ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ சபா பர்வம்-ஸ்ரீ  அனுத்யூத   பர்வம்–

பாண்டவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர் | சபா பர்வம் – பகுதி 73-(அனுத்யூத பர்வம் – 01)-பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டனர் என்று கேள்விப்பட்ட துச்சாசனன், துரியோதனனிடம் விரைந்து சென்று சொல்வது; உடனே துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் திருதராஷ்டிரனைத் தனிமையில் சந்தித்து முறையிடுவது; பாண்டவர்களை மீண்டும் விளையாட அழைப்பது…

ஜனமேஜயன் சொன்னான், “தங்கள் ரத்தினங்கள் மற்றும் செல்வங்களுடன், திருதராஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் புறப்பட்டனர் என்று தெரிய வந்த போது திருதராஷ்டிரன் மகன்களின் உணர்வு எப்படி இருந்தது?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் அவர்களது தலைநகருக்குத் திரும்பலாம் என ஞானமுள்ள திருதராஷ்டிரன் ஆணை கொடுத்தான் என்பதை அறிந்த துச்சாசனன் நேரங்கடத்தாமல் தனது அண்ணனிடம் {துரியோதனனிடம்} சென்றான்.(2) மேலும், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, தனது ஆலோசகருடன் இருந்த துரியோதனன் முன்னிலைக்கு வந்து, துயரத்துடன்,(3) “பெரும் பலம் வாய்ந்த வீரர்களே, நாம் இவ்வளவு சிரமப்பட்டு வென்றதையெல்லாம், அந்தக் கிழவர் {திருதராஷ்டிரன்} வீசி எறிந்துவிட்டார். மொத்த செல்வத்தையும் அவர் நமது எதிரிகளிடம் கொடுத்துவிட்டார்” என்றான்.(4) செருக்கால் வழிநடத்தப்பட்ட துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் இந்த வார்த்தைகளைக் கேட்டு, பாண்டவர்களுக்கு பதிலடி கொடுக்க விரும்பி, ஒன்று கூடி விரைந்து சென்று விசித்திர வீரியனின் மகனான ஞானமுள்ள மன்னன் திருதராஷ்டிரனைத் தனிமையில் சந்தித்து, அவனை {திருதராஷ்டிரனை} மகிழ்விக்கும் தந்திரமான வார்த்தைகளால் பேசினர்.(5,6)

துரியோதனன், “ஓ மன்னா, தேவர்களுக்கு ஆசானான பிருஹஸ்பதி, சக்ரனிடம் {இந்திரனிடம்}, மனிதர்கள் மற்றும் அரசியல் குறித்து பேசியதை நீர் கேள்விப்பட்டதில்லையா?(7) ஓ எதிரிகளைக் கொல்பவரே, “தவறு செய்யும் எதிரிகளை, எப்போதும் தந்திரம் மூலமாகவும், பலத்தின் மூலமாகவும், எந்த உபாயத்தைக் கைக்கொண்டும் கொன்றுவிட வேண்டும்” இது தான் பிருஹஸ்பதி சொன்ன வார்த்தைகள்.(8)

எனவே நாம், பாண்டவர்களின் செல்வத்தைக் கொண்டு பூமியின் மன்னர்களை நிறைவடையச் செய்து பிறகு பாண்டுவின் மகன்களுடன் போரிட்டால், என்ன எதிர்விளைவுகள் வந்துவிடப் போகிறது?(9) ஒருவனுடைய கழுத்திலும் முதுகிலும் கோபத்திலிருக்கும் கடும் விஷம் கொண்ட பாம்புகள் இருக்கும்போது, அவனால் அதை எடுத்துவிட முடியுமா?(10) ஆயுதம் பொருந்திய தங்கள் தேர்களில் அமர்ந்திருக்கும் பாண்டுவின் கோபக்கார மகன்கள், ஓ தந்தையே {திருதராஷ்டிரரே}, நிச்சயமாக நம்மை அழித்துவிடுவார்கள்.(11) 

இப்போது கூட, கவச உடை தரித்தவனும், இரு அம்பறாதூணிகளுடன் கூடியவனுமான அர்ஜுனன், அடிக்கடி தனது காண்டீபத்தை எடுத்து நீண்ட மூச்சுகளை விட்டு, தனது கோபப்பார்வையை சுற்றிலும் சுழற்றிக் கொண்டு முன்னேறுகிறான்.(12) விருகோதரன் {பீமன்}, விரைவாகத் தனது தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டு, அதன் மீது ஏறி, பெரும் எடை கொண்ட தனது கதாயுதத்தைச் சுழற்றிக் கொண்டே பயணிக்கிறான் என்றும் கேள்விப் படுகிறோம்.(13) நகுலன் வாளில் தனது பிடியை வைத்துக் கொண்டும், கரத்தில் தனது அரைவட்ட கேடயத்தைப் பிடித்துக் கொண்டும் பயணிக்கிறான். சகாதேவனும், மன்னனும் (யுதிஷ்டிரனும்), தங்கள் நோக்கங்களை {ஒருவருக்கொருவர்} தங்கள் அறிகுறிகளால் தெளிவாகக் காட்டியபடியே செல்கின்றனர்.(14) அவர்கள் அனைவரும் அனைத்துவித ஆயுதங்களைத் தங்கள் தேர்களில் நிரப்பி, தங்கள் குதிரைகளைச் சவுக்கால் அடித்து, (காண்டவத்திற்கு விரைவாக சென்று} தங்கள் படைகளை ஒன்றுசேர்க்கப் போகின்றனர்.(15)

நம்மால் இவ்வாறு துன்புறுத்தப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}, தங்களுக்கு ஏற்பட்ட காயங்களால், நம்மை மன்னிக்கும் திறனற்று இருக்கிறார்கள். திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்தை அவர்களில் யார்தான் மன்னிக்க முடியும்?(16) நீர் அருளப்பட்டிருப்பீராக. நாம் மீண்டும் பாண்டுவின் மகன்களோடு பகடையாடி அவர்களை நாடு கடத்துவோம். ஓ மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, இப்படியே நாம் அவர்களை {பாண்டவர்களை} வசப்படுத்தி நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.(17) பகடையில் தோற்கும் நாமோ அவர்களோ தோலாடை பூண்டு, பனிரெண்டு வருடம் வனம் செல்ல வேண்டும்.(18) பதிமூன்றாவது வருடம், யாருக்கும் தெரியாமல், யாருக்கும் தெரியாத தேசத்தில் வாழ வேண்டும். அப்படி அவர்கள் வாழ்வது வெளிப்பட்டால், மற்றுமொரு பனிரெண்டு வருட காலம் கானகத்தில் இருக்க வேண்டும்.(19) {இவ்வுடன்பாட்டின்படி} நாமோ, அவர்களோ இப்படியே வாழ வேண்டும். பகடை வீசி விளையாட்டு தொடங்கட்டும், பாண்டுவின் மகன்கள் மீண்டும் விளையாடட்டும்.(20) 

ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஓ மன்னா, இதுவே நமது மேலான கடமையாகும். இந்தச் சகுனி பகடையின் முழு அறிவியலையும் அறிவார்.(21) அவர்கள் பதிமூன்று வருடங்களை வெற்றிகரமான முடித்துத் திரும்பினாலும், நாம் அதற்குள் நாட்டில் நன்கு வேரூன்றி, பலருடன் கூட்டணி அமைத்து, அவர்களால் அணுக முடியாத பெரும் படையைக் கொண்டு அவர்களை அடக்கிவிடலாம்.(22) ஓ மன்னா, இதனால், பாண்டுவின் மகன்கள் திரும்ப வந்தாலும் அவர்களை வீழ்த்தி விடலாம். ஓ எதிரிளைக் கொல்பவனே, இந்தத் திட்டமே உமக்கு பரிந்துரைப்பதாக இருக்கட்டும்” என்றான் {துரியோதனன்}.(23)

திருதராஷ்டிரன் சொன்னான், “உண்மையில் பாண்டவர்கள் வெகு தொலைவு சென்றிருந்தாலும், அவர்களைத் திரும்ப அழைத்து வாருங்கள். பகடை வீச அவர்கள் உடனே வரட்டும்” என்றான்”.(24)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு துரோணர், சோமதத்தன், பாஹ்லீகர், கௌதமர் {கிருபர்}, விதுரர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வைசிய மனைவிக்குப் பிறந்த திருதராஷ்டிரனின் பெரும் பலம் வாய்ந்த மகன் {யுயுத்சு} ஆகியோர், “விளையாட்டைத் தொடங்க வேண்டாம். அமைதி நிலவட்டும்” என்றனர்.(26) ஆனால் பிள்ளைகளிடம் பாகுபாடு கொண்ட திருதராஷ்டிரன், ஞானமுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இவ்வாலோசனைகளைக் கருதாமல் பாண்டுவின் மகன்களை அழைத்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

காந்தாரி சொன்ன புத்திமதி | சபா பர்வம் – பகுதி 74-(அனுத்யூத பர்வம் – 02)-அறத்தின் வழி நடக்கும்படி திருதராஷ்டிரனுக்கு காந்தாரி அறிவுறுத்துவது; காந்தாரியை சொல்லை மறுத்த திருதராஷ்டிரன் பாண்டவர்களை மீண்டும் சூதாட அழைப்பது..

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஏகாதிபதி, அதன்பிறகு தான் அறம் சார்ந்த காந்தாரி, தனது மகன்கள் மேல் இருக்கும் அன்பால் துயரமடைந்து மன்னன் திருதராஷ்டிரனிடம்,(1) “துரியோதனன் பிறந்த போது, பெரும் புத்திகூர்மையுள்ள விதுரர், “குலத்தைக் கெடுக்கப் போகும் இவனை {துரியோதனனை} மறு உலகத்திற்கு அனுப்புவது நலம்.” என்று சொன்னார்.(2) இவன் ஒரு குள்ளநரியைப் போல மீண்டும் மீண்டும் ஊளையிட்டான். இவன் நம் இனத்தின் அழிவை உறுதி செய்வான். ஓ குருக்களின் மன்னா, இஃதை இதயத்தில் நிறுத்துவீராக.(3) 

ஓ பாரதரே, உமது தவறுக்காக பேராபத்து எனும் கடலில் மூழ்காதீர். ஓ தலைவா, முதிரா வயது கொண்ட இந்தத் தீயவர்களின் ஆலோசனைகளைப் பாராட்டி அங்கீகரிக்காதீர்.(4) இந்தக் குலத்தின் பயங்கர அழிவுக்கு நீரே காரணமாகாதீர். கட்டி முடிக்கப்பட்ட ஏரிக்கரையை எவன் உடைப்பான்? அல்லது அணைந்து போன நெருப்பை எவன் மறுபடி கிண்டுவான்?(5) ஓ பாரத குலத்தின் காளையே, அமைதியாக இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} எவன் தூண்டிவிடுவான்? ஓ அஜமீடரே {திருதராஷ்டிரரே}, அனைத்தையும் நீர் நினைவில் வைத்திருப்பீர். இருப்பினும், நான் இந்த விஷயத்தில் உம்முடைய கவனத்தைக் கோருகிறேன்.(6) 

சாத்திரங்களால் தீய மனம் கொண்டோரை நன்மையாகவோ தீமையாகவோ கட்டுப்படுத்தவே முடியாது {புத்தி கெட்டவனுக்கு நன்மையையும் தீமையையும் சாத்திரங்கள் கற்பிக்காது}. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, முதிர்ச்சியில்லா மனிதனின் புத்தி, முதிர்ச்சியுடையோரைப் போல இருக்காது.(7) உமது மகன்கள் உம்மைத் தலைவராக ஏற்றுப் பின்பற்றட்டும். அவர்கள் {தங்கள் உயிரை இழந்துவிடாமல்} உம்மிடம் இருந்து  எப்போதும் பிரிக்கப்படாது இருக்கட்டும்.(8) எனவே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, என் வார்த்தையின்படி இந்தப் பாவியை {துரியோதனனை} நமது குலத்தில் இருந்து கைவிடுவீராக.(8) 

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இதற்கு முன்பு உமது பிள்ளைப் பாசத்தால் உம்மால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவனால் {துரியோதனனால்} நமது குலம் அழியும் நேரம் வந்து விட்டது என்பதை அறிந்து கொள்வீராக.(9) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பிழை செய்யாதீர். அமைதி, அறம் மற்றும் வாய்மையின் கொள்கைகளால் உமது மனம் வழிநடத்தப்படட்டும். தீச்செயல்கள் மூலம் செழிப்பை அடைபவன் விரைவில் அழிக்கப்படுவான். மென்மையான செயல் மூலம் கிட்டும் செல்வம், வேர்விட்டு, கீழிறங்கி தலைமுறை தலைமுறையாக இருக்கும்” என்றாள்.(10)

அறவழியைக் காட்டும் வார்த்தைகளைப் பேசிய காந்தாரியால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, அவளிடம் {காந்தாரியிடம்}, “நமது குலத்திற்கு அழிவு வந்திருக்கிறது என்றால், அது அப்படியே நடக்கட்டும். நான் அதைத் தடுக்க இயலாதவனாக இருக்கிறேன்.(11) அவர்கள் (எனது மகன்கள்) விருப்பப்படியே நடக்கட்டும். பாண்டவர்கள் திரும்பட்டும். எனது மகன்கள் பாண்டுவின் மகன்களோடு சூதாடட்டும்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(12)

பந்தயம் இதுதான் | சபா பர்வம் – பகுதி 75-(அனுத்யூத பர்வம் – 03)-திருதராஷ்டிரனின் தூதுவர் யுதிஷ்டிரனிடம் சென்று மீண்டும் அழைத்து வருவது; சகுனி புதிய பந்தயம் பற்றிச் சொல்வது; யுதிஷ்டிரன் பந்தயத்தை ஏற்று, பகடையாட்டம் தொடங்கியது..

வைசம்பாயனர் சொன்னார், “புத்திசாலியான மன்னன் திருதராஷ்டிரனின் கட்டளைகளை ஏற்றுச் சென்ற அரசத் தூதுவன் {பிராதிகாமின்}, அந்த நேரத்தில் நெடுந்தூரம் சென்றிருந்த பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரனைச் சந்தித்து,(1) “உமக்குத் தந்தையைப் போன்றவரான உமது பெரியப்பா “சபை தயாராக இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே, ஓ மன்னன் யுதிஷ்டிரனே, வந்து பகடையை வீசுவாயாக” என்ற சொற்களை உமக்கு சொல்லி அனுப்பினார்” என்றான்.(2)

யுதிஷ்டிரன், “படைப்புகளுக்கு ஆணையிடுபவர் {பிரம்மா/ விதி} பகிர்ந்தளிக்கும் வண்ணமே நற்பேறு மற்றும் கேட்டின் கனியை உயிரினங்கள் பெறுகின்றன. நான் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் அந்தக் கனிகள் {பலன்கள்} தவிர்க்கப்பட முடியாதனவாகும்.(3) இது பகடைக்கான உத்தரவாகும். தவிர இது கிழட்டு மன்னரின் {திருதராஷ்டிரரின்} கட்டளையும் ஆகும். எனக்கு அது அழிவைத் தான் தரும் என்றாலும் என்னால் அதை மறுக்க முடியாது” என்றான்.(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “தங்கத்தாலான (உயிருள்ள) விலங்கு இருக்க வாய்ப்பில்லை என்றாலும், ராமன் மானைக் கண்டு மயங்கினான். உண்மையில் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் மனிதனின் மனம் ஒழுங்கு மாறி குழம்பிப் போகிறது.(5) எனவே, யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுத் தனது தம்பிகளுடன் வந்த பாதையிலேயே மறுபடி திரும்பினான். சகுனியின் வஞ்சகத்தை முழுவதும் அறிந்தும், பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, திரும்பி வந்து, மீண்டும் அவனுடன் பகடையாட அமர்ந்தான்.(6) அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரர்கள், தங்கள் நண்பர்களின் மனம் பாதிக்கும் வகையில் மறுபடியும் அந்தச் சபைக்குள் நுழைந்தனர். தங்களையே அழிவுக்குள்ளாக்க, விதியால் கட்டாயப்படுத்தப்பட்டு, சூதாடுவதற்காக மீண்டும் வந்து வசதியாக அமர்ந்தனர்.(8)

சகுனி, “கிழட்டு மன்னர் {திருதராஷ்டிரர்} உங்கள் செல்வத்தை எல்லாம் மீண்டும் உங்களுக்கே கொடுத்துவிட்டார். அது நல்லதுதான். ஆனால், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, நான் சொல்வதைக் கேள், ஒரு பெரும் பந்தயம் இருக்கிறது.(9) உன்னால் நாங்கள் வீழ்த்தப்பட்டால், மான் தோல் உடுத்தி, கானகம் நுழைந்து அங்கே பனிரெண்டு வருட காலம் வாழ்ந்து, பதிமூன்றாவது வருடம் ஏதோவோர் அறியாத தேசத்தில், யாரும் அறியா வண்ணம் வாழ்வோம். அறியப்பட்டால், மேலும் பனிரெண்டு வருடங்கள் தொடர்ச்சியாக கானகம் செல்வோம்.(10,11) அதேபோல எங்களால் நீங்கள் வீழ்த்தப்பட்டால், நீங்கள் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து மான் தோலுடுத்தி, பனிரெண்டு வருடங்கள் கானகம் சென்று, பதிமூன்றாவது வருடம் யாருமறியா தேசத்தில் யாரும் அறியா வண்ணம் வாழ வேண்டும். கண்டுபிடிக்கப்பட்டால், மேலும் பனிரெண்டு {வருடங்கள் தொடர்ச்சியாக கானகத்தில் வாழ வேண்டும். பதிமூன்றாவது வருடம் முடிந்ததும், யாராக இருந்தாலும் அவர்கள் நாடு மற்றவரால் கொடுக்கப்படும்.(12-14) ஓ யுதிஷ்டிரா, ஓ பாரதா, இந்த உறுதியுடன் பகடை வீசி எங்களுடன் விளையாடு” என்றான்.(15)

இந்த வார்த்தைகளைக் கேட்ட சபையோர், பெரும் துயரத்துடன் தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் உணர்வுகளின் பலத்தால்,(16) “ஐயோ, துரியோதனன் நண்பர்கள், அவனது ஆபத்தை அவனுக்கு உணர்த்தவில்லையே… சீ.. சீ.. ஓ பாரதர்களில் காளைகளே, இவன் (திருதராஷ்டிரா) புரிந்து கொள்கிறானோ இல்லையோ, நீங்கள் சொல்ல வேண்டியது உங்கள் கடமை” என்றனர்.(17) 

மன்னன் யுதிஷ்டிரன், இவ்வாறான பல்வேறு கருத்துகளைக் கேட்டும், வெட்கத்தாலும், அறவுணர்வாலும் மீண்டும் பகடையில் அமர்ந்தான்.(18) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாகவும், விளைவுகளை முழுமையாக அறிந்தவனாகவும் இருந்தாலும், குருக்களின் அழிவை அறிந்தவனைப் போல விளையாடத் தொடங்கினான்.(19)

யுதிஷ்டிரன், “ஓ சகுனி, தன் சொந்த வகைக்கான கடமையை நோற்று {என் தர்மத்தின் படி} வாழும் என்னைப் போன்ற ஒரு மன்னன், பகடைக்கு அழைக்கப்படும்போது எப்படி மறுப்பான்? எனவே, நான் உன்னோடு {மீண்டும்} விளையாடுவேன்” என்றான்.(20)

சகுனி, “எங்களிடம் நிறைய பசுக்களும், குதிரைகளும், கறவை மாடுகளும், கணக்கிலடங்கா ஆடுகளும், செம்மறிகளும், யானைகளும், பொக்கிஷமும், தங்கமும் இருக்கின்றன, ஆண் பெண் பணியாட்களும் இருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் முன்பு பந்தயம் வைத்தோம். ஆனால் இப்போதோ இஃது ஒன்றே பந்தயம்; அதாவது கானகத்திற்கு நாடு கடத்தப்படுவது. தோல்வியுறும் நீயோ, நாங்களோ கானகத்தில் வாழ்ந்து, பதிமூன்றாவது வருடம் தலைமறைவாக யாரும் அறியாத இடத்தில் வாழவேண்டும். மனிதர்களில் காளைகளே இந்த உடன்பாட்டைப் பந்தையமாகக் கொண்டு நாம் விளையாடலாம்” என்றான்.(21-23)

ஓ பாரதா {ஜனமேஜயா}, இந்த முன்மொழிவு ஒரு முறை சொல்லப்பட்டது. பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்}, அஃதை ஏற்றுக் கொண்டான். சகுனி பாச்சிகைகளை எடுத்தான். அவற்றை {பாச்சிகைகளை} வீசியபடியே யுதிஷ்டிரனிடம் “பார், நான் வென்று விட்டேன்” என்றான்.(24)

நகுலனும் சபதமேற்றான் | சபா பர்வம் – பகுதி 76-(அனுத்யூத பர்வம் – 04)-துச்சாசனன் பாண்டவர்களைப் பார்த்து எள்ளி நகையாடி, திரௌபதியிடம் தங்களுள் ஒருவரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லல்; பீமன் கோபம் கொள்ளுதல்; துரியோதனனின் நையாண்டி; பீமன் சபதத்தை உரக்கச் சொல்லல்; அர்ஜுனன் சபதமேற்றல்; சகாதேவன் பீமனின் சபதத்தை உறுதி கூறல்; நகுலன் சபதம் ஏற்றல்; பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனை அணுகுதல்.

வைசம்பாயனர் சொன்னார், “பிறகு {பகடை ஆட்டத்தில்} தோல்வியுற்ற பிருதையின் {குந்தியின்} மகன்கள், வனவாசத்துக்குத் தயாரானார்கள். அவர்கள் {பாண்டவர்கள்} ஒருவர் பின் ஒருவராக, முறையான வரிசையில் தங்கள் அரச உடுப்புகளைக் களைந்து மான் தோல் உடுத்தினர்.(1) மான் தோல் உடுத்தப்பட்டு நாட்டை இழந்து, நாடு கடத்தலுக்குத் தயாராக இருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களைக் கண்ட துச்சாசனன்,(2) “சிறப்புவாய்ந்த மன்னன் துரியோதனனின் முழு அரசாட்சி நடக்கத் தொடங்கிவிட்டது. பாண்டுவின் மகன்கள் வெற்றிகொள்ளப்பட்டு, பெரும் துயரத்தில் மூழ்கினர்.(3) அகலமான அல்லது குறுகலான பாதைகளில் சென்று எங்கள் குறிக்கோளை நாங்கள் அடைந்துவிட்டோம். இன்று நாங்கள் எங்கள் எதிரிகளைவிட செல்வத்திலும், அனைத்திலும் மேன்மையடைந்தோம்.(4) எங்கள் அரசாட்சி காலமும் மனிதர்கள் போற்றுதலுக்குரிய வகையில் இருக்கிறது. பிருதையின் {குந்தியின்} மகன்கள் அனைவரும் நிலைத்த நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். அவர்கள் காலாகாலத்துக்கும் நாட்டையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டனர்.(5) செல்வத்தில் செருக்கு கொண்டு, திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை} ஏளனம் செய்து சிரித்தவர்கள், இப்போது தோல்வியுற்று, தங்கள் செல்வத்தையெல்லாம் இழந்து கானகத்திற்கு செல்ல வேண்டியவர்களானார்கள்.(6)

சுபலன் மகனிடம் {சகுனியிடம்} அவர்கள் பந்தயமாக ஏற்றுக் கொண்டது போல, தங்கள் பல வண்ண கவசங்களையும், தெய்வீக ஆடை ஆபரணங்களையும் களைந்து, மான் தோலை அணிந்து கொள்ளட்டும்.(7) உலகத்தில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லையென்று தற்பெருமை பேசியவர்கள், இப்போது தங்கள் பேரிடர் காலத்தில் எள்ளுப் பதர்களைப் போலத் தங்களைக் கருதி, தங்கள் நிலையை அறிந்து கொள்வார்கள்.(8) இந்த ஆடையில் கூட பாண்டவர்கள் வேள்வியில் அமர்ந்திருக்கும் பலம் கொண்ட ஞானிகள் போல இருந்தாலும், வேள்வி செய்யத் தகாதவர்களைப் போலவும், வேடதாரிகள் போலவும் தெரிகிறார்கள்.(9)

சோமக குலத்தின் ஞானமுள்ள யக்ஞசேனன் {துருபதன்}, பாஞ்சால இளவரசியான தனது மகளை {திரௌபதியை}, பாண்டுவின் மகன்களுக்கு அளித்தான். ஆண்மையற்றவர்களுக்குத் தனது பெண்ணை அளித்ததால் அவன் நற்பேறற்ற நிலையை அடைந்தான்.(10) ஓ யக்ஞசேனி {திரௌபதி}, செல்வத்தையும், உடைமைகளையும் இழந்து, மான் தோலுடுத்தி, கந்தலான நூலாடை அணியும் உனது கணவர்களால் உனக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது? இங்கே இருப்பவர்களுக்கு மத்தியில், உனக்கு யாரைப் பிடிக்கிறதோ, அவரைக் கணவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வாயாக.(11) இங்கே கூடியிருக்கும் குருக்கள் அனைவரும் பொறுமையும், தற்கட்டுப்பாடும், பெரும் செல்வமும் கொண்டவர்கள். இவர்களில் ஒருவரை உனது தலைவராகக் கொண்டால், இந்தப் பேரிடர் உனக்குப் பாவகர நிலையைத் தராது.(12) இந்தப் பாண்டுவின் மகன்கள் எள்ளுப் பதர்களைப் போன்றவர்களாவர்; அல்லது பார்வைக்காக தோலால் பாடம் செய்யப்பட்ட விலங்கு போன்றவர்களாவர்; அல்லது நெற்பதரைப் போன்றவர்களாவர்.(13) வீழ்ந்துவிட்டவர்களான பாண்டுவின் மகன்களுக்காக இனியும் நீ ஏன் காத்திருக்க வேண்டும்? {நீ ஏன் இன்னும் அவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்?} {எண்ணைக்காக} எள்ளுப் பதரை நசுக்கும் வேலை வீணானது” என்றான்.(14)

திருதராஷ்டிரன் மகனான துச்சாசனன், பாண்டவர்களின் முன்னிலையில் இவ்வாறான கொடுமையான வார்த்தைகளைப் பேசினான். இதைக் கேட்டு பொறுமை காக்க முடியாதவனான பீமன், பெருங்கோபத்தில் திடீரென சிறு நரியை அணுகும் இமாலய சிங்கம் போல அந்த இளவரசனை {துச்சாசனனை} அணுகி, பேரொலியுடன் கண்டிக்கும் வார்த்தைகளில்,(15) “தீய எண்ணம் கொண்ட இழிந்தவனே, பாவிகள் பேசும் பேச்சைப் பேசிவிட்டு பரந்த அளவில் பாராட்டுகளைப் பெறுவாய் என்றா நினைக்கிறாய்? காந்தார மன்னனின் {சகுனியின்} திறனால் நீ முன்னேறினாய். ஆனால் மன்னர்களுக்கு முன்னிலையில் தற்பெருமை பேசுகிறாய்.(16) உனது கணை போன்ற வார்த்தைகளால் எப்படி நீ எங்கள் இதயங்களைத் துளைக்கிறாயோ, அப்படி போர்க்களத்தில், இதையெல்லாம் நினைவுகூர்ந்து உனது இதயத்தைத் துளைப்பேன்.(17) கோபத்தாலும், பேராசையாலும் உனக்குப் பின்னால் உனக்குப் பாதுகாவலாக இருப்போரையும் அவர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் உறவினர்களுடன் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன்” என்றான்”.(18)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மான்தோல் உடுத்தியிருந்த பீமன் இப்படிப் பேசிவிட்டு, அறத்தின் பாதையில் இருந்து வழுவாமல், வேறு எதுவும் செய்யாமல் விட்டான். அப்போது துச்சாசனன் வெட்கமின்றி குருக்களுக்கு மத்தியில் ஆடிக் கொண்டு சத்தமாக “மாடே! மாடே!” என்றான்.(19)

இதனால் பீமன் மறுபடியும், “ஓ துச்சாசனா, பாதகா, இது போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த உனக்கு என்ன துணிவு? ஏமாற்று வித்தைகளால் எங்கள் செல்வத்தை வென்று, நீயெல்லாம் தற்பெருமை பேசுகிறாய்.(20) நான் உனக்குச் சொல்கிறேன். போர்க்களத்தில் பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமனாகிய நான்} உனது இதயத்தைத் துளைத்துப் பிளந்து, உனது உயிர்க் குருதியைப் பருகவில்லையெனில், அருள் நிறைந்த பகுதிகளை அவன் அடைய மாட்டான்.(21) நான் இஃதை உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், போர்க்களத்தில் திருதராஷ்டிரன் மகன்களை, அனைத்து வீரர்கள் முன்னிலையில் கொன்று, எனது கோபத்தை விரைவில் தணித்துக் கொள்வேன்” என்றான்”.(22)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தச் சபையை விட்டு பாண்டவர்கள் வெளியேறும் போது, தீய மன்னனான துரியோதனன், சிங்கம் போல நடக்கும் பீமனின் நடையைப் போல நடந்து காட்டி பெரும்  மகிழ்ச்சியுடன் நையாண்டி செய்தான்.(23) 

அப்போது, விருகோதரன் {பீமன்} மன்னனை {துரியோதனனை} நோக்கி பாதி திரும்பிய நிலையில், “ஓ மூடா, இதனால் நீ என்னை விஞ்சியவனாகி விட்டாய் என்று நினைத்துக் கொள்ளாதே. விரைவில் உன்னையும் உன்னைத் தொடர்பவர்களையும் கொல்வேன். அப்போது இதையெல்லாம் நினைவு கூர்ந்து உனக்குப் பதிலளிக்கிறேன்” என்றான்.(24) 

தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைக் கண்டவனும், பெரும் பலமும் செருக்கும் கொண்டவனுமான பீமன், பொங்கும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, யுதிஷ்டிரனின் சுவடுகளைப் பின்பற்றி சென்று, அந்தக் கௌரவ அவையில்,(25) “நான் துரியோதனனைக் கொல்வேன். தனஞ்சயன் {அர்ஜுனன்} கர்ணனைக் கொல்வான். சகாதேவன் பகடைச் சூதாடியான சகுனியைக் கொல்வான்.(26) நான் இந்தச் சபையின் முன்னால் செருக்குமிக்க இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்கிறேன். இவ்வார்த்தைகளுக்குத் தேவர்கள் நன்மை செய்வர்.(27) எப்போதாவது நாங்கள் குருக்களுடன் போர் செய்தால், இந்தப் பாதகன் துரியோதனனை அப்போர்க்களத்தில் எனது கதாயுதத்தால் அடித்தே கொல்வேன். பிறகு அவனை {துரியோதனனை} தரையில் கிடத்தி, எனது பாதத்தை அவனது தலையில் வைப்பேன்.(28) தீய பேச்சு கொண்ட இந்தத் தீய மனிதன் துச்சாசனைப் பொறுத்தவரை, சிங்கம் போல நான் அவனது குருதியைக் குடிப்பேன்” என்றான்.(29)

அர்ஜுனன், “ஓ பீமரே, மேன்மையான மனிதர்களின் தீர்மானங்கள் வார்த்தைகளால் மட்டும் அறியப்படுவதில்லை. இன்றிலிருந்து பதினான்காவது வருடத்தில், அவர்கள் என்ன நடக்கும் என்பதைக் காண்பார்கள்” என்றான்.(30)

பீமன், “இந்தப் பூமி துரியோதனன், கர்ணன், தீய சகுனி, மற்றும் துச்சாசனன் ஆகிய நால்வரின் குருதியைப் பருகும்” என்றான்.(31)

அர்ஜுனன், “ஓ பீமரே, நீர் சொன்னவாறே, தீங்கிழைப்பவனும், பொறாமை கொண்டவனும், கடும் பேச்சு கொண்டவனும், வீணனுமான இந்தக் கர்ணனை நான் போர்க்களத்தில் கொல்வேன்.(32) பீமருக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக, இந்தக் கர்ணனையும் அவனது தொண்டர்களையும் தனது கணைகளால் கொல்வதாக அர்ஜுனன் உறுதியேற்கிறான்.(33) மூடத்தனத்தால் எனக்கு எதிராகப் போரிட வரும் மன்னர்களையும் நான் யமனுலகு அனுப்புவேன்.(34) இமய மலை அகற்றப்படலாம், பகலை உண்டாக்குபவன் {சூரியன்} ஒளிழந்து போகலாம், சந்திரன் தனது குளிர்ச்சியை இழக்கலாம். ஆனால் இந்த எனது உறுதிமொழி எப்போதும் பேணப்படும்.(35) மேலும் இவை அனைத்தும் பதினான்காவது வருடத்திலேயே நிச்சயமாக நடைபெறும். துரியோதனன் உரிய மதிப்புடன் நமது நாட்டைத் திரும்பத் தர மாட்டான்” என்றான்”.(36)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அர்ஜுனன் இதைச் சொன்னதும், மாத்ரியின் அழகான மகனான பெரும் சக்தி பெற்ற சகாதேவன், சகுனியைக் கொல்ல விரும்பியவனாகத் தனது பலம் வாய்ந்த கரங்களை அசைத்துக்கொண்டும், பாம்பு போல பெருமூச்சுவிட்டுக் கொண்டும், கண்கள் சிவக்க கோபத்துடனும்,(37,38) “காந்தார மன்னர்களின் புகழைக் கெடுத்தவனே {சகுனியே}, தோல்வியுற்றார்கள் என்று யாரை நீ நினைக்கிறாயோ, அவர்கள் உண்மையில் வீழவில்லை. அவர்கள் கூரிய முனை கொண்ட கணைகளாவர். அவர்களுக்குத் தீங்கைச் செய்துவிட்டுப் போர் அபாயத்தை வரவழைத்துக் கொண்டாய்.(39) உன்னையும், உனது தொண்டர்களையும் குறித்து பீமர் சொன்ன அனைத்தையும் நிச்சயம் நான் சாதிப்பேன். உனக்கு செய்ய வேண்டிய காரியம் ஏதாவது இருந்தால், அந்த நாளுக்கு முன்பே செய்து முடித்துக் கொள்வாயாக.(40) ஓ சுபலனின் மகனே {சகுனியே}, அதுவரை நீ க்ஷத்திரிய நடைமுறையில் எதிர்த்துப் போரிட்டால், நான் உன்னையும், உனது தொண்டர்களையும் கொல்வேன்” என்றான்.(41)

பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சகாதேவனின் வார்த்தைகளைக் கேட்ட மனிதர்களில் அழகான நகுலன்,(42) “விதியால் உந்தப்பட்டு மரணத்தைவிரும்பி, யக்ஞசேனன் {துருபதன்} மகளை {திரௌபதியை} சூதாட்டத்தில் அவமதித்து, துரியோதனனுக்கு ஏற்புடைய காரியங்களைச் செய்யும் திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரையும் நான் நிச்சயம் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்.(43,44) விரைவில், திரௌபதிக்கு நேர்ந்த கொடுமையை நினைத்துப் பார்த்து, யுதிஷ்டிரரின் கட்டளையின் பேரில், இந்தப் பூமியை திருதராஷ்டிரன் மகன்கள் அற்றதாக ஆக்குவேன்” என்றான்.45)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “நீண்ட கரங்கள் உடைய அந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் அவர்களுக்குள் அறம்சார்ந்த உறுதிமொழிகளை ஏற்று மன்னன் திருதராஷ்டிரனை அணுகினர்” {என்றார் வைசம்பாயனர்}.(46)

பாண்டவர்கள் வெளியேறினர் | சபா பர்வம் – பகுதி 77-அனுத்யூத பர்வம் – 05)-யுதிஷ்டிரன் அனைவரிடம் விடை பெறுதல்; விதுரன் குந்தி தன்னிடம் இருக்கட்டும் என்று கோருதல்; பாண்டவர்கள் சம்மதித்தல்; விதுரன் யுதிஷ்டிரனுக்கு நீதிகளைச் சொல்லல்; பாண்டவர்கள் வெளியேறுதல்.

யுதிஷ்டிரன், “எனது முதிர்ந்த பாட்டாவிடமும் {பீஷ்மரிடமும்}, மன்னர் சோமதத்தரிடமும், பெரும் மன்னன் பாஹ்லீகரிடமும்,(1) துரோணர், கிருபர் ஆகியோரிடமும், அனைத்து மன்னர்களிடமும், அஸ்வத்தாமன், விதுரர், திருதராஷ்டிரர் மற்றும் திருதராஷ்டிரரின் அனைத்தும் மகன்களிடமும்,(2) யுயுத்சு, சஞ்சயன், மற்றும் சபையோர் அனவரிடமும் நான் பிரியாவிடையைக் கோருகிறேன். நான் அனைத்து பாரதர்களிடமும் பிரியாவிடை கோருகிறேன். நான் திரும்பி வந்து உங்கள் அனைவரையும் காண்பேன்” என்றான்”.(3)

வைசம்பயாணர் தொடர்ந்தார், “அங்கிருந்த அனைவரும் அவமானத்தால் குன்றிப்போனதால் யுதிஷ்டிரனுக்கு பதிலேதும் சொல்ல இயலவில்லை. இருப்பினும் அவர்களது மனத்திற்குள், அந்த புத்திசாலி இளவரசின் நன்மைக்காக வேண்டினார்கள்.(4) 

விதுரன், “மதிப்புக்குரிய பிருதை {குந்தி} பிறப்பிலேயே இளவரசி ஆவாள். அவள் {குந்தி} காட்டுக்குச் செல்வது தகாது. முதிர்ந்தவளாகவும், மிக மென்மையானவளாகவும், எப்போதும் மகிழ்ச்சியானவளாகவும் அறியப்படும் இந்த அருளுடையவள் என் வசிப்பிடத்தில், என்னால் வணங்கப்பட்டு வாழ்ந்து வருவாளாக. பாண்டவர்களே, இஃதை அறிந்து கொள்வீராக. எப்போதும் பாதுகாப்பு உங்களுடையதாக இருக்கட்டும்” என்றான்”.(5,6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டவர்கள், “ஓ பாவமற்றவரே {விதுரரே}, நீர் சொல்வது போலவே ஆகட்டும். நீர் எங்கள் சிறிய தகப்பனார் ஆவீர். எனவே எங்களுக்கு நீர் தந்தையைப் போன்றவராவீர். நாங்கள் அனைவரும் உமக்குக் கீழ்ப்படிந்தவர்களே.(7) ஓ கல்விமானே, நீரே எங்கள் மதிப்பிற்குரிய பெரியவராவீர் {குருவாவீர்}. உமது ஆணைகளுக்கு நாங்கள் எப்போதும் கீழ்ப்படிவோம். ஓ உயர் ஆன்மாவே, செய்ய வேண்டியது வேறு ஏதேனும் இருப்பின் எங்களுக்கு ஆணையிடுவீராக” என்றனர்.(8)

விதுரன், “ஓ யுதிஷ்டிரா, ஓ பாரத குலத்தின் காளையே, பாவ வழிகளில் வீழ்த்தப்பட்டவன், அவ்வாறு அடையப்பட்ட தோல்வியின் வலியை உணர வேண்டியவனில்லை. இஃது எனது கருத்து.(9) அனைத்து அறநெறிகளையும் அறிந்தவன் நீ; போர்களத்தில் தனஞ்சயன் {அர்ஜுனன்} எப்போதும் வெற்றியாளன்; பீமசேனனோ பகைவரைக் கொல்பவன்; நகுலன் செல்வம் சேர்ப்பவன்;(10) சகாதேவன் நிர்வாகத் திறன் கொண்டவன்; தௌமியர் வேதம் அறிந்தவர்களில் முதன்மையானவர்; திரௌபதி அறம் மற்றும் பொருளியல் அறிந்தவள்.(11) 

நீங்கள் ஒருவருக்கொருவர் பிணைப்புடையவர்களாக இருக்கிறீர். ஒருவரைப் பார்த்து ஒருவர் மகிழ்பவர்களாக இருக்கிறீர். எதிரிகளால் உங்களைப் பிரிக்கவே முடியாது. மேலும் நீங்கள் அனைவரும் நிறைவுடையவர்களாக இருக்கிறீர்.(12) எனவே, உலகத்தில் உங்களைக் கண்டு பொறாமைப் படாதோர் யார் இருக்கக்கூடும்? ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி பொறுமையின் வடிவமாக இந்த பொருள்சார்ந்த உலகத்தில் இருப்பது உனக்கு பெரிய நன்மையைத் தரும். சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான எதிரிகூட அதற்கு எதிராக நிற்க முடியாது.(13) 

முன்பு இமயமலையில் மேருஸாவர்ணியாலும் {முனிவராலும்}, வாரணாவத நகரத்தில் கிருஷ்ண துவைபாயனராலும் {வியாசராலும்},(14) பிருகு மலை நெடும்பாறைகளில் {பிருகுதுங்கம் என்ற மலையில்} ராமரிடமும் {பரசுராமராலும்}, திருஷத்வதி கரைகளில் சம்புவிடமும் {ஜம்பு = பரமசிவனாலும்} உபதேசம் பெற்றிருக்கிறாய். மேலும் அஞ்சன மலையில் பெரும் முனிவரான அசிதரின் போதனையைக் கேட்டிருக்கிறாய்.(15) மேலும் கல்மாஷி {ஆற்றங்} கரையில் பிருகுவின் சீடனாகியிருந்தாய். நாரதரும், உனது புரோகிதரான தௌமியரும் இப்போது உனக்கு உபதேசிப்பவர்களாக இருக்கிறார்கள்.(16) 

முனிவர்களால் உனக்குக் கிடைக்கப்பெற்ற அற்புதமான பாடங்களை கைவிட்டுவிடாதே. அவை மறு உலகத்திற்கும் பயனுள்ளவையாக இருக்கும். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, புத்திகூர்மையில் நீ இளையின் மகனான புரூரவசையே {புரூரவனையே} விஞ்சியவனாக இருக்கிறாய்.(17) பலத்தால் பல ஏகாதிபதிகளையும், அறத்தால் பல முனிவர்களையும் விஞ்சியிருக்கிறாய். எனவே, நீ இந்திரனுக்கு சொந்தமான வெற்றியை அடைவாயாக; யமனுக்கு சொந்தமான கோபத்தைக் கட்டுப்படுத்துவாயாக;(18) குபேரனுக்குச் சொந்தமானதை {செல்வத்தை} தானமாகக் கொடுப்பாயாக; வருணனுக்குச் சொந்தமான உனது உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவாயாக. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, சந்திரனிடம் இருந்து மகிழ்ச்சிக்குரிய சக்தியைப் பெறுவாயாக.(19) நீரில் இருந்து அனைத்தையும் அடக்கும் சக்தியைப் பெறுவாயாக; பொறுமையை பூமியிடம் இருந்து பெறுவாயாக; சக்தியை மொத்த சூரிய வட்டிலில் இருந்து பெறுவாயக; பலத்தை காற்றிடம் {வாயு} இருந்து பெறுவாயாக; மற்ற பூதங்களிடம் இருந்து செழுமையைப் பெறுவாயாக.(20) நோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியும், உடல்நலனும் உனதாகட்டும்; நீ திரும்பி வருவதைக் காண்பேன் என்று நம்புகிறேன். ஓ யுதிஷ்டிரா, துன்பம், கடினம் போன்ற அனைத்து காலங்களிலும் கடமையின் படி சரியாக நடந்து கொள்வாயாக. ஓ யுதிஷ்டிரா, எங்களிடம் விடைபெற்று செல்வாயாக. ஓ பாரதா, அருள் உனதாகட்டும்.(21,22) இதற்கு முன்பு நீ பாவம் செய்தாய் என்று யாராலும் சொல்ல முடியாது. நாங்கள் உன்னைக் காண்போம் என நம்புகிறோம், எனவே, பாதுகாப்புடன் வெற்றி மகுடம் தரித்துக் கொண்டு திரும்பி வருவாயாக” என்றான் {விதுரன்}”.(23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படி விதுரனால் சொல்லப்பட்டவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி பீஷ்மரிடமும் துரோணரிடமும் பணிந்து வணங்கிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

குந்தியின் அழுகை | சபா பர்வம் – பகுதி 78-(அனுத்யூத பர்வம் – 06)-திரௌபதி குந்தியிடமும் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை பெறுவது; குந்தி திரௌபதியைச் சமாதானப்படுத்தியது; பாண்டவர்களைக் கண்ட குந்தி துக்கம் கொண்டது; பாண்டவர்கள் குந்தியைச் சமாதானப்படுத்தியது, பாண்டவர்கள் கிளம்பியது; விதுரன் குந்தியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றது; திருதராஷ்டிரன் விதுரைரை அழைத்தது…

வைசம்பாயனர் சொன்னார், “பின்பு அனைவரும் புறப்படத் தயாரான போது, சிறப்புமிக்கப் பிருதையிடம் {குந்தியிடம்} சென்று திரௌபதி பிரியாவிடை கோரினாள். துயரத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை கோரினாள்.(1) தகுதியுடையவர்கள் அனைவரையும் வணங்கி, ஆரத்தழுவி செல்ல அவள் {திரௌபதி} விரும்பினாள். பின்னர் பாண்டவர்களின் அந்தப்புரத்திற்குள் இருந்து ஒப்பாரியும், அழுகையும் பேரொலியுடன் எழுந்தது.(2) அவர்கள் பயணப்படுவதற்கு முன்னர், திரௌபதியைக் கண்ட குந்தி, மிகவும் துன்புற்றவளாக, துயரத்தால் அடைபட்ட குரலுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.(3)

அவள் {குந்தி}, “ஓ குழந்தாய் {திரௌபதி}, இந்தப் பேரிடரைக் கண்டு அஞ்சாதே. பெண்களின் கடமைகளை நன்கு அறிந்தவள் நீ. நடத்தைகள் எவ்வாறே இருக்க வேண்டுமோ அவ்வாறே உன்னிடம் இருக்கின்றன.(4) ஓ இனிய புன்னகை உடையவளே, உனது தலைவர்களுக்கு நீ ஆற்ற வேண்டிய கடமையை நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. நீ கற்புடையவளாகவும், சாதனைகளைக் கொண்டவளாகவும் இருக்கிறாய். உனது குலத்துக்கு ஏற்ற வகையிலும், புகுந்த வீட்டின் குலத்துக்கு ஏற்ற வகையிலும் உன் பண்புகள் இருக்கின்றன.(5) 

உனது கோபத்தால் எரியாது போன கௌரவர்கள் நற்பேறு பெற்றவர்களே. ஓ குழந்தாய், எனது வேண்டுதல்களால் {ஜபங்களால்} நீ பாதுகாப்பாகச் சென்று வருவாயாக.(6) தவிர்க்கப்பட முடியாத காரியங்களில் நல்ல பெண்கள் மனவேற்றுமை கொள்வதில்லை. அனைத்திற்கும் மேலான அறத்தால் காக்கப்பட்டு, விரைவில் நீ நற்பேறு பெறுவாயாக.(7) கானகத்தில் வாழும்போது, எனது மகன் சகாதேவனைக் கவனித்துக் கொள்வாயாக. அவனது {சகாதேவனது} மனம் இந்த பேரிடரில் மூழ்கிப்போகாமல் பார்த்துக் கொள்வாயாக” என்றாள்.(8) 

திரௌபதி, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, கண்ணீரால் நனைந்து, ஒற்றையாடையில் குருதிக்கறையுடன், மயிர்க் கலைந்தவளாக தனது மாமியாரை விட்டு சென்றாள்.(9) அழுது ஒப்பாரி வைத்து சென்ற அவளை {திரௌபதியை} பிருதை {குந்தி} துயரத்துடன் பின்தொடர்ந்தாள். அவள் {குந்தி} அப்படி வெகுதூரம் சென்றிருக்கமாட்டாள், அதற்குள் அவள் {குந்தி} ஆபரணங்களாலும் ஆடைகளாலும் பிரகாசிக்கும் தனது மகன்கள் மான் தோலை உடுத்தி, அவமானத்தால் தலையைத் தொங்கப் போட்டு வருவதைக் கண்டாள். அவர்களைச் சுற்றி எதிரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும், நண்பர்கள் பரிதாபகரமாக நிற்பதையும் கண்டாள்.(10,11) தாயுணர்ச்சி மேலிட்டதன் காரணமாக, குந்தி அந்த நிலையில் இருந்த தனது மகன்கள் அனைவரையும் ஆரத்தழுவி துயரத்தால் தடைபட்ட சொற்களுடன் இப்படிச் சொன்னாள்.(12)

அவள் {குந்தி}, “அறம் சார்ந்த நல்லொழுக்கத்துடன், அனைத்து அற்புதமான குணங்களும், மரியாதைக்குரிய நடத்தையும் கொண்டவர்கள் நீங்கள். நீங்கள் அனைவரும் உயர்ந்த மனம் படைத்தவர்கள்.(13,) எப்போதும் பெரியவர்களின் பணிவிடைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். தேவர்களுக்கும் வேள்விகளுக்கும் அர்ப்பணிப்புடன் இருந்த உங்களை இந்தப் பேரிடர் எப்படி ஆட்கொண்டது? இந்தப் பேறு மாறுவது எப்போது? யாருடைய தீமையால் இந்தப் பாவம் உங்களை ஆட்கொண்டது என்பது எனக்குத் தெரியவில்லை.(14) ஐயோ நானே உங்களை ஈன்றவள். என்னுடைய கெட்ட காலத்தால் தான் உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கிறது. இதனால் தான் அற்புதமான அறங்களைக் கொண்ட உங்களுக்கு இந்தப் பேரிடர் நேர்ந்தது.(15) சக்தியால், ஆற்றலால், பலத்தால், உறுதியால், பராக்கிரமத்தால் நீங்கள் குறைந்தவர்களல்லர். சொத்துகளையும் உடைமைகளையும் இழந்து, பாதைகளற்ற கானகத்தில் எப்படி ஏழ்மையில் வாழப்போகிறீர்கள்?(16)

கானக வாழ்க்கைதான் உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்திருந்தால், {எனது கணவர்} பாண்டு இறந்த போது, சதசிருங்க மலையில் இருந்து ஹஸ்தினாபுரத்திருக்கு வந்திருக்கவே மாட்டேன்.(17) உங்கள் தந்தை {பாண்டு} நற்பேறு பெற்றவர், அவர் வருநலம் தெரிந்தவராக {தீர்க்க தரிசனுத்துடன்} தனது தவ வாழ்க்கையின் கனிகளை {பலன்களை} அனுபவித்து, விருப்பம் நிறைவேறி, மகன்களைப் பற்றி எந்தத் துன்பமும் இல்லாமல் சொர்க்கத்திற்கு உயர்ந்தார்.(18) அறம் சார்ந்த மாத்ரியும் நற்பேறு பெற்றவளே, அவள் {மாத்ரியும்} பின்னால் நடக்கப் போவதை அறிந்தே உயர்ந்த பாதையை அடைந்து, அனைத்து அருளையும் பெற்றாள்.(19) மாத்ரி என்னை அவளது வசிப்பிடமாகவும், தனது மனமாகவும் நினைத்து, அவளது அன்பை என்னில் நிலைக்கச் செய்தாள். ஓ.. சீ… சீ… எனக்கு உயிரின் மேலிருந்த ஆசையினால் அல்லவா இன்று துயரத்தை அனுபவிக்கிறேன்?(20) குழந்தைகளே, நீங்கள் எனக்கு அற்புதமானவர்கள், அன்பானவர்கள். உங்களை நான் பெரும் சிரமத்திற்கிடையில் பெற்றேன். என்னால் உங்களை விட முடியாது. நானும் உங்களுடன் வருகிறேன். ஐயோ, ஓ கிருஷ்ணையே {திரௌபதி} என்னை ஏன் விட்டுச் செல்கிறாய்?(21) உயிருடன் கூடிய அனைத்தும் நிச்சயம் அழியும். தத்தா {பிரம்மா} எனது இறப்பை விதிக்க மறந்துவிட்டாரா? அப்படித்தான் இருக்கும். அதனால் தான் எனது உயிர் போகாமல் இன்னும் இருக்கிறது.(22)

ஓ கிருஷ்ணா {கிருஷ்ணன்}, துவாரகையில் இருப்பவனே, சங்கர்ஷணனின் {பலராமனின்} தம்பியே, நீ எங்கிருக்கிறாய்? இந்தத் துயரத்திலிருந்து என்னையும் இந்த மனிதர்களில் சிறந்தவர்களையும் ஏன் விடுவிக்காமல் இருக்கிறாய்?(23) ஆதியும் அந்தமும் இல்லாத நீ, உன்னை நினைப்பவர்களை விடுவிப்பாய் என்று சொல்கிறார்களே. அஃது ஏன் இப்போது பொய்யானது?(24) எனது மகன்களான இவர்கள், எப்போதும் அறத்துடன் இணைந்து, உயர்ந்தவர்களாக, நல்ல புகழும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த துயரம் தகாது. அவர்களுக்கு கருணை காட்டுவாயாக.(25)

அறநெறிகளையும், உலகளாவிய நடைமுறைகளையும் அறிந்த பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகிய மூத்தவர்கள் இருக்கும்போது இந்த பேரிடர் எப்படி வந்தது?(26) ஓ பாண்டுவே, ஓ மன்னா, நீர் எங்கே இருக்கிறீர்? உமது பிள்ளைகள் பகடையில் வீழ்த்தப்பட்டு, நாடு கடத்தப்படும்போது நீர் அமைதியாக இருப்பதேன்?(27) ஓ சகாதேவா, போகாதே. நீயே எனக்கு அன்பான மகன், ஓ மாத்ரியின் மகனே, நீ எனக்கு எனது உடலைவிட அன்பானவன். என்னைக் கைவிடாதே. என்னிடம் கருணை காட்டுவாயாக.(28) அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்டவர்களாக உனது சகோதரர்கள் செல்லட்டும். ஆனால், நீ என்னிடம் இருந்து, எனக்காகக் காத்திருப்பதால் {என்னைப் பார்த்துக் கொள்வதால்} கிட்டும் அறத்தைப் பெற்றுக் கொள்வாயாக” என்றாள்”.(29)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டவர்கள், அழுது கொண்டிருந்த தங்கள் தாயை {குந்தியைச்} சமாதானப்படுத்திவிட்டு, இதயம் நிறைந்த துயரத்துடன் கானகம் சென்றனர்.(30) துயரத்தில் இருந்த விதுரனும், துயரத்தில் இருந்த குந்தியிடம் பல காரணங்களைச் சொல்லி சமாதானப் படுத்தி, அவளை மெதுவாகத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.(31) திருதராஷ்டிரன் வீட்டுப் பெண்மணிகள், பாண்டவர்களின் நாடு கடத்தலையும், சபைக்கு கிருஷ்ணை {திரௌபதி} இழுத்துவரப்பட்டதையும் கேள்விப்பட்டு, கௌரவர்களை நிந்தித்துப் பேரொலியுடன் அழுதனர்.(32) அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளும் நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்து, தாமரை போன்ற தங்கள் முகங்களை தங்கள் அழகான கரங்களால் மூடிக் கொண்டனர்.(33) 

தனது மகன்களுக்கு வர இருக்கும் ஆபத்தை எண்ணிய மன்னன் திருதராஷ்டிரனும் துயரத்துக்கு இரையாகி, மனம் அமைதியில்லாமல் இருந்தான்.(34) ஒவ்வொன்றையும் கவனமாகத் தியானித்து, துயரத்தால் மன அமைதி இழந்தவனாக, ஒரு தூதரை விதுரனிடம் அனுப்பி, “ஒரு நொடியும் தாமதிக்காமல் க்ஷத்தன் {விதுரன்} இங்கே வரட்டும்” என்று சொன்னான்.(35) 

இந்த அழைப்பின் பேரில் திருதராஷ்டிரனின் அரண்மனைக்கு விதுரன் விரைவாக வந்தான். அவன் {விதுரன்} வந்ததும், அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} அவனிடம் பெரும் கவலையுடன், பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டு எவ்வாறு சென்றார்கள் என்பதை விசாரித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(36)

துரோணர் பயந்தாரா? – சபாபர்வம் பகுதி 79-(அனுத்யூத பர்வம் – 07)-விதுரன் பாண்டவர்கள் எப்படிச் சென்றார்கள் என்பதை திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; தொடர்ந்து கெட்டசகுனங்கள் தோன்றுவது; நாரதர் தோன்றி பதினான்காம் வருடம் கௌரவர்கள் அழிவார்கள் என்று எச்சரிப்பது; துரியோதனன், கர்ணன், மற்றும் சகுனி ஆகியோர் துரோணரிடம் தஞ்சம் புகுவது; துரோணர் தன்னால் இயன்றவரை காப்பதாக உறுதியளிப்பது; திருதராஷ்டிரன் விதுரனிடம் மறுபடியும் பாண்டவர்களை அழைத்துவரும்படி சொல்வது…

வைசம்பாயனர் சொன்னார், “பெரும் முன்னறியும் திறன் கொண்ட விதுரன் வந்தவுடன், அம்பிகையின் மகன் மன்னன் திருதராஷ்டிரன் தனது தம்பியிடம் {விதுரனிடம்},(1) “தர்மனின் மகன் யுதிஷ்டிரன் எப்படிச் சென்றான்? அர்ஜுனன் எப்படிச் சென்றான்? மாத்ரியின்மகன்களான அந்த இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} எப்படிச் சென்றனர்?(2) ஓ க்ஷத்தா {விதுரா} தௌமியர் எப்படிச் சென்றார்? சிறப்பு வாய்ந்த திரௌபதி எப்படிச் சென்றாள்? நான் அனைத்தையும் கேட்க விரும்புகிறேன். ஓ க்ஷத்தா, அவர்களது செயல்களை எனக்கு விளக்கிச் சொல்வாயாக” என்றான்.(3)

விதுரன், “குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது முகத்தைத் துணியால் மூடிச் சென்றான். பீமன், தனது பெரும் கரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றான்.(4) ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மன்னனைப் பின்தொடர்ந்து சென்று, சுற்றிலும் மண்ணை வீசிச் சென்றான். மாத்ரியின் மகனான சகாதேவன், தன் மேனியில் வண்ணம் பூசிச் சென்றான்.(5) ஓ மன்னா {திருதராஷ்டிரரே} மனிதர்களில் அழகனான நகுலன் தன் மேனியில் அழுக்கைப் பூசிக் கொண்டு பெரும் துயரத்துடன் சென்றான்.(6) பெரிய கண்களை உடைய அழகான திரௌபதி, கலைந்திருந்த தனது முடியால் தனது முகத்தை மூடிக்கொண்டு கண்ணீருடன் அழுதுகொண்டே சென்றாள்.(7) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தௌமியர் தமது கையில் குசப் புல்லை வைத்துக் கொண்டு யமனைக் குறிப்பதும், அச்சமூட்டுவதுமான சாம வேத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே சாலை வழியில் சென்றார்” என்றான்.(8) 

திருதராஷ்டிரன், “ஓ விதுரா, பாண்டுவர்கள் ஏன் இத்தகைய மாறுபட்ட வேடங்களில் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றனர்?” என்று கேட்டான்.(9)

விதுரன், “உமது மகன்களால் துன்புறுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து நாடும், செல்வமும் திருடப்பட்டு இருந்தாலும், ஞானமும் நீதியும் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் மனம் அறத்தின் பாதையில் இருந்து வழுவவில்லை.(10) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரன் எப்போதும் உனது பிள்ளைகளிடம் அன்புடனேயே இருக்கிறான். நியாயமற்ற முறையில் அனைத்தையும் இழந்தாலும், அவன் {யுதிஷ்டிரன்} பெரும் கோபம் கொண்டிருந்தாலும்,(11) “எனது கோபப் பார்வையால் மக்களைப் பார்த்து அவர்களை எரித்துவிடக் கூடாது” என்று கண்களைத் திறக்காமல் செல்கிறான். அதனாலே அவன் {யுதிஷ்டிரன்} முகத்தை மூடிச் செல்கிறான்.(12)

ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீமன் ஏன் அப்படிச் செல்கிறான் என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக. “எனது கரங்களின் பலத்திற்கு நிகரானவர் யாருமில்லை” என்று நினைத்துக் கொண்டு தனது பெரும் கரங்களை அடிக்கடி விரித்துப் பார்த்துக் கொண்டே செல்கிறான். ஓ மன்னா, தனது கரத்தின் வலிமையில் கர்வம் கொண்ட விருகோதரன் {பீமன்}, அந்தக் கரங்களைக் கொண்டு எதிரிகளின் செயல்களுக்காக அவர்களை அவன் {பீமன்} என்ன செய்யப் போகிறான் என்பதைக் காட்டிக் கொண்டு செல்கிறான்.(13,14)

இரண்டு கரங்களையும் (காண்டீபத்தைத் தாங்கிப்} பயன்படுத்தவல்ல குந்தியின் மகனான அர்ஜுனன் யுதிஷ்டிரனின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி சென்று, மணல் துகள்களை தூவி, போர்களத்தில் தனது கணைகளின் மழையைக் குறிப்பால் உணர்த்துகிறான். ஓ பாரதா, மணற்துகளை எப்படி எளிதாக அவனால் வீச முடிகிறதோ அப்படித் தனது அம்புகளின் மழையை (போர்க்களத்தில்) எளிதாக எதிரிகள் மீது பொழிவேன் என்று குறிப்பிட்டுச் செல்கிறான்.(15,16)

சகாதேவன் தனது முகத்தில் வண்ணம் பூசி, “இந்த துயர் நிறைந்த நாளில் என்னை யாரும் அறிந்து கொள்ள வேண்டாம்” என்று நினைத்துக் கொண்டு செல்கிறான். ஓ மேன்மையானவரே, நகுலன் தனது மேனியை புழுதியால் கறைபடுத்தி, “இப்படிச் செய்யவில்லை என்றால், என்னைப் பார்க்கும் பெண்களின் இதயங்களைக் கொள்ளையிடுவேன்” என்று நினைத்துக் கொண்டு செல்கிறான்.(17,18)

கேசம் கலைந்து, கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தியிருக்கும் திரௌபதி, அழுது கொண்டே,(19) “என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் மனைவிமார், இன்றிலிருந்து பதினான்காவது ஆண்டு, தங்கள் மாதவிலக்கு காலத்தில், தங்கள் கணவர்களையும், மகன்களையும், உறவினர்களையும், அன்பானவர்களையும் இழந்து, இரத்தம் படிந்து, தலை முடி கலைந்து உடலெல்லாம் புழுதி படிந்து, (தாங்கள் இழந்தவர்களின் ஆன்மாவுக்கு) நீரால் தர்ப்பணம் செய்த பிறகு ஹஸ்தினாபுரத்துக்குள் நுழைய வேண்டும்” என்று குறிப்பால் உணர்த்தி செல்கிறாள்.(20,21)

ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உணர்ச்சிகளைத் தமது கட்டுக்குள் வைத்திருக்கும் கற்ற தௌமியர், தனது கையில் தெற்மேற்கு நோக்கிய குசப்புல்லை {தென்மேற்கு மூலையில் இருந்து தர்ப்பைப் புல்களை அறுத்து} கொண்டு, முன்னணியில் நடந்து, யமனைக் குறிக்கும் சாம வேத மந்திரங்களை உரைத்துச் செல்கிறார்.(22) ஓ ஏகாதிபதி, கல்விமானான அந்தப் பிராமணரும், “போர்க்களத்தில் பாரதர்கள் கொல்லப்படும் போது, குருக்களின் புரோகிதர்கள் இப்படியே (இறந்தவர்களின் நன்மைக்கான} சோம மந்திரங்களைப் பாடிச் செல்வர்’ என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.(23)

பெரும் துயரத்தில் இருந்த குடிமக்கள் அனைவரும், “ஐயோ, ஐயோ, எங்கள் தலைவர்கள் செல்கிறார்களே. ச்சீ… ச்சீ… பேராசை கொண்ட குருகுலப் பெரியவர்கள் சிறுபிள்ளைகள் போல் நடந்து கொண்டு பாண்டுவின் வாரிசைகளை ஒதுக்கினரே.(24) ஐயோ, பாண்டுவின் மகனிடம் இருந்து பிரிக்கப்பட்ட நாங்கள், தலைவன் இல்லாமல் இருப்போமே.(25) தீயவர்களும், பேராசை கொண்டவர்களுமான குருக்களிடம் நாங்கள் எப்படி அன்புடன் இருக்க முடியும்?” என்றனர்.(26)

ஓ மன்னா இப்படியே பெரும் மனோ சக்தி கொண்ட குந்தியின் மகன்கள், தங்கள் இதயத்தில் இருந்த தீர்மானங்களைக் குறிப்புகளாலும், நடத்தையாலும் குறிப்பிடும் வகையில் சென்றனர்.(27) 

அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றதும், வானத்தில் மேகமில்லாது இருந்த போதே மின்னல் வெட்டியது, பூமி நடுங்கத் தொடங்கியது.(28) அமாவாசை இல்லாத போதே சூரியனை ராகு விழுங்க வந்தான். நகரத்தை வலப்புறம் கொண்டு {இடப்புறமாக} எரிகற்கள் விழுந்தன. {ஊரை அபஸவ்யமாகச் சுற்றி எரிகொள்ளி விழுந்தது}.(29) நரிகளும், கழுகுகளும், கருங்காக்கைகளும், இறைச்சி உண்ணும் வேறு விலங்குகளும் பறவைகளும், தேவர்களின் கோவில்களில் இருந்தும், புனிதமான மரங்களின் உச்சியிலிருந்தும், சுவர்கள் மற்றும் வீடுகளின் மேலிருந்தும் உரக்கக் கதறத் தொடங்கின.(30) ஓ மன்னா, உமது தீய ஆலோசனைகளின் விளைவால் இந்த இயல்புக்கு மிக்க பேரிடர் அறிகுறிகள், பாரதர்களின் அழிவைக் குறிக்கும்படி காணப்படவும் கேட்கப்படவும் செய்தன” என்றான் {விதுரன்}”.(31)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இப்படி மன்னன் திருதராஷ்டிரனும், ஞானமுள்ள விதுரனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்த போது,(32) அந்த கௌரவர்கள் சபையில், அனைவரின் கண்களுக்கும் முன்னால், தேவலோக முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்} தோன்றினார். அவர்கள் அனைவருக்கும் முன்னால் தோன்றிய அவர் {நாரதர்}, பயங்கரமான வார்த்தைகளால்,(33) “துரியோதனனின் பிழையின் காரணமாக, இன்றிலிருந்து பதினான்காவது வருடம், பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள்” என்று சொன்னார்.(34) வேத அருளைத் தன்னகத்தே கொண்டிருந்த அந்த முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்}, இப்படிச் சொல்லிவிட்டு, வானத்தில் கடந்து சென்று, காட்சியில் இருந்து மறைந்தார்.(35)

பிறகு, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் சகுனி ஆகியோர் துரோணரைத் தங்கள் ஒரே தஞ்சமாகக் கருதி, நாட்டை அவரிடம் {துரோணரிடம்} ஒப்படைத்தனர்.(36) 

அப்போது துரோணர், பகைமையும் கோபமும் கொண்ட துரியோதனன், துச்சாசனன், கர்ணன் ஆகியோரிடமும், அனைத்து பாரதர்களிடமும்,(37) “பாண்டவர்கள் தெய்வீகத் தோற்றம் கொண்டவர்கள் என்றும், அவர்கள் கொல்லப்பட முடியாதவர்கள் என்று பிராமணர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் திருதராஷ்டிரனின் மகன்கள், அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து, மரியாதையுடன் இதயப்பூர்வமாக என்னிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். என்னால் முடிந்ததில் சிறந்ததை செய்து, நான் அவர்களைப் பார்த்துக் கொள்வேன். ஆனால் விதி வலியது, அஃதை என்னால் மீற முடியாது.(38,39)  பகடையில் தோற்ற பாண்டுவின் மகன்கள், தாங்கள் ஏற்ற உறுதிமொழிக்கு ஏற்றவாறு நாடு கடந்து செல்கிறார்கள். அவர்கள் கானகத்தில் பனிரெண்டு வருடங்கள் வாழ்வார்கள்.(40) இந்தக் காலத்தில் அவர்கள் அங்கே பிரம்மச்சரிய வாழ்வுமுறையைக் கைக்கொண்டு, பெரும் துயரத்துடனும் கோபத்துடனும் திரும்பித் தங்கள் எதிரிகளை வஞ்சம் தீர்க்கப் போகின்றனர்.(41) 

முன்பு நடந்த ஒரு நட்பு ரீதியான போரில் நான் துருபதனை நாட்டை இழக்கச் செய்தேன். ஓ பாரதா {துரியோதனா}, என்னால் அவனது நாடு கவரப்பட்டதால், அவன் ஒரு வேள்வி செய்து, {என்னைக் கொல்வதற்காக} ஒரு மகனைப் பெற்றான்.(42) யாஜர் மற்றும் உபயாஜரின் தவ வலிமையில், துருபதனின் {வேள்வி} நெருப்பிலிருந்து திருஷ்டத்யும்னன் என்ற பெயர் கொண்ட மகனையும், களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி} என்ற மகளையும் பெற்றான். அவர்கள் இருவரும் வேள்வி மேடையில் எழுந்தவர்கள் ஆவர்.(43) பாண்டுவின் மகன்களுக்கு நடந்த திருமணத்தால் அந்தத் திருஷ்டத்யும்னன் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} மைத்துனனாகி, அவர்களிடம் அன்புடன் இருக்கிறான். எனவே, அவனைக் {திருஷ்டத்யும்னன்} குறித்தே நான் அஞ்சுகிறேன்.(44) தெய்வீகப் பிறப்பு பிறந்து, நெருப்பு போல பிரகாசிக்கும் அவன் {திருஷ்டத்யும்னன்} பிறக்கும்போதே வில், அம்பு மற்றும் கவசத்துடன் பிறந்தான். நானோ இறக்கக்கூடிய மனிதனாவேன். எனவே, அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} நான் பேரச்சம் கொண்டிருக்கிறேன்.(45) அந்த எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பிருஷதனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, பாண்டவர்கள் பக்கம் இருக்கிறான்.(46) நானும் அவனும் {திருஷ்டத்யும்னனும்} நேரடியாகப் போர்க்களத்தில் மோதும் நிலை வந்தால், நான் எனது உயிரை இழக்க நேரிடும். கௌரவர்களே, திருஷ்டத்யும்னன் தான் துரோணரைக் கொல்வான் என்ற பொது நம்பிக்கை இருக்கும் போது, இதை விட எனக்கு பெரிய துன்பம் வேறு என்ன இருக்க முடியும்? அவன் {திருஷ்டத்யும்னன்} என்னைக் கொல்லவே பிறந்திருக்கிறான் என்று நான் கேள்விப்படுகிறேன். இதுவே உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கிறது.(47,48) 

ஓ துரியோதனா, உன்னால் அந்தக் கொடுமையான அழிவுக்காலம் நெருங்கி வந்துவிட்டது. உனக்கு நன்மை பயக்கும் செயல்களை நேரம் கடத்தாமல் செய்வாயாக.(49) பாண்டவர்களை நாடு கடத்திவிட்டதால், அனைத்தையும் சாதித்து விட்டதாக நினைத்துக் கொள்ளாதே. நீ கொள்ளும் இந்த மகிழ்ச்சி, பனிக்காலத்தில் பனை மரத்தின் அடியில் (குறுகிய காலம்) ஓய்வெடுப்பதைப் போலத்தான் நீடித்திருக்கும். ஓ பாரதா {துரியோதனா} பல்வேறு வேள்விகளைச் செய்து மகிழ்ந்து, நீ விரும்பும் அனைத்தையும் கொடையளிப்பாயாக.(50) இன்றிலிருந்து பதினான்காவது வருடம் பேரிடர் உன்னை மூழ்கடிக்கும்” என்றார் {துரோணர்}”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “துரோணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன்,(51) “ஓ க்ஷத்தா {விதுரா}, ஆசான் உண்மையைச் சொல்கிறார். நீ சென்று பாண்டவர்களை அழைத்து வருவாயாக. அவர்கள் திரும்பி வர வில்லை என்றால், அவர்கள் அன்புடனும், மதிப்புடனும் செல்லட்டும். என் மகன்களான அவர்கள் {பாண்டவர்கள்} ஆயுதங்களுடனும், தேர்களுடனும், காலாட் படையுடனும் சென்று, நல்ல பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கட்டும்” என்றான் {திருதராஷ்டிரன்}.(52)

அந்தணர்கள் செய்த வேலைநிறுத்தம் – சபாபர்வம் பகுதி 80-அனுத்யூத பர்வம் – 08)-பாண்டவர்கள் சென்ற பிறகு துயரத்தில் இருக்கும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் வருவது; திருதராஷ்டிரன் பாண்டவர்கள் குறித்த அச்சத்தை சஞ்சயனிடம் தெரிவிப்பது; சஞ்சயன் அனைத்துக்கும் காரணம் உமது மகனே என்று சொல்லுவது; சில காரியங்களை விதுரன் சொன்னதாக திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது…

வைசம்பாயனர் சொன்னார், “பகடையில் தோற்று பாண்டவர்கள் வனம் சென்ற பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் பெருந்துயரத்தில் மூழ்கினான்.(1) அவன் அமைதியற்றவனாகக் கவலையுடன் அமர்ந்து, துயரத்தால் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அப்போது சஞ்சயன் அவனை {திருதராஷ்டிரனை} அணுகி,(2) “ஓ பூமியின் தலைவா, பூமி முழுவதையும், அதன் செல்வங்களையும் அடைந்து விட்டீர்; பாண்டவர்களையும் நாடு கடத்திவிட்டீர்; இன்னும் ஏன் துயரத்தில் இருக்கிறீர்?” என்று கேட்டான்.

திருதராஷ்டிரன், “கூட்டணிப் படைகளின் துணையுடன், பெரும் தேர்களைச் செலுத்திப் போர் புரியும் வீரர்களில் காளைகளான பாண்டுவின் மகன்களைப் போரில் சந்திக்க வேண்டிய ஒருவன் எப்படி துக்கப்படாமல் இருக்க முடியும்?” என்று கேட்டான்.(4)

சஞ்சயன், “ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உமது தவறான செயலாலேயே இந்தப் பெரும் பகைமை தவிர்க்கப்பட முடியாததாகிவிட்டது. இது நிச்சயம் மொத்த உலகிற்கும் அழிவைக் கொண்டு வரும்.(5) பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரால் தடுக்கப்பட்டும், தீய மனம் கொண்டவனும், வெட்கங்கெட்டவனுமான உமது மகன் துரியோதனன், தனது சூதத் தூதுவனிடம் {பிராதிகாமினிடம்}, பாண்டவர்களின் அன்புக்குரியவளும், அறம்சார்ந்தவளுமான அவர்களுடைய மனைவியை {திரௌபதியை} சபைக்கு அழைத்து வரக் கட்டளையிட்டான்.(6,7) தேவர்கள், தோல்வியையும், அவமானத்தையும் யாருக்கு கொடுக்கப் போகிறார்களோ, அவர்களுக்கு முதலில் மதிமயக்கத்தை {தேவர்கள்} ஏற்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் அப்படிப்பட்ட மனிதன் அனைத்தையும் வித்தியாசமாகப் பார்க்கிறான்.(8)  

அழிவு அருகில் இருக்கும் போது, தீமையையும், அடக்கமின்மையையும், நேர்மையின்மையையுமே அவன் விரும்புவான். அழிவு நேரப்போகும் மனிதனுக்கு முறையற்றவை முறையானவையாகவும், முறையானவை முறையற்றவையாகவும் தோன்றும். அதையே அவன் எப்போதும் விரும்பவும் செய்வான்.(9,10) அழிவைக் கொண்டு வரும் காலம் கைகளில் தண்டத்தைக் கொண்டு வந்து தலையில் அடிப்பதில்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட காலத்தில், அந்த மனிதன் தீமையை நன்மையாகவும், நன்மையைத் தீமையாகவும் காணும்படி செய்யும்.(11) அந்தப் பாவிகள், ஆதரவற்ற பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} சபையின் நடுவே இழுத்து வந்ததால் பயங்கரமான கொடூரமான அழிவை மொத்தமாகப் பெற்றுக் கொண்டனர்.(12) 

பெண்ணின் கருவில் பிறக்காமல் புனித நெருப்பில் பிறந்து, கடமையையும், அனைத்து அறநெறிகளையும் அறிந்து, அழகும் புத்திசாலித்தனமும் கொண்ட துருபதன் மகளை {திரௌபதியை}, போலிப் பகடையாட்டம் {பொய்யாட்டம்} ஆடும் துரியோதனனைத் தவிர வேறு யாரால் இப்படி சபைக்குக் கொண்டு வந்து அவமதிக்க முடியும்? கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தி மாதவிலக்காக இருந்த அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி},(13,14) சபைக்குக் கொண்டு வரப்பட்ட போது, பாண்டவர்களின் மேல் பார்வையைச் செலுத்தினாள். செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு, நாடு பிடுங்கப்பட்டு, ஆடைகளும் களைந்து, அழகிழந்து, அனைத்து மகிழ்ச்சியையும் தொலைத்து, அடிமை நிலையில் இருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்டாள் {திரௌபதி}. அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்ட அவர்கள் தங்கள் ஆற்றலைக்காட்ட இயலாமல் இருந்தனர்.(15,16) அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனும், கர்ணனும் கொடுமையானவையும், கடுமையானவையுமான வார்த்தைகளை, அப்படி நடத்தப்படத் தகாதவளான கோபம் கொண்ட கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} பேசினர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் அச்சமூட்டும் தீமையின் முன் அறிகுறி என எனக்குப் படுகிறது” என்றான்.(17)

திருதராஷ்டிரன், “ஓ சஞ்சயா, துயரத்தில் இருக்கும் துருபதன் மகளின் பார்வையே முழு உலகத்தையும் எரித்துவிடும். அப்படியிருக்கும் போது, என் மகன் ஒருவனாவது உயிருடன் இருக்கும் வாய்ப்பிருக்கிறதா?(18) பாண்டவர்களால் மணக்கப்பட்ட மனைவியும், அழகும் இளமையும் கூடியவளும், அறம்சார்ந்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} சபையில் இழுத்து வரப்பட்ட போது, பாரதர்களின் {துரியோதனாதிபதிகளின்} மனைவிகள் காந்தாரியுடன் கூடி பயத்தால் ஓலமிட்டு அழுதனர். குடிமக்கள் அனைவருடன் சேர்ந்து இப்போது கூட அவர்கள் தினமும் அழுது கொண்டுதான் இருக்கின்றனர்.(19) திரௌபதி இப்படி அவமதிக்கப்பட்ட கோபத்தால் பிராமணர்கள் அன்று மாலை செய்ய வேண்டிய அக்னிஹோத்திரச் சடங்கைச் செய்யவில்லை.(20) 

பிரளய காலத்தில் நடப்பது போலக் காற்று கடும்பலத்துடன் வீசியது. அங்கே கடும் இடியுடன் கூடிய புயலும் ஏற்பட்டது. எரிகற்கள் விண்ணிலிருந்து விழுந்தன. காலமற்ற காலத்தில் சூரியனை ராகு விழுங்கி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தினான். நமது போர் தேர்கள் திடீரென எரிந்தன.(21-23) அவற்றின் கொடிக் கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. இவை அனைத்தும் பாரதர்களுக்கு நேரப்போகும் தீங்கினைப் பகன்றன. துரியோதனனின் வேள்வி அறையில் இருந்து நரிகள் ஊளையிட்டன.(24) அனைத்துப் புறத்திலிருந்தும் கழுதைகள் பதிலுக்கு கத்த தொடங்கின. பிறகு, பீஷ்மர், துரோணர், கிருபர், சோமதத்தன், உயர் ஆன்ம பாஹ்லீகர் ஆகியோர் சபையை விட்டுச் சென்றனர். 

இதன்பிறகுதான் நான் விதுரனின் ஆலோசனையின் பேரில், கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்},(25,26) “ஓ கிருஷ்ணையே, நான் உனக்கு வரங்களை வழங்குகிறேன். நீ என்ன விரும்புகிறாயோ அதை நிச்சயம் கொடுக்கிறேன்” என்றேன். பாஞ்சால இளவரசி பாண்டவர்களின் விடுதலையைக் கோரினாள்.(27) எனது சுய விருப்பத்தின் பேரில், நான் பாண்டவர்களை விடுவித்து, அவர்களை {பாண்டவர்களை} அவர்களது தேர்கள் விற்கள் மற்றும் அம்புகளுடன் {அவர்களது தலைநகருக்கு – காண்டவப்பிரஸ்தத்திற்கு /  இந்திரப்பிரஸ்தத்திற்குத்} திரும்பிச் செல்ல ஆணையிட்டேன்.(28)

அதன் பிறகு தான் விதுரன் “சபைக்குள் கிருஷ்ணையை இழுத்து வந்த காரியம் நிச்சயம் பாரத குலத்தை அழிவடையச் செய்யும். பாஞ்சால மன்னனின் மகளான இவள் {திரௌபதி} களங்கமற்ற ஸ்ரீ ஆவாள்.(29) தெய்வீகப் பிறவியான இவள் {திரௌபதி} பாண்டவர்கள் மணந்த மனைவியாக இருக்கிறாள். இவளுக்கு நேர்ந்த அவமதிப்பைப் பாண்டுவின் கோபக்கார மகன்கள் மன்னிக்க மாட்டார்கள்.(30) விருஷ்ணி குல வில்லாளிகளும் மன்னிக்க மாட்டார்கள். பெரும் பலம் வாய்ந்த வீரர்களான பாஞ்சாலர்களும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ள மாட்டர்கள். தடுக்க முடியாத ஆற்றலைக் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} துணை கொண்டு,(31) நிச்சயம் அர்ஜுனன் பாஞ்சாலப் படையுடன் திரும்பி வருவான். பெரும் பலம் வாய்ந்த பீமசேனனும் தனது கதாயுதத்தை யமனைப் போலச் சுழற்றிக் கொண்டு வருவான். பீமனுடைய கதாயுதத்தின் பலத்தை இந்த மன்னர்களால் தாங்க முடியாது. எனவே, ஓ மன்னா, பாண்டவர்களிடம் பகைமையில்லாமல் எப்போதும் அமைதியும் சமாதானமுமாக இருப்பதே சிறந்ததாகப் படுகிறது.(32-34) பாண்டுவின் மகன்கள் எப்போதுமே குருக்களைவிட {கௌரவர்களைவிட} பலசாலிகள்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, சிறப்பும் பெரும் பலமும் வாய்ந்த மன்னன் ஜராசந்தனைப்(35) பீமன் தனது வெறும் கைகளாலேயே கொன்றான் என்பதை நீர் அறிவீர். எனவே, ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோடு சமாதானம் செய்து கொள்வதே உமக்குத் தகும்.(36) எந்த விதமான மனவுறுத்தலுமின்றி, ஓ மன்னா, இருதரப்பையும் ஒற்றுமையடையச் செய்வீராக. ஒ மன்னா, நீர் இந்த வழியில் நடந்து கொண்டால், நிச்சயம் நற்பேற்றைப் பெறுவீர்.” என்றான் {விதுரன்}.(37) 

{திருதராஷ்டிரன் தொடர்ந்தான்} ஓ கவல்கனனின் மகனே {சஞ்சயா}, விதுரன், அறமும் பொருளும் சார்ந்த இவ்வாறான வார்த்தைகளில் என்னிடம் பேசினான். எனது மகன் மீது நான் கொண்ட பாசத்தினால், நான் அவனது {விதுரனது} ஆலோசனையை ஏற்கவில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}” {என்றார் வைசம்பாயனர்}.(38)

************ சபா பர்வம் முற்றும் ************
———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading