ஸ்ரீ மஹாபாரதம் மங்கள ஸ்லோகங்கள்-ஸ்ரீ ஆதி பர்வம்-ஸ்ரீ பௌலோம பர்வம் —

அமித தேஜஸே பகவதே தஸ்மை வ்யாஸாய நம யஸ்ய ப்ரஸாதாத் இமாம் நாராயண கதாம் வஹ்யாமி -ஸ்ரீ பாரதம்
மஹா தேஜஸ்ஸை யுடையவரும் முக்காலங்களையும் அறிபவரான அந்தப் வ்யாஸ மஹரிஷியின் பொருட்டு நமஸ்காரம் -எவருடைய அனுக்ரஹத்தினால் இந்த நாராயண கதையைச் சொல்லப் போகிறேன் –

ஓம் தர்மகர்த்த்ரே நமோ நமஹ |
தர்மஜாய ச நமோ நமஹ |
தர்மவிஷயிணே நமோ நமஹ |
மஹாபாரத ஸம்ஸ்தாபகாய தர்ம ராஜாய நமோ நமஹ ||”

மதி மந்த்தான மாவித்ய யேதாஸெள ஸ்ருதி ஸாகராத் ஜகத்திதாய ஜனிதோ மஹாபாரத சந்த்ரமா : “
ஸ்ரீவேத வ்யாசர் தமது புத்தி என்கிற மத்தைக் கொண்டு வேதம் என்னும் கடலைக் கடைந்து உலக நன்மைக்காக மஹா பாரதம் என்கிற சந்திரனை கொடுத்ததாகக் கூறப் பட்டுள்ளது.

————–

தமிழ் மஹாபாரதம் – ம.வீ.ராமானுஜாசாரியர் பதிப்பு

ஆதி பர்வம் 260 அத்தியாயங்கள் 956 பக்கங்கள்
சபா பர்வம் 103 அத்தியாயங்கள் 359 பக்கங்கள்
வனபர்வம் 315 அத்தியாயங்கள் 1242 பக்கங்கள்
விராட பர்வம் 78 அத்தியாயங்கள் 337 பக்கங்கள்
உத்யோக பர்வம் 196 அத்தியாயங்கள் 663 பக்கங்கள்
பீஷ்ம பர்வம் 122 அத்தியாயங்கள் 510 பக்கங்கள்
துரோண பர்வம் 203 அத்தியாயங்கள் 858 பக்கங்கள்
கர்ண பர்வம் 101 அத்தியாயங்கள் 482 பக்கங்கள்
சல்ய பர்வம் 66 அத்தியாயங்கள் 303 பக்கங்கள்
சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள் 72 பக்கங்கள்
ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள் 72 பக்கங்கள்
சாந்தி பர்வம் 375 அத்தியாயங்கள் 1414 பக்கங்கள்
அநுசாஸன பர்வம் 274 அத்தியாயங்கள் 1068 பக்கங்கள்
அஸ்வமேதிக பர்வம் 118 அத்தியாயங்கள் 403 பக்கங்கள்
ஆஸ்ரமவாசிக பர்வம் 41 அத்தியாயங்கள் 98 பக்கங்கள்
மௌஸல பர்வம் 9 அத்தியாயங்கள் 28 பக்கங்கள்
மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள் 10 பக்கங்கள்
18 ஸ்வர்காரோஹண பர்வம் 5 அத்தியாயங்கள் 20 பக்கங்கள்

மொத்தம் 2314 அத்தியாயங்கள் 8895 பக்கங்கள்

பாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.

தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடலுக்கடியில் மூழ்கிய துவாரகா நகரத்துக்கு கி.மு. 3000 என்று அறிஞர்கள் அறிவியல் முறைப்படி தேதி குறித்துள்ளனர். கிருஷ்ணர் இறந்த பின்னர் சுனாமி தாக்குதலில் துவாரகா கடலுக்கடியில் சென்றதை பாகவதம் முதலிய புராணங்கள் சொல்லும்.

ஸ்ரீ வியாஸர் ஸ்ரீ பராசரருக்கும் சத்யவதிக்கும் பிறந்த இவர் யமுனைக்கரையில் த்வீ பத்தில் -விடப்பட்டவர் -கிருஷ்ண த்வைபாயனர் -எனப்படுபவர்

சத்தியம் மிக உயர்ந்த தருமம்’, ‘தருமம் வெற்றி பெறும்’ என்ற ஓர் உண்மைத் தத்துவத்தை மகாபாரதம் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது. தருமம் இரண்டு மனித உருவம் தாங்கிச் செயற்பட்டதையும் மகாபாரதத்தில் காண்கின்றோம். ஒருவர் தருமர், மற்றவர் விதுரர். அறவுரை கூறி நின்றார் விதுரர். அதேநேரம் தருமர் அறத்தைப் பேணிக் காக்க ஆயுதத்தை நாடினார். அதில் இருவரும் வென்றனர்.     

பார்வதி, பரமசிவன், இந்திரன், வாயுபகவான், தருமதேவதை, முருகக் கடவுள், சூரியன், அசுவினித்தேவர்கள், சப்தரிஷிகள், முனிவர்கள், மகரிஷிகள், நாரதர், வியாசர், துர்வாச மகரிஷி, பராசர முனிவர், கண்ணன், பலராமர், அகஸ்தியர், சத்தியபாமா, அனுமன் ஆகிய மேலோர் அனைவரும் மகாபாரதம் முழுவதும் உலாவித் திரிந்து தத்தமது ஞானத் தத்துவங்களை வீசிச் சென்றமையால் மகாபாரதம் ஈடிணையற்ற இதிகாசமாக மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

மகாபாரதத்தில் நட்பு, ஞானம், சத்தியம், தவம், தானம், ஆசை, தியாகம், அறியாமை, விரோதம், சுவர்க்கம், நரகம், பிறப்பு, காதல், திருமணம்,  இறப்பு, போர், அழிவு, பணிவு, அறிவு, சுத்தம், தூய்மை, பரிசுத்தம், கல்வி, அறம், பொருள், இன்பம், முக்தி, காலத்தின் வலிமை, காலத்தின் நியதி, வினையின் பயன், பாவம், புண்ணியம்,  இன்சொல்லின் சிறப்பு, உபவாசத்தின் உயர்ச்சி, குதிரை யாகம், இராஜசூய யாகம்,  கர்மவினை, சாபம், துறவு வாழ்க்கை ஆகிய விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டு அவற்றிற்குரிய விடைகளும் காணப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.

அறம், மறம் ஆகிய இரு நிலைகளில் நின்றவர்களையும் மகாபாரதம் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அறநிலையில் சந்தனு, பீஷ்மர், விதுரர், பாண்டு, தருமர், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், துரோணர், துருபதன், பலராமர், கிருஷ்ணன், கங்காதேவி, சத்தியவதி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் நின்று அறங்கூறிப் பேரும் புகழும் பெற்றனர். அதேநேரம் மறநிலையில் திருதராட்டிரன், காந்தாரி, துரியோதனன் ஆகிய தொண்ணூற்றி ஒன்பது சகோதரர்கள், சகுனி, அசுவத்தாமன், கர்ணன் ஆகியோர் மறங்காத்து மாண்டொழிந்தனர்.

குந்தியானவள் ஒரு முனிவரால் அருளிக் கொடுக்கப்பட்ட மந்திரத்தை உச்சரித்ததால் கர்ணன், தருமர், பீமன், அருச்சுனன் ஆகியோர் வந்துதித்தனர். அதன்பின் குந்தி, மாத்ரிக்கு அந்த மந்திரத்தை உபதேசித்தாள். மாத்ரி அந்த மந்திரத்தை இரட்டையர்களான அசுவினி தேவர்களை நினைந்து உச்சரிக்க  நகுலன், சகாதேவர் என்னும் இரட்டையர் பிறந்தனர். இன்னும் வியாசர் மூலமாக அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் முறையே திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் பிறந்தனர். அக்காலத்தில் அரச மகளிர் மந்திரம் உச்சரித்தும், முனிவர்கள் மூலமும் மகப்பேறு பெற்ற அதிசயச் செய்திகளையும் காண்கின்றோம்.

மன்னர் பலதார மணம் புரிவது ஒரு வழக்காக இருந்துள்ளதை மகாபாரதத்தில் காணக் கூடியதாக உள்ளது. சந்தனு மன்னன் கங்காதேவி, சத்தியவதி ஆகிய இருவரையும், விசித்திரவீரிய அரசன் அம்பிகை, அம்பாலிகை ஆகியோரையும், வியாச மகரிஷி அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவரையும், திருதராட்டிர வேந்தன் காந்தாரி, காந்தாரியின் பத்துச் rNfhதரிகள் ஆகிய பதினொருவரையும், பாண்டு மன்னன் குந்தி, மாத்ரி ஆகிய இருவரையும், அருச்சுன அரசன் திரௌபதி, சுபத்திரை ஆகிய இருவரையும், பீமன் ஆன அரசன் திரௌபதி, இடும்பி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டனர். அக்கால மன்னர்கள் அதிகமாகப் போர் தொடுத்து மடிவதாலும், தத்தமது அரசுக்குப் பல வாரிசுகளை வைத்திருக்க வேண்டியதாலும், அவர்கள் பலதார மணம் புரிந்தனர் போலும்.

மேற்காட்டிய அரசியர்களான கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் தத்தமக்குரிய மன்னர்களுடன் இணைந்து வாழ்ந்து, அரசுப் பரம்பரையை நிலைநாட்ட உதவி நின்று, அரச வாரிசுகளைப் பெற்றுக் கொடுத்து, ஆட்சிப் பொறுப்பிலும் உதவி நின்று, தம் மன்னர்களை அறநெறிக்குட்படுத்தி ஆகிய பெரும் பொறுப்புகளில் ஈடுபட்டுள்ள அரசியர்கள் வாழ்த்திப் போற்றற்குரியோராவர்.

பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம் புலன்கள் தான். அந்த ஐம்புலன்களையும், தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கவுரவர்கள். தீமைகள் பலவாறான எண்ணிக்கையில், படைபலம் மிகுந்த சக்தியோடு இருக்கும் என்பதைச் சொல்லவே, மகாபாரதம்

உன்னுடைய ஐம்புலன்களின் சகோதரனே, கர்ணன். இந்தக் கலியுகத்தில் அவனது பெயர் ஆசை, மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன். ஆனால் அவன்எப்போதுமே தீமைகளின் பக்கம் தான் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கும் கூட தெரியும். ஆனால் உனக்குள் எழும் ஆசைக்காக, விருப்பத்திற்காக அந்த தவறைச்சரியாக்கும் விதமாக சாக்குபோக்கு சொல்வான். நீயே யோசித்துச் சொல்.. நம் மனம் எப்போதும் ஆசைக்குத்தானே அடிமையாக நினைக்கிறது?’

டம்பாஸுரன் -சஹஸ்ர கவசம் -நர நாராயணன் -இவனே குந்திக்கு சூர்யன் அம்சத்துடன் கர்ணன் -துரியோதனன் பொறாமை -இருவரும் கூட்டு சேர்ந்து -நர நாராயணனே -அர்ஜுனன் கண்ணன்-ஸஹஸ்ர கவசன் -ஏக கவசன் -12 வர்ஷம் தபஸ் இருந்து இவனை முடிக்கவே -12 வருஷம் வனவாசம் –ஓட்டைக் கைக்கும் யானைக்கும் இடையே ஓர் ஆயிரம் மைல் தூரம் இடையே நடப்பது புடவை வியாபாரம் -த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க
அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி
-பாரதம் -உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –

——–

பதிவின் சுருக்கம் : நைமிசாரண்யம் வந்த சௌதி; வியாசர் சொன்ன கதைகளைச் சொல்லட்டுமா என்று முனிவர்களைக் கேட்கும் சௌதி; முனிவர்கள் சௌதியிடம் பாரதம் உரைக்க வேண்டும் என்று கேட்டல்; வியாசர் சொன்ன பாரதத்தின் வரலாறு; தேவர் பிறப்பு; அண்டத்தின் படைப்பு; பாரதத்தின் சுலோகப் பிரிவினை; கௌரவர்களையும், பாண்டவர்களையும் மரமாக உருவகப்படுத்துதல்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் [ஜயா] என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}ஒரு நாள், “சௌதி” என்ற குடும்பப் பெயர் கொண்டவரும், புராணங்களை நன்கறிந்தவரும், லோமஹர்ஷணரின் {ரோமஹர்ஷணரின்} மகனுமான உக்ரசிரவன் {சௌதி }[1], (வேறு மொழிபெயர்ப்புகளிலும், வேறு பல சுருக்கங்களிலும் இவர் சூத முனிவர் என்று அழைக்கப்படுகிறார். சௌதி என்பது, சூதன் மகன் என்ற பொருளைக் கொண்டதாகும். பௌராணிகர் என்பது புராணங்களை உரைப்பவரின் பெயராகும். .)நைமிச வனத்தில் நடந்து வந்ததும், “குலபதி” என்ற குடும்பப் பெயர் கொண்ட சௌனகரால் நடத்தப்பட்டதுமான பன்னிரண்டு வருட {12} {சத்ரம் என்று அழைக்கப்பட்ட} வேள்வியில் பங்கெடுத்தவர்களும், கடினமான நோன்புகளை மேற்கொண்டு, சுகமாக அமர்ந்திருந்தவர்களுமான பெரும் முனிவர்களைத் தன்னடக்கத்துடன் அணுகினார் {சௌதி}.(1,2) இவ்வாறு அந்த நைமிசக்காட்டுவாசிகளின் {துறவிகளின்} தனிப்பட்ட வசிப்பிடத்திற்கு {ஆசிரமத்திற்கு} வந்த சௌதியிடம், அவரது அழகான வர்ணனைகளைக் கேட்கும் ஆர்வத்தில் அந்தத் தவசிகள் பேசத் தொடங்கினர்.(3) சரியான முறையில் அந்தத் தெய்வீக மனிதர்களால் உற்சாகமூட்டப்பட்ட அவர் {சௌதி}, தமது கரங்களைக் கூப்பி அவர்களை வணங்கியபடியே, தவத்தில் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து விசாரித்தார்.(4)

அனைவரும் அமர்ந்த பின்னர், அந்த லோமஹர்ஷனரின் மகன் {சௌதி}, தமக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் பணிவாக அமர்ந்தார்.(5) அவர் சுகமாக அமர்ந்ததையும், அவரது பயணக் களைப்பு நீங்கியதையும் கண்ட அந்த முனிவர்களில் ஒருவர், விவாதத்தைத் தொடங்கும் வகையில்.(6) “நீர் எங்கிருந்து வருகிறீர்? ஓ! தாமரைக்கண் சௌதியே, நீர் உமது காலத்தை எங்கு கழித்தீர்? {இவற்றைக்} கேட்பவனான எனக்கு விவரமாகச் சொல்வீராக!” என்றார்.(7) இவ்வாறு கேட்கப்பட்டவரும், பேச்சில் வல்லவருமான சௌதி, ஆழ்நிலை தியானம் செய்பவர்களான முனிவர்களின் அந்தப் பெரிய கூட்டத்திற்கு மத்தியில், அவர்களது வாழ்வு முறைக்கு ஏற்ற சொற்களைக் கொண்டு, முறையாகவும், முழுமையாகவும் பதிலளிக்க முற்பட்டார்.(8)

சௌதி,“கிருஷ்ண-துவைபாயனரால் {வியாசரால்}, தமது மஹாபாரதத்தில் இயற்றப்பட்டவையும், உயர்-ஆன்மா கொண்டவனும், பரீக்ஷித்தின் மகனும், இளவரசர்களின் தலைவனுமான அரசமுனி ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், அவனது {ஜனமேஜயனின் முன்னிலையிலேயே,{வியாசரின்சீடர்} வைசம்பாயனரால் முழுமையாக உரைக்கப்பட்டவையும், புனிதமானவையும், அற்புதம் நிறைந்தவையுமான பல்வேறு கதைகளைக் கேட்ட பிறகு,(9-11) புனித நீர்நிலைகளுக்கும், புண்ணியத்தலங்களுக்கும் சென்ற நான், முன்பொரு சமயம், குரு மற்றும் பாண்டுவின் பிள்ளைகளுக்கும், அந்த இருதரப்பிற்கும் அடங்கிய நிலத்தின் தலைவர்கள் அனைவருக்கும் இடையில் போர் நடைபெற்ற களமும், த்விஜர்களால் {இருபிறப்பாளர்களால்} போற்றப்படுவதும், சமந்தபஞ்சகம் என்றழைக்கப்படுவதுமான நாட்டிற்கு {குருசேத்திரம் என்னும் புண்ணியத்தலத்திற்குப்} பயணித்தேன்.(12-13) அங்கிருந்தே உங்களைக் காணும் ஆவலில், உங்களிடம் {நைமிசாரண்யம்} வந்தேன். பிரம்மாவைப் போன்ற பெரும் முனிவர்களே; இந்த வேள்விச்சாலையில் சூரிய நெருப்பின் காந்தியோடு ஒளிரும் வகையில் மிகவும் அருளப்பட்டவர்களே; புனித நெருப்புக்கு {அக்னிக்கு} உணவு அளித்து, மௌன தியானங்களை நிறைவு செய்தவர்களே; இருப்பினும் {இவ்வளவு செய்திருந்தாலும்} அலட்சியமாக அமர்ந்திருப்பவர்களே, ஓ! த்விஜர்களே (இருபிறப்பாளர்களே), அறக்கடமைகள் மற்றும் உலக ஆதாயங்கள் குறித்த கட்டளைகளை {விதிகளைக்} கொண்டவையான புராணங்களில் உள்ள புனிதக் கதைளை நான் மறுபடியும் சொல்லட்டுமா? அல்லது, சிறப்புமிக்கத் தவசிகள் மற்றும் மனித குலத்தின் மன்னர்கள் ஆகியோரின் செயல்பாடுகளைக் குறித்துச் சொல்லட்டுமா? ” என்று கேட்டார் {சௌதி}”.(14-16)

அந்த முனிவர், {சௌதியிடம்}, “பெருமுனிவர் துவைபாயனரால் {வியாசரால்} முதலில் அறிவிக்கப்பட்டதும், தேவர்களாலும், பிரம்மமுனிவர்களாலும் கேட்கப்பட்ட பிறகு உயர்வாக மதிக்கப்பட்டதும், இருக்கும் உரைநடைகளிலேயே மிகச் சிறப்புவாய்ந்ததும், சொற்தேர்வு {பதங்கள்} மற்றும் பிரிவுகள் {பர்வங்கள்} ஆகிய இரண்டிலும் பலவகைகளில் விரிவானதும், அளவையியலோடு இயைந்த {தர்க்க ரீதியில்} அதிநுட்பமான பொருள்களைக் கொண்டதும், வேதங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதுமான {சம்ஹிதையான} அந்தப் புராணம் {மஹாபாரதம்}, ஒரு புனிதமான படைப்பாகும்.(17,18) நேர்த்தியான மொழியில் இயற்றப்பட்டிருக்கும் அது, பிற நூல்களின் உட்பொருள்களையும் {தனக்குள்} கொண்டிருக்கிறது. வேறு சாத்திரங்களால் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும் அது, நான்கு வேதங்களின் பொருளையும் {தனக்குள்} உள்ளடக்கியிருக்கிறது. அற்புதம் நிறைந்ததும், வியாசருடைய புனிதத் தொகுப்பும், தீமை குறித்த அச்சத்தை அகற்றுவதும், பாரதம் என்றும் அழைக்கப்படுவதுமான அந்த வரலாற்றை {மஹாபாரதத்தை}, மன்னன் ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், துவைபாயனரின் {வியாசரின்} வழிகாட்டுதலின் படி, முனிவர் வைசம்பாயனரால் உற்சாகத்தோடு உரைக்கப்பட்டதைப் போலவே, உள்ளபடியே அதை {மஹாபாரதத்தை} நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார் {முனிவர்}.(19-21)

சௌதி சொன்னார், “{வேள்விகளில்} பலரால் படையல்கள் அளிக்கப்படுபவனும், பலரால் துதிக்கப்படுபவனும்; உண்மையில் அழிவில்லாத, உணரப்படக்கூடிய, புலப்படாத, நித்தியமான பிரம்மமே ஆனவனும்; இருப்பானவனும், இல்லாமையே ஆனவனும்; இந்த அண்டமே ஆனவனும்; இருக்கும் மற்றும் இல்லாத அண்டத்தில் முற்றாக மாறுபட்டவனும்; உயர்வு தாழ்வைப் படைத்தவனும்; பழமையான, மேன்மையான, முடிவில்லாத ஒருவனும்; நலம் பயப்பவனும்; நலமேயானவனும்; அனைத்து முன்னுரிமைகளுக்கும் தகுந்தவனும்; தூய்மையானவனும், மாசற்றவனுமான விஷ்ணுவே ஆனவனும்; அனைத்துப் பிரிவுகளின் {துறைகளின்} ஆட்சியாளனும்; அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் வழிகாட்டியுமான ஹரியே ஆனவனும்; ஆதி இருப்புமான அந்த ஈசானனை வணங்கிப் பணியும் நான், அற்புதமான காரியங்களைச் செய்தவரும், இங்கே அனைவராலும் வழிபடப்படுபவரும், சிறப்புமிக்கத் தவசியுமான வியாசரின் புனித எண்ணங்களை நான் அறிவிக்கப் போகிறேன்.(22-25) சில புலவர்கள் ஏற்கனவே இந்த வரலாற்றை வெளியிட்டிருக்கின்றனர், சிலர் இப்போது இதைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர், இதே போலவே, இதன்பிறகும் மேலும் பலர் இதை அறிவிப்பார்கள் {என்பதில் ஐயமில்லை}.(26) உலகின் மூன்று பகுதிகளிலும் முழுமையாக நிறுவப்பட்ட இஃது அறிவின் பெரும் கொள்ளிடமாகும். விவரமாகவும், சுருக்கமாகவும் என இருபிறப்பாளர்களிடம் {பிராமணர்களிடம்} இஃது இரு வடிவங்களில் இருக்கிறது.(27) நேர்த்தியான வெளிப்பாடுகள், மனித மற்றும் தெய்வீக உரையாடல்கள், பல்வேறு கவித்துவ அளவீடுகள் ஆகியவற்றால் கல்விமான்களுக்கு இது மகிழ்ச்சியை அளிக்கிறது[2]. (28)(வேறொரு பதிப்பில்  “இது அழகான சொற்களாலும், தேவர்களுடைய வரலாறுகளாலும், மனிதர்களுடைய வரலாறுகளாலும் அலங்கரிக்கப்பட்டது; பலவகையான சந்தங்களோடு கூடியது; பண்டிதர்களுக்குப் பிடித்தமானது; சத்தியவதியின் மகனான வியாசர், தம்முடைய தவத்தினாலும், பிரமச்சரியத்தினாலும், நித்தியமான வேதத்தை வகுத்த பிறகு, இந்தப் புண்ணியமான இதிஹாசத்தைச் செய்தார். புண்ணியத்தலமான இமய மலையின் அடிவாரத்தில் பரிசுத்தமான குஹாக்ருஹத்தில் அற ஆன்மா கொண்டவரான அந்த வியாசர், நீராடிவிட்டு, தர்ப்பையைப் பரப்பி, அதன்மேல் அமர்ந்து கொண்டு, தூய்மையும், நியமமும் கொண்டவராக மனதையடக்கித் தியானத்திலேயே நிலைபெற்றிருந்து பாரதமென்னும் இதிஹாசத்தின் வரலாற்றைத் தபோ பலத்தினால் ஆராய்ந்து, யோகத்தில் ஊடுருவி, ஞானத்தால் அனைத்தையும் முழுவதுமாகப் பார்த்தார்” அதன் பிறகு பின்வருவன தொடர்கிறது.)இவ்வுலகம், ஒளியற்று, சுற்றிலும் முற்றுமுழுதாக இருளால் சூழப்பட்டிருந்தபோது, அனைத்து உயிரினங்களின் ஒரே வற்றாத விதையும், படைப்பின் அடிப்படைக் காரணமுமான ஒரு பெரிய முட்டை அங்கே இருப்புக்கு வந்தது.(29) அழிவற்றதும், அற்புதம் நிறைந்ததும், ஒரே தன்மையுடன் அனைத்திடங்களிலும் ஊடுருவியிருப்பதும், நினைப்பதற்கரியதும், காணமுடியாத நுட்பமான காரணமாக இருப்பதுமான பிரம்மத்தின் உண்மை ஒளியைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அது மஹாதிவ்யம் {அந்த முட்டை} என்றழைக்கப்பட்டது.(30,31)

முதல் பிரஜாபதியும், தலைவனும், பிதாமகனுமான பிரம்மன்,சூரகுரு {சுக்ராச்சாரியார்} மற்றும் ஸ்தாணுவுடன் அந்த முட்டையிலிருந்து வெளியே வந்தான்.(32) அதன் பிறகு, மனு, வசிஷ்டர், பரமேஷ்டி, பத்துப் பிரசேதர்கள், தக்ஷன், தக்ஷனின் மகன்கள் எழுவர் ஆகிய இருபத்தோரு பிரஜாபதிகள் தோன்றினர். அதன் பிறகு, முனிவர்கள் அனைவராலும் அறியப்பட்டவனும், நினைத்துப் பார்க்க முடியாத இயல்புடையவனுமான மனிதன் {விராட்புருஷன்} தோன்றினான்; அவ்வாறே, விஸ்வதேவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோரும்; யக்ஷர்கள், சத்யஸ்கள், பிசாசங்கள், குஹ்யர்கள் மற்றும் பித்ருக்களும் தோன்றினர்.(33-35)

அதன்பிறகு, ஒவ்வொரு உன்னதக் குணத்தாலும் புகழ்பெற்ற விவேகிகளும், மிகப் புனிதமானவர்களுமான பிரம்மமுனிகளும் {பிரம்மரிஷிகளும்}, எண்ணற்ற அரசமுனிகளும் {ராஜரிஷிகளும்} படைக்கப்பட்டனர். அதே போல, நீர், சொர்க்கங்கள், பூமி, காற்று, வானம், திசைப்புள்ளிகள், வருடங்கள், காலங்கள் {பருவங்கள்}, மாதங்கள், பக்ஷங்கள் என்றழைக்கப்படும் பிறைநாட்கள், இரவு மற்றும் பகல் ஆகியன முறையாக அடுத்தடுத்துப் படைக்கப்பட்டன. இவ்வாறே மனிதகுலத்தால் அறியப்பட்ட பொருள்கள் அனைத்தும் படைக்கப்பட்டன.(36-37)

இந்த அண்டத்தில் காணப்படும் படைக்கப்பட்ட பொருள்களில், அசைவனவோ, அசையாதனவோ, உலகின் இறுதிக் காலத்தில், யுகம் தீர்ந்த பிறகு மீண்டும் சீர்குலைகின்றன.(38) வேறு யுகங்கள் தொடங்குகையில், பூமியின் பல்வேறு கனிகளை {பலன்களைப்} போல, அனைத்துப் பொருள்களும், தங்கள் காலங்களில் {பருவங்களில்} முறையான வரிசையில் அடுத்தடுத்து புணரமைக்கப்படுகின்றன.(39) இவ்வாறே அனைத்துப் பொருள்களுக்கும் அழிவை உண்டாக்கும் இந்தச் சக்கரம், தொடக்கமும், முடிவும் இல்லாமல் நிரந்தரமாக இவ்வுலகில் தொடர்ந்து சுழன்று வருகிறது.(40)

தேவர்களின் தலைமுறையானது, முப்பத்து மூன்று ஆயிரங்களும், முப்பத்துமூன்று நூறுகளும், முப்பத்துமூன்றுமாகச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது.(41) திவ்-ன் மகன்கள்: ப்ருஹத்பானு, சக்ஷூஸ், ஆத்மா, விபாவசு, சவிதா, ரிசீகன், அர்க்கன், பானு, ஆசாவஹன் மற்றும் ரவி ஆவர்.(42)

இந்தப் பழைய காலத்து விவஸ்வான்களில், இளையவனான மஹ்யனின் மகன், தேவவிரதன் {தேவப்ராட்} ஆவான். பின்னவனின் {தேவவிரதனின்} மகன் சுவவிரதனுக்கு {ஸுப்ராட்டுக்கு}, தசஜோதி, சதஜோதி, சஹஸ்ரஜோதி என்று மூன்று மகன்கள் இருந்ததாகவும், அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணற்ற வாரிசுகளை உண்டாக்கினர் என்றும் நாம் அறிகிறோம்.(43,44) சிறப்புமிக்கத் தசஜோதிக்குப் பத்தாயிரம் {10,000} மக்களும், சதஜோதிக்கு அதைவிடப் பத்து மடங்கும் {1,00,000}, சஹஸ்ரஜோதிக்கு அதைவிடப் பத்துமடங்கும் {10,00,000} மக்கள் இருந்தனர்.(45,46) இவர்களிலிருந்தே குருக்கள், யதுக்கள், பாரதர்கள், யயாதியின் குடும்பத்தினர் மற்றும் இக்ஷவாகுவின் குடும்பத்தினர் ஆகியோரும், அரசமுனிகள் அனைவரும் இந்த வரிசையிலேயே வந்தனர்.(47) {இவர்களால்} உண்டாக்கப்பட்ட தலைமுறைகள் எண்ணற்றவையாகவும், உயிரினங்களும், அவற்றின் வசிப்பிடங்களும் மிக அதிகமாகவும் இருந்தன.

முவ்வழி புதிர்களான வேதங்கள், யோகம், விஞ்ஞானம்; தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியனவும்;(48) தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை விளக்கும் பல்வேறு நூல்களும்; மனிதகுலத்தின் நடத்தைவிதிகளும்;(49) வரலாறுகள் மற்றும் பல்வேறு சுருதிகள் குறித்த உரைகளும், என இவையனைத்தும் முனிவர் வியாசரால் காணப்பட்டு, இந்த நூலில் {மஹாபாரதத்தில்} எடுத்துக்காட்டுகளாக {மாதிரிகளாக} முறையான வரிசையில் குறிப்பிடப்படுகின்றன. (50,51)

முனிவர் வியாசர் இந்த அறிவுத்திரளை விவரமாகவும், சுருக்கமாகவும் இரு வடிவங்களில் வெளியிட்டார். விவரமானதைக் கொள்வதா? சுருக்கமானதைக் கொள்வதா? என்பது உலகில் உள்ள கல்விமான்களின் விருப்பத்தைப் பொருத்ததாகும்.(52) சிலர் பாரதத்தைத் தொடக்க மந்திரத்துடன்[3-நாராயணம் நமஸ்க்ருத்ய” என்ற சுலோகம் முதலாகவும் என்பது இங்கே பொருள்.] படிக்கத் தொடங்குகின்றனர், சிலர் ஆஸ்தீகர் கதையிலிருந்தும், சிலர் உபரிசரனிலிருந்தும், மேலும் சில பிராமணர்கள் முற்றுமுழுதாகவும் படிக்கின்றனர்.(53) கல்விமான்கள், இந்தத் தொகுப்பைக் குறித்துக் கருத்துத் தெரிவித்து, பல்வேறு அறிவுத்துறைகளில் {ஸ்மிருதிகளில்} தங்கள் அறிவை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அதை விளக்குவதிலும், மேலும் சிலர், அதன் உள்ளடக்கத்தை நினைவுகொள்வதிலும் திறன்மிக்கவர்களாக இருக்கின்றனர். (54)

அந்தச் சத்யவதியின் மகன் {வியாசர்}, தவம் மற்றும் தியானத்தைக் கொண்டு நித்தியமான வேதத்தை ஆய்வு செய்த பிறகே இந்தப் புனித வரலாற்றைத் இயற்றினார்.(55) கடும் நோன்புகளைக் கொண்டவரும், கல்விமானும், பராசரரின் வாரிசுமான துவைபாயன வியாசர், விவரிப்புகளில் சிறந்த இந்த விவரிப்பை நிறைவு செய்த போது, அதைத் தன் சீடர்களுக்குத் தன்னால் எவ்வாறு கற்பிக்க முடியும் என்று பரிசீலனை செய்யத் தொடங்கினார்.(56) ஆறு குணங்களைக் கொண்டவனும், உலகங்களின் ஆசானுமான பிரம்மன், முனிவர் துவைபாயனரின் {வியாசரின்} கவலையை அறிந்து, அந்தத் தவசியை {வியாசரை} நிறைவு செய்வதற்காகவும், மக்களுக்கு நன்மையைச் செய்வதற்காகவும், அவர் {வியாசர்} இருந்த இடத்திற்கு வந்தான்.(57) முனி இனங்கள் அனைத்தாலும் சூழப்பட்ட வியாசர், அவனைக் {பிரம்மனை} கண்டு ஆச்சரியமடைந்தார்; கூப்பிய கரங்களோடு நின்று வணங்கிய அவர் {வியாசர்}, ஓர் ஆசனத்தைக் கொண்டு வருமாறு {அந்த முனிவர்களில் இருந்த தம் சீடர்களை} பணித்தார்.(58) வியாசர், ஹிரண்யகர்பன் என்று அழைக்கப்பட்ட அவனை {பிரம்மனை} வலம் வந்து, அந்தப் புகழ்மிக்க ஆசனத்தின் அருகே நின்றார்;(59) பிரம்ம பரமேஷ்டியினால் ஆணையிடப்பட்ட அவர், நிறைந்த அன்புடனும், மகிழ்ச்சியில் புன்னகைத்துக் கொண்டும் அந்த ஆசனத்தின் அருகே அமர்ந்தார்.(60)

அப்போது, பெரும்புகழ்வாய்ந்த வியாசர், அந்தப் பிரம்ம பரமேஷ்டியிடம், “ஓ! தெய்வீகப் பிரம்மனே, பெரிதும் மதிக்கப்படும் செய்யுள் தொகையொன்று {காவியமொன்று} என்னால் இயற்றப்பட்டிருக்கிறது.(61) வேதத்தின் புதிர், மற்றும் வேறு அனைத்து உட்பொருள்களும் என்னால் அதில் விளக்கப்பட்டிருக்கின்றன; அங்கங்களோடு கூடிய உபநிஷத்துகளின் பல்வேறு சடங்குகள்;(62) காலத்தின் மூன்று பிரிவுகளான கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் பெயரால் என்னால் அமைக்கப்பட்ட புராணங்கள் மற்றும் வரலாற்றின் தொகுப்பு; (63) சிதைவு {மூப்பு, இறப்பு}, அச்சம், நோய், இருப்பு மற்றும் இல்லாமை ஆகியவற்றைக் கொண்ட இயற்கையின் உறுதிப்பாடு; சமய நம்பிக்கைகள் மற்றும் பல்வேறு வாழ்வுமுறைகளைக் குறித்த விளக்கங்கள்;(64) நான்கு சாதிகளின் {வர்ணங்களின்} விதி மற்றும் புராணங்கள் அனைத்தின் சாரம்; தவம் மற்றும் ஓர் அற மாணவனின் கடமைகள்;

நான்கு காலங்களின் {யுகங்களின்} காலவரையறைகளுடன் சேர்த்து சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கூட்டங்கள் {நட்சத்திரக்கூட்டங்கள்}, நட்சத்திரங்கள் ஆகியவற்றின் பரிமாணங்கள்; ரிக், சாமம் மற்றும் யஜூர் வேதங்கள்; ஆதியாத்மம்;(65,66) நியாயம் {தர்க்கசாஸ்திரப் பயிற்சி}, மருத்துவம் மற்றும் நோய்களுக்கான சிகிச்சைகள் என்று அழைக்கப்படும் அறிவியல்கள்; ஈகை மற்றும் பாசுபததர்மம்; குறிப்பிட்ட காரியங்களுக்காகப் பிறந்த தேவர்கள் மற்றும் மனிதர்கள்;(67)

புனிதப்பயணத்திற்கான இடங்கள், ஆறுகள், மலைகள், காடுகள், பெருங்கடல்கள்,(68) தெய்வீக நகரங்கள் ஆகிய பிற புனித இடங்கள் மற்றும் கல்பங்கள் {பிரம்மனின் நாட்கள்}; போர்க்கலை; பல்வேறு வகைகளிலான நாடுகள் மற்றும் மொழிகள்; மக்களுடைய நடைமுறைகளின் {செயல்பாடுகளின்} இயல்பு;(69) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆவி {பரம்பொருள்} ஆகிய அனைத்தின் உட்பொருள்களும் அதில் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை யாவற்றுக்கும் பிறகு, இந்தப் படைப்புக்கான எழுத்தர் எவரும் பூமியில் காணப்படவில்லை” என்றார் {வியாசர்}.(61-70)

பிரம்மன் {வியாசரிடம்}, “தெய்வீகப் புதிர்களில் உனக்கிருக்கும் அறிவைக் கொண்டு உன்னை, வாழ்வின் புனிதத்தன்மைக்காகக் கொண்டாடப்படும் இந்த முனிவர்க்கூட்டத்திற்கு முன்னிலையில் நான் உயர்வாக மதிக்கிறேன்.(71) தெய்வீகச் சொற்களை, அவை முதலில் உச்சரிக்கப்பட்டதிலிருந்தே, உண்மையான மொழியில் நீ வெளிக்கொணர்வாய் என்பதை நான் அறிவேன். உன் தற்போதைய படைப்பை நீ செய்யுள் தொகுப்பு {காவியம்} என்று அழைத்தாய், எனவே அது செய்யுள் தொகுப்பாகவே இருக்கட்டும் {காவியமேயாகும்}.(72) இல்லற ஆசிரமத்தின் தகுதிக்கு, மற்ற மூன்று வகை ஆசிரமங்களும் ஒருபோதும் இணையாகாததைப் போலவே, இந்தச் செய்யுள்தொகுப்பின் விளக்கங்களுக்கு இணையான படைப்பைத் தரக்கூடிய எந்தப் புலவரும் எப்போதும் இருக்க மாட்டார்கள்.(73) ஓ! முனியே, இந்தச் செய்யுள் தொகுப்பை {காவியத்தை} எழுதும் காரியத்திற்காகக் கணேசன் {விநாயகர்} நினைக்கப்பட வேண்டும் {கணபதியைத் தியானிப்பாயாக}” என்றான் {பிரம்மன்}.(74)

சௌதி சொன்னார், “இவ்வாறு வியாசரிடம் பேசிய பிரம்மன், தன் வசிப்பிடத்திற்குச் சென்று சேர்ந்தார். பிறகு வியாசர் கணேசனைத் தமது மனத்தில் அழைக்கத் தொடங்கினார். தன் பற்றார்வலர்களின் {பக்தர்களின்} விருப்பங்களை நிறைவேற்றத் தயாராக இருப்பவனும், தடைகளை அகற்றுபவனுமான கணேசன், நினைக்கப்பட்ட மாத்திரத்திலேயே, வியாசர் அமர்ந்திருந்த இடத்தை அடைந்தான்.(75,76) அவன் {கணேசன்} வணங்கப்பட்டு, அமர்ந்த பிறகு, வியாசர் அவனிடம் இவ்வாறு பேசினார், “ஓ! கணங்களின் வழிகாட்டியே, என் மனத்தில் நான் அமைத்ததும், நான் திரும்பச் சொல்லப்போவதுமான பாரதத்திற்கு நீ எழுத்தனாவாயாக” என்று கேட்டார்.(77)

இந்த அறிமுகத்தைக் கேட்ட கணேசன், இவ்வாறு பதலளித்தான், “{நீர் சொல்லும்போது} என் எழுத்தாணி ஒரு கணமும் எழுதாமல் நிற்காதென்றால், நான் உமது படைப்பின் எழுத்தனாவேன்” {என்றான் கணேசன்}.(78) வியாசர் அந்தத் தெய்வீகத்தன்மையிடம் {கணேசனிடம்}, “எங்காவது, ஏதாவது உனக்குப் புரியாதபோது, தொடர்ந்து எழுதுவதை நிறுத்துவாயாக” என்றார். கணேசன், “ஓம்” என்ற சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லி, தன் இசைவைக் குறிப்பிட்டுவிட்டு, எழுத முனைந்தான்; வியாசரும் {சொல்லத்} தொடங்கினார்;(79) திசை திருப்பும் வழியின் மூலம் அவர் {வியாசர்} அந்தத் தொகுப்பில் மிக நெருக்கமான முடிச்சுகளைப் {பொருள் விளங்கிக் கொள்ள முடியாத வியாசகூடங்களைப்} பின்னினார்; அதைச் செய்ததன் மூலம் அவர், தமது ஒப்பந்தத்தின்படி இந்தப் படைப்பை எழுதுவதற்குக் கூறினார்.(80)

(சௌதி தொடர்ந்தார்), {சௌதியான} எனக்கு அவற்றில் {வியாசகூடங்களில்} எட்டாயிரத்து எண்ணூறு (8800) செய்யுள்கள் தெரியும், அதே போலச் சுகருக்கும் {வியாசரின் மகனுக்கும்}, ஒருவேளை சஞ்சயனுக்கும் தெரியும். ஓ! முனிவரே, {வியாசகூடங்களால்} நெருக்கமாகப் பின்னப்பட்டு, புதிர்த்தன்மையுடன் கூடிய அந்தக் கடினமான சுலோகங்களுக்குள் யாராலும் ஊடுருவிப் புரிந்து கொள்ள இந்நாள் வரை முடியவில்லை.(81,82) அனைத்தையும் அறிந்த கணேசனே கூட, கருத்தில் கொள்ள ஒரு கணத்தை எடுத்துக் கொண்டான் {அதனால் கண நேரம் தாமதமானது}; எனினும், அதேவேளையில் வியாசர், {அதே வேளையில்} தொடர்ந்து வேறு செய்யுள்களை மிக அபரிமிதமாக இயற்றினார்.(83)

அஞ்சனமிட {கண்களைக் கழுவும் மருந்தை இடப்} பயன்படும் கருவியொன்றைப் போல, இந்தப் படைப்பின் அறிவானது, அறியாமை எனும் இருளில் குருடாகியிருந்ததும், அறிவார்வம் கொண்டதுமான இந்த உலகத்தின் கண்களைத் திறந்திருக்கிறது.(84) சூரியன் இருளை அகற்றுவதைப் போலவே, இந்தப் பாரதம், அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றில் தான் கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்களால், மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறது.(85) முழு நிலவானது, தன் மென்மையான ஒளியால், ஆம்பல் மலர்களின் இதழ்களை விரிப்பதுபோலவே, இந்தப் புராணமும், சுருதியின் ஒளியை வெளிப்படுத்தி, மனித அறிவை மலரச் செய்திருக்கிறது.(86) அறியாமையெனும் இருளை அளிக்கும் வரலாறு {மஹாபாரதம்} எனும் விளக்கால், இயற்கையெனும் மொத்த மாளிகையும், சரியாகவும், முழுமையாகவும் ஒளியூட்டப்படுகிறது.(87)

இந்தப் படைப்பு {பாரதம்} ஒரு மரமாகும். அதன் பகுதிகளின் பொருளடக்கம் {அனுக்கிரமணிகம்} அதன் விதையாகும்; பௌலோமம் மற்றும் ஆஸ்தீகம் என்றழைக்கப்படும் பிரிவுகள் {உபபர்வங்கள்} அதன் வேர்களாகும். சம்பவம் என்றழைக்கப்படும் பகுதி அதன் தண்டாகும்; சபா மற்றும் ஆரண்யம் என்றழைக்கப்படும் நூல்கள் ஓங்கி உயர்ந்த கிளைகளாகும்; ஆரணி என்றழைக்கப்படும் நூல் முடிக்கப்பட்ட முடிச்சுகளாகும் {புதிர்களாகும்};(88) விராடம் மற்றும் உத்யோகம் என்றழைக்கப்படும் நூல்கள் நடுப்பாகமாகும்; பீஷ்மர் என்றழைக்கப்படும் நூலானது முக்கியக் கிளையாகும்; துரோணர் என்றழைக்கப்படும் நூலானது இலைகளாகும்; கர்ணன் என்றழைக்கப்படும் நூலானது அழகிய மலர்களாகும்; சல்லியன் என்ற பெயரைக் கொண்ட நூலானது அவற்றின் இனிய மணமாகும்; ஸ்திரீ மற்றும் ஐஷீகம் என்று தலைப்பிடப்பட்ட நூல்கள் புத்துணர்ச்சியளிக்கும் நிழலாகும்; சாந்தி என்றழைக்கப்படும் நூலானது பெரும் கனியாகும்;(89,90) அஸ்வமேதம் என்றழைக்கப்படும் நூலானது அழிவில்லாத இனப்பாலாகும் {அமிர்தத்திற்கு ஒப்பான பழரசமாகும்}; ஆசிரமவாசிகம் என்ற பெயரிடப்பட்டது, அது {மரம்} வளரும் இடமாகும்; மௌசலம் என்றழைக்கப்படும் நூலானது, வேதங்களின் சுருக்கமும், நல்ல பிராமணர்களால் பெரிதாக மதிக்கப்படுவதுமாகும். பாரதம் எனும் இந்த மரமானது, மேகங்களைப் போல மனித குலத்திற்கு வற்றாததாகி, புகழ்வாய்ந்த புலவர்கள் அனைவரின் வாழ்வாதாரமாக அமையும்.(91,92)

நான் இப்போது இந்த மரத்தில் இறுதிவரை மலர்ந்திருப்பவையும், கனிநிறைந்தவையாக இருப்பவையும், தூய்மை மற்றும் இனிய சுவையைக் கொண்டவையும், தேவர்களாலும் அழிக்கப்பட முடியாதவையுமான படைப்புகளைச் சொல்லப் போகிறேன்.(93)

முன்பொரு சமயம், உற்சாகமுள்ளவரும், அறம் சார்ந்தவருமான கிருஷ்ண-துவைபாயனர் {வியாசர்}, கங்கையின் ஞானமகனான பீஷ்மர், மற்றும் தன் சொந்த தாயார் {சத்தியவதி} ஆகியோரின் உத்தரவுகளின்டி, விசித்திரவீரியனின்மனைவியர் இருவரின் மூலமும், மூன்று நெருப்புகளைப் போன்றவர்களான மூன்று ஆண்பிள்ளைகளுக்குத் தந்தையானார்;(94) இவ்வாறு திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோரை பெற்ற அவர், தமது அறப்பயிற்சியின் வழக்கத்தைத் தொடர தமது தனிப்பட்ட வசிப்பிடத்திற்கு {ஆசிரமத்திற்குச்} சென்றார்.(95)

பெரும் முனிவரான வியாசர், இவர்கள் {அந்த மூவரும்} பிறந்து, வளர்ந்து, உயர்ந்த பயணத்தில் பிரிந்து போகும் வரை இம்மனிதகுலவுலகில் பாரதத்தை வெளியிடவில்லை;(96) ஜனமேஜயனாலும்,[4-விசித்திரவீரயன் மகன் பாண்டு. பாண்டு மகன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மகன் பரிக்ஷித்.பரிக்ஷித் மகன் ஜனமேஜயன்.அந்த ஜனமேஜயன் நடத்திய நாகயாகத்தின் போது, ஜனமேஜயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க வியாசரின் முன்னிலையிலேயே வியாசரின் சீடரான வைசம்பாயனர் உரைத்ததே இந்த மகாபாரதம்.வைசம்பாயனர் உரைத்ததைக் கேட்ட சௌதியே தற்போது நைமிசாரண்யத்தில் உரையாற்றுகிறார்.] ஆயிரக்கணக்கான பிராமணர்களாலும் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டபோது, தமதருகே அமர்ந்திருந்த தம் சீடரான வைசம்பாயனரை அவர் அறிவுறுத்தினார்;(97) அவரோ {வைசம்பாயனரோ}, சத்யஸ்களுடன் அமர்ந்து கொண்டு, மீண்டும் மீண்டும் உரைக்கத் தூண்டப்பட்டு, வேள்வி சடங்குகளின் {ஹோம காரியங்களின்} இடைவேளைகளின் போது இந்தப் பாரதத்தை உரைத்தார்.(98)

குரு {கௌரவக்} குடும்பம், காந்தாரியின் அறக்கொள்கைகள், விதுரனின் அறிவு, குந்தியின் பண்பு மாறா இயல்பு நிலை ஆகியவற்றின் பெருமைகளை வியாசர் இதில் முழுமையாகப் பிரதிபலித்திருக்கிறார்.(99) உன்னதமான அந்த முனிவர் {வியாசர்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தெய்வீகத் தன்மையையும், பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} நன்னெறிகளையும், திருதராஷ்டிரனுடைய மகன்கள் மற்றும் அவர்களுடைய பங்காளிகளின் தீய நடைமுறைகளையும் விளக்கியிருக்கிறார்.(100)

ஆதிபர்வம் – பகுதி 1 ஆ-(பதிவின் சுருக்கம் : பாண்டு மற்றும் பாண்டவர்களின் வரலாற்றுச் சுருக்கம்; திருதராஷ்டிரன் கவலை; மஹாபாரதத்தின் பெயர்க்காரணம்…)

உண்மையாக வியாசர்முதலில் இருபத்துநாலாயிரம் {24,000} செய்யுள்களில் தனிபட்ட பகுதிகளை {அத்யாயங்களைக்} கொண்ட பாரதத் தொகுப்பையே செய்தார்; அவ்வளவு மட்டுமே கல்விமான்களால் {உண்மையான} பாரதம் என்றழைக்கப்படுகிறது.(101) அதன்பிறகு அவர், அறிமுகம் மற்றும் அந்தப் பகுதிகளின் பொருளடக்கத்துடன் கூடிய நூற்றைம்பது {150} செய்யுள்களில் ஒரு சுருக்கத்தை இயற்றினார்[5-இந்த 102ம் ஸ்லோகத்திற்குப் பிறகு, 103ம் ஸ்லோகத்திலிருந்து 272ம் ஸ்லோகம் வரையில் உள்ள 170 ஸ்லோகங்களுக்குள்ளாகவே இங்கே குறிப்பிடப்படும் நூற்றைம்பது {150} சுலோகங்களைக் கொண்ட அனுக்கிரமாணிகம் என்ற மஹாபாரதச் சுருக்கம் இருக்க வேண்டும்.].(102) இதை அவர், முதலில் தமது மகன் சுகருக்குக் கற்பித்தார்; அதன் பிறகு அவர், அதே தகுதிகளைக் கொண்ட தமது பிற சீடர்களுக்கு அதைக் கொடுத்தார்.(103)

அதன் பிறகு அவர், அறுபது நூறாயிரம் (அறுபது லட்சம் 60,00,000} செய்யுள்களுடன் {கிரந்தஸங்கியைகளுடன்} கூடிய மற்றொரு தொகுப்பைச் செய்தார்.

அவற்றில், முப்பது நூறாயிரத்தை {முப்பது லட்சத்தை 30,00,000} தேவர்களின் உலகம் அறிந்திருக்கிறது;(104)

பதினைந்து நூறாயிரத்தை {பதினைந்து லட்சத்தை 15,00,000} பித்ருக்களின் உலகம் அறிந்திருக்கிறது;

பதினான்கு நூறாயிரம் {பதினான்கு லட்சம் 14,00,000} கந்தர்வர்களுக்கு மத்தியில் அறியப்பட்டிருக்கிறது,

அதேவேளையில் ஒரு நூறூயிரமானது {ஒரு லட்சமானது 1,00,000} இந்த மனிதகுல உலகால் அறியப்பட்டிருக்கிறது.(105)

தேவர்களுக்கு அவற்றை {மஹாபாரதச் சுலோகங்களை} நாரதர் உரைத்தார், பித்ருக்களுக்குத் தேவலரும், கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களுக்குச் சுகரும் வெளியிட்டனர்;(106)

நீதியுடன் கூடிய கொள்கைகள் கொண்டவரும், வேதங்களை அறிந்தர் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசரின் சீடர்களில் ஒருவரான வைசம்பாயனரால் இவ்வுலகில் அவை உரைக்கப்பட்டன. சௌதியாகிய நானும், அந்த ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம் 1,00,000} செய்யுள்களையும் மீண்டும் சொல்லப் போகிறேன் என்பதை அறிவீராக.(107)

துரியோதனன்,ஆசையால் உண்டாக்கப்பட்ட ஒரு பெரும் மரமாவான்,கர்ணனே அதன் தண்டாவான்; சகுனி அதன் கிளைகளாவான்; துச்சாசனனே அதன் கனியும், மலர்களுமாவான்; பலவீனனான திருதராஷ்டிரனே அதன் வேராவான்.(108) {இந்த ஸ்லோகம் கங்குலியின் பதிப்பில் இல்லை}

யுதிஷ்டிரன்அறம் மற்றும் நல்லொழுக்கம் கொண்ட ஒரு பெரும் மரமாவான்,அர்ஜுனன் அதன் தண்டாவான், பீமசேனன் அதன் கிளைகளாவான், மாத்ரியின் மைந்தர்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} அதில் முழுதாக வளர்ந்த கனியும் மலர்களுமாவர். கிருஷ்ணன், பிரம்மன் மற்றும் பிராமணர்கள் அந்த மரத்தின் வேராவர்.(109)-

பாண்டு தன் விவேகத்தாலும், ஆற்றலாலும் பல நாடுகளை அடக்கி, ஒரு விளையாட்டு வீரனாக, முனிவர்களுடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட காட்டில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட போது, தன் இணையோடு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மானைக் கொன்றதால், மிகக் கடுமையானதும், தன் குடும்பத்து இளவரசர்கள் {பாண்டவர்கள்} வாழ்ந்தவரை, அவர்களது நடத்தைக்கு எச்சரிக்கையாக அமைந்ததுமான தீப்பேறு ஒன்றை அடைந்தான்.(110,111) அவர்களது {அந்த இளவரசர்களின்} தாய்மார் {குந்தி மற்றும் மாத்ரி}, விதிகளை நிறைவேற்றும்பொருட்டு {பாண்டுவின் குலம் அழிந்து போகாமல் இருப்பதற்காக}, தேவர்களான தர்மன் {யமதர்மராஜன்}, வாயு, சக்ரன் {இந்திரன்}, தெய்வத்தன்மை கொண்ட அசுவினி இரட்டையர்கள் ஆகியோரைத் தங்கள் அரவணைப்புகளுக்கு மாற்றாக ஏற்றுக்கொண்டனர்[6-வேறொரு பதிப்பில், “பிறகு, பர்த்தாவினிடத்து அன்புள்ளவர்களாகிய குந்தி பதிவிரதாதர்மத்துக்குரிய துர்வாஸரிஷியின் மந்திரத்தையடைந்து புத்திரர்களை இச்சித்து அந்த மந்தித்தினால், தர்மதேவதை, வாயு, இந்திரன் இவர்களையழைத்தாள். குந்தி உபதேசித்த மந்திரத்தினால் மாத்திரி அசுவினி தேவர்களையழைத்தாள். பிறகு, பாண்டவர் யாவரும் குந்தி மாத்திரி இவர்களுடைய மந்திரங்களினாற் பிறந்தனர்” என்றிருக்கிறது.].(112) அவர்களது வாரிசுகள் {பாண்டவர்கள்} தாய்மாரின் கவனிப்பின் கீழ், தவசிகள் சமூகத்தில், புனிதமான சோலைகள் மற்றும் அறவோருக்குச் சொந்தமான, தனிப்பட்ட, புனிதமான வசிப்பிடங்களில் வளர்ந்து வந்தபோது, தங்கள் முடிகளைத் தங்கள் தலைகளில் முடிந்து கட்டிக் கொண்டவர்களாகவும் {சடை தரித்தவர்களாகவும்}, பிரம்மச்சரிய வழக்கம் கொண்ட மாணவர்களாகவும் யாரைப் பின்தொடர்ந்து சென்றார்களோ, அந்த முனிவர்களால் அவர்கள், திருதராஷ்டிரன் மற்றும் அவனது மகன்களின் முன்னிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.(113-114) “இந்த எங்கள் சீடர்கள்” என்று சொன்ன அவர்கள் {முனிவர்கள்}, “உங்கள் மகன்களும், உங்கள் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர்; இவர்கள் பாண்டவர்களாவர்” என்றும் சொன்னார்கள். {பிறகு} இதைச் சொன்ன அந்த முனிவர்கள் மறைந்து போனார்கள்.(115)

அவர்கள் பாண்டுவின் மகன்களாக முனிவர்களால்} அறிமுகப்படுத்தப்பட்டதைக் கௌரவர்கள் {குருஜாங்கல நாட்டு மக்கள்} கண்ட போது, புகழ்பெற்ற {உயர்ந்த} வகுப்பைச் சார்ந்த குடிமக்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் கூச்சலிட்டனர்.(116) எனினும் சிலர், “அவர்கள் பாண்டுவின் மகன்கள் அல்ல” என்றனர்; சிலர் “அவர்களே {மகன்களே}” என்றனர்; மேலும் சிலரோ, அவன் {பாண்டு} இறந்து நெடுங்காலமானதைக் கண்டு, “அவர்கள் அவனது {பாண்டுவின்} வாரிசாக எவ்வாறு இருக்க முடியும்?” என்று கேட்டனர்.(117) இருப்பினும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும், “அனைத்து வகையிலும் அவர்களுக்கு நல்வரவு! தெய்வீக முன்னறிவாலேயே {காலம் நல்லதாக இருப்பதாலேயே} பாண்டுவின் குடும்பத்தை நாம் காண்கிறோம். அவர்களது வரவு நல்வரவாகவே அறிவிக்கப்பட வேண்டும்” என்ற கூக்குரல்கள் கேட்கப்பட்டன.(118) இந்த இசைவுப்பேரொலிகள் நின்றதும், சொர்க்கத்தின் அனைத்துப் புள்ளிகளிலும் {அனைத்துத் திசைகளிலும்} எதிரொலித்தவையான, கண்களுக்குப் புலப்படாத ஆவிகளின்[7] ( ஆவி என்ற சொல் இங்கே பொருந்தவில்லை. வேறொரு பதிப்பில், “அந்தச் சத்தம் ஓய்ந்த பின் மறைந்திருந்த தேவதைகளுடைய பெருமுழக்கமானது எல்லாத் திசைகளிலும் எதிரொலியை உண்டாக்கிக் கொண்டு எழும்பியது” என்றிருக்கிறது.)பாராட்டுகள், மிகப்பெரியனவாக இருந்தன. அங்கே இனிய நறுமணமிக்க மலர்களின் மழையும், சங்குகள் மற்றும் துந்துபிகளின் ஒலியும் இருந்தன. அந்த இளம் இளவரசர்களின் {பாண்டவர்களின்} வருகையின் போது இத்தகு ஆச்சரியங்கள் நடந்தன.(119,120) அந்தச் சந்தர்ப்பத்தில், குடிமக்கள் தங்கள் நிறைவை வெளிப்படுத்தும் வகையில், அவர்கள் அனைவரின் மகிழ்ச்சி நிறைந்த ஒலியானது, பாராட்டுகளாகப் பெருகி, சொர்க்கங்களையே {வானத்தையே} எட்டும் வகையில் மிகப் பெரியதாக இருந்தது.(121)

வேதங்களையும், பல்வேறு சாத்திரங்களையும் முழுமையாகக் கற்ற பாண்டவர்கள், எவரிடமும் எந்த அச்சவுணர்வுமின்றி, அனைவராலும் மதிக்கப்பட்டு அங்கே {ஹஸ்தினாபுரத்தில்} வசித்து வந்தனர்.(122) முக்கியமான மனிதர்கள், யுதிஷ்டிரனின் தூய்மையிலும், பீமசேனனின் பலத்திலும், அர்ஜுனனின் வீரத்திலும்,(123) மூத்தோருக்கு அடங்கி நடக்கும் குந்தியின் கவனிப்பிலும், இரட்டையரான நகுலன் மற்றும் சகாதேவனின் பணிவிலும் நிறைவடைந்தனர்; அவர்களது வீர அறங்களால் {நல்லொழுக்கங்களால்} மக்கள் அனைவரும் {அவர்களிடம்} மகிழ்ச்சியடைந்தனர்.(124) சிறிது காலங்கழித்து, அர்ஜுனன், ராஜாக்களின் {மன்னர்களின்} கூட்டத்திற்கு மத்தியில், ஒரு ஸ்வயம்வரத்தில் {தன்னேற்பில்}, வில்லாண்மையில் {வில்வித்தையில்} மிகக் கடினமான அருஞ்செயல் ஒன்றைச் செய்து, கிருஷ்ணை {திரௌபதி} என்ற கன்னிகையை அடைந்தான்.(125) இந்தக் காலத்திலிருந்தே அவன் {அர்ஜுனன்} இவ்வுலகின் வில்லாளிகள் அனைவருக்கும் மத்தியில் மிகவும் மதிக்கப்படலானான்; போர்க்களங்களிலும் அவன், அந்தச் சூரியனைப் போல, எதிரிகளால் கடினமானவனாகக் காணப்பட்டான்.(126) அண்டை {நாடுகளின்} இளவரசர்கள் அனைவரையும், கருத்திற்கொள்ளத்தக்க அனைத்து இனங்களையும் வென்ற அவன் {அர்ஜுனன்}, ராஜா (தன் அண்ணன்) {யுதிஷ்டிரன்}, ராஜசூயம் என்று அழைக்கப்பட்ட பெரும் வேள்வியை நடத்துவதற்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றினான்.(127)

வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அறிவாலோசனைகள் {நல்ல உபாயங்கள்}, பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் வீரம் {சக்தி} ஆகியவற்றின் மூலம், (மகதத்தின் மன்னன்) ஜராசந்தனையும், செருக்குமிக்கச் சைத்யனையும் {சேதி நாட்டு மன்னன் சிசுபாலனையும்} கொன்று, தகுதிகள் கடந்த நிலையை அடைந்த யுதிஷ்டிரன், பொருள்கள் {அன்னம்}, காணிக்கைகள் {தக்ஷிணைகள்} ஆகியவை நிறைந்த மகத்தான ராஜசூய வேள்வியைச் செய்யும் உரிமையை அடைந்தான்.(128,129) இந்த வேள்விக்குத் துரியோதனன் வந்தான்; காணிக்கைகள், விலைமதிப்புமிக்கக் கற்கள் {முத்துக்கள்}, தங்கம் மற்றும் ரத்தினங்களையும்; பசுக்கள், மாடுகள், யானைகள், குதிரைகள் ஆகிய செல்வங்களையும்; ஆர்வத்தைத் தூண்டும் இழைமங்கள் {துணிகள்}, ஆடைகள் மற்றும் மேலாடைகளையும்; விலைமதிப்பற்ற சால்வைகள், விலங்கின் மென்மயிர் ஆடைகள், ரங்குவின் {ரங்கு என்ற மானின்} தோலாலான விரிப்புகளையும்; சுற்றிலும் சிதறிக் கிடக்கும் பாண்டவர்களின் பரந்த செல்வத்தையும் அவன் {துரியோதனன்} கண்டபோது, பொறாமையால் நிறைந்து, மிகவும் மகிழ்ச்சியற்றவனானான் {உற்சாகத்தை இழந்தவனானான்}.(130-132) தெய்வீக சபையின் பாணியில், (அசுரத்தச்சன்) மயனால் நேர்த்தியாகக் கட்டப்பட்ட சபா மண்டபத்தைக் கண்ட போது அவன் சினத்தால் எரிந்தான்.(133) அந்தக் கட்டடத்திற்குள் உள்ள குறிப்பிட்ட கட்டடக்கலை மாயங்களால் குழம்பத் தொடங்கிய போது, இழிந்த பரம்பரையைச் சேர்ந்த ஒருவனைப் போல அவன் {துரியோதனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் பீமசேனனால் ஏளனம் செய்யப்பட்டான்[8].(134)(வேறொரு பதிப்பில், “அந்த ஸபையில் நாகரிகமறியாதவனைப் போல் தடுமாறி இடறி விழுந்த துரியோதனன் கிருஷ்ணனுக்கெதிரில் பீமஸேனனால் நகைக்கப்பட்டான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.)

பல்வேறு இன்பநுகர் பொருள்கள், பல்வேறு விலைமதிப்பற்ற பொருள்கள் ஆகிவற்றைப் பகிர்ந்தளிக்கும்போது, குறைவடைந்தவனாகவும், குருதியற்றவனாகவும், வெளிறியவனாகவும் அவனது மகன் {துரியோதனன்} மாறிக்கொண்டிருப்பதாகத் திருதராஷ்டிரனிடம் தெரிவிக்கப்பட்டது.(135) சில காலம் கழித்து, அந்தத் திருதராஷ்டிரன், தன் மகன் {துரியோதனன்} மீது கொண்ட பாசத்தின் காரணமாக, (பாண்டவர்களுடன்) அவர்கள் {கௌரவர்கள்} பகடை விளையாட தன் ஒப்புதலை அளித்தான். இதை அறியவந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} மிகவும் கோபமடைந்தான்.(136) இதனால் நிறைவையிழந்த {அதிருப்தியடைந்த} அவன், சச்சரவுகளைத் தவிர்க்க ஏதும் செய்யாமல், அந்த விளையாட்டையும், அதனால் எழுந்தவையும், நியாயப்படுத்தப்பட முடியாதவையும், பயங்கரமானவையுமான பரிமாற்றங்களைப் புறக்கணித்தான்;(137) விதுரன், பீஷ்மர், துரோணர், சரத்வானின் மகனான கிருபர் ஆகியோர் இருந்தாலும், அதை {அந்த விளையாட்டைத்} தொடர்ந்து வந்த பயங்கரப் போரில் அவன் {கிருஷ்ணன்} க்ஷத்திரியர்களைத் தங்களுக்குள் ஒருவரையொருவர் கொல்லச் செய்தான்.(138)

{குருக்ஷேத்திரப் போரின் முடிவில்} பாண்டவர்களின் வெற்றி குறித்த தீய செய்தியைக் கேட்டவனும், துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரின் தீர்மானங்களை நினைத்துப் பார்த்தவனுமான திருதராஷ்டிரன்,(139) சிறிது நேரம் சிந்தித்து, சஞ்சயனிடம் பின்வருமாறு பேசினான்: “ஓ! சஞ்சயா, நான் சொல்லப்போகும் அனைத்தையும் கவனித்தால் {கவனத்துடன் கேட்டால்}, என்னை நீ வெறுக்க மாட்டாய்.(140) சாத்திரங்களை நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவு மற்றும் நல்லறிவைக் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய். நான் எப்போதும் போரை விரும்பியதில்லை, என் குல அழிவிலும் நான் மகிழ்ச்சி கொண்டதில்லை.(141) என் சொந்தப் பிள்ளைகள் மற்றும் பாண்டுவின் பிள்ளைகள் ஆகியோருக்கிடையில் எனக்கு {எப்போதும்} எந்த வேறுபாடுமில்லை.(142) நான் கிழவன் என்பதால், என் மகன்கள், தங்கள் விருப்பபடிக்கு ஏறுக்குமாறானவர்களாகி என்னை இகழ்ந்தனர். பார்வையற்றவனான நான், என் பரிதாப நிலையினாலும், தந்தை பாசத்தாலும் அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.(143)

சிந்தையற்ற {புத்தியில்லாத} துரியோதனனிடம் எப்போதும் வளர்ந்த மடமையின் பின்னால் சென்று நானும் மூடனானேன். பாண்டு மகன்களின் பெரும் செல்வங்களைக் காணச் சென்ற என் மகன் {துரியோதனன்}, மண்டபத்தில் {மண்டபத்தின் படிகளில்} ஏறிச் சென்ற போது, அவனது தடுமாற்றத்திற்காக ஏளனம் செய்யப்பட்டான்.(144) அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனும், களத்தில் பாண்டுவின் மகன்களை வெற்றிகொள்ள இயலாதவனுமான அவன் {துரியோதனன்}, தானே படைவீரனாக இருப்பினும், தன் சொந்த முயற்சியால் நற்பேற்றை அடைய விரும்பாமல், காந்தாரத்தின் மன்னனுடைய {சகுனியுடைய} உதவியோடு, பகடையெனும் ஒரு நியாயமற்ற விளையாட்டை நடத்தினான்.(145,146) ஓ! சஞ்சயா, அதன்பேரில் நடந்தவையும், என் அறிவுக்கு எட்டியவையுமான அனைத்தையும் கேட்பாயாக. நான் சொல்லும் அனைத்தையும் நீ கேட்கும்போதே, அவை அனைத்தையும் நீ நினைத்துப் பார்த்தால், முன்கண்டுணரும் {தீர்க்கதரிசனக்} கண்களைக் கொண்ட ஒருவனாக என்னை நீ அறிவாய்.(147)

எப்போது அர்ஜுனன் வில்லை வளைத்து, ஆவலுடன் இலக்கைத் துளைத்து, அதைத் தரையில் வீழ்த்தினான் என்றும், கூடியிருந்த இளவரசர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கன்னிகையான கிருஷ்ணையை {திரௌபதியை} வெற்றிகரமாகக் கொண்டு சென்றான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(148)

எப்போது மது குலத்தைச் சேர்ந்த சுபத்திரை, வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப்பட்ட பிறகு, துவாரகை நகரத்தில், அர்ஜுனனால் திருமணம் செய்யப்பட்டாள் என்றும், விருஷ்ணி குலத்தின் இரு வீரர்களும் (சுபத்திரையின் சகோதரர்களான கிருஷ்ணனும், பலராமனும்) அதற்காகக் கோபமடையாமல் இந்திரப்பிரஸ்தத்திற்குள் நண்பர்களாக நுழைந்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(149)

எப்போது அர்ஜுனன், தன் தெய்வீகக் கணையைக் கொண்டு, தேவர்களின் மன்னனான இந்திரனால் பொழியப்பட்ட மழையைத் தடுத்தான் என்றும், காண்டவத்தின் காட்டை {காண்டவவனத்தை} அக்னிக்குக் கொடுத்து, அவனை நிறைவுகொள்ளச் செய்தான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(150)

எப்போது ஐந்து பாண்டவர்களும், தங்கள் தாயான குந்தியுடன் அரக்கு வீட்டில் இருந்து தப்பித்தனர் என்றும், அவர்களுக்கான ஏற்பாடுகளை நிறைவேற்றுவதில் விதுரன் ஈடுபட்டான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(151)

எப்போது அர்ஜுனன், அரங்கில் உள்ள இலக்கைத் துளைத்துத் திரௌபதியை வென்றான் என்றும், துணிச்சல்மிக்கப் பாஞ்சாலர்கள், பாண்டவர்களைச் சேர்ந்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(152)

எப்போது மகத அரசகுலத்தில் முதன்மையானவனும், க்ஷத்திரியர்களுக்கு மத்தியில் சுடர்விடுபவனுமான ஜராசந்தன், வெறுங்கரங்களைக் கொண்டே பீமனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(153)

எப்போது பாண்டு மகன்கள் தங்கள் பொதுப்போர்த்தொடரில் {திக்விஜயத்தில்} நிலத்தின் தலைவர்களை வென்று, மகத்தான ராஜசூய வேள்வியைச் செய்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(154)

எப்போது திரௌபதி, கண்ணீரால் தடைபட்ட தன் குரலுடனும், இதயம் நிறைந்த வேதனையுடனும், தூய்மையற்ற {தீட்டுக்} காலத்தில், ஒற்றையுடுப்புடன் சபைக்கு இழுத்து வரப்பட்டாள் என்றும், பாதுகாவலர்களைக் கொண்டவளானாலும், பாதுகாவலர்களற்றவளைப் போல நடத்தப்பட்டாள் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(155)

எப்போது தீயவனும், பொல்லாதவனுமான துச்சாசனன், அவளது {திரௌபதியின்} அந்த ஒற்றையாடையை உருவ முயன்று, அவளது மேனியில் இருந்து ஒரு பெரும் துணிக்குவியலை மட்டுமே உருவி, அதன் முனையை அடைய முடியாமல் போனான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(156)

எப்போது யுதிஷ்டிரன், பகடையாட்டத்தில் சௌபலனால் {சகுனியால்} வீழ்த்தப்பட்டு, அதன் விளைவாக அவனது நாட்டை இழந்தும், ஒப்பற்ற ஆற்றலையுடைய அவனது தம்பிமாரால் கவனிக்கப்பட்டான் {சேவகம் செய்யப்பட்டான்} என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(157)

எப்போது நல்லோரான பாண்டவர்கள், துன்பத்துடன் அழுதுகொண்டே, தங்கள் அண்ணனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து காட்டுக்குச் சென்றனர் என்றும், தங்கள் நலமின்மையைத் தணிக்கப் பல்வேறு வகைகளில் முயன்றனர் என்றும் கேட்டேனோ, ஓ சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(158)

எப்போது யுதிஷ்டிரன், ஸ்நாதகர்களாலும், பிச்சை பெற்று வாழும் உன்னத மனம் கொண்ட பிராமணர்களாலும் காட்டுக்குள் பின்தொடரப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(159)

எப்போது அர்ஜுனன், ஒரு மோதலில், வேடனின் வடிவில் இருந்தவனும், தேவர்களுக்குத் தேவனுமான திரையம்பகனை (முக்கண்ணனை) {சிவனை} நிறைவு செய்து, பாசுபதம் என்ற பெரும் ஆயுதத்தை அடைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(160)

எப்போது நீதிமானும், புகழ்பெற்றவனுமான அர்ஜுனன், தேவலோகங்களுக்குச் சென்று, இந்திரனிடமே தெய்வீக ஆயுதங்களை அடைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(161)

எப்போது அர்ஜுனன், அதன் பிறகு காலகேயர்களையும், தேவர்களால் பாதிப்படைய முடியாதவர்களும், தாங்கள் அடைந்திருந்த வரத்தால் செருக்குடன் இருந்தவர்களுமான பௌலோமர்களையும் வென்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(162)

எப்போது எதிரிகளைத் தண்டிப்பவனான அர்ஜுனன், அசுரர்களின் அழிவுக்காக இந்திரலோகத்திற்குச் சென்று வெற்றியோடு திரும்பினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(163)

எப்போது பீமனும், பிருதையின் (குந்தியின்) பிற மகன்களும், வைஸ்ரவணனுடன் {குபேரனோடு} சென்று மனிதர்களால் அடைய முடியாத நாட்டை அடைந்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(164)

எப்போது என் மகன்கள், கர்ணனின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்டுச் சென்று, தங்கள் கோஷயாத்திரை பயணத்தின் போது, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டனர் என்றும், அர்ஜுனனால் விடுவிக்கப்பட்டனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(165)

எப்போது தர்மன் (நீதிதேவன்), யக்ஷனின் வடிவில் வந்து, யுதிஷ்டிரனிடம் குறிப்பிட்ட கேள்விகளை முன்வைத்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(166)

எப்போது என் மகன்கள், விராடனின் ஆட்சிப்பகுதிகளுக்குள், தங்கள் மாற்றுவடிவத்தில் திரௌபதியுடன் வசித்த பாண்டவர்களைக் கண்டுபிடிக்கத் தவறினர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(167)

எப்போது என் தரப்பின் முக்கிய மனிதர்கள் அனைவரும், விராடனின் ஆட்சிப்பகுதிகளில் வசித்தவனும், ஒரே தேரில் வந்தவனுமான உன்னதமான அர்ஜுனனால் வெல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(168)

எப்போது மதுகுலத்தவனும், ஓர் அடியால் மொத்த உலகத்தையும் மறைத்தவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் நன்மையில் இதயப்பூர்வமான ஆர்வம் கொண்டிருந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(இந்த ஸ்லோகம் மன்மதநாததத்தரின் பதிப்பில் சுலோகம் எண் 171-ஆக இருக்கிறது)

எப்போது மத்ஸ்யத்தின் {மத்ஸ்ய நாட்டின்} மன்னன் {விராடன்}, நல்லொழுக்கம் கொண்ட தன் மகள் உத்தரையை, அர்ஜுனனுக்குக் கொடுக்க முன்வந்தான் என்றும், அர்ஜுனனோ அவளை {உத்தரையைத்} தன் மகனுக்காக {அபிமன்யுவிற்காக} ஏற்றான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(169)

எப்போது யுதிஷ்டிரன், பகடையில் வீழ்த்தப்பட்டும், செல்வத்தை இழந்தும், நாடு கடத்தப்பட்டும், தன் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டும் கூட, ஏழு அக்ஷௌஹிணிகள் கொண்ட ஒரு படையைத் திரட்டினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(170)

எப்போது நாரதர், கிருஷ்ணனும், அர்ஜுனனுமாக இருப்போர் நரனும் நாராயணனுமாவர் என்றும், பிரம்மலோகத்தில் அவர்கள் ஒன்றாக இருந்ததைத் தாம் கண்டதாக அறிவித்ததையும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(172)

எப்போது கிருஷ்ணன், குருக்களிடம் {கௌரவர்களிடம்} மனிதகுலத்தின் நன்மைக்காக வந்து, அமைதியை ஏற்படுத்த விரும்பினான் என்றும், {ஆனால்} தான் வந்த நோக்கத்தை அடைய முடியாமல் திரும்பினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(173)

எப்போது கர்ணனும், துரியோதனனும் கிருஷ்ணனைச் சிறைபிடிக்கத் தீர்மானித்தபோது, அவன் {கிருஷ்ணன்} மொத்த அண்டத்தையும் தன்னில் வெளிப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(174)

எப்போது கிருஷ்ணன் புறப்படும் நேரத்தில், சோகத்தால் நிறைந்து, அவனது தேரின் அருகே நின்ற பிருதை (குந்தி), அவனால் {கிருஷ்ணனால்} ஆறுதலளிக்கப்பட்டாள் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(175)

எப்போது வாசுதேவன், சந்தனுவின் மகனான பீஷ்மர் ஆகியோர் பாண்டவர்களின் ஆலோசகர்களாக் இருந்தார்கள் என்றும், பரத்வாஜரின் மகனான துரோணர் அவர்களுக்கு ஆசி வழங்கினார் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(176)

எப்போது கர்ணன் பீஷ்மரிடம், “நீர் போரிடும் வரை நான் போரிட மாட்டேன்” என்று சொல்லிப் படையை விட்டு சென்றுவிட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(177)

எப்போது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், அளவிலா ஆற்றலைக் கொண்ட காண்டீவ வில்லும் என இம்மூன்று பயங்கர சக்திகளும் ஒன்றாகச் சேர்ந்தன என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(178)

எப்போது அர்ஜுனன், குற்றவுணர்வுக்கு ஆட்பட்டுர தன் தேரில் மூழ்கிப் போக இருந்த {அழுதுகொண்டிருந்த} சமயத்தில், கிருஷ்ணன் அவனுக்கு உலகங்கள் அனைத்தையும் தன் உடலுக்குள் காட்டினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(179)

எப்போது எதிரிகளைத் துணையற்றவர்களாகச் செய்யும் பீஷ்மர், போர்க்களத்தில் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் தேர்வீரர்கள் கொன்றும், குறிப்பிட்டோரில் (பாண்டவர்களில்) ஒருவரையேனும் கொல்லவில்லை என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(180)

எப்போது கங்கையின் நீதிமிக்க மகனான பீஷ்மர், போர்க்களத்தில் தம்மைக் கொல்லும் வழிகளைக் குறிப்பிட்டார் என்றும், மேலும் அது {பீஷ்மரின் அழிவு} மகிழ்ச்சிநிறைந்த பாண்டவர்களால் நிறைவேற்றப்பட்டது என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(181)

எப்போது அர்ஜுனன் தன் தேருக்கு முன்னணியில் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, எல்லையில்லா வீரம் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான பீஷ்மரைக் காயப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(182)

எப்போது வயது முதிர்ந்த வீரரான பீஷ்மர், சோமகக் குலத்தை எண்ணிக்கையில் ஒரு சிலராகக் குறைத்தும், பல்வேறு காயங்களால் வெற்றிகொள்ளப்பட்டுக் கணைகளின் படுக்கையில் கிடந்தார் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(183)

எப்போது தண்ணீருக்கான தாகத்துடன் தரையில் கிடந்த பீஷ்மர், அர்ஜுனனை வேண்டிக்கொண்டதும், தரையைத் துளைத்து அவரது தாகத்தை அவன் {அர்ஜுனன்} தணித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(184)

எப்போது குந்தி மகன்களின் {பாண்டவர்களின்} வெற்றிக்காக இந்திரன், சூரியனுடன் மற்றும் வாயு ஆகியோர் கூட்டணியாக ஒருங்கிணைந்தனரோ, ஊனுண்ணும் விலங்குகள் (அவர்களது {மேற்கண்ட மூன்று தேவர்களின்} மங்கலமற்ற இருப்பால்) நம்மை {சகுனங்களால்} அச்சுறுத்தினவோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(185)

எப்போது அற்புதப் போர்வீரரான துரோணர், களத்தில் நடந்த போரில் பல்வேறு வழிமுறைகளை வெளிப்படுத்தியும், பாண்டவர்களில் மேன்மையானவர்கள் {முக்கியமானவர்கள்} எவரையும் கொல்லமுடியவில்லையோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(186)

எப்போது நமது படையைச் சேர்ந்தவர்களும், அர்ஜுனனை வீழ்த்துவதற்காக நியமிக்கப்பட்டவர்களும், மஹாரதர்களுமான சம்சப்தகர்கள் அனைவரும், அர்ஜுனனாலேயே கொல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(187)

எப்போது பிறரால் ஊடுருவப்பட முடியாதவையும், நன்கு ஆயுதம் தரித்த பரத்வாஜராலேயே {துரோணராலேயே} காக்கப்பட்டவையுமான நமது படைகளின் நிலைகளைச் சுபத்திரையின் துணிச்சல்மிக்க மகன் {அபிமன்யு}, தனியொருவனாகத் தாக்கி அதனுள் நுழைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(188)

எப்போது அர்ஜுனனை வெற்றிக் கொள்ள முடியாத நமது மஹாரதர்கள், களிப்பான முகங்களுடன் சிறுவன் அபிமன்யுவால் சூழப்பட்டு மொத்தமாகக் கொல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(189)

எப்போது குருட்டுக் கௌரவர்கள், அபிமன்யுவைக் கொன்றுவிட்டு மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர் என்றும், அதன்பேரில் கோபமடைந்த அர்ஜுனன், சைந்தவனை {ஜெயத்ரதனைச்} சுட்டும் வகையில் கொண்டாடப்படும் தன்னுரையைப் பேசினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(190)

எப்போது அர்ஜுனன் சைந்தவனை {ஜெயத்ரதனைக்}கொல்ல சபதம் செய்து, தன் எதிரிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தனது அந்தச் சபதத்தை நிறைவேற்றினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(191)

எப்போது அர்ஜுனனுடைய குதிரைகள் களைப்படைந்ததும், வாசுதேவன் {கிருஷ்ணன்} அவற்றை விடுவித்து, நீரருந்தச் செய்து, மீண்டும் கொண்டு வந்து அவற்றுக்குச் சேணம் பூட்டி, முன்பு போலவே வழிகாட்டத் தொடங்கினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(192)

எப்போது குதிரைகள் களைப்படைந்ததும், தன் தேரிலேயே நின்ற அர்ஜுனன், தன்னைத் தாக்கியோர் அனைவரையும் தடுத்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(193)

எப்போது விருஷ்ணி குலத்தின் யுயுதானன் {சாத்யகி}, துரோணரின் படையைக் குழப்பத்தில் ஆழ்த்தி, யானைகளின் முன்னிலையிலும் தாங்க முடியாத ஆற்றலை வெளிப்படுத்தி, கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் இருந்த இடத்திற்குச் சென்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(194)

எப்போது கர்ணன், பீமனைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தும், தன் வில்லின் முனையால் அவனை இழுத்தும், அவமானப்படுத்தும் வகையில் மட்டும் பேசிவிட்டு, அவனைத் தப்பிச் செல்ல அனுமதித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(195)

எப்போது துரோணர், கிருதவர்மன், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ரத்தின் வீர மன்னன் (சல்லியன்) ஆகியோர் சைந்தவன் {ஜெயத்ரதன்} கொல்லப்படுவதைப் பொறுத்தார்கள் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(196)

எப்போது இந்திரனால் (கர்ணனுக்குக்) கொடுக்கப்பட தெய்வீக சக்தியை {ஈட்டி போன்ற ஆயுதத்தை}, மாதவன் {கிருஷ்ணன்} தனது தீயத் திட்டங்களால், அச்சந்தரும் முகத்தோற்றம் கொண்ட ராட்சசன் கடோத்கசனின் மீது ஏவச்செய்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(197)

எப்போது கர்ணனுக்கும், கடோத்கசனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில், போரில் அர்ஜுனனை நிச்சயம் கொன்றிருக்கக்கூடிய அந்தச் சக்தியை {ஈட்டி போன்ற ஆயுதத்தைக்} கடோத்கசன் மீது கர்ணன் ஏவினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(198)

எப்போது திருஷ்டத்யும்னன், இறக்கத் தீர்மானித்த துரோணர், தமது தேரில் தனியாக இருந்த போது, போர் விதிகளை மீறிக் கொன்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(199)

எப்போது மாத்ரியின் மகனான நகுலன், மொத்தப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே துரோணர் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} தனிப்போரில் ஈடுபட்டு, அவனுக்கு இணையாகத் தன்னை வெளிக்காட்டி, சுற்றிலும் தன் தேரில் வட்டமாகச் சுழன்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(200)

எப்போது துரோணர் இறந்ததன் பேரில், அவரது மகன் {அஸ்வத்தாமன்} நாராயணம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், பாண்டவர்களின் அழிவை அடையத் தவறினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(201)

எப்போது பீமசேனன், எவராலும் தடுக்கப்பட முடியாதபடி போர்க்களத்தில், தன் தம்பியான துச்சாசனனின் குருதியைக் குடித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(202)

எப்போது எல்லையற்ற துணிச்சல் கொண்டவனும், போரில் வெல்லப்பட முடியாதவனுமான கர்ணன், தேவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாததும், சகோதரர்களுக்கிடையில் நடந்ததுமான அந்தப் போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(203)

எப்போது நீதிமானான யுதிஷ்டிரன், வீரனான துரோணர் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, துச்சாசனனையும், சீற்றமிக்கக் கிருதவர்மனையும் வெற்றிக் கொண்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(204)

எப்போது துணிச்சல்மிக்கவனும், போரில் கிருஷ்ணனையே எதிர்க்கத் துணிந்தவனுமான மத்ர மன்னன் {சல்லியன்}, யுதிஷ்டிரனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(205)

எப்போது மாயசக்தி கொண்டவனும், விளையாட்டு {சூதாட்டம்} மற்றும் வழிவழியான பகைக்கு வேராக இருந்தவனுமான தீய சுபலன் {சகுனி}, சகாதேவனால் போரில் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(206)

எப்போது களைப்படைந்த துரியோதனன், ஒரு தடாகத்துக்குச் சென்று, அதன் நீருக்குள் புகலிடத்தை அமைத்துக் கொண்டு, தன் பலத்தையும், தேரையும் இழந்தவனாக அங்கே தனியாகக் கிடந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(207)

எப்போது பாண்டவர்கள், வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} அந்தத் தடாகத்துக்குச் சென்று, அதன் கரையில் நின்று கொண்டு, அவமதிப்புகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத என் மகனிடம் {துரியோதனனிடம்} அவமதிப்பாகப் பேசத் தொடங்கினர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(208)

எப்போது கதாயுதங்களுடன் கூடிய ஒரு மோதலில், பல்வேறு புதிய (தாக்குதல் மற்றும் தற்காத்தல்) முறைகளுடன் கூடிய சுழற்சியை வெளிக்காட்டிய அவன் {துரியோதனன்}, கிருஷ்ணனின் ஆலோசனைகளின்படி நியாயமற்ற வழியில் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(209)

எப்போது துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்}, பிறரும் {கிருபரும், கிருதவர்மனும்}, உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலர்களையும், திரௌபதியின் மகன்களையும் கொன்று, பயங்கரமானதும், இகழ்வைத் தருவதுமான {அருவருப்பானதுமான} ஒரு செயலைச் செய்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(210)

எப்போது பீமசேனனால் பின்தொடரப்பட்ட அஸ்வத்தாமன், ஐஷீகம் என்றழைக்கப்பட்ட முதன்மையான ஆயுதத்தை வெளிப்படுத்தி, (உத்தரையின்) கருவறையில் இருந்த கருவை {பரீக்ஷித்தைக்} காயப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(211)

எப்போது (அஸ்வத்தாமனால் வெளியிடப்பட்ட) பிரம்மசிரஸ் ஆயுதத்தை, “சஷ்டி” என்ற சொல்லைச் சொல்லி மற்றொரு ஆயுதத்தால் அர்ஜுனன் தடுத்தான் என்றும், அஸ்வத்தாமனின் தலையில் ஆபரணம் போல இருக்கும் குருப்பு ஒன்றை அவன் {அஸ்வத்தாமன்} கொடுக்க வேண்டியிருந்தது என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(212)

எப்போது விராடன் மகளின் {உத்தரையின்} கருவறையில் இருந்த கருவானது, அஸ்வத்தாமனின் வலிமைமிக்க ஆயுதத்தால் காயப்படுத்தப்பட்டது என்றும், துவைபாயனரும் {வியாசரும்}, கிருஷ்ணனும் அவனுக்கு {அஸ்வத்தாமனுக்குச்} சாபமளித்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(213)

ஐயோ! பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள் மற்றும் சொந்தங்களை இழந்தவளான காந்தாரியின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பாண்டவர்களால் செய்யப்பட்டப் பணி கடினமானதாக இருக்கிறது; எந்த எதிரியுமற்ற ஓர் அரசானது அவர்களால் மீட்கப்பட்டிருக்கிறது.(214)

ஐயோ! போரானது பத்து பேரை மட்டுமே உயிருடன் விட்டு வைத்துள்ளது என்று நான் கேட்டேன்: நம் தரப்பில் மூவரும், பாண்டவர்களின் தரப்பில் எழுவரும், அந்தப் பயங்கரப் போரில் பதினெட்டு அக்ஷௌஹிணிகளின் க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(215) என்னைச் சுற்றிலும் இருளாக இருக்கிறது, பொருத்தமான மயக்கம் என்னைத் தாக்குகிறது: ஓ சூதா, சுயநினைவு என்னைவிட்டு அகல்கிறது, என் மனமும் சஞ்சலமடைகிறது” என்றான் {திருதராஷ்டிரன்}”.(216)

சௌதி சொன்னார், “இவ்வார்த்தைகளால் தன் விதியை நொந்து கொண்ட திருதராஷ்டிரன், கடும் வேதனையை அடைந்து, சிறிது நேரத்திற்கு உணர்வை இழந்தவனானான்; எனினும் புத்துயிரடைந்த அவன், பின் வரும் வார்த்தைகளை சஞ்சயனிடம் பேசினான்.(217)

{திருதராஷ்டிரன் சஞ்சயனிடம்}, “இவ்வாறு நடந்த பிறகு, ஓ! சஞ்சயா, தாமதமில்லாமல் என் உயிருக்கு ஒரு முடிவைக் கொடுக்க விரும்புகிறேன்; இனியும் அதைப் பேணிக் காப்பதற்கான சிறு பயன் ஒன்றையும் நான் காணவில்லை” என்றான்”.(218)

சௌதி சொன்னார், “அறிவாளியான கவல்கணன் மகன் (சஞ்சயன்), கலங்கிப் போயிருந்த பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்}, இவ்வாறு பேசிக்கொண்டும், வருந்திப்புலம்பிக் கொண்டும், பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டும், மீண்டும் மீண்டும் மயங்கிக் கொண்டும் இருந்தபோது, ஆழ்ந்த பொருள் கொண்ட இவ்வார்த்தைகளில் {அவனிடம்} பேசினான்.(219)

{சஞ்சயன்}, ஓ! ராஜாவே {திருதராஷ்டிரரே}, பரந்துபட்ட முயற்சிகளைச் செய்த பெரும் பலமிக்க மனிதர்களைக் குறித்து வியாசரும், ஞானியான நாரதரும் பேசியதை நீர் கேட்டீர்;(220) தகுந்த குணங்களுடன் பிரகாசித்தவர்களும், தெய்வீக ஆயுதங்களின் அறிவியலை நன்கறிந்தவர்களும், மகிமையில் இந்திரனின் சின்னங்களுக்கு ஒப்பானவர்களும், பெரும் அரச குடும்பங்களில் பிறந்தவர்களுமான மனிதர்கள்;(221) நீதியால் உலகை வென்று, தகுந்த காணிக்கைகளை (பிராமணர்களுக்கு) அளித்துப் பெரும் வேள்வியைச் செய்தவர்களான அவர்கள், இவ்வுலகில் பெரும் புகழை அடைந்தும், இறுதியில் காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கினர் {இறக்கவே செய்தனர்}.(222,223)

வீரமான மஹாரதனான {வலிமைமிக்கத் தேர்வீரனான} சைப்யன், வெற்றியாளர்களுக்கு மத்தியில் பெரியவனான சிருஞ்சயன், சுஹோத்ரன், ரந்திதேவன், பெரும்புகழைக் கொண்ட {உசிக்கின் மகனாகிய} கக்ஷீவான், பாஹ்லீகன், தமனன், {சைத்யன்,} சர்யாதி, அஜிதன், நளன், எதிரிகளை அழிப்பவரான விஸ்வமித்திரர், பெரும் பலம் கொண்டவனான அம்பரீஷன், மருத்தன், மனு, இக்ஷ்வாகு, கயன், பரதன், தசரதன் மகனான இராமன், சசவிந்து {சசிபிந்து}, பகீரதன், பெரும் பேறு பெற்ற கிருதவீரியன், ஜனமேஜயன், வேள்விகளைச் செய்வதற்குத் தேவர்களாலேயே துணைபுரியப்பட்டவனும், வசிப்பிடங்கள் மற்றும் வசியாயிடங்கள் ஆகியவற்றுடன் கூடிய பூமாதேவியின் மேனி எங்கும் வேள்விப்பீடங்கள் மற்றும் வேள்வி மரங்கள் {யூபஸ்தம்பம்} ஆகியவற்றால் குறிப்பிட்டவனும், நல்ல செயல்களைச் செய்தவனுமான யயாதி ஆகியோர் அப்படிப்பட்டோரே.(224,227) முன்பொரு சமயம், தன் பிள்ளைகளின் இழப்பால் மிகவும் துன்பப்பட்ட சைப்யனுக்கு இந்த இருபத்துநான்கு, ராஜாக்களும் தெய்வீக முனிவரான நாரதரால் குறிப்பிடப்பட்டனர்.(228)

இவர்களைத் தவிர, இன்னும் பலம் நிறைந்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், உன்னத மனம் கொண்டவர்களும், ஒவ்வொரு தகுந்த குணத்தாலும் ஒளிர்ந்தவர்களுமான வேறு ராஜாக்களும் இவர்களுக்கு முன்னே சென்றிருக்கின்றனர் {இறந்திருக்கின்றனர்}.(229) அவர்கள் பூரு, குரு, யது, சூரன், பெரும் புகழைக் கொண்ட விஸ்வகஸ்வன்; அணுஹன், யுவனாஸ்வன், ககுத்ஸ்தன், விக்ரமி, ரகு; விஜயன், விதிஹோத்ன், அங்கன், பவன், சுவேதன், பிருபத்குரு {பிருஹத்குரு}; உசீனரன், சத-ரதன், கங்கன், துலிதுஹன், துருமன்; தம்போத்பவன், பரன், வேனன், ஸகரன், ஸங்கிருதி, நிமி; அஜயன், பரசு, புண்டரன், சம்பு, புனிதமான தேவ-விரதன்; தேவாஹுயன் {தேவாஹ்வயன்}, {சுப்ரதிமன்,} சுப்ரதீகன், பிருஹத்-ரதன்; மஹாத்சாகன், வினிதாத்மன், சுக்கிரது, நிஷாதர்களின் மன்னன் நளன்; சத்தியவிரதன், சாந்தபயன், சுமித்திரன், தலைவன் சுபலன்; ஜானுஜங்கன், அனரண்யன், அர்க்கன், பிரியபிருத்யன், சுசி-விரதன், பலபந்து, நிராமர்த்தன், கேதுசிருங்கன், பிருஹத்பலன்; திருஷ்டகேது, பிருஹத்கேது, திருப்தகேது, நிராமயன்; அவிக்ஷித், சபலன், தூர்த்தன், கிருதபந்து, திருதே-சுத்தி; மஹாபுராணனன் சம்பவ்யன், பிரத்யங்கன், பரஹன், சுருதி ஆவர்.(230-236)

ஓ! தலைவா, இவர்களும், இன்னும் வேறு ராஜாக்களும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், பத்து லட்சம் கணக்கிலும், பெரும் சக்தியும், அறிவும் வாய்ந்த இளவரசர்களும், பெரும் இன்பங்களை விட்டுத் தங்கள் {உமது} மகன்களைப் போலவே மரணத்தைச் சந்தித்தனர்.(237,238) அவர்களது நல்ல செயல்கள், வீரம், ஈகை, மகிமை, நம்பிக்கை, உண்மை, தூய்மை, எளிமை மற்றும் கருணை ஆகியவை, பெரும் கல்விமான்களான புனிதமான புலவர்களால் உலகின் முற்காலப் பதிவுகளில் வெளியிடப்பட்டன. உன்னதமான ஒவ்வொரு நற்குணத்துடனும் கூடிய அவர்களும் தங்கள் உயிரைவிட்டனர்.(239)

உமது மகன்கள், பேரார்வம், பேராசை மற்றும் தீய மனநிலை ஆகியவற்றால் தூண்டப்பட்ட தீயவர்களாகவே இருந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் சாத்திரங்களை அறிந்தவராகவும், நுண்ணறிவும், ஞானமும் கொண்டவராக இருக்கிறீர்; சாத்திரங்களால் வழிநடத்தப்படுவதைத் தங்கள் அறிவாகக் கொண்டோர், தீயூழில் ஒருபோதும் மூழ்குவதில்லை.(240,241) ஓ! இளவரசரே {திருதராஷ்டிரரே}, விதியின் மென்மையையும், வன்மையையும் நீர் அறிந்தவராக இருக்கிறீர்; எனவே உமது பிள்ளைகளைப் பாதுகாப்பதைக் குறித்துக் கவலை கொள்வது உமக்குத் தகாது; மேலும் நடக்க வேண்டியவற்றுக்காக வருந்தாமலிருப்பதே உமக்குத் தகும்:(242) தன் ஞானத்தைக் கொண்டு விதியின் கட்டளைகளை எவரால் திசைதிருப்ப முடியும்? வருங்காலத் தேவைக்காக ஒருவனுக்காகக் குறிக்கப்பட்ட பாதையில் இருந்து எவனாலும் விலக முடியாது.(243)

இருப்பு மற்றும் இல்லாமை, இன்பம் மற்றும் துன்பம் ஆகிய அனைத்தும் காலத்தையே தங்கள் வேர்களாகக் கொண்டிருக்கின்றன.(244) காலமே அனைத்துப் பொருள்களையும் படைக்கிறது; காலமே அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறது. காலமே உயிரினங்களை எரிக்கிறது, மேலும் காலமே அந்நெருப்பை அணைக்கவும் செய்கிறது.(245) மூன்று உலகிலும் நன்மை மற்றும் தீமையின் அனைத்து நிலைகளும் காலத்தாலேயே உண்டாக்கப்படுகின்றன. காலம் அனைத்துப் பொருள்களையும் வெட்டிக் குறுக்குகிறது, மேலும் புதியனவற்றையும் உண்டாக்குகிறது.(246) அனைத்துப் பொருட்களும் உறங்கும்போது காலம் மட்டுமே விழித்திருக்கிறது. காலமே எந்தப் பாதிப்புமின்றி அனைத்துப் பொருள்களையும் கடந்து செல்கிறது.(247) நீர் அறிந்தது போலவே, கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் அனைத்துப் பொருள்களும், நிகழ்கணத்தில் இருப்பவை யாவையும் காலத்தின் குழந்தைகளே என்பதை அறிந்து கொண்டு, உமது விவேகத்தை இழக்காமல் இருப்பதே உமக்குத் தகும்” என்றான் {சஞ்சயன்}”.(248)

சௌதி சொன்னார், “கவல்கணன் மகன் {சஞ்சயன்}, தன் மகன்களுக்காகத் துயரில் மூழ்கியிருந்த அரசன் திருதராஷ்டிரனுக்கு இம்முறையில் ஆறுதலை அளித்து, அவனது {திருதராஷ்டிரனின்} மன அமைதியை மீட்டான்.(249)

துவைபாயனர் {வியாசர்} இந்த உண்மைகளையே தமது உட்பொருளாக எடுத்துக் கொண்டு, இவ்வுலகிற்காகக் கல்விமான்களாலும், புனிதமான புலவர்களாலும் இயற்றப்பட்ட புராணங்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு புனிதமான உபநிஷத்தை {பகவத்கீதையைத்} இயற்றினார்[9].(250)-(வேறொரு பதிப்பில், “முனிஸ்ரேஷ்டராகிய கிருஷ்ணத்வைபாயனர் உலகங்களுக்கெல்லாம் நன்மைக்காகக் கருணையினாற் பாபத்தைப் போக்கத்தக்க உபநிஷத்தென்று சொல்லப்பட்ட பகவத்கீதையை இந்தப் பாரதத்திற்சொன்னார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பெரும் துவைபாயனர், இவ்வுண்மைகளைக் கொண்டு ஒரு புனிதமான உபநிஷத்தைத் தொகுத்தார்; அதுவே இவ்வுலகில் கல்விமான்களாலும், புனிதமான புலவர்களாலும் புராணங்களில் வெளியிடப்பட்டது” என்றிருக்கிறது.)

பாரதம் குறித்த ஆய்வானது ஒரு பக்தி {பற்றார்வத்தின்} செயல்பாடாகும் {பாரதம் ஓதுவது புண்ணியமாகும்}. எவன் நம்பிக்கையுடன் {இவற்றில்} ஓர் அடியையேனும் படிப்பானோ அவனது பாவங்கள் முற்றிலுமாக நீக்கப்படுகின்றன {அழிக்கப்படுகின்றன}.(251) தேவர்கள், தேவ முனிவர்கள், நல்ல செயல்களைச் செய்யும் களங்கமற்ற பிரம்மமுனிவர்கள் ஆகியோர் இதற்குள் பேசப்பட்டிருக்கின்றனர்; அதே போல யக்ஷர்களும், பெரும் உரகர்களும் (நாகர்களும்) பேசப்பட்டிருக்கின்றனர்.(252) ஆறு குணங்களைக் கொண்ட அழிவற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்} இதற்குள் விளக்கப்பட்டிருக்கிறான். அவனே {கிருஷ்ணனே} உண்மையாளன், நீதிமான், தூயன், புனிதன், அழிவற்ற பிரம்மம், உண்மையான நிலையான ஒளி, அவனுடைய தெய்வீகச் செயல்களையே அறிவாளிகளும், கல்விமான்களும் மீண்டும் உரைக்கின்றனர்;(253,254) படைப்புக் கொள்கைகளையும், முன்னேற்றத்தையும், பிறவி, மரணம், மறுபிறவி ஆகியவற்றையும், இருப்பு மற்றும் இல்லாமையையும் கொண்ட அண்டம் அவனிலிருந்து {கிருஷ்ணனிலிருந்தே} உண்டானது.(255) இதற்குள் அத்யாத்மம் என்று அழைக்கப்படும் அதுவே (இயற்கையின் மேற்பார்வையிடும் தன்மையே) {கிருஷ்ணனே} ஐம்பூதங்களின் பண்புகளைப் பகிர்ந்தளிக்கிறது {பகிர்ந்தளிக்கிறான்} என்று சொல்லப்பட்டிருக்கிறது. “வடிவற்றது” என்பது போன்ற அடைமொழிகளால் “எவன் புருஷன்?” என்பது விளக்கப்பட்டிருக்கிறது;(256) பொதுவிதியில் இருந்து விலக்களிக்கப்பட்ட யதிகளில் முதன்மையானோரும், தியானம் மற்றும் தவம் செய்வோரும், கண்ணாடியில் பிம்பத்தைப் பார்ப்பது போல, தங்கள் இதயங்களில் வசிப்பதாக அதையே {அவனையே} காண்பார்கள்.(257)

நம்பிக்கை கொண்டவனும், பக்தியில் {பற்றார்வத்தில்} அர்ப்பணிப்பு கொண்டவனும், அறப்பயிற்சியில் நிலைத்திருப்பவனுமான ஒரு மனிதன், இந்தப் பகுதியைப் படிப்பதால், பாவத்திலிருந்து விடுபடுகிறான்.(258)

அறிமுகம் {அனுக்கிரமணிக அத்யாயம்} என்று அழைக்கப்படும் பாரதத்தின் இந்தப் பகுதியைத் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து கேட்கும் நம்பிக்கையாளன் இடர்பாடுகளுக்குள் வீழமாட்டான்.(259) அறிமுகத்தின் எந்தப் பகுதியையாவது இரு சந்திப்பொழுதுகளில் மீண்டும் உரைக்கும் ஒரு மனிதன், அந்தச் செயலின் போது, பகல், அல்லது இரவில் ஈர்க்கப்பட்ட பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.(260) பாரதத்தின் உடலான இந்தப் பகுதி உண்மையானதும், அமுதமானதுமாகும். தயிரில் உள்ள வெண்ணையைப் போலவும், இருகால்களைக் கொண்டோரில் பிராமணர்களைப் போலவும்,(261) வேதங்களில் ஆரண்யகத்தைப் போலவும், மருந்துகளில் அமுதத்தைப் போலவும்; நீர்க்கொள்ளிடங்களில் கடலைப் போலவும், நான்கு கால் கொண்டவற்றில் பசுவைப் போலவும்;(262) (குறிப்பிடப்பட்ட பொருள்களின் மத்தியில்) இவற்றைப் போலவே வரலாறுகளுக்கு மத்தியில் பாரதமும் சொல்லப்படுகிறது. ஒரு சிராத்தத்தின் போது, இவற்றில் ஓர் அடியையாவது பிராமணர்களுக்கு ஒருவன் உரைக்கச் செய்வானாயின், தன் மூதாதையருக்கு அவன் அளிக்கும் உணவும், நீரும் வற்றாததாகின்றன {அழிவில்லாதவை ஆகின்றன}.(263)

வரலாறு, புராணங்கள் ஆகியவற்றின் உதவியோடு வேதமானது விளக்கப்படலாம்;(264) ஆனால் வேதமோ குறைந்த அறிவைக் கொண்டோனின் விளக்கத்திற்கு {அவன் தன்னை மோசம் செய்வான் என்று} அஞ்சுகிறது. வியாசரின் இந்த வேதத்தை {இந்த மஹாபாரதத்தைப்} பிறருக்கு உரைக்கும் கல்வியாளன் பயனையே அறுவடை செய்கிறான்.(265) கருவைக் கொன்ற பாவத்தையோ, அதற்கு இணையானதையோ கூட இஃது அழித்துவிடும் என்பதில் ஐயமில்லை.(266) சந்திரனின் இந்தப் புனித அதிகாரத்தை[10] (வேறொரு பதிப்பில், “எவன் பரிசுத்தனாக இருந்து இந்த அனுக்கிரமகாத்தியாயத்தை ஒவ்வொரு புண்ணியக் காலத்திலும் படிப்பானோ அவனாற் பாரதம் முழுமையும் படிக்கப்பட்டது போலாகும் என்பது என் கருத்து” என்றிருக்கிறது. மன்மதநாதத்தரின் பதிப்பில், “சந்திரனின் ஒவ்வொரு மாற்றத்தின்போதும் மதிப்புடன் இதைப் படிப்பவர்கள் கருவையே கொன்றிருந்தாலும் அந்தப் பாவம் அழிவடைகிறது” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “கருவைக் கொன்ற பாவம் கூட இதனால் அழிக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. சந்திரனின் ஒவ்வொரு மாற்றத்திலும் ஒரு தூய மனிதன் இந்த அத்யாயத்தைப் படிப்பானாகில், அவன் மொத்த பாரதத்தையும் படித்தவன் என நான் நினைக்கிறேன்” என்றிருக்கிறது.){இந்த அனுக்கிரமணிக அத்யாயத்தைப்} படிக்கும் ஒருவன், மொத்த பாரதத்தையுமே படித்தவனாவான் என நான் நினைக்கிறேன். எந்த மனிதன் மதிப்புடன் இந்தப் புனித படைப்பைத் தினமும் கேட்பானோ,(267) அவன் நீண்ட வாழ்வையும், புகழையும் அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான். முந்தைய நாட்களில், நான்கு வேதங்களை ஒரு பக்கத்திலும், பாரதத்தை மறுபக்கத்திலும் நிறுத்திப் பார்க்கும் காரியத்திற்காகக் கூடிய தேவர்கள், அவற்றைத் தராசில் நிறுத்தினர். பின்னதே {பாரதமே}, புதிர்களுடன் {உபநிஷத்துகளுடன்} கூடிய நான்குவேதங்களைவிடக் கனமாக இருந்ததால்,(268,269) அந்தக் காலத்தில் இருந்து அது மஹாபாரதம் (பெரும் பாரதம்) என்று இவ்வுலகில் அழைக்கப்படுகிறது. பொருள் மற்றும் உள்ளடக்கத்தின் கனம் ஆகிய இரண்டிலும் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருப்பதால்,(270) அது மஹாபாரதம் என்று பெயரிடப்பட்டது. எவன் அதன் பொருளை அறிவானோ, அவன் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் காக்கப்படுகிறான்.(271) தவம் பாவமற்றது, கல்வி தீங்கற்றது, இனங்கள் அனைத்திற்கும் பரிந்துரைக்கப்படும் வேதங்களின் கட்டளைகள் தீங்கற்றவை, உழைப்பால் அடையப்படும் செல்வம் தீங்கற்றது; ஆனால், அவற்றின் நடைமுறைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, அவை தீமையின் ஊற்றுக்கண்களாகின்றன {பாவத்தைத் தருகின்றன}” {என்றார் சௌதி}[11].(272)([11] வேறு பதிப்புகளில் இந்த இறுதிப் பத்தி, “தவம் பாவத்தைப் போக்குகிறது; வேதத்தில் சொல்லப்பட்ட குலவிதிகளும் பாவத்தைப் போக்குகின்றன; சிரமத்தைப் பொறுத்துப் பொருளீட்டுவதும் பாவத்தைப் போக்குகிறது. மேற்சொன்னவையே கெட்ட எண்ணத்தோடு செய்யப்பட்டால் பாவங்களாகின்றன” என்று இருக்கிறது.)

ஆதிபர்வம் – பகுதி 2 அ((பர்வசங்கிரகப் பர்வம்))(பதிவின் சுருக்கம் : சமந்த பஞ்சகம் குறித்து முனிவர்கள் வினவுவது; சமந்த பஞ்சகம் உருவான வரலாற்றைச் சௌதி சொல்வது; பரசுராமர் க்ஷத்திரியர்களைக் கொன்றது; க்ஷத்திரியர்களின் இரத்தத்தால் உருவான ஏரி; அக்ஷௌஹிணி என்பதற்கு விளக்கம்; எவர் எவர் தலைமையில் போர் எத்தனை நாட்கள் நடந்ததென்ற விளக்கம்; மஹாபாரதத்தின் உட்கட்டமைப்பு எப்படி உப பர்வங்களாகப் பிரிந்திருக்கின்றன என்பதற்கான விளக்கம்; உப பர்வங்களின் பெயர்களும் அதில் வரும் செய்திகளும்; முதல் பர்வமான ஆதிபர்வத்தின் சுருக்கம்...)

முனிவர்கள் ‘ஓ! சூதன் மகனே {சௌதியே}, நீர் குறிப்பிட்ட இடமான சமந்த பஞ்சகம் {குருக்ஷேத்திரம்} என்ற இடத்தைப் பற்றிய வரலாற்றை நாங்கள் முழுமையாகக் கேட்க விரும்புகிறோம்” என்று கேட்டனர்.(1)

சௌதி சொன்னார், “ஓ! பிராமணர்களே, நான் சொல்லப்போகும் புனிதமான விளக்கங்களைக் கேட்பீராக. ஓ மனிதர்களில் சிறந்தோரே, சமந்த-பஞ்சகம் என்று அழைக்கப்படும் இடத்தைக் குறித்துக் கேட்க நீங்கள் தகுந்தோரே.(2) திரேத மற்றும் துவாபர யுகங்களுக்கு இடையில், ஆயுதங்கள் தரித்தோர் அனைவருக்கும் மத்தியில் பெரியவரான (ஜமதக்னியின் மகன்) ராமர் {பரசுராமர்}, குற்றங்களின் கொண்ட பொறுமையின்மையால் தூண்டப்பட்டு, க்ஷத்திரியர்களின் உன்னதக் குலத்தை மீண்டும் மீண்டும் தாக்கினார் {அழித்தார்}.(3) அந்தக் கடும் எரிநட்சத்திரம் {பரசுராமர்}, தம் வீரத்தால் க்ஷத்திரியர்களின் மொத்த இனத்தையுமே அழித்தபோது, அந்தச் சமந்த-பஞ்சகத்தில் குருதியாலான ஐந்து தடாகங்களை அமைத்தார்.(4) கோபத்தில் மயங்கிய அறிவுடன் கூடிய அவர், அத்தடாகங்களுடைய குருதிநீரின் மத்தியில் நின்று கொண்டு தமது மூதாதையரின் ஆவிகளுக்கு {பித்ருக்களுக்கு} இரத்த காணிக்கையளித்தார் என நமக்குச் சொல்லப்படுகிறது.(5) அதன் பேரில் அப்போது, அவரது மூதாதையரில் ரிசீகரை முதலாகக் கொண்டோர் அவரிடம் வந்து, “ஓ ராமா, ஓ அருளப்பட்ட ராமா, ஓ பிருகுவின் வாரிசே, ஓ வலிமைமிக்கோனே, உன் வீரத்தைக் கொண்டு உன் மூதாதையருக்கு நீ காட்டிய மதிப்பால் நாங்கள் நிறைவடைந்திருக்கிறோம். உன் மீது அருள் பொழியட்டும். ஓ சிறப்புமிக்கவனே, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக” என்றனர்.(6,7)

ராமர் {பரசுராமர்}, “ஓ ஐயன்மீர், நீங்கள் என்னிடம் சாதகமான மனநிலையைக் கொண்டிருப்பீர்களென்றால், கோபத்தில் க்ஷத்திரியர்களை அழித்ததன் மூலம் பிறந்த என் பாவங்களில் இருந்து நான் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், நான் அமைத்த தடாகங்கள் இவ்வுலகில் புண்ணியத்தலங்களாகப் புகழ்பெற வேண்டும் என்றும் நான் வரம் கேட்கிறேன்” என்றார்.(8,9) பித்ருக்கள், “அப்படியே ஆகட்டும். ஆனால் நீ தணிவடைவாயாக” என்றனர். ராமரும் அதன்படியே தணிவையடைந்தார்.(10) குருதிநீரைக் கொண்ட அந்தத் தடாகாங்களுக்கு அருகே கிடக்கும் பகுதியானது அந்தக் காலத்தில் இருந்து புனிதமான சமந்த-பஞ்சகம் என்று கொண்டாடப்படுகிறது.(11) ஒவ்வொரு நாடும், அதைப் புகழ்பெறச் செய்த ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க சூழலின் பெயரால் வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டும் என்று ஞானியர் தீர்மானித்திருக்கின்றனர்.(12) துவாபர மற்றும் கலி யுகங்களின் இடைவெளியில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளுக்கு இடையிலான மோதல் அங்கே அந்தச் சமந்த-பஞ்சகத்தில் நடந்தது.(13) எந்த வகையான முரட்டுத்தன்மையுமற்ற அந்தப் புனிதமான பகுதியில் போரிடும் ஆவலுடன் பதினெட்டு அக்ஷௌஹிணிகள் படைவீரர்கள் அங்கே திரண்டனர். ஓ பிராமணர்களே, அங்கே வந்த நிலையிலேயே அவர்கள் அனைவரும் அவ்விடத்தில் கொல்லப்பட்டனர்.(14) ஓ பிராமணர்களே, அந்தப் பகுதியின் பெயரும், புனிதமானதாக, இனிமைநிறைந்ததாக உங்களுக்கு விவரிக்கப்படும் அந்த நாடும் இவ்வாறே விளக்கப்படுகின்றன.(15) மூவுலகங்கள் முழுவதிலும் கொண்டாடப்படும் அந்தப் பகுதி சம்பந்தமாக முழுமையாக நான் {இப்போது} குறிப்பிட்டிருக்கிறேன்” {என்றார் சௌதி}.(16)

முனிவர்கள் {சௌதியிடம்}, “ஓ சூதன் மகனே {சௌதியே}, நீர் பயன்படுத்திய அக்ஷௌஹிணி என்ற சொல்லில் {பதத்தில்} உள்ளடங்கிய அனைத்தையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.(17) நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர் என்பதால், ஓர் அக்ஷௌஹிணியானது எத்தனை குதிரைகள் {குதிரைவீரர்கள்}, காலாட்படை வீரர்கள், தேர்கள் {தேர்வீரர்கள்}, யானைகள் {யானைமேல் அமர்ந்து போரிடும் வீரர்கள்} ஆகியவற்றைக் கொண்டது என்பதை எங்களுக்கு முழுமையாகவே சொல்வீராக” என்று கேட்டனர்.(18)

சௌதி சொன்னார், “ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்படை வீரர்கள், மூன்று குதிரைகள் ஒரு பட்டியை அமைக்கின்றன;(19) மூன்று பட்டிகள் ஒரு சேனா-முகத்தை அமைக்கின்றன; மூன்று சேனா-முகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படுகிறது;(20) மூன்று குல்மங்கள், ஒரு கணமென அழைக்கப்படுகிறது; மூன்று கணங்கள், ஒரு வாஹினியாகும்; ஒன்றான மூன்று வாஹினிகள் ஒரு பிருதனை என்று அழைக்கப்படுகிறது(21); மூன்று பிருதனைகள் ஒரு சமுவை அமைக்கின்றன; மூன்று சமுக்கள், ஓர் அனீகினியாகும்; பத்து மடங்காகப் பெருகும் ஓர் அனீகினியானது, அவற்றை அறிந்தோரால் ஓர் அக்ஷௌஹிணி என்ற நடைமாற்றப்படுகிறது {ஓர் அக்ஷௌஹிணி என்று அழைக்கப்படுகிறது}.(22) பிராமணர்களில் சிறந்தோரே, ஓர் அக்ஷௌஹிணியில் உள்ள தேர்களின் எண்ணிக்கையானது, இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபது {21,870} என்று எண்கணிப்பியலாளர்களால் கணிக்கப்படுகிறது. யானைகளின் அளவும் அதே எண்ணிக்கையிலேயே {21,870} உறுதிப்படுத்தப்பட வேண்டும்.(23,24) ஓ தூயோரே, காலாட்படை வீரர்களின் எண்ணிக்கையானது, நூற்றொன்பது ஆயிரத்து, முன்னூற்று ஐம்பது {ஒரு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து முன்னூற்றைம்பது, 109,350} என்பதையும், குதிரைகளின் எண்ணிக்கையானது, அறுபத்தைந்தாயிரத்து, அறுநூற்று பத்து {65,610} என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.(25,26) , ஓ பிராமணர்களே, ஓர் அக்ஷௌஹிணியின் எண்ணிக்கையானது என்னால் முழுமையாக விளக்கப்படுவதைப் போலவே, எண்களின் கொள்கைகளை {விதிகளை} அறிந்தோராலும் சொல்லப்படுகிறது.(27) ஓ பிராமணர்களில் சிறந்தோரே, இந்தக் கணக்கீட்டின்படியே, கௌரவ மற்றும் பாண்டவப்படையின் பதினெட்டு அக்ஷௌஹிணிகள் தொகுக்கப்பட்டிருந்தன.(28) அற்புதம் நிறைந்த செயல்களைச் செய்யும் காலமானது, அந்த இடத்தில் அவர்களைத் திரட்டி, கௌரவர்களையே காரணமாக்கி, அவர்கள் அனைவரையும் அழித்தது.(29) ஆயுதங்களின் தேர்வை அறிந்தவரான பீஷ்மர், பத்து நாட்களுக்குப் போரிட்டார். கௌரவ வாஹினிகளைத் துரோணர் ஐந்து நாட்களுக்குப் பாதுகாத்தார்.(30) பகைவரின் படைகளைத் துணையற்றவையாகச் செய்யும் கர்ணன், இரண்டு நாட்களுக்குப் போரிட்டான்; சல்லியன் அரை நாள் போரிட்டான். அதன்பிறகு துரியோதனனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த, கதாயுத மோதல் அரை நாள் நீடித்தது. அந்த நாளின் முடிவில் அஸ்வத்தாமனும், கிருபரும், ஆபத்து குறித்த எந்த எச்சரிக்கையுமில்லாமல் இரவில் தூங்கிக் கொண்டிருந்த யுதிஷ்டிரனின் படையை அழித்தனர்.(31-33)

ஓ சௌனகரே, உமது வேள்வியில் மீண்டும் சொல்லத் தொடங்கப்படுவதும், பாரதம் என்று அழைக்கப்படுவதுமான இந்தச் சிறந்த விளக்கமானது, முன்பொரு சமயம், ஜனமேஜயனின் வேள்வியில், நுண்ணறிவு கொண்ட வியாசரின் சீடரால் {வைசம்பாயனரால்} மீண்டும் உரைக்கப்பட்டதாகும். இது பல்வேறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கிறது; தொடக்கத்தில், பௌசியம், பௌலோமம் மற்றும் ஆஸ்தீக பர்வகளில், வீரமும், புகழும் மிக்கவர்களான மன்னர்கள் முழுமையாக விளக்கப்பட்டிருக்கின்றனர்.(34,35) இது, விளக்கம், மொழிநடை, பொருள் ஆகியவற்றை மாறுபட்டவையாகவும், அற்புதம் நிறைந்தவையாகும் கொண்டிருக்கும் ஒரு படைப்பாகும். பல்வேறு நடைமுறைகள் மற்றும் சடங்குகளின் விவரங்களை இது கொண்டிருக்கிறது. இறுதி விடுதலையை {முக்தியை} விரும்பும் மனிதர்களால் வைராக்யம் என்றழைக்கப்படும் நிலையைப் போலவே இது {மஹாபாரதம்} ஞானியரால் ஏற்கப்படுகிறது.(36) அறியப்பட வேண்டிய பொருள்களில் தன்னை {சுயத்தைப்} போலவும், அன்புக்குரிய பொருள்களின் மத்தியில் உயிரைப் போலவும், பிரம்ம அறிவை அடையும் வழிமுறைகளைச் சொல்லும் இந்த வரலாறானது {மஹாபாரதமானது}, சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். பாதங்களின் மேலிருக்கும் உடலைப் போலவே, இந்த வரலாற்றின் சார்பில்லாத எந்தக் கதையும் தற்போது இவ்வுலகில் இல்லை. நல்ல பரம்பரையில் வந்த ஆசான்கள், முன்னுரிமையை விரும்பும் பணியாட்களால் பணிவிடை செய்யப்படுவதைப் போலவே, பாரதமும் புலவர்கள் அனைவராலும் பேணிக் காக்கப்படுகிறது.(37-39) உலகம் தொடர்பான பல்வேறு அறிவுக் கிளைகள் மற்றும் வேதத்தில் உள்ளடங்கியிருக்கும் சொற்களானவை, உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் மட்டும் வெளிக்காட்டுவதைப் போலவே, இந்த அற்புத வரலாறும் உயர்ந்த அறிவை {ஞானத்தை} மட்டுமே வெளிக்காட்டுகிறது.(40) ஓ தவசிகளே, பெரும் அறிவைக் கொண்டிருப்பதும், வேதங்களின் உட்பொருளால் அலங்கரிக்கப்பட்டதும், நுட்பமான பொருள்கள் மற்றும் காரணகாரியங்களின் {தர்க்கத்} தொடர்புகளைக் கொண்டதும் பாரதம் என்றழைக்கப்படுவதுமான இந்த வரலாற்றின் பல்வேறு பிரிவுகள் (பர்வங்கள்), மற்றும் பகுதிகளின் {அத்யாயங்களின்} திட்டவரையை {சுருக்கத்தைக்} கேட்பீராக.(41)

முதல் பர்வம் அனுக்கிரமணிகம் என்றழைக்கப்படுகிறது; இரண்டாவது சங்கிரகம்; அடுத்துப் பௌசியம், அதன்பிறகு பௌலோமம், ஆஸ்தீகம், அடுத்து ஆதிவம்சவதரணம்.(42) அடுத்து வருவது அற்புதமான உணர்ச்சிகரமான சம்பவங்களைக் கொண்ட சம்பவம். ஜதுக்ருகதாஹம் (அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைத்தல்) என்பது அடுத்து வருவது. அடுத்து ஹிடிம்பவத பர்வம் (இடும்ப வதம்).(43) அதற்கடுத்து பகவத (பகாசுரன் வதம்), அடுத்துச் சைத்ரரதம். அடுத்து திரௌபதியைத் தனது க்ஷத்திரியத் திறமைகளால் அர்ஜுனன் வெல்லும் சுயம்வரம் (பாஞ்சாலி தன் கணவனைத் தேர்ந்தெடுப்பது).(44) அடுத்து வைவாஹிகம் (திருமணம்). அடுத்து வருவது விதுராகமனம் (விதுரனின் வருகை), ராஜ்யலாபம் (அரசைப் பெறுவது),(45) அர்ஜுன வனவாசம் (அர்ஜுனன் நாடு கடந்து செல்வது), அடுத்துச் சுபத்திராஹரணம் (சுபத்திரை கடத்தப்படுவது). இதற்கெல்லாம் அடுத்து ஹரணாஹரிகம்,(46) காண்டவ-தாஹம் (காண்டவ வன தகனம்), மய தர்சனம் (அசுர சிற்பி மயனை சந்தித்தல்). அதற்கடுத்து வருவது சபா பர்வமாகும், மந்திரம்,(47) ஜராசந்தவதம், திக்விஜயம் (தொடர் போர்). திக்விஜயத்திற்கு அடுத்து ராஜசூயம்,(48) அர்க்காபிஹரணம் (அர்க்கியம் திருட்டு), சிசுபாலவதம் (சிசுபாலன் கொல்லப்படுவது). இதற்கெல்லாம் அடுத்துத் தியூதம் (சூதாடுதல்), அனுதியூதம் (சூதாட்ட தொடர்ச்சி),(49) ஆரண்யகம், கிர்மீரவதம் (கிரிமீரன் வதம்). அர்ஜுனாபிகமனம் (அர்ஜுனனின் பயணங்கள்),(50) கைராதி ஆகியன வருகின்றன.

இறுதியாக அர்ஜுனனுக்கும் வேடன் உருவத்தில் இருந்த மஹாதேவனுக்கும் {சிவனுக்கும்} இடையில் நடந்த போர் {கைராதம்}. அதற்கடுத்து இந்திரலோகபிகமனம் (இந்திரலோகப் பயணம்);(51) அடுத்து, அறம் மற்றும் நற்பண்புகளின் புதையலும், மிகவும் சோகமானதுமான நளோபாக்யானம் (நளனின் கதை). அடுத்து தீர்த்தயாத்ரா அல்லது விவேகிகளான குரு இளவரசர்களின் புனிதப் பயணம்,(52) ஜடாசுரன் மரணம் {ஜடாசுரவதம்}, யக்ஷர்களுடன் போர் {யக்ஷயுத்தம்}. அதன் பிறகு, நிவாதகவசர்களுடனான போர் {நிவாதகவசயுத்தம்}, அஜகரம்,(53) மார்கண்டேய சமாஸ்யம் (மார்கண்டேயரைச் சந்தித்தல்). திரௌபதி சத்தியபாமா சந்திப்பு {திரௌபதி சத்யபாமா சம்வாதம்},(54) கோஷயாத்திரை, மிருக சுவப்னம் (மானின் கனவு). வருஹதாரண்யகம் {விரீஹித்ரௌணிகம்} மற்றும் ஐந்திரத்துரும்னம் {இந்திரத்யும்னோபாக்யானம்}.(55) திரௌபதிஹரணம் (திரௌபதி அபகரிப்பு), ஜயத்ரதா விமோக்ஷணம் (ஜயத்ரதன் விடுதலை). அடுத்து வருவது கற்புக்கரசி சாவித்திரியின் கதை {பதிவிரதாமாகாத்மியம்}.(56)

அதன்பிறகு ராமனின் கதை {ராமோபாக்யானம்}. அடுத்தப் பர்வம் குண்டலாஹரணம் (காதணி திருட்டு) என்று அழைக்கப்படும்.(57) அதற்கடுத்து “ஆரண்யம் {ஆரணேயம்}” அதற்கடுத்து “வைராடம் {விராடம்}”. அதன்பிறகு பாண்டவர்களின் உறுதிமொழி நுழைவும், அவர்கள் அதை நிறைவேற்றுவதும் (பாண்டவர்கள் செய்திருந்த ஒப்பந்தப்படி ஒருவருட தலைமறைவு வாழ்க்கை {பாண்டவப் பிரவேசம்}).(58) பிறகு “கீசகர்களின்” அழிவு. அதன்பிறகு (விராடத்திலிருந்து) பசுக்களைக் கடத்த (கௌரவர்களால்) செய்யப்பட்ட முயற்சி. அதற்கடுத்து வருவது விராடனின் மகளுடன் அபிமன்யு திருமணம் என்றழைக்கப்படுகிறது.(59) அதன்பிறகு, நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய உத்தியோகம் என்றழைக்கப்படும் மிக அற்புதமான பர்வம். அதன்பிறகு “சஞ்சய யானம்” (சஞ்சயனின் வருகை).(60) அதற்கடுத்து வருவது “பிரஜாகரம்” (திருதராட்டிரனின் தூக்கமின்மை). அடுத்து ஆன்ம தத்துவங்களின் புதிர்களைக் கொண்ட “சனத்சுஜாதீயம்”.(61) அடுத்து “யானசந்தி”, அதற்கடுத்து கிருஷ்ணனின் வருகை {பகவத்யானம்}. அதன்பிறகு “மாதலி”யின் கதை, அடுத்து “காலவர்”.(62) அதன்பிறகு “சாவித்திரி” {சாவித்திரோபாக்கியானம்}, “வாமதேவர்” {வாமதேவோபாக்கியானம்}, “வைனியன்” ஆகியோரின் கதைகள். அதன்பிறகு “ஜமதக்கினீயம்” மற்றும் “ஷோடசராஜகம்” கதைகள்.(63) அதன்பிறகு கிருஷ்ணனின் அரசவை வருகை {கிருஷ்ணசபாப்பிரவேசம்}, அதன்பிறகு விதுலபுத்ரசாசனம். அதன்பிறகு படைகளைத் திரட்டலும், சேதனின் {ஸ்வேதனின்} கதை.(64) அதன்பின் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது உயர்பிறப்பாளன் கர்ணனின் சச்சரவு {வாக்குவாதம்}. அதன்பிறகு, இருதரப்பு படைகளின் அணிவகுப்பு.(65) அடுத்து ரதி மற்றும் அதிரதர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுவது. அடுத்து (பாண்டவர்களின்) கோபத்தைத் தூண்டும் உலூகனின் தூது.(66) அடுத்து வருவது நீங்கள் அவசியம் அறிய வேண்டிய அம்பையின் கதை. அடுத்து பீஷ்மர் படைத்தலைவராக நியமிக்கபட்ட உணர்ச்சிமயமான கதை.(67) அதற்கடுத்துத் தனிப்பட்ட தன்மையுடன் கூடிய ஜம்பூ என்று பகுதி {ஜம்பூத்வீபம்} பூமியில் உண்டான கதை {ஜம்பூத்வீபநிர்மாணம்}; அடுத்து தீவுகளின் அமைப்பைக் குறித்த பூமி {பூமிபர்வம்}.(68) அதன்பிறகு “பகவத் கீதை” வருகிறது; பிறகு பீஷ்மரின் மரணம் {பீஷ்மவதம்}. துரோணர் படைத்தலைமையில் நிறுவப்படுவது {துரோணாபிஷேகம்}. பிறகு “சம்சப்தகர்களின்” அழிவு {சம்சப்தகவதம்},(69) பிறகு அபிமன்யுவின் மரணம் {அபிமன்யுவதம்}; பிறகு அர்ஜுனன் (ஜெயத்ரதனைக் கொல்வதாக) உறுதி மொழி ஏற்பது. அதன் பிறகு ஜெயத்ரதன் மரணம் {ஜயத்ரதவதம்}, பிறகு கடோத்கசனின் மரணம் {கடோத்கசவதம்}.(70) அதன்பிறகு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய கதையானது, யாரும் எதிர்பாராத துரோணரின் திடீர் மரணமாகும் {துரோணவதம்}. அதற்கடுத்து வருவது, நாராயணம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தை வெளிப்படுத்துவது {நாராயணாஸ்திரமோக்ஷம்}.(71) அதன்பிறகு கர்ணன் மற்றும் சல்லியன் {ஆகியோரின் மறைவு} என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்பிறகு துரியோதனன் தடாகத்திற்குள் மூழ்குவது, பிறகு (பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நடந்த) கதாயுத மோதல்.(72) அதன்பிறகு, சரஸ்வதம் மற்றும் புண்ணியத் தலங்களின் வர்ணனை, பிறகு குலவரலாறு {குறித்த வர்ணனை}. அதன்பிறகு (கௌரவர்களின் கௌரவத்திற்கு) இழிவுநிறைந்த சம்பவங்களை விளக்கும் சௌப்திகம் {சௌப்திக பர்வம்}.(73) அடுத்து பயங்கர நிகழ்வுகளைக் கொண்ட “ஐஷீகம் {ஐஷீகபர்வம்}.

அடுத்து, “ஜலப்பிரதானிகம்” முன்னோர்களுக்கு (இறந்தவர்களுக்கான) நீர்க்காணிக்கை {ஆகுதி, அஞ்சலி}, பிறகு, பெண்களின் அழுகை {ஸ்திரீவிலாபம்}.(74) அதன் பிறகு கொல்லப்பட்டவர்களான கௌரவர்களுக்குச் செய்யப்பட்ட இறுதி சடங்குகளை விளக்கும் “சிராத்தம்” என்றழைக்கப்பட்டதை {பர்வத்தை} அறிய வேண்டும். அதன்பிறகு (யுதிஷ்டிரனை ஏமாற்றுவதற்காக) ஒரு பிராமணன் வடிவத்தை ஏற்று வந்த ராட்சசன் சார்வாகனின் அழிவு {சார்வாகநிக்கிரகம்}.(75) பிறகு ஞானியான யுதிஷ்டிரனின் பட்டமேற்பு {அபிஷேகம்}. அடுத்து “கிரகவிபாகம்” என்றழைக்கப்படுகிறது.(76) அடுத்து வருவது “சாந்தி”, அதற்கடுத்து “ராஜதர்மனுசாசனம்”, அதன்பிறகு “ஆபதர்மம்”, பிறகு “மோக்ஷதர்மம்”.(77) அடுத்து பின்தொடர்ந்த வருவன “சுகப்பிரசனாபிகமனம்”, “பிரம்ம-பிரசனனுசாசனம்”, துர்வாசரின் தோற்றம் (அவரின் பிறப்பு), மயனுடன் விவாதம் ஆகியனவாகும்.(78) அதன் பிறகு வருவது “ஆனுசாசனிகம்” என்று அறியப்பட வேண்டும். பிறகு பீஷமர் சொர்க்கத்திற்கு உயர்வது {ஸ்வர்க்கரோஹணம்}.(79) அதன்பிறகு, பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் குதிரை-வேள்வி {ஆசுவமேதிகம்}. அதன்பிறகு, ஆன்ம தத்துவ வார்த்தைகளைக் கொண்ட “அனுகீதை” என்று அறியப்பட வேண்டும்.(80) அதன்பின் தொடர்வன “ஆசிரமவாசம்”, (இறந்து போன தங்கள் மக்களின் ஆவியைக் காணும்) “புத்ரதர்சனம்”, மற்றும் நாரதர் வருகை {நாரதாகமனம்}.(81) அடுத்து பயங்கரமான கொடிய நிகழ்வுகளைக் கொண்ட “மௌசலம்” என்றழைக்கப்படுகிறது. அடுத்து வருவது “மஹாபிரஸ்தாணிகம்” மற்றும் சொர்க்கத்திற்கு உயர்வது {ஸ்வர்க்காரோஹணம்}.(82) அதன்பிறகு வருவது “கிலவம்சம்” என்றழைக்கப்படும் புராணமாகும் {ஹரிவம்சம்}. இறுதியில் “விஷ்ணு பர்வம்”, விஷ்ணுவின் கேளிக்கைகள், குழந்தையாக அவன் செய்த அருஞ்செயல்கள், “கம்சனின்” அழிவு ஆகியன இருக்கின்றன.(83) இறுதியிலும் இறுதியாக (எதிர்காலத்தைக் குறித்த வருவனவுரைத்தல் (தீர்க்கதரிசனங்கள்) அடங்கிய) அற்புதங்கள் நிறைந்த “பவிஷ்யபர்வம்” இருக்கிறது” {என்றார் சௌதி}. உயர் ஆன்மா கொண்ட வியாசரால் இயற்றப்பட்ட இந்த நூறு பர்வங்களில் மேற்கண்டவை சுருக்கம் மட்டுமே;(84) அவற்றைப் பதினெட்டாகப் பிரித்த சூதன் மகன் {சௌதி}, அதனைத் தொடர்ந்து நைமிசக் காட்டில் பின்வருமாறு உரைத்தார்[1].(85)(இங்கே சொல்லப்பட்டுள்ள உபபர்வங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கின்றன.)

ஆதிபர்வத்தில் பௌசியம், பௌலோமம், ஆஸ்தீகம், அதிவப்ணாவதரணம்,(86) சம்பவம், அரக்கு மாளிகை எரியூட்டல் {ஜதுக்ருகதாஹம்}, ஹிடிம்பன் {இடும்பன்} வதம் {ஹிடிம்பவதம்}, அசுரர்கள் பகன் {பகவதம்} மற்றும் சித்ரரதன் வதம் {சைத்ரரதம்}, திரௌபதி சுயம்வரம்,(87) அதைத்தொடர்ந்து அவள் {திரௌபதி} திருமணத்தை முன்னிட்டு நடக்கும் போர் {வைவாஹிகம்|, விதுரனின் வருகை {விதுராகமனம்}, {ராஜ்யலாபம்},(88) அர்ஜுனன் நாடுகடந்து செல்தல் {அர்ஜுனவனவாசம்}, சுபத்திரை அபகரிப்பு {சுபத்ராஹரணம்}, பரிசு மற்றும் சீர்வரிசை {ஹரணாஹரணம்}, காண்டவ வனம் எரிந்துபோதல் {காண்டவதாஹம்},(89) அசுர சிற்பி மயனுடனான சந்திப்பு {மயதர்சனம்}. பௌசிய பர்வத்தில் உதங்கரின் மேன்மை சொல்லப்படுகிறது.(90) பௌலமத்தில் பிருகு மைந்தர்களின் மேன்மை சொல்லப்படுகிறது. ஆஸ்தீக பர்வத்தில் கருடன் மற்றும் நாகங்களின் பிறப்பு,(91) ஆழி கடைதல் {பாற்கடல் கடைதல்}, தெய்வீகக் குதிரை உச்சைசிரவசின் பிறப்பு, ஜனமேஜயனின் நாகவேள்வியில் விவரிக்கப்படும் பரதனின் பரம்பரை ஆகியன. சம்பவ பர்வத்தில் பல மன்னர்கள், வீரர்கள் மற்றும் கிருஷ்ண துவைபாயனரின் (வியாசரின்) பிறப்பு, தேவர்களின் பாதி அவதாரங்கள்,(92-94) தானவர்கள், மற்றும் பெரும் ஆற்றலைக் கொண்ட யக்ஷர்கள், பாம்புகள், கந்தர்வர்கள், பறவைகள்,(95) மற்றும் அனைத்து உயிரினங்களின் பிறப்பு; அடுத்து மன்னன் பரதனின் வரலாறு, அவனது பெயரால் உண்டான பரம்பரை, கண்வரின் ஆசிரமத்தில் சகுந்தலைக்கு மகனாக {பரதன்} பிறப்பு ஆகியவை வருகின்றன.(96,97)

மேலும் இந்தப் பர்வத்தில் பாகீரதி நதியின் பெருமை, சந்தனுவின் இல்லத்தில் வசுக்களின் பிறப்பும், அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வது ஆகியன சொல்லப்படுகின்றன.(98) மேலும் இந்தப் பர்வத்தில் மற்ற வசுக்களின் சக்திப் பகுதிகளைத் தன்னுள் அடக்கிப் பிறக்கும் பீஷ்மரின் பிறப்பு, அரசைத் துறத்தல் மற்றும் அவர் பிரம்மச்சரியம் கொள்வது,(99) ஏற்ற நோன்புகளில் அவருக்கு இருந்த உறுதி, சித்திராங்கதனைப் பாதுகாப்பது, அவனது {சித்திராங்கதனது} மறைவிற்குப் பிறகு விசித்திரவீரியனைப் பாதுகாப்பது, அவனை {விசித்திரவீரியனை} அரியணையில் அமர்த்துவது, தர்மதேவன் ஆணிமாண்டவ்யரின் சாபம் பெற்றதால் மனிதனாக {விதுரனாகப்} பிறப்பது.(100-101) வியாசர் மூலம் திருதராட்டிரன் மற்றும் பாண்டுவின் பிறப்பு, பாண்டவர்களின் பிறப்பு,(102) துரியோதனின் திட்டத்தால் பாண்டவர்கள் வாரணாவதம் செல்வது, பாண்டவர்கள் குறித்துத் திருதராஷ்டிரன் மகன்கள் செய்த தீய ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன.(103) பாண்டவர்களின் நலன்விரும்பியான விதுரன், மிலேச்ச மொழியில் யுதிஷ்டிரனை எச்சரிப்பது,(104) சுரங்கம் தோண்டுவது, அரக்கு மாளிகையில் வைத்து, வேடுவப்பெண்ணையும், அவளது ஐந்து பிள்ளைகளையும் புரோச்சனனையும் எரிப்பது, அரக்கு மாளிகை எரிவது, ஹிடிம்பையைச் {இடும்பியைச்} சந்தித்தல்,(105,106) ஹிடிம்பனை {இடும்பனை} வதம் செய்வது. கடோத்கசனின் பிறப்பு,(107) பாண்டவர்கள் வியாசரைச் சந்திப்பது, அவரின் {வியாசரின்} ஆலோசனைகளை ஏற்றுப் பிராமணத் தோற்றத்தில் ஏகச்சக்கர நகரத்தில் தலைமறைவாக வசிப்பது, அசுரன் பகன் வதம், அதைக் கண்டு மலைத்த மக்கள்;(108,109) திரௌபதி மற்றும் திருஷ்டத்யும்னனின் அமானுஷ்ய பிறப்பு, வியாசரின் அறிவுரைப்படியும், ஒரு பிராமணரின் மூலம் கேள்விப்பட்டு, திரௌபதியின் கரங்களை வெல்வதற்காகவும் சுயம்வரத்தில் பங்கேற்பதற்காகப் பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்லத் தீர்மானிப்பது; பாகீரதி நதிக்கரையில் அங்காரபர்ணன் என்ற கந்தர்வனிடம் அர்ஜுனனின் வெற்றி, தங்கள் எதிராளியிடம் நட்பு கொள்வது,(110-112) கந்தர்வன் தபதி, வசிஷ்டர் மற்றும் அவுர்வாவின் வரலாறுகள் சொல்லப்படுகின்றன.

பாஞ்சாலம் நோக்கிச் செல்லும் பாண்டவர்களின் பயணம்,(113) அனைத்து மன்னர்கள் முன்னிலையிலும் கொடுத்த குறியை அடித்து, திரௌபதியை அர்ஜுனன் வென்றெடுப்பது;(114) அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போரில் சல்லியன், கர்ணன் ஆகியோர் அர்ஜுனனிடம் தோற்பது, மகுடம் தரித்த தலைகளைக் கொண்ட பிறர் அனைவரும் பெரும் ஆற்றலைக் கொண்ட பீமனிடமும் அர்ஜுனனிடமும் தோற்பது;(115) இந்த ஒப்பற்ற அருஞ்செயல்களைக் கண்ட பலராமனும், கிருஷ்ணனும் அந்த வீரர்களை {பாண்டவர்களை} அடையாளம் காண்பது.(116) பாண்டவர்கள் தங்கியிருந்த ஒரு குயவனின் இல்லத்தை அச்சகோதரர்கள் வந்தடைவது; திரௌபதி ஐவருக்கு மணமுடிக்கப்படப் போகிறாள் என்பதை அறிந்து துருபதன் மனம் தளர்வது;(117) அதன் விளைவாகச் சொல்லப்படும் ஐந்து இந்திரர்களைப் பற்றிய அற்புதமான கதை, இயல்புக்கு மிக்க வகையில் தெய்வீக ஆணையால் நடந்த திரௌபதியின் திருமணம்,(118) திருதராஷ்டிரனின் மைந்தர்கள் பாண்டவர்களிடம் விதுரனைத் தூதனாக அனுப்புவது; விதுரனின் வருகையும், அவன் கிருஷ்ணனைப் பார்ப்பதும்,(119) காண்டவப்பிரஸ்தத்தில் அமைந்த பாண்டவர்களின் வசிப்பிடம், பாதி நாட்டின் மேல் அவர்கள் செலுத்திய ஆட்சி; நாரதரின் அறிவுரைப்படி, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} உறவு கொள்ளும் முறைகளைப் பாண்டவர்கள் நிர்ணயித்துக் கொள்வது.(120) இதற்காகச் சுந்தன் உபசுந்தன் வரலாறு சொல்லப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட பிராமணரின் பசுக்களைக் காக்க ஆயுதமெடுக்கச் செல்கையில், யுதிஷ்டிரனும் திரௌபதியும் இணைந்து அமர்ந்திருப்பதைக் கண்டதால், அர்ஜுனன் தான் நோற்ற நோன்பின்படி தானே நாடு கடந்து வனவாசம் செல்வது. அர்ஜுனன் நாகத்தின் மகளான உலூபியை வழியில் சந்திப்பது;(121-123) அர்ஜுனன் பல்வேறு புண்ணியத் தலங்களுக்குச் செல்வது, பப்ருவாகனனின் பிறப்பு; ஒரு பிராமணரின் சாபத்தால் முதலைகளாக மாறி ஐந்து தேவமங்கையருக்கு அர்ஜுனன் விடுதலை அளிப்பது, பிரபாசம் என்ற புண்ணியத் தலத்தில் மாதவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் சந்திப்பது;(124,125) சுபத்திரையின் அண்ணனான கிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில், நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றில் சாரதியின் விருப்பப்படி செல்லக்கூடிய அற்புதத் தேரொன்றில் அர்ஜுனன் அவளைக் கடத்திச் செல்வது;(126) சீருடன் இந்திரப்பிரஸ்தம் புறப்படுதல்; சுபத்திரையின் கருவறையில் பெரும் ஆற்றலைக் கொண்ட அபிமன்யு கருத்தரித்தல்;(127) யக்ஞசேனிக்கு {திரௌபதிக்கு} குழந்தைகள் பிறப்பு; யமுனையின் கரைக்கு உல்லாசப் பயணம் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும், சக்கரத்தையும், கொண்டாடப்படும் வில்லான காண்டீவத்தையும் அடைதல்; காண்டவ வனம் எரித்தல்; அர்ஜுனனால் மயன் காப்பாற்றப்படுதல் மற்றும் பாம்பு தப்பித்தல்;(128,129) பறவையான சாரங்கியின் கருவறையில், முனிவர் மந்தபாலர், தன் மகனைப் பெறுதல் ஆகியன இருக்கின்றன. இந்தப் பர்வமானது இருநூற்றி இருபத்தேழு அதிகாரங்களைக் கொண்டதாக வியாசரால் பிரிக்கப்பட்டுள்ளது. (130,131) இருநூற்றி இருபத்தேழு அதிகாரங்களில் {227) எட்டாயிரத்தி எண்ணூற்றி எண்பத்திநான்கு {8884} பாடல்கள் (சுலோகங்கள்) உள்ளன[2].(132)(கங்குலியின் இந்த மொழிபெயர்ப்பில் ஆதிபர்வத்தில் மட்டும் மொத்தம் 236 பகுதிகள் இருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், “இருநூற்றிருபத்தேழு {227} அத்தியாயங்களும், அவற்றில் எண்ணாயிரத்து தொண்ணெண்பத்து நான்கு {8984} சுலோகங்களும் சொல்லப்பட்டன” என்றிருக்கிறது.)

ஆதிபர்வம் – பகுதி 2 ஆ-((பர்வசங்கிரகப் பர்வம்))இரண்டவது பர்வமான சபாபர்வம் சுருக்கம்; மூன்றாவது பர்வமான வன பர்வம் சுருக்கம்; அதன் பிறகு வரும் விராட பர்வ சுருக்கம் …

இரண்டாவதாக வரும் நீண்ட சபா பர்வமானது பொருள் நிறைந்ததாகும். இந்தப் பர்வத்தில் வரும் நிகழ்வுகளாவன: பாண்டவர்கள் நிறுவிய அரசவையும் {சபா மண்டபம்}, அவர்களுடன் தொடர்புடையோரின் மதிப்புரைகளும்;(133) தேவலோகங்களை நன்கறிந்தவரான நாரதரின் லோகபாலகர்கள் குறித்த வர்ணனை; ராஜசூய வேள்விக்கான ஆயத்தம்; ஜராசந்த வதம்;(134) மலையடிவாரத்தில் {மகதத்தின் தலைநகரான கிரிவ்ரஜம் [மலையடிவாரம்]} அடைபட்டுக் கிடந்த இளவரசர்களை வாசுதேவன் {கிருஷ்ணன்} விடுதலை செய்வது; பாண்டவர்களின் உலகளாவிய படையெடுப்புகள்;(135) ராஜசூய வேள்விக்குக் காணிக்கையோடு வந்த பிற இளவரசர்களின் வருகை; வேள்வியின் போது ஆர்கியம் அளித்தல் தொடர்பாகச் சிசுபாலன் கொல்லப்படுவது;(136) சபையில் துரியோதனனைப் பீமன் கேலி செய்வது; பெருமளவில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைக் கண்டு துரியோதனன் அடையும் பொறாமையும், கவலையும்; துரியோதனனின் உளக்கொதிப்பும்,(137) பகடையாட்டத்திற்கான ஆயத்தங்களும்; வஞ்சகன் சகுனியுடனான ஆட்டத்தில் {சூதாட்டத்தில்} யுதிஷ்டிரன் தோல்வியுறல்;(138) திருதராஷ்டிரன், புயலின் அலைகளால் கலங்கடிக்கப்பட்ட படகைப் போலச் சூதாட்டத்தால் விளைந்த துன்பக்கடலில் மூழ்கியிருந்த தன் மருமகள் திரௌபதியைத் துன்பத்தில் இருந்து விடுவித்தல்.(139) யுதிஷ்டிரனை மீண்டும் சூதாட வைக்கத் துரியோதனன் செய்த முயற்சி;(140) {சூதாட்டத்தில்} வீழ்த்தப்பட்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் வனவாசம் புகுதல். பெரும் வியாசரால் தொகுக்கப்பட்ட சபா பர்வம் இவற்றால் {இந்தச் சம்பவங்களால்} ஆனதே.(141) இந்தப் பர்வமானது எழுபத்தி எட்டு {78}[3] பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஓ பிராமணர்களில் சிறந்தோரே, இரண்டாயிரத்தி ஐநூற்றி ஏழு {2507} பாடல்களுடன் {சுலோகங்களுடன்} உள்ளது.(கங்குலியின் பதிப்பில் சபாபர்வத்தில் 80 பகுதிகளும், 2708 சுலோகங்களும் உள்ளன)

அதன்பிறகு மூன்றாவதாக வருவது (காடு தொடர்பான) ஆரண்யகம் என்றழைக்கப்படும் பர்வம் ஆகும்.(142,143) இந்தப் பர்வத்தில் பாண்டவர்கள் காட்டுக்குச் செல்வதும், ஞானியான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து குடிமக்கள் செல்வதும்,(144) தன்னைச் சார்ந்திருக்கும் பிராமணர்களுக்கு உணவும், நீரும் அளிக்கத் தௌமியரின் சொல் கேட்டு யுதிஷ்டிரன் நாளின் தேவனை {சூரியனைத்} துதித்தலும் சொல்லப்பட்டுள்ளது; சூரியனின் அருளால் உணவை உண்டாக்குவது; தலைவனின் நன்மைக்காகவே எப்போதும் பேசும் விதுரனை திருதராஷ்டிரன் வெளியேற்றுதல்;(145,146) விதுரன் பாண்டவர்களிடம் வந்ததும், பின்னவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் மீண்டும் அவன் திரும்பச் சென்றதும்;(147) காட்டில் வாழ்ந்துவரும் பாண்டவர்களை அழிக்க, கர்ணனின் தூண்டுதலின் பேரில் துரியோதனன் திட்டம் தீட்டுவது;(148) வியாசர் வருவதும், காட்டுக்குப் போகும் துரியோதனனைத் தடுத்தலும்; சுரபியின் வரலாறு;(149) மைத்திரேயரின் வரவு; அவர் திருதராஷ்டிரனுக்கு விதித்த நடைமுறையும்; துரியோதனனுக்கு அவர் அளித்த சாபமும்;(150) போரில் பீமன் கிர்மீரனைக் கொல்வது; சகுனியால் சூதாட்டத்தில் வஞ்சகமாக யுதிஷ்டிரன் வீழ்த்தப்பட்டதைக் கேட்டுப் பாஞ்சாலர்களும், விருஷ்ணி குலத்தின் இளவரசர்களும் வருவது; கிருஷ்ணனின் கோபத்தைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} தணிப்பது;(151,152) மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} திரௌபதி அழுது புலம்புவது; கிருஷ்ணன் அவளுக்கு உற்சாகமூட்டுவது;(153) {வியாச} முனிவரால் இங்கே சௌபனின் வீழ்ச்சியும் விளக்கப்படுகிறது; கிருஷ்ணன் சுபத்திரையையும், அவள் பிள்ளையையும் {அபிமன்யுவையும்} துவாரகைக்கு அழைத்துப் போவது;(154) திருஷ்டத்யும்னன் திரௌபதியின் மகனை பாஞ்சாலம் அழைத்துப் போவது; அழகான துவைத வனத்திற்குப் பாண்டுவின் மைந்தர்கள் செல்வது;(155) பீமன், யுதிஷ்டிரன், திரௌபதி விவாதம்;(156) பாண்டவர்களிடம் வியாசரின் வருகை, பிராதிசிம்ரிதி என்ற சக்தியை அவர் யுதிஷ்டிரனுக்கு அளித்தல்;(157) அதன்பிறகு, வியாசர் புறப்பாடு, பாண்டவர்கள் காம்யக வனம் செல்வது; சக்தி வாய்ந்த ஆயுதங்களை {அஸ்திரங்களைத்} தேடி அர்ஜுனன் அலைவது;(158) வேடுவ ரூபத்தில் இருக்கும் மகாதேவனுடன் {சிவனுடன்} அர்ஜுனன் போர்புரிவது; லோகபாலகர்களைச் சந்தித்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெறுவது;(159) அவனது {அர்ஜுனனின்} இந்திரலோகப் பயணமும், அதன் விளைவாகத் திருதராட்டிரன் அடைந்த கவலையும்;(160) வழிபடத்தக்க பெருமுனிவர் பிருகதஸ்வரைச் சந்திக்கும் போது, அவரிடம் யுதிஷ்டிரனின் அழுகையும், துயருரைப்பும் விளக்கப்படுகிறது.(161)

இந்த இடத்தில்தான் புனிதமானதும், மிகத்துயர்நிறைந்ததும், தமயந்தியின் பொறுமையையும், நளனின் குணத்தையும் எடுத்துரைப்பதுமான நளனின் கதை சொல்லப்படுகிறது.(162) அதே பெருமுனிவரிடம் இருந்து யுதிஷ்டிரன் பகடையின் (சூதாட்டத்தின்) புதிர்களை {இரகசியம்} அறிவது; அதன்பிறகு, மேலுலகிலிருந்து பாண்டவர்கள் இருந்த இடத்திற்குப் பெருமுனி லோமசர் வருகை,(163) சகோதரன் அர்ஜுனன் சொர்க்கத்தில் இருப்பதைத் தெரிவித்த முனிவரை, அந்த உயர் ஆன்ம காட்டுவாசிகள் {பாண்டவர்கள்} வரவேற்றது;(164) புனிதப் பயணம் மேற்கொள்ளும் பாண்டவர்கள், பல்வேறு புண்ணியத்தலகளுக்குச் செல்வது;(165) பிறகு பெருமுனிவர் நாரதர் புண்ணியத்தலமான புடஸ்டாவுக்குப் புனிதப் பயணம் செல்வதும்; உயர் ஆன்மப் பாண்டவர்களின் புனிதப் பயணமும்.(166) இங்கேதான் இந்திரன் கர்ணனிடம் காதணிகளை வாங்குவது விளக்கப்படுகிறது. மேலும் இங்கேதான் கயனின் வேள்வி மகத்துவம் விளக்கப்படுகிறது.(167)

பிறகு அசுரன் வாதாபியை அகத்தியர் உண்பதும், வாரிசு பெறும் விருப்பத்தால் லோபாமுத்திரையைத் திருமணம் செய்வதும் சொல்லப்பட்டுள்ளது.(168) பிறகு பிள்ளைப் பருவம் முதலே ரிஷ்யசிருங்கர் பிரம்மச்சரிய வாழ்வை ஏற்ற கதை சொல்லப்படுகிறது; பிறகு ஜமதக்னி முனிவரின் மைந்தனும், பேராற்றல் கொண்டவருமான இராமரின் {பரசுராமரின்} வரலாறும்,(169) கார்த்தவீரியன் மற்றும் ஹைஹயர்களின் மரணமும் விளக்கப்படுகிறது; பிரபாசம் என்றழைக்கப்படும் புனிதத்தலத்தில் பாண்டவர்களும், விருஷ்ணிகளும் சந்திப்பது;(170) பிருகு முனிவரின் மைந்தனான சியவனன், சர்யாதி மன்னனின் வேள்வியில் அசுவினி இரட்டையர்களைச்
{மற்ற தேவர்களால் அவர்களுக்கு விலக்கப்பட்டிருந்த} சோம பானம் அருந்தச் செய்த நிகழ்வுடன் கூடிய சுகன்யாவின் கதையும், (அதன் மூலம் நன்றியுடன் கூடிய அசுவினி இரட்டையர்களிடம் இருந்து வரமாக) முடிவில்லாத இளமையைச் சியவனன் பெறுவதும் சொல்லப்படுகிறது[4]. (கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில், “பிருகுபுத்திரராகிய ச்யவனமுனி சர்யாதிமுனிவருடைய யாகத்தில் அசுவினிதேவர்களுக்கு ஸோம்பானம் செய்வித்ததையும், அசுவினிதேவர்கள் இந்தச் சியவனமுனிக்கு யௌவனம் கொடுத்ததையும் பற்றிய ஸுகன்னியின் உபாக்கியானமும், மாந்தாதாவென்னும் ராஜாவின் உபாக்கியானமும் இதிற்சொல்லப்பட்டிருக்கின்றன” என்றிருக்கிறது)பிறகு மன்னன் மாந்தாதாவின் வரலாறு விளக்கப்படுகிறது;(171,172) பிறகு ஜந்துவின் வரலாறு; மன்னன் சோமகன், தன் ஒரே மகனை (ஜந்துவை) வேள்வியில் காணிக்கையாக்கி, நூறு மகன்களை அடைந்தது;(173) பிறகு பருந்து மற்றும் புறாவின் அற்புத வரலாறு; இந்திரன், அக்னி மற்றும் தர்மனால் சோதிக்கப்படும் மன்னன் சிபி {சிபிச்சக்கரவர்த்தி};(174) வருணனின் மகனும், ஏரணவியலாளருமான {தர்க்கவியலாளருமான} வந்தினுக்கும், அஷ்டவக்கிர முனிவருக்கும் இடையில் ஜனகரின் வேள்வியில் நடக்கும் சச்சரவு;(175.176) பெரும் அஷ்டவக்கிரனால் வந்தின் {வாதில்} வீழ்த்தப்படுவதும், பெருங்கடலின் ஆழத்தில் இருந்து அம்முனிவரின் தந்தை விடுதலையடைவதும்.

பிறகு யவக்கிரீதியின் கதை மற்றும் பெரும் ரைவ்யனின் கதை;(177) பிறகு கந்தமாதனத்திற்குப் புறப்பட்டு (பாண்டவர்கள்) நாராயண ஆசிரமத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டது; திரௌபதியின் வேண்டுகோளுக்கிணங்க கந்தமாதனத்தில் (இனிய நறுமணமிக்க மலரைத்தேடி) பீமன் மேற்கொள்ளும் பயணம்.(178) பீமன் தன் வழியில், ஒரு வாழைத்தோப்பில் வைத்து பெரும் ஆற்றலைக் கொண்ட பவனனின் மகனான {வாயு மைந்தன்} அனுமானைச் சந்திப்பது;(179) பீமன் தடாகத்தில் குளித்து, (தான் தேடி வந்த) நறுமணமிக்க மலருக்காகப் பிற மலர்களைப் அழிப்பது; வலிமிக்க ராட்சசர்களுடன் அவன் {பீமன்} போரிடுவது(180), பெரும் ஆற்றலைக் கொண்ட மணிமான் மற்றும் பிற யக்ஷர்களுடன் அவன் போரிடுவது; பீமன் அசுரன் ஜடனை அழிப்பது;(181) அரசமுனியான விருஷபர்வனை (பாண்டவர்கள்) சந்திப்பது; ஆர்ஷ்டிசேனரின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டு, அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வது;(182) (பழிதீர்ப்பதற்காக) திரௌபதியால் தூண்டப்படும் பீமன். பிறகு, கைலாச மலைச்சரிவில், மணிமான் தலைமையிலான வலிமைமிக்க யக்ஷர்களுடன் பீமசேனன் பயங்கரமாகப் போரிடுவது சொல்லப்படுகிறது; பிறகு வைஸ்ரவணனுடன் (குபேரனுடன்) பாண்டவர்கள் சந்திப்பதும், யுதிஷ்டிரனின் காரியத்திற்காகப் பல தெய்வீக ஆயுதங்களை அடைந்து வந்த அர்ஜுனனைச் சந்திப்பதும்;(183,184) ஹிரண்யபுரத்தில் வசிக்கும் நிவாதகவசர்களுடன் அர்ஜுனன் பயங்கரமாக மோதுவது;(185) பௌலோமர்கள் மற்றும் காலகேயர்களுடனும் மோதுவது; அர்ஜுனன் கரங்களில் அவர்களுக்கு ஏற்படும் அழிவு;(186) யுதிஷ்டிரனின் முன்னிலையில் தெய்வீக ஆயுதங்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கும் அர்ஜுனனும், அதைத் தடுத்த நாரதரும்;(187) கந்தமாதனத்தில் இருந்து பாண்டவர்கள் இறங்குவது; காட்டில் மலையைப் போன்ற பெரும்பாம்பொன்றிடம் {நகுஷனிடம்} பீமன் அகப்படுவது;(188) குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு யுதிஷ்டிரன் பதிலளித்ததும், அந்தப் பாம்பின் சுருளில் இருந்து {பீமன்} விடுபடுவது;(189) காம்யக வனத்திற்குப் பாண்டவர்கள் திரும்புவது.

இங்கேதான் வலிமைமிக்கப் பாண்டுவின் மகன்களை வாசுதேவன் {கிருஷ்ணன்} மீண்டும் சந்திப்பது விளக்கப்படுகிறது; மார்க்கண்டேயரின் வருகையும், அவரால் பல்வேறு கதைகள் உரைக்கப்படுதலும்(190,191), அந்தப் பெரும் முனிவரால் வேனனின் மகனான பிருதுவின் வரலாறு உரைக்கப்படுகிறது; சரஸ்வதி மற்றும் முனிவர் தார்க்ஷியரின் கதைகளும் உரைக்கப்படுகின்றன.(192) இதன் பிறகு, மத்ஸ்யத்தின் {மீனின்} கதை; மற்றும் பிற பழங்கதைகளை மார்க்கண்டேயர் உரைப்பது;(193) இந்திரத்யும்னன் மற்றும் துந்துமாரனின் கதைகள்; பிறகு கற்புடைய மனைவியின் வரலாறு; அங்கிரஸின் வரலாறு;(194) திரௌபதி மற்றும் சத்யபாமா சந்திப்பும், உரையாடலும்; துவைதவனத்திற்குப் பாண்டவர்கள் திரும்புவது;(195) கன்றுகளைக் கணக்கெடுத்தலும் {கோஷயாத்திரையும்}, துரியோதனன் கைப்பற்றப்படுவதும்; அந்தப் பொல்லாதவன் தூக்கிச் செல்லப்படும்போது அர்ஜுனன் அவனை மீட்பது;(196) யுதிஷ்டிரனின் மான் கனவு; பாண்டவர்கள் மீண்டும் காம்யக வனத்திற்குள் நுழைவதும்,(197) விரீஹித்ரௌணிகம் எனும் நெடுங்கதையும் இங்கே சொல்லப்படுகிறது. இங்கே துர்வாசரின் கதை உரைக்கப்படுகிறது;(198)

பிறகு ஆசிரமத்திலிருந்து ஜெயத்ரதனால் திரௌபதி அபகரிக்கப்படுவது; கடத்தியவனைப் பின்தொடர்ந்து சென்று பிடித்து, அவனது முடியை பீமன் சிரைப்பது ஆகியன இங்கே உரைக்கப்படுகின்றன. ராமன் தன் ஆற்றலால் எவ்வாறு போரில் ராவணனைக் கொன்றான் என்ற ராமனின் நெடும் வரலாறு இங்கே சொல்லப்படுகிறது. இங்கே சாவித்ரியின் கதையும் சொல்லப்படுகிறது;(199-201), இந்திரன் கர்ணனின் குண்டலங்களைப் பெற்று அதற்குப் பதிலாக, வீசப்பட்டால் ஒருவனை மட்டும் நிச்சயம் கொல்லக்கூடிய சக்தி ஆயுதத்தைக் கொடுப்பது.(202) (நீதி தேவன்) தர்மன் {யமன்} தன் மகனுக்கு (யுதிஷ்டிரனுக்கு) அறிவுரை வழங்கிய ஆரண்யம் என்றழைக்கப்படும் கதை; வரத்தை அடைந்து மேற்கு நோக்கிச் செல்லும் பாண்டவர்கள் இங்கு விவரிக்கப்படுகின்றனர்.(203) இவையே மூன்றாவது பர்வமான ஆரண்யக பர்வத்தில் வருவன. இருநூற்று அறுபத்து ஒன்பது {269} பகுதிகளுக்குள்[5] பதினோராயிரத்து அறுநூற்று அறுபத்து நாலு {11664} பாடல்களைக் {சுலோகங்களைக்} கொண்டது இந்தப் பர்வம்.(கங்குலியில் வனபர்வத்தில் 313 பகுதிகள் இருக்கின்றன.)

அதன்பிறகு வருவது விரிவானதும், விராடம் என்றழைக்கப்படுவதுமான பர்வமாகும்.(204-206) விராடனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் வரும் பாண்டவர்கள், அந்நகரத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள மயானத்தில் ஒரு பெரிய சமி {வன்னி} மரத்தைக் கண்டு, அதில் தங்கள் ஆயுதங்களை {பதுக்கி} வைப்பது.(207) இங்கேதான் அவர்கள் {பாண்டவர்கள்} நகருக்குள் நுழைவதும், மாறுவேடத்தில் அங்கே தங்குவதும் உரைக்கப்படுகிறது. பிறகு, காமத்தால் மதியிழந்து திரௌபதியை வேண்டும் தீய கீசகனைப் பீமன் கொல்வது; இளவரசன் துரியோதனனால் புத்திசாலி ஒற்றர்கள் நியமிக்கப்படுவது; வலிமைமிக்கப் பாண்டு மகன்களைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தோற்பது;(208-210) முதலில் திரிகர்த்தர்களால் விராடனின் பசுக்கள் கவரப்படுவதும்; அதைத் தொடர்ந்த பயங்கரப் போரும்;(211) பகைவனால் விராடன் கைப்பற்றப்படுவதும்; அவனைப் பீமசேனன் மீட்பதும்;(211) பாண்டவன் (பீமன்) பசுக்களை விடுவிப்பது;(212) குருக்களால் மீண்டும் விராடனின் பசுக்கள் கைப்பற்றப்படுவது; தனியொருவனான அர்ஜுனனால் போரில் குருக்கள் அனைவரும் வீழ்த்தப்படுவதும்;(213) மன்னனின் பசுக்கள் விடுவிக்கப்படுவதும்; சுபத்திரையின் மூலமான தன் மகனும், எதிரிகளை அழிப்பவனுமான அபிமன்யுவுக்காக விராடனின் மகள் உத்தரையை அர்ஜுனன் ஏற்பதும் சொல்லப்படுகின்றன. இவையே விரிவான நான்காம் பர்வமான விராட பர்வத்தின் உள்ளடக்கங்கள் ஆகும்.(214,215) பெருமுனிவரான வியாசர் அறுபத்தி ஏழு {67} பகுதிகளாக[6] இதைப் பிரித்து, இரண்டாயிரத்து ஐம்பது {2050} பாடல்களுக்குள் {சுலோகங்களுக்குள்} இதை அடக்கியுள்ளார்.(216,217)(கங்குலியில் விராட பர்வத்தில் 72 பகுதிகள் இருக்கின்றன.)

ஆதிபர்வம் – பகுதி 2 இ(பர்வசங்கிரகப் பர்வம்))ஐந்தாவது பர்வமான உத்யோகபர்வம் சுருக்கம்; ஆறாவது பர்வமான பீஷ்ம பர்வம் சுருக்கம்; அதன் பிறகு வரும் ஏழாவது பர்வமான துரோண பர்வ சுருக்கம்; அதன் பிறகு வரும் எட்டாவது பர்வமான கர்ண பர்வ சுருக்கம் …

அடுத்து, உத்யோக பர்வம் என்று அறியப்படும் ஐந்தாவது பர்வத்தை (உத்யோக பர்வத்தின் உள்ளடக்கத்தைக்) கேட்பீராக. வெற்றியை விரும்பிய பாண்டவர்கள், உபப்பிலாவ்யம் என்றழைக்கப்படும் இடத்தில் இருந்த போது,(218) துரியோதனனும் அர்ஜுனனும் ஒரே நேரத்தில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} சென்று, “இந்தப் போரில் உன் துணையை எங்களுக்கு அளிக்க வேண்டும்” என்று கேட்டனர்.(219) இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்மக் கிருஷ்ணன் “மனிதர்களில் முதன்மையானவர்களே! ஒருபுறம் போர் புரியாத ஆலோசகராக நானும்,(220) மற்றொருபுறம் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளும் இருக்கிறோம். இதில் உங்கள் இருவரில் யாருக்கு எதைக் கொடுப்பது?” என்றான். தன் சுய விருப்பங்களால் குருடனாவனும், மூடனுமான துரியோதனன் துருப்புகளைக் கோரியது;(221) அர்ஜுனன் போரிடாத ஆலோசகராகக் கிருஷ்ணனயே வேண்டியது. அதன்பிறகு, மத்ரத்தின் மன்னன் {சல்லியன்} பாண்டவர்களுக்குத் துணைபுரிய வந்து கொண்டிருந்தபோது, கொடைகளாலும், விருந்தோம்பலாலும் அவனை வஞ்சித்த துரியோதனன், அவனை ஒரு வரம் தரத் தூண்டி, பிறகு அந்த வரமாகப் போரில் அவனது துணையை வேண்டுவது;(222,223) சல்லியன் துரியோதனனிடம் இப்படி வார்த்தையைக் கொடுத்துவிட்டுப் பாண்டவர்களிடம் வந்து நடந்த நிகழ்ச்சியையும் சொல்லி, இந்திரனின் வெற்றிக் கதை (இந்திரனுக்கு விருத்திராசுரனுக்கும் நடைபெற்ற போர்) ஒன்றையும் சொல்லி பாண்டவர்களுக்கு ஆறுதலளித்தது.(224)

அதன்பிறகு, பாண்டவர்களின் புரோகிதர் கௌரவர்களிடம் அனுப்பப்படுதல் வருகிறது. அதன்பிறகு மன்னன் திருதராஷ்டிரனிடம் பாண்டவர்களின் புரோகிதர் சொல்லும் இந்திரனின் வெற்றிக்கதையைக் கேட்ட பின் {திருதராஷ்டிரன்} தனது புரோகிதரை அனுப்ப நினைத்து இறுதியில் சஞ்சயனை பாண்டவர்களிடம் அமைதியேற்பட அனுப்புவது.(225,226) இங்கேதான் பாண்டவர்களையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} அவர்களது நண்பர்களையும் பற்றிக் கேள்விப்பட்டுக் கவலையடையும் திருதராஷ்டிரனின் தூக்கமற்ற நிலை விவரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில்தான் உண்மை பிறழாத விதுரன் திருதராஷ்டிரனிடம் விவேகம் நிறைந்த பல ஆலோசனைகளைக் கூறும் சம்பவம் வருகிறது.(227,228) மேலும் இந்த இடத்தில்தான் கவலையில் மூழ்கியிருக்கும் மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} ஆன்மிகத் தத்துவங்களின் உண்மைத் தன்மையைச் சனத்சுஜாதர் விவரிக்கிறார். அடுத்த நாள் காலையில் மன்னனின் {திருதராஷ்டிரனின்} சபையில், சஞ்சயன், வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் உடல் மற்றும் மனக் குறிப்புகளைத் தெரிவிக்கிறான்.

அப்போதுதான் அன்பாலும், அமைதிக்கான ஆசையாலும் உந்தப்பட்ட சிறப்புமிக்கக் கிருஷ்ணன், தானே கௌரவத் தலைநகரான ஹஸ்தினாபுரம்த்திற்குச் சென்று அமைதியை வேண்டுகிறான். இரு தரப்புக்கும் நன்மையைத் தரக்கூடிய கிருஷ்ணனின் ஆலோசனைகள் துரியோதனனால் மறுக்கப்படுவது. இந்த இடத்தில் தம்போத்பவனின் கதை சொல்லப்படுகிறது;(229-233) உயர்ந்த உள்ளங்கொண்ட மாதலி தனது மகளுக்குக் கணவனைத் தேடுவது; அதன்பிறகு பெருமுனிவரான காலவரின் வரலாறு;(234) அதன்பிறகு விதுலையின் பயிற்சிகளும் ஒழுக்கமுறைகளும் வருகின்றன. மன்னர்களின் முன்னிலையில், துரியோதனன் மற்றும் கர்ணனின் தீய ஆலோசனைகளை அறிந்து கொண்டு, தனது யோக வலிமையால் கிருஷ்ணன் விஸ்வரூபக் காட்சி தருவது; அதன்பிறகு கிருஷ்ணன் தனது தேரில் கர்ணனை அழைத்துப் போய் அறிவுரை கூறுவதும்,(235,236) கர்ணன் தற்பெருமையால் {கர்வத்தால்} அதை மறுப்பதும் வருகிறது. பிறகு எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணன், ஹஸ்தினாபுரத்திலிருந்து உபப்பிலாவியத்திற்குத் திரும்பி,(237) பாண்டவர்களிடம் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறான். அதன்பிறகு பகைவர்களை ஒடுக்குபவர்களான பாண்டவர்கள், அனைத்தையும் கேட்டு, ஒருவரோடொருவர் நன்கு ஆலோசித்து, போருக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றனர்.(238-239)

அதன்பிறகு காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகள் போருக்கு அணிவகுத்து வருவது. பிறகு இருதரப்பில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது. போருக்கு முன்பு உலூகனை துரியோதனன் பாண்டவர்களிடம் தூதனுப்புகிறான். பல்வேறு பிரிவுகளின் தேரோட்டிகள் கதை அதன்பிறகு வருகிறது. அதன்பிறகு அம்பையின் கதை.(240,241) போர் தயாரிப்புகளும், அமைதி ஏற்பாடுகளுமான இவையனைத்தும் மஹாபாரதத்தின் ஐந்தாவது பர்வமான உத்யோக பர்வத்தில் வருகின்றன.(242) ஓ துறவிகளே! பெருமுனிவர் வியாசர் நூற்று எண்பத்து ஆறு {186} பகுதிகளில்[7] ஆறாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு {6698} பாடல்களில் {சுலோகங்களில்} விவரித்துள்ளார். (243,244)(கங்குலியில் உத்யோக பர்வத்தில் 199 பகுதிகள் இருக்கின்றன.)

அதன்பிறகு அற்புதமான நிகழ்வுகள் கொண்ட பீஷ்ம பர்வம் உரைக்கப்படுகிறது. ஜம்பூ என்ற இடம் உருவான வரலாற்றுக் குறித்துச் சஞ்சயனால் இங்குச் சொல்லப்படுகிறது.(245) யுதிஷ்டிர சேனையின் பெரிய மனத்தளர்ச்சியும், அடுத்தடுத்து பத்து நாட்கள் நடந்த கொடூரப் போரும் வருகின்றன.(246) தன் பாட்டன் மீது கொண்ட மதிப்பால் அர்ஜுனனிடம் எழுந்த கழிவிரக்கத்தை, உயர் ஆன்ம வாசுதேவன் {கிருஷ்ணன்}, இறுதி விடுதலை தத்துவத்தின் {பகவத்கீதையின்} மூலம் அவனிடம் இருந்து விரட்டுவது.(247) மகத்தானவனும், யுதிஷ்டிரனின் நன்மையில் கவனமாக இருப்பவனுமான கிருஷ்ணன், (பாண்டவப் படைக்கு) நேர்ந்த அழிவைக் கண்டு, தைரியமான இதயத்துடனும், கையில் சாட்டையுடனும், தன் தேரில் இருந்து இறங்கி பீஷ்மரைக் கொல்ல அவரை நோக்கி வேகமாக ஓடுவதும் இதில் {இந்தப் பர்வத்தில்} வருகிறது. இதில்தான், காண்டீவதாரியும், ஆயுததாரிகள் அனைவரிலும் போரில் முதன்மையானவனுமான அர்ஜுனனைத் துளைக்கும் வார்த்தைகளால் கிருஷ்ணன் தாக்குவது வருகிறது. வில்லாளிகளில் முதன்மையான அர்ஜுனன், தன் முன் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, தன் கூரிய கணைகளால் பீஷ்மரைத் துளைத்து, அவரது தேரில் இருந்து வீழ்த்துவது வருகிறது. இதில் தான் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் நீண்டு கிடப்பதும் வருகிறது.(248-251) இந்தப் பெரிய பர்வமானது மஹாபாரதத்தின் ஆறாவது பர்வமாக அறியப்படுகிறது. வேதங்களை அறிந்த வியாசரால் நூற்றுப் பதினேழு {117} பகுதிகளில்[8], ஐயாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு {5888} பாடல்களில் இவையனைத்தும் விவரிக்கப்படுகின்றன(கங்குலியில் பீஷ்ம பர்வத்தில் 124 பகுதிகள் இருக்கின்றன)

அதன்பிறகு நிகழ்வுகள் நிறைந்த அற்புத பர்வமாகிய துரோண பர்வம் வருகிறது.(252-254) முதலில், பெரும் ஆயுத ஆசானான துரோணரைப் படைத் தலைமையில் நிறுவப்படுவது; துரியோதனனை மனநிறைவு செய்வதற்காக யுதிஷ்டிரனைக் கைப்பற்றுவதாகத் துரோணர் சூளுரைப்பது; சம்சப்தகர்களிடம் இருந்து அர்ஜுனன் பின்வாங்கி,(255,256) களத்தில் இரண்டாவது இந்திரனைப் போல இருந்த பகதத்தனையும், அவனது யானையையும் வீழ்த்துவது; தனியனாக, ஆதரவற்றவனாகத் தன் பதின்ம வயதில் இருந்த வீரன் அபிமன்யு, ஜெயத்ரதன் உள்ளிட்ட பல மஹாரதர்களின் கைகளில் மரணத்தை அடைவது;(258) அபிமன்யுவின் மரணத்திற்குப் பிறகு, ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளையும் ஜெயத்ரதனையும் அர்ஜுனன் அழிப்பது;(259) யுதிஷ்டிரனின் கட்டளையை ஏற்று, தேவர்களாலும் ஊடுருவப்பட முடியாத கௌரவத் துருப்புகளுக்குள் வலிய கரங்களைக் கொண்ட பீமனும், தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியும் அர்ஜுனனைத் தேடி ஊடுருவுவதும், சம்சப்தகர்களின் அழிவும்.(260,261) அலம்புசன், சுருதாயு, ஜலசந்தன், சௌமதத்தன் {சோமதத்தன்}, விராடன், பெரும் தேர்வீரனான துருபதன், கடோத்கசன் ஆகியோரும், இன்னும் பிறரும் மரணமடைவது இந்தத் துரோண பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன; மேலும் அஸ்வத்தாமன் தனது தந்தையின் மரணத்தால் கோபங்கொண்டு நாராயணக் கணையை ஏவுதல். (மூன்று நகரங்களை) அழித்ததில் ருத்ரனின் மகிமை.(262-264) கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பெருமைகளை வியாசர் வந்து விவரித்தல் ஆகியவை வருகின்றன.(265) இதுவே, வீரத்தலைவர்களும், இளவரசர்களும் மரணமடைந்ததைச் சொல்லும் மஹாபாரதத்தின் ஏழாவது பர்வமான துரோண பர்வமாகும்.(266) இதில் மொத்தம் நூற்று எழுபது {170} பகுதிகள் இருக்கின்றன.[9] மேலும் பராசரர் மகனும், அதிகத் தியானத்திற்குப் பிறகு உண்மை ஞானத்தை அடைந்தவருமான வியாசமுனிவரால் தொகுக்கப்பட்ட இந்தத் துரோண பர்வத்தில் எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது {8909} பாடல்கள் {சுலோகங்கள்} இருக்கின்றன.(267,268)(கங்குலியில் துரோண பர்வத்தில் 203 பகுதிகள் இருக்கின்றன.)

இதன் பிறகு அற்புதமான கர்ண பர்வம் வருகிறது. இதில் (கர்ணனின்) தேரோட்டியாக ஞானியான மத்ர மன்னன் {சல்லியன் நியமிக்கப்பட்டது உரைக்கப்படுகிறது.(269) அதற்கடுத்து திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு சொல்லப்படுகிறது. போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கர்ணனை அவமதிக்க அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு {சல்லியன்} கதை சொல்வது; அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது;(271) தண்டசேனன் மற்றும் தண்டன் ஆகியோரின் மரணம்; ஆபத்து என்றறிந்தும் அனைத்து வீரர்களுக்கு மத்தியில் கர்ணனுடன் யுதிஷ்டிரன் தனித்துப் போர் புரிவது; அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் ஒருவருக்கொருவர் கோபத்துடன் பேசிக்கொள்வது;(272,273) கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. இந்தப் பர்வத்தில், பீமன் தன் சபதத்தை நிறைவு செய்யும் வகையில், துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராகக் கர்ணனிடம் போர் புரிந்து அவனை {கர்ணனை} வீழ்த்துவது வருகின்றது.(274,275) பாரதத்தை உரைப்பவர்கள் இதை எட்டாவது பர்வம் என்று சொல்கின்றனர். இஃது அறுபத்தொன்பது {69) பகுதிகளும்,[10] நாலாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு {4964} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்பட்டுள்ளது.(276,277)(கங்குலியில் கர்ண பர்வத்தில் 96 பகுதிகளும், 4887 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

ஆதிபர்வம் – பகுதி 2 ஈ(பர்வசங்கிரகப் பர்வம்) ஒன்பதாவது முதல் பதினெட்டாவது பர்வங்கள் வரையிலான  சுருக்கங்கள்; பாரதம் படிப்பதன் பலன்

அடுத்ததாக அற்புதமான பர்வமான சல்லிய பர்வம் உரைக்கப்படுகிறது. பெரும் போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்துவிட்ட நிலையில், மத்ர மன்னன் சல்லியன் {கௌரவப்} படையின் தலைவனாகிறான்.(278) தேர்வீரர்களுக்கிடையில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் மோதல்கள் இங்கே விளக்கப்படுகின்றன.(279) பெரும் சல்லியன், நீதிமானான யுதிஷ்டிரனின் கையில் வீழ்கிறான். இந்தப் பர்வத்தில்தான் சகாதேவனின் கையால் சகுனி மரணத்தைத் தழுவுகிறான்.(280) பேரழிவுக்குப்பின்னர் சில துருப்புகளே எஞ்சியிருக்கும் நிலையில் தடாகத்திற்குச் சென்ற துரியோதனன், அந்த நீர் நிலைக்குள் ஓர் அறையை உண்டாக்கிக் கொண்டு அங்கே சிறிது நேரம் படுத்துக் கிடக்கிறான்.(281) வேடர்களிடம் இருந்து பீமனுக்கு இந்தச் செய்தி கிடைப்பது உரைக்கப்படுகிறது; நுண்ணறிவு கொண்ட யுதிஷ்டிரனுடைய அவமதிப்பான பேச்சுகளால் தூண்டப்பட்டு, அந்த அவமதிப்புகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நீர்நிலையில் இருந்து துரியோதனன் வெளிவருவது. அதன் பிறகு பீம துரியோதன கதாயுதப் போர்;(282,283) இத்தகு மோதல் நடந்து கொண்டிருக்கும்போது பலராமன் வருகை; சரஸ்வதி நதியின் புனிதத்தன்மை விவரிக்கப்படுகிறது;(284) கதாமோதல் தொடர்வது; போரில் தன் கதாயுதத்தால் {அதன் பயங்கர வீச்சால்} பீமன் துரியோதனனின் தொடைகள் முறிப்பது. இவை அனைத்தும் இந்த அற்புதமான ஒன்பதாவது பர்வத்தில் விளக்கப்படுகின்றன.(285,286) மொத்தம் ஐம்பத்து ஒன்பது {59} பகுதிகளில்[11] மூவாயிரத்து இருநூற்று இருபது {3220} பாடல்களில் {சுலோகங்களில்} கௌரவர்களின் புகழைப் பரப்புபவரான பெரும் வியாசர் இவற்றை விவரிக்கிறார்.(287,288)(கங்குலியில் சல்லிய பர்வத்தில் 65 பகுதிகளும் 3503 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

இதன் பிறகு பயமுறுத்தும் நிகழ்வுகள் கொண்ட சௌப்திக பர்வத்தைக் குறித்து நான் விளக்கப் போகிறேன். பாண்டவர்கள் சென்றவுடன், பெரிய வீரர்களான கிருதவர்மன், கிருபர், துரோண மைந்தன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், தொடை உடைந்து இரத்தத்தில் நனைந்து கிடக்கும் துரியோதனனைக் காண்கின்றனர். இந்தக் காட்சியைக் கண்ட துரோணரின் மைந்தன் {அசுவத்தாமன்} கோபங்கொண்டு “பாஞ்சாலர்கள், திருஷ்டத்யுமனன், பாண்டவர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளைக் கொல்லாமல் என் கவசம் களைவதில்லை” என்று சபதமேற்கிறான்.(289-292) பிறகு மூவரும் துரியோதனனை விட்டுவிட்டு கதிர் அடங்கும் வேளையில் கானகத்துக்குள் நுழைகின்றனர்.(293)

ஒரு பெரிய ஆலமரத்தடியில் அவர்கள் மூவரும் உட்கார்ந்திருக்கையில், ஓர் ஆந்தை பல காக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்வதைக் காண்கின்றனர்.(294) இக்காட்சியைக் கண்ட அஸ்வத்தாமன், இதயம் நிறைந்த கோபத்தால், தன் தந்தையைக் கொன்ற பாஞ்சாலர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களைப் பழி வாங்குவது என்று தீர்மானிக்கிறான்.(295) பாசறையின் வாசலை பயங்கரமான ஓர் இராட்சசன் காவல் காப்பதைக் காண்கிறான்.(296) தன் போர்க்கருவிகள் அவனிடம் செயலிழப்பதைக் கண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} மனத்தில் முக்கண் ருத்திரனை வழிபட்டு அவனைக் {ருத்திரனைக்} குளிர்விக்கிறான்.(297)

பிறகு கிருதவர்மனையும், கிருபரையும் அழைத்துக் கொண்டு இரவு வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில், திரௌபதி மைந்தர்கள் அனைவரையும், திருஷ்டத்யும்னனுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரையும், அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களது உறவினர்களுடன் சேர்த்துக் கொல்கிறான். ஐந்து பாண்டவர்களையும், சாத்யகியையும் தவிர்த்து மற்ற அனைவரும் அந்தப் பயங்கர இரவில் இறக்கின்றனர். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி தப்பியவர்களிடம்,(298-300) உறங்கிக் கொண்டிருக்கும்போது துரோணர் மகனால் பாஞ்சாலர்கள் கொல்லப்பட்டதைத் திருஷ்டத்யும்னனின் தேரோட்டி சொல்கிறான். பிள்ளைகள், தமையன், தந்தை ஆகியோரின் பிரிவால் துயருற்ற திரௌபதி உண்ணாதிருந்து சாக முடிவு செய்து, தனது கணவர்களின் முன்னால் அமர்கிறாள். திரௌபதியின் வார்த்தைகளில் இரக்கமடைந்த பீமசேனன், அவளை நிறைவு செய்ய எண்ணி, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஆயுதாசானின் மகனைத் {அசுவத்தாமனை} தேடுகிறான்.(301-303) பீமசேனன் மீதிருக்கும் பயத்தாலும், விதியின் வசத்தாலும் அசுவத்தாமன் பாண்டவர்கள் அனைவரையும் அழிக்கும்படி, “இது பாண்டவர்கள் அனைவரின் அழிவுக்காக” எனச் சொல்லி தெய்வீகக் கணையொன்றை ஏவுகிறான்;(304) கிருஷ்ணன் அசுவத்தாமனின் வார்த்தைகளைக் கேட்டு “இது நடக்காது” என்று சொல்லி அந்தக் கணையை அர்ஜுனனைக் கொண்டு செயலிழக்க வைக்கிறான்.(305) துவைபாயனரும் {வியாசரும்}, கிருஷ்ணனும் அழிவு நோக்கம் கொண்ட அசுவத்தாமனுக்குச் மாறி மாறி சாபம் கொடுக்கின்றனர். அஸ்வத்தாமனும் பதிலுக்குச் சாபமிடுகிறான்.(306) அஸ்வத்தாமனிடம் அவனது தலையில் பிறப்பிலிருந்தே இருக்கும் நகையொன்றை அறுத்தெடுத்து, மிகவும் மகிழ்ச்சியடைந்து, தங்கள் வெற்றி குறித்துப் பெருமை பேசி, துயரத்தில் இருக்கும் திரௌபதிக்கு அதை {அந்நகையைப்} பரிசளிக்கின்றனர் பாண்டவர்கள்.(307) இப்படியே சௌப்திகம் என்று அழைக்கப்படும் இந்தப் பத்தாவது பர்வம் உரைக்கப்படுகிறது. மொத்தம் பதினெட்டு {18} பகுதிகளில்[12] எண்ணூற்று எழுபது {870} பாடல்களில் {சுலோகங்களில்} சௌப்திக பர்வத்தை விவரிக்கிறார் பெரும் வியாசர்.(308,309) இந்தப் பர்வத்தில் சௌப்திக மற்றும் ஐஷிக பர்வங்கள் பெருமுனிவரால் சேர்க்கப்பட்டிருக்கிறது.(கங்குலியில் சௌப்திக பர்வத்தில் 18 பகுதிகளும், 791 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

இதன்பிறகு துயர்நிறைந்த பர்வமான ஸ்த்ரீ பர்வம் உரைக்கப்படுகிறது.(310) மைந்தர்களின் பிரிவால் துயருற்றிருந்த, முன்னறி கண் கொண்ட திருதராஷ்டிரன் முன்னால் “இது பீமன்” என்று கிருஷ்ணன் ஓர் இரும்புச் சிலையைக் காட்ட, பீமன் மீதிருந்த கோபத்தால் அந்தச் சிலையை இறுகப் பற்றித் தூள் தூளாக்குகிறான் திருதராஷ்டிரன். விதுரன் திருதராட்டிரனின் கோபத்தை அமைதிப்படுத்தி, உலகப்பற்றை விடச்சொல்லி விவேகம் நிறைந்த அந்த ஏகாதிபதிக்கு அறிவுறுத்துகிறான்.(311-313) அடுத்து திருதராஷ்டிரன் தனது இல்லத்தில் உள்ள பெண்மணிகளை அழைத்துக் கொண்டு, போர் நடந்த இடத்திற்குச் செல்லும் காட்சி விவரிக்கப்படுகிறது.(314) இதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட வீரர்களுடைய மனைவியரின் துயரமான ஓலங்களும், புலம்பல்களும் சொல்லப்படுகின்றன. காந்தாரியும் திருதராஷ்டிரனும் கோப மிகுதியால் மயக்கம் கொண்டு நினைவிழப்பது.(315) திரும்பி வராதவர்களான தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைகள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பதை க்ஷத்திரியப் பெண்மணிகள் காண்கின்றனர்.(316) மகன்களும், பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்ட காந்தாரிக்கு கிருஷ்ணன் ஆறுதல் வார்த்தைகள் சொல்வது.(317) இறந்த மன்னர்களின் சடலங்களுக்கு, பெரும் ஞானியும், அறவோர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} உரிய இறுதிச்சடங்குகளைச் செய்வது.(318) கமுக்கத்தில் தனக்கு மகனாய் பிறந்த கர்ணனை அங்கீகரிக்கும் குந்தியின் கதை.(319) இவையாவும் பெரும் முனிவரான வியாசரால் இந்தப் பதினோராவது பர்வத்தில் விளக்கப்படுகிறது.(320) உணர்வுள்ள நெஞ்சங்களில் கவலையையும், கண்ணீரையும் வர வைக்கும் பர்வம் இது. மொத்தம் இருபத்து ஏழு {27} பகுதிகளில்[13] எழுநூற்று எழுபத்தைந்து {775} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.(321,322)(கங்குலியில் ஸ்திரீ பர்வத்தில் 27 பகுதிகளும், 803 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

பனிரெண்டாவதாகப் பர்வமாக, புரிதலை {அறிவை} அதிகரிக்க வல்லதும், தன் தந்தைமார், சகோதரர்கள், மகன்கள், தாய்மாமன்கள், மற்றும் சம்பந்திகள் கொல்லப்பட்ட யுதிஷ்டிரனின் மனத்தளர்ச்சி சம்பந்தமானதுமான சாந்தி பர்வம் வருகிறது. இந்தப் பர்வத்தில், அறிவை விரும்பும் மன்னர்களுக்குத் தகுந்த பல்வேறு கடமைகளைக் குறித்துப் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் இருந்து எவ்வாறு விளக்குகிறார் என்பது சொல்லப்பட்டுள்ளது; ஆபத்துக் காலங்களுக்கு உகந்த கடமைகளையும், காலம் மற்றும் அறிவு ஆகியவற்றையும் முழுமையாக விளக்குகிறது இந்தப் பர்வம்.(323-325) இதைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதன் முழுமையான அறிவை அடைகிறான். இறுதி விடுதலை {முக்தி} குறித்தும் இந்தப் பர்வத்தில் விவரிக்கப்படுகிறது. இதுவே ஞானிகளுக்குப் பிடித்தமான பனிரெண்டாவது பர்வமாகும். மொத்தம் முந்நூற்று முப்பத்தொன்பது {339} பகுதிகளில்[14] பதினாலாயிரத்து எழுநூற்று முப்பத்திரண்டு {14732} பாடல்களில் {சுலோகங்களில்} இது விவரிக்கப்படுகிறது.(கங்குலியில் சாந்தி பர்வத்தில் 366 பகுதிகளும் 13682 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

வரிசையில் அடுத்தது அற்புதமான அனுசாசன பர்வம் ஆகும்.(328-329) பாகீரதியின் {கங்கையின்} மைந்தனான பீஷ்மரால் விளக்கப்பட்டுக் கடமைகளை {நீதிகளைக்} கேட்டு குருக்களின் மன்னனான யுதிஷ்டிரன் எவ்வாறு தன்னைச் சீர்படுத்திக் கொண்டான் என்பது இதில் விளக்கப்படுகிறது.(330) தர்மம் {அறம்} மற்றும் அர்த்தம் {பொருள்} ஆகியவற்றின் விதிகளும்; கொடை {தானம்} மற்றும் தகுதிகளின் {புண்ணியங்களின்} விதிகளும்; தானம் பெறுபவர்களின் தகுதிகளும், தானம் செய்வதற்கான முக்கியமான விதிமுறைகளும் இப்பர்வத்தில் விவரமாக விளக்கப்படுகின்றன. மேலும் இந்தப் பர்வத்தில், சடங்குகளில் ஒரு தனி மனிதனின் கடமை, நடத்தை விதிகள் மற்றும் ஒப்பற்ற வாய்மையின் தகுதி {சத்தியத்தின் பயன்} ஆகியனவும் விளக்கப்படுகின்றன.(331,332) மேலும் இந்தப் பர்வம், பிராமணர்கள் மற்றும் பசுக்களின் பெரும் தகுதியை {மகிமையை} வெளிப்படுத்தி, காலம் மற்றும் இடம் தொடர்பான கடமைகளின் புதிர்களைக் கட்டவிழ்க்கிறது.(333) இவையே, பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட அனுசாசனம் என்றழைக்கப்படும் இந்த அற்புத பர்வத்தின் உள்ளடக்கங்களாகும். பீஷ்மர் சொர்க்கத்திற்கு உயர்வதும் இந்தப் பர்வத்தில்தான் விளக்கப்படுகிறது.(334) நூற்று நாற்பத்தாறு {146} பகுதிகளில்[15] எட்டாயிரம் {8000} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.(கங்குலியில் அனுசாசன பர்வத்தில் 168 பகுதிகளும் 7670 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

அதன்பிறகு வருவது பதினான்காவது பர்வமான அஸ்வமேத பர்வம் ஆகும். (335,336) இதில் சம்வர்த்தர் மற்றும் மருத்தத்தனின் அற்புதமான கதை விவரிக்கப்படுகிறது. அதன்பிறகு (பாண்டவர்கள்) தங்கக் கருவூலங்களைக் கண்டடைவது; அஸ்வத்தாமனின் (தெய்வீக) ஆயுதத்தால் {கருவில்} எரிக்கப்பட்ட பரீக்ஷித் கிருஷ்ணனால் மீட்கப்பட்டுப் பிறப்பை அடைவதும் விவரிக்கப்படுகிறது. அவிழ்த்துவிடப்பட்ட வேள்விக் குதிரையைப் பின்தொடர்ந்து செல்கையில், அதைக் கோபத்துடன் கைப்பற்றிய பல்வேறு இளவரசர்களுடன், பாண்டுவின் மகனான அர்ஜுனன் செய்த போர்கள் சொல்லப்படுகின்றன. மணிப்பூரின் தலைவனுடைய மகளான சித்திராங்கதையின் (அர்ஜுனன் மூலம் பிறந்த) மகனான பப்ருவாகனனுடன் மோதி பேராபத்தை அடையும் அர்ஜுனனின் நிலை விவரிக்கப்படுகிறது. அதன் பிறகு குதிரை வேள்வியில் கீரிப்பிள்ளையின் கதை சொல்லப்படுகிறது.(337-340) இதுவே அஸ்வமேதிகம் என்றழைக்கப்படும் மிக அற்புதமான பர்வமாகும். இதில் நூற்று மூன்று {103} பகுதிகள் இருக்கின்றன[16].(341) உண்மை ஞானம் கொண்ட வியாசரால் (இதில்) தொகுக்கப்பட்ட சுலோகங்களின் எண்ணிக்கை மூவாயிரத்து முன்னூற்று இருபது {3320} ஆகும்.(342)(கங்குலியில் அஸ்வமேத பர்வத்தில் 92 பகுதிகளும், 2844 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

அதன்பிறகு வருவது பதினைந்தாவது பர்வமான ஆஸ்ரமவாஸிக பர்வம் ஆகும். இதில், திருதராஷ்டிரன் நாட்டைத்துறந்து, தனது மனைவி காந்தாரி மற்றும் விதுரனுடன் காட்டுக்குச் செல்வது விளக்கப்படுகிறது. இதைக் கண்டவளும், மூத்தவர்களைப் பேணிக் காப்பதில் எப்போதும் ஈடுபடுபவளுமான நல்லாள் பிருதையும் {குந்தியும்} அந்த முதிர்ந்த தம்பதியினரை {திருதராஷ்டிரனையும், காந்தாரியையும்} பின்தொடர்ந்து செல்வது.(343-345) வியாசரின் கருணையால், மன்னன் (திருதராஷ்டிரன்) கொல்லப்பட்ட தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பிற இளவரசர்களின் ஆவிகளைச் சந்திக்கும் அற்புத நிகழ்வு விளக்கப்படுகிறது.(346) பிறகு தன் கவலைகளை அனைத்தையும் கைவிட்ட அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, தன் புண்ணியச் செயல்களின் உயர்ந்த கனிகளைத் தன் மனைவியுடன் சேர்ந்து அடைந்தான். இந்தப் பர்வத்தில், தன் வாழ்வு முழுவதும் அறவோனாக வாழ்ந்த விதுரன் பெரும் அருள்நிலையை அடைந்தான்.(347) கல்விமானும், அமைச்சர்களில் முதன்மையானவனும், கவல்கணன் மகனுமான சஞ்சயன், ஆசைகளைத் தன் முழுக் கட்டுக்குள் கொண்டு வந்து, அருள் நிலையை அடைந்தது இந்தப் பர்வத்தில் சொல்லப்படுகிறது. இதில் நீதிமானான யுதிஷ்டிரன், நாரதரைச் சந்தித்து, விருஷ்ணிகளின் குலம் அழிந்ததைக் குறித்து அவரிடம் இருந்து கேள்விப்படுகிறான். இதுவே ஆஸ்ரமவாசிகம் என்றழைக்கப்படும் மிக அற்புதமான பர்வமாகும்.(348,349) உண்மையை அறிந்தவரான வியாசரால் நாற்பத்திரண்டு {42} பகுதிகளில்[17], ஆயிரத்து ஐநூற்று ஆறு {1506} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.(350.,351)(கங்குலியில் ஆஸ்ரமவாஸிக பர்வத்தில் 39 பகுதிகளும், 1081 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

அதன்பிறகு வருவது வலிநிறைந்த நிகழ்வுகள் கொண்ட மௌஸல பர்வம் ஆகும். இதில், சிங்கம் போன்ற இதயம் கொண்டவர்களும், பல போர்களங்களில் பெற்ற விழுப்புண்களை மார்பில் கொண்டவர்களுமான விருஷ்ணி குல {யாதவக் குல} நாயகர்கள் {சாத்யகியும், கிருதவர்மனும்}, ஓர் அந்தணனின் சாபத்தால், குடிவெறியில் மதியிழந்து, வஜ்ரத்தைப் போன்ற நிலையை அடைந்த சவட்டைக்கோரைப் புற்களால் (கையில் கொண்டு, அவற்றால்) ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உப்புக்கடலருகே அழிந்து போவது விளக்கப்படுகிறது.(352,353) பலராமனும், கேசவனும் (கிருஷ்ணனும்) தங்கள் குலம் அழியக் காரணமாக அமைந்து, தங்கள் நேரம் வந்ததும், அனைத்தையும் அழிக்கும் காலத்திற்கு முன் மேன்மையாக எழாமலே சென்றனர்.(354) மனிதர்களில் முதன்மையான அர்ஜுனன் தூவாராவதிக்கு {துவாரகைக்குச்} சென்று, விருஷ்ணிகள் இல்லாத நகரத்தின் வெறுமையைக் கண்டு துயருறுதல் இதில் விவரிக்கப்படுகிறது.(355) யதுக்களில் (விருஷ்ணிகளில்) முதன்மையானவரான தன் தாய்மாமன் வசுதேவரின் இறுதிச்சடங்கைச் செய்த அவன் {அர்ஜுனன்}, யது குலத்தின் வீரர்கள் எங்குக் குடித்தனரோ அங்கேயே இறந்து கிடப்பதைக் கண்டான்.(356) பிறகு அவன் {அர்ஜுனன்}, சிறப்புமிக்கக் கிருஷ்ணன், பலராமன் மற்றும் விருஷ்ணி குலத்தின் முக்கிய உறுப்பினர்களின் உடல்களை எரியூட்ட {தகனம் செய்ய} ஏற்பாடு செய்தான்.(357) பிறகு அவன் {அர்ஜுனன்}, யது குலத்தில் எஞ்சியவர்களான மகளிர், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பேரிடரைச் சந்திக்கிறான். பிறகு அவன், தன் வில்லான காண்டிவம் அவமதிக்கப்படுவதையும், தன் தெய்வீக ஆயுதங்கள் பயனற்றுப் போவதையும் காண்கிறான். இவையாவற்றையும் கண்டு, மனக்குழப்பமடையும் அர்ஜுனன், வியாசரின் அறிவுரைக்கிணங்க, யுதிஷ்டிரனிடம் சென்று, சந்நியாச வாழ்வு முறையைப் பின்பற்ற அனுமதி கோருகிறான்.(358-360) இதுதான் பதினாறாவது {16} பர்வமான மௌசல பர்வம் ஆகும். உண்மையை அறிந்தவரான வியாசர், எட்டு {8} பகுதிகளில்[18] முன்னூற்று இருபது {320} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வத்தை விளக்குகிறார்.(கங்குலியில் மௌஸல பர்வத்தில் 8 பகுதிகளும், 288 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

அடுத்தது, மஹாப்ரஸ்தானிகம் என்றழைக்கப்படும் பதினேழாவது பர்வம் ஆகும்.(361,362) மனிதர்களில் சிறந்தவர்களான பாண்டவர்கள் தங்கள் நாட்டைத் துறந்து, திரௌபதியுடன் சேர்ந்து மஹாபிரஸ்தானம் என்றழைக்கப்படும் தங்கள் நெடும்பயணத்தைச் செய்கின்றனர்.(363) சிவப்பு நீர் கொண்ட கடலின் கரையை அடைந்த அவர்கள் அக்னியை சந்திக்கின்றனர். அக்னியை முறையாக வழிபட்ட அர்ஜுனன், அக்னி தேவனின் வேண்டுகோளுக்கிணங்க சிறந்ததும், தெய்வீகமான வில்லுமான காண்டீவத்தை அவனிடமே ஒப்படைக்கிறான். ஒருவர் பின் ஒருவராக விழும் தனது தம்பிகளையும், அடுத்து விழும் திரௌபதியையும் விட்டு விட்டு ஒரு முறைகூடத் திரும்பிப் பார்க்காமல் யுதிஷ்டிரன் செல்கிறான். இதுவே மஹாபிரஸ்தானிகம் என்று அழைக்கப்படும் பதினேழாவது பர்வமாகும்.(364-366) இது மூன்று {3} பகுதிகளாகப் பிரிக்கட்டிருக்கிறது.[19] உண்மையை அறிந்தவரான வியாசரால், முன்னூற்று இருபது {320} பாடல்களில் {சுலோகங்களில்} இது விவரிக்கப்படுகிறது.(367)(கங்குலியில் மஹாப்ரஸ்தானிக பர்வத்தில் 3 பகுதிகளும், 109 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

அடுத்து வரும் பர்வம் இயல்புக்குமீறிய தெய்வீக நிகழ்வுகள் கொண்ட சுவர்க்கம் என்றழைக்கப்படும் பர்வம் ஆகும். யுதிஷ்டிரனை அழைத்துப் போக தெய்வலோகத் தேர் வந்தும், தன்னுடன் கடைசி வரை வந்த நாய் மீது எற்பட்ட அன்பால், அதில் அவன் ஏற மறுக்கிறான். சிறப்புமிக்க யுதிஷ்டிரனின் நிலையான அறப்பற்றைக் கண்டு தனது மாற்றுருவத்தைக் களைத்து தர்மதேவன் காட்சி அளிக்கிறான். அதன் பிறகு நல்லுலகம் ஏறும் வழியில் மிகுந்த வலியை உணர்கிறான் யுதிஷ்டிரன்.(368-370) தெய்வீகத் தூதுவர் ஒரு மாயச் செயலால் நரகத்தை அவனுக்குக் காண்பிக்கின்றனர். அப்போது நீதியின் ஆன்மாவான யுதிஷ்டிரன், யமனின் ஆட்சிக்குட்பட்ட அந்தப் பகுதியில், இதயத்தைப் பிளக்கும் வகையில் தனது தம்பிகளின் அழுகுரல்களைக் கேட்கிறான். பிறகு தர்மதேவனும், இந்திரனும் பாவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைக் காண்பிக்கின்றனர். அதன்பிறகு தெய்வீகக் கங்கையில் {ஆகாயக் கங்கையில்} மூழ்கித் தனது மனித உடலைத் துறந்த யுதிஷ்டிரன், தன் புண்ணியச் செயல்களுக்கான பகுதியை அடைந்து, இந்திரன் முதலான தேவர்களுடன் இன்பமயமாக இருக்கிறான். சிறப்புமிக்க வியாசரால் உரைக்கப்படும் இது பதினெட்டாவது பர்வம் ஆகும். பெருமுனிவரால் {ஆறு {6} பகுதிகளாக[20] பிரிக்கப்பட்ட இதில்} தொகுக்கப்பட்ட பாடல்களின் {சுலோகங்களின்} எண்ணிக்கை இருநூற்று ஒன்பது {209} ஆகும்.(கங்குலியில் சுவர்க்க பர்வத்தில் 6 பகுதிகளும், 316 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)

மேற்குறிப்பிட்டவையே பதினெட்டு {18} பர்வங்களின் உள்ளடக்கமாகும்.(375,376) பின்னிணைப்பில் (கிலத்தில்) ஹரி வம்சம், பவிஷ்யம் ஆகியன வருகின்றன. ஹரி வம்சத்தில் பனிரெண்டாயிரம் {12000} பாடல்கள் {சுலோகங்கள்} உள்ளன. பர்வ சங்கிரகம் என்றழைக்கப்படும் இந்தப் பகதியின் உள்ளடக்கங்களை இவையே[21].(377,378)(ஆகமொத்தமாகச் சௌதி இங்கே சொல்லியிருப்பது 18 பர்வங்களில் 1934 பகுதிகளும், 84835 பாடல்களுமாகும்; ஹரிவம்சத்துடன் 96835 பாடல்களுமாகும். சில பாடல்கள் Coupletகளாக இல்லாமல் tripletகளாக இருப்பதாகக் கங்குலி ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுகிறார். அந்த வகையில் மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்டதாக இருக்கலாம். கங்குலியில் ஹரிவம்சத்தைச் சேர்க்காமலேயே 2114 பகுதிகள் வருகின்றன. சுலோகங்களின் எண்ணிக்கையைப் பின்னர்தான் பார்க்க வேண்டும். பிபேக் திப்ராயின் பதிப்பில் 18 பர்வங்கள் மட்டும் 1995 பகுதிகளும், 73784 சுலோகங்களும் இருக்கின்றன. ஹரிவம்சத்தையும் சேர்த்து மொத்தமாக 2113 பகுதிகளும், 79,857 சுலோகங்களும் உள்ளன.)

சௌதி சொன்னார் “பதினெட்டு அக்ஷௌஹிணி படைகள் இந்தப் போரில் கலந்து கொண்டன. இந்தப் போர் பதினெட்டு நாட்கள் கொடூரமாக நடந்தது. நான்கு வேதங்களையும், அதன் அங்கங்கள் மற்றும் உபநிஷத்துகளுடன் அறிந்திருந்தாலும், (பாரதம் என்ற) இந்த வரலாற்றை அறியாமல் இருந்தால் அவன் ஞானியாகக் கருதப்படமாட்டான்.(380) அளவிலா நுண்ணறிவைக் கொண்ட வியாசர், அர்த்தம் {பொருள்}, தர்மம் {அறம்}, காமம் {இன்பம்} ஆகியவற்றின் ஆய்வாகவே மஹாபாரதத்தை உரைக்கிறார்.(381) உண்மையில், ஆண் கோகிலத்தின் {ஆண்குயிலின்} இனிய குரலைக் கேட்டவர்களால், கா என்ற காகத்தின் இசையொவ்வாமையைக் கேட்க முடியாததைப் போலவே, இந்த வரலாற்றை {மஹாபாரதத்தைக்} கேட்டவர்களுக்குப் பிறவற்றைக் கேட்கப் பிடிக்காது.(382) ஐம்பூதங்களில் இருந்து மூவுலகங்களும் உண்டானதைப் போலவே, அனைத்துப் புலவர்களின் அகத்தூண்டுதல்களும் இந்தச் சிறந்த தொகுப்பில் இருந்தே எழுகின்றன.(383) ஓ பிராமணர்களே, (ஈன்று பிறப்பவை, [முட்டை] பொரித்துப் பிறப்பவை, வெப்ப ஈரப்பதத்தில் பிறப்பவை [புழுக்கள்] மற்றும் பூமியைப் பிளந்து பிறப்பவை [தாவரங்கள்] ஆகிய} நால்வகை உயிரினங்களும் தங்கள் இருப்புக்காக வெளியை {ஆகாயத்தைச்} சார்ந்திருப்பதைப் போலவே, புராணங்களும் இந்த வரலாற்றைச் சார்ந்தே இருக்கின்றன.(384) புலன்கள் அனைத்தும் தங்கள் செயல்பாட்டுக்கு, மனத்தின் பல்வேறு மாற்றங்களைச் சார்ந்திருப்பதைப் போலவே, அனைத்துச் செயல்பாடுகளும் (சடங்குகளும்), ஒழுக்கத்தன்மைகளும் இந்த ஆய்வைச் சார்ந்தே இருக்கின்றன.(385) உடலானது எவ்வாறு தான் உட்கொள்ளும் உணவைச் சார்ந்திருக்கிறதோ, அவ்வாறே இந்த வரலாற்றைச் சாராத எந்தக் கதையும் இப்போதும் உலகில் இல்லை. {உணவைச் சாராமல் உடலில்லாததைப் போல, இவ்வரலாற்றைச் சாராத எந்தக் கதையும் இப்போதும் இவ்வுலகில் இல்லை}.(386) மேன்மையை அடைய விரும்பும் பணியாட்களால் நல்ல குலத்தில் பிறந்த தலைவர்கள் கவனிக்கப்படுவதைப் போலவே பாரதத்தை அனைத்துப் புலவர்களும் மனத்தில் கொள்கின்றனர்.(387) அருளப்பட்ட குடும்ப ஆசிரமத்தை {இல்லறத்தை} ஒரு போதும் மற்ற மூன்று ஆசிரமங்களால் (வாழ்வியல் முறைகளால்) விஞ்சமுடியாததைப் போலவே, இந்தச் செய்யுள் தொகுப்பை எந்தப் புலவர்களாலும் விஞ்ச இயலாது.(388)

தவசிகளே செயலின்மைகள் அனைத்தையும் உதறுவீராக. {விடாமுயற்சி கொள்வீராக}. அடுத்த உலகத்திற்குச் செல்பவனுக்கு உற்ற ஒரே நண்பன் அறமேயாதலால், அறத்தில் உங்கள் இதயங்களை நிலைக்கச் செய்வீராக. மிகப் புத்திசாலிகளே கூட, செல்வத்தையும் மனைவியரையும் விரும்பினாலும் இவற்றை {செல்வம் மற்றும் மனைவிகள் ஆகியவற்றைத்} தங்களுடையதாக்கிக் கொள்ளவும் முடியாது, இந்த உடமைகளை நிலைத்திருக்கவும் செய்யாது.(389)

துவைபாயனரின் உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பாரதம் இணையற்றதாகும்; அது தானே அறமாகவும், புனிதமானதாகவும் இருக்கிறது. அது பாவத்தை அழித்து நன்மையை உண்டாக்குகிறது. அஃது உரைக்கப்படும்போது கேட்டவன், புஷ்கரங்களின் புனித நீர்களில் நீராட வேண்டிய அவசியம் இல்லை.(390) பகல் பொழுதில் தன் புலன்களால் ஒரு பிராமணன் எந்தப் பாவங்களைச் செய்தாலும், மாலையில் பாரத்தைப் படிப்பதால் அவை அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(391) செயல்கள், வார்த்தைகள் அல்லது மனம் ஆகியவற்றால் இரவில் எந்தப் பாவங்களைச் செய்தாலும், முதல் சந்தியில் (அதிகாலையில்) பாரதத்தைப் படிப்பதால் அவனை அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(392) வேதங்கள், மற்றும் கல்வியின் அனைத்துக் கிளைகள் ஆகியவற்றை நன்கறிந்த ஒரு பிராமணனுக்குத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைத் தானமளிக்கும் ஒருவனும், பாரதத்தின் புனித விவரிப்புகளைத் தினமும் கேட்பவன் ஆகிய இருவரும் சம தகுதியையே {புண்ணியத்தையே} அடைகின்றனர்.(393) மரக்கலங்களைக் கொண்டோரால் பரந்த பெருங்கடலை எளிதாகக் கடக்க முடிவதைப் போலவே, பர்வ சங்கிரகம் என்றழைக்கப்படும் இந்த மிக முக்கியமான பகுதியின் {அத்தியாயத்தின்} உதவியுடன், மிகச் சிறப்பானதும், விரிவானதுமான இந்த வரலாற்றைக் கடக்கலாம்.(394)

ஆதிபர்வம் – பகுதி 3 அ-(பௌசிய பர்வம்)-ஜனமேஜயன் வேள்வி; சரமை என்ற நாயின் சாபம்; ஆருணி, உபமன்யு ஆகியோரின் கதைகள்; அஸ்வினித் தேவர்களுக்குரிய துதி …

சௌதி சொன்னார், “பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன் தனது தம்பிகளுடன் சேர்ந்து குருக்ஷேத்திரத்தின் சமவெளியில் நீண்ட கால வேள்வி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான்.(1) சுருதசேனன், உக்ரசேனன், பீமசேனன் ஆகியோர் அவனுடன் பிறந்த மூன்று தம்பிகளாவர். அவர்கள் வேள்வியில் உட்கார்ந்திருக்கும் சமயத்தில், (தெய்வீகப் பெண்நாயான) சரமாவின் {சரமையின்} குட்டி ஒன்று, அந்த வேள்வி நடக்கும் இடத்திற்கு வந்தது.(2) ஜனமேஜயனின் தம்பிகள் மூவராலும், நையப் புடைக்கப்பட்ட அது, வலியுடன் கதறிக் கொண்டே தன் தாயிடம் ஓடியது.(3)

அதன் தாய் “ஏன் அழுகிறாய்? யார் உன்னை அடித்தது?’ என்று கேட்டது.(4) இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் குட்டி, தன் தாயிடம் “நான் ஜனமேஜயனின் தம்பிகளால் அடித்து விரட்டப்பட்டேன்” என்று சொன்னது.(5) அதற்குக் குட்டியின் தாய் “நீ ஏதாவது தவறு செய்து உன்னை அடித்தார்களா?” என்று கேட்டது.(6) “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வேள்விக்கு வைத்திருந்த நெய்யை எனது நாவால் தொடவில்லை; அதன் பக்கம்கூட நான் பார்க்கவில்லை” என்றது குட்டி.(7) அத்தனையும் கேட்ட குட்டியின் தாய் சரமா, தனது குட்டியின் துயரைப் பொறுக்கமுடியாமல், ஜனமேஜயனும் அவனது தம்பிகளும் இருக்கும் அந்தப் பெரிய வேள்வி நடக்கும் இடத்திற்கு வந்தது.(8)

ஜனமேஜயனிடம் கோபத்துடன் “இவன் எனது மைந்தன் எந்தத் தவறையும் செய்யவில்லையே; உனது வேள்வியின் நெய்யை இவன் நாவால் தொடவில்லை, அதன் பக்கமே பார்வையைச் செலுத்தவில்லை. இவன் தண்டிக்கப்பட்டது எவ்வாறு?” என்று கேட்டது.(9) அவர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பிறகு சரமா “எக்குற்றமும் செய்யாத என் மைந்தன் உங்களால் அடிக்கப்பட்டதால், நீங்கள் அறியாதிருக்கும் சமயத்தில் தீமை உங்களை வந்தடையட்டும்” என்று சபித்தது.(10)

தெய்வீகப் பெண் நாயான சரமாவால் இப்படிச் சபிக்கப்பட்ட ஜனமேஜயன், மிகவும் அச்சமடைந்து மனத்தளர்ச்சியடைந்தான்.(11) வேள்வி முடிந்ததும் ஹஸ்தினாபுரம் திரும்பி, தன் பாவத்திலிருந்து விடுபடவும், சாபத்தின் விளைவைத் தணிக்கவும் கூடிய ஒரு புரோகிதரைத் தேடுவதில் பெரும் முயற்சி செய்யத் தொடங்கினான்.(12)

ஒருநாள், பரீக்ஷித்தின் மைந்தனான அந்த ஜனமேஜயன் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், தனது ஆளுகைக்குட்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, பிரபலமாக இருந்த சுருதசிரவன் என்ற முனிவரைக் கவனித்து வந்தான். அவருக்குச் சோமசிரவன் என்ற பெயரில், அர்ப்பணிப்புடன் ஆழமான தவத்தில் ஈடுபடக்கூடிய மைந்தன் ஒருவர் இருந்தார்.(13,14) அந்த முனி மைந்தனைத் தனது புரோகிதராக நியமிக்க விருப்பங்கொண்டவனும், பரீக்ஷித்தின் மகனுமான ஜனமேஜயன்,(15) அந்த முனிவரை {சுருதசிரவரை} வணங்கி, “ஓ {பிராமணர்களுக்குரிய} ஆறு குணங்களைக் கொண்டவரே! இந்த உமது மைந்தன் {சோமசிரவர்} எனது புரோகிதராகட்டும்” என்றான்.(16) இப்படிக் கேட்கப்பட்ட முனிவர் {சுருதசரவர்} “ஓ ஜனமேஜயா! தவ அர்ப்பணிப்புகளில் ஆழமானவனும், வேதக் கல்வி கற்றவனும், என் தவத்தின் முழுச்சக்தியைக் கொண்டவனுமான இந்த எனது மைந்தன் {சோமசிரவன்}, என் உயிர்நீரைக் குடித்த ஒரு பெண் பாம்புக்குப் (அதன் கருவறையில்) பிறந்தவன் ஆவான்.(17) அவன், மகாதேவனுக்கு {சிவனுக்கு} எதிராக இழைக்கப்பட்டவை தவிர, பிற குற்றங்கள் அனைத்தில் இருந்தும் உன்னை விடுவிக்க இயன்றவனாவான்.(18) ஆனால், தன்னிடம் இரந்து கேட்கும் எந்தப் பிராமணனுக்கும் எதையும் கொடுத்துவிடும் பழக்கம் அவனுக்கு இருக்கிறது. அதை உன்னால் ஏற்க முடியும் என்றால், நீ அவனை {சோமசிரவனை} அழைத்துச் செல்லலாம்” என்றார்.(19) முனிவரால் {சுருதசிரவரால்} இப்படி மறுமொழி கூறப்பட்ட ஜனமேஜயன், “அப்படியே ஆகட்டும்” என்றான்.(20) ஜனமேஜயன் அவரைப் {சோமசிரவரை} புரோகிதராக ஏற்றுக் கொண்டு தனது தலைநகரம் திரும்பி, தன் தம்பிகளிடம் “இந்த மனிதரை நான் என் ஆன்ம குருவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; இவர் என்ன கேட்கிறாரோ அதை ஆய்ந்துபார்க்காமல் முடித்துக் கொடுங்கள்” என்றான்.(21)

தம்பிகளும் அதன்படியே நடந்துகொண்டனர். மன்னன், தம்பிகளுக்கு இப்படிக் கட்டளையிட்டுவிட்டுத் தக்ஷசீலத்திற்குப் படையெடுத்துச் சென்று அந்நாட்டையும் தனது ஆளுகைக்குள் இணைத்துக் கொண்டான்.(22) அதே சமயத்தில், அயோதா தௌம்யர்[1] (அயோதா என்றால் இரும்பு போன்ற பற்களை உடையவர் என்றும், நீரைக் குடிப்பவர் என்றும் இரு பொருள் உண்டு என்று சொல்லப்படுகிறது.)என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அந்த அயோதா தௌம்யருக்கு உபமன்யு, ஆருணி, வேதா {பைதன்} என்ற மூன்று சீடர்கள் இருந்தனர்.(23) பாஞ்சாலத்தைச் சேர்ந்த ஆருணி என்ற சீடனைத் தனது வயலில் உள்ள ஒரு வாய்க்கால் நீரை அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார் அம்முனிவர்.(24) அங்கு சென்ற போது அந்த வாய்க்காலின் நீரைச் சாதாரணமாக அடைக்க முடியாது என்பதை ஆருணி உணர்ந்தான்.(25) தனது ஆசானின் {அயோதா தௌம்யரின்} கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருக்கும்போது, {அவனுக்கு} ஒரு வழி கிடைத்தது. “நன்று, நான் இஃதை இவ்வழியில் செய்யப் போகிறேன்” என்று சொல்லி,(26) நேராக அந்த வாய்க்காலை அடைத்துக் கொண்டு தானே படுத்துக் கொண்டான். நீரும் இவ்வாறு அடைபட்டது.(27)

சிறிது நேரங்கழித்து ஆசான் அயோதா தௌம்யர், “பாஞ்சாலத்தின் ஆருணி எங்கே?” என்று மற்ற இரு சீடர்களிடமும் கேட்டார்.(28) அவர்கள், “ஐயா, நீங்கள் தானே அவனை {ஆருணியை} வாய்க்காலின் நீரை அடைக்க அனுப்பினீர்கள்” என்றார்கள். இப்படி நினைவுப்படுத்தப்படவே “அவ்வாறெனில், அவன் இருக்கும் இடத்திற்கு நாம் அனைவரும் செல்வோம்” என்றார்.(29) அந்த இடத்திற்கு வந்ததும், “ஓ பாஞ்சாலத்தின் ஆருணியே! நீ எங்கிருக்கிறாய்? இங்கே வா மகனே” என்று உரக்க அழைத்தார்.(30) ஆசானின் {அயோதா தௌம்யரின்} குரலைக் கேட்ட ஆருணி வாய்க்காலில் இருந்து உடனே எழுந்திருந்து தனது ஆசானின் முன்னிலையில் வந்து நின்றான்.(31) பின்னவரிடம் {ஆசானிடம்} பேசிய ஆருணி, “இதோ நான் வாய்க்காலில் இருக்கிறேன். இஃதை அடைக்க வேறு வழியேதும் தெரியாததால், நீர் வெளியேறுவதைத் தடுப்பதற்காக நானே இதற்குள் இறங்கிவிட்டேன். ஆசானே, நீர் வந்து அழைத்தபிறகு, அதைவிட்டெழுந்து, நீரோட அனுமதித்து உமது முன்னால் நிற்கிறேன் ஆசானே நான் உம்மை வணங்குகிறேன்; நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான் {ஆருணி}.(32)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்த ஆசான், “வாய்க்காலில் இருந்து எழுந்து, நீரோட்டத்தைத் திறந்ததால், உன் ஆசானுக்கு உதவி செய்த ஒரு குறியீடாக உத்தாலகன்[2] என்று இன்று முதல் நீ அழைக்கப்படுவாய்.(33) என்னுடைய வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படிந்ததால் உனக்கு நற்பேறு கிட்டும். எல்லா வேதங்களும், தர்மசாத்திரங்களும் உன்னுள் ஒளிரும்” என்றார்.(35) தன் ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்ட ஆருணி தன் இதயம் விரும்பிய நாட்டுக்குச் சென்றான்.(உத்தாலகன் என்றால் பிளப்பவன் என்று பொருளாம். மடையைப் பிளந்து வந்ததால் ஏற்பட்ட காரணப் பெயர் இதுவாகும்.)

அயோதா தௌம்யரின் மற்றொரு சீடனின் பெயர் உபமன்யு என்பதாகும்.(36) அவனை {உபமன்யுவை} ஒருநாள் தௌம்யர் அழைத்து “மகனே, நீ கால்நடைகளைக் கவனித்துக் கொள்” என்றார்.(37) அவனும் தன் ஆசானின் {அயோதா தௌம்யரின்} கட்டளையை ஏற்று மாடு மேய்க்கச் சென்றான். அவற்றை நாளெல்லாம் மேய்த்துவிட்டு, மாலையில் தன் ஆசானின் {அயோதா தௌம்யரின்} இல்லத்திற்குத் திரும்பி வந்து, அவரை மரியாதையுடன் வணங்கி நின்றான்.(38) அவன் {உபமன்யு} நல்ல நிலைமையில் வந்திருப்பதைக் கவனித்த ஆசான், அவனிடம், “உபமன்யு, என் மகனே, நீ எதைக் கொண்டு உன்னைத் தாங்கிக் கொள்கிறாய்? நீ மிகவும் பருமனாக இருக்கிறாயே?” என்று கேட்டார்.(39) அதற்கு அவன், “ஐயா, நான் பிச்சை எடுத்து என்னைத் தாங்கிக் கொள்கிறேன்” என்றான்.(40)

அவனது ஆசான் {அயோதா தௌம்யர்} “பிச்சையின் மூலம் எது உனக்குக் கிடைக்கிறதோ, அதை எனக்குக் கொடுக்காமல் நீ பயன்படுத்தக் கூடாது” என்றார். இவ்வாறு சொல்லப்பட்ட உபமன்யு அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டான். பிச்சை எடுத்து, அதைத் தனது ஆசானுக்குக் கொடுத்தான்.(41) அவனது ஆசான் அவனிடமிருந்த முழுவதையும் தானே எடுத்துக் கொண்டார். இவ்வாறு நடத்தப்பட்ட உபமன்யு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிட்டான். நாளெல்லாம் மாடுகளை மேய்த்துவிட்டு, மாலையில் தன் ஆசானின் முன்பு வந்து நின்று அவரை மரியாதையுடன் வணங்கினான்.(42) ஆசான் அவன் இன்னும் நல்ல நிலையிலேயே இருப்பதைக் கண்டு, அவனிடம், “உபமன்யு, என் மகனே, நீ பிச்சை எடுத்துக் கொண்டு வந்த அனைத்தையும், உனக்கென எதையும் விடாமல் நானே எடுத்துக் கொண்டேன். இப்போதும் நீ எவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டாய்?” என்று கேட்டார்.(43) உபமன்யு “ஐயா, பிச்சை எடுத்த அனைத்தையும் உங்களிடம் கொடுத்துவிட்டதால், மறுபடியும் இரண்டாவது முறை பிச்சை எடுத்து, என்னை நான் தாங்கிக் கொண்டேன்” என்றான்.(44)

இதற்கு மறுமொழியுரைத்த ஆசான், “இது நீ உன் ஆசானுக்குச் செலுத்தும் மரியாதை அல்ல. இப்படிச் செய்வதால், பிச்சை எடுத்து வாழ்பவர் பலரின் தேவைகளை நீ அழிக்கிறாய். இவ்வாறு உன்னைத் தாங்கிக் கொள்வதால் நீ பேராசைக்காரன் என்பதையே நிரூபிக்கிறாய்” என்றார்.(45) தன் ஆசான் சொன்ன அனைத்துக்கும் சம்மதித்த உபமன்யு, மாடு மேய்ப்பதற்குச் சென்று விட்டான். மாடுகளை நாளெல்லாம் மேய்த்துவிட்டு, மாலையில் தன் ஆசானின் இல்லத்திற்குத் திரும்பினான். பிறகு தன் ஆசானின் முன் நின்று மரியாதையுடன் அவரை வணங்கினான்.(46) அவன் {உபமன்யு} இன்னும் பருமனாகவே இருப்பதைக் கவனித்த ஆசான், அவனிடம் மீண்டும், “உபமன்யு, என் மகனே, நீ பிச்சை எடுத்துக் கொண்டு வந்த அனைத்தையும் நானே எடுத்துக் கொண்டேன். நீ இரண்டாவது முறை பிச்சை எடுக்கவும் செல்வதில்லை. இருந்தும் நீ ஆரோக்கியமாக இருக்கிறாயே. நீ எவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டாய்” என்று கேட்டார்.(47)

இப்படிக் கேட்கப்பட்ட உபமன்யு “ஐயா, நான் இந்த மாடுகளின் பால் குடித்து என்னைத் தாங்கிக் கொள்கிறேன்” என்று பதிலளித்தான். அதன்பேரில் அவனது ஆசான், “முதலில் என் சம்மதத்தைப் பெறாமல், நீ மாடுகளிடம் பால் எடுப்பது சரியல்ல” என்றார்.(48) உபமன்யுவும் இந்த அவதானிப்புகளில் உள்ள நீதியை ஏற்றுக் கொண்டு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிட்டான். அவன் தன் ஆசானின் இல்லத்திற்குத் திரும்பியபோது, அவர் முன்பு வழக்கம் போலவே நின்று வணங்கினான்.(49) இப்போதும் அவன் பருமனாகவே இருப்பதைக் கவனித்துவிட்ட அவனது ஆசான், “உபமன்யு, என் மகனே, நீ இப்போது பிச்சை எடுத்து உண்பதில்லை, இரண்டாவது முறை பிச்சை எடுப்பதுமில்லை, பாலும் குடிப்பதில்லை; இருப்பினும் பருமனாகவே இருக்கிறாயே. இப்போது எவ்வழிமுறைகளில் நீ உன்னைத் தாங்கிக் கொள்கிறாய்” என்று கேட்டார்.(50) “ஐயா, கன்றுக்குட்டிகள் தனது தாயின் மடியை உறிஞ்சும் போது, சிந்தும் உமிழ்பாலை {நுரையை} உறிஞ்சி உண்கிறேன்” என்றான்.(51) அதற்கு ஆசான், “இந்தக் கன்றுக்குட்டிகள், உன் மீதிருக்கும் அன்பால் நிறைய உமிழ்பாலை {நுரையை} வெளியிடுகின்றன என்று நினைக்கிறேன். இவ்வாறு நீ நடந்து கொள்வதால், அவை {கன்றுக்குட்டிகள்} முழு உணவைப் பெறும் வழியில் நீ குறுக்கிடுகிறாய். உமிழ்பாலை {நுரையை} குடிப்பதும் சரியல்ல” என்றார்.

இதற்கும் சம்மதித்த உபமன்யு, மாடுகளைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.(52) ஆசானால் கட்டுப்படுத்தப்பட்ட அவன், பிச்சை எடுத்து உண்பதில்லை, உண்பதற்கு வேறு எதுவும் இல்லை; பாலைக் குடிக்கவும் இல்லை; உமிழ்பாலைச் {நுரையை} சுவைப்பதுமில்லை. ஒரு நாள் பசியால் ஒடுக்கப்பட்ட உபமன்யு, காட்டில் இருக்கும்போது, எருக்கிலைகளை உண்டு விட்டான். அவன் உண்ட அந்த இலைகளின் கொடூரமான, எரிச்சலுள்ள, முரட்டுத்தனமான உப்புத் தன்மைகளால் அவன் குருடானான். தவழ்ந்து கொண்டே சென்ற அவன், ஒரு குழிக்குள்ளும் விழுந்துவிட்டான்.(53,54) அந்த நாளில் மேற்கு மலைகளின் சிகரங்களுக்குப் பின்னால் சூரியன் மறைந்த பிறகும் அவன் திரும்பாததால், அந்த ஆசான், உபமன்யு இன்னும் வரவில்லை என்பதைக்கண்டு தன் சீடர்களிடம் சொன்னார். அவர்கள் மாடுகளுடன் அவன் சென்றதாக அவரிடம் சொன்னார்கள்.(55)

அப்போது அந்த ஆசான், “அனைத்தையும் பயன்படுத்துவதில் இருந்து உபமன்யு என்னால் தடுக்கப்பட்டான் என்பதாலேயே, உண்மையில், தாமதமாகியும் அவன் இன்னும் இல்லத்திற்கு வராமல் இருக்கிறான். நாம் அவனைத் தேடிச் செல்வோம்” என்றார். இதைச் சொன்ன அவர், தன் சீடர்களுடன் காட்டுச் சென்று, “ஓ உபமன்யு, நீ எங்கிருக்கிறாய்?” என்று கூவத் தொடங்கினார்.(56) தன் ஆசானின் குரலைக் கேட்ட உபமன்யு, “இங்கே நான் கிணற்றுக்கடியில் இருக்கிறேன்” என்று உரத்தத் தொனியில் பதிலுரைத்தான். அவன் அங்கே எவ்வாறு சென்றான் என அவனது ஆசான் கேட்டார்.(57) உபமன்யு “எருக்கஞ்செடியின் இலைகளையுண்டதால், நான் குருடானேன், எனவே இந்தக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன்” என்றான்.(58) அதன் பேரில் அவனது ஆசான், “தேவர்களுக்கே மருத்துவர்களான அசுவினி இரட்டையர்களைப் போற்றி மகிழ்விப்பாயாக. அவர்கள் உனது பார்வையை மீட்பார்கள்” என்றார். ஆசானால் இவ்வாறு வழிநடத்தப்பட்ட உபமன்யு, ரிக் வேதத்தின் வார்த்தைகளின் பின்வருமாறு அசுவினி இரட்டையர்களைப் போற்றத் தொடங்கினான்.(59)

“படைப்புக்கு முன்பிருந்தவர்கள் நீங்களே, முதலில் பிறந்தவர்கள் நீங்களே, ஐம்பூதங்களில் காட்சியளிப்பவர்கள் நீங்களே, எனது கேள்வி ஞானத்தாலும், தியானத்தாலும் இதை அறிந்த நான் உங்களது உதவியை நாடி நிற்கிறேன். நீங்கள் முடிவில்லாதவர்கள், நீங்கள் இயற்கையில் ஆன்மாவிலும் உறைபவர்கள், நீங்களே மரம் போன்ற உடலில் இறகுள்ள பறவை. நீங்களே எல்லா உயிர்களின் பொதுத்தன்மை, நீங்களே ஒப்பற்றவர்கள், நீங்களே படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் இந்த அண்டத்தை ஊடுருவியிருக்கும் ஆவி.

நீங்களே பொற்கழுகுகள், நீங்களே எல்லாப்பொருட்களும் எதில் மறையுமோ, அதன் சாரம். நீங்களே தவறிழைக்காதவர்கள், அழியும் தன்மையற்றவர்கள், நீங்களே நியாயமற்ற முறையில் அடிக்காமல் அனைத்து மோதல்களிலும் வெற்றிகொள்ளும் அழகான அலகு. நீங்களே காலத்திற்கு மேல் பணி செய்பவர்கள். கதிரவனைப் படைத்து, பகலெனும் வெள்ளை நூலாலும், இரவெனும் கருப்பு நூலாலும் பின்னப்பட்ட ஆடை நீங்களே. அப்படிப் பிண்ணப்பட்ட ஆடையால், நீங்களே இரண்டு செயல்களை (கர்மங்களை) தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படைத்தவர்கள். காலத்தால் பற்றப்பட்ட உயிர்ப்பறவையின் பலத்தையும், முடிவில்லா ஆன்மாவையும் பிரதிபலித்து, அவளை விடுவித்து அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பவர்கள் நீங்களே. புலன்களால் மயங்கி ஆழ்ந்த அறியாமையில் இருப்பவர்களுக்கு நீங்களே மிகப்பெரிய பரிசு

முன்னூற்று அறுபது {360} மாடுகள், முன்னூற்று அறுபது {360} நாட்களைப் பிரதிபலித்து ஒரு கன்றுக்குட்டியை ஈன்றெடுக்கின்றன அதுதான் ஒரு வருடம். அந்தக் கன்றுக்குட்டியே அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் செய்கிறது. உண்மையைத் தேடுபவர்கள் பல பாதைகளில் தொடர்ந்து, ஞானம் எனும் பாலை அந்தக் கன்றுக்குட்டியின் தயவால் பெறுகின்றனர். அசுவினிகளாகிய நீங்களே, அந்தக் கன்றுக்குட்டியைப் படைப்பவர்கள். வருடம் என்பது பல பகல்களையும் இரவுகளையும் பிரதிபலிக்கும் எழுநூற்று இருபது {720} கோல்களை {சட்டங்களை} இணைத்த ஒரு சக்கரத்தின் மையம். சக்கரத்தின் சுற்றளவு பனிரெண்டு மாதங்களை முடிவில்லாமல் பிரதிபலிக்கிறது. இந்தச் சக்கரம் மாயத்தோற்றம் கொண்டது. அழிவை அறியாதது. அஃது எல்லா உயிரினங்களையும் மற்ற உலகங்களையும் பாதிக்கின்றது. அசுவினிகளாகிய நீங்களே, இந்தச் சக்கரத்தின் ஓட்டத்தை முடுக்குபவர்கள்.

காலச்சக்கரத்தால் பிரதிபலிக்கப்படும் வருடம் ஆறு {6} பருவங்களைப் பிரதிபலிக்கும் மையத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சக்கரத்துடன் சேர்ந்த பனிரெண்டு {12} கோல்களை ஜாதகத்தின் பனிரெண்டு {12} ராசிச் சின்னங்கள் பிரதிபலிக்கின்றன. காலத்தின் சக்கரமான இந்தச் சக்கரம் அனைத்துப் பொருட்களின் செயலுக்குமான பலனை வெளிப்படுத்துகிறது. காலத்திற்கான தேவதைகள் இந்தச் சக்கரத்தில் லயித்திருக்கின்றன. நான் இப்போது அப்படிப்பட்ட ஒரு சிரமகாலத்தில் அகப்பட்டிருக்கிறேன். ஓ அசுவினிகளே, என்னைக் காலச்சக்கரத்தின் பிடியில் இருந்து விடுவியுங்கள். ஓ அசுவினிகளே, நீங்களே இந்த அண்டத்தின் ஐம்பூதங்கள். நீங்களே அனைத்து உலகங்களின் பயன்படுபொருளாக உள்ளீர்கள். என்னை ஐம்பூதங்களின் பிடியில் இருந்து விடுவியுங்கள். நீங்களே பிரம்மாவாக இருந்தாலும், உலகத்தின் மீது புலன்கள் தரும் மகிழ்ச்சியில் வலம் வருகிறீர்கள்.

ஆதியில் நீங்களே அண்டத்தின் பத்துப் புள்ளிகளை உருவாக்கினீர்கள். அதன்பிறகு நீங்களே கதிரவனையும், வானத்தையும் மேலே வைத்தீர்கள். அதே கதிரவனின் ஓட்டத்தைக் கணக்கிட்டு முனிவர்கள், தங்கள் வேள்விகளைச் செய்கின்றனர். தேவர்களும், மனிதர்களும் அவர்களுக்கு என்ன விதித்திருக்கிறதோ அதன்படி தமது வேள்விகளைச் செய்து பலன்களைப் பெறுகின்றனர். மூன்று நிறங்களைக் கலந்து, பார்வையில் படும் பொருட்களைப் படைத்திருக்கிறீர்கள். இதிலிருந்துதான் அண்டமே உண்டாயிற்று. அதனால்தான் தேவர்களும் மனிதர்களும் தங்களது தொழில்களை முறையே செய்ய முடிகின்றது. அசுவினிகளாகிய உங்களை நான் துதிக்கிறேன். உங்கள் கைவண்ணத்தால் உருவான வானத்தையும் நான் துதிக்கிறேன். தேவர்களும் எதில் {செயல்களின் பலன்களில்} சுதந்திரமாக இல்லையோ அந்த அனைத்துச் செயல்களின் கனிகளையும் விதிப்பதும் நீங்களே.

அனைவருக்கும் பெற்றோர் நீங்களே. ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து உணவை விழுங்குபவர்கள் நீங்களே. இதுவே {அந்த உணவு} பின்னர், உயிரை உண்டாக்கும் நீர்மையையும் இரத்தத்தையும் உருவாக்குகிறது. புதிதாகப் பிறந்த குட்டிகள் தனது தாயின் மார்பை உறிஞ்சுகின்றன. அந்தக் குழந்தையின் உருவத்தை எடுத்தவர்கள் {அந்தக் குழந்தைகளும்} நீங்களே. அசுவினிகளே, எனக்குப் பார்வையைக் கொடுத்து எனது வாழ்வைக் காப்பீராக!” (என்று துதித்தான் உபமன்யு}.(60-70)

இவ்வாறு அழைக்கப்பட்ட அந்த அசுவினி இரட்டையர்கள், அங்கே தோன்றி, “நாங்கள் நிறைவு கொண்டோம். உனக்காக ஓர் அப்பம் இங்கே இருக்கிறது. எடுத்து உண்பாயாக” என்றனர்.(71) இப்படிச் சொல்லப்பட்ட உபமன்யு, “ஓ அசுவினிகளே, உங்கள் சொற்கள் எப்போதும் பொய்த்ததில்லை. ஆனாலும், எனது ஆசானுக்குக் காணிக்கை கொடுக்காமல் இந்த அப்பத்தை எடுத்துக் கொள்ள நான் துணியமாட்டேன்” என்றான்.(72) அதற்கு அசுவினிகள் “இதற்கு முன்பு, உனது ஆசானும் எங்களை இருப்புக்கு அழைத்தார். அதன்பேரில் இதே போன்ற அப்பத்தை நாங்கள் அவருக்குக் கொடுத்தோம்; அப்போது அவர் {அயோதா தௌம்யர்} தனது குருவுக்குக் காணிக்கையாகக் கொடுக்காமலே அதை எடுத்துக் கொண்டார். உனது ஆசான் எப்படி நடந்து கொண்டாரோ, அப்படியே நீயும் நடந்து கொள்வாயாக” என்றனர்.(73) இப்படிச் சொல்லப்பட்ட உபமன்யு, “ஓ அசுவினிகளே, உங்கள் மன்னிப்பை மன்றாடிக் கேட்கிறேன். எனது குருவுக்கு {அயோதா தௌம்யருக்கு} காணிக்கைக் கொடுக்காமல் இந்த அப்பத்தைப் ஏற்றுக் கொள்ளத் துணிய மாட்டேன்” என்றான்.(74) அசுவினிகள், “ஓ, உன் ஆசானிடம் நீ கொண்டுள்ள அர்ப்பணிப்பால் நாங்கள் நிறைவடைந்தோம். உன் குருவின் பற்கள் உருக்காலானாது. உனக்கு அவை தங்கமாக இருக்கட்டும். உனது பார்வை உனக்குத் திரும்பட்டும், நீ நற்பேற்றை அடைவாய்” என்றனர்.(75)

அசுவினிகள் இப்படிச் சொல்லப்பட்ட அவன் தன் பார்வையை மீண்டும் அடைந்து, தன் ஆசானின் முன்னிலைக்குச் சென்று அவரை வணங்கி அனைத்தையும் சொன்னான். அவனது ஆசானும் அதைக் கேட்டு உள்ளம் நிறைந்து, அவனிடம், “நீ அசுவினிகள் சொன்னதைப் போலவே, எல்லாச் செல்வங்களையும் செழுமையும் பெறுவாய்.(76) வேதங்கள் மற்றும் தர்ம சாத்திரங்களும் அனைத்தும் உன்னுள் ஒளிரும்” என்றார். இதுவே உபமன்யுவுக்கு வந்த சோதனை.(77)

ஆதிபர்வம் – பகுதி 3 ஆ(பௌசிய பர்வம்)வேதாவின் கதை; உதங்கரின் குருகுல வாசம்; வேதாவின் மனைவி உதங்கரிடம் கேட்ட குரு தட்சணை; பௌசியன் மனைவியிடம் உதங்கர் பெற்ற காதணி; உதங்கரும், பௌசியனும் மாறி மாறி அளித்த சாபங்கள்…

அதன்பிறகு அயோதா தௌம்யரின் மற்றொரு சீடனான வேதா {பைதன்} அழைக்கப்பட்டான். அவனிடம் மீண்டும் பேசிய அவனது ஆசான் {அயோதா தௌம்யர்}, “வேதா, எனது மகனே, எனது இல்லத்திலேயே சில நாட்கள் தங்கியிருந்து எனக்குச் சேவை செய்வாயாக. அஃது உனக்கு ஆதாயத்தைத் தரும்” என்றார்.(78) வேதாவும் அவரது {அயோதா தௌம்யரின்} இல்லத்திலேயே தங்கி எப்போதும் சேவை செய்யத் தயாராக இருந்தான். அந்த வீட்டிற்காக வெயில், குளிர், பசி, தாகம் என அனைத்தையும் முணுமுணுப்பின்றித் தாங்கி, ஓர் எருதைப் போல உழைத்தான். அவனது ஆசானும் {அயோதா தௌம்யரும்} விரைவில் மனநிறைவு கொண்டார்.(79) அந்த மனநிறைவின் விளைவாக வேதா நற்பேற்றையும், உலகளாவிய அறிவையும் பெற்றான். இதுவே வேதாவின் சோதனை.(80)

“வேதா, தனது ஆசானிடம் அனுமதி பெற்று, தனது கல்வியனைத்தையும் முடித்து அங்கிருந்து விடைபெற்று, இல்லற வாழ்வுமுறைக்குள் நுழைந்தார்.(81) அவர் {வேதாவின்} தன் வீட்டில் வாழ்ந்து வந்தபோது, மூன்று சீடர்களை அடைந்தார். தன் ஆசானின் குடும்பத்தில் வசித்துவந்தபோது, அதிகத் துன்பத்தைத் தானே அடைந்திருந்ததால், அவர்களை {தன் சீடர்களை} எந்த வேலை செய்யவோ, lன் சொந்த வேலைகளுக்குக் கீழ்ப்படியவோ சொல்லாத அவர், அவர்களைக் கடுமையாக நடத்த விரும்பவில்லை.(82,83) ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு க்ஷத்திரிய வகையைச் சேர்ந்தோரான ஜனமேஜயன் மற்றும் பௌஸ்யன் ஆகிய இருவரும், அவரது வசிப்பிடத்திற்கு வந்து, பிராமணரான வேதாவைத் தங்கள் ஆன்ம வழிகாட்டியாக (உபாத்யாயராக) நியமித்துக் கொண்டனர்.(84) ஒரு நாள் வேள்வி சம்பந்தமான ஏதோ ஒரு காரியத்திற்காகப் புறப்படும்போது, தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவதற்குத் தன் சீடர்களில் ஒருவனான உதங்கனை நியமித்தார்.(85) அவர், “உதங்கா, வீட்டில் எவையெல்லாம் நடக்க வேண்டுமோ அவையெல்லாம் புறக்கணிக்கப்படாமல் உன்னால் செய்யப்பட வேண்டும்” என்று சொன்னார். உதங்கனுக்கு இந்த உத்தரவுகளைக் கொடுத்துவிட்டு பயணிக்கலானார்.(86)

“தன் ஆசான் சொன்னவற்றை எப்போதும் மனத்தில் நிறுத்திய உதங்கன், பின்னவரின் இல்லத்திலேயே வசித்தான். உதங்கன் அங்கே வசித்து வந்தபோது, தன் ஆசானின் இல்லத்தில் இருந்த பெண்கள் கூடி அவனிடம் பேசினர், “ஓ உதங்கா,(87) உனது குருவின் மனைவி தாம்பத்யத் தொடர்பு கனி கொடுக்கும் காலத்தில் {ருது ஸ்நானம் செய்து} இருக்கிறாள். உனது ஆசானும் {வேதாவும்} இல்லை; எனவே, அவரது இடத்தில் நீ இருந்து, தேவையானதைச் செய்வாயாக” என்றனர்.(88) இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கன், அந்தப் பெண்களிடம் “பெண்களின் உத்தரவின் பேரில் நான் இதைச் செய்வது முறையாகாது. முறையற்றதைச் செய்ய நான் என் ஆசானால் பணிக்கப்படவில்லை” என்றான்.(89)

சிறிது காலத்திற்குப் பிறகு அவனது ஆசான் வேதா தனது பயணத்திலிருந்து திரும்பினார். அவனது ஆசான் அங்கு நடந்தது அத்தனையும் அறிந்து, மிகவும் மகிழ்ந்து,(90) உதங்கனிடம், “உதங்கா, என் மகனே, உனக்கு என்ன உதவியை நான் அளிப்பது? உன் கடமை உணர்ச்சியால் நான் நன்றாகத் தொண்டாற்றப்பட்டேன்; எனவே நம்மில் ஒருவருக்கொருவர் நட்பு பெருகிற்று. எனவே, நீ விடைபெற்றுச் செல்ல நான் அனுமதியளிக்கிறேன். செல்; உனது ஆசைகளனைத்தும் நிறைவேறட்டும்” என்றார்.(91)

இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கன், மறுமொழியாக, “நீர் விரும்பியதை நான் செய்வதற்கு எனக்கு உத்தரவு அளிப்பீராக. பயன்பாட்டுக்கு {வழக்கத்துக்கு} முரணாகக் கல்வியை அளிப்பவன், பயன்பாட்டுக்கு முரணாக அதைப் பெறுபவன் ஆகிய அந்த இருவரில் ஒருவர் இறப்பர் என்றும், {அல்லது} அந்த இருவருக்குள் பகை ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.(93) எனவே, உம்மிடம் விடை கிடைத்தாலும், ஆசானுக்குரிய ஏதாவது வெகுமானத்தை உமக்குக் கொண்டு வர நான் விரும்புகிறேன்” என்றான். இதைக்கேட்ட அவனது ஆசான் {வேதா}, “உதங்கா, என் மகனே, சிறிது காலம் பொறுத்திரு” என்றார்.(94)

சிறிது காலம் கழித்து, உதங்கன் மறுபடியும் தன் ஆசானிடம், “நீர் விரும்பும் வெகுமானத்தைக் கொண்டு வர எனக்கு உத்தரவளிப்பீராக” என்றான். அதற்கு அவனது ஆசான் {வேதா}, “எனதன்பு உதங்கா, நீ பெற்ற கல்விக்கான காணிக்கையாக ஏதாவது பெறும்படி நீ அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாய். எனவே, உள்ளே சென்று உனது குருவின் மனைவியிடம் என்ன கொண்டு வர வேண்டுமென்று கேட்பாயாக. அவள் கேட்பதைக் கொண்டு வருவாயாக” என்றார். இவ்வாறு தன் ஆசானால் வழிநடத்தப்பட்ட உதங்கன் தன் ஆசானின் மனைவியிடம், “அம்மா, நான் வீடு செல்வதற்கு ஆசானின் அனுமதியைப் பெற்றேன். ஒரு கடனாளியாக நான் செல்லாதிருப்பதற்காக, நான் பெற்ற கல்விக்கு ஈடாக உங்களுக்கு ஏற்புடைய எதையாவது வெகுமானமாகக் கொண்டு வர விரும்புகிறேன். எனவே, நான் என்ன கொண்டு வர வேண்டும் என் ஆணையிடுவாயாக” என்றான் {உதங்கன்}.(96)

இவ்வாறு சொல்லப்பட்ட அவனது ஆசானின் மனைவி, “மன்னன் பௌசியனிடம் சென்று, அவனது ராணி அணிந்திருக்கும் ஒரு ஜோடி கம்மலை பிச்சையாக அவனிடம் கேட்டு,(97) அதை இங்குக் கொண்டு வா. இன்றிலிருந்து நான்காவது நாள் புனிதமான நாளாகும். அன்று (என் வீட்டில் விருந்துண்ண வரும்) பிராமணர்கள் முன்னிலையில் அந்தக் குண்டலங்களுடன் காட்சியளிக்க விரும்புகிறேன். ஓ உதங்கா, இதை நிறைவேற்றுவாயாக. நீ இதில் வெற்றிக் கொண்டால் நற்பேறு உன்னைத் தேடி வரும்; தோல்வியுற்றால் நீ என்ன எதிர்பார்க்க முடியும்?” என்றாள்.(98)

இவ்வாறு ஆணையிடப்பட்ட உதங்கன், அங்கிருந்து புறப்பட்டான். அப்படியே வீதியோரமாக நடந்து செல்கையில் இயல்புக்குமிக்கப் பெரிய தோற்றத்தில் ஒரு காளையும், அதன்மீது அசாதாரண உடலமைப்பைக் கொண்ட மனிதன் ஒருவன் அமர்ந்திருப்பதையும் பார்த்தான். அந்த மனிதன் உதங்கனைப் பார்த்து,(99) “இந்தக் காளையின் சாணத்தை உண்பாயாக” என்றான். {இதற்கு} உதங்கன் உடன்பட விரும்பவில்லை.(100)

அந்த மனிதன் மறுபடியும், “ஓ உதங்கா, ஆராயாமல் உண்பாயாக. உனது ஆசானும் {வேதாவும்} இதற்கு முன் இதை உண்டிருக்கிறார்” என்றான்.(101) உதங்கன் சம்மதித்து, அந்தச் சாணத்தை உண்டு, அந்தக் காளையின் சிறுநீரைக் குடித்து, மரியாதையுடன் எழுந்து, தன் கைகளையும் வாயையும் தூய்மைப்படுத்திக் கொண்டு மரியாதையாக எழுந்து மன்னன் பௌசியன் இருக்குமிடம் சென்றான்.(102)

அரண்மனையை அடைந்து, மன்னன் பௌசியன் (தனது அரியாசனத்தில்) அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனை {மன்னன் பௌசியனை} அணுகிய உதங்கன், தனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு,(103) “நான் உன்னிடம் ஒரு விண்ணப்பதாரனாக வந்தேன்” என்றான். மன்னனும் பதில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு, “ஐயா, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(104) உதங்கன் “ஒரு ஜோடி காதுகுண்டலங்களை என் ஆசானுக்குப் பரிசளிப்பதற்காக உன்னிடம் பிச்சை கேட்டு நான் வந்தேன். ராணி அணிந்திருக்கும் காது குண்டலங்களை எனக்குக் கொடுப்பதே உனக்குத் தகும்” என்றான்.(105)

மன்னன் {பௌசியன்}, “உள்ளே இராணி இருக்கும் பெண்கள் அறைகளுக்குச் {அந்தப்புரத்திற்கு} சென்று அவளிடம் கேட்பீராக” என்றான். உதங்கனும் அந்தப்புரத்திற்குள் சென்றான். ஆனால் அவனால் இராணியைக் காண முடியவில்லை,(106) எனவே மீண்டும் மன்னனிடம் அவன், “நான் உன்னால் வஞ்சிக்கப்படுவது முறையாகாது. என்னால் உன் இராணியைக் காணமுடியவில்லை, அவள் அந்தப்புரத்திற்குள் இல்லை” என்றான்.(107) இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் சற்று நேரம் சிந்தித்த பின் மறுமொழி கூறினான், “ஐயா, அசுத்தங்கள் எதனுடனாவது ஏற்பட்ட தொடர்பால் நீர் மாசடையவில்லை என்பது உறுதிதானா என்பதைச் சற்றுக் கவனத்துடன் நினைவுப்படுத்திப் பாரும். கற்புடைய மனைவியான என் ராணி, உணவின் எச்சங்களால் தூய்மையற்றிருப்பவர்கள் எவராலும் காணப்பட முடியாதவள் ஆவாள். அதே போல, மாசுடனிருப்பவர்கள் முன் அவள் தோன்றுவதுமில்லை” என்றான்.(108)

இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கன், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும். அவசரமாக வந்ததால், (உணவருந்தி்விட்டு {சாணமாக இருக்க வேண்டும்} நின்ற நிலையிலேயே தூய்மைச் சடங்கைச் {நீராடலை} செய்தேன்” என்றான். அப்போது, மன்னன் பௌசியன் “இதுதான் வரம்பை மீறிய குற்றம். நின்றபடி சடங்கைச் செய்தல் சுத்திகரிப்பு ஆகாது. அதுவும் பயணம் மேற்கொள்ளும்போது அப்படிச் செய்தல் கூடாது” என்றான்.(109)

இதை ஏற்றுக் கொண்ட உதங்கன், கிழக்கு முகமாக {கிழக்கை நோக்கி} அமர்ந்து, தன் முகம், கைகள் மற்றும் பாதங்களைக் கழுவினான். பிறகு சத்தமிடாமல் மூன்று முறை நுரையும் வெதுவெதுப்புமில்லாத நீர், தனது குடலை அடையும் வரை எச்சில்படாமல் உறிஞ்சினான். தனது முகத்தை இரு முறை துடைத்தான். பிறகு நீரைக் கொண்டு (காது, மூக்கு போன்ற) தனது உறுப்புகளைத் தொட்டான். இவை யாவற்றையும் செய்து, மீண்டும் பெண்களின் அறைகளுக்குள் அவன் நுழைந்தான்[3].(110)(கும்பகோணம் பதிப்பில், “கிழக்கு முகமாக உட்கார்ந்து, கை கால் முகங்களைச் செவ்வையாகக் கழுவிக் கொண்டு, நுரையில்லாமலும், காய்ச்சப்படாமலுமிருந்த தீர்த்தம் உள்ளே போவது மார்பு வரையில் உணரப்படும்படி சப்தமில்லாமல் மூன்று முறை ஆசமனஞ்செய்து இரண்டு முறை கண், காது, மூக்கு முதலி இடங்களை ஜலத்தினால் துடைத்துக் கொண்டு அந்தப்புரத்திற்குப் போனார்” என்றிருக்கிறது.)

இம்முறை அவன் ராணியைக் கண்டான். ராணியும் அவனைக் {உதங்கனை} கண்டு, மரியாதையாக வணங்கி, ” ஐயா, உமக்கு நல்வரவு. நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டாள்.(111) உதங்கன் அவளிடம், “அந்தக் குண்டலங்களை நீ எனக்குக் கொடுப்பதே தகும். அவற்றை எனது ஆசானுக்குக் {வேதாவுக்குக்} காணிக்கையாகக் கொடுக்க நான் பிச்சை கேட்கிறேன்” என்றான். உதங்கனின் நடத்தையில் மிகவும் மகிழ்ந்த ராணி கொடைக்குத் தகுந்தவனான உதங்கனைக் கடக்க இயலாது என்றெண்ணி, தனது குண்டலங்களைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள். மேலும் அவள், “இந்தக் குண்டலங்களைப் பாம்புகளின் மன்னனான தக்ஷகன் விரும்புகிறான். எனவே, இந்தக் குண்டலங்களை மிகவும் கவனமாக நீர் கொண்டு செல்ல வேண்டும்” என்றாள்.(112)

“இப்படிச்சொல்லப்பட்ட உதங்கன், ‘பெண்ணே, அச்சங்கொள்ளாதே, பாம்புகளுக்குத் தலைவனா தக்ஷகனால் என்னை விஞ்ச முடியாது” என்றான்.(113) இதைச் சொல்லிவிட்டு ராணியிடம் விடைபெற்றுக் கொண்ட அவன் {உதங்கன்}, பௌசியன் முன்பு வந்து “பௌசியா, நான் மனம் நிறைந்தேன்” என்றான். பௌசியன் உதங்கனிடம், “கொடைக்குத் தகுந்த பொருளை நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகே கொள்ள முடியும். நீர் தகுதியுள்ள விருந்தினர், எனவே, நான் சிராத்தம் செய்ய விரும்புகிறேன். சற்றுப் பொறுப்பீராக” என்றான்.(114,115)

உதங்கன், “சரி, நான் பொறுத்திருக்கிறேன். தயாராக வைத்திருக்கும் தூய பொருட்களை விரைவாகக் கொண்டு வருமாறு வேண்டுகிறேன்” என்றான். இதை ஏற்றுக் கொண்ட மன்னன் {பௌசியன்}, உதங்கனை முறையாக உபசரித்தான்.(116) தனக்கு முன்பாக வைக்கப்பட்ட உணவு, முடியுடன் கூடியதாகவும், குளிர்ந்ததாகவும், தூய்மையற்றதாகவும் இருப்பதை உதங்கன் கண்டான். அவன் பௌசியனிடம், “நீ எனக்குச் தூய்மையற்ற உணவைக் கொடுத்ததால், பார்வையை இழப்பாயாக” என்று சபித்தான்.(117) பதிலுக்குப் பௌசியனும், “தூய்மையான உணவைத் தூய்மையற்றது என்று சொன்னதால் நீர் பிள்ளைப்பேறில்லாமல் போவீராக’ என்று சபித்தான்.(118) அதன் பேரில் உதங்கன் மீண்டும், “எனக்குத் தூய்மையற்ற உணவைக் கொடுத்து, பதில் சாபமும் கொடுப்பது உனக்குத் தகாது. கண்ணால் சாட்சி கண்டு உன்னில் நீ மனம் நிறைவாயாக” என்றான்.(119)

உணவு தூய்மையற்றதாகத்தான் இருக்கிறது என்பதைப் பௌசியன், நேரடியாகவே கண்டு கொண்டான். அந்த உணவு உண்மையிலேயே உண்மையிலேயே தூய்மையற்றதாகவும், குளிர்ந்ததாகவும், பின்னலிடாத பெண்ணால் தயாரிக்கப்பட்டு அதில் முடி கலந்திருப்பதையும் உறுதி செய்து கொண்ட பௌசியன் உதங்க முனியை அமைதிப்படுத்த முயலும் வகையில்,(120) “ஐயா, உம் முன்னால் வைத்த உணவு குளிர்ந்ததாகவும், முடியுடனும் இருக்கிறது. சரியான அக்கறையுடன் இந்த உணவு தயாரிக்கப்படவில்லை. ஆகவே என்னை மன்னிப்பீராக. நான் குருடனாக வேண்டாம்” என்றான்.(121) உதங்கன், “நான் சொல்வது நடந்தாக வேண்டும். எனினும், நீ குருடானாலும் மிக விரைவில் பார்வையை அடைவாய். உனது சாபமும் பலனளிக்காமல் போக அருள்வாயாக” என்றான்.(122)

பௌசியன் சொன்னான், “என் கோபம் இன்னும் தணியாதிருப்பதால், எனது சாபத்தைத் திரும்பப்பெற இயலாதவனாக நான் இருக்கிறேன். ஆனால் நீர் இதை அறியாதிருக்கிறீர்.(123) பிராமணனின் வார்த்தைகள் கூர்முனை கொண்ட கத்தியைப் போன்றதாக இருந்தாலும், அவனது இதயம் புதிதாய்க் கடையப்பட்ட வெண்ணையைப் போன்று மென்மையானது. க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரையில் இது வேறு வகையாகும். அவனது வார்த்தைகள் புதிதாய்க் கடையப்பட்ட வெண்ணையைப் போல இருந்தாலும், அவனது இதயம் கூர்முனை கொண்ட கருவியைப் போன்றதாகும்.(124) வழக்கம் இப்படியிருப்பதால், என் இதயத்தின் கடினத்தால் என் சாபத்தை என்னால் தணிக்க முடியவில்லை. எனவே, நீர் உம் வழியில் செல்வீராக” என்றான். அதற்கு உதங்கன், “நீ தூய்மையற்ற உணவினைத்தான் கொடுத்தாய் என்பதை நான் காண்பித்தேன். நீ என்னை அமைதிப்படுத்தினாய்.(125) அஃது ஒருபக்கம் இருந்தாலும், தூய்மையான உணவைத் தூய்மையற்றது என்று நான் சொன்னதாகக் கருதிய நீ, எனக்குப் பிள்ளைப் பேறற்றுப் போகட்டும் என்று சபித்தாய். ஆனால், உணவு தூய்மையற்றதாகவே இருந்தது. எனவே, உனது சாபம் என்னை ஒன்றும் செய்யாது. இதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்” என்று சொன்னான்.(126)

ஜனமேஜயன் துயரம் | ஆதிபர்வம் – பகுதி 3 இ(பௌசிய பர்வம்)உதங்கரிடம் இருந்து காதணிகளைத் திருடிய தக்ஷகன்; இந்திரன் உதவியுடன் மீண்டும் காதணிகளை அடைந்த உதங்கர்; ஜனமேஜயனைப் பாம்பு வேள்வி செய்யத் தூண்டிய உதங்கர்

இதைச் சொன்ன உதங்கன், காதுகுண்டலங்களுடன் அங்கிருந்து புறப்பட்டான். சில நேரம் தோன்றுவதும், சில நேரம் மறைவதுமாகச் சாலையில் ஓர் அம்மணப் பிச்சைக்காரன் தன்னை நோக்கி வருவதை உதங்கன் கண்டான்.(128) குண்டலங்களைத் தரையில் வைத்துவிட்டு, நீரை நோக்கி உதங்கன் சென்றான். அந்நேரத்தில் அந்தப் பிச்சைக்காரன் வெகுவிரைவாக அந்த இடத்திற்கு வந்து, குண்டலங்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.(128) உதங்கன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் சடங்குகளை முடித்துக் கொண்டு, தேவர்களையும், ஆன்ம ஆசான்களையும் மரியாதையுடன் வணங்கி வெகுவிரைவாக அந்தக் கள்வனைப் பின்தொடர்ந்து சென்றான்.(129) மிகவும் சிரமப்பட்டு அவனை {திருடனை} முந்தி வந்து, குண்டலங்களை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்க முயற்சித்தான். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில், பிச்சைக்காரத் தோற்றத்தை விட்டு தன் உண்மை வடிவை ஏற்ற தக்ஷகன், தரையில் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்தான்.(130)

அதற்குள் நுழைந்த தக்ஷகன், தன் வசிப்பிடமான பாம்புகளின் உலகிற்குச் சென்று சேர்ந்தான். உதங்கன், ராணி {மன்னன் பௌசியனின் மனைவி} சொன்னதை இப்போது நினைத்துப் பார்த்து, பாம்பைப் பின்தொடரவென,(131) அந்தப் பொந்தைத் தனது குச்சியை வைத்துப் பெரிதாக்கத் தொடங்கினான். ஆனால் பெரிய முன்னேற்றத்தை அவனால் {உதங்கனால்} காண முடியவில்லை. இந்திரன் அவனுக்கு {உதங்கனுக்கு} உதவ முன் வந்து தனது இடியை (வஜ்ரம்) அனுப்பினான். அந்த இடி, அந்தக் குச்சிக்குள் நுழைந்து, அந்தப் பொந்தைப் பெரிதாக்கியது.(132,133) உதங்கன் அந்த இடியைப் பின்தொடர்ந்து பொந்துக்குள் சென்றான். உள்ளே சென்று பார்த்ததும், பாம்புகளின் உலகம் ஒரு முடிவே இல்லாதிருப்பதைக் கண்டான். நூற்றுக்கணக்கான அரண்மனைகள், பெரிய கோபுரங்களுடனும், பெரிய வாயிற்கதவுகளுடனும் கூடிய மாளிகைகள், விளையாட்டுக்கும் கேளிக்கைக்கும் உகந்த பல்வேறு அற்புதமான இடங்கள் எனப் பலவும் அங்கே இருந்தன.(134)

உதங்கன் பின்வரும் ஸ்லோகங்களைச் சொல்லிப் பாம்புகளைத் துதித்தான்:

“மன்னன் ஐராவதனின் ஆளுகைக்குட்பட்டவர்களும், போரில் வல்லவர்களுமான பாம்புகளே, காற்றினால் உந்தப்பட்ட மேகங்கள் வேகமாகச் சென்று, இடியுடன் கூடிய மழையைப் பொழிவது போல் போர்க்களங்களில் போர்க்கருவிகளைப் பொழிபவர்கள் நீங்கள்.(135) அழகானவர்களாகவும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கும் ஐராவதனின் பிள்ளைகளே, பல வண்ணங்களிலான காது குண்டலங்களை அணிந்த நீங்கள் ஆகாயத்துச் சூரியனைப் போல ஒளிவீசுகிறீர்கள்.(136) கங்கையின் வடக்குக் கரையில், பாம்புகளின் பல வசிப்பிடங்கள் இருக்கின்றன. அங்கேதான் நான் பாம்புகளாகிய உங்களைத் தொடர்ந்து துதித்து வருகிறேன்.(137) சூரியனின் கதிர்களில் எரிந்து கொண்டே நகர ஐராவதனைத் தவிர வேறு எவனால் முடியும்? (ஐராவதனின் சகோதரனான) திருதராஷ்டிரன் செல்லும்போது, அவனுக்குப் பணிசெய்ய இருபத்தெட்டாயிரத்து எட்டு {28008} பாம்புகள் பின்தொடர்ந்து செல்வர்.(138) அவனருகில் உலவுபவர்களே, அவனுக்குத் தொலைவில் இருப்பவர்களே, ஐராவதனை உங்கள் அண்ணனாகக் கொண்ட உங்கள் அனைவரையும் நான் துதிக்கிறேன்.(139)

முன்பு குருக்ஷேத்திரத்தையும், காண்டவ வனத்தையும் தனது வசிப்பிடமாக வைத்திருந்த ஓ தக்ஷகனே, குண்டலங்களை அடைய நான் உன்னையும் வணங்குகிறேன்.(140) தக்ஷகன், அஸ்வசேனன் ஆகிய நீங்கள் இக்ஷுமதி {நதியின்} கரையில் உள்ள குருக்ஷேத்திரத்தில் தங்கியிருக்கும் தோழர்கள் ஆவீர்கள்.(141) மஹத்யும்னா என்ற புனிதமான இடத்தில் வசிக்கும் தக்ஷகனின் தம்பியும் பாம்புகளின் தலைவனுமான சிறப்பு மிக்கச் சுருதசேனா, உன்னையும் நான் வணங்குகிறேன்” என்று வணங்கினான் {உதங்கன்}.(142)

பிராமண முனிவனான உதங்கன் முக்கியமான பாம்புகளையெல்லாம் இப்படி வணங்கியும், குண்டலங்கள் தனக்குக் கிடைக்காததை எண்ணிய போது,(143) இரு பெண்கள் கருப்பும், வெள்ளையுமாக இருந்த நூலைக் கொண்டு ஒரு துணியை நெய்வது போலக் கண்டான். அதே போலப் பனிரெண்டு ஆரங்களைக் கொண்ட சக்கரத்தை ஆறு சிறுவர்கள் சுழற்றுவது போலவும் கண்டான். அதே போல, ஓர் அழகான குதிரையுடன் ஒரு மனிதனையும் கண்டான். அவர்களையெல்லாம் நிறைவு செய்யப் பின்வரும் இந்த மந்திரங்களைச் சொன்னான்:(144)

“இந்தச் சக்கரமானது தனது சுற்றளவில் இருபத்து நாலாகப் {24} பிரிக்கப்பட்டு முன்னூறு {300} ஆரங்களுடன் ஆறு {6} சிறுவர்களால் (காலங்களால்) சுற்றப்பட்டு, எப்போதும் செயலில் வைக்கப்பட்டு, சந்திரனின் மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன.(145) அண்டத்தின் பிரதிபலிப்பான இந்த மங்கையர், தொடர்ந்து கருப்பு வெள்ளை நூல்களால் துணியைத் தடையில்லாமல் தொடர்ந்து நெய்து பல பயனுள்ள பொருட்களைக் கொண்ட உலகங்களுக்கும், அதில் வசித்துவரும் உயிர்களுக்கும் வாழும் வகையைச் செய்கின்றனர்.(146) இடியைப் பயன்படுத்துபவனே, அண்டத்தைக் காப்பவனே, விருத்திரனையும் நமுசியையும் கொன்றவனே {இந்திரனே}, கருப்பு உடையணிந்து உண்மையையும், பொய்ம்மையையும் இந்த அண்டத்தில் காட்டுபவனே,(147) பெருங்கடலின் ஆழங்களில் இருந்து கண்டெடுத்த அக்னியின் மாற்றுருவான குதிரையை உனது வாகனமாய்க் கொண்டவனே, தேவர்களின் தலைவனே, மூவுலகங்களின் தலைவனே, ஓ புரந்தரா {இந்திரா}! உன்னை வணங்குகிறேன்” என்றான் {உதங்கன்}.(148)

குதிரையுடன் இருந்த மனிதன் உதங்கனிடம், “உனது துதியால் என் மனம் நிறைந்தேன். நான் உனக்கு என்ன நல்லதைச் செய்யட்டும்?” என்றான்.(149) உதங்கன், “பாம்புகளை எனது ஆளுகைக்குள் கொண்டு வா” என்றான். அந்த மனிதன், “இந்தக் குதிரைக்குள் {ஆசனவாய்க்குள்} ஊதுவாயாக” என்றான்.(150) உதங்கன் அந்தக் குதிரைக்குள் ஊதினான். அப்படி ஊதப்பட்ட குதிரையின் உடலின் அங்கங்களிலெல்லாம் நெருப்புடன் கூடிய புகை தோன்றி அந்தப் பாம்புகளின் உலகத்தையே பொசுக்கியது.(151) அளவிலா ஆச்சரியத்தை அடைந்த தக்ஷகன், அந்த நெருப்பின் வெம்மையைத் தாங்க முடியாமல், தனது இருப்பிடத்தை விட்டு உதங்கனிடம் வந்து,(152) “ஐயா, உம்மை வேண்டுகிறேன். உமது குண்டலங்களை எடுத்துக் கொள்ளும்” என்றான் {தட்சகன்}. உதங்கன் அதை எடுத்துக் கொண்டான். குண்டலங்களை மீண்டும் அடைந்த உதங்கன்,(153) ‘ஓ, இன்றுதானே ஆசானின் {வேதாவின்} மனைவி சொன்ன புனிதமான நாள். நான் வெகுதொலைவிலல்லவா இருக்கிறேன். எப்படி எனது மரியாதையை அவளுக்குச் செலுத்துவது’ என்று நினைத்தான். உதங்கன் இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில் குதிரையுடன் இருந்த மனிதன்,(154) “உதங்கா, இந்தக் குதிரையில் ஏறுவாயாக, இஃது உன் ஆசானின் {வேதாவின்} வசிப்பிடத்திற்கு நொடியில் அழைத்துச் செல்லும்” என்றான்.(155)

உதங்கனும் அதற்குச் சம்மதித்து, அந்தக் குதிரையின் மீதேறி குருவின் {வேதாவின்} இல்லத்திற்குச் சென்றான். அவனது {உதங்கனின்} ஆசானின் மனைவி {வேதாவின் மனைவி}, காலையிலேயே குளித்து முடித்துத் தனது கூந்தலை அலங்கரித்து, உதங்கன் வரவில்லையென்றால் அவனைச் சபிக்கக் காத்திருந்தாள்.(156) அதே வேளையில், உதங்கன் குருவின் {வேதாவின்} இருப்பிடத்திற்குள் நுழைந்து, தனது குருவின் மனைவிக்குத் தனது மரியாதையைத் தெரிவித்தான். அப்போது அவள்,(157) “உதங்கா, நீ சரியான சமயத்தில், சரியான இடத்திற்கு வந்தாய், உன்னை வரவேற்கிறேன். மகனே, நீ ஓர் அப்பாவி, உன்னைச் சபிக்க மாட்டேன். நற்பேறு உன்னெதிரிலேயே இருக்கிறது. உன் விருப்பங்கள் யாவும் வெற்றியால் முடிசூடப்படட்டும்” என்றாள்.(158)

உதங்கன் ஆசானுக்காகக் காத்திருந்தான். அவனது ஆசானும் {வேதா}, “உனக்கு நல்வரவு. உன்னை நீண்ட நாளாகக் காணமுடியவில்லையே என்ன காரணம்?” என்றார்.(159) உதங்கன், “ஐயா, என்னுடைய அலுவலை நான் பார்க்கும்போது பாம்புகளின் அரசன் தக்ஷகனால் தடை வந்தது. அதனால் நான் பாம்புகளின் வசிப்பிடம் சென்றேன்.(160) அங்கே நான் இரு பெண்கள் கருப்பும் வெள்ளையுமான நூல்களால் ஒரு துணியை நெய்துகொண்டிருப்பதைக் கண்டேன். அதற்கு என்ன பொருள் என்று உங்களிடம் வேண்டிக் கேட்கிறேன்?(161) அதே போல, பனிரெண்டு {12} ஆரங்களுடன் கூடிய ஒரு சக்கரத்தை ஆறு {6} சிறுவர்கள் சுழற்றிக் கொண்டிருந்தனர். அஃது எதைக் குறிக்கிறது? நான் கண்ட அந்த மனிதன் யார்? நான் பின்தொடர்ந்து வந்த அந்த இயல்புக்குமிக்க {அசாதாரண} குதிரை என்ன?(162) அதேபோல் சாலைவழியில் காளையின் மீதமர்ந்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன். அவன் “உதங்கா, இந்தக் காளையின் சாணத்தை உண்பாயாக, முன்பு உன் குருவும் இதை உண்டிருக்கிறார்” என்றான்.(163) எனவே அவனது வார்த்தைகளின்படி, நான் அந்தச் சாணத்தை உண்டேன். அவன் யார்? உம்மால் கல்விபெற்ற நான், இவை அனைத்தையும் உம்மிடமிருந்து அறிய விரும்புகிறேன்” என்றான்.(164)

இவ்வாறு கேட்கப்பட்ட அவனது ஆசான் {வேதா}, “அந்த இரு மங்கையரும் ததாவும், விததாவும் ஆவர், கருப்பும் வெள்ளையுமான நூல்கள், இரவையும் பகலையும் குறிக்கின்றன. ஆறு {6} சிறுவர்களால் சுழற்றப்படும் பனிரெண்டு {12} ஆரங்களுடன் கூடிய சக்கரம், ஆறு {6} காலங்களைக் கொண்ட வருடத்தைக் குறிக்கிறது.(165) குதிரையுடன் கூடிய அந்த மனிதன் மழை தேவனான பரஜன்யன் {இந்திரன்} ஆவான். அந்தக் குதிரை நெருப்பு தேவனான அக்னி ஆவான். சாலைவழியில் கண்ட அந்தக் காளை யானைகளுக்கு அரசனான ஐராவதமாகும்.(166) அதன்மீதிருந்த மனிதன் இந்திரனாவான். உன்னால் உண்ணப்பட்ட காளையின் சாணம் அமிர்தமாகும். அதனால்தான் நீ பாம்புகளின் வசிப்பிடத்திலிருந்து உயிருடன் திரும்பினாய்.(167) இந்திரன் எனது நண்பன். உன் மீதிருந்த கருணையால் உனக்கு உதவி செய்திருக்கிறான். அதனால் தான் குண்டலங்களுடன் நீ பாதுகாப்பாக இங்கு வந்தாய்.(168) ஓ மனதுக்கினியவனே, நான் உன்னை விடுவிக்கிறேன். நீ நற்பேறு பெறுவாய்” என்றார் {குரு வேதா}. தனது குருவிடம் இருந்து விடுபட்ட உதங்கன், தக்ஷகன் மீதிருந்த அதிகமான கோபத்தால் உந்தப்பட்டு ஹஸ்தினாபுரம் சென்றான்.(169)

அந்த நல்ல பிராமணன் {உதங்கன்}, விரைவாக ஹஸ்தினாபுரம் சென்றடைந்தான். சிறிது காலத்திற்கு முன் தக்ஷசீலத்திலிருந்து வெற்றியுடன் திரும்பிய ஜனமேஜயனுக்காகக் காத்திருந்தான். வெற்றியடைந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்} அமைச்சர்களால் சூழப்பட்டிருப்பதை உதங்கன் கண்டான்.(170,171) தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் சரியான முறையில் அவனுக்குச் {ஜனமேஜயனுகுச்} சொன்னான். அந்த ஏகாதிபதியிடம் சரியான நேரத்தில், இனிமையாகப் பேசிய உதங்கன்,(172) “ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயா}! உனது கவனத்துக்கு அவசரமாக வரவேண்டிய செய்திகளிருக்கும் போது, இப்படிச் சிறுபிள்ளையைப் போல் பொழுதைப் போக்குகிறாயே, எப்படி?” என்றான்.(173)

“சௌதி சொன்னார், “இவ்வாறு கேட்கப்பட்ட அந்த ஏகாதிபதி ஜனமேஜயன், அந்தப் பிராமணர்களில் சிறந்தவனை வணங்கி,(174) “என் குடிமக்களின் நலனை மனத்தில் வைத்தே, எனது கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் செய்ய வேண்டிய கடமை குறித்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்?” என்று கேட்டான்.(175)

பிராமணர்களில் முதன்மையானவனும், நற்செயல்களால் அடையாளங்காணப் படுபவனுமான உதங்கன், பெரும் இதயம் கொண்ட அந்த ஏகாதிபதியிடம் {ஜனமேஜயனிடம்}, “ஓ மன்னா! உனது கவனத்திற்கு வர வேண்டிய அந்தக் கடமை உன்னுடையதுதான். அதனால் தயைகூர்ந்து அதைச் செய்வாயாக.(176) ஓ மன்னர்களுக்கு மன்னா! உனது தந்தை {பரீக்ஷித்} தக்ஷகனால் கொல்லப்பட்டான்.(177) உனது தந்தையின் மரணத்திற்காக அந்தப் பாம்பை நீ பழிவாங்க வேண்டும். விதிவசத்தால் நீ பழிக்கு பழி வாங்கும் நேரமும் வந்துவிட்டது.(178) காரணமில்லாமல் உனது தந்தை {பரீக்ஷித்} அந்தப் பாம்பால் கடிக்கப்பட்டு, இடிவிழுந்த மரமாக ஐம்பூதங்களாகக் குறைக்கப்பட்டான்.(179)

அந்தத் தீய தக்ஷகன், பாம்பு இனத்திலேயே இழிவானவன். அதிகாரத்தால் போதையுண்டு, தேவனைப் போன்றவனும் புனிதமான முனிவர்களைக் காக்கும் மன்னனுமான உனது தந்தையைத் தேவையில்லாமல் தீண்டினான்.(180) செயல்களால் தீயவனான அந்தத் தக்ஷகன், உனது தந்தையைக் காப்பாற்ற வந்த மருத்துவர்களின் தலைவன் கசியபரையும் காப்பாற்ற விடாமல் திரும்பப் போக வைத்தான்.(181) அந்தத் தீய பாதகனைத் தீயில் விழ வைக்கப் பாம்பு வேள்வி ஒன்றை நீ செய்ய வேண்டும். ஓ மன்னா! அதற்கான உத்தரவைக் கொடுப்பாயாக.(182) இப்படித்தான் நீ உனது தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்க முடியும். இதனால், நீ எனக்கும் பெரிய உதவியைச் செய்தவனாவாய்.(183) ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் கொடிய பாதகன் {தட்சகன்}, எனது ஆசானுக்கான அலுவலை நான் செய்யும்போது, அந்த அலுவலுக்குத் தடையேற்படுத்தியிருக்கிறான்” என்றான் {உதங்கன்}.(184)

சௌதி தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த ஏகாதிபதி, தக்ஷகன் மீது பெரு கோபம் கொண்டான். உதங்கனின் பேச்சு வேள்வித் தீயில் நெய்யூற்றியது போல் அந்த மன்னனின் {ஜனமேஜயன்} கோபத்தை அதிகரித்தது.(185) உதங்கனின் முன்னிலையில், துயரால் உந்தப்பட்டு, தனது அமைச்சர்களை அழைத்துத் தனது தந்தையின் {பரிக்ஷித்தின்} மோட்சப் பயணத்தைக் குறித்து விசாரித்தான்.(186) தனது தந்தை மரணித்ததின் சூழல்களை உதங்கனின் உதடுகளால் கேட்டபோது, துன்பத்தின் வலியால் அவன் {ஜனமேஜன்} துயருற்றான்” {என்றார் சௌதி}.(187) 

சௌனகருக்கு அந்தணர்கள் காத்திருப்பு! | ஆதிபர்வம் – பகுதி 4(பௌலோம பர்வம்)நெருப்பு கடனில் {அக்னிஹோத்ரத்தில்} ஈடுபட்டுக் கொண்டிருந்த சௌனகருக்காக அந்தணர்களும் சௌதியும் காத்திருப்பு…

நைமிச வனத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்ததும், குலபதி என்று அழைக்கப்பட்ட சௌனகரால் நடத்தப்பட்டதுமான பனிரெண்டு வருட வேள்வியில் பங்கெடுத்த முனிவர்கள் முன்பு, புராணங்களில் தெளிந்த புலமை கொண்ட லோமஹர்ஷணரின் மகனான சௌதி நின்று கொண்டிருந்தார்.(1)

புராணங்களை ஆழ்ந்த கவனத்துடன் கற்றதனால் அவற்றை முழுமையாக அறிந்தவரான அவர் {சௌதி} குவிந்த கரங்களுடன், “மன்னன் ஜனமேஜயனின் நாக வேள்விக்கு, ஒரு காரணமாயிருந்த உதங்கனின் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டிவிட்டேன்? மரியாதைக்கு உரியவர்களே, இப்போது நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன சொல்லட்டும்?” என்று கேட்டார்.(2)

அதற்கு அந்தப் புனிதமானவர்கள், “ஓ லோமஹர்ஷணரின் மகனே {சௌதியே}, எங்களுக்குக் கேட்பதில் ஆர்வமுள்ளதையே உம்மிடம் கேட்போம், நீரும் ஒவ்வொரு கதையாகச் சொல்வீராக.(3) எங்கள் தலைவரான {குலபதியான} சௌனகர், தற்போது நெருப்புக்கடன் செய்யும் புனித அறையில் {அக்னி ஹோத்ர சாலையில்} இருக்கிறார்.(4) தேவர்களும், அசுரர்களும் சம்பந்தப்பட்ட கதைகளில், அவர் தேர்ந்த புலமையுள்ளவராவார். அவருக்கு மனிதர்கள், பாம்புகள், கந்தர்வர்கள் குறித்த வரலாறுகள் நன்றாகத் தெரியும்.(5) மேலும், ஓ சௌதியே! கல்விமானான அந்தப் பிராமணரே {சௌனகரே} இந்த வேள்விக்குத் தலைவராவார்.

தன் உறுதிகளுக்கு உண்மையுள்ளவராக, சாத்திரங்கள் மற்றும் ஆரண்யகத்தில் பண்டிதராக, உண்மை பேசுபவராக, அமைதியை விரும்புபவராக, புலன்களை அடக்கியவராக, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி நோன்புகளை நோற்பவராக இருக்கும் அவரே {சௌனகரே} {இதற்குத்} தகுதிவாய்ந்தவராவார்.(6,7) எங்கள் அனைவருக்கும் அவர் மதிப்புக்குறியவராவார். எனவே, அவருக்காகக் {சௌனகருக்காகக்} காத்திருப்பதே நமக்குத் தகும்.(8) அவர் எப்போது வந்து, உயர்ந்த மதிப்புடைய தன் இருக்கையில் {தலைமை ஆசனத்தில்} அமர்கிறாரோ, அப்போது அந்த இருபிறப்பாளர்களில் சிறந்தவர் {சௌனகர்} உம்மிடம் கேட்பனவற்றிற்குப் பதிலளிப்பீராக” என்றார்கள்.(9)

சௌதி, “அப்படியே ஆகட்டும். அந்த உயரான்ம தலைவர் {சௌனகர்} வந்து அமர்ந்ததும், அவரது கேள்விகளுக்கேற்றபடி, பல வகையான தலைப்புகளிலான புனிதமான கதைகளை நான் உரைப்பேன்” என்று சொன்னார்.(10)

சிறிது நேரங்கழித்து, தனது கடமைகள் அனைத்தையும் முடித்து, கடவுளரைத் துதிகளாலும் {மந்திரங்களாலும்}, ஆவிகளை {பிதிர்களை} நீர்க்காணிக்கையாலும் அமைதிப்படுத்திய அந்தச் சிறப்புவாய்ந்த அந்தணர் (சௌனகர்), பிறகு, நிம்மதியுடன் அமர்ந்திருந்தவர்களும், கடும் நோன்புகளைக் கொண்டவர்களுமான அந்தத் தவசிகளின் கூட்டத்துக்கு {சபைக்கு} எதிரில் சௌதி எங்கு அமர்ந்திருந்தாரோ அந்த வேள்வி நடக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தார். தத்தமது இருக்கையில் அமர்ந்திருந்த ரித்விக்குகள், சாத்யர்கள் ஆகியோருக்கு மத்தியில் அமர்ந்த அந்தச் சௌனகர் பின்வருமாறு பேசினார்.(11,12)

பிருகு பரம்பரை | ஆதிபர்வம் – பகுதி 5(பௌலோம பர்வம் – 2)பிருகு குலத்தின் வரலாற்றைக் கேட்ட சௌனகர்; அவற்றைச் சௌனகருக்குச் சொன்ன சௌதி; புலோமையை மணந்த பிருகு; அக்னியிடம் கேள்வி கேட்ட ராட்சசன்..

“சௌனகர் சொன்னார், “குழந்தாய் {சௌதியே}, முன்பு, உன் தகப்பனார் அனைத்துப் புராணங்களையும், பாரதத்தையும் கிருஷ்ண துவைபாயனரிடம் கற்றுத் தேர்ந்திருந்தார். நீயும் அவற்றைக் கற்றறிந்திருக்கிறாயா?(1) அந்தப் பண்டைய ஆவணங்களில் வரிசை படுத்தப்பட்டிருப்பனவான, ஆர்வத்தைத் தூண்டும் கதைகள், விவேகமுள்ள முதல் தலைமுறையினரின் வரலாறுகள் ஆகிய அனைத்தையும் உன் தந்தை திரும்பக் கூறும்போது நாங்கள் கேட்டிருக்கிறோம்.(2) முதலில், பிருகு குலத்தின் வரலாற்றையே நான் அறிய விரும்புகிறேன். அந்த வரலாற்றை மறுபடியும் நீ விவரித்துச் சொல்வாயாக, நீ சொல்வதை நாங்கள் கவனத்துடன் கேட்போம்” என்றார்.(3)

சௌதி சொன்னார், “முன்பு வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} உட்பட உயர்-ஆன்ம அந்தணர்கள் படித்து ஓதியதையெல்லாம் நானும் கற்றிருக்கிறேன்;(4) என் தந்தை {ரோமஹர்ஷணர்} கற்றிருந்ததையெல்லாம் நானும் கற்றிருக்கிறேன். ஓ பிருகு பரம்பரையின் வழித்தோன்றலே {சௌனகரே}! இந்திரனாலும், தேவர்களாலும், முனிவர் குழுக்களாலும், மருத்துகளாலும் (காற்று) போற்றத்தக்க பிருகு குலத்தைக் குறித்தவற்றைக் கேட்பீராக.(5,6) ஓ பெருமுனிவரே, இந்தக் குடும்பத்தின் கதையைப் புராணங்களில் விவரித்திருப்பது போல விவரிக்கிறேன். நாம் அறிந்தவரையில், அருள்நிறைந்த பெருமுனிவர் பிருகு[1], (பிருகு [அ] ப்ருகு என்றால் தானே தோன்றியவர் என்பது பொருளாம்.)தான்தோன்றியாகத் {சுயம்புவாகத்} தன்னாலேயே நிலைத்திருக்கும் பிரம்மனிடம் இருந்து வருணனின் வேள்வி ஒன்றில் பிறந்தவர் ஆவார். பிருகுவிற்குச் சியவனன் என்று ஒரு மகன் இருந்தான்; அவர் {பிருகு} அவன்மீது {சியவனன் மீது} மிகுந்த அன்புடனிருந்தார்.(7,8) சியவனனுக்கு நற்குணமிக்க பிரம்மாதி {பிரமதி} என்று ஒருவன் பிறந்தான். பிரம்மாதிக்கு தேவலோக நடனமாது கிரிடச்சி {கிருதாசி} மூலம் ருரு என்றொரு மகன் பிறந்தான்.(9) ருருவுக்கு, பிரமத்வரை என்ற தன் மனைவி மூலம் சுனகன் என்றொரு மகன் பிறந்தான். ஓ சௌனகரே![2] (சுனகரின் வழிவந்தவர் என்பதால் சௌனகர்)உமது பெரும் மூதாதையான அவர் {சுனகர்} தன் வழிகளில் மிகவும் நற்குணமிக்கவராகத் திகழ்ந்தார்.(10) தன்னைத் தவத்திற்கு {ஆன்மிகத்திற்கு} அர்ப்பணித்திருந்த அவர் {சுனகர்}, நற்பெயருடன், நீதிமானாக, வேதம் அறிந்தவர்களில் மேம்பட்டவராக இருந்தார். அவர் நற்குணமுள்ளவராக, உண்மையானவராக, ஒழுக்கமுடையவராகவும் இருந்தார்” என்று பதிலுரைத்தார் {சௌதி}.(11)

சௌனகர், “ஓ சூத மைந்தனே {சௌதியே}, புகழ்பெற்ற பிருகுவின் மைந்தனுக்குச் சியவனன் என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது? அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக!” என்று கேட்டார்.(12)

சௌதி சொன்னார், “பிருகுவுக்குப் புலோமை என்ற பெயரில் ஒரு மனைவியிருந்தாள். பிருகு அவளிடம் {புலோமையிடம்} அன்புடன் இருந்தார். பிருகுவின் மைந்தனை {சியவனனை} சுமந்து அவள் {புலோமை} பெரிய உருவம் பெற்றாள்.(13) அந்த அறம்சார்ந்த இடத்தில் புலோமை அந்நிலையில் இருந்த போது, ஒருநாள், தன்னறத்திற்கு உண்மையுடன் இருப்பவர்களில் மேன்மையான பிருகு, அவளை {புலோமையை} வீட்டில் விட்டுவிட்டு, நீராடுவதற்காக {தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள} வெளியே சென்றார். அப்போதுதான், புலோமன் என்றழைக்கப்பட்ட {அவள் பெயரையே கொண்ட} ராட்சசன் ஒருவன், பிருகுவின் இல்லத்திற்கு வந்தான்.(14,15)  முனிவரின் இல்லத்திற்குள் நுழைந்த ராட்சசன் {புலோமன்}, எவ்விதத்திலும் களங்கமில்லாத பிருகுவின் மனைவியைக் {புலோமையைக்} கண்டான். அவளைக் கண்டதும் காமத்தில் நிறைந்து தன் அறிவை இழந்தான்.(16) அழகான புலோமை, கானகத்தின் கிழங்குகளையும், கனிகளையும் கொடுத்து அந்த ராட்சசனை உபசரித்தாள்.(17)

ஓ நன்முனிவரே {சௌனகரே}! அவளை {புலோமையைப்} பார்த்ததுமுதல் காமத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ராட்சசன் {புலோமன்} மிகவும் மகிழ்ந்து, அனைத்து வகையிலும் களங்கமில்லாத அவளை {புலோமையை} அபகரிப்பது எனத் தீர்மானித்தான்.(18) “என் திட்டம் நிறைவேறியது” என்று சொன்ன அந்த ராட்சசன் {புலோமன்}, அந்த அழகான பெண்ணை அபகரித்துச் செல்ல எண்ணினான். உண்மையில், மனதிற்கினிய புன்னகைக் கொண்ட அவளை {புலோமையை} அவளது தந்தை முன்னர் அவனுக்கு {ராட்சசன் புலோமாவிற்குத்தான்} நிச்சயித்திருந்தாலும்[3], (புலோமையின் குழந்தைப் பருவத்தில் அவள் அழுது கொண்டிருந்த போது, அவளை அச்சுறுத்துவதற்காக, “ராட்சசா, இவளைப் பிடித்துக் கொள்!” என்று அவளது தந்தை சொன்னார். அப்போது, அங்கு மறைந்திருந்த புலோமன் என்ற ராட்சசன் அதைக் கேட்டு அவளையே தன் மனைவியாக நினைத்தான்)பின்னர், முறையான சடங்குகளுடன் பிருகுவிற்கே அவளை {புலோமையை} அளித்தார். ஓ பிருகுகுலத்தவரே {சௌனகரே}, ஆழமான இந்தக் காயம் {புலோமையை பிருகுவிடம் இழந்தது} அந்த ராட்சசன் மனத்தைப் பெரும் பாடுபடுத்தியது, அந்தக் கணமே, அந்த மங்கையைக் {புலோமையைக்} கடத்துவதற்கு மிகவும் சிறந்த சந்தர்ப்பம் என்று நிச்சயித்தான். அறையின் மூலையில் வேள்வித்தீ சுடர்விட்டு எரிவதை அந்த ராட்சசன் {புலோமன்} கண்டான்.(19-21)

அந்த நெருப்பிடம் அந்த ராட்சசன், “ஓ அக்னியே சொல், நியாயமாக இந்தப் பெண் யாருடைய மனைவி என்பதை எனக்குச் சொல்வாயாக.(22) நீயே தேவர்களின் வாயாக இருக்கிறாய்; அதனால் என் கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறாய். மேலான நிறமுடைய இந்த பெண் முதலில் என்னால்தான் மனைவியாக வரிக்கப்பட்டாள், ஆனால் பிறகு இவள் தந்தை பொய்யனான பிருகுவிடம் இவளை ஒப்படைத்தான். இவளைத் தனிமையில் கண்ட நான், ஆசிரமத்திலிருந்து வலுக்கட்டாயமாக அபகரித்து செல்லத் தீர்மானித்திருப்பதால், பிருகுவின் மனைவியாக இவ்வழகிக் கருதத்தக்கவளா என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. முதலில் எனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இந்தக் மெல்லிடையாளைப் பிருகு அடைந்தான் என்று நினைக்கும் போதே கோபத்தால் என் இதயம் எரிகிறது” என்றான் {புலோமன்}.(23-25)

“சௌதி தொடர்ந்தார், “இந்த வகையிலே அந்த ராட்சன் {புலோமன்}, தழலுடன் கூடிய அந்த நெருப்பு தேவனிடம் {அக்னியிடம்}, அந்த மங்கை பிருகுவின் மனைவிதானா என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.(26) அந்தத் தேவனோ {அக்னி} பதில் கூற அச்சப்பட்டான். “ஓ நெருப்பு தேவா {அக்னியே}” என்று சொன்ன அவன் {ராட்சசன் புலோமன்}, “ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் எப்போதும் உறைந்திருந்து அவன் அல்லது அவளின் நற்செயல்களுக்கும், தீச்செயல்களுக்கும் சாட்சியாக இருப்பவன் நீ.  ஓ மரியாதைக்குரியவனே {அக்னியே}! என் கேள்விக்கு உண்மையான பதிலைக் கூறுவாயாக.(27) என் மனைவியாக நான் தேர்ந்தெடுத்திருந்தவளை பிருகு அபகரிக்கவில்லையா? நான் முதலில் தேர்ந்தெடுத்ததால் இவள் என்னுடைய மனைவிதான் என்ற உண்மையை அறிவிப்பாயாக.(28) இவள் பிருகுவின் மனைவிதானா என்று நீ பதிலுரைத்த பின்பு, உன் கண்ணெதிரிலேயே இவளை இந்த ஆசிரமத்திலிருந்து நான் தூக்கிச் செல்வேன். எனவே நீ உண்மையுடன் பதிலுரைப்பாயாக” {என்று அந்த ராட்சசன் சொன்னான்}.(29)

சௌதி தொடர்ந்தார் “ஏழு தழல்களைக் கொண்ட அந்தத் தேவன் {அக்னி} அரக்கனின் வார்த்தைகளைக் கேட்டு பொய்யுரைக்கவும் அஞ்சி, அதேயளவு பிருகுவின் சாபத்திற்கும் அஞ்சி பெரும் துயருக்கு ஆளானான். நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்தத் தேவன் {அக்னி} மென்னொலி வார்த்தைகளால் பதிலளித்தான். (30)

“ஓ ராட்சசா {புலோமா}, இந்தப் புலோமையை முதலில் நீயே தேர்ந்தெடுத்தாய். ஆனால் முறையான புனிதமான சடங்குகளுடனும், வேண்டுதல்களுடனும் நீ அவளை {புலோமையை} ஏற்கவில்லை.(31) அருள் கிடைக்கும் என்ற விருப்பத்தில், வெகுதொலைவுக்கும் புகழ்மிகுந்த இந்த மங்கையை {புலோமையை}, பிருகுவுக்கு அவளது தகப்பன் அளித்தான்.(32) ஓ ராட்சசா, அவள் {புலோமா} உனக்கு அளிக்கப்படவில்லை. வேதச்சடங்குகளுடன், என் முன்னிலையில்தான் இந்த மங்கை பிருகு முனிவரால் முறையாக தன் மனைவியாக வரிக்கப்பட்டாள்.(33) இவளே அவள் என்று நானறிவேன். பொய்ம்மை பேச நான் துணிய மாட்டேன். ஓ ராட்சசர்களில் சிறந்தவனே, பொய்ம்மைக்கு இந்த உலகில் மதிப்பில்லை” என்று பதிலளித்தான் {அக்னி}.(34)

சியவனன் பிறப்பு! | ஆதிபர்வம் – பகுதி 6(பௌலோம பர்வம் – 3)சியவனன் பிறப்பும் பெயர்க்காரணமும்; ராட்சசன் மாண்டது; பிருகுவிடமிருந்து அக்னிக்குக் கிடைத்த சாபம்…

சௌதி சொன்னார், “ஓ பிராமணரே {சௌனகரே}, இந்த வார்த்தைகளை நெருப்பு தேவனிடமிருந்து {அக்னியிடமிருந்து} கேட்ட அரக்கன் {புலோமா}, ஆண் காட்டுப் பன்றியின் உருவமெடுத்து, காற்றின் வேகத்துக்கு இணையாக, மனத்தின் வேகத்துடன், அந்த மங்கையைக் {புலோமையைக்} கைப்பற்றித் தூக்கிச் சென்றான்.(1)

இந்தப் பெரும் கொடுமையைத் தாங்கமுடியாமல் கோபப்பட்ட பிருகுவின் குழந்தை, கருப்பையிலிருந்து நழுவி விழுந்தது. அதனாலேயே அந்தக் குழந்தைக்குச் சியவனன்[1] (சியவனன் [அ] ச்யவனன் என்றால் நழுவி விழுந்தவன் என்று பொருள். ச்யவனம் என்றால் நழுவுதல் என்று பொருள்.)என்று பெயர் வந்தது.(2) குழந்தை, தாயின் கருவிலிருந்து நழுவியதையும், அந்தக் குழந்தை சூரியனைப் போல ஒளிர்வதையும் கண்ட ராட்சசன் {புலோமன்} அந்தப் பெண்ணின் {பிருகுவின் மனைவி புலோமையின்} மீதிருந்த பிடியை விட்டுக் கீழே விழுந்து சாம்பலாக மாறினான்.(3)

ஓ பிருகு பரம்பரையில் வந்த பிராமணரே, துயரத்தால் தடுமாறிப் போயிருந்த அந்த அழகிய புலோமை, பிருகு மைந்தனான தனது குழந்தை சியவனனை எடுத்துக் கொண்டு நடந்துசென்றாள்.(4) தனது மைந்தனின் {பிருகுவின்} களங்கமற்ற மனைவி {புலோமை} அழுதுகொண்டிருப்பதைப் பெருந்தகப்பன் பிரம்மனே கண்டான்.(5) அனைவருக்கும் பெருந்தகப்பனான அவன் {பிரம்மன்}, குழந்தையிடம் பாசம் கொண்ட அவளைத் தேற்றினான். அவளது {புலோமாவின்} கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் ஒரு பெரிய நதியை உண்டாக்கின.(6) அந்த ஆறு பெரும் துறவியான பிருகுவின் மனைவியுடைய காலடிகளைத் தொடர்ந்தது. உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} தனது மகனின் {பிருகுவின்} மனைவியைத் {புலோமாவை} தொடரும் அந்த ஆற்றைக் கண்டு, அதற்கு வதுசாரை[2] (வதுசாரை என்றால் பெண்ணுடன் சென்றது என்று பொருள். வது – பெண்; சாரை – ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும் வரிசை.)என்று பெயர் வைத்தான் {பிரம்மன்}. அது சியவனனின் ஆசிரமத்தைக் கடந்து செல்கிறது.(7,8) {அதாவது பின்னாளில் இந்த ஆற்றின் கரையில் தன்னுடைய ஆசிரமத்தை சியவனன் அமைத்துக் கொண்டான்}. இந்த விதத்தில்தான் பிருகுவின் மைந்தனான பெரும் ஆன்ம சக்தியுள்ள சியவனன் பிறந்தான்.

பிருகு, தனது குழந்தை சியவனனையும், அதன் அழகான தாயையும் {மனைவி புலோமையையும்} கண்டார். முனிவர் {பிருகு} கோபத்தில்,(9) “உன்னைக் கடத்த முடிவு செய்து வந்த ராட்சசனிடம் யார் உன்னைக் காட்டிக் கொடுத்தது? ஓ மனதிற்கினிய புன்னகை கொண்டவளே {புலோமையே}, நீ என் மனைவியென்று ராட்சசனுக்குத் தெரிந்திருக்க முடியாது.(10) எனவே, அப்படி உன்னை அரக்கனிடம் சொன்னது {காட்டிக் கொடுத்தது} யார் என்பதைச் சொல், எனது கோபத்தால் அவனைச் சபிக்கப் போகிறேன்” என்று கேட்டார்.(11)

அதற்குப் புலோமை “ஓ, அறுகுணங்கொண்டவரே, அக்னியே (நெருப்பு தேவனே} அந்த ராட்சசனிடம் {புலோமனிடம்} என்னைக் காட்டிக் கொடுத்தது. அவன் (அந்த ராட்சசன் {புலோமன்}}, குராரியைப் {பெண் அன்றிலைப்} போலக் கதறிக் கொண்டிருந்த என்னைக் கடத்திக் கொண்டு போனான்.(12) உமது மகனின் {சியவனனின்} தீவிரப் பிரகாசத்தால் தான் நான் காப்பாற்றப்பட்டேன். அரக்கன் (இந்தக் குழந்தையைப் பார்த்துத்தான்) {சியவனனைப் பார்த்துத்தான்} எனது மீதிருந்த பிடியைவிட்டு, கீழே விழுந்து சாம்பலானான்” என்றாள் {பிருகுவின் மனைவி புலோமை}.(13)

சௌதி தொடர்ந்தார், “புலோமையிடமிருந்து இந்த விவரத்தைக் கேட்ட பிருகு, மிகுந்த கோபங்கொண்டார். கட்டுக்கடங்காத கோபத்தால், “நீ அனைத்தையும் உண்பாயாக” என்று அக்னியைச் சபித்தார்” {என்றார் சௌதி}.(14)

விலகினான் அக்னி! | ஆதிபர்வம் – பகுதி 7(பௌலோம பர்வம் – 4)பொய் சாட்சி சொல்வதின் தீமை; அனைத்துப் புறங்களில் இருந்தும் விலகிக் கொண்ட அக்னி; பிரம்மனின் அறிவுரை; சாபத்தின் பாதிப்புக் குறைப்பு…

சௌதி சொன்னார், “பிருகுவின் சாபத்தால் கோபங்கொண்ட அக்னிதேவன், முனிவரிடம் {பிருகுவிடம்}, “ஓ பிராமணரே {பிருகுவே}, என்னிடம் நீர் இப்படிக் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதற்கு என்ன பொருள்?(1) நான் பெருமுயற்சி செய்து, பாரபட்சமின்றி உண்மையைப் பேசி, நீதியை நிலைக்கச் செய்த போது, வரம்பு {விதிகளை} மீறியதாகத் தாம் என்மேல் எவ்வாறு குற்றம் சாட்ட முடியும்? என்னைக் கேட்டதால், நான் உண்மையான பதிலைச் சொன்னேன்.(2) ஓர் உண்மையை அறிந்தவனைச் சாட்சியாகக் கூப்பிட்டு விசாரிக்கும்பொழுது, அவன் உண்மைக்கு மாறாகப் பேசினால், அவனது முன்னோர்கள் ஏழு தலைமுறையினரையும், சந்ததியினர் ஏழு தலைமுறையினரையும் பாழாக்கியவனாவான் {நரகத்தில் தள்ளியவனாவான்}.(3) தான் முழுவதும் அறிந்திருந்தும், அறிந்ததை முழுமையாகக் கூறவில்லை என்றால், அவனும் குற்ற உணர்வால் கறைபட்டிருப்பான்.(4) என்னாலும் உமக்குச் சாபமிட முடியும். ஆனால் பிராமணர்கள் என்னால் பெரிதும் மதிக்கப்படுபவர்கள். இவையெல்லாம் உமக்கும் தெரிந்தாலும், ஓ பிராமணரே, நான் சொல்வதைக் கேளும்!(5)

எனது தவசக்தியால், நான் என்னைப் பெருக்கிக் கொண்டு, பல உருவங்களில் இருக்கிறேன். தினசரி ஹோமங்கள் நடக்கும் இடங்களிலும், வருடக்கணக்காக நடைபெறும் வேள்விகளிலும் இருக்கிறேன்.(6) (திருமணம் போன்ற) புனிதச் சடங்குகள், பலிகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருக்கிறேன். என் தழல்களின் மேல் வேத விதிகளின் படி இடப்படும் நெய்யைத் தேவர்களும், பித்ருக்களும் பெற்றுச் சாந்தம் அடைகின்றனர்.(7) தேவர்களும், பித்ருக்களும் நீர் {தண்ணீர்} ஆவர். தர்ஷம், பூர்ணமஷம் என்னும் வேள்விகளில் அளிக்கப்படுவனவற்றில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் சமபங்கு உரிமை உள்ளது.(8) ஆகையால் தேவர்களே பித்ருக்கள், பித்ருக்களே தேவர்கள். ஒரேமாதிரியான {சமமான} அவர்களைச் சேர்த்து வைத்தும், பிரித்தும் சந்திரனின் மாறுதல்களுக்கு ஏற்ப வழிபடப்படுகிறார்கள்.(9)

அந்தத் தேவர்களும் பித்ருக்களும் என் மீது ஊற்றப்படுவதையே உண்கின்றனர். எனவே, என்னைத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்குமான வாய் என்று அழைக்கிறார்கள்.(10) புதுமதியில் (அமாவாசையில்) பித்ருக்களும், முழுமதியில் (பௌர்ணமியில்) தேவர்களும், தூய்மையாக்கப்பட்ட நெய்யை, எனது வாய்மூலமாகத்தான் உண்கிறார்கள். அவர்களின் வாயாக இருப்பதால், அனைத்தையும் (சுத்தமானதும், சுத்தமில்லாததும்) உண்பவனாக எவ்வாறு நான் ஆக முடியும்?” என்றான் {அக்னி}.(11)

அதன்பிறகு, அக்னி சிறிது யோசித்துவிட்டு பிராமணர்களின் ஹோமங்களிலிருந்தும், நீண்ட வேள்விகளிலிருந்தும், புனிதச் சடங்குகள் மற்றும் வைபவங்களிலிருந்தும் என எல்லா இடங்களிலிருந்தும் விலகிக் கொண்டான்.(12) நெருப்பில்லாததால் ஓம்களும், வஷட்களும், சுவதாக்களும், சுவாஹாக்களும் (பிரார்த்தனைகளில் சொல்லப்படும் மந்திரங்கள்) இல்லாமல்[1], (ஓம் என்று வேதம் ஓதுவது, வஷட் என்று வேள்வி செய்வது, சுவதா என்று பிதுர்க்கடன் {சிராத்தம்} செய்வது, சுவாகா என்று ஹோமம் செய்வது ஆகியன நின்று போயின என்பது இங்கே பொருள்.)அனைத்து உயிரினங்களும் துயரடைந்தன.(13)

கவலை கொண்ட முனிவர்கள், தேவர்களிடம் சென்று, “குறைவற்றவர்களே! அக்னி இல்லாமல் வேள்விகள் மற்றும் சடங்குகள் தொடர்ந்து நின்று போனதால் மூன்று உலகங்களும் குழப்பத்தில் உள்ளன. காலந்தாழ்த்தாமல் இந்தக் காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுங்கள்” என்றனர். பிறகு முனிவர்களும் தேவர்களும் சேர்ந்து பிரம்மனிடம் சென்றனர்.(14,15) அவனிடம் {பிரம்மனிடம்} அக்னியின் சாபத்தைப் பற்றியும், அதனால் அனைத்து விழாக்களும் தடைப்பட்டிருப்பதையும் பற்றிய விவரங்களையும் எடுத்துரைத்தனர். அவர்கள், “ஓ நற்பேறுபெற்றவரே! ஏதோ காரணத்திற்காகப் பிருகு முனிவரால் அக்னி சபிக்கப்பட்டிருக்கிறான்.(16) உண்மையில் தேவர்களுக்கு வாயாக இருப்பவனும், வேள்விகளில் தரப்படுவதை முதலில் உண்பவனும், வேள்வி நெய்யை உண்பவனுமாகிய அக்னியானவன் எவ்வாறு வரைமுறை இல்லாமல் அனைத்தையும் உண்ணும் நிலைக்கு ஆளாகலாம்?” என்று கேட்டனர்.(17)

இந்த வார்த்தைகளைக் கேட்ட அண்டப்படைப்பாளன் {பிரம்மன்}, அக்னியைத் தன் முன் வர ஆணையிட்டான். பிரம்மன் தன்னைப் போன்றே அனைத்தையும் படைப்பவனும், என்றும் நிலைத்திருப்பவனுமான அக்னியிடம் மென்மையான வார்த்தைகளால்,(18) “உலகங்களைப் படைத்தவன் நீயே, அவற்றை அழிப்பவன் நீயே! மூவுலகங்களைப் பாதுகாப்பவன் நீயே! வேள்விகள் அனைத்தையும் வளர்ப்பவனும் நீயே!(19) எனவே, சடங்குகள் தடைபெறாமல் இருக்குமாறு நடந்து கொள்வாயாக. ஓ வேள்வி நெய்யை உண்பவனே, நீயே எல்லாவற்றிற்கும் தலைவனாக இருக்கும்போது, ஏன் இவ்வளவு மூடனாக நடந்து கொள்கிறாய்?(20) அண்டத்தில் என்றுமே தூய்மையானவன் நீயே! அண்டத்தை நிலைத்திருக்க வைத்திருப்பவனும் நீயே! உன் முழு உடலாலும் வரைமுறையில்லாமல் அனைத்தையும் உண்ணும் தாழ்ந்த நிலைக்கு நீ ஆளாகமாட்டாய்.(21)

ஓ தழல்களால் ஆனவனே, பின்புறத்தில் இருக்கும் தழல்கள் {ஜ்வாலைகள்} மட்டுமே அனைத்தையும் உண்ணும்[2].(தீயின் நாக்கு (அனல்) என்பது முன்பகுதி ஆகும். கனல் எனப்படும் கீழ்ப்பகுதி மட்டுமே தான் பற்றிய பொருட்கள் அனைத்தையும் உண்ணும். அனல் எனும் மேற்பகுதி, எரியும் (உண்ணப்படும்) பொருளிலிருந்து விலகியே இருக்கும்.) (ஊனுண்ணிகள் அனைத்தின் வயிற்றிலும் இருக்கும்) இறைச்சியை உண்ணும் உன்னுடைய உடலும்[3] (இறைச்சியுண்ணும் விலங்குகளின் வயிற்றில் செரிமானம் செய்யும் அக்னி, செரிக்காததைச் செரிக்க வைப்பது. எல்லா உயிரினங்களின் வயிற்றிலும் உணவை செரிப்பதற்காக ஜாடராக்னி என்ற பெயரில் அக்னி இருக்கிறான். அவன் இறைச்சியைச் செரிக்கச் செய்யும் போது உண்ணத்தகாததை உண்பவனாகக் கருதப்படுகிறான்.)வரைமுறையில்லாமல் அனைத்தையும் உண்ணும். எப்படிக் கதிரவனின் கதிர்பட்டதும் எல்லாம் தூய்மையாகின்றனவோ,(22) அப்படியே உன் தழல்களால் எரிக்கப்படுபவை அனைத்தும் தூய்மையாகும். ஓ நெருப்பே, தானாக உருவான எல்லாம்வல்ல சக்தி நீயே.(23) ஓ தலைவனே, உனது அந்தச் சக்தியால் {பிருகு} முனிவரின் சாபம் உண்மையாகட்டும். உன் வாயில் படைக்கப்படுவனவற்றில் உனக்குச் சேர வேண்டிய பங்கையும், தேவர்களுக்குச் சேர வேண்டிய பங்கையும் எடுத்துக் கொண்டு உனது பணியைத் தொடர்வாயாக” என்றான் {பிரம்மன்}.(24)

சௌதி தொடர்ந்தார், “அக்னி அந்தப் பிதாமகனிடம் {பிரம்மனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். மிக உயர்ந்த தலைவனின் {பிரம்மனின்} ஆணைப்படியே, அக்னி தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான்.(25) தேவர்களும், முனிவர்களும், தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே மகிழ்ச்சியுடன் திரும்பினர். முனிவர்கள், சடங்குகளையும், வேள்விகளையும் செய்யத் தொடங்கினார்கள்.(26) உலகில் அனைத்து உயிரினங்களும், மேலுலகில் தேவர்களும் மகிழ்வுற்றனர். அக்னியும் பாவத்திலிருந்து விடுபட்டதால் மகிழ்ந்தான்.(27)

ஓ அறுகுணங்கொண்டவரே! இவ்வாறு பழங்காலத்தில் பிருகுவினால் அக்னி சபிக்கப்பட்டான். புலோமை, அரக்கனின் {புலோமனின்} அழிவு,  சியவனனின் பிறப்பு ஆகியனவற்றுடன் தொடர்புடைய பழைய வரலாறுகள் இவ்வாறே இருக்கின்றன” {என்றார் சௌதி}.(28) 

ருருவும் பிரமத்வரையும்! | ஆதிபர்வம் – பகுதி 8(பௌலோம பர்வம் – 5)மேனகைக்குப் பிறந்த பிரமத்வரையின் கதை; சியவனனின் பேரன் ருரு; பிரமத்வரையை விரும்பிய ருரு; பிரமத்வரைக்கும், ருருவுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்; மணப்பெண்ணைக் கடித்த பாம்பு; தனிமையில் சென்ற ருரு…

சௌதி சொன்னார், “ஓ பிராமணரே, பிருகுவின் மைந்தன் சியவனன், தனது மனைவி சுகன்யாவின் {சுகன்னியின்} கருவறையில் ஒரு மைந்தனைப் பெற்றெடுத்தான். அந்த மைந்தன்தான் ஒப்பற்ற சக்தி கொண்ட, புகழ்பெற்ற பிரமதி ஆவான்.(1) பிரமதி கிரீடச்சி {கிருதாசி} கருவறையில் ருருவைப் பெற்றான். ருரு, தனது மனைவி பிரமத்வரையின் மூலம் சுனகன் என்ற மகனைப் பெற்றான்.(2) ஓ பிராமணரே, அபரிமிதமான சக்தி கொண்ட ருருவின் வரலாற்றை முழுவதுமாகக் கூறுகிறேன் கேட்பீராக.(3)

முன்பொரு காலத்தில் தவசக்தியும், கல்வியும், அனைத்துயிரிடமும் அன்பு செலுத்தும் குணமும் கொண்ட ஸ்தூலகேசர் என்ற ஒரு முனிவர் இருந்தார்.(4) ஓ பிராமண முனிவரே {சௌனகரே}, அந்த நேரத்தில், கந்தர்வர்களின் மன்னன் விஸ்வாவசு, தேவலோக நடனமங்கை மேனகையுடன் நெருக்கமாக இருந்தான்.(5) ஓ பிருகுவின் வழித்தோன்றலே {சௌனகரே}, அந்த அப்சரஸ் மேனகை, அவளது நேரம் நெருங்கியதும், ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கருகே ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(6)

புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையை அவள் ஆற்றங்கரையிலேயே விட்டுச் சென்று விட்டாள். ஓ பிராமணரே {சௌனகரே}, மேனகை என்ற அந்த அப்சரஸ் இரக்கத்தையும், வெட்கத்தையும் துறந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.(7) பெரும் தவவலிமை பொருந்திய ஸ்தூலகேசர், ஆள் நடமாட்டமில்லாத நதிக்கரைப் பகுதியில் அந்தக் குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தையானது இறப்பில்லாதவர்களின் {தேவர்களின்} குழந்தை என்றும், அழகால் ஒளிவீசும் ஒரு பெண்குழந்தை என்றும் கண்டுகொண்டார்.(8,9) அந்தப் பெரும் பிராமணரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஸ்தூலகேசர், இரக்கத்தினால் {மனம்} நிறைந்து அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார். அந்தக் குழந்தையும் அவருடைய புனிதமான இருப்பிடத்திலேயே {ஆசிரமத்திலேயே} வளர்ந்தாள்.(10)

உயர்ந்த மனம் படைத்தவரும், ஆசிர்வதிக்கப்பட்டவருமான ஸ்தூலகேசர் தெய்வீக விதிகளுக்குட்பட்டு {சாஸ்திரங்களுக்குட்பட்டு} பிறந்ததிலிருந்து செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் அந்தந்த காலத்தில் அக்குழந்தைக்குச் செய்தார்.(11) தனது நற்குணங்களாலும், அழகாலும், மற்றும் எல்லாப் பண்புகளாலும் அனைத்துப் பெண்களையும் அவள் மிஞ்சி நின்றதால், பிரமத்வரை[1] (பிரமதா என்றால் பெண்கள் என்று பொருள். வரா என்றால் சிறந்தவள் என்று பொருள். எனவே, பிரமத்வரா என்பது பெண்களிற்சிறந்தவள் என்ற பொருளைத் தரும்.)என்று அந்த முனிவர் அவளை அழைத்தார்.(12) தெய்வத்திற்கு அஞ்சி நடக்கும் ருரு, ஒரு நாள் ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கு அருகே இருந்த பிரமத்வரையைக் கண்டு, காம தேவனின் {மன்மதனின்} கணையால் இதயத்தில் துளைக்கப்பட்டவன் ஆனான்.(13) ருரு, தனது நண்பர்கள் மூலம், பிருகுவின் மகனான தனது தந்தை பிரமதி, தன் ஆசையை அறியும்படி செய்தான்.

பிரமதி தனது மகனுக்காக மிகவும் புகழ்வாய்ந்த ஸ்தூலகேசரிடம் அவளைக் {பிரமத்வரையைக்} கேட்டான்(14). அவளது வளர்ப்புத்தந்தை {ஸ்தூலகேசர்}, அந்தக் கன்னிப்பெண் பிரமத்வரையை ருருவுக்கு நிச்சயித்துக் கொடுத்தார். திருமணம் அடுத்து வரும் வர்க தைவதா {பூரம்} நட்சத்திரத்தில்[2] (கும்பகோணம் ஹஸ்தம் நட்சத்திரம் என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே பூரம் நட்சத்திரம் என்றே இருக்கிறது.)என நிச்சயமானது.(15)

திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, அந்த அழகான கன்னிப்பெண் மற்ற பெண்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது,(16) விதி வசத்தால் அவளது நேரம் நெருங்கி வந்தது. வழியில் சுருண்டு கிடந்த ஒரு பாம்பைக், கவனியாமல், அதை மிதித்துவிட்டாள்.(17) அந்த ஊர்வனவும் {பாம்பும்}, விதியின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தூண்டப்பட்டு, கவனக்குறைவாக இருந்த அவளது உடம்பில் தனது நஞ்சுப் பற்களைச் செலுத்தியது.(18)

பாம்பால் கடிபட்டதும், அவள் {பிரமத்வரை} உணர்விழந்து தரையில் விழுந்தாள். அவளது நிறம் மங்கி ஒளி குன்றியது.(19) கலைந்த கேசத்துடன் கிடந்த அவள் துன்பத்தைத் தருகின்ற ஒரு காட்சி பொருளானாள். காண்பதற்கு இனிமையானவளான அவள் இறந்து கிடப்பதைக் காண்பது வேதனையைத் தந்தது.(20) விஷம் ஏறி, தரையில் விழுந்து கிடந்த அந்தக் கொடியிடையாள், தூங்குபவளை போலக் காட்சியளித்து, அந்நிலையிலும், உயிரோடு இருந்தபோதை விட அழகாக இருந்தாள்.(21)

வளர்ப்புத் தந்தையும் {ஸ்தூலகேசரும்}, மற்ற முனிவர்கள் அனைவரும் அங்கு வந்து, அழகான தாமரை மலரைப் போலத் தரையில் அசைவில்லாமல் கிடக்கும் அவளைக் {பிரமத்வரையை} கண்டனர்.(22) சுவஸ்தியாத்ரேயர், மஹாஜானு, குசிகர், சங்கமேகலர்,(23) உத்தாலகர், கடர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஸ்வேதர், பரத்வாஜர், கௌணகுத்சியர், ஆர்ஷ்டிஷேணர், கௌதமர்,(24) பிரமதி, அவனது மகனான ருரு, மற்றும் அந்தக் கானகத்தில் வசிப்போர் ஆகியோர் அங்கே வந்தனர். பாம்பு கடித்ததால், தரையில் உயிரற்ற சடலமாகக் கிடக்கும் அந்த மங்கையைக் கண்டு அனைவரும் துக்கத்தில் அழுதனர். இந்த நிகழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட ருரு அந்த இடத்தைவிட்டு அகன்றான்.” {என்றார் சௌதி}.(25)

பாம்பினத்தை அழிப்பதாக ருரு ஏற்ற உறுதி | ஆதிபர்வம் – பகுதி 9)(பௌலோம பர்வம் – 6)ருருவின் புலம்பல்; ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு மீண்டும் உயிர்பெற்ற பிரமத்வரை; ருரு பிரமத்வரை திருமணம்; துந்துபா பாம்பைக் கண்ட ருரு..

சௌதி சொன்னார், “பிரமத்வரையின் உயிரற்ற சடலத்தைச் சுற்றி புகழ்பெற்ற பிராமணர்கள் அமர்ந்திருக்கும்போது, பெரும் துக்கமடைந்த ருரு அடர்ந்த கானகத்தின் ஆழத்துக்குச் சென்று சத்தம்போட்டு கதறி அழுதான்.(1) துயரத்தால் உந்தப்பட்டுப் பரிதாபகரமாக ஒப்பாரி வைத்தான். தன் அன்பிற்குரியவளான பிரமத்வரையை நினைத்த ருரு தன் துக்கத்தைத் தீர்த்துக்கொள்ளப் பின் வரும் வார்த்தைகளில்,(2) “ஐயோ! {அந்தப்} பேரழகி இப்படிக் கட்டாந்தரையில் கிடந்து என் துயரைப் பெருகச் செய்தாளே! இதைவிட எங்களுக்கும், அவள் நண்பர்களுக்கும் துயர் தருவது ஏது?(3) நான் கொடையளித்திருந்தால், தவம் செய்திருந்தால், மேலோரை எப்போதும் மதித்திருந்தால், இந்தச் செயல்களின் புண்ணியம் என் அன்பிற்குரியவளை உயிர்மீட்டுத் தரட்டும்!(4) நான் பிறந்ததிலிருந்து ஆசைகளை அடக்கி, நோன்புகளைக் கடைப்பிடித்திருந்தேன் என்றால் அந்த அழகான பிரமத்வரை தரையிலிருந்து எழுந்திருக்கட்டும்” என்று புலம்பினான்.(5)

தன் துணையை இழந்ததினால் ருரு இப்படிக் கதறிக்கொண்டிருக்கையில், தேவலோகத் தூதுவன் ஒருவன், அந்தக் கானகத்துக்கு வந்து, அவனிடம் {ருருவிடம்},(6) “ஓ ருருவே, உனது துயர் மேலீட்டால் நீ இப்போது உதிர்த்தாயே வார்த்தைகள், அவை பயனற்றவை. ஓ நல்லவனே, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு நாட்கள் முடிந்தால், அவர்கள் திரும்பி வருவதில்லை.(7) கந்தர்வருக்கும், அப்சரசுக்கும் பிறந்த அந்தப் பரிதாபத்திற்குரிய குழந்தையின் நாட்கள் முடிந்துவிட்டன. அதனால் மகனே, நீ உன் இதயத்தைத் துயருக்குப் பறிகொடுக்காதே.(8) இருந்தாலும், ஒப்பற்ற தேவர்கள் அவளது உயிரை மீட்கும் வழி குறித்து முன்பே சொல்லி வைத்துள்ளனர். நீ அதன்படி நடந்தால் பிரமத்வரை {மீண்டும்} கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்றான்.(9)

ருரு, “ஓ தேவலோகத் தூதுவரே! அந்தத் தேவர்கள் என்னதான் கட்டளையிட்டிருகின்றனர். முழுவதும் {முழு விவரம்} கூறினால், நான் (அதைக் கேட்டு) அப்படியே நடந்துகொள்வேன். என்னைத் துன்பத்திலிருத்து விடுவிப்பதே உமக்குத் தகும்” என்றான்.(10) அதற்குத் தேவதூதுவன், “உனது வாழ்நாட்களில் பாதியை உனது துணைக்குக் கொடுக்க வேண்டும். பிருகுவின் பரம்பரையில் வந்த ஓ ருருவே, உனது பிரமத்வரை தரையில் இருந்து எழுந்து வருவாள்” என்றான்.(11)

ருரு, “ஓ தேவதூதர்களில் சிறந்தவரே, நான் எனது வாழ்நாளில் பாதியை எனது துணைக்கு அதிவிருப்பத்துடன் கொடுப்பேன். எனது அன்புக்குரியவளை மறுபடியும் அவளது {பழைய} உடைகளுடனே, அழகான அவள் தோற்றத்துடனே எழுப்புவீராக” என்றான்.”(12)

சௌதி சொன்னார், “பிறகு நற்குணங்கள் கொண்டவர்களாகிய கந்தர்வ மன்னனும் (பிரமத்வரையின் தகப்பனும்), தேவதூதனும், இருவரும் தர்மதேவனிடம் சென்று,(13) “ஓ அறமன்னா {தர்மராஜா}, உமக்கு விருப்பமிருந்தால் {சம்மதமிருந்தால்} ருருவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இனிமையான பிரமத்வரையை, அவனது {ருருவின்} பாதி வாழ்நாட்களைக் கொண்டு உயிர்ப்பிப்பாயாக” என்றான்.(14) அதற்கு அந்த அறமன்னன், “ஓ தேவதூதா, உனது விருப்பத்தின்படியே, ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு, அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரமத்வரை எழுந்திருக்கட்டும்” என்றான்.”(15)

சௌதி தொடர்ந்தார், “அறமன்னன் இவ்வாறு சொன்னதும், தேர்ந்த நிறமுடைய அந்த மங்கை பிரமத்வரை, ருருவின் பாதி ஆயுளை எடுத்துக் கொண்டு, தூக்கத்திலிருந்து எழுவதைப் போல் எழுந்தாள்.(16) ருரு தனது பாதி ஆயுளைத் தனது துணை உயிர்த்தெழ தந்ததால், பின்னர் அவனது ஆயுள் சுருங்கியது.(17)

ஒரு நன்னாளில், அவர்களது தந்தைமார், அவர்களுக்கு முறையான சடங்குகளுடன் திருமணம் செய்து வைத்தனர். அந்தத் தம்பதியினரும் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் தங்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.(18) அவ்வளவு அழகான, கிடைப்பதற்கரிதான, தாமரை இதழ்களின் காந்தியை ஒத்த மங்கையை மணந்து கொண்ட பிறகும் கூட, ருரு {பாம்பினத்தின் மீது கொண்ட கோபம் காரணமாக} பாம்பினத்தையே அழிப்பதாக உறுதியேற்றான்.(19) எப்பொழுதெல்லாம் அவன் பாம்பைக் கண்டானோ அப்பொதெல்லாம் பெரும்கோபத்தில் நிறைந்து, ஒரு ஆயுதத்தை எடுத்து அந்தப் பாம்பைக் கொன்று வந்தான்.(20)

ஓ பிராமணரே {சௌனகரே}, ஒரு நாள் ருரு ஒரு பெரிய கானகத்திற்குள் நுழைந்தான். அங்கே ஒரு வயதான துந்துபா {டுண்டுப} வகையைச் {நீர்பாம்பு வகை} சார்ந்த ஒரு பாம்பு தரையில் கிடப்பதைக் கண்டான்.(21) கோபத்தால் உந்தப்பட்ட ருரு, அந்தப் பாம்பைக் கொல்ல மரணக்கோல் {யமனின் தண்டத்தைப்} போல இருந்த தன் தடியை உயத்தினான். அப்போது அந்தத் துந்துபா {தண்ணீர்ப்பாம்பு} ருருவிடம்,(22) “ஓ பிராமணா! நான் உனக்கு எந்தக் கெடுதலையும் செய்யவில்லையே. பிறகு ஏன் கோபங்கொண்டு என்னைக் கொல்ல வருகிறாய்” என்றது” {என்றார் சௌதி}.(23)

சஹஸ்ரபத் பெற்ற சாபம்! | ஆதிபர்வம் – பகுதி 10(பௌலோம பர்வம் – 7)நீர்ப்பாம்புகளுக்கு நேரும் அநீதி குறித்துச் சொன்ன பாம்பு; துந்துபா பாம்பின் முற்பிறவி வரலாறு; சகஸ்ரபத் எனும் முனிவன்…

சௌதி சொன்னார், “{பாம்பின்} அந்த வார்த்தைகளைக் கேட்ட ருரு, “எனது உயிருக்கு ஒப்பான, எனது அன்பு மனைவி ஒரு பாம்பால் கடிக்கப்பட்டாள். ஓ பாம்பே, அதுமுதல் எனது வழியில் வரும் எந்தப் பாம்பையும் கொல்வது எனும் பயங்கரமான உறுதிமொழியை ஏற்றுள்ளேன். எனவே, இப்போது உன்னை நான் அடிக்கப் போகிறேன். நீ உனது உயிரை இழக்கப் போகிறாய்” என்றான்.(1,2)

அதற்குத் துந்துபா, “ஓ பிராமணா, மனிதர்களைக் கடிக்கும் பாம்பினம் வேறு வகை. பெயரளவில் மட்டுமே பாம்புகளாக இருக்கும் துந்துபாக்களை {நீர்ப்பாம்புகளை} நீ கொல்வது தகாது.(3) கடிக்கும் வகையிலான பாம்புகளின் நற்பேறுகள் எங்களுக்கு {நீர்ப்பாம்புகளுக்கு} கிடைப்பதில்லை. ஆனால் அவற்றுக்கு நேரும் கெடுதிகள் அனைத்தும் எங்களுக்கும் {நீர்ப் பாம்புகளுக்கு} நேருகின்றன. அவற்றின் துயரம் எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் அவற்றின் மகிழ்ச்சி எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆகையால் தவறான புரிதலால் துந்துபாக்களைக் {டுண்டுபங்களைக் = நீர்ப்பாம்புகளைக்} கொன்றுவிடாதே” என்றது.”(4)

“சௌதி தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைப் பாம்பிடமிருந்து கேட்ட முனிவர் ருரு, அது பயத்தில் திகைத்து நிற்பதையும், அது நீர்ப்பாம்பே என்பதையும் கண்டு, அந்தத் துந்துபாவைக் {நீர்ப்பாம்பை} கொல்லவில்லை.(5) ஆறு குணங்களைக் கொண்ட முனிவனான அந்த ருரு, “ஓ பாம்பே, முழுவதுமாகச் சொல். இந்த உருவத்தில் இருக்கும் நீ யார்?” என்றான்.(6) அதற்கு அந்தத் துந்துபா, “ஓ ருரு, முன்பு நான் சஹஸ்ரபத் என்ற பெயர் கொண்ட ஒரு முனிவனாக இருந்தேன். ஒரு பிராமணனின் சாபத்தால் இந்தப் பாம்புருவிற்கு மாறினேன்” என்றது.(7) ருரு, “ஓ பாம்புகளில் சிறந்தவனே, கோபத்தில் இருந்த பிராமணனின் சாபத்துக்கு நீ ஏன் ஆளானாய்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு உன்னுடைய {இந்த} பாம்புருவம் தொடரும்?” என்று கேட்டான்.(8)

ருருவுக்கு சஹஸ்ரபத்தின் அறிவுரை! | ஆதிபர்வம் – பகுதி 11(பௌலோம பர்வம் – 8)சஹஸ்ரபத்தும் ககமனும்; ககமனை அச்சமூட்டிய சஹஸ்ரபத்; சஹஸ்ரபத் பெற்ற சாபம்; சகஸ்ரபத்துக்கு அளிக்கப்பட்ட சாப விமோசனம்…

சௌதி தொடர்ந்தார், “அந்தத் துந்துபா பாம்பானது {சஹஸ்ரபத்} ருருவிடம், “முன்பு ஒரு காலத்தில், ககமன் என்ற பெயரில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.(1) அவன் பேச்சில் அவசரப்படுபவனாகவும், கடுந்தவங்களின் பயனால் ஆன்மச் சக்தி கூடியவனாகவும் இருந்தான். ஒருநாள் அவன் {ககமன்} நெருப்பு வேள்வி (அக்னி ஹோத்ரம்) செய்து கொண்டிருக்கும்போது, புற்களால் பாம்பு போன்ற தோற்றத்தைச் செய்து, அதைக்காட்டி விளையாட்டுக்காக அவனை {ககமனை} அச்சுறுத்தினேன். அவன் உடனே மயக்கமுற்று விழுந்தான்.(2) உண்மை பேசுபவனும், தனது விரதங்களில் உறுதியாய் இருக்கும் துறவியுமான அவன் புலனுணர்வு மீண்டவுடன், கோபம் கொண்டு,(3) “சக்தியில்லாத பொய்ப்பாம்பைக் காட்டி என்னை அச்சுறுத்தினாய் ஆதலால், என் சாபத்தினால் நீ நஞ்சில்லாப் பாம்பாகப் போவாயாக” என்ற சபித்தான்.(4) ஓ துறவியே, எனக்கு அவனது தவமகிமை தெரியும், ஆகையால்,(5) கலங்கிய உள்ளத்துடன், கைகூப்பிக் குனிந்து, “நண்பா, விளையாட்டுக்காக, உன்னை மகிழ்விக்கவே அப்படிச் செய்தேன்.(6) என்னை மன்னிப்பதே உனக்குத் தகும். உன் சாபத்தைத் திருப்பி எடுத்துக் கொள்வாயாக” என்றேன்.

அப்படிக் கலங்கிய நிலையில் என்னைக் கண்ட அந்தத் துறவி {ககமன்}, சற்றே நெகிழ்ந்து சூடான கடுமையான மூச்சுடன், “நான் சொன்னது நடக்கவே வேண்டும்.(7,8) நான் சொல்வதைக் கேட்டு உனது இதயத்தில் பதிய வைத்துக் கொள்வாயாக.(9) ஓ நல்லவனே, பிரமதியின் தூய்மையான மைந்தன் ருரு எப்போது உன் முன் தோன்றுவானோ, அப்போது அவனைக் கண்ட மாத்திரத்தில் உனக்குச் சாப விடுதலை கிடைக்கும்” என்றான் {ககமன்}.(10)

நீயே அந்தப் பிரமதியின் மைந்தன் ருரு. எனது சுய உருவை அடைந்ததும், உனக்கு ஒரு நல்லதைச் சொல்கிறேன்” என்றான் துந்துபா {சஹஸ்ரபத்}.(11)

“அப்படிச் சொன்ன பிராமணர்களில் சிறந்தவனான அந்த ஒப்பற்ற மனிதன் {சஹஸ்ரபத்}, தனது பாம்பு வடிவம் நீங்கிப் பிரகாசமான உண்மை வடிவத்தை அடைந்தான்.(12) அதன்பிறகு சிறப்புமிக்க சக்தி கொண்ட ருருவிடம், “ஓ படைத்தவற்றில் முதன்மையானவனே, மனிதர்களுக்கு உயர்ந்த அறம் கொல்லாமையே.(13) எனவே, எந்தப் பிராமணனும் எந்த உயிரினத்தின் உயிரையும் எடுக்கக்கூடாது. பிராமணன் எப்போதும் மென்மையானவனாகவே இருக்க வேண்டும். இதுவே வேதங்களின் மிகப் புனிதமான விதி.(14) ஒரு பிராமணன் வேதங்களையும், வேதாங்கங்களையும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். உயிரினங்களுக்குக் கடவுள் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். எப்படி வேதங்களை நினைவில் வைத்திருப்பது முதற்கடமையோ அவ்விதமே எல்லா உயிர்களுக்கு நன்மை கருதுவதும், உண்மையோடு இருப்பதும், மன்னிப்பதும் {கடமையே} ஆகும். உனது கடமை, க்ஷத்திரியரின் கடமையன்று.(15,16) கடுமையாக நடந்து கொள்வது, செங்கோலுடன் அதிகாரம் செய்வது, குடிமக்களை முறையாக ஆள்வது ஆகியவை க்ஷத்திரியனின் கடமைகள். ஓ ருருவே, முன்பொரு காலத்தில் ஜனமேஜயன் பாம்புகளின் அழிவிற்காக ஒரு வேள்வி நடத்தியபோது[1] (ஆக இந்த ருருவின் கதை மகாபாரதம் நடந்த காலத்திற்குப் பிந்தையது மட்டுமல்ல, மகாபாரதக் கதை நடந்து, கணேசரைக் கொண்டு வியாசர் எழுதிய பிறகு, ஜனமேஜயன் வேள்வியில் மகாபாரதம் வைசம்பாயனரால் உரைக்கப்பட்ட பிறகே நடந்திருக்கிறது. எனவே, இது வியாசரின் சீடரான தன் தந்தை ரோமஹர்ஷணரால் முன்பு நைமிசாரண்யத்தில் சொல்லப்பட்டது என்று சௌதியால் சொல்லப்படும் வரலாறேயன்றி, வைசம்பாயனராலோ, வியாசராலோ சொல்லப்பட்டது அல்ல என்பது இங்கே தெளிவாகிறது.)வேத சாத்திரங்களில் தேர்ந்தவரும், தவசக்தி மிக்கவரும், இருபிறப்பாளர்களில் சிறந்தவருமான ஆஸ்தீகரால் எப்படி அந்தப் பயங்கொண்ட பாம்புகளுக்கு விடுதலை கிடைத்தது என்ற வரலாற்றைக் கேட்பாயாக” என்றான் {சஹஸ்ரபத்}” {என்றார் சௌதி}.(17,18)

உணர்விழந்த ருரு! | ஆதிபர்வம் – பகுதி 12(பௌலோம பர்வம் – 9)ஜனமேஜயன் நடத்திய வேள்வி குறித்து ருரு சஹஸ்ரபத்திடம் கேட்பது; சஹஸ்ரபத் மறைந்துவிடுவது; ஓடிக் களைத்து உணர்விழந்த ருரு, தந்தையிடம் ஆஸ்திகர் வரலாறு கேட்பது …

{சௌனகர் மற்றும் முனிவர்களிடம்} சௌதி தொடர்ந்தார், “ருரு அதன்பிறகு, “இருபிறப்பாளரில் {பிராமணர்களில்} சிறந்தவரே {சஹஸ்ரபத்தே}, ஏன் ஜனமேஜயன் பாம்புகளின் அழிவை விரும்பினான்?(1) ஞானமிகுந்த ஆஸ்தீகர் ஏன் பாம்புகளைக் காப்பாற்றினார்? எப்படிக் காப்பாற்றினார்? அதை முழுவதும் அறிய ஆவலுடன் உள்ளேன்” என்றான்.(2)

முனிவர் {சஹஸ்ரபத்}, “ஓ ருருவே, இந்த முக்கியமான ஆஸ்தீக வரலாற்றை, பிராமணர்களின் உதடுகளால் {வாயிலாக} நீ அறிவாய்” என்று சொல்லி மறைந்து விட்டார்.”(3)

சௌதி தொடர்ந்தார், “மறைந்த முனிவரைத் {சஹஸ்ரபத்தைத்} தேடி ருரு ஓடினான். அந்தக் கானகத்தில் அவரைக் கண்டுபிடிக்கமுடியாமல், களைத்துச் சோர்வடைந்து தரையில் விழுந்தான்.(4) முனிவர் {சஹஸ்ரபத்} சொன்னதை மனத்தில் நினைத்துப் பார்த்தான். மிகவும் குழம்பிப் போய்ப் புலன் உணர்வை இழந்தான்.(5) உணர்வு மீண்டதும், ருரு தனது இல்லத்திற்கு வந்து, தனது தந்தையிடம் {பிரமதியிடம்} இந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டான். அப்படிக் கேட்கப்பட்டதால், அவனது தந்தையும் {பிரமதியும்} கதையைச் முழுவதுமாகச் சொன்னார்” {என்றார் சௌதி}.(6)

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading