ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ வன பர்வம்-ஸ்ரீ  கிர்மீரவத   பர்வம்–

மலை போல் நின்ற கிர்மீரன்! – வனபர்வம் பகுதி 11அ-கிர்மீர வதம் குறித்து திருதராஷ்டிரன் விதுரனிடம் கேட்டல்; விதுரன் திருதராஷ்டிரனுக்கு கிர்மீரன் மற்றும் பாண்டவர்கள் சந்திப்பை விவரித்தல்

திருதராஷ்டிரன் சொன்னான், “ஓ க்ஷத்தா {விதுரா}, கிர்மீரனின் அழிவைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்! அந்த ராட்சசனுக்கும் பீமசேனனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து எனக்குச் சொல்!”

விதுரன், “மனித சக்தியை விஞ்சிய பீமசேனனின் சாதனைக் கதையைக் கேளும்! பாண்டவர்களுடன் நான் (அவர்களுடன் இருந்து) உரையாடிக் கொண்டிருந்த போது, இதை நான் கேள்வியுற்றேன்!

“ஓ மன்னர்களின் முதன்மையானவனே {திருதராஷ்டிரா}, பகடையில் தோல்வியுற்று, இங்கிருந்து வெளியேறிய பாண்டவர்கள் பகலும் இரவுமாக மூன்று நாட்கள் பயணித்து, காம்யகம் என்ற பெயர் கொண்ட வனத்தை அடைந்தனர். ஓ மன்னா, கொடூரமான நடு இரவில், இயற்கை உறங்கிக் கொண்டிருந்த போது, கொடும் செயல்கள் புரியும்  மனிதரை உண்ணும் ராட்சசர்கள் உலவ ஆரம்பித்த போது, தவசிகளும், இடையர்களும், கானகத்தில் திரிபவர்களும், நர மாமிச உண்ணிகளுக்குப் பயந்து காம்யக வனத்தைத் தவிர்த்து தூரமான இடங்களுக்கு ஓடினர். 

ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த நேரத்தில் பாண்டவர்கள் அந்த வனத்தில் நுழைந்த போது, சுட்டெரிக்கும் கண்களுடன் ஒரு பயங்கரமான ராட்சசன், எரிகொள்ளியுடன் அவர்கள் {பாண்டவர்கள்} கண் முன் தோன்றி அவர்களது பாதையைத் தடுத்துக் கொண்டு நின்றான். நீண்ட கரங்களும், பயங்கரமான முகமும், கொண்ட அவன் அந்த குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்களின் {பாண்டவர்களின்} வழியில் அவர்களைத் தடுத்துக் கொண்டு நின்றான். எட்டு பற்கள் வெளியே தள்ளிக் கொண்டு, தாமிரச் சிவப்பான கண்களுடன், சூரியக் கதிர்களைப் பிரதிபலிக்கும் மின்னலுடன் கூடிய பெரும் மேகங்களுக்கு அடியில் கூட்டமாக நிற்கும் கொக்குகள் போல, மேல் நோக்கி நின்ற நெருப்பு போன்ற தலைமுடியுடன் நின்றிருந்தான். 

மழைநீர் நிறைந்த மேகம் கர்ஜிப்பது போல, தனது வகை உயிரினங்களின் தன்மைக்கேற்ப மாயத் தோற்றம் கொண்டிருந்தான் அந்தப் பேயுரு கொண்டவன். அந்தப் பயங்கரமான கர்ஜனையைக் கேட்ட பறவைகளும் மற்ற நீர் வாழ் நில வாழ் விலங்குகள் அனைத்தும் பயத்தால் கதறி எல்லா புறங்களிலும் விழ ஆரம்பித்தன. மான்களும் சிறுத்தைகளும், எருமைகளும், கரடிகளும் எல்லா திக்குகளுக்கும் ஓடும் நிலையில், அந்தக் கானகமே நகர்வது போல காட்சி அளித்தது. அந்த ராட்சசனின் பெரும் மூச்சால் உண்டான காற்றில் ஆடி கொடிகள் அனைத்தும் தங்கள் தாமிர வண்ண இலைகள் கொண்ட கரங்களால் மரங்களை அணைத்துக் கொண்டு தவித்தன.

அந்த நேரத்தில் அங்கு கடுமையான பெருங்காற்று வீசியது. வானம் இருட்டி, தூசிப்படலம் அந்த வானத்தை மூடியது. ஐம்புலனுக்கும் பெரும் எதிரி துக்கமானது போல, பாண்டவர்கள் முன்னிலையில் அவர்கள் அறியாத எதிரியான அந்த ராட்சசன் தோன்றினான். கருப்பு நிறத்தில் இருந்த மான் தோலை உடுத்தியிருந்த பாண்டவர்களைத் தூரத்திலேயே கண்ட ராட்சசன் அவர்களது பாதையைப் பெரும் மைனக மலை தடுத்து நிற்பது போல நின்றான். 

இதுவரை இதுபோன்றவனைக் கண்டிராத தாமரைக் கண் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி} அவனைக் கண்ட பயத்தால், தனது கண்களை மூடிக் கொண்டாள். துட்சாசனனால் கலைந்த கூந்தலுடன் பாண்டவர்களுக்கு மத்தியில் ஐந்து மலைகளுக்கு நடுவே வெட்டிச் செல்லும் ஊற்று போல இருந்தாள். பயத்தில் மூழ்கிய அவளைக் கண்ட ஐந்து பாண்டவர்களும், ஆசையால் உந்தப்பட்ட ஐம்புலன்களும் புலன் நுகர் பொருட்களைப் பின்பற்றி இருப்பது போல அவளைத் {திரௌபதியைத்} தாங்கினர். 

பெரும் (தவ) சக்தி கொண்ட தௌமியர், பாண்டுவின் மகன்களுக்கு முன்னிலையில், அந்த ராட்சசனால் பரப்பப்பட்டிருந்த பயங்கரமான மாயையை பல மந்திரங்களால் அழித்து, அந்த ராட்சசனையும் அழிக்க கணக்கிட்டார். நேர்மையற்ற வழிகளைப் பின்பற்றுபவனும், நினைத்த உருவை எடுக்கும் வல்லமை பெற்றவனுமான அந்தப் பலம் வாய்ந்த ராட்சசன், மாயை அகன்றதைக் கண்டு, கோபத்தால் தனது கண்களை அகல விரித்து, மரணத்தைப் போல காட்சியளித்தான். 

பிறகு மன்னன் யுதிஷ்டிரன் பெரும் விவேகத்துடன் அவனிடம், “நீ யார், யாருடையவன் (யாருடைய மகன்)? நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்” என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட ராட்சசன், நீதிமானான யுதிஷ்டிரனிடம், “நான் பகனின் தம்பி, எல்லோராலும் கொண்டாடப்படும் கிர்மீரன் {Kirmira}. இங்கே வரும் மனிதர்களை வீழ்த்தி எனது உணவைச் சம்பாதித்து, யாருமற்ற இந்த காம்யக வனத்தில் வசதியாக வசிக்கிறேன். எனது உணவின் உருவில் எனது அருகில் வந்திருக்கும் நீங்கள் யார்? உங்கள் அனைவரையும் சண்டையில் வென்று, இன்பமாக உங்களை உண்பேன்” என்றான் {கிர்மீரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்தப் பாவியின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், யுதிஷ்டிரன் தனது பெயரைச் சொல்லி, தனது குல வழியைச் சொல்லத் தொடங்கினான், “நான் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகன். நீ என்னைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். நாட்டை இழந்த நான், எனது தம்பிகள் பீமசேனன், அர்ஜுனன், மேலும் மற்றவர்களுடன் சுற்றித் திரியும்போது, எனது வனவாச காலத்தைக் கழிக்க உனது ஆளுகைக்குட்பட்ட இந்தப் பயங்கரமான கானகத்திற்குள் வந்தேன்” என்றான்.

விதுரன் தொடர்ந்தான், “கிர்மீரன் யுதிஷ்டிரனிடம், “நல்ல அதிர்ஷ்டத்தாலேயே, விதி இன்று எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வந்திருக்கிறது! ஆயுதம் ஏந்திய நிலையிலேயே, இந்தப் பூமி முழுவதும் பீமனைக் கொல்லும் நோக்கத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறேன். ஆனால் நான் பீமனைக் காணவில்லை. நல்ல அதிர்ஷ்டத்தாலேயே, எனது சகோதரனைக் கொன்றவனும், நீண்ட நாள் நான் தேடி வந்தவனும் என்னிடம் வந்திருக்கிறான். அந்தண வேடத்தில் இருந்த அவனே எனது அன்புச் சகோதரனான பகனை, தான் கற்ற அறிவியலின் அறத்தால் வெட்ராக்கிய வனத்தில் {Vetrakiya forest} வைத்து கொன்றான். 

அவனுக்கு உண்மையில் கரத்தில் வலுவில்லை! முன்பொரு சமயம், அந்தத் தீய ஆன்மாவே இந்தக் கானகத்தில் இருந்த எனது அன்பு நண்பனான ஹிடிம்பனைக் கொன்று, அவனது தங்கையை {ஹிடிம்பையைக்} கற்பழித்தான். அந்த முட்டாள் இப்போது இந்த எனது ஆழ்ந்த கானகத்திற்குள், பாதி இரவு கழிந்து, அதுவும் நாங்கள் உலவ ஆரம்பிக்கும் சமயத்தில் வந்திருக்கிறான். இன்று நான் எனது நீண்ட நாள் பழியை இவனை {பீமனைத்} தண்டித்துத் தீர்த்துக் கொள்வேன். இன்று இவனிடம் {பீமனிடமிருந்து} இருந்து நிறைய இரத்தத்தை எடுத்து பகனைத் (பகனின் ஆவியை) திருப்திப்படுத்துவேன். ராட்சசர்களின் எதிரியைக் கொல்வதன் மூலம், எனது நண்பனுக்கும் {ஹிடும்பனுக்கும்}, எனது சகோதரனுக்கும் {பகனுக்கும்} நான் பட்ட கடனில் இருந்து விடுபட்டு மேலான மகிழ்ச்சியை அடைவேன். முன்பு பீமசேனன் பகனால் விடப்பட்டிருந்தாலும், இன்று உன் முன்னிலையில், ஓ யுதிஷ்டிரா, நான் அவனை {பீமனை} விழுங்குவேன். பெரும் அசுரனை (வாதாபியை) உண்டு செரித்த அகத்தியரைப் போல, நானும் இந்த பீமனை உண்டு செரித்துவிடுவேன்!” என்றான் {கிர்மீரன்}.

கொல்லப்பட்டான் கிர்மீரன்! – வனபர்வம் பகுதி 11ஆ-கிர்மீரன் பீமன் மோதல், பீமன் கிர்மீரனைக் கொல்வது; விதுரன் இவை யாவற்றையும் திருதராஷ்டிரனுக்கு சொல்வது; திருதராஷ்டிரன் துக்கமடைந்து சிந்தனையில் ஆழ்வது…

விதுரன் தொடர்ந்தான், “தனது உறுதிமொழிகளில் உறுதியான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், இப்படி ராட்சசனால் சொல்லப்பட்டதும், “அப்படி ஆகவே முடியாது” என்று ராட்சசனை {கிர்மீரனைக்} கண்டித்தான். பிறகு பெரும் பலம்வாய்ந்த பீமன், தன்னைப் போல பத்து பாகம் நீளமுள்ள ஒரு மரத்தை வேகமாகப் பிடுங்கி, அதன் இலைகளை உதிர்த்தான். எப்போதும் வெற்றிவாகை சூடும் அர்ஜுனன், சிறு காலத்திற்குள் இடியின் விசையைக் கொண்ட தனது காண்டீவத்தின் நாணை ஏற்றினான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, ஜிஷ்ணுவைத் {அர்ஜுனனைத்} தடுத்த பீமன், மேகத்தைப் போன்று கர்ஜித்துக் கொண்டிருந்த ராட்சசனை அணுகி, அவனிடம், “நில்! நில்!” என்று அந்த நரமாமிச உண்ணியிடம் தெரிவித்தான். 

இடுப்பைச் சுற்றித் தனது ஆடைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டு, தனது உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டு, உதடுகளைப் பற்களால் கடித்து, மரத்தை எடுத்துக் கைகளில் ஏந்தி எதிரியை நோக்கி முன்னேறினான் பலம்வாய்ந்த பீமன். இடியைச் சுழற்றிச் செல்லும் மகவத்தைப் {இந்திரனைப்} போல, பீமன் அந்த மரத்தை, யமனின் கதாயுதம் போலத் தோன்றச் செய்து, பெரும் பலத்துடன் அதை அந்த நரமாமிச உண்ணியின் தலையில் இறக்கினான். அடியால் தாக்குண்ட அந்த ராட்சசன் சற்றும் அசராமல் நின்றான். மறுபுறம், தனது கைகளில் இருந்த எரிகொள்ளியைச் சுழற்ற, மின்னலைப் போல் இருந்த அதை பீமன் மீது வீசினான். ஆனால் அந்த வீரர்களில் முதன்மையானவன் {பீமன்}, தனது இடது காலால் அதை அணைத்து, வந்த வேகத்தில் அது ராட்சசனை {கிர்மீரனை} நோக்கி செல்லுமாறு செய்தான்.

 பிறகு அந்தக் கொடுமையான கிர்மீரன், தனது பங்குக்கு ஒரு மரத்தைத் திடீரெனப் பிடுங்கி கதையுடன் கூடிய யமனைப் போலப் போர்புரியத் தொடங்கினான். மரங்களுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கிய அந்தச் சண்டை பழங்காலத்தில் ஒரு பெண்ணுக்காக, வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நடந்த சண்டை போல இருந்தது. போரிடுபவர்களின் தலையில் அடிக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் யானையின் தலையில் தூவப்பட்ட தாமரைத் துணுக்குகள் போல துண்டு துண்டாகின. அந்தப் பெரும் வனத்தில் இருந்த கணக்கிலடங்கா மரங்கள், நாணல் போல நசுக்கப்பட்டு, கந்தலாகத் தரையில் கிடந்தன. 

ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ராட்சசர்களில் முதன்மையானவனுக்கும் {கிர்மீரனுக்கும்}, மனிதர்களில் சிறந்தவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் நடந்த மரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட அந்தச் சண்டை சிறிது நேரமே நீடித்தது. பிறகு செங்குத்தான ஒரு பாறையைத் தூக்கிய அந்தக் கோபம் நிறைந்த ராட்சசன் தனது எதிரில் நின்று கொண்டிருந்த பீமன் மீது வீசினான். ஆனால் பீமன் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. பிறகு, பாறையின் தாக்குதலில் அசையாது நின்ற பீமனை நோக்கி கதிர்களை வெளியேற்றும் சூரியனை விழுங்கச் செல்லும் ராகுவைப் போல தனது நீண்ட கரங்களை நீட்டினான். முட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் இரு கோபக்கார களைகள் போல இருவரும் ஒருவருக்கு எதிராகப் போராடினர். அல்லது இரு பெரும் பலம் வாய்ந்த புலிகள் தங்கள் பற்களாலும் கூரிய நகங்களாலும் போரிடுவதுபோல கடுமையாகப் போரிட்டனர். 

துரியோதனன் கைகளில் (முன்பு) அவமானப்பட்டதை நினைத்தும், தனது பலம் நிறைந்த கரங்களில் கர்வம் கொண்டும், கிருஷ்ணை {திரௌபதி} தன்னை நோக்குவதை உணர்ந்தும், விருகோதரன் மிகுந்த ஆவேசம் அடைந்தான். கோபத்தால் பொறிந்த பீமன் தனது கரங்களால் அந்த ராட்சசனை மதம் கொண்ட யானை மற்றொரு யானையைப் பற்றுவது போல பற்றினான். அந்தப் பலம் நிறைந்த ராட்சசனும் தனது எதிரியைப் பற்றினான். ஆனால், மனிதர்களில் முதன்மையான பலம் நிறைந்த பீமசேனன், அந்த நரமாமிச உண்ணியை வன்முறையுடன் தூக்கி எறிந்தான். அந்த இரு பெரும் போராளிகளும் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றுவது, மூங்கில் முறிவது போன்ற பயங்கரமான ஒலியை உண்டாக்கியது. அந்த ராட்சசனைக் கீழே தள்ளி, அவனது இடையைப் பற்றி, கடும்புயல் மரத்தைச் சுழற்றுவது போல அந்த ராட்சசனைச் சுழற்றத் தொடங்கினான் {பீமன்}. 

இப்படி பலம் நிறைந்த பீமனால் பற்றப்பட்ட ராட்சசன் {கிர்மீரன்} சோர்வடைத் தொடங்கி நடுங்கினான். இருப்பினும் தனது பலம் முழுவதையும் செலுத்தி எதிர்த்தான். அவன் {கிர்மீரன்} களைப்படைவதைக் கண்ட விருகோதரன் {பீமன்}, மிருகத்தை கயிறால் கட்டுவது போல தனது கரங்களைக் கொண்டு அந்த எதிரியைக் கட்டினான். அதனால் அந்த மிருகம் பழுதான ஊதுகுழலைப் போல பயங்கரமாக கத்தினான். பிறகு பலம் நிறைந்த விருகோதரன் {பீமன்} நீண்ட நேரத்திற்குச் சுழற்றினான். ராட்சசன் உணர்வற்றவன் போல கலங்கிப் போய் நடந்தான். சக்தியிழந்த ராட்சசனைக் கண்ட பாண்டுவின் மகன் {பீமன்} நேரத்தைக் கடத்தாமல் மிருகத்தைக் கொல்வது போலக் கொன்றான். 

தனது கால் முட்டியை அந்த இழிந்த ராட்சசனின் இடுப்பில் வைத்த விருகோதரன், அந்த எதிரியின் கழுத்தைத் தனது கைகளால் அழுத்தினான். கண்கள் மூடும் நிலையில் ராட்சசனின் நசுக்கப்பட்ட உடலை இழுத்துச் சென்ற பீமன் “ஓ இழிந்த பாவியே {கிர்மீரனே}, இனி நீ ஹிடிம்பன் அல்லது பகனின் கண்ணீரை துடைக்க வேண்டியதில்லை. ஏனென்றால், நீ எமனுலகு செல்லப் போகிறாய்” என்று சொன்னான். இதைச் சொன்ன அந்த மனிதர்களில் முதன்மையானவன், இதயத்தில் கோபம் நிறைந்து, ஆடை ஆபரணம் மற்றும் உணர்வு ஆகியவற்றை இழந்த அந்த ராட்சசன் {கிர்மீரன்} வலிப்புடன் இருந்த போது, அவனைச் சாகும்படி விட்டான். மேக நிறம் கொண்ட அந்த ராட்சசனை {கிர்மீரனைக்} கொன்ற பிறகு, மன்னர்களில் சிறந்தவனின் {பாண்டுவின்} மகன் {யுதிஷ்டிரன்}, பீமனை அவனது பல குணங்களுக்காகப் புகழ்ந்து, கிருஷ்ணையை {திரௌபதியை} அவர்கள் முன்பு விட்டு, துவைத வனத்திற்குக் கிளம்பினர்.

விதுரன் சொன்னான், “ஓ மனிதர்களின் தலைவா {திருதராஷ்டிரா}, இப்படியே அந்தச் சண்டையில் நீதிமானான யுதிஷ்டிரனின் கட்டளைக்கு இணங்கி பீமனால் கிர்மீரன் கொல்லப்பட்டான். பாரத குலத்தைச் சேர்ந்த அந்தக் காளைகள் திரௌபதியை வசதியாக விட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் பீமனை அதிகமாகப் புகழ்ந்தனர். பீமனுடைய கரங்களின் வலிமையால் ராட்சசன் கொல்லப்பட்ட பிறகு, அந்த வீரர்கள் தொல்லைகளில் இருந்து விடுபட்ட அந்த அமைதியான காட்டில் நுழைந்தனர். அந்தப் பெரும் வனத்திற்குள் நுழைந்த போது, பீமனால் அச்சமின்றி கொல்லப்பட்ட அந்தத் தீய ராட்சசனின் {கிர்மீரனின்} உடலை நான் கண்டேன். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் இந்தச் சாதனையை, பாண்டவர்களைச் சூழ்ந்து இருக்கும் அந்தணர்களிடம் இருந்து கேள்விப்பட்டேன்”

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ராட்சசர்களில் முதன்மையான கிர்மீரன் சண்டையில் கொல்லப்பட்டதை அறிந்த மன்னன் {திருதராஷ்டிரன்} துக்கத்தால் பெருமூச்சு விட்டு, சிந்தனையில் ஆழ்ந்தான்.

கிர்மீரவத பர்வம் முற்றிற்று*

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading