ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ சபா பர்வம்-ஸ்ரீ  ராஜசூய ஆரம்ப பர்வம்–

கிருஷ்ணன், “ஓ மாமன்னா, ராஜசூய வேள்வி செய்வதற்கான அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் நீர் கொண்டிருக்கிறீர். நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர், ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, இருப்பினும், நான் உமக்குச் சிலவற்றைச் சொல்கிறேன்.(1) இன்றைய உலகில் இருக்கும் க்ஷத்திரியர்கள் எல்லாம், முன்பு ஜமதக்னியின் மகன் ராமரால் {பரசுராமனால்} கொல்லப்பட்ட க்ஷத்திரியர்களைவிட (அனைத்திலும்) தாழ்ந்தவர்களே.(2) ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, ஓ பாரதக் குலத்தின் காளையே, க்ஷத்திரியர்கள் தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாகத் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு, விதிகளைத் தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர் என்பதையும், ராஜசூய வேள்வி செய்ய அவர்களுக்கு எவ்வளவு தகுதி இருக்கிறது என்பதையும் நீர் அறிவீர்.(3) பல்வேறு அரச பரம்பரைகளும், மற்ற சாதாரண க்ஷத்திரியர்களும், ஐலா மற்றும் இக்ஷவாகுவின் வழித்தோன்றல்களாகவே இருப்பார்கள். ஓ மன்னா, ஐலனின் வழித்தோன்றல்களும், இக்ஷ்வாகு குலத்தில் வந்த மன்னர்களும், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, இன்று நூற்றுக்கணக்கான தனித்தனி நாடுகளாகிவிட்டனர் என்பதை அறிந்து கொள்ளும்.(4,5) யயாதியின் வழித்தோன்றல்களும் போஜர்களும் குலம், எண்ணிக்கை மற்றும் சிறப்புகளிலும் பெரியவர்களாக இருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இறுதியில் அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர்.(6)

அந்த ஏகாதிபதிகளின் செல்வத்தையும், வளத்தையும் அனைத்து க்ஷத்திரியர்களும் வழிபட்டு வருகின்றனர். இருப்பினும், தற்போது, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரையும் விட செல்வத்திலும், பலத்திலும் பெருகி இருக்கும் மன்னன் ஜராசந்தன், அனைத்து மன்னர்களுக்கும் தலைவனாகத் தன்னை நிறுவிக் கொண்டான்.(7,8) மேலும் பூமியின் மத்தியப் பகுதியை {மதுராவை} ஆட்சி செய்யும் அந்த ஜராசந்தன் நமக்குள் ஒற்றுமையின்மையைத் தோற்றுவிக்கிறான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மன்னர்களில் உயர்ந்தவனாக இருக்கும் அம்மன்னனின் ஆளுகையின் கீழே மொத்த அண்டமும் இருக்கிறது. எனவே, அவனே {ஜராசந்தனே} மாமன்னன் {சக்கரவர்த்தி} என்று அழைக்கப்படக்கூடிய தகுதியுடன் இருக்கிறான்.

மேலும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி படைத்த மன்னன் சிசுபாலன், அவனது {ஜராசந்தனின்} பாதுகாப்புக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு, அவனது {ஜராசந்தனது} படைகளுக்குத் தளபதியாகச் செயல்படுகிறான்.

ஓ பெரும் மன்னா, கரூஷர்களின் மன்னனும் பலம் பொருந்தியவனும், மாய சக்திகளைக் கொண்டு போரிடும் தகுதி கொண்டவனுமான மன்னன் வகன் {வக்ரன்}, ஜராசந்தனுக்காகக் {அவனுக்குச் சேவை செய்ய} காத்திருந்து, அவனது சீடனாகவே செயல்பட்டு வருகிறான்.(9-12)

மேலும் பெரும் சக்திபடைத்தவர்களும், உயர் ஆன்மாக்களுமான ஹம்சன் மற்றும் டிம்பகன் என்ற இருவர், பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தனின் நிழலில் வாழ்கிறார்கள். மேலும், தந்தவக்கிரன், கரூஷன், கரபன், மேகவாஹனன் ஆகியோரும் ஜராசந்தனுக்காகக் {அவனுக்குச் சேவை செய்ய} காத்திருக்கிறார்கள்.

உலகில் அற்புதமான ரத்தினத்தைத் தனது தலையில் தரித்திருப்பவரும், யவனர்களின் மன்னருமான பகதத்தர், உமது தந்தையின் {பாண்டுவின்} பழைய நண்பனாவார். அளவிடமுடியாத சக்தி கொண்ட அவர், முரு மற்றும் நரகனைத் தண்டித்து, வருணனைப் போல மேற்கு உலகத்தை ஆண்டு வருகிறார். அப்படிப்பட்ட பகதத்தனே ஜராசந்தனிடம் பேச்சாலும் செயலாலும் பணிந்திருக்கிறார். இருப்பினும், ஒரு தந்தைக்குத் தனது மகனிடம் இருக்கும் அன்பை உம்மிடம் கொண்டிருக்கிறார்.(13-16)

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பூமியின் மேற்கிலும், தெற்கிலும் தனது ஆட்சிக்குட்பட்ட நாடுகளைக் கொண்டிருக்கும் உமது தாய்வழி மாமன் ஒருவர் புருஜித் என்று அழைக்கப்படுகிறார். பகைவரை அழிப்பவரான அவர் குந்தி குலத்தை தழைக்க வைப்பவராவார். அவர் உன்னிடம் அன்பு கொண்டு மதிப்பு பாராட்டுபவராவார் {அவர் மட்டுமே உம் தரப்பில் இருக்கிறார்}.(17)

முன்னரே என்னால் கொல்லப்படாதவனும், தன்னைத் தானே தெய்வீகமானவன் என்று சொல்லிக் கொள்பவனும், அப்படியே பலராலும் அறியப்படுபவனும், என்னைச் சுட்டும் குறிகளை {சங்கு, சக்கரம் போன்றவை} தன் மூடத்தனத்தால் எப்போதும் தரிப்பவனும், வங்கம், புண்ட்ரம், கிராதம் ஆகிய நாடுகளுக்கு மன்னனாக இருப்பவனும், இந்தப் பூமியில் பௌண்டரகன், வாசுதேவன் என்ற பெயர்களால் அறியப்படுபவனும், சேதி நாட்டில் இருப்பவனும், பெரும் பலம் கொண்டவனுமான அந்தத் தீய பாவியும் {பௌண்டரக வாசுதேவன்} ஜராசந்தனின் பக்கம் இருக்கிறான்.(18-20)

மேலும், ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரரே}, போஜர்களின் பலம் பொருந்திய மன்னனும், இந்திரனுக்கு நண்பனும், பகை வீரர்களைக் கொல்பவனும், உலகத்தின் கால் பங்கை ஆள்பவனுமான பீஷ்மகன், தனது கல்வியால் பாண்டியர்களையும், கிருதகௌசிகர்களையும் {க்ருதகைசிகர்களையும்} வென்றவனாவான். அவனும் {பீஷ்மகனும்} மகத மன்னனுக்கு {ஜராசந்தனுக்குப்} பணியாளாக இருக்கிறான்.  அவனது சகோதரனான அக்ருதி, ஜமதக்னியின் மகன் ராமரைப் {பரசுராமனைப்} போன்று ஆற்றல்மிக்கவனாவான். அந்தப் போஜமன்னனுக்கு நாம் உறவினராக இருப்பதால், அவனுக்கு விருப்பமானதையே நாள்தோறும் நாம் செய்துவந்தாலும், அவன் நம்மை மதிப்பதில்லை. அவன் {பீஷ்மகன்} எப்போதும் நமக்குத் தீங்கையே செய்கிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அவன் தனது தரத்தையும், பலத்தையும் அறிந்து கொண்டு, ஜராசந்தனின் பார்வையின் கீழ் தன்னை நிறுவிக் கொண்டான்.(21-24)

மேலும், ஓ மேன்மையானவரே {யுதிஷ்டிரரே}, போஜர்களின் பதினெட்டு இனங்களும், ஜராசந்தன் மீது கொண்ட அச்சத்தால், மேற்கு நோக்கி ஓடினார்கள். சூரசேனர்கள், பத்திரகாரர்கள், போதர்கள், சால்வர்கள், படத்சரர்கள், சுஸ்தலர்கள், முகுட்டர்கள் {ஸுகுட்டர்கள்}, குலிந்தர்கள், குந்திகள் ஆகியோரும் அவ்வாறே ஓடினர்.(25,26) சகோதரர்களுடன் கூடிய சால்வயன குலத்தின் மன்னர்கள், தென் பாஞ்சாலர்கள், கிழக்கு கோசலர்கள் என அனைவரும் தங்கள் நாடுகளை விட்டு குந்தியின் நாடு வந்தனர்.(27) அதே போல வடக்கில் இருந்த மத்ஸ்யர்களும், ஸந்யஸ்தபாதர்களும் அச்சத்தால் தங்கள் நாடுகளை விட்டு தென் நாட்டிற்கு ஓடினர். ஜராசந்தனின் சக்திக்கு அஞ்சிய பாஞ்சாலர்களும் தங்கள் நாட்டைவிட்டு எல்லா திசைகளுக்கும் ஓடினர்.(28,29)

சில காலத்திற்கு முன்னர் மூடன் கம்சன், யாதவர்களைக் கொன்ற பிறகு, ஜராசந்தனின் இரு மகள்களைத் திருமணம் செய்திருந்தான்.(30) அவர்கள் அஸ்தி மற்றும் பிராப்தி என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சகதேவனின் சகோதரிகள் ஆவர். இப்படிப்பட்ட கூட்டணியால், அந்த மூடன் {கம்சன்} தனது உறவினர்களைக் கொன்று அவர்கள் அனைவரையும்விட உயர்ந்து நின்றான்.(31) ஆனால் அவனது நடத்தையால் தீச்சொல்லையே அவன் ஈட்டினான். மேலும் அந்தப் பாவி போஜ இனங்களின் முதிர்ந்த மன்னர்களை ஒடுக்கத் தொடங்கினான்.(32) அவர்கள் தங்களையும், தங்கள் உறவினர்களையும் காப்பாற்றிக் கொள்ள எங்கள் பாதுகாப்பினை நாடினார்கள். அவர்கள் அக்ரூரனுக்கு அஹுகனின் அழகிய மகளைக் கொடுத்தனர்.(33) நான் சங்கர்ஷணரை {பலராமரைத்} துணையாகக் கொண்டு எனது உறவினர்களுக்குத் தொண்டு செய்தேன். ராமரின் {பலராமரின்} உதவியுடன் நான் கம்சனையும், சுநாமனையும் கொன்றேன்.(34) ஆனால் {கம்சன் இறந்ததால்} உடனடி ஆபத்து அகன்றாலும், அடுத்து அவனது {கம்சனது} மாமனாரான ஜராசந்தன் ஆயுதம் ஏந்தினான்.

பிறகு, பதினெட்டு இளம் கிளைகளைக் கொண்ட யாதவர்கள் அனைவரும் கூடி,(35) எதிரியை {ஜராசந்தனை} அற்புதமான ஆயுதங்களால் முன்னூறு வருடங்களுக்குத் தாக்கினாலும், அவனுக்கு எந்தக் காயத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது என்பதை எங்களுக்குள் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம்.(36) தேவர்களைப் போன்றவர்களும், பெரும் பலம்மிக்கவர்களுமான இரு நண்பர்கள் அவனுக்கு {ஜராசந்தனுக்கு} இருந்தனர். அவர்கள் ஹம்சன் மற்றும் டிம்பகன் என்று அழைக்கப்பட்டனர். அவர்களை எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. அவர்களுடன் சேர்ந்திருப்பவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான ஜராசந்தனை வெல்ல மூவுலகங்களிலும் எவனும் கிடையாது. ஓ புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இஃது எங்கள் கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த மன்னர்களும் அப்படியே நினைத்தனர்.(37-39)

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஹம்சன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். பதினெட்டு நாள் போர் புரிந்த அவன், ராமரால் {பலராமரால்} வீழ்த்தப் பட்டான் {கொல்லப்பட்டது போல மயக்கமுற்றான்}.(40) ஆனால், ஓ பாரதா, ஓ மன்னா, ஹம்சன் கொல்லப்பட்டான் என்று மக்கள் சொல்வதைக் கேட்ட டிம்பகன், ஹம்சன் இல்லாது தன்னால் வாழ முடியாது என்று நினைத்தான். எனவே, யமுனையின் நீரில் குதித்துத் தன்னைத் தானே அவன் மாய்த்துக் கொண்டான். பிறகு பகை வீரர்களைக் கொல்பவனான ஹம்சன், டிம்பகன் தற்கொலை செய்து கொண்டான் என்பதைக் கேள்விப்பட்டு, யமுனைக்கு சென்று, அதன் நீரில் தானும் குதித்தான்.(41-43) பிறகு, ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, ஹம்சனும், டிம்பகனும் கொல்லப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட ஜராசந்தன் வெறுமையான இதயத்துடன் தனது நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்.(44) ஜராசந்தன் திரும்பியதும், ஓ எதிரிகளைக் கொல்பவரே, மகிழ்ச்சியால் நிறைந்த நாங்கள், மதுராவிலேயே தொடர்ந்து வாழத் தொடங்கினோம்.(45)

பிறகு ஹம்சனின் விதவை மனைவியும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், அழகானப் பெண், அழகானவளுமான ஜராசஸந்தனின் மகள், தனது தலைவனின் மரணத்துக்காக துக்கமடைந்து, தனது தந்தையைத் தொடர்ந்து தூண்டினாள். அவள் “ஓ எதிரிகளைக் கொல்பவரே, எனது கணவரைக் கொன்றவர்களைக் கொல்வீராக” என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள். ஓ பெரும் மன்னா, முன்பே நாங்கள் எடுத்திருந்த தீர்மானத்தை நினைவுகூர்ந்து உற்சாகமற்ற இதயத்துடன் நாங்கள் மதுராவில் இருந்து தப்பிச் சென்றோம்.(46,47) ஜராசந்தனுக்கு அஞ்சிய நாங்கள், எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, எளிதாகச் சுமந்து செல்லும் வகையில் சிறு சிறு பகுதிகளாக்கி, எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு தப்பி ஓடினோம். அனைத்தையும் நினைத்துப் பார்த்த நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.(48,49) மேற்கில் ரைவதக மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம்.(50) நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாத வகையில் மீண்டும் செப்பனிட்டோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?(51)

ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். ஓ குரு குலத்தின் புலியே {யுதிஷ்டிரரே}, மலைகளில் முதன்மையான அந்த {ரைவதக} மலையைக் கடக்க முடியாது என்றும், ஜராசந்தனின் மீதிருந்த அச்சத்தைக் கடந்து வந்துவிட்டோம் என்றும் கருதிய மதுவின் வழித்தோன்றல்கள் {யாதவர்கள்} மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.(52,53) இவ்வாறே, ஓ மன்னா {யுதிஷ்டிர்ரே}, பலமும், சக்தியும் பெற்றவர்களாக இருப்பினும், ஜராசந்தனின் ஒடுக்குதலால் மூன்று யோஜனை நீளம் கொண்ட கோமந்த மலையை அடைய நாங்கள் பணிக்கப்பட்டோம். ஒவ்வொரு யோஜனையின் இடைவெளியில் நூறு வளைவுகளில், நூறு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு யோஜனையிலும் இருபத்தியோரு வகையான ஆயுதம் தாங்கிய வீரர்களை நிறுத்தினோம். ஒவ்வொரு வாயிலும் ஆற்றல்நிறைந்த வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது. பதினெட்டு யாதவ பிரிவுகளைச் சார்ந்த இளையவர்கள், இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.(54,55)

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்கள் குலத்தில் பதினெட்டாயிரம் சகோதரர்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். அஹுகனுக்கு நூறு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் (ஆற்றலில்) தேவர்களைப் போல இருக்கின்றனர்.(56) சாருதேஷ்ணன், அவனது சகோதரன் சக்ரதேவன், சாத்யகி, நான் {கிருஷ்ணன்}, ரோகிணியின் மகன் பலதேவர் {பலராமர்}, எனக்குச் சமமான எனது மகன் சாம்பன்(57) ஆகிய ஏழுபேரும் அதிரதர்கள் ஆவோம். எங்களைத் தவிர மேலும் பலரும் இருக்கின்றனர். ஓ மன்னா, அவர்களின் பெயர்களையும் இப்போது சொல்கிறேன். கிருதவர்மன், அனாதிருஷ்டி, சமீகன், சமிதிஞ்சயன்,(58) கங்கன், சங்கு, குந்தி ஆகிய எழுவரும் மஹாரதர்கள். அந்தக போஜனின் இரு மகன்களும், அந்த முதிர்ந்த மன்னனும் சேர்ந்ந்த பத்து பேரும் மஹாரதர்களேயாவர்.(59) அந்த பெரும் சக்தி மிக்க வீரர்கள் ஒவ்வொருவரும் வஜ்ரத்தைப் போன்றவர்களாவர். இந்த மஹாரதர்கள் அனைவரும் {குசஸ்தலியில்} மத்திய நாட்டைத் தேர்ந்தெடுத்து, விருஷ்ணிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.(60)

ஓ பாரதக் குலத்திற் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் ஒருவரே மாமன்னன் {சக்கரவர்த்தி} ஆகும் தகுதி படைத்தவர். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, க்ஷத்திரியர்கள் அனைவரின் மீதும் உமது பேரரசை நிறுவுவதே உமக்குத் தகும்.(61) ஆனால், ஜராசந்தன் உயிரோடு உள்ளவரை உம்மால் ராஜஸூய வேள்வியைக் கொண்டாட இயலாது என்பதே என் தீர்மானம்.(62) சிங்கமானது, மலைகளின் மன்னனுக்கு உள்ளிருக்கும் ஒரு குகையில் தன்னால் கொல்லப்பட்ட பெரும் யானைகளின் சடலங்களை வைத்திருப்பதைப் போல, {கிரிவ்ரஜத்தின்} ஒரு மலைக்கோட்டையில் பல எண்ணிலடங்கா ஏகாதிபதிகள் அவனால் {ஜராசந்தனால்} அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.(63) ஓ பகைவரைவரையும் கொல்பவரே, வேள்வியில் நூறு ஏகாதிபதிகளைக் காணிக்கையளிக்க விரும்பிய மன்னன் ஜராசந்தன், கடும் தவங்களைச் செய்து, சிறப்புமிக்கவனும், தேவர்களுக்குத் தேவனுமான உமையின் தலைவனை {சிவனைத்} துதித்தான். இவ்வழியிலேயே பூமியின் மன்னர்கள் அனைவரும் ஜராசந்தனால் வீழ்த்தப்பட்டனர். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே, இவ்வகையிலேயே அவன் தன் வேள்வி தொடர்பான நோன்பை நிறைவேற்ற முடிந்தது.(64,65)

மன்னர்களை அவர்களது துருப்புகளுடன் சேர்த்து வீழ்த்தி, அவர்கள் அனைவரையும் கைதிகளாகத் தன் நகரத்திற்குக் கொண்டு வந்ததன் மூலம் {மன்னர்களின்} கூட்டத்தை மிக அதிகமாகப் பெருக்கியிருக்கிறான்.(66) ஓ மன்னா, நாங்களும் ஒரு காலத்தில் ஜராசந்தனின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக மதுராவை விட்டகன்று துவாராவதி நகரத்திற்கு {துவாரகைக்குத்} தப்பி ஓடினோம்.(67) ஓ மன்னா, நீர் இவ்வேள்வியை {ராஜசூய வேள்வியைச்} செய்ய விரும்பினால், ஜராசந்தனால் அடைத்து வைக்கப்பட்டுள்ள மன்னர்களை விடுவிக்கவும், அவனைக் கொல்லவும் முனைவீராக.(68) இல்லையெனில், ஓ குருகுலத்தின் மகனே, உமது காரியத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. ஓ நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ராஜஸூயம் உம்மால் செய்யப்பட வேண்டுமானால், அதை நீர் இவ்வழியில் செய்ய வேண்டுமேயன்றி வேறு வழியில் முடியாது.(69) ஓ மன்னா, (இக்காரியத்தில்) இதுவே என் கருத்தாகும். ஓ பாவமற்றவரே, நீர் எண்ணியவாறே செயல்படுவீராக. ஓ மன்னா, இந்தச் சூழ்நிலையில், அனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, விளைவுகளையும் குறித்துக் கொண்டு, எது சரி என்று நீர் நினைக்கிறீரோ அதை எங்களுக்குச் சொல்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(70)

எண்பத்தாறு மன்னர்கள் சிறையில்! – சபாபர்வம் பகுதி 15-(ராஜசூய ஆரம்ப பர்வம் – 02)-யுதிஷ்டிரன் கிருஷ்ணனை மெச்சுவது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும் ஜராசந்தனையும் ஒப்பிடுதல்; எண்பத்தாறு மன்னர்கள் சிறைப்பட்டிருப்பதை உரைத்தல்; ஜராசந்தன் நூறு மன்னர்களைப் பிடித்து சிவனுக்குப் பலி கொடுப்போவதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்; ஜராசந்தனை வீழ்த்தினால் தான் ஒருவன் மாமன்னனாக முடியும் என்பதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்…

யுதிஷ்டிரன், {கிருஷ்ணனிடம்}” நீ புத்திசாலி, யாரும் சொல்ல முடியாததைச் சொல்லிவிட்டாய். இந்த உலகத்தில் வேறு யாருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் தகுதி இல்லை.(1) தங்கள் நன்மையைக் கருதும் மன்னர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருக்கும் மாட்சிமைமிக்க தகுதி கிடையாது. உண்மையில், மாமன்னன் {சக்கரவர்த்தி} என்ற பட்டத்தை அடைவதற்கரியதாகும்.(2) மற்றவர்களின் ஆற்றலையும், பலத்தையும் அறிந்தவர்கள் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில்லை. உண்மையில் புகழத்தகுந்தவன், எதிரிகளுடன் போரில் ஈடுபட்டு, பாராட்டுகளைத் தானே தாங்கிக் கொண்டிருப்பவன் ஆவான்.(3) விருஷ்ணி குலத்தின் மேன்மையைத் தாங்கும் நீ, இந்த விரிந்த உலகம் போல் இருக்கும் மனிதர்களின் ஆசைகளும் மனப்பாங்குகளும், பல்வேறு வகையாகவும் விரிவானவையாகவும் இருக்கின்றன என்பதை அறிந்தவனாவாய். தன் இல்லத்தைவிட்டுப் பல பகுதிகளுக்கும் பயணிப்பதால் உண்டாகும் அனுபவத்தினாலும், உயர்ந்த கொள்கைகளாலும், முக்தி அடையப்படுகிறதே ஒழிய, சாதாரண ஆசைகளாலும் மனப்பாங்குங்களாலும் அடையப்படுவதில்லை. மன அமைதியே உயர்ந்த தகுதி என நான் கருதுகிறேன். அந்த உயர்ந்த தகுதியில் இருந்தே செழிப்புண்டாகிறது. நான் இந்த வேள்வியைச் செய்தால், உயர்ந்த வெகுமதியை அடையமாட்டேன்.(5)

ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பெரும் சக்தியும் புத்திகூர்மையும் கொண்ட இந்தக் {குரு} குலத்தில் பிறந்தவர்கள், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தங்களில் ஒருவன் க்ஷத்திரியர்களில் முதன்மையானவனாக வருவான் என்று கருதுகின்றனர்.(6) ஆனால், ஓ மேன்மை மிக்கவனே, ஓ பாவமற்றவனே {கிருஷ்ணா}, அந்த ஏகாதிபதியின் {ஜராசந்தனின்} தீய குணத்தால் நாங்களும் அவனுக்குப் பயந்தே இருந்தோம். ஓ போர்க்களத்தில் ஒப்பற்றவனே {கிருஷ்ணா}, உனது பலம் வாய்ந்த கரமே எனக்குப் பாதுகாப்பு. நீயே ஜராசந்தனின் பலத்துக்கு அஞ்சினால், நான் எவ்வாறு என்னை அவனுடன் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்?(7,8) ஓ மாதவா {கிருஷ்ணா}, ஓ விருஷ்ணி குலத்தவனே, ஜராசந்தன் உன்னாலோ, ராமனாலோ {பலராமனாலோ}, பீமசேனனாலோ, அர்ஜுனனாலோ கொல்லப்படக்கூடியவனா? இல்லையா? என்று நினைக்கும்போதே நான் மிகுந்த துயர் கொள்கிறேன். ஆனால், நான் என்ன சொல்வேன், ஓ கேசவா {கிருஷ்ணா}? அனைத்திலும் நீயே எனது உயர்ந்த அதிகாரம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(9,10)

இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், பேச்சில் வல்லவனுமான பீமன், “கடும் முயற்சியற்ற ஓர் அரசனோ, ஆதரவற்ற பலவீனமான மன்னனோ, ஒரு பலசாலியுடன் பகைமை கொண்டானெனில், மலைபோன்ற எறும்புப்புற்று அழிவடைவது போல அழிவான்.(11) இருப்பினும், தனது விழிப்புணர்வாலும், கொள்கைகளைச் சரியாகப் பயன்படுத்துவதாலும் பலவீனமான மன்னன், பலமான மன்னை வீழ்த்தி, தனது ஆசைகளின் கனிகளை {பலன்களை} அடைவதையும் நாம் காணத்தான் செய்கிறோம்.(12) கிருஷ்ணனிடம் கொள்கையும் {வியூகமும்}, என்னிடம் {பீமனிடம்} பலமும், அர்ஜுனனிடம் வெற்றியும் இருக்கிறது. எனவே, வேள்வியில் சாதிக்கப்படும் மூன்று நெருப்பைப் போல, நாம் மகத மன்னனுக்கு {ஜராசந்தனுக்கு} மரணத்தை ஏற்படுத்தலாம்” என்றான் {பீமன்}.(13)

அப்போது கிருஷ்ணன், “புத்திமுதிராதொருவன், பிற்காலத்தில் தனக்கு என்ன நடக்கும் என்பதைக் கருதாமல், தனக்கு வேண்டிய ஆசையின் கனிகளை எதிர்பார்க்கிறான். தனது நலனில் அக்கறையுள்ள யாரும், ஒரு புத்தி முதிரா எதிரியை நினைத்து விட்டுக்கொடுப்பதில்லை.(14) கிருத யுகத்தில், யுவனாஸ்வனின் வரிகளை விலக்கியும், பகீரதன் தனது குடிகளிடம் அன்பாக இருந்தும், கார்த்தவீரியன் தனது தவ சக்தியாலும், தலைவன் பரதன் தனது பலம் மற்றும் ஆற்றலாலும், மருத்தன் செழிப்பாலும் என இந்த ஐவரும் முழு உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மாமன்னர்கள் {சக்கரவர்த்திகள்} ஆனார்கள் என்று கேள்விப்படுகிறோம். ஆனால், ஓ யுதிஷ்டிரரே, மாட்சிமையில் விருப்பம் கொண்டு அதை ஏற்கும் தகுதி கொண்ட நீர், வெற்றி, மக்களைக் காத்தல், அறம், வளமை, கொள்கை ஆகிய அனைத்துக் குணங்களிலும் ஒன்றிலும் குறையில்லாமல் இருக்கிறீர்.(15-17)

ஓ குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, பிருஹத்ரதன் மகனான ஜராசந்தனும் அதே {உம்மைப் போன்ற} குணங்களுடனே இருக்கிறான். நூறு குலங்களைச் சேர்ந்த அரசர்களும் ஜராசந்தனை எதிர்க்கத் திராணியற்று இருக்கின்றனர்.(18) எனவே, அவன் {ஜராசந்தன்}, தனது பலத்தால் மாமன்னாக மதிக்கப்படத் தகுதியானவனே. நகைகளை அணிந்த மன்னர்கள் ஜராசந்தனை (நகைகளைப் பரிசாகக் கொடுத்து) வழிபடுகிறார்கள். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்து தீயவனாக இருக்கும் அவன் {ஜராசந்தன்} அந்த வழிபாடுகளால் நிறைவடையவில்லை.(19,20) அனைவருக்கும் முதன்மையானவன் ஆனதால், தலையில் மகுடன் {கிரீடம்} கொண்ட அனைத்து மன்னர்களையும் அவன் தாக்குகிறான். அவனுக்கு {ஜராசந்தனுக்குக்} கப்பம் கட்டாத எந்த மன்னனையும் நாம் காண முடியவில்லை.(21)

இப்படியே கிட்டத்தட்ட நூறு மன்னர்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து விட்டான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, பலவீனமான ஏகாதிபதிகள் அவனுடன் பகைமை கொள்ள எப்படித் துணிவார்கள்?(22) ஓ பாரத குலத்தவரே {யுதிஷ்டிரரே}, சிவனின் ஆலயத்துக்குள் பலியாகும் வேறு விலங்குகள் பலவற்றைப் போல அவனுக்காக {ஜராசந்தனுக்காக} அத்தேவனுக்கே பலியாகப் போகும் அந்த ஏகாதிபதிகளின் மனவேதனையைத் தூண்டும் பெருந்துயரம் எவ்வாறு இருக்கும்?(23) போரில் இறக்கும் க்ஷத்திரியன் எப்போதும் மதிப்பு மிக்கவனாக கருதப்படுகிறான். எனவே, ஏன் நாம் அனைவரும் சேர்ந்து ஜராசந்தனைப் போரில் சந்திக்கக்கூடாது?(24) அவன் ஏற்கனவே எண்பத்தாறு மன்னர்களைக் கொண்டு வந்து, நூறு எண்ணிக்கையை நிறைவு செய்ய பதினான்கு பேருக்காகக் காத்திருக்கிறான். அந்தப் பதினான்கு பேரை அவன் {ஜராசந்தன்} அடைந்ததும், அவனது தீய செயலைத் தொடங்குவான்.(25) அத்தீயச்செயலைத் தடுப்பவன் எவனும் பெரும் புகழை அடைவான். ஜராசந்தனை வீழ்த்தும் எவனும், நிச்சயமாக அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் மாமன்னனாக {சக்கரவர்த்தியாக} ஆவான்” {என்றான் கிருஷ்ணன்}.(26)

அர்ஜுனன் கொடுத்த ஊக்கம்! – சபாபர்வம் பகுதி 16-(ராஜசூய ஆரம்ப பர்வம் – 03)-யுதிஷ்டிரன் ஜராசந்தனை எதிர்ப்பதைக் கைவிட்டுவிடலாம் என்று சொல்லல்; அர்ஜுனன் அதற்குச் சமாதானம் கூறல்

யுதிஷ்டிரன், “ஓ கிருஷ்ணா, தகுந்த மாட்சிமையில் விருப்பம் கொண்டு, என் ஆற்றலை மட்டுமே நம்பி சுய நல நோக்கத்துடன் செயல்பட்டு, எப்படி என்னால் அவனை {ஜராசந்தனை} அழிக்க முடியும்?(1) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பீமனையும், அர்ஜுனனையும் எனது கண்களாகவும், உன்னை எனது மனமாகவும் நான் நினைக்கிறேன். எனது கண்களையும், மனத்தையும் இழந்து என்னால் எப்படி வாழ முடியும்?(2) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ஜராசந்தனை யமனாலும் வீழ்த்த முடியாதே! அவற்றுக்கு எதிராக என்ன வகையான ஆற்றலை உன்னால் வெளிப்படுத்த முடியும்?(3) இந்தக் காரியத்தை முடிக்க வில்லை என்றால், நாம் பேரழிவிற்குள் தள்ளப்படுவோம் என்பது உறுதியாகத் தெரிகிறது. எனவே, வெல்லப்பட முடியாத காரியத்தைச் செய்யக்கூடாது என்பதே எனது கருத்து.(4) ஓ கிருஷ்ணா, நான் அடிக்கடி நினைப்பதை நீ கேட்பாயாக. ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்தக் காரியத்தைச் செய்வதில் இருந்து ஒதுங்குவதே நமக்கு நன்மை என எனக்குத் தெரிகிறது. இன்று எனது இதயம் துயரால் பீடிக்கப்பட்டிருக்கிறது. ராஜசூயம் அடைய முடியாத சாதனையாக எனக்குத் தெரிகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.(5)

வைசம்பாயனர் சொன்னார், “விற்களில் அற்புதமான வில்லையும், வற்றாத இரு அம்பறாத்தூணியையும், கொடியுடன் கூடிய தேரையும், சபா மண்டபத்தையும் அடைந்தவனான அர்ஜுனன்,(6) யுதிஷ்டிரனிடம், “ஓ மன்னா, நான் வில்லையும், ஆயுதங்களையும், கணைகளையும், சக்தியையும், கூட்டாளிகளையும், நாடுகளையும், புகழையும், பலத்தையும் அடைந்துள்ளேன். அவை விரும்பப்பட்டாலும், அவற்றை அடைவது மிகக் கடினமாகும்.(7) கல்விமான்களும், புகழ்வாய்ந்தவர்களுமான மனிதர்கள், நல்ல சமுதாயத்தில் பிறந்த உயர்ந்த பிறப்பைப் புகழ்கின்றனர். ஆனால் ஆற்றலிற்கீடானது எதுவும் இல்லை.(8) உண்மையில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஆற்றலைவிட நான் விரும்புவது வேறு எதையும் அல்ல. அற்றலுக்குப் பெயர்பெற்ற குலத்தில் பிறந்தும், ஆற்றலின்றி இருப்பவன் மதிப்பற்றவனாவான்.(9) இருப்பினும், ஆற்றலுடைய, குறிப்பிடத் தகாத குலத்தில் பிறந்தவன், முன்னவனை {வீரமற்றவனை} விட மிகவும் மேன்மையானவன். எதிரிகளை அடக்கி, அனைத்திலும் தனது புகழை வளர்த்துக் கொள்பவன் அனைத்து வகையிலும் க்ஷத்திரியன் எனப்படுவான்.(10)

வேறு எந்தத் தகுதியும் இல்லாமல் இருந்தாலும், ஆற்றலை மட்டும் கொண்டவன் தனது எதிரிகளை வீழ்த்துகிறான். இருப்பினும் ஆற்றலற்றவன், அனைத்துத் தகுதிகளைக் கொண்டிருந்தாலும், எதையும் சாதிப்பதில்லை. தொடக்க நிலையில் இருக்கும் வீரத்தால் மட்டுமே அனைத்துத் தகுதிகளும் வருகின்றன.(11) கவனத்தைக் குவித்தலும் {ஒரு முகப்படுத்தலும்}, முயற்சியும், விதியும் வெற்றியின் மூன்று காரணங்களாகும். இருப்பினும், வீரத்தைக் கொண்டிருந்தாலும், கவனக்குறைவாக இருப்பவன் வெற்றியை அடையத் தகுதியடைவதில்லை. அதன்காரணமாகவே, சில நேரங்களில், பெரும் பலம் கொண்ட எதிரிகள்கூட அவர்களது எதிரிகளின் கையில் மரணத்தைச் சந்திக்கின்றனர். பலவீனத்தை அற்பத்தனம் வெல்வதைப் போல, சில சமயங்களில் பலமானவனை அவன் செய்யும் தவறுகள் வீழ்த்திவிடும். எனவே, வெற்றியில் விருப்பமுள்ள ஒரு மன்னன், இந்த இரு காரணங்களையும் {கவனக்குறைவு மற்றும் தவறுகளை} விலக்க வேண்டும்.(12-14) நமது வேள்விக்காக ஜராசந்தனைக் கொல்ல நாம் பெரு முயற்சி செய்து, அவனது தீய காரியத்திற்காகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் மன்னர்களை விடுவித்தால், அதைவிட நாம் ஈடுபடும் உயர்ந்த காரியம் வேறு எதுவும் இல்லை.(15) இருப்பினும், நாம் அந்தக் காரியத்தை மேற்கொள்ளவில்லை என்றால், உலகம் நம்மைத் தகுதியற்றவர்களாகக் கருதும். நமக்கு நிச்சயம் தகுதி இருக்கிறது, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}! எனவே, நீர் ஏன் நம்மைத் தகுதியற்றவர்களாக நினைக்க வேண்டும்?(16) ஆன்ம அமைதியை விரும்பும் முனிவர்கள், வசதியாக மஞ்சள் ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். நாம் அந்த எதிரியை {ஜராசந்தனை} வீழ்த்தினால், மாட்சிமை கொண்ட தகுதி நமதாகும். அகையால், நாம் அந்த எதிரியை {ஜராசந்தனை} எதிர்த்துப் போரிடலாம்.” என்றான் {அர்ஜுனன்}.(17)

ராட்சசி ஜரையால் உயிர்பெற்ற ஜராசந்தன்! – சபாபர்வம் பகுதி 17-(ராஜசூய ஆரம்ப பர்வம் – 04)- யுதிஷ்டிரனை ஜராசந்தனுக்கு எதிராக கிருஷ்ணன் தூண்டுதல்; ஜராசந்தன் யார் என்று யுதிஷ்டிரன் கேட்டல்; ஜராசந்தனின் பிறப்பு ரகசியத்தை கிருஷ்ணன் சொல்லல்…

வாசுதேவன், “பாரத குலத்தில் பிறந்தவன், அதிலும் குறிப்பாக குந்தியின் மகனாக இருப்பவன், என்ன செய்ய வேண்டும் என்பதை அர்ஜுனன் சொல்லிவிட்டான்.(1) நம்மை மரணம் எப்போது வந்தடையும்? இரவிலா, பகலிலா என்பதை நாம் அறியோம். போரில் இருந்து விலகுவதால் சாகா வரம் பெறுவோம் என்பதையும் எப்போதும் நாம் கேள்விப்பட்டதில்லை.(2) எனவே, விதிப்படி அனைத்து எதிரிகளையும் தாக்குவது மனிதர்களின் கடமையாகிறது. இது எப்போதும் நமது இதயத்துக்கு நிறைவைத் தருகிறது.(3) விதியின் காரணமாக வெறுப்படையாமல், நல்ல கொள்கையின் துணை கொண்டு பணியை மேற்கொண்டால் நிச்சயம் நாம் வெற்றி மகுடத்தை அடைவோம். இதே தகுதிகளைக் கொண்ட இரு தரப்புகள், போரில் ஒருவருக்கொருவர் மோதும்போது, யாராவது ஒருவர் சிறப்படைந்தே ஆக வேண்டும், இருவரும் வெல்லவோ அல்லது இருவரும் தோற்கவோ முடியாது.(4)

தீய கொள்கையால் வழிநடத்தப்பட்ட ஒரு போரென்பது, நன்கறியப்பட்ட கலைகளற்று தோல்வியையோ அழிவையோ கொடுக்கும். இரு கட்சிகளும் ஒரே சூழ்நிலையில் சமமாக இருந்தால், பலன் சந்தேகத்திற்கிடமாகிறது. இருப்பினும் இருவரும் ஒரே நேரத்தில் வெல்ல முடியாது.(5) அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு நதியின் நீரோட்டம் ஒரு மரத்தை வேரோடுப் பிடுங்குவதுபோல நாம் ஏன் நல்ல கொள்கைகளைக் கொண்டு, எதிரியை நேரடியாக அணுகி அழிக்கக்கூடாது?(6) நமது தவறுகளை மறைத்து, எதிரியின் குறைகளில் மேலாண்மை பெற்று, நாம் எதிரியைத் தாக்கினால், நாம் ஏன் வெல்ல மாட்டோம்? உண்மையில், புத்திசாலி மனிதர்களின் கொள்கைகள், மிகுந்த பலசாலிகளான, பெரும் சக்திகளின் துணை கொண்டு தலைமையில் இருக்கும் எதிரிகளை நேரிடையாக வெளிப்படைத்தன்மையுடன் தாக்கக்கூடாது என்றே சொல்கிறது. இது எனது கருத்துமாகும்.(7) இருப்பினும், எதிரியின் வசிப்பிடத்திற்கும் ரகசியமாகச் சென்று தாக்கினால், நாம் இகழப்பட மாட்டோம்.(8) அனைத்து உயிர்களின் இதயத்தில் மகிழ்ச்சியாக இருப்பவன் போல {இறைவனைப் போல} மனிதர்களில் காளையான ஜராசந்தன் மங்காத புகழை அனுபவிப்பவன். ஆனால், நான் அவனது {ஜராசந்தனது} அழிவை என் முன் காண்கிறேன்.(9) நமது உறவினர்களைக் காக்கும் பொருட்டு நாம் அவனை {ஜராசந்தனைக்} கொல்வோம், அல்லது கடைசியாக அவனால் கொல்லப்பட்டு விண்ணுலகை அடைவோம்” என்றான் {கிருஷ்ணன்}.(10)

அதற்கு யுதிஷ்டிரன், “ஓ கிருஷ்ணா ஜராசந்தன் என்பவன் யார்? அவனது வலிமையும் சக்தியும் எப்படிப்பட்டது? உன்னைத் தீண்டியதும், நெருப்பைத்தொட்ட பூச்சி போல அவன் ஏன் எரிந்து சாகவில்லை?”, என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(11)

அதற்கு கிருஷ்ணன், “ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஜராசந்தன் யார், அவனது சக்தியும் ஆற்றலும் எப்படிப்பட்டது? அவன் நமக்குத் தொடர்ந்து குற்றம் புரிந்திருந்தாலும், அவன் நம்மால் ஏன் கொல்லப்படாமல் காக்கப்பட்டிருக்கிறான் என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(12) மகதர்களின் தலைவனும், பிருஹத்ரதன் என்ற பெயர் கொண்டவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான மன்னன் ஒருவன் இருந்தான். போரில் பெருமை கொள்பவனான அவன் மூன்று அக்ஷௌணி துருப்புகளைக் கொண்டிருந்தான்.(13) பெரும் சக்தியும், அழகும், அளவுக்கதிகமான ஆற்றலும் கொண்டிருந்த அவன், வேள்விகளால் ஏற்பட்ட குறிகளை {வடுக்களை} உடலெங்கும் தாங்கியபடி இரண்டாவது இந்திரனைப் போல இருந்தான்.(14) புகழால் சூரியனைப் போலவும், மன்னிக்கும் இயல்பால் பூமியைப் போலவும், கோபத்தால் அழிப்பவனான யமனைப் போலவும், செல்வத்தால் வைஸ்ரவணனை {குபேரனைப்} போலவும் இருந்தான்.(15)

ஓ பாரத குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இந்த முழு உலகமும் அவனது குணத்தால் நிறைந்திருந்தது. அவனது {பிருஹத்ரதனது} நீண்ட பரம்பரையில் வந்த மூதாதையர்கள், சூரியனில் இருந்து வரும் கதிர்களைப் போல அவனுக்குள் பிரகாசித்துக் கொண்டிருந்தனர்.(16) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்ட அந்த ஏகாதிபதி {பிருஹத்ரதன்}, காசி மன்னனின் மகள்களான பெரும் அழகைச் செல்வமாகக் கொண்ட இரட்டையர்களான அந்தப் பெண்களை மணந்து கொண்டான். மனிதர்களில் காளையான அவன் {பிருஹத்ரதன்} தனது மனைவிகளிடையே, அவர்கள் இருவரிடமும் சம அன்பு கொண்டு இருப்பதாகவும், யாருக்கும் யாரைவிட அதிக சலுகை கொடுக்க மாட்டேன் என்றும் ரகசியமாக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். தான் அன்பாக நேசித்த அன்பு மனைவிகளுடன் அந்த பூமியின் அதிபதி ஒரு பெரும் ஆண் யானை இரு பெண் யானைகளுடன் சுகித்து இருப்பது போலவும், கங்கையாலும் யமுனையாலும் திருப்தி கொண்ட சமுத்திரம் போலவும் ஆனந்தமாக இருந்தான்.(17-20) இருப்பினும் அந்த ஏகாதிபதியின் இளமை இப்படியே கொண்டாட்டங்களுடன், தனது குலத்தை விரித்தி செய்ய ஒரு மகன் இல்லாமல் கடந்து போயிற்று. அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {பிருஹத்ரதன்}, ஏராளமான சடங்குகளும், ஹோமங்களும், வேள்விகளும் செய்தும் தனது குலத்தை விரித்தி செய்ய ஒரு மகனை அடையாமல் இருந்தான்.(21)

ஒரு நாள் அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, உலகெங்கும் திரிந்து வந்தவரும், கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், கக்ஷீவானின்  மகனுமான உயர் ஆன்ம சண்டகௌசிகர் தன் வழியில் அவனது தலைநகருக்கு வந்து, ஒரு மாமரத்தின் அடியில் இருப்பதாக அறிந்தான். அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, அந்த முனிவரிடம் {சண்டகௌசிகரிடம்} தனது இரு மனைவிகளையும் அழைத்துக் கொண்டு, அவருக்கு நகைகளும், மதிப்பு மிக்க பொருள்களும் கொடுத்து அவரை நிறைவடையச் செய்து வழிபட்டான்.(22,23) வாய்மைநிறை பேச்சும், வாய்மையில் பற்றும் கொண்ட அந்த முனிவர்களில் சிறந்தவர் {சண்டகௌசிகர்} அந்த மன்னனிடம், “ஓ மன்னர்களின் மன்னா {பிருஹத்ரதா}, நான் உன்னால் நிறைவடைந்தேன். ஓ சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, நீ ஒரு வரத்தைக் கேட்பாயாக” என்றார்.(24)

தன் மனைவிகளுடன் இருந்த மன்னன் பிருஹத்ரதன் மிகவும் தாழ்மையாகப் பணிந்து வணங்கி, அந்த முனிவரிடம் குழந்தையின்மையால் தான் அடையும் துன்பத்தைக் கண்ணீருடன் சொன்னான்.(25) {அவன்}, “ஓ புனிதமானவரே, நான் எனது நாட்டைக் கைவிட்டு, கடுந்தவம் பயில கானகத்திற்குச் செல்ல இருக்கிறேன். நான் மகனில்லாத கொடும்பேறு பெற்றவன். எனவே நான் நாட்டை வைத்துக் கொண்டும், வரத்தாலும் என்ன காரியத்தை அடைய முடியும்?”, என்று கேட்டான் {பிருஹத்ரதன்}.(26)

கிருஷ்ணன் தொடர்ந்தான், “{மன்னனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, மாமரத்தின் நிழலில் அமர்ந்திருந்த அந்த முனிவர் {சண்டகௌசிகர்} தனது புற உணர்வுகளை அடக்கி, தியான யோகத்திற்குள் புகுந்தார்.(27) அப்படி அமர்ந்திருந்த அந்த முனிவரின் மடியில், கிளியின் அலகால் தீண்டப்படாத சாறுகொண்ட ஒரு மாங்கனி விழுந்தது.(28) முனிவர்களில் சிறந்தவரான அவர், அந்தக் கனியை எடுத்து, மனத்திற்குள் சில மந்திரங்களை உச்சரித்து, அந்த மன்னனுக்கு {பிருஹத்ரதனுக்கு} மகப்பேறு உண்டாக அவனிடம் கொடுத்தார்.(29) இயல்புக்கு மிக்க ஞானம் கொண்ட அந்தப் பெரும் முனிவர் {சண்டகௌசிகர்} அந்த ஏகாதிபதியிடம் {பிருஹத்ரதனிடம்}, “ஓ மன்னா, உனது விருப்பம் ஈடேறி திரும்பு. கானகம் செல்லும் உனது முடிவை மாற்றிக் கொள்வாயாக” என்றார்.(30)

முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட பெரும் ஞானமுள்ள அந்த ஏகாதிபதி {பிருஹத்ரதன்}, அவரது பாதங்களை வணங்கி, தனது வசிப்பிடம் திரும்பினான்.(31) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, தன் மனைவிகளுக்குத் தான் கொடுத்த உறுதிமொழியை நினைத்துப் பார்த்த அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, மனைவிகள் இருவரையும் அழைத்து அந்தக் கனியைக் கொடுத்தான்(32). அவனது அழகான ராணிகள், அந்த ஒரு பழத்தை இரண்டாகப் பிரித்து உண்டனர். அந்தக் கனியை உண்டதாலும் அந்த முனிவரின் வார்த்தைகளின் பலத்தாலும், அந்த இருவரும் கர்ப்பவதியானார்கள். அந்த நிலையில் அவர்களைக் கண்ட மன்னன் பெருமகிழ்ச்சி அடைந்தான்.(33,34) பிறகு ஓ ஞானமுள்ள ஏகாதிபதியே, சிறிது காலம் கடந்து, நேரம் வந்ததும், அந்த ராணிகள் இருவரும் ஒரே உடலின் இரண்டு பாகத்தை ஈன்றெடுத்தனர்.(35) அந்த ஒவ்வொரு துண்டிலும் ஒரு கண், ஒரு கரம், ஒரு கால், அரை வயிறு, அரை முகம் அரை குதம் {ஆசனவாய்} ஆகியன இருந்தன. அந்தத் துண்டு உடல்களைக் கண்ட அந்தத் தாய்மார்கள் மிகவும் நடுக்கமுற்றனர்.(36) அந்த ஆதரவற்ற சகோதரிகள் இருவரும் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, அந்த உயிருள்ள உடல் துண்டுகளைக் கைவிட்டனர். பேறு கால மருத்துவச்சிகளான இரண்டு பேர் அந்தத் துண்டுகளை துணியில் சுற்றி, அரண்மனையின் பின் வாயில் வழியாக வந்து அந்தத் துண்டுகளைத் தூக்கி வீசிவிட்டு விரைவாகத் திரும்பி வந்தனர்.(37,38)

சிறிது நேரம் கழித்து, ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, இறைச்சியை உண்டும், குருதியைக் குடித்தும் வாழும் ஜரை என்ற ராட்சசி நாற்சந்தியில் போடப்பட்ட துண்டுகளை எடுத்தாள்.(39) விதியின் சக்தியால் உந்தப்பட்ட மனித ஊனுண்ணியான அந்தப் பெண், தூக்கிச் செல்வதற்கு வசதியாக அந்த இரண்டு துண்டுகளையும் இணைத்தாள்.(40) ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, அந்த இரண்டு துண்டுகளும் இணைந்ததும், ஓர் உடலாகி கட்டுறுதி வாய்ந்த (உயிருள்ள) குழந்தையானது.(41) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த பெண் நரமாமிச உண்ணி {ஜரை}, வஜ்ரத்தைப் போன்ற உறுதியான உடல் கொண்ட அந்தக் குழந்தையைத் தூக்கிச் செல்ல முடியாமல் வியப்பால் கண்களை அகலவிரித்தாள்.(42) அந்தக் குழந்தை தாமிரம் போன்ற சிவந்த தனது முட்டிகளை மடித்து அவற்றைத் தனது வாய்க்குள் நுழைத்து, மழை நிறைந்த மேகம் முழங்குவதைப் போல பயங்கரமாக முழங்கியது.(43) அவ்வொலியால் அச்சமடைந்த அந்த அரண்மனைவாசிகள், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, ஓ எதிரிகளைக் கொல்பவனே, மன்னனுடன் {பிருஹத்ரதனுடன்} சேர்ந்து வெளியே வந்தனர்.(44) பாலால் நிறைந்த மார்புகளுடன், ஆதரவற்று, மிகுந்த துயரத்தில் இருந்த ராணிகளும் தங்கள் குழந்தையை மீட்க திடீரென வெளியே வந்தனர்.(45)

ராணிகளின் இந்த நிலையையும், வாரிசை விரும்பிய மன்னனையும், மிகுந்த பலசாலியான அந்தக் குழந்தையையும் கண்டவளும், மனித ஊனுண்ணியுமான அந்த பெண் {ஜரை}, தனக்குள், “வாரிசை விரும்பும் இந்த மன்னனின் நாட்டுக்குள் தான் நான் வாழ்கிறேன். அதனால் இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அறம் சார்ந்த மன்னனின் குழந்தையை நான் கொல்லலாகாது” என்று நினைத்தாள்.(46,47)) பிறகு அந்த ராட்சசப் பெண் {ராட்சசி ஜரை}, மனித வடிவம் ஏற்று, சூரியனை மூடும் மேகங்கள் போல அக் குழந்தையைத் தாங்கி வந்து, அந்த மன்னனிடம்,(48) “ஓ பிருஹத்ரதா, இது உனது குழந்தை. இவனை நான் உன்னிடம் கொடுக்கிறேன். எடுத்துக் கொள். பெரும் பிராமணரின் கட்டளையால் உனது இரு மனைவியருக்கும் பிறந்தவன் இவன். மருத்துவச்சிகளால் தூக்கி எரியப்பட்ட இவனை, நான் காத்து எடுத்து வந்திருக்கிறேன்” என்றாள் {ஜரை}.(49)

கிருஷ்ணன் தொடர்ந்தான், “ஓ பாரத குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, காசி மன்னனின் அழகிய மகள்கள், தங்கள் குழந்தையைப் பெற்றுக் கொண்டு தங்கள் பால் ஊற்றால் அவனை நனைத்தனர்.(50) அனைத்தையும் உறுதி செய்து கொண்ட மன்னன் {பிருஹத்ரதன்} மகிழ்ச்சியால் நிறைந்து, தங்க நிறம் கொண்ட மனித வடிவில் இருந்த மனித ஊனுண்ணியான அந்த பெண்ணிடம்,(51) “தாமரை இதழ்களின் நிறம் கொண்டவளே, எனக்கு இந்தக் குழந்தையைக் கொடுக்கும் நீ யார்? ஓ அதிர்ஷ்டமானவளே, இந்தப் பகுதியில் இன்பமாகச் சுற்றித் திரியும் தேவதையாகத் தெரிகிறாயே!”, என்று கேட்டான் {பிருஹத்ரதன்}.(52)

சுயம்புவால் உருவாக்கப்பட்ட கிரகதேவி ஜரை! – சபாபர்வம் பகுதி 18-(ராஜசூய ஆரம்ப பர்வம் – 05)-பிருஹத்ரதனிடம் ஜரை தன்னை அறிமுகம் செய்து கொள்ளல்; தான் கிரகதேவி என்று சொல்லல்; பிருஹத்ரதன் அந்த ராட்சசிக்கு மரியாதை செலுத்த ஒரு விழாவை ஏற்பாடு செய்து; தனது பிள்ளைக்கு ஜரையின் பெயரையும் சேர்த்து ஜராசந்தன் என்ற பெயரைச் சூட்டல்…

கிருஷ்ணன் தொடர்ந்தான், “மன்னனின் {பிருஹத்ரதனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த ராட்சசப் பெண் {ஜரை}, “நீ அருளப்பட்டிரு. ஓ மன்னர்களுக்கு மன்னா, நினைத்த வடிவை அடையக்கூடிய ராட்சசப் பெண்ணான நான் ஜரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன். ஓ மன்னா {பிருஹத்ரதா}, நான் அனைவராலும் வழிபடப்பட்டு மகிழ்ச்சியுடன் உனது இல்லத்தில் வாழ்ந்து வருகிறேன்.(1) ஒவ்வொரு நாளும் நான் ஒரு மனிதனின் இல்லத்தில் இருந்து மற்றொரு மனிதனின் இல்லத்திற்கு சென்று வருகிறேன். உண்மையில் நான் பழங்காலத்தில் சுயம்புவால் படைக்கப்பட்ட போது, கிருகதேவி (வீட்டில் குடியிருக்கும் பெண் தெய்வம்) என்று பெயரிடப்பட்டேன்.(2)

தெய்வீக அழகுடைய நான் தானவர்களின் அழிவுக்காக இங்கு (இந்த உலகத்தில்) நிறுத்தப்பட்டேன். எவன் தனது சுவற்றில் குழந்தைகளுக்கு மத்தியில் நான் இளமையுடன் இருப்பதைப் போல வரைந்து வைக்கிறானோ, அவனது இல்லம் செழிப்பில் வளரும்; இல்லையெனில், அந்த இல்லம் தேய்ந்து அழிவை நோக்கிச் செல்லும். ஓ தலைவா {பிருஹத்ரதா}, உனது சுவற்றில் எண்ணற்ற குழந்தைகளுடன் என்னைப் போலவே வரைந்து வைத்திருக்கிறாய். நான் அங்கேயே இருந்து, தினமும் நறுமணப்பொருட்களாலும், மலர்களாலும், நறுமணப் புகையாலும் உண்ணத்தக்க பல பொருட்களை வைத்து வணங்கப்படுகிறேன்.(3-5)

இப்படி உனது வீட்டில் வழிபடப்படும் நான், தினமும் பிரதிபலனாக ஏதாவது நன்மை செய்ய வேண்டுமே என்று நினைப்பேன். ஓ அறம்சார்ந்த மன்னா {பிருஹத்ரதா}, விதிவசத்தால், இருகூறான உனது பிள்ளையின் உடல் துண்டுகளை நான் கண்டேன்.(6) அவை என்னால் ஒன்றாகச் சேர்க்கப்பட்ட போது, உயிருள்ள குழந்தை வடிவானது. ஓ பெரும் மன்னா, இவையெல்லாம் உனது நற்பேற்றாலேயே விளைந்தன. நான் இதில் ஒரு கருவியாக மட்டுமே பயன்பட்டிருக்கிறேன்.(7) நான் மேரு மலையை விழுங்கக்கூடியவள். அப்படியிருக்கும்போது உனது பிள்ளையைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? இருப்பினும், நான் உனது இல்லத்தில் எனக்குக் கிடைக்கும் வழிபாட்டால் பெரும் மனநிறைவடைந்தேன். எனவே, ஓ மன்னா, நான் இந்தக் குழந்தையை உனக்கு அளிக்கிறேன்” என்றாள் {ராட்சசி ஜரை}.(8)

கிருஷ்ணன் தொடர்ந்தான், “ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைப் பேசிய ஜரை அப்படியே மறைந்து போனாள். குழந்தையைப் பெற்றுக்கொண்ட மன்னன் {பிருஹத்ரதன்} அரண்மனைக்குள் நுழைந்தான்.(9) பிறகு அம்மன்னன் குழந்தைக்கான சடங்குகள் அனைத்தையும் செய்து, அந்த ராட்சசப் பெண்ணுக்கு {ஜரைக்கு} மதிப்பளிக்கும் வகையில் ஒரு பண்டிகையை ஏற்பாடு செய்து கட்டளையிட்டான்.(10) பிறகு அவன் {பிருஹத்ரதன்}, இந்தக் குழந்தை ஜரையால் சேர்க்கப்பட்டதால், இவன் ஜராசந்தன் (ஜரையால் இணைக்கப்பட்டவன்) என்று அழைக்கப்படுவான்.(11) மகத மன்னனின் {பிருஹத்ரதனின்} மகன் பெரும் சக்தியுடனும், பெரும் வடிவத்துடனும், பெரும் பலத்துடனும், தெளிந்த நெய் ஊற்றப்படும்போது வளரும் நெருப்பு போல வேகமாக வளர்ந்தான். வளர்பிறைச் சந்திரனைப் போல நாளுக்கு நாள் வளர்ந்த அவன் {ஜராசந்தன்}, தனது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரித்தான்” {என்றான் கிருஷ்ணன்}.(12,13)

ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை – சபாபர்வம் பகுதி 19-(ராஜசூய ஆரம்ப பர்வம் – 06)-சந்தகௌசிகர் ஜராசந்தனின் வருநலமுரைத்தல்; அதே போல ஜராசந்தன் பெரும் பலத்துடன் வளர்தல்; கம்சன் மரணத்தால் ஜராசந்தனுக்கு கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பகை; யாதவர்கள் ஜராசந்தனுடன் மோதுவது இல்லை என்று தீர்மானத்துடன் இருந்தது…

கிருஷ்ணன் தொடர்ந்தான், “இது நடந்த சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் பெரும் துறவியான அந்த மேன்மைமிகு சண்டகௌசிகர் மகத நாட்டுக்கு வந்தார்.(1) அந்த முனிவரின் {சண்டகௌசிகரின்} வருகையால் மிகவும் மகிழ்ந்த மன்னன் பிருஹத்ரதன், தனது அமைச்சர்கள், புரோகிதர், மனைவியர், மகன் {ஜராசந்தன்} ஆகியோருடன் அவரை வரவேற்கச் சென்றான்.(2) ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, அந்த முனிவருக்குக் கால் மற்றும் முகம் கழுவ நீர் கொடுத்து, அர்க்கியம் கொடுத்து, பிறகு அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, அவருக்கு {சண்டகௌசிகருக்குத்} தனது மகனுடன் {ஜராசந்தனுடன்} சேர்ந்த நாட்டையே கொடுக்க முன் வந்தான்.(3)

அந்த முனிவர் {சண்டகௌசிகர்} மன்னன் வழங்கிய அந்த வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அந்த மகத நாட்டு ஆட்சியாளனிடம் {பிருஹத்ரதனிடம்} இதயத் திருப்தியுடன்,(4) “ஓ மன்னா {பிருஹத்ரதா}, நான் அனைத்தையும் என் ஞானப் பார்வையால் அறிவேன். ஆனால், ஓ மன்னர்களுக்கு மன்னா, இதையும் கேள்,(5) உனது மகன் {ஜராசந்தன்} எதிர்காலத்தில் மிகுந்த அழகுடனும், பலத்துடனும், அற்புதமான திறன்களுடனும் பராக்கிரமத்துடனும் இருப்பான். உனது மகன் {ஜராசந்தன்} சந்தேகமற, செழிப்பில் வளர்ந்து, பேராற்றலால் அனைத்தையும் அடைவான்.(6,7) எப்படி வினதையின் மகனுடைய (கருடனின்) வேகத்தை மற்ற பறவைகளால் அடைய முடியாதோ அப்படி உனது மகனுடைய {ஜராசந்தனுடைய} சக்தியை இந்த உலகத்தில் எந்த ஏகாதிபதியாலும் அடைய முடியாது. அவன் {ஜராசந்தன்} மிகுந்த பராக்கிரமத்துடன் இருப்பான். அவன் வழியில் தடையாக எதிர்படும் அனைத்தும் அழிவுக்குள்ளாகும்.(8)

நீரோட்டத்தின் சக்தியால் எவ்வாறு மலைகளின் சாரலில் உள்ள பாறைகளை ஒன்றும் செய்ய முடிவதில்லையோ அப்படி தேவர்கள் வீசும் ஆயுதங்களால் இவனுக்கு சிறு துன்பமும் உண்டாகாது.(9) மணிமுடி தரித்தவர்களின் தலைகளை விட இவன் {ஜராசந்தன்} அதிகம் பிரகாசிப்பான். சூரியன் எப்படி மற்ற ஒளிரும் பொருட்களின் பிரகாசத்தை மங்கச் செய்யுமோ அப்படி அனைத்து ஏகாதிபதிகளின் பிரகாசங்களையும் இவன் {ஜராசந்தன்} களவாடி விடுவான்.(10) பெரும் பலம் மிக்க படைகளும், எண்ணிலடங்கா தேர்களும், விலங்குகளும் கொண்ட மன்னனால் கூட உன் மகனை அணுக முடியாது. அப்படி அணுகினால் அவர்கள் நெருப்பில் விழும் பூச்சிகள் என மடிந்து போவர்.(11) உனது மகனான இவன் {ஜராசந்தன்}, அனைத்து மன்னர்களின் வளமைகளை, சமுத்திரம் எப்படி பல நதிகளின் வெள்ளத்தை உள் வாங்கிக் கொள்ளுமோ அப்படி உள்வாங்கிக் கொள்வான்.(12) அனைத்து உற்பத்திகளையும் தாங்கும் பெரும் உலகம் போல, நல்ல மற்றும் தீயவை அனைத்தையும் தாங்கி, பெரும் பலம் கொண்டு நால் வகை மக்களையும் ஆள்வான்.(13) உடல் கொண்ட அனைத்து உயிரும் வாயுவை நம்பி இருப்பது போல, பூமியில் உள்ள அனைத்து மன்னர்களும் உனது மகனுக்கு {ஜராசந்தனுக்கு} கீழ்ப்படிந்து இருப்பார்கள்.(14) இந்த மகத இளவரசன் {ஜராசந்தன்}, தனது ஊனக்கண்களாலேயே ருத்திரன் என்றும் ஹரன் என்றும் அழைக்கப்படும், திரிபுரத்தை அழித்த தேவாதி தேவனைக் {சிவனைக்} காண்பான்” என்றார் {சண்டகௌசிகர்}.(15)

ஓ எதிரிகளை அழிப்பவனே, இவை யாவும் சொன்ன அந்த முனிவர் {சண்டகௌசிகர்}, தமது சொந்த அலுவல்களை நினைத்துக் கொண்டு மன்னன் பிருஹத்ரதனுக்கு விடை கொடுத்தார்.(16) பிறகு அந்த மகதத்தின் தலைவன் {பிருஹத்ரதன்}, தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தலைநகருக்குள் நுழைந்து, ஜராசந்தனை அரியணையில் அமர்த்தினான்.(17) தனது மகன் ஜராசந்தனை அரியணையில் அமர்த்திய மன்னன் பிருஹத்ரதன் பிறகு உலக இன்பங்களை வெறுத்து, தனது மனைவியரையும் அழைத்துக் கொண்டு கானகத்திற்குச் சென்று ஒரு தவசியின் வாழ்வுமுறையை நோற்றான்.(18) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தனது தந்தையும் தாயும் கானகத்திற்கு ஓய்ந்து சென்ற பிறகு, பராக்கிரமமிக்க ஜராசந்தன் எண்ணிலடங்க மன்னர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்” {என்றான் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}.(19)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மன்னன் பிருஹத்ரதன் சிறிது காலம் கானகத்தில் தங்கியிருந்து, தவம் பயின்று, தனது மனைவியருடன் சேர்ந்து விண்ணுலகம் ஏகினான்.(20) கௌசிகரால் சொல்லப்பட்டது போல மன்னன் ஜராசந்தன், எண்ணிலடங்கா வரங்களைப் பெற்று, தனது தந்தையைப் போலவே நாட்டை ஆண்டு வந்தான்.(21) சில காலம் கழித்து மன்னன் கம்சன் வாசுதவேனால் {கிருஷ்ணனால்} கொல்லப்பட்டான். அப்போது கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் {ஜராசந்தனுக்கும்} பகை வளரத் தொடங்கியது.(22) பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, மகதத்தின் பலம் வாய்ந்த மன்னன் தனது நகரான கிரிவ்ரஜத்திலிருந்து ஒரு கதாயுதத்தை தொண்ணூற்று ஒன்பது முறை சுழற்றி, மதுராவை நோக்கி எறிந்தான்.(23) அந்த நேரத்தில் அற்புதச் செயல்களைச் செய்யும் கிருஷ்ணன் மதுராவில் தங்கியிருந்தான். ஜராசந்தனால் வீசப்பட்ட அழகிய கதாயுதம் மதுராவுக்கு அருகில், கிரிவ்ராஜாவில் இருந்து தொண்ணூற்று ஒன்பது யோஜனைகள் தொலைவில் விழுந்து கிடந்தது.(24)

சூழ்நிலையை நன்கு உணர்ந்த குடிமக்கள் கிருஷ்ணனிடம் சென்று கதாயுதம் விழுந்த செய்தியைச் சொன்னார்கள். கதாயுதம் விழுந்த இடம் மதுராவுக்கு அருகிலேயே இருந்தது. அந்த இடம் கதாவஸானம் என்று அழைக்கப்படுகிறது.(25) ஜராசந்தனுக்கு ஹம்சன் என்றும் டிம்பகன் என்று அழைக்கப்பட்ட இரு ஆதரவாளர்கள் இருந்தனர். அவர்களை எந்த ஆயுதத்தாலும் வீழ்த்த {கொல்ல} முடியாது. அரசியலிலும் நீதி அறிவியலிலும் நன்கு தேர்ச்சி பெற்ற அவர்கள் ஆலோசனைகள் வழங்கும் புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவர்களாக இருந்தார்கள்.(26) இந்த அற்புதமான இருவரைப் பற்றி நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். அந்த இருவரும் ஜராசந்தனும் சேர்ந்து மூவுலகங்களிலும் ஒப்பற்றவர்களாக இருந்தனர்.(27) ஓ வீர மன்னா {ஜனமேஜயா}, இந்தக் காரணத்தாலேயே குக்குர, அந்தக மற்றும் விருஷ்ணி குலத்தவர், கொள்கை நோக்கங்களுடன் செயல்பட்டு, அவனுடன் மோதுவது சரியல்ல என்று தீர்மானித்திருந்தனர்.” என்றார் {வைசம்பாயனர்}.(28)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading