ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ ஆதி பர்வம்-ஸ்ரீ ஜதுக்கிரகப்  பர்வம் – 

பொறாமை கொண்ட துரியோதனன்! – ஆதிபர்வம் பகுதி 143-(ஜதுக்கிரகப் பர்வம் – 1)அரக்கு மாளிகை எரியூட்டப்பட்ட வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்ன வைசம்பாயனர்; துரியோதனனுக்கும், திருதராஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்..

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சுபலனின் மகனும் (சகுனியும்), மன்னன் துரியோதனனும், துச்சாசனனும், கர்ணனும் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை செய்து ஒரு தீய திட்டத்தை வகுத்தனர்.(1) குரு குல மன்னன் திருதராஷ்டிரனின் சம்மதத்தைப் பெற்றுக் குந்தியையும், அவளது மைந்தர்களையும் எரித்துவிட அவர்கள் தீர்மானித்தனர்.(2) ஆனால், மேலோட்டமான குறிப்புகளைக் கொண்டே இதயத்தைப் படிக்கும் வல்லமைபெற்றவனும், ஞானியுமான விதுரன், இந்தத் தீயவர்களின் வதனத்தைக் கவனித்தே அவர்களது நோக்கத்தைப் புரிந்து கொண்டான்.(3) பாண்டவர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவனும், உண்மை அறிவும், ஞான ஆன்மாவும் கொண்டவனும், பாவங்களற்றவனுமான அந்த விதுரன், குந்தியும் அவளது மைந்தர்களும் எதிரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தான்.(4)


அதன் பொருட்டுப் பெரும் காற்றையும், கடும் அலைகளையும் சமாளிக்கும் ஒரு படகைக் கொணர்ந்த விதுரன், குந்தியிடம்,(5) “இந்தத் திருதராஷ்டிரர் (குரு) குலத்தின் பெருமைகளையும், வாரிசுகளையும் அழிக்கப் பிறந்திருக்கிறார். தனது தீய ஆன்மாவால், நித்தியமான அறத்தை அவர் கைவிடப்போகிறார்.(6) ஓ! அருளப்பட்டவளே, காற்றிலும், அலைகளிலும் நிலைத்து நிற்கும் ஒரு படகை இந்த நீரோட்டத்தில் தயாராக வைத்திருக்கிறேன். உங்களைச் சுற்றி மரணம் விரித்திருக்கும் வலையிலிருந்து, அப்படகில் ஏறி உனது மைந்தர்களுடன் தப்பித்துக் கொள்வாயாக” என்றார்.(7)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட சிறப்பு வாய்ந்த குந்தி, பெரிதும் துயரடைந்தாள். தனது மைந்தர்களுடன், அந்தப் படகில் அடியெடுத்து வைத்து, கங்கையில் சென்றாள்.(8) பாண்டவர்கள், விதுரனின் ஆலோசனைப்படி, அந்தப் படகைக் கைவிட்டு, தங்கள் எதிரிகள் (தாங்கள் வாரணாவதத்தில் இருந்த போது) கொடுத்த செல்வத்தை எடுத்துக் கொண்டு அடர்ந்த கானகத்திற்குள் பாதுகாப்பாக நுழைந்தனர்.(9) இருப்பினும், பாண்டவர்களின் அழிவுக்காகக் கட்டப்பட்டிருந்த அரக்கு வீட்டில், ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கு வந்திருந்த ஓர் அப்பாவி நிஷாதப் {வேடுவப்} பெண்மணி, தனது மைந்தர்களுடன் எரிந்து போனாள்.(10) {அந்த அரக்கு வீட்டைக் கட்டிய} மிலேச்சர்களில் இழிந்தவனான பாவி புரோச்சனனும் அந்த நெருப்பில் எரிந்து போனான். இப்படியே திருதராஷ்டிரனின் மைந்தர்கள் தங்கள் ஆலோசகர்களுடன், அவர்களது எதிர்பார்ப்புகளில் ஏமாற்றப்பட்டனர் {பாண்டவர்கள் எரிந்தார்கள் என்று நம்பி அவர்கள் ஏமாந்தனர்}.(11)

இப்படியே விதுரனின் ஆலோசனையால், சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள் தங்கள் தாயுடன் காக்கப்பட்டனர். ஆனால், (வாரணாவத) மக்கள், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அறியவில்லை.(12) அரக்குவீடு எரிவதைக் கண்ட வாரணாவத மக்கள் (பாண்டவர்கள் எரிந்து இறந்துவிட்டதாகக் கருதி) பெரிதும் வருத்தப்பட்டனர்.(13) அவர்கள் மன்னன் திருதராஷ்டிரனிடம் நடந்தது அத்தனையும் தெரியப்படுத்தத் தங்கள் தூதர்களை அனுப்பினர். அவர்கள் அந்த ஏகாதிபதியிடம் சென்று, “உமது இலக்கை நீர் அடைந்துவிட்டீர். இறுதியாக, பாண்டவர்களை நீர் எரித்துக் கொன்றுவிட்டீர்!(14) ஓ! குரு குல மன்னா {திருதராஷ்டிரரே}, உமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு, உ்மது பிள்ளைகளுடன் இந்த நாட்டை மகிழ்ச்சியாக அனுபவிப்பீராக” என்றனர். இதைக் கேட்ட திருதராஷ்டிரனும் அவனது பிள்ளைகளும், தங்கள் உறவினர்களையும், க்ஷத்திரியையும் (விதுரனையும்), குரு குலத்தில் முதன்மையான பீஷ்மரையும் சேர்த்துக் கொண்டு, தாங்கள் துக்கமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டு, பாண்டவர்களுக்கு இறுதி மரியாதைகளைச் செய்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(15,16)

ஜனமேஜயன், “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, அரக்கு வீடு எரிந்த வரலாற்றையும், அதிலிருந்து பாண்டவர்கள் தப்பித்த வரலாற்றையும் நான் முழுவதுமாகக் கேட்க விரும்புகிறேன்.(17) தீயவரின் (கணிகரின்) ஆலோசனைகளைக் கேட்டு, செயல்பட்ட அவர்கள் செய்த (கௌரவர்கள்) செயல் கொடுஞ்செயலாகும். நடந்த வரலாறு அத்தனையும் எனக்குச் சொல்வீராக. நான் அதைக் கேட்கும் ஆர்வத்தால் எரிந்து கொண்டிருக்கிறேன்” என்று கேட்டான்.(18)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அரக்கு மாளிகை எரிந்ததையும், ஓ! ஏகாதிபதி! பாண்டவர்கள் தப்பியதையும் பற்றி நான் இப்போது உரைக்கக் கேட்பாயாக.(19) பலத்தால் பீமசேனனும், ஆயுதச் சாதனைகளால் அர்ஜுனனும் விஞ்சியிருப்பதைக் கண்ட தீய துரியோதனன் வருத்தத்துடன் சிந்தனையில் ஆழ்ந்தான்.(20) சூரியனின் மகனான கர்ணனும், சுபலனின் மகனான சகுனியும் பல வழிகளில் பாண்டவர்களின் மரணத்திற்காக முயன்றனர்.(21) பாண்டவர்களும், ஒன்றன்பின் ஒன்றாக அவற்றைத் தடுத்துவிட்டு, விதுரனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைப் பற்றி எப்போதுமே பேசாமலிருந்தனர்.(22)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, பாண்டு மைந்தர்களின் சாதனைகளைக் கண்ட குடிமக்கள், பொது இடங்கள் அனைத்திலும் அவர்களைப் பற்றியே பேசத் தொடங்கினர்.(23) மாளிகை முற்றத்திலும், மற்ற இடங்களிலும் கூடிப் பாண்டுவின் மூத்த மகனே (யுதிஷ்டிரன்), நாட்டை ஆளும் தகுதியைப் பெற்றவன் என்று அவர்கள் பேசினர்.(24) அவர்கள், “திருதராஷ்டிரன், அறிவுக்கண் கொண்டவனாக இருந்தாலும் (பிறவியிலேயே) பார்வையற்றவனாக இருப்பதால், முன்பே அவனால் நாட்டை அடைய முடியவில்லை. எனவே, இப்போது அவனால் எப்படி அடைய முடியும்?(25) கடும் நோன்புகள் நோற்று, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் சந்தனுவின் மைந்தனான பீஷ்மர் முன்பே ஆட்சி உரிமையை நிராகரித்துவிட்டார். அவர் இப்போதும் அஃதை ஏற்கமாட்டார். (26) எனவே, நாம் இப்போது, பாண்டவர்களில் மூத்தவனை (அரியணையில்) உரிய சடங்குகளுடன் {மன்னனாக} அமர்த்தலாம். அவன் வேதமறிந்தவனாகவும், உண்மையானவனாகவும், அன்பானவனாகவும் இருக்கிறான்.(27)  சந்தனுவின் மகனான பீஷ்மரையும், நீதிகள் அறிந்த திருதராஷ்டிரனையும் அவன் வழிபட்டு நிற்கிறான். அவன் முன்னவரையும், பின்னவரையும் அவர்களது பிள்ளைக்குட்டிகளுடன் மகிழ்ச்சியாக வைத்திருப்பான்” என்றனர்.(28)

யுதிஷ்டிரன் மீது அன்பு கொண்டவர்கள் இப்படிப் பேசிச் செல்வதைக் கேட்ட பாவியான துரியோதனன், மிகுந்த துன்பம் அடைந்தான்.(29) பெருந்துயர் கொண்ட அந்தத் தீய இளவரசனால் {துரியோதனனால்} அப்பேச்சுகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொறாமையால் கொதிப்படைந்து, திருதராஷ்டிரனிடம் சென்று,(30) அவன் தனிமையாக இருப்பதைக் கண்டு, மரியாதையுடன் வணங்கி, யுதிஷ்டிரனை ஆதரிக்கும் குடிமக்களால் வெறுப்புண்டு, அந்த ஏகாதிபதியிடம்,(31) “ஓ! தந்தையே, கலைந்து செல்லும் குடிமக்கள் தீய சகுனத்தைக் காட்டும் வார்த்தைகளை உச்சரிப்பதைக் கேட்டேன். உம்மையும், பீஷ்மரையும் கூடக் கடந்து, அவர்கள் பாண்டுவின் மகனை மன்னனாக்க விரும்புகின்றனர்.(32) பீஷ்மர் இந்த நாட்டை ஆளமாட்டார். எனவே அவர் இதை ஏற்றுக் கொள்வார். குடிமக்கள் நமக்குப் பெருந்தீங்கு செய்ய முனைகின்றனர் என்றே தெரிகிறது.(33) பாண்டு, தமது மூதாதையர் நாட்டைத் தமது அறத்தின் சாதனைகளால் அடைந்தார். ஆனால் நீரோ, நாட்டைப் பெற முழுத் தகுதி இருந்தும், உமது குருட்டுத்தன்மையால், அஃதை அடைய முடியவில்லை.(34) பாண்டுவின் வாரிசு என்ற முறையில் பாண்டுவின் மகன் இந்நாட்டை அடைந்தால், அவனுக்குப் பிறகு அவனது மகனும், அதற்குப் பிறகு அவனது மகனின் மகனுமே பாண்டுவின் வழியில் அதைப் பெறுவார்கள்.(35) அவ்வழக்கத்தின் பயனாக, ஓ! உலகத்தின் மன்னா! நாமும், நமது சந்ததியும் அரச குலத்திலிருந்து விலக்கப்பட்டு, மனிதர்கள் அனைவராலும் நிச்சயம் அவமதிக்கப்படுவோம்.(36) எனவே, ஓ! ஏகாதிபதி! நிலைத்த துயரத்திற்கு நாம் ஆளாகாதவாறும், உணவுக்காக மற்றவர்களை நம்பியிருக்கும் நிலை நமக்கு ஏற்படாதவாறும், தகுந்த ஆலோசனைகளைப் பெறுவீராக.(37) ஓ! மன்னா, நீர் ஏற்கனவே அரசுரிமையைப் பெற்றுவிட்டீர், எனவே எவ்வளவுதான் மக்கள் நமக்குச் சாதகமாக இல்லையெனினும் நாமே அரசாட்சியைத் தொடர வேண்டும்” என்றான் {துரியோதனன்}”.(38)

பாண்டவர்களை வாரணாவதம் அனுப்புங்கள் – ஆதிபர்வம் பகுதி 144-(ஜதுக்கிரகப் பர்வம் – 2)பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்புமாறு திருதராஷ்டிரனிடம் வேண்டிய துரியோதனன்; அதிலுள்ள பாதகங்களை எடுத்துக்கூரிய திருதராஷ்டிரன்; சாதகங்களை எடுத்துச் சொன்ன துரியோதனன்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “தனது கண்களைப் போன்ற ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், தனது மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், கணிகர் சொன்னதை நினைத்துப் பார்த்தும், துயரடைந்ததால், அவனது மனம் {நன்மைக்கும் தீமைக்குமாக} ஆட்டம் கண்டது. பிறகு துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி,(1,2) மற்றும் நான்காவதாகத் துச்சாசனனும் சேர்ந்து ஆலோசனை நடத்தினர். இளவரசன் துரியோதனன், திருதராஷ்டிரனிடம்,(3) “ஓ! தந்தையே, புத்திசாலித்தனமான சூழ்ச்சியால், பாண்டவர்களை வாரணாவதம் எனும் நகரத்திற்கு அனுப்புவீராக. அதன் பிறகு நாம் அவர்களைக் குறித்து அஞ்சத் தேவையில்லை” என்றான்.(4)


தனது மகனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், சிறிது நேரம் யோசித்துவிட்டுத் துரியோதனனிடம்,(5) “பாண்டு எப்போதும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தான். அவன் எப்போதும் தனது உறவினர்களிடம் கடமையுணர்வுடனேயே இருந்தான். குறிப்பாக என்னிடம் மிகுந்த கடமையுணர்ச்சியுடன் இருந்தான்.(6) அவன் உலக இன்பங்களைப் பெரிதாகக் கருதாமல், நாடு உட்பட அனைத்தையும் எனக்குத் தந்துவிட்டான்.(7) அவனது மகனும், அவனைப் போலவே அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்து, எல்லா நற்செயல்களும் புரிகிறான். அவன் உலகப்புகழை அடைந்து, மக்களின் அன்புக்குரியவனாகவும் இருக்கிறான்.(8) பல கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் அவனை, தந்தைவழியில் அவனுக்கு வந்த நாட்டிலிருந்து எப்படி விரட்ட முடியும்?(9) அமைச்சர்களும், (நாட்டின்) படைவீரர்களும், அவர்களது பேரன்களும் பாண்டுவால் நன்கு பேணிப் பராமரிக்கப்பட்டவர்கள்.(10) ஓ! மகனே, இப்படிப் பழங்காலத்தில் பாண்டுவால் நன்மையடைந்த குடிமக்கள், யுதிஷ்டிரனுக்காக, நம்மை நமது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சேர்த்துக் கொன்றுவிட மாட்டார்களா?” என்றான்.(11)

அதற்குத் துரியோதனன், “ஓ! தந்தையே, நீர் சொல்வது அனைத்தும் உண்மையே. நமது எதிர்காலத்தின் மீது விழுந்திருக்கும் தீமையைக் கணக்கில் கொண்டு, நாம் மக்களுக்குச் செல்வத்தையும், மரியாதைகளையும் கொடுத்தோமென்றால், அவர்கள் நமது அதிகாரத்தைக் கண்டு நம் பக்கமே நிற்பார்கள். ஓ! மன்னா, பொக்கிஷமும், நாட்டின் அமைச்சர்களும் இந்த நொடியில் நமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றனர்.(12,13) எனவே, நீர் ஏதாவது நல்ல வழிமுறைகளைக் கையாண்டு, பாண்டவர்களை இங்கிருந்து வாரணாவத நகரத்திற்கு வெளியேற்றிவிடுவீராக.(14) ஓ! மன்னா, ஆட்சி உரிமைகள் அனைத்தும் என்னிடம் வந்தபிறகு, குந்தி அவளது மைந்தர்களுடன் அவ்விடத்தில் இருந்து இங்கே திரும்பி வரட்டும்” என்று பதிலுரைத்தான்.(15)

திருதராஷ்டிரன், “ஓ! துரியோதனா, இதே சிந்தனைதான் என் மனத்திலும் இருக்கிறது. ஆனால், அது பாவம் நிறைந்த செயலெனவே, நான் அதை வெளியிடவில்லை.(16) பாண்டவர்கள் நாடுகடத்தப்படுவதைப் பீஷ்மரோ, துரோணரோ, க்ஷத்திரியோ {விதுரரோ}, கௌதமரோ (கிருபரோ) ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.(17) ஓ! அன்பு மகனே, அவர்களின் பார்வையில், கௌரவர்களான நாமும், பாண்டவர்களும் இணையானவர்களே. ஞானமுள்ள அறம்சார்ந்த மனிதர்கள் இரு தரப்புகளுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணமாட்டார்கள்.(18) எனவே, நாம் பாண்டவர்களிடம் இப்படி நடந்து கொண்டால், ஓ! மகனே, நாம் குரு குலத்தவர் கைகளாலும், இந்தச் சிறப்புவாய்ந்தவர்கள் கைகளாலும், இந்த முழு உலகத்தின் கைகளாலும் மரணிக்க மாட்டோமா? {அவர்கள் நம்மைக் கொல்லாமல் விடுவார்களா?}” என்று கேட்டான்.(19)

துரியோதனன், “பீஷ்மருக்கு இரு தரப்பிடமும் அளவு கடந்த பாசமெல்லாம் கிடையாது, எனவே அவர் (சச்சரவு வரும்போது) நடுநிலையே வகிப்பார். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} என் பக்கம் இருக்கிறான். மகன் எங்கிருக்கிறானோ அங்கேதான் தந்தையும் இருப்பார் என்பதில் ஐயம் கிடையாது.(20) துரோணரும், அஸ்வத்தாமரும் இருக்கும் பக்கத்தில் தான் சரத்வானின் மகனான கிருபரும் இருக்க முடியும். அவரால் துரோணரையும், தனது தங்கையின் மகனையும் (அஸ்வத்தாமனையும்) புறக்கணிக்க முடியாது.(21) க்ஷத்திரி (விதுரன்), ரகசியமாக நமது எதிரிகள் பக்கத்தில் இருப்பினும், அவரது வாழ்வை நடத்த நம்மையே நம்பியிருக்கிறார். அவர் பாண்டவர்கள் பக்கம் நின்றாலும், அவர் ஒருவரால் மட்டுமே நமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது.(22)  எனவே, எந்த அச்சமும் கொள்ளாமல் பாண்டவர்களை வாரணாவதத்திற்கு நாடுகடத்துவீராக. அவர்கள் இந்நாளிலேயே அங்கே செல்லத் தக்க நடவடிக்கைகளை எடுப்பீராக.(23) ஓ! தந்தையே, இச்செயலால் சுடர்விட்டெரியும் நெருப்பு உட்கொள்வதுபோல என்னை உட்கொள்ளும் துயரை அணைப்பீராக. அத்துயரம், எனது உறக்கத்தைக் களவாடுகிறது. பயங்கரமான கணை போல எனது இதயத்தைத் துளைக்கிறது” என்றான் {துரியோதனன்}.(24)

வாரணாவதம் கிளம்பினர் பாண்டவர்கள் – ஆதிபர்வம் பகுதி 145-(ஜதுக்கிரகப் பர்வம் – 3)வாரணாவதத்தில் நடக்கும் திருவிழாவையும், அதனை அழகையும் வர்ணித்த அமைச்சர்கள்; பாண்டவர்களின் ஆவல் தூண்டப்பட்டதை அறிந்த திருதராஷ்டிரனன் அவர்களை அங்கே சென்றுவரச் சொன்னது; பாண்டவர்களை வாழ்த்திய பெரியவர்கள்; வாரணாவதம் புறப்பட்ட பாண்டவர்கள்…

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இளவரசன் துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து, மக்களுக்குச் செல்வங்களும், மரியாதைகளும் கொடுத்து அவன் பக்கத்திற்கு இழுத்துக் கொண்டிருந்தான்.(1) அதே நேரத்தில், திருதராஷ்டிரனால் உத்தரவுகள் கொடுக்கப்பட்ட சில புத்திசாலி சபை அங்கத்தினர்கள் {அமைச்சர்கள்}, ஒரு நாள், வாரணாவதம் என்ற நகரத்தின் அழகைப்பற்றி வர்ணிக்கத் தொடங்கினர்.(2) அவர்கள், “வாரணாவதத்தில் வரவிருக்கும் பசுபதி (சிவன்) திருவிழாவைப் பற்றிக் கூறினர். அத்திருவிழாவிற்கு வரும் மக்கள் கூட்டம் பெரியதும்,(3) அதன் நிகழ்வு உலகத்திலேயே மிக உற்சாகமானதும் மகிழ்ச்சிகரமானதும் ஆகும். அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நகரம், பார்வையாளர்களின் இதயங்களையும் வசீகரிக்கிறது” என்றனர். இவ்வாறே திருதராஷ்டிரனால் சொல்லிக் கொடுக்கப்பட்ட அந்த அமைச்சர்கள் அந்நகரத்தைக் {வாரணாவதத்தைக்} குறித்துப் பேசினர்.(4) அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இனிமையான நகரத்திற்குச் செல்ல பாண்டவர்களும் விரும்பினர்.(5)


பாண்டவர்களின் ஆவல் தூண்டப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட அம்பிகையின் மைந்தன் {திருதராஷ்டிரன்} அவர்களிடம்,(6) “இந்த மனிதர்கள் வாரணாவதம் தான் உலகத்திலேயே மிக மகிழ்ச்சிகரமான நகரம் என்று என்னிடம் எப்போதும் சொல்கிறார்கள்.(7) எனவே, குழந்தைகளே, வாரணாவதத்தில் நடக்கும் திருவிழாவைக் காணும் ஆவல் உங்களுக்கு இருந்தால், உங்கள் நண்பர்களுடனும், தொண்டர்களுடனும் அங்கே சென்று தேவர்களைப் போல மகிழ்ச்சியாக இருப்பீராக.(8) அங்கே பிராமணர்களுக்கும், (அங்கே கூடியிருக்கும்) இசைக் கலைஞர்களுக்கும் முத்துக்களையும், ரத்தினங்களையும் அளிப்பீராக.நீங்கள் விரும்பும்வரை அங்கே தேவர்களைப் போல சில காலம் மகிழ்ச்சியாக விளையாடிய பிறகு ஹஸ்தினாபுரம் திரும்புங்கள்” என்றான்”.(9,10)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “திருதராஷ்டிரனின் நோக்கங்களை யுதிஷ்டிரன் புரிந்து கொண்டாலும், தான் பலவீனமாக இருப்பதைக் கருதிய அவன், மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான்.(11) அப்போது, சந்தனுவின் மகனான பீஷ்மர், அறிவுள்ள விதுரன், துரோணர், பாஹ்லீகர், கௌரவரான சோமதத்தர், கிருபர், அஸ்வத்தாமன், பூரிஸ்ரவஸ், மற்ற சபை உறுப்பினர்கள், பிராமணர்கள் மற்றும் துறவிகள், புரோகிதர்கள் மற்றும் குடிமக்கள், சிறப்புமிகுந்த காந்தாரி ஆகியோரிடம் யுதிஷ்டிரன், மெதுவாகவும், எளிமையாகவும், “திருதராஷ்டிரர் உத்தரவின் பேரில் நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் கூடிய நாங்கள், மக்கள் கூட்டம் நிறைந்ததும், மகிழ்ச்சி நிறைந்ததுமான வாரணாவதத்திற்குச் செல்கிறோம்.(15) நாங்கள் வளமை அடையவும், பாவங்கள் எங்களை அணுகாதிருக்கவும் எங்களை வாழ்த்துவீராக” என்றான்.(16)

பாண்டுவின் மூத்த மகன் இப்படிக் கேட்டுக் கொண்டதும், கௌரவத் தலைவர்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக அவர்களை வாழ்த்தி, “பாண்டுவின் மைந்தர்களே, உங்கள் வழியெங்கும் அனைத்துக் கூறுகளும் (ஐம்பூதங்களும்) உங்களுக்கு நற்பேற்றை அளிக்கட்டும். சிறு தீமையும் உங்களை அணுகாதிருக்கட்டும்” என்றனர்.(17,18)

பாண்டவர்கள், (தங்கள் பங்கு) நாட்டை அடைய நல்லெண்ணங்களை உண்டாக்கும் சிலச் சடங்குகளைச் செய்துவிட்டு, தங்கள் தயாரிப்புகளை முடித்துக் கொண்டு வாரணாவதத்திற்குப் புறப்பட்டுச்சென்றர்.(19)

புரோசனனிடம் பேசிய துரியோதனன் – ஆதிபர்வம் பகுதி 146-(ஜதுக்கிரகப் பர்வம் – 4)புரோசனனை அழைத்து அரக்கு வீட்டைக் கட்டும்படி பணித்த துரியோதனன்; விரைவாக வாரணாவதம் சென்று துரியோதன் சொன்ன அனைத்தையும் செய்து முடித்த புரோசனன்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, மன்னன் {திருதராஷ்டிரன்}, பாண்டவர்களிடம் இப்படிக்கேட்டுக் கொண்டதைக் கேட்ட தீய துரியோதனன், பெரும் மனநிறைவு கொண்டான்.(1)

அதன் பிறகு, ஓ! பாரதக் குலத்தில் காளையே, அவன் {துரியோதனன்} தனது அமைச்சனான புரோசனனைத் தனிமையில் அழைத்து, அவனது வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டு,(2) “ஓ! புரோசனா, செல்வம் நிரம்பிய இந்த முழு உலகும் எனதே. ஆனால் எனக்கு இணையாகவே அஃது உனக்கும் சொந்தமாகும். எனவே, அதைக் காப்பது உனது கடமையாகும்.(3) உன்னை விட நம்பிக்கைக்குரிய அமைச்சர் எனக்கு வேறு யாரும் இல்லை. எனவே, ஓ! ஐயா, எனது ஆலோசனைகளைக் காத்து {ரகசியமாக வைத்துக் கொண்டு}, எனது எதிரிகளை உனது புத்திசாலித்தனமான வழிமுறைகளால் நீ அழிக்க வேண்டும். நான் சொல்வதைப் போலச் செய்வாயாக.(4,5)

திருதராஷ்டிரர், பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்பியிருக்கிறார். அவர்கள் அங்கே திருதராஷ்டிரர் உத்தரவின் பேரில் விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பர்.(6) எனவே, வேகமாகச் செல்லக்கூடியதும், கோவேறு கழுதைகள் பூட்டப்பட்டதுமான ஒரு தேரில் ஏறி, இன்றே நீ அங்கே செல்ல வேண்டும்.(7) அங்கே சென்று, {நகரின் வெளியே} ஆயுதக் கிடங்கின் அருகில் ஒரு நாற்கோண அரண்மனையைக் கட்டி விலை உயர்ந்த பொருட்களாலும், ஆசனங்களாலும் நிரப்பி, அந்த மாளிகையைக் (துருவியறியும் கண்களுடன்) காத்து வருவாயாக.(8) கிடைக்கும் சணல், பிசின் மற்றும் எளிதாக எரியும் வேறு பொருட்களையும் அதில் (அவ்வீட்டைக் கட்டுவதில்) பயன்படுத்தவும்.(9) சிறிது மண்ணும், நெய்யும், எண்ணெயும், கொழுப்பும் சேர்த்து, அதிக அளவில் அரக்கையும் சேர்த்து அதன் சுவர்களில் பூசச் செய்வாயாக.(10) வீடு முழுவதும் சணலையும், எண்ணெயையும், தூய்மையாக்கப்பட்ட நெய்யையும், அரக்கையும், மரங்களையும் பரப்பி வைத்து பாண்டவர்களோ மற்றவர்களோ அந்த வீடு எளிதாக எரிந்து விடும் என்று முடிவு செய்யாதவாறு அமைப்பாயாக.(11,12)

அப்படிப்பட்ட ஒரு மாளிகையை அமைத்துப் பாண்டவர்களைப் பெரும் மரியாதையுடன் அங்கே அழைத்துச் சென்று, அவர்களைக் குந்தியுடனும், அவர்களது நண்பர்களுடனும் அதில் வசிக்கச் செய்வாயாக.(13) திருதராஷ்டிரர் குறை சொல்லாதவாறு, தொழில் திறமைவாய்ந்த தொழிலாளர்களைக் கொண்டு மேலான ஆசனங்களையும், வாகனங்களையும், படுக்கைகளையும் அவர்களுக்கு அமைத்துக் கொடுப்பாயாக.(14) காரியம் முடியும் வரை வாரணாவதத்தில் உள்ள எவரும் எதையும் அறியாத வண்ணம் அதைச் செய்ய வேண்டும்.(15) பிறகு, பாண்டவர்கள் நன்றாக உறங்குவதை உறுதி செய்து கொண்டு, அந்த மாளிகையில் வெளிப்புற வாயிலில் அச்சமில்லாமல் நீ தீ வைக்க வேண்டும்.(16) அதன்காரணமாகப் பாண்டவர்கள் எரிந்து சாக வேண்டும். மாளிகை எரிந்ததால் பாண்டவர்கள் இறந்தார்கள் (அஃது ஒரு விபத்து) என்று மட்டுமே மக்கள் சொல்ல வேண்டும்” என்றான் {துரியோதனன்}.(17)

குரு இளவரசனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன புரோசனன், வேகமான கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேரில் வாரணாவதம் சென்றான்.(18) ஓ! மன்னா, அங்கே சென்று நேரங்கடத்தாமல், துரியோதனனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவன் சொன்ன அனைத்தையும் செய்து முடித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(19)

விதுரரின் பிதற்றல் மொழி – ஆதிபர்வம் பகுதி 147-(ஜதுக்கிரகப் பர்வம் – 5)-தொடர்ந்து வந்த நகர மக்களைத் திருப்பி அனுப்பிய யுதிஷ்டிரன்; மிலேச்ச மொழியில் யுதிஷ்டிரனிடம் பேசிய விதுரன்…

வைசம்பாயனர் சொன்னார், “அதேவேளையில் பாண்டவர்கள் காற்றின் வேகத்தில் செல்லக்கூடிய நல்ல குதிரைகள் பூட்டப்பட்டத் தேரில் ஏறினர். தேர்களில் ஏறுவதற்கு முன்னர், பெரும் துயரத்துடன் பீஷ்மர், மன்னன் திருதராஷ்டிரன், சிறப்புமிகுந்த துரோணர், கிருபர், விதுரன் மற்றும் குரு குல மூத்தவர்களின் பாதங்களை அவர்கள் தொட்டனர்.(1,2) மூத்தவர்களை மரியாதையுடன் வணங்கிச் சிறுவர்களையும் தங்களுக்குச் சமமாக வாரியணைத்து, அரசகுல மகளிர் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு, அவர்களை மரியாதையுடன் வலம் வந்து, நாட்டின் குடிமக்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, தங்கள் நோன்புகளின் மீது முழு மனம் வைத்து வாரணாவதத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(3,4) பெரும் ஞானமுள்ள விதுரனும், குரு குலத்தின் காளைகளான மற்றவர்களும் மற்றும் குடிமக்கள் அனைவரும் பெரும் துயர் கொண்டு, குரு குலத்தின் புலிகளான அவர்களைச் சிறிது தூரத்திற்குப் பின் தொடர்ந்து சென்றனர்.(5)

பாண்டவர்களைத் தொடர்ந்த குடிமக்களில் சிலர் துன்பத்துடன் செல்லும் பாண்டுவின் மகன்களைக் கண்டு மிகவும் வருத்தத்துடன் சத்தமாக,(6) “தீய ஆன்மா கொண்ட மன்னன் திருதராஷ்டிரன் ஒரே கண்ணுடன் எந்தப் பொருளையும் பார்ப்பதில்லை. அந்தக் குரு குல ஏகாதிபதி அறத்தின் பக்கம் தனது பார்வையைச் செலுத்த மறுக்கிறான்.(7) பாவங்களற்ற யுதிஷ்டிரனோ, பலம்வாய்ந்த மனிதர்களின் முதன்மையான பீமனோ, அல்லது குந்தியின் (இளைய) மகனான தனஞ்சயனோ {அர்ஜுனனோ} இனி எப்போதும் குற்ற உணர்ச்சி (புரட்சிப் போர் தொடுக்கும் பாவத்தினால் உண்டாகும் குற்ற உணர்ச்சி) கொள்ளத் தேவையில்லை.(8) இவர்களே அமைதியுடன் இருக்கும்போது, மாத்ரியின் சிறப்புமிகுந்த மகன்களால் என்ன செய்ய முடியும்?

இவர்கள் தங்கள் தந்தையின் மூலம் நாட்டையடைந்ததைத் திருதராஷ்டிரனால் பொறுக்க முடியவில்லை.(9) பாண்டவர்கள் அந்தப் பாவகரப் பூமிக்கு நாடு கடத்தப்படுவதில் துயருற வேண்டிய பீஷ்மர், இந்தப் பெரும் அநீதியை எப்படி அனுமதித்தார்?(10) குரு குலத்தைச் சார்ந்த சந்தனுவின் மைந்தனான விசித்திரவீரியனும், அரசு முனியான பாண்டுவும் ஒரு தந்தையைப் போல நம்மைக் கவனித்துக் கொண்டனர்.(11) ஆனால் இப்போதோ, அந்த மனிதர்களில் புலியான பாண்டு தேவலோகம் உயர்ந்துவிட்டான். பாண்டுவின் மைந்தர்களான இந்த இளையவர்களைத் திருதராஷ்டிரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(12) இந்த நாடு கடத்தலை {இவ்வாறு இவர்கள் நாடுகடத்தப்படுவதை} ஏற்காத நாமும், இந்த அற்புதமான நகரத்தையும், நமது இல்லங்களையும் துறந்து, யுதிஷ்டிரன் செல்லுமிடத்திற்கே செல்வோமாக” என்றனர்.(13)

யுதிஷ்டிரனோ, தானே துக்கத்துடன் வந்து கொண்டிருந்தாலும், வழியில் துயருற்ற குடிமக்களின் சொற்களைக் கேட்டுச் சிறிது நேரம் சிந்தித்து, அவர்களிடம்,(14) “மன்னன் {திருதராஷ்டிரர்} நமக்குத் தந்தையைப் போன்றவர்; மதிப்புக்குரியவர்; அவர் நமது ஆன்ம குருவும் நமக்கு முதன்மையானவரும் ஆவார். எப்போதுமே அவர் சொல்வதைச் ஐயம் இல்லாத இதயத்துடன் ஏற்று, செயல்படுத்துவதே நமது கடமையாகும்.(15) நீங்கள் எங்களது நண்பர்கள். எங்களை வலம் வந்து, உங்கள் அருளாசிகளால் எங்களை மகிழ்வித்து, உங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புவீராக.(16) உங்களால் எங்களுக்குக் காரியமாக வேண்டிய காலம் வரும்போது, எங்களுக்கு நன்மை செய்யக்கூடியவையும், ஏற்புடையவையுமான செயல்களை நிச்சயமாக நீங்கள் சாதிப்பீர்கள்” என்றான்.(17)

இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டதும், அக்குடிமக்கள் பாண்டவர்களை வலம் வந்து, தங்கள் ஆசிகளைக் கூறி, தத்தமது வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(18) பாண்டவர்களைக் குடிமக்கள் பின்தொடர்வது நின்றதும், நீதிகளனைத்தும் அறிந்த விதுரன், பாண்டவர்களில் மூத்தவனை {யுதிஷ்டிரனை} விழிப்படையச் செய்ய இவ்வாறு பேசினான்.(19) பிதற்றல் மொழியை (மிலேச்சர்களின் மொழி) நன்கறிந்தவனும், கல்விமானுமான விதுரன், மற்றவர் அறியாவண்ணம், அதே மொழியை நன்கறிந்த யுதிஷ்டிரனுக்கு மட்டுமே புரியும்போடி, “அரசியலின் அறிவியலுக்கு ஏற்ப எதிரியின் திட்டங்களைக் கண்டறிந்த ஒருவன், அவற்றைப் புரிந்து கொண்டதும், ஆபத்துகள் அனைத்தையும் விலக்கும் முறையில் நடந்து கொள்ள வேண்டும்.(20) உடலை வெட்டுவதற்கு, இரும்பால் செய்யப்படாத கூரிய ஆயுதங்களும் இருக்கின்றன என்பதை அறிந்த ஒருவன், அதைத் தடுக்கும் முறைகளையும் அறிந்திருந்தால், அவனுக்குப் பகைவரால் காயமேற்படுத்த முடியாது.(21)

வைக்கோலையும், மரத்தையும் உண்பவனோ {நெருப்போ}, பனியை உலர்த்துபவனோ {சூரியனோ}, ஆழ்ந்த கானகத்தின் துளையில் வசிப்பவர்களை {எலி, முயல் போன்றவைகளை} எரிக்க முடியாது என்பதை அறிந்த அறிவுள்ளவன் பாதுகாப்பாக வாழ்ந்திருப்பான்.(22) குருடன் வழியைப் பார்ப்பதில்லை. குருடனுக்குத் திசைகளின் அறிவும் கிடையாது. உறுதியற்ற ஒருவன் வளத்தை {செழிப்பை} அடைவதில்லை. இதை நினைவில் வைத்துக் கொண்டு, எப்போதும் விழிப்புடனிருப்பாயாக.(23) எதிரிகளால் கொடுக்கப்படும் இரும்பாலாகாத ஆயுதத்தை (எரியக்கூடிய வீடு) எடுக்கும் மனிதன், தனது வசிப்பிடத்தை நரியின் வசிப்பிடம் போல ஆக்கினால் ({பொந்துகளுடன்} வெளியே செல்லும் வழி பல வைத்தால்) நெருப்பிலிருந்து தப்பிக்கலாம்.(24) ஒரு மனிதன் பயணிப்பதனால் வழிகள் பற்றிய ஞானத்தை அடையலாம். நட்சத்திரங்களின் துணை கொண்டு திசையை அறியலாம். தன்னிடம் உள்ள ஐந்தைக் (ஐம்புலன்களைக்) கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவனை, அவனது எதிரிகளால் ஒடுக்க முடியாது” என்றான் {விதுரன்}.(25)

இப்படிச் சொல்லப்பட்ட பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன், கல்விமான்களில் முதன்மையான விதுரனிடம், “உம்மை நான் புரிந்து கொண்டேன்” என்றான். அப்போது விதுரன், பாண்டவர்களுக்குச் சில அறிவுரைகளைச் சொல்லிச் சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற பிறகு, அவர்களை வலம் வந்து, அவர்களிடம் விடைபெற்று தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(26,27)

குடிமக்களும், பீஷ்மரும், விதுரனும் சென்ற பிறகு, குந்தி யுதிஷ்டிரனிடம் வந்து,(28) “மக்கள் முன்னிலையில் க்ஷத்ரி {விதுரன்} சொன்னது எதுவுமே விளங்கவில்லையே.  அவர் எதுவுமே சொல்லாதது போலவே இருந்தது. ஆனால் நீயும் அதே போன்ற வார்த்தைகளால், அதே குரலில், பதிலுரைத்தாய். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.(29) நாங்கள் அறிந்து கொள்வதில் தவறில்லை என்றால், நீயும், அவரும் பேசிக் கொண்ட அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டாள்.(30)

யுதிஷ்டிரன், “அறம் சார்ந்த விதுரர், நமக்காகக் கட்டப்பட்டிருக்கும் மாளிகை எளிதில் எரியத்தக்க பொருட்களால் ஆனது என்று என்னிடம் சொன்னார். மேலும், தப்பிக்கும் வழியை நீ அறியாமல் இருக்கக்கூடாது என்றும்,(31) தனது புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் முழு உலகத்தின் அரசாட்சியையும் அடைவான் என்றும் சொன்னார். அதற்கு நான், விதுரரிடம் “நான் உம்மைப் புரிந்து கொண்டேன்” என்று சொன்னேன்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(32)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டவர்கள் பங்குனி மாதத்தின் எட்டாவது நாளில், ரோஹிணி நட்சத்திரத்தில் வாரணாவதம் வந்து சேர்ந்து, அந்த நகரத்தையும், நகர மக்களையும் கண்டனர்”.(33)

யுதிஷ்டிரன் சொன்ன உபாயம் – ஆதிபர்வம் பகுதி 148-(ஜதுக்கிரகப் பர்வம் – 6)-வாரணாவதத்திற்குள் நுழைந்த பாண்டவர்கள்; பாண்டவர்களை அரக்கு மாளிகைக்கு இட்டுச் சென்ற புரோசனன்; மாளிகையின் தன்மையை அறிந்து கொண்ட யுதிஷ்டிரன்; சுரங்கம் தோண்ட வேண்டும் என்று பீமனிடம் சொன்ன யுதிஷ்டிரன்..

வைசம்பாயனர் சொன்னார், “பாண்டவர்கள் வருகையைக் கேள்விப்பட்ட (வாரணாவதத்தின்) குடிமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, வேகமாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் வாரணாவதத்தைவிட்டு வெளியே வந்தனர். அந்த மனிதர்களில் சிறந்தவர்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொடுப்பதற்காக, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள பல வகைப் பரிசுப் பொருட்களுடன் அவர்கள் வந்தனர்.(1,2) வாரணாவதத்தின் மக்கள், குந்தி மைந்தர்களை அணுகி, “ஜெயம்” என்ற வார்த்தையைச் சொல்லி, அவர்களைச் சூழ்ந்து நின்றனர்.(3) இப்படி மக்களால் சூழப்பட்ட மனிதர்களில் புலியான யுதிஷ்டிரன், தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் வஜ்ரதாரியை {இந்திரன்} போலப் பிரகாசமாக இருந்தான்.(4) அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பாவமற்றவர்கள், குடிமக்களால் நன்கு வரவேற்கப்பட்டு, மக்கள்தொகை நிறைந்ததும், அலங்காரமானதுமான அந்த வாரணாவதத்துக்குள் நுழைந்தனர்.(5)

ஓ! ஏகாதிபதியே, அந்த நகருக்குள் நுழைந்த அவ்வீரர்கள், முறையாகத் தங்கள் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிராமணர்களின் வசிப்பிடத்துக்குச் சென்றனர்.(6) பிறகு, நகர அதிகாரிகளின் வசிப்பிடங்களுக்கும், அதன்பின்பு சூதர்கள், மற்றும் வைசியர்கள் வசிப்பிடங்களுக்கும், ஏன் சூத்திரர்களின் வசிப்பிடங்களுக்கும் கூடச் சென்றனர்.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, குடிமக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பாண்டவர்கள், புரோசனனைத் தங்களுக்கு முன்னால் செல்லவிட்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(8)  பின்பு அவர்களுக்காகக் கட்டி வைக்கப்பட்ட அரண்மனைக்குச் சென்றனர்.  புரோசனன் அவர்களுக்கு முன்பு உணவையும், நீரையும், படுக்கைகளையும், தரைவிரிப்புகளையும், எல்லாவகைப் பொருட்களையும் வைத்தான்.(9) விலையுயர்ந்த ஆடைகளைப் பூண்டு கொண்ட பாண்டவர்கள், புரோசனனாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டு, வாரணாவதத்திலேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தனர்.(10)

அப்படியே பாண்டவர்கள் அங்கே பத்து இரவுகள் தங்கினார்கள்.  அவ்வீடு சபிக்கப்பட்ட வீடாயிருப்பினும், புரோசனன் அவர்களிடம் “இஃது ‘அருளப்பட்ட வீடு’ என அழைக்கப்படுகிறது” என்று சொன்னான்.(11) அதன்பிறகு அந்த மனிதர்களில் புலிகள், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு அந்த மாளிகைக்குள் கைலாசத்திற்குள் புகும் குஹ்யகர்கள் (யக்ஷர்கள்} போல புரோசனனுடன் நுழைந்தனர்.(12) அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், அந்த வீட்டை ஆய்வு செய்து, பீமனிடம் அஃது எரியத்தக்கப் பொருட்களால்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்தான்.(13)

அரக்கைத் {அரக்கு} தயார் செய்யும்போது அதனுடன் கலக்கப்பட்ட நெய் மற்றும் கொழுப்பின் வாசத்தை நுகர்ந்து கண்ட யுதிஷ்டிரன் பீமனிடம், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இவ்வீடு உண்மையிலேயே எரியத்தக்க பொருட்களாலேயே கட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இது தெளிவாகத் தெரிகிறது.(14) நமது எதிரி, நம்பத்தகுந்த கட்டுமானக் கலைஞர்களைக் கொண்டு, சணல், குங்கிலியம், காய்ந்த புல், வைக்கோல், மூங்கில் ஆகியவற்றைத் தெளிந்த நெய்யில் ஊறவைத்து, அவற்றைக் கொண்டு இவ்வீட்டை அழகாகக் கட்டியிருக்கிறான். தீயவனும், பாவியும், துரியோதனனின் உத்தரவின்படி செயல்படுபவனுமான இந்தப் புரோசனன், என்னை நம்பிக்கைக்குரியவனாகக் காணும்போது எரித்தவிடலாம் என்ற நோக்கோடு இங்கே தங்கியிருக்கிறான்.(15,16) ஆனால், ஓ! பிருதையின் மகனே {பீமனே}, பெரும் புத்திக்கூர்மை கொண்ட விதுரர், இந்த ஆபத்தை உணர்ந்தே என்னை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார்.(17) நம் மீது கொண்ட பாசத்தால், எப்போதும் நமது நன்மையையே விரும்பும் நமது சிறிய தகப்பனார், அனைத்தையும் அறிந்து கொண்டு, துரியோதனனின் கட்டளையால் இந்தப்பாவிகளால் கமுக்கமாகக் கட்டப்பட்ட இந்த ஆபத்தான வீட்டைப் பற்றி நமக்குச் சொல்லியிருக்கிறார்” என்றான்.(18)
இதைக் கேட்ட பீமன், “ஐயா, இஃது எரியத்தக்க பொருட்களால் கட்டப்பட்ட வீடு என்பதை நீர் அறிந்தால், உடனே நாம் இந்த இடத்தைவிட்டு அகன்று நாம் முதலில் தங்கியிருந்த இடத்திற்கே[1]திரும்புவது நமக்கு நன்மையைத் தரும்” என்றான்.(19)(பாண்டவர்கள் வாரணாவதத்திற்கு வந்ததும், வேறெங்கோ ஒரு வீட்டில் தங்கியிருந்திருக்க வேண்டும். பிறகு, புரோசனனால் அழைக்கப்பட்டு அரக்கு மாளிகைக்கு வந்திருக்க வேண்டும்.)

யுதிஷ்டிரன், “நாம் இங்கேயே வாழ வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஐயத்திற்கிடமில்லாமல் எச்சரிக்கையுடனும், உணர்வுகள் விழிப்பான நிலையிலும் நாம் வாழும்போதே, ஏதாவது செய்து இங்கிருந்து தப்புவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.(20) புரோசனன் நமது முகச் சுருக்கங்களைக் கண்டு கொண்டால் {நாம் ஐயுறுகிறோம் என்பதை அறிய வந்தால்}, அவன் விரைவாகச் செயல்பட்டுத் திடீரென நம்மை எரித்துக் கொன்றுவிடக் கூடும்.(21) உண்மையில் புரோசனன் அவதூறையும், பழிபாவத்தையும் சிறிதும் மதிக்காதவனாவான். துரியோதனனின் உத்தரவுக்கிணங்கியே அந்தப் பாவி இங்குத் தங்கியிருக்கிறான்.(22) நாம் எரிக்கப்பட்டால் பீஷ்மர் கோபம் கொள்வாரா? அப்படிக் கோபப்பட்டுக் கௌரவர்களின் கோபத்திற்கு அவர் ஏன் ஆளாகப் போகிறார்?(23) அல்லது நமது பாட்டனான பீஷ்மரும், மற்ற குரு குலத்தின் காளைகளும், தீய காரியங்களுக்கு எதிராகச் சீறும் அறச்சீற்றம் கொண்டு கோபமடையவும் வாய்ப்பிருக்கிறது.(24) எவ்வாறிருப்பினும், எரிக்கப்படுவதற்கு அஞ்சி, நாம் இங்கிருந்து தப்பித்தோமென்றால், ஆட்சியை விரும்பும் துரியோதனன், நாம் இருக்கும் இடத்தைத் தேடித் தனது ஒற்றர்களைக் கொண்டு நமக்கு மரணத்தை ஏற்படுத்துவான்.(25)

நமக்கு அதிகாரமும் இல்லை; பலமும் இல்லை. ஆனால், துரியோதனன் இரண்டையும் கொண்டிருக்கிறான். நமக்கு நண்பர்களோ, கூட்டாளிகளோ இல்லை. ஆனால் துரியோதனன் இரண்டையும் கொண்டிருக்கிறான். நாம் செல்வமற்றிருக்கிறோம். துரியோதனனுக்கோ கருவூலம் முழுமையும் அவனது கட்டுக்குள் இருக்கிறது.(26) எந்த வழிமுறையைக் கையாண்டாவது நம்மை அவனால் கொல்ல முடியும் என்பது நமக்குத் தெளிவாகவில்லையா? எனவே, நாம் இந்தப் பாவியை (புரோசனனை) ஏமாற்றி, நாட்களைக் கடத்திச் சிறிது காலத்திற்கு நம்மை மறைத்துக் கொள்வோம் {தலைமறைவாக இருப்போம்}.(27) வேட்டையாடும் வாழ்வை நோற்று இப்பூமியில் திரிந்து வருவோம். அப்போது, தப்புவதற்குள்ள வழிகள் அனைத்தையும் நாம் அறிந்திருப்போம்.(28) மேலும், இன்றே, மிகக் கமுக்கமாக {இரகசியமாக} நமது அறைக்குள் ஒரு சுரங்கப் பாதையை உண்டாக்குவோம். இவ்வழியில் செயல்பட்டு, நாம் செய்வதனைத்தையும் மறைத்தே செய்து வந்தால், நெருப்பால் நம்மை உட்கொள்ள முடியாது.(29) நாம் இங்கேயே தங்கி, புரோசனனோ, வாரணாவத குடிமக்களோ அறியாத வண்ணம், நமது பாதுகாப்புக்கான அனைத்தையும் செய்ய வேண்டும், நாம் தப்புவதையும் அவர்களில் ஒருவரும் அறியக்கூடாது” என்றான்”.(30)

சுரங்கப்பணி தொடங்கியது – ஆதிபர்வம் பகுதி 149-(ஜதுக்கிரகப் பர்வம் – 7)யுதிஷ்டிரனிடம் வந்த விதுரனின் நண்பன் கனகன்; சுரங்கத்தைத் தோண்டி, அதன் வாயிலை வீட்டின் மத்தியில் அமைத்த கனகன்…

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சுரங்கம் தோண்டுவதில் நிபுணரான விதுரனின் நண்பர் {கனகன் என்ற}[1] ஒருவர் பாண்டவர்களைக் கமுக்கமாகச் சந்தித்து,(1) (கும்பகோணம் பதிப்பில் “கனகன்” என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. கனகன் என்றால் சுரங்கம் செய்பவன் என்பது பொருள்.)”நான் விதுரரால் அனுப்பப்பட்டவன். சுரங்கம் தோண்டுவதில் நான் நிபுணன். பாண்டவர்களுக்குத் தொண்டாற்ற வந்திருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.(2) என்னிடம் இருக்கும் நம்பிக்கையால் விதுரர் என்னிடம், “நீ பாண்டவர்களிடம் சென்று அவர்களுக்கு நன்மை செய்வாயாக” என்றார். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?(3) தேய்பிறையின் பதினான்காவது நாள் இரவில் {கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி} புரோசனன் இந்த வீட்டின் கதவுகளுக்குத் தீ வைப்பான்.(4) மனிதர்களில் புலியான பாண்டவர்களை அவர்களது தாயுடன் எரித்துக் கொல்ல வேண்டும் என்பது தீய மனம் படைத்த திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனன்} விருப்பமாகும்.(5) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, விதுரர் மிலேச்ச மொழியில் உம்மிடம் ஏதோ சொல்ல, நீரும் அதே மொழியில் மறுமொழி கூறியிருக்கிறீர். இக்குறிப்புகளை நீர் என்னை நம்புவதற்காகவே தெரிவிக்கிறேன்” என்றார்.(6)

உண்மையைப் பேசுபவனான குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அவரிடம் {கனகரிடம்}, “ஓ! இனிமையானவரே, நான் உம்மை விதுரரின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும், அவரின் அன்புக்குரியவருமாக அறிந்திருக்கிறேன். நீர் அவரிடம் உண்மையுடனும் ,அர்ப்பணிப்புணர்வுடனும் இருப்பவர். கல்விமானான விதுரர் அறியாத யாதொன்றும் இல்லை.(7,8) அவருக்கு நீர் எப்படி வேண்டியவரோ, அதே போலத்தான் எங்களுக்கும் வேண்டியவரே. அவரிடமும், எங்களிடமும் வேறுபாடு காணாதீர். நாங்கள் அவருக்கு எப்படியோ அப்படியே உங்களுக்கும். கல்விமானான விதுரர் எங்களைக் காப்பது போல, நீரும் எங்களைக் காப்பாற்றும்.(9) எரியத்தக்க இந்த வீட்டைத் திருதராஷ்டிரன் மகனின் உத்தரவாலேயே புரோசனன் நிறுவினான்.(10) தீய வழியில் நடக்கும் அந்த இழிந்தவன், செல்வம் மற்றும் கூட்டாளிகளின் துணைக் கொண்டு, எங்களை எப்போதும் கண்காணிக்கிறான்.(11) உமது உழைப்பைக் கொடுத்து வரவிருக்கும் பெருந்தீயிலிருந்து எங்களைக் காப்பாற்றுவீராக. நாங்கள் இங்கே எரித்துக் கொல்லப்பட்டால், துரியோதனனின் விருப்பம் ஈடேரும்.(12) இங்கேதான் அந்தப் பாவியின் ஆயுதங்கள் நிறைந்த ஆயுத சாலை இருக்கிறது. இந்தப் பெரிய மாளிகையானது, அருகில் உயர்ந்த மதில்கள் எழுப்பித் தப்பிக்க எந்த வழியும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. (13) ஆனால் துரியோதனனின் இந்தப் புனிதமற்ற சதித்திட்டத்தை விதுரர் தொடக்கத்திலிருந்தே அறிந்திருக்கிறார். அவரே இதுகுறித்து எங்களை முன்கூட்டியே விழிப்படையச் செய்தார்.(14) க்ஷத்திரி {விதுரர்} முன்கூட்டியே அறிந்திருந்த அந்த ஆபத்து, இப்போது நமது வாயிலருகே இருக்கிறது. இவை குறித்துப் புரோசனன் அறியாவண்ணம் எங்களைக் காப்பாற்றுவீராக” என்றான்.(15)

இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சுரங்க நிபுணன் {கனகன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி சுரங்கம் தோண்டும் பணியைக் கவனத்துடன் தொடங்கிப் பெரிய சுரங்க வழியை உண்டாக்கினான்.(16) அச்சுரங்கத்தின் வாய் {வாயில்} நடு வீட்டில் இருந்தது. அது தரைக்குச் சமமாக மரப்பலகைகளால் மூடப்பட்டு இருந்தது.(17) அவ்வீட்டின் கதவைத் தொடர்ந்து கண்காணித்து வந்தவனும், தீயவனும், பொல்லாதவனுமான புரோசனனிடம் கொண்ட அச்சத்தால், அதன் வாயில் மூடப்பட்டிருந்தது.(18) பாண்டவர்கள் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு {ஆயுதம் தரித்துக் கொண்டே} தங்கள் அறையில் உறங்கினர். பகலெல்லாம் காடு காடாகச் சென்று வேட்டையாடினர்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}! இப்படிப் புரோசனனை அவர்கள் நம்பவில்லை என்றாலும், நம்புவது போலப் பாசாங்கு செய்து அங்குப் பாதுகாப்புடன் வாழ்ந்தனர்.(20) பாண்டவர்களின் திட்டம் குறித்து வாரணாவதக் குடிமக்களும் அறிந்திருக்கவில்லை. உண்மையில், சுரங்க நிபுணரான விதுரரின் நண்பரைத் தவிர வேறு யாரும் இத்திட்டத்தை அறியவில்லை” {என்றார் வைசம்பாயனர்}.(21)

மாளிகைக்கு தீயிட்டான் பீமன் – ஆதிபர்வம் பகுதி 150-(ஜதுக்கிரகப் பர்வம் – 8)மக்களுக்கு விருந்து படைத்த குந்தி; ஐந்து மகன்களுடன் அவ்வீட்டுக்கு வந்த வேடுவச்சி குடிமயக்கத்தில் உணர்விழந்து உறங்கியது; மாளிகைக்குத் தீயிட்ட பீமன்; சகோதரர்களையும், தாயையும் தூக்கிக் கொண்டு ஓடிய பீமன்..

வைசம்பாயனர் சொன்னார், “பாண்டவர்கள் மகிழ்ச்சியுடனும் ஐயத்திற்கிடமில்லாமலும், முழுமையாக ஒரு வருடம் வாழ்ந்ததைக் கண்ட புரோசனன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான்.(1) புரோசனன் மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பதைக் கண்ட குந்தியின் அறம்சார்ந்த மைந்தன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், மற்றும் இரட்டையர்களிடம் (நகுலன் மற்றும் சகாதேவனிடம்),(2) “கொடும் இதயம் கொண்ட அந்தப் பாவி நன்றாக ஏமாற்றப்பட்டிருக்கிறான். நாம் தப்பிச் செல்வதற்குத் தகுந்த காலம் வந்ததென நான் நினைக்கிறேன்.(3) ஆயுதச் சாலைக்கு நெருப்பு மூட்டிப் புரோசனனை எரித்துக் கொன்று, அவனது உடலை அங்கே விட்டு, நாம் அறுவரும் யாரும் அறியாமல் தப்பிச் சென்றுவிடலாம்” என்று சொன்னான்”.(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, கொடை அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்த போது, குந்தி, ஒரு குறிப்பிட்ட நாள் இரவில், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு உணவு கொடுத்தாள். அங்கே பல பெண்களும் வந்து உண்டும், குடித்தும், அவர்கள் விருப்பப்பட்டவாறு மகிழ்ந்திருந்தனர். பிறகு அவர்கள் குந்தியிடம் அனுமதி பெற்றுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.(5,6) ஐந்து மகன்களுக்குத் தாயான ஒரு நிஷாதப் பெண்பமணி {வேடுவப் பெண்மணி}, தன் பயணத்தின்போது, உணவு பெற விரும்பியும், விதியால் உந்தப்பட்டும், தனது மகன்கள் அனைவரையும் அந்த விருந்துக்கு அழைத்து வந்தாள்.(7) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளும் அவளது மகன்களும் அவர்கள் உண்டிருந்த மதுவினால் போதை கொண்டு நிலை தடுமாறி இருந்தனர். அந்த மாளிகையில் அந்தப் பெண் தனது மகன்களுடன் உணர்விழந்து பிணம் போல் உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த மாளிகையில் வசித்தவர்கள் அனைவரும் படுத்தவுடன், அங்கே அந்த இரவில் பயங்கரமான பெருங்காற்று வீசியது.(8,9)

அப்போது பீமன், அந்த வீட்டில் புரோசனன் உறங்கிக் கொண்டிருந்த பகுதியில் தீயை மூட்டினான். அதன்பிறகு அந்தப் பாண்டுவின் மைந்தன் {பீமன்}, அந்த அரக்கு வீட்டின் கதவுகளுக்குத் தீ மூட்டினான்.(10) அந்த மாளிகையைச் சுற்றிலும் பல இடங்களில் தீ மூட்டினான். அந்த வீட்டின் பல இடங்களில் தீப்பற்றியதைக் கண்டு மனநிறைவு கொண்ட பிறகு,(11) அந்த எதிரிகளைத் தண்டிக்கும் பாண்டுவின் மைந்தர்கள் {பாண்டவர்கள்} தங்கள் நேரத்தை வீணாக்காமல் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தனர். பிறகு அந்த நெருப்பின் வெப்பமும், உறுமலும் உக்கிரமடைந்து அந்நகர மக்களை எழுப்பியது. வீடு எரிவதைக் கண்ட அந்த நகரத்துக் குடிமக்கள் கவலை நிறைந்த முகங்களுடன்,(12,13) “அந்தத் தீய ஆன்மா கொண்ட பாவி (புரோசனன்), துரியோதனனின் கட்டளையின் பேரில், தனது முதலாளியின் உறவினர்கள் அழிவுக்காகவே இவ்வீட்டைக் கட்டியிருக்கிறான். நிச்சயமாக அவனே இதற்குத் தீ மூட்டியிருக்கிறான். ச்சீ… ச்சீ.. எவ்வளவு வஞ்சனை கொண்ட இதயத்தைப் பெற்றவனாக இருந்திருக்கிறான் இந்தத் திருதராஷ்டிரன்.(14) பாவங்களற்ற பாண்டுவின் வாரிசுகளை எதிரிகளாகக் கருதி, அவன்தான் அவர்களை எரித்துவிட்டான்!(15) ஐயமடையாதவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான அந்த அப்பாவி இளவரசர்களை, எரித்த தீய ஆன்மா கொண்ட அந்தப் பாவியையும் (புரோசனனையும்), விதி எரித்துக் கொன்றுவிட்டது” என்றனர்.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “வாரணாவதத்தின் குடிமக்கள் இப்படி (பாண்டவர்களின் விதியை நினைத்து) ஒப்பாரி வைத்தழுது, அன்று இரவு முழுவதும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டு காத்திருந்தனர்.(17) இருப்பினும், பாண்டவர்கள் தங்கள் தாயை அழைத்துக் கொண்டு அந்தச் சுரங்க வழியிலிருந்து வெளிவந்து, யாரும் அறியாத வண்ணம் விரைவாக ஓடினர்.(18) ஆனால், தூக்கக் கலக்கத்தாலும், பயத்தாலும் தங்கள் தாயுடனிருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களால் விரைவாக முன்னேற முடியவில்லை.(19)

ஓ! ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பயங்கரமான ஆற்றலும், துரிதமான இயக்கமும் கொண்ட பீமசேனன், அந்த இருளில் தனது சகோதரர்கள் அனைவரையும், தனது தாயையும் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.(20) அவன், தனது தாயைத் தோளிலும், இரட்டையர்களைத் தனது பக்கங்களிலும் {இடுப்பிலும்}, யுதிஷ்டிரனையும், அர்ஜுனனையும் தனது இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டான். பெரும் சக்தியும், பலமும், காற்றைப் போன்ற வேகமும் கொண்ட விருகோதரன், எதிர்பட்ட மரங்களைத் தனது மார்பால் ஒடித்துக் கொண்டும், பூமியைத் தனது பாதச்சுவடுகளால் ஆழமாகத் துளைத்துக் கொண்டும் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(21,22)

கங்கையைக் கடந்த பாண்டவர்கள் – ஆதிபர்வம் பகுதி 151-(ஜதுக்கிரகப் பர்வம் – 9)- பாண்டவர்களுக்காகப் படகை அனுப்பி வைத்த விதுரன்; கங்கையைக் கடந்து சென்ற பாண்டவர்கள்…

வைசம்பாயனர் சொன்னார், “அதே நேரத்தில் விதுரன் தனது நம்பிக்கைக்குரியவனும், நல்ல குணம் படைத்தவனுமான ஒரு மனிதனை அந்தக் கானகத்திற்குள் அனுப்பி வைத்தான்.(1) அந்த மனிதன், கானகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், கங்கையின் ஆழத்தை அளந்து கொண்டிருந்த பாண்டவர்களை அவர்களது தாயாருடன் கண்டான்.(2) துன்மார்க்கனான துரியோதனனின் தீய திட்டங்களைத் தனது ஒற்றர்கள் மூலம் அறிந்த புத்திக்கூர்மையுள்ள விதுரன், அதன் காரணமாகவே அந்த விவேகமுள்ள மனிதனைப் பாண்டவர்களிடம் அனுப்பினான்.(3) விதுரனால் அனுப்பப்பட்ட அந்த மனிதன், புனிதமான கங்கையின் கரையில் இயந்திரங்களுடனும் கொடிகளுடனும் கூடிய படகொன்றைப் பாண்டவர்களுக்குக் காட்டினான். அப்படகு, கடும் காற்றையும் அலைகளின் வேகத்தையும் புயல்காலத்திலும் சமாளிக்கும் வண்ணம் நம்பிக்கைக்குரிய கைவினைஞர்களால் கட்டப்பட்டிருந்தது.(4,5)

அம்மனிதன், தான் விதுரனால்தான் அனுப்பப்பட்டவன் என்பதை நிரூபிக்கப் பாண்டவர்களிடம், “ஒ யுதிஷ்டிரா, கற்றறிந்த விதுரர், நான் அவரிடம் இருந்துதான் வருகிறேன் என்பதை நிரூபிக்க ஒரு சம்பவத்தைச் சொல்லியனுப்பினார்.(6) ‘வைக்கோலை உண்பவனோ {அக்னி}, பனியைக் காய வைப்பவனோ {சூரியன்} கானகத்தின் பொந்தினுள் வசிப்பவனை எரிக்க முடியாது. இதை அறிந்தவன் தன்னை மரணத்தில் இருந்து காத்துக் கொள்வான்.’ என்ற வார்த்தைகளைச் சொல்லச் சொன்னார்.(7) இதன் மூலம் நான் விதுரரால் அனுப்பப்பட்டவன்தான் என்பதையும், நான் நம்பிக்கைக்குரியவன் என்பதையும் அறிந்து கொள்வீராக. அனைத்தையும் அறிந்த விதுரர், ‘ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ நிச்சயமாகக் கர்ணன், துரியோதனன், அவனது சகோதரர்கள், மற்றும் சகுனியைப் போரில் தோற்கடிப்பாய்’ என்று நான் சொன்னதாகச் சொல்.’ என்றார்.(8,9) இப்போது நீரில் இருக்கும் இந்தப் படகு, புறப்படுவதற்குத் தயாராக இருக்கிறது. இது நிச்சயம் உங்கள் அனைவரையும் இந்தப் பகுதிகளிலிருந்து சுமந்து செல்லும்” என்றான்.(10)

அந்த மனிதர்களில் சிறந்தவர்கள், தங்கள் தாயுடன் சோகமாக இருப்பதைக் கண்ட அம்மனிதன், அவர்களைக் கங்கையின் மீதிருந்த படகில் ஏற்றி, அவர்களுடன் தானும் ஏறிக் கொண்டான். அப்போது மறுபடியும் அவர்களிடம்,(11) “விதுரர் உங்களை (மனத்தால்) உச்சிமோந்து {தலையை முகர்ந்து} அணைத்து, ‘உங்களுக்கு நன்மை தரும் இந்தப் பயணத்தைத் தனியாக மேற்கொள்ளும்போது, எக்காரணம் கொண்டும் கவனக்குறைவுடன் இருந்துவிடக்கூடாது’ என்றும் சொன்னார்” என்றான்.(12) இவ்வார்த்தைகளை அந்த இளவரசர்களுக்குச் சொன்ன விதுரனால் அனுப்பப்பட்ட அந்த மனிதன், அந்த மனிதர்களில் காளைகளைத் தனது படகில் கங்கையின் அக்கரைக்கு அழைத்துச் சென்றான்.(13) அப்படி நீரின் மேல் அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் பாதுகாப்பாக அக்கரையில் இறங்கியதைக் கண்ட அம்மனிதன் “ஜெயம் {வெற்றி}” என்ற சொல்லைச் சொன்னான். அதன்பிறகு அவர்களை விட்டகன்று, அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே திரும்பிச் சென்றான்.(14)

அச்சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள், அவனிடம் விதுரனுக்கான செய்தியைச் சொல்லிவிட்டு, கங்கையைக் கடந்து, கமுக்கமாகவும் வேகமாகவும் முன்னேறிச் சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(15)

யுதிஷ்டிரன் துயரம் – ஆதிபர்வம் பகுதி 152-(ஜதுக்கிரகப் பர்வம் – 10)-வாரணவத மக்கள் பாண்டவர்கள் இறந்ததாகக் கருதியது; திருதராஷ்டிரனுக்கு செய்தியைச் சொல்லியனுப்பிய மக்கள்; பாண்டவர்களுக்கு நீர்க்கடன் செலுத்தச் சொன்ன திருதராஷ்டிரன்; யுதிஷ்டிரன் அடைந்த துயரம்..

வைசம்பாயனர் சொன்னார், “இரவு கழிந்ததும், நகரத்து மக்கள் பெருமளவில் கூடி பாண்டுவின் மைந்தர்களைக் காண வந்தனர்.(1) எரிந்து போன அவ்வீடு அரக்கைக் கொண்டு கட்டப்பட்டது என்பதையும், அதைக் கட்டிய (துரியோதனனின்) அமைச்சன் புரோசனனும் எரிந்து இறந்தான் என்பதையும் நெருப்பை அணைத்த பிறகு அம்மக்கள் அறிந்தனர்.(2)

அவர்கள், “பாண்டவர்களின் அழிவுக்காகப் பாவியான துரியோதனன் ஏற்படுத்திய திட்டமே இஃது என்பது நிச்சயம்.(3) திருதராஷ்டிரனுக்குத் தெரிந்தே பாண்டுவின் வாரிசுகளைத் துரியோதனன் கொன்றிருக்கிறான் என்ற சிறு சந்தேகமும் எழுகிறது. இல்லையென்றால் அவ்விளவரசன் தனது தந்தையால் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.(4) சந்தனுவின் மைந்தன் பீஷ்மர், துரோணர், விதுரன், கிருபர் மற்றும் மற்ற கௌரவர்கள் ஆகியோர், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்ய வில்லை என்ற சிறு சந்தேகமும் எழுகிறது.(5) சரி இனி, “உனது பெரும் விருப்பம் ஈடேறியது! நீ பாண்டவர்களை எரித்துவிட்டாய்” என்று திருதராஷ்டிரனுக்குச் சொல்லி அனுப்புவோம்” என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.(6)

அப்போது, பாண்டவர்களை அடையாளம் காணச் சிலரை அனுப்பினர். அவர்கள் அந்த அப்பாவி நிஷாதப் பெண்மணியும், அவளது ஐந்து மகன்களும் எரிந்து கிடப்பதைக் கண்டனர்.(7) விதுரனால் அனுப்பப்பட்ட சுரங்க நிபுணன் {கனகன்}, எவரும் அறியாவண்ணம், சாம்பலை அகற்றி, அவன் தோண்டியிருந்த சுரங்கக் குழியில் அவற்றைப் போட்டு அதை மறைத்தான்.(8) அந்நகரக் குடிமக்கள், பாண்டவர்களும், (துரியோதனனின்) அமைச்சன் புரோசனனும் எரிந்து போய் இறந்ததாகத் திருதராஷ்டிரனுக்குச் சொல்லியனுப்பினர்.(9) பாண்டவர்கள் இறந்த தீய செய்தியைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயர் கொண்டு அழுதான்.(10)

அவன் {திருதராஷ்டிரன்}, “இந்த வீர மைந்தர்கள் தங்கள் தாயுடன் எரிந்து போனதால், பெரும் புகழ் கொண்டவனும் எனது தம்பியுமான மன்னன் பாண்டு, இன்றுதான் இறந்து போனான். இது நிச்சயம்.(11) மக்களே, வேகமாக வாரணாவதம் சென்று அவ்வீரர்களுக்கும் {பாண்டவர்களுக்கும்}, குந்திபோஜனின் மகளுக்கும்  {குந்திக்கும்} ஈமச்சடங்குகளைச் செய்யுங்கள்.(12) அவர்களது எலும்புகளைக் கொணர்ந்து அதற்குத் தகுந்த சடங்குகளைச் செய்யுங்கள். அவர்களது நன்மைக்கான எல்லாச் செயல்களையும் செய்யுங்கள். எரிந்து போனவர்களின் நண்பர்களும் உறவினர்களும் அங்கே செல்லட்டும்.(13) பாண்டவர்களுக்காகவும், குந்திக்காகவும் இச்சூழலில் செய்ய வேண்டிய நற்கருமங்கள் அனைத்தும் தொடங்கட்டும்” என்றான்.(14)

உறவினர்களால் சூழப்பட்ட அம்பிகையின் மைந்தன் திருதராஷ்டிரன், இதைச் சொல்லிவிட்டுப் பாண்டுவின் மகன்களுக்கு நீர்க்கடன் செலுத்தினான்.(15) அனைவரும் சோகத்தால் தாக்குண்டு சத்தமாக, “ஓ! யுதிஷ்டிரா, ஓ! குரு குலத்தின் இளவரசா!” என்று கதறி அழுதனர். அதே வேளையில் மற்றவர்கள், “ஓ! பீமா!,(16) ஓ! பல்குனா!” என்றும், வேறு சிலர், “ஓ! இரட்டையர்களே!, ஓ! குந்தி!” என்றும் கதறி அழுது தங்கள் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.(17) பாண்டவர்களுக்காக அந்நாட்டுக் குடிமக்கள் அழுதனர், ஆனால், உண்மையை அறிந்திருந்ததால், விதுரன் அதிகமாக அழவில்லை[1].(18)(கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில் பீஷ்மர் மிகவும் துக்கமடைந்ததாகவும், பாண்டவர்களுக்காகக் கதறி அழுததாகவும், அவரைத் தேற்றுவதற்காக விதுரன், பாண்டவர்கள் உயிரோடிருக்கும் செய்தியை அவருக்குச் சொன்னதாகவும், பீஷ்மர் விதுரனைப் பாராட்டுவதாகவும் செய்திகள் இருக்கின்றன.)

அதேவேளையில், பெரும் பலம் வாய்ந்த பாண்டவர்கள், தங்கள் தாயுடன் சேர்ந்து ஆறு பேராக வாரணாவத நகரத்தை விட்டு அகன்று கங்கைக் கரைக்கு வந்தனர்.(19) படகோட்டியின் கரபலத்தாலும், நதியின் வேகமான ஓட்டத்தாலும், சாதகமாக வீசிய காற்றினாலும், விரைவாகக் கங்கையின் மறுகரையை அடைந்தனர்.(20) அவர்கள் அப்படகை விடுத்து, இருட்டில் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் தங்கள் வழியைக் கண்டுபிடித்துத் தென்திசையில் முன்னேறிச் சென்றனர்.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் துன்பத்திற்கிடையில் கடைசியாக அவர்கள் அடர்ந்த கானகத்தை அடைந்தனர். அவர்கள் களைத்துப் போய், தாகத்தால் நாவறண்டு இருந்தனர்.  உறக்கம் அவர்களது கண்களை ஒவ்வொரு நொடியும் மூடியது.(22) பின்பு யுதிஷ்டிரன், வலிமைமிக்கவனான பீமசேனனிடம் “இதைவிட வலி நிறைந்தது என்ன இருக்க முடியும்? நாம் இப்போது ஆழ்ந்த கானகத்திற்குள் இருக்கிறோம். நமக்குத் திசைகள் தெரியவில்லை. மேற்கொண்டு நகரவும் முடியவில்லை.(23) பாவி புரோசனன் இறந்துவிட்டானா? இல்லையா? என்பதும் நமக்குத் தெரியவில்லை. நாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் எப்படி இந்த ஆபத்துகளிலிருந்து தப்பப் போகிறோம்?(24) ஓ! பாரதா {பீமா}, முன்பு போலவே எங்களைச் சுமந்து கொண்டு முன்னேறுவாயாக. நம்மில் நீயே பலவானும், காற்றைப் போல் வேகமாக நகர்பவனும் ஆவாய்” என்றான்.(25)

யுதிஷ்டிரனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான பீமசேனன், குந்தியையும், அவனது சகோதரர்களையும் தூக்கிக் கொண்டு, வேகமாக நடந்து முன்னேறிச் சென்றான்.(26)

அழ ஆரம்பித்த பீமன் – ஆதிபர்வம் பகுதி 153-(ஜதுக்கிரகப் பர்வம் – 11)-தன் தாயையும், சகோதரர்களையும் ஒரு ஆலமரத்தடியில் விட்டுவிட்டு நெடுந்தொலைவு சென்று நீர் கொணர்ந்து வந்த பீமன்; பஞ்சணையில் படுப்பவர்களான தனது தாயாரும், சகோதரர்களும்  கட்டாந்தரையில் கிடப்பதைக் கண்டு புலம்பி அழுதது…

வைசம்பாயனர் சொன்னார், “இப்படி அந்தப் பெரும் பலம்வாய்ந்த பீமன் முன்னேறிச் செல்கையில், அவனது மார்பின் மோதலால் அந்த முழுக் கானகமே அதன் மரங்களுடனும், கிளைகளுடனும் நடுங்குவது போலத் தெரிந்தது.(1) அவனது தொடைகளின் அசைவு உண்டாக்கிய காற்றானது, ஆனி மற்றும் ஆடி மாதக் காற்றைப் போல வீசியது. அந்தப் பெரும் பலம்வாய்ந்த பீமன் மரங்களையும், செடிகொடிகளையும் சாய்த்துத் தனக்கான வழியை உண்டாக்கியபடியே முன்னேறிச் சென்றான்.(2)  உண்மையில் அவன், தன் வழியில் நின்ற பெரும் மரங்களையும், செடிகளையும், அதன் பூக்கள் மற்றும் கனிகளுடன் ஒடித்துப் போட்டு முன்னேறிச் சென்றான்.(3) யானை மந்தையின் அறுபது வயதான தலைமை யானை குறிப்பிட்ட காலத்தில் தனது உடலின் மூன்று பகுதிகளில் நீர் வழிய, பெரும் மரங்களை ஒடித்துப் போட்டுக் கடந்து செல்வதைப் போல அந்தக் கானகத்தைப் பீமன் கடந்து சென்றான்.(4) பீமனின் சக்தி, கருடன் மற்றும் மருதனின் (வாயுத்தேவன்) வேகத்திற்கு இணையாக இருந்தது. அதனால் பாண்டவர்கள் {அப்படிச் செல்லும் பீமன் மீது அமர்ந்து இருந்ததால்} மயக்கமடையும் சூழல் ஏற்பட்டது.(5)

பாண்டவர்கள், கடக்கக் கடினமான நீரோட்டங்களை நீந்தி, திருதராஷ்டிரனின் மகன்களுக்குப் பயந்து, வழியில் மாறுவேடம் பூண்டு கொண்டு சென்றனர்.(6) சமமற்ற நதிகளின் கரைகளில், பீமன், நுட்பமான உணர்வுகள் கொண்டவளான தனது தாயைத் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றான்.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மாலை நெருங்கும் போது பீமன் (தனது சகோதரர்களையும் தாயையும் முதுகில் சுமந்து கொண்டே), பழங்களும், கிழங்குகளும் நீரும் அரிதாகவே கிடைக்கும் ஒரு பயங்கரமான கானகத்தை அடைந்தான். அந்தக் கானகத்தைச் சுற்றிலும் பறவைகள் மற்றும் விலங்குகளின் பயங்கரமான அலறல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.(8) அந்தி சாய்ந்ததும், அவற்றின் அலறல்கள் கடுமையாகின. இருட்டு, அனைத்தையும் பார்வையில் இருந்து மறைத்தது. அகாலமான நேரத்தில் கடும் காற்று வீசிப் பெரிதும் சிறிதுமான பல மரங்களையும், கொடிகளையும், இலைகளையும், பழங்களையும் தரையில் சாய்த்தது.(9,10)

களைப்பாலும், தாகத்தாலும் அவதிப்பட்ட அந்தக் கௌரவ இளவரசர்கள் {பாண்டவர்கள்} கனத்த உறக்கத்தால் மேலும் முன்னேற முடியாமல் தவித்தனர்.(11) அவர்கள் அனைவரும் உணவும், நீரும் இன்றி அந்தக் கானகத்தில் அமர்ந்தனர். தாகத்தால் அவதிப்பட்ட குந்தி, தனது மகன்களிடம்,(12) “நான் ஐந்து பாண்டவர்களின் தாய். இப்போது அவர்கள் மத்தியிலேயே இருக்கிறேன். இருப்பினும் நான் தாகத்தால் அவதிப்படுகிறேன்” என்றாள். இதையே திரும்பத் திரும்பத் தனது மகன்களிடம் குந்தி சொன்னாள்.(13) இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமனின் இதயம், தாய் மீது கொண்ட பாசத்தால் இரக்கப்பட்டு வெந்தது.  உடனே அவன் (முன்பு போலவே) {அனைவரையும் தூக்கிக் கொண்டு} புறப்படத் தீர்மானித்தான்.(14)

வாழும் ஆன்மா ஒன்றும் {ஒரு உயிரினமும்} இல்லாத அந்தப் பயங்கரமான பெரிய கானகத்தில், பீமன் முன்னேறி நடந்து, அகலமாகக் கிளைகள் பரவிய ஓர் அழகான ஆல மரத்தைக் கண்டான்.(15) ஓ! பாரதக் குலக் காளையே {ஜனமேஜயா}, அங்கே தனது சகோதரர்களையும், தாயையும் இறக்கிவிட்டு, அவர்களிடம், “இங்கே ஓய்வெடுங்கள், அதே வேளையின் நான் நீர் தேடிச் செல்லப் போகிறேன்.(16) நீர் வாழ் பறவைகளின் இனிய ஒலிகளைக் கேட்கிறேன். இங்கே ஒரு பெரிய குளம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றான்.(17) ஓ! பாரதா {ஜனமேஜயா}, “செல்வாயாக” என்று தனது மூத்த சகோதரனால் {யுதிஷ்டிரனால்} கட்டளையிடப்பட்ட பீமன், அந்த நீர்வாழ் பறவைகளின் ஒலி வந்த திக்கில் முன்னேறிச் சென்றான்.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அவன் விரைவில் ஓர் தடாகத்தை வந்தடைந்தான். அங்கே குளித்து முடித்துத் தனது தாகத்தைத் தணித்துக் கொண்டான். தனது சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தால் தனது மேலாடையை நீரில் முக்கி, அதை அவர்களுக்குக் கொண்டு வந்தான். தான் சென்ற நான்கு மைல் வழியைத் தொடர்ந்து தனது தாய் இருக்கும் இடத்திற்கு வேகமாக வந்து, அவளைக் கண்டு பெரும் துன்பமடைந்து, பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டான்.(19,20)

விருகோதரன் {பீமன்}, தனது தாயும், சகோதரர்களும் வெறும் தரையில் படுத்துறங்குவதைக் கண்டு, துக்கத்தால் மன உளைச்சலடைந்து அழுது புலம்பத் தொடங்கினான்.  “ஓ!, சகோதரர்கள் வெறுந்தரையில் தூங்குவதைக் காணும் பாவியானேனே, இதைவிடப் பெரிய வலியைத் தர வேறு என்ன நிகழ வேண்டும்?(22) ஐயோ, வாரணவதத்தின் விலையுர்ந்த மென்மையான படுக்கையில் தூங்க முடியாதவர்கள், இப்போது வெறுந்தரையில் தூங்குகிறார்களே!(23) ஓ!, தாமரை இதழ்களைப் போன்ற மென்மை கொண்டவளான இந்தக் குந்தி, எதிரிப் படைகளைத் துவம்சம் செய்யும் வாசுதேவனின் தங்கையான இந்தக் குந்தி, குந்திராஜனின் மகளான இந்தக் குந்தி, அதிர்ஷ்டக் குறிகள் நிறைந்தவளான இந்தக் குந்தி,(24) விசித்திரவீரியனின் மருமகளும், சிறப்புமிக்கப் பாண்டுவின் மனைவியுமான இந்தக் குந்தி, எங்களின் (ஐந்து சகோதரர்கள்) தாயான இந்தக் குந்தி,(25) விலையுயர்ந்த படுக்கையில் படுக்கத் தகுதி வாய்ந்த இந்தக் குந்தி, வெறும் தரையில் தூங்குவதைக் காணும் காட்சியை விட, வலி நிறைந்த காட்சி எது இருக்க முடியும்!(26)

ஓ!, தர்மன், இந்திரன், மருதன் {வாயு} ஆகியோரின் பிள்ளைகளை ஈன்றெடுத்து, அரண்மனையில் மட்டுமே உறங்கியவள், களைப்படைந்து வெறும் தரையில் உறங்குகிறாளே!(27) ஓ!, இந்த மனிதப் புலிகள் (எனது சகோதரர்கள்) வெறும் தரையில் தூங்குவதைக் காணும் காட்சியை விட வலி நிறைந்த காட்சி எது இருக்க முடியும்?(28) ஓ!, மூவுலகத்தையும் ஆளும் தகுதி கொண்ட அறவோனான இந்த யுதிஷ்டிரர், சாதாரண மனிதனைப் போலக் களைப்படைந்து தரையில் தூங்குகிறாரே!(29) மனிதர்களில் ஒப்பில்லாதவனும், நீல மேகங்களைப் போலக் கருநிறம் கொண்டவனுமான அர்ஜுனன், வெறுந்தரையில் சாதாரண மனிதனைப் போலத் தூங்குகிறானே! ஓ!, இதைவிட வலிநிறைந்தது எது இருக்க முடியும்?(30)

ஓ! அஸ்வினி இரட்டையர்களைப் போன்ற அழகுடன் தேவர்களைப் போல இருக்கும் இந்த இரட்டையர்கள் சாதாரணமானவர்கள் போல வெறும் தரையில் தூங்குகிறார்களே!(31) பொறாமை மற்றும் தீய எண்ணங்கொண்ட உறவினர்கள் யாரும் இல்லாதவன், கிராமத்தில் இருக்கும் ஒற்றை மரம் போல இவ்வுலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வான்.(32) அதே வகை மரங்கள் வேறு இல்லாமல், தனியாக இலைகளுடனும் கனிகளுடனும் கிராமத்தில் நிற்கும் மரம் புனிதமடைந்து, அனைவராலும் வழிபடப்பட்டுக் கொண்டாடப்பட்டு இருக்கும்.(33) நிறைய உறவினர்களுடனும், வீரத்துடனும், அறத்துடனும் இருப்பவர்களும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.(34) பலத்துடனும், வளமையில் வளர்ந்தும், எப்போதும் நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்வூட்டுபவர்கள், ஒரே கானகத்தில் வளரும் நெடும் மரங்களைப் போல ஒருவரை ஒருவர் நம்பியே வாழ்கின்றனர்.(35)

நாம் தீய திருதராஷ்டிரனாலும் அவனது மகன்களாலும் நாடுகடத்தப்பட்டு, மரணத்திலிருந்து பெரும் சிரமத்திற்கிடையில் தப்பித்து வந்திருக்கிறோம்.(36) அந்த நெருப்பிலிருந்து தப்பித்து, இந்த மரத்தின் நிழலின் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இவ்வளவு துன்பப்பட்ட பிறகு, இனி நாம் எங்கே செல்வது?(37) தொலைநோக்குப் பார்வை சிறிதும் அற்ற திருதராஷ்டிரன் மைந்தர்களே, நீங்கள் தீயவர்கள், உங்கள் தற்காலிக வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். தேவர்கள் உங்களுக்கு நற்பேற்றைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தீய பாவிகளே, நீங்கள் இன்னும் உயிரோடிருப்பது, யுதிஷ்டிரர் உங்களைக் கொல்ல எனக்குக் கட்டளையிடாமல் இருப்பதால்தான். இல்லையேல் கோபத்தால் நிறைந்திருக்கும் நான், இந்நாளிலேயே (ஓ! துரியோதனா) உன்னை, உனது பிள்ளைகள்[1], (இக்காலத்திற்குள் துரியோதனனின் திருமணம் நடந்து முடிந்திருக்க வேண்டும் என்பதற்கு இவ்வரிகள் வலுசேர்க்கின்றன.)நண்பர்கள், சகோதரர்கள், கர்ணன் மற்றும் (சகுனியுடன்) சுபலனின் மகனோடு சேர்த்து யமனின் உலகத்திற்கு (புளூட்டோ கிரகம் என்கிறார் கங்குலி) அனுப்பியிருப்பேன். ஆனால், இழிந்த பாவிகளே, நான் என்ன செய்ய? பாண்டவர்களில் மூத்த அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், இன்னும் உங்களிடம் கோபம் கொள்ளவில்லையே?” என்று சொல்லி அழுதான்.(38-41)

இப்படிச் சொன்னவனும், பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான பீமன், கோபத்தால் எரிந்து, தனது உள்ளங்கைகளைப் பிசைந்து கொண்டு, துக்கத்தால் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.(42) தனது சகோதரர்கள் வெறும் தரையில் நம்பிக்கையுடன் சாதாரண மனிதர்களைப் போலத் துயில்வதைக் கண்டே விருகோதரன் {பீமன்}, திடீரென்று கோபமடைந்தான். பீமன் தனக்குள்,(43) “இந்தக் கானகத்திற்கு அருகில் ஏதோ நகரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நான் விழிப்புடன் அமர்ந்து கொள்வேன்.(44) அவர்கள் உறக்கத்திலிருந்து எழுந்ததும், இது {நான் கொண்டு வந்த இந்த நனைந்த ஆடை} இவர்களது தாகத்தைத் தணிக்கும்” என்று சொல்லிக் கொண்டான். இப்படிச் சொல்லிக் கொண்ட, பீமன் விழிப்புடன் அமர்ந்து, தனது தாயையும், சகோதரர்களையும் பார்த்துக் கொண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(45)

பீமனிடம் பேசிய ராட்சசி! – ஆதிபர்வம் பகுதி 154-(ஹிடிம்ப வத பர்வம் – 1)-பாண்டவர்களைக் கொன்று இறைச்சியைக் கொண்டுவர ஹிடிம்பையை அனுப்பிய ஹிடிம்பன்; பீமனைக் கண்டு காமுற்ற ஹிடிம்பை; பீமனிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி, தன் தமயனிடம் இருந்து பாண்டவர்களைக் காப்பதாகச் சொன்னது; ராட்சசர்களால் தன் பலத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லி ஹிடிம்பையைப் புறக்கணித்த பீமன்…

வைசம்பாயனர் சொன்னார், “பாண்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு சால மரத்தில் {ஆச்சா மரம்} ஹிடிம்பன் {இடும்பன்} என்ற பெயர் கொண்ட ராட்சசன் ஒருவன் இருந்தான்.(1)

பெரும் ஆற்றலையும் வலிமையையும் கொண்ட அவன், மனித இறைச்சியை உண்ணும் கொடியவனாவான். அவனது முகம் கடுமையுடனும், அவனது பற்கள் நீண்டு கூர்மையாகவும் இருந்தன. அப்போது அவன் பசியோடும் மனித இறைச்சியை உண்பதற்கு ஏங்கிக் கொண்டும் இருந்தான். நீண்ட கால்களும், பெருத்த வயிறும் கொண்ட அவனது கேசமும், தாடியும் சிவப்பு நிறத்திலிருந்தன. அவனது தோள்கள் அகலமாக, மரத்தின் கழுத்துப் போல இருந்தன; அவனது காதுகள் கணைகளின் முனைகளைப் {அம்பு முனை} போன்று இருந்தன. அவனது தோற்றம் அச்சமேற்படுத்தும் வகையில் இருந்தது. கடும் முகமும், சிவந்த கண்களும் உடைய அந்த மிருகம் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த போது, தற்செயலாகப் பாண்டுவின் மகன்கள் அக்கானகத்தில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.(2-4) அவன் பசியுடனும், மனித இறைச்சிக்காக ஏங்கிக் கொண்டும் இருந்தான். அவனது காய்ந்த கோரை மயிரை ஆட்டித் தனது விரல்களால் அதை மேல்நோக்கிக் கோதிவிட்டுக் கொண்ட அந்தப் பெரும் வாய் படைத்த மனித ஊனுண்ணி, ஆவலுடன் கொட்டாவி விட்டுக் கொண்டே திரும்பத் திரும்பத் தூங்கிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன்களைப் பார்த்தான். பெரும் உடலும், பெரும் பலமும், பெருமேகத்தின் நிறமும், கூர்மையான நீண்ட பற்களும், ஒருவிதமான பளபளப்புடன் கூடிய முகங்களும் கொண்ட அவன் எப்போதும் மனித இறைச்சியை விரும்புபவன் ஆவான்.(5-7)

அப்படிப்பட்ட அவன், மனித வாடையை முகர்ந்து கொண்டே, தனது தங்கையிடம், “ஓ தங்காய், வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஏற்ற உணவு என்னை அணுகியிருக்கிறது!(8) இப்படிப்பட்ட உணவின் சுவையை நினைத்தாலே, எனது வாயில் நீரூறுகிறது. எந்தப் பொருளும் தாங்கிக் கொள்ள முடியாத எனது கூர்மையான எட்டுப் பற்களுக்கு, வெகு நாளைக்குப் பிறகு, சுவையான இறைச்சியைக் கொடுக்கப் போகிறேன்.(9)  அவற்றைக் கொண்டு மனிதத் தொண்டையைத் தாக்கி, நரம்புகளை அறுத்துப் புத்தம்புதிய  சூடான மனித இரத்தத்தை (இன்று) நான் அதிகமாகக் குடிக்கப் போகிறேன். இக்கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் அவர்கள் யார் என்பதை அறிந்து வா.(10,11) பிடித்தமான கடும் மனித வாடை எனது மூக்கைத் துளைக்கிறது. அந்த மனிதர்களைக் கொன்று, அவர்களை என்னிடம் கொண்டு வா.(12) அவர்கள் என் எல்லைக்குள் தூங்குகிறார்கள். நீ அவர்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் இருவரும் சேர்ந்து அவர்களது உடல்களை மகிழ்ச்சியாகக் கிழித்து, அவர்களது இறைச்சியை உண்பதற்காக நான் சொன்னதைச் செய்வாயாக.(13,14) மனித இறைச்சியை நிறைவுடன் உண்ட பிறகு, நாம் இருவரும் பல வகைகளில் நடனமாடலாம்” என்றான்.

அந்த வனத்தில் ஹிடிம்பனால் இப்படிக் சொல்லப்பட்ட ஹிடிம்பை என்ற மனித ஊனுண்ணி {நர மாமிசம் உண்பவள்}, தனது தமையனின் கட்டளைக்கிணங்கி, ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, பாண்டவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றாள்.(15,16) அங்கே சென்றதும், அவள் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், விழிப்புடன் அமர்ந்திருந்தவனும், வெல்லப்பட முடியாதவனுமான பீமசேனனையும் கண்டாள்.(17)

பலம் வாய்ந்த சால மரத்தைப் போன்ற அந்தப் பீமசேனனிடம் பூமியில் ஒப்பிடமுடியாத அழகைக் கண்ட அந்த ராட்சசி, உடனே அவனிடம் காதலில் விழுந்து, தனக்குத் தானே,(18) “புடம்போட்ட தங்கம் போன்ற நிறத்துடன், பெரும் கரங்களுடன், சிங்கம் போன்ற அகலமான தோள்களுடன், சங்கு போலக் கழுத்தில் மூன்று கோடுகளுடன், தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன் இருக்கும் இந்த மனிதர் எனக்குக் கணவனாக இருக்கத் தகுந்தவர்.(19) எனது தமையனின் கொடூர ஆணைக்கு நான் கீழ்ப்படிய மாட்டேன். ஒரு பெண் தனது சகோதரனிடம் கொண்டிருக்கும் பாசத்தைவிட, அவளது கணவனின் மீது கொண்டிருக்கும் காதல் வலுவானது.(20) இவரைக் கொல்வதால், எனது தமையனுக்கும் எனக்கும் கிடைக்கும் மனநிறைவு சில நொடிகளுக்கானதே. நான் இவரைக் கொல்லாதிருந்தால், இவருடன் எப்போதும் இன்பமாக இருக்க முடியும்” என்று சொல்லிக் கொண்டாள்.(21)

நினைத்த வடிவை அடையும் சக்தி கொண்ட அந்த ராட்சசி {ஹிடிம்பை}, அழகான பெண்ணின் வடிவத்தை ஏற்றுக் கொண்டு மெதுவாகப் பெரும் கரம் கொண்ட பீமனை நோக்கி முன்னேறினாள்.(22) தெய்வீக ஆபரணங்கள் பூண்டு, இதழ்களில் புன்னகையுடன் எளிமையாக நடந்து சென்று, பீமனிடம்,(23) “ஓ மனிதர்களில் காளையே, எங்கிருந்து நீர் இங்கு வந்தீர்? நீர் யார்? தெய்வீக அழகுடன் உறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் யாவர்?(24) ஓ பாவங்களற்றவரே, தனது அறையில் கிடப்பதைப் போல நம்பிக்கையாக இந்தக் கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த மேம்பட்ட அழகுடைய பெண்மணி யார்?(25) இக்கானகம் ஒரு ராட்சசனின் உறைவிடம் என்பதை நீர் அறியீரா? நான் உண்மையாகவே சொல்கிறேன். இங்கு ஹிடிம்பன் என்ற தீய ராட்சசன் வாழ்ந்து வருகிறான்.(26)

தெய்வீக அழகுடையவர்களே, நான் எனது தமையனான அந்த ராட்சசனால், உங்களைக் கொன்று உங்களை அவனது உணவாக்க அனுப்பப்பட்டேன்.(27) ஆனால் உண்மையைச் சொல்கிறேன். தெய்வீகப் பிரகாசத்துடன் இருக்கும் உம்மைக் கண்டதும், உம்மைத் தவிர வேறு எவரையும் கணவராக ஏற்க முடியாது என்று கருதி உம்மைக் காக்க நினைத்தேன்.(28) கடமைகளையும், நீதிகளையும் அறிந்த நீர், இவற்றையும் அறிந்து, எனக்கு எது சரியோ அதைச் செய்வீராக. எனது இதயமும், எனது உடலும் காமனால் (மன்மதனால்) (அவனது கணையால்) துளைக்கப்படுகின்றன. ஓ, நான் உம்மை அடைய விருப்பத்தோடிருப்பதால், என்னை உமதாக்கிக் கொள்வீராக.(29) ஓ பெரும் கரங்கள் கொண்டவரே! மனித ஊனுண்ணும் ராட்சசனிடம் இருந்து நான் உம்மைக் காக்கிறேன். சாதாரண மனிதர்கள் நுழைய முடியாத மலைகளின் சாரலில் நாம் வாழலாம்.(30) என்னால் காற்றில் பறக்க முடியும். நான் அதை என் மகிழ்வுக்காகச் செய்வேன். நீர் என்னுடன் அப்பகுதிகளில் மிகுந்த இன்பத்துடன் இருக்கலாம்” என்றாள் {ஹிடிம்பை}.(31)

அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமன், “ஓ ராட்சசப் பெண்ணே, ஒரு முனிவனைப் போலத் தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவனால், தனது தாயையும் மூத்த மற்றும் இளைய சகோதரர்களையும் எப்படிக் கைவிட்டுவிட்டு வர முடியும்?(32) தூங்கும் தாயையும், சகோதரர்களையும் ராட்சசனுக்கு உணவாகப் போகும்படி விட்டு, என்னைப் போன்ற எந்த மனிதன், தனது காமத்தைத் தணித்துக் கொள்ளச் செல்வான்?” என்றான்.(33)

அதற்கு அந்த ராட்சசப் பெண், “ஓ, இவர்களை விழிப்படையச் செய்வீராக. நான் உமக்கு ஏற்புடைய அனைத்தையும் செய்வேன்! நர மாமிசம் உண்பவனான என் தமையனிடம் இருந்து, நான் உங்கள் அனைவரையும் நிச்சயம் காப்பேன்!” என்றாள்.(34)

பீமன், “ஓ ராட்சசப் பெண்ணே, “உனது தீய தமையனிடம் இருக்கும் அச்சத்தால், இக்கானகத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் எனது சகோதரர்களையும், எனது தாயையும் எழுப்ப மாட்டேன்.(35) ஓ மருட்சியுடையவளே, ராட்சசர்களால் எனது கரத்தின் பலத்தைத் தாங்க முடியாது. ஓ அழகான கண்களுடையவளே, மனிதர்களாலோ, கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ எனது பலத்தைத் தாங்க முடியாது.(36) ஓ இனிமையானவளே, நீ இங்கே இருப்பதும் செல்வதும் உனது விருப்பமாகும். அல்லது நீ சென்று உனது தமையனையே கூட இங்கு அனுப்புவாயாக. ஓ கட்டுடல் கொண்டவளே நான் அதுபற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை” என்றான்”.(37)

பீமன் ஹிடிம்பன் மோதல்! – ஆதிபர்வம் பகுதி 155-(ஹிடிம்ப வத பர்வம் – 2)-ஹிடிம்பை செய்த தாமதத்தினால் அங்கேயே வந்து நின்ற ஹிடிம்பன்; ஹிடிம்பனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த சொற்போரும், கோரமான மற்போரும்

வைசம்பாயனர் சொன்னார், “ராட்சசத் தலைவன் ஹிடிம்பன், தனது தங்கை வெகு நேரமாகியும் திரும்பாதது கண்டு, மரத்திலிருந்து கீழிறங்கி, பாண்டவர்களிருக்கும் இடத்திற்கு விரைவாக முன்னேறி வந்தான்.(1) சிவந்த கண்களுடன், பலம்வாய்ந்த கரங்களுடன், கரங்களும் தலைமயிரும் நட்டுக் கொண்டு நிற்க, திறந்த பெரிய வாயுடனும், கருமேகக் கூட்டங்கள் போன்ற உடலுடனும், கூரிய மற்றும் நீண்ட பற்களுடனும் காண்பதற்கு மிகப் பயங்கரமாக இருந்தான்.(2) கடும் முகம் கொண்ட தனது தமையன் மரத்திலிருந்து இறங்கியதைக் கண்ட ஹிடிம்பை மிகுந்த அச்சம் கொண்டு, பீமனிடம்,(3) “அந்த நரமாமிசம் உண்ணும் தீயவன், இங்கே கோபத்தோடு வருகிறான். நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீரும் உமது சகோதரர்களும் நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.(4) ஓ பெரும் வீரம் கொண்டவரே! ராட்சச சக்திகளைக் கொண்ட நான், விரும்பிய இடங்களுக்குச் செல்லக்கூடிய சக்தி படைத்தவள். நீர் எனது இடுப்பில் ஏறிக்கொள்வீராக. நான் உம்மை வானத்தினூடே தூக்கிச் செல்கிறேன்.(5) ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, சுகமாகத் தூங்கும் இவர்களையும் {உமது சகோதரர்களையும்} உமது தாயையும் விழிப்படையச் செய்வீராக. நான் இவர்கள் அனைவரையும் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்து செல்வேன்” என்றாள்.(6)

பீமன், “ஓ அழகான இடையுடையவளே, எதற்கும் அஞ்சாதே. நான் இங்கிருக்கும் வரை, எந்த ராட்சசனாலும் இவர்களைக் காயப்படுத்திவிடமுடியாது என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். ஓ கொடியிடையாளே, நான் இவனை உன் கண்ணெதிரிலேயே கொல்வேன்.(7) ஓ மருட்சியுடையவளே, ராட்சசர்களில் இழிந்த இவன், எனக்கு எதிரியாக இருக்கத் தகுதியற்றவன். ஏன் அனைத்து ராட்சசர்களும் ஒன்று சேர்ந்து வந்தாலும், அவர்களாலும் எனது கரங்களின் பலத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாது.(8) எனது பலம் நிறைந்த கரங்களைப் பார், ஒவ்வொன்றும் யானையின் துதிக்கையைப் போன்று இருக்கின்றன. இரும்பு கதாயுதத்தைப் போன்ற இந்த எனது தொடைகளையும், அகலமான வைரம் பாய்ந்த மார்பையும் பார்.(9) ஓ அழகானவளே, நீ இன்று இந்திரனுக்கு ஒப்பான எனது ஆற்றலைக் காண்பாய். ஓ அழகான இடை கொண்டவளே, என்னை மனிதன் என்று நினைத்து வெறுக்காதே[1]” என்றான்.(10)(கும்பகோணம் பதிப்பில், “என்னை மனிதனாக நினைத்து இப்போது குறைவாகப் பேசாதே” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “என்னை மனிதனாக நினைத்துப் பலவீனனாகக் கருதாதே” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “நீ என்னைப் பலவீனமாக நினைக்காதே” என்றிருக்கிறது. கங்குலியில் உள்ளதைப் போல “வெறுக்காதே” என்று எந்தப் பதிப்பிலும் இல்லை.)

ஹிடிம்பை, “ஓ மனிதர்களில் புலியே, ஓ தெய்வீக அழகு வாய்ந்தவரே, நிச்சயமாக நான் உம்மை அவமதிக்கவில்லை. ஆனால் மனிதர்களிடம் அந்த ராட்சசன் வெளிப்படுத்தும் ஆற்றலை நான் கண்டிருக்கிறேன்” என்று பதிலுரைத்தாள்”.(11)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அப்போது, ஓ பாரதா {ஜனமேஜயா}, மனித மாமிசம் உண்பவனான அந்தக் கோபம் மிகுந்த ராட்சசன், தான் வரும் வழியிலேயே பீமனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே வந்தான்.(12) முகம் முழு மதியைப் போன்றும், தலையில் பூச்சூடியும், புருவங்களும், நாசியும், கண்களும், மயிர்சுருளும் உள்ள அழகான பெண் போலத் தனது தங்கை மானுட வடிவில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவளது நகங்களும், மேனியும் நுண்மையான நிறத்துடன் இருந்தது. அனைத்து வகை ஆபரணங்களும் பூண்டு நன்றாக ஒளி ஊடுருவும் ஆடை அணிந்திருந்தாள்.(14) அவள் அழகான பெண்ணுருக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த மனித ஊனுண்ணி, அவள் உடலுறவு கொள்ள விரும்புகிறாள் என ஐயுற்று மிகுந்த கோபத்துக்குள்ளானான்.(15)

ஓ குரு குலத்தவரில் சிறந்தவனே {ஜனமேஜயா}, தனது தங்கையிடம் கோபம் கொண்டு, கண்களை அகல விரித்து அவளிடம்,(16) “நான் பசியோடிருக்கும்போது, எனது பாதையில் தடையை ஏற்படுத்திய உணர்வற்ற ஜென்மம் எது? ச்சீ… ச்சீ… ஓ ஹிடிம்பையே என் கோபத்தில் உனக்கு அச்சமில்லையா?(17) கற்பற்ற பெண்ணே! நீ இப்போது உடலுறவில் விருப்பம் கொண்டு எனக்குத் தீங்கிழைக்க நினைக்கிறாய். நமது முன்னோர்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களின் நற்பெயரையும் மரியாதையையும் நீ துறக்கத் தயாராயிருக்கிறாய்.(18) யாருடன் சேர்ந்து எனக்கு நீ தீங்கிழைக்க நினைக்கிறாயோ, அவனுடன் சேர்த்து உன்னையும் இப்போதே கொல்கிறேன் பார்”(19) என்று தனது தங்கையிடம் இப்படிச் சொன்ன ஹிடிம்பன், கோபத்தால் கண்கள் சிவக்கப் பற்களுடன் பற்கள் அழுத்தி, அவளை அங்கேயே கொல்ல அவளிடம் ஓடினான்.(20) இப்படி அவனது தங்கையிடம் விரைபவனைக் கண்டவனும், தாக்குபவர்களின் முதன்மையானவனும், பெரும் சக்தி படைத்தவனுமான அந்தப் பீமன், “நில். நிற்பாயாக” என்று சொல்லிக் கண்டித்தான்”.(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “தனது தங்கையிடம் கோபமாக உள்ள ராட்சசனைக் கண்ட பீமன், (ஏளனமாகச்) சிரித்துக் கொண்டே, அவனிடம்,(22) “ஓ ஹிடிம்பா, சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும் இவர்களை எழுப்ப உனக்கு என்ன தேவையிருக்கிறது? ஓ மனித மாமிசம் உண்ணும் தீயவனே, நேரந்தாழ்த்தாமல் முதலில் நீ என்னை அணுகுவாயாக.(23) என்னை முதலில் தாக்கு, பெண்ணைக் கொல்வது உனக்குத் தகாது. குறிப்பாக அவள் பாவம் செய்யாமல், பாவத்திற்கு ஆளாகியிருக்கும்போது அது தகவே தகாது.(24)  என்னுடன் உறவு கொள்ள விரும்பிய அவளது செயலுக்கு அவள் பொறுப்பில்லை. எல்லா உயிரினுள்ளும் உறைந்திருக்கும் காமதேவனால் அவள் உந்தப்பட்டாள்.(25) நீ தீய பாவி, ராட்சசர்களில் மிகவும் மோசமானவன். உன் தங்கை உனது உத்தரவின் பேரிலேயே இங்கு வந்தாள். அப்படி வந்த அவள் என்னைக் கண்டு, என்னை விரும்பினாள். அதனால் இந்த மருட்சியுடையவள் உனக்கு என்ன தீங்கு செய்தாள். இங்குக் காமதேவனே குற்றம் புரிந்திருக்கிறான். இக்குற்றத்திற்கு நீ அவளைத் தாக்குவது உனக்குத் தகாது.(26,27)

ஓ தீய பாவியே, நான் இங்கிருக்கும் போது, ஒரு பெண்ணை உன்னால் கொல்ல முடியாது. ஓ நரமாமிசம் உண்பவனே, என்னிடம் வந்து நேருக்கு நேர் ஒற்றைக்கு ஒற்றையாக மோதுவாயாக.(28) தனி ஆளாக நான் உன்னை யமனுலகு அனுப்புகிறேன். ஓ ராட்சசா, இன்று உனது தலை, யானையினால் மிதிக்கப்பட்டு நசுங்குவது போல எனது பலத்தால் நசுங்கிச் சுக்குநூறாகப் போகிறது.(29) இப்போரில் இன்று என்னால் நீ கொல்லப்பட்ட பிறகு, தரையில் கிடக்கும் உனது உறுப்புகளை மீனுண்ணும் நாரைகளும், பருந்துகளும், நரிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பிய்த்துண்ணட்டும். ஒரு நொடியில் இன்று நான் இந்தக் கானகத்தை ராட்சசர்கள் அற்ற கானகமாக மாற்றுகிறேன் பார். மனிதர்களை உண்டு நீ வெகுகாலமாக இக்கானகத்தை ஆண்டுவருகிறாய்! (30,31)  நீ பெரும் மலையைப் போல இருந்தாலும், பெரும் யானையைத் தொடர்ந்து இழுக்கும் சிம்மம் அதைக் கொல்வதைப் போல, ஓ ராட்சசர்களில் இழிந்தவனே, உன்னை நான் கொல்வதை இன்று உனது தங்கை காணப் போகிறாள்.(32) உன்னைக் கொன்று, மனிதர்கள் அச்சமற்று உலவ ஏற்றதாக இக்கானகத்தை மாற்றப்போகிறேன்” என்றான்.(33)

இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹிடிம்பன், “ஓ மனிதா, இந்த உனது வீண் இரைச்சலுக்கும், தற்பெருமைக்கும் என்ன அவசியம் இருக்கிறது? முதலில் நீ சொன்னதைச் செய், அதன்பிறகு தற்பெருமை பேசுவாயாக. எனவே, தாமதிக்காதே.(34) நீ ஆற்றல் நிரம்பிய பலவான் என்று உன்னை நினைக்கிறாய். எனவே, என்னுடன் மோதிய பிறகு, உனது {உண்மையான} பலத்தைப் பற்றி நீ அறிந்து கொள்வாயாக.(35) அதுவரை, நான் இவர்களைக் (உனது சகோதரர்களைக்) கொல்ல மாட்டேன். அவர்கள் சுகமாக உறங்கட்டும். ஆனால் முதலில், தீய பேச்சு பேசும் முட்டாளான உன்னை நான் கொல்வேன்.(37) உனது ரத்தத்தைக் குடித்த பிறகு, இவர்கள் அனைவரையும் கொல்வேன். இறுதியாக எனக்குத் தீங்கிழைத்த இவளையும் (எனது தங்கையைக்) கொல்வேன்” என்றான்”.(38)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிச் சொன்ன அந்த மனித ஊனுண்ணி, எதிரிகளைத் தண்டிக்கும் பீமனை நோக்கித் தனது கரங்களைக் கோபமாக நீட்டினான்.(38) பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், தன்னை நோக்கி ஓடி வந்த ராட்சசனின் கரங்களைப் பெரும்பலத்துடன் விளையாட்டாகப் பற்றினான்.(39) பிறகு, பெரும் வன்முறையுடன் அந்த ராட்சசனையும் பற்றி, ஒரு சிங்கமானது, சிறிய மிருகத்தை இழுத்துச் செல்வதைப் போல அவனை முப்பத்திரண்டு முழம் தொலைவிற்கு இழுத்துச் சென்றான்.(40)

பீமனுடைய பலத்தின் நிறையை உணர்ந்த அந்த ராட்சசன், பெரும் கோபம் கொண்டு, அந்தப் பாண்டவனை அணைத்துக் கட்டிக் கொண்டு, பெரும் கூச்சல் போட்டான்.(41) இக்கூச்சலால், சுகமாக உறங்கும் தனது சகோதரர்கள் எழுந்துவிடாமல் இருக்க, பீமன் அந்த ராட்சசனை இன்னும் அதிகத் தூரத்திற்கு இழுத்துச் சென்றான்.(42) கட்டியணைத்துக் கொண்டும், ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டும் பெரும் பலத்துடன் ஹிடிம்பனும், பீமசேனனும் தங்கள் பேராற்றலை வெளிப்படுத்தினர்.(43) முழுவதும் வளர்ந்த இரு மதம்பிடித்த பெரும் யானைகள் கோபத்துடன் மோதிக் கொள்வதைப் போல, அவர்கள் மரங்களை ஒடித்தும், தரையில் முளைத்திருந்த செடிகொடிகளைப் பிடுங்கியும் சண்டையிட்டனர்.(44) இவ்வொலியால் அந்த மனிதர்களில் புலியானவர்கள் (உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்கள்) தங்கள் தாயுடன் எழுந்திருந்து, ஹிடும்பை தங்களெதிரில் அமர்ந்திருப்பதைக் கண்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(45)

ஹிடிம்பனைக் கொன்றான் பீமன்! – ஆதிபர்வம் பகுதி 156-(ஹிடிம்ப வத பர்வம் – 3)-உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த குந்தியும், பாண்டவர்களும்; ஹிடிம்ப பீம மற்போரைக் குறித்து ஹிடிம்பை மூலமாக அறிந்த கொண்ட பாண்டவர்கள்; பீமனைக் கேலி செய்த அர்ஜுனன்; ஹிடிம்பனைக் கொன்ற பீமன்; பீமனைக் கொண்டாடிய அர்ஜுனன்..

வைசம்பாயனர் சொன்னார், “தங்கள் தாயுடன் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்களான அந்த மனிதர்களில் புலிகள், ஹிடிம்பையின் இயல்புக்குமிக்க அழகைக் கண்டு வியந்தனர்.(1) குந்தி, அவளது அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவளிடம் இனிமையாகவும், உறுதியேற்படுத்தும் வகையிலும்(2) “ஓ தேவர்களின் மகளைப் போல இருப்பவளே, நீ யாருடையவள்? யார் நீ? ஓ அழகான நிறம் கொண்டவளே, என்ன காரியமாக நீ இங்கே வந்திருக்கிறாய்? எங்கிருந்து வந்திருக்கிறாய்?(3) நீ கானக தேவதையாகவோ, அப்சரஸாகவோ இருப்பின், உன்னைப் பற்றி முழுமையாகச் சொல்வாயாக. நீ ஏன் இங்கிருக்கிறாய் என்பதையும் சொல்வாயாக” என்று கேட்டாள்.(4)

அதற்கு ஹிடிம்பை, “நீ பார்த்துக் கொண்டிருப்பதும், நீல மேகத்தின் நிறத்தைக் கொண்டதும் {இருண்டதும்}, விரிந்ததுமான இந்தக் கானகம், ஹிடிம்பன் என்ற ராட்சசனின் வசிப்பிடமாகும்.(5) ஓ அழகான பெண்மணியே, என்னை அந்த ராட்சசத் தலைவனுடைய தங்கையாக அறிந்து கொள்வாயாக. மதிப்புக்குரிய பெண்மணியே, நான் எனது சகோதரனால் ஏவப்பட்டு, உன்னையும் உனது பிள்ளைகளையும் கொல்ல வந்தேன்.(6) எனது சகோதரனின் அந்தக் கொடூரமான கட்டளையைக் கேட்டு இங்கு வந்த நான், பலம்வாய்ந்த உனது மகனைக் கண்டேன்.(7) ஓ அருளப்பட்ட மங்கையே, எல்லா உயிரினுள்ளும் படர்ந்தூடுருவியிருப்பவனான காதல் தேவன் {மன்மதன்}, என்னை, உனது மகனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(8) உனது பலம் வாய்ந்த மகனை எனது கணவராக நான் (மனத்தால்) தேர்ந்தெடுத்தேன். உங்களையெல்லாம் வெளியேற்ற என்னால் முடிந்த வரை முயன்றேன். ஆனால் (உனது மகனின் எதிர்ப்பால்) முடியவில்லை.(9) எனது தாமதத்தைக் கண்ட அந்த மனித ஊனுண்ணி {ஹிடிம்பன்}, உனது மகன்களைக் கொல்ல இங்கே வந்தான்.(10) ஆனால் அவன், உனது பெரும் பலம் வாய்ந்த மகனான, எனது கணவரால் {பீமனால்} வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளான்.(11) நரனும் ராட்சசனும் ஆன அந்த இரும் பெரும் பலசாலிகளும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திப் போரிட்டுக் கொண்டே, ஒருவரை ஒருவர் நசுக்கி, இந்த முழுப் பகுதியையும் தங்கள் முழக்கங்களால் நிரப்பிக் கொண்டிருப்பதைப் பார்” என்றாள்.(12)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அவளது வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், அர்ஜுனன், நகுலன் மற்றும் பெரும் சக்தி படைத்த சகாதேவன் ஆகியோர் வேகமாக எழுந்து, பீமனும், ராட்சசனும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டனர்.(13) ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டும், ஒருவரையொருவர் பெரும் பலத்துடன் இழுத்துக் கொண்டும் இரு சிங்கங்கள் மோதிக் கொள்வதைப் போல அவர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டிருந்தனர்.(14) அவர்களது சண்டையால் எழுந்த புழுதியால், அந்தக் காடே பற்றி எரிவதைப் போலத் தெரிந்தது.(15) புழுதியால் மறைக்கப்பட்ட உடல்களைக் கொண்ட அவர்கள், பார்ப்பதற்கு பனியால் மூடப்பட்ட இரண்டு பெரும் மலைகளைப் போல இருந்தனர்.(16)

அப்போது, ராட்சசனால் ஒடுக்கப்படும் பீமனைக் கண்ட அர்ஜுனன், உதடுகளில் புன்னகையுடன், மெதுவாக,(17) “ஓ பெரும் கரம் கொண்ட பீமரே, அஞ்சாதீர்! நீர் இந்தப் பயங்கரமான ராட்சசனோடு சண்டையிட்டுக் களைத்துப் போவதை (உறங்கிக் கொண்டிருந்ததால்) நாங்கள் அறியாதிருந்தோம்.(18) உமக்கு உதவி செய்ய நான் இப்போது இங்கே நிற்கிறேன். நான் இந்த ராட்சசனைக் கொல்ல, நீர் எனக்கு வழிவிடுவீராக. நகுலனும் சகாதேவனும் நமது தாயைக் காக்கட்டும்” என்றான்.(19)

இதைக் கேட்ட பீமன், “ஓ தம்பி, அந்நியனைப் போல் நின்று சண்டையை மட்டும் பார்ப்பாயாக! முடிவை எண்ணி அஞ்சாதே. எனது கரங்கள் எட்டும் தொலைவிற்குள் வந்த பிறகு, இவன் உயிருடன் தப்பமாட்டான்” என்றான்.(20)

அர்ஜுனன், “ஓ பீமரே, இந்த ராட்சசனை இவ்வளவு நேரம் உயிருடன் வைத்திருப்பதன் அவசியம் என்ன? ஓ எதிரிகளை ஒடுக்குபவரே, நாம் செல்ல வேண்டும். இன்னும் இங்கேயே தங்க முடியாது.(21) கிழக்குச் சிவக்கிறது, காலைச் சந்தி வரப்போகிறது. அக்காலத்தில் ராட்சசர்களின் பலம் கூடும். எனவே, ஓ பீமரே, விளையாடாமல் துரிதமாகச் செயல்பட்டு இந்தப் பயங்கரமான ராட்சசனை உடனே கொல்வீராக. நாளின் இரு சந்தி காலங்களில் ராட்சசர்கள் தங்கள் மாய சக்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றுவார்கள். உமது கரங்களின் பலம் அத்தனையையும் பயன்படுத்துவீராக” என்றான்”.(22,23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அர்ஜுனனின் இந்தப் பேச்சால் கோபம் மூண்ட பீமன், அண்ட அழிவின் {பிரளயத்தின்} போது பயன்படும் வாயுவின் (தனது தந்தையின்) பலத்துடன், பெரும் கோபம் கொண்டு அந்த நீல மேகம் போன்ற ராட்சசனின் உடலைத் தூக்கி, நூறு முறை சுழற்றினான்.(24,25)

அப்போது பீமன், அந்த மனித ஊனுண்ணியிடம் {ஹிடிம்பனிடம்}, “ஓ ராட்சசா, உனது புத்திக்கூர்மை வீணே. வீணாக இந்தப் புனிதமற்ற பெருத்த சதைகளை நீ வளர்த்திருக்கிறாய். எனவே புனிதமற்ற இறப்புக்கு நீ தகுதியுள்ளவனே. நான் இன்று உன்னை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறேன்.(26) இன்று இந்தக் கானகத்தை நான் முட்செடிகள் இல்லாத அருளப்பட்ட கானகமாக்குகிறேன். ஓ ராட்சசா, நீ மனிதர்களை உனது உணவாக இனி கொள்ள முடியாது” என்றான்.(27)

அப்போது அர்ஜுனன், “ஓ பீமரே, இந்த ராட்சசனைக் கொல்வது கடினமாக இருப்பின், நான் உமக்கு உதவி செய்து, உம்முடன் சேர்ந்து தாமதிக்காமல் அவனைக் கொல்கிறேன்.(28) அல்லது ஓ விருகோதரரே {பீமரே}, நான் தனியாக இந்த ராட்சசனைக் கொல்கிறேன். அதற்காவது வழிவிடுவீராக. நீர் களைத்திருக்கிறீர். கிட்டத்தட்ட வேலையை முடித்துவிட்டீர். உமக்கு ஓய்வு தேவைப்படுகிறது” என்றான்”.(29)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்ட பீமன், நெருப்பெனக் கோபம் கொண்டு, அந்த ராட்சசனைத் தரையில் தேய்த்து, விலங்கைக் கொல்வதைப் போல அவனைக் கொன்றான்.(30) அந்த ராட்சசன் கொல்லப்படும்போது, அவன் பயங்கரமான பேரொலியை எழுப்பினான். அவ்வொலி அக்கானகம் முழுதும் நிறைந்து, ஈரமான பேரிகை {நனைந்த மேளம்} போல ஆழ்ந்த ஒலியாக இருந்தது.(31) பிறகு அந்தப் பலம்வாய்ந்த பீமன், அவ்வுடலைத் தனது கைகளில் பிடித்து, இரண்டாக மடித்து, நடுவில் உடைத்து அவனது சகோதரர்களை {தன் சாதனையால்} மனநிறைவு கொள்ளச் செய்தான்.(32) ஹிடிம்பன் கொல்லப்பட்டதைக் கண்டதும், அவர்கள் பெரிதும் மகிழ்ந்து, தாமதிக்காமல் எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பீமனை வாழ்த்தினர்.(33) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தச் சிறப்பு மிக்கப் பீமனைப் பெரிதும் கொண்டாடிய அர்ஜுனன், அவனிடம்,(34) “மரியாதைக்குரிய மூத்தவரே {அண்ணா}, இக்கானகத்தின் அருகிலேயே ஒரு நகரமிருப்பதாக நான் நினைக்கிறேன். நீர் அருளப்பட்டிருப்பீராக. உடனே நாம் அங்குச் சென்றால், துரியோதனனால் நமது சுவடுகளை அறிய முடியாது” என்றான்.(35) பிறகு, பலம்வாய்ந்தவர்களும், தேர் வீரர்களுமான அந்த மனிதர்களில் புலிகள், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, தங்கள் தாயுடன் தொடர்ந்தனர். ராட்சசப் பெண்ணாண ஹிடும்பையும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள்” {என்றார் வைசம்பயானர்}.(36)

கடோத்கசன் பிறப்பு! – ஆதிபர்வம் பகுதி 157-(ஹிடிம்ப வத பர்வம் – 4)-ஹிடிம்பையைக் கொல்லத் துணிந்த பீமன்; பீமனைத் தடுத்த யுதிஷ்டிரன்; ஹிடிம்பையை ஏற்கும்படி பீமனுக்குச் சொன்ன குந்தி…

வைசம்பாயனர் சொன்னார், “ஹிடிம்பை அவர்களைத் {பாண்டவர்களைத்} தொடர்ந்து வருவதைக் கண்ட பீமன், அவளிடம் {ஹிடிம்பையிடம்}, “ராட்சசர்கள் தங்கள் பகைமையை மனத்திலேயே வைத்துக் கொண்டு, எதிரிகளை ஏமாற்றிப் பழி தீர்ப்பார்கள். எனவே, ஓ ஹிடிம்பையே, நீ உன் அண்ணன் {ஹிடிம்பன்} சென்ற வழியிலேயே செல்வாயாக” என்றான். {ஹிடிம்பையைக் கொல்லத் துணிந்தான் பீமன்}.

கோபப்பட்ட பீமனைக் கண்ட யுதிஷ்டிரன், “ஓ பீமா, ஓ மனிதர்களில் புலியே, கோபவசப்பட்டு ஒரு பெண்ணைக் கொல்லாதே.  ஓ பாண்டவா {பீமா}, அறத்தைக் கடைப்பிடிப்பது உடலைக் காப்பதைவிட உயர்ந்த கடமையாகும்.(2) நம்மைக் கொல்லும் நோக்கத்தில் வந்த ஹிடிம்பனை ஏற்கனவே நீ கொன்றுவிட்டாய். இந்தப் பெண் {ஹிடிம்பை} அந்த ராட்சசனின் {ஹிடிம்பனின்} தங்கையாவாள். இவள் கோபப்பட்டால் கூட, இவளால் நம்மை என்ன செய்துவிட முடியும்?” என்றான்”.(3)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு ஹிடிம்பை, குந்தியையும், அவளது மகன் யுதிஷ்டிரனையும் மரியாதையாகக் கரங்கூப்பி வணங்கி,(4) “ஓ மரியாதைக்குரியவளே {குந்தியே}, காம தேவன் கைகளில் அகப்பட்ட பெண்ணின் வேதனை என்ன என்பது உனக்குத் தெரியும். ஓ அருளப்பட்ட மங்கையே {குந்தியே}, பீமசேனரால் உண்டான அந்த வேதனை என்னைச் சித்தரவதை செய்கிறது.(5) நான் இதுவரைத் தக்க நேரத்திற்காகக் காத்திருந்து, தாங்கமுடியாத வேதனையைத் தாங்கி வந்தேன். நான் மகிழ்ச்சியடையத்தக்க அந்த நேரம் இப்போது வந்திருக்கிறது.(6) என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் எனது குல வழக்கங்கள் ஆகியவற்றைக் கைவிட்டு, ஓ அருளப்பட்ட மங்கையே {குந்தியே}, நான் இந்த மனிதர்களில் புலியான, உனது மகனை {பீமனை},  எனது கணவராகத் தேர்ந்தெடுத்தேன்.(7) ஓ சிறப்பு வாய்ந்த மங்கையே! நான் உண்மையைச் சொல்கிறேன். இந்த வீரராலோ, உன்னாலோ கைவிடப்பட்டால், நான் இந்த உயிரை இனியும் தாங்கிக் கொள்ள மாட்டேன்.(8) எனவே, ஓ அழகான நிறம் கொண்டவளே {குந்தியே}, அறிவற்றவளாக, அல்லது உனக்குக் கீழ்ப்படிந்த ஓர் அடிமையாக என்னை நினைத்துக் கொண்டு, எனக்குக் கருணை காட்டுவாயாக.(9) ஓ சிறப்புமிக்க மங்கையே {குந்தியே}, என்னை உனது மகனோடு {பீமனோடு} சேர்த்து, அவரை எனது கணவராக்குவாயாக.  இந்தத் தெய்வீக அழகுடையவரை, நான் விருப்பப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கொடுப்பாயாக. ஓ அருளப்பட்டவளே என்னை நம்புவாயாக.  நான் அவரை மீண்டும் உங்களிடமே கொண்டு வந்துவிடுவேன்.(10)

நீ எப்போது என்னை நினைக்கிறாயோ அப்போதே நான் உன்னிடம் வந்து, நீ சொல்வதையெல்லாம் செய்வேன். உங்களை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பேன். நுழையமுடியாத சமமற்ற பகுதிகளுக்கெல்லாம் உங்களைச் சுமந்து செல்வேன்.(11) நீங்கள் வேகமாகச் செல்ல நினைக்கும்போதெல்லாம் உங்களை என் முதுகில் வைத்துச் சுமந்து செல்வேன். ஓ, என்னிடம் கருணை கொண்டு, பீமரை என்னை ஏற்கச் செய்வாயாக.(12) ஒருவன் துன்பத்திலிருக்கும் போது, எவ்வழியை மேற்கொண்டாவது அவனைக் காக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(13) துன்ப காலத்திலும் அறவழியில் நடப்பவன், அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனாவான். துன்பமே அறத்திற்கும், அறம் சார்ந்த மனிதர்களுக்கும் பெரும் அபாயமாகும். அறமே வாழ்வைக் காக்கிறது.(14) எனவே அதுவே {அறமே} வாழ்வைக் கொடுக்கிறது. ஆகவே, அறத்தின் அல்லது கடமையின் பாதுகாப்பை நாம் நாடினால், அது அழிவைக் கொடுக்காது” என்றாள்.(15)

ஹிடிம்பையின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “ஓ ஹிடிம்பையே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. அதில் ஐயம் இல்லை. ஆனால், ஓ கொடியிடையாளே {ஹிடிம்பையே}, நீயும் நீ சொல்வது போல நடந்து கொள்ள வேண்டும்.(16) பீமன், தன் நீராடலை முடித்துத் தனது தினசரி துதிகளையும் சடங்குளையும் {பூஜைகளை} முடித்துச் சூரியன் மறையும் வரை உன்னைக் கவனிப்பான்.(17) நீ விரும்பியவாறு அவனுடன் பகலெல்லாம் விளையாடு, ஓ மனோவேகம் கொண்டவளே! ஆனால் நீ தினமும் பீமசேனனை இரவுக்கு முன்னர் இங்குத் திரும்பக் கொண்டு வந்துவிட வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}”[1].(18)(கும்பகோணம் பதிப்பில், இவ்விடத்தில், பாண்டவர்கள் ஹிடிம்பையோடு சாலிஹோத்ரசரஸுக்குச் சென்று சாலிஹோத்ர முனிவரைக் காண்கின்றனர். அவர் மூலமாக ராஜநீதிகளையும், தர்க்க சாத்திரங்கள் பலவற்றையும் கற்கின்றனர். ஹிடிம்பை அவர்களுக்கு ஒரு வசிப்பிடத்தை அமைத்துத் தருகிறாள். பிறகு சமாதானமடைந்த பீமன் ஹிடிம்பையை ஏற்கிறான். இது கும்பகோணம் பதிப்பில் இரண்டு அத்தியாயங்களில் விவரிக்கப்படுகிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இக்குறிப்புகள் இல்லை.)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பீமன், தனது சம்மதத்தை யுதிஷ்டிரனுக்கு உணர்ந்தி ஹிடிம்பையிடம், “ஓ ராட்சசி, நான் சொல்வதைக் கேள்! உண்மையில் உன்னிடம் ஓர் ஒப்பந்தம் செய்கிறேன்.(19) ஓ கொடியிடையாளே, உனக்கு ஒரு மகன் பிறக்கும் வரை நான் உன்னுடன் இருப்பேன்” என்றான்.(20)அதற்கு ஹிடிம்பை, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி பீமனைத் தனது உடலில் தாங்கி வானத்தில் வேகமாகச் சென்றாள். அழகாகக் காட்சியளிக்கும் மலை முகடுகளிலும், தேவர்களுக்கும் புனிதமான பகுதிகளிலும், மான்கள் நிறைந்த இனிய கானம், பாடும் பறவைகள் நிறைந்த இடங்களிலும், தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, சில சமயங்களில் வழவழப்பானவற்றை வந்து கொட்டிய அந்த ஹிடிம்பை அந்தப் பாண்டவனுடன் {பீமனுடன்} விளையாடி அவனை மகிழ்வித்தாள்.(22,23) அக்கானகத்தில் யாரும் நுழைய முடியாத பகுதிகளிலும், பெரிய அளவுக்கு வளர்ந்து பூத்து குலுங்கிய மரங்களும், தாமரைகளும், அல்லி மலர்களும் நிறைந்த மலையின் சாரலிலும்,(24) நதிகள் அமைத்த தீவுகளிலும், அதன் கரைகளிலும், ஓடைகளிலும், அதன் கரைகளிலும், மலை அருவிகளிலும்,(25) அடர்ந்த மரங்கள் நிறைந்த கானகத்திலும், கொடிகள் நிறைந்த இமயத்திலும், பலவிதமான குகைகளிலும்,(26) தாமரைகள் பூத்துக் குலங்கும் தெளிந்த நீருடைய தடாகங்களிலும், தங்கமும், முத்துக்களும் ஒளிரும் கடற்கரலைகளிலும்,(27) அழகிய நகரங்கள், அழகிய நந்தவனங்கள், தேவர்களுக்குப் புனிதமான காடுகள், மலைச்சாரல்கள் ஆகியவற்றிலும்,(28) குஹ்யர்கள் மற்றும் துறவிகள் வாழும் பகுதிகளிலும், எல்லாக் காலத்திற்கும் ஏற்ற வகையில் பழங்களும் மலர்களும் நிறைந்த மானசரோவரின் (ஏரி) கரைகளிலும் ஹிடிம்பை அழகான பெண்ணுருக் கொண்டு பீமனுடன் விளையாடி அவனை மகிழ்வித்தாள்.(29) மனோவேகம் கொண்ட அவள் {ஹிடிம்பை} இந்தப் பகுதிகளிலெல்லாம் அந்தப் பாண்டவன் {பீமன்} மூலம் ஒரு பிள்ளை பெறும் வரை விளையாடினாள்.(30)சிறிது காலங்கழித்து, பயங்கரமான கண்களுடனும், பெரிய வாயுடனும், அம்பு போன்ற நீண்ட காதுகளுடனும் பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள்.(31) உதடுகள் தாமிரத்தைப் போன்று சிவப்பாகவும், பற்கள் கூர்மையாகவும், சத்தம் உறுமலாகவும், பெரும் கரங்களுடனும், பெரும் பலத்துடனும், கட்டுக்கடங்காத வீரத்துடனும் வளர்ந்த அந்தப் பிள்ளை, பெரும் வலிமைமிக்க வில்லாளி ஆனான்.(32) நீண்ட நாசியும், அகலமான மார்பும், பயமுறுத்தும் வகையில் வீங்கிய கால் ஆடு (Calf) தசைகளும், வேகமான இயக்கமும் கொண்ட அவன், மனிதனுக்குப் பிறந்திருந்தாலும், மனிதனுக்குரிய எந்த அம்சமும் இல்லாதிருந்தான். பிசாசங்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களையும் பலத்தால் விஞ்சியிருந்தான்.(33,34) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவன் குழந்தையாக இருந்தாலும், பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஓர் இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான். அந்தப் பலம் வாய்ந்த வீரன் உடனே அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவமும் அடைந்தான்.(35)

ராட்சசப் பெண்கள், தாங்கள் கருத்தரித்த உடனேயே விரும்பிய வடிவை அடையும் சக்திவாய்ந்த பிள்ளையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வார்கள்.(36) வழுக்கைத் தலையுடைய பிள்ளையான அந்தப் பெரும் வில்லாளி, தான் பிறந்தவுடனேயே, கீழே குனிந்து தனது தாய் {ஹிடிம்பை} மற்றும் தந்தையின் {பீமனின்} பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவனது பெற்றோர்கள் {பீமனும் ஹிடிம்பையும்} அவனுக்கு ஒரு பெயர் வைத்தனர்.(37) அவனது தாய், அவனது தலை கடத்தைப் {பானையைப்} போல (வழுக்கையாக) இருப்பதைக் குறிப்பிட்டாள். பெற்றோர் இருவரும் சேர்ந்து அவனைக் கடோத்கசன் (பானைத்தலையன்) என்று அழைத்தனர்.(38) அந்தக் கடோத்கசன் பாண்டவர்களுக்குப் பெரும் அர்ப்பணிப்புடன் இருந்து, அவர்களுக்கு விருப்பமானவனாகி, அவர்களில் ஒருவனானான்.(39)பிறகு ஹிடிம்பை, தனது (கணவனுடன் பீமனுடன்) தங்கும் காலம் முடிவுக்கு வந்ததை உணர்ந்து, பாண்டவர்களை வணங்கி அவள் விரும்பிய இடத்திற்குச் சென்றாள்.(40) ராட்சசர்களில் முதன்மையான கடோத்கசன் விரும்பிய நேரம் திரும்பி வருவதாகத் தனது தந்தையிடம் உறுதியளித்து, அவர்களனைவரையும் வணங்கிவிட்டு, வடதிசை நோக்கிச் சென்றான்.(41) சிறப்பு வாய்ந்த இந்திரன், கர்ணனுக்குக் கணையொன்றைக் (அது யார் மீது தொடுக்கப்படுகிறதோ, அவனது மரணம் நிச்சயம்) கொடுத்ததன் நிமித்தமாக, உண்மையில், பெரும் தேர்வீரனான கடோத்கசன் (தனது ஒரு பகுதியைக் கொடுத்து), நிகரற்ற சக்தி கொண்ட அந்தக் கர்ணனுக்குத் தகுதிவாய்ந்த பகைவன் ஆனான்” {என்றார் வைசம்பாயனர்}.(42)

வியாசரைச் சந்தித்த பாண்டவர்கள்! – ஆதிபர்வம் பகுதி 158-(ஹிடிம்ப வத பர்வம் – 5)காட்டில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; ஏகச்சக்கர நகரத்தில் ஒரு பிராமணன் வீட்டில் பாண்டவர்களைத் தங்கச் செய்த வியாசர்…

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, பலம் வாய்ந்த தேர்வீரர்களான பாண்டவர்கள், (தங்கள் உணவுக்காக) மான்களையும் மற்றும் பல விலங்குகளையும் கொன்று, கானகம் விட்டுக் கானகம் சென்று கொண்டிருந்தனர்.(1) அவர்கள் அப்படிச் சுற்றித் திரிகையில் மத்ஸ்யம், திரிகர்த்தம், பாஞ்சாலம், கீசகம் ஆகிய நாடுகளையும் மற்றும் அவற்றிலிருந்த அழகிய கானகங்களையும், ஏரிகளையும் கண்டனர்.(2) அவர்கள் அனைவரும் தலையில் சடாமுடி தரித்து, மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோல்களையும் ஆடையாயுடுத்தியிருந்தனர். அவர்களுடன் இருந்த குந்தியும், துறவு ஆடைகளுடனேயே இருந்தாள்.(3)

அந்தப் பெரும் தேர் வீரர்கள் தங்கள் தாயை முதுகில் சுமந்தபடி வேகமாகவும், சில நேரங்களில் மறைந்து மெதுவாகவும் சென்றனர். சில நேரங்களில் பெரும் வேகத்துடனும் சென்றனர்.(4) அவர்கள் ரிக் மற்றும் பிற வேதங்களையும், அனைத்து வேதாங்கங்களையும், ஒழுக்கம் மற்றும் அரசியல் சார்ந்த அறிவியல்களையும் {சாலிஹோத்ர மஹரிஷியிடம்} கற்றனர். அறநெறிகளை நன்குணர்ந்த பாண்டவர்கள் அப்படிச் சுற்றித் திரிகையில் தங்கள் பாட்டனைச் (வியாசரைச்) சந்தித்தனர்.(5)

அந்தச் சிறப்புமிகுந்த கிருஷ்ண துவைபாயனரை வணங்கிய, அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தாயுடன் சேர்ந்து அவர் முன்னிலையில் கைகூப்பி நின்றனர்.(6) வியாசர் அவர்களிடம், “பாரதக் குலத்தின் காளைகளே, திருதராஷ்டிரன் மகன் மூலம் நீங்கள் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு நாடுகடத்தப்படும் நிலையை அடைவீர்கள் என்று நான் முன்பே அறிந்திருந்தேன்.(7) அதை அறிந்ததாலேயே உங்களுக்கு நன்மை செய்ய வேண்டி இங்கு வந்திருக்கிறேன். உங்களுக்கு நடந்ததை எண்ணித் துயரடையாதீர்கள். இவை எல்லாம் உங்கள் மகிழ்ச்சிக்காகவே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(8) திருதராஷ்டிரன் மகன்களும் நீங்களும் எனது பார்வையில் ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், துயரத்திலிருப்பவர்களிடத்திலும், இளம் வயதில் இருப்பவர்களிடத்திலும் அவர்கள் மீது கொண்ட கருணையால் அவர்களுக்குச் சாதகமாக மனிதர்கள் ஒருதலைப்பட்சமாகவே இருப்பார்கள்.(9) எனவே, இப்போது எனது பாசம் உங்களிடமே அதிகமாக இருக்கிறது. அந்தப் பாசத்தால் நான் உங்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். நான் சொல்வதைக் கேளுங்கள்.(10) இங்கிருந்து வெகு அருகில் ஒரு மகிழ்ச்சிகரமான நகரம் இருக்கிறது.  அங்கு எந்த ஆபத்தும் உங்களை அணுகாது. அங்கே நீங்கள் மாற்றுருவில் வாழ்ந்து, எனது வரவுக்காகக் காத்திருங்கள்” என்றார்”.(11)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சத்தியவதி மைந்தனான அந்த வியாசர், பாண்டவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, அவர்களை ஏகச்சக்கர நகரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தக் குரு {வியாசர்} குந்தியிடம்,(12) “ஓ மகளே, மனிதர்களில் சிறந்தவனும், காளையுமான இந்த உனது மகன் யுதிஷ்டிரன், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, முழு உலகத்தையும் வென்று, அனைத்து ஏகாதிபதிகளையும் இந்தப் பூமி முழுவதையும் ஆள்வான்.(13) அவன், பீமன் மற்றும் அர்ஜுனனின் ஆற்றலால் கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் இந்த முழு உலகத்தையும் அடைந்து, அதன் ஆட்சி உரிமையை ஏற்று மகிழ்வான்.(14) உன் மகன்களும், பெரும் தேர் வீரர்களான மாத்ரியின் மைந்தர்களும் தங்கள் ஆட்சிக்குரிய பகுதிகளில் விரும்பியவாறு இருப்பார்கள்.(15) அந்த மனிதர்களில் புலிகள், ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகள் போன்ற வேள்விகள் பலவற்றைச் செய்து பிராமணர்களுக்குப் பல பரிசுகளை அளிப்பார்கள்.(16) உனது மகன்கனான இவர்கள் தங்கள் மூதாதையர் அரசை அடைந்து, தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் ஆடம்பரமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார்கள்” என்றார்”.(17)வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன வியாசர் அவர்களை ஒரு பிராமணரின் வசிப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.(18) தீவில் பிறந்தவரான அந்த முனிவர் {துவைபாயனர்}, பாண்டவர்களில் மூத்தவனிடம், “எனக்காக இங்கே காத்திருங்கள்! நான் இங்கே மீண்டும் வருவேன். இந்த நாட்டிற்கும், இந்தச் சூழ்நிலைகளுக்கும் உங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் நீங்கள் இங்கே பெருமகழிச்சியடையலாம்” என்றார்.(19) ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் தங்கள் கரங்களைக் கூப்பியபடி அந்த முனிவரிடம் “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு, சிறப்புமிக்க குருவும், முனிவருமான அந்த வியாசர், எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பிச் சென்றார்” {என்றார் வைசம்பாயனர்}.(20)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading