ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ உத்யோக பர்வம்-ஸ்ரீ  பகவத்யாந பர்வம்-

“செல்வமற்றவன் இறந்தவனே” யுதிஷ்டிரன்! – உத்யோக பர்வம் பகுதி 72அ-(பகவத்யாந பர்வம்)பாண்டவர்களிடம் இருந்து சஞ்சயன் சென்ற பிறகு, அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள் என்று ஜனமேஜயன் வைசம்பாயனரிடம் கேட்பது; யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் பேசிய செய்தியை வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொல்வது; ஐந்து கிராமங்களைக் கூடத் திருதராஷ்டிரர் கொடுக்கவில்லையே என யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் வருந்துவது; கிருஷ்ணனின் பாதுகாப்பை யுதிஷ்டிரன் நாடுவது; செல்வமற்றவன் உயிரோடு இருந்தாலும் இறந்தவனே என்றும், தான் அந்த நிலையிலேயே இருப்பதாக யுதிஷ்டிரன் சொல்வது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், “(பாண்டவர் இடத்தை விட்டு அகன்ற) நல்ல சஞ்சயன் குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்ற போது, எனது பாட்டன்களான பாண்டுவின் மகன்கள் என்ன செய்தார்கள்? ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, இவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். எனவே, இவற்றை எனக்குச் சொல்வீராக” என்றான் {ஜனமேஜயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சஞ்சயன் சென்ற பிறகு, நீதிமானான யுதிஷ்டிரன், சாத்வதர்கள் அனைவரின் தலைவனும், தாசார்ஹ குலத்தவனுமான கிருஷ்ணனிடம், “ஓ! நண்பர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனே {கிருஷ்ணா}, நண்பர்கள் தங்கள் நட்பைக் காட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தத் துயர் நிறைந்த காலத்தில் எங்களைக் காப்பதற்கு உன்னைத் தவிர வேறு எவரையும் நான் காணவில்லை. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அளவற்ற கர்வத்தால் நிறைந்திருக்கும் துரியோதனன் மற்றும் அவனது ஆலோசகர்களிடம் எங்களுக்குரிய பங்கை உன்னை நம்பியே நாங்கள் அச்சமற்றுத் திரும்பக் கேட்டிருக்கிருக்கிறோம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, விருஷ்ணிகளின் துயரங்கள் அனைத்திலும் நீயே அவர்களைக் காக்கிறாய். இப்போது பெரும் ஆபத்தில் இருக்கும் பாண்டவர்களையும் காப்பாயாக. அவர்களும் {பாண்டவர்களும்} உனது பாதுகாப்பைப் பெறத் தகுந்தவர்களே” என்றான் {யுதிஷ்டிரன்}.

தெய்வீகமான கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இதோ நான் இருக்கிறேன். நீர் சொல்ல விரும்புவதை என்னிடம் சொல்லும். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, நீர் எதையெல்லாம் சொல்வீரோ அவற்றை நான் செய்வேன்” என்றான்.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “திருதராஷ்டிரர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் நோக்கம் என்ன என்பதை நீ கேட்டாய். ஓ! கிருஷ்ணா, சஞ்சயன் சொன்ன யாவும், திருதராஷ்டிரரின் வார்த்தைகள் என்பது உறுதி. திருதராஷ்டிரரின் ஆன்மா போன்ற சஞ்சயன், அவரது {திருதராஷ்டிரரின்} மனதில் இருப்பதையே பேசினார். தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளையே ஒரு தூதன் பேச முடியும், ஏனெனில் மாறாகப் பேசினால் அவன் கொல்லப்படத் தகுந்தவனாகிவிடுவான். தன்னுடையவை அனைத்தையும் சமமாகப் பாராமல், பேராசையால் உந்தப்பட்ட தீய இதயம் கொண்ட திருதராஷ்டிரர், எங்கள் நாட்டைத் திரும்பக் கொடுக்காமலேயே எங்களிடம் சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்.

உண்மையில், திருதராஷ்டிரர் கட்டளையின் பேரில் நாங்கள் காட்டில் பன்னிரெண்டு {12} வருடங்களையும், மேலும் ஒரு வருடத்தைத் தலைமறைவாகவும், ஓ! தலைவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் எங்கள் உறுதிமொழியில் உறுதியாக இருப்பார் என்ற நம்பிக்கையிலேயே கழித்தோம். எங்களது உறுதிமொழியில் இருந்து நாங்கள் பிறழவில்லை என்பதை எங்களோடு இருந்த அந்தணர்கள் நன்கு அறிவார்கள்.

பேராசை கொண்ட மன்னர் திருதராஷ்டிரர் க்ஷத்திரிய அறங்களை நோற்க இப்போது விரும்பவில்லை. தன் மகன் {துரியோதனன்} மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவர் தீய மனிதர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். சுயோதனனின் {துரியோதனனின்} ஆலோசனைகளுக்குக் கட்டுப்படும் மன்னர் {திருதராஷ்டிரர்}, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பேராசையால் இயக்கப்பட்டு, தனது நன்மையை மட்டும் நாடி, எங்களிடம் உண்மையற்று நடந்து கொள்கிறார்.

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது தாயையும், நண்பர்களையும் பராமரிக்க இயலாதவனாக நான் இருப்பதைவிட எது துயர்நிறைந்ததாக இருக்க முடியும்?

ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, காசி, பாஞ்சாலம், சேதி, மத்ஸ்ய நாட்டவர்களை எனது கூட்டாளிகளாகவும், {கிருஷ்ணனான} உன்னை எனது பாதுகாவலனாகவும் கொண்டிருக்கும் நான், அவிஸ்தலம், விருகஸ்தலம், மாகந்தீ, வாரணாவதம், மேலும் ஏதாவது ஒன்றை ஐந்தாவதாகவும் என ஐந்து கிராமங்களை மட்டுமே வேண்டினேன். “ஓ! ஐயா, நாங்கள் பாரதர்களின் அழிவை விரும்பவில்லை. நாங்கள் ஒற்றுமையாக வசிக்கத்தக்க வகையில் எங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது நகரங்களையாவது கொடும்” என்றே கேட்டேன். எனினும், தீய மனம் படைத்த திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, உலகத்தின் தலைமைத்தன்மையைக் கருதி அதைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். இதை விட வேறு எது துயர் நிறைந்ததாக இருக்கக்கூடும்?

ஒரு மதிப்புமிக்கக் குடும்பத்தில் பிறந்து, அங்கேயே வளர்க்கப்பட்ட ஒரு மனிதன், பிறரின் உடைமைகளைக் கவர்ந்தால், அந்தப் பேராசையே அவனது புத்திக்கூர்மையை அழிக்கும்; புத்திக்கூர்மை அழிந்தால், நாணம் தொலைந்து போகும்; வெட்கமற்றுப் போனால் அறம் குறைய வழிவகுக்கும்; அறத்தின் இழப்பு, செழிப்பின் இழப்பைக் கொண்டுவரும்; செல்வத்தின் அழிவு ஒரு மனிதனை நிர்மூலமாக்கும். ஏனெனில், வறுமையே ஒரு மனிதனின் மரணமாகும். மலர்களோ, கனிகளோ அற்ற மரத்தைப் பறவைகள் தவிர்ப்பது போல, உறவினர்களும், நண்பர்களும், அந்தணர்களும் ஒரு ஏழையைத் தவிர்க்கிறார்கள்.

இறந்த உடலைவிட்டு விலகும் உயிர்மூச்சைப் போல, என்னை விழுந்தவனாகக் கருதி இப்படி உறவினர்கள் என்னை ஒதுக்குவதும் என்னுடைய மரணத்தைப் போன்றதே. “இன்று எனக்கு இறைச்சி இல்லை, நாளை எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற எண்ணத்துடனேயே எப்போதும் துயர்த்தில் இருக்கும் ஒருவனின் வாழ்நிலையைவிடத் துயர்மிகுந்தது எதுவும் இல்லை என்று சம்பரன் சொன்னான். செல்வமே உயர்ந்த அறம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அனைத்தும் செல்வத்தைச் சார்ந்தே உள்ளது. செல்வமுள்ளவரே உயிரோடு இருப்பவராவர். அதேவேளையில் செல்வமற்றவர்களோ உயிரோடிருப்பினும் இறந்தவர்களே ஆவர்” என்றான் {யுதிஷ்டிரன்}.

வெற்றியும் தோல்வியும் இழப்பே! – உத்யோக பர்வம் பகுதி 72ஆ-வறுமை ஒரு மனிதனை எந்நிலைக்கெல்லாம் தள்ளுகிறது; வறுமையும் மரணமும்; விழிப்படைபவன் எப்படிச் செழிப்படைகிறான்? அறத்திற்கு நாணத்தின் பங்களிப்பு; உறவினர்களைக் கொல்வது பாவமே; க்ஷத்திரிய வகையின் இழிதன்மை; போர்த்தொழில் பாவகரமானது; வென்றவனும் தோற்றவனும் இழப்பையே சந்திக்கின்றனர்; போரினால் ஆவது ஒன்றுமில்லை என்பன போன்றவற்றை யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் சொல்வது…

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தான், “வன்முறையுடன் ஒரு மனிதனின் செல்வத்தைத் திருடுபவர்கள், அவனைத் திருடுவது மட்டுமல்ல, அவனது அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றையும் அழிக்கின்றனர். வறுமையால் பீடிக்கப்படும் சில மனிதர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; பிறர் நகரங்களை விட்டு விலகி கிராமங்களுக்குச் செல்கின்றனர், பிறரோ காட்டுக்கே சென்றுவிடுகிறார்கள்; மேலும் சிலரோ தங்கள் வாழ்வை அழித்துக் கொண்டு பிச்சைக்காரர்களாகிவிடுகிறார்கள் {they become religious mendicants}. சிலர் {பறிபோன} அந்தச் செல்வத்தின் காரணமாகப் பைத்தியக்காரர்களாகி விடுகிறார்கள்; பிறர் செல்வத்திற்காகப் பகைவர்களுக்கு அடங்கி அவர்களின் கீழ் வாழ்கிறார்கள்; மேலும் பலர், பிறருக்குத் தங்களை அடிமையாக்கிக் கொள்கிறார்கள்.

ஒரு மனிதனின் வறுமை, மரணத்தைவிடத் துயர்நிறைந்ததாகும். ஏனெனில், அறத்திற்கும், இன்பத்திற்கும் காரணமாக இருப்பது அந்தச் செல்வமே. ஒரு நபரின் இயற்கை மரணம் பெரிதாக மதிக்கப்படுவதில்லை. ஏனெனில், அதுவே அனைத்து உயிர்களின் நிலையான பாதையாகும். உண்மையில், படைக்கப்பட்ட உயிரினங்களில் எதுவும் இதை மீற முடியாது. ஓ! கிருஷ்ணா, முன்பொரு சமயம் பெரும் செழிப்போடு இருந்து, ஆடம்பரமாக வளர்க்கப்பட்டு, அந்தச் செழிப்பை இழந்தவன் அடையும் துன்பத்தைப் போலப் பிறப்பில் இருந்தே ஏழையாக இருக்கும் ஒரு மனிதன் பெரிதான துன்பத்தை அடைவதில்லை. தனது சொந்த தவறால் துயரில் விழுந்த ஒரு மனிதன் இந்திரனோடு சேர்ந்த தேவர்களையும் தன்னையும் பழித்துக் கொள்கிறான். [1]

உண்மையில், முழுமையான சாத்திரங்களின் அறிவுகூட அவனது வலிகளைத் தணிக்க இயலாமல் தோல்வியுறுகின்றன. சில நேரங்களில் அவன் தனது பணியாட்களிடம் கோபம் கொள்கிறான். சில நேரங்களிலோ அவன் தனது நலன் விரும்பிகளுக்குக் கூடத் தீமை செய்துவிடுகிறான். தொடர்ச்சியாகக் கோபத்துக்குள்ளாகி, தனது புலனறிவை இழந்து, அறிவு மறைக்கப்பட்டுத் தீச்செயல்களைப் புரிகிறான். தனது பாவம் நிறைந்த தன்மையால், அத்தகு மனிதன், சங்கரத்துக்குப் {சாதிக் கலப்புக்குப்} பங்களிக்கிறான். சங்கரம் என்பது நரகத்திற்கு இட்டுச் செல்வதாகும். அதுவே {சாதிக் கலப்பே} பாவம் நிறைந்த செயல்களில் முதன்மையானதுமாகும்.

காலத்தில் அவன் விழிப்படையச் செய்யப்படவில்லையெனில், ஓ! கிருஷ்ணா, அவன் நரகத்திற்குச் செல்வது நிச்சயம். உண்மையில், ஞானம் மட்டுமே அவனை விழிப்படையச் செய்யவல்லது. ஞானக்கண்ணை மீண்டும் பெற்றால், அவன் காக்கப்படுவான். ஞானம் மீட்கப்பட்டால், அவன் சாத்திரங்களில் தனது கவனத்தைச் செலுத்துவான். சாத்திரங்களின் கவனிப்பு, அவனது அறத்திற்கு உதவுகிறது. பிறகு, நாணமே அவனது சிறந்த ஆபரணமாகிறது. நாணமுடையவன் பாவத்திற்கு எதிராக ஒரு வெறுப்பை அடைகிறான். அவனது செழிப்பு அதிகரிக்கிறது; செழிப்பை அடைந்தவன் உண்மையில் மனிதனாகிறான்.

எப்போதும் அறத்திற்கு அர்ப்பணிப்போடு இருந்து, மனதைத் தனது கட்டுக்குள் வைத்து, சிந்தித்த பிறகு செயல்படும் ஒருவன், அறமற்றதை {மறத்தை} ஒருபோதும் செய்வதில்லை. மேலும் அவன் எந்தவித பாவகரச் செயலிலும் ஒருபோதும் ஈடுபடுவதில்லை. நாணமும் அறிவும் அற்ற ஒருவன் ஆணுமல்லாமல் பெண்ணுமல்லாதவனாக இருக்கிறான். சூத்திரனைப் போல, அவன் அறத்தகுதியை ஈட்ட இயலாதவனாக இருக்கிறான். நாணமுடையவன், தேவர்களையும், பித்ருக்களையும், ஏன் தனது சுயத்தையும் கூட நிறைவுகொள்ளச் செய்கிறான். இதனால் அவன் மோட்சத்தை அடைகிறான். உண்மையில், இதுவே நல்ல மனிதர்கள் அனைவரின் உயர்ந்த குறிக்கோளுமாகும்.

ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, இவை அனைத்தையும் என்னிடம் உனது கண்களாலேயே கண்டிருக்கிறாய். நாட்டை இழந்து நாங்கள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தது நீ அறியாததல்ல. (எங்களுடையதாயிருந்த) செழிப்பை {செல்வங்களை} நியாயப்படி நாங்கள் கைவிட முடியாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நாங்களும் கௌரவர்களும் சமாதானத்துடன் ஒன்றுபட்டு, எங்கள் செழிப்பை அமைதியாக அனுபவிப்பதே எங்கள் முதல் முயற்சியாக இருக்கும்.

இல்லையென்றால், ஓ! கிருஷ்ணா, எங்களுடன் உறவு கொண்ட இழிவான எதிரிகளை இரத்தம் சிந்த வைத்து அழித்து வெல்வது என்பது கடுமையான செயல்களிலும் மோசமானது என்றாலும், கௌரவர்களில் இழிந்தவர்களைக் கொன்று, அந்தப் பகுதிகளை மீட்க வேண்டியிருக்கும். எண்ணற்ற உறவினர்களையும், எண்ணற்ற மரியாதைக்குரிய மூத்தவர்களையும் இத்தரப்பிலோ, அத்தரப்பிலோ நாங்கள் கொண்டிருக்கிறோம். இவர்களையெல்லாம் கொல்வது பெரும் பாவமே ஆகும். எனவே, போரில் என்ன நன்மை இருக்கிறது?

ஐயோ, அத்தகு பாவகரச் செயல்கள் க்ஷத்திரிய வகையின் கடமைகளாக இருக்கின்றனவே! இந்த இழிந்த {க்ஷத்திரிய} வகையிலல்லவா நாங்கள் எங்கள் பிறப்பை அடைந்திருக்கிறோம். அச்செயல்கள் பாவகரமாக இருந்தாலும், அறம்சார்ந்ததாக இருந்தாலும், ஆயுதமேந்தும் தொழிலைத் தவிர வேறு தொழில் எங்களுக்கு நிந்திக்கத்தக்கதே. ஒரு சூத்திரன் பணி செய்கிறான்; ஒரு வைசியன் வணிகத்தால் வாழ்கிறான்; பிராமணன் (பிச்சை எடுப்பதற்காக) மரப்பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறான், நாங்களோ {க்ஷத்திரியர்களோ} படுகொலையால் வாழ்கிறோம்!

மீனானது {மற்றொரு} மீனை உண்டு வாழ்கிறது; ஒரு நாய் {மற்றொரு} நாயை இரையாகக் கொள்கிறது; அதே போல ஒரு க்ஷத்திரியன் {மற்றொரு} க்ஷத்திரியனைக் கொல்கிறான்! ஓ! தாசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, ஒவ்வொருவரும் தனது வினோதமான அறத்தை எப்படிப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பார். ஓ! கிருஷ்ணா, போர்க்களங்களில் கலி எப்போதும் இருக்கிறான்; சுற்றிலும் உயிர்கள் கொல்லப்படுகின்றன. கொள்கை மூலம் கட்டுப்படுத்தப்படும் பலம் தூண்டப்படுகிறது என்பது உண்மையே; இருப்பினும் வெற்றியும் தோல்வியும் போட்டியாளர்களின் விருப்பங்களால் ஆவதில்லையே.

உயிரினங்களின் உயிர்களும் அவற்றின் விருப்பங்களைச் சாராமலே இருக்கின்றன. ஓ! யது குலத்தில் சிறந்தவனே {கிருஷ்ணா}, அதுஅதற்கான நேரம் அமையவில்லையெனில், இன்பமோ, துன்பமோ ஒருவனைச் சாராது. சில நேரங்களில் ஒரு மனிதன் பலரைக் கொல்கிறான், சில நேரங்களில் பலர் ஒன்றாகக் கூடி ஒருவனைக் கொல்கின்றனர். ஒரு கோழை, ஒரு வீரனைக் கொல்லலாம், புகழற்ற ஒருவனும் கூடப் புகழ்வாய்ந்த ஒரு வீரனைக் கொன்றுவிடலாம். இருதரப்பும் வெல்ல முடியாது. அதே போல, இரண்டும் தோற்கவும் முடியாது. எனினும், இருதரப்பின் இழப்பும் சமமாக இருக்கலாம்.

புறமுதுகிட்டு ஓடுபவன், தனது உயிர் மற்றும் புகழ் ஆகிய இரண்டையும் இழக்கிறான். எனினும், அனைத்துச் சூழ்நிலைகளிலும், போர் என்பது பாவமே. அடுத்தவனை அடிக்கும் எவன் தானே அடிபடாமல் இருக்கிறான்? ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அடிப்பட்ட மனிதனைப் பொறுத்தவரை, வெற்றியும் தோல்வியும் சமமானதே. தோல்வி என்பது மரணத்தைக் காட்டிலும் வேறில்லை. ஆனால், ஓ! கிருஷ்ணா, தோற்றவனின் இழப்பைவிட வென்றவனின் இழப்பு குறைந்ததில்லை. தானே கொல்லப்படவில்லை ஆயினும், தனது அன்பிற்குரிய ஒருவனையோ, வேறு ஒருவனையோ அவனது பகைவர்கள் கொல்ல நேரிடும். ஓ ஐயா {கிருஷ்ணா}, அதனால், அந்த மனிதன் தனது பலத்தை இழந்து, தனது மகன்களையும், சகோதரர்களையும் தன் முன்னிலையில் காணாத அவன், ஓ! கிருஷ்ணா, தன் வாழ்வையே வெறுக்கிறான்.

அமைதியாக, பணிவாக, அறம்சார்ந்தவனாக, கருணையுள்ளவனாக இருப்பவர்களே, போர்க்களங்களில் பொதுவாகக் கொல்லப்படுகிறார்கள். அதேவேளையில், தீயவர்களோ தப்பிவிடுகிறார்கள். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, ஒருவன் தனது எதிரிகளைக் கொன்ற பிறகும் கூட, வருத்தம் அவனது இதயத்தைப் பீடிக்கிறது. எதிரிகளில் பிழைப்பவன் தொல்லை கொடுக்கிறான். ஏனெனில், அப்படிப் பிழைத்திருப்பவன், ஒரு படையைத் திரட்டி, பிழைத்திருக்கும் வெற்றியாளனை அழிக்கை முயல்கிறான். சச்சரவை முடிக்கும் நம்பிக்கையில் ஒருவன் தனது எதிரியை அழிக்க அடிக்கடி முயல்கிறான். இப்படியே வெற்றி பகையை உண்டாக்கிறது. தோற்றவனோ சோகத்துடன் வாழ்கிறான்” என்றான் {யுதிஷ்டிரன்}.

“குருக்களிடம் செல்வேன்” என்றான் கிருஷ்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 72இ- பகை நிறைந்தவன் புகழ்கேட்டை அடைகிறான்; ஒரு தரப்பு முற்றாக அழிந்தால்தான் பகை ஒழியும்; முற்றாக ஒரு தரப்பை அழிக்கும் செயல் கொடூரமானது; நாட்டைத் துறந்து அடையப்படும் அமைதி மரணத்திற்கு ஒப்பானது; நாயின் சண்டையோடு மனிதர்களின் சண்டையை ஒப்பிட்டுக் கிருஷ்ணனிடம் சொல்லும் யுதிஷ்டிரன், தான் திருதராஷ்டிரனை மதிப்பதாகவும், ஆனால் அவன் தன் மகன் மீது கொண்ட பாசத்தால் தனது வணக்கத்தை ஏற்கமாட்டான் என்றும் சொல்வது; கிருஷ்ணனே தங்களுக்கு உற்ற தோழன் என்றும் சொல்வது; இவற்றையெல்லாம் கேட்ட கிருஷ்ணன் தானே கௌரவர்களிடம் தூது செல்வதாகச் சொல்வது; அதில் தனக்கு விருப்பம் இல்லை என்று யுதிஷ்டிரன் சொல்வது; நோக்கம் நிறைவேறாவிட்டாலும், தான் செல்வது எவ்வகையிலும் நன்மையையே விளைவிக்கும் என்று கிருஷ்ணன் சொல்வது; யுதிஷ்டிரன் சம்மதிப்பது..

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தான், “அமைதி நிறைந்தவன், வெற்றி மற்றும் தோல்வி குறித்த எண்ணங்களையெல்லாம் துறந்து மகிழ்ச்சியாக உறங்குகிறான். அதேவேளையில், பகையால் தூண்டப்பட்டவனோ, பாம்புடன் ஒரே அறையில் உறங்குவதைப் போல, கவலை நிறைந்த இதயத்துடன் எப்போதும் துக்கத்துடனேயே உறங்குகிறான். அழிப்பவன் மிக அரிதாகவே புகழை வெல்கிறான். மறுபுறம், அத்தகு மனிதன், அனைவரின் மதிப்பீட்டின்படி நிலைத்த புகழ் கேட்டை {அபகீர்த்தியை} அடைகிறான். நீண்டகாலம் பாராட்டப்படும் பகைமை ஒழிவதில்லை; ஏனெனில், எதிரியின் குடும்பத்தில் ஒருவன் உயிரோடு இருந்தாலும், அவனுக்குக் கடந்த காலத்தை விவரிக்க உரை நிகழ்த்துபவர்கள் {கதைசொல்லிகள்} எப்போதும் தேவையில்லை.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, பகையைப் பகையால் சமன் செய்ய எப்போதும் முடியாது; மறுபுறம், தெளிந்த நெய்யால் தூண்டப்படும் நெருப்பு போல, பகை தூண்டிவிடப்படுகிறது. எனவே, ஒரு தரப்பு நிர்மூலமடையாமல் சமாதானத்தை எட்ட முடியாது {அமைதி ஏற்படாது}. ஏனெனில், ஒரு தரப்பு மற்றொரு தரப்பின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கான {அந்த மற்றொரு தரப்பின்} குறைகளை எப்போதும் கண்டுபிடிக்கும். குறைகாண்பதில் ஈடுபடுபவர்கள் இந்தத் தீயொழுக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். {குறை காண்பது தீயொழுக்கமே}.

தன் சொந்த ஆற்றல் குறித்த ஒருவனின் தன்னம்பிக்கை அவனது இதயத்தின் ஆழத்தில் குணப்படுத்த முடியாத நோயாக இருந்து தொல்லை கொடுக்கிறது. அதை உடனே கைவிடவில்லை என்றாலோ, {அம்மனிதனுக்கு} மரணம் ஏற்படவில்லை என்றாலோ, அங்கே அமைதி ஏற்பட முடியாது.

ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}பகைவரை அவர்களது வேர் வரை அழிப்பது, பெரும் செழிப்பெனும் வடிவில் நல்ல விளைவுக்கு வழிவகுத்தாலும், அத்தகு செயல் மிகவும் கொடூரமானதே. நாங்கள் நாட்டைத் துறப்பதால் அடையப்படும் அமைதி, மரணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எதிரியின் வடிவமைப்பு மற்றும் எங்களது அப்பட்டமான அழிவு ஆகியவற்றின் விளைவால் ஏற்படும் அந்த நாடு இழப்பு, எங்கள் மரணத்தையே குறிக்கிறது. நாங்கள் எங்கள் நாட்டையும் கொடுக்க விருப்பவில்லை, எங்கள் குலம் அழிவதைக் காணவும் விரும்பவில்லை.

எனவே, இந்தச் சூழ்நிலையில், அவமானத்தின் மூலம் கூட முன்னதாகவே பெறப்படும் சமாதானம் சிறந்ததாகவே இருக்கும். போரை விரும்பாமல், அனைத்து வழிகளிலும் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும் இவர்களின் சமரசங்கள் தோல்வியில் முடிந்தால், போர் தவிர்க்க முடியாததாக ஆகும். அதன் பிறகு வீரத்தை வெளிப்படுத்தும் நேரம் வரும். உண்மையில், சமரசம் தோற்றால், பயங்கர விளைவுகளே பின்தொடரும்.

கற்றோர், இவையனைத்தையும் நாய்ச்சண்டையில் கவனித்திருக்கின்றனர். முதலில், வாலாட்டுதல், பிறகு குரைத்தல், பிறகு பதிலுக்குக் குரைத்தல், பிறகு வலம் வருதல், பிறகு பற்களைக் காட்டுதல், பிறகு திரும்பத் திரும்ப உறுமுதல், கடைசியாகச் சண்டையிடுதல். ஓ! கிருஷ்ணா, அத்தகு சண்டையில், தனது எதிரியை வீழ்த்தும் வலிய நாய், பின்னதன் {வீழ்ந்த நாயின்} இறைச்சியை எடுத்துக் கொள்ளும். சரியாக மனிதர்களின் வழக்கிலும் இதே தான் நடக்கிறது. எந்தவித வித்தியாசமும் இல்லை. சக்திவாய்ந்தவர்கள், எப்போதும் பணிந்து நிற்கும் பலவீனர்களிடம் சச்சரவுகளைத் தவிர்த்து, அவற்றை அலட்சியம் செய்ய வேண்டும். தந்தை, மன்னன், வயது முதிர்ச்சியால் மதிக்கத்தக்கவர்கள் ஆகியோர் எப்போதும் மரியாதைக்குகந்தவர்கள் ஆவர். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர், எங்கள் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவரே. ஆனால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் தனது மகன் மீது கொண்ட பாசம் பெரிதாக இருக்கிறது. தனது மகனுக்குக் {துரியோதனனுக்குக்} கீழ்ப்படியும் அவர் {திருதராஷ்டிரர்}, நமது வணக்கத்தை மறுதலிப்பார். ஓ! கிருஷ்ணா, இச்சந்தர்ப்பத்தில் எது சிறந்ததென நீ நினைக்கிறாய்?

ஓ! மாதவா, எங்கள் பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டையும் நாங்கள் எவ்வாறு பாதுகாக்க முடியும்? ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, மனிதர்களில் முதன்மையானவனே, இக்கடினமான விவகாரத்தை உன்னைத் தவிர வேறு யாருடன் நாங்கள் ஆலோசிக்க முடியும்? ஓ! கிருஷ்ணா, எங்களிடம் அன்பாகவும், எங்கள் நன்மைக்கு முயல்பவனாகவும், அனைத்து செயல்படுவழிகளையும் அறிந்தவனாகவும், உண்மையை {சத்தியத்தை} நன்கு அறிந்தவனாகவும் உன்னைப்போல வேறு எந்த நண்பன் எங்களுக்கு இருக்கிறான்?” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, நீதிமானான யுதிஷ்டிரனிடம், “உங்கள் இருவருக்காகவும் {பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்காவும்}, நான் குருக்களின் {கௌரவர்களின்} சபைக்குச் செல்வேன். உங்கள் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல் என்னால் அமைதியை எட்ட முடியுமென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் பலன்களைத் தரவல்ல தகுதியுடைய ஒரு பெரும் அறச்செயல் எனதாகும். குருக்கள் {கௌரவர்கள்}, கோபத்தால் எரிந்து கொண்டிருக்கும் ஸ்ருஞ்சயர்கள், பாண்டவர்கள், திருதராஷ்டிரர்கள், ஏன், உண்மையில் இந்த முழு உலகையும் கூட மரண வலையில் இருந்து காத்தவனாவேன்” என்று பதிலுரைத்தான் {கிருஷ்ணன்}.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “நீ துரியோதனனுக்கு நல்லதை அறிவுறுத்தினாலும், உனது வார்த்தைகளுக்கு ஏற்ப அவன் செயல்படவே மாட்டான். குருக்களிடம் {கௌரவர்களிடம்} நீ செல்வதை நான் விரும்பவில்லை. துரியோதனனின் ஆணைக்குக் கீழ்ப்படியும் இவ்வுலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரும் அங்கே கூடியிருக்கிறார்கள். ஓ! கிருஷ்ணா, நீ அவர்களுக்கு மத்தியில் செல்வதை நான் விரும்பவில்லை. உனக்கு ஏதாவது குறைவு {அங்கே} உண்டாகுமானால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, இன்பம் என்ன? அதன்மூலமாகக் {உனக்கு ஏற்படும் குறைவால் எங்களுக்குக்} கிடைக்கும் தெய்வீகத்தன்மையும், தேவர்களின் அரசுரிமையும் கூட எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது” என்றான் {யுதிஷ்டிரன்}.

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} பாவம் நிறைந்த தன்மையை நான் அறிவேன். ஆனால், அங்கே செல்வதால், பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரின் பழிச்சொல்லிலிருந்தும் நாம் தப்புவோம். சிங்கத்தின் முன்னிலையில் பிற விலங்குகளைப் போல, பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும் கூடி வந்தாலும் கூட, கோபத்தில் இருக்கும் என்னிடம் போரில் நிலைத்து நிற்க முடியாது. அவர்கள் எனக்கு ஏதாவது தீங்கைச் செய்தார்களெனில், நான் குருக்கள் அனைவரையும் எரித்துவிடுவேன். இதுவே எனது நோக்கம். ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, அங்கே நான் செல்வது கனியற்றதாகாது. ஏனெனில், நமது நோக்கம் நிறைவேறவில்லை என்றாலும் கூட, நாம் அனைத்துப் பழிகளில் இருந்தும் தப்பலாம்” என்றான் {கிருஷ்ணன்}.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், “ஓ! கிருஷ்ணா, நீ விரும்புவதைச் செய். நீ அருளப்பட்டிரு. குருக்களிடம் {கௌரவர்களிடம்} செல். வெற்றியோடும், செழிப்போடும் நீ திரும்பவதைக் காண்பேன் என நான் நம்புகிறேன். ஓ! தலைவா {கிருஷ்ணா}, பரதனின் மகன்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடனும், மனநிறைவுடனும் ஒன்றாகச் சேர்ந்து வாழும்படிக்குக் குருக்களிடம் சென்று அமைதியை நிலைநாட்டுவாயாக. நீ எங்களுக்குச் சகோதரனும், நண்பனுமாவாய். பீபத்சுவைப் {அர்ஜுனனைப்} போல, நீ எனது அன்புக்குரியவனுமாவாய். உன்னிடம் இருக்கும் எங்களுக்கான ஆர்வத்தைப் புறக்கணிக்க மாட்டோம். உன்னிடம் நாங்கள் அவ்வளவு நெருக்கத்தைக் கொண்டுள்ளோம்.

நீ எங்களையும் அறிவாய், எங்கள் பகைவரையும் அறிவாய். எங்கள் காரியங்கள் என்ன என்பதை நீ அறிவாய், என்ன பேச வேண்டும் என்பதையும் நீ அறிவாய். ஓ! கிருஷ்ணா, எங்களுக்கு நன்மை தரக்கூடிய வார்த்தைகளை நீ சுயோதனனிடம் {துரியோதனனிடம்} பேசுவாயாக. (வெளிப்படையான) பாவத்தாலோ, வேறு எந்தப் பிற வழிகளிலோ அமைதி நிறுவப்பட்டாலும், ஓ! கேசவா {கிருஷ்ணா}, நமது நன்மைக்கு வழிகோலும் வார்த்தைகளையே பேசுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

“உண்மை உணர்த்துவேன்” என்றான் கிருஷ்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 73-வெற்றியும் மரணமும் க்ஷத்திரியனின் கடமை; கோழைத்தனம் மெச்சத்தகுந்ததல்ல என்று யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொல்வது; கௌரவர்களிடம் மிதமாக, மென்மையாக நடந்து கொண்டால் யுதிஷ்டிரனால் தனது நாட்டைத் திரும்பப் பெற முடியாது என்று சொன்னது; தீச்செயல் செய்துவிட்டு அதற்காக வெட்கப்படாத துரியோதனன், அதன் காரணமாக முன்பே இறந்து விட்டான் என்று சொன்னது; பாண்டவர்கள் அனாதரவாக விடப்பட்டத்தையும், திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்தையும் நினைவூட்டி, துரியோதனன் கொல்லத்தக்கவன் என்று சொன்னது; குருக்களிடம் சென்று, அங்கே கூடியிருக்கும் மன்னர்களிடம் யுதிஷ்டிரனின் அறச்செயல்களையும், துரியோதனனின் தீமைகளையும் எடுத்துரைக்கப் போவதாகச் சொன்னது; தான் சென்று விரைந்து திரும்பி விடுவதாகவும், பாண்டவர்களின் படையைப் போருக்குத் தயாராக நிறுத்தும்படியும் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது…

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “நான் சஞ்சயரின் வார்த்தைகளைக் கேட்டேன். இப்போது உம்முடையவற்றையும் கேட்டேன். அவரது {சஞ்சயரின்} நோக்கங்களையும் உம்முடையவற்றையும் குறித்த அனைத்தையும் நான் அறிவேன். உமது இதயம் அறத்தை நோக்குகிறது, அதே வேளையில் அவர்களது {கௌரவர்களது} இதயமோ பகைமையை நோக்கி இருக்கிறது. போரில்லாமல் கிடைக்கும் எதுவும் உமக்கு மதிப்பு மிக்கதே.

ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, நீண்ட நாள் பிரம்மச்சாரியாக இருப்பது க்ஷத்திரியனின் கடமையாகாது. உண்மையில், க்ஷத்திரியர்கள் பிச்சையால் தங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடாது என்றே நான்கு வகைகளைச் சேர்ந்த மனிதர்களும் சொல்லியிருக்கின்றனர். போர்க்களத்தில் வெற்றி அல்லது மரணம் என்பது படைப்பாளனால் நிலையானதாக விதிக்கப்பட்டுள்ளது; அதுவே க்ஷத்திரியனின் கடமையும் கூட. (க்ஷத்திரியரில்) கோழைத்தனம் மெச்சத்தகுந்ததல்ல. ஓ! யுதிஷ்டிரரே, ஓ! வலிய கரங்கள் கொண்டவரே, கோழைத்தனத்தால் வாழ்வாதாரம் சாத்தியமல்ல. உமது வீரத்தை வெளிப்படுத்தி, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, உமது எதிரிகளை வீழ்த்துவீராக.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிரரின் பேராசை கொண்ட மகன் {துரியோதனன்}, (பல மன்னர்களுடன்) நீண்ட காலம் வாழ்ந்ததால், {அவர்களுடன் ஏற்பட்ட} பாசத்தாலும் நட்பாலும் மிகுந்த பலவானாகி விட்டான். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்முடன் அவன் {துரியோதனன்} சமாதானம் கொள்வான் என்பதில் {எனக்கு} நம்பிக்கையே இல்லை. பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் பிறர் தங்களோடு இருப்பதால், அவர்கள் {கௌரவர்கள்} தங்களைப் பலவான்களாகக் கருதுகிறார்கள்.

ஓ! மன்னா, ஓ! எதிரிகளை வாட்டுபவரே {யுதிஷ்டிரரே}, நீர் எவ்வளவு காலம் அவர்களோடு மென்மையாகப் பழகுகிறீரோ, அவ்வளவு காலம் உமது நாட்டை அவர்களே வைத்துக் கொள்வர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, {நீர் காட்டும்} கருணையாலோ, மென்மையாலோ, நீதியுணர்வின் காரணத்தாலோ, திருதராஷ்டிரர் மகன்கள் உமது விருப்பங்களை நிறைவேற்ற மாட்டார்கள்.

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அவர்கள் உம்மோடு சமாதானம் செய்ய மாட்டார்கள் என்பதற்கு இது மற்றுமொரு சாட்சியாகும். உம்மைக் கோவணத்துடன் {Kaupina} தள்ளி, உமக்கு ஆழ்ந்த வலியை உண்டாக்கிய அவர்கள் {கௌரவர்கள்}, அதற்காக வருத்தமடையவில்லை. ஈகை, மென்மை, சுயக்கட்டுபாடு, அறம், கடும் நோன்புகள் ஆகியவற்றைக் கொண்ட உம்மை, பாட்டன் {பீஷ்மர்}, துரோணர், ஞானியான விதுரர், மற்றும் பல புனிதமான அந்தணர்கள், மன்னன் {திருதராஷ்டிரர்}, குடிமக்கள் மற்றும் கௌரவர்களில் முக்கியத் தலைவர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஏமாற்றுகரமாகப் பகடையில் வீழ்த்திய கொடூரனான துரியோதனன், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} தனது அந்தத் தீயச் செயலுக்காக வெட்கப்படவில்லையே.

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இத்தகு மனநிலை கொண்ட அந்த இழிந்தவனுக்கு {துரியோதனனுக்கு} நீர் எந்த இரக்கத்தையும் காட்டாதீர். அனைவரின் கைகளாலும் மரணத்தைப் பெற அவர்கள் தகுந்தவர்களே எனும்போது, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உம்மால் கொல்லப்பட அவர்கள் எவ்வளவு தகுந்தவர்கள்? ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, மகிழ்ச்சியுடன் பல தற்பெருமைப் பேச்சுகளில் ஈடுபட்டவனும், தனது தம்பிகளுடன் கூடியவனுமான துரியோதனன், எப்படிப்பட்ட முறையற்ற பேச்சுகளால் உம்மையும் உமது தம்பிகளையும் துன்புறுத்தினான்?

அவன் {துரியோதனன்}, “இந்தப் பரந்த பூமியில் இப்போது பாண்டவர்கள் தங்களுக்கென்று எதையும் கொண்டிருக்கவில்லை. அவர்களது {பாண்டவர்களது} குலமும் பெயர்களும் கூட அழிந்து போகும். முடிவிலா காலத்தில், தோல்வி மட்டுமே அவர்களுடையதாகும். அவர்களது அறங்கள் அனைத்தும் என்னில் கலந்து, ஐம்பூதங்களாக அவர்கள் குறைக்கப்பட்டுவிட்டனர்.” என்று சொன்னான்.

பகடையாட்டம் நடந்து கொண்டிருந்த போது, பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரின் முன்னிலையில், தீய ஆன்மா கொண்ட இழிந்தவனான துச்சாசனன், பாதுகாப்பற்ற ஒருத்தியைப் போல, அழுது கொண்டிருக்கும் மங்கையான திரௌபதியின் கூந்தலைப் பற்றி மன்னர்களின் சபைக்கு இழுத்து வந்து, மீண்டும் மீண்டும் அவளை {திரௌபதியை} “மாடே, மாடே” என்று அழைத்தான். பயங்கர ஆற்றல்படைத்த உமது சகோதரர்கள், உம்மால் தடுக்கப்பட்டு, அறத்தின் கட்டுகளுக்குக் கட்டுப்பட்டு, பழிதீர்க்க எதுவும் செய்யவில்லை; அதன் பிறகு, நீங்கள் காட்டிற்கு நாடுகடத்தப்பட்ட பிறகும், தனது உறவினர்களுக்கு மத்தியில் இத்தகு வார்த்தைகளையும், மேலும் கொடும் வார்த்தைகளைச் சொல்லி, துரியோதனன் தற்பெருமை பேசினான்.

நீர் {குற்றமற்ற) அப்பாவி என்பதை அறிந்தும், அங்கே கூடியிருந்தவர்கள் அந்தச் சபாமண்டபத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அடைபட்ட குரலுடன் அழுது கொண்டிருந்தார்கள். அந்தணர்களோடு அங்கே கூடியிருந்த மன்னர்கள் இதற்காக அவனை {துரியோதனனை} மெச்சவில்லை. உண்மையில், அங்கே இருந்த சபை உறுப்பினர்கள் அனைவரும் அவனை {துரியோதனனை} நிந்திக்கவே செய்தனர்.

ஓ! எதிரிகளை வாட்டுபவரே {யுதிஷ்டிரரே}, நற்குலத்தில் பிறந்தவனுக்கு நிந்தனையே கூட மரணமாகும். பழி நிறைந்த வாழ்வை வாழ்வதை விட மரணமே பல மடங்கு சிறந்ததாகும். பூமியின் மன்னர்கள் அனைவராலும் நிந்திக்கப்பட்டும், வெட்கமடையாத அவன் {துரியோதனன்}, அப்போதே இறந்துவிட்டான். தனது குணத்தை இவ்வளவு அருவருக்கத்தக்கதாக அமைத்துக் கொண்ட ஒருவன், ஒரே பலவீனமான வேரில் நிமிர்ந்து நிற்கும் வேரற்ற மரத்தைப் போல எளிதில் அழிவடைவான். பாவம் நிறைந்த, தீய மனம் படைத்த துரியோதனன், பாம்பைப் போல அனைவர் கையாலும் சாகத் தகுந்தவனாவான். எனவே, எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அவனை {துரியோதனனைக்} கொன்றுவிடும். சற்றும் தயங்காதீர்.

ஓ! பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, உமது தந்தையான திருதராஷ்டிரருக்கும், பீஷ்மருக்கும் நீர் மரியாதை செலுத்துவதை நானும் விரும்புகிறேன், உமக்கும் அது தகும். துரியோதனனின் தீமைகளைக் குறித்து முடிவெடுக்க முடியாமல் இருக்கும் மனிதர்களின் சந்தேகங்கள் அனைத்தையும் நான் அங்கே {ஹஸ்தினாபுரம்} சென்று நீக்கிவிடுவேன். அங்கே, நான், மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும், அனைத்து மனிதர்களிடமும் காண முடியாதவையும், உம்மில் இருப்பவையுமான அறங்கள் அனைத்தையும், மேலும், துரியோதனனின் தீமைகள் அனைத்தையும் பட்டியலிடுவேன்.

அறம் மற்றும் பொருள் நிறைந்த நல்ல வார்த்தைகளை நான் பேசுவதைக் கேட்கும் பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள், {யுதிஷ்டிரனாகிய} உம்மை, அறம்சார்ந்த ஆன்மா கொண்டவராகவும், உண்மையைப் பேசுபவராகவும் கருதுவார்கள். அதே வேளையில், துரியோதனன் எவ்வளவு பேராசை கொண்டவன் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். அங்கே கூடியிருக்கும் குடிமக்கள் மற்றும் அந்த நாட்டில் வசிப்பவர்கள் ஆகிய இருவரிடமும், இளையவர் மற்றும் முதியவர் ஆகிய இருவரிடமும், நால் வகை மக்கள் அனைவரிடமும், துரியோதனனின் தீமைகளை எடுத்துச் சொல்வேன்.

நீர் சமாதானத்தைக் கேட்பதால் யாரும் உம்மைப் பாவம் நிறைந்தவன் என்று குற்றஞ்சாட்டமாட்டார்கள். அதே வேளையில், பூமியின் தலைவர்கள் அனைவரும் குருக்களையும் {கௌரவர்களையும்}, திருதராஷ்டிரரையும் நிந்திப்பார்கள். மனிதர்கள் அனைவராலும் கைவிடப்பட்டதன் விளைவால் துரியோதனன் கொல்லப்பட்டால், மேற்கொண்டு செய்வதற்கு எதுவும் இருக்காது. எனவே, செய்ய வேண்டியதை இப்போதே செய்வீராக.

குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்று, உங்கள் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல் அமைதியேற்படுத்த முயன்று, அவர்களது போர் எண்ணத்தையும், அவர்களது ஏற்பாடுகளையும் குறித்துக் கொண்டு, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உமது வெற்றிக்காக நான் விரைந்து வருவேன். எதிரியிடம் போர் நிச்சயம் என்றே நான் நினைக்கிறேன். நான் காணும் சகுனங்கள் அனைத்தும் அதையே குறிக்கின்றன. முன்னிரவு நேரத்தில், பறவைகளும், விலங்குகளும் பயங்கமாக அலறுகின்றன. யானைகள் மற்றும் குதிரைகளில் முதன்மையாவை கொடூர உருவங்களைக் கொள்கின்றன. நெருப்பே கூடப் பல்வேறு வகைகளில் பயங்கர வண்ணங்களை வெளிப்பட்டுத்துகின்றன! உலகத்தை அழிக்கப்போகும் பேரழிவு நமக்கு மத்தியில் வந்திருப்பதாலேயே வழக்கத்திற்கு மாறான இவற்றை நாம் காண்கிறோம்.

ஆயுதங்கள், பொறிகள், கவசங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைத் தயார் செய்தபடி உமது வீரர்கள் அனைவரும் போருக்குத் தயாராக இருக்கட்டும். அவர்கள், தங்கள் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களைக் கவனித்துக் கொள்ளட்டும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, வரப்போகும் போரில் உமக்குத் தேவையான அனைத்தையும் சேகரித்துக் கொள்ளும். துரியோதனன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ, அவ்வளவு காலம் அவனால் உமக்கு எவ்வழியிலும் {நாட்டைத்} திருப்பிக் கொடுக்க இயலாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, செழிப்பு மிகுந்த உமது நாட்டை அவன் {துரியோதனன்} பகடை கொண்டு உம்மிடம் கைப்பற்றினான்” என்றான் {கிருஷ்ணன்}.

“நாங்கள் பணிவோம்” என்றான் பீமன்! – உத்யோக பர்வம் பகுதி 74-கடுமையுடன் எப்போதும் பேசக்கூடிய பீமன் வழக்கத்திற்கு மாறாகத் துரியோதனனிடம் மென்மையாகப் பேசுமாறு கிருஷ்ணனை வேண்டுவது; துரியோதனன் பிடிவாதம் கொண்டவன் என்றும், தான் கொண்ட கருத்துக்காக உயிரையே கூட  விடுவான் என்றும் சொல்வது; துரியோதனன் பாரதக் குலத்தை அழிக்கவே பிறந்திருக்கிறான் என்று சொல்வது; பாரதர்கள் அனைவரையும் அழிக்காமல் இருப்பதற்காகத் தாங்கள் துரியோதனனுக்குப் பணிந்து போவது கூட நன்மையே என்று சொல்வது; பீஷ்மரிடம் துரியோதனன் சினத்தைத் தணிக்கச் சொல்லுமாறு வேண்டுவது; யுதிஷ்டிரனுக்கும், அர்ஜுனனுக்கும் கூட போரில் விருப்பம் இல்லை என்றும் பீமன் கிருஷ்ணனிடம் சொல்வது…

பீமன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், “ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, குருக்களிடம் அமைதியை ஏற்படுத்தும் அழுத்தத்துடன் பேசுவாயாக. போரைக் காட்டி அவர்களை அச்சுறுத்த வேண்டாம். தனது சொந்த நன்மைக்கு எதிராகவும், திமிருடனும், கோபத்தால் தூண்டப்பட்டும் அனைத்திலும் கோபம் காட்டும் துரியோதனனிடம் கடுமையாகப் பேச வேண்டாம். அவனிடம் நீ மென்மையாக நடந்து கொள்வாயாக. செழுமையின் செருக்கால் போதையுண்டிருக்கும் துரியோதனன், ஒரு திருடனைப் போல, இயல்பிலேயே பாவம் நிறைந்த இதயம் படைத்தவனும், பாண்டவர்களிடம் பகை கொண்டிருப்பவனும் ஆவான். தொலைநோக்குப் பார்வையின்றி, கொடும்பேச்சும், எப்போதும் பிறரை நிந்திக்கும் மனநிலையும், தீய ஆற்றலும், எளிதில் தணிக்கமுடியாத கோபமும் கொண்டவனாக, எளிதில் கற்பிக்கப்பட இயலாதவனாக, தீய ஆன்மாவும், ஏமாற்றுகர நடத்தையும் கொண்டவனாவான். அவன் {துரியோதனன்}, தனது கருத்தைக் கைவிடவோ, உடைக்கவோ விடாமல், அதற்காகத் {பிடிவாதமாக} தனது உயிரையே விடக்கூடியவனாவான்.

ஓ! கிருஷ்ணா, அப்படிப்பட்ட ஒருவனிடம் சமாதானம் பேசுவது மிகக் கடினமானது என நான் கருதுகிறேன். அவனின் {துரியோதனனின்} நலன்விரும்பிகளின் வார்த்தைகளைக்கூட மதிக்காமல், அறமற்று, பொய்மையை விரும்பும் அவன் {துரியோதனன்}, தனது ஆலோசகர்களின் வார்த்தைகளுக்கு எதிராகவே எப்போதும் செயல்பட்டு, அவர்களது இதயங்களைக் காயப்படுத்தி வருகிறான். புற்களுக்குள் மறைந்திருக்கும் பாம்பைப் போல, தனது சொந்த மனநிலையை ஒட்டியும், கோபத்தின் உந்துவிசைக்குக் கீழ்ப்படிந்தும், இயல்பாகவே பாவம்நிறைந்த செயல்களையே அவன் {துரியோதனன்} செய்கிறான். துரியோதனன் என்ன படையைக் கொண்டிருக்கிறான்? அவனது நடத்தை என்ன? அவனது இயல்பு என்ன? அவனது வலிமை என்ன? அவனது ஆற்றல் என்ன? ஆகிய அனைத்தையும் நீ நன்கு அறிவாய்.

இதற்கு முன்பு, கௌரவர்கள் தங்கள் மகனுடன் தங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தினார்கள். நாங்களும், எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இந்திரனின் தம்பி {விஷ்ணு}, இந்திரனோடு மகிழ்ந்திருந்ததைப் போன்று இருந்தோம். ஐயோ, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பனிக்காலத்தின் இறுதியில் நெருப்பால் எரிக்கப்படும் காடு போல, துரியோதனனின் கோபத்தால், பாரதர்கள் அனைவரும் எரிக்கப்படுவார்களே. உறவினர்களையும், நண்பர்களையும், சொந்தங்களையும் அழித்த பதினெட்டு மன்னர்களும் நன்கு அறியப்பட்டவர்களே ஆவர்.

தர்மம் {அறம்} அரிதானபோது, செழுமையில் பிரகாசித்து, சக்தியில் சுடர்விட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் குலத்தில் கலி பிறந்ததைப் போலவே, ஹைஹயர்களில் உதாவர்தனும், நீபர்களில் ஜனமேஜயனும், தாலஜங்களர்களில் பஹூளனும், கிரிமிகளில் செருக்கு நிறைந்த வசுவும், சூவீரர்களில் அஜபிந்துவும், சூராஷ்டிரர்களில் ருஷர்ததிகனும், பலீஹர்களில் அர்க்கஜனும், சீனர்களில் தௌதமூலகனும், விதேகர்களில் ஹயக்ரீவனும், மஹௌஜஸாக்களில் வரயுவும், சுந்தரர்களில் பாஹுவும், தீப்தாக்ஷர்களில் புரூரவனும், சேதி மற்றும் மத்ஸ்யர்களில் ஸஹஜனும், பிரவீரர்களில் விருஷத்வஜனும், சந்திர-வத்ஸ்யர்களில் தாரணனும், முகுடர்களில் வீகாஹனனும், நந்திவேகர்களில் சமனும் பிறந்தார்கள்.

ஓ! கிருஷ்ணா, இந்தத் தீய நபர்கள் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் தங்களுக்குரிய குலங்களில், தங்கள் உறவினர்களின் அழிவுக்காகவே பிறக்கிறார்கள். அதே போலவே, பாவத்தின் உருவமும், தனது குலத்தின் அவமானமுமான துரியோதனன், யுகத்தின் முடிவில் குருக்களான எங்கள் மத்தியில் பிறந்திருக்கிறான்.

எனவே, ஓ! கடும் ஆற்றல் கொண்டவனே {கிருஷ்ணா}, நீ அவனிடம் மெதுவாகவும், மென்மையாகவும் பேசுவாயாக. அறமும் பொருளும் நிறைந்த கசப்பில்லாத இனிய வார்த்தைகளால், அவனது இதயத்தைக் கவரும் வகையில் பேசுவாயாக. ஓ! கிருஷ்ணா, அவமதிக்கப்பட்டவர்களாகி, பணிந்த நிலையில் நாங்கள் துரியோதனனைப் பின்பற்றியே கூட நடந்து கொள்கிறோம், ஆனால் பாரதர்கள் அழிக்கப்பட வேண்டாமே.

ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, நாங்கள் குருக்களுக்கு அந்நியர்களாகவே வாழ நேர்ந்தாலும் கூட, முழுக் குலத்தையும் அழித்த பாவம் அவர்களைத் {கௌரவர்களைத்} தொடாதிருக்கட்டும். ஓ! கிருஷ்ணா, சகோதரர்களுக்கிடையில் சகோதர உணர்வுகளைக் கொண்டு வரவும், திருதராஷ்டிரர் மகனைத் {துரியோதனனை} தணிக்கவும் முதியவரான பாட்டனும் {பீஷ்மரும்}, குருக்களின் {கௌரவர்களின்} பிற ஆலோசகர்களும் கேட்டுக்கொள்ளப்படட்டும். இதுவே நான் சொல்வதாகும். மன்னன் யுதிஷ்டிரரும் இதை அங்கீகரிக்கிறார், அர்ஜுனனுன் போருக்கு எதிராகவே இருக்கிறான். ஏனெனில் அவனிடம் பெரும் கருணை இருக்கிறது” என்றான் {பீமன்}.

“அச்சமா பீமரே?” என்றான் கிருஷ்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 75-பீமனின் மென்மையான பேச்சை எதிர்பாராத கிருஷ்ணன், பீமனை ஏளனம் செய்வது; முன்பெல்லாம் போரை விரும்பிய பீமன் இப்போது ஏன் அமைதியை விரும்புகிறான் எனக் கேட்டது; இதயத்தை அச்சம் பீடிக்கிறதா எனக் கேட்டது; முன்பு கோபத்தில் பீமன் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக இருந்து செய்த செயல்களையெல்லாம் கிருஷ்ணன் சுட்டிக் காட்டுவது; பீமனின் வீரத்தை நினைவூட்டியது; அப்படிப்பட்ட பீமன் இப்படிப் பேடியாக இருக்கலாமா என்று கேட்டது; பீமனுக்கு உற்சாகம் தரும் வார்த்தைகளைக் கிருஷ்ணன் பேசுவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மலைகள் தங்கள் எடையை இழந்தது போலவும், நெருப்புக் குளுமையானதாக ஆனது போலவும் எதிர்பாராதவகையில் இத்தகு மென்மை நிறைந்த பீமனின் வார்த்தைகளைக் கேட்டவனும், சாரங்கம் எனும் வில்லைத் தாங்குபவனும், வலிய கரங்களைக் கொண்டவனும், ராமனின் {பலராமனின்} தம்பியுமான சூர குலத்துக் கேசவன் {கிருஷ்ணன்}, நெருப்பைத் தூண்டும் காற்று போலப் பீமனைத் தனது வார்த்தைகளால் தூண்டும்படி உரக்கச் சிரித்து, கருணையின் உந்துவிசையில் மூழ்கியிருந்த அவனிடம் {பீமனிடம்}, “ஓ! பீமசேனரே, மற்ற பிற நேரங்களில், பிறரை அழித்து மகிழ்ந்து, திருதராஷ்டிரரின் தீய மகன்களை நசுக்க விரும்பிய நீர் போரை மட்டுமே மெச்சினீர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, முகம் கீழ்நோக்கி அமர்ந்தபடி, {அப்போதெல்லாம்} முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தீரே. உமது இதயத்துக்குள் வீசும் புயலைக் குறிக்கும் வகையில் பயங்கரக் கோபத்தை அடிக்கடி வெளிக்காட்டினீரே.

ஓ! பீமரே, உமது கோபமெனும் நெருப்பால் தூண்டப்பட்டு, பெருமூச்சு விட்டபடியும் அமைதியற்ற இதயத்துடனும், புகையோடு கலந்த நெருப்புச் சுடராய் இருந்தீரே. பெரும் சுமையால் அழுத்தப்பட்ட பலவீனமான மனிதன் ஒருவன் போல, கூட்டத்தில் இருந்து விலகி, கீழே படுத்தபடி சூடான பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தீரே. இதற்கான காரணத்தை அறியாதோர், உம்மைப் பைத்தியம் என்றே கருதினர் {தெரியுமா?}. வேரோடு பிடுங்கப்பட்டுத் தரையில் கிடக்கும் மரங்களைத் தூள் தூளாக நொறுக்கி, காலில் போட்டு அவற்றை மிதித்துக் கொண்டு, ஆத்திரத்தில் உறுமும் யானையைப் போல, ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடி, உமது பாதச்சுவடுகளால் உலகத்தைக் குலுக்கியபடி நீர் ஓடிக் கொண்டிருந்தீரே.

இங்கே இந்தப் பகுதியில் கூடக் கூட்டத்துடன் இருப்பதில் மகிழாமல், உமது நேரத்தைத் தனிமையிலேயே கழிக்கிறீர். இரவோ, பகலோ, தனிமையைத் தவிர வேறு எதுவும் உமக்கு மகிழ்ச்சியூட்டுவதில்லை. தனியாக அமர்ந்திருக்கும் நீர், திடீரென உரக்கச் சிரிப்பீர். சில வேளைகளில், உமது கால் முட்டிகள் இரண்டுக்குமிடையில் தலையை வைத்துக் கொண்டு, கண்கள் மூடிக் கொண்டு, அதே நிலையிலேயே தொடர்ந்து நீண்ட நேரம் இருப்பீர்.

இன்னும் சில நேரங்களில், ஓ! பீமரே, அடிக்கடி உமது புருவங்களைச் சுருக்கி, உதடுகளைக் கடித்தபடி, கடுமையாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பீர். இவை யாவும் கோபத்தின் குறியீடுகளே. ஒரு சமயத்தில், உமது சகோதரர்களுக்கு மத்தியில் கதாயுதத்தைப் பற்றிக் கொண்டு, இந்த உறுதிமொழியை உரைத்தீர், “தனது காந்தியை வெளிப்படுத்திக் கொண்டு சூரியன் கிழக்கில் உதித்து, மேருவைச் சுற்றிப் பயணித்து மேற்கில் மறைவதைப் பார்ப்பது போல {சூரியன் உதித்து மறைவது எப்படி உறுதியானதோ அதைப் போல}, ஆணவமிக்கத் துரியோதனனை, எனது இந்தக் கதாயுதம் கொண்டு கொல்வேன் என்று உறுதி ஏற்கிறேன். இந்த உறுதிமொழி பொய்க்காது” என்றீர்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, அதே இதயத்தைக் கொண்டிருக்கும் நீர், இப்போது சமாதானத்துக்கான ஆலோசனைகளை எப்படிப் பின்பற்றுவீர்? ஐயோ, உண்மையில் போர் உடனடியாக வரும் எனும்போது, இதயத்தில் அச்சம் நுழைந்துவிட்டால், ஓ! பீமரே, {முன்பு} போரை விரும்பியவர்கள் இதயமெல்லாம் வருத்தமடையும்.

ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமரே}, உறங்கும்போதோ, விழித்திருக்கும்போதோ, மங்கலமற்ற சகுனங்களையே நீர் காண்கிறீர். உண்மையில், அதன் காரணமாகவே நீர் சமாதானத்தை விரும்புகிறீர். ஐயோ, அலியைப் போல ஆண்மைக்குரிய எந்த அறிகுறிகளையும் நீர் வெளிக்காட்டவில்லையே. பயத்தால் நீர் பீடிக்கப்பட்டிருக்கிறீர். அதன் காரணமாகவே உமது இதயம் வருத்தமடைகிறது. இதயம் நடுங்குகிறது, உமது மனமோ துயரத்தில் மூழ்கி இருக்கிறது. உமது தொடைகள் நடுங்குகின்றன. அதற்காகவே நீர் சமாதானத்தை விரும்புகிறீர்.

ஓ! பார்த்தரே {பீமரே}, காற்றின் விசைக்கு வெளிப்பட்டு நிற்கும் இலவங்காய் விதையின் நெற்றுகள் {காய்ந்த பருப்புகள்} [Pods of Salmali seed} போல, மனிதர்களின் இதயங்கள் நிலையற்றவை என்பது நிச்சயம். உமது இந்த மனநிலை, அறிவூட்டப்பட்ட பசுக்களின் பேச்சு போல விசித்திரமாக இருக்கிறது. தங்களைக் காக்க ஒரு படகின்றிக் கடலில் நீந்துபவர்களைப் போல, உண்மையில், உமது சகோதரர்களின் இதயங்கள் அனைத்தும் துன்பக் கடலில் மூழ்கப் போகின்றன.

ஓ! பீமசேனரே, நீர் இத்தகு எதிர்பாராத வார்த்தைகளைப் பேசுவது, மலையே நகர்ந்து விட்டது போன்று விசித்திரமாக இருக்கிறது. ஓ! பாரதரே {பீமரே}, உமது சாதனைகளையும், நீர் பிறந்திருக்கும் குலத்தையும் நினைத்துப் பார்த்து எழுந்திரும். ஓ! வீரரே {பீமரே}, துன்பத்துக்கு உம்மைக் கொடுக்காமல் உறுதியாக இருப்பீராக. ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {பீமரே}, இத்தகு தளர்வு உமக்குத் தகுந்ததல்ல. ஏனெனில், தனது வீரத்தால் அடையப்படாத எதிலும் ஒரு க்ஷத்திரியன் மகிழ மாட்டான்” என்றான் {கிருஷ்ணன்}.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! – உத்யோக பர்வம் பகுதி 76-கிருஷ்ணனின் அவமதிப்புகளைத் தாங்கிக் கொள்ள இயலாத பீமன், தனது ஆற்றல் குறித்தும், தன்னிடம் சிக்கியவர்கள் தப்ப முடியாது என்றும், தான் சொல்லிக் கொண்டதைவிடத் தனது ஆற்றல் பெரிது என்றும், இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை என்றும் பீமன் கிருஷ்ணனிடம் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “எப்போதும் கோபம் நிறைந்த பீமன், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அவமானங்களைத் தாங்கிக் கொள்ள இயலாமல், உயர்ந்த பொருளாலான குதிரையைப் [1] போல உடனே விழித்தெழுந்து, ஒரு நொடியும் தாமதிக்காமல், “ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, குறிப்பிட்ட ஒரு வழியில் நான் செயல்பட விரும்புகிறேன்; எனினும், நீ என்னை வேறு வெளிச்சத்தில் காண்கிறாய். நான் போரில் பெரும் மகிழ்வடைகிறேன் என்றும், எனது ஆற்றல் கலங்கடிக்கப்பட இயலாதது என்றும், ஓ! கிருஷ்ணா, எங்களோடு வெகு காலம் சேர்ந்து வாழ்ந்திருப்பதால் நீ நன்கு அறிந்திருப்பாய். அல்லது தடாகத்தின் ஆழம் தெரியாமல் அதில் நீந்திக் கொண்டிருப்பவனைப் போல, நீ என்னை அறியாதிருந்திருக்கலாம்.

இதன்காரணமாகவே, நீ தகாத வார்த்தைகளால் என்னைக் கடிந்து கொள்கிறாய். ஓ! மாதவா? நான் பீமசேனன் என்று அறிந்தும் இத்தகு தகாத வார்த்தைகளை என்னிடம் யாரால் பேச முடியும்? எனவே {கேட்டது நீ என்பதால்}, ஓ! விருஷ்ணிகளுக்கு மகிழ்ச்சியூட்டுபவனே {கிருஷ்ணா}, எனது ஆற்றல் மற்றும் ஒப்பற்ற வலிமை குறித்து நான் உனக்குச் சொல்கிறேன். ஒருவன், தனது சொந்த ஆற்றல் குறித்துப் பேசுவது எப்போதும் இழிவான செயலே என்றாலும், அன்பற்ற உனது கண்டனங்களால் துளைக்கப்பட்டிருக்கும் நான் எனது சொந்த வலிமையைக் குறித்துப் பேசுகிறேன்.

ஓ! கிருஷ்ணா, அசைக்க இயலாதவையும், மகத்தானவையும், எல்லையற்றவையும், பிறப்பெடுத்த எண்ணற்ற உயிரினங்களுக்கு அடைக்கலமாக இருப்பவையுமான வானத்தையும், பூமியையும் பார். கோபத்தால் இவை இரு மலைகளைப் போல ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக் கொண்டால், அவற்றில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றோடு கூடிய அவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க எனது கரங்களால் முடியும் [2]. கரங்களைப் போல இருக்கும் எனது கதாயுதத்தின் இணைப்புகளைப் பார். அவற்றின் பிடியில் ஒருமுறை சிக்கி, தப்பிக்க இயன்றவனை நான் காணவில்லை.

இமயம், பெருங்கடல், வலனைக் கொன்றவனான வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} ஆகிய மூவராலும் கூட, என்னால் தாக்கப்பட்டவனைத் தங்கள் பலத்தால் தப்புவிக்க முடியாது. போர்க்களத்தில் பாண்டவர்களுக்கு எதிராக வரக்கூடிய க்ஷத்திரியர்கள் அனைவரையும் நான் எனது பாதத்தைக் கொண்டு எளிதாகத் தரையில் நசுக்கிவிடுவேன்.

ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, என்ன ஆற்றலுடன் நான் பூமியில் உள்ள மன்னர்களை வீழ்த்தி அடக்கினேன் என்பது நீ அறியாததல்ல. உண்மையில், கடும் சக்தியுடன் இருக்கும் மதிய வேளை சூரியனைப் போன்ற எனது ஆற்றலை நீ அறியவல்லையெனில், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் நடக்கும் கடும் கைக்கலப்பில் அதை அறிந்து கொள்வாய். நாற்றமிகுந்த கட்டியை உடைத்தால் ஏற்படும் வலியைப் போன்ற வலியைக் கொடுக்கும் வகையில் உனது கொடுஞ்சொற்களால் நீ என்னைக் காயப்படுத்துகிறாய்.

ஆனால், நான் சுயமாக என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டதைவிட வலியவனாக என்னை அறிவாயாக. அழிவையும், சீர்குலைவையும் தரும் உக்கிரமான போர் தொடங்கும் போது, நான், யானைகளையும், தேர்வீரர்களையும், குதிரைகளில் இருந்து போரிடுவோரையும், யானைகளில் இருப்போரையும் வீழ்த்தி, க்ஷத்திரிய வீரர்களில் முதன்மையானவர்களைக் கொல்வதையும் நீ காண்பாய்.

இவை யாவையும், போராளிகளில் முதன்மையானவர்களை நான் கலங்கடித்து வீழ்த்துவதையும் நீயும் பிறரும் காண்பீர்கள். எனது எலும்புகளின் மச்சை இன்னும் அழியவில்லை, எனது இதயமும் நடுங்கவில்லை. இவ்வுலகமே என்னை நோக்கிக் கோபத்துடன் விரைந்து வந்தாலும், நான் அச்சத்தை உணர மாட்டேன் [2]. ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, கருணையின் காரணமாகவே, நான் எதிரியிடம் நல்லெண்ணத்ததை வெளிப்படுத்துகிறேன். பாரதக் குலம் அழிவடையாதிருக்கவே, நான் காயங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன்.

போரின் சுமை உமதே பீமரே! – உத்யோக பர்வம் பகுதி 77-பீமனின் மனதை அறியவே தான் அப்படிக் கடுமையாகப் பேசியதாகக் கிருஷ்ணன் சொன்னது; செயல்களில் மனித சக்திக்கு உட்பட்ட செயல்கள் மற்றும் தெய்வாதீனமான செயல்கள் குறித்துச் சொன்னது; ஒருவனுடைய காரியம்,  விதி மற்றும் முயற்சி ஆகியவற்றின் கலவையால் ஏற்படும் என்றும்; அதை அறிந்த மனிதன் வெற்றி தோல்வி குறித்துக் கவலைப்பட மாட்டான் என்றும் சொன்னது; போர் நடந்தால், அதன் பாரம் முழுவதையும் தங்கள் தரப்பில் இருந்து பீமனும், அர்ஜுனனும் மட்டுமே தாங்க வேண்டியிருக்கும் என்றும் பீமனிடம் கிருஷ்ணன் சொன்னது…

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் பீமனிடம்} சொன்னான், “கல்வியின் செருக்காலோ, கோபத்தாலோ, ஓர் உரை நிகழ்த்தும் விருப்பத்தாலோ, உம்மை நிந்திக்கும் விருப்பத்தாலோ இல்லாமல், உமது மனதை அறிய விரும்பி ஒரு பற்றின் காரணமாகவே நான் இவை யாவையும் சொன்னேன். உமது ஆன்மாவின் பெருந்தன்மையையும், உமது பலத்தையும், உமது செய்கைகளையும் நான் அறிவேன். அந்தக் காரணத்திற்காக நான் உம்மை நிந்திக்கவில்லை.

ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, நீர் எவ்வளவு செய்ய முடியும் என்று எண்ணியிருக்கிறீரோ, அதைவிட ஆயிரம் மடங்கு பெரிதான செயல்களை உம்மால் பாண்டவக் காரணத்திற்காகச் செய்ய முடியும். ஓ! பீமரே, நீரும், உமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகிய ஒவ்வொருவரும், உலகத்தின் மன்னர்கள் அனைவராலும் மதிக்கப்படும் உமது குடும்பத்தைப் போன்ற குடும்பங்களில் சரியாகவே பிறப்பை எடுத்திருக்கிறீர்கள். எனினும், அறம், மறம், மற்றும் மனிதர்களின் பலம் மற்றும் பலவீனங்களின் விளைவுகளைச் {இது தெய்வாதீனமா, மனித செயலா என்ற} சந்தேகத்ததின் காரணமாக விசாரிப்பவர்களால் உண்மையை அடைய முடிவதில்லை. ஏனெனில், ஒரு மனிதனின் வெற்றிக்கு எது {எந்த அறம்} காரணமாக இருக்கிறதோ, அதுவே அவனது நிர்மூலத்திற்கும் காரணமாக அமைவதை நாம் காண்கிறோம்.

எனவே, மனித செயல்களின் விளைவுகள் சந்தேகத்திற்குரியவையே. தீய செயல்களைத் தீர்மானிக்க இயன்ற கற்றோர், ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்றத் தகுந்தது எனச் சொல்கின்றனர். எனினும், அந்த விளைவுகள், தொலைநோக்குடன் காணப்பட்டதற்கு நேர் எதிராகக் காற்றின் வழியைப் போலவே {வேறு விதமாக அல்லது தெய்வாதீனமாக} அமைகிறது. உண்மையில், ஆழ்ந்த சிந்தனை மற்றும் நன்கு வழிநடத்தப்பட்ட கொள்கை {நியாயத்தின் உதவி} ஆகியவற்றின் விளைவுகளால் ஏற்படும் மனிதர்களின் செயல்களும், பொருத்தமுடைமைகளின் கருத்துகளுக்கு இசைவான செயல்களும் கூடத் தெய்வாதீனமானவற்றை வகுக்கையில் குழம்பிப் போகின்றன.

பிறகு, மேலும், மனித செயல்களின் விளைவுகளால் உண்டாகாமல், தெய்வாதீனமாக வகுக்கப்படும், வெப்பம், குளுமை, மழை, பசி, தாகம் ஆகியவை மனித முயற்சியால் கலங்கடிக்கப்படும். பிறகு, மேலும், ஒரு மனிதன் செய்வதற்கு (கடந்த பிறவிகளின் செய்த செயல்களின் விளைவுகளால்} முன்பே விதிக்கப்பட்ட செயல்களைத் தவிர, {மனிதன் தானே செய்த} மற்ற செயல்கள் அனைத்தையும், ஸ்ம்ருதிகள் மற்றும் சுருதிகள் ஆகிய இரண்டின் சான்றுகளின் படி, ஒருவன் தன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் எப்போதும் கைவிடலாம்.

எனவே, ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, இவ்வுலகில் ஒரு மனிதன் செயல்படாமல் இருக்க முடியாது. ஆகவே, ஒருவனுடைய காரியம் விதி மற்றும் முயற்சி ஆகிய இரண்டின் கலவையால் சாதிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து வேலையில் ஈடுபட வேண்டும். இந்த நம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபடும் ஒருவன் தோல்வியுறும்போது துன்புறவோ, வெற்றியடையும்போது மகிழவோ மாட்டான். ஓ! பீமசேனரே, இதுவே எனது பேச்சின் நோக்கமாகும். எதிரியுடன் ஏற்படும் மோதலில் வெற்றி உறுதி என்பதை நான் நோக்கமாகக் கொள்ளவில்லை.

ஒருவன், மனவருத்தத்தில் இருக்கும்போது உற்சாகத்தை இழக்கக்கூடாது. எந்தத் தளர்வுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகக் கூடாது. இதற்காகவே நான் இப்படிப் பேசினேன். ஓ! பாண்டவரே {பீமரே}, நாளை விடிந்ததும், நான் திருதராஷ்டிரரின் முன்னிலைக்குச் செல்வேன். உங்களது விருப்பங்களைத் {பயன்களைத்} தியாகம் செய்யாமல் அமைதியை ஏற்படுத்த முயல்வேன். கௌரவர்கள் சமாதானத்துக்கு உடன்பட்டால், எல்லையில்லா புகழ் எனதாகும். உங்கள் {பாண்டவர்களின்} நோக்கங்களும் அடையப்படும், அவர்களும் {கௌரவர்கும்} பெரும் நன்மையை அறுவடைசெய்வார்கள்.

இருப்பினும், எனது வார்த்தைகளைக் கேளாமால், அவர்களது கருத்தையே தக்க வைத்துக் கொள்ளக் கௌரவர்கள் தீர்மானித்தால், பிறகு, போர் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தவிர்க்க முடியாததாகும். ஓ! பீமசேனரே, இந்தப் போரில் சுமைகள் உம்மீதே குடிகொள்ளும். அந்தச் சுமையை அர்ஜுனனும் தாங்குவான், அதே வேளையில், மற்ற வீரர்கள் அனைவரையும், நீங்கள் இருவரே வழிநடத்த வேண்டும்.

போர் நிகழ்ந்தால், நான் நிச்சயம் பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரோட்டியாக இருப்பேன். ஏனெனில், உண்மையில், அது தனஞ்சயனின் {அர்ஜுனனின்} விருப்பமேயன்றி, நான் போரிட விரும்பவில்லை என்பதில்லை. ஓ! விருகோதரரே {பீமரே}, உமது நோக்கத்தை நீர் சொன்னதைக் கேட்டதாலேயே, {சந்தேகத்தின் அடிப்படையிலேயே} நான் உமது சக்தியை மீண்டும் தூண்டிவிட்டேன்” என்றான் {கிருஷ்ணன்}.

“கிருஷ்ணா, முடிவு உனதே!” என்ற அர்ஜுனன்! – உத்யோக பர்வம் பகுதி 78-துரியோதனன் கொல்லத்தக்கவனே என்றும், திரௌபதிக்கு அவன் இழைத்த அவமானத்தையும் கிருஷ்ணனிடம் சுட்டிக் காட்டிய அர்ஜுனன், கிருஷ்ணன் தேர்ந்தெடுப்பது போராக இருந்தாலும் சரி, சமாதானமாக இருந்தாலும் சரி, அதை விரைந்து செய்யுமாறும், அதை முழு மனதுடன் பாண்டவர்கள் எற்பார்கள் என்றும் சொன்னது…

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், “ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, என்ன சொல்லப்பட வேண்டும் என்பதை யுதிஷ்டிரர் ஏற்கனவே சொல்லிவிட்டார். ஆனாலும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, நீ சொன்னதைக் கேட்டதால், ஓ! தலைவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரரின் பேராசை அல்லது எங்களின் தற்போதைய பலவீனம் ஆகியவற்றின் விளைவாகச் சமாதானத்தை அடைவது எளிதல்ல என்று நீ நினைப்பதாகத் தெரிகிறது. மனித முயற்சி மட்டுமே பலனளிக்காது என்றும், ஒருவனது ஆற்றலை வெளிக்காட்டாமல் ஒருவனது காரியங்கள் அடையப்பட மாட்டாது என்றும் நீ நினைக்கிறாய். நீ சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில், அஃது எப்போதும் உண்மையாகவே இருக்காது. எனினும், செய்யக்கூடாதது என்று எதுவும் கருதப்படக்கூடாது.

எங்களது துயர்நிறைந்த நிலையின் விளைவால் சமாதானத்தை எட்ட முடியாது என்று உனக்குத் தோன்றுவது உண்மையே. இருப்பினும், அவர்கள் தங்கள் செயல்களுக்கான கனிகளை {பலனை / தண்டனையை} அறுவடை செய்யாமலே இன்னும் நமக்கெதிராகச் செயல்படுகிறார்கள். ஓ! தலைவா {கிருஷ்ணா}, எனவே, முறையாக முன்மொழிப்படும்போது சமாதானம் அடையப்படக்கூடியதே. எனவே, ஓ! கிருஷ்ணா, எதிரியிடம் சமாதானத்தைக் கொண்டு வர முயல்வாயாக. ஓ! வீரா {கிருஷ்ணா}, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பிரஜாபதி எப்படியோ, அப்படியே பாண்டவர்கள், குருக்கள் ஆகிய இரு தரப்புக்கும் நண்பர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக நீ இருக்கிறாய். எனவே, குருக்கள், பாண்டவர்கள் ஆகிய இரு தரப்புக்கும் நன்மை எதுவோ, அதைச் சாதிப்பாயாக.

எங்களுக்கான நன்மையைச் சாதிப்பது உனக்குக் கடினமானது அல்ல என்றே நான் நம்புகிறேன். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நீ முயன்றால் இக்காரியம் உடனே நடந்துவிடும். நீ அங்கே சென்றதுமே, அது சாதிக்கப்பட்டு விடும். ஓ! வீரா, தீய மனம் கொண்ட துரியோதனனை வேறு வழியில் நடத்த நீ கருதினாயென்றால், அந்த உனது நோக்கம், நீ விரும்பியபடியே நடக்கும். நீ விரும்புவது எதிரியுடனான சமாதானமாகவோ, போராகவோ இருந்தாலும், அவற்றில் நீ ஊக்கப்படுத்தும் எந்த விருப்பமாக இருந்தாலும், ஓ! கிருஷ்ணா, அஃது எங்களால் நிச்சயமாக மதிக்கப்படும்.

யுதிஷ்டிரரின் செழிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல், குற்றமற்ற எந்த வழிகளையும் காணாமல், பாவம் நிறைந்த வழியான ஏமாற்றுகரமான பகடையால் நாட்டை எங்களிடம் இருந்து கவர்ந்தவனும், இழிந்தவனுமான அந்தத் தீய மனம் கொண்ட துரியோதனன், தனது மகன்களோடும் உறவினர்களோடும் சேர்த்துக் கொல்லப்படத்தகுந்தவன் இல்லையா? போருக்கு அழைக்கப்பட்ட க்ஷத்திரிய வகையைச் சேர்ந்த எந்த வில்லாளி, தான் சாகவே போகிறோம் என்றாலும் புறமுதுகிடுவான்?

பாவகர வழிகளினால் வீழ்த்தப்பட்டு, காட்டுக்கு விரட்டப்பட்ட எங்களைக் {எங்கள் நிலையைக்} கண்ட போதே, ஓ! விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, என் கைகளால் இறக்கத் தகுந்தவனே சுயோதனன் {துரியோதனன்} என்று நான் நினைத்தேன். எனினும், ஓ! கிருஷ்ணா, மென்மை அல்லது கடுமை மூலம் நடைமுறையாக்கப்படும் பொருளின் நோக்கம் விவரிக்க முடியாததாகத் தெரிந்தாலும், நீ உனது நண்பர்களுக்குச் செய்ய விரும்புவது அரிதானதாகவும் விநோதமானதாகவும் இருக்கிறது. அல்லது, நீ அவர்களது உடனடி அழிவைத் தேர்ந்தெடுக்கிறாய் என்றால், அஃது அப்படியே ஆகட்டும். மேலும் அது குறித்தே சிந்தித்துக் கொண்டிராமல் செயலில் இறங்குவோமாக.

பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட துரியோதனனால், சபைக்கு மத்தியில் திரௌபதி எப்படி அவமதிக்கப்பட்டாள் என்பதையும், நாங்கள் அதை எப்படிப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டோம் என்பதையும் நீ அறிவாய். ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்தத் துரியோதனன், பாண்டவர்களிடம் நீதியுடன் நடந்து கொள்வான் என்பது என்னால் நம்ப முடியாததாகும். தரிசு நிலத்தில் தூவப்படும் விதைப் போல அறிவுநிறைந்த ஆலோசனைகள் அனைத்தும் அவனிடம் {துரியோதனனிடம்} தொலைந்து போகும். எனவே, ஓ! விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, எது சரி என்றும் பாண்டவர்களுக்கு எது நன்மை என்றும் அல்லது அடுத்ததாகச் செய்யப்பட வேண்டியது எது என்றும் நீ நினைக்கிறாயோ, அதை விரைந்து செய்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.

“என்னை அஞ்சாதே, நம்பு!” என்ற கிருஷ்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 79-பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகிய இரு தரப்பின் நன்மையையும் தான் விரும்புவதாக அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொன்னது; மனிதர்கள் என்னதான் முயற்சி செய்தாலும், தெய்வச்செயலும் அவசியம் என்று சொன்னது; ஏற்கனவே தீயவனான துரியோதனன், சகுனி, கர்ணன் மற்றும் துச்சாசனனின் ஆலோசனைகளைக் கேட்டு மேலும் பாவச் செயல்களைச் செய்வதாகச் சொன்னது; துரியோதனன் சிறு இடத்தையும் கொடுக்கமாட்டான், அதனால் சமாதானத்தை எட்டுவது மிகவும் கடினம் என்று சொன்னது; தூது செல்லும் முன் துரியோதனன் குறித்துத் தான் சிறிது சிந்திக்க வேண்டும் என்று அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொன்னது…

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {அர்ஜுனா}, ஓ!பாண்டவர்களே, நீங்கள் சொல்வது போலவே ஆகும். நான் பாண்டவர்கள் மற்றும் குருக்கள் {கௌரவர்கள்} ஆகிய இருவருக்குமான நன்மையை அடையவே முயல்வேன். போர் மற்றும் அமைதி ஆகிய இருவித செயல்களில், ஓ! பீபத்சு {அர்ஜுனா}, பின்னது {அமைதி} ஒருவேளை எனது சக்திக்குட்பட்டதாக இருக்கலாம்.

மனித உழைப்பால் களைகள் அகற்றப்பட்டு நீர் தெளித்து ஈரப்படுத்தப்பட்டிருக்கும் மண்ணைப் பார். எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மழையற்றுப் போனால் பயிர் விளையாது. உண்மையில், மழையில்லாமல் போனால், செயற்கை பாசனத்தை வெற்றியடையும் ஒரு வழிமுறையாகக் கொள்வது குறித்துச் சிலர் பேசுகிறார்கள். ஆனால், அப்படிச் செய்யினும், தெய்வாதீனமாக ஏற்படும் வறட்சியின் விளைவால் செயற்கையாகப் பாய்ச்சப்படும் நீர் காய்ந்து போவதையும் நாம் பார்க்கிறோம்.

இவற்றையெல்லாம் கண்ட பழங்கால ஞானிகள், தெய்வாதீன மற்றும் மனித தகுமுறைகள் இரண்டின் ஒத்துழைப்பினாலேயே மனித விவகாரங்கள் நடக்கும் என்று சொல்லியிருக்கின்றனர். மனித முயற்சியால் செய்யக்கூடிய அனைத்தையும் நான் சிறப்பாகச் செய்வேன். ஆனால், தெய்வாதீனமான எதையும் என்னால் எந்த வழிகளிலும் கட்டுப்படுத்த இயலாது.

தீய ஆன்மா கொண்ட துரியோதனன் அறம் மற்றும் உலகம் ஆகிய இரண்டையும் புறக்கணிக்கும் வகையிலேயே செயல்படுகிறான். இவ்வழியில் செயல்படுவதன் விளைவாக அவன் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. மேலும், சகுனி, கர்ணன் மற்றும் அவனது தம்பி துச்சாசனன் ஆகிய அவனது ஆலோசகர்களும் அவனது பாவ புத்தியையே வளர்க்கின்றனர். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தனது உறவினர்களோடு சேர்த்து நமது கைகளால் மொத்தமாக அழிவடையாமல், சுயோதனன் {துரியோதனன்} நாட்டைக் கொடுத்துச் சமாதானம் பெறவே மாட்டான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரும் {துரியோதனனுக்குப்} பணிந்து நாட்டை விட்டுவிட விரும்பவில்லை.

தீய மனம் கொண்ட துரியோதனன், நமது கோரிக்கையால் நாட்டைக் கொடுக்கமாட்டான். எனவே, யுதிஷ்டிரரின் செய்தியை அவனுக்குச் சொல்வது முறையல்ல என்றே நான் நினைக்கிறேன். குருகுலத்தின் பாவம் நிறைந்த துரியோதனன், ஓ! பாரதா {அர்ஜுனா}, யுதிஷ்டிரர் பேசும் பொருள்களைச் {தனக்கு வேண்டும் என்று கேட்டவற்றைச்} செய்ய மாட்டான். இணங்க மறுத்தாலோ, அவன் {துரியோதனன்} அனைவரின் கைகளாலும் மரணம் அடையத் தகுந்தவனாவான். ஓ! பாரதா {அர்ஜுனா}, குழந்தை பருவத்தில் இருந்தே உங்கள் அனைவரையும் அவன் {துரியோதனன்} துன்புறுத்தியிருக்கிறான் என்பதாலும், யுதிஷ்டிரரின் செழிப்பைக் கண்டு பொறாத தீயவனான அந்தப் பாவம் நிறைந்த இழிந்தவன் {துரியோதனன்}, உங்கள் நாட்டைத் திருடிக் கொண்டதாலும், அனைவரையும் போலவே அவன் {துரியோதனன்} என் கையாலும் கொல்லப்படத்தக்கவனே.

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பல நேரங்களில் அவன் {துரியோதனன்} உன்னை என்னிடம் இருந்து பிரிக்க முயன்றிருக்கிறான். ஆனால் அவனது அந்தத் தீய முயற்சிகளை நான் எண்ணிப்பார்த்ததில்லை {கண்டுகொண்டதில்லை}. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, துரியோதனனின் நோக்கங்கள் என்ன என்பதை நீ அறிவாய். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் நலத்தை நான் விரும்புகிறேன் என்பதையும் நீ அறிவாய். துரியோதனனின் இதயத்தையும், எனது விருப்பங்களையும் அறிந்திருந்தும், ஓ! அர்ஜுனா, எதையும் அறியாதவனைப் போல, என்னைக் குறித்த இத்தகு அச்ச உணர்வுகளை நீ ஏன் ஊக்கப்படுத்துகிறாய்?

சொர்க்கத்தில் விதிக்கப்பட்ட அந்தப் பயங்கரச் செயலை நீ அறிவாய். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பிறகு எப்படி எதிரியுடன் சமாதானம் ஏற்படும்? எனினும், ஓ! பாண்டவர்களே, பேச்சு, செயல் ஆகிய இரண்டினால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அத்தனையும் என்னால் செய்யப்படும். எனினும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, எதிரியுடன் சமாதானம் சாத்தியம் என்று எதிர்பாராதே. ஒரு வருடத்திற்கு முன்னால், விராடனின் பசுக்களைத் தாக்கிய சந்தர்ப்பத்தில், {தோல்வியுற்று} அவர்கள் {கௌரவர்கள்} திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த அமைதியே அனைவருக்கும் நன்மையைத் தரும் என்று துரியோதனனிடம், பீஷ்மர் சொல்லவில்லையா?

அவர்கள் தோற்பார்கள் என்று நீ தீர்மானித்தபோதே அவர்கள் தோற்றுவிட்டார்கள். என்னை நம்பு. உண்மையில், நாட்டில் உள்ளதிலேயே சிறுபகுதியையேனும் மிகக் குறுகிய காலத்திற்குக் கூடப் பிரிய சுயோதனன் {துரியோதனன்} சம்மதிக்கமாட்டான். என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரரின் கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனே. எனவே, அந்தத் தீய இழிந்தவனின் {பொல்லாத பாதகனான துரியோதனனின்} பாவச் செயல்களை, மீண்டும் என் மனதில் சுழலச்செய்யவேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}.

“உம்மால் முடியும்!” என்ற நகுலன்! – உத்யோக பர்வம் பகுதி 80-காலத்திற்கு ஏற்ப கருத்துகள் மாறுகின்றன எனவும்; சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி செயல்படும்போதே வெற்றி கிடைக்கிறது எனவும்; முதலில் துரியோதனனிடம் மென்மையாகவும், பின்பு வன்மையாகவும் பேச வேண்டும் எனவும்; பாண்டவர்களோடு நிற்கும் தலைவர்களிடம் எந்த மனிதனால் மோத முடியும் எனவும்; கிருஷ்ணன் சொல்லும் ஞானமொழிகளைக் கேட்டு கௌரவ அவையின் முதிர்ந்தவர்களும் மதிப்புமிக்கவர்களும் திருதராஷ்டிரருக்கு அறிவுரை கூறுவார்கள் எனவும் கிருஷ்ணனிடம் நகுலன் பேசியது…

நகுலன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், “ஓ! மாதவா {கிருஷ்ணரே}, அறநெறிகள் அறிந்தவரும், ஈகை குணம் கொண்டவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரரால் நிறையச் சொல்லப்பட்டது. பல்குனர் {அர்ஜுனர்} என்ன சொன்னார் என்பதை நீர் கேட்டீர். ஓ! வீரரே {கிருஷ்ணரே}, என் கருத்தை நீரே பலமுறை வெளிப்படுத்திவிட்டீர். இவை யாவற்றையும் அலட்சியம் செய்து, எதிரியின் விருப்பங்களை முதலில் கேட்டு, சந்தர்ப்பத்திற்கு எது தகுந்ததென நீர் கருதுகிறீரோ அதைச் செய்யும்.

ஓ! கேசவரே {கிருஷ்ணரே}, பல்வேறு விவகாரங்களுக்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் பல்வேறு வகையிலேயே இருக்கின்றன. எனினும், ஓ !எதிரிகளைத் தண்டிப்பவரே {கிருஷ்ணரே}, சந்தர்ப்பத்தை நோக்கில் கொண்டு ஒரு மனிதன் செயல்படும்போதே, வெற்றி வெல்லப்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பொருள் ஒரு வகையில் தீர்க்கப்பட்டால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அது தகாததாகி வேறுபடுகிறது.

எனவே, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, இவ்வுலகத்தின் மனிதர்கள் எவரும் ஒரே கருத்துடன் தொடர்ந்து இருக்க முடியாது. நாங்கள் காட்டில் வாழ்ந்த போது, எங்கள் இதயங்கள் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்ய விரும்பியது. நாங்கள் தலைமறைவாக இருந்த போதோ, அது {வேறு} ஒரு வகையில் இருந்தது. இப்போதோ, ஓ! கிருஷ்ணரே, இனியும் தலைமறைவு வாழ்வு தேவைப்படாதபோது, எங்கள் விருப்பங்கள் வேறுவிதமாக மாறியிருக்கின்றன.

ஓ! விருஷ்ணி குலத்தவரே {கிருஷ்ணரே}, நாங்கள் காட்டில் உலவி கொண்டிருந்த போது, நாட்டின் மீதான பற்று எங்களுக்கு இப்போதைய அளவுக்குப் பெரியதாக இல்லை. ஓ! வீரரே {கிருஷ்ணரே} எங்கள் வனவாச காலம் முடிந்து திரும்பிவிட்டோம் என்பதைக் கேட்டதும், ஓ! ஜனார்த்தரரே {கிருஷ்ணரே}, உமது அருளால் இங்கே ஏழு {7} அக்ஷொஹிணிகள் எண்ணிக்கையில் படை திரண்டுள்ளது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவு வலிமையும் ஆற்றலும் கொண்ட இந்த மனிதர்களில் புலிகள் ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக நிற்பதைக் காணும் எந்த மனிதன் தான் அச்சத்தால் பீடிக்கப்பட மாட்டான்? எனவே, குருக்கள் மத்தியில் சென்றதும், முதலில் மென்மை நிறைந்த வார்த்தைகளையும், பிறகு அச்சுறுத்துவனவற்றையும் பேசி அந்தத் தீய துரியோதனனை அச்சத்தால் நீர் பதைபதைக்க வைப்பீராக.

ஓ! கேசவரே {கிருஷ்ணரே}, யுதிஷ்டிரர், பீமசேனர், ஒப்பற்ற பீபத்சு, சகாதேவன், நான், நீர், ராமர் {பலராமர்}, பெரும் வலிமையும் சக்தியும் கொண்ட சாத்யகி, தனது மகன்களோடு கூடிய விராடர், தனது கூட்டாளிகள் மற்றும் திருஷ்டத்யும்னனோடு கூடிய துருபதர், பெரும் ஆற்றல்படைத்த காசியின் ஆட்சியாளர், சேதிகளின் தலைவனான திருஷ்டகேது ஆகியோரோடு சதையும், இரத்தமும் கொண்ட எந்த மனிதனால் போரில் மோத முடியும்?

ஓ! வலிய கரங்கள் கொண்டவரே {கிருஷ்ணரே}, நீர் அங்குச் சென்றதுமே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரர் விரும்பிய நோக்கத்தைச் சாதிப்பீர், என்பதில் ஐயமில்லை. ஓ! பாவமற்றவரே {கிருஷ்ணரே}, விதுரர், பீஷ்மர், துரோணர், பாஹ்லீகர் ஆகியோர் நீர் சொல்லும் ஞானமொழிகளைப் புரிந்து கொள்வர். அந்த அறிவுரைக்கேற்ப நடக்குமாறு மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரரையும், பாவம் நிறைந்த மனநிலை கொண்டவனான சுயோதனனையும் {துரியோதனனையும்} அவர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஓ! ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, நீர் பேச்சாளராகவும், விதுரர் கேட்பவராகவும் இருக்கும்போது, மென்மையாகவும், சாதாரணமாகவும் எந்தக் காரியத்தைத்தான் விளக்க முடியாது?” என்றான் {நகுலன்}.

“போரே விருப்பம்!” என்ற சகாதேவன்! – உத்யோக பர்வம் பகுதி 81-கௌரவர்களே பாண்டவர்களிடம் சமாதானம் கோரினால் அதற்கு உடன்படக்கூடது என்றும்; திரௌபதியை அவமதித்த துரியோதனன் நிச்சயம் கொல்லப்பட வேண்டும் என்றும் பாண்டவர்கள் அனைவரும் அறம் சார்ந்திருந்தாலும், இக்காரியத்திற்காக அந்த அறத்தைத் துறந்து தான் துரியோதனனுடன் போரிட விரும்புவதாகவும் கிருஷ்ணனிடம் சொல்வது; சாத்யகி சகாதேவன் சொன்னதை ஆமோதித்துக் கிருஷ்ணனிடம் பேசியது; இதைக் கேட்ட போர்வீரர்கள் அனைவரும் ஆர்ப்பரித்துப் போருக்கான தங்கள் ஆவலை வெளிப்படுத்தத் தொடங்கியது

சகாதேவன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், ” உண்மையில், மன்னன் {யுதிஷ்டிரர்} சொன்னது நிலைத்த அறமாகும். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {கிருஷ்ணரே}, போர் நிச்சயம் நடக்கும்வண்ணம் நீர் செயல்பட வேண்டும். கௌரவர்களே பாண்டவர்களிடம் சமாதானம் கொள்ள விரும்பினாலும், ஓ! தாசார்ஹ குலத்தவரே {கிருஷ்ணரே}, அவர்களுடன் போர் ஏற்படும்படி அவர்களைத் தூண்டுவீராக.

ஓ! கிருஷ்ணரே, சபைக்கு மத்தியில் பாஞ்சால இளவரசி {திரௌபதி} அந்த அவல நிலையில் கொண்டுவரப்பட்டதைக் கண்ட பிறகும், சுயோதனன் {துரியோதனன்} கொல்லப்பட்டாமல் எனது கோபம் எப்படித் தணியும்? ஒ கிருஷ்ணா, பீமர், அர்ஜுனர், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரர் ஆகியோர் அறம் சார்ந்த மன நிலையைக் கொள்வதாக இருந்தாலும், அறத்தைத் துறக்கும் நான், போர்க்களத்தில் துரியோதனனுடன் மோத விரும்புகிறேன்” என்றான் {சகாதேவன்}.

அப்போது சாத்யகி {கிருஷ்ணனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {கிருஷ்ணரே}, உயர் ஆன்மா கொண்ட சகாதேவர் உண்மையையே பேசியிருக்கிறார். நான் துரியோதனனிடம் கொண்டுள்ள கோபம், அவனது மரணத்தால் மட்டுமே தணியும். கந்தலுடையும், மான் தோலும் உடுத்தி, பாண்டவர்கள் துயர்நிறைந்த நிலையில் காட்டில் இருப்பதைக் கண்டபோது நீரும் சினம் கொண்டீர், என்பது உமக்கு நினைவில்லையா? எனவே, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, போரில் கடுமையானவரான மாத்ரியின் வீர மகன் {சகாதேவர்} சொன்னதே இங்குக் கூடியிருக்கும் வீரர்கள் அனைவரின் ஒருமனதான கொள்கையாக இருக்கிறது” என்றான் {சாத்யகி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம யுயுதனனின் {Yuyudhana} இவ்வார்த்தைகளால், அங்கே கூடியிருக்கும் வீரர்கள் அனைவரும் சிங்கம் போலக் கர்ஜித்தனர். மேலும் அந்த வீரர்கள் அனைவரும் சாத்யகியின் வார்த்தைகளை உயர்வாக மெச்சி, அவனை {சாத்யகியை} புகழ்ந்து “அருமை! அருமை!” என்றனர். போரிடும் ஆவலால் அவர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தொடங்கினர்.

“இந்தக் கூந்தலை நினைப்பாயாக!” என்ற திரௌபதி! – உத்யோக பர்வம் பகுதி 82-யுதிஷ்டிரனின் வார்த்தைகளைத் துரியோதனன் கேட்க மாட்டான் என்றும்; நாட்டைக் கொடுக்காத துரியோதனனிடம் சமாதானம் பேசுவது தகாது என்றும்; கொல்லத்தக்கவர்களைக் கொல்லாதிருப்பதும் பாவமே என்றும்; கிருஷ்ணனும் பாண்டவர்களும் உயிரோடு இருக்கும்போதே தனக்கு அவமதிப்பு நிகழ்ந்தது என்றும்; அதைச் செய்த துச்சாசனனின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்றும் திரௌபதி சொன்னது; அர்ஜுனனின் வில்திறத்தையும், பீமனின் பலத்தையும் இகழ்ந்து கிருஷ்ணனிடம் திரௌபதி சொன்னது; திரௌபதிக்கு நீதி செய்வதாகக் கிருஷ்ணன் உறுதியளித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அறமும் பொருளும் நிறைந்த மன்னரின் {யுதிஷ்டிரரின்} அமைதிநிறைந்த வார்த்தைகளைக் கேட்டவளும், பெரும் துயரத்தில் இருந்தவளும், நீண்ட கூந்தலுடையவளும், மன்னன் துருபதனின் மகளுமான கிருஷ்ணை {திரௌபதி}சகாதேவனையும், வலிமைமிக்கத் தேர் வீரனான சாத்யகியையும் புகழ்ந்தபடி, சாத்யகியின் அருகில் அமர்ந்திருந்த மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினாள்.

பீமசேனன் சமாதானம் அறிவிப்பதைக் கண்ட அந்தப் புத்திசாலிப் பெண் {திரௌபதி}, துயரம் மேலிட, கண்கள் குளமாக, “ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, ஓ! நீதிமானே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தனது ஆலோசகர்களுடன் கூடிய திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்களின் மகிழ்ச்சியை எப்படி ஏமாற்றுகரமாகத் திருடினான் என்பதை நீ அறிவாய். ஓ! தாசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, தனிப்பட்ட முறையில் மன்னரால் {திருதராஷ்டிரரால்} சஞ்சயனுக்குச் சொல்லப்பட்ட செய்தியை நீ அறிவாய்.

பதிலுக்குச் சஞ்சயனிடம் சொல்லப்பட்ட அனைத்தையும் நீ கேட்டாய். ஓ! பெரும் பிரகாசம் உடையவனே {கிருஷ்ணா}, “அவிஸ்தலம், விருகஸ்தலம், மாகந்தி, வாரணாவதம் மற்றும் ஐந்தாவதாக ஏதாவது ஒன்று என ஐந்து கிராமங்கள் மட்டும் எங்களுக்குக் கொடுக்கப்படட்டும்” என்ற வார்த்தைகளே சொல்லப்பட்டன. ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துரியோதனனுக்கும், அவனது ஆலோசகர்களுக்கும் உன்னால் சொல்லப்பட வேண்டியது என்று முன்னர்ச் சொல்லப்பட்ட செய்தி இதுவே.

ஆனால், ஓ! கிருஷ்ணா, ஓ! தாசார்ஹ குலத்தவனே, அடக்கமும், அமைதிக்கான ஆவலும் உடைய யுதிஷ்டிரரின் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி சுயோதனன் {துரியோதனன்} நடக்கமாட்டான். ஓ! கிருஷ்ணா, நாட்டைக் கொடுக்காமல் சமாதானத்தை அடைய துரியோதனன் விரும்பினால், அத்தகு சமாதானத்தைச் செய்து கொள்ள அங்குச் செல்ல வேண்டிய தேவையே இல்லை. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, கோபத்துடன் இருக்கும் திருதராஷ்டிரரின் படையை எதிர்கொள்ளச் சிருஞ்சயர்களுடன் கூடிய பாண்டவர்கள் இயன்றவர்களே. அவர்கள் {கௌரவர்கள்} சமரசக் கலைகளுள் எதற்கும் உடன்படாமல் இருக்கிறார்கள் என்றால், இனியும் அவர்களுக்கு நீ கருணை காட்டுவது முறையாகாது.

ஓ! கிருஷ்ணா, தன் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் ஒருவன், சமரசத்தின் மூலமாகவோ, கொடைகளின் மூலமாகவோ சமாதானத்துக்கு உடன்படாத தன் எதிரிகளைக் கடுமையாக நடத்த வேண்டும். எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்ட அச்யுதா {கிருஷ்ணா}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் உதவியைப் பெற்ற நீ, கடுமையான தண்டனைக்குத் தகுந்த அவர்களை விரைவாகத் தண்டிக்க வேண்டும். உண்மையில், அது பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} நன்மை செய்ததாகவே ஆகும். உனக்கும் அது புகழைக் கொடுக்கும். ஓ! கிருஷ்ணா, சாதிக்கப்பட்டால், அதுவே க்ஷத்திரிய குலம் முழுமைக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கும்.

பேராசை கொண்டிருப்பவன் க்ஷத்திரியனாக இருப்பினும், பிராமணனைத் தவிர வேறு எந்த வகையைச் சார்ந்தவனாக இருப்பினும், பாவம் நிறைந்த அவன், க்ஷத்திரிய வகைக்கான கடமைகளில் உண்மையாக இருக்கும் ஒருவனால் நிச்சயம் கொல்லத்தக்கவனே ஆவான். ஓ! ஐயா, பிற வகையைச் சேர்ந்த அனைவருக்கும் பிராமணர்களே ஆசான்களாக இருப்பதாலும், அனைத்தையும் பகிர்ந்து கொள்வதில் முதலாக இருப்பதாலும் பிராமணர்கள் இதில் தவிர்க்கப்படலாம்.

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சாத்திரங்கள் அறிந்த நபர்கள், கொல்லத்தகாதவர்களைக் கொல்வது பாவம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். எனவே, கொல்லத்தக்கவர்களைக் கொல்லாதிருப்பதும் அதற்கு நிகரான பாவமே.

ஆகவே, ஓ! கிருஷ்ணா, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் படைகளோடு சேர்ந்து, உன்னைப் பாவம் அண்டாதவாறு செயல்படுவாயாக. உன் மீதுள்ள அதீத நம்பிக்கையாலேயே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சொன்னதையே நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, என்னைப் போன்ற பெண் இந்தப் பூமியில் வேறு எவள் இருக்கிறாள்? வேள்விப் பீடத்தில் உதித்தவள் நான், மன்னன் துருபதரின் மகள் நான். ஓ! கிருஷ்ணா, உனது அன்பிற்குரிய நண்பனான திருஷ்டத்யும்னனின் தங்கை நான். திருமணத்தின் மூலமாக அஜமீட குலத்துப் பெண்ணாகவும், ஒப்பற்ற பாண்டுவின் மருமகளாகவும் ஆனவள் நான். காந்தியில் ஐந்து இந்திரர்களுக்கு ஒப்பான பாண்டு மகன்களின் ராணி நான். இந்த ஐந்து வீரர்களால் {பாண்டவர்களால்}, ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்கத் தேர்வீரர்களான ஐந்து மகன்களைப் பெற்றேன். அபிமன்யுவைப் போன்றே அவர்களும் உனக்குத் தார்மீக அடிப்படையில் கட்டுண்டவர்களே.

இப்படிப்பபட்ட நான், ஓ! கிருஷ்ணா, நீ வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, தலைமுடியைப் பற்றிச் சபைக்கு இழுத்து வரப்பட்டு, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} கண் முன்பாகவே அவமதிக்கப்பட்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டு மகன்களும், பாஞ்சாலர்களும், விருஷ்ணிகளும் உயிரோடு இருக்கும்போதே, அந்த இழிந்தவர்களால் சபையின் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டு, அடிமையைப் போல நடத்தப்பட்டேன். இதைக் கண்டும் பாண்டவர்கள் அனைவரும் கோபப்படாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். அப்போதே நான் உன்னை என் இதயத்தால் {மனதால்} அழைத்தேன்.

ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, “என்னைக் காப்பாற்று, ஓ! என்னைக் காப்பாற்று” என்று சொல்லி {உன்னை} அழைத்தேன். பிறகு ஒப்பற்ற மன்னரும், எனது மாமனாருமான திருதராஷ்டிரர், என்னிடம், “ஓ! பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, ஏதாவது வரம் கேள். நீ எனது கையால் வரங்களையும், ஏன் மரியாதையையும் கூடப் பெறத் தகுந்தவளாவாய்” என்றார். இப்படிச் சொல்லப்பட்ட நான், “தேர்கள் மற்றும் ஆயுதங்களுடன் பாண்டவர்கள் விடுதலை பெற்றவர்களாகட்டும்” என்று கேட்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அதனால் பாண்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், காட்டுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது இந்தச் சோகங்கள் அனைத்தையும் நீ அறிவாய். ஓ! தாமரை போன்ற கண்களை உடையவனே {கிருஷ்ணா}, இந்தத் துயரில் இருந்து எனது கணவர்கள், உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய என்னைக் காப்பாயாக. ஓ! கிருஷ்ணா, தார்மீக அடிப்படையில் நான் பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரர் ஆகிய இருவருக்கும் மருமகளாவேன். அப்படியிருந்தும், நான் வலுக்கட்டாயமாக அடிமையாக்கப்பட்டேன். ஓ! கிருஷ்ணா, அந்தத் துரியோதனன் இந்தக் கணம் வரை உயிரோடு இருக்கிறான், பார்த்தரின் {அர்ஜுனரின்} விற்திறத்திற்கு ஐயோ, பீமசேனரின் பலத்திற்கு ஐயோ. உனது கைகளாலான எந்த உதவிக்காவது நான் தகுந்தவளென்றால், உனக்கு என் மீது ஏதாவது கருணை இருந்தால், ஓ! கிருஷ்ணா, உனது கோபம் திருதராஷ்டிரர் மகன்கள் மீது திரும்பட்டும்” என்றாள் {திரௌபதி}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்னதும், தாமரை இதழ்களைப் போன்ற பெரியதும் கருமையானதுமான கண்களைக் கொண்ட அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, கண்ணீரால் குளித்தாள். சுருள் முனை கொண்டதும், அடர்நீல நிறம் கொண்டதும், அனைத்து நறுமணப் பொருட்களால் நறுமணமூட்டப்பட்டதும், அனைத்து மங்கலக்குறிகளைக் கொண்டதும், பின்னலாகக் கட்டப்பட்டிருந்தாலும், பெரும்பாம்பு போலப் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருந்ததுமான தனது கூந்தலைத் தன் இடது கையில் பற்றிக் கொண்டு, பெண் யானையைப் போல நடந்து, தாமரைக் கண் கிருஷ்ணனை அணுகி, “எதிரியுடன் சமாதானம் கொள்ள ஆவலாய் இருக்கும் தாமரைக் கண் கொண்டவனே {கிருஷ்ணா}, நீ எந்தச் செயலைச் செய்தாலும், துச்சாசனனின் முரட்டுக் கைகளால் பற்றப்பட்ட இந்தக் கூந்தலை நினைத்துச் செயல்படுவாயாக!

ஓ! கிருஷ்ணா, பீமரும், அர்ஜுனரும் சமாதானத்திற்கு ஏங்கும் அளவிற்குத் தாழ்ந்தவர்கள் ஆனார்கள் என்றால், போர்க்குணமிக்கத் தனது மகன்களுடன் வயது முதிர்ந்த எனது தந்தை {துருபதர்} எனக்காகப் போர்க்களத்தில் பழி தீர்ப்பார். ஓ! மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பெரும் சக்தி கொண்ட எனது ஐந்து மகன்களும் அபிமன்யுவைத் தங்கள் தலைமையில் கொண்டு, கௌரவர்களுடன் போரிடுவார்கள். துச்சாசனின் கரிய கைகள் அவனது உடலில் இருந்து அறுக்கப்பட்டு, அணுக்களாக நொறுங்காமல் என்னுடைய இதயத்துக்கு என்ன அமைதி கிடைக்கும்?

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் போன்ற எனது கோபத்தை என் இதயத்தில் மறைத்துக் கொண்டு, நல்ல காலங்களை எதிர்பார்த்து, நீண்ட பதிமூன்று {13} வருடங்களை நான் கழித்திருக்கிறேன். இப்போதோ பீமரின் சொற்களெனும் கணைகளால் துளைக்கப்பட்ட எனது இதயம் உடையும் நிலையில் இருக்கிறது. ஏனெனில், பீமர் இப்போது அறநெறியின் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார்” என்றாள் {திரௌபதி}. கண்ணீரால் தடைபட்ட குரலுடன் இவ்வார்த்தைகளைச் சொன்ன நீண்ட கண்களையுடைய கிருஷ்ணை {திரௌபதி}, அதிரவைக்கும் விம்மல்களோடும், கண்ணத்தில் உருண்டோடும் கண்ணீரோடும் உரக்க அழத்தொடங்கினாள். திரண்டு உருண்ட இடையைக் கொண்ட அந்த மங்கை {திரௌபதி}, நெருப்பு நீர் போலச் சூடாகச் சிந்திய கண்ணீரால் தனது நெருக்கமான ஆழமான மார்பகத்தை நனைக்கத் தொடங்கினாள்.

வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, அவளுக்கு {திரௌபதிக்கு} ஆறுதல் தரும் வார்த்தைகளில் பேசினான். “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, பாரதக் குலத்தின் மங்கையர், நீ அழுவதைப் போலவே அழுவதை, நீ விரைவில் காண்பாய். ஓ! மருட்சியுடையவளே {திரௌபதி}, உறவினர்களும், நண்பர்களும் கொல்லப்பட்ட நிலையில் அவர்கள் உன்னைப் போலவே அழுவார்கள். ஓ! மங்கையே {திரௌபதி}, நீ யாரிடம் கோபம் கொண்டிருக்கிறாயோ, அவர்களின் உறவினர்களும் வீரர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள் {என்று நினைத்துக் கொள்}. யுதிஷ்டிரரின் கட்டளையின் பேரிலும், பீமர், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களுடனும், விதிக்கு ஏற்புடைய வகையில், படைப்பாளனால் விதிக்கப்பட்ட அனைத்தையும் நான் சாதிப்பேன்.

அவர்களுக்கான நேரம் வந்துவிட்டது. திருதராஷ்டிரரின் மகன்கள் எனது வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கவில்லையெனில், நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகும்படி, கீழே பூமியில் அவர்கள் விழுவது நிச்சயம். இமய மலைகள் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்ளலாம், பூமியானவள் தன்னை நூறு துண்டுகளாகப் பிளந்து கொள்ளலாம். கோடிக்கணக்கான நட்சத்திரங்களுடன் கூடிய வானம் விழுந்து போகலாம், ஆனால் எனது வார்த்தைகள் பொய்க்காது. உனது கண்ணீரை நிறுத்து. ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, தங்கள் எதிரிகளைக் கொன்று, செழிப்பால் மகுடம் சூட்டப்பட்டவர்களாக நீ உனது கணவர்களை விரைவில் காண்பாய் என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணனின் புறப்பாடு! – உத்யோக பர்வம் பகுதி 83அ-துரியோதனனுக்கு அறிவுரை கூறி சமாதானத்தை எட்டும்படி கிருஷ்ணனிடம் அர்ஜுனன் சொன்னது; கிருஷ்ணன் அதை ஆமோதித்தது; காலையில் எழுந்து சாத்யகியையும் உடன் அழைத்துக் கொண்டு கிருஷ்ணன் புறப்பட்டது; கிருஷ்ணன் கொண்டிருந்த ஆயுதங்கள், தேர், தேரில் பூட்டப்பட்ட குதிரைகள், அந்தத்தேரில் இருந்தவை ஆகியவற்றின் வர்ணனைகள், கிருஷ்ணன் புறப்பட்ட போது ஏற்பட்ட நல்ல சகுனங்கள் ஆகியவற்றை வைசம்பாயனர் சொன்னது..

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், “ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ இப்போது அனைத்து குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} சிறந்த நண்பனாக இருக்கிறாய். இரு தரப்பிடமும் உறவுமுறை கொண்ட நீ, இருவருக்கும் அன்பிற்குரிய நண்பனாகவே இருக்கிறாய். பாண்டவர்களுக்கும் திருதராஷ்டிரர் மகன்களுக்கும் இடையில் சமாதானத்தைக் கொண்டு வருவதே உனக்குத் தகும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ திறமையானவன், எனவே, சமரசத்தைக் கொண்டு வருவதே உனக்குத் தகும். ஓ! தாமரைக் கண் கொண்டவனே {கிருஷ்ணா}, இங்கிருந்து சமாதானத்துக்காகச் சென்று, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, எப்போதும் கோபத்துடன் இருக்கும் எங்கள் சகோதரன் சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, உண்மையில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல். அறம் பொருள் ஆகியவை நிறைந்ததும், மங்கலகரமானதும், நன்மை விளைவிக்கக்கூடியதுமான உனது ஆலோசனைகளை மூடனான துரியோதனன் ஏற்கவில்லையெனில், அவன் விதிக்குப் பலியாகப் போகிறவன் ஆவான்” என்றான் {அர்ஜுனன்}.

அதற்கு அந்தப் புனிதமானவன், “நீதிக்கு இசைவானதையும், நமக்கும், குருக்களுக்கும் நன்மையானதையும் சாதிக்க விரும்பியே நான் மன்னன் திருதராஷ்டிரரிடம் செல்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இரவு கடந்து, ஒளிரும் சூரியன் கிழக்கில் உதித்தான். மைத்திரம் என்ற நேரம் {முகூர்த்தம்} நடந்து கொண்டிருந்தது. சூரியனின் கதிர்கள் இன்னும் மென்மையாகவே இருந்தன. அந்த மாதமானது (கௌமுத கார்த்திகை = கார்த்திகை மாதம்} ரேவதி நட்சத்திரத்தின் கீழ் இருந்தது. {கார்த்திகை மாதத்தின் ரேவதி நட்சத்திர நாளில் கிருஷ்ணன் புறப்பட்டான்}. இலையுதிர் காலம் விடுபட்ட பனிக்காலமாகவும் அஃது இருந்தது. பூமியில் சுற்றிலும் அபரிமிதமான பயிர்கள் நிறைந்திருந்தன {விளைந்திருந்தன}. அத்தகு நேரத்தில் தான், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், அருமையான உடல்நிலையைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, (தெய்வீக) முனிவர்களின் துதிகளைக் கேட்கும் வாசவனைப் {இந்திரனைப்} போல, மங்கலகரமானதும், புனித ஒலியுடையதுமான அந்தணர்களின் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு, காலையில் வழக்கமாகச் செய்யும் செயல்களையும் சடங்குகளையும் செய்து, குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தைலங்களாலும், ஆபரணங்களாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு சூரியன் அக்னி ஆகிய இருவரையும் வழிபட்டான்.

காளையின் வாலைத் தொட்டு, அந்தணர்களை மரியாதையுடன் வணங்கி, புனித நெருப்பை வலம் வந்து, பார்வையில் பட்ட (வழக்கமான) மங்கலப் பொருட்களில் தனது கண்களைச் செலுத்தி, யுதிஷ்டிரனின் வார்த்தையை நினைத்துப் பார்த்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் அருகே அமர்ந்திருந்த சினியின் பேரனான சாத்யகியிடம், “எனது தேர் தயார் செய்யப்படட்டும், எனது சங்கும், கதாயுதத்துடன் கூடிய எனது சக்கரமும், அம்பறாத்தூணிகளும், கணைகளும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் பயன்படும் அனைத்து வகையான ஆயுதங்களும் அதில் {அந்தத் தேரில்} இருக்கட்டும். ஏனெனில், துரியோதனன், கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் தீய ஆன்மா கொண்டவர்களாவர். ஒருவன் வலிமைமிக்கவனாகவே இருந்தாலும், பலத்தில் சிறிய எதிரிகளைக் கூட அவன் அலட்சியப்படுத்தக்கூடாது” என்றான் {கிருஷ்ணன்}.

சக்கரம் மற்றும் காதாயுதத்தைத் தாங்குபவனான கேசவனின் {கிருஷ்ணனின்} விருப்பங்களைப் புரிந்து கொண்ட அவனது பணியாட்கள் {தேருக்கு முன் செல்லும் பரிஜனங்கள்}, அவனது தேரைப் பூட்டச் செய்தனர்.

அண்ட அழிவு நேரத்தில் வெளிப்படும் நெருப்பின் பிரகாசம் கொண்ட அந்தத் தேர் அதே நெருப்பைப் போன்ற வேகமும் கொண்டதாக இருந்தது. அதன் இரண்டு சக்கரங்களும் பிரகாசத்தில் சூரியனையும் சந்திரனையும் ஒத்திருந்தன. பிறை மற்றும் முழு நிலவுகள், மீன்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் ஒப்பனைகளைத் தன்னில் கொண்டு, பல்வேறு வகை மலர்கள், முத்துகள் மற்றும் பல்வேறு வகையான ரத்தினங்களாலான மாலைகளால் அது {அந்தத் தேர்} சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. உதயச் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டிருந்த அது {தேர்}, பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. பலவண்ண ரத்தினங்களையும் தங்கத்தையும் கொண்டிருந்த அஃது, அழகிய கொடிகளுடன் கூடிய அற்புதமான கொடிக் கம்பங்களைக் கொண்டிருந்தது. தேவையான அனைத்துப் பொருட்களும் நன்கு வழங்கப்பட்டு, எதிரிகளால் தடுக்க இயலாத வகையில் இருந்த அது, புலித் தோல்களால் மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு எதிரியின் புகழையும் கவரவல்லதும், யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கவல்லதுமாக அது {அந்தத் தேர்} இருந்தது. சைப்யம், சுக்ரீவம், மேகபுஷ்பம், வலாஹகம் என்ற பெயர்களைக் கொண்ட அற்புத குதிரைகளை நன்கு குளிப்பாட்டி, அழகிய சேணங்களை அவற்றுக்கு உடுத்தி அந்தத் தேரில் பூட்டினர்.

கிருஷ்ணனின் மதிப்பை மேலும் உயர்த்தும்படி, இறகு கொண்ட பிறவிகளுக்குத் {பறவைகளுக்குத்} தலைவனான கருடன் அங்கே வந்து, பயங்கரச் சடசடப்பொலியை எழுப்பும் அந்தத் தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்தான்.

மேருவின் சிகரம் போன்று உயர்ந்ததும், பேரிகைக் கொண்ட மேகங்களைப் போன்ற ஆழ்ந்த உரத்த சடசடப்பொலியை எழுப்பக்கூடியதும், இயக்குபவரின் விருப்பத்திற்கேற்ப செல்லும் தெய்வீகத் தேரை ஒத்திருப்பதுமான அந்தத் தேரில் சௌரி {கிருஷ்ணன்} ஏறினான். சாத்யகியையும் அதில் உடன் ஏற்றிக் கொண்ட அந்த மனிதர்களில் சிறந்தவன் {கிருஷ்ணன்}, தனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியையும் வானத்தையும் நிறைத்தபடி கிளம்பினான்.

வானம் மேகமற்று இருந்தது, மங்கலகரமான காற்று சுற்றிலும் வீசத் தொடங்கியது, தூசியில் இருந்து விடுபெற்ற சுற்றுச்சூழல் தூய்மையானது. உண்மையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} அப்படிக் கிளம்பிய போது, மங்கலகரமான விலங்குகளும், பறவைகளும் வலமாகச் சுற்றி அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றன. கொக்குகள், மயில்கள், அன்னஙகள் ஆகியன நல்ல சகுனங்களைக் கொண்ட ஒலிகளை வெளியிட்டபடியே அந்த மதுவைக் கொன்றவனைத் {மதுசூதனனைத்} தொடர்ந்து சென்றன. மந்திரங்களின் துணையோடு கூடிய ஹோம நீர்க்காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்பே கூட, புகையில் இருந்து விடுபட்டு உற்சாகமாகச் சுடர்விட்டு எரிந்து, தனது தழல்களை வலப்புறமாக வெளியிட்டது.

வசிஷ்டர், வாமதேவர், பூரித்யும்னர், கயர், கிரதர், சுக்கிரர், குசிகர், பிருகு மற்றும் பிற பிரம்ம முனிவர்களும் தெய்வீக முனிவர்களும் {நாரதர், வால்மீகர், மருத்தர்} ஒன்றிணைந்து, யாதவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவனும், வாசவனுக்கு {இந்திரனுக்கு} இளைய தம்பியுமான கிருஷ்ணனின் வலப்புறமாக நின்றனர். இப்படி அந்த முனிவர்களாலும், ஒப்பற்ற பிற முனிவர்களாலும், புனிதமானவர்களாலும் வழிபடப்பட்ட கிருஷ்ணன், குருக்களின் வசிப்பிடம் நோக்கிக் கிளம்பினான்” என்றார் {வைசம்பாயனர்}.

குதிரைகளும் யானைகளும் மலஜலங்கழித்தன! – உத்யோக பர்வம் பகுதி 83ஆ-யுதிஷ்டிரன், பிற பாண்டவர்கள் மற்றும் மன்னர்கள் ஆகியோர் ஹஸ்தினாபுரம் செல்லும் கிருஷ்ணனைத் தொடர்ந்து செல்வது; யுதிஷ்டிரன் தனது தாய் குந்தி குறித்து வருந்தியது; அவளைத் தன் சார்பாக நலன்விசாரித்து ஆலிங்கணம் செய்யுமாறு கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; முடிந்தவரை சமாதானம் பேசும்படியும், கௌரவர்கள் அதற்கு இணங்க மறுத்தால் க்ஷத்திரிய குலமே தன்னால் அழியும் என்றும் அர்ஜுனன் சொன்னது; அர்ஜுனனின் பேச்சைக் கேட்ட பீமன் பயங்கரமாகக் கர்ஜித்தது; பிறகு கிருஷ்ணனின் அனுமதியுடன் அவர்கள் அனைவரும் திரும்பியது; கிருஷ்ணன் பயணப்பட்ட வழியில் முனிவர்கள் அவனைச் சந்திப்பது; பரசுராமர் முனிவர்க்கூட்டத்தின் நோக்கத்தைக் கிருஷ்ணனிடம் சொல்வது….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்படிக் கிருஷ்ணன் சென்றபோது, குந்தியின் மகனான யுதிஷ்டிரரும், பீமன், அர்ஜுனன், மாத்ரியின் இரட்டை மகன்களான   அந்த மற்ற பாண்டவர்களும் {நகுல சகாதேவர்களும்} அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றனர். வீரமிக்கச் சேகிதானன், சேதிகளின் ஆட்சியாளனான திருஷ்டகேது, துருபதன், காசி மன்னன், பெரும் வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், தனது மகன்களோடு கூடிய விராடன், கேகய இளவரசர்கள் ஆகிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும். அவனை {கிருஷ்ணனை} மதிக்கும் வகையில், அந்த க்ஷத்திரியக் குலத்துக் காளையைப் {யுதிஷ்டிரனைப்} பின் தொடர்ந்து சென்றார்கள்.

ஒப்பற்ற மன்னனும் நீதிமானுமான யுதிஷ்டிரன், சிறிது தூரத்திற்குக் கோவிந்தனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்று, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் பேசினான். ஆசையினாலோ, கோபத்தினாலோ, அச்சத்தினாலோ, லாப நோக்கத்தாலோ சிறிய தவறைக் கூட இழைக்காதவனும், என்றும் உறுதியான மனம் படைத்தவனும், பேராசைக்கு அந்நியனும், அறநெறிகளை அறிந்தவனும், பெரும் புத்திக்கூர்மை மற்றும் ஞானத்தைக் கொண்டவனும், அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் அறிந்தவனும், அனைவருக்கும் தலைவனும், தேவர்களுக்குத் தேவனும், நித்தியமாக நிலைத்திருப்பவனும், அனைத்து அறங்களைக் கொண்டவனும், தனது மார்பில் மங்கலக்குறியைக் கொண்டவனுமான அந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனை {கிருஷ்ணனை} குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அணைத்துக் கொண்டான். அவனை {கிருஷ்ணனை} அணைத்தவாறே, அவன் {கிருஷ்ணன்} என்ன செய்ய வேண்டும் என்பதை மன்னன் {யுதிஷ்டிரன்} குறிப்பிடத் தொடங்கினான்.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், “குழந்தையாக இருந்ததில் இருந்து எங்களை வளர்த்தவளும்; உண்மைகளிலும், துறவு நோன்புகளிலும், தீயனத் தணிக்கும் சடங்குகளிலும் எப்போதும் ஈடுபடுபவளும்; தேவர்களையும், விருந்தினர்களையும் வணங்குவதில் அர்ப்பணிப்பு கொண்டவளும்; தனது மகன்களிடம் அன்போடிருக்கும் பெரியவர்களுக்காக எப்போதும் காத்திருப்பவளும்; தனது மகன்களிடம் எல்லையில்லா பாசம் கொண்டவளும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எங்களால் எப்போதும் அன்போடு விரும்பப்படுபவளும்; ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {கிருஷ்ணா}, உடைந்த கப்பலில் இருக்கும் பயணிகளைப் பயங்கரக் கடலில் இருந்து காக்கும் படகைப் போல, துரியோதனனின் வலைகளில் இருந்து எங்களை எப்போதும் காத்தவளும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, துன்புறத்தகாதவளும், எங்களின் நிமித்தமாக எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தவளுமான அந்த மங்கையிடம் {குந்தியாகிய எங்கள் தாயிடம்} நலன்விசாரித்து, அவளை {குந்தியை} வணங்கித் தழுவி கொண்டு, மகன்களின் நிமித்தமான அவளது துயரத்தில் இருந்து அவளுக்கு ஆறுதல் அளிப்பதற்காகப் பாண்டவர்களைக் குறித்து மீண்டும் மீண்டும் அவளிடம் {குந்தியிடம்} பேசுவாயாக.

என்னதான் அவள் {குந்தி} துன்ப துயரத்தை அடையத் தகாதவள் என்றாலும், தனக்குத் திருமணம் ஆனது முதலே, தனது மாமனாரின் நடத்தையால் {griefs due to the conduct of her father-in-law} {மாமனார் விசித்திரவீரியன் வீட்டில்} அவற்றுக்குப் {துன்ப துயரங்களுக்குப்} பலியாகி வருகிறாள். பாடு என்பதே  {கஷ்டப்படுதலே} அவளது நிலையாக இருக்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது துயரங்கள் அனைத்தும் தீர்ந்து, துன்பமிக்க என் தாயை மகிழ்வுறச் செய்யும் நேரத்தை நான் காண்பேனா? {காண மாட்டேனா?} நாங்கள் நாடுகடத்தப்பட்ட போது {வனவாசம் அனுப்பப்பட்ட போது}, தன் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தால் கசந்து அழுது, துயரத்தால் எங்கள் பின்னே ஓடி வந்தாள். ஆனால், அவளை {குந்தியை} விட்டுவிட்டு, நாங்கள் காட்டுக்குச் சென்றோம். துயரம் அவளைக் கொன்றிருக்காது {என நம்புகிறேன்}. எனவே, தன் மகன்களின் நிமித்தமாகத் துயரத்தில் இருந்தாலும், ஆனர்த்தர்களால் உற்சாகப்படுத்தப்படும் அவள் உயிரோடு இருக்கச் சாத்தியம் இருக்கிறது.

ஓ! மகிமைமிக்கக் கிருஷ்ணா, அவளையும் {குந்தியையும்}, மன்னன் திருதராஷ்டிரரையும், எங்கள் வயதைவிட முதிர்ந்த ஏகாதிபதிகள் அனைவரையும், பீஷ்மர், துரோணர், கிருபர், மன்னன் பாஹ்லீகர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, சோமதத்தர், உண்மையில் பாரதக் குலத்தவர் அனைவரையும், குருக்களின் ஆலோசகரும் {அமைச்சரும்}, ஆழ்ந்த அறிவு கொண்டவரும், அறநெறிகளை நுண்மையாக அறிந்தவரும், பெரும் ஞானம் கொண்டவருமான விதுரரையும் என்சார்பாக நீ வணங்கி, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா} அவர்கள் அனைவரையும் தழுவுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

மன்னர்களின் முன்னிலையில் இந்த வார்த்தைகளைக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்ன யுதிஷ்டிரன், கிருஷ்ணனின் அனுமதியுடன், அவனை {கிருஷ்ணனை} வலம் வந்து திரும்பினான். பிறகு, சில எட்டுகளை எடுத்து வைத்த அர்ஜுனன், தனது நண்பனும், மனிதர்களில் காளையும், எதிரி வீரர்களைக் கொல்பவனும், தாசார்ஹ குலத்தின் ஒப்பற்ற வீரனுமானவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஒப்பற்ற கோவிந்தா {கிருஷ்ணா}, ஆலோசனையின் போது, எங்கள் நாடு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்க்கப்பட்டதை மன்னர்கள் அனைவரும் அறிவார்கள். எங்களை அவமதிக்காமல், உன்னை மதித்து, நாங்கள் கோருவதை, நேர்மையாக அவர்கள் {கௌரவர்கள்} கொடுத்தார்களானால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எனக்கு மனநிறைவைக் கொடுத்து, பயங்கர ஆபத்தில் இருந்து அவர்கள் தப்புவார்கள். எனினும், எப்போதும் முறையற்ற வழிகளையே பின்பற்றும் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்}, வேறுவிதமாக நடந்து கொண்டானேயானால், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பின்பு நான் க்ஷத்தரிய குலத்தையே அழிப்பேன் என்பது நிச்சயம்” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, விருகோதரன் {பீமன்} மகிழ்ச்சியால் நிறைந்தான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தொடர்ந்து கோபத்தால் நடுங்கினான், மேலும் மேலும் அவன் கோபத்தால் நடுங்கிக் கொண்டிருந்தாலும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வார்த்தைகள், தனது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பியதால் பயங்கரமாகக் கர்ஜனை செய்தான். அவனது கர்ஜனையைக் கேட்ட வில்லாளிகள் அனைவரும் அச்சத்தால் நடுங்கினர். குதிரைகளும், யானைகளும் மலமும் சிறுநீரும் கழித்தன.

கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} தனது தீர்மானத்தைக் குறித்துச் சொன்ன பிறகு, ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} தழுவி கொண்ட அர்ஜுனன், அவனது {கிருஷ்ணனின்} அனுமதியின் பேரில் திரும்பினான். மன்னர்கள் அனைவரும் அவனைத் {கிருஷ்ணனைத்} தொடர்வதை நிறுத்திய பின், சைப்யம், சுக்ரீவம் மற்றும் பிறவற்றால் இழுக்கப்பட்ட தேரில், உற்சாகம் நிறைந்த இதயத்துடன் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புறப்பட்டான். {கிருஷ்ணனின் தேரோட்டியான} தாருகனால் உந்தப்பட்ட வாசுதேவனின் அந்தக் குதிரைகள், வானத்தை விழுங்கி, சாலையைக்  குடித்தபடி தொடர்ந்து சென்றன.{And those steeds of Vasudeva, urged by Daruka, coursed onwards, devouring the sky and drinking the road.}

அப்படி வலிமை நிறைந்த கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} சென்று கொண்டிருந்த வழியில், சாலையின் இரு மருங்கிலும் அந்தணக் காந்தியுடன் சுடர்விட்டுக் கொண்டிருந்த முனிவர்களைக் கண்டான். விரைந்து தனது தேரைவிட்டு இறங்கிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அவர்களை மரியாதையுடன் வணங்கினான். அவர்களை முறையாக வழிபட்ட அவன் {கிருஷ்ணன்}, அவர்களிடம் {பிராமணர்களிடம்}, “உலகம் அனைத்திலும் அமைதி இருக்கிறதா? அறம் முறையாகப் பயிலப்படுகிறதா? பிற மூவகையினரும் அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்களா?” என்று கேட்டான். பிறகு அவர்களை முறையாக வழிபட்ட அந்த மதுவைக் கொன்றவன் {மதுசூதனன்}, மீண்டும் அவர்களிடம் {பிராமணர்களிடம்}, “வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டீர்களா? எங்கே எந்த நோக்கத்திற்காகச் செல்கிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எது உங்களைப் பூமிக்குக் கொண்டு வந்தது?” என்று கேட்டான் {கிருஷ்ணன்}.

இப்படிச் சொல்லப்பட்டவரும், ஜமதக்னியின் மகனும், தேவர்கள் மற்றும் அசுரர்களுக்குத் தலைவனுமான பிரம்மனின் நண்பர் {பரசுராமர்}, மதுவைக் கொன்றவனான கோவிந்தரை அணுகி, அவனைத் தழுவி கொண்டு, “தேவர்கள் மற்றும் அசுரர்களின் முந்தைய செயல்களை அறிந்தவர்களான நற்செயல்கள் புரியும் தெய்வீக முனிவர்களும், சாத்திரங்களைப் பரந்த அளவில் அறிந்த அந்தணர்களும், அரச முனிவர்களும் [1], (இந்த முனிவர்கள் கூட்டத்தில், அதஸ்சிரஸ், சர்ப்பமாலீ, பெரும் முனிவரான தேவலர், அர்வாவசு, சுஜானு, மைத்திரேயர், சனகர், பலி, பகர், தாலப்யர், ஸ்தூலசிரஸ், கிருஷ்ணத்வைபாயனர் {வியாசர்}, ஆபோத்தௌமியர், தௌமியர், ஆணிமாண்டவ்யர், கௌசிகர் {விஸ்வாமித்ரர்}, தர்மோஷணீஷர், பர்ணாதர், கடஜானுகர், மௌஞ்சாயனர், வாயுபக்ஷர், பாராசர்யர், சாலிகர், சீலவான், அசனி, தாதா, சூனியபாலர், அக்ருதவரணர், ஸ்வேதகேது, கஹோளர், பரசுராமர், நாரதர் ஆகியோர் இருந்ததாக ஒரு பதிப்பில் இருக்கிறது)ஓ! தாசர்ஹா, ஓ! ஒப்பற்றவனே, அனைத்துப் புறங்களில் இருந்தும் ஓரிடத்தில் கூடும் பூமியின் க்ஷத்திரியர்களையும், சபையில் அமர்ந்திருக்கும் ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்}, மன்னர்களையும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உண்மையின் உருவமான உன்னையும் காண விரும்புகிறார்கள். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அந்தப் பிரம்மாண்ட காட்சியைக் காண நாங்கள் அங்கே வருவோம்.

ஓ! மாதவா, மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும், குருக்களிடம் நீ பேசப் போகும் அறம் மற்றும் பொருள் நிறைந்த பேச்சைக் கேட்க நாங்கள் ஆவலாக உள்ளோம். உண்மையில், பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரோடு ஒப்பற்ற விதுரன், மற்றும் யாதவர்களில் புலியான நீ ஆகிய அனைவரும் ஒன்றாகச் சபையில் கூடப் போகிறீர்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, கேட்பதற்கு அருமையானதும், உண்மை நிறைந்ததும் நன்மைக்கு வழிவகுப்பதுமான உனது பேச்சையும், ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அவர்கள் பேசும் பேச்சையும் கேட்க நாங்கள் விரும்புகிறோம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எங்கள் நோக்கத்தை இப்போது உன்னிடம் தெரிவித்து விட்டோம். உன்னை நாங்கள் மீண்டும் சந்திக்கிறோம். ஓ! வீரா {கிருஷ்ணா}, நீ அங்கே பாதுகாப்பாகச் செல்வாயாக. உனது ஆற்றல், வலிமை ஆகியவற்றைச் சேகரித்து, சபைக்கு மத்தியில் அற்புதமான இருக்கையில் அமர்ந்திருக்கும் உன்னைக் காண்போம் என நாங்கள் நம்புகிறோம்” என்றார் {பரசுராமர்}.

விருகஸ்தலத்தில் நின்ற கிருஷ்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 84-கிருஷ்ணனைத் தொடர்ந்து சென்று படைகளையும்; ஹஸ்தினாபுரத்திற்கு நேரிட்ட தீய சகுனங்களையும், கிருஷ்ணன் கடந்து சென்ற இடங்களில் நேர்ந்த இனிமையான அனுபவங்களையும் வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொல்வது; விருகஸ்தலத்தை அடைந்த கிருஷ்ணன்; கிருஷ்ணனை உபசரித்த அந்தணர்கள்; அந்தணர்களுக்கு உணவளித்து இரவை மகிழ்ச்சியாகக் கழித்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! எதிரிகளை அடிப்பவனே {ஜனமேஜயா}, வலிய கரங்களைக் கொண்ட அந்தத் தேவகியின் மகன் {கிருஷ்ணன்} (ஹஸ்தினாபுரத்திற்குப்) புறப்பட்டபோது, எதிரி வீரர்களைக் கொல்லவல்லவர்களும் பலமிக்கவர்களுமான பத்துத் தேர்வீரர்கள் அவனை {கிருஷ்ணனைத்} தொடர்ந்து சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆயிரம் {1000} காலாட்படை வீரர்களும், ஆயிரம் {1000} குதிரைவீரர்களும், நூற்றுக்கணக்கான பணியாட்களும் அபரிமிதமான உணவுப்பொருட்களுடன் அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “தாசார்ஹ குலத்தவனான அந்த ஒப்பற்ற மதுவைக்கொன்றவன் {மதுசூதனன்}, தனது பயணத்தை எப்படிச் செய்தான்? அந்த வீரன் {கிருஷ்ணன்} புறப்பட்ட போது என்னென்ன சகுனங்கள் காணப்பட்டன?” என்று கேட்டான் {ஜனமேஜயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த ஒப்பற்ற கிருஷ்ணன் (ஹஸ்தினாபுரத்திற்குக்) கிளம்பியபோது காணப்பட்ட இயல்பான மற்றும் இயல்புக்கு மாறான சகுனங்களை நான் உரைக்கும்போதே கேட்பாயாக. வானம் மேகமற்று இருந்தாலும், மின்னல்கீற்றுகளுடன் கூடிய இடி உருளும் ஒலி கேட்டது. தெளிந்த வானில் {கண்களுக்குத் தெரியாதபடி} வரிசையாக வந்த மேகங்கள் இடைவிடாமல் பின்புறத்தில் மழையைப் பொழிந்து கொண்டிருந்தன. கிழக்கு நோக்கிப் பாயும் சிந்து நதி உட்பட்ட ஏழு பெரிய ஆறுகள் எதிர் திசை {மேற்கு} நோக்கிப் பாய்ந்தன. எதையும் வேறுபடுத்திப் பார்க்க இயலாவண்ணம் எல்லாத் திசைகளும் எதிர்மறையானதைப் போலத் தோன்றின.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா} எங்கும் நெருப்புகள் சுடர்விட்டு எழுந்தன, பூமி மீண்டும் மீண்டும் நடுங்கியது. நூற்றுக்கணக்கான கிணறுகள் மற்றும் நீர் பாத்திரங்கள் {நீர்} பெருகி வழிந்தோடின. மொத்த அண்டமே இருளில் மூழ்கியது. புழுதி நிறைந்த சுற்றுச்சூழலில், அடிவானத்தின் திக்குகளையும், மூலத்திசைகளையும் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை. வானத்தில் இருந்து பெரும் கர்ஜனைகள் கேட்கப்பட்டன, ஆனால் எந்த உருவமும் தென்படவில்லை.

ஓ! மன்னா {ஜனமேஜயா} அற்புதம் நிறைந்த இந்த நிகழ்வு நாடு முழுவதும் காணப்பட்டது. கடுமையான இடியைப் போன்ற ஒலியுடன் வீசிய தெற்மேற்கு காற்று, ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்து, ஹஸ்தினாபுர நகரத்தை நசுக்கியது.

எனினும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்} கடந்த சென்ற இடங்களில் இனிமையான தென்றல் வீசியது, அனைத்தும் மங்கலகரமாக ஆனது. தாமரைகள் மற்றும் நறுமணமிக்க மலர்கள் அங்கே பொழிந்தன. கூரிய புற்களும் முட்களும் அற்றிருந்த அந்தச் சாலை இனிமையானதாக இருந்தது. அவன் {கிருஷ்ணன்} தங்கிய இடங்களில் எல்லாம், ஆயிரக்கணக்கான பிராமணர்கள் வந்து செல்வத்தைத் தானமளிக்கும் அவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து, தயிர், நெய், தேன் போன்ற உணவுகள் மற்றும் செல்வங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவனை {கிருஷ்ணனை} வழிபட்டனர்.

பெண்களே கூட, வெளியே சாலைக்கு வந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்கும் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த ஒப்பற்ற வீரனின் {கிருஷ்ணனின்} மேனியில் நறுமணமிக்கக் காட்டு மலர்களைத் தூவினர். பிறகு அவன், இதயத்துக்கு இனிமையைத் தரவல்லவையும், கண்களுக்கு இனிய காட்சிகளைக் கொண்டவையும், வண்டுகள் நிறைந்தவையுமான பல்வேறு கிராமங்களைக் கடந்தும், பல்வேறு நாடுகள் மற்றும் அரசுகளைக் கடந்தும், புனிதமானதும், அழகுள்ளதும், அனைத்து வகைப் பயிர்கள் நிரம்பியதும், இனிமையானதுமான சாலிபவனம் என்கிற இடத்தை அடைந்தான்.

எப்போதும் உற்சாகம் கொண்டவர்களும், நல்ல இதயம் படைத்தவர்களும், பாரதர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டவர்களும், அதன்காரணமாகப் படையெடுப்பாளர்கள் குறித்த அச்சங்களில் இருந்து விடுபட்டவர்களும், எந்தவித துயரத்தையும் அறியாதவர்களுமான உபப்லாவ்யத்துக் குடிமக்களில் பலர், தங்கள் நகரத்தை விட்டு வெளியே வந்து, கிருஷ்ணனைக் காணும் விருப்பத்தில் ஒன்றிணைந்து {அங்கே சாலிபவனத்தின் சாலை} வழியில் நின்றார்கள். சுடர்மிக்க நெருப்பைப் போன்ற அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்} அந்த இடத்திற்கு {சாலிபவனத்திற்கு} வந்ததைக் கண்டதும், தங்கள் வழிபாட்டுக்குகந்த அவனை {கிருஷ்ணனை}, தங்கள் இல்லத்திற்கு வந்த ஒரு விருந்தினரை உபசரிப்பதைப் போல மரியாதையுடன் வழிபட்டார்கள்.

கடைசியாக அந்த எதிரிவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, விருகஸ்தலத்தை அடைந்த போது, இங்குமங்குமாய்ச் பிரிந்த சூரியக்கதிர்கள் வானத்தைச் சிவப்பாக்கியதாகத் தோன்றியது. தனது தேரில் இருந்து இறங்கிய அவன் {கிருஷ்ணன்}, தான் வழக்கமாகச் செய்யும் சுத்திகரிப்புச் சடங்குகளை முறையாகச் செய்து, குதிரைகளுக்குச் சேணம் அகற்றச் சொல்லி உத்தரவிட்டு, தனது மாலைநேரத் துதிகளைச் சொல்ல தன்னைத் தயாரித்துக் கொண்டான். {தேரோட்டி} தாருகனும், குதிரைகளை விடுவித்து, குதிரை அறிவியல் விதிகளின்படி அவற்றை மேய்த்து, நுகங்களையும், தடயங்களையும் அகற்றி அவற்றுக்கு விடுதலை கொடுத்தான். இது செய்து முடிக்கப்பட்டதும் மதுவைக் கொன்றவன் {மதுசூதனன்}“யுதிஷ்டிரரின் தூதுக்காக நாம் இந்த இரவை இங்கே கழிக்க வேண்டும்” என்றான். அவனது {கிருஷ்ணனின்} நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்ட அவனது பணியாட்கள், விரைவாக ஒரு தற்காலிகக் குடிலை அமைத்து, அருமையான உணவையும் பானங்களையும் விரைந்து தயாரித்தனர்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கிராமத்தில் வசித்த பிராமணர்களில் உன்னதமானவர்கள், உயர்ந்த வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், பணிவானவர்கள், வேதங்களின் கூற்றுக்குக் கீழ்ப்படிந்து தங்கள் நடத்தையை அமைத்துக் கொண்டவர்கள் ஆகியோர், எதிரிகளைத் தண்டிப்பவர்களில் ஒப்பற்றவனான ரிஷிகேசனை {கிருஷ்ணனை} அணுகி, தங்கள் அருளாசிகள் மற்றும் மங்கலகரமான பேச்சுகளால் அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தினார்கள். அனைவரின் மரியாதைக்கும் தகுதிவாய்ந்த அந்தத் தாசார்ஹ குலத்தவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்திய பிறகு, செல்வங்கள் நிறைந்த தங்கள் இல்லங்களை, அந்த ஒப்பற்ற மனிதனின் {கிருஷ்ணனின்} ஆளுகைக்குள் வைத்தனர்.

அவர்களிடம் “போதும்” என்று சொன்ன அந்த ஒப்பற்ற கிருஷ்ணன், அவர்களுக்கு, அவரவர் தகுதிக்கேற்ப முறையான மரியாதையைச் செலுத்தி, அவரவர் வீடுகளுக்கு அவரவர்களுடன் சென்று, பிறகு அவர்களின் துணையுடனே தனது கூடாரத்திற்குத் திரும்பினான். அந்தணர்கள் அனைவருக்கும் இனிய இறைச்சியை உண்ணக் கொடுத்து, அவர்களுடன் சேர்ந்து தனது உணவை எடுத்துக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, அந்த இரவை மகிழ்ச்சியாக அங்கே கழித்தான்” என்றார் {வைசம்பாயனர்}.

வரவேற்பு அரங்குகள் அமைத்த துரியோதனன்! – உத்யோக பர்வம் பகுதி 85-கிருஷ்ணன் உபப்லாவ்யத்தில் இருந்து புறப்பட்டதை ஒற்றர்கள் மூலம் அறிந்த திருதராஷ்டிரன்; கிருஷ்ணனை வரவேற்பதற்காக வழிநெடுக்கிலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரங்குகளை அமைக்குமாறு துரியோதனனிடம் திருதராஷ்டிரன் சொன்னது; சபையின் பெரியோர்கள் அதை மெச்சியது; துரியோதனன் அரங்குகளை அமைத்தது; அத்தகு அரங்கொன்றிலும் தனது பார்வையைச் செலுத்தாத கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்தை அடைந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதேவேளையில், மதுசூதனன் {கிருஷ்ணன்} புறப்பட்டதைத் தனது ஒற்றர்கள் மூலம் அறிந்த திருதராஷ்டிரன், தன் மயிர் சிலிர்க்க, வலிய கரங்கள் கொண்ட பீஷ்மர், துரோணர், சஞ்சயன், ஒப்பற்ற விதுரன் ஆகியோரிடம் {இதுகுறித்து} புகழ்ந்து பேசியபிறகு, துரியோதனனிடமும் அவனது ஆலோசகர்களிடமும், “ஓ! குருகுலத்தின் கொழுந்தே {துரியோதனா}, நாம் கேள்விப்படும் செய்தி விசித்திரமானதாகவும், அற்புதமானதாகவும் இருக்கிறது. பிறர் அது குறித்துப் புகழ்ந்து பேசுகின்றனர், இன்னும் பிறர் தங்கள் இல்லங்களிலும், திறந்த வெளிகளிலும் கூடி இது குறித்து விவாதிக்கின்றனர்.

பெரும் ஆற்றல்படைத்த அந்தத் தாசார்ஹன் {கிருஷ்ணன்},, பாண்டவர்கள் சார்பாக இங்கு வருவதாக அனைவரும் சொல்கிறார்கள். அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்} எல்லாவகையிலும் நம் கையாலான மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவனாவான். அனைத்து உயிரினங்களுக்கும் தலைவன் அவன் {கிருஷ்ணன்}. இந்த அண்டத்தில் உள்ள அனைத்தின் வழிகளும் அவனிலேயே நிலைத்திருக்கின்றன. உண்மையில், புத்திக்கூர்மை, ஆற்றல், அறிவு, சக்தி ஆகிய அனைத்தும் மாதவனிலேயே {கிருஷ்ணனிலேயே} வசிக்கின்றன. நீதிமான்கள் அனைவராலும் வழிபடத்தக்க அவன் {கிருஷ்ணன} மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான். உண்மையில் அவனே நிலைத்த அறமுமாவான்.

வழிபடும்போது மகிழ்ச்சியை நிச்சயம் அளிப்பவன் அவன்; அவனை வழிபடவில்லை என்றாலோ, இழிவும் துயரமும் ஏற்படுவது நிச்சயம். நமது காணிக்கைகளால், அந்த எதிரிகளை அடிப்பவனான தாசார்ஹன் {கிருஷ்ணன்} மனநிறைவு கொள்ளச் செய்யப்பட்டால், அவனது {கிருஷ்ணனது} அருளால் மன்னர்களுக்கு மத்தியில் நாம் நமது அனைத்து விருப்பங்களையும் அடையலாம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, தாமதிக்காமல் அவனை {கிருஷ்ணனை} வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வாயாக. இன்பத்திற்குகந்த அனைத்து பொருட்களும் நிறைந்த அரங்குகள் சாலையில் அமைக்கப்படட்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்ட காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவன் உன்னிடம் மனநிறைவு கொள்ளும்படியான ஏற்பாடுகளைச் செய்வாயாக. இக்காரியத்தில் பீஷ்மர் என்ன நினைக்கிறார்?” என்றான் {திருதராஷ்டிரன்}.

பீஷ்மரும் மற்றும் பிறரும் என அனைவரும் மன்னன் திருதராஷ்டிரனின் அவ்வார்த்தைகளை மெச்சி, “சாலச் சிறந்தது” என்றனர். அவர்களது விருப்பங்களைப் புரிந்து கொண்ட துரியோதனன், அரங்குகளை அமைப்பதற்கான இனிமையான இடங்களைத் தேர்ந்தெடுக்கக் கட்டளையிட்டான். இதன் காரணமாக, சரியான இடைவெளிகளுடன் கூடிய இனிமையான இடங்களில், அனைத்து வகை ரத்தினங்களும் நிறைந்த பல அரங்குகள் கட்டப்பட்டன. சிறந்த தரம் கொண்ட அருமையான இருக்கைகள், அழகிய பெண்கள், நறுமணப் பொருட்கள், ஆபரணங்கள், அருமையான ஆடைகள், பல்வேறு வகைகளிலான சிறந்த உணவு மற்றும் பானங்கள் மற்றும் பலவகைகளிலான நறுமணமிக்க மாலைகளையும் அங்கே மன்னன் {துரியோதனன்} அனுப்பி வைத்தான்.

மன்னன் {துரியோதனன்}, கிருஷ்ணனை வரவேற்பதற்காக, விலைமதிப்பற்ற ரத்தினங்கள் நிறைந்த உயர்ந்த அழகுடைய அரங்கொன்றை, சிறப்புக் கவனத்துடன் விருகஸ்தலத்தில் நிறுவினான். தேவர்கள் அனுபவிப்பதைப் போன்றதும், மனித தகுதிக்கு மேலானதுமான இந்த ஏற்பாடுகளைச் செய்த மன்னன் துரியோதனன், இது குறித்துத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்தான். எனினும், தாசார்ஹ குலத்தைச் சேர்ந்த கேசவன் {கிருஷ்ணன்}, பல்வேறு வகைகளிலான ரத்தினங்களுடன் கூடிய அந்த அரங்குகள் அனைத்திலும் ஒரு பார்வையைக்கூடச் செலுத்தாமல், குருக்களின் தலைநகரை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்தான்.

துச்சாசனன் மாளிகையே சிறந்தது! – உத்யோக பர்வம் பகுதி 86-கிருஷ்ணனின் புறப்பாட்டை விதுரனிடம் சொன்ன திருதராஷ்டிரன், கிருஷ்ணனின் பெருமைகளைச் சொன்னது; ஹஸ்தினாபுரத்திற்கு வரப்போகும் கிருஷ்ணனுக்கு என்னென்ன பொருட்களைப் பரிசாகக் கொடுக்கப் போகிறான் என்பதைத் திருதராஷ்டிரன் விதுரனிடம் சொன்னது; கிருஷ்ணனின் வரவேற்புக்காகத் துச்சாசனனின் மாளிகையைத் தயார் செய்யுமாறு திருதராஷ்டிரன் சொன்னது..

திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான், “ஓ! விதுரா, உபப்லாவ்யத்தில் இருந்து ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புறப்பட்டுவிட்டான். அவன் {கிருஷ்ணன்} இப்போது விருகஸ்தலத்தில் தங்கியிருக்கிறான். நாளை இங்கே வருவான். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஆஹுகர்களின்தலைவனாவன். அவன் {கிருஷ்ணன்}, சாத்வத குல உறுப்பினர்கள் அனைவரிலும் முதன்மையான நபரும், உயர் ஆன்மா, பெரும் சக்தி மற்றும் பலத்தைக் கொண்டவனுமாவான். உண்மையில், விருஷ்ணிகளின் செழிப்புமிக்க நாட்டுக்கு மாதவனே {கிருஷ்ணனே} காப்பாளனாகவும் பாதுகாவலனாகவும் இருக்கிறான். அவனே மூவுலகங்களுக்கும் ஒப்பற்ற பெரும்பாட்டனாக இருக்கிறான். ஆதித்தியர்கள், வசுக்கள் மற்றும் ருத்திரர்கள் ஆகியோர் ஞானம் கொண்ட பிருஹஸ்பதியைப் புகழ்வதைப் போல, விருஷ்ணி குலத்தவர், புத்திசாலியான கிருஷ்ணனின் அறிவைப் புகழ்கிறார்கள்.

ஓ! அறம்சார்ந்தவனே {விதுரா}, நான் உனது முன்னிலையில், அந்த ஒப்பற்ற தாசார்ஹ குலக் கொழுந்துக்கு {கிருஷ்ணனுக்கு} வழிபாட்டைக் காணிக்கையாக்குவேன். அந்த வழிபாட்டைக் குறித்து நான் சொல்வதைக் கேள். நான் அவனுக்கு {கிருஷ்ணனுக்குத்} தங்கத்தாலான பதினாறு {16} தேர்களைக் கொடுப்பேன். ஒரே நிறம் கொண்டவையும், பாஹ்லீக இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையுமான சிறந்த நான்கு குதிரைகளால் அவை ஒவ்வொன்றும் {அந்த ஒவ்வொரு தேரும்} இழுக்கப்படும்.

ஓ! கௌரவா {விதுரா}, எப்போதும் மதநீர் ஒழுகுபவையும், பகைவீரர்களை அடிப்பதற்கேற்ற வகையில், கலப்பையின் தண்டுகளைப் போன்ற பெரிய தந்தங்களைக் கொண்டவையுமான எட்டு {8} யானைகளை நான் அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} கொடுப்பேன். அவை ஒவ்வொன்றும் {ஒவ்வொரு யானைக்கும்} எட்டு {8 மனிதப்} பணியாட்கள் இருப்பார்கள். தங்க நிறத்திலான நூறு {100} அழகிய கன்னிப் பெண்களை நான் அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பணியாட்களாகக் கொடுப்பேன். அதே போலப் பல ஆண் பணியாட்களையும் நான் அவனுக்குக் கொடுப்பேன்.

மலைவாழ் மனிதர்களால் நமக்குக் கொடுக்கப்பட்டவையும், தொடுவதற்கு மென்மையானவையுமான பதினெட்டாயிரம் {18,000} கம்பளிப் போர்வைகளை நான் அவனுக்குக் கொடுப்பேன். சீனத்தில் இருந்து பெறப்பட்ட ஆயிரம் {1000} மான் தோல்களையும், கேசவனுக்குத் {கிருஷ்ணனுக்குத்} தகுந்த அந்த வகையான பல பொருட்களையும் நான் அவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கொடுப்பேன். பகலும், இரவும் மின்னும் தூய கதிர்களைக் கொண்ட ரத்தினங்களையும் நான் அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், கேசவன் {கிருஷ்ணன்} மட்டுமே அதற்குத் தகுதியுடையவன் ஆவான்.

சுற்றிலும் ஒரு நாளைக்குப் பதினான்கு {14} யோஜனைகள் செல்லவல்லதும், கோவேறு கழுதைகள் பூட்டியதுமான இந்த எனது தேரையும் நான் அவனுக்குக் கொடுப்பேன். அவனைத் தொடர்ந்து வந்துள்ள பணியாட்களுக்கும் விலங்குகளுக்கும் தேவையான தினப்படி உணவைக் காட்டிலும் எட்டுமடங்கிலானவற்றை நான் அவனது முன்னிலையில் வைப்பேன். துரியோதனனைத் தவிர, எனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, அவரவர் தேர்களில் சென்று அவனை {கிருஷ்ணனை} வரவேற்பார்கள்.

அருள் நிறைந்தவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் {1000} ஆடல் மகளிரும், ஒப்பற்ற கேசவனை {கிருஷ்ணனை} வரவேற்க கால்நடையாகச் செல்வார்கள். ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வரவேற்பதற்காக நகரத்தை விட்டுச் செல்லும் அழகிய மங்கையர் முகத்திரை விலக்கி வெளிப்படையாகவே வெளியே செல்வார்கள். மனைவியர் மற்றும் பிள்ளைகளுடன் கூடிய குடிமக்கள் ஒப்பற்ற மதுசூதனனைக் {கிருஷ்ணனைக்} காணச் செல்லும்போது, காலை கதிரவனிடம் தங்கள் கண்களைச் செலுத்துபவர்களைப் போலவே மரியாதையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தட்டும். எனது கட்டளையின் பேரில், சுற்றிலும் உள்ள கவிகைகள் {விதானங்கள்} அனைத்தும், பதக்கங்களாலும், கொடிகளாலும் நிறைக்கப்படட்டும். கேசவன் {கிருஷ்ணன்} வரும் சாலை, நன்கு நீர் தெளிக்கப்பட்டு, புழுதி நீக்கப்படட்டும்.

துரியோதனனுடையதைவிடச் சிறந்ததான துச்சாசனனின் வசிப்பிடம் தூய்மையாக்கப்பட்டு, தாமதமில்லாமல் நன்கு அலங்கரிக்கப்படட்டும். பல அழகிய கட்டடங்களைக் கொண்ட அந்த மாளிகையே, இனிமையானதும், இன்பம் நிறைந்ததும், அனைத்து காலங்களுக்கும் ஏற்ற செல்வங்களை அபரிமிதமாகக் கொண்டதுமாகும். அந்த வசிப்பிடத்தில்தான் எனது மற்றும் துரியோதனனின் செல்வமனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த விருஷ்ணி குலத்துக்கொழுந்து {கிருஷ்ணன்} எவை எவற்றுக்குத் தகுதியானவனோ அவை அனைத்தும் அவனுக்குக் கொடுக்கப்படட்டும்” என்றான் {திருதராஷ்டிரன்}.

விதுரனின் அறிவுரை! – உத்யோக பர்வம் பகுதி 87-திருதராஷ்டிரனின் நற்பண்புகளை எடுத்துரைத்த விதுரன், தற்போதைய அவனது செயல்பாடுகளுக்காக அவனைக் கடிந்து கொண்டது; கிருஷ்ணனுக்குக் கொடுக்க நினைப்பதெல்லாம் திருதராஷ்டிரனின் அறநோக்கமோ, கிருஷ்ணன் விரும்பியதைக் கொடுப்பதோ அல்ல என்றும், பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கத் திருதராஷ்டிரன் விரும்பவில்லை என்பதே வெளிப்படை என்றும் விதுரன் சொல்வது; கிருஷ்ணன் சமாதான நோக்கத்துக்கு வருவதால், அவனது அறிவுரைப்படி நடப்பதே நல்ல விருந்தோம்பல் என்று விதுரன் திருதராஷ்டிரனை இடித்துரைப்பது…

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மூவுலகத்தாலும் நீர் மதிக்கப்படுகிறீர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் அனைவராலும் விரும்பப்பட்டு மதிக்கப்படுகிறீர். முதிர்ந்தவரான நீர் இந்த வயதில் சொல்வது எதுவும் சாத்திர விதிகளுக்கும், நன்கு செலுத்தப்பட்ட அறிவின் முடிவுக்கும் முரணாக இருக்க இயலாது. ஏனெனில் உமது மனம் எப்போதும் அமைதியாகவே இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் உள்ள எழுத்துகள், சூரியனின் ஒளி, பெருங்கடலின் அலை ஆகியவை போல உம்முள் அறம் நிரந்தரமாகவே வசிக்கிறது.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது எண்ணிலடங்கா அறங்களின் விளைவாக அனைவரும் மதிக்கப்பட்டு, மகிழ்ச்சியூட்டப்படுகிறார்கள். எனவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய நீர் உமது அறங்களைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வீராக. உமக்கு அன்பான உறவினர்கள், நண்பர்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உமது மகன்களின் மொத்த அழிவுக்கு மூடத்தனத்தால் நீரே காரணமாகாதீர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருந்தினனாக வரும் கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நீர் அதிகமாகவே கொடுக்க விரும்புகிறீர். எனினும், கேசவன் {கிருஷ்ணன்} இதைவிட எல்லாம் இன்னும் இன்னும் அதிகமாகப் பெறத் தகுந்தவன், ஏன் மொத்த உலகத்தையுமே கூடப் பெறத் தகுந்தவனே.

உண்மையாக எனது ஆத்மாவின் {உயிரின்} மேல் ஆணையாக நான் சொல்கிறேன், இவை யாவையும், அறநோக்கத்தாலோ, அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்புடையதைச் செய்யும் நோக்கத்தாலோ நீர் கிருஷ்ணனுக்குக் கொடுக்கவில்லை. ஓ! பெரும் செல்வத்தைக் கொடுப்பவரே {திருதராஷ்டிரரே}, இவை யாவும் மோசடி, பொய் மற்றும் நேர்மையற்ற {உமது} தன்மையையே காட்டுகிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வெளிப்புறச் செயல்களால் {மறைக்கப்பட்ட} உமது கமுக்கமான {இரகசிய} காரியங்களை நான் அறிவேன்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஐந்து பாண்டவர்களும் ஐந்து கிராமங்களை மட்டுமே விரும்புகின்றனர். எனினும், நீர் அவற்றைக்கூட அவர்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை. ஆகவே, நீர் {அவர்களுடனான} சமாதானத்துக்கு உடன்பட விரும்பவில்லை. வலிய கரங்களைக் கொண்ட அந்த விருஷ்ணி குலத்து வீரனை {கிருஷ்ணனை}, உமது செல்வத்தைக் கொண்டு உமதாக்க முயல்கிறீர்; ஆனால் அடியிலோ, இதன் மூலம் பாண்டவர்களிடம் இருந்து கேசவனை {கிருஷ்ணனை} நீர் பிரிக்க முயல்கிறீர்.

எனினும், செல்வத்தாலோ, கவனிப்பாலோ, வழிபாட்டாலோ தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து கிருஷ்ணனை உம்மால் பிரிக்க இயலாது என நான் உமக்குச் சொல்கிறேன். கிருஷ்ணனின் பெருமையை நான் அறிவேன்; அர்ஜுனனிடம் அவன் {கிருஷ்ணன்} கொண்டிருக்கும் உறுதியான அர்ப்பணிப்பை நான் அறிவேன்; கேசவனின் {கிருஷ்ணனின்} உயிரான தனஞ்சயனை {அர்ஜுனனை} கிருஷ்ணனால் விட முடியாது என்பதையும் நான் அறிவேன். நீர்ப்பாத்திரத்தால் தனது காலைக் கழுவுவதைத் தவிர, (வழக்கமான} நலன் விசாரிப்புகளைத் தவிர, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} வேறு எந்த விருந்தோம்பலையும் ஏற்கவோ, வேறு பொருளின் மீது தனது கண்களை நிலைக்க வைக்கவோ {செலுத்தவோ} மாட்டன்.

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து மரியாதைகளுக்கும் தகுதி வாய்ந்த அந்த ஒப்பற்றவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மிகவும் ஏற்புடைய விருந்தோம்பலைக் கொடுப்பீராக. ஏனெனில், ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} கொடுக்கக்கூடாத எந்த மரியாதையும் கிடையாது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இருதரப்புக்கும் நன்மை விளைவிக்கும் நோக்கத்துடன் அவன் {கிருஷ்ணன்} குருக்களிடம் வருகிறான். அவன் எதிர்பார்க்கும் அந்த நோக்கத்துக்கு உகந்தவற்றை அந்தக் கேசவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கொடுப்பீராக. துரியோதனனை ஒருபுறத்திலும், பாண்டவர்களை மறுபுறத்திலும் கொண்டு உங்களுக்குள் சமாதானத்தை நிறுவவே கேசவன் {கிருஷ்ணன்} விரும்புகிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனது ஆலோசனைகளைப் பின்பற்றுவீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் அவர்களுக்குத் தந்தையும்; பாண்டவர்கள் உமக்கு மகன்களுமாவர். நீர் முதிர்ந்தவர், அவர்களோ வயதால் உமக்குச் சிறுபிள்ளைகளே. பிள்ளைகளின் மனநிலையில் இருந்து உம்மை மதிக்கும் அவர்களிடம் தந்தையாக நடந்து கொள்ளும்” என்றான் {விதுரன்}.

“கிருஷ்ணனைச் சிறைபிடிப்பேன்!” என்ற துரியோதனன் – உத்யோக பர்வம் பகுதி 88-கிருஷ்ணனைக் குறித்து விதுரன் சொன்னது உண்மையே, இருப்பினும் அச்சத்தால் செய்கிறோம் என்று அவன் நினைக்கக்கூடும் என்பதால் கிருஷ்ணனுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்று துரியோதனன் சொன்னது; கிருஷ்ணனை அவமதிக்கக்கூடாதென்றும், பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொள்வதே சிறந்தது என்றும் பீஷ்மர் சொல்வது; கிருஷ்ணனை சிறையில் அடைத்து, பாண்டவர்களைப் பணிய வைக்கப் போவதாகத் துரியோதனன் சொன்னது; இதற்காகத் துரியோதனனை நிந்தித்த பீஷ்மர், கோபத்தில் அவையை விட்டு எழுந்து சென்றது…

துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}சொன்னான், “உண்மையில் கிருஷ்ணனைக் குறித்து விதுரர் சொன்னது அனைத்தும் உண்மையாகவே சொல்லப்பட்டிருக்கிறது; ஏனெனில் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} பாண்டவர்களிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவும் இருக்கிறான். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} அளிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்ட பல்வேறு வகையான செல்வங்களில் ஒன்றையும் அவனுக்குக் கொடுக்கக்கூடாது. நிச்சயமாக, கேசவன் {கிருஷ்ணன்} நமது வழிபாட்டுக்குத் தகுந்தவனே, ஆனால் காலமும் இடமும் அதற்கு எதிராக இருக்கின்றன. ஏனெனில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {கிருஷ்ணன்} நமது வழிபாட்டைப் பெற்றால், அவன் {கிருஷ்ணன்} மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நாம் அவனை வழிபடுகிறோம் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறிவார்ந்த ஒரு க்ஷத்திரியன் தனக்கு அவமானத்தைத் தரக்கூடிய ஒரு காரியத்தைச் செய்யக்கூடாது, என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மூவுலகங்களிலும் உள்ள மிகுந்த மரியாதைக்குரிய வழிபாட்டுக்கும் தகுந்தவனே நீண்ட கண் கொண்ட கிருஷ்ணன் என்பதை நான் நன்கறிவேன். எனவே, ஓ! ஒப்பற்ற மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது நாம் அவனுக்கு எதையும் கொடுப்பதற்கு எந்த இடமும் இல்லை. ஏனெனில் போர் என்பது தீர்மானிக்கப்பட்ட பிறகு, அது விருந்தோம்பலால் தள்ளிப்போகக்கூடாது” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனது {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட குருக்களின் பாட்டன் {பீஷ்மர்}, விசித்திரவீரியனின் அரச மகனிடம் {திருதராஷ்டிரனிடம்}, “வழிபடப்பட்டாலோ, வழிபடப்படாவிட்டலோ ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} கோபமடைய மாட்டான். எனினும், யாரும் அவனை அவமதிக்க முடியாது. ஏனெனில, கேசவன் அலட்சியப்படுத்தத்தக்கவன் அல்ல. ஓ! வலிமைவாய்ந்தவனே {திருதராஷ்டிரா}, அவன் {கிருஷ்ணன்} என்ன செய்ய நோக்குகிறானோ, அதை, எவராலும், தனது அதிகாரம் அனைத்தினாலும், எந்த வகையிலும் தடுக்க முடியாது. வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணன் சொல்வதைத் தயங்காமல் செய்வாயாக. வாசுதேவனை {கிருஷ்ணனை} வழியாகக் கொண்டு பாண்டவர்களிடம் சமாதானம் கொள்வாயாக. உண்மையில், அறம் சார்ந்த ஆன்மா கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அறம் மற்றும் பொருளுக்கு உகந்ததையே சொல்வான். எனவே, உனது நண்பர்கள் அனைவருடனும் கூடிய நீ, அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்புடையதை மட்டும் சொல்வதே உனக்குத் தகும்” என்றார் {பீஷ்மர்}.

துரியோதனன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா {பிதாமஹரே, பீஷ்மரே}, நான் எந்த வகையிலும், இந்த எனது பெருகும் செழிப்பைப் {செழிப்பு நிறைந்த நாட்டைப்} பாண்டவர்களுடன் பகிர்ந்து கொண்டு வாழ முடியாது. உண்மையில், நான் இப்போது எட்டியிருக்கும் இந்தத் தீர்மானம் பெரியதாகும். அதைக் கேளும். பாண்டவர்களுக்குப் புகலிடமாய் இருக்கும் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} நான் சிறை பிடிப்பேன். நாளை காலை அவன் {கிருஷ்ணன்} இங்கே வருவான்; அவன் {கிருஷ்ணன்} இங்கு அடைபட்டிருக்கும்போது, விருஷ்ணிகளும், பாண்டவர்களும், ஏன் இந்த முழு உலகமும் எனக்கு அடிபணியும். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} நமது நோக்கத்தை யூகிக்க முடியாதபடி அதை நிறைவேற்றவும், அதன் காரணமாக நமக்கு எந்த ஆபத்தும் நேராமல் இருக்கவும் உள்ள வழிமுறைகள் என்ன என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணனைச் சிறைபிடிக்கப் போவதாக, தனது மகன் {துரியோதனன்} சொன்ன அச்சம் தரும் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், தனது ஆலோசகர்களுடன் சேர்ந்து மிகவும் துன்புற்று ஆழமாகக் காயமடைந்தான். பிறகு மன்னன் திருதராஷ்டிரன் துரியோதனனிடம், “ஓ! மனிதர்களில் ஆள்பவனே {துரியோதனா}, மீண்டும் இதை ஒருபோதும் சொல்லாதே. இது பழங்கால வழக்கமல்ல. ரிஷிகேசன் {கிருஷ்ணன்} இங்கே தூதனாக வருகிறான். அஃது ஒருபுறமிருக்க, அவன் {கிருஷ்ணன்} நமது உறவினனும், நமது அன்புக்குரியவனும் ஆவான். அவன் நமக்கு எந்தத் தவறையும் செய்யவில்லை; பிறகு எப்படி அவன் சிறையிலடைக்கப்படத் தகுந்தவனாவான்?” என்றான் {திருதராஷ்டிரன்}.

பீஷ்மர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! திருதராஷ்டிரா, இந்த உனது தீய மகனுக்கான {துரியோதனனுக்கான} காலம் வந்துவிட்டது. தனது நலன் விரும்பிகளால் வேண்டப்பட்டாலும், நன்மையையல்லாமல் அவன் தீமையையே தேர்ந்தெடுக்கிறான். தன் நலன் விரும்பிகளின் வார்த்தைகளைக் கேட்காமல், முள் நிறைந்த பாதையில் நடந்து பாவச் சூழலைக் கொண்ட இந்த இழிந்த தீயவனையே {துரியோதனனையே} நீயும் தொடர்ந்து பின்பற்றிச் செல்கிறாய். கறைபடியா செயல்களைக் கொண்ட கிருஷ்ணனின் தொடர்பு ஏற்படும்போது {கிருஷ்ணனை துரியோதனன் சந்திக்கும்போது}, தனது ஆலோசகர்களுடன் கூடிய இந்த உனது மிகத் தீய மகன் {துரியோதனன்}, அந்தக் கணத்திலேயே அழிக்கப்படுவான். அறம் அனைத்தையும் கைவிட்டிருக்கும் இழிந்தவனும், தீயவனுமான இந்தப் பாவம் நிறைந்தவனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்கத் துணிய மாட்டேன்” என்றார் {பீஷ்மர்}.

கலங்கடிக்கப்படமுடியா ஆற்றல் கொண்டவரும், பாரதக் குலத்தின் முதிர்ந்த தலைவருமான அந்தப் பீஷ்மர், இதைச் சொல்லிவிட்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, எழுந்து, அந்த இடத்தைவிட்டு அகன்றார்” என்றார் {வைசம்பாயனர்}.

நகர் நுழைந்த கிருஷ்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 89-விருஸ்தலவாசிகளிடம் விடைபெற்ற கிருஷ்ணன் ஹஸ்தினாபுரம் வந்தடைந்தது; துரியோதனனைத் தவிர்த்த மற்ற கௌரவர்கள் வழியிலேயே கிருஷ்ணனை எதிர்கொண்டு அழைத்து வந்தது; திருதராஷ்டிரன் மாளிகையில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணன், பிறகு திருதராஷ்டிரனின் அனுமதியுடன் வெளியேறி, விதுரனின் இல்லத்திற்குச் சென்றது; விதுரன் கிருஷ்ணனை விருந்தோம்பலுடன் வரவேற்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(தனது படுக்கையில் இருந்து) அதிகாலையில் எழுந்த கிருஷ்ணன், தனது காலைச் சடங்குகளைச் செய்து, பாரதர்களிடம் இருந்து விடைபெற்று, (குருக்களின்} நகரத்திற்குப் {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான். விருகஸ்தலத்தில் வசிப்போர் அனைவரும் அந்த நீண்ட கரங்களைக் கொண்ட வலியவனுக்கு {கிருஷ்ணனுக்கு} விடை கொடுத்து, அவன் புறப்பட்டதும், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். துரியோதனனைத் தவிர மற்ற தார்தராஷ்டிரர்கள் அனைவரும் சிறந்த ஆடைகளை உடுத்தி, பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் பிறருடன் அவனைச் {கிருஷ்ணனைச்} சந்திக்க வெளியே சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பல்வேறு வகைகளிலான தேர்களில் ஆயிரக்கணக்கான குடிமக்களும், கால்நடையாகப் பலரும் அந்த ரிஷிகேசனைக் {கிருஷ்சனைக்} காண வெளியே வந்தனர்.

களங்கமற்ற செயல்களைக் கொண்ட பீஷ்மர், துரோணர் மற்றும் திருதராஷ்டிரர் மகன்கள் ஆகியோரை வழியிலேயே சந்தித்த அவன் {கிருஷ்ணன்}, அவர்கள் அனைவரும் சூழ நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான். கிருஷ்ணனை மதிக்கும் வகையில் அந்நகர் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. முக்கியமான தெருக்கள் பல்வேறு வகையான ரத்தினங்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அச்சந்தர்ப்பத்தில், ஆண்களோ, பெண்களோ, குழந்தைகளோ எவரும் வீடுகளுக்குள் இல்லை. வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} காண குடிமக்களிடம் அவ்வளவு ஆவல் இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} நகருக்குள் நுழைந்து, அதன் வழியே கடந்து சென்ற போது, குடிமக்கள் அனைவரும் வெளியே வந்து, தெருக்களில் வரிசையாக நின்று தங்கள் சிரங்களைத் தரைவரை தாழ்த்தி அவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து பாடினர்.

உயர்குலப் பெண்கள் நிறைந்திருந்த பெரிய மாளிகைகள், ஒருகட்டத்தில், அவர்களது {அந்தப் பெண்களின்} பாரம் தாங்க முடியாமல் தரையில் விழுந்துவிடுவது போலத் தோன்றின. வாசுதேவனின் குதிரைகள் பெரும் வேகம் கொண்டவை என்றாலும், மனிதர்களின் அடர்த்தியினூடே மிகவும் மெதுவாகவே சென்றது. எதிரிகளைக் கலங்கடிப்பவனான அந்தத் தாமரைக்கண்ணன் {கிருஷ்ணன்}, எண்ணிலடங்கா கட்டடங்கள் நிறைந்த திருதராஷ்டிரனின் சாம்பல் நிற [1] அரண்மனைக்குள் நுழைந்தான். அந்த அரண்மனையின் முதல் மூன்று அறைகளைக் கடந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, விசித்திரவீரியனின் அரச மகனைச் {திருதராஷ்டிரனைச்} சந்தித்தான்

அந்தத் தாசார்ஹ குலத்தின் மகன் {கிருஷ்ணன்}, தனது முன்னிலையை அணுகியதும், பெரும் புகழையுடைய அந்தப் பார்வையற்ற ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, துரோணர், பீஷ்மர், கிருபர், சோமதத்தன், மன்னன் பாஹ்லீகன் ஆகியோரோடு எழுந்து நின்றான். ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} மதிக்கும் வண்ணம் அங்கே இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அந்த விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்}, பெரும் புகழைப் படைத்த மன்னன் திருதராஷ்டிரனை அணுகியதும், நேரம் எதையும் வீணடிக்காமல், அவனையும் {திருதராஷ்டிரனையும்}, பீஷ்மரையும் முறையான வார்த்தைகளால் வழிபட்டான்.

நிறுவப்பட்ட பயன்பாடுகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு வழிபாட்டை வழங்கிய பின்னர், அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, பிற மன்னர்களை வயது மூப்பின் அடிப்படையில் வணங்கவும் வாழ்த்தவும் செய்தான். பிறகு அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஒப்பற்ற துரோணரையும், அவரது மகனையும் {அஸ்வத்தாமனையும்}, பாஹ்லீகனையும், கிருபரையும், சோமதத்தனையும் அணுகினான். அந்த அறையில், அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தங்கத்தாலான இருக்கை ஒன்று ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு ஓரிடத்தில் இருந்தது. திருராஷ்டிரனின் வேண்டுகோளுக்கிணங்க, அச்யுதன் {கிருஷ்ணன்} அந்த இருக்கையில் அமர்ந்தான். திருதராஷ்டிரனின் புரோகிதர்கள் ஒரு மாடு, தேன், தயிர்க்கடைசல் மற்றும் நீரை ஜனார்த்தனனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} காணிக்கையாக வழங்கினர். [2]

விருந்தோம்பல் சடங்குகள் முடிந்த பிறகு, ஒவ்வொருவர் உறவுமுறைக்கேற்ப அவர்களுடன் கேலி செய்து கொண்டும், சிரித்துக் கொண்டும் சிறிது நேரம் கோவிந்தன் {கிருஷ்ணன்} குருக்கள் சூழ அங்கே இருந்தான். திருதராஷ்டிரனால் வழிபடப்பட்டு, மதிக்கப்பட்ட அந்த எதிரிகளைக் கலங்கடிக்கும் ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, மன்னனின் {திருதராஷ்டிரனின்} அனுமதியுடன் வெளியே வந்தான். குருக்கள் அனைவரையும் அவர்களது சபையில் முறையாக வணங்கிய மாதவன் {கிருஷ்ணன்}, விதுரனின் இனிமையான இல்லத்திற்குச் சென்றான்; தனது இல்லத்திற்கு வந்த தாசார்ஹ குலத்து ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} அணுகி, அனைத்து மங்கலகரமான மற்றும் விரும்பத்தக்க காணிக்கைகளாலும் அவனை {கிருஷ்ணனை} விதுரன் வழிபட்டான்.

அவன் {விதுரன் கிருஷ்ணனிடம்}, “ஓ! தாமரைக்கண்ணா {கிருஷ்ணா}, உடல் கொண்ட அனைத்து உயிரினங்களுக்கும் நீயே உள்ளுறையும் ஆன்மாவாக இருப்பதால், உனது வருகையால் நான் உணர்ந்த மகிழ்ச்சியை உனக்குச் சொல்லி என்ன பயன்?” என்றான். உபசரிப்பும், வரவேற்பும் முடிந்த பிறகு, அறநெறியின் அனைத்துக் கொள்கைகளையும் அறிந்த விதுரன், மதுசூதனனான கோவிந்தனிடம் பாண்டவர்களின் நலன் குறித்து விசாரித்தான்.

கடந்த காலமும், வருங்காலமும், எவனிடம் நிகழ்காலமாக இருக்கிறதோ, அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்து, அந்த விருஷ்ணிகள் தலைவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களால் விரும்பப்படுபவனாக, அவர்களிடம் நட்புணர்வோடு இருப்பவனாக, கல்விமானாக, அறநெறியில் உறுதியுள்ளவனாக, நேர்மையாளனாக, (பாண்டவர்களுக்கு எதிராக) எந்தக் கோபத்தையும் அடையாதவனாக, அறிவுள்ளவனாக விதுரனை அறிந்து, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} செயல்பாடுகள் அனைத்தையும் விரிவாக அவனிடம் {விதுரனிடம்} சொல்ல ஆரம்பித்தான்” என்றார் {வைசம்பாயனர்}.

“கண்மணி நகுலனைக் காண்பேனா?” என்றாள் குந்தி – உத்யோக பர்வம் பகுதி 90அ-விதுரனைச் சந்தித்த கிருஷ்ணன், பிற்பகலில் குந்தியைச் சந்தித்தது; நீண்ட காலத்திற்குப் பிறகு கிருஷ்ணனைக் கண்ட குந்தி அழுவது; தன் மகன்கள் எப்படியெல்லாம் ஆடம்பரமாக வளர்க்கப்பட்டார்கள் என்பதைச் சொல்வது; அப்படிச் சொகுசாக வளர்ந்தவர்கள் காட்டில் எப்படி வாழ்கிறார்கள் என்று சொல்லி குந்து அழுவது; பாண்டவர்கள் ஒவ்வொருவர் திறமைகளையும் குணங்களையும் கிருஷ்ணனிடம் சொல்லி, அவர்கள் ஒவ்வொருவரும் எப்படியிருக்கிறார்கள் என்று குந்தி கேட்பது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “எதிரிகளைத் தண்டிப்பவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விதுரனைச் சந்தித்தபிறகு, பிற்பகலில், தனது அத்தையான {தந்தையின் சகோதரியான} பிருதையிடம் {குந்தியிடம்} சென்றான். சூரியனைப் போல ஒளிரும் முகத்தைக் கொண்ட கிருஷ்ணன், தனது இல்லத்திற்கு வந்ததைக் கண்ட அவள் {குந்தி}, தனது கரங்களால் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு தனது மகன்களை நினைத்து அழுது புலம்ப ஆரம்பித்தாள்.

தனது பெரும்பலமிக்க மகன்களின் துணைவனான விருஷ்ணி குலத்துக் கோவிந்தனை {கிருஷ்ணனை} நீண்ட காலம் கழித்துக் கண்டதால், பிருதையின் {குந்தியின்} கண்ணீர் வேகமாக வழிந்தது. வீரர்களில் முதன்மையான கிருஷ்ணன், விருந்தோம்பல் சடங்குகள் முடிந்து இருக்கையில் அமர்ந்த பிறகு, துயரால் சுண்டிய முகம் கொண்ட பிருதை {குந்தி – கிருஷ்ணனிடம்}, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், “ஆரம்பக் காலத்திலிருந்தே பெரியோர்களுக்காக மரியாதையாக எப்போதும் காத்திருந்தவர்களும் {பணிவிடை செய்தவர்களும்}; தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நட்பால் இணைந்தவர்களும்; நண்பர்களுடனும் பணியாட்களுடனும் வாழத் தகுதியிருப்பினும், வஞ்சனையால் தங்கள் நாடு பறிக்கப்பட்டு விலகியவர்களும், கோபத்தையும் மகிழ்ச்சியையும் அடக்கி, அந்தணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்தவர்களும், உண்மைநிறைந்த பேச்சு கொண்டவர்களுமான எனது பிள்ளைகள், நாட்டையும், இன்பங்களையும் கைவிட்டு, துக்கத்தில் இருந்த என்னையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்று எனது இதயத்தின் வேரையே பிடுங்கிப் போட்ட ஒப்பற்ற அந்தப் பாண்டுமகன்கள் {பாண்டவர்கள்}, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துயரத்திற்குத் தகாதவர்களாக இருப்பினும் துன்பப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}, ஐயோ, சிங்கங்களும், புலிகளும், யானைகளும் நிறைந்த ஆழ்ந்த காட்டுக்குள் எப்படி வாழ்ந்தார்கள்?

குழந்தையாக இருந்தபோதே {சிறு வயதிலேயே} தந்தையைப் பறிகொடுத்து என்னால் மென்மையாக {அன்பாக} வளர்க்கப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும், பெற்றோர் இருவரையும் காணாமல் அந்தப் பெருங்காட்டில் எப்படி வாழ்ந்தார்கள்? ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்கள் தங்கள் சிறுவயதிலிருந்தே சங்குகள், பேரிகைகள் மற்றும் புல்லாங்குழல்களின் இசையால் தங்கள் படுக்கையில் இருந்து எழுப்பப்பட்டவர்கள். வீட்டில் இருக்கும்போது, உயர்ந்த அரண்மனை அறைகளில் மென்மையான போர்வைகள் மற்றும் ரங்கு மான் தோல் ஆகியவற்றில் உறங்கியவர்கள். காலையில் யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, சங்கு, கைத்தாள {ஜால்ரா} ஒலியாலும், யாழ் மற்றும் குழலின் இசையாலும் எழுப்பப்பட்டவர்கள். அந்தணர்களால் உச்சரிக்கப்பட்ட புனித ஒலி கொண்ட பாடல்களால் அதிகாலையிலேயே துதிக்கப்பட்டு, அவர்களில் தகுந்தவர்களை ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் நகைகளால் வணங்கியவர்கள். மறுபிறப்பாள வகையின் ஒப்பற்ற உறுப்பினர்கள் {அந்தணர்கள்} அடைந்த விருந்தோம்பலுக்குப் பதிலாக, அவர்களிடம் மங்கல ஆசிகளைப் பெற்றவர்கள். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அப்படிப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}; இரைதேடும் விலங்குகளின் கீச்சொலி மற்றும் அலறல்கள் போன்ற துன்பங்களுக்குத் தகாத அவர்கள்; ஆழமான காடுகளில் உறக்கம் கொண்டார்கள் என்பதை நம்பமுடியவில்லை. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தொழில்முறை காரிகள் {ஓதுவார்கள்} மற்றும் பாணர்களின் துதிமுழக்கங்கள், பாடல் மகளிரின் தேன்குரலுடன் கூடிய கைத்தாளங்கள், பேரிகைகள், சங்குகள் மற்றும் குழல்களின் இசையால் படுக்கையில் இருந்து எழுப்பபட்டவர்கள், ஐயோ, காட்டு விலங்குகளின் அலறல்களுடன் கூடிய ஆழ்ந்த காட்டுக்குள் எப்படி எழுந்தார்கள்?

பணிவு கொண்டவனும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதி கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டவனும், காமத்தையும், தீமையையும் வீழ்த்தி, எப்போதும் நீதியின் பாதையில் நடப்பவனும், அம்பரீஷன், மாந்தாதா, யயாதி, நகுஷன், பரதன், திலீபன், உசீநரனின் மகனான சிபி மற்றும் பழங்கால அரசமுனிகள் தாங்கியது போலப் பெரும்பாரத்தைத் தாங்க இயன்றவனும், அற்புத குணமும், மனநிலையும் கொண்டவனும், அறத்தை அறிந்தவனும், கலங்கடிக்கப்படாத ஆற்றல் கொண்டவனும், தான் கொண்ட சாதனைகள் அனைத்தின் விளைவாக, மூவுலகத்திற்கும் ஏகாதிபதியாகக் கூடிய தகுதி கொண்டவனும், கல்வி மற்றும் மனநிலையால் நீதி நிறைந்த குருக்கள் அனைவரிலும் முதன்மையானவனும், அழகானவனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனும், எதிரியற்றவனும், சுத்தமான தங்கம் போன்ற நிறமுடையவனும் அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனுமான அந்த யுதிஷ்டிரன் எப்படி இருக்கிறான்?

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், காற்றின் வேகம் கொண்டவனும், பலமிக்கவனும், பாண்டு மகன்களில் எப்போதும் கோபம் நிறைந்தவனும், தனது சகோதரர்களுக்கு எப்போதும் நன்மை செய்பவனும், அதனால் அவர்கள் அனைவருக்கும் அன்பானவனும், உறவினர்கள் அனைவருடனும் கூடிய கீசகனைக் கொன்றவனும், குரோதவாசர்கள், ஹிடிம்பன் {இடும்பன்}, பகன் ஆகியோரைக் கொன்றவனும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஆற்றலும், காற்று தேவனுக்கு {வாயுத்தேவனுக்கு} நிகரான வலிமையும் கொண்டவனும், பயங்கரமானவனும், மாதவனுக்கு இணையான கோபம் கொண்டவனும், அடிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கோபம்நிறைந்த பாண்டு மகனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், கோபம், வலிமை, பொறுமையின்மை, ஆகியவற்றை ஒடுக்கி, தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, தனது அண்ணனின் {யுதிஷ்டிரனின்} கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து இருப்பவனும், அளவற்ற வீரம் கொண்டவனும், விருகோதரன் {பீமன்} என்ற தனது பெயருக்கு நியாயம் கற்பிப்பவனும், கதாயுதத்தைப் போன்ற கரங்களைக் கொண்டவனும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பாண்டுவின் வலிமைநிறைந்த இரண்டாவது மகனுமான பீமசேனன் எப்படி இருக்கிறான்?

ஓ! கிருஷ்ணா, பழங்காலத்தின் ஆயிரங்கரங்கள் படைத்த அர்ஜுனனின் {கார்த்தவீர்யார்ஜுனனின்} பெயரைக் கொண்டிருப்பதால், தன்னை எப்போதும் மேலானவனாகக் கருதும் அந்த இருகரங்கள் கொண்டவனும், ஒரே இழுப்பில் ஐநூறு {500} கணைகளை அடிக்கவல்லவனும், மன்னன் கார்த்தவீரியனுக்கு இணையாக ஆயுதங்களைப் பயன்படுத்தும் {மூன்றாவது} பாண்டுமகனும், சக்தியில் ஆதித்தியனுக்கு இணையானவனும், புலனடக்கத்தில் பெரும் முனிவருக்கு நிகரானவனும், பொறுமையில் பூமிக்கு நிகரானவனும், ஆற்றலில் இந்திரனுக்கு நிகரானவனும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தனது ஆற்றலால் பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரைக்காட்டிலும் பரந்த நாட்டைக் குருக்களுக்கு உண்டாக்கிக் கொடுத்தவனும், பிரகாசத்தில் சுடர் விடுபவனும், கரங்களின் வலிமைக்காகப் பாண்டவர்களால் கொண்டாடப்படுபவனும், தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கலங்கடிக்கப்படாத ஆற்றல் கொண்டவனும், தன்னிடம் போரிட்ட எதிரியை உயிருடன் தப்பவிடாதவனும், ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, அனைவரையும் வென்றவனும், எவராலும் வெல்லப்படாதவனும், தேவர்களுக்கு வாசவனைப் {இந்திரனைப்} போலப் பாண்டவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவனும், உனது சகோதரனும் {மைத்துனனும்} நண்பனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} இப்போது எப்படி இருக்கிறான்?

அனைத்து உயிர்களிடமும் கருணையுள்ளவனும், பணிவு கொண்டவனும், பலமிக்க ஆயுதங்களை அறிந்தவனும், மென்மையானவனும் {மென்மையான மேனியும்}, நுட்பமானவனும் {நுட்பமான அறிவும்}, அறம் சார்ந்தவனும், எனக்கு அன்பானவனும், ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்க வில்லாளியும், வீரனும், சபைகளின் ரத்தினமும், வயதில் இளையவனும், தனது அண்ணன்களுக்குச் சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்தவனும், அறம், பொருள் அறிந்தவனும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தன் மனோநிலைக்காக, தனது அண்ணன்களால் மெச்சப்படுபவனும், நன்னடத்தை மற்றும் உயர்ந்த ஆன்மா கொண்ட எனது மகனும், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, வீரர்களில் முதன்மையானவனும், தனது அண்ணன்களுக்கு அடக்கமாகக் காத்திருப்பவனும் {பணிவிடை செய்பவனும்}, என்னிடம் மரியாதை கொண்டவனும், மாத்ரியின் மகனுமான அந்தச் சகாதேவனைக் குறித்து எனக்குச் சொல்வாயாக.

மென்மையானவனும், வயதால் இளையவனும், வீரமுடையவனும், மேனி அழகு கொண்டவனும், நம் அனைவரிடமும் தனது சகோதரர்களிடமும் அன்புடன் இருக்கும் பாண்டுமகனும், {தனது சகோதரர்களைப் பொறுத்தவரையில்}, தனி உடல் கொண்டு நடக்கும் தங்கள் உயிர் போன்றவனும், பல்வேறு வகையான போர்முறைகளை அறிந்தவனும், பெரும் பலம் கொண்டவனும், வலிய வில்லாளியும், ஆடம்பரமாக வளர்க்கப்பட்டவனும், அன்புக்குரிய எனது மகனுமான அந்த நகுலன், ஓ! கிருஷ்ணா, இப்போது நல்ல உடல்நிலையும் மனநிலையும் கொண்டிருக்கிறானா? வலிமைமிக்கத் தேர்வீரனும், அனைத்து ஆடம்பரங்களிலும் வளர்க்கப்பட்டவனும், துயருறத் தகாதவனுமான எனது நகுலனை நான் மீண்டும் காண்பேனா? ஓ! வீரா {கிருஷ்ணா} கண்ணிமைக்கும் குறுகிய நேரம் கூட நகுலனிடம் இருந்து பார்வையை அகற்றினால் அமைதியடையாத நான், இன்றும் உயிருடன் இருப்பதைப் பார்” {என்றாள் குந்தி}.

குந்தியின் சோகம்! – உத்யோக பர்வம் பகுதி 90ஆ-திருதராஷ்டிரன் மகன்களின் கைகளில் திரௌபதி அடைந்த அவமானத்தைக் கிருஷ்ணனிடம் குந்தி சொன்னது; அதைவிடப் பெரிய துயரம் தனக்கு வேறு என்ன இருக்க முடியும் என்று கேட்டது; சூதும் வேட்டையும் பாண்டவர்களுக்குத் தகுமா என்று கேட்டது; தர்மத்தின் நிமித்தமாகப் பாண்டவர்கள் நிச்சயம் வெல்வார்கள் என்று சொன்னனது; அர்ஜுனன் பிறந்தபோது அசரீரி செய்த அறிவிப்பைச் சொன்னது; நீண்ட நாளாகக் காணாதிருப்பதால் தனக்குத் தன் பிள்ளைகளும், தன் பிள்ளைகளுக்குத் தானும் இறந்ததற்குச் சமமாக இருப்பதாகக் கிருஷ்ணனிடம் குந்தி சொன்னது.

{குந்தி தொடர்ந்தாள்}, “ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது மகன்களுக்கு மேலாக, துருபதனின் மகள் {திரௌபதி} எனது அன்புக்குரியவள் ஆவாள். உயர்குலப் பிறப்பும், பெரும் அழகும் கொண்ட அவள் {திரௌபதி} அனைத்து சாதனைகளையும் கொண்டவளாவாள். உண்மை நிறைந்த பேச்சுடன் கூடிய அவள் {திரௌபதி}, தனது மகன்களின் துணையை விட்டு, தனது தலைவர்களின் துணையைத் தேர்ந்தெடுத்தாள். உண்மையில், தனது அன்புக்குரிய மகன்களை விட்டுவிட்டு, பாண்டுவின் மகன்களைப் பின்தொடர்ந்து சென்றாள். ஒரு காலத்தில் பணியாட்களின் பெரிய வரிசையால் காக்கப்பட்டவளும் {பணிவிடை செய்யப்பட்டவளும்}, இன்ப நோக்கம் அனைத்திலும் தனது கணவர்களால் புகழப்பட்டவளும், ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, மங்கலக்குறிகள் மற்றும் சாதனைகள் அனைத்தையும் கொண்டவளுமான அந்தத் திரௌபதி இப்போது எப்படி இருக்கிறாள்?

அக்னிக்கு நிகரான சக்தியைக் கொண்டவர்களும், எதிரிகளை அடிப்பவர்களும், வலிய வில்லாளிகளுமான ஐந்து வீரக் கணவர்களைக் கொண்டிருந்தும், ஐயோ, துருபதன் மகள் {திரௌபதி} அடைந்த துன்பம் பெரியதே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, பதினான்கு {14} நீண்ட வருடங்களாகப் பாஞ்சால இளவரசியான எனது மருமகளை {திரௌபதியை} நான் காணவில்லை. தொடர் இடர்களுக்கு இரையான அவளும், அவ்வளவு காலம் தன் மகன்களைக் காணவில்லை. இப்படிப்பட்ட நிலையைக் கொண்ட துருபதனின் மகளே {திரௌபதியே}, தடங்கலில்லா இன்பத்தை அனுபவிக்க இயலாத போது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, ஒருவன் அனுபவிக்கும் மகிழ்ச்சி, அவனது செயல்களின் கனி அல்ல என்றே தோன்றுகிறது.

வலுக்கட்டாயமாகச் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்ட திரௌபதியை நினைக்கும்போது, பீபத்சுவோ {அர்ஜுனனோ}, யுதிஷ்டிரனோ, பீமனோ, நகுலனோ, சகாதேவனோ என் பற்றுக்கு ஆட்படவில்லை. கோபமும், பேராசையும் கொண்ட இழிந்த துச்சாசனன், மாதவிலக்கான காலத்தில் ஒற்றையாடையுடுத்தியிருந்த திரௌபதியை, அவளது மாமனார் {திருதராஷ்டிரரின்} முன்னிலையிலேயே இழுத்துவந்து, குருக்கள் அனைவரின் பார்வைக்கும் அவளை {திரௌபதியை} வெளிப்படுத்தியபோது ஏற்பட்டதைவிடக் கனமான துயரம் எனக்கு வேறு எதுவும் கிடையாது.

அங்கே இருந்தவர்களில் மன்னன் பாஹ்லீகன், கிருபர், சோமதத்தன் ஆகியோர் இந்தக் காட்சியால் துளைக்கப்பட்டனர் என்பது அறியப்பட்டதே. ஆனால், அந்தச் சபையில் இருந்தோர் அனைவரைக்காட்டிலும் நான் விதுரனையே வழிபடுகிறேன். கல்வியாலோ, செல்வத்தாலோ ஒருவன் விருந்தோம்பலுக்குத் தகுந்தவனாகமாட்டான். ஒருவன் தனது மனநிலையாலேயே மதிப்புக்குரியவன் ஆகிறான். ஓ! கிருஷ்ணா, பெரும் புத்திசாலித்தனமும், ஆழ்ந்த ஞானமும் கொண்ட ஒப்பற்ற விதுரனின் குணம், இந்த முழு உலகத்தையும் (அவன் அணிந்திருக்கும்) ஆபரணம் போல அலங்கரிக்கிறது” என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கோவிந்தனின் {கிருஷ்ணனின்} வரவால் மகிழ்ச்சியையும், (தனது மகன்கள் நிமித்தமான) சோகத்தாலும் பாதிக்கப்பட்ட பிருதை {குந்தி}, தனது பல்வேறு துயரங்களுக்குமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாள். அவள் {குந்தி}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, பழங்காலத்துத் தீய மன்னர்கள் அனைவரின் தொழிலான சூதும், மான்வேட்டையும், பாண்டவர்களின் மகிழ்ச்சிக்குகந்த தொழிலாகுமா? ஓ! கேசவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் மகன்களால் தங்கள் சபையில் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரின் முன்னிலையில் இழுத்துவரப்பட்டு, மரணத்தைவிடக் கொடுமையான அவமானங்கள் கிருஷ்ணையின் {திரௌபதியின்} மீது குவிக்கப்பட்டதையும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது மகன்கள் தங்கள் தலைநகரில் இருந்து விரட்டப்பட்டுக் காட்டில் உலவியதையும், இன்னும் எனது பல்வேறு துயரங்களையும் நினைக்கும்போதெல்லாம் எனக்கு {எனது மனம்} எரிகிறது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு அந்நியரின் வீட்டில் அடைந்து கிடந்து, தங்கள் காலத்தை மறைந்திருந்து கழிக்க வேண்டிய நிலையைக் காட்டிலும் எனக்கோ, எனது மகன்களுக்கோ வேறு எதுவும் அதிக வலியைத் தராது.

என் மகன்களைத் துரியோதனன் துரத்தியது முதல் பதினான்கு {14} வருடங்கள் முழுமையாக முடிந்திருக்கிறது. பாவங்களின் கனிகளை {பலன்களை} துன்பம் அழிக்கும், அறத்தகுதியைச் சார்ந்தே மகிழ்ச்சி இருக்கும் என்றால், இவ்வளவு துன்பங்களுக்குப் பிறகு, மகிழ்ச்சி என்பது எங்களுடையதே ஆகும். (தாய்ப்பாசத்தைப் பொறுத்தவரை) நான் திருதராஷ்டிரர் மகன்களிடமும் எனது மகன்களிடமும் எந்தப் பாகுபாட்டையும் காட்டவில்லை. அந்த உண்மையின் காரணமாகவே, ஓ! கிருஷ்ணா, பாண்டவர்களது எதிரிகள் கொல்லப்பட்டு, அவர்களால் நாடும் மீட்கப்பட்டு, தற்போதைய கலவர நிலையில் இருந்து வெளியே பாதுகாப்பாக வரும் அவர்களோடு {பாண்டவர்களோடு} உன்னையும் நான் நிச்சயம் காண்பேன். அறத்தை ஒட்டியிருக்கும் உண்மைநிறைந்த நோன்பை நோற்றப் பாண்டவர்கள், எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

எனினும், தற்போதைய எனது சோகங்களின் காரியத்தில் நான் என்னையோ, சுயோதனனையோ {துரியோதனனையோ} பழி கூறாமல் எனது தந்தையை {சூரசேனரை} மட்டுமே கூறுவேன். செல்வந்தன் ஒருவன் பணத்தைக் கொடையாகக் கொடுப்பது போல, என் தந்தை {சூரசேனர்}, என்னைக் குந்திபோஜருக்குக் கொடுத்துவிட்டார். சிறுபிள்ளையாகக் கைகளில் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த என்னை, உனது பாட்டன் {சூரசேனர்}, ஓ! கேசவா {கிருஷ்ணா}, தனது நண்பரான ஒப்பற்ற குந்திபோஜருக்குக் கொடுத்துவிட்டார். எனது தந்தையாலும், எனது மாமனாராலும் கைவிடப்பட்ட நான், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, ஓ! மாதவா, தாங்கமுடியாத துயரங்களால் பீடிக்கப்பட்டு, வாழ்வதில்தான் என்ன பயன் இருக்க முடியும்? {பிறந்த இடத்திலும் கைவிடப்பட்டேன், புகுந்த இடத்திலும் கைவிடப்பட்டேன். அப்படிப்பட்ட நான் வாழ்ந்துதான் என்ன பயன்?}.

சவ்யசச்சின் {அர்ஜுனன்} பிறந்த அன்றிரவு, பிரசவ அறையில், உருவமற்ற ஒரு குரல், “இந்த உனது மகன் உலகம் முழுதையும் வெல்வான். இவனது புகழ் சொர்க்கத்தையே எட்டும். பெரும் போரில் குருக்களைக் கொன்று, நாட்டை மீட்கும் உனது மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் சேர்ந்து, மூன்று பெரிய வேள்விகளை நடத்துவான்” என்றது. நான் அந்த அறிவிப்பை சந்தேகிக்கவில்லை. படைப்பைத் தாங்கிப்பிடிக்கும் தர்மத்தை {அறத்தை} நான் வணங்குகிறேன். தர்மம் {அறம்} என்பது கட்டுக்கதை {தொன்மம்} அல்ல என்றால், ஓ! கிருஷ்ணா, அந்த உருவமற்ற குரல் சொன்ன அனைத்தையும் நீ சாதிப்பாய்.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, எனது பிள்ளைகளின் பிரிவைப் போன்ற வலிநிறைந்த துயரை, எனது கணவரின் இழப்போ, செல்வத்தின் இழப்போ, குருக்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட பகையோகூட எனக்கு அளிக்கவில்லை. ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை}, அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனை} என் முன்னே காணாமல், என் இதயம் என்ன சமாதானத்தை அடையும்? ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, யுதிஷ்டிரன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} ஆகியோரை பதினான்கு {14} வருடங்களாக நான் காணவில்லை. நீண்ட நாட்கள் காணாமல் போனவர்களை [1] இறந்ததாகக் கருதி மனிதர்கள் ஈமச்சடங்குகளைச் செய்கின்றனர். நடைமுறைப்படி, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனக்கு எனது பிள்ளைகள் அனைவரும் இறந்தவராவர். அதே போல, நானும் அவர்களுக்கு இறந்தவளாவேன்” {என்றாள் குந்தி}

இருள் விலகிய குந்தி! – உத்யோக பர்வம் பகுதி 90இ-கிருஷ்ணனிடம் குந்தி தனது சோகங்களைப் பகிர்ந்து கொண்டு தனது மகன்களுக்குச் சொல்ல வேண்டியதைக் கிருஷ்ணனிடம் சொன்னது; குந்திக்கு ஆறுதலைச் சொன்ன கிருஷ்ணன், பாண்டவர்களின் நலத்தையும் மகிழ்ச்சியையும் சொன்னது; கிருஷ்ணனைப் புரிந்து கொண்ட குந்தி இருள் விலகி கிருஷ்ணனைப் புகழ்ந்தது…

{குந்தி கிருஷ்ணனிடம் தொடர்ந்தாள்}, “ஓ! மாதவா {கிருஷ்ணா}, அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரனிடம், “ஓ! மகனே {யுதிஷ்டிரனே} உனது அறம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, அறத்தகுதி அழிந்து போகாத வகையில் செயல்படுவாயாக” என்று {நான் சொன்னதாகச்} சொல்வாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பிறரைச் சார்ந்து வாழ்வது இழிவே. அற்பத்தனம் மூலம் {கெஞ்சி வாழ்வதன் மூலம்} வாழ்வாதாரத்தைப் பெறுவதைவிட மரணமே மேலானது.

தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, எப்போதும் தயாராக இருக்கும் விருகோதரனிடமும் {பீமனிடமும்}, “ஒரு க்ஷத்திரியப் பெண் எதை நோக்கமாகக் கொண்டு ஒரு மகனைப் பெறுகிறாளோ, அந்நிகழ்வுக்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் எதையும் சாதிக்காமல் நேரத்தை நழுவ விட்டீர்களேயானால், இப்போது உலகமனைத்தாலும் மதிக்கப்படும் நீங்கள், பின்பு, இழிந்ததாகக் கருதப்படும் ஒன்றையே செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் இகழ்ச்சியை அடைந்தால், நான் உங்களை என்றென்றைக்கும் கைவிட்டுவிடுவேன். நேரம் வரும்போது, அன்பிற்குரிய {தனது} உயிர்கூட விடப்பட வேண்டும்” என்று சொல்வாயாக.

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, க்ஷத்திரிய வழக்கங்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் மாத்ரியின் மகன்களிடம் {நகுல சகாதேவனிடம்}, “க்ஷத்திரிய வழக்கங்களின் படி வாழ விரும்பும் மனிதனின் இதயத்தை, தன் ஆற்றலால் வெல்லப்பட்ட பொருட்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும். எனவே, ஆற்றலால் {வீரத்தால்} அடையத்தக்க இன்ப {மகிழ்ச்சியைத் தரக்கூடிய} பொருட்களை வெல்ல முயலுங்கள்” என்று சொல்வாயாக.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, அங்கே சென்று, ஆயுதம் தாங்கியோர் அனைவரிலும் முதன்மையானவனும், பாண்டுவின் வீரமகனுமான அர்ஜுனனிடம், “திரௌபதி சுட்டிக்காட்டும் பாதையில் நீ நடப்பாயாக” என்று சொல்வாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, அண்டத்தை அழிப்பவனைப் போன்ற பீமனும் அர்ஜுனனும், கோபத்தால் தூண்டப்படும்போது, தேவர்களையே கூட அவர்களால் கொல்ல இயலும் என்பது நீ அறிந்ததே. அவர்களது மனைவியான கிருஷ்ணையை {திரௌபதியை} துச்சாசனனும், கர்ணனும் சபைக்கு இழுத்து வந்து அவமதித்துப் பேசியது, அவர்களுக்கு {பீமனுக்கும் அர்ஜுனனுக்கும்} இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகும்.

குரு {கௌரவத்} தலைவர்களின் முன்னிலையிலேயே பெரும்பலமிக்க சக்தி கொண்ட பீமனை துரியோதனனே அவமதித்திருக்கிறான். அந்த நடத்தைக்கான கனியை {பலனை} அவன் {துரியோதனனே} அறுவடை செய்வான் {அடைவான்} என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், எதிரியால் தூண்டப்பட்டால், விருகோதரன் {பீமன்} அமைதியை அறியமாட்டான். உண்மையில், ஒரு முறை தூண்டப்பட்டுவிட்டால், நீண்டகாலத்துக்கு அதைப் பீமன் மறக்க மாட்டான். அந்த எதிரியும், அவனது கூட்டாளிகளும் அழியும் வரை அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்} மறக்க மாட்டான். நாட்டை இழந்தது என்னைத் துயர்கொள்ளச் செய்யவில்லை; பகடையில் தோற்றதும் என்னைத் துயர்கொள்ளச் செய்யவில்லை. ஒற்றையாடை உடுத்தியிருந்தவளும், ஒப்பற்றவளும், அழகானவளுமான பாஞ்சால இளவரசி {திரௌபதி} சபைக்கு இழுத்துவரப்பட்டு, கசப்பான வார்த்தைகளைக் {அவள்} கேட்குமாறு செய்யப்பட்டதே என்னை மிகவும் துன்புறுத்தியது. ஓ! கிருஷ்ணா, இதைவிட எனக்குப் பெரிய வருத்தத்தை அளிக்கக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்?

ஐயோ, க்ஷத்திரிய வழக்கங்களுக்கு என்றும் அர்ப்பணிப்புடன் இருந்தவளும், பெரும் அழகுடையவளுமான அந்த இளவரசி {திரௌபதி}, மேனி சுகமில்லாத போது {மாதவிலக்காய் இருந்த போது}, இப்படிக் கொடூரமாக நடத்தப்பட்டாளே. வலிமைமிக்கப் பாதுகாவலர்களைக் கொண்டவளாய் இருந்தாலும், யாருமற்றவளைப் போல, அப்போது ஆதரவற்று இருந்தாளே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உன்னையும், பலமிக்க மனிதர்களில் முதன்மையான அந்த ராமனையும் {பலராமனையும்}, வலிமைமிக்கத் தேர் வீரனான பிரத்யும்னனையும் எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் பாதுகாவலர்களாய்க் கொண்டிருந்தும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, எனது மகன்களான யாரும் வெல்லமுடியாத பீமன், புறமுதுகிடாத விஜயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் உயிரோடு இருந்தும், நான் இத்தகு துயரைத் தாங்க வேண்டியிருப்பது நிச்சயம் விசித்திரமாகவே இருக்கிறது!” என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி அவளால் {குந்தியால்} சொல்லப்பட்டதும், பார்த்தனின் {அர்ஜுனனின்} நண்பனான சௌரி {கிருஷ்ணன்}, தன் மகன்களைக் குறித்த துயரில் பாதிக்கப்பட்டிருந்த தனது அத்தை {தந்தையின் சகோதரி} பிருதையைத் {குந்தியைத்} தேற்றினான். மேலும் அந்த வாசுதேவன் {கிருஷ்ணன் – குந்தியிடம்}, “ஓ! அத்தை {குந்தி}, உன்னைப் போன்ற எந்தப் பெண் இந்த உலகில் இருக்கிறாள்? மன்னன் சூரசேனருக்கு மகளான நீ, திருமணத்தால் அஜமீட குலத்தை {குருகுலத்தை} அடைந்தாய். உயர்ந்த பிறப்பும், உயர்ந்த மணமும் கொண்ட நீ, ஒரு பெரிய தடாகத்தில் இருந்து மற்றொரு பெரிய தடாகத்திற்கு மாற்றப்பட்ட தாமரையைப் போன்றவளாவாய்.

செழிப்புகள் அனைத்தையும், பெரும் நற்பேறையும் பெற்ற நீ, உனது கணவரால் {பாண்டுவால்} வணங்கப்பட்டாய். அறங்கள் அனைத்தையும், பெரும் அறிவையும் உடைய நீ, இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்வதே உனக்குத் தகும். உறக்கம், தளர்வு, கோபம், மகிழ்ச்சி, பசி, தாகம், குளிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றில் இருந்து மீண்ட உனது பிள்ளைகள், வீரர்களுக்குத் தகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். பெரும் முயற்சியும், பெரும் பலமும் கொண்ட உனது மகன்கள், தாழ்ந்த மற்றும் சராசரியானவர்களுக்கு மட்டுமே மனநிறைவைத் தருகின்றதும், புலன்களால் பெறப்படுவதுமான வசதிகளால் பாதிக்கப்படாமல், வீரர்களுக்குத் தகுந்த இன்பத்தை எப்போதும் தொடர்ந்து செல்கிறார்கள். அதே போலச் சராசரி ஆசைகளைக் கொண்ட சிறிய மனிதர்களைப் போல, அவர்கள் மனநிறைவை அடைவதில்லை.

மகிழ்ச்சிகரமானதையும், துன்பகரமானதையும், அறிவுடையோர், அதே இன்பத்துடனோ துன்பத்துடனோ பெற்றுக் கொள்கிறார்கள். உண்மையில், குறைந்த அல்லது சராசரி மனிதர்களை மனநிறைவு கொள்ளச் செய்யும் வசதிகளால் பாதிக்கப்பட்டு, எந்த வகையான உற்சாகமும் அற்ற மந்த நிலைக்கு இணையான நிலையையே சாதாரண மனிதர்கள் விரும்புகின்றனர். எனினும், மேன்மையானவர்களோ, மனித துயரங்களில் தீவிரமானதையோ, அல்லது, மனிதனுக்கு அளிக்கப்படும் மகிழ்ச்சிகள் அனைத்திலும் உயர்ந்ததையோ தான் விரும்புகிறார்கள். அறிவுடையோர் எல்லை கடந்தவற்றிலேயே {அதீத [தீவிர] நிலைகளிலே} இன்புறுகின்றனர். இடைநிலைகளில் அவர்கள் இன்பத்தைக் காண்பதில்லை; எல்லை கடந்தவற்றையே {அதீதமான இரு நிலைகளையே} அவர்கள் இன்பமாகக் கருதுகிறார்கள். அதே வேளையில், {இரு நிலைகளுக்கும்} இடைநிலையைத் {அதீத நிலை இரண்டுக்கும் நடுவில் இருப்பதைத்} துயரமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள் என் மூலமாக உன்னை வணங்குகிறார்கள். தாங்கள் நன்றாக இருப்பதாகச் சொல்லி, உனது நலத்தை விசாரிக்கிறார்கள். தங்கள் எதிரியைக் கொன்று, செழிப்பை முதலீடாக்கிக் கொண்டு, முழு உலகத்தின் தலைவர்களாக அவர்களை {பாண்டவர்களை} நீ விரைவில் காண்பாய்”, என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிக் கிருஷ்ணனால் தேற்றப்பட்டவளும், தன் மகன்கள் குறித்த துயரத்தால் பாதிக்கப்பட்டவளுமான குந்தி, தனது புரிதலை தற்காலிகமாக இழந்திருந்ததால் விளைந்த இருளை விரைவாக அகற்றி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எதைச் செய்வது முறையானது என்று நீ கருதுகிறாயோ, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, சிறு கபடமும் இல்லாமல், நீதியைத் தியாகம் செய்யாமல் அது செய்யப்படட்டும். ஓ! கிருஷ்ணா, உனது உண்மை {சத்தியம்} மற்றும் உனது பரம்பரையின் பலம் என்ன என்பதை நான் அறிவேன். உனது நண்பர்கள் சம்பந்தமானவற்றைச் செய்து முடிக்க, என்ன தீர்ப்பையும், என்ன ஆற்றலையும் நீ வெளிப்படுத்துவாய் என்பதையும் நான் அறிவேன். எங்கள் குலத்தில், நீயே அறம் {தர்மம்}, நீயே உண்மை {சத்தியம்}, நீயே தவத்துறவுகளின் உருவகமும் ஆவாய். நீயே அந்தப் பெரும் பிரம்மம், அனைத்தும் உன் மீதே இருக்கின்றன. எனவே, நீ சொன்னது அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்” என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவளை {குந்தியை} வலம் வந்து, அவளிடம் பிரியாவிடை பெற்றவனும் வலிய கரங்களைக் கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, {அங்கிருந்து} துரியோதனனின் மாளிகைக்குப் புறப்பட்டான்” என்றார் {வைசம்பாயனர்}.

“உணவை ஏன் மறுக்கிறாய்!” துரியோதனன்! – உத்யோக பர்வம் பகுதி 91-குந்தியிடம் விடைபெற்றுச் சென்ற கிருஷ்ணன் துரியோதனனை அடைந்தது; துரியோதனன் கொடுக்க முன்வந்த உணவைக் கிருஷ்ணன் மறுத்தது; மறுத்ததற்கான காரணத்தைத் துரியோதனன் கேட்க, அதைக் கிருஷ்ணன் சொன்னது; கிருஷ்ணன் விதுரனின் இல்லத்தை அடைந்து அங்கே குந்தியின் கைகளால் உண்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிருதையிடம் {குந்தியிடம்} விடைபெற்றுக் கொண்டு, அவளை வலம் வந்தவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், சௌரி என்றும் அழைக்கப்பட்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, புரந்தரனின் {இந்திரனின்} வசிப்பிடத்தைப் போன்றதும், அழகிய இருக்கைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பெரும் செல்வம் நிறைந்ததுமான துரியோதனனின் அரண்மனைக்குச் சென்றான். வாயில் காப்போரால் தடுக்கப்படாத அந்தப் பெரும் புகழ் கொண்ட வீரன் {கிருஷ்ணன்}, தொடர்ச்சியாக மூன்று கட்டுகளைக் கடந்து, சுடர்விட்டுப் பிரகாசிப்பதும், மலையின் சிகரத்தைப் போன்று உயர்ந்ததும், மேகத்திரள் போன்று தெரிவதுமான அந்த மாளிகைக்குள் நுழைந்தான் {உப்பரிகையில் ஏறினான்}.

அங்கே, குருக்கள் அனைவராலும் சூழப்பட்டு, ஆயிரம் {1000} மன்னர்களுக்கு மத்தியில் தனது அரியணையில் அமர்ந்திருந்த வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரன் மகனைக் {துரியோதனனைக்} கண்டான். மேலும், அங்கே, துச்சாசனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் தங்களுக்குரிய இருக்கைகளில் துரியோதனனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பதையும் கண்டான். அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} சபைக்குள் நுழைந்ததும், அமைச்சர்களுடன் கூடியவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, அந்த மதுசூதனனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தும் விதமாகத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்தான்.

பிறகு, கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரர் மகன்களையும், அவனது ஆலோசகர்கள் அனைவரையும், அங்கே இருந்த மன்னர்கள் அனைவரையும், அவரவர் வயதுக்குத் தகுந்தபடி நலம் விசாரித்தான். பிறகு, அந்த விருஷ்ணி குலத்து அச்யுதன் {கிருஷ்ணன்}, தங்கத்தாலானதும், தங்க வேலைப்பாடுகள் கொண்டதுமான அழகிய இருக்கை ஒன்றில் அமர்ந்தான். குரு {கௌரவ} மன்னன் {துரியோதனன்}, ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஒரு மாட்டையும், தயிர்க்கடைசலையும், நீரையும் காணிக்கையாக்கி, தனது அரண்மனைகள், மாளிகைகள் மற்றும் முழு நாட்டையும், அவனது {கிருஷ்ணனின்} பயன்பாட்டுக்காக வைத்தான். பிறகு அங்கிருந்த மன்னர்கள் அனைவருடன் கூடிய கௌரவர்கள், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் தனது இருக்கையில் இருந்த கோவிந்தனை {கிருஷ்ணனை} வழிபட்டனர்.

வழிபாடுகள் முடிந்ததும், மன்னன் துரியோதனன், வெற்றியாளர்களில் முதன்மையானவனான அந்த விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனை}, தனது இல்லத்தில் உண்ண அழைத்தான். எனினும், கேசவன் {கிருஷ்ணன்} அந்த அழைப்பை ஏற்கவில்லை. குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} மத்தியில் அமர்ந்திருந்தவனும், குரு {கௌரவ} மன்னனுமான துரியோதனன், மென்மையான குரலில், ஆனால், தனது வார்த்தைகளுக்குப் பின்னால் மறைபொருளுடன் கூடிய ஏமாற்றுத்தனங்களுடன், கர்ணனை {ஓரக்கண்ணால்} பார்த்துக் கொண்டே, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} உரையாடி, பிறகு {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உனக்காகத் தயாராக வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான உணவுகளையும் பானங்களையும், ஆடைகளையும், படுக்கைகளையும் நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்? உனது உதவியை நீ இரு தரப்புக்கும் அளித்திருக்கிறாய்; நீ இரு தரப்புகளின் நன்மையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய். மேலும், நீ திருதராஷ்டிரரின் உறவினர்களில் முதன்மையானவனும், அவரால் மிகவும் விரும்பப்படுபவனும் ஆவாய். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அறம், பொருள் ஆகிய இரண்டையும், அனைத்தின் விபரங்களையும் நீ முழுமையாக அறிவாய். எனவே, ஓ! சக்கரம் மற்றும் கதாயுதம் தாங்குபவனே {கிருஷ்ணா}, உனது மறுப்புக்கான உண்மைக் காரணம் என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்மா கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தனது வலிய (வலது) கரத்தை உயர்த்தி, அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மறுமொழியாக, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில், காரணங்கள் நிறைந்தவையும், தெளிவானவையும், தனித்துவமானவையும், சரியாக உச்சரிக்கப்பட்டவையும், ஓர் எழுத்தும் விடுபடாதவையுமான அற்புத வார்த்தைகளில், “ஓ! மன்னா {துரியோதனா}, தங்கள் காரியங்கள் வெற்றியடைந்த பிறகு மட்டுமே, தூதர்கள் உண்ணவும், வழிபாட்டை ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள். எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, எனது காரியம் வெற்றியடைந்ததும், நீ என்னையும், எனது பணியாட்களையும் உற்சாகப்படுத்தலாம்” என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிப் பதிலுரைக்கப்பட்டதும், திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, மீண்டும் ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ எங்களிடம் இப்படி நடந்து கொள்வது உனக்குத் தகாது. {வந்திருக்கும் காரியத்தில்} நீ வெற்றியடைந்தாலும், வெற்றியடையாவிட்டாலும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நீ எங்களுடன் கொண்ட உறவின் காரணமாகவே நாங்கள் உன்னை நிறைவு செய்ய முயல்கிறோம். எனினும், ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, எங்களது அந்த முயற்சியெல்லாம் கனியற்றதாகத் தோன்றுகிறது. அல்லது, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நட்பாலும் அன்பாலும் நாங்கள் வழங்கும் வழிபாட்டை நீ ஏற்காததன் விளைவில் எந்தக் காரணத்தையும் நாங்கள் காணவில்லை. {எங்கள் விருந்தோம்பலை நீ ஏற்காததற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை}. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, எங்களுக்கு உன்னிடம் பகையோ, சண்டையோ கிடையாது. எனவே, சிந்தித்துப் பார்த்தால், இது போன்ற அந்த வார்த்தைகள் உனக்குத் தகாது என்பது உனக்குத் தெரியும்” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்து ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தனது கண்களைத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} மற்றும் அவனது ஆலோசகர்கள் மீது செலுத்தியபடி {கிருஷ்ணன் துரியோதனனிடம்}, “ஆசையாலோ, கோபத்தாலோ, அகந்தையாலோ, பொருளீட்டவோ, வாதத்தின் பொருட்டோ, மயக்கத்தாலோ நான் ஒருபோதும் அறத்தைக் கைவிடமாட்டேன். துயரத்தில் இருக்கும்போது ஒருவன் மற்றொருவரின் உணவைக் கொள்கிறான். எனினும், தற்போதோ, ஓ! மன்னா {துரியோதனா}, உனது எந்தச் செயலாலும் நீ என்னிடம் அன்பை ஈர்க்கவில்லை, அல்லது நானும் துயரில் மூழ்கிவிடவில்லை.

ஓ! மன்னா {துரியோதனா}, அனைத்து அறங்களையும் கொண்டவர்களும், அன்பான மற்றும் மென்மையான உனது சகோதரர்களுமான பாண்டவர்களை, அவர்கள் பிறந்ததிலிருந்தே, எக்காரணமும் இன்றி நீ வெறுக்கிறாய். பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ கொண்டிருக்கும் நியாயமற்ற வெறுப்பு உனக்குக் கெடுதியையே செய்யும். பாண்டுவின் மகன்கள் அனைவரும் அறத்திற்கு அர்ப்பணிப்போடு இருப்பவர்கள். உண்மையில், எவனால் அவர்களுக்குச் சிறு காயத்தையும் ஏற்படுத்த முடியும்? அவர்களை வெறுப்பவன், என்னையே வெறுக்கிறான்; அவர்களை விரும்புபவன், என்னையே விரும்புகிறான். அறம்சார்ந்த பாண்டவர்களுக்கும் எனக்கும் பொதுவான  ஆன்மா ஒன்றே {நாங்கள் வேறு வேறு அல்ல} என்பதை அறிந்து கொள்வாயாக.

காமம் மற்றும் கோபத்தின் தூண்டுதலைத் தொடர்ந்து, தன் ஆன்மாவின் இருளால், அனைத்து நல்ல குணங்களையும் கொண்டவனை வெறுத்து, அவனைக் காயப்படுத்த முயல்பவன் மனிதர்களில் படுபயங்கரமானவனாகக் கருதப்படுகிறான். அனைத்து நற்குணங்களையும் கொண்டிருந்தாலும், கோபம் நிறைந்த பாதகன் ஒருவன் மனிதர்களில் படுபயங்கரமானவனாகக் கருதப்படுகிறான். கட்டுபாடற்ற ஆன்மா கொண்ட கோபம் நிறைந்த அந்தப் பாதகன், தனது அறியாமையாலும் பேராசையாலும், அனைத்து மங்கலகரமான குணங்களையும் கொண்ட தனது இரத்த உறவினர்களை வெறுத்தால், அவன் தனது செழிப்பில் நீண்ட காலம் இன்புற முடியாது. {அவனால் தனது செழிப்பை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ள முடியாது}. மறுபுறம், தனது நல்ல அலுவல்களால், நற்குணங்கள் கொண்ட மனிதர்களை வென்றெடுக்கும் ஒருவன், தனது இதயத்தில் அவர்கள் மீது வெறுப்பைக் கொண்டிருந்தாலும், செழிப்பையும், புகழையும் சதாகாலமும் அவன் அனுபவிப்பான். எனவே, தீமையால் அசுத்தமான இந்த உணவு அனைத்தும், என்னால் உண்ணத்தக்கது அல்ல. விதுரரால் வழங்கப்படும் உணவை மட்டுமே, நான் உண்ணலாம் என நான் நினைக்கிறேன்” என்று மறுமொழி கூறினான் {கிருஷ்ணன்}.

தனது விருப்பங்களுக்கு எதிரான எதையும் எப்போதும் தாங்கிக் கொள்ள இயலாதவனான துரியோதனனிடம் இதைச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} சுடர்மிகும் அரண்மனையில் இருந்து வெளியே வந்தான். உயர்ந்த ஆன்மாவும், வலிய கரங்களையும் கொண்ட அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, அம்மாளிகையில் இருந்து வெளியே வந்து, ஒப்பற்ற விதுரனின் இல்லத்தை நோக்கி அடியெடுத்து வைத்தான். அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்}, விதுரனின் இல்லத்தில் தங்கியிருந்த போது, துரோணர், கிருபர், பீஷ்மர், பாஹ்லீகன் மற்றும் பல கௌரவர்கள் அங்கே வந்தனர். அங்கே வந்த அந்தக் கௌரவர்கள் மாதவனிடம், அந்த வீர மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, எங்கள் இல்லங்களையும், அதில் இருக்கும் செல்வங்களையும் நாங்கள் உன் ஆளுகைக்குள் வைக்கிறோம்” என்றனர்.

பெரும் சக்தி கொண்ட அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, அவர்களிடம், “நீங்கள் செல்லலாம். உங்கள் காணிக்கைகளால் நான் பெருமையடைகிறேன்” என்றான். அந்தக் குருக்கள் அனைவரும் சென்ற பிறகு, விதுரன், அந்தத் தாசார்ஹ குலத்தின் வீழாத வீரனை {கிருஷ்ணனை}, விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களுடன் கவனித்து உற்சாகப்படுத்தினான். அந்த ஒப்பற்ற கேசவனின் {கிருஷ்ணனின்} முன்பு, குந்தி, சுத்தமானதும், சுவை நிறைந்ததுமான உணவைக் அபரிமிதமாக வைத்தாள். அதைக் கொண்டு, மதுசூதனன் {கிருஷ்ணன்}, முதலில் அந்தணர்களை நிறைவு செய்தான். உண்மையில், நிறையச் செல்வங்களுடன் சேர்த்து அந்த உணவின் ஒரு பகுதியை வேதமறிந்த பல அந்தணர்களுக்குக் கொடுத்தான். பிறகு, விதுரனால் வழங்கப்பட்ட சுவை நிறைந்த சுத்தமான உணவில் மீந்ததைக் கொண்டு, மருதர்களுக்கு மத்தியில் இருக்கும் வாசவனைப் {இந்திரனைப்} போல, தனது பணியாட்களுடன் சேர்ந்து அவன் உண்டான்”, என்றார் {வைசம்பாயனர்}.

விதுரனின் அன்பு ! – உத்யோக பர்வம் பகுதி 92-திரண்டிருக்கும் படைகளால் செருக்குற்றிருக்கும் துரியோதனன் கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்க மாட்டான் என்றும்; கிருஷ்ணனின் வருகையைத் திட்டமிடப்படாத ஒன்றாகத் தான் கருதுவதாகவும், கௌரவர்களுக்கு மத்தியில் கிருஷ்ணன் செல்லாதிருப்பதே நலம் என்றும் விதுரன் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கேசவன் {கிருஷ்ணன்} (உணவு)உண்டு புத்துணர்ச்சி பெற்றதும், இரவில், விதுரன் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, இந்த உனது வருகை நன்கு தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இல்லை. ஏனெனில், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டின் விதிகளையும் மீறுபவனாவான். புகழை விரும்புபவனாக இருப்பினும், தீயவனாகவும், கோபம் நிறைந்தவனாகவும் இருந்து கொண்டு, பிறரை அவமித்து வருகிறான். முதியோர் கட்டளைகளுக்கு அவன் {துரியோதனன்} கீழ்ப்படிவதில்லை.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவன் {துரியோதனன்}, சாத்திரங்களை மீறுபவனும், அறியாமை கொண்ட தீய ஆன்மா கொண்டவனும், ஏற்கனவே விதியில் மூழ்கியவனும், எளிதில் வசப்படுத்த முடியாதவனும், அவனுக்கு நன்மை செய்ய முயல்பவர்களுக்குத் தீமை செய்யும் மனநிலை கொண்டவனும் ஆவான். அவனின் {துரியோதனனின்} ஆன்மா, ஆசையாலும் காமத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது. அவன் {துரியோதனன்} தன்னைத்தானே அறிஞன் என மூடத்தனத்தால் கருதிக் கொள்கிறான். உண்மையான தனது நண்பர்கள் அனைவருக்கும் அவன் எதிரியாக இருக்கிறான். எப்போதும் சந்தேகத்துடன், தனது ஆன்மா மீது எவ்விதக் கட்டுபாடுமின்றி, நன்றி கெட்டவனாகி, அறம் அனைத்தையும் கைவிட்ட அவன் {துரியோதனன்}, இப்போது பாவத்துடன் காதலில் இருக்கிறான்.

பண்படுத்தப்படாத புரிதலைக் கொண்ட மூடனான அவன் {துரியோதனன்}, புலன்களுக்கு அடிமையாய், காமம் மற்றும் பேராசையின் தூண்டுதலுக்கு எப்போதும் அடிபணிந்தவனாய், செய்யப்பட வேண்டிய ஒவ்வொரு செயலிலும் தயக்கம் உள்ளவனாய் இருக்கிறான். இவற்றையும், இன்னும் பல தீமைகளையும் அவன் {துரியோதனன்} கொண்டிருக்கிறான். அவனுக்கு நன்மை யாதென நீ சுட்டிக் காட்டினாலும், செருக்காலும் கோபத்தாலும் அவன் அவற்றை அலட்சியப்படுத்துவான்.

பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஜெயத்ரதன் ஆகியோரிடம் அவன் {துரியோதனன்} பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறான். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சமாதானத்தில் தன் இதயத்தை அவன் செலுத்தவில்லை. கர்ணனுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்கள் {கௌரவர்கள்}, ‘பீஷ்மர், துரோணர் மற்றும் பிற வீரர்களைப் பாண்டவர்களால் {எதிர்த்துப்} பார்க்கக்கூட இயலாது எனும் போது, அவர்களுடன் {இந்த கௌரவர்களுடன்} அவர்கள் {அந்த பாண்டவர்கள்} போரிடுவதைக் குறித்து என்ன சொல்வது’ என்ற உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார்கள். மட்டுப்பட்ட பார்வை கொண்டவனான முட்டாள் துரியோதனன், ஒரு பெரிய படையைக் கூட்டிவிட்டதால், தனது நோக்கங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுகிறான்.

அவனது {துரியோதனனின்} எதிரிகளை, கர்ணன், தனியாளவே வெல்லத் தகுந்தவன் என்ற தீர்மானத்திற்குத் திருதராஷ்டிரரின் முட்டாள் மகன் {துரியோதனன்} வந்திருக்கிறான். எனவே, அவன் {துரியோதனன்} சமாதானத்திற்கு உடன்படமாட்டான்.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீயோ இருதரப்புக்கும் இடையில் சமாதானத்தையும், சகோதர உணர்வுகளையும் நிறுவ விரும்புகிறாய். உண்மையில், பாண்டவர்களுக்கு உரிமையிருந்தாலும் கூட, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு அவர்களது பங்கைக்} கொடுப்பதில்லை என்ற முடிவுக்குத் திருதராஷ்டிரரின் மகன்கள் அனைவரும் வந்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வாயாக. அப்படிப்பட்ட தீர்மானத்துடன் இருக்கும் அவர்களிடம் {கௌரவர்களிடம்} உனது வார்த்தைகள் வீணாவது நிச்சயம். ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எங்கே நல்ல வார்த்தைகளுக்கும், தீய வார்த்தைகளுக்கும் ஒரே விளைவு இருக்கிறதோ, அங்கே, காது கேளாதவன் முன்பு பாடுபவன் போல, அறிவுள்ள ஒரு மனிதன், தனது மூச்சைக்கூட வீணாக்க மாட்டான்.

சண்டாளர்கள் கூட்டத்திற்கு முன்பான ஓர் அந்தணன் போல, ஓ! மாதவா {கிருஷ்ணா}, அறியாமைகொண்டவர்களும், இழிந்தவர்களும், தீயவர்களும், மதிப்புக்குரிய அனைவரையும் மதிக்காதவர்களுமான அவர்களுக்கு மத்தியில் உனது வார்த்தைகளுக்கு மரியாதை இருக்காது. அவனிடம் நீ எந்த வார்த்தைகளைப் பேசினாலும் அது முற்றிலும் பலனற்றதாகவே இருக்கும். ஓ! கிருஷ்ணா, தீய மனம் கொண்ட இந்த இழிந்தவர்களுக்கு மத்தியில் அவர்களுடன் ஒன்றாக நீ அமர்வது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. ஓ! கிருஷ்ணா, எண்ணிக்கையில் வலுவாக, நீதியற்றவர்களாக, மூடர்களாக, தீய ஆன்மா கொண்டவர்களாக இருக்கும் அவர்களை {கௌரவர்களை} எதிர்த்து அங்கே நீ பேசப்போவது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.

அவர்கள் முதியோரை வழிபடாததன் விளைவாகவும், செழிப்பு, செருக்கு ஆகியவற்றால் குருடானதன் விளைவாகவும், இளமையின் செருக்கு மற்றும் கோபத்தாலும், அவர்களுக்கு முன்னிலையில் நீ வைக்கப் போகும் நல்ல அறிவுரையை அவர்கள் ஏற்கவே மாட்டார்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவன் {துரியோதனன்} பலமான படையைத் திரட்டியிருக்கிறான். மேலும், அவன் {துரியோதனன்} உன்மீது சந்தேகம் கொண்டிருக்கிறான். எனவே, அவன் உனது எந்த ஆலோசனைக்கும் கீழ்ப்படியவே மாட்டான்.

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தற்போதைய நிலையில், இந்திரன் தலைமையிலான தேவர்களே வந்தாலும், போர்க்களத்தில் தங்களை வீழ்த்த முடியாது என்ற உறுதியான நம்பிக்கையில் திருதராஷ்டிரர் மகன்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். எப்போதும் விளைவுகளை உண்டாக்கும் உனது வார்த்தைகள், இது போன்ற நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டவர்களிடமும், காமம் மற்றும் கோபத்தின் தூண்டுதல்களை எப்போதும் பின்பற்றுபவர்களிடமும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. தனது யானைப் படை, தேர்ப்படை மற்றும் வீரமிகுந்த காலாட்படை ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் மூடனான தீய துரியோதனன், அச்சங்கள் அனைத்தும் விலகிய நிலையில், முழு உலகமும் ஏற்கனவே தன்னால் அடக்கப்பட்டதாகக் கருதுகிறான். உண்மையில், திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, எந்த எதிரிகளும் அற்ற பரந்த பேரரசுக்காகப் பேராசைப் படுகிறான். எனவே, அவனிடம் சமாதானம் கொள்வது என்பது அடையப்பட முடியாதது ஆகும்.

தன் உடைமையாக இருக்கும் அனைத்தும் மாற்றமில்லாமல் தனதே என அவன் {துரியோதனன்} கருதுகிறான். ஐயோ, துரியோதனனுக்காகப் பூமியில் ஏற்படப்போகும் அழிவு அருகிலிருப்பதாகத் தெரிகிறதே. ஏனெனில், க்ஷத்திரிய வீரர்கள் அனைவருடன் கூடிய பூமியின் மன்னர்கள், விதியால் உந்தப்பட்டு, பாண்டவர்களுடன் போரிட விரும்பி ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள். அந்த மன்னர்கள் அனைவரும் உன்னுடன் பகை கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, அவர்கள் அனைவரும் உன்னால் தங்கள் உடைமைகளை இழந்தவர்களாகவும் இருக்கின்றர். உன்னிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, அந்த வீர ஏகாதிபதிகள் அனைவரும் கர்ணனுடன் சேர்ந்து கொண்டு, திருதராஷ்டிரன் மகன்களுடன் {கௌரவர்களுடன்} ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருக்கின்றனர். தங்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனுடன் இணைந்திருக்கின்றனர்.

ஓ! தாசார்ஹ குலத்து வீரா {கிருஷ்ணா}, அவர்களுக்கு மத்தியில் நீ நுழைவது மெச்சத்தகுந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {கிருஷ்ணா}, தீய ஆன்மாக்களைக் கொண்ட எண்ணற்ற உனது எதிரிகள் ஒன்றாக அமர்ந்திருக்கையில், அவர்களுக்கு மத்தியில் நீ எப்படிச் செல்வாய்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, உண்மையில், தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவன் நீ என்பதையும், ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, உனது ஆண்மை மற்றும் புத்திக்கூர்மையையும் நான் அறிவேன். ஓ! மாதவா {கிருஷ்ண}, உன்னிடம் நான் கொண்ட அன்பானது, பாண்டுவின் மகன்களிடம் நான் கொண்டிருப்பதற்கு ஈடானதாகும். எனவே, நட்பு, மரியாதை மற்றும் எனது பாசத்தினாலேயே நான் இந்த வார்த்தைகளை உனக்குச் சொல்கிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே {கிருஷ்ணா}, உடல்படைத்த அனைத்து உயிர்களின் உள்ளுறை ஆன்மாவாக இருக்கும் உன்னைக் காண்பதில் நான் அடையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்ன தேவைதான் இருக்கிறது?” என்றான் {விதுரன்}.

என்னைக் காயப்படுத்த முயன்றால்!” கிருஷ்ணன் ! – உத்யோக பர்வம் பகுதி 93-விதுரன் சொன்னதைப் புகழ்ந்த கிருஷ்ணன், தான் ஹஸ்தினாபுரம் வந்த நோக்கத்தைச் சொன்னது; சமாதானம் ஏற்பட்டால் புண்ணியம் கிட்டும், ஏற்படாவிட்டால் மனசாட்சிக்கு நிறைவேற்படும் என்று சொன்ன கிருஷ்ணன்…

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் விதுரனிடம்} சொன்னான், “உண்மையில், பெரும் ஞானம் கொண்டவர் சொல்ல வேண்டியதே அஃது; உண்மையில், பெரும் முன்னறிவு கொண்டவர் சொல்ல வேண்டியதே அஃது; உண்மையில், உம்மைப் போன்ற ஒருவன், என்னைப் போன்ற நண்பனுக்குச் சொல்ல வேண்டியதே அஃது; உண்மையில், அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றை நன்கு அறிந்த உம்மால் சொல்லத்தகுந்ததே அஃது; ஓ! விதுரரே, எனக்குத் தந்தையும் தாயும் போன்ற உம்மால் சொல்லத்தகுந்ததே அஃது. நீர் என்னிடம் கூறியது நிச்சயம் உண்மையானது; பாராட்டுக்குத் தகுதியானது; மற்றும் அறிவுக்கு இசைவானது. எனினும், ஓ! விதுரரே, நான் வந்ததற்கான காரணத்தைக் கவனமாகக் கேளும்.

ஓ! விதுரரே, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} தீய தன்மையையும், அவன் தரப்பை அடைந்திருக்கும் க்ஷத்திரியர்களின் பகையையும் நன்கு அறிந்தே குருக்களிடம் நான் வந்திருக்கிறேன். யானைகள், தேர்கள் மற்றும் குதிரைகளுடன் கூடிய முழு உலகமும் பேராபத்தில் மூழ்கி மரணவலைக்குள் அகப்படுவதில் இருந்து அதை விடுவிப்பவன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவான். ஓர் அறச்செயலைச் செய்யத் தன் திறமைகளில் சிறந்தவற்றால் {இயன்றவரை} முயன்று, ஒரு மனிதன் தோற்றாலும், ஒருபுறம் அது தோல்வியாக இருந்தாலும், அந்தச் செயல் ஈட்டிய தகுதி {புண்ணியம்} அவனுடையதாகிறது, என்பதில் சிறு ஐயத்தையும் நான் கொள்ளவில்லை. ஒரு மனிதன் பாவம்நிறைந்த ஒரு செயலைச் செய்ய மனதில் நினைத்திருந்தாலும், அவன் அதை உண்மையில் செய்யவில்லையென்றால், அந்தச் செயலின் கெட்ட தகுதி {பாவம்} அவனுடையதாகாது என்பதைச் சாத்திரம் மற்றும் அறம் ஆகியவற்றை அறிந்தவர்கள் அறிவார்கள்.

ஓ! விதுரரே, போரில் கொல்லப்படப்போகும் குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் சமாதானத்தைக் கொண்டுவர நான் உள்ளப்பூர்வமாக முயல்வேன். (அவர்கள் அனைவருக்கும் மேல் தொங்கிக் கொண்டிருக்கும்) பயங்கரமான பேராபத்து, குருக்களின் நடத்தையில்தான் தன் தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில், துரியோதனன் மற்றும் கர்ணன் ஆகியோரின் நேரடி செயல்பாட்டின் காரணமாகவே, இந்த இருவரின் தலைமையில் பிற க்ஷத்திரியர்கள் அதைப் {அந்தப் பேராபத்தைப்} பின்தொடர்கிறார்கள். ஆபத்தில் மூழ்கப்போகும் ஒரு நண்பனைத் தனது வேண்டுதலின் மூலம் காக்க முயலாத ஒருவனை, இழிந்தவனாகவே கற்றோர் கருதுகின்றனர். தனது வலிமையில் சிறந்ததால் {இயன்றவரை} முயன்று, தன் நண்பனின் முடியைப் பற்றி இழுக்கும் அளவுக்குச் சென்றாவது, முறையற்ற செயலில் இருந்து அந்த நண்பனை விலகச்செய்ய முயல வேண்டும். இப்படி ஒருவன் {அந்த மனிதன்} செயல்படும்போது, அவனுக்குப் பழி நேராமல், புகழை அறுவடை செய்கிறான்.

எனவே, ஓ! விதுரரே, அறம் மற்றும் பொருளுக்கு ஏற்புடையதும், தற்போதைய பேரிடரை விலக்கவல்லதுமான நன்மையை விளைவிப்பதுமான எனது நல்ல ஆலோசனைகளைத் தனது ஆலோசகர்களுடன் சேர்ந்து ஏற்பதே திருதராஷ்டிரர் மகனுக்குத் {துரியோதனனுக்குத்} தகும். எனவே, திருதராஷ்டிரர் மகன்களுக்கும், பாண்டவர்களுக்கும், பூமியில் உள்ள அனைத்து மன்னர்களுக்கும் நன்மையைக் கொண்டு வரவே நான் உள்ளப்பூர்வமாக முயற்சி செய்வேன். (எனது நண்பர்களுக்கான) நன்மையைக் கொண்டுவர நான் முயலும்போது, துரியோதனன் என்னைத் தவறாக எடுத்துக் கொண்டால், நான் எனது மனசாட்சிக்கு நிறைவுடன் இருப்பேன். உறவினர்களுக்கிடையில் சச்சரவு உண்டாகும்போது, இடைநிலை வேலைகளை {மத்தியஸ்த வேலைகளை} ஏற்பவனே உண்மையான நண்பனாவான்.

நீதியற்றவர்களும், மூடர்களும், பகையாளர்களுமான அவர்கள் {கௌரவர்கள்}, ‘கோபக்கார குருக்களும், பாண்டவர்களும், தங்களுக்குள் ஒருவரையொருவர் கொல்வதைத் தடுக்கத் தன்னால் {கிருஷ்ணனால்} முடியுமென்றாலும், கிருஷ்ணன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை’ என்று பின்னர்ச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். உண்மையில், இருதரப்புக்கும் உதவி செய்யவே நான் இங்கே வந்திருக்கிறேன். சமாதானத்தைக் கொண்டுவர நான் முயற்சி செய்வதால், நான் மன்னர்கள் அனைவரின் நிந்தனையில் இருந்து தப்புவேன்.

அறம் மற்றும் பொருள் நிறைந்த எனது மங்கலகரமான வார்த்தைகளைக் கேட்ட பிறகும், மூடனான துரியோதனன் அதை ஏற்கவில்லையென்றால், அவன் {துரியோதனன்} தன் விதியையே {மரணத்தையே} அழைத்துக் கொள்வான். ஓ! உயர்ந்த ஆன்மா கொண்டவரே {விதுரரே}, பாண்டவர்களின் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல், என்னால் குருக்களிடம் {கௌரவர்களிடம்} சமாதானத்தை உண்டாக்க முடியுமென்றால், எனது நடத்தை உயர்ந்த தகுதியைப் {புண்ணியத்தைப்} பெற்றதாகக் கருதப்படும், கௌரவர்களும் மரண வலைகளில் இருந்து விடுதலை பெறுவார்கள்.

கெடுதியில்லாததும், நீதிக்கு இசைவானதும், அறிவு நிறைந்ததுமான நான் சொல்லப்போகும் வார்த்தைகளைத் திருதராஷ்டிரர் மகன்கள் கவனமாகக் கேட்டால், எனது நோக்கமான சமாதானம் எட்டப்படும். (அதற்குத் தூதனாக இருந்த) என்னைக் கௌரவர்கள் வழிபடுவார்கள். மறுபுறம், அவர்கள் {கௌரவர்கள்} எனக்குக் காயமேற்படுத்த முயன்றால், பூமியில் உள்ள அனைத்து மன்னர்களும் ஒன்றாகக் கூடி வந்தாலும், கோபமடைந்திருக்கும் சிங்கத்திற்கு முன் நிற்க இயலாத மான் கூட்டம் போல, அவர்கள் எனக்கு ஈடாக இருக்கமாட்டார்கள் என்பதை நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “யாதவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் விருஷ்ணி குலத்துக் காளை {கிருஷ்ணன்} இவ்வாறு சொல்லிவிட்டு, தனது மென்மையான படுக்கையில் உறங்குவதற்காகப் படுத்தான்.”

சபையை அடைந்த கிருஷ்ணன் ! – உத்யோக பர்வம் பகுதி 94-விதுரனின் இல்லத்தில் இருந்து கிருஷ்ணனை அழைத்துப் போகத் துரியோதனனும், சகுனியும் வந்தது; கிருஷ்ணன் கௌரவச் சபையை அடைந்தது; கிருஷ்ணனுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை; வானில் முனிவர்கள் நிற்பதை கிருஷ்ணன் பீஷ்மருக்குச் சொன்னது; பீஷ்மர் முனிவர்களை அழைத்து இருக்கையில் அமர வைத்தது; அனைவரும் அமர்ந்தது அங்கே முற்றான அமைதி நிலவியது….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் புத்திக்கூர்மை கொண்டவர்களும், புகழ்பெற்றவர்களுமான அந்த இரண்டு நபர்களுக்கு {கிருஷ்ணன், விதுரன் ஆகியோருக்கு} இடையில் நடைபெற்ற இத்தகு உரையாடலில், பிரகாசமான நட்சத்திரங்களால் ஆன அந்த இரவு கடந்து சென்றது.

உண்மையில், அறம், பொருள், இன்பம் ஆகியன நிறைந்தவையும், மகிழ்ச்சிகரமான வார்த்தைகள் மற்றும் ஏற்புடைய வகையைச் சார்ந்த எழுத்துகளைக் {சொற்களைக்}  கொண்டவையுமான கிருஷ்ணனின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஒப்பற்ற விதுரனின் விருப்பத்திற்கு எதிராகவே அந்த இரவு கடந்து சென்றது.

அளவிலா ஆற்றல் கொண்ட கிருஷ்ணனும் அதற்கு நிகரான பாணி மற்றும் எழுத்துகளைக் கொண்ட சொற்பொழிவுகளை {அன்று இரவு} கேட்டுக் கொண்டேயிருந்தான்.

பிறகு, அதிகாலையில், இனிய குரலைக் கொடையாகக் கொண்ட சூதர்களும், பாணர்களும், கேசவனை {கிருஷ்ணனை}, இனிய ஒலி கொண்ட சங்குகள் மற்றும் துந்துபி முழக்கங்களுடன் எழுப்பினர். படுக்கையில் இருந்து எழுந்த தாசார்ஹ குலத்தவனும், சாத்வதர்கள் அனைவரில் காளையுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காலைக்குரிய அனைத்து வழக்கமான செயல்களையும் செய்தான். நீராடல் மூலம் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, புனித மந்திரங்களை ஓதி, தெளிந்த நெய்யிலானான நீர்க்காணிக்கைகளை வேள்வித்தீயில் ஊற்றினான். தன்னை அலங்கரித்துக் கொண்ட மாதவன் {கிருஷ்ணன்}, உதயசூரியனை வணங்கத் தொடங்கினான்.

தாசார்ஹ குலத்தின் வீழ்த்தப்படாத கிருஷ்ணன், தனது காலை துதியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும் அங்கே அவனிடம் {கிருஷ்ணனிடம்} வந்து, “பீஷ்மரின் தலைமையிலான அனைத்து குருக்களுடனும், பூமியின் அனைத்து மன்னர்களுடனும் திருதராஷ்டிரர் தனது அவையில் அமர்ந்திருக்கிறார். தெய்வலோகத்தில் சக்ரனின் {இந்திரனின்} இருப்பை விரும்பும் தேவர்களைப் போல, அவர்கள் அனைவரும் உனது இருப்பை வேண்டுகின்றனர்” என்றனர்.

இப்படிச் சொல்லப்பட்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அவர்கள் இருவரையும் இனிமையாகவும் மரியாதையாகவும் விசாரித்தான். சூரியன் சிறிது உயர எழுந்த போது, எதிரிகளைத் தண்டிப்பவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, எண்ணற்ற அந்தணர்களை அழைத்து, அவர்களுக்கு, தங்கம், ஆடைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளைப் பரிசாகக் கொடுத்தான்.

அதிகச் செல்வத்தைத் தானமளித்த அவன் {கிருஷ்ணன்}, தனது இருக்கையில் வந்து அமர்ந்த பிறகு, அங்கே வந்த அவனது தேரோட்டி (தாருகன்), தாசார்ஹ குலத்தின் அந்த வீழாவீரனை {கிருஷ்ணனை} வணங்கினான். பிறகு, கிண்கிணி மணிகளால் வரிசையாக அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்கதுமான தனது தலைவனின் {கிருஷ்ணனின்} பெரிய தேரில், அற்புதக் குதிரைகளைப் பூட்டி அங்கே விரைவாகத் திரும்பி வந்தான் தாருகன். தனது அழகிய தேர், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, பலமிக்க மேகத்திரளின் இரைச்சலைப் போல ஆழ்ந்த சடசடப்பொலியை எழுப்பத் தயாராக இருப்பதை உணர்ந்தவனும், யாதவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குபவனுமான உயர் ஆன்ம ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, புனித நெருப்பையும், அந்தணர்கள் குழுவையும் வலம் வந்து, கௌஸ்துப மணியைப் பூண்டு கொண்டு, அழகில் சுடர்விட்டபடி, குருக்களால் சூழப்பட்டு, விருஷ்ணிகளால் நன்கு பாதுகாக்கப்பட்டுத் தேரில் ஏறினான் {கிருஷ்ணன்}.

அறத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் அறிந்த விதுரன், உயிர்வாழும் அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவனும், அறிவைக் கொடையாகக் கொண்ட அனைத்து நபர்களில் முதல்வனுமான அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்தை {கிருஷ்ணனை}, தனது சொந்தத் தேரில் பின்தொடர்ந்து சென்றான் {விதுரன்}. துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும், எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணனை {வேறு} ஒரு தேரில் பின்தொடர்ந்து சென்றார்கள். சாத்யகி, கிருதவர்மன் மற்றும் பிற பலமிக்க விருஷ்ணி குலத்துத் தேர்வீரர்கள் ஆகிய அனைவரும் தேர்களிலும், குதிரைகளிலும், யானைகளிலும் கிருஷ்ணனுக்குப் பின்னால் சென்றனர்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், அற்புத குதிரைகளால் இழுக்கப்பட்டவையுமான அந்த வீரர்களின் அழகிய தேர்கள் ஒவ்வொன்றும் உரத்த சடசடப்பொலியை எழுப்பிபடியும், பிரகாசித்துக் கொண்டும் முன்னேறி நகர்ந்து சென்றன.

முன்கூட்டியே தூற்றப்பட்டு, நீர்தெளிக்கப்பட்டிருந்ததும், உயர்ந்த மன்னர்கள் மட்டுமே பயன்படுத்த தகுந்ததுமான அகலமான ஒரு தெருவுக்கு, அழகுடன் பெரும் புத்திக்கூர்மை கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} வந்தான். அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்து {கிருஷ்ணன்} புறப்பட்டபோது, எக்கங்கள் {கைத்தாளங்கள் = ஜால்ரா போன்ற பெரிய இசைக்கருவி} இசைக்கப்பட்டன, சங்குகள் முழங்கத் தொடங்கின, இன்னும் பிற கருவிகள் தங்கள் இசையைப் பொழிந்தன.

வீரத்திற்காக இவ்வுலகில் முதன்மையானவர்களாக இருப்பவர்களும், சிங்கம்போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான இளமை நிறைந்த வீரர்கள், சௌரியின் {கிருஷ்ணனின்} தேரைச் சூழ்ந்து கொண்டு, பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து சென்றனர். பல்வேறு நிறங்களில் உடுத்தியிருந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள், வாள்கள், ஈட்டிகள், போர்க்கோடரிகளுடன் கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு அணிவகுத்து சென்றனர். அந்த வீழ்த்தப்படமுடியாத தாசார்ஹ குலத்து வீரன் {கிருஷ்ணன்} முன்னேறிச் சென்று கொண்டிருந்த போது, ஐநூறு {500} யானைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றன.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அனைத்து வயதிலான ஆண்களும் பெண்களுமான அந்தத் தலைநகரத்தின் {ஹஸ்தினாபுரத்தின்} குடிமக்கள் அனைவரும் ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} காண விரும்பி வெளியே தெருக்களுக்கு வந்தனர். வீடுகளின் மாடிகள் மற்றும் மேல்மாடங்களில் திரண்டிருந்த பெண்களின் பாரத்தைத் தாங்க முடியாமல், அவை {அந்த வீடுகள்} விழும் நிலையில் இருந்தன. குருக்களால் {கௌரவர்களால்} வழிபடப்பட்டு, பல்வேறு இனிய பேச்சுகளைக் கேட்டு, தகுந்தவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் திரும்பச் சொல்லி, அனைவரின் மீதும் கண்களைச் செலுத்தியபடியே கேசவன் {கிருஷ்ணன்} அந்தத் தெருவில் சென்று கொண்டிருந்தான்.

கடைசியாக, கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையை அடைந்த போது, அவனது பணியாட்கள், தங்கள் சங்குகளையும், எக்காளங்களையும் உரக்க முழங்கி, ஆகாயத்தை அந்த முழக்கத்தால் நிறைத்தனர். அதன்பேரில், அளவிலா ஆற்றல் படைத்த மன்னர்களின் அந்தச் சபை, விரைவில் தங்கள் கண்களைக் கிருஷ்ணன் மீது செலுத்தப்போகும் எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியுடன் நடுங்கினர். மழைநிறைந்த மேகங்கள் உருள்வதைப் போன்ற சடசடப்பை எழுப்பிய தேரின் ஒலியைக் கேட்ட அந்த ஏகாதிபதிகள், கிருஷ்ணன் அருகில் வந்துவிட்டதை உணர்ந்து, மகிழ்ச்சியால் தங்கள் உடல்களின் மயிர்ச்சிலிர்த்து நின்றனர். அந்தச் சபையின் வாயிலை அடைந்த சாத்வதர்களில் காளையான சௌரி {கிருஷ்ணன்}, கயிலாய மலையைப் போன்ற தனது தேரில் இருந்து இறங்கி, புதிதாய் எழுந்த மேகத் திரள் போல இருப்பதும், அழகால் சுடர்விடுவதும், பெரும் இந்திரனின் வசிப்பிடத்தைப் பிரதிபலிப்பதுமான அந்தச் சபைக்குள் நுழைந்தான்.

இருபுறத்திலும் விதுரன் மற்றும் சாத்யகியைத் தோளோடு தோள் சேர்த்தபடியும், ஆகாயத்தில் இருக்கும் சிறு ஒளிகளின் பிரகாசத்தை மூழ்கடிக்கும் சூரியனைப் போல, குருக்கள் அனைவரின் பிரகாசத்தையும் தனது சொந்த பிரகாசத்தால் மூழ்கடித்தபடியும், அந்த ஒப்பற்ற வீரன் {கிருஷ்ணன்}, அந்தச் சபைக்குள் நுழைந்தான். வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு கர்ணனும், துரியோதனனும் அமர்ந்தனர், அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பின்பு, கிருதவர்மனோடு கூடிய விருஷ்ணிகள் அமர்ந்தனர்.

ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தும் விதமாக, பீஷ்மர், துரோணர் மற்றும் திருதராஷ்டிரனோடு கூடிய பிறர் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுவதற்குத் தயார் நிலையில் இருந்தனர். உண்மையில், அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} வந்ததும், ஒப்பற்றவனும் பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, துரோணர், பீஷ்மர் மற்றும் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். வலிமைமிக்கவனும், மனிதர்களின் ஆட்சியாளனுமான மன்னன் திருதராஷ்டிரன் தனது இருக்கையில் இருந்து எழுந்ததும், அவனை {திருதராஷ்டிரனை} சுற்றி இருந்த ஆயிரக்கணக்கான மன்னர்களும் எழுந்தனர்.

திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுச் சுற்றிலும் அழகானதாக இருந்த ஓர் இருக்கை, கிருஷ்ணனுக்காக அங்கே வைக்கப்பட்டிருந்தது.

அந்த இருக்கையில் மாதவன் {கிருஷ்ணன்} அமர்ந்ததும், மன்னன் {திருதராஷ்டிரன்}, பீஷ்மர், துரோணர் மற்றும் பிற ஆட்சியாளர்கள் அனைவருக்கும், அவரவர் வயதுக்குத் தகுந்தபடி புன்னகையுடன் தனது வாழ்த்துகளை அவன் {கிருஷ்ணன்} தெரிவித்தான். அந்தச் சபைக்கு வந்த கேசவனைக் {கிருஷ்ணனைக்} கண்டதும், பூமியின் மன்னர்கள் அனைவரும் மற்றும் குருக்கள் அனைவரும் அவனை {கிருஷ்ணனை} முறையாக வழிபட்டனர்.

எதிரிகளைத் தண்டிப்பவனும், பகை நகரங்களை வீழ்த்துபவனுமான அந்தத் தாசார்ஹ குலத்து வீரன் {கிருஷ்ணன்} அங்கே அமர்ந்திருந்த போது, ஹஸ்தினாபுரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கையில் தான் கண்ட முனிவர்கள், ஆகாயத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். நாரதரின் தலைமையில் நின்று கொண்டிருந்த முனிவர்களைக் கண்ட அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சந்தனுவின் மகனான பீஷ்மரிடம் மெதுவாக, “ஓ! மன்னா {பீஷ்மரே}, நம்முடைய இந்தப் பூலோக சபையைக் {கூட்டத்தைக்} காண முனிவர்கள் வந்திருக்கின்றனர். இருக்கைகள் மற்றும் ஏராளமான மரியாதைகளுடன் அவர்களை அழைப்பீராக. ஏனெனில், அவர்கள் {அந்த முனிவர்கள்} அமராதாபோது, இங்கே யாரும் தன் இருக்கையில் அமரக்கூடாது. எனவே, தங்கள் ஆன்மாக்களை முறையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களுக்கு, முறையான வழிபாட்டை விரைந்து அளிப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.

பிறகு அந்த முனிவர்களை அரண்மனையின் வாயிலில் கண்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அவர்களுக்கான {அந்த முனிவர்களுக்கான} இருக்கைகளை விரைந்து கொண்டுவருமாறு பணியாட்களுக்கு உத்தரவிட்டார். அவர்களும் விரைவில், தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அழகிய பெரிய இருக்கைகளை அங்கே கொண்டு வந்தனர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த முனிவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆர்க்கியாக்களை ஏற்றதும், கிருஷ்ணன் தனது இருக்கையில் அமர்ந்தான்; அவ்வாறே மன்னர்கள் அனைவரும் அமர்ந்தனர். சாத்யகிக்கு அருமையான ஓர் இருக்கையை துச்சாசனன் அளித்தான், அதே வேளையில், விவிம்சதி, தங்கத்தாலான இருக்கையைக் கிருதவர்மனுக்குக் கொடுத்தான்.

ஒப்பற்றவர்களும், கோபம் நிறைந்தவர்களுமான கர்ணனும் துரியோதனனும் கிருஷ்ணனுக்கு அருகிலேயே ஒரே இருக்கையில் இணைந்து அமர்ந்தனர். தன் நாட்டுத் தலைவர்கள் சூழ இருந்த காந்தார மன்னன் சகுனியும், ஓ மன்னா {ஜனமேஜயா}, தனது மகனுடன் சேர்ந்து அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அருகே அமர்ந்தான். உயர் ஆன்மா கொண்ட விதுரன், கிருஷ்ணனின் இருக்கையைத் தொட்டுக் கொண்டிருந்ததும், வெள்ளை மான்தோல் விரிக்கப்பட்டிருந்ததுமான மணிக்கல் பதித்த இருக்கையில் அமர்ந்தான்.

அந்தச்சபையின் மன்னர்கள் அனைவரும், தாசார்ஹ குலத்து ஜனார்த்தனையே {கிருஷ்ணனையே} நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அமிர்தத்தை அடுத்து அடுத்துக் குடித்தாலும், எப்போதும் மனநிறைவு கொள்ளாதவர்களைப் போல, நிறைவு காணவில்லை. காயாம்பூ {Atasi flower} நிறத்திலான மஞ்சள் ஆடைகளை உடுத்தியிருந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தங்கத்தில் பதிக்கப்பட்ட நீலக்கல் {Sapphire} போல, அந்தச் சபையின் மத்தியில் அமர்ந்திருந்தான். கோவிந்தன் {கிருஷ்ணன்} தனது இருக்கையில் அமர்ந்ததும், யாரும் ஒரு வார்த்தையும் பேசாததால் அங்கே முற்றான அமைதி நிலவியது” என்றார் {வைசம்பாயனர்}.

கிருஷ்ணனின் உரை ! – உத்யோக பர்வம் பகுதி 95-கௌரவச் சபையை அடைந்த கிருஷ்ணன், திருதராஷ்டிரனிடம் பாண்டவர் தரப்பு நியாயங்களையும், கௌரவர்கள் அவர்களுக்குச் செய்த தீங்குகளையும், திருதராஷ்டிரனிடம் யுதிஷ்டிரன் வெளிப்படுத்தும் கீழ்ப்படிந்த நடத்தையையும் எடுத்துரைத்து, பாண்டவர்களுக்கு அவர்களது நாட்டைத் திரும்பக் கொடுப்பதே கௌரவர்களுக்குத் தகும் என்று சொன்னது….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னர்கள் அனைவரும் அமர்ந்து, முற்றான அமைதி நிலவியபோது, அழகிய பற்களைக் கொண்ட கிருஷ்ணன், துந்துபியைப் போன்ற ஆழ்ந்த குரலில் பேசத் தொடங்கினான். மாதவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனிடம் பேசினாலும், மழைக்காலத்தில் மேகங்கள் உருள்வது போன்ற ஆழ்ந்த குரலில் முழுச் சபையும் கேட்கும் வண்ணம் பேசினான். அவன் {கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீரர்கள் எவரும் கொல்லப்படாதிருக்கக் குருக்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானத்தை நிறுவுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். இதுதவிர, ஓ! மன்னா, வேறு எந்த நன்மையான வார்த்தைகளும் என்னிடம் இல்லை. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் கற்கப்பட வேண்டியவை அனைத்தையும் நீர் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்’.

இந்த உமது {கௌரவ} குலம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் கல்விக்காகவும், அதன் நடத்தைக்காகவும், சாதித்த அனைத்திற்காகப் புகழப்படுவதாலும், எல்லா அரச குலங்களுக்கு மத்தியிலும் மிகவும் சிறப்புமிக்கதாய் இருக்கிறது. பிறரின் மகிழ்ச்சியில் இன்பம், பிற மனிதர்களின் துயரில் துன்பம், {பிறர்} துயரை நீக்க விருப்பம், ஊறிழையாமை, நேர்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உண்மை ஆகியவை குருக்களிடம் {கௌரவர்களிடம்} இருக்கின்றன. அப்படியிருக்கையில், உமது குலம் உன்னதமானதே. எனவே, அதற்குச் சொந்தமான யாருக்கும் முறையற்றது செய்யப்படுமானால் அது பரிதாபத்திற்குரியதாகும். அதுவும் உம்மால் அது செய்யப்படுமானால் அது மேலும் பரிதாபத்திற்குரியதாகும்.

ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்நியர்களிடம், அல்லது அவர்களோடு கூடியவர்களிடம் குருக்கள் ஏமாற்றுகரமாக நடந்து கொண்டால், அவர்களை {கௌரவர்களைத்} தடுப்பவர்களில் நீரே முதல் நபராக இருக்க வேண்டும். ஓ! குரு குலத்தவரே, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தலைமையிலான உமது தீய மகன்கள், அறம், பொருள் ஆகியவற்றைக் கைவிட்டு, அறநெறியை அலட்சியப்படுத்தி, பேராசையால் மதியிழந்து, தங்கள் உறவினர்களில் முதன்மையானோரிடமே மிகவும் நீதியற்ற வகையில் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிவீராக. (அனைவரையும் அச்சுறுத்தும்) அந்தப் பயங்கர ஆபத்து, குருக்களின் நடத்தையிலேயே தனது ஊற்றுக்கண்ணைக் கொண்டுள்ளது. நீர் அதை அலட்சியப்படுத்தினால், உலகளாவிய படுகொலைக்கு அது வழிவகுக்கும்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் விரும்பினால், இப்போது கூட உம்மால் அந்த ஆபத்தை விலக்க முடியும். ஏனெனில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சமாதானம் என்பது அடைவதற்கரிதானது அல்ல. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சமாதானத்தை நிறுவதல் என்பது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்மையும் என்னையும் சார்ந்தே இருக்கிறது. ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களை நீர் நேராக்கும் {அடக்கும்}, நான் பாண்டவர்களை நேராக்குவேன் {தணிப்பேன்}. உமது கட்டளை எதுவாக இருப்பினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களும், அவர்தம் தொண்டர்களும் அதற்குக் கீழ்ப்படிவதே தகும். அவர்களால் உமக்குக் கீழ்ப்படிந்து வாழ முடியுமென்றால், அதுவே அவர்களுக்கு மிகச் சிறந்ததும் ஆகும். உமது மகன்களை அடக்கி, நீர் சமாதானத்திற்கு முயன்றால், அஃது உமக்கும் நன்மை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும் அது நன்மையைத் தரும். கவனமாகச் சிந்தித்த பிறகு, ஓ! மன்னா, செயல்படுவீராக. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பரதனின் அந்த மகன்கள் (பாண்டவர்கள்) உமது கூட்டாளிகளாகட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களால் ஆதரிக்கப்பட்டு, அறம், பொருள் ஆகிய இரண்டையும் பெற முயல்வீராக. உமது சக்திக்குத் தக்க அனைத்து முயற்சியாலும் முயன்றாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களைப் போன்ற கூட்டாளிகள் கிடைக்க மாட்டார்கள்.

பாண்டுவின் ஒப்பற்ற மகன்களால் பாதுகாக்கப்பட்டால், இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட உம்மை வீழ்த்த முடியாது. அப்படியிருக்கும்போது வெறும் பூவுலக மன்னர்களால் உமது ஆற்றலை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் விவிம்சதி, அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன், பாஹ்லீகன், சிந்துக்களின் தலைவன் {ஜெயத்ரதன்}, கலிங்கர்களின் ஆட்சியாளன், கம்போஜர்களின் மன்னன் சுதக்ஷிணன் ஆகியோரோடு யுதிஷ்டிரன், பீமசேனன், சவ்யசச்சின் {அர்ஜுனன்}, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, பெரும் சச்தி படைத்த சாத்யகி, பெரும் பலமிக்கத் தேர்வீரனான யுயுத்சு ஆகியோரும் இருந்தால், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, புத்திகெட்ட எவன்தான் அவர்களோடு போரிட வருவான்?

ஓ! எதிரிகளைக் கொல்பவரே {திருதராஷ்டிரரே}, உமக்குப் பின்னால் குருக்களையும் {கௌரவர்களையும்}, பாண்டவர்களையும் கொண்டிருந்தால், முழு உலகத்தின் ஆட்சியுரிமையும், எதிரிகள் அனைவருக்கும் எதிரான ஒப்பற்ற தன்மையும் உமதாகும். உமக்கு நிகராகவோ, மேன்மையாக இருக்கும் உலகத்தின் ஆட்சியாளர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்முடனான கூட்டணிக்கு முயற்சிப்பார்கள். மகன்கள், பேரன்கள், தந்தையர், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோரால் அனைத்துப் புறத்தில் பாதுகாக்கப்படும் போது, மிகுந்த மகிழ்ச்சியோடு நீர் வாழத் தகுந்தவராவீர். இவற்றை உமது முன்பு வைத்து, பழங்காலத்தைப் போல அவர்களை அன்பாக நடத்தினால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்த முழு உலகத்தின் அரசுரிமையையும் நீர் அனுபவிப்பீர்.

இந்த உமது ஆதரவாளர்களோடு, பாண்டுவின் மகன்களையும் உமது ஆதரவாளர்களாகக் கொண்டால், ஓ! பாரதரே {திருதராஷ்டரரே}, நீர் உமது எதிரிகள் அனைவரையும் வெல்ல முடியும். இதுவே உமக்குச் சாதகமானவற்றில் சிறந்ததாகும். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, நீர் உமது மகன்கள், உறவினர்கள் மற்றும் ஆலோசகர்களோடு ஒற்றுமையாக இருந்தால், அவர்களால் வெல்லப்படும் முழு உலகத்தின் ஆட்சி உரிமையை நீர் அனுபவிப்பீர். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, போரென்றாலோ, மொத்த அழிவைத் தவிர வேறு எதுவும் காட்சியில் தெரியவில்லை. உண்மையில், இரு தரப்பின் அழிவிலும் என்ன தகுதியை {புண்ணியத்தை} நீர் காண்பீர்? போர்க்களத்தில் பாண்டவர்கள் கொல்லப்பட்டாலோ, பலமிக்க உமது மகன்கள் வீழ்ந்தாலோ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அதில் என்ன இன்பத்தை நீர் அனுபவிக்க முடியும்? எனக்குச் சொல்வீராக.

அவர்களில் அனைவரும் வீரமிக்கவர்களாகவும், ஆயுதங்களில் திறம்படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய அவர்கள் அனைவரும் போருக்கு விரும்புகிறார்கள். ஓ!, அவர்களை அச்சுறுத்தும் இந்தப் பயங்கர ஆபத்தில் இருந்து அவர்களைக் காப்பீராக. போருக்குப் பிறகு நீர் குருக்களில் அனைவரையும், பாண்டவர்களில் அனைவரையும் காணமாட்டீர். தேர்வீரர்களால் தேர்வீரர்கள் கொல்லப்பட்டு, இரு தரப்பின் வீரர்களும் எண்ணிக்கையிலும், பலத்திலும் குறைந்திருப்பதை நீர் காண்பீர். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருக்கிறார்கள். கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் அவர்கள், நிச்சயம் உலகத்தின் மக்கள் தொகையை அழிப்பார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலகைக் காப்பீராக. உலகத்தின் மக்கள் தொகை அழியாதிருக்கட்டும்.

ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது இயல்பான மனநிலையை நீர் மீண்டும் பெற்றால், இந்தப் பூமி இப்போது போலவே மக்களுடன் இருக்கும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூட்டணி அல்லது உறவுமுறையால் ஒருவருடன் ஒருவர் பிணைந்திருப்பவர்களும், பக்தி, தயாளம், பணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும், தூய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுமான இந்த ஏகாதிபதிகளை அச்சுறுத்தி வரும் பயங்கர ஆபத்தில் இருந்து இவர்களைக் காப்பீராக. கோபம் மற்றும் பகையைக் கைவிட்டு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, இந்த மன்னர்கள் அனைவரும் அமைதியுடன் ஒருவரை ஒருவர் தழுவி, ஒன்றாக உண்டு, குடித்து, அற்புத ஆடைகளாலும், மலர்மாலைகளாலும் அலங்கரித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி, தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லட்டும்.

பாண்டவர்களிடம் நீர் கொண்ட பாசம் உமது இதயத்தில் புத்துயிரூட்டட்டும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அதுவே சமாதானத்தை நிறுவ வழிவகுக்கட்டும். குழந்தைப்பருவத்தில் அவர்கள் தங்கள் தந்தையை இழந்திருந்தபோது, நீரே அவர்களை வளர்த்தீர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} உமது சொந்த மகன்களைப் போல நீர் அவர்களைப் பேணிக் காப்பீராக. அவர்களைக் காப்பது உமது கடமையே. அதிலும் குறிப்பாக, அவர்கள் துயரத்தில் இருக்கும் போது காப்பது உமது கடமையே.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் இழக்காதிருப்பீராக. உம்மை வணங்கி, அருள் கோரும் பாண்டவர்கள், “உமது கட்டளையின் பேரில், நாங்கள் எங்கள் தொண்டர்களுடன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறோம். பனிரெண்டு {12} வருடங்கள் காட்டில் வாழ்ந்திருக்கிறோம். பதிமூன்றாவது {13} வருடத்தை உலகத்தில் இதுவரை வசித்திராத பகுதியில் தலைமறைவாக வாழ்ந்திருக்கிறோம். எங்கள் தந்தையும் {தந்தையான திருதராஷ்டிரரும்} அவர் பங்குக்கு மீற மாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையில், நாங்கள் எங்கள் உறுதிமொழியை மீறவில்லை. எங்கள் வார்த்தைகளை நாங்கள் மீறவில்லை என்பது எங்களுடன் இருந்த அந்தணர்களுக்குத் தெரியும். ஓ! பாரதக் குலத்துக் காளையே {திருதராஷ்டிரரே}, நாங்கள் எங்கள் உறுதி மொழிக்கேற்றவாறு நடந்து கொண்டதால், நீரும் அதற்கேற்றவாறு நடந்து கொள்வீராக. நீண்ட காலம் பெரும் துன்பத்தை அனுபவித்துவிட்டோம். இப்போதாவது, எங்களுக்குரிய பங்கான நாட்டை நாங்கள் பெறச்செய்வீராக.

அறம், பொருள் ஆகியவற்றை முழுதாக அறிந்தவரான உமக்கு எங்களைக் காப்பதே தகும். உமக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அமைதியாகப் பெரும் துன்பத்தை அனுபவித்தோம். எனவே, எங்களிடம் ஒரு தகப்பனாகவோ, சகோதரனாகவோ நடந்து கொள்ளும். ஓர் ஆசான், தன் சீடர்களிடம் ஓர் ஆசானைப் போல நடந்து கொள்ள வேண்டும், சீடர்களாக நாங்களும், உம்மிடம் ஆசானிடம் நடந்து கொள்வது போல நடந்து கொள்கிறோம். எனவே, எங்களிடம் நீர் எங்கள் ஆசானாக நடந்து கொள்ளும். நாங்கள் தவறிழைத்தால், எங்களை நேராக்குவது எங்களது தந்தையான உமது கடமை. எனவே, {வழிதவறி இருக்கும்} எங்களைப் வழியில் நிறுத்தி, நேர்மையெனும் அற்புதப் பாதையில் நடந்து செல்வீராக” என்று உம்மிடம் {என் மூலமாகச்} சொல்கிறார்கள் {பாண்டவர்கள்}.

அந்த உமது மகன்கள் {பாண்டவர்கள்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சபையில் கூடியிருக்கும் இந்த மன்னர்களுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள். அவர்கள் {பாண்டவர்கள் சபையோரிடம்}, “ஒரு சபையின் உறுப்பினர்கள் அறநெறி அறிந்தவர்களாக இருப்பின், முறையற்றது எதையும் நடக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒரு சபையில், அறம் சார்ந்த உறுப்பினர்கள் இருந்தும், நீதியை அநீதியும், உண்மையைப் பொய்மையும் வென்றால், அந்த உறுப்பினர்களே வீழ்த்தப்பட்டவர்களும் கொல்லப்பட்டவர்களும் ஆவர். அநீதியால் {அநீதியெனும் கணையால்} துளைக்கப்படும் நீதி, ஒரு சபையின் பாதுகாப்பை நாடினால், அந்தக் கணை எடுக்கப்படாதிருக்குமேயானால், அந்தச் சபையின் உறுப்பினர்களே அந்தக் கணையால் துளைக்கப்பட்டவர்கள் ஆவார்கள். உண்மையில், அவ்வழக்கில், கரையில் நிற்கும் மரங்களின் வேர்களை ஓர் ஆறு தின்றுவிடுவதைப் போல, அந்தச் சபையின் உறுப்பினர்களை நீதியே கொன்றுவிடும்” என்று {பாண்டவர்கள்} சொன்னார்கள்.

ஓ! பாரத் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இப்போது நியாயம் தீர்ப்பீராக. நீதியின் கண் இருக்கும் பாண்டவர்கள் அனைத்தையும் சிந்தித்து, அமைதியான அணுகுமுறையுடன் இருக்கிறார்கள். அவர் என்ன சொன்னார்களோ, அஃது, உண்மை, அறம் மற்றும் நீதிக்கு இசைவானதாக இருக்கிறது. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அவர்களது நாட்டைத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறீர் என்பதைத் தவிர நீர் அவர்களுக்கு வேறு எதைச் சொல்ல முடியும்?

இங்கே அமர்ந்திருக்கும் இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் (என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதைச்} சொல்லட்டும்! அறத்திற்கு உண்மையாக இருக்கும்படி நன்கு ஆலோசித்த பிறகு இவை என்னால் சொல்லப்பட்டது என்று உமக்குத் தோன்றினால், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் மரணத்தின் வலைகளில் இருந்து காப்பீராக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} சமாதானத்திற்கு உடன்படுவீராக. கோபத்திற்கு வசப்படாதீர். நீதியின் படி அவர்களது தந்தை வழி பங்கான நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுத்து, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உனது மகன்களுடன், மகிழ்ச்சியாகவும், ஆடம்பரமாகவும், உமது விருப்பங்கள் எல்லாம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டும் இன்புற்றிருப்பீராக.

நீதிமிக்கவர்கள் நடந்த பாதையிலேயே எப்போதும் யுதிஷ்டிரர் நடக்கிறார் என்பதை அறிவீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மிடமும், உமது மகன்களிடமும் யுதிஷ்டிரர் எப்படி நடந்து கொண்டார் என்பதை நீர் அறிவீர். நீங்கள் அவரை {யுதிஷ்டிரரை- பாண்டவர்களை} உயிரோடு எரிக்க முற்பட்டீர்கள், மனித வசிப்பிடங்களில் இருந்து அவரைத் துரத்தினீர்கள். இருப்பினும், உம்மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் அவர் உம்மிடம் வந்தார். அதன்பிறகும், இந்த உமது மகன்களோடு கூடிய நீர் அவரை இந்திரப்பிரஸ்தத்துக்குத் துரத்தினீர்? அங்கே இருந்தபோது, அவர் பூமியின் மன்னர்கள் அனைவரையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தார். இருப்பினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மை அலட்சியம் செய்யத் துணியாத அவர் உம்மையே நாடி நின்றார். என்னதான் அவர் உம்மிடம் இவ்வழியில் நடந்து கொண்டாலும், அவரது {யுதிஷ்டிரனது} ஆட்சிப்பகுதிகளையும், செல்வத்தையும், உடைமைகளையும் திருட விரும்பிய சுபலனின் மகன் {சகுனி}, {உங்களுக்கு} மிகவும் பயன் அளிக்கக்கூடிய பகடை வழியைத் தேர்ந்தெடுத்தான். அந்நிலைக்குத் தாழ்த்தப்பட்டும், சபையில் கிருஷ்ணை {திரௌபதி} இழுத்துவரப்படுவதைக் கண்டும், அளவிலா ஆன்மாகக் கொண்ட யுதிஷ்டிரர், தனது க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து சற்றும் நிலைதடுமாறவில்லை.

என்னைப் பொறுத்தவரை, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது நன்மையையும், அதே அளவுக்கு அவர்களது நன்மையையும் நான் விரும்புகிறேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றுக்காகச் சமாதானத்துக்கு உடன்படுவீராக. தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் கருதி, பூமியின் மக்கள் படுகொலைக்குள்ளாவதை அனுமதியாதிருப்பீராக. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பேராசையின் காரணமாக வெகுதூரம் சென்று விட்ட உமது மகன்களைத் தடுப்பீராக. பிருதையின் {குந்தியின்} மகன்களைப் பொறுத்தவரை, கடமைநிறைந்த சேவையுணர்வுடன் உமக்குக் காத்திருக்கவோ, போரிடவோ இரண்டுக்கும் சமமாகத் தயார் நிலையிலும் இருக்கின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உமக்கு எது நன்மை என்று படுகிறதோ, அதைப் பின்பற்றுவீராக!” என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அங்கே இருந்த பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைத் தங்கள் இதயத்துக்குள் உயர்வாகப் புகழ்ந்தனர். ஆனால் எவரும், துரியோதனனின் முன்னிலையில் எதையும் சொல்லத் துணியவில்லை” என்றார் {வைசம்பாயனர்}.

தம்போத்பவன் மற்றும் நரன் நாராயணன்! – உத்யோக பர்வம் பகுதி 96-துரியோதனனுக்குத் தம்போத்பவனின் கதையைப் பரசுராமர் சொல்வது; உலகை ஒரே குடையின் கீழ் ஆண்ட தம்போத்பவன் தனக்கு நிகர் எவனும் இல்லை என்ற அகந்தையுடன் அனைவரிடமும் பேசுவது; தொடர்ச்சியாக இந்தப் பேச்சைக் கேட்கும் அந்தணர்களில் சிலர், நரன் மற்றும் நாராயணனைக் குறித்துத் தம்போத்பவனுக்குச் சொன்னது; அவர்களுடன் போரிட்ட தம்போத்பவன் அகந்தை அழிந்து, அறவழி திரும்பியது; அந்த நரனும் நாராயணனும் தான் இப்போது அர்ஜுனனும் கிருஷ்ணனுமாக அவதரித்திருக்கிறார்கள் என்று பரசுராமர் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சபையில் அமர்ந்திருந்த நபர்கள் அனைவரும் உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மயிர்ச்சிலிர்த்தபடி அமைதியாக நீடித்தனர். அந்த மன்னர்கள் அனைவரும் தங்களுக்குள், ‘இந்தப் பேச்சுக்கு மறுமொழி சொல்ல, துணிவு கொண்ட மனிதன் எவனும் இல்லை’ என்று நினைத்தனர்.

மன்னர்கள் அனைவரும் அமைதியாக இருப்பதைக் கண்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, அந்தக் குருக்களின் சபையில் (துரியோதனனிடம்) இந்த வார்த்தைகளைச் சொன்னார். அவர் {பரசுராமர் துரியோதனனிடம்}, “ஓர் உதாரணம் மூலம் தெளிவை உண்டாக்கும், எனது வார்த்தைகளை நம்பிக்கையோடு கேட்டு, எனது பேச்சு உனக்கு நன்மையைச் செய்யுமென்றால், உன் நன்மையை நாடுவாயாக.

பழங்காலத்தில் பூமியின் தலைவனாக {சார்வபௌமனாக} தம்போத்பவன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவனது அரசுரிமை உலகம் முழுவதும் பரந்திருந்தது {ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டான்} என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பலமிக்கத் தேர்வீரன், தினமும் காலையில் எழுந்ததும், அந்தணர்களையும், க்ஷத்திரியர்களையும் தன்னிடம் அழைத்து, “சூத்திரனிலோ, வைசியனிலோ, க்ஷத்திரியனிலோ, அல்லது அந்தணரிலோகூடப் போரில் எனக்கு மேன்மையாகவோ, இணையாகவோ எவனாவது இருக்கிறானா?” என்று எப்போதும் கேட்பான். இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே அந்த மன்னன், செருக்கால் போதையுண்டு, வேறு எதையும் நினைக்காமல் உலகம் எங்கும் திரிந்து கொண்டிருந்தான்.

இப்படியிருக்கையில், உயர் ஆன்மா கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், பூமியில் எதற்கும் அஞ்சாதவர்களுமான சில அந்தணர்கள், திரும்பத் திரும்பத் தனது ஆற்றல் குறித்துத் தற்பெருமை பேசும் அவனது செருக்குக்குக் கடிவாளம் இடும்படி, அந்த மன்னனிடம் ஆலோசித்தனர். அவ்வாறு தற்பெருமை பேச வேண்டாம் என அந்த அந்தணர்களால் தடுக்கப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} அவர்களிடம் தினம் தினம் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தான். பெரும் தவத் தகுதியையும், வேதங்களால் அளிக்கப்படும் ஆதாரங்களையும் அறிந்த சில உயர் ஆன்ம அந்தணர்கள் கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தச் செருக்கு நிறைந்தவனும், தற்பெருமை மிக்கவனும், செழிப்பால் போதையுண்டிருந்தவனுமான அந்த மன்னனிடம் {தம்போத்பவனிடம்}, “மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாக இரு நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் போரில் வெற்றிபெற்றே வருகின்றனர். ஓ! மன்னா {தம்போத்பவா}, அவர்களில் ஒருவருடன் மோத முயன்றால், நீ அவர்களுக்கு நிகராக இருக்கமாட்டாய்” என்றனர்.

இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்தணர்களிடம், “அந்த வீரர்கள் இருவரும் எங்குக் காணப்படுவார்கள்? அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்திருக்கிறார்கள்? அவர்களது சாதனைகள் என்ன? அவர்கள் யார்?” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்கள், “அந்த இரு நபர்களும் நரன் மற்றும் நாராயணன் என்று அழைக்கப்படும் இரு தவசிகளாவர் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்த இருவரும் மனித குலத்திலேயே தங்கள் பிறப்பை அடைந்திருக்கின்றனர். ஓ! மன்னா {தம்போத்பவா}, நீ அவர்களிடம் சென்று போரிடுவாயாக. அந்த ஒப்பற்ற இணையான நரனும் நாராணயனனும், கந்தமாதன மலைகளின் மறைவான பகுதியில் இப்போதும் கடும் தவத்தைப் பயின்று கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.

அந்த அந்தணர்களின் வார்த்தைகளைக் கேட்ட அம்மன்னன் {தம்போத்பவன்}, அவர்களது பெருமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாமல், ஆறு அங்கங்களோடு [1] கூடிய தன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, வீழாத அந்தத் தவசிகள் இருந்த இடத்திற்கு அணிவகுத்து சென்று, மேடு பள்ளம் நிறைந்த பயங்கரமான கந்தமாதன மலைகளை அடைந்தான். அந்த முனிவர்களைத் தேடத் தொடங்கிய அவன் {தம்போத்பவன்}, மறைக்கப்பட்டிருந்த ஒரு காட்டுக்கு வந்து சேர்ந்தான். பசி மற்றும் தாகத்தால் மெலிந்து, தங்கள் தடித்த நரம்புகள் தெரிய, குளிர், காற்று, சூரியனின் வெப்பக் கதிர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான அந்த இருவரையும் கண்டு, அவர்களது பாதங்களைத் தொட்டு, அவர்களது நலத்தை விசாரித்தான்.

அந்த முனிவர்கள் இருவரும், கனிகள், கிழங்குகள், இருக்கை மற்றும் நீர் கொடுத்து விருந்தோம்பலுடன் அம்மன்னனை {தம்போத்பவனை} வரவேற்றார்கள். பிறகு, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிய அவர்கள், அம்மன்னனின் தொழில் குறித்து விசாரித்தனர். {அவன் வந்த நோக்கம் குறித்து விசாரித்தனர்}. அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {தம்போத்பவன்}, அவர்களிடம், தான் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பழக்கப்பட்ட அதே வார்த்தைகளைச் சொன்னான். பிறகு அவன், “எனது கரங்களின் பலத்தால் முழு உலகமும் வெல்லப்பட்டது. எனது எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். உங்கள் இருவருடன் போரிட விரும்பியே நான் இந்த மலைக்கு வந்திருக்கிறேன். இந்த விருந்தோம்பலை எனக்கு அளியுங்கள். இஃது எனது நெடுநாளைய விருப்பமாகும்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட நரனும் நாராயணனும், “ஓ! மன்னர்களில் சிறந்தவனே {தம்போத்பவா}, இந்தப் பின்வாங்கலில் {எங்கள் தவ வாழ்வில்} கோபத்திற்கும், பொருளாசைக்கும் இடம் கிடையாது. எனவே, இங்கே போர் எப்படிச் சாத்தியமாகும்? இங்கே ஆயுதங்களோ, அநீதியோ, தீமையோ ஏதுமில்லை. போரை வேறெங்காவது தேடு. பூமியில் பல க்ஷத்திரியர்கள் இருக்கிறார்கள்” என்றனர் {நரனும் நாராயணனும்}.

ராமர் {பரசுராமர்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} போருக்காக மேலும் அழுத்தம் கொடுத்தான். எனினும், அந்த முனிவர்கள் தொடர்ச்சியாக அவனைத் தணித்து, அவனது தொந்தரவைச் சகித்தனர். போரில் விருப்பமுடைய மன்னன் தம்போத்பவனோ அந்த முனிவர்களை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகப் போருக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.

ஓ! பாரதா {துரியோதனா}, பிறகு, நரன், தன் கைநிறைய புற்குச்சிகளை {சீழ்கம்புல் ஈர்க்குகளை} எடுத்து, “ஓ! க்ஷத்திரியா, போருக்கு விரும்பி இங்கு வந்திருக்கிறாய். வா, வந்து போரிடு! உனது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள். உனது துருப்புகளைச் சேர். இனிமேல் போர் செய்வதற்கான உனது ஆவலை நான் அடக்குகிறேன்” என்றார். அதற்குத் தம்போத்பவன், “ஓ! தவசியே, எங்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு இந்த உமது ஆயுதம் தகுந்ததென்று நீர் நினைக்கிறீர். போரில் விருப்பம் கொண்டு நான் இங்கு வந்திருப்பதால், அவ்வாயுதத்தையே நீர் பயன்படுத்தினாலும், நான் உம்மிடம் போரிடுவேன்” என்றான். இதைச் சொன்ன தம்போத்பவன், தனது துருப்புகளை அனைத்தையும் கொண்டு, அந்தத்தவசியைக் {நரனைக்} கொல்ல விரும்பி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மறைத்தான்.

எனினும், அந்தத் தவசி {நரன்}, அந்தக் குச்சிகளால், பகைவீரர்களின் உடலைச் சிதைக்கவல்ல அந்த மன்னனின் பயங்கரக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தார். அந்த ஒப்பற்ற முனிவர் {நரன்}, பதில்தொடுக்க முடியாததும் குச்சிகளால் ஆனதுமான ஒரு பயங்கர ஆயுதத்தை அந்த மன்னனை {தம்போத்பவனை} நோக்கிச் செலுத்தினார். அங்கே அப்போது நடந்தது, மிகுந்து அற்புதம் நிறைந்ததாக இருந்தது. ஏனெனில், இலக்குத் தவறாதவரான அந்தத் தவசி {நரன்}, தனது மாய சக்தியின் உதவியால், தனது குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி, பகைவீரர்களின் கண்கள், காதுகள் மற்றும் மூக்குகளைத் துளைக்கவும் அறுக்கவும் செய்தார்.

அந்தக் குச்சிகளால் வெண்ணிறமடைந்த முழு வானத்தையும் கண்ட அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்த முனிவரின் {நரனின்} பாதத்தில் விழுந்து, “என்னை அருளப்பட்டவனாக இருக்கச் செய்யும்” என்று கேட்டான். ஓ! மன்னா {துரியோதனா}, பாதுகாப்பை அளிக்க எப்போதும் தயங்காத நரன், அந்த ஏகாதிபதியிடம் {தம்போத்பவனிடம்}, “அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து அறம் சார்ந்தவனாக இருப்பாயாக. மீண்டும் இப்படிச் செய்யாதே. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் புலியே {தம்போத்பவா}, பகை நகரங்களையும் வெல்பவனும் மனம் நிறையத் தன் கடமைகளைக் கொண்டுள்ள ஒரு க்ஷத்திரியனுமான மனிதன் ஒருவன், நீ இப்போது இருப்பதைப் போல இருக்கக்கூடாது. உனக்குத் தாழ்ந்தோ, உயர்ந்தோ இருப்பவர்களை, உனது செருக்கின் நிறைவால் எச்சந்தர்ப்பத்திலும் அவமதிக்காதே. அத்தகு நடத்தையே உனக்குத் தகும்.

ஓ! மன்னா {தம்போத்பவா}, அறிவை அடைந்து, பேராசையையும், செருக்கையும் கைவிட்டு, உனது ஆன்மாவை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி, மன்னிக்கும் தன்மை {பொறுமை} மற்றும் பணிவைப் பயின்று, இனிமையானவனாகி, உனது குடிமக்களைப் பேணிக் காப்பாயாக. மனிதர்களின் பலத்தையோ, பலவீனத்தையோ உறுதி செய்து கொள்ளாமல், எத்தகு சூழ்நிலையிலும் யாரையும் அவமதிக்காதே. நீ அருளப்பட்டிருப்பாயாக! எனவே நீ சென்று, மீண்டும் இந்த வழியில் எப்போதும் நடக்காதே. எங்கள் உத்தரவின் பேரில், எப்போதும் உனக்கு நன்மையானவற்றையே அந்தணர்களிடம் விசாரிப்பாயாக” என்றார் {நரன்}.

அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்த ஒப்பற்ற முனிவர்கள் இருவரின் பாதங்களையும் வழிபட்டு தனது நகரத்திற்குத் திரும்பினான். அக்காலத்தில் இருந்து அவன் நீதிபயிலத் தொடங்கினான். உண்மையில், பழங்காலத்தில் நரனால் அடையப்பட்ட சாதனை பெரிதே. மேலும், இன்னும் பல குணங்களின் விளைவாக நரனுக்கு நாராயணன் மேன்மையானவரானார்.

எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, உனது செருக்கையெல்லாம் அகற்றிவிட்டு, காகுதிகம், சுகம், நாகம், அக்ஷிசந்தர்ஜனம், சந்தானம், நர்த்தனம், கோரம் மற்றும் அசியமோதகம் [2] ஆகிய ஆயுதங்களைத் தவிர, இன்னும் பல ஆயுதங்களை விற்களில் சிறந்ததான காண்டீவத்தில் பொருத்தும் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} செல்வாயாக. இந்த ஆயுதங்களால் அடிக்கப்பட்டால், மனிதர்கள் எப்போதும் தங்களது உயிரை விட்டுவிடுவார்கள். உண்மையில் இந்த ஆயுதங்கள் அனைத்தும் {எட்டும்}, காமம், கோபம், பொருளாசை, மாயை, செருக்கு, தற்பெருமை, அகந்தை, தன்னலம் ஆகிய எட்டு உணர்வுகளுடன் பிற வழிகளில் தொடர்புடையவையாகும். இவற்றின் தாக்கத்தில் உள்ள மனிதர்கள் எப்போதும் அதிகளவு உறக்கம், துள்ளுதல், கக்குதல் {வாந்தி எடுத்தல்}, சிறுநீர் மற்றும் மலங்கழித்தல், அழுதுபுலம்புதல், தொடர்ச்சியாகச் சிரித்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள்.

காகுதிகாஸ்திரம் = இந்த ஆயுதத்தை வில்லில் பொருத்தி இழுத்தாலே யானை, குதிரை ஆகியவற்றை இது தூங்கச் செய்துவிடும். இதற்குப் பிரஸ்வாபம் என்ற பெயரும் சொல்லப்படுகிறது.

சுகாஸ்திரம் = பீரங்கி போன்ற ஒலியால், கூட்டில் பதுங்கும் கிளி போலத் தேர்களில் பதுங்கச் செய்யும் ஆயுதம். இதற்கு மோஹனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

நாகாஸ்திரம் = சொர்க்கத்தைக் கண்ணில் காட்டுவதாகும். நிச்சயம் உயிரைக் கொல்வதாகும். இதற்கு உன்மாதனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

அக்ஷிசந்தர்ஜனாஸ்திரம் = அடித்தவுடன் அடிக்கப்பட்டவர் மேல் மலஜலங்களைப் பொழியும் ஆயுதம். இதற்குத் தராசனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

சந்தானாஸ்திரம் = இடைவிடாமல் ஆயுதங்களைப் பொழியும் ஆயுதம்.

நர்த்தகாஸ்திரம் = அடிக்கப்பட்டவரை நாட்டியமாடச் செய்யும். இதற்குப் பைசாசம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

கோராஸ்திரம் = அழிவை உண்டாக்கும் ஆயுதம். இதற்கு ராக்ஷசம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

அசியமோதகாஸ்திரம் = உலோகங்களை வாயில் போட்டுக் கொண்டு இறக்கச் செய்யும் ஆயுதம். இதற்கு யாமயம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

படைப்பாளனும், உலகங்கள் அனைத்தின் தலைவனும், அனைத்தின் போக்கையும் முழுமையாக அறிந்தவனுமான நாராயணனைத் தனது நண்பனாகக் கொண்டிருப்பவனுமான அந்த அர்ஜுனன், உண்மையில், போரில் வெல்லப்படமுடியாதவன் ஆவான். ஓ! பாரதா {துரியோதனா}, போரில் இணையற்றவனும், குரங்கு {அனுமன்} கொடியைக் கொண்ட வீரனுமான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} வெல்ல மூவுலகிலும் எவன் இருக்கிறான்? பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} குடிகொண்டுள்ள அறங்கள் எண்ண முடியாதவையாகும். மேலும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அவனிலும் சிறந்தவனாவான். குந்தியின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} நீயே கூட நன்கறிந்தவனாகவே இருக்கிறாய்.

பழங்காலத்தில் நரனும், நாராயணனுமாக இருந்தவர்கள், இப்போது அர்ஜுனனும் கேசவனுமாக {கிருஷ்ணனுமாக} இருக்கிறார்கள். ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரமிக்கவர்களுமான அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வாயாக. என்னிடம் நம்பிக்கையேற்பட்டு, இதை நீ நம்பினால், நல்ல ஒரு தீர்மானத்தை அடைந்து, பாண்டுவின் மகன்களிடம் சமாதானம் செய்து கொள்வாயாக. உனது குடும்பத்தில் `ஒற்றுமையின்மை கூடாது’ என்ற இதுவே உனது நன்மை என நீ கருதினால், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாமல், சமாதானம் கொள்வாயாக. குரு பரம்பரையில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ சார்ந்திருக்கும் குலம் உலகத்தில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த மதிப்பு அப்படியே தொடரும்படி செய்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக. உனக்கான நலனை எது விளைவிக்கும் என்பதைச் சிந்திப்பாயாக” என்றார் {பரசுராமர்}. 

மாதலியின் மகள் குணகேசி! – உத்யோக பர்வம் பகுதி 97-இந்திரனின் தேரோட்டியான மாதலி, தனது மகள் குணகேசிக்காக வரன் தேட நாகலோகம் புறப்பட்ட கதையைத் துரியோதனனிடம் கண்வர் சொல்ல ஆரம்பித்தது …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஜமதக்னேயரின் {பரசுராமரின்} வார்த்தைகளைக் கேட்ட ஒப்பற்ற முனிவரான கண்வர், குருக்களின் அந்தச் சபையில் துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

கண்வர் {துரியோதனனிடம்}, “அண்டத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், அழிவற்றவனும் நித்தியமானவனும் ஆவான். அந்த ஒப்பற்ற முனிவர்களான நரனும் நாராயாணனும் அதே போன்றவர்களாவர். *அதிதியின் மகன்கள் அனைவரிலும் விஷ்ணு மட்டுமே நித்தியமானவனாவான். அவனே வெல்லப்பட முடியாதவனும், அழிவில்லாதவனும், எப்போதும் நிலைத்திருப்பவனும், அனைத்திற்கும் தலைவனும், தெய்வீக பண்புகளைக் கொண்டவனும் ஆவான். சூரியன், சந்திரன், பூமி, காற்று, நெருப்பு, ஆகாயம், கோள்கள் {கிரகங்கள்}, விண்மீன்கள் {நட்சத்திரங்கள்} ஆகிய பிற அனைத்தும் அழிவுக்குகந்தவையே. அண்டத்தின் முடிவு வரும்போது, இவையெல்லாம் மூவுலகில் இருந்தும் விடுபடும். அவை அழிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் படைக்கப்படும். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், உயிர்வாழும் பிற வகை உயிரினங்கள் ஆகிய பிற அனைத்தும், உண்மையில் மனிதர்களில் உலகில் அசைவுள்ள அனைத்தும் குறுகிய வாழ்வு கொண்டவையே.

மன்னர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரும் பெரும் செழிப்பை அனுபவித்து, இறுதியில் அழிவு காலத்தை அடைந்து, {இப்பிறவியின்} நற்செயல் மற்றும் தீச்செயல்களின் கனிகளை மீண்டும் பிறந்து அனுபவிக்கிறார்கள். நீ யுதிஷ்டிரனிடம் சமாதானம் கொள்வதே உனக்குத் தகும். பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இருவரும் இந்த உலகத்தை ஆளட்டும். ஓ! சுயோதனா {துரியோதனா}, “நானே பலவான்” என்று ஒருவன் சிந்திக்கக்கூடாது. எனெனில், ஓ! மனிதர்களில் காளையே, பொதுவாகப் பலவானாகக் கருதப்படும் மனிதர்களை விடப் பலம் நிறைந்தவர்களும் காணப்படுகிறார்களே. ஓ! குரு குலத்தின் மகனே {துரியோதனா}, உண்மையாகவே பலவானாக இருப்பவர்களால், உடல்வலிமை, அரிதாகவே பலமாகக் கருதப்படுகிறது. பாண்டவர்களைப் பொறுத்தவரை, தேவர்களுக்கு நிகரான ஆற்றல் நிறைந்த அவர்கள் அனைவரும் பலவான்களாகவே கருதப்படுகறார்கள்.

இதன் தொடர்ச்சியாக, தன் மகளுக்கு {குணகேசிக்கு} மணமகன் தேடிய மாதலியின் கதை உதாரணமாகச் சொல்லப்படுகிறது. மூவுலகங்களின் மன்னனுக்கு (இந்திரனுக்கு) மாதலி என்ற பெயரில் அவனது அன்புக்குரிய ஒரு தேரோட்டி இருந்தான். அவனுக்கு {மாதலிக்கு} அழகுக்காக உலகத்தால் கொண்டாடப்படும் ஒரு மகள் {குணகேசி} பிறந்தாள். தெய்வீக அழகுடன் இருந்த அந்த மாதலியின் குழந்தை குணகேசி என்ற பெயரால் அறியப்பட்டாள். உண்மையில், அன்பிலும், கட்டுடலிலும் மாதலியின் மகள் {குணகேசி}, மற்ற பெண்களை எல்லாம் விஞ்சியிருந்தாள். அவளை {குணகேசியை} மணமுடித்துக் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று அறிந்த மாதலியும் அவனது மனைவியும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, தன் கணவன் {மாதலி} அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று கவலைக்குள்ளானான்.

அவன் {மாதலி} தனக்குள்ளேயே, “ஐயோ, நன்னடத்தை, உயர்ந்த மரபு, புகழ் மற்றும் பணிவு கொண்ட குடும்பங்களில் ஒரு மகளின் பிறப்பு, எப்போதும் தீமையையே விளைவிக்கிறது. மரியாதைக்குரிய குடும்பங்களில் மகள்கள் பிறக்கும்போது, தாய்வழி, தந்தை வழி மற்றும் திருமணத்தால் பந்தப்படும் மூன்று குடும்பங்களின் பெருமையும் எப்போதும் ஆபத்துக்குள்ளாகிறது. எனது மனக்கண்ணால், தேவர்கள் மற்றும் மனிதர்களின் உலகில் தேடிப் பார்த்ததில், {எனது மகளுக்கு} தகுதியுடைய எந்த மணமகனையும் நான் காணவில்லை” என்று நினைத்தான்.

{முனிவர்} கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “தேவர்களிலும், தைத்தியர்களிலும், கந்தர்வர்களிலும், மனிதர்களிலும், எண்ணற்ற முனிவர்களிலும், தனது மகளுக்குத் தகுந்த கணவனாக யாரையும் மாதலி கருதவில்லை. இரவில், தனது மனைவியான சுதர்மையிடம் ஆலோசித்து, நாகர்களின் உலகத்திற்குப் பயணம் மேற்கொள்வதில் தனது இதயத்தை நிலைநிறுத்தினான். பிறகு அவன் {மாதலி} தனக்குள்ளேயே, “தேவர்களிலோ, மனிதர்களிலோ எனது குணகேசிக்குத் தகுந்த அழகனை நான் காணவில்லை. நாகர்கள் மத்தியில் எவனாவது நிச்சயம் இருப்பான்” என்று சொல்லிக் கொண்டான். இப்படிச் சொன்ன அவன் {மாதலி}, தனது மனைவியிடம் விடைபெற்றான். தனது மகளின் {குணகேசியின்} உச்சிமுகர்ந்த மாதலி, பாதாள உலகத்திற்குள் நுழைந்தான்

மாதலி கண்ட வருணலோகம்! – உத்யோக பர்வம் பகுதி 98-இந்திரனின் தேரோட்டி மாதலி தனது மகள் குணகேசிக்கு மணமகன் தேட நாகலோகம் சென்றுகொண்டிருந்த போது,  மாதலியை நாரதர் வருணனிடம் அழைத்துச் செல்வது; மாதலிக்கு நாரதர் வருணலோகத்தைச் சுற்றிக் காட்டி விளக்குவது; காண்டீவத்தின் முன்னோடியான ஒரு வில்லை நாரதர் மாதலிக்குக் காட்டியது…

{முனிவர்} கண்வர் {துரியோதனனிடம்} சொன்னார், “மாதலி தனது வழியில் சென்று கொண்டிருந்தபோது, வருணனை (நீர் நிலைகளின் தேவனைச்) சந்திக்கச் சென்று கொண்டிருந்த பெரும் முனிவரான நாரதரைக் கண்டான். மாதலியைக் கண்ட நாரதர், “எங்கே செல்கிறாய்? ஓ! தேரோட்டி {சூதா} {மாதலி}, சொந்த காரியமாகச் செல்கிறாயா? அல்லது இந்த உனது பயணம் சதக்கிரதுவின் {இந்திரனின்} கட்டளையா?” என்று கேட்டார்.

தன் {தான் விரும்பும்} இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நாரதரால், வழியில் இப்படிக் கேட்கப்பட்ட மாதலி, தனது பயண நோக்கத்தை அவரிடம் {நாரதரிடம்} முறையாகச் சொன்னான். அனைத்தையும் அறிந்து கொண்ட அந்த முனிவர் {நாரதர்}, மாதலியிடம், “நாம் இருவரும் சேர்ந்தே செல்லலாம். என்னைப் பொறுத்தவரை, விண்ணுலகில் இருந்து வந்த நான் நீர்நிலைகளின் தலைவனை {வருணனைத்} தேடி பாதாள உலகத்திற்குச் செல்கிறேன். நான் உனக்கு அனைத்தையும் சொல்கிறேன். ஓ! மாதலி, நன்கு தேடிய பிறகு, நாம் மணமகனைத் தேர்ந்தெடுக்கலாம்” என்றார்.

பிறகு பாதாள உலகத்திற்குள் நுழைந்த ஒப்பற்ற இணையான மாதலியும், நாரதரும், அங்கே லோகபாலகனான நீர்நிலைகளின் தலைவனைக் {வருணனைக்} கண்டனர். அங்கே தெய்வீக முனிவருக்குரிய வழிபாட்டை நாரதர் பெற்றார், பெரும் இந்திரனுக்கு நிகரான வழிபாட்டை மாதலி பெற்றான். காரியத்தில் நிபுணர்களான அந்த இருவரும், தாங்கள் வந்த நோக்கத்தைத் தெரிவித்து, அவனிடம் {வருணனிடம்} விடைபெற்றுக் கொண்டு, நாகர்களின் உலகத்தினுள் உலவத் தொடங்கினர். பாதாள உலகத்தில் வசிப்பவர்கள் அனைவரையும் அறிந்த நாரதர், தன் தோழனுக்கு {மாதலிக்கு} நாகலோகவாசிகள் குறித்து விரிவாக விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.

நாரதர் {மாதலியிடம்}, “ஓ! தேரோட்டி {சூதா} {மாதலி}, மகன்களாலும், பேரப்பிள்ளைகளாலும் சூழப்பட்டிருந்த வருணனை நீ கண்டாய். நீர்நிலைகளின் தலைவனுடைய {வருணனின்} ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பார். இது சுற்றிலும், இனிமை நிறைந்ததாக, செல்வங்கள் நிறைந்ததாக இருக்கிறது. கடலின் தலைவனான வருணனின் மகன் புஷ்கரன், தனது நடத்தையாலும், மனநிலையாலும், புனிதத்தாலும் தனித்துவமானவன் ஆவான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய அந்தப் புஷ்கரன் {வருணனின் மகன்}, வருணனின் பெரும் விருப்பத்திற்குரிய மகனும், பெரும் அழகுடையவனும், காண்பதற்கு இனிமையானவனும் ஆவான்.

சோமனின் மகள் {சந்திரனின்மகள்} அவனையே தனது கணவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஸ்ரீக்கு {லட்சுமிக்கு} இணையான அழகுடையவளும், இரண்டாவது ஸ்ரீயைப் போன்றவளுமான சோமனின் அந்த மகள், ஜோதஸ்நாகாலி {ஜ்யோதஸ்நாகாலி} என்ற பெயரால் அறியப்படுகிறாள். உண்மையில், முன்னர் ஒரு முறை அவள் {ஜோதஸ்நாகாலி}, அதிதியின் மகன்களில் முதன்மையானவனான அவர்களில் மூத்தவனைத் {தத்ரி} [1] தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தேவர்கள் தலைவனின் தோழா {மாதலியே}, வருணி [2] என்றழைக்கப்படும் மது நிறைந்ததும், முழுக்க முழுக்கத் தங்கத்தாலானதுமான இந்த வசிப்பிடத்தைப் பார். உண்மையில் அந்த மதுவை அடைந்த பிறகுதான், தேவர்கள் தங்கள் தெய்வத்தன்மையை அடைந்தனர்.

நீ காணும் பல வகைகளிலான இந்தச் சுடர்மிகும் ஆயுதங்கள் அனைத்தும், ஓ! மாதலி, தங்கள் அரசுரிமையை இழந்த தைத்தியர்களுக்குச் சொந்தமானதே. இந்த ஆயுதங்கள் சிதைவடையாதனவும், எதிரியின் மீது ஏவப்பபட்டால் மீண்டும் ஏவியவர் கரங்களுக்கே எப்போதும் திரும்புவனவுமாகும். போரில் தேவர்களுக்குக் கிடைத்த செல்வங்களான இவற்றை, எதிரிகள் மீது பயன்படுத்த கணிசமான மன ஆற்றல் தேவை. பழங்காலத்தில் பல்வேறு வகைகளிலான தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட ராட்சசர்கள் மற்றும் தைத்தியர்கள் ஆகியோரின் {அசுரர்களின்} பல குலங்கள் இங்கே வசித்திருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் தேவர்களால் வீழ்த்தப்பட்டனர். அங்கே, சுடர்மிகும் தழல்களைக் கொண்ட அந்த நெருப்பையும் {அக்னியையும்}, கடும்வெப்பத்தால் உண்டான பளபளக்கும் பிரகாசத்தால் சூழப்பட்டிருக்கும் *விஷ்ணுவின் சக்கரத்தையும் பார்.

உலகத்தின் அழிவுக்காக உருவாக்கப்பட்டதும், சிக்கலான முடிச்சுகள் நிறைந்ததுமான வில் [2] அங்கே கிடப்பதைப் பார். எப்போதும் தேவர்களின் பெரிய கண்காணிப்பினால் அது {அந்த வில்} பாதுகாக்கப்படுகிறது. அர்ஜுனன் தாங்கியிருக்கும் வில்லின் பெயர் {காண்டீவம் என்ற பெயர்} இதில் இருந்தே பெறப்பட்டது. நூறாயிரம் {ஒரு லட்சம்} விற்களின் பலத்தைக் கொண்ட அது, போர்க்காலத்தில் வகிக்கும் சக்தி, வர்ணிக்க இயலாத பெருமை உடையதாகும். தண்டிக்கத்தகுந்த அனைத்துத் தீயவர்களையும், ராட்சச இயல்பு கொண்ட மன்னர்களையும் அது தண்டிக்கும். இந்தக் கடுமையான *வில் {காண்டீவம்} வேதங்களை உச்சரிப்பவரான பிரம்மனால் முதலில் படைக்கப்பட்டது. பெரும் ஆசானான சுக்ரன் {சுக்ராச்சாரியார்}, மன்னர்கள் அனைவருக்கும் இது பயங்கரமானதாகும் என்று சொல்லியிருக்கிறார். பெரும் சக்தியுடைய இது {காண்டீவம்}, நீர் நிலைகளின் தலைவனுடைய {வருணனின்} மகன்களால் தாங்கப்படுகிறது-வருணனின் குடை அந்தக் குடை அறைக்குள் இருப்பதை அங்கே பார். அது மேகங்களைப் போன்ற புத்துணர்வூட்டும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கிறது. அந்தக் குடையில் இருந்து விழும் நீர், சந்திரனைப் போலத் தூய்மையாக இருந்தாலும், யாரும் காணமுடியாத அளவுக்கு இருளால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஓ! மாதலி, இந்த இடங்களில், எண்ணிலடங்கா அற்புதங்களைக் காணலாம். எனினும், இங்கே மேலும் காலத்தைச் செலவிட்டால், உன் காரியத்துக்குப் பாதிப்பேற்படும். எனவே, நாம் இந்த இடைத்தை விட்டு விரைந்து செல்வோம்” என்றார் {நாரதர்}.

பாதாளத்தில் இருக்கும் முட்டை! – உத்யோக பர்வம் பகுதி 99-மாதலிக்கு நாரதர் பாதாளம் என்ற நகரைச் சுற்றிக் காட்டி விளக்குவது; அசுர நெருப்பு, ஹயக்ரீவன் எழுச்சி, பாதாளத்தில் இருக்கும் உயிரினங்கள், மழை உண்டாகும் விதம், யானைகளின் தோற்றம், கோ எனும் நோன்பு, பிரளயத்தின் போது அண்டத்தை அழிக்கக் காரணமாகும் முட்டை ஆகியவற்றைக் குறித்து மாதலியிடம் நாரதர் விளக்குவது..

நாரதர் {இந்திரனின் தேரோட்டி மாதலியிடம்} தொடர்ந்தார், “இங்கே, இந்த நாகர்கள் உலகத்தின் மத்தியிலே பாதாளம் என்ற பெயரில் அறியப்படும் ஒரு நகரம் அமைந்திருக்கிறது. அண்டம் அனைத்திலும் கொண்டாடப்படும் அது, தைத்தியர்களாலும், தானவர்களாலும் வழிபடப்படுகிறது. பூமியில் வாழும் உயிரினங்கள், நீரோட்டத்தின் வலிமையால் இங்கே அடித்துவரப்பட்டால், உரக்க அலறி பயத்தால் பீடிக்கப்படுகின்றன.

இங்கே அசுர நெருப்பு [1] என்ற பெயரால் அறியப்படுவதும், நீரால் மூட்டப்படுவதுமான நெருப்பு, தொடர்ந்து சுடர்விட்டு எரிகிறது. தேவர்களின் தளத்தால் நன்றாகப் பற்றப்பட்டுள்ளதால், கட்டுப்படுத்தப்பட்டு, தான் அடக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அது {அசுர நெருப்பு} அசையாமல் இருக்கிறது. இங்கேதான் தேவர்கள் முதலில் தங்கள் எதிரிகளை வீழ்த்தி, அமிர்தத்தைக் குடித்து, எச்சங்களை வைத்தனர்.

இந்த இடத்தில் இருந்துதான் நிலவின் தேய்வும், வளர்ச்சியும் {க்ஷயமும் விருத்தியும்} காணப்படுகிறது [2]. ஒவ்வொரு மங்கலகராமன சந்தர்ப்பங்களிலும் மீண்டும் தோன்றும் குதிரைத்தலையன் (விஷ்ணு) {ஹயக்ரீவன்}, சுவர்ணன் [3] {ஆதித்தியன்} என்றும் அழைக்கப்படும் வேத பாடல்கள் மற்றும் மந்திரங்கள் ஆகியவை அடங்கிய ஒலியுடன் அண்டத்தை நிரப்பிக் கொண்டு இங்குதான் எழுகிறான். நீர் வடிவங்களான சந்திரன் முதலியவையும், பிறவும் தங்கள் நீரை இந்தப் பகுதியில் பொழிவதால் இந்த அற்புத இடம் பாதாளம் என்று அழைக்கப்படுகிறது [4].

அண்டத்தின் நன்மைக்காக, தெய்வீக யானையான ஐராவதம், இங்கிருந்துதான் குளிர்ந்த நீரை எடுத்து மேகங்களுக்குள் செலுத்துகிறது. அந்த நீரையே இந்திரன் மழையாகப் பொழிகிறான். இங்கே, சந்திரனின் கதிர்களால் வாழும், திமிகள் {Timi} மற்றும் பல்வேறு வடிவங்களிலான பல்வேறு வகைகளைச் சார்ந்த நீர் விலங்குகள் பிறவும் வசிக்கின்றன. ஓ! தேரோட்டி {மாதலி}, இந்த இடத்தில், பகலில், சூரியனின் கதிர்களால் துளைக்கப்பட்டு இறக்கும் பல்வேறு வகையான உயிரினங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் இரவில் மீண்டும் பிழைக்கின்றன. இந்த இடத்தில் சந்திரன் எந்நாளும் உதித்து, தனது கதிர்கள் எனும் கரங்களில் இருக்கும் அமிர்தத்தைக் கொண்டு, இறந்து கிடக்கும் அவ்வுயிரினங்களைத் தொடுவதே அதற்குக் {இறந்த உயிரினங்கள் பிழைப்பதற்குக்} காரணமாகும்.

வாசவனால் {இந்திரனால்} தங்கள் செழிப்பை இழந்தவர்களும், பாவம் நிறைந்தவர்களுமான பல தானவர்கள், அவனால் {இந்திரனால்} வீழ்த்தப்பட்டு, காலத்தால் பீடிக்கப்பட்டு, இங்கே தான் அடைந்திருந்தார்கள். இங்கேதான், உயிரினங்களின் தலைவனும், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெரும் ஆசானுமான {பூதபதியுமான} மகாதேவன் {சிவன்}, அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகக் கடுந்தவத்தைப் பயின்றான்.

“கோ” என்று அழைக்கப்படும் நோன்புகளை நோற்பவர்களும், வேதம் ஓதுதல் மற்றும் வேத கல்வி ஆகியவற்றால் உடல் மெலிந்திருப்பவர்களும், பிராணன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்றை விட்டு, தங்கள் தவங்களின் சக்தியால் சொர்க்கத்தை அடைந்தவர்களுமான மறுபிறப்பாளப் {பிராமண} பெருமுனிவர்கள் பலர் இங்கே வசிக்கின்றனர். கிடைத்த இடத்தில் உறங்கி, தனக்கு முன்பு பிறர் வைக்கும் எதையும் உண்டு, பிறர் தரும் ஆடைகளை உடுத்திக் கொண்டு வாழும் ஒரு மனிதன், “கோ” எனும் நோன்பைப் பின்பற்றும் ஒருவனாகச் சொல்லப்படுகிறான்.

ஐராவதம், வாமனம், குமுதம், தனது குலத்தின் முதல் மன்னனான அஞ்சனம் என்ற யானைகளில் சிறந்த யானைகள், கொண்டாடப்படும் யானையான சுப்ரதிகாவின் குலத்தில் இங்கேதான் பிறந்தன.

ஓ! மாதலி, மேன்மையான தகுதிகளால் தனித்துவமான ஏதாவது மணமகன் இங்கிருக்கிறானா என்று பார். அப்படியிருப்பின், உனது மகளை {குணகேசியை} ஏற்குமாறு வேண்டி நான் அவனிடம் மரியாதையுடன் செல்வேன்.

இந்த நீரில் சுடர்மிகும் அழகோடு கூடிய முட்டை ஒன்று கிடப்பதைப் பார். படைப்பின் ஆரம்பத்தில் இருந்தே இஃது {இந்த முட்டை} இங்கிருக்கிறது. இஃது அசைவதுமில்லை, வெடிப்பதுமில்லை. அதன் தோற்றம் அல்லது இயல்பு குறித்து யாரும் பேசுவதை நான் கேட்டதில்லை. இதன் தந்தை மற்றும் தாய் யார் என்பதை யாரும் அறியமாட்டார்கள். ஓ! மாதலி, உலகின் முடிவு வரும்போது, பலமிக்க நெருப்பு அதனுள் இருந்து வெடித்துப் பரவி, அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் கொண்ட மூன்று உலகங்களையும் அஃது {இந்த முட்டை}  எரிக்கும் என்று சொல்லப்படுகிறது” என்றார் {நாரதர்}.

நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட மாதலி, அவரிடம், “தகுதி உடைய எவரும் இங்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, தாமதமில்லாமல் இங்கிருந்து செல்வோமாக” என்றான் {மாதலி}. 

ஹிரண்யபுரம் சென்ற மாதலி! – உத்யோக பர்வம் பகுதி 100-மாதலிக்கு நாரதர் தைத்தியர்கள் மற்றும் தானவர்கள் வசித்த பகுதியைச் சுற்றிக் காட்டி விளக்கியது; ஹிரண்யபுரம், காலகஞ்சர்கள், யாதுதானர்கள், நிவாடகவசர்கள், அவர்கள் வசித்த அரண்மனைகள், ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி மாதலிக்கு நாரதர் விளக்கியது…

நாரதர் {மாதலியிடம்} தொடர்ந்தார், “பல்வேறு வகையான நூறு மாயைகளை உள்ளடக்கியதும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களுக்குச் சொந்தமானதும், பரந்திருப்பதும், நகரங்களின் நகரம் என்று புகழ்பெற்றதுமான ஹிரண்யபுரம் என்ற நகரத்தை இதோ பார். பாதாளம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில், மயன் என்ற தானவனால் திட்டமிடப்பட்டுத் தேவதச்சனால் மிகுந்த கவனத்தோடு {இந்நகரம்} கட்டப்பட்டது இது. பழங்காலத்தில் (பிரம்மனிடம்) வரம்பெற்றவர்களும், பெரும் ஆற்றலும், வீரமும் கொண்டவர்களுமான பல தானவர்கள், ஆயிரம் வகைகளிலான தங்கள் வித்தியாசமான மாயைகளை வெளிப்படுத்தியபடி இங்கே வாழ்ந்துவந்தனர். அவர்கள் சக்ரனாலோ {இந்திரனாலோ}, யமன், வருணன், பொக்கிஷத்தலைவன் {குபேரன்} போன்ற வேறு எந்தத் தேவனாலோ வீழ்த்தப்படமுடியாதவர்களாக இருந்தனர்.

ஓ! மாதலி, விஷ்ணுவில் {பாதத்தில்} இருந்து உதித்த காலகஞ்சர்கள் {நைருதர்களும்} என்ற அசுரர்களும், பிரம்மனின் பாதத்தில் உதித்த யாதுதானர்கள் என்ற ராட்சசர்களும் இங்கே வசிக்கின்றனர். அச்சுறுத்தும் பற்களையும், பயங்கர முகத்தையும், காற்றின் வேகம் மற்றும் ஆற்றலையும், மாயையினால் உண்டாகும் பெரும் சக்தியையும் அவர்கள் அனைவரும் கொண்டிருக்கின்றனர். இவர்களைத் தவிரத் தானவர்களில் வேறு வர்க்கத்தினரும், போரில் ஒப்பற்றவர்களுமான நிவாதகவசர்களும் தங்கள் வசிப்பிடத்தை இங்கே கொண்டுள்ளனர்.

சக்ரனால் {இந்திரனால்} இவர்களை வீழ்த்த முடியாது என்பது நீ அறிந்ததே. ஓ! மாதலி, உனது மகன் கோமுகனோடு கூடிய நீயும், தனது மகனோடு {ஜயந்தனோடு} கூடியவனும், சச்சியின் கணவனுமான தேவர்கள் தலைவனும் {இந்திரனும்}, அவர்களுக்கு முன்னிலையில் பல முறை தோற்றோடியிருக்கிறீர்கள்.

ஓ! மாதலி, கலையின் {சிற்பக்கலையின்} விதிகளின் படி நன்கு அலங்கரிக்கப்பட்டு வெள்ளியினாலும், தங்கத்தினாலும் ஆன அவர்களது வீடுகளை இதோ பார். வைடூரிய மணிகளாலும், விசித்திரமான பவழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சூரியகாந்தக் கற்கள் {அர்க்கஸ்பதிகம்} மற்றும் வஜ்ரசரம் என்ற ரத்தினம் {வஜ்ரம்} ஆகியவற்றின் காந்தியினால் அவை பிரகாசிக்கின்றன. அவர்கள் வசிப்பதற்கான அந்த அரண்மணைகளில் பல, பத்மராகங்கள் என்றழைக்கப்படும் ரத்தினங்களாலோ, பிரகாசமான பளிங்கினாலோ, அற்புதமான மரங்களினாலோ பிரகாசிக்கச் செய்யப்பட்டவை போலத் தோன்றுகின்றன. மேலும் அவை சூரியன் அல்லது சுடர்விடும் நெருப்பின் ஒளியையும் கொண்டிருக்கின்றன. அந்த மாளிகைகள் அனைத்தும், கற்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒன்றுக்கொன்று நெருக்கமாக மிக உயரத்தில் இருக்கின்றன. விசாலமான விகிதாச்சாரத்துடனும், பெரும் கட்டுமான அழகுடனும் இருக்கும் அந்த மாளிகைகள் என்னென்ன பொருளில் கட்டப்பட்டிருக்கின்றன என்பதையோ, அந்த அழகின் பாணியையோ விவரிப்பது இயலாதது. உண்மையில், அலங்காரத்தின் விளைவாக அவை மிகுந்த அழகோடு இருக்கின்றன.

பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுக்காக அமைந்த தைத்தியர்களின் ஓய்வில்லங்களையும், அவர்கள் உறங்குவதற்கான படுக்கைகளையும், விலைமதிப்பற்ற கற்களால் செய்யப்பட்ட அவர்களது ஆடம்பரப் பாத்திரங்களையும் {utensils}, அவர்களது பயன்பாட்டுக்கான இருக்கைகளையும் இதோ பார். ஒருவன் கேட்கும் மலர்கள் மற்றும் கனிகள் அனைத்தையும் தரவல்லவையும், தங்கள் விருப்பப்படி நகர்ந்து கொண்டிருப்பவையுமான இந்த மரங்களையும், இந்த நீரூற்றுகளையும், மேகங்களைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் அவர்களது மலைகளையும் இதோ பார். ஓ! மாதலி, இங்கே உனக்கு ஏற்புடைய மணமகன் யாராவது இருக்கிறானா என்று பார். அப்படி யாரையும் காணவில்லையென்றால், நீ விரும்பினால், இங்கிருந்து இந்த உலகத்தின் வேறொரு பகுதிக்குச் செல்வோம்” என்றார் {நாரதர்}.

இப்படிச் சொல்லப்பட்ட மாதலி, நாரதரிடம், “ஓ! தெய்வமுனியே {நாரதரே}, தேவலோக வாசிகளுக்கு ஏற்பில்லாத எதையும் நான் செய்வது எனக்குத் தகாது. தேவர்களும், தானவர்களும் {அசுரர்களும்} சகோதரர்களாக இருப்பினும், அவர்களுக்குள் எப்போதும் பகையே இருக்கிறது. எனவே, எங்கள் எதிரிகளுடன் நான் எவ்வாறு சம்பந்தம் கொள்ள முடியும்? ஆகவே, நாம் வேறு ஏதாவது இடத்திற்குச் செல்வோம். தானவர்களில் தேடுவது எனக்குத் தகாது. உம்மைப் பொறுத்தவரை, உமது இதயம் என்றென்றைக்கும் சண்டைகளைத் தூண்டிவிடுவதிலேயே நிலைத்து நிற்கும் என்பதை நான் அறிவேன்” என்றான் {மாதலி}.

பறவைகளின் மாகாணம்! – உத்யோக பர்வம் பகுதி 101-மாதலிக்கு நாரதர் பறவைகளின் இடத்தைச் சுற்றிக் காட்டி விளக்கியது; கருடனின் பெருமை, விஷ்ணு அந்தக் குலத்திற்குக் கொடுத்திருக்கும் அங்கீகாரம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி மாதலிக்கு நாரதர் விளக்கியது; கருட பரம்பரையில் வந்த தலைவர்களின் பெயர்களை நாரதர் சொன்னது…

நாரதர் {மாதலியிடம்} தொடர்ந்தார், “இந்த இடம் அற்புத இறகுகள் படைத்த பறவைகளுக்குச் சொந்தமானது. இவர்கள் {இந்தப் பறவைகள்} அனைவரும் பாம்புகளை உண்டு வாழ்கின்றனர். தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தவதிலோ, பயணங்கள் மேற்கொள்வதிலோ, சுமைகளைச் சுமப்பதிலோ இவர்கள் {பறவைகள்} எந்தக் களைப்பையும் அறிவதில்லை. ஓ! தேரோட்டி {மாதலி}, இந்தக் குலம் கருடனின் ஆறு மகன்களில் இருந்து பெருகியது. அவர்கள் சுமுகன், சுனாமா, சுனேத்திரன், சுவர்ச்சஸ், சௌஞ்சன் {சுருக்} மற்றும் பறவைகளின் இளவரசனான சுபலன் ஆகியோர் ஆவர்.

காசியபர் வம்சாவளியில் பிறந்து, வினதையின் குலப்பெருமையை உயர்த்தியவர்களும், தங்கள் வகையில் முதன்மையானவர்களுமான இந்தச் சிறகு படைத்த பறவைகளில் பலர், பிள்ளைகளைப் பெற்று, ஆயிரக்கணக்கான அரசமரபுகளைத் தோற்றுவித்துப் பெருகினர். இந்தப் பறவைகள் அனைவரும் உன்னத இரத்தம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த உயிரினங்கள் அனைவரும் பெரும் செழிப்புடனும், ஸ்ரீவத்சம் என்று அழைக்கப்படும் மங்கலச் சுழியடனும், பெரும் செல்வத்துடனும், பெரும் வலிமையுடனும் இருக்கின்றனர்.

செயல்களால் இவர்கள் க்ஷத்திரிய வகையினராக இருந்தாலும், பாம்புகளை உண்டு வாழ்வதால், இவர்கள் அனைவரும் இரக்கமற்றவர்களாக இருக்கிறார்கள். தங்கள் உறவினர்களையே உண்பதன் விளைவாக இவர்கள் ஆன்ம ஞானத்தை {முக்தியை} அடைவதே இல்லை. ஓ! மாதலி, இவர்களின் தலைவர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்கிறேன் கேள். விஷ்ணு இந்தக் குலத்தை அங்கீகரித்ததன் விளைவாக இந்தக் குலம் பெரும் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. விஷ்ணு இவர்கள் அனைவரின் இதயங்களிலும் எப்போதும் வசிக்கிறான். அந்த விஷ்ணுவே இவர்களின் பெரும் புகலிடமும் ஆவான்.

சுவர்ணசூடன், நாகாசின், தாருணன், சண்டதுண்டகன், அநலன், விசாலாக்ஷன், குண்டலின், பங்கஜித், வஜ்ரவிஷ்கம்பன், வைநத்தேயன், வாமனன், வாதவேகன், திசாசக்ஷு, நிமேஷன், அநிமிஷன், திரிராவன், சப்தராவன், வால்மீகி, தீபகன், தைத்யத்வீபன், சரிதவீபன், சாரஸன், பத்மகேதனன், சுமுகன், சித்ரகேது, சித்ரபரன், அநகன், மேஷஹிருத், குமுதன், தக்ஷன், சர்ப்பாந்தன், சோமபோஜனன், குருபாரன், கபோதன், சூர்யநேத்திரன், சிராந்தகன், விஷ்ணுதர்மன், குமாரன், பரிபர்ஹன், ஹரி, சுஸ்வரன், மதுபர்க்கன், ஹேமவர்ணன், மால்யன், மாத்ரிஸ்வான், நிசாகரன், திவாகரன் ஆகியவையே அவர்களது பெயர்கள்.

நான் பெயர்களைச் சொன்ன கருடனின் இந்த மகன்கள் அனைவரும் இந்தப் பகுதியில் இருக்கும் ஒரே மாகாணத்தைச் சேர்ந்தவர்களே. பலம், புகழ், சாதனைகள் ஆகியவற்றைத் தனித்தன்மையுடன் வென்றவர்களை மட்டுமே நான் இப்போது குறிப்பிட்டிருக்கிறேன். இங்கே இருப்பவர்களில் யாரையும் நீ விருப்பமில்லையென்றால், ஓ! மாதலி, நான் உன்னை வேறு பகுதிக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே நீ உனது மகளுக்கு {குணகேசிக்குத்} தகுந்த கணவனைக் காண நேரலாம்” என்றார் {நாரதர்}.

தென்திசையைத் தாங்குபவள் ஹம்சிகை! – உத்யோக பர்வம் பகுதி 102-மாதலிக்கு நாரதர் ரசாதலத்தைச் சுற்றிக் காட்டி விளக்கியது; சுரபி, சுரூபை, ஹம்சிகை, சுபத்ரை, சர்வகாமதுகை போன்ற பசுக்களையும், பாற்கடலைச் சுற்றி வசிக்கும் பேனபர்கள் என்ற முனிவர்களைக் குறித்தும் மாதலிக்கு நாரதர் சொன்னது…

நாரதர் {இந்திரனின் தேரோட்டி மாதலியிடம்} சொன்னார், “நான் இப்போது இருக்கும் இடம் ரசாதலம் என்று அழைக்கப்படுகிறது. இது பூமிக்கு அடியில் ஏழாவது அடுக்காக இருக்கிறது. அமிர்தத்தில் இருந்து பிறந்தவளும், பசுக்கள் அனைத்திற்கும் தாயானவளுமான சுரபி {காமதேனு} இங்கே வசிக்கிறாள். பூமியில் உள்ள சிறந்த பொருட்களின் சாரத்தால் {பூமியின் சாரமான புலம் முதலியவற்றில் உண்டான ஆறு ரசங்களின் சாரத்தால்} அவள் எப்போதும் பாலைத் தருகிறாள். (பேசப்பட்டுவரும்) ஆறு வெவ்வேறு வகையான சுவைகளின் சாரத்தில் இருந்து எழுந்த அது {பால்}, அற்புத சுவை கொண்டதாக இருக்கிறது. அமிர்தத்தைக் குடித்து நிறைந்து, சிறந்த பொருட்களைக் கக்கும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} வாயில் இருந்து பழங்காலத்தில் எழுந்தவள் இந்தக் களங்கமற்ற சுரபியாவாள்.

இவளது பாலின் ஒரு தாரை மட்டுமே, பூமியில் விழுந்தது. அதுவே, தற்போது புனிதமானதாகவும், அற்புதமானதாகவும் அறியப்படும் “பாற்கடலை” உண்டாக்கியது. அந்தக் கடலின் விளிம்புகள். மலர்களின் கச்சையை {மலர்மாலையை} ஒத்திருக்கும் வெண்ணுரையால் எப்போதும் மூடப்பட்டிருக்கின்றன. நுரையைக் குடிப்பவர்கள் {பேனபர்கள்} என்ற பெயரில் அறியப்படும் சிறந்த தவசிகள், அந்த நுரையை மட்டுமே உண்டு இந்தக் கடலைச் சுற்றி வசிக்கின்றனர். ஓ! மாதலி, அந்த நுரையைத் தவிர வேறு எதையும் உண்டு வாழாததால், அவர்கள் நுரையைக் குடிப்பவர்கள் {பேனபர்கள்} என்று அழைக்கப்படுகிறார்கள் [1]. கடுமையான தவங்களில் ஈடுபடும் அவர்களைக் கண்டு தேவர்களும் அஞ்சுவார்கள் என்று அறியப்படுகிறது.

ஓ! மாதலி, அவளிடம் {சுரபியிடம்} இருந்து, நான்கு திக்குகளைத் தாங்கும் நான்கு பிற பசுக்களும் பிறந்தன. எனவே அவர்கள் திக்குகளைத் தாங்குபவர்கள் என்று (திக்பலி என்று) அழைக்கப்படுகிறார்கள். சுரபியிடம் பிறந்து கிழக்குத் திசையைத் தாங்குபவள் சுரூபை {Surupa} என்று அழைக்கப்படுகிறாள். தென்திசையைத் தாங்குபவள் ஹம்சிகை {Hansika} என்று அழைக்கப்படுகிறாள். ஓ! மாதலி, வருணனால் ஆளப்படும் மேற்குத் திசையைத் தாங்கும் அண்ட வடிவு கொண்ட ஒப்பற்ற பசு, சுபத்ரை என்ற பெயரால் அறியப்படுகிறாள். அறம் சார்ந்த பகுதியை {தர்மம் சார்ந்த பகுதியை} உள்ளடக்கியதும், பொக்கிஷங்களின் தலைவன் குபேரன் பெயரால் அழைக்கப்படுவதுமான வட திசை, சர்வகாமதுகை என்ற பெயருடைய பசுவால் தாங்கப்படுகிறது.

அசுரர்களோடு சேர்ந்த தேவர்கள், மந்தரமலையை மத்தாகக் கொண்டு, கடலின் நீரைக் கடைந்து, வருணி எனும் மது, லட்சுமி {என்றழைக்கப்படும் செழிப்பு மற்றும் அருளின் தேவி), அமிர்தம், குதிரைகளின் இளவரசன் உச்சைஸ்ரவம், ரத்தினங்களில் சிறந்த கௌஸ்துபம் ஆகியவற்றை அடைந்தனர். ஓ! மாதலி, இந்த அருமையான பொருட்களைத் தந்த அந்த நீர் {பாற்கடலின் நீர்} இந்த நான்கு பசுக்களின் பால் கலந்தவையே ஆகும்.

சுரபியைப் பொறுத்தவரை, அவள் தரும் பால் சுவாகாவில் {சுதை = நாகர் உணவு} வாழ்பவர்களுக்குச் சுவாகாவாவும், சுவாதாவில் {சுவதை = பிதிரர் [பிதிர் தேவதை] உணவு} வாழ்பவர்களுக்குச் சுவாதாவாவும், அமிர்தத்தில் {தேவர் உணவு} வாழ்பவர்களுக்கு அமிர்தமாகவும் ஆகிறது. பழங்காலத்தில் ரசாதலத்தில் வாழ்ந்தவர்களால் பாடப்பட்ட ஈரடிச் செய்யுளொன்றைக் கல்விமான்கள் இந்த உலகத்தில் உரைப்பதை இன்னும் கேட்க முடிகிறது. “நாகர்கள் பகுதியிலோ, சொர்க்கத்திலோ, விமானத்திலோ, திரிபிஸ்தபத்திலோ இருப்பவர்கள் கூட ரசாதலவாசிகள் போல இன்பமாக இருப்பதில்லை” என்பதே அந்த ஈரடிச் செய்யுளாகும். 

ஆர்யகனின் பேரன் சுமுகன்! – உத்யோக பர்வம் பகுதி 103-மாதலிக்கு நாரதர் நாகலோகத்தைச் சுற்றிக் காட்டி விளக்கியது; வாசுகியின் பெருமை மற்றும் தன்மை, நாகர்களின் தன்மைகள், மற்றும் நாகர்களில் புகழ்பெற்றவர்களின் பெயர்கள் குறித்தும் மாதலிக்கு நாரதர் சொன்னது; நாகன் சுமுகன் தனது மகளுக்குத் தகுந்தவனாக இருப்பான் என மாதலி சொன்னது; சுமுகன் பற்றி நாரதர் மாதலிக்கு உரைப்பது…

நாரதர் {மாதலியிடம்} சொன்னார், “நீ காணும் இது, தேவர்கள் தலைவனின் {இந்திரனின் தலைநகரமான} அமராவதியை ஒத்திருக்கும் நகரங்களில் முதன்மையான நகரமாகும். இந்நகரம் போகவதி என்ற பெயரால் அறியப்படுகிறது. இது நாகர்கள் மன்னன் வாசுகியால் ஆளப்படுகிறது. கடும் தவங்களில் முதன்மையான தவத்தின் விளைவாகப் பெரும்பரப்புடன் கூடிய பூமிதேவியைத் தாங்க இயன்ற அந்தச் சேஷன் {வாசுகி} இங்கே வசிக்கிறான். அவனது உடல் வெண்மலையைப் போன்றதாகும். தெய்வீக ஆபரணங்களைப் பூண்டவனான அவனுக்கு {வாசுகிக்கு} ஆயிரம் {1000} தலைகள் உண்டு. நெருப்புத் தழல்கள் போன்ற சுடர்மிக்க நாக்குகளைக் கொண்ட அவன் {வாசுகி} பெரும்பலம் கொண்டவனாவான்.

சுரசையின் மகன்களும், பல்வேறு வடிவங்கள் கொண்டவர்களும், விதவிதமான ஆபரணங்களைப் பூண்டவர்களும், ரத்தினங்கள் {நாகரத்தினம்}, சுவஸ்திகா {சுவஸ்திகாரேகை}, {காரேகை}, வட்டங்கள் {சக்ரரேகை}, நீர்ப்பாத்திரங்கள் {கமண்டலுரேகை} ஆகிய குறிகளைத் தாங்கியவர்களுமான எண்ணிலடங்கா நாகர்கள் இங்கே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சிலர் ஆயிரம் தலைகளுடனும், சிலர் ஐநூறுடனும் {500}, சிலர் மூன்று {3} தலைகளுடனும் இருக்கின்றனர். சிலர் இரண்டும் {2}, சிலர் ஐந்து {5} தலைகளும் கொண்டுள்ளனர். சிலர் ஏழு {7} முகங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் மலைகளை நிகர்த்த பெரும் உடல்களுடன் பூமியில் நீண்டு கிடக்கின்றனர். பல ஆயிரங்களாகவும், பத்து லட்சங்களாகவும், பத்து கோடிகளாகவும் அவர்கள் இருக்கிறார்கள். உண்மையில், ஒரே குலத்தைச் சேர்ந்த அவர்களை எண்ணவே முடியாது. எனினும், அவர்களில் புகழ்பெற்ற ஒரு சிலரின் பெயர்களை நான் சொல்கிறேன் கேள்.

வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், காளீயன், நகுஷன், {கம்பளன்}, அஸ்வதரன், பாக்யகுண்டன், மணி, அபூரணன், ககன், வாமனன், எலபத்திரன், குகுரன், குகுணன், ஆர்யகன், நந்தகன், கலசன், போதகன், கலிலாஸகன், பிஞ்சரகன், ஐராவதன், சுமனோமுகன், ததிமுகன், சங்கன், நந்தன், உபநந்தகன், ஆப்தன், கோடரகன், சிகி, நிஷ்தூரகன், தித்திரி, ஹஸ்திபத்திரன், குமுதன், மயிலப்பிண்டகன், பத்மர்கள் இருவர், புண்டரீகன், புஷ்பன், முத்கரபர்ணகன், கரவீரன், பீதரகன், ஸம்விருத்தன், விருத்தன், பீண்டாரன், பில்வபத்ரன், மூஷிகாதன், சிரீஷகன், திலீபன், சங்க-சீர்ஷன், ஜியோதிஷகன், அபராஜிதன், கௌரவ்யன், திருதராஷ்டிரன், குஹுரன், கிருசகன், விரஜஸ், தாரணன், சுபாகு, முகரன், ஜயன், பிதிரன், அந்தன், விசுண்டி, விரஸன், சுரஸன் ஆகியோரே அவர்கள். காசியபர் மகன்களில் இன்னும் பலரும் இவர்களும் இருக்கின்றனர். ஓ! மாதலி, நீ தேர்ந்தெடுக்கும் வகையில் இங்கே யாராவது இருக்கிறார்களா என்று பார்?” என்றார் {நாரதர்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “அதேவேளையில், மாதலி, அருகே ஓரிடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நபரைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பேசுவதை நாரதர் நிறுத்தியதும், மனநிறைவு கொண்ட அந்தத் தெய்வீகத் தேரோட்டி {மாதலி} அந்த முனிவரிடம் {நாரதரிடம்}, “கௌரவ்யன் வம்சாவளியைச் சார்ந்த ஆர்யகனின் முன்பு நின்று கொண்டிருப்பவனும், காந்தியுள்ளவனும், அழகும் இளமையும் பொருந்தியவனுமான இந்த இனியவன் எக்குலத்தைச் சார்ந்தவன்? இவனுடைய தந்தையும் தாயும் யார்? எந்த நாகக் குலத்தைச் சேர்ந்தவன் இவன்? உண்மையில், பெரிய கொடிக்கம்பம் {த்வஜம்} போன்றிருக்கும் இவன் எந்த வம்சாவளியைச் சேர்ந்தவன்? இவனது புத்திக்கூர்மை, பொறுமை, அழகு, இளமை ஆகியவற்றின் விளைவால், ஓ! தெய்வீக முனிவரே {நாரதரே}, எனது இதயம் அவன்பால் ஈர்க்கப்படுகிறது. இந்த இளைஞனே என் {மகள்}குணகேசிக்குச் சிறந்த கணவனாக இருப்பான்” என்றான் {மாதலி}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “சுமுகன் என்று அழைக்கப்படும் நாகனைப் பார்த்து மாதலி அடைந்த மனநிறைவைக் கண்ட நாரதர், அவனுடைய பெருமையையும், பிறப்பையும் செய்கைகளையும் தெரிவித்தார். அவர் {நாரதர் மாதலியிடம்}, “ஐராவதனின் குலத்தில் பிறந்த இந்த நாகர்களின் இளவரசன் சுமுகன் என்ற பெயர் கொண்டவனாவான். இவன் ஆர்யகனுக்குப் பிடித்தமான பேரனும், வாமனனின் மகளுடைய மகனும் ஆவான். ஓ! மாதலி, இந்த இளைஞனின் {சுமுகனின்} தந்தை, சிகுரன் என்று அழைக்கப்பட்ட நாகனாவான். சமீபத்தில்தான் அவன் {சிகுரன்} வினதையின் மகனால் {கருடனால்} கொல்லப்பட்டான்” என்றார் {நாரதர்}.

இதைக்கேட்ட மாதலி மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். பிறகு நாரதரிடம் பேசிய அந்தத் தேரோட்டி {மாதலி}, “ஓ! ஐயா, நாகர்களில் சிறந்த இவன் {சுமுகன்}, எனது மருமகனாவதற்கு மிகவும் ஏற்றவனாக இருக்கிறான். அவனை அடைய ஒரு முயற்சி செய்யும். ஏனெனில், ஓ! முனிவரே, நான் எனது அன்புக்குரிய மகளை {குணகேசியை} இந்த நாகனுக்குக் கொடுக்கும் நினைப்பே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதே” என்றான் {மாதலி}.

குணகேசியை மணந்த சுமுகன்! – உத்யோக பர்வம் பகுதி 104-ஆர்யகனிடம் நாரதர் மாதலியை அறிமுகப்படுத்தியது; மாதலி தன் மகள் குணகேசியை ஆர்யகனின் பேரன் சுமுகனுக்கு மணமுடித்துக் கொடுக்க விரும்புவதாகச் சொல்வது; கருடன் மீது கொண்ட அச்சத்தால் ஆர்யகன் தயங்கியது; மாதலி சுமுகனையும், ஆர்யகனையும் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றது; அங்கே இந்திரனுடன் விஷ்ணுவையும் காண்பது; இந்திரன் சுமுகனுக்கு நீண்ட ஆயுளை வழங்குவது; சுமுகன் குணகேசி திருமணம் நடந்தேறுவது…

பிறகு நாரதர் {ஆர்யகனிடம்} சொன்னார், “இவன் மாதலி என்ற பெயரையுடைய தேரோட்டியாவான். அது தவிர, இவன் {மாதலி} சக்ரனின் {இந்திரனின்} அன்புக்குரிய நண்பனாவான். தூய்மையான நடத்தை கொண்ட இவன் {மாதலி} அற்புதமான மனநிலையையும், எண்ணற்ற நற்பண்புகளையும் கொண்டிருக்கிறான். மனோபலமும், பெரும் சக்தியும் பலமும் கொண்டவன் இவன். இவன் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நண்பனும், ஆலோசகனும், தேரோட்டியுமாவான். அனைத்துப் போர்களிலும் இவனுக்கும் வாசவனுக்கு {இந்திரனுக்கும்}, ஆற்றல் மற்றும் பலத்தைப் பொறுத்தவரையில் சிறு வித்தியாசமே காணப்பட்டிருக்கிறது.

தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் நடைபெற்ற அனைத்துப் போர்களிலும், ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படுவதும், எப்போதும் வெற்றிகரமானதுமான இந்திரனின் தேரை, தனது மனதை மட்டுமே கொண்டு, மாதலியே இயக்கி வருகிறான். இவனது குதிரைகளை ஓட்டும் திறனால், வாசவன் {இந்திரன்} தேவர்களின் பகைவர்களை அடக்கியிருக்கிறான். ஏற்கனவே மாதலியிடம் தோல்வியுற்ற அசுரர்கள், அதன் தொடர்ச்சியாக இந்திரனால் கொல்லப்பட்டார்கள்.

உலகில் ஒப்பற்ற அழகுடன் கூடிய அற்புத மகள் ஒருத்தியை மாதலி கொண்டிருக்கிறான். உண்மைநிறைந்தவளும், அனைத்து குணங்களும் நிரம்பியவளுமான அவள், குணகேசி என்ற பெயரால் அறியப்படுகிறாள். இவன் {மாதலி} தகுந்த மணமகனுக்காக மூவுலகங்களிலும் தேடிக் கொண்டிருந்தான். ஓ! தெய்வீக காந்தியைக் கொண்டவனே {ஆர்யகா}, உனது பேரனான சுமுகன் இவனது {மாதலியின்} மகளுக்கு {குணகேசிக்குத்} தகுந்த கணவனாக இருப்பான்.

ஓ! பாம்புகளில் சிறந்தவனே {ஆர்யகா}, இந்த முன்மொழிவு உனக்கு ஏற்புடையதாக இருப்பின், ஓ! ஆர்யகா, உனது பேரனுக்குரிய பரிசாக இவனது மகளைப் பெற, விரைந்து முடிவெடுப்பாயாக. விஷ்ணுவின் இல்லத்தில் இருக்கும் லட்சுமியைப் போல, அல்லது அக்னியின் இல்லத்தில் உள்ள சுவாகாவைப் போல, கொடியிடை கொண்ட குணகேசி உனது குலத்தில் ஒரு மனைவியாக இருக்கட்டும். எனவே, சச்சியைப் பெறத் தகுந்த வாசவனைப் {இந்திரனைப்} போல இருக்கும் உனது பேரன் {சுமுகன்} குணகேசியை ஏற்கட்டும். இந்த இளைஞன் தனது தந்தையை இழந்திருப்பினும், இவனது நற்குணங்கள், ஐராவதன் மற்றும் உன் மேல் கொண்ட மதிப்பு ஆகியவற்றின் காரணமாகவே நாங்கள் இவனைத் தேர்ந்தெடுத்தோம்.

உண்மையில், சுமுகனின் சிறப்புகள் {புண்ணியங்கள்}, அவனது மனநிலை, தூய்மை, தன்னடக்கம் மற்றும் பிற தகுதிகளின் விளைவாக, மாதலி தனது மகளை அவனுக்குக் கொடுக்க விரும்புகிறான். எனவே, நீ மாதலியைப் பெருமைப்படுத்துவதே தகும்” என்றார் {நாரதர்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட ஆர்யகன், தனது பேரன் {சுமுகன்} மணமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டு, தனது மகனின் மரணத்தையும் நினைத்து, ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாலும், துயரத்தாலும் நிறைந்தான். அவன் {ஆர்யகன்} நாரதரிடம், “ஓ! தெய்வீக முனிவரே {நாரதரே}, குணகேசியை மருமகளாக்கிக் கொள்ள நான் எப்படி விரும்ப முடியும்? ஓ! பெரும் முனிவரே, இதனால், உமது வார்த்தைகளை நான் உயர்வாக மதிக்கவில்லை என்றாகாது. ஏனெனில், இந்திரனின் நண்பனுடன் {மாதலியுடன்} சம்பந்தம் வைத்துக் கொள்ள எவன்தான் விரும்பமாட்டான்?

எனினும், ஓ! பெரும் முனிவரே, உறுதியற்ற தன்மையின் விளைவால் அந்தச் சம்பந்தம் வெகுநாளைக்கு நீடிக்காது என்பதாலேயே நான் தயங்குகிறேன். ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே, இந்த இளைஞனைப் படைத்த எனது மகன் {சிகுரன்}, கருடனால் விழுங்கப்பட்டுவிட்டான். நாங்கள் அதன் காரணமாகத் துயரத்தில் இருக்கிறோம். ஓ! தலைவா {நாரதரே}, ஆனால் அதற்கு மேலும் மோசமான நிலையென்னவென்றால், அந்த வினதையின் மகன் {கருடன்} இந்தப் பகுதியை விட்டுச் செல்லும்போது, “ஒரு மாதத்திற்குப் பிறகு நான் இந்தச் சுமுகனையும் விழுங்குவேன்” என்றான். அவன் {கருடன்} சொன்னது போலவே அது நிச்சயம் நடக்கும். ஏனெனில் நாங்கள் யாரைச் சமாளிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவோம். சுபர்ணனின் {கருடனின்} இவ்வார்த்தைகளால் நாங்கள் மகிழ்ச்சியற்றுப் போனோம்” என்றான் {ஆர்யகன்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “பிறகு மாதலி ஆர்யகனிடம், “நான் ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த உனது பேரன் {சுமுகன்}, என்னால் எனது மருமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். என்னுடனும் நாரதருடனும் இந்த நாகன் {சுமுகன்} சொர்க்கத்தின் தலைவனான தேவர்களின் தலைவனிடம் {இந்திரனிடம்} வரட்டும். பிறகு நான் சுபர்ணனின் {கருடனின்} வழியில் தடைகளை உண்டாக்க முயல்வேன். நீ அருளப்பட்டிருப்பாயாக. எனவே, ஓ! நாகா {ஆர்யகா}, தேவர்கள் தலைவனின் முன்னிலைக்குச் சுமுகன் என்னுடன் வரட்டும்” என்றான் {மாதலி}. இதைச் சொன்ன அவர்கள் சுமுகனைத் தங்களோடு அழைத்துச் சென்றனர். பெரும் பிரகாசத்துடன் கூடிய அந்த நால்வரும், விண்ணுலகம் வந்து, பெரும் புகழுடன் அமர்ந்திருந்த தேவர்கள் தலைவனான சக்ரனைக் {இந்திரனைக்} கண்டனர். நான்கு கரங்களைக் கொண்ட ஒப்பற்ற விஷ்ணுவும் அந்த இடத்தில் இருக்கும்படி அப்போது நேர்ந்தது. பிறகு, நாரதர் மாதலியையும் அவனது {மணமகன்} தேர்வையும் குறித்த முழுக் கதையையும் சொன்னார்.”

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “நாரதர் சொன்ன அனைத்தையும் கேட்ட விஷ்ணு, அண்டத்தின் தலைவனான புரந்தரனிடம் {இந்திரனிடம்}, “இந்த இளைஞனுக்கு {சுமுகனுக்கு} அமிர்தம் கொடுக்கப்படட்டும், இவனும் தேவர்களைப் போல இறவாதவனாகட்டும். ஓ! வாசவா {இந்திரா}, மாதலி, நாரதர், சுமுகன் ஆகிய அனைவரின் விருப்பமும் உனது அருளால் நிறைவேறட்டும்” என்றான்.

எனினும், வினதை மகனின் {கருடனின்} ஆற்றலை எண்ணிய புரந்தரன் {இந்திரன்}, விஷ்ணுவிடம், “உன்னாலேயே அமிர்தம் அவனுக்கு வழங்கப்படட்டும்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட விஷ்ணு, “அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்துக்கும் தலைவன் நீ. ஓ தலைவா {இந்திரா}, உன்னால் கொடுக்கப்படும் பரிசை மறுப்பவன் எவன் இருக்கிறான்?” என்றான்.

{விஷ்ணுவின்} இந்த வார்த்தைகளால் சக்ரன் அந்த நாகனுக்கு {சுமுகனுக்கு} நீண்ட ஆயுளைக் கொடுத்தான். வலனையும் விருத்திரனையும் கொன்றவனான அவன் {இந்திரன்}, அவனை {சுமுகனை} அமிர்தத்தைக் குடிக்கச் செய்யவில்லை. {நீண்ட ஆயுளெனும்} அந்த வரத்தைப் பெற்ற சுமுகன், தனது முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறிகளைப் பரவவிட்டதால், (உண்மையிலேயே) அவன் சுமுகன் [1] ஆனான். மாதலியின் மகளை {குணகேசியைத்} திருமணம் செய்து கொண்ட அவன் {சுமுகன்}, மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினான். தங்கள் நோக்கம் நிறைவேறிய நாரதரும், ஆர்யகனும் மகிழ்ச்சியால் நிறைந்து, பெருமைமிக்கத் தேவர்கள் தலைவனை {இந்திரனை} வழிபட்டுவிட்டுத் தங்கள் வழியே சென்றனர்” என்றார் {கண்வர்}.

செருக்கழிந்த கருடன்! – உத்யோக பர்வம் பகுதி 105-சுமுகனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்த இந்திரனிடம் கருடன் கோபித்துக் கொள்வது; கருடன் விஷ்ணுவை அவமதித்துப் பேசுவது; கருடன் செருக்கழிந்து, விஷ்ணுவின் பாதம் பணிவது; இந்தக் கதையைச் சொல்லி துரியோதனனுக்குக் கண்வர் புத்தி புகட்டுவது; துரியோதனன் கண்வரை அவமதிக்கும் வகையில் தொடையில் அறைந்து கொள்வது…

கண்வர் {துரியோதனனிடம்} சொன்னார், “அதேவேளையில், ஓ! பாரதா {துரியோதனா}, நாகனான சுமுகனுக்குச் சக்ரன் {இந்திரன்} நீண்ட ஆயுளைக் கொடுத்ததைப் பலமிக்கக் கருடன் கேள்விப்பட்டான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட ஆகாய உலாவியான அந்தச் சுபர்ணன் {கருடன்}, தனது சிறகையடித்து எழுப்பப்பட்ட புயலால் மூன்று உலகங்களையும் அடித்தபடி வாசவனிடம் {இந்திரனிடம்} விரைந்து வந்தான்.

அந்தக் கருடன் {இந்திரனிடம்}, “ஓ! ஒப்பற்றவனே, என்னை அவமதித்து, எனது வாழ்வாதாரத்தில் நீ ஏன் தலையிடுகிறாய்? உனது சுயவிருப்பத்தின் படி எனக்கு வரத்தை அளித்துவிட்டு, பிறகு அதை நீ ஏன் பறிக்கிறாய்? எது எனது உணவு என, அனைத்து உயிரினங்களின் தலைவனால் {பிரம்மனால்} முன்பே விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தெய்வீக கட்டளையின் குறுக்கே நீ ஏன் நிற்கிறாய்? நான் இந்தப் பெரும் நாகனைத் {சுமுகனைத்} தேர்ந்தெடுத்து, {அவனுக்கான} காலத்தையும் குறித்திருக்கிறேன். ஏனெனில், ஓ! தேவா {இந்திரா}, அவனது உடலின் இறைச்சியை எனது எண்ணற்ற பிள்ளைகளின் உணவாக்க நான் நினைத்திருந்தேன். அவன் உன்னிடம் வரத்தைப் பெற்றுவிட்டதால், என்னால் அழிக்கப்பட முடியாதவன் ஆகிவிட்டான். எனவே, அவனது இனத்தைச் சேர்ந்த வேறொருவனை நான் இனிமேல் எவ்வாறு கொல்லத்துணிவேன்? ஓ! வாசவா {இந்திரா}, உனது விருப்பப்படி, இப்படியெல்லாம் நீ விளையாடுகிறாயா? இதனால், நானும் எனது குடும்ப உறுப்பினர்களும், என் இல்லத்தில் {இல்லத்தின் வேலைகளில்} நான் ஈடுபடுத்தியிருக்கும் எனது பணியாட்களும் இறந்துவிடுவோம். ஓ! வாசவா {இந்திரா}, அஃது உன்னை நிறைவாக்கும் என நான் நினைக்கிறேன். [1](கருடனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட சுமுகன் தூமுகன் ஆனான். அதாவது விகார முகம் கொண்டவனான். அவன் நிறம் மாறி, பாம்பின் உருவத்தை அடைந்தான். பிறகு, விஷ்ணுவின் அருகில் சென்று, அவனது பாதத்தைச் சுற்றிக் கொண்டான். அப்போது இந்திரன், “ஓ! கருடா! இஃது என் செயலில்லை. நீ என்னிடம் கோபம் கொள்ளாதே. சுமுகனை விஷ்ணுவே பாதுகாத்தான்” என்றான்.)

உண்மையில், ஓ! வலனையும் விருத்திரனையும் கொன்றவனே {இந்திரா}, பலத்தால் மூன்று உலகங்களுக்கும் தலைவனாக இருக்கும் தகுதி இருந்தும், இன்னொருவனுக்குப் பணியாளாய் இருக்கச் சம்மதித்த எனக்கு இவை அனைத்தும் தகும். {இன்னமும் தகும்}. எனினும், ஓ! மூவுலகங்களின் ஏகாதிபதியே {இந்திரா}, எனது இந்தத் தாழ்மைக்கு விஷ்ணுவே காரணம். ஏனெனில், ஓ! வாசவா {இந்திரா}, நான் உனக்குச் சமமானவனாக இருந்தும், ஓ! தேவர்களின் தலைவா, மூவலகங்களின் அரசுரிமையும் உன்னிடம் இருக்கிறதல்லவா?

உன்னைப்போலவே, நானும் தக்ஷனின் மகளை {வினதையை} [2] எனக்குத் தாயாகவும், காசியபரை எனக்குத் தந்தையாகவும் கொண்டிருக்கிறேன். (இந்திரனின் தாய், தக்ஷனின் மகளான அதிதி ஆவாள். கருடனின் தாய் தக்ஷனின் இன்னொரு மகளான வினதையாவாள்)உன்னைப் போலவே, எந்தக் களைப்பும் இல்லாமல் மூவுலகங்களின் சுமையை என்னாலும் சுமக்க முடியும். எந்த உயிரினத்தாலும் தடுக்கப்பட முடியாத அளவிட முடியாத பலத்தை நானும் கொண்டிருக்கிறேன். தைத்தியர்களுக்கு எதிரான போரில் நானும் பெரும் செயல்களைச் செய்திருக்கிறேன். திதியின் மகன்களில் சுரூதஸ்ரீ, சுரூதசேனன், விவஸ்வான், ரோசனாமுகன், பிரசருதன், காலகாக்ஷன் ஆகியோர் என்னால் கொல்லப்பட்டனர்.

உனது தம்பியுடைய {விஷ்ணுவுடைய} தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்து, நான் அதைக் {அந்தத் தேரைக்} கவனமாகப் போரில் பாதுகாக்கிறேன். சில சமயங்களில், நான் உனது தம்பியை {விஷ்ணுவை} எனது முதுகில் சுமக்கிறேன். இதன்காரணமாகத் தான் நீ என்னை அவமதிக்கிறாயோ? அவ்வளவு பாரமிக்கச் சுமைகளைச் சுமக்கும் வல்லமை இந்த அண்டத்தில் எவனுக்கு இருக்கிறது? எவன் என்னைவிடப் பலவானாக இருக்கிறான்? மேன்மையானவனான நான், உனது தம்பியையும் {விஷ்ணுவையும்}, அவனது நண்பர்களையும் எனது முதுகில் சுமக்கிறேன். எனினும் {நான் மேன்மையானவனாக இருப்பினும்}, எனது முதுகில் தன்னைச் சுமக்கச் செய்து, இதுவரை என்னை அவமதித்து வரும் உனது தம்பியைப் {விஷ்ணுவைப்} போலவே, எனது உணவில் தலையிட்டு, என்னை அவமதித்து, எனது கௌரவத்தை நீ அழித்துவிட்டாய். {என்று இந்திரனிடம் சொன்ன கருடன், பிறகு விஷ்ணுவிடம் திரும்பி}, உன்னைப் பொறுத்தவரை, ஓ! விஷ்ணுவே, அதிதியின் கருவறையில் பிறந்தவர்களான ஆற்றல் மிக்கவர்களும் பலமிக்கவர்களுமான அனைவரைக் காட்டிலும், பலத்தில் நீ மேன்மையானவனாகவே இருக்கிறாய். இருப்பினும், எனது இறகுகளில் ஒன்றைக் கொண்டே, எந்தக் களைப்பையும் அறியாமல், நான் உன்னைச் சுமக்கிறேன். ஓ! சகோதரா {விஷ்ணுவே}, நம்மில் யார் பலவான் என்று ஆற அமர சிந்தித்துப் பார்!” என்றான் {கருடன்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “ஆபத்தை அறிவிக்கின்ற அந்தப் பறவையானவனின் செருக்கு நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட சக்கரந்தாங்கி {விஷ்ணு}, தார்க்ஷியனை {கருடனை} மேலும் தூண்டும்படி, “ஓ! கருடா, மிகப் பலவீனமான நீ, ஏன் உன்னைப் பலவானாகக் கருதிக் கொள்கிறாய்? ஓ முட்டையிடும் இனத்தோனே {கருடா}, எங்கள் முன்னிலையில் இப்படித் தற்பெருமையடித்துக் கொள்வது உனக்குத் தகாது. மூன்று உலகமும் ஒன்று சேர்ந்தாலும் கூட, எனது உடலின் எடையை அவற்றால் தாங்க முடியாது. எனது சொந்த எடையையும், உனது எடையையும் தாங்குவது நானே. இப்போது வா, எனது வலது கரத்தின் எடையைத் தாங்கிவிடு {பார்ப்போம்}. உன்னால் இதை மட்டும் தாங்க முடிந்துவிட்டால், உனது தற்பெருமை அறிவுள்ளதாகக் {சரியானது என்றே} கருதப்படும்” என்றான் {விஷ்ணு}.

இதைச் சொன்ன அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, தனது கரத்தைக் அந்தக் கருடனின் தோள் மீது வைத்தான். பின்னவன் {கருடன்}, அதன் {அக்கரத்தின்} எடையால் பீடிக்கப்பட்டு, வெட்கமடைந்து, புலனுணர்வை இழந்து, கீழே விழுந்தான். மலைகளுடன் கூடிய பூமியின் முழு எடையினளவுக்கு விஷ்ணுவின் ஒரு கரத்து எடையே இருப்பதைக் கருடன் உணர்ந்தான். எனினும், எல்லையில்லா பெரும்பலமுடைய விஷ்ணு, அவனை மிகவும் துன்புறுத்தவில்லை. உண்மையில், அச்யுதன் {விஷ்ணு} அவனது {கருடனின்} உயிரை எடுக்கவில்லை.

அந்த விண்ணதிகாரி {கருடன்}, தாங்கமுடியாத சுமையால் பீடிக்கப்பட்டு, மூச்சுத் திணறி, தனது இறகுகளை உதிர்க்கத் தொடங்கினான். தன் ஒவ்வொரு அங்கமும் பலவீனமடைந்து, முழுதாய் கலக்கமடைந்த கருடன், கிட்டத்தட்ட தன் சுயநினைவையே இழந்தான். அந்தச் சிறகு படைத்த வினதையின் பிள்ளை {கருடன்}, இப்படியே கலக்கமடைந்து, கிட்டத்தட்ட நினைவற்றுப் போய், முழுதும் ஆதரவற்ற நிலையில், தன் சிரம் தாழ்த்தி விஷ்ணுவை வணங்கியபடி, அவனிடம் {விஷ்ணுவிடம்}, “ஓ! ஒப்பற்ற தலைவா, அண்டத்தையே தாங்கும் பலத்தின் சாரம், உனது இந்த உடலிலேயே வசிக்கிறது. எனவே, உனது ஒற்றைக் கரத்தால், உன் விருப்பப்படி நான் பூமியில் நசுக்கப்பட்டேன், அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஓ! தெய்வீகத் தலைவா, உனது கொடிக்கம்பத்தில் அமர்பவனும், பலத்தின் செருக்கால் போதையுண்டவனும், தற்போது முழுதும் ஆதரவற்ற நிலையில் இருப்பவனுமான இந்தச் சிறகு படைத்த உயிரினத்தை {கருடனான என்னை} நீ மன்னிப்பதே தகும். ஓ! தெய்வீகத் தலைவா {விஷ்ணுவே}, உனது பெரும் பலத்தை இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. அதன் காரணமாகவே எனது சொந்த பலம் நிகரற்றது என நான் கருதினேன்” என்றான் {கருடன்}.

இப்படிச் சொல்லப்பட்ட ஒப்பற்ற விஷ்ணு, மனம் நிறைந்து, கருடனிடம் பாசத்துடன், “உனது நடத்தை மீண்டும் இது போல ஆகாதிருக்கட்டும்” என்றான். இப்படிச் சொன்ன உபேந்திரன் {விஷ்ணு}, தனது பாதத்தின் கட்டைவிரலால் சுமுகனை கருடனின் மார்பில் தூக்கி எறிந்தான். ஓ! மன்னா {துரியோதனா}, அக்காலம் முதல், கருடன் அந்தப் பாம்புடன் {சுமுகனுடன்} நட்புடன் வாழ்ந்தான். இப்படியே, ஓ! மன்னா {துரியோதனா}, பலவானும், வினதையின் மகனுமான அந்த ஒப்பற்ற கருடன், விஷ்ணுவின் பலத்தால் பீடிக்கப்பட்டு, தனது செருக்கழிந்தான்”

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “இதே வழியில், ஓ! காந்தாரியின் மகனே, ஓ மகனே {துரியோதனா}, நீ எவ்வளவு நாள் பாண்டுவின் வீர மகன்களைப் போரில் அணுகாதிருக்கிறாயோ, அவ்வளவு நாள் வாழ்வாய். வாயுவின் பலமிக்க மகனும், அடிப்பவர்களில் முதன்மையானவனுமான பீமனாலும், இந்திரனின் மகனான தனஞ்சயனாலும் {அர்ஜுனனாலும்} போரில் கொல்லப்பட முடியாதவன் எவன் இருக்கிறான்? விஷ்ணு, வாயு, தர்மன், அசுவினிகள் ஆகிய இந்தத் தேவர்களும் கூட உனது எதிரிகளாகவே இருக்கின்றனர். அவர்களோடு நீ மோதுவது இருக்கட்டும், களத்தில் நிற்கும் அவர்களை நீ பார்க்கக்கூடத் திறனற்றவனாவாய்.

எனவே, ஓ! இளவரசே {துரியோதனா}, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே; வாசுதேவன் {கிருஷ்ணன்} மூலமாகச் சமாதானம் ஏற்படட்டும். இப்படியே நீ உனது குலத்தைக் காப்பதே உனக்குத் தகும். இந்தப் பெரும் முனிவரான நாரதர், விஷ்ணுவின் பெருமையை உணர்த்தும் (நான் சொன்ன} அந்தச் சம்பவத்தைத் தனது சொந்தக் கண்களால் கண்டிருக்கிறார். சக்கரத்தையும், கதையையும் தாங்குபவனான அந்த விஷ்ணு இந்தக் கிருஷ்ணனே  ஆவான் என்பதை அறிவாயாக” என்றார் {கண்வர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த முனிவரின் {கண்வரின்} வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், தனது புருவங்களைச் சுருக்கி, பெருமூச்சு விடத்தொடங்கினான். பிறகு, ராதையின் மகன் {கர்ணன்} மீது கண்களைச் செலுத்திய அவன், உரக்கச் சிரித்தான். அந்த முனிவரின் வார்த்தைகளை வீணாகச் செய்தவனும், இழிந்தவனுமான அந்தத் தீயவன் {துரியோதனன்}, யானையின் துதிக்கையைப் போன்றிருந்த தனது தொடையில் அறையத் தொடங்கினான். பிறகு அந்த முனிவரிடம், அவன், “ஓ பெரும் முனிவரே, படைத்தவன் எப்படிப் படைத்தானோ அப்படியே நான் இருக்கிறேன். எது நேருமோ, அது நடந்தே தீரும். எனது வழக்கில் என்ன நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதுவே நடக்க வேண்டும், என்னால் வேறுமாதிரியாகச் செயல்பட முடியாது. எனவே, முட்டாள்தனமான இந்தப் பிதற்றல்களால் {என்னை} என்ன செய்துவிட முடியும்?” என்றான் {துரியோதனன்} [3](கோபத்தால் அறிவிழந்து இருக்கும் துரியோதனனைக் கண்ட கண்வர், “நீ இப்படித் தொடையில் அறைந்து கொள்வதால், தொடையொடிந்தே நீ இறப்பாய்” என்று அவனைச் சபித்ததாக வேறு பதிப்புகளில் இப்பகுதி நிறைவடைகிறது.)

காலவரின் பிடிவாதம்! – உத்யோக பர்வம் பகுதி 106-நாரதர் துரியோதனனுக்குக் காலவர் மற்றும் விஸ்வாமித்ரரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தது; தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரருக்கு பணிவிடை செய்த காலவர்; காலவரின் சேவையால் மகிழ்ந்த விஸ்வாமித்ரர், காலவரை சீடன் நிலையில் இருந்து விடுவித்தது; குருதட்சணை கொடுக்காமல் தான் போகக்கூடாது எனக் காலவர் பிடிவாதம் பிடிப்பது; விஸ்வாமித்ரர் கேட்ட குருதட்சணை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், “ஓயாமல் தீமைகளில் ஈடுபட்டு, பேராசையில் குருடாகி, தீய வழிகளுக்கு அடிமையாகி, தனக்குத் தானே அழிவைத் தீர்மானித்து, உறவினர்களின் இதயங்களில் துன்பத்தை எழுப்பி, நண்பர்களின் துயரங்களை மேம்படுத்தி, தனது நலன் விரும்பிகள் அனைவரையும் வேதனைப்படுத்தி, எதிரிகளின் மகிழ்ச்சியை அதிகரித்து, தவறான வழியில் நடந்து கொண்டிருந்த அவனை {துரியோதனனை}, அவனது நண்பர்கள் ஏன் தடுக்கவில்லை? அமைதியான ஆன்மாக் கொண்டவனும், (குரு குலத்தின்) பெரும் நண்பனுமான அந்தப் புனிதமானவனோ {கிருஷ்ணனோ}, பெரும்பாட்டனோ {பீஷ்மரோ}, பாசத்தினால் அவனிடம் {துரியோதனனிடம்} ஏன் ஏதும் கூறவில்லை?” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஆம். அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} பேசினான். எது நன்மையோ அதைப் பீஷ்மரும் பேசினார். நாரதரும் இன்னும் அதிகம் சொன்னார். இவர்கள் சொன்னது அனைத்தையும் கேட்பாயாக”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நாரதர் {துரியோதனனிடம்}, “நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்கும் நபர்கள் அரிது. நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடிய நண்பர்கள் கிடைப்பதும் அரிது. (ஆலோசனை தேவைப்படும்) நண்பன் இருக்கும் இடத்தில் (ஆலோசனை கொடுக்கக்கூடிய) நண்பன் இருப்பதில்லை. ஓ! குரு குல மகனே {துரியோதனா}, நண்பர்களின் வார்த்தைகள் கேட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிடிவாதம் தவிர்க்கப்பட வேண்டும்; ஏனெனில், அது தீமைகள் நிறைந்ததாக இருக்கிறது. இது தொடர்பாக, பழங்காலத்தில், தனது பிடிவாதத்தால் அவமானத்தைச் சந்தித்த காலவரின் கதை மேற்கோளாகச் சொல்லப்படுகிறது.

பழங்காலத்தில், தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரைச் சோதிப்பதற்காக, வசிஷ்ட முனிவரின் உருவத்தைத் தாங்கி தர்மனே {தர்ம தேவனான யமனே} அவரிடம் {விஸ்வாமித்திரரிடம்} நேரடியாக வந்தான். ஏழு முனிவர்களில் {சப்தரிஷிகளில்} ஒருவரின் {வசிஷ்டரின்} உருவத்தைத் தரித்த அவன் {தர்மன்}, ஓ! மன்னா {துரியோதனா}, போலியாக, தான் பசித்திருப்பது போலவும், உண்ண விரும்பி தான் வந்திருப்பது போலவும்  கௌசிகரின் {விஸ்வாமித்ரரின்} ஆசிரமத்தை அடைந்தான். இதன்காரணமாக, பரபரப்படைந்த விஸ்வாமித்ரர், {பரமான்னத்தின்} (அரிசியும் பாலும் கலந்து தயாரிக்கப்படும்) சருவைச் சமைக்க ஆரம்பித்தார்.

அந்த அற்புத உணவைத் தயாரிக்கக் கவனம் எடுத்துக் கொண்டதன் விளைவாக, அவரால் தனது விருந்தினருக்குச் {வசிஷ்டரின் உருவத்தில் வந்திருந்த தர்மனுக்குச்} சரியான முறையில் பணிவிடை செய்ய முடியவில்லை. அந்த விருந்தினர் {தர்மன்}, மற்ற தவசிகளால் கொடுக்கப்பட்ட உணவை உண்ட பிறகே, விஸ்வாமித்ரர், தான் சமைத்த ஆவி பறக்கும் உணவுடன் அவனை {தர்மனை} அணுகினார். அந்தப் புனிதமானவனோ {தர்மனோ} “நான் ஏற்கனவே உண்டுவிட்டேன். இங்கேயே காத்திரு” என்றான். இப்படிச் சொன்ன அந்தப் புனிதமானவன் தான் வந்த வழியே சென்றுவிட்டான்.

இதனால், ஓ! மன்னா {துரியோதனா}, ஒப்பற்றவரான அந்த விஸ்வாமித்ரர் அங்கேயே காத்திருந்தார். அந்த உணவைத் தனது தலையில் வைத்து, தன் கரங்களால் அதைத் தாங்கிப் பிடித்தவாறே, காற்றை மட்டுமே உண்டு வந்த அந்தக் கடும் நோன்பு கொண்ட தவசி {விஸ்வாமித்ரர்}, கட்டையைப் போலத் தனது ஆசிரமத்திலேயே நின்றார். அப்படி அவர் {விஸ்வாமித்திரர்} அங்கே நின்று கொண்டிருந்தபோது, மரியாதை, பெரும் மதிப்பு, பாசம் மற்றும் இனியன செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட காலவர் என்ற பெயருடைய தவசி, அவருக்கு {விஸ்வாமித்ரருக்குப்} பணிவிடை செய்ய ஆரம்பித்தார்.

இப்படியே நூறு {100} வருடம் கடந்ததும், மீண்டும் வசிஷ்டரின் உருவை ஏற்ற தர்மன், உண்ணும் விருப்பத்துடன் கௌசிகரிடம் {விஸ்வாமித்ரரிடம்} வந்தான். அவ்வளவு நாளும் காற்றை மட்டுமே உண்டு, தலையில் உணவுடன் நின்று கொண்டிருந்தவரும், பெரும் ஞானம் கொண்டப் பெரும் முனிவருமான விஸ்வாமித்ரரைக் கண்ட தர்மன், இன்னும் சூடாகவும், புதியதாகவும் இருந்த அந்த உணவை ஏற்றான். அந்த உணவை உண்ட அந்தத் தேவன் {தர்மன் – விஸ்வாமித்திரரிடம்}“ஓ! மறுபிறப்பாள முனிவரே {O regenerate rishi}, நான் மனநிறைவு கொண்டேன்” என்று சொல்லிச் சென்றுவிட்டான். தர்மனின் அந்த வார்த்தைகளால், க்ஷத்திரியத் தன்மையை விட்டு நீங்கி, அந்தண நிலையை அடைந்ததன் காரணமாக விஸ்வாமித்ரர் மகிழ்ச்சியில் நிறைந்தார். [1](விஸ்வாமித்ரர் அந்தண நிலைக்கு உயர்ந்த கதை தனிச்சிறப்புடையதாகும். (குசிகனின் மகனான) க்ஷத்திரிய மன்னன் விஸ்வாமித்ரர், அந்தண முனிவரான வசிஷ்டரிடம் சர்ச்சையில் ஈடுபட்டு, ஒரு கசந்த அனுபவத்தைப் பெற்றார். அந்தண சக்தியின் முன்பு ஆயுதங்களின் அறிவியலால் தாங்கப்பட்ட க்ஷத்திரிய சக்தியும் பலமும் பலனளிக்கவில்லை. தனது தவசக்திகளால் வசிஷ்டர் ஆயிரமாயிரம் துருப்புகளை உண்டாக்கி அந்த க்ஷத்திரிய மன்னனை {விஸ்வாமித்ரரை} வீழ்த்தினார். இப்படிக் கலங்கடிக்கப்பட்ட விஸ்வாமித்ரர், இமயத்திற்குச் சென்று சிவனைத் துதித்தார். அந்தப் பெருந்தேவன் {சிவன்} அங்கே தோன்றினான். விஸ்வாமித்ரர் அவனிடம் {சிவனிடம்} ஆயுதங்களின் முழு அறிவியலில் தனக்குத் திறனேற்பட வேண்டும் என இரந்து கேட்டார். விஸ்வாமித்ரரின் வேண்டுதலுக்கு அந்தத் தேவன் {சிவன்} செவிசாய்த்தான். பிறகு திரும்பி வந்த விஸ்வாமித்ரர், வசிஷ்டரிடம் மோத முயன்றார். ஆனால் வசிஷ்டரோ, தனது தண்டத்தை மட்டுமே கொண்டு விஸ்வாமித்ரரின் கடும் ஆயுதங்கள் அனைத்தையும், ஏன் தெய்வீக ஆயுதங்களைக் கூடக் கலங்கடித்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானம் மற்றும் ஏமாற்றத்தால், விஸ்வாமித்ரர் அந்தணராவதில் தனது இதயத்தை நிலைக்க வைத்தார். தனது நாட்டைத் துறந்து, தனது ராணியுடன் காட்டுக்குள் சென்று கடும் தவங்களை இயற்றினார். பத்தாயிரம் {10000} வருடங்கள் கடந்ததும், படைப்பாளனான பிரம்மா அவர் முன் தோன்றி, அவரை அரசமுனி {ராஜரிஷி} என்று அழைதார். இதனால் மனமுடைந்த அவர், மேலும் கடுமையான தவங்களை அர்ப்பணிப்புடன் செய்தார். இறுதியாக, (மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில்) தர்மனின் உத்தரவால் அந்தப் பெரும் க்ஷத்திரிய மன்னன் {விஸ்வாமித்ரர்} அந்தணரானார்.)தனது சீடனான தவசி காலவரின் சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பால் மகிழ்ந்த விஸ்வாமித்ரர், அவரிடம் {காலவரிடம்}, “ஓ! காலவா, நான் உனக்கு விடைகொடுக்கிறேன். நீ விரும்பிய இடத்திற்குச் செல்” என்றார். இப்படித் தனது ஆசானால் கட்டளையிடப்பட்ட காலவர், மிகவும் மகிழ்ந்து, பெரும் பிரகாசம் கொண்ட விஸ்வாமித்ரரிடம் இனிமையான குரலில், “ஆசானாக இருந்த உமது சேவைக்கு நான் இறுதிக்கொடையாக {தக்ஷிணையாக} என்ன கொடுக்க வேண்டும்? ஓ! மதிப்பை அளிப்பவரே {விஸ்வாமித்ரரே}, இந்த இறுதிக் கொடையின் {தக்ஷிணையின்} விளைவாலேயே ஒரு வேள்விகள் வெற்றியடையும். இது போன்று கொடையளிப்பவன் முக்தியை அடைகிறான். உண்மையில், இந்தக் கொடைகளே (ஒருவன் சொர்க்கத்தில் அனுபவிக்கும்) கனிகளாகும் {பலன்களாகும்}. அமைதி குடிகொண்டவனாக அவன் கருதப்படுவான். எனவே, நான் எனது ஆசானுக்கு என்ன கொண்டு வரவேண்டும்? ஓ, அதைச் சொல்லும்” என்று கேட்டார்.

தனது சேவைகளின் மூலமாகக் காலவர் ஏற்கனவே தன்னை வென்றுவிட்டதாக அறிந்த ஒப்பற்ற விஸ்வாமித்ரர் {காலவரிடம்}, “போ, போ” என மீண்டும் மீண்டும் சொன்னார். ஆனால், விஸ்வாமித்ரரால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டும், காலவர் மீண்டும் அவரிடம், “நான் என்ன கொடுக்கட்டும்” என்று கேட்டார். காலவர் தரப்பில் இருக்கும் பிடிவாதத்தைக் கண்ட விஸ்வாமித்ரர் சற்றே கோபமடைந்து, இறுதியில், “எண்ணூறு {800} குதிரைகளை எனக்குக் கொடு. அவை ஒவ்வொன்றும் சந்திரனின் கதிர்களைப் போல வெண்மையாக இருக்க வேண்டும். மேலும் அவை ஒவ்வொன்றிலும் ஒரு காது கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். ஓ! காலவா, தாமதிக்காதே, போ” என்றார் {விஸ்வாமித்திரர்}.

காலவரின் புலம்பல்! – உத்யோக பர்வம் பகுதி 107-விஸ்வாமித்ரர் கேட்ட குருதட்சணையால் கவலையடைந்த காலவர் அழுது புலம்புவது; தனது நண்பனான காலவருக்கு உதவி செய்வதற்காகக் கருடன் அங்கே வந்தது; காலவருக்காக விஷ்ணுவிடம் பரிந்து பேசியதாகக் கருடன் சொல்வது…

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “பெரும் புத்திக்கூர்மை கொண்ட விஸ்வாமித்ரரால் இப்படிச் சொல்லப்பட்ட காலவர், அமரவோ, படுக்கவோ, உண்ணவோ முடியாத அளவுக்குத் துயரால் நிறைந்தார். பதற்றம் மற்றும் வருத்தத்திற்கு இரையாகி, மனங்கசந்து புலம்பி, குற்றவுணர்வால் ஏற்பட்ட வருத்ததால் எரிச்சலடைந்த காலவர் நிறம் மங்கி எலும்புக்கூடாய் மெலிந்தார். கவலையால் அடிக்கபட்ட அவர், ஓ! சுயோதனா {துரியோதனா}, தனது புலம்பல்களில், “செல்வாக்கு மிக்க நண்பர்களை நான் எங்குக் காண்பேன்? செல்வத்தை எங்கே அடைவேன்? என்ன சேமிப்புகளை நான் கொண்டிருக்கிறேன்? சந்திர வெளுப்பில் எண்ணூறு {800} குதிரைகளை நான் எங்கே காண்பேன்? உண்பதில் என்ன மகிழ்ச்சியை நான் அடைவேன்? இன்பநுகர் பொருட்களில்தான் எனக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கும்?

எனக்கு உயிரின் மேற் கொண்ட ஆசையும் போய்விட்டது. உயிரைக்கொண்டு எனக்குத் தேவை என்ன இருக்கிறது? பெருங்கடலின் அடுத்தக் கரைக்குச் சென்று, அல்லது பூமியில் நெடுந்தொலைவுக்குச் சென்று எனது உயிரைக் கைவிடுவேன். இந்த உயிரால் எனக்கு என்ன பயன்? ஏழையாய் இருந்து, கடும் முயற்சியற்று, வெற்றியடையாமல், வாழ்வின் அனைத்து நல்ல பொருட்களையும் இழந்து, கடனைச் சுமக்கும் ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? நட்பின் மூலம் நண்பனின் செல்வத்தை அனுபவித்து, அந்த நண்பனுக்குப் பதிலுதவி செய்ய முடியாதவனைப் பொறுத்தவரை, வாழ்வை விட மரணமே அவனுக்குச் சிறந்ததாகும்.

ஒரு செயலைச் செய்வதாக உறுதிகூறிய பின் அதைச் செய்யத் தவறும் ஒரு மனிதனின் அறச் செயல்கள் எல்லாம் அந்தப் பொய்மையின் விளைவால் பலன் இழக்கின்றன. பொய்மை எனும் கறை படிந்தவன், அழகு, பிள்ளைகள், பலம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை அடைய முடியாது. எனவே, அப்படிப்பட்ட ஒருவனால் எப்படி அருள்நிலையை அடைய முடியும்? நன்றிகெட்ட எந்த மனிதன்தான் புகழை ஈட்டியிருக்கிறான்? உண்மையில், அவனுக்கு இடம்தான் ஏது? மகிழ்ச்சிதான் ஏது?

ஒரு நன்றிகெட்ட மனிதனால் ஒருபோதும் மரியாதையையும், பாசத்தையும் பெற முடியாது. முக்தியும் எப்போதும் அவனுடையதாகாது. செல்வமற்ற ஒருவன், வாழக்கூட முடியாத இழிந்தவனாவான். அப்படிப்பட்ட இழிந்தவனால் தனது உறவினர்களையோ நண்பர்களையோ தாங்க முடியாது. தான் பெற்ற நன்மைகளுக்கான பதிலுதவியைச் செய்ய முடியாமல், அவன் அழிவைச் சந்திக்கிறான். என் நோக்கங்களை எனது ஆசானிடம் இருந்து அடைந்த பிறகும், அவர் கேட்பதை என்னால் கொடுக்க முடியாததால், பொய்மையின் கறை படிந்த, வளங்கள் அற்ற, நன்றிகெட்ட இழிந்தவனே நான்.

முடிந்தவரை முயற்சித்த பிறகு, நான் எனது உயிரை விடுவேன். இதற்கு முன்னர் நான் தேவர்களிடம்கூட எதையும் கேட்டதில்லை. வேள்வி செய்யும் இடத்தில் இதற்காக என்னைத் தேவர்கள் கௌரவிப்பார்கள். நானோ, மூவுலகங்களின் தெய்வீகத் தலைவனான விஷ்ணுவிடம், பாதுகாப்பினால் அருளப்பட்டிருக்கும் அனைவருக்கும் அடைக்கலமாக இருப்பவனான அந்தக் கிருஷ்ணனிடம் சென்று எனது பாதுகாப்பைக் கோரப்போகிறேன். அவனிடம் சென்று பணிந்து, துறவிகள் அனைவரிலும் உயர்ந்த நித்தியமானவனும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் இன்பங்கள் மற்றும் உடைமைகள் அனைத்துக்கும் காரணமானவனுமான கிருஷ்ணனைக் காண நான் விரும்புகிறேன்” என்றார் {காலவர்}.

காலவர் இப்படி அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது, அவரது {காலவரின்} நண்பனான வினதையின் மகன் கருடன் அங்கே தோன்றினான். அவருக்கு நன்மையைச் செய்ய விரும்பிய கருடன், அவரிடம் மகிழ்ச்சியாக, “நீ எனது அன்புக்குரிய நண்பனாவாய். செழிப்போடிருக்கையில், நண்பர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதில் கவனம் செலுத்த வேண்டியது ஒரு நண்பனின் கடமையாகும். ஓ! அந்தணா, நான் கொண்டிருக்கும் செழிப்பு வாசவனின் {இந்திரனின்} தம்பியான விஷ்ணுவுடையது. இதற்கு முன் நான் அவனிடம் {விஷ்ணுவிடம்} உனக்காகப் பரிந்து பேசினேன். அவன் எனது விருப்பங்களால் மகிழ்ந்தான். வா, இப்போதே நாம் இருவரும் சேர்ந்து செல்வோம். கடலின் அடுத்தக் கரைக்கோ, அல்லது பூமியில் கடைசி எல்லைக்கோ நான் உன்னை வசதியாகச் சுமந்து செல்வேன். ஓ! காலவா, தாமதிக்காதே வா” என்றான் {கருடன்}.

கிழக்கை விவரித்த கருடன்! – உத்யோக பர்வம் பகுதி 108-கருடன் காலவரிடம் நான்கு திசையில் எந்தத் திசையில் செல்லலாம் எனக் கேட்டது; கிழக்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது…

கருடன் {காலவரிடம்} சொன்னான், “ஓ! காலவா, அனைத்து அறிவுக்கும் காரணமான தேவனால் நான் கட்டளையிடப்பட்டிருக்கிறேன். நான் உன்னைக் கேட்கிறேன். அந்தத் திசையில் என்ன இருக்கிறது என்பதைக் காண நான் உன்னை எந்தத் திசைக்கு அழைத்துச் செல்லட்டும்? கிழக்கா? தெற்கா? மேற்கா? வடக்கா, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, ஓ! காலவா, நான் எங்கே செல்லட்டும்?” என்று கேட்டான்.

எத்திசையில் அண்டத்திற்கு ஒளியூட்டுபவனான சூரியன் உதிக்கிறானோ; எங்கே மாலை நேரங்களில் சத்யஸ்கள் தங்கள் தவத்துறவுகளில் ஈடுபடுகிறார்களோ; எங்கே அண்டம் முழுவதும் ஊடுருவியிருக்கும் அறிவு முதலில் எழுகிறதோ. எங்கே தர்மனும் அவனது இரு கண்களும் நிலைத்திருக்கின்றனவோ; எங்கே முதலில் வேள்வியில் ஊற்றப்பட்ட தெளிந்த நெய் அதன்பிறகு சுற்றிலும் வழிகிறதோ; அத்திசையிலேயே {கிழக்கு திசையிலேயே}, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே {காலவா}, நாள் மற்றும் காலத்தின் கதவுகள் இருக்கின்றன.

அங்கேதான் புராதனமான காலங்களில், தக்ஷனின் மகள்கள் தங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். அங்கேதான் காசியபரின் பிள்ளைகள் முதலில் பெருகினர். அந்தத் திசைதான் தேவர்களின் அனைத்துச் செழிப்புக்கும் ஊற்றுக்கண்ணாகும், ஏனெனில், இங்கேதான் சக்ரன் {இந்திரன்} தேவர்களின் தலைவனாக முடிசூட்டப்பட்டான். ஓ! மறுபிறப்பாள முனிவா {காலவா}, இந்திரனும் தேவர்களும் இங்கேதான் தங்கள் தவங்களை இயற்றினர். ஓ! அந்தணா {காலவா}, அதன் காரணமாகவே இந்தத் திசை (முதலில்) பூர்வம் என்று அழைக்கப்பட்டது. காலங்களின் ஆதியில் இத்திசையில் சூரர்கள் {தேவர்கள்} பரவியிருந்ததன் காரணமாகவே இது பூர்வம் என்று அழைக்கப்பட்டது. செழிப்பை விரும்பிய தேவர்கள் தங்கள் அறச்சடங்குகள் அனைத்தையும் இங்கேயே செய்தனர். இங்கேதான் தெய்வீகப் படைப்பாளன் {பிரம்மன்} வேதங்களை முதலில் பாடினார்.

புனித பாடல்களை ஓதுவோருக்கு இங்கேதான் சூரியன் முதலில் காயத்ரியைப் {காயத்ரி மந்திரத்தைப்} போதித்தான். ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, இங்கேதான் சூரியன் {யாக்ஞவல்கியருக்கு} யஜூர் வேதத்தை வழங்கினான். வரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சோமச்சாறு {சோமபானம்}, இங்கேதான் வேள்விகளில் சூரர்களால் {தேவர்களால்} முதலில் பருகப்பட்டது. (மந்திரங்களால் நிறைவடைந்த) ஹோம நெருப்புகளால் இங்கே தான் உறவுள்ள தோற்றமுடைய {உடன்பிறந்த} பொருட்கள் முதலில் பருகப்பட்டன [1].(வேள்வியில் நீர்க்காணிக்கைகளாகப் பயன்படுத்தப்படும் தெளிந்த நெய், பால் மற்றும் {சோமம் போன்ற} பிற பொருட்களே உறவுள்ள தோற்றமுடைய {உடன்பிறந்த} பொருட்களாகும்.)இங்கேதான் வருணன் முதலில் பாதாள உலகத்திற்குச் சென்று தனது செழிப்பு அனைத்தையும் அடைந்தான். ஓ! இரு பிறப்பாளர்களில் {பிராமணர்களில்} காளையே {காலவா}, இங்கேதான், பழங்கால வசிஷ்டரின் பிறப்பு, வளர்ச்சி, மரணம் ஆகியன நேரிட்டன. இங்கேதான் முதலில் நூறு பல்வேறு கிளைகளைக் கொண்ட ஓம் வளர்ந்தது [2]. {இங்கேதான் ஓங்காரத்தின் பதினாயிரம் வழிகள் உண்டாயின}.இங்கேதான் புகையை உண்ணும் {தூம்பர்கள் என்ற} முனிவர்கள் வேள்வி நெருப்புகளில் புகையாக {தூமமாக} இருக்கின்றனர். இந்தப் பகுதியில்தான் கூட்டங்கூட்டமாகப் பன்றிகளும், பிற விலங்குகளலும், சக்ரனால் {இந்திரனால்} கொல்லப்பட்டு, அவை தேவர்களுக்கு வேள்விப்பாகமாகக் காணிக்கையாக்கப்பட்டன. இங்கேதான் ஆயிரங்கதிர் கொண்ட சூரியன் சினத்துடன் எழுந்து, மனிதர்களில் தீயவர்களையும், நன்றிகெட்டவர்களையும், அசுரர்களையும் விழுங்குகிறான். இதுவே {கிழக்கு திசையே} மூன்று உலகங்களின் வாயிலாக இருக்கிறது. இதுவே சொர்க்கத்திற்கும் இன்ப நிலைக்கும் வழியாகும். இந்தத் திசையே பூர்வம் {கிழக்குத் திசை} என்று அழைக்கப்படுகிறது.

உனக்கு விருப்பம் இருந்தால் நாம் அங்கே செல்வோம். நான் எப்போதும் எனக்கு நண்பனாய் இருப்பவர்களுக்கு ஏற்புடையதையே செய்வேன். ஓ! காலவா, சொல். வேறு ஏதாவது திசையில் உனக்கு விருப்பமிருந்தால், நாம் அங்கே செல்லலாம். மற்றொரு திசையைக் குறித்தும் நான் சொல்வதைக் கேள்” என்றான் {கருடன்}.

தென்திசையை விவரித்த கருடன்! – உத்யோக பர்வம் பகுதி 109-தெற்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது…

கருடன் {முனிவர் காலவரிடம்}தொடர்ந்தான், “பழங்காலத்தில், ஒரு வேள்வியைச் செய்த விவஸ்வான் {சூரியன்}, இந்தத் திசையைத் {தெற்கு திசையைத்} தனது ஆசானுக்குக் கொடையாக (தக்ஷிணையாகக்) கொடுத்தான், இதன் காரணமாகவே, இந்தத் திசை தக்ஷிணம் (தெற்கு) என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் மூவுலகங்களின் பித்ருக்களும் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டுள்ளனர்.

ஓ! அந்தணா {காலவா}, இங்கே புகையை மட்டுமே உண்டு வாழும் தேவர்களில் ஒரு வர்க்கத்தினர் {ஊஷ்மபர் என்ற தேவர்கள்} வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அனைத்து உலகங்களிலும் வேள்விகளில் வழிபடப்படும் இவர்கள் பித்ருக்களுடன் சமமான பாகத்தை அடைகிறார்கள். இந்தத் திசை யமனின் இரண்டாவது வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கேதான், மனிதர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தின் கணக்கானது திருதியாகவும் லவகமாகவும் கணக்கிடப்படுகிறது. [1]

இந்தப் பகுதியில்தான் தெய்வீக முனிவர்களும், பித்ருலோக முனிவர்களும், அரசமுனிகளும் பெரும் மகிழ்ச்சியுடன் வசிக்கின்றனர். அறமும், உண்மையும் {சத்தியமும்} இங்கேதான் இருக்கின்றன. (மனிதர்களின்) செயல்களுக்கான கனிகள் இங்கேதான் வெளிப்படுகின்றன. ஓ! இரு பிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே {காலவா}, இறந்தோரின் செயல்களுக்கான இலக்காக இந்தப் பகுதி இருகிறது. {இறந்தோரின் இருவினைப் பயனை அனுபவிக்கக்கூடிய இடமாக இஃது இருக்கிறது}. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே {காலவா}, இதுவே அனைவரும் {இறுதியில்} அடைய வேண்டிய திசையாகும். எனவே, அனைத்து உயிரினங்களும் இருளில் {அஞ்ஞானத்தால் [மூடத்தனத்தால்]} மூழ்கியிருப்பதால், அருளுடன் அவைகளால் இந்த இடத்திற்கு வரமுடியாது. ஓ! மறுபிறப்பாளர்களில் காளையே {காலவா}, பாவிகளால் காணப்பட வேண்டிய தீய ராட்சசர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு இருக்கின்றனர்.

ஓ! அந்தணா, இங்கே மந்தர மலையில் உள்ள புதர்களிலும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களின் இல்லங்களிலும், இதயத்தையும் புத்தியையும் கொள்ளைகொள்ளும் பாடல்கள் கந்தர்வர்களால் பாடப்படுகின்றன.. இங்கேதான், இனிமையான குரலில் சாம {வேத} பாடல்கள் பாடப்படுவதைக் கேட்டு {கதைகளுடன் பாடப்பட்ட பாடல்களைக் கேட்டு}, தனது மனைவி, நண்பர்கள் மற்றும் நாட்டையும் விட்டு ரைவதன் (என்கிற தைத்தியன்} காட்டுக்கு ஓய்ந்து போனான்.

ஓ! அந்தணா {காலவா}, மனுவும் {சாவாணிமனுவும்}, யவக்ரீதருடைய மகனும் சேர்ந்து சூரியன் தாண்டிச்செல்லாதவாறு ஓர் எல்லையை இந்தப் பகுதியில்தான் வகுத்தனர். இங்கேதான், புலஸ்தியரின் ஒப்பற்ற வழித்தோன்றலான ராட்சசர்களின் மன்னன் ராவணன், கடும்தவத்தில் ஈடுபட்டு, தேவர்களிடம் இருந்து இறவாத் தன்மையை யாசித்தான் (வரமாகக் கேட்டான்).

இங்கேதான் {அசுரன்) விருத்திரன், தன் தீய நடத்தையின் விளைவால் சக்ரனுடன் {இந்திரனுடன்} பகைமை பாராட்டினான். இந்தப் பகுதியில்தான் பல்வேறு உருவங்களில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வந்து, (தங்களுக்குள் உள்ளடங்கிய} ஐம்பூதங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்கின்றன. ஓ! காலவா, இந்தப் பகுதியில்தான், தீச்செயல்கள் செய்யும் மனிதர்கள் (சித்திரவதைகளால்) வாட்டப்படுகின்றனர். நரகத்திற்குச் செல்ல நிந்திக்கப்பட்ட மனிதர்களின் உடல்கள் நிறைந்த வைதரணீ நதி இங்கேதான் ஓடுகிறது.

இங்கே வரும் மனிதர்கள் ஆதீத மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அடைகின்றனர். இந்தப் பகுதியை அடையும் சூரியன் இனிய நீரைப் பொழிகிறான், பிறகு வசிஷ்டரின் பெயரால் அழைக்கப்படும் திசைக்குச் {வடதிசைக்குச்} செல்லும் அவன் {சூரியன்} பனியைப் பொழிகிறான். இங்கேதான், ஒரு முறை, போராடிக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய யானையையும், ஒரு மகத்தான ஆமையையும் (உணவுக்காக) நான் அடைந்தேன். இங்கேதான் பெருமுனிவரான சக்ரதனு, சூரியனிடமிருந்து தனது பிறப்பை அடைந்தார். பிறகு அந்தத் தெய்வீக முனிவர் கபிலர் என்ற பெயரால் அறியப்பட்டார். அவராலேயே சகரனின் (அறுபதாயிரம்) மகன்களும் பாதிக்கப்பட்டனர்.

இங்கேதான் அந்தணர்களில் ஒரு வர்க்கத்தினரும் வேதங்களில் முழு நிபுணத்துவம் கொண்டவர்களுமான சிவர்கள் என்ற பெயர் கொண்ட அந்தணர்கள் (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர். வேதங்கள் அனைத்தையும் கற்ற பிறகு அவர்கள் முக்தியை அடைந்தனர்.

வாசுகி, நாகன் தக்ஷகன் மற்றும் ஐராவதன் ஆகியோரால் ஆளப்பட்டதும், போகவதி என்று அழைக்கப்படுவதுமான ஒரு நகரம் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. (மரணத்திற்குப் பிறகு) தங்கள் பயணத்தை மேற்கொள்வோர்கள் இங்கே அடர்த்தியான இருளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சூரியனாலோ, அக்னியாலோ ஊடுருவ இயலாதபடி அந்த இருள் மிகுந்த அடர்த்தியாக இருக்கும். வழிபடத்தகுந்தவனான நீயும் இந்தச் சாலையைக் கடக்க வேண்டியிருக்கும். {தெற்கு திசையாகிய} இந்தத் திசையை நோக்கி நீ செல்ல வேண்டுமா என்பதை எனக்குச் சொல். அல்லது மேற்கு திசை குறித்து நான் விவரிப்பதைக் கேள்” என்றான் {கருடன்}

மேற்கை விவரித்த கருடன்! – உத்யோக பர்வம் பகுதி 110-மேற்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது…

கருடன் {முனிவர் காலவரிடம்} தொடர்ந்தான், “இந்தத் திசை {மேற்குத் திசை}, கடலின் ஆட்சியாளனான மன்னன் வருணனுக்குப் பிடித்த திசையாகும். உண்மையில், நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} இங்கேதான் தோன்றினான். இங்கே தான் அவனது ஆட்சியும் நடக்கிறது. நாளின் இறுதியில் (பச்சாத்தில் [paschat) = பகலின் பின்பாகத்தில்} இத்திசையிலிருந்து சூரியன் தனது கதிர்களை வெளியிடுவதால், ஓ! இருபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே {காலவா}, இது மேற்கு (பச்சிமை) என்று அழைக்கப்படுகிறது. நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் ஆள்வதற்கும், நீர்நிலைகளின் பாதுகாப்புக்காகவும் தெய்வீகமான காசியபர் வருணனை இங்கே {இந்த மேற்கு திசையின் மன்னனாக} நிறுவினார்.

வருணனின் ஆறு சாறுகள் {சுவைகள்} அனைத்தையும் பருகுபவனும் இருளை அகற்றுபவனுமான சந்திரன், முதல் இரு வாரங்களில் {வளர்பிறையில்} அதிக இளமையுடன் வெளியே வருகிறான். ஓ! அந்தணா {காலவா}, இந்தப் பகுதியில் தான் வாயுத் தேவனால் தைத்தியர்கள் நிலைகுலையச் செய்யப்பட்டுக் கட்டப்பட்டனர். பலத்த பெரும் காற்றால் பீடிக்கப்பட்டு, (புறமுதுகிட்டு ஓடியதால்) மூச்சு வாங்கிய அவர்கள் {தைத்தியர்கள்}, இறுதியில் இந்தப் பகுதியில்தான் (விழிப்பை அறியாத தூக்கத்தில்) உறங்கினர்.

இங்கே தான் மாலை நேர சந்திப் பொழுதுக்குக் காரணமாக இருக்கும் அஸ்தம் என்று அழைக்கப்படும் மலை, சூரியனைத் (தினமும்) தன்னை நோக்கி அன்போடு வரவேற்கிறது. இந்தப் பகுதியில்தான் இரவு மற்றும் உறக்கம் ஆகிய இரண்டும், நாளின் இறுதியில் வெளிவந்து, வாழும் உயிரினங்களுக்கான வாழ்நாளைத் திருடிக் கொள்வது போல, முழுவதும் பரவி கொள்கின்றன.

இங்கேதான் சக்ரன் {இந்திரன்}, (தனது மாற்றாந்தாயான) திதி தேவி, தனது கர்ப்ப காலத்தில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்தக் கருவை (நாற்பத்தொன்பது துண்டுகளாக) வெட்டிப் போட்டு, அதிலிருந்து (நாற்பத்தொன்பது) மருதர்கள் {மருத்துக்கள்} எழுந்தனர். இந்தத் திசையை நோக்கித் தான் இமயத்தின் வேர்கள் (கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும்) நித்தியமான மந்தரத்தை நோக்கி நீள்கின்றன. ஒருவன் ஆயிரம் வருடங்கள் பயணம் செய்தாலும் இந்த வேர்களின் இறுதியை அடைய முடியாது.

இந்தப் பகுதியில்தான் (பசுக்களின் தாயான) சுரபி {காமதேனு} தங்கத் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பரந்த தடாகத்தின் கரைகளுக்குச் சென்று, தனது பாலைப் பொழிகிறாள். இங்கேதான் சூரியன், சந்திரன் ஆகிய இருவரையும் எப்போதும் விழுங்க முனைபவனான ஒப்பற்ற சுவர்ணபானுவின் (ராகுவின்) தலையற்ற உடல் கடலுக்கு மத்தியில் காணப்படுகிறது. இங்கேதான் ஒப்பற்றவரும், அளவிலா சக்தி படைத்தவரும், நிலையான பச்சை நிற மயிர் {நரையில்லாத கறுத்த மயிர்} கொண்டவருமான சுவர்ணசிரர் எனும் முனிவர் பெரிய ஒலியுடன் வேதங்களைப் பாடிக் கொண்டிருப்பது கேட்கப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஹரிமேதஸ் எனும் முனிவருடைய மகள் {தவஜ்வதி}, சூரியனால் “நில்!”, “நில்!” என்று கட்டளையிடப்பட்டதன் விளைவால் அந்தரத்திலேயே நின்றாள்.

ஓ! காலவா, இங்கேதான் காற்று, நெருப்பு, பூமி, நீர் ஆகிய அனைத்தும் தங்கள் வலிநிறைந்த உணர்வுகளில் இருந்து பகல் இரவு ஆகிய இரண்டிலும் விடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இருந்துதான் சூரியனின் பாதை நேரான பாதையில் இருந்து விலகுகிறது {குறுக்கே திரும்புகிறது}. இந்தத் திசையில்தான் ஒளியுருவங்கள் அனைத்தும் {all luminous bodies – விண்மீன் கூட்டங்கள்} சூரிய கோளத்திற்குள் {மண்டலத்திற்குள்} நுழைகின்றன. இருபத்தெட்டு இரவுகள் சூரியனோடு சுற்றிவிட்டு, மறுபடியும் சந்திரனுடைய சேர்கையில் இருந்து மீண்டு சூரியனிலிருந்து அவை வெளி வருகின்றன.

இந்தத் {மேற்கு} திசையில்தான் கடலுக்கு உணவூட்டும் ஆறுகள் தங்கள் ஊற்றுக்கண்களைக் கொண்டிருக்கின்றன. இங்கே இருக்கும், வருணனின் இல்லத்தில்தான் மூன்று உலகங்களின் நீர்நிலைகளும் உள்ளன. இந்தப் பகுதியில்தான் பாம்புகளின் இளவரசனான அனந்தனின் இல்லம் அமைந்திருக்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாத விஷ்ணுவின் ஒப்பற்ற வீடும் இங்கேதான் இருக்கிறது. இந்தப் பகுதியில்தான் மரீசி முனிவரின் மகனான காசியப முனிவரின் இல்லமும் இருக்கிறது. இப்படியே மேற்குப் பகுதியின் பல்வேறு தன்மைகளை உனக்கு உரைத்துள்ளேன். ஓ! காலவா, இப்போது சொல், ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, நாம் எந்தப் பக்கத்தை நோக்கிச் செல்லலாம்?” என்றான் {கருடன்}.

வடதிசையை விவரித்த கருடன்! – உத்யோக பர்வம் பகுதி 111-வடக்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது…

கருடன் {முனிவர் காலவரிடம்} சொன்னான், “ஓ! அந்தணா, ஒருவன் இங்கே முக்தி அடைவதால் இந்தத் திசை பாவத்தில் இருந்து அவனைக் காக்கிறது. இதற்காகவே இத்திசை சக்திவாய்ந்தது (உத்தாரணம் = தீங்கிலிருந்து மீட்டல் = uttarana) என்பதற்காகவே இத்திசை வடக்கு (உத்தரம்) என்று அழைக்கப்படுகிறது. ஓ! காலவா, செல்வங்கள் அனைத்தின் வசிப்பிடம் இங்கே கிழக்காகவும் மேற்காகவும் வடக்கில் நீண்டு கிடப்பதால், சில சமயங்களில் இந்த வடக்குப் பகுதி மத்திய பகுதி (மத்திமம்) என்றும் அழைக்கப்படுகிறது.

ஓ! இருபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} காளையே {காலவா}, இந்தப்பகுதியே அனைத்துக்கும் மேன்மையானது. இனிமையற்றவர்களோ, கட்டற்ற உணர்வுகள் கொண்டவர்களோ, அநீதிமிக்கவர்களோ இங்கே வாழ இயலாது. இங்கேதான், பதரி என்று அழைக்கப்படும் ஆசிரமத்தில், நாராயணனின் சுயமான கிருஷ்ணனும், மனிதர்களில் மேன்மையான ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, (படைப்பாளனான) பிரம்மனும் நித்தியமாக வசிக்கிறார்கள். {நரன், நாராயணன், பிரம்மன் ஆகியோர் வசிக்கின்றனர்}.

இங்கே, இமயத்தின் மார்பில், யுகத்தின் முடிவில், நெருப்பு போன்ற பெரும் பிரகாசத்துடன் மகேஸ்வரன் சுடர்விட்டு எரிகிறான். புருஷனாக {காலப் புருஷனாக}, அவன் பிராக்ருதியுடன் (அண்டத்தின் தாயுடன்) விளையாடிக் கொண்டிருக்கிறான். நரன் மற்றும் நாராயணனைத் தவிர முனிவர்களின் பல்வேறு வர்க்கங்களாலோ, வாசவனைத் {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, சித்தர்களாலோ காணமுடியாதவனாக அவன் {அந்த சிவன்} இங்கே இருக்கிறான். மாயையால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும், ஆயிரம் தலைகளும், ஆயிரம் கால்களும் கொண்ட நித்தியமான விஷ்ணு மட்டுமே {நரன் மற்றும் நாராயாணனைத் தவிர்த்து} அவனைக் காண முடியும்.

இங்கேதான் மறுபிறப்பாள வகை {அந்தண வகை} முழுவதற்கும் அரசனாகச் சந்திரன் நியமிக்கப்பட்டான். ஓ! பிரம்மத்தை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {காலவா}, இங்கேதான் கங்கையைத் தனது தலைக்குள் முதலில் ஏற்றிய மஹாதேவன் {சிவன்}, பிறகு, (புனித ஓடையாக) சொர்க்கத்தில் இருந்து மனிதர்களின் உலகில் அவளை {கங்கையை} விழ வைத்தான். இங்கேதான் (உமா) தேவி, மகேஸ்வரனை (தனது தலைவனாக அடைய) அடையும் தனது விருப்பத்தால் கடும் தவம் செய்தாள். இந்தப் பகுதியில்தான் காமன், (சிவனின்) கோபம், இமயம், உமை ஆகிய அனைவரும் ஒன்றாகிப் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.

இங்கேதான், கயிலாயத்தின் மார்பில், ஓ! காலவா, ராட்சசர்கள், யக்ஷர்கள் மற்றும் கந்தர்வர்களை ஆள குபேரன் நிறுவப்பட்டான். இந்தப் பகுதியில்தான் (அந்தக் குபேரனின் நந்தவனமான) சித்திரரதம் இருக்கிறது. இங்கேதான் வைகனசர்களின் {என்ற முனிவர்களின்} ஆசிரமம் அமைந்திருக்கிறது.

ஓ! இருபிறப்பாளர்களில் காளையே {காலவா}, இங்கேதான் மந்தாகினி என்றழைக்கப்படும் தெய்வீக ஓடையும், மந்தர மலையும் காணப்படுகின்றன. ராட்சசர்களால் எப்போதும் பாதுகாக்கப்படும் சௌகந்த கனகம் என்று அழைக்கப்படும் நந்தவனம் இங்கேதான் இருக்கிறது. இங்கேதான் புசுமையான புல்லால் மூடப்பட்டிருக்கும் பல சமவெளிகளும், வாழைமரக் காடுகளும், சொதனகங்கள் என்று அழைக்கப்படும் தெய்வீக மரங்களும் இருக்கின்றன. இந்தப் பகுதியில்தான் ஓ! காலவா, தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், எப்போதும் விருப்பப்படி விளையாடுபவர்களுமான சித்தர்களின் வசிப்பிடங்கள் இருக்கின்றன. அவற்றில் இன்பத்திற்கான அனைத்துவிதமான பொருட்களும் நிறைந்திருக்கும்.

இங்கேதான் ஏழு முனிவர்களையும் {சப்தரிஷிகளையும்} அருந்ததியையும் காண முடியும். இங்கே தான் சுவாதி நட்சத்திரக்கூட்டத்தைக் காண முடியும். இங்கேதான் அது {சுவாதி நட்சத்திரம்} முதலில் காட்சியில் எழுகிறது {கண்ணுக்குத் தெரிகிறது}. இந்தப் பகுதியில் தான் பெரும்பாட்டனான பிரம்மன் யக்ஞத்தின் அருகில் {வேள்வி பொருந்திய வடிவில்} வசிக்கிறான். இந்தப் பகுதியில் தான் சூரியன், சந்திரன் மற்றும் பிற ஒளியுடல்கள் {நட்சத்திரங்கள், கோள்கள்} சுழல்வது தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.

ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, இந்தப் பகுதியில்தான், ஒப்பற்றவர்களும், உண்மை பேசுபவர்களுமான, தர்மர்கள் என்ற பெயரில் அறியப்படும் முனிவர்கள் கங்கையின் ஊற்றுக்கண்ணைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முனிவர்களின் தோற்றம், உருவத்தின் தன்மைகள், தவநோன்புகளை யாரும் அறிய மாட்டார்கள். அவர்களால் சுயமாகத் தங்கள் விருப்பத்தின் பேரில் படைக்கப்படுவதும், விருந்தோம்பலுக்காக வழங்கப்படுவதும், பரிமாறப்பட்டு, பயன்படுத்தப்படுவதுமான ஆயிரம் உணவு வகைகளின் தயாரிப்பு {அனைவருக்கும்} புதிராகவே இருக்கின்றன. ஓ! காலவா, இந்த முனிவர்களால் {தர்மர்களால்} பாதுகாக்கப்படும் இடத்தைக் கடக்க முயல்பவர்கள், ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே, அழிவார்கள் என்பது நிச்சயம். ஓ! அந்தணர்களில் காளையே {காலவா}, தெய்வீகமான நாராயணன் மற்றும் ஜிஷ்ணு என்று அழைக்கப்படும் நித்தியமான நரனைத் தவிர வேறு யாராலும் இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியைக் கடக்க முடியாது.

ஐலவிலனின் (குபேரனின்) வசிப்பிடமான கயிலாய மலைகள் இந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. வித்யுத்பிரபைகள் என்று அறியப்படும் பத்து அப்ரசஸ்களின் தோற்றம் இங்கேதான் நிகழ்ந்தது. ஓ! அந்தணா {காலவா}, (அசுர மன்னனான) பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் உலகை அளந்த விஷ்ணு, இந்த வடக்குப் பகுதி முழுமையையும் அளந்தான். அதனால் இந்த இடம் விஷ்ணுபாதம் என்று அழைக்கப்படுகிறது. அச்சந்தர்ப்பத்தில் அது விஷ்ணுவின் கால்தடம் என்றும் அழைக்கப்பட்டது.

ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, இங்கே, இந்தப் பகுதியில் உள்ள உசிரவிஜம் என்று அழைக்கப்படும் இடத்தில், தங்கத் தடாகத்தின் அருகில், மன்னன் மருத்தன், ஒரு வேள்வியைச் செய்தான். இங்கேதான் இமயம் தன்னிடம் உள்ள தங்கச்சுரங்கங்களை ஒப்பற்ற மறுபிறப்பாள முனிவரான ஜிமுதருக்குத் வெளிக்காட்டியது. அந்த ஜிமுதர் அந்தச் செல்வங்கள் அனைத்தையும் அந்தணர்களுக்கே கொடுத்தார். அவற்றைக் கொடுத்த பிறகு, அந்தப் பெரும் முனிவர், அவர்கள் அனைவரிடமும், அவை {அந்தத் தங்கங்கள்} தன் பெயராலே அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதுமுதல், அந்தச் செல்வங்கள் ஜைமுத தங்கம் என்ற பெயரால் அறியப்படுகின்றன.

இங்கே, இந்தப் பகுதியில்தான், ஓ! பாரதர்களில் காளையே [1], ஓ! காலவா, தினமும் காலையிலும் மாலையிலும், லோகபாலகர்கள், “எந்த நபரின் எந்தக் காரியத்தை நாம் பார்க்கலாம்?” என்று பிரகடனம் செய்து கொள்கின்றனர். இதற்காகவும், இன்னும் பிற சம்பவங்களுக்காகவும், ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, வடக்குப் பகுதி மற்ற பகுதிகள் அனைத்தையும் விட மேன்மையானதாக இருக்கிறது. இந்தப் பகுதி அனைத்திலும் மேன்மையானது (உத்தரம்) என்பதாலேயே, இது வடக்கு (உத்தரம்) என்று அழைக்கப்படுகிறது. ஓ! ஐயா, இப்படியே நான் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து திசைகளையும் உனக்கு விவரித்துவிட்டேன். எந்தப் பகுதியை நோக்கி நீ செல்ல விரும்புகிறாய்? ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, பூமியின் அனைத்துப் பகுதிகளையும் உனக்குக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்” என்றான் {கருடன்

“மரணமே கடவுள்!” என்ற கருடன்! – உத்யோக பர்வம் பகுதி 112-கிழக்கு திசையை நோக்கிச் செல்லுமாறு கருடனிடம் காலவர் கேட்டுக் கொண்டது; கருடன் தனது முதுகில் காலவரை ஏற்றிக் கொண்டது; கருடனின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத காலவர் அதைக் கருடனிடம் சொன்னது; ரிஷப மலையில் ஓய்ந்து போகலாம் என்று கருடன் சொன்னது…

காலவர் {கருடனிடம்} சொன்னார், “ஓ கருடா, பாம்புகளில் முதன்மையானோரைக் கொல்பவனே, ஓ! அழகிய சிறகுகள் கொண்டவனே, ஓ! வினதையின் மகனே {கருடனே}, ஓ! தார்க்கியா {தார்க்ஷயா}, தர்மத்தின் கண்கள் இரண்டும் எங்கு விழித்தனவோ, அந்தக் கிழக்குத் திசைக்கு என்னைச் சுமந்து செல்வாயாக. எங்கே தேவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்று நீ முதலில் சொன்னாயோ, அந்தக் கிழக்குத் திசைக்கு என்னை அழைத்துச் செல். உண்மையும், அறமும் அங்கே வசிக்கின்ற என்று நீ சொல்லியிருக்கிறாய். தேவர்கள் அனைவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன். எனவே, அருணனின் தம்பியே {கருடா}, நான் தேவர்களைக் காணும் வகையில் என்னை அங்கே {கிழக்குத் திசைக்கு} அழைத்துச் செல்” என்றார் {காலவர்}.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட வினதையின் மகன் {கருடன்}, அந்த அந்தணரிடம் {காலவரிடம்}, “என் முதுகில் ஏறுவாயாக” என்றான். பிறகு, காலவ முனிவர் கருடனின் முதுகில் ஏறினார்.

காலவர் {கருடனிடம்}, “ஓ! பாம்புகளை உண்பவனே {கருடா}, நீ பறந்து செல்கையில், ஆயிரம் கதிர்களைக் கொண்டவனும், நாள் படைப்பனுமான சூரியன் காலை வேளையில் இருப்பதைப் போன்ற அழகுடன் இருக்கிறாய். ஓ! விண்ணதிகாரியே {கருடா}, உனது சிறகடிப்பால் உண்டான புயல் காற்றில் மரங்களே உடைந்து உனது பாதையில் தொடரும் அளவுக்கு உனது வேகம் பெரியதாக இருக்கிறது.

ஓ! வானவாசியே {கருடா}, உனது சிறகுகளால் உண்டான புயலைக் கொண்டு கடல்களில் இருக்கும் நீர், மலைகள், காடுகளுடன் கூடிய பூமியையே இழுத்துவிடுவாய்ப் போலிருக்கிறது. உண்மையில், உனது சிறகுகளின் அசைவால் உண்டான பெருங்காற்று, மீன்கள், பாம்புகள் மற்றும் முதலைகள் நிரம்பிய கடல் நீரை ஆகாயத்தின் மத்தியப்பகுதி வரை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஒரே முகம் கொண்ட மீன்களும், மனித முகங்களைக் கொண்ட திமிகள், திமிங்கலங்கள் மற்றும் பாம்புகளும் உனது சிறகுகள் எழுப்பும் பெருங்காற்றால் நசுக்கப்படுகின்றன. அந்த ஆழ்ந்த கர்ஜனையால் எனது காதுகள் செவிடாகின்றன. எதையும் கேட்கவோ, பார்க்கவோ முடியாதபடி நான் மலைத்துப் போயிருக்கிறேன். உண்மையில், எனது சொந்த நோக்கத்தைக்கூட நான் மறந்து விட்டேன்.

ஓ! விண்ணதிகாரியே {கருடா}, ஓர் அந்தணனின் உயிர் ஆபத்தில் இருப்பதை நினைவுகூர்ந்து உனது வேகத்தைத் தளர்த்துவாயாக. ஓ! ஐயா, சூரியனையோ, திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ கூட என்னால் பார்க்க முடியவில்லை. என்னைச் சுற்றிலும் ஓர் அடர்த்தியான இருளையே நான் காண்கிறேன். உடலை என்னால் காண முடியவில்லை. ஓ! முட்டையிடும் இனத்தவனே {கருடா}, ஒளிமிக்க இரண்டு ரத்தினங்களைப் போல ஒளிரும் உனது கண்கள் இரண்டை மட்டுமே நான் காண்கிறேன். என்னால் உனது உடலையோ, எனது உடலையோ காண முடியவில்லை.

ஒவ்வொரு அடியிலும் உனது உடலில் இருந்து தீப்பொறி பறப்பதை நான் காண்கிறேன். இந்தத் தீப்பொறிகளை விரைவில் நிறுத்து, மேலும் உனது கண்களின் ஒளிர்வையும் நிறுத்து. ஓ! வினதையின் மகனே {கருடா}, உனது வழியில் நீ செல்லும் இந்த அபரிமித வேகத்தைத் தளர்த்துவாயாக. சந்திரப் பிரகாசத்துடனும், ஒரு காதில் கருப்பு நிறத்துடனும் கூடிய எண்ணூறு {800} குதிரைகளை எனது ஆசானுக்கு {விசுவாமித்திரருக்கு} கொடுப்பதாக நான் வாக்களித்திருக்கிறேன். ஓ! முட்டையிடும் இனத்தோனே {கருடா}, எனது வாக்குறுதியை நிறைவேற்றும் எந்த வழியையும் நான் காணவில்லை. ஆனால் ஒரு வழியை என்னால் காண முடிகிறது. அஃது எனது உயிரை விடுவதுதான். எனக்குச் சுயமாக எந்தச் செல்வமும் இல்லை, செல்வமிக்க எந்த நண்பரும் எனக்குக் கிடையாது, மேலும் அபரிமிதமான செல்வத்தாலும் எனது நோக்கத்தை அடைய துணை நிற்க முடியாது” என்றார் {காலவர்}.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “இதையும் இன்னும் பிற சோகமான வார்த்தைகளையும் சொன்ன காலவரிடம், வினதையின் மகன் {கருடன்}, தனது வேகத்தைக் குறைக்காமல் சிரித்துக் கொண்டே, “ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவா {காலவா}, உனது வாழ்வுக்கு ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் உனக்குச் சிறுமதியே இருக்கிறது. ஒருவனது முயற்சியால் அவனுக்கு மரணம் ஏற்படாது. உண்மையில் மரணமே கடவுள். உனது நோக்கத்தை இதற்கு முன் நீ எனக்கு ஏன் சொல்லவில்லை? இவை அனைத்தையும் சாதிக்கப் பல அற்புத வழிகள் இருக்கின்றன. இங்கே கடலின் அருகே ரிஷபம் என்றழைக்கப்படும் ஒரு மலை இருக்கிறது. அங்கே சிறிது நேரம் நாம் ஓய்வெடுப்போம். உணவால் புத்துணர்ச்சி பெற்ற பிறகு, ஓ! காலவா மீண்டும் நான் திரும்புவேன்” என்றான் {கருடன்}.

சாண்டிலி என்ற பெண்! – உத்யோக பர்வம் பகுதி 113-கருடனும் காலவரும் ஓய்வெடுக்க ரிஷப மலையில் இறங்குவது; அங்கே தவம் செய்யும் சாண்டிலியைக் கண்டது; சாண்டிலியின் விருந்தோம்பல்; கருடனின் சிறகுகள் பறிபோனது; தூய நடத்தையின் பெருமையைச் சாண்டிலி சொல்வது; கருடன் மீண்டும் சிறகுகளைப் பெற்றது; ரிஷப மலையில் இருந்து அவர்கள் புறப்பட்டதும், வழியில் காலவரை விஸ்வாமித்ரர் சந்தித்தது…

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “பிறகு ரிஷப மலையின் சிகரத்தில் இறங்கிய அந்த அந்தணரும் {காலவரும்}, அந்தப் பறவையும் {கருடனும்}, அங்கே தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சாண்டிலி என்ற அந்தணப் பெண்ணைக் கண்டனர். காலவரும், கருடனும் தங்கள் சிரம் தாழ்த்தி அவளை {சாண்டிலியை} வணங்கி வழிபட்டனர். அதன்பேரில், அந்த மங்கை அவர்களது நலன் விசாரித்து அவர்களுக்கு {அமர} இருக்கை கொடுத்தாள். உணவைச் சமைத்த அந்த மங்கை முதலில் மந்திரங்களால் அதைத் தேவர்களுக்குக் காணிக்கையாக்கினாள். இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இருவரும் {காலவரும், கருடனும்}, அந்த மங்கையால் {சாண்டிலியால்} தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அந்த உணவை உண்டனர். உணவை உண்ட பிறகு தங்களைத் தரையில் கிடத்திக் கொண்ட அவர்கள் {காலவரும், கருடனும்} இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தனர்.

விழித்ததும் அந்த இடத்தைவிட்டு செல்ல முயன்ற கருடன், தனது சிறகுகள் விழுந்துவிட்டதைக் கண்டான். உண்மையில், அவன் தலையும் கால்களும் மட்டும் உள்ள ஒரு சதைப் பிண்டம் {சதைகளால் ஆன உருண்டை} போல இருந்தான். அவனுக்கு நேர்ந்த இந்த அவலநிலையைக் கண்ட காலவர் மிகுந்த வருத்தத்துடன், “பயணம் மேற்கொண்டு இங்கே வந்ததன் விளைவாகத்தான் இந்த அவல நிலை உனக்கு வந்ததா? ஐயோ, இன்னும் எவ்வளவு காலம் நாம் இங்கே வசிக்க வேண்டியதிருக்கும்? உனது மனதில் தீமையான பாவ சிந்தனையை ஏதும் கொண்டாயா? நீ குற்றமுள்ள மனமுடன் இருப்பதால், அந்தப் பாவம் அற்பமானதாக இராது என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்” என்றார் {காலவர்}.

இப்படிச் சொல்லப்பட்ட கருடன், அந்த அந்தணரிடம் {காலவரிடம்}, “உண்மையில், ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே-காலவா}, தவ வெற்றியால் மகுடம் சூட்டபட்டிருக்கும் இந்தப் பெண்மணியை இந்த இடத்தில் இருந்து, எங்கே படைப்பாளன் இருக்கிறானோ, எங்கே தெய்வீகமான மகாதேவன் {சிவன்} இருக்கிறானோ, எங்கே நித்தியமான விஷ்ணு இருக்கிறானோ, எங்கே அறமும் வேள்வியும் சேர்ந்து இருக்கிறதோ அங்கே தூக்கிச் சென்றுவிட வேண்டும் எனக்கருதினேன். ஏனெனில், இந்தப் பெண்மணி அங்கேயே வாழ வேண்டும் என நான் நினைத்தேன். இப்போது நான், எனக்கு நன்மை வேண்டி, இந்தப் புனிதமான பெண்மணியின் முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுவேன், என்று சொல்லி பரிதாபம் நிறைந்த இதயத்துடன் அந்தப் பெண்மணியிடம் {சாண்டிலியிடம்}, “உண்மையில் நான் என் மனதில் இப்படியே நினைத்தேன். நான் சரியாகச் செயல்பட்டிருந்தாலும், தவறிழைத்திருந்தாலும், இதுவே எனது விருப்பமாக இருந்தது. அஃது உனது விருப்பத்திற்கு எதிரானது என்பது தெளிவு என்றாலும், உன் மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாகவே நான் அவ்வாறு நினைத்தேன். எனவே, உனது இதயத்தின் உன்னதத் தன்மையால் எனக்கு மன்னிப்பை அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {கருடன்}.

அந்தப் பறவைகளின் இளவரசனிடமும், அந்த அந்தணர்களில் காளையிடமும் அந்தப் பெண்மணி மனநிறைவு கொண்டாள். அவள் {சாண்டிலி}, கருடனிடம், “ஓ! அழகிய இறகுகள் கொண்டவனே {கருடா}, அஞ்சாதே. உனது சிறகுகள் திரும்பும், உனது அச்சங்களை விலக்கு. உன்னால் நான் அவமதிக்கப்பட்டேன் {இகழ்வாகக் கருதப்பட்டேன்}. ஆனால், நான் இகழ்ச்சியை மன்னிப்பதில்லை என்பதை அறிந்து கொள்வாயாக. எந்தப் பாவி என்னை அவமதிப்பானோ, அவன் அருள் உலகங்கள் அனைத்தில் இருந்தும் வேகமாக விழுவான். என் மேல் எந்த ஓர் அமங்கலக் குறியும் இன்றி, முற்றிலும் பழியற்று இருக்கும் நான், எனது நடத்தையில் கொண்ட தூய்மையின் விளைவாக உயர்ந்த தவ வெற்றியை அடைந்திருக்கிறேன்.

தூய நடத்தையானது {ஆசாரமானது}, தனது கனியாக அறத்தைத் தாங்கி வருகிறது. தூய நடத்தையானது, தனது கனியாகச் செல்வத்தைத் தாங்கி வருகிறது. அந்தத் தூய நடத்தையே, செழிப்பையும் கொண்டு வருகிறது. அந்தத் தூய நடத்தையே {ஆசாரமே}, மங்கலமற்ற அனைத்து அறிகுறிகளையும் விரட்டி விடுகிறது. ஓ! பறவைகளின் அருளப்பட்ட இளவரசனே {கருடா}, இந்த இடத்தில் இருந்து நீ எங்கு விரும்புகிறாயோ அங்கே செல். என்னை இகழும் நினைப்பை ஊக்குவிக்காதே. உண்மையில் பழிக்கத்தக்க பெண்களும் இருக்கலாம். அவர்களைக் கூட நீ அவமதிக்காமல் கவனமாக இருப்பாயாக. முன்பைப் போலவே, நீ மீண்டும் பலத்தையும் சக்தியையும் பெறுவாய்” என்றாள் {சாண்டிலி}.

அந்தப் பெண்மணியின் வார்த்தைகளின் பேரில் கருடன் மீண்டும் சிறகுகளை அடைந்து, முன்பை விட அதிகப் பலவான் ஆனான். பிறகு சாண்டிலியிடம் விடைபெற்ற கருடன், காலவரை முதுகில் சுமந்த படி அங்கிருந்து {ரிஷப மலையிலிருந்து} சென்றான். ஆனால் தாங்கள் தேடி வந்த வகைக் குதிரைகளைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தோல்வியுற்றனர். அப்போது வழியில் காலவரை விஸ்வாமித்ரர் சந்திக்க நேர்ந்தது.

வினதையின் மகன் {கருடன்} முன்னிலையிலேயே அந்தப் பேச்சாளர்களில் முதன்மையானவர் {விஸ்வாமித்ரர்}, காலவரிடம், “ஓ! மறுபிறப்பாளனே {காலவா}, நீ உன் சுயவிருப்பத்தின் படியே வாக்குறுதியளித்திருந்த செல்வத்தைக் கொடுக்க வேண்டிய நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நீ என்ன செய்வாய் என்பதை நான் அறியவில்லை. நான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். நான் இன்னும் சில காலம் காத்திருப்பேன். (வாக்குறுதி கொடுத்த காரியத்தில்) நீ வெற்றியடைத்தக்க வழியைத் தேடுவாயாக” என்றார் {விஸ்வாமித்ரர்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், துயரத்தில் மூழ்கி உற்சாகமற்று இருந்த காலவரிடம், “உன்னிடம் விஸ்வாமித்ரர் முன்பே சொன்னதை, இப்போது என் முன்னிலையிலும் சொல்லக் கேட்டேன். எனவே, ஓ காலவா, அந்தணர்களில் சிறந்தவனே, வா, இக்காரியம் குறித்துத் தீர்மானிப்போம். (உன்னால் வாக்குறுதி அளிக்கப்பட்ட படி) உனது ஆசானுக்கு முழுச் செல்வத்தையும் அளிக்காமல், நீ அமரவும் கூடாது” என்றான் {கருடன்}.

யயாதியைச் சந்தித்த கருடனும் காலவரும்! – உத்யோக பர்வம் பகுதி 114-கருடன் தனது நண்பனான யயாதி குறித்துக் காலவரிடம் சொன்னது; காலவரை  யயாதியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து, காலவர் கேட்கும் குதிரைகளைத் தானமாகக் கொடுக்கும்படி யயாதியிடம் கேட்டது…

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “பிறகு, சிறகு படைத்த உயிரினங்களில் முதன்மையானவனான கருடன், உற்சாகமற்றிருந்த காலவரிடம், “பூமிக்கடியில் அக்னியினால் உண்டாக்கப்பட்டு, வாயுவினால் சோதிக்கப்படுவதாலும், பூமியே ஹிரண்மயமாயிருக்கிறது என்று சொல்லப்படுவதாலும், அந்தச் செல்வம் {தங்கம்} ஹிரண்யம் என்று அழைக்கப்படுகிறது. அந்தச் செல்வமே {தங்கமே} உலகத்தைத் தாங்கி வாழ்வை நிலைக்க வைக்கிறது. எனவே, அது தனம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தனை சேவைகளுக்காகவே அந்தத் தனம் {செல்வம்}, ஆதியில் இருந்து மூவுலகிலும் நிலைத்திருக்கிறது. குபேரனின் கையிருப்பை அதிகரிக்கும்பொருட்டு, பூரட்டாதியும் உத்திரட்டாதியும் கூடிய வெள்ளிக்கிழமையில் அக்னி தனது விருப்பத்தின் ஆணையால் செல்வத்தை உண்டாக்கி மனிதர்களிடம் அளித்தான். பூமிக்கடியில் இருக்கும் அந்தச் செல்வம் அஜைகபாதர்கள் மற்றும் அஹிர்ப்புதனியர் என்று அழைக்கப்படும் தேவர்களாலும், குபேரனாலும் காக்கப்படுகிறது. எனவே, ஓ! அந்தணர்களில் காளையே {காலவா}, அடைவதற்கு அரிதான அது மிக அரிதாகவே அடையப்படுகிறது. செல்வமில்லாமல், நீ வாக்குறுதியளித்திருக்கும் குதிரைகளை அடைவது இயலாது. எனவே, அரச முனிவர்களின் குலத்தில் பிறந்திருப்பவனும், தனது குடிமக்களை ஒடுக்காதவனுமான ஏதாவது ஒரு மன்னனிடம் {செல்வத்தை} இரந்து கேட்டு நமது நோக்கத்தில் வெற்றியடைவாயாக.

சந்திர குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் எனது நண்பனாக இருக்கிறான். நாம் அவனிடம் செல்வோம். ஏனெனில், பூமியில் உள்ளோர் அனைவரை விடவும், அவனே பெரும் செல்வத்தைக் கொண்டிருக்கிறான். அந்த அரச முனி யயாதி என்ற பெயரால் அறியப்படுகிறான். அவன் நகுஷனின் மகனுமாவான். அவனது ஆற்றல் கலங்கடிக்கப்பட முடியாததாக இருக்கிறது. நேரடியாக நீ கேட்டு, நானும் அதை நிர்பந்தித்தால், நாம் கேட்பதை அவன் {யயாதி} கொடுப்பான். ஏனெனில், பொக்கிஷத்தலைவனான குபேரன் கொண்டுள்ளதற்கு நிகரான அளவு அபரிமிதமான செல்வத்தை அவன் {யயாதி} கொண்டிருக்கிறான். ஓ! கற்றவனே, இப்படியே கொடையை ஏற்று, உனது ஆசானின் கடனை அடைப்பாயாக” என்றான் {கருடன்}.

இப்படியே பேசிக்கொண்டு, என்ன செய்யப்பட வேண்டும் என்பதைச் சிந்தித்த கருடனும் காலவனும், பிரதிஷ்டானம் என்று அழைக்கப்படும் தனது தலைநகரில் இருந்த மன்னன் யயாதியிடம் சேர்ந்தே சென்றனர். விருந்தோம்பலுடன் அவர்களை வரவேற்ற அந்த மன்னன் {யயாதி} அவர்களுக்கு அற்புதமான ஆர்கியாவையும், அவர்களது பாதங்களைக் கழுவி கொள்ள நீரையும் கொடுத்தான். பிறகு அந்த மன்னன் அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டான்.

அதன்பேரில் கருடன், “ஓ! நகுஷனின் மகனே {யயாதி}, காலவன் என்று அழைக்கப்படும் இந்தத் தவக்கடல் எனது நண்பனாவான். ஓ! ஏகாதிபதி, இவன் {காலவன்} விஸ்வாமித்ரரிடம் பல்லாயிரம் வருடங்களாகச் சீடனாக இருந்தான். இந்தப் புனித அந்தணன் {காலவன்}, தான் செல்ல விரும்பும் இடத்திற்கு விடைகொடுத்து விஸ்வாமித்ரரால் அனுப்பப்பட்ட போதும், அந்நேரத்தில் தனது ஆசானிடம், தனது குருதட்சணையைக் கொடுத்துவிட்டுச் செல்வதாகச் சொன்னான்.

இவனது  ஏழ்மையை அறிந்து கொண்ட விஸ்வாமித்ரர் இவனிடம் {காலவனிடம்} எதையும் கேட்கவில்லை. ஆனால் இந்த அந்தணன் {காலவன்} மீண்டும் மீண்டும் கல்விக் கட்டணத்தைக் குறித்துச் சொன்னதும், சற்றே கோபப்பட்ட அந்த ஆசான் {விஸ்வாமித்திரர்}, “நல்ல வம்சாவளியைக் கொண்டதும், சந்திரப் பிரகாசம் கொண்டதும், ஒரு காதில் மட்டும் கருப்பு நிறம் கொண்டதுமான எண்ணூறு {800} குதிரைகளை எனக்குக் கொடு. ஓ! காலவா, நீ உனது ஆசானுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இதையே நீ கொடுப்பாயாக”, என்று சொல்லிவிட்டார். இப்படியே தவத்தைச் செல்வமாகக் கொண்ட விசுவாமித்ரர் இவனிடம் கோபத்தில் சொல்லிவிட்டார்.

அதனால், இந்த அந்தணர்களில் காளை {காலவன்} பெரும் துயரத்தில் இருக்கிறான். தனது ஆசானின் {விஸ்வாமித்ரரின்} ஆணையை நிறைவேற்ற முடியாததால், இப்போது உனது பாதுகாப்பை நாடி வந்திருக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {யயாதி}, அவற்றை உன்னிடம் இருந்து பிச்சையாகப் பெற்று, மீண்டும் மகிழ்ச்சியை அடைந்து, தனது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய கடனை அடைத்து, தன்னை இவன் தவநோன்புகளுக்கு அர்ப்பணித்துக் கொள்வான். 

எனவே, அரச முனியாக இருக்கும் உனக்கு, தான் கொண்டிருக்கும் தவச் செல்வத்தில் ஒரு பகுதியைக் கொடுப்பதால், அவ்வகைச் செல்வத்தில் மேலும் செல்வந்தனாக இந்த அந்தணன் உன்னை ஆக்குவான். ஓ! மனிதர்களின் தலைவா, ஒரு குதிரையின் உடலில் எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ, ஓ! பூமியின் ஆட்சியாளா, அவ்வளவு அருள் உலகங்களையும், ஒரு குதிரையைக் கொடுப்பவன் அடைவான். இவன் {காலவன்} உன்னிடம் கொடை பெறுவதற்குத் தகுதியுடையவன் ஆவான். எனவே, சங்குக்குள் சேகரிக்கப்பட்ட பாலைப் போல உனது கொடை இந்த நேரத்தில் அவனுக்கு அமையட்டும்” என்றான் {கருடன்}.

மாதவியை மகளாக ஏற்ற காலவர்! – உத்யோக பர்வம் பகுதி 115-காலவர் கேட்ட குதிரைகளைக் கொடுக்க இயலாத யயாதி, தனது மகளை காலவரிடம் கொடுப்பது; யயாதி தனது மகள் மாதவியைத் திருமணம் செய்து கொடுப்பதால் கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு காலவர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சொன்னது; காலவர் மாதவியை ஏற்றுக் கொள்வது; கருடன் தனது நண்பன் காலவன் தன் நோக்கத்தை அடைய ஒரு வழி கிடைத்த மனநிறைவுடன் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பியது; மாதவியை மணமுடித்துக் கொடுத்து வரதட்சணையைப் பெற்றுக் கொள்ள அயோத்யா மன்னன் ஹர்யஸ்வனிடம் காலவர் சென்றது..

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “உண்மை நிறைந்த அற்புத வார்த்தைகளைக் கொண்டு சுபர்ணனால் {கருடனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், ஆயிரம் வேள்விகளைச் செய்தவனும், தானமளிப்பவர்களில் முதன்மையானவனும், காசி நாட்டவர் அனைவரிலும் தயாளமான ஆட்சியாளனுமான தலைவன் யயாதி, தன் மனதில் அவ்வார்த்தைகளைச் சுழற்றி, தன்னிடம் கேட்கப்பட்ட யாசகத்தால் கிடைக்கும் பெருமையையும், (காலவரின்) தவத்தகுதியையும் கருதிப் பார்த்து, சூரிய குல மன்னர்கள் அனைவரையும் கடந்து, குறிப்பாகத் தன்னிடம் இந்த இருவரும் {கருடனும் காலவரும்} வந்ததை நோக்கில் கொண்டு, “இன்றைய எனது வாழ்வு அருளப்பட்டதே. உண்மையில், நான் பிறந்த குலமும் இன்று அருளப்பட்டதாகியது. ஓ! பாவமற்ற தார்க்ஷியா {கருடா}, எனக்கு நிகராக இந்த மாநிலமும் அருளப்பட்டிருக்கிறது. எனினும், ஓ! நண்பா, நான் உன்னிடம் சொல்ல ஒன்றிருக்கிறது. நீ நினைப்பது போல நான் இப்போது அவ்வளவு பெரிய செல்வந்தனில்லை. எனது செல்வம் குறைந்துவிட்டது. எனினும், ஓ! விண்ணதிகாரியே {கருடா}, நீ இங்கே வந்த நோக்கம் கனியற்றதாகச் {பலனற்றுப் போகச்} செய்ய என்னால் இயலாது. மேலும் இந்த மறுபிறப்பாள முனிவரின் {பிராமண முனிவர் காலவரின்} நம்பிக்கைகளையும் நான் வீணாக்க விரும்பவில்லை.

எனவே, அவரது நோக்கம் எதனால் நிறைவேறுமோ, அதை {குதிரையை} நான் கொடுப்பேன். இரந்து கேட்டு வரும் ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பினால், அவர் {தானமளிக்க வேண்டியவரின்} குலத்தையே எரித்துவிடக் கூடும். ஓ! வினதையின் மகனே {கருடா}, “கொடு” என்று கேட்டு வருபவரின் நம்பிக்கைகளையெல்லாம் அழித்துவிட்டு, “என்னிடம் ஏதும் இல்லை” என்று சொல்வதை விட வேறு பெரிய பாவச்செயல் ஏதும் இல்லை என்று சொல்லப்படுகிறது. {உலகில் ஆசையை நாசம் செய்வதான “கொடு” மற்றும் “இல்லை” என்ற வார்த்தைகளைக் காட்டிலும் மிகப் பாவமானது வேறு எதுவும் இல்லை}. தனது நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்து, தன் நோக்கமும் நிறைவேறாமல் ஏமாற்றமடைந்த ஒரு மனிதர், தனக்கு நன்மை செய்யத்தவறிய ஒருவனுடைய மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் அழித்துவிடக்கூடும்.

எனவே, ஓ! காலவரே, நான்கு குடும்பங்களைத் தழைக்க வைக்கவல்ல [1] இந்த எனது மகளை {மாதவியைப்} பெற்றுக் கொள்ளும். அழகில் இவள் {மாதவி} தேவர்களுக்கு நிகரானவளாவாள். இவளிடம் நற்குணங்களால் ஆன திறன்கள் அனைத்தும் உள்ளன. உண்மையில், இவளது அழகுக்காகவே, தேவர்கள், மனிதர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் {தாங்கள் மணமுடித்துக்கொள்ள} (என்னிடம்) இவளைக் கேட்கின்றனர். ஒரு காது கருப்பாக உள்ள எண்ணூறு குதிரைகளைக்கூட விடும், பூமியில் உள்ள மன்னர்கள் தங்கள் முழு நாடுகளையும் இவளுக்கு வரதட்சணையாக கொடுப்பார்கள். எனவே, மாதவி என்ற பெயர் கொண்ட எனது இந்த மகளை நீர் பெற்றுக் கொள்வீராக. நான், எனது மகள் மூலமாகப் பெறப்படும் மகனைக் {தௌஹித்ரர் = மகளின் மகன்} கொண்டவனாக வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றான் {யயாதி}.(நான்கு குடும்பங்கள் என்பது 1. தன் தாயின் குடும்பம் 2. தன் தந்தையின் குடும்பம், 3. தன் கணவனின் தாயுடைய குடும்பம் 4. தன் கணவனின் தந்தையுடைய குடும்பம் ஆகியவை ஆகும். நான்கு பிள்ளைகளைப் பெற்று, நான்கு வம்சங்களைப் பெறுவாள் இந்த மாதவி என்ற தொலைநோக்குப் பார்வையும் இதில் அடங்கியிருக்கிறது)

அந்த மகளைப் {யயாதியின் மகளாகிய மாதவியைத் தன் மகளாகப்} பெற்றுக் கொண்ட காலவர், “நான் மீண்டும் உம்மைக் காண்பேன்” என்று சொல்லியபடி கருடனுடன் சென்றுவிட்டார். அவர்கள் {காலவரும் கருடனும்} அந்த மங்கையை {மாதவியை} தங்களுடன் அழைத்துச் சென்றனர். முட்டையிடும் இனத்தைச் சேர்ந்த {பறவையினத்தைச் சேர்ந்த} காலவரின் நண்பன் {கருடன்}, அவரிடம் {காலவரிடம்}, “இறுதியாக குதிரைகளை அடைவதற்கான வழி கிடைத்தது” என்று சொன்னான். இதைச் சொன்ன கருடன், பிறகு, காலவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தனது இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டான். அந்தப் பறவைகளின் இளவரசன் {கருடன்} சென்ற பிறகு, தன்னுடன் அந்த மங்கையை {மாதவியை} அழைத்துச் சென்ற அவர் {காலவர்}, அந்த மங்கைக்கான (தகுந்த) வரதட்சணையைக் கொடுக்கக்கூடிய ஒரு மன்னனிடம் செல்வது குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.

பெரும் சக்தி கொண்டவனும், நால்வகை அணிகளுடன் கூடியபெரும் படையைக் கொண்டவனும், கருவூலம் நிரம்பியவனும், அபரிமிதமான தானியங்களைக் கொண்டவனும், தனது குடிகளால் அன்புடன் விரும்பப்படுபவனும், அந்தணர்களால் விரும்பப்படுபவனும், அயோத்யா நகரத்தை ஆள்பவனுமான இக்ஷவாகு குலத்தின் ஹர்யஸ்வனிடம் [2] செல்ல அவர் முதலில் நினைத்தார். வாரிசை அடையும் விருப்பத்துடன் இருந்த அவன் {ஹர்யஸ்வன்}, அற்புதமான தவங்களில் ஈடுபட்டு, சமாதானத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து வந்தான்.(ஹர்யஸ்வன் என்றால் பச்சைக் குதிரைகளை உடையவன் என்று பொருள்.)

பிறகு அந்த அந்தணரான காலவர், ஹர்யஸ்வனிடம் சென்று, “ஓ! மன்னர்களின் மன்னா {ஹர்யஸ்வா}, இந்த மங்கை {மாதவி}, பிள்ளைகளைப் பெற்று தனது கணவனின் குடும்பத்தைப் பெருக வைப்பாள். ஓ! ஹர்யஸ்வா, எனக்கு வரதட்சணையைக் கொடுத்துவிட்டு, இவளை {மாதவியை} உனது மனைவியாக என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. நீ என்ன வரதட்சணையைக் கொடுக்க வேண்டும் [3] என்பதை நான் சொல்கிறேன். அதைக் கேட்ட பிறகு, நீ என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பாயாக” என்றார் {காலவர்}.

மீண்டும் கன்னியான மாதவி! – உத்யோக பர்வம் பகுதி 116-ஹர்யஸ்வன் காலவரிடம் அவர் கேட்கும் வகையில் இருநூறு  குதிரைகள் மட்டுமே இருப்பதாகவும், இருப்பினும் தான் மாதவியை அடைய விரும்புவதாகவும் சொன்னது; ஒவ்வொரு பிரசவத்திற்குப் பிறகும் தான் கன்னியாகும் வரத்தைத் தான் கொண்டிருப்பதாகக் காலவரிடம் மாதவி சொல்வது; ஹர்யஸ்வனுக்கும் மாதவிக்கும் மகனாக வசுமனஸ் பிறப்பது; மீண்டும் மாதவியைப் பெற்றுக் கொண்ட காலவர்…

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “ஏகாதிபதிகளில் சிறந்தவனான மன்னன் ஹர்யஸ்வன், தனக்குப் பிறக்கப்போகும் மகனை நினைத்துச் சூடான நீண்ட பெருமூச்சை விட்டு, நீண்ட நேரம் சிந்தித்தபிறகு, இறுதியாக, “உயர்ந்திருக்க வேண்டிய {உன்னதமாக இருக்க வேண்டிய} அங்கங்கள் ஆறும் {6} இந்த மங்கையிடம் {மாதவியிடம்} உயர்ந்திருக்கின்றன. மென்மையாக இருக்க வேண்டிய ஏழும் {7} இவளிடம் மென்மையாக இருக்கின்றன. ஆழமாக {கம்பீரமாக} இருக்க வேண்டிய மூன்றும் {3} இவளிடம் ஆழமாக இருக்கின்றன. இறுதியாக, சிவந்திருக்க வேண்டிய ஐந்தும் {5} இவளிடம் சிவந்தே இருக்கின்றன [1]. இவள் தேவர்களாலும், அசுரர்களாலும் கூட விரும்பப்படுபவள் போலவும், கலைகள் மற்றும் அறிவியல்கள் அனைத்தையும் அறிந்தவளாகவும் தெரிகிறாள். அனைத்து மங்கலக் குறிகளையும் கொண்ட இவள் {மாதவி} நிச்சயம் பல பிள்ளைகளைப் பெறுவாள். சக்கரவர்த்தியாகக் கூடிய ஒரு மகனைக் கூடப் பெறுவதற்கு இவள் தகுந்தவளே. ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {காலவரே}, எனது செல்வத்தைக் கருத்தில் கொண்டு, இவளுக்காக {மாதவிக்காக} நான் கொடுக்க வேண்டிய வரதட்சணை என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான் {ஹர்யஸ்வன்}

அதற்குக் காலவர், “நல்ல நாட்டில் பிறந்தவையும், சந்திர வெண்மை கொண்டவையும், ஒரு காது கருப்பாக இருப்பவையுமான எண்ணூறு குதிரைகளை எனக்குக் கொடுப்பாயாக. மங்கலகரமான இந்தப் பெரிய கண்களைக் கொண்ட மங்கை, நெருப்புக்குக் காரணமாக அரணிகளைப் {கடையப்பட்டால் நெருப்பை உண்டாக்கும் தடி} போல, உனது மகன்களின் தாயாவாள்” என்றார்.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட அரசமுனியான மன்னன் ஹர்யஸ்வன் துயரத்தால் நிறைந்தான். ஆனால் காமத்தில் குருடான அவன், முனிவர்களில் முதன்மையானவரான காலவரிடம், “பிற வகை வேள்விகள் அனைத்துக்கும் தகுந்த வகையில் ஆயிரக்கணக்கான குதிரைகளை நான் (எனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில்) கொண்டிருப்பினும், ஓ! காலவரே, உமக்குத் தேவையான வகையில் என்னிடம் இருநூறு குதிரைகளே இருக்கின்றன. நான் இந்தக் காரிகையிடம் ஒரு மகனை மட்டுமே பெற விரும்புகிறேன். அன்புகூர்ந்து, எனது இந்த வேண்டுகோளை அருளும்” என்றான் {ஹர்யஸ்வன்}.

மன்னனின் {ஹர்யஸ்னின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் காரிகை {மாதவி}, காலவரிடம், “பிரம்மத்தை உரைப்பவர் {பிரம்மவாதி} ஒருவர், ஒவ்வொரு மகப்பேறுக்குப் {பிரசவத்திற்குப்} பிறகும் நான் மீண்டும் கன்னியாவேன் என்ற வரத்தை எனக்கு அருளினார். எனவே, இந்த மன்னனின் {ஹர்யஸ்வரின்} அற்புதக் குதிரைகளை ஏற்றுக் கொண்டு, என்னை இவருக்கு அளிப்பீராக. இதே வழியில், தொடர்ச்சியாக நான்கு மன்னர்களிடம் எண்ணூறு குதிரைகளை முழுமையாக நீர் அடைந்துவிடலாம். நானும் நான்கு மகன்களைப் பெற்றவளாவேன். இவ்வழியில், உமது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய செல்வத்தை நீர் கொடுப்பீராக. இதையே நான் நினைக்கிறேன். இருப்பினும், ஓ! அந்தணரே {காலவரே}, நீர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது உம்மைச் சார்ந்ததே” என்றாள்.

அந்த மங்கையால் {மாதவியால்} இப்படிச் சொல்லப்பட்ட காலவ முனிவர், மன்னன் ஹர்யஸ்வனிடம், “ஓ! ஹர்யஸ்வா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நான் தீர்மானித்த வரதட்சணையில் {சுல்கத்தில்} நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து இந்தக் காரிகையை ஏற்று, இவளிடத்தில் ஒரே மகனை மட்டும் பெறுவாயாக” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த மங்கையைப் பெற்றுக் கொண்டு, காலவரை வழிபட்ட மன்னன் {ஹர்யஸ்வன்}, உரிய நேரத்திலும், உரிய இடத்திலும், தான் விரும்பிய வகையில் ஒரு மகனை அவளிடம் {மாதவியிடம்} பெற்றான். அப்படிப் பிறந்த அந்த மகன், வசுமனஸ் என்ற பெயரால் அழைக்கப்படலானான். பூமியின் மன்னர்கள் அனைவரிலும் செல்வந்தனாக, வசுக்களைப் போல இருந்த அவன் {வசுமனஸ்}, ஒரு மன்னனாகவும், பெரும் ஈகையாளனாகவும் ஆனான்.

சிறிது காலத்திற்குப் பிறகு, புத்திக்கூர்மை கொண்ட காலவர் மீண்டும் வந்து மகிழ்ச்சியில் இருந்த ஹர்யஸ்வனை அணுகி, அவனிடம், “ஓ! மன்னா, நீ ஒரு மகனை அடைந்துவிட்டாய். உண்மையில், இந்தப் பிள்ளை சூரியப் பிரகாசம் கொண்டவனாக இருக்கிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஹர்யஸ்வா}, ஏதாவது பிற மன்னனிடம் இரக்க {மீதமுள்ள குதிரைகளை இரந்து பெற} எனக்கு நேரம் வந்துவிட்டது” என்றார்.

ஆண்மை நிறைந்த செயல்களில் உறுதியுள்ளவனும், உண்மை நிறைந்த பேச்சை எப்போதும் கொண்டவனுமான ஹர்யஸ்வன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, தன்னால் மேலும் அறுநூறு {600} குதிரைகளைக் கொடுக்க முடியாது என்பதை நினைவுகூர்ந்து, மாதவியைக் காலவரிடம் திருப்பிக் கொடுத்தான். மாதவியும் அந்தச் சுடர்மிகும் அரசச் செழிப்பைக் கைவிட்டு, மீண்டும் கன்னித் தன்மையை அடைந்து, காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். “இந்தக் குதிரைகள் உன்னிடமே இருக்கட்டும்” என்று சொன்ன காலவர், அந்தக் கன்னிப் பெண்ணை {மாதவியை} அழைத்துக் கொண்டு மன்னன் திவோதாசனிடம் சென்றார்” என்றார் {நாரதர்}.

புகழ்பெற்ற காதல் இணைகள்! – உத்யோக பர்வம் பகுதி 117-காலவர் காசியின் ஆட்சியாளன் திவோதாசனிடம் சென்று மாதவியை மணந்து கொண்டு குதிரைகளைத் தரும்படி இரந்து கேட்டது; ஹர்யஸ்வனைப் போலவே தன்னிடமும் இருநூறு குதிரைகளே உள்ளன என்று திவோதாசன் சொல்வது; காலவர் மாதவியைத் திவோதாசனுக்கு அளிப்பது; புராணங்களில் உள்ள புகழ்பெற்ற தம்பதியினரின் பெயர்ப்பட்டியலை நாரதர் உரைப்பது; திவோதாசனுக்குப் பிரதர்த்தனன் என்ற மகன் பிறப்பது; உரிய நேரத்தில் காலவர் வந்து திவோதாசனிடம் இருந்து மாதவியை அழைத்துச் செல்வது …

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “பிறகு மாதவியிடம் பேசிய காலவர், “காசியின் ஆட்சியாளன் ஓர் ஒப்பற்ற மன்னனாவான். அவன் திவோதாசன் என்ற பெயரில் அறியப்படுகிறான். பெரும் ஆற்றலும், வலிமைமிக்க நாட்டையும் கொண்ட அவன் {திவோதாசன்}, பீமசேனனின் மகனாவான். ஓ! அருளப்பட்ட மங்கையே {மாதவி}, நாம் இப்போது அவனிடம்தான் {திவோதாசனிடம்} செல்கிறோம். மெதுவாக என்னைத் தொடர்ந்து வருவாயாக! வருந்தாதே. மனிதர்களின் ஆட்சியாளனான அவன் {திவோதாசன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவனாவான்” என்றார் {காலவர்}.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “அந்த முனிவர் {காலவர்}, அந்த மன்னனின் {திவோதாசனின்} முன்னிலையில் நின்ற போது, பின்னவனால் {திவோதாசனால்} உரிய விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட்டார். பிறகு, காலவர், அந்த ஏகாதிபதி {திவோதாசன்} ஒரு குழந்தையைப் பெறும் பொருட்டு, அவனைத் தூண்டத் தொடங்கினார். இப்படிச் சொல்லப்பட்ட திவோதாசன் {காலவரிடம்}, “இவை யாவையும் முன்பே நான் கேள்விப்பட்டேன். ஓ! அந்தணரே, நீர் அதிகம் பேசத் தேவையில்லை. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, நான் இக்காரியம் குறித்துக் கேள்விப்பட்டதும் எனது இதயம் அதிலேயே நிலைத்துவிட்டது. மற்ற மன்னர்கள் அனைவரையும் கடந்து நீர் என்னை அடைந்திருப்பது எனக்குக் கிடைத்த பெரிய மரியாதையின் அடையாளமே. உமது நோக்கம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. குதிரைகளின் காரியத்தில், ஓ! காலவரே, எனது செல்வமும் மன்னன் ஹர்யஸ்வனைப் போன்றதுதான் {என்னிடமும் இருநூறு {200} குதிரைகள்தான் உள்ளன}. எனவே, நான் இந்தக் கன்னிகையிடம் {மாதவியிடம்} ஓர் அரச மகனை மட்டுமே பெறுவேன்” என்றான் {திவோதாசன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர்களில் சிறந்தவர் அந்த மங்கையை {மாதவியை} அந்த மன்னனுக்கு {திவோதாசனுக்கு} அளித்தார்.

பிறகு அந்த அரசமுனியும் {திவோதாசனும்},
பிரபாவதியுடன் சூரியனையைப் போலவோ,
சுவாஹாவுடன் அக்னியைப் போலவோ,
சச்சியுடன் {இந்திராணியுடன்} வாசவனைப் {இந்திரனைப்} போலவோ, ரோகிணியுடன் சந்திரனைப் போலவோ,
ஊர்மிளையுடன் {தூமோர்ணையுடன்} யமனைப் போலவோ,
கௌரியுடன் வருணனைப் போலவோ,
ரித்தியுடன் குபேரனைப் போலவோ,
லட்சுமியுடன் நாராயணனைப் போலவோ,
ஜானவியுடன் {கங்கையுடன்} சாகரனைப் {பெருங்கடலைப்} போலவோ, ருத்திராணியுடன் ருத்திரனைப் போலவோ,
சரஸ்வதியுடன் {வேதியினியுடன்} பெரும்பாட்டனைப் {பிரம்மாவைப்} போலவோ,
அத்ரிசியந்தியுடன் வசிஷ்டரின் மகனான சக்திரியைப் போலவோ,
(அக்ஷமாலை என்றும் அழைக்கப்பட்ட) அருந்ததியுடன் வசிஷ்டரைப் போலவோ,
சுகன்யையுடன் சியவனனைப் போலவோ,
சந்தியையுடன் புலஸ்தியரைப் போலவோ,
விதர்ப்ப இளவரசியான லோபாமுத்ரையுடன் அகஸ்தியரைப் போலவோ,
சாவித்ரியுடன் சத்யவானைப் போலவோ,
புலோமையுடன் பிருகுவைப் போலவோ,
அதிதியுடன் காசியபரைப் போலவோ,
ரேணுகையுடன் ரிசீகரின் மகனான ஜமதக்னியைப் போலவோ,
ஹைமவதியுடன் குசிகரின் மகன் விஸ்வாமித்ரரைப் போலவோ,
தாரையுடன் பிருகஸ்பதியைப் போலவோ,
சதப்பிரவாவுடன் சுக்ரனைப் போலவோ,
பூமியுடன் பூமிபதியைப் போலவோ,
ஊர்வசியுடன் புரூரவசைப் {புரூரவனைப்} போலவோ,
சத்தியவதியுடன் ரிசீகரைப் போலவோ,
சரஸ்வதியுடன் மனுவைப் போலவோ,
சகுந்தலையுடன் துஷ்யந்தனைப் போலவோ,
திருதியுடன் நித்தியமான தர்மனைப் போலவோ,
தமயந்தியுடன் நளனைப் போலவோ,
சத்யவதியுடன் நாரதரைப் போலவோ,
ஜரத்காருவுடன் ஜரத்காருவைப் போலவோ,
பிரதீசியையுடன் புலஸ்தியரைப் போலவோ,
மேனகையுடன் ஊர்ணாயுவைப் போலவோ,
ரம்பையுடன் தும்புருவைப் போலவோ,
சதசீர்ஷையுடன் வாசுகியைப் போலவோ,
குமாரியுடன் தனஞ்சயனைப் போலவோ,
விதேக இளவரசியான சீதையுடன் ராமனைப் போலவோ அல்லது
ருக்மிணியுடன் கிருஷ்ணனைப் போலவோ
{தியோதாசன்} அவளுடன் {மாதவியுடன்} விளையாடினான்.

தன்னுடன் விளையாடி மகிழ்ந்த மன்னன் திவோதாசனுக்குப் பிரதர்த்தனன் என்ற பெயருடைய மகனை மாதவி பெற்றாள். அவனுக்கு {திவோதாசனுக்கு} அவள் {மாதவி} ஒரு மகனைப் {பிரதர்த்தனனைப்} பெற்றுக் கொடுத்ததும், புனிதமான காலவர் திவோதாசனிடம் குறித்த நேரத்தில் வந்து, “அந்தக் கன்னிகை {மாதவி} என்னுடன் வரட்டும். எனக்கு நீ தர வேண்டிய குதிரைகள் உன்னிடமே இருக்கட்டும். ஏனெனில், ஓ! பூமியின் ஆட்சியாளா {திவோதாசா}, நான் வரதட்சணைக்காக {சுல்கத்துக்காக} வேறு இடம் செல்ல விரும்புகிறேன்” என்றார். இப்படிச் சொல்லப்பட்ட அறம்சார்ந்தவனும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவனுமான மன்னன் திவோதாசன் அந்தக் கன்னிகையை {மாதவியை} குறித்த நேரத்தில் காலவரிடம் திருப்பிக் கொடுத்தான்” என்றார் {நாரதர்}.

மன்னன் சிபியின் பிறப்பு! – உத்யோக பர்வம் பகுதி 118-போஜர்களின் மன்னனா உசீநரனிடம் சென்று மாதவியை மணந்து கொண்டு நானூறு குதிரைகளை வரதட்சணையாகத் தரும்படி இரந்து கேட்டது; ஹர்யஸ்வன் மற்றும் திவோதாசன் போலவே தன்னிடமும் இருநூறு குதிரைகளே உள்ளன என்று உசீநரன் சொல்வது; காலவர் மாதவியை உசீநரனுக்கு அளிப்பது; உசீநரனுக்குச் சிபி என்ற மகன் பிறப்பது; உரிய நேரத்தில் காலவர் வந்து உசீநரனிடம் இருந்து மாதவியை அழைத்துச் செல்வது ..

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “தனது உறுதிமொழியில் பற்றுறுதியுடன் இருந்த ஒப்பற்ற மாதவி, அந்தச் செழிப்பைக் கைவிட்டு மீண்டும் கன்னித்தன்மையை அடைந்து, அந்தணரான காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். தனது சொந்த காரியத்தைச் சாதிக்க மனதில் உறுதி கொண்ட காலவர், அடுத்து என்ன செய்வது என்பதைச் சிந்தித்து மன்னன் உசீநரனுக்குக் காத்திருப்பதற்காகப் போஜர்களின் நகரத்திற்குச் சென்றான்.

கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட அந்த மன்னனின் {உசீநரனின்} முன்னிலையை அடைந்ததும், காலவர் அவனிடம் {உசிநரனிடம்}, “இந்தக் கன்னிகை உனக்கு அரச மகன்கள் இருவரைப் பெற்றுத் தருவாள். ஓ! மன்னா {உசீநரா}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் நிகரனான இரு மகன்களை இவளிடம் பெற்று, இவ்வுலகிலும், மறுவுலகிலும் உனது நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. எனினும், ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவனே, அவளுக்கான {மாதவிக்கான} வரதட்சனையாக {சுல்கமாக}, சந்தோரப் பிரகாசம் கொண்டவையும், கரிய நிறம் கொண்ட ஒரு காதைக் கொண்டவையுமான நானூறு {400} குதிரைகளை நீ தர வேண்டும். குதிரைகளை அடைய வேண்டி நான் செய்யும் இந்த முயற்சியும் எனது ஆசானுக்காகவே {விஸ்வாமித்திரருக்காகவே}, மற்றபடி அவற்றைக் கொண்டு எனக்கு வேறு காரியம் எதுவுமில்லை.

(எனது சொற்களை) நீ ஏற்கமுடியுமென்றால், எந்தத் தயக்கமும் இன்றி நான் உனக்குச் சொல்வதைச் செய்வாயாக. ஓ! அரசமுனியே {உசிநரனே}, நீ இப்போது குழந்தையற்று இருக்கிறாய். ஓ! மன்னா, இரண்டு குழந்தைகளைப் பெறுவாயாக. இப்படிப் பெறும் வாரிசைப் படகாகக் கொண்டு, பித்ருகளையும் உன்னையும் காத்துக் கொள்வாயாக. ஓ! அரசமுனியே {உசீநரா}, வாரிசுகளின் வடிவில் கனியைப் பெற்ற ஒருவன், சொர்க்கத்தில் இருந்து விழுவதில்லை. அப்படிப்பட்ட மனிதன், பிள்ளைகள் அற்றவர்கள் செல்லும் அச்சங்கள் நிறைந்த நரகத்திற்குச் செல்லத் தேவையில்லை.

இவற்றையும், காலவர் சொன்ன பிற வார்த்தைகளையும் கேட்ட மன்னன் உசீநரன், அவரிடம் {காலவரிடம்}, “ஓ! காலவரே, நீர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். நீர் சொல்வதைச் செய்ய எனது இதயமும் விரும்புகிறது. எனினும், பரமாத்மாவே அனைத்திலும் சக்தி வாய்ந்தவன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, நீர் குறிப்பட்ட வகையில் என்னிடம் இருநூறு {200} குதிரைகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வகைகளில், என் ஆட்சிப்பகுதியில் உலவும் ஆயிரக்கணக்கானவற்றை {ஆயிரக்கணக்கான குதிரைகளை} நான் பெற்றிருக்கிறேன்.

ஓ! காலவரே, ஹர்யஸ்வன், திவோதாசன் போன்ற பிறர் சொன்னது போன்ற பாதையிலே நடந்து நானும் இவளிடம் {மாதவியிடம்} ஒரு மகனை மட்டுமே பெறுவேன். வரதட்சணை {சுல்கம்} குறித்த இக்காரியத்தில் நானும் அவர்களைப் போலவே செயல்படுவேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, எனது செல்வங்கள் எனது வசதிகளுக்காகவும் இன்பங்களுக்காகவும் அல்ல, எனது நகரத்திலும் நாட்டிலும் வசிக்கும் குடிமக்களுக்காகவே இருக்கிறது.

ஓ! அறம்சார்ந்தவரே {காலவரே}, தனது சொந்த இன்பங்களுக்காக, பிறர் செல்வத்தைக் கொடுக்கும் மன்னன் அறத்தையோ, புகழையோ ஈட்டவே முடியாது. தெய்வீகப் பெண் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் இந்தக் கன்னிகை எனக்குக் கொடுக்கப்படட்டும். ஒரு மகனைப் பெறுவதற்காக மட்டுமே நான் இவளை {மாதவியை} ஏற்பேன்” என்றான் {உசீநரன்}.

இவற்றையும், உசீநரன் பேசிய பிற வார்த்தைகளையும் கேட்ட அந்த அந்தணர்களில் சிறந்தவரான காலவர், அந்த ஏகாதிபதியை {உசீநரனை} மெச்சியபடி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவனுக்குக் {உசீநரனுக்கு} கொடுத்தான். அந்தக் காரிகையை உசீநரன் ஏற்கும்படி செய்த காலவர் காடுகளுக்குள் சென்றுவிட்டார். (தனது சொந்த செயல்களால் வென்ற) செழிப்பை அனுபவிக்கும் நீதிமிக்க ஒரு மனிதனைப் போல, உசீநரன் மாதவியுடன் பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலுள்ள நீரூற்றுகளிலும், நதிகளின் நீர்வீழ்ச்சிகளிலும், மாளிகைகளிலும், இனிமையான அறைகளிலும் பலவண்ண வேறுபாடுகள் கொண்ட தோட்டங்களிலும், காடுகளிலும், இனிமையான இடங்களிலும், வீடுகளின் மேல்தளங்களிலும் அந்தக் காரிகையுடன் விளையாடி இன்புற்றிருந்தான்.

உரிய நேரத்தில், காலைச் சூரியனின் பிரகாசத்துடன் அவனுக்கு {உசீநரனுக்கு} ஒரு மகன் பிறந்தான். பின்னாட்களில் அவன் சிபி என்ற பெயரால் சிறந்த மன்னனாகக் கொண்டாடப்பட்டான். ஓ! மன்னா {துரியோதனா}, அந்த மகனின் பிறப்புக்குப் பிறகு, அந்தணரான காலவர் உசீநரனிடம் வந்து, அந்தக் கன்னிகையைத் {மாதவியைத்} திரும்பப் பெற்றுக் கொண்டு, வினதையின் மகனைக் {கருடனைக்} காணச் சென்றார்” என்றார் {நாரதர்}.

கடனைத் தீர்த்த காலவர்! – உத்யோக பர்வம் பகுதி 119-காலவரைக் கண்ட கருடன், மேலும் இருநூறு குதிரைகளை அடைய முயற்சிக்க வேண்டாம் என்று தடுத்தது; குதிரைகள் ஏன் கிடைக்காது என்பதற்கு ஒரு பழங்காலக் கதையைக் கருடன் சொன்னது; காலவர் மாதவியை விஸ்வாமித்ரருக்கு அளிப்பது; விஸ்வாமித்ரர் மாதவியிடம் அஷ்டகனைப் பெறுவது; கடன் தீர்ந்த காலவர் மாதவியை அவளது தந்தையிடம் திரும்ப ஒப்படைப்பது..

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “காலவரைக் கண்ட வினதையின் மகன் {கருடன்} புன்னகையுடன் அவரிடம் {காலவரிடம்}, “ஓ! அந்தணா, நற்பேறாலேயே, நான் உன்னை வெற்றிகரமானவனாகக் காண்கிறேன்” என்றான். எனினும், கருடன் பேசிய வார்த்தைகளைக் கேட்ட காலவர், காரியத்தின் நான்காவது பகுதி இன்னும் நிறைவேறாமல் இருப்பதை அவனுக்கு {கருடனுகுச்} சுட்டிக் காட்டினார்.

பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான கருடன், காலவரிடம், “(மீதம் உள்ள இருநூறு குதிரைகளை அடைய) எந்த முயற்சியும் செய்யாதே. ஏனெனில் அதில் நீ வெல்ல மாட்டாய். பழங்காலத்தில், கான்யகுப்ஜ நாட்டில் காதியின் மகளாகிய சத்தியவதியைத் தனது மனைவியாக்கிக் கொள்ள {விரும்பிய} ரிசீகர் {தனது விருப்பத்தைக் காதியிடம்} கேட்டார். ஓ! காலவா, அதன் பேரில், காதி அந்த முனிவரிடம் {ரிசீகரிடம்}, “ஓ! புனிதமானவரே {ரிசீகரே}, சந்திரப் பிரகாசம் கொண்டவையும், ஒரு காதில் கருப்பு நிறம் கொண்டவையுமான ஆயிரம் குதிரைகள் எனக்கு {சுல்கமாக} வழங்கப்படட்டும்” என்று கேட்டான் {காதி}. இப்படிக் கேட்கப்பட்ட ரிசீகர் {காதியிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். பிறகு வருணனின் உறைவிடத்தில் உள்ள மாபெரும் குதிரைகள் அங்காடிக்குச் (அஸ்வதீர்த்தத்திற்குச்) சென்ற அந்த முனிவர் {ரிசீகர்}, அவன் {காதி} கேட்டதை அடைந்து, அவற்றை அந்த மன்னனிடம் {காதியிடம்} கொடுத்தார்.

புண்டரீகம் என்ற பெயர் கொண்ட வேள்வி ஒன்றை நடத்திய அந்த ஏகாதிபதி {காதி}, அக்குதிரைகளை (தக்ஷிணையாக) அந்தணர்களுக்குக் கொடுத்துவிட்டான். நீ ஏற்கனவே கோரிக்கை வைத்த அந்த மூன்று மன்னர்கள் ஒவ்வொருவரும், ஆளுக்கு இருநூறு {200} குதிரைகளை அந்த அந்தணர்களிடம் இருந்து கொள்முதல் செய்தார்கள். ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, மீதம் நானூறும் {400-நானூறு குதிரைகளும்}, ஆற்றைக் கடக்கும்போது விதஸ்தையால் [1] எடுத்துக் கொள்ளப்பட்டன.

எனவே, ஓ! காலவா, பெறமுடியாத ஒன்றை, உன்னால் பெற முடியாது. ஓ! அறம்சார்ந்தவனே {காலவா}, நீ ஏற்கனவே அடைந்திருக்கும் அறுநூறு {600} குதிரைகளையும், மேலும், இருநூறு {200} குதிரைகளுக்கு இணையாக இந்தக் கன்னிகையையும் விஸ்வாமித்ரருக்குக் கொடுத்துவிடு. ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, பிறகு நீ துன்பத்தில் இருந்து விடுபட்டு வெற்றியால் மகுடம் சூட்டப்படுவாய்” என்றான் {கருடன்}.

பிறகு காலவர், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, குதிரைகளையும், அந்தக் கன்னிகையையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, கருடனையும் தனது துணைக்கு அழைத்துக் கொண்டு விஸ்வாமித்ரரிடம் சென்றார். அவரது {விஸ்வாமித்ரரின்} முன்னிலைக்கு வந்த காலவர், “நீர் கோரிய வகையில் அறுநூறு {600} குதிரைகள் இங்கு இருக்கின்றன. மீதம் உள்ள இருநூறுக்காக {200} இந்தக் கன்னிகையை நான் காணிக்கையாக்குகிறேன். இவை அனைத்தும் உம்மால் ஏற்கப்படட்டும். இந்தக் கன்னிகையிடம் மூன்று அரச முனிகள் அறம்சார்ந்த மகன்கள் மூவரைப் பெற்றிருக்கிறார்கள். நான்காவதும், அனைவருக்கும் முதன்மையானவனுமான மகனை நீர் இவளிடம் பெறுவீராக. இப்படியே எண்ணூறு {800} குதிரைகள் என்ற எண்ணிக்கை நிறைவடைந்ததாக உம்மால் கருதப்படட்டும். நானும் கடனில் இருந்து விடுபட்டு, நான் விரும்பும் தவ நோன்புகளைப் பயிலச் செல்ல அனுமதிப்பீராக” என்றார் {காலவர்}.

அந்தப் பறவை {கருடன்} மற்றும் உயர்ந்த அழகுடைய கன்னிகை {மாதவி} ஆகியோரின் துணையுடன் இருக்கும் காலவரைக் கண்ட விஸ்வாமித்ரர், “ஓ! காலவா, நீ ஏன் முன்பே இந்த மங்கையை எனக்குக் கொடுக்கவில்லை? எனது குலத்தை விருத்திச் செய்யும் நான்கு மகன்கள் எனக்கு மட்டுமே இருந்திருப்பார்களே. இவளிடம் ஒரு மகனைப் பெறுவதற்காக நான் இந்த உனது கன்னிகையை {மாதவியை} ஏற்கிறேன். குதிரைகளைப் பொறுத்தவரை, அவற்றை எனது துறவில்லத்தில் {ஆசிரமத்தில்} மேய விடுவாயாக” என்றார் {விஸ்வாமித்ரர்}.

இதைச் சொன்ன பெரும் காந்திபடைத்த விஸ்வாமித்ரர் அவளுடன் {மாதவியுடன்} தனது நேரத்தை இன்பமாகக் கழிக்கத் தொடங்கினார். மாதவி, அஷ்டகன் என்ற பெயரில் அவருக்கு {விஸ்வாமித்திரருக்கு} ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். அந்த மகன் பிறந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்ரர் அறம் பொருள் ஆகிய இரண்டையும் உரைத்து, அறுநூறு {600} குதிரைகளையும் அவனிடமே {அஷ்டகனிடமே} கொடுத்தார்.

பிறகு, சோமனின் {சந்திரனின்} நகரத்தைப் போன்ற பிரகாசமிக்க நகரத்திற்கு அஷ்டகன் சென்றான். குசிகரின் மகனான விஸ்வாமித்ரர் அந்தக் காரிகையைத் {மாதவியைத்} தனது சீடனிடம் {காலவரிடம்} ஒப்படைத்துவிட்டு, காட்டுக்குச் சென்றுவிட்டார். தனது ஆசான் கோரிய கட்டணத்தைக் கொடுப்பதில் வென்ற காலவரும், அவரது நண்பனான சுபர்ணனுடன் {கருடனுடன்} சேர்ந்து மகிழ்ச்சிகரமான இதயத்துடன் அந்தக் கன்னிகையிடம் {மாதவியிடம்}, “மிகுந்த ஈகை குணம் உள்ள ஒருவனையும், மிகுந்த வீரம் கொண்டவன் ஒருவனையும், உண்மைக்கும், நீதிக்கும் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒருவனையும், பெரும் வேள்விகளைச் செய்யும் ஒருவனையும் நீ மகன்களாகப் பெற்றாய். ஓ! அழகிய கன்னிகையே {மாதவி}, நீ இந்த மகன்களால், உனது தந்தையை மட்டுமல்ல, நான்கு மன்னர்களையும், என்னையும் காத்திருக்கிறாய். ஓ! கொடியிடையாளே, இப்போது நீ செல்லலாம்” என்றார். இதைச் சொன்ன காலவர், பாம்புகளை உண்ணும் கருடனுக்கு விடைகொடுத்தனுப்பி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவளது தந்தையிடம் {யயாதியிடம்} ஒப்படைத்துவிட்டு காட்டுச் சென்றுவிட்டார்” என்றார் {நாரதர்}.

யயாதியை மறந்த தேவர்கள்! – உத்யோக பர்வம் பகுதி 120-யயாதி தன் மகள் மாதவிக்கு மீண்டும் சுயம்வரம் நடத்திய ; காட்டைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்த மாதவி, மான் போன்ற வாழ்வு முறையைத் தேர்ந்தெடுத்து கடும் நோன்பைப் பயில்வது; சொர்க்கத்தை அடைந்த யயாதி, அனைவரையும் அவமதித்தது; தேவர்கள் அனைவரும் யயாதியை மறந்து போனது…

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “மன்னன் யயாதி, தனது மகளை {மாதவியை} மீண்டும் சுயம்வரத்தில் கொடுக்க விரும்பி, மலர்மாலைகளால் மேனி அலங்கரிக்கப்பட்ட தனது மகள் மாதவியைத் தேரில் அழைத்துக் கொண்டு, கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஒரு துறவில்லத்திற்குச் {ஆசிரமத்திற்குச்} சென்றான். புரு, யது ஆகிய இருவரும் தங்கள் தங்கையைத் {மாதவியைத்} தொடர்ந்து அந்தப் புனிதமான ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த இடத்தில், நாகர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியோரும், மலைகள், மரங்கள் மற்றும் காடுகளில் வசிப்போரும், குறிப்பிட்ட மாகாணத்தின் பல மக்களும் அந்த இடத்தின் பரந்த சபையில் கூடினர்.

அந்தத் துறவில்லத்தைச் சுற்றி இருந்த காடுகள் அனைத்தும் பிரம்மனை ஒத்திருக்கும் எண்ணற்ற முனிவர்களால் நிறைந்தது. கணவனைத் தேர்ந்தெடுக்கும் தருணம் வந்தபோது, அழகிய நிறம்படைத்த அந்தக் காரிகை {மாதவி}, அங்கே கூடியிருந்த மணமகன்கள் அனைவரையும் தாண்டிச் சென்று, காட்டையே தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்தாள். தனது தேரில் இருந்து இறங்கி, தன் நண்பர்கள் அனைவரையும் வணங்கிய யயாதியின் மகள் மாதவி, எப்போதும் புனிதமாக இருக்கும் காட்டுக்குள் நுழைந்து, தவத் துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.

பல்வேறு வகையான உண்ணா நோன்புகள் வழியாகவும், அறச் சடங்குகள் மற்றும் கடும் நோன்புகளாலும் தனது உடலை மெலியச் செய்த அவள் {மாதவி}, மானின் வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டாள். வைடூரியத்தின் முளைகளுக்கு ஒப்பானவைகளும், மெலிதானவையும், பசுமை நிறம் கொண்டவையும், துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவையைக் கொண்டவையும், மெதுவானவையுமான புற்களை உண்டும், இனிமையான, தூய்மையான, குளிர்ந்த, தெளிந்த, மிக மேன்மையான புனித மலைகளில் உள்ள ஓடைகளின் நீரைப் பருகி வாழ்ந்து, சிங்கங்களும், புலிகளுமற்ற காடுகளில் மான்களுடன் உலாவி, காட்டுத் தீயற்ற பாலைவனங்களிலும், அடர்த்தியான காடுகளிலும் அலைந்த அந்தக் கன்னிகை {மாதவி}, ஒரு காட்டு மானின் வாழ்வை மேற்கொண்டு, பிரம்மச்சரிய தவங்களைப் பயின்று, பெரும் அறத் தகுதிகளை ஈட்டினாள்.

(அதே வேளையில்), பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்த மன்னன் யயாதி, தனக்கு முன் இருந்த மன்னர்களின் நடைமுறைகளின் படி, காலத்தின் தாக்கத்திற்கு உட்பட்டான் {இறந்தான்}. மனிதர்களில் முதன்மையானவர்களான புரு மற்றும் யது ஆகிய அவனது இரு மகன்களின் சந்ததிகள் பல்கிப் பெருகின. அதன் விளைவாக அந்த நகுஷனின் மகன் {யயாதி}, இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெரும் மரியாதையை வென்றான்.

ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, பெரும் முனிவரை ஒத்திருந்த மன்னன் யயாதி, சொர்க்கத்தில் வசித்து, பெரும் மதிப்புக்குரியவனாகி, அந்தப் பகுதிகளின் உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவித்தான். இப்படியே பெரும் மகிழ்ச்சியுடன் பல்லாயிரம் வருடங்கள் கடந்த பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், பெரும் முனிவர்களுடனும், ஒப்பற்ற அரசமுனிகளுடன் மன்னன் யயாதி அமர்ந்திருந்த போது, மூடத்தனத்தாலும், அறியாமையாலும், செருக்காலும் தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரையும், மற்றும் மனிதர்கள் அனைவரையும் அவன் {யயாதி} அவமதித்தான்.

வலனைக் கொன்றவனும், தெய்வீகமானவனுமான சக்ரன் {இந்திரன்} உடனடியாக அவனது {யயாதியின்} இதயத்தைப் படித்துவிட்டான். அந்த அரச முனிகள் அவனிடம், “சீ, சீச்சீ” என்று சொன்னார்கள். நகுஷனின் மகனைக் {யயாதியைக்} கண்டவர்கள், “யார் இவன்? எந்த மன்னனின் மகன் இவன்? இவன் ஏன் சொர்க்கத்தில் இருக்கிறான்? எந்தச் செயல்களின் மூலம் இவன் வெற்றியை அடைந்தான்? தவத் தகுதியை இவன் எங்கே ஈட்டினான்? இவன் எதற்காக இங்கே {சொர்க்கத்தில்} அறியப்படுகிறான்? இவனை அறிந்தவர் யார்?” என்ற கேள்விகளைக் கேட்டனர்.

அந்த ஏகாதிபதியைக் {யயாதியைக்} குறித்து இவ்வாறு பேசிய அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மனிதர்களின் ஆட்சியாளனான யயாதியைக் குறித்த இந்தக் கேள்விகளைக் கேட்டனர். நூற்றுக்கணக்கான தெய்வீகத் தேரோட்டிகளும், தேவலோகத்தின் நூற்றுக்கணக்கான வாயில்காப்போரும், சொர்க்கத்தின் இருக்கைகளுக்குப் பொறுப்பானவர்களும் என அனைவரும் இப்படிக் கேட்கப்பட்ட போது, “இவனை நாங்கள் அறியோம்” என்றே சொன்னார்கள். அவர்கள் அனைவரின் மனங்களும் தற்காலிகமாக மறைக்கப்பட்டது. அதனால் யாராலும் அந்த மன்னனை {யயாதியை} அடையாளம் காண முடியவில்லை. பிறகு அந்த மன்னன் விரைவில் தனது சிறப்புகள் அனைத்தையும் இழந்து தன் பிரகாசத்தைத் தொலைத்தான்” என்றார் {நாரதர்}.

தௌஹித்ரர்களுடன் யயாதி! – உத்யோக பர்வம் பகுதி 121-தேவ தூதன் ஒருவன் யயாதியை சொர்க்கத்தில் இருந்து தள்ளவிட வருவது; கீழே விழுந்த யயாதி தங்கள் மகள் வழி பேரர்களுக்கு மத்தியில் விழுவது; பேரர்களும், மகளும், காலவரும் தங்கள் புண்ணியங்களை யயாதிக்குக் கொடுக்க முன் வந்தது …

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “தனது இடத்தில் இருந்து அகற்றப்பட்டு, தனது இருக்கையில் இருந்து தள்ளப்பட்டு, அச்சத்தால் இதயம் நடுங்கி, வருத்தத்தால் எரிந்து, தனது மாலைகளின் ஒளி மங்கி, அறிவு மறைக்கப்பட்டு, மணிமுடியும் {கிரீடமும்} தோள்வளைகளும் நழுவி, தலைச்சுற்றலுடன், ஆபரணங்களும் அங்கிகளும் இழந்து, அங்கங்கள் அனைத்தும் தளர்ந்து, அடையாளம் காணமுடியாதபடி மாறினான் யயாதி. சில நேரங்களில் மற்ற சொர்க்கவாசிகளைக் காணாது, விரக்தியில் நிரம்பி, புத்தி சூன்யமாகிப் போன மன்னன் யயாதி, பூமியை நோக்கித் தலைகீழாக விழுந்து கொண்டிருந்தான்.

அந்த மன்னன் {யயாதி} விழுவதற்கு முன்னர், அவன் தனக்குள், “நான் ஊக்கப்படுத்திய எந்த மங்கலமற்ற, பாவம் நிறைந்த எண்ணத்தின் விளைவாக, இப்படி என் இடத்தில் இருந்து நான் வீசி எறியப்படுகிறேன்?” என்று நினைத்தான். அங்கே இருந்த மன்னர்கள், சித்தர்கள் மற்றும் அப்சரஸ்கள் அனைவரும் யயாதி தனது நிலையை இழந்து கீழே விழுவதைக் கண்டு சிரித்தனர். ஓ! மன்னா {துரியோதனா}, விரைவில், தகுதி இழந்தவர்களை வீசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் தேவர்கள் மன்னனின் {இந்திரனின்} கட்டளையின் பேரில் அங்கே வந்தான்.

அங்கே வந்த அவன் யயாதியிடம், “செருக்கால் அதீதமாகப் போதையுண்டிருக்கும் உன்னால் அலட்சியம் செய்யப்படாதவர்கள் யாரும் இல்லை. இந்த உனது செருக்கின் விளைவால், சொர்க்கத்தில் இனியும் உனக்கு இடமில்லை. ஓ! மன்னனின் மகனே {நகுஷனின் மகனே யயாதி}, இங்கே வசிக்க நீ தகுந்தவனில்லை. நீ இங்கே அங்கீகரிக்கப்பட்டவன் இல்லை. போய்க் கீழே விழுவாயாக” என்றான். தேவ தூதன் இப்படிச் சொன்னதும், அந்த நகுஷனின் மகன் மூன்று முறை மீண்டும் மீண்டும், “விழுந்தால், நீதிமான்கள் மத்தியில் நான் விழக்கடவேன்” என்று கேட்டுக் கொண்டான். இதைச் சொன்னவனும், தங்கள் செயல்களால் உயர்ந்த பகுதிகளை வென்ற மனிதர்களில் முதன்மையானவனுமான அவன் {யயாதி}, எந்தக் குறிப்பிட்ட பகுதியில் விழுவது என்பது குறித்து நினைக்கத் தொடங்கினான்.

அதே வேளையில், வலிமைமிக்க நான்கு மன்னர்களான பிரதர்த்தனன், வசுமனஸ், உசீநரனின் மகனான சிபி மற்றும் அஷ்டகன் ஆகியோர் நைமிஷ வனத்தில் கூடியிருப்பதைக் கண்டு, அவர்களுக்கு மத்தியில் அந்த மன்னன் {யயாதி} விழுந்தான்., தேவர்கள் தலைவனை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்யும் வகையில், வாஜபேயம் என்ற பெயரில் அறியப்படும் வேள்வி ஒன்றைச் செய்வதில் அந்த ஏகாதிபதிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வேள்விப்பீடத்தில் இருந்து எழும் புகை சொர்க்கத்தின் வாயில்களையே எட்டின. அப்படி எழுந்த புகையானது, பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் ஒரு நதியைப் போலத் தெரிந்தது. மேலும் அது வானத்தில் இருந்து பூமியை நோக்கி இறங்கும் புனித ஓடையான கங்கையைப் போல இருந்தது. அந்தப் புகையை நுகர்ந்தபடி, அதை வழிகாட்டியாகக் கொண்டு, அண்டத்தின் தலைவனான அந்த யயாதி, பூமிக்கு இறங்கி வந்தான். பெரும் அழகு படைத்தவர்களும், வேள்வி செய்வோரில் முதன்மையானவர்களும், உண்மையில் தனது சொந்த உறவினர்களும், நான்கு திசைகளில் லோகபாலகர்கள் போல இருந்தவர்களும், நான்கு பெரும் வேள்வி நெருப்புகள் போல இருந்தவர்களுமான ஆட்சியாளர்களில் சிம்மங்கள் போன்ற அந்த நால்வருக்கு மத்தியில் அந்த மன்னன் {யயாதி} விழுந்தான். தனது தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் இழந்ததன் விளைவாக அந்த அரசமுனியான யயாதி அவர்களுக்கு மத்தியில் இப்படியே விழுந்தான்.

சுடர்மிகும் அழகுடன் இருந்த அவனைக் {யயாதியைக்} கண்ட அந்த மன்னர்கள் அவனிடம் {யயாதியிடம்}, “நீர் யார்? எந்த இனம், நாடு அல்லது நகரத்தைச் சேர்ந்தவர் நீர்? நீர் ஒரு யக்ஷரா? தேவரா? கந்தர்வரா? அல்லது ஒரு ராட்சசரா? உம்மைக் காண மனிதனைப் போல இல்லையே. நீர் கருத்தில் கொண்டுள்ள நோக்கம் என்ன?” என்று கேட்டனர். இப்படிக் கேட்கப்பட்ட யயாதி, “நான் அரச முனியான யயாதி ஆவேன். புண்ணியம் தீர்ந்ததன் விளைவாகச் சொர்க்கத்தில் இருந்து விழுந்தேன். நீதிமான்களுக்கு மத்தியில் நான் விழ விரும்பியதால், உங்களுக்கு மத்தியில் விழுகிறேன்” என்றான் {யயாதி}.

அதற்கு அந்த மன்னர்கள் {யயாதியிடம்}, “ஓ! அனைவரிலும் முதன்மையானவரே, உமது அந்த விருப்பம் நிறைவேறட்டும். எங்கள் அனைவரின் புண்ணியங்களையும், நாங்கள் செய்த வேள்விகள் அனைத்தின் கனிகளையும் நீர் ஏற்றுக் கொள்ளும்” என்றனர். அதற்கு யயாதி,“நான், தானத்தை ஏற்கத் தகுந்த பிராமணன் அல்ல. மறுபுறம், நான் ஒரு க்ஷத்திரியனாவேன். பிறர் புண்ணியங்களைக் குறைக்கும் நோக்கம் எனது இதயத்துக்கு இல்லை” என்றான்.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “இந்த நேரத்தில், {விலங்கினம் போல} நோக்கமற்ற தனது உலவல்களின் போது அங்கே மாதவி வர நேர்ந்தது. அவளை {மாதவியைக்} கண்ட அந்த ஏகாதிபதிகள் அவளை வணங்கி, அவளிடம், “நீ இங்கே வந்த நோக்கம் என்ன? உனது எந்தக் கட்டளைக்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்? ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவளே, நாங்கள் அனைவரும் உனது மகன்கள் ஆதலால், எங்களுக்குக் கட்டளையிடுவதே உனக்குத் தகும்” என்றனர்.

அவர்களது வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியில் நிறைந்த மாதவி, தனது தந்தையான யயாதியை அணுகி, அவனை மரியாதையாக வணங்கினாள். தவத்துறவுகளில் ஈடுபட்டு வந்த அந்த மங்கை {மாதவி}, தனது மகன்கள் அனைவரின் தலைகளையும் தொட்டபடி, தனது தந்தையிடம் {யயாதியிடம்}, “இவர்கள் அனைவரும் எனது மகன்களானதால், ஓ! மன்னர்களின் மன்னா {யயாதியே}, இவர்கள் உமது மகளின் மகன்களாவர் {தௌஹித்ரர்கள் ஆவார்கள்}. இவர்கள் உமக்கு அந்நியரில்லை. இவர்கள் உம்மைக் காப்பார்கள். இந்த நடைமுறை புதியதல்ல, இதன் தோற்றம் பழங்காலத்திற்குச் சொந்தமானது. ஓ! மன்னா, மானின் நடத்தையைக் கைக்கொண்டு வனத்தில் வாழும் நான் உமது மகளான மாதவி ஆவேன். நானும் புண்ணியம் ஈட்டியிருக்கிறேன். நீர் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளும். ஓ! மன்னா, தங்கள் வாரிசுகளால் ஈட்டப்பட்ட தகுதிகளின் {புண்ணியங்களின்} ஒரு பகுதியை அனுபவிக்க மனிதர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளதாலேயே, அவர்கள் தங்கள் மகள்கள் மகனைப் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். ஓ! மன்னா, இதுவே உமது வழக்கிலும் (காலவரிடம் நீர் என்னைக் கொடுக்கும்போது) நடந்தது” என்றாள் {மாதவி}.

தங்கள் தாயின் {தாய் மாதவியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த ஏகாதிபதிகள் அவளை வணங்கி, தங்கள் தாய்வழி பாட்டனையும் வணங்கி, அதே வார்த்தைகளைச் சத்தமாக, ஒப்பற்ற வகையில், இனிய குரலில் உரைத்தனர். சொர்க்கத்தில் இருந்து விழுந்த தங்கள் தாய்வழி பாட்டனைக் காக்க அவர்கள் உரைத்த வார்த்தைகள் உலகம் முழுதும் எதிரொலித்தன. அந்நேரத்தில்அங்கே வந்து,காலவரும் யயாதியிடம், “எனது தவத்துறவின் {புண்ணியத்தில்} எட்டில் ஒரு பங்கை ஏற்று, சொர்க்கத்திற்கு நீ உயர்வாயாக” என்றார் {காலவர்}. 

சொர்க்கத்திற்கு உயர்ந்த யயாதி! – உத்யோக பர்வம் பகுதி 122-மாதவியின் மகன்களான வசுமனஸ், பிரதர்த்தனன், சிபி மற்றும் அஷ்டகன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக  தங்கள் புண்ணியங்களை யயாதிக்கு அளிப்பது; அவர்களது புண்ணியங்களைப் பெற்றுக் கொண்ட யயாதி சொர்க்கத்திற்கு உயர்வது…

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “மனிதர்களில் காளையான அந்த மன்னன் யயாதி அந்த அறம்சார்ந்த மனிதர்களை அடையாளம் கண்டுகொண்ட பிறகு, பூமியின் பரப்பைத் தொட வேண்டிய அவசியமே இல்லாமல் மீண்டும் சொர்க்கத்திற்கு எழுந்தான். அவன் {யயாதி} தனது தேவ உருவை மீண்டும் அடைந்து, கவலைகள் அனைத்தில் இருந்தும் முழுமையாக விடுபட்டான். தெய்வீக மாலைகள், அங்கிகள், தெய்வீக ஆபரணங்கள் ஆகியவை பூட்டப்பட்டு, தெய்வீக நறுமணப் பொருட்கள் தெளிக்கப்பட்டு, தெய்வீகப் பண்புகள் நிறைந்து, பூமியைத் தனது காலால் தொட வற்புறுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் மீண்டும் எழுந்தான்.

அதே வேளையில், ஈகைகுணத்துக்காக உலகத்தில் கொண்டாடப்படும் வசுமனஸ், உரத்த குரலில், அந்த மன்னனிடம் {யயாதியிடம்} முதலில் பேசினான். அவன் {வசுமனஸ் யயாதியிடம்}, “அனைத்து வகை மனிதர்களிடமும் பழியற்ற வகையில் நடந்து கொண்டு, நான் வென்ற தகுதியை {புண்ணியத்தை} உமக்குத் தருகிறேன். ஓ! மன்னா {யயாதியே}, அது முழுமையாக உமதே ஆகட்டும். ஈகை மற்றும் மன்னிக்கும் குணம் {பொறுமை} ஆகியவற்றால் ஒருவன் அடையும் தகுதி {புண்ணியம்}, நான் செய்த வேள்விகளின் விளைவாக நான் அடைந்த தகுதி ஆகியவை அனைத்தும் உமதாகட்டும்” என்றான் {வசுமனஸ்}.

அதன் பிறகு, க்ஷத்திரியர்களில் காளையான பிரதர்த்தனன் {யயாதியிடம்}, “போரைப் போலவே அறத்திற்கும் எப்போதும் அர்ப்பணிப்புடன், ஒரு க்ஷத்திரியனானதன் விளைவால், வீரனாக நான் அடைந்த புகழ் (உண்மையில் நான் எதற்காக அறியப்படுகிறேனோ அந்தப் புகழ்) அனைத்தும் உமதாகட்டும்” என்றான் {பிரதர்த்தனன்}.

அதன் பிறகு, உசீநரனின் புத்திசாலி மகனான சிபி, இனிய வார்த்தைகளில் {யயாதியிடம்}, “கேலிக்காகக் குழந்தைகளிடமோ பெண்களிடமோ, ஆபத்திலோ, துயரிலோ, பகடையிலோ நான் பொய் பேசியதே இல்லை. நான் தியாகம் செய்யாத அந்த உண்மையை {சத்தியத்தைக்} கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. ஓ! மன்னா {யயாதியே}, என்னால், ஆசைக்குகந்த, இன்பத்துக்குகந்த பொருட்கள் அனைத்தையும் கைவிட முடியும். எனது நாட்டையே ஏன் உயிரையும் கூடக் கைவிட முடியும், ஆனால் உண்மையை {சத்தியத்தை} ஒருபோதும் கைவிடேன். அந்த உண்மையைக் கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. எந்த உண்மையைக் கொண்டு தர்மனையும் {தர்மதேவனையும்}, எந்த உண்மையைக் கொண்டு அக்னியையும், எந்த உண்மையைக் கொண்டு நூறு வேள்விகள் செய்தவனையும் {இந்திரனையும்} நான் மன நிறைவு கொள்ளச் செய்தேனோ, அந்த உண்மையைக் கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக”, என்றான் {மன்னன் சிபி சக்கரவர்த்தி}.

இறுதியாக, குசிகரின் மகன் {விஸ்வாமித்ரர்} மற்றும் மாதவியின் மகனும், அரச முனியுமான அஷ்டகன், பல நூறு வேள்விகளைச் செய்த நகுஷனின் மகன் யயாதியிடம், “ஓ! தலைவா, புண்டரீகம், கோசவம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை நான் நூற்றுக் கணக்கில் செய்திருக்கிறேன். அந்தத் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் நீர் எடுத்துக் கொள்ளும். வேள்விகள் செய்வதற்காக நான் செல்வம், ரத்தினங்கள், ஆடைகள் ஆகிய எதையும் விட்டு வைத்ததில்லை. அந்த உண்மையைக் {சத்தியத்தைக்} கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக” என்றான் {விஸ்வாமித்திரர் மகன் அஷ்டகன்}.

பூமியை விட்டு அகன்ற அந்த மன்னன் {யயாதி}, தனது மகளின் {மாதவியின்} மகன்கள் ஒருவர் பின் ஒருவராக இவ்வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல மேலும் மேலும் சொர்க்கத்தை நோக்கி உயரத் தொடங்கினான்.

இப்படியே சொர்க்கத்தில் இருந்து வீசப்பட்ட யயாதியை, தங்கள் நற்செயல்கள் மூலம் அந்த மன்னர்கள் விரைவாகக் காத்தனர். இப்படியே நான்கு அரச மரபுகளில் பிறந்தவர்களும், {யயாதியின்} மகளின்  மகன்களும் {மகள் வழிப் பேரன்களும்}, தங்கள் குலத்தைப் பெருக்குபவர்களுமான அந்த மன்னர்கள் தங்கள் அறங்கள், வேள்விகள், கொடைகள் மூலமாகத் தங்கள் தாய்வழி பாட்டனை {யயாதியை} மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்த்தினார்கள். அந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஒருமித்தபடி, “அரசப் பண்புகள் மற்றும் அனைத்து அறங்களையும் கொண்ட நாங்கள், ஓ! மன்னா {யயாதி}, உமது மகளின் {மாதவியின்} மகன்களாவோம் {தௌஹித்ரர்களாவோம் – மகள்வழிப் பேரன்களாவோம்}. (எங்கள் நற்செயல்களின் புண்ணியத்தால்) நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக” என்றனர்.

துரியோதனனை அறிவுறுத்திய நாரதர்! – உத்யோக பர்வம் பகுதி 123-சொர்க்கத்தில் வரவேற்கப்படும் யயாதி; பிரம்மனிடம் தனது சந்தேகத்துக்கான விளக்கத்தைப் பெற்ற யயாதி; யயாதி மற்றும் காலவரின் கதையினூடே நாரதர் துரியோதனனுக்கு உரைத்த நீதி…

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், “தங்கள் வேள்விக் கொடைகளின் ஈகையால் தனித்துவம்பெற்ற அந்த நீதிமிக்க மன்னர்களால் சொர்க்கத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டவனும், தனது மகளின் {மாதவியின்} மகன்களைக் {தௌஹித்ரர்களைக்} கொண்டவனுமான யயாதி, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தேவலோகத்தை அடைந்தான். தனது மகளின் {மாதவியின்} மகன்களுடைய தகுதிகளின் {புண்ணியங்களின்} மூலம் நித்திய உலகை அடைந்த யயாதி, தனது சொந்த செயல்களால் அலங்கரிக்கப்பட்டு, மணமிக்க இனிய தென்றலால் அரவணைக்கப்பட்ட நறுமணமிக்க மலர்மாரியில் குளித்துப் பெரும் அழகுடன் ஒளிர்ந்தான்.

துந்துபி ஒலிகளுடன் சொர்க்கத்தில் உற்சாகமாக வரவேற்கப்பட்ட அவன் {யயாதி}, பல்வேறு கந்தர்வர்கள் மற்றும் அசுர இனங்களைச் சேர்ந்தவர்களின் ஆடல் பாடல்களின் மூலம் உற்சாகமூட்டப்பட்டான். தெய்வீக முனிகளும், அரச முனிகளும், சாரணர்களும் அவனை {யயாதியைத்} துதிக்கத் தொடங்கினர். தேவர்கள் அவனுக்கு {யயாதிக்கு} அற்புதமான ஆர்கியாவைக் கொடுத்து, பிற வெகுமதிகளையும் கொடுத்து அவனை {யயாதியை} மகிழ்ச்சியடையச் செய்தனர்.

சொர்க்கத்தில் தனது நிலையையும், இதய அமைதியையும் மீண்டும் அடைந்து, கவலையில் இருந்து விடுபட்ட அவனிடம் {யயாதியிடம்}, பெருந்தகப்பன் {பிரம்மன்}, “உனது பூலோகச் செயல்களால் நீ {அறத்தின் பலனான} புண்ணியத்தை முழுமையான அளவு ஈட்டிவிட்டாய். சொர்க்கத்தில் உண்டான உனது செயலைப் போலவே, (நீ வென்ற) இந்தப் பகுதி நித்தியமானது. எனினும், ஓ! அரசமுனியே {யயாதியே}, உனது உடைமைகள் அனைத்தையும் உன் வீண் தற்பெருமையால் அழித்துக் கொண்டு, உன்னை யாரும் அடையாளம் காணாத வண்ணம் சொர்க்கவாசிகள் அனைவரின் இதயத்தையும் இருளில் மூழ்கச் செய்துவிட்டாய். நீ அடையாளம் காணப்படாததாலேயே {இங்கிருந்து} வீசப்பட்டாய்! உனது மகளின் {மாதவியின்} மகன்களுடைய {தௌஹித்ரர்களுடைய} அன்பு மற்றும் பாசத்தால் மீண்டும் காக்கப்பட்டு, இங்கே மீண்டும் வந்தடைந்து, உனது செயல்களால் நீ ஏற்கனவே வென்றிருந்த மாற்றமில்லாத, நித்தியமான, புனிதமான, அற்புதமான, நிலையான, அழிவற்ற பகுதியை அடைந்துவிட்டாய்”, என்றான் {பிரம்மன்}.

இப்படிச் சொல்லப்பட்ட யயாதி {பிரம்மனிடம்}, “ஓ புனிதமானவனே {பிரம்மாவே}, எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அதை விலக்குவதே உமக்குத் தகும். ஓ! அனைத்துலகங்களின் பெரும்பாட்டனே {பிரம்மனே}, இதை நான் வேறு எவரிடமும் கேட்க முடியாது. நான் ஆயிரக்கணக்கான வருடங்களாக எனது குடிமக்களை (அறம்சார்ந்து) ஆண்டதால் அடையப்பட்டதும், எண்ணற்ற வேள்விகளாலும், எனது கொடைகளாலும் வெல்லப்பட்டதுமான எனது தகுதி பெரிதாகவே இருந்தது. அவ்வளவு பெரிய தகுதி {புண்ணியம்), எப்படி இவ்வளவு விரைவாகத் தீர்ந்து போய் நான் வீசப்பட்டேன்? ஓ! புனிதமானவனே {பிரம்மாவே}, எனக்காக உண்டாக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் நித்தியமானவை என்பதை நீ அறிவாய். ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {பிரம்மாவே}, அந்த எனது பகுதிகள் அனைத்தும் ஏன் அழிக்கப்பட்டன?” என்று கேட்டான் {யயாதி}.

அதற்குப் பெரும்பாட்டன் {பிரம்மன் யயாதியிடம்}, “ஆயிரக்கணக்கான வருடங்கள் உனது குடிமக்களை (அறம்சார்ந்து) ஆண்டதால் உன்னால் அடையப்பட்டதும், எண்ணற்ற வேள்விகளாலும், உனது கொடைகளாலும் உன்னால் வெல்லப்பட்டதுமான உனது தகுதி, ஒரே ஒரு குறையால் தீர்ந்து போயிற்று, அதன் காரணமாகவே நீ (இந்தப் பகுதியில் இருந்து) வீசப்பட்டாய். ஓ! மன்னர்களின் மன்னா {யயாதி}, உனது வீண் தற்பெருமையே அந்தக் குறை. அதன் காரணமாகவே நீ சொர்க்கவாசிகளின் கண்டனங்களுக்கு ஆட்பட்டாய்.

ஓ! அரச முனியே {யயாதியே}, தற்பெருமையாலோ, பலத்தின் மீது கொண்ட செருக்காலோ, அற்பத்தனத்தாலோ, வஞ்சனையாலோ, இந்தப் பகுதி நித்தியமானதாகி விடாது. உனக்குத் தாழ்ந்தவர்களையோ, உயர்ந்தவர்களையோ, நடு நிலையில் இருப்பவர்களையோ {உனக்குச் சரிசமமாக இருப்பவர்களையோ} ஒருபோதும் அவமதிக்காதே. தற்பெருமை எனும் நெருப்பால் எரிக்கப்படுபவனை விடப் பெரிய பாவி எவனுமில்லை. இப்படி நீ விழுந்து, மீண்டும் உயர்ந்த இதைக் குறித்து உரையாடுபவர்கள், பெரும் ஆபத்தில் மூழ்கியிருந்தாலும் காக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை” என்றார் {பிரம்மா}.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, தற்பெருமையின் விளைவால் விழுந்த யயாதியின் துயரம் இப்படியே இருந்தது. பிடிவாதத்தால் துயரில் விழுந்த காலவரின் துயரும் இப்படியே இருந்தது. தங்கள் சொந்த நன்மையை விரும்புபவர்கள், தங்கள் நன்மையை விரும்பும் நண்பர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். பிடிவாதத்தை எப்போதும் ஊக்கப்படுத்தக் கூடாது, ஏனெனில் பிடிவாதமே எப்போதும் அழிவின் வேராக இருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, தற்பெருமையையும் கோபத்தையும் கைவிட்டு, பாண்டு மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சமாதானம் கொள்வாயாக.

ஓ! மன்னா {துரியோதனா}, கோபத்தைத் தவிர்ப்பாயாக. கொடுக்கப்படும் தானம், செய்யப்படும் செயல், பயிலப்படும் தவம், நெருப்பில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகள் ஆகிய இவற்றில் எதுவும் அழிவடைவதோ, குறைவடைவதோ இல்லை. இவற்றைச் செய்பவனைத் தவிர வேறு யாரும் அவற்றின் கனிகளை {பலன்களை} அடைவதும் இல்லை. இந்த மேன்மையான அற்புதமான வரலாற்றைப் புரிந்து கொள்வதில் வெல்பவர்கள், கோபம் மற்றும் காமத்தில் இருந்து விடுபட்டு பெரும் கல்வி கற்றவர்களின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்டவர்கள், சாத்திரங்கள் மற்றும் பகுத்தறிவின் பல்வேறு குறிப்புகளை அமலாக்குபவர்கள் ஆகியோர் அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றின் அறிவை அடைந்து, முழு உலகத்தின் அரசுரிமையையும் அனுபவிக்கிறார்கள்” என்றார் {நாரதர்}.

துரியனிடம் பேசிய கிருஷ்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 124-துரியோதனன் தான் சொல்வதைக் கேட்க மாட்டான் என்றும், அவனுக்குப் புத்தி கூறுமாறும் திருதராஷ்டிரன் கிருஷ்ணனிடம் கூறியது; கிருஷ்ணன் துரியோதனனுக்குப் போரினால் உண்டாகும் பாதகங்களைக்  எடுத்துரைத்தது; பாண்டவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுத்து அவர்களுடன் சமாதானம் பேண வேண்டும் என்று கிருஷ்ணன் சொன்னது..

திருதராஷ்டிரன் {நாரதரிடம்} சொன்னான், “ஓ! புனிதமானவரே, ஓ! நாரதரே, நீர் சொல்வது போலத்தான் இருக்கிறது. துல்லியமாக இதுவே எனது விருப்பமுமாகும். ஆனால், ஓ! புனிதமானவரே {நாரதரே}, (அவற்றை முன்னெடுத்துச் செல்ல) என்னிடம் சக்தி இல்லை” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நாரதரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குரு மன்னன் {திருதராஷ்டிரன்}, பிறகு, கிருஷ்ணனிடம், “ஓ! கேசவா, சொர்க்கத்திற்கு வழிநடத்தவல்லதும், உலகத்திற்கு நன்மை செய்வதும், அறத்திற்கு இசைவானதும், பகுத்தறிவு நிறைந்ததுமான வார்த்தைகளை நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ! ஐயா, நான் சுதந்திரமானவன் இல்லை. எனக்கு ஏற்புடைய எதையும் துரியோதனன் செய்வதில்லை. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, எனது கட்டளைக்குக் கீழ்ப்படியாதவனும், மூடனும், தீயவனுமான எனது மகனைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்வாயாக.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, காந்தாரி, விதுரன் மற்றும் பீஷ்மரின் தலைமையிலான பிற நண்பர்களின் நன்மை மிக்க வார்த்தைகளுக்கு இவன் {துரியோதனன்} செவி கொடுப்பதே இல்லை. எனவே, தீய மனநிலையும், பாவம் நிறைந்த இதயமும், கோணல் புத்தியும், அறிவிலாத் தன்மையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த இளவரசனுக்கு {துரியோதனனுக்கு} நீயே ஆலோசனை வழங்குவாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இதைச் செய்வதால், ஒரு நண்பன் எப்போதும் செய்ய வேண்டிய உன்னதச் செயலைச் செய்தவனாவாய்” என்றான் {திருதராஷ்டிரன்}.

இப்படிச் சொல்லப்பட்டவனும், அறம் {தர்மம்} மற்றும் பொருள் {அர்த்தம்} குறித்த உண்மைகளை அறிந்தவனுமான விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, எப்போதும் கோபம் நிறைந்திருக்கும் துரியோதனனிடம் நெருங்கி, இனிய வார்த்தைகளால் அவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, ஓ! குருக்களில் சிறந்தவனே, உனது நன்மைக்காகவும், உனது தொண்டர்களின் நன்மைக்காகவும் நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. பெரும் ஞானத்திற்காகத் தனித்துவமாக அறியப்படும் ஒரு குலத்தில் நீ பிறந்திருக்கிறாய். நான் குறிப்பிடுவது போல நீதியுடன் செயல்படுவதே உனக்குத் தகும். கல்வியும், அற்புதமான நடத்தையும் கொண்ட நீ, அற்புதப் பண்புகள் அனைத்தையும் கொண்டிருக்கிறாய்.

இழிவான குடும்பங்களில் பிறந்தவர்களோ, தீய ஆன்மா படைத்தவர்களோ, கொடூரர்களோ, வெட்கங்கெட்டவர்களோதான், ஓ! ஐயா {துரியோதனா}, உனக்கு ஏற்புடைய வழியில் செயல்படுவார்கள். இவ்வுலகில், நீதிமிக்கவர்களின் விருப்பங்கள் மட்டுமே, அறம் மற்றும் பொருளின் விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன. எனினும், நீதியற்றவர்களின் செயல்களோ விபரீதமாக {வக்கிரமாகத்} தெரிகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நீ மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் மனநிலை விபரீத {வக்கிர} வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. இது போன்ற செயல்களில் தொடர்வது, பாவம் நிறைந்ததும், அச்சம் நிறைந்ததும், மிகவும் பொல்லாததும், மரணத்திற்கே வழிவகுப்பதுமாகும். ஓ! பாரதா {துரியோதனா}, அது தவிர, இது காரணமற்றதாகவும், நீண்ட காலம் உன்னால் கடைப்பிடிக்க முடியாததாகவும் இருக்கிறது.

கேடு மட்டுமே விளைவிக்கக் கூடிய இதை நீ தவிர்த்தால், உனது சொந்த நன்மையை அடையலாம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ உன் சகோதரர்கள், தொண்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் செய்யும் பாவம் நிறைந்த, மதிப்பில்லாத செயல்களில் இருந்து தப்புவாயானால், ஓ! மனிதர்களில் புலியே, ஓ! பாரதர்களில் காளையே {துரியோதனா}, பெரும் ஞானமும், பெரும் முயற்சியுடன் கூடிய பெரும் வீரமும், பெரும் கல்வியும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ சமாதானம் செய்து கொள்வாயாக.

இத்தகு நடத்தையே பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரருக்கும், பெரும்பாட்டனுக்கும் (பீஷ்மருக்கும்), துரோணருக்கும், உயர்ஆன்ம கிருபருக்கும், சோமதத்தனுக்கும், ஞானமுள்ள பாஹ்லீகனுக்கும், அஸ்வத்தாமனுக்கும், விகர்ணனுக்கும், சஞ்சயனுக்கும், விவிம்சதிக்கும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, உனது பல்வேறு உறவினர்களுக்கும், பல்வேறு நண்பர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும்.

ஓ! ஐயா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது தந்தை மற்றும் தாயின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. நல்ல மகன்கள் எப்போதும் தங்கள் தந்தையின் கட்டளைகளையே நன்மையானதாகக் கருதுவார்கள். உண்மையில், பேரிடர் ஏற்பட்டால், ஒவ்வொருவரும் தனது தந்தையின் தலையீடுகளையே நினைவுகூர்வார்கள். ஓ! ஐயா, உனது தந்தை {திருதராஷ்டிரர்} பாண்டவர்களுடன் சமாதானத்தையே விரும்புகிறார். எனவே, ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, உனது ஆலோசகர்களுடன் கூடிய நீயும் அதையே விரும்புவாயாக.

தனது நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகும் ஒரு மனிதன் அதன்படி நடக்கவில்லையென்றால், அந்த அலட்சியத்தின் விளைவாக அவன் கிம்பகம் என்று அழைக்கப்படும் கனியை {எட்டிக் கொட்டையை} விழுங்கியவன் போல இறுதியில் எரிந்து போவான். மூடத்தனத்தால் நன்மையான ஆலோசனைகளை ஏற்காத ஒருவன், காலம் தாழ்த்துவதால் பதட்டமடைந்து, தனது நோக்கத்தை அடைய முடியாமல், இறுதியில் வருந்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான். மறுபுறம், நன்மையான ஆலோசனைகளைக் கேட்ட பிறகு, அதை உடனே ஏற்று, தனது கருத்தைக் கைவிடுபவன், எப்போதும் உலகில் மகிழ்ச்சியை அடைகிறான். நல்ல அறிவுடைய நண்பர்களின் வார்த்தைகளைப் புறந்தள்ளி, அவை தனக்கும், தனது விருப்பத்துக்கும் எதிரானவையெனக் கருதுபவன், தனக்கு எதிரான வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதால், விரைவில் தனது எதிரிகளால் அடக்கப்படுகிறான்.

நீதிமான்களின் கருத்துகளை அலட்சியம் செய்து, தீயோரின் கருத்துகளுக்குக் கீழ்ப்படிபவன், தான் துயரில் மூழ்குவதன் விளைவாக விரைவில் தனது நண்பர்களை அழச் செய்கிறான். மேன்மையான ஆலோசகர்களை விட்டு, தாழ்ந்தவர்களிடம் ஆலோசனை கோருபவன், விரைவில் பெரும் துயரத்தில் வீழ்ந்து, தன்னைக் காத்துக் கொள்வதில் வெல்ல முடியாமல் போகிறான். போலியாக நடந்து கொண்டு, நல்ல நண்பர்கள் பேசுவதைக் கேளாதவனும், அந்நியர்களை மதித்து, தனது சொந்தங்களை வெறுப்பவனுமான பாவிகளின் தோழன், ஓ! பாரதா {துரியோதனா}, விரைவில் இந்தப் பூமியால் தள்ளப்படுவான்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, (பாண்டுவின் மகன்களிடம்) சண்டையிட்டு வரும் நிலையில், நீ பாவம் நிறைந்தவர்கள், இயலாதவர்கள் மற்றும் மூடர்களான பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். சக்ரனைப் {இந்திரனைப்} போன்றவர்களும், வலிமைமிக்கத் தேர் வீரர்களுமான உனது சொந்தங்கள் அனைவரையும் அவமதித்து, அந்நியர்களிடம் உதவியையும் பாதுகாப்பையும் நாடும் வேறெந்த மனிதன் உன்னைத் தவிர இருக்கிறான்? குந்தியின் மகன்களை நீ அவர்கள் பிறந்ததில் இருந்தே துன்புறுத்தி வந்திருக்கிறாய். அவர்கள் உன்னிடம் கோபமடையவில்லை. ஏனெனில், பாண்டுவின் மகன்கள் அனைவரும் உண்மையில் அறம்சார்ந்தவர்களாவர்.

அவர்களுடைய பிறப்பு முதலே நீ பாண்டவர்களிடம் வஞ்சகமாக நடந்து வந்திருந்தாலும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அந்தப் புகழ்வாய்ந்தவர்கள் {பாண்டவர்கள்} உன்னிடம் தாராளமாகவே நடந்து வந்திருக்கிறார்கள். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த உனது முக்கிய உறவினர்களிடம், உனக்குச் சமமாக, பெருந்தன்மையுடன் நீ நடந்து கொள்வதே உனக்குத் தகும். கோபத்தின் ஆளுகைக்கு இடங்கொடுக்காதே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஞானமுள்ளோரின் முயற்சிகள் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கும்.

உண்மையில், இவை மூன்றையும் அடைய முடியவில்லை என்றாலும், மனிதர்கள் அறம் மற்றும் பொருளையாவது பின்தொடர்கிறார்கள். மேலும், இவை மூன்றும் தனித்தனியாகக் கடைப்பிடிக்கப்பட்டால், தங்கள் இதயத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அறத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; நல்லவர்களுமில்லாமல், கெட்டவர்களாகவும் இல்லாமல் நடுநிலையில் இருப்பவர்கள் எப்போதும் சர்ச்சைக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; அதே வேளையில் மூடர்கள் இன்பத்தைத் தணிப்பதையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது காணப்படுகிறது.

மயக்கத்தால் அறத்தைக் கைவிடும் மூடன், பொருளையும் இன்பத்தையும் நீதியற்ற வழிகளில் அடைந்து, விரைவில் தனது அறிவால் அழிவை அடைகிறான். பொருள் மற்றும் இன்பத்தைக் குறித்துப் பேசுபவர்கள், முதலில் அறத்தையே பயில வேண்டும். ஏனெனில், பொருளோ {அர்த்தமோ}, இன்பமோ {காமமோ} (உண்மையில்) அறத்தில் இருந்து விலகி இருப்பது இல்லை. ஓ! மன்னா {துரியோதனா}, அறம் மட்டுமே அந்த {அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய) மூன்றுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், மூன்றையும் அடைய முயல்பவன், அறத்தின் துணை கொண்டு மட்டுமே காய்ந்த புற்குவியலைப் பற்றும் நெருப்பு போல வளர்கிறான்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஓ! ஐயா, செழிப்பில் மலர்ச்சியடைந்திருப்பதும், பூமியின் ஏகாதிபதிகள் அனைவராலும் அறியப்பட்டதுமான பரந்த பேரரசை நீதியற்ற வழியில் அடைய நீ முயல்கிறாய். ஓ! மன்னா {துரியோதனா}, நீதிமிக்க நடத்தையுடன் வாழ்வோரிடம் போலியாக நடந்து கொண்டால், கோடரியைக் கொண்டு காட்டை அறுப்பதுபோல, நிச்சயம் நீயே உன்னை அறுத்துக் கொள்வாய். எவனுடைய வீழ்ச்சியை {அவமானத்தை} ஒருவன் விரும்பவில்லையோ, அவனுடைய புத்தியை அவன் கலங்கச் செய்யக்கூடாது. ஏனெனில், ஒருவனது புத்தி கலங்கடிக்கப்பட்டால், அவன் நன்மையானது எதுவோ அதில் தனது கவனத்தை அர்ப்பணிக்க முடியாது.

தனது ஆன்மாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன், மூவுலகங்களில் எவரையும் அவமதிக்க மாட்டான். சாதாரண உயிர்களைக் கூட ஒருவன் அவமதிக்கக் கூடாது எனும்போது, மனிதர்களில் காளையரான பாண்டுவின் மகன்களை அவமதிக்கவே கூடாது. கோபத்தின் ஆளுகைக்கு அடிபணிபவன், சரி தவறு என்பதில் தனது புத்தியை இழக்கிறான். படர்ந்து வளர்பவை எப்போதும் வெட்டப்பட வேண்டும். ஓ! பாரதா {துரியோதனா}, பார், இதுவே {பிரமாணமே} சாட்சியாகும். தற்போது, ஓ! ஐயா, தீயவர்களுடன் சேர்வதைவிட, பாண்டவர்களுடன் சேர்வதே உனக்குச் சிறந்தது. நீ அவர்களுடன் சாமாதானம் செய்து கொண்டால், உனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறிவன் ஆவாய்.

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பாண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பேரரசை அனுபவித்துக் கொண்டு, அந்தப் பாண்டவர்களையே அலட்சியம் செய்துவிட்டு, நீ பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். ஓ! பாரதா {துரியோதனா}, துச்சாசனன், துர்விஷஹன், கர்ணன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} உனது மாநிலத்தின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, உன் செழிப்புத் தொடரும் என்று நீ விரும்புகிறாய். எனினும், பாண்டவர்களின் அறிவுக்கும், அறத்திற்கும், செல்வத்தை அடையும் திறனுக்கும், ஆற்றலுக்கும்  முன்னிலையில் இவர்கள் மிகச் சிறியவர்களாவர். உண்மையில், ஓ! பாரதா {துரியோதனா}, (நான் சொன்ன நால்வரையும் கூட விட்டு விடு. அவர்களைத் தவிர) உன்னைத் தலைமையாகக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் போர்க்களத்தில் கோபத்துடன் இருக்கும் பீமனின் முகத்தைக் காணக்கூடத் திறனற்றவர்கள் ஆவர்.

ஓ! ஐயா, பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொண்ட இந்தப் படை, உண்மையில் உனது கையில் இருக்கின்றது. பீஷ்மர், துரோணர், இந்தக் கர்ணன், கிருபர், பூரிஸ்ரவஸ், சோமதத்தன், அஸ்வத்தாமன் மற்றும் ஜயத்ரதன் ஆகியோரும் அதில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கூடி வந்தால் கூட, இவர்களால் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகப் போரிடமுடியாது. உண்மையில், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள் என அனைவராலும் வீழ்த்தப்பட முடியாதவன் அர்ஜுனன் ஆவான். போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே. அர்ஜுனனுடன் போரிட்டு வீட்டுக்குப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் திரும்பிய ஒரு மனிதனை, இந்தப் பூமியின் அரச இனங்களில் எதிலும் நீ கண்டிருக்கிறாயா? ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உலகளாவிய படுகொலையால் கிடைக்கும் பலன்தான் என்ன?

யாரை வீழ்த்திவிட்டால் வெற்றி உனதாகுமோ அந்த அர்ஜுனனை வீழ்த்தவல்ல ஒரு தனி மனிதனைக் காட்டிவிடு பார்ப்போம்? கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரையும் காண்டவப் பிரஸ்தத்தில் வீழ்த்திய அந்தப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போர்க்களத்தில் எவன் மோதுவான்? விராட நகரத்தில் ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த ஆச்சரியமிக்கப் போர் கேள்விப்படப்படுகிறது. இதுவே போதுமான சாட்சியில்லையா? தேவர்களுக்குத் தேவனான சிவனையே போரில் மனநிறைவு கொள்ளச் செய்த வீரனும், கோபம் தூண்டப்பட்டால் ஒப்பிலாதவனும், தடுக்கப்பட முடியாதவனும், எப்போதும் வெல்பவனும், அழிவடையாதவனுமான அர்ஜுனனை வீழ்த்திவிடலாம் என்று நீ நம்புகிறாயா?

என்னைத் துணையாகக் கொண்டு பிருதையின் மகன் {அர்ஜுனன்}, எதிரியை நோக்கிப் போர்க்களத்தில் முன்னேறும் போது, அவனுக்கு {அர்ஜுனனுக்கு} சவால் விடக்கூடிய அளவு தகுதிவாய்ந்தவன் எவன் இருக்கிறான்? புரந்தரனாலும் {இந்திரனாலும்} அவ்வாறு செய்ய இயலுமா? அர்ஜுனனைப் போரில் வீழ்த்தவல்லவன், தனது கரங்களால் பூமியைத் தாங்கவல்லவனாக இருப்பான், கோபத்தில் பூமியின் மொத்த மக்கள் தொகையையும் எரித்துவிடவல்லவனாக இருப்பான், சொர்க்கத்தில் இருந்து தேவர்களையே கூடத் தூக்கிவீசவல்லவனாக இருப்பான். உனது மகன்களையும், சகோதரர்களையும், சொந்தங்களையும், உறவினர்களையும் பார். உன் நிமித்தமாகப் பாரதக் குலத்தின் இந்தத் தலைவர்கள் அனைவரும் அழிவடைய வேண்டாம். கௌரவக் குலம் நிர்மூலமாக்கப்பட வேண்டாம்.

ஓ! மன்னா {துரியோதனா}, உனது குலத்தை அழித்தவன் என்றும், அதன் சாதனைகளை அழித்தவன் என்றும் மக்கள் உன்னைச் சொல்ல வேண்டாம். (சமாதானத்திற்கு உடன்பட்டால்) வலிய தேர்வீரர்களான அந்தப் பாண்டவர்கள் உன்னை யுவராஜாவாகவும் {Yuvaraja = பட்டத்து இளவரசனாகவும்}, மனிதர்களின் தலைவரான உனது தந்தை திருதராஷ்டிரரை, இந்தப் பரந்த பேரரசின் ஆட்சியாளராகவும் நிறுவுவார்கள். ஓ! ஐயா, நிச்சயமாகக் கிடைப்பதும், உனக்காகக் காத்திருப்பதுமான செழிப்பை அலட்சியம் செய்யாதே. பிருதையின் மகன்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} பாதி நாட்டை அளித்து, பெரும் செழிப்பை வெல்வாயாக. பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு, உனது நண்பர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டு, அவர்களுடன் இன்புற்றிருக்கும் நீ, எப்போதும் நன்மையையே அடைந்திருப்பாய்” என்றான் {கிருஷ்ணன்}. 

துரியோதனனிடம் பெரியோரின் மன்றாடல்! – உத்யோக பர்வம் பகுதி 125-துரியோதனனுக்குப் பீஷ்மர் நல்வார்த்தைகளைச் சொல்வது; பீஷ்மரைத் தொடர்ந்து துரோணரும் சொல்வது; துரியோதனனுக்காக வருந்தவில்லை, காந்தாரிக்காகவும் திருதராஷ்டிரனுக்காகவுமே தான் வருந்துவதாக விதுரன் சொன்னது; இறுதியாகத் திருதராஷ்டிரன், துரியோதனனிடம் கிருஷ்ணனின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், பழியுணர்ச்சியுடைய துரியோதனனிடம், “சொந்தங்களுக்குள் சமாதானத்தைக் கொண்டு வரவே கிருஷ்ணன் உன்னிடம் பேசியிருக்கிறான். ஓ! ஐயா, அந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவாயாக, கோபத்தின் ஆளுகைக்கு ஆட்படாதே. ஓ! ஐயா, உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளின்படி நீ செயல்படவில்லை என்றால் உனக்கு நன்மையைக் கொடுக்கும் செழிப்பையோ, மகிழ்ச்சியையோ எப்போதும் நீ அடைய மாட்டாய். ஓ! ஐயா, அறம் மற்றும் பொருளுக்கு இசைவானதையே வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} உன்னிடம் சொன்னான். அந்த நோக்கத்தை நீ ஏற்பாயாக. 

ஓ! மன்னா {துரியோதனா}, உலகத்தில் வாழும் மக்களை அழித்துவிடாதே. ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {துரியோதனா}, கேசவன் {கிருஷ்ணன்}, உனது தந்தை {திருதராஷ்டிரன்}, ஞானம் கொண்ட விதுரன் ஆகியோரால் சொல்லப்பட்டவையும், உனக்கு நன்மை நிறைந்தவையும், சத்தியத்துக்கு இசைவானவையுமான வார்த்தைகளை நீ மீறுவாயெனில், அந்த உனது துர்க்குணத்தால், பூமியின் மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் பிரகாசமாக இருக்கும் இந்தப் பாரதர்களின் செழிப்பை, திருதராஷ்டிரனின் வாழ்நாளிலேயே நீ அழித்துவிடுவாய். இந்த ஆணவ மனநிலையுடனேயே நீ இருந்தால், உனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்}, மகன்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் உயிரையும் நீ பறித்துவிடுவாய். உனது குலத்தை அழிப்பவனாக ஆகிவிடாதே! பொல்லாதவனாக இராதே; உனது இதயம் பாவம் நிறைந்ததாக இருக்க வேண்டாம்; நீதியற்றவர்களின் பாதையில் நடக்காதே. உனது தந்தை மற்றும் தாயைத் துன்பக்கடலில் மூழ்கச் செய்யாதே” என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மர் முடித்த பின்னர், துரோணரும், கோபம் நிறைந்து பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த துரியோதனனிடம், “ஓ! ஐயா, கேசவன் {கிருஷ்ணன்} உன்னிடம் சொன்ன வார்த்தைகள் அறம் மற்றும் பொருள் நிறைந்தவையாகும். சந்தனுவின் மகனான பீஷ்மரும் இதையேதான் சொன்னார். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அவ்வார்த்தைகளை ஏற்பாயாக.

அவர்கள் இருவரும் {கிருஷ்ணனும், பீஷ்மரும்} ஞானிகளும், பெரும் புத்திக்கூர்மையுள்ளவர்களும், ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், உனது நன்மைக்கானவற்றைச் செய்ய விரும்புபவர்களும், பெரும் கல்வி கற்றவர்களும் ஆவர். எது நன்மையோ அதையே அவர்கள் சொன்னார்கள். ஓ! மன்னா, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {துரியோதனா}, கிருஷ்ணன், பீஷ்மர் ஆகிய இருவரின் வார்த்தைகளை ஏற்று, அவர்கள் சொன்னது போலச் செயல்படுவாயாக. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, புரிதலில் உண்டாகும் மாயையினால் மாதவனை {கிருஷ்ணனை} அலட்சியம் செய்யாதே.

உன்னை எப்போதும் ஊக்குவித்து வருபவர்கள், வெற்றியைக் கொடுக்கவல்லவர்களல்ல. போர்க்காலத்தில் அவர்கள் வெறுப்பின் சுமையைத் தூக்கி மற்றவர்கள் கழுத்தில் வீசுவார்கள் [1]. பூமியில் வாழும் மக்களைப் படுகொலை செய்யாதே. உனது மகன்களையும், சகோதரர்களையும் கொன்றுவிடாதே. வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் எந்தப் படைக்கு மத்தியில் இருக்கிறார்களோ, அந்தப் படையை யாராலும் வெல்ல முடியாது. ஓ! பாரதா {துரியோதனா}, உனது நண்பர்கள், கிருஷ்ணன் மற்றும் பீஷ்மர் ஆகியோரின் உண்மைநிறைந்த வார்த்தைகளை நீ ஏற்கவில்லையென்றால், ஓ! ஐயா, நீ நிச்சயம் வருந்த வேண்டியிருக்கும்.

ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} சொன்னதைவிட அர்ஜுனன் இன்னும் பெரியவனாவான். தேவகியின் மகனான கிருஷ்ணனைப் பொறுத்தவரை, அவன் தேவர்களாலும் எதிர்க்க இயலாதவன் ஆவான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, இன்பத்தையும், நன்மையையும் உண்மையில் அளிப்பனவற்றை உனக்குச் சொல்வதால் என்ன பயன்? அனைத்தும் இப்போது உனக்குச் சொல்லப்பட்டுவிட்டது. நீ விரும்பியதைச் செய்வாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, மேலும் எதையும் உனக்குச் சொல்ல நான் விரும்பவில்லை” என்றார் {துரோணர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “துரோணர் நிறுத்தியதும், க்ஷத்ரி {க்ஷத்தா} என்றும் அழைக்கப்படும் விதுரன், துரியோதனன் மீது கண்களைச் செலுத்தி, பழியுணர்ச்சி கொண்ட அந்தத் திருதராஷ்டிரரின் மகனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, ஓ! பாரத்குலத்தின் காளையே, நான் உனக்காக வருந்தவில்லை. எனினும், காந்தாரி மற்றும் உனது தந்தை {திருதராஷ்டிரர்} ஆகிய இந்த முதிய இணைக்காக நான் வருந்துகிறேன். (யாரை விரைவில் இழக்கப் போகிறார்களோ, அந்தத்) தீய ஆன்மா கொண்ட உன்னைத் தங்கள் பாதுகாவலனாகக் கொண்ட அவர்கள் {காந்தாரியும் திருதராஷ்டிரரும்}, தங்கள் நண்பர்களையும் ஆலோசகர்களையும் இழந்து, சிறகிழந்த பறவை இணை ஒன்றைப் போலத் தங்களைப் பார்த்துக்கொள்ள எவனுடனும் திரிவார்களே. தன் குலத்தை அழித்துக் கொள்பவனான தீய மகனைப் பெற்றதால், ஐயோ, இவர்கள் இருவரும் கவலையுடன் பூமியெங்கும் பிச்சைக்காரர்களாகத் திரியப் போகிறார்களே” என்றான் {விதுரன்}.

அதன்பிறகு, மன்னர்கள் சூழ தனது தம்பிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்த துரியோதனனிடம் பேசிய மன்னன் திருதராஷ்டிரன், “ஓ! துரியோதனா, உயர் ஆன்ம சௌரி {கிருஷ்ணன்} சொன்னவற்றைக் கேள். நித்தியமானவையும், மிகுந்த பயனுள்ளவையும், உயர்ந்த நன்மைக்கு உகந்தவையுமான அந்த வார்த்தைகளை ஏற்பாயாக. களங்கமற்ற செயல்களையுடைய கிருஷ்ணனின் துணையுடன், மன்னர்கள் அனைவரின் மத்தியிலும், நாம் அனைவரும் நமது நோக்கங்கள் நிறைவேறியவர்கள் ஆவோம்.

ஓ! ஐயா, கேசவன் {கிருஷ்ணன்} மூலமாக உறுதியாக இணைந்து யுதிஷ்டிரனிடம் சமரசம் செய்து கொள்வாயாக. அமைதிக்கான ஆடி விழாவைப் போல { like unto an august ceremony of propitiation = மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய பிரம்மாண்டமான நிவர்த்தி [சமாதான] விழாவைப் போலப்}  பாரதர்களுக்கான பெரும் நன்மையை நாடுவாயாக. வாசுதேவனை {கிருஷ்ணனை} உபாயமாகக் கொண்டு பாண்டவர்களுடன் நெருக்கமாகப் பிணைவாயாக. அதற்கான நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாதே. எனினும், நன்மையை அடைய வேண்டிய உன்னிடம் சமாதானத்தை வேண்டும் கேசவனை {கிருஷ்ணனை} நீ அலட்சியம் செய்வாயெனில், எப்போதுமே வெற்றி உனதாகாது.” என்றான் {திருதராஷ்டிரன்}.

பீஷ்மர் துரோணர் அறிவுரை! – உத்யோக பர்வம் பகுதி 126-திருதராஷ்டிரன் பேசிய பேச்சைக் கேட்டு, அவன் மேல் பரிவு கொண்ட பீஷ்மரும் துரோணரும் மேலும் பேசியது; துரியோதனனுக்கு அறிவுரை கூறிய அவர்கள், பாண்டவர்களோடு ஒற்றுமையாக இருக்கும்படி சொன்னது; போர் ஏற்படுவதற்கு முன்னரே பாண்டவர்களுடன் சமாதானம் எட்டப்படட்டும் என்று துரியோதனனிடம், பீஷ்மரும் துரோணரும் வேண்டியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “திருதராஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்டு, அந்த முதிய மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} பரிவு கொண்ட பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், கீழ்ப்படியாதவனான துரியோதனனிடம் மீண்டும், “இரண்டு கிருஷ்ணன்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} கவசம் தரிக்காத போதே, காண்டீவம் செயல்படாமல் ஓய்வெடுக்கும்போதே, போர் நெருப்பில் நீர்க்காணிக்கைகளை ஊற்றி எதிரிகளின் பலத்தைத் தௌமியர் எரிக்காத போதே, பணிவைத் தனது ஆபரணமாகக் கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான யுதிஷ்டிரன் உனது துருப்புகளின் மீது தனது கோபப் பார்வையைச் செலுத்தாதபோதே பகைமை தணிந்து போகட்டும்.

வலிமைமிக்க வில்லாளியும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பீமசேனன் தனது பிரிவின் நடுவே நிற்காதபோதே பகைமை தணிந்து போகட்டும். கையில் கதாயுதத்துடன், போர்களத்தின் மத்தியில் திரிந்து (பகைப்) பிரிவுகளைப் பீமசேனன் அடிக்காத போதே, பாண்டவர்களுடன் சமாதானம் ஏற்படட்டும். வீரர்களைக் கொல்லும் கதாயுதத்தால், தங்கள் பருவகாலத்தில் பழுத்த பனம்பழங்களைப் போல, யானைகளின் முதுகில் இருந்து போரிடும் வீரர்களின் தலைகளைப் போர்க்களத்தில் பீமன் உருளச் செய்யாத போதே பகைமை தணிந்து போகட்டும்.

ஆயுதங்களை நன்கு அறிந்த நகுலனும், சகாதேவனும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும், விராடனும், சிகண்டியும், சிசுபாலனின் மகனும் {திருஷ்டகேதுவும்} கவசம் தரித்து, பெரும் முதலைகள் ஆழ்ந்து போவது போல, உனது படையணிகளுக்குள் ஊடுருவித் தங்கள் கணைகளை மழையாகப் பொழியாத போதே பகைமை தணிந்து போகட்டும்.

கூடியிருக்கும் மன்னர்களின் மென்மையான உடல்களின் மேல் கடும் சிறகுகள் கொண்ட கணைகள் விழாத போதே பகைமை தணிந்து போகட்டும். ஆயுதங்களில் நற்திறன் வாய்ந்தவர்களும், வேகமான கரங்களைக் கொண்டவர்களும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அடிக்க வல்லவர்களுமான வலிமைமிக்க வில்லாளிகளால் இரும்பாலும், உருக்காலும் ஆன ஆயுதங்கள் குறிதவறாமல் அடிக்கப்பட்டு, சந்தனமும், நறுமணத் தைலங்களும் பூசப்பட்டவையும், தங்க மாலைகளாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையுமான வீரர்களின் மார்பைத் துளைக்காத போதே பகைமை தணிந்து போகட்டும்.

தலைவணங்கும் உன்னை, மன்னர்களில் யானையும், நீதிமானுமான யுதிஷ்டிரன் ஆரத்தழுவி வரவேற்கட்டும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, வேள்விக் கொடைகளின் ஈகையால் தனித்துவம் கொண்ட அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, கொடி {துவஜம்} மற்றும் அங்குசம் ஆகிய குறிகளால் அடையாளம் காணப்படும் உள்ளங்கையைக் கொண்ட தனது வலது கையை உனது தோளில் வைக்கட்டும். நீ அமர்ந்திருக்கும்போது, சிவந்திருப்பதும், ரத்தினங்களால் குறிக்கப்பட்டதும், விரல்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது கைகளால் உனது முதுகை அவன் {யுதிஷ்டிரன்} தட்டிக் கொடுக்கட்டும்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஆச்சா {சால} மரத்தைப் போன்ற தோள்களையுடையவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்} உன்னை ஆரத்தழுவியபடி சமாதானத்திற்காக உன்னிடம் மென்மையாகப் பேசட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, அர்ஜுனன் மற்றும் இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகிய மூவராலும் மரியாதையாக வணங்கப்பட்டு, அவர்களது தலையை நீ முகர்ந்து, பாசத்துடன் அவர்களிடம் உரையாடுவாயாக.

உனது வீரச் சகோதரர்களான பாண்டுவின் மகன்களுடன் இணைந்திருக்கும் உன்னைக் கொண்டு இந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் சிந்தட்டும். உங்கள் நட்பிணைப்பின் செய்தி, இந்த மன்னர்கள் அனைவரின் நகரங்களிலும் பிரகடனம் செய்யப்படட்டும். (உனது இதயத்தில்) சகோதரப் பாசத்துடன் கூடிய உணர்வுகளோடு இந்தப் பூமி உன்னால் ஆளப்படட்டும். (பொறாமை மற்றும் கோபம்) எனும் நோயில் இருந்து உனது இதயம் விடுபடட்டும்” என்றனர்.

பங்குதர மறுத்த துரியோதனன்! – உத்யோக பர்வம் பகுதி 127- பீஷ்மர், துரோணர், விதுரர் மற்றும் கிருஷ்ணனின் பேச்சுகளை ஏற்க முடியாத துரியோதனன், கிருஷ்ணனிடம், தன் பக்கம் எந்தத் தவறும் இல்லையென்றும், தன்னால் ஊசிமுனை அளவு இடமும் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்றும் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தனக்கு ஏற்பில்லாத வார்த்தைகள் குருக்களின் சபையில் பேசப்படுவதைக் கேட்ட துரியோதனன், வலிய கரங்களைக் கொண்டவனும், பெரும் புகழ்வாய்ந்தவனுமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, அனைத்துச் சூழ்நிலைகளையும் சிந்தித்த பிறகு பேசுவதே உனக்குத் தகும். உண்மையில், எக்காரணமும் இன்றி இத்தகு கடுமையான வார்த்தைகள் பேசும் நீ, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என்னிடம் மட்டுமே குறை கண்டுபிடித்து, எப்போதும் பிருதையின் மகன்களை {குந்தியின் மகன்களான பாண்டவர்களை} உயர்வாக மதிக்கிறாய். ஆனால், (இரு தரப்புகளின்) பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்த பிறகுதான் நீ என்னைக் கண்டிக்கிறாயா?

உண்மையில், நீ, க்ஷத்திரி {விதுரர்}, மன்னர் {திருதராஷ்டிரர்}, ஆசான் {துரோணர்}, பெரும்பாட்டன் {பிதாமஹரான பீஷ்மர்} ஆகிய அனைவரும் வேறு எந்த ஏகாதிபதியையும் {பாண்டவர்களை} நிந்திக்காமல் என்னை மட்டுமே நிந்திக்கிறீர்கள். எனினும், என்னால் என்னிடம் எந்தச் சிறு குறையையும் காணமுடியவில்லை. இருப்பினும், (முதிய) மன்னன் {திருதராஷ்டிரர்} உட்பட நீங்கள் அனைவரும் என்னை வெறுக்கிறீர்கள். ஓ! எதிரிகளை அடக்குபவனே {கிருஷ்ணா}, ஆழ்ந்து சிந்தித்தபிறகும் கூட, நான் என்னிடம் எந்தப் பெரிய குறையையும் காணவில்லை, அல்லது ஓ! கேசவா {கிருஷ்ணா} மிகச் சிறிய குறையைக்கூட நான் காணவில்லை.

பாண்டவர்களால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பகடையாட்டத்தில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அவர்கள் வீழ்த்தப்பட்டு, அவர்களது நாட்டைச் சகுனி வென்றார். அதைப் {பகடையாட்டத்தைப்} பொறுத்தவரை என்னுடையது என்று என்ன குற்றம் இருக்க முடியும்?

மறுபுறம், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பாண்டவர்களிடம் வென்ற செல்வத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுக்கும்படி நானே கட்டளையிட்டேன். ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, வெல்லப்படமுடியாத பாண்டவர்கள் மீண்டும் ஒருமுறை பகடையில் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் காட்டுக்குப் போக வேண்டி வந்ததில் எங்களுடைய தவறு ஏதும் இருக்க முடியாது.

குற்றம் சுமத்தும் அளவுக்கு எங்களிடம் உள்ள என்ன தவறைக் கண்டு, அவர்கள் {பாண்டவர்கள்} எங்களைத் தங்கள் எதிரிகளாகக் கருதுகின்றனர்? ஓ! கிருஷ்ணா, (உண்மையில்) பலவீனமாக இருந்தாலும், ஏதோ தாங்கள் பலமானவர்கள் போல, ஏன் பாண்டவர்கள் இவ்வளவு உற்சாகமாக எங்களிடம் சண்டைக்கு முனைகிறார்கள்? நாங்கள் அவர்களுக்கு என்ன {குற்றத்தைச்} செய்தோம்? (அவர்களுக்கு) இழைக்கப்பட்ட எந்தத் தீங்குக்காக, சிருஞ்சயர்களுடன் {பாஞ்சாலர்களுடன்} கூடிய பாண்டுவின் மகன்கள், திருதராஷ்டிரர் மகன்களைக் கொல்ல முயல்கிறார்கள்?

எந்தக் கடும் செயலின் விளைவாலோ, (அவர்களது) வார்த்தைகளாலோ (அதற்கு அஞ்சியோ), அறிவை இழந்து அச்சத்தால் அவர்களை வணங்கமாட்டோம். பாண்டுவின் மகன்களை விட்டுவிடு, நாங்கள் இந்திரனையேகூட (அப்படி) வணங்கமாட்டோம். ஓ! கிருஷ்ணா, ஓ எதிரிகளைக் கொல்பவனே, போரில் எங்களை வெல்லத் தலைப்படுபவனும், க்ஷத்திரிய அறங்களைக் கடைப்பிடிப்பவனுமான எந்த ஒரு மனிதனையும் நான் காணவில்லை.

பாண்டவர்களை விட்டுவிடு, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பீஷ்மர், கிருபர், துரோணர் மற்றும் கர்ணன் ஆகியோரை தேவர்களாலும் கூடப் போரில் வீழ்த்த முடியாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, போரில் ஆயுதங்களால் வெட்டும் நாங்கள், எங்கள் வகைக்குரிய நடைமுறைகளை நோற்கிறோம் என்றால், எங்கள் முடிவு வரும்போது, அதுவும் எங்களைச் சொர்க்கத்திற்கே வழிநடத்திச் செல்லும். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் அம்புப்படுக்கையில் எங்களைக் கிடத்திக் கொள்ள வேண்டும் என்ற இதுவும் க்ஷத்திரியர்களான எங்களின் உயர்ந்த கடமையே ஆகும்.

எங்கள் எதிரிகளுக்குத் தலைவணங்காத எங்களுக்கு, போரில் அம்புப்படுக்கையே கிடைக்குமென்றாலும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, நாங்கள் அதற்காக வருந்த மாட்டோம். உன்னதக் குலத்தில் பிறந்து, க்ஷத்திரிய நடைமுறைகளை உறுதி செய்யும் எவன், தனது உயிரைக் காத்துக்கொள்ள மட்டும் விரும்பி, அச்சத்தால் எதிரியிடம் தலைவணங்குவான்? “(க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை), ஒருவன் எப்போதும் நிமிர்ந்திருக்க வேண்டும், {யாரையும்} எப்போதும் வணங்கக் கூடாது, ஏனெனில் உழைப்பு மட்டுமே ஆண்மையாகும்; வளைவதைவிட, ஒருவன் கணுக்களில் உடைந்தேவிடலாம்” {கணுவில் முறிந்தாலும் முறியலாம். இவ்வுலகில் ஒருவனிடமும் வணங்கக்கூடாது} என்ற மாதங்கருடைய வார்த்தைகளை, தங்கள் சுய நன்மையை விரும்பும் க்ஷத்திரியர்கள் மதிப்புடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

என்னைப் போன்ற ஒருவன் {க்ஷத்திரியன்} வேறு யாரையும் கருதிப் பாராமல் {வணங்காமல்}, பக்திக்காக அந்தணர்களை மட்டுமே வணங்க வேண்டும். (அந்தணர்கள் தவிர்த்த பிறரிடம்) ஒருவன் தனது வாழ்நாள் முழுவதும் மாதங்கரின் சொல்படியே செயல்பட வேண்டும். இதுவே க்ஷத்திரியர்களின் கடமையாகும்; இதுவே எனது கருத்துமாகும்.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, முன்பு அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} என் தந்தை {திருதராஷ்டிரர்} அளித்த நாட்டின் பங்கை, நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களால் {பாண்டவர்களால்} திரும்பப் பெறவே முடியாது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மன்னர் திருதராஷ்டிரர் வாழும் வரை, நாங்கள் மற்றும் அவர்கள் ஆகிய இருதரப்பும் ஆயுதங்களை உறையிலிட்டு விட்டு, ஓ! மாதவா {கிருஷ்ணா} அவரைச் சார்ந்தே வாழ வேண்டும். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் சிறுவனாகவும், பிறரைச் சார்ந்தவனாகவும் இருந்த போது, அறியாமையாலோ, அச்சத்தாலோ கொடுக்கப்பட்டதும், மீண்டும் கொடுக்கப்பட முடியாததுமான நாட்டை, ஓ! விருஷ்ணி குலத்திற்கு மகிழ்ச்சியை அளிப்பவனே {கிருஷ்ணா}, பாண்டவர்களால் மீண்டும் அடைய முடியாது.

தற்போது, ஓ! வலிய கரங்களைக் கொண்ட கேசவா {கிருஷ்ணா}, நான் வாழும்வரை, எங்கள் நிலத்தில் ஒரு கூர்மையான ஊசியின் முனையால் மூடப்படும் பகுதியைக்கூடப் பாண்டவர்களுக்கு எங்களால் வழங்க முடியாது” என்றான் {துரியோதனன்}”.

“துரியோதனனைக் கட்டுங்கள்” என்ற கிருஷ்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 128-துரியோதனனை நிந்தித்த கிருஷ்ணன், பாண்டவர்களுக்கு அவன் செய்த தீமைகளைச் சுட்டிக் காட்டியது; சமாதானம் செய்யவில்லையெனில் துரியோதனனைக் கௌரவர்களே கட்டிப் போட்டுப் பாண்டவர்களிடம் ஒப்படைப்பார்கள் என்று துரியோதனனிடம் துச்சாசனன் சொன்னது; கௌரவச்சபையை விட்டு துரியோதனன் வெளியேறியது; குலத்தின் நன்மைக்காகத் துரியோதனனைக் கட்டி பாண்டவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சமாதானத்தை நிறுவுவதே நல்லது எனக் கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கோபத்தில் சிவந்த கண்களுடன் இருந்த தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, (ஒரு கணம்) சிந்தித்து, குருக்களின் சபையில் இருந்த துரியோதனனிடம், “வீரர்களின் படுக்கையை நீ விரும்புகிறாயா? அதை உன் ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்த்து நிச்சயமாக நீ அடைவாய். (சிறிது காலம்) காத்திரு, இதைத் தொடர்ந்து பெரும் அழிவு வரப்போகிறது. ஓ! சிறு புத்தி கொண்டவனே {துரியோதனா}, நீ பாண்டவர்களுக்கு எக்குற்றமும் இழைக்கவில்லை என்றா கருதுகிறாய்? (கூடியிருக்கும்) ஏகாதிபதிகளே அதைத் தீர்மானிக்கட்டும்.

ஓ! பாரதா {துரியோதனா}, உயர் ஆன்ம பாண்டவர்களின் செழிப்பைக் கண்டு வருந்திய நீ, சூதாட்டப் போட்டி குறித்துத் திட்டமிட்டு, சுபலனின் மகனுடன் {சகுனியுடன்} சேர்ந்து சதி செய்தாய். ஓ! ஐயா, அறம்சார்ந்தவர்களும், நேர்மையானவர்களும், மேன்மையானவர்களுமான உனது சொந்தங்களால் {பாண்டவர்களால்}, கபடமுள்ள சகுனி போல எப்படி (வேறுவகையில்) தீச்செயலில் ஈடுபட முடியும்?

ஓ! பெரும் அறிவுடையவனே {துரியோதனா}, நல்லோரின் அறிவையும் சூதாட்டம் திருடிவிடும், மேலும், தீயோரைப் பொறுத்தவரையில், பிளவும், கொடிய விளைவுகளுமே அதிலிருந்து {சூதாட்டத்தில் இருந்து} எழும். நீதிமிக்க நடத்தை கொண்டோரிடம் கலந்தாலோசியாமல், உன் பொல்லாத ஆலோசகர்களைக் {அமைச்சர்களைக்} கொண்டு சூதாட்டப் போட்டியின் வடிவில் பெரும் ஆபத்துக்கான அந்தப் பயங்கர ஊற்றுக்கண்ணை நீயே திட்டமிட்டு உற்பத்தி செய்தாய்.

ஒரு சகோதரனின் மனைவியை அவமதிக்கவோ, அல்லது சபைக்கு இழுத்து வந்து, திரௌபதியை நோக்கி நீ பயன்படுத்திய மொழிகளைப்போல அவளிடம் {சகோதரனின் மனைவியிடம்} பேசவோ இயன்றவன் உன்னைப் போல வேறு எவன் இருக்கிறான்? உன்னதமான பெற்றோரைக் கொண்டவளும், அற்புதமான நடத்தை கொண்டவளும், தங்கள் உயிரைவிட அன்புக்குரியவளுமான பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} பட்டத்து ராணியை {திரௌபதியை} நீ இப்படியே {மேற்சொன்னது போலவே} நடத்தினாய்.

எதிரிகளைத் தண்டிப்பவர்களான குந்தியின் மகன்கள் காட்டுக்குப் புறப்பட்ட போது, அவர்களது சபையில் துச்சாசனன் என்ன வார்த்தைகளைச் சொன்னான் என்பதைக் கௌரவர்கள் அனைவரும் அறிவார்களே.

எப்போதும் தங்கள் நடத்தையில் சரியாக இருப்பவர்களும், பேராசையால் கறைபடியாதவர்களும், அறம்பயில்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், நேர்மையானவர்களுமான தனது சொந்தங்களிடமே, இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள இயன்றவன் {உன்னைத் தவிர} வேறு எவன் இருக்கிறான்?

கர்ணன், துச்சாசனன் மற்றும் நீ ஆகியோர், இதயமற்றவர்களும், இழிவானவர்களும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொழியையே திரும்பத்திரும்பப் பேசினீர்கள்.

பாண்டுவின் மகன்கள் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களது தாயோடு {குந்தியோடு} சேர்த்து வாரணாவதத்தில் வைத்து அவர்களை உயிருடன் எரிக்க நீ மிகுந்த சிரமப்பட்டாய். எனினும், அந்த உனது முயற்சி வெற்றியால் மகுடம் சூட்டப்படவில்லை. {உனது அந்த முயற்சி பலிக்கவில்லை}. அதன் பிறகு, தங்கள் தாயுடன் கூடிய பாண்டவர்கள், ஏகசக்கரம் எனும் நகரில், ஓர் அந்தணன் வீட்டில், நீண்ட நாள் மறைந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உனது திட்டமிடல்கள் ஒன்றும் வெற்றியடையவில்லை எனினும், விஷம், பாம்புகள், கயிறுகள் என எல்லா வழிகளிலும் நீ பாண்டவர்களை அழிக்க முயன்றிருக்கிறாய். இப்படிப்பட்ட உணர்வுகளுடன், அவர்களிடம் இவ்வளவு வஞ்சகமாக நடந்து கொண்ட நீ, அந்த உயர் ஆன்ம பாண்டவர்களுக்கு எதிராக எக்குற்றத்தையும் நீ செய்யவில்லை என்று எப்படிச் சொல்கிறாய்?

ஓ! பாவியே {துரியோதனா}, அவர்கள் உன்னிடம் இரந்து {கெஞ்சிக்} கேட்டாலும், அவர்களது தந்தை வழி பங்கான நாட்டை அவர்களுக்குக் கொடுக்க நீ விரும்பவில்லை. செழிப்பை எல்லாம் இழந்து, நீ கீழே கிடத்தப்பட்ட பிறகே, அவர்களுக்கு அதைக் கொடுப்பாய்.

இதயமற்றவன் போலப் பாண்டவர்களுக்கு எண்ணிலடங்கா குற்றங்களை இழைத்துவிட்டு, அவர்களிடம் வஞ்சகமாக நடந்து கொண்டு, வேறுவகையான ஆடையில் {தோற்றத்தில்} தோன்ற இப்போது முயல்கிறாய்.

உனது பெற்றோர், பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரால் மீண்டும் மீண்டும் சமாதானம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும், ஓ! மன்னா {துரியோதனா}, நீ இன்னும் சமாதானத்தைச் செய்து கொள்ளவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கும் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவருக்கும் சமாதானத்தால் உண்டாகும் பயன் பெரியதாகும். எனினும், அமைதி, உனக்குத் தன்னைப் பரிந்துரைக்கவில்லை. {அமைதியை நீ விரும்பவில்லை}. இதில் புத்தி குறைவைக் காட்டிலும் வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

உனது நண்பர்களின் வார்த்தைகளை மீறிய நீ, உனது நன்மைக்கான எதையும் எப்போதும் அடைய முடியாது. ஓ! மன்னா {துரியோதனா}, நீ செய்யப்போகும் செயல், பாவம் நிறைந்ததும் மதிப்பற்றதுமாகும்” என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது, பழியுணர்ச்சி கொண்ட துரியோதனனிடம் பேசிய துச்சாசனன், குருக்களுக்கு மத்தியில் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! மன்னா {துரியோதனரே}, நீர் விருப்பத்துடன் பாண்டவர்களிடம் சமாதானம் செய்து கொள்ளவில்லை எனில், உம்மைக் (உமது கையையும் காலையும்) கட்டி, நிச்சயம் கௌரவர்களே அந்தக் குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} ஒப்படைத்துவிடுவார்கள். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனரே}, பீஷ்மர், துரோணர் மற்றும் உமது (சொந்த) தந்தை ஆகியோர், விகர்த்தனன் மகனையும் {கர்ணன்}, உம்மையும், மற்றும் என்னையும் சேர்த்து, நம் மூவரையும், பாண்டவர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள்” என்றான் {துச்சாசனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தீயவனும், வெட்கங்கெட்டவனும், கீழ்ப்படியாதவனும், மரியாதை தெரியாதவனும், வீணனுமான சுயோதனன் {துரியோதனன்}, தனது தம்பியின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, பெரும்பாம்பு போலப் பெருமூச்சுவிட்டு, கோபத்தால் தனது இருக்கையை விட்டு எழுந்து, விதுரன், திருதராஷ்டிரன், பெரும் மன்னனான பாஹ்லீகன், கிருபர், சோமதத்தன், பீஷ்மர், துரோணர், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஆகியோரையும், ஏன், உண்மையில் அவர்கள் {அங்கிருந்தவர்கள்}  அனைவரையும் அவமதிக்கும் வகையில் சபையை விட்டு வெளியேறினான் {துரியோதனன்}. அந்த மனிதர்களில் காளையானவன் {துரியோதனன்}, சபையை விட்டு வெளியேறுவதைக் கண்ட, அவனது தம்பி {துச்சாசனன்}, அவனது அனைத்து ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் அனைத்து மன்னர்கள் ஆகியோர் அவனைப் {துரியோதனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.

கோபத்தில் எழுந்து தனது தம்பிகளுடன் சபையை விட்டு வெளியேறிய துரியோதனனைக் கண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், “அறம் மற்றும் பொருள் ஆகியவற்றைத் தள்ளிவிட்டு கோபத்தின் தூண்டுதலைப் பின்பற்றுபவனுடைய எதிரிகள், அவன் விரைவில் துன்பத்தில் மூழ்குவதைக் கண்டு மகிழ்கிறார்கள். திருதராஷ்டிரனின் இந்தத் தீய மகன் {துரியோதனன்}, (தனது நோக்கங்களை அடைய) உண்மையான வழிகளை அறியாதவனும், தனது ஆட்சியுரிமையை வீணடிக்கும் மூடனும், கோபம் மற்றும் பேராசையின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிபவனுமாவன். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, க்ஷத்திரியர்கள் அனைவரின் {அழிவு} நேரமும் வந்துவிட்டதை நான் காண்கிறேன். ஏனெனில், அந்த மன்னர்கள் அனைவரும் மாயையால் தங்கள் ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} துரியோதனனைப் பின்பற்றிச் செல்கிறார்களே” என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் சக்திகளை உடையவனுமான தாமரைக் கண்ணனான தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் (இன்னும் அங்கே) இருந்தோரிடம், “குரு குல முதியவர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக்கும் இதுவும் ஒரு பெரிய அத்துமீறலே. ஏனெனில், அவர்கள் {குரு குலத்தின் பெரியோர்}, அரசுரிமையின் இன்பத்தில் திளைக்கும் அந்தத் தீய மன்னனைப் {துரியோதனனைப்} பலவந்தமாகப் பிடித்துக் கட்டிப் போடவில்லையே.

எதிரிகளைத் தண்டிப்பவர்களே, இதைச் செய்ய நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். இது செய்யப்பட்டால் {துரியோதனன் கட்டப்பட்டால்}, அது நல்ல பலனைக் கொடுக்கக்கூடும். பாவமற்றவர்களே, உண்மையில், உங்கள் சம்மதத்தின் விளைவால், நான் சொல்வதை நீங்கள் ஏற்றால், ஓ! பாரதர்களே, நான் பேசும் வார்த்தைகள் விரைவில் நல்ல விளைவுகளை உண்டாக்கும்.

முதிய போஜ மன்னரால் {உக்ரசேனரால்} தவறாக நெறிபடுத்தப்பட்ட அவரது தீய மகன் {கம்சன்}, தனது தந்தையின் அரசுரிமையை, அவரது வாழ்நாளிலேயே பறித்துக் கொண்டு, மரணத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டான். உண்மையில், உக்ரசேனரின் மகனான கம்சன் தனது உறவினர்கள் அனைவராலும் கைவிடப்பட்டு, சொந்தங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய என்னால், ஒரு பெரும் மோதலில் கொல்லப்பட்டான். எங்கள் சொந்தங்களுடன் கூடிய நாங்கள், ஆஹுகரின் மகனான உக்ரசேனருக்கு உரிய மரியாதையைச் செலுத்தி, போஜர்களின் அரசைப் பெருக்குபவரான அவரை {உக்ரசேனரை மீண்டும்} அரியணையில் நிறுவினோம். யாதவர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகிய அனைவரும், அவர்களது முழு இனத்திற்காகவும், கம்சன் என்ற தனி மனிதனைக் கைவிட்டு, செழிப்பையும், மகிழ்ச்சியையும் அடைந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்களும் அசுரர்களும் போருக்காக அணிவகுத்து, ஆயுதங்களை உயர்த்திய போது, அனைத்து உயிரினங்களின் தலைவனான பரமேஷ்டின் {பிரம்மா} (நம்மிடையே உள்ள இந்த வழக்கிற்கும் பொருந்தும்படி) இப்படியே சொன்னான். உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உலகத்தில் வசித்தோர் அனைவரும் இரு கட்சிகளாகப் பிரிந்து, கொல்லப்படும்போது, தெய்வீகமானவனும், அண்டம் தோன்ற புனிதக் காரணனுமான அந்தப் படைப்பாளன் {பிரம்மன்}, {தனக்குள்} “{இந்தப் போரில்} தானவர்களுடன் கூடிய அசுரர்களும் தைத்தியர்களும் வீழ்த்தப்படுவார்கள். ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள் மற்றும் தேவலோகவாசிகள் வெல்வார்கள். உண்மையில், தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும், கந்தர்வர்களும், நாகர்களும், ராட்சசர்களும் இந்தப் போரில் கோபத்தால் ஒருவரை ஒருவர் கொல்வார்கள்” என்றான் {என்று நினைத்தான்}.

இப்படி நினைத்தவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவனுமான பரமேஷ்டின் {பிரம்மா}, தர்மனை {தர்மதேவனை} நோக்கி, “தைத்தியர்களையும், தானவர்களையும் கட்டிப்போட்டு, அவர்களை வருணனிடம் ஒப்படைப்பாயாக” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தர்மன், பரமேஷ்டினின் {பிரம்மனின்} கட்டளையின் பேரால் தைத்தியர்களையும் தானவர்களையும் கட்டி வருணனிடம் ஒப்படைத்தான். நீர்நிலைகளின் தலைவனான வருணன், தர்மனின் {யமனின்} பாசக்கயிராலும், தன்னுடைய பாசக் கயிறாலும் அந்தத் தானவர்களைக் கட்டி, கடலின் ஆழங்களில் அவர்களை வைத்துக் கவனமாகப் பாதுகாத்தான்.

அதே வழியில் துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் சகுனி, துச்சாசனன் ஆகியோரைக் கட்டி பாண்டவர்களிடம் ஒப்படைப்பீராக. ஒரு குடும்பத்துக்காக, தனிப்பட்ட ஒருவனைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமத்திற்காக, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம். ஒரு மாகாணத்திற்காக {நாட்டிற்காக}, ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம். இறுதியாக, ஒருவனின் சுயத்துக்காக, முழுப் பூமியையும் தியாகம் செய்யலாம். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் கட்டிப் போட்டு, பாண்டவர்களுடன் சமாதானம் செய்வீராக. ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, உம் நிமித்தமாக க்ஷத்திரிய குலம் முழுமையும் கொல்லப்படாதிருக்கட்டும்” என்றான் {கிருஷ்ணன்}”. 

“பேராசையைக் கைவிடு” என்ற காந்தாரி! – உத்யோக பர்வம் பகுதி 129-திருதராஷ்டிரன் விதுரனிடம் காந்தாரியை அழைத்துவருமாறு பணித்தது; அங்கே வந்த காந்தாரி, துரியோதனனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கேட்டது; தாயின் சொல்லைக் கேட்க வந்த துரியோதனனிடம் காந்தாரி நன்மொழிகளைச் சொல்வது; பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு, பாதி நாட்டைக் கொண்டு மகிழ்ச்சியாக ஆளும்படி காந்தாரி துரியோதனனிடம் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் நேரத்தைக் கடத்தாமல், அறவிதிகள் அனைத்தையும் அறிந்த விதுரனிடம் பேசினான். அந்த மன்னன் {திருதராஷ்டிரன் விதுரனிடம்}, “ஓ! குழந்தாய், பெரும் அறிவும், முன்னறிதிறனும் கொண்ட காந்தாரியிடம் சென்று, அவளை இங்கே அழைத்து வா. அவளை {காந்தாரியைக்} கொண்டு நான் இந்தத் தீய இதயம் படைத்தவனிடம் (எனது மகனிடம்) {துரியோதனனிடம்} கோரிக்கை வைப்பேன் {பேசிப் பார்க்கிறேன்}. அவளால் {காந்தாரியால்} அந்தத் தீய இதயம் கொண்ட இழிந்த பாவியைத் தணிக்க முடியுமென்றால், நம்மால் இன்னும்கூட நம் நண்பன் கிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்பட முடியும்.

சமாதானத்தைப் பரிந்துரைத்துப் பேசுவதன் மூலம், பேராசையால் பாதிக்கப்பட்டவனும், தீய கூட்டாளிகளை {நண்பர்களைக்} கொண்டவனுமான இந்த மூடனுக்கு {துரியோதனனுக்குச்} சரியான பாதையைச் சுட்டிக் காட்டுவதில், ஒருவேளை அவள் {காந்தாரி} வெல்லக்கூடும். துரியோதனனால் நடைபெற இருக்கும் இந்தப் படுபயங்கர ஆபத்தை அவளால் விலக்க முடியுமென்றால், மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் பாதுகாக்கப்படவும், சாதிக்கப்படவும் அது {அம்முயற்சி} துணைநிற்கும்”, என்றான் {திருதராஷ்டிரன்}.

மன்னனின் {திருதராஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட விதுரன், திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில், பெரும் முன்னறிதிறன் கொண்ட காந்தாரியை அங்கே அழைத்து வந்தான். பிறகு திருதராஷ்டிரன் காந்தாரியிடம், “ஓ, காந்தாரி, தீய ஆன்மா கொண்ட உனது மகன் {துரியோதனன்}, எனது கட்டளைகள் அனைத்தையும் மீறி, ஆட்சியுரிமையின் மீது தான் கொண்ட ஆசையின் விளைவாக, ஆட்சியுரிமை மற்றும் உயிர் ஆகிய இரண்டையும் தியாகம் செய்யப் போவதைப் பார். தீய ஆன்மாவும், சிறு மதியும் கொண்ட அவன் {துரியோதனன்}, பாவிகளான தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்}, தன்னைவிட மேன்மையானோரை அவமதித்து, தன் நலன்விரும்பிகளின் வார்த்தைகளை மீறி, பண்படாத மனத்தைக் கொண்டவன் போலச் சபையைவிட்டு வெளியேறினான்”, என்றான் {திருதராஷ்டிரன்}.”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது கணவனின் {திருதராஷ்டிரனின்} வார்த்தைகளைக் கேட்டவளும், பெரும் புகழ் வாய்ந்தவளுமான காந்தாரி {திருதராஷ்டிரனிடம்}, உயர்ந்த நன்மையை விரும்பி, “காலந்தாழ்த்தாமல், நாட்டின் மீது பேராசை கொண்டு நோயுற்றிருக்கும் எனது மகனை {துரியோதனனை} இங்கே அழைத்து வாருங்கள். பண்படாத இதயம் கொண்டவனும், அறம் மற்றும் பொருளைத் தியாகம் செய்தவனுமான அவன் {துரியோதனன்}, ஒரு நாட்டை நிர்வகிக்கும் தகுதி இல்லாதவனாவான். இப்படி இவை அனைத்தும் இருந்தாலும், பணிவற்ற அவன் {துரியோதனன்}, அனைத்து வகையிலும் நாட்டை அடைந்தான்.

உண்மையில், ஓ! திருதராஷ்டிரரே, உம் மகனின் மீது கொண்ட பெரும் பாசத்தாலும், அவன் {துரியோதனன்} பாவியாய் இருப்பதை அறிந்தும், அவனது ஆலோசனைகளைப் பின்தொடர்ந்து வருவதாலும், நீரே இதற்காகப் பெரிதும் பழிசொல்லத் தக்கவர். அந்த உமது மகன் {துரியோதனன்}, ஆசைக்கும், கோபத்திற்கும் முழுமையாக ஆட்பட்டு, இப்போது மாயையின் அடிமையாக இருக்கிறான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எனவேதான் உம்மால் இப்போது அவனை {துரியோதனனை} வலுக்கட்டாயமாகத் திருப்ப முடியவில்லை.

ஓ! திருதராஷ்டிரரே, பேராசைக்கு ஆட்பட்டவனும், தீய ஆலோசகர்களைக் கொண்டவனும், தீய ஆன்மா கொண்டவனுமான அந்த அறிவில்லாத மூடனிடம் {துரியோதனனிடம்} நாட்டைக் கொடுத்ததன் {மூலம் உண்டான} கனியையே {பலனையே} இப்போது நீர் அறுவடை செய்து கொண்டிருக்கிறீர். இவ்வளவு நெருக்கமான சொந்தங்களுக்கிடையில் ஏற்படப்போகும் பிளவை மன்னர் {திருதராஷ்டிரர்} (இன்று) ஏன் அலட்சியம் செய்கிறார்? என , உமது சொந்தங்களுக்குள்ளே பிளவு கொண்டிருக்கும் உம்மைக் கண்டு, உண்மையில் உமது எதிரிகள் நகைப்பார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, *சமரசத்தினாலோ {சமாதானத்தினாலோ}, பரிசு மூலமோ {தானத்தினாலோ} கடக்க வேண்டிய அந்த ஆபத்துகளை, பலத்தைப் பயன்படுத்தி {தண்டத்தினால்} எவன் கடப்பான்?” என்றாள் {காந்தாரி}”.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரிலும், அவனது {துரியோதனனின்} தாயுடைய {காந்தாரியின்} கட்டளையின் பேரிலும், பழியுணர்ச்சி கொண்ட துரியோதனனை மீண்டும் ஒருமுறை சபைக்குள் நுழையச் செய்தான் க்ஷத்திரி {விதுரன்}. கோபத்தால் தாமிரம் போலச் சிவந்திருந்த கண்களுடன், பாம்பு போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தனது தாயின் வார்த்தைகளை எதிர்பார்த்து அந்தச் சபைக்குள் மீண்டும் நுழைந்தான். தவறான பாதையில் நடந்து கொண்டிருந்த தனது மகன் {துரியோதனன்}, சபைக்குள் நுழைவதைக் கண்ட காந்தாரி, அவனைக் {துரியோதனனைக்} கடுமையாகக் கண்டித்து, சமாதானத்தை ஏற்படுத்த இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.

காந்தாரி {துரியோதனனிடம்} சொன்னாள், “ஓ! துரியோதனா, ஓ! அன்பு மகனே, உனக்கும் உனது தொண்டர்கள் {உன்னைப் பின்பற்றுபவர்கள்} அனைவருக்கும் நன்மையைத் தருபவையும், உன்னால் கீழ்ப்படியத் தக்கவையும், உனக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருபவையுமான எனது வார்த்தைகளைக் கவனிப்பாயாக. ஓ! துரியோதனா, உனது நலன்விரும்பிகள் சொல்லும் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. பாரதர்களில் சிறந்தவர்களான உனது தந்தை {திருதராஷ்டிரர்}, பீஷ்மர், துரோணர், கிருபர், க்ஷத்ரி {விதுரன்} ஆகியோர் சொல்லும் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவாயாக. நீ சமாதானம் செய்து கொண்டால், பீஷ்மர், உனது தந்தை {திருதராஷ்டிரர்}, {காந்தாரியாகிய} நான் மற்றும் துரோணரின் தலைமையிலான உனது நலன் விரும்பிகள் அனைவருக்கும் நீ மரியாதை செய்தவனுமாவாய். {மேற்கண்டவர்களை மதித்தவனுமாவாய்}.

ஓ! பெரும் அறிவு கொண்டவனே, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, ஒரு நாட்டை அடைந்து, அதைப் பாதுகாத்து அனுபவிப்பதைத் தனது சொந்த விருப்பம் ஒன்றால் மட்டுமே எவனாலும் வெல்ல முடியாது. புலன்களைக் கட்டுக்குள் வைக்காதவனால் நீண்ட காலம் அரசுரிமையைத் தக்க வைத்துக் கொள்ள இயலாது. தனது ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டு, பெரும் புத்திக்கூர்மையும் கொண்டவனால் மட்டுமே ஒரு நாட்டை ஆள முடியும். ஆசை மற்றும் கோபம் ஆகியவை ஒரு மனிதனிடம் உள்ள செல்வங்கள் மற்றும் இன்பங்கள் அனைத்தையும் அழித்துவிடும்.

{ஆசை, கோபம் என்ற} இந்த எதிரிகளை முதலில் வென்ற பிறகே, ஒரு மன்னனால், பூமியைத் தனது கட்டுக்குள் கொண்டு வர முடியும். மனிதர்களை ஆள்வது பெரிய காரியமாகும். தீய ஆன்மா கொண்டோர்தான், ஒரு நாட்டை எளிதாக வெல்ல விரும்புவார்கள். ஆனால், (அது வெல்லப்பட்ட பிறகு), அவர்களால் அந்த நாட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஒரு பெரிய பேரரசை அடைய விரும்பும் ஒருவன், அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் நிச்சயம் கட்டுப்பட வேண்டும். ஏனெனில், விறகை உண்ணும் நெருப்பு வளர்வதைப் போல, புலன்கள் ஒடுக்கப்பட்டால்தான், புத்திக்கூர்மை அதிகரிக்கும். அவை {புலன்கள்} கட்டுப்படுத்தப்படவில்லையெனில், பழக்கப்படாதவையும், அடங்காதவையுமான குதிரைகள், திறனற்ற ஓட்டுநரைக் கொன்று விடுவதைப்போல, {அந்தப் புலன்களை} உரியவர்களையேகூட அவற்றால் {புலன்களால்} கொன்றுவிட இயலும்.

தன்னை வெல்லாமல், தனது ஆலோசகர்களை வெல்ல முனைபவனும், தனது ஆலோசகர்களை வெல்லாமல், தனது எதிரைகளை வெல்ல முனைபவனும் விரைவில் வீழ்த்தப்பட்டு நிர்மூலமடைகிறார்கள். தனது சுயத்தையே எதிரியாக எடுத்துக் கொண்டு, அதை முதலில் வெல்பவன், தனது ஆலோசகர்களையும், அதன்பின்பு தனது எதிரிகளையும் வீணாக வெல்ல முயல மாட்டான். தன் புலன்களையும், தனது ஆலோசகர்களையும் வென்று, வரம்புமீறுபவர்களைத் தண்டித்து, ஆலோசித்தபிறகு செயல்பட்டு, அறிவுடன் இருக்கும் ஒரு மனிதனையே செழிப்பு வழிபடுகிறது. நெருங்கிய துளைகள் கொண்ட வலையில் இரு மீன்கள் அகப்படுவதைப் போல, உடலில் குடியிருக்கும் ஆசை {காமம்} மற்றும் கோபம் {குரோதம்} ஆகியவை {மனிதனின்} அறிவினால் {ஞானத்தினால்} பலத்தை இழக்கின்றன.

சொர்க்கத்திற்குச் செல்லும் விருப்பத்தால், உலக ஈர்ப்புகளில் இருந்து விடுபடும் ஒருவன், ஆசை {காமம்} மற்றும் கோபத்தால் {குரோதத்தால்} உற்சாகம் அடைந்தால், அந்த இரண்டின் விளைவாக, சொர்க்கத்தின் வாசல்களைத் தேவர்களே அவனுக்கு எதிராக {அவன் உள்ளே செல்லமுடியாதபடி} அடைப்பார்கள். ஆசை, கோபம், பேராசை, தற்பெருமை, செருக்கு ஆகியவற்றை நன்கு அடக்கத்தெரிந்த மன்னனால், முழுப் பூமியின் ஆட்சியதிகாரத்தையும் தன் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

செல்வம் மற்றும் அறம் ஆகியவற்றை ஈட்டவும், எதிரிகளை வீழ்த்தவும் விரும்பும் ஒரு மன்னன், தனது ஆசைகளைக் கட்டுப்படுத்துவதிலேயே எப்போதும் ஈடுபட வேண்டும். ஆசையாலோ, கோபத்தாலோ தன் சொந்தங்களிடமோ, பிறரிடமோ வஞ்சகமாக நடந்து கொள்ளும் ஒருவனால், பல கூட்டாளிகளைப் {நண்பர்களைப்} பெறுவதில் வெற்றி அடைய முடியாது.

ஓ! மகனே {துரியோதனா}, பெரும் அறிவுபடைத்தவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான பாண்டுவின் வீர மகன்களுடன் {பாண்டவர்களுடன்} சேர்ந்து மகிழ்ச்சியுடன் இந்தப் பூமியை அனுபவிப்பாயாக. சந்தனுவின் மகனான பீஷ்மர், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர் ஆகியோர் சொன்னவையெல்லாம், ஓ! மகனே {துரியோதனா}, நிச்சயம் உண்மையே. கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} வெல்லப்பட முடியாதவர்கள் ஆவர். எனவே, உழைக்க வருந்தாதவனான இந்த வலிமைமிக்கவனின் {கிருஷ்ணனின்} பாதுகாப்பை நாடுவாயாக. ஏனெனில், கேசவன் {கிருஷ்ணன்} கருணை இருந்தால், இரு தரப்பும் மகிழ்ச்சியடைவார்கள்.

தனது செழிப்பை மட்டுமே எப்போதும் தேடி, அறிவுடைய கல்விமான்களான தன் நண்பர்களின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படியாத ஒரு மனிதன், தனது எதிரிகளையே மகிழ்ச்சிப்படுத்துகிறான். ஓ! மகனே {துரியோதனா}, போரினால் எந்த நன்மையுமில்லை, எந்த அறமும் பொருளும் இல்லை. பிறகு, அதனால் {போரினால்} மகிழ்ச்சியை எப்படிக் கொண்டு வர முடியும்? வெற்றியும் கூட எப்போதும் நிச்சயமானதல்ல. எனவே, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே.

ஓ! பெரும் அறிவு கொண்டவனே {துரியோதனா}, பீஷ்மர், உனது தந்தை {திருதராஷ்டிரர்}, பாஹ்லீகர் ஆகியோர் பாண்டவர்களுக்கு அவர்களுடைய {நாட்டின்} பங்கை {பகைவர்கள் மீது கொண்ட} அச்சத்தின் காரணமாகவே (முன்பு) கொடுத்தார்கள். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவர்களுடன் {பாண்டவர்களுடன்} பிளவை விரும்பாதே. அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} மூலம், முட்கள் {பகைவர்கள்} அற்றதாகச் செய்யப்பட்ட பூமி முழுவதிலும் நீ அரசுரிமை புரிகிறாய். உண்மையில், அப்படி {பீஷ்மர், திருதராஷ்டிரர் மற்றும் பாஹ்லீகர் ஆகியோர்} (அமைதியாக) விட்டுக்கொடுத்ததன் விளைவில் உண்டான கனியையே {பயனையே} நீ இன்று காண்கிறாய்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} உரியதைப் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} கொடுத்துவிடு. உனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} (இந்தப் பேரரசில்) பாதியை நீ அனுபவிக்க விரும்பினாலும், அவர்களுடைய {பாண்டவர்களுடைய} பங்கை அவர்களுக்குக் கொடுத்துவிடு. உன்னையும், உனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} ஆதாரமாகத் தாங்கிக் கொள்ளப் பாதிப் பூமியே போதுமானதாகும். உனது நலன்விரும்பிகளின் சொற்களின்படி செயல்பட்டு, ஓ! பாரதா {துரியோதனா}, பெரும் புகழை வெல்வாயாக.

செழிப்பைக் கொண்டவர்களும், தங்கள் ஆன்மாக்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவர்களும், பெரும் புத்திக்கூர்மை கொண்டவர்களும், தங்கள் ஆசைகளை வென்றவர்களுமான பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ பூசல் கொண்டால், அஃது உனது பெரும் செழிப்பை அழிக்க மட்டுமே செய்யும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது நலன்விரும்பிகள் அனைவரின் கோபத்தையும் அகற்றி, பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமான பங்கை அவர்களிடம் கொடுத்து, உனது நாட்டை நீ மகிழ்ச்சியாக ஆள்வாயாக.

ஓ! மகனே, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} முழுமையாகப் பதிமூன்று {13} வருடங்கள் அனுபவித்த தண்டனை போதும். ஓ! பெரும் அறிவுடையவனே {துரியோதனா}, ஆசையாலும், கோபத்தாலும் வளரும் (அந்த நெருப்பை) இப்போதே தணிப்பாயாக {அடக்குவாயாக}. பாண்டவர்களின் செல்வத்தில் பேராசை கொண்டிருக்கும் நீ அவர்களுக்கு இணையாக மாட்டாய்; பெரும் கோபம் கொண்ட இந்தச் சூதனின் மகனும் {கர்ணனும்}, உனது தம்பியான துச்சாசனனும் {பாண்டவர்களுக்கு} இணையாகமாட்டார்கள்.

உண்மையில், பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, திருஷ்டத்யும்னன் ஆகியோர் கோபமுற்றால், பூமியில் வாழ்வோர் அனைவரும் அழிவடைவார்கள். ஓ! மகனே {துரியோதனா}, கோபத்தின் ஆளுகைக்குள் சென்று குருக்களை {கௌரவர்களை} அழித்துவிடாதே. உன் நிமித்தமாக இந்தப் பரந்த பூமி அழியாதிருக்கட்டும்.

பீஷ்மரும், துரோணரும், கிருபரும், மற்றும் அனைவரும் முழு வலிமையுடன் (உனக்காகப்) போரிடுவார்கள் என்றே சிறுமதி படைத்த நீ நினைக்காய். அஃது எப்போதும் நிகழாது. ஏனெனில், தன்னறிவைக் கொண்ட இவர்களைப் பொறுத்தவரை, {கௌரவர்களான} உங்களுக்குச் சமமாகப் பாண்டவர்களிடமும் இவர்கள் பாசம் கொண்டுள்ளனர். மன்னரிடம் (திருதராஷ்டிரரிடம்) தாங்கள் பெற்ற வாழ்வாதாரத்தின் பொருட்டு [1], அவர்கள் தங்கள் உயிரையே கொடுக்கச் சம்மதித்தாலும், மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி அவர்களால் தங்கள் கோபப் பார்வையைச் செலுத்த முடியாது.
பேராசை மூலம், மனிதர்கள் செல்வத்தை அடைவது இந்த உலகில் காணப்படுவதில்லை. ஓ! மகனே, உனது பேராசையைக் கைவிடுவாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நில்” என்றாள் {காந்தாரி}”.

கிருஷ்ணனையா பிடிப்பாய்? – உத்யோக பர்வம் பகுதி 130-காந்தாரியின் சொற்களைக் கேளாத துரியோதனன் மீண்டும் சபையை விட்டு வெளியேறுவது; தன் நண்பர்களுடன் சேர்ந்து கிருஷ்ணனைக் கைப்பற்றத் துரியோதனன் தீர்மானித்தது; இதை அறிந்த சாத்யகி சபையில் இருந்த கிருஷ்ணன், திருதராஷ்டிரன் மற்றும் விதுரனிடம் அச்சதியைக் குறித்துச் சொன்னது; துரியோதனனை அழைத்த திருதராஷ்டிரன் அவனைக் கண்டித்தது; கிருஷ்ணனின் மகிமையைச் சொன்ன விதுரன் துரியோதனனை நிந்தித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தனது தாயால் {காந்தாரியால்} சொல்லப்பட்ட பயனுள்ள வார்த்தைகளை அலட்சியம் செய்த துரியோதனன், கோபத்தால் அந்த இடத்தைவிட்டு அகன்று, தீய மனிதர்களின் முன்னிலைக்குச் சென்றான். சபையை விட்டு வெளியேறிய அந்தக் குரு {கௌரவ} இளவரசன் {துரியோதனன்}, பகடையில் பெரும் அறிவுடையவனும், சுபலனின் அரச மகனுமான சகுனியுடன் ஆலோசிக்கத் தொடங்கினான்.

துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் சகுனி ஆகியோரும், நான்காவதாகத் துச்சாசனனும் சேர்ந்து அடைந்த தீர்மானம் இதுவே. “செயலில் வேகமான இந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மன்னர் திருதராஷ்டிரருடனும், சந்தனுவின் மகனுடனும் {பீஷ்மருடனும்} சேர்ந்து, முதலில் நம்மைக் கைப்பற்ற {சிறைபிடிக்க} முயல்வான். எனினும், விரோச்சனன் மகனைப் {பலியைப்} பலவந்தமாகக் கைப்பற்றிய இந்திரனைப் போல, மனிதர்களில் புலியான இந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைப்} நாம் பலவந்தமாகக் கைப்பற்றுவோமாக.

இந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பிடிபட்டதைக் கேட்கும் பாண்டவர்கள், நம்பிக்கையை இழந்து, விஷப்பற்கள் உடைந்த பாம்புகளைப் போல முயற்சி செய்யும் திறன் அற்றவர்கள் ஆவார்கள்.

உண்மையில், இந்த வலிமைமிக்கவனே {கிருஷ்ணனே}, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் பாதுகாத்து, அவர்களுக்குத் தஞ்சம் அளிக்கிறான். வேண்டியவற்றை அளிப்பவனும், சாத்வதர்கள் அனைவரிலும் காளையுமான இவன் {கிருஷ்ணன்} பிடிபட்டால், சோமகர்களுடன் கூடிய பாண்டவர்கள் மனம் தளர்ந்து, எந்த முயற்சியையும் செய்யும் திறனற்றவர்கள் ஆவார்கள். எனவே, திருதராஷ்டிரரின் கதறல்களை அலட்சியம் செய்து, செயல்வேகமுள்ள இந்தக் கேசவனைக் {கிருஷ்ணனை} நாம் இங்கேயே பிடித்து வைப்போம். பிறகு எதிரியுடன் போரிடலாம்” {என்றே அந்த நால்வரும் தீர்மானித்தனர்}.

தீய ஆன்மாக்களை உடைய அந்தப் பாவிகள், இந்தப் பாவகரத் தீர்மானத்தை அடைந்த பிறகு, இதயக் குறிப்புகளைப் படிக்கும் திறன் கொண்டவனும், உயர்ந்த புத்திக்கூர்மை கொண்டவனுமான சாத்யகி விரைவில் இதைக் குறித்து அறிந்தான். அந்த அறிவின் காரணமாக, அவன் {சாத்யகி}, ஹிருதிகனின் மகனுடன் (கிருதவர்மனுடன்) சேர்ந்து, விரைந்து சபையைவிட்டு வெளியேறினான்.

சாத்யகி கிருதவர்மனிடம், “துருப்புகளை விரைவில் அணிவகுப்பாயாக. கவசம் பூண்டு, உனது துருப்புகளைப் போருக்கு அணிவகுத்து, உழைப்பால் {முயற்சியால்} களைத்துப் போகாத கிருஷ்ணனிடம் இவ்விஷயத்தை நான் சொல்லும் வரை, சபையின் வாசலில் காத்திருப்பாயாக” என்றான். இதைச் சொன்ன அந்த வீரன் {சாத்யகி}, மலைக்குகைக்குள் நுழையும் சிங்கம் போல மீண்டும் சபைக்குள் நுழைந்தான். (முதலில்) அவன் உயர் ஆன்ம கேசவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பிறகு திருதராஷ்டிரனிடமும், பிறகு விதுரனிடமும் இந்தச் சதியைக் குறித்துச் சொன்னான்.

இந்தத் தீர்மானத்தைக் குறித்துச் சொன்ன அவன் {சாத்யகி} {பரிகாசச் சிரிப்பைச்} சிரித்தவாறே, “அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைக் கருதும் நல்லோரால் அங்கீகரிக்கப்படாத ஒரு செயலை, இந்தத் தீய மனிதர்கள், இங்கே செய்ய நினைக்கிறார்கள். ஒன்றாகக் கூடி இருப்பவர்களும், பாவம் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், மூடர்களும், ஆசை மற்றும் கோபத்தின் ஆளுகைக்குள் இருப்பவர்களுமான இந்த இழிந்தவர்கள், செய்யக்கூடாத செயலொன்றை கோபம் மற்றும் பேராசையால் இங்கே செய்யப் போகிறார்கள். சுடர்மிகும் நெருப்பைத் தங்கள் ஆடைகளால் கைப்பற்ற நினைக்கும் பிள்ளைகளைப் போலவும், மூடர்களைப் போலவும், தாமரைக் கண்ணனை {கிருஷ்ணனைக்} கைப்பற்ற {கைது செய்ய}, சிறுமதி படைத்தவர்களும் இழிந்தவர்களுமான அவர்கள் விரும்புகிறார்கள்” என்றான் {சாத்யகி}.

சாத்யகியின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் முன்னறிதிறனைக் கொண்டவனுமான விதுரன், குருக்களுக்கு மத்தியில் இருந்த வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரனிடம், “ஓ! மன்னா, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரின் நேரமும் வந்து விட்டது. ஏனெனில், உண்மையில் தங்களால் முடியாதெனினும், பெரும் புகழ்க்கேட்டைத் தரும் செயலைச் செய்ய அவர்கள் முனைந்துள்ளார்கள். ஐயோ, ஒன்றாகச் சேர்ந்திருக்கும் அவர்கள் {கௌரவர்கள்}, வாசவனின் {இந்திரனின்} தம்பியை வீழ்த்தவும், இந்தத் தாமரைக் கண்ணனைக் {கிருஷ்ணனைக்} கைப்பற்றவும் விரும்புகிறார்களே.

உண்மையில், இந்த மனிதர்களில் புலியிடம் {கிருஷ்ணனிடம்}, இந்த ஒப்பற்றவனிடம், தடுக்கப்பட முடியாதவனிடம் மோதினால், சுடர்மிகும் நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல அவர்கள் அழிந்தே போவார்கள். அவர்கள் {கௌரவர்கள்} அனைவரும் ஒற்றுமையுடன் போரிட்டாலும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விரும்பினால், யானை மந்தையை விரட்டும் கோபம் நிறைந்த சிங்கத்தைப் போல, அவர்களை யமனுலகுக்கே அனுப்ப முடியும். எனினும், இவன் {கிருஷ்ணன்}, அத்தகு பாவம் நிறைந்ததும், கண்டிக்கத்தக்கதுமான ஒரு செயலை எப்போதும் செய்ய மாட்டான். மனிதர்களில் சிறந்தவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான இவன் {கிருஷ்ணன்}, அறத்தில் இருந்து எப்போதும் வழுவ மாட்டான்” என்றான் {விதுரன்}.

விதுரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பிறர் சொல் கேட்கும் நல்ல அறிவுடையோருக்கு மத்தியில், தனது கண்களைத் திருதராஷ்டிரன் மீது செலுத்திய கேசவன் {கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவர்கள் வன்முறையின் மூலம் என்னைத் தண்டிக்க விரும்பினால், என்னை அவர்கள் தண்டிக்க அனுமதியும். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நான் அவர்களைத் தண்டிப்பதைப் பொறுத்தவரையில், கோபமடைந்திருக்கும் அவர்கள் அனைவரையும் தண்டிக்கவே நானும் விரும்புகிறேன். எனினும், பாவம் நிறைந்த, கண்டிக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்ய மாட்டேன்.

பாண்டவர்களின் உடைமைகள் மீது ஆசை கொண்ட உமது மகன்கள், தங்கள் சொந்த உடைமைகளை இழக்கப் போகிறார்கள். இத்தகு செயலைச் செய்ய அவர்கள் விரும்பினால், யுதிஷ்டிரரின் நோக்கம் இந்நாளிலேயே (எளிதில்) நிறைவேறிவிடும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவர்களையும், இவர்களைத் தொடர்ந்து வருவோரையும் கைப்பற்றி, அவர்களைப் பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நான் ஒப்படைத்துவிடுவேன்.

அடைவதற்குக் கடினமானது என்று எனக்கு என்ன இருக்கிறது? எனினும், ஓ!பெரும் ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே}, கோபத்திலும், பாவம் நிறைந்த புரிதலாலும் மட்டுமே முன்னெழும் அது போன்ற கண்டிக்கத்தக்க செயல் எதையும் உமது முன்னிலையில் நான் செய்ய மாட்டேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் விரும்பவது போலவே நடக்கட்டும். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரும் அதைச் செய்வதற்கு நான் அனுமதி அளிக்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

(கேசவனின்) இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், விதுரனிடம், “அரசுரிமையில் மிகுந்த ஆசை கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான துரியோதனனை, அவனது நண்பர்கள், ஆலோசகர்கள், தம்பிகள் மற்றும் தொண்டர்களோடு விரைவாக இங்கே அழைத்து வா. உண்மையில், அவனைச் சரியான பாதைக்குக் கொண்டு வர முடியுமா என்று மற்றும் ஒரு முறை நான் பார்க்கப் போகிறேன்” என்றான்.

திருதராஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்ட க்ஷத்ரி {விதுரன்}, விருப்பமில்லாத துரியோதனனை, அவனது தம்பிகளோடு, {துரியோதனனைப் பின்பற்றும்} மன்னர்கள் சூழ மீண்டும் ஒருமுறை அழைத்து வந்தான். பிறகு, கர்ணன், துச்சாசனன் மற்றும் அந்த மன்னர்கள் அனைவராலும் சூழப்பட்ட துரியோதனனிடம் மன்னன் திருதராஷ்டிரன், “ஓ! பாவங்களைத் திரட்டும் இழிந்தவனே {துரியோதனா}, இழிவான செயல்களைச் செய்யும் மனிதர்களை உனது கூட்டாளிகளாகக் {நண்பர்களாகக்} கொண்டிருக்கும் நீ, பாவம் நிறைந்த நண்பர்களுடன் கூடி, புகழுக்குக் கேட்டைத் தரும் செயலைச் செய்ய முயல்கிறாய். சிறுமதி படைத்த நீ, உனது குலத்திற்கும் புகழ்க்கேட்டை விளைவிக்கிறாய். நல்லோரால் அங்கீகரிக்கப்படாததும், உண்மையில் அடைய முடியாததுமான இந்த இழிவான செயலை உன்னைப் போன்ற ஒருவனால் மட்டுமே முயற்சிக்க முடியும்.

பாவம் நிறைந்த கூட்டாளிகளுடன் இணைந்து, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், தவிர்க்கப்பட முடியாதவனுமான இந்த ஒப்பற்றவனையா நீ {கைப்பற்றி} தண்டிக்க விரும்புகிறாய்? சந்திரனைப் பெற விரும்பும் குழந்தையைப் போல, ஓ! மூடா, வாசவனால் {இந்திரனால்} தலைமை தாங்கப்படும் தேவர்களே தங்கள் பலம் முழுமையும் வெளிப்படுத்தினாலும் சாதிக்க முடியாத ஒரு காரியத்தையா நீ முயல்கிறாய்? கேசவன் {கிருஷ்ணன்}, தேவர்களாலும், மனிதர்களாலும், கந்தர்வர்களாலும், அசுரர்களாலும் உரகர்களாலும் கூடப் போரில் எதிர்க்கப்பட முடியாதவன் என்பதை நீ அறிவாயா? காற்றை, எவன் கைகளாலும் பிடிக்க முடியாததைப் போல, சந்திரனை, எந்தக் கையும் அடைய முடியாததைப் போல, பூமியை, எவன் தலையாலும் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல, கேசவனை {கிருஷ்ணனை} பலத்தினால் பிடிக்க உன்னால் முடியாது” என்றான் {திருதராஷ்டிரன்}.

திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, துரியோதனன் மீது தனது கண்களைச் செலுத்திய விதுரன், அந்தப் பழியுணர்ச்சி கொண்ட திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, எனது இந்த வார்த்தைகளை இப்போது கேட்பாயாக. துவிதன் என்ற பெயரால் அறியப்பட்ட குரங்குகளில் முதன்மையானவன் ஒருவன், வலிமைமிக்கக் கற்களின் மழையால், சௌபத்தின் வாயில்களில் கேசவனை {கிருஷ்ணனை} மறைத்தான். மாதவனைப் {கிருஷ்ணனைப்} பிடிக்க விரும்பி, தனது ஆற்றல் மற்றும் உழைப்பு அனைத்தையும் பயன்படுத்தினான். எனினும் அவனால் {துவிதனால்} இவனை {கிருஷ்ணனைப்} பிடிக்க முடியவில்லை. இவனையா நீ பலத்தினால் பிடிக்க முயல்கிறாய்?

சௌரி {கிருஷ்ணன்} பிராக்ஜோதிஷத்திற்குச் {பிராக்ஜோதிஷ நாட்டிற்குச்} சென்ற போது, தானவர்கள் அனைவருடன் கூடிய நரகனால் {நரகாசூரனால்}, அங்கே இவனைப் பிடிப்பதில் வெல்லமுடியவில்லை. இவனையா நீ பலத்தினால் பிடிக்க முயல்கிறாய்? போரில் அந்த நரகனைக் கொன்று (அவனது நகரத்தில் இருந்து) ஆயிரம் {1000} கன்னிகைகளைக் கொண்டு வந்து, அவர்கள் அனைவரையும் விதிப்படி இவன் {கிருஷ்ணன்} மணந்தான்.

நிர்மோசனம் என்ற நகரத்தில், சுருக்குக் கயிறுகளுடன் கூடிய வலிமைமிக்க ஆறாயிரம் {6000} அசுரர்கள் இவனைப் பிடிப்பதில் தோல்வியுற்றனர். இவனையா நீ பலத்தினால் பிடிக்க முயல்கிறாய்? குழந்தையாக இருந்த போதே, இவன் பூதனையையும், பறவைகளின் வடிவில் வந்த அசுரர்கள் இருவரையும் கொன்றான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, (தொடர்ச்சியான மழையில் இருந்து) பசுக்களைக் காப்பதற்காக, (தனது சுண்டு விரலில்) இவன் {கிருஷ்ணன்} கோவர்த்தன மலைகளைத் தூக்கிப் பிடித்தான்.

அரிஷ்டன், தேனுகன், பெரும் பலம் கொண்ட சாணூரன், அஸ்வராஜன், தீமை செய்பவனான கம்சன் ஆகியோரையும் இவனே {கிருஷ்ணனே} கொன்றான். ஜராசந்தன், வக்ரன் {வக்தரன்}, வலிமையான சக்தி படைத்த சிசுபாலன் ஆகியோரும் மற்றும் {இவனிடம்} போரிட்ட பாணன் என்பவனும், இன்னும் எண்ணற்ற மன்னர்களும் இவனால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அளவிலா வலிமை கொண்ட இவன் {கிருஷ்ணன்}, மன்னன் வருணனையும், பாவகனையும் (அக்னியையும்) வீழ்த்தியிருக்கிறான். (தெய்வீக மலர் என்று அழைக்கப்படும்) பாரிஜாதத்தைத் (தேவலோகத்தில் இருந்து) கொண்டு வந்த நிகழ்வின் போது சச்சியின் தலைவனையும் {இந்திரனையும்} இவன் வீழ்த்தியிருக்கிறான். கடலின் ஆழத்தில் மிதந்து கொண்டிருந்த போது, இவன் {கிருஷ்ணன்} மது என்பவனையும், கைடபன் என்பவனையும் கொன்றான். மற்றும் ஒரு பிறவியில் இவன் ஹயக்ரீவனையும் (குதிரைக் கழுத்துடையவனையும்) [1] கொன்றான்.யாவையும் செய்பவன் இவனே {கிருஷ்ணனே}, ஆனால் யாதாலும் இவன் செய்யப்பட்டவன் இல்லை. இவனே சக்திகள் அனைத்தின் காரணமாக இருக்கிறான். சௌரி {கிருஷ்ணன்} விரும்பும் எதையும், எந்த முயற்சியும் இன்றியே சாதித்துக் கொள்வான். பயங்கர ஆற்றல் கொண்ட இந்தப் பாவமற்ற கோவிந்தன் {கிருஷ்ணன்} அழிவில்லாதவன் என்பதை நீ அறியாயா?

கடும் விஷம் கொண்ட சீற்றம் மிகுந்த பாம்பைப் போன்ற இவன், முடிவிலா சக்தியின் ஊற்றுக்கண்ணாவான். வலிய கரங்களும் களைப்பிலா உழைப்பும் {முயற்சியும்} கொண்ட கிருஷ்ணனிடம் வன்முறையைக் கையாள முயலும் நீ, நெருப்பில் விழும் பூச்சி போல உனது தொண்டர்களுடன் சேர்ந்து அழிந்து போவாய்” என்றான் {விதுரன்}”. 

அண்டப்பெருவடிவம் – விஸ்வரூபம்! – உத்யோக பர்வம் பகுதி 131-கிருஷ்ணன் தன்னுள் அண்டசராசரங்களின் காட்சியை வெளிப்படுத்தியது; கிருஷ்ணன் வெளிப்படுத்திய அண்டப்பெருவடிவைக் கண்டவர்கள் அனைவரும் அஞ்சித் தங்கள் கண்களை மூடிக்கொள்வது; அண்டத்தில் உள்ள அனைத்தும் கிருஷ்ணனின் வடிவத்தில் தெரிந்தது; அந்த வடிவத்தைப் பீஷ்மர், துரோணர் விதுரர், சஞ்சயன் மற்றும் சில முனிவர்கள் மட்டுமே கண்டது; பிறகு மீண்டும் பழைய உருவத்தை அடைந்த கிருஷ்ணன் சபையை விட்டு வெளியேறி, பாண்டவர் மற்றும் கௌரவர்களின் நிலைகளைச் சாட்சியாகக் கண்ட மன்னர்களிடம் அதை உறுதி செய்து, குந்தியின் வீட்டுக்குச் சென்றது 

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விதுரர் இதைச் சொன்னதும், பகையணிகளைக் கொல்பவனும், பெரும் சக்தி கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரன் மகன் துரியோதனனிடம், “மாயையால், ஓ! சுயோதனா {துரியோதனா}, நான் தனியன் என்று நீ கருதுகிறாய். அதனால்தான், ஓ! சிறுமதி படைத்தவனே, வன்முறையால் என்னை வீழ்த்தி பிறகு, என்னைச் சிறைபிடிக்க நீ முயல்கிறாய். எனினும், பாண்டவர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் அனைவரும் இங்கேயே இருக்கிறார்கள். ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள், மற்றும் பெரும் முனிவர்கள் அனைவரும் இங்கேயே இருக்கிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.

இதைச் சொன்னவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்தான். அப்படி அந்தச் சௌரி {கிருஷ்ணன்} சிரித்த போது, அவனது உடலில் இருந்து, சுடர்மிகும் நெருப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம், கட்டைவிரலைவிடச் சிறிய அளவில், மின்னலின் பிரகாசத்துடன் கூடிய எண்ணற்ற தேவர்கள் வெளிப்பட்டனர். அவனது {கிருஷ்ணனின்} முன்நெற்றியில் பிரம்மனும், மார்பில் ருத்ரனனும் தோன்றினார்கள். அவனது கரங்களில் லோகபாலர்கள் தோன்றினார்கள். அவனது வாயில் {முகத்தில்} இருந்து அக்னி, ஆதித்யர்கள், சத்யஸ்கள், வசுக்கள், அசுவினிகள், மருத்துகள் ஆகியோர், இந்திரன் மற்றும் விஸ்வதேவர்களுடன் சேர்ந்து வெளிப்பட்டனர்.

எண்ணற்ற யக்ஷர்களும், கந்தர்வர்களும், ராட்சர்களும்கூட அதே அளவில் அங்கே வெளிப்பட்டனர். அவனது இரு கரங்களில் இருந்து சங்கர்ஷணனும் {பலராமனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} வெளிப்பட்டனர். வலது பக்கத்தில் வில்லுடன் அர்ஜுனன் நின்றான். இடது பக்கத்தில் கலப்பையுடன் பலராமன் நின்றான். அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பின்னே, பீமன், யுதிஷ்டிரன் மற்றும் மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் நின்றனர். அவனுக்கு முன்னே அந்தகர்கள், பிரத்யும்னனுடன் கூடிய விருஷ்ணிகள் மற்றும் வலிமை நிறைந்த ஆயுதங்களை உயர்த்திப் பிடித்திருந்த மற்ற தலைவர்களும் இருந்தனர்.

{பாஞ்சஜன்யம் என்ற} சங்கு, {சுதர்சனம் எனும்} சக்கரம், {கௌமோதகி எனும்} கதாயுதம், சாரங்கம் என்றழைக்கப்படும் வில், {ஹாலம் எனும்} கலப்பை, {சக்தி ஆயுதம் எனும்}, நந்தகம் {என்ற வாள்} மற்றும் இன்னும் பிற ஆயுதங்கள் அவனது பல்வேறு கரங்களில் பிரகாசத்துடனும், அடிப்பதற்கு உயர்த்திப் பிடித்த நிலையிலும் இருந்தன. அவனது கண்கள், மூக்கு {நாசி}, காதுகள் மற்றும் அவனது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் புகையுடன் கலந்த தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவனது உடலின் நுண்துளைகளில் {pores} இருந்து சூரியக் கதிர்களைப் போன்ற தீப்பொறிகள் வெளிப்பட்டன.(அவன் ஆயிரம் கால்களும், ஆயிரம் கைகளும், ஆயிரம் கண்களும் கொண்டவனாக ஆனான். அப்போது, நாகலோகம் அவனது காலுக்கடியில் காணப்பட்டது. சந்திரனும் சூரியனும் கண்களாக, கோள்களும் [கிரகங்களும்] மற்ற அனைத்தும் அவனுடைய மாட்சிமை பொருந்திய உடலாகவும் இருந்தன. ஆறுகளும், கடல்களும் அவனுடைய வேர்வையாக இருந்தன. மலைகள் அனைத்தும் அவனுடைய எலும்புகளாக இருந்தன. மரங்கள் அவனுடைய உடல் மயிர்களாயின. இரவும் பகலும் அவனது இமைக்கொட்டுகள் ஆயின. சரஸ்வதி தேவி அவனது நாவில் இருந்தாள்)

அந்த உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} பயங்கர வடிவத்தைக் {அண்டப்பெருவடிவைக்} கண்டு, துரோணர், பீஷ்மர், உயர்ந்த புத்திக்கூர்மை கொண்ட விதுரன்,  பெரும் நற்பேறுடைய சஞ்சயன் மற்றும் தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்கள் ஆகியோரைத் தவிர, (மற்ற) மன்னர்கள் அனைவரும் அச்சம் கொண்ட இதயத்தோடு தங்கள் கண்களை மூடிக் கொண்டனர். அச்சந்தர்ப்பத்தில் அந்தத் தெய்வீக ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அவர்களுக்கு தெய்வீகப் பார்வையை அளித்திருந்திருந்தான்(துரோணர், பீஷ்மர், விதுரன், சஞ்சயன் மற்றும் முனிவர்கள் மட்டும் தங்கள் சொந்தக் கண்களுடன் அந்த அண்டப்பெருவடிவைக் கண்டனர். அந்தச் சக்தியற்ற மற்றவர்கள் கிருஷ்ணன் அளித்த ஞானக் கண்களால் அதைக் கண்டனர்-அவன் தெய்வீகப் பார்வை கொண்ட கண்களைத் திருதராஷ்டிரனுக்கு அளித்தான். அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன் அற்புதமான அந்த வடிவத்தைக் கண்டான். பிறகு தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், மஹோரகர்கள், பெரும்பேறு பெற்ற முனிவர்கள், லோகபாலர்கள், ஆகியோர் அந்தத் தலைவனைத் {கிருஷ்ணனைத்} தங்கள் தலையால் வணங்கி பணிவுடன் நின்று துதித்தார்கள்.அந்த உயர்ந்த அற்புதக் காட்சியை (குருக்களின்) அந்தச் சபையில் கண்டு, (வானத்தில்) தேவ துந்துபிகள் முழங்கின, (அவன் {கிருஷ்ணன்} மீது) பூமாரி பொழிந்தது.-அவர்கள் “ஓ! தலைவா, கோபத்தை அடக்கும்; அடக்கிவிடும். தேவர்களும், மனிதர்களும் கூடிய இந்தப் பூமி முழுமையாக அழியும் முன்னர் உம்மால் வெளிப்படுத்தப்பட்டபடி உம்முள் இருக்கும் இந்த வடிவத்தை அடக்கிவிடும். படைப்பவனும் நீயே; அழிப்பவனும் நீயே; காப்பவனும் நீயே. அண்டசராசரங்களில் வியாபித்திருப்பவனும் நீயே. ஓ! வலிய தோள்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, அரசர்களிடம் இருப்பது என்ன? அவர்களது வீரம் என்ன? ஆற்றல் என்ன? அவர்களுக்காக இந்தத் தெய்வீக வடிவத்தை வெளிப்படுத்தினாயே” என்றார்கள்.-அப்போது திருதராஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! அழிவற்ற இதயத் தாமரையில் வசிப்பவனே {புண்டரீகாக்ஷனே}! யாதவர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, உலகம் அனைத்துக்கும் இதமானவன் நீயே. அருள்செய்வாய் நீயே {எனவே, அருள்செய்வாயாக}. ஓ! தலைவா, மீண்டும் எனது கண்கள் குருடாகட்டும். உன்னைப் பார்த்த கண்களால் மற்றவரைக் காண நான் விரும்பவில்லை” என்றான்.-அப்போது வலிமைமிக்கத் தோள்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனிடம், “ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, உமது கண்கள் இரண்டும் இனி காணாது” என்றான். ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, அந்த இடத்தில், அதற்கு முன்னர் {கிருஷ்ணனின்} அண்டப் பெருவடிவை {விஸ்வரூபத்தைக்} காண விரும்பிய திருதராஷ்டிரன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கண்களை அடைந்தது அதிசயமே. கண்களைப் பெற்ற திருதராஷ்டிரனைக் கண்டு ஆச்சரியமுற்ற மன்னர்கள், முனிவர்களுடன் கூடி அந்த மதுசூதனனைத் {கிருஷ்ணனைத்} துதித்தனர். )பூமி முழுதும் நடுங்கியது. கடல்கள் கலங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பூமியில் வசிப்போர் பெரும் ஆச்சரியத்தில் நிறைந்தனர். பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த மனிதர்களில் புலி {கிருஷ்ணன்}, தெய்வீகமானதும், உயர்ந்த அற்புதம் நிறைந்ததும், மிகவும் மாறுபட்டதுமான தனது மங்கல வடிவத்தை {விஸ்வரூபக் காட்சியை} விலக்கிக் கொண்டான்.

பிறகு சாத்யகியை ஒரு புறமும், ஹிருதிகனின் மகனை (கிருதவர்மனை) [1] மறுபுறமும், கரத்தோடு கரங்களாகக் கொண்டு, முனிவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்} அங்கிருந்து வெளியேறினான். பிறகு அங்குப் பெரும் ஆரவாரம் ஏற்பட்டபோது, அந்த முனிவர்களும், நாரதரும், பிறரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் செல்ல {அங்கேயே} மறைந்து போனார்கள். மற்றும் ஓர் அற்புத நிகழ்ச்சியாக இதுவும் அங்கே நடந்தது.

அந்த மனிதர்களில் புலி {கிருஷ்ணன்} சபையை விட்டுச் செல்வதைக் கண்ட கௌரவர்களும், மன்னர்கள் அனைவரும், இந்திரனைப் பின்தொடர்ந்து செல்லும் தேவர்களைப் போல, அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றார்கள். எனினும், அளக்கமுடியா ஆன்மா கொண்ட சௌரி {கிருஷ்ணன்}, தன்னைத் தொடர்ந்து வருவோரைக் குறித்து ஒரு சிந்தனையும் செய்யாமல், புகையுடன் கலந்த சுடர்மிகும் நெருப்பைப் போலச் சபையை விட்டு வெளியேறினான்.

{சபையின்} வாயிலில், கிண்கிணி ஒலியெழுப்பும் மணிகளின் வரிசையாலும், தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டதும், பெரும் வேகம் கொண்டதும், மேகங்கள் உருளும் ஒலியைப் போன்ற பெரும் சடசடப்பொலியை எழுப்பும் சக்கரங்களைக் கொண்டதும், வெள்ளைப் புலித் தோல்களால் முழுவதும் மூடப்பட்டதும், தனது {கிருஷ்ணனின்} குதிரைகளான சைவியம் (மற்றும் பிறவற்றால்) பூட்டப்பட்டதுமான தனது {கிருஷ்ணனின்} பெரிய வெண்தேரில், தனது தேரோட்டியான தாருகன் காத்திருப்பதைக் கண்டான். விருஷ்ணிகளுக்குப் பிடித்தமான வீரனும், ஹிருதிகனின் மகனும், வலிமைமிக்கத் தேரோட்டியுமான கிருதவர்மனும் தனது தேரில் அங்கே தோன்றினான். 

எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சௌரி {கிருஷ்ணன்}, தனது தேரைத் தயார் செய்து புறப்படும்போது, மன்னன் திருதராஷ்டிரன் மீண்டும் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! எதிரிகளை வாட்டுபவனே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மகன்கள் மீது நான் கொண்ட அதிகாரத்தை {சக்தியை} நீ கண்டாய். உண்மையில், இவை அனைத்தையும் நீ உனது கண்களாலேயே கண்டாய். இப்போது நீ அறியாதது எதுவுமில்லை. குருக்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நான் முயன்றதைக் கண்டு, (நான் இருக்கும்) எனது நிலையை அறிந்து, என் மீது நீ எந்தச் சந்தேகமும் கொள்ளாதிருப்பதே உனக்குத் தகும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நான் பாண்டவர்கள் மீது எந்தப் பாவம் நிறைந்த உணர்வுகளையும் கொள்ளாதவன். சுயோதனனிடம் {துரியோதனனிடம்} நான் பேசிய வார்த்தைகளை நீ அறிவாய். ஓ! மாதவா {கிருஷ்ணா}, சமாதானத்தை ஏற்படுத்த நான் செய்த அனைத்து முயற்சிகளையும் கௌரவர்களும், பூமியின் மன்னர்கள் அனைவரும் அறிவார்கள்” என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திருதராஷ்டிரன், துரோணர், பெரும்பாட்டனான {பிதாமஹரான} பீஷ்மர், க்ஷத்ரி, பாஹ்லீகர், கிருபர் ஆகியோரிடம், வலிய கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, “குருக்களின் சபையில் நடந்த அனைத்தையும், கல்லாத இழிந்தவனைப் போல, கோபத்தில், தீயவனான துரியோதனன்  எப்படிக் சபையை விட்டு வெளியேறினான் என்பதையும், தான் அதிகாரம் {சக்தி} அற்றவர் என்று மன்னன் திருதராஷ்டிரரே சொல்வதையும் நீங்கள் சாட்சியாகக் கண்டீர்கள். உங்கள் அனைவரின் அனுமதியின் பேரில் நான் இப்போது யுதிஷ்டிரனிடம் திரும்பப் போகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

பிறகு அவர்களை வணங்கிய மனிதர்களில் காளையான சௌரி {கிருஷ்ணன்}, தனது தேரில் ஏறிப் புறப்பட்டான். பாரதர்களில் வீரக் காளைகளான பீஷ்மர், துரோணர், கிருபர், க்ஷத்ரி {விதுரன்}, அஸ்வத்தாமன், விகர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சு ஆகிய வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும் அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர். குருக்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே, அவன் {கிருஷ்ணன்}, கிண்கிணி ஒலியெழுப்பும் மணிகளின் வரிசையால் அலங்கரிக்கப்பட்ட தனது பெரிய வெண்தேரில், தன் அத்தையின் (குந்தியின்) வசிப்பிடத்திற்குச் சென்றான்.

கிருஷ்ணனிடம் பேசிய குந்தி! – உத்யோக பர்வம் பகுதி 132-குந்தியைச் சந்தித்த கிருஷ்ணன், அவளிடம் கௌரவச் சபையில் நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொன்னது; தான் புறப்படப் போவதாகவும், பாண்டவர்களின் தாய் சொல்லிய அனுப்பிய செய்தி என யுதிஷ்டிரனிடம் தான் என்ன சொல்ல வேண்டும் என்றும் கிருஷ்ணன் குந்தியிடம் கேட்டது; ஓர் அரசனுக்கு உரிய கடமைகளைக் குறித்துக் கிருஷ்ணன் மூலமாகக் குந்தி யுதிஷ்டிரனுக்குச் சொன்ன நீதிகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தியின் வசிப்பிடம் சென்று அவளது பாதங்களை வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் அவளுக்குச் சுருக்கமாகச் சொன்னான். வாசுதேவன் {கிருஷ்ணன் – குந்தியிடம்}, “ஏற்கத்தகுந்ததும், காரணங்களுடன் கூடியதுமான பல்வேறு வார்த்தைகள், என்னாலும், முனிவர்களாலும் சொல்லப்பட்டும் துரியோதனன் அவற்றை ஏற்கவில்லை.

துரியோதனனையும் அவனது தொண்டர்களையும் பொறுத்தவரை, அவர்களது {அழிவு} நேரம் வந்துவிட்டது. உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு, நான் பாண்டவர்களிடம் விரைந்து செல்வேன். உனது செய்தியாக நான் அவர்களிடம் {பாண்டவர்களிடம்} என்ன சொல்ல வேண்டும்? ஓ! பெரும் அறிவு படைத்தவளே, நான் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

குந்தி {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, நல்ல ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக, “ஓ மகனே {யுதிஷ்டிரா}, உனது அறம் வெகுவாகக் குறைந்து வருகிறது. வீண் செயல் புரியாதே. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வேதங்களின் உண்மைப் பொருளை உணரும் திறனற்றவன் அதைப் படித்தாலும் உண்மையில் கல்லாதவனே. அது போல, நீ வேதங்களில் அறம் சார்ந்த வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொள்கிறாய். படைப்பாளன் {பிரம்மன்} வகுத்துள்ள படி, உனது சொந்த வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளில் உனது கண்களைச் செலுத்துவாயாக. கொடூரச் செயல்கள் அத்தனைக்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், தன் கரங்களின் ஆற்றலையே நம்பியிருக்கும் க்ஷத்திரியன், அவனது (பிரம்மனின்) கரங்களில் இருந்தே உண்டாக்கப்பட்டான்.

இது தொடர்பாக, நான் முதியோரிடம் இருந்து கேட்டறிந்த ஒரு நிகழ்வைக் கேட்பாயாக. பழங்காலத்தில், அரசமுனியான முசுகுந்தனிடம் மனநிறைவு கொண்ட வைஸ்ரவணன் {குபேரன்}, இந்தப் பூமியைக் கொடையாக அவனுக்கு {முசுகுந்தனுக்கு} அளித்தான். பின்னவனோ {முசுகுந்தனோ} அந்தக் கொடையை ஏற்காமல், “எனது கரங்களின் ஆற்றலினால் வெல்லப்பட்ட அரசுரிமையையே நான் அனுபவிக்க விரும்புகிறேன்” என்றான். இதனால் பெரிதும் மகிழ்ந்த வைஸ்ரவணன் {குபேரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து போனான். க்ஷத்திரிய வகைக் கடமைகளை முழுமையாக நோற்ற மன்னன் முசுகுந்தன், தனது கரங்களின் ஆற்றலினால் இந்தப் பூமியை வென்று ஆட்சி செலுத்தினான். 

மன்னனால் நன்கு பாதுகாக்கப்பட்ட குடிமக்கள் பயிலும் அறத்தில் {தர்மத்தில்} ஆறில் ஒரு பங்கு மன்னனால் அடையப்படுகிறது. தானே பயிலும் அறத்தால் அந்த மன்னன் தெய்வத் தன்மையை அடைகிறான். அதே வேளையில் அவன் பாவத்தைச் {மறம்-அதர்மம்} செய்தால், அவன் நரகத்திற்குச் செல்கிறான்.

குற்றவியல் சட்டங்களை {தண்ட நீதியை} முறையாகப் பயன்படுத்தும் ஆட்சியாளன், நால்வகை மக்களையும் தங்கள் கடமைகளைச் செய்ய வைத்தால், அஃது (ஆட்சியாளன்) அறம் (பொருளையும், முக்தியையும்) ஈட்ட வழிவகுக்கிறது. குற்றவியல் சட்டத்தின் {தண்ட நீதியின்} ஒரு பகுதியின் ஓர் எழுத்தைக் கூட உயிரற்றதாக்கமல், ஒரு மன்னன் அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்தும்போது, காலங்களில் சிறந்த அந்தக் காலத்தில்தான் கிருதயுகம் ஏற்படுகிறது. காலம் மன்னனுக்குக் காரணமா? மன்னன் காலத்துக்குக் காரணமா? என்பதில் உனக்குச் சந்தேகம் வேண்டாம். மன்னனே காலத்திற்குக் காரணமாவான் (இதை உறுதியாக அறிந்து கொள்வாயாக).

கிருத, திரேத அல்லது துவாபர யுகங்களை மன்னனே உண்டாக்குகிறான். உண்மையில், நான்காவது யுகத்துக்கும் (கலியுகத்துக்கும்) மன்னனே காரணமாக இருக்கிறான். கிருத யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் {அதாவது சொர்க்கத்தை முடிவின்றி அனுபவிக்கிறான்}. திரேதா யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அதீதமாக அல்ல. {அதாவது சொர்க்கத்தை முடிவுள்ளதாகவே அனுபவிக்கிறான்}. துவாபர யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், தனக்கு உரியதை அனுபவிக்கிறான். எனினும் கலியுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன் பாவத்தை அதீதமாக ஈட்டுகிறான். அதன்பேரில், அந்த மன்னன் நரகத்தில் எண்ணற்ற வருடங்களுக்கு வசிக்கிறான். உண்மையில், மன்னனின் பாவங்கள் உலகை பாதிக்கச் செய்கின்றன, உலகின் பாவங்களும் அவனைப் பாதிக்கின்றன.

உனது குலமரபுக்குப் பொருத்தமான அரச கடமைகளை நீ நோற்பாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தை ஓர் அரசமுனியினுடையது அல்ல. உண்மையில், பலவீனமான இதயத்தால் கறைபடிந்தவனும், இரக்கம் கொள்பவனும், நிலையற்றவனுமான ஒருவனால், தனது குடிமக்களை அன்புடன் பேணிக்காத்து தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியாது.

என்ன புரிதலில் நீ இப்போது செயல்பட்டுவருகிறாயோ, அதை {அந்தச் செயல்களை}, {உனது தந்தை} பாண்டுவோ, நானோ, உனது பாட்டனோ {பீஷ்மரோ} எப்போதும் விரும்பியதில்லை. நாங்கள் உனக்கு ஆசிகள் வழங்கிய போதெல்லாம், வேள்வி, கொடை, தகுதி {புண்ணியம்}, வீரம், குடிமக்கள், பிள்ளைகள், ஆன்ம பெருமை, பலம், சக்தி ஆகியவற்றை வேண்டியே உனக்கு ஆசி கூறினோம். நன்மை விரும்பும் அந்தணர்கள் {வேள்வியில்} தங்கள் சுவாகாக்களையும், சுவதாக்களையும் சேர்த்து, உனக்கு நீண்ட ஆயுள், செல்வம், பிள்ளைகள் ஆகியவை ஏற்பட தேவர்களையும், பித்ருக்களையும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவர்களை முறையாக வழிபட்டனர்.

தேவர்களைப் போலவே தாயும் தந்தையும் எப்போதும் தங்கள் பிள்ளைகளுக்காகத் தயாளம், கொடை, கல்வி, வேள்வி, குடிமக்களின் மீது ஆட்சி ஆகியவற்றையே எப்போதும் விரும்புகின்றனர். இவை நீதிமிக்கதோ {அறமோ}, நீதியற்றதோ {மறமோ},  எப்படிப்பட்டதாக இவை இருப்பினும், உனது பிறப்பின் விளைவால் நீ அதைப் {க்ஷத்ரியக் கடமைகளைப்} பயிலவே வேண்டும்.

(ஓ! கிருஷ்ணா, இவற்றையெல்லாம் {அவன்} செய்யும்படி பார்), உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும், ஆதரவுக்கான வழிமுறைகள் அற்றவர்களாக இருப்பவர்கள், துன்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். துணிச்சல் மிக்கவனும், தாராளமானவனுமான ஏகாதிபதி ஒருவனை அணுகும் பசி நிறைந்த மனிதர்கள், மனநிறைவடைந்து, அவனுக்குப் பக்கத்திலேயே வாழ்கிறார்கள். அதைக்காட்டிலும் மேன்மையான அறம் என்ன? அறம் சார்ந்த மனிதன் ஒருவன், நாட்டை அடைந்த பிறகு, கொடையால் சிலரையும் {தானத்தால்}, பலத்தால் சிலரையும் {தண்டத்தால்}, இனிய சொற்களால் {சாமத்தால்} சிலரையும் என உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்தணன் ஒருவன் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; 
ஒரு க்ஷத்திரியன் (குடிமக்களைப்) பாதுகாக்க வேண்டும்; 
ஒரு வைசியன் செல்வம் ஈட்ட வேண்டும்; 
ஒரு சூத்திரன் மற்ற மூவருக்கும் சேவை செய்ய வேண்டும்.
எனவே, பிச்சை உனக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. உழவும் {விவசாயம்} உனக்குப் பொருத்தமானது இல்லை.

நீ ஒரு க்ஷத்திரியன். எனவே, துயரில் இருக்கும் அனைவரையும் நீ பாதுகாப்பவனாவாய். உனது கரங்களின் ஆற்றலைக் கொண்டே நீ வாழ வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ இழந்த உனது தந்தையின் பங்கை, சமரசப் பேச்சுவார்த்தை மூலமோ {சாமத்தாலோ}, எதிரிகளுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தியோ {பேதத்தாலோ}, பணத்தைக் கொடையாகக் கொடுத்தோ {தானத்தாலோ}, வன்முறையாலோ {தண்டத்தாலோ}, நன்கு இயக்கப்படும் கொள்கையினாலோ {நீதியினாலோ} மீட்டெடுப்பாயாக.

நண்பர்களின் இன்பங்களை அதிகரிப்பவனே {யுதிஷ்டிரா}, உன்னைப் பெற்ற பிறகும், நண்பர்களை இழந்த நான், பிறரால் தரப்படும் உணவில் வாழும் நிலை இருப்பதைவிட வேறு என்ன பெரிய துயரம்  இருக்க முடியும்? மன்னர்களின் நடைமுறைப்படி போரிடுவாயாக. உனது மூதாதையர்களை (புகழ்க்கேட்டில்) ஆழ்த்தாதே. உனது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்து, உனது தம்பிகளுடன், பாவம் நிறைந்த முடிவை {கதியை} அடையாதே” {என்று யுதிஷ்டிரனிடம் சொல்லும்படி கிருஷ்ணனிடம் சொன்னாள் குந்தி}.

விதுலையின் நிந்தனை! – உத்யோக பர்வம் பகுதி 133-(பகவத்யாந பர்வம் –62) {விதுலோபாக்யானம் – 1}விதுலை தனது மகனுக்கு உரைத்த நீதிகளை யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு குந்தி கிருஷ்ணனிடம் சொல்வது; போரில் தோற்று வெறுப்புற்றுக் கிடந்த தன் மகனைச் சோம்பல் நிலையில் இருந்து தூண்டுவதற்காக விதுலை உரைத்த நீதிகள் …

குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, இது தொடர்பாகப் பழங்காலத்தில் விதுலைக்கும் அவளது மகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் சொல்லப்படுகிறது. இதில் இருந்து சேகரிக்கப்படும் எதையும், அல்லது அதைவிடப் பயன்தரத்தக்க வேறு எதையும் நீ யுதிஷ்டிரனுக்குச் சொல்வதே தகும்.

உயர்ந்த குடியில் பிறந்தவளும், பெரும் முன்னறிதிறன் கொண்டவளுமான பெண் ஒருத்தி விதுலை என்ற பெயரில் இருந்தாள். புகழ்பெற்ற அவள், சிறிது கோபம் நிறைந்தவளாகவும், குறுக்கு மனம் கொண்டவளாகவும், க்ஷத்திரிய அறங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவளாகவும் இருந்தாள். நன்கு கல்வி பெற்றிருந்த அவள் {விதுலை} பூமியின் மன்னர்கள் அனைவராலும் அறியப்பட்டவளாக இருந்தாள். பெரும் கல்வியறிவு பெற்ற அவள், பல்வேறு விசாரணைகளை அறிந்தவளாகவும், உரைகளைக் கேட்டவளாகவும் இருந்தாள்.

இளவரசியான விதுலை, சிந்துக்களின் {சிந்து நாட்டு} மன்னனிடம் தோற்று, துயரத்தினால் சோர்வடைந்த இதயத்துடனும் படுத்துக் கிடந்த தனது சொந்த மகனைக் கண்டித்துக் கொண்டிருந்தாள். அவள் {விதுலை தன்மகனிடம்}, “ஓ! எதிரிகளின் மகிழ்ச்சியை மேம்படுத்துபவனே, நீ எனது மகன் இல்லை. நீ எனக்கும், உனது தந்தைக்கும் பிறக்கவில்லை! நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்? கோபமே இல்லாத உன்னை ஆண்மகனாக எண்ண முடியாது. உனது அம்சங்கள் உன்னை ஓர் அலி எனக் காட்டிக் கொடுக்கின்றன. நீ வாழும் காலம் வரை நீ துயரத்திலேயே மூழ்கப் போகிறாயா?

நீ உனது சொந்த நலனை விரும்புகிறாய் எனில், பாரத்தை (உன் விவகாரங்களை உன்தோளில்) சுமப்பாயாக. உனது ஆன்மாவை அவமதிக்காதே. அற்ப காரியங்களால் மனநிறைவு கொள்ளாதே. உனது நலனில் உனது இதயத்தை நிறுத்து. அஞ்சாதே. உனது அச்சங்களைக் கைவிடு. ஓ! பேடியே, எழுவாயாக. உனது தோல்விக்குப் பிறகு, எதிரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்து, நண்பர்களைத் துயரில் ஆழ்த்தி, மானம் அனைத்தையும் இழந்து இப்படிப் படுத்துக் கிடக்காதே.

சிறு ஓடைகள், சிறு அளவு நீரில் மட்டுமே நிரம்பிவிடுகின்றன. எலியின் உள்ளங்கைகள் சிறு அளவிலேயே நிரம்பிவிடுகின்றன. ஒரு கோழை சிறியவற்றை அடைந்ததுமே விரைவில் மனநிறைவு அடைந்துவிடுகிறான். நாயைப் போலப் பரிதாபமாக இறப்பதைவிட, ஒரு பாம்பின் விஷப்பல்லைப் பறித்து அழிந்து போகலாம். உன் உயிரையே பணயம் வைத்தாவது உனது ஆற்றலை வெளிப்படுத்து.

வானில் அச்சமற்று உலவும் பருந்தைப் போல, நீயும் அச்சமற்று உலவு அல்லது உனது ஆற்றலை வெளிப்படுத்து, அல்லது ஒரு சந்தர்ப்பத்திற்காக அமைதியாக எதிரியைக் கவனித்துவா. இடியால் தாக்ககுண்டவன் போலவோ, இறந்தவன் போலவோ ஏன் இப்படிக் கிடக்கிறாய்? எழுவாய் ஓ! கோழையே, எதிரியால் வீழ்த்தப்பட்ட பிறகு உறங்காதே. இப்படிப் பரிதாபமாக அனைவரின் பார்வையில் இருந்தும் மறைந்து போகாதே. உனது செயல்களால் உன்னை அறியப்படுத்துவாயாக {புகழடைவாயாக}.

நடுநிலையையோ, தாழ்ந்த நிலையையோ, தாழ்மையிலும் தாழ்ந்த நிலையையோ அடையாதே. (நன்கு ஊட்டப்பட்ட நெருப்பு போல) சுடர்விட்டு எரிவாயாக {பிரகாசிப்பாயாக}. திந்துக மரத்திலான கொள்ளையைப் போல, ஒருக்கணமாவது சுடர்விடுவாயாக. நெல் உமியின் சுடர்களற்ற நெருப்பு போல {உமிக்காந்தல் போல} ஆசையால் எப்போதும் புகையாதே. எப்போதும் புகைந்து கொண்டிருப்பதைவிட ஒருக்கணம் சுடர்விடுவதே சிறந்தது.

மிகக் கடுமையானவனாகவோ, மிக மென்மையானவனோக ஓர் அரச குலத்தில் எந்த மகனும் பிறக்காதிருக்கட்டும். போர்க்களத்திற்குச் சென்று, ஒரு மனிதனால் அடையத்தக்க பெரும் சாதனைகள் அனைத்தையும் அடையும் ஒரு வீர மனிதன் க்ஷத்திரிய வகைக்கான கடமைகளுக்குத் தான் பட்டிருக்கும் கடனில் இருந்து விடுபடுகிறான். அப்படிப்பட்ட ஒருவன் தன்னைத் தானே அவமதித்துக் கொள்வதில்லை. அவன் தனது நோக்கத்தை அடைகிறானோ இல்லையோ, புத்தியுள்ள எவனும் துக்கத்தில் ஈடுபடமாட்டான்.

மறுபுறம், அப்படிப்பட்ட ஒருவன், அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை, தனது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் சாதிப்பான். எனவே, ஓ! மகனே, உனது வீரத்தை வெளிப்படுத்தி, அல்லது தவிர்க்க முடியாத முடிவை அடைவாயாக. உண்மையில் உனது வகைக்கான கடமைகளை அலட்சியம் செய்து நீ ஏன் உயிர்வாழ வேண்டும்? ஓ! பேடியே, உனது அறச்சடங்குகள் அனைத்தும், உனது சாதனைகள் அனைத்தும் போய்விட்டன. உனது இன்பங்களுக்கான வேர்கள் அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. அதன் பிறகு நீ ஏன் வாழ்கிறாய்?

ஒருவன் வீழ்ந்து மூழ்க வேண்டிய நிலைவந்தால், அவன் எதிரியின் இடுப்பைப் [1] பற்றிக் கொள்ள வேண்டும். (அதன்பிறகு எதிரியுடன் சேர்ந்து விழ வேண்டும்). ஒருவனது வேர்களே வெட்டப்பட்டுவிட்டாலும், அவன் துயரத்திற்கு ஆளாகக் கூடாது. உயர்ந்த சாதிக் குதிரைகள், பெரும் பாரங்களை இழுக்கவும் சுமக்கவும் தங்கள் ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவற்றின் நடத்தையை நினைவுகூர்ந்து, உனது மானம் மற்றும் பலம் அனைத்தையும் திரட்டுவாயாக. எதில் ஆண்மை அடங்கியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வாயாக. உன் விளைவாக மூழ்கியிருக்கும் உனது குலத்தை உனது உழைப்பால் {முயற்சியால்} உயர்த்துவாயாக.

மனிதர்களின் விவாதப் பொருளாக ஒரு பெரும் சாதனையையும் செய்யாதவன் மக்கள் தொகையை மட்டுமே அதிகரிக்கிறான். அவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. ஈகை, தவம், உண்மை {சத்தியம்}, கல்வி, செல்வமீட்டல் ஆகியவற்றால் புகழை அடையாதவன், தனது தாய் வெளியிட்ட மலம் மட்டுமே ஆவான். மறுபுறம், கல்வி, தவம், செல்வம், வீரம், செயல்கள் ஆகியவற்றில் பிறரை விஞ்சி நிற்கும் ஒருவனே (உண்மையில்) ஆணாவான் {ஆண்மையுள்ளவன் ஆவான்}. கோழைக்கு மட்டுமே தகுந்ததும், சோம்பல் நிறைந்ததும், இழிந்ததும், புகழற்றதும், மோசமானதுமான பிச்சையெடுக்கும் தொழிலைத் தேர்ந்தெடுப்பது உனக்குத் தகாது.

எவனைக் கண்டால் எதிரிகள் மகிழ்வார்களோ, எவனை ஆண்கள் வெறுத்து ஒதுக்குவார்களோ, எவன் இருக்கைகளும் ஆடைகளும் இல்லாமல் இருக்கிறானோ, அற்ப பொருட்களை அடைந்து எவன் மனநிறைவு கொள்கிறானோ, எவன் எதுவுமில்லாதிருக்கிறானோ, எவன் வீரமற்று இழிந்தவனாக இருக்கிறானோ அந்தப் பலவீனமான மனிதனை நண்பனாக அடைவதில் நண்பர்கள் எப்போதும் எந்த மகிழ்ச்சியையும் அடைவதில்லை. ஐயோ, நமது நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, வீட்டில் இருந்தும் துரத்தப்பட்டு, அனைத்துவகையான இன்பங்களையும் மகிழ்ச்சிகளையும் இழந்து, ஆதாரங்களை இழந்திருக்கும் நாம், வாழ்வாதாரம் இன்மையால் அழிய வேண்டியிருக்குமே.

நல்லோருக்கு மத்தியில் கெட்ட நடத்தை கொண்டவனும், உனது குலத்தையும் குடும்பத்தையும் அழிப்பவனுமான உன்னைப் பெற்றதன் மூலம், ஓ! சஞ்சயா, ஒரு மகனின் வடிவத்தால் நான் கலியைப் பெற்றுவிட்டேனே. ஓ! கோபமற்றவனும், உழைப்பற்றவனும் {முயற்சியற்றவனும்}, சக்தியற்றவனும், எதிரிகளுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனுமான உன்னைப் போன்ற ஒரு மகனை எந்தப் பெண்ணும் பெறாதிருக்கட்டும். புகையாதே. உனது வீரத்தை வெளிப்படுத்திச் சுடர்விட்டு எரிவாயாக. உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஒருக்கணமாயிருந்தாலும், குறுகிய காலமே இருந்தாலும், நீ உனது எதிரிகளின் தலையில் சுடர்விட்டு எரிவாயாக.

கோபம் கொள்பவனும், மன்னிக்காதவனுமே ஆண்மகனாவான். மறுபுறம், மன்னிக்கும் தன்மையுடன் கோபமில்லாதவன் ஆணும் அல்லாதவன், பெண்ணும் அல்லாதவனாவான். கருணை, இதயத்தில் மென்மை, முயற்சியின்மை {உழைப்பின்மை}, அச்சம் ஆகியவை செழிப்பை அழிப்பனவாகும். உழைப்பில்லாதவன் பெரியது எதையும் வெல்லமாட்டான். எனவே, ஓ! மகனே {சஞ்சயா}, உனது சொந்த முயற்சியால், தோல்விக்கும், வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் இவற்றில் இருந்து உன்னை நீயே விடுவித்துக் கொள்வாயாக. இதயத்தை உருக்காக்கிக்  கொண்டு {இரும்பாக்கிக் கொண்டு} உனது சொந்த உடைமைகளை மீட்பாயாக.

(பறம் [பிறன்] param என்கிற} தன் எதிரிக்கு ஈடானதாக இருப்பதால் ஒரு மனிதன் புருஷன் {Purusha} என்று அழைக்கப்படுகிறான். எனவே, பெண்ணைப் போல வாழ்பவனுக்குப் புருஷன் (ஆண்மகன்) என்பது தவறான பெயராகும். சிங்கம் போல நடப்பவனான பெரும் பலமிக்க ஒரு வீர மன்னன் அனைத்துயிரும் போகும் பாதையில் சென்றாலும் {இறந்துவிட்டாலும்}, அவனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடிமக்கள் மகிழ்ச்சி அற்றவர்களாக ஆகமாட்டார்கள். தனது சொந்த மகிழ்ச்சியையும், இன்பங்களையும் அலட்சியம் செய்யும் ஒரு மன்னன், தனது நாட்டின் செழிப்புக்கு முயற்சி செய்து, தனது ஆலோசகர்களும், நண்பர்களும் மகிழும் வண்ணம் விரைவில் வெல்கிறான்” என்றாள் {விதுலை}.

{தாயின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, “உன்னால் என்னைக் காண முடியவில்லை என்றால், இந்த உலகத்தால் உனக்கு என்ன பயன்? உனது ஆபரணங்களால் என்ன பயன்? அனைத்து வகை இன்பங்களாலும், ஏன் இந்த உயிரினாலும் கூட என்ன பயன்?” என்று கேட்டான்.

அதற்கு அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்}, “இழிந்தோருக்குச் சொந்தமான பகுதிகளை நமது எதிரிகள் அடையட்டும். மரியாதையுடன் கருதப்படும் மனிதர்களால் அடையத்தக்க பகுதிகளை நமது நண்பர்கள் அடையட்டும். பலமற்றோர், {தங்கள் கட்டளைகளை மேற்கொள்ள} சேவகர்கள் மற்றும் பணியாட்கள் அற்றோர், பிறரால் வழங்கப்படும் உணவில் வாழ்வோர் ஆகிய இழிந்த மனிதர்களின் வாழ்வுமுறையை நீ பின்பற்றாதே. மேகங்களை நம்பியிருக்கும் பூமியின் உயிரினங்களைப் போலவோ, இந்திரனை நம்பி இருக்கும் தேவர்களைப் போலவோ, வாழ்வாதாரத்திற்காக அந்தணர்களும் உனது நண்பர்கள் அனைவரும் உன்னை நம்பி இருக்கட்டும்.

ஓ! சஞ்சயா, பழுத்த கனிகள் நிறைந்த மரத்திற்குப் பறவைகள் வருவதைப் போல [2] வாழ்வாதாரத்திற்காக எவனை நம்பி அனைத்துயிரும் இருக்கின்றனவோ அவனது வாழ்வு வீணானது அல்ல. உண்மையில், சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலால் மகிழ்ச்சி அடையும் தேவர்களைப் போல, எவனது ஆற்றல் மூலம் நண்பர்கள் மகிழ்ச்சியை அடைவார்களோ, அந்த வீர ஆண்மகனின் வாழ்வு பெருமைமிக்கதாகும். தனது சொந்த கரங்களின் ஆற்றலை நம்பி பெருமையுடன் வாழும் ஒரு மனிதன், இவ்வுலகில் புகழை வென்ற நிலையையும், மறுஉலகில் அருள் நிலையையும் அடைகிறான்” என்றாள் {விதுலை}.”

ஆலிலே பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தன்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி
ஆலிலை ஆதிபோனால் அங்கு வந்திருப்பர் உண்டோ?– விவேக சிந்தாமணி

“உழைப்பே ஆண்மை” என்ற விதுலை! – உத்யோக பர்வம் பகுதி 134-விதுலை தன் மகன் தனது வார்த்தைகளக் கேட்கவில்லையே என  வருந்தியது; ஒரு க்ஷத்திரியன் எப்போது திருடனாகக் கருதப்படுகிறான்? அந்தணர் ஒருவர் தன் மகன் குறித்து முன்னறிவித்தது; சம்பரன் சொன்ன நிலை; தான் இருந்த உன்னத நிலை; எந்த நிலைகளை விட மரணமே மேல்? எதைக் கைவிட்டால் எதிரிகளை வெல்லலாம்? இந்திரன் அடைந்த நிலை; எவனை எதிரிகள் வணங்குவார்கள்? கோழைகளால் ஏற்படும் நிலை? க்ஷத்திரிய அறங்களின் நித்தியமான சாறுகள்; உழைப்பே ஆண்மை என்பன போன்றவற்றைத் தன் மகனுக்கு விதுலை சொன்னது.

விதுலை {தன் மகன் சஞ்சயனிடம்} சொன்னாள், “இத்தகு துயரில் விழுந்து உனது ஆண்மையைக் கைவிட நீ விரும்புகிறாயெனில், தாழ்ந்தோரும், இழிந்தோரும் நடக்கும் பாதையில் நீ மிக விரைவில் நடப்பாய். உயிரின் மீது கொண்ட ஆசையால் தனது பலத்திலும், ஆற்றலிலும் சிறந்ததைப் பயன்படுத்தித் தனது சக்தியை வெளிப்படுத்தாத ஒரு க்ஷத்திரியன் திருடனாகக் கருதப்படுகிறான். ஐயோ, பயன் நிறைந்ததும், சரியானதும், காரணங்கள் கொண்டதுமான எனது வார்த்தைகள், சாகப் போகும் மனிதனுக்கு மருந்தைப் போல, உன்னில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லையே.

சிந்துக்களின் மன்னன் பல தொண்டர்களைக் கொண்டிருக்கிறான், என்பது உண்மையே! எனினும் அவர்கள் {அத்தொண்டர்கள்} அனைவரும் மகிழ்ச்சியை அடையாமல் தள்ளப்பட்டார்கள். {சிந்து மன்னனிடம் அவர்கள் அதனால் பகைமை கொண்டார்கள்}. பலவீனத்தாலும், முறையான வழிகளை அறியாததாலும், (தங்கள் முயற்சிகளால் விடுபடாத) அவர்கள் தனது தலைவனின் {சிந்துமன்னனின் அழிவிற்காக} துயருக்காகக் காத்திருக்கிறார்கள். பிறரைப் (அவனது {சிந்து மன்னனின்} வெளிப்படையான எதிரிகளைப்} பொறுத்தவரை, நீ உனது ஆற்றலை வெளிப்படுத்துவதை அவர்கள் கண்டால் தங்கள் உடைமைகளுடன் அவர்கள் உன்னைச் சேர்வார்கள். அவர்களுடன் சேர்ந்து, மலைகளையும், காடுகளையும் தஞ்சமாக அடைந்து, நீ எதிரியை வீழ்த்த தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பாயாக. ஏனெனில், அவனும் நோய் மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டவன் அல்ல.

உனது பெயரால் நீ சஞ்சயனாவாய் {வெற்றியாளனாவாய்}. எனினும், அதற்கான குறிப்புகள் எதையும் நான் உன்னிடத்தில் காணவில்லை. உனது பெயருக்கு உண்மையுள்ளவனாக இருப்பாயாக. {உண்மையில்} எனது மகனாவாயாக. ஓ! உனது பெயர் பொய்யாகாதிருக்கட்டும். சிறுவனாக இருக்கும் உன்னைக் கண்டவரும், பெரும் முன்னறிதிறனும், ஞானமும் கொண்டவருமான அந்தணர் ஒருவர், “பெரும் துயரில் விழும் இவன், மீண்டும் பெரும் புகழை வெல்வான்” என்று சொன்னார். அவரது வார்த்தைகளை நினைவுகூரும் நான், உனது வெற்றியை நம்புகிறேன். அதன் காரணமாகவே, ஓ! மகனே {சஞ்சயா}, நான் உன்னிடம் இப்படிச் சொல்கிறேன். மேலும் மேலும் நான் உன்னிடம் அப்படியே சொல்வேன்.

கொள்கை வழிகளின்படி {நீதியின்படி} தனது நோக்கங்கள் கனியும் {பலிக்கும்} தருணத்தைத் தொடரும் {எதிர்நோக்கியிருக்கும்} ஒரு மனிதன், தனது நோக்கங்களுக்காக தன்னுடன் உழைக்கும் மக்களைப் பெற்றிருந்தால், அவன் வெற்றி அடைவது எப்போதும் நிச்சயமே. ஓ! சஞ்சயா, ஓ! கல்விமானே, போரில் இருந்து உன்னை விலக்கிக் கொள்ளாமல், ‘நான் அடைந்திருப்பது வெற்றியோ, தோல்வியோ, நான் பின்வாங்க மாட்டேன்’ என்ற தீர்மானத்துடன் போரிடுவாயாக.

“தினம் தினம் தனது உணவுக்காக ஒருவன் ஆவலாக இருக்கும் நிலையைவிடப் பரிதாபகரமான நிலை வேறு எதுவும் இல்லை” என்று சம்பரன் சொல்லியிருக்கிறான். ஒருத்தியின் கணவனும், மகன்களும் இறந்ததைவிட, அது போன்று இருப்பதே {உணவை எதிர்பார்த்து இருப்பதே} பெரும் துன்பமான நிலை எனச் சொல்லப்படுகிறது. ஏழ்மை என்று அழைக்கப்படும் நிலை மரணத்தின் வடிவமே ஆகும்.

என்னைப் பொறுத்தவரை, நான், உயர்ந்த ஒரு குலத்தில் பிறந்து, மற்றொரு உயர்ந்த குலத்தில் குடியேறியவள் ஆவேன். அனைத்து மங்கலப் பொருட்களையும் அடைந்து, எனது கணவனால் வழிபடப்பட்டு இருந்த எனது சக்தி அனைவர் மீதும் பரவியிருந்தது. நண்பர்களுக்கு மத்தியில் இருந்த என்னை, விலையுயர்ந்த மாலைகளோடும், ஆபரணங்களோடும், சுத்தமான உடலோடும், அற்புதமான ஆடைகளோடும், மிகவும் மகிழ்ச்சிகரமாகவும்தான் எப்போதும் நமது நண்பர்கள் கண்டிருக்கிறார்கள். (உணவில்லாமல்) நானும், உனது மனைவியும் பலவீனமாவதைக் காணும் நீ, ஓ! சஞ்சயா, உயிருடன் வாழ விரும்பமாட்டாய்.

நம்மிடம் பணி செய்த பணியாட்கள் அனைவரும், நமது ஆசான்களும், நமது இயல்பான {சாதாரண} மற்றும் இயல்புக்குமிக்க {அசாதாரண} புரோகிதர்களும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்மைவிட்டுச் செல்வதைக் காணும் உனக்கு வாழ்வதனால் என்ன பயன் ஏற்படும்? முன்பு போலவே மெச்சத்தகுந்த, புகழ்மிக்க உனது சாதனைகளில் நீ ஈடுபடுவதை இப்போது நான் காணவில்லை எனும் போது, எனது இதயம் எப்படி அமைதியை அடையும்?

அந்தணர் ஒருவருக்கு, “ஒன்றுமில்லை” என்று நான் சொல்ல வேண்டியிருந்தால், எனது இதயமே வெடித்துவிடும். இதற்கு முன் எனது கணவர் எந்த அந்தணருக்கும், “இல்லை” என்று சொன்னதே இல்லை. நாமே பிறரின் புகலிடம், நாம் என்றும் பிறரிடம் தஞ்சமடைந்ததில்லை. இப்படியிருக்கையில், அடுத்தவரைச் சார்ந்து எனது வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை எனக்கு இருந்தால், நிச்சயம் எனது உயிரை நான் விட்டுவிடுவேன். கடக்க முடியாத கடலைக் கடக்கும் வழிகளாக எங்களுக்கு நீ இருப்பாயாக. படகுகள் இல்லாத நிலையில், நீயே எங்களது படகாவாய். இடமில்லாத போது, நீயே எங்களுக்கு இடமாவாயாக. மாண்டு போன எங்களை மீட்டெடுப்பாயாக.

நீ உயிர் மீது கொண்டிருக்கும் ஆசையை விட்டாயானால், உனது எதிரிகள் அனைவரிடமும் போட்டியிடத் தகுந்தவனாவாய். ஆனால், அலிகளுக்குத் தகுந்த வாழ்முறையை நீ நோற்பாயானால், ஆன்மா நொந்து, துயர் நிறைந்த இதயத்துடன் அப்படி வாழ்வதைக் காட்டிலும், நீ உனது உயிரைத் தியாகம் செய்வதே சிறந்ததாகும். ஒரே எதிரியைக் கொன்றால் கூட ஒரு வீரமிக்க மனிதன் புகழை வெல்கிறான். விருத்திரனைக் கொன்ற இந்திரன் பெரும் இந்திரனாகி {மஹேந்திரன் ஆகி}, தேவர்களின் அரசுரிமையையும், சோமச்சாற்று குவளையையும் {மாஹேந்திரம் என்கிற சோமக்கிரகத்தையும்}, உலகங்கள் அனைத்தின் தலைமையையும் அடைந்தான். போர்க்களத்தில் தனது பெயரைச் சொல்லி, உருக்குக் கவசங்கள் அணிந்த தனது எதிரிகளை அறைகூவி அழைத்து, பகையணி வீரர்களில் முதன்மையானவர்களைக் கொன்றும் அடித்தும், நல்ல போரினால் எப்போது ஒரு வீரன் பரந்து விரிந்த புகழை அடைகிறானோ, அப்போது அவனது எதிரிகள் வலியை உணர்ந்து அவனை வணங்குவார்கள் {அடிபணிவார்கள்}.

கோழைகளோ தங்கள் சொந்த நடத்தையின் விளைவால் ஆதரவற்றவர்களாகி, திறன்மிக்கவர்களும், வீரர்களும், உயிரைத் துச்சமாக மதித்துப் போரிடுபவர்களுமாக இருப்பவர்களகுக்குத் தனது ஆசைப் பொருட்கள் அத்தனையும் தாரைவார்ப்பார்கள். நாடுகள் பெரும் அழிவை அடைந்தாலோ, உயிரே போய்விடக் கூடிய சூழ்நிலை இருந்தாலோ கூட, உன்னதமானவர்கள், தங்கள் அருகே இருக்கும் எதிரிகளைக் கொல்லாமல் ஓடிப் போவதில்லை. அரசுரிமை என்பது சொர்க்கத்தின் வாயிலோ, அமிர்தமோதான். இவற்றில் ஒன்றாக அதைக் {அரசுரிமையைக்} கருதி, நீ அறியாத அதையே மனதில் கொண்டு, எதிரிகளுக்கு மத்தியில் எரியும் கொள்ளியென விழுவாயாக.

ஓ! மன்னா {சஞ்சயா}, போரில் உனது எதிரிகளைக் கொல்வாயாக. உனது {க்ஷத்திரிய} வகைக்கான கடமைகளை நோற்பாயாக. ஓ! எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவனே {சஞ்சயா}, உற்சாகமிழந்தவனாக நான் உன்னைக் காணாதிருப்பேனாக. துயர் நிறைந்த நம்மவர்களால் சூழப்பட்டு, எதிரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்து, துயரத்தில் நிற்கும் உன்னை நான் காணாதிருப்பேனாக. ஓ! மகனே {சஞ்சயா}, செல்வத்தை அடைந்து, சௌவீரர்களின் மகள்களின் துணையோடு உன்னை நீ மகிழ்வித்துக் கொள்வாயாக. இதயத்தின் பலவீனத்தால் நீ சைந்தவர்களின் {சிந்துக்களின்} மகள்களால் ஆளப்படும் நிலையில் இருக்காதே.

`அழகிய மேனியும், கல்வியும், நற்குடி பிறப்பும், உலகம் பரந்த புகழும் கொண்ட உன்னைப் போன்ற இளைஞன் ஒருவன், சுமையைத் தாங்க வேண்டிய விஷயத்தில், அடங்காமல் இருக்கும் காளையைப் போலத் தகாத நிலையை அடைவது மரணத்துக்கு இணையானது’ என்றே நான் நினைக்கிறேன். பிறரைப் புகழ்ந்தோ, அவர்களுக்குப் பின் (பணிவாக) நடந்தோ செல்லும் உன்னைக் காணும் எனது இதயம் எப்படி அமைதியை அடையும்?

ஓ…! இன்னொருவனுக்குப் பின்னால் நடந்து செல்லும் ஒருவன் நமது குலத்தில் பிறந்ததே இல்லையே. ஓ! மகனே {சஞ்சயா}, அடுத்தவனை நம்பி வாழும் வாழ்வு உனக்குத் தகாது. முன்னோர்களாலும், முன்னோர்களுக்கு முன்னோர்களாலும், அவர்களுக்குப் பின்வந்தவர்களாலும், அப்படிப் பின்வந்தவர்களுக்கும் பின் வந்தவர்களாலும் சொல்லப்பட்ட க்ஷத்திரிய அறங்களின் நித்தியமான சாறு என்ன என்பதை நான் அறிவேன். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான அது படைப்பாளனாலேயே {பிரம்மனாலேயே} விதிக்கப்பட்டதாகும். இவ்வுலகில் எந்த உயர்ந்த குலத்திலாவது க்ஷத்திரியனாகப் பிறந்து, அந்த வகையின் கடமைகளின் அறிவை அடைந்த ஒருவன், பயத்தாலோ, வாழ்வாதாரத்திற்காகவோ பூமியில் உள்ள எவனுக்கும் தலைவணங்க மாட்டான்.

உழைப்பே {முயற்சியே} ஆண்மை என்பதால், ஒருவன் வீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்; தலைவணங்கி நிற்கக்கூடாது. யாருக்கும் வளைந்து போவதைக் காட்டிலும் ஒருவன் கணுக்களில் உடைந்து போகலாம். உயர் ஆன்ம க்ஷத்திரியன் ஒருவன், எப்போதும் ஒரு மதங்கொண்ட யானை போல நடக்க வேண்டும். ஓ! சஞ்சயா, அறத்தின் நிமித்தமாக அந்தணர்களை மட்டுமே ஒருவன் வணங்க வேண்டும். தீமை செய்வோர் அனைவரையும் அழித்து, அனைத்துப் பிற வகைகளையும் அவன் ஆள வேண்டும். கூட்டாளிகளைக் கொண்டோ அல்லது அவர்கள் இல்லாமலோ, தான் வாழும் வரை ஒருவன் அப்படியே இருக்க வேண்டும்” என்றாள் {விதுலை}.

எதிரியின் எதிரிகளை ஒன்று சேர்! – உத்யோக பர்வம் பகுதி 135-சஞ்சயன் தன் தாய் விதுலையிடம்,  மகனென்றும் பாராமல் தன்னிடம் இப்படிப் பேசுவது முறையா என வருந்துவது; இழிநிலையை அடையும் மகனைப் பாசத்தால் கண்டிக்காமல் இருத்தல், அந்தப் பாசத்துக்கே இழுக்கு என விதுலை சொன்னது; வெற்றியடையும் வழிமுறைகள் தெரிந்தால் தனக்குச் சொல்லுமாறு சஞ்சயன் விதுலையிடம் கேட்டது; எதிரியை வெல்லும் வழிமுறைகளை விதுலை சொன்னது…

குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், “தனது தாயின் {தாய் விதுலையின்} வார்த்தைகளைக் கேட்ட மகன் {சஞ்சயன் விதுலையிடம்}, “ஓ! இரக்கமற்றவளும், கோபம் நிறைந்தவளுமான தாயே, ஓ! உலகியல் வீரத்தை உயர்வாக நினைப்பவளே, உனது இதயம் உருக்காலாகி {இரும்பாலாகி} வடிவம் பெற்றது என்பது உறுதி. க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ; அதன் காரணமாகத்தானே என்னை அந்நியனைப் போலக் கருதி, என்னை நீ போரிடத் தூண்டுகிறாய். அதன்காரணமாகத் தானே உனது ஒரே மகனான என்னிடம் இத்தகு வார்த்தைகளைப் பேசுகிறாய். உனது மகனான என்னைக் காணாமல், என்னிடம் இருந்து நீ பிரிந்துவிட்டால், இந்த முழு உலகத்தாலும் உனக்கு என்ன பயன்? உனது ஆபரணங்கள் அனைத்தாலும், மகிழ்ச்சிக்கான வழிகள் அனைத்தாலும் இந்த வாழ்வில் உனக்கு என்னதான் பயன் இருக்கும்?” என்று கேட்டான் {சஞ்சயன்}.

அதற்கு அந்தத் தாய் {விதுலை சஞ்சயனிடம்}, “ஓ! மகனே {சஞ்சயா}, அறிவுடையோர், தாங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தையும் அறம் மற்றும் பொருள் ஆகியவற்றின் காரணமாகவே செய்கின்றனர். அறம் மற்றும் பொருள் ஆகியவற்றை மட்டுமே கண்டு, ஓ! சஞ்சயா நான் உன்னைப் போரிடத் தூண்டுகிறேன். உனது ஆற்றலை வெளிப்படுத்தத் தக்க தருணம் வந்துவிட்டது. இத்தகு நேரத்தில் நீ செயல்படவில்லையெனில், மக்களால் அவமதிக்கப்பட்டு, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றையே நீ செய்பவனாவாய்.

ஓ! சஞ்சயா, புகழ்க்கேட்டால் கறைபடப்போகும் உன்னிடம் (பாசத்தால்) நான் எதையும் சொல்லவில்லையென்றால், பிறகு அந்தப் பாசம், பெண்கழுதை தன் குட்டியிடம் கொண்டதைப் போல மதிப்பற்றத்தாகவும், காரணமற்றதாகவும் ஆகும். அறிவுடையோரால் அங்கீகரிக்கப்படாததும், மூடர்களால் பின்பற்றப்படுவதுமான பாதையில் நீ நடக்காதே. இங்கே {மனிதர்களிடம்} இருக்கும் அறியாமை பெரியதாக இருக்கிறது. உலகின் எண்ணற்ற உயிரினங்கள் அதையே {அறியாமையையே} புகலிடமாகக் கொண்டிருக்கின்றன.

எது எப்படியிருப்பினும், நீ அறிவுடையோரின் நடத்தையைப் பின்பற்றினால், எனது அன்புக்குரியவனாக இருப்பாய். உண்மையில், அறம் மற்றும் பொருளை அறிந்து, கடவுளை மேலானவனாகக் கொண்டு, மனித உழைப்பை நம்பியவனாக, நல்லோரின் நடத்தையை பின்பற்றுபவனாக நீ இருந்தால், அதன் காரணமாகவே நீ எனது அன்புக்குரியவனாவாய்; மற்ற எந்த வழிகளிலும் அப்படி ஆக மாட்டாய். எவன் நன்கு அறிவுறுத்தப்பட்ட பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் கண்டு மகிழ்கிறானோ அவனே உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். மறுபுறம், எவன் முயற்சியற்ற, அடக்கமில்லாத, தீய மனம் கொண்ட மகனைக் கண்டு மகிழ்கிறானோ, அவன் ஒரு மகனால் எது அடையப்பட வேண்டும் என்று விரும்புவானோ, அந்த நோக்கத்தை அடையமாட்டான். சரியானதை எப்போதும் செய்யாமல், கண்டிக்கத்தக்கதையே எப்போதும் செய்பவன் இங்கேயும், இதன் பிறகும் {மறு உலகிலும்} இன்பத்தை அடைவதில்லை.

ஓ! சஞ்சயா, ஒரு க்ஷத்திரியன் போருக்காகவும், வெற்றிக்காகவுமே படைக்கப்பட்டிருக்கிறான். {போரில்} வென்றாலும், அழிந்தாலும் அவன் இந்திரலோகத்தை அடைகிறான். அடிபணியச் செய்து எதிரிகளைக் குறைக்கும் ஒரு க்ஷத்திரியன் அடையும் இன்பம், புனிதமான இந்திரலோகத்தில் உள்ள சொர்க்கத்தில் கூட இருக்காது. கோபத்தில் எரிந்து கொண்டிருப்பவனும், பெரும் சக்தி படைத்தவனுமான ஒரு க்ஷத்திரியன், பல முறை தோல்வியுற்றாலும், தனது எதிரிகளை வீழ்த்த விரும்பி அவன் காத்திருக்க வேண்டும். உயிரையும் விடாமல், எதிரிகளையும் கொல்லாமல் இருக்கும் ஒருவனால் எவ்வழியில்தான் மன அமைதியை அடைய முடியும்?

அறிவுடையவன் எவனும், சிறியது எதையும் ஏற்பில்லாதவையாகவே கருதுவான். சிறியது எதையும் ஏற்கும் ஒருவனுக்கு, அந்தச் சிறிய விவகாரமே வலியின் ஊற்றுக்கண்ணாக (முழுமையாக) ஆகும். விரும்பியதை அடையாத ஒருவன் விரைவில் இழிந்தவனாகிறான். உண்மையில், அவன் அனைத்துத் தேவைகளையும் உணர்ந்து கடலுக்குள் நுழையும் கங்கையாகக் காணாமல் போகிறான்” என்றாள் {விதுலை}.

அதற்கு அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, “ஓ! தாயே, நீ உனது மகனின் முன்பு, இத்தகு கருத்துகளை வெளியிடக்கூடாது. அமைதியான ஊமை ஒருத்திபோல, அவனது பக்கத்தில் இருந்து, இப்போது அவனுக்குக் கருணை காட்டுவாயாக” என்றான்.

அதற்கு அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்}, “நீ இப்படிச் சொல்வதால் நான் பெரும் மனநிறைவு கொள்கிறேன். (எனது கடமை என்ன என்று உன்னால்) உந்தப்பட்டதால் தானோ என்னவோ, நான் உன்னை இப்படித் தூண்டுகிறேன். எனவே, (நீ எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய) நான் இன்னும் அதிகமாக உன்னைத் தூண்டுவேன். சைந்தவர்கள் {சிந்துக்கள்} அனைவரும் கொல்லப்பட்டு, முழுமையான வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உன்னைக் கண்ட பிறகே உண்மையில் நான் உன்னை மதிப்பேன்”, என்றாள் {விதுலை}.

அதற்கு அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, “செல்வம் இல்லாமல், கூட்டாளிகள் இல்லாமல், வெற்றி எப்படி எனதாகும்? மிகப் பரிதாபகரமான எனது நிலையை உணர்ந்தறிந்தே, சொர்க்கத்தின் மேல் உள்ள ஆசையைத் திருப்பிக் கொள்ளும் தீயவன் போல, நாட்டின் மீது கொண்ட எனது ஆசையை நானே திருப்பிக்கொண்டேன். எனவே, ஓ! முதிர்ந்த அறிவு கொண்டவளே, (இவை அனைத்தையும் இது நேர் செய்யும் என) எந்த வழிகளையாவது நீ கண்டால், அது குறித்து முழுமையாகச் சொல்வாயாக என நான் கேட்கிறேன். ஏனெனில், நீ எனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் நான் செய்வேன்” என்றான் {சஞ்சயன்}.

அதற்கு அந்தத் தாய் {விதுலை சஞ்சயனிடம்}, “ஓ! மகனே, தோல்வியை எதிர்பார்த்து, நீ உனது ஆன்மாவை அவமதிக்காதே {உன்னையே அவமதித்துக் கொள்ளாதே}. அடையப்படாத பொருட்கள் அடையப்பட்டிருக்கின்றன; அடையப்பட்டனவோ தொலைக்கப்பட்டுள்ளன. கோபத்தாலோ, மூடத்தனத்தாலோ பொருட்களின் சாதனையை முயற்சிக்கக்கூடாது. ஓ! மகனே {சஞ்சயா}, அனைத்து செயல்களிலும் வெற்றியை அடைவது என்பது உறுதியில்லாதது. வெற்றி உறுதியற்றது; சில வேளைகளில் வெல்லலாம், சில வேளைகளில் அது முடியாமல் போகலாம் என்று அறிந்தும் மக்கள் செயல்படுகிறார்கள். எனினும், செயலில் இருந்து விலகும் ஒருவன் வெற்றியை அடைவதே இல்லை. உழைப்பு {முயற்சி} இல்லை என்றால் ஒரே முடிவுதான், அது வெற்றி இல்லை என்பதாகும். எனினும், உழைப்பின் {முயற்சியின்} போது வெற்றியை அடைவது, அல்லது அதை அடையாதது என்ற இரு நிலைகள் எப்போதுமே உண்டு.

ஓ! இளவரசே {சஞ்சயா}, விளைவுகளைப் பொறுத்தவரை அனைத்துச் செயல்களிலும் அவை உறுதியற்றவைதான் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்பவன், வெற்றி மற்றும் செழிப்பு ஆகிய இரண்டையும் தான் அடையும்படி செய்கிறான். அப்படிப்பட்ட நம்பிக்கையுடன் ஒருவன், சோம்பல் அனைத்தையும் கைவிட்டு, முயற்சியுடன் எழுந்து, ஒவ்வொரு செயலையும் செய்கிறான். ஓ! மகனே {சஞ்சயா}, செயல்களில் ஈடுபடும் {கர்மாவைச் செய்யும்} அறிவுள்ள மன்னன் ஒருவன், தேவர்களையும், அந்தணர்களையும் தன் பக்கத்ததில் வைத்துக் கொண்டு, மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்து, விரைவில் வெற்றியை அடைகிறான். கிழக்கை வாரியணைக்கும் சூரியனைப் போல, செழிப்பின் தேவதை அவனை {செயல்படுபவனை} அரவணைப்பாள். {சுற்றிக் கொண்டு சூரியன் மீண்டும் கிழக்கு திசைக்கு வருவதைப் போல, சுற்றிக் கொண்டு லட்சுமி அவனை நோக்கி வருகிறாள்}.

நான் உனக்கு உரைத்த பல்வேறு பரிந்துரைகளுக்கும், வழிகளுக்கும், ஊக்கமூட்டும் உரைகளுக்கும் தகுந்தவனாகவே உன்னை நான் காண்கிறேன். (இப்போது) உனது ஆற்றலை வெளிப்படுத்து. அனைத்து முயற்சிகளையும் செய்து, உனது கருத்தில் கொண்டுள்ள பொருளை வெல்வதே உனக்குத் தகும். (உனது எதிரிகளிடம்) கோபத்தில் இருப்போரையும், பேராசை கொண்டோரையும், (உனது எதிரியால்) பலவீனமாக்கப்பட்டவர்களையும், (உனது எதிரிகளிடம்) பொறாமை கொண்டோரையும், (உனது எதிரிகளால்) அவமதிப்புக்கு உள்ளானவர்களையும், அதீத செருக்கின் காரணமாக (உனது எதிரிகளால்) எப்போதும் அறைகூவி அழைக்கப்படுபவர்களையும், இந்த வகைகளைச் சார்ந்த {எதிரியின் எதிரிகளான} அத்தனை பேரையும் உன் பக்கத்தில் ஒன்றாகச் சேர்ப்பாயாக.

இவ்வழிகளில் நீ மேகங்களைச் சிதறடிக்கும் வகையில், மூர்க்கமாகவும், கடுமையாகவும் எழும் சூறாவளியைப் போன்று, (உனது எதிரியின்) பலமிக்கப் படையை உன்னால் உடைக்க முடியும். அவர்களுக்கு (உனது கூட்டாளிகளாக இருப்போருக்கு), உரிய காலத்திற்கு முன்பே செல்வத்தையும் உணவையும் அளித்து, எப்போதும் அவர்களுக்காகச் செயல்பட்டு, அவர்கள் அனைவரிடமும் இனிமையாகப் பேசுவாயாக. பிறகு அவர்கள் உனக்கு நன்மையைச் செய்து, உன்னைத் தங்கள் தலையில் {முன்பு} வைப்பார்கள்.

தன் எதிரி உயிரைத் துச்சமாக நினைக்கிறான், என எப்போது உனது எதிரி அறிவானோ, அப்போது அவன் {அந்த எதிரி} தன் அறையிலேயே வாழும் பாம்பைப் போல அவனை {உன்னை} எண்ணி நடுங்குவானல்லவா? ஒருவனைப் பலம் நிறைந்தவனாக அறிந்து கொள்ளும் அவனது எதிரி, அவனை அடக்க முயற்சிக்க மாட்டான். சமரசக் கலைகள், கொடை மற்றும் விருப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவனை {தன் எதிரியை} நண்பனாக்கவே முயற்சிப்பான். அதுவும் அவன் அடக்கப்பட்டதுக்கு ஒப்பானதே ஆகும்.

சமரசக் கலை மூலம் நிவாரணம் பெறுவதால், ஒருவன் தனது செல்வத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். ஒருவனது செல்வம் அதிகரித்தால், அவன் வழிபடப்பட்டு, தஞ்சமளிப்பவனாக அவனது நண்பர்களால் அவன் வேண்டப்படுவான். ஒருவன் செல்வத்தை இழந்தாலோ, அவன் நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு, அதைவிட அதிகமாக அவநம்பிக்கையடைந்து, அவர்களால் வெறுக்கப்படும் நிலையும் உண்டாகும். தனது எதிரியிடமே சேர்ந்து நம்பிக்கையுடன் வாழ்பவனால், தனது நாட்டை மீண்டும் மீட்பது முற்றிலும் முடியாததாகும்” என்றாள் {விதுலை}.”

ஜெயம் எனும் வரலாறு! – உத்யோக பர்வம் பகுதி 136-நண்பர்களின் துணையால் கிட்டும் நன்மையை விதுலை சொல்வது; சஞ்சயன் அறியாத பல பொக்கிஷ அறைகள் உண்டென்றும், அதைத் தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும் விதுலை சொன்னது; தனது தாயின் வார்த்தைகளைக் கேட்ட சஞ்சயன், தனது துயரில் இருந்து விடுபடுவது; விதுலை சஞ்சயன் உரையாடல் அடங்கிய வரலாற்றைக் கேட்பதனால் உண்டாகும் பலனைக் குந்தி சொன்னது…

அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்} சொன்னாள், “ஒரு மன்னன் எந்தவிதமான ஆபத்தில் தோல்வியுற்றாலும், அவன் அதைக் காட்டிக் கொள்ளக்கூடாது {அதற்கு அஞ்சக்கூடாது}. அச்சத்தால் பாதிக்கப்படும் மன்னனைக் கண்டு, படை, ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் முழு நாடும் அச்சம் அடைந்து, குடிமக்கள் அனைவரும் {கருத்தில்} ஒற்றுமையற்றவர்களாக ஆகிறார்கள். சிலர் சென்று எதிரியின் தரப்பை அரவணைப்பார்கள்; பிறரோ எளிதாக மன்னனைக் கைவிட்டுவிடுவார்கள்; ஏற்கனவே {மன்னனிடம்} அவமானத்தை அடைந்த மேலும் பிறர், தாக்குவதற்கே கூட முயல்வார்கள்.

எனினும், நெருக்கமான நண்பர்கள், அவனது தரப்பில் எப்போதும் காத்திருக்கிறார்கள். அவனது நன்மையை அவர்கள் விரும்பினாலும், எதையும் செய்ய இயலாமல், கட்டி வைக்கப்பட்டுள்ள கன்றுக்காகக் காத்திருக்கும் மாட்டைப் போல ஆதரவற்ற நிலையில் காத்திருக்கிறார்கள். துயரத்தில் மூழ்கியிருக்கும் நண்பர்களுக்காக வருந்தும் நண்பர்களைப் போல, துயரத்தில் மூழ்கி இருக்கும் தங்கள் தலைவனைக் கண்டு நலன்விரும்பிகளும் வருந்துவார்கள்.

முன்பு நீயும், உன்னால் வழிபடப்பட்ட பல நண்பர்களை கொண்டிருந்தாய். உனது நாட்டுக்காக உனது இதயத்தை உணர்பவர்களும், உனது துன்பங்களைத் தங்கள் துன்பமாகவே எடுத்துக் கொள்பவர்களுமான பல நண்பர்களை நீயும் கொண்டிருக்கிறாய். அந்த நண்பர்களை நீ அச்சுறுத்தாதே. நீ அச்சத்திலிருப்பதைக் கண்டு அவர்கள் உன்னைக் கைவிடும் நிலையை அனுபவிக்காதே.

உனது பலம், ஆண்மை, புரிதல் {புத்தி} ஆகியவற்றைச் சோதிப்பதற்காகவும், உனக்கு உற்சாகமூட்ட விரும்பியும், உனது சக்தியை அதிகரிக்கவுமே நான் இவை அனைத்தையும் உன்னிடம் சொல்கிறேன். நான் சொன்னது உனக்குப் புரிந்தால், நான் சொன்னது முறையானதாகவும், போதுமானதாகவும் உனக்குத் தோன்றினால், ஓ! சஞ்சயா, உனது பொறுமையைத் திரட்டி, வெற்றிக்காக உனது இடுப்புக் கச்சையை இறுகக் கட்டுவாயாக.

நீ அறியாதவையும், பெரும் எண்ணிக்கையும் கொண்ட, பல கருவூல வீடுகள் {பொக்கிஷ அறைகள்} நமக்குண்டு. அதன் இருப்பை வேறு யாரும் அறியமாட்டார்கள்; நான் மட்டுமே அறிவேன். அவை அனைத்தையும் நான் உனக்கு அளிக்கிறேன்.

ஓ! சஞ்சயா, உன் மகிழ்ச்சி மற்றும் துயரங்களில் உனக்கு ஆதரவாக இருப்பவர்களும், ஓ! வீரா {சஞ்சயா}, போர்க்களத்தில் இருந்து பின்வாங்காதவர்களுமான ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் உனக்கு உண்டு. ஓ! எதிரிகளை வாட்டுபவனே, இது போன்ற கூட்டாளிகள், தனது நன்மையை விரும்பி, தனக்கு ஏற்புடையதைச் செய்யும் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களாகத் தங்கள் பங்கை எப்போதும் சரியாகச் செய்வார்கள்” என்றாள் {விதுலை}.”

குந்தி {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தாள், “அற்புதமான வார்த்தைகளும், அறிவும் நிரம்பிய தனது தாயின் {தாய் விதுலையின்} பேச்சைக் கேட்டதும், அந்த இளவரசன் சஞ்சயன், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவனாக இல்லாவிடினும், அவனது இதயத்தில் இருந்த துயரம் உடனே விலகியது. அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, “என் எதிர்கால நலனை கவனிக்கும் உன்னை எனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் நான், நிச்சயம் எனது தந்தைவழி நாட்டை மீட்பேன், அல்லது அந்த முயற்சியில் அழிந்து போவேன். உனது சொற்பொழிவின் போது நான் கிட்டத்தட்ட அமைதியாகக் கேட்பவனாகவே இருந்தேன். அக்காரியம் குறித்து நான் அதிகம் கேட்க வேண்டும் என்பதற்காகவும், {அது குறித்து} உன்னை மேலும் விரிவாகப் பேச வைப்பதற்காகவுமே அப்போதைக்கப்போது ஒரு வார்த்தையை இடையிடையில் நான் கேட்டேன் {பேசினேன்}. அமுதத்தைக் குடிப்பவன் போதும் என்று சொல்லாதது போல, உனது வார்த்தைகளும் எனக்குப் போதுமெனத் தோன்றவில்லை. எந்தக் கூட்டாளிகளிடமிருந்தாவது ஆதரவைப் பெற்று, எனது இடைக்கச்சைகளை இறுகக் கட்டிக் கொண்டு, எதிரிகளை ஒடுக்கி நான் வெற்றியடைவதைப் பார்” என்றான் {சஞ்சயன்}.”

குந்தி {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தாள், “தனது தாயின் {தாய் விதுலையின்} வார்த்தை அம்புகளால் துளைக்கப்பட்ட மகன், பெருமைமிக்க இனத்தைச் சேர்ந்த குதிரையைப் போல எழுந்து, தனது தாய் சுட்டிக்காட்டியவை அனைத்தையும் சாதித்தான்.

சக்தியை மேம்படுத்தி, பலத்தை ஈர்க்கும் இந்த அற்புத வரலாற்றை, எதிரிகளால் பாதிப்படைந்து, துயரத்தில் மூழ்கியிருக்கும் தனது மன்னனை, அவனது அமைச்சர் ஒருவர் கேட்கச் செய்ய வேண்டும். உண்மையில், இந்த வரலாறு ஜெயம் என்று அழைக்கப்படுகிறது. இது வெற்றி விரும்பும் அனைவராலும் கேட்கப்பட வேண்டும்.

உண்மையில், இதைக் கேட்கும் ஒருவன், தனது எதிரிகளைக் கலக்கி இந்த முழு உலகையும் விரைவில் அடக்கி விடுவான். இந்த வரலாறு ஒரு பெண் வீரமகனை ஈன்றெடுக்கச் செய்யும். இதைத் திரும்பத் திரும்பக் கேட்ட ஒரு பெண், நிச்சயமாக ஒரு வீரனையே ஈன்றெடுப்பாள்.

இதைக் கேட்கும் {இந்த வரலாற்றைக் கேட்கும்} ஒரு க்ஷத்திரியப் பெண், தடுக்கமுடியா ஆற்றல் கொண்டவனாக, கல்வியில் முதன்மையானவனாக, தவத்துறவுகளில் முதன்மையானவனாக, தயாளத்தில் முதன்மையானவனாக, தவத்துக்குத் தன்னை அர்ப்பணிப்பவனாக, பிரம்ம அழகுடன் சுடர்விடுபவனாக, எண்ணற்ற நன்மைகள் கொண்டவனாக, பிரகாசத்தில் ஒளிர்பவனாக, பெரும் பலம் கொண்டவனாக, அருளப்பட்டவனாக, (போரில்) தாங்கிக்கொள்ளப்பட முடியாதவனாக, எப்போதும் வெல்பவனாக, ஒற்றப்பற்றவனாக, தீயவர்களைத் தண்டிப்பவனாக, அறம் பயில்வோர் அனைவரையும் பாதுகாப்பவனாக ஒரு மகனை ஈன்றெடுப்பாள்” என்றாள் {குந்தி}”.

கண்ணன் தேரில் கர்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 137-அர்ஜுனன், பீமன், திரௌபதி, மாத்ரியின் மகன்கள் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டிய  செய்தியை அவள் கிருஷ்ணனிடம் சொல்லியனுப்பியது; கர்ணனைத் தனது தேரில் ஏற்றிக் கொண்ட கிருஷ்ணன் அவனோடு நெடுநேரம் வாதிட்டது; கர்ணனை வழியனுப்பிய கிருஷ்ணன், விரைந்து உபப்லாவ்யத்தை அடைந்தது…

குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், “இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொல்வாயாக, “நீ பிறந்த போது, பிரசவ அறையில் மங்கையர் சூழ நான் அமர்ந்திருந்தேன். அப்போது வானத்தில் இருந்து ஒரு மகிழ்ச்சிகரமான தெய்வீகக் குரல், “ஓ! குந்தி, இந்த உனது மகன் ஆயிரம் கண் படைத்த தேவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனாவான். கூடியிருக்கும் குருக்கள் அனைவரையும் இவன் {அர்ஜுனன்} போரில் வீழ்த்துவான். பீமனின் துணை கொண்டு, இவன் முழு உலகையும் வெல்வான். இவனது புகழ் சொர்க்கத்தையே தொடும். வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்ட இவன் {அர்ஜுனன்} போரில் குருக்களைக் கொன்று, தொலைந்து போன தனது தந்தை {பாண்டு} வழி நாட்டை மீட்பான். பெரும் செழிப்புடைய இவன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் கூடி, மூன்று பெரும் வேள்விகளைச் செய்வான்”,என்றது.

ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் பீபத்சு {அர்ஜுனன்} எப்படி உண்மையில் {சத்தியத்தில்} நிலையானவன் என்பதையும், எப்படித் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் என்பதையும் நீ அறிவாய். ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, அந்தத் (தெய்வீகக்) குரல் சொன்னது போலவே ஆகட்டும். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நீதி என்ற ஒன்று உண்டென்றால், அந்த வார்த்தைகள் உண்மையாகட்டும். நீயொருவனாகவே அவை அனைத்தையும் சாதிப்பாய். அந்தக் குரல் சொன்ன எதையும் நான் சந்தேகிக்கவில்லை. அனைத்துக்கும் மேன்மையான நீதியை நான் வணங்குகிறேன். நீதியே அனைத்து உயிர்களையும் தாங்குகிறது. நீ இவ்வார்த்தைகளையே தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொல்வாயாக.

மேலும், எப்போதும் உழைக்க {முயற்சி செய்யத்} தயாராக இருக்கும் விருகோதரனிடம் {பீமனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம் {பீமனிடம்}, “ஒரு க்ஷத்திரியப் பெண் ஒரு மகனைப் பெறும் காரணத்திற்கான நேரம் வந்துவிட்டது! பகை இருக்கும்போது, எப்போதும், மனிதர்களில் முதன்மையானவர்கள் உற்சாகமற்றுப் போவதில்லை”, என்று சொல்வாயாக. பீமனின் மனநிலையை நீ அறிவாய். எதிரிகளைக் கலங்கடிப்படிப்பவனான அவன் {பீமன்}, தனது எதிரிகளை அழிக்கும் வரை எப்போதும் தணியமாட்டான் {ஓயமாட்டான்}.

பிறகு நீ, ஓ! மாதவா {கிருஷ்ணா}, பெரும் புகழ்கொண்டவளும், உயர் ஆன்ம பாண்டுவின் மருமகளும், மங்கலகரமானவளுமான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! உயர்ந்த அருள் கொண்டவளே, ஓ! உன்னதமான பெற்றோரைக் கொண்டவளே, ஓ! பெரும்புகழ் கொண்டவளே, எனது மகன்களிடம் எப்போதும் நீ நடந்து கொள்ளும் இனிமையான விதம், உண்மையில் உனக்குத் தகுந்ததே”, என்று சொல்வாயாக.

மேலும், க்ஷத்திரிய அறங்களுக்குத் தங்களை எப்போதும் அர்ப்பணித்திருக்கும் மாத்ரியின் மகன்களிடம் {நகுலன் மற்றும் சகாதேவனிடம்}, “உயிரைவிட, வீரத்தினால் பெறப்படும் இன்பங்களைப் பெரிதாக விரும்புங்கள். வீரத்தினால் வெல்லப்பட்ட பொருட்கள், க்ஷத்திரிய நடைமுறைகளின் படி வாழும் ஒருவனின் இதயத்துக்கு எப்போதும் இனிமையானவையாக இருக்கும். அனைத்து வகை அறங்களையும் அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உங்கள் கண் முன்பாகவே பாஞ்சால இளவரசி {திரௌபதி} கொடூரமான, தவறான அடைமொழிகளால் அழைக்கப்பட்டாள். அந்த அவமானத்தை எவனால் மன்னிக்கமுடியும்?”, என்று சொல்வாயாக.

அவர்கள் {பாண்டவர்கள்} நாட்டை இழந்தது எனக்குத் துயரை அளிக்கவில்லை. பகடையில் அவர்கள் அடைந்த தோல்வி எனக்குத் துயரை அளிக்கவில்லை. ஆனால், உன்னதமானவளும், அழகானவளுமான திரௌபதி சபைக்கு மத்தியில் அழுதுகொண்டிருந்த போது, அந்தக் கொடூரமான, அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளைக் கேட்க நேர்ந்ததே எனக்குப் பெரும் துயரை அளித்தது. ஐயோ, க்ஷத்திரிய அறங்களுக்குத் தன்னை எப்போதும் அர்ப்பணித்துக் கொண்டவளும், மிக அழகானவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, இத்தகு பலம் நிறைந்த பாதுகாவலர்களை மணந்திருந்தாலும், அச்சந்தர்ப்பத்தில் எந்தப் பாதுகாவலனையும் அவள் {திரௌபதி} காணவில்லை.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, மனிதர்களில் புலியும், ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனனிடம், திரௌபதி சுட்டிக் காட்டும் பாதையில் எப்போதும் அவன் நடக்க வேண்டும் என்று சொல்வாயாக. கேசவா {கிருஷ்ணா}, அனைத்தையும் அழிக்கும் யமன்களும், கடுமையான இணையுமான பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர், தேவர்களையே கூட அனைத்து உயிரினங்களின் வழியில் செல்ல வைக்க இயன்றவர்கள் {தேவர்களைப் பரகதி அடையச் செய்வார்கள்} என்பதை நீ நன்கு அறிவாய். (அப்படிப்பட்ட அவர்களுக்கு மனைவியான) கிருஷ்ணை சபையில் இழுத்துவரப்பட்டது அவர்களை அவமதித்ததாகாதா?

ஓ! கேசவா {கிருஷ்ணா}, குருகுலத்தின் வீரர்கள் அனைவரின் முன்னிலையிலும், பீமனிடம் துச்சாசனன் பேசிய கொடூரமான, கடுமையான வார்த்தைகள் அனைத்தையும் அவர்களுக்கு ஞாபகப்படுத்துவாயாக. (என் பெயரால்) பாண்டவர்கள், அவர்களது பிள்ளைகள் மற்றும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} நலன்களை விசாரிப்பாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் நன்றாக இருக்கிறேன் என்று அவர்களிடம் சொல்வாயாக. மங்கலகரமான உனது வழியில் சென்று, நீ எனது மகன்களைக் காப்பாயாக”, என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவளை {குந்தியை} வணங்கி வலம் வந்தவனும் வலிய கரங்களைக் கொண்டவனும், சிங்கத்தின் கம்பீரமான நடைக்கு ஒப்பான நடையைக் கொண்டவனுமான கிருஷ்ணன், பிருதையின் {குந்தியின்} இல்லத்தில் இருந்து வெளிப்பட்டான். பிறகு அவன் {கிருஷ்ணன்}, (தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களான) பீஷ்மரைத் தலைமையாகக் கொண்ட குருக்களின் தலைவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பி, கர்ணனைத் தனது தேரில் ஏற்றிக் கொண்டு, சாத்யகியுடன் (குருக்களின் நகரை) விட்டுச் சென்றான்.

அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} சென்ற பிறகு, அவனுடன் {கிருஷ்ணனுடன்} தொடர்புடைய அற்புதமான ஆச்சரியமான சம்பவத்தைக் குறித்து, ஒன்றாகக் கூடியிருந்த குருக்கள் பேசத் தொடங்கினர். அவர்கள், “அறியாமையில் மூழ்கியிருக்கும் முழு உலகமும் மரணவலையில் சிக்கியிருக்கிறது” என்றனர். மேலும் அவர்கள், “துரியோதனனின் மூடத்தனத்தால், இவை அனைத்தும் அழிவுக்குள்ளாகப் போகின்றன” என்றும் சொன்னார்கள்.

(குரு) நகரத்தில் இருந்து வெளியேறியவனும், முன்னேறியவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், நீண்ட நேரம் கர்ணனுடன் வாதிட்டுக் கொண்டிருந்தான். யாதவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பவனான அவன் {கிருஷ்ணன்}, பிறகு கர்ணனுக்கு விடைகொடுத்து, தனது குதிரைகளை அதிவேகமாகச் செலுத்தினான். தாருகனால் செலுத்தப்பட்ட அந்த மனோவேகம் கொண்ட குதிரைகள், வானத்தைக் குடித்துவிடுவதைப் போலச் சென்றன. நெடும் வழியை விரைவாகக் கடக்கும் வேகமான பருந்தைப் போல, சாரங்கம் தாங்குபவனை {கிருஷ்ணனைத்} தாங்கிக் கொண்டு, அவை {அந்தக் குதிரைகள்} உபப்லாவ்யத்தை மிக விரைவில் அடைந்தன.

பீஷ்மர், துரோணர் வற்புறுத்தல்! – உத்யோக பர்வம் பகுதி 138-குந்தியின் வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மரும், துரோணரும் துரியோதனனிடம் சமாதானத்தை ஏற்கும்படி சொல்வது; குந்தியின் சொல்லுக்கும், கிருஷ்ணனுக்கு ஏற்புடையவைக்கும் பாண்டவர்கள் கீழ்ப்படிவார்கள் என்றும், அது போலத் துரியோதனனும், அவனது தந்தை திருதராஷ்டிரன், தாய் காந்தாரி மற்றும் அவனது நலன்விரும்பிகளான நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் சொன்னது …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தியின் வார்த்தைகளைக் கேட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மரும், துரோணரம், கீழ்ப்படியாதவனான துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். அவர்கள் {பீஷ்மரும், துரோணரும்}, “ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, கிருஷ்ணனின் முன்னிலையில் சொல்லப்பட்டவையும், பயனுள்ளவையும், அற்புதமானவையும், அறத்திற்கு இசைவானவையும், கடுமையானவையுமான குந்தியின் வார்த்தைகளைக் கேட்டாயா? அவளது {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} அதன்படியே செயல்படுவார்கள், அதிலும் குறிப்பாகக் கிருஷ்ணனால் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தைகளின்படியே செயல்படுவார்கள்.

ஓ! கௌரவா {துரியோதனா}, தங்கள் பங்கான நாடு (அவர்களுக்குக்) கொடுக்கப்படாமல், அவர்கள் நிச்சயம் தணியமாட்டார்கள். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} நீ நிறைய வலிகளைக் கொடுத்துவிட்டாய். திரௌபதியும் சபையில் வைத்து உன்னால் துன்புற்றாள். எனினும், உண்மையின் {சத்தியத்தின்} கட்டுகளுக்கு அவர்கள் {பாண்டவர்கள்} கட்டுப்பட்டிருந்தார்கள். இதன்காரணமாகவே அவர்களால் {பாண்டவர்களால்} அந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடிந்தது.

அனைத்து ஆயுதங்களிலும் திறன் படைத்த அர்ஜுனனையும், உறுதியான தீர்மானம் கொண்ட பீமனையும், காண்டீவத்தையும், (வற்றாத) அம்பறாத்தூணிகள் இரண்டையும், (அர்ஜுனனின்) தேரையும், (குரங்கு உருவம் பொறிக்கப்பட்ட) கொடியையும், பெரும் வலிமை மற்றும் சக்தி படைத்த நகுலன் மற்றும் சகாதேவனையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} தனது கூட்டாளிகளாகக் கொண்ட யுதிஷ்டிரன் (உன்னை) மன்னிக்கமாட்டான்.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, விராடநகரத்தில் நடந்த போரில், புத்திக்கூர்மையுள்ள அர்ஜுனன் நம் அனைவரையும் முன்பே வீழ்த்தியதை நீ உனது கண்களாலேயே கண்டிருக்கிறாய். உண்மையில் அந்த வானரக் கொடியோன் {அநுமன் கொடிகொண்ட வீரன் அர்ஜுனன்} பயங்கரச் செயல்களைச் செய்யும் நிவாதகவசர்கள் எனும் தானவர்களை, தனது கடும் ஆயுதங்களால் போரில் எரித்தான். கால்நடைகளை எண்ணும் சந்தர்ப்பத்தில் {கோஷ யாத்திரையில்}, கந்தர்வர்களால் {நீ} கைப்பற்றப்பட்ட போது, இந்தக் கர்ணனையும், உனது ஆலோசகர்கள் அனைவரையும், கவசம் தரித்து உனது தேரில் இருந்த உன்னையும் கந்தர்வர்களின் பிடியில் இருந்து விடுவித்தவன் அந்த அர்ஜுனனே. {அவன் நம்மைவிடப் பலவான் என்பதற்கு} அதுவே போதுமான சாட்சியாகும். எனவே, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது சகோதரர்கள் அனைவருடன் கூடி பாண்டு மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சமாதானம் கொள்வாயாக. அழிவின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து இந்த முழு உலகத்தையும் காப்பாயாக.

அறம்சார்ந்த நடத்தை கொண்டவனும், உன்னிடம் பாசம் கொண்டவனும், இனிய பேச்சு மற்றும் கல்வியைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் உனது அண்ணனாவான். உனது பாவம் நிறைந்த நோக்கங்களைக் கைவிட்டு, அந்த மனிதர்களில் புலியிடம் {யுதிஷ்டிரனிடம்} ஒற்றுமையாகச் சேர்வாயாக. கைகளில் வில்லற்று, கோபத்தால் புருவம் சுருங்காமல், மகிழ்ச்சியாக இருக்கும் உன்னை அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கண்டால், {நிச்சயம் யுதிஷ்டிரன் பகையை மறந்துவிடுவான்}, அதுவே நமது குலத்திற்கான நன்மையாகும். உனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} அனைவருடன் கூடி நீ அவனை {யுதிஷ்டிரனைச்} சகோதரப்பாசத்தோடு தழுவுவாயாக.

ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, முன்பு போலவே நீ அந்த மன்னனை {யுதிஷ்டிரனை} மதிப்பாயாக. குந்தியின் மகனும், பீமனின் அண்ணனுமான யுதிஷ்டிரன், வணங்கிச் செல்லும் உன்னைப் பாசத்தால் ஆரத் தழுவட்டும். அடிப்பவர்களில் முதன்மையானவனும், சிங்கம் போன்ற தோள், நீண்ட உருண்ட தொடைகள் மற்றும் வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமன் உன்னைத் ஆரத்தழுவிக் கொள்ளட்டும். குந்தியின் மகனும், பார்த்தன் என்றும் அழைக்கப்படுபவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனும், சுருட்டை முடி மற்றும் சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} உன்னை மரியாதையாக வணங்கட்டும். மனிதர்களில் புலிகளும், இப்பூமியில் ஒப்பற்ற அழகுடையவர்களுமான அசுவினி இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்} பாசத்துடன் உனக்குச் சேவை செய்து, உன்னை அவர்களது ஆசானாக மதிக்கட்டும்.

{இதனால்} தாசார்ஹ குலத்தோனைத் {கிருஷ்ணனைத்} தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீரை வடிக்கட்டும். உனது செருக்கையைக் கைவிட்டு, உனது சகோதரர்களுடன் ஒன்றுபடுவாயாக. ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா} போருக்கான எந்தத் தேவையும் இல்லை. உனது நண்பர்கள் எடுத்துச் சொல்பவற்றைக் கேட்பாயாக. வரப்போகும் போரினால் க்ஷத்திரியர்களுக்குப் பெரும் அழிவு ஏற்படப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

நட்சத்திரங்கள் அனைத்தும் பகையாயிருக்கின்றன. விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அச்சத்திற்குரிய அம்சங்களை ஏற்கின்றன. ஓ! வீரா {துரியோதனா} பல்வேறுவிதமான தீய சகுனங்கள், க்ஷத்திரியர்களின் படுகொலைகளை முன்னறிவிக்கின்றன. இந்தச் சகுனங்கள் அனைத்தும் குறிப்பாக நமது இல்லங்களில் மட்டுமே மீண்டும் மீண்டும் தெரிகின்றன. சுடர்விடும் எரிகற்கள் உனது படையைத் துன்புறுத்துகின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, நமது விலங்குகள் உற்சாகமற்றவையாகவும், அழுபவையாகவும் தெரிகின்றன. உனது துருப்புகளைக் கழுகுகள் வட்டமிடுகின்றன. நகரமோ, அரண்மனையோ முன்பு போலத் தோற்றமளிக்கவில்லை. அச்சுறுத்தும்வகையில் ஊளையிடும் ஓநாய்கள், காட்டு நெருப்புக்கு மத்தியில் நாலாபுறமும் ஓடுகின்றன.

உனது தந்தை {திருதராஷ்டிரன்}, தாய் {காந்தாரி} மற்றும் உனது நலன்விரும்பிகளான நாங்கள் சொல்லும் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, போரும், அமைதியும் உனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன. ஓ! எதிரிகளை வாட்டுபவனே {துரியோதனா}, உனது நண்பர்களின் வார்த்தைகளின்படி நீ செயல்படாவிடில், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் உனது படை அல்லலுறுவதைக் கண்டு நீ வருந்த வேண்டியிருக்கும். வலிமைமிக்கப் பீமனாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் எழுப்பப்படும் பயங்கர ஒலிகளைப் போரில் கேட்கும் நீ, எங்களது இந்த வார்த்தைகளை நினைவு கூர்வாய். நாங்கள் சொல்வது உனக்கு ஏற்புடையதாகத் தோன்றாவிடில், நாங்கள் சொல்வது போலத்தான் உண்மையில் நடக்கும்” என்றனர் {பீஷ்மரும் துரோணரும்}.

யுதிஷ்டிரனை நீ எப்படி வெல்வாய்? – உத்யோக பர்வம் பகுதி 139-பீஷ்மரும், துரோணரும் மாறி மாறிப் பேசியும் சமாதானத்திற்கு உடன்படாத துரியோதனன் தலையைத் தொங்கப்போடுவது; யுதிஷ்டிரனிடம் போரிடுவது தவறு எனப் பீஷ்மர் உரைப்பது; அர்ஜுனனிடம் தான் கொண்ட பாசம், அர்ஜுனனின் ஆற்றல் ஆகியவற்றைத் துரியோதனனிடம் துரோணர் சொல்வது; க்ஷத்திரியக் கடமைகளைத் தான் நோற்க வேண்டி வந்ததை எண்ணி நொந்து கொள்வது; பாண்டவர்களிடம் துரியோதனன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று துரோணர் அவனைத் தூண்டியது .

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி அவர்களால் சொல்லப்பட்ட துரியோதனன், தனது புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியைச் சுருக்கி, உற்சாகமிழந்தவனாக, தலையைத் தொங்கப்போட்டவாறு சரிந்த பார்வையைச் செலுத்தினான். மறுமொழியாக அவன் {துரியோதனன்} எவ்வார்த்தையும் சொல்லவில்லை. அவன் {துரியோதனன்} உற்சாகமிழந்தைக் கண்டவர்களும், மனிதர்களில் காளைகளுமான பீஷ்மரும், துரோணரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, மீண்டும் அவனிடம்  {துரியோதனனிடம்} (இந்த வார்த்தைகளால்) பேசினார்கள்.

பீஷ்மர் {துரியோதனனிடம்}, “தனக்கு மூத்தவர்களுக்குச் சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனும், பொறாமையற்றவனும், பிரம்மத்தை அறிந்தவனும், உண்மையைப் பேசுபவனுமான யுதிஷ்டிரனிடம் நாம் போரிடுவதைவிடத் துயர் நிறைந்த காரியம் வேறு எதுவும் கிடையாது” என்றார் {பீஷ்மர்}.

துரோணர் {துரியோதனனிடம்}, “என் மகன் அஸ்வத்தாமனைவிட நான் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} அதிகப் பாசம் கொண்டிருக்கிறேன். அந்த வானரக்கொடியோனும் {அர்ஜுனனும்} (அஸ்வத்தாமன் கொண்டிருப்பதைவிட) அடக்கமும், என்னிடம் அதிக மரியாதையும் கொண்டிருக்கிறான். ஐயோ, க்ஷத்திரியக் கடமைகளை நோற்பதினால், நான் என் மகனை விட அன்பாகக் கருதும் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} போரிட வேண்டியுள்ளதே. ஐயோ, க்ஷத்திரியத் தொழிலுக்காக  உலகில் தனக்கு நிகரற்ற அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, எனது அருளால் வில்லாளிகள் அனைவரிலும் மேன்மையை அடைந்திருக்கிறான்.

தனது நண்பர்களை வெறுப்பவனும், தீய மனநிலை கொண்டவனும், கடவுளை மறுப்பவனும், குறுகிய மனம் படைத்த வஞ்சகனுமான ஒருவன், வேள்வியில் பங்குபெறும் மூடனைப் போல, நீதிமான்களின் வழிபாட்டைப் பெறவே மாட்டான். {என்னதான் ஒரு மூடன் வேள்விகளில் பங்குகொண்டாலும் அவன் மதிப்பபைப் பெறுவதில்லை}. பாவத்தில் இருந்து விலக்கப்பட்டாலும், பாவம் நிறைந்த ஒருவன் பாவச் செயல்களையே செய்வான்; அதே வேளையில் நீதிமானான ஒருவன் பாவத்தால் ஈர்க்கப்பட்டாலும், அவன் நீதியைக் கைவிட மாட்டான். நீ பாண்டவர்களிடம் பொய்மையுடனும், வஞ்சகத்துடனும் நடந்து கொண்டாலும், அவர்கள் {பாண்டவர்கள்} இன்னும் உனக்கு ஏற்புடையதைச் செய்யவே விரும்புகிறார்கள். உன்னைப் பொறுத்தவரை, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, உனது தவறுகள் அனைத்தும், உனக்குப் பேரழிவுகளையே கொண்டு வருவனவாக இருக்கின்றன.

குருக்களில் மூத்தவரும் {பீஷ்மரும்}, நானும், விதுரனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்} உன்னிடம் பேசினோம். எது நன்மை என்பதை நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை. “என்னிடம் பெரிய படை இருக்கிறது” என்ற நம்பிக்கையில், சுறா மீன்களும், முதலைகளும், மகரங்களும் நிறைந்த கடலை, கங்கையின் நீரூற்று துளைப்பதைப் போல, வீரர்கள் நிறைந்த பாண்டவப் படையை நீ துளைக்க விரும்புகிறாய். மற்றொருவன் களைந்து போட்ட மாலைகளையோ, ஆடைகளையோ போன்ற யுதிஷ்டிரனின் செழிப்பை அடைந்த நீ, அதை உனதாகவே கருதுகிறாய். பிருதை {குந்தி} மற்றும் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஆயுதம் தாங்கிய தனது தம்பிகள் சூழ திரௌபதியுடன் காட்டிலேயே தங்கிவிட்டாலும்கூட, நாட்டைக் கொண்ட எவனால் அவனை {யுதிஷ்டிரனை} வீழ்த்த முடியும்? யக்ஷர்கள் யாருடைய உத்தரவின் பேரில் பணியாட்களைப் போல அவனுக்கு {யுதிஷ்டிரனுகு} பணி செய்து கிடக்கிறார்களோ, அந்த ஐலவிலன் {குபேரன்} முன்னிலையிலேயே கூட நீதிமானான யுதிஷ்டிரன் பிரகாசத்தால் ஒளிர்ந்தான். குபேரனின் வசிப்பிடத்திற்கு முன்னேறி, அங்குச் செல்வத்தை அடைந்த பாண்டவர்கள், பரந்திருக்கும் உனது நாட்டைத் தாக்கி, அரசுரிமையை வெல்லவே இப்போது விரும்புகிறார்கள்.

{பீஷ்மர், துரோணர் ஆகிய} (எங்கள் இருவரைப் பொறுத்தவரை), நாங்கள் தானங்களைச் செய்திருக்கிறோம்; நெருப்பில் நீர்க்காணிக்கைகளை ஊற்றியிருக்கிறோம், (சாத்திரங்களைக்) கற்றிருக்கிறோம், செல்வத்தால் அந்தணர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்திருக்கிறோம். எங்களது (எங்களுக்கு ஒதுக்கப்பட்ட) வாழ்வுக் காலம் முடியப்போகிறது. எங்கள் வேலை முடிந்துவிட்டது என்பதை அறிவாயாக. (எனினும், உன்னைப் பொறுத்தவரை), இன்பம், நாடு, நண்பர்கள், செல்வம் ஆகியவற்றைக் கைவிட்டுப் பாண்டவர்களிடம் நீ போருக்கு முனைந்தால், நீ அடையும் துன்பம் பெரியதாக இருக்கும். உண்மை நிறைந்த பேச்சுடன், கடும் நோன்புகளுக்கும், தவங்களுக்கும் தன்னை அர்ப்பணித்து, பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} வெற்றிக்காகத் திரௌபதி வேண்டி {பூஜை செய்து} கொண்டிருக்கும்போது, உன்னால் அவனை {யுதிஷ்டிரனை} எப்படி வெல்ல முடியும்? ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தனது ஆலோசகனாகவும், ஆயுதங்களைத் தாங்குவோரில் முதன்மையான தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தனது தம்பியாகவும் கொண்டிருகும் அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} நீ எப்படி வெற்றி கொள்வாய்? இவ்வளவு நிறைய அந்தணர்களைத் தனது கூட்டாளிகளாகக் கொண்டவனும், புத்திக்கூர்மை கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், கடும் தவங்களைக் கொண்டவனுமான பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} நீ எப்படி வெற்றி கொள்வாய்?

துன்பக்கடலில் மூழ்கப்போகும் தனது நண்பனைக் கண்டு, செழிப்பை விரும்பும் நண்பன் ஒருவன் என்ன சொல்ல வேண்டுமோ, அதையே நான் மீண்டும் உனக்குச் சொல்கிறேன். போருக்கான அவசியமே இல்லை. குருக்களின் செழிப்பிற்காகவாவது நீ அந்த வீரர்களுடன் {பாண்டவர்களுடன்} சமாதானம் கொள்வாயாக. உனது மகன்கள், ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் இந்தப் படையுடன் நீ தோல்வியை அடையாதே” என்றார் துரோணர்.”

கர்ணா நீயும் பாண்டவனே! – உத்யோக பர்வம் பகுதி 140-கர்ணனிடம் கிருஷ்ணன், அவன் குந்தியின் மகன் என்பதைச் சொல்வது; பாண்டவர்களுடன் சேருமாறும், நாட்டின் மன்னனாக ஆகுமாறும் கிருஷ்ணன் கர்ணனிடம் சொன்னது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, சேவகர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரின் மத்தியிலும், கர்ணனைத் தனது தேரில் அழைத்துக் கொண்டு மதுசூதனன் {கிருஷ்ணன்} (நமது நகரத்தை விட்டு) வெளியே சென்றான். பகைவீரர்களைக் கொல்பவனான அந்த அளக்கமுடியாத ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} என்ன சொன்னான்? அந்தச் சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} கோவிந்தன் {கிருஷ்ணனிடம்} பேசிய சமரச வார்த்தைகள் என்ன? ஓ! சஞ்சயா, மழைக்காலத்தின் போது, புதிதாய் எழுந்த மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்ட கிருஷ்ணன் கர்ணனிடம் பேசிய வார்த்தைகள் மென்மையானவையா? கடுமையானவையா? அதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “அளவிடமுடியாத ஆன்மா கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்} ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சொன்னதும், இதயத்துக்கு இனிமையானதும், நன்மையானதும், உண்மையானதும், அறத்திற்கு இசைவானதும், ஏற்புடையதும், மிரட்டல் மற்றும் மென்மை ஆகிய இரண்டும் கலந்ததுமான அந்த வார்த்தைகளைச் சரியான வரிசையில் நான் சொல்வதை நீர் கேட்பீராக” என்றான் {சஞ்சயன்}.

வாசுதேவன் {கிருஷ்ணன் கர்ணனிடம்} சொன்னான், “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, வேதங்களை முழுதாய் அறிந்த பல அந்தணர்களை நீ வழிபட்டிருக்கிறாய். குவிந்த கவனத்துடன், மனதில் பொறாமையின்றி {பல சந்தர்ப்பங்களில்) நீ அவர்களிடம் உண்மையை {சத்தியத்தைக்} குறித்து விசாரித்திருக்கிறாய். எனவே, ஓ! கர்ணா, வேதங்கள் சொல்லும் நித்தியமானவை என்ன என்பதை நீ அறிவாய். சாத்திரங்களின் நுணுக்கமான தீர்மானங்களையும் நீ முழுமையாக அறிந்திருக்கிறாய்.

‘ஒரு கன்னிகைக்கும், அந்தக் கன்னிகையை மணந்த தங்கள் தந்தைக்கும் காநீகன், சகோடன் என்று இருவகையான மகன்கள் பிறக்கிறார்கள்’ என்று சாத்திரங்களை நன்கு அறிந்தோர் சொல்கின்றனர். ஓ! கர்ணா, நீயும் இவ்வழியிலேயே பிறந்திருக்கிறாய். {சாத்திரங்களை அறிந்தோர், ஒரு கன்னிகைக்குப் பிறக்கும் காநீகன் மற்றும் சகோடன் என்ற இருவகைப் பிள்ளைகளுக்கு, அந்தக் கன்னிகையை மணந்தவனே தந்தை என்று சொல்கிறார்கள்}. எனவே, தார்மீக அடிப்படையில் நீயும் பாண்டுவின் மகனே. வா, சாத்திரங்களின் கூற்றுப்படி நீ மன்னனாவாயாக. உனது தந்தையின் {பாண்டுவின்} வழியில் பிருதையின் {குந்தியின்} மகன்களையும் {பாண்டவர்களையும்}, தாயின் வழியில் விருஷ்ணிகளையும் {சொந்தங்களாகக்} கொண்டவன் நீ. ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, இந்த இருவரையும் உனக்குச் சொந்தமானவர்களாக நீ அறிவாயாக.

இப்போதே என்னுடன் வந்து, ஓ! ஐயா, யுதிஷ்டிரர் பிறப்புக்கு முன்பே குந்திக்குப் பிறந்தவன் நீ என்பதைப் பாண்டவர்கள் அறியச் செய்வாயாக. சகோதரர்களான ஐந்து பாண்டவர்கள், திரௌபதியின் மகன், சுபத்திரையின் ஒப்பற்ற மகன் {அபிமன்யு} ஆகிய அனைவரும் உனது பாதத்தைத் தழுவுவார்கள் {உனது காலைப் பிடிப்பார்கள்}. பாண்டவக் காரணத்திற்காகக் கூடியிருக்கும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரும் கூட உனது பாதத்தைத் தழுவுவார்கள்.

ராணிகளும், இளவரசிகளும், (நீர் நிரம்பிய} பொன், வெள்ளி மற்றும் மண் குடங்களையும், இனிமையான மூலிகைகளையும், அனைத்து வகையிலான விதைகளையும், ரத்தினங்களையும் கொடிகளையும் உன்னை நிறுவுவதற்காக {உனக்கு மன்னனாக முடிசூட்டுவதற்காக} கொண்டு வரட்டும். ஆறாம் காலத்தில், திரௌபதி (மனைவியாக) உன்னிடம் வருவாள். ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவரும், அந்தணர்களில் சிறந்தவருமான தௌமியர், (புனித) நெருப்பீல் தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாக ஊற்றட்டும். நான்கு வேதங்களை அதிகாரப்பூர்வமானதாகக் கருதும் (பாண்டவர்களுக்குப் புரோகிதர்களாகச் செயல்படும்) அந்தணர்கள் உன்னை {மன்னனாக} நிறுவுவதற்கான சடங்கைச் செய்யட்டும். வேதச் சடங்குகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவரான பாண்டவர்களின் குடும்பப் புரோகிதரும் {தௌமியரும்}, மனிதர்களில் காளைகளும் சகோதரர்களுமான பாண்டுவின் ஐந்து மகன்களும், திரௌபதியின் ஐந்து மகன்களும், பாஞ்சாலர்களும், சேதிகளும், நானும் கூடி இந்த முழு உலகத்தின் தலைவனாக உன்னை நிறுவுவோமாக.

நீதிமிக்க ஆன்மா கொண்டவரும், கடும் நோன்புகள் கொண்டவருமான தர்மனின் மகன் யுதிஷ்டிரர், உனது பட்டத்து இளவரசராக இருந்து, உனக்குக் கீழே நாட்டை ஆளட்டும். தனது கைகளில் வெண்சாமரம் கொண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரர், ஒரே தேரில் உனக்குப் பின்னே இருக்கட்டும். உனது முடிசூட்டு முடிந்ததும், குந்தியின் மற்றொரு மகனான பலமிக்கப் பீமசேனன், உனது தலைக்கு மேலே வெண்குடையைப் பிடிக்கட்டும். உண்மையில் அப்போது, நூற்றுக்கணக்கான கிண்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், புலித் தோல்களால் பக்கங்கள் மூடப்பட்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமான உனது தேரை அர்ஜுனன் ஓட்டுவான். அப்போது, நகுலன், சகாதேவன், திரௌபதியின் ஐந்து மகன்கள், பாஞ்சாலர்கள், பலமிக்கத் தேர்வீரனான சிகண்டி ஆகியோர் உனக்குப் பின்னே வருவார்கள்.

அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவருடன் கூடிய நானும் உனக்குப் பின்னே நடந்து வருவேன். உண்மையில், தாசார்ஹர்கள் மற்றும் தசார்ணர்கள் அனைவரும், ஓ! மன்னா {கர்ணா}, உனது உறவினர்களின் கணக்கில் எண்ணப்படுவார்கள். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கர்ணா}, உனது தம்பிகளான பாண்டவர்களுடனும், யபங்கள் {ஜபங்கள்}, ஹோமங்கள், பல்வேறு வகைகளிலான மங்கலச் சடங்குகள் ஆகியவை உனது மதிப்பிற்காகச் செய்யப்படட்டும். திராவிடர்கள், குந்தளர்கள், ஆந்திரர்கள், தாலசரர்கள், சூசுபர்கள், வேணுபர்கள் ஆகியோர் உனக்கு முன்பு {பரிவாரங்களாக} நடந்து செல்லட்டும்.

சூதர்களும், மாகதர்களும், எண்ணிலடங்கா துதிப்பாடல்களைப் பாடி உன்னைப் புகழட்டும். “வசுசேணனுக்கு {கர்ணனுக்கு} வெற்றி என்று பாண்டவர்கள் அறிவிக்கட்டும். சந்திரனைச் சூழ்ந்திருக்ககும் நட்சத்திரங்களைப் போலப் பாண்டவர்களால் சூழப்பட்டு நீ நாட்டை ஆள்வாயாக. ஓ! குந்தியின் மகனே {கர்ணா}, குந்தியையும் மகிழ்ச்சியடையச் செய்வாயாக. உனது நண்பர்கள் மகிழட்டும், உனது எதிரிகள் துயருறட்டும். இந்த நாளில் உனக்கும், உனது தம்பிகளான பாண்டுவின் மகன்களுக்கும் {பாண்டவர்களுக்கும்} இடையில் சகோதர ஒற்றுமை உண்டாகட்டும்” என்றான் {கிருஷ்ணன்}.”

“ரகசியமாயிருக்கட்டும்!” என்ற கர்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 141- குந்தியின் மகனே தான் என்பதைத் தான் அறிந்திருப்பதாகக் கர்ணன் சொல்வது; எனினும் அதிரதனும், ராதையுமே தனது தாய் தந்தையர் என்று கர்ணன் சொல்வது; கர்ணன் தனது அண்ணன் என்பதை யுதிஷ்டிரன் அறிந்தால், அவன் நிச்சயம் நாட்டை ஏற்கமாட்டான், எனவே கிருஷ்ணனுக்கும் தனக்கும் இடையில் நடந்த அந்த உரையாடல் ரகசியமாகவே இருக்கட்டும் என்று கர்ணன் கிருஷ்ணனிடம் கேட்டுக் கொள்வது; நாட்டை ஆளும் தகுதி யுதிஷ்டிரனுக்கு உண்டு என்று கர்ணன் சொன்னது; நடக்கப் போகும் போர் ஓர் ஆயுத வேள்வி என்று சொல்வது; அதில் ஒவ்வொருவரும் ஏற்கும் நிலைகளைக் கர்ணன் கிருஷ்ணனிடம் பட்டியலிடுவது; க்ஷத்திரியர்கள் இழிவான மரணத்தை அடையாமல் குருக்ஷேத்திரம் எனும் புனிதமான இடத்தில் போரில் ஈடுபட்டு, ஆயுதங்களால் கொல்லப்பட்டு, நிலையான சொர்க்கத்தை அடையட்டும் என்றும், அதற்காக போரில் அர்ஜுனனை  தன் எதிரில் கிருஷ்ணன் கொண்டு வரவேண்டும் என்று கர்ணன் சொன்னது…

கர்ணன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், “ஓ! கேசவா {கிருஷ்ணா}, ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, என்னிடம் நீ கொண்ட அன்பு, பாசம் மற்றும் நட்பின் அடிப்படையிலும், எனக்கு நன்மை செய்யும் உனது விருப்பத்தின் விளைவாலுமே இவ்வார்த்தைகளை நீ சொன்னாய் என்பதில் {எள்ளளவும் எனக்கு} ஐயமில்லை. நீ என்னிடம் சொன்ன அனைத்தையும் {ஏற்கனவே} நான் அறிவேன். தார்மீக அடிப்படையிலும், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையிலும், ஓ! கிருஷ்ணா, நீ நினைப்பது போலவே நான் பாண்டுவின் மகனே. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது தாய் {குந்தி} கன்னிகையாக இருந்த போது, சூரியனுடன் ஏற்பட்ட தனது தொடர்பினால், தன் கருவில் என்னைச் சுமந்தாள். சூரியனின் கட்டளையின் பேரிலேயே நான் பிறந்ததும் அவள் {குந்தி} என்னைக் கைவிட்டாள். ஓ! கிருஷ்ணா, இப்படியே நான் இவ்வுலகுக்கு வந்தேன். எனவே, தார்மீக அடிப்படையில் நான் பாண்டுவின் மகனே.

எனினும், எனது நல்வாழ்வை நினைக்காமல் குந்தி என்னைக் கைவிட்டுவிட்டாள். சூதரான அதிரதர் என்னைக் கண்டதுமே தனது இல்லத்திற்கு எடுத்துச் சென்றார். என் மீது கொண்ட பாசத்தால், அந்த நாளிலேயே ராதையின் முலைகள் பாலால் நிரம்பின. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவள் {ராதை} எனது சிறுநீரையும் மலத்தையும் சுத்தம் செய்தாள். கடமைகளை அறிந்தவர்களும், எப்போதும் சாத்திரங்களைக் கேட்பதில் ஈடுபடுபவர்களுமான நாம் எப்படி அவளது பிண்டத்தை இழக்கச் செய்யலாம்? அதே போலத்தான் சூத வர்கத்தைச் சேர்ந்த அதிரதரும் என்னைத் தனது மகனாகவே கருதுகிறார். நானும் பாசத்தால், அவரையே {அதிரதரையே எனது} தந்தையாக எப்போதும் கருதுகிறேன்.

ஓ! மாதவா, அந்த அதிரதர், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் குழந்தையாக இருந்த போது, ஒரு தந்தையின் பாசத்தோடு, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி குழந்தைக்கான சடங்குகளை {ஜாதகர்மம்} அனைத்தையும் எனக்குச் செய்வித்தார். அதே அதிரதர்தான், அந்தணர்களைக் கொண்டு எனக்கு வசுசேணன் {வஸுஷேணன்} என்ற பெயரையும் அளித்தார். நான் இளமையை அடைந்தபோது, அவரது தேர்வுகளின்படியே நான் என் மனைவியரை மணந்தேன். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களின் {அந்த மங்கையரின்} மூலமே நான் மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் அடைந்தேன். ஓ! கிருஷ்ணா, எனது இதயமும், பாசமும் மற்றும் அன்புக்கட்டுகள் அனைத்தும் அவர்களிடமே நிலைத்திருக்கிறது. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, மகிழ்ச்சியாலோ, அச்சத்தாலோ, முழு உலகத்துக்காகவோ, பொற்குவியலுக்காகவோ அந்தக் கட்டுகளை {பந்தங்களை} அழிக்கும் துணிவு எனக்கு ஏற்படாது.

திருதராஷ்டிரர் குலத்துத் துரியோதனனிடம் நான் கொண்ட தொடர்பின் விளைவால், ஓ! கிருஷ்ணா, ஒரு முள்ளும் என் பக்கத்தில் இல்லாமல் ஆட்சியுரிமையைப் பதிமூன்று {13} வருடங்களாக அனுபவித்தேன். நான் பல வேள்விகளைச் செய்தேன். அவற்றில், சூத இனத்தோர் தொடர்பானவற்றையே எப்போதும் செய்தேன். {நான் சூதர்களோடு பல வேள்விகளைச் செய்தேன். குலச்சடங்குகளையும், திருமணங்களையும் சூதர்களோடே நான் செய்து கொண்டேன்}. ஓ! கிருஷ்ணா, என்னை அடைந்த துரியோதனன், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, பாண்டுவின் மகன்களுடன் பகையுணர்வு தூண்டப்பட்டு, ஆயுத மோதலுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறான்.

ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, {வரப்போகும்} போரில் இதற்காகவே, ஓ! கிருஷ்ணா, அர்ஜுனனின் பெரும் எதிரியாகவும், அவனுக்கு எதிராகத் தனிப்போர் தொடுத்து முன்னேறுபவனாகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். மரணத்திற்கு ஆஞ்சியோ, {பாண்டுவின் மகன்கள் என்ற} இரத்தப்பற்றுக்கு {இரத்த பந்தங்களுக்கு} மயங்கியோ, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரரின் புத்திசாலி மகனுக்கு {துரியோதனனுக்கு} எதிராகப் பொய்மையுடன் {வஞ்சகமாக} நடக்க நான் துணிய மாட்டேன். ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அர்ஜுனனோடு தனிக்குத்தனி மோதலில் நான் ஈடுபடவில்லை என்றால், அஃது எனக்கும், பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} புகழைத் தராது {புகழ்க்கேட்டையே தரும்}.

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இவையனைத்தையும் நீ எனது நன்மைக்காகவே என்னிடம் இப்படிச் சொல்கிறாய் என்பதில் எனக்கு ஐயமில்லை. உனக்குக் கீழ்ப்படியும் பாண்டவர்களும், நீ சொல்வதையே செய்வார்கள் என்பதிலும் எனக்கு ஐயமில்லை. எனினும், தற்போது நமக்குள் நடக்கும் இந்த உரையாடலை, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நீ மறைக்க வேண்டும். ஓ யாதவர்கள் அனைவரையும் மகிழச் செய்பவனே {கிருஷ்ணா}, நமது நலன் அதில் அடங்கியிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

நன்கு அடக்கப்பட்ட புலன்களும், அறம்சார்ந்த ஆன்மாவும் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், குந்தியின் முதல் மகன் {அவனது அண்ணன்} நான் தான் என்பதை அறிந்தால், நாட்டை ஒருபோதும் அவன் ஏற்கமாட்டான். மேலும், ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, பரந்திருப்பதும், விரிவடைவதுமான இந்தப் பேரரசு எனதானால் {என்னுடையதானால்}, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {கிருஷ்ணா}, நிச்சயம் நான் அதைத் துரியோதனனிடம்தான் கொடுப்பேன். {எனவே}, அறம்சார்ந்த யுதிஷ்டிரனே நிலையான மன்னனாக ஆவானாக.

எவன் ரிஷிகேசனை {கிருஷ்ணனை} வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறானோ, எவன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன், நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள் ஆகியோரைப் போர்வீரர்களாகக் கொண்டிருக்கிறானோ, ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவனே {யுதிஷ்டிரனே} இந்த முழு உலகத்தையும் ஆளத் தகுந்தவன்.

பாஞ்சாலர்களின் இளவரசன் திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, உத்தமௌஜஸ், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் சோமக இளவரசனான யுதாமன்யு, சேதி நாட்டு ஆட்சியாளனான சேகிதானன், வெல்லப்படமுடியாத சிகண்டி, இந்திரகோபப் பூச்சிகளின் நிறம் கொண்டோரான கேகய சகோதரர்கள், வானவில்லின் நிறத்திலான குதிரைகளைக் கொண்டவனும், பீமசேனனின் மாமனும், உயர் ஆன்மா கொண்டவனுமான குந்திபோஜன், பெரும் தேர்வீரனான சேனஜித், விராடனின் மகனான சங்கன் மற்றும் {கிருஷ்ணனாகிய} நீ ஆகியோர் அடங்கிய கூட்டம் (யுதிஷ்டிரனால் கூட்டப்பட்டிருக்கும் இந்தக் கூட்டம்}, ஓ! கிருஷ்ணா, க்ஷத்திரியர்களிலேயே பெரிய கூட்டமாகும்.

பூமியின் மன்னர்கள் அனைவர் மத்தியிலும் கொண்டாடப்படும் இந்தச் சுடர்மிகும் நாடு ஏற்கனவே (யுதிஷ்டிரனால்) வெல்லப்பட்டுவிட்டது. {வரப்போகும் போரில் யுதிஷ்டிரனே நிச்சயம் வெல்வான்}.

ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, திருதராஷ்டிரரின் மகனால் {துரியோதனனால்}, ஆயுதங்களாலான பெரும் வேள்வி {சஸ்திரயாகம்} கொண்டாடப்பட இருக்கிறது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நீயே அந்த வேள்விக்கு உபதரஷ்டிரியாகப் போகிறாய். ஓ! கிருஷ்ணா, அவ்வேள்வியில் உனது பணி அத்யர்யுவின் பணியாக இருக்கும். வானரக் கொடி கொண்டவனும், கவசம் தரித்தவனுமான பீபத்சு {அர்ஜுனன்} ஹோத்ரியாவான். {அர்ஜுனனின் வில்லான} காண்டீவம் வேள்விக் கரண்டியாக இருக்கும். வீரர்களின் வீரமே அதில் (எரிக்கப்படப்போகும்) தெளிந்த நெய்யாக {ஹவிஸாக} இருக்கும். ஐந்திரம், பாசுபதம், பிராம்மம், ஸ்தூணாகர்ணம் ஆகிய ஆயுதங்கள், ஓ! மாதவா {கிருஷ்ணா}, (அந்த வேள்வியில்) அர்ஜுனனால் மந்திரங்களாகப் பயன்படுத்தப்படும். தந்தைக்கு {அர்ஜுனனுக்கு} நிகரானவனோ, ஆற்றலில் அவனுக்கும் {அர்ஜுனனுக்கும்}  மேம்பட்டவனோ ஆன சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, {அவ்வேள்வியில்} உரைக்கப்படப்போகும் முக்கிய வேத மந்திரமாவான்.

யானைப் படைகளை அழிப்பவனும், போரில் கொடூரமாகக் கர்ஜிப்பவனும், மனிதர்களில் புலியும், அதீத பலமுடையவனுமான பீமன், இவ்வேள்வியில் உத்கத்ரியும், பிரஸ்தோத்ரியுமாவான். யபம் {ஜபம்} மற்றும் ஹோமத்தில் எப்போதும் ஈடுபடுபவனும், நல்லான்மா கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரனே அவ்வேள்வியில் பிரம்மனாக இருப்பான். சங்குகள், முரசுகள், பேரிகைகள், {போர் வீரர்களின்} சிம்மகர்ஜனைகள் ஆகிய விண்ணை எட்டும் ஒலிகள், உண்ண அழைக்கும் அழைப்பொலிகளாக இருக்கும். மாத்ரியின் இருமகன்களும், பெரும் புகழ் மற்றும் வீரத்தைக் கொண்டவர்களுமான நகுலனும், சகாதேவனும் வேள்வி விலங்குகளைக் கொல்பவர்களாக இருப்பார்கள். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பல்வேறு நிறங்களிலான கொடிக்கம்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் தேர்களின் வரிசை, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்த வேள்வியில் (விலங்குகளைக் கட்டும்) கம்பங்களாக {யூபங்காக} இருக்கும்.

முட்கள் பொருந்திய கணைகள் {காணிகள்}, நாளீகங்கள், நீண்ட தடிகள் {நாராசங்கள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்ட கணைகள் {வத்ஸதந்தங்கள்} ஆகியன (சோமச் சாற்றைப் பகிர்ந்தளிக்கும்) கரண்டிகளாகச் செயல்படும் {உபப்ரம்மணங்கள், சமசாத்வர்யுக்களும் ஆகும்}. தோமரங்கள் சோமப் பாத்திரங்களாகும், விற்கள் பவித்திரங்களாகும். வாட்கள் கபாலங்களாகும், (கொல்லப்பட்ட வீரர்களின்} தலைகள் புரோடாசங்கள் ஆகும். ஓ! கிருஷ்ணா, இவ்வேள்வியில், வீரர்களின் குருதியே தெளிந்த நெய்யாகும் {ஹவிஸ் ஆகும்}.

வேல்களும் {சக்திகளும்}, பளபளக்கும் கதாயுதங்களும், (வேள்வி நெருப்பைத் தூண்டச் செய்யும்) தீக்கிளறிகளாகவும் {பரிதிகளாகவும்}, (விறகு கீழே விழாதிருக்கச் செய்யும்) முலைக்கம்புகளாகவும் {இதமங்களாகவும்} செயல்படும். துரோணர் மற்றும் சரத்வானின் மகன் கிருபர் ஆகியோரின் சீடர்கள் (உதவி செய்யும் புரோகிதர்களாக) சதஸ்யர்களாக இருப்பார்கள். காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, (பிற) வலிமைமிக்கத் தேர்வீரர்கள், துரோணர், மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரால் அடிக்கப்படும் கணைகள் சோமத்தைப் பகிர்ந்தளிக்கும் கரண்டிகளாகச் செயல்படும்.

சாத்யகி அத்யர்யுவின் தலைமை உதவியாளனாகத் {பிரதிபிரஸ்தாதாவாகத்} தனது கடமைகளைச் செய்வான். இவ்வேள்வியில், திருதராஷ்டிரரின் மகனே {துரியோதனனே} அதைச் செய்பவனாக {தீக்ஷிதனாக} நிறுவப்படுவான். அவ்வேளையில் இந்தப் பரந்த படையே அவனது மனைவியாக {பத்தினியாக} இருக்கும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, வேள்வியின் இரவு நேரச் சடங்குகள் தொடங்கும்போது {அதிராத்திரத்தில்}, பெரும் பலமிக்கவனான கடோத்கசன், அதில் (அர்ப்பணிக்கப்படும்) பலிகளைக் கொல்பவனாவான் {சாமித்திரத்தைச் செய்வான்}. மந்திரங்களால் கொண்டாடப்படும் சடங்குகளின் வாயான வேள்வி நெருப்பில் இருந்து உயிருடன் உதித்தவனான பலமிக்கத் திருஷ்டத்யும்னன், ஓ! கிருஷ்ணா, அந்த வேள்வியின் கொடையாக {தக்ஷிணையாக} இருப்பான்.

ஓ! கிருஷ்ணா, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} மனநிறைவுக்காக, பாண்டுவின் மகன்களிடம், தீய நடத்தையுடன் நடந்து கொண்டு, பேசிய கடுஞ்சொற்களுக்காக, குற்றவுணர்ச்சியால் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். ஓ! கிருஷ்ணா, அர்ஜுனனால் நான் கொல்லப்படுவதை நீ காணும்போது, இந்த வேள்வியின் புனசித்தி {வேள்வியின் பின் செய்யப்படும் சயனம்} ஆரம்பிக்கும்.

எப்போது பாண்டுவின் (இரண்டாம்) மகன் {பீமன்} உரத்து கர்ஜிப்பவனான துச்சாசனனின் குருதியைக் குடிப்பானோ, அப்போது இவ்வேள்வியின் சோமம் பருகும் நேரம் அமையும்.

எப்போது பாஞ்சாலத்தின் இளவரசர்கள் இருவரும் (திருஷ்டத்யும்னனும், சிகண்டியும்), துரோணரையும், பீஷ்மரையும் வீழ்த்துவார்களோ, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அப்போது இவ்வேள்வியின் இடைவேளை {அவசாநம்} உண்டாகும்.

எப்போது பலமிக்கப் பீமசேனன் துரியோதனனைக் கொல்வானோ, ஓ! மாதவா {கிருஷ்ணா}, அப்போதே இவ்வேள்வி முடியும்.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, எப்போது திருதராஷ்டிரரின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளின் மனைவிமார், தங்கள் கணவர்களையும், மகன்களையும் இழந்து, பாதுகாவலர்கள் அற்றவர்களாக, நாய்களும், கழுகுகளும், ஊணுண்ணும் பறவைகளும் {சாகுருவிகளும்} மொய்க்கும் போர்க்களத்தில் ஒன்றாகக்கூடி காந்தாரிக்கு மத்தியில் அழுது புலம்புவார்களோ, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அப்போது இவ்வேள்வியின் இறுதி நீராடல் {அவபிருதம்} நடைபெறும்.

ஓ! க்ஷத்திரிய குலத்தின் காளையே {கிருஷ்ணா}, கல்வியாலும், வயதாலும் முதிர்ந்த க்ஷத்திரியர்கள், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உன் நிமித்தமாக இழிவாக அழிவடைய வேண்டாம் என நான் உன்னை வேண்டிக் கொள்கிறேன். ஓ! கேசவா {கிருஷ்ணா} மூவுலகின் அனைத்து இடங்களிலும் மிகவும் புனிதமான குருக்ஷேத்திரம் என்ற இடத்தில், க்ஷத்திரியர்களின் இந்த விரிந்த கூட்டம், ஆயுதங்களின் மூலம் அழிவடையட்டும். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே, உனது மனத்தில் இருப்பவற்றை இந்த இடத்தில் நீ சாதித்தால், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, க்ஷத்திரிய குலம் முழுமையும் சொர்க்கத்தை அடையும்.

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மலைகளும், நதிகளும் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் இந்தச் சாதனைகளின் புகழ் நீடிக்கும். பாரதர்களின் பெரும்போர் {மஹாபாரதப் போர் – The great war of Bharatas} என்று இதை அந்தணர்கள் உரைப்பார்கள். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, போர்களில் க்ஷத்திரியர்கள் அடையும் புகழ் என்ற செல்வமே அவர்களுக்குச் சொந்தமானது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, நமது இந்த உரையாடலை எப்போதும் கமுக்கமாக வைத்துக் கொண்டு, ஓ! கேசவா {கிருஷ்ணா}, போரில் குந்தி மகனை {அர்ஜுனனை} என் முன்னிலைக்கு அழைத்துவா” என்றான் {கர்ணன்}.

அமாவாசையில் போர் தொடங்கட்டும்! – உத்யோக பர்வம் பகுதி 142-கர்ணனிடம் கிருஷ்ணன், பாண்டவர்களின் வெற்றி உறுதி என்று சொல்வது; போருக்கான நாளை நிச்சயித்துக் கொண்ட கிருஷ்ணன், அமாவாசை அன்று போர் தொடங்கட்டும் என்று கௌரவர்களிடம் சொல்லுமாறு கர்ணனிடம் சொல்வது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தவாறே அவனிடம் {கர்ணனிடம்}, “ஒரு பேரரசை வெல்லும் வாய்ப்பு உன்னிடம் தன்னைப் பரிந்துரைத்துக் கொள்ளவில்லையா? {ஒரு பேரரசை வெல்லும் வாய்ப்பை மறுக்கிறாயா?} ஓ! கர்ணா, என்னால் கொடுக்கப்படும் முழுப் பூமியையும் நீ ஆள விரும்பவில்லையா? எனவே, {நீயே சொல்வதால்} பாண்டவர்களின் வெற்றி உறுதியே. இதில் எந்த ஐயமும் தோன்றவில்லை. கடும் குரங்கைக் கொடியாகக் கொண்டிருக்கும் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} வெற்றிக் கொடி ஏற்கனவே நாட்டப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.

இந்திரனின் கொடியைப் போல உயர்ந்து நின்று காட்சியளிக்கும்படி, தெய்வீகக் கைவினைஞனான {தச்சனான} பௌமானன் {விஸ்வகர்மா} அதில் {அக்கொடியில்} தெய்வீக மாயையைப் பயன்படுத்தியிருக்கிறான். வெற்றியைக் குறிக்கும் வகையில் பயங்கர வடிவம் கொண்ட பல்வேறு தெய்வீக உயிரினங்கள் அந்தக் கொடிக்கம்பத்தில் காணப்படுகின்றன. மேல்நோக்கியும், சுற்றிலும் ஒரு யோஜனை அளவு பரந்திருக்கும் அர்ஜுனனின் அழகிய கொடிக்கம்பம், தீ போன்ற பிரகாசத்துடன் {தேரில்} நாட்டப்படுகையில், ஓ! கர்ணா, எப்போதும் அது மலைகளாலோ, மரங்களாலோ தடுக்கப்படுவதில்லை.

வெண்குதிரைகளால் இழுக்கப்பட்டு, கிருஷ்ணனால் செலுத்தப்படும் தேரில் இருந்து கொண்டு ஐந்திரம், ஆக்னேயம், மருதம் ஆகிய ஆயுதங்களைப் போரில் அர்ஜுனன் பயன்படுத்துவதை எப்போது காண்பாயோ, இடியைப் போன்று விண்ணைத் துளைக்கும் காண்டீவத்தின் நாணொலியை எப்போது நீ கேட்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும் (ஆனால், அதற்குப் பதிலாக உடல் கொண்டு வரும் கலி அங்கிருக்கும்).

யபம் {ஜபம்}, ஹோமம் ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவரும், வலிமைமிக்கத் தனது படையைத் தானே காப்பவரும், தனது எதிரியின் படையை எரிப்பவரும், ஒப்பற்றவரும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரரை எப்போது நீ போரில் காண்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.

மதம் கொண்ட கடும் யானையைப் போல, வலிமைமிக்கப் பெரும் எதிரியைக் கொன்றுவிட்டு, துச்சாசனனின் குருதியைக் குடித்து, ஆடிக் கொண்டிருக்கும் பீமசேனனை எப்போது நீ போரில் காண்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.

மோதலுக்காக மூர்க்கமாக விரைந்து எதிர்த்துவரும் துரோணர், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, கிருபர், மன்னன் சுயோதனன் {துரியோதனன்}, சிந்து குலத்தின் ஜயத்ரதன் ஆகியோரைத் தடுக்கும் அர்ஜுனனை எப்போது நீ போரில் காண்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.

பகையணித் தேர்களைத் துண்டுதுண்டாக உடைக்கவல்லவர்களும், வீரமிக்கத் தேர்வீரர்களுமான மாத்ரியின் இரு வலிமைமிக்க மகன்கள் {நகுலனும், சகாதேவனும்} மதம் கொண்ட இரு யானைகளைப் போல, திருதராஷ்டிரர் மகன்களின் படையைத் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு மோதிக் கலங்கடிப்பதை எப்போது நீ போரில் காண்பாயோ, அந்தக் கணமே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.

துரோணர், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, கிருபர் ஆகியோரிடம் நீ திரும்பிச் சென்றதும், ஓ! கர்ணா, “இந்த மாதம் இனிமையானது. உணவு, நீர் மற்றும் எரிபொருள் {விறகு} ஆகியன இப்போது அபரிமிதமாக இருக்கின்றன. செடிகள் மற்றும் மூலிகைகள் அனைத்தும் இப்போது செழிப்பாக இருக்கின்றன; அனைத்து மரங்களிலும் கனிகள் நிறைந்திருக்கின்றன; பூச்சிகளோ {ஈக்களோ} ஒன்றுமில்லை; சாலைகள் புழுதியற்று இருக்கின்றன; நீரும் இனிமையான சுவை கொண்டதாக இருக்கிறது; பருவநிலை அதிக வெப்பத்துடனோ, அதிகக் குளுமையுடனோ இல்லை. எனவே அதுவும் {பருவ நிலையும்} இனிமையாகவே இருக்கிறது.

{இன்றிலிருந்து} ஏழு நாள் கழித்து வருவது அமாவாசை நாளாகும். அப்போதே போர் ஆரம்பிக்கட்டும். அந்த நாளே இந்திரனின் தலைமை கொண்டதாகச் சொல்லப்படுகிறது” என்று சொல்வாயாக. போரிடுவதற்காகக் கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரிடமும், அவர்களால் பேணிக் காக்கப்படும் ஆசையை நான் முழுமையாகத் தீர்த்துவைப்பேன் என்றும் சொல்வாயாக. உண்மையில் துரியோதனனின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், ஆயுதங்களின் மூலம் மரணத்தை அடைந்து, அற்புத நிலையை நிச்சயம் அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.

கர்ணன் கண்ட கனவுகளும் சகுனங்களும்! – உத்யோக பர்வம் பகுதி 143-கர்ணன் தான் கண்ட கனவுகளையும் சகுனங்களையும் கிருஷ்ணனிடம் சொன்னது; அவை பாண்டவர்களுக்கு வெற்றியையும், கௌரவர்களுக்கும் தோல்வியையும் முன்னறிவிப்பதாகச் சொன்னது; அந்தச் சூழலில் இருந்த கோள்களின் நிலைகளைக் கர்ணன் வர்ணிப்பது; அபசகுனங்களின் தோற்றங்களைத் தான் கண்டவாறே கர்ணன் உரைப்பது …

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த மங்கலகரமான, நன்மையான வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், மதுசூதனனான கிருஷ்ணனை வழிபட்டு, “(அனைத்தையும்) அறிந்தும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ ஏன் என்னை இன்னும் ஏமாற்ற முயல்கிறாய்? தற்போது பூமி முழுமைக்கும் அழிவேற்படப்போகிறது. சகுனி, {கர்ணனாகிய} நான், துச்சாசனன், திருதராஷ்டிரர் மகனான மன்னன் துரியோதனன் ஆகியோர் அதற்கான காரணங்களாக இருப்போம்.

ஓ! கிருஷ்ணா, இரத்தப்புழுதியால் உலகை நனைக்கப் போவதாக, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் தற்போது நடக்க இருக்கும் போர் பெரியதாகவும், கடுமையானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. துரியோதனனின் வழிநடத்தலைப் பின்தொடரும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், ஆயுதங்கள் எனும் நெருப்பால் எரிக்கப்பட்டு, யமனின் வசிப்பிடத்தை அடைவார்கள். ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பல்வேறுவிதமான பயங்கரக் காட்சிகள் தெரிகின்றன. பல கொடூரமான அத்தாட்சிகளும், கடுமையான தொந்தரவுகளும் கூடக் காணப்படுகின்றன.

(பார்வையாளர்களின்) மயிரைச் சிலிர்க்கச் செய்யும் இந்தச் சகுனங்கள் அனைத்தும், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} தோல்வியையும், யுதிஷ்டிரனின் வெற்றியையுமே குறிக்கின்றன.

பெரும் பிரகாசமிக்கக் கடுமையான கோளான சனைஸ்சரன் (சனிக் கிரகம்), பூமியில் உள்ள உயிரினங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் வகையில், ரோகிணி நட்சத்திரக் கூட்டத்தைப் பீடிக்கிறது. {கோள்கணியத்தின் படி இந்த அமைப்பு, மன்னர்களுக்குள் பெரும் போர் மூளும் என்பதை முன்னறிவிக்கும் அமைப்பாகும்

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அங்காரகன் (செவ்வாய்) என்ற கோள், கேட்டை நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சுழன்று, நண்பர்களின் பெரும் படுகொலைகளைக் குறிக்கும் வகையில், அனுஷத்தை {அனுஷ நட்சத்திரத்தை} {வக்ர கதியில்} அணுகுகிறது. {ஆயுதம் தாங்குபவர்களுக்கு அழிவை உண்டாக்கும் அமைப்பு இது.}

ஓ! கிருஷ்ணா, ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, மஹாபத் {செவ்வாய்} என்ற கோள் சித்திரை நட்சத்திரத்தைப் பீடிப்பதால், குறிப்பாகக் குருக்களைப் பயங்கரப் பேரிடர் அணுகுகிறது என்பதில் ஐயமில்லை. {மன்னர்களுக்கு பயத்தை உண்டாக்கும் அமைப்பு இது}.

சந்திர வட்டில் உள்ள கறை {களங்கம்}, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.

ராகுவும் சூரியனை அணுகுகிறான். {இந்த அமைப்பைக் கர்த்தரி யோகம் என்று குறிப்பிடுவார்கள். சூரிய குல, சந்திரகுல மன்னர்களின் அழிவை இது முன்னறிவிக்கிறது}.

வானில் இருந்து உரத்த ஒலியுடனும், நடுங்கும் அசைவுடனும் எரிகற்கள் விழுகின்றன.

யானைகள் பயங்கரமாக அலறுகின்றன, அதேவேளையில், ஓ! மாதவா {கிருஷ்ணா}, குதிரைகள், உணவிலோ, பானத்திலோ எந்த மகிழ்ச்சியும் கொள்ளாமல் கண்ணீரைச் சிந்துகின்றன. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, இந்த அத்தாட்சிகள் தோன்றும்போது, பெரும் படுகொலைகளை அது ஏற்படுத்தும் என்றும், பயங்கரப் பேரிடர் {நம்மை} அணுகும் என்றும் சொல்கிறார்கள்.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, குதிரைகளிலும், யானைகளிலும், துரியோதனனின் படையில் உள்ள பிரிவுகள் அனைத்திலும் உள்ள படைவீரர்களிலும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அவர்கள் உண்ணும் உணவு மிகச் சிறு அளவே இருப்பினும், அவர்கள் கழிக்கும் மலம் அதிகமாக இருக்கிறது. இது குறைபாட்டின் அறிகுறி என்று ஞானிகள் கூறியுள்ளனர்.

பாண்டவர்களின் யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும், ஓ! கிருஷ்ணா, உற்சாகமாக இருக்கின்றன. பிற விலங்குகள் அனைத்தும் அவர்களை {பாண்டவர்களை} வலமாகச் சுற்றுகின்றன. இஃது அவர்களது வெற்றிக்கான அறிகுறியாகும். அதே விலங்கு, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துரியோதனனின் படையை இடது பக்கமாகக் கடக்கிறது. அதே வேளையில் (அவர்களின் தலைகளுக்கு மேலே} உருவமற்ற குரல்களும் கேட்கின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியே.

மயில்கள், அன்னங்கள், நாரைகள், சாதகங்கள், ஜீவஜிவங்கள், வகங்களின் பெரிய கூட்டமும், மங்கலமான பறவைகள் அனைத்தும் பாண்டவர்களைத் தொடர்ந்து செல்கின்றன. அதே வேளையில், கழுகுகள், கங்கங்கள், பருந்துகள், ராட்சசர்கள், ஓநாய்கள், வண்டுகள் ஆகியன கூட்டம் கூட்டமாகக் கௌரவர்களைத் தொடர்ந்து செல்கின்றன. திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படையில் உள்ள பேரிகைகள் ஒலிகளை வெளியிடவில்லை. அதே வேளையில் பாண்டவர்களுக்கு உடையன {பேரிகைகள்} அடிக்கப்படாமலேயே ஒலியை வெளியிடுகின்றன. துரியோதனனின் முகாம்களுக்கு மத்தியில் இருக்கும் கிணறுகள் பெரும் காளைகளைப் போலப் பெரிய கர்ஜனைகளை வெளியிடுகின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியே ஆகும்.

ஓ! மாதவா, துரியோதனனின் படை வீரர்கள் மீது தேவர்கள் இறைச்சியையும், குருதியையும் மழையாகப் பொழிகின்றனர். {துரியோதனனின் படை வீரர்கள் மீது தேவர்கள் தசைமாரியும், உதிரமாரியும் பொழிகின்றனர்}. உயரமான சுவர்கள் {மதில்கள்}, ஆழமான அகழிகள், அழகான கட்டட முகப்புகள் ஆகியன (குருக்களின் முகாமுக்கு மேலே) திடீரென வானத்தில் தோன்றுகின்றன. சூரிய வட்டைச் சுற்றி ஒரு கருவளையம் தோன்றுகிறது. சூரிய எழுகை {சூரியோதயம்} மற்றும் சூரிய மறைவு {சூரியாஸ்தமனம்} ஆகிய சந்திப் பொழுதுகள் இரண்டும் பெரும் பயங்கரங்களைக் குறிக்கின்றன. கொடூரமான முறையில் குள்ளநரிகள் ஊளையிடுகின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியே ஆகும்.

ஒரு சிறகு, ஒரு கண், ஒரு கால் மட்டுமே கொண்ட பல்வேறு பறவைகள் பயங்கரமாகக் கதறுகின்றன. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியாகும். கருப்பு சிறகுகளும், சிவந்த கால்களும் கொண்ட கடுமை நிறைந்த பறவைகள் குருக்களின் முகாமுக்கு மேல் இரவு விழும் நேரங்களில் {மாலை நேரத்தில் இருட்டும் வேளையில்} பறக்கின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியாகும். துரியோதனனின் படை வீரர்கள் முதலில் அந்தணர்களிடம் வெறுப்பைக் காட்டுகிறார்கள், பிறகு தங்கள் ஆசான்களிடமும், பிறகும் தங்களிடம் பாசம் கொண்ட அனைத்து சேவகர்களிடமும் வெறுப்பைக் காட்டுகிறார்கள். (துரியோதனனின் முகாமில் இருந்து பார்க்கையில்), ஓ! மதுசூதனா {கிருஷ்ணா} அடிவானத்தின் கிழக்குத் திசை சிவப்பாகவும், தெற்கு ஆயுதங்களின் {கத்தியின்} நிறத்திலும், மேற்கு பூமியின் நிறத்திலும், {வடக்கு சங்கு போன்ற நிறத்திலும்} தோன்றுகின்றன. ஓ! மாதவா {கிருஷ்ணா} துரியோதனனின் முகாமைச் சுற்றிலும் உள்ள திசைகள் பற்றி எரிவதைப் போலத் தோன்றுகின்றன. இப்படித் தோன்றும் இந்த அனைத்து அத்தாட்சிகளும், பெரும் ஆபத்துக்கே அறிகுறியாகும்.

ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, ஆயிரம் தூண்கால் தாங்கப்படும் அரண்மனையில், யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் ஏறுவதைக் கனவினில் கண்டேன். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் வெண்கிரீடங்கள் {வெள்ளைத் தலைப்பாகைகள்} மற்றும் வெள்ளாடைகளுடன் தோன்றினர். அவர்கள் அனைவரும் வெள்ளை இருக்கையில் அமர்ந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. அதே கனவின் மத்தியில் ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இரத்தம் நிறம் பூசிய பூமியை ஆயுதங்களால் சூழ்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உன்னையும் நான் கண்டேன்.

அதே வேளையில், அளக்கமுடியா சக்தி கொண்ட யுதிஷ்டிரன், எலும்புகளின் குவியல் ஒன்றின் மீது ஏறி, தங்கக் கோப்பையில் நெய் பாயசத்தை உண்டு கொண்டிருந்தான். மேலும், நீ கொடுக்கும் பூமியை விழுங்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனையும் நான் கண்டேன். அவன் {யுதிஷ்டிரன்} பூமியை ஆள்வது நிச்சயம் என்பதன் அறிகுறியே இஃது.

மனிதர்களில் புலியும், கடும் செயல்கள் புரிபவனுமான விருகோதரன் {பீமன்}, கையில் கதாயுதத்துடன் பூமியை விழுங்கிவிடுபவன் போல மலை உச்சியில் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன். கடும்போரில் அவன் {பீமன்} எங்கள் அனைவரையும் கொன்றுவிடுவான் என்பதன் வெளிப்படையான அறிகுறியே இஃது. ஓ! புலன்களின் தலைவா {கிருஷ்ணா}, நீதி எங்கிருக்கிறதோ அங்கேயே வெற்றி இருக்கும் என்பதை நான் அறிவேன்.

ஓ! புலன்களின் தலைவா {கிருஷ்ணா}, காண்டீவந்தாங்கியான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வெள்ளையானையின் முதுகில் உன்னுடன் அமர்ந்து கொண்டு பெரும் அழகுடன் பிரகாசிப்பதை நான் கண்டேன். ஓ! கிருஷ்ணா, துரியோதனனின் தலைமையிலான மன்னர்கள் அனைவரையும் போரில் அவன் {அர்ஜுனன்} கொல்வான் என்பதில் எனக்கு ஐயமில்லை.

வெள்ளை தோள்வளையங்கள், வெள்ளை மார்புக் கவசங்கள் [1], வெண்மாலைகள், வெள்ளாடைகள் ஆகியவற்றில் அலங்கரிக்கப்பட்டிருக்கும், நகுலன், சகாதேவன் மற்றும் பெரும் பலமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோரை நான் கண்டேன். மனிதர்களில் புலிகளான அவர்கள் மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் அற்புத வாகனங்களில் {பல்லக்குகளில்} அமர்ந்திருந்தனர். அந்த மூவரின் தலை மேலும் குடைகள் பிடிக்கப்பட்டிருப்பபதையும் நான் கண்டேன்(மூலத்தில் இது “கண்டதரா” என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. அது “கண்டபூரகம்” என்ற பெயருடையது என்றும், தலை முதல் தோள்வரையில் தொங்கும்படி போர்வீரர்கள் அதை அணிந்து கொள்வார்கள் என்றும், அது கழுத்தை மறைக்கும் என்றும் சொல்கிறார்கள். கழுத்தைப் பாதுகாக்கும் வகையில் மார்பில் அணியப்படும் ஒரு கவசமாகவும் இஃது இருக்கலாம்.)

திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படைவீரர்களுக்கு மத்தியில் மூவர், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, வெண்கிரீடங்களுடன் {வெள்ளை தலைக்கவசம் அல்லது தலைப்பாகையாக} இருந்ததை நான் கண்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அந்த மூவர் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சத்வத குலத்தில் கிருதவர்மன் என்பதை அறிந்து கொள்வாயாக. ஓ! மாதவா {கிருஷ்ணா}, பிற மன்னர்கள் அனைவரும் இரத்தச் சிவப்பான கிரீடங்களை {தலைப்பாகைகளை} அணிந்திருந்தனர்.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பலமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மர், துரோணர் ஆகியோர், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா} ஒட்டகங்களாலும், என்னாலும், திருதராஷ்டிரர் மகனாலும் {துரியோதனனாலும்} இழுக்கப்பட்டு, வாகனத்தில் ஏறி அகஸ்தியரால் ஆளப்படும் திசைக்குப் போவதைக் கண்டேன். நாங்கள் அனைவரும் யமனின் வசிப்பிடத்திற்கு விரைவில் செல்வோம் என்பதன் அறிகுறியே இஃது. நானும் மற்ற பிற மன்னர்களும், உண்மையில் கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் காண்டீவ நெருப்புக்குள் நுழைய வேண்டியிருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை” என்றான் {கர்ணன்}.

கிருஷ்ணன் {கர்ணனிடம்}, “எனது வார்த்தைகள் உனது இதயத்துக்கு ஏற்பில்லாமல் போகும் போது, உலகத்தின் அழிவு சமீபத்தில் இருக்கிறது என்பது உண்மையே. ஓ! ஐயா, அனைத்து உயிரினங்களின் அழிவும் வரும்போது, சரியானதைப் போன்று தெரியும் தவறு உனது இதயத்தை விட்டு அகலாது” என்றான் {கிருஷ்ணன்}.

கர்ணன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, வீர க்ஷத்திரியர்களுக்குப் பெரும் அழிவைத் தரும் இந்தப் பெரும் போரில் இருந்து நாம் உயிருடன் வெளிவந்தால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, நாம் மீண்டும் இங்கே சந்திப்போம். இல்லையெனில், ஓ! கிருஷ்ணா, நாம் நிச்சயம் சொர்க்கத்தில் சந்திக்கலாம். ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, அங்கேதான் {சொர்க்ககத்தில் தான்} நாம் சந்திப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது என்றே எனக்கு இப்போது தோன்றுகிறது” என்றான் {கர்ணன்}.”

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “இவ்வார்த்தைகளைப் பேசிய கர்ணன், மாதவனைத் {கிருஷ்ணனை} தனது மார்போடு தழுவி கொண்டான். பிறகு கேசவனால் {கிருஷ்ணனால்} விடைகொடுக்கப்பட்ட அவன் தேரில் இருந்து இறங்கினான். பெரிதும் மனம் தளர்ந்த கர்ணன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது தேரில் நம்மை மீண்டும் வந்தடைந்தான்” என்றான்.”

கர்ணன் முதுகைச் சுட்ட சூரியன்! – உத்யோக பர்வம் பகுதி 144-விரும்பியது ஈடேறாமல் செல்லும் கிருஷ்ணனைச் சுட்டிக்காட்டி குந்தியிடம் வருந்திய விதுரன்; குந்தி மனதிற்குள் அடைந்த தீர்மானம்; கங்கைக் கரையில் தனது துதிகளைச் செய்து கொண்டிருந்த கர்ணன்; கர்ணனைக் காண குந்தி சென்றது; குந்தியைக் கண்ட கர்ணன் ஆச்சரியம் அடைந்தது …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணனின் (அமைதிக்கான) வேண்டுதல்கள் தோல்வியில் முடிந்த பிறகு, அவன் {கிருஷ்ணன்} குருக்களிடம் இருந்து பாண்டவர்களிடம் புறப்பட்டுச் சென்ற போது, பிருதையை {குந்தியை} அணுகிய க்ஷத்ரி {விதுரன்} துயரத்துடன், “ஓ! வாழும் பிள்ளைகளின் தாயே {குந்தியே}, எனது விருப்பம் எப்போதும் சமாதானமே என்பதையும், என்னதான் நான் அடித்தொண்டையில் இருந்து கதறினாலும், சுயோதனன் {துரியோதனன்} எனது வார்த்தைகளைக் கேட்கவில்லை என்பதையும் நீ அறிவாய். 

சேதிகள், பாஞ்சாலர்கள், கேகயர்கள், பீமன், அர்ஜுனன், கிருஷ்ணன், யுயுதானன் மற்றும் இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைத் தனது கூட்டாளிகளாகக் கொண்டிருந்தும், மன்னன் யுதிஷ்டிரன் இன்னும் உபப்லாவ்யத்திலேயே தங்கியிருக்கிறான். தனது சொந்தங்களிடம் தான் கொண்ட பாசத்தால், பெரும்பலத்தைக் கொண்டிருந்தும் பலவீனமான மனிதனைப் போல நீதியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். வயதில் முதிர்ந்திருந்தாலும், இங்கே இருக்கும் திருதராஷ்டிரர் சமாதானத்தை எட்டாமல், தனது பிள்ளைகள் மேல் கொண்ட கர்வத்தால், பாவம் நிறைந்த பாதையில் நடக்கிறார்.

ஜெயத்ரதன், கர்ணன், துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோருடைய தீமையின் விளைவால் சொந்தங்களுக்குள்ளே வேற்றுமை {உட்பூசல்} உண்டாகப்போகிறது. நீதிமிக்க ஒருவனிடம் நீதியற்று நடந்து கொள்பவர்கள், அந்தப் பாவத்தின் விளைவுகளை விரைவில் காண்பார்கள். இவ்வழியில் நீதியைத் துன்புறுத்தும் குருக்களைக் காணும் எவன்தான் வருந்தமாட்டான்? சமாதானத்தை எட்ட முடியாமல் திரும்பும் கேசவனைக் {கிருஷ்ணனைக்} கண்டதும், பாண்டவர்கள் நிச்சயம் போருக்குத் தயாராவார்கள். அதன்பேரில், குருக்களின் பாவம், வீரர்களின் அழிவுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தையும் நினைத்துக் கொண்டிருப்பதால், பகலும் இரவும் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை” என்றான் {விதுரன்}.

குந்தி பிள்ளைகளின் {பாண்டவர்களின்} நோக்கங்கள் ஈடேறுவதை எப்போதும் விரும்பும் விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட அவள் {குந்தி}, துன்பத்தால் பெருமூச்சுவிடத் தொடங்கித் தனக்குள், “எதன் பொருட்டுச் சொந்தங்களுக்குள் இந்தப் பெரும்படுகொலை நேரப்போகிறதோ அந்தச் செல்வத்துக்கு ஐயோ. {அந்த செல்வத்தை நிந்திக்க வேண்டும்}. உண்மையில், இந்தப் போரில் நண்பர்களாக இருப்பவர்கள் தோல்வியை அடையப்போகிறார்கள். பாண்டவர்கள், சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் யாதவர்கள் அனைவரும் கூடி, பாரதர்களுடன் {கௌரவர்களுடன்} போரிடுவதைவிடப் பெரிய துயர் ஏது? போரில் நான் குற்றத்தையே காண்கிறேன்.

(மறுபுறம்) நாம் போரிடவில்லையெனில் வறுமையும், அவமானமும் நமதாகும். ஏழையைப் பொறுத்தவரை, (அவனுக்கு) மரணமே நன்மை. (மறுபுறம்) ஒருவன் தனது சொந்தங்களையே அழிப்பது வெற்றியாகாது. இதை நினைக்கையிலேயே எனது இதயத்தில் துயர் பெருகுகிறது. சந்தனுவின் மகனான பாட்டன் {பீஷ்மர்}, வீரர்களில் முதன்மையானவரான ஆசான் (துரோணர்), கர்ணன் ஆகியோர் துரியோதனனின் பக்கத்தில் இருந்து எனது அச்சத்தை அதிகரிக்கின்றனர். ஆசானான துரோணர், தனது மாணாக்கர்களுக்கு எதிராக எப்போதும் விருப்பத்துடன் போர் புரியமாட்டார். பாட்டனைப் {பீஷ்மரைப்} பொறுத்தவரை, அவர் {பீஷ்மர்} பாண்டவர்களிடம் சிறு பாசத்தையாவது கொண்டிருக்க மாட்டாரா?

பாவம் நிறைந்த கர்ணன் மட்டுமே, தனது அறிவின் மயக்கத்தாலும், தீய துரியோதனனால் வஞ்சக வழியை எப்போதும் பின்பற்றுவதாலும், பாண்டவர்களை வெறுக்கிறான். பாண்டவர்களுக்குத் தீங்கிழைப்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்தக் கர்ணன் மிகவும் சக்தி வாய்ந்தவனாகவும் இருக்கிறான். இதுவே என்னை இப்போது எரித்துக் கொண்டிருக்கிறது. அவன் {கர்ணன்} மனநிறைவு கொள்ளும் வகையில், இன்று நான் அவனிடம் சென்று உண்மையை வெளிப்படுத்தி, பாண்டவர்களின்பால் அவனது {கர்ணனின்} இதயத்தை ஈர்க்க முயற்சிக்கப் போகிறேன்.

{குந்தியாகிய} நான் எனது தந்தையான குந்திபோஜனின் அரண்மனையில் உள்ள அந்தப்புரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, என்னிடம் மனநிறைவு கொண்ட புனிதரான துர்வாசர், {தேவர்களை} அழைக்கும் {வழிபாட்டு} வடிவங்கள் அடங்கிய மந்திரங்களை வரமாக எனக்கு அளித்தார்.

நம்பிக்கையான செவிலியால் பாதுகாக்கப்பட்டு, பணிப்பெண்களால் சூழப்பட்டிருந்த நான், {இயற்கையாகப்} பெண்கள் கொண்டிருக்கும் மனநிலையின் விளைவாகவும், வயதில் முதிராத பெண்ணான எனது இயல்பாலும் மீண்டும் மீண்டும் ஆலோசித்து, எந்த நிந்தனையும் அடையாமல் இருப்பது எப்படி? என் தந்தையின் {வளர்ப்பு தந்தை குந்திபோஜனின்} மரியாதையைப் பராமரிப்பது எப்படி? விதியை மீறும் குற்றம் எதையும் செய்யாமல் நற்பேறை அடைவது எப்படி? என்று சிந்தித்தேன். அந்த மந்திரங்களின் பலம் அல்லது பலவீனத்தையும், அந்த அந்தணரின் {துர்வாசரின்} வார்த்தைகளில் உள்ள சக்தியையும், நடுங்கும் இதயத்துடன் நீண்ட நேரம் சிந்தித்தேன்., இறுதியாக, அந்த அந்தணரை {துர்வாசரை} நினைவு கூர்ந்து அவரை {துர்வாசரை} வணங்கினேன். அவரிடம் {துர்வாசரிடம்} பெற்ற மந்திரத்தால் உண்டான பெரும் ஆவலாலும் அறியாமையாலும், எனது கன்னிப்பருவத்தில் நான் சூரிய தேவனை அழைத்தேன்.

எனவே, கன்னிப்பருவத்தில் எனது கருவறையில் தாங்கப்பட்ட அவன், தனது தம்பிகளுக்கு நிச்சயம் ஏற்புடையதும், நன்மையானதுமான எனது வார்த்தைகளுக்கு ஏன் கீழ்ப்படிய மாட்டான்?” என்று நினைத்தாள். இதே போலச் சிந்தித்த குந்தி, ஓர் அற்புத தீர்மானத்தை அடைந்தாள். தீர்மானத்தை அடைந்த அவள் {குந்தி}, பகீரதன் பெயரால் அழைக்கப்படும் புனித ஓடைக்குச் சென்றாள். கங்கைக்கரையை அடைந்த பிருதை {குந்தி}, பெரும் கருணை கொண்டவனும், உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான தனது மகன் {கர்ணன்}, வேத மந்திரங்களை உரைப்பதைக் கேட்டாள்.

கிழக்கு முகமாக, கரங்களை உயர்த்திக் கர்ணன் நின்று கொண்டிருந்தபோது, ஆதரவற்ற குந்தி, தான் கொண்ட காரியத்தின் நிமித்தம், {கர்ணனது} துதிகள் நிறைவடையக் காத்திருந்தாள். விருஷ்ணி குலத்து மங்கையும், குருக்கள் வீட்டு மனைவியுமான அந்த மங்கை {குந்தி}, சூரியனின் வெப்பத்தால் தாக்கப்பட்டு, வாடிய தாமரைமலர் மாலையைப் போலக் காணப்பட்டாள். இறுதியாக, கர்ணனின் மேலாடை கொடுத்த நிழலில் அவள் {குந்தி} நின்றாள்.

மாறாத நோன்புகளைக் கொண்ட கர்ணன், தனது முதுகு சூரியக் கதிர்களால் வெப்பமடையும்வரை தனது துதிகளைச் சொல்லிக் கொண்டிருந்தான் [1]. {துதிகள் முடிந்ததும்} திரும்பிய அவன் {கர்ணன்}, குந்தியைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான். அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தியும், செருக்கும் கொண்டவனுமான அந்த விகர்த்தனன் மகன் விருஷன் {கர்ணன்} அவளைக் {குந்தியை} முறையான வடிவில் குவிந்த கரங்களால் வணங்கிய பிறகு பேசத் தொடங்கினான்.”

“கர்ணா, நீ என் மகனே!” என்ற குந்தி! – உத்யோக பர்வம் பகுதி 145-குந்தி வந்த நோக்கத்தைக் கர்ணன் கேட்பது; கர்ணன் தனது மகனே என்று குந்தி கர்ணனிடம் சொல்வது; பாண்டவர்களுடன் சேர்ந்திருக்குமாறு கர்ணனிடம் குந்தி கேட்பது .

கர்ணன் {குந்தியிடம்} சொன்னான், “ராதைக்கும், அதிரதருக்கும் மகனான நான் கர்ணன் ஆவேன். ஓ! மங்கையே, நீ எதற்காக இங்கு வந்தாய்? நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்வாயாக” என்றான் {கர்ணன்}.

அதற்குக் குந்தி {கர்ணனிடம்}, “நீ ராதையின் மகனில்லை; குந்தியின் மகனாவாய். அதிரதனும் உனது தந்தையில்லை. ஓ! கர்ணா, நீ சூத வகையில் பிறந்தவனில்லை. நான் சொல்வதை நம்புவாயாக. நான் கன்னிகையாக இருந்தபோது, நீ என்னால் ஈன்றெடுக்கப்பட்டாய். முதலில், உன்னைக் கருவறையில் சுமந்தவள் நானே. ஓ! மகனே {கர்ணா}, நீ குந்திராஜனின் அரணன்மனையில் பிறந்தாய். ஓ! ஆயுதம் தாங்குபவர் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணா}, ஓ! கர்ணா, அனைத்தையும் காணச் செய்பவரும், ஒளியால் சுடர்விடுபவரும், தெய்வீகமானவருமான சூரியனே, என்னிடம் உன்னைப் பெற்றார்.

ஓ! வெல்லப்பட இயலாதவனே, ஓ! மகனே {கர்ணா}, (இயற்கையான) காது குண்டலங்களுடனும், (இயற்கையான} கவசத்துடனும், சுடர்மிகும் அழகுடனும், எனது தந்தையின் வசிப்பிடத்தில் என்னால் நீ ஈன்றெடுக்கப்பட்டாய். உனது தம்பிகளை அறியாத நீ, அறியாமையின் காரணமாகத் திருதராஷ்டிரர் மகனுக்குச் {துரியோதனனுக்குச்} சேவகம் செய்வது முறையாகாது. ஓ! மகனே, அதிலும் குறிப்பாக உனக்கு {உன்னைப் போன்ற ஒருவனுக்கு} அது முறையாகாது.

ஓ! மகனே, மனிதர்களின் கடமைகளை உறுதி செய்கையில், ஒருவனின் தந்தையும், (தான் பெற்ற பிள்ளையிடம்) முழுப் பாசத்தையும் காட்டும் தாயும் எக்காரியத்தில் மனநிறைவு கொள்கின்றனரோ, அதுவே கடமைகள் அனைத்திலும் உயர்ந்ததாகும் {அறப்பயனாகும்}. அர்ஜுனனால் முன்பு அடையப்பட்டதான யுதிஷ்டிரனின் செழிப்பை, பேராசையின் காரணமாகத் தீயவர்கள் பறித்துக் கொண்டார்கள். திருதராஷ்டிரர் மகன்களிடம் இருந்து மீண்டும் பறித்து, அந்தச் செழிப்பை நீ அனுபவிப்பாயாக.

கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான ஒற்றுமையைக் குருக்கள் இன்று காணட்டும். சகோதரப் பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் {கர்ணனான} உன்னையும், உனது தம்பியையும் {அர்ஜுனனையும்} காணும் அந்தத் தீயவர்கள் உனக்குத் தலைவணங்கட்டும். ராமனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} அழைக்கப்படுவது போல, கர்ணனும், அர்ஜுனனும் {இவ்வுலகத்தால்} அழைக்கப்படட்டும். நீங்கள் இருவரும் ஒன்றுசேர்ந்தால், இவ்வுலகில் அடையமுடியாததுதான் எது?

ஓ! கர்ணா, தம்பிகளால் சூழப்பட்டிருக்கும் நீ, பெரும் வேள்வி மேடையில் தேவர்களால் சூழப்பட்ட பிரம்மனைப் போலப் பிரகாசிப்பாய் என்பதில் ஐயமில்லை. அனைத்து அறங்களையும் கொண்ட நீ, எனது உறவினர்கள் அனைவரிலும் முதல்வன் {மூத்தவன்} ஆவாய். சூதனின் மகன் என்ற அடைமொழி உன்னைப் பற்றாதிருக்கட்டும். பெரும் சக்தி கொண்ட நீ பார்த்தனாவாய்” என்றாள் {குந்தி}.

“அர்ஜுனனைத் தவிர நால்வரை கொல்லேன்!” என்ற கர்ணன் – உத்யோக பர்வம் பகுதி 146-குந்தி சொன்ன கதை உண்மையே எனச் சூரியன் கர்ணனுக்கு உறுதி அளித்தது; குந்தியை நிந்தித்த கர்ணன், அவள் செய்த குற்றங்களையும், தான் இழந்த சுகங்களையும் சுட்டிக் காட்டியது; துரியோதனானால் விரும்பிய அனைத்தையும் அடைந்த தான் உரிய நேரத்தில் அவனைக் கைவிட முடியாது என்று கர்ணன் சொன்னது; அர்ஜுனனைத் தவிரக் குந்தியின் மற்ற நான்கு மகன்களைக் கொல்ல மாட்டேன் எனக் குந்தியிடம் உறுதியளித்த கர்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(குந்தி இப்படிச் சொன்னதும்) சூரிய வட்டிலில் இருந்து வெளிவந்ததும், பாசம் மிகுந்ததுமான ஒரு குரலைக் கர்ணன் கேட்டான். வெகு தூரத்தில் இருந்து வந்த அந்தக் குரல், தந்தையின் பாசத்துடன் சூரியனால் பேசப்பட்டதாகும். (அது {அந்தக் குரல்}), “பிருதை {குந்தி} சொன்ன வார்த்தைகள் உண்மையே. ஓ! கர்ணா, உனது தாயின் {குந்தியின்} வார்த்தைகளின்படி நீ செயல்படுவாயாக. ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, அந்த வார்த்தைகளை நீ முழுமையாகப் பின்பற்றினால், பெரும் நன்மை உனக்கு விளையும்” என்றது {சூரியனின் குரல்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது தாயாலும், தனது தந்தையான சூரியனாலேயும் கூட இப்படிச் சொல்லப்பட்டும், கர்ணனின் இதயம் தடுமாற்றமடையவில்லை. அவன் {கர்ணன்} உண்மைக்கு {சத்தியத்துக்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தான்.

அவன் {கர்ணன் குந்தியிடம்}, “ஓ! க்ஷத்திரியப் பெண்மணியே, உனது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதே கடமைகளில் உயர்ந்தது என்று, (என் காரியத்தில்) நீ சொன்னதை என்னால் ஏற்க முடியாது.

ஓ! தாயே, நான் பிறந்த உடனேயே, உன்னால் நான் கைவிடப்பட்டேன். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, எனக்கு நீ செய்த இந்தப் பெருந்தீங்குதான், எனது சாதனைகளுக்கும், புகழுக்கும் அழிவைச் செய்து வந்திருக்கிறது. உண்மையில், நான் க்ஷத்திரியனே என்றாலும், க்ஷத்திரியனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் நான் உன்னால் இழந்தேன். இதைவிடப் பெரிய தீங்கை, வேறு எந்த எதிரியால் எனக்கு இழைத்துவிட முடியும்? இரக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் எனக்கு இரக்கம் காட்டாத நீ, (நான் பிறந்த {க்ஷத்திரிய} வகைக்குண்டான கட்டாயச்) சடங்குகள் மற்றும் எனக்குச் செய்யப்பட வேண்டிய அனைத்திலும் இருந்து என்னை விலக்கி வைத்த நீ, இன்று எனக்கு உன் கட்டளைகளை இடுகின்றாய். {க்ஷத்திரியன் ஒருவனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை உரிய காலத்தில் செய்ய எனக்குக் கருணை காட்டாமல், நன்மைகள் அற்றுப் போன என்னிடம் இன்று நீ கட்டளை இடுகின்றாயா?}

ஒரு தாயைப் போல, எனது நன்மைக்காக இதற்கு முன் நீ எப்போதும் முற்பட்டதில்லை. எனினும், உனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பியே நீ இன்று என்னிடம் பேசுகிறாய். கிருஷ்ணனைத் (தனது தேரோட்டியாகத்) தன்னுடன் கொண்டிருக்கும் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எவன்தான் அஞ்சமாட்டான்? இன்று நான் பார்த்தர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றால், நான் அச்சத்தாலேயே அப்படிச் செய்கிறேன் என்று எவன்தான் கருதமாட்டான்? இதுவரை, அவர்களது {பாண்டவர்களின்} அண்ணனாக என்னை யாரும் அறியமாட்டார்கள். போர் நெருங்கும் சமயத்தில், நான் பாண்டவர்களின் அண்ணன் என்று சொல்லி, அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றுவிட்டால், க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன சொல்வார்கள்? விரும்பிய பொருட்கள் அனைத்தும் அளித்து, என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நோக்கம் கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால், எப்போதும் வணங்கப்பட்டு வரும் நான், அவர்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட நட்பை எப்படி முழுமையாகப் பயனற்றதாக்க முடியும்? மற்றவர்களுடன் பகைமையால் தூண்டப்பட்ட அவர்கள் {கௌரவர்கள்}, வாசவனிடம் {இந்திரனிடம்} தலைவணங்கும் வசுக்களைப் போல எப்போதும் என்னை வணங்கி, எனக்காக எப்போதும் காத்திருக்கிறார்கள் {பணிவிடை செய்கிறார்கள்}. எனது பலத்தின் துணையால், எதிரிகளுடன் மோதும் திறனைப் பெற்றுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அப்படிப் பேணப்பட்ட அவர்களது நம்பிக்கையை எப்படி நான் கெடுப்பேன்? என்னைத் தங்கள் படகாகக் கொண்டு, போர் எனும் கடக்க முடியாத கடலைக் கடக்க அவர்கள் விரும்புகிறார்கள். வேறு எந்தப் படகுகளும் அற்ற கடலைக் கடக்க விரும்பும் அவர்களை நான் எப்படிக் கைவிட முடியும்?

இதுவரை திருதராஷ்டிரர் மகன்களால் தாங்கப்பட்டு வந்த யாவரும், தங்கள் தலைவர்களுக்கு {எஜமானர்களுக்கு} உதவ வேண்டிய நேரம் இதுவே. எனது உயிரையும் துச்சமாக நினைத்து, நிச்சயம் நான் அவர்களுக்காகவே {கௌரவர்களுக்காகவே} செயல்படுவேன். தங்கள் தலைவர்களால் நன்கு ஊட்டப்பட்டு, (தேவையான அனைத்தும்) நன்கு அளிக்கப்பட்டும், உரிய நேரத்தில் தக்க உதவியைச் செய்யாத உறுதியற்ற இதயம் படைத்த, பாவம் நிறைந்த மனிதர்கள், தங்கள் தலைவனின் {சோறிடுபவனின்} சோற்றைத் திருடுவதால், அவர்களுக்கு இம்மையும் இல்லை; மறுமையும் கிடையாது. நான் உன்னிடம் வஞ்சகமாக {ஏமாற்றுகரமாகப்} பேச மாட்டேன். {நான் உன்னை ஏமாற்ற மாட்டேன்}. திருதராஷ்டிரர் மகனுக்காக {துரியோதனனுக்காக}, என் சக்தியிலும், பலத்திலும் சிறந்ததைக் கொண்டு உனது மகன்களுடன் நான் போரிடுவேன். எனினும், நான் அன்பையும், நன்னடத்தையையும் கைவிட மாட்டேன். எனவே, உனது வார்த்தைகள் என்னதான் எனக்கு நன்மையை அளித்தாலும், இப்போது என்னால் அதற்குக் கீழ்ப்படிய முடியாது. எனினும் இந்த உனது வேண்டுதல்கள் பலனற்றதாகாது.

அர்ஜுனனைத் தவிர, உனது மற்ற மகன்களான யுதிஷ்டிரன், பீமன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைப் போரில் தாக்குப்பிடித்து, என்னால் அவர்களைக் கொல்ல முடியும் என்றாலும், அவர்கள் என்னால் கொல்லப்பட மாட்டார்கள். யுதிஷ்டிரனின் போராளிகள் அனைவரிலும் நான் அர்ஜுனனிடம் மட்டுமே போரிடுவேன். *போரில் அர்ஜுனனைக் கொன்று, நான் பெரும் தகுதியை அடைவேன், அல்லது சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, புகழால் நான் போர்த்தப்படுவேன். ஓ! புகழ்பெற்ற பெண்மணியே {குந்தியே}, உனது மகன்களின் எண்ணிக்கை எப்போதும் ஐந்துக்குக் குறையாது. {அர்ஜுனன் கொல்லப்பட்டால்} என்னுடனாவது, அல்லது நான் கொல்லப்பட்டால் அர்ஜுனனுடனாவது சேர்த்து, அது {உனது மகன்களின் எண்ணிக்கை} எப்போதும் ஐந்தாகவே இருக்கும்” என்றான் {கர்ணன்}.

கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, துயரில் நடுங்கிய குந்தி, மனோபலத்தின் விளைவால் அதிராமல் இருந்த தனது மகனை {கர்ணனை} அணைத்துக் கொண்டாள். அவள் {குந்தி கர்ணனிடம்}, “உண்மையில், ஓ! கர்ணா, நீ சொல்வது சாத்தியமாகத் தோன்றினாலும், கௌரவர்கள் நிச்சயம் அழிக்கப்படுவார்கள். அனைத்தும் விதியே. எனினும், ஓ! எதிரிகளை வாட்டுபவனே {கர்ணா}, உனது தம்பிகள் நால்வருக்கு, பாதுகாப்புக்கான உறுதியை நீ வழங்கியிருக்கிறாய். போரில் நீ ஆயுதங்களை அடிக்கும் நேரத்தில், இந்த உறுதிமொழியை நினைவில் தாங்குவாயாக” என்றாள். இவை அனைத்தையும் சொன்ன பிருதை {குந்தி}, மேலும் கர்ணனிடம், “நீ அருளப்பட்டிருப்பாயாக. உடல்நலம் {ஆரோக்கியம்} உனதாகட்டும்” என்றாள். கர்ணன் அவளிடம் {குந்தியிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறினான். பிறகு அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெவ்வேறு திசைகளில் சென்றனர்.”

“என் நாடு! எவனுக்கு உரிமை?” என்ற பீஷ்மர்! – உத்யோக பர்வம் பகுதி 147-ஹஸ்தினாபுரத்தில் இருந்து திரும்பிய கிருஷ்ணன் உபப்லாவ்யம் அடைந்தது; ஹஸ்தினாபுரத்தில் நடந்தது அத்தனையும் பாண்டவர்களிடம் தெரிவித்தது; யுதிஷ்டிரன் அதை மீண்டும் திரும்பச் சொல்லும்படி கேட்டதும், துரியோதனனிடம் பீஷ்மர் பேசிய பேச்சைக் கிருஷ்ணன் விவரித்துச் சொன்னது; பாண்டவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுக்குமாறு பீஷ்மர் துரியோதனினடம் சொன்னைக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஹஸ்தினாபுரத்தில் இருந்து உபப்லாவ்யத்திற்குத் திரும்பியவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, நடந்த அத்தனையும் பாண்டவர்களிடம் சொன்னான். நீண்ட நேரம் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} கலந்தாலோசித்து, மீண்டும் மீண்டும் ஆலோசனைகள் வழங்கிய சௌரி {கிருஷ்ணன்}, ஓய்வெடுக்கத் தனது பகுதிக்கு {மாளிகைக்குச்} சென்றான். விராடனுடன் கூடிய மன்னர்கள் அனைவரையும், அவர்கள் தலைமையில் இருந்த பிறரையும் அனுப்பிய பாண்டவர்கள், சூரியன் மறையும்போது, தங்கள் மாலைத் துதிகளைச் சொன்னார்கள். கிருஷ்ணனில் தங்கள் இதயங்களை நிலைக்க வைத்த அவர்கள், அவனைக் {கிருஷ்ணனைக்} குறித்தே சிந்திக்கலானார்கள். இறுதியாக, தாசார்ஹ குலத்துக் கிருஷ்ணனைத் தங்கள் மத்தியில் கொண்டு வந்து, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மீண்டும் விவாதித்தார்கள்.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷனே} {கிருஷ்ணா}, நாகபுரத்திற்கு {ஹஸ்தினாபுரத்தின் மற்றொரு பெயர்} சென்று, (குருக்களின்) சபையில், திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} நீ சொன்ன அனைத்தையும் எங்களுக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்றான். அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “நாகபுரத்திற்குச் {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்ற நான், நன்மையானவையும், {அறிவுக்குகந்த} காரணம் நிரம்பியவையும், உண்மையானவைமான சொற்களைத் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} சொன்னேன். எனினும், தீய மனம் கொண்ட அவன் {துரியோதனன்} அவற்றை ஏற்கவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தவறான வழியில் துரியோதனன் நடக்க விரும்பிய போது, குருக்களில் முதிர்ந்தவரான பாட்டன் {பீஷ்மர்}, பழியுணர்ச்சி கொண்ட அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? பரத்வாஜரின் மகனான பெரும் அருள் கொண்ட ஆசான் {துரோணர்} என்ன சொன்னார்? அவனைப் பெற்றோரான திருதராஷ்டிரரும், காந்தாரியும் என்ன சொன்னார்கள்? அறமறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், எங்கள் நிமித்தமாக எப்போதும் துயர் கொண்டவரும், எங்களை மகனாகக் கருதுபவரும், எங்கள் சிறிய தந்தையுமான க்ஷத்ரி {விதுரர்}, அந்தத் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? அந்தச் சபையில் அமர்ந்திருந்த மன்னர்கள் அனைவரும் என்ன சொன்னார்கள்?

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நடந்ததை நடந்தவாறே எங்கள் அனைவருக்கும் சொல்வாயாக. தன்னைத்தானே அறிவாளியாகக் கருதுபவனும், பேராசை மற்றும் காமத்தில் மூழ்கியிருப்பவனுமான தீய துரியோதனனுக்கு ஏற்பில்லாத வகையில், குருக்களின் தலைவர்களும் (பீஷ்மரும், திருதராஷ்டிரரும்}, குருக்களின் அந்தச் சபையில் இருந்த மற்ற பிறரும் பேசிய பேச்சுக்களை ஏற்கனவே நீ {எங்களிடம்} சொன்னாய். எனினும், ஓ! கேசவா {கிருஷ்ணா}, அவ்வார்த்தைகள் எனது நினைவில் நிற்கவில்லை. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, நான் அவ்வார்த்தைகளை மீண்டும் கேட்க விரும்புகிறேன். ஓ! தலைவா {கிருஷ்ணா}, வாய்ப்பைக் கடந்துவிடாதபடியான ஒரு வழியில் நீ செயல்படுவாயாக. {காலங்கடத்தாமல் சொல்வாயாக}. ஓ! கிருஷ்ணா, நீயே எங்களது புகலிடம், நீய எங்களது தலைவன், நீயே எங்களது வழிகாட்டியுமாவாய்!”, என்றான் {யுதிஷ்டிரன்}.

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மன்னன் சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, குருக்களின் சபைக்கு மத்தியில் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்பீராக. ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரரே}, அவற்றை உமது மனத்தில் தாங்குவீராக. எனது வார்த்தைகள் முடிந்ததும், திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} உரக்கச் சிரித்தான். இதனால் பெரிதும் கோபமுற்ற பீஷ்மர் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, நமது குலம் ({குலத்தைப்} பாதுகாப்பது) குறித்து நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேள். அதைக் கேட்ட பிறகு, ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, உனது குடும்பத்திற்கு {குலத்திற்கு} நன்மையானதைச் செய்வாயாக.

ஓ! ஐயா {துரியோதனா}, ஓ! மன்னா, எனது தந்தை சந்தனு உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவராக இருந்தார். முன்பு, நானே அவரது {சந்தனுவின்} ஒரே மகனாக இருந்தேன். “ஒரே மகனாக இருப்பவன் மகன் அல்ல {ஒரே மகன் உள்ளவன் மகனில்லாதவனே} என்பதே அறிவுள்ளோர் வாக்கு. எனது குலம் அழிவடையாதிருக்கட்டும், எனது புகழ் பரவ வேண்டும்” என்பதே அவரது {சந்தனுவின்} ஆசையாக இருந்தது. இதனால், இரண்டாவது மகனைத் தான் எப்படிப் பெறுவது என்ற விருப்பம் அவரது {சந்தனுவின்} இதயத்தில் எழுந்தது. இதுவே அவரது விருப்பம் என்பதை அறிந்த நான், எனது தந்தைக்காகவும், நமது குலத்திற்காகவும், நோற்க {நோன்பு ஏற்று வாழக்} கடுமையான உறுதிமொழியைச் செய்து, காளியை {சத்யவதியை} எனது தாயாக அழைத்து வந்தேன்.

னது உறுதிமொழியின் விளைவால், நான் மன்னனாக முடியவில்லை என்பதும், எனது உயிர்வித்தை நான் மேலெழச் செய்திருக்கிறேன் என்பதும் நிச்சயமாக உன்னால் நன்கு அறியப்பட்டவையே. (நான் அதற்காக வருந்தவும் இல்லை). எனது வாக்குறுதியை நோற்று, மகிழ்ச்சியுடனும், இன்பத்துடனும் வாழ்ந்து வரும் என்னை இதோ பார்.

ஓ! மன்னா {துரியோதனா}, குரு குலத்தைத் தாங்கியவர்களில் அழகனும், வலிய கரங்களைக் கொண்டவனும், அற ஆன்மா கொண்டவனுமான விசித்திரவீரியன், எனது தம்பியாக அவளிடம் {காளி என்ற சத்தியவதியிடம்} பிறந்தான். என் தந்தை {சந்தனு} விண்ணேகியதும், என்னை நான் விசித்திரவீரியனுக்குப் பணியாளாக நிறுத்திக் கொண்டு, எனது நாட்டின் ஆட்சியாளனாக அவனை {விசித்திரவீரியனை} நிறுவினேன். ஓ! மன்னர்களுக்கு மன்னா {துரியோதனா}, பிறகு பல ஏகாதிபதிகளின் கூட்டத்தை வீழ்த்தி, தகுந்த மனைவிகளை, நான் அவனுக்குக் {விசித்திரவீரியனுக்குக்} கொணர்ந்தேன். நீ அதை அடிக்கடி கேட்டிருக்கிறாய்.

சில காலத்திற்குப் பிறகு, நான் (பெரும்) ராமரிடம் {பரசுராமரிடம்} தனிப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ராமரிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால், எனது தம்பி {விசித்திரவீரியன்} ஓடிவிட்டான். மேலும் அவனது குடிமக்களும் {அப்போது} அவனைக் கைவிட்டனர். இந்தக் காலத்தில் தான், அவன் தனது மனைவியரிடம் மிகவும் பற்றுக் கொண்டான். அதன் காரணமாக அவனை உருக்கு நோய் {phthisis = உடலை மெலியச் செய்யும் காச நோய்; க்ஷய ரோகம்} தாக்கியது. அவனது மரணத்தை அடுத்து, நாட்டில் அரசின்மை ஏற்பட்டது. தேவர்கள் தலைவன் {இந்திரன்}, (நாட்டின் மீது) ஒரு துளி மழையும் பொழியாமல் இருந்தான்.

பிறகு, பட்டினி என்ற அச்சத்தால் பாதிக்கப்பட்ட குடிமக்கள், என்னிடம் துரிதமாக வந்து, “உமது குடிமக்கள் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். எங்கள் நன்மைக்காக, நீர் எங்கள் மன்னனாவீராக. இந்த வறட்சியை விரட்டுவீராக. ஓ! சந்தனுவின் குலத்தைத் தழைக்க வைப்பவரே {பீஷ்மரே}, நீர் அருளப்பட்டிரும். உமது குடிமக்கள் கடுமையான மற்றும் பயங்கரமான நோய்களால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் {குடிமக்களில்} வெகு சிலரே இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஓ! கங்கையின் மகனே {காங்கேயரே = பீஷ்மரே}, அவர்களைக் காப்பதே உமக்குத் தகும். இந்த வேதனைகளை {சித்திரவதைகளை} விரட்டுவீராக {நோய்களைப் போக்குவீராக}. ஓ! வீரரே {பீஷ்மரே}, உமது குடிமக்களை நீதியுடன் பேணிக் காப்பீராக. நீர் உயிரோடிருக்கையில், இந்த நாடு அழிவடையாதிருக்கட்டும்” என்று {குடிமக்கள்} கூறினர்.

அழுகுரலுடன் அவர்கள் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டும், எனது இதயம் கலங்காதிருந்தது. நல்லோரின் நடத்தையை நினைவுகூர்ந்த நான், எனது நோன்பைக் {வாக்குறுதியைக்} காக்கவே விரும்பினேன். பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, குடிமக்கள், மங்கல குணம் கொண்ட எனது தாய் காளி {சத்தியவதி}, எனது பணியாட்கள், புரோகிதர்கள், (எங்கள் வீட்டைச் சார்ந்த) ஆசான்கள், கல்வி அறிவுள்ள பல அந்தணர்கள் ஆகிய அனைவரும் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டு, என்னை அரியணை ஏறும்படி வேண்டினார்கள்.

அவர்கள், “(பழங்காலத்தில்) பிரதீபனால் ஆளப்பட்ட நாடு, நீ உயிரோடிருக்கையில் {நீ வாழ்ந்து கொண்டிருக்கும்போதே} அழிந்து போகலாமா? ஓ! பரந்த இதயம் கொண்டவனே {பீஷ்மா}, எங்கள் நன்மைக்காக நீ மன்னனாவாயாக” என்றனர். அவர்களால் இப்படிச் சொல்லப்பட்டவனும், துன்பம் நிறைந்து பெரிதும் பாதிக்கப்பட்டவனுமான நான், எனது கரங்களை ஒன்றாகக் குவித்து, எனது பெற்றோரிடம் {தந்தையிடம்} கொண்ட மரியாதையால், நான் ஏற்ற நோன்பைத் தெரிவித்தேன். எங்கள் குலத்துக்காகவே நான் எனது உயிர் வித்தை மேலெழுப்பி, அரியணையை உதறி வாழும் நோன்பை நோற்றேன் என்று அவர்களிடம் திரும்பத் திரும்பக் கூறினேன். அதிலும் குறிப்பாக எனது தாய்க்காகவே {சத்தியவதிக்காகவே} நான் மீண்டும் அப்படிச் செய்தேன். எனவே, நான், “நுகத்தடியில் என்னைப் பூட்ட வேண்டாம்” என்று அவர்களிடம் இரந்து கேட்டேன்.

மீண்டும் நான் எனது கரங்களைக் கூப்பி, எனது தாயைச் {சத்தியவதியைச்} சமாதானப்படுத்தும் வகையில், “ஓ! தாயே, சந்தனுவால் பெறப்பட்டு, குரு குலத்தின் உறுப்பினராக இருக்கும் நான், எனது உறுதிமொழியைப் பொய்யாக்க முடியாது” என்று சொன்னேன். இதையே நான் மீண்டும் மீண்டும் அவளிடம் {சத்தியவதியிடம்} சொன்னேன். ஓ! மன்னா {துரியோதனா}, மேலும் நான் {சத்தியவதியிடம்}, “ஓ! தாயே, குறிப்பாக உனக்காகவே நான் இந்த நோன்பை நோற்றேன்; தாய்ப்பாசத்தின் சிறந்த அடையாளமான {எடுத்துக்காட்டான} உனக்கு, ஓ! தாயே, நிச்சயம் நான் பணியாளும் அடிமையுமாவேன்” என்றேன்.

இப்படி என் தாயிடமும், {குடி}மக்களிடமும் இரந்து கேட்ட நான், பிறகு, பெரும் தவசியான வியாசரை அணுகி, எனது தம்பியின் {விசித்திரவீரியனின்} மனைவியரிடம் பிள்ளைகளைப் பெறுமாறு வேண்டினேன். உண்மையில், ஓ! மன்னா {துரியோதனா}, நானும், எனது தாயும் {சத்தியவதியும்} அந்த முனிவரை {வியாசரை} மனநிறைவு கொள்ளச் செய்தோம். இறுதியில், ஓ! மன்னா {துரியோதனா}, பிள்ளைகள் குறித்த எங்களது வேண்டுதல்களை அந்த முனிவர் {வியாசர்} அருளினார். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா}, மொத்தமாக அவர் {வியாசர்} மூன்று பிள்ளைகளைப் பெற்றார்.

உன் தந்தை {திருதராஷ்டிரன்} பார்வையற்றவனாகப் {குருடனாகப்} பிறந்தான், ஒரு புலனில் பிறவிக் குறைபாடு கொண்டதன் விளைவாக, அவனால் {திருதராஷ்டிரனால்} மன்னனாக முடியவில்லை {முடியாது}. உயர் ஆன்மா கொண்டவனும், கொண்டாடப்பட்டவனுமான பாண்டுவே மன்னனானான். பாண்டு மன்னனானான் எனும்போது, அவனுடைய மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தந்தைவழி பரம்பரை உரிமையைப் பெற வேண்டும். ஓ! ஐயா {துரியோதனா}, சண்டையிடாதே, அவர்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} பாதி நாட்டைக் கொடு. நான் உயிரோடு இருக்கும்போது, வேறு எந்த மனிதன்தான் ஆட்சி செய்யத்தகுந்தவன்? எனது வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே.

உங்களுக்கு மத்தியில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம். ஓ! ஐயா, ஓ! மன்னா {துரியோதனா}, உன்னிடமும், அவர்களிடமும் {பாண்டவர்களிடமும்} நான் எந்த வேறுபாடும் கொள்ளவில்லை {பாரபட்சமும் பார்க்கவில்லை}. (ஆனால் உங்கள் அனைவரையும் சமமாக விரும்புகிறேன்). நான் என்னென்ன சொன்னேனோ, அவையே, உனது தந்தை {திருதராஷ்டிரன்}, காந்தாரி மற்றும் விதுரன் ஆகியோரின் கருத்துகளுமாகும். இந்த எனது வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே. இந்தப் பூமியையும், நீ கொண்ட அனைத்தையும் அழிக்காதிருப்பாயாக” என்றார் {பீஷ்மர்}.

துரோணர், விதுரன், காந்தாரி பேச்சு! – உத்யோக பர்வம் பகுதி 148-குருக்களின் நாடு பாண்டுவுக்கு எப்படி உரிமையானது என்றும், அதன் காரணமாக யுதிஷ்டிரனுக்குத் தார்மீக அடிப்படையில் எப்படி உரிமையானது என்றும் துரோணர், விதுரன் மற்றும் காந்தாரி ஆகியோர் துரியோதனனுக்கு எடுத்துரைத்ததைக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது…

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பீஷ்மர் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பேசுவதற்கு எப்போதும் தகுதிவாய்ந்தவரான துரோணர், (கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில், {யுதிஷ்டிரரான} உமக்கு நன்மையான வார்த்தைகளைத் துரியோதனனிடம் பேசினார். அவர் {துரோணர் துரியோதனனிடம்}, “ஓ! ஐயா {துரியோதனா}, பிரதீபரின் மகன் சந்தனு, தனது குலத்தின் நன்மைக்கு அர்ப்பணிப்புடன் இருந்ததைப் போலவும், பீஷ்மர் என்று அழைக்கப்படும் தேவவிரதன் தனது குலத்தின் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருந்ததைப் போலவும், உண்மைக்கு {சத்தியத்திற்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தவனும், தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தவனும், அறம் சார்ந்தவனும், அற்புத நோன்புகளைக் கொண்டவனும், அனைத்துக் கடமைகளிலும் கவனத்துடன் இருந்தவனும், குருக்களின் மன்னனுமான அந்த அரசன் பாண்டுவும் தனது குலத்தின் நன்மையில் அர்ப்பணிப்புடனேயே இருந்தான்.

(தான் கொண்ட உரிமையின் படி) குரு குலத்தைத் தழைக்க வைத்த அவன் {பாண்டு}, பெரும் ஞானம் கொண்ட தனது அண்ணன் திருதராஷ்டிரனுக்கும், தனது தம்பி க்ஷத்ரிக்கும் (விதுரனுக்கும்) அரசாட்சியைக் கொடுத்தான். மங்காப் புகழ் கொண்ட அரியணையில் இந்தத் திருதராஷ்டிரனை அமர்த்திய, குருகுலத்தின் அந்த அரச மகன் {பாண்டு}, அதன்பிறகு, தன் இரு மனைவியருடன் காட்டுக்குச் சென்றான். மனிதர்களில் புலியான விதுரன், பெரும் பணிவுடன், திருதராஷ்டிரனுக்குக் கீழ் தன்னை அமர்த்திக்கொண்டு, பனைமரத்தின் இளங்கிளை ஒன்றால் சாமரம் வீசிக் கொண்டு, இவனிடம் {திருதராஷ்டிரனிடம்} அடிமையைப் போலக் காத்திருக்கத் தொடங்கினான் {பணிவிடை செய்யத் தொடங்கினான் இந்த விதுரன்}.

பிறகு, ஓ! ஐயா {துரியோதனா}, குடிமக்கள் அனைவரும் பாண்டுவிடம் எப்படிப் பணிந்து நடந்தார்களோ, அப்படியே மன்னன் திருதராஷ்டிரனிடமும், அன்றிலிருந்து பணிந்து நடந்து வருகிறார்கள். பகை நகரங்களை வெல்பவனான பாண்டு, திருதராஷ்டிரனிடமும், விதுரனிடமும் நாட்டைக் கொடுத்துவிட்டு உலகம் முழுவதும் சுற்றினான். எப்போதும் உண்மைக்கு {சத்தியத்துக்கு} அர்ப்பணிப்புடன் இருக்கும் விதுரன், நிதி, தானம், (நாட்டின்) சேவகர்களை மேற்பார்வையிடுதல், அனைவருக்கும் உணவிடுதல் ஆகிய துறைகளின் {நிதி மற்றும் உள்துறை ஆகியவற்றின்} அதிகாரத்தை {திருதராஷ்டிரர் ஆட்சியில்} எடுத்துக் கொண்டான். அதே வேளையில், பகை நகரங்களை வெல்பவரான பெரும் சக்தி கொண்ட பீஷ்மரோ, மன்னர்களிடம் போர், அமைதி, தேவையானவற்றைச் செய்தல், அல்லது பரிசுகளை நிறுத்தி வைத்தல் போன்ற துறைகளை {வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைகளை} மேற்பார்வையிட்டார். பெரும் பலம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன் அரியணையில் இருக்கும்போது, உயர் ஆன்ம விதுரன் அவன் {திருதராஷ்டிரன்} அருகிலேயே  இருந்தான்.

திருதராஷ்டிரனின் குலத்தில் பிறந்த நீ, குடும்பத்துக்குள் பிளவைக் கொண்டு வர எப்படித் துணிந்தாய்? உனது சகோதரர்களிடம் (பாண்டவர்களிடம்) ஒற்றுமையாக இருந்து, இன்பத்துக்கான அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பாயாக. ஓ! மன்னா {துரியோதனா}, கோழைத்தனத்தாலோ {ஏழ்மையாலோ}, செல்வத்துக்காகவோ நான் இதை உன்னிடம் சொல்லவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பீஷ்மர் எனக்குக் கொடுத்த செல்வத்தையே நான் அனுபவிக்கிறேன்; நீ கொடுத்ததை அல்ல. ஓ! மன்னா {துரியோதனா}, எனது வாழ்வாதாரத்திற்கான வழிகளை நான் உன்னிடம் பெற விரும்பவில்லை. {நான் பீஷ்மரால் கொடுக்கப்பட்டதில் மனம் நிறைகிறேன். உன்னால் கொடுக்கப்பட்டதை விரும்பவில்லை}. எங்கே பீஷ்மர் இருக்கிறாரோ, அங்கேதான் இந்தத் துரோணன் இருப்பான். பீஷ்மர் உன்னிடம் சொன்னதைச் செய்வாயாக. ஓ! எதிரிகளை வாட்டுபவனே {துரியோதனா}, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, பாதி நாட்டைக் கொடுப்பாயாக. ஓ! ஐயா {துரியோதனா}, உன்னிடம் போலத்தான், நான் அவர்களுக்கும் ஆசானாகச் செயல்பட்டேன். உண்மையில், அஸ்வத்தாமன் எப்படியோ, அப்படியே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனும் எனக்கு ஆவான். உணர்ச்சி மிக்கப் பேச்சினால் {ஆவதென்ன?} என்ன பயன் ஏற்படும்? நீதி எங்கே இருக்கிறதோ, அங்கேதான் வெற்றி இருக்கும்” என்றார் {துரோணர்}.

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “அளக்கமுடியாத சக்தி கொண்ட துரோணர் இதைச் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் அறம்சார்ந்த விதுரர், தனது பெரியப்பாவை {பீஷ்மரை} நோக்கித் திரும்பி, அவரது முகத்தைப் பார்த்தார். பிறகு விதுரர் {பீஷ்மரிடம்}, “ஓ! தேவவிரதரே {பீஷ்மரே}, நான் பேசும் இவ்வார்த்தைகளைக் கேட்பீராக. அழியும் தருவாயில், இந்தக் குரு குலம் உம்மால் மீட்கப்பட்டது. இதன் காரணமாகவே நீர் எனது இப்போதைய புலம்பல்களில் வேறுபடுகிறீர். {புலம்புகிறவனான எனது வார்த்தைகளை அலட்சியம் செய்கிறீர்}. இந்த நமது குலத்தின் களங்கமும், காமத்தால் உணர்வுகளை இழந்தவனும், நன்றி மறந்தவனும், தீயவனும், பேராசைக்கு அடிமையானவனுமாக இந்தத் துரியோதனன் இருந்தாலும், அவனது {துரியோதனனின்} விருப்பங்களையே நீர் பின்தொடர்கிறீர். அறம் மற்றும் பொருளை மேற்கொள்பவரான தனது தந்தையின் {திருதராஷ்டிரரின்} கட்டளைகளை மீறிவரும் துரியோதனனின் செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் குருக்கள் தாங்கத்தான் வேண்டும். ஓ! பெரும் மன்னா {பீஷ்மரே}, குருக்கள் அழியா வண்ணம் செயல்படுவீராக.

ஓவியம் படைக்கும் ஓவியனைப் போல, ஓ! மன்னா {பீஷ்மரே}, நானும், திருதராஷ்டிரரும் உயிர்பெறக் காரணமாக இருந்தவர் நீரே. உயிரினங்களைப் படைத்த படைப்பாளனே {பிரம்மனே}, அவற்றை மீண்டும் அழிக்கிறான். அவனைப் {பிரம்மனைப்} போலவே செயல்படாதீர். உமது கண் முன்பாகவே உமது குலம் அழிவதைக் கண்டு, அதை அலட்சியம் செய்யாதீர். எனினும், நெருங்கி வரும் உலகளாவிய படுகொலையின் விளைவால், உமது அறிவை இழந்துவிட்டீரெனில் {உமக்கு புத்தி கெட்டுவிட்டதெனில்}, என்னையும், திருதராஷ்டிரரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் செல்வீராக. இல்லையெனில் {புத்தி கெடவில்லையெனில்}, தனது அறிவை வஞ்சித்துக் கொள்ளும் இந்தத் தீய துரியோதனனை இன்றே கட்டிப் போட்டு, பாண்டுவின் மகன்களுடன் இந்த நாட்டை ஆண்டு, அதைச் சுற்றிலும் பாதுகாப்பீராக. ஓ! மன்னர்களில் புலியே {பீஷ்மரே}, எண்ணிப் பாரும். பாண்டவர்கள், குருக்கள், மற்றும் அளவற்ற சக்தி கொண்ட பிற மன்னர்கள் ஆகியோரின் பெரும் படுகொலைகள் நம்முன்னே இருக்கின்றன” என்றார் {விதுரர்}.

துயரால் நிரம்பி வழிந்த இதயத்துடன் இருந்த விதுரர் இதைச் சொல்லி நிறுத்தினார். இக்காரியம் குறித்துச் சிந்தித்த அவர் {விதுரர்}, மீண்டும் மீண்டும் பெருமூச்சு விடத் தொடங்கினார்.

பிறகு, ஒரு முழு இனமே அழிவுக்குள்ளாகப்போவதை அறிந்து எச்சரிக்கை அடைந்த மன்னன் சுபலனின் மகள் {காந்தாரி}, மிகுந்த சீற்றத்துடன், கூடியிருந்த மன்னர்கள் முன்னிலையில், தீய இதயம் கொண்ட கொடூரனான துரியோதனனிடம், அறம் மற்றும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னாள். அவள் {காந்தாரி துரியோதனனிடம்}, “பாவம் நிறைந்த நீ, உன் ஆலோசகர்களின் ஆதரவோடு செய்த குற்றங்களை அறிக்கையிடப் போகும் (எனது) வார்த்தைகளை, இந்த அரசச் சபையில் இருக்கும் மன்னர்கள் அனைவரும் மற்றும் இந்தச் சபையின் பிற உறுப்பினர்களான மறுபிறப்பாள முனிவர்களும் {பிராமணர்களும்} கேட்கட்டும்.

குருக்களின் நாடு முறையான வகையில், அடுத்தடுத்து அனுபவிக்கப்படுகிறது {ஆளப்படுகிறது}. இதுவே எப்போதும் நமது குலத்தின் வழக்கமுமாகும். நீயோ, பாவம் நிறைந்த ஆன்மாவோடும், அதீதத் தீச்செயல்களைச் செய்து கொண்டும், குரு நாட்டை நீதியற்ற வகையில் அழிக்க முற்படுகிறாய். பெரும் முன்னறிதிறம் கொண்ட விதுரனைத் (தனது ஆலோசகராக) தன் கீழே கொண்டிருக்கும் திருதராஷ்டிரர் இந்த நாட்டை உடைமையாகக் கொண்டிருக்கிறார். இந்த இருவரையும் கடந்து, ஏன் அறியாமையால் அரசாட்சியின் மேல் இப்போது பேராசை கொள்கிறாய்?

பீஷ்மர் உயிரோடிருக்கையில், உயர் ஆன்ம மன்னன் {திருதராஷ்டிரன்}, க்ஷத்ரி {விதுரன்} ஆகிய இருவரும் கூட, அவருக்கு {பீஷ்மருக்கு} அடங்கியே நடக்க வேண்டும். உண்மையில், தான் ஏற்ற நீதியின் விளைவால், மனிதர்களில் முதன்மையானவரும், கங்கையின் பிள்ளையுமான உயர் ஆன்ம பீஷ்மர் ஆட்சியுரிமையை விரும்பவில்லை.. இதன்காரணமாக, இந்த வெல்லப்பட முடியாத நாடு பாண்டுவுக்கு உடைமையானது. எனவே, அவனது {பாண்டுவின்} பிள்ளைகளே இன்று {அதற்கு} தலைவர்களாவர் {எஜமானர்களாவர்}; வேறு எவனும் அல்ல. தங்கள் தந்தைவழி உரிமையால், இந்தப் பரந்த நாடு, பாண்டவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கும் என முறையான வரிசையில் உரிமையானதாகும்.

உயர்ந்த ஆன்மாக் கொண்டவரும், குருக்களின் அறிவுநிறைந்த தலைவரும், உண்மையை உறுதியுடன் கடைப்பிடிப்பவருமான தேவவிரதர் {பீஷ்மர்} என்ன சொல்கிறாரோ, அதன் படி இந்த மன்னனும் {திருதராஷ்டிரரும்}, விதுரனும், பெரும் நோன்புகள் கொண்ட பீஷ்மரின் கட்டளையின் பேரில், அதையே அறிக்கையிட்டபடி {பறைசாற்றியபடி}, நமது குலத்தின் வழக்கத்தை நோற்று, உரிய வகையில் நமது நாட்டை ஆளட்டும். இதுவே (இந்தக் குலத்தின்) நலன்விரும்பிகள் செயல்பட வேண்டிய முறையாகும். தர்மனின் மகனான யுதிஷ்டிரன், அறத்தை முதன்மையாகக் கொண்டு, மன்னன் திருதராஷ்டிரரால் வழிகாட்டப்பட்டு, சந்தனுவின் மகனால் {பீஷ்மரால்} தூண்டப்பட்டு, குருக்களின் இந்த நாட்டைச் சட்ட முறைமைகளின்படி அடைந்து, நீதியுடன் நீண்ட வருடங்கள் ஆளட்டும்” என்றாள் {காந்தாரி}.”

“நீ மன்னனின் மகனில்லை!” என்ற திருதராஷ்டிரன்! – உத்யோக பர்வம் பகுதி 149-யயாதியின் காலத்தில் அவனது மகன்களான யது மற்றும் பூரு குறித்து ஏற்பட்ட சிக்கலையும், பிரதீபனின் காலத்தில் தேவாபி, பாஹ்லீகன், சந்தனு ஆகியோருக்கு அரசாட்சியில் ஏற்பட்ட சிக்கலையும், தேவாபியின் அங்கப்பழுது, பாஹ்லீகன் தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டுக்குச் சென்றது, சந்தனு ஹஸ்தினாபுரத்தின் மன்னனானது ஆகியவற்றையும், தான் பார்வையற்றவனானதால் தனக்கு நாடு கிடைக்கவில்லை என்பதையும், பாண்டு எப்படி மன்னனானான் என்பதையும், பாதி நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுக்கும்படியும் கௌரவச் சபையில் வைத்து திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னதாக யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொன்னது…

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “காந்தாரி இதைச் சொன்னதும், மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரர், ({சபையில்} கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினார். அவர் {திருதராஷ்டிரர்}, “ஓ! துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ! மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் தந்தையிடம் ஏதாவது மரியாதை கொண்டிருந்தாயானால், அதைச் செய்வாயாக {நான் சொல்வதைக் கேட்பாயாக}.

உயிரினங்களுக்குத் தலைவனான சோமனே {சந்திரனே} குரு {கௌரவக்} குலத்தின் உண்மையான மூதாதையாக இருந்தான். சோமனின் வழித்தோன்றல்களில் ஆறாவதாக, நகுஷனின் மகனான யயாதி இருந்தான். யயாதி, ஐந்து அரசமுனிகளைத் தனது மகன்களாகக் கொண்டிருந்தான். அவர்களில் பெரும் சக்திமிக்கத் தலைவன் யதுவே மூத்தவனாகப் பிறந்தான். யதுவுக்கு இளையவனாக {அந்தச் சகோதரர்கள் ஐவரில் இளையவனாக}, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை, நமது குலத்தின் மூதாதையான புருவை ஈன்றெடுத்தாள்.

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, யதுவோ தேவயானிக்குப் {தேவயானிக்கு யயாதிக்கும்} பிறந்தவன். எனவே அவன் {யது}, ஓ! ஐயா, காவியர் என்றும் அழைக்கப்பட்டு வந்த சுக்ரனின் மகள் வயிற்று மகனாவான். பெரும் பலமும் ஆற்றலும் கொண்டவனான அந்த யாதவர்களின் மூதாதை {யது}, செருக்கு நிறைந்த தீய அறிவால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அவமதித்தான். பலத்தின் செருக்கால் போதையுண்டிருந்த அவன் {யது}, தனது தந்தையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவில்லை. போரில் வெல்லப்படமுடியாத அவன் {யது} தனது தந்தையையும், சகோதரனையும் அவமதித்தான். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூமியில், யது அதிகச் சக்திவாய்ந்தவனாக இருந்தான். அனைவரையும் அடக்கிய அவன் {யது}, யானையின் பெயரால் அழைக்கப்படும் இந்த நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} தன்னை நிறுவி கொண்டான்.

அவனது {யதுவின்} தந்தையான நகுஷனின் மகன் யயாதி, அவனிடம் {யதுவிடம்} கோபம் கொண்டு, தனது மகனான அவனைச் {யதுவைச்} சபித்தான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவனை {யதுவை} நாட்டை விட்டே கூடத் துரத்தினான். கோபம் கொண்ட யயாதி, தங்கள் பலத்தில் செருக்குக் கொண்டு, தங்கள் அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருந்த {யதுவின்} மற்ற தம்பிகளையும் சபித்தான். இப்படித் தனது மகன்களைச் சபித்த அந்த மன்னர்களில் சிறந்தவன் {யயாதி}, தன்னிடம் அடக்கமாகவும், கீழ்ப்படிந்தவனாகவும் நடந்து கொண்ட தன் இளைய மகன் பூருவைத் தனது அரியணையில் அமர்த்தினான். இப்படியே, மூத்த மகனைக் கடந்து, அவனுக்கு {யதுவிற்கு} நாட்டைக் கொடுக்காமல், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் இளைய மகன்கள் நாட்டை அடையலாம். {செருக்கு மிகுந்தவனாக இருந்தால், மூத்தவனாயிருந்தாலும் ஒருவன் நாட்டை அடைவதில்லை. இளையவர்களாக இருந்தாலும், பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதால் நாட்டை அடைகின்றனர்}.

இதைப் போலவே, அனைத்து அறங்களை அறிந்தவரும், எனது தந்தையின் பாட்டனுமான மன்னன் பிரதீபர், மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவராக இருந்தார். அறம் சார்ந்து தனது நாட்டை ஆண்டு வந்த அந்த மன்னர்களில் சிங்கத்திற்கு {பிரதீபருக்கு}, முப்பெரும் தேவர்களைப் போல, பெரும் புகழ்கொண்ட மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களில் தேவாபி மூத்தவராகவும், அடுத்ததாகப் பாஹ்லீகரும், ஓ! ஐயா {துரியோதனா}, எனது பாட்டனான பெரும் புத்திக்கூர்மை கொண்ட சந்தனு இளையவராகவும் இருந்தனர்.

பெரும் சக்தி கொண்ட தேவாபி, அறம் சார்ந்தவராகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவராகவும், எப்போதும் தனது தந்தைக்காகக் காத்திருப்பதில் {பணிசெய்வதில்} ஈடுபடுபவராகவும் இருந்தார். ஆனால் அந்த மன்னர்களில் சிறந்தவர் {தேவாபி} தோல் நோயைக் {குஷ்டரோகத்தைக்} கொண்டிருந்தார். நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களிடம் பிரபலமாகவும், நல்லோரால் மதிக்கப்பட்டவராகவும், முதியோர் மற்றும் இளையோரால் அன்புடன் விரும்பப்படுபவராகவும் இருந்த தேவாபி, தயாள குணம் கொண்டவராகவும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்றுடையவராகவும், அனைத்து உயிர்களின் நன்மையில் ஈடுபடுபவராகவும், தன் தந்தை {பிரதீபர்} மற்றும் அந்தணர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவராகவும் இருந்தார்.

அவருடைய {தேவாபியின்} சகோதரர்களான பாஹ்லீகர் மற்றும் உயர் ஆன்ம சந்தனுவாலும் அன்போடு விரும்பப்படுபவராக அவர் {தேவாபி} இருந்தார். உண்மையில், அவருக்கும் {தேவாபிக்கும்}, அவரது உயர் ஆன்ம சகோதரர்களுக்கும் இடையில் இருந்த சகோதரப் பாசம் பெரியதாக இருந்தது. முதிர்ந்தவரும், மன்னர்களில் சிறந்தவருமான பிரதீபர், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, தேவாபியை (அரியணையில்) நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உரிய நேரத்தில் செய்தார். உண்மையில், அத்தலைவன் பிரதீபர், அனைத்து மங்கல ஏற்பாடுகளையும் {சாமக்கிரிகளை} செய்தேவிட்டார்.

எனினும், அந்தணர்களாலும், நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களில் முதிர்ந்தோராலும் தேவாபியின் முடிசூட்டுவிழா {பட்டாபிஷேகம்} தடுக்கப்பட்டது. தனது மகனின் முடிசூட்டுவிழா தடுக்கப்பட்டதைக் கேள்வியுற்ற முதிர்ந்த மன்னன் {பிரதீபர்}, கண்ணீரால் தடை செய்யப்பட்ட குரலுடன், தனது மகனுக்காக {தேவாபிக்காக} வருந்த ஆரம்பித்தார். இப்படியே தயாளராக, அறம்சார்ந்தவராக, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவராக, குடிமக்களால் விரும்பப்படுபவராக இருந்தும், தோல் நோயின் விளைவால், அவரது மரபுரிமையில் இருந்து தேவாபி ஒதுக்கப்பட்டார். மன்னர் பிரதீபர் தனது மூத்த மகனுக்கு முடிசூட்டும்போது, “உறுப்புகள் ஒன்றில் கூடக் குறையுள்ள {அங்கப்பழுதுள்ள} மன்னனை தேவர்கள் அங்கீகரிப்பதில்லை” என்பதை நினைத்தே, அந்த அந்தணர்களில் காளைகள் தடுத்தனர்.

உறுப்பு ஒன்றில் குறை கொண்டிருந்த தேவாபி, (தனது தந்தையான) மன்னன் {பிரதீபன்}, (தன்னை அரியணையில் நிறுவும்போது) தடுக்கப்பட்டதைக் கண்டு, அவரின் {பிரதீபரின்} நிமித்தமாகத் துக்கத்தை அடைந்து, காட்டுக்குள் ஓய்ந்து போனார். பாஹ்லீகரைப் பொறுத்தவரை, அவர், தனது (தந்தைவழி) நாட்டைக் கைவிட்டு, தனது தாய்மாமன் நாட்டில் வசித்தார். தனது தந்தையையும், தம்பியையும் கைவிட்ட அவர் {பாஹ்லீகர்}, பெரும் செல்வச் செழிப்புக் கொண்ட தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டை அடைந்தார். தனது தந்தையின் {பிரதீபரின்} மரணத்தை அடுத்து, ஓ இளவரசே {துரியோதனா}, பாஹ்லீகரின் அனுமதியுடன், உலகம் பரந்த புகழ் கொண்ட சந்தனு மன்னனாகி இந்த நாட்டை ஆண்டார்.

இவ்வழியிலும், ஓ! பாரதா {துரியோதனா}, உறுப்பு ஒன்றில் குறையுள்ளவனாக இருந்ததால், நான் மூத்தவனாகவே இருந்தாலும், அறிவார்ந்த பாண்டுவால் நாட்டில் {அரசில்} இருந்து விலக்கபட்டேன். அதுவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அப்படிச் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. வயதில் என்னைவிட இளைவனாகவே இருந்தாலும், நாட்டை அடைந்த பாண்டு மன்னனானான். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம்? பிறரின் உடைமையை நீ அடைய விரும்புகிறாய்.

உயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், மன்னனின் {பாண்டுவின்} மகனாவான். சட்டமுறைமைகளின்படி இந்நாடு அவனுடையதே {யுதிஷ்டிரனுடையதே}. பெருந்தன்மை மிக்க ஆன்மா கொண்ட அவனே {யுதிஷ்டிரனே} குரு குலத்தின் ஆட்சியாளனும் தலைவனுமாவான். அவன் {யுதிஷ்டிரன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாகவும், தெளிந்த பார்வை கொண்டவனாகவும், நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிபவனாகவும், நேர்மையானவனாகவும், குடிமக்களால் விரும்பப்படுபவனாகவும், நலன் விரும்பிகள் அனைவருக்கும் அன்பானவனாகவும், தனது ஆசைகளுக்குத் தலைவனாகவும் {எஜமானனாகவும்}, நல்லோரல்லாத அனைவரையும் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துறவு, சுயக்கட்டுப்பாடு, சாத்திர அறிவு, அனைத்து உயிர்களிடமும் கருணை, அறத்தின் விதிகளுக்குட்பட்டு ஆளும் திறன் ஆகிய அரசகுணங்ககள் அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இருக்கின்றன.

நீயோ மன்னனின் மகனில்லை. மேலும், உனது உறவினர்களுக்கு எப்போதும் நீ பாவத்தையே செய்கிறாய். ஓ! இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும்? இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ! மன்னா {துரியோதனா}, நீ உனது தம்பிகளுடன் சில காலம் வாழ முடியும் [1]” என்றார் {திருதராஷ்டிரர்}.”

“ஒரே வழி போரே!” என்ற கிருஷ்ணன்! – உத்யோக பர்வம் பகுதி 150-பெரியோர் சொல் கேளாத துரியோதனன் அவர்களை அவமதிக்கும் வகையில் சபையை விட்டு அகன்றது, பதினோரு அக்ஷௌஹிணி படையை குருக்ஷேத்திரத்திற்கு அனுப்பியது ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன், சாம, தான, பேதங்களைத் தான் துரியோதனனிடம் கௌரவச் சபையில் முயற்சித்துப் பார்த்துவிட்டதாகவும், இனி தண்டமே மீதி என்றும் சொன்னது..

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படி பீஷ்மர், துரோணர், விதுரர், காந்தாரி, திருதராஷ்டிரர் ஆகியோர் சொல்லியும், அந்தப் பொல்லாதவன் {துரியோதனன்} அறிவைப் பெறவில்லை. மறுபுறம், அந்தத் தீய துரியோதனன், கோபத்தால் கண்கள் சிவக்க, (அவையை விட்டு அகன்று), அவர்கள் அனைவரையும் அவமதித்தான். (அவனால் அழைக்கப்பட்டவர்களும்), தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்த மன்னர்கள் அனைவரும், அவனது {துரியோதனனின்} பின்னை தொடர்ந்து சென்றனர்.

“இன்று பூச நட்சத்திரக் கூட்டம் உச்சம் பெற்றிருக்கிறது {இன்று பூச நட்சத்திரமாகும்}. (இன்றே) குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் செல்லுங்கள்” என்று மன்னன் துரியோதனன், தீய இதயம் கொண்ட அந்த ஆட்சியாளர்களிடம், மீண்டும் மீண்டும் சொன்னான். விதியால் உந்தப்பட்ட அந்த ஏகாதிபதிகள், பீஷ்மரைப் படைத்தலைவராக {சேனாதிபதியாகக்} கொண்டு, தங்கள் படைவீரர்களுடன் மகிழ்ச்சியாகப் புறப்பட்டுச் சென்றனர்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கௌரவர்களுக்காக பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகள் கூடியிருக்கின்றன. அப்படையின் தலைமையில், பனைமரக் கொடியைத் தனது தேரில் கொண்டவரான பீஷ்மர் பிரகாசித்துக் கொண்டிருந்தார். எனவே, இதுவரை நடந்ததை நோக்கில் கொண்டு, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, எது சரியாகத் தோன்றுகிறதோ, அதைச் செய்யும். ஓ! மன்னா, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது முன்னிலையில், பீஷ்மர், துரோணர், விதுரர், காந்தாரி மற்றும் திருதராஷ்டிரர் ஆகியோர் சொன்னது அனைத்தையும் உமக்குச் சொல்லிவிட்டேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, (பூமியில் உள்ள) மக்களின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் இந்தக் {கௌரவக்} குலத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் நிமித்தமாக, ({பாண்டவர்களாகிய} உங்களுக்கும், {கௌரவர்களாகிய} உமது சகோதரர்களுக்கும் இடையில்) சகோதரப் பாசத்தை நிறுவும் விருப்பத்தால், சமரசப் பேச்சில் தொடங்கும் கலைகள் அனைத்தையும் {சாம வழி} முயன்றேன். சமரசம் தோற்றதும், கருத்து வேறுபாட்டை (உண்டாக்கும்) கலையை {பேத வழியை} முயன்று, பாண்டவர்களாகிய உங்கள் அனைவரின் இயல்பான மற்றும் இயல்புக்கு மிக்க {சாதாரண மற்றும் அசாதாரண} சாதனைகளைக் குறிப்பிட்டேன். உண்மையில், சுயோதனன் சமரசப் பேச்சுகளுக்கு எந்த மதிப்பையும் காட்டாத போதே, ஒன்றாகக் கூடியிருந்த மன்னர்களுக்கிடையில் (அவர்களுக்குள்) கருத்து வேறுபாட்டை உண்டாக்க முயற்சி செய்தேன் (பேசினேன்). ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, இயல்புக்கு மிக்க, மோசமான, பயங்கரமான மற்றும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட அறிகுறிகளை நான் என்னிடம் வெளிப்படுத்தினேன்.

ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, {பேத வழியில்} மன்னர்கள் அனைவரையும் கடிந்து கொண்டு, துரியோதனனைப் புல்லாக்கி {துரும்பாகச் சிறுமை செய்து}, ராதையின் மகனை {கர்ணனை} அச்சுறுத்தி, திருதராஷ்டிரர் மகன்களின் சூதாட்டத்துக்காக சுபலனின் மகனை {சகுனியை} மீண்டும் மீண்டும் நிந்தித்து, வார்த்தைகள் மற்றும் சூழ்ச்சிகள் ஆகிய இரண்டின் மூலமாகவும் மன்னர்கள் அனைவருக்குள்ளும் ஒற்றுமையின்மையை {கருத்த வேறுபாட்டை} ஏற்படுத்த மீண்டும் ஒருமுறை முயற்சித்த பிறகு, நான் மீண்டும் சமரசம் பேசினேன். {மீண்டும் சாம வழிக்குத் திரும்பினேன்}. குரு குலத்தின் ஒற்றுமைக்காகவும், (நெருங்கி வரும்) தொழிலுக்கான {போருக்கான} முக்கிய தேவைகளை நோக்கில் கொண்டும், நான் கொடையளிப்பது குறித்தும் {தானவழியிலும்} பேசினேன்.

உண்மையில் நான், “வீரர்களான அந்தப் பாண்டுவின் மகன்கள், தங்கள் பெருமையைத் துறந்து, திருதராஷ்டிரர், பீஷ்மர் மற்றும் விதுரரைச் சார்ந்தே வாழ்வார்கள். {துரியோதனனான} உனக்கே நாடு கொடுக்கபடட்டும். அவர்கள் {பாண்டவர்கள்} எந்த அதிகாரத்தையும் பெறாமல் இருக்கட்டும். மன்னன் (திருதராஷ்டிரர்), கங்கையின் மகன் (பீஷ்மர்), மற்றும் விதுரர் ஆகியோர் உனது நன்மைக்காகச் சொல்வது அனைத்தும் நடைபெறட்டும். நாடும் உனதாகட்டும். (பாண்டவர்களுக்கு) ஐந்து கிராமங்களை மட்டும் விட்டுக்கொடு. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, உனது தந்தையால் தாங்கப்படத் தகுந்தவர்கள் {ஆதரிக்கப்பட வேண்டியவர்கள்} அவர்கள் {பாண்டவர்கள்} என்பதில் ஐயமில்லை” என்றேன். {இப்படியே தான வழியில் பேசினேன்}.

இப்படிச் சொல்லப்பட்டும், அந்தத் தீய ஆன்மா கொண்டவன் {துரியோதனன்}, உமக்கு உங்கள் பங்கைத் தர மறுக்கிறான். எனவே, தண்டனையைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை. அதுவே, பாவம் நிறைந்தவர்களுக்கு எதிராகச் செய்யப்பட வேண்டிய வழியாக இப்போது இருக்கிறது [1]. உண்மையில், அந்த மன்னர்கள் அனைவரும், ஏற்கனவே குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் சென்றுவிட்டார்கள். குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, போரில்லாமல் உமக்கு அவர்கள் நாட்டைத் தரமாட்டார்கள். மரணம் அவர்களுக்கு முன் காத்திருப்பதால், உலக அழிவுக்கு அவர்கள் அனைவரும் காரணமாக விளங்குகிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.”

  ——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading