலிங்கர்களை [2] வீழ்த்தியவனும் இவனே {கிருஷ்ணனே}. பிறரால் வீழ்த்தப்பட முடியாதவனான இவனாலேயே வாராணசி நகரம் {காசி} எரிக்கப்பட்டுப் பல வருடங்கள் மன்னனில்லாமல் இருந்தது.நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யன் [3], எப்போதும் இவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} போர் அறைகூவல் விடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்; ஆனால், மலைமீது மூர்க்கமாக அடித்து வீசப்பட்ட அசுரன் ஜம்பன் {ஜம்பாசுரன்} போல, {அந்த ஏகலவ்யன்} கிருஷ்ணனால் வெட்டுண்டு இறந்து கிடக்கிறான்.
தனக்கு அடுத்தபடியாகப் பலதேவனைக் {பலராமனைக்} கொண்டவனும் {having Baladeva for his second}, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் மத்தியில், சபையில் அமர்ந்திருந்த உக்கிரசேனனின் தீய மகனைக் (கம்சனைக்) கொன்று, {அந்த} நாட்டை உக்கிரசேனனிடமே கொடுத்தவனும் இந்தக் கிருஷ்ணனே.
தான் கொண்ட மாய சக்திகளின் விளைவால் அச்சமற்றவனாகி வானத்தில் நிலைத்திருந்த {வானத்தில் இருந்து போர் செய்த} சௌபத்தின் தலைவனான மன்னன் சால்வனிடம் போரிட்டவன் இந்தக் கிருஷ்ணனே; (சௌபத்தின் தலைவனால் {சால்வனால்}) வீசப்பட்ட கடுமையான சதாக்னியை, சௌபத்தின் வாயிலில் நின்று தனது கரங்களில் பிடித்தவன் இவனே {இந்தக் கிருஷ்ணனே}. இவனுடைய {கிருஷ்ணனுடைய} வலிமையை எந்த மனிதனால் தாங்கிக் கொள்ள முடியும்?
வல்லமைமிக்கதும், அணுக முடியாததும், தாங்க முடியாததுமான பிராக்ஜோதிஷம் என்ற நகரத்தை அசுரர்கள் கொண்டிருந்தனர். அதிதியிடம் தான் அபகரித்து வந்த காதணிகளை {ரத்னகுண்டலங்களை}. பூமியின் {பூமாதேவியின்} வலிமைமிக்க மகனான நரகன் {நரகாசுரன்}, அங்கேதான் {பிராக்ஜோதிஷத்தில்தான்} வைத்திருந்தான்.
சக்ரனின் {இந்திரனின்} தலைமையில் கூடியிருந்த மரணத்திற்கு அஞ்சாத தேவர்களே கூட அவனை {நரகாசுரனை} வெல்ல இயலாதவர்களாகவே இருந்தார்கள். கேசவனின் {கிருஷ்ணனின்} ஆற்றல், வலிமை, {இவன் கொண்டிருந்த} தடுக்க முடியாத ஆயுதம் ஆகியவற்றைக் கண்டும், இவனது {கிருஷ்ணனின்} பிறப்பின் நோக்கத்தை அறிந்தும், அசுரர்களை அழிக்கும் பணியில் இவனை {கிருஷ்ணனை} தேவர்கள் அமர்த்தினார்கள்.
வெற்றியை உறுதி செய்யும் தெய்வீகப் பண்புகள் அனைத்தையும் தன்னிடம் கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, மிகக் கடினமான இந்தப் பணியைத் தானே மேற்கொள்ள ஏற்றுக் கொண்டான். நிர்மோசனம் என்ற நகரத்தில் இந்த வீரன் {கிருஷ்ணன்}, ஆறாயிரம் {6000} அசுரர்களைக் கொன்று, எண்ணிலா கூர்முனைக் கணைகளைத் துண்டுகளாக அறுத்துப் போட்டு, முரனையும், ராட்சசர்கள் கூட்டத்தையும் கொன்று, அந்த நகரத்திற்குள் {நிர்மோசனத்திற்குள்} நுழைந்தான்.
அங்கேதான் {நிர்மோசனத்தில்தான்} வலிமைமிக்க நரகனுக்கும் {நரகாசுரனுக்கும்}, அளவிலா சக்தி கொண்ட விஷ்ணுவுக்கும் இடையில் அந்த மோதல் நிகழ்ந்தது. காற்றால் வேரோடு சாய்க்கப்பட்ட கோங்கு மரம் போல, கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நரகன் அங்கே உயிரற்றுக் கிடக்கிறான். அழகாலும், சாகாப்புகழாலும் அலங்கரிக்கப்பட்டவனும் ஒப்பற்ற ஆற்றல் கொண்டவனும் கற்றவனுமான கிருஷ்ணன், முரனையும், பூமியின் {பூமாதேவியின்} மகனான நரகனையும் கொன்று, ரத்தினங்களால் ஆன அந்தக் காதணிகளையும் மீட்டுத் திரும்பி வந்தான்.
அந்தப் போரில், இவன் {கிருஷ்ணன்} செய்த பயங்கரச் சாதனைகளைச் சாட்சியாகக் கண்ட தேவர்கள் {கிருஷ்ணனிடம்}, “போரில் உனக்கு எப்போதும் களைப்பேற்படாது, ஆகாயமோ, நீரோ உனது வழியைத் தடை செய்யாது {ஆகாயத்திலும், நீரிலும் செல்லும் சக்தி உனக்குக் கிடைக்கும்}. ஆயுதங்கள் உன் உடலைத் துளைக்காது”என்று இவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அருளினர். இவை அனைத்தினாலும், கிருஷ்ணன், தனக்குப் போதுமான வெகுமதி கிடைத்ததாகக் கருதினான்.
அளவிலாத பெரும் வலிமையைக் கொண்ட வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} அறங்கள் அனைத்தும் {குண நிறைவுகள் அனைத்தும்} இருக்கின்றன. அளவற்ற சக்தி வாய்ந்தவனும், தாங்கிக் கொள்ள முடியாதவனுமான இந்த விஷ்ணுவை {கிருஷ்ணனை},இன்னும் கூடத் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} வெல்லவே விரும்புகிறான். அதனாலேயே அந்த இழிந்தவன் {துரியோதனன்}, அடிக்கடி இவனைச் சிறையிலடைக்க [4] எண்ணுகிறான். எனினும், இவை யாவற்றையும் கிருஷ்ணன் எங்களுக்காகப் பொறுத்து வருகிறான் {மன்னித்து வருகிறான்}. அந்த இழிந்தவன் {துரியோதனன்}, கிருஷ்ணனுக்கும் எனக்கும் இடையில் திடீர்ப் பிளவை உண்டாக்கவும் முயன்று வருகிறான். எனினும், பாண்டவர்களிடம் கிருஷ்ணன் கொண்ட பாசத்தை அகற்ற, தான் எவ்வளவு தூரம் திறன்பெற்றவன் என்பதைப் போர்க்களத்தில் அவன் {துரியோதனன்} காண்பான்.
காண்டீவத்தின் கொட்டாவி! – உத்யோக பர்வம் பகுதி 48உ-தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை நினைத்து அர்ஜுனன் சூளுரைப்பது; கற்றோரின் துணை தங்களுக்கு இருப்பதாகவும், அவர்கள் துரியனின் வீழ்ச்சியை முன்னறிவிப்பதகாவும் அர்ஜுனன் சொல்வது; அனைத்துச் சகுனங்களும் தங்களுக்குச் சாதகமாகவே இருப்பதை அர்ஜுனன் எடுத்துரைப்பது; துரியோதனனின் மடமையைச் சஞ்சயனிடம் எடுத்துச் சொல்லி, தங்கள் நாட்டு முதியோர் சொல்வது போலக் கௌரவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழட்டும் என்று அர்ஜுனன் வாழ்த்தியது…
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “சந்தனுவின் மகனையும் {பீஷ்மரையும்}, துரோணரையும், அவரது மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சரத்வானின் ஒப்பற்ற மகனையும் {கிருபரையும்} வணங்கி, எங்கள் நாட்டை மீட்க நான் போரிடுவேன். பாண்டவர்களுடன் போரிடும் பாவிக்கு, நீதித்தேவனே {தர்மதேவனே} அழிவைக் கொண்டு வருவான் என்று நான் நம்புகிறேன்.
அந்த இழிந்தவர்களால் {கௌரவர்களால்} ஏமாற்றுகரமாகப் பகடையில் வீழ்த்தப்பட்ட அரச பிறப்புடைய {பாண்டவர்களாகிய} நாங்கள், காட்டில் பெருந்துன்பத்துடன் பனிரெண்டு {12} ஆண்டுகளையும், நீண்ட ஒரு வருட மறைந்த நிலை வாழ்வையும் {அஞ்ஞாதவாசம்} கழித்தோம்.
அந்தப் பாண்டவர்கள் உயிரோடு இருக்கையில், திருதராஷ்டிரரின் மகன்கள், தாங்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தாலும் செல்வச்செழிப்பாலும் எப்படி மகிழ்ச்சியடைய முடியும்? இந்திரனின் தலைமையைக் கொண்ட தேவர்களைக் கொண்டு அவர்கள் {துரியோதனாதிபதிகள்} எங்களைப் போரில் வீழ்த்திவிட்டால், அறப்பயிற்சிகளைவிட {தர்மத்தைவிட} மறமே {அதர்மமே} சிறந்ததென்று ஆகிவிடும். மேலும் இந்தப் பூமியில் நீதி போன்ற எதுவும் நிச்சயமாக இருக்காது. மனிதன் அவன் செய்யும் செயல்களால் பாதிப்பை அடைகிறான் என்றால், நாங்கள் {பாண்டவர்கள்} துரியோதனனைவிட மேன்மையானவர்கள் என்றால், வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டு {எனது துணைவனாகக் கொண்டு} {with Vasudeva as my second}, துரியோதனனை அவனது இரத்த உறவுகளோடு சேர்த்து நான் கொல்வேன் என்றே நம்புகிறேன்.
ஓ! மனிதர்களின் தலைவா {சஞ்சயா}, எங்கள் நாட்டைத் திருடியது தீமை என்றால், எங்களது இந்த நற்செயல்கள் கனியற்றதாகாது {பலனற்றதாகாது} என்றால், இதுவும் அதுவும் ஆகிய இரண்டையும் நோக்குகையில் {ஆலோசிக்கையில்}, துரியோதனனின் வீழ்ச்சி உறுதி என்றே எனக்குப் படுகிறது.
கௌரவர்களே, அவர்கள் {துரியோதனாதிபதிகள்} எங்களுடன் போரிட்டால், திருதராஷ்டிரர் மகன்கள் நிச்சயம் அழிவார்கள் என்பதை உங்கள் கண்ணால் நீங்களே காண்பீர்கள். போரிடுவதைத் தவிர்த்து வேறுமாதிரியாகச் செயல்பட்டால் அவர்கள் வாழ்வார்கள்; ஆனால் வரப்போகும் போரினால் அவர்களில் எவரும் உயிருடன் எஞ்சமாட்டார்கள். கர்ணனுடன் சேர்த்து திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் கொன்று, அவர்களது முழு நாட்டையும் நான் வெல்வேன். அதே வேளையில், நீங்கள் எதையெல்லாம் சிறந்ததாக நினைப்பீர்களோ அவற்றையெல்லாம் செய்யுங்கள், உங்கள் மனைவியரையும், வாழ்வின் பிற இனிமையான பொருட்களையும் அனுபவியுங்கள் {அனுபவித்துவிடுங்கள்}.
பல்வேறு அறிவியல்களை அறிந்தவர்களும், இனிமையான நடத்தை, நற்பிறப்பு ஆகியவற்றைக் கொண்டவர்களும், வருடச் சுழற்சிகளை அறிந்தவர்களும், சோதிடக் கல்வியில் ஈடுபடுபவர்களும், கோள்களின் அசைவுகளையும், நட்சத்திரக் கூடுகைகளையும் துல்லியமாகப் புரிந்துகொள்ள வல்லவர்களும், விதியின் புதிர்களை விளக்கவல்லவர்களும், எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளுக்கு விடை அளிப்பவர்களும், இராசிச் சக்கரத்தின் {zodiac} இராசிகளை {signs} அறிந்தவர்களும், ஒவ்வொரு மணி நேரத்தின் நிகழ்வுகளை அறிந்தவர்களுமான முதிர்ந்த அந்தணர்கள் பலர் எங்களிடம் இருக்கிறார்கள். ஒருபோதும் யாரையும் எதிரியாக்காத யுதிஷ்டிரர், தனது எதிரிகளைப் படுகொலை செய்வதன் விளைவாகத் தனது நோக்கங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டன என்று கருத வைப்பது போல, குருக்கள் மற்றும் ஸ்ரீன்ஜயர்களின் {சிருஞ்சயர்களின்} பெரும் அழிவையும், பாண்டவர்களின் முழு வெற்றியையும் அவர்கள் {அந்த அந்தணர்கள்} முன்னறிவிக்கின்றனர்.
கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்தின் அறிவை {ஞானத்தைக்} கொண்டிருக்கும் விருஷ்ணிகளில் சிங்கமான ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, இவையனைத்தையும் ஐயமறக் காண்கிறான். தவறாத தொலைநோக்குப் பார்வை கொண்ட நானும், அந்த எதிர்காலத்தையே காண்கிறேன். பழங்காலத்தில் அடையப்பட்ட எனது தொலை நோக்குப் பார்வை தடைசெய்யப்படவில்லை. திருதராஷ்டிரர் மகன்கள் போரிட்டால், அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்.
கையாளப்படாமல் இருக்கும் எனது வில்லான காண்டீவம் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது; நீட்டி இழுக்கப்படாமல் இருக்கும் எனது வில்லின் நாண்கயிறு நடுங்கிக் கொண்டிருக்கிறது; எனது அம்பறாத்தூணியின் வாயில் இருந்து வெளிப்படும் அம்புகளும், மீண்டும் மீண்டும் பறக்க எத்தனிக்கின்றன. தனது சட்டையைவிட்டு அகலும் பாம்பைப் போல, எனது பிரகாசமான கூன்வாள் உறையைவிட்டு வெளியே வருகின்றது; எனது கொடிக்கம்பத்துக்கு மேலே, “ஓ! கிரீடி, எப்போது உனது தேர் பூட்டப்படும்?” என்று பயங்கரக் குரல்கள் கேட்கின்றன. இரவில் எண்ணிலடங்கா நரிகள் பயங்கரமாக ஊளையிடுகின்றன, மேலும் அடிக்கடி வானத்தில் இருந்து ராட்சசர்கள் கீழே இறங்குகின்றனர்; எனது வெண்குதிரைகளை எனது தேரில் பூட்டும்போது, மான்கள், நரிகள், மயில்கள், காகங்கள், கழுகுகள், கொக்குகள், ஓநாய்கள் மற்றும் தங்கச் சிறகு கொண்ட பறவைகள் அதைப் {அந்தத் தேரைப்} பின்தொடர்கின்றன.
எனது அம்பு மழையால், தனி மனிதனான என்னால், போர்குணமிக்க அனைத்து மன்னர்களையும் இறந்தவர்களின் உலகத்திற்கு {யமனுலகுக்கு} அனுப்ப முடியும். வெப்ப காலத்தில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பு, ஒரு காட்டையே எரித்துவிடுவதைப் போல, பல்வேறு வழிமுறைகளை வெளிப்படுத்தி, அந்தப் பெரும் ஆயுதங்களான, ஸ்தூர்-கர்ணம் {ஸ்தூணாகர்ணம்}, பாசுபதம் {பாசுபதாஸ்திரம்} மற்றும் பிரம்மம் {பிரம்மாஸ்திரம்} ஆகியவற்றையும், சக்ரன் {இந்திரன்} எனக்குக் கொடுத்தவையான கடும் மூர்க்கம் கொண்ட {ஐந்திரம் உள்ளிட்ட} அந்த அனைத்து ஆயுதங்களையும் நான் வீசுவேன் {பயன்படுத்துவேன்}.
அவற்றின் துணை கொண்டு, அந்த ஏகாதிபதிகளின் அழிவை எனது இதயத்தில் நிறுத்தி, போர்க்களத்திற்கு வருவோர் யாரையும் நான் எஞ்சவிடமாட்டேன். இவை யாவற்றையும் செய்த பிறகே நான் ஓய்வேன். இதுவே நான் முடிவெடுத்திருக்கும் எனது தலைமையான தீர்மானமாகும்.
ஓ! கவல்கணர் மகனே {சஞ்சயரே}, இவற்றை அவர்களுக்குச் {கௌரவர்களுக்குச்} சொல்லும். துரியோதனனின் மடமையைப் பாரும்! ஓ! சூதரே, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையே தங்கள் துணையாகக் கொண்டு, போரில் வல்லவர்களாய் இருப்பவர்களிடம் கூட அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} போரையே விரும்புகிறான். ஆனால், “கௌரவர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழட்டும்” என்று சந்தனுவின் மகனான முதிர்ந்த பீஷ்மரும், கிருபரும், மகனுடன் {அசுவத்தாமனுடன்} கூடிய துரோணரும், பேரறிவு கொண்ட விதுரரும் சொல்வது போலவே, அப்படியே ஆகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.
இந்தக் கர்ணன் இழிந்தவன்! – உத்யோக பர்வம் பகுதி 49-பீஷ்மர் சொன்ன நர நாராயணர்களின் கதை; நர நாராயணர்களே அர்ஜுனனும் கிருஷ்ணனும் என்றது; கர்ணன், சகுனி, துச்சாசனன் ஆகிய மூவரின் கருத்தை மட்டுமே உண்மையெனத் துரியோதனன் ஏற்பதாகப் பீஷ்மர் குற்றஞ்சாட்டுவது; தன்னை இழிவாகப் பேசுவது தகாது என கர்ணன் பீஷ்மரிடம் கேட்பது; கர்ணன் தற்பெருமைக்காரன் என்றும்; பாண்டவர்களில் பதினாறில் ஒரு பங்குக்குக்கூட அவன் ஒப்பாக மாட்டான் என்று பீஷ்மர் சொல்வது; பீஷ்மரின் சொல்லை ஏற்கும்படி துரோணர் திருதராஷ்டிரனிடம் சொல்வது; திருதராஷ்டிரன் துரோணரையும், பீஷ்மரையும் அலட்சியம் செய்து சஞ்சயனிடம் பாண்டவர்களைக் குறித்து மீண்டும் விசாரித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் சந்தனுவின் மகனான பீஷ்மர், துரியோதனனிடம், “ஒரு காலத்தில், பிருஹஸ்பதியும் சுக்ரனும் {சுக்ராச்சாரியரும்} [1] பிரம்மனிடம் சென்றார்கள். இந்திரனோடு சேர்ந்து மருதர்களும், அக்னியோடு சேர்ந்து வசுக்களும், ஆதித்தியர்களும், சத்யஸ்களும் {சாத்தியர்களும்}, ஏழு தெய்வீக முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, கந்தர்வர்களும், விஸ்வவசு மற்றும் அப்சரஸ்சுகளின் அழகிய குலமும் அந்தப் பழமையான பெரும்பாட்டனை {பிரம்மனை} அணுகினார்கள். அந்த அண்டத்தின் தலைவனை {பிரம்மனை} வணங்கிய சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, அவனை {பிரம்மனைச்} சுற்றி அமர்ந்தனர். அதே நேரத்தில், தங்கள் மனங்களால் தங்கள் சக்தியை தங்களுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல, பழமையான இரு தெய்வங்களான முனிவர்கள் நரனும், நாராயணனும், அங்கே இருந்த அனைவரின் சக்திகளையும் இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
அதன்பேரில், பிருஹஸ்பதி பிரம்மனிடம், “உம்மை வழிபடாமல் இந்த இடத்தை விட்டுச் செல்லும் இந்த இருவரும் யார்? ஓ பெரும்பாட்டனே {பிரம்மனே}, எங்களுக்குச் சொல்லும். இவர்கள் யார்?” என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மன், “தவத்தகுதியுடையவர்களும், தங்கள் பேரொளி மற்றும் அழகால் சுடர்விட்டு, பூமி, சொர்க்கம் ஆகிய இரண்டுக்கும் ஒளியூட்டுபவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், அனைத்திலும் ஊடுருவி, அனைத்தையும் கடந்திருப்பவர்களுமான இந்த இருவரும், வேறு உலகத்தில் இருந்து வந்து, தற்போது இங்கே வசித்து வரும் நரனும், நாராயணனும் ஆவார்கள். பெரும் வலிமையும் ஆற்றலும் உடைய அவர்கள், தங்கள் சொந்த தவத்தின் விளைவால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் செயல்களால் அவர்கள் உலகத்தின் மகிழ்ச்சிக்கு எப்போதும் பங்களித்து வருகிறார்கள். தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடப்படும் அவர்கள் {நரனும் நாராயணனும்}, அசுரர்களின் அழிவுக்காக மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்” என்றான் {பிரம்மன்}”
பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைக் கேட்ட சக்ரன் {இந்திரன்}, அவ்விருவரும் {நரனும், நாராயணனும்} தவம்பயின்று கொண்டிருந்த இடத்திற்கு, பிருஹஸ்பதி முதலான அனைத்துத் தேவர்களுடன் சென்றான். அந்நேரத்தில், சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, தங்களுக்கும், அசுரர்களும் இடையில் ஏற்பட்டிருந்த போரின் விளைவை எண்ணி மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.
ஒப்பற்றிருந்த அந்த இருவரிடமும், இந்திரன் ஒரு வரத்தைத் தருமாறு வேண்டினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா}, இப்படிக் கேட்கப்பட்டதும், அந்த இருவரும், “வரத்தைக் கேள்?” என்றனர். அதற்குச் சக்ரன் {இந்திரன்} அவர்களிடம் {நரன் மற்றும் நாராயணனிடம்}, “எங்களுக்கு உங்கள் உதவியைக் கொடும்” என்றான். அதற்கு அவர்கள் சக்ரனிடம் {இந்திரனிடம்}, “நீ விரும்பியதை நாங்கள் செய்வோம்” என்றனர். பிறகு, அவர்களது உதவியைக் கொண்ட சக்ரன் {இந்திரன்}, அதன் தொடர்ச்சியாகத் தைத்தியர்களையும், தானவர்களையும் [2] வீழ்த்தினான். எதிரிகளைத் தண்டிப்பவனான நரன், பௌலோமர்கள் மற்றும் காலகஞ்சர்கள் மத்தியில் இருந்த இந்திரனின் எதிரிகளை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் போர்க்களத்தில் கொன்றான்.(திதியின் மகன் தைத்தியர்கள், தானுவின் மகன்கள் தானவர்கள். திதியும், தானுவும் தக்ஷனின் மகள்களாவர்.)
அசுரன் ஜம்பன் தன்னை விழுங்க வந்த போது, சுழன்று வரும் தேரை நடத்தி, அகன்ற தலை கொண்ட கணைகளைக் கொண்டு அவனது {ஜம்பனுடைய} தலையைக் கொய்தவன் இந்த அர்ஜுனனே. அறுபதாயிரம் நிவாதகவசர்களை வீழ்த்தி, கடலுக்கு அக்கரையைத் (ஹிரண்யபுரம் எனும் தைத்தியர் நகரைத்) துன்புறுத்தியவன் {அழித்தவன்} அவனே {இந்த அர்ஜுனனே}. வலிய கரங்களைக் கொண்டவனும், பகை நகரங்களை வெல்பவனுமான அவனே {இந்த அர்ஜுனனே}, இந்திரன் தலைமையிலான தேவர்களையே வீழ்த்தி {காண்டவ வனத்தில்} அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்தவன் ஆவான்.
இதே போல, இவ்வுலகில், எண்ணிலடங்கா பிற தைத்தியர்களையும், தானவர்களையும் நாராயணனும் கொன்றான். வலிமைமிக்க சக்தியைக் கொண்ட அந்த இருவரை {நரனையும் நாராயணனையும்} போன்றவர்களே, இப்போது ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகக் காணப்படுபவர்கள் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்} ஆவர். ஒருவருக்கொருவர் இப்போது ஒற்றுமையாகக் காணப்படும் இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், அந்தப் பழங்கால தெய்வங்களான அதே தெய்வீக நரனும், நாராயணனுமே ஆவர்.
இவ்வுலகத்திலுள்ளோர் அனைவரைக் காட்டிலும், அசுரர்களாலும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் அவர்களே {அர்ஜுனனும் கிருஷ்ணனுமே}. கிருஷ்ணனே அந்த நாராயணன். பல்குனனே {அர்ஜுனனே} அந்த நரன். உண்மையில், அவர்கள் ஈருடலில் இருக்கும் ஒரே ஆன்மா. அவர்கள் தங்கள் செயல்களால் {கர்மத்தால்}, அழிவடையாத நித்திய உலகங்களை அனுபவிக்கின்றனர். இவ்வுலகில் அழிவை ஏற்படுத்தக்கூடிய போர்களுக்கான அவசியம் ஏற்படும்போது, அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். இதன் காரணமாகவே, போரே அவர்களது நோக்கமாக இருக்கிறது.
வேதங்களை அறிந்தவரான நாரதர், இதையே விருஷ்ணிகளிடம் சொல்லியிருக்கிறார். ஓ! துரியோதனா, கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதத்துடன் கேசவனையும் {கிருஷ்ணனையும்}, பயங்கர வில்லையும் {காண்டீவத்தையும்}, ஆயுதங்களையும் தாங்கியிருக்கும் அர்ஜுனனையும் எப்போது காண்பாயோ, நித்தியமான, ஒப்பற்றவர்களான அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்கள் என்று பொருளும் இங்கே வரும்} ஒரே தேரில் அமர்ந்திருப்பதை எப்போது காண்பாயோ, ஓ! குழந்தாய் {துரியோதனா}, அப்போது, எனது இந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.
ஓ! குழந்தாய் {துரியோதனா}, பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டில் இருந்தும் உனது அறிவு வீழ்ந்து விட்ட பிறகு, இத்தகு ஆபத்து, குருக்களை {கௌரவர்களை} ஏன் அச்சுறுத்தாது? எனது வார்த்தைகளுக்கு நீ செவிசாய்க்கவில்லையெனில், பலரின் படுகொலைகளை நீ கேள்விப்பட வேண்டியிருக்கும். ஏனெனில், குருக்கள் அனைவரும் உனது கருத்தையே ஏற்கின்றனர். {உன்னுடைய கொள்கையையே கௌரவர்கள் அனைவரும் பின்பற்றுகின்றனர்}. ஓ! பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, ராமரால் {பரசுராமரால்} சபிக்கப்பட்டவனும், இழிபிறப்பு கொண்டவனும், சூதனின் மகனுமான கர்ணன், சுபலனின் மகன் சகுனி, அற்பனும், பாவியுமான உனது தம்பி துச்சாசனன் ஆகிய மூவரின் கருத்தே உண்மை என நீ மட்டுமே ஏற்கிறாய்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் {பீஷ்மர்}.
கர்ணன் {பீஷ்மரிடம்}, “ஓ! அருளப்பட்டவரே! பாட்டா, என்னிடம் இத்தகு வார்த்தைகளைப் பயன்படுத்துவது உமக்குத் தகாது. ஏனெனில், சொந்த வகையின் {சுயதர்மத்தின்} கடமைகளில் இருந்தும் வீழாமல், க்ஷத்திரிய வகைக்கான {க்ஷத்திரிய தர்மத்தின்} கடமைகளையும் நான் பின்பற்றி வருகிறேன். அதுதவிர, வேறு என்ன பொல்லாப்பு {துர்க்குணம்} என்னிடம் இருக்கிறது? திருதராஷ்டிரரின் மக்கள் யாரும் அறிய வண்ணம் பாவம் எதையும் நான் செய்யவில்லை. திருதராஷ்டிரரின் மகனுக்கு {துரியோதனனுக்கு} எந்தக் காயத்தையும் {தீங்கையும்} நான் செய்தவனில்லை; மறுபுறம், போரில் நான் பாண்டவர்கள் அனைவரையும் கொல்வேன். முன்பே {நம்மால்} காயம் பட்டவர்களிடம், அறிவுடையோர், எப்படி அமைதியை {சமாதானத்தை} மீண்டும் ஏற்படுத்த முடியும்? மன்னர் திருதராஷ்டிரருக்கும், பேரரசைக் கொண்டவனாதலால், குறிப்பாகத் துரியோதனனுக்கும் ஏற்புடைய அனைத்தையும் எப்போதும் செய்ய வேண்டியது எனது கடமையாகும்” என்றான் {கர்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கர்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், மீண்டும் திருதராஷ்டிரனிடம், ““நான் பாண்டவர்களைக் கொல்வேன்” என்று இவன் {கர்ணன்}, அடிக்கடி தற்பெருமை பேசி வந்தாலும், உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாக்களான} பாண்டவர்களின் பதினாறில் ஒரு பங்குக்கும் இவன் {கர்ணன்} ஈடாக மாட்டான். தீய ஆன்மாக்கள் கொண்ட உன் மகன்களுக்கு நேரப்போகும் பெரும் ஆபத்து, சூதனின் கேடுகட்ட மகனான இவனது {கர்ணனின்} செயல்களாலேயே ஏற்படப்போகிறது என்று அறிந்து கொள்வாயாக.
இவனை {கர்ணனை} நம்பி, தெய்வீக வழித்தோன்றல்களும் {வம்சாவளியினரும்}, எதிரிகள் அனைவரையும் தண்டிப்பவர்களுமான அந்த வீரர்களை {பாண்டவர்களை} உன் முட்டாள் மகனாகிய சுயோதனன் {துரியோதனன்} அவமதித்தான். எனினும், பாண்டவர்கள் ஒவ்வொருவராலும் பழங்காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளில் ஏதாவது ஒன்றுக்கு இணையாகவாவது இந்த இழிந்தவனால் முன்னர்ச் செய்யப்பட்ட கடினமான சாதனை என்ன? {பாண்டவர்களில் ஒருவர் சாதித்த ஏதேனும் ஒரு சாதனைக்கு இணையாகவாவது இந்த இழிந்தவன் என்ன செய்திருக்கிறான்?}
விராடனின் நகரத்தில், பெரும் ஆற்றலை வெளிப்படுத்திய தனஞ்சயனால் {அர்ஜுனனால்}, இவனது அன்பிற்குரிய தம்பி கொல்லப்பட்டதைக் கண்ட பிறகும் இவன் என்ன செய்தான்?
பசுமந்தையைக் காணச் சென்ற {கோஷ யாத்திரை சென்ற} உனது மகன் {துரியோதனன்}, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட போது, காளை போல இப்போது முழங்கும் இந்தச் சூத மகன் {கர்ணன்} எங்கே இருந்தான்?
பீமனும், ஒப்பற்ற பார்த்தனும் {அர்ஜுனனும்}, இரட்டையர்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} தான் அங்கேயும் கந்தர்வர்களுடன் மோதி அவர்களை {கந்தர்வர்களை} வீழ்த்தினர்.
ஓ! பாரதகுலத்தின் காளையே, நீ அருளப்பட்டிருப்பாயாக. எப்போதும் அழகாகவும், எப்போதும் அறம் பொருள் ஆகிய இரண்டையும் கொண்டிராத இவை, இவனால் {கர்ணனால்} சொல்லப்படும் பல தவறான {பொய்} வார்த்தைகளே” என்றார் {பீஷ்மர்}.
பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பரத்வாஜரின் உயர் ஆன்ம மகன் {துரோணர்}, திருதராஷ்டிரனுக்கும், அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கும் உரிய மரியாதைகளைச் செலுத்திவிட்டு “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பாரதர்களில் சிறந்தவரான பீஷ்மர் சொல்வதைச் செய். செல்வத்தில் பேராசை கொண்டோரின் வார்த்தைகளின்படி செயல்படுவது உனக்குத் தகாது. போர் ஏற்படுவதற்கு முன்னரே பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதே சிறந்ததாகத் தெரிகிறது. அர்ஜுனனால் சொல்லப்பட்டு, சஞ்சயனால் மீண்டும் உரைக்கப்பட்ட அனைத்தையும், பாண்டுவின் அந்த மகனால் {அர்ஜுனனால்} சாதிக்க இயலும் என்பதை நான் அறிவேன். ஏனெனில், மூவுலகிலும் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகரான வில்லாளி யாரும் கிடையாது” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் {துரோணர்}.
எனினும், துரோணர் மற்றும் பீஷ்மர் ஆகிய இருவராலும் பேசப்பட்ட வார்த்தைகளை அலட்சியம் செய்த மன்னன் {திருதராஷ்டிரன்}, மீண்டும் பாண்டவர்கள் குறித்துச் சஞ்சயனிடம் கேட்டான். பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோருக்கு உரிய பதிலை மன்னன் {திருதராஷ்டிரன்} தெரிவிக்காத அந்தக் கணமே, வாழ்வின் அனைத்து நம்பிக்கைகளையும் கௌரவர்கள் கைவிட்டனர் {உயிரில் ஆசையற்றவர்களானார்கள்}” என்றார் {வைசம்பாயனர்}.
அம்பையின் மறுபிறவி? – உத்யோக பர்வம் பகுதி 50-பாண்டவர் தரப்பில் யாரெல்லாம் போருக்கு ஆவலாக இருப்பதாகத் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்டது; பாஞ்சாலர்களும் பாண்டவர்களும் ஆவலாக இருப்பதாகச் சஞ்சயன் சொன்னது; யுதிஷ்டிரனுக்கு உதவப் போகும் படைகளைக் குறித்துத் திருதராஷ்டிரன் கேட்டது; சஞ்சயன் காரணமேதுமில்லாமல் மயங்கி விழுந்தது; மீண்டும் உணர்வு பெற்ற சஞ்சயன், யாரெல்லாம் பாண்டவர்களுக்கு உதவுவார்கள், அவர்களது தகுதிகள் என்ன என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, நமக்கு மகிழ்வூட்டும்படி இங்கே கூடியிருக்கும் பெரும்படையைக் குறித்துக் கேள்விப்பட்ட பிறகு, பாண்டவ மன்னனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} என்ன சொன்னான்? வரப்போகும் மோதலைக் கருத்தில் கொண்டு யுதிஷ்டிரன் எப்படிச் செயல்படுகிறான்? ஓ! சூதா {சஞ்சயா}, அவனது உத்தரவைப் பெற விரும்பி, அவனின் {யுதிஷ்டிரனின்} சகோதரர்களிலும், மகன்களிலும் யாரெல்லாம் அவனது {யுதிஷ்டிரனது} முகத்தைப் பார்க்கிறார்கள்? அதே போல, எனது தீய மகன்களால் ஏமாற்றப்பட்டவனும் அறநெறி அறிந்தவனும், அறம்சார்ந்த நடத்தை கொண்டவனுமான அந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்}, யாரெல்லாம், “அமைதியை ஏற்றுக் கொள்ளும்” என்று அறிவுரைசொல்லித் தடுக்கிறார்கள்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “பாண்டுவின் {யுதிஷ்டிரனைத் தவிர்த்த} பிற மகன்களுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரும் யுதிஷ்டிரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். நீர் அருளப்பட்டிரும். அவனும் {யுதிஷ்டிரனும்} அவர்கள் அனைவரையும் தடுத்துக் கொண்டிருக்கிறான். குந்தி மகனான யுதிஷ்டிரனை மகிழ்விப்பதற்காக, பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களுக்குச் சொந்தமான தேர்க்கூட்டங்கள் போர்க்களத்தில் அணிவகுக்கத் தயாராகத் தனித்தனி அணிகளாக வந்து கொண்டிருக்கின்றன.
சூரியன் உதிக்கும்போது பிரகாசிக்கும் வானத்தைப் போன்றதும், ஒளிவெள்ளம் எழுந்தது போன்றதுமான சுடர்மிகும் பிரகாசத்தைக் கொண்ட குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} தாங்கள் கொண்ட கூட்டணியால் பாஞ்சாலர்கள் மகிழ்கிறார்கள். பாஞ்சாலர்கள், கேகயர்கள், ஆடுமாடுகளைக் கவனித்துக் கொள்ளும் பசுமந்தையாளர்களுடன் கூடிய மத்ஸ்யர்கள் ஆகியோர் தாங்களும் மகிழ்ந்து, பாண்டு மகனான யுதிஷ்டிரனையும் மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள். விளையாட்டு மனநிலையுடன் கூடிய பிராமண மற்றும் க்ஷத்திரியப் பெண்களும், வைசியர்களின் மகள்களும், கவசம் தரித்த பார்த்தனை {அர்ஜுனனைக்} காண பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கின்றனர்” என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, நம்முடன் போரிடும் முனைப்புடைய, திருஷ்டத்யும்னன், சோமகர்கள் மற்றும் பிறர் ஆகியோரின் படைகள் அனைத்தையும் குறித்து எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “குருக்களின் மத்தியில் இப்படிக் கேட்கப்பட்ட கவல்கணன் மகன் {சஞ்சயன்}, ஒருக்கணம் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் நீண்ட ஆழமான பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விடுவதாகத் தெரிந்தது. திடீரென எந்த வெளிப்படையான காரணமுமின்றி, அவன் {சஞ்சயன்} மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான்.
பிறகு அந்த மன்னர்கள் கூட்டத்தில் விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சஞ்சயன் உணர்வற்றுத் தரையில் விழுந்துவிட்டான். தன் அறிவு மறைக்கப்பட்டு, உணர்வற்றிருக்கும் அவனால் ஒரு வார்த்தையும் உச்சரிக்க இயலவில்லை” என்று உரக்கச் சொன்னான் {விதுரன்}.
திருதராஷ்டிரன், “பெரும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான குந்தியின் மகன்களைச் சஞ்சயன் கண்டிருக்கிறான். மனிதர்களில் புலிகளான அவர்களின் {பாண்டவர்களைக் கண்டதன்} விளைவாகவே அவனது மனம் பெரும் கவலையால் நிறைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மீண்டும் உணர்வையும் தேறுதலையும் அடைந்த சஞ்சயன், அந்தச் சபையில் கூடியிருந்த குருக்களின் கூட்டத்திற்கு மத்தியில் இருந்த மன்னன் திருதராஷ்டிரனிடம், “ஓ! மன்னர்களுக்கு மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில், மத்ஸ்ய மன்னனின் இடத்தில் வாழ்ந்து, அங்கே இருந்த கட்டுப்பாடுகளின் விளைவாக உடல் மெலிந்திருந்த பெரும் போர்வீரர்களான குந்தியின் மகன்களை நான் கண்டேன்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யார் யாருடன் சேர்ந்து பாண்டவர்கள் உமக்கு எதிராகப் போரிடுவார்கள் என்பதைக் கேட்பீராக.
வீரனான அந்தத் திருஷ்டத்யும்னனைத் தங்கள் கூட்டாளியாகக் கொண்டு, அவர்கள் {பாண்டவர்கள்} உம்மை எதிர்த்து போரிடுவார்கள். அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டவனும் {தர்மாத்மாவும்}, கோபத்தாலோ, அச்சத்தாலோ, மயக்கத்தாலோ, செல்வத்துக்காகவோ, வீண் தர்க்கத்திற்காகவோ ஒருபோதும் உண்மையை {சத்தியத்தைக்} கைவிடாதவனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறம்சார்ந்த விவகாரங்களில் அனைத்து அதிகாரத்தையும் பெற்றவனும், அறம்பயில்வோரில் சிறந்தவனும், ஒருபோதும் யாரையும் எதிரியாக்காதவனாக இருப்பவனுடன் {யுதிஷ்டிரனுடன்} சேர்ந்து பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவர்.
கரங்களின் வலிமையால் இவ்வுலகில் தனக்கு இணையில்லாதவனும், தனது வில்லைக் கொண்டு அனைத்து மன்னர்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தவனும், காசி, அங்கம், மகதம், கலிங்கம் ஆகிய அனைத்து மக்களையும் பழங்காலத்தில் வீழ்த்தியவனுமான பீமசேனனோடு சேர்ந்து பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவர்.
உண்மையில், எவனது வலிமையால் பாண்டுவின் நான்கு மகன்களும் (எரிந்து கொண்டிருந்த) அரக்கு மாளிகையில் இருந்து வெளிப்பட்டு, விரைந்து பூமியில் இறங்கினார்களோ, அவனுடன் {பீமனுடன்}; மனித ஊனுண்ணியான ஹிடிம்பனிடம் இருந்து அவர்களை மீட்பற்கு காரணமாக இருந்த அந்தக் குந்தியின் மகனான விருகோதரனுடன் {பீமனுடன்}; யக்ஞசேனன் மகள் {துருபதன் மகள் திரௌபதி}, ஜெயத்ரதனால் கடத்தப்பட்ட போது அவர்களின் {பாண்டவர்களின்} புகலிடமான அந்தக் குந்தியின் மகனான விருகோதரனுடன் {பீமனுடன்}; உண்மையில், வாரணாவதத்தின் நெருப்பில் இருந்து அங்கே கூடியிருந்த பாண்டவர்களை மீட்ட அந்தப் பீமனுடன் சேர்ந்து அவர்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
கிருஷ்ணையை {திரௌபதியை} மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, மேடு பள்ளம் நிறைந்த, பயங்கரமான கந்தமாதன மலையில் ஊடுருவி எவன் குரோதவசர்களைக் கொன்றனோ, எவனுடைய கரங்களுக்குப் பத்தாயிரம் {10,000} யானைகளின் பலம் கொடுக்கப்பட்டதோ அந்தப் பீமசேனனோடு சேர்ந்து (அவனைத் துணையாகக் கொண்டு) பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, பழங்காலத்தில் போரில் புரந்தரனையே {இந்திரனையே} எந்த வீரன் வென்றானோ; தேவர்களின் தேவனும் {தேவாதி தேவனும்}, திரிசூலம் தாங்குபவனும், உமையின் கணவனும், மலைகளைத் தனது வசிப்பிடமாகக் கொண்டவனுமான மகாதேவனையே {சிவனையே} போரில் எவன் மனநிறைவு கொள்ளச் செய்தானோ, பூமியின் மன்னர்கள் அனைவரையும் அடக்கிய போர்வீரர்களில் முதன்மையான அந்த விஜயனுடன் {அர்ஜுனனுடன்} சேர்ந்து (அவனைத் துணையாகக் கொண்டு) பாண்டவர்கள் உம்மோடு போரில் மோதுவார்கள்.
மிலேச்சர்கள் நெருக்கமாகவுள்ள மேற்கு உலகம் முழுமையையும் எவன் வீழ்த்தினானோ அந்த அற்புத வீரனான நகுலன், பாண்டவர்கள் கூடாரத்தில் தற்போது உள்ளான். அழகிய வீரனும், நிகரற்ற வில்லாளியுமான அந்த மாத்ரியின் மகனைக் {நகுலனைக்} கொண்டு, ஓ! கௌரவ்யா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
காசி, அங்கம், கலிங்கம் ஆகியவற்றில் உள்ள போர்வீரர்களைப் போரில் வீழ்த்திய அந்தச் சகாதேவனைக் கொண்டு பாண்டவர்கள் உம்மோடு மோதுவார்கள். இந்தப் பூமியில், அஸ்வத்தாமன், திருஷ்டக்கேது, ருக்மி மற்றும் பிரத்யும்னன் ஆகிய நான்கு மனிதர்களை மட்டுமே தனது சக்திக்கு நிகராகக் கொண்டவனும், வயதில் இளையவனும், மனிதர்களில் வீரனும், மாத்ரியின் இதயத்தை மகிழ்விப்பவனுமான அந்தச் சகாதேவனிடம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழிவைத் தரும் போரில் நீர் ஈடுபட வேண்டியிருக்கும்.
எவள் பழங்காலத்தில் காசி மன்னனின் மகளாக {அம்பையாக} வாழ்ந்து, தவநோன்புகள் பயின்றாளோ; ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, எவள் அடுத்தப் பிறவியில் பீஷ்மரின் அழிவை நிர்ணயிக்க விரும்பினாளோ, அவள் {அம்பை}, பாஞ்சாலனின் {துருபதனின்} மகளாக {சிகண்டினியாகப்} பிறவி எடுத்து, பிறகு தற்செயலாக ஆணாக {சிகண்டியாக} மாறியிருக்கிறாள். ஓ மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, இப்படி, எவன் இரு பாலினங்களின் நன்மை தீமைகளை அறிந்திருக்கிறானோ, அவனே கலிங்கர்களிடம் போரில் மோதிய பாஞ்சால இளவரசன் {சிகண்டி} ஆவான். அனைத்து ஆயுதங்களிலும் திறன்பெற்ற அந்தச் சிகண்டியைக் கொண்டு, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள். பீஷ்மரின் அழிவுக்காக, ஒரு யக்ஷனால் எவள் ஆணாக {சிகண்டினியாக இருந்து சிகண்டியாக} மாற்றப்பட்டாளோ, அந்த வல்லமை மிக்க வில்லாளியைச் {சிகண்டியைக்} கொண்டு பாண்டவர்கள் உம்மோடு போரிடுவார்கள்.
வலிமைமிக்க வில்லாளிகளும், சகோதரர்களும், ஐந்து கேகய இளவரசர்களுமான அந்தக் கவசம் பூண்ட வீரர்கள் அனைவரையும் கொண்டு பாண்டவர்கள் உம்மோடு போரிடுவார்கள்.
நீண்ட கரங்கள் கொண்ட போர்வீரனும்; ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பெரும் வேகம், புத்திசாலித்தனம் ஆகியவற்றையும், கலங்கடிக்க முடியா ஆற்றலைக் கொண்டவனும், விருஷ்ணி குலத்தின் சிங்கமுமான யுயுதானனிடம் {சாத்யகியிடம்} நீர் போரிட வேண்டியிருக்கும்.
உயர் ஆன்மா கொண்ட பாண்டவர்களுக்கு ஒரு காலத்தில் புகலிடமாக இருந்த விராடனுடன் நீர் போரில் மோத வேண்டியிருக்கும்.
காசியின் தலைவனும், வாராணசியை ஆள்பவனுமாக இருப்பவன் அவர்களது நண்பனாகியிருக்கிறான்; அவனோடு சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
வயதில் இளையோரானாலும், போரில் ஒப்பற்றவர்களும், கடும் நஞ்சு கொண்ட பாம்புகளைப் போல அணுகப்பட முடியாதவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான {மகாத்மாக்களுமான} திரௌபதியின் மகன்களோடு சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
சக்தியில் கிருஷ்ணனைப் போன்றவனும், சுயக்கட்டுப்பாட்டில் யுதிஷ்டிரனைப் போன்றவனுமான அந்த அபிமன்யுவுடன் சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
போர்க்குணமிக்கவனும், பெரும் புகழைக் கொண்டவனும், ஒப்பீடுக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்டவனும், போர்க்களத்தில் சீறும்போது தாக்குப்படிக்கப்பட முடியாதவனும், சேதிகளின் {சேதிநாட்டு} மன்னனும், ஓர் *அக்ஷௌஹிணி படையுடன் பாண்டவர்களுடன் சேர்ந்திருப்பவனும், சிசுபாலனின் மகனுமான திருஷ்டகேதுவுடன் சேர்ந்து பாண்டுவின் மகன்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.-தேவர்களுக்கு வாசவனைப் {இந்திரனைப்} போல, பாண்டவர்களின் புகலிடமாக இருக்கும் வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} சேர்ந்து, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சேதிகள் {சேதி நாட்டு} மன்னனுடைய {திருஷ்டகேதுவின்} சகோதரனான சரபன், அவனோடு கூடிய {மற்றுமொரு சகோதரன்} கரகார்ஷன் [1] ஆகிய இருவரைக் கொண்டும் பாண்டவர்கள் உமக்கு எதிராகப் போரிடுவார்கள்.(சகோதரர்களான திருஷ்டகேது, சுகேது, சரபன், கரகார்ஷன் ஆகியோர் சிசுபாலனின் மகன்களாவர். சிசுபாலன், வசுதேவரின் தங்கை சுரூதகீர்த்தியின் மகனாவான். குந்தியும், சிசுபாலனின் அன்னையும் உடன் பிறந்தோராவார்)போரில் நிகரற்றவர்களும், ஜராசந்தனின் மகன்களுமான சகாதேவன், ஜயத்சேனன் ஆகிய இருவரும் பாண்டவர்களுக்காகப் போரிடுவது எனத் தீர்மானித்துள்ளனர்.
பெரும் படை பின்தொடர வரும் பெரும் வலிமை கொண்ட துருபதனும், தனது உயிரைத் துச்சமாக மதித்துப் பாண்டவர்களுக்காகப் போரிடத் தீர்மானித்திருக்கிறான்.
கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இருதிசை நாடுகளில் இருந்து வந்திருக்கும் இவர்களையும், பிற நூற்றுக்கணக்கான மன்னர்களையும் நம்பியே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் போருக்குத் தயாராக இருக்கிறான்” என்றான் {சஞ்சயன்}.
பீமனை நினைத்தால் என் இதயம் நடுங்குகிறது? – உத்யோக பர்வம் பகுதி 51-பீமனைக் குறித்த தனது அச்சத்தைத் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் தெரிவிப்பது; பீமனின் தோற்றத்தையும் குணத்தையும் சொல்வது; சிறு வயதிலிருந்தே பீமன் துரியோதனனிடம் கொண்ட பகையைச் சொல்வது; இந்த ஆபத்து நேர்ந்ததற்கான காரணங்களைச் சொல்லி வருந்துவது; பீமன் தனது மகன்கள் அனைவரையும் கொல்வான் எனச் சொன்னது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “உன்னால் பெயர் சொல்லப்பட்ட அனைவரும் உண்மையில் பெரும் வீரர்களே. ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்தாலும் கூடத் தனியனான பீமன் ஒருவனுக்குத்தான் சமமாக இருப்பார்கள்.
ஓ! குழந்தாய் {சஞ்சயா}, வெஞ்சினம் கொண்ட பீமனிடம் நான் கொண்ட அச்சம், கோபமுற்றிருக்கும் புலியிடம் கொழுத்த மான் கொண்டதைப் போன்று மிகப் பெரியது. ஓ! குழந்தாய் {சஞ்சயா}, சிங்கத்தைக் கண்டு அஞ்சும் பிறவகை விலங்கைப் போல விருகோதரனுக்கு {பீமனுக்கு} அஞ்சி, ஆழமான வெப்பப் பெருமூச்சுகளைவிட்டபடி எனது இரவுகள் அனைத்தையும் தூக்கமின்றிக் கடத்தி வருகிறேன்.
வலிய கரங்களும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான சக்தியும் கொண்டவனுமான அவனைப் {பீமனைப்} போரில் தாக்குப்பிடிக்க {எதிர்கொள்ளக்} கூடிய ஒருவனைக்கூட நான் இந்த மொத்தப் படையிலும் காணவில்லை.
வெஞ்சினம் கொண்டவனும், தீர்மானமான பகைமை கொண்டவனும், கோபவெறி கொண்டவனும், சாய்ந்த பார்வைகளை வீசுபவனும், இடிபோன்ற குரலில் பேசுபவனுமான அந்தக் குந்தி மற்றும் பாண்டுவின் மகன் {பீமன்} விளையாட்டுக்குக் கூடச் சிரிக்க மாட்டான்.
பெரும் மூர்க்கமும், பெரும் துணிவும், நீண்ட கரங்களும், பெரும் வலிமையும் கொண்ட அவன் {பீமன்}, போர்க்களத்தில், எனது மூட மகன்களில் ஒருவனைக் கூட உயிரோடு விட மாட்டான். உண்மையில், போர்க்களத்தில் தன் கதாயுதத்தைச் சுழற்றும் குருக்களில் காளையான அந்த விருகோதரன் {பீமன்}, கைகளால் கதாயுதம் கொண்ட இரண்டாவது யமனைப் போல, கனத்த ஆபத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் எனது மகன்கள் அனைவரையும் கொன்றுவிடுவான்.
அந்தணச் சாபம் போல உயர்த்திப் பிடிக்கப்பட்டதும், எஃகால் செய்யப்பட்டதும், எட்டுப் பக்கங்களைக் கொண்டதுமான அவனது பயங்கரக் கதாயுதத்தை இப்போதும் நான் {மனதால்} காண்கிறேன்.
மான்மந்தைக்கு {மான்கூட்டத்திற்கு} மத்தியில் பெரும் வலிமை கொண்ட ஒரு சிங்கத்தைப் போல, எனது துருப்புகளுக்கு மத்தியில் பீமன் உலா வருவான். (அவனது சகோதரர்களுக்கு மத்தியில்) அவன் {பீமன்} மட்டுமே எப்போதும் என் மகன்கள் மீது தனது பலத்தைக் கொடூரமாகக் காட்டியிருக்கிறான். பெருவேட்கையுடன் {பெரும் பசியுடன்} உணவை உண்பவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான அவன் {பீமன்}, குழந்தைப் பருவம் முதலே என் பிள்ளைகளிடம் பகைமையுடன் நடந்து வருகிறான்.
குழந்தைப் பருவத்திலேயே கூட, அவனுடன் {பீமனுடன்} (விளையாட்டாக) சண்டையிடுகையில், துரியோதனனும் எனது பிற மகன்களும் யானை போன்ற அந்தப் பீமனால் எப்போதும் தரையில் அடிக்கப்பட்டார்களாகையால் (அதை நினைத்துப் பார்க்கையில்) எனது இதயம் நடுங்குகிறது. ஐயோ, அவனது {பீமனது} வலிமையால் எனது மகன்கள் எப்போதும் ஒடுக்கப்பட்டார்களே, பயங்கர ஆற்றல் கொண்ட அந்தப் பீமனே இந்த முறிவுக்குக் காரணமாக இருந்திருக்கிறான்.
கோப வெறி கொண்டவனான பீமன், படையின் முன்னணியில் நின்று போரிட்டு, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களாலான எனது மொத்த படையையும் விழுங்குவதை இப்போதுகூட நான் {மனதால்} காண்கிறேன். ஆயுதங்களில் துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் நிகரான அவனது {பீமனின்} வேகம் காற்றின் வேகத்துக்கு நிகரானது. கோபத்தில் மகேஸ்வரனைப் {சிவனைப்} போன்றவனும், போரில் வெஞ்சினமும், பயங்கரமும் கொண்டவனுமான அந்த வீரனைக் {பீமனைக்} கொல்ல, ஓ! சஞ்சயா, இங்கே எவனிருக்கிறான்?
இத்தகு சக்தியைக் கொண்டவனும், பகைவர்களைக் கொல்பவனுமான அவனால் {பீமனால்}, அப்போதே எனது மகன்கள் கொல்லப்படவில்லை என்பதையே நான் பெரிய ஆதாயமாக நினைக்கிறேன். முற்காலத்திலேயே, பயங்கர வலிமை கொண்ட ராட்சசர்களையும், யக்ஷர்களையும் கொன்ற அந்தப் போர் வீரனின் {பீமனின்} மூர்க்கத்தனத்தைப் போரில் எந்த மனிதனால் தாக்குப்பிடிக்க முடியும்?
ஓ! சஞ்சயா, அவனது {பீமனது} குழந்தைப்பருவத்திலேயே கூட அவன் {பீமன்} எப்போதும் எனது முழுக் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இப்போது எனது தீய மகன்களால் காயப்படுத்தப்பட்டதால், அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, எனது கட்டுப்பாட்டுக்குள் எப்படி இருப்பான்? கொடூரமும், மிகுந்த வெஞ்சினமும் கொண்ட அவன் {பீமன்} உடைந்து போனாலும் போவான், வளைய மாட்டான். {அழியத் துணிவான், வணங்க மாட்டான்}. சாய்ந்த பார்வையும், சுருங்கிய புருவமும் கொண்ட அவன் {பீமன்}, அமைதியடையும்படி, அவனை {பீமனை} எப்படி இணங்கச் செய்ய முடியும்?
வீரமும், ஒப்பற்ற வலிமையும், சிவந்த நிறமும், தெளிவில்லாத உச்சரிப்புகள் கொண்ட பேச்சும், தேன் நிறக் கண்களும், பனைமரம் போன்ற உயரமும் கொண்டவனும், அர்ஜுனனைவிடக் கட்டை விரலளவு உயர்ந்தவனுமான அந்தப் பாண்டுவின் இரண்டாவது மகன் {பீமன்}, வேகத்தில் குதிரைகளையும், பலத்தில் யானைகளையும் விஞ்சுபவனாவான். உருவம், வலிமை ஆகியவற்றைப் பொறுத்தவரை, அவன் {பீமன்} குழந்தைப் பருவத்திலேயே இப்படித்தான் இருந்தான் என்பதை வியாசரின் உதடுகளால் முற்காலத்திலேயே நான் கேட்டிருக்கிறேன்.
பயங்கரமானவனும், கொடூர வலிமை கொண்டவனுமான அவன் {பீமன்}, கோபம் கொண்டால், போரில் தனது இரும்பு கதாயுதத்தைக் கொண்டு, தேர்களையும், யானைகளையும், மனிதர்களையும், குதிரைகளையும் அழித்துப் போடுவான். எப்போதும் வெஞ்சினத்துடனும், மூர்க்கத்துடனும் இருக்கும் அடிப்பவர்களில் முதன்மையான அவனது {பீமனது} விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்ட வகையில், முன்பே அவன் {பீமன்} என்னால் அவமதிக்கப்பட்டிருக்கிறான்.
நேரானதும், எஃகால் ஆனதும், தடித்ததும், அழகிய பக்கங்களைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நூறுபேரைக் கொல்லவல்லதும், எதிரியின் மீது வீசப்படும் போது பயங்கர ஒலியை உண்டாக்குவதுமான அவனது {பீமனது} கதாயுத்தை, ஐயோ, எனது மகன்கள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்?
ஓ! குழந்தாய் {சஞ்சயா}, உண்மையில் கரைகளற்றதும், அளவிலா ஆழமுடையதும் அம்புகளின் பாய்ச்சல் போல வேகமான நீரோட்டங்கள் நிறைந்ததுமான பீமன் எனும் அணுகமுடியாத கடலை, எந்தப் படகும் இன்றி, ஐயோ, எனது முட்டாள் மகன்கள், கடக்க விரும்புகிறார்களே. உண்மையில் முட்டாள்களாக இருந்து கொண்டு, தங்கள் அறிவைக் குறித்துத் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கும் எனது பிள்ளைகள், ஐயோ, என்னதான் நான் கதறினாலும் எனக்குச் செவிசாய்க்க மறுக்கிறார்களே. தேனை மட்டுமே காணும் அவர்கள் தங்கள் முன்னால் இருக்கும் பயங்கரமான வீழ்ச்சியைக் {பெரும் பள்ளத்தைக்} காணாதிருக்கிறார்களே.
மனித உருவத்தில் இருக்கும் மரணத்துடன் {காலனுடன்_பீமனுடன்} போரிட விரைவோர், சிங்கத்தின் பார்வைக்குள் இருக்கும் விலங்குகளைப் போல, தெய்வத்தால் நிச்சயமாக அழிக்கப்படுவார்கள். முழுதாக நாலு முழ நீளமும், ஆறு பக்கங்கங்கள் கொண்டதும், பெரும் வலிமை மற்றும் மரணத்தீண்டலைக் கொண்டதுமான தனது கதாயுதத்தைப் பொறியில் இருந்த அவன் {பீமன்} வீசினால், ஓ! குழந்தாய் {சஞ்சயா}, அதன் தூண்டுவிசையை எனது மகன்கள் எவ்வாறு தாங்குவார்கள்?
தனது கதாயுதத்தைச் சுழற்றி, அதைக் கொண்டு (பகையணியின்) யானைகளின் தலைகளை உடைத்து, தனது நாவால் வாயின் ஓரங்களை நக்கிக் கொண்டு, நீண்ட மூச்சுகளை இழுத்து விட்டபடி, வலிமைமிக்க யானைகளை எதிர்த்து அவன் {பீமன்} விரைந்து ஓடும்போதும், தன்னை எதிர்த்து வலிமையுடன் விரைந்து வரும் அந்த மதங்கொண்ட விலங்குகளின் பிளிறல்களுக்கு எதிர் கர்ஜனை செய்து கொண்டு, அவன் {பீமன்} விரைந்து வரும்போது, தேர்க்கூட்டங்களின் நெருக்கத்தில் வந்து போர்வீரர்களில் தலைமையானவர்களின் மீது சரியான குறியை வைத்துக் கொல்லும்போதும், சுடர்மிகும் நெருப்பென இருக்கும் அவனிடம் {பீமனிடம்} இருந்து, எனது அணியில் எந்த மனிதன் தப்புவான்?
எனது படைகளை நசுக்கி, அவற்றினூடே பாதையை அமைத்துக் கொள்ளும் அந்த வலிய கரங்கள் கொண்ட வீரன் {பீமன்}, நடனம் செய்து கொண்டே, யுகத்தின் முடிவில் ஏற்படப்போகும் உலகளாவிய அழிவைக் காட்சிப்படுத்துவான். மதங்கொண்ட யானை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரங்களை நசுக்குவதைப் போல, போர்க்களத்தில், விருகோதரன் {பீமன்}, எனது மகன்களின் படையணிகளுக்குள் மூர்க்கமாக ஊடுருவுவான்.
தங்கள் தேர்கள், தேரோட்டிகள், குதிரைகள், கொடிக் கம்பங்கள் ஆகிவற்றை என் போர்வீரர்களை இழக்கச் செய்தும், தேர்மீதும், யானைகளின் முதுகின் மீதும் இருந்து போரிடும் வீரர்கள் அனைவரையும் துன்புறுத்தியும், ஓ! சஞ்சயா, தன் கரைகளில் நிற்கும் பல்வேறு மரங்களைப் பிடுங்கிச் செல்லும் வேகமான நீரூற்றுடைய கங்கையைப் போல, எனது மகன்களின் துருப்புகளைப் போர்க்களத்தில் அந்த மனிதர்களில் புலி {பீமன்} நொறுக்குவான். ஓ! சஞ்சயா, எனது மகன்களும், அவர்களது தொண்டர்களும் மற்றும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள மன்னர்களும் என அனைவரும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பாதிப்படைந்து, பல்வேறு திசைகளுக்குப் பறந்தோடுவார்கள். ஓ! சஞ்சயா, முற்காலத்தில் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உதவியைக் கொண்டு, வீரம் மிகுந்த மன்னனான ஜராசந்தனின் அந்தப்புரத்திற்குள்ளேயே நுழைந்து, பூமாதேவியைத் தனது கட்டுக்குள் முழுதும் கொண்டு வந்து, அந்த **மகதத்தின் தலைவனை, அந்தப் பலமிக்க ஜராசந்தனை வீழ்த்தியது இந்தப் பீமனே. பீஷ்மரின் ஆற்றலின் விளைவாகக் கௌரவர்களும், தங்கள் கொள்கையின் {தந்திரத்தின்} விளைவாக அந்தகர்களும் விருஷ்ணிகளும், நற்பேறின் காரணமாக மட்டுமே அவனால் {ஜராசந்தனால்} வீழ்த்தப்படாமல் இருந்தனர். அப்படிப்பட்ட மன்னனை {ஜராசந்தனை}, எந்த ஆயுதங்களுமின்றி, தனது கரங்களின் வலிமையை மட்டுமே கொண்டு பாண்டுவின் வீர மகன் {பீமன்} கொன்றதைக் காட்டிலும் வேறு என்ன அற்புதம் இருக்க முடியும்?
வலிமையான கரங்களைக் கொண்ட பாண்டுவின் வீர மகன் {பீமன்}, எந்த ஆயுதமும் இன்றி, அப்படிப்பட்ட மன்னனை {ஜராசந்தனை} அணுகி, நொடிப் பொழுதில் அவனைக் கொன்றதைவிட வேறு எது அற்புதம் மிகுந்ததாக இருக்க முடியும்?
ஆண்டாண்டுகாலமாகத் திரட்டப்பட்ட நஞ்சைக் கொண்டிருக்கும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போல, ஓ! சஞ்சயா, போர்க்களத்தில், தனது கோபமெனும் நஞ்சை எனது மகன்கள் மீது பீமன் உமிழ்வான்! தேவர்களில் முதன்மையானவனான பெரும் இந்திரன், தனது வஜ்ரத்தைக் கொண்டு தானவர்களை அடித்தது போல, தனது கரங்களில் கதாயுதத்தைக் கொண்டிருக்கும் பீமசேனன், எனது மகன்கள் அனைவரையும் கொல்வான்!
எதிர்க்கப்படவோ தடுக்கப்படவோ முடியாதவனும், கடும் உத்வேகமும் சக்திகளும் கொண்டனும், தாமிர நிறக் கண்களைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்}, என் மகன்கள் மீது விழுவதை நான் இப்போது கூட {மனதால்} காண்கிறேன். கதாயுதமோ வில்லோ இல்லாமல், தேரோ, கவசமோ இல்லாமல், தனது வெறும் கரங்களைக் கொண்டே போரிடும் இவனது {பீமனின்} எதிரில் எந்த மனிதனால் நிற்க முடியும்?
புத்திசாலியான பீமனின் சக்தியை, பீஷ்மர், இருபிறப்பாளரான {பிராமணரான} துரோணர், சரத்வானின் மகனான கிருபர் ஆகியோர் என்னைப் போலவே அறிந்திருக்கின்றனர். உன்னதமானோரின் {ஆரியர்களின்} பயிற்சியை {நடத்தையை} அறிந்த இந்த மனிதர்களில் காளைகள் {இந்த மூவரும்}, போர்க்களத்தில் மரணத்தை விரும்பி, நமது படையின் முன்னணியில் தங்கள் நிலையை அமைத்துக் கொள்வார்கள்.
போர்க்களத்தில் பாண்டவர்களின் வெற்றியை {மனதால்} கண்டாலும், நான் எனது மகன்களை இன்னும் தடுக்காமல் இருக்கும்படியால், எல்லா இடங்களிலும், குறிப்பாக ஆண்களின் வழக்கில் விதி சக்தி வாய்ந்தது என்றே ஆகிறது. எனது இந்த வலிமைமிக்க வில்லாளிகள் {பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகிய மூவரும்}, சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பழங்காலத்துப் பாதையில் நடக்க விரும்பி, உலகப்புகழை கவனத்தில் கொண்டு, போர்க்களத்தில் தங்கள் உயிர்களையே கூட விடுவார்கள்.
ஓ! குழந்தாய் {சஞ்சயா}, எனது மகன்கள் எப்படிப் பீஷ்மருக்குப் பேரன்களும், துரோணருக்கும், கிருபருக்கும் சீடர்களும் ஆவார்களோ, அதே போலப் பாண்டவர்களும் இருப்பதால், அவர்கள் அனைவரும் {என் மகன்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும்} இந்த வலிமைமிக்க வில்லாளிகளுக்கு ஒன்றே. ஓ! சஞ்சயா, நாம் இந்த மூன்று மதிப்பிற்குரியவர்களுக்கும் செய்யும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறிய சேவைகளால், தாங்கள் கொண்டுள்ள உன்னத மனநிலையின் காரணமாக அதை {அவற்றுக்குப் பதிலுதவிகளை} அவர்கள் நிச்சயம் திருப்பித் தருவார்கள்.
ஆயுதங்களை எடுத்து, க்ஷத்திரிய பயிற்சிகளை {நடத்தைகளை} மேற்கொள்ள விரும்பும் க்ஷத்திரியர்களுக்குப் போர்க்களத்தில் மரணம் என்பது உண்மையில் நன்மை, தகுதி {புண்ணியம்} ஆகிய இரண்டையும் தரும் என்று சொல்லப்படுகிறது.
எனினும், பாண்டவர்களுக்கு எதிராகப் போரிடப்போகும் அனைவருக்காகவும் நான் அழுகிறேன். முன்பே விதுரனால் முன்னறிவோடு காணப்பட்ட அந்தப் பெரும் ஆபத்து இப்போது வந்திருக்கிறது. ஓ! சஞ்சயா, அறிவால் துயரைக் களைய முடியாது என்றே தெரிகிறது; மறுபுறம், துயர் மேலிடும்போது அஃது அறிவை விலக்குகிறது.
உலகக் கவலைகள் அனைத்திலும் இருந்து விடுதலை பெற்றவர்களும், அண்டத்தின் அனைத்து விவகாரங்களில் இருந்து தனியே நின்று அதைக் காண்பவர்களுமான முனிவர்களே கூட, செழிப்பினாலும், வறுமையினாலும் பாதிக்கப்படும்போது, மகன்கள், அரசு, மனைவிகள், பேரர்கள், உறவினர்கள் போன்ற ஆயிரம் காரியங்கள் மீது எனது பற்றை {பாசத்தை} வைத்திருக்கும் நான் வருந்துவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
இதுபோன்ற ஒரு பயங்கரமான ஆபத்தில் சிக்கப்போகும் எனக்கு, என்ன நன்மை காத்திருக்க முடியும்? ஒவ்வொரு சூழ்நிலையையும் நினைத்துப் பார்க்கையில், நான் குருக்களின் அழிவையே உறுதியாகக் காண்கிறேன். பகடை ஆட்டமே, குருக்களின் இந்தப் பெரும் ஆபத்துக்குக் காரணமாகத் தெரிகிறது.
ஐயோ, செல்வத்தில் விருப்பமுள்ள மூடன் துரியோதனனின் மயக்கத்தால் செய்யப்பட்ட பாவம் இஃது; அனைத்தையும் கொண்டு வருவதும் எப்போதும் விரைந்து வருதுமான காலத்தின் விரும்பத்தகாத விளைவே இது {காலத்தின் விபரீதம் இது} என நான் நம்புகிறேன். காலச்சக்கரத்தில் கட்டுண்டிருக்கும் அதன் விளிம்பைப் {சக்கரத்தின் ஓரங்களைப்} போல, நானும் அதில் இருந்த தப்ப இயலாதவனாக இருக்கிறேன்.
ஓ! சஞ்சயா, எனக்குச் சொல். நான் எங்கே செல்வேன்? நான் என்ன செய்வேன்? நான் அதை எப்படிச் செய்வேன்?
இந்த மூடக் கௌரவர்கள் அனைவரும் அழியப் போகிறார்கள். அவர்களுக்கான காலம் வந்துவிட்டது. எனது நூறு மகன்களும் கொல்லப்படும்போது, பெண்களின் புலம்பலை {அழுகுரலை} ஆதரவற்ற நிலையில் நான் கேட்க வேண்டியிருக்கும். ஓ!, எனக்கு மரணம் எப்படி ஏற்படும்?
கோடை காலத்தில் நெருப்பு, காற்றால் தூண்டப்பட்டுக் காய்ந்த புற்களை எரிப்பதைப் போல, கையில் கதாயுதம் கொண்ட பீமன், அர்ஜுனனுடன் சேர்ந்து, எனது பக்கத்தில் உள்ள அனைவரையும் கொல்வான்!
கவனமற்ற கர்ணனும்! தோல்வியற்ற அர்ஜுனனும்! – உத்யோக பர்வம் பகுதி 52-அர்ஜுனனைக் கொண்டவன் வெற்றிப் பெறுவான் என்று திருதராஷ்டிரன் சொல்வது; அர்ஜுனனின் ஆயுத வலிமை, போர்த்திறமை ; கர்ணனும், துரோணரும் ஏன் அர்ஜுனனை வெல்ல மாட்டார்கள்? இது வரை தோற்காத அர்ஜுனன்; அர்ஜுனன், கிருஷ்ணன், காண்டீவம் ஆகிய மூன்று சக்திகள்; அர்ஜுனனின் ஆற்றலால் பீதியடையப்போகும் கௌரவப்படை ஆகியவற்றைப் பற்றித் திருதராஷ்டிரன் சொல்வது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “எவன் எப்போதுமே பொய்பேசாதவன் {யுதிஷ்டிரன்} என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ, எவன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தனக்காகப் போரிடக் கொண்டிருக்கிறானோ, அவனால் {யுதிஷ்டிரனால்} மூன்று உலகங்களின் ஆட்சியையும் பெற முடியும்.
நாளுக்கு நாள் சிந்தித்தாலும், போர்க்களத்தில் தனது தேரில் முன்னேறி, காண்டீவந்தாங்கியை {அர்ஜுனனை} எதிர்க்கக்கூடிய எந்தப் போர்வீரனையும் என்னால் காணமுடியவில்லை. அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, இறகு படைத்த கணைகளையும், நாளீகங்களையும் {Nalikas}, போர்வீரர்களின் மார்பைத் துளைக்கவல்ல காணிகளையும் அடித்தால், அந்தப் போரில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிரி ஒருவனும் அங்கே இருக்கமாட்டான்.
ஆயுதங்களை அறிந்த வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவர்களும், போரில் ஒப்பற்றவர்களும், மனிதர்களில் காளைகளுமான துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய வீரர்கள், அவனை {அர்ஜுனனைத்} தாக்குப் பிடித்தாலும், அதன் முடிவு ஐயத்திற்கிடமானதே. ஆனால் வெற்றி எனதாகாது என்பதை நான் உறுதியாக நினைக்கிறேன்.
கருணை மற்றும் கவனமற்ற தன்மை ஆகிய இரண்டையும் கர்ணன் கொண்டிருக்கிறான். முதிர்ந்தவராகவும், இந்த மாணவனிடம் {அர்ஜுனனிடம்} பாசம் கொண்டவராகவும் ஆசான் {துரோணர்} இருக்கிறார். அதேவேளையில், திறன் மற்றும் பலம் கொண்டவனாகவும், (வில்லில்) உறுதியான பிடியைக் கொண்டவனாகவும் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கிறான். அவர்களுக்குள் ஏற்படும் மோதல், யாருக்கும் தோல்வி என்ற முடிவை எட்டாத {முடிவை எட்டவே முடியாத} வகையில் பயங்கரமானதாக இருக்கும். ஆயுதங்களின் அறிவையும், வீரத்தையும் கொண்ட அவர்கள் அனைவரும் {கர்ணன், துரோணர் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} பெரும் புகழைப் பெற்றவர்களாவர். தேவர்களின் ஆட்சியையே விட்டாலும் விடுவார்களேயன்றி, தாங்கள் வெற்றி அடையும் வாய்ப்பை அவர்கள் விட மாட்டார்கள். இந்த இருவர் (துரோணரும், கர்ணனும்} அல்லது பல்குனன் {அர்ஜுணன்} ஆகியோரில் எவர் வீழ்ந்தாலும் அமைதி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எனினும், பல்குனனைக் கொல்லவோ, வீழ்த்தவோ இயன்றவர்கள் எவனும் இல்லை.
ஐயோ, எனது மூட மகன்களின் மீது அவன் {அர்ஜுனன்} கொண்டிருக்கும் கோபத்தை எப்படித் தணிப்பது? ஆயுதங்களை அறிந்தவர்களில் வெல்பவர்களும், வெல்லப்படுபவர்களுமாகவே பிறர் அறியப்படுகிறார்கள்; ஆனால், இந்தப் பல்குனன் {அர்ஜுனன்} எப்போதும் வெல்பவன் என்றே கேள்விப்படப்படுகிறான்.
**காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} அக்னியை அழைத்து, தேவர்கள் அனைவரையும் வீழ்த்தி, அவனை {அக்னியை} அர்ஜுனன் மனநிறைவு கொள்ளச்செய்தது முதல் முப்பத்தைந்து {35} வருடங்கள் கடந்துவிட்டன. ஓ! குழந்தாய், இவனது {அர்ஜுனனின்} தோல்வியை நாம் எங்கும் கேள்விப்பட்டதில்லை.
குணத்தாலும், மனநிலையாலும் தன்னை {அர்ஜுனனான தன்னைப்} போன்ற ரிஷிகேசனை {கிருஷ்ணனை} சாரதியாகக் கொண்ட அர்ஜுனனுக்கு, வெற்றி, இந்திரனைப் போன்று எப்போதும் உரியதாகிறது. ஒரே தேரில் இருக்கும் இரண்டு கிருஷ்ணர்களும் {கருப்பர்களான_அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணனும்}, நாணேற்றப்பட்ட காண்டீவமும் என மூன்று சக்திகளும் ஒன்றுசேர்ந்துவிட்டன என்று நாம் கேள்விப்படுகிறோம். நம்மைப் பொறுத்தவரை, அது போன்ற வகையிலான வில்லையோ, அர்ஜுனனைப் போன்ற போர்வீரனையோ, கிருஷ்ணனைப் போன்ற சாரதியையோ {தேரோட்டியையோ} நாம் கொண்டிருக்கவில்லை.
துரியோதனனின் மூடத் தொண்டர்கள், இது குறித்த விழிப்புணர்வுடன் இல்லை. ஓ! சஞ்சயா, சுடர்விட்டுத் தலையில் இறங்கும் இடியாவது ஏதேனும் ஒன்றைக் அழிக்காமல் விட்டுச்செல்லும், ஆனால், ஓ! குழந்தாய் {சஞ்சயா}, கிரீடியால் {அர்ஜுனனால்} அடிக்கப்படும் கணைகள் எதையும் அழிக்காமல் விடுவதில்லை.
அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} தனது அம்புகளை அடித்தபடி, தனது கணை மழையால் உடல்களில் இருந்து தலைகளைக் கொய்ந்தபடி, சுற்றிலும் அழிவை ஏற்படுத்துவதை நான் இப்போதுகூட {மனதால்} காண்கிறேன். காண்டீவத்தில் இருந்து புறப்பட்டு, சுற்றிலும் சுடர்விட்டுச்செல்லும் நெருப்பைப் போன்ற அம்புகள், எனது மகன்களின் படையணிகளைப் போர்களத்தில் எரிப்பதை நான் இப்போதுகூட {மனதால்} காண்கிறேன். பல்வேறு படையணிகளைக் கொண்ட எனது பரந்த படை, சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தேர்ச்சடசடப்பால் {தேரொலியால்} பீதியடைந்து எல்லாப்புறங்களிலும் தப்பியோடுவதை நான் இப்போது கூட {மனதால்} காண்கிறேன்.
பெருகும் சுடர்களுடன் எல்லாப்புறங்களிலும் உலவும் மிகப்பெரிய நெருப்பு, காற்றால் உந்தப்பட்டு, காய்ந்த இலைகளையும் புற்களையும் எரிப்பதைப் போல, அர்ஜுனனுடைய ஆயுதங்கள் கொண்டிருக்கும் பெரும் புகழ், எனது துருப்புகள் அனைத்தையும் எரித்துவிடும் {அழித்துவிடும்}. பிரம்மனால் கட்டளையிடப்பட்ட அனைத்தையும் அழிப்பவனுமான காலனைப் போல, போரில் எதிரியாகத் தோன்றி, எண்ணிலடங்கா கணைகளை உமிழும் கிரீடி {அர்ஜுனன்}, தடுக்கப்பட முடியாதவனாக இருப்பான். குருக்களின் {கௌரவர்களின்} வீடுகளிலும், அவர்களைச் சுற்றியும், போர்க்களத்திலும் ஏற்படும் பல்வேறு வகையான தீய சகுனங்களைக் குறித்து நான் எப்போது தொடர்ச்சியாகக் கேட்பேனோ, அப்போது, பாரதர்களுக்கு அழிவேற்படும் என்பதில் ஐயமில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.
யுதிஷ்டிரனின் கோபம் அச்சுறுத்துகிறது! – உத்யோக பர்வம் பகுதி 53-பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், மகதர்கள், கிருஷ்ணன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், ஆகியோரது துணை பாண்டவர்களுக்கு வலிமை சேர்க்கிறது என்றும், யுதிஷ்டிரனின் கோபம் மற்றும் பிற பாண்டவர்களின் ஆற்றல் தனக்கு அச்சமூட்டுகிறது என்றும் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது; பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ளுமாறு கௌரவர்களுக்குச் சொல்வது.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பெரும் ஆற்றலும், வெற்றியில் ஆர்வமும் கொண்ட பாண்டுவின் மகன்களைப் {பாண்டவர்களைப்} போலவே, அவர்களது தொண்டர்களும், தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தீர்மானித்து, வெற்றியை வென்றெடுப்பதில் குறியாக இருக்கிறார்கள். ஓ! மகனே {சஞ்சயா}, பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், மகதர்கள் ஆகியோரின் பெரும்பலமிக்க மன்னர்கள் எனது எதிரிகளாவர் என்று நீயே சொல்லியிருக்கிறாய்.
மேலும், தான் விரும்பினால், இந்திரனின் தலைமையைக் கொண்ட மூவுலகங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எவனால் கொண்டுவரமுடியுமோ, இந்த அண்டத்தையே எவன் படைத்தானோ, அந்தப் பெரும்பலமிக்கக் கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு வெற்றியளிக்க உறுதியுடன் இருக்கிறான்.
சாத்யகியைப் பொறுத்தவரை, அவன் அர்ஜுனனிடம் இருந்து முழு ஆயுத அறிவியலையும் விரைவில் அடைந்தவனாவான். அந்தச் சினி குலக் கொழுந்து, விதைகளை விதைக்கும் உழவனைப் போல, தனது கணைகளை அடித்தபடி போர்க்களத்தில் நிற்பான்.
கருணையற்ற செயல்கள் புரியும் வலிமைமிக்கத் தேர்வீரனும், மேன்மையான அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனும், பாஞ்சால இளவரசனுமான திருஷ்டத்யும்னன் எனது படையுடன் போரிடுவான்.
ஓ! குழந்தாய் {சஞ்சயா}, யுதிஷ்டிரனின் கோபம், அர்ஜுனன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} மற்றும் பீமசேனனின் ஆற்றல் ஆகியவற்றால் நான் கொள்ளும் அச்சம் பெரிதாக இருக்கிறது. அந்த மனிதர்களின் தலைவர்கள், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட தங்கள் கணைவலையை எனது படைக்கு மத்தியில் விரிக்கும்போது, அதிலிருந்து எனது துருப்புகள் மீளாது என்றே நான் அஞ்சுகிறேன். ஓ! சஞ்சயா, இதற்காகவே நான் அழுகிறேன்.
பாண்டுவின் மகனான அந்த யுதிஷ்டிரன், அழகானவனாகவும், பெரும் சக்தி படைத்தவனாகவும், உயர்ந்த அருள், பிரம்ம சக்தி, புத்திக்கூர்மை, பெரும் அறிவு {ஞானம்}, அறம்சார்ந்த ஆன்மா ஆகியவற்றைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.
கூட்டாளிகள் மற்றும் ஆலோசகர்களோடும், போருக்குத் தயாராக இருக்கும் நபர்களுடன் ஒன்றிணைந்தும், வீரர்களாக இருக்கும் தம்பிகள், மாமனார் ஆகியோரைக் கொண்டும் இருக்கும் மனிதர்களில் புலியான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பொறுமைசாலியாக, தனது ஆலோசனைகளைக் கமுக்கமாக {இரகசியமாக} வைத்திருக்கும் திறன் கொண்டவனாக, கருணை மற்றும் பணிவு கொண்டவனாக, கலங்கடிக்கப்பட முடியாத சக்திகளைக் கொண்டவனாக, பெரும் கல்வி கொண்டவனாக, முறையான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஆன்மா கொண்டவனாக, எப்போதும் வயது முதிர்ந்தோருக்குக் காத்திருப்பவனாக {பணிவிடை செய்பவனாக}, புலன்களை அடக்கியவனாக, என இப்படி அனைத்து சாதனைகளையும் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்} எரியும் நெருப்பு போலல்லவா இருக்கிறான். அழிவுக்கு விதிக்கப்பட்டு, அறிவை இழந்து, தடுக்கப்பட முடியாததும், எரிந்து கொண்டிருப்பதுமான அந்தப் பாண்டவ நெருப்பில் விட்டில் பூச்சியைப் போல எந்த மூடன் விழுவான்.
ஐயோ, நான் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} வஞ்சகமாக நடந்து கொண்டேனே. உயர்ந்து எரியும் நெருப்பைப் போல, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, போர்க்களத்தில், எனது மூட மகன்கள் அனைவரில் ஒருவனையும் உயிரோடு விடாமல் அழித்துவிடுவான். எனவே, அவர்களுடன் போரிடுவது சரியல்ல என்றே நான் நினைக்கிறேன்.
கௌரவர்களே, நீங்களும் அதே மனம் கொள்ளுங்கள் {அதை அறிந்து கொள்ளுங்கள்}. பகைமை பாராட்டினால், குருக்களின் {கௌரவர்களின்} இனம் முற்றாக அழியும் என்பதில் ஐயமில்லை. இஃது எனக்குத் தெரிவாகத் தோன்றுகிறது. இதன்படி நாம் செயல்பட்டால், எனது மனம் அமைதியடையும். அவர்களுடன் போரிடுவது உங்களுக்கு நன்மையாகத் தெரியவில்லை என்றால், நாம் அமைதியை நிலைநாட்டுவதற்குப் பாடுபடுவோம். நாம் துன்பப்பட்டால் யுதிஷ்டிரன் அலட்சியம் செய்ய மாட்டான். ஏனெனில், அவன் {யுதிஷ்டிரன்} இந்த அநீதியான போருக்கு {திருதராஷ்டிரனான} நான்தான் காரணம் என்றே கண்டித்துவருகிறான்” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் நிந்தனை! – உத்யோக பர்வம் பகுதி 54- பாண்டவர்கள் ஏன் வெல்வார்கள் என்றும்; துரியோதனன் ஏன் தோற்பான் என்றும் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது; பகடையாட்டத்தின் போது திருதராஷ்டிரன் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதாகச் சஞ்சயன் திருதராஷ்டிரனை நிந்திப்பது; துரியோதனன் தடுக்கப்படாவிட்டால், கௌரவர்களின் அழிவு நிச்சயம் என்று சஞ்சயன் எச்சரிப்பது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பெரும் மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் சொல்வது போலத்தான் இஃது இருக்கிறது. போர் நிகழும்போது, காண்டீவத்தால் க்ஷத்திரியர்களின் அழிவு நிச்சயம் ஏற்படும். எனினும், எப்போதும் ஞானியாக இருக்கும் உம்மால், குறிப்பாகச் சவ்யசச்சினுடைய {அர்ஜுனனுடைய} ஆற்றலை அறிந்த உம்மால் எப்படி உமது மகன்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற முடிகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஆரம்பத்திலிருந்தே காயமேற்படுத்தி, உண்மையில், அப்பாவத்தை மீண்டும் மீண்டும் செய்த பின்பு, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி வருந்துவதற்கு) இது நேரமில்லை.
தந்தை அல்லது நண்பன் என்ற நிலையை அடைந்த ஒருவன், எப்போதும் கண்காணிப்புடனும், நல்ல இதயத்துடனும் இருந்தால், (தன் பிள்ளைகளுக்கு) நன்மையை நாடுவான்; ஆனால் காயமேற்படுத்துபவனைத் தந்தை என்று அழைக்கலாகாது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையில் பாண்டவர்களின் தோல்வியைக் கேட்டு “இது வெல்லப்பட்டது, இஃது அடையப்பட்டது” என்று சிறுபிள்ளையைப் போல நீர் சிரித்தீர். பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} நோக்கி கடுஞ்சொல் பேசப்பட்டபோதோ, உம் மகன்கள் முழு நாட்டையும் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ந்தீர். எனினும், உமக்கு முன்னால் இருந்த தவிர்க்கப்பட முடியாத வீழ்ச்சியை நீர் காணவில்லை.
ஜாங்கலம் என்று அழைக்கப்படும் பகுதியோடு கூடிய குருக்களின் நாடே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தந்தைவழி நாடாகும். எனினும், அவ்வீரர்களால் {பாண்டவர்களால்} முழுப் பூமியையும் நீர் அடைந்தீர். தங்கள் கரங்களின் வலிமையால் வென்ற பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, இந்த விரிந்த பேரரசை உமக்காகச் செய்தார்கள் {உம்மிடம் ஒப்படைத்தார்கள்}. எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இவை யாவும் உம்மால் அடையப்பட்டது என்று நீர் நினைத்துக் கொள்கிறீர்.
கந்தர்வர்களால் உமது மகன்கள் பிடித்துச் செல்லப்பட்ட போது, கரைகளற்ற கடலில், தங்களைக் காக்க ஒரு படகு கூட இல்லாமல் மூழ்கும் நிலையில் இருந்தவர்களை {உமது மகன்களை}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனே {அர்ஜுனனே} மீட்டு அழைத்து வந்தான்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீரோ, பகடையில் பாண்டவர்கள் தோற்று வனவாசம் சென்ற போது சிறுபிள்ளையைப் போல திரும்பத் திரும்பச் சிரித்தீர். முனைப்புள்ள கணைகளை அர்ஜுனன் மாரியாகப் பொழிகையில், கடல்களே கூட வற்றிவிடும் எனும்போது சதையும் இரத்தமும் எம்மாத்திரம்.
அடிப்பவர்கள் அனைவரிலும் பல்குனனே {அர்ஜுனனே} முதன்மையானவன்; விற்கள் அனைத்திலும் காண்டீவமே முதன்மையானது; அனைத்து உயிரினங்களிலும் கேசவனே {கிருஷ்ணனே} முதன்மையானவன்; ஆயுதங்கள் அனைத்திலும் சுதர்சனமே முதன்மையானது; தேர்களில், சுடர்மிகும் குரங்குக் {அனுமன்} கொடி கொண்ட அந்தத் தேரே முதன்மையானது. இவை யாவையும் தன்னில் கொண்டு, வெண்குதிரைகளால் இழுக்கப்படும் அவனது {அர்ஜுனனின்} தேர், உயர்ந்த காலச்சக்கரம் போலப் போரில் நம் அனைவரையும் எரித்துவிடும்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தனக்காகப் போரிட, பீமனையும், அர்ஜுனனையும் கொண்டவனுக்குத்தான் இந்த முழுப் பூமி இப்போதும் சொந்தம். அவனே {பீமனையும் அர்ஜுனனையும் கொண்டவனே = யுதிஷ்டிரனே} மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவன். பீமனால் தாக்கப்படும்போது, நம்பிக்கையிழந்து மூழ்கும் துரியோதனன் தலைமையிலான படையால் வெற்றியை அடைய இயலாது.
மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சால்வர்கள், சூரசேனர்கள் ஆகிய அனைவரும் உம்மை மதிக்காமல் இப்போது அவமதிக்கிறார்கள். எனினும், அந்த அறிவுள்ள மன்னனின் {யுதிஷ்டிரனின்} சக்தியை அறிந்த அவர்கள் அனைவரும், அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {யுதிஷ்டிரனுடன்} சேர்ந்துள்ளனர். அவனிடம் தாங்கள் கொண்ட அர்ப்பணிப்பின் காரணமாக எப்போதும் உமது மகன்களை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.
அறம்சார்ந்தவர்களும், அழியத்தகாதவர்களுமான பாண்டுவின் மகன்களைத் தன் தீச்செயல்களால் துன்புறுத்தியவனும், அவர்களை {பாண்டவர்களை} இப்போதும் கூட வெறுப்பவனுமான அந்தப் பாவி, வேறு யாருமல்ல உமது மகனைத்தான் {துரியோதனனைத்தான்} சொல்கிறேன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனும் {துரியோதனனும்}, அவனைப் பின்பற்றுபவர்களும் எல்லாவகையிலும் தடுக்கப்பட {அடக்கப்பட} வேண்டும்.
இந்தச் சோர்வான நேரத்தில் {இந்த அழுத்தத்தில்} நீர் புலம்பியழுவது உமக்குத் தகாது. பகடையாட்டம் நடைபெற்ற நேரத்திலேயே ஞானியான விதுரராலும், என்னாலும் இதுவே {கௌரவர்கள் அடக்கப்பட வேண்டும் என்று} சொல்லப்பட்டது. ஏதோ நீர் ஓர் ஆதரவற்ற நபர் போல, பாண்டவர்கள் தொடர்பாகச் செய்யும் இந்த உமது புலம்பல்கள் அனைத்தும் பயனற்றவையே” என்றான் {சஞ்சயன்}.
“அஞ்சாதீர்!” என்றான் துரியோதனன்! – உத்யோக பர்வம் பகுதி 55-தங்களுக்காக திருதராஷ்டிரன் வருந்த வேண்டாம் என்று துரியோதனன் சொன்னது; பகடையாட்டம் முடிந்து பாண்டவர்கள் வனவாசம் சென்ற பிறகு, பாண்டவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட படையைக் கண்டு அஞ்சி பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபரிடம் தான் பேசியவற்றைத் துரியோதனன் நினைவு கூர்வது; பலராமனிடத்தில் தான் பயின்ற கதாயுதத்தை நினைவுகூர்வது; கதாயுதத்தில் தனக்கு நிகர் இவ்வுலகில் எவனும் இல்லை என்று சொன்னது; படை எண்ணிக்கையிலும், தலைவர்களின் எண்ணிக்கையிலும் கௌரவப்படையே பெரிதாக இருக்கிறது என்று சொல்வது; திருதராஷ்டிரனிடம் துரியோதனன் மதியிழக்க வேண்டாம் என்று கண்டிப்பது…
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அஞ்சாதீர். எங்களுக்காக வருந்தவும் செய்யாதீர். ஓ !ஏகாதிபதி, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, நாங்கள் போரில் எதிரிகளை வீழ்த்த வல்லவர்களே. பார்த்தர்கள் {பாண்டவர்கள்} நாடுகடத்தப்பட்டு {காட்டிற்கு} அனுப்பப்பட்ட போது, பகை நாடுகளை நசுக்க வல்லவனான, மதுவைக் கொன்றவன் {கிருஷ்ணன்} பரந்திருக்கும் தனது படையுடன் அங்கே வந்தான்; மேலும் அங்கே கேகயர்களும், திருஷ்டகேதுவும், பிரஷத [1] குலத்தின் திருஷ்டத்யும்னன் மற்றும் எண்ணிலடங்கா பிற மன்னர்களும் தொடர்ந்து வந்தனர்; (பிரஷதன் = துருபதனின் தந்தை)அந்தப் பெரும் தேர்வீரர்களான அனைவரும் இந்திரப்பிரஸ்தத்திற்கு மிக அருகில் கூடினர்; அங்கே கூடிய அவர்கள் உம்மையும், குருக்கள் {கௌரவர்கள்} அனைவரையும் நிந்தித்தனர்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனைத் தலைமையாகக் கொண்ட அவ்வீரர்கள் அனைவரும், மான்தோலுடுத்தி தங்கள் மத்தியில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனுக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தினர். பிறகு அந்த மன்னர்கள் அனைவரும் யுதிஷ்டிரன் தனது நாட்டை மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைத்தனர். அவர்கள் அனைவரும் உம்மையும், உமது தொண்டர்கள் அனைவரையும் கொல்ல விரும்பினர்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட நான், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நம் குடும்பத்தின் அழிவைக் கருதி ஏற்பட்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டு பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபரிடம் பேசினேன். நான் அவர்களிடம், “தாங்கள் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு பாண்டவர்கள் கட்டுப்பட மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்; நமது முழுமையான அழிவை வாசுதேவன் {கிருஷ்ணன்} விரும்புகிறான். அப்படுகொலையில், குருக்களின் தலைவரும், அறநெறி அறிந்தவருமான திருதராஷ்டிரர் சேர்க்கப்படாவிட்டாலும், விதுரரைத் தவிர்த்து உங்கள் அனைவரையும் கொன்று, ஓ! ஐயா, நமது முழுமையான அழிவைத் தோற்றுவித்து, யுதிஷ்டிரனுக்கு குருக்களின் {கௌரவர்களின்} முழு நாட்டையும் அளிக்க ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விரும்புகிறான் என்று நான் நினைக்கிறேன்.
{இப்போது} நாம் என்ன செய்வது? சரணடைவதா? தப்பியோடுவதா? அல்லது உயிரை விட்டாவது பகைவருடன் போரிடுவதா? உண்மையில், அவர்களுக்கு எதிராக நாம் நிற்போமெனில், நமது தோல்வி உறுதியானது. ஏனெனில், பூமியின் மன்னர்கள் அனைவரும் யுதிஷ்டிரனின் கட்டளைக்குக் கீழ் {கட்டளையை எதிர்பார்த்து} இருக்கிறார்கள். நாட்டின் மக்கள் அனைவரும் நம்மிடம் எரிச்சலடைந்திருக்கின்றனர், மற்றும் நமது நண்பர்கள் அனைவரும் கூட நம்மிடம் கோபத்திலிருக்கின்றனர். பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும், அதிலும் குறிப்பாக நமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் நம்மைக் குறித்துத் தவறாகப் பேசுகின்றனர். நினைவுக்கெட்டாத காலம் முதல், பலமற்ற கட்சியே சமாதானம் கொள்ளும் என்பது அறியப்பட்டதே. எனவே, நாம் சரணடைந்தால், அதில் தவறு ஒன்றும் இருக்க முடியாது.
எனினும், என் நிமித்தமாக, முடிவிலா துன்ப துயரங்களால் பீடிக்கப்படும் அந்த மனிதர்களின் தலைவரான. பார்வையற்ற என் தந்தையைக் {திருதராஷ்டிரரைக்} குறித்தே நான் கவலைகொள்கிறேன். [ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மற்ற மகன்கள் அனைவரும் என்னை மகிழ்விப்பதற்காக மட்டுமே, பகைவரை எதிர்த்தார்கள் {பாண்டவர்களுக்குக் கெடுதல் செய்தார்கள்} என்பது இதற்கு முன்பே உமக்குத் தெரியும்]. அந்தப் பலமிக்க தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள், ஆலோசகர்களோடு {அமைச்சர்களோடு} கூடிய மன்னர் திருதராஷ்டிரரின் குலத்தை முற்றாக அழித்து, தங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்காகப் {அநீதிகளுக்காகப்} பழிதீர்ப்பார்கள் என்பது நிச்சயம்.” என்று ({துரியோதனனான} நான் அவர்களிடம் {பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபரிடம்} {அப்போது} இப்படியே பேசினேன்).
பெரும் கவலையால் நான் பாதிக்கப்படுவதையும், உணர்வுகளால் நான் அடைந்த சித்திரவதையையும் கண்ட துரோணர், பீஷ்மர், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் என்னிடம், “ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, அஞ்சாதே. நாங்கள் களங்காணும்போது, நம்மிடம் பகை கொள்ளும் எதிரிகளால் எங்களை வீழ்த்த இயலாது. நாங்கள் ஒவ்வொருவரும் பூமியின் மன்னர்கள் அனைவரையும் தனியாகவே வீழ்த்தும் வல்லமை பெற்றிருக்கிறோம். அவர்கள் வரட்டும். கூர்முனை கொண்ட கணைகளால் நாம் அவர்களது ஆணவத்தைத் தடுப்போம்.
பழங்காலத்தில் {முற்காலத்தில்}, தனது தந்தையின் மரணத்தால் கோபத்தில் அழற்சியுற்ற (நம் மத்தியில் இருக்கும்) இந்தப் பீஷ்மர், ஒரே தேரில் {தனியாகச்} சென்று பூமியின் மன்னர்கள் அனைவரையும் வெற்றி கொண்டார். ஓ! பாரதா {துரியோதனா}, கோபத்தால் தூண்டப்பட்ட அந்தக் குருக்களில் சிறந்தவர் {பீஷ்மர்}, அவர்களில் எண்ணற்றோரை அடித்தார். அதனால் அச்சமுற்ற அவர்கள், தங்கள் பாதுகாப்பைக் கோரி இந்தத் தேவவிரதனிடம் {பீஷ்மரிடம்} சரணடைந்தனர். நம்முடன் இருக்கும் அந்தப் பீஷ்மர், இப்போதும் போரில் எதிரியை வீழ்த்தவல்லராவார். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது அச்சங்கள் அனைத்தும் அகலட்டும்” என்றனர்” என்றான் {துரியோதனன்}.
துரியோதனன் தொடர்ந்தான், “அளவிலா சக்தி கொண்ட இந்த வீரர்களால் {துரோணர், பீஷ்மர், கிருபர் மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோரால்} அன்று செய்யப்பட்ட உறுதி இதுவே. முன்பு, இந்த முழு பூமியும் எதிரியின் {யுதிஷ்டிரனின்} அதிகாரத்திற்குள்ளேயே இருந்தது. எனினும், இப்போது, அவர்கள் {பாண்டவர்கள்} நம்மைப் போரில் வீழ்த்தவல்லவர்களாக இல்லை. எனெனில், நமது எதிரிகளான பாண்டுவின் மகன்கள் இப்போது கூட்டாளிகள் இன்றி, சக்தி இன்றி உள்ளனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பூமியின் ஆட்சியதிகாரம் இப்போது என்னிடமே குடிகொண்டிருக்கிறது.
என்னால் கூட்டப்பட்டிருக்கும் இந்த மன்னர்கள் செழிப்பிலும், துக்கத்திலும் நான் கொண்டிருக்கும் அதே மனமுடையவர்களாக இருக்கிறார்கள். ஓ! குருக் {கௌரவக்} குலத்தில் சிறந்தவரே, ஓ! எதிரிகளைக் கொல்பவரே {திருதராஷ்டிரரே}, இந்த மன்னர்கள் அனைவரும் எனக்காக நெருப்பிலோ, கடலிலோ நுழையவல்லவர்கள் என்பதை அறிந்து கொள்ளும். பகைவரின் தற்புகழ்ச்சியைக் கண்டு அஞ்சி, கவலையில் நிறைந்து, மதியிழந்தவர் போலப் புலம்பிக் கொண்டிருக்கும் உம்மைக் கண்டு இப்போது இவர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். இம்மன்னர்களில் ஒவ்வொருவரும் பாண்டவர்களைத் தனியாகவே எதிர்க்கவல்லவர்கள். உண்மையில், அனைவரும் அவ்வாறே தங்களைக் கருதுகின்றனர். எனவே, உமது அச்சங்கள் அகலட்டும்.
பரந்திருக்கும் எனது படையை வீழ்த்த வாசவனாலும் {இந்திரனாலும்} இயலாது. அந்தப் படையை அழிக்க சுயம்புவான பிரம்மனே நினைத்தாலும் முடியாது. நான் கூட்டியிருக்கும் படைக்கும், எனது சக்திக்கும் அஞ்சியே, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, நகரத்திற்கான நம்பிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு, {ஒரு நகரத்தைக் கூடக் கேட்காமல்} ஐந்து கிராமங்களை மட்டுமே யுதிஷ்டிரன் கெஞ்சிக் கேட்கிறான்.
குந்தியின் மகனான விருகோதரனின் {பீமனின்} ஆற்றல், நீர் பாராட்டும்படி எங்குமே காணப்படவில்லை. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் எனது ஆற்றலின் அளவை அறியவில்லை. கதாயுத மோதலில் எனக்கு நிகரானவர் பூமியில் எவரும் இல்லை. இத்தகைய மோதலில் எவரும் எப்போதும் என்னை விஞ்சியதில்லை, {இனிமேல்} யாரும் என்னை விஞ்சவும் மாட்டார்கள்.
பல இடர்பாடுகளை அனுபவித்து, அர்ப்பணிப்போடு கூடிய முயற்சியுடன் எனது ஆசானின் {பலராமரின்} வசிப்பிடத்தில் வாழ்ந்தவன் நான். எனது அறிவு மற்றும் பயிற்சிகள் அங்கேயே நிறைவுபெற்றன. இதன் காரணமாகவே நான், பீமனிடமோ பிறரிடமோ அச்சங்கொள்வதில்லை. நான் (எனது ஆசானான) சங்கர்ஷணருக்காகப் {பலராமருக்காகப்} பணிவுடன் காத்திருந்தபோது {அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது}, கதாயுதத்தில், துரியோதனனுக்கு நிகர் எவனும் இல்லை என்பதே அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. போர்க்களத்தில் சங்கர்ஷணருக்கு {பலராமருக்கு} நிகரானவன் நான். பலத்தில் எனக்கு மேலானவன் எவனும் இப்பூமியில் இல்லை.
போரில் எனது கதாயுதத்தின் வீச்சை பீமனால் தாங்கிக் கொள்ள இயலாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் பீமனை நோக்கி நான் வீசும் ஒரே வீச்சு, ஓ! வீரரே {திருதராஷ்டிரரே}, அவனை {பீமனைத்} தாமதமின்றி யமனுலகிற்கு அழைத்துச் செல்லும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கையில் கதாயுதத்துடன் இருக்கும் பீமனைக் காண நான் விரும்புகிறேன். இதுவே எனது நீண்ட கால ஆசையாக இருந்திருக்கிறது. போரில் எனது கதாயுதத்தால் தாக்கப்படும் பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, தன் அங்கங்கள் சிதற, தரையில் செத்து விழுவான்.
எனது கதாயுத வீச்சில் அடிபட்டால், இமயத்தின் மலைகளே கூட நூறாயிரம் துண்டுகளாகச் சிதறிப் போகும். கதாயுதத்தைப் பயன்படுத்துவதில் துரியோதனனுக்கு யாரும் நிகரில்லை என்று வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் போலவே விருகோதரனும் {பீமனும்} அறிவான். எனவே, விருகோதரன் நிமித்தமாக உண்டான உமது அச்சங்கள் விலகட்டும். ஏனெனில் கடுமையான ஒரு மோதலில் நான் நிச்சயம் அவனை {பீமனைக்} கொல்வேன்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனக் கவலைக்கு வழி கொடுக்காதீர் {இடமளிக்காதீர்}. நான் அவனை {பீமனைக்} கொன்ற பிறகு, ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுக்குச் சமமான அல்லது மேன்மையான சக்தி படைத்த எண்ணற்ற தேர்வீரர்கள் அவனை {அர்ஜுனனை} விரைவாக வீழ்த்துவார்கள். பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், பூரிஸ்ரவஸ், சல்யன், பிராக்ஜோதிஷத்தின் மன்னன் {பகதத்தன்}, சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தனியொருவராகவே பாண்டவர்களைக் கொல்லவல்லவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணையும்போது, நொடிப்பொழுதில் அவர்கள் அர்ஜுனனை யமனுலகுக்கு அனுப்புவார்கள்.
உண்மையில், இம்மன்னர்கள் அனைவரின் ஒன்றிணைந்த படைகளால், தனஞ்சயன் என்ற ஒருவனை {அர்ஜுனனை} வீழ்த்த இயலாது என்பதற்கு {என்ற உமது எண்ணத்திற்கு} எந்தக் காரணமும் இல்லை. பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் ஆகியோரால் அடிக்கப்படும் அளவிலாக் கணைகளால் நூறு முறை மறைக்கப்பட்டும், தன் பலத்தையெல்லாம் இழக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} யமனுலகு செல்ல வேண்டியிருக்கும்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கங்கைக்குப் பிறந்தவரும் {கங்காதரரும்}, சந்தனுவுக்கும் மேலானவரும், இருபிறப்பாள {பிராமண} முனிவனைப் போன்றவரும், தேவர்களாலும் எதிர்க்கப்பட முடியாதவருமான நமது பாட்டன் {பிதாமகன் பீஷ்மர்}, மனிதர்களுக்கு மத்தியில் தனது பிறப்பை எடுத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைக் கொல்ல இப்பூமியில் எவருமில்லை. ஏனெனில், இவர் {பீஷ்மர்}, “உனது விருப்பமில்லாமல் நீ இறக்கமாட்டாய்” என்று {தன்னிடம்} நிறைவடைந்த தன் தந்தையிடம்{சந்தனுவிடம்} வரம் பெற்றவர்.
துரோணர், இருபிறப்பாளரான {பிராமணரான} தவசி {பிரம்மரிஷி} பரத்வாஜர் மூலம் நீர்க்குடத்தில் {கலசத்தில்} பிறந்தவர். துரோணருக்குப் பிறந்த மகன் {அஸ்வத்தாமன்}, உயர்ந்த ஆயுதங்களின் அறிவனைத்தையும் அடைந்திருக்கிறார். ஆசான்களில் முதன்மையானவரான இந்தக் கிருபர் பெரும் முனிவரான கௌதமருக்குப் பிறந்தவராவார். நாணற்கட்டில் பிறந்தவரான இந்த ஒப்பற்றவர் கொல்லப்பட இயலாதவர் என்று நான் நினைக்கிறேன். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமனின் தந்தை, தாய், தாய்மாமன் ஆகிய மூவரும் பெண்ணின் கருவறையில் பிறவாதவர்களாவர் {என்பதை நினைவில் கொள்ளும்}. அந்த வீரரையும் {அஸ்வத்தாமனையும்}, நான் என் கட்சியில் கொண்டுள்ளேன்.
தேவர்களைப் போன்ற இந்தப் பலமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} வலியை உண்டாக்கக் கூடியவர்கள். இவர்களில் ஒருவரைக் காணக் கூட அர்ஜுனன் சக்தி படைத்தவனல்ல. மனிதர்களில் புலிகளான இவர்கள் ஒன்றாக இணைந்திருக்கும்போது, தனஞ்சயனை {அர்ஜுனனை} நிச்சயம் கொல்வார்கள்.
கர்ணனும், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோருக்கு நிகரானவனே என நான் கருதுகிறேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, “நீ எனக்கு நிகரானவன்” என்று ராமரே {பரசுராமரே}, அவனிடம் {கர்ணனிடம்} சொல்லியிருக்கிறார். பெரும் பிரகாசமும் அழகும் உடைய இரு காது குண்டலங்களுடன் கர்ணன் பிறந்தான்; சச்சியை {இந்திராணியை} மனநிறைவு கொள்ளச் செய்ய, பொய்க்காத, பயங்கரமான ஒரு கணைக்கு மாற்றாக, எதிரிகளை ஒடுக்கும் அவனிடம் {கர்ணனிடம்} அவற்றை {அந்தக் காதணிகளை} இந்திரன் இரந்து பெற்றான். எனவே, அந்தக் கணையால் பாதுகாக்கப்படும் கர்ணனிடம் இருந்து தனஞ்சயனால் {அர்ஜுனனால்} எப்படி உயிரோடு தப்ப முடியும்?
எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கைப்பிடிக்குள் உறுதியாகப் பற்றப்பட்டிருக்கும் கனியைப் போல {உள்ளங்கை நெல்லிக்கனி போல}, எனது வெற்றி உறுதியானது. எனது எதிரிகளின் அப்பட்டமான தோல்வி, பூமியில் ஏற்கனவே பேசப்படுகிறது.
இந்தப் பீஷ்மர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் படை வீரர்களையேனும் கொல்வார். துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் ஆகியோர் அவருக்கு நிகரான வில்லாளிகளே.
மேலும், ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {திருதராஷ்டிரரே}, “ஒன்று, நாங்கள் அர்ஜுனனைக் கொல்வோம், அல்லது குரங்குக் கொடி கொண்ட அந்த வீரன் {வானரக் கொடியோன் அர்ஜுனன்} எங்களைக் கொல்லட்டும்” என்று சம்சப்தக வீரர்களின் கூட்டம் தீர்மானித்திருக்கிறது. சவ்யசச்சின் {அர்ஜுனன்} தங்களுக்கு நிகரானவன் அல்ல என்று கருதும் பிற மன்னர்களும் அவனை {அர்ஜுனனைக்} கொல்ல உறுதியாகத் தீர்மானித்திருக்கிறார்கள். பாண்டவர்களால் ஏற்படும் ஆபத்துக்காக இனியும் நீர் ஏன் வருந்துகிறீர்?
பீமசேனனே கொல்லப்படும்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (அவர்களில்) எவன் போரிட முடியும்? எதிரிகளின் மத்தியில் அப்படி எவரேனும் உண்டெனில், ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {திருதராஷ்டிரரே}, அதை எனக்குச் சொல்லும்.
ஐந்து சகோதரர்கள் {பாண்டவர்கள்}, திருஷ்டத்யும்னன், சாத்யகி ஆகிய ஏழு போர்வீரர்களே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியின் முக்கிய பலம் எனக் கருதப்படுகிறார்கள். எனினும், பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், சோமதத்தன், பாஹ்லீகன், சல்யன், பிராக்ஜோதிஷத்தின் மன்னன் {பகதத்தன்}, அவந்தியின் இரு மன்னர்கள் {விந்தன் மற்றும் அனுவிந்தன்}, ஜெயத்ரதன், மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களான துச்சாசனன், துர்முகன், துஸ்ஸகன், ஸ்ருதாயு ஆகியோரும், சித்ரசேனன், புருமித்ரன், விவிம்சதி, சலன், பூரிஸ்ரவஸ், விகர்ணன் ஆகியோரும் நமது முக்கிய போர்வீரர்களாக இருக்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் பதினோரு{11} அக்ஷௌஹிணிகளைக் கூட்டியிருக்கிறேன். ஏழு{7} அக்ஷௌஹிணிகளை மட்டுமே கொண்ட எதிரியின் படை எனதை விட அளவில் சிறியதே. பிறகு நான் எப்படித் தோற்பேன்? மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கும் ஓர் படையுடன் மோதலாம் என பிருஹஸ்பதியே சொல்லியிருக்கிறார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியை விட எனது படை, மூன்றில் ஒரு பங்குக்குப் பெரியதாக இருக்கிறது. [2](கௌரவர்களின் பதினோரு அக்ஷொஹிணியில் மூன்றில் ஒரு பங்கு என்பது 3.66 ஆகும். பாண்டவர்களின் படையோ ஏழு அக்ஷௌஹிணி ஆகும். எனவே தன் படையில் மூன்றில் ஒரு பங்கை நீக்கினாலும் {11 – 3.66 = 7.33}, அதைவிட எதிரிகளின் படை {7} குறைவாகவே இருக்கிறது–இதையே வேறுவிதமாக, பாண்டவர்களில் ஏழு{7} முக்கிய வீரர்கள், கௌரவர்களில் தன்னையும் சேர்த்து இருபத்தோரு{21} {மேலே துரியோதனனைச் சேர்க்காமல் இருபத்திரண்டு பேர் இருக்கின்றனர்} முக்கிய வீரர்கள். எனவே, பாண்டவப்படையை விட கௌரவப்படை மூன்று மடங்கு பெரியது)
இதுதவிர, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளின் பல குறைகளை நான் அறிவேன், அதே வேளையில், நான் பல குணநிறைவுகளுடன் இருக்கிறேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவையாவற்றையும், எனது படையின் மேன்மையையும், பாண்டவர்களின் தாழ்வையும் அறிந்தும், உமது மதியை நீர் இழப்பது உமக்குத் தகாது” என்றான் {துரியோதனன்}.
{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம்} “ஓ! பாரதா {ஜனமேஜயா}, பகை தலைவர்களை வெல்பவனான துரியோதனன், இதைச் சொன்ன பிறகு, பாண்டவர்களின் செயல்பாடுகளை அறியும் ஆவலில், மீண்டும் சஞ்சயனிடம் கேட்கலானான் ”.
பாண்டவர்களின் குதிரைகள்! – உத்யோக பர்வம் பகுதி 56-போரில் பாண்டவர்கள் கொண்டிருக்கும் விருப்பத்தையும், அவர்கள் கொண்டிருக்கும் தேர் மற்றும் குதிரைகளைக் குறித்தும் சஞ்சயன் துரியோதனனுக்குச் சொன்னது…
துரியோதனன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, ஏழு{7} அக்ஷௌஹிணி எண்ணிக்கையிலான படையைத் திரட்டிய பிறகு, பிற மன்னர்களின் துணையுடன், குந்தியின் மகனான யுதிஷ்டிரன் என்ன செய்ய நினைக்கிறான்?”
சஞ்சயன் {துரியோதனிடம்}, “ஓ! மன்னா {துரியோதனா}, போரைப்பொறுத்தவரை யுதிஷ்டிரன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். பீமசேனனும், அர்ஜுனனும் அதே போலவே இருக்கின்றனர். இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} முற்றிலும் அச்சமற்றிருக்கின்றனர். (தான் பெற்ற) மந்திரங்களைச் சோதித்துப் பார்க்கும் நோக்கத்தில், குந்தியின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, அனைத்துப் புறங்களையும் ஒளியூட்டியபடி தனது தெய்வீகத் தேரைப் பூட்டினான். கவசம் தரித்த அவன் {அர்ஜுனன்}, மின்னல்களால் சக்தியூட்டப்பட்ட மேகக்குவியல் போலத் தெரிந்தான். சிறிது நேரம் சிந்தித்த அவன் {அர்ஜுனன்}, என்னிடம் மகிழ்ச்சியாக, “ஓ! சஞ்சயரே, இதோ இந்தத் தொடக்க நிலை அறிகுறிகளைப் பாரும். நாங்கள் நிச்சயம் வெல்வோம்” என்றான். உண்மையில், பீபத்சு {அர்ஜுனன்} என்ன சொன்னானோ, அஃது எனக்கு உண்மையாகவே தோன்றியது.” என்றான் {சஞ்சயன்}.
துரியோதனன் {சஞ்சயனிடம்}, “பகடையில் தோற்ற பிருதையின் {குந்தியின்} மகன்களைப் புகழ்வதில் நீர் மகிழ்ச்சியடைகிறீர். இப்போது, அர்ஜுனனின் தேரில் எவ்வகைக் குதிரைகள் பூட்டப்படுகின்றன என்றும், எவ்வகைக் கொடிகள் {துவஜங்கள் [dhvajaḥ]} அதில் நிறுவப்பட்டுள்ளன என்றும் எங்களுக்குச் சொல்லும்” என்றான்.
சஞ்சயன் {துரியோதனனிடம்}, “ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, தஷ்டிரி என்றும், பௌமானன் என்றும் அழைக்கப்படும் தெய்வீகத் தச்சன், சக்ரன் {இந்திரன்} மற்றும் தத்ரி {ஆதித்யர்களில் ஒருவர், ஆரோக்கியம் மற்றும் உள்நாட்டு அமைதிக்கான தெய்வம்} ஆகியோரின் உதவியுடன், பல்வேறு வகை உருவங்களை அமைத்து அர்ஜுனனின் தேருக்கு பெரும் அழகூட்டினான். மேலும், பீமசேனனின் வேண்டுகோளுக்கிணங்க, காற்று தேவனின் {வாயுவின்} மகனான ஹனுமனும் தனது உருவத்தை அதில் {அத்தேரில்} நிறுவினார்.
செங்குத்தாகவும் {நெடுக்கிலும்}, பக்கவாட்டாகவும் {குறுக்கிலும்}, ஒரு யோஜனை பரப்பை ஏற்கும் அக்கொடியை {துவஜம் [dhvajaḥ]}, மாயையால் பௌமானன் உருவாக்கியிருக்கிறான். {தன்னொளியாலான} அதன் வழியில் மரங்கள் குறுக்கே நின்றாலும் கூட, அவற்றால் அதன் போக்கைத் தடுக்க முடியாது. வானில் காட்சியளிக்கும், பல்வேறு நிறங்களாலான சக்ரனின் வில் {வானவில் [அ] இந்திரவில்] எதனாலானது என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அது போல, உண்மையில், பௌமானனால் திட்டமிடப்பட்ட அதன் வடிவம் மாறுபட்டதாகவும், எப்போதும் மாறுவதாகவும் இருக்கிறது.
விண்ணை முட்டி எழும் புகையோட கூடிய நெருப்பு, பல்வேறு பிரகாசமான நிறங்களையும் வடிவங்களையும் காட்டுவது போல, பௌமானனால் வடிவமைக்கப்பட்ட அந்தக் கொடி இருக்கிறது. உண்மையில் அதற்கென்று ஓர் எடையும் {பாரம்} கிடையாது. அது தடுக்கப்படக்கூடியதும் அல்ல. அத்தேரில், (கந்தர்வ மன்னன்) சித்திரசேனனால் அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வெண்ணிற தெய்வீகக் குதிரைகள் இருக்கின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, பூமியிலோ, வானத்திலோ, சொர்க்கத்திலோ கூட அவற்றின் {அந்தக் குதிரைகளின்} போக்கைத் தடுக்க முடியாது. எத்தனை முறை கொல்லப்பட்டாலும், அவற்றின் {அக்குதிரைகளின்} எண்ணிக்கை எப்போதும் முழுமையாக {நூறு என்று} நிறைந்திருக்கும்படி முன்னரே வரமருளப்பட்டிருக்கிறது.
யுதிஷ்டிரனின் தேரில், தந்தம் போன்ற வெண்ணிறத்தில், சம ஆற்றல் படைத்த பெரிய குதிரைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. பீமசேனனின் தேரில், காற்றின் வேகமும், ஏழு முனிவர்களின் [1] பிரகாசமும் கொண்ட சிறப்புமிக்கவை {சிறப்புமிக்கக் குதிரைகள்} பூட்டப்பட்டிருக்கின்றன. கருநிற மேனியும், தித்திரி பறவை {சதுப்புநிலக் கௌதாரி} போன்று பல வண்ணங்களிலான முதுகு கொண்டதும், மனநிறைவு கொண்ட தன் சகோதரன் பல்குனனால் {அர்ஜுனனால்} கொடுக்கப்பட்டதும், பல்குனனின் {அர்ஜுனனின்} குதிரைகளை விட மேன்மையானதுமான குதிரைகள் சகாதேவனை மகிழ்ச்சியாகச் சுமக்கின்றன. விருத்திரனைக் கொன்ற இந்திரனைத் தாங்கும் அற்புதக் குதிரைகளைப் போன்றிருப்பவையும், பலமிக்கக் காற்றைப் போலப் பெரும் வேகம் கொண்டவை மாத்ரியின் மகனான, அஜமீட குலத்து நகுலனைச் சுமக்கின்றன. அளவில் பெரியவையும், வயதிலும், பலத்திலும் பாண்டவர்களின் குதிரைகளுக்கு நிகரானவையும், பெரும் வேகம் கொண்டவையும், அழகானவையும், தேவர்களால் கொடுக்கப்பட்டவையுமான அற்புத குதிரைகள், இளம் இளவரசர்களான சுபத்திரை மற்றும் திரௌபதியின் மகன்களைச் சுமக்கின்றன” என்றான் {சஞ்சயன்}.(ஏழு முனிவர்கள் என்பது ஏழு நட்சத்திர மண்டலங்கள் என்ற பொருளைக் கொள்ளும். “ரிஷ்யப்ரக்யா” “ṛśya prakhyā” என்பது மூலச் சொல். ரிக்ஷப்ரக்யா என்பதற்கு “கரடிகள் போன்றவை” என்ற பொருளும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து பிரகாசம் என்ற சொல்லும் வருவதால், அது நட்சத்திரக்கூட்டங்களைக் குறிப்பதாகவே கொள்ளலாம்.)
சிகண்டியின் பங்கு – பீஷ்மர்! – உத்யோக பர்வம் பகுதி 57அ-பாண்டவர்களிடம் சேர்ந்த ஏழு அக்ஷௌஹிணி படைகள் யார் மூலமாக வந்தன என்று சஞ்சயன் சொன்னது; பாண்டவர்கள் தரப்பில் ஒவ்வொருவரும் தங்களுக்கு இலக்காக யார் யாரைப் பிரித்துக் கொண்டார்கள் என்பதைச் சஞ்சயன் சொன்னது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, பாசத்தால் அங்கே வந்தவர்களும், பாண்டவர்கள் சார்பாக என் மகனின் {துரியோதனனின்} படைகளுடன் போரிடப்போகிறர்வர்களுமான யாரையெல்லாம் நீ கண்டாய்?”
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளில் முதன்மையானவனான கிருஷ்ணனையும், சேகிதானனையும், யுயுதானன் என்று அழைக்கப்படும் சாத்யகி ஆகியோர் அங்கு வந்திருந்ததைக் கண்டேன். தங்கள் பலத்தில் செருக்கும், அகில உலகப் புகழும் கொண்ட {சேகிதானான் மற்றும் சாத்யகி ஆகிய} அவ்விரு தேர்வீரர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் பாண்டவர்களை வந்தடைந்தனர்.
பாஞ்சாலர்களின் மன்னான துருபதன், திருஷ்டத்யும்னன் தலைமையிலான சத்யஜித் மற்றும் பிறரைக் கொண்ட தனது பத்து {10} மகன்களால் சூழப்பட்டு, சிகண்டியால் நன்கு பாதுகாக்கப்பட்டு, தனது படைவீரர்களுக்கு அனைத்து அடிப்படை பொருட்களையும் கொடுத்து, யுதிஷ்டிரனைக் கௌரவப்படுத்தும் வகையில் ஒரு முழு அக்ஷௌஹிணியுடன் அங்கே வந்திருக்கிறான்.
பூமியின் தலைவனான விராடன், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் சூழ, தனது மகன்களான சங்கன் மற்றும் உத்தரன் ஆகிய இருவருடனும், மதிராக்ஷன் தலைமையிலான சூரியதத்தன் மற்றும் பிற வீரர்களுடனும், தன் தம்பிகள் மற்றும் மகன்களின் துணையுடனும், பிருதையின் {குந்தியின்} மகனை {யுதிஷ்டிரனை} வந்தடைந்திருக்கிறான்.
ஜராசந்தனின் மகனான மகத மன்னன் {ஜயத்சேனன் [சகாதேவன்]} மற்றும் சேதிகளின் மன்னன் திருஷ்டகேது ஆகியோர் ஆளுக்கு ஒவ்வொரு அக்ஷௌஹிணி துருப்புகளுடன் அங்கே வந்திருக்கின்றனர்.
ஊதா நிறக் கொடிகளுடன் கூடிய கேகயத்தின் ஐந்து சகோதரர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் சூழ, பாண்டவர்களை வந்தடைந்திருக்கிறார்கள். பாண்டவர்களுக்காகத் தார்தராஷ்டிர படைகளுடன் {திருதராஷ்டிர படைகளுடன்} மோதப்போகும் இந்த அளவு எண்ணிக்கையிலான படைகள் அங்கு கூடியிருப்பதை நான் கண்டேன்.
மனித, தெய்வீக, கந்தர்வ, அசுர வகைகளிலான போர் வியூகங்களை அறிந்தவனும், பெரும் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன் அந்தப் படைகளுக்குத் தலைமை தாங்குகிறான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்தனுவின் மகன் பீஷ்மர், சிகண்டியின் பங்காக {இலக்காக} நிர்ணயிப்பட்டிருக்கிறார்; தன் மத்ஸ்ய வீரர்கள் அனைவருடன் விராடன் சிகண்டியை ஆதரிப்பான் {பின்பலமாக இருப்பான்}.
பெரும் பலமிக்க மத்ர மன்னன் {சல்யன்}, பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனின்} பங்காக நிர்ணயிப்பட்டிருக்கிறார். எனினும், இவர்கள் இருவரும் சரியான {சமமான} இணையல்ல என்பது சிலரது கருத்தாக இருக்கிறது.
துரியோதனனும், அவனது தொண்ணூற்றொன்பது சகோதரர்களும், மேலும், கிழக்கு மற்றும் தெற்கின் ஆட்சியாளர்களும் பீமசேனனின் பங்காகக் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றனர்.
விகர்த்தனன் மகன் கர்ணன், சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன் ஆகியோர் அர்ஜுனனின் பங்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இந்தப் பூமியில் வெல்லப்பட முடியாத வீரர்களையும், தங்கள் பலத்தில் செருக்குடையோரையும், அர்ஜுனன் தனது பங்காக ஏற்றுக் கொண்டான்.
வலிமைமிக்க வில்லாளிகளான கேகயத்தின் ஐந்து அரச சகோதரர்கள் [1], (திருதராஷ்டிரர் பக்கத்தில் உள்ள) கேகய வீரர்களைத் தங்கள் எதிரிகளாக ஏற்று, போரில் தங்கள் பலத்தைக் காட்டப் போகிறார்கள். (விந்தன், அனுவிந்தன் ஆகியோரால் கேகயத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள் இவர்கள்.)அவர்களது பங்கில், மாளவர்கள், சால்வகர்கள் மற்றும் திரிகார்த்தப் படையைச் சேர்ந்தவர்களும், வெற்றி அல்லது மரணம் என்று உறுதியேற்றிருப்பவர்களுமான இரு புகழ்பெற்ற {சம்சப்தகர்கள் என்ற} வீரர்களும் அவர்களது {இலக்காக நிர்ணயிக்கப்பட்ட} பங்கில் இருக்கிறார்கள்.துரியோதனனின் மகன்கள், துச்சாசனன், மன்னன் பிருகத்பலன் ஆகியோர் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} பங்காகக் நிர்ணயிக்கப்பட்டனர்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்க, சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கொடிகளுடைய தேரைக் கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளுமான திரௌபதியின் மகன்கள், திருஷ்டத்யும்னன் தலைமையில் துரோணருக்கு எதிராக முன்னேறுவார்கள்.
சேகிதானன் தனது தேரில் இருந்து கொண்டு சோமதத்தனுடன் தனிப் போரில் மோத விரும்புகிறான். அதே வேளையில் சாத்யகி, போஜர்கள் தலைவனான கிருதவர்மனுக்கு எதிராகப் போரிட ஆவலுடன் இருக்கிறான்.
போர்க்களத்தில் பயங்கரக் கர்ஜனை புரியும் மாத்ரியின் வீரமகனான சகாதேவன், உமது மைத்துனனான சுபலனின் மகனைத் {சகுனியைத்} தனது பங்காகக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறான்.
மத்ராவதியின் {மாத்ரியின்} மகனான நகுலன், வஞ்சகம் நிறைந்த உலூகனையும், சாரஸ்வதர்கள் [2] (சரஸ்வதி ஆற்றங்கரையில் இருந்த மன்னர்கள்)என்ற பழங்குடியினரையும் தனது பங்காகக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறான்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரிடப்போகிறவர்களான பூமியில் உள்ள பிற மன்னர்கள் அனைவரையும், ஒவ்வொருவராகப் பெயரைச் சொல்லி, {அவர்களைத்} தங்கள் ஒவ்வொருவருக்குமான பங்காகப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, பிரித்துக் கொண்டார்கள். இப்படியே பாண்டவப் படை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இப்போது, உமது மகன்களுடன் கூடிய நீர் எது சிறந்தது என்று கருதுவீரோ, அதைத் தாமதமின்றிச் செய்வீராக” என்றான் {சஞ்சயன்}.
அச்சமற்ற திருஷ்டத்யும்னன் ! – உத்யோக பர்வம் பகுதி 57ஆ-துரியோதனனை நினைத்து திருதராஷ்டிரன் வருந்தியது; பாண்டவர்களின் பலம் அறிந்ததாலேயே பீஷ்மர் போரை விரும்பவில்லை என்று திருதராஷ்டிரன் சொன்னது; துரியோதனன் தனது தந்தை திருதராஷ்டிரனுக்கு உற்சாகமூட்டியது; யுதிஷ்டிரனைப் போருக்கு யார் தூண்டுவது எனத் திருதராஷ்டிரன் மீண்டும் சஞ்சயனிடம் கேட்டது; சஞ்சயன் திருஷ்டத்யும்னனைக் குறித்துச் சொன்னது; திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரனிடம் பேசியது; யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனை மெச்சியது; கௌரவர்களை எச்சரிக்கும் வகையான சொற்களைத் திருஷ்டத்யும்னன் சஞ்சயனிடம் சொன்னது…
திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொன்னான், “ஐயோ, ஏமாற்றுகரப் பகடைக்கு அடிமையான எனது மூட மகன்கள் அனைவரும், யாருடன் போர்க்களத்தில் மோத வேண்டும் என்று விரும்பினார்களோ, அந்த வலிமைமிக்கப் பீமனால் ஏற்கனவே மாண்டுவிட்டார்கள். நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல, வேள்விக்காக மரணத்தால் {காலனால்} புனிதமாக்கப்பட்டவர்கள் போல {வேள்வி விலங்கைப் போல}, பூமியின் மன்னர்கள் அனைவருமே கூடக் காண்டீவத்தை நோக்கி விரைவார்கள். என்னால் காயமுற்ற அந்த ஒப்பற்ற வீரர்களால் {பாண்டவர்களால்} எனது படை ஏற்கனவே துரத்தப்பட்டு விட்டதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில், பாண்டுவின் மகன்களால் {பாண்டவர்களால்} மோதலில் உடைக்கப்பட்ட எனது வீரர்களின் தலைவர்களை யார் பின்தொடர்வார்கள்?
அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும், வலிமை மிக்கத் தேர்வீரர்களாவர். பெரும் துணிவும், புகழ்மிக்கச் சாதனைகளும், பெரும் ஆற்றலும், எரியும் சூரியனுக்கு நிகரான சக்தி ஆகியவற்றைக் கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் வெற்றிவாகை சூடுபவர்களாவர். யுதிஷ்டிரனைத் தங்கள் தலைவனாகவும், மதுவைக் கொன்றவனை {மதுசூதனன்_கிருஷ்ணனைத்} தங்கள் பாதுகாவலனாகவும், வீரனான சவ்யசச்சின் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரனை {பீமனைத்} தங்கள் போர்வீரர்களாகவும், நகுலன், சகாதவேன், பிரஷதன் மகனான திருஷ்டத்யும்னன், சாத்யகி, துருபதன், தன் மகனுடன் கூடிய திருஷ்டகேது, உத்தமௌஜஸ், பாஞ்சாலர்களின் வெல்லப்பட முடியாத யுதாமன்யு, சிகண்டி, க்ஷத்திரதேவன், விராடனின் மகன் உத்தரன், காசயர்கள் {காசி நாட்டவர்}, சேதிக்கள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள், விராடனின் மகன் பப்ரு, பாஞ்சாலர்கள், பிரபத்திரகர்கள் ஆகியோரைத் தங்களுக்காகப் போரிடுபவர்களாகக் கொண்டவர்களிடம் இருந்து இந்திரனாலும் இந்தப் பூமியைப் பறிக்க முடியாது. போரில் அமைதியும் உறுதியும் கொண்ட அவ்வீரர்களால் மலைகளையும் பிளக்க முடியும். ஐயோ, தொண்டை கட்டுமளவுக்கு நான் கதறினாலும் கூட, என்னைப் புறக்கணித்து, ஓ சஞ்சயா, அனைத்து அறங்களையும் கொண்ட அந்தத் தெய்வீக ஆற்றல் படைத்தோரிடம் {பாண்டவர்களிடம்} எனது தீய மகன் {துரியோதனன்} போரிட விரும்புகிறானே.”
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம், “பாண்டவர்களும் நாங்களும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களே; அவர்களும் நாங்களும் ஒரே பூமியில் தான் நடக்கிறோம். பாண்டவர்களுக்கே வெற்றி கிட்டும் என்று நீர் தீர்மானிப்பது எப்படி? வலிமைமிக்க வில்லாளிகளான பீஷ்மர், துரோணர், கிருபர், வெல்லப்பட முடியாத கர்ணன், ஜெயத்ரதன், சோமதத்தன், அஸ்வத்தாமன் ஆகிய அனைவரும் பெரும் ஆற்றல் படைத்தவர்களாவர். தேவர்களோடு கூடிய இந்திரனே ஆனாலும் அவர்களை வீழ்த்த முடியாது. அப்படியிருக்கையில், ஓ! தந்தையே, பாண்டவர்களைக் குறித்து நீர் என்ன சொல்வீர்?
ஆயுதம் தாங்கி நிற்கும் இந்த உன்னதமான வீர மன்னர்கள் அனைவரும், ஓ! தந்தையே, எனக்காகப் பாண்டவர்களை எதிர்த்து நிற்க இயன்றவர்களே, அதே வேளையில் பாண்டவர்கள் எனது துருப்புகளைப் பார்க்கக்கூட இயன்றவர்களல்லர். பாண்டவர்களையும், அவர்களது மகன்களையும் போரில் சந்திக்கப் போதிய பலம் கொண்டவனாகவே நான் இருக்கிறேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எனது நலனில் ஆவலுள்ள இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும், இளம் மான்களை வலையில் பிடிப்பது போல, பாண்டவர்கள் அனைவரையும் நிச்சயம் பிடிப்பார்கள். நமது தேர்க்கூட்டங்கள் மற்றும் கணைகளின் கண்ணிகளின் விளைவாகப் பாஞ்சாலர்களும் பாண்டவர்களும் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படுவார்கள் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்” என்றான் {துரியோதனன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, இந்த எனது மகன் {துரியோதனன்} பைத்தியக்காரனைப் போலப் பேசுகிறான். நீதிமானான யுதிஷ்டிரனைப் போர்க்களத்தில் வீழ்த்த இயலாதவனாக இருக்கிறான். அந்த ஒப்பற்றவர்களுடன் {பாண்டவர்களுடன்} இந்தப் பீஷ்மர் போரை விரும்பவில்லை. ஆகையால், புகழ்வாய்ந்த, பலமிக்க, அறம்சார்ந்த, உயர்ஆன்ம பாண்டவர்கள் மற்றும் அவர்களின் மகன்களின் வலிமையை இவர் {இந்தப் பீஷ்மர்} உண்மையில் அறிந்திருக்கிறார். ஆனால், ஓ! சஞ்சயா, அவர்களது {பாண்டவர்களின்} நடவடிக்கைகளை எனக்கு மீண்டும் சொல். (ஹோம) நெருப்பைத் தெளிந்த நெய்யைக் கொண்டு தூண்டும் புரோகிதர்களைப் போல, அந்த ஒப்பற்ற, பெரும் வேகம் கொண்ட அந்த வலிமைமிக்க வில்லாளிகளை {பாண்டவர்களை} யார் தூண்டி விடுகிறார்கள் என்பதை எனக்குச் சொல்” என்றான் {திருதராஷ்டிரன்}.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, “பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, போரிடுவீராக. சிறு அச்சத்தையும் ஊக்கப்படுத்தாதீர். திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} உள்ள பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும், வரப்போகும் கடும் மோதலில் ஆயுத மழைக்கு இலக்காவார்கள். உண்மையில், சிறு மீன்களை நீரில் பிடிக்கும் திமிங்கலம் போல, அங்கே தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து, சினத்துடன் கூடியிருக்கும் அந்த மன்னர்கள் அனைவருடனும் நான் ஒருவனே {தனியனாக} மோதுவேன். பெருகும் கடலைத் தடுக்கும் கரையைப் போல, பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்யன், சுயோதனன் {துரியோதனன்} ஆகிய அனைவரையும் நானே {ஒருவனாகவே} தடுப்பேன்” என்று பாண்டவர்களிடம் எப்போதும் போருக்காகத் தூண்டுகிறான் {திருஷ்டத்யும்னன்}.
அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன், அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்}, “உனது ஆற்றலையும், உறுதியையுமே பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் முழுமையாக நம்பியிருக்கிறோம். போரிலிருந்து எங்களைப் பாதுகாப்பாக மீட்பாயாக. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, க்ஷத்திரிய வகைக் கடமைகளில் நீ உறுதியாக இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உண்மையில், கௌரவர்களிடம் தனியொருவனாகப் போரிட நீ தகுந்தவனே. போரிட விரும்பி, அவர்கள் {கௌரவர்கள்} நம் முன்னிலையில் நிற்கும்போது, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {திருஷ்டத்யும்னா}, நீ எதைச் செய்வாயோ, அஃது எங்களுக்கு நன்மையானதாகவே இருக்கும் என்பது நிச்சயம். படுதோல்வி அடைந்து, பாதுகாப்பு நாடி போரில் இருந்து தப்பியோடுபர்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில், தன் ஆற்றலை வெளிக்காட்டும் ஒரு வீரனை ஆயிரம் {விலை} கொடுத்தாவது {ஒருவன்} வாங்க வேண்டும் என்பதே சாத்திரமறிந்தோர் கருத்து. போர்க்களத்தில் அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களை விடுவிப்பவன் நீ என்பதில் {யாருக்கும்} ஐயமில்லை. {அதாவது, நீ எங்களுக்கு மதிப்புமிக்கவன் என்பதில் ஐயமில்லை}” என்றான் {யுதிஷ்டிரன்}.
நீதிமானான குந்தியின் மகன் யுதிஷ்டிரன் இதைச் சொன்ன போது, அச்சமற்ற வகையில் திருஷ்டத்யும்னன் {சஞ்சயனான} என்னிடம், “ஓ! சூதரே {சஞ்சயரே}, நீர் தாமதமில்லாமல் சென்று, துரியோதனனுக்காகப் போரிட வந்திருக்கும் அனைவரிடமும், பாஹ்லீகர்களோடு கூடிய பிரதீப குல குருக்களிடமும், சரத்வான் மகன் {கிருபர்}, கர்ணன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஜெயத்ரதன், துச்சாசனன், விகர்ணன், மன்னன் துரியோதனன் மற்றும் பீஷ்மர் ஆகியோரிடமும் “தேவர்களால் பாதுகாக்கப்படும் அர்ஜுனனால் நீங்கள் கொல்லப்பட வேண்டாம். அது நடப்பதற்குள், ஏதேனும் ஒரு நல்ல மனிதன் யுதிஷ்டிரரைத் அணுகி, மனிதரில் சிறந்தவரான அந்தப் பாண்டுவின் மகனிடம், {பாண்டவர்கள் ஒப்படைத்த} நாட்டை ஏற்றுக் கொள்ளும்படி தாமதமில்லாமல் வேண்டிக் கொள்ளட்டும். கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்டவரான பாண்டுவின் மகன் சவ்யசச்சினைப் {அர்ஜுனரைப்} போன்ற வீரர் எவரும் இந்தப் பூமியில் இல்லை. காண்டீவத்தைக் கொண்டிருப்பவரின் {அர்ஜுனரின்} தெய்வீகத் தேர் தேவர்களாலேயே பாதுகாக்கப்படுகிறது. மனிதர்களால் அவர் {அர்ஜுனர்} வெல்லப்படத்தக்கவர் அல்ல. எனவே, போரிடத் துணியாதீர்” என்று சொல்லும்” என்ற இந்தச் சொற்களைப் {திருஷ்டத்யும்னன்} பேசினான்” என்றான் {சஞ்சயன்}.
ஊசி முனை அளவு நிலம்கூடத் தரமாட்டேன்! – உத்யோக பர்வம் பகுதி 58-கௌரவர்கள் யாரும் போரை விரும்பவில்லை, போரைத் தானும் விரும்பவில்லை என்று திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னது; கௌரவர்களில் யாருடைய துணையுமின்றி, தான் பாண்டவர்களைக் கொல்லப் போவதாகத் துரியோதனன் சொன்னது; அப்படிச் சொன்ன துரியோதனனை திருதராஷ்டிரன் நிந்தித்தது…
திருதராஷ்டிரன்{துரியோதனனிடம்} சொன்னான், “பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் க்ஷத்திரிய சக்தியைக் கொண்டு, தன் இளமைக்காலத்தில் இருந்தே பிரம்மச்சரிய வாழ்வு முறையை மேற்கொள்கிறான். ஐயோ, இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் என்னைப் புறக்கணித்து, எனது மூட மகன்கள், அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} போரிட விரும்புகின்றனரே. ஓ! துரியோதனா, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, பகைமையில் இருந்து விலகும்படி நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, எந்தச் சூழ்நிலையிலும் போர் மெச்சத் தகுந்ததல்ல. உன்னையும், உனது தொண்டர்களையும் பரமாரித்துக் கொள்ளப் பாதிப் பூமியே போதுமானது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களுக்குரிய பங்கைத் திருப்பிக் கொடுப்பாயாக. உயர் ஆன்ம பாண்டவர்களிடம் சமாதானம் ஏற்படுத்திக் கொள்வதே நீதியின் பாற்பட்டது எனக் கௌரவர்கள் அனைவரும் கருதுகிறார்கள். ஓ! மகனே {துரியோதனா}, இப்படி நினைத்துப் பார். இந்த உனது படை, உனது மரணத்தின் உருவமே என்பதைக் காண்பாய்.
நீ கொண்டிருக்கும் மடமையின் காரணமாக, உன்னால் இதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. நானோ, பாஹ்லீகனோ, பீஷ்மரோ, துரோணரோ, அஸ்வத்தாமனோ, சஞ்சயனோ, சோமதத்தனோ, சல்யனோ, சத்தியவிரதனோ, புருமித்ரனோ, பூரிஸ்ரவசோ போரை விரும்பவில்லை. உண்மையில், இவர்களில் யாருமே போரை விரும்பவில்லை. உண்மையில், எதிரிகளால் தாங்கள் பாதிக்கப்படும்போது, கௌரவர்கள் யாரைச் சார்ந்த இருப்பார்களோ, அவர்கள் அனைவரும் போரை அங்கீகரிக்கவில்லை. ஓ! குழந்தாய் {துரியோதனா}, அதுவே {அக்கருத்தே} உனக்கும் ஏற்புடையதாக இருக்கட்டும். ஐயோ, நீ உனது சொந்த விருப்பத்தின் பேரில் இதை மேற்கொள்ளவில்லை. கர்ணன், தீய மனம் கொண்ட துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரே உன்னை அதற்கு {அம்முடிவிற்கு} வழிநடத்துகிறார்கள்.” {என்றான் திருதராஷ்டிரன்}.
அதற்குத் துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “உம்மையோ, துரோணரையோ, அஸ்வத்தாமரையோ, சஞ்சயரையோ, விகர்ணனையோ, காம்போஜனையோ, கிருபரையோ, பாஹ்லீகனையோ, சத்தியவிரதனையோ, புருமித்ரனையோ, பூரிஸ்ரவசையோ, உமது கட்சியைச் சேர்ந்த எவரையும் சார்ந்திராமலே போரிடும்படிக்கு நான் பாண்டவர்களுக்கு அறைகூவல் விடுகிறேன். ஆனால், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, நானும், கர்ணனும் மட்டுமே இருந்து, யுதிஷ்டிரனைப் பலியாக {வேள்வி விலங்காக} வைத்து, ஓ! தந்தையே, தேவையான அனைத்துச் சடங்குகளுடன், போரெனும் வேள்வியைத் தனியாகக் கொண்டாடத் தயாராக இருக்கிறோம்.
அவ்வேள்வியில் எனது தேரே வேள்விப்பீடம்; நீர்க்காணிக்கைகள் செலுத்த எனது வாளே சிறு கரண்டி, கதாயுதம் பெரிய கரண்டி; எனது கவசமே பார்வையாளர்கள் கூட்டம்; எனது குதிரைகள் நான்கும் அவ்வேள்வியைச் செய்யும் புரோகிதர்கள்; எனது கணைகளே குசப் புற்கள் {தர்ப்பை}; புகழே தெளிந்த நெய். [ரதம் வேதி, கத்தி ஸருவம், கதை ஸருக்கு; கவசம் மான்தோல், எனது குதிரைகள் நான்கு ஹோதாக்கள், பாணங்கள் தர்ப்பைகள், புகழானது ஹவிஸ் என்றும் சொல்லப்படுகிறது.)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனுக்கு மரியாதை செலுத்தி, எங்கள் பொருட்களை மட்டுமே கொண்டு இத்தகு போரெனும் வேள்வியைச் செய்யப் போகும் நாங்கள், பகைவர்களைக் கொன்ற பிறகு, புகழோடு கூடிய வெற்றியுடன் திரும்புவோம். ஓ! தந்தையே, நான், கர்ணன் மற்றும் என் தம்பி துச்சாசனன் ஆகிய மூவரும் சேர்ந்து, போர்க்களத்தில் பாண்டவர்களைக் கொல்வோம்.
ஒன்று பாண்டவர்களைக் கொல்லும் நான், இப்பூமியை ஆள்வேன், அல்லது என்னைக் கொன்ற பிறகு, பாண்டவர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கட்டும். ஓ! மன்னா, ஓ! மங்காப் புகழ் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, உயிர், நாடு, செல்வம், ஏன் அனைத்தையும் நான் தியாகம் செய்வேன், ஆனால் பாண்டவர்களுடன் அருகருகே வாழ்வதென்பது என்னால் இயலாது. ஓ! மதிப்பிற்குரியவரே {திருதராஷ்டிரரே}, ஊசியின் கூரிய முனை மூடும் அளவிலான நிலத்தைக்கூட நான் பாண்டவர்களுக்குத் திருப்பித் தர மாட்டேன்” என்றான் {துரியோதனன்}.
திருதராஷ்டிரன், “நான் இப்போது, துரியோதனனை என்றென்றைக்கும் கைவிடுகிறேன். மன்னர்களே, இந்த மூடனைப் {துரியோதனனைப்} பின்தொடர்ந்து யமனுலகு செல்லப் போகும் உங்கள் அனைவருக்காகவும் நான் வருந்துகிறேன். மான்கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் புலிகளைப் போல, அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, போர்க்களத்தில் கூடியிருக்கும் உங்கள் முக்கியத் தலைவர்களை அடித்து வீழ்த்துவார்கள்.
நீண்ட கரங்கள் கொண்ட யுயுதானனால் {சாத்யகியால்} நசுக்கி தூர வீசப்படும் போது, பாரதப் படை ஆதரவற்ற பெண்ணைப் போல இருக்கும் என நான் நினைக்கிறேன். சாத்யகி இல்லாமலேயே, ஏற்கனவே போதுமானதாக இருந்த யுதிஷ்டிரனின் படைக்கு கூடுதல் பலமாக, அந்தச் சினியின் மகன் {சாத்யகி}, போர்க்களத்தில் தனது நிலையை உறுதி செய்து, உழுத நிலத்தில் வீசப்படும் விதைகளைப் போலத் தன் கணைகளைச் சிதறுவான்.
எதிரிகளுடைய அந்தப் படையின் முன்னணியில், தனது நிலையைப் பீமசேனன் ஏற்பான். அச்சமற்ற அவனது வீரர்கள் அனைவரும் அவனுக்குப் பின்னால் அரணாக இருப்பார்கள். ஓ! துரியோதனா, பெரும் மலைகளைப் போன்ற யானைகள், தங்கள் தந்தந்தங்கள் ஒடிந்து, தலை நசுக்கப்பட்டு, உடல்களில் ஆகோரமாகச் சாயம் ஏற்றப்பட்டு, பிளக்கப்பட்ட மலைகளைப் போல போர்க்களத்தின் தரையில் கிடப்பதைக் கண்டு, உண்மையில், அவனுடன் {பீமனுடன்} மோதுவதற்கு எப்போது நீ அஞ்சுவாயோ, அப்போது, எனது இந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.
தேர்கள், குதிரைகள், ஆகியவற்றைக் கொண்ட உனது படை, பீமசேனனால் எரிக்கப்பட்டு, வெறும் காட்டுத் தீயாக பரந்து விரிந்து இருப்பதை எப்போது நீ காண்பாயோ, அப்போது, இந்த எனது வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.
பாண்டவர்களிடம் நீ சமாதானம் கொள்ளவில்லையென்றால், பேரிடர் உனதாகும். பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்ட பிறகு, நீ அமைதியாக ஓய்வாய். உண்மையில், பெரும் கானகம் ஒன்று வேரோடு சாய்க்கப்பட்டதைப் போல, முழு கௌரவப்படையையும் எப்போது அவன் {பீமன்} தரையோடு தரையாக்குவானோ, அப்போது நீ எனது இந்த வார்த்தைகளை நினைவுகூர்வாய்” என்றான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பூமியின் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இதைச் சொன்ன அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, மீண்டும் சஞ்சயனிடம் பின்வருமாறு கேட்டான்.”
கிருஷ்ணனின் பேச்சு! – உத்யோக பர்வம் பகுதி 59-கிருஷ்ணன், சத்யபாமா, அர்ஜுனன் மற்றும் திரௌபதி ஆகியோர் அந்தப்புரத்தில் இருந்தபோது சஞ்சயன் சந்தித்தது; கிருஷ்ணனின் கால்கள் அர்ஜுனனின் மடியிலும், அர்ஜுனனின் கால்கள் சத்யபாமா மற்றும் திரௌபதியின் மடியிலும் கிடந்ததைச் சஞ்சயன் கண்டது; அர்ஜுனனின் பாதங்களில் மங்களக்குறிகளைச் சஞ்சயன் கண்டது; திருதராஷ்டிரனுக்குச் சொல்லுமாறு எச்சரிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கிருஷ்ணன் சஞ்சயனிடம் சொன்னது; கிருஷ்ணன் பேசி முடித்ததும், அர்ஜுனனும் அதே போன்ற வார்த்தைகளைச் சொன்னது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {சஞ்சயா}, உயர் ஆன்ம வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மேலும் என்ன சொன்னார்கள் என்பதை எனக்குச் சொல். இது குறித்து அனைத்தையும் நான் உன்னிடம் கேட்க ஆவலாக இருக்கிறேன்”
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் என்ன நிலையில் நான் கண்டேன் என்பதைச் சொல்கிறேன் கேளும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் உமக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பணிந்த பார்வையுடனும், கூப்பிய கரங்களுடனும், நன்கு அடக்கப்பட்ட புலன்களுடனும், அந்த மனிதர்களில் தேவர்களுடன் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுடன்} கலந்துரையாடுவதற்காக அந்தரப்புரத்திற்குள் நான் நுழைந்தேன்.
அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்_கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனும்}, திரௌபதியும், பிராட்டி சத்யபாமாவும் {the two Krishnas and Draupadi and lady Satyabhama } இருந்த அந்த இடத்திற்கு, அபிமன்யுவோ, இரட்டையர்களோ {நகுலன் மற்றும் சகாதேவனோ} கூடச் செல்ல முடியாது. மலர்மாலைகளால் உடல் அலங்கரிக்கப்பட்டு, இலுப்பம்பூ மதுவினால் மயங்கியிருந்த {exhilarated with Bassia wine} அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களை {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனை} அங்கே நான் கண்டேன்.
சிறந்த ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களாலும், எண்ணிலடங்கா ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள், பல்வேறு இழையமைப்புகளும், நிறங்களும் கொண்ட தரைவிரிப்புகளால் மூடப்பட்டிருந்த தங்க மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
கேசவனின் {கிருஷ்ணனின்} பாதங்கள் அர்ஜுனன் மடியிலும், உயர் ஆன்ம அர்ஜுனனின் பாதங்கள் கிருஷ்ணை {திரௌபதி} மற்றும் சத்யபாமா ஆகியோர் மடிகளிலும் இருந்ததை நான் கண்டேன்.
அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, (நான் அமர்வதற்காக), தங்கத்தாலான ஒரு பாதபீடத்தை எனக்குச் சுட்டிக்காட்டினான். அதை என் கையால் தொட்டபடி, நான் கீழே தரையில் அமர்ந்து கொண்டேன். அவன் {அர்ஜுனன்} தனது காலை அந்தப் பாதபீடத்தில் இருந்து எடுத்தபோது, அவனது {அர்ஜுனனின்} இரு பாதங்களிலும் மங்களக்குறிகளை நான் கண்டேன். குதிகால்களில் இருந்து கட்டை விரல் வரை ஓடும் இரு நெடுக்கான கோடுகளை அவை {பாதங்கள்} கொண்டிருந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கரிய நிறமும், உயரமான தோற்றமும், ஆச்சாமரத் {சாலமரத்} தண்டுகளைப் போன்ற உறுதியும் கொண்ட இளமை நிறைந்த அந்த வீரர்கள் இருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} ஒரே இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்ட போது, பெரும் அச்சம் என்னைப் பீடித்தது.
ஒன்றாக அமர்ந்திருந்த இந்திரனையும், விஷ்ணுவையும் போல அவ்விருவரும் {கிருஷ்ணனும் அர்ஜுனனும்} எனக்குத் தெரிந்தார்கள். ஆயினும், துரோணர் மற்றும் பீஷ்மரையும், வீண்வீராப்புகளை உரத்துப் பேசும் கர்ணனையும் நம்புவதன் விளைவாக, இந்த மந்த புத்தி கொண்ட துரியோதனன் இதை அறியவில்லை. அவ்விருவரையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} தனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கச் செய்யும், அந்த நீதிமானான யுதிஷ்டிரனின் விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் அந்தக் கணமே நான் உறுதியடைந்தேன்.
உணவு மற்றும் பானங்களால், விருந்தோம்பலோடு உபசரிக்கப்பட்டு, மற்ற உபசாரங்களாலும் கௌரவிக்கப்பட்ட நான், எனது கூப்பிய கரங்களைத் தலையில் வைத்துக் கொண்டு, உமது செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தேன்.
பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, நாண்கயிற்றால் தழும்பேறிய தனது கரங்களைக் கொண்டு தன் மடியில் இருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} மங்களகரமான பாதங்களை அகற்றி அவனைப் {கிருஷ்ணனைப்} பேசத் தூண்டினான். அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சக்தியில் இந்திரனைப் பிரதிபலித்த கிருஷ்ணன், இந்திரனின் கொடி போல உறுதியாக அமர்ந்த பிறகு என்னிடம் பேசினான். பேச்சாளர்களில் சிறந்த அவன் {கிருஷ்ணன்} சொன்ன வார்த்தைகள், திருதராஷ்டிரன் மகன்களுக்குத் துயர் நிறைந்தவையாகவும் அச்சம் தருவனவையாக இருந்தாலும், இனிமையாகவும், அழகாகவும், மென்மையாகவும் இருந்தன. எவன் ஒருவன் மட்டுமே பேசத் தகுந்தவனோ, அந்தக் கிருஷ்ணன், உச்சரித்த வார்த்தைகள், முடிவில் இதயத்தை உருக்குவதாக இருந்தாலும், உண்மையில் அவை, சரியான முக்கியத்துவம் கொண்டவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருந்தன.
வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! சஞ்சயரே, ஓ! சூதரே {சஞ்சயரே}, எங்கள் வேண்டுகோளுக்கிணங்க, முதலில் முதியோர் அனைவரையும் வணங்கி, இளையோரின் நலன்களையும் விசாரித்த பிறகு, குருக்களின் முதன்மையானவரான பீஷ்மரும், துரோணரும் கேட்டுக் கொண்டிருக்கையில், ஞானியான திருதராஷ்டிரரிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லும். “பெரிய ஆபத்து ஒன்று உம்மை அச்சுறுத்தும் போது, அந்தணர்களுக்குப் பரிசுகளை அளித்து, பல்வேறு வேள்விகளைச் செய்து, உமது மகன்கள் மற்றும் மனைவியருடன் மகிழ்ந்திருப்பீரோ? மன்னன் யுதிஷ்டிரர் வெற்றிக்கு ஆவலாய் இருக்கையில், தகுந்தவர்களுக்குச் செல்வத்தைத் தானமளித்து, விரும்பத்தக்க மகன்களைப் பெற்று, உமது அன்புக்குரியோருக்கு ஏற்புடைய அலுவல்களைச் செய்வீரோ?” என்று அவன் {கிருஷ்ணன், உம்மிடம்} சொல்லச் சொன்னான்.
நான் தொலைவில் இருந்த போது, கண்ணீருடன் கூடிய அந்தக் கிருஷ்ணன் என்னிடம், “காலத்தோடு திரட்டப்பட்ட கடன், என்னால் இன்னும் திருப்பிச் செலுத்தப்படவில்லை. எரிக்கும் சக்தி கொண்ட காண்டீவத்தைத் தனது வில்லாகவும், உதவும் துணைவனாக என்னையும் கொண்ட சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} நீர் பகை கொண்டிருக்கிறீர். புரந்தரனாகவும் {இந்திரனாகவும்}, ஆயுள் நிரம்பியவனாகவும் இருந்தாலும் கூட, என்னைத் துணைவனாகக் கொண்ட பார்த்தனுக்கு அறைகூவல் விடுக்கத்தகுந்தவன் எவன்? போரில் அர்ஜுனனை {அர்ஜுனனுக்கு} வீழ்த்தவல்ல ஒருவனால், உண்மையில், தன் இரு கரங்களைக் கொண்டு பூமியைத் தாங்கிக் கொள்ள முடியும்; படைக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் கோபத்தில் எரித்துவிட முடியும்; சொர்க்கத்தில் இருந்து தேவர்களை அவனால் வீசி எறிந்துவிட முடியும்.
தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுக்கு மத்தியிலும்; யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும் நாகர்களுக்கு மத்தியிலும், அர்ஜுனனுடன் போரில் மோதவல்ல ஒரு நபரை என்னால் காண முடியவில்லை.
ஒரு புறத்தில் ஒரு தனி மனிதனையும் {அர்ஜுனனையும்ம்}, மறுபுறத்தில் எண்ணிலடங்கா வீரர்களையும் {கௌரவர்களையும்} கொண்டு, விராட நகரத்தில் நடந்த மோதல் குறித்து, என்னால் கேட்கப்பட்ட அற்புதக் கதையே இதற்குப் போதுமான சான்றாக இருக்கும். அதாவது, ஒருவனாக இருந்த பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்}, விராட நகரத்தில் இருந்து நீங்கள் முற்றாக விரட்டப்பட்டீர்கள் என்பதே இதற்குப் போதுமான சான்றல்லவா?
வலிமை, ஆற்றல், சக்தி, வேகம், கரங்களின் இலகு, அயராத்தன்மை, பொறுமை ஆகிய பண்புகள் அனைத்தும் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தவிர வேறு எவனிடமும் காணப்படாது” என்றான் {கிருஷ்ணன்}.
இப்படிப் பேசிய ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, தன் வார்த்தைகளால் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} உற்சாகமூட்டியபடி, ஆகாயத்தில் இருக்கும் மழை நிறைந்த மேகங்களைப் போலக் கர்ஜனை செய்தான். கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பிறகு, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனும் அதே தாக்கத்துடன் பேசினான்.
சமாதானமே விருப்பம்; போரல்ல! – உத்யோக பர்வம் பகுதி 60-இரு தரப்பு படைகளின் பலம் மற்றும் பலமின்மைகளையும் திருதராஷ்டிரன் நினைத்துப் பார்ப்பது; பாண்டவர்களுக்குத் தேவர்கள் உதவி செய்வார்கள் என்றும், சமாதானமே தனக்கு விருப்பமானது என்றும் திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னது..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தனது கண்ணையே அறிவாகக் {ஞானமாகக்} கொண்ட அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, சஞ்சயனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, நன்மை {எது?} என்றும், தீமை {எது?} என்றும், தான் கருதுவதைக் குறித்துப் பேசினான். தன்னால் இயன்றவரை, நன்மைகள் மற்றும் தீமைகளை விவரமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டவனும், இரு தரப்பின் பலம் மற்றும் பலவீனங்களைச் சரியாக உறுதி செய்து கொண்டவனும், தனது மகன்களின் வெற்றியை எப்போதும் விரும்புபவனும், கல்விமானுமான அந்தப் புத்திசாலி மன்னன் {திருதராஷ்டிரன்}, இரு தரப்புகளின் பலங்களைக் குறித்தும் ஒப்பீடு செய்ய ஆரம்பித்தான்.
கடைசியாக, மனித வகையிலும், தெய்வீக வகையிலும் பாண்டவர்களே பலத்தோடு இருப்பதாகவும், குருக்கள் {கௌரவர்கள்} பலவீனமாக இருப்பதாகவும் உறுதி செய்து கொண்ட திருதராஷ்டிரன், துரியோதனனிடம், “இந்தப் பதட்டம், ஓ! துரியோதனா, எப்போதும் என்னில் நிறைந்திருக்கிறது. உண்மையில் அஃது என்னை விட்டு அகல மறுக்கிறது. அதை நான், எனது கண்களால் காண்பதாக எனக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது. அனுமானத்தால் விளைந்த ஒரு காரியம் அல்ல இந்நம்பிக்கை. படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், தங்கள் வாரிசுகளின் மேல் பெரும் பாசத்தைக் காட்டுகின்றன. மேலும், வாரிசுகளுக்கு எது ஏற்புடையதோ? எது நன்மையானதோ? அதைத் தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்திச் செய்கின்றனர். நன்மை செய்ய விரும்புகிறவர்களின் வழக்கில் எல்லாம் இதுவும் பொதுவாகக் காணப்படுகிறது.
நல்லவர்கள், தங்களுக்குச் செய்யப்பட்ட நன்மையைத் திரும்பச் செய்யவும் மற்றும் தங்கள் நலன் விரும்பிகளுக்கு மிகவும் ஏற்புடையவற்றைச் செய்யவுமே எப்போதும் விரும்புகின்றனர். காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} தனக்குச் செய்யப்பட்டதை {செய்யப்பட்ட நன்மையைக்} கருதும் அக்னி, குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடக்கப்போகும் இந்தப் பயங்கர மோதலில், அர்ஜுனனுக்குத் தனது உதவியைத் தருவான் என்பதில் ஐயமில்லை. தந்தை பாசத்தால் தர்மனும் {யமனும்}, முறையாக எழுப்பப்பட்ட பிற தேவர்களும் சேர்ந்து பாண்டவர்களின் உதவிக்கு வருவார்கள்.
இடியைப் போன்ற விளைவுகளைக் கொடுக்கும் தேவர்கள், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரிடம் இருந்து அவர்களைக் {பாண்டவர்களைக்} காப்பதற்காகவே {நம் மேல்} கோபத்தில் நிறைந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.
சக்தி கொண்டவர்களும், ஆயுதங்களின் பயன்பாடுகளை நன்கு அறிந்தவர்களும், மனிதர்களில் புலிகளுமான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தேவர்களுடன் சேரும்போது, {நமது படையின்} மானுட வீரர்கள், அவர்களைக் காணவும் சக்தியற்றவர்களாக இருப்பார்கள்.
தடுக்கப்பட முடியாததும் அற்புதமானதும் தெய்வீகமானதுமான காண்டீவத்தை எவன் தனது வில்லாகக் கொண்டிருக்கிறானோ; பெரியதும், கணைகள் நிறைந்ததும், வற்றாததும், தெய்வீகமானதுமான இரு அம்பறாத்தூணிகளை எவன் கொண்டிருக்கிறானோ; புகை போன்ற செயல்பாடுடையதும், குரங்கு {அனுமன்} படத்தை தெய்வீக வடிவில் கொண்டதுமான கொடி எவனுக்கு உடையதோ; நான்கு கடல்கள் சூழ்ந்த பூமியில், ஈடு இணையற்றதும், மேகங்களின் கர்ஜனை போன்ற சடசடப்போசையை மனிதர்களைக் கேட்கச் செய்வதும், உருளும் இடியைப் போல எதிரிகளைப் அச்சங்கொள்ளச் செய்வதுமான தேரை எவன் கொண்டிருக்கிறானோ; மனித சக்திக்கு அப்பாற்பட்டவன் என மக்களால் எவன் கருதப்படுகிறானோ; போர்க்களத்தில் தேவர்களையே கூட வீழ்த்தவல்லவன் எனப் பூமியில் உள்ள மன்னர்கள் எவனை அறிகிறார்களோ; ஐநூறு {500} கணைகளை ஒரே நேரத்தில் எடுத்து, ஒருமுறை கண்மூடித் திறப்பதற்குள், அவற்றைப் பிறர் காணாமல் பெருந்தூரத்திற்கு எவன் அடிப்பானோ; மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்களான பூமியின் மன்னர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவனென்றும், போரிடத் தயாராக இருந்தால் ஒரே முறையில் ஐநூறு கணைகளை அடிக்க வல்லவன் என்றும், கரங்களின் பலத்தில் கார்த்தவீரியனுக்கு நிகரானவன் என்றும், பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ர மன்னனான சல்யன் மற்றும் பாகுபாடற்ற மனிதர்கள் அனைவரும் உண்மையில் எவனைக் கருதுகிறார்களோ, அவன், தேர்வீரர்கள் மத்தியில் புலியானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், பிருதையின் {குந்தியின்} மகனும், பெரும் வில்லாளியுமான அந்த அர்ஜுனன், ஆற்றலில், இந்திரனுக்கோ உபேந்திரனுக்கோ நிகரானவனே. இந்தக் கொடூரமான போரில் அந்தப் பெரும் வீரன் {அர்ஜுனன்} பெரும் அழிவை உண்டாக்குவதை நான் காண்கிறேன்.
ஓ! பாரதா {துரியோதனா}, குருக்களின் {கௌரவர்களின்} நலத்தில் உள்ள பதட்டத்தின் காரணமாக, பகலும் இரவும் இதையே நினைத்து, மகிழ்ச்சியற்றவனாகவும், உறக்கமற்றவனாகவும் நான் இருக்கிறேன். இந்தப் பூசலைத் தீர்க்க சமாதானத்தைத் தவிர வேறெதுவுமில்லை. குருக்களை {கௌரவர்களை} ஒரு பயங்கர அழிவு பீடிக்கப்போகிறது. பார்த்தர்களுடன் {பாண்டவர்களுடன்} சமாதானமே எனக்கு விருப்பமானது; போரல்ல! ஓ குழந்தாய் {துரியோதனா}, குருக்களை {கௌரவர்களை} விட எப்போதும் பாண்டவர்கள் வலிமைமிக்கவர்கள் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}.
தேவர்களைவிட என் சக்தி பெரிது! – உத்யோக பர்வம் பகுதி 61-பாண்டவர்களுக்குத் தேவர்கள் உதவ மாட்டார்கள் என்று துரியோதனன் திருதராஷ்டிரனிடம் சொல்வது; அப்படி உதவியிருந்தால் பதிமூன்று வருடங்களாகத் துன்பத்தை ஏன் பாண்டவர்கள் அனுபவிக்க வேண்டும் என்றும், தேவர்கள் உலகியல் காரியங்களில் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுவார்கள் என்றும் சொன்னது; அப்படியே தேவர்கள் இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டாலும், தன்னால் அவர்களை வசீகரித்துவிட முடியும் என்றும் சொன்னது; தேவர்கள் கொண்டிருக்கும் சக்தியைவிட, தான் கொண்டிருக்கும் சக்தி பெரிது எனச் சொன்னது; தான் பெற்றிருக்கும் மந்திர வித்தைகளைக் குறித்துச் சொன்னது; புத்தி, சக்தி, அறிவு, வளம் ஆகிய அனைத்திலும், தானே பாண்டவர்களை விட மேன்மையானவனாக இருப்பதாகத் திருதராஷ்டிரனிடம் துரியோதனன் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் தந்தையின் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரனின் பாசமிகு மகன் {துரியோதனன்}, பெரும் கோபத்தில் பற்றி எரிந்தபடி, பொறாமையால், மீண்டும் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “தேவர்களைத் தங்கள் கூட்டாளிகளாகப் பார்த்தர்கள் {பாண்டவர்கள்} கொண்டிருக்கின்றனர் என்றும், அவர்கள் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்றும் நீர் நினைக்கிறீர். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இந்த உமது அச்சம் விலகட்டும். இச்சை, பேராசை மற்றும் பகை ஆகியவற்றைக் கைவிட்டும், உலகளாவிய காரியங்களில் பாகுபாடற்று நடந்துமே தேவர்கள் தங்கள் தெய்வீகத் தன்மையை அடைந்தார்கள். துவைபாயன வியாசர், பெரும் தவத்துறவுகள் கொண்ட நாரதர், ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்} ஆகியோர் முன்பே இதை நமக்குச் சொல்லியிருக்கின்றனர்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இச்சை, கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றைக் கொண்டு, ஒரு போதும் மனிதர்களைப் போலத் தேவர்கள் வேலையில் ஈடுபடுவதில்லை. உண்மையில், அக்னியோ, வாயுவோ, தர்மனோ {யமனோ}, இந்திரனோ, அசுவினிகளோ உலகளாவிய ஆசைகளின் காரணமாக எப்போதாவது தங்களை வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், பிருதையின் {குந்தியின்} மகன்கள் துயரத்தில் விழுந்திருக்க மாட்டார்கள். எனவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்களுக்குத் தகுந்த காரியங்களிலேயே தேவர்கள் தங்கள் கண்களை எப்போதும் நிலைத்து வைத்திருப்பர் என்பதால், இத்தகு கவலைகளில் நீர் ஈடபடலாகாது.
எனினும், {தாங்கள் கொண்ட} ஆசையின் விளைவால், தேவர்கள் பொறாமையையோ காமத்தையோ கவனிக்கிறார்கள் என்றானால், பிறகு, அந்தத் தேவர்களாலேயே விதிக்கப்பட்ட பொறாமையோ, நீதியோ மேலோங்க முடியாது. அக்னி, அனைத்து உயிர்களையும் எரித்துவிடும்படி சுற்றிலும் சுடர் விட்டெரிந்தாலும், என்னால் வசீகரிக்கப்படும் அவன் {அக்னி}, உடனடியாக அணைக்கப்படுவான். தேவர்கள் பெற்றிருக்கும் சக்தி பெரிதே. ஆனால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தேவர்களை விட எனது சக்தி பெரியது என்பதை அறிவீராக.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமி இரண்டாகப் பிளந்தாலும், மலைமுகடுகள் பிளந்தாலும், அனைவரின் கண்களுக்கும் முன்பாக, என் மந்திரங்களின் மூலம், மீண்டும் அவற்றை என்னால் ஒன்றிணைக்க முடியும். இயக்கமுடையன, இயக்கமற்றன, அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டத்தின் அழிவுக்காக ஒரு பயங்கரப் புயலோ, பெரும் கர்ஜனை கொண்ட கல் மழையோ ஏற்படுமானால், படைக்கப்பட்ட உயிரினங்கள் மேல் நான் கொண்ட இரக்கத்தின் காரணமாக, அனைவர் கண் முன்பாகவும் எப்போதும் என்னால் அதைத் தடுக்க முடியும்.-என்னால் நீர்நிலைகள் திடமாக்கப்படும்போது, அவற்றில் தேர்களும், காலாட்படையும் நடக்கலாம்.
தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருதரப்பினரின் விவகாரங்கள் அனைத்தையும் நானே அமைக்கிறேன். என்ன காரியத்திற்காகவும், என் அக்ஷௌஹிணிகளுடன் நான் எந்த நாடுகளுக்குச் சென்றாலும், நான் விரும்பும் இடங்களுக்கெல்லாம் எனது குதிரைகள் நகர்கின்றன. என் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் அச்சமூட்டும் பாம்புகள் எதுவும் கிடையாது. என் பகுதிக்குள் இருக்கும் உயிரனங்கள் {மனிதர்களும் சேர்த்து}, என் மந்திரங்களால் பாதுகாக்கப்பட்டு, பயங்கரமானவற்றால் எப்போதும் காயப்படுத்தப்படுவதில்லை.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, என் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போரைப் பொறுத்தவரை, மேகங்களே கூட [1], {என் மக்கள்} விரும்பும் அளவுக்கும், விரும்பும் நேரத்திலும் {மழையைப்} பொழிகின்றன. மேலும், எனது குடிமக்கள் அனைவரும் அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் {தர்மத்தை அனுசரிக்கிறார்கள்}. எனவே காலத்தால் ஏற்படும் துயரங்களுக்கு [2] அவர்கள் {என் மக்கள்} ஆட்படுவதில்லை. அசுவினிகள், வாயு, அக்னி, மருதர்களுடன் கூடிய இந்திரன், தர்மன் {யமன்} ஆகியோர் என் எதிரிகளைப் பாதுகாக்கத் துணியவில்லையே. இவர்களால் {மேற்சொன்ன தேவர்களால்} என் பகைவர்களைப் பாதுகாக்க முடிந்திருந்தால், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, இத்தகு துன்பத்தில் பதிமூன்று வருடங்கள் வீழ்ந்திருக்கமாட்டார்கள்.
எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியவனை {என்னால் பகைக்கப்பட்டவனை} தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, அசுரர்களாலோ, ராட்சசர்களாலோ காக்க இயலாது என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். என் நண்பனுக்கோ பகைவனுக்கோ, நான் அளிக்கவோ, தண்டிக்கவோ நினைத்த வெகுமதியில் இருந்து தண்டனை வரை எதுவும் இதற்கு முன்பு பொய்த்ததில்லை. ஓ! பகைவரை ஒடுக்குபவரே {திருதராஷ்டிரரே}, “இது நடக்கும்” என்று நான் சொன்னால், அஃது எப்போதும் நடந்தே இருக்கிறது. எனவே, மக்கள் என்னை எப்போதும் உண்மை பேசுபவனாகவே அறிந்திருக்கிறார்கள். அனைத்துப் புறங்களிலும் பரவிய புகழைக் கொண்ட எனது பெருமையை மக்கள் அனைவரும் சாட்சியாகக் காண்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவை யாவற்றையும் உமது தகவலுக்காகவே சொல்கிறேன்; செருக்காலல்ல. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது இழிவானது. ஆகையால், இதற்கு முன்னர் ஒருபோதும் என்னை நானே புகழ்ந்து கொண்டதில்லை. பாண்டவர்கள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், கேகயர்கள், சாத்யகி, வாசுதவேன் {கிருஷ்ணன்} ஆகியோர் என் கைகளில் தோற்றனர் என்பதை நீர் கேள்விப்படுவீர்.
உண்மையில், கடலுக்குள் நுழையும் ஆறுகள் எப்படி முழுதும் தொலைந்து போகுமோ, அப்படி, என்னை அணுகும்போது, தங்கள் தொண்டர்களுடன் கூடிய பாண்டவர்கள் அனைவரும் அழிவார்கள். எனது புத்தி மேன்மையானது, எனது சக்தி மேன்மையானது, எனது ஆற்றல் மேன்மையானது, எனது அறிவு மேன்மையானது, எனது வளங்களோ, பாண்டவர்களை விட மிக மேன்மையானது. பாட்டனிடமும் {பிதாமகரான பீஷ்மரிடமும்}, துரோணரிடமும், கிருபரிடமும், சல்லியனிடம், சலனிடமும் என்னவெல்லாம் ஆயுத ஞானம் இருக்குமோ, அவை அனைத்தும் என்னிடமும் உள்ளன” என்றான் {துரியோதனன்}.
இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, ஓ! பாரதா {ஜமனேஜயா}, எதிரிகளை ஒடுக்குபவனான துரியோதனன், போரிடும் விருப்பமுள்ள யுதிஷ்டிரனின் நடவடிக்கைகளை உறுதி செய்து கொள்வதற்காக, மீண்டும் சஞ்சயனிடம் வினவலானான்.
“நீர் ஒழிந்த பிறகே போரில் பங்கேற்பேன்!” என்றான் கர்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 62-கௌர்வர்களுக்கு உற்சாகமூட்டும்படி கர்ணன் பேசியது; பரசுராமரிடம் தான் பெற்ற பிரம்மாஸ்திரத்தைக் குறித்துச் சொன்னது; தான் ஒருவனாகவே சென்று பாண்டவர்களையும் அவர்களது கூட்டணியையும் வென்று திரும்புவதாகக் கர்ணன் சொன்னது; பீஷ்மர் கர்ணனைக் கண்டு எள்ளி நகையாடியது; சக்தி ஆயுதத்தைக் கிருஷ்ணன் தவிடுபொடியாக்குவான் என்றும், நாகாஸ்திரத்துடன் சேர்த்து அர்ஜுனன் கர்ணனையும் அழிப்பான் என்றும் பீஷ்மர் சொன்னது; இதனால் கோபமுற்ற கர்ணன், பீஷ்மர் ஒழிந்த பிறகே, தான் போரில் கலந்து கொள்வதாகச் சொல்லிவிட்டு சபையைவிட்டு வெளியேறியது; கர்ணனின் பொய்மை குறித்துப் பீஷ்மர் இடித்துரைத்தது; பீஷ்மருக்குப் பதிலுரைக்கத் துரியோதனன் எத்தனித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்துக் {சஞ்சயனிடம்} கேட்பதற்கு இருந்த விசித்திரவீரியன் மகனான திருதராஷ்டிரனைப் பொருட்படுத்தாத கர்ணன், அங்கே கூடியிருந்த குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} உற்சாகத்தை ஊட்டும்படி, திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். அவன் {கர்ணன்}, “பழங்காலத்தில், போலிப் பாசாங்கால் [1], பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} அடைந்தேன் என்பதை அறிந்த ராமர் {பரசுராமர்}, என்னிடம், “உனது நேரம் {கடைசிக்காலம்} வரும்போது, இவ்வாயுதம் குறித்த உனது நினைவு பொய்த்து விடும். {இந்த ஆயுதம் உனக்குத் தோன்றாமல் போகும்}” என்றார்.
அப்படிப்பட்ட ஒரு பெரிய குற்றத்திற்கு, எனது ஆசானான அந்தப் பெருமுனிவரால் {பரசுராமரால்} இப்படிச் சாதாரணமாகவே நான் சபிக்கப்பட்டேன். கடும் சக்தி கொண்ட அந்தப் பெரும் முனிவர் {பரசுராமர்}, கடல்களுடன் கூடிய முழுப் பூமியையும் எரித்துவிடவல்லவர். {என்} பணிவிடை மற்றும் தனிப்பட்ட வீரத்தின் காரணமாக நான் அவரது {பரசுராமரின்} இதயத்தை அமைதியடையச் செய்தேன். என்னிடம் அந்த ஆயுதம் {பிரம்மாஸ்திரம்} இன்னும் இருக்கிறது. எனது காலமும் இன்னும் இருக்கிறது. எனவே, (வெற்றியடையத்தக்க அளவில்} நான் முழுத் திறமையுடனேயே இருக்கிறேன். {எதிரியை வெல்லும் இந்தப்} பொறுப்பு எனதாகட்டும். அம்முனிவரின் {பரசுராமரின்} அருளைப் பெற்றிருப்பதால், பாஞ்சலர்கள், கரூசர்கள், மத்ஸ்யர்கள், மகன்கள் மற்றும் பேரர்களுடன் கூடிய பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} ஆகியோரை கண்ணிமைக்கும் நேரத்தில் கொன்று, எனது ஆயுதங்களால் வெல்லப்பட்ட எண்ணற்ற பகுதிகளை நான் உனக்கு அளிப்பேன்.
பாட்டன் {பிதாமகரான பீஷ்மர்}, துரோணர் மற்றும் மன்னர்கள் அனைவரும் உன்னுடன் இருக்கட்டும். எனது படையின் தலைமை {முக்கிய} போர்வீரர்களுடன் அணிவகுத்துச் செல்லும் நான் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களைக்} கொல்வேன். இப்பணி எனதாகட்டும்” என்றான் {கர்ணன்}.
இப்படிப் பேசிய அவனிடம் {கர்ணனிடம்}, பீஷ்மர், “ஓ! கர்ணா, நீ என்ன சொல்கிறாய்? {என்ன பிதற்றுகிறாய்?}, நேரம் நெருங்கி வருவதால் உனது புத்தி மறைக்கப்படுகிறது. ஓ! கர்ணா, தலைவன் {கர்ணனான நீ} [2] கொல்லப்பட்டால், திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்பதை நீ அறியவில்லையா? கிருஷ்ணனை மட்டுமே துணைவனாகக் கொண்டு, காண்டவ வனத்தை எரித்து, தனஞ்சயன் {அர்ஜுனன்} செய்த சாதனையைக் கேட்ட பிறகு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய நீ, மனதை அடக்கிக் கொள்வதே தகும்.
ஒப்பற்றவனும் வழிபடத்தகுந்தவனும், தேவர்கள் தலைவனுமான பெரும் இந்திரன் உனக்கு அளித்த கணை {சக்தி ஆயுதம்}, கேசவனின் {கிருஷ்ணனின்} சக்கரத்தால் தாக்கப்படும்போது, {அந்த சக்தி ஆயுதம்} உடைந்து சாம்பலாகப் போவதை நீ காண்பாய். மலர் மாலைகளைக் கொண்டு உன்னால் மரியாதையாக வழிபடப்படுவதும், பாம்பு வாய்க் கொண்டதும், (உனது அம்பறாத்தூணியில்) ஒளிர்ந்து கொண்டிருப்பதுமான மற்றொரு கணை {நாகாஸ்திரம்}, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கணைகளால் அடிக்கப்படும்போது, உன்னோடு சேர்ந்து அழிந்து போகும். பாணன், பூமியின் மகன் {நரகன்} ஆகியோரைக் கொன்றவனும், கடும்போரில் உனக்கு நிகரான மற்றும் உன்னைவிட மேம்பட்ட எதிரிகளைக் கொன்றவனுமான வாசுதேவனே {கிருஷ்ணனே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அர்ஜுனனைப் பாதுகாக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.
அதற்குக் கர்ணன் {சபையோரிடம்}, “விருஷ்ணிகளின் தலைவன் {கிருஷ்ணன்} அப்படியே இருக்கிறான். அதில் ஐயமில்லை. மேலும், அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்} அதற்கும் மேலானவனே. எனினும், அவர் உச்சரித்திருக்கும் சிறிய கடும் உரையின் விளைவைப் பாட்டன் {பிதாமகரான பீஷ்மர்} கேட்கட்டும். நான் எனது ஆயுதங்களைக் கீழே வைக்கிறேன். இனிமேல் பாட்டன் {பீஷ்மர்} என்னைச் சபையில் மட்டுமே காண்பார்; போர்க்களத்தில் அல்ல. நீர் அமைதியடைந்த {ஒழிந்த} பின்பே, எனது ஆற்றலை, இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் இவ்வுலகத்தில் காண்பார்கள்” [3] என்றான் {கர்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன அந்தப் பெரும் வில்லாளி (கர்ணன்), அந்தச் சபையை விட்டகன்று தனது வசிப்பிடம் சென்றான். எனினும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பீஷ்மர் உரக்கச் சிரித்தபடி, குருக்கள் {கௌரவர்கள்} மத்தியிலிருந்த துரியோதனனிடம், “இந்தச் சூதனின் மகன் {கர்ணன்} வாக்கில் எவ்வளவு உண்மையுள்ளவன்? “அவந்தி மற்றும் கலிங்கத்தின் மன்னர்கள், ஜெயத்ரதன், சேதித்தஜன், வால்ஹீகன் ஆகியோரைப் பார்வையாளர்களாகக் கொண்டு, பகைவீரர்களை ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும் நான் கொல்வேன்” என்று மீண்டும் மீண்டும் சூளுரைத்தானே. {இனி} எப்படி அந்தக் கடமையை அவன் {கர்ணன்} நிறைவேற்றுவான்?
எதிர் வியூகத்தால் தனது பிரிவுகளைப் பகிர்ந்து, தலைகளை ஆயிரக்கணக்கில் சிதறடித்து, பீமன் இழைக்கப்போகும் பேரழிவைப் பார். புனிதமானவரும், பழியற்றவருமான ராமரிடத்தில் {பரசுராமரிடத்தில்}, விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தன்னை ஒரு பிராமணன் என்று காட்டி, அந்த ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} அடைந்த அந்தக் கணத்தில்தான், உண்மையில், அந்தப் பாவி {கர்ணன்}, தனது அறம் மற்றும் தவம் ஆகிய இரண்டையும் இழந்தான்” என்றார் {பீஷ்மர்}. ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, தனது ஆயுதங்களைக் கைவிட்டு கர்ணன் சென்றதும், பீஷ்மர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட விசித்திரவீரியன் மகனின் {திருதராஷ்டிரனின்} மூட மகனான துரியோதனன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம் பின்வரும்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்” என்றார் {வைசம்பாயனர்}.
அண்டத்தின் நண்பன் யார்? – உத்யோக பர்வம் பகுதி 63-கௌரவர்களும் பாண்டவர்களும் சமமானவர்களே என்றும், தானும், கர்ணனும், துச்சாசனனும் சேர்ந்து பாண்டவர்களைக் கொன்று விட முடியும் என்றும் பீஷ்மரிடம் துரியோதனன் சொன்னது; அப்படிப் பாண்டவர்களை வென்று அவர்களைத் தங்கள் வீரர்கள் இழுத்து வரும்போது, பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணனின் செருக்கு அழியும் என்று திருதராஷ்டிரனிடம் துரியோதனன் சொன்னது; இதைக் கேட்டுக் கொண்டிருந்த விதுரன் சுயக்கட்டுப்பாடு குறித்த விளத்தைச் சொல்வது…
துரியோதனன் {பீஷ்மரிடம்} சொன்னான், “பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரும் பிற மனிதர்களைப் போன்றோரே. உண்மையில், அவர்கள் {பாண்டவர்கள்} பிற மனிதர்களைப் போலப் பூலோகப் பிறப்புக் கொண்டவர்களே. பிறகு ஏன் அவர்களது வெற்றி உறுதி என்று நீர் நினைக்கிறீர்? சக்தி, ஆற்றல், வயது, புத்திக்கூர்மை, சாத்திர அறிவு, ஆயுதங்கள், போர்க்கலை, கரங்களின் வேகம், திறன் ஆகிய அனைத்திலும் நாங்களும் {கௌரவர்களும்}, அவர்களும் {பாண்டவர்களும்} சமமானவர்களே. அனைவரும் மனிதராய் இருப்பதால், நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே. பிறகு, ஓ! பாட்டா {பீஷ்மரே}, வெற்றி அவர்களுடையது என்று எப்படி நீர் அறிகிறீர்? எனது குறிக்கோளை அடைய நான் {பீஷ்மரான} உம்மையோ, துரோணர், கிருபர், பாஹ்லீகர் {சோமதத்தன்} அல்லது பிற மன்னர்களையோ நம்பி இருக்கவில்லை. {என்று பீஷ்மரிடம் சொன்ன துரியோதனன், திருதராஷ்டிரன் பக்கம் திரும்பி}
போர்க்களத்தில் {துரியோதனனான} நான், விகர்த்தனன் மகனான கர்ணன், என் தம்பி துச்சாசனன் ஆகியோர் சேர்ந்து எங்கள் கூரிய கணைகளால் பாண்டுவின் ஐந்து மகன்களையும் கொல்வோம். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, பல்வேறு வகையான பெரும் வேள்விகளைச் செய்து, அபரிமிதமான தட்சணைகளையும், பசு, குதிரை, செல்வம் ஆகிய தானங்களையும் கொடுத்து அந்தணர்களை மனம் நிறையச் செய்வோம்.
வேடர்களால் வலையில் இழுத்துவரப்படும் மான்கூட்டம் போலவோ, நீழ்ச்சுழியால் இழுக்கப்படும் படகோட்டிகளில்லா படகைப் போலவோ, போர்க்களத்தில் எனது வலிய கரங்களின் உதவியைப் பெற்ற என் படையால் அந்தப் பாண்டவர்கள் இழுத்து வரப்படும்போது, மக்கள் திரள், தேர்கள் மற்றும் யானைகளால் ஆதரிக்கப்படும். அவர்களது எதிரியான எங்களைக் கண்டதும், {பாண்டவர்கள்} தங்கள் செருக்கைக் கைவிடுவார்கள். அவர்கள் {பாண்டவர்கள்} மட்டுமல்ல கேசவனும் {கிருஷ்ணனும்} {தனது செருக்கைக்} கைவிடுவான்” என்றான் {துரியோதனன்}.
இதைக் கேட்ட விதுரன், “பிழையற்ற அறிவு கொண்ட மதிப்புமிக்க மனிதர்கள், ‘சுயக்கட்டுப்பாடே’ இவ்வுலகில் மிகவும் நன்மையானது என்று சொல்கிறார்கள். குறிப்பாக அந்தணர்கள் வழக்கில், இது {சுயக்கட்டுப்பாடே} அவர்களது கடமையாகிறது. சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒருவன், ஈகை, தவம், அறிவு, வேத கல்வி ஆகியவற்றைப் பின்பற்றி, வெற்றி, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, தன் தானங்களுக்கான கனி {பலன்} ஆகியவற்றை வெல்கிறான் {அடைகிறான்}. சுயக்கட்டுப்பாடு, சக்தியைப் பெருக்குகிறது. அது {சுயக்கட்டுப்பாடு என்பது} அற்புதமான புனிதமான ஒரு பண்பாகும். பாவத்தில் இருந்து விடுபட்டு, சுயக்கட்டுப்பாட்டால் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் ஒருவன், பிரம்மத்தையும் அதன்மூலமே {சுயக்கட்டுப்பாட்டின் மூலமே} அடைந்துவிடுகிறான்.
ராட்சசர்களைக் கண்டது போல, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களைக் கண்டு, எப்போதும் மக்கள் அஞ்சுவார்கள். இவர்களைப் போன்றோருக்காகத்தான் {சுயக்கட்டுப்பாடு இல்லாதோருக்காகத்தான்}, க்ஷத்திரியர்களைச் சுயம்பு படைத்தான். வாழ்வுமுறைகள் நான்கிலும் சுயக்கட்டுப்பாடே சிறந்த நோன்பாகும் எனச் சொல்லப்படுகிறது. சுயக்கட்டுப்பாட்டின் மூலமாக {பிறப்பிடமாக} இருக்கும் பண்புகளை அதன் {சுயக்கட்டுப்பாட்டை நோக்கிச் செல்லும்} அறிகுறிகளாக நான் கருதுகிறேன். மன்னிக்கும் தன்மை, மன உறுதி, ஊறிழையாமை {அஹிம்சை}, அனைத்தையும் சமமாகக் கருதல், உண்மை நிறைந்த பேச்சு, எளிமை, புலனடக்கம், பொறுமை, பேச்சில் மென்மை, பணிவு, உறுதி, பரந்த {தாராள} மனம், மென்மை, மனநிறைவு, நம்பிக்கை ஆகியவையே {இந்தப் பண்புகளே} அந்த அறிகுறிகள். சுயக்கட்டுப்பாடு உடையவன் இச்சை, பேராசை, செருக்கு, சினம், உறக்கம், தற்புகழ்ச்சி, அகங்காரம், கெட்ட எண்ணம் மற்றும் கவலை ஆகியவற்றைக் கைவிடுவான்.
தூய்மை, கோணல் புத்தியின்மை, வஞ்சமின்மை ஆகியவையே சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதனின் தனித்துவமான அறிகுறிகள். பேராசையின்றி எவன் இருக்கிறானோ, கொஞ்சம் வைத்திருந்தாலும் மனநிறைவுடன் எவன் இருக்கிறானோ, கடலைப் போன்று பயங்கரமான காமத்தைத் தூண்டும் பொருட்களை எவன் விரும்பவில்லையோ, அவனே சுயக்கட்டுப்பாடுடைய மனிதன் என்று அறியப்படுகிறான். நன்னடத்தையும், நல்ல மனநிலையும், நிறைவான ஆன்மாவும் கொண்டு, அறிவுடையவனாகத் தன்னை அறியும் ஒருவன் இங்கே {இவ்வுலகத்தில்} பெரும் மரியாதையைப் பெறுகிறான். இதற்குப் பிறகு {அடுத்த உலகத்தில்} அருள் நிலையை அடைகிறான்.
முதிர்ச்சி கொண்ட அறிவுடன், பிற உயிர்களிடம் அச்சம் கொள்ளாதவன் எவனோ, பிற உயிர்களுக்கு அச்சத்தைத் தராதவன் எவனோ அவனே மனிதர்களில் முதன்மையானவனாகச் சொல்லப்படுகிறான். அனைவருக்கும் நன்மையை விரும்பும் அவன் {பிற உயிர்களுக்கு அச்சம் தராதவன்} இந்த அண்டத்திற்கே நண்பனாகக் கருதப்படுகிறான். யாரும் அவனால் மகிழ்வின்மையை {துயரை} அடைவதில்லை. கடல் போன்ற ஈர்ப்புடன் இருக்கும் ஒரு மனிதன், அறிவின் விளைவால் கிடைத்த மனநிறைவுடன் எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான்.
நீதிமிக்கப் பழங்காலங்களிலும், தங்கள் கண்களுக்கு முன்னிலையிலும் {தற்காலத்திலும்} பயிலப்படும் செயல்களின் படி தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் சுயக்கட்டுப்பாடு உடைய ஒருவன், அமைதிக்குத் தன்னை அர்ப்பணித்து, இவ்வுலகில் இன்புற்று இருக்கிறான். அல்லது, அறிவின் விளைவால் ஏற்பட்ட மனநிறைவால் செயலைத் துறக்கும் அத்தகு மனிதன், தனது புலன்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து இவ்வுலகில் விரைந்து நகர்ந்து, பிரம்மத்திற்குள் தான் கரைந்து போகும் அந்தத் தவிர்க்க முடியாத நேரத்திற்காகக் காத்திருக்கிறான்.
இறகு படைத்த உயிரினங்கள் {பறவைகள் பறந்து} செல்லும் பாதை காணப்படாததுபோல, அறிவின் விளைவால் மனநிறைவில் மகிழ்ந்திருக்கும் ஒரு துறவியின் பாதையும் கண்களுக்குத் தெரியாது. உலகைத் துறக்கும் அவன், விடுதலையைப் பெறும் நோக்கில் சந்நியாச வகை வாழ்வு முறையை ஏற்று, சொர்க்கத்தில் தனக்காகப் பிரகாசமான நித்தியமான உலகங்களை ஒதுக்கிக் கொள்கிறான்.
விதுரன் சொன்ன வேடர்கள் கதை! – உத்யோக பர்வம் பகுதி 64-வேடன் மற்றும் பறவைகளின் கதை; உறவினர்களுடன் பேண வேண்டிய உறவு குறித்து விதுரன் சொன்னது; மலையில் தேனைக் கண்டு, அதை எடுக்கப் போய் இறந்த வேடர்களைக் குறித்து விதுரன் சொன்னது; அர்ஜுனனுடன் துரியோதனன் மோத நினைப்பது விவேகமல்ல என்று விதுரன் சொன்னது…
விதுரன் {திருதராஷ்டிரரிடம்} சொன்னான், “ஓ! ஐயா, ஒருகாலத்தில் காற்றுவாசிகளான இறகு பெற்றவைகளை {பறவைகளைப்} பிடிப்பதற்காக, ஒரு வேடன், தரையில் தனது வலையை விரித்து வைத்தான் என்பதை முதியவர்களிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஒன்றாக வாழ்ந்து வந்த இரு பறவைகள் ஒரே நேரத்தில் அந்த வலையில் சிக்கின. இறகு பெற்ற அந்த உயிரினங்கள் {பறவைகள்} இரண்டும், அந்த வலையைத் தூக்கிக் கொண்டு காற்றில் பறந்தன. அவை வானத்தில் பறப்பதைக் கண்ட வேடன், துயரத்திற்கு ஆட்படாமல், அவை பறந்த திசையிலேயே அவற்றைப் பின்தொடர்ந்து {துரத்திச்} சென்றான். அப்போது, அங்கே அருகே வசித்திருந்த ஒரு துறவி, தனது காலை துதிகளை முடித்துக் கொண்டு திரும்பும்போது, பறவைகளைப் பிடிக்க அதன் பின்னே ஓடிக்கொண்டிருந்த வேடனைக் கண்டார்.
அந்தக் காற்றுவாசிகளை {பறவைகளைத்} துரத்திச் செல்லும் பூலோகவாசியைக் {வேடனைக்} கண்ட அந்தத் துறவி, ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, ஒரு சுலோகத்தின் மூலம் அவனிடம் பேசினார், “ஓ! வேடா, பூமியில் நடப்பவனான நீ, காற்றுவாசிகளான உயிரினங்கள் இரண்டைத் துரத்திச் செல்வது மிகவும் விசித்திரமாகவும் அற்புதமாகவும் எனக்குத் தோன்றுகிறது” என்றார். அதற்கு அந்த வேடன் {துறவியிடம்}, “ஒன்றாக இருக்கும் இவை இரண்டும் எனது வலையைத் தூக்கிச் செல்கின்றன. எனினும், எப்போது அவை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனவோ, அப்போது அவை எனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வரும்” என்றான் {வேடன்}.
விதுரன் தொடர்ந்தான், “மரணமடைய விதிக்கப்பட்ட அந்தப் பறவைகள் இரண்டும் விரைவில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டன. அந்த இணை, மடத்தனமாகத் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு பூமியில் விழுந்தன. மரண வலைக்குள் சிக்கிய அவை {அந்த பறவைகள்}, தங்களுக்குள் கோபத்துடன் சண்டையிட்டுக் கொண்ட போது, அவை காணாதவகையில் அங்கு வந்த வேடன், அவை இரண்டையும் பிடித்துக் கொண்டான்.
ஒன்றாக உண்பதும், ஒன்றாகப் பேசுவதுமே உறவினர்களின் கடமையாகும். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தங்களுக்குள் சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது. அன்பு கொண்ட இதயங்களுடன் முதியோருக்காகக் காத்திருக்கும் {பணிவிடை செய்யும்} உறவினர்கள், சிங்கங்களால் பாதுகாக்கப்பட்ட காடு போல வீழ்த்தப்பட முடியாதவர்கள் ஆகிறார்கள். அதே வேளையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அபரிமிதமான செல்வத்தை அடையும் மனிதர்கள், கோணல் புத்தியுடன் நடந்து கொள்ளும்போது, தங்கள் எதிரிகளின் செழிப்பிற்கே அவர்கள் பங்களிக்கிறார்கள். ஓ! திருதராஷ்டிரரே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உறவினர்கள் என்போர் எரியும் கொள்ளிகளைப் போன்றோராவர். சேர்ந்திருக்கும்போது அந்தக் கொள்ளி சுடர்விட்டு எரியும், பிரிந்தாலோ வெறும் புகைதான் மிஞ்சும். {உறவினர்கள் சேர்ந்திருந்தால் புகழோடு வாழலாம், பிரிந்தால் வெறும் மனப்புகைச்சல்தான் இருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்}.
மலையின் மார்பில் நான் கண்ட வேறு ஒன்றை நான் இப்போது உமக்குச் சொல்கிறேன். அதையும் கேட்ட பிறகு, ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, உமக்கு நன்மையானது எதுவோ அதைச் செய்யும். நாங்கள் ஒருகாலத்தில், மருத்துவத் தாவரங்கள் மற்றும் குணங்களைக் குறித்து விவாதிக்க விரும்பும் எண்ணற்ற பிராமணர்கள் மற்றும் சில வேடர்களுடன், வடக்கில் இருக்கும் மலைக்கு சென்றோம். வடக்கில் இருக்கும் மலையான கந்தமாதனம் {புதர்களோடு கூடிய} ஒரு தோப்பைப் போலத் தெரிந்தது. தனது மார்பின் அனைத்துப் புறங்களிலும் மரங்களையும், பல்வேறு வகையிலான பிரகாசமான மருத்துவ மூலிகைகளையும் அது {கந்தமாதனம்} கொண்டிருந்ததால், அங்கே சித்தர்களும், கந்தர்வர்களும் வசித்து வந்தனர்.
அங்கே, அந்த மலையில் அணுக முடியாத செங்குத்தான ஒரு பாறையில் ஒரு குடுவையின் அளவில், பிரகாசமான மஞ்சள் நிறத்தில், நிறையத் தேன் இருப்பதை நாங்கள் அனைவரும் கண்டோம். குபேரனுக்குப் பிடித்தமான பானமான அந்தத் தேன், கடும்நஞ்சு கொண்ட பாம்புகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அந்தத் தேனைக் குடித்தால், ஒரு மனிதன் இறவா நிலையை அடையலாம், பார்வையற்ற மனிதன் பார்வையை அடையலாம், முதிர்ந்த மனிதன் இளைஞனாகலாம். மந்திரங்கள் அறிந்த அந்தப் பிராமணர்களால், அந்தத் தேன் குறித்து இவ்வாறே பேசப்பட்டு வந்தது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதைக் கண்ட வேடர்கள், அந்தத் தேனை அடைய விரும்பினார்கள். பாம்புகள் நிறைந்த அந்த அணுக முடியாத மலைக்குகையிலேயே அவர்கள் {அந்த வேடர்கள்} அனைவரும் மாண்டுபோனார்கள். அதே வழியில்தான், இந்த உமது மகன் {துரியோதனன்}, போட்டியில்லாமல் இந்த முழு உலகத்தையும் அனுபவிக்க விரும்புகிறான். அவன் தேனைக் காண்கிறான், ஆனால் தனது மடமையால், அந்தப் பயங்கரப் பள்ளத்தை அவன் காணவில்லை.
சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} போரில் மோத துரியோதனன் விரும்புகிறான் என்பது உண்மையே. ஆனால், இவனிடத்தில் பாதுகாப்பாக இருக்கத்தக்க சக்தியையோ ஆற்றலையோ நான் காணவில்லை. அர்ஜுனன், ஒரே தேரில் தனியாகச் சென்று முழு உலகத்தையும் வென்றான். பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரை முன்னணியில் கொண்ட இவனது {துரியோதனனது} படை அர்ஜுனனால் அச்சுறுத்தப்பட்டு, விராட நகரத்தில் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாரும்” என்றான் {விதுரன்}.
பாண்டவர்களை அரவணை! – உத்யோக பர்வம் பகுதி 65-திருதராஷ்டிரன் பாண்டவர்களின் சக்தியையும், பீமன், அர்ஜுனன், திருஷ்டத்யும்னன், சாத்யகி, கிருஷ்ணன் ஆகியோரின் பலங்களையும் எடுத்துரைப்பது; கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு நண்பனாக இருப்பதால் பாண்டவர்களை வெல்ல முடியாது என்று சொல்வது; பாண்டவர்களைத் தனது சகோதரர்களாக ஏற்று அவர்களுக்குரிய பங்கை துரியோதனன் கொடுக்க வேண்டும் என்றும் திருதராஷ்டிரன் சொன்னது…
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்} சொன்னான், “ஓ! துரியோதனா, ஓ! அன்பு மகனே, நான் சொல்வதைக் கருதிப் பார். அசைவன, அசையாதன ஆகிய அனைத்தும் அடங்கிய அண்டத்தை நுட்பமான உருவில் தாங்கும் ஐம்பூதங்களைப் போலவே இருக்கும் பாண்டுவின் மகன்கள் ஐவரின் சக்தியை நீ திருட விரும்புவதால், அறியாமையில் இருக்கும் ஒரு பயணியைப் போலவே, தவறான பாதையைச் சரியென நீ நினைக்கிறாய்.
நிச்சயம், உனது உயிரை தியாகம் செய்யாமல், உலகத்தின் அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான குந்தியின் மகன் யுதிஷ்டிரனை உன்னால் வெல்லமுடியாது. ஐயோ, பெரும் புயலை மீறி நிற்கும் ஒரு மரத்தைப் போல, போர்க்களத்தில் யமனுக்கு நிகரானவனும், (மனிதர்களுக்கு மத்தியில்) வல்லமையில் தனக்கு நிகரில்லாதவனுமான பீமசேனனை நீ உரசுகிறாயே. மலைகளில் மேருவைப் போன்றவனும், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையானவனும், காண்டீவத்தைத் தாங்குபவனுமான ஒருவனிடம் {அர்ஜுனிடம்} புத்தியுள்ள எவன் போர்க்களத்தில் மோதுவான்?
வஜ்ரத்தை வீசும் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல, எதிரிகளுக்கு மத்தியில் தனது கணைகளை அடிக்கும் பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னனால் வீழ்த்த முடியாத எந்த மனிதன் இருக்கிறான்? அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளுக்கு மத்தியில் மதிக்கப்படும் வீரனும், பாண்டவர்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவனுமான தடுக்கப்படமுடியாத சாத்யகியும் உனது கூட்டத்தைப் {படையைப்} படுகொலை செய்வான்.
மூவுலகங்களையும் விஞ்சும் சக்தியும் பலமும் கொண்ட தாமரைக் கண் கிருஷ்ணனுடன் புத்தியுள்ள எந்த மனிதன் மோதுவான்? கிருஷ்ணனைப் பொறுத்தவரை, அவனது {கிருஷ்ணனது} மனைவியர், சம்பந்திகள், உறவினர்கள், தன் ஆன்மா, இந்த முழு உலகம் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்தால், அதற்கு மறுதட்டில் உள்ள தனஞ்சயனின் {அர்ஜுனனின்} எடைக்கு அவை அனைத்தும் சமமாக இருக்கும். அர்ஜுனனால் நம்பப்படும் அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} தடுக்கப்பட முடியாதவனாவான். அந்தக் கேசவன் {கிருஷ்ணன்} இருக்கும் படையும் எங்கும் தடுக்கப்பட முடியாததாகவே இருக்கும்.
எனவே, ஓ! குழந்தாய் {துரியோதனா}, உனது நன்மைக்கான வார்த்தைகளையே எப்போதும் பேசும் உனது நலன் விரும்பிகளின் ஆலோசனைகளுக்குச் செவிகொடு. முதிர்ந்தவரும் உனது பாட்டனுமான, சந்தனுவின் மகன் பீஷ்மரை உனது வழிகாட்டியாக ஏற்றுக் கொள். நான் உனக்குச் சொல்வதையும், குருக்களின் {கௌரவர்களின்} நலன்விரும்பிகளான துரோணர், கிருபர், விகர்ணன், மன்னன் பாஹ்லீகன் ஆகியோர் சொல்வதையும் கேள். அவர்கள் அனைவரும் என்னைப் போன்றோரே. ஓ! பாரதா {துரியோதனா}, நான் உன்னிடம் பாசம் கொண்டிருப்பதைப் போலவே, அறநெறி அறிந்த இவர்கள் அனைவரும் உன்னிடம் பாசம் கொண்டிருக்கிறார்கள் என்பதால், நீ என்னை எப்படி மதிக்கிறாயோ அப்படியே அவர்களையும் மதிக்க வேண்டும்.
விராட நகரத்தில் உன் கண் எதிரிலேயே, உன் தம்பிகளுடன் கூடிய உனது துருப்புகள் பீதியும் படுதோல்வியும் அடைந்தன என்பதும், அதுவும் மன்னன் சரணடைந்த பின்னர் இது நடந்தது [1] என்பதும், உண்மையில், அந்நகரத்தில் தனி ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த மோதல் குறித்துக் கேள்விப்படும் அந்த அற்புதக் கதையுமே போதுமான சாட்சிகளாகும் (நான் சொல்வது அறிவுப்பூர்வமானது என்பதற்கு அது சாட்சியாகும்). இவை அனைத்தையும் அர்ஜுனனால் தனியாகவே சாதிக்க முடியுமென்றால், ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வரும் பாண்டவர்களால் அடைய முடியாததுதான் என்ன? அவர்களை உனது சகோதரர்களாக ஏற்று, அவர்களது கரங்களைப் பற்றுவாயாக. இந்தபேரரசின் ஒரு பங்கை கொடுத்து அவர்களை அரவணைப்பாயாக” என்றான் {திருதராஷ்டிரன்
அர்ஜுனனின் எச்சரிக்கை! – உத்யோக பர்வம் பகுதி 66-அர்ஜுனன் மேலும் என்னென்ன சொன்னான் என்று சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்டது; அர்ஜுனன் பேசிய வார்த்தைகளைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படிச் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} சொன்ன பிறகு, உயர்ந்த அருள் கொண்டவனும், ஞானியுமான திருதராஷ்டிரன், மீண்டும் சஞ்சயனிடம், “ஓ! சஞ்சயா, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பேச்சுக்குப் பிறகு பேசிய அர்ஜுனனின் வார்த்தைளில் இன்னும் உன்னால் சொல்லப்படாதவற்றை எனக்குச் சொல்வாயாக. அதைக் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது”, என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வாசுதேவனின் பேச்சைக் கேட்டதும், கட்டுப்படுத்த இயலாதவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனக்குச் சந்தர்ப்பம் வாய்த்த போது, வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையிலேயே இவ்வார்த்தைகளைச் சொன்னான். “ஓ! சஞ்சயரே, சந்தனுவின் மகனான எங்கள் பாட்டன் {பீஷ்மர்}, திருதராஷ்டிரர், துரோணர், கிருபர், கர்ணன், மன்னன் பாஹ்லீகன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சோமதத்தன், சுபலனின் மகன் சகுனி, துச்சாசனன், சலன், புருமித்ரன், விவிங்சதி, விகர்ணன், சித்திரசேனன், மன்னன் ஜயத்சேனன், அவந்தியின் இரு தலைவர்களான விந்தன் மற்றும் அனுவிந்தன், பூரிஸ்ரவஸ், மன்னன் பகதத்தன், மன்னன் ஜராசந்தன் {ஜராசந்தனின் மகனாக இருக்க வேண்டும்} மற்றும் கௌரவர்களின் நன்மைக்காக அங்கே கூடியிருக்கும் பூமியின் இன்னும் பிற ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார்கள்.
சுடர்விடும் பாண்டவ நெருப்பில், நீர்க்காணிக்கைகளாக அளிக்கப்படவே திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} அவர்களைக் கூட்டியிருக்கிறான். சஞ்சயரே, அப்படிக் கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரின் நலத்தையும் எனது பெயரில் விசாரிப்பீராக. அதேவேளையில், அவரவர் தகுதிக்கேற்றபடி அவரவர்களுக்குரிய மரியாதையை {என் சார்பாக} செலுத்துவீராக.
மேலும், ஓ! சஞ்சயரே, கோபக்காரனும், தீயவனும், பாவ ஆன்மா கொண்டவனும், அதீத பேராசை கொண்டவனும், பாவிகள் அனைவரிலும் முதன்மையானவனும், தனது ஆலோசகர்களுடன் கூடியவனுமான அந்த முட்டாள் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} நான் சொல்வதனைத்தையும் அவன் {துரியோதனன்} கேட்குமாறு அனைத்து மன்னர்களின் முன்னிலையிலும் சொல்லும்”, என்றான் {அர்ஜுனன்}.
இப்படி முன்னுரை கொடுத்தவனும், கடைக்கண்கள் சிவந்த பெரிய விழிகளுடையவனும், பெரும் அறிவுடையவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} பார்த்தபடியே, அறம், பொருள் ஆகிய இரண்டும் நிறைந்த இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னான். “உயர் ஆன்மா கொண்ட மது குலத்தலைவன் {கிருஷ்ணன்}, அளவான வார்தைகளால் பேசியதை ஏற்கனவே நீர் கேட்டீர். அவ்வார்த்தைகள் என்னுடையவையுமாகும் என்பதை அங்கே கூடியிருக்கும் மன்னர்களிடம் சொல்லும்.
மேலும் அந்த மன்னர்களிடம் என் சார்பாக இதையும் சொல்லும். “தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி மந்திரங்களாகவும், படையணித் தலைவர்களை நிர்மூலமாக்கும் வில் கரண்டியாகவும், செயல்படும் நெருப்பக்கணைகளால் ஆன போர்க்களம் எனும் பெரும் வேள்வியில், நீர்க்காணிக்கைகள் ஊற்றப்பட வேண்டியதில்லை {மனித உயிர்கள் கொல்லப்பட வேண்டியதில்லை} எனும்படி ஒன்று சேர்ந்து முயற்சியுங்கள். பகைவர்களைக் கொல்பவரான யுதிஷ்டிரர் திருப்பிக் கேட்கும் அவரது பங்கான நாட்டை, உண்மையில் நீங்கள் அவருக்குக் கொடுக்கவில்லையெனில், குதிரைப்படை, காலாட்படை யானைகள் ஆகியவற்றோடு கூடிய உங்கள் அனைவரையும், எனது கணைகளின் மூலமாக, {உடல்விட்டுப்} பிரிந்த ஆவிகளின் அமங்கலமான உலகங்களுக்கு அனுப்பி வைப்பேன்” என்றான் {அர்ஜுனன்}.
பின்பு, தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, நான்கு கரங்கள் கொண்ட ஹரியிடமும் {கிருஷ்ணனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அவர்கள் இருவரையும் வணங்கிவிட்டு, தேவர்களுக்கு இணையான பிரகாசம் கொண்ட உமக்கு, அந்தப் பயங்கரமான வார்த்தைகளைத் தெரிவிப்பதற்காகப் பெரும் வேகத்துடன் இங்கே வந்தேன்” என்றான் {சஞ்சயன்}.
வியாசரையும் காந்தாரியையும் இங்கே அழைப்பீராக! – உத்யோக பர்வம் பகுதி 67-சஞ்சயன் சொன்ன எதையும் துரியோதனன் மதிக்காமல் இருப்பது; எஞ்சிய பிறரும் அமைதியாக இருப்பது; சபை கலைவது; இருதரப்புப் பலம் மற்றும் பலவீனங்களைச் சஞ்சயனிடம் தனிமையில் திருதராஷ்டிரன் கேட்பது; சஞ்சயன், வியாசரையும், காந்தாரியையும் வரவழைக்கச் சொல்வது; சஞ்சயன் மற்றும் திருதராஷ்டிரன் மனநிலைகளைப் புரிந்து கொண்ட வியாசர், கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் குறித்துச் சஞ்சயன் அறிந்த யாவற்றையும் திருதராஷ்டிரனுக்குச் சொல்லச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “திருதராஷ்டிரன் மகனான துரியோதனன், சஞ்சயன் கூறிய வார்த்தைகளைச் சிறிதும் மதிக்கவில்லை, எஞ்சியவர்களும் அமைதியாக இருந்தனர். அப்போது, அங்கே கூடியிருந்த மன்னர்கள் எழுந்து சென்றனர். பூமியின் மன்னர்கள் அனைவரும் சென்றபிறகு, தனது மகன் {துரியோதனன்} மீது தான் கொண்ட பாசத்தால், அவனது {துரியோதனனின்} ஆலோசனைகளை எப்போதும் பின்பற்றுபவனான மன்னன் திருதராஷ்டிரன், அங்கே கூடிய மன்னர்கள் அனைவரும் வெற்றியடைய விரும்பி, தன் தரப்பு மற்றும் தனக்கு எதிரான பாண்டவர்கள் தரப்புத் தீர்மானங்கள் குறித்துச் சஞ்சயனிடம் தனிமையில் விசாரிக்கத் தொடங்கினான்.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டவர்களின் விவகாரங்களை நுணுக்கமாக நீ தெரிந்து வைத்திருப்பதால், நமது படையின் பலமும் பலவீனமும் எதில் அடங்கி இருக்கிறது என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. அவர்களின் {பாண்டவர்களின்} மேன்மையும், தாழ்மையும் எதிலிருக்கிறது என்பதையும் எனக்குச் சொல்வாயாக. நீ இருதரப்பு பலங்களையும் முழுதாய் அறிந்திருக்கிறாய். நீ அனைத்தையும் அறிந்தவனாகவும், அறம் மற்றும் பொருள் குறித்த அனைத்துக் காரியங்களை அறிந்தவனாகவும் இருக்கிறாய். ஓ! சஞ்சயா, என்னால் கேட்கப்படும் நீ, போரில் ஈடுபடும்போது, எத்தரப்பு அழிந்து போகும் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் உம்மிடம் எதையும் கமுக்கத்தில் {இரகசியத்தில், தனிமையாகச்} சொல்ல மாட்டேன். ஏனெனில், {அப்படிச் சொன்னால்} எனக்கெதிரான தீய உணர்வுகள் {அருவருப்பு} உமக்கு உண்டாகலாம். ஓ! அஜமீடரே {திருதராஷ்டிரரே}, உயர்ந்த நோன்புகளைக் கொண்ட உமது தந்தை வியாசரையும், உமது ராணி காந்தாரியையும் இங்கே அழைப்பீராக. அறநெறி அறிவும், நுண்ணிய நோக்கும், உண்மை அறியும் திறனும் பெற்ற அவர்கள் {வியாசரும், காந்தாரியும்}, உமக்கு என் மீது அருவருப்பு உண்டானால் அவற்றை நீக்குவார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் முன்னிலையில், கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் பார்த்தனின் {அர்ஜுனனின்} நோக்கங்கள் பற்றிய அனைத்தையும் நான் உமக்குச் சொல்கிறேன்” என்றான் {சஞ்சயன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் {சஞ்சயனால்} சொல்லப்பட்ட திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் வியாசர் ஆகியோரை அங்கே அழைத்து வர ஏற்பாடு செய்தான். விதுரனால் வரவேற்கப்பட்ட அவர்கள் {காந்தாரியும் வியாசரும்}, தாமதமின்றிச் சபைக்குள் நுழைந்தார்கள். பெரும் ஞானம் கொண்டவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, சஞ்சயன் மற்றும் தன் மகன் {திருதராஷ்டிரன்} ஆகிய இருவரது நோக்கங்களையும் புரிந்து கொண்டு, “ஓ! சஞ்சயா, அறிந்து கொள்ளும் விருப்பத்தில் திருதராஷ்டிரன் விசாரிக்கும் அனைத்தையும் அவனுக்கு {திருதராஷ்டிரனுக்குச்} சொல்வாயாக. வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் குறித்து நீ அறிந்தது அத்தனையும் அவனுக்குச் சொல்வாயாக” என்றார் {வியாசர்}.
கோவிந்தன் இருக்குமிடம்? – உத்யோக பர்வம் பகுதி 68-கிருஷ்ணனைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது; கிருஷ்ணனுடைய சக்கரத்தின் மகிமை; கிருஷ்ணனின் மேன்மை; கிருஷ்ணன் இருக்குமிடம்; அண்டத்தின் தலைவன் யார் என்பன போன்றவற்றை வியாசர் மற்றும் காந்தாரியின் முன்னிலையில் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேவர்களைப் போன்ற தங்களின் இயல்பினால் தங்களுக்குள் சரிநிகரானவர்களும், போற்றப்படும் வில்லாளிகளுமான அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தங்கள் சுயவிருப்பத்தினாலேயே தங்கள் பிறப்பை அடைந்தார்கள்.
ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அபரிமிதமான சக்தி கொண்டதும், முழுமையாக ஐந்து முழ விட்டம் கொண்டதுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சக்கரம், அதைத் தாங்கியிருப்பவர் விருப்பத்திற்கேற்ப (பெரிய அல்லது சிறிய உருவங்களில்) எதிரி மீது வீசவல்லதாகவும், மாயை சார்ந்ததாகவும் இருக்கிறது.
தனது பிரகாசத்தால் எப்போதும் அப்பட்டமான உண்மையாக இருக்கும் அது {அந்தச் சக்கரம்}, குருக்களின் {கௌரவர்களின்} கண்களுக்குத் தெரியாததாக இருக்கிறது; பலத்தையோ, பலவீனத்தையோ உறுதி செய்வதில் அந்தச் சக்கரம், பாண்டவர்களுக்குச் சிறந்த அடித்தளத்தைக் கொடுக்கிறது.
உண்மையில், பெரும் பலம் கொண்ட அந்த மதுகுலத்துக் கொழுந்து {கிருஷ்ணன்}, வல்லமைமிக்க நரகன், சம்பரன், கம்சன் மற்றும் சேதிகள் தலைவன் (சிசுபாலன்) ஆகியோரை விளையாட்டுத்தனமாகவும், முயற்சியற்ற வகையிலும் வீழ்த்தினான்.
தெய்வீகத்தன்மையும், அனைத்துக்கும் மேன்மையான ஆன்மாவும் கொண்டவனும், ஆண்களில் மேன்மையானவனுமான அவன் {புருஷோத்தமனான கிருஷ்ணன்} விரும்பினால், பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து கொள்வதற்காக நீர் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்கிறீர். அவை அனைத்தையும் இப்போது சுருக்கமாகக் கேளும். தராசின் ஒரு தட்டில் முழு அண்டத்தையும், மறு தட்டில் ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} வைத்தால், அண்டத்தைவிட ஜனார்த்தனனே எடை அதிகமானவனாக இருப்பான்.
ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விரும்பினால் அண்டத்தைச் சாம்பலாக்கிவிடுவான். ஆனால் முழு அண்டமும் சேர்ந்தாலும் ஜனார்த்தனனை சம்பலாக்க முடியாது.
எங்கெல்லாம் உண்மை நிறைந்திருக்கிறதோ, எங்கெல்லாம் அறம், அடக்கம், எளிமை ஆகியன இருக்கின்றனவோ அங்கெல்லாம் கோவிந்தன் {கிருஷ்ணன்} இருப்பான். கிருஷ்ணன் எங்கிருப்பானோ, அங்குதான் வெற்றியும் இருக்க முடியும்.
அனைத்து உயிர்களின் ஆன்மாவும், ஆண்களில் மேன்மையானவனுமான {புருஷோத்தமனுமான} ஜனார்த்தனனே {கிருஷ்ணனே}, பூமி, ஆகாயம், சொர்க்கம் முழுமையையும் விளையாட்டாக வழிநடத்துகிறான். பாவத்திற்கு அடிமையாக இருக்கும் உமது தீய மகன்கள் அனைவரையும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, வெடித்துச் சிதற வைக்க விரும்புகிறான். தெய்வீகப் பண்புகள் கொண்ட அந்தக் கேசவனே {கிருஷ்ணனே}, தனது ஆன்மசக்தியால் காலச்சக்கரத்தையும், அண்டத்தின் சக்கரத்தையும், யுகச்சக்கரத்தையும் தொடர்ச்சியாகச் சுழல வைக்கிறான்.
காலம், மரணம், அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய இந்த அண்டம் ஆகியவற்றுக்கு அந்த மகத்தானவன் {கிருஷ்ணன்} மட்டுமே தலைவன் என்பதை உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். அந்தப் பெரும் துறவியான ஹரி {கிருஷ்ணன்}, இந்த முழு அண்டத்திற்குமே தலைவனாக இருப்பினும், வயல்களை உழும் எளிமையான தொழிலாளி {உழவன்} போலத் தன்னை உழைப்புக்கு {செயலுக்கு [அ] கர்மம் செய்வதற்கு} உட்படுத்திக் கொள்கிறான். உண்மையில், தனது மாயையின் உதவி கொண்டு கேசவன் அனைவரையும் ஏமாற்றுகிறான். எனினும், அவனை {கிருஷ்ணனை} அடைந்த மனிதர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவதில்லை” என்றான் {சஞ்சயன்}.
கேசவனைத் தஞ்சமடை துரியோதனா! – உத்யோக பர்வம் பகுதி 69-கிருஷ்ணனை அடைவது எப்படி என்று சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; கிருஷ்ணனைத் தஞ்சமடையும்படி துரியோதனனிடம் திருதராஷ்டிரன் சொன்னது; துரியோதனன் மறுப்பது; காந்தாரி துரியோதனனைக் கண்டிப்பது; கிருஷ்ணனை அடையும் வழிகளைச் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, அண்டத்தின் உயர்ந்த தலைவனாக {மஹாதேவனாக} மாதவனை {கிருஷ்ணனை} எப்படி உன்னால் அறிய முடிகிறது? என்னால் ஏன் அவனை {கிருஷ்ணனை} அப்படி அறிய முடியவில்லை? ஓ! சஞ்சயா, இதை எனக்குச் சொல்” என்றான்.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ மன்னா {திருதராஷ்டிரரே} கேளும். உமக்கு ஞானமில்லை {பக்தியில்லை}, எனக்கோ எனது ஞானம் குறையவில்லை. ஞானமில்லாமல், அறியாமை எனும் இருளில் மூழ்கி இருக்கும் ஒருவனால், கேசவனை {கிருஷ்ணனை} அறிய முடியாது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திரள், நுட்பம் மற்றும் காரணம் ஆகியவற்றின் சங்கமமே மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்} என்றும்; அனைத்தையும் படைத்தவன் அவனே, ஆனால் படைக்கப்படாதவன் {சுயம்பு} அவன்; தெய்வீகமானவன் அவன், அவனிலிருந்தே அனைத்தும் எழுகின்றன, அவனிடமே அனைத்தும் திரும்பிச் சேர்கின்றன என்றும் எனது அறிவின் துணை கொண்டு நான் அறிகிறேன்” என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} நீ கொண்டுள்ள நம்பிக்கையின் {பக்தியின்} இயல்பு எப்படிப்பட்டது? திரள், நுட்பம் மற்றும் காரணம் ஆகியவற்றின் சங்கமமே மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்} என்று எதன் {எந்த நம்பிக்கையின்} விளைவாக அறிகிறாய்?” என்று கேட்டான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் அருளப்பட்டிரும். (உலக இன்பங்களோடு அடையாளப்படுத்தப்படும்) மாயைக்கு நான் எவ்வித மதிப்பும் அளிப்பதில்லை. (நோன்புகள், அவனிடம் {கிருஷ்ணனிடம்} நம்பிக்கையில்லாத வேலை மற்றும் ஆத்ம தூய்மை போன்ற) பயனற்ற அறங்களை நான் எப்போதும் பயில்வதுமில்லை. நம்பிக்கையால் ஆத்மாவின் தூய்மையை அடைந்து, சாத்திரங்களில் இருந்து நான் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} அறிந்து கொண்டேன்” என்றான்.
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, ரிஷிகேசன் என்றும் அழைக்கப்படும் ஜனார்த்தனனின் {கிருஷ்ணனுடைய} பாதுகாப்பை நீ நாடுவாயாக. ஓ! குழந்தாய் {துரியோதனா}, சஞ்சயன், நாம் நம்பத்தகுந்த நண்பர்களில் ஒருவனாவான். கேசவனை {கிருஷ்ணனைத்} தஞ்சமடைவாயாக” என்றான்.
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “தேவகியின் தெய்வீக மகன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனோடு நட்பில் ஒன்றுபட்டு மனிதவகையைக் கொல்லப்போகிறான் என்றாலும் கூட, என்னால் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} செல்ல முடியாது” என்றான்.
திருதராஷ்டிரன் {காந்தாரியிடம்}, “ஓ! காந்தாரி, தீய மனம் கொண்ட இந்த உனது மகன் {துரியோதனன்} பேரிடரில் மூழ்கத் தீர்மானித்திருக்கிறான். பொறாமையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த வீணன் {துரியோதனன்}, தன்னைவிட மேன்மையான அனைவரின் வார்த்தைகளையும் புறந்தள்ளுகிறான்” என்றான்.
காந்தாரி {துரியோதனனிடம்}, “முதிர்ந்தோரின் கட்டளைகளை அலட்சியம் செய்யும் பேராசை கொண்ட இழிந்தவனே {துரியோதனா}, உனது தந்தையையும், என்னையும் கைவிட்டுவிட்டு, செழிப்பையும் வாழ்வையும் விட்டுவிட்டு, எதிரிகளின் மகிழ்ச்சியை மேம்படுத்தி, என்னை ஆழ்ந்த துயரில் ஆழ்த்துகிறாயே. ஓ! மூடா {துரியோதனா}, பீமசேனனால் அடிக்கப்பட்டு, புழுதியை {மண்ணை} நீ கடிக்கும்போது, உனது தந்தையின் வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்” என்றாள்.
வியாசர், “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, நான் சொல்வதைக் கேள். ஓ! திருதராஷ்டிரா, கிருஷ்ணனின் அன்புக்குப் பாத்திரமாக நீ இருக்கிறாய். சஞ்சயனை உனது தூதனாக நீ கொண்டிருக்கிறாய். அவன் {சஞ்சயன்} உனது நன்மைக்கு உன்னை வழிநடத்துவான். பழமையானவனும், மேன்மையானவனுமான ரிஷிகேசனை {கிருஷ்ணனை} அவன் {சஞ்சயன்} அறிவான். அவன் சொல்வதை நீ கவனமாகக் கேட்டாயானால், உன் தலைக்கு மேலே தொங்கும் பெரும் ஆபத்திலிருந்து அவன் {சஞ்சயன்} உன்னை நிச்சயம் காப்பான். ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரா}, கோபத்துக்கும் இன்பத்துக்கும் ஆட்படும் மனிதர்கள் பல்வேறு வலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
தங்கள் சுய உடைமைகளோடு மனநிறைவு கொள்ளாதவர்கள், விருப்பங்களுடனும் பேராசைகளுடனும் இருப்பதால் அறிவை இழந்து, குருடனால் வழிநடத்தப்படும் {மற்றொரு} குருடன் (குழிகளில் விழுவதைப்} போலத் தங்கள் சொந்த செயல்களின் விளைவாகவே மரணத்திற்கு ஆட்படுகிறார்கள். ஞானிகள் நடக்கும் (பிரம்மத்துக்கு வழிநடத்தும்) பாதை ஒன்றே. அந்தப் பாதையை நோக்கில் கொள்ளும் மேன்மையானவர்கள், மரணத்தை வென்று, அதன் மூலமே இலக்கை {முக்தியை} அடைகிறார்கள்” என்றார் {வியாசர்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, முக்தி {விடுதலை} எனதாகும் வகையில், ரிஷிகேசனை {கிருஷ்ணனை} அடையும் பயங்கரமற்ற பாதையைக் குறித்து எனக்குச் சொல்வாயாக” என்றான்.
சஞ்சயன், “கட்டுப்பாடற்ற மனம் கொண்ட ஒரு மனிதன், ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} அறிய எந்த வழிகளும் இல்லை. புலன்களை அடக்காதவன் செய்யும் வேள்விகளும் முடிவை {முக்தியை} அடையும் எந்த வழிகளையும் காட்டாது. தூண்டப்பட்ட புலன்களுக்கு உகந்த பொருட்களைத் துறக்க ஆன்ம ஒளியாலேயே இயலும்; ஆன்ம ஒளி மற்றும் ஊறிழையாமை {அஹிம்சை} ஆகிய இரண்டும் உண்மை ஞானத்தில் இருந்து உதிப்பவை என்பதில் ஐயமில்லை.
எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மால் முடிந்த அளவு கடுமையாக உமது புலன்களை அடக்கத் தீர்மானிப்பீராக; உண்மை ஞானத்தில் இருந்து உமது புத்தி தடம் மாறாதிருக்கட்டும்; அதை {புத்தியைச்} சூழ்ந்திருக்கும் உலகளாவிய மயக்கங்களை உமது இதயத்தில் இருந்து விலக்குவீராக. கற்ற அந்தணர்கள், இந்தப் புலனடக்கத்தையே உண்மை ஞானம் என்று விளக்குகிறார்கள். இந்த ஞானமே, கற்ற மனிதர்கள் தங்கள் இலக்கை {முக்தியை} அடைவதற்கான பாதையாக இருக்கிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புலன்களை அடக்காத மனிதர்களால் கேசவனை {கிருஷ்ணனை} அடைய முடியாது. புலன்களை அடக்கிய ஒருவனே, சாத்திர அறிவினாலும், யோக ஈர்ப்பின் இன்பத்தினாலும் விழிப்புணர்வடைந்து ஆன்ம அறிவை விரும்புகிறான்” என்றான் {சஞ்சயன்}.
கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்! – உத்யோக பர்வம் பகுதி 70-கிருஷ்ணனின் பெயர்களையும் அதற்கான பொருள்களையும் உரைக்குமாறு சஞ்சயனைத் திருதராஷ்டிரன் வேண்டுவது; சஞ்சயன் அவற்றையும் கிருஷ்ணனின் பெருமைகளையும் சொல்லி, கௌரவர்களின் அழிவைத் தடுக்கக் கிருஷ்ணன் அங்கே வரப்போகிறான் என்பதையும் சொன்னது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, தாமரைக்கண் கிருஷ்ணனைக் குறித்து மீண்டும் எனக்குச் சொல்லுமாறு நான் உன்னை வேண்டிக் கொள்கிறேன்; ஏனெனில், ஓ! ஐயா {சஞ்சயா}, அவனது {கிருஷ்ணனுடைய} பெயர்களின் பொருளை அறிந்தாலாவது, நான் அந்த ஆண்மகன்களில் மேன்மையானவனை {புருஷோத்தமனை} அடையக்கூடும்” என்றான் {திருதராஷ்டிரன்}.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “(கேசவனின் {கிருஷ்ணனின்}) அந்த மங்கலகரமான பெயர்களை நான் முன்பே கேட்டிருக்கிறேன். அவற்றில் நான் அறிந்தவற்றை மட்டும் உமக்குச் சொல்கிறேன். எனினும், கேசவன் {கிருஷ்ணன்}, அளவிடப்பட முடியாதவனும், பேச்சின் சக்தியால் விவரிக்கப்பட முடியாதவனும் ஆவான் {என்பதை அறிந்து கொள்ளும்}.
தனது மாயத்திரையால் அனைத்து உயிர்களையும் ஆக்கிரமிப்பதாலோ , தனது மகிமைமிக்கப் பிரகாசத்தாலோ, தேவர்களின் ஓய்விடமாகவும் ஆதரவாகவும் இருப்பதாலோ {எல்லா உயிர்களிலும் வசிப்பதாலோ} அவன் வாசுதேவன் என்று அழைக்கப்படுகிறான்.
எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால் {எங்கும் வியாபித்துள்ளதால்} அவன் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறான்.
யோக உட்கவர்தலிலும், உண்மையிலும் மனதைக் குவித்து முனிவனாகப் பயிற்சி செய்வதால், அவன் மாதவன் {பெரும் தவம் செய்பவன்} என்று அழைக்கப்படுகிறான்.
அசுரன் மதுவைக் கொன்றதனாலும், அறிவுக்கான இருபத்து நான்கு பொருட்களின் [1] {ஆத்ம தத்துவங்களின்} சாரமாக அவன் இருப்பதாலும் மதுசூதனன் என்று அழைக்கப்படுகிறான்.சாத்வத குலத்தில் பிறந்த அவன், “ஏற்கனவே இருக்கிறது” என்பதைக் குறிக்கும் “கிருஷி” மற்றும் “நித்திய அமைதி” என்பதைக் குறிக்கும் “ண” ஆகிய இரண்டு வார்த்தைகளுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் {ஏற்கனவே நிலைத்து இருக்கும் நித்திய அமைதியாக [சமாதானமாக] அவனே இருப்பதால்} அவன் கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான். [2](க்ருஷ்” என்றால் கீறுதல் என்று பொருள். “கருஷ்” என்றால் பூமி என்று பொருள், “ண” என்றால் சுகம் என்று பொருள். “கிருஷ்ண” என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் {நிலத்தை உழுவதால்} விளையும் நன்மையைக் குறிப்பதாகும் )
“உயர்ந்ததும், நிரந்தரமானதுமான அவனது வசிப்பிடத்தை” குறிக்கும் “புண்டரீகம்” {ஹ்ருதயக் கமலம் = இதயத்தாமரை} மற்றும் “அழிவற்றதைக்” குறிக்கும் “அக்ஷம்” ஆகியவற்றில் இருந்து அவன் புண்டரீகாக்ஷன் என்று அழைக்கப்படுகிறான்;
மேலும் தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் அவன் ஜனார்த்தனன் என்று அழைக்கப்படுகிறான்.
சத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் அதைவிட்டு எப்போதும் விலகாமல் இருப்பதாலும் அவன் சாத்வதன் என்று அழைக்கப்படுகிறான்;
“விருஷபம்” என்பது “வேதங்களைக்” குறிக்கும், “இக்ஷணம்” என்பது “கண்ணைக்” குறிக்கும். அந்த இரண்டும் இணைந்து வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள் என்றோ குறிக்கின்றன என்பதால், அவன் விருஷபாக்ஷணன் என்று அழைக்கப்படுகிறான்,
எதிரி படைகளை வெற்றிக் கொள்ளும் அவன், எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால், “பிறக்காதவன்” அல்லது அஜா என்று அழைக்கப்படுகிறான்.
தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும் படைக்கப்படாததாக இருப்பதாலும், சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் அந்தப் பரமாத்மா தாமோதரன் [3] என்று அழைக்கப்படுகிறான்.
“நித்திய மகிழ்ச்சி” என்பதற்கு “ஹ்ரிஷிகா” என்றும் “ஈசா” என்பதற்கு “ஆறு தெய்வீகப் பண்புகள்” என்றும் பொருள், இவற்றின் இணைப்பு இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பதால் அவன் ரிஷிகேசன் {ஹ்ரிஷிகேசன்} என்று அழைக்கப்படுகிறான்.
தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால், அவன் மஹாபாஹு என்று அழைக்கப்படுகிறான்.
எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எந்தக் குறைவும் அற்று இருப்பதனாலும் அவன் அதாக்ஷஜன் {அதோக்ஷஜன்} என்று அழைக்கப்படுகிறான்,
மேலும், மனிதர்கள் {நரர்கள்} அனைவருக்கும் புகலிடமாக இருப்பதால் {அயனமாக இருப்பதால்} அவன் நாராயணன் என்று அழைக்கப்படுகிறான்.
“படைத்துப் பாதுகாப்பவன்” என்பதையும், “அண்டத்தைப் படைத்து, பாதுகாத்து, அழிப்பவனைக் குறிக்கும் ஒருமையை அழிப்பவன்” என்பதையும் குறிக்கும் “புரு” என்பதில் இருந்து அவன் புருஷோத்தமன் {ஆண்மகன்களில் மேன்மையானவன்} என்று அழைக்கப்படுகிறான்.
அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் அவன் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.
கிருஷ்ணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருக்கிறது, மேலும் கோவிந்தனே உண்மையின் உண்மையாவான். எனவே, அவன் சத்யன் என்று அழைக்கப்படுகிறான்.
தனது {வியாபிக்கும் தன்மை கொண்ட} ஆற்றலுக்காக விஷ்ணு என்றும், தனது வெற்றிகாக ஜிஷ்ணு என்றும் அவன் அழைக்கப்படுகிறான்.
நித்தியமானவனாக {அழிவில்லாதவனாக} இருப்பதால் அனந்தன் என்றும், அனைத்து வகைப் பேச்சுகளின் அறிவையும் கொண்டிருப்பதால் கோவிந்தன் என்றும் அவன் அழைக்கப்படுகிறான்.
உண்மையற்றவற்றை உண்மையாகத் தோன்றச் செய்து அனைத்து உயிர்களையும் அவன் ஏமாற்றுகிறான். இத்தகு குணங்களைக் கொண்டவனும், அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், தெய்வீகமானவனும், சிதையும் திறனற்ற வலிய கரங்கள் கொண்டவனும் மதுவைக்கொன்றவனுமான, அவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்}, குருக்களின் {கௌரவர்களின்} படுகொலையைத் தடுக்கும்பொருட்டு இங்கே வருவான்” என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரனின் பக்தி! – உத்யோக பர்வம் பகுதி 71-கிருஷ்ணன் வருவதைக் கேட்ட திருதராஷ்டிரன், கிருஷ்ணனைப் புகழ்ந்து, அவனைக் காணும் கண் படைத்தவர்கள் அனைவரையும் கண்டு தான் பொறாமை படுவதாகச் சொல்வது; சிறப்புமிக்க அந்தக் கிருஷ்ணனிடம் தான் தஞ்சம் அடைவதாகவும் தெரிவிப்பது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, பெரும் அழகும் பிரகாசமும் கொண்ட உடலைப் படைத்தவனும், முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளைப் பிரகாசிக்கச் செய்பவனும், பாரதர்களால் மரியாதையாகக் கேட்கத்தக்கதும், ஸ்ருஞ்சயர்களுக்கு மங்கலகரமானதும், செழிப்பை விரும்புகிறவர்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கதும், அனைத்து வகையிலும் குறைகளற்றதும், மரணமடைய விதிக்கப்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததுமான வார்த்தைகளைச் சொல்பவனும், உயர்ந்த தீர்மானங்களை நிறைவாகக் கொண்டவனும், நித்தியமானவனும், ஒப்பற்ற வீரம் படைத்தவனும், யாதவர்களில் காளையும், {யாதவர்களுக்குத்} தலைவனும், பகைவரைக் கொல்பவனும், அவர்களுக்குப் பிரமிப்பையும் ஊக்கத்தையும் அளிப்பவனும், பகைவர்கள் அனைவரின் புகழை அழிப்பவனுமான வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தங்கள் முன்னால் காண்பதற்குப் பார்வையைக் கொடையாகக் கொண்டவர்களைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன்.
உயர்ந்த ஆன்மா கொண்டவனும், வணங்கத்தக்கவனும், எதிரிகளைக் கொல்பவனும், விருஷ்ணிகளின் தலைவனும், அன்பு நிறைந்த வார்த்தைகளைப் பேசுபவனும், என் தரப்பில் உள்ளோரை கவர்பவனுமான {மயங்கச் செய்பவனுமான} அவனை {கிருஷ்ணனை} இங்கே கூடியிருக்கும் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரும் காண்பார்கள்.
தன்னறிவு கொண்ட {சுயத்தை அறிந்த} முனிவனும், சொல் திறனின் கடல் ஆனவனும், துறவிகளால் எளிதாக அடையப்படக்கூடியவனும், அழகிய சிறகுகள் கொண்ட அரிஷ்டா {கருடன்} என்றழைக்கப்படும் பறவையானவனும், உயிரினங்களை அழிப்பவனும், அண்டத்தின் புகலிடமானவனும், ஆயிரம் தலைகளைக் கொண்டவனும், அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவனும், புராதானமானவனும், தொடக்கமும், நடுவும், முடிவும் அற்றவனும், முடிவிலா சாதனைகள் கொண்டவனும், முதன்மை வித்துக்குக் காரணமானவனும், பிறப்பற்றவனும், நித்தியத்தைச் சுயமாகக் கொண்டவனும், உயர்ந்தவற்றில் எல்லாம் உயர்ந்தவனும், மூவுலகங்களையும் படைத்தவனும், தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், ராட்சசர்கள், கல்விமான்களில் முதன்மையானவர்கள் அனைவர், மனிதர்களின் ஆட்சியாளர்கள் ஆகியோருக்கு ஆசிரியனும், இந்திரனின் தம்பியுமான அந்த நித்தியமானவனின் {கிருஷ்ணனின்} கைகளில் நான் என்னைக் கொடுக்கிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}.
சனத்சுஜாத பர்வம் {யானசந்தி பர்வம்} முற்றும்
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply