ஜரத்காருவும் யாயாவரர்களும்! | ஆதிபர்வம் – பகுதி 13(ஆஸ்தீகப் பர்வம் – 1)-தன் மூதாதையர்களான யாயாவரர்களைக் கண்ட ஜரத்காரு; ஜரத்காருவை நிந்தித்த யாயாவரர்கள்; திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த ஜரத்காரு…
சௌனகர் {சௌதியிடம்}, “மன்னர்களில் புலியான மன்னன் ஜனமேஜயன், எக்காரணம் கொண்டு பாம்புகளின் இனத்தை அழிக்கும் குறிக்கோளுடன் வேள்வி நடத்தினான்?(1) ஓ சௌதி, முழுக்கதையையும் எங்களுக்குச் சொல்வாயாக. இருபிறப்பாளரில் சிறந்தவரும், துறவிகளில் முதன்மையானவருமான ஆஸ்தீகர், சுடர்விட்டெரியும் நெருப்பிலிருந்து பாம்புகளை ஏன் காப்பாற்றினார்?(2) அந்தப் பாம்பு வேள்வியை நடத்திய ஏகாதிபதி {ஜனமேஜயன்} யாருடைய மைந்தன்? அந்த இருபிறப்பாளரில் {பிராமணர்களில்} சிறந்தவர் {ஆஸ்தீகர்} யாருடைய மைந்தன்? எங்களுக்குச் சொல்வாயாக” என்றார்.(3)
சௌதி, “ஓ பேச்சாளர்களில் சிறந்தவரே, இந்த ஆஸ்தீகரின் கதை மிக நீண்டதாகும். நான் உள்ளபடிக்கு முழுவதும் சொல்கிறேன் கேட்பீராக” என்றார்.(4)
சௌனகர், “அந்தப் புகழ்பெற்ற பிராமணரான ஆஸ்தீக முனிவரின் அழகான கதையை முழுவதும் கேட்க ஆவலாக உள்ளேன்” என்றார்.(5)
சௌதி சொன்னார், “கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} (முதலில்) ஓதப்பட்ட இந்த வரலாற்றை, புராணம் என்றும் பிராமணர்கள் கூறுவார்கள். இதற்கு முன், என் தந்தையும், வியாசரின் சீடருமான ரோமஹர்ஷணர்[1] (ஜனமேஜயன் வேள்வியில் மகாபாரதம் உரைத்த வைசம்பாயனரும், நைமிசாரண்யத்தில் மகாபாரதம் உரைத்த சௌதியின் தந்தை ரோமஹர்ஷணரும் வியாசரின் சீடர்கள் என்றால் இரண்டுக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளியே உள்ளது என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது. அஃது அவ்வாறு ஒரு தலைமுறை இடைவெளி அல்ல, பல தலைமுறைகள் இடைவெளி கொண்டது. சௌதி மிக நீண்ட ஆயுள் படைத்தவர். அவரை ஒரு தலைமுறை என்று கொள்ளக்கூடாது என்ற கருத்தும் இருக்கிறது..)நைமிசாரண்யவாசிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இஃதை அவர்களுக்கு ஓதியிருக்கிறார்.(6,7) அப்படி ஓதப்பட்ட போது, நானும் அங்கே இருந்தேன். ஓ சௌனகரே, நீர் கேட்டுக் கொண்டதால், ஆஸ்தீகரின் வரலாற்றை நான் கேட்டவாறே சொல்லப் போகிறேன்.(8) பாவங்களை அழிக்கும் கதையைச் நான் முழுவதுமாகச் சொல்லும்போதே கேட்பீராக.
ஆஸ்தீகரின் தந்தை, பிரஜாபதியை {பிரம்மனைப்} போன்ற சக்தி படைத்தவர்.(9) அவர் தவத்தில் உறுதிமிக்க ஒரு பிரம்மச்சாரி. காமத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்த மிகப்பெரிய துறவியான அவர், சிறிதளவே உண்பார். அவர் ஜரத்காரு என்ற பெயரால் அறியப்பட்டிருந்தார்.(10) யாயாவரர்களில் முதன்மையான அவர் {ஜரத்காரு}, ஒழுக்கமானவர்; கடுமையான விரதங்களை நோற்பவர்; பெரும் ஆன்மசக்திகளைக் கொண்டவர், மிகச்சிறந்த முறையில் அருளப்பட்டவராவார்.(11) அவர் ஒரு முறை உலகம் முழுவதும் பயணம் செய்தார். பலவகைப்பட்ட இடங்களுக்குச் சென்றார்; பலவகைப்பட்ட புனித ஆறுகளில் நீராடினார். பொழுது எங்கே இருட்டுகிறதோ அங்கே இளைப்பாறினார்.(12) பெரும் சக்தி கொண்ட அவர், ஆத்மாவை {மனதை} அடக்காத மனிதர்களால் செய்யமுடியாத கடுமையான விரதங்களை நோற்றார். அவர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தார். தூக்கத்தை எப்போதும் துறந்தார்.(13)
அப்படிப் பிரகாசமான நெருப்பு போல் அவர் திரிந்து கொண்டிருந்த போது, ஒருநாள் ஒரு பெரிய குழிக்குள் தனது மூதாதையர்கள் தலைகீழாகவும் கால்மேலாகவும் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களைக் கண்டதும், ஜரத்காரு,(14,15) “அனைத்துப் பக்கங்களிலும் எலி கடிக்கப்படும் விரானா {விலாமிச்சை} மர நாறுகளில் {வைக்கோலில்}, யாரும் அறியாதவாறு இந்தக் குழிக்குள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார்?” என்று கேட்டார்.(16)
அதற்கு மூதாதையர்கள், “நாங்கள் கடுந்தவங்களைச் செய்த யாயாவர முனிவர்கள் ஆவோம். சந்ததி இல்லாததால் நாங்கள் பூமிக்குள் புதைந்து கொண்டிருக்கிறோம்.(17) எங்களுக்கு ஜரத்காரு என்று ஒரு மகன் இருக்கிறான். அவனால்தான் எங்களுக்குக் கேடு வந்தது. அந்த மோசமானவன் தவம் மற்றும் சடங்குகளில் மட்டும் நாட்டம் கொண்டு அலைகிறான்.(18) அந்த மடையன் திருமணம் செய்து கொண்டு சந்ததியைப் பெருக்கவில்லை. அவனால் {ஜரத்காரு}, எங்கள் குலம் அழியப்போகிறது. அதனால்தான் நாங்கள் இந்தக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.(19) வழியிருந்தும் இல்லாத பேறிலிகளைப் {அதிர்ஷ்டமற்றவர்களைப்} போல நாங்கள் இருக்கிறோம். ஓ அருமையானவரே, எங்களுக்கு நண்பர் போல் வந்து எங்களுக்காக வருந்தும் நீர் யார்?(20) ஓ பிராமணரே, எங்கள் அருகில் நிற்கும் நீர் யார் என்பதை அறிய விரும்புகிறோம். எங்களைப் போன்ற பேறிலிகளுக்காக நீர் ஏன் வருந்துகிறீர்?” என்று கேட்டனர்.(21)
ஜரத்காரு, “நீங்களே எனக்குத் தாத்தனும் பாட்டனும் ஆவீர்கள். நானே அந்த ஜரத்காரு ஆவேன். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்றார்.(22)
அதற்கு அந்த மூதாதையர்கள், “ஓ குழந்தாய் {ஜரத்காரு}, ஒரு மகனைப் பெற்று, நமது பரம்பரையின் நீட்சிக்கு உன்னால் முடிந்ததை முயற்சி செய்வாயாக. அப்படிச் செய்தாயானால், நீ உனக்கும், எங்களுக்கும் பெரிய நன்மையைச் செய்தவனாவாய்.(23) குழந்தைக்குத் தகப்பனாவதில் கிடைக்கும் பலனை, சிறந்த ஒழுக்கத்தாலும், தவங்களைக் கடைப்பிடிப்பதாலும் கூட ஒருவன் அடைய முடியாது.(24) எனவே, ஓ குழந்தாய், இஃது எங்கள் உத்தரவு. திருமணம் செய்து குழந்தைப் பெறுவதில் உன் இதயத்தை நிறுத்துவாயாக {மனதைச் செலுத்து}. இதுவே நீ எங்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி ஆகும்” என்றனர்.(25)
ஜரத்காரு, “எனக்காக நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது இன்பத்திற்காக நான் செல்வம் ஈட்ட மாட்டேன். உங்களின் நலனுக்காகவே அவற்றைச் செய்யப் போகிறேன்.(26) இந்தப் புரிதலின் அடிப்படையில், முக்தி பெறுவதற்காகவே, சாத்திரங்களுக்கு உட்பட்டு ஒரு மனைவியைப் பெறப் போகிறேன். நான் இதற்குப் புறம்பாக நடக்க மாட்டேன். எனது பெயரையே கொண்ட ஒரு மணப்பெண்ணை, அவளது உற்றார் {உறவினர்கள்}, முழு மனதுடன் எனக்குப் பிச்சைப் பரிசாகத் தர வேண்டும். அப்படிப்பட்டவளையே நான் மணமுடிப்பேன்.(27-28) ஆனால் என்னைப் போன்ற ஓர் ஏழைக்கு எந்த மனிதன் தன் பெண்ணைக் கொடுப்பான்? ஆனால் பிச்சையாகக் கொடுக்கப்படும் எந்தப் பெண்ணையும் நான் ஏற்பேன்.(29) இதன்படியே நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முயல்வேன். நான் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டு அதற்கு மாறாக எப்போதும் நடக்க மாட்டேன். உங்களை மீட்டு, நிலைபெற்ற இன்ப உலகங்களுக்கு அனுப்புவதற்காக நான் அந்தப் பெண்ணிடம் சந்ததியை உண்டாக்குவேன்” என்றார் {ஜரத்காரு}” {என்றார் சௌதி}.(30,31).
வாசுகியின் தங்கை பெயரும் ஜரத்காரு! | ஆதிபர்வம் – பகுதி 14(ஆஸ்தீக பர்வம் – 2)தனக்கான மணப்பெண்ணைத் தேடி உலகம் முழுவதும் அலைத்த ஜரத்காரு; வாசுகி என்ற பாம்பு தன் தங்கையை ஜரத்காருவுக்கு அளிக்கச் சம்மதித்தது; ஜரத்காருவின் திருமணம்…
சௌதி சொன்னார், “அந்தக் கடுமையான விரதங்களை மேற்கொள்ளும் பிராமணன் {ஜரத்காரு}, உலகம் முழுதும் தேடி அலைந்தும் மனைவி கிடைத்தாளில்லை.(1) ஒருநாள், அடர்ந்த கானகத்தின் ஆழத்திற்குள் சென்று, தனது மூதாதையர் சொன்னதை நினைவுகூர்ந்து, மெல்லிய குரலில் தனக்கு மனைவி வேண்டும் என்று மூன்று முறை வேண்டினார்.(2) அப்பொழுது வாசுகி {என்ற பாம்பு மன்னன்} எழுந்து, தனது தங்கையை {மனைவியாக} ஏற்றுக்கொள்ள அந்த முனிவருக்கு {ஜரத்காருவிற்குக்} கொடுத்தான். ஆனால், அந்தப் பிராமணர் அவளுக்கும் தனது பெயர் {ஜரத்காரு என்று} இருக்காது என்று நினைத்து அவளைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினார்.(3) அந்த உயரான்ம ஜரத்காரு தனக்குள் ‘எனது பெயரில்லாத எந்தப் பெண்ணையும் நான் ஏற்க மாட்டேன்’ என நினைத்துக் கொண்டு,(4) வாசுகியிடம், “ஓ பாம்பே, உனது தங்கையின் பெயர் என்ன என்ற உண்மையைக் கூறுவாயாக” என்று கேட்டார் {ஜரத்காரு}.(5)
வாசுகி, “ஓ ஜரத்காரு, இவள் எனது தங்கையாவாள், இவளது பெயரும் ஜரத்காருவே. இந்தக் கொடியிடை மங்கையை உமது மனைவியாக நான் உமக்குக் கொடுக்கிறேன்; ஏற்றுக்கொள்வீராக. ஓ பிராமணர்களில் சிறந்தவரே, உமக்காகவே இவளை வளர்த்தேன். அதனால் இவளை ஏற்றுக் கொள்வீராக” என்று கூறி தன் அழகான தங்கையைக் கொடுத்தான். பின் ஜரத்காருவும் அவளை உரிய சடங்குகளுடன் மணம் செய்து கொண்டார். {என்றார் சௌதி}.(6,7)
பெண் பாம்பை மணந்த ஜரத்காரு! | ஆதிபர்வம் – பகுதி 15(ஆஸ்தீக பர்வம் – 3)பாம்புகளின் தாய் கத்ரு அளித்த சாபத்தில் இருந்து விடுபடவே வாசுகி தனது தங்கையை ஜரத்காருவுக்குத் திருமணம் செய்து கொடுத்தான் எனச் சௌதி சொல்லும் பீடிகை; ஆஸ்திகரின் வரலாறு சுருக்கமாக…
சௌதி சொன்னார், “பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையானவர்களே, முன்பொரு சமயம் பாம்புகளின் தாய் {கத்ரு}, “காற்றைத் தேரோட்டியாகக் கொண்டவன் (அக்னி), ஜனமேஜயன் வேள்வியில் உங்களைச் சுட்டெரிப்பான்” என அந்தப் பாம்புகளைச் சபித்தாள்.(1) அந்தச் சாபத்தைச் சமன்செய்யவே {சாபத்தின் கொடுமையைத் தணிக்கவே} அந்தப் பாம்புகளின் தலைவன் {வாசுகி}, உயர்ந்த நோன்புகளை நோற்ற அந்த உயரான்ம முனிவருக்குத் {ஜரத்காருக்குத்} தனது தங்கையைக் {ஜரத்காருவை மணமுடித்து} கொடுத்தான்.(2) அந்த முனிவரும் {ஜரத்காருவும்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டிருக்கும் முறையான சடங்குகளுடன் அவளை மணமுடித்தார். அவர்களுக்கு மகனாக உயரான்ம ஆஸ்தீகர் பிறந்தார்.(3) வேதங்களிலும் அதன் கிளைகளிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த அந்தப் புகழ்பெற்ற முனிவர் {ஆஸ்தீகர்} அனைத்திலும் சமமான கண்ணோட்டம் கொண்டவராக, தனது பெற்றோர் இருவரின் அச்சத்தையும் போக்கினார்.(4)
வெகு காலத்திற்குப் பிறகு, பாண்டவ வழியில் வந்த ஒரு மன்னன் {ஜனமேஜயன்} ஒரு பெரிய வேள்வியை நடத்தினான்.(5) அந்த {நாக} வேள்வி பாம்புகளின் அழிவிற்காக நடத்தப்பட்ட போது ஆஸ்தீகர், தனது சகோதரர்களும், தாய்வழி மாமன்களுமான அந்தப் பாம்புகளையும் மற்ற பாம்புகளையும் (நெருப்பு மரணத்திலிருந்து) காப்பாற்றினார். {ஜரத்காரு} தான் பிள்ளைப்பேறு பெற்றதால் அவரது மூதாதையர்களையும் விடுவித்தார்.(6,7) ஓ பிராமணரே {சௌனகரே}, {ஜரத்காரு} தனது கடுமையான விரதங்களாலும், தவத்தாலும், ஆழ்ந்த வேத கல்வியினாலும், தனது கடன்கள் அனைத்திலுமிருந்து விடுபட்டார். வேள்விகளால் தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்து, பிரம்மச்சரியத்தால் முனிவர்களை மனநிறைவு கொள்ளச் செய்து, பிள்ளைப்பேறு பெற்றதால் தனது மூதாதையர்களையும் {யாயாவரர்களையும்} மனநிறைவு கொள்ளச் செய்தார்.(8,9)
இப்படியாகக் கடுமையான நோன்புகளை நோற்றவரான ஜரத்காரு, தனது மூதாதையர்களின் {யாயாவரர்களின்} தளையை விடுவித்து அவர்களுக்குத் தான் பட்டிருந்த பெருங்கடனைத் தீர்த்தார்.(10) இப்படிச் சிறந்த அறத்தைப் புரிந்த ஜரத்காரு, தனது மைந்தன் ஆஸ்தீகரை {சந்ததிக்காக} விட்டு பல வருடங்கள் கழித்து மேலுலகம் சென்றார். இதுவே ஆஸ்திகரின் கதை [1]; (ஜரத்காருவின் கதை இங்கே {ஆதிபர்வத்தின் பகுதிகள் 13 முதல் 15 வரை} சுருக்கமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ஆதிபர்வத்தின் பகுதிகள் 45 முதல் 48 வரை விரிவாக மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது.)நான் உள்ளபடியே சொல்லிவிட்டேன். ஓ பிருகு குலத்தின் புலியே {சௌனகரே}, இன்னும் வேறு என்ன நான் சொல்ல வேண்டும்” {என்றார் சௌதி}.(11)
அன்னையைச் சபித்த அருணன்! | ஆதிபர்வம் – பகுதி 16(ஆஸ்தீக பர்வம் – 4)ஆஸ்தீகரின் வரலாற்றைச் சௌதியிடம் கேட்ட சௌனகர்; அதற்கு முன்னோட்டமாகக் கசியபரின் மனைவிகளான கத்ரு மற்றும் வினதையின் கதையைச் சொல்ல ஆரம்பித்த சௌதி; பாம்புகளைப் பெற்ற கத்ரு; தன் இரு முட்டைகளில் ஒன்றை உடைத்த வினதை; ஊனத்துடன் பிறந்த அருணன்; தாயைச் சபித்த அருணன்; கருடன் பிறப்பு .
சௌனகர், “ஓ சௌதி, கற்றவரும், அறம்சார்ந்தவருமான ஆஸ்தீகரின் வரலாற்றை விரிவாக மேலும் விளக்குவாயாக. அதை அறியும் ஆவல் எங்களுக்கு அதிகமாக உள்ளது.(1) ஓ தகுதியானவனே {மலர்ந்த முகத்தை உடையவனே}, இனிமையாகவும், சரியான உச்சரிப்புடனும் நீ பேசுகிறாய்; நாங்கள் உனது பேச்சால் பெரும் மனநிறைவை அடைந்துள்ளோம். நீயும் உனது தந்தை {ரோமஹர்ஷணர்} போலவே பேசுகிறாய்.(2) உன் தந்தை {ரோமஹர்ஷணர்}, எங்களை மனநிறைவு கொள்ளச் செய்ய எப்போதும் சித்தமாகவே இருப்பார். உனது தந்தை {ரோமஹர்ஷணர்} உன்னிடம் சொன்னவாறே அந்தக் கதையை விவரிப்பாயாக” என்று கேட்டார் {சௌனகர்}.(3)
சௌதி சொன்னார், “ஓ வெகுகாலம் வாழும் ஆசி கொண்டவர்களே, எனது தந்தையிடம் {ரோமஹர்ஷணரிடம்} கேட்டவாறே ஆஸ்தீகரின் வரலாற்றை விவரிக்கிறேன்.(4) ஓ பிராமணரே {சௌனகரே}, பொற்காலத்தில், பிரஜாபதிக்கு {தஷனுக்கு} இரு பெண் மக்கள் இருந்தனர். ஓ பாவமற்றவரே {சௌனகரே}, அந்தப் பெண்மக்கள் இருவரும் மிகுந்த அழகுடன் இருந்தனர்.(5) கத்ரு என்றும், வினதை என்றும் பெயர் கொண்ட அந்த இருவரும் கசியபருக்கு மனைவிகளாகினர்.(6) தமது இரு மனைவியரால் {கத்ரு, வினதையால்} கசியபர் பெரும் இன்பத்தை அடைந்தார். நிறைவடைந்த {திருப்தியடைந்த} அவர், பிரஜாபதியைப் {பிரம்மாவைப்} போல அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் தருவதாகச் சொன்னார். தங்கள் தலைவன் தாங்கள் விரும்பிய வரத்தைத் தருவதாகச் சொன்னது கேட்டு அந்த இருமனைவியரும் {கத்ரு, வினதை} மிகவும் அகமகிந்தனர். கத்ரு, சம ஆற்றல் கொண்ட ஆயிரம் பாம்புகள் தனக்கு மகன்களாக வேண்டும் என்று விரும்பினாள்.(7,8) வினதையோ, கத்ருவின் அந்த ஆயிரம் பிள்ளைகளின் வல்லமையை (பலம், ஆற்றல், உருவம், வீரம் ஆகியவற்றில்) விஞ்சும் இரு மகன்கள் வேண்டும் என்று விரும்பினாள்.(9)
கத்ருவிற்கு அவளது தலைவன் பல குழந்தைகள் பெறும் வரத்தைக் கொடுத்தார். வினதையிடமும் கசியபர், “அப்படியே ஆகட்டும்” என்றார்.(10) வினதை தனது வேண்டுதல் நிறைவேறியதில் பெருமகிழ்ச்சி அடைந்தாள். ஆற்றலில் முதன்மையான இரு புதல்வர்களைப் பெற்று தனது வரம் நிறைவடைந்தது என்று மனநிறைவு கொண்டாள்.(11) கத்ருவும் தனது வேண்டுதலான ஆயிரம் மகன்களை அடைந்தாள். “உங்கள் கருக்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, வரத்தால் மகிழ்ந்த தனது மனைவியர் இருவரிடமும் கூறிவிட்டுக் கானகத்திற்குச் சென்றார். {கசியபர்}.”(12)
சௌதி தொடர்ந்தார், “இருபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {சௌனகரே}, வெகு காலத்திற்குப் பிறகு, கத்ரு ஆயிரம் முட்டைகளையும், வினதை இருமுட்டைகளையும் இட்டனர்.(13) அவர்களது பெண் பணியாட்கள், அந்த முட்டைகளைத் தனியாக வெதுவெதுப்பான பாத்திரங்களில் வைத்தனர். ஐநூறு {500} வருடங்கள் இப்படியே சென்றன.(14) கத்ருவால் இடப்பட்ட ஆயிரம் முட்டைகளும் வெடித்து, குஞ்சுகள் வெளியே வந்தன. ஆனால் வினதையின் இரட்டையர்கள் வெளிப்படவில்லை.(15)
பொறாமையால் உந்தப்பட்ட வினதை, தனது முட்டையில் ஒன்றை உடைத்தாள். மேலே வளர்ச்சியடைந்து, கீழே வளர்ச்சியடையாமல் {கால்கள் இல்லாமல்} இருந்த தன் கருவைக் கண்டாள். இதனால் அந்த முட்டையிலிருந்த குழந்தை {அருணன்} கோபம் கொண்டு,(16,17) “காலங்கனியும் முன்பே முட்டையை உடைத்ததால், நீ அடிமையாகச் சேவகம் செய்வாய். ஐநூறு வருடங்கள் பொறுத்திருப்பாயாக. உனது பொறுமையின்மையால் இன்னொரு முட்டையை உடைத்து அதை அழிக்காமலோ அல்லது பாதி வளர்ந்ததாய் ஆக்காமலோ இருந்தாயானால், அதிலிருந்து வரும் புகழ்பெற்ற குழந்தை உன்னை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பான். அந்தக் குழந்தை பலம்பெற முட்டையை அந்தக் காலம் வரை பத்திரமாகப் பாதுகாத்திருப்பாயாக”(18-21) என்று தனது தாய்க்கு {வினதைக்கு} சாபமிட்ட அந்தக்குழந்தை {அருணன்} வானத்துக்குப் பறந்தான்.
ஓ பிராமணரே, அவனே {அருணனே} காலையில் முதல் மணி நேரத்தில் தெரியும் சூரியனின் சாரதியாவான்! அதன்பிறகு ஐநூறு ஆண்டுகள் கடந்ததும், மீதமிருந்த மற்றொரு முட்டையை உடைத்துக் கொண்டு, பாம்புகளை உண்பவனான கருடன் வெளிப்பட்டான்.(22,23) ஓ பிருகு குலத்தின் புலியே {சௌனகரே}, ஒளியைக் கண்டதுமே, வினதையின் மகன் {கருடன்} தனது தாயை விட்டுப் பிரிந்தான். அந்தப் பறவைகளின் தலைவன் {கருடன்}, பசியை உணர்ந்து கட்டளையிடுபவர்களில் சிறந்தவரால் {பிரம்மனால்} தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் உணவைத் தேடி பறந்தான்”. {என்றார் சௌதி}.(24)
மேரு மலையில் தேவர்கள் தவம்! | ஆதிபர்வம் – பகுதி 17(ஆஸ்தீக பர்வம் – 5)உச்சைஸ்வரவம் குறித்து விளக்கிய சௌதி; கடல் கடைந்த காரணத்தைக் கேட்ட சௌனகர்; அமுதத்திற்காக மேரு மலையில் தவமிருந்த தேவர்கள்; கடலைக் கடையச் சொன்ன நாராயணன்…
சௌதி சொன்னார், “ஓ துறவியே, அந்தச் சமயத்தில் அந்த இரு சகோதரிகளும் {கத்ருவும், வினதையும்} கடலைக் {பாற்கடலைக்} கடையும் போது எழுந்ததும், தேவர்களால் வழிபடப்படுவதும், குதிரைகளின் ரத்தினமுமான {குதிரைகளின் அரசனான} தெய்வீகக் குதிரை உச்சைஸ்ரவஸ் அருகில் அணுகுவதைக் கண்டனர். தெய்வீகமானதும், அருள்நிறைந்ததும், அழியா இளமை கொண்டதும், படைப்புகளில் தலையாயப் படைப்பானதும், அடக்க முடியாத வீரியம் கொண்டதும், அனைத்து நற்குறிகளும் கொண்டதுமாக அந்தக் குதிரை {உச்சைஸ்ரவம்} அருளப்பட்டு இருந்தது”(1-3)
சௌனகர் {சௌதியிடம்}, “தேவர்கள் ஏன் அமுதத்துகாகக் கடலைக் கடைந்தனர்? பலம்பொருந்தியவனும் காந்திமிக்கவனுமான அந்தக் குதிரைகளில் சிறந்தவன் {உச்சைஸ்ரவன்} எப்போது, எச்சந்தர்ப்பத்தில் தோன்றினான்?” என்று கேட்டார்.(4)
சௌதி சொன்னார், ’ஒளிக்குவியல் போன்று பிரகாசிப்பதும், மேரு என்றழைக்கப்படுவதுமான ஒரு மலை இருந்தது. அதன் சிகரங்களில் விழும் தங்கம் போன்ற சூரிய ஒளியை அது பிரதிபலித்தது.(5) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் {அலங்கரிக்கப்பட்டது போல் இருப்பதும்} மிக அழகானதுமான அதில் தேவர்களும், கந்தர்வர்களும் உலவுவர். பாவங்கள் நிறைந்த மனிதர்களால் அந்த மலையை நெருங்கக்கூட முடியாது.(6) பயங்கரமான விலங்குகள் அந்த மலையின் சாரலில் அலைந்து கொண்டிருந்தன.(7) அது பல மூலிகைகளால் ஒளிவீசுவதாக விளங்கியது. அது சொர்க்கத்தை முத்தமிடுவது போன்ற உயரத்துடன், மலைகளிலேயே முதன்மையானதாக விளங்கியது. சாதாரண மக்கள் அந்த மலையில் ஏறச் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாது. (8)
அந்த மலை மரங்களாலும், அருவிகளாலும் அருளப்பட்டு, இனிய குரலில் மெல்லிசை பாடும் பறவைகளை எதிரொலித்துக்கொண்டு இருந்தது. ஒருமுறை தேவர்கள் அந்த மலையின் சிகரத்திலே ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சபையிலே அமர்ந்திருந்தனர்.(9) தவங்களைப் பயின்றவர்களும், அமுதத்திற்காக அற்புத நோன்பிருந்தவர்களுமான அவர்கள், அப்போது அமுதத்தை அடைய மிகுந்த ஆவலுடன் இருந்தனர். தேவர்களின் சபையானது கவலையில் இருப்பதைக் கண்ட நாராயணன் பிரம்மனிடம்,(10,11) “தேவர்களையும் அசுரர்களையும் கொண்டு அந்தக் கடலைக் கடையச் செய்யும். அப்படிச் செய்தால், அதில் அமுதமும், மருந்துகளும், ரத்தினங்களும் கிடைக்கும்” {என்று சொல்லிவிட்டுத் தேவர்களிடம்}, “ஓ தேவர்களே! கடலைக் கடையுங்கள், அமுதத்தைக் கண்டடைவீர்கள்” என்றான்.”(12-13)
காலகூட நஞ்சையுண்ட மகேஸ்வரன்! | ஆதிபர்வம் – பகுதி 18(ஆஸ்தீக பர்வம் – 6)மந்தர மலையைப் பெயர்த்தெடுத்த அனந்தன் என்ற பாம்பு; கடைவதற்காகப் பெருங்கடலை வேண்டிய தேவர்கள்; ஆமையின் முதுகில் மந்தர மலையை வைத்தது; வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி மந்தர மலையைக் கொண்டு அந்தப் பெருங்கடலைக் கடைந்த தேவர்களும், அசுரர்களும்; கடைந்ததில் இறுதியாக வந்த காலகூட நஞ்சு; பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை விழுங்குவது; பெண்ணுரு கொண்ட நாராயணன்…
“சௌதி சொன்னார், “மேகம்போன்ற முகடுகளைக் கொண்டதும், மந்தரம் என்றழைக்கப்பட்டதுமான ஒரு மலை இருந்தது. அந்தச் சிறந்த மலையெங்கும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்ட மூலிகைகள் நிறைந்திருந்தன.(1) எண்ணற்ற பறவைகள் தங்கள் மெல்லிசைகளை எழுப்பியும், விலங்குகள் இரையைத் தேடியும் அலைந்து கொண்டிருந்தன. தேவர்கள், அப்சரஸ்கள் மற்றும் கின்னரர்கள் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.(2) பதினோராயிரம் யோஜனைகள்[1] (அதாவது 88,000 மைல்கள் {1 யோஜனை = 8 மைல்கள்} மேலெழுந்தவாரியாக – புவி ஓட்டுக்கு மேல் தெரியும் பகுதி, கீழிறங்கியவாறு – பூமிக்குள் புதைந்து அமைந்த பகுதி)மேலெழுந்தவாரியும், அதே அளவு {சம பங்கு} கீழிறங்கியவாறும் அஃது இருந்தது.(3) தேவர்கள் கடலைக் கடையும் மத்தாக அந்த மலையைப் பயன்படுத்த எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றுத் தோற்றனர். ஆகவே அவர்கள், ஒன்றாக அமர்ந்திருந்த விஷ்ணு மற்றும் பிரம்மனிடம்,(4) “எங்கள் நன்மைக்காக இந்த மலையை எப்படிப் பெயர்த்தெடுப்பது என்று ஆலோசனை வழங்குவீராக” என்று வேண்டினர்.”(5)
சௌதி தொடர்ந்தார், “ஓ பிருகு குல மைந்தரே{சௌனகரே}! விஷ்ணுவும் பிரம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
அந்தத் தாமரைக்கண்ணன் (விஷ்ணு), கடினமான அவ்வரும்பணியைப் பாம்புகளின் இளவரசனான அனந்தனுக்குக் {திருமாலின் படுக்கையான ஆதிசேஷன் என்ற பாம்புக்கு} கொடுத்தான்.(6) ஓ பிராமணரே {சௌனகரே}, பிரம்மனாலும், நாராயணனாலும் அறிவுறுத்தப்பட்ட அந்தப் பலம்பொருந்திய அனந்தன், அந்த மலையை, அதன் கானகங்களுடனும், அவற்றில் வசித்த உயிர்களுடனும் பெயர்த்தெடுத்தான்.(7,8) தேவர்கள், கடலின் கரைக்கு அனந்தனுடன் வந்து, பெருங்கடலிடம் {சமுத்திரத்திடம்}, “ஓ கடலே! நாங்கள் உன்னைக் கடைந்து, அமுதத்தை எடுக்க வந்துள்ளோம்” என்றனர்.(9) அதற்கு அந்தப் பெருங்கடல், “அப்படியே ஆகட்டும், ஆனால் கிடைப்பனவற்றில் எனக்கும் பங்கு வேண்டும். கடையும்போது, அந்த மலையின் சுழற்சியால் ஏற்படும் கலக்கத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியும்” என்றது.(10) அதன்பிறகு தேவர்கள், ஆமை மன்னனிடம் {திருமாலின் கூர்ம அவதாரம்} சென்று, “ஓ ஆமை மன்னா! நீ அந்த மலையை உன் முதுகில் தாங்கிக் கொள்ள வேண்டும்” என்றனர்.(11) ஆமை மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டதால், இந்திரன் மந்தர மலையை முன்னவனின் {ஆமையின்} முதுகில் வைக்கச் செய்தான்.(12)
தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாக வடித்து, வாசுகியை (பாம்பினை) கயிறாகப் பயன்படுத்தி, அமுதத்துக்காக அந்தக் கடலைக் கடைய ஆரம்பித்தனர். அசுரர்கள் வாசுகியின் தலைப் பக்கம் பிடித்துக் கொண்டனர், தேவர்கள் அவனது வால்பக்கம் பிடித்துக் கொண்டனர்.(13,14) அனந்தன், தேவர்களின் பக்கம் நின்று {தேவர்களின் நன்மைக்காக} வாசுகியின் தலையை உயர்த்துவதும், திடீரெனத் தாழ்த்துவதுமாக இருந்தான்.(15) தேவர்களும் அசுரர்களும் இழுத்த இழுப்பில், வாசுகியின் வாயிலிருந்து கரும்புகை நெருப்புடன் வெளிப்பட ஆரம்பித்தது.(16) அந்தப் புகை மேகமாக மாறி, இடி மின்னலுடன் கூடிய மழையைப் பொழிந்து களைத்துப் போன தேவர்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தது.(17) மத்தாகச் சுழன்ற மந்தர மலையில் இருந்து அனைத்துப் பக்கங்களிலும் விழுந்த மலர்களும் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.(18)
ஓ பிராமணரே! {சௌனகரே}, கடலில் இருந்து ஒரு கடுமையான முழக்கம் கேட்டது. அஃது ஊழிக் காலத்தில் மேகங்கள் இடும் முழக்கத்திற்கு ஒப்பானதாக இருந்தது.(19) பெரிய நீர் விலங்குகள் அந்தப் பெரிய மலையின் சுழற்சியால் அந்த உப்பு நீரிலேயே தமது உயிரை விட்டன.(20) பாதாள உலகில் வசிப்பவர்களும், வருணனின் உலகில் வசித்தவர்களும் கொல்லப்பட்டனர்.(21) மந்தர மலை சுழன்று கொண்டிருக்கும்போது அதன் மீதிருந்து பறவைகளுடன் கூடிய பெரிய மரங்களும் வேருடன் பிடுங்கப்பட்டு நீருக்குள் விழுந்தன.(22) மேலும் பல மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து அவ்வப்போது நெருப்பை உண்டாக்கின. அப்படி அந்த மலை மின்னலுடன் கூடிய கருமேகம் போல் காட்சியளித்தது. (23) ஓ பிராமணரே! {சௌனகரே}, நெருப்புப் பரவி சிங்கங்களும், யானைகளும், மற்ற உயிரினங்களும் அதில் சாம்பலாகின.(24) பிறகு இந்திரன் பெரும் மழையைப் பொழிந்து அந்த நெருப்பை அடக்கினான்.(25)
ஓ பிராமணரே! {சௌனகரே}, இப்படியே கடைந்துகொண்டு சிலகாலம் ஆனதும், மரங்களின் பாலும் அமுதத்தின் தன்மை கொண்ட மூலிகைகளும் ஒன்றாகக் கலந்து அந்தக் கடலில் கலந்தது.(26) தேவர்கள், அந்தக் கூழுடனும், தங்கச்சாற்றுடனும் {தங்கரஸத்துடனும்} கலந்த நீரைக் குடித்தே அமரத்துவம் அடைந்தனர்.(27) கொந்தளித்த கடலின் பால் போன்ற நீர் {கொந்தளித்த அந்தப் பாற்கடல்} நன்றாகக் கடையப்பட்டு அந்தக் கூழான சாற்றின் தன்மையால் தெளிந்த நெய்யைப் போன்று காட்சியளித்தது. ஆனால் அப்போதும் அமுதம் தோன்றவில்லை.(28) தன் ஆசனத்தில் அமர்ந்திருந்த வரங்கொடுக்கும் பிரம்மன் முன்பு தேவர்கள் வந்து, “தகப்பனே, நாங்கள் களைப்படைந்தோம். மேலும் கடைவதற்கு எங்களிடம் பலம் இல்லை. அமுதம் இன்னும் உதிக்கவில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. நாராயணனைத் தவிர எங்களுக்கு வேறு ஆதாரம் இல்லை {உதவுபவர் வேறு ஒருவருமில்லை}” என்றனர்.(29,30)
“இதைக் கேட்டதும் பிரம்மன், நாராயணனிடம், “ஓ தெய்வமே! தேவர்களுக்கு மீண்டும் கடலைக் கடைவதற்கான பலத்தை அருள்வாயாக” என்றான்.(31)
பிறகு நாராயணன் அவர்களது பல்வேறு வேண்டுதல்களை {பிரார்த்தனைகளை} நிறைவேற்ற உறுதிகூறி, “ஞானமுள்ளவர்களே, போதிய பலத்தை உங்களுக்குத் தருகிறேன். போய் மலையை மீண்டும் சரியான இடத்தில் வைத்து நீரைக் கடையுங்கள்” என்றார்.(32)
அப்படிப் பலத்தை மீண்டும் பெற்ற தேவர்கள் திரும்பவும் கடையத் தொடங்கினர்.(33) சிறிது காலத்திற்குப் பிறகு மென்மையான ஆயிரங்கதிர்களுடன் நிலவு (சந்திரன்) கடலில் இருந்து உதித்தான்.(34)
வெண்மையான உடையுடன் லட்சுமியும், அதன் பிறகு சோமமும், அதன்பிறகு வெள்ளைக் குதிரையும்,(35) அதன்பிறகு நாராயணனின் மார்பை அலங்கரிக்கும் தெய்வீக ரத்தினமான கௌஸ்துபமும் வெளிப்பட்டன.(36) லட்சுமி, சோமம், மனத்தின் வேகங்கொண்ட குதிரை என அனைவரும், மகிழ்ச்சியுடன் இருந்த தேவர்கள் முன்னிலையில் வந்தனர்.(37,38) அதன்பிறகு அமுதம் கொண்ட வெள்ளைப் பாத்திரத்தோடு தன்வந்தரி உதித்தான்.(39) அவனைப் பார்த்ததுமே, அசுரர்கள் “அஃது எங்களுடையது” என்று பெரிதும் கூச்சலிட்டனர்.(40)
நீண்ட நேரத்திற்குப் பிறகு, சிறந்த யானையான ஐராவதன், இரு ஜோடி வெள்ளைத் தந்தங்களுடனும், பெருத்த உடலுடனும் தோன்றினான். அவனை இடிக்குத் தலைவனான இந்திரன் எடுத்துக்கொண்டான்.(41) கடைதல் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாகக் காலகூட {ஹாலாஹலம் என்ற} நஞ்சு வெளிப்பட்டது[2].(42) (காலகூட நஞ்சுதான் முதலில் தோன்றியது என்று சொல்லும் பதிப்புகளும் இருக்கின்றன. அவையே சரியானதாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அமுதம் முதலிலேயே கிடைத்துவிட்டால், பிறகும் ஏன் கடலைக் கடைய வேண்டும்)புகையுடன் கூடிய நெருப்புடன் அஃது உலகத்தையே விழுங்கிவிடுவது போலத் தகித்தது. பயத்தைத் தரும் காலகூடத்தின் மணத்தை நுகர்ந்தே மூன்று உலகங்களும் உணர்விழந்தன.
படைக்கப்பட்டவற்றின் பாதுகாப்புக்காக, பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை எடுத்து விழுங்கினான்.(43) அந்தத் தெய்வீகமான மகேஸ்வரன் {சிவன்}, அந்த நஞ்சைத் தனது தொண்டையில் நிறுத்தினான். ஆகையால் அதுமுதல் அவன் நீலகண்டன் (நீல நிற தொண்டையுள்ளவன்) என அழைக்கப்படுகிறான் என்று சொல்லப்படுகிறது.(44) இந்த அற்புதமான நிகழ்வுகள் அனைத்தையும் கண்ட அசுரர்கள் நம்பிக்கையிழந்தனர். அமுதத்தையும், லட்சுமியையும் பெற தேவர்களைப் பகைத்துக் கொள்ளத் தயாராகினர்.(45)
அந்நேரத்தில் நாராயணன் தனது மயக்கும் மாய சக்தியின் உதவியால் (ஏமாற்றும் சக்தி) மதியைக் கவரும் பெண்ணுருக் கொண்டு தானவர்களிடம் இதமான காதல் மொழி பேசினான்.(46) தானவர்களும், தைத்தியர்களும் அந்த மங்கையின் பேரழகினாலும், கவர்ச்சியானாலும் மயக்கப்பட்டு, மதியிழந்து அனைவரும் சேர்ந்து அந்த அமுதத்தை அந்த அழகு மங்கையின் கையிலேயே கொடுத்தனர்” {என்றார் சௌதி}.(47)
அமுதத்துக்காக தேவாசுரப் போர்! | ஆதிபர்வம் – பகுதி 19(ஆஸ்தீக பர்வம் – 7)அமுதத்துக்காக நடந்த தேவாசுரப் போர்; ராகுவின் தலையைக் கொய்த நாராயணன்; போரை வென்ற தேவர்கள்; அமுதகலசத்தை நாராயணனிடம் கொடுத்த இந்திரன்…
சௌதி சொன்னார், “தைத்தியர்களும் தானவர்களும் முதல்தரமான கவசங்களை அணிந்துகொண்டு ஆயுதங்களால் தேவர்களைத்[1] தாக்கினர்.(1) (தைத்தியர்கள் என்போர் திதி என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். தானவர்கள் என்போர் தனு என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். தேவர்கள் என்போர் அதிதி என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். திதியும், தனுவும், அதிதியும் தக்ஷனின் மகள்கள் ஆவர். தக்ஷனின் 13 மகள்களைக் கசியபர் மணந்தார்.)அந்த நேரத்தில் துணிவுள்ள தலைவனான விஷ்ணு, கவர்ச்சியான பெண்ணுருக் கொண்டு நரனுடன் சேர்ந்து தானவர்களின் கைகளிலிலிருந்து அமுதத்தைப் பறித்தான்.(2)
“பெரும்பயத்தை உண்டாக்கக்கூடிய அந்த நேரத்தில் தேவர்கள் அமுதத்தை ஆவலுடன் விஷ்ணுவிடம் இருந்து பெற்றுக் குடித்தனர்.(3) தாங்கள் பெரிதும் விரும்பிய அமுதத்தைத் தேவர்கள் பருகிக் கொண்டிருக்கையில், ராகு என்ற தானவனும், தேவ வேடம் பூண்டு அமுதத்தைக் குடித்துக் கொண்டிருந்தான்.(4) அது ராகுவின் தொண்டைக்குள் செல்லும்போதுதான் சூரியனும், சந்திரனும் (அவனை அடையாளம் கண்டு) தேவர்களிடம் காட்டிக் கொடுத்தனர்.(5)
உடனே, அமுதத்தை அனுமதியின்றிப் பருகிய அந்தத் தானவனின் அலங்கரிக்கப்பட்ட தலையை நாராயணன் சக்கர ஆயுதத்தைக் கொண்டு வெட்டினான்.(6) அப்படிச் சக்கர ஆயுதத்தால் வெட்டுண்டதும், மலைமுகட்டை ஒத்திருந்ததுமான அந்தத் தானவனின் பெரிய தலை, வானத்தில் எழுந்து பயங்கரமாகக் கதறியது.(7) அந்தத் தானவனின் தலையற்ற உடல் பூமியில் விழுந்து உருண்டதால், மலைகளுடனும், கானகங்களுடனும், தீவுகளுடனும் இருந்த பூமி நடுங்கியது.(8) அச்சமயத்திலிருந்து ராகுவின் தலைக்கும் சூரிய சந்திரர்களுக்கும் நெடுநாள் பகை {தீராப்பகை} இருந்து வருகிறது. இந்த நாள்வரை ராகு சூரியனையும், சோமனையும் {சூரிய சந்திர கிரகணங்களின் போது} விழுங்கி வருகிறான்.(9)
அதன் பிறகு நாராயணன் தனது கவர்ச்சிகரமான பெண்ணுருவை விடுத்து, பல ஆயுதங்களைத் தானவர்கள் மீது வீசி அவர்களை நடுங்கச் செய்தான்.(10) அப்படியே அந்த உப்புநீர் கடற்கரையில், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் பயங்கரமான போர் மூண்டது.(11) கூரிய ஈட்டிகளும், தோமரங்களும் பலதரமான ஆயுதங்களும் அனைத்து பக்கங்களிலும் ஆயிரக்கணக்கில் வீசப்பட்டன.(12) சக்கராயுதத்தால் தாக்கப்பட்டும், வாள், கணைகள், கதாயுதங்கள் இவற்றால் புண்பெற்றும் பெரும் எண்ணிக்கையிலான அசுரர்கள் இரத்தம் கக்கிப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள்.(13) இருபுறமும் கூரான வாட்களால் வெட்டப்பட்டு அசுரர்களின் உடல்களிலிருந்து, பிரகாசமாகத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களின் தலைகள் போர்க்களத்தில் தொடர்ந்து விழுந்த வண்ணம் இருந்தன.(14) வல்லமை பொருந்திய அசுரர்கள், உடல் ரத்தத்தால் நனைக்கப்பட்டு எங்கும் இறந்து கிடந்தனர். அது பார்ப்பதற்குச் சிவப்பு நிற மலை முகடுகள் எங்கும் சிதறிக் கிடப்பது போல் இருந்தது.(15) பெரும் ஒளிவீசியபடி சூரியன் உதித்ததும்[2] (கும்பகோணம் பதிப்பில் சூரியன் மறையும் காலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் சூரியன் சிவந்த போது என்றிருக்கிறது.)ஆயிரமாயிரம் வீரர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். எங்கும் துன்ப கூக்குரல்கள் கேட்டன.(16) தூரத்தில் இருந்து மோதிக் கொள்பவர்கள் இரும்பாலான ஏவுகணைகளைக் கொண்டு ஒருவரையொருவர் கீழே சாய்த்தனர். அருகில் இருந்து மோதிக் கொள்பவர்கள் கைமுட்டிகளின் குத்துக்களால் ஒருவரை மற்றவர் சாய்த்தனர்.(17) அங்குக் காற்றில் துன்ப ஒலிகளே நிறைந்திருந்தன. ‘வெட்டு’, ‘குத்து’, ‘அவனை விடாதே’, ‘சாய்த்திடு’, ‘முன்னேறு’ என்ற அலறல்கள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தன.(18)
இப்படிப் போர் மூர்க்கமான முறையில் நடந்து கொண்டிருக்கையில், நரனும், நாராயணனும் களத்தில் இறங்கினர்.(19) நரனின் கைகளில் தெய்வீகமான வில்லைக் கண்ட நாராயணன், தானவர்களை அழிக்கும் தனது ஆயுதமான சக்கராயுதத்தை மனத்தில் நினைத்தான்.(20) எதிரிகளை அழிப்பதும், அக்னியையொத்த ஒளிகொண்டதும், போர்க்களத்தில் பயங்கரமானதுமான அந்தச் சுதர்சனச் சக்கரம், நினைத்த மாத்திரத்தில் வானிலிருந்து வந்தது.(21) அது {சுதர்சனம்} வந்ததும், பெரும் ஆற்றலுடையவனும், யானையின் துதிக்கைப் போன்ற கைகளையுடையவனுமான நாராயணன், இயல்புக்கு மீறிய காந்தியுடையதும், எரியும் தீயைப் போன்றதும், பயங்கரமானதும், எதிரிகளின் நகரங்களை அழிக்க வல்லதுமான அந்த ஆயுதத்தைப் பெரும் வேகத்தோடு வீசினான்.(22) யுக முடிவின் போது நெருப்பு எப்படி அனைத்தையும் உட்கொள்ளுமோ அப்படி, தீப்போன்று ஒளிர்ந்த அந்தச் சக்கரம் நாராயணனால் வேகமாக வீசப்பட்டவுடன் தொடர்ந்து எல்லா இடங்களிலும் விழுந்து தைத்தியர்களையும், தானவர்களையும் ஆயிரக்கணக்கில் எரித்தது.(23) சில நேரம் தீப்போல எரிந்து அவர்களை உட்கொண்டது, சில நேரம் வானிலிருந்து இறங்கிவந்து தாக்கியது, சில நேரம் பூதத்தைப் போல அவர்களின் உயிரைக் குடித்தது.(24)
மறுபுறத்தில் பெரும்பலம் பொருந்தியவர்களும், நெஞ்சுறுதி கொண்டவர்களுமான தானவர்கள், மழை பொழிந்த வெண்ணிற மேகங்களைப் போல் வானில் கிளம்பி, ஆயிரக்கணக்கான மலைகளை வீசி தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினர்.(25) மரங்களுடையதும், சமமான சிகரங்களுடையதுமான {சிகரங்கள் சரிந்ததுமான} அந்தப் பயங்கரமான மலைகள், வானிலிருந்து விழும்போது ஒன்றோடொன்று மோதிக்கொண்டு பெறும் உறுமல் ஒலியை உண்டாக்கின.(26) ஆயிரக்கணக்கான வீரர்கள் இடைவெளியின்றிக் கூச்சலிட்டதாலும், மலைகள் அதிலிருக்கும் காடுகளுடன் கீழே விழுந்ததாலும், காடுகளுடன் கூடிய பூமியானது நடுங்கிற்று. இப்படித் கணங்களும் {ருத்ரனைத் தொடர்பவர்கள்} அசுரர்களும் மோதிக்கொண்டிருக்கையில்,(27) நரன் தோன்றி, தனது பொன்தலைக் கணைகளால் அந்த மலைகளைத் தூள் தூளாக்கி சொர்க்கத்தைப் புழுதியால் மறைத்தான்.(28) இப்படித் தேவர்களால் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டதாலும், குழப்பப்பட்டதாலும் சீற்றமிகுந்த சக்கரமானது சொர்க்கத்தின் பகுதிகளையும் எரிகின்ற தழல் போலக் கலங்கடித்து அழுக்ககற்றி வருவதாலும், வலிமை வாய்ந்த தானவர்கள் பூமியின் குடலுக்குள்ளும், {பாதாளத்துக்குள்ளும்}, உப்பு நீர் கடலிலும் புகுந்தனர்.(29) வெற்றியடைந்த தேவர்கள், மந்தர மலைக்குத் தக்க மரியாதைகள் செய்து, அஃதை அதன் பழைய அடித்தளத்திலேயே {அது முன்பு இருந்த இடத்திலேயே} மீண்டும் நிறுவினர். அமுதுண்ட தேவர்கள் அவர்களது உற்சாகக்குரலால் தேவலோகத்தை எதிரொலிக்கச் செய்து விட்டு அவரவர் இருப்பிடத்திற்குச் சென்றனர்.(30,31) தேவர்கள் தேவலோகத்திற்கு வந்து உற்சாகமாக இருந்தனர். இந்திரனும் பிற தேவர்களும் அமுதத்தைப் பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பை நாராயணனிடம் கொடுத்தார்கள்” {என்றார் சௌதி}.(32)
தாய் கத்ருவிடம் பாம்புகள் பெற்ற சாபம்! | ஆதிபர்வம் – பகுதி 20(ஆஸ்தீக பர்வம் – 8)வினதைக்கும் கத்ருவுக்கும் இடையிலான பந்தயம்; தங்கள் தாயான கத்ருவிடம் சாபம் பெற்ற பாம்புகள்; கத்ருவின் சாபத்தை அங்கீகரித்த பிரம்மன்; விஷமுறிவு மருத்துவத்தைக் கசியபருக்குப் போதித்த பிரம்மன்…
சௌதி சொன்னார், “அமுதம் பாற்கடலில் எப்படிக் கடையப்பட்டது, பெரும் அழகும் ஒப்பிடமுடியாத சக்தியும் கொண்ட குதிரை உச்சைஸ்ரவஸ் எந்தச் சூழ்நிலையில் கிடைக்கப் பெற்றது போன்ற கதைகளை முழுமையாக உரைத்துவிட்டேன்.(1) இந்தக் குதிரையைக் குறித்துதான் கத்ரு வினதையிடம், “மனதிற்கினிய சகோதரி, உச்சைஸ்ரவம் எந்நிறம் கொண்டது என்பதை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் சொல்வாயாக” என்று கேட்டாள்.(2) வினதை, “அந்தக் குதிரைகளின் இளவரசன் நிச்சயமாக வெண்மையானவன்தான். நீ என்ன நினைக்கிறாய் சகோதரி? இதைப்பற்றி நாம் பந்தயம் வைப்போம்” என்றாள் {வினதை}.(3) கத்ரு “ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே {வினதையே}, அக்குதிரையின் வால்பகுதி கருப்பு என்று நான் நினைக்கிறேன். அழகானவளே {வினதையே}, யார் தோற்கிறார்களோ அவர்கள் வெல்பவர்களுக்கு அடிமை என்று பந்தயம் வைப்போம்” என்றாள் கத்ரு.”(4)
சௌதி தொடர்ந்தார், “இப்படியே ஓர் அடிமையாகத் தாழ்ந்த வேலை செய்ய ஒருவருக்கொருவர் பந்தயம் கட்டிக் கொண்ட அந்தச் சகோதரிகள், அடுத்த நாள் அந்தக் குதிரையை ஆராய்ந்து நிறைவு கொள்ளத் தீர்மானித்து வீட்டுக்குச் சென்றனர்.(5) கத்ரு, தனது சகோதரியை {வினதையை} ஏமாற்ற எண்ணங்கொண்டு, தான் அடிமையாகாமல் இருக்கும் பொருட்டு, தன் ஆயிரம் மகன்களிடமும் {பாம்புகளிடம்},(6) “வேகமாகச் சென்று அந்தக் குதிரையின் வால்பகுதியில் கருமையான முடிகளாக மாறி இருக்கும்படி” பணித்தாள். ஆனால் அவளது {கத்ருவின்} மக்களாகிய அந்தப் பாம்புகள், அவள் {கத்ரு} பணித்த வேலைக்குப் பணிய மறுத்தனர்.
அதனால் அவள் {கத்ரு} அவர்களை {பாம்புகளை} நோக்கி,(7) “பாண்டவப் பரம்பரையில் வருபவனும், விவேகமுள்ளவனுமான மன்னன் ஜனமேஜயன் நடத்தும் பாம்பு வேள்வியில், அக்னி உங்கள் அனைவரையும் உட்கொள்வானாக” என்று சபித்தாள்.(8) விதிவசத்தால், கத்ரு இப்படி மிகக்கொடூரமான சாபத்தை இடுவதைப் பெருந்தகப்பன் {பிரம்மன்} கேட்டான்.(9) பாம்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாகப் பெருத்திருப்பதைக் கண்டும், மற்ற உயிரினங்களின் நன்மைக்காகவும் கத்ருவின் இந்தச் சாபத்தைத் தேவர்கள் அனைவருடன் சேர்ந்து அவன் அங்கீகரித்தான்.(10)
பாம்புகள் மிகுந்த நச்சுத்தன்மையுடனும், பெரும் சக்தியுடனும், அதிகப் பலத்துடனும், எப்போதும் மற்ற உயிரினங்களைக் கடிக்கும் எண்ணத்துடன் இருப்பதாலும், பிற உயிர்களின் நன்மைக்காகவும், எல்லா உயிரினங்களையும் இழிவாக நடத்தும் அவற்றுக்கு, அவற்றின் தாயின் செய்கையானது பொருத்தமானதே. விதியானது மற்ற உயிரினங்களின் மரணத்தை விரும்புபவர்களுக்கு மரணத்தையே தண்டனையாகத் தரும். இவ்வாறெல்லாம் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட தேவர்கள் கத்ருவின் செயலை ஆதரித்தனர். {சாபத்தை அங்கீகரித்தனர்}.(11-13)
பிரம்மன் கசியபரை தன்னிடம் அழைத்து, “ஓ அனைவரையும் வெல்லக்கூடியவனே, தூய்மையானவனே, நீ பெற்றெடுத்த இந்தப் பாம்புகள் பெரும் உடலுடனும், கடுமையான விஷத்துடனும் இருக்கின்றன. எப்போதும் பிற உயிர்களைக் கடிக்கும் எண்ணங்கொண்ட இவை {பாம்புகள்} தங்கள் தாயாரால் சபிக்கப்பட்டுள்ளன. ஓ மகனே {கசியபனே}, அதற்காக நீ துயர் கொள்ளாதே.(14,15) பாம்பு வேள்வியில் பாம்புகளின் அழிவு என்பது முன்பே நிர்ணயிக்கப்பட்டதுதான்” என்று சமாதானம் சொன்னான். பிறகு, கடும் விஷத்தை முறிக்கும், விஷமுறிவு ஞானத்தை அந்தப் புகழ்பெற்றவருக்கு {கசியபருக்கு} உலகைப் படைத்த அந்தத் தெய்வீகமானவன் {பிரம்மன்} உபதேசித்தான்” {என்றார் சௌதி}.(16)
கடல் – ஆறுகளுக்கு அரசன்! | ஆதிபர்வம் – பகுதி 21(ஆஸ்தீக பர்வம் – 9)பந்தயத்தின் முடிவுக்காக உச்சைஸ்ரவத்தைக் காண கடலைக் கடந்து சென்ற சகோதரிகள்…
சௌதி சொன்னார், “ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே! {சௌனகரே}, இரவு கழிந்து காலையில் சூரியன் உதித்ததும், அந்த இரு சகோதரிகளான கத்ருவும், வினதையும், அடிமையாவதாகப் பந்தயம் கட்டிக் கொண்டு, பொறுமையின்மையால் அந்த உச்சைஸ்ரவஸ் குதிரையை அருகில் காண அவசரமாகச் சென்றனர்.(1,2) வழியில் அவர்கள் பெருங்கடலைக் கண்டனர். வெகு அகலமானதாகவும், ஆழமானதாகவும், கடக்கமுடியாததாகவும் இருந்த அந்தப் பெரும் நீர்க்கொள்ளிடம் (கடல்), உருண்டு கொண்டு, பயங்கரமாக உறுமிக் கொண்டு, மிகப் பெரிய, கருத்த, கடுமையான நீர்வாழ் உயிரினங்கள், திமிங்கலங்களையே விழுங்கும் பெரிய மீன்கள், மகரங்கள் {மீன் அல்லது நீர்நாயின் உடலும் யானை முகமும் கொண்ட புராண கால விலங்கு}, வெவ்வெறு வடிங்களினாலான ஆயிரக்கணக்கான உயிரினங்கள், மற்றும் எண்ணிலடங்கா ஆமைகள், முதலைகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு,(3-5) ரத்தினங்களின் சுரங்கமாக, வருணனின் இல்லமாக (நீர்க்கடவுள்), நாகர்களின் அழகான, மிகச்சிறந்த வசிப்பிடமாக, ஆறுகள் அனைத்திற்கும் அரசனாக,(6) பூமிக்கடியில் உள்ள நெருப்பின் இருப்பிடமாக, அசுரர்களுக்கு நண்பனாக (அல்லது ஆதரவளிப்பவனாக), எல்லா உயிரினங்களுக்கும் பயங்கரமாக, பெரிய நீர்க்களஞ்சியமாக, காலத்திற்கும் மாற்ற முடியாததாக இருந்தது.(7)
அது தெய்வீகமானது; தேவர்களுக்கு நன்மையானது; அமுதத்திற்கு மூலமாக இருப்பது. எல்லையில்லாதது, புத்திக்கு எட்டாதது, புனிதமானது, பெரும் அதிசயமானது.(8) அஃது இருளானது. நீர்வாழ்வனவற்றின் ஒலிகளோடு கூடிய பயங்கரமானது, பெருத்த இரைச்சலுடன் உறுமிக்கொண்டிருப்பது, ஆழமான நீர்ச்சுழல்கள் நிறைந்தது, எல்லா உயிர்களுக்கும் அச்சமூட்டுவது.(9) கரையிலிருந்து வீசும் காற்றினால் உந்தப்பட்டு, மிக உயரத்திற்குக் கிளர்ந்தெழும்பிக் குழம்பிக் கொண்டே இருப்பது. அதன் அலைகள், எல்லாப்பக்கங்களிலும் கையை உயர்த்தி நடனம் ஆடிக் கொண்டே இருப்பதுபோல் பிரதிபலிக்கும்.(10) வாசுதேவனின் சிறப்புமிக்கச் சங்கான பாஞ்சஜன்யத்திற்குத் தந்தையும், சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது ஈர்க்கப்பட்டு அளவுக்கதிகமான பெரிய அலைகளால் நிறைந்திருப்பதும், ரத்தினங்களுக்குப் பெரும் சுரங்கமாகத் திகழ்வதும்,(11) (மூழ்கிய) பூமியைத் தூக்கிட, அளவிடமுடியாத சக்தி வாய்ந்த கோவிந்தன், முன்பு பன்றி உருவத்தில் கலக்கியபோது பெரும் அதிர்வுக்குள்ளாகி, பெரிய அலைகளை எழுப்பியதும், பாதாள லோகத்தை விட ஆழமான தளத்தைக் கொண்டதும், பெரும் தவம் செய்த அத்ரி முனிவர் நூறு வருடங்கள் உழைத்தும் ஆழம் காணமுடியாதது அது {கடல்}.(12,13)
எல்லையில்லா சக்திக் கொண்டவனும், தாமரை போன்ற வயிறு படைத்தவனுமான விஷ்ணுவுக்கு ஒவ்வொரு யுக முடிவின் போதும் அவனது யோகத் துயிலும், ஆன்மிகத் தவமுமான ஆழ்ந்த உறக்கத்திற்குப் படுக்கையாக இருப்பது {கடல்}.(14) இடியின் தாக்குதலுக்குப் பயந்த மைநாகத்துக்கு {மைநாக மலைக்கு} அடைக்கலம் கொடுத்தது. கடும் போர்களில் பின்வாங்கும் அரக்கர்களுக்குப் புகலிடமானது.(15) வரவராவின் (பெண் கடற்குதிரை) வாயிலிருந்து கிளம்பும் சுடர் நெருப்புக்கு {வடவாக்னிக்கு} இதன் நீர் புனிதமான நெய்யாகப் பயன்படும். இஃது ஆழமறிய முடியாதது, எல்லையற்றது, மிகப் பரந்தது, அளவிடமுடியாதது, ஆறுகளுக்கு அரசனானது.(16)
{கடல் எனும் தங்கள் கணவன் மீது} காதல் வலைவீசும் சக்களத்திகளைப் போலச் செருக்கு நடை கொண்டவையும், ஒன்றையொன்று {கடலைச்} சந்திக்கும் ஆவலில் பிறவற்றைத் {பிற ஆறுகளைத்} தடுத்தவையுமான ஆயிரக்கணக்காகப் பெரிய ஆறுகள் அதற்குள் {அந்தக் கடலுக்குள்} விரைவதை அவர்கள் {கத்ருவும், வினதையும்} கண்டனர்.(17) அந்தக் கடல் எப்போதும் நிறைந்து, எப்போதும் அலைகளின் ஆட்டத்துடன் இருப்பதைக் கண்டனர். எண்ணிலடங்கா சீற்றங்கொண்ட திமிங்கலங்களையும், மகரங்களையும் கொண்ட அஃது {கடல்}, ஆழமாக இருப்பதையும் கண்டனர். அந்தக் கடலானது தன்னகத்தே இருக்கும் நீர் உயிரிகளின் பயங்கரமான ஒலிகளை எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது, பெரிதாகவும், அகலமானதாகவும், விண்ணைப் போல் பெரும்பரப்பு கொண்டதாகவும், ஆழம் காண முடியாததாகவும், எல்லை இல்லாததாகவும், நீருக்குப் பெரிய களஞ்சியமாக இருப்பதையும் கண்டனர்” {என்றார் சௌதி}.(18)
கத்ருவும் வினதையும் கடலைக் கடந்தனர்! | ஆதிபர்வம் – பகுதி 22(ஆஸ்தீக பர்வம் – 10)கத்ரு மீது கொண்ட அச்சத்தினால் பாம்புகள் அவள் சொன்னதைச் செய்தது; கடலைக் கடந்த சகோதரிகள்…
“சௌதி சொன்னார், “தாயின் {கத்ருவின்} ஆசை நிராசையானால், அவள் தங்கள் மீது வைத்திருக்கும் பாசத்தைத் துறந்து தங்களை எரித்துவிடுவாளோ என்ற பயத்தில், பாம்புகள் தங்களுக்குள் கலந்து பேசி, அவளது ஆணையை நிறைவேற்றுவது என்று முடிவு செய்தனர்.(1) மற்றொருபுறம், அவள் கருணை தங்களுக்குக் கிடைக்குமானால், தங்களைச் சாபத்திலிருந்து விடுவிப்பாள் என்ற எண்ணத்தில், “நாம் நிச்சயமாகக் குதிரையின் வாலைக் கருப்பாக்குவோம்” என்றனர்.(2) பிறகு அந்தப் பாம்புகள் சென்று குதிரையின் வாலின் முடிகளாக மாறினர் என்று சொல்லப்படுகிறது. பந்தயம் கட்டிக்கொண்ட அந்தச் சக்களத்திகளும் {கசியபரின் மனைவிகள்}, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, தக்ஷனின் மகள்களும், சகோதரிகளுமான கத்ரு மற்றும் வினதை ஆகிய இருவரும், கடலின் அக்கரையைக் காண வான் வெளியில் மகிழ்ச்சியுடன் விரைந்தனர்.(3-5)
அப்படிச் செல்லும்போது, எளிதாகக் கலங்கடிக்கப்பட முடியாததான அந்த நீர்ப்பாத்திரமானது, திடீரென்று வலிமைமிகுந்த காற்றால் அசைக்கப்பட்டுப் பேரொலியுடன் கர்ஜிப்பதைக் கண்டனர். திமிங்கலங்களையே விழுங்கும் பெரிய மீன்கள், மகரங்கள்,(6) ஆயிரக்கணக்கான வெவ்வெறு வடிவங்களிலாலான பல்வேறு உயிரிகளுடன், கொடுமையான பெரும் விலங்குகளுடன் அச்சத்தைத் தருவதாக, அணுக முடியாத ஆழத்தோடு பயங்கரமாக,(7) எல்லா வகையான ரத்தினங்களின் சுரங்கமாக, வருணனின் (நீர் கடவுள்) இல்லமாக, நாகர்களின் வசிப்பிடமாக, ஆறுகள் அனைத்திற்கும் அரசனாக,(8) பூமிக்கடியில் உள்ள நெருப்பின் இருப்பிடமாக, அசுரர்களுக்கு வசிப்பிடமாக, எல்லாப் பயங்கரமான உயிரினங்களுக்கும் இருப்பிடமாக, நீர்க்களஞ்சியமாக,(9) அழுகுதலில்லாமல் {கெடாமல்} நறுமணம் மிக்கதாக, அற்புதமானதாக, தேவர்களுடைய அமுதத்தின் ஊற்றாக, அளக்கமுடியாததாக, புத்திக்கு எட்டாததாக, புனிதமான நீரைக் கொண்டதாக,(10) ஆயிரக்கணக்கான பெரிய ஆறுகளின் நீரினால் விளிம்பு வரை நிறைந்திருந்ததாக, அலைகள் நாட்டியமாடிக்கொண்டிருந்த, கடலை அவர்கள் கண்டனர்.(11) புரளும் அலைகளுடன் விண்ணைப் போல் பெரும்பரப்புக் கொண்டதாக, ஆழமானதாக, பூமிக்கடியில் உள்ள நெருப்பினால் சுடர்மேனி கொண்டதாக, கர்ஜனை செய்வதாக இருந்த அந்தக் கடலைச் சகோதரிகள் இருவரும் {கத்ருவும், வினதையும்} வேகமாகக் கடந்தனர்” {என்றார் சௌதி}.(12)
பிறந்தான் கருடன்! | ஆதிபர்வம் – பகுதி 23(ஆஸ்தீக பர்வம் – 11)பந்தயத்தில் வீழ்ந்த வினதை; கத்ருவுக்கு அடிமையான வினதை; கருடன் பிறந்தது; தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்பட்ட கருடன்…
சௌதி சொன்னார் “கடலைக் கடந்ததும், துரிதமான வேகம் கொண்ட கத்ரு தன் சகோதரி வினதையுடன் குதிரைக்கு அருகில் இறங்கினாள்.(1) அவர்கள் இருவரும் வேகமாக ஓடக்கூடிய குதிரைகளில் முதன்மையான அந்தக் குதிரை {உச்சைஸ்ரவஸ்}, சந்திரக்கதிர்களைப் போல உடல் முழுவதும் வெள்ளையாகவும், (வாலில்) கருமுடிகளுடன் இருந்ததையும் கண்டனர்.(2) குதிரையின் வாலில் நிறையக் கருமுடிகள இருப்பதைச் சுட்டிக்காட்டிய கத்ரு, மிகவும் வாட்டமுற்றிருந்த வினதையைத் தனது அடிமையாக்கிக் கொண்டாள்.(3) இப்படிப் பந்தயத்தில் தோற்று, அடிமைத்தனத்திற்குள் தான் புகுந்துவிட்டதை எண்ணி வினதை மிகவும் வருந்தினாள்.(4)
அதே வேளையில், தன் விருப்பப்படியே நினைத்த உருவெடுக்க வல்லவனும், நினைத்த இடத்திற்குச் செல்ல தகுந்தவனும், நினைத்த அளவிற்கு சக்தியைப் பெருக்கிக் கொள்ளத் தக்கவனும், காந்தி மிக்கவனும், பலசாலியுமான அந்தப் பெரும்பறவையான கருடன், அவனது {கருடனது} நேரம் வந்தவுடன்,(5) அண்டத்தின் அனைத்து புள்ளிகளையும் பிரகாசப்படுத்திக் கொண்டு, தாயின் உதவியில்லாமல் முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவந்தான்.(6) நெருப்புக் குவியல் போன்ற ஒளியுடன் அவன் பயங்கரமாகப் பிரகாசித்தான்.
மின்னலைப் போன்ற பார்வையுடனும், யுக முடிவின் நெருப்புக்கு ஒத்த காந்தியுடனும், இருந்த அந்தப் பறவையானவன் {கருடன்}, பிறந்தவுடனேயே வேகமாக வளர்ந்து, உருவத்தைப் பெருக்கிக் கொண்டு வானத்தில் பறந்தான்.
மூர்க்கமாகவும், மிகுந்த உணர்ச்சியுடனும் கர்ஜனை செய்த அவன் இரண்டாவது கடல் நெருப்பைப் {வடவாக்னி} போல அச்சந்தரும் வகையில் தோன்றினான்.(7,8) அவனைக் {கருடனை} கண்ட அனைத்துத் தேவர்களும் அச்சமுற்று, விபாவசுவிடம் (அக்னியிடம்) பாதுகாப்பை வேண்டினர். அவர்கள் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்த, பல உருவங்கள் கொண்ட அந்தத் தேவனிடம் {அக்னியிடம்} பணிந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்,(9) “ஓ அக்னி, உமது உடலை பெருக்காதே, எம்மை உட்கொண்டு விடுவாயோ? இதோ இந்தப் பெருங்குவியலான தழல்கள் அகலமாகப் பெருகிக் கொண்டே வருகின்றனவே” என்றனர்.(10)
அதற்கு அக்னி, “ஓ அசுரர்களைத் துன்புறுத்துபவர்களே, நீங்கள் நினைப்பது போல அல்ல இஃது. இவன் பெரும்பலம் வாய்ந்த கருடன். ஒளியில் என்னை ஒத்திருப்பவன்;(11) பெரும் சக்தி படைத்தவன்; வினதையின் மகிழ்வைப் பெருக்கப் பிறந்தவன். நீங்கள் காணும் பிரகாசமான ஒளிக்குவியல் உங்களுக்குள் இந்த மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.(12) இவன் கசியபரின் பெரும்பலம் பொருந்திய மகன்; நாகங்களை அழிப்பவன்; தேவர்களின் நன்மையில் ஈடுபடுபவன், தைத்தியர்களுக்கும், ராட்சசர்களுக்கும் எதிரியானவன்.(13) இவனைக் கண்டு சிறிதும் அஞ்சாதீர்கள். என்னுடன் வந்து பாருங்கள்” என்று தேவர்களுக்குச் சொன்னான்.(14)
தேவர்கள், கருடனைத் தூரத்தில் இருந்தே பார்த்து,(15) “முனிவன் நீயே (அனைத்து மந்திரங்களையும் அறிந்தவன்), வேள்விகளில் கிடைக்கும் அவிர்பாகத்தில் பெரும்பகுதியை பகிர்பவன் நீயே, எப்போதும் பிரகாசிப்பவன் நீயே, அசைவன, அசையாதன ஆகியவற்றின் தலைவன் நீயே, அனைத்தையும் அழிப்பவன் நீயே, அனைத்தையும் படைப்பவன் நீயே, ஹிரண்யகர்பன் நீயே, தட்சனாகவும், பிரஜாபதிகளாகவும் அனைத்தையும் படைப்பவன் நீயே,(16) இந்திரன் (தேவர்களின் தலைவன்) நீயே, குதிரை முகம் கொண்ட விஷ்ணுவான ஹயக்ரீவன் நீயே, கணை நீயே (திரிபுரத்தை எரித்த மஹாதேவரின் {சிவனின்} கையில் கணையாக இருந்த விஷ்ணு), நான்முகம் படைத்த பத்மஜன் {பிரம்மன்} நீயே, பிராமணன் (ஞானமுள்ளவன்) நீயே, அக்னி நீயே,(17) பவனன் (அண்டதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் தலைவன்) நீயே. அறிவு நீயே, எங்களை மயக்கும் மாயை நீயே, ஊடுருவும் ஆவி நீயே, தேவர்களுக்குத் தேவன் நீயே, பெரிய உண்மை நீயே, அச்சமற்றவன் நீயே, என்றும் மாறுதலில்லாதவன் நீயே, குணங்களற்ற (நிர்க்குணமான) பிரம்மம் நீயே,(18) கதிரவனின் சக்தி நீயே, சித்தத்தின் செயல்கள் நீயே, எங்கள் காப்பாளன் நீயே, தெய்வீகங்களின் கடல் நீயே, புனிதமானவன் நீயே, இருளின் {அறியாமையின்} தன்மைகளற்றவன் நீயே, உயர்ந்த ஆறு குணங்களின் சொந்தக்காரன் நீயே, எங்களால் போட்டிகளில் வெல்லப்படமுடியாதவன் நீயே,(19) உன்னிலிருந்தே எல்லாம் உற்பத்தியாயிற்று, அற்புதமான செயல்கள் செய்பவன் நீயே, இருந்தவை இல்லாதவை எல்லாம் நீயே, தூய அறிவு நீயே, கதிரவன் தன் கதிர்களால் ஒளி தருவது போல, எங்களுக்குக் காட்சி தருபவன் நீயே, அண்டத்திலுள்ள உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாம் நீயே,(20) சூரியனின் ஒளியை மறைப்பவன் நீயே, அனைத்தையும் அழிப்பவன் நீயே, அழிவது அழியாதது எல்லாமும் நீயே.
ஓ ஒளிரும் அக்னியே! கதிரவன் கோபத்தால் உயிரினங்கள் அனைத்தையும் சுட்டெரிப்பதைப் போல, அனைத்தையும் எரிப்பவன் நீயே,(21) ஓ பயங்கரமானவனே, பிரளயத்தில் நெருப்பால் எல்லாம் அழிந்தாலும் அழியாதவன் நீயே. ஓ விண்ணில் உலவும் பலம்பொருந்திய கருடா, எங்கள் பாதுகாப்பை உன்னிடம் வேண்டுகிறோம். ஓ பறவைகளின் மன்னா! {கருடா}, இயல்புக்கு மீறிய {அசாதரணமான} சக்தியும், நெருப்புக்கு நிகரான காந்தியும் கொண்டு, இருள் அணுகமுடியாத மின்னலைப் போலப் பிரகாசிப்பவன் நீயே, மேகங்களைத் தொடுபவன் நீயே, காரணமும் காரியமும் நீயே, வரங்களைத் தருபவனும், வெல்ல முடியாத வீரத்தைக் கொண்டவனும் நீயே,(22,23) ஓ தேவனே! புடம்போட்ட தங்கம்போல இந்த அண்டமே உன் காந்தியால் வெப்பமடைந்தது. உன்னைக்கண்ட அச்சத்தால் அங்குமிங்கும் தங்கள் வாகனங்களில் தேவலோகத்தில் பறந்து திரியும் உயர் ஆன்மத் தேவர்களைக் காப்பாயாக.(24) ஓ பறவைகளில் சிறந்தவனே! {கருடா}, அனைத்துக்கும் தலைவன் நீயே, கருணையுள்ள உயர் ஆன்ம முனிவர் கசியபரின் புதல்வன் நீயே, அண்டத்தின் மீது கோபங்கொள்ளாமல் கருணை கொள்வாயாக. யாவற்றுக்கும் தலைமையானவன் நீயே, கோபத்தைத் தணித்து, எங்களைக் காப்பாற்றுவாயாக.(25)
இடியின் முழக்கம் போன்ற உனது குரலால், ஓ பறவையானவனே {கருடா}, அண்டத்தின் பத்துப் புள்ளிகளையும், விண்ணையும், தேவலோகத்தையும், பூமியையும், எங்கள் இதயங்களையும் தொடர்ந்து நடுங்க வைக்கிறாய். அக்னியைப் போன்ற உனது இந்த உடலைச் சுருக்குவாயாக.(26) கோபமடைந்த யமனைப் போன்ற காந்தியுடன் உன்னைப் பார்க்கும்போது, எங்கள் இதயத்தில் அமைதியை இழந்து நடுங்குகிறோம்.(27) ஓ பறவைகளின் தலைவா! {கருடா}, உன் இரக்கத்தை வேண்டும் எங்களுக்கு உனது கருணையால் நன்மை செய்வாயாக. ஓ சிறப்புமிக்கவனே! {கருடா}, எங்களுக்கு இன்பத்தையும் நற்பேறையும் அளிப்பாயாக” என்று வேண்டினர் {தேவர்கள்}. இப்படித் தேவர்களாலும், முனிவர்களாலும் போற்றப்பட்ட அழகான இறகுகளைக் கொண்ட அந்தப் பறவையானவன் {கருடன்}, தனது சக்தியையும் காந்தியையும் குறைத்துக் கொண்டான்” {என்றார் சௌதி}.(28)
கதிரவனின் சாரதியாக அருணன்! | ஆதிபர்வம் – பகுதி 24(ஆஸ்தீக பர்வம் – 12)தன் பெரிய உடலைச் சுருக்கிக் கொண்ட கருடன்; சூரியனின் கோபம்; உலகைச் சுட்டெரித்த சூரியன்; சூரியனின் தேரோட்டியான அருணன்…
சௌதி சொன்னார், “அனைத்தையும் கேட்டுவிட்டு, அந்த அழகான இறகுகளுடைய பறவையானவன் தனது உடலைக் கண்டு, தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டான்.(1)
அந்தப் பறவையான கருடன், “எவ்வுயிரும் அச்சப்பட வேண்டாம், எனது பயங்கர உருவைக் கண்டு நீங்கள் அச்சத்திலிருப்பதால், எனது சக்தியைச் சுருக்கிக்கொள்கிறேன்” என்றான்.”(2)
சௌதி தொடர்ந்தார், “விருப்பப்பட்ட இடத்திற்குத் தங்குதடையின்றிச் செல்லக்கூடியவனும், எவ்வளவு சக்தியையும் விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்ளக்கூடியவனுமான அந்தப் பறவையானவன் {கருடன்}, {தனது அண்ணன்} அருணனை முதுகில் ஏற்றிக் கொண்டு தனது தந்தையின் {கசியபரின்} இல்லத்தைத் தொடர்ந்து, பெருங்கடலுக்கு அக்கரையில் இருக்கும் தனது அன்னையின் {வினதையின்} பக்கத்தில் உள்ள கடற்கரையில் வந்து சேர்ந்தான். கதிரவனோ உலகங்களைத் தனது கொடுங்கதிர்களால் சுட்டெரிக்கத் தீர்மானிக்கும் நேரத்தில் பெரும் காந்திமிக்க அருணனைக் கிழக்குப் பகுதியில் அமர்த்தியிருந்தான்”.(3,4)
சௌனகர் சொன்னார், “போற்றத்தக்க கதிரவன் எப்போது உலகங்களை எரிக்கத் தீர்மானித்தான்? அப்படி அவன் கோபத்தைத் தூண்டி விடும்படியாகத் தேவர்கள் அவனுக்கு என்ன தவறு செய்தார்கள்?[1]“(5)(ருரு கேட்பதாகவும், பிரமதி சொல்வதாகவும் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளது. கும்பகோணம் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் இந்தப் பகுதியே இல்லை)
சௌதி, “ஓ பாவங்களற்றவரே, அமுதத்துக்காகப் பாற்கடலைக் கடையும்போது ராகு தேவர்களின் பக்கம் நின்று அமுதத்தைப் பருகியதை, சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்தனர். அப்போதிருந்தே அவன் {ராகு} அந்தத் தேவர்கள் மீது பகை கொண்டான்.(6) {அதுமுதல்} ராகு தன் எதிரியை {சூரியனை} விழுங்குவதால் கோபங்கொண்ட அவன் {சூரியன்}, ‘இந்த ராகுவின் பகையானது தேவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற என் ஆவலிலிருந்தே தொடங்கியது.(7) அதன் பலனை நான் மட்டுமே அனுபவிக்கிறேன். உண்மையில் இத்தருணத்தில் எனக்கு எந்த உதவியும் கிட்டவில்லை.(8) அனைத்து சொர்க்கவாசிகளின் முன்னிலையிலேயே நான் விழுங்கப்படப்போகிறேன், அதை அவர்களும் அமைதியாக அனுமதிக்கப்போகின்றனர். எனவே, நான் உலகங்களை அழிக்கப் போகிறேன்’ என்று உறுதி கொண்ட கதிரவன்,(9) மேற்கு மலைகளுக்குச் சென்றான். அந்த இடத்திலிருந்தே உலகத்தை அழிக்கத் தனது வெப்பத்தை அனைத்து இடங்களிலும் வெளிப்படுத்தினான்.(10)
தேவர்களிடம் சென்ற பெரும் முனிவர்கள், “இதோ, நடு இரவில் ஒவ்வொரு இதயத்தையும் அச்சமூட்டியபடியும், மூன்று உலகங்களையும் அழிக்கும்படியும் இந்தப் பெரும் வெப்பம் உண்டாகிறது” என்றனர்.(11) தேவர்கள், முனிவர்களையும் அழைத்துக் கொண்டு பெருந்தகப்பனிடம் சென்று “இன்று ஏன் இந்த வெப்பம் அதிகமாகி அச்சமூட்டுகிறது?(12) கதிரவன் இன்னும் உதிக்கவில்லை, எனினும் (உலக) அழிவு தெளிவாகத் தெரிகிறது. ஓ தலைவா {பிரம்மனே}, அவன் {சூரியன்} உதித்தால் என்ன நடக்கும்?” என்றனர்.(13) அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, “உண்மையாக இன்று கதிரவன் உலக அழிவுக்காகவே உதிக்கத் தயாராகிறான். எப்போது அவன் காட்சி தருவானோ அப்போதே அனைத்தையும் சாம்பற்குவியலாக எரித்துவிடுவான்.(14) ஏற்கனவே அதைத் திருத்த நான் {பிரம்மன்} நடவடிக்கை எடுத்துவிட்டேன்.(15)
கசியபரின் புத்திசாலி மகனான அருணனை அனைவரும் அறிவார்கள். தனது பெருத்த உடலுடன், பெரியகாந்தியுடனும் கூடிய அவன் {அருணன்}, கதிரவன் முன்பு நின்று, அவனுக்குச் தேரோட்டியாக இருந்து, முன்னவனின் {சூரியனின்} சக்தியையெல்லாம் எடுத்துவிடுவான். இந்த நடவடிக்கை உலகத்தின் நன்மையையும், முனிவர்கள் மற்றும் தேவலோகவாசிகளின் நன்மையையும் உறுதிசெய்யும்.” என்றான்.(16,17)
சௌதி தொடர்ந்தார், “அருணன், பெருந்தகப்பனின் {பிரம்மனின்} கட்டளைப்படி, என்னென்ன செய்யவேண்டுமோ அவையனைத்தையும் செய்தான். அருணனின் உடலால் திரையிடப்பட்டுக் கதிரவன் உதித்தான்.(18) நான் {சௌதி} இதுவரை கதிரவன் ஏன் கோபங்கொண்டான்? கருடனின் தமையனான அருணன் எப்படி அவனது தேரோட்டியாக நியமிக்கப்பட்டான்? என்பதைச் சொன்னேன். சிறிது நேரத்திற்கு முன்பு நீங்கள் {நைமிசாரண்யத்தில் 12 வருட வேள்வியில் பங்கெடுத்த ஆன்மிகவாதிகளும், சௌனகரும்} கேட்ட அடுத்தக் கேள்விக்கான {விளக்கத்தை} அடுத்துக் கேளுங்கள்” {என்றார் சௌதி}.(19)
கத்ரு இந்திரனிடம் வேண்டுதல்! | ஆதிபர்வம் – பகுதி 25(ஆஸ்தீக பர்வம் – 13) வினதை கத்ருவையும், கருடன் பாம்புகளையும் நடுக்கடலில் உள்ள தீவை நோக்கிச் சுமந்து செல்வது; கதிரவனின் கதிர்களால் சுடப்பட்ட பாம்புகள் அடைந்த துன்பம்; இந்திரனிடம் வேண்டிய கத்ரு; கத்ரு சொன்ன இந்திரத்துதி…
சௌதி சொன்னார், “எந்த இடத்திற்கும் தன் இச்சைப்படி செல்லக்கூடிய அந்தப் பெரும்பலம்பொருந்திய பறவையானவன், தனது தாயின் {வினதையின்} இருப்பிடம் சென்று கடற்கரையில் இறங்கினான்.(1) அங்கே வினதை பந்தயத்தில் தோல்வியுற்று, {கத்ருவிற்கு} அடிமையாகச் சோகத்துடன் வாழ்ந்து வந்தாள்.(2)
ஒருமுறை கத்ரு, வினதையை அழைத்தாள். வினதை அவளை விழுந்து வணங்கி எழுந்ததும், கத்ரு அவளது மகனின் {கருடனின்} முன்னிலையிலேயே, “ஓ மென்மையான வினதையே, கடலுக்கு நடுவிலே, யாரும் அணுகமுடியாத ஓர் இடத்திலே, அழகானதும், இன்பம் தருவதுமான பாம்புகளின் வசிப்பிடம் ஒன்று இருகிறது. என்னை அங்கே தூக்கிச் செல்வாயாக” என்றாள்.(3)
இப்படிச் சொன்னதும், அந்த அழகான இறகுகளுடைய பறவையின் {கருடனின்} தாய் {வினதை}, (தனது தோளில்) பாம்புகளின் தாயை {கத்ருவை} சுமந்து சென்றாள். கருடனும் தனது தாயின் {வினதையின்} சொல்படி, பாம்புகளைத் {கத்ருவின் மக்களை} (தனது முதுகில்) தூக்கிச் சென்றான்.(4) வினதைக்குப் பிறந்த அந்த விண்ணோடி {கருடன்} அப்படியே கதிரவனை நோக்கி எழும்பினான். அதனால், அந்தப் பாம்புகள் கதிரவனின் கதிர்களால் சுடப்பட்டு, மயக்கமடைந்தன.(5) தனது மைந்தர்களின் {பாம்புகளின்} அந்த நிலையைக் கண்ட கத்ரு, இந்திரனிடம் இப்படி வேண்டினாள், “உன்னை வணங்குகிறேன். தேவதேவா! உன்னை வணங்குகிறேன், விருத்ரனைக் கொன்றவனே! நான் உன்னை வணங்குகிறேன்.(6) நமுசியைக் கொன்றவனே, ஆயிரங்கண் கொண்டவனே, சச்சியின் {சசியின்} மணாளனே, சூரியனால் சுடப்பட்ட பாம்புகளை உனது மழைத்துளிகளால் காப்பாற்றுவாயாக.(7)
ஓ தேவர்களில் சிறந்தவனே! எங்கள் சிறந்த காப்பாளன் நீயே. ஓ புரந்தரா! பருவகாலத்தில் மழைத்தாரைக்கு உத்தரவிடுபவன் நீயே.(8) வாயு நீயே, மேகம் நீயே, நெருப்பு நீயே, வானில் {காணும்} மின்னல் நீயே, மேகங்களைப் பரவச் செய்பவன் நீயே, (யுக முடிவில் அண்டத்தை இருளாக்கும்) பெருமேகம் என்றழைக்கப்படுபவன் நீயே.(9) ஒப்புயர்வற்ற, பயங்கரமான இடியும் முழங்கும் மேகங்களும் நீயே. உலகத்தைப் படைத்தவன் நீயே, அதை அழிப்பவன் நீயே. வெல்லப்பட முடியாதவன் நீயே.(10) அனைத்து உயிரினங்களுக்கும் ஒளி நீயே, ஆதித்யன், விபாவசு, அற்புதமான பூதங்கள் நீயே. தேவர்கள் அனைவருக்கும் தலைவன் நீயே.(11)
விஷ்ணு நீயே, ஆயிரங்கண் கொண்டவனே! தேவன் நீயே, இறுதிப் பாதுகாப்பு நீயே. ஓ தேவனே! அமுதமும், போற்றுதலுக்குரிய சோமமும் நீயே.(12) சந்திர நாள் {திதி [அ] ஒரு நாள்} நீயே, பலா ({லவம்} ஒரு நிமிடம்) நீயே, க்ஷணம் (நான்கு நிமிடம்) நீயே. வளர்பிறையும் {சுக்லபக்ஷமும்} நீயே, தேய்பிறையும் {கிருஷ்ணபக்ஷமும்} நீயே. {கண் இமைக்கும் நேரமான} த்ருடி நீயே, {பதினெட்டு த்ருடிகள் கொண்ட} காஷ்டை நீயே, {முப்பது காஷ்டைகள் கொண்ட} கலை நீயே. வருடம் நீயே, பருவங்கள் நீயே, மாதங்கள் நீயே, இரவுகள் நீயே, பகல்கள் நீயே.(13) மலைகளும், கானகங்களும் நிறைந்த அழகான பூமி நீயே. சூரியனால் ஒளிரும் வானம் நீயே. திமிங்கலங்களையும், திமிங்கலங்களையே விழுங்கும் உயிரினங்களையும், மகரங்களையும் பல்வேறு மீன்களையும் தன்னகத்தே கொண்ட அலைகள் நிறைந்த பெருங்கடல் நீயே.(14) மிகுந்த கவனமுடைய ரிஷிகளாலும், ஞானமுள்ளவர்களாலும் போற்றப்படுபவன் நீயே. வேள்விகளில் உண்டாகும் சோமரசத்தையும், மந்திரங்களோடு கூடிய தெளிந்த நெய்யையும், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகவும் குடிப்பவன் நீயே.(15) ஆசையின் கனிகளில் விருப்பமுள்ள பிராமணர்களால் எப்போதும் வேள்விகளில் வழிபடப்படுபவன் நீயே. ஒப்பில்லாத பலம் வாய்ந்தவன் நீயே, வேதங்களிலும் வேதாங்கங்களிலும் பாடப்படுபவன் நீயே. படித்த பிராமணர்கள் எப்போதும் வேள்விகளை நடத்திக் கொண்டு, வேதங்களை அதிக அக்கறையுடன் படிக்கக் காரணம் நீயே” {இப்படியே கத்ரு இந்திரனை போற்றினாள்} {என்றார் சௌதி}.(16
பாம்புகளைக் காப்பாற்றிய இந்திரன்! | ஆதிபர்வம் – பகுதி 26ஆஸ்தீக பர்வம் – 14) மழையைப் பொழிந்த இந்திரன்; மகிழ்ச்சியுற்ற பாம்புகள்; ரமணீயகத் தீவை அடைதல்…
சௌதி சொன்னார், “தேவமன்னனும், குதிரைகளிலே சிறந்தவற்றைத் தன் தேரிலே கொண்டவனுமான இந்திரன், கத்ருவால் இப்படி வழிபடப்பட்ட பிறகு, வானவட்டத்தை நீலநிறப் பெருமேகங்களால் மறைத்து,(1) அம்மேகங்களிடம், ‘உயிருண்டாக்கவல்ல, புனிதமான உங்கள் துளிகளைப் பொழியுங்கள்’ என்று பணித்தான். அந்த மேகங்கள் மின்னலுடன் கூடிய ஒளி பொருந்தி, தடையேதுமின்றி ஒன்றோடொன்று ஆகாயத்தில் முழங்கியபடியே பெருமழையைப் பொழிந்தன.(2)
அற்புதமானதும், பயங்கரமாகக் கர்ஜிப்பதும், இடைவிடாது பெரும் நிறைகொண்ட நீரைப் பொழிவதுமான அந்த மேகங்களால் வானமானது யுக முடிவு வந்ததைப்போலக் காட்சியளித்தது. பெரும் மழையினால் அலைகள் {போன்ற} மழைத்தாரைகளுடனும், மேகங்களின் முழக்கங்களுடனும், மின்னல்களின் ஒளிகளுடனும், காற்றின் கடுமையாலும், கொந்தளிப்பாலும் ஆகாயமானது பித்துப் பிடித்து ஆடுவதுபோலக் காட்சியளித்தது.(3,4) வானம் முழுவதும் மேகங்களால் மறைக்கப்பட்டது. இடைவிடாத பெருமழையால் கதிரவன் மற்றும் சந்திரனின் கதிர்கள் முற்றிலுமாக மறைந்தன.
இந்திரன் பெருமழைப் பொழிந்ததால் பாம்புகள் மிகுந்த மகிழ்வுற்றன.(5) பூமி எங்கும் நீர் நிறைந்தது, தெளிவான, குளிர்ந்த நீர் பாதாளம் வரை பாய்ந்தது.(6) பூமியெங்கும் எண்ணிக்கையில் அடங்காத அலைகள் நிறைந்த நீர் சூழ்ந்தது. பாம்புகளும் அவர்களின் தாயும் {கத்ருவும்} ரமணீயகமென்னும் தீவை {பத்திரமாக} அடைந்தனர்” {என்றார் சௌதி}.(7)
கருடனுக்குப் பாம்புகளிட்ட கட்டளை! | ஆதிபர்வம் – பகுதி 27(ஆஸ்தீக பர்வம் – 15)ரமணீயகத் தீவில் பொழுதைக் கழித்த பாம்புகள், மீண்டும் கருடனிடம் வேறு தீவுகளுக்குத் தங்களைச் சுமந்து செல்லுமாறு கட்டளையிட்டது; கருடனுக்கும் தாய் வினதைக்கும் இடையில் நடந்த உரையாடல்; அடிமைத்தளையில் இருந்து தங்களை விடுவிக்கும்படி பாம்புகளிடம் கேட்ட கருடன்; அமுதத்தைக் கோரிய பாம்புகள்…
சௌதி சொன்னார், “மழையில் நனைந்த பாம்புகள், அதன்பிறகு மிகவும் மகிழ்ந்திருந்தன. அந்த அழகான இறகுகள் கொண்ட பறவையானவன் {கருடன்} தங்களைச் சுமந்து செல்ல விரைவாகத் தீவை அடைந்தனர்.(1) அந்தத் தீவு, மகரங்களின் இருப்பிடமாக, அண்டம் படைத்தோனால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்கள் பயங்கரமான லவணச் சமுத்திரத்தைக் (உப்புக் கடல்) கண்டனர்.(2) கருடனுடன் வந்தவர்கள் அங்கே நீரால் சுத்தம் செய்யப்பட்ட ஓர் அழகான காடு கடலின் மடியில் இருந்ததையும், இறகுகள் கொண்ட இசைக்கலைஞர்களின் {பாடும் பறவைகளின்} இன்னிசை எங்கும் நிறைந்து இருந்ததையும் உணர்ந்தனர்.(3) {அப்படிப்பட்ட} அக்கானகத்தில் கருடனுடன் அப்பாம்புகள் வந்திறங்கினர். அங்கே, கொத்துக் கொத்தாக மரங்கள் பலவகைப்பட்ட மலர்களுடனும் பழங்களுடனும் நிறைந்து இருந்தன.
அழகான மாளிகைகளும் அங்கு நிறைந்திருந்தன. தாமரை நிறைந்த தடாகங்களாலும் நிறைந்திருந்தன.(4) சுத்தமான நீர் கொண்ட பல ஏரிகள் அங்கு இருந்தன. அங்குத் தவழ்ந்த சுத்தமணங்கொண்ட தென்றலால் உற்சாகம் நிலவியது.(5) மலய மலையில் மட்டுமே விளையும் பல மரங்கள் அங்கே இருந்தன. அவற்றின் உயரங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தன. இன்னும் பல மரங்களில், அவற்றின் மலர்கள் உதிர்ந்து தென்றலின் உதவியால் அழகாகப் பரவிக் கிடந்தன.(6,7) இப்படி அந்தக் கானகம் அழகாகவும், கந்தர்வர்களுக்கு எப்போதும் இன்பத்தைத் தருவதாகவும், விருப்பமானதாகவும் இருந்தது. அது {அந்த கானகமானது} மலர்களில் இருந்து மதுவை உண்டு மதிமயங்கிய வண்டுகளால் நிறைந்திருந்தது. இந்தக் காட்சிகள் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியைத் தந்தன.(8)
{இப்படி} பல விஷயங்களால் அந்தக் கானகம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவதாகவும், அழகாகவும், புனிதமானதாகவும் இருந்தது. பல பறவைகளின் மெல்லிசைகளை எதிரொலித்த அது கத்ருவின் மைந்தர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.(9) அந்தப் பாம்புகள் அந்தக் காட்டிற்கு வந்து மகிழ்ச்சியாகத் தங்கள் பொழுதைக் கழித்தன. பறவைகளின் மன்னனான சக்தி நிறைந்த கருடனிடம், அவை {பாம்புகள்},(10) “வேறு ஏதேனும் அழகான, சுத்தமான நீர் நிறைந்த தீவுக்கு எங்களை அழைத்துச் செல்வாயாக. நீ விண்ணோடியாதலால், அப்படிப் (காற்றில்) பறக்கும்போது நிறைய அழகான இடங்களைக் கண்டிருப்பாயே” என்று கட்டளையிட்டனர்.(11)
கருடன் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு தனது தாய் வினதையிடம், “தாயே, இந்தப் பாம்புகளின் உத்தரவுகளை எல்லாம் நான் ஏன் நிறைவேற்ற வேண்டும்?” என்று கேட்டான்.(12)
இப்படிக்கேட்கப்பட்ட வினதை, விண்ணோடியும், அனைந்து அறங்களும் நிறைந்தவனும், பெரும் சக்தியும், பலமும் கொண்டவனுமான தன் மகனிடம் {கருடனிடம்}, “ஓ பறவைகளில் சிறந்தவனே, என் கெடுபேறால் {துரதிர்ஷ்டத்தால்} நான் எனது சக்களத்தியிடம் அடிமையானேன். அந்தப் பாம்புகள், ஏமாற்று வேலை செய்து, பந்தயத்தில் தோற்கடித்து, என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின” என்றாள் {வினதை}.(13) தனது தாய் இப்படிக் கூறியதைக் கேட்டு, அந்த விண்ணோடி {கருடன்} மிகவும் துன்புற்று, அந்தப் பாம்புகளிடம்,(14) “பாம்புகளே, நான் எந்தப் பொருளைக் கொண்டுவந்தால், அல்லது எந்தப் பொருளைப் பற்றிய அறிவை அடைந்தால், அல்லது எந்த வீரச் செயலைச் செய்தால், இந்த அடிமைத்தனத்திலிருந்து நாங்கள் விடுபடுவோம், சொல்லுங்கள்” என்று கேட்டான்.”(15)
சௌதி தொடர்ந்தார், “இதைக் கேட்ட பாம்புகள், “உனது பலத்தால் அமுதத்தைக் கொண்டு வா. ஓ பறவையே {கருடா}, அப்போது நீங்கள் உங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள்” என்றன {பாம்புகள்}”.(16)
கருடன் வேட்டை! | ஆதிபர்வம் – பகுதி 28(ஆஸ்தீக பர்வம் – 16)அமுதத்தைத் தேடிச் சென்ற கருடனுக்குத் தாயின் அறிவுரை; நிஷாதர்களைக் கொன்று தின்ற கருடன்…
சௌதி சொன்னார், “இப்படிப் பாம்புகள் சொல்ல, அதைக் கேட்ட கருடன் தனது தாயிடம், “நான் சென்று அமுதத்தைக் கொண்டு வருகிறேன். வழியிலேயே ஏதாவது நான் சாப்பிட விரும்புகிறேன். எனக்கு வழிகாட்டுவாயாக” என்றான்.(1) வினதை, “தொலைதூரத்தில், நடுக்கடலில் நிஷாதர்களின் அழகான வசிப்பிடம் இருக்கிறது. அங்கு வாழும் ஆயிரக்கணக்கான நிஷாதர்களைத் தின்று அமுதத்தைக் கொண்டு வருவாயாக.(2) ஆனால், எந்த ஒரு பிராமணனின் உயிரையும் மாய்க்க உன் மனதில் எண்ணாதே. எல்லா உயிரினங்களிலும் பிராமணன் கொல்லப்படக்கூடாது. அவன் உண்மையில் நெருப்பு போன்றவன்.(3) ஒரு பிராமணன் கோபம் கொள்ளும்போது, நெருப்பு போல, அல்லது சூரியனைப் போல அல்லது கூரிய முனை கொண்ட ஆயுதம் போல அல்லது விஷம் போல ஆகிறான்.
பிராமணன் எல்லா உயிரினங்களுக்கும் தலைவனாகச் சொல்லப்படுகிறான். இதற்காகவும், பிற காரணங்களுக்காகவும் ஒழுக்கம் மிகுந்தவர்களிடையே பிராமணன் போற்றப்படுகிறான்.(4) அதனால் பிராமணர்களுடன் பகை என்பது எந்தச் சூழ்நிலையிலும் நல்லதல்ல. ஓ மகனே! உனக்குக் கோபம் உண்டானாலும், பிராமணர்களைக் கொல்லாதிருப்பாயாக.(5) ஓ பாவங்களற்றவனே! கடுமையான விரதங்கள் இருந்த ஒரு பிராமணனின் கோபம் எரிப்பது போல, சூரியனாலும் அக்னியாலும் கூட எரிக்க முடியாது.(6) இது போன்ற பல குறிப்புகளைக் கொண்டு ஒரு நல்ல பிராமணனை நீ அறியலாம். பிராமணனே எல்லா உயிர்களிலும் முன் பிறந்தவன். நான்கு வர்ணங்களில் முதன்மையானவன். அவன் எல்லா உயிரினங்களுக்கும் தந்தையும் தலைவனும் ஆகிறான்” என்றாள்.(7)
கருடன், “ஓ தாயே! {வினதையே}, பிராமணன் என்பவன் எந்த உருவத்தில் இருப்பான்? அவனுடைய நடத்தை எப்படியிருக்கும்? எந்தச் சக்திகள் கொண்டவனாக இருப்பான்? அவன் நெருப்பைப் போல ஒளிர்வானா? அல்லது அவன் அமைதிமிக்கவனா?(8) ஓ தாயே, எந்தச் சிறந்த அறிகுறிகளைக் கொண்டு ஒரு பிராமணனை அடையாளம் காண முடியும்? எனக்கு நீ பதில் சொல்வதே உனக்குத் தகும்” என்று கேட்டான்.(9) வினதை, “ஓ குழந்தாய்! உனது தொண்டையில் நுழைந்தவுடன், மீன்முள் தைத்தது போலவோ, நிலக்கரி எரிவது போலவோ உனக்குத் துன்பத்தை ஏற்படுத்துபவனை, பிராமணர்களில் சிறந்தவனாக நீ அறிந்து கொள்வாயாக.(10) கோபத்தால் எந்த ஒரு பிராமணனையும் நீ கொல்லக்கூடாது” என்றாள்.
வினதை தனது மகன் {கருடன்} மீது கொண்ட பாசத்தால் மீண்டும்,(11) “உனது குடலால் செரிக்கப்பட முடியாதவனை நல்ல பிராமணனாக அறிந்து கொள்வாயாக” என்றாள்.(12) பாம்புகளால் ஏமாற்றப்பட்டு, பெருந்துன்பத்திற்கு உள்ளான வினதை, தனது மகனின் {கருடனின்} ஒப்பற்ற பலத்தை அறிந்திருந்தாலும் அவனை முழு மனதோடு ஆசிர்வதித்தாள்.(13) “மாருதன் (காற்று தேவதை) உனது சிறகுகளைக் காக்கட்டும், உனது முதுகெலும்பை சூரியனும் சந்திரனும் காக்கட்டும். அக்னி உனது தலையைக் காக்கட்டும், வசுக்கள் உனது முழு உடலையும் காக்கட்டும்.(14) நானும் உனது நன்மைக்காக இங்கே அமர்கிறேன். ஓ குழந்தாய்! பத்திரமாகச் சென்று உன் காரியத்தை முடிப்பாயாக” என்று கூறினாள்.”(15)
சௌதி தொடர்ந்தார், “தன் தாயின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், தனது சிறகுகளை விரித்து, வானத்தில் உயர்ந்தான். அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன், பசித்தவன், விரைவாகச் சென்று இன்னொரு எமனைப் போல நிஷாதர்கள் மீது விழுந்தான்.(16)
நிஷாதர்களைக் கொல்ல விரும்பிய அவன் {கருடன்}, அந்த இடத்தில் பெரும் தூசிப்படலத்தைக் கிளப்பி ஆகாயத்தை மறைத்தான். கடலிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து {கடலை வற்ற செய்து}, மலைகளில் வளரும் மரங்களைக் குலுக்கினான்.(17) அந்தப் பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது வாயால் {அலகால்}, நிஷாதர்களுடைய நகரத்தின் முக்கிய வாயில்களை அடைத்து அந்த வாயைப் பெரிதாக்கினான். அந்த நிஷாதர்கள் பெரும் வேகத்துடன் பாம்பை உண்ணும் அவனது {கருடனின்} திறந்த வாய் இருக்கும் திசை நோக்கியே ஓடினர்.(18) காற்றினால் அசைக்கப்பட்ட காட்டு மரங்களிலிருந்து எப்படி ஆயிரக்கணக்கான பறவைகள் பெரிதும் கலக்கமுற்று விண்ணில் எழுமோ, அவ்வாறே அந்த நிஷாதர்கள், புயலினால் உண்டான புழுதியில் குருடாகி அவர்களை வரவேற்க விரிந்து திறந்திருந்த கருடனின் வாயில் போய் விழுந்தனர்.(19) பிறகு அந்த எதிரிகளை அழிப்பவனும், பெரும் பலம் பொருந்தியவனும், தன் காரியத்தை முடிக்கப் பெரும் லாகவத்தோடு நகர்பவனும், பசித்தவனுமான அந்த விண்ணோடிகளின் தலைவன் (கருடன்}, மீன்பிடி தொழிலைச் செய்துவந்த எண்ணற்ற நிஷாதர்களைத் தன் வாயை மூடி கொன்றான்” {என்றார் சௌதி}.(20)
விபாவசூரும் சுப்ரதீகனும்! | ஆதிபர்வம் – பகுதி 29(ஆஸ்தீக பர்வம் – 17)கருடனின் வாயில் சிக்கிய அந்தணன்; அவனையும், அவனது மனைவியையும் விடுவித்த கருடன்; கசியபரைக் கண்ட கருடன்; கருடனின் பசிபோக்க வழி சொன்ன கசியபர்; விபாவசூர் மற்றும் சுப்ரதீகன் ஆகியோரின் கதை…
சௌதி தொடர்ந்தார், “{அப்படிக் கருடன் நிஷாதர்களை விழுங்கிக் கொண்டிருக்கும் போது}, ஒரு பிராமணன் தனது மனைவியுடன் அந்த விண்ணதிகாரியின் தொண்டைக்குள் புகுந்தான். முன்னவன் {பிராமணன்} சுடர்விட்டெரியும் மரக்கரி போல் அந்தப் பறவையின் {கருடனின்} தொண்டையைச் சுட்டான். அவனிடம் கருடன்,(1) “ஒ பிராமணர்களில் சிறந்தவரே, எனது வாயை உமக்காகத் திறக்கும்போது விரைவாக வெளியேறுவீராக. என்னதான் பாவகரமான செயல்களிலேயே ஒரு பிராமணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அவன் என்னால் கொல்லப்படக் கூடாதவன்” என்றான்.(2) இப்படிக் கருடன் சொன்னவுடன் அந்த பிராமணன், “ஓ, எனது மனைவியான இந்த நிஷாதப் பெண்ணும் என்னுடன் வெளியே வரட்டும்” என்றான்.(3) அதற்குக் கருடன், “நிஷாத இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணையும் உம்முடன் அழைத்துக் கொண்டு விரைவாக வெளியே வருவீராக. எனது குடலின் வெப்பத்தால் இன்னும் நீங்கள் செரிக்கப்படாமல் இருப்பதால், காலந்தாழ்த்தாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்வீராக” என்றான்.(4)
சௌதி தொடர்ந்தார், “அதன் பிறகு அந்த பிராமணன் நிஷாத இனத்தைச் சேர்ந்த தன் மனைவியுடன் வெளியே வந்து கருடனைப் புகழ்ந்து, தான் விரும்பிய வழியில் சென்றான்.(5) பிராமணன் தனது மனைவியுடன் வெளியே வந்தவுடன், அந்தப் பறவை மன்னன் {கருடன்}, இறகுகளை விரித்து மனோ வேகத்துடன் விண்ணில் ஏறினான்.(6) அப்போது அவன் தனது தந்தையைக் {கசியபரை} கண்டான். அவரால் {கசியபரால்} அழைக்கப்பட்ட ஒப்புயர்வற்ற ஆற்றலுடைய அந்தக் கருடன், அவரிடம் சரியாகப் பேசினான்.(7) அந்தப் பெரும் முனிவர் (கசியபர்) “ஓ குழந்தாய்! {கருடா}, நீ நன்றாக இருக்கிறாயா? நாளும் உனக்குத் தேவையான உணவு கிடைக்கிறதா? மனிதர்களின் உலகத்தில் உனக்கு நிறைய உணவு கிடைக்கிறதா?” என்று கேட்டார்.(8)
“கருடன், “என் தாய் {வினதை} நன்றாக இருக்கிறாள். என் தமையனும் {அருணனும்},[1] (ராமாயணத்தில் வரும் ஜடாயு மற்றும் சம்பாதி ஆகியோரின் தந்தையே அருணன்.)நானும் அப்படியே இருக்கிறோம். ஆனால் தந்தையே, எனக்கு எப்போதும் போதுமான அளவுக்கு உணவு கிடைப்பதில்லை. அதனால் எனது உள்ளத்தில் அமைதி இல்லை.(9) அற்புதமான அமுதத்தைக் கொணர்வதற்காகப் பாம்புகளால் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். என் தாயை {வினதையை} அடிமைக் கட்டிலிருந்து விடுவிக்க, இன்று நான் கண்டிப்பாக அதைக் கொணர்வேன்.(10)
‘நிஷாதர்களை உண்பாயாக’ என்று என் தாய் {வினதை} எனக்குக் கட்டளையிட்டாள். நான் அவர்களை ஆயிரக்கணக்கில் தின்றேன். ஆனாலும் எனது பசி அடங்கவில்லை.(11) எனவே, ஓ போற்றுதலுக்குரியவரே {கசியபரே}, அமுதத்தை அபகரித்துக் கொண்டு வரும் அளவுக்கு நான் பலவானாக, வேறு ஏதாவது உணவை எனக்குக் காட்டுவீராக. எனது பசியையும் தாகத்தையும் தணித்துக் கொள்ளத் தகுந்த உணவைச் சுட்டிக் காட்டுங்கள்” என்று சொன்னான் {கருடன்}.(12)
கசியபர் கருடனிடம், “நீ காணும் இந்த ஏரி மிகவும் புனிதமானது. தேவலோகத்திலும் இஃது அறியப்பட்டிருக்கிறது. முகம் கீழ்நோக்க, தொடர்ந்து தனது அண்ணனான ஆமையை இழுத்துக் கொண்டிருக்கும் ஒரு யானை இதில் {இந்த ஏரியில்} இருக்கிறது.(13) முற்பிறவியிலிருந்தே அந்த இருவருக்குள்ளும் இருக்கும் பகை பற்றி உனக்கு விரிவாகச் சொல்கிறேன். அவர்கள் ஏன் இங்கிருக்கிறார்கள் என்பதை விரிவாகச் சொல்கிறேன் கவனமாகக் கேள்.(14)
முன்பொரு காலத்தில் விபாவசூர் என்று ஒரு பெரும்முனிவர் இருந்தார். அவர் மிகுந்த கோபக்காரராகவும் இருந்தார். அவருக்குச் சுப்ரதீகன் என்று ஒரு தம்பி இருந்தான்.(15) பின்னவன் (தம்பி {சுப்ரதீகன்}) தனது செல்வத்தை அண்ணனுடன் {விபாவசுவுடன்} கூட்டாக வைத்துக் கொள்ள விருப்பமில்லாதவனாக இருந்தான். சுப்ரதீகன் எப்போதும் பாகப்பிரிவினை குறித்தே பேசிக் கொண்டிருந்தான்.(16) சில காலம் கழித்து விபாவசூர் சுப்ரதீகனைப் பார்த்து, “செல்வத்தின் மீதுள்ள கண்மூடித்தனமான ஆசையால், மனிதர்கள் தங்கள் தந்தைவழியில் வந்த பரம்பரைச் செல்வங்களைப் பிரித்துக் கொள்ள ஆசைப்படுவது பெரிய முட்டாள்தனமாகும்.(17) பரம்பரைச் சொத்தைப் பிரித்துக் கொண்ட பிறகு, செல்வம் தரும் மயக்கத்தினால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டே இருப்பர். அப்போது அறிவற்றவர்களுக்கும், சுயநலம் கொண்டவர்களுக்கும் {சொத்தைப் பிரித்துக் கொண்டவர்கள்} இடையே நண்பர்கள் என்ற போர்வையில் இருக்கும் எதிரிகளால், குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுப் பேதங்கள் உருவாக்கப்பட்டு, பூசல் பலமாகி, அதனால் பின்னவர்கள் {சொத்தைப் பிரித்துக் கொண்டவர்கள்} ஒருவர் பின் ஒருவராக விழுவர்.(18,19) முழுமையான கேடு பிரிந்தவர்களை வெகு விரைவாக வந்தடையும். இதன் காரணமாகவே ஞானமுள்ளவர்கள் சகோதரர்களுக்குள் பிரிவினையை ஆமோதிக்கமாட்டார்கள்.(20) அப்படிப் பிரியும் சகோதரர்கள் அதிகாரபூர்வமான சாத்திரங்களைப் புறந்தள்ளி, ஒருவர் மீது ஒருவர் பயங்கொண்டு வாழ்வர். ஆனால் சுப்ரதீகா, நீ எனது அறிவுரைகளை ஏற்காமல் எப்போதும் பிரிவினையிலேயே ஆவல்கொண்டு உனது தனிப்பட்ட செல்வத்திற்கு ஏற்பாடு செய்வதற்கே விரும்புகிறாய்.(21) ஆகையால் நீ யானையாகக் கடவாய்” என்று சபித்தார் {விபாவசூர்}. இப்படிச் சபிக்கப்பட்ட சுப்ரதீகன் விபாவசூரைப் பார்த்து,(22) “நீயும், நீர் நடுவில் நகரும் ஆமையாகக் கடவாய்” என்று பதிலுக்குச் சபித்தான்.
இப்படிப்பட்ட முட்டாள்களான சுப்ரதீகன், விபாவசூர் ஆகிய அந்த இருவரும் செல்வத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் சபித்துக் கொண்டு முறையே யானையாகவும், ஆமையாகவும் ஆனார்கள். அவர்களின் கோபத்தால் இப்படித் தாழ்ந்த விலங்குகளாகினர்.(23,24) அவர்கள் தங்கள் பெரும்பலத்திலும், உடல் எடையிலும் கர்வங்கொண்டு தங்களுக்குள் எப்போதும் பகை வளர்த்தே வருகின்றனர்.
இந்த ஏரியில் அந்தப் பெரும் உடல் கொண்ட இரு விலங்குகளும் தங்கள் முற்பிறவிப் பகைக்குப் பொருத்தமாகவே நடந்து வருகின்றனர்.(25) இதோ பார், அவர்களில் ஒருவனான, பெருத்த உடலுடைய இந்த அழகான யானை, இப்போதுகூட {சண்டையிட} நெருங்குகிறது. நீரினுள்ளே வசிக்கும் பெரும் உடலைக் கொண்ட ஆமையும், யானையின் பிளிறலைக் கேட்டு, வெளியே வந்து ஏரியை முரட்டுத்தனமாகக் கலக்குகிறது. ஆமையைப் பார்த்ததும் யானையும் தனது துதிக்கையைச் சுழற்றிக் கொண்டு நீருக்குள் ஓடுகிறது. பெரும் சக்தியைத் தன்னுள் கொண்டு, தன் தந்தங்களின் அசைவாலும், தனது துதிக்கை, வால் மற்றும் கால்களாலும் மீன்கள் நிறைந்த ஏரியின் நீரைக் கலக்குகிறது.(26,28) பெரும் பலம் கொண்ட ஆமையும் தனது தலையைத் தூக்கி, தாக்குவதற்காக முன்னே வருகிறது. யானை, ஆறு யோஜனை {6 x 8 = 48 மைல்கள்} உயரமும், அதைவிட இருமடங்கு சுற்றளவும் {96 மைல்கள்} கொண்டிருக்கிறது.(29) ஆமை, மூன்று யோஜனை{24 மைல்கள்} உயரமும், பத்து யோஜனை {80 மைல்கள்} சுற்றளவும் கொண்டிருக்கிறது. பைத்தியக்காரத் தனமாக ஒருவரை ஒருவர் கொல்வதற்காகத் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் இந்த இருவரையும் உணவாகக் கொண்டுவிட்டு,(30) பிறகு நீ விரும்பும் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வாயாக. மலையைப் போன்றும், கருமேகங்களின் கூட்டம் போன்றும் தெரியும் மூர்க்கமான அந்த யானையையைத் தின்று, அமுதத்தைக் கொண்டு வா” என்றார் {கசியபர்}.”(31)
சௌதி தொடர்ந்தார், “கருடனிடம் இப்படிச் சொல்லி, “தேவர்களுடன் போரிடும்போது நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். ஓ முட்டையிடும் இனமே! {பறவை இனம் – முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்} பூரணகும்பமும், பிராமணர்களும், பசுக்களும், மற்றும் பிற புனித பொருள்களும் உன்னை ஆசீர்வதிக்கட்டும். ஓ பெரும்பலம் வாய்ந்தவனே! நீ தேவர்களுடன் போரிடும்போது, ரிக், யஜூர், சாமங்களும், புனிதமான வேள்வி நெய்யும், அனைத்துப் புதிர்களும் (உபநிஷத்துகளும்), உன்னை வலிமையாக்கட்டும்” என்று அவனை {கருடனை} ஆசீர்வதித்தார் {கசியபர்}.(32-35)
இப்படித் தனது தந்தையால் {கசியபரால்} ஆசீர்வதிக்கப்பட்ட கருடன், ஏரியின் அருகில் சென்றான். அவன் {கருடன்}, அந்தச் சுத்தமான நீர்பரப்பைச் (ஏரியைச்) சுற்றி பல்வேறு வகையான பறவைகளைக் கண்டான்.(36) நகர்வதில் பெரும் வேகம் கொண்ட அந்த விண்ணோடி {கருடன்}, தனது தந்தையின் {கசியபரின்} வார்த்தைகளை நினைவில் கொண்டு, யானையை ஒரு காலிலும், ஆமையை மற்றொரு காலிலும் இறுகப் பற்றினான்.(37) அதன் பிறகு அந்தப் பறவையானவன் {கருடன்} உயரமாக விண்ணுக்குப் பறந்தான். அலம்ப தீர்த்தம் என்ற புனிதமான இடத்தை அடைந்து, அங்கு பல தெய்வீக மரங்களைக் கண்டான்.(38)
அவனது சிறகுகள் எழுப்பிய காற்றின் தாக்கத்தால், அந்த மரங்கள் அச்சத்தால் நடுங்கத் தொடங்கின. தங்கக் கிளைகள் கொண்ட அந்தத் தெய்வீக மரங்கள், ‘நாம் உடைந்து போவோமோ’ என்று அஞ்சின.(39) விரும்பிய வரங்களைத் தரும் அந்த மரங்கள், பயத்தால் நடுங்குவதைக் கண்ட அந்த விண்ணோடி, ஒப்பற்ற தோற்றம் கொண்ட மற்ற மரங்களை நாடிச் சென்றான்.(40) அந்த மாபெரும் மரங்கள் தங்கம் மற்றும் வெள்ளியினாலான கிளைகளுடனும், மற்றும் விலைமதிப்பற்ற கற்களைக் (ரத்தினங்களைக்) கொண்ட கனிகளுடனும் இருந்தன. அவை கடல் நீரால் சுத்தப்படுத்தப்பட்டு இருந்தன.(41)
அங்குள்ள மரங்களிலேயே பிரமாண்ட அளவிலே வளர்ந்திருந்த ஒரு பெரும் ஆல மரத்தை, அந்தப் பறவைகளின் மன்னன் மனோ வேகத்துடன் நெருங்கும்போது, அந்த மரம்,(42) “ஒரு நூறு யோஜனை விரிந்து இருக்கும் எனது இந்தப் பெரிய கிளையில் அமர்ந்து, யானையையும், ஆமையையும் உண்பாயாக” என்றது.(43) பறவைகளில் சிறந்தவனும், மலை போன்ற உடல் கொண்டவனும், பெரும் வேகமுடையவனுமான அவன் {கருடன்}, விரைவாக அந்த ஆலமரத்தின் கிளையில் உட்கார்ந்த போது, இலைகளால் நிறைந்ததும், ஆயிரக்கணக்கான சிறகுள்ள உயிரினங்களுக்கு {பறவைகளுக்கு} தங்குமிடமுமான அந்தக் கிளை ஆட்டம் கண்டு ஒடிந்து விழுந்தது” {என்றார் சௌதி}.(44)
கருடனுக்குப் பெயர் கொடுத்த வாலகில்யர்கள்! | ஆதிபர்வம் – பகுதி 30(ஆஸ்தீக பர்வம் – 18)யானையையும், ஆமையையும் தூக்கிச் சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்த கருடன்; மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த வாலகில்யர்கள்; கருடனுக்குப் பெயர் கொடுக்கப்பட்டது; யானையையும், ஆமையையும் தின்ற கருடன்; அமுதத்தைக் காக்க உத்தரவிட்ட இந்திரன்…
சௌதி தொடர்ந்தார், “தனது காலால் பெரும் பலம் வாய்ந்த கருடன் தொட்டவுடனேயே, அந்த மரத்தின் கிளை ஒடிந்தது. அதைக் {ஒடிந்த கிளையை} கருடன் {அலகால்} பிடித்துக் கொண்டான்.(1) வியப்பால் தனது பார்வையைச் சுழலவிட்ட கருடன், வாலகில்ய முனிவர்கள் அதிலிருந்து {அந்த கிளையிலிருந்து} தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவமியற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான்.(2) அந்தக் கிளை கீழே விழுந்தால் அந்த முனிவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதை உணர்ந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன், யானையையும், ஆமையையும் இன்னும் இறுகப் பற்றினான்.(3,4)
முனிவர்கள் கொல்லப்படுவார்களே என்று அஞ்சி, அவர்களைக் காப்பாற்ற விருப்பங்கொண்டு, அந்தக் கிளையைத் தனது அலகால் பற்றி, சிறகுகளை அடித்து உயர்ந்தான்.(5) அந்தப் பெரும் முனிவர்கள் தேவர்களாலும் முடியாத இந்தச் செயலைக் கண்டு வியந்து, அந்த வலிமைமிகுந்த பறவைக்கு ஒரு பெயர் கொடுத்தனர்[1].(6) (கருடனுக்கு வாலகில்யர்கள்தான் பெயர் கொடுக்கிறார்கள். அதற்கு முன்பு அவனுக்கு என்ன பெயர்? வேறொரு பதிப்பில் வைநதேயன் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. வைநதேயன் என்றால் வினதையின் மகன் என்று பொருள்)வாலகில்யர்கள், “பாம்புகளை உணவாக உண்பவனும், பறவைகளில் முதன்மையானவனும், விண்ணோடியுமான இவன் {கருடன்}, பெரும் சுமையைச் சுமந்து கொண்டிருக்கும்போதும், தனது சிறகுகளால் உயர்வதால், கருடன் (பெரும் சுமையைச் சுமப்பவன்) என்று அறியப்படட்டும்” என்றனர்.(7)
தனது சிறகுகளால் மலைகளை நடுங்க வைத்த கருடன், நிதானமாக வானத்தில் பறந்து சென்றான். யானை மற்றும் ஆமையோடு {கைகளில் பிடித்து} உயர்ந்த {பறந்த} போது கீழே இருக்கும் பல்வேறு பகுதிகளை நோக்கினான்.(8) வாலகில்யர்களைக் காப்பாற்ற விரும்பிய அவன், அமர ஓர் இடமும் காணவில்லை. கடைசியாக மலைகளில் முதன்மையான கந்தமாதன மலைக்குச் சென்றான்.(9) அங்கே அர்ப்பணிப்புடன் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனது தந்தை கசியபரைக் கண்டான். அந்த விண்ணோடியை, அந்தத் தெய்வீக வடிவிலானவனை, அதிகப் பிரகாசமும், பலமும் சக்தியும் கொண்டவனை, காற்றுவேகம், மனோவேகம் கொண்டவனை, மலைச்சிகரம் போன்று பெரிதாக இருப்பவனை, பிராமணனின் சாபத்தைப் போல உடனே அடிக்கத் தயாராக இருப்பவனை, புத்திக்கு எட்டாதவனை, விவரிக்க முடியாதவனை, அனைத்து உயிருக்கும் அச்சத்தை ஏற்படுத்துபவனை, பெரும் ஆற்றலுள்ளவனை, பயங்கரமானவனை, அக்னி போலப் பிரகாசிப்பவனை, தேவர்களாலும், தானவர்களாலும், அசுரர்களாலும் வெல்லப்பட முடியாதவனை, மலையைப் பிளந்து, பெருங்கடலைக் குடித்து மூன்று உலகங்களையும் அழிக்க வல்லவனை, மூர்க்கமாக யமனைப் போல் காட்சியளிப்பவனை, தனது மகனான கருடனை கசியபரும் கண்டார். அவன் தன்னை நெருங்கி வருவதைக் கவனித்த புகழ்பெற்ற கசியபர், அவனது நோக்கம் அறிந்து பேசினார்.(10-14)
கசியபர், “ஓ குழந்தாய்! ஆராயாத {கண்மூடித்தனமான} செயலைச் செய்யாதே. அப்படிச் செய்தால் நீ வேதனையை அடைய வேண்டியிருக்கும். சூரியக் கதிர்களைக் குடித்து உயிர்தாங்கிக் கொண்டிருக்கும் இந்த வாலகில்யர்கள் கோபம் கொண்டால் உன்னைச் சிதறடித்து விடுவார்கள்”என்றார் {கசியபர்}.”(15)
சௌதி தொடர்ந்தார், “தவப்பயன்களால் தங்களது பாவங்களை எரித்து, நற்பேறு பெற்ற வாலகில்யர்களைச் சாந்தப்படுத்த எண்ணி கசியபர் தனது மகனுக்காக அவர்களிடம்,(16) “ஆன்மீகத்தையே செல்வமாகக் கொண்டவர்களே, கருடனின் செயல்கள், அனைத்து உயிருக்கும் நன்மை பயக்கும் செயல்களே. அவன் சாதிக்க நினைக்கும் இந்தப் பணி கடுமையானது. நீங்கள் அவனுக்கு அனுமதி வழங்குங்கள்” என்று வேண்டினார்.(17)
சௌதி தொடர்ந்தார், “புகழ்பெற்ற கசியபரால் இப்படி வேண்டிக்கொள்ளப்பட்ட அந்தத் துறவிகளும், தங்கள் தவத் துறவுகளை இயற்ற, அந்தக் கிளையைக் கைவிட்டு, புனிதமான இமய மலைக்குச் சென்றனர்.(18) முனிவர்கள் சென்றதும், அந்த வினதையின் மைந்தன் {கருடன்}, கிளையைத் தனது வாயில் வைத்துக்கொண்டே தடைபட்ட குரலுடன் தனது தந்தை கசியபரிடம்,(19) “ஓ சிறப்புமிக்கவரே! இந்த மரத்தின் கிளையை நான் எங்கே வீசி எறிவது? ஓ புகழ்பெற்றவரே! மனிதர்கள் இல்லாத ஒரு பகுதியை எனக்குச் சுட்டிக் காட்டுவீராக” என்று கேட்டான்.(20) கசியபர், குகைகளும், எப்போதும் பனி மூடிய பள்ளத்தாக்குகளும் உள்ள, சாதாரண உயிரினங்கள் எண்ணத்தால்கூட நெருங்க முடியாத மனிதர்களற்ற ஒரு மலையைப் பற்றிச் சொன்னார்.(21)
அந்தப் பெரும்பறவையானவன் கிளையையும், யானையையும், ஆமையையும் தாங்கிக் கொண்டு அந்த மலையை நோக்கி வேகமாகப் பறந்து சென்றான்.(22) பெரும் உடல் படைத்த அந்தப் பறவை தூக்கிச் சென்ற மரத்தின் பெருங்கிளையை நூறு தோல்களைக் (விலங்குத் தோல்களைக்) கொண்டு வார் {கயிறு}[2] (நூறு மாடுகளின் தோலினால் செய்யப்பட்ட வார் என்பது பழைய உரை என்று கும்பகோணம் பதிப்பில் காணப்படுகிறது.)அமைத்தாலும் சுற்றிக் கட்ட முடியாது.(23) பறவைகளின் மன்னன் கருடன், நூறாயிரம் யோஜனைகளை மிகக் குறைந்த நேரத்தில் பறந்து கடந்தான்.(24) அந்த விண்ணோடி, நொடிப்பொழுதில் தனது தந்தை சுட்டிக்காட்டிய திசையைப் பின்பற்றி மலையை அடைந்து, அந்தப் பிரம்மாண்டமான கிளையைக் கீழே விட்டான். அது பேரொலியுடன் விழுந்தது.(25)
கருடனின் சிறகுகளால் எழும்பிய புயலால் தாக்கப்பட்டு, அந்த மலைகளின் இளவரசன் நடுங்கினான். அங்கிருந்த மரங்களும் பூக்களைச் சொரிந்தன.(26) ரத்தினங்களையும் தங்கங்களையும் கொண்டு அந்த மலையை அலங்கரித்த சிகரங்கள், கட்டறுந்து எல்லாப்புறமும் கீழே விழுந்தன.(27) கீழே விழுந்த அந்தக் கிளை, மின்னலைக் கொண்டிருக்கும் மேகங்கள் போலக் கரும் இலை கொத்துக்களின் நடுவே தங்க மலர்களைக் கொண்ட மரங்கள் மீது விழுந்து, அவற்றைச் சாய்த்தது.(28) தங்கம் போன்று ஒளிவீசும் அம்மரங்கள் கீழே விழுந்து, மலை உலோகங்களின் சாயமேற்றப்பட்டு, சூரியக் கதிர்களில் குளித்ததைப் போல ஒளிர்ந்தன.(29) பிறகு, அந்தப் பறவைகளில் சிறந்தவனான கருடன், அந்த மலையின் உச்சியில் அமர்ந்து யானையையும், ஆமையையும் உண்டு, அந்த மலையை விட்டுச் சிறகடித்துப் பெரும் வேகத்துடன் பறந்தான்.(30,31)
{அதே நேரத்தில்} பல்வேறு தீய சகுனங்கள் தோன்றி தேவர்களை அச்சத்தில் ஆழ்த்தின. இந்திரனுக்குப் பிடித்த வஜ்ராயுதம், பயத்தால் ஒளிர்ந்தது.(32) ஆகாயத்திலிருந்து விண்கற்கள் நெருப்புடனும் புகையுடனும் பகலிலேயே விழுந்தன. வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்தியர்கள், சப்யர்கள், மருத்துக்கள் மற்றும் மற்ற தேவர்களின் ஆயுதங்கள் தங்களுக்குள் தங்கள் சக்தியை செலவிட்டன. {அதாவது அவற்றுக்குள்ளேயே சண்டையிட்டன}.(33,34) தேவாசுரப் போர் நிகழ்ந்துபோது கூட இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடந்ததில்லை. இடியுடன் கூடிய காற்று அடித்தது, விண்கற்கள் ஆயிரக்கணக்கில் விழுந்தன.(35) வானம் மேகமற்றதாய் இருந்தாலும், முழங்கிக் கொண்டே இருந்தது. தேவர்களுக்குத் தேவனும் இரத்த மழையைப் பொழிந்தான்.(36) தேவர்களின் கழுத்திலிருந்த பூமாலைகள் வாடி அவர்கள் வீரம் மங்கியது. கொடூரமான மேகத் திரள், அடர்ந்த இரத்த மழையைப் பொழிந்தன.(37)
காற்றினால் எழும்பிய புழுதியானது தேவர்களின் கிரீடங்களின் பளபளப்பை குறைத்து மங்கியதாக்கியது. இந்தத் தீய தடைகளைக் கண்டு மற்ற தேவர்களுடன் சேர்ந்து அச்சத்தால் குழம்பிப் போன ஆயிரம் வேள்விகள் செய்தவன் (இந்திரன்), பிருஹஸ்பதியிடம்,(38) “ஓ வழிபடத் தகுந்தவரே, இந்த இயற்கைச் சீற்றங்கள் திடீரென ஏன் எழுந்தன? போரில் எங்களை வெல்ல எந்த எதிரியையும் நான் காணவில்லையே” என்றான்.(39) பிருஹஸ்பதி, “ஓ தேவர்கள் தலைவனே, ஓ ஆயிரம் வேள்வி நடத்தியவனே {இந்திரா}, உனது தவறும், கவனக்குறைவும், உயரான்ம வாலகில்ய முனிவர்களின் ஆன்மிகத் தவமுமே இதற்கெல்லாம் காரணம்.(40) பெரும் பலம்பொருந்திய விண்ணோடியும், நினைத்த உருவத்தை நினைத்தமாத்திரத்தில் அடைபவனுமான கசியபர் மற்றும் வினதையின் மகன் {கருடன்}, சோமத்தை அபகரிக்க நெருங்கி வருகிறான்.(41) பெரும் வலிமை படைத்தவர்களில் முதன்மையானவனான அந்தப் பறவையால் உன்னிடமிருந்து சோமத்தை கவர முடியும். அவனால் எல்லாம் முடியும். அடைய முடியாத ஒன்றை அவனால் எளிதாக அடைய முடியும்.”(42)
சௌதி தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்திரன், அமுதத்தைக் காக்கும் காவலர்களிடம், “பெரும்பலமும் சக்தியும் கொண்ட ஒரு பறவையானவன் அமுதத்தை அபகரிக்க எண்ணங்கொண்டுள்ளான்.(43) அவன் {கருடன்} அதை அபகரித்து விடக்கூடாது. ஆகையால் உங்களை முன்கூட்டியே எச்சரிக்கிறேன். அவன் அளவிலடங்காத சக்தி கொண்டவன் என்று பிருஹஸ்பதி சொன்னார்” என்று தகவல் தெரிவித்தான்.(44)
தேவர்கள் இதைக் கேட்டு வியந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அமுதத்தைச் சுற்றி அவர்கள் நின்று கொண்டனர். பெரும் வீரம் கொண்டவனும், வஜ்ரதாரியுமான இந்திரனும் அவர்களுடன் நின்றான்.(45) பெரும் மதிப்புக் கொண்ட தங்கத்தில் ரத்தினங்கள் பதித்த மார்புக் கவசங்களையும், உறுதியும் பளபளப்புமிக்கத் தோலாலான கவசங்களையும் தேவர்கள் அணிந்தனர்.(46) அந்த வலிமைமிக்கத் தேவர்கள், பல்வேறு கூர்முனை கொண்ட, பயங்கரமான உருவங்களில் உள்ள பலதரப்பட்ட ஆயுதங்களைத் தரித்தனர்.(47) கணக்கிலடங்காதவையாக இருந்த அந்த எல்லா ஆயுதங்களும் நெருப்புப் பொறிகளையும் புகையையும் கக்கிப் பிரகாசித்தன.(48)
நிறையச் சக்கரங்களையும், கூர்முனை முட்களைக் கொண்ட இரும்புத் தண்டங்களையும், திரிசூலங்களையும், போர்க்கோடரிகளையும், பல்வேறு வகைப்பட்ட கூர்முனை கொண்ட கணைகளையும், பளபளப்பான வாட்களையும், கொடூரமான வடிவங்கள் கொண்ட கதாயுதங்களையும், தங்கள் உடலில் தரித்துக் கொண்டனர்.(49) பிரகாசமான ஆயுதங்களையும், தெய்வீக ஆபரணங்களையும் தரித்து ஒளிவீசி கொண்டு தங்கள் அச்சத்தைத் தணித்துக்கொண்டு, தேவர்கள் அங்கே காத்திருந்தனர்.(50) ஒப்பற்ற பலமும், சக்தியும், பிரகாசமும் கொண்ட தேவர்கள் அமுதத்தைக் காக்கத் தீர்மானித்துக் கொண்டனர். அசுரர்களின் நகரங்களை அழித்தொழிக்க வல்லவர்களான அவர்கள் {தேவர்கள்} நெருப்பு போலக் காட்சியளித்தனர்.(51) தேவர்கள் நூறாயிரக்கணக்கான கூர்முனை முட்கள் கொண்ட இரும்புக் கதைகளைக் கொண்டு அந்த {போர்க்களமாகப் போகும்} இடத்தில் நின்றதால், அந்த இடமே சூரியனின் கதிர்களால் பிரகாசிக்கும் இன்னொரு வானம் போலவே விளங்கியது” {என்றார் சௌதி}.(52)
வாலகில்யர்களின் கோபம்! | ஆதிபர்வம் – பகுதி 31ஆஸ்தீக பர்வம் – 19)சௌனகர் கேட்ட கேள்விகள்; கசியபர் செய்த வேள்வியில் வாலகில்யர்களை அவமதித்த இந்திரன்; மற்றொரு இந்திரனை உருவாக்கத் தவமிருந்த வாலகில்யர்கள்; கருடனின் பிறப்புக்குக் காரணமாக அமைந்த வாலகில்யர்கள்…
சௌனகர், “ஓ சூதப் புதல்வா! {சௌதியே}, ”இந்திரன் செய்த தவறு என்ன? அவன் கவனக்குறைவாகச் செய்த செயல் என்ன? எப்படி வாலகில்யர்களின் தவப்பயனின் விளைவால் கருடன் பிறந்தான்?(1) கசியபர் எப்படிப் பறவைகளின் அரசனை {கருடனை} மகனாக அடைந்தார்? எப்படி எல்லா உயிரினங்களாலும் வெல்ல முடியாதவனாகவும், கொல்ல முடியாதவனாகவும் அவன் {கருடன்} இருக்கிறான்?(2) எப்படி அந்த விண்ணோடியால் விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்லவும், விரும்பிய சக்தியை அடையவும் முடிகிறது? இவ்விவரங்கள் புராணங்களில் உள்ளதெனில் நான் அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டார் {சௌனகர்}.(3)
அதற்குச் சௌதி, “நீர் கேட்பவையெல்லாம் உண்மையில் புராணங்களில் உள்ளவைதான். ஓ இருபிறப்பாளரே {பிராமணரே}, நான் அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன் கேட்பீராக.(4) முன்பொரு காலத்தில், உயிரினங்களின் தலைவரான {பிரஜாபதியான} கசியபர், புத்திரப்பேறுக்காக வேள்வி நடத்தினார், முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும் அவருக்கு உதவி செய்தனர்.(5) கசியபர், இந்திரனையும், அவனுக்கு உதவியாகத் துறவிகளான வாலகில்யர்களையும், மற்ற தேவர்களையும் வேள்விக்குத் தேவையான எரிபொருளைக் {சமித்துக்களை} கொணர்வதற்கு நியமித்திருந்தார்.(6) தேவனான இந்திரன், மலைக்கு நிகரான பெரும் சுமையைத் தன் பலத்திற்கேற்றபடி எந்தவொரு சிரமுமின்றிக் கொண்டு வந்தான்.(7) வரும் வழியில், கட்டைவிரல் அளவே உள்ள வாலகில்ய முனிவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பலாச இலையின் குச்சியைச் சுமந்து கொண்டு வருவதைக் கண்டான்.(8)
அந்த முனிவர்கள் உணவில்லாமல் மிகவும் உடல்மெலிந்து, அவர்கள் உடலுக்குள்ளே தங்கள் உடல் மறைந்திருந்தனர் {எலும்போடு ஒட்டி இருந்தனர்}. பாதையிலே மாடுகளின் குளம்புகள் ஏற்படுத்திய பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மிகவும் சிரமப்படும் அளவுக்குப் பலவீனமாக அவர்கள் இருந்தனர்.(9) புரந்தரன் (இந்திரன்), தனது பலத்தில் கர்வங்கொண்டு, அவர்கள் தலைக்குமேல் தாண்டிச் சென்றது[1] (தலையைத் தாண்டிச் செல்வது அவமதிக்கும் செயலாகவே இன்றும் நம்மால் கொள்ளப்படுகிறது.)மட்டுமல்லாமல், அவர்களைத் திரும்பிப்பார்த்து, கேலியாகச் சிரித்தும் அவமதித்தான்.(10) இப்படி அவமதிக்கப்பட்ட முனிவர்கள் மிகுந்த கோபமும், துன்பமும் கொண்டு ஒரு பெரிய வேள்விக்கு ஏற்பாடு செய்து, இந்திரனைப் பீதியடையச் செய்தனர்.(11)
ஓ சௌனகரே! கேளும், தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற, விரதங்களை மேற்கொள்பவர்களும், ஞானமுள்ளவர்களும், சிறந்தவர்களுமான அந்தத் துறவிகள் வேள்வித்தீயில், சுத்தமான நெய்யை விட்டு, சத்தமாக,(12) “அனைத்து இடத்திற்கும் தன் விருப்பப்படி செல்லக்கூடியவனும், விரும்பிய அளவு சக்தியை அடையக்கூடியவனும், (இப்போது) இருக்கும் தேவர்களின் தலைவனுக்கு அச்சத்தைத் தரக்கூடியவனாக இன்னொரு இந்திரன் உண்டாகட்டும். எங்கள் தவங்களின் பயனாக மனம் போல் வேகங்கொண்டவனாகவும்[2], (மனம் போன்ற வேகம் என்றால் அளவிட முடியாத வேகம் என்று பொருள். இங்கிருந்து நாம் சூரியனை நினைத்துக் கொள்கிறோம். அப்படியானால் நம் மனமானது சூரியனை அடைந்த விட்டதாகப் பொருள். இதுவே அளவிட முடியாத மனோவேகமாகும்.)பயங்கரமானவனாகவும் ஒருவன் தோன்றட்டும்” என்று மந்திரங்களைச் சொன்னார்கள்.(13,14) இதைக் கேள்விப்பட்டவனும், ஆயிரம் வேள்விகளைச் செய்தவனுமான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பெரும் அச்சங்கொண்டு, நோன்புகள் நோற்கும் கசியபரிடம் தஞ்சம் புகுந்தான்.(15)
பிரஜாபதியான கசியபர் இந்திரனிடம் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டு, வாலகில்யர்களிடம் சென்று அவர்களது வேள்வி வெற்றிகரமாக முடிந்ததா என்று கேட்டார்.(16) அந்த உண்மை பேசும் முனிவர்கள், “நீங்கள் சொல்வது போலவே நடக்கட்டும்” என்றனர். பிரஜாபதியான கசியபர் அவர்களை அமைதிப்படுத்தி,(17) “பிரம்மனின் வார்த்தைகளால், இவன் (இந்திரன்) மூன்று உலகங்களிலும் தேவர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளான். துறவிகளே, நீங்களும் மற்றுமொரு இந்திரனை உற்பத்தி செய்யப் பாடுபடுகிறீர்கள்!(18) சிறந்தவர்களே, பிரம்மனின் வார்த்தைகளைப் பொய்யாக்காமல் இருக்கச் செய்வதே உங்களுக்குத் தகும். உங்களுடைய இந்த முயற்சியும் பலனில்லாமல் போகவேண்டாம்.(19) பெரும்பலம் கொண்டவனாக, சிறகுள்ள உயிரினங்களுக்கு இந்திரனாக (தலைவனாக) ஒருவன் தோன்றட்டும். உங்கள் முன் பணிந்து நிற்கும் இந்த இந்திரன் மீது கருணை கொள்ளுங்கள்” என்று சொன்னார் {கசியபர்}.(20) கசியபரால் இப்படி வேண்டிக்கொள்ளப்பட்ட வாலகில்யர்கள், முனிவர்களில் முதல்வரான பிரஜாபதி கசியபருக்குத் தங்கள் மரியாதைகளைச் செலுத்திவிட்டுப் பேசத் தொடங்கினர்.(21)
அந்த வாலகில்யர்கள், “ஓ பிரஜாபதி! எங்கள் எல்லோராலும் நடத்தப்படும் இந்த வேள்வியானது ஓர் இந்திரனுக்காக நடைபெறுகிறது! உண்மையில் அவன் உமக்கு மகனாகப் பிறக்கவே இந்த வேள்வி நடைபெறுகிறது.(22) இதன் பலனை உம் கையிலேயே விடுகிறோம். இந்த விஷயத்தில் எது நன்மையாகவும், சரியாகவும் இருக்குமோ அதைச் செய்யும்” என்று சொன்னார்கள்.(23)
சௌதி தொடர்ந்தார், “அப்பொழுது, மனதிற்கினியவளும், நற்பேறு பெற்றவளும், நோன்பு நோற்பவளும், தக்ஷனின் நன்மகளுமான வினதை, பிள்ளைப்பேற்றின் மீதுள்ள ஆசையால், தனது நோன்புகளை முடித்துக் குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, உறவுக்கான சரியான கனிதரும் காலம் வந்தவுடன் தனது நாயகனை நெருங்கினாள். கசியபர் அவளிடம்,(24,25) “மதிப்புக்குரியவளே, நான் நடத்திய வேள்வி இப்போது கனி தந்திருக்கிறது. நீ என்ன ஆசைப்பட்டாயோ அஃது உனக்குக் கிடைக்கும். மூன்று உலகங்களுக்கும் தலைவர்களான வீர மகன்கள் இருவர் உனக்குப் பிறப்பார்கள்.(26) எனது வேள்வியின் தூய்மையான நோக்கத்தாலும், வாலகில்யர்களின் தவப்பயனாலும், அந்த மகன்கள் மிகுந்த நற்பேறு பெற்றவர்களாகவும், மூவுலகங்களாலும் வழிபடத் தகுந்தவர்களாகவும் இருப்பார்கள்” என்று சொன்னார்.(27)
புகழ்பெற்றவரான கசியபர் மீண்டும் அவளிடம் {வினதையிடம்}, “இந்தப் புனிதமான விதைகளை, மிகுந்த கவனத்துடன் சுமந்து வா.(28) இந்த இருவரும் எல்லாச் சிறகுள்ள உயிரினங்களுக்கும் {பறவைகளுக்கும்} தலைவர்கள் ஆவார்கள். நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவை அடையும் இந்த வீரமிக்க விண்ணோடிகள் மூன்று உலகங்களாலும் மதிக்கப்படுவார்கள்” என்று சொன்னார்.(29)
நடைபெற்ற காரியங்களால் திருப்தியடைந்த பிரஜாபதி {கசியபர்}, ஆயிரம் வேள்வி செய்த இந்திரனிடம், “பெரும் பலமும் வீரமும் மிக்க இரு சகோதரர்கள் உனக்கு உதவி செய்யக் கிடைப்பார்கள்.(30) அவர்களால் உனக்கு எந்த இன்னலும் ஏற்படாது. உன் வருத்தம் தீரட்டும், நீயே எல்லோருக்கும் தலைவனாக இருப்பாய்.(31) இனி எப்போதும், பிரம்மனின் பெயரை உச்சரிப்பவர்களைச் சிறுமைப்படுத்தாதே. கோபக்காரர்களை, இடியைப் போன்ற வார்த்தைகளை உச்சரிப்பவர்களை அவமதிக்காதே” என்று அறிவுரை கூறினார்.(32)
இதைக் கேட்ட இந்திரன் பயத்தை விட்டு, தேவலோகம் சென்றான். வினதையும், தனது நோக்கம் நிறைவேறியதால், மிகவும் மகிழ்ந்தாள்.(33) அவள் அருணன் மற்றும் கருடன் ஆகிய இரு மகன்களைப் பெற்றாள். குறை உடலுடன் பிறந்தவனான அருணன் சூரியனுக்குச் சாரதியாக நின்றான்.(34) கருடனுக்குப் பறவைகளின் தலைமை கொடுக்கப்பட்டது. ஓ பிருகுவின் வழித்தோன்றலே! {சௌனகரே}, கருடனின் பெரும் சாதனைகளைக் கவனமாகக் கேளும்” {என்றார் சௌதி}.(35)
தேவர்களைக் கலங்கடித்த கருடன்! |ஆதிபர்வம் – பகுதி 32(ஆஸ்தீக பர்வம் – 20) கருடனுடன் மோதிய தேவர்கள்; தோற்றோடிய தேவர்கள்; பல நதிகளின் நீர்கொண்டு அமுதமிருக்கும் இடத்தில் இருந்த நெருப்பை அணைத்த கருடன்…
சௌதி சொன்னார், “ஓ பிராமணர்களில் முதன்மையானவரே! இப்படித் தேவர்கள் போருக்குத் தயாராக இருக்கையில், பறவைகளின் மன்னன் கருடன், அந்த விவேகமுள்ளவர்கள் முன் விரைவாக வந்தான்.(1) அவனது பெரும்பலத்தைக் கண்ட தேவர்கள் அச்சத்தால் நடுங்கி, ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(2) சோமத்தை (அமுதத்தைக்) காப்பவர்களில் அளவிட முடியா பலத்துடனும், நெருப்பு போன்ற சுடரொளியுடனும், பெரும் சக்தியுடனும் கூடிய பௌமனன் (தேவ தச்சன் {விஸ்வகர்மா}) இருந்தான்.(3) சிறிது நேரமே நீடித்த ஒரு பயங்கர மோதலுக்குப் பிறகு, பறவைகள் மன்னனால் {கருடன்}, கூர்நகங்களாலும், அலகாலும், சிறகுகளாலும் அடிபட்ட அவன் இறந்தவனாகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான்.(4)
அந்த விண்ணோடி {கருடன்}, தனது சிறகுகளால் பெரும்புயலை ஏற்படுத்தி, புழுதிப்படலத்தால் உலகங்களை இருளில் முழ்க வைத்துத் தேவர்களைத் திகைக்கவைத்தான்.(5) பின்னவர்கள் {தேவர்கள்} அங்கு ஏற்பட்ட புழுதியால் தாக்கப்பட்டு, மூர்ச்சையாகி விழுந்தனர். அமுதத்தைக் காத்த இறவாதவர்கள் {தேவர்கள்} அந்தத் தூசிப்படலத்தால் குருடாகி கருடனைக் காண முடியாதவர்களாகினர்.(6)
இப்படிக் கருடன் அந்தத் தேவலோகத்தையே கலங்கடித்தான். தேவர்களைத் துவைத்தெடுத்து, தனது சிறகுகளாலும் அலகுகளாலும் காயங்களை உண்டாக்கினான்.(7) பிறகு அந்த ஆயிரம் கண் கொண்ட தேவன் {இந்திரன்} வாயுவைப் பார்த்து, ‘இந்தத் தூசி மழையை மறைய செய்வாயாக. இஃது உண்மையில் உன்னுடைய வேலையே’ என்றான்.(8) பிறகு, பலம்வாய்ந்த வாயு தேவன் அந்தப் புழுதியை விரட்டியடித்தான். இருள் மறைந்த பிறகு, தேவர்கள் கருடனைத் தாக்கினர்.(9) அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன் தேவர்களால் தாக்கப்படும்போது, யுக முடிவில் வரும் பெரும் மேகம் போலப் பெரிதாக முழங்கி அனைத்து உயிருக்கும் அச்சத்தை ஏற்படுத்தினான்.(10)
எதிரி வீரர்களைக் கொல்பவனும், சக்திமிக்கவனுமான அந்தப் பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது சிறகுகளைப் பயன்படுத்தி உயர்ந்தான். இருபுறக்கூர் கொண்ட வாட்கள் {பட்டிசங்கள்}, கூர்முனை முட்கள் பதித்த இரும்புத் தண்டங்கள் {பரிகங்கள்}, கூர் ஈட்டிகள், கதாயுதங்கள், பளபளப்பான கணைகள், சூரிய வடிவிலான பல சக்கரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தேவர்களும், இந்திரனும், கருடன் தங்கள் தலைக்குமேல் உயர்வதைக் கண்டனர்.(11-13) அந்தப் பறவைகள் மன்னன் {கருடன்}, அவர்களை அனைத்துத் திக்குகளிலிருந்தும் பலதரப்பட்ட ஆயுதங்களால் அடித்தும்[1] (கருடன் ஆயுதமேதும் கொண்டு வரவில்லை. ஆக அவன் தேவர்களை ஆயுதம் கொண்டு தாக்கியதாகச் சொல்வது பொருத்தமாக இல்லை. கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தரின் பதிப்பு, பிபேக் திப்ராயின் பதிப்பு ஆகியவற்றில் கருடன் ஆயுதம் கொண்டு போரிட்டதாகக் குறிப்பேதும் இல்லை.. மேலே அடித்தும் என்றிருக்கும் இடத்தில் “அவர்களால் அடிக்கப்பட்டும்” என்று இருந்திருக்க வேண்டும், தேவர்களால் பலபக்கங்களில் இருந்தும் கருடன் ஆயுதங்களால் தாக்கப்படுகிறான், இருந்தும் அவன் தள்ளாடாமல் தாக்கப்படுகிறான் என்று பொருள்படும். தள்ளாடாமல் போர்புரிந்தான் என்பது அஃதை உறுதி செய்கிறது.)சிறிதும் தள்ளாடாமல் கடும் போர் புரிந்தான். பெரும் வீரம் கொண்ட வினதையின் மைந்தன் {கருடன்}, வானில் ஒளிர்ந்து, அனைத்துப் புறங்களிலும் தேவர்களைத் தனது சிறகாலும், மார்பாலும் தாக்கினான்.(14) கருடனின் கூர்நகங்களாலும், அலகாலும் தாக்குண்ட தேவர்களின் உடலில் இருந்து அதிகமான இரத்தம் வழிந்தது.(15)
பறவை மன்னனால் {கருடனால்} வீழ்த்தப்பட்ட சாத்யர்களும், கந்தர்வர்களும் கிழக்குப்புறம் பாய்ந்து ஓடினர், வசுக்களும் ருத்ரர்களும் தென்புறமாகவும்,(16) ஆதித்யர்கள் மேற்குப்புறமாகவும், அஸ்வினி இரட்டையர்கள் வடபுறமாகவும் ஓடினர். பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டவர்கள் போரிலிருந்து ஓடி, ஒவ்வொரு நொடியும் தங்கள் எதிரியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(17)
கருடன், யக்ஷர்களுடனும், பெரும் தைரியம் மிகுந்த அஸ்வக்கிரந்தன், ரேணுகன், துணிவுமிக்கக் கிரதனன், தபனன், உலூகன், சுவசனன்[2], (இனிமையாய் பேசுபவன் என்று பொருள்.)நிமேஷன், பிரருஜன் {ப்ரருஜன்} மற்றும் புளினன் ஆகியோருடனும் போர் புரிந்தான்.(18,19) அந்த வினதையின் மைந்தன் {கருடன்}, அனைவரையும் தனது சிறகுகளாலும், கூரியநகங்களாலும், அலகாலும் துவைத்தெடுத்து, எதிரிகளைத் தண்டிப்பவனும், யுக முடிவில் பினகையை (சிவ தனுசு) ஏந்தி கோபத்துடன் இருக்கும் சிவனைப் போலக் காட்சியளித்தான்.(20) பெரும் வீரமும் துணிவும் கொண்ட யக்ஷர்கள் அந்த விண்ணோடியால் {கருடனால்} துவைக்கப்பட்டு, அடர்ந்த இரத்தமழையைப் பொழியும் கரும் மேகக்குவியல் போலக் கிடந்தனர்.(21)
கருடன் அவர்கள் உயிரைக் கவர்ந்து, அமுதம் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அஃது அனைத்துப்புறத்திலும் நெருப்பால் சூழப்பட்டு இருப்பதைக் கண்டான்.(22) அந்தப் பயங்கரமான நெருப்பின் சுடர்கள் வானத்தையே மூடியபடி இருந்தது. அச்சுடர்கள் பெரும் காற்றால் அசைக்கப்பட்டு, சூரியனையே எரித்து விடுவது போல இருந்தன.(23) அந்தப் புகழ்பெற்றவனான கருடன், எட்டாயிரத்து நூறு வாய்களைக் {கொண்ட உருவம் எடுத்துக்} கொண்டு, அந்த வாய்களால் விரைவாகப் பல நதிகளின் நீரைக் குடித்து {வாயில் அடக்கிக் கொண்டு}, பெரும் வேகத்துடன் திரும்பி வந்தான். அந்த நீரைக் கொண்டு அந்த எதிரிகளை அழிப்பவனும், சிறகுகளைத் தன் வாகனமாகக் கொண்டவனுமானவன் {கருடன்} அந்த நெருப்பை அணைத்தான். அந்த நெருப்பை அணைத்தபிறகு (அமுதம் இருக்கும் இடத்தில்) நுழையும் ஆவலினால் சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டான்” {என்றார் சௌதி}.(24,25)
அமுதத்தைக் கவர்ந்த கருடனின் மகிமை! | ஆதிபர்வம் – பகுதி 33(ஆஸ்தீக பர்வம் – 21)தடைகளை மீறி அமுதத்தைக் கவர்ந்த கருடன்; கருடனைத் தன் வாகனமாக்கிக் கொண்ட விஷ்ணு; தன் தேரின் கொடிமரத்தில் அவனுக்கு இடமளித்தது; வஜ்ராயுதத்திற்கு ஓர் இறகை அளித்த கருடன்; கருடனின் பலத்தை அறிய விரும்பிய இந்திரன்
சௌதி சொன்னார், “அந்தப் பறவையானாவன் {கருடன்}, கதிரவனின் கதிர்களைப் போலப் பொன்னொளி கொண்ட உருவம் தரித்துக் கடலில் வேகமாகச் செல்லும் நீரோட்டம் போலப் பெரும் சக்தியுடன், (அமுதுள்ள இடத்திற்குள்) நுழைந்தான்.(1) கத்தியைப் போன்ற கூர்மையான முனைகள் கொண்டு இடைவிடாமல் சுழலும் எஃகுச் சக்கரம் ஒன்று அமுதத்தின் அருகே நிறுவப்பட்டிருந்ததைக் கண்டான்.(2)
அமுதத்தைத் திருட வருபவர்களைக் கண்டந்துண்டமாக வெட்டத் தேவர்களால் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பொறியானது, சூரியனைப் போன்ற பளபளப்புடனும், பயங்கரமான வடிவத்துடனும் இருந்தது.(3) கருடன் அதனுள்ளே {நுழைவதற்கு} ஒரு வழியைக் கண்டு ஒரு கணநேரம் நின்றான். உடனே, தனது உருவத்தை இன்னும் குறுக்கிக் கொண்டு அந்த சக்கரத்தின் {வாள் போன்ற} ஆரங்களுக்கிடையே விரைவாக நுழைந்து சென்றான் கருடன்.(4)
அமுதத்தைக் காப்பதற்காக, நெருப்பைப் போன்ற ஒளி கொண்டவையும், மின்னலின் வீச்சு போன்ற பிரகாசமான நாக்குகளைக் கொண்டவையும், பெரும் ஆற்றல் கொண்டவையும், வாயிலிருந்து நெருப்பைக் கக்குபவையும், ஒளிரும் கண்களைக் கொண்டவையும், விஷத்தையுடையவையும், மிகப் பயங்கரமானவையும், எப்போதும் கோபங்கொண்டே திரிபவையுமான இரண்டு பெரும் பாம்புகள், அந்தச் சக்கரத்திற்குக் கீழே இருப்பதை அவன் {கருடன்} கண்டான்.(5,6) அவற்றின் கண்கள் இமைக்காமலும், எப்போதும் கோபத்தால் பெரிதாகவும் இருந்தன. எவனொருவன் அந்தம் பாம்புகளில் இரண்டில் ஒன்றாலேனும் பார்க்கப்படுகிறானோ அவன் உடனடியாகச் சாம்பலாகிவிடுவான்.(7)
அழகான சிறகுகளையுடைய அந்தப் பறவையானவன் {கருடன்}, திடீரெனப் பாம்புகளின் கண்களில் புழுதியை இறைத்து, அவற்றால் பார்க்க முடியாதபடி செய்து, அனைத்துப்புறங்களிலிருந்தும் அவற்றைத் தாக்கினான்.(8) வினதையின் மைந்தனான அந்த விண்ணோடி {கருடன்}, அவற்றின் உடல்களைத் தாக்கி, அவற்றைத் துண்டுதுண்டாகச் சிதைத்தான். அதன்பிறகு காலந்தாழ்த்தாமல் அமுதம் இருந்த இடத்திற்குச் சென்றான்.(9) அங்கு இருந்த அமுதத்தை எடுத்துக் கொண்டு, தனது சிறகுகளை அடித்து வேகமாகப் பறந்து, அதை {அமுதத்தை} சூழ்ந்திருந்த பொறியை அடித்துத் தூள்தூளாக்கினான்.(10) அவன் {கருடன்}, அந்த அமுதத்தைக் குடிக்காமலேயே, வெளியே எடுத்து வந்தான். சிறிதும் சோர்வோ தளர்ச்சியோ கொள்ளாமல், கதிரவனின் ஒளியை மங்கச் செய்து வந்த வழியே அவன் திரும்பினான்.(11)
வினதையின் மைந்தன் {கருடன்}, வான்வழியே வரும்போது, விஷ்ணுவைக் கண்டான். கருடனின் தன்னலமற்ற செயலால் நாராயணன் பெரிதும் மகிழ்ந்தான்.(12) அழிவற்ற அந்தத் தெய்வம் {மகாவிஷ்ணு}, அந்த விண்ணோடியிடம் {கருடனிடம்}, “ஓ, நான் உனக்கு வரம் தர விரும்புகிறேன்” என்றான். அதற்கு அந்த விண்ணோடி {கருடன்}, “நான் உமக்கு மேலே இருக்க வேண்டும்” என்று கூறி,(13) மேலும், “நான் அமுதத்தைக் குடிக்காமலேயே நோயற்றவனாக, மரணமற்றவனாக இருக்க வேண்டும்” என்று கேட்டான்.(14)
விஷ்ணு வினதையின் மகனிடம் {கருடனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். கருடன் அந்த இரு வரங்களையும் பெற்றுக்கொண்டு விஷ்ணுவிடம்,(15) “நானும் உமக்கு வரம் தருகிறேன். அதனால் அறுகுணம் கொண்ட நீர் என்னிடம் கேட்கலாம்” என்றான். விஷ்ணு, பெரும் வல்லமை படைத்த கருடனைத் தன்னைச் சுமப்பவனாக {தனது வாகனமாகக்} கேட்டான்.(16) தனது தேரின் கொடிமரத்தில் அந்தப் பறவைக்கு இடம் கொடுத்து, “இப்படியும், நீ எனக்கு மேலிருக்கலாம்” என்றான்.[1] (கருடன் விஷ்ணுவுக்கு மேலிருக்க வரம் கேட்டான், அது தரப்பட்டதும், அவன் விஷ்ணுவுக்கும் மேலானவன் என்பதால் விஷ்ணுவுக்கு வரம் தர விழைகிறான். விஷ்ணு சமயோசிதமாக கருடன் தன் வாகனமாக வேண்டும் எனக் கேட்கிறான். ஆக புத்திசாலித்தனத்தினால் விஷ்ணு கருடனை வென்று விடுகிறான். தன் வரம் பொய்க்காமல் இருக்க கருடனைத் தன் கொடியிலும் ஏற்றுக் கொண்டு தனக்கு மேலே கருடனை வைக்கிறான். இதுதான் ஞானத்திற்கும், அறிவிற்கும் இடையேயான பேதமாகும். ஞானம் வெல்லும்பொழுது யாருக்கும் தோல்வி உண்டாவதில்லை.)பெரும் வேகம் கொண்ட அந்த விண்ணோடி நாராயணனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி,(17) காற்றைக் கேலி செய்யும் வகையில் வேகமாகச் சென்றான். அப்படி அந்த விண்ணோடிகளில் முதன்மையான, சிறகுள்ள உயிரினங்களில் முதன்மையான அவன் {கருடன்} அமுதத்தை அபகரித்துக் கொண்டு காற்றில் பறந்து செல்லும்போது, இந்திரன் அவன் மீது வஜ்ராயுதத்தை {இடியை} ஏவினான்.(18)
அந்தப் பறவை மன்னன் கருடன், போரில் ஈடுபட்ட இந்திரனிடம் சிரித்துக் கொண்டே இனிமையான வார்த்தைகளால்,(19) “யாருடைய எலும்பினால் வஜ்ராயுதமானது செய்யப்பட்டதோ அந்த முனிவரை (ததீசி) நான் மதிக்கிறேன்.(20) வஜ்ராயுதத்தையும், ஆயிரம் வேள்விகள் செய்தவனான உன்னையும் மதிக்கிறேன். {அதனால்} எனது இந்த இறகு ஒன்றை இதோ போடுகிறேன். அதன் இன்னொரு நுனியை உன்னால் அடைய முடியாது.(21) உனது இடியால் தாக்கப்பட்டாலும், எனக்குச் சிறு வலி கூட ஏற்படவில்லை” என்று சொன்ன பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது இறகு ஒன்றைப் போட்டான்.(22)
கருடனால் அப்படிப் போடப்பட்ட அந்தச் சிறந்த இறகைக் கண்ட அனைத்து உயிர்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தன. அந்த இறகு அழகாக இருப்பதைக் கண்டு “இந்தப் பறவையானவன் {கருடன்}, சுபர்ணன் (அழகிய இறகுகள் கொண்டவன்) என்று அழைக்கப்படட்டும்” என்றனர். ஆயிரங்கண் கொண்ட புரந்தரன் {இந்திரன்}, அந்த அற்புத நிகழ்வைக் கண்டு, அந்தப் பறவையை ஒரு பேருயிர் என்றெண்ணினான். {அப்படி எண்ணிய} இந்திரன்,(23,24) “ஓ பறவைகளில் சிறந்தவனே! {கருடனே}, நான் உனது பலத்தின் எல்லையை அறிய விரும்புகிறேன். நான் உன்னுடன் நிலைத்த நட்பு கொள்ள விரும்புகிறேன்” என்றான்” {என்றார் சௌதி}.(25)
பாம்புகளின் நாவுகள் பிளந்தன! | ஆதிபர்வம் – பகுதி 34-(ஆஸ்தீக பர்வம் – 22)கருடனிடம் நட்பு கொண்ட இந்திரன்; தன் பலத்தைச் சொன்ன கருடன்; பாம்புகளைத் தன் உணவாகக் கேட்ட கருடன்; பாம்புகளிடம் அமுதத்தைக் காட்டிய கருடன்; அமுதத்தைக் கவர்ந்தான் இந்திரன்; பாம்புகளின் நாவுகள் பிளந்தன…
சௌதி தொடர்ந்தார், “அதன் பின்பு கருடன், “ஓ புரந்தரா! {இந்திரா}, நீ விரும்புவது போலவே உனக்கும் எனக்குமான இடையில் நட்பு உண்டாகட்டும். எனது பலம் தாங்க முடியாதது என்பதை அறிந்து கொள்வாயாக.(1) ஓ ஆயிரம் வேள்வி செய்தவனே! தன் பலத்தைத் தானே உயர்வாகப் பேசுவதை நல்லவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், தங்கள் பெருமையையும் பேச மாட்டார்கள்.(2) ஓ நண்பனே! காரணமில்லாத தற்பெருமை சரியானதல்ல என்றாலும், நீ நண்பனாகிவிட்டுக் கேட்டபடியால், உனக்குப் பதிலளிக்கிறேன்.(3) ஓ சக்ரா! {இந்திரா}, மலைகளுடனும், கானகங்களுடனும் பெருங்கடல்களின் நீருடனும் இருக்கும் இந்த முழுப் பூமியை, அதன் மேல் நீ இருப்பினும் எனது இறகு ஒன்றைக் கொண்டே என்னால் சுமக்க முடியும்.(4) அனைத்து உலகங்களையும், அதனுள் இருக்கும் அசைவன, அசையாதன ஆகியவற்றையும் ஒன்றாகச் சேர்த்தாலும் அனைத்தையும் சோர்வில்லாமல், எனது பலத்தால் நான் சுமக்க முடியும் என்பதை நீ அறிந்து கொள்வாயாக” என்றான்.”(5)
சௌதி தொடர்ந்தார், “ஓ சௌனகரே! இப்படிப் பெரும் துணிவுமிக்கக் கருடன் பேசியதும், (தேவலோக) மகுடத்தை அணிந்தவனும், தேவர்களுக்குத் தலைவனும், எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதி நிற்பவனுமான இந்திரன்,(6) “நீ சொல்வது போல் தான் இருக்கிறது. அனைத்தும் உனக்குச் சாத்தியப்படும். உள்ளம் நிறைந்த எனது உண்மையான நட்பை இப்போது ஏற்றுக் கொள்வாயாக.(7) சோமத்தை வைத்து உனக்கெந்தப் பயனும் இல்லையென்றால், அதை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடு. நீ யாரிடம் இதைக் கொண்டு போகிறாயோ, அவர்கள் எப்போதுமே எங்களை எதிர்ப்பவர்களாவர்” என்று மறுமொழி கூறினான் {இந்திரன்}.(8)
அதற்குக் கருடன், “இந்தச் சோமத்தை நான் எடுத்துச் செல்ல ஒரு காரணம் இருக்கிறது. இந்தச் சோமத்தை யாரும் அருந்துவதற்குத் தரமாட்டேன்.(9) ஓ ஆயிரங்கண் கொண்டவனே! {இந்திரனே}, நான் இதைக் கீழே வைத்தவுடன், ஓ தேவலோகத் தலைவனே! அதை உடனே எடுத்துக் கொண்டு வந்து விடு” என்றான்.(10) அதற்கு இந்திரன், “ஓ முட்டையிடும் இனத்தைச் சேர்ந்தவனே! உன்னால் இப்போது சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு நான் பெரிதும் மகிழ்கிறேன். ஓ விண்ணோடிகளில் சிறந்தவனே! {கருடனே}, என்னிடம் இருந்து நீ விரும்பும் ஏதாவது வரத்தைப் பெற்றுக் கொள்வாயாக” என்றான் {இந்திரன்}.(11)
சௌதி தொடர்ந்தார், “அதன்பிறகு கருடன், கத்ருவின் மைந்தர்களை நினைவில் கொண்டு, ஏமாற்று வேலையால் ஏற்பட்ட தனது தாயின் அடிமைக் கட்டையும், நன்றாகத் தெரிந்த அதன் காரணத்தையும்[1] நினைவுகூர்ந்து,(இங்கு ‘நன்றாகத் தெரிந்த காரணம்’ என்பது அருணனின் சாபம் என்று கங்குலி விளக்குகிறார். குழந்தை வரத்தை கத்ரு முதலில் கேட்டாள். அவளுக்கு ஆயிரம் பாம்புகள் பிறந்தன. அவளை அடுத்து குழந்தை வரம் கேட்ட வினதை, தன் சகோதரிகளின் புத்திரர்களை விட உயர்வான புத்திரவரம் கேட்டாள். அதே போல் பாம்புகள் பிறந்தும், தன் குழந்தைகள் பிறக்காமல் இருந்த போது வினதை பொறாமையால் அவசரப்பட்டு முட்டையை உடைக்கு அரைகுறை வளர்ச்சி கொண்ட அருணன் பிறந்து சபித்தான். அருணனின் பலம் கண்டு பொறாமை கொண்ட கத்ரு வினதையை அடிமையாக்கினாள். வினதை அடிமையானபோது கருடன் பிறக்காததால் கருடனும் வினதையுடன் அடிமை ஆனான். அருணன் முன்பே பிறந்துவிட்டதால் அவன் அடிமை ஆகவில்லை). ஆக இந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் மூல காரணம் சகோதரிகளுக்கு இடையேயான பொறாமையே ஆகும்.)(12) “என்னதான் எல்லா உயிரினங்களையும் ஆளுமை செய்யும் பலம் எனக்கு இருந்தாலும், நீ சொன்னபடியே செய்வேன் {வரம் கேட்பேன்}. ஓ சக்ரா {இந்திரா}, வலிமைமிக்கப் பாம்புகள் எனது உணவாகட்டும்” என்று கேட்டான்.(13)
இதைக்கேட்ட தானவர்களைக் கொல்பவன் {இந்திரன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு, தேவாதி தேவனும், பேருயிரும் (பரமாத்மாவும்), யோகிகளின் தலைவனுமான ஹரியிடம் சென்றான்.(14) பின்னவன் {ஹரி}, கருடன் கூறிய அனைத்தையும் அங்கீகரித்தான். தேவலோகத்தின் புகழ்பெற்ற தலைவன் {இந்திரன்}, கருடனிடம்,(15) “சோமத்தை நீ கீழே வைத்தவுடன், அதை நான் எடுத்து வந்துவிடுகிறேன்” என்று சொல்லிக் கருடனுக்கு விடைகொடுத்தான். அழகான இறகுகளைக் கொண்ட அந்தப் பறவையானவன் {கருடன்}, பிறகு தனது தாயின் {வினதையின்} இருப்பிடத்திற்கு வேகமாகச் சென்றான்.(16)
பெருமகிழ்ச்சியில் இருந்த கருடன், அனைத்துப் பாம்புகளிடமும், “நான் இப்போது அமுதத்தைக் கொண்டு வந்துவிட்டேன். இதை {அமுதகலசத்தை} குசப்புல்லின் {தர்ப்பைப் புல்லின்} மீது வைக்கிறேன்.(17) நீங்கள் சென்று உங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, வழிபாடுகளையும், சடங்குகளையும் முடித்து, இங்கமர்ந்து அமுதத்தைக் குடியுங்கள்.(18) நான் உங்கள் உத்தரவை நிறைவேற்றிவிட்டதால், நீங்கள் சொன்னவாறே, இன்றே {இப்போதே} என் தாய் {வினதை} அடிமைக்கட்டிலிருந்து விடுபடட்டும்” என்று சொன்னான். பாம்புகளும் கருடனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளச் சென்று விட்டன.(19-20)
அதே வேளையில், சக்ரன் {இந்திரன்}, அமுதத்தை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்றுவிட்டான். பாம்புகளும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் முடித்துக் கொண்டு, அமுதத்தைக் குடிக்க மிகுந்த ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் வந்தன.(21) அமுதம் வைக்கப்பட்டிருந்த, அந்தக் குசப்புற்களால் ஆன படுக்கை {தர்ப்பைப்புற்கள் பரப்பியிருந்த இடம்} வெறுமையாக இருப்பதையும், {ஏமாற்றியதற்குப்} பதில் செய்கையாகத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதையும் அறிந்தனர்.(22) அமுதம் வைக்கப்பட்டிருந்ததால் அந்தக் குசப்புற்களைத் தங்கள் நாவால் நக்கத் தொடங்கின. இந்தச் செயலால், அந்தப் பாம்புகளின் நாக்குகள் இரண்டாகப் பிளந்தன[2].(23) (ஒரு வேளை அமுதம் கீழே சிந்தியிருக்குமோ என்ற நப்பாசையினால், பாம்புகள் குசப்புற்களை நக்கின. குசப்புற்கள் கூர்மையாக இருக்குமாதலால் அவற்றின் நாக்குகள் இரண்டாகப் பிளந்தன. சில புராணங்களில் அமுதம் ஒரு துளி சிந்தியதாகவே உள்ளது. அமிர்தம் பட்டதாலேயே தர்ப்பைப் புற்கள் புனிதமானதாகின.)அமுதத்துடன் இருந்த தொடர்பால், அந்தக் குசப் புற்களும் தெய்வீகத் தன்மை கொண்டதாகின. இப்படியே புகழ்மிக்கக் கருடன், பாம்புகளுக்காக (தேவலோகத்திலிருந்து) அமுதத்தைக் கொண்டு வந்தான். இப்படியே கருடன் செய்த செயலால் பாம்புகளின் நாவுகளும் பிளந்தன.(24)
அதன்பிறகு அந்த அழகான இறகுகளைக் கொண்ட பறவையானவன் {கருடன்}, பெரும் மகிழ்வுற்று, அந்த அழகான கானகத்தில், தனது தாயுடன் {வினதையுடன்} மகிழ்ச்சியாக வாழ்ந்தான். மகத்தான செயல்களைப் புரிந்தும், அனைத்து விண்ணோடிகளாலும் பெரிதும் மதிக்கப்பட்டும் பாம்புகளைத் தின்றும் தன் தாய்க்கு {வினதைக்கு} மகிழ்ச்சியை ஏற்படுத்தினான்.(25) எந்த மனிதன் இந்தக் கதையை நல்ல பிராமணர்கள் உள்ள சபையில் கேட்கிறானோ அல்லது உரக்க உரைக்கிறானோ, அவன் நிச்சயம் சொர்க்கம் அடைவான். கருடனின் சாதனைகளை ஒப்பிப்பதால் பெரும் நற்பேற்றையும் அவன் பெறுவான்” {என்றார் சௌதி}.(26)
பாம்புகளின் பெயர் வரிசை! | ஆதிபர்வம் – பகுதி 35-(ஆஸ்தீக பர்வம் – 23)-பாம்புகளின் பெயர்ப்பட்டியலைக் கேட்ட சௌனகர்; அவற்றில் முக்கியமானவற்றைச் சொன்ன சௌதி..
சௌனகர், “ஓ சூதப் புதல்வா! {சௌதியே}, நீ இதுவரை, பாம்புகள் ஏன் அவற்றின் தாயாலே {கத்ருவினாலே} சபிக்கப்பட்டன என்றும், வினதை ஏன் தனது மகனால் {அருணனால்} சபிக்கப்பட்டாள் என்றும்,(1) கத்ரு மற்றும் வினதைக்கு அவர்களது கணவர் {கசியபர்} கொடுத்த வரங்களைப் பற்றியும், வினதையின் மகன்களின் பெயர்களையும் {அருணன், கருடன்} சொல்லிவிட்டாய்.(2) ஆனால், நீ இன்னும் பாம்புகளின் பெயர்களைக் கூறவில்லையே? அவற்றில் முக்கியமான பாம்புகளின் பெயர்களைக் கேட்க ஆவலுடன் இருக்கிறோம்” என்று கேட்டார்.(3)
சௌதி சொன்னார், “ஓ தவத்தை செல்வமாய்க் கொண்டவரே! {சௌனகரே}, அவை மிகவும் நீண்ட பட்டியலாக இருக்கும் என்று அஞ்சினேன். அனைத்துப் பாம்புகளின் பெயர்களையும் என்னால் குறிப்பிட இயலாது. முக்கியமானவர்களின் பெயர்களை மட்டும் நான் விவரிக்கிறேன். கேட்பீராக.(4)
சேஷன் முதலில் பிறந்தான், அதன்பிறகு வாசுகி, ஐராவதன், தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், காலகேயன் {காளியன்}, மணி {மணிநாகன்} என்ற பாம்பு, பூரணன் {ஆபூரணன்}, பிஞ்சரகன், ஏலாபத்ரன், வாமனன், நீலன், அநீலன், கல்மாஷன், சபலன், ஆர்யகன், உக்கிரன் {உக்கிரகன்} {சதிகன்}, கலசபோதகன்{சலபோதகன்}, சூரமுகன் {சுமனோமுகன்}, ததிமுகன், விமலபிண்டகன், ஆப்தன், கரோடகன் {கோடரகன்}, சங்கன், வாலிசிகன், நிஷ்டானகன், ஹேமகுஹன், நஹுஷன், பிங்களன், பாஹ்யகர்ணன், ஹஸ்திபதன், முத்கரபிண்டகன், கம்பலன், அசுவதரன், காளீயகன், விருத்தன், சம்வர்த்தகன், பத்மன், மஹாபத்மன், சங்கமுகன், கூச்மாண்டகன், க்ஷேமகன், பிண்டாரகன், கரவீரன், புஷ்பதம்ஷ்டிரகன், பில்வகன், பில்வபாண்டுரன், மூஷிகாதன், சங்கசிரசன், பூர்ணபத்திரன், ஹரித்திரகன், அபராஜிதன், ஜியோதிகன், ஸ்ரீவஹன், கௌரவ்யன், திருதராஷ்டிரன், சங்கபிண்டன், விரஜசன், சுபாகு, சாலிபிண்டன், பிரபாகரன், ஹஸ்திபிண்டன், பிடரகன், சுமுக்ஷன் {சுமுகன்}, கௌணபாசனன், குடரன், குஞ்சரன், குமுதன், குமதாக்ஷன், தித்திரி, ஹலிகன், கர்த்தமன், பகுமூலகன், கர்க்கரன், அகர்க்கரன், குண்டோதரன் மற்றும் மகோதரன் ஆகியோர் பிறந்தனர்.(5-16)
ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே! {சௌனகரே}, இவ்வாறு நான் முக்கியமான பாம்புகளின் பெயர்களைச் சொல்லியிருக்கிறேன். சலிப்பூட்டும் என்று அஞ்சி மீதமிருக்கும் பெயர்களை நான் சொல்லவில்லை.(17) ஓ தவத்தை செல்வமாய்க் கொண்ட முனிவர்களே, இந்தப் பாம்புகளின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எனப் பலர் கணக்கிலடங்காமல் உள்ளனர். இதைச் சிந்தித்தே அவர்கள் பெயரையெல்லாம் நான் உம்மிடம் சொல்லப் போவதில்லை.(18) ஓ சிறந்த துறவிகளே! இந்த உலகில் உள்ள பாம்புகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கானவை, அவற்றை எண்ணமுடியாது” {என்றார் சௌதி}.(19)
உலகைத் தாங்கு ஆதிசேஷா! | ஆதிபர்வம் – பகுதி 36ஆஸ்தீக பர்வம் – 24)தாயை விட்டுப் பிரிந்து கடுமையான தவமியற்றிய சேஷன்; சேஷன், பிரம்மன் உரையாடல்; உலகைச் சுமக்கப் பணிக்கப்பட்ட சேஷன்
சௌனகர், “ஓ குழந்தாய்! {சௌதியே}, பெரும் சக்தியுடனும், எளிதில் வெல்லப்பட முடியாதவர்களுமாக வரம் அருளப்பட்ட, பல பாம்புகளின் பெயர்களைக் குறிப்பிட்டாய். {கத்ரு தந்த} அந்தச் சாபத்தைக் கேட்ட பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டார்.(1)
“சௌதி சொன்னார், “அவர்களில் {பாம்புகளில்} புகழ்வாய்ந்தவனும், சிறப்பு மிக்கவனுமான சேஷன், தனது தாயை விட்டுச் சென்று, கடுமையான விரதங்களை நோற்றுக் காற்றை மட்டும் உண்டு, கடுந்தவம் செய்தான்.(2) அவனது தவங்களை கந்தமாதன மலையிலும், பதரி, கோகர்ண மலைகளிலும், புஷ்கர வனத்திலும், இமய மலையின் அடிவாரத்திலேயும் மேற்கொண்டான்.(3)
அவன் {சேஷன்} தனது காலத்தை அந்தப் புனிதமான இடங்களிலேயே உறுதியாக விரதங்களை நோற்றுக் கழித்தான். சில இடங்கள் தங்கள் நீருக்காகவும் {தீர்த்தப் பெருமை கொண்டவையாக}, சில இடங்கள் தங்கள் மண்ணுக்காகவும் {தலப்பெருமை கொண்டவையாக} புனிதத்தன்மை வாய்ந்ததாகவும் இருந்தன. அந்த இடங்களில் ஒரே குறிக்கோளுடன், தனது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கடும் தவம் இருந்தான்.(4) தலையில் சடை தரித்தவனும், கந்தல்துணியை உடுத்தியவனும், கடுந்தவம் பயின்றதால் தனது சதைகளும், தோலும், சதை நார்களும் வற்றிப் போய் இருந்தவனுமான அந்தத் துறவியை {சேஷனை}, எல்லோருக்கும் பெருந்தகப்பனான பிரம்மன் கண்டான்.(5) பெருந்தகப்பன் {பிரம்மன்}, தவம் பயிலும் பெரும் உறுதி கொண்ட அவனிடம் {சேஷனிடம்}, “ஓ சேஷா! நீ என்ன இன்னலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாய்[1]? (மனத்தில் குறிக்கோளுடன் யாராவது தொடர்ந்து தவம் செய்தால் அதனால் மூவுலகத்தினரும் இன்னலை அடைவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் வேண்டும் வரத்தைத் தந்து தெய்வங்கள் அவர்களை மன நிறைவு கொள்ளச் செய்ய வேண்டும். தவத்திற்கு அவ்வளவு சக்தி உண்டு.)உலகங்களில் வாழும் மற்ற உயிர்களின் நன்மையும் உனது எண்ணத்தில் இருக்கட்டும்.(6) ஓ பாவங்களற்றவனே! உனது கடுந்தவத்தால் நீ மற்ற உயிரினங்களை வருத்திக் கொண்டிருக்கிறாய். ஓ சேஷா! உனது இதயத்தில் குடிகொண்டிருக்கும் விருப்பத்தை என்னிடம் சொல்வாயாக” என்றான் {பிரம்மன்}.(7)
அதற்குச் சேஷன், “என்னுடன் ஒரே கருவறையில் பிறந்தவர்கள் {மற்ற பாம்புகள்} அனைவரும் இதயத்தால் தீயவர்களாக இருக்கிறார்கள். நான் அவர்களுடன் வாழ விரும்பவில்லை. இஃது உம்மால் அங்கீகரிக்கப்படட்டும்.(8) {அவர்கள்} பகைவர்களைப் போல், ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டுள்ளனர். அதனால், நான் தவத்துறவுகளில் ஈடுபட வந்துவிட்டேன். நான் அவர்களைப் பார்க்கக்கூட மாட்டேன்.(9) வினதையிடமும், அவளது மகனிடமும் {கருடனிடமும்} அவர்கள் அன்புடன் இருப்பதில்லை. விண்ணை அதிகாரம் செய்யும் வல்லமை பெற்றிருக்கும் வினதையின் மைந்தன் {கருடன்} எங்களுக்கு மற்றுமொரு சகோதரனே. அவனை {அவர்கள்} எப்போதும் பகைக்கிறார்கள். எங்கள் தந்தை உயரான்ம கசியபரின் வரத்தால், அவன் {கருடன்} பெரும் பலத்துடன் இருக்கிறான்.(10,11) அடுத்தப் பிறவியிலும் எனக்கு அவர்கள் உறவு இல்லாதபடி தவம் செய்து நான் என் உடலை விடப்போகிறேன்” என்றான் {சேஷன்}.(12)
அப்படிச் சொன்ன சேஷனிடம் பெருந்தகப்பன், “ஓ சேஷா! உன் சகோதரர்களின் நடத்தையையும், தங்கள் தாயை {கத்ருவை} மறுத்துப் பேசியதால் அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தையும் நான் அறிவேன். ஆனால் அதற்கு முன்பே, ஓ பாம்பே! {சேஷனே}, (அதற்கான) பரிகாரத்தை நான் கொடுத்திருக்கிறேன்.(13,14) அதனால் நீ உனது சகோதரர்களைக் குறித்து வருந்தாதே. ஓ சேஷா, நீ விரும்பும் வரத்தைக் கேள்.(15) நான் உன்னால் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். ஆகையால் இன்று உனக்கு ஒரு வரம் தருகிறேன். ஓ பாம்புகளில் சிறந்தவனே! {சேஷனே}, உனது மனம் அறத்தில் நிலைத்திருப்பது நல்லதே. உனது மனம் மேலும், மேலும் அறம் சார்ந்தே இருக்கட்டும்” என்றான். {பிரம்மன்}.(16)
சேஷன், “ஓ தெய்வீகமானவரே! பெருந்தகப்பனே, ஓ அனைவருக்கும் தேவனே. எனது இதயம் எப்போதும் அறத்திலும், அருள் நிறைந்த ஆன்ம தவத்திலும் இன்பம் அடையட்டும். இவ்வரத்தையே நான் விரும்புகிறேன்” என்று கேட்டான். (17)
பிரம்மன், “ஓ சேஷா! உனது தன்னலமற்ற தன்மையையும், அமைதிக்கான விருப்பத்தையும் அறிந்து நான் பெருமகிழ்வு கொள்கிறேன். ஆனால் என்னுடைய ஆணைக்கிணங்க, என் படைப்புகளின் நன்மைக்காக நீ இந்தச் செயலை செய்யவேண்டும்.(18) இதுமுதல், ஓ சேஷா, மலைகளுடனும், கானகங்களுடனும், கடல்களுடனும், நகரங்களுடனும், தோட்டங்களுடனும் இருக்கும் இந்த உறுதியற்ற பூமியை, சரியாகவும் சிறப்பாகவும் தாங்கிக் கொள்வாயாக. அதனால் அவள் {பூமாதேவி} உறுதியுடன் இருப்பாள்” என்றான்.(19)
சேஷன், “ஓ அனைத்து உயிர்களுக்கும், பூமிக்கும், படைக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும், அண்டத்திற்கும் தேவனே, அனைத்து வரங்களையும் அளிப்பவரே, நீர் சொல்வது போலவே, நான் இந்தப் பூமியை உறுதியாகத் தாங்கிக் கொள்வேன். அதனால் ஓ அனைத்து உயிர்களுக்கும் தலைவரே, அவளை {பூமியை} என் தலையில் வையும்” என்றான்.(20)
“பிரம்மன், “ஓ பாம்புகளில் சிறந்தவனே! {சேஷா}, பூமிக்கடியில் செல்வாயாக, நீ உள்ளே கடந்து செல்வதற்காக அவளே தன்னுள் பிளவு ஏற்படுத்தி வழி தருவாள். ஓ சேஷா, நீ பூமியைத் தாங்கி, என்னால் பெரிதும் மதிக்கப்படும் செயலைச் செய்வாயாக” என்றான்.”(21)
சௌதி தொடர்ந்தார், “பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} அண்ணன் {சேஷன்}, ஒரு பொந்துக்குள் புகுந்து, பூமியின் மறுபுறம் சென்று, அவளை, எங்கும் பரவியிருந்த கடல் என்னும் கச்சையுடன் சேர்த்து, தனது தலையால் முட்டுக் கொடுத்துத் தாங்கினான்.(22)
பிரம்மன், “ஓ சேஷா! ஓ பாம்புகளில் சிறந்தவனே, நீயே தர்ம தேவன், ஏனெனில், என்னை அல்லது வலவித்தைப் (இந்திரன்)[2] போலத் (மன்மதநாததத்தரின் பதிப்பிலும், கும்பகோணம் பதிப்பிலும் நேரடியாக இந்திரன் என்ற பெயரே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் பலன் Bala என்றிருக்கிறது. மூல ஸ்லோகத்தில் balabhid பலபித் என்ற வார்த்தைத் தென்படுகிறது. பலமிகுந்த சேனைகளை அழிப்பவன் என்பது இதன் பொருள்.)தனியாளாக, உன் பெரும் உடலுடன், இந்தப் பூமியை அதன் எல்லாப் பொருளுடனும் சேர்த்துத் தாங்குகிறாய்” என்றான்.”(23)
சௌதி தொடர்ந்தார், “அந்தப் பாம்பு, சேஷன், தேவன் ஆனந்தன், அந்தப் பெரும் ஆற்றல் மிக்கவன், பிரம்மனின் கட்டளையால், அன்று முதல் பூமிக்கடியில் தனியாக உலகத்தைத் தாங்கிக் கொண்டு நிற்கிறான்.(24) அந்தப் புகழ்மிக்கப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, இறவாதவர்களில் சிறந்தவன், அனந்தனின் {சேஷனின்} உதவிக்காக அழகான இறகுகள் கொண்ட வினதையின் மைந்தனை {கருடனை} நியமித்தான்” {என்றார் சௌதி}.(25)
பாம்புகளின் ஆலோசனை! | ஆதிபர்வம் – பகுதி 37(ஆஸ்தீக பர்வம் – 25)தங்கள் தாயுடைய சாபத்திலிருந்து தப்பிக்க ஆலோசனையில் ஈடுபட்ட பாம்புகள்; பாம்புகள் சொன்ன திறனற்ற ஆலோசனைகளைக் கேட்டு கவலை கொண்ட வாசுகி…
சௌதி சொன்னார், “அந்தப் பாம்புகளில் சிறந்தவனான வாசுகி, தனது தாயின் சாபத்தைக் கேட்டு, அதை {அந்தச் சாபத்தை} எப்படிச் செயலிழக்க வைப்பது என்பது குறித்து சிந்தித்தான்.(1) தனது சகோதரர்கள் ஐராவதன் மற்றும் ஏனைய பாம்புகளுடன் சேர்ந்து எந்தக் காரியத்தைச் செய்தால் அது சிறந்ததாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினான்.(2)
வாசுகி, “`ஓ பாவமற்றவர்களே! சாபத்தின் காரணம் உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தச் சாபத்தைச் செயலிழக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்.(3) சாபங்கள் அனைத்திற்கும் பரிகாரம் உண்டு. ஆனால் தங்கள் தாயினால் சபிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் கிடையாது.(4) மாற்றமில்லாதவனும், முடிவில்லாதவனுமான உண்மையானவன் {பிரம்மன்} முன்னிலையில் இந்தச் சாபம் இடப்பட்டதைக் கேட்டு என் இதயம் நடுங்குகிறது.(5) அந்த மாற்றமில்லாத தலைவன் {பிரம்மன்} நமது தாயைச் சபிக்க விடாமல் தடுக்காததால், நமக்கு அழிவுகாலம் வந்துவிட்டது என்பது நிச்சயம்.(6)
எனவே, பாம்புகளைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து இன்று ஆலோசிப்போம். நேரத்தை நாம் வீணடிக்கவேண்டாம்.(7) நீங்கள் அனைவருமே புத்திசாலிகள்; முடிவெடுப்பதில் சிறந்தவர்கள். முற்காலத்தில் குகைக்குள் ஒளிந்து கொண்ட அக்னியைத் தேவர்கள் மீண்டும் அடைந்ததைப் போல, நாம் ஒன்றாக ஆலோசித்து, பாம்புகளின் அழிவுக்கான ஜனமேஜயனின் வேள்வி நடைபெறாதவாறும், நாம் அழிவைச் சந்திக்காதவாறும் விடுதலைக்கான வழிகளைக் கண்டுபிடிப்போம்” என்றான் {வாசுகி}.”(8,9)
சௌதி தொடர்ந்தார், “{வாசுகியால்} இப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்ட கத்ருவின் விவேகமுள்ள வாரிசுகள் {பாம்புகள்} ஒன்றாகக் கூடி, தங்கள் கருத்துக்களை ஒருவரோடொருவர் பரிமாறிக் கொண்டனர்.(10) பாம்புகளில் ஒரு தரப்பு, “உயர்ந்த பிராமணர்களின் தோற்றத்தை ஏற்று {வேடம் புனைந்து}, ஜனமேஜயனிடம் “(நீ செய்ய கருதியிருக்கும்) இந்த உனது வேள்வி நடக்கக்கூடாது” என்று வேண்டிக் கேட்போம்” என்றன.(11)
தங்களை விவேகிகளாக நினைத்துக் கொண்ட சில பாம்புகள், “நாம் அவனுக்கு விருப்பமான ஆலோசகர்களாக ஆக வேண்டும்.(12) பிறகு எந்தக் காரியமாக இருந்தாலும், அவன் நிச்சயமாக நம் ஆலோசனைகளைக் கேட்பான். நாம் வேள்வி தடைபடும்படியாக அவனுக்கு ஆலோசனை அளிப்போம்.(13) விவேகிகளில் முதன்மையான அந்த மன்னன் {ஜனமேஜயன்} நம்மை மேன்மையானவர்களாக மதித்துத் தன் வேள்வியைக் குறித்து நம்மிடம் நிச்சயம் கேட்பான். நாம் “அது {நடக்கக்} கூடாது” என்று சொல்லி,(14) அதனால் இவ்வுலகத்திலும் அடுத்த உலகத்திலும் ஏற்படும் {ஏற்படும் எனப் பொய்யாகத்} தீமைகளைச் சுட்டிக்காட்டி, அந்த வேள்வி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.(15) அல்லது எவன் பாம்பு வேள்வியின் சடங்குகளை நன்கறிந்தவனோ, எவன் அந்த ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} நன்மையை எண்ணி வேள்விப்புரோகிதனாக நியமிக்கப்படுவானோ, அந்த மனிதன் மரணமடையும் வகையில், பாம்புகளில் ஒருவன் அவனைக் கடிக்கட்டும். வேள்வியின் புரோகிதன் இறந்தால் அந்த வேள்வி நிறைவு பெறாது.(16,17) பாம்பு வேள்வியின் சடங்குகளை அறிந்தவர்கள் எவரோ, வேள்வியின் ரித்விக்குகளாக நியமிக்கப்படக்கூடியவர்கள் எவரோ, அவர்கள் அனைவரையும் கடித்து, அதன் மூலம் நம் நோக்கத்தை நாம் நிறைவேற்றிக் கொள்வோம்” என்று சொல்லின.(18)
ஒழுக்கமும், கருணையும் கொண்ட சில பாம்புகள், “உங்களது இவ்வாலோசனை தீமையானது. பிராமணர்களைக் கொல்வது தகாது.(19) ஆபத்துக் காலங்களில் நீதிமிக்கோரின் {நல்லோரின்} நடைமுறைகளால் அருளப்பட்ட பரிகாரங்களே சரியானது ஆகும். அநீதியானது {அதர்மம்} இறுதியில் உலகத்தை அழித்துவிடும்” என்றன.(20)
வேறு சில பாம்புகள், “நாம் ஒளியுடைய மின்னலுடன் கூடிய மேகங்களாக மாறிச் சென்று, மழையைப் பொழிந்து எரியும் வேள்வித்தீயை அணைத்துவிடுவோம்” என்றன.(21) வேறு சில சிறந்த பாம்புகள், “இரவில் சென்று சோமச்சாறு {சோமரசம்} உள்ள பாத்திரத்தைத் திருடிச் சென்றுவிடுவோம். அஃது அந்தச் சடங்குக்குத் தடங்கலைச் செய்யும்.(22) அல்லது, அந்த வேள்வியில் நூற்றக்கணக்கான ஆயிரக்கணக்கான பாம்புகள் மக்களைக் கடித்து, எங்கும் பீதியைப் பரப்பட்டும்.(23) அல்லது, பாம்புகள், தங்கள் சிறுநீரையும் மலத்தையும் கலந்து தூய உணவைக் களங்கப்படுத்தட்டும்” என்றன.(24)
வேறு சில பாம்புகள், “நாம் மன்னனின் {ஜனமேஜயனின்} ரித்விக்குகளாக மாறி, ஆரம்பத்திலேயே ‘எங்களுக்கு வேள்விக்கான தக்ஷிணையைக் கொடு’ என்று கேட்டு அவனது வேள்வியைத் தடுப்போம்.(25) அவன் (மன்னன் {ஜனமேஜயன்}) நம் சக்திக்கு உட்பட்டு நாம் விரும்புவதைச் செய்வான்” என்றன. அங்கே இருந்த வேறு சில {பாம்புகள்}, “மன்னன் {ஜனமேஜயன்} நீரில் நீந்தி விளையாடும்போது,(26) அவனைத் நமது இருப்பிடத்திற்குத் தூக்கிச் சென்று, அந்த வேள்வி நடைபெறாதவாறு அவனைக் கட்டிப் போடுவோம்” என்றன. இன்னும் சில தங்களைப் புத்திசாலிகளாகக் கருதிக் கொண்டு,(27) “மன்னனை {ஜனமேஜயனை} அணுகி, நம் நோக்கம் நிறைவடையும் வகையில் அவனைக் கடிப்போம். அவனுடைய மரணத்தால் தீமைகள் அனைத்தின் வேர்களும் அறுந்துவிடும்.(28) ஓ கண்களால் கேட்பனே[1], (பாம்புகளுக்கு புறக்காது கிடையாது. கட்செவி – கண்களில் செவிகொண்டவை பாம்புகள் என தமிழ் இலக்கியங்கள் கூறும். பாம்பின் தலையில் செவியின் அமைப்பு கண்களுக்கு மத்தியில் உள்ளது. அது தரையில் மற்றும் காற்றும் ஏற்படும் அதிர்வுகளை ஒலியாக உணரச் செய்யும் என அறிவியலும் சொல்கிறது. அசுணமா என்ற பாம்பு பலத்த முரசொலி எழுப்பினால் இறந்து விடும் எனத் தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.)இதுவே எங்கள் அனைவரின் முடிவான தீர்மானமாகும். நீ சரியென்று கருதுவதை விரைவாகச் செய்வாயாக” என்றன.(29)இவ்வாறு சொல்லிவிட்டுக் குறிப்பாக பாம்புகளில் சிறந்த வாசுகியை {பதிலை எதிர்பார்த்து} நோக்கின. சிறிது நேரம் சிந்தித்த வாசுகி,(30) “பாம்புகளே, நீங்கள் சொன்ன முடிவான தீர்மானம் பின்பற்றுவதற்குத் தகுந்ததாக இல்லை. உங்கள் அனைவரின் ஆலோசனைகளும் எனக்குப் பிடித்த வகையில் இல்லை.(31) உங்கள் நன்மைக்காக நான் என்ன சொல்ல முடியும்? புகழ்மிக்க (நம் தந்தைக்) கசியபரின் கருணை மட்டுமே நமக்கு நன்மை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.(32) பாம்புகளே, உங்கள் பரிந்துரைகள் அனைத்திலும் எதை எனது நன்மைக்காகவும், நமது குல நன்மைக்காகவும் பின்பற்றுவது என்பதை என் இதயம் அறியவில்லை.(33) உங்கள் நன்மைக்காக நான் என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்தாக வேண்டும். அந்தச் செயலின் நன்மையோ, தீமையோ என்னைச் சேர்ந்தது என்பதே என்னை இவ்வளவு கவலையடையச் செய்கிறது” என்று பதிலளித்தான் {வாசுகி}.”(34)
ஏலாபத்திரன் ஞானம்! | ஆதிபர்வம் – பகுதி 38(ஆஸ்தீக பர்வம் – 26)சாபத்தின் விளைவைத் தடுக்க முடியாது என்று எடுத்துச் சொன்ன ஏலாபத்திரன்; தேவர்களிடம் பேசிய பிரம்மனின் பேச்சைப் பாம்புகளிடம் எடுத்துச் சொன்ன ஏலாபத்திரன்; ஜரத்காருவை எதிர்நோக்கும்படி வாசுகியைத் தூண்டியது…
சௌதி சொன்னார், “அனைத்துப் பாம்புகளின் பேச்சையும், வாசுகியின் வார்த்தைகளையும் கேட்ட ஏலாபத்திரன், அவர்களிடம் {பாம்புகளிடம்},(1) “அந்த வேள்வி தடுக்கப்படக் கூடியதல்ல. எவனிடமிருந்து இந்த அச்சம் தோன்றியிருக்கிறதோ அந்தப் பாண்டவ குலத்து மன்னன் ஜனமேஜயனும் தடுக்கப்பட முடியாதவனே.(2) ஓ மன்னா {வாசுகி}, எவன் விதியினால் பாதிக்கப்பட்டானோ, அவன் விதியிடம் மட்டுமே தஞ்சம் அடைய வேண்டும். வேறு எதுவும் அவனுக்குப் புகலிடமாக அமைய முடியாது.(3) பாம்புகளில் சிறந்தவர்களே, நமது அச்சத்தின் காரணம் விதியில் வேர் விட்டிருக்கிறது. எனவே, விதி மட்டுமே நமது புகலிடமாக இருக்க முடியும். நான் சொல்வதைக் கேட்பீராக.(4) பாம்புகளில் சிறந்தவர்களே, அந்தச் சாபம் உச்சரிக்கப்படும்போது, அச்சத்தினால் நான் நமது தாயின் {கத்ருவின்} மடியிலேயே பதுங்கியிருந்தேன். பாம்புகளில் சிறந்தவர்களே, ஓ பெரும் காந்தி மிக்கத் தலைவனே (வாசுகி), {நான் பதுங்கியிருந்த} அந்த இடத்தில், (இந்தச் சாபத்தால்) கவலை கொண்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} பேசும் வார்த்தைகள் எனக்குக் கேட்டன.(5,6)
தேவர்கள், “ஓ பெருந்தகப்பனே!, ஓ தேவர்களுக்குத் தேவா {பிரம்மா}, உமது இருப்பை உணர்ந்தும், இவ்வளவு அன்பானப் புதல்வர்கள் கிடைத்தும், இந்தப் பாவி கத்ருவைத் தவிர வேறு எவரால் உம் முன்னிலையிலேயே இப்படிச் சபிக்க முடியும்?(7) ஓ பெருந்தகப்பனே, நீரும், “அப்படியே ஆகட்டும்” என்று அவளை {கத்ருவை} அங்கீகரித்துள்ளீரே. அவள் {கத்ரு} அப்படிச் செய்வதை நீர் ஏன் தடுக்கவில்லை என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றனர் {தேவர்கள்}.(8)
அதற்குப் பிரம்மன், “பாம்புகள் பல்கிப் பெருகிவிட்டன. அவை கொடூரமானவையாகவும், உருவத்தால் பயங்கரமானவையாகவும், மிகுந்த விஷத்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன. எனது படைப்புகளின் நன்மையை விரும்பி, நான் கத்ருவைத் தடுக்கவில்லை.(9) எந்த விஷத்தன்மையுள்ள பாம்புகளும், மற்ற பாவிகளும் ஒரு தவறும் செய்யாதவர்களைக் கடிக்கின்றனவோ, அவை உண்மையில் அழியும். ஆனால் எவை தீங்கில்லாதவையோ, அறமுள்ளவையோ அவை அழியாது.(10) பயங்கரமான பேரிடர் சம்பவிக்கும் அந்தக் காலத்தில், பாம்புகள் எப்படி அதில் {அந்த இடரில்} இருந்து தப்பிப்பார்கள் என்பதையும் கேட்பீராக.(11)
யாயாவரர் குலத்திலே[1] புத்திக்கூர்மை உள்ளவனாகவும், ஆசைகளை முழுதும் அடக்கியவனாகவும், ஜரத்காரு என்னும் பெருமுனிவன் பிறப்பான்.(12) அந்த ஜரத்காருவுக்கு, ஆஸ்தீகன் என்ற பெயர் கொண்ட பிள்ளை இருப்பான். அவன் அந்த வேள்வியைத் {நாக வேள்வியைத்} தடுத்து நிறுத்துவான். எந்தப் பாம்புகள் அறம்சார்ந்தனவோ, அவை தப்பிக்கும்” என்றான் {பிரம்மன்}.(13) தேவர்கள் {பிரம்மனிடம்}, “ஓ உண்மைகளை அறிந்தவரே, பெரும் சக்தியும் தவமும் கொண்ட அந்த ஜரத்காரு என்ற முனிவர்களில் முதன்மையானவன், யார் மூலமாகத் தனது சிறப்புமிக்கப் புத்திரனை ஈன்றெடுப்பான்?” என்று கேட்டனர்.(14)
அதற்குப் பதிலளித்த பிரம்மன், “பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அந்த பிராமணர்களில் சிறந்தவன் {ஜரத்காரு}, தனது {ஜரத்காரு என்ற} பெயரைக் கொண்ட தன் மனைவி மூலமே, பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட தன் மகனை {ஆஸ்தீகனை} ஈன்றெடுப்பான்.(15) பாம்புகளின் மன்னன் வாசுகிக்கு ஜரத்காரு என்ற பெயரில் ஒரு தங்கை இருக்கிறாள். யாரைக் குறித்து நான் பேசுகிறேனோ, அந்த மகன் {ஆஸ்தீகன்} அவள் மூலமே பிறப்பான். அவன் விடுவிப்பான்” என்றான்.”(16)
ஏலாபத்திரன் தொடர்ந்தான், “தேவர்கள் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றனர். தெய்வமான பிரம்மனும் தேவர்களிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தேவலோகம் {பிரம்மலோகம்} சென்றான்.(17) ஓ வாசுகி, ஜரத்காரு எனும் பெயரில் இருக்கும் உன் தங்கையை என் முன்னே நான் காண்கிறேன். கடும் தவம் செய்த (முனிவர்) ஜரத்காரு, ஒரு மணமகளுக்காக அலைந்து {அவர்} பிச்சைக் கேட்கும்போது அவளை {வாசுகியின் தங்கையை}, கொடுத்து எங்களை அச்சத்திலிருந்து விடுவிப்பாயாக. விடுதலைக்கான இந்த வழியை நான் {பிரம்மனிடம் இருந்து} கேட்டேன்” என்றான் {ஏலாபத்திரன்}.”(18,19)
வாசுகியின் கவலை! |ஆதிபர்வம் – பகுதி 39(ஆஸ்தீக பர்வம் – 27)தன் தங்கையை ஜரத்காருவுக்காக வளர்த்த வாசுகி; பெருங்கடல் கடைவதில் வாசுகி செய்த உதவியினால் பாம்பினத்திற்காகப் பிரம்மனிடம் வேண்டிக்கொண்ட தேவர்கள்; ஏலாபத்திரன் கூறியதை உறுதிப்படுத்திய பிரம்மன்; ஜரத்காருவைக் கவனிக்கப் பாம்புகளுக்கு உத்தரவிட்ட வாசுகி ..
சௌதி சொன்னார், “ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {சௌனகரே}, ஏலாபத்திரனின் வார்த்தைகளைக் கேட்ட எல்லாப் பாம்புகளும் பெரும் மகிழ்ச்சி கொண்டு, “நன்றாகச் சொன்னாய், நன்றாகச் சொன்னாய்” என்று மகிழ்ச்சி குரல் கொடுத்தனர்.(1) அன்றிலிருந்து வாசுகி, தனது தங்கையான ஜரத்காரு என்ற அந்தப் பெண்ணை {பெண் பாம்பை} கவனமாக வளர்த்து வந்தான். அவளை {ஜரத்காருவை} வளர்ப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டான்.(2)
சிறிது காலத்திற்குள் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து வருணனின் இருப்பிடத்தைக் {பெருங்கடலை} கடைந்தனர்.(3) வலிமை அருளப்பட்டவர்களில் முதன்மையானவனான வாசுகி {கடலைக்} கடைவதற்கான கயிறானான். அந்த வேலை முடிந்ததும், அந்தப் பாம்புகளின் மன்னன் {வாசுகி}, பெருந்தகப்பனின் {பிரம்மனின்} முன்னிலைக்குச் சென்றான்.(4) வாசுகி உடனிருக்க, தேவர்கள் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்}, “ஓ தலைவா {பிரம்மனே}, வாசுகி (தனது தாயின் சாபத்தினால்) அச்சம் கொண்டு மிகுந்த துயருற்றிருக்கிறான்.(5) தன் இனத்தின் {பாம்பினத்தின்} நன்மையை விரும்பும் வாசுகியின் நெஞ்சைத் துளைப்பதும், தாயின் சாபத்திலிருந்து விளைந்ததுமான, அந்தத் துயரை நீக்குவதே உமக்குத் தகும்.(6) பாம்புகளின் மன்னன் {வாசுகி}, நமது நன்மையை விரும்பி எப்போதும் நம்முடன் {தேவர்களுடன்} நட்புடன் இருப்பவன். ஓ தேவர்கள் தலைவனே {பிரம்மனே}, அவனிடம் {வாசுகியிடம்} கருணை கொண்டு, அவனது மன நோயைப் போக்கும்” என்று தெரிவித்தனர்.(7)
அதற்குப் பிரம்மன், “ஓ இறவாதவர்களே {தேவர்களே}, நீங்கள் சொன்னதையே நானும் என் மனத்தில் எண்ணியிருக்கிறேன். பாம்புகளின் மன்னன் {வாசுகி}, முன்பு ஏலாபத்திரன் சொன்னவாறு செய்யட்டும்[1]. (கும்பகோணம் பதிப்பில் ‘ஏலாபத்திரன் முன்னால் இவனுக்கு என்ன சொன்னானோ, அது நானே மனப்பூர்வமாகச் சொன்ன வாக்கியம். நான் சொன்னதை இந்த நாகராஜனான வாசுகி காலம் வரும்போது தானே செய்வான்’ என்றுள்ளது. வேறு பதிப்புகளில் இந்தத் தகவல் இல்லை.)அந்த நேரம் இப்போது வந்துவிட்டது. தீயவர்கள் மட்டுமே அதில் அழிவர், அறம் சார்ந்தோர் அழிய மாட்டார்கள்.(8,9) ஜரத்காரு பிறந்துவிட்டான், அந்த பிராமணன் {ஜரத்காரு} கடுந்தவங்களைச் செய்து கொண்டிருக்கிறான். வாசுகி, சரியான தருணத்தில் தனது சகோதரியை {ஜரத்காருவை} அவனுக்கு {ஜரத்காருவுக்கு} அளிக்கட்டும்.(10) தேவர்களே, பாம்புகளின் நன்மையில் விருப்பம் கொண்ட பாம்பு ஏலாபத்திரன் சொன்னது அனைத்தும் உண்மை. அதைத் {உண்மையைத்} தவிர வேறெதுவும் இல்லை” என்றான் {பிரம்மன்}.(11)
சௌதி தொடர்ந்தார், “அதன்பிறகு, தாயின் சாபத்தால் துயருற்றிருந்த பாம்புகளின் மன்னன் வாசுகி, பெருந்தகப்பனின் {பிரம்மனின்} வார்த்தைகளைக் கேட்டு, தனது சகோதரியை {ஜரத்காருவை} முனிவர் ஜரத்காருவுக்கு அளிப்பதற்கு எண்ணங்கொண்டு, தங்கள் கடமைகளில் எப்போதும் கவனத்துடன் கூடிய பெரும் எண்ணிக்கையிலான பாம்புகளை முனிவர் ஜரத்காருவைக் கவனித்து வருமாறு உத்தரவிட்டு,(12,13) “எப்போது தலைவன் ஜரத்காரு தனக்கு ஒரு மனைவியை வேண்டுகிறாரோ, அப்போது உடனே என்னிடம் வந்து தெரிவியுங்கள். நமது இனத்தின் நன்மை அதில்தான் அடங்கியிருக்கிறது” என்றான் {வாசுகி}.”(14)
பரீக்ஷித் செய்த பிழை! | ஆதிபர்வம் – பகுதி 40(ஆஸ்தீக பர்வம் – 28)ஜரத்காருவின் பெயர்க்காரணம்; பரிக்ஷித் அடித்த மான்; பேசாத சமீகர்; சமீகரை அவமதித்த பரிக்ஷித்; கிருசனும் சிருங்கியும் பேசிக் கொண்டது; சிருங்கியை கோபமடைய வைத்த கிருசன் …
சௌனகர், “ஓ சூத மைந்தா! {சௌதியே}, அந்தச் சிறப்புமிக்க முனிவர் ஜரத்காரு, இந்த உலகத்தில் அந்தப் பெயரால் ஏன் அழைக்கப்பட்டார். ஜரத்காரு என்ற பெயருக்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்று கேட்டார்.(1,2)
சௌதி சொன்னார், “`ஜரை’, என்றால் உதவாதது என்றும், காரு என்றால் பெரியது என்று பொருள் எனச் சொல்லப்படுகிறது. இந்த முனிவர் {ஜரத்காரு} பெரும் உடலுடையவராக இருந்தார்[1]. (கும்பகோணம் பதிப்பில் பெயர் காரணம் இன்னொரு விதமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜரை என்றால் கெடுவது என்றும், காரு என்றால் துன்பத்தைத் தருவது என்றும், சிறந்த ஞானமுள்ள முனிவருக்கு வைராக்கியத்தின் காரணமாக இந்த உடலானது துன்பத்தைத் தருவதாகத் தோன்றியதால் இந்தப் பெயர் அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. மூல ஸ்லோகத்தில் கும்பகோணத்துப் பதிப்பில் உள்ளது போலவே ஜரை என்றால் ஷயம் அதாவது கெடுவது என்றும், காரு என்றால் துன்பம் தருவது என்றுமே சொல்லப்பட்டிருக்கிறது.)ஆனால் அதைத் தனது கடுமையான தவத் துறவுகளால் படிப்படியாகக் குறைத்தார். ஓ பிராமணர்களே, அதே காரணத்துக்காகவே, வாசுகியின் சகோதரியும் ஜரத்காரு {பெரியதைக் குறைத்தவள்} என்று அழைக்கப்பட்டாள்” {என்றார் சௌதி}.(3,4)
நற்குணம் பொருந்திய சௌனகர், இதைக்கேட்டுப் புன்னகைத்து உக்ரச்ரவனிடம் {சௌதியிடம்}, “இதுவும் அப்படியா?” என்று சொன்னார்.(5) பிறகு சௌனகர் “இதற்கு முன் நீ சொன்னதையெல்லாம் கேட்டேன். ஆஸ்தீகர் எப்படிப் பிறந்தார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றார்.(6)
இந்த வார்த்தைகளைக் கேட்ட சௌதி, சாத்திரங்களில் {புராணங்களில்} எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே சொல்லத் தொடங்கினார். சௌதி சொன்னார், “வாசுகி {பாம்பு மன்னன்}, முனிவர் ஜரத்காருவுக்குத் தனது சகோதரியை {ஜரத்காருவை} அளிக்க விருப்பங்கொண்டு, பாம்புகளுக்கு (தேவையான) உத்தரவுகளை இட்டிருந்தான்.(7) ஆனால் நாட்கள் கழிந்தன, முனிவர் {ஜரத்காரு} கடுந்தவங்களிலும், துறவுகளிலும் ஈடுபட்டாரே தவிர, மனைவியைத் தேடவில்லை.(8) அந்த உயர் ஆன்ம முனிவர் {ஜரத்காரு}, கல்வியிலும், தவத்திலும் ஆழ்ந்து ஈடுபட்டுத் தனது உயிர்வித்தைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, மனைவியைப் பெறுவதில் விருப்பமில்லாமல், முழு உலகையும் அச்சமில்லாமல் சுற்றித் திரிந்தார்.(9)
பின்னர், ஒரு காலத்தில், ஓ பிராமணரே {சௌனகரே}, கௌரவக் குலத்தில் பிறந்த பரீக்ஷித் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான்.(10) அவன் {பரீக்ஷித்}, தனது முப்பாட்டன் பாண்டுவைப் போலப் பலம் கொண்ட கைகளுடனும், போரில் வில்லேந்தியவர்களில் முதன்மையானவனாகவும், வேட்டையில் விருப்பம் கொண்டவனாகவும் இருந்தான்.(11) அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, மான்கள், காட்டுப்பன்றிகள், ஓநாய்கள், எருமைகள் மற்றும் பல்வேறு காட்டு விலங்குகளை வேட்டையாடித் திரிந்து கொண்டிருந்தான்.(12) ஒரு நாள் {வேட்டை ஆடும்போது} கூரிய அம்பொன்றினால் ஒரு மானை அதன் முதுகில் தைத்தான்.(13) அப்படித் தைத்தபிறகு, முற்காலத்தில் சிறப்புமிக்க ருத்ரன் கையில் வில்லேந்தி, மானாக உருவெடுத்த வேள்வியைத் {வேள்விப்புருஷனை}[2] (தக்ஷன் சிவனை அவமதித்து நடத்திய வேள்வியைச் சிவன் அழித்தான். அப்போது யாகப்புருஷன் மான் வடிவெடுத்துத் தப்பிக்கப் பார்க்க சிவன் அவனை அம்பால் அடித்ததாகப் புராணக் கதை உண்டு.)தேவலோகத்தில் துரத்தியது போல, வில்லைத் தன் முதுகில் மாட்டிக்கொண்டு, அந்த மானை இங்கேயும், அங்கேயும் தேடிக்கொண்டு காட்டுக்குள்ளே ஊடுருவினான்.(14) பரீக்ஷித்தினால் துளைக்கப்பட்ட எந்த மானும் இதுவரை இப்படி உயிருடன் காட்டுக்குள் தப்பியதில்லை. எனினும், இந்த மானோ ஏற்கனவே காயம்பட்டிருந்தாலும், மன்னன் {பரீக்ஷித்} சொர்க்கத்தை அடைவதற்கு (நெருங்கிய) காரணமாக வேகமாகத் தப்பியோடியது.(15)
மனிதர்களின் மன்னனான பரீக்ஷித்தால் துளைக்கப்பட்ட அந்த மான், அவனைக் கானகத்திற்குள் வெகு தொலைவிற்கு அழைத்து வந்து, அவனது பார்வையில் இருந்து மறைந்து விட்டது.(16) களைப்பும், தாகமும் கொண்ட அவன் {பரீக்ஷித்}, அந்தக் கானகத்தில் மாட்டு மந்தையில் அமர்ந்து, தாயிடம் பாலருந்தும் கன்றுகளின் வாயிலிருந்து உமிழப்படும் நுரையை (பால் நுரை) உறிஞ்சி {வயிறு} நிரம்பக் குடித்துக் கொண்டிருந்த ஒரு முனிவரிடம் {முனிவரின் பெயர் சமீகர்} வந்தடைந்தான். பசியும் சோர்வுமாய் இருந்த அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} விரைவாக அவரை அடைந்து, தனது வில்லை உயர்த்தி, அந்தக் கடும் நோன்புகள் கொண்ட முனிவரிடம் {முனிவர் சமீகரிடம்}, “ஓ பிராமணரே, நான் அபிமன்யுவின் மகன், மன்னன் பரீக்ஷித் ஆவேன்.(17-19) என்னால் துளைக்கப்பட்ட மான் ஒன்றைக் காணவில்லை. அதை நீர் கண்டீரா?” என்று கேட்டான். ஆனால், அப்போது பேசா நோன்பு நோற்றுக் கொண்டிருந்த அந்த முனிவர் {சமீகர்} அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.(20)
கோபம் கொண்ட மன்னன் {பரீஷித்}, அங்குக் கிடந்த ஓர் இறந்த பாம்பைத் தனது வில்லின் நுனியால் எடுத்து அவரது {சமீகரின்} தோளில் போட்டான். முனிவர் {சமீகர்} எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் {அமைதியாக} வேதனையைத் {அவமானத்தைத்} தாங்கிக் கொண்டார்.(21) நன்மையாகவோ, தீமையாகவோ யாதொரு வார்த்தையும் கூறவில்லை. அவரை {சமீகரை} அந்நிலையில் கண்ட மன்னன் {பரீக்ஷித்} தன் கோபத்தை விட்டு {தன் செயலை உணர்ந்து} வருத்தமடைந்தான். அவன் {பரீக்ஷித்} தன்னுடைய தலைநகரத்துக்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினாலும், அந்த முனிவர் {சமீகர்} அதே நிலையிலேயே தொடர்ந்தார். மன்னிக்கத் தெரிந்த {பொறுமையுள்ள} அந்த முனிவர் {சமீகர்}, மன்னர்களில் புலியான அந்த ஏகாதிபதி தன் வகையின் கடமைகளுக்கு உண்மையாக இருப்பவன் என்றும் அறிந்து,(22,23) தான் அவமதிக்கப்பட்டிருந்தாலும், அவனைச் {பரீக்ஷித்தை} சபிக்காதிருந்தார். ஏகாதிபதிகளில் புலியான அந்தப் பரதகுலத்தில் முதன்மையானவனும் {பரீக்ஷித்தும்}, தான் அவமதித்த அந்த மனிதர் ஓர் அறம் சார்ந்த முனிவர் என்பதை அறியவில்லை. இதன் காரணமாகவே அவன், அவரை இப்படி அவமதித்துவிட்டான்.
பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டவனும், ஆழ்ந்த தவம் கொண்டவனும், கடுமையான நோன்புகள் கொண்டவனும்,(24,25) அமைதிப்படுத்த முடியாத கடும் கோபக்காரனும், சிருங்கி என்ற பெயரைக் கொண்டவனும், இளவயதுடையவனுமான மகன் ஒருவன் அந்த முனிவருக்கு {சமீகருக்கு} இருந்தான். அவ்வப்போது அவன் {சிருங்கி}, உயிர்கள் அனைத்திற்கும் நன்மை செய்வதில் எப்போதும் ஈடுபடுபவரும், தன் இருக்கையில் சுகமாக வீற்றிருப்பவருமான தன் {குருவிடம் சென்று} குருவை கவனத்துடனும், மரியாதையுடனும் வழிபட்டு வந்தான். ஓ பிராமணர்களில் சிறந்தவரே {சௌனகரே}, {அப்படிச் செய்துவிட்டுத்} தனது குருவின் உத்தரவின் பேரில் அவன் {சிருங்கி} வீட்டுக்குத் திரும்பி வருகையில்,(26,27) கிருசன் என்ற பெயரைக் கொண்டவனும், ஒரு முனிவரின் மகனுமான அவனது தோழன் ஒருவன், அவனுடன் {சிருங்கியுடன்} விளையாட்டுத்தனமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு வந்தான். {அப்போது} நஞ்சைப் போன்ற கோபம் நிறைந்தவனான சிருங்கி, தன் தந்தையைக் குறித்த இந்த வார்த்தைகளைக் கேட்டு சினத்தால் எரிந்தான்.(28,29)
கிருசன், “செருக்காயிராதே, ஓ சிருங்கி, உன்னைப்போன்ற தவசியும், சக்தி கொண்டவருமான உன் தந்தை {சமீகர்}, இறந்த பாம்பொன்றைத் தன் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்கிறார்.(30) ஆகையால், எங்களைப் போன்ற உண்மை அறிவும், ஆழ்ந்த ஆன்மிகத் தவமும் கொண்டு, அவற்றில் வெற்றியும் கண்ட முனி மைந்தர்களிடம் ஒரு வார்த்தையும் பேசாதே.(31) உன் தந்தை {சமீகர்} இறந்த பாம்பைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் போகிறாயே, உன் ஆண்மை எங்கே? செருக்கினால் நீ உதிர்க்கும் அந்த உயர்ந்த வார்த்தைகள் எங்கே?(32) ஓ முனிவர்கள் அனைவரிலும் சிறந்தவனே {சிருங்கியே}, உனது தந்தை {சமீகர்} இந்த நிலையை அடைய, அவர் ஒரு குற்றமும் செய்யவில்லை. இதன் காரணமாகவே நானே தண்டிக்கப்பட்டது போல உணர்ந்து வருத்தப்படுகிறேன்” என்றான் {கிருசன்}.(33)
தந்தையின் கண்டிப்பு! | ஆதிபர்வம் – பகுதி 41(ஆஸ்தீக பர்வம் – 29)சிருங்கியின் கோபம்; பரீக்ஷித்தைச் சபித்த சிருங்கி; தன் சாபத்தைக் குறித்துத் தனது தந்தையிடம் தெரிவித்த சிருங்கி; தன் மகனைக் கண்டித்த சமீகர்…
சௌதி சொன்னார், “இப்படிச் {கிருசனால்} சொல்லப்பட்டதையும், தன் தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்த சிருங்கி கோபத்தால் எரிந்தான்.(1) கிருசனைப் பார்த்து, மென்மையாக, “வேண்டிக் கேட்கிறேன், இன்று ஏன் எனது தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமக்கிறார்?” என்று கேட்டான்.(2) அதற்குக் கிருசன், “ஓ அன்புக்குரியவனே, மன்னன் பரீக்ஷித்வேட்டைக்காகத் திரிந்து கொண்டிருக்கும்போது, அவன் அந்தச் இறந்த பாம்பை உனது தந்தையின் {சமீகரின்} தோளில் போட்டுச் சென்றான்” என்றான்.(3) சிருங்கி, “அந்தத் தீய ஏகாதிபதிக்கு {பரீக்ஷித்} எனது தந்தை {சமீகர்} என்ன தீங்கு செய்தார்? ஓ கி்ருசா, இதைச் சொல்லி, எனது ஆன்ம பலத்தைக் காண்பாயாக” என்றான்.(4)
கிருசன், “அபிமன்யுவின் மைந்தனான மன்னன் பரீக்ஷித் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு வேகமான மானைத் தனது கணையால் துளைத்து, அதைத் தனியாகத் துரத்திக் கொண்டு வந்தான்.(5) கானகம் அடர்ந்திருந்ததால் மன்னன் {பரீக்ஷித்தின்} பார்வை அந்த மானில் மேல் இருந்து தப்பியது. அப்போது அவன் உன் தந்தையைக் {சமீகரைக்} கண்டதும், அது குறித்து உடனே வினவினான்.(6) உனது தந்தை அப்போது பேசா நோன்பில் இருந்தார். அசைவற்று அமர்ந்திருந்த உனது தந்தையிடம், பசியுடனும், தாகத்துடனும், மிகுந்த சோர்வுடனும் இருந்த மன்னன் {பரீக்ஷித்} காணாமல் போன மானைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்டான்.(7) உனது தந்தை {சமீகர்} பேசா நோன்பு இருந்ததால், பதிலேதும் கூறவில்லை. அதன்பிறகு அந்த மன்னன் {பரீக்ஷித்}, தனது வில்லின் நுனியால் இறந்த பாம்பு ஒன்றை எடுத்து, உனது தந்தையின் தோளில் போட்டான்.(8) ஓ சிருங்கி, வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் உனது தந்தை {சமீகர்} அப்படியே அசைவற்று அமர்ந்திருந்தார். அந்த மன்னன் {பரீக்ஷித்}, யானையின் பெயரைக் கொண்ட தனது தலைநகரத்திற்குச் {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்றுவிட்டான்” என்றான் {கிருசன்}.”(9)
சௌதி தொடர்ந்தார், “{தன் தந்தையின்} தோள்களில் இறந்த பாம்பைப் போட்டதைக் கேட்ட அந்த முனி மைந்தன் {சிருங்கின்}, ஆத்திரத்தால் கண்கள் சிவந்து, எரியும் தழலெனக் கோபம் கொண்டான்.(10) அந்த வலிமைவாய்ந்த முனிவன் {சிருங்கின்} கோபத்தால் பீடிக்கப்பட்டும் உந்தப்பட்டும், நீரைத் தொட்டு, மன்னனைச் {பரீக்ஷித்தைச்} சபித்தான்.(11)
சிருங்கின், “மெலிந்தவரும், வயதானவருமான என் தந்தையின் {சமீகரின்} தோளில் இறந்த பாம்பைக் கிடத்திய அந்தப் பாவியும், பிராமணர்களை அவமதிப்பவனும், குருப்பரம்பரையின் புகழை மங்கச் செய்பவனுமான அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, இன்றிலிருந்து ஏழு இரவுகளுக்குள், எனது வார்த்தைகளின் பலத்தால் தூண்டப்பட்டவனும், பாம்புகளின் வலிமையான மன்னனுமான தக்ஷகனால் {கடியுண்டு}, யமனின் உலகிற்குச் செல்வான்” என்றான் {சிருங்கி}.”(12-14)
சௌதி தொடர்ந்தார், “இப்படி (மன்னனைச்) சபித்துவிட்டுச் சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்} சென்றான். அங்கே மாட்டு மந்தைக்கிடையில், அந்த முனிவர், இறந்த பாம்பைத் தனது தோளில் தாங்கி அமர்ந்திருப்பதைக் கண்டான்.(15) தன்னைப் பெற்றவரை {தந்தையை} அந்தக் கோலத்தில் கண்ட அவன் {சிருங்கி} மீண்டும் கோபத்தால் கொதித்தான்.(16) அந்தத் துயரால் ஏற்பட்ட கண்ணீருடன் தனது தந்தையிடம் {சமீகரிடம்}, “தந்தையே, உங்களுக்கு நேர்ந்த இந்த அவமதிப்பைக் கேள்விப்பட்டு, நான் அந்தத் தீய மன்னன் பரீக்ஷித்தைச் சபித்துவிட்டேன். குரு பரம்பரையில் வந்த அந்த இழிந்தவனுக்கு {பரீக்ஷித்துக்கு} எனது சக்தியுள்ள சாபம் நன்றாகத்தகும். இன்னும் ஏழு நாட்களில், பாம்புகளின் தலைவன் தக்ஷகன், அந்தப் பாவம் நிறைந்த மன்னனை {பரீக்ஷித்தை}, பயங்கரமான காலனின் இல்லத்திற்கு அனுப்புவான்” என்றான் {சிருங்கி}.(17-19)
கோபத்துடன் இருந்த தனது மகனிடம் {சிருங்கியிடம்} அந்தத் தந்தை {சமீகர்}, “குழந்தாய், உனது இந்தச் செயலை நான் விரும்பவில்லை. துறவிகள் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. நாம் அந்தப் பேரரசனின் {பரீக்ஷித்தின்} ஆளுகைக்குட்பட்ட இடத்திலேயே வாழ்கிறோம்.(20) நாம் அவனால் நீதியுடன் பாதுகாக்கப்படுகிறோம். நம்மை ஆள்பவனான அவன் என்ன செய்திருந்தாலும், நம்மைப் போன்றவர்களால் மன்னிக்கப்பட வேண்டும்.(21) நீ அறத்தை {தர்மத்தை} அழித்தால், அந்த அறமே {தர்மமே} உன்னைக் கண்டிப்பாக அழிக்கும். மன்னன் {பரீக்ஷித்} நம்மைச் சரியாகப் பாதுகாக்கவில்லையென்றால், நமது நிலை மோசமாகும்.(22) நம்மால், நமது விருப்பத்தின்படி ஆன்மீகச் சடங்குகளைச் செய்ய இயலாது. ஆனால், நீதியுள்ள மன்னர்களால் நாம் பாதுகாக்கப்படும்போது,(23) மிக உயர்ந்த தகுதிகளை அடைகிறோம். அதில் {நற்பேறில்} அவர்களுக்கும் பங்கு உண்டு. எனவே, ஆதிக்கம் செலுத்தும் மன்னன் அனைத்து வகையிலும் மன்னிக்கப்பட வேண்டியவன்.(24) அதிலும் அந்தப் பரீக்ஷித் தனது முப்பாட்டனைப்போல ஒரு மன்னன் எப்படிப் பாதுகாக்க வேண்டுமோ, அப்படியே தனது குடிகளைப் பாதுகாக்கிறான்.(25) நோன்புகள் நோற்கும் அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, சோர்வாலும், பசியின் கொடுமையாலும், எனது (பேசா) நோன்பு குறித்த அறியாமையாலுமே அப்படிச் செய்தான்.(26)
மன்னனற்ற நாடு தீங்கையே எப்போதும் சந்திக்கும். அத்துமீறுபவர்களை மன்னன் தண்டிப்பதால்{மட்டுமே} மக்கள் தங்கள் சடங்குகளையும், கடமைகளையும் தடையின்றிச் செய்ய முடியும். தண்டனைகளின் நிமித்தம் அமைதியுண்டாகும்.(27,28) அறத்தை நிலைநிறுத்தும் மன்னன், அங்கே {அந்த இடத்தில்} சொர்க்கத்தையே நிலைநிறுத்துகிறான். மன்னன், வேள்விகளைத் தடைகளில் இருந்து பாதுகாக்கிறான். வேள்வி, தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்கிறது.(29) தேவர்கள் மழையைப் பொழிகின்றனர். மழையால், மனிதனுக்கு எப்போதும் பயன்படும் தானியங்களும், மூலிகைகளும் விளைகின்றன.(30) மனு, “மக்களின் விதியை ஆள்பவன், வேதம் படிக்கும் பத்து ஆசான்களுக்கு {சுரோத்தியர்களுக்கு} (மரியாதையில்) சமம்” என்று கூறுகிறார்.(31) அந்த நோன்புகளைக் கடைப்பிடிக்கும் இளவரசன் {பரீக்ஷித்}, சோர்வாலும், பசியின் கொடுமையாலும், எனது நோன்பைக் குறித்து அறியாததாலுமே இந்தக் காரியத்தைச் செய்தான்.(32) உனது குழந்தைத்தனத்தால் ஏன் இப்படி நீதியற்ற ஒரு காரியத்தைச் செய்தாய்? ஓ மகனே {சிருங்கியே}, எவ்வகையிலும் அந்த மன்னன் சாபத்திற்குத் தகுந்தவன் அல்லன்” என்றார் {சமீகர்}.”(33)
பரீக்ஷித்துக்குச் செய்தி வந்தது! | ஆதிபர்வம் – பகுதி 42(ஆஸ்தீக பர்வம் – 30)சிருங்கியை அறிவுறுத்திய சமீகர்; சாபம் குறித்த செய்தி மன்னனுக்கு அனுப்பிய சமீகர்; பரீக்ஷித்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்; தக்ஷகனின் விஷத்தை முறிக்க வந்த கசியபர்; கசியபரைச் சந்தித்த தக்ஷகன்…
சௌதி சொன்னார், “அதன்பிறகு சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்}, “ஓ தந்தையே! நான் இந்தச் செயலை அவசரத்தில் செய்திருந்தாலும், அல்லது நான் செய்தது சரியில்லாத செயலாக இருந்தாலும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது வார்த்தைகள் வீணாகாது {பொய்க்காது}.(1) ஓ தந்தையே! நான் உங்களுக்குச் சொல்கிறேன், (ஒரு சாபமானது) வேறு விதமாகாது. நான் விளையாட்டுக்காகக் கூடப் பொய் சொன்னதில்லை” என்றான்.(2)
சமீகர், “ஓ குழந்தாய்! {சிருங்கினே}, நீ பெரும் ஆற்றலுடையவன் என்பதும், உண்மை பேசுபவன் என்பதும் எனக்குத் தெரியும். இதற்கு முன்பு நீ பொய் சொன்னதில்லை. எனவே, உனது சாபமும் பொய்க்காது.(3) ஒரு மகன் தகுந்த வயதை அடைந்தாலும் கூட, அவன் தந்தையால் அறிவுறுத்தப்பட்டால்தான் நற்குணங்களை அடைந்து புகழையும் அடையமுடியும்.(4) {அவ்வாறிருக்க} நீயோ சிறுவனாகையால் எவ்வளவு அதிகமான ஆலோசனைகள் உனக்கு தேவைப்படும்? நீ எப்போதும் தவத்துறவுகளிலேயே ஈடுபடுகிறாய். அறுகுணங்கள் கொண்ட சிறப்புமிக்கவர்கள் கூட, கோபவசப்பட்டால் அந்தக் கோபம் பெருகிக் கொண்டே தான் இருக்கும்.(5) ஓ விதிகளைக் கடைப்பிடிப்பவர்களில் முதன்மையானவனே! நீ எனது மகனாக இருப்பதாலும், சிறுவனாக இருப்பதாலும், உன் அவசரத்தை நான் கண்டதாலும், நான் உனக்கு அறிவுரை வழங்க வேண்டும்.(6)
ஓ மகனே! {சிருங்கியே}, காட்டிலுள்ள பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே உண்டு அமைதியுடன் வாழ்ந்து வருவாயாக. உனது இந்தக் கோபத்தைக் கொன்றுவிடு, உனது தவச் செயல்களின் நற்பலன்களை இப்படிக் கெடுத்துக் கொள்ளாதே.(7) கோபமானது, பெரும் வலிகளை {கடினமான விரதங்களை} அனுபவித்துத் தவசிகள் அடையும் அறங்களை {தர்மங்கள்} நிச்சயமாக அழித்து விடுகிறது. பிறகு அறமிழந்தவர்களான அவர்களுக்கு அருள் நிலை இருக்காது.(8) மன்னிக்கும் தன்மையுள்ள துறவிகளுக்கு, அமைதியே எப்போதும் வெற்றியைத் தந்திருக்கிறது. ஆகவே, மன்னிக்கும் குணம் கொண்டவனாக, உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, வாழக் கற்றுக் கொள்வாயாக. மன்னிக்கும் தன்மையினால், பிரம்மனாலும் எட்ட முடியாத உலகங்களை நீ அடைவாய்.(9,10) நான் அமைதி வழியைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும், என்னால் முடிந்த அளவு நன்மையைச் செய்ய வேண்டும் என்பதாலும், என் சக்திக்குத் தகுந்த எதையாவது இதில் நான் செய்ய வேண்டும். மன்னனிடம் {பரீக்ஷித்திடம்}, ‘ஓ ஏகாதிபதி, என்னை நீ அவமதித்ததால், அறிவு முதிர்வுறாத எனது இளவயது மகன் கோபம் கொண்டு உன்னைச் சபித்திருக்கிறான்’, என்று செய்தியனுப்ப வேண்டும்” என்றார் {சமீகர்}.”(11,12)
சௌதி தொடர்ந்தார், “அந்தப் பெரு முனிவர் {சமீகர்}, பெரும் நோன்புகளை நோற்பவர், கருணையால் உந்தப்பட்டுச் சரியான உத்தரவுகள் கொடுத்து, மன்னன் பரீக்ஷித்திடம் தனது சீடனை அனுப்பினார்.(13) முதலில் மன்னனின் {பரீக்ஷித்தின்} நலத்தை விசாரித்துவிட்டு, பிறகு உண்மையான செய்தியைக் கூறுமாறு அறிவுறுத்தி, ஆன்மிகத் தவங்களில் ஈடுபட்டவனும், நன்னடத்தையுள்ளவனுமான கௌர்முகன் என்ற தனது சீடனை அனுப்பினார்.(14) அந்தச் சீடனும் விரைவில் குரு {கௌரவ} குலத்தின் தலைவனான அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} அடைந்தான். வாயில்காப்போன் மூலம் தன் வரவைத் தெரிவிக்குமாறு முதலில் சொல்லிவிட்டு, {பிறகு} மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(15) அந்த இருபிறப்பாளனான {பிராமணனான} கௌர்முகன் அந்த ஏகாதிபதியால் {பரீக்ஷித்தால்} தகுந்த முறையில் வழிபடப்பட்டான். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மன்னனிடம் {பரீக்ஷித்திடம்}, அவனது அமைச்சர்கள் முன்னிலையில், தனக்கு அறிவுறுத்தியிருந்தபடி அந்தச் சமீகரின் கொடூரமான வார்த்தைகளை முழுமையாகச் சொன்னான்.(16)
கௌர்முகன், “ஓ மன்னர்களுக்கு மன்னா, அற ஆன்மா கொண்ட, உணர்ச்சிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், அமைதி நிறைந்த, கடினமான ஆன்மீக வழிபாடுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, சமீகர் என்ற பெயர் கொண்ட, ஒரு முனிவர் உனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஓ மனிதர்களில் புலியே, அவர் {சமீகர்} பேசா நோன்பிருக்கும்போது அவரது தோளில் உனது வில்லின் நுனியால் இறந்த பாம்பைக் கிடத்தினாய். அவரே {சமீகரே} உன்னை மன்னித்துவிட்டார். ஆனால் அவரது மகனால் {சிருங்கியால்} அது முடியவில்லை.(17-19) ஓ மன்னர்களின் மன்னா {பரீக்ஷித்}, பின்னவனால் {சிருங்கியால்} அவன் தந்தைக்குத் தெரியாமல், இப்போதிலிருந்து ஏழு இரவுகளுக்குள் தக்ஷகன் (என்னும் பாம்பு) உன் மரணத்தை ஏற்படுத்தும் என்று சபிக்கப்பட்டிருக்கிறாய்.(20) சமீகர் உன்னைக் காப்பாற்றத் தனது மகனிடம் {சிருங்கியிடம்} மீண்டும் மீண்டும் வேண்டினார். ஆனால் அவரது மகனுடைய சாபத்தைப் பொய்யாக்க யாரும் இல்லை[1].(21) (தகுதியில் உயர்ந்தவரால் ஒருவருடைய சாபத்திலிருந்து விலக்கு அளிக்கமுடியும் அல்லது பலனை குறைக்க மடியும். உதா. கத்ருவின் சாபத்தைப் பிரம்மா மாற்றியமைத்தது. அதுபோலச் சிருங்கியின் சாபத்தை மாற்ற அப்போது யாரும் இல்லை.)தனது மகனின் {சிருங்கியின்} கோபத்தை அமைதிப்படுத்தத் அவரால் இயலாத காரணத்தால்[2], (சிருங்கி கோபத்தை விட்டால் அவனாலேயே சாபத்தை மாற்றமுடியும். அவன் கோபத்தைத் தணித்துக் கொள்ள முடியாததால் சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. உதா. பௌஷ்யனால் உதங்கருக்குக் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை.)ஓ மன்னா, உனது நன்மைக்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்றான் {கௌர்முகன்}.(22)
குரு பரம்பரையில் உதித்தவனும், தவ பயிற்சிகளில் ஈடுபடுபவனுமான அந்த மன்னன் {பரீக்ஷித்}, இந்தக் கொடூர வார்த்தைகளைக் கேட்டுத் தனது பாவகரமான காரியத்தை நினைவுகூர்ந்து, மிகவும் வருந்தினான்.(23) அந்த முனிவர்களிலே முதன்மையானவர் {சமீகர்}, பேசா நோன்பு நோற்றிருந்தார் என்பதை அறிந்ததும், இருமடங்கு துயருற்று, அந்த முனிவர் சமீகரின் கருணையையும், தனது பாவகரக் காரியத்தையும் நினைத்துப் பார்த்து மிகவும் வருந்தினான்.(24,25) ஒரு தேவனைப் போன்று காட்சியளித்த அந்த மன்னன், முனிவருக்கு {சமீகருக்கு} இழைக்கப்பட்ட செயலை எண்ணி வருத்தப்பட்ட அளவிற்குக் கூடத் தன் மரணச் செய்திக்காக வருந்தவில்லை.(26)
அதன்பிறகு, “அந்த வழிபடத்தகுந்தவர் {சமீகர்} என்னிடம் கருணையோடு இருக்கட்டும்” என்று சொல்லி கௌர்முகனை மன்னன் {பரீக்ஷித்} அனுப்பி வைத்தான்.(27) அவன் {கௌர்முகன்} சென்றவுடன், ஆழ்ந்த கவலையுடன் இருந்த மன்னன் {பரீக்ஷித்}, சிறிதும் நேரத்தை வீணாக்காமல் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினான்.(28) ஆலோசனைகளில் சிறந்தவனான அந்த மன்னன் பரீக்ஷித்} அவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, ஒரே தூணில் ஒரு மாளிகையை எழுப்பச் செய்தான். அஃது {அம்மாளிகை} இரவும் பகலும் நன்கு காக்கப்பட்டது.(29)
மருத்துவர்களும், மருந்துகளும், மந்திரங்களில் திறமை மிகுந்த பிராமணர்களும் அந்த மாளிகையில் நிறைய இருந்தனர்.(30) அனைத்துப் புறங்களிலும் பாதுகாக்கப்பட்ட அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, தனது கடமைகளை அறம் மிகுந்த அமைச்சர்கள் புடைசூழ அங்கிருந்தே நிறைவேற்றினான்.(31) எவரும் அங்கிருக்கும் மன்னனை நெருங்க முடியவில்லை. காற்று கூடப் புகமுடியாதபடி அந்த இடம் பாதுகாக்கப்பட்டது.(32) ஏழாவது நாள் வந்தபோது, பிராமணர்களில் சிறந்தவரும், பெரும் கல்வி கற்றவருமான கசியபர் (பாம்பு கடித்தபின்)[3] (இந்தக் கசியபரும், கருடனின் தந்தையான முனிவர் கசியபரும் வேறு வேறானவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆதிபர்வம் பகுதி 20ல் கருடனின் தந்தையான கசியபருக்கு விஷமுறிவு ஞானத்தைப் பிரம்மன் அருளியதாக ஒரு குறிப்பு இருக்கிறது. இருப்பினும் இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள கால வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டால் இரண்டு கசியபர்களும் வேறு வேறு என்ற தீர்வையே நாம் எட்ட வேண்டியிருக்கும். அதே சமயம், முனிவர்களின் ஆயுள் மிக நீண்டது எனவும் உணர்தல் வேண்டும். ஆனால் தக்ஷகன் கசியபரின் மகன். கசியபர் – தக்ஷகன் உரையாடல் தந்தை மகன் உரையாடலாக இல்லை என்பதால் இது வேறு கசியபர் என்று முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது.)மன்னனைக் குணப்படுத்த விரும்பி (மன்னனின் இருப்பிடம் நோக்கி) வந்துகொண்டிருந்தார்.(33) அவர் நடந்தனவற்றை எல்லாம் கேள்விப்பட்டிருந்தார். பாம்புகளில் முதன்மையான தக்ஷகனால் அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {பரீக்ஷித்} எமனுலகு அனுப்பப்படுவான் என்பதை அறிந்திருந்தார்.(34) ‘அந்த முதன்மையான பாம்பால் {தக்ஷகனால்} கடிபட்ட பிறகு, அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} குணப்படுத்த வேண்டும். அதனால், எனக்குச் செல்வமும் கிடைக்கும், நற்பேறும் கிடைக்கும்’ என்று அவர் எண்ணினார்.(35)
ஆனால், மன்னனைக் குணப்படுத்த இதயத்தில் எண்ணியிருந்த கசியபர், தனது வழியில் நெருங்கி வருவதை, முதிர்ந்த பிராமண வேடத்தில் இருந்த பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் கண்டான்.(36) அந்தப் பாம்புகளின் இளவரசன் { தக்ஷகன் }, அந்த முனிவர்களில் காளையிடம் {கசியபரிடம்}, “இவ்வளவு வேகமாக எங்குச் செல்கிறீர்? இப்படி நீங்கள் செல்வதன் நோக்கம் என்ன?” என்று கேட்டான் {முதிர்ந்த பிராமணரின் உருவில் இருந்த பாம்பான தக்ஷகன் }.(37) இப்படிக் கேட்கப்பட்ட கசியபர், “குரு பரம்பரையில் வந்தவனும், எதிரிகள் அனைவரையும் ஒடுக்குபவனுமான, மன்னன் பரீக்ஷித்தைத் தனது விஷத்தால் இன்று தக்ஷகன் எரிக்கப் போகிறான்.(38) ஓ மனதிற்கினியவரே, அக்னியைப் போன்ற சக்தி படைத்த தக்ஷகன் அவரைக் கடித்த பிறகு, பாண்டவப் பரம்பரையின் ஒரே பிரதிநிதியான அந்த அளவற்ற வீரமிக்க மன்னனை {பரீக்ஷித்தை} குணப்படுத்தவே நேரத்தை வீணடிக்காமல் வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறேன்” என்று மறுமொழி சொன்னார்.(39) அதற்குத் தக்ஷகன், “நான்தான் தக்ஷகன், ஓ பிராமணரே {கசியபரே}, நானே அந்தப் பூமியின் தலைவனை {பரீக்ஷித்தை} எரிக்கப் போகிறேன். நில்லும், என்னால் கடிபட்டவனை உம்மால் குணப்படுத்த முடியாது” என்றான்.(40) கசியபர், “எனது கல்வியின் ஆற்றலால், அங்குச் சென்று உன்னால் கடிபட்ட ஏகாதிபதியைக் {பரீக்ஷித்தைக்} குணப்படுத்த முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார் {கசியபர்}.”(41)
பரீக்ஷித்தைக் கொன்றான் தக்ஷகன்! | ஆதிபர்வம் – பகுதி 43(ஆஸ்தீக பர்வம் – 31) தன் திறனை தக்ஷகனுக்கு நிரூபித்துக் காட்டிய கசியபர்; கசியபரிடம் சமாதானம் பேசிய தக்ஷகன்; புழுவாகிக் கனியில் இருந்த தக்ஷகன்; பரீக்ஷித் கொல்லப்பட்டான்..
சௌதி சொன்னார், “அதன் பிறகு தக்ஷகன் {பாம்பு மன்னன்}, என்னால் கடிபட்ட எந்த உயிரையும் உம்மால் குணப்படுத்த முடியும் என்றால், ஓ கசியபரே என்னால் கடிக்கப்படும் இந்த மரத்திற்கு உயிரைத் தாரும்.(1) ஓ பிராமணர்களில் சிறந்தவரே {கசியபரே}, இந்த ஆலமரத்தை உங்கள் பார்வை முன்பே {விஷத்தினால்} எரிக்கிறேன். உங்களால் முடிந்ததைச் செய்து, நீங்கள் சொன்னது போல உங்கள் மந்திரங்களின் திறமையை எனக்குக் காட்டும்” என்றான்.(2) கசியபர், “அப்படி நீ நினைத்தாயானால் ஓ பாம்புகளின் மன்னா {தக்ஷகா}, இந்த மரத்தைக் கடி. உன்னால் கடிபட்டாலும், ஓ பாம்பே, அதை நான் காப்பாற்றுவேன்” என்றார்.”(3)
சௌதி தொடர்ந்தார், “அந்தப் பாம்புகளின் மன்னன் {தக்ஷகன்}, சிறப்புமிக்கக் கசியபர் இப்படிச் சொன்னவுடன், அந்த ஆலமரத்தைக் கடித்தான்.(4) அந்தச் சிறப்புமிக்கப் பாம்பால் கடிக்கப்பட்ட அந்த மரமானது, பாம்பின் விஷம் ஊடுருவி அனைத்துப்புறங்களும் பற்றி எரிந்தன.(5) ஆலமரத்தை அப்படி எரித்ததும் அந்தப் பாம்பு {தக்ஷகன்}, கசியபரிடம், “ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, உம்மால் ஆனதை முயற்சித்து, இந்தக் கானகத்தின் மன்னனை {ஆலமரத்தை} காப்பாற்றும்” என்றான்.”(6)
சௌதி தொடர்ந்தார், “பாம்புகளின் மன்னன் {தக்ஷகன்} ஏற்றிய விஷத்தால் {அந்த} மரம் {ஆலமரம்} சாம்பலாகியிருந்தது. அந்தச் சாம்பலை எடுத்த கசியபர்,(7) “ஓ பாம்புகளின் மன்னா, இந்தக் கானகத்தின் மன்னன் மீது என் வித்தையின் பலத்தை நான் பிரயோகிப்பதை பார். ஓ பாம்பே {தக்ஷகனே}, உனது மூக்கின் அருகிலேயே {உன் முன்னாலேயே} நான் அவனுக்கு உயிர் தருகிறேன்” என்றார்.(8) பிறகு பிராமணர்களில் சிறந்தவரும், சிறப்புமிக்கவரும், நன்கு கற்றவருமான அந்தக் கசியபர் சாம்பல் குவியலாக்கப்பட்ட அந்த மரத்திற்குத் தன் வித்தையினால் உயிரூட்டினார்.(9) முதலில் மொட்டு ஒன்றை உருவாக்கினார். அதன் பிறகு, அதைச்சுற்றி இலைகள் இரண்டை உருவாக்கினார். அதன்பிறகு, மரத்தின்தண்டையும், அதன் கிளைகளையும், பிறகு இலைகளுடன் கூடிய முழுவதும் வளர்ந்த மரத்தையே உருவாக்கினார்.(10)
சிறப்புமிக்கக் கசியபரால் புத்துயிர் பெற்ற மரத்தைக் கண்ட தக்ஷகன், அவரிடம் {கசியபரிடம்} “எனது விஷத்தையோ அல்லது என்னைப் போன்ற இன்னொருவரின் விஷத்தையோ நீர் முறிப்பது ஆச்சரியமன்று. ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே, எந்தச் செல்வத்தை விரும்பி நீர் அங்குச் செல்கிறீர்?(11,12) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனிடம் {பரீக்ஷித்திடம்} என்ன பரிசு கிடைக்கும் என்று நீர் நம்புகிறீரோ, அதை அடைவதற்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும், நானே அதைத் தருகிறேன்.(13) புகழால் அலங்கரிக்கப்பட்டவரே, பிராமணரின் {சிருங்கி} சாபத்தால் பாதிக்கப்பட்டவனும், வாழ்நாள் குறுகியவனுமான மன்னனிடம் {பரீக்ஷித்திடம்} தங்கள் வெற்றிச் சந்தேகத்திற்கிடமானதே.(14) அப்படி ஆகி விட்டால், மூவுலகிலும் பரவியிருக்கும் தங்கள் ஒளி வீசும் புகழானது (கிரகணத்தின் போது) ஒளியை இழக்கும் சூரியனைப் போல மறைந்துவிடும்.(15)
அதற்குக் கசியபர், “பொருட்செல்வத்திற்காகவே நான் அங்குச் செல்கிறேன். அதை நீ எனக்குக் கொடுப்பாயாக. ஓ பாம்பே, உனது தங்கத்தை எடுத்துக் கொண்டு, நான் வந்த வழியே திரும்புகிறேன்” என்றார்.(16) தக்ஷகன், “ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, நீர் அந்த மன்னனிடம் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே தருகிறேன். அதனால் நீர் அங்கே செல்லாதீர்” என்றான்.”(17)
சௌதி தொடர்ந்தார், “இதைக் கேட்டவரும், பெரும் சக்தியும் அறிவும் கொண்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்தக் கசியபர் அம்மன்னனை {பரீக்ஷித்தை} நினைத்துத் தியானத்தில் அமர்ந்தார்.(18) அந்த முனிவர்களில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், ஆன்மிக ஞானத்தைக் கொடையாகக் கொண்டவருமான கசியபர் பாண்டவ குலத்தில் வந்த மன்னனின் {பரீக்ஷித்தின்} வாழ்நாள் உண்மையிலேயே தீர்ந்ததைக் கண்டு தக்ஷகனிடம் தான் விரும்பிய அளவிற்குச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு வந்த வழியே திரும்பிப் போனார். அப்படி வந்த வழியே சிறப்புமிக்கக் கசியபர் சென்றதும், சரியான நேரத்தில் தக்ஷகன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தான்.(19,20) வழியிலேயே, மன்னன் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்வதாகவும், விஷமுறிவுக்கான மந்திரங்களாலும், மருந்துகளாலும் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் அறிந்தான் {தக்ஷகன்}.”(21)
சௌதி தொடர்ந்தார், “அந்தப் பாம்பு {தக்ஷகன்}, “அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} எனது மாயையால் ஏமாற்றப்பட வேண்டும். ஆனால் அதற்கு என்ன வழி?” என்று சிந்தித்தான்.(22) பிறகு தக்ஷகன் சில பாம்புகளைத் துறவிகள் போல வேடம்பூணச் செய்து, பழங்கள், தர்ப்பைப் புற்கள், தண்ணீர் ஆகியவற்றோடு அனுப்பினான்.(23) பின் தக்ஷகன் அவர்களிடம், ‘அவசர வேலையிருப்பதாகக் காட்டிக்கொண்டு, பொறுமையின்மைக்கான எந்த அடையாளத்தையும் காட்டிக் கொள்ளாமல், அரசனிடம் {பரீக்ஷித்திடம்} சென்று (நீங்கள் அவனுக்குப் பரிசாக எடுத்துச் செல்லும்) பழங்களையும், பூக்களையும், தண்ணீரையும் அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} ஏற்குமாறு மட்டும் செய்யுங்கள்’ என்றான்.”(24)
சௌதி தொடர்ந்தார், “அந்தப் பாம்புகளும், தக்ஷகன் உத்தரவிட்டவாறே நடந்து கொண்டன. அவை தர்ப்பைப் புல்லையும், நீரையும், பழங்களையும் கொண்டு சென்றன.(25) பெரும் சக்தி கொண்ட அந்த மன்னர்களில் முதன்மையானவன் {பரீக்ஷித்} அந்தக் காணிக்கைகளை ஏற்றுக் கொண்டான். அவர்கள் {வந்தவர்களின்} வேலை முடிந்தவுடன், “சென்று வாருங்கள்” என்று சொன்னான்.(26) துறவிகளைப் போல வேடம்பூண்டு வந்த பாம்புகள் சென்றவுடன், மன்னன் {பரீக்ஷித்} தனது அமைச்சர்களிடமும், நண்பர்களிடமும்,(27) “அந்தத் துறவிகள் கொண்டு வந்த, இந்த அருஞ்சுவைக் கனிகளை என்னுடன் சேர்ந்து உண்ணுங்கள்” என்றான்.(28) விதியின் உந்துதலாலும், முனிவரின் {சிருங்கியின்} வார்த்தைகளாலும், மன்னன் {பரீக்ஷித்} தனது அமைச்சர்களுடன் அந்தப் பழங்களை உண்ண விரும்பினான்.(29) தக்ஷகன் புகுந்திருந்த, அந்தக் குறிப்பிட்ட பழத்தை மன்னனே {பரீக்ஷித்தே} உண்பதற்காக எடுத்தான். அப்படி அவன் அதை எடுத்து உண்ணும்போது, ஓ சௌனகரே, அதன் உள்ளிருந்து கண்கள் கருப்பாகவும், செம்பு நிற உடலுடனும், புரிந்துகொள்ள முடியாத உருவத்துடனும், ஓர் அருவருக்கத்தக்க புழு வெளியே வந்தது.
அந்த மன்னர்களில் முதன்மையானவன் அதை எடுத்துத் தனது சபை உறுப்பினர்களிடம்,(30,31) “கதிரவன் மறைகிறான். விஷத்தால் எனக்கு இனிமேல் கண்ணீரில்லை. அதனால், எனது பாவகாரியத்திற்குப் பரிகாரமாகவும், அத்துறவியின் {சிருங்கின்} வார்த்தைகள் உண்மையாகவும், இந்தப் புழுவே தக்ஷகனாக மாறி என்னைக் கடிக்கட்டும்” என்றான். அச்சபை உறுப்பினர்களும், விதியால் உந்தப்பட்டு, அவனது பேச்சை அங்கீகரித்தனர்.(32,33) பிறகு அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, தனது நேரம் வந்ததும், புலனுணர்வை இழந்தவனைப் போல புன்னகையுடன், அந்தப் புழுவை உடனே எடுத்துத் தனது கழுத்தில் விட்டுக்கொண்டான்.(34) அவன் அப்படிப் புன்னகைத்துக் கொண்டிருக்கும்போதே, மன்னனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பழத்திலிருந்து வெளியே வந்த (புழுவின் உருவத்தில் இருந்த) தக்ஷகன், அந்த ஏகாதிபதியின் {பரீக்ஷித்தின்} கழுத்தைச் சுற்றிக் கொண்டான். விரைவாக மன்னனின் {பரீக்ஷித்தின்} கழுத்தைச் சுற்றிக் கொண்ட பாம்புகளின் மன்னன் தக்ஷகன் பேரொலியுடன் முழங்கியவாறு, புவியைக் காப்பவனைக் கடித்தான்” {என்றார் சௌதி}.(35,36)
ஜனமேஜயனும் வபுஷ்டமையும்! | ஆதிபர்வம் – பகுதி 44(ஆஸ்தீக பர்வம் – 32)பரீக்ஷித் இறந்ததும் பாலகன் ஜனமேஜயன் மன்னனானது; காசி மன்னன் சுவர்ணவர்மனின் மகள் வபுஷ்டமையை மணந்த ஜனமேஜயன்; இன்புற்றிருந்த ஜனமேஜயன்…
விசித்திர வீர்யன் -பாண்டு -அர்ஜுனன் -அபிமன்யு -பரீக்ஷித் -ஜனமேஜயன்
சௌதி சொன்னார், “தக்ஷகனின் சுருளுக்குள் அகப்பட்டுக் கிடந்த மன்னனைப் {பரீக்ஷித்தைப்} பார்த்த சபை உறுப்பினர்கள் பயத்தினால் வெளிறி போய்த் துயரம் கொண்டு அழுதனர்.(1) தக்ஷகனின் முழக்கத்தைக் கேட்ட அனைத்து அமைச்சர்களும் தலைதெறிக்க ஓடினர். அப்படி அவர்கள் ஓடியபோது, ஒரு பெண்ணின் தலையுச்சியின் அடர்ந்த கூந்தலின் நடுவே உள்ள சிவந்த வகிட்டைப் போல, நீல வானத்திலே தாமரை நிறக் கோடாக அந்தப் பாம்புகளில் அற்புதமானவனும், பாம்புகளின் அரசனுமான தக்ஷகன் செல்வதைக் கண்டனர்.(2,3)
மன்னன் {பரீக்ஷித்} வாழ்ந்த வந்த அந்த மாளிகை தக்ஷகனின் விஷத்தால் பற்றி எரிந்தது. இதையெல்லாம் கண்ட மன்னனின் சபை உறுப்பினர்கள் எல்லாத் திக்குகளுக்கும் பறந்து சென்றனர். மன்னனோ {பரீக்ஷித்} இடியால் தாக்குண்டவன் போல் கீழே விழுந்தான்.(4) தக்ஷகனின் விஷத்தால் கீழே வீழ்த்தப்பட்ட மன்னனுக்கான {பரீக்ஷித்துக்கான}, இறுதிச் சடங்குகள் அனைத்தையும் அவனது சபை உறுப்பினர்களும், பிராமணர்களான அரச புரோகிதரும் சேர்ந்து செய்தனர்.(5) குடிமக்கள் அனைவரும் சேர்ந்து, இன்னும் வயதை அடையாதவனும், இறந்து போன தங்கள் ஏகாதிபதியின் மகனுமான சிறுவனைத் தங்கள் மன்னனாக்கினர். அம்மக்கள் குரு பரம்பரை நாயகனும், எதிரிகளை ஒடுக்குபவனுமான அந்தப் புது மன்னனை ஜனமேஜயன் என்று அழைத்தனர்.(6)
அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனான ஜனமேஜயன் சிறுவனாக இருந்தாலும், எண்ணத்தில் விவேகமுள்ளவனாக இருந்தான். குரு பரம்பரையினரில் காளையான பரீக்ஷித்தின் அந்த மூத்த மகன் {ஜனமேஜயன்}, தனது அமைச்சர்கள் மற்றும் புரோகிதரோடு அந்த நாட்டைத் தனது முப்பாட்டனைப் (யுதிஷ்டிரனை) போலவே சிறப்பாக ஆண்டான்.(7) அந்த இளம் ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} அமைச்சர்கள், அவன் தற்போது எதிரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் திறமை வாய்ந்தவனாக ஆகிவிட்டதைக் கண்டு {தகுந்த வயதடைந்ததைக் கண்டு}, காசி மன்னன் சுவர்ணவர்மனிடம், அவனது மகள் வபுஷ்டமையைத் தங்கள் மன்னனுக்கு மணமகளாகக் கேட்டனர்.(8) காசிமன்னன் {சுவர்ணவர்மன்}, தகுந்த விசாரணைகளுக்குப் பிறகு, குரு பரம்பரையின் அந்தப் பலம்வாய்ந்த வீரனுக்கு {ஜனமேஜயனுக்கு}, தனது மகள் வபுஷ்டமையை முறையான சடங்குகளுடன் மணமுடித்துக் கொடுத்தான். மன்னன் மணவாட்டியைப் பெற்று பெரு மகிழ்ச்சியோடு இருந்தான். அவன் {ஜனமேஜயன்} எந்நேரத்திலும் வேறு எந்தப் பெண்ணுக்கும் தனது இதயத்தைக் கொடுக்காமல் இருந்தான்.(9)
பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு, நிறைந்த இதயத்துடன், இன்பத்தை விரும்பி, நீர்நிலைகளிலும், கானகங்களிலும், மலர்ச்சோலைகளிலும் திரிந்து கொண்டிருந்தான். பழங்காலத்தில் தேவலோக மங்கை ஊர்வசியை அடைந்த புரூரவஸ் எப்படி மகிழ்ச்சியாக இருந்தானோ அப்படி இந்த முதன்மையான ஏகாதிபதியும் காலத்தைக் கழித்தான்.(10) அழகுக்காகப் போற்றப்பட்டவளும், அழகானவர்களிலேயே அழகானவளுமான அந்த மங்கை வபுஷ்டமையும், தான் விரும்பியவாறு கணவன் கிடைத்தான் என்றெண்ணி, அவன் தன்னோடு இன்பமாக இருந்தபோதெல்லாம், அர்ப்பணிப்புடனும், மிகுந்த பாசத்துடனும் தனது கணவனை {ஜனமேஜனை} மனநிறைவு கொள்ளச் செய்தாள்” {என்றார் சௌதி}.(11)
புத்திரப்பேறு குறித்து யாயாவரர்கள்! | ஆதிபர்வம் – பகுதி 45-(ஆஸ்தீக பர்வம் – 33)யாயாவரர்களின் துயர் களைய வழி கேட்ட ஜரத்காரு; ஜரத்காருவை நிந்தித்த யாயாவரர்கள்.
{சௌதி தொடர்ந்தார்}, “அதேவேளையில், பெரும் துறவி ஜரத்காரு, எந்த இடத்தில் பொழுது மறைகிறதோ, அந்த இடத்தை {அந்த} இரவுக்கான தனது இல்லமாக்கி, உலகம் முழுதும் சுற்றினார்.(1) ஆன்ம பலத்தைக் கொடையாகக் கொண்டு, சுற்றித் திரிந்து, முதிர்வுறாதவர்களால் செய்ய முடியாத கடினமான பல நோன்புகளை நோற்று, பல புனித நீர் நிலைகளில் நீராடினார்.(2) அவர் காற்றை மட்டுமே உணவாகக் கொண்டும், உலக இன்பங்களின் மீது ஆசை இல்லாமலும் சுதந்திரமாக இருந்தார். தினமும் மெலிந்துகொண்டு வந்து, சதைப்பற்றில்லாமல் இருந்தார். அவர் ஒருநாள் தனது முன்னோர்களின் ஆவிகள் ஒரு பொந்துக்குள், ஒரே ஒரு விலாமிச்சை {விரானா} மர வேரைக் கயிறாகக் கொண்டு, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த ஒரு வேரையும், அப்பொந்துக்குள் வாழும் பெரிய எலி ஒன்று தின்று கொண்டிருப்பதைக் கண்டார்.(3,4)
அப்படி இருந்த அந்தப் பித்ருக்கள், முக்தியில் பெருவிருப்பம் கொண்டவர்களாக, உணவில்லாமல், உடல் மெலிந்து, பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தனர். ஜரத்காரு அந்தப் பரிதாபமானவர்களை {பித்ருக்களை} அடக்கத்துடன் அணுகி,(5) “இந்த விலாமிச்சை {விரானா} வேர்களில் தொங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார்? விலாமிச்சை வேர்கள் எலியின் கூரிய பற்களால் {கடித்து} தின்னப்பட்ட நிலையில் மீதமிருக்கும் மெல்லியதான ஒற்றை வேரும் அதே எலியாலே கடிக்கப்படுகிறதே!(6,7) மீதமிருக்கும் அந்த ஒற்றை இழையும் விரைவிலேலேயே அறுந்து விடும். நீங்கள் இந்தப் பொந்துக்குள் தலைகுப்புற விழப்போவது தெளிவாகத் தெரிகிறது.(8) தலைகீழாகத் தொங்கும் உங்களையும், உங்களது பெருந்துயரையும் பார்க்கும் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. நான் உங்களுக்கு என்ன நல்லது செய்யட்டும்?(9) இந்த உங்கள் துயரை, எனது தவத்தில் நாலில் ஒரு பங்கு {1/4}, அல்லது மூன்றிலொரு பங்கு {1/3}, அல்லது இரண்டில் ஒரு பங்கைக் {1/2} கொண்டு விலக்க முடியுமா என்று விரைவாக எனக்குச் சொல்லுங்கள்.(10) ஓ! {அல்லது} எனது முழுப் புண்ணியங்களையும் எடுத்துக் கொண்டு உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அனைத்திற்கும் நான் ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் விருப்பப்படும்படி செய்யுங்கள்” என்றார் {ஜரத்காரு}.(11)
அதற்கு அந்தப் பித்ருக்கள் {மூதாதையர்கள்}, “பெருமதிப்புக்குரிய பிரம்மச்சாரியே, நீ எங்களை விடுவிக்க விரும்புகிறாய். ஆனால், ஓ பிராமணர்களில் முதன்மையானவனே! உனது புண்ணியத்தால் {தவப்பயனால்} எங்கள் துன்பத்தை நீக்க முடியாது.(12) ஓ பேச்சாளர்களில் முதன்மையானவனே! குழந்தாய், எங்கள் சொந்தப் புண்ணியங்களின் பலன்கள் எங்களுக்கும் உள்ளன. ஆனால், ஓ பிராமணா! வாரிசற்ற நிலையிலேயே நாங்கள் இந்தப் புனிதமற்ற பொந்துக்குள் விழுகிறோம்.(13) ஒரு {ஒருவனின்} மகனே, ஒருவனுக்குச் சிறந்த தகுதி என்று பெருந்தகப்பனே {பிரம்மனே} சொல்லியிருக்கிறான். இந்தக் குழிக்குள் நாங்கள் விழப்போகும் இந்தத் தருணத்தில், எங்களுக்கு எந்தச் சிந்தனையும் தெளிவாக இல்லை.(14) எனவே, ஓ குழந்தாய்! உன்னை நாங்கள் அறியவில்லையென்றாலும், உனது மனிதத்தன்மையை உலகம் அறியும். எங்கள் துயரையும் அவலநிலையையும் கண்டு, கருணையினால் எங்களுக்காகப் பரிதாபப்படும் நீ வணக்கத்துக்கும், நற்பேற்றுக்கும் உரியவன்.(15)
ஓ பிராமணா! நாங்கள் யார் என்பதைக் கேள், நாங்கள் கடுந்தவங்களைச் செய்யும் யாயாவரப் பிரிவைச் சேர்ந்த முனிவர்கள்.(16) ஓ முனிவனே! பிள்ளைப் பேறில்லாமல், புனிதமான இடத்திலிருந்து கீழே விழுந்திருக்கிறோம். எங்கள் தவப் பலன்கள் {புண்ணியங்கள்} முழுவதும் அழிந்துவிடவில்லையாதலால் ஓர் இழை இன்னும் இருக்கிறது.(17) ஆனால் இப்போது அந்த ஒரே ஓர் இழையை மட்டுமே நாங்கள் கொண்டிருக்கிறோம். எனினும், {அந்த ஒரே வாரிசு இழையான} அவன் இருப்பதனாலும், இல்லாமல் போவதாலும் காரியம் ஒன்றுமில்லை. எங்களைப் போலவே பேறற்றவனும், ஜரத்காரு என்று அறியப்படுபவனுமான ஓரிழையை நாங்கள் கொண்டிருக்கிறோம். அந்தப் பேறற்றவன் {ஜரத்காரு}, வேதங்களையும் அதன் அனைத்துக் கிளைகளையும் பயின்று, துறவை மேற்கொண்டு தனியாக இருக்கிறான். ஆன்மாவை முழுமையாகத் தன் கட்டுக்குள் வைத்திருப்பவனும், உயர் ஆன்மாக் கொண்டவனும், நோன்புகளைக் கடைப்பிடிப்பவனும், தவத்துறவுகளில் ஆழமாக ஈடுபட்டு, தவத் தகுதிகளைக் {புண்ணியங்களைக்} குறித்த பேராசைகளைத் துறந்தவனுமான அவனே {ஜரத்காருவே} எங்களை இந்த நிலைக்குக் கீழிறக்கியிருக்கிறான். அவனுக்கு {ஜரத்காருவுக்கு} மனைவி கிடையாது, மகன் கிடையாது, எந்த உறவினர்களும் கிடையாது.(18-20) அதனால், நாங்கள் எங்கள் சுயநினைவை இழந்து கவனிக்க ஆள் இல்லாதவர்களைப் போல {அனாதைகளைப் போல} இந்தப் பொந்துக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.
நீ அவனைச் சந்தித்தால், எங்கள் மீது கருணை கொண்டு அவனிடம் {ஜரத்காருவிடம்},(21) ‘துயர் கொண்டிருக்கும் உமது பித்ருக்கள் தலைகுப்புறப் பொந்துக்குள் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். புனிதமானவரே {ஜரத்காருவே}, ஒரு மனைவியைத் தேர்ந்தெடுத்து, பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வீராக.(22) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே, ஓ மனதுக்கினியவரே, நீரே ஒரே ஒரு இழையாக உமது பித்ருக்களின் பரம்பரையில் இருக்கிறீர்’ என்று சொல்வாயாக. ஓ பிராமணா! நாங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஒரே இழையான விலாமிச்சை {விரானா} வேரானது,(23) எங்கள் குலத்தின் பெருக்கத்தைக் குறிக்கிறது. நீ காண்பதான {எலியால்} உண்ணபட்ட விரானா வேர்களின் இழைகளே, காலத்தால் உண்ணப்பட்ட நாங்கள் ஆவோம். பாதி உண்ணப்பட்ட நிலையில் நீ காண்பதும், நாங்கள் தொங்கி கொண்டிருப்பதுமான இந்த வேரே, அந்தத் தவத்தை மட்டுமே தேர்ந்தடுத்தவன் {ஜரத்காரு} ஆவான். நீ காணும் அந்த எலியே பெரும்பலம்பொருந்திய காலமாகும்.(24-26) அந்தக்காலமானது, தவ பயன்களால் படிப்படியாக தூண்டப்பட்டுத் தவங்களில் ஈடுபட்டு இருக்கும், அறிவும், {நல்} இதயமும் அற்ற அந்தப் பாதகன் ஜரத்காருவைக் கொல்கிறது {பலவீனப்படுத்துகிறது}.(27)
ஓ சிறந்தவனே! அவனது தவத்தால் எங்களைக் காக்க முடியாது. வேர்கள் அறுந்து காலத்தால் சுயநினைவை இழந்து மேலுலகில் இருந்து பாவங்கள் செய்த பாதகர்களைப் போலக் கீழே விழும் எங்களைப் பார். நாங்கள் எங்கள் உறவினர்களுடன் இந்தக் குழிக்குள் விழுந்தால், அவனும் இந்த நரகத்திற்குள்ளேயே விழுவான். ஓ குழந்தாய், ஆன்மிகமாக இருந்தாலும், வேள்வியாக இருந்தாலும், புனிதமான எந்தச் செயலாக இருந்தாலும், அவையெல்லாம் ஒரு மகனுக்கு ஈடாகாது. ஓ குழந்தாய்! அனைத்தையும் கண்ட நீ, ஆன்மீகத்தைச் செல்வமாகக் கொண்ட ஜரத்காருவிடம் பேசுவாயாக.(28-31) நீ கண்டதையெல்லாம் விபரமாக அவனிடம் எடுத்துக்கூறுவாயாக. ஓ பிராமணா, நீ எங்கள் மீது கொண்ட கருணையால், அவன் தன் நண்பர்களுக்கிடையிலோ, எங்கள் குலத்திலேயோ திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற தூண்டும் வகையில் பேசுவாயாக.(32) ஓ சிறந்தவனே! எங்கள் நண்பனைப் போல எங்கள் துயரைக் கண்டு வருந்தும் நீ யார்? இங்கே நிற்கும் நீ யார் என்பதைக் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள் {யாயாவரர்கள்}.”(33)
ஜரத்காரு கேட்ட பிச்சை! | ஆதிபர்வம் – பகுதி 46(ஆஸ்தீக பர்வம் – 34) திருமணத்திற்காக ஜரத்காரு செய்த முயற்சி; காட்டிலே மணமகளை இரந்து கேட்ட ஜரத்காரு; வாசுகிக்குத் தகவல் தெரிவித்த பாம்புகள்; ஜரத்காரு விதித்த நிபந்தனைகள்…
சௌதி சொன்னார், “இதையெல்லாம் கேட்ட ஜரத்காரு மிகுந்த துயருற்றார். அந்தத் துயரத்தால் உந்தப்பட்டுக் கண்ணீரால் தடைப்பட்டுத் தனது பித்ருக்களிடம் பேசலானார்.(1) ஜரத்காரு, “நீங்களே முன்சென்ற எனது தந்தையும், பாட்டன்களும் ஆவீர்கள். எனவே, நான் உங்கள் நன்மைக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வீராக.(2) நானே உங்கள் மகனான, அந்தப் பாவி ஜரத்காரு. பாதகனான என்னை, எனது பாவங்களுக்காகத் தண்டியுங்கள்” என்றார் {ஜரத்காரு}.(3)
பித்ருக்கள், ”ஓ மகனே! {ஜரத்காருவே}, உனது நற்பேறாலேயே உன் பயணத்தில் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாய். ஓ பிராமணா, நீ ஏன் ஒரு மனைவியை உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை?” என்றனர்.(4)
ஜரத்காரு, “பித்ருக்களே, எனது உயிர் வித்தை மேல்நோக்கி எழும்பச் செய்து, எனது உடலுடன் மற்ற உலகங்களுக்குச் செல்ல ஆவல் கொண்டேன்.(5) மனைவியைக் கொள்ளவேண்டாம் என்ற எண்ணத்தை என் மனம் கொண்டது. ஆனால் பாட்டன்மார்களே, நீங்கள் பறவைகளைப் போலத் தொங்குவதைக் கண்ட பிறகு,(6) எனது மனத்தைப் பிரம்மச்சரியத்திலிருந்து விலக்கிக் கொண்டேன். நீங்கள் விரும்புவதை உண்மையாகச் செய்வேன்.(7) எனது பெயர் {ஜரத்காரு என்ற பெயரே} கொண்ட ஒரு மங்கையை நான் கண்டால், அவளும் அவளுடைய விருப்பத்தின் பேரில் என்னிடம் பிச்சையாக ஒப்படைப்பட்டால், அவளை நான் காப்பாற்ற வேண்டியது இல்லையென்றால், நான் கண்டிப்பாக மணமுடிப்பேன். அப்படி ஒருத்தி கிடைத்தால், நான் மணமுடிப்பேன்.(8,9) அப்படி இல்லையென்றால் நான் மணமுடிக்க மாட்டேன். இஃது உண்மை பாட்டன்மார்களே, அவளால் பெறப்படும் பிள்ளை உங்கள் முக்திக்கு வழி வகுப்பான். என் பித்ருக்களே, நீங்கள் எப்போதும் அச்சமின்றி அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்” என்றார் {ஜரத்காரு பித்ருக்களிடம்}.”(10)
சௌதி தொடர்ந்தார், “இப்படித் தமது பித்ருக்களிடம் சொல்லிவிட்டு, அந்த முனிவர் {ஜரத்காரு}, மறுபடியும் உலகைச் சுற்றினார். ஓ சௌனகரே! வயதான பிறகும் அவரால் ஒரு மனைவியைக் கொள்ளமுடியவில்லை.(11) தமது தோல்வியை உணர்ந்த அவர் துயர்கொண்டார். ஆனால் தமது முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி அவரது தேடலைத் தொடர்ந்தார். அடர்ந்த கானகத்திற்குள் சென்று {தமது முன்னோர்களை நினைத்து} துயரத்தால் கதறி அழுதார்.(12)
அந்தக் கானகத்திற்குள் சென்ற அந்த விவேகி, தமது முன்னோர்களுக்கு நன்மை செய்வதற்கு எண்ணி, “நான் மனைவியை யாசிக்கிறேன்” என்று உறுதியுடன் மூன்று முறை கூறினார்.(13) அதன்பிறகு, “அசைவன, அசையாதன, கண்ணுக்குப் புலப்படாதவை என்று எந்த உயிரினங்கள் இங்கே இருக்கின்றனவோ, யாராக இருந்தாலும், எனது வார்த்தைகளைக் கேட்பீராக!(14) எனது முன்னோர்கள் துயரத்தால் உந்தப்பட்டு, கடும் தவங்களில் ஈடுபட்டிருந்த என்னை ‘ஒரு மகனுக்காகத் திருமணம் செய்து கொள்’ என்று பணித்தார்கள்.(15) நான் எனது முன்னோர்களின் {பித்ருக்களின்} வழிகாட்டுதல்படி, வறுமையுடனும், துயரத்துடனும் ஒரு மணமகளைப் பிச்சையாகக் கேட்டு உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறேன்.(16) இந்த எனது வார்த்தைகளைக் கேட்ட எந்த உயிரினமும் தனது மகளை எல்லா இடங்களிலும் அலையும் எனக்கு மணமுடிக்கட்டும்.(17) எனது பெயர் கொண்ட அந்த மணமகளை எனக்குப் பிச்சையாக இட்டாலும், நான் அவளைப் பராமரிக்க மாட்டேன். எனக்கு மணமகளை அளியுங்கள்” எனக் கூறினார்.(18)
இதைக் கவனித்தவையும், ஜரத்காருவின் வழியில் {வாசுகியால் கண்காணிக்கப் பணிக்கப்பட்டு} இருந்தவையுமான பாம்புகள், அவர் {ஜரத்காருவின்} விருப்பத்தை உணர்ந்து, வாசுகிக்குத் தகவலைத் தெரிவித்தன.(19) பாம்புகளின் மன்னன் {வாசுகி}, அந்த {பாம்புகளுடைய} வார்த்தைகளைக் கேட்டு, ஆபரணங்கள் பூண்ட மங்கையை {பெண் பாம்பு ஜரத்காருவை} அழைத்துக் கொண்டு முனிவர் {ஜரத்காரு} இருந்த வனத்திற்குச் சென்றான்.(20) ஓ பிராமணரே! {சௌனகரே}, பாம்புகளின் மன்னன் வாசுகி, அங்கே சென்று, அந்த மங்கையை அந்த உயரான்ம முனிவருக்கு {ஜரத்காருவுக்கு} பிச்சையாக இட்டான். அந்த முனிவர் {ஜரத்காரு} உடனே அவளை ஏற்கவில்லை.(21) தமது பெயர் கொண்டவளாக அவள் இருக்கமாட்டாள் என்றெண்ணியும், அவளுடைய பராமரிப்புக் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றும் சிறிது நேரம் சிந்தித்த அந்த முனிவர் {ஜரத்காரு}, அவளை ஏற்பதில் தயக்கம் காட்டினார்.(22) அதன் பிறகு, ஓ பிருகுவின் மைந்தரே! {சௌனகரே}, வாசுகியிடம் அந்த மங்கையின் பெயரைக் கேட்டு, ‘இவளை நான் பராமரிக்க மாட்டேன்’ என்று அவனிடம் {வாசுகியிடம்} சொன்னார் {ஜரத்காரு}.”(23)
மனைவியைப் பிரிந்த ஜரத்காரு! | ஆதிபர்வம் – பகுதி 47-(ஆஸ்தீக பர்வம் – 35) ஜரத்காருவின் நிபந்தனைகளை ஏற்ற வாசுகி; வாசுகியின் தங்கையைத் திருமணம் செய்த ஜரத்காரு; வாரிசு உண்டானபின் மனைவியைப் பிரிந்தார் ஜரத்காரு…
சௌதி சொன்னார், “{பாம்புகளின் மன்னன்} வாசுகி முனிவர் ஜரத்காருவிடம், “ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {ஜரத்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே! {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே! {ஜரத்காருவே}, உமக்காகவே நான் இவளை வளர்த்தேன்” என்றான் {வாசுகி}.(2) அதற்கு முனிவர் {ஜரத்காரு}, “நான் அவளைப் பாதுகாக்க மாட்டேன் என்பது இதன்மூலம் ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனக்குப் பிடிக்காத எதையும் அவள் செய்யக்கூடாது. அவள் அப்படிச் செய்தால், நான் அவளை விட்டு விலகி விடுவேன்” என்றார் {ஜரத்காரு}.”(3)
சௌதி தொடர்ந்தார், “அதற்கு “நான் எனது தங்கையைப் பராமரிப்பேன்” என்று அந்தப் பாம்பு {வாசுகி} உறுதி கூறிய பிறகு, ஜரத்காரு அந்தப் பாம்பின் இல்லத்திற்குச் சென்றார்.(4) மந்திரங்களை அறிந்த பிராமணர்களில் முதன்மையானவரும், கடுந்தவங்கள் நோற்றவரும், அறம்சார்ந்தவரும், தவத்திலே பெரியவருமான அவர் {ஜரத்காரு} சாத்திர விதிகளின்படி தம்மிடம் கொடுக்கப்பட்ட அவளது {அந்தப் பாம்பான ஜரத்காருவின்} கரத்தைப் பற்றினார்.(5) பின், பெரும் முனிவர்களால் கொண்டாடப்பட்டவரான அவர் {முனிவர் ஜரத்காரு}, தமது மணவாட்டியை அழைத்துக்கொண்டு தமக்காகப் பாம்புகளின் மன்னனால் {வாசுகியால்} ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றார்.(6)
அந்த அறைக்குள்ளிருந்த பஞ்சணையில் விலையுயர்ந்த மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. அங்கே ஜரத்காரு தமது மனைவியுடன் {பாம்பு ஜரத்காருவுடன்} வாழ்ந்து வந்தார்.(7) அந்தச் சிறந்த முனிவர் {ஜரத்காரு}, தன் மனைவியுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த முனிவர் {ஜரத்காரு}, “எனது விருப்பத்திற்கு மாறாக எதையும் நீ சொல்லவோ, செய்யவோ கூடாது. அப்படி ஏதாகிலும் நீ செய்தால், உடனே நான் உன்னைவிட்டு விலகிவிடுவேன், உனது இல்லத்தில் தங்கமாட்டேன். என்னால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை உன் மனத்திற்குள் பதியவைத்துக் கொள்” என்று கூறியிருந்தார்.(8,9)
அந்தப் பாம்பு மன்னனின் {வாசுகியின்} தங்கை {பெண் பாம்பு ஜரத்காரு} கவலையுடனும், அதிகமான வருத்தத்துடனும் “அப்படியே ஆகட்டும்” என்றாள்.(10) தனது உறவினர்களுக்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டு, குற்றமில்லாதவளான அந்த மங்கை, நாய் போன்ற விழிப்புடனும், மான் போன்ற மருட்சியுடனும், காக்கையைப் போன்ற குறிப்புணர்தலுடனும் தனது கணவனை {ஜரத்காருவை} கவனித்துக் கொண்டாள்[1].(11) ஒரு நாள், தனது தீட்டுக் காலத்திற்குப் பிறகு, அந்த வாசுகியின் தங்கை {பெண் பாம்பான ஜரத்காரு}, முறைப்படி குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தனது தலைவரான அந்த முனிவரை அணுகினாள்.(12) அதன் பிறகு அவள் கருத்தரித்தாள். நெருப்பின் தழல் போன்றும், பெரும் சக்தியுடனும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடனும் அந்தக் கரு இருந்தது.(13) வளர்பிறைச் சந்திரன் போல அது வளர்ந்து வந்தது.
[1] இங்கே சொல்லப்பட்டிருக்கும் மூலச் சொல் சுவேதகாகீயம் என்பதாகும். சுவ என்றால் நாய் என்றும், ஏத என்றால் மான் என்றும் காக என்றால் காக்கை என்றும் சிலர் பிரித்துக் கொள்வார்கள்; மற்றும் சிலரோ சுவேதகாகம் என்பது கொக்கு என்றும், மழைக்காலத்தில் கூட்டுக்குள்ளிருக்கும் ஆண் கொக்கைப் பெண்கொக்குக் காப்பாற்றுவது போல உபசரித்தாள் என்று சொல்கிறார்கள்.
ஒருநாள் பெரும் புகழ் வாய்ந்த ஜரத்காரு, தனது மனைவியின் மடியில் படுத்து சிறிது நேரத்திற்குள் களைப்புற்றவர் போலத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்படி அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, சூரியன் மேற்கு மலைகளில் உள்ள தன் இல்லத்திற்குள் புகுந்து மறையத் தொடங்கினான்.(14,15) ஓ பிராமணரே! {சௌனகரே}, பகல் அப்படி ஒளியிழந்து கொண்டிருந்த போது, வாசுகியின் சிறந்த தங்கை {ஜரத்காரு} தனது கணவரின் {முனிவர் ஜரத்காருவின்} அறம் அழிந்துவிடுமே என்ற அச்சத்தினால் சிந்தித்தாள்.(16) “நான் இப்போது என்ன செய்வது? எனது கணவரை எழுப்பலாமா வேண்டாமா? தமது அறக் கடமைகளில் அவர் நேரம் தவறாதவராகவும், {அதற்கென} இன்னல்களை அடைய தயாராகவும் இருப்பாரே. அவரைக் கோபப்படுத்தாதவாறு நான் எப்படிச் செயல்படுவது?(17) ஒன்று அவரது கோபத்திற்கு ஆளாக வேண்டும். அல்லது இந்த அறம் சார்ந்த மனிதனின் அறம் கெட்டுப்போக வேண்டும். அறத்தை இழப்பதுவே இந்த இரு தீமைகளில் தீங்கானது என்று நான் எண்ணுகிறேன்.(18) நான் எழுப்பினால் இவரின் கோபத்துக்கு ஆளாவேன். {ஆனால்} இவரது வேண்டுதல்கள் இல்லாமல் மாலை {சந்தியாகாலம்} கரையுமானால், இவர் நிச்சயமாக அறத்தை இழந்துவிடுவார்” என்று நினைத்தாள்.[2] (19)
மனைவி ஜரத்காரு தன் கணவனை எழுப்பினாலும் அவர் கோபித்துக் கொள்வார். எழுப்பாவிட்டாலும் அறம் பிறழ வைத்ததற்காக கோபித்துக் கொள்ளுவார். எனவே எழுப்புவதே மேல். அவரது அறமாவது பிறழாமல் இருக்கட்டுமென நினைத்தாள்.
இனிய சொல்கொண்ட வாசுகியின் தங்கையான அந்த ஜரத்காரு, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து, தனது தவத் துறவுகளால் ஒளிர்ந்தவரும், நெருப்பின் தழலைப் போலப் படுத்துக் கிடந்தவருமான முனிவர் ஜரத்காருவிடம் மென்மையாகப் பேசினாள். அவள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}, “ஓ பெரும் நற்பேறுடையவரே! {முனிவர் ஜரத்காருவே}, கதிரவன் மறைகிறான் எழுந்திருப்பீராக.(20,21) ஓ கடுந்தவங்கள் செய்வரே, ஓ சிறப்புமிக்கவரே, நீரால் உங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, விஷ்ணுவின் பெயரை உச்சரித்துச் செய்யப்படும் மாலை வேண்டுதல்களைச் செய்வீராக. மாலை வேள்விக்கான நேரமாகிவிட்டது.(22) சந்தி வெளிச்சம் (பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் இருக்கும் வெளிச்சம்) இப்போது கூட மேற்கு புறத்தில் மென்மையாகச் சூழ்ந்திருக்கிறது {சிறிது இருக்கிறது}” என்றாள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}.
இப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டவரும், சிறந்த தவத்தகுதிகள் கொண்டவருமான புகழ்பெற்ற ஜரத்காரு,(23) கோபத்தால் மேல் உதடுகள் துடிக்கத் தன் மனைவியிடம், “நாகர்குலத்தில் {உதித்த} இனிமையானவளே, நீ என்னை அவமதித்தாய்.(24) இனி ஒருக்காலும் உன்னுடன் இருக்க மாட்டேன். நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்கிறேன். ஓ அழகிய தொடைகளைக் கொண்டவளே. நான் உறங்கி கொண்டிருந்தேனேயானால், சூரியனுக்கு வழக்கமான நேரத்தில் மறையும் சக்தி கிடையாது என்பதை இதயப்பூர்வமாக நம்புகிறேன், அவமதிக்கப்பட்ட மனிதன், தான் அவமதிக்கப்பட்ட இடத்தில் வாழக்கூடாது.(25,26) அதுவும் என்னைப் போன்ற அறம் சார்ந்தவர்கள் {அப்படி வாழ} கூடவே கூடாது” என்றார். தனது கணவனால் {முனிவர் ஜரத்காருவால்} இப்படிச் சொல்லப்பட்ட வாசுகியின் தங்கை ஜரத்காரு, அச்சத்தால் நடுங்கியவாறு,(27) “ஓ பிராமணரே! {முனிவர் ஜரத்காருவே}, அவமதிக்க விரும்பி நான் உம்மை எழுப்பவில்லை. உமது அறம் கெட்டுவிடக்கூடாது என்றே எழுப்பினேன்” என்றாள் {பெண் பாம்பான ஜரத்காரு}.(28)
கோபவசப்பட்டவரும், பெரும் ஆன்மிகத் தகுதி கொண்டவருமான முனிவர் ஜரத்காரு, தன் மனைவியைக் கைவிட விரும்பி, தன் மனைவியிடம் இப்படிப் பேசினார், “ஓ அழகானவளே! ஒருபோதும் நான் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் செல்வேன்.(29,30) இதுவே நமக்குள்ளான உடன்பாடாகும். ஓ இனியவளே! நான் உன்னுடன் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தேன். ஓ அழகானவளே! நான் சென்ற பிறகு, நான் உன்னை விட்டுச் சென்றேன் என்பதை உன் தமையனிடம் நீ சொல்வாயாக. நான் செல்வதால், எனக்காக நீ வருந்துவது உனக்குத் தகாது” என்றார் {ஜரத்காரு}.(31,32)
இப்படிக் குற்றமில்லாத அங்கங்களை உடையவளான வாசுகியின் அழகான தங்கை {ஜரத்காரு}, பதற்றத்தாலும், துயரத்தாலும் நிறைந்து, அவள் நெஞ்சம் நடுங்கி கொண்டிருந்தாலும், போதுமான அளவு தைரியத்தையும், பொறுமையையும் வரவழைத்துக்கொண்டு முனிவர் ஜரத்காருவிடம் பேசினாள். அவளது வார்த்தைகள் கண்ணீரால் தடைபட்டு வெளிவந்தது. அவளது முகம் பயத்தால் மங்கியது. அவள் தனது கரங்களைக் குவித்து, கண்ணீரில் குளித்த கண்களுடன், “என்னிடம் குற்றம் இல்லாத போது என்னைவிட்டு நீர் பிரிவது தகாது.(33-35) நீர் அறத்தின் பாதையில் செல்பவர். எனது உறவினர்களின் நன்மையைக் கருதிக் கொண்டு நானும் அதே பாதையில்தான் போகிறேன். ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {முனிவர் ஜரத்காருவே}, என்ன காரணத்திற்காக நான் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டேனோ,(36) அந்தக் காரியம் நிறைவேறவில்லையே. நற்பேறற்றவளான என்னிடம் வாசுகி என்ன கேட்பான்? ஓ அருமையானவரே! தாயின் {கத்ருவின்} சாபத்தால் பாதிக்கப்பட்ட எனது உறவினர்கள் {எனது} மகனை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அந்தக் காரியம் இன்னும் நிறைவேறவில்லையே! என் உறவினர்களின் நன்மையானது உம்மிடமிருந்து {நான்} ஒரு மகனை பெறுவதையே சார்ந்திருக்கிறது.(37,38) உம்முடனான எனது தொடர்பு பலனளிக்காமல் போகக்கூடாது என்பதற்காகவும், ஓ சிறப்புமிக்க பிராமணரே! குலத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தினாலும் நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அருமையானவரே, உயரான்மாவே, நான் குற்றமற்றவளாக இருக்கும்போது, நீர் ஏன் விலகுகிறீர்? இஃது எனக்குப் புரியவில்லை?” என்றாள்.(39,40)
இப்படிக் கேட்கப்பட்ட பெரும் தவ தகுதிகள் வாய்ந்த முனிவர் ஜரத்காரு, தனது மனைவியிடம் {வாசுகியின் தங்கை ஜரத்காருவிடம்} அந்தச் சூழ்நிலைக்குத் தக்க வார்த்தைகளைப் பேசினார்.(41) அவர், “ஓ நற்பேறுபெற்றவளே! நீ கருவுற்றிருக்கிறாய் என்பதை அறிந்து கொள். அறத்தில் சிறந்து, வேதங்களிலும் அதன் கிளைகளிலும் புலமை கொண்டு, அக்னிக்கு நிகரான ஒரு முனிவனின் ஆன்மா உன்னுள் இருக்கிறது” என்றார் {முனிவர் ஜரத்காரு}.(42) “இப்படிச் சொல்லிவிட்டு, அந்த அற ஆன்மா கொண்ட பெருமுனி ஜரத்காரு, மீண்டும் கடுந்தவங்களைப் பயிலத் தமது இதயத்தில் உறுதியான எண்ணங்கொண்டு {தமது வழியே} சென்றார்” {என்றார் சௌதி}.(43)
ஆஸ்தீகர் பிறப்பு! | ஆதிபர்வம் – பகுதி 48(ஆஸ்தீக பர்வம் – 36)வாசுகியும் அவன் தங்கை ஜரத்காருவும் பேசியது; வாசுகி மகிழ்ச்சி; ஆஸ்தீகர் பிறந்தார்…
சௌதி சொன்னார், “ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! {சௌனகரே}, தனது தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்தவுடன், ஜரத்காரு தனது தமையனிடம் {வாசுகியிடம்} சென்றாள். அவனிடம் {வாசுகியிடம்} நடந்த அனைத்தையும் சொன்னாள்.(1) அந்தப் பாம்புகளின் இளவரசன் {வாசுகி}, பேரழிவு {போன்ற} செய்தியைக் கேட்டு, பரிதாபகரமாக இருந்த தனது சகோதரியிடம் {ஜரத்காருவிடம்}, அதைவிடப் பரிதாபமான நிலையில் இருந்து பேசினான்.(2)
அவன் {வாசுகி}, “ஓ இனிமையானவளே!, உன்னை அளித்த காரணத்தை நீயே அறிவாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே! {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா? அந்த ஞானமுள்ளவருக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} உன்னை அளித்தது கனியற்றதாக இருக்கக்கூடாது என்பதே என் இதயத்தின் விருப்பம்.(5)
உண்மையில், இதை நான் உன்னிடம் கேட்பது சரியாகாது. இருப்பினும், விஷயத்தின் அழுத்தத்தைக் {முக்கியத்தை} கருதியே நான் உன்னைக் கேட்கிறேன்.(6) எப்போதும் கடுமையான தவங்களில் ஈடுபடுபவரான உன் தலைவனின் {முனிவர் ஜரத்காருவின்} பிடிவாதத்தை அறிந்த நான், அவர் சபித்து விடக்கூடும் என்பதால் {அவர் திரும்பி வர வேண்டி} அவர் பின் செல்லமாட்டேன்.(7) ஓ இனிமையானவளே! உனது தலைவன் {ஜரத்காரு} என்னவெல்லாம் செய்தான் என்று விவரமாகக்கூறு. எனது இதயத்தில் நெடுங்காலமாகச் செருகப்பட்டிருப்பதும், பயங்கரமாகக் கலங்கடிப்பதுமான கணையை அகற்றி விடு” என்றான் {வாசுகி தனது தங்கை ஜரத்காருவிடம்}.(8)
பாம்புகளின் மன்னனான வாசுகியால் இப்படிக் கூறப்பட்ட ஜரத்காரு, விரிவாகப் பேசி அவனைச் சமாதானப்படுத்தினாள்.(9) அவள், “தவவலிமை கொண்டவரான அந்த உயரான்ம முனிவரிடம் {முனிவர் ஜரத்காருவிடம்} பிள்ளையைப் பற்றி நான் கேட்டதற்கு, “இருக்கிறது” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.(10) அவர் {முனிவர் ஜரத்காரு}, கேலிக்காகக் கூட மெய்யற்றதைப் பேசிக் கேட்ட நினைவு எனக்கில்லை. ஓ மன்னா {வாசுகி}, இதைப் போன்ற முக்கிய நேரத்தில் அவர் ஏன் பொய்மை பேச வேண்டும்? அவர் {முனிவர் ஜரத்காரு},(11) “பாம்பினத்தின் மகளே {வாசுகியின் தங்கை ஜரத்காருவே}, நமது தாம்பத்தியத்தின் நோக்கமான பலனை எண்ணி நீ வருந்தாதே. ஒளிரும் கதிரவனைப் போன்ற பிரகாசத்துடன் உனக்கொரு மகன் பிறப்பான்” என்றார்.(12) ஓ சகோதரா! {வாசுகி}, இதைச் சொல்லிவிட்டு, தவத்தை செல்வமாகக் கொண்ட எனது கணவர் {முனிவர் ஜரத்காரு} சென்றுவிட்டார். ஆகையால், உனது மனத்தில் உள்ள ஆழ்ந்த வருத்தமானது மறையட்டும்” {என்றாள் பெண்பாம்பான ஜரத்காரு}.’(13)
சௌதி தொடர்ந்தார், “இதைக் கேட்ட பாம்புகளின் மன்னன் வாசுகி தனது சகோதரியின் {பாம்பு ஜரத்காருவின்} வார்த்தைகளை ஏற்று, பெருமகிழ்வுடன், “அப்படியே ஆகட்டும்” என்றான்.(14) அந்தப் பாம்புகளின் தலைவன் {வாசுகி}, தன் தங்கையை வாழ்த்தியும், பொருத்தமாகப் புகழ்ந்தும், செல்வத்தை அளித்தும் நன்கு கவனித்துக் கொண்டான்.(15) பிறகு, ஓ பிராமணர்களில் சிறந்தவரே {சௌனகரே}, பெரும் காந்தியைக் கொண்ட அந்தக் கரு, வானத்தில் இருக்கும் வளர்பிறை மதியைப் போல வளர ஆரம்பித்தது.(16)
அந்தப் பாம்புகளின் சகோதரி {ஜரத்காரு}, குறித்த நேரத்தில், தேவலோகக் குழந்தைக்கு ஒப்பான காந்தியுடன் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். அவன் {பின்னாளில்} தன் முன்னோர்களையும் தாய்வழி உறவினர்களையும் அச்சத்திலிருந்து விடுவிப்பவன் ஆனான்.(17) அந்தக் குழந்தை, பாம்பு மன்னனுடைய {வாசுகியுடைய} வீட்டிலேயே வளர்ந்தான். வேதங்களையும், அதன் கிளைகளையும், பிருகுவின் மைந்தரான முனிவர் சியவனரிடம் படித்தான்.(18) சிறுவனாக இருந்தபோதிலும் அவனது நோன்புகள் கடுமையானதாக இருந்தன. அறிவுக்கூர்மையைக் கொடையாகக் கொண்டும், அறம்சார்ந்த எல்லாக் குணங்களுடனும், ஞானத்துடனும், உலக விருப்பங்கள் அற்று, ஞானியைப் போல இருந்தான். அவன் கருவில் இருந்தபோது ‘இருக்கிறது’ என்று சொல்லி அவன் தந்தை காட்டிற்குச் சென்றதால் அவன் ஆஸ்தீகன்[1] (ஆஸ்தி’ என்றால் இருக்கிறது என்று பொருள். அவன் தந்தை “ஆஸ்தி” என்று கூறிசென்றதால் ஆஸ்தீகன் என்றழைக்கப்பட்டான்.)என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(19,20)
அவன் சிறுவனாக இருந்தபோதிலும் புத்திக்கூர்மையோடு தீவிரமானவனாக இருந்தான். பாம்புகளின் அரண்மனையில் பெரும் அக்கறையுடன் அவன் {ஆஸ்தீகன்} வளர்க்கப்பட்டான்.(21) திரிசூலம் தரித்தவனும், தேவர்களின் தலைவனும், சிறப்பு வாய்ந்தவனுமான மகாதேவனைப் போலப் அவன் {ஆஸ்தீகன்} பொன்வண்ணத்தில் இருந்தான். நாளுக்கு நாள் அவன் வளர்ந்து, பாம்புகளை மகிழ்வூட்டினான்” {என்றார் சௌதி}.(22)
பரீக்ஷித் வரலாறு! | ஆதிபர்வம் – பகுதி 49(ஆஸ்தீகப் பர்வம் – 37)தன் தந்தையின் வரலாற்றை அமைச்சர்களிடம் கேட்ட ஜனமேஜயன்; பரீக்ஷித்தின் சிறப்பு; அவன் வேட்டையாடச் சென்றது; பரீக்ஷித் சமீகரை அவமதித்தது…
சௌனகர், “மன்னன் ஜனமேஜயன், அவனது அமைச்சர்களிடம், தனது தந்தை {பரீக்ஷித்} தேவலோகத்திற்கு உயர்ந்ததைப் பற்றி கேட்டதனைத்தையும் மறுபடியும் விரிவாக எனக்குச் சொல்” என்றார். (1)
சௌதி சொன்னார், “ஓ பிராமணரே! {சௌனகரே}, பரீக்ஷித்தின் இறப்பைப் பற்றித் தனது அமைச்சர்களிடம் மன்னன் ஜனமேஜயன் கேட்டதனைத்தையும், அவர்கள் சொன்னதனைத்தையும் கேட்பீராக.(2)
ஜனமேஜயன், “உங்கள் எல்லோருக்கும் எனது தந்தைக்கு என்ன நடந்தது என்பது தெரியும். அந்தப் புகழ்வாய்ந்த மன்னன் {பரீக்ஷித்}, அந்த நேரத்தில் எப்படித் தனது மரணத்தைச் சந்தித்தார்?(3) எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரமாக உங்களிடம் நான் கேட்டறிந்தால், உலக நன்மைக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் நான் அதற்கு உத்தரவிடுவேன். இல்லையென்றால் நான் எதுவும் செய்யமாட்டேன்” எனக் கேட்டான் {ஜனமேஜயன்}.(4) {உயர் ஆன்ம மன்னன் ஜனமேஜயனால் இவ்வாறு கேட்கப்பட்டவர்களும், அறவோர்களும், விவேகிகளுமான அமைச்சர் இவ்வாறு பதிலுரைத்தனர்}[1].(5)
அதற்கு அமைச்சர்கள், “ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, உனது சிறப்புமிக்கத் தந்தையின் {பரீக்ஷித்தின்} வாழ்க்கை பற்றிய விவரத்தையும், எப்படி அந்த மன்னாதிமன்னன் {பரீக்ஷித்} இந்த உலகத்தை விட்டு அகன்றான் என்பதையும் நீ கேட்டதற்கிணங்க சொல்கிறோம் கேட்பாயாக.(6) உனது தந்தை {பரீக்ஷித்} அறம் சார்ந்த உயர் ஆன்மாவாக, தனது மக்களை எப்போதும் காத்து வந்தான். இந்த உலகத்தில் அந்த உயர் ஆன்மா எப்படி நடந்து கொண்டான் என்பதைக் கேட்பாயாக.(7) அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, அறமும் நீதியும் உருவெடுத்தாற் போல் இருந்து, அறம் உணர்ந்து, நான்கு வர்ணங்களையும், அவரவர் கடமைகளுக்கேற்ப அறத்தின்படிக் காத்து வந்தான்.(8) ஒப்பற்ற வீரத்துடன், நற்பேறும் அருளப்பட்ட அவன், பூமாதேவியைக் {உலகைக்} காத்து வந்தான். அவனை {பரீக்ஷித்தை} வெறுத்தவர் யாருமில்லை, அவனும் {பரீக்ஷித்தும்} யாரையும் வெறுத்ததில்லை.(9) பிரஜாபதியைப் (பிரம்மாவைப்) போல அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவித்தான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, தங்கள் கடமையை மனநிறைவுடன் செய்து வந்த பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என,(10) எல்லோரையும் பாரபட்சமின்றிக் காத்துவந்தான், அந்த மன்னன் {பரீக்ஷித்}, விதவைகளையும், அனாதைகளையும், ஊனமுள்ளவரையும், ஏழைகளையும் தாங்கிக் காத்து வந்தான்.(11)
சரத்வானின் மகன் கிருபர் ஆவார். அவர் குரு வம்சத்து குலகுரு. அப்படி இருக்க சரத்வான் பரீக்ஷித்தின் குரு என்பது நெருடலாய் இருக்கிறது. மூல ஸ்லோகத்தை ஆராய்ந்ததில், சரத்வன் எனப்படும் கௌதமர் வழிவந்தவர் என்பதைக் குறிக்கும் சரத்வத் (சரத்வன் என்னும் கௌதம பரம்பரையைச் சேர்ந்தவன்) என்ற சொல்லே உபயோகப் படுத்தப்பட்டிருப்பதால் கிருபரே பரீக்ஷித்துக்கும் குருவாக இருந்தார் எனத் தெரிகிறது.அனைத்துயிர்களுக்கும், தனது அழகால் இரண்டாவது சோமனைப் {சந்திரனைப்} போலத் தோன்றினான். நற்பேறு அருளப்பட்டு, தனது குடிகளை மனத்தில் வைத்து, அவர்களை மனநிறைவுப்படுத்தி, உண்மை பேசி, அளவிலா வீரம்பொருந்தி, சரத்வானின்[2] சீடனாக இருந்து, ஆயுத அறிவியல் பயின்றான். ஓ ஜனமேஜயா, உனது தந்தை {பரீக்ஷித்} கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} அன்பானவனாக இருந்தான்.(12,13) பெரும் புகழை அடைந்து, அனைத்து மனிதர்களாலும் அன்பு பாராட்டப்பட்டான். குரு பரம்பரையே கிட்டதட்ட அழிந்திருந்த காலத்தில் உத்தரையின் கருவறையில் அவன் {பரீக்ஷித்} பிறந்தான்.(14) எனவே, அந்தப் பலம்பொருந்திய அபிமன்யுவின் மகன் பரீக்ஷித் என்று அழைக்கப்பட்டான். மன்னர்களுக்கான கடமைகளைப் {ராஜதர்மங்களைப்} பற்றிய சாத்திரங்களை விளக்குவதில் அவன் நிபுணனாக இருந்தான். எல்லா அறங்களையும் அவன் கொடையாகப் பெற்றிருந்தான். தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, புத்தி கூர்மையுடன், பெருத்த ஞாபகச் சக்தியுடன், எல்லா அறங்களையும் கடைப்பிடித்தான். தனது மனத்தின் சக்தியால் ஆறு உணர்ச்சிகளையும் வென்றான். அவன் அனைவரிலும் மேம்பட்டு இருந்தான். (15,16) அரசியலும் ஒழுக்கமும் அறிந்த உனது தந்தை {பரீக்ஷித்}, தனது குடிகளை அறுபது {60} வருடங்கள் ஆண்டான். அப்படிப்பட்ட அவன் {பரீக்ஷித்} பிறகு தனது குடிகளைப் புலம்பி அழச் செய்யும் வகையில் இறந்து போனான். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, அவனுக்குப் பிறகு, குரு பரம்பரையின் ஆயிரம் வருடப் பரம்பரை {வம்சாவளி} அரசை நீ அடைந்தாய். குழந்தைப் பருவத்திலேயே முடிசூட்டப்பட்டு, {அதுமுதல்} உயிரினங்களனைத்தையும் நீ காப்பாற்றி வருகிறாய்” என்றார் {அமைச்சர்}.(17,18)
ஜனமேஜயன், “குடிகளின் நன்மையைக் கருதாத அல்லது அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகாத எந்த ஒரு மன்னனும் எங்கள் பரம்பரையில் {குரு குலத்தில்} தோன்றியதில்லை. குறிப்பாக என் முப்பாட்டன்களின் நடத்தை, பெரும் சாதனைகளைச் செய்வதாகவே இருந்ததைக் கண்டிருப்பீர்கள்.(19) பல அறங்கள் அருளப்பட்ட எனது தந்தை {பரீக்ஷித்} எப்படி மரணமடைந்தார்? நடந்தது அனைத்தையும் எனக்கு நடந்தபடியே விவரியுங்கள். உம்மிடமிருந்து அதைக் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்” என்றான் {ஜனமேஜயன்}.”(20)
சௌதி தொடர்ந்தார், “இப்படி அந்த ஏகாதிபதியால் {ஜனமேஜயனால்} கேட்டுக்கொள்ளப்பட்டதும், எப்போதும் மன்னனின் {ஜனமேஜயனின்} நலனில் அக்கறையுள்ள சபை உறுப்பினர்கள் {அமைச்சர்கள்}, அவனிடம் எது எது எப்படி நடந்ததோ அப்படியே மொத்தமாகத் தெரிவித்தனர்”(21)
சபை உறுப்பினர்கள், “ஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தை {பரீக்ஷித்}, முழு உலகத்தையும் பாதுகாத்தவன். சாத்திரங்கள் வழி ஒழுகும் மனிதர்களில் முதன்மையானவன். போர்க்களத்தில் வில்தாங்கியவர்களில் முதன்மையான பாண்டுவைப் போல, வேட்டையாடும் விளையாட்டிற்கு அடிமையாக இருந்தான். அவன் சிறு விஷயங்களிருந்து மிக முக்கியமான விஷயங்கள் வரை நாட்டு நடப்பில் எல்லா விஷயங்களையும் எங்களைக் கலந்தாலோசித்தான்.(22,23) அவன் {பரீக்ஷித்}, ஒரு நாள், கானகத்திற்குள் சென்று, ஒரு மானைத் தனது கணையால் துளைத்தான். தனது அம்புறாத்தூணியையும், வாளையும், {வில்லையும்} சுமந்து கொண்டு,(24) அந்த மானைத் துரத்திக் கொண்டு ஓடினான். தொலைந்த மானை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு அறுபது {60} வயது ஆகியிருந்ததால், முதுமையினால் தளர்வுற்று, விரைவிலேயே மிகவும் சோர்ந்து போய்ப் பசியெடுத்து களைத்து இருந்தான். அங்கே அந்த ஆழ்ந்த கானகத்திற்குள் ஓர் உயர் ஆன்ம முனிவரைக் கண்டான்.(25,26) அந்த முனிவர் {சமீகர்} மௌன விரதம் மேற்கொண்டிருந்தார். மன்னன் {பரீக்ஷித்} அவரிடம் {சமீகரிடம்} மானைப் பற்றிக் கேட்டான். ஆனாலும் அவர் பதிலளிக்கவில்லை.(27) ஏற்கனவே களைப்பாலும், சோர்வாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த அந்த மன்னன் {பரீக்ஷித்}, முடிவில், அசைவற்று மரக்கட்டை போல் மௌன விரதம் இருந்த முனிவரைக் {சமீகரைக்} கண்டு கோபம் கொண்டான். அவர் {முனிவர் சமீகர்} மௌன விரதம் இருப்பது மன்னனுக்குத் தெரியாது. எனவே, கோபத்தால் உந்தப்பட்ட உனது தந்தை {பரீக்ஷித்} அவரை {முனிவர் சமீகரை} அவமதித்தான்.(28,29) பாரதக் குலத்தில் அருமையானவனே {ஜனமேஜயனே}, அந்த மன்னனான உனது தந்தை {பரீக்ஷித்}, தனது வில்லின் நுனியால் ஓர் உயிரற்ற பாம்பை எடுத்து களங்கமற்ற ஆன்மாவான அந்த முனிவரின் {முனிவர் சமீகரின்} தோளில் போட்டான்.(30) ஆனாலும் அந்த முனிவர் {சமீகர்} நன்மை தரும் சொல்லோ, தீமை தரும் சொல்லோ ஒன்றும் கூறாமல், கோபமற்று இருந்தார். அவர் {முனிவர் சமீகர்} அந்த உயிரற்றப் பாம்பைத் தாங்கிக் கொண்டு அதே நிலையிலேயே இருந்தார்” என்றனர் {அமைச்சர்கள்}.”(31)
ஜனமேஜயன் கோபம்! | ஆதிபர்வம் – பகுதி 50(ஆஸ்தீக பர்வம் – 38)அமைச்சர்கள் நடந்ததைக் கூறினர்; தக்ஷகன் கசியபர் உரையாடல் தெரிந்த விதம்; தக்ஷகனைப் பழிதீர்க்க முடிவு செய்த ஜனமேஜயன்
சௌதி தொடர்ந்தார், “அமைச்சர்கள் சொன்னார்கள், “அந்த மன்னர் மன்னன் {பரீக்ஷித்}, பசியாலும், முயற்சியாலும் களைத்துப் போய், அந்த முனிவரின் {சமீகரின்} தோள்களில் பாம்பைக் கிடத்திவிட்டு தனது தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} திரும்பி வந்துவிட்டான்.(1) அந்த முனிவருக்குப் {முனிவர் சமீகருக்கு}, பசுவிடம் பிறந்த ஒரு பிள்ளை இருந்தான். அவன் பெயர் சிருங்கி. அவன் {சிருங்கி} தனது பெரும் வீரம், சக்தி மற்றும் பெரும் கோபத்துக்காகப் பெரிதும் அறியப்பட்டு இருந்தான்.(2) (தினமும்) தனது குருவிடம்[1] சென்று, (பிரம்மனிடம் சென்று என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.)அவரை வழிபட்டு வரும் வழக்கம் அவனிடம் {சிருங்கியிடம்} இருந்தது. அந்தக் குருவின் உத்தரவின் பேரில் சிருங்கி தனது வீட்டுக்குத் திரும்பி வருகையில்,(3) தனது நண்பனின் மூலம், உன் தந்தையினால் அவன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைக் கேட்டறிந்தான். ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, தன் தந்தை {முனிவர் சமீகர்} எக்குற்றமும் செய்யாதிருப்பினும், உயிரற்ற பாம்பைச் சுமந்து ஒரு சிலையைப் போல அசைவற்றவராக அமர்ந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டான்.(4,5)
ஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} கடும் தவங்களை நோற்பவர். முனிவர்களில் முதன்மையானவர். தனது உணர்ச்சிகளை அடக்கி வாழ்பவர். சுத்தமானவர். அற்புதமான செயல்கள் செய்து கொண்டிருப்பவர். தவத் துறவுகளால் அவரது {முனிவர் சமீகரது} ஆன்மா ஞானஒளி பெற்றிருந்தது. அவரது உறுப்புகளும், அதன் செயல்களும் அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. அவரது செயல்களும், பேச்சும் எப்போதும் அருமையாகவே இருக்கும். அவர் {முனிவர் சமீகர்} பேராசைகள் அற்று மனநிறைவுடன் இருந்தார். அவர் பொறாமையற்றும், எந்த விதத்திலும் கருமித்தனமற்றும் இருந்தார். அவர் அனைத்து உயிர்களுக்கும் அதன் துயரங்களில் அடைக்கலம் கொடுப்பவர். அந்த முதிர்ந்தவர் மௌன விரதம் இருப்பது வழக்கம். உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} அப்படிப்பட்டவர். அந்த முனிவரின் மகன் {சிருங்கி} பெரும் கோபம் கொண்டு உனது தந்தையை {பரீக்ஷித்தைச்} சபித்தான்.(6-8) வயதில் இளையவனாக இருந்தாலும், அந்தச் சக்திவாய்ந்தவன் தவ மகிமையில் முதிர்ந்தவனாக இருந்தான். அவன் {சிருங்கி} கோபம் கொண்டு வேகமாக நீரைத் தொட்டு, தவசக்தியினால் ஒளிர்ந்து கொண்டு உன் தந்தையைக் குறித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தான்.(9) அவன், “எனது ஆன்மீக பலத்தைப் {தவத்தின் சக்தியைப்} பார்! எனது இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டுப் பலமான சக்தியும், கொடிய விஷமும் கொண்ட தக்ஷகன் {பாம்பு}, எந்தத் தவறும் செய்யாத என் தந்தை {முனிவர் சமீகர்} மீது இந்தப் பாம்பைக் கிடத்திய தீயவனை, இன்னும் ஏழு இரவுகளுக்குள் தன் விஷத்தால் எரிப்பான்” என்று {சிருங்கி} சபித்துவிட்டு, தனது தந்தை {முனிவர் சமீகர்} எங்கிருந்தாரோ அங்குச் சென்றான்.(10-12)
அவனது தந்தையைச் சந்தித்து, தனது சாபத்தைப் பற்றிச் சொன்னான். அந்த முனிவர்களில் புலியானவர் {முனிவர் சமீகர்}, இனிமையான குணமும், அனைத்து அறங்களும் கொண்டவனும், இனிமையானவனுமான தனது சீடன் கௌர்முகனை உனது தந்தையிடம் {பரீக்ஷித்திடம்} அனுப்பினார். அவன் {சமீகரின் சீடன் கௌர்முகன்} (சபைக்கு வந்த பிறகு) வந்து சிறிது ஓய்வெடுத்த பின், மன்னனிடம் {பரீக்ஷித்திடம்} அனைத்தையும் தன் குருவின் {சமீகர்} வார்த்தைகளிலேயே தெரிவித்தான்.(13,14) “எனது மகனால் {சிருங்கியால்} நீ சபிக்கப்பட்டிருக்கிறாய், ஓ மன்னா, தக்ஷகன் {பாம்பு} தனது விஷத்தால் உன்னை எரிக்கப்போகிறான். ஓ மன்னா, கவனமாக இருப்பாயாக” {என்றான் கௌர்முகன்}.(15) ஓ ஜனமேஜயா, அந்தப் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்ட உனது தந்தை {பரீக்ஷித்} பலம்வாய்ந்த தக்ஷகனுக்கு எதிராக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டான்.(16)
ஏழாவது நாள் வந்த போது, கசியபர் என்ற பிராமண முனிவர், ஏகாதிபதியை {பரீக்ஷித்தைச்} சந்திக்க விருப்பம் கொண்டார்.(17) ஆனால் அந்தப் பாம்பு தக்ஷகன், கசியபரைச் சந்தித்தான்.. அந்தப் பாம்புகளின் இளவரசன் {தக்ஷகன்} கசியபரிடம் நேரத்தைக் கடத்தாமல் பேசினான். “எங்கே இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்? எக்காரியத்திற்காக நீர் போகிறீர்?” என்று கேட்டான்.(18) கசியபர், “ஓ பிராமணரே, நான் குரு பரம்பரையின் சிறந்த மன்னன் பரீக்ஷித் எங்கிருக்கிறானோ அங்குச் செல்கிறேன். அவன் தக்ஷகனின் விஷத்தால் இன்று எரியப் போகிறான்.(19) அவனைக் குணப்படுத்தவே நான் விரைவாகச் செல்கிறேன். உண்மையில் என்னால் பாதுகாக்கப்படும் போது அந்தப் பாம்பால் அவனைக் {பரீக்ஷித்தைக்} கடித்துக் கொல்ல முடியாது” என்றார்.(20)
தக்ஷகன், “நானே தக்ஷகன். என்னால் கடிபட இருக்கும் அந்த மன்னனை எதற்காகக் காக்கப் போகிறீர்? ஓ பிராமணரே {கசியபரே}, என்னால் கடிக்கப்படும் அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} பிழைக்க வைக்க உம்மால் ஆகாது. எனது விஷத்தின் அற்புத பலத்தைப் பாரும்” என்று சொல்லி, அங்கே இருந்த கானக மன்னனைக் (ஆல மரத்தைக்) கடித்தான்.(21-22) அந்த ஆலமரம் பாம்பால் {தக்ஷகனால்} கடிபட்ட உடன் சாம்பலாக ஆனது. ஆனால் ஓ மன்னா {ஜனமேஜயா}, கசியபர் அதை உயிர்ப்பித்தார்.(23) அப்போது தக்ஷகன், “உமது விருப்பத்தைச் சொல்லும்” என்று கேட்டு அவரது {ஆசையைத்} தூண்டினான். இப்படிக் கேட்கப்பட்ட கசியபரும் தக்ஷகனிடம்,(24) “செல்வத்தில் விருப்பம் கொண்டே நான் அங்குச் செல்கிறேன்” என்றார். அந்த உயர்ஆன்ம கசியபரிடம் தக்ஷகன் மென்மையான வார்த்தைகளால்,(25) “ஓ பாவமற்றவரே {கசியபரே}, நீர் அந்த ஏகாதிபதியிடம் {பரீக்ஷித்திடம்} இருந்து எதிர்பார்த்ததை விட அதிகச் செல்வத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு, வந்த வழியே திரும்பிச் செல்லும்” என்றான் {தக்ஷகன்}.(26) இதைக் கேட்ட, அந்த மனிதர்களில் முதன்மையான கசியபர், அவனிடமிருந்து தான் விரும்பிய அளவு செல்வத்தைப் பெற்றுக் கொண்டு, தான் வந்த வழியே சென்றார்.(27)
கசியபர் திரும்பிச் சென்றதும், தக்ஷகன் மாற்றுருவம் கொண்டு, தனது மாளிகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கியிருந்த, மன்னர்களில் முதன்மையானவனும், அறவழி நடப்பவனுமான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} மேல் தனது விஷ நெருப்பைச் செலுத்தினான். அதன் பிறகு ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயனே}, நீ (அரியணையில்) அமர்த்தப்பட்டாய்.(28,29) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, கொடூரமானதாக இருந்தாலும், நாங்கள் கண்டதையும், கேட்டதையும் முழுவிவரத்தையும் உரைத்துவிட்டோம்.(30 மன்னனான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} கவலையையும், உதங்க முனிவரின் அவமதிப்பையும் முழுவதும் கேட்டு, செய்யவேண்டியதை நீயே தேர்வு செய்து கொள்வாயாக” என்றனர்.”(31)
சௌதி தொடர்ந்தார், “எதிரிகளை அடக்கும் மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்கள் அனைவருடன் பேசினான்.(32) அவன், “ஆலமரம், தக்ஷகனால் சாம்பலானதையும், அது பிறகு அற்புதமான முறையில் கசியபரால் உயிர்ப்பிக்கப்பட்டதையும் எப்போது நீங்கள் அறிந்தீர்கள்? எனது தந்தை {பரீக்ஷித்} தக்ஷகன் தீண்டி இறந்திருந்தாலும், கசியபரின் மந்திரங்களால் அவரை நிச்சயம் பிழைக்க வைத்திருக்க முடியும்.(33,34) அந்தப் பாம்புகளில் இழிந்தவன் {தக்ஷகன்}, அந்தப் பாவ ஆன்மா, தன்னால் கடிபட்ட மன்னன், கசியபரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தால் தன் விஷம் செயலிழக்க வைக்கப்பட்டதைக் குறித்து உலகம் தன்னைக் கேலி செய்து எள்ளி நகையாடும் என்று தன் மனதில் எண்ணியிருக்கிறான். நிச்சயமாக அந்த எண்ணம் இருந்ததால்தான், அவன் {தக்ஷகன்} கசியபரை சமாதானப் படுத்தியிருக்கிறான்.(35,36) அவனைத் {தக்ஷகனைத்} தண்டிக்க நான் ஒரு வழியைத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தக் கானகத்தில் தனிமையில் தக்ஷகனும் கசியபரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை நீங்கள் பார்த்தபடியே அல்லது கேட்டபடியே எனக்குச் சொல்லுங்கள். அதை அறிந்த பிறகு, பாம்பினத்தையே ஒழிக்க ஒரு திட்டம் செய்கிறேன்” என்றான் {ஜனமேஜயன்}.(37,38)
அமைச்சர்கள், “ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அந்த பிராமணர்களில் முதன்மையானவரும் {கசியபரும்}, பாம்புகளின் இளவரசனும் கானகத்தில் சந்தித்துக் கொண்டதைப் பற்றி முன்பு எங்களுக்குக் கூறியவனைப் பற்றிக் கேட்பாயாக.(39) ஓ ஏகாதிபதியே, {அந்த ஆலமரத்தின்} காய்ந்த கிளைகளை உடைத்து, அவற்றை வேள்விக்கான விறகாக்கும் எண்ணத்துடன் ஒரு மனிதன் அம்மரத்தின் மேல் ஏறியிருந்தான்.(40)
அவன் அந்தப் பாம்பாலோ {தக்ஷகனாலோ} அல்லது அந்த பிராமணராலோ கவனிக்கப்படவில்லை. ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த மனிதனும் அந்த மரத்தோடு சாம்பலானான்.(41) ஓ மன்னர்மன்னா, அந்த மரம் பிராமணரின் {கசியபரின்} சக்தியால் உயிர்மீட்கப்பட்ட போது, உடன் சேர்ந்து இவனும் மீண்டான். ஒரு பிராமணரின் வேலைக்காரனான அவன், எங்களிடம் வந்து,(42) தக்ஷகனுக்கும், பிராமணருக்கும் {கசியபருக்கும்} இடையில் நடந்த உரையாடலை முழுமையாகச் சொன்னான். ஓ மன்னா {ஜனமேஜயா} நாங்கள் பார்த்தவாறும், கேட்டவாறும் அனைத்தையும் இப்போது சொல்லிவிட்டோம். இதைக் கேட்ட நீ, ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, என்ன நடக்க வேண்டும் என்று உத்தரவிடுவாயாக” என்றனர் {அமைச்சர்கள்}.”(43)
சௌதி தொடர்ந்தார், “மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்களின் வார்த்தைகளைக் கேட்டதும் மிகுந்த துயர் கொண்டு அழத் தொடங்கினான். அந்த ஏகாதிபதி தனது கைகளைப் பிசைந்தான்.(44) அந்தத் தாமரைக் கண்கொண்ட மன்னன் {ஜனமேஜயன்} பெரும் சூடான நெடும் மூச்சுகளை விட்டபடியே, கண்களில் நீர்ச் சிந்தி, உரக்கக் கதறினான்.(45) மிகுந்த துக்கம் கொண்டு, சாரை சாரையாகக் கண்ணீர் சிந்தி, நீரைத் தொட்ட அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, மனத்தில் ஏதோ திட்டம் போடுபவனைப் போலச் சிறிது நேரம் சிந்தித்து விட்டு தனது அமைச்சர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினான்.(46)
அவன் {ஜனமேஜயன்}, “எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} விண்ணேகுதலை உங்கள் மூலம் அறிந்தேன்.(47) என் உறுதியான முடிவை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எனது தந்தையை {பரீக்ஷித்தைக்} கொன்ற தீயவனான தக்ஷகனைப் பழிவாங்கக் காலம் தாழ்த்தக்கூடாது என்று நான் எண்ணுகிறேன். எனது தந்தையை எரித்த அவன், சிருங்கியை வெறும் இரண்டாவது காரணமாக்கினான்.(48,49) ஆழ்ந்த வெறுப்பாலேயே அவன் {தக்ஷகன்} கசியபரைத் திரும்பிப் போகச் செய்தான். அந்த பிராமணர் {கசியபர்} வந்திருந்தால் எனது தந்தை {பரீக்ஷித்} நிச்சயம் பிழைத்திருப்பார்.(50) கசியபரின் கருணையாலும், அமைச்சர்களின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாலும் எனது தந்தை பிழைத்திருந்தால் அவன் எதை இழந்திருப்பான்?(51) எனது கோபத்தின் விளைவுகளைப் பற்றிய அறியாமையால், எனது தந்தையை உயிர்ப்பிக்கும் ஆவலுடன் வந்த, அந்த பிராமணர்களில் சிறந்த கசியபரைத் {நேரடியாகத்} தோற்கடிக்க முடியாமல் தடுத்து நிறுத்தினான்.(52) மன்னனை உயிர்ப்பிக்கக் கூடாது என்று அந்த பிராமணருக்குச் செல்வத்தைக் கொடுத்த அந்தப் பாவியான தக்ஷகனின் பகைமை மிகப்பெரியதாகும்.(53) என்னையும், உதங்க முனிவரையும், உங்கள் எல்லோரையும் மனநிறைவு கொள்ளச் செய்ய, எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} எதிரியை நானே இப்போது பழி வாங்கப் போகிறேன்” என்றான் {ஜனமேஜயன்}.”(54)
சூதனின் தீர்க்க தரிசனம்! | ஆதிபர்வம் – பகுதி 51(ஆஸ்தீக பர்வம் – 39)ஜனமேஜயன் பாம்பு வேள்விக்கு உத்தரவிட்டான்; அந்தணனால் வேள்வி தடைபடும் என்றான் ஒரு சூதன்
சௌதி சொன்னார், “மன்னன் ஜனமேஜயன் இப்படிச் சொல்லவும், அமைச்சர்களும் அதை உறுதி செய்தனர். அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, பாம்பு வேள்வியை நடத்தப்போவதாகத் தனது முடிவைச் சொன்னான்.(1) பிறகு அந்தப் பூமியின் தலைவன், பாரதக் குலத்தின் புலி, பரீக்ஷித்தின் மைந்தன் {ஜனமேஜயன்} தனது புரோகிதரையும் ரித்விக்குகளையும், அழைத்தான்.(2)
பேச்சில் வல்லவனான அவன், தன்னுடைய பெரும்பணியை நிறைவேற்றுவது குறித்து இந்தச் சொற்களைச் சொன்னான். “எனது தந்தையைக் {பரீக்ஷித்தைக்} கொன்ற அந்தப் பாவி {பாம்பு மன்னன்} தக்ஷகனை நான் பழிதீர்க்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்லுங்கள்.(3) அந்தப் பாம்பு தக்ஷகனும் அவனது உறவினர்களும் சேர்ந்து எரியும் நெருப்பில் விழ நான் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? முன்பு எனது தந்தையைத் {பரீக்ஷித்தைத்} தனது விஷமென்னும் நெருப்பால் எரித்த தக்ஷகனை நானும் எரிக்கவே விரும்புகிறேன்” {என்றான் ஜனமேஜயன்}.(4,5)
அதற்கு அந்தப் புரோகிதர்களின் தலைவர், “ஓ மன்னா! {ஜனமேஜயா}, உனக்காகவே தேவர்கள் ஒரு பெரிய வேள்வியை உருவாக்கியிருக்கிறார்கள். அது பாம்பு வேள்வி (சர்ப்ப வேள்வி) என்று அறியப்படுகிறது. இது புராணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.(6) ஓ மன்னா {ஜனமேஜயா}, உன்னால் மட்டுமே இந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும். வேறு எவராலும் முடியாது. புராணங்களை நன்கு அறிந்தவர்கள் இப்படி ஒரு வேள்வி இருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர்.”(7)
சௌதி தொடர்ந்தார், “ஓ சிறந்தவரே! {சௌனகரே}, இப்படிப் பதில் சொல்லப்பட்ட மன்னன், வேள்வி நெய்யை உண்ணும் அக்னியின் ஒளிரும் வாயில் தக்ஷகன் எரிந்துவிட்டதாகவே எண்ணம் கொண்டான்.(8) அதன்பிறகு அந்த மன்னன் {ஜனமேஜயன்} மந்திரங்களில் தேர்ந்த பிராமணர்களிடம், “நான் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன். தேவையான பொருட்கள் என்னென்ன வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.(9) ஓ சிறந்த பிராமணரே! {சௌனகரே}, வேதங்களில் தேர்ந்தவர்களும், அந்த வேள்வியின் சடங்குகளை அறிந்தவர்களுமான அரசனின் ரித்விக்குகள், வேள்விமேடை அமைப்பதற்காகச் சாத்திரங்களில் சொன்னபடி நிலத்தை அளந்தனர்.(10)
மேடை விலையுயர்ந்த பொருட்களாலும், பிராமணர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது {மேடை} கிடைத்தற்கரிய பொருட்களாலும் நெல்லாலும் நிறைந்திருந்தது. ரித்விக்குகள் அதில் வசதியாக அமர்ந்தனர். அந்த மேடை விதிகளின்படி விரும்பியவாறு கட்டி முடிக்கப்பட்டதும், குறித்த நோக்கம் நிறைவேற மன்னனை {ஜனமேஜயனை} நாக வேள்வியில் அமர்த்தினர். வேள்வி ஆரம்பிப்பதற்கு முன்னர்,(11-13) அந்த வேள்வி பின்னர் தடைபடும் என்பதை முன்னறிவிக்கும் வகையில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. வேள்விக்கான மேடையைக் கட்டும்போது, கட்டுமானக் கலையில் நிபுணரும், சூத சாதியைச்[1] (கங்குலி, கும்பகோணம், மன்மதநாததத்தர் ஆகிய பதிப்புகளில் சூதசாதியைச் சேர்ந்தவன் என்றே சொல்லப்பட்டுள்ளது. பிபேக்திப்ராயின் பதிப்பில் மட்டும் சூதனான அம்மனிதன் என்று சொல்லப்பட்டுள்ளது. சாதி என்ற சொல் மூலத்தில் இல்லை. மூல ஸ்லோகம். இதி அப்ராவித் சூத்ரதாரா சூத பௌராணிகா ததா. புராணங்களைச் சொல்லும் சூதர் என்கிறது. அதாவது அந்த ஸ்தபதியும் புராணங்களைச் சொல்ல வல்லவர். )சேர்ந்தவரும், புராணங்களில் தெளிந்த அறிவுடையவரும் அடித்தளங்கள் {அஸ்திவாரங்கள்} அமைப்பதை நன்கறிந்தவருமான {வாஸ்து, மனையடி சாத்திரம் ஆகியவற்றில் வல்ல ஸ்தபதி} ஒருவர்[2], (ஆதி 56:6ல் {ஆதிபர்வம் 56ம் பகுதி 6ம் ஸ்லோகத்தில்} சொல்லப்படும் லோகிதாக்ஷர் என்ற பெயரைக் கொண்ட சூதர் இவராகவே இருக்கக்கூடும்.)(14,15) “இந்த மேடை அமைந்த மண்ணின் தன்மையும், வேள்வி மேடைக்காக அளவுகள் எடுத்த நேரமும், ஒரு பிராமணனால் இந்த வேள்வி முழுமையடையாமல் போகப் போகிறது என்பதை உணர்த்துகிறது” என்றார்.(16) இதைக்கேட்ட மன்னன் {ஜனமேஜயன்}, மேடையில் அமரும் முன்பு, வாயில் காப்போரிடம் தனது கவனத்துக்கு வராமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டான் {ஜனமேஜயன்}” {என்றார் சௌதி}.(17)
நெருப்பில் விழுந்த பாம்புகள்! | ஆதிபர்வம் – பகுதி 52(ஆஸ்தீக பர்வம் – 40)-வேள்வி ஆரம்பித்தது; பாம்புகள் அழிந்தன
சௌதி சொன்னார், “பாம்பு வேள்வி அதன் விதிகளின்படி தொடங்கியது. சாத்திர விதிகள்படி தங்கள் கடமைகளில் தேர்ந்தவர்களான வேள்விப் புரோகிதர்கள், கருப்பு ஆடை அணிந்து, புகையினால் கண்கள் சிவந்து, சுடர்விட்டெரியும் நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டு சரியான மந்திரங்களை உச்சரித்தனர்.(1,2) அக்னியின் வாயில் தெளிந்த நெய்யை விட்டு, பாம்புகளின் பெயர்களைச் சொல்லி, அந்தப் பாம்புகளைப் பயத்தால் நடுங்க வைத்தனர்.(3) அதன்பிறகு, பாம்புகள் தங்கள் சக்திகளை இழந்து, பரிதாபமாக ஒன்றை ஒன்று அழைத்துக்கொண்டு, அந்த எரியும் நெருப்பில் விழ ஆரம்பித்தன.(4) உடல் உப்பி, மூச்சு விடச் சிரமப்பட்டு, ஒன்றை ஒன்று {அந்த பாம்புகள்} தம் தலைகளாலும், வால்களாலும் பின்னிக் கொண்டு பெரும் எண்ணிக்கையில் வந்து நெருப்பில் விழுந்தன.(5)
வெண்மையானவையும், கருப்பானவையும், நீலமானவையும், முதுமையானவையும், இளமையானவையுமாகப் பல பாம்புகள் பலவாறாகக் கதறிக் கொண்டு அந்த எரியும் நெருப்பில் ஒரே மாதிரி விழுந்தன. ஒரு சில ஒரு குரோச நீளமும், ஒரு சில ஒரு யோஜனை நீளமும், ஒரு சில ஒரு கோகர்ண நீளமும் கொண்டு முதன்மையான அந்தத் தீயிலே தொடச்சியாக வந்து விழுந்தன.(6,7) அந்தச் சம்பவத்தில் {வேள்வியில்}, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும் பாம்புகள், தங்கள் உறுப்புகளின் கட்டுப்பாட்டையிழந்து அழிந்தன.(8)
அப்படி அழிந்தனவற்றில் சில குதிரைகளைப் போலவும், சில யானையின் துதிக்கையைப் போலவும், மற்றும் சில பெரும் உடலைக்கொண்ட, மதம் பிடித்த யானை போன்று,(9) பல வண்ணங்களில் கொடுமையான விஷத்துடனும், பயங்கரமான தோற்றத்துடனும், இரும்பு முள் கொண்ட கதாயுதம் போலவும், பெரும் பலத்துடன், எப்போதும் கடிப்பதில் குறியாக இருந்த அந்தப் பாம்புகள், தங்கள் தாயின் {கத்ருவின்} சாபத்தால் நெருப்பில் வந்து விழுந்தன” {என்றார் சௌதி}.(10)
தக்ஷகனைப் பாதுகாத்த இந்திரன்! | ஆதிபர்வம் – பகுதி 53ஆஸ்தீக பர்வம் – 41)வேள்வியை நடத்திய அந்தணர்களின் பெயர்கள்; வேள்வி குறித்து அறிந்த தக்ஷகன் இந்திரனின் பாதுகாப்பை அடைந்தான்; கவலைக்கொண்ட வாசுகி தங்கை ஜரத்காருவிடம் ஆஸ்திகனின் உதவியைக் கோரியது
சௌனகர், “பாண்டவ குலத்தில் வந்த விவேகியான மன்னன் ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், எந்தப் பெரும் முனிவர்கள், ரித்விக்குகளாக இருந்தனர்?(1) பாம்புகளுக்கு அச்சமூட்டியதும், அவைகளுக்குத் துன்பத்தைக் கொடுத்ததுமான அந்தப் பயங்கரமான பாம்பு வேள்வியில் யாரெல்லாம் சதஸ்யர்களாக இருந்தனர்?(2) ஓ சூத மைந்தா! {சௌதியே}, இந்த விவரங்களை விரிவாகக் கூறினால், அந்தப் பாம்பு வேள்வியின் சடங்குகளை யார் அறிந்திருந்தனர் என்று நாங்கள் தெரிந்து கொள்வோம்” என்று கேட்டார்.(3)
அதற்குச் சௌதி, “அந்த ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} ரித்விக்குகளாகவும், சதஸ்யர்களாகவும் இருந்த அந்த விவேகிகளின் பெயர்களை நான் உமக்குச் சொல்கிறேன்.(4) சண்டபார்கவர் என்ற பிராமணர் ஹோத்ரியாக அந்த வேள்வியில் இருந்தார். வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான அவர் {சண்டபார்கவர்}, சியவனரின் பரம்பரையில் வந்த புகழ் வாய்ந்தவராவார்.(5) கல்விமானும், முதிர்ந்தவரும் பிராமணரான கௌத்சர், வேத சுலோகங்களை உச்சரிக்கும் உத்கத்ரியாக இருந்தார். ஜைமினி பிராமணராகவும், சாரங்கரவர் மற்றும் பிங்களர் அத்வர்யுக்களாகவும்,(6) வியாசர் தனது மகன் {சுகர்} மற்றும் சீடர்களுடனும், உத்தாலகர், பிரமதகர், சுவேதகேது, பிங்களர்[1] (மூலத்தில் பிங்களர் இல்லை. மூலத்தில் இவ்விடத்தில் கீழ்கணடவாறு உள்ளது. வியாச புத்திரர் மற்றும் அவர் சீடன், உத்தாலகர், பிரமதகர், சுவேதகேது ஆகிய ஐவரும் சதஸ்யர்களாக இருந்தனர். அசிது, தேவலர், நாரதர் ஆகிய சிறந்த தேவரிஷிகளுடன் ஆத்ரேயர், குண்டர், ஜடரர், காலகடர் என்னும் பிராமணர், வத்ஸ்யர், எப்போதும் ஜபத்திலும், வேதகல்வியிலும் ஈடுபடும் முதிர்ந்த சுருதசிரவஸ், கோஹலர், தேவசர்மர், மௌத்கல்யர், சமசௌரபர் உள்ளிட்ட பல சன்னியாசிகளும், பிராமணர்களும் இந்த நாக வேள்வியின் சதஸ்யங்களை அறிந்த மற்றும் பலரும் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வியில் சதஸ்ய கர்மத்தில் ஆங்காங்கே உதவினர். சம்ஸ்க்ருதம் அறிந்த நண்பர் தாமரையின் மூலம் கிடைத்த தகவல் இது.)ஆத்ரேயர், குண்டர், ஜடரர், காலகடர் என்னும் பிராமணர், வத்ஸ்யர், எப்போதும் ஜபத்திலும், வேதகல்வியிலும் ஈடுபடும் முதிர்ந்த சுருதசிரவஸ், கோஹலர், தேவசர்மர், மௌத்கல்யர், சமசௌரபர் ஆகியோருடன்,(7-9) வேதங்களை முழுவதும் அறிந்த மற்றும் பல பிராமணர்கள் அந்தப் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வியில் சதஸ்யர்களாக இருந்தனர்.(10)
அந்தப் பாம்பு வேள்வியில், ரித்விக்குகள் தெளிந்த நெய்யை நெருப்பில் விட ஆரம்பித்ததும், எல்லா உயிரினங்களிடத்திலும் பயத்தை உண்டாக்கும் பயங்கரமான பாம்புகள் அந்த நெருப்பில் வந்து விழத் தொடங்கின.(11) அப்படி விழுந்த அந்தப் பாம்புகளின் கொழுப்பும், மஜ்ஜையும் {எலும்புக்குள் இருக்கும் சத்தும்} உருகி ஆறுகளாக ஓடின. பாம்புகள் தொடர்ந்து வந்து எரிந்ததால், அந்தச் சுற்றுவட்டாரம் முழுவதும் தாங்கமுடியாத கடும் நாற்றமெடுத்தது.(12) அப்படி நெருப்பில் விழுந்த மற்றும் விழுவதற்கு முன் ஆகாயத்தில் இருந்த அந்தப் பாம்புகளின் கதறல்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.(13)
அதே நேரத்தில், ஜனமேஜயன் பாம்புகளின் யாகத்தை நடத்துகிறான், என்று அறிந்ததுமே, அந்தப் பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் புரந்தரனின் (இந்திரன்) அரண்மனைக்குக் சென்றான்.(14) அந்தப் பாம்புகளில் சிறந்தவன் {பாம்பு தஷகன்}, நடந்தவைகள் அனைத்தையும் கூறி, தனது தவறுகளை ஏற்றுக் கொண்டு பீதியினால் இந்திரனின் பாதுகாப்பை நாடினான்.(15) {அதைக் கேட்டு} நிறைவடைந்த இந்திரன், “ஓ பாம்புகளின் இளவரசனே, ஓ தக்ஷகா, பாம்பு வேள்வியால் இந்த இடத்தில் உனக்கு எந்தப் பயமுமில்லை.(16) உனக்காக என்னால் பெருந்தகப்பன் {பிரம்மன்} சமாதானம் செய்யப்பட்டார். ஆகையால் உனக்கு எந்தப் பயமும் வேண்டாம். உனது இதயத்தில் இருக்கும் அச்சமானது தணியட்டும்” என்றான் {இந்திரன்}.(17)
சௌதி தொடர்ந்தார், “இப்படி அவனால் {இந்திரனால்} ஊக்குவிக்கப்பட்ட, அந்தப் பாம்புகளில் சிறந்தவன் {தஷகன்} இந்திரனின் இருப்பிடத்திலேயே தங்கி மகிழ்ச்சியுடன் இருந்தான்.(18) ஆனால், வாசுகி {பாம்பு}, இப்படிப் பாம்புகள் தொடர்ந்து நெருப்பில் விழுவதைக் கண்டும், தனது குடும்பம் {பாம்பினம்} ஒரு சில உறுப்பினர்களாகக் குறைக்கப்பட்டதைக் கண்டும் மிகவும் வருந்தினான். பெரும் துயரம் கொண்ட அந்தப் பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} இதயம் உடையும் நிலையில் இருந்தது. அவன் {பாம்பு மன்னன் வாசுகி} தனது தங்கையை {ஜரத்காருவை} வரவைத்து,(19,20) “ஓ இனிமையானவளே! {ஜரத்காருவே}, எனது உறுப்புகள் எரிகின்றன. தேவலோகத்தின் புள்ளிகள் எனக்குத் தெரியவில்லை. நான் எனது சுயநினைவை இழந்து கீழே விழப்போகிறேன். எனது மனம் குழம்புகிறது {நிலையற்று இருக்கிறது},(21) பார்வை மங்குகிறது, எனது இதயம் உடைகிறது. உணர்விழந்து, இன்று அந்த எரியும் நெருப்பில் விழுந்துவிடப் போகிறேன்.(22)
பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} இந்த வேள்வி நமது இனத்தை அழிக்க உருவானதாகும். மரணதேவனின் வசிப்பிடத்திற்கு நானும் செல்ல வேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது.(23) ஓ என் தங்கையே! {ஜரத்காருவே}, நம்மையும், நமது உறவினர்களையும் காப்பதற்கு உன்னை எதற்காக ஜரத்காருவுக்கு அளித்தேனோ, அதற்கான நேரம் வந்துவிட்டது.(24) ஓ பாம்பினப் பெண்களில் சிறந்தவளே! {ஜரத்காருவே}, நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேள்வியை ஆஸ்தீகன் தடுத்து நிறுத்துவான், என்று பழங்காலத்தில் பெருந்தகப்பன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.(25) எனவே, ஓ குழந்தாய்! {ஜரத்காரு} எனது பாதுகாப்புக்காகவும், என்னை நம்பியிருப்பவர்களின் பாதுகாப்புக்காகவும், வேதங்களில் முழுமை கண்டவனும், வயதில் முதிர்ந்தவர்களாலும் மதிக்கப்படுபவனான உனது மைந்தனை {ஆஸ்தீகனைக்} வேண்டிக் கேட்டுக் கொள்வாயாக” என்றான் {பாம்பு மன்னன் வாசுகி}.”(26)
ஆஸ்தீகர் உறுதி! | ஆதிபர்வம் – பகுதி 54(ஆஸ்தீக பர்வம் – 42)-ஆஸ்திகருக்கு ஜரத்காரு பழைய வரலாறுகளைத் தெரிவித்தாள்; ஆஸ்தீகர் பாம்புகளை விடுவிக்க உதவுவதாக வாக்களிப்பது; வேள்வி அரங்கில் நுழைந்த ஆஸ்தீகர்
சௌதி சொன்னார், “அதன்பிறகு, அந்த நாகமங்கை ஜரத்காரு, தனது மகனை {ஆஸ்தீகனை} அழைத்து, பாம்புகளின் மன்னன் வாசுகி சொன்னபடி பேசினாள்.(1) அவள், “ஓ மகனே! {ஆஸ்தீகனே} எதற்காக நான் எனது தமையனால் {வாசுகியால்} உனது தந்தைக்கு {ஜரத்காருவுக்கு} அளிக்கப்பட்டேனோ அந்தக் குறிக்கோளை அடைய இப்போது நேரம் வந்து விட்டது. எனவே, எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்” என்றாள் {பெண் பாம்பு ஜரத்காரு}.(2)
ஆஸ்தீகர், “ஓ தாயே!{ஜரத்காருவே}, மாமா {பாம்பு மன்னன் வாசுகி} ஏன் உன்னை எனது தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} மணமுடித்துக் கொடுத்தார்? உண்மை முழுமையும் சொல்வாயானால், அதைக் கேட்டதும் நான் தகுந்ததைச் செய்ய ஏதுவாக இருக்கும்” என்றார்.(3)
தனது உறவினர்களின் நன்மையில் விருப்பம் கொண்டவளும், துயரத்தால் கலங்காதவளுமான, அந்தப் பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} தங்கை ஜரத்காரு,(4) “ஓ மகனே! {ஆஸ்தீகனே}, பாம்புகள் அனைவருக்கும் தாய் கத்ரு என்று அறியப்படுகிறாள். கோபத்தால் தனது மைந்தர்களை {பாம்புகளை} அவள் {கத்ரு} ஏன் சபித்தாள் என்பதை அறிந்து கொள்வாயாக.(5)
அவள் {கத்ரு}[1] பாம்புகளிடம், “வினதையைப் பந்தயத்தில் வீழ்த்தி எனது அடிமையாக்கிக் கொள்ள, அந்தக் குதிரைகளின் இளவரசன் உச்சைஸ்ரவஸின் பொய்யான தோற்றமுண்டாக்க நீங்கள் {பாம்புகள்} மறுத்ததால், வாயுவைச் சாரதியாகக் கொண்டவன் {அக்னியானவன்}, ஜனமேஜயன் வேள்வியில் உங்களை எரிக்கட்டும். அங்கே அழிந்து மீட்கப்படாத ஆவிகளின் உலகத்தை {யமலோகத்தை} நீங்கள் {பாம்புகளாகிய நீங்கள்} அடைவீர்கள்” என்றாள்.(6,7)
[1] கத்ரு பாம்புகளைச் சபித்த விவரங்களை ஏற்கனவே ஆதிபர்வம் – பகுதி 16 மற்றும் பகுதி 20 ஆகியவற்றில் கண்டோம்.
இதைக் கேட்ட அனைத்து உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} அவளிடம் {கத்ருவிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவளது சாபத்தை அங்கீகரித்தான்.(8) {உன் தாய்மாமனான பாம்புகளின் மன்னன்} வாசுகி, அந்தச் சாபத்தையும், பெருந்தகப்பனின் {பிரம்மனின்} வார்த்தைகளையும் கேட்டு, அமுதம் கடையப்பட்ட சந்தர்ப்பத்தில் தேவர்களின் பாதுகாப்பை நாடினார்.(9) ஓ குழந்தாய்! {ஆஸ்தீகனே} தேவர்கள் சிறந்த அமுதத்தை அடைந்து, தங்கள் காரியம் நிறைவேறியதும், வாசுகியை முன்னிட்டுக் கொண்டு பெருந்தகப்பனைச் {பிரம்மனைச்} சந்தித்தனர்.(10) அந்தச் சாபத்தை விலக்க மன்னனான வாசுகியுடன் அனைத்துத் தேவர்களும், தாமரையில் பிறந்தவனிடம் {பிரம்மனிடம்} மன்றாடினர்.(11)
தேவர்கள், “ஓ தலைவா! {பிரம்மனே} பாம்புகள் மன்னன் வாசுகி, தனது உறவினர்களை நினைத்து வருந்துகிறான். அவனது தாயின் {கத்ருவின்} சாபத்தை விலக்குவது எவ்வாறு?” என்றனர்.(12) பிரம்மன், “ஜரத்காரு {முனிவர்}, ஜரத்காரு என்ற மங்கையை மனைவியாக வரிப்பான். அவளுக்குப் பிறக்கும் பிராமணன் {ஆஸ்தீகன்}, அந்தப் பாம்புகளை விடுவிப்பான்” என்று கூறினான்.(13)
ஓ தேவர்களைப் போன்றவனே {ஆஸ்தீகனே}, அந்த வார்த்தைகளைக் கேட்டவரும், பாம்புகளில் சிறந்தவருமான வாசுகி, வேள்வி நடப்பதற்குச் சிறிது காலம் முன்னர், என்னை உனது உயர் ஆன்மத் தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவிற்கு} மணமுடித்துக் கொடுத்தார்.(14) அந்தத் திருமணத்தால் நீ எனக்குப் பிறந்தாய். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. எங்களை இந்த ஆபத்தில் இருந்து நீதான் காக்க வேண்டும்.(15) என்னை உனது விவேகமுள்ள தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவிற்கு} அளித்த காரணம் நிறைவேற எனது தமையனையும் {வாசுகியையும்}, என்னையும் {பெண் பாம்பு ஜரத்காருவையும்} அந்த நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். நீ என்ன நினைக்கிறாய் மகனே?” என்று கேட்டாள் {பெண் பாம்பான ஜரத்காரு}.”(16)
சௌதி தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட ஆஸ்தீகர், தனது தாயிடம் {ஜரத்காருவிடம்}, “ஆம், நான் நிறைவேற்றுவேன்” என்று சொல்லிவிட்டு, கலக்கமடைந்திருந்த வாசுகியிடம் அவனுக்கு உயிர் கொடுப்பது போல,(17) “ஓ வாசுகி! பாம்புகளில் சிறந்தவரே, உயர்ந்தவரே, அந்தச் சாபத்திலிருந்து உம்மை விடுவிப்பேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்வேன்.(18) கவலை கொள்ளாதீர். ஓ பாம்பானவரே! {வாசுகியே!} இனிமேல் எந்தப் பயமும் உமக்கு இல்லை. நன்மையைச் செய்ய நான் கடுமையாக முயற்சிப்பேன்.(19) கேலிக்காக நான் கூறிய வார்த்தைகள்கூட, பொய்த்தது என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. இதைப் போன்ற முக்கியமான நேரத்தில் நான் கூறுவதற்கு வேறொன்றுமில்லை. ஓ மாமனே! {வாசுகியே} இன்று அங்கு நான் சென்று, வேள்வியில் அமர்ந்திருக்கும் அந்த ஏகாதிபதிக்கு {ஜனமேஜயனுக்கு} எனது வார்த்தைகளில் அருள் கலந்து அவனை {ஜனமேஜயனைத்} மனநிறைவுப்படுத்தி, ஓ அருமையானவரே {வாசுகியே}, அந்த வேள்வியை நிறுத்துகிறேன்.(20-21) ஓ உயர்ந்த மனம் கொண்டவரே! {வாசுகியே} ஓ பாம்புகளின் மன்னரே {வாசுகியே}, நான் சொல்லும் அனைத்தையும் நம்புங்கள். எனது தீர்மானம் நிறைவடையாமல் இருக்காது என்பதை நம்புங்கள்” என்றார் {ஆஸ்தீகர்}.(22)
வாசுகி, “ஓ ஆஸ்தீகா! எனக்கு மயக்கம் வருகிறது. எனது இதயம் உடைகிறது. நான் தாயின் சாபத்தால் பீடிக்கப்பட்டிருப்பதால், திசைகளின் புள்ளிகளை என்னால் காண முடியவில்லை” என்றான்.(23) ஆஸ்தீகர், “பாம்புகளில் சிறந்தவரே {வாசுகியே}, நீர் இனி வருந்தவேண்டியதில்லை. அந்த நெருப்பின் மீதான உமது பயத்தை நான் போக்குகிறேன்.(24) யுகத்தின் முடிவைப் போல் எரியும் நெருப்பைப் போன்ற இந்தத் தண்டனையைப் போக்குகிறேன். உமது பயத்தை வளர்க்காதீர்” என்றார்.”(25)
சௌதி தொடர்ந்தார், “பிறகு, பிராமணர்களில் சிறந்தவரான ஆஸ்தீகர், வாசுகியின் இதயத்தில் இருக்கும் பயத்தைப் போக்கி, அதைத் தான் எடுத்துக்கொண்டு, பாம்புகளின் மன்னனின் {வாசுகியின்} நன்மைக்காக, எல்லாச் சிறப்புகளுடனும் கூடிய ஜனமேஜயனின் வேள்விக்கு விரைந்தார்.(26,27) அங்குச் சென்ற ஆஸ்தீகர் அருமையான வேள்வி சாலையையும், அங்கு சூரியனுக்கோ, அக்னிக்கோ ஒப்பான ஒளிபொருந்திய எண்ணற்ற சதஸ்யர்களையும் கண்டார்.(28) ஆனால் வாயில் காப்போரால் அவர் {ஆஸ்தீகர்} உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பெரும் துறவி {ஆஸ்தீகர்} அவர்கள் ஏற்கும்படி அவர்களை வாழ்த்தி வேள்வி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தார்.(29) பிராமணர்களில் சிறந்தவரும், அறம் மிக்கோரில் முதன்மையானவருமான அந்த ஆஸ்தீகர், அந்த அருமையான வேள்விமண்டபத்திற்குள்ளே நுழைந்ததும், எண்ணற்ற சாதனைகள் புரிந்த மன்னனையும் {ஜனமேஜயனையும்}, ரித்விக்குகளையும், சதஸ்யர்களையும், புனிதமான அக்னியையும் போற்றி வாழ்த்தினார் {ஆஸ்தீகர்}.(30)
ஆஸ்தீகர் புகழ்ச்சி! | ஆதிபர்வம் – பகுதி 55(ஆஸ்தீக பர்வம் – 43)ஜனமேஜயனையும், மற்றவர்களையும் புகழ்ந்த ஆஸ்தீகர்; அனைவரும் ஆஸ்தீகரிடத்தில் மனநிறைவு அடைந்தனர்
ஆஸ்தீகர் சொன்னார், “பழங்காலத்தில் பிரயாகையில் சோமனும் வருணனும், பிரஜாபதியும் வேள்விகளைச் செய்தனர். ஆனால் உனது வேள்வி, அவற்றில் எதிலும் குறைந்ததில்லை. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே! {ஜனமேஜயனே} நம் அன்பிற்குரியவர்கள்[1] (நம் அன்புக்குரியவர்கள் என்பது உன் அன்பிற்குரியவர்கள் மற்றும் என் அன்பிற்குரியவர்கள் என இரண்டாகப் பிரிந்து பொருள் தரும். நாசூக்காக இதை வேள்வியில் சொல்வதன் மூலம் புகழும்பொழுதே என் உறவினர்களுக்கு கருணை காட்டுவாயாக என வேண்டிக் கொள்கிறார் ஆஸ்திகர். நமக்குச் சம்பந்தம் இல்லாதோர் நம் என்னும் வார்த்தையை உபயோகிக்கும் பொழுது நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். )அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(1) சக்ரன் (இந்திரன்) நூறு வேள்விகளை நடத்தினான். ஆனால் உனது இந்த வேள்வி, அந்தச் சக்ரனின் பத்தாயிரம் வேள்விகளுக்குச் சமமானதாகும். ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே {ஜனமேஜயனே}, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(2) யமன், ஹரிமேதன், ரந்திதேவ மன்னன் ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(3) மயன், மன்னன் சசபிந்து, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(4) நிருகன், அஜமீடன், தசரத மைந்தன் {ஸ்ரீராமன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(5)
அஜமீட குலத்தைச் சேர்ந்த தேவ மைந்தன், மன்னன் யுதிஷ்டிரன் நடத்தியதும், தேவலோகத்திலும் அறியப்படுவதுமான வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(6) தானே தலைமைப் புரோகிதராக இருந்து சத்தியவதியின் மைந்தரான கிருஷ்ணர் {கிருஷ்ண துவைபாயனர்=வியாசர்} நடத்திய வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(7) இங்கே இந்த வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் அனைவரும் (ரித்விக்குகளும், சதஸ்யர்களும்) விருத்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலவும், பிரகாசத்தில் சூரியனுக்கு இணையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அறிந்து கொள்ள இனி வேறு எதுவும் இல்லை. அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் யாவும் அழிவற்ற தகுதியைப் {புண்ணியத்தைப்} பெறுகின்றன.(8) உனது ரித்விக்கு, துவைபாயனருக்கு {கிருஷ்ண துவைபாயனருக்கு = வியாசருக்கு} இணையான வேறு எந்த ரித்விக்கும் இந்த உலகத்தில் இல்லை என்பது எனது தீர்மானம். அவரது சீடர்கள் ரித்விக்குகளாகி, தங்கள் கடமைகளுக்குத் தகுந்தவர்களாக, உலகம் முழுவதும் பயணிக்கின்றனர்.(9)
விபாவசு என்றும், சித்ரபானு என்றும் அழைக்கப்படுபவனும், தங்கத்தைத் தன் உயிர்வித்தாகக் கொண்டவனும், கரும்புகையால் அடையாளம் காட்டப்படும் பாதையைக் கொண்டவனும், வலப்புறமாக எரியும் சுடர்களைக் கொண்டவனுமான உயரான்மா (அக்னி), உனது இந்தத் தெளிந்த நெய்யை தேவர்களுக்கு எடுத்துச் செல்லுகிறான்.(10) இந்த மனிதர்களின் உலகத்தில், உன்னைப் போல் குடிகளைக் காக்கும் மன்னன் இன்னொருவன் இல்லை. உனது விரதங்களால் நான் எப்போதும் பெருமை கொள்கிறேன். உண்மையில் நீயே வருணனும், நீதிதேவன் யமனும் ஆவாய்.(11)
வஜ்ரத்தைக் கைகளில் தாங்கியிருக்கும் சக்ரனைப் {இந்திரனைப்} போல இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் நீயே காக்கின்றாய். இவ்வுலகில் வேள்வி செய்வதில் உனக்கு இணையான பெருமை கொண்ட வேறு எந்த மனிதனோ, எந்த ஏகாதிபதியோ எவனும் இல்லை.(12) நீ கட்வாங்கன், நாபாகன், திலீபன் ஆகியோரைப் போன்றவன். ஆற்றலில் நீ யயாதியைப் போலவும், மாந்தாதா போலவும் இருக்கிறாய். சூரியனைப் போன்ற பிரகாசமும், அற்புதமான சபதங்களும் ஏற்றிருக்கும் ஓ ஏகாதிபதியே, நீ பீஷ்மரை போல் இருக்கின்றாய். சிறந்த நோன்புகளில் நீ பீஷ்மரைப் போன்றவனாவாய்.(13) வால்மீகியைப் போல உனது சக்தியை மறைத்து வைத்திருக்கிறாய். வசிஷ்டரைப் போல உனது கோபத்தை அடக்கி வைத்திருக்கிறாய். இந்திரனின் தலைமையைப் போல உனது தலைமையும் இருக்கிறது. உனது காந்தி{மனதைக் கவரும் ஈர்ப்புத்தன்மை} நாராயணனைப் போல இருக்கிறது.(14) நீதி வழங்குவதில் யமனைப் போல இருகின்றாய். அனைத்து அறங்களும் கொண்ட கிருஷ்ணனைப் போல இருக்கிறாய். நீயே வசுக்களின் நற்பேறுகள் நிறைந்த வீடு. எல்லா வேள்விகளுக்கும் அடைக்கலம் கொடுப்பவன் நீயே.(15) தாம்வோபவனின் பலத்திற்கு ஈடாக உனது பலம் இருக்கிறது. ராமனைப் (ஜமதக்னி மைந்தன் பரசுராமன்) போல, சாத்திரங்களிலும், ஆயுதப்பயிற்சியிலும் சிறந்திருக்கிறாய். அவுர்வா மற்றும் திரித்தனின் சக்திக்கு ஈடாக இருக்கிறது உனது சக்தி. உனது பார்வையால் பகீரதனைப் போல அச்சமூட்டுகிறாய்” {என்றார் ஆஸ்தீகர்}.(16)
சௌதி சொன்னார், “ஆஸ்தீகன் இப்படி அவர்கள் அனைவரையும், மன்னனையும் {ஜனமேஜயனையும்}, சத்யஸ்யர்களையும், ரித்விக்குகளையும், வேள்வி நெருப்பையும் வாழ்த்தி மனநிறைவடையச் செய்தார். மன்னன் ஜனமேஜயன், சுற்றியிருக்கும் சூழ்நிலையின் மாறுதல்களைக் {வேள்வி செய்வோரின் குறிப்புகளை} கவனித்துப் பேசினான்” {என்றார் சௌதி}.(17)
தக்ஷகனைக் கைவிட்டான் இந்திரன்! | ஆதிபர்வம் – பகுதி 56(ஆஸ்தீக பர்வம் – 44)ஆஸ்தீகரைப் பாராட்டி வரமளிக்க முன்வந்த ஜனமேஜயன்; இந்திரனின் பாதுகாப்பில் தக்ஷகன் இருப்பதாக ஜனமேஜயனுக்குச் சொல்லப்படுவது; அச்சத்தால் தக்ஷகனைக் கைவிட்ட இந்திரன்; வேள்வியை நிறுத்தும் வரத்தைக் கோரிய ஆஸ்தீகர்…
ஜனமேஜயன், “இவர் சிறுவனைப் போல இருந்தாலும், விவேகமுள்ள முதிர்ந்தவர் போலப் பேசுகிறார். இவர் சிறுவனில்லை. விவேகி. முதிர்ந்தவர். இவருக்கு நான் வரமளிக்கலாம் என்று நினைக்கிறேன். பிராமணர்களே, அதற்கான அனுமதியை எனக்கு அளியுங்கள்” என்றான்.(1)
அதற்குச் சதயஸ்யர்கள், “பிராமணன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும், மன்னனால் மதிக்கப்பட வேண்டியவன். கற்றோர் எப்போதும் அப்படியே செய்வர். இந்தச் சிறுவனின் விருப்பங்கள் உன்னால் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், வேகத்துடன் தக்ஷகன் வந்து விழுவதற்கு முன்னால் அல்ல ” என்றனர்.”(2)
சௌதி தொடர்ந்தார், “மன்னன் {ஜனமேஜயன்} அந்தப் பிராமணச் சிறுவனிடம் {ஆஸ்தீகனிடம்}, “ஒரு வரத்தைக் கேள்” என்றான். இதனால் அதிருப்தி அடைந்த ஹோத்ரி {சண்டபார்கவர்}, “தக்ஷகன் இன்னும் இந்த வேள்விக்குள் வரவில்லை” என்றார்.(3)
ஜனமேஜயன், “உங்கள் பலத்தில் சிறந்ததைச் செய்து, தக்ஷகனை விரைவாக வர வைத்து, இந்த வேள்வியை முடித்து வையுங்கள். அவன் {தஷகன்} எனது எதிரி” என்றான்.(4)
அதற்கு ரித்விக்குகள், “சாத்திரங்கள் அறிவிப்பதும், இந்த நெருப்பு {அக்னி பகவானும்} சொல்வதும், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, தக்ஷகன் அச்சத்தால் பீடிக்கப்பட்டு இந்திரனின் இருப்பிடத்தில் இருக்கிறான் (என்றே தெரிகிறது)” என்றனர்.(5)
சௌதி தொடர்ந்தார், “புராணங்களில் தெளிந்த அறிவுடையவரும், லோஹிதாக்ஷன்[1] என்ற பெயரைக் கொண்ட சிறப்புமிக்க சூதர் ஒருவரும் முன்பே இதைச் சொல்லியிருக்கிறார். அவர் {லோஹிதாக்ஷர்},(சிவந்த கண்களைக் கொண்டவர் என்று பொருள்) மன்னனால் {ஜனமேஜயனால்} தற்போது கேட்கப்பட்டு, அந்த ஏகாதிபதியிடம் மீண்டும்,(6) “ஐயா {ஜனமேஜயரே}, பிராமணர்கள் கூறுவதையே புராணங்களை அறிந்த நானும் சொல்கிறேன், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயரே}, இந்திரன் “என்னிடம் மறைவாக இருப்பாயாக. அக்னி உன்னை எரிக்கமாட்டான்” என்ற வரத்தை அவனுக்கு {தஷகனுக்கு} அளித்திருக்கிறான்” என்றார்.(7)
சௌதி தொடர்ந்தார், “வேள்வியில் அமர்த்தப்பட்ட மன்னன் {ஜனமேஜயன்}, இதைக் கேட்டு மிகவும் கவலை கொண்டு, ஹோத்ரியைத் {சண்டபார்கவரைத்} தனது கடமையைச் செய்யத் தூண்டினான். அந்த ஹோத்ரி, மந்திரங்களை உச்சரித்து, தெளிந்த நெய்யை நெருப்பில் விடும்போது இந்திரன் அங்கே தோன்றினான்.(8) அந்தச் சிறப்பு மிகுந்தவன், தேவர்கள் சுற்றிலும் நின்று போற்ற, மேகக் கூட்டங்களும், தேவலோக பாடகர்களும், தேவலோக நடன மாதர்களின் கூட்டங்களும் பினதொடர தன் தேரில் தெரிந்தான்.(9)
தக்ஷகன் பயத்தினால் கலக்கமடைந்து இந்திரனின் மேலாடையினுள் ஒளிந்து கொண்டு கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தான். மன்னன் {ஜனமேஜயன்} மிகுந்த கோபம் கொண்டு, தக்ஷகனை அழிக்கும் நோக்கத்தில் மந்திரங்கள் அறிந்த பிராமணர்களிடம்,(10) “அந்தப் பாம்பு தக்ஷகன், இந்திரனிடம் இருந்தால், அவனை {தஷகனை} இந்திரனோடே வந்து இந்த நெருப்பில் விழச்செய்யுங்கள்” என்றான் {ஜனமேஜயன்}.(11)
சௌதி தொடர்ந்தார், “இவ்வாறு தக்ஷகனைக் குறித்து ஜனமேஜயனால் தூண்டப்பட்ட ஹோத்ரி அங்கிருந்த அவனது {தஷகனின்} பெயரைச் சொல்லி நெய்யை ஊற்றினார்.(12) அப்படி ஆகுதி ஊற்றப்படும்போது, கலவரமடைந்த தக்ஷகன், புரந்தரனுடன் {இந்திரனுடன்} உடனே வானத்தில் தெரிந்தான்.(13) புரந்தரன் {இந்திரன்}, அந்த வேள்வியைப் பார்த்து எச்சரிக்கையடைந்து விரைவாகத் தக்ஷகனைக் கைவிட்டுத் தனது இருப்பிடம் திரும்பினான்.(14) இந்திரன் அப்படிச் சென்றதும், அந்தப் பாம்பு இளவரசனான தக்ஷகன் அச்சத்தால் உணர்விழந்து, மந்திரங்களின் வலிமையால் வேள்வி நெருப்பின் அருகே வந்துவிட்டான்.(15)
அப்போது ரித்விக்குகள், “ஓ மன்னர் மன்னா! {ஜனமேஜயா} உனது வேள்வி சிறப்பாக நடக்கிறது. ஓ தலைவா! இனி நீ இந்த பிராமணர்களில் முதல்வனுக்கு {ஆஸ்தீகனுக்கு} வரத்தை அருளலாம்” என்றனர்.(16)
ஜனமேஜயன், “அளவற்ற அழகுடன் குழந்தையைப் போல் இருப்பவரே, உமக்குத் தக்க வரமளிக்க விரும்புகிறேன். அதனால், உமது இதயத்தில் நீர் விரும்புவதைக் கேளும். கொடுக்க முடியாததையும் உமக்குக் கொடுக்கிறேன் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்றான்.(17)
ரித்விக்குகள், “ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே} தக்ஷகன் விரைவாக உனது கட்டுப்பாட்டுக்கள் வருவதைப் பார். அவனது {தஷகனது} கொடூரமான கதறலும், சத்தமான உருமலும் கேட்கிறது பார்.(18) நிச்சயமாக வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அந்தப் பாம்பைக் கைவிட்டுவிட்டான். உனது மந்திரங்களால் அவனது உடல் செயலிழந்துள்ளது, அவன் {தஷகன்} மேலுலகில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறான். இப்போது, வானத்தில் உருண்டு, சுய உணர்வை இழந்து, சத்தமாக மூச்சுவிட்டுக் கொண்டு அந்தப் பாம்புகளின் இளவரசன் {தஷகன்} வந்து கொண்டிருக்கிறான்” என்றனர்.”(19)
சௌதி தொடர்ந்தார், “அவ்வாறு அந்தப் பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் அந்த வேள்வித்தீயில் விழுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன், அந்தக் குறுகிய காலத்திற்குள் ஆஸ்தீகர்,(20) “ஓ ஜனமேஜயா! நீ எனக்கு ஒரு வரம் அருள்வதாக இருந்தால், இந்த உனது வேள்வி இத்தோடு முடிவுக்கு வரட்டும். மேலும் பாம்புகள் இந்தத் தீயில் விழ வேண்டாம்” என்றார் {ஆஸ்தீகர்}.(21)
ஓ பிராமணரே! {சௌனகரே}, அந்தப் பரீக்ஷித்தின் மைந்தன் {ஜனமேஜயன்}, ஆஸ்தீகரால் இப்படிக் கேட்கப்பட்டதால் மிகவும் வருந்தி அவரிடம் {ஆஸ்தீகரிடம்},(22) “ஓ சிறந்தவரே! தங்கம், வெள்ளி, பசுக்கள் என்று நீர் எதை விரும்பினாலும் நான் தருகிறேன். ஆனால் எனது வேள்வி நிற்காதிருக்கட்டும்” என்றான் {ஜனமேஜயன்}.(23)
ஆஸ்தீகர், “நான் தங்கம், வெள்ளி, பசுக்கள் என்று எதையும் உன்னிடம் கேட்கவில்லை. ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே} உனது இந்த வேள்வி இத்தோடு நிற்கட்டும். எனது தாய்வழி {பெண் பாம்பு ஜரத்காருவின்} உறவினர்கள் {பாம்புகள்} இதனால் விடுதலை அடையட்டும்” என்றார்.(24)
சௌதி தொடர்ந்தார், “அந்தப் பரீக்ஷித்தின் மைந்தன் ஆஸ்தீகரால் இப்படிக் கேட்கப்பட்டு, மீண்டும் மீண்டும் அந்தப் பேச்சாளர்களில் முதன்மையானவரிடம் {ஆஸ்தீகரிடம்},(25) “பிராமணர்களில் சிறந்தவரே, வேறு ஏதாவது வரத்தைக் கேளும். நீர் அருளப்பட்டு இருப்பீர்!” என்றான். ஆனால், ஓ பிருகு குலத்தோரே! {சௌனகரே} அவர் {ஆஸ்தீகர்} வேறு எந்த வரத்தையும் வேண்டவில்லை.(26) அதன்பிறகு வேதமறிந்த சத்யஸ்யர்களும் அனைவரும் ஒருமித்த குரலில் மன்னனிடம் {ஜனமேஜயனிடம்}, “இந்த பிராமணன் தனது வரத்தைப் பெற்றுக் கொள்ளட்டும்” என்றனர்.”(27)
எரிந்த பாம்புகளின் பெயர்கள்! | ஆதிபர்வம் – பகுதி 57(ஆஸ்தீக பர்வம் – 45)எரிந்த பாம்புகளின் பட்டியல் …
சௌனகர், “ஓ சூத மைந்தா! {சௌதியே} இந்தப் பாம்பு வேள்வியில் தீயில் விழுந்த பாம்புகள் அனைத்தின் பெயர்களையும் கேட்க விரும்புகிறேன்” என்றார்.(1)
சௌதி, “பல்லாயிரக்கணக்கில், கோடிக்கணக்கில் பாம்புகள் அந்த நெருப்பில் விழுந்தன. ஓ பிராமணர்களில் அதியற்புதமானவரே {சௌனகரே}, அதன் எண்ணிக்கை மிக அதிகமானதால் என்னால் எண்ண இயலாது.(2) இதுவரை எனது நினைவில் நிற்கும் அளவுக்குத் தீயில் விழுந்த முக்கியமான பாம்புகளின் பெயர்களைச் சொல்கிறேன், கேட்பீராக.(3)
நிறத்தால் நீலமாகவும், சிவப்பாகவும், வெள்ளையாகவும் எனக் கொடூரமான உருவங்களில், பெருத்த உடலும், மரணத்தைத் தரும் விஷத்தோடும், உதவியின்றிப் பெரும் சிரமத்திற்குள்ளாகித் தங்கள் தாயின் {கத்ருவின்} சாபத்தால் பாதிக்கப்பட்டுத் தீயில் நெய் விழுவது போல விழுந்த {பாம்பு மன்னன்} வாசுகியின் குலத்தில் வந்த முக்கியமான பாம்புகளின் பெயரை மட்டும் கேட்பீராக. கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், கௌணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாகு, சரணன், கக்ஷகன், காலதந்தகன் – ஆகியோர்{4-6) வாசுகிக்குப் பிறந்து தீயில் விழுந்த பாம்புகள்.
ஓ பிராமணரே {சௌனகரே}, பெரும் பலத்துடனும், கொடூரமான உருவத்திலும் எண்ணிலடங்கா பாம்புகள் அந்த எரியும் தீயில் விழுந்து மடிந்தன. இப்போது தக்ஷகனின் குலத்தில் வந்த பாம்புகளின் பெயர்களைச் சொல்கிறேன், கேட்பீராக.(7) அவர்கள் புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சோசிகன், சரபன், பங்கன், பில்வதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமன், சுரோமன் மற்றும் மஹாஹனு ஆவர்.(8-11) இவர்கள் தக்ஷகனுக்குப் பிறந்து தீயில் விழுந்த பாம்புகள். பாராவதன், பாரிஜாதன், பாண்டரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மேதன், பிரமோதன், சௌஹதாபனன் {அல்லது சம்ஹதாபனன்} – இவை ஐராவதனுக்குப் பிறந்து தீயில் விழுந்த பாம்புகள்.(12)
இனி, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, கௌரவ்யன் குலத்தில் பிறந்த பாம்புகளின் பெயர்களை நான் சொல்லக் கேட்பீராக. ஏரகன், குண்டலவேணி, {குண்டலன், வேணி என்று இரண்டு பாம்புளாகவும் சொல்வதுண்டு} வேணிஸ்கந்தன், குமாரகன், பாகுகன், சிருங்கபேரன், துர்த்தகன், பிராதரன் {அல்லது பிராதன்} மற்றும் அஸ்தகன் {அல்லது ராதகன்} – இவர்கள் கௌரவ்ய குலத்தில் பிறந்து தீயில் விழுந்த பாம்புகள்.(13,14)
இனி காற்றைப் போன்ற பெரும் வேகமும், கொடுமையான விஷமும் கொண்ட, {பாம்பு} திருதராஷ்டிரன் குலத்தில் பிறந்த பாம்புகளின் பெயர்களைச் சொல்லக் கேட்பீராக.(15) அவர்கள் சங்குகர்ணன், பிடரகன், குடாரமுகன் {அல்லது குதரன்}, சுகணன் சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், குமடகன் {அல்லது காமடகன்}, சுஷேணன், வியயன் {அல்லது அவ்யயன்}, பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உத்ரபாரகன் {அல்லது உதபாரகன்}, ரிஷபன், வேகவத், பிண்டாரகன், ரக்தாங்கன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படாவும், வாசகன்னும் {படவாசகன் என்று ஒரே பாம்பாகவும் சொல்வதுண்டு}, வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேதிகன், பராசரன், தருணகன், மணிஸ்கந்தன் {மணி, ஸ்கந்தன் என்று இரண்டு பாம்புகளாகவும் சொல்வதுண்டு} ஆருணி[1] ஆவர்”.(16-19)(இவை தவிர இன்னும் கூடுதலாக மானஸன், அஷ்டாவக்ரன், கோமலகன், சுவஸனன், மௌனவேபகன், மஹாஹனு என்ற பாம்புகள் கும்பகோணம் பதிப்பில் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளன.)
“ஓ பிராமணரே, சாதனைகளுக்காகப் பெரிதும் அறியப்பட்ட முக்கியமான பாம்புகளின் பெயர்களைச் சொல்லிவிட்டேன். என்னால் எண்ணற்ற பாம்புகளின் பெயர்களை முழுவதுமாகச் சொல்ல இயலாது.(20) அந்தப் பாம்புகளின் மைந்தர்கள், மைந்தர்களின் மைந்தர்கள் எல்லாம் அந்தத் தீயில் விழுந்த எரிந்தனர். அவற்றின் பெயர்களையும் சொல்ல இயலாது. அவை பல!(21) சில மூன்று தலைகளுடனும், சில ஏழு தலைகளுடனும், சில பத்துத் தலைகளுடனும் யுக முடிவில் வரும் நெருப்பைப் போன்ற விஷத்துடன், கொடூரமான உருவத்துடன் இருந்த அவை ஆயிரக்கணக்கில் எரிந்தன.(22)
பெரும் உடலும், பெரும் வேகமும், மலைமுகடுகளைப் போன்ற உயரமும், யமம், ஒரு யோஜனை, இரு யோஜனை நீளம் உள்ளவையும்,(23) நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவையும், பலத்தையும் கொள்ளக்கூடியவையும், எரியும் நெருப்பைப் போன்ற விஷம் கொண்டவையும் தங்கள் தாயின் {கத்ருவின்} சாபத்தால் பீடிக்கப்பட்டு அந்தப் பெரும் வேள்வியில் எரிந்தன” {என்றார் சௌதி}.(24)
வேள்வி நின்றது! | ஆதிபர்வம் – பகுதி 58(ஆஸ்தீக பர்வம் – 46)ஆஸ்தீகர் புரிந்த அற்புதம்; வேள்வி முடிந்தது; லோகிதாக்ஷனுக்குப் பரிசளித்த ஜனமேஜயன்; ஆஸ்தீகருக்குப் பாம்புகள் அளித்த வரம்…
சௌதி சொன்னார், “இப்போது, ஆஸ்தீகருடன் தொடர்புடைய ஓர் அற்புத நிகழ்வைச் சொல்கிறேன் கேட்பீராக. மன்னன் ஜனமேஜயன் ஆஸ்தீகருக்கு வரத்தைக் கொடுக்கப் போகும் தருணத்தில்,(1) இந்திரனின் கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாம்பு {தஷகன்}, கீழே விழாமல் அந்தரத்தில் மிதந்தது. தக்ஷகன் பெயரைச் சொல்லி ஆகுதி {நெய்} சரியான முறையில் வேள்வித்தீயில் ஊற்றப்பட்டும், அச்சத்துடனிருந்த தக்ஷகன் கீழே நெருப்பில் விழாததைக் கண்ட ஜனமேஜயன் ஆச்சரியப்பட்டான்” என்றார் {சௌதி}.(2,3)
சௌனகர், “ஓ சூதா! விவேகிகளான அந்த பிராமணர்களின் மந்திரங்கள் சக்திமிக்கவையாக இல்லையா? தக்ஷகன் நெருப்பில் விழாதது ஏன்?” என்று கேட்டார்.”(4)
சௌதி சொன்னார், “இந்திரனால் கைவிடப்பட்டு, சுயநினைவை இழந்த அந்தப் பாம்புகளில் சிறந்தவனான தக்ஷகனை நோக்கி ஆஸ்தீகர் ‘நில், நில், நில்’ என்று மூன்று முறைக் கூறினார்.(5) கலங்கிய இதயத்துடன் கூடிய அவன் {தக்ஷகன்} அந்தரத்திலே, பூமிக்கும், ஆகாயத்திற்கும் {சொர்க்கத்திற்கும்} நடுவில் நிற்கும் மனிதனைப் போல் நின்றான்” என்றார்.(6)
பிறகு சதஸ்யர்களால் தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்பட்ட மன்னன் {ஜனமேஜயன்}, “ஆஸ்தீகர் சொன்னது போல் நடக்கட்டும்.(7) இந்த {நாக} வேள்வி இத்துடன் நிற்கட்டும். பாம்புகள் காக்கப்படட்டும், இந்த ஆஸ்தீகரும் மனம் நிறையட்டும். ஓ சூதரே! {லோகிதாக்ஷரே}, உமது வார்த்தைகளும் உண்மையாகட்டும்[1]” என்றான்.(8)(பார்க்க: 51:16 {ஆதிபர்வம், பகுதி 51, 16வது சுலோகம்})
ஆஸ்தீகருக்கு வரம் அருளப்பட்ட போது, மகிழ்ச்சி ஆரவாரங்கள் அந்த இடம் முழுவதையும் நிறைத்தன. பாண்டவ குலத்தில் வந்த மன்னன் {ஜனமேஜயன்}, அந்தப் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வி அத்துடன் முடிவுக்கு வந்தது. மன்னன் {ஜனமேஜயன்} மனநிறைவுகொண்டு,) ரித்விக்குகளுக்கும், சதஸ்யர்களுக்கும், மற்றும் அங்கு வந்திருந்த அனைவருக்கும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் செல்வத்தைக் கொடுத்தான்.(9-11) கட்டுமானப்பணியில் சிறந்தவரும், கட்டடங்கள் மற்றும் அடித்தளங்களின் விதிகளை அறிந்து, பாம்பு வேள்வி தடைபடுவதற்கு ஒரு பிராமணன் காரணமாவான் என்று முதலிலேயே சொன்னவரும் சூத சாதியைச் சேர்ந்த லோஹிதாக்ஷருக்குப்[2] (கும்பகோணம் பதிப்பில் புராணத்தை நினைவு கூர்ந்த லோஹிதாக்ஷரும், யாகம் நிற்கும் என்று கூறிய கட்டுமானக்கலைஞரும் {ஸ்தபதியும்} ஒருவர் அல்லாது, இருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக் திப்ராயின் பதிப்புகளில் லோகிதாக்ஷர் ஒருவராகவே கொள்ளப்படுகிறார்.)பெரும் செல்வங்களைக் கொடுத்தான். குறிப்பிடத்தக்க கருணையுடன் மன்னன் {ஜனமேஜயன்}, இன்னும் பல பொருட்களையும், உணவுகளையும், ஆடைகளையும் அவரது {சூதன் லோஹிதாக்ஷரின்} விருப்பத்திற்கேற்பக் கொடுத்து மனநிறைவடைந்தான்.(12,13) உரிய சடங்குகளுடன் வேள்வியை நிறைவு செய்த அவன் {ஜனமேஜயன்}, தன் காரியத்தை முடித்த மனநிறைவுடன் இருந்த ஆஸ்தீகரை மரியாதையுடன் நடத்தி அவரை வீட்டிற்கு விடைகொடுத்தனுப்பினான்.(14,15)
மன்னன் {ஜனமேஜயன்} அவரிடம் {ஆஸ்தீகரிடம்}, “நீர் எனது பெரும் குதிரை வேள்வியில் (அஸ்வமேத வேள்வி) சதயஸ்யராக இருக்க நீர் மீண்டும் வர வேண்டும்” என்றான்.(16) ஆஸ்தீகர், “சரி” என்று சொல்லி, அந்த ஏகாதிபதியை {ஜனமேஜயனை} மனநிறைவு கொள்ளச் செய்து, தன் குறிக்கோளை அடைந்த மகிழ்ச்சியுடன் தனது இல்லத்திற்குச் சென்றார்.(17) அப்படி மகிழ்ச்சியாகச் சென்று தனது மாமன் {வாசுகி} மற்றும் தாய் {ஜரத்காரு} ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்று, {நாக வேள்வியில்} நடந்தவை நடந்தபடியே அனைத்தையும் அவர்களிடம் சொன்னார் {ஆஸ்தீகர்}.(18)
சௌதி தொடர்ந்தார், “அவர் {ஆஸ்தீகர்} சொன்னதையெல்லாம் கேட்ட பாம்புகள் பெரும் மகிழ்வு கொண்டன. அவற்றின் அச்சம் நீங்கியது. ஆஸ்தீகரிடம் பெரும் மனநிறைவு கொண்டு அவருக்கு {ஆஸ்தீகருக்கு} ஒரு வரம் தருவதாகச் சொல்லின,(19) “ஓ கற்றவனே {ஆஸ்தீகனே}, உனக்கு நாங்கள் என்ன நன்மை செய்வது? உன்னிடம் நாங்கள் பெரும் மனநிறைவுகொண்டோம். எங்களையெல்லாம் காப்பாற்றிவிட்டாய். உனக்காக நாங்கள் என்ன செய்யட்டும் குழந்தாய்” என்றன.(20)
ஆஸ்தீகர், “காலையிலோ, மாலையிலோ, எனது இந்தப் புனிதமான செயலடங்கிய வரலாற்றை கவனத்துடனும், மகிழ்ச்சியுடனும் படிக்கும் பிராமணர்களும் மற்ற மனிதர்களும், உங்களிடம் எந்தவிதமான அச்சத்தையும் அடையாதிருக்கட்டும்” என்றார்.(21) அதற்கு அந்தப் பாம்புகள் பெருமகிழ்வுடன், “ஓ மருமகனே, உன் வரமானது நீ கேட்டபடியே ஆகட்டும். ஓ மருமகனே, நீ என்ன கேட்டாலும் நாங்கள் மகிழ்ச்சியோடு செய்வோம்.(22) ஆஸ்தீகன், அர்திமான், சுனிதன் என்று பகலிலோ, இரவிலோ மனதால் நினைப்பவர்களுக்கும் பாம்புகளினால் எந்த அச்சமும் ஏற்படாது.(23) ’ஜரத்காருவுக்குப் பிறந்தவரும், பாம்பு வேள்வியிலிருந்து பாம்புகளைக் காத்தவருமான ஆஸ்தீகரை என் மனத்தில் நினைக்கிறேன். எனவே, பெரும் நற்பேறு பெற்ற பாம்புகளே, நீங்கள் என்னைக் கடிப்பது உங்களுக்குத் தகாது.(24) இங்கே இருந்து சென்றுவிடுங்கள், நீங்கள் அருளப்படுவீர்கள். கடும் விஷம் கொண்ட பாம்புகளே சென்றுவிடுங்கள். பாம்புகளே, ஜனமேஜயனின் பாம்பு வேள்விக்குப் பிறகு ஆஸ்தீகர் சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள்” என்று சொல்பவர் எவருக்கும் பாம்புகளிடமிருந்து அச்சமேற்படாது.(25) எந்தப் பாம்பு ஆஸ்தீகரைக் குறித்துச் சொல்லியும் கடிக்கிறதோ, அந்தப் பாம்புகளின் தலை சிம்சா மரத்தின் கனி போல நூற்றுக்கணக்காகப் பிளந்து போகட்டும்” என்று சொல்லின {அந்தப் பாம்புகள்}.”(26)
சௌதி தொடர்ந்தார், “பிராமணர்களில் முதன்மையானவரே {சௌனகரே}, அப்படி முக்கியமான பாம்புகள் கூடி சொன்னபோது ஆஸ்தீகர் பெரிதும் மகிழ்ந்தார். அதன்பிறகு அந்த உயர் ஆன்ம முனிவர் {ஆஸ்தீகர்} அங்கிருந்து சென்றுவிடுவதில் தனது இதயத்தைச் செலுத்தினார்.(27) அப்படிப் பாம்பு வேள்வியில் இருந்து பாம்புகளைக் காத்த அந்த பிராமணர்களில் சிறந்தவர் {ஆஸ்தீகர்}, தனக்குரிய காலத்தில் மகன்களையும் பேரன்களையும் விட்டு மேலுலகம் சென்றார்.(28)
ஆஸ்தீகர் வரலாற்றை எப்படி நடந்ததோ அப்படியே சொல்லிவிட்டேன். இந்த வரலாற்றைச் சொல்வதால் பாம்புகளின் மேல் இருக்கும் பயம் விலகும்.”(29)
சௌதி தொடர்ந்தார், “ஓ பிராமணர்களே, ஓ பிருகு பரம்பரையில் முதன்மையானவரே {சௌனகரே}, உமது முன்னோரான பிரமதி, இதுகுறித்து விசாரித்த ருருவிடம் சொன்னவாறே,(30) அதை {என் தந்தையிடமிருந்து} நான் கேட்டவாறே, கல்விமானான ஆஸ்தீகர் குறித்த இந்த அருள்நிறைந்த வரலாற்றைத் தொடக்கமுதல் {முடிவு வரை} சொன்னேன்.(21) ஓ பிராமணரே {சௌனகரே}, ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {சௌனகரே}, {நீர்ப்பாம்பு} துந்துபாவின் கதையைக் கேட்டவுடன் நீர் விரும்பிய அறம்வளர்க்கும் புனிதமான ஆஸ்தீகர் வரலாற்றைக் கேட்டீர். உமது ஆர்வம் நிறைவடையட்டும்” என்றார் {சௌதி}.(32)
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply