ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ ஆதி பர்வம்- ஸ்ரீ ஆதி வம்சாவதரணப் பர்வம் – 

பெரும் வரலாறு! | ஆதிபர்வம் – பகுதி 59(ஆதிவம்சாவதரணப் பர்வம் – 1) சௌதியிடம் மஹாபாரதத்தைச் சொல்லும்படி கேட்ட சௌனகர்; மஹாபாரதப் பீடிகை..

சௌனகர் சொன்னார், “ஓ மகனே! {சௌதியே}, விரிவானதும், அற்புதமானதுமான இந்த வரலாற்றை, பிருகு பரம்பரையின் தொடக்கத்தில் இருந்து எனக்குக் கூறினாய். ஓ சூத மைந்தா {சௌதி}, உன்னால் நான் மனநிறைவடைந்தேன்.(1) உன்னை மறுபடியும் கேட்கிறேன். ஓ சூத மைந்தா {சௌதி}, வியாசர் தொகுத்த வரலாற்றைச் சொல்வாயாக. ஓ சூத மைந்தா {சௌதி}, அந்த வேள்வியில் கூடியிருந்த சிறப்புமிக்கச் சதஸ்யர்கள், அந்த நீண்ட விழாவில் தம் கடமைகளுக்கு இடையில் கிடைத்த இடைவெளிகளில் ஓதிய சிறந்தவைகளும், அற்புதமானவைகளுமான அந்த வர்ணனைகளையும், அவற்றின் பொருளையும் உன்னிடம் நான் கேட்க விரும்புகிறேன். ஆகையால் முழுமையாகச் சொல்” என்றார் {சௌனகர்}.(2-4)

சௌதி சொன்னார், “தங்கள் கடமைகளின் {வேள்விகளின்} இடைவேளைகளில் அந்த பிராமணர்கள் வேதங்களில் காணப்படும் பலவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டனர். ஆனால் வியாசரோ அற்புதமான பெரும் வரலாறான பாரதத்தை உரைத்தார்” என்றார்.(5)

சௌனகர், “பாண்டவர்களின் புகழைப் பரப்புவதான மஹாபாரதம் என்றழைக்கப்படும் புனிதமான வரலாறானது, ஜனமேஜயனால் கேட்கப்பட்டு, வேள்வியின் முடிவில்[1] கிருஷ்ணத் துவைபாயனரால் முறையாக உரைக்கப்பட்டது. (மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, “வேள்வியின் இடைவேளைகளில் ஜனமேஜயனுக்குச் சொல்லப்பட்டது” என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பிலும், “ஸர்ப்பயாககாலத்தில் சாஸ்திரப்பிரகாரம் நடந்த கிரியைகளின் மத்தியில் ஜனமேஜயர் கேட்கும்போது, கிருஷ்ணத்வைபாயனர் பாண்டவர்களுடைய புகழை விருத்திச்செய்யத்தக்க மஹாபாரதமென்கிற சரித்திரத்தைச் சொன்னாரல்லவா? அந்தப் புண்ணியக் கதையை நான் ஒழுங்காகக் கேட்க விரும்புகிறேன்” என்றிருக்கிறது. பிபேகத்திப்ராயின் பதிப்பிலும் இடைவேளைகளில் சொல்லப்பட்டது என்றே இருக்கிறது. கங்குலியின் பதிப்பிலேயேகூட இதற்கு முன்னர் சொல்லப்பட்ட இடங்களில் எல்லாம் இடைவேளைகளில் சொல்லப்பட்டது என்றே இருக்கிறது. இன்றும் யாகங்களின் இடைவேளைகளில் புராணம் உரைக்கப்படும் வழக்கம் இருக்கிறது.)அதை முறையாகக் கேட்க விரும்புகிறேன்.(6,7) அவ்வரலாறானது, யோகத்தால் தூய்மையடைந்த ஆன்மா கொண்ட அப்பெருமுனிவருடைய {வியாசரின்} பெருங்கடல்போன்ற மனத்தில் பிறந்ததாகும். நன்மக்களில் முதன்மையானவனே {சௌதியே}, ஓ சூத மைந்தா {சௌதியே}, நீ சொன்னது அனைத்தையும் கேட்டும் எனது தாகம் தணியவில்லை என்பதால் அதை எனக்கு உரைப்பாயாக” என்றார் {சௌனகர்}.(8)

சௌதி, “கிருஷ்ண துவைபாயனரால் தொகுக்கப்பட்டு, மஹாபாரதம் என்றழைக்கப்படும் அந்தச் சிறந்த பெரும் வரலாற்றைத் தொடக்கத்திலிருந்து உரைக்கப் போகிறேன்.(9) ஓ பிராமணரே! {சௌனகரே} நான் சொல்லும்போது அதை முழுவதுமாகக் கேட்பீராக. அதை உரைப்பதில் நானும் பெரும் மகிழ்வையடைகிறேன்” என்றார் {சௌதி}.(10)

மஹாபாரதம் ஆரம்பம்! | ஆதிபர்வம் – பகுதி 60(ஆதிவம்சாவதரணப் பர்வம் – 2)-ஜனமேஜயன் யாகத்திற்கு வியாசர் வருவது; வியாசரின் பெருமை; பாண்டவர் வரலாற்றை ஜனமேஜயன் வியாசரிடம் கேட்பது; அக்கதையைச் சொல்லும்படி வைசம்பாயனரைப் பணித்த வியாசர்…

சௌதி சொன்னார், “ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார்.(1) அந்தப் பாண்டவர்களின் பாட்டன் {வியாசர்}, கன்னிகையான கலிக்கும் {சத்தியவதிக்கும்}, சக்தியின்[1] (சௌதி சொன்னார், “ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார்.(1) அந்தப் பாண்டவர்களின் பாட்டன் {வியாசர்}, கன்னிகையான கலிக்கும் {சத்தியவதிக்கும்}, சக்தியின்[1] (இங்குச் சக்தி {சக்திரி} என்று சொல்லப்படுபவர், வசிஷ்டரின் புதல்வராவார்.)மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார்.(2) அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே {விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே} தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார்.(3))மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார்.(2) அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே {விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே} தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார்.(3)

தவங்களாலும், முயற்சியுடன் கூடிய கல்வியாலும், {அத்யாயனத்தினாலும்}, விரதங்களாலும், உண்ணாநோன்புகளாலும், குலத்தினாலும், யாகத்தினாலும் மற்றவர் அடைய முடியாதவற்றை {வேதங்களின் முழுமையான அறிவை} அவர் எளிதாக அடைந்தார்.(4) வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான அவர் {வியாசர்}, வேதங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்தார். அந்த பிராமண முனிவர் {வியாசர்} பிரம்மனைக் குறித்த ஞானத்துடன் இருந்தார். கடந்ததை {இறந்த காலத்தை} மனத்தால் அறிந்தார். அவர் {வியாசர்} தெய்வீகத்தன்மையுடன், உண்மையைப் போற்றி வாழ்ந்தார்.(5) புனிதமான செயல்களையும், பெரும் புகழையும் கொண்ட அவர் {வியாசர்}, சந்தனுவின் பரம்பரை தொடர்ச்சிக்காகப் பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன் ஆகியோரை பெற்றெடுத்தார்.(6)

அந்த உயரான்ம முனிவர் {வியாசர்}, வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கறிந்த தனது சீடர்களுடன் {சீடர் வைசம்பாயனர் போன்றோருடன்}, ஜனமேஜயன் அமர்ந்திருந்த வேள்விச்சாலைக்கு வந்தார்.(7) மன்னன் ஜனமேஜயன், சதயஸ்யர்களும், பட்டாபிஷேகம் செய்துகொண்ட பலநாட்டு மன்னர்களும், பிரம்மனுக்கு ஒப்பான ரித்விக்குகளும் சூழ அந்த வேள்வியில் இந்திரனைப் போல அமர்ந்திருப்பதைக் கண்டார்.(8,9) பாரதக் குலத்தின் முதன்மையானவனும், அரசமுனியுமான அந்த ஜனமேஜயன், முனிவர் {வியாசர்} வருவதைக் கண்டு, தன்னைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் பெருமகிழ்வோடு வேகமாக முன்வந்து அவரை வரவேற்றான்.(10) அந்த மன்னன் {ஜனமேஜயன்} சதஸ்யர்களின் அனுமதியோடு, இந்திரன் பிருஹஸ்பதிக்குக் கொடுத்ததைப் போல, அந்த முனிவருக்கு {வியாசருக்கு} ஒரு பொன் ஆசனத்தைக் கொடுத்தான்.(11)

வரங்களை அருளவல்லவரும், தெய்வீக முனிவர்களாலும் போற்றபடுபவருமான, அந்த முனிவர் {வியாசர்} அமர்ந்தபோது, அந்த மன்னர்மன்னன் {ஜனமேஜயன்} சாத்திரங்களில் சொல்லப்பட்ட உரிய மரியாதைகளுடன் வணங்கினான்.(12) மன்னன் {ஜனமேஜயன்}, முற்றிலும் தகுதிவாய்ந்த தனது பாட்டன் கிருஷ்ணருக்கு {கிருஷ்ண துவைபாயனர்=வியாசருக்கு} கால்கள் மற்றும் வாயைக் கழுவ நீரும், அர்க்கியமும், பசுக்களையும் கொடுத்தான்.(13) அந்தப் பாண்டவ ஜனமேஜயனின் காணிக்கைகளை ஏற்று, பசுக்களைக் கொல்லக்கூடாது என்று சொல்லி, வியாசர் பெரும் மனநிறைவு கொண்டார்.(14)

அந்த மரியாதைகளுக்குப் பிறகு மன்னன் {ஜனமேஜயன்} தனது முப்பாட்டனை {வியாசரை} வணங்கி, மகிழ்ச்சியுடன் அமர்ந்து அவரது நலத்தைக் கேட்டறிந்தான்.(15) அந்தச் சிறப்புமிக்க முனிவர் {வியாசர்} அவன் {ஜனமேஜயன்} மீது தனது பார்வையைச் செலுத்தி அவனின் {ஜனமேஜயனின்} நலத்தைப் பற்றிக் கேட்டார். சதஸ்யர்களால் வணங்கப்பட்ட அவர் {வியாசர்}, பதிலுக்கு அவர்களை வணங்கினார்.(16) அதன்பிறகு, மன்னன் {ஜனமேஜயன்} தனது சதஸ்யர்களுடன் கரங்கள் கூப்பி, பிராமணர்களில் முதன்மையானவரிடம் {வியாசரிடம்} கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான்.(17)

{ஜனமேஜயன்}, “ஓ பிராமணரே {வியாசரே}, கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் செயல்களைத் தங்கள் கண்ணாலேயே கண்டிருக்கிறீர். நீங்கள் உரைக்க அந்த வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன்.(18) அவர்களை {கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களை} செயற்கரிய காரியங்களைச் செய்ய வைத்த அந்தச் சச்சரவுக்குக் காரணம் என்ன? எண்ணற்ற உயிர்கள் மடியக் காரணமான அந்தப் பெரும்போர் எனது பாட்டன்களுக்குள் ஏன் நடந்தது? அவர்கள் தெளிந்த அறிவும் விதியால் மூடப்பட்டதோ? ஓ பிராமணர்களில் சிறந்தவரே {வியாசரே}, அதை எனக்கு முழுமையாக, எவை எவ்வாறு நடந்தனவோ அவற்றை அவ்வாறே சொல்வீராக” என்றான் {ஜனமேஜயன்}.(19,20)

ஜனமேஜயனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தனது அருகில் அமர்ந்திருந்த தமது சீடரான வைசம்பாயனரிடம்,(21) “பழங்காலத்தில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த பிணக்குகளை, நீ என்னிடம் கேட்டறிந்தவாறே இந்த மன்னனுக்கு {ஜனமேஜயனுக்கு} முழுமையாகச் சொல்வாயாக” என்றார் {வியாசர்}.(22)

அதன்பிறகு அருள்நிறைந்த அந்த பிராமணர் {வைசம்பாயனர்}, தனது ஆசானின் {வியாசரின்} கட்டளைப்படி மன்னனுக்கும் {ஜனமேஜயனுக்கும்}, சதஸ்யர்களுக்கும் மற்றும் அங்குக் கூடியிருந்த பிற மன்னர்களுக்கும் அந்த முழு வரலாற்றையும் கூறினார். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பகைமையையும், அவர்கள் முழுமையாக அழிந்ததையும் முழுமையாகச் சொன்னார்” {என்றார் சௌதி}[2].(23,24)(இப்படி வியாசரின் சீடர் வைசம்பாயனர், ஜனமேஜயன் நடத்திய நாக வேள்வியில் சொல்லப்பட்டதே மகாபாரதம்.)

பாண்டவர் வரலாறு! | ஆதிபர்வம் – பகுதி 61(ஆதிவம்சாவதரணப் பர்வம் – 3)மகாபாரதத்தின் கதைச்சுருக்கம்.

வைசம்பாயனர் சொன்னார், “எனது உடலின் எட்டுப் பகுதிகளும் தரையைத் தொட,[1] (சாஷ்டாங்க நமஸ்காரம் = ஸ+அஷ்ட+அங்க+நமஸ்காரம். எட்டு அங்கங்கள் தரையில் பட வணங்குதல். பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் ஒரு முறை. தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை)என் ஆசானை {வியாசரை} பக்தியுடனும், மரியாதையுடனும் முதற்கண் வணங்கி, இந்தச் சபையில் இருக்கும் பிராமணர்களையும், மற்ற கற்றவர்களையும் முழு மனத்துடன் வழிபட்டு, மூவுலகங்களிலும் புத்திசாலிகளில் முதன்மையான இந்த உயரான்ம முனிவர் வியாசரிடம் நான் கேட்டவற்றை முழுமையாக உரைக்கின்றேன்.(1,2) இதை அறியப்போகும் ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நீ பாரதம் என்று அழைக்கப்படும் இந்தத் தொகுப்பைக் கேட்கத் தகுதி வாய்ந்தவனே. எனது ஆசானின் {வியாசரின்} கட்டளையில் தூண்டப்பட்டிருப்பதால் எனது இதயத்தில் அச்சத்தை[2]  (பாரதம் முழுமையாகப் படித்தல் அல்லது முழுமையாக உரைத்தல் என்பது எளிமையான காரியம் அல்ல. தகுதிபெற்றோரே அதைச் செய்துமுடிக்க இயலும்.)நான் உணரவில்லை.(3) “ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒற்றுமையின்மை நிலவியது ஏன் என்றும், (குருக்களின்) ஆளும் ஆசையினால் நேர்ந்த சூதாட்டத்தைத் தொடர்ந்து, வனவாசம் ஏன் விதிக்கப்பட்டது என்றும் கேட்பாயாக. பாரதக் குலத்தில் சிறந்தவனே! {ஜனமேஜயனே!} கேட்க விரும்பிய உனக்கு அனைத்தையும் சொல்வேன்.(4,5)

அந்த வீரர்கள் (பாண்டவர்கள்), தங்கள் தந்தையின் {பாண்டுவின்} மரணத்தையடுத்து, காட்டிலிருந்து, தங்கள் சொந்த வீட்டிற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தனர். வந்து குறுகிய காலத்திற்குள், வில்வித்தையில் தேர்ந்தனர்.(6) பாண்டவர்கள் உடல் பலத்தாலும், சக்தியாலும், மனபலத்தாலும், குடிமக்களிடத்தில் பிரபலமாகவும், நற்பேறுகள் அருளப்பட்டு இருந்ததைத் கண்ட கௌரவர்கள் அவர்கள் மேல் {பாண்டவர்கள் மேல்} பொறாமை கொண்டனர்.(7) கோணல்புத்தி கொண்ட துரியோதனன், கர்ணன், சுபலனின் மைந்தன் (சகுனி) ஆகியோர் அவர்களைத் {பாண்டவர்களைத்} துன்புறுத்தவும், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் ஆலோசித்து வந்தனர்.(8) அந்தத் தீயவனான துரியோதனன், எதிர்ப்பும் போட்டியுமற்ற அரசுரிமையைப் பெறுவதற்காக, (தாய்மாமனான) சகுனியின் ஆலோசனைப் படி பாண்டவர்களுக்கு இன்னலைச் {அழிக்கும் முயற்சிகளைச்}  செய்து வந்தான்.(9)

ஒருநாள் திருதராஷ்டிரனின் அந்தத் தீய மகன் {துரியோதனன்} பீமனுக்கு விஷத்தைக் கொடுத்தான். ஆனால் ஓநாய் வயிறு கொண்ட பீமன் அந்த விஷத்தை உணவுடன் சேர்த்துச் செரித்து முடித்தான்.(10) அதன் பிறகும் அந்தப் பாவி {துரியோதனன்} கங்கையின் கரையில் தூங்கிக் கொண்டிருந்த பீமனைக் கட்டி நீரில் வீசி விட்டுச் சென்று விட்டான்.(11) ஆனால் பலம் பொருந்திய கைகளைக் கொண்ட பீமசேனன், அந்தக் குந்தியின் மைந்தன் {பீமன்} எழுந்து, தன்னைக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்துத் தன் வலியெல்லாம் அகன்று வெளியே வந்தான்.(12)

அவன் {பீமன்} தூங்கிக் கொண்டிருக்கையிலும், நீரிலும் கடும் விஷம் கொண்ட கருநாகங்கள் அவனை உடலெங்கும் தீண்டின. இருப்பினும் அந்த எதிரிகளை அழிப்பவன் {பீமன்} அழியவில்லை.(13) அப்படிப் பாண்டவர்கள், தங்கள் சகோதரர்களான கௌரவர்களால் துன்பப்படும் பொழுதெல்லாம், உயர்ந்த எண்ணம் கொண்ட விதுரன், கருத்தோடு அவர்களைக் {பாண்டவர்களைக்} கவனிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அந்தத் தீய காரியங்களை மட்டுப்படுத்தி, துன்பத்திலிருந்த அவர்களைக் காப்பாற்றினான்.(14) எப்படிப் பூலோக மனிதர்களின் இன்பத்தைச் சக்ரன் {இந்திரன்} தக்கவைக்கிறானோ அப்படி விதுரன் பாண்டவர்களைத் தீயவற்றிலிருந்து விலக்கி வைத்தான்.(15)

இப்படி மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பலவகைகளில் முயன்றும் பாண்டவர்கள் விதியாலும், எதிர்காலத்தில் முக்கியமான (குரு பரம்பரையை அழிக்க) காரணத்துக்காகவும் காப்பாற்றப்படும்போது, அவர்களை {பாண்டவர்களை} அழிப்பதில் தன் இயலாமையை உணர்ந்த துரியோதனன், விருஷன் (கர்ணன்), துச்சாசனன் உள்ளிட்ட தனது ஆலோசகர்கள் பலரையும் கூட்டி, திருதராஷ்டிரன் அறிய அரக்காலான வீடு {அரக்கு மாளிகை} ஒன்றைக் கட்டச் செய்தான்.(16,17)

மன்னன் திருதராஷ்டிரன், தன் மக்கள் {கௌரவர்கள்} மீதிருந்த பாசத்தாலும், ஆட்சி உரிமையின் மீதிருந்த ஆசையால் தூண்டப்பட்டும், பாண்டவர்களைத் தந்திரமாக வாரணாவதத்திற்கு அனுப்பினான்.(18) பாண்டவர்கள் தங்கள் தாயுடன் {குந்தியுடன்} அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் {பாண்டவர்கள்} நகரத்தைவிட்டு வெளியேறும் போது, விதுரன் நடக்கப் போகும் ஆபத்தையும், அதிலிருந்து தப்புவது எப்படி என்று சில யோசனைகளையும் அவர்களுக்குத் {பாண்டவர்களுக்குத்} தெரிவித்தான்.(19)

குந்தியின் மைந்தர்கள் {பாண்டவர்கள்} வாரணாவதத்தை அடைந்து தங்கள் தாயுடன் {குந்தியுடன்} வாழ்ந்து வந்தனர். திருதராஷ்டிரனின் உத்தரவை ஏற்றுக் கொண்டு அந்த நகரத்தில் {வாரணாவதத்தில்}, அந்த அரக்காலான வீட்டில் எதிரிகளை அழிப்பதில் சிறப்புவாய்ந்தவர்களான அவர்கள் வாழ்ந்து வந்தனர்.(20,21) அந்த இடத்தில புரோச்சனனிடம் இருந்து விழிப்புடன் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு ஒரு வருடம் அங்கே வாழ்ந்தனர். விதுரனின் வழிகாட்டுதல்படி, ஒரு சுரங்கப் பாதையை அமைத்து, அந்த அரக்காலான வீட்டுக்கு நெருப்பு வைத்துப் (அவர்களது எதிரியும், துரியோதனனின் ஒற்றனுமான) புரோச்சனனை எரித்துக் கொன்றனர். அந்த எதிரிகளை அழிப்பவர்கள் {பாண்டவர்கள்}, பயத்துடனும், கவலையுடனும், தங்கள் தாயை {குந்தியை} அழைத்துக் கொண்டு தப்பித்தனர்.(22,23)

கானகத்திற்குள் அருவி ஒன்றின் அருகில் ஒரு ராட்சசனைக் கண்டனர் {கொன்றனர்}. திருதராஷ்டிரனின் மைந்தர்களுக்குப் {கௌரவர்களுக்குப்} பயந்து, தங்களது எந்தச் செயலும் தங்களை வெளிக்காட்டிவிடும் என்று அஞ்சியபடியே பாண்டவர்கள் அந்த இருளில் தப்பிச் சென்றனர். இங்கே பீமன் ஹிடிம்பையை (அவன் கொன்ற ராட்சசனின் தங்கையை) மனைவியாக அடைந்ததால், அவள் மூலமாகக் கடோத்கசன் பிறந்தான்.(24,25)

கடும் நோன்புகளை நோற்பவர்களும், வேதங்களை நன்கு அறிந்தவர்களுமான பாண்டவர்கள், ஏகச்சக்கரம் என்ற நகரத்திற்குச் சென்று, அங்கே பிரம்மச்சாரிகளாக வேடம் பூண்டு மறைந்து வாழ்ந்தனர்.(26) அந்த மனிதர்களில் காளைகள் {பாண்டவர்கள்}, அந்த நகரில் ஒரு பிராமணரின் வீட்டில் சிறிது காலம் யாவற்றையும் தவிர்த்துத் தன்னடகத்துடன் வாழ்ந்தனர்.(27) இங்கேதான் பெரும் கரங்களைக் கொண்ட பீமன், பசிகொண்டவனும், பலம்பொருந்தியவனும், மனிதர்களை உண்ணும் ராட்சசனுமான பகனைச் {பகாசுரனைச்} சந்தித்தான்.(28) அந்தப் பாண்டுவின் மைந்தனும், மனிதர்களில் புலியுமான பீமன், தனது பெருத்த கரங்களைக் கொண்டு அவனை {பகாசுரனை} வேகமாகக் கொன்று அங்கு வாழ்ந்த குடிமக்களைக் காப்பாற்றிப் பயத்திலிருந்து விடுவித்தான்.(29)

பாண்டவர்கள் அதன்பிறகு, கிருஷ்ணை (பாஞ்சால இளவரசி) {திரௌபதி}, கூடியிருக்கும் இளவரசர்களுக்கிடையில் ஒரு கணவனைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள் என்பதை அறிந்தனர். அதைக் கேட்டதும் அவர்கள் {பாண்டவர்கள்} பாஞ்சாலத்திற்குச் சென்று அந்த மங்கையை {திரௌபதியை} அடைந்தனர்.(30) அப்படித் திரௌபதியை (பொதுவான மனைவியாக) அடைந்து, அங்கே {பாஞ்சாலத்தின் தலைநகர் காம்பில்யத்தில்} ஒரு வருடம் வாழ்ந்தனர். அதன்பிறகு அனைவராலும் அவர்கள் {பாண்டவர்கள்} அறியப்பட்டதும், அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் {பாண்டவர்கள்}, அஸ்தினாபுரம் திரும்பினர்.(31)

அங்கே சென்றதும் திருதராஷ்டிரனாலும், சந்தனுவின் மைந்தனாலும் (பீஷ்மராலும்) “ஓ அன்பானவர்களே {பாண்டவர்களே}, உங்களுக்கும் உங்கள் தம்பிகளுக்கும் கருத்துப் பேதங்கள் ஏற்படாதிருக்க, உங்களுக்குக் காண்டவபிரஸ்தத்தை இருப்பிடமாகத் {அளிக்கத்} தீர்மானித்திருக்கிறோம். ஆகையால், எல்லாப் பொறாமைகளையும் மறந்து தூக்கியெறிந்துவிட்டு, பல நகரங்களும், பல அகலமான சாலைகளும் கொண்ட காண்டவபிரஸ்தத்துக்குச் சென்று அங்கு வாழுங்கள்” என்றனர். அதன்படி பாண்டவர்கள் தங்கள் நண்பர்களுடனும், தொண்டர்களுடனும், பலவகையான ஆபரணங்களையும் ரத்தின கற்களையும் எடுத்துக் கொண்டு காண்டவபிரஸ்தம் சென்றனர். அங்கே அந்தப் பிருதையின் {குந்தியின்} மைந்தர்கள் {பாண்டவர்கள்} பல வருடங்கள் தங்கி இருந்தனர்.(33-35)

பல நாடுகளைத் தங்கள் பலத்தால் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தங்கள் இதயத்தை அறத்தின்பால் ஈடுபடுத்தி, உண்மையை உறுதியாக ஏற்று,(36) அடைந்த செல்வத்தால் நிலைத்தடுமாறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், பல தீமைகளை அழித்தும் பாண்டவர்கள் பலத்தில் வளர்ந்தனர். புகழ் மிக்கப் பீமன் கிழக்கை வென்றான்,(37) வீரனான அர்ஜுனன் வடக்கை வென்றான், நகுலன் மேற்கை வென்றான், எதிரி வீரர்களை அழிப்பவனான சகாதேவன் தெற்கை வென்றான்.(38) இவையெல்லாம் நடந்தபிறகு, அவர்களது {பாண்டவர்களது} ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. சூரியனைப் போன்ற ஐந்து பாண்டவர்களோடு சேர்ந்து,(39) பூமியானது ஆறு சூரியன்களைக் கொண்டதாகக் காணப்பட்டது. அதன்பிறகு, பெரும் சக்தியையும், வீரத்தையும் கொடையாகக் கொண்ட நீதிமானான யுதிஷ்டிரன், தனக்கு உயிரை விட மேலானவனும், இடது கையாலும் வில்லின் நாணை இழுக்கும் சக்தி கொண்டவனுமான அர்ஜுனனைச் சில காரணங்களுக்காகத் காட்டிற்கு அனுப்பினான்.(40,41) மனிதர்களில் புலியும், உறுதியான ஆன்மாகக் கொண்டவனுமான அர்ஜுனன், அனைத்து அறங்களையும் கொடையாகக் கொண்டு, பதினோரு வருடங்களும், பதினோரு மாதங்களும் கானகத்தில் வாழ்ந்தான்[3].(42)(மன்மதநாதரின் பதிப்பில் பதினோரு வருடங்களும், பத்து மாதங்களும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்பகோணம் பதிப்பில், “ஒரு வருஷம் முழுதும் மேலே ஒரு மாஸமும் வனத்தில் வசித்து” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் ஒரு வருடமும், ஒரு மாதமும் என்றே இருக்கிறது. மூல ஸ்லோகத்தில்  துவாதச வர்ஷானி அதாவது பனிரெண்டு வருடங்கள் என்றே உள்ளது.)

இந்தக் காலத்தில், ஒரு சமயம், அர்ஜுனன் துவாரகையில் இருக்கும் கிருஷ்ணனிடம் சென்றான். அங்கே அந்த பீபத்சு (அர்ஜுனன்) தாமரைக்கண் கொண்டவளும், இனிமையான பேச்சுடையவளுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இளைய தங்கை சுபத்திரையைத் தனது மனைவியாகக் கொண்டான். பெரும் இந்திரனுடன் சச்சி இருந்தது போல, அல்லது கிருஷ்ணனுடன் ஸ்ரீ இருந்ததுபோல,(43,44) அவள் {சுபத்திரை} பாண்டுவின் மகன் அர்ஜுனனுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். அதன்பிறகு ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, குந்தியின் மைந்தன் அர்ஜுனன், வாசுதேவனுடன் சேர்ந்து வேள்வி நெய்யைச் சுமக்கும் அக்னியை (அக்னியின் செரியாமையைப் போக்க அங்கே இருந்த மருத்துவ மூலிகைகளை எரித்து) காண்டவ வனத்தில் மனநிறைவு கொள்ளச் செய்தான். அர்ஜுனனுக்குக் கேசவனின் {கிருஷ்ணனின்} உதவி இருக்கும்போது,(45,46) ஒப்பற்ற மிக உயர்ந்த ஆதாரங்களைக் கொண்ட விஷ்ணுவுக்கு எதிரிகளை அழிப்பது எப்படிக் கடினமில்லையோ அப்படி இந்தப் பணியும் அவனுக்குக் {அர்ஜுனனுக்குக்} கடினமாகத் தெரியவில்லை. அக்னி அந்தப் பிருதையின் {குந்தியின்} மைந்தனுக்கு {அர்ஜுனனுக்கு} அற்புதமான வில்லான காண்டீவத்தையும்,(47) எப்போதும் வற்றாத அம்பறாத்தூளியையும், கருடனைக்[4](குரங்குக் கொடி கொண்ட தேர் என்றுதான் ஆதிபர்வம் 227 இல் சொல்லப்படுகிறது. கருடக் கொடி கிருஷ்ணன் மற்றும் விஷ்ணுவுன்டையது ஆகும். மூல ஸ்லோகத்தில் கபிலக்சணம் – அதாவது குரங்குச் சின்னம் கொண்ட என்றே உள்ளது.)கொடிக்கம்பத்தில் கொண்ட ஒரு தேரையும் கொடுத்தான். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அர்ஜுனன் பெரும் அசுரனை (மயனை) நெருப்பில் விழும் அச்சத்திலிருந்து (நெருப்பிலிருந்து) காப்பாற்றினான்.(48) நன்றியுடைய மயன், அனைத்து வகையான நகைகளையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு (பாண்டவர்களுக்காக) ஒரு தெய்வீக அரண்மனையைக் கட்டிக் கொடுத்தான். தீய துரியோதனன், அந்த அரண்மனையைக் கண்டு அதை அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டான்.(49)

யுதிஷ்டிரனைச் சுபலனின் மகன் {சகுனியின்} மூலம் சூதாட்டத்தில் ஏமாற்றி, பாண்டவர்களைப் பனிரெண்டு {12} வருடங்கள் கானகத்திற்கும்,(50) ஒரு {1} வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழவும் பணித்தான். ஆக அந்த நாடு கடத்தலை முழுப் பதிமூன்று {13} வருடங்களுக்கு விதித்தான். பதினான்காவது {14} வருடத்தில், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, பாண்டவர்கள் திரும்பி வந்து தங்கள் சொத்துக்களைக் கோரினர்.(51) அவர்களால் {பாண்டவர்களால்} அதைப் பெற முடியவில்லை. அதன் காரணமாகப் போர் தீர்மானிக்கப்பட்டது. பாண்டவர்கள் மொத்த க்ஷத்திரிய குலத்தையே அழித்து, மன்னன் துரியோதனனைக் கொன்று, பேரழிவிற்குள்ளான தங்கள் அரசைப் பெற்றனர். இதுதான் எந்தச் செயலையும் தீய ஆசைகளால் கவரப்பட்டு செய்யாதவர்களான பாண்டவர்களின் வரலாறு. ஓ வெற்றிபெற்ற ஏகாதிபதிகளில் முதன்மையானவனே! {ஜனமேஜயனே} இதுதான் ஒற்றுமையின்மையின் காரணமாகக் கௌரவர்கள் தங்கள் அரசை இழந்து, பாண்டவர்கள் வெற்றியை அடைந்த வரலாறு” {என்றார் வைசம்பாயனர்}.(52,53)

பாரதம் படிப்பது வேதம் படிப்பதற்குச் சமம்! | ஆதிபர்வம் – பகுதி 62(ஆதிவம்சாவதரணப் பர்வம் – 4)மகாபாரதப் பாத்திரங்களின் செயல்பாட்டில் உள்ள தன் சந்தேகங்களைக் கேள்விகளாக வைசம்பாயனரிடம் வைத்த ஜனமேஜயன்; மஹாபாரதத்தை விரிவாகச் சொல்லும்படி வைசம்பாயனரை வேண்டினான்; மகாபாரதத்தின் பெருமைகளை எடுத்துரைத்த வைசம்பாயனர்…

ஜனமேஜயன் “ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {வைசம்பாயனரே} குருக்களின் {குரு குலத்தவர்களின்} பெரும் செயல்களை விளக்குவதும், மஹாபாரதம் என்று அழைக்கப்படுவதுமான வரலாற்றை நீர் சுருக்கமாகச் சொல்லிவிட்ட போதிலும்,(1) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! {வைசம்பாயனரே} அந்த அற்புதமான விவரிப்பை முழுமையாகச் சொல்வீராக. அதைக் கேட்பதில் நான் {ஜனமேஜயனாகிய நான்} பெரும் ஆவல் கொண்டுள்ளேன்.(2) எனவே, அதை நீர் முழுமையாகச் சொல்வீராக. இப்படி அந்தப் பெரும் வரலாற்றை மணிச்சுருக்கமாகக் கேட்பதில் நான் மனநிறைவுகொள்ளவில்லை.(3) கொல்லத்தகாதவர்களைக் {ஆசிரியர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும்} கொன்ற அந்த அறவோர் {பாண்டவர்கள்}, அதற்காகக் கொண்டாடப்படுகிறார்கள் என்றால் அதன் காரணம் சிறியதாக இருக்கமுடியாது.(4) நேர்மையானவர்களும், தாங்களே பழி வாங்கும் திறன் கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்}, ஏன், அந்தப் பொல்லாத குருக்களின் {கௌரவர்களின்} துன்புறுத்தலை அமைதியாக ஏற்றனர்?(5)

ஓ பிராமணர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, பெரும்பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனும், பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவனுமான அந்தப் பீமன், ஏன் தவறுகளைப் பொறுத்து தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்?(6) துருபதனின் மகளும், கற்புள்ளவளுமான திரௌபதி, அந்தப் பாவிகள் {கௌரவர்கள்} தன்னைத் துன்புறுத்தும் போது, அவர்களை எரித்துவிடும் சக்தி கொண்டிருந்த போதும், அந்தத் திருதராஷ்டிரனின் மைந்தர்களைத் {கௌரவர்களைத்} தனது கோபப் பார்வையால் ஏன் எரிக்கவில்லை?(7)

பிருதையின் {குந்தியின்} மற்ற இரு மகன்களும் (பீமனும், அர்ஜுனனும்), மாத்ரியின் இரு மகன்களும் (நகுலனும் சகதேவனும்) அந்தப் பாவிகளான குருக்களிடம் {கௌரவர்களிடம்} காயப்பட்டும் தீய பழக்கமான சூதாட்டத்தின் அடிமையாக இருந்த யுதிஷ்டிரனை ஏன் அனுசரித்துச் சென்றார்கள்?(8) அறவோரில் முதன்மையானவனும், தர்ம தேவதையின் புதல்வனுமான யுதிஷ்டிரன், தனது கடமைகளைச் சரியாகச் செய்தும், ஏன் அந்தப் பெரும் துன்பத்திற்கு ஆளானான்?(9)

அச்சமின்றிப் போர்புரியும் மாந்தர்களை தனது கணைகளால் வேறு உலகத்திற்கு அனுப்பியவனும், கிருஷ்ணனைத் தேரோட்டியாகக் கொண்டவனுமான அந்தப் பாண்டவத் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏன் அப்படிப்பட்ட துன்புறுத்தலுக்கு ஆளானான்?(10) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, நடந்தவை அனைத்தையும் உள்ளவாறே எனக்குச் சொல்வீராக. அந்தப் பெரும் தேர்வீரர்கள் சாதித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்றான் {ஜனமேஜயன்}.(11)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அதைக் {வரலாற்றைக்} கேட்பதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்வாயாக. கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} சொல்லப்பட்ட இந்த வரலாறு மிகப் பெரியதாகும். இது வெறும் தொடக்கம்தான். நான் அஃதை உரைக்கிறேன். அளவிட முடியாப் பெரும் மனோபலம் கொண்டவரும், உலகங்கள் அனைத்திலும் வழிபடப்படுபவரும், சிறப்பு மிகுந்தவருமான பெரும் முனிவர் வியாசர் அருளிய அந்த முழுத் தொகுப்பையும் முழுமையாக நான் மறுபடியும் சொல்கிறேன்.(12,13) அளவில்லா மனோபலம் கொண்ட சத்தியவதி மகனால் {வியாசரால்} படைக்கப்பட்ட இந்தப் பாரதம் நூறாயிரம் {100000} செய்யுள்களைக் (சுலோகங்களைக்) கொண்டதாகும்.(14)

அடுத்தவருக்கு இஃதை யார் படித்துக் காட்டுகிறார்களோ, யார் இதைக் கேட்கிறார்களோ, அவர்கள் பிரம்மனின் உலகை அடைந்து, தேவர்களுக்குச் சமமாக இருப்பர்.(15) இந்தப் பாரதம் வேதங்களுக்கு இணையானது; புனிதமானது; அருமையானது; கேட்பனவற்றிலெல்லாம் சிறந்தது. இது முனிவர்களால் வழிபடப்படும் ஒரு புராணமுமாகும்.(16) பொருள், இன்பம் (அர்த்தம், காமம்) சம்பந்தமான பயனுள்ள கருத்துகள் பல இதில் அடங்கியுள்ளன. இந்தப் புனிதமான வரலாறு {மகாபாரதம்}, நம் இதயத்தைப் வீடுபேறு அடைதலில் ஆர்வம் கொள்ள வைப்பதுமாகும்.(17)

தாராளவாதிகளும், உண்மை நிறைந்தவர்களும், நம்பிக்கையுள்ளவர்களுமான மனிதர்களுக்கு, கிருஷ்ண துவைபாயனரின் {வியாசரின்} இந்த வேதத்தை,  உரைக்கும் கல்விமான்கள் பெருஞ்செல்வத்தை அடைகின்றனர்[1].(கும்பகோணம் பதிப்பில், “வித்வானாயிருப்பவன், கிருஷ்ணத்வைபாயனராற் சொல்லப்பட்ட வேதமாகிய இந்தப் பாரதத்தைப் பெருந்தன்மையுள்ளவர்களும், கொடுப்பவர்களும், ஸ்தயம் தவறாதவர்களும், நாஸ்திகரல்லாதவர்களுமான மனிதர்களுக்குச் சொல்லிப் பொருளை ஸம்பாதிக்கிறான்” என்றிருக்கிறது.)(18) கருவறையிலேயே கருவைக் கொல்லும் பாவம் கூட இதைக் கேட்பதால் அகலும். ஒரு மனிதன் எவ்வளவுதான் கொடூரமானவனாகவும், பாவியாகவும் இருந்தாலும், இந்த {மகாபாரத} வரலாற்றைக் கேட்பதால், {கிரகணம் முடிந்தவுடன்} ராகுவிடம் இருந்து விடுபடும் சூரியனைப் போல, அவனிடமிருந்து எல்லாப் பாவங்களும் அகலும். இந்த {மகாபாரத} வரலாறு ஜெயம் என்று அழைக்கப்படுகிறது. வெற்றியடைவதில் விருப்பம் கொண்டோர் அனைவரும் இதைக் கேட்க வேண்டும்.(19,20)

ஒரு மன்னன் இதைக் கேட்பதால், முழு உலகத்தையும் தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து, தனது எதிரிகள் அனைவரையும் அடக்குவான். தனது இயல்பாலேயே நிறைவை அளிக்கும் ஒரு சிறந்த செயல்பாடான இவ்வரலாறானது {மகாபாரதமானது}, அருள்நிறைந்த கனியை உருவாக்கும் ஒரு பெரும் வேள்வியாகும்.(21) இளம் ஏகாதிபதிகள், தங்கள் மனைவியுடன் இதைக் கேட்க வேண்டும். அதனால் அவர்கள் தங்கள் அரியணையை அலங்கரிக்கச் சிறந்த புதல்வனையோ, புதல்வியையோ பெறுவார்கள்.(22)

இந்த {மகாபாரத} வரலாறு அறம், பொருள், வீடு (தர்மம், அர்த்தம், மோட்சம்) என்பதை அறியும் உயர்வான ஒரு புனிதமான அறிவியல் {தர்ம, அர்த்த, மோட்ச சாஸ்திரம்} என்று அளவிலா மனம் கொண்ட வியாசரால் சொல்லப்பட்டுள்ளது.(23) இது தற்போது உரைக்கப்படுகிறது. வருங்காலத்திலும் உரைக்கப்படும். இதைக் கேட்பவர்கள், பணிவாகக் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களான மகன்களையும், பணியாட்களையும் பெற்றிருப்பர்.(24) உடலால், வார்த்தையால், மனத்தால் செய்யப்படும் பாவங்கள் அனைத்தும் இதைக் கேட்பதால் ஒருவனிடமிருந்து உடனே அகன்று போகும்.(25) பாரத இளவரசர்களின் பிறப்பைப் பற்றிய கதைகளைக் குறை கண்டுபிடிக்கும் மனம் இல்லாமல் கேட்பவர்கள், எந்தக் நோயாலும் மற்றும் மறு உலகத்தைப் பற்றிய எந்த எண்ணத்தாலும் அச்சங்கொள்ளாதிருப்பார்கள்.(26)

அனைத்து துறைகளிலும் ஞானமுள்ளவர்களும், ஊக்கமுள்ளவர்களும், தங்கள் சாதனைகளால் உலகில் அறியப்பட்டவர்களான க்ஷத்திரியர்கள் மற்றும் உயரான்ம பாண்டவர்களின் புகழைப் பரப்புவதற்காகவும், உலகிற்கு நன்மை செய்வதற்காகவும், கிருஷ்ண துவைபாயனர் இதை {மஹாபாரதத்தைத்} தொகுத்துள்ளார். இது {மகாபாரதம்} அருமையானதும், புகழை உற்பத்தி செய்யக்கூடியதும், நீண்ட ஆயுளைக் கொடுக்கக்கூடியதும், புனிதமானதும், தெய்வீகமானதுமாகும். எவன் தனது அறத்தகுதிகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு இந்த {மகாபாரத} வரலாற்றைப் புனிதமான பிராமணர்கள் மூலம் கேட்கிறானோ, அவன் அழிவற்ற பெரும் தகுதிகளையும், அறத்தையும் பெறுகிறான். இந்தக் குரு பரம்பரையை {குரு பரம்பரையின் கதையை} விவரிப்பவர்கள் உடனே தூய்மையை அடைந்து {புனிதமாகி},(27-31) பெரிய குடும்பத்தை அடைந்து, உலகத்தில் பெரும் மரியாதைக்கு ஆளாகின்றனர். மழைப்பருவமான அந்த நான்கு மாதங்களில் இந்தப் புனிதமான பாரதத்தைத் தொடர்ந்து படிக்கும் பிராமணன், தனது அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். பாரதத்தைப் படித்த ஒருவனை வேதமறிந்தவனாகக் கருதலாம்.(32)

இந்த {மகாபாரதத்} தொகுப்பில், தேவர்கள், அரசமுனிகள், புனிதமான மறுபிறப்பு அடைந்த முனிகள், பாவங்களற்ற கேசவன் {கிருஷ்ணன்},(33) தேவர்களின் தேவன் மகாதேவன் {சிவன்}, பார்வதி, பார்வதி மகாதேவன் தொடர்பால் கார்த்திகேயன் {முருகன்} பிறந்து, பல தாய்மார்களால் வளர்க்கப்படுவது,(34) பிராமணர்கள் மற்றும் பசுக்களின் பெருமை, ஆகியன விவரிக்கப்படுகின்றன. அனைத்து அறம் சார்ந்தவர்களாலும் கேட்கப்பட வேண்டிய பாரதமென்பது சுருதிகளின் {வேதங்களின்} தொகுப்பாகும்.(35) கற்றவர்களால், புனிதமான மாதங்களில் பிராமணர்களுக்கு இஃது உரைக்கப்படும்போது, அவர்களது அனைத்துப் பாவங்களும் அகன்று சொர்க்கத்தைப் பற்றிய லட்சியமில்லாமல் பிரம்மனிடம் ஐக்கியமடைவார்கள்.(36)

சிரார்த்தத்தின்[2] (சிரார்த்தம் = சிரம் + அர்த்தம். அதாவது தலையாய கடமை. ஒரு மனிதனின் முதற்கடமை, தனது முன்னோர்களுக்கு பித்ருகடன் செய்வதே ஆகும். வள்ளுவர் கூட (1) முன்னோர்கள் (2) தெய்வம் (3) விருந்தினர் (4) சுற்றத்தார் (5) தான் என்னும் இவ்வைரையும் காக்க வேண்டியது இல்லறத்தார் கடமை எனப் பிதுர்கடனை முதலாவதாகச் சொல்லுவார். பிதுர்கடன் செய்ய வாரிசுகள் இல்லாததால் யாயாரவர்கள் நரகத்தின் குழியில் விழ இருந்ததாக கதையும் மகாபாரதத்தில் படித்தோம். புத்திரர் இல்லாதோர் “புத்” என்னும் நரகத்தில் வீழ்வர் எனப் புராணங்களும் சிரார்த்தத்தின் பெருமை சொல்லும்.){திதி எனும் நோன்பிருக்கும்} போது, இதில் ஓர் அடியையேனும் பிராமணர்களைக் கேட்கச் செய்தால், அந்த சிரார்த்தம் அழிவற்றதாகும், பித்ருக்களும் படையலால் எப்போதும் மனநிறைவு பெற்று இருப்பர்.(37) எந்த மனிதனாலும் அறிந்தோ, அறியாமலோ, புலன்களாலோ, மனத்தாலோ, செய்யப்படும் பாவங்கள் அனைத்தும், மஹாபாரதத்தைக் கேட்பதால் அழிந்து போகும். மேன்மையான பிறப்புகளான பாரத இளவரசர்களின் வரலாறே மஹாபாரதம் என்றழைக்கப்படுகிறது.(38,39) இந்தச் சொற்தோற்றத்தை அறிந்தவர்களின் பாவங்கள் கழுவித் தூய்மையாகப்படுகின்றன. இந்தப் பாரதக் குலத்தின் வரலாறு அற்புதமானதாக இருப்பதால்,(40) அஃது உரைக்கப்படும்போது, நிலையாதவர்களின் (அநித்யமானவர்கள்) பாவங்களை உறுதியாகப் போக்குகிறது. கிருஷ்ண துவைபாயன முனிவர் {வியாசர்} இந்தத் தொகுப்பை மூன்று வருடங்களில் நிறைவு செய்தார்.(41) தினமும் எழுந்து, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தனது ஆன்மீகக் கடமைகளை முடித்து மஹாபாரதத்தைத் தொகுத்தார்.(42) எனவே, இஃது உறுதியேற்றிருக்கும் (நோன்பிருக்கும்) பிராமணர்களால் கேட்கத்தக்கது. மற்றவர்கள் கேட்பதற்காக யாரொருவர் கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} உரைத்திருக்கும் இந்தப் புனித விவரிப்பை உரைக்கிறாரோ, அவருக்கும், அவர் சொல்லிக் கேட்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் அவர்களை நல்லவையும் தீயவையுமான கர்மங்கள் பாதிக்காது.(43,44)

பித்ருகடனே தலையாய கடமை என்ற பொருளில் சிரார்த்தம் என அழைக்கப்படுகிறது.

தகுதியை {புண்ணியத்தை} அடைய விரும்பும் மனிதன், இதை முழுமையாகக் கேட்க வேண்டும். இஃது எல்லா வரலாறுகளுக்கும் இணையானது. இதைக் கேட்பவர்கள் எவரும் இதயத் தூய்மையை அடைவர்.(45) சொர்க்கத்தை அடைபவனின் மனநிறைவை விட, இந்தப் புனிதமான வரலாற்றைக் கேட்பதால் அடையும் மனநிறைவானது மேலானது.(46) கேட்கவோ, மரியாதையுடன் அது கேட்கப்படவோ {உபன்யாசம் ஏற்பாடு செய்தல், உரைத்தல்} செய்யும் அறம்சார்ந்த மனிதன், ராஜசூய வேள்வி செய்தும், அசுவமேத வேள்வி (குதிரை வேள்வி) செய்தும் கிடைக்கும் பலனைப் பெறுவான்.(47)

ரத்தினங்களின் சுரங்கமாகவும், பெரும் கடலாகவும், பெருமலை மேருவாகவும் பாரதம் போற்றப்படுகிறது.(48) இந்த {மஹாபாரத} வரலாறு வேதத்திற்கிணையானதும், புனிதமானதும் அற்புதமானதுமாகும். {மஹாபாரதம்} கேட்பதற்குத் தகுதியானது, காதுகளுக்கு இனிமையானது, பாவங்களைப் போக்கவல்லது, அறங்களை வளர்க்கவல்லது.(49) ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, ஒருவன் பாரதத்தின் {மஹாபாரதத்தின்} ஒரு பிரதியை கேட்பவருக்குக் கொடுப்பானேனால், கடலை கச்சையாக அணிந்திருக்கும் முழுப் பூமியையே அவனுக்குப் பரிசாகக் கொடுத்ததாகப் பொருளாகும்.(50) ஓ பரீக்ஷித்தின் மைந்தா {ஜனமேஜயா}, நான் முழுமையாகச் சொல்லப்போகும் இந்த இனிய விவரிப்பு, அறங்களையும் வெற்றியையும் கொடுக்கவல்லதாகும். கவனமாகக் கேட்பாயாக.(51) முனிவர் கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} மூன்று வருடங்களாகத் தொடர்ந்து, இந்த அற்புதமான வரலாறான மஹாபாரதத்தைத் தொகுத்தார்.(52) பாரத ஏகாதிபதிகளில் காளையே {ஜனமேஜயனே}, அறம், பொருள், இன்பம், வீடு சம்பந்தமாக இதில் பேசப்படும் அனைத்தும் எங்கேயும் பேசப்படலாம், ஆனால், இந்த வரலாற்றில் அடங்காதது எதையும் எங்கும் காண முடியாது” {என்றார் வைசம்பாயனர்}. (53)

உபரிசரன் (எ) வசு! | ஆதிபர்வம் – பகுதி 63அ-(ஆதிவம்சாவதரணப் பர்வம் – 5)கடுந்தவம் இருந்த உபரிசரனைச் சமாதானப்படுத்திய இந்திரன் சேதி நாட்டைக் கவனமாக ஆளச் சொல்வது

வைசம்பாயனர் சொன்னார், “உபரிசரன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்தவனாக இருந்தான். வேட்டைக்கும் அவன் அடிமையாக இருந்தான்.(1)

வசு என்றும் அழைக்கப்பட்ட அந்தப் பௌரவகுல மன்னன் {உபரிசரன்}, இந்திரனின் ஆலோசனையின்படி அருமையானதும், இன்பத்தை அளிப்பதுமான சேதி நாட்டை அடக்கி ஆண்டான்.(2) சில காலங்களுக்குப் பிறகு, ஆயுதங்களை விடுத்து, தனிமையான இடத்தில் இருந்து, கடுந்தவம் செய்தான். அந்தக் காலத்தில், அவன் {உபரிசரன்} தேவர்களின் தலைமைப் பதவியை வேண்டிக் கடுந்தவம் இருக்கிறான் என்று எண்ணிய தேவர்கள், இந்திரனின் தலைமையில் வந்து அந்த ஏகாதிபதியை {உபரிசரனை} அணுகினர்.(3) தேவர்கள், அவன் {உபரிசரன்} முன் தோன்றி, மென்மையாகப் பேசி அவனைத் தவத்தைக் கைவிடவைத்து வெற்றி பெற்றனர்.(4)  தேவர்கள், “ஓ பூமியின் தலைவா! {உபரிசரனே} பூமியில் அறம் குறையாதபடி நீ பார்த்துக் கொள்ள வேண்டும். உன்னால் காக்கப்பட்ட அந்த அறம், பதிலுக்கு இந்த அண்டத்தையே காக்கும்” என்றனர்.(5)

அதன்பிறகு இந்திரன், “ஓ மன்னா! {உபரிசரா} கவனமாகவும், உறுதியாகவும் இருந்து பூமியில் அறத்தைக் காப்பாற்றுவாயாக. அறம் சார்ந்து வாழ்வதாலேயே, (மறுமையில்) பல புனிதமான பகுதிகளை நீ நித்தியமாய்க் காண்பாயாக.(6) நான் தேவலோகத்தைச் சார்ந்தவனாகவும், நீ பூலோகத்தைச் சார்ந்தவனாகவும் இருப்பினும், நீ எனக்கு நண்பனாகவும், அன்புக்குரியவனாகவும் இருக்கிறாய். ஓ மனிதர்களின் மன்னா! {உபரிசரா} இன்பந்தருவதும், விலங்குகள் நிறைந்ததும், புனிதமானதும், செல்வமும் {தனமும்}, சோளமும் {தானியங்களும்} நிறைந்ததும், சொர்க்கத்தைப் போல் பாதுகாக்கப்பட்டதும், உவப்பான தட்பவெப்ப நிலை கொண்டதும் {சீதோஷ்ணமுள்ளதும்}, இன்பத்திற்குரிய அனைத்து பொருள்களாலும் அருளப்பட்டதும், செழிப்பானதுமான பூமியின் இந்தப் பகுதியிலேயே வாழ்வாயாக.(7,8) ஓ சேதியின் ஏகாதிபதியே! {உபரிசரனே} உனது ஆளுகைக்குட்பட்ட இந்த இடம் வளங்களால் நிறைந்துள்ளது. ரத்தினங்கள், விலைமதிப்பில்லாக் கற்கள், வளமான தாதுக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.(9) இந்தப் பகுதியில் உள்ள நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் அறம் சார்ந்து {அர்ப்பணிப்புடன்} இருக்கின்றன. மக்களும் நேர்மையாகவும், மனநிறைவுடனும் இருக்கின்றனர். அவர்கள் கேலிக்காகக் கூடப் பொய் பேசுவதில்லை.(10)

மகன்கள் தங்கள் தந்தைகளிடம் இருந்து சொத்தைப் பிரித்துக் கொள்வதில்லை. அதுபோக, தங்கள் பெற்றோரின் நன்மையிலேயே எப்போதும் விருப்பங்கொண்டுள்ளனர். உழுவதற்காக ஏரில் பூட்டப்படவோ, வண்டியில் பாரம் சுமக்க வைக்கவோ உள்ள மாடுகள் மெலிந்தவையாக இல்லை. (11) மாறாக அவை நன்றாகப் பேணப்பட்டுத் பருத்தவைகளாக இருக்கின்றன. சேதியில், நான்கு வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவர்களும் அவரவர்களுக்கான தொழில்களையே செய்கின்றனர். மூவுலகங்களில் நடக்கும் காரியங்கள் அனைத்தையும் நீ அறிந்திருப்பாயாக. (12) ஆகாயத்தில் தேவர்கள் மட்டுமே பயணிக்கும் ஸ்படிகமயமான தேர் ஒன்றை நான் உனக்குத் தருகிறேன்.(13) உலக மனிதர்களிலேயே நீ ஒருவன் மட்டுமே, தேர்களிலேயே சிறந்ததான இந்தத் தேரில், உடல் கொண்ட தேவனைப் போலப் பறந்து செல்வாய்.(14) வாடாத தாமரைகளைக் கொண்ட வெற்றி மாலை {வைஜயந்தி மாலை} ஒன்றை உனக்கு நான் தருகிறேன். போர்க்களங்களில் நீ அதை அணிந்திருந்தால், ஆயுதங்களால் காயமடையமாட்டாய்.(15) ஓ மன்னா {உபரிசரா}, ஒப்பற்றதும், அருளப்பட்டதுமான இந்த மாலை, பூமியில் இந்திரனின் மாலை {வைஜயந்தி மாலை} என்று அறியப்படும். {அணிந்து கொள்ளும்} உனக்கு இது தனி அடையாளமாகட்டும்” என்றான் {இந்திரன்}.(16)

விருத்திரனைக் கொன்றவன் (இந்திரன்), அந்த மன்னனுக்கு {உபரிசரனுக்கு}, நேர்மையானவர்களையும், சாதுக்களையும் காப்பதற்காக ஒரு மூங்கில் தடியைக் {கோலைக்} கொடுத்தான்.(17) ஒரு வருடம் சென்ற பிறகு, அந்த மன்னன், அந்தக் கோலை நிலத்திலே நாட்டி அதைக் கொடுத்தவனான சக்ரனை {இந்திரனை} வழிபட்டான்.(18) அப்போதிலிருந்து, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, மன்னர்கள் அனைவரும், வசுவின் {உபரிசரனின்} உதாரணத்தைத் தொடர்ந்து, தரையில் மூங்கில் தடியை நட்டு இந்திரனை வழிபட்டு, {இந்திரவிழாவைக் [இந்திரோத்ஸவத்தைக்]} கொண்டாடி வருகின்றனர்[1].(19) (கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, “அப்போது பூமியில் இந்திரனைப் பூஜிப்பதற்காக அந்த அரசன் அந்தக் கோலுக்கு எல்லா உத்ஸவங்களிலும் சிறந்த நகரப்ரவேசம் என்கிற உத்ஸவத்தைச் செய்வித்தான். அதுமுதல் இன்னமும் அந்த ராஜா நடத்தினபடி எல்லா ராஜஸ்ரேஷ்டர்களும் மார்கழி மாதம் சுக்கிலபக்ஷத்தில் கோலுக்கு நகரப்ரவேசத்தைப் பெரிய யாகமாகச் செய்கின்றனர். அதற்கு மறுதினம் அந்தக் கோலைப் பொற்கிங்கிணிகளாலும், சந்தனங்களாலும், புஷ்பமாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்காரஞ்செய்து, அரசர்கள் எடுத்து நாட்டுகின்றனர். புஷ்பமாலைகளாற் சுற்றப்பட்டதும், முப்பத்திரண்டு சாண் அளவுள்ளதுமாகிய அந்தக் கோலைத் தூக்கி ஸுவர்ணமயமான வஸ்திரங்களை அந்தக் கோலுக்குச் சுற்றி, வஸ்திரங்களினாலும், அன்னபானங்களினாலும் பிராமண ஸ்ரேஷ்டர்களைத் திருப்தி செய்வித்து அவர்களால் புண்ணியாஹவாசனம் செய்வித்து ஆறுகஜம் உயரமிருக்கும் பள்ளத்தில் {ஆறு கஜம் = 18 அடி; ஒரு அடி =1-1/3 சாண்; ஆக 6 கஜம் என்பது 24 சாண். 24 சாண் வெளியே தெரியும்படி நடவேண்டும் என்பதே வழக்கம். ஆறுகஜ உயரம் வெளியே தெரியும்படி இருக்க எட்டு சாண் பள்ளத்தில் நடவேண்டும் என்றிருக்க வேண்டும். 24 சாண் என்பது 24 தத்துவங்களைக் குறிக்கும். (பூதங்கள் – 5 (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு), ஞானேந்திரியங்கள் -5 (மெய், வாய், கண், மூக்கு, செவி), கர்மேந்திரியங்கள் -5 (வாய், கை, கால், மலவாய், கருவாய்), தன்மாத்திரைகள் -5 (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்), அந்தக்கரணங்கள் -4 ((மனம், அறிவு, நினைவு, முனைப்பு) எட்டு சாண் என்பது உடலைக் குறிக்கும். 24 தத்துவங்கள் எண்சாண் உடலில் நிலைபெறுவதை இது அடையாளப்படுத்துகிறது.}  அந்தத்துவஜத்தை நாட்டுகின்றனர். அந்தக் காலத்தில் சங்கங்களும், பேரிகைகளும், மிருதங்கங்களும் வாசிக்கப்படும். மஹாத்துமாவான உபரிசரவஸுவினிடம் அன்பினால் தானே கோல் வடிவமெடுத்துக் கொண்டு வந்த பகவனாகிய இந்திரன் அந்தக் கோலில் பூஜிக்கப்படுகிறான். மணிபத்திரன் முதலிய யக்ஷர்களும், தேவர்களுடன் பூஜிக்கப்படுகின்றனர். வேண்டுகிறவர்களுக்கு அனேகவிதமான தானங்களைக் கொடுத்து இஷ்டமித்திரர்களுடன் புஷ்பமாலைகளாலும், பலவித ஆடைகளாலும் அலங்காரஞ்செய்து கொண்டு, ராஜாவின் ஆக்ஞையினால் ஜலம் நிரம்பிய அநேகம் தோல் துருத்திகளைக் கொண்டு விளையாடி, ராஜாவைக் கண்டு வேடிக்கையான பேச்சுகளைப் பேசி, நகரத்து ஜனங்களும், கிராமத்து ஜனங்களும் விளையாடுகின்றனர். ஸூதர்களெனப்பட்ட பௌராணிகர்களும் {சூதர்கள் மட்டுமே புராணம் சொல்பவர்களாகவும் இருந்திருப்பார்களோ என இந்த வாசகம் சிந்திக்க வைக்கிறது}, அரசனைப் பற்றிய ஸ்தோத்திரங்களைப் பாடுகிற மாகதர்களும், நாடகம் ஆடுகிறவர்களும், நர்த்தனஞ்செய்கிறவர்களும் ஸந்தோஷிக்கின்றனர். ராஜஸ்ரேஷ்டரே! அந்த உபரிசரராஜன் காலத்தில் எல்லாரும் ஸந்தோஷமாகப் பெரிய உத்சவத்தைச் செய்தனர்” என்றிருக்கிறது. இந்தக் குறிப்பு, கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, பிபேக்திப்ராயின் பதிப்பிலோ இல்லை. இன்றும் எந்த விழா எடுப்பதாக இருந்தாலும் மூங்கிலால் முகூர்த்தக் கால் நடுவது என்னும் உற்சவம் இதைப் போலவே கொண்டாடப்படுகிறது. இன்று பதினாறு கணுக்கள் கொண்ட மூங்கிலை, நான்கு கணுக்கள் நிலத்தில் பதியுமாறு நட்டு, முகூர்த்தக்கால் நடப்படுகிறத்ய். சங்ககாலத்தில் இந்திரவிழா, வசந்தவிழா போன்றவை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டன.)அந்தத் தடியை நட்டு வைத்துவிட்டு, அதைத் தங்கமயமான துணியாலும், நறுமணத் தைலங்களாலும், மலர் மாலைகளாலும் மற்ற பல அணிகலன்களாலும் அலங்கரிக்கின்றனர்.(20)

இப்படியே தேவனான வாசவன் {இந்திரன்} மலர்மாலைகளாலும், அணிகலன்களாலும் உரிய முறையில் வழிபடப்படுகிறான். இந்திரனும் அம்மன்னனை வாழ்த்துவதற்காக, அன்னத்தின் உருவைக் கொண்டு, அம்மன்னனின் {உபரிசரனின்} வழிபாட்டை ஏற்றான். அப்படி வந்த இந்திரன், வசுவினால் செய்யப்பட்ட வழிபாட்டைக் கண்டு, ஏகாதிபதிகளில் முதன்மையான மன்னன் வசுவிடம் {உபரிசரனிடம்}, “சேதி நாட்டின் மன்னனைப் போல இப்படி என்னை மகிழ்ச்சியுடன் வணங்கி, இந்த விழாவைக் கொண்டாடும் மன்னர்களும், பிற மனிதர்களும், பெரும்புகழையும், வெற்றியையும் தனது நாட்டிற்காகவும், அரசுக்காகவும் அடைவர்.(21-24) அவர்களது நகரங்களும் விரிந்து எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்” என்றான் {இந்திரன்}. மன்னன் வசு மனநிறைவு கொண்ட அந்தத் தேவர்களின் தலைவனான உயர் ஆன்ம மகவத்தின் {இந்திரனின்} இந்த வார்த்தைகளால் மகிழ்ந்தான். எந்த மனிதர்கள், நிலங்களையும், ரத்தினங்களையும், விலைமதிப்பில்லா கற்களையும் பரிசாகக் கொடுத்து இந்திரனுடைய விழாவை கொண்டாடினரோ, அவர்கள் உண்மையிலேயே உலகத்தோரால் மதிக்கப்பட்டனர்.(25-27) சேதி நாட்டின் தலைவனான வசு, இந்திரனால் வரங்கள் அருளப்பட்டு, பெரிய வேள்விகளைச்செய்தும், இந்திர விழாவைக் கொண்டாடினான். சேதி நாட்டில் இருந்து கொண்டு அவன் உலகத்தை ஆண்டான். இந்திரனை மனநிறைவு கொள்ளச் செய்ய வசு இந்திர விழாவைக் {இந்திரோத்சவத்தை ஒவ்வொரு ஆண்டும்} கொண்டாடினான். வசுவுக்கு {உபரிசரனுக்கு} பெரும்பலமும் சக்தியும், அளவிடமுடியா வீரமும் கொண்ட ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.(28,29)

தன் மகன்கள் ஒவ்வொருவரையும், தனது அரசாங்கத்தின் ஒவ்வொரு பகுதிக்குப் பிரதிநிதியாக அமர்த்தினான் அந்த மன்னன். அவனது மகன் பிருஹத்ரதன் மகதத்துக்கு மன்னனாக நியமிக்கப்பட்டு மஹாரதன் என்று அழைக்கப்பட்டான்{மஹாரதனாக விளங்கினான்}.(30) பிராத்யக்ரஹாவும், மணிவாகனன் என்று அழைக்கப்பட்ட குசாம்பனும், மாவெலனும் {மத்சில்லனும்}, பெரும் வீரம் கொண்டவனும், போரில் தோல்வியடையச் செய்யமுடியாதவனுமான யதுவும் அம்மன்னனின் மற்ற மகன்களாவர்.(31) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, இவர்களே அந்த அரசமுனியின் {உபரிசரனின்} பெரும் சக்தி கொண்ட புதல்வர்களாவர். அந்த ஐந்து மகன்களும் அரசுகளையும், நகரங்களையும் தங்கள் பெயரில் உருவாக்கிக் கொண்டு,(32) பல காலங்களுக்கு நீடித்த தனிப்பரம்பரைகளை நிறுவினர்.

சாபம் விலகிய மீன்! | ஆதிபர்வம் – பகுதி 63ஆ(ஆதிவம்சாவதரணப் பர்வம் – 5)உபரிசரனின் உயிர்வித்தை விழுங்கிய மீன்; மீனுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது; ஆண் {சத்யவதியின் சகோதரன்} மத்ஸ்ய நாட்டு மன்னனாக வளர்ந்தது.

மன்னன் வசு {உபரிசரன்}, இந்திரனால் பரிசாக அளிக்கப்பட்ட தனது தெய்வீக தேரில் அமர்ந்து வானத்தினூடே செல்லும்போது, கந்தர்வர்களும், அப்சரஸ்களும் (தேவலோக பாடகர்களும், ஆடல் கலைஞர்களும்) அவனை {உபரிசரனை} அணுகினர். அப்படி அவன் {உபரிசரன்} மேலுகங்களில் உலவியதால் {மேலே சஞ்சரிப்பவன் என்ற பொருள்பட} உபரிசரன் என்று அழைக்கப்பட்டான்.(33,34)

அவனது தலைநகரத்தின் அருகிலே சுக்திமதி என்ற ஆறு ஓடியது. அந்த ஆறானது, ஒரு காலத்தில், காமத்தால் பித்துப்பிடித்ததும், உயிரையுடையதுமான கோலாஹல மலையால் தாக்கப்பட்டது.(35) மலையின் தவறான முயற்சியைக் கண்ட வசு {உபரிசரன்}, தனது காலால் அந்த {கோலாஹல} மலையை ஓங்கி உதைத்தான். வசு உதைத்ததனால் கோலாஹல மலையிலிருந்து (அந்த மலையின் அணைப்பிலிருந்து) ஆறு வெளியே வந்தது.(36) ஆனால் அந்த {கோலாஹல} மலை, அந்த {சுக்திமதி} நதியிடம் இரட்டையரான இரு மக்களைப் பெற்றெடுத்தது. கோலாஹலத்தின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்த வசுவுக்கு {உபரிசரனுக்கு} நன்றிக்கடனாக, தன் பிள்ளைகளை அந்த {சுக்திமதி} ஆறு அவனுக்கே {உபரிசரனுக்கே} கொடுத்தது.(37) அரசமுனிகளில் சிறந்தவனும், பொருளளிக்கும் வள்ளலும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான வசு {உபரிசரன்}, அந்த {சுக்திமதி} ஆற்றின் மகனைத் தனது படைகளுக்குத் தலைவனாக நியமித்தான்.(38) கிரிகை என்ற அந்த {சுக்திமதி} நதியின் மகள், வசுவால் {உபரிசரனால்} மணந்து கொள்ளப்பட்டாள். வசுவின் மனைவி கிரிகை, தனது தீட்டுக்காலம் முடிந்து, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தனது நிலையைத் தனது தலைவனிடம் {உபரிசரனிடம்} தெரிவித்தாள். ஆனால், அதே நாளில் பித்ருக்கள், ஏகாதிபதிகளில் சிறந்தவனும், விவேகிகளில் முன்னவனுமான அந்த வசுவிடம் {உபரிசரனிடம்} வந்து,(39-40) தங்கள் சிரார்த்தத்திற்காக ஒரு மானைக் கொன்று கொடுக்கச் சொன்னார்கள். மன்னனும் {உபரிசரனும்}, பித்ருக்களின் கட்டளையை மதிக்காமல் இருக்கக்கூடாது என்று எண்ணி,(41) பெரும் அழகைக் கொடையாகக் கொண்ட, மற்றுமொரு ஸ்ரீயாக (லட்சுமியாக) இருந்த கிரிகையை நினைத்துக் கொண்டே தனியாக வேட்டைக்குக் கிளம்பிப் போனான்.(42)

அது வசந்த காலமாகையால், மன்னன் {உபரிசரன்} சென்ற கானகம், கந்தர்வ மன்னனின் தோட்டத்தைப் போல அழகாக இருந்தது. அங்கே அசோகங்களும், சம்பகங்களும் {செண்பகங்களும்}, சுதங்களும் {மாமரங்களும்}, அதிமுக்தங்களும் {தினிசமரங்களும்} நிறைந்திருந்தன. அங்கே புன்னாகம் {புன்னை}, கர்ணீகரம் {கொன்றை}, வாகுலம் {மகிழம்}, திவ்யபாதாளம் {பாதிரிமரங்கள்},(43) பாதாளம் {பலா}, நாரிகேளம் {தென்னை}, சந்தனம், அர்ஜுனம் {மருதமரம்} போன்ற அழகான புனிதமான மரங்கள் பெரும் நறுமணத்தோடும், சுவை நிறைந்த கனிகளோடும் காட்சியளித்தன.(44)

அந்த முழுக் கானகமே கோகிலப் பறவைகளின் {குயில்களின்} இனிய நாதத்தால் பித்துப்பிடித்தது போல இருந்தது. போதையுடனிருந்த வண்டுகளின் ஹூங்காரத்தை அந்தக் கானகம் எதிரொலித்துக் கொண்டிருந்தது.(45) மன்னன் {உபரிசரன்} மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தான், ஆனால் தனது மனைவியை {கிரிகையை} தன் முன்னால் காணவில்லை. ஆசையால் பித்துப்பிடித்து, அந்தக் கானகம் முழுதும் அங்குமிங்கும் அலைந்தான். அடர்ந்த இலைகளைக் கொண்டதும், அழகான மலர்களால் மூடப்பட்ட கிளைகளை உடையதுமான அசோக மரத்தைக் கண்டு,(46,47) அதன் நிழலில் அமர்ந்தான். அந்தக் காலத்தின் இனிமையாலும், சுற்றியிருந்த மலர்களின் நறுமணத்தாலும், இதமான தென்றலாலும், அவனால் {உபரிசரனால்} அவன் மனதை அழகான கிரிகையை நினைக்காமல் கட்டுப்படுத்த முடியவில்லை.(48,49) [2](வெளிப்படையான காரணத்தினால், சுலோகம் 50 முதல் 52 வரை மொழிபெயர்க்கவில்லை என்று மன்மதநாததத்தர் குறிப்பிடுகிறார். கங்குலியிலும் அவ்வரிகள் இல்லை. கும்பகோணம் பதிப்பில், “தற்செயலாகப் புஷ்பங்களால் கிளைகளின் நுனிகள் மறைக்கப்பட்டதும், தளிர்களினால் சோபிக்கின்றதும், அழகானதும், பூங்கொத்துக்களால் மறைக்கப்பட்டதுமாகிய ஓர் அசோக மரத்தைக் கண்டான். அதன் கீழ் நிழலில் ஸுகமாக வீற்றிருந்த ராஜன் காற்றினால் கொண்டுவரப்பட்டதும், தேன்மணமுள்ளதுமாகிய அந்த இனிய புஷ்பவாஸனையை மோந்து ஸந்தோஷமடைந்தான். மனைவியை நினைக்கும்போது அந்த ராஜாவுக்கு காமமென்னும் அக்னி விருத்தியாயிற்று. அவன் இருண்ட காட்டில் ஸஞ்சரிக்கும்போது அவனுடைய வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட மாத்திரத்தில், அந்த அரசன், “என்னுடைய வீரியம் வீணாகக் கூடாது” என்று நினைத்து, உடனே அதனை இலையில் ஏந்தினான். ராஜா அந்த வீரியத்தில் தன் மோதிரத்தினால் முத்திரை வைத்துச் சிவந்த அசோக புஷ்பங்களாலும், தளிர்களினாலும் மூடிக் கட்டினான். “இந்த என் வீரியம் வீணாக விழுந்ததாகாமலும், அந்த என் பத்தினியின் ருது காலம் வீணாகமலும் எவ்வாறிருக்கும்” என்று அறம், பொருள் இவைகளின் நுட்பமான உண்மையை அறிந்திருந்த அந்த ஸமர்த்தனாகிய ராஜஸ்ரேஷ்டன் சிந்தித்துப் பலமுறை ஆராய்ந்து பார்த்து, தன் வீரியம் வீணாவதில்லையென்பதை நிச்சயித்து, அதைத் தன் பத்தினிக்கு அனுப்புவதற்கு, “இது காலம்: என்று நினைத்து, அதற்குக் கர்ப்பாதான மந்திரத்தை ஜபித்தான்” என்றிருக்கிறது. இவையே 50 முதல் 52 வரையுள்ள ஸ்லோகங்களாக இருக்க வேண்டும். பிபேகத் திப்ராயின் பதிப்பில் மேற்கண்ட வரிகள் மிகச் சுருக்கமாக இருக்கின்றன)

துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் {உபரிசரன்} கண்டான். தர்மம் (அறம்) மற்றும் அர்த்தம் (பொருள்) குறித்த நுட்பமான உண்மைகளை அறிந்த அவன் {மன்னன் உபரிசரன்} அதனிடம் {பருந்திடம்} சென்று,(53) “இனிமையானவனே, இந்த எனது வித்தை {உயிரணுவை} எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் {கிரிகையிடம்} இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது” என்றான் {சேதி நாட்டின் மன்னன் உபரிசரன்}.(54) அந்தத் துரிதமானப் பருந்து, மன்னனிடம் {உபரிசரனிடம்} அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது.(55) அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது.(56) இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வித்து யமுனையின் நீரில் விழுந்தது.(57)

உயர்ந்த அந்தஸ்து கொண்ட அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள்.(58) வசுவின் {உபரிசரனின்} வித்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அத்ரிகை விரைவாக அதை எடுத்து, உடனே விழுங்கிவிட்டாள்.(59) சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த {அப்சரஸ் அத்ரிகை} மீன் வித்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன.(60) அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதைக் கண்ட மீனவர்கள் ஆச்சரியமடைந்து, (அவர்கள் அந்த மன்னனின் குடிகளாக இருப்பதால்) மன்னன் உபரிசரனிடம் வந்து நடந்ததைக் கூறினர்.(61) அவர்கள் {மீனவர்கள்}, “ஓ மன்னா {உபரிசரா}, மனித உருவத்தில் இருக்கும் இந்தக் குழந்தைகளை மீனின் வயிற்றிலிருந்து கண்டெடுத்தோம்” என்றனர். ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான்.(62) அந்தக் குழந்தை பிற்காலத்தில் அறம் சார்ந்து நடக்கும் உண்மை நிறைந்த ஏகாதிபதியான மத்ஸ்யனாக ஆனான். அந்த இரட்டையர்களின் பிறப்புக்குப் பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} தனது சாபத்தில் இருந்து விடுபட்டாள்.(63)

அவள் {அப்சரஸ் அத்ரிகை} முன்னமே அந்தச் சிறப்பு வாய்ந்தவரால் (சபித்தவரால்), தான் மீனாக இருக்கும்போது மனித உருவில் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததும் தனது சாபத்திலிருந்து விடுபடுவாள் என்று சொல்லப்பட்டிருந்தாள்.(64) அந்த வார்த்தைகளுக்கிணங்க, இரு குழந்தைகள் பிறந்ததும், மீனவர்களால் கொல்லப்பட்டுத் தனது மீன் உடலைத் துறந்து, சுய உருவம் கொண்டாள்.(65) அதன்பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} எழுந்து, சித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும் செல்லும் பாதையில் சென்றாள்.

பராசரரின் ஆசைக்கிணங்கிய சத்தியவதி! | ஆதிபர்வம் – பகுதி 63இ(ஆதிவம்சாவதரணப் பர்வம் – 5)மீனுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை சத்யவதியாகவும் வளர்ந்தது; சத்தியவதிக்குப் பிறந்த வியாசர்…

அந்த அப்சரஸின் மகளும், மீன் நாற்றம் கொண்டவளுமான அக் குழந்தையை மன்னன் {சேதி நாட்டு மன்னன் உபரிசரன்} மீனவர்களிடம் {செம்படவர்களிடம்} கொடுத்து, “இவள் உங்கள் மகளாக இருக்கட்டும்” என்றான்.(66,67) அந்தப் பெண்குழந்தை சத்தியவதி என்ற பெயரால் அறியப்பட்டாள். மிகுந்த அழகைக் கொடையாகக் கொண்டு, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு, இனிய புன்னகை உடையவளாய், மீனவர்களின் தொடர்பால், சிறிது காலம் மீன் நாற்றத்தோடே இருந்தாள்.{அதனால் அவள் மச்சகந்தி என்றும் அறியப்பட்டாள்}(68) தனது (வளர்ப்புத்) தந்தைக்குச் சேவை செய்வதற்காக, யமுனையின் நீரில் அவள் ஓடம் செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த வேலையை அவள் {சத்தியவதி} செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள், யாத்திரை செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் பராசரரால் சத்தியவதி பார்க்கப்பட்டாள்.(69) பேரழகைக் கொடையாகக் கொண்டவளும், துறவிகளுக்கும் ஆசையைத் தரும் வடிவம் உடையவளும், இனிய புன்னகையை உடையவளுமான அவளைக் கண்டதும் ஞானியான முனிவர் {பராசரர்} அவளை அடைய விருப்பம் கொண்டார்[3].(70)(இந்த இடத்தில் கும்பகோணம் பதிப்பில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. அது கங்குலியில் இல்லை. அது பின்வருமாறு : சக்தியின் மகனாகிய பராசரர் சத்தியவதியைக் கண்டு அவளது பிறப்பைக் குறித்துச் சிந்தித்து, அவளை, “வசுவின் மகளே” என்றழைத்தார். அப்படி அழைத்த காரணத்தைச் சத்தியவதி கேட்க, அவர், “அமிர்தத்தை உண்ட பர்ஹிஷத்துகள் என்ற பிதிர்த்தேவதைகளுக்கு நீ மனத்தினால் உண்டான மகளாவாய். அச்சோதம் {தெளிந்த நீர்} என்ற தேவலோக தடாகத்திலிருந்து நீ உண்டானதால் உனக்கு அச்சோதையென்று பெயர் உண்டாயிற்று. மனத்தினால் நீ உண்டானவள் ஆதலால், உன் பிதிர்க்களை நீ அறியாய். நீ அத்ரிகையென்னும் அப்சரசுடன் ஆகாசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வசு என்ற பெயர் கொண்ட மனுவின் மகனை உனக்குத் தந்தையாக விரும்பினாய். வேறு ஒரு தந்தையை நீ வேண்டியதால், யோக சக்தியை இழந்து நீ கீழே விழுந்தாய்)

திரஸரேணு எனப்பட்ட சிறு அணுவளவான உன் பிதிர்கள், “அஞ்சாதே” என்று சொன்னதால் ஆகாயத்திலேயே நின்றாய். அதன் பின் அவர்கள் “யோக சக்தியற்று விழுகிறாய். தேவர்களுக்குச் செய்த கர்மம் அப்போதே பலிக்கும். மனிதருக்கோ செய்த கர்மங்கள் வேறு பிறவியில் பலிக்கும். அடுத்தப் பிறவியில் இதன் பலனை அனுபவிப்பாய். கங்கையில் பிறந்திருக்கும் அத்ரிகையின் கருவில் நீ மகளாகப் பிறப்பாய். பராசரருக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாய். அவன் வேதங்களை நான்காக வகுப்பான். மஹாபிஷக்கின் மகனாகிய சந்தனுவிடம் சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையும் பெறுவாய். அதன் பிறகு மீண்டும் உன் உலகத்திற்குத் திரும்புவாய். இந்த மன்னனுக்கே {உபரிசரனுக்கு} அத்திரிகையிடம் நீ மகளாகப் பிறப்பாய். இருபத்தெட்டாவது சதுர்யுகத்தைச் சேர்ந்த துவாபர யுகத்தில் நீ மீனின் யோனியில் உயிரை அடைவாய்” என்று சொன்னார்கள்.

அத்திரிகை, பிரம்மாவின் சாபத்தினால் மீனாகப் பிறந்து, உன்னைப் பெற்ற பிறகு சொர்க்கம் சென்றாள். அந்த அச்சோதையாகிய நீ வசுவென்ற மன்னனின் வீரியத்திற்கு, மீனாக இருந்த அப்சரஸிடம் பிறந்தாய். ஆதலால், வசுவின் மகளே, உனக்கு மங்கலமுண்டாகட்டும். வம்சவிருத்திக்காக ஒரு மகனை நான் வேண்டுகிறேன். அழானவளே, என்னுடன் சங்கமிப்பாய்” என்று நயமாகப் பேசினார் பராசரர். என்று இருக்கிறது.

முனிவர்களில் காளையான அந்த முனிவர் {பராசரரால்}, தெய்வீக அழகும், சீராக மெலிந்த தொடைகளையும் கொண்ட வசுவின் {உபரிசரனின்} மகளிடம் {சத்தியவதியிடம்}, “ஓ அருளப்பட்டவளே! எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக” என்றார்.(71) அதற்குச் சத்தியவதி, “ஓ புனிதமானவரே! {பராசரரே} நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது?” என்றாள் {சத்தியவதி}.(72) அவளால் {சத்தியவதியால்} இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே (அதுவரை இல்லாத) மூடுபனியை உண்டாக்கினார். அது {மூடுபனி} அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.(73) முனிவரால் {பராசரரால்} உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட அந்தப் பெண் {சத்தியவதி} பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை {சத்தியவதி},(74) “ஓ புனிதமானவரே! {பராசரரே} நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக. ஓ பாவங்களற்றவரே! {பராசரரே} உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.(75) ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே {பராசரரே}, எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும்? அதன்பிறகு என்னால் எனது உயிரைத் தாங்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக” என்றாள்.(76)

அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, அவள் {சத்தியவதி} சொன்னதையெல்லாம் கேட்டு மனநிறைவுகொண்டு, “எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்.(77) ஓ அச்சங்கொண்டவளே, ஓ அழகான மங்கையே {சத்தியவதியே}, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ அழகான புன்னகைக் கொண்டவளே, எனது அருள் எப்போதும் கனியற்றதாக (பலனற்றதாக) இருந்ததில்லை” என்றார்.(78) இப்படிச்சொல்லப்பட்ட அந்த மங்கை {சத்தியவதி}, தனது உடல், (அப்போது கொண்டிருந்த மீன் நாற்றத்திற்குப் பதிலாக) இனிமையான நறுமணத்தை வெளியிட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவரும் {பராசரரும்}, அவளது இதயத்தில் இருந்த விருப்பத்தை நிறைவேற்றினார்.(79) கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவை அடைந்த அவளுக்கு {சத்தியவதிக்கு} உடனே பருவ காலமும் வந்தது. அற்புதமான செயல்கள் பல செய்த அந்த முனிவரின் {பராசரரின்} அணைப்பை அவள் {சத்தியவதி} ஏற்றாள்.(80) அதுமுதல் அவள் {சத்தியவதி} மனிதர்களால் கந்தவதி ({பரிமளகந்தி}, நறுமணம் கொண்டவள்) என்று அழைக்கப்பட்டாள். ஒரு யோஜனைக்கு அப்பாலிருந்த மனிதர்களுக்கு அவளது நறுமணத்தை நுகர முடிந்தது.(81) இதனால் அவள் {சத்தியவதி} யோஜனகந்தா (ஒரு யோஜனைக்கு அப்பாலும் நறுமணத்தைக் கொடுப்பவள்) என்ற மற்றுமொரு பெயராலும் அழைக்கப்பட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த பராசரர், அதன்பிறகு தனது ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.(82)

வரத்தினால் இனிய நறுமணத்தை அடைந்த சத்தியவதி மனநிறைவை அடைந்தாள். பராசரரால் அணைக்கப்பட்டுக் கருவுற்றாலும், அவள் கன்னித்தன்மைக் கெடவில்லை. யமுனையின் தீவு ஒன்றில், அன்றே {கருக்கொண்ட அந்நாளிலேயே} பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட பராசரரின் குழந்தையை {வியாசரைப்} பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} அனுமதியைப் பெற்று, தவத்தில் தனது மனதைச் செலுத்தினான்.(83,84) அவன், “சமயம் வரும் போது, நீ என்னை நினைத்தவுடன் நான் உன் முன் தோன்றுவேன்” என்று சொல்லிவிட்டு {வியாசர்} சென்றுவிட்டான். இப்படியே வியாசர் சத்தியவதிக்கு, பராசரர் மூலம் பிறந்தார்.(85) அவர் {வியாசர்} தீவு ஒன்றில் பிறந்ததால், துவைபாயனர்[4] (தீவில் பிறந்தவர்) என்று அழைக்கப்பட்டார். ([4] பராசரர் த்வீபத்தில் இருந்ததனால் அவர் த்வீபர்; அவருடைய மகன் என்பதால் த்வைபாயனர் என்பது பொருளாகும். த்வீபமாகிற அயனம் – இடம்; அதில் உண்டானதால் த்வைபாயனர் என்று பொருள் கூறுவது பழைய உரையாகும் எனக் கும்பகோணம் பதிப்பில் விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மூல ஸ்லோகத்திலேயே திவீபத்தில் பிறந்ததால் த்வைபாயனர் என அழைக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது)அனைத்தும் கற்ற துவைபாயனர் {வியாசர்},  ஒவ்வொரு யுகத்திலும் அறமானது, தனது கால்களில் ஒன்றை இழப்பதையும்,(86) வாழ்வுக்காலமும், மனிதர்களின் பலமும் யுகங்களைப் பொறுத்தே அமைவதையும் கண்டு, பிரம்மன் மற்றும் பிராமணர்களின் அருளைப் பெறுவதற்காக(87) வேதங்களைத் தொகுத்தார். அதனால் அவர் வியாசர் (தொகுப்பாளர் (அ) சீர்படுத்துபவர்) என்று அழைக்கப்பட்டார். அந்த வரமளிக்கும் சிறந்த மனிதர் {வியாசர்}, சுமந்து, ஜைமினி, பைலர், தனது மகன் சுகர், வைசம்பாயனர் {நான்} ஆகியோருக்கு மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட {நான்கு} வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.(88,89) பாரதம் என்னும் தொகுப்பு அவர்கள் {சீடர்கள்} மூலமாக {அவர்கள் மூலமாகவும், என் மூலமாகவும் வெளிப்பட்டது.

பெரும் போர் காரணகர்த்தர்கள் பிறப்பு | ஆதிபர்வம் – பகுதி 63ஈ(ஆதிவம்சாவதரணப் பர்வம் – 5)மஹாபாரதப் பாத்திரங்களின் பிறப்பு…

அதன்பிறகு, பெரும் சக்தியும், புகழும் கொண்ட பீஷ்மர் அளவிடமுடியாத காந்தியைத் தன்னகத்தே கொண்டு, {பிரபாசன் என்ற வசுவின்} வசுக்களின் அம்சங்களைக் கொண்டு, கங்கையின் கருப்பையில் சந்தனுவால் பிறந்தார்.(90,91) பெரும் புகழ் கொண்ட முனிவர் ஒருவர் ஆணிமாண்டவ்யர் என்ற பெயரில் இருந்தார். அவர் வேதங்களின் விளக்கங்களில் ஆழ்ந்த புலமை கொண்டு, சிறப்புற்றுப் பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு, பெரும் நற்பெயர் பெற்றிருந்தார். அப்பாவியாக இருந்தும், திருட்டுப் பழி சுமத்தப்பட்டு, அந்த வயதான முனிவர் {ஆணிமாண்டவ்யர்}, கழுவிலேற்றபட்டார்.(92)

அதனால் அவர் {ஆணிமாண்டவ்யர்} தர்மதேவனை வரவழைத்து, “எனது குழந்தைப் பருவத்தில் பறக்கும் ஒரு சிறு பூச்சியைக் கூரான புல் கொண்டு நான் துளைத்திருக்கிறேன்.(93) ஓ தர்மா! அந்த ஒரு பாவத்தை நான் நினைவு வைத்திருக்கிறேன். அதைத்தவிர வேறு எந்தப் பாவமும் எனது நினைவில் இல்லை. அப்படியிருந்தாலும், அது முதல் ஆயிரம் மடங்கு தவம் செய்திருக்கிறேன். இத்தனை தவங்களால் அந்த ஒரு பாவத்தை வெல்ல முடியவில்லையா?(94) கொலைகளிலேயே பிராமணனைக் கொல்வது மிகவும் கொடியது. ஆகையால், ஓ தர்மா, நீ பாவம் நிறைந்தவன். நீ பூமியில் சூத்திரனாகப் பிறக்கக் கடவாய்!” என்று சபித்தார்.(95) அந்தச் சாபத்தின் காரணமாகத் தர்மன் சூத்திரனாகவும், பாவங்களற்றவனாகவும், புனிதமான உடல் கொண்டவனும், அறிவுடையவனாகவும் விதுரன் பிறந்தான்.(96)

{முனிவனைப் போன்றவனான சூதன் சஞ்சயன் கவல்கணனனால் பெறப்பட்டான்}[5], பெரும் பலமிக்கவனான சூதன் {கர்ணன்}, குந்தியிடம் அவளது கன்னிமைக்காலத்தில் சூரியன் மூலம் பிறந்தான்.(97) இயற்கையான மார்புக்கவசத்தோடும், முகத்தை மின்னச்செய்யும் காது குண்டலங்களோடும், தனது தாயின் கருவறையில் இருந்து வெளியே வந்தான்.(98) உலகம் முழுதும் புகழ்வாய்ந்தவனும், உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்டவனுமான விஷ்ணு, மூன்று உலகங்களின் நன்மைக்காகவும் வசுதேவர் மூலம் தேவகிக்கு பிறந்தான். அவன் பிறப்பும் இறப்பும் அற்றவனும், சுடர்விடும் பிரகாசம் கொண்டவனும், இந்த அண்டத்தின் அதிபதியும், அனைவரின் தலைவனும் {தெய்வமும்} ஆவான்.(99)

அவனே எல்லாக் காரியங்களுக்கும் மறைமுகக் காரணமாவான். அவன் அழிவற்றவன். அவன் எல்லா உயிருக்குள்ளும் இருப்பவன். நகரும் அனைத்துக்கும் மையம் அவனே. சத்வ, ரஜஸ், தமஸ் {ஆகிய மூன்று} குணங்களின் இருப்பிடம் அவனே. அவனே பிரபஞ்சத்தின் ஆன்மா, அவன் ஒருவனே மாற்றமில்லாதவன். அண்டத்தின் கட்டுமானப் பொருள் அவனே. அவனே படைப்பாளன், அவனே கட்டுப்படுத்துபவன், அவனே எல்லாப் பொருளிலும் மறைமுகமாக இருப்பவன். இந்த அண்டத்தின் ஐந்து பூதங்களுக்கும் ஆதி அவனே. அவன் உயர்ந்த ஆறு குணங்களைக் கொண்டவன். அவனே பிரணவம், அவனே வேதங்களின் ஓம், அளவில்லாதவன், தன் விருப்பத்தைத் தவிர வேறு எந்தச் சக்தியாலும் அசைக்கப்பட முடியாதவன். சிறப்பு மிகுந்தவன். சிறப்பு மிகுந்த சந்நியாசம் எனும் வாழ்க்கை முறையின் உடலே அவன். படைப்பிற்கு முன் அவன் நீரில் மிதந்து கொண்டிருந்தான். இந்தப் பெரும் கட்டமைப்புக்கு அவனே மூலம். அவனே சிறந்த ஒருங்கிணைப்பாளன், அவனே அனைத்தையும் அழிப்பவன். அனைத்திலும் மறைவான சாரம் அவன், அவனே மாற்றம் இல்லாத பெரியவன். புலன் நுகர்வால் அறியப்படும் குணங்கள் இல்லாதவன் அவனே. அவனே அண்டம், ஆதி அந்தம் அற்று, பிறப்பு இறப்பும் அற்று, அளவிடமுடியாத செல்வங்களைக் கொண்டு, அனைத்து உயிர்களுக்கும் பெரும் தகப்பனாக இருப்பவன். அப்படிப்பட்டவன் அந்தக விருஷ்ணி குலத்தில் {யாதவக் குலத்தில்} அனைத்து அறங்களையும் வளர்க்கப் பிறந்தான்.(100-103)

அனைத்து ஆயுதங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களும், பெரும் சக்தி கொண்டு விளங்கியவர்களும், அனைத்து ஞானக்கிளைகளிலும் புலமை கொண்டவர்களும், எல்லாவற்றிலும் நாராயணனுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்களும், அனைத்து ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் தேர்ச்சி பெற்றவர்களுமான சாத்யகியும், கிருதவர்மனும்,(104) {முறையே} சத்யகன் மற்றும் ஹிருதிகனின் மூலம் பிறந்தனர். கடும் தவங்கள் செய்த முனிவர் பரத்வாஜரின் வித்து ஒரு குடத்துக்குள்[6] வைக்கப்பட்டு, அது வளரத்துவங்கியது. அந்த வித்தில் இருந்து தோன்றியவர்தான் துரோணர்(துரோணி என்ற பாத்திரத்தில்) (பானையில் பிறந்தவர்). கௌதமரின் வித்து நாணல் கட்டில் விழுந்து, பிறந்த இரட்டையர்தான், அசுவத்தாமனின் தாயும் (கிருபியும்), பெரும் சக்தி வாய்ந்த கிருபரும் ஆவர்.(105-107) அதன் பிறகு, அக்னியின் காந்தியுடன் திருஷ்டத்யுமனன் வேள்வித்தீயில் பிறந்தான்.(108) அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன், பிறக்கும்போதே, துரோணரின் அழிவுக்காக வில்லைக் கையில் கொண்டு பிறந்தான். வேள்விப் பீடத்திலிருந்து கண்ணைக் கவரும் இளமையுடனும், பிரகாசமான அங்கங்களுடனும், பேரழகுடனும் கிருஷ்ணை {திரௌபதி} பிறந்தாள்.[7] (கிருஷ்ணை என்றால் கரிய நிறமுடையவள் என்று பொருள்.)அதன்பிறகு பிரகலாதனனின் சீடர்களான நக்னஜித்தும், சுபலனும் பிறந்தார்கள்(109,110) சுபலனுக்குத் தேவர்களின் சாபத்தால் அறத்திற்கு எதிரியாகவும், உயிரினங்களின் அழிவுக்காகவும் சகுனி என்ற மகன் பிறந்தான்[8]. (நக்னஜித்தின் மகன்தான் சுபலன் என்று வேறொரு பதிப்பில் இருக்கிறது. மன்மதநாத தத்தர் பதிப்பில் கங்குலியைப் போலவே நக்னஜத்தும், சுபலனும் பிரகலாத சிஷ்யர்கள் என்றே உள்ளது. பாகவதத்தில், நக்னஜித் யாதவ குல மன்னன் ஆவான். யசோதைக்கு இவன் அண்ணன் முறை. இவன் மகளான சத்யாவை ஏழு காளைகளை அடக்கி கிருஷ்ணன் மணந்து கொண்டான். கிருஷ்ணனுடைய எட்டு மனைவியரில் சத்யா, நக்னஜிதா மற்றும் நப்பின்னை என அறியப்படும் இவளும் ஒருத்தி.)அவனுக்கு {சுபலனுக்கு} ஒரு மகளும் (காந்தாரி) பிறந்தாள்.(111) அவள் துரியோதனின் தாயானாள் (காந்தாரி). அவர்கள் இருவரும் {சகுனியும், காந்தாரியும்} உலக லாபங்களைப் பெறும் கலையில் திறம்பெற்றிருந்தார்கள். கிருஷ்ணரின் {கிருஷ்ண துவைபாயனரின் – வியாசரின்} மூலம், விசித்திரவீரியனின் மண்ணில் {மனைவிகளிடத்தில்}, மனிதர்களுக்குத் தலைவன் திருதராஷ்டிரனும்,(112) பெரும் பலம் கொண்ட பாண்டுவும் பிறந்தனர். அதே துவைபாயனர் {கிருஷ்ண துவைபாயனர் – வியாசர்} மூலம், சூத்திர வர்ணத்தில், விவேகியும், புத்திசாலியும் அறத்திலும் பொருளீட்டுவதிலும் திறம்பெற்றவனும், பாவமற்றவனுமான விதுரன் பிறந்தான்.(113,114)

பாண்டு தனது இரு மனைவிகள் {குந்தி, மாத்ரி} மூலம் தேவர்களைப் போன்ற ஐந்து புதல்வர்களைப் பெற்றான். அவர்களின் மூத்தவன் பெயர் யுதிஷ்டிரன், அவன் தர்மதேவனின் மூலம் (யமன், நீதிதேவனின் வித்திலிருந்து} பிறந்தவனாவான். ஓநாயின் வயிறு கொண்ட பீமன் மாருதனாலும் (வாயு),(115) ஆயுதம் தாங்கியவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், நற்பேறு பெற்றவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, இந்திரனாலும், அழகான குணங்கள் கொண்டு, எப்போதும் தங்கள் மூத்தவர்களுக்குப் பணி செய்யக் காத்திருக்கும் நகுல, சகாதேவர்கள் அசுவினி இரட்டையர்கள் மூலமும் பிறந்தார்கள். விவேகியான திருதராஷ்டிரனுக்கு, துரியோதனன் முதற்கொண்டு நூறு புதல்வர்கள் பிறந்தார்கள். கூடவே வைசியப் பெண்ணுக்கு யுயுத்சு பிறந்தான்.(116-118) அந்த நூற்றொருவரில், பதினொரு பேர் – துச்சாசனன், துச்சகன், துர்மர்ஷணன், விகர்ணன், சித்திரசேனன், விவிம்சதி, ஜயன், சத்தியவிரதன், புருமித்ரன், வைசிய மனைவி மூலம் பிறந்த யுயுத்சு ஆகியோர் மஹாரதர்கள் (பெரும் தேர் வீரர்கள்) ஆவார்கள்.

அபிமன்யு, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை சுபத்திரைக்கு அர்ஜுனன் மூலமாகப் பிறந்தான். அதனால் அவன் {அபிமன்யு} சிறப்பு மிகுந்த பாண்டுவுக்குப் பேரனாவான். அந்த ஐந்து பாண்டவர்களுக்கும் (பொதுவான மனைவியான) பாஞ்சாலியின் மூலம் ஐந்து புதல்வர்கள் பிறந்தார்கள்.(119-121) அந்த இளவரசர்கள் அனைவரும் அழகானவர்களாகவும், அனைத்து ஞானக்கிளைகளிலும் {ஞானப் பிரிவுகளிலும்} தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்தார்கள். யுதிஷ்டிரனுக்கு, பிரதிவிந்தியனும், விருகோதரனுக்குச் {பீமனுக்கு} சுதசோமனும்,(122) அர்ஜுனனுக்குச் சுருதகீர்த்தியும், நகுலனுக்குச் சதாநீகனும், சகாதேவனுக்குப் பெரும் சக்தி கொண்ட சுருதசேனனும் பிறந்தார்கள்.(123) பீமன், கானகத்தில் ஹிடும்பையுடன் {இடும்பியுடன்} கூடி கடோத்கசன் {கடோத்கஜன்} என்ற மைந்தனைப் பெற்றான். துருபதனுக்குச் சிகண்டினி என்ற பெண் குழந்தையும் பிறந்தாள். அவள் பிற்காலத்தில் ஆணாக {சிகண்டியாக} மாறினாள்.(124) சிகண்டினி, அவளுக்கு நல்லது செய்ய விரும்பிய ஸ்தூணன் என்ற யக்ஷன் மூலமாக ஆணாக மாறினாள். குருக்களின் அந்தப் பெரும் போரில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏகாதிபதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள வந்தனர். அதில் பங்குபெற்றவர்களின் எண்ணிக்கையைப் பத்தாயிரம் வருடங்கள் உட்கார்ந்து எண்ணினாலும் என்னால் எண்ண முடியாது. நான், இந்த வரலாற்றில் முக்கியமானவர்கள் பெயர் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்” {என்றார் வைசம்பாயனர்}.(125-127)

பூமி பாரத்தைக் குறைக்க தேவர்கள் பிறப்பு! | ஆதிபர்வம் – பகுதி 64(ஆதிவம்சாவதரணப் பர்வம் – 6)பூமியில் பிறந்த அசுரர்கள்; பிரம்மனிடம் முறையிட்ட பூமாதேவி; தேவர்களைப் பூமியில் பிறக்கும்படி பிரம்மன் உத்தரவிட்டது; இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க நாராயணன் அவதரிக்க உடன்பட்டது

ஜனமேஜயன், “ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, நீர் பெயர் குறிப்பிட்டவர்களைப் பற்றியும், பெயர் குறிப்பிடாதவர்களைப் பற்றியும், ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பற்றியும் விவரமாகச் சொல்வீராக.(1) ஓ பெரும் நற்பேறு பெற்றவரே {வைசம்பாயனரே}, தேவர்களுக்கு இணையானவர்களான அந்த மஹாரதர்கள் பூமியில் பிறந்த காரணம் பற்றி முழுமையாகச் சொல்லுங்கள் ” என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(2)

வைசம்பாயனர், “ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, உன்னால் கேட்கப்படும் இந்தக் கேள்வி தேவர்களுக்கே புதிரானது என்பதை நாம் அறிகிறோம். இருப்பினும், தான்தோன்றியை {சுயம்புவான பிரம்மாவை} வணங்கி, நான் அவற்றைக் குறித்தும் சொல்கிறேன்.(3) ஜமதக்னியின் மகன் (பரசுராமர்), உலகத்தை இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்து, மகேந்திரம் என்றழைக்கப்பட்ட மலைக்குச் சென்று, தமது தவத்துறவுகளை இயற்றினார்.(4) உலகத்தில் க்ஷத்திரியர்கள் இல்லாத அந்தக் காலங்களில், க்ஷத்திரியப் பெண்மணிகள், பிள்ளைப்பேறு கருதி, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, கடுமையான உறுதிகளை ஏற்றிருக்கும் பிராமணர்களிடம், பிள்ளைப்பேறுக்காக மட்டும், அதற்குரிய காலத்தில் வந்தனர். காமங்கொண்டோ, தகுந்த காலம் இல்லாமலோ அவர்கள் அப்படி வந்ததில்லை.(5,6) ஆயிரக்கணக்கான க்ஷத்திரியப் பெண்மணிகள் இப்படிப் பிராமணர்களால் கருவுற்றனர். அதன்பிறகு, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பெரும்சக்தி கொண்ட க்ஷத்திரிய ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் தங்கள் குலம் தழைக்கப் பிறந்தனர்.(7) இப்படித் தவத்துறவுகள் செய்யும் பிராமணர்கள் மூலம் க்ஷத்திரியப் பெண்ககளிடமிருந்து க்ஷத்திரிய குலம் {மீண்டும்} தோன்றியது. அந்தப் புதிய தலைமுறை, நீடித்த ஆயுளுடன், அறம் வளர்க்கத் தொடங்கியது. அதன்படி, பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட நான்கு வர்ணங்களும் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டது.(8,9)

அந்தக் காலத்தில், ஒவ்வொரு மனிதனும் தன் மனைவியிடம், அவளது பருவ காலத்திலேயே சேர்ந்தான், காமத்தாலோ, பருவ காலமல்லாமலோ ஒரு போதும் சேர்ந்ததில்லை. ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இதைப்போன்றே மற்ற உயிரினங்களும், ஏன் பறவைகளும் கூடத் தங்கள் துணையிடத்தில் தகுந்த காலத்தில் மட்டுமே சேர்ந்தன.(10,11) ஓ பூமியைக் காப்பவனே {ஜனமேஜயா}, இவ்வழியிலேயே பிறந்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அனைத்தும் அறம்சார்ந்து இருந்து, அறத்தை வளர்த்து, கவலை, நோய் ஆகியவற்றில் இருந்து விடுபட்டிருந்தன.(12) ஓ யானை நடை கொண்டவனே {ஜனமேஜயா}, கடல்களைத் தன் எல்லைகளாகக் கொண்ட இந்த அகண்ட பூமியானவள், தனது மலைகளுடனும், கானகங்களுடனும், நகரங்களுடனும், மீண்டும் க்ஷத்திரியர்களால் ஆளப்பட்டாள்.(13) க்ஷத்திரியர்களால் அப்படி மறுபடியும் பூமி அறம்சார்ந்து ஆளப்பட்ட போது, பிராமணர்களை முதலாகக் கொண்ட மற்ற வகையினரும் {வர்ணத்தாரும்} பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(14) காமத்தினாலும், கோபத்தினாலும் உண்டாகும் களங்கங்கள் அனைத்தையும் கைவிட்ட மன்னர்கள், நீதியோடு {தண்டிக்கத்} தகுந்தவர்களுக்குத் {தகுந்த} தண்டனையளித்துப் பூமியைக் காத்தனர்.(15)

க்ஷத்திரியர்கள் இப்படி அறம்சார்ந்து ஆள்வதைக் கண்டவனும் நூறுவேள்விகளைச் செய்தவனுமான அந்த ஆயிரம் கண்களை உடையவன் {இந்திரன்}, சரியான நேரங்களிலும், இடங்களிலும் மழையைப் பொழிந்து உயிரினங்கள் அனைத்தையும் வாழ்த்தினான்.(16) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, முதிரா வயதுடையோர் எவரும் இறக்கவில்லை, மேலும் பருவமடையாத பெண்ணை {மனைவியாக} யாரும் அறிந்ததுமில்லை {அடைந்ததுமில்லை}.(17) ஓ பாரதக் குலத்தின் காளையே, இப்படியே கடற்கரை வரை பரந்த பூமி அறம் சார்ந்து நீடித்து வாழ்ந்த இப்படிப்பட்ட மனிதர்களால் நிரம்பியது.(18) க்ஷத்திரியர்கள் பெரும் செல்வங்களைத் தானமளித்துப் பெரும் வேள்விகளைச் செய்தனர். பிராமணர்கள் அனைவரும், வேதங்களையும் அதன் அங்கங்களையும் {கிளைகளையும்}, உபநிஷத்துகளையும் கற்றனர்.(19) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தக் காலத்தில் எந்தப் பிராமணனும் வேதத்தை விற்கவில்லை (பணம் பெற்றுக் கல்வி கொடுத்ததில்லை), அல்லது சூத்திரனின் முன்னால் வேதத்தைச் சத்தமாகப் படித்ததும் இல்லை.(20)

வைசியர்கள், தங்கள் காளைகளின் உதவியைக் கொண்டு, நிலத்தை உழுதனர். அவர்கள் {வைசியர்கள்} தங்கள் கலப்பையில் பசுக்களைப் பூட்டுவதில்லை. மேலும் அவர்கள் {வைசியர்கள்}, இளைத்திருந்த {இளைக்காமலிருக்க} கால்நடைகளுக்குக் கவனத்துடன் தீனி கொடுத்தனர் {கொடுத்துப் பருக்கச் செய்தனர்}.(21) கன்றுகள், தங்கள் தாயின் பாலை மட்டுமே உணவாகக் கொள்ளும்வரை (புல்லோ, மற்ற உணவோ கொள்ளும் வரை), அந்தப் பசுவிடம் இருந்து மனிதர்கள் பாலைக் கறக்காதிருந்தார்கள். அந்நாட்களில், எந்த வியாபாரியும் தவறான அளவீடுகளைக் கொண்டு தன் பொருட்களை விற்காதிருந்தான்.(22)

ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, மனிதர்கள் அனைவரும் அறவழியில் நடந்து, அறத்தில் தங்கள் பார்வையை நிலைக்கச்செய்தபடியே அனைத்தையும் செய்தனர்.(23) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, அனைத்து வகை {வர்ண} மக்களும் தங்கள் கடமைகளில் கண்ணாயிருந்தனர். ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, அந்தக் காலத்தில் அறமானது, எந்தக் குறைவுமற்றதாக இருந்தது.(24) ஓ பாரதக் குலத்தின் காளையே, பசுக்களும், பெண்மணிகளும் சரியான காலத்தில் தங்கள் பிள்ளைகளை ஈன்றனர். மரங்கள் பருவ காலத்திற்கேற்றபடி முறையாக மலர்களையும் கனிகளையும் கொடுத்தன.(25) ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே கிருத யுகம் முறையாகத் தொடங்கியதும், மொத்த பூமியும் எண்ணற்ற உயிரினங்களால் நிரம்பியிருந்தது.(26)

ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பூலோகமானது இப்படி அருளப்பட்டு இருந்த காலத்தில், ஓ மனிதர்களின் தலைவனே {ஜனமேஜயா}, மன்னர் பரம்பரைகளில் அசுரர்கள் பிறக்கத் தொடங்கினர்.(27) திதியின் மைந்தர்கள் (தைத்தியர்கள்), அதிதியின் மைந்தர்களால் (தேவர்களால்) தொடர்ந்து போரில் தோற்கடிக்கப்பட்டுத் தங்கள் அரசுரிமையையும், சொர்க்கத்தையும் இழந்து, பூமியில் அவதரிக்கத் தொடங்கினர்.(28) ஓ மன்னா {ஜனமேஜயா}, பெரும் சக்திகளைக் கொண்ட அசுரர்கள், அரசுரிமையில் விருப்பம் கொண்டு, பசுக்கள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருமைகள், யானைகள், மான்கள் என்று பல உயிரினங்களாகவும் மற்றும் ராட்சசர்களாகவும் பூமியில் பிறக்கத் தொடங்கினர்.(29,30)

ஓ பூமியைக் காப்பவனே, ஏற்கனவே பிறந்தவர்களாலும், பிறந்து கொண்டு இருப்பவர்களாலும் பூமாதேவி, தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ளத் தடுமாறினாள்.(31) தேவலோகத்தில் இருந்து துரத்தப்பட்ட திதி மற்றும் தனுவின் மகன்களில் {தைத்தியர்கள் மற்றும் தானவர்களில்} சிலர், பெரும் பெருமையும் செருக்கும் கொண்ட மன்னர்களாகப் பூமியில் பிறந்தனர்.(32) பெரும் சக்திகளைக் கொண்ட அவர்கள், பல்வேறு வடிவங்களில் பூமியை மறைத்தனர். எதிரிகள் அனைவரையும் ஒடுக்கும் திறன் கொண்ட அவர்கள் கடலைத் தன் எல்லையாகக் கொண்ட பூமியை நிறைத்தனர்.(33) மேலும் அவர்கள், தங்கள் பலத்தால் பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும், வைசியர்களையும், சூத்திரர்களையும் மற்ற பிற உயிரினங்கள் அனைத்தையும் ஒடுக்கத் தொடங்கினர்.(34) உயிரினங்கள் அனைத்தையும் பயமுறுத்தியும், கொன்றும், ஓ மன்னா {ஜனமேஜயா} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூட்டங்களாக இந்த உலகத்தில் திரிந்தனர்.(35) உண்மையும், அறமுமற்று, தங்கள் பலத்தில் பெருமை கொண்டு, செருக்கு என்னும் (மதுவின்) போதை கொண்டிருந்த அவர்கள், ஆசிரமங்களிலிருந்த பெரும் முனிவர்களைக்கூட அவமதித்தனர்.(36)

பூமியானவள், பெரும் பலத்தையும், சக்தியையும் அபரிமிதமான பல்வேறு வழிமுறைகளில் பெற்ற வலிமைமிக்க அசுரர்களால் ஒடுக்கப்பட்டு, பிரம்மனுக்குப் பணிவிடை செய்ய {பிரம்மனை நோக்கித் தவம் செய்ய வேண்டும் என்று} நினைக்கத் தொடங்கினாள்.(37) (சேஷன், ஆமை, பெரும் யானை போன்ற) உயிரினங்கள் மற்றும் பல சேஷன்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பலத்தால் கூட, தானவர்களின் எடையைச் சுமந்து கொண்டிருந்தவளும், மலைகளுடன் கூடியவளுமான பூமியைத் தாங்கிக் கொள்ள இயலில்லை[1].(38) (வேறொரு பதிப்பில் திக்கஜங்களும், ஆதிசேஷன் முதலிய அஷ்டநாகங்களும் பூமியைத் தாங்குவதற்கு சக்தியில்லாமல் போயின என்று உள்ளது.பூமியை ஆதிசேஷன் தாங்குவதாக ஆதிபர்வம் 36 ஆம் பகுதியில் படித்தோம். யானை என்பது அஷ்டதிக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகளைக் குறிக்கும். அவை ஐராவதம், புண்டரீகன், வாமனன், குமுதன், அஞ்சனன், புஷ்பந்தன், ஸார்வ, பௌமன், சுப்ரதீகன் ஆகும். சேஷன், கூர்மம், அஷ்டதிக் கஜங்கள் ஆகியவை பூமியை தாங்குவதை விளக்கும் படம் இதோ.)பிறகு, ஓ மன்னா, சுமையினால் ஒடுக்கப்பட்டவளும், பயத்தினால் பீடிக்கப்பட்டவளுமான பூமியானவள் அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பனுடைய {பிரம்மனின்} பாதுகாப்பை நாடினாள்.(39) அவள் {பூமாதேவி}, உலகங்களைப் படைப்பவனும், அழிவறியாதவனும், தேவர்களாலும், பிராமணர்களாலும், நற்பேறுமிக்கப் பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டவனும், மகிழ்ச்சி நிறைந்த கந்தர்வர்களாலும், தேவர்களுக்குச் சேவை செய்வதில் எப்போதும் ஈடுபடும் அப்ஸரஸ்களாலும் போற்றப்படுபவனுமான தெய்வீகமான பிரம்மனைக் கண்டாள். பாதுகாப்பை விரும்பிய பூமியானவள், ஓ பாரதா {ஜனமேஜயா}, லோகபாலர்கள் அனைவரின் முன்னிலையில் அனைத்தையும் அவனிடம் {பிரம்மனிடம்} சொன்னாள்.(40-42)

ஆனால், ஓ மன்னா {ஜனமேஜயா}, அனைத்தும் அறிந்தவனும், தான்தோன்றியுமான அந்த உயர்ந்த தலைவன் {பிரம்மன்} அவளது {பூமாதேவியினது} நோக்கத்தை முன்பே அறிந்திருந்தான்.(43) ஓ பாரதா {ஜனமேஜயா}, அவனே {பிரம்மாவே} அண்டத்தைப் படைத்தவனாதலால், தேவர்கள், அசுரர்கள் முதலான தன் உயிரினங்களின் மனதில் உள்ளதை அவன் ஏன் அறிந்திருக்கமாட்டான்?(44) ஓ மன்னா {ஜனமேஜயா}, பூமியின் தலைவனும், ஈசன் என்றும் சம்பு என்றும் பிரஜாபதி என்றும் அழைக்கப்பட்டவனும், அனைத்து உயிர்களின் படைப்பாளியானவனுமான பிரம்மன் பூமியிடம் பேசினான்.(45) பிரம்மன், “ஓ செல்வங்களைத் தாங்குபவளே, நீ எந்நோக்கோடு என்னிடம் வந்தாயோ, அதை நிறைவேற்றத் தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரையும் நியமிக்கிறேன்” என்றான் {பிரம்மன்}.”(46)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பூமியிடம் இப்படிக் கூறிவிட்டு, ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தத் தெய்வீகப் பிரம்மன் அவளுக்கு விடைகொடுத்தான். அந்தப் படைப்பாளன் {பிரம்மன்} தேவர்கள் அனைவரிடமும், “பூமியின் சுமையைக் குறைக்க, நீங்கள் சென்று, உங்கள் அம்சங்களுடன் அவளிடம் {பூமியிடம்} பிறந்து (ஏற்கனவே பிறந்துவிட்ட அசுரர்களுடன்) இகலாடுவீராக {சச்சரவில் ஈடுபடுவீராக}” என்று கட்டளையிட்டான்.(47-48) மேலும் அந்தப் படைப்பாளன் {பிரம்மன்}, கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இனங்கள் அனைத்தையும் அழைத்து, “மனிதர்களுக்கு மத்தியில் நீங்கள் விரும்பிய வடிவில் உங்கள் அம்சங்களுடன் பிறப்பீராக! செல்லுங்கள்” என்று ஆழ்ந்த பொருளுடன் உரைத்தான்.(49) இந்திரனோடு கூடிய தேவர்கள் அனைவரும், உண்மையானதும், அந்தச் சூழ்நிலையில் விரும்பதக்கதும், பயனோடு கூடியதுமான தேவர்கள் தலைவனின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அஃதை ஏற்றனர்.(50)

தங்கள் அம்சங்களுடன் பூமிக்கு வரத் தீர்மானித்த அவர்கள் {தேவர்கள்} அனைவரும், வைகுண்டத்தில் இருப்பவனும்,(51) சக்கரத்தையும், கதையையும் தனது கைகளில் தாங்கியவனும், ஊதா வண்ண ஆடைகளை அணிந்தவனும், பெரும் காந்தி கொண்டவனும், நாபியில் {தொப்புளில்} தாமரையைக் கொண்டவனும், தேவர்களின் எதிரிகளை அழிப்பவனும், (யோக நிலையில்) தனது அகன்ற மார்பில் தனது பார்வையைத் தாழ்த்தியிருப்பவனும்,(52) பிரஜாபதிக்கே {பிரம்மனுக்கே} தலைவனும், வலிமையும் பலமும் கொண்ட தேவர்கள் அனைவரின் இறையாண்மையும், மார்பில் மங்கலக் குறியை {ஸ்ரீவத்ஸமென்னும் மருவைக்} கொண்டவனும்{ஸ்ரீவத்ஸமென்னும் இந்த மருதான் மகாலஷ்மியின் வாசஸ்தலம் எனப் புராணங்கள் சொல்கின்றன}, ஒவ்வொருவரின் நுண்திறனிலும் செயல்படுபவனும், அனைத்து தேவர்களாலும் போற்றப்படுபவனுமான நாராயணனிடம் சென்றனர்.(53) அனைவரிலும் மேன்மைமிகுந்த இந்திரன் அவனிடம் {விஷ்ணுவிடம்}, “அவதாரம் எடுப்பீராக” என்று வேண்டினான். அதற்கு ஹரி {விஷ்ணு}, “அப்படியே ஆகட்டும்” என்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(54)

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading