ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ ஆதி பர்வம்-ஸ்ரீ சம்பவ பர்வம் – 

அனைத்துயிர்களின் பிறப்பு | ஆதிபர்வம் – பகுதி 65(சம்பவ பர்வம் – 1)பிரம்மாவின் மானஸ புத்திரர்கள்; கஸ்யபருக்கும் தக்ஷனின் மகள்களுக்கும் பிறந்தவர்கள்; இந்தப் பகுதியைப் படிப்பதால் உண்டாகும் பலன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதன்பிறகு இந்திரன், நாராயணனிடம், தேவர்கள் அனைவருடன் அவரவர் அம்சங்களுக்கேற்ப பின்னவன் {நாராயணன்} எவ்வாறு சொர்க்கத்தில் இருந்து பூமியில் இறங்கப் போகிறான் என்பது குறித்துக் கலந்தாலோசித்தான்.(1) தேவலோகவாசிகள் அனைவருக்கும் கட்டளையிட்ட பிறகு இந்திரன் நாராயணனின் இருப்பிடத்திலிருந்து திரும்பினான்.(2)

அசுரர்களின் அழிவுக்காகவும், மூவுலகங்களின் நன்மைக்காகவும் தேவலோகவாசிகள் ஒவ்வொருவராகப் பூமியில் அவதாரம் எடுத்தனர்.(3) அதன்பிறகு தேவர்கள், ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, பிரம்ம முனிவர்கள் மற்றும் அரச முனிகளின் குலத்தில் தாங்கள் விரும்பியவாறே பிறப்பை எடுத்தனர்.(4) {அப்படிப் பிறந்து}, தானவர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், மனிதனைத் தின்போர் மற்றும் பிற உயிரினங்கள் பலவற்றையும் அவர்கள் கொன்றனர்.(5) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, தேவர்கள் குழந்தைகளாகப் இருக்கும்போதே பலம்பொருந்தியவர்களாக இருந்ததால், தானவர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், பாம்புகள் ஆகியோரால் அவர்களைக் கொல்ல முடியவில்லை” {என்றார் வைசம்பாயனர்}.(6)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், மனிதர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோரின் பிறப்பை முதலில் இருந்தே கேட்க நான் விரும்புகிறேன். எனவே, அனைத்து உயிரினங்களின் பிறப்பைக் குறித்தும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(7,8)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தான்தோன்றியை {சுயம்புவான பிரம்மனை} என் சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு, தேவர்கள் மற்றும் பிற உயிரினங்களின் தோற்றத்தைக் குறித்து உண்மையாகவே உனக்கு விரிவாகச் சொல்கிறேன்.(9) பிரம்மனுக்குமரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரதுஎன ஆறு ஆன்ம மகன்கள் {மனத்தினால் உண்டாக்கப்பட்ட மகன்கள்} இருந்ததாக அறியப்படுகிறது.(10) மேலும் மரீசியின் மகன் கசியபர் ஆவார். கசியபரிடமிருந்தே இந்த உயிரினங்கள் எழுந்தன.

(பிராஜாபதிகளில் ஒருவரான) தக்ஷனுக்குப் பெரும் நற்பேற்றைக் கொண்ட பதிமூன்று {13} மகள்கள் பிறந்திருந்தனர்.(11) ஓ! மனிதர்களில் புலியே, பாரதக் குல இளவரசனே {ஜனமேஜயனே}, அதிதி, திதி, தனு, காலை, தனாயு, சிம்ஹிகை, குரோதை, பிராதை, விஸ்வை[1], (விஸ்வை-என்பவளின் பிள்ளைகளைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை.)வினதை, கபிலை, முனி மற்றும் கத்ரு ஆகியோரே அந்தத் தக்ஷனின் மகள்களாவர். இவர்களின் மகன்களும், பேரன்களும் பெரும் சக்திகளைக் கொடையாகக் கொண்டு கணக்கிலடங்காதவர்களாக இருந்தனர்.(12,13)

{1.தக்ஷனின் முதல் மகளான} அதிதியிலிருந்து இந்த அண்டத்தின் தலைவர்களான {லோக ஈஸ்வரர்களான} பனிரெண்டு {12} ஆதித்யர்கள் தோன்றினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெயர் வரிசையில் உனக்கு அவர்களை விவரித்துச் சொல்கிறேன்.(14) தாத்ரி {தாதா}, மித்ரன், அர்யமா, சக்ரன் {இந்திரன்}, வருணன், அம்சன், பகன், விவஸ்வத் {விவஸ்வான்}, உஷா {பூஷா}, சாவித்ரி {சவிதா},(15) த்வஷ்த்ரி {த்வஷ்டா} மற்றும் விஷ்ணு ஆகியோரே அவர்கள். எனினும், இளையவன் {விஷ்ணு} தகுதியால் அவர்கள் அனைவரையும் விட மேன்மையானவனாக இருந்தான்.(16)

{2.தக்ஷனின் இரண்டாவது மகளான} திதிக்கு ஹிரண்ய கசிபு[2] (மூத்தவனின் பெயர் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. இளையவன் ஹிரண்யாக்ஷன், வராஹ அவதாரத்தில் கொல்லப்படுகிறான்.)என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். அந்தச் சிறப்புமிகுந்த ஹிரண்யகசிபுவுக்கு உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஐந்து மகன்கள் இருந்தனர்.(17) அவர்கள் அனைவருக்கும் மூத்தவனாகப் பிரஹலாதனும், அடுத்தவனாக ஸாஹ்ரதன் {ஸம்ஹ்லாதன்}, மூன்றாமவனாக அனுராதன் {அனுஹ்லாதன்}, அவனுக்கு அடுத்தவர்களாகச் சிபியும், பாஷ்கலனும் இருந்தனர்.(18) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிரஹலாதனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர்கள் விரோசனன்,கும்பன் மற்றும் நிகும்பன் ஆவர்.(19) விரோசனனுக்குப் பெரும் ஆற்றல்மிக்கப் பலி என்ற ஒரு மகன் பிறந்தான். அந்தப் பலியின் மகனே பாணன் என்ற பெரும் அசுரனாக அறியப்பட்டான்.(20) பெரும் நற்பேறால் அருளப்பட்ட பாணன், ருத்ரனைப் பின்பற்றுபவனாகவும், மஹாகாலன் என்ற பெயரால் அறியப்படுபவனாகவும் இருந்தான்.(21)

{3.தக்ஷனின் மூன்றாவது மகளான} தனு நாற்பது {40} மகன்களைப் பெற்றாள். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரில் மூத்தவன் பெரும் புகழ் பெற்ற விப்ரசித்தி, மற்றவர்கள் “சம்பரன், நமுசியும், பௌலமனும் {புலோமன்}, அசிலோமன், கேசி, துர்ஜயன், அயசிரன், அஸ்வசிரன், பலம் மிகுந்த அஸ்வசங்கு, ககனமூர்த்தன், வேகவத் {வேகவான்}, கேதுமத் {கேதுமான்}, சுவர்பானு, அஸ்வன், அஸ்வபதி, விருஷபர்வன், அஜகன், அஸ்வகிரீவன், சூக்ஷமன், பெரும்பலம் பொருந்திய துஹுண்டன், ஏகபாதன் {இக்ஷுபாத்}, ஏகசக்ரன், விருபாக்ஷன், மஹோதரன், நிசந்திரன், நிகும்பன், குபடன், கபடன், சரபன், சுலபன், சூரியன், சந்திரமஸ் ஆகியோராவர்;(22-26) இவர்களே தனுவின் குலத்தில் வந்தவர்களில் நன்கறியப்பட்டவர்கள். தேவர்களின் சூரியனும் சந்திரனும் வேறானவர்கள், அவர்கள் மேற்குறிப்பிட்டபடி தனுவின் மகன்கள் அல்ல. ஓ! மன்னா, பெரும் பலத்தையும், வீரத்தையும் கொடையாகக் கொண்ட பின்வரும் பத்துபேரும் தனுவின் குலத்தில் பிறந்தவர்களே: ஏகாக்ஷன், பெரும் வீரம் கொண்ட அம்ருதபன், பிரலம்பன், நரகன், வாதாபி, சத்ருதபனன், சடன், கவிஷ்டன், வனாயு, தீர்க்கஜிஹ்வன் ஆகியோரே அவர்கள்.(27-30) ஓ! பாரதா, இவர்களுக்குப் பிறந்த மகன்களும் பேரன்களும் கணக்கிலடங்காதவர்களாவர்.

{6.தக்ஷனின் ஆறாவது மகளான} சிம்ஹிகை சூரியனையும் சந்திரனையும் விழுங்கும் ராகுவையும்,(31) சுசந்திரன், சந்திரஹந்தரி {சந்திரஹர்தன்}, சந்திரபிரமர்தனன் ஆகிய பிற மூவரையும் பெற்றெடுத்தாள்.

{7.தக்ஷனின் ஏழாவது மகளான} குரூரையின் {குரோதையின்} கணக்கிலடங்கா புதல்வர்கள் அவளை {குரோதையைப்} போலவே தீயவர்களாக {குரோதகவசர்கள்} இருந்தனர்.(32) அவர்களின் இனமானது தீய செயல்களைக் கொண்டதும், கோபம் நிறைந்ததாகவும், பகைவர்களைத் தண்டிப்பதாகவும் இருந்தது.

{5.தக்ஷனின் ஐந்தாவது மகளான} தனாயுவுக்கு அசுரர்களில் காளையரான நான்கு மகன்கள் இருந்தனர்.(33) விக்ஷரன், பலன், வீரன், பெரும் அசுரனான விருத்திரன் ஆகியோரே அவர்கள்.

{4.தக்ஷனின் நான்காவது மகளான} காலையின் மைந்தர்கள் அனைவரும் யமனைப் போன்றவர்களாகவும், எதிரிகள் அனைவரையும் தாக்குபவர்களாகவும் இருந்தனர்.(34) {அவர்கள், தானவர்களில் பெரும் புகழைக் கொண்டவர்களாகவும் பலமிக்கவர்களாகவும், தங்கள் எதிரிகளை ஒடுக்குபவர்களாகவும் இருந்தனர்.}(35) அந்தக் காலையின் மகன்கள் விநாசனன், குரோதன், குரோதஹந்தரி, குரோதசத்ரு ஆகியோராவர். காலையின் மகன்களின் இன்னும் பலரும் இருந்தனர். ரிஷியின் {பிருகு முனிவரின்} மகனான சுக்ரன் {சுக்ராசாரியார்}, அசுரர்களுக்குத் தலைமைப் புரோகிதராக இருந்தார்.(36) கொண்டாடப்பட்டவரான சுக்ரன், அசுரர்களுக்குப் புரோகிதர்களாக இருந்த நான்கு மகன்களைக் கொண்டிருந்தார். அவர்கள் தாஷ்டதரா {த்வஷ்டா}, அத்ரி மற்றும் கடும் செயல்களைச் செய்யும் மற்றும் இருவராவர்.(37) சக்தியில் சூரியனைப் போன்றிருந்த அவர்கள், பிரம்ம லோகத்தை அடையத் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர். இப்படியே பெரும் சக்தியும், பலமும் கொண்ட தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இரு சந்ததிகளைக் குறித்தும் புராணங்களில் கேட்டது போலவே நான் உரைத்துவிட்டேன். ஓ! மன்னா {ஜனமேஜயா} இந்த வம்சாவளியினர் எண்ணற்றவர்களாகவும், புகழுக்கு அறியப்படாதவர்களாகவும் இருப்பதால், நான் அவர்களை எண்ணும் திறனற்றவனாக இருக்கிறேன்.(38,39)

{10.தக்ஷனின் பத்தாவது மகளான} வினதையின் மகன்களாக தார்க்ஷ்யன், அரிஷ்டநேமி, கருடன், அருணன், ஆருணி, வாருணி ஆகியோர்களாவர்.(40)

{13.தக்ஷனின் பதிமூன்றாவது மகளான} கத்ருவின் மகன்களாகசேஷன் அல்லது அநந்தன், வாசுகி, தக்ஷகன்,(41) கூர்மன் {குமாரன்}, குலிகன் ஆகியோர்  அறியப்படுகிறார்கள்;

{12.தக்ஷனின் பன்னிரண்டாவது மகளான} முனியின் மகன்களாக பீமசேனன், உக்ரசேனன், சுபர்ணன், வருணன்,(42) கோபதி, திருதராஷ்டிரன், ஏழாவதாகச் சூரியவர்ச்சஸ், சத்யவசாஸ், அர்க்கபர்ணன், பிரயுதன்,(43) பீமன், புகழுக்காகவும், கல்விக்காவும், உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதாலும் அறியப்பட்ட சித்ரரதன், சாலிசிரஸ் {காலிசிரஸ்}, பதினான்காவதாகப் பிரஜன்யன்,(44) பதினைந்தாவதாகக் கலி, பதினாறாவதாக நாரதன் ஆகிய இந்தத் தேவர்களும் கந்தர்வர்களும் (முன்பு சொன்னது போலத் தக்ஷனின் மகளான) முனியின் மகன்களாக அறியப்படுகின்றனர்.(45)

{8.தக்ஷனின் எட்டாவது மகளான} பிராதையின் மகள்களாக, ஓ! பாரதா {ஜனமேஜயா}, இன்னும் பலரை நான் நினைவுகூர்கிறேன். அனவத்யை, மனு, வம்சை, அசுரை, மார்க்கணப்பிரியை,(46) அரூபை {அனுபை}, சுபகை, பாசி ஆகியோர் பெறப்பட்டார்கள். சித்தன், பூர்ணன், பர்ஹிஸ், பெரும் புகழ்வாய்ந்த பூர்ணாயுஸ்,(47) பிரம்மச்சாரி, ரதிகுணன், ஏழாவதாகச் சுபர்ணன், விஸ்வாவசு, பானு, பத்தாவதாகச் சுசந்திரன்,(48) ஆகியோர் பிராதையின் மகன்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தேவலோகத்துக் கந்தர்வர்கள் ஆவர். பெரும் நற்பேறு பெற்ற பிராதை தெய்வீக முனிவர் (தனது கணவர் கசியபர்) மூலம்[3](மூல ஸ்லோகத்தில் பெரும் நற்பேறு பெற்ற பிராதை தெய்வீக முனிவர் (தனது கணவர் கசியபர்) மூலம் என்ற வார்த்தைகள் இல்லை, எனவே இவர்கள் கபிலையின் மக்கள் என்றே கொள்ளலாம்.)புனித அப்சரஸ்களான, அலம்புஷை, மிச்ரகேசி, வித்யுத்பர்ணை, திலோத்தமை,(49,50) அருணை, ரக்ஷிதை, ரம்பை, மனோரமை, கேசினி, சுபாஹு, சுரதை,(51) சுரஜை, சுப்ரியை ஆகியோரை மகள்களாகவும், கந்தர்வர்களில் சிறந்தவர்களான அதிபாஹூ, கொண்டாடப்படும் ஹாஹா, ஹூஹூ, தும்புரு[4] ஆகியோரை மகன்களாவும் பெற்றெடுத்தாள் என்றும் அறியப்படுகிறது.(52)(கும்பகோணம் பதிப்பில் இந்த நால்வரும் சுபகையின் மகன்கள் என்று கூறப்படுகிறது. சுபகை என்பது யாரை குறிக்கிறது என்று தெரியவில்லை. கங்குலியின் பதிப்பும், மன்மதநாததத்தரின் பதிப்பும் இங்கே ஒன்றுபோலவே இருக்கின்றன. ஹூஹூ என்ற கந்தர்வன், தேவலர் நீராடும் போது அவரை தொல்லை செய்ததால் சபிக்கப்பட்டு முதலையானவன். முதலையால் கவ்வப்பட்ட யானை ஆதி மூலமே என அழைத்த போது விஷ்ணு ஹரியின் வடிவத்தில் வந்து சக்ரத்தால் ஹூஹூவின் சிரசைக் கொய்து, அவனது சாபத்தைத் தீர்த்தான். ஹாஹா, ஹூஹூ இருவரும் நாட்டியக் கலையில் இணையற்றவர்கள். தும்புரு நாரதருக்கு இணையாக இனிமையாய் கானமிசைக்க வல்லவன். வனபர்வம் பகுதி 43 இல் ஹாஹா-ஹூஹூ மற்றும் தும்புரு ஆகியோரை அர்ச்சுனன் சந்திக்கிறான்.)

{11.தக்ஷனின் பதினொறாவது மகளான} புராணக்கூற்றுப்படிகபிலைக்கு {அமுதம்}, பிராமணர்கள், பசுக்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் பிறந்தவர்களாவர்.(53)

இப்படியே கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பாம்புகள், சுபர்ணர்கள் {கருடர்கள்}, ருத்திரர்கள், மருத்துக்கள் {தேவர்கள்}, கோக்கள் {பசுக்கள்}, பெரும் நற்பேறு கொண்டவர்களும், புனித செயல்களைச் செய்பவர்களுமான பிராமணர்கள் மற்றும் அனைத்து உயிர்களின் பிறப்பைப் பற்றியும் சொல்லிவிட்டேன்.(54,55) புனிதமானதும், புகழனைத்துக்கும் தகுந்ததும், காதுகளுக்கு இன்பத்தை அளிக்கக்கூடியதுமான இந்த விவரிப்பு (படித்தால்) வாழ்வின் அளவை நீட்டிக்கிறது. எப்போதும் சரியான மனநிலையுடனே இது கேட்கப்படவும், பிறருக்கு உரைக்கப்படவும் வேண்டும்.(56) இந்த உயரான்ம உயிரினங்கள் அனைத்தின் பிறப்பு விவரிப்பைத் தேவர்கள் மற்றும் பிராமணர்கள் முன்னிலையில் முறையாகப் படிப்பவன், நல்ல சந்ததியையும், நற்பேற்றையும், புகழ் மற்றும் சிறந்த உலகங்களையும் அடைவான்” {என்றார் வைசம்பாயனர்}.(57)

பரம்பரைகளின் ஆய்வு | ஆதிபர்வம் – பகுதி 66(சம்பவ பர்வம் – 2)பிரம்மனின் மகன்கள்; மகன்கள் இல்லாத தக்ஷன் மகளைப் புத்ரிகைகளாக ஆக்கிக் கொண்டது; அந்தப் பெண்கள் மூலம் வளர்ந்த பரம்பரை; பரசுராமர் வம்ச வரலாறு; ராட்சசர்கள் பிறப்பு; உயிரினங்களின் பிறப்பு

வைசம்பாயனர் சொன்னார், “(ஏற்கனவே குறிப்பிட்டது போல) பிரம்மனின் ஆன்மிக {மனத்திலிருந்து பிறந்த} மகன்கள் ஆறுபேர் என்று அறியப்படுகிறது. ஸ்தாணு என்ற பெயரில் மற்றொருவரும் இருந்தார். அந்த ஸ்தாணு பெரும் சக்தி கொண்ட பதினோரு மகன்களைப் பெற்றிருந்தார்.(1) அவர்கள் மிருகவியாதர், சர்ப்பர், பெரும்புகழ் கொண்ட நிருருதி, அஜைகபாத், அஹிர்ப்புத்னியர், எதிரிகளை அடக்கும் பினாகி,(2) தஹனர், ஈஸ்வரர், பெரும் காந்தி கொண்ட கபாலி ஆவார்கள். இவர்களுடன் ஸ்தாணு மற்றும் சிறப்புமிக்கப் பகன் ஆகியோர் சேர்ந்து பதினொரு ருத்ரர்களாக அழைக்கப்படுகிறார்கள்.[1](3)(ஏகாதச ருத்ரர்களாக அறியப்படுபவர்கள் மகாதேவன், ருத்ரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன், சவும்யதேவன், பலோத்பவன், கபாலிகன், ஹரன் என மச்ச புராணம் போன்றவை சொல்லுகின்றன.  மகாபாரதம் எழுதிய பின் வியாசர் எழுதியதாகக் கருதப்படும் பாகவதத்தில் ருத்ரர்களின் வரலாறு சிறிது வித்தியாசமாகப் பேசப்பட்டிருக்கிறது. அவர்களின் பெயர்கள் அஜர், ஏகபாதர், அக்னிபுத்திரர், விரூபாட்சர், ரைவதர், ஹரர், பகுரூபர், த்ரியம்பகர், அசுரேசர், சாவித்ரர்,சயந்தர் என்பனவாகும். மிருகவியாதர், சரவர், நிருருதி, அஜய், அஹிர்ப்புத்னியர், பினாகி, தஹன்,  ஈஸானன், கபாலி, ஸ்தாணு, பகன் (பவன்) என்று மகாபாரத மூலம் சொல்கிறது. வால்மீகி இராமாயணம் அஜன், ஏகபாதன், அபிர்புத்யன்ம் ஹரன், சம்பு, த்ரயம்பகன், அபராஜிதன், ஈசானன், திரிபுவனன், த்வஸ்டன் மற்றும் ருத்ரன் என்கிறது. அக்னிபுராணம், பத்மபுராணம், ஜோதிட சாத்திரம், ருத்ரபுராணம் எனப் பலவற்றிலும் ஏகாதச ருத்ரர்களின் பெயர்கள் மாற்றங்களுடனேயே இருக்கின்றன. ஸ்தாணு என்பது சிவனைக் குறிக்கும். பிரம்மனின் முகத்தில் இருந்து பிறந்த ஸ்தாணு 11 அம்சங்களைப் படைத்து ஏகாதச ருத்ரர்களைப் படைத்தார் என்பது சாராம்சமாகும்.)

மரீசி, அங்கீரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது ஆகிய பெரும் சக்தி கொண்ட ஆறு முனிவர்களும் பிரம்மனின் புதல்வர்கள் என்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.(4) கடும் நோன்புகளைக் கொண்ட பிருஹஸ்பதி, உதத்தியர், சம்வர்த்தர் ஆகிய மூன்று பேரும் அங்கீரஸின் மகன்களென நன்கு அறியப்பட்டுள்ளது.(5) ஓ மன்னா! {ஜனமேஜயா}, அத்ரியின் புதல்வர்கள் எண்ணற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. பெரும் முனிவர்களான அவர்கள் அனைவரும் தவத்தில் வெற்றிமகுடம் சூடி, நித்திய அமைதியில் ஆன்மாவைத் திளைக்கச் செய்து, வேதங்களை நன்கு அறிந்தவர்களாக இருந்தனர்.(6) ஓ மன்னர்களில் புலியே! {ஜனமேஜயனே} பெரும் ஞானம் கொண்ட புலஸ்தியரின் மகன்கள், ராட்சசர்களும், குரங்குகளும், கின்னரர்களும் (பாதி மனிதன் பாதிக் குதிரை), யக்ஷர்களும் ஆவர்.(7) ஓ மன்னா {ஜனமேஜயா}, புலஹரின் மக்கள், சரபங்களும் (இறகுகள் கொண்ட பூச்சிகளும்), சிங்கங்களும், கிம்புருஷர்களும் (பாதிச் சிம்மம், பாதி மனிதன்), புலிகளும், கரடிகளும், ஓநாய்களும் ஆவர்.(8) வேள்விகளைப் போன்ற புனிதமானவரான கிரதுவின் மகன்கள், உண்மைக்கும், நோன்புகளுக்கும் தங்களை அர்ப்பணித்து மூன்று உலகங்களாகாலும் அறியப்பட்ட சூரியனின் தோழர்கள் (வாலகில்யர்கள்) ஆவர்.(9)

ஓ பூமியைக் காப்பவனே! {ஜனமேஜயனே} முழு அமைதியுள்ள ஆன்மாவும், பெரும் தவமும் கொண்ட அந்தச் சிறப்பு மிகுந்த முனிவனான தக்ஷன், பிரம்மனின் வலதுகால் கட்டைவிரலில் இருந்து தோன்றியவனாவான்.(10) பிரம்மனின் இடதுகால் கட்டைவிரலில்[2] (கும்பகோணம் பதிப்பில் கைக்கட்டைவிரல்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மன்மனதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே கால் கட்டைவிரல் என்றே இருக்கிறது.)அந்த உயர்ஆன்ம தக்ஷனின் மனைவி தோன்றினாள். அந்த முனிவன் {தக்ஷன்} அவள் மூலமாகத் தனது ஐம்பது மகள்களையும் பெற்றெடுத்தான்;(11) அந்த மகள்கள் அனைவரும் குற்றமற்ற குணமும் அங்கங்களும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவர்களாக இருந்தனர். தலைவன் தக்ஷனுக்கு மகன்கள் இல்லாத காரணத்தால் தனது மகள்களைப் (அவர்களது மகன்கள் தனக்கும், அவர்களது கணவர்களுக்கும் சொந்தமாகும் வகையில்) புத்ரிகைகளாக[3] (ஒரு பெண்ணின் தந்தையானவன், அந்தப் பெண்ணின் மூத்த மகனைத் தானே எடுத்துக் {வளர்த்துக்} கொள்வதாக அவளுக்குத் திருமணம் ஆகும்போதே ஏற்படுத்திக் கொண்டால், அந்த மகளுக்குப் புத்திரிகை என்று பெயர்.)ஆக்கிக் கொண்டான்.(12) தக்ஷன் தனது பத்து மகள்களைத் தர்மனுக்கும் (தர்ம தேவனாகிய யமனுக்கும்), இருபத்தேழு மகள்களைச் சந்திரனுக்கும், பதிமூன்று மகள்களைக் கசியபருக்கும் புனித விதிகளின்படி மணமுடித்துக் கொடுத்தான்.(13)

தர்மனின் மனைவியர் அனைவரின் பெயர்களையும் சொல்கிறேன் கேட்பாயாக. கீர்த்தி {புகழ்}, லக்ஷ்மி{செல்வம்}, திரு{ப்}தி {மனநிறைவு}, மேதை {உறுதியான மனம்}, புஷ்டி {உடற்பலம்}, சிரத்தை {நம்பிக்கை}, கிரியை {செயல்},(14) புத்தி {தீர்மானமான மனம்}, லஜ்ஜை {நாணம்} மற்றும் மதி {அறிவு} ஆகிய பத்து பேரே அவர்கள் ஆவர். சுயம்புவால் {பிரம்மனால்} நியமிக்கப்பட்ட தர்மனின் மனைவியர் இவர்களே ஆவர்.(15)

சோமனின் (சந்திரனின்) மனைவிகள் இருபத்தேழு பேர் என்பதை இந்த உலகம் முழுவதும் அறியும். புனித நோன்புகளைக் கொண்ட சோமனின் மனைவிகள் அனைவரும், நேரத்தைக் குறிக்க அமர்த்தப்பட்டுள்ளனர்;(16) உலகங்களின் வழிமுறைகளுக்குத் துணை நிற்கும் அவர்களே நட்சத்திரங்களும், யோகினிகளும் ஆவர்.

பிரம்மனுக்கு மனு என்ற பெயரில் மற்றுமொரு மகன் இருந்தான். அந்த மனுவுக்குப் பிரஜாபதி[4] (பிரஜாதிபதி என்பது காரணப்பெயராகும். படைப்புத் தொழிலில் உதவ பிரம்மனால் உருவாக்கப்பட்டவர்கள் பிரஜாதிபதிகள். தக்ஷன், மனு போன்று பிரம்மனின் படைப்புத் தொழிலில் உதவி உயிரினப் பெருக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருமே பிரஜாதிபதிகள்தான். பிதாமகனான பிரம்மனின் மகனாக மனு பிரஜாதிபதி இருந்தான் என்றுதான் மூல ஸ்லோகம் சொல்கிறது.)என்ற மகன் இருந்தான். (17) பிரஜாபதியின் மகன்கள் எட்டு பேராவர். வசுக்கள் என்றழைக்கப்படும் அவர்களின் பெயர்களை விவரமாகச் சொல்கிறேன். அவர்கள் தரன், துருவன், சோமன், அஹன் {அஹஸ்}, அனிலன், அனலன்,(18) பிரத்யூஷன் மற்றும் பிரபாசன் ஆவர். அந்த எட்டுப் பேரும் வசுக்கள் என்று அறியப்படுவராவர். இவர்களில் தரனும், உண்மையை அறிந்த துருவனும் தூம்ரைக்குப் பிறந்தவர்கள் ஆவர்;(19) சந்திரமாசும் (சோமன் {நிலவு}) சுவசனனும் (அனிலன்) புத்திக்கூர்மையுள்ள ஸ்வாசைக்குப் பிறந்தவர்கள்; அஹன் {அஹஸ்} ரதைக்கும்; ஹுதாசனன் (அனலன்) சாண்டிலிக்கும்,(20) பிரத்யூஷனும் பிரபாசனும் பிரபாதைக்கும் மகன்களாக இருந்தனர்[5]. (கும்பகோணம் பதிப்பில் இது வேறுமாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு, “தரன், தூம்ரையின் மகனாவான்; துருவன் பிரமவ்வித்தியின் மகனாவான்; சோமன் மனஸ்வ்வினியின் மகனாவான்; அனிலன் சுவாசையின் மகனாவான்; அஹஸ் ரதையின் மகனாவான்; அனலன் சாண்டிலியின் மகனாவான்; பிரத்யூஷனும், பிரபாசனும் பிரபாதையின் மகன்களாவர்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “தரனும், பிரம்ம ஞானம் கொண்ட துருவனும் தூம்ரையின் மகன்களாவர். சந்திரன் மனஸ்வினியின் மகனாவான். சுவாஸன் சுவாசனையின் மகனாவான். அஹன் ரதையின் மகனாவான், அக்னி சாண்டிலியின் மகனாவன். பிரத்யூஷனும், பிரபாசனும் பிராபதையின் மகன்களாக அறியப்படுகின்றனர்” என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பு மூல ஸ்லோகத்துடன் சரியாகப் பொருந்துவதாகத் தெரிகிறது.)தரனுக்குத் திரவிணன் மற்றும் ஹுத-ஹவ்ய-வஹன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.(21)

துருவனின் மகன் உலகங்களை அழிக்கும், சிறப்பு வாய்ந்த காலனாவான் (காலம்). சோமனின் மகன் பிரகாசமான வர்ச்சஸ் ஆவான். வர்ச்சஸ் தனது மனைவி மனோகரையின் மூலம் சிசிரன், பிராணன், ரமணன் ஆகிய மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான். அஹனின் மகன்கள் ஜோதிஷ், சமன், சாந்தன் மற்றும் முனி ஆவர்.(22,23) அக்னியின் {அனலனின்} மகன் கானக நாணலில் {சரவணத்தில்} பிறந்த குமரனாவான் {முருகனாவான்}. அவன் கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டுக் கிருத்திகை மற்றும் பிறரால் வளர்க்கப்பட்டான். கார்த்திகேயனுக்குப் பிறகு, அவனது தம்பிகளாகச் சாகன், விசாகன் மற்றும் நைகமேயன் ஆகியோர் பிறந்தனர். அனிலனின் மனைவி சிவை, சிவையின் மகன்கள் மனோஜவன்(24,25) மற்றும் அவிஞ்சாதகதி ஆகியோராவர். இந்த இருவரும் அனிலனின் மகன்களாவர். நீ அறியவேண்டிய பிரத்யூஷனின் மகன் தேவலர் என்ற பெயரைக் கொண்ட முனிவர் ஆவார்;(26) தேவலருக்கு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளக்கூடிய பெரும் மனோசக்தி பெற்ற இருமகன்கள் இருந்தனர். பெண்களில் முதன்மையானவளும் பிருஹஸ்பதியின் தங்கையுமான ஒருத்தி {யோகசித்தை}, புனிதமான உண்மைகளை உரைத்துக் கொண்டு,(27) தவத்துறவுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, உலகம் முழுவதும் உலவி வந்தாள்; அவள் எட்டாவது வசுவான பிரபாசனின் மனைவியானாள்.(28) அவள், கலைகள் அனைத்திற்கும் நிறுவனனான சிறப்புமிக்க விஷ்வகர்மனைப் பெற்றெடுத்தாள். கலைஞர்களில் முதல்வனான அந்த விஷ்வகர்மன், ஆயிரம் கலைகளை உண்டாக்கியவனாகவும், அழிவற்றவர்களின் {தேவர்களின்} பொறியாளனாகவும், அனைத்து வகைகளிலான ஆபரணங்களை உண்டாக்கியவனாகவும் இருந்தான். பலதரப்பட்ட ஆபரணங்களை வடிவமைத்துக் கலைஞர்களில் முதன்மையானவனாகவும் இருந்தான். அவனே தேவர்களுக்கான தெய்வீகத் தேர்களை வடிவமைத்தான்,(29,30) அந்தச் சிறப்புமிக்கவனின் கண்டுபிடிப்புகளின் விளைவால் மனித இனமே வாழ இயன்றது. மனிதர்களால் அந்தக் காரணத்திற்காகவே அவன் வழிபடப்படுகிறான். அவனே அழிவில்லாதவனும், மாற்றமில்லாதவனுமான இந்த விஷ்வகர்மன் ஆவான்.(31)

மகிழ்ச்சிகள் அனைத்தையும் அருளக்கூடிய சிறப்புவாயந்த தர்மன், மனித வடிவத்தை ஏற்று, பிரம்மனின் வலது மார்பில் இருந்து வெளியே வந்தான்.(32) அந்த அஹஸ்தனுக்கு (தர்மனுக்கு) அனைத்து உயிர்களையும் அழகு படுத்தக்கூடிய மூன்று அற்புதமான மகன்கள் இருந்தனர். சமன், காமன், ஹர்ஷன் (அமைதி{சமாதானம்}, ஆசை{மோகம்}, இன்பம்{ஈர்ப்பு}) ஆகியோரே அவர்கள். தங்கள் சக்தியாலேயே அவர்கள் இவ்வுலகங்களைத் தாங்குகின்றனர்.(33) காமனின் {ஆசையின், மோகத்தின்} மனைவி ரதி {சுகம்}, சமனின் {அமைதியின்} மனைவி பிராப்தி {கிடைத்தல்}, ஹர்ஷனின் {இன்பத்தின், ஈர்ப்பின்} மனைவி நந்தை {குறைவின்மை} ஆவர். உண்மையில், இவர்களை நம்பியே உலகங்கள் இருக்கின்றன.(34) மரீசியின் மகன் கசியபர் ஆவார். கசியபரின் வாரிசுகளே தேவர்களும் அசுரர்களும் ஆவர். எனவே, கசியபரே இந்த உலகங்களில் தந்தையாவார்.(35) வடவத்தின் (பெண் குதிரையின்) வடிவத்தைக் கொண்ட த்வஷ்திரி {த்வஷ்டா} {விஸ்வகர்மாவின் மகள்} சாவித்ரியின் {சூரியனின்} மனைவியானாள். அவள், பெரும் பேறுகொண்ட அசுவினி இரட்டையர்களை வானத்தில் பெற்றெடுத்தாள்.(36)

ஓ மன்னா! {ஜனமேஜயா}, அதிதியின் மகன்கள் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட பன்னிருவர் ஆவர். அவர்களில் இளையவனே இந்த உலகமே சார்ந்திருக்கும் விஷ்ணு ஆவான்.(37) (எட்டு வசுக்கள், பதினோரு ருத்ரர்கள், பனிரெண்டு ஆதித்யர்கள், பிரஜாபதி மற்றும் வஸத்காரம் {வஷத்}[5] (எட்டு வசுக்கள் + பன்னிரெண்டு ஆதித்யர்கள் + பதினோரு ருத்ரர்கள் மற்றும் அசுவினி இரட்டையர்கள் சேர்த்து முப்பத்தி மூன்று என்பது வழக்கம். பிராஜாதிபதி, வஷத் ஆகியோர் அல்ல என்பது பக்ஷம், ஆதித்யம், குஹ்யம் என்ற பிரிவுகளின் விளக்கத்தில் காணக் கிடைக்கும்.)ஆகியோருடன் கூடிய) இவர்களே முப்பத்து மூன்று தேவர்களாவர். இனி பக்ஷங்கள், குலங்கள், கணங்களின் பிறப்புகளைப் பற்றிச் சொல்லப் போகிறேன்.(38) ருத்திரர்கள், சத்யஸ்கள் {சாத்யர்கள்}, மருத்துக்கள், வசுக்கள், பார்கவர்கள், விஸ்வதேவர்கள் ஆகியோர் பக்ஷங்களாக அறியப்படுகின்றனர்.(39) வினதையின் மகனான கருடனும், வலிமைமிக்க அருணனும், சிறப்பு மிகுந்த பிருஹஸ்பதியும் ஆதித்யர்களாக அறியப்படுகிறார்கள்.(40) அசுவினி இரட்டையர்களும், வருடாந்திரச் செடிகள் அனைத்தும், தாழ்ந்த நிலை கொண்ட {சக்தி குறைந்த} விலங்குகள் அனைத்தும் குஹ்யர்கள் என்று அறியப்படுகின்றனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, இவையே உனக்கு {வரிசை மாறாமல்} ஓதப்படும் தேவர்களுடைய கணங்களாகும்.(41)

மனிதனின் அனைத்துப் பாவங்களையும் இவ்வொப்பித்தல் கழுவிவிடும். சிறப்பு மிகுந்த பிருகு, பிரம்மனின் மார்பைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். கல்விமானான சுக்கிரன் {சுக்கிராச்சாரியார்}, பிருகுவின் மைந்தனாவார். கல்விமானான அந்தச் சுக்கிரனே ஒரு கோளாகி, சுயம்புவின் {பிரம்மனின்} உத்தரவுகளுக்கு இணங்க, மழையைப் பொழிவதிலும், தடுத்து நிறுத்துவதிலும், மூவுலகங்களில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்வதற்கான அழிவுகள் மற்றும் பயணங்களை வழங்குவதிலும், குறைப்பதிலும் வானத்தில் இருந்து ஈடுபடுகிறார். பெரும் புத்திக்கூர்மையும், ஞானமும், கடுமையான நோன்புகளும் கொண்டு, பிரம்மச்சாரியின் வாழ்வை வாழும் கல்விமானான சுக்கிரன், தன் தவசக்தியின் மூலமாகத் தன்னை இருகூறாகப் பிரித்து, தைத்தியர்களுக்கும் தேவர்களுக்கும் தெய்வீக வழிகாட்டியாக {குருவாக} ஆனார்.(42-44)

சுக்கிரன், (தேவர்கள் மற்றும் அசுரர்களின்) நன்மையைக் கருதி பிரம்மனால் இப்படி நியமிக்கப்பட்ட பிறகு, பிருகு மற்றுமொரு அற்புத புதல்வனைப் பெற்றெடுத்தார்.(45) எரியும் சூரியனைப் போன்றவனும், அறம்சார்ந்த ஆன்மாவையும், பெரும் புகழையும் கொண்ட அவர் சியவனராவார். தமது தாயின் கருப்பையில் இருந்து கோபமாக வெளியேறிய அவர், (ராட்சசனிடம் இருந்து) தனது தாயை விடுவிக்கக் காரணமானார்.(46) மனுவின் புதல்வியான ஆருஷியானவள், ஞானியான சியவனரின் மனைவியானாள். பெரும் புகழை கொண்ட ஔருவர் அவளிடத்திலே பெறப்பட்டார். அவர் {ஔருவர்}, தமது தாயான ஆருஷியின் தொடையைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார்.(47) ஔருவர் ரிசீகரைப் பெற்றார். குழந்தைப் பருவத்திலேயே, ரிசீகர், பெரும் பலத்தையும் சக்தியையும், அனைத்து அறங்களையும் கொண்டவராக இருந்தார். ரிசீகர் ஜமதக்னியைப் பெற்றெடுத்தார்.(48) அந்த உயரான்ம ஜமதக்னிக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரிலும் இளையவர் ராமராவார் (பரசுராமராவார்). ராமர், நற்பண்புகளைக் கொண்டதில் தமது தமையர்கள் அனைவரை விடவும் மேன்மையானவராக இருந்தார்.(49) அனைத்து ஆயுதங்களிலும் திறன்மிக்கவராக இருந்த அவர், க்ஷத்திரியர்களைக் கொல்பவரானார். அவர் தமது ஆசைகளைத் தமது முழுக் கட்டுக்குள் வைத்திருந்தார். ஔருவர்[7], (ஔருவரின் மகன் ரிஷீகர் என்று இருக்க வேண்டும்)ஜமதக்னியை மூத்தவராகக் கொண்ட நூறு மகன்களைப் பெற்றிருந்தார்.(50) இந்த நூறு மகன்களும், இந்தப் பூமியில் பரவியிருந்த ஆயிரக்கணக்கான வாரிசுகளைப் பெற்றிருந்தனர். மனுவுடன் இருந்தவர்களான தாத்ரி {தாதா}, விதாத்ரி {விதாதா} என்று பிரம்மனுக்கு மேலும் இரண்டு மகன்கள் இருந்தார்கள். தாமரைகளுக்கு மத்தியில் தன் வசிப்பிடத்தைக் கொண்ட மங்கலகரமான லக்ஷ்மி அவர்களது தங்கையாவாள்.(51,52) வானில் பறக்கும் குதிரைகளே[8] லக்ஷ்மியின் தெய்வீகப் புதல்வர்கள் ஆவர்.(ஆகாயத்தில் பிரகாசிக்கும் சூரியக் கிரணங்களே இங்கே குதிரைகள் என்று சொல்லப்படுகின்றன். இதே இடத்தில் ஒரு பழைய உரை, பிரம்மாவின் ஆன்மிகப் புதல்வர்கள் பிதிர்கள் என்று சொல்கிறது.)

சுக்கிரனுக்குப் பிறந்த மகளான திவியானவள் {ஜ்யேஷ்டதேவி}, வருணனுடைய மூத்த மனைவியானாள்.(53) அவளிடம் மகனாகப் பலனும், மகளாகத் தேவர்களுக்கு மகிழ்ச்சி தருபவளான சுரையும் {சுராபானம்} (மது) பிறந்தனர். உயிரினங்கள் (உணவுத் தேவைக்காக) ஒன்றையொன்று விழுங்கத் தொடங்கிய போது {அந்தச் சுரையிடம்} அதர்மன் (பாவம்) பிறந்தான். அதர்மன் எப்போதும் அனைத்து உயிரினங்களையும் அழிப்பவனாவான். அந்த அதர்மனானவன் நிருதியைத் தன் மனைவியாகக் கொண்டதால், அவர்கள் (நிருதிக்குப் பிறந்தவர்கள்) ராட்சசர்கள் நைருதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.(54,55) அவளுக்கு {நிருதிக்கு} எப்போதும் பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களான மூன்று கொடூர மகன்கள் இருந்தனர். படைக்கப்பட்ட அனைத்தையும் எப்போதும் கொல்வதில் ஈடுபடும் அவர்கள் பயன் (பயம்), மஹாபயன் (பயங்கரம்) மற்றும் மிருத்யு (மரணம்) ஆவர்.(56) {மிருத்யுக்களான[9]} (கங்குலியின் பதிப்பில் இங்கே மிருத்யு என்று குறிக்கப்படவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் அடைப்புக்குறிக்குள் மிருத்யு என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. மூலத்திலும் மிருத்யு என்ற வார்த்தை இல்லை.)அவர்கள் அனைத்தையும் அழிப்பதிலேயே இருந்ததால், அவர்கள் மனைவியோ மக்களோ அற்று இருந்தார்கள். தாம்ராவானாவள் உலகங்கள்தோறும் அறியப்படும் ஐந்து மகள்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள், காகி (காக்கை), சேனி (பருந்து), பாசி (கோழி), திருதராஷ்டிரி (வாத்து), சுகி (கிளி) ஆகியோராவர். காகி காக்கைகளைப் {கோட்டான்களையும்} பெற்றெடுத்தாள்; சேனி பருந்துகளையும், சேவல்களையும், கழுகுகளையும் பெற்றெடுத்தாள்; திருதராஷ்டிரி அனைத்து வாத்துகள், அன்னங்கள் ஆகியவற்றைப் பெற்றெடுத்தாள்; அவளே சக்ரவாகங்களையும் பெற்றெடுத்தாள்; இனிய குணங்களையும், மங்கலக்குறிகளை அனைத்தையும் கொண்ட சுகியானவள், கிளிகள் அனைத்தையும் பெற்றெடுத்தாள். குரோதையானவள், கோபம் நிறைந்த மனநிலை கொண்ட ஒன்பது மகள்களைப் பெற்றெடுத்தாள்.(57-61) அவர்கள் மிருகி, மிருகமந்தை, ஹரி, பத்ரமனை {பத்ரமனஸ்}, மாதங்கி, சார்த்தூலி, ஸ்வேதை, சுரபி, அனைத்து அறங்களும் கொண்ட சுரசை ஆகியோர் ஆவர். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மான் இனத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் மிருகியின் வாரிசுகளே.(62,63)

கரடி இனங்களைச் சேர்ந்த அனைத்து விலங்குகளும், (இனிய நடை கொண்ட) சிரிமாரம் {கவரிமான்} என்று அழைக்கப்படுபவையும் மிருகமந்தையின் வாரிசுகளாவர். பத்ரமனை தெய்வீக யானையான ஐராவதத்தை {தன் மகனாகப்} பெற்றெடுத்தாள். சுறுசுறுப்புமிக்க வாலில்லா குரங்கு இனத்தைச் சேர்ந்த அனைத்து விலங்குகளும், குதிரைகளும் ஹரியின் வாரிசுகளாவர்.(64,65) கோலாங்குலம் (பசுவின் வால் கொண்ட) என்று அழைக்கப்பட்ட அந்த விலங்குகளும் ஹரியின் வாரிசகளாகவே சொல்லப்படுகின்றன. சார்த்தூலி, பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்களையும், புலிகளையும்,(66) சிறுத்தைகளையும் மற்றும் பலம்வாய்ந்த விலங்குகள் அனைத்தையும் பெற்றெடுத்தாள். ஓ மன்னா {ஜனமேஜயா}, யானைகள் அனைத்தும் மாதங்கியின் வாரிசுகளாவர்.(67) ஸ்வேதை, ஸ்வேதம் என்று தன் பெயராலேயே அறியப்பட்டதும், பெரும் வேகம் கொண்டதுமான பெரிய யானையைப் {திக்கஜத்தைப்} பெற்றெடுத்தாள். ஓ மன்னா சுரபி, இனிமையான ரோஹிணி, புகழ்மண்டிய கந்தர்வி ஆகிய இரு மகள்களைப் பெற்றெடுத்தாள். ஓ பாரதா, அவளுக்கு விமலை மற்றும் அனலை என்ற பெயர்களைக் கொண்ட மற்றுமிரு மகள்களும் இருந்தனர்.(68,69) பசுக்கள் அனைத்தும் ரோஹிணியிடமும், குதிரை இனங்களைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் கந்தர்வியிடமும் உதித்தனர்[10]. அநலை, சதைப்பற்றுள்ள பழங்களைக் கொடுக்கும் ஏழு வகை மரங்களைப் பெற்றெடுத்தாள். (அவை பேரீச்சை, பனை, ஹின்டலா (hintala-ஈந்து-datepalm), தலி (tali), சிறு பேரீச்சை (little date), கடலை (nuts), தென்னை ஆகியவையே).(70)(கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் இருக்கிறது. அது பின்வருமாறு: “இரையென்பவளுக்குத் தாமரை மலர்களைப் போன்ற கண்களைக் கொண்ட மூன்று கன்னிகைகள் பிறந்தனர். அவர்களிடம் இருந்து பூக்காமல் காய்க்கும் மரங்களும், மற்ற மரங்களும், கொடிகளும் பிறந்தன. லதையென்றும், ருஹையென்றும் இருவரே முக்கியமானவர்களாகச் சொல்லப்படுகின்றனர். அவர்கள் மூவரும் மேற்சொன்ன கொடிசெடி இனங்களுக்கெல்லாம் உரியவர்களாவர். மலர்களில்லாமலே காய்க்கும் மரங்கள் அனைத்தும் லதையென்பவளுடைய வாரிசுகளென அறியத்தக்கவை. அவற்றைதான் வனஸ்பதி என்று சொல்கின்றனர். பூத்துக் காய்க்கும் மரங்கள் ருஹையின் வாரிசுகளென அறியப்படுகின்றன. புதர்களும், மரங்களும், தோலில் பலமுள்ள மூங்கில் முதலிய புல் இனங்களும், கொடிகளும் ருஹையின் வாரிசுகளாவர். அவர்கள் இருவரோடும் வம்சம் முடிந்து போகின்றது. மூன்று கன்னிகைகளில் மூன்றாமவளுக்குத் தனித்து வாரிசுகளில்லாமையால் பெயர் கூறவில்லை” என்று இருக்கிறது.)

அவளுக்கு {அனலைக்குச்} சுகி (கிளிகளின் தாய்) என்ற மற்றுமொரு மகளும் இருந்தாள். சுரசைக்குக் கங்கன் என்றொரு மகன் (நீளமான இறகுகள் கொண்ட பறவைகள் வகை) இருந்தான். அருணனின் மனைவி சேனி, சம்பாதி மற்றும் வலிமைமிக்க ஜடாயு என்ற பெயர்களைக் கொண்டவர்களும், பெரும் சக்தியும், பலமும் கொண்டவர்களுமான இரு மகன்களைப் பெற்றெடுத்தாள். சுரசை நாகர்களையும், கத்ரு பன்னகங்களையும் (பாம்புகளையும்) பெற்றெடுத்தனர்.(71,72) வினதை, நெடுந்தூரம் பரந்து அறியப்பட்டிருந்த கருடன் மற்றும் அருணன் என்ற இரு மகன்களைக் கொண்டிருந்தாள். ஓ மனிதர்களின் மன்னா, ஓ புத்திசாலி மனிதர்களின் முதன்மையானவனே {ஜனமேஜயா}, முதன்மையான உயிரினங்கள் அனைத்தின் குலமரபுகளும் இப்படியே முழுமையாக என்னால் விவரிக்கப்படுகிறது. இதைக் கேட்பதனால் ஒரு மனிதன் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, பெரும் ஞானத்தை அடைந்து, இறுதியாக மறுமையில் {அடுத்த பிறவியில்} முதன்மையான நிலையை அடைகிறான்” {என்றார் வைசம்பாயனர்}. (73,74)

அசுரர்கள் பிறப்பு | ஆதிபர்வம் – பகுதி 67அ(சம்பவ பர்வம் – 3)மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள் யார் யாருடைய அம்சங்கள் என்ற விரிவு.

ஜனமேஜயன், “ஓ போற்றுதலுக்குரியவரே! {வைசம்பாயனரே}, மனிதர்களுக்கிடையே தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள், சிங்கங்கள், புலிகள், பிற விலங்குகள், பாம்புகள், பறவைகள் மற்றும் அனைத்து உயிர்களும் பிறந்த விவரத்தை உம்மிடம் கேட்க விரும்புகிறேன். மேலும், மனித வடிவை ஏற்ற {அவதாரமெடுத்த} பிறகு, அவர்களின் செயல்களையும், சாதனைகளையும், முறையான வரிசையில் அறிய விரும்புகிறேன்” என்றான்.(1,2)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மனிதர்களின் மன்னா! {ஜனமேஜயா}, நான் முதலில், மனிதர்களுக்கிடையில் பிறந்த தேவர்கள் மற்றும் தானவர்கள் குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன்.(3) விப்ரசித்தி என்ற பெயரில் அறியப்பட்ட தானவர்களில் முதன்மையானவனே மனிதர்களில் காளையான ஜராசந்தன் என்று அறியப்பட்டான்.(4) ஓ மன்னா! {ஜனமேஜயா}, மேலும் ஹிரண்யகசிபு என்ற அறியப்பட்ட திதியின் மைந்தன், இவ்வுலகின் மனிதர்களுக்கிடையில் பெரும் பலம்வாய்ந்த சிசுபாலனாக அறியப்பட்டான்.(5) பிரஹலாதனின் தம்பியும், சம்ஹலாதன் என்றும் அறியப்பட்டவன், மனிதர்களுக்கிடையில் பாஹ்லீகர்களில் காளையான புகழ்வாய்ந்த சல்லியனாக ஆனான்.(6) அனைவருக்கும் இளையவனும் உற்சாகமுள்ளவனுமான அனூஹ்லாதன், இவ்வுலகில் திருஷ்டகேது என்று குறிப்பிடப்பட்டான்.(7)

ஓ மன்னா {ஜனமேஜயா} சிபி என்று அறியப்பட்ட திதியின் மைந்தன், உலகத்தில் புகழ்வாய்ந்த ஏகாதிபதி துருமனாக ஆனான்.(8) பெரும் அசுரனாக அறியப்பட்ட பாஷ்கலன், பூமியில் பெரும் பகதத்தனாக ஆனான்.(9) பெரும் சக்திகளைக் கொடையாகக் கொண்ட ஐந்து பெரும் அசுரர்களான அயசிரன், அஸ்வசிரன், உற்சாகமுள்ள அயசங்கு, ககனமூர்த்தன், மற்றும் வேகவத் {வேகவான்}(10) ஆகியோர் அனைவரும் கேகயத்தின் மன்னர் பரம்பரையில் பிறந்து பெரும் ஏகாதிபதிகளாகத் திகழ்ந்தனர்.(11) பெரும் சக்திகொண்டு கேதுமத் {கேதுமான்} என்ற பெயரில் அறியப்பட்ட மற்றுமொரு அசுரன், பூமியில் கொடூர செயல்கள் புரியும் ஏகாதிபதி அமிதௌஜசாக ஆனான்.(12) சுவர்ணபானு என்று அறியப்பட்ட பெரும் அசுரன், பூமியில் கடுமையான செயல்கள் புரியும் உக்கிரசேனனாக ஆனான்.(13)

அஸ்வன் என்ற பெரும் அசுரன், பூமியில் போரில் வெல்லப்பட முடியாத, பெரும் ஆற்றலைக் கொண்ட ஏகாதிபதி அசோகனாக ஆனான்.(14) ஓ மன்னா! {ஜனமேஜயா} அஸ்வனின் தம்பியும், அஸ்வபதி என்ற பெயரில் அறியப்பட்டவனுமான திதியின் புதல்வன், ஹார்த்திக்யன் {கிருதவர்மனின் தந்தை} என்ற பலம்வாய்ந்த ஏகாதிபதியாக ஆனான்.(15) பெரும்பேறு பெற்றவனும், விருஷபர்வன் என்ற பெயரில் அறியப்பட்டவனுமான அசுரன், பூமியில் மன்னன் தீர்க்கப்பிரக்ஞன் என்று அறியப்பட்டான்.(16) ஓ மன்னா {ஜனமேஜயா}, அஜகன் என்ற பெயரில் அறியப்பட்ட விருஷபர்வனின் தம்பி, பூமியில் மன்னன் சால்வனாக அறியப்பட்டான்.(17) சக்திவாய்ந்தவனும், வலிமைமிக்கவனும், அஸ்வகிரீவன் என்ற பெயரில் அறியப்பட்டவனுமான அசுரன், பூமியில் மன்னன் ரோசமானனாக அறியப்பட்டான்.(18)

ஓ மன்னா {ஜனமேஜயா} சூக்ஷுமன் என்று அறியப்பட்டவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், பெரும் சாதனைகளைச் செய்தவனுமான அசுரன் {சூக்ஷுமன்}, பூமியில் புகழ்பெற்ற மன்னன் பிருஹத்ரதன் என்று அறியப்பட்டான்.(19) துஹுண்டன் என்ற பெயரில் அறியப்பட்ட அசுரர்களின் முதன்மையானவன், பூமியின் சேனாபிந்து என்ற ஏகாதிபதியாக அறியப்பட்டான்.(20) இஷுபா {இஷுபாத்} என்ற பெயரில் அறியப்பட்ட பெரும் பலம் வாய்ந்த அசுரன், பூமியில் புகழ்பெற்ற ஆற்றலைக் கொண்ட ஏகாதிபதி நக்னஜிதன் என்று அறியப்பட்டான்.(21) ஏகச்சக்கரன் என்று அறியப்பட்ட பெரும் அசுரன், பூமியில் பிரதிவிந்தியன் என்று அறியப்பட்டான்.(22) பல போர் முறைகளை அறிந்த விருபாக்ஷன் என்ற பெரும் அசுரன் பூமியில் மன்னன் சித்திரவர்மன் {சித்திரதர்மன்} என்று அறியப்பட்டான்.(23) எதிரிகளின் பெருமைகளைச் சிறுமையாக்குபவனும், தானவர்களின் முதன்மையான வீரனுமான ஹரன், பூமியில் பேறும் புகழும் பெற்ற சுபாஹுவாக அறியப்பட்டான்.(24) {பெரும் ஆற்றலுடையவனும், எதிரிகளை அழிப்பவனுமான அஹரன் என்பவன் பூமியில் பாஹ்லீகன் என்ற பெயர் கொண்ட மன்னனாகப் பிறந்தான்}[1].(25) பெரும் சக்தி வாய்ந்தவனும், எதிரிகளை அழிப்பவனுமாகச் சுகுத்ரன் {நிசந்திரன்} என்ற அசுரன், பூமியில் பேறு பெற்ற ஏகாதிபதியான முஞ்சகேசன் என்று அறியப்பட்டான்.(26) தனது நுண்ணறிவுக்குப் பெயர் பெற்றவனும், போரில் வெற்றிகொள்ளப்படாதவனும், நிகும்பன் என்று அழைக்கப்பட்டவனுமான பெரும் அசுரன், பூமியில் மன்னன் தேவாதிபனாகப் பிறந்து, ஏகாதிபதிகளில் முதன்மையானவனாக இருந்தான்.(27)

திதியின் மைந்தர்களில் சரபன் என்று அழைக்கப்பட்ட பெரும் அசுரன், பூமியில் பௌரவன் என்று அழைக்கப்பட்ட அரசமுனியாக ஆனான்.(28) பெரும் சக்தி கொண்டவனும், பேறுபெற்றவனுமான குபடன் என்ற பெரும் அசுரன், பூமியில் புகழ்வாய்ந்த ஏகாதிபதி சுபார்ஸ்வனாகப் பிறந்தான்.(29) ஓ மன்னா {ஜனமேஜயா}, கிராதன் {கபடன்} என்றழைக்கப்பட்ட பெரும் அசுரன், பூமியில் தங்க மலையைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய வடிவத்துடன் அரசமுனி பர்வதேயனாகப் பிறந்தான்.(30) அசுரர்களில் இரண்டாம் சலபன் என்று அறியப்பட்டவன், பாஹ்லீகர்களின் நாட்டில் ஏகாதிபதி பிரகலாதனாக ஆனான்.(31) சந்திரன் என்ற பெயரால் அறியப்பட்டவனும். நட்சத்திரங்களின் தலைவனைப் போல் அழகு நிறைந்தவனுமான திதியில் மைந்தர்களில் முதன்மையானவன், பூமியில் காம்போஜ நாட்டின் மன்னன் சந்திரவர்மனாக அறியப்பட்டான்.(32) ஆர்கா {சூரியன்} என்ற பெயரில் அறியப்பட்ட தானவர்களில் காளை, பூமியில் அரசமுனி ரிஷிகனாக ஆனான்.(33) மிருதபன் என்று அறியப்பட்ட அசுரர்களில் சிறந்தவன், பூமியில், பச்சுமானூபகன் என்ற ஏகாதிபதியாக ஆனான்.(34) கரிஷ்டன் {கவிஷ்டன்} என்று அறியப்பட்டவனும், பெரும் சக்தி கொண்டவனுமான பெரும் அசுரன் பூமியில் மன்னன் துருமசேனனாகப் பிறந்தான்.(35) மயூர்யன் என்று அறியப்பட்ட பெரும் அசுரன், பூமியில் ஏகாதிபதி விஸ்வனாக அறியப்பட்டான்.(36) சுபர்ணன் என்று அழைக்கப்பட்ட மயூர்யனின் தம்பி, பூமியில் ஏகாதிபதி காலகீர்த்தியாக அறியப்பட்டான்.(37) சந்திரஹந்தரி {சந்திரஹந்தா} என்று அறியப்பட்ட வலிமைமிக்க அசுரன், பூமியில் அரசமுனி சுனகனாக ஆனான்.(38) சந்திரவினாசனன் {சந்திரப்ரமர்த்தனன்} என்று அழைக்கப்பட்ட பெரும் அசுரன், பூமியில் ஏகாதிபதி ஜானகியாக அறியப்பட்டான்.(39)

ஓ குரு குலத்தின் இளவரசனே! {ஜனமேஜயா}, தீர்க்கஜிஹ்வன் என்று அழைக்கப்பட்ட தானவர்களில் காளை, பூமியில் காசிராஜன் என்று அறியப்பட்டான்.(40) {தக்ஷகனின் மகளும், கசியபரின் 13 மனைவியருள் ஒருத்தியுமான} சிம்ஹிகையால் பெறப்பட்டவனும், சூரியனையும் சந்திரனையும் தண்டிப்பவனுமான கிரகம் {ராகு}, பூமியில் ஏகாதிபதி கிராதன் என்று அறியப்பட்டான்.(41) {தக்ஷகனின் மகளும், கசியபரின் 13 மனைவியருள் ஒருத்தியுமான} தனாயுவின் நான்கு மகன்களில் மூத்தவனாக விக்ஷரன் என்ற பெயரில் அறியப்பட்டவன், பூமியில் உற்சாகமான ஏகாதிபதி வசுமித்ரனாக ஆனான்.(42) பெரும் அசுரன் விக்ஷரனுக்கு அடுத்துப் பிறந்தவன் {விக்ஷரனின் தம்பி} {பலன் என்ற அசுரன்}, பாண்டிய என்று அழைக்கப்பட்ட நாட்டின் {பாண்டிய நாட்டின்} மன்னனாகப் பிறந்தான்.(43) வலினன் என்ற பெயரில் அறியப்பட்ட அசுரர்களில் சிறந்தவன், பூமியில் ஏகாதிபதி பௌண்ட்ரமாத்ஸ்கனாக ஆனான்.(44) ஓ மன்னா {ஜனமேஜயா}, விருத்திரன் என்று அறியப்பட்ட பெரும் அசுரன், பூமியில் அரசமுனி மணிமத் {மணிமான்} என்ற பெயரில் அறியப்பட்டான்.(45) விருத்திரனின் தம்பியும், குரோதஹந்தரி என்று அறியப்பட்டவனுமான அசுரன், பூமியில் மன்னன் தண்டன் என்று அறியப்பட்டான்.(46) குரோதவர்தனன் என்ற பெயரில் அறியப்பட்டவனான மற்றொரு அசுரன், பூமியில் ஏகாதிபதி தண்டதாரனாக அறியப்பட்டான்.(47)

காலேயனின் எட்டு மகன்களில் {காலகேயர்களில்} பூமியில் பிறந்த அனைவரும், புலிகளின் ஆற்றலைக் கொண்ட பெரும் மன்னர்களாக ஆனார்கள்.(48) அவர்கள் அனைவரிலும் மூத்தவன், மகத நாட்டின் மன்னன் ஜயத்சேனனாக ஆனான்.(49) அவர்களில் இரண்டாமவன், இந்திரனைப் போன்ற ஆற்றலுடன் கூடியவனாகப் பூமியில் அபராஜிதனாக அறியப்பட்டான்.(50) பெரும் சக்தியும், மாயை உண்டாக்குவதில் பலமும் கொண்டவனான அவர்களில் மூன்றாமவன், பெரும் ஆற்றலைக் கொடையாகக் கொண்ட நிஷாதர்களின் {வேடர்களின்} மன்னனாகப் பூமியில் பிறந்தான்.(51) அவர்களில் நான்காவதாக அறியப்பட்ட மற்றொருவன், பூமியில் அரசமுனிகளில் சிறந்த சிரேணிமத் {சிரேணிமான்} என்று அறியப்பட்டான்.(52) அவர்களில் ஐந்தாமவனான பெரும் அசுரன், பூமியில் எதிரிகளை ஒடுக்குபவனான மன்னன் மஹாஜனன் என்று அறியப்பட்டான்.(53) அவர்களில் பெரும் நுண்ணறிவு கொண்டவனும் ஆறாமவனுமான பெரும் அசுரன், அரச முனிகளில் சிறந்தவனான அபீருவாகப் பூமியில் அறியப்பட்டான்.(54) அவர்களில் ஏழாமவன், நடுக்கடலில் இருந்து பூமி முழுமையும் அறியப்பட்டவனும், சாத்திரங்களின் உண்மையை நன்கறிந்தவனுமான மன்னன் சுமுத்திரசேனனாக அறியப்பட்டன்.(55) காலகேயர்களில் எட்டாமவனாக பிருஹத் என்று அறியப்பட்டவன், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபடும் அறம் சார்ந்த மன்னனாக ஆனான்.(56)

குக்ஷி என்ற பெயரில் அறியப்பட்ட வலிமைமிக்கத் தானவன், தங்க மலையைப் போன்ற தன் பிரகாசத்தால் பூமியில் பார்வதீயனாக ஆனான்.(57) பெரும் சக்தியையும், வலிமைமையையும் கொண்ட அசுரன் கிரதனன், பூமியில் ஏகாதிபதி சூர்யாக்ஷனாக அறியப்பட்டான்.(58) சூரியன் என்ற பெயரில் அறியப்பட்டவனும், அழகான தன்மைகள் கொண்டவனுமான பெரும் அசுரன், பூமியில் மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவனான பாஹ்லீக நாட்டு ஏகாதிபதி தரதனாக அறியப்பட்டான்.(59) ஓ மன்னா {ஜனமேஜயா}, நான் ஏற்கனவே சொன்னவர்களான குரோதவசர்கள் என்றழைக்கப்பட்ட அசுர இனத்தைச் சேர்ந்தவர்கள் பூமியில் வீர மன்னர்களாகப் பிறந்திருந்தனர்.(60) மத்ரகன், கர்ணவேஷ்டன், சித்தார்த்தன், கீடகன், சுவீரன், சுபாஹு, மஹாவீரன், பாஹ்லீகன், கிரதன், விசித்திரன், சுரதன், அழகான மன்னன் நீலன், சீரவாசன், பூமிபாலன், தந்தவக்த்ரன் {தந்தவக்ரன் / தந்தவக்தரன்}, துர்ஜயன் என்றழைக்கப்பட்டவன், மன்னர்களில் புலியான ருக்மி, மன்னன் ஜனமேஜயன், அஷாடன், வாயுவேகன், பூரிதேஜஸ், ஏகலவ்யன், சுமித்திரன், வாடதானன், கோமுகன், கரூஷகர்கள் என்றழைக்கப்பட்ட மன்னர்களின் இனத்தைச் சேர்ந்தோர், க்ஷேமதூர்த்தி, சுருதாயுஸ், உத்வஹன், பிருஹத்சேனன், க்ஷேமன், கலிங்கர்களின் மன்னனான உக்ரதீர்த்தன் {அக்ரதீர்த்தன்}, மன்னன் ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்ட மதிமத் {மதிமான்}[2], (கும்பகோணம் பதிப்பில் இந்த இடம் சற்றே மாறுபடுகிறது. “கலிங்க மன்னன் குஹரன், மதிமான் எனும் மன்னன், ஈஸ்வரன் என்ற பெயருள்ளவன்” என்று வருகிறது.)ஆகிய(61-66) இந்த முதன்மையான மன்னர்கள் அனைவரும் குரோதவச அசுர குலத்திலிருந்து பிறந்தவர்களாவர். பெரும் வலிமை மற்றும் மகத்தான சாதனைகளைக் கொண்டவனும், செழுமையின் பெரும் பங்கால் அருளப்பட்டவனும், தானவர்களுக்கு மத்தியில் காலநேமி என்ற பெயரில் அறியப்பட்டவனுமான வலிமைமிக்க அசுரன் ஒருவனும் பூமியில் பிறந்திருந்தான். அவன் உக்ரசேனனின் வலிமைமிக்க மகனாகி பூமியில் கம்சன் என்ற பெயரால் அறியப்பட்டான்.(67,68) இந்திரனைப் போன்ற பிரகாசம் கொண்டவனும், அசுரர்களுக்கு மத்தியில் தேவகன் என்ற பெயரால் அறியப்பட்டவனுமான ஒருவன் {அசுரன்}, பூமியில் கந்தர்வர்களின் முதன்மையான மன்னனாகப் பிறந்தான்.(69)

ஓ மன்னா {ஜனமேஜயா}, எந்தப் பெண்ணின் மூலமும் பிறக்காதவரும், பரத்வாஜரின் மகனுமான துரோணர் {குடத்தில் பிறந்தவர்}, மகத்தான சாதனைகளைக் கொண்ட தெய்வீக முனிவர் பிருஹஸ்பதியின் பகுதிகளில் {உயிர்ப்பகுதிகளில்} இருந்து உதித்தவர் என்பதை அறிவாயாக.(70) அவர் வில்லாளிகள் அனைவரின் இளவரசனாகவும், ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவராகவும், வலிமைமிக்கச் சாதனைகள் மற்றும் பெரும் சக்தியைக் கொண்டவராகவும் இருந்தார்.(71) அவர் {துரோணர்} வேதங்களையும், ஆயுதங்களின் அறிவையும் நன்கறிந்தவராக இருந்தார் என்பதையும் நீ அறிய வேண்டும். அவர் அற்புதமான செயல்களைச் செய்பவராகவும், தம் குலத்தின் பெருமையாகவும் இருந்தார்.(72)

ஓ மன்னா {ஜனமேஜயா}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், கொடையாக மிக அதிகமான சக்தியையும் கொண்டவனாக, எதிரிகள் அனைவருக்கும் பயங்கரனாக, எதிரிகளை அடக்குவதில் மிகப் பெரியவனுமான அவரது மகன் அஸ்வத்தாமனானவன், மகாதேவன், யமன், காமன் மற்றும் குரோதனின் ஒருங்கிணைந்த பகுதிகளைக் கொண்டவனாகப் பூமியில் பிறந்தான்.(73,74)

வசிஷ்டரின் சாபம், மற்றும் இந்திரனின் ஆணை ஆகியவற்றால், எட்டு வசுக்களும், கங்கைக்கு அவளது கணவனான சந்தனு மூலம் பிறந்தனர்.(75) அவர்களில் {அப்படிப் பிறந்தவர்களில்} இளையவரான பீஷ்மர், குருக்களின் அச்சங்களைப் போக்குபவராகவும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவராகவும், வேதங்களை அறிந்தவராகவும், பேச்சாளர்களில் முதன்மையானவராகவும், எதிரிகளின் படையணிகளைக் குறைப்பவராகவும் இருந்தார்.(76) வலிமையும் சக்தியும் கொண்டவராக, ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவராக இருந்த அவர் {பீஷ்மர்}, பிருகு குல ஜமதக்னியின் மகனான சிறப்புமிக்க ராமரிடமே {பரசுராமரிடமே} போரிட்டவராவார்.(77)

ஓ மன்னா {ஜனமேஜயா}, கிருபர் என்ற பெயரில் பூமியில் அறியப்பட்ட பிராமண முனிவர், ருத்ரர்களின் குலத்திலிருந்து ஆண்மையின் வடிவமாகப் பிறந்தவராவார்.(78) சகுனி என்ற பெயரில் அறியப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், மன்னனுமான அந்த எதிரிகளை நசுக்குபவன் {சகுனியானவன்}, (மூன்றாவது யுகமான) துவாபரனே என்பதை அறிவாயாக.(79) விருஷ்ணி குலத்தின் பெருமையை உயர்த்துபவனும், எதிரிகளை ஒடுக்குபவனும், உறுதியான இலக்கைக் கொண்டவனுமான சாத்யகி என்பவன், மருத்துக்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் பகுதியில் இருந்து பிறந்தவனாவான்.(80) ஆயுதம் தரித்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், பூமியில் ஏகாதிபதியாக இருந்தவனும், அரசமுனியுமான துருபதனும், தேவர்களின் அதே {மருத்துக்களின்} குலத்திலிருந்தே பிறந்தவனாவான்.(81)

ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களின் இளவரசனும், எவனாலும் விஞ்சமுடியாத செயல்களைக் கொண்டவனும், க்ஷத்திரியக் காளைகள் அனைவரிலும் முதன்மையானவனுமான கிருதவர்மனும், அதே தேவர்களின் {மருத்துக்களின்} பகுதியிலிருந்தே பிறந்தவனாவான் என்பதையும் நீ அறிய வேண்டும். பிறரின் அரசாங்கங்களை எரிப்பவனும், எதிரிகள் அனைவரையும் ஒடுக்குவதில் மிகப்பெரியவனும், விராடன் என்ற பெயர் கொண்டவனுமான அந்த அரச முனியும், அதே தேவர்களின் {மருத்துக்களின்} பகுதியிலிருந்து பிறந்தவனேயாவான்.(82,83) ஹம்சன் என்ற பெயரில் அறியப்பட்டவனான அரிஷ்டையின் மகன், குரு குலத்தில் பிறந்து, கந்தர்வர்களின் ஏகாதிபதியானான்.(84) அவனே கிருஷ்ண துவைபாயனரின் {வியாசரின்} வித்தில் பிறந்தவனும், நீண்ட கரங்கள், பெரும் சக்தி ஆகியவற்றைக் கொடையாகக் கொண்டவனும், ஏகாதிபதியாகவும், ஞானக் கண் கொண்டவனாக அறியப்பட்டவனுமான திருதராஷ்டிரன் என்ற பெயரில் அறியப்பட்டவன், தன் தாயின் {அம்பிகையின்} தவறாலும், முனிவரின் {வியாசரின்} கோபத்தாலும் குருடனாக ஆனான். பெரும் பலத்தைக் கொண்ட அவனது {திருதராஷ்டிரனது} தம்பியானவன், உண்மையில், பாண்டு என்று அறியப்பட்டு, உண்மைக்கும் {சத்தியத்திற்கும்}, அறத்திற்கும் {தர்மத்திற்கும்} அர்ப்பணிப்புள்ளவனாகவும், தூய்மையின் திருவடிவமாகவும், பெரும் மனிதனாகவும் இருந்தான்.(85,86) ஓ மன்னா! {ஜனமேஜயா}, அறம்சார்ந்தோர் அனைவரிலும் முதன்மையானவனும், நீதிதேவனே ஆனவனுமாக விதுரன் என்று பூமியில் அறியப்பட்டவன், முனிவர் அத்ரியின் சிறப்புமிக்க, பெரும் நற்பேறுபெற்ற மகனாவான் என்பதை நீ அறிய வேண்டும்.(87)

குருக்களின் நல்ல புகழை அழித்தவனும், தீய எண்ணம் கொண்டவனுமான தீய மன்னன் துரியோதனன், பூமியில் {நான்காவது யுகமான} கலியின் பகுதியிலிருந்து பிறந்தவனாவான்.(88) அவனே உயிரினங்கள் அனைத்தும் கொல்லப்படுவதற்கும், பூமி வெறுமையானதற்கும் காரணமானான்; மேலும் அவனே பகைமையின் தழலை மூட்டி அனைவரையும் எரித்தவனானான். புலஸ்தியரின் மகன்களே (ராட்சசர்களே), துச்சாசனன் முதலிய நூறு தீயவர்களாக, துரியோதனனுக்குத் தம்பிகளாகப் பூமியில் பிறந்தனர்.(89,90) ஓ பாரத இளவரசர்களில் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனை (அவனது திட்டங்கள் அனைத்திலும்) எப்போதும் ஆதரித்தவர்களான துர்முகன், துஹ்ஸஹன் மற்றும் நான் பெயர் குறிப்பிடாத இன்னும் பிறர் உண்மையில் புலஸ்தியரின் மகன்களே ஆவர். இந்த நூறு பேருக்கும் மேல், திருதராஷ்டிரன், ஒரு வைசிய மனைவியிடம் யுயுத்சு என்ற பெயரில் ஒரு மகனையும் கொண்டிருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(91,92)

ஜனமேஜயன், “ஓ சிறப்புமிக்கவரே {வைசம்பாயனரே}, திருதராஷ்டிரனுடைய மகன்களின் பெயர்களை மூத்தவனிலிருந்து தொடங்கி அவர்களுடைய பிறப்பின் வரிசைப்படி எனக்குச் சொல்வீராக” என்றான்.(93)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் : துரியோதனன், யுயுத்சு, துச்சாசனன், துஸ்ஸஹன், துச்சலன், துர்முகன், விவின்சதி {விவிம்சதி}, விகர்ணன், ஜலசந்தன், சுலோச்சனன், விந்தன், அனுவிந்தன், துர்த்தர்ஷன், சுபாஹு, துஷ்பிரதர்ஷணன், துர்மர்ஷணன், {இங்கே ஒன்று விடுபட்டிருக்க வேண்டும்}, துஷ்கர்ணன், கர்ணன், சித்ரன், உபசித்ரன், சிர்தாக்ஷன், சாருசித்ரன், அங்கதன், துர்மதன், துஷ்பிரஹர்ஷணன், விவித்சு, விகடன், சமன், ஊர்ணநாபன், பத்மநாபன், நந்தன், உபநந்தன், சேனாபதி, சுஷேணன், குண்டோதரன், மஹோதரன், சித்ரபாஹு, சித்ரவர்மன், சுவர்மன், துர்விரோசனன், அயோபாஹு, மஹாபாஹு, சித்ரசாபன், சுகுண்டலன், பீமவேகன், பீமபலன், பலாகி, பீமவிக்ரமன், உக்ராயுதன், பீமசரன், கனகாயு, திருடாயுதன், திருடவர்மன், திருடக்ஷத்ரன், சோமகீர்த்தி, அனாதரன் {அனூதரன்}, ஜராசந்தன், திருடசந்தன், சத்யசந்தன், சஹஸ்ரவேகன், உக்ரசிரவஸ், உக்ரசேனன், க்ஷேமமூர்த்தி, அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன், துராதரன், திருடஹஸ்தன், சுஹஸ்தன், வாதவேகன், சுவர்ச்சஸ், அதித்யகேது, பஹ்வாசி, நாகதத்தன், அனுயாயீ, நிஷங்கீ, குவசீ {கவசீ}, தண்டீ, தண்டதாரன், தனுக்கிரஹன், உக்கிரன், பீமரதன், வீரன், வீரபாஹு, அலோலூபன், அபயன், ரௌத்திரகர்மன், திருடரதன், அனாத்ருஷ்யன், குண்டவேதன், விராவி, தீர்க்கலோசனன், தீர்க்கபாஹு, மஹாபாஹு, வியூடோரு, கனகாங்கதன், குண்டஜன், சித்ரகன் ஆகியோராவர். வைசிய மனைவியின் மூலம் திருதராஷ்டிரனுக்குப் பிறந்த யுயுத்சு, அந்த நூறு பேருக்கும் அதிகமானவனாவான்[3].(94-106) அந்த நூறுபேருக்கு மேல், துச்சலை என்ற பெயரில் மகள் ஒருத்தியும் இருந்தாள்.(கிசாரி மோகன் கங்குலியின் மொழிபெயர்ப்பின்படி மேற்கண்ட கௌரவர்கள் பெயர்ப்பட்டியலில் 98 பெயர்கள்தான் வருகின்றன. ஆகையால் நூறு பேர் யார் என்பது தெளிவாகத் அறிய http://en.wikipedia.org/wiki/Kaurava என்ற லிங்குக்குச் சென்று பார்த்ததில். அங்கே Puranic Encyclopedia of Vettom Mani. Mahabharata Aadiparvam – chapter 67 Compiled by T.J.Neriamparampil என்ற புத்தகத்திலிருந்து அப்பெயர்களைக் கொடுத்திருந்தார்கள் அந்தப் பெயர் வரிசை பின்வருமாறு: துரியோதனன், துச்சாசனன், துட்சலன், ஜலகந்தன், சாமன், சாஹன், விந்தன், அனுவிந்தன், துர்முகன், சித்திரசேனன், துரதர்ஷன், துர்மர்ஷன், துஸ்ஸஹா, துர்மதன், விகர்ணன், துஷ்கர்ணன், துர்தரன், விவின்சதி, துர்மார்ஷனன், துர்விஷாஹன், துர்மோசனன், துஷ்பிரதர்ஷா, துர்ஜயன், ஜைத்திரன், பூரிவலன், ரவி, ஜெய்சேனன், சுஜாதா, சுரூதவன், சுரூதந்தன், ஜெயா, சித்திரன், உபசித்திரன், சாருசித்திரன், சித்திராக்ஷன், சரசனன், சித்ரயுதன், சித்திரவர்மன், சுவர்மண், சுதர்ஷனன், தனுர்கிரஹன், விவித்சு, சுபாஹு, நந்தா, உபநந்தா, கிராதா, வடவேகா, நிஷாகின், கவஷின், பாசி, விகடன், சோமன், சுவர்சஸஸ், தனுர்தரன், அயோபாஹு, மஹாபாஹு, சித்ராம்கன், சித்ரகுண்டலன், பீமரதன், பீமவேகன், பீம்பேலன், உக்கிராயுதன், குண்டாதரன், பிருந்தாரகன், திருதவர்மன், திருதாக்ஷத்ரா, திருதசந்தா, ஜராசந்தா, சத்தியசந்தா, சதாசுவாக், உக்கிரஸ்ரவஸ், உக்கிரசேனன், சேனாயி, அபராஜிதா, குந்தாசாய், திருதஹஸ்தா, சுஹஸ்தா, சுவர்ச்சா, ஆதித்யகேது, உக்கிரசாய், கவச்சி, கிராதனா, குந்தை, பீமவிக்ரன், அலோலூபன், அபயா, திரிர்மாவு, திரிதராஸ்ரயா, அனாதருஷ்யா, குந்தபேதி, விரவை, சித்திரகுண்டலா, பிரதாமா, அமபிரமாதி, தீர்க்கரோமன், சுவீர்யவான், தீர்க்கபானு, காஞ்சனாத்வஜன், குந்தாசி, விராஜஸ் என்பதாகும்.)

ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே (திருதராஷ்டிரனின்) அந்த நூறு மைந்தர்களின் பெயரையும், அந்த மகளின் பெயரையும் உரைத்துவிட்டேன். இப்போது நீ அவர்கள் பிறந்த வரிசையின்படி அவர்களது பெயரை அறிந்து கொண்டாய்.(107) அவர்கள் அனைவரும் வீரர்களாகவும், பெரும் தேர்வீரர்களாகவும், போர்க்கலையில் திறம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அதையும் தவிர, ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் வேதாங்கங்களை அறிந்தவர்களாகவும், சாத்திரங்களைப் படித்தவர்களாகவும் இருந்தனர்.(108) அவர்கள் அனைவரும் தாக்குவதிலும் தடுப்பதிலும் வலிமை மிக்கவர்களாகவும், கல்வியில் அருள் கொண்டவர்களாகவும் இருந்தனர். மேலும், ஓ ஏகாதிபதி! அவர்கள் அனைவரும் அருளிலும், சாதனைகளிலும் தங்களுக்குத் தகுதியான மனைவியரைக் கொண்டிருந்தனர்.(109) ஓ மன்னா {ஜனமேஜயா}, நேரம் வந்த போது, அந்தக் கௌரவ ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, சகுனியின் ஆலோசனையை ஏற்று, தனது மகள் துச்சலையை, சிந்து மன்னன் ஜெயத்ரதனுக்குக் கொடுத்தான்[4].(110)(கும்பகோணம் பதிப்பில் இது, “ராஜாவே, குரு வம்சத்தவனாகிய திருதராஷ்டிர மகாராஜா துச்சலையென்னும் பெண்ணை விவாகத்துக்குரிய பருவத்தில் காந்தாரியின் அபிப்பிராயப்படி சிந்து தேசத்தரசனாகிய ஜயத்ரதனுக்குக் கன்னிகாதானஞ்செய்தான்” என்றிருக்கிறது.)

அவதாரங்களின் உயிர்ப்பகுதிகள்! | ஆதிபர்வம் – பகுதி 67ஆ(சம்பவ பர்வம் – 3)மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள் யார் யாருடைய அம்சங்கள் என்ற விரிவு…

ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே} மன்னன் யுதிஷ்டிரன் தர்மனுடைய {தர்ம தேவனான யமனுடைய} ஒரு பகுதியாவான்; பீமசேனன் காற்று தேவனுடையவன் {வாயு தேவனுடையவன்}; அர்ஜுனன் தேவர்களின் தலைவனான இந்திரனுடையவன்;(111) அதே போல உயிரினங்கள் அனைத்திலும் அழகானவர்களும், பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களுமான நகுலனும், சகாதேவனும், அசுவினி இரட்டையர்களுடைய பகுதிகளாவர் என்பதைத் தெரிந்து கொள்வாயாக.(112)

சோமனின் மகனான வலிமைமிக்க வர்ச்சஸ் என்று அறியப்பட்டவனே, அர்ஜுனனின் மகனாக, அற்புதச் செயல்களைச் செய்யும் அபிமன்யுவானான்.(113) மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அவன் அவதரிப்பதற்கு முன்னர், சோமதேவன் (சந்திரன்), தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “என்னால் எனது மகனைக் கொடுக்க (பிரிய) முடியாது. அவன் எனக்கு உயிருக்கும் அதிகமான விருப்பத்துக்குரியவனாவான்.(114) இது சிறிய காலமாக இருக்கட்டும். இந்த வரம்பை மீற வேண்டாம். பூமியில் அசுரர்களை அழிப்பது தேவர்களின் பணியாகும், எனவே இஃது எங்கள் பணியுமாகும். ஆகவே, இந்த வர்ச்சஸ் அங்கே போகட்டும், ஆனால் அவன் அங்கே அதிகக் காலம் இருக்க வேண்டாம். நாராயணனைத் தோழனாகக் கொண்ட நரன் இந்திரனின் மகனாகப் பிறக்கப் போகிறான்,(115,116) மேலும் அவன் பாண்டுவின் வலிமைமிக்க மகனான அர்ஜுனன் என்று அறியப்படப் போகிறான். இந்த எனது மகன் {வர்ச்சஸ்} அவனது {அர்ஜுனனின்} மகனாகி, பாலனாக இருக்கும்போதே வலிமைமிக்கத் தேர்வீரனாகத் திகழட்டும்.(117) தேவர்களில் சிறந்தவர்களே, அவன் பதினாறு வருடங்கள் பூமியில் தங்கட்டும். அவன் பதினாறாவது வயதை அடைகையில், உங்கள் பகுதிகளாகப் பிறக்கும் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அழிவை அடையும் போர் ஏற்படப் போகிறது.(118) ஆனால் ஒரு குறிப்பிட்ட மோதல், நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரும் இல்லாமல் (அம்மோதலில் கலந்து கொள்ளாத நிலையில்) நடைபெறப் போகிறது.(119) உண்மையில், தேவர்களே, உங்கள் பகுதிகள் {அவதாரங்கள்}, சக்கர வியூகம் என்ற பெயரில் அறியப்படும் படைநிலையை ஏற்படுத்திக் கொண்டு போரிடப் போகின்றனர். என் மகன் பகைவர்கள் அனைவரையும் தன் முன்னால் புறமுதுகிட நிர்ப்பந்திப்பான்.(120) வலிமைமிக்க அந்தப் பிள்ளை {வர்ச்சஸ்-அபிமன்யு}, ஊடுருவ முடியாத வியூகத்தை ஊடுருவி, அதற்குள் அச்சமின்றித் திரிந்து, பகைவரின் படையணியில் நான்கில் ஒரு பாகத்தை அரை நாளுக்குள் யமனுலகத்திற்கு அனுப்புவான். நாளின் முடிவில் எண்ணற்ற வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் தங்கள் பொறுப்புக்குத் திரும்பும்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட என் மகன் என் முன் தோன்றுவான். மேலும் அவன், தன் பரம்பரையில் ஒரு வீர மகனைப் பெற்றெடுப்பான். அவனே கிட்டத்தட்ட அழிந்த பாரதக் குலத்தைத் தொடரச் செய்வான் {தழைக்க வைப்பான்}” {என்றான் சோமன்}.(121-124)

சோமனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, “அப்படியே ஆகட்டும்” என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் நட்சத்திரங்களின் மன்னனை (சோமனைப்) புகழ்ந்து வழிபட்டனர்.(125) இப்படியே, ஓ மன்னா {ஜனமேஜயா}, உன் தந்தையுடைய தந்தைமாரின் பிறப்பை (பிறப்பு குறித்தவற்றை) உனக்கு உரைத்துவிட்டேன். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அக்னியின் ஒரு பகுதி என்பதையும் அறிவாயாக.(126) மேலும், முதலில் பெண்ணாகப் பிறந்த அந்தச் சிகண்டி ஒரு ராட்சசனாவான் (ராட்சசனின் அவதாரமாவான்) என்பதையும் அறிவாயாக. ஓ பாரதக் குலத்தின் காளையே, திரௌபதியின் ஐந்து மகன்களாக ஆன(127) அந்தப் பாரத இளவரசர்களில் காளைகள், விஸ்வர்கள் என்று அறியப்பட்ட தேவர்களாவர். அவர்களின் பெயர்கள் பிரிதிவிந்தியன், சூதசோமன், சுரூதகீர்த்தி,(128) நகுலன் மகனான சதானீகன், மற்றும் சுருதசேனன் என்பதாகும். யதுக்களில் முதன்மையான சூரன், வசுதேவரின் தந்தையாவான்.(129) அவன் {சூரன்}, தன்னழகில் உலகில் ஒப்பற்றவளான பிருதை என்று அழைக்கப்பட்ட மகள் ஒருத்தியைக் கொண்டிருந்தான். சூரன், தனக்குப் பிறக்கும் முதல் குழந்தையை, வாரிசற்றவனும், தன் அத்தையின் மகனுமான குந்திபோஜனக்கு அளிப்பதாக நெருப்பின் முன்னிலையில் உறுதியேற்றிருந்ததால் {சத்தியம் செய்திருந்ததால்}, அந்த ஏகாதிபதியின் {குந்திபோஜனின்} உதவிகளை எதிர்பார்த்து, அவனுக்குத் தன் மகளைக் கொடுத்தான். அதன்பேரில் குந்திபோஜன் அவளை {பிருதையைத்} தன் மகளாக்கிக் கொண்டான்[5]. (கும்பகோணம் பதிப்பில், “பராக்கிரமசாலியான அந்தச் சூரன் பிள்ளையில்லாமலிருந்த தன் அத்தையின் புத்ரனுடைய புத்ரனாகிய குந்திபோஜனென்பவனுக்குத் தன் ஸந்ததியில் முதன்மையானதைக் கொடுப்பதாகப் பிரதிஜ்ஞை செய்தபடி, அந்தப் பெண் முதலிற்பிறந்தவளாதலால், அந்தக் குந்திபோஜனை விருத்தி செய்வதற்காக, அவளை அவனுக்குப் பெண்ணாகக் கொடுத்தான். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே குந்திபோஜன், சூரனின் அத்தை மகனே என்றும், குந்திபோஜனின் உதவியை எதிர்பார்த்தே சூரன் தன் மகளை அவனுக்குக் கொடுத்தான் என்றும் இருக்கிறது.)அதிலிருந்து அவள் தன் (தன்னைத் தத்தெடுத்த) தந்தையின் வீட்டில், பிராமணர்களுக்கும், விருந்தினர்களுக்கும் பணிவிடை செய்வதில் ஈடுபட்டாள்.(130-132)

ஒரு நாள் அவள் {குந்தி}, கடும் நோன்புகளைக் கொண்டவரும், உண்மை மற்றும் அறத்தின் புதிர்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்தவரும், துர்வாசர் என்ற பெயரைக் கொண்டவருமான கோபக்காரத் தவசிக்குப் பணிவிடை செய்ய வேண்டியிருந்தது. பிருதை {குந்தி}, முழு ஆன்மக் கட்டுப்பாடோடும், மிகுந்த கவனத்தோடும் அந்தக் கோபக்கார முனிவரை {துர்வாசரை} மன நிறைவு கொள்ளச் செய்தாள்.(133,134) அந்தப் புனிதமானவர் {துர்வாசர்}, அந்தக் கன்னிகையின் {குந்தியின்} பணிவிடையால் மனம் நிறைந்து அவளிடம், “ஓ பேறுபெற்றவளே, நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். (நான் உனக்குக் கொடுக்கப் போகும்) இந்த மந்திரத்தால், நீ விரும்பும் தேவர்களை (உன்னிடம்) அழைக்க உன்னால் முடியும்.(135) அவர்களின் அருளால் நீ குழந்தைகளை அடைவாய்” என்றார். இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெண் {குந்தி}, (சிறிது நேரத்திற்குப் பின்னர்) ஆவல் மேலீட்டால்,(136) தனது கன்னிப் பருவ காலத்தில் தேவன் சூரியனை {அந்த மந்திரத்தைக் கொண்டு} அழைத்தாள். அதன் பேரில் ஒளியின் தலைவனும் {சூரியனும்} அவளைக் கருவுறச் செய்து,(137) ஆயுததாரிகள் அனைவரிலும் முதல்வனாக ஆன ஒரு மகனை {கர்ணனை} அவளிடம் பெற்றான். உறவினர்களுக்கு அஞ்சிய அவள் {குந்தி}, காது குண்டலங்களுடனும், கவசத்துடனும் வெளிவந்த அந்தப் பிள்ளையை ரகசியமாக ஈன்றெடுத்தாள். அவன் {அந்தக் குழந்தை}, ஒரு தெய்வீகக் குழந்தையின் அழகைக் கொடையாகக் கொண்டு,(138) பகலை உண்டாக்குபவனை {சூரியனைப்} போன்ற காந்தியுடன் இருந்தான். அவனது உடலின் ஒவ்வொரு பகுதியும் சமச்சீராகவும், நன்கு அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(139) அச்சத்தால் குந்தி அந்த அழகிய குழந்தையை நீரில் விட்டாள். ஆனால் இப்படி நீரில் வீசப்பட்ட அப்பிள்ளை {கர்ணன்}, ராதையின் சிறப்புமிக்கக் கணவனால் {அதிரதனால்} எடுக்கப்பட்டு,(140) அவனது மனைவியால் {ராதையால்} அவர்களின் மகனாக ஏற்கப்பட {தத்தெடுக்கப்பட} அவளிடம் கொடுக்கப்பட்டான். அந்த இணையர் {அதிரதனும், ராதையும்}, அப்பிள்ளை விரைவில் எந்தப் பட்டப்பெயரால் நிலம் முழுவதும் அறியப்பட்டானோ[6] (குமபகோணம் பதிப்பில், “ஜலத்தில் விடப்பட்ட அந்தக் குழந்தையை ராதையின் கணவனும், மிகுந்த கீர்த்தியுள்ளவனுமாகிய ஒரு சூதன் தன் மனைவியாகிய ராதையின் புத்ரனாகச் செய்தான். அந்தத் தம்பதிகள் இருவரும் அந்தக் குழந்தைக்கு எல்லாத் தேசங்களிலும் பிரசித்தமான வஸுஷேனனென்கிற நாமதேயத்தைச் செய்தனர்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஆனால், இப்படி நீரில் வீசப்பட்ட பிள்ளை ராதையின் சிறப்புமிக்கக் கணவனால் எடுக்கப்பட்டான். அதிரதன் (ராதையின் கணவன்) அப்பிள்ளையைத் தன் மகனாக ஆக்கிக் கொண்டான். அந்த இணையர், எந்தப் பெயரால் அவன் விரைவில் நாடுகளெங்கிலும் அறியப்பட்டானோ அதே வசுசேணன் என்ற பெயரையே அவனுக்குக் கொடுத்தனர்” என்றிருக்கிறது.)அதே வசுசேனன் என்ற பெயரையே அவனுக்குக் கொடுத்தனர். அவன் வளர்ந்து வருகையில், மிகப் பலவனாகவும், ஆயுதங்கள் அனைத்தில் விஞ்சி நிற்பவனாகவும் ஆனான்.(141,142) வெற்றியாளர்கள் அனைவரிலும் முதல்வனான அவன் விரைவில் அறிவியல்களை {வேதாங்கங்களை} நன்கறிந்தான். உண்மையைத் தன் பலமாகக் கொண்ட அந்த நுண்ணறிவு மிக்கவன் {வசுசேனன்-கர்ணன்} வேதங்களை உரைத்தபோது, பிராமணர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று அவனிடம் ஏதும் இருக்கவில்லை.(144)

அந்த வேளையில், பொருள்கள் அனைத்தையும் தொடங்கி வைப்பவனான இந்திரன், தன் மகனான அர்ஜுனனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்டு, ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்று அவனிடம் {கர்ணனிடம்} வந்து, அவனது காதுகுண்டலங்களையும், இயற்கையான மார்புக் கவசத்தையும் அவ்வீரனிடம் இரந்து கேட்டான்.(145) அவ்வீரனும் {கர்ணனும்}, தன் காது குண்டலத்தையும், கவசத்தையும் எடுத்து அந்தப் பிராமணனிடம் கொடுத்தான். (அந்தத் தானத்தை ஏற்ற) சக்ரன் {இந்திரன்}, (அவனது வெளிப்படைத் தன்மையில்) ஆச்சரியமடைந்து, தானமளித்தவனுக்கு ஓர் ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொடுத்து, இவ்வார்த்தைகளில், “ஓ வெல்லப்பட முடியாதவனே {கர்ணா}, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருக்கு மத்தியில் எவன் மீது நீ (இவ்வாயுதத்தை) ஏவினாலும், அவன் நிச்சயம் கொல்லப்படுவான்” என்றான். அந்தச் சூரியனின் மகன் முதலில் வசுசேனன் என்ற பெயராலேயே உலகத்தில் அறியப்பட்டான்.(146,147) ஆனால், அவனது செயல்களின் தொடர்ச்சியால் அவன் கர்ணன் என்று அழைக்கப்படலானான். மேலும் பிருதையின் முதல் மகனும், பெரும் புகழைக் கொண்டவனுமான அந்த வீரன், இயற்கையான தன் மார்புக் கவசத்தை அறுத்து எடுத்ததால் கர்ணன்[7] என்று அழைக்கப்பட்டான்.(க்ருண் என்றால் சேதிப்பது என்று பொருள். அதன் நீட்சியாகவே கர்ணன் என்ற பெயரும் அமைந்திருக்கிறது என்று கும்பகோணம் பதிப்பில் குறிப்பு இருக்கிறது) ஓ மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவ்வீரன் சூத சாதியிலேயே வளரத்தொடங்கினான்.(148,149) ஓ மன்னா {ஜனமேஜயா}, மேன்மையான மனிதர்கள் அனைவரிலும் முதல்வனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், பகலை உண்டாக்குபவனின் {சூரியனின்} சிறந்த பகுதியைக் கொண்டவனுமான அந்தக் கர்ணன் துரியோதனனுக்கு, நண்பனாகவும், ஆலோசகனாகவும் இருந்தான்.(150)

பெரும் வீரம் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, நித்தியமானவனும், தேவர்களுக்குத் தேவனுமான நாராயணனின் ஒரு பகுதியாக மனிதர்களுக்கு மத்தியில் இருந்தான்.(151) பெரும்பலத்தைக் கொண்ட பலதேவன் {பலராமன்}, நாகன் சேஷனின் ஒரு பகுதியாவன்.(152) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட பிரதியும்னன், சனத்குமாரனாவான் என்பதை அறிவாயாக. இப்படியே பல்வேறு தேவலோகவாசிகளின் பகுதிகள், வசுதேவ குலத்தில் மேன்மை மிகுந்த மனிதர்களாகப் பிறந்து மகிமையை அதிகரித்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, நான் ஏற்கனவே சொன்னதைப் போல, அப்சர இனங்களைச் சேர்ந்தோரின் பகுதிகள் இந்திரனின் உத்தரவின் பேரில் உலகத்தில் அவதரித்தனர்.(153,154) அப்படிப் பதினாறாயிரம் {16000} தேவகன்னிகைகள், இந்தப் பூமியில் பிறந்து வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மனைவிகளாகினர். ஸ்ரீ-இன் {லட்சுமியின்} ஒரு பகுதியானவள், நாராயணனின் நிறைவுக்காகப் பீஷ்மகனின் குலத்தில் பூமியில் அவதரித்தாள். அவள் {லட்சுமி} கற்புடைய ருக்மிணி என்ற பெயரைக் கொண்டிருந்தாள். குளவி போன்ற மெல்லிய இடைகொண்ட களங்கமற்ற திரௌபதி, சச்சியின் (தேவலோக ராணி {இந்திரனின் மனைவி}) பகுதியைக் கொண்டு துருபதனின் குலத்தில் பிறந்தாள். தோற்றத்தில் அவள் குள்ளமாகவோ, உயரமாகவோ இல்லை. உடலில் நீலத் தாமரையின் மனம் கொண்டு(155-158), தாமரை இதழ்களைப் போலப் பெரிய கண்களுடன், உருண்ட அழகிய தொடைகளுடன், அடர்த்தியான சுருள் முடிகள் கொண்ட கருமையான கேசத்துடன் அவள் இருந்தாள். நல்ல அம்சங்கள் அனைத்தையும் கொண்டு, வைடூரிய நிற மேனியுடன் இருந்த அவள்,(159) மனிதர்களில் முதன்மையான ஐவரின் இதயங்களை மந்திரத்தால் மயக்கி {பாம்பாட்டியைப் போல ஆட்டி} வைப்பவளானாள். சித்தி, திருதி என்ற இரு தேவிகள் அந்த ஐவரின் தாயாகி(160) குந்தி மற்றும் மாத்ரி என்று அழைக்கப்பட்டனர். மதி என்பவள் {என்ற தேவி} சுபலனின் மகள் (காந்தாரி) ஆனாள்[8].(சித்தி என்றால் வெற்றி என்றும், திருதி என்றால் மகிழ்ச்சி என்றும், மதி என்றால் விவேகம் என்றும் பொருளாம்.) இவ்வாறே, ஓ மன்னா! {ஜனமேஜயா}, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ராட்சசர்கள் ஆகியோருக்குரிய அவரவர் பகுதிகளின்படியான அவதாரங்கள் குறித்த அனைத்தையும் நான் உனக்கு உரைத்துவிட்டேன்.(161-162)

போரில் வெல்லப்பட முடியாத ஏகாதிபதிகளாகப் பூமியில் பிறந்தவர்கள், நீண்டு பரந்திருந்த யதுக்களின் குலத்தில் பிறந்திருந்த உயர் ஆன்மாக்கள், பிற குலங்களில் பிறந்திருந்த வலிமைமிக்க ஏகாதிபதிகள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களாகப் பிறந்திருந்தவர்கள் ஆகிய அனைவரும் என்னால் முறையாக உரைக்கப்பட்டிருக்கின்றனர்.(163)

செல்வம், புகழ், சந்ததி, நீண்ட ஆயுள், வெற்றி ஆகியவற்றை அளிக்க வல்லதும், (தங்கள் தங்கள் பகுதிகளுடன் பிறந்த மேன்மையானவர்களின்) அவதாரங்கள் குறித்ததுமான இந்த விவரிப்பானது {அம்சாவதாரமானது}, {வெறுப்பற்ற}சரியான மனநிலையிலேயே எப்போதும் கேட்கப்பட வேண்டும்.(164) கேட்பவன் மிக மோசமாகக் கவலையில் ஆழ்ந்திருப்பவனாக இருந்தாலும், தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோரின் பகுதிகளின் படியான அவதாரங்கள் குறித்த இந்த விவரிப்பை {அம்சாவதரணத்தைக்} கேட்டு, அண்டத்தின் படைப்பு {பிறப்பு}, பாதுகாப்பு {வாழ்வு}, அழிவு {மரணம்} ஆகியவற்றை அறிந்து, ஞானத்தை அடைந்து, எப்போதுமே {கவலையில்} வீழாதவனாக {சோர்வடையாதவனாக} இருப்பான்” என்றார் {வைசம்பாயனர்}.(165)

துஷ்யந்தன்! | ஆதிபர்வம் – பகுதி 68(சம்பவ பர்வம் – 4)பௌரவக் குலத்தை நிறுவிய துஷ்யந்தன்; துஷ்யந்தனின் ஆட்சி சிறப்பு.

ஜனமேஜயன், “ஓ பிராமணரே! {வைசம்பாயனரே} உண்மையில் நான் தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரின் உயிர்ப்பகுதிகளுக்கேற்ப உண்டான அவதராங்களை உம்மிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டேன்.(1) எனினும் நான், குருக்களின் அரசமரபை {வம்சத்தைக்} குறித்துத் தொடக்கத்திலிருந்தே கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, அவற்றை இந்த மறுபிறப்பாளர்களான முனிவர்கள் அனைவரின் முன்னிலையில் சொல்வீராக” என்றான்.(2)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ பாரதக் குலத்தின் மேன்மைமிக்கவனே {ஜனமேஜயா}, பௌரவக் குலத்தை நிறுவியவன் பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட துஷ்யந்தனாவான் {துஷ்மந்தனாவான்}. நான்கு கடல்களால் சூழப்பட்ட பூமியின் பாதுகாவலனாக அவன் இருந்தான். இந்த உலகின் நாற்காற்பகுதிகள் முழுமையும் அவனது {துஷ்யந்தன்} ஆதிக்கத்திலேயே இருந்தன. நடுக்கடலில் இருந்த பல்வேறு மண்டலங்களுக்கும் அவனே {துஷ்யந்தனே} தலைவனாக இருந்தான்.(3,4) அந்த எதிரிகளை ஒடுக்குபவன் {துஷ்யந்தன்}, {நால் வகை மனிதர்களால் நிறைந்தவையும், கடலால் சூழப்பட்டவையும், ரத்தினங்களின் சுரங்கமாவும் இருந்த} மிலேச்சர்களின் நாடுகளின் மேலும் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தான்.(5)

அவனுடைய ஆட்சிக்காலத்தில் மனிதர்களில் கலப்பு சாதியினரோ[1], (நிலம் தானே விளைந்ததால்) மண்ணை உழுபவர்களோ, (பூமியின் பரப்பிலேயே செல்வம் அபரிமிதமாக இருந்ததால்) சுரங்கத் தொழிலாளர்களோ, பாவம் நிறைந்த மனிதர்களோ எவரும் இல்லை[2].(6) (மண்ணை உழுவதனாலோ, சுரங்கம்-கிணறு எனத் தோண்டுவதாலோ மண்ணைத் துன்புறுத்தாமல், தானாய் விளைந்த தானியங்கள் காய்கனிகள், தாமாய் வெளிப்படும் இரத்தினங்கள் மற்றும் உலோகங்களை உபயோகித்த மக்கள் வாழ்ந்தனர் என்று கொள்ளலாம்.)ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் அறம் சார்ந்தோராகவும், அற நோக்கங்களைக் கொண்டவர்களுமாகவே இருந்தனர்.(7) ஓ அன்புக்குரியோனே! {ஜனமேஜயா}, அங்கே கள்வர்கள் குறித்த அச்சமேதும் இல்லை, பஞ்சம் குறித்த அஞ்சமேதும் இல்லை, நோய் குறித்த அச்சமேதும் இல்லை.(8) தங்கள் தங்களுள்ளுரிய கடமைகளைச் செய்வதில் இன்புற்ற நால் வகை மனிதர்களும், ஆசைகளின் பலனை அடைவதற்காக எப்போதும் அறச் செயல்களைச் செய்ததில்லை. அவனை {துஷ்யனைச்} சார்ந்திருந்த அவனது குடிமக்கள் எந்த அச்சத்தையும் கொண்டிருக்கவில்லை.(9) பரஜன்யா (இந்திரன்) சரியான காலத்தில் மழையைப் பொழிந்ததால், நிலத்தில் விளைந்ததனைத்திலும் நீர்ச்சத்தும், சதைப்பற்றும் நிறைந்திருந்தன. பூமியில் அனைத்து வகைச் செல்வங்களும், அனைத்து வகை விலங்குகளும் நிறைந்திருந்தன.(10) பிராமணர்கள் எப்போதும் தங்கள் கடமைகளில் ஈடுபடுபவர்களாக, எப்போதும் உண்மை பேசுபவர்களாக இருந்தனர்.

இளமை நிறைந்த அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, அற்புதமான ஆற்றலையும், காடுகள் மற்றும் புதர்களோடு கூடிய மந்தர மலையை எடுத்துத் தன் கரங்களில் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வஜ்ரத்தைப் போன்ற கடினமான உடலையும் கொண்டிருந்தான். கதாயுதத்தைக் கொண்டு போரிடும் நான்கு முறைகளிலும் (அதாவது, தூரத்தில் இருப்பவர்கள் மீது வீசுவது, அருகில் இருப்பவர்களைத் தாக்குவது, பலருக்கு மத்தியில் சுழற்றுவது, எதிரில் இருக்கும் எதிரிகளை விரட்டுவது போன்ற முறைகளில்) அவன் மிகுந்த திறம் பெற்றவனாக இருந்தான். மேலும் அவன் {துஷ்யந்தன்}, அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும்,(11,12) யானைகள் மற்றும் குதிரைகளைச் செலுத்துவதிலும் திறமை பெற்றவனாக இருந்தான். பலத்தில் அவன் {துஷ்யந்தன்} விஷ்ணுவைப் போன்றவனாகவும், காந்தியில் பகலை உண்டாக்குபவனை {சூரியனைப்} போன்றவனாகவும்,(13) நிறையீர்ப்பில் கடலைப் போன்றவனாகவும், பொறுமையில் பூமியைப் போன்றவனாகவும் இருந்தான். மேலும் தன் குடிமக்கள் அனைவராலும் பெரிதும் நேசிக்கப்பட்ட அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, நிறைவுள்ள தன் மக்களை அறம் சார்ந்து ஆண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(14)

துஷ்யந்தன் வேட்டை! | ஆதிபர்வம் – பகுதி 69(சம்பவ பர்வம் – 5)காட்டுக்கு வேட்டையாட படைகளுடன் சென்ற துஷ்யந்தன்; விலங்குகளை வேட்டையாடி அவற்றை அச்சுறுத்தியது.

ஜனமேஜயன், “உயர் ஆன்ம பரதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் சகுந்தலையின் பிறப்பு குறித்தும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன். ஓ புனிதமானவரே! {வைசம்பாயனரே}, மனிதர்களில் சிங்கமான துஷ்யந்தனைக் குறித்தும், அவ்வீரன் சகுந்தலையை எப்படி அடைந்தான் என்பது குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ உண்மையை அறிந்தவரே, புத்திசாலிகள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, அனைத்தும் எனக்குக் கூறுவதே உமக்குத் தகும்” என்றான்.(2)

வைசம்பாயனர் சொன்னார், “முன்பொரு காலத்தில் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் (மன்னன் துஷ்யந்தன்), தனது பெரும் படையின் துணையுடன் காட்டுக்குள் சென்றான். அவன் தன்னுடன் நூற்றுக்கணக்கான குதிரைகளையும், யானைகளையும் கூட்டிச் சென்றான்.(3) அந்த ஏகாதிபதியுடன் {துஷ்யந்தனுடன்} சென்ற படைகள் நான்கு வகையானவையாக (காலாட்படை வீரர்கள், தேர் வீரர்கள், குதிரைப்படை, யானைப்படைகளாக) இருந்தன. வீரர்கள் வாள்கள், ஈட்டிகள் தரித்தவர்களாக, தங்கள் கரங்களில் கதாயுதங்கள் மற்றும் தடித்த தண்டங்களைக் கொண்டவர்களுமாக இருந்தனர்.(4) அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, வேல்கள், பராசங்கள் ஆகியவற்றைத் தங்கள் கரங்களில் கொண்ட நூற்றுக்கணக்கான வீரர்கள் சூழத் தன் பயணத்தைத் தொடங்கினான். மன்னன் தன் அணிவகுப்பில் சென்ற போது, வீரர்களின் சிங்க முழக்கங்கள், சங்குகள் மற்றும் துந்துபி ஒலியின் இசை, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, பெரும் யானைகளின் பிளிறல்கள் ஆகியவை, குதிரைகளின் கனைப்பொலிகள் மற்றும் பல்வேறு ஆடைகளில் இருந்த பணியாட்கள் தாங்கி வந்த பல்வேறு ஆயுதங்களின் உரசல்கள் ஆகியவற்றுடன் கலந்து அங்கே காதைப் பிளக்கும் அமளி எழுந்தது.(5-7)

பெரும் அழகைக் கொடையாகக் கொண்ட மங்கையர், வீரனும், தன் சொந்த புகழை அடைந்தவனுமான அந்த ஏகாதிபதியை {துஷ்யந்தனை} அழகிய மாளிகைகளின் மாடிகளில் நின்றபடியே கண்டனர்.(8) எதிரிகளை அழிப்பவனும், எதிரிகளின் யானைகளை விரட்டும் திறன் கொண்டவனுமான அவனை {துஷ்யந்தனை}, அம்மங்கையர் சக்ரனை {இந்திரனைப்} போலக் கண்டு, அவனே வஜ்ரதாரி {இந்திரன்} என நம்பவும் செய்தனர் {அறிந்திருந்தனர்}.(9) அவர்கள் {அந்த மங்கையர்}, “இந்த மனிதர்களில் புலி {துஷ்யந்தன்}, போரில் வசுக்களுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவனாக, தன் கரங்களுடைய வலிமையின் விளைவால், எஞ்சி நிற்கும் எந்த எதிரியுமற்றவனாகவும் இருக்கிறான்” என்றனர்.(10) இதைச் சொன்ன அந்த மங்கையர் அன்பினால் அந்த ஏகாதிபதியின் தலையின் மீது மலர்களைப் பொழிந்து அவனை மனநிறைவு கொள்ளச் செய்தனர்.(11)

ஆசிகளைச் சொல்லும் பிராமணர்களில் முதன்மையானோரால் வழியெங்கும் பின்தொடரப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, இதயத்தில் பெருமகிழ்ச்சியுடன் மான்களைக் கொல்லும் ஆவலால் காட்டை நோக்கிச் சென்றான்.(12) மதங்கொண்ட யானையின் முதுகில் அமர்ந்து, தேவர்களின் மன்னனை {இந்திரனைப்} போலத் தெரிந்த அந்த ஏகாதிபதியை {துஷ்யந்தனை}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோரில் பலர் பின்தொடர்ந்து சென்றனர்.(13) குடிமக்களும் பிற வகையைச் சார்ந்தவர்களும் அந்த ஏகாதிபதியைச் சிறிது தூரத்திற்குப் பின்தொடர்ந்து சென்றனர்.(14) இறுதியாக, அவர்கள் மன்னனின் உத்தரவால் மேலும் {பின்தொடர்ந்து} செல்லாமல் நின்றனர்.

காற்றின் வேகத்தைக் கொண்ட தன் தேரில் ஏறிய மன்னன், தனது தேர்ச்சக்கரத்தின் சடசடப்பொலியால் பூமி முழுவதையும், ஏன் சொர்க்கத்தையும் கூட நிறைத்தான். அப்படி அவன் செல்கையில், தன்னைச் சுற்றிலும் (தேவலோகத் தோட்டமான) நந்தனத்தைப் போன்ற ஒரு காட்டைக் கண்டான்.(15,16) அது வில்வம், எருக்கு {ஆர்கா}, கருங்காலி {கதிரா} (பாக்கு), விளா {கபிதா}, வெள்வேல {தவ} மரங்கள் நிறைந்ததாக இருந்தது. மேலும் அங்கு மண் சமமற்றதாக இருப்பதையும், அருகில் உள்ள மலைகளில் இருந்து தளர்ந்து விழுந்த பாறைகள் சிதறிக் கிடப்பதையும் அவன் கண்டான்.(17) நீரற்று, மனிதர்களற்று இருந்த அது {அந்த நிலம்}, பல யோஜனைகள் தொலைவிற்குப் பரந்து கிடப்பதையும் கண்டான். அது மான்கள், சிங்கங்கள், இரைதேடும் விலங்குகள் பலவற்றால் நிறைந்திருந்தது.(18)

மனிதர்களில் புலியான மன்னன் துஷ்யந்தன், தன் அணிவகுப்பில் இருந்த போர்வீரர்கள் மற்றும் பணியாட்கள் உதவியோடு, எண்ணற்ற விலங்குகளைக் கொன்று அந்தக் காட்டையே கலங்கடித்தான்.(19) துஷ்யந்தன், அடிக்கும் தொலைவில் இருந்த எண்ணற்ற புலிகளைத் தனது கணைகளால் வீழ்த்தினான்.(20) மேலும் அந்த மன்னன், வெகு தொலைவில் இருந்த விலங்குகளைக் {கணைகளால்} காயப்படுத்தி, மிக அருகில் இருந்த விலங்குகளைத் தன் கனமான வாளால் கொன்றான்.(21) ஈட்டி தரித்தவர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {துஷ்யந்தன்}, தன் ஈட்டிகளை ஏவி அவற்றில் பலவற்றைக் கொன்றான். கதாயுதம் சுழற்றும் கலையை நன்கறிந்தவனும், அளவிலா ஆற்றலைக் கொள்ளவனுமான அம்மன்னன், {துஷ்யந்தன்}, அந்தக் கானகத்தில் அச்சமில்லாமல் திரிந்தான்.(22) சில நேரங்களில் தன் வாளைக் கொண்டும், சில நேரங்களில் தன் கதாயுதம் மற்றும் கனமான தண்டம் ஆகிவற்றை வேகமாக இறக்கியும் அந்தக் காட்டுவாசிகளைக் {விலங்குகளைக்} கொன்றான்.(23)

அற்புதமான சக்தி கொண்ட மன்னனாலும், போர் விளையாட்டுகளில் மகிழ்பவர்களும், அவனது அணிவகுப்பில் இருந்தவர்களுமான வீரர்களாலும் அந்தக் காடு இப்படிக் கலக்கப்பட்ட போது பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கின.(24) தங்கள் தலைவர்களை {தலைமை விலங்குகளை} இழந்த விலங்குக் கூட்டங்கள், அச்சத்தாலும், கவலையாலும் கதறிக் கொண்டே அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடத் தொடங்கின.(25) ஓடியதால் களைப்புற்ற அவை, முற்றிலும் காய்ந்து போயிருந்த ஆற்றுப் படுகைகளை அடைந்து, தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ள முடியாமல் அனைத்துப் பக்கங்களிலும் கீழே விழ ஆரம்பித்தன. அப்படி விழுந்த சில விலங்குகள் பசித்திருந்த வீரர்களால் உண்ணப்பட்டன.(26,27) அதே வேளையில் பிற {விலங்குகள்}, முகாம்களை அடைந்து, நெருப்பு கொளுத்தி சுடப்பட்டப் பிறகு அவர்களால் {அவ்வீரர்களால்} உண்ணப்பட்டன.(28)

வலுவான யானைகள் பல, தாங்கள் அடைந்த காயங்களால் பித்தடைந்து, மிதமிஞ்சிய அச்சத்தை அடைந்து துதிக்கைகளை உயர்த்தியபடியே தப்பி ஓடின. அந்தக் காட்டு யானைகள், சிறுநீர் கழித்தும், தங்கள் வயிற்றின் உள்ளடக்கங்களை வெளியேற்றியும், பெரும் அளவிலான இரத்தத்தைக் கக்கியும் எச்சரிக்கையின் வழக்கமான அறிகுறிகளைக் காட்டி ஓடுகையில் வீரர்கள் பலரை மிதித்துக் கொன்றன.(29,30) விலங்குகளால் நிறைந்திருந்த அந்தக் காடு, பணியாள் கூட்டத்துடன் கூடிய அந்த மன்னனின் கூரிய ஆயுதங்களால், விரைவில் சிங்கங்கள், புலிகள் மற்றும் காட்டின் பிற ஏகாதிபதிகளற்றதாகச் செய்யப்பட்டது” {என்றார் வைசம்பாயனர்}.(31)

ஆசிரமத்திற்குள் நுழைந்தான் துஷ்யந்தன்! | ஆதிபர்வம் – பகுதி 70(சம்பவ பர்வம் – 6)வேறு காட்டுக்கு வேட்டையாடச் சென்ற துஷ்யந்தன்; அந்தக் கானகத்தின் அழகு; பசியும் தாகமும் அடைந்த துஷ்யந்தன்; காட்டுக்குள் ஓர் ஆசிரமத்தைக் காண்பது; கண்வரின் ஆசிரமத்தில் முனிவர்களையும், துறவிகளையும் கண்ட துஷ்யந்தன்.

வைசம்பாயனர் சொன்னார், “மன்னன் {துஷ்யந்தன்} தன்னைப் பின்தொடர்பவர்களுடன் {தனது பணியாட்களுடன்} சேர்ந்து, ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொன்ற பிறகு, வேட்டையாடும் பொருட்டு மற்றொரு காட்டுக்குள் நுழைந்தான்.(1) தன்னைக் கவனிப்பதற்கு ஒரே ஒரு பணியாளை மட்டுமே கொண்ட அம்மன்னன் {துஷ்யந்தன்} பசியாலும் தாகத்தாலும் களைத்துப் போய், அந்தக் காட்டின் எல்லைப்பகுதியில் ஒரு பெரிய பாலைவனத்தை அடைந்தான்.(2)

செடிகளற்ற அந்தச் சமவெளியைக் கடந்த அம்மன்னன் {துஷ்யந்தன்}, தவசிகளின் ஓய்வில்லங்கள் {ஆசிரமங்கள்} நிறைந்ததும், பார்ப்பதற்கு அழகானதும், இதயத்திற்கு மகிழ்ச்சியை அளிப்பதும், குளுமையானதும், இனிய தென்றலுடன் கூடியதுமான மற்றொரு காட்டை அடைந்தான்.(3) மலர்ந்த மலர்களால் மறைக்கப்பட்ட மரங்கள் நிறைந்ததும், மென்மையான பச்சைப்புற்கள் மிகையாக வளர்ந்தும், சுற்றிலும் பல மைல்களுக்குப் பரந்து விரிந்த மண்ணுடன் கூடியதுமான அது {அந்தக் காடு}, பறவைகளின் இனிய இசையை எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஆண் குயிலின் இசைகளையும், சுவர்க்கோழிகளின் கீச்சொலிகளையும் அஃது எதிரொலித்துக் கொண்டிருந்தது.(4,5) தலைக்கு மேலே நிழற்பந்தல்களை அமைத்த நெடிது வளர்ந்த கிளைகளுடன் கூடிய மகத்தான மரங்களால் அது நிறைந்திருந்தது. சுற்றிலும் இருந்த மலர்க்கொடிகளின் மேல் வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்தன. அங்கே அனைத்து இடங்களிலும் அழகிய தோப்புகள் இருந்தன.(6) கனிகளற்றதாகவோ, முட்களுள்ளதாகவோ, சுற்றிலும் வண்டுகளேதும் மொய்க்காததாகவோ அங்கே எந்த மரமும் இல்லை.(7) அந்த மொத்தக் காடும், இறகுகளுடன் கூடிய பாடகர்களின் {பறவைகளின்} மெல்லிசையை எதிரொலித்துக் கொண்டிருந்தது. அனைத்துப் பருவங்களுக்குரிய மலர்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலர்ந்திருந்த மரங்களின் புத்துணர்ச்சி தரும் நிழல்கள் அங்கே இருந்தன.(8) அந்தப் பெரும் வில்லாளி {துஷ்யந்தன்} நுழைந்த அந்தக் காடானது, இப்படியே இனிமையாகவும் அற்புதமாகவும் இருந்தது.

பூங்கொத்துகளால் அழகூட்டப்பட்ட கிளைகளுடன் கூடிய மரங்கள், மென்மையான தென்றலில் அசையத் தொடங்கி அந்த ஏகாதிபதியின் {துஷ்யந்தனின்} தலையில் தங்கள் மலர்களைப் பொழிந்தன.(9,10) வண்ணமயமான பூக்களை ஆடையாகக் கொண்டிருந்தவையும், இனிய குரலில் பாடும் பறவைகள் அமர்ந்திருந்த நுனிகளைக் கொண்டவையுமான மரங்கள், விண்ணை முட்டும் வண்ணம் உயர்ந்து, தேவலோகத்தையே தொட்டுக் கொண்டு நின்றன. தேனில் ஆசை கொண்ட வண்டுகள், மலர்களின் கனத்தால் தொங்கிக் கொண்டிருக்கும் அவற்றின் {மரங்களின்} கிளைகளைச் சுற்றிலும் இனிய குரலுடன் ரீங்காரமிட்டபடி இருந்தன. பெரும் சக்தியைக் கொண்ட அந்த மன்னன் {துஷ்யந்தன்}, மலர்க்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிகளின் நிழற்பந்தல்களால் மறைக்கப்பட்ட எண்ணற்ற இடங்களைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியால் {மந்திரத்தால் கட்டுண்டது போல} மயக்கத்துக்கு உள்ளானான்.(11-13)

சுற்றிலும் இருந்த அம்மரங்களின் மலர்நிறைந்த கிளைகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, பல வானவிற்களைப் போல பளபளப்புடனும், பல வண்ணங்களிலும் தெரிந்ததன் விளைவால் அக்கானகம் மிக அழகாக இருந்தது.(14) சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், குரங்குகள் {வானரங்கள்}, மகிழ்வுடன் குடித்த {மகிழ்ச்சியில் திளைத்த} கின்னரர் கூட்டங்களின் வசிப்பிடமாக அந்தக் கானகம் திகழ்ந்தது.(15) சுகமான, குளிர்ச்சியான, நறுமணமிக்கத் தென்றல், புதுமலர்களின் நறுமணத்தைப் பரப்பியபடியே, ஏதோ மரங்களுடன் தான் விளையாட வந்திருப்பதைப் போல அனைத்துத் திசைகளிலும் வீசிக் கொண்டிருந்தது.(16) இத்தகு அழகுகளைக் கொடையாகக் கொண்டதும், மயக்கம் தருவதுமான அந்தக் கானகத்தை மன்னன் {துஷ்யந்தன்} கண்டான்.

ஆற்றின் கழிமுகப் பகுதியில் அது {அந்தக் கானகம்} இருந்தது. ஒன்றாக நின்ற நெடிய மரக்கூட்டங்கள், இந்திரனைக் கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட அழகான கம்பங்கள் {இந்திரத்வஜங்கள்} இருப்பதைப் போல அந்த இடத்திற்கு ஒரு தோற்றத்தையளித்தன.(17) எப்போதும் மகிழ்ச்சிரமான பறவைகளின் வசிப்பிடமாக இருந்த அந்தக் காட்டில், துறவிகளின் இனிமையான, அழகான ஓய்வில்லம் {ஆசிரமம்} ஒன்று இருப்பதை அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்} கண்டான்.(18) அதை {அந்த ஆசிரமத்தைச்} சுற்றிப் பல மரங்களும் இருந்தன. அதனுள் வேள்வித்தீ எரிந்து கொண்டிருந்தது. அந்த ஒப்பற்ற ஓய்வில்லத்தை {ஆசிரமத்தை} மன்னன் {துஷ்யந்தன்} வழிபட்டான்.(19)

எண்ணற்ற யதிகள், வாலகில்யர்கள் மற்றும் பல முனிவர்களும் அதில் அமர்ந்திருப்பதை அவன் கண்டான். வேள்வி நெருப்புடன் கூடிய பல அறைகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. மரங்களிலிருந்து விழுந்த மலர்கள், அடர்த்தியான தரைவிரிப்பை ஏற்படுத்தியிருந்தன.(20) பெரும் தண்டுகள் கொண்ட உயரமான மரங்களால் அந்த இடமே பெரும் அழகுடன் இருந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, புனிதமானதும், தெளிந்த நீர் கொண்டதும், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் தன் மார்பில் கொண்டதுமான மாலினி என்ற ஆறு அங்கே ஓடிக் கொண்டிருந்தது.(21) தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக அதனிடம் வரும் தவசிகளின் இதயங்களை அந்த நீரோடை மகிழ்ச்சியால் வியாபிக்கச் செய்தது. அதன் கரைகளில் மான்வகையிலான மாசற்ற விலங்குகள் பலவற்றை மன்னன் {துஷ்யந்தன்} கண்டு, மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான்.(22)

எந்த எதிரியாலும் தடுக்க முடியாத தேரைக் கொண்ட அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, தேவலோகம் போலச் சுற்றிலும் அழகாக இருந்த அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(23) அது {அந்த ஆசிரமம்}, அருகில் வசிக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தாயைப் போல இருந்த அந்தப் புனித ஓடையின் கரையில் இருக்கிறது என்பதையும் மன்னன் {துஷ்யந்தன்} கண்டான்.(24) அதன் கரையில் சக்கரவாகமும், பால்வெண்மையான நுரைகளைக் கொண்ட அலைகளும் விளையாடிக் கொண்டிருந்தன. அங்குக் கின்னரர்களின் வசிப்பிடங்களும் இருந்தன. பெரும் எண்ணிக்கையிலான குரங்குகளும், கரடிகளும் கூட அங்கே மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன.(25) கல்வியிலும், தியானத்திலும் ஈடுபடும் புனிதமான தவசிகளும் அங்கே வாழ்ந்து வந்தனர். யானைகளையும், புலிகளையும், பாம்புகளையும் கூட அங்கே காண முடிந்தது.(26)

அந்த ஓடையின் {மாலினி ஆற்றின்} கரையில்தான், பெரும் தவத்தகுதிகளைக் கொண்டதும், எண்ணற்ற முனிவர்களுக்கு வசிப்பிடமுமான சிறப்புமிக்கக் கசியபரின்[1] சிறந்த ஆசிரமம் இருந்தது.(27) (கசியப குலத்தவரின் என்று இருந்திருக்க வேண்டும். எப்படி பிருகு முனிவரின் வம்சத்தவர்கள் பார்கவர் என்ற பொதுப்பெயரால் அறியப்பட்டார்களோ, பரத்வாஜரின் வம்சத்தவர், பரத வம்சத்தவர், குரு வம்சத்தவர் என அனைவரும் பொதுப் பெயரால் அறியப்பட்டார்களோ அப்படியே இங்கே கசியப என்பது கசியப வம்சத்தவர் என்ற பொதுப்பெயராகவே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.)அந்த ஆற்றையும், கங்கையின் நீரலைகள் மோதும் நர நாராயணர்களின் ஆசிரமத்தைப் போலவே, பல தீவுகள் பதிக்கப்பட்டு, பெரும் அழகுடன் கூடிய கரைகளைக் கொண்ட ஆற்றின் அலைகள் மோதும் ஆசிரமத்தையும் கண்ட மன்னன், அந்தப் புனிதமான வசிப்பிடத்திற்குள் நுழையத் தீர்மானித்தான்.(28,29) மேலும், அனைத்து நற்குணங்களையும் கொண்டவரும், தன் காந்தியின் காரணமாகக் காணக் கடினமானவரும், கசியப குலத்தைச் சேர்ந்தவரும், தவச்செல்வத்தைக் கொண்ட பெருமுனிவருமான சிறப்புமிக்கக் கண்வரைக் காண விரும்பிய அந்த மனிதர்களில் காளை {துஷ்யந்தன்}, பித்துப்பிடித்து அகவும் மயில்களின் குரல்களை எதிரொலித்ததும், பெரும் கந்தர்வனான சித்ரரதனின் நந்தவனங்களைப் போன்றதுமான அந்தக் காட்டை அணுகினான்.(30,31)

கொடிகள், குதிரைப்படை, காலாட்படை, யானைகள் ஆகியவற்றைக் கொண்ட தன் படையைக் கானகத்தின் நுழைவிலேயே நிறுத்திய அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, அவர்களிடம் பின்வருமாறு பேசினான், “இருளற்றவரும் {தமோ, ரஜோ குணங்களற்றவரும்}, கசியப குலத்தைச் சேர்ந்தவருமான பெரும் தவசியைக் {கண்வரைக்} காணச் செல்கிறேன். நான் திரும்பும் வரை இங்கேயே நிற்பீராக” என்றான்.(32,33) இந்திரனின் நந்தவனத்தைப் போல அந்தக் காட்டுக்குள் நுழைந்த மன்னன் {துஷ்யந்தன்}, விரைவில் தன் பசியையும், தாகத்தையும் மறந்தே போனான். மேலும் அவன் அளவில்லாத மகிழ்ச்சியையும் அடைந்தான்.(34) தவத்தகுதியின் அழிவற்ற திரளான அந்த முனிவரைக் காணும் விருப்பத்தில், தன் அரசக் குறியீடுகள் {ராஜ சின்னங்கள்} அனைத்தையும் களைந்த அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, தன் அமைச்சரோடும், தன் புரோகிதரோடும் அந்தச் சிறப்பான ஆசிரமத்திற்குள் நுழைந்தான். அந்த ஆசிரமம், பிரம்மலோகத்தைப் போல இருப்பதை மன்னன் {துஷ்யந்தன்} கண்டான்.(35,36)

இனிமையாக ரீங்காரமிட்ட வண்டுகளும், தங்கள் இனிய மெல்லிசைகளைப் பொழியும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகளும் இங்கே இருந்தன. குறிப்பிட்ட இடங்களில் அந்த மனிதர்களில் புலி {துஷ்யந்தன்}, சரியான ஸ்வர விதிகளின் படி, முதல்தரமான பிராமணர்களால் ரிக் {ரிக் வேதப்} பாடல்கள் {சுலோகங்கள்} பாடப்படுவதைக் கேட்டான்.(37) மேலும் வேறு இடங்கள், வேள்வி விதிகள், அங்கங்கள் மற்றும் யஜுர் வேதத்தின் பாடல்களை அறிந்த பிராமணர்களால் அருளப்பட்டிருந்தன. இன்னும் வேறு இடங்கள், நோன்பு நோற்கும் முனிவர்களால் பாடப்படுபவையும், ஒத்திசையும் வகையிலான சாமப் பாடல்களால் நிறைந்திருந்தன.(38) அந்த ஆசிரமத்தின் வேறு இடங்கள், அதர்வண வேதத்தைக் கற்றவர்களான பிராமணர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் வேறு இடங்களில், அதர்வண வேதத்தைக் கற்றவர்களும், சாமத்தின் {சாம வேதத்தின்} வேள்விப்பாடல்களைப் பாடவல்லவர்களுமான பிராமணர்கள், சரியான உச்சரிப்பு விதிகளின்படி சம்ஹிதைகளை உரைத்துக் கொண்டிருந்தனர். மேலும் வேறு இடங்களில், வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கும் அறிவியலை நன்கறிந்த பிராமணர்கள் பிற வகையிலான மந்திரங்களை உரைத்துக் கொண்டிருந்தனர். உண்மையில் இப்படிப்பட்ட புனிதமான ஒலிகளை எதிரொலித்த அந்த ஆசிரமமானது இரண்டாவது பிரம்மலோகத்தைப் போல இருந்தது.(39-41)

வேள்வி மேடைகளை அமைக்கும் திறன் வாய்ந்தவர்களும், வேள்விகளின் கிரம விதிகள், தர்க்கம் மற்றும் மனோ அறிவியலில் தேர்ச்சியடைந்தவர்களும், வேதங்களை முழுமையாக அறிந்தவர்களுமான பல பிராமணர்கள் அங்கே இருந்தனர்.(42) அனைத்து விதமான வெளிப்பாடுகளுக்குமான பொருள்களை நன்கு அறிந்தவர்களும், சிறப்புச் சடங்குகள் அனைத்தையும் அறிந்தவர்களும், மோக்ஷ தர்மத்தைப் பின்பற்றுபவர்களும், முன்மொழிவுகளை நிறுவுவதில் நன்கு திறன் பெற்றவர்களும், மிதமிஞ்சிய காரணங்களை நிராகரித்துச் சரியான முடிவுகளை மேற்கொள்பவர்களுமான பல பிராமணர்கள் அங்கே இருந்தனர்.(43)

மேலும், சொற்களின் அறிவியல் (இலக்கணம்), நயங்கள் {யாப்பிலக்கணம்: எதுகை, மோனை, சந்தம், அசைகள் போன்று ஓசைநயம் சேர்க்கும் இலக்கணங்கள்}, நிருக்தம் {சொற்களின் வேர் குறித்த அங்கம்} ஆகியவற்றில் அறிவுள்ளவர்களும்; மேலும் கணியம் {சோதிடம்} அறிந்தவர்களும், பருப்பொருளின் பண்புகள், வேள்விச் சடங்குகளின் கனிகள் {பலன்கள்} ஆகியவற்றைக் கற்றவர்களும், காரணங்கள் மற்றும் விளைவுகளைக் குறித்த அறிவுடையவர்களும், பறவைகள் மற்றும் குரங்குகளின் கூச்சல்களைப் புரிந்து கொள்ளவல்லவர்களும், பெரும் ஆய்வுக்கட்டுரைகளை நன்கு படித்தவர்களும், பல்வேறு அறிவியல்களில் திறன் வாய்ந்தவர்களும் அங்கே இருந்தனர்.(44,45) அந்த மன்னன் {துஷ்யந்தன்}, தான் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும்போதே அவர்களின் குரல்களைக் கேட்டான். மனிதர்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவல்ல மனிதக் குரல்களையும் அந்த ஓய்வில்லம் எதிரொலித்துக் கொண்டிருந்தது.(46)

அந்தப் பகை வீரர்களைக் கொல்பவன் {துஷ்யந்தன்}, தன்னைச் சுற்றிலும், ஜபங்கள் (தேவர்களின் பெயர்களைத் தொடர்ந்து உச்சரிப்பது}, ஹோமங்கள் (எரித்துக் காணிக்கையளிப்பது) ஆகியவற்றில் ஈடுபட்டவர்களும், கடுமையான நோன்புகளைக் கொண்டவர்களும், கற்றறிந்தவர்களுமான பிராமணர்களைக் கண்டான்.(47) அந்தப் பிராமணர்கள் அவனுக்கு மரியாதையுடன் வழங்கிய அழகிய தரைவிரிப்புகளைக் கண்ட மன்னன் {துஷ்யந்தன்} மிகவும் ஆச்சரியப்பட்டான்.(48) தேவர்களையும், பெரும் முனிவர்களையும் வழிபடும் அந்தப் பிராமணர்களின் சடங்குகளைக் கண்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {துஷ்யந்தன்} தான் பிரம்மலோகத்தில் இருப்பதாகவே நினைத்தான்.(49)

முனிவர்களின் தவ ஒழுக்கங்களால் பாதுகாக்கப்பட்டதும், புனிதமான ஓய்வில்லமாக இருக்கவேண்டிய தகுதிகள் அனைத்தையும் கொண்டதுமான கசியப வம்சத்தவருடைய அந்தப் புனிதமான ஆசிரமத்தை அந்த மன்னன் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகக் கண்டானோ அவ்வளவுக்கவ்வளவு இன்னும் அதிகமாகக் காணவே அவன் ஆசைப்பட்டான். உண்மையில் தனது இந்தச் சிறிய ஆய்வில் அவன் {துஷ்யந்தன்} மனநிறைவு கொள்ளவில்லை. வீரர்களைக் கொல்பவனான அவன் {துஷ்யந்தன்}, இறுதியாக, தவச் செல்வமும், மேன்மையான நோன்புகளும் கொண்ட முனிவர்கள் சுற்றிலும் வசித்திருந்ததும், மகிழ்ச்சியளிப்பதுமான கசியப வம்சத்தவரின் அந்தப் புனிதமான ஓய்வில்லத்திற்குள் தனது அமைச்சர் மற்றும் புரோகிதரோடு நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(50,51)

மேனகையின் ஆயத்தம்! | ஆதிபர்வம் – பகுதி 71(சம்பவ பர்வம் – 7)சகுந்தலையைக் கண்ட துஷ்யந்தன்; தன் பிறப்பு முதலிய வரலாற்றைச் சொன்ன சகுந்தலை; மேனகைக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்..

வைசம்பாயனர் சொன்னார், “அதன் பிறகு அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, குறைக்கப்பட்டிருந்த தன் பரிவாரத்தையும் ஆசிரமத்தின் வாசலில் விட்டான். தனியாகவே {ஆசிரமத்தினுள்ளே} நுழைந்த அவன், கடும் நோன்புகளைக் கொண்ட முனிவரைக் {கண்வரைக்} காணவில்லை.(1) முனிவரைக் காணாமலும், வசிப்பிடம் வெறுமையாக இருப்பதைக் கண்டும் அவன் {துஷ்யந்தன்}, “ஓ இங்கே யார் இருப்பது?” என்று உரக்கக்கேட்டான். {அந்தக் காட்டில்} அவனது குரல் எதிரொலித்தது.(2) அவனது குரலைக் கேட்டு, ஒரு துறவியின் மகளைப் போல உடுத்தியிருந்தவளும், ஸ்ரீயை (லட்சுமியைப்) போன்ற அழகுடையவளுமான ஒரு கன்னிகை {சகுந்தலை}, அந்த முனிவரின் {கண்வரின்} வசிப்பிடத்தில் இருந்து வெளியே வந்தாள்.(3) கருங்கண்களைக் கொண்ட அந்த அழகி, மன்னன் துஷ்யந்தனைக் கண்டதும், அவனுக்கு நல்வரவு கூறி மரியாதையுடன் வரவேற்றாள்.(4) அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} ஆசனம் கொடுத்து, கால்களைக் கழுவ நீரும், அர்க்கியமும்[1] கொடுத்த அவள் {சகுந்தலை}, அந்த மன்னனின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து விசாரித்தாள்.(5)(விருந்தினரை வரவேற்பதில் பதினாறு வரை உபச்சாரங்கள் உண்டு.
1.ஆசனம் கொடுத்தல், 2. கால்கழுவுதல், 3. கைகளைக் கழுவுதல், 4. அருந்த நீர் தருதல் 5. குளிப்பதற்கான வாசனைப் பொடிகளை பூசுதல் 6. குளிக்க வைத்தல் 7. உடைகள் தருதல் 8 ஆபரணங்கள் தருதல் 9. வாசனை திரவியங்கள் பூசுதல் 10. பூணூல் அளித்தல் 11. தூபங்கள் வாசனைப் புகைகளை பரவவிடல் 12. கவரி வீசுதல் 13.அவர்கள் மனம் குளிர உபசார வார்த்தைகள் பேசுதல் 14. உணவளித்தல் 15. தாம்பூலம் கொடுத்தல் 16. ஆரத்தி எடுத்தல்
1. ஆசனம், 2. பாத்யம் 3. அர்க்கியம் 4. ஆசமனம் 5. ஔஷபோகாராம் 6. ஸ்னானம் 7. வஸ்திரம் 8. ஆபரணம் 9 கந்தம் 10. உபவீதம் 11. தூபம் 12. வியாஜனம்  13. அர்ச்சனை 14. நைவேத்யம் 15. தாம்பூழம் 16. ஆரத்தி இவற்றில் கால்கழுவுதல் பாத்யம் எனப்படும். கைகளைக் கழுவுவது அர்க்கியம் எனப்படும்.)

இவ்வாறு மன்னனை வழிபட்டு, அவனது உடல்நிலை மற்றும் மனநிலையைக் கேட்ட அந்தக் கன்னிகை {சகுந்தலை}, “ஓ மன்னா, எது செய்யப்பட வேண்டும்? உமது உத்தரவுகளுக்காக நான் காத்திருக்கிறேன்” என்று மரியாதையாகக் கேட்டாள்.(6) அவளால் முறையாக வழிபடப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, களங்கமற்ற பண்புகளையும், இனிய பேச்சையும் கொண்ட அந்தக் கன்னிகையிடம்,(7) “பெரும் அருள் கொண்ட முனிவர் கண்வரை நான் வழிபட வந்திருக்கிறேன். ஓ இனிமையானவளே, அழகானவளே, சிறப்புமிக்க முனிவர் கண்வர் எங்கே சென்றிருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(8) அதற்குச் சகுந்தலை, “சிறப்புமிக்க என் தந்தை {கண்வர்}, பழங்கள் கொணர்ந்து வர ஆசிரமத்தைவிட்டு வெளியே சென்றார். ஒருகணம் பொறுத்தால், அவர் வருகையில் நீர் அவரைக் காணலாம்” என்று சொன்னாள்.(9)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “முனிவரைக் {கண்வ முனிவரைக்} காணாது, அவளால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, அந்தக் கன்னிகை மிகுந்த அழகும், கச்சிதமான உடலமைப்பும் கொண்டவளாக இருப்பதைக் கண்டான். அவள் இனிமையான புன்னகையுடன் இருப்பதையும் கண்டான். (10) அவள் {சகுந்தலை}, தனது களங்கமற்ற பண்புகள், தவத்துறவுகள், பணிவு ஆகியவற்றின் அழகால் அலங்கரிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தாள். அவள் {சகுந்தலை} இளமையின் தொடக்கத்தில் {கன்னிப் பருவத்தில்} இருப்பதையும் மன்னன் {துஷ்யந்தன்} கண்டான்.(11)

எனவே அவன் {துஷ்யந்தன்}, அவளிடம் {சகுந்தலையிடம்}, “ஓ அழகியே! நீ யார்? எவருடைய மகள் நீ? மேலும் நீ ஏன் இந்தக் காட்டுக்கு வந்தாய்? ஓ எழில் வாய்ந்தவளே! இப்படிப்பட்ட பண்புகளுடனும், இவ்வளவு அழகுடனும் உள்ள நீ எங்கிருந்து வந்தாய்?(12) ஓ ஆழகானவளே! முதல் பார்வையிலேயே நீ என் இதயத்தைத் திருடிவிட்டாய்! நான் உன்னைப்பற்றி முழுவதும் அறிய விரும்புகிறேன். எனவே, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(13) அந்த ஏகாதிபதியால் {துஷ்யந்தனால்} இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் கன்னிகை {சகுந்தலை} புன்னகையுடன் கூடிய இனிமையான வார்த்தைகளில்,(14) “ஓ துஷ்யந்தரே! நற்குணம், ஞானம், உயர்ந்த ஆன்மா ஆகியவற்றைக் கொண்ட சிறப்புமிக்க முனிவர் கண்வரின் மகள் நான் ” என்று மறுமொழி கூறினாள் {சகுந்தலை}.(15)

துஷ்யந்தன், “உலகம் முழுவதும் வழிபடப்படுபவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான முனிவர் {கண்வ முனிவர்}, உயிர்வித்தை மேலெழுப்பியவராவார் {காம இச்சைக்களைக் கட்டுப்படுத்தியவர் ஆவார்}. தர்மன் கூடத் தன் பாதையில் தவறலாம், ஆனால் கடும் நோன்புகளைக் கொண்ட ஒரு தவசி தவறவே முடியாது.(16) எனவே, ஓ அழகான நிறம் கொண்டவளே! அவரது மகளாக நீ எப்படிப் பிறந்திருக்க முடியும்? எனது இந்தப் பெரும் ஐயப்பாட்டைக் களைவதே உனக்குத் தகும்” என்றான் {துஷ்யந்தன்}.(17) சகுந்தலை, “ஓ மன்னா! {துஷ்யந்தரே} பழங்காலத்தில் எனக்கு என்ன நேர்ந்தது, முனிவரின் மகளாக நான் எப்படி ஆனேன் என்பதை நான் அறிந்த வரை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(18) முன்பொரு காலத்தில், ஒரு முனிவர் இங்கு வந்து எனது பிறப்பைக் குறித்துக் கேட்டார். ஓ மன்னா {துஷ்யந்தரே}, அவரிடம் அந்தச் சிறப்பு மிகுந்தவர் (கண்வர்) சொன்னது அனைத்தையும் என்னிடம் இருந்து இப்போது கேட்பீராக.(19)

முனிவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் எனது தந்தை கண்வர், “பழங்காலத்தில் கடுந்தவத்தில் விஷ்வாமித்திரர்[2]  ஈடுபட்டதால் தேவர்களின் தலைவனான இந்திரன் அச்சுறுத்தலுக்கு ஆளானான். அவரது தவங்களால் சொர்க்கத்தின் உயர்ந்த ஆசனத்தில் இருந்து தன்னைத் தள்ளிவிடக் கூடும் என்று நினைத்து அஞ்சிய இந்திரன், மேனகையை அழைத்து, அவளிடம்,(20,21) “ஓ மேனகையே! நீயே அப்சரஸ்களில் முதன்மையானவள், எனவே, ஓ இனிமையானவளே {மேனகையே}, எனக்கு ஒரு சேவையைச் செய்வாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக.(22) காந்தியில் சூரியனைப் போன்ற இந்தப் பெரும் தவசி விஷ்வாமித்திரர் தவங்களில் கடுமையானவற்றைச் செய்துவருகிறார். என் இதயம் அச்சத்தால் நடுங்குகிறது.(23) உண்மையில், ஓ கொடியிடை மேனகையே, இஃது உன் தொழிலே. ஆழ்ந்த தியானத்தில் மெய்மறந்த ஆன்மா கொண்டவரும், கடும் தவங்களில் ஈடுபடுபவருமான விஷ்வாமித்திரரால் என்னை என் ஆசனத்தில் {பதவியில்} இருந்து தள்ள முடியும் என்பதை நீ {எண்ணிப்} பார்க்க வேண்டும். நீ சென்று அவரை மயக்கி, அவர் தொடர்ந்து வரும் தவங்களைக் கலங்கடித்து என் நன்மையைச் சாதிப்பாயாக.(24,25) ஓ அழகானவளே! உன் அழகு, இளமை, ஏற்புடைமை, கலைகள், புன்னகை மற்றும் பேச்சால் அவரை மயக்கி, அவரது தவங்களில் இருந்து விலக்கி, அவரை வெல்வாயாக” என்றான் {இந்திரன்}.(26)

இவையாவற்றையும் கேட்ட மேனகை, “அந்தச் சிறப்புமிக்க விஷ்வாமித்திரர் பெரும் சக்தியைக் கொண்ட வலிமைமிக்கத் துறவியாவார். நீர் அறிந்தவாறே அவர் மிகவும் முன்கோபம் கொண்டவருமாவார்.(27) அந்த உயர் ஆன்மாவின் சக்தி, தவங்கள், கோபம் ஆகியவை உம்மையே கவலை கொள்ளச் செய்திருக்கின்றன. நானும் ஏன் கவலை கொள்ளலாகாது?(28) சிறப்புமிக்க வசிஷ்டரே கூடத் தன் பிள்ளைகளின் அகால மரணத்தைக் காணும் வேதனையை அடையச் செய்தவரும் அவரே. முதலில் க்ஷத்திரியராகப் பிறந்திருப்பினும், அடுத்து தன் தவத்துறவுகளின் அறத்தால் பிராமணரானவர் ஆவார்.(29) கடக்கக் கடினமானதும், கௌசிகி என்ற பெயரில் அறியப்படும் புனித ஓடையுமான ஓர் ஆழமான ஆற்றைத் தன் தூய்மைச் சடங்குகளுக்காக {புனித நீராடலுக்காக} உண்டாக்கியவர் அவரே.(30)

தந்தையின் சாபத்தால் வேடுவனாக வாழ்ந்த வந்த அரசமுனி மதங்கன் (திரிசங்கு), கொடும் காலத்தில் {பஞ்ச காலத்தில்} இருந்த விஷ்வாமித்திரரின் மனைவியை ஆதரித்தான்.(31) பஞ்சம் தீர்ந்ததும், திரும்பிக் கொண்டிருந்த விஷ்வாமித்திரர், தனது ஆசிரமம் எங்கிருந்ததோ அந்த ஓடையின் {நதியின்} பெயரை கௌசிகி என்பதிலிருந்து பாரை என்று மாற்றினார்.(32) மதங்கனின் சேவைகளுக்குப் பதிலாக {நன்றிக்கடனாக}, வேள்விகளில் பின்னவனின் {மதங்கனின்} புரோகிதராக ஆனார். {அந்த வேள்விகளில்} தேவர்களின் தலைவரே அச்சத்தால் சோமச்சாற்றை அருந்த சென்றார் {அச்சத்தால் நீரே சென்றீர்}.(33) சிரவணத்தை {திரவோணம் நட்சத்திரத்தை} முதலாகக் கொண்ட எண்ணற்ற நட்சத்திங்களுடன் கூடிய இரண்டாம் உலகத்தைக் கோபத்தால் உண்டாக்கியவர் விஷ்வாமித்திரரே. மேன்மையானவரின் {ஆசான் வசிஷ்டரின்} சாபத்தில் கெட்டிருந்த திரிசங்குவுக்குப் பாதுகாப்பளித்தவர் அவரே.(34) இத்தகு செயல்களைச் செய்த அவரை அணுக நான் அஞ்சுகிறேன். ஓ இந்திரரே, அவரது கோபத்தால் நான் எரிந்துவிடாதவாறு, என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(35)

தன் காந்தியால் மூவுலகங்களை எரிக்கவும், (தன் பாதத்தின்) ஒரு மிதியால் பூமியை நடுங்கவும் செய்ய இயன்றவர் அவர் {விஷ்வாமித்திரர்}. பெரும் மேருவை {மகாமேருவை} பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து, எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வீச இயன்றவர் அவர். ஒருக்கணத்தில் பூமியின் பத்து {திசைப்} புள்ளிகளையும் சுற்றி வர இயன்றவர் அவர்.(36) சுடர்மிக்க நெருப்பைப் போலத் தவ அறங்கள் நிறைந்தவரும், தன் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவருமான ஒருவரை என்னைப் போன்ற ஒரு பெண்ணால் எவ்வாறு தீண்டவும் முடியும்?(37) அவரது வாய் சுடர்மிக்க நெருப்பைப் போன்றது; அவரது கண்களின் கருவிழிகள் சூரியனையும், சந்திரனையும் போன்றன; அவரது நாக்கு யமனையே போன்றது. ஓ தேவர்களின் தலைவரே! {இந்திரரே} என்னைப் போன்ற ஒரு பெண்ணால், எவ்வாறு அவரைத் தீண்டவும் முடியும்?(38) யமன், சோமன், பெரும் முனிவர்கள், சத்யஸ்யர்கள், விஸ்வர்கள், வாஹில்யர்கள் ஆகியோரும் அவரது ஆற்றலை நினைத்தால் அஞ்சுவர். என்னைப் போன்ற ஒரு பெண்ணால் எவ்வாறு அஞ்சாமல் அவரைக் காணவும் முடியும்? (39)

எனினும், ஓ தேவர்களின் மன்னா {இந்திரரே}, உம்மால் ஆணையிடப்படும் நான் எவ்வாறேனும் அம்முனிவரை அணுக வேண்டும். ஆனால், ஓ தேவர்களின் தலைவரே {இந்திரரே}, உம்மால் பாதுகாக்கப்படும் நான் அந்த முனிவரிடம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஏதாவது திட்டத்தைத் தீட்டுவீராக.(40) அந்த முனிவரின் {விஷ்வாமித்திரரின்} முன்னிலையில் நான் விளையாடத் தொடங்குகையில் மாருதன் (காற்று தேவன் {வாயு}) அங்கு வந்து, என் ஆடைகளைக் களவாடுவது நன்று என்றும், உமது ஆணையின் பேரில் மன்மதனும் (காமதேவன்} எனக்கு உதவுவது நன்று என்றும் நான் நினைக்கிறேன்.(41) அந்தச் சந்தர்ப்பத்தில் மாருதன், காட்டில் இருந்து நறுமணத்தை அங்கே கொண்டு வந்து அம்முனிவரை {விஷ்வாமித்திரரை} மயக்கட்டும்” என்று மறுமொழி கூறினாள் {மேனகை}. இதைச் சொல்லியும், தான் கேட்ட அனைத்தும் முறையாகக் கிடைத்ததைக் கண்டும் மேனகை, அந்தப் பெரும் கௌசிகரின் ஓய்வில்லத்திற்குச் சென்றாள்” {என்றார் கண்வர்}.(42)(கௌசிகர் {விஷ்வாமித்திரர்}, மன்னன் குசநாபனின் மகனாவார். வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள விஜயாபதி (Vijayapathi) என்னும் ஊரில் விஷ்வாமித்திரருக்குக் கோயில் உள்ளது. இவ்வூரின் அண்மையிலுள்ள ஊர்கள்: இடிந்தகரை, கூடன்குளம் ஆகியனவாகும். )

விஷ்வாமித்திரரும் மேனகையும் | ஆதிபர்வம் – பகுதி 72(சம்பவ பர்வம் – 8)விஷ்வாமித்ரரை மயக்கிய மேனகை; மேனகை பெற்றெடுத்த மகள்; சகுந்தலையைக் கண்ட கண்வர்; சகுந்தலையின் பெயர்க்காரணம்; துஷ்யந்தனிடம் தன் கதையைச் சொல்லி முடித்த சகுந்தலை.

கண்வர் தொடர்ந்தார், “அவளால் {மேனகையால்} இப்படிச் சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அனைத்து இடங்களையும் அணுக வல்லவனிடம் (காற்று தேவன் வாயுவிடம்), முனிவரின் {விஷ்வாமித்திரரின்} முன் மேனகை இருக்கும் நேரத்தில், அவளோடு இருக்குமாறு ஆணையிட்டான்.(1) பிறகு, மருட்சியுடையவளும், அழகானவளுமான மேனகை, அந்த ஓய்வில்லத்தில் நுழைந்து, தன் தவங்களால் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்தவரான விஷ்வாமித்திரர் இன்னும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அங்கே கண்டாள்.(2) முனிவரை {விஷ்வாமித்திரரை} வணங்கிய அவள் {மேனகை}, அவர் முன்பாக விளையாடத் தொடங்கினாள். சரியாக அதே நேரத்தில் மாருதன் {வாயு தேவன்}, சந்திரனைப் போன்ற வெண்மையுடன் கூடிய அவளது {மேனகையினது} ஆடைகளைக் களவாடிச் சென்றான்.(3) அதன்பேரில் பெரும் நாணத்தில் நிறைந்த அவள் {மேனகை}, ஏதோ தான் மாருதனிடம் {வாயு தேவனிடம்} மிகவும் எரிச்சல் அடைந்ததைப் போலவும் தன் ஆடையைப் பிடிக்க ஓடினாள்.(4)

அவள், நெருப்பைப் போன்ற சக்தி கொண்ட விஷ்வாமித்திரரின் கண்களுக்கு முன்பாகவே இவையாவற்றையும் செய்தாள். விஷ்வாமித்திரரும் அவளை அதே மனோபாவத்துடனேயே கண்டார்.(5) ஆடைகள் விலகிய அவள் {மேனகை} களங்கமற்ற {நிறைவான} அழகு கொண்டவளாக இருப்பதையும் அவர் {விஷ்வாமித்திரர்} கண்டார். அந்த முனிவர்களில் சிறந்தவர் {விஷ்வாமித்திரர்}, மேனியில் வயதின் தடயம் ஏதும் இல்லாமால் மிக அழகானவளாக அவள் {மேனகை} இருப்பதைக் கண்டார்.(6) அவளது அழகையும், வித்தகத் தன்மையையும் கண்ட அந்த முனிவர்களில் காளை {விஷ்வாமித்திரர்}, காமங்கொண்டு, தான் அவளது தோழமையை விரும்புவதாகக் குறிப்பால் உணர்த்தினார்.(7) அதன்படியே அவர் அழைக்கவும் செய்தார், களங்கமில்லா அழகுடைய அவளும் அந்த அழைப்புக்கான ஏற்பை வெளிப்படுத்தினாள். பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர் துணையாக நீண்ட காலத்தை அங்கே கழித்தனர் [1].(கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, “எப்போதும் தவத்திலிருந்த ரிஷியானவர் இவ்வாறு காமக் குரோதங்களை அடக்காதவராகி அநேக ஆயிர வருஷங்கள் கடந்து போனதை நினைக்காமற்போனார். அந்த ரிஷி வெகுகாலமாகச் சம்பாதித்த தவத்துக்கு அழிவைச் செய்து கொண்டார். தவமிழந்ததனாலேயும் அம்முனிவர் மோகத்தை அடைந்தார். கோபமே இயல்பாகவுடையவரும், காய் கிழங்குகளைப் புசிப்பவருமாகிய முனிவர் பெண் மயக்கத்தில் அகப்பட்டுக் கொண்டு காலலம்புவதனால் ஜலத்தில் சப்தத்தைச் செய்துவிட்டு நதியின் உள் திட்டிலுள்ள ஆசிரமத்திற்குச் சென்றார். தானும் விட்டு நீங்குவதற்கு விரும்பின மேனகை ஜலத்தின் சப்தத்தைக் கேட்டாள். “தபஸினால் ஜ்வலித்த மகிமையுள்ள இவர் போவதும் வருவதும் ஆகாசமார்க்கத்தாலேதான். இப்போது இவர் தவம் குறைந்து போனதினுடைய அடையாளத்தை நான் அறிகிறேன். இப்போது நாம் போவது சரியன்று” என்று சொல்லி, மேனகை ருதுஸ்நானஞ்செய்து, காமத்தின் விருப்பத்தில் அகப்பட்டவராகிய அம்முனிவரின் அருகிற்சென்றாள்” என்றிருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்ட கதை இல்லை.)

மிக நீண்ட காலத்தை ஏதோ அஃது ஒரு நாளை போல எண்ணி, தாங்கள் விரும்பியவாறெல்லாம் ஒருவரோடொருவர் விளையாடியதால், அந்த முனிவர், மேனகையிடம் சகுந்தலை என்ற பெயரில் ஒரு மகளைப் பெற்றார். (8,9) மேனகையும் (தான் கருத்தரித்ததும்) அழகிய இமய மலைகளின் பள்ளத்தாக்கில் ஓடும் மாலினி ஆற்றின் கரைக்குச் சென்றாள். அங்கே அவள் அந்த மகளை ஈன்றெடுத்தாள்[2]. (கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, “தெய்வப் பெண்ணுக்கு ஒப்பானவளும், எல்லா ஆபரணங்களும் அணிந்து கொண்டு அழகிய சயனத்தில் படுத்திருப்பவளுமான அந்தப் பெணைப் பார்த்து, மேனகை, “பெண்ணரசியே! நீ உக்கிரமான தவமுள்ள மஹரிஷியின் வீரியமாக இருக்கிறாய். {அதாவது மானிடப் பெண்ணை ஸ்வர்க்கத்தில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது}. ஆதலால் தேவகாரியத்திற்காக வந்த நான் ஸ்வர்க்கம் செல்வன்” என்று சொன்னாள்” என்று இருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்ட கதை இல்லை.)அவள், புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தையை அந்த ஆற்றங்கரையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்[3].(10) (மன்மதநாததத்தரின் பதிப்பிலும், கும்பகோணம் பதிப்பிலும் இங்கே இதன் பிறகு, “தான் வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்ததும் அவள் விரைவில் இந்திரனிடம் திரும்பினாள்” என்றிருக்கிறது. இவ்வரி கங்குலியில் இல்லை. இது தவறுதலாகவே விடுபட்டிருக்க வேண்டும்.)மனிதர்களற்றதும், சிங்கங்களும், புலிகளும் நிறைந்ததுமான அந்தக் காட்டில் கிடக்கும் புதிதாய்ப் பிறந்த பச்சிளங்குழந்தையைக் கண்ட எண்ணற்ற கழுகுகள் தீங்கிலிருந்து அதை {அந்தக் குழந்தையைப்} பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் அமர்ந்தன. எந்த ராட்சசனோ, ஊனுண்ணும் விலங்கோ அதன் உயிரை எடுக்கவில்லை.(11,12) அந்தக் கழுகுகள் மேனகையின் மகளைப் {சகுந்தலையைப்} பாதுகாத்தன. நான் அங்கே என் தூய்மையாகும் சடங்கை {நீராடலைச்} செய்யச் சென்று, கழுகுகள் சூழக் காட்டில் தனியாகக் கிடக்கும் அந்தப் பச்சிளம் குழந்தையைக் கண்டேன்[4]. அவளை {சகுந்தலையை} இங்கே கொண்டு வந்து, எனது மகளாக்கிக் கொண்டேன்.(13,14)(கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, “அழகாகக் கூவுகின்ற பக்ஷியெல்லாம் என்னைப் பார்த்துக் கிட்ட வந்து என் கால்களில் விழுந்து, “பிராமணரே, இந்த விசுமாத்திரருடைய பெண்ணை அடைக்கலம் போல் வைத்துக் காப்பாற்றக் கடவீர். உமது சினேகிதர் காமக் குரோதங்களை அடக்காமல் கௌசிகி நதிக்குச் சென்றார். ஆதலால் தயையோடு அவருடைய பெண்ணை வளர்க்கக்கடவீர்” என்று இனிமையாகவும் தெளிவில்லாமலும் சொல்லின. பிராணிகளின் பாஷைகளையெல்லாம் தெரிந்தவனும், எல்லாப் பிராணிகளிடத்தும் தயையுள்ளவனுமாகிய நான் உடனே அவளைக் கொண்டு வந்து பெண்ணாக வைத்துக் கொண்டேன்” என்று இருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்ட கதை இல்லை.)

உண்மையில், உடலைப் படைப்பவன், உயிரைக் காப்பவன், உணவு கொடுப்பவன் ஆகிய மூவரும், சாத்திரங்களின் படி தரத்தில் தந்தைளாகின்றனர்.(15) காட்டில் தனியாக அவள் சகுந்தங்களால் {பறவைகளால்} சூழப்பட்டிருந்த காரணத்தால், அவள் சகுந்தலை[5] (பறவைகளால் காக்கப்பட்டவள்} என என்னால் பெயரிடப்பட்டாள்.(16)(சகுந்த – பறவைகளினால், லா – கிருஹிக்கப்பட்டவள் என்று கும்பகோணம் பதிப்பில் விளக்கம் இருக்கிறது.) ஓ பிராமணரே, இப்படியே சகுந்தலை எனது மகளானாள் என்பதை அறிவீராக. அந்தக் களங்கமற்ற சகுந்தலையும் என்னைத் தந்தையாகவே கருதுகிறாள்” என்றார் {கண்வ முனிவர்}.(17)

அந்த முனிவரால் கேட்கப்பட்டதும், எனது தந்தை {கண்வ முனிவர்} அவரிடம் இதையே சொன்னார். ஓ மனிதர்களின் மன்னா {துஷ்யந்தரா}, இப்படியே நான் கண்வரின் மகளாவேன் என்பதை அறிந்து கொள்வீராக.(18) எனது உண்மை தந்தையை {விஷ்வாமித்திரரை} அறியாத நான் கண்வரையே எனது தந்தையாகக் கருதுகிறேன். இப்படியே, ஓ மன்னா {துஷ்யந்தரே}, எனது பிறப்பைக் குறித்து நான் கேள்விப்பட்டது அனைத்தையும் உமக்குச் சொல்லிவிட்டேன்” என்றாள் {சகுந்தலை}.(19)

சகுந்தலையை மயக்கிய துஷ்யந்தன்! | ஆதிபர்வம் – பகுதி 73-(சம்பவ பர்வம் – 9)எட்டு வகைத் திருமணங்கள் குறித்துச் சொன்ன துஷ்யந்தன்; துஷ்யந்தனிடம் வரம் கேட்ட சகுந்தலை; துஷ்யந்தன் சகுந்தலை திருமணம்; கண்வரிடம் நடந்ததைச் சொன்ன சகுந்தலை; சகுந்தலையைப் பாதுகாத்த கண்வர்..

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவை அனைத்தையும் கேட்ட மன்னன் துஷ்யந்தன், “ஓ இளவரசியே! {சகுந்தலையே}, நீ சொன்னதனைத்தையும் நன்றாகவே சொன்னாய். ஓ அழகானவளே! நீ என் மனைவியாவாயாக. நான் உனக்காக என்ன செய்யட்டும்?(1) தங்கமாலை, ஆடைகள், தங்கத்தாலான காதணிகள், பல நாடுகளைச் சேர்ந்த அழகான வெண்முத்துக்கள், தங்க நாணயங்கள், சிறந்தத் தரைவிரிப்புகள் ஆகியவற்றை இன்றே உனக்குப் பரிசளிக்கிறேன். ஓ அழகானவளே! {சகுந்தலையே}, எனது முழு அரசாங்கமும் இன்று உனதாகட்டும். என்னிடம் வா, ஓ மருட்சியுடையவளே! அழகானவளே! கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள்வாயாக. ஓ {வாழைமரம் போன்று} வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே! திருமண முறைகள் அனைத்திலும் காந்தர்வ முறையே முதன்மையானதாக மதிக்கப்படுகிறது” என்றான் {துஷ்யந்தன்}.(2-4)

இதைக்கேட்ட சகுந்தலை, “ஓ மன்னா! {துஷ்யந்தரே}, எனது தந்தை {கண்வ முனிவர்} கனிகள் கொண்டு வருவதற்காக இந்த ஆசிரமத்திலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஒரு கணம் பொறுப்பீராக; அவரே என்னை உமக்கு அளிப்பார்” என்றாள் {சகுந்தலை}[1].(5)(கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: “ராஜாவே! எனதுபிதா பழங்கள் கொண்டு வருவதற்காக இந்த ஆஸ்ரமத்தைவிட்டுப் போயிருக்கிறார். சற்று நேரம் இரும். அவர் என்னை உமக்குக் கொடுப்பார். எனக்குப் பிதாவே அதிகாரி. அவர் எனக்கு முக்கியமான தேவதை. பிதா என்னை யாருக்குக் கொடுப்பாரோ அவரே எனக்குப் பர்த்தாவாவர். இளமையில் பிதா காப்பாற்றுகிறார். பருவகாலத்தில் கொழுநன் காப்பாற்றுகிறான். முதிர்ந்த பிராயத்தில் புத்திரன் காப்பாற்றுகிறான். ஸ்திரீ ஸ்வதந்திரமாய் இருக்கத்தக்கவள் அல்லள். ராஜஸ்ரேஷ்டரே! தர்மிஷ்டரே! சிறந்த தவமுள்ள என் பிதாவை மதிக்காமல் அதர்மமாக வரனை நான் எப்படி அடையலாம்?” என்று சொன்னாள். துஷ்யந்தன், “சுந்தரியே! தவமே உருக்கொண்டவரும், சாந்தியை இயல்பாக உடையவருமான கண்ணுவரைப் பற்றி நீ இவ்வாறு சொல்வது தகாது; தகாது” என்று சொல்ல, கேட்ட சகுந்தலை, “பிராம்மணர்களுக்குக் கோபமே ஆயுதம்; பிராமணர்கள் கையில் ஆயுதம் பிடிப்பவரல்லர்; இந்திரன் வஜ்ராயுதத்தினால் அஸுரர்களைக் கொல்வது போல் பிராமணர்கள் கோபத்தினால் சத்துருக்களைக் கொல்லுகின்றனர். அக்னி ஜ்வாலைகளினால் தகிக்கிறது; சூரியன் கிரகணங்களினால் தகிக்கிறான்; ராஜா தண்டனையினால் தகிக்கிறான்; பிராமணன் கோபத்தினாலேயே தகிக்கிறான். கோபம் மூட்டப்பட்ட பிராமணன், கோபத்தினாலேயே, இந்திரன் அஸுரர்களைக் கொன்றது போலவே கொல்லுகிறான்” என்று சொன்னாள். அதற்குத் துஷ்யந்தன், “பிரியமானவளே! அந்தக் கண்ணுவ மஹரிஷியை நான் அறிவேன். அவருக்குக் கோபமில்லை. அழகான நிதம்பமுள்ளவளே! சிலாக்கியமானவளே! நீ என்னை அடைவதை நான் விரும்புகிறேன்” – மீதம் கங்குலியில் உள்ளதைப் போலவே பின்வருமாறு இருக்கிறது)

துஷ்யந்தன், “ஓ அழகானவளே! களங்கமற்றவளே! நீ எனது வாழ்க்கைத் துணையாக நான் விரும்புகிறேன். நான் உனக்காகவே வாழ்கிறேன் என்றும், என் இதயம் உன்னிடமே இருக்கிறது என்றும்  அறிந்து கொள்வாயாக.(6) ஒருவன் நிச்சயமாகத் தனக்குத் தானே நண்பனாகவும், தன்னைச் சார்ந்தவனாகவுமே இருப்பான்.  எனவே, முறைப்படி, நிச்சயமாக நீயே உன்னை எனக்கு அளிக்கலாம்.(7) மொத்தம் எட்டு வகைத் திருமணங்கள் இருக்கின்றன. அவை, பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்யம், ஆசுரம்,(8) காந்தர்வம், இராட்சசம் மற்றும் பைசாசம் ஆகிய வகைகளாகும்[2]. (அலங்கரிக்கப்பட்ட கன்னிகையைத் தானமளிப்பது பிரம்மவிவாகம்; வேள்வியின் முடிவில் ரித்விக்குகளுக்குத் தக்ஷிணையாகக் கன்னிகையைத் தானமளிப்பது தைவவிவாகம்; இணையர் இருவரும் சேர்ந்து அறம் வளர்க்கட்டும் என்று மனத்தினால் எண்ணி தானம் செய்வது பிரஜாபத்யம்; மணமகனிடமிருந்து இரண்டு பசுக்களைப் பெற்றுக் கொண்டு கன்னிகையைத் தானமளிப்பது ஆர்ஷவிவாகம்; பெருந்திரவியங்களை வாங்கிக் கொண்டு கன்னிக்கையைத் தானமளிப்பது ஆசுரவிவாகம்; மணமகனும், மணமகளும் மனமொப்பிக் கலந்து கொள்வது காந்தர்வவிவாகம்; தூக்கத்திலும், மதுமயக்கத்திலும் கன்னிகையைக் கடத்திச் செல்வது பைசாசவிவாகம்; போரிட்டுப் பலவந்தமாகக் கடத்திச் செல்வது ராக்ஷஸவிவாகம்.)தான்தோன்றியின் {பிரம்மனின்} மகனான மனு, இவற்றின் தகுதிகள் அனைத்தையும், அதனதன் ஒழுங்குக்கேற்ப சொல்லியிருக்கிறார்.(9) ஓ களங்கமற்றவளே! {சகுந்தலையே}, பிராமணர்களுக்கு முதல் நான்கு வகையும், க்ஷத்திரியர்களுக்கு முதல் ஆறு வகையும் பொருந்துபவையாகும் என்பதை அறிவாயாக.(10) மன்னர்களைப் பொறுத்தவரை, இராட்சச வகையும் கூட அனுமதிக்கப்படுகிறது. வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் ஆசுர வகை அனுமதிக்கப்படுகிறது. முதல் ஐந்தில் மூன்று முறையானவை, மீதம் இரண்டும் முறையற்றவை.(11) பைசாச மற்றும் ஆசுர வகைகள் (எந்த மனிதனாலும்) நடைமுறையில் செய்யப்படவே கூடாது.[3] (அர்த்தசாஸ்திரம் போன்ற அரசநீதி நூல்களில் இதேத் திருமண வகைகள் உண்டு. பெற்றவரின் சம்மதம் பெற்ற பிரம்மம், தைவம், பிரஜாபத்யம் ஆகியவை ஒப்புக் கொள்ளப்பட்ட விவாகங்கள் ஆர்ஷம், ஆசூரம் ஆகியவற்றை அரசுக்குத் தண்டம் அளித்து ஏற்கும் வகை விவாகங்களாக மாற்றிக் கொள்ளலாம். காந்தர்வம் பெற்றோரின் ஒப்புதல் பெறப்பட்டு முறைப்படுத்தப்படும். பைசாஸம், ராட்சஸம் ஆகிய திருமணங்கள் செய்தவர் தண்டிக்கப்பட்டுவர். தண்டனைக்குப்பின் மணப்பெண் மற்றும் அவளைப் பெற்றோரின் சம்மதம் இருப்பின் அத்திருமணம் முறைப்படுத்தப்படும்.)அறத்தின் அங்கங்களான இவற்றின்படியே ஒவ்வொருவனும் நடக்க வேண்டும்.(12) காந்தர்வ மற்றும் இராட்சச வகைகள் க்ஷத்திரியர்களுக்கு ஏற்ற நடைமுறைகளாகும். நீ இதனால் சிறு அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இறுதியாக சொன்ன இருவகையில் எந்த ஒரு வகையும், அல்லது இருவகையும் கலந்து நமது திருமணம் நடைபெறலாம்.(13) ஓ அழகான நிறம் கொண்டவளே {சகுந்தலையே}, நான் ஆசையால் நிறைந்திருக்கிறேன், நீயும் அவ்வாறே இருப்பதால், காந்தர்வ முறைப்படி நீ எனது மனைவியாகலாம்” என்றான் {துஷ்யந்தன்}.(14)

இதையெல்லாம் கேட்ட சகுந்தலை பதிலளித்தாள், “இதுதான் அறம் அங்கீகரித்தப் பாதை என்றால், நிச்சயமாக நானே என்னை அளிக்கலாம் என்றால், ஓ பௌரவ குலத்தில் முதன்மையானவரே![4] (இங்கே இது புரூரவஸைக் குறிப்பிட்டுச் சொல்வதாகும், யயாதியின் மகன் பூரூவை அல்ல)எனது நிபந்தனைகளைக் கேட்பீராக.(14) நான் கேட்பனவற்றை எனக்குக் கொடுப்பதாக உண்மையாக எனக்கு உறுதிகூறுவீராக. என் மூலமாகப் பிறக்கும் மகனே உமது வாரிசாக வேண்டும். ஓ மன்னா! {துஷ்யந்தரே}, இதுவே எனது நிலையான மனத்துணிவாகும் {தீர்மானமாகும்}. ஓ துஷ்யந்தரே! இந்த வரத்தை நீர் எனக்களிப்பதாக இருந்தால், நமது கூடுகை {திருமணம்} நடக்கலாம்” என்றாள் {சகுந்தலை}.(15,16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, சிந்திக்க எந்த நேரமும் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக, “அப்படியே ஆகட்டும். ஓ ஏற்கத்தக்க புன்னகை கொண்டவளே! {சகுந்தலையே}, நான் உன்னை எனது தலைநகருக்கே அழைத்துச் செல்வேன்.(17) நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஓ அழகானவளே! {சகுந்தலையே}, நீ இஃது எல்லாவற்றுக்கும் தகுந்தவளே” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு, அந்த மன்னர்களில் முதன்மையானவன் {துஷ்யந்தன்}, நயத்தகு நடைகொண்ட அழகிய சகுந்தலையை மணந்து, ஒரு கணவனாக இருந்து அவளை {ஒரு மனைவியாக} அறிந்துக் கொண்டான்[5]. (கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, “என்று அந்த ராஜரிஷி அழகாக நடக்கின்ற அவளைப் பார்த்து இவ்வாறு சொல்லி, *[புரோஹிதரை அழைத்து ஸமயோசிதமான சொல்லைச் சொன்னான். “ராஜகுமாரியான சகுந்தலை சொன்னதை வியர்த்தமாக்குவதற்கு நான் கருதவில்லை. சிறந்த கீர்த்தியுள்ள எனது புத்ரன் ஸம்ஸ்காரமில்லாதவனாக ஆகத்தகாது. ஆதலால், சாஸ்திர விதிப்படி விவாஹத்தை நடத்தும்; காலவிளம்பம் செய்ய வேண்டாம்” என்றான். ராஜாவினால் இவ்வாறு சொல்லப்பட்ட பிராமணர், “அரசர்க்கரசே! நியாயம்” என்று சொல்லிச் சிறந்த நியமமுள்ளவராகச் சாஸ்திரப்படி விவாஹத்தைச் செய்தார். அந்தப் பிராமணஸ்ரேஷ்டர் சொற்படி மங்களகங்கணம் கட்டிக் கொண்டு சாஸ்திரப்படி சகுந்தலையைப் பாணிக்கிரஹணஞ் செய்து கொண்டு] அவளுடன் கூட இருந்தான். அவன் அவளை ஸமாதானப்படுத்திப் பிரயாணப்படும்போது, “உனக்காக சதுரங்கஸேனையையும் அனுப்புவேன்” என்று பலமுறையும் சொன்னான்” என்றும். “*[ ] இவற்றுக்குட்பட்டவை உத்தரதேச பாடத்தில் இல்லை” என்றும் இருக்கிறது.)அவன் {துஷ்யந்தன்},(18-20) அவளிடம் {சகுந்தலையிடம்} “உனது பாதுகாப்புக்காக எனது நான்கு வகைப் படைகளை அனுப்பி வைக்கிறேன். ஓ இனிமையான புன்னகை கொண்டவளே, நிச்சயமாக நான் உன்னை எனது தலைநகருக்கு அழைத்துச் செல்கிறேன்” என்று மீண்டும் மீண்டும் உறுதிகூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ ஜனமேஜயா, இப்படி அவளுக்கு உறுதி கூறிய மன்னன் {துஷ்யந்தன்} அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் {துஷ்யந்தன்} வந்தவழியே தனது இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, காசியபரை {கசியப குலத்தில் தோன்றிய கண்வரைக்} குறித்து நினைக்கத் தொடங்கினான்.(22) அவன் {துஷ்யந்தன்}, ‘ சிறப்புமிக்கத் துறவி {கண்வர்}, அனைத்தையும் அறிந்த பிறகு, என்ன சொல்வார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். இதை நினைத்துக் கொண்டே அவன், தனது தலைநகருக்குள் நுழைந்தான்[6].(23)(கும்பகோணம் பதிப்பில், துஷ்யந்தன், “அழகிய புன்னகையுள்ளவளே! மூன்று வேதங்களையும் அறிந்த பெரியோர்களோடும், அனேக ராஜஸேவகர்களோடும், அனேகமாயிரம் பல்லக்குகளோடும்கூட என் பந்துக்கள் வருவார்கள். ஊமையர்களும், வேடர்களும், கூனர்களும், குள்ளர்களும், அலிகளும், புராணம் சொல்லுகின்றவர்களும் ஸ்துதிபாடுகிறவர்களும், சேர்ந்த சேனை சங்கதுந்துபி வாத்தியங்களின் முழக்கங்களுடன் வனத்திற்கு வரப்போகிறது. அவ்வாறாக உன்னை என் நகரத்திற்கு வருவிப்பேன். அவ்வாறு மங்களங்களான எல்லா ஆசாரங்களாலும் கௌரவம் செய்யாமல் சாதாரணமாக உன்னை என் அரண்மனைக்கு அழைக்க மாட்டேன். அழகிய புருவமுள்ளவளே! உனக்கு ஸத்தியஞ்செய்கிறேன்” என்று சொன்னான். அழகாக நடக்கின்ற அந்த சகுந்தலைக்கு அந்த ராஜரிஷி இவ்வாறு சொல்லி, அவளை இரண்டு கைகளினாலும் தழுவிக் கொண்டு, மலர்ந்த முகத்துடன் பார்த்து, தான் சொன்னதை அவள் ஒப்புக் கொண்டதன் பின், மறுபடியும் அவளைத் தழுவிக் கொண்டான். அழகிய முகமுள்ள அந்தச் சகுந்தலை ராஜாவின் பாதங்களில் விழுந்தாள். ஜனமேஜய ராஜரே! தன் மனைவியான அந்தச் சகுந்தலையை மறுபதியும் தழுவியெடுத்து, “ராஜகுமாரியே! நீ விசனப்படாதே; நான் அழைத்துக் கொண்டு போவேன்; என் தர்மத்தின் மேல் ஆணை” என்று பலமுறை அவளுக்கு உறுதிமொழி சொல்லி, அவ்வரசன் கண்ணுவரைப் பற்றி மனத்தில் சிந்தித்துக் கொண்டே சென்றான். “சிறந்த தவமுள்ளவரும் கசியபகுலத்தவருமான பகவான் கண்ணுவர் கேட்டு என்ன செய்வோரோ? அந்தப் பிராமணஸ்ரேஷ்டரைத் தயை செய்யுமென்று மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாமல் நான் வந்துவிட்டேனே” என்று நினைத்துக் கொண்டே தனது நகரத்தில் பிரவேசித்தான்” என்றிருக்கிறது.)

மன்னன் {துஷ்யந்தன்} சென்ற கணத்தில், கண்வர் தமது குடிலுக்கு வந்தார். ஆனால் சகுந்தலை, வெட்கப்பட்டுக்கொண்டு தனது தந்தையை {கண்வ முனிவரை} வரவேற்கச் செல்லவில்லை.(24) இருந்தாலும், அந்தப் பெரும் துறவி, தனது ஆன்ம ஞானத்தால் அனைத்தையும் அறிந்தார். ஞானக்கண் கொண்டு அனைத்தையும் கண்ட அந்தச் சிறப்புவாய்ந்தவர் {கண்வர்}, மகிழ்ந்து, அவளிடம் {சகுந்தலையிடம்},(25) “இனிமையானவளே, எனக்காகக் காத்திராமல் ரகசியமாக இன்று நீ என்ன செய்தாயோ, அதனால் உனது நல்லொழுக்கத்துக்கு இழுக்கில்லை.(26) புலன் ஆசை கொண்ட ஆணும், விருப்பமுள்ள பெண்ணும் எந்த மந்திரமும் இல்லாமல் காந்தர்வ முறைப்படி சேர்வது க்ஷத்திரியர்களுக்குச் சிறந்த நடைமுறையே.(27) மனிதர்களில் சிறந்தவனான அந்த துஷ்யந்தன், உயர் ஆன்மா கொண்டவனும் அறம் சார்ந்தவனுமாவான். ஓ சகுந்தலா, நீ அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டாய்.(28) உனக்குப் பிறக்கப் போகும் மகன் இந்த உலகில் பெரும் பலம் வாய்ந்தவனாகவும், சிறப்பு வாய்ந்தவனாகவும் இருப்பான். அவன் கடல் மீதும் ஆதிக்கம் செலுத்துவான்.(29) அந்தச் சிறப்பு வாய்ந்த மன்னர்களுக்கு மன்னன் {உன் மகன்} தனது படைகளுடன் எதிரிகளிடம் சென்றால் அது தாங்கமுடியாததாக இருக்கும்” என்றார்.(30)

சகுந்தலை அதன்பிறகே களைப்படைந்து வந்த தன் தந்தையை {கண்வ முனிவரை} அணுகி, அவரது பாதங்களைக் கழுவினாள். அவரது சுமையை வாங்கிக் கொண்டு பழங்களைச் சரியான முறையில் அடுக்கி வைத்து, அவரிடம் {கண்வ முனிவரிடம்},(31) “என்னால் கணவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட துஷ்யந்தருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் நீர், உமது கருணையால் அருள வேண்டும்” என்றாள்.(32)

அதற்குக் கண்வர், “ஓ அழகான நிறம் கொண்டவளே {சகுந்தலையே}, உனக்காகவே நான் அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} அருள் வழங்குவேன்.  ஆனால், ஓ அருளப்பட்டவளே {சகுந்தலையே}, என்னிடமிருந்து நீ ஆசைப்படும் ஒரு வரத்தைப் பெற்றுக் கொள்வாயாக” என்றார்.(33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சகுந்தலை, துஷ்யந்தனுக்கு அனுகூலமாக இருக்க ஆசைப்பட்டுப் பௌரவ குல ஏகாதிபதிகள் எப்போதும் அறம் வழுவாமல், தங்கள் அரியணையை இழக்காமல் இருக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள்.”(34)

சகுந்தலையை மயக்கிய துஷ்யந்தன்! | ஆதிபர்வம் – பகுதி 73சம்பவ பர்வம் – 9)எட்டு வகைத் திருமணங்கள் குறித்துச் சொன்ன துஷ்யந்தன்; துஷ்யந்தனிடம் வரம் கேட்ட சகுந்தலை; துஷ்யந்தன் சகுந்தலை திருமணம்; கண்வரிடம் நடந்ததைச் சொன்ன சகுந்தலை; சகுந்தலையைப் பாதுகாத்த கண்வர்…

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவை அனைத்தையும் கேட்ட மன்னன் துஷ்யந்தன், “ஓ இளவரசியே! {சகுந்தலையே}, நீ சொன்னதனைத்தையும் நன்றாகவே சொன்னாய். ஓ அழகானவளே! நீ என் மனைவியாவாயாக. நான் உனக்காக என்ன செய்யட்டும்?(1) தங்கமாலை, ஆடைகள், தங்கத்தாலான காதணிகள், பல நாடுகளைச் சேர்ந்த அழகான வெண்முத்துக்கள், தங்க நாணயங்கள், சிறந்தத் தரைவிரிப்புகள் ஆகியவற்றை இன்றே உனக்குப் பரிசளிக்கிறேன். ஓ அழகானவளே! {சகுந்தலையே}, எனது முழு அரசாங்கமும் இன்று உனதாகட்டும். என்னிடம் வா, ஓ மருட்சியுடையவளே! அழகானவளே! கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள்வாயாக. ஓ {வாழைமரம் போன்று} வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே! திருமண முறைகள் அனைத்திலும் காந்தர்வ முறையே முதன்மையானதாக மதிக்கப்படுகிறது” என்றான் {துஷ்யந்தன்}.(2-4)

இதைக்கேட்ட சகுந்தலை, “ஓ மன்னா! {துஷ்யந்தரே}, எனது தந்தை {கண்வ முனிவர்} கனிகள் கொண்டு வருவதற்காக இந்த ஆசிரமத்திலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஒரு கணம் பொறுப்பீராக; அவரே என்னை உமக்கு அளிப்பார்” என்றாள் {சகுந்தலை}[1].(5)(கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: “ராஜாவே! எனதுபிதா பழங்கள் கொண்டு வருவதற்காக இந்த ஆஸ்ரமத்தைவிட்டுப் போயிருக்கிறார். சற்று நேரம் இரும். அவர் என்னை உமக்குக் கொடுப்பார். எனக்குப் பிதாவே அதிகாரி. அவர் எனக்கு முக்கியமான தேவதை. பிதா என்னை யாருக்குக் கொடுப்பாரோ அவரே எனக்குப் பர்த்தாவாவர். இளமையில் பிதா காப்பாற்றுகிறார். பருவகாலத்தில் கொழுநன் காப்பாற்றுகிறான். முதிர்ந்த பிராயத்தில் புத்திரன் காப்பாற்றுகிறான். ஸ்திரீ ஸ்வதந்திரமாய் இருக்கத்தக்கவள் அல்லள். ராஜஸ்ரேஷ்டரே! தர்மிஷ்டரே! சிறந்த தவமுள்ள என் பிதாவை மதிக்காமல் அதர்மமாக வரனை நான் எப்படி அடையலாம்?” என்று சொன்னாள். துஷ்யந்தன், “சுந்தரியே! தவமே உருக்கொண்டவரும், சாந்தியை இயல்பாக உடையவருமான கண்ணுவரைப் பற்றி நீ இவ்வாறு சொல்வது தகாது; தகாது” என்று சொல்ல, கேட்ட சகுந்தலை, “பிராம்மணர்களுக்குக் கோபமே ஆயுதம்; பிராமணர்கள் கையில் ஆயுதம் பிடிப்பவரல்லர்; இந்திரன் வஜ்ராயுதத்தினால் அஸுரர்களைக் கொல்வது போல் பிராமணர்கள் கோபத்தினால் சத்துருக்களைக் கொல்லுகின்றனர். அக்னி ஜ்வாலைகளினால் தகிக்கிறது; சூரியன் கிரகணங்களினால் தகிக்கிறான்; ராஜா தண்டனையினால் தகிக்கிறான்; பிராமணன் கோபத்தினாலேயே தகிக்கிறான். கோபம் மூட்டப்பட்ட பிராமணன், கோபத்தினாலேயே, இந்திரன் அஸுரர்களைக் கொன்றது போலவே கொல்லுகிறான்” என்று சொன்னாள். அதற்குத் துஷ்யந்தன், “பிரியமானவளே! அந்தக் கண்ணுவ மஹரிஷியை நான் அறிவேன். அவருக்குக் கோபமில்லை. அழகான நிதம்பமுள்ளவளே! சிலாக்கியமானவளே! நீ என்னை அடைவதை நான் விரும்புகிறேன்” – மீதம் கங்குலியில் உள்ளதைப் போலவே பின்வருமாறு இருக்கிறது)

துஷ்யந்தன், “ஓ அழகானவளே! களங்கமற்றவளே! நீ எனது வாழ்க்கைத் துணையாக நான் விரும்புகிறேன். நான் உனக்காகவே வாழ்கிறேன் என்றும், என் இதயம் உன்னிடமே இருக்கிறது என்றும்  அறிந்து கொள்வாயாக.(6) ஒருவன் நிச்சயமாகத் தனக்குத் தானே நண்பனாகவும், தன்னைச் சார்ந்தவனாகவுமே இருப்பான்.  எனவே, முறைப்படி, நிச்சயமாக நீயே உன்னை எனக்கு அளிக்கலாம்.(7) மொத்தம் எட்டு வகைத் திருமணங்கள் இருக்கின்றன. அவை, பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்யம், ஆசுரம்,(8) காந்தர்வம், இராட்சசம் மற்றும் பைசாசம் ஆகிய வகைகளாகும்[2]. (அலங்கரிக்கப்பட்ட கன்னிகையைத் தானமளிப்பது பிரம்மவிவாகம்; வேள்வியின் முடிவில் ரித்விக்குகளுக்குத் தக்ஷிணையாகக் கன்னிகையைத் தானமளிப்பது தைவவிவாகம்; இணையர் இருவரும் சேர்ந்து அறம் வளர்க்கட்டும் என்று மனத்தினால் எண்ணி தானம் செய்வது பிரஜாபத்யம்; மணமகனிடமிருந்து இரண்டு பசுக்களைப் பெற்றுக் கொண்டு கன்னிகையைத் தானமளிப்பது ஆர்ஷவிவாகம்; பெருந்திரவியங்களை வாங்கிக் கொண்டு கன்னிக்கையைத் தானமளிப்பது ஆசுரவிவாகம்; மணமகனும், மணமகளும் மனமொப்பிக் கலந்து கொள்வது காந்தர்வவிவாகம்; தூக்கத்திலும், மதுமயக்கத்திலும் கன்னிகையைக் கடத்திச் செல்வது பைசாசவிவாகம்; போரிட்டுப் பலவந்தமாகக் கடத்திச் செல்வது ராக்ஷஸவிவாகம்.)தான்தோன்றியின் {பிரம்மனின்} மகனான மனு, இவற்றின் தகுதிகள் அனைத்தையும், அதனதன் ஒழுங்குக்கேற்ப சொல்லியிருக்கிறார்.(9) ஓ களங்கமற்றவளே! {சகுந்தலையே}, பிராமணர்களுக்கு முதல் நான்கு வகையும், க்ஷத்திரியர்களுக்கு முதல் ஆறு வகையும் பொருந்துபவையாகும் என்பதை அறிவாயாக.(10) மன்னர்களைப் பொறுத்தவரை, இராட்சச வகையும் கூட அனுமதிக்கப்படுகிறது. வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் ஆசுர வகை அனுமதிக்கப்படுகிறது. முதல் ஐந்தில் மூன்று முறையானவை, மீதம் இரண்டும் முறையற்றவை.(11) பைசாச மற்றும் ஆசுர வகைகள் (எந்த மனிதனாலும்) நடைமுறையில் செய்யப்படவே கூடாது.[3] (அர்த்தசாஸ்திரம் போன்ற அரசநீதி நூல்களில் இதேத் திருமண வகைகள் உண்டு. பெற்றவரின் சம்மதம் பெற்ற பிரம்மம், தைவம், பிரஜாபத்யம் ஆகியவை ஒப்புக் கொள்ளப்பட்ட விவாகங்கள் ஆர்ஷம், ஆசூரம் ஆகியவற்றை அரசுக்குத் தண்டம் அளித்து ஏற்கும் வகை விவாகங்களாக மாற்றிக் கொள்ளலாம். காந்தர்வம் பெற்றோரின் ஒப்புதல் பெறப்பட்டு முறைப்படுத்தப்படும். பைசாஸம், ராட்சஸம் ஆகிய திருமணங்கள் செய்தவர் தண்டிக்கப்பட்டுவர். தண்டனைக்குப்பின் மணப்பெண் மற்றும் அவளைப் பெற்றோரின் சம்மதம் இருப்பின் அத்திருமணம் முறைப்படுத்தப்படும்.)அறத்தின் அங்கங்களான இவற்றின்படியே ஒவ்வொருவனும் நடக்க வேண்டும்.(12) காந்தர்வ மற்றும் இராட்சச வகைகள் க்ஷத்திரியர்களுக்கு ஏற்ற நடைமுறைகளாகும். நீ இதனால் சிறு அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இறுதியாக சொன்ன இருவகையில் எந்த ஒரு வகையும், அல்லது இருவகையும் கலந்து நமது திருமணம் நடைபெறலாம்.(13) ஓ அழகான நிறம் கொண்டவளே {சகுந்தலையே}, நான் ஆசையால் நிறைந்திருக்கிறேன், நீயும் அவ்வாறே இருப்பதால், காந்தர்வ முறைப்படி நீ எனது மனைவியாகலாம்” என்றான் {துஷ்யந்தன்}.(14)

இதையெல்லாம் கேட்ட சகுந்தலை பதிலளித்தாள், “இதுதான் அறம் அங்கீகரித்தப் பாதை என்றால், நிச்சயமாக நானே என்னை அளிக்கலாம் என்றால், ஓ பௌரவ குலத்தில் முதன்மையானவரே![4] (இங்கே இது புரூரவஸைக் குறிப்பிட்டுச் சொல்வதாகும், யயாதியின் மகன் பூரூவை அல்ல)எனது நிபந்தனைகளைக் கேட்பீராக.(14) நான் கேட்பனவற்றை எனக்குக் கொடுப்பதாக உண்மையாக எனக்கு உறுதிகூறுவீராக. என் மூலமாகப் பிறக்கும் மகனே உமது வாரிசாக வேண்டும். ஓ மன்னா! {துஷ்யந்தரே}, இதுவே எனது நிலையான மனத்துணிவாகும் {தீர்மானமாகும்}. ஓ துஷ்யந்தரே! இந்த வரத்தை நீர் எனக்களிப்பதாக இருந்தால், நமது கூடுகை {திருமணம்} நடக்கலாம்” என்றாள் {சகுந்தலை}.(15,16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, சிந்திக்க எந்த நேரமும் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக, “அப்படியே ஆகட்டும். ஓ ஏற்கத்தக்க புன்னகை கொண்டவளே! {சகுந்தலையே}, நான் உன்னை எனது தலைநகருக்கே அழைத்துச் செல்வேன்.(17) நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஓ அழகானவளே! {சகுந்தலையே}, நீ இஃது எல்லாவற்றுக்கும் தகுந்தவளே” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு, அந்த மன்னர்களில் முதன்மையானவன் {துஷ்யந்தன்}, நயத்தகு நடைகொண்ட அழகிய சகுந்தலையை மணந்து, ஒரு கணவனாக இருந்து அவளை {ஒரு மனைவியாக} அறிந்துக் கொண்டான்[5]. (கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, “என்று அந்த ராஜரிஷி அழகாக நடக்கின்ற அவளைப் பார்த்து இவ்வாறு சொல்லி, *[புரோஹிதரை அழைத்து ஸமயோசிதமான சொல்லைச் சொன்னான். “ராஜகுமாரியான சகுந்தலை சொன்னதை வியர்த்தமாக்குவதற்கு நான் கருதவில்லை. சிறந்த கீர்த்தியுள்ள எனது புத்ரன் ஸம்ஸ்காரமில்லாதவனாக ஆகத்தகாது. ஆதலால், சாஸ்திர விதிப்படி விவாஹத்தை நடத்தும்; காலவிளம்பம் செய்ய வேண்டாம்” என்றான். ராஜாவினால் இவ்வாறு சொல்லப்பட்ட பிராமணர், “அரசர்க்கரசே! நியாயம்” என்று சொல்லிச் சிறந்த நியமமுள்ளவராகச் சாஸ்திரப்படி விவாஹத்தைச் செய்தார். அந்தப் பிராமணஸ்ரேஷ்டர் சொற்படி மங்களகங்கணம் கட்டிக் கொண்டு சாஸ்திரப்படி சகுந்தலையைப் பாணிக்கிரஹணஞ் செய்து கொண்டு] அவளுடன் கூட இருந்தான். அவன் அவளை ஸமாதானப்படுத்திப் பிரயாணப்படும்போது, “உனக்காக சதுரங்கஸேனையையும் அனுப்புவேன்” என்று பலமுறையும் சொன்னான்” என்றும். “*[ ] இவற்றுக்குட்பட்டவை உத்தரதேச பாடத்தில் இல்லை” என்றும் இருக்கிறது.)அவன் {துஷ்யந்தன்},(18-20) அவளிடம் {சகுந்தலையிடம்} “உனது பாதுகாப்புக்காக எனது நான்கு வகைப் படைகளை அனுப்பி வைக்கிறேன். ஓ இனிமையான புன்னகை கொண்டவளே, நிச்சயமாக நான் உன்னை எனது தலைநகருக்கு அழைத்துச் செல்கிறேன்” என்று மீண்டும் மீண்டும் உறுதிகூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ ஜனமேஜயா, இப்படி அவளுக்கு உறுதி கூறிய மன்னன் {துஷ்யந்தன்} அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் {துஷ்யந்தன்} வந்தவழியே தனது இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, காசியபரை {கசியப குலத்தில் தோன்றிய கண்வரைக்} குறித்து நினைக்கத் தொடங்கினான்.(22) அவன் {துஷ்யந்தன்}, ‘ சிறப்புமிக்கத் துறவி {கண்வர்}, அனைத்தையும் அறிந்த பிறகு, என்ன சொல்வார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். இதை நினைத்துக் கொண்டே அவன், தனது தலைநகருக்குள் நுழைந்தான்[6].(23)(கும்பகோணம் பதிப்பில், துஷ்யந்தன், “அழகிய புன்னகையுள்ளவளே! மூன்று வேதங்களையும் அறிந்த பெரியோர்களோடும், அனேக ராஜஸேவகர்களோடும், அனேகமாயிரம் பல்லக்குகளோடும்கூட என் பந்துக்கள் வருவார்கள். ஊமையர்களும், வேடர்களும், கூனர்களும், குள்ளர்களும், அலிகளும், புராணம் சொல்லுகின்றவர்களும் ஸ்துதிபாடுகிறவர்களும், சேர்ந்த சேனை சங்கதுந்துபி வாத்தியங்களின் முழக்கங்களுடன் வனத்திற்கு வரப்போகிறது. அவ்வாறாக உன்னை என் நகரத்திற்கு வருவிப்பேன். அவ்வாறு மங்களங்களான எல்லா ஆசாரங்களாலும் கௌரவம் செய்யாமல் சாதாரணமாக உன்னை என் அரண்மனைக்கு அழைக்க மாட்டேன். அழகிய புருவமுள்ளவளே! உனக்கு ஸத்தியஞ்செய்கிறேன்” என்று சொன்னான். அழகாக நடக்கின்ற அந்த சகுந்தலைக்கு அந்த ராஜரிஷி இவ்வாறு சொல்லி, அவளை இரண்டு கைகளினாலும் தழுவிக் கொண்டு, மலர்ந்த முகத்துடன் பார்த்து, தான் சொன்னதை அவள் ஒப்புக் கொண்டதன் பின், மறுபடியும் அவளைத் தழுவிக் கொண்டான். அழகிய முகமுள்ள அந்தச் சகுந்தலை ராஜாவின் பாதங்களில் விழுந்தாள். ஜனமேஜய ராஜரே! தன் மனைவியான அந்தச் சகுந்தலையை மறுபதியும் தழுவியெடுத்து, “ராஜகுமாரியே! நீ விசனப்படாதே; நான் அழைத்துக் கொண்டு போவேன்; என் தர்மத்தின் மேல் ஆணை” என்று பலமுறை அவளுக்கு உறுதிமொழி சொல்லி, அவ்வரசன் கண்ணுவரைப் பற்றி மனத்தில் சிந்தித்துக் கொண்டே சென்றான். “சிறந்த தவமுள்ளவரும் கசியபகுலத்தவருமான பகவான் கண்ணுவர் கேட்டு என்ன செய்வோரோ? அந்தப் பிராமணஸ்ரேஷ்டரைத் தயை செய்யுமென்று மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாமல் நான் வந்துவிட்டேனே” என்று நினைத்துக் கொண்டே தனது நகரத்தில் பிரவேசித்தான்” என்றிருக்கிறது.)

மன்னன் {துஷ்யந்தன்} சென்ற கணத்தில், கண்வர் தமது குடிலுக்கு வந்தார். ஆனால் சகுந்தலை, வெட்கப்பட்டுக்கொண்டு தனது தந்தையை {கண்வ முனிவரை} வரவேற்கச் செல்லவில்லை.(24) இருந்தாலும், அந்தப் பெரும் துறவி, தனது ஆன்ம ஞானத்தால் அனைத்தையும் அறிந்தார். ஞானக்கண் கொண்டு அனைத்தையும் கண்ட அந்தச் சிறப்புவாய்ந்தவர் {கண்வர்}, மகிழ்ந்து, அவளிடம் {சகுந்தலையிடம்},(25) “இனிமையானவளே, எனக்காகக் காத்திராமல் ரகசியமாக இன்று நீ என்ன செய்தாயோ, அதனால் உனது நல்லொழுக்கத்துக்கு இழுக்கில்லை.(26) புலன் ஆசை கொண்ட ஆணும், விருப்பமுள்ள பெண்ணும் எந்த மந்திரமும் இல்லாமல் காந்தர்வ முறைப்படி சேர்வது க்ஷத்திரியர்களுக்குச் சிறந்த நடைமுறையே.(27) மனிதர்களில் சிறந்தவனான அந்த துஷ்யந்தன், உயர் ஆன்மா கொண்டவனும் அறம் சார்ந்தவனுமாவான். ஓ சகுந்தலா, நீ அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டாய்.(28) உனக்குப் பிறக்கப் போகும் மகன் இந்த உலகில் பெரும் பலம் வாய்ந்தவனாகவும், சிறப்பு வாய்ந்தவனாகவும் இருப்பான். அவன் கடல் மீதும் ஆதிக்கம் செலுத்துவான்.(29) அந்தச் சிறப்பு வாய்ந்த மன்னர்களுக்கு மன்னன் {உன் மகன்} தனது படைகளுடன் எதிரிகளிடம் சென்றால் அது தாங்கமுடியாததாக இருக்கும்” என்றார்.(30)

சகுந்தலை அதன்பிறகே களைப்படைந்து வந்த தன் தந்தையை {கண்வ முனிவரை} அணுகி, அவரது பாதங்களைக் கழுவினாள். அவரது சுமையை வாங்கிக் கொண்டு பழங்களைச் சரியான முறையில் அடுக்கி வைத்து, அவரிடம் {கண்வ முனிவரிடம்},(31) “என்னால் கணவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட துஷ்யந்தருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் நீர், உமது கருணையால் அருள வேண்டும்” என்றாள்.(32)

அதற்குக் கண்வர், “ஓ அழகான நிறம் கொண்டவளே {சகுந்தலையே}, உனக்காகவே நான் அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} அருள் வழங்குவேன்.  ஆனால், ஓ அருளப்பட்டவளே {சகுந்தலையே}, என்னிடமிருந்து நீ ஆசைப்படும் ஒரு வரத்தைப் பெற்றுக் கொள்வாயாக” என்றார்.(33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சகுந்தலை, துஷ்யந்தனுக்கு அனுகூலமாக இருக்க ஆசைப்பட்டுப் பௌரவ குல ஏகாதிபதிகள் எப்போதும் அறம் வழுவாமல், தங்கள் அரியணையை இழக்காமல் இருக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள்.”(34)

சகுந்தலையை மயக்கிய துஷ்யந்தன்! | ஆதிபர்வம் – பகுதி 73சம்பவ பர்வம் – 9)எட்டு வகைத் திருமணங்கள் குறித்துச் சொன்ன துஷ்யந்தன்; துஷ்யந்தனிடம் வரம் கேட்ட சகுந்தலை; துஷ்யந்தன் சகுந்தலை திருமணம்; கண்வரிடம் நடந்ததைச் சொன்ன சகுந்தலை; சகுந்தலையைப் பாதுகாத்த கண்வர்…

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவை அனைத்தையும் கேட்ட மன்னன் துஷ்யந்தன், “ஓ இளவரசியே! {சகுந்தலையே}, நீ சொன்னதனைத்தையும் நன்றாகவே சொன்னாய். ஓ அழகானவளே! நீ என் மனைவியாவாயாக. நான் உனக்காக என்ன செய்யட்டும்?(1) தங்கமாலை, ஆடைகள், தங்கத்தாலான காதணிகள், பல நாடுகளைச் சேர்ந்த அழகான வெண்முத்துக்கள், தங்க நாணயங்கள், சிறந்தத் தரைவிரிப்புகள் ஆகியவற்றை இன்றே உனக்குப் பரிசளிக்கிறேன். ஓ அழகானவளே! {சகுந்தலையே}, எனது முழு அரசாங்கமும் இன்று உனதாகட்டும். என்னிடம் வா, ஓ மருட்சியுடையவளே! அழகானவளே! கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள்வாயாக. ஓ {வாழைமரம் போன்று} வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே! திருமண முறைகள் அனைத்திலும் காந்தர்வ முறையே முதன்மையானதாக மதிக்கப்படுகிறது” என்றான் {துஷ்யந்தன்}.(2-4)

இதைக்கேட்ட சகுந்தலை, “ஓ மன்னா! {துஷ்யந்தரே}, எனது தந்தை {கண்வ முனிவர்} கனிகள் கொண்டு வருவதற்காக இந்த ஆசிரமத்திலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஒரு கணம் பொறுப்பீராக; அவரே என்னை உமக்கு அளிப்பார்” என்றாள் {சகுந்தலை}[1].(5)(கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: “ராஜாவே! எனதுபிதா பழங்கள் கொண்டு வருவதற்காக இந்த ஆஸ்ரமத்தைவிட்டுப் போயிருக்கிறார். சற்று நேரம் இரும். அவர் என்னை உமக்குக் கொடுப்பார். எனக்குப் பிதாவே அதிகாரி. அவர் எனக்கு முக்கியமான தேவதை. பிதா என்னை யாருக்குக் கொடுப்பாரோ அவரே எனக்குப் பர்த்தாவாவர். இளமையில் பிதா காப்பாற்றுகிறார். பருவகாலத்தில் கொழுநன் காப்பாற்றுகிறான். முதிர்ந்த பிராயத்தில் புத்திரன் காப்பாற்றுகிறான். ஸ்திரீ ஸ்வதந்திரமாய் இருக்கத்தக்கவள் அல்லள். ராஜஸ்ரேஷ்டரே! தர்மிஷ்டரே! சிறந்த தவமுள்ள என் பிதாவை மதிக்காமல் அதர்மமாக வரனை நான் எப்படி அடையலாம்?” என்று சொன்னாள். துஷ்யந்தன், “சுந்தரியே! தவமே உருக்கொண்டவரும், சாந்தியை இயல்பாக உடையவருமான கண்ணுவரைப் பற்றி நீ இவ்வாறு சொல்வது தகாது; தகாது” என்று சொல்ல, கேட்ட சகுந்தலை, “பிராம்மணர்களுக்குக் கோபமே ஆயுதம்; பிராமணர்கள் கையில் ஆயுதம் பிடிப்பவரல்லர்; இந்திரன் வஜ்ராயுதத்தினால் அஸுரர்களைக் கொல்வது போல் பிராமணர்கள் கோபத்தினால் சத்துருக்களைக் கொல்லுகின்றனர். அக்னி ஜ்வாலைகளினால் தகிக்கிறது; சூரியன் கிரகணங்களினால் தகிக்கிறான்; ராஜா தண்டனையினால் தகிக்கிறான்; பிராமணன் கோபத்தினாலேயே தகிக்கிறான். கோபம் மூட்டப்பட்ட பிராமணன், கோபத்தினாலேயே, இந்திரன் அஸுரர்களைக் கொன்றது போலவே கொல்லுகிறான்” என்று சொன்னாள். அதற்குத் துஷ்யந்தன், “பிரியமானவளே! அந்தக் கண்ணுவ மஹரிஷியை நான் அறிவேன். அவருக்குக் கோபமில்லை. அழகான நிதம்பமுள்ளவளே! சிலாக்கியமானவளே! நீ என்னை அடைவதை நான் விரும்புகிறேன்” – மீதம் கங்குலியில் உள்ளதைப் போலவே பின்வருமாறு இருக்கிறது)

துஷ்யந்தன், “ஓ அழகானவளே! களங்கமற்றவளே! நீ எனது வாழ்க்கைத் துணையாக நான் விரும்புகிறேன். நான் உனக்காகவே வாழ்கிறேன் என்றும், என் இதயம் உன்னிடமே இருக்கிறது என்றும்  அறிந்து கொள்வாயாக.(6) ஒருவன் நிச்சயமாகத் தனக்குத் தானே நண்பனாகவும், தன்னைச் சார்ந்தவனாகவுமே இருப்பான்.  எனவே, முறைப்படி, நிச்சயமாக நீயே உன்னை எனக்கு அளிக்கலாம்.(7) மொத்தம் எட்டு வகைத் திருமணங்கள் இருக்கின்றன. அவை, பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்யம், ஆசுரம்,(8) காந்தர்வம், இராட்சசம் மற்றும் பைசாசம் ஆகிய வகைகளாகும்[2].(அலங்கரிக்கப்பட்ட கன்னிகையைத் தானமளிப்பது பிரம்மவிவாகம்; வேள்வியின் முடிவில் ரித்விக்குகளுக்குத் தக்ஷிணையாகக் கன்னிகையைத் தானமளிப்பது தைவவிவாகம்; இணையர் இருவரும் சேர்ந்து அறம் வளர்க்கட்டும் என்று மனத்தினால் எண்ணி தானம் செய்வது பிரஜாபத்யம்; மணமகனிடமிருந்து இரண்டு பசுக்களைப் பெற்றுக் கொண்டு கன்னிகையைத் தானமளிப்பது ஆர்ஷவிவாகம்; பெருந்திரவியங்களை வாங்கிக் கொண்டு கன்னிக்கையைத் தானமளிப்பது ஆசுரவிவாகம்; மணமகனும், மணமகளும் மனமொப்பிக் கலந்து கொள்வது காந்தர்வவிவாகம்; தூக்கத்திலும், மதுமயக்கத்திலும் கன்னிகையைக் கடத்திச் செல்வது பைசாசவிவாகம்; போரிட்டுப் பலவந்தமாகக் கடத்திச் செல்வது ராக்ஷஸவிவாகம்.) தான்தோன்றியின் {பிரம்மனின்} மகனான மனு, இவற்றின் தகுதிகள் அனைத்தையும், அதனதன் ஒழுங்குக்கேற்ப சொல்லியிருக்கிறார்.(9) ஓ களங்கமற்றவளே! {சகுந்தலையே}, பிராமணர்களுக்கு முதல் நான்கு வகையும், க்ஷத்திரியர்களுக்கு முதல் ஆறு வகையும் பொருந்துபவையாகும் என்பதை அறிவாயாக.(10) மன்னர்களைப் பொறுத்தவரை, இராட்சச வகையும் கூட அனுமதிக்கப்படுகிறது. வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் ஆசுர வகை அனுமதிக்கப்படுகிறது. முதல் ஐந்தில் மூன்று முறையானவை, மீதம் இரண்டும் முறையற்றவை.(11) பைசாச மற்றும் ஆசுர வகைகள் (எந்த மனிதனாலும்) நடைமுறையில் செய்யப்படவே கூடாது.[3] (அர்த்தசாஸ்திரம் போன்ற அரசநீதி நூல்களில் இதேத் திருமண வகைகள் உண்டு. பெற்றவரின் சம்மதம் பெற்ற பிரம்மம், தைவம், பிரஜாபத்யம் ஆகியவை ஒப்புக் கொள்ளப்பட்ட விவாகங்கள் ஆர்ஷம், ஆசூரம் ஆகியவற்றை அரசுக்குத் தண்டம் அளித்து ஏற்கும் வகை விவாகங்களாக மாற்றிக் கொள்ளலாம். காந்தர்வம் பெற்றோரின் ஒப்புதல் பெறப்பட்டு முறைப்படுத்தப்படும். பைசாஸம், ராட்சஸம் ஆகிய திருமணங்கள் செய்தவர் தண்டிக்கப்பட்டுவர். தண்டனைக்குப்பின் மணப்பெண் மற்றும் அவளைப் பெற்றோரின் சம்மதம் இருப்பின் அத்திருமணம் முறைப்படுத்தப்படும்.)அறத்தின் அங்கங்களான இவற்றின்படியே ஒவ்வொருவனும் நடக்க வேண்டும்.(12) காந்தர்வ மற்றும் இராட்சச வகைகள் க்ஷத்திரியர்களுக்கு ஏற்ற நடைமுறைகளாகும். நீ இதனால் சிறு அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இறுதியாக சொன்ன இருவகையில் எந்த ஒரு வகையும், அல்லது இருவகையும் கலந்து நமது திருமணம் நடைபெறலாம்.(13) ஓ அழகான நிறம் கொண்டவளே {சகுந்தலையே}, நான் ஆசையால் நிறைந்திருக்கிறேன், நீயும் அவ்வாறே இருப்பதால், காந்தர்வ முறைப்படி நீ எனது மனைவியாகலாம்” என்றான் {துஷ்யந்தன்}.(14)

இதையெல்லாம் கேட்ட சகுந்தலை பதிலளித்தாள், “இதுதான் அறம் அங்கீகரித்தப் பாதை என்றால், நிச்சயமாக நானே என்னை அளிக்கலாம் என்றால், ஓ பௌரவ குலத்தில் முதன்மையானவரே![4] (இங்கே இது புரூரவஸைக் குறிப்பிட்டுச் சொல்வதாகும், யயாதியின் மகன் பூரூவை அல்ல)எனது நிபந்தனைகளைக் கேட்பீராக.(14) நான் கேட்பனவற்றை எனக்குக் கொடுப்பதாக உண்மையாக எனக்கு உறுதிகூறுவீராக. என் மூலமாகப் பிறக்கும் மகனே உமது வாரிசாக வேண்டும். ஓ மன்னா! {துஷ்யந்தரே}, இதுவே எனது நிலையான மனத்துணிவாகும் {தீர்மானமாகும்}. ஓ துஷ்யந்தரே! இந்த வரத்தை நீர் எனக்களிப்பதாக இருந்தால், நமது கூடுகை {திருமணம்} நடக்கலாம்” என்றாள் {சகுந்தலை}.(15,16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, சிந்திக்க எந்த நேரமும் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக, “அப்படியே ஆகட்டும். ஓ ஏற்கத்தக்க புன்னகை கொண்டவளே! {சகுந்தலையே}, நான் உன்னை எனது தலைநகருக்கே அழைத்துச் செல்வேன்.(17) நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஓ அழகானவளே! {சகுந்தலையே}, நீ இஃது எல்லாவற்றுக்கும் தகுந்தவளே” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு, அந்த மன்னர்களில் முதன்மையானவன் {துஷ்யந்தன்}, நயத்தகு நடைகொண்ட அழகிய சகுந்தலையை மணந்து, ஒரு கணவனாக இருந்து அவளை {ஒரு மனைவியாக} அறிந்துக் கொண்டான்[5]. (கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, “என்று அந்த ராஜரிஷி அழகாக நடக்கின்ற அவளைப் பார்த்து இவ்வாறு சொல்லி, *[புரோஹிதரை அழைத்து ஸமயோசிதமான சொல்லைச் சொன்னான். “ராஜகுமாரியான சகுந்தலை சொன்னதை வியர்த்தமாக்குவதற்கு நான் கருதவில்லை. சிறந்த கீர்த்தியுள்ள எனது புத்ரன் ஸம்ஸ்காரமில்லாதவனாக ஆகத்தகாது. ஆதலால், சாஸ்திர விதிப்படி விவாஹத்தை நடத்தும்; காலவிளம்பம் செய்ய வேண்டாம்” என்றான். ராஜாவினால் இவ்வாறு சொல்லப்பட்ட பிராமணர், “அரசர்க்கரசே! நியாயம்” என்று சொல்லிச் சிறந்த நியமமுள்ளவராகச் சாஸ்திரப்படி விவாஹத்தைச் செய்தார். அந்தப் பிராமணஸ்ரேஷ்டர் சொற்படி மங்களகங்கணம் கட்டிக் கொண்டு சாஸ்திரப்படி சகுந்தலையைப் பாணிக்கிரஹணஞ் செய்து கொண்டு] அவளுடன் கூட இருந்தான். அவன் அவளை ஸமாதானப்படுத்திப் பிரயாணப்படும்போது, “உனக்காக சதுரங்கஸேனையையும் அனுப்புவேன்” என்று பலமுறையும் சொன்னான்” என்றும். “*[ ] இவற்றுக்குட்பட்டவை உத்தரதேச பாடத்தில் இல்லை” என்றும் இருக்கிறது.)அவன் {துஷ்யந்தன்},(18-20) அவளிடம் {சகுந்தலையிடம்} “உனது பாதுகாப்புக்காக எனது நான்கு வகைப் படைகளை அனுப்பி வைக்கிறேன். ஓ இனிமையான புன்னகை கொண்டவளே, நிச்சயமாக நான் உன்னை எனது தலைநகருக்கு அழைத்துச் செல்கிறேன்” என்று மீண்டும் மீண்டும் உறுதிகூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ ஜனமேஜயா, இப்படி அவளுக்கு உறுதி கூறிய மன்னன் {துஷ்யந்தன்} அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் {துஷ்யந்தன்} வந்தவழியே தனது இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, காசியபரை {கசியப குலத்தில் தோன்றிய கண்வரைக்} குறித்து நினைக்கத் தொடங்கினான்.(22) அவன் {துஷ்யந்தன்}, ‘ சிறப்புமிக்கத் துறவி {கண்வர்}, அனைத்தையும் அறிந்த பிறகு, என்ன சொல்வார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். இதை நினைத்துக் கொண்டே அவன், தனது தலைநகருக்குள் நுழைந்தான்[6].(23)(கும்பகோணம் பதிப்பில், துஷ்யந்தன், “அழகிய புன்னகையுள்ளவளே! மூன்று வேதங்களையும் அறிந்த பெரியோர்களோடும், அனேக ராஜஸேவகர்களோடும், அனேகமாயிரம் பல்லக்குகளோடும்கூட என் பந்துக்கள் வருவார்கள். ஊமையர்களும், வேடர்களும், கூனர்களும், குள்ளர்களும், அலிகளும், புராணம் சொல்லுகின்றவர்களும் ஸ்துதிபாடுகிறவர்களும், சேர்ந்த சேனை சங்கதுந்துபி வாத்தியங்களின் முழக்கங்களுடன் வனத்திற்கு வரப்போகிறது. அவ்வாறாக உன்னை என் நகரத்திற்கு வருவிப்பேன். அவ்வாறு மங்களங்களான எல்லா ஆசாரங்களாலும் கௌரவம் செய்யாமல் சாதாரணமாக உன்னை என் அரண்மனைக்கு அழைக்க மாட்டேன். அழகிய புருவமுள்ளவளே! உனக்கு ஸத்தியஞ்செய்கிறேன்” என்று சொன்னான். அழகாக நடக்கின்ற அந்த சகுந்தலைக்கு அந்த ராஜரிஷி இவ்வாறு சொல்லி, அவளை இரண்டு கைகளினாலும் தழுவிக் கொண்டு, மலர்ந்த முகத்துடன் பார்த்து, தான் சொன்னதை அவள் ஒப்புக் கொண்டதன் பின், மறுபடியும் அவளைத் தழுவிக் கொண்டான். அழகிய முகமுள்ள அந்தச் சகுந்தலை ராஜாவின் பாதங்களில் விழுந்தாள். ஜனமேஜய ராஜரே! தன் மனைவியான அந்தச் சகுந்தலையை மறுபதியும் தழுவியெடுத்து, “ராஜகுமாரியே! நீ விசனப்படாதே; நான் அழைத்துக் கொண்டு போவேன்; என் தர்மத்தின் மேல் ஆணை” என்று பலமுறை அவளுக்கு உறுதிமொழி சொல்லி, அவ்வரசன் கண்ணுவரைப் பற்றி மனத்தில் சிந்தித்துக் கொண்டே சென்றான். “சிறந்த தவமுள்ளவரும் கசியபகுலத்தவருமான பகவான் கண்ணுவர் கேட்டு என்ன செய்வோரோ? அந்தப் பிராமணஸ்ரேஷ்டரைத் தயை செய்யுமென்று மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாமல் நான் வந்துவிட்டேனே” என்று நினைத்துக் கொண்டே தனது நகரத்தில் பிரவேசித்தான்” என்றிருக்கிறது.)

மன்னன் {துஷ்யந்தன்} சென்ற கணத்தில், கண்வர் தமது குடிலுக்கு வந்தார். ஆனால் சகுந்தலை, வெட்கப்பட்டுக்கொண்டு தனது தந்தையை {கண்வ முனிவரை} வரவேற்கச் செல்லவில்லை.(24) இருந்தாலும், அந்தப் பெரும் துறவி, தனது ஆன்ம ஞானத்தால் அனைத்தையும் அறிந்தார். ஞானக்கண் கொண்டு அனைத்தையும் கண்ட அந்தச் சிறப்புவாய்ந்தவர் {கண்வர்}, மகிழ்ந்து, அவளிடம் {சகுந்தலையிடம்},(25) “இனிமையானவளே, எனக்காகக் காத்திராமல் ரகசியமாக இன்று நீ என்ன செய்தாயோ, அதனால் உனது நல்லொழுக்கத்துக்கு இழுக்கில்லை.(26) புலன் ஆசை கொண்ட ஆணும், விருப்பமுள்ள பெண்ணும் எந்த மந்திரமும் இல்லாமல் காந்தர்வ முறைப்படி சேர்வது க்ஷத்திரியர்களுக்குச் சிறந்த நடைமுறையே.(27) மனிதர்களில் சிறந்தவனான அந்த துஷ்யந்தன், உயர் ஆன்மா கொண்டவனும் அறம் சார்ந்தவனுமாவான். ஓ சகுந்தலா, நீ அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டாய்.(28) உனக்குப் பிறக்கப் போகும் மகன் இந்த உலகில் பெரும் பலம் வாய்ந்தவனாகவும், சிறப்பு வாய்ந்தவனாகவும் இருப்பான். அவன் கடல் மீதும் ஆதிக்கம் செலுத்துவான்.(29) அந்தச் சிறப்பு வாய்ந்த மன்னர்களுக்கு மன்னன் {உன் மகன்} தனது படைகளுடன் எதிரிகளிடம் சென்றால் அது தாங்கமுடியாததாக இருக்கும்” என்றார்.(30)

சகுந்தலை அதன்பிறகே களைப்படைந்து வந்த தன் தந்தையை {கண்வ முனிவரை} அணுகி, அவரது பாதங்களைக் கழுவினாள். அவரது சுமையை வாங்கிக் கொண்டு பழங்களைச் சரியான முறையில் அடுக்கி வைத்து, அவரிடம் {கண்வ முனிவரிடம்},(31) “என்னால் கணவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட துஷ்யந்தருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் நீர், உமது கருணையால் அருள வேண்டும்” என்றாள்.(32)

அதற்குக் கண்வர், “ஓ அழகான நிறம் கொண்டவளே {சகுந்தலையே}, உனக்காகவே நான் அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} அருள் வழங்குவேன்.  ஆனால், ஓ அருளப்பட்டவளே {சகுந்தலையே}, என்னிடமிருந்து நீ ஆசைப்படும் ஒரு வரத்தைப் பெற்றுக் கொள்வாயாக” என்றார்.(33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சகுந்தலை, துஷ்யந்தனுக்கு அனுகூலமாக இருக்க ஆசைப்பட்டுப் பௌரவ குல ஏகாதிபதிகள் எப்போதும் அறம் வழுவாமல், தங்கள் அரியணையை இழக்காமல் இருக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள்.”(34)

துஷ்யந்தனிடம் சென்றாள் சகுந்தலை | ஆதிபர்வம் – பகுதி 74அ(சம்பவ பர்வம் – 10)ஆண்மகவைப் பெற்றெடுத்த சகுந்தலை; குழந்தையின் அழகு மற்றும் ஆற்றல்; கண்வர் ஆசிரம முனிவர்கள் அவனுக்குச் சர்வதமனன் என்ற பெயர்ச்சூட்டல்; துஷ்யந்தனிடம் சகுந்தலையை அனுப்பி வைத்த கண்வர்..

வைசம்பாயனர், “துஷ்யந்தன் சகுந்தலைக்குச் சத்தியங்களைச் செய்து கொடுத்து ஆசிரமத்தை விட்டு அகன்ற பின், {வாழைமரம் போன்று} வழவழப்பான தொடைகளைக் கொண்ட அவள் {சகுந்தலை} அளவிடமுடியா சக்தி கொண்ட ஓர் ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(1) அந்தக் குழந்தை மூன்று வயதை அடைந்ததும், எரியும் நெருப்பைப் போன்ற காந்தியைப் பெற்றான். ஓ ஜனமேஜயா! அவன் அழகையும், பெருந்தன்மையையும், நிபுணத்துவத்தையும் கொண்டவனாக இருந்தான்.(2) அறம் சார்ந்த மனிதர்களின் முதன்மையான கண்வர், தர்மத்தின்படியான சடங்குகளையெல்லாம் நாளுக்கு நாள் புத்திசாலியாகும் அந்தக் குழந்தைக்குச் செய்வித்தார்.(3) அந்த ஆண்பிள்ளை முத்துக்களைப் போன்ற பளபளப்பான பற்களைப் பெற்றிருந்தான். உள்ளங்கையில் அனைத்து அதிர்ஷ்ட ரேகைகளையும் பெற்று, சிங்கத்தை வீழ்த்தும் பலம் பெற்றிருந்தான். அகலமான நெற்றியுடன், அழகு வாய்ந்தவனாகவும், பலம் வாய்ந்தவனாகவும் வளர்ந்தான். அவன் தேவலோகக் குழந்தையைப் போன்ற காந்தியுடன் விளங்கி வேகமாக வளர்ந்தான்.(4) அவனுக்கு ஆறு வயதானபோது, பெரும் பலம் கொண்டு, சிங்கங்கள், புலிகள், கரடிகள், எருமைகள், யானைகள் ஆகியவற்றை அடக்கிக் கவர்ந்து, அந்த ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கட்டி வைத்தான்.(5)

சில விலங்குகளின் மேல் அமர்ந்து சவாரி செய்து, சில விலங்குகளுடன் சண்டையிட்டு விளையாடி மகிழ்ந்தான். கண்வரின் ஆசிரமத்தில் வசிப்பவர்கள் அவனுக்கு ஒரு பெயரைச் சூட்டினர். {அவர்கள்} “இவன் எந்தப் பலம் மிகுந்த விலங்கையும் கட்டிப்போட்டு அடக்கி வைப்பதால் சர்வதமனன் (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படுவான்” என்று சொன்னார்கள்.(6) இவ்வாறே வீரமும் சக்தியும் பலமும் கொண்டதால் அந்தப் பிள்ளைக்குச் சர்வதமனன் என்ற பெயர் சூட்டப்பட்டது.(7) முனிவர் {கண்வர்} அந்தப் பிள்ளையின் இயல்புக்கு அதீதமானச் செயல்களைக் கண்டு, சகுந்தலையிடம், “இவனை அனைவரும் அறிய, மரபுரிமை சார்ந்த வாரிசாக {இளவரசனாக} நிறுவப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று சொன்னார்.(8)

அந்தப் பிள்ளையின் பெரும்பலத்தைக் கண்டு, கண்வர் தனது சீடர்களிடம், “சகுந்தலையையும், அவள் மகனையும், அனைத்து அதிர்ஷ்டக் குறிகளையும் கொண்ட அவளது கணவனிடம் {துஷ்யந்தனிடம்} தாமதிக்காமல் கொண்டு செல்வீராக.(9) பெண்கள் தன் தந்தைவழி அல்லது தாய்வழி உறவினர்களிடம் வெகுகாலம் வாழக்கூடாது. அப்படித் தங்குவது, அவர்களது நற்பெயருக்கும், நன்னடத்தைக்கும், அறத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். அதனால் தாமதிக்காமல் உடனே அவளை {சகுந்தலையை} தாங்கிச் செல்லுங்கள்”, என்றார்.(10)

அந்தச் சீடர்களும் முனிவரிடம் {கண்வரிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, யானையின் பெயரைக் கொண்ட (ஹஸ்தினாபுரம்) நகரத்திற்குச் சகுந்தலையையும், அவளது மகனையும் {சர்வதமனனையும்} அழைத்துச் சென்றார்கள்.(11) அந்த அழகான புருவங்களைக் கொண்டவள் {சகுந்தலை}, தேவலோக அழகுடன் கூடியவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனுமான அந்தப் பிள்ளையை {சர்வதமனனை} அழைத்துக் கொண்டு, தான் துஷ்யந்தனை முதலில் சந்தித்த அந்த வனத்தைவிட்டு அகன்றாள்.(12)

மன்னனிடம் {துஷ்யந்தனிடம்} சென்ற பிறகு, அவளும் {சகுந்தலையும்}, உதயசூரியனின் காந்தியைக் கொண்ட அவளது பிள்ளையும் {சர்வதமனனும்}, அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} அறிமுகப்படுத்தப்பட்டார்கள்(13). முனிவரின் {கண்வ முனிவரின்} சீடர்கள் அவளை {சகுந்தலையை} மன்னனிடம் அறிமுகப்படுத்திவிட்டு, ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.

சகுந்தலை, மன்னனை {துஷ்யந்தனை} சரியான முறையில் துதித்து,(14) “இவன் உமது மகனாவான். ஓ மன்னா {துஷ்யந்தரே}, இவன் உமது வாரிசாக நியமிக்கப்படட்டும். ஓ மன்னா! {துஷ்யந்தரே}, தேவர்களைப் போன்ற இந்தப் பிள்ளையை {சர்வதமனனை}, நீர் என்னிடம் பெற்றீர். எனவே, ஓ மனிதர்களில் சிறந்தவரே! {துஷ்யந்தரே}, நீர் எனக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவீராக.(15) ஓ பெரும் நற்பேறு பெற்றவரே! {துஷ்யந்தரே}, என்னுடன் கூடுவதற்கு முன்பு கண்வரின் ஆசிரமத்தில் ஏற்பட்ட நமது ஒப்பந்தத்தை நினைத்துப் பார்ப்பீராக” என்றாள் {சகுந்தலை}.(16)

மன்னன் {துஷ்யந்தன்}, அவளது {சகுந்தலையின்} வார்த்தைகளைக் கேட்டு, அனைத்தையும் நினைத்துப் பார்த்து, “எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஓ துறவுக் கோலத்தில் இருக்கும் தீய பெண்ணே! நீ யார்?(17) தர்மம் {அறம்}, காமம் {இன்பம்}, அர்த்தம் {பொருள்} ஆகிய செய்கைகளில் எதிலும் உன்னுடனான தொடர்பு எனக்கு இருப்பதாக நினைவில்லையே. செல், அல்லது இரு, அல்லது நீ என்ன விருப்பப்படுகிறாயோ அதைச் செய்வாயாக” என்றான்.(18)

அவனால் {துஷ்யந்தனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அந்த அழகான நிறம் கொண்ட அப்பாவி {சகுந்தலை} அதிர்ச்சியடைந்தாள். துன்பம் அவளின் {சகுந்தலையின்} நினைவை இழக்க வைத்தது. சிறிது நேரம் அவள் ஒரு மரக்கட்டை போல் நின்றாள்.(19) இருப்பினும், விரைவாக அவளின் {சகுந்தலையின்} கண்கள் தாமிரத்தைப் போன்று சிவந்தன, உதடுகள் துடிக்கத் தொடங்கின. அவ்வப்போது மன்னனின் {துஷ்யந்தனின்} மேல் படும் அவளின் {சகுந்தலையின்} பார்வை, அவனை {துஷ்யந்தனை} எரிப்பதாகத் தெரிந்தது.(20) தன்னுள் எழும் கோபத்தையும், துறவின் நெருப்பையும், இயல்புக்ககுமீறிய முயற்சியால் தனக்குள்ளேயே கட்டுப்படுத்தினாள்.(21) சிறிது நேரம் தனது நினைவுகளைக் கூர்மைப் படுத்தினாள்.

துஷ்யந்தனைக் கடிந்து கொண்ட சகுந்தலை! | ஆதிபர்வம் – பகுதி 74ஆ(சம்பவ பர்வம் – 10) ஆதுஷ்யந்தனைக் கடிந்து கொண்ட சகுந்தலை; சகுந்தலையை நிந்தித்த துஷ்யந்தன்.

அவளது {சகுந்தலையின்} இதயம் துன்பத்திலும் கோபத்திலும் உழன்றது, அவள் கோபத்தால் தனது தலைவனைப் {துஷ்யந்தனைப்} பார்த்து,(22) ” ஓ ஏகாதிபதியே! அனைத்தையும் அறிந்தும், இழிவான ஒரு மனிதன் போல, எதையும் அறிந்ததில்லை என்று உம்மால் எப்படிச் சொல்ல முடிகிறது?(23) இக்காரியத்தில் உள்ள உண்மைக்கோ பொய்மைக்கோ உமது இதயமே சாட்சியாகும். எனவே,  உம்மைத் தாழ்த்திக் கொள்ளாமல், உண்மையைப் பேசுவீராக.(24) தனது உண்மை நிலையை விட்டு, வேறொரு நிலையில் தானிருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளும் ஒருவன், திருடனும், தன்னைத் தானே களவாடிக் கொள்ளும் கள்வனுமாவான். அவன் என்ன பாவம்தான் செய்ய மாட்டான்?(25)

உமது செயலை நீர் மட்டுமே அறிந்திருப்பதாக நினைக்கிறீர். ஆனால், உமது இதயத்தில் குடியிருக்கும் அளவற்ற ஞானம் கொண்ட அந்தப் பழமையானவனை (நாராயணனை) நீர் அறியமாட்டீரா? உமது பாவங்கள் அனைத்தையும் அவன் அறிவான். நீர் அவன் முன்னிலையிலேயே பாவம் இழைக்கிறீர்.(26) பாவத்தைச் செய்யும் ஒருவன், யாரும் தன்னைக் காணவில்லை என்று நினைக்கிறான். ஆனால், அவன் தேவர்களாலும், ஒவ்வொருவரின் இதயத்தில் இருப்பவனாலும் பார்க்கப்படுகிறான்.(27) சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, பூமி, ஆகாயம், இதயம், யமன், பகல், இரவு, இரவும் பகலும் சந்திக்கும் இரு வேளைகள் (சந்திகள்), தர்மம் ஆகியன அனைத்தும் மனிதனின் செயல்களுக்குச் சாட்சியாக இருப்பனவாகும்.(28)

அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக ஒருவனுக்குள் இருக்கும் நாராயணன், அவன் செய்யும் செயல்களில் மனநிறைவுடனிருந்தால், அவனது செயல்களுக்கான பாவங்களை சூரியனின் மகனான யமன் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டான்.(29) ஆனால் எவனிடம் நாராயணன் நிறைவு கொள்ளவில்லையோ, அவனை யமன் அவனது பாவங்களுக்காகத் துன்புறுத்துவான் {சித்திரவதை செய்வான்}.(30) தன்னைப் பொய்யாகக் காட்டிக்கொண்டு, தன் தரத்தைத் தாழ்த்திக் கொள்பவனுக்குத் தேவர்கள் ஒருபோதும் அருள்வதில்லை. அப்படிப்பட்டவனை அவனது சொந்த ஆன்மா கூட வாழ்த்தாது.(31)

நான் என் கணவனிடம் அர்ப்பணிப்புள்ள மனைவியாவேன். எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே நான் வந்தேன் என்பது உண்மையே. அதன்பொருட்டு என்னை அவமதியாதீர். உமது மனைவியான நான், மரியாதையாக நடத்தப்படத் தகுந்தவள்.(32) நான் எனது சொந்த விருப்பத்தின் பேரில் உம்மை நாடி வந்ததால், என்னை அப்படி {மனைவியாக} மதிக்கவில்லையா? பலபேர் முன்னிலையில், என்னைச் சாதாரணப் பெண்ணைப் போல ஏன் நடத்துகிறீர்? நிச்சயம் நான் காட்டில் அழவே இல்லை.  நான் சொல்வதை நீர் கேட்க மாட்டீரா?(33) ஆனால், நான் வேண்டி கேட்பதை நீர் மறுதலித்தால், ஓ துஷ்யந்தரே, உமது தலை இந்த நொடியில் நூறு துண்டுகளாக வெடித்துச் சிதறட்டும்!(34)

ஒரு கணவன் தனது மனைவியின் கருவறைக்குள் நுழைந்து, தானே மகனாகப் பிறக்கிறான். எனவே, வேதங்களின்படி ஒரு மனைவி ஜெயா {ஜாயை} (அவள் மூலமாக மறுபடியும் பிறப்பதால்) என்று அழைக்கப்படுகிறாள்.(35) வேத மந்திரங்களை அறிந்தவர்களுக்கு {ஞானிகளுக்குப்} பிறக்கும் மகன், வீழ்ந்து கிடக்கும் தங்கள் மூதாதையர்களின் ஆவிகளை மீட்க உதவுகிறான்.(36) அப்படிப் பிறக்கும் மகன், புத் எனும் நரகத்தில் விழ வேண்டிய தனது மூதாதையர்களை மீட்பதால், சுயம்புவால் புத்திரன் (புத் எனும் நரகத்தில் இருந்து காப்பவன்) என்று அழைக்கப்படுகிறான்.(37) ஒருவன் தன் மகனால், மூன்று உலகங்களையும் கைப்பற்றுகிறான். ஒரு மகனின் மகனால் {பேரனால்}, அழிவில்லா நிலையை அடைகிறான். ஒரு பேரனின் மகனால், பெருந்தகப்பன்களும், முப்பாட்டன்களும் முடிவில்லா நீடித்த மகிழ்ச்சியை அடைகிறார்கள்.(38)

வீட்டுக் காரியங்களைக் கவனிப்பதில் திறன் நிறைந்தவளே உண்மையான மனைவி.  ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தவளே உண்மையான மனைவி. தனது தலைவனுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவளே உண்மையான மனைவி. தனது தலைவனைத் தவிர வேறு யாரையும் அறியாதவளே உண்மையான மனைவி.(39) ஒரு மனைவி என்பவள் ஒரு மனிதனின் பாதியாவாள். நண்பர்களில் மனைவியே முதன்மையானவள். மனைவியே, ஒருவனது அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பவள். முக்திக்கும் அவளே காரணமாவாள்.(40)

மனைவிகளை உடையவர்களே அறச் செயல்களைச் செய்ய முடியும். மனைவிகள் உள்ளவர்களே இல்லற வாழ்வு வாழ முடியும்.  மனைவிகளை உடைவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கக் காரணங்கள் இருக்கும். மனைவிகளை உடையவர்களே நற்பேற்றை அடைய முடியும்.(41) இனிமையாகப் பேசும் மனைவியர், மகிழ்ச்சியான தருணங்களில் நண்பர்களாக இருக்கிறார்கள்.  அறச்செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் தந்தையாக இருக்கிறார்கள். துன்பத்திலும், நோயிலும் அவர்கள் தாயாக இருக்கிறார்கள்.(42) ஆழ்ந்த கானகத்திற்குள் பயணிக்கும் ஒருவனுக்கும் மனைவியானவளே புத்துணர்ச்சியும், ஆறுதலுமாவாள். மனைவியை உடைய ஒருவன் எல்லோராலும் நம்பப்படுகிறான். எனவே, ஒரு மனைவி என்பவள் ஒருவனது மதிப்புமிக்கச் சொத்தாவாள்.(43) கணவன் இந்த உலகை விட்டு யமனின் உலகத்திற்குச் சென்றாலும், ஓர் அர்ப்பணிப்புள்ள மனைவி மட்டுமே அவனுக்குத் துணையாக அங்கே செல்வாள்.(44) அவனுக்கு முன்பே அங்கு செல்லும் மனைவி அவள் தன் கணவனுக்காகக் காத்திருப்பாள். கணவன் முன்சென்றாலோ, கற்புடைய மனைவி, மிக விரைவாக அவனைத் தொடருகிறாள்.(45) ஓ மன்னா, இந்தக் காரணங்களுக்காகவே திருமணம் என்பது {இவ்வுலகில்} நிலைத்திருக்கிறது. கணவன், மனைவியின் துணையால், இவ்வுலகிலும் பரவுலகிலும் மகிழ்ச்சியை அடைகிறான்[1].(46)(கும்பகோணம் பதிப்பில், “ஜீவித்திருக்கும்போதும், இறந்து போன போதும், கஷ்டங்களில் ஸகாயமின்றி அகப்பட்டபோதும் பதிவ்ரதையான பாரியை ஒருத்தி மட்டுமே பர்த்தாவை விடாமல் அநுஸரிக்கிறாள். முதலில் இறந்து போன மனைவி தன் கணவனுக்குப் பரலோகத்தில் காத்திருக்கிறாள். முன்னிறந்த கணவனைக் கற்புடைய மனைவி பின்னேயும் அனுசரிக்கிறாள். ராஜாவே! இந்த லோகத்திலும், பரலோகத்திலும் பாரியையைக் கணவன் அடைகிறான். இந்த லோகத்தில் பாரியை தேகத்தை வளர்ப்பதற்குரியவள்; ஸ்வர்க்கலோகம் செல்லுகிறவனுக்குக் கட்டுஸாதம் போன்றவள். இந்தக் காரணத்தினாலேதான் பாணிக்கிரகணம் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது.)

ஒருவன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்று கற்றவர்களால் சொல்லப்படுகிறது.   எனவே, மகனைப் பெற்றுக் கொடுத்த மனைவியை ஒருவன் தனது தாயாகவும் பார்க்க வேண்டும்.(47) ஒருவன் தனது மனைவியின் மூலம் பெற்றெடுத்த மகனின் முகத்தைக் காணும் போது, கண்ணாடியில் தன்னைக் காண்பது போல உணர்ந்து, சொர்க்கத்தை அடையும் அறம்சார்ந்த மனிதனைப் போன்ற மகிழ்ச்சியை அடைகிறான்.(48)

மனத்துயராலும், உடல் நோயாலும் துன்பப்படும் மனிதன், வேர்த்துக் கொண்டிருக்கும் போது குளிர்ந்த நீராடலால் கிடைக்கும் உற்சாகத்தைத் தனது மனைவியின் துணையால் அடைகிறான்.(49) மகிழ்ச்சி, இன்பம், அறம் ஆகியன மனைவியாலே கிடைப்பதால், எந்த மனிதனும், தனது மனைவி ஏற்றுக் கொள்ளாத எதையும் செய்யக்கூடாது.(50) ஒரு மனைவியானவள், தனது கணவன் மீண்டும் பிறப்பை எடுக்கும் புனிதமான பூமியாகிறாள். முனிவர்களாலும், ஒரு பெண் இல்லாமல் உயிரினங்களை உருவாக்க முடியாது.(51)

கும்பகோணம் பதிப்பில், “மூன்று வருடம் நிறைந்த பின் இந்த வீரனாகிய குமாரன், உமது துக்கத்தைப் போக்குவதற்காக என்னிடத்தில் பிறந்திருக்கிறான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “உமது துயரத்தை அகற்றுபவனான இந்தப் பிள்ளையை, மூன்று வருடங்கள் நிறைவடைந்த பிறகு ஈன்றெடுத்தேன்” என்றிருக்கிறது. பிபேகத்திப்ராயின் பதிப்பில், “உமது துயரத்தை விலக்குபவனான இந்த மகனை நான் மூன்று வருடங்கள் சுமந்தேன்” என்றிருக்கிறது. மூலத்தில் அஸ்வமேத யாகங்கள் பற்றியச் செய்தி இல்லை. இவன் அரசர்களின் இந்திரனாகத் (இராஜேந்திரனாக) திகழ்வான் என்று அசரீரி சொன்னதாக இருக்கிறது.ஒரு மகன், புழுதியடைந்த உடலுடனிருந்தாலும் கூட, அவன் தன்னை நோக்கி ஓடி வந்து தன் அங்கங்களைக் கட்டிக் கொள்ளும் போது உணர்வதை விட ஒரு தந்தைக்கு வேறு எது பெரிய மகிழ்ச்சியாக இருக்க முடியும்?(52) உம்மை அணுகி, உமது மடியின் மேலேற குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும் உமது மகனை ஏன் இப்படி யாரோ போல் நடத்துகிறீர்?(53} எறும்புகள் கூட தாமிடும் முட்டைகளை அழித்துவிடாமல் காக்கின்றன; அறவோனான நீர் ஏன் உமது மகனை ஆதரிக்க மறுக்கிறீர்?(54) மெதுவான சந்தனக் குழம்பின் தீண்டல், பெண்களின் தீண்டல், நீரின் தீண்டல் ஆகியன ஒரு மகனை வாரியணைத்துக் கட்டிக் கொள்ளும் இன்பத்துக்கு ஈடாகாது.(55) இருகால் உள்ளவைகளில் ஒரு பிராமணன் எவ்வாறு முதன்மையானவனோ, நான்கு கால் உள்ளவைகளில் பசு எவ்வாறு முதன்மையானதோ, பெரியவர்களில் அனைவரைக் காட்டிலும் ஒரு ஆசான் எவ்வாறு முதன்மையானவரோ, அவ்வாறு ஏற்புடைய தீண்டலுக்குரிய அனைத்துப் பொருட்களை விடவும் ஒரு மகனே முதன்மையானவன் ஆவான்.(56) எனவே, இந்த அழகான குழந்தை உம்மைத் தீண்டி அணைக்கட்டும். ஒரு மகனின் அணைப்புக்கு ஈடானது இந்த உலகத்தில் இனியது வேறு எதுவும் இல்லை.(57) ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே! ஓ ஏகாதிபதியே! உமது துன்பங்களையெல்லாம் விலக்கவல்ல இந்தப் பிள்ளையை எனது கருவில் மூன்று வருடங்கள் முழுமையாகச் சுமந்து பெற்றிருக்கிறேன்[2].(58) ஓ பூருவின் {புரூரவஸின்} வின் குலத்து ஏகாதிபதியே, நான் பேறுகால அறையில் இருந்தபோது, “இவன் நூறு குதிரை வேள்விகளைச் செய்வான்” என்று வானத்திலிருந்து அசரீரிகேட்டது.(59)

உண்மையில், தங்கள் இல்லங்களில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் மனிதர்கள், பிறரின் பிள்ளைகளைத் தங்கள் மடியில் அமர்த்திக் கொண்டு, அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்து, பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.(60) குழந்தை பிறந்ததும், நடத்தப்படும் முதல் சடங்கில்[3], பிராமணர்கள் இந்த மந்திரங்களைச் சொல்வார்கள் என்று உமக்குத் தெரியும்.(61)(குழந்தை பிறந்தபின் தொப்புள் கொடி அறுக்கும்பொழுது நிகழ்த்தப்படும் சடங்கு ஜாதகர்மம். பிறந்த குழந்தையின் நாவில், சிறிது பொன், நெய், மற்றும் தேன் கலந்த கலவையைத் தந்தை தடவி, இம்மந்திரங்களைச் சொல்வார் மூலத்தில் ஜாதகர்மாணி என இந்தச் சடங்கே சொல்லப்பட்டுள்ளது. அந்த மந்திரங்கள் இதோ,அங்கத் அங்கத் சம்பவாசி ஹிருதயத் அபிஜெயாஸே ஆத்மா வை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரதாஹ் சதம்பொசோ ஹு த்வததீனோ மெ சந்தானம் அபி காகஸ்யன் தஸ்மத் த்வம் ஜீவ மெ வத்ஸ சுசுக்ஷி சரதாம் சதம்)

“ஓ மகனே! நீ எனது உடல் மூலம் பிறந்தாய்! நீ எனது இதயத்தின் மூலம் பிறந்தாய், நீ எனக்கு மகனாக {மகனின் வடிவில்} இருக்கும் நானே ஆவாய். நீ நூறு வருடங்கள் வாழ்வாயாக!(62) எனது வாழ்வு உன்னை நம்பியே இருக்கிறது, எனது குலத்தின் வளர்ச்சி உன்னிடமே இருக்கிறது. எனவே மகனே, நீ மகிழ்ச்சியாக நூறுவருடங்கள் வாழ்வாயாக”  என்பதே அம்மந்திரங்கள்.(63) இவன் உமது உடலிலிருந்தே முளைத்தவனாவான். இவன் உமது இரண்டாவது வடிவமாவான். தெளிந்த தடாகத்தில் உம் வடிவத்தைக் காண்பது போலவே உமது மகனிடம் உம்மைக் காண்பீராக.(64) வேள்வி நெருப்பு, வீட்டு நெருப்பால் தூண்டப்படுவதைப் போல, உம்மில் இருந்து {உமது} இவன் முளைத்தான். நீரே, உம்மை இரண்டாகப் பிரித்துக் கொண்டீர்.(65) நீர் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு மானைத் தேடிவந்து, என்னை அணுகினீர். ஓ மன்னா! {துஷ்யந்தரே}, அப்போது நான் கன்னியாக எனது {வளர்ப்புத்} தந்தையின் {கண்வ முனிவரின்} ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தேன்.(66)

ஊர்வசி, பூர்வசித்தி, சஹஜன்யா, மேனகா, விஸ்வாச்சி, கிரிடச்சி {கிருதாஸி} ஆகியோரே ஆறு முதன்மையான அப்சரஸ்கள் ஆவர்.(67)  அவர்களிலும், ஒரு பிராமணருக்குப் பிறந்த மேனகையே முதன்மையானவள் ஆவாள். அவள் {மேனகை} தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்து, விஷ்வாமித்திரருடன் கலந்து, என்னைப் பெற்றெடுத்தாள்.(68) அந்தக் கொண்டாடப்படும் அப்சரஸ் மேனகை, என்னை இமயமலையின் பள்ளத்தாக்கொன்றில் ஈன்றெடுத்தாள். எல்லாப் பாசபந்தங்களையும் துறந்து, நான் யாருக்கோ பிறந்தவள் போல, என்னை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.(69) பச்சிளம் குழந்தையாக இருக்கும் போதே பெற்றோரால் துறக்கப்பட்ட நான், முற்காலத்தில் {முற்பிறவியில்} என்ன பாவம் செய்தேனோ, இப்போது உம்மாலும் துறக்கப்படுகிறேன்.(70) நான் எனது தந்தையிடமே அகதியாகச் செல்லத் தயாராக இருக்கிறேன். ஆனால், உமக்குச் சொந்தமான உமது குழந்தையை நீர் துறக்கக்கூடாது” என்றாள் {சகுந்தலை}.(71)

இதையெல்லாம் கேட்ட துஷ்யந்தன், “ஓ சகுந்தலா! உன்னிடம் இந்த மகனை நான் பெற்றதாக நான் அறியவில்லை. பொதுவாகவேப் பெண்கள் பொய் பேசுவர். உனது வார்த்தைகளை யார் நம்புவார்கள்?(72) எவ்விதப் பாச பந்தமற்ற, காமவெறி கொண்ட  மேனைகையே உனது தாய்.  தேவர்களுக்கு காணிக்கையாக்கிய மலர்களை ஒருவன் கைவிடுவதைப் போலவே அவள் {மேனகை} உன்னை இமயமலை அடிவாரத்தில் விட்டுச் சென்றாள்.(73)

க்ஷத்திரிய குலத்தைச் சார்ந்தவரும், காமம் நிறைந்தவருமான விஷ்வாமித்திரரும் கூட, பிராமணராகும் ஆசையில் மயங்கி பந்தபாசம் அற்றிருப்பவர்.(74) இருப்பினும் மேனகை அப்சரஸ்களில் முதன்மையானவள், உன் தந்தையும் {விஷ்வாமித்திரரும்} முனிவர்களின் முதன்மையானவர். அவர்களின் மகளாயிருந்தும், நீ ஏன் காம வெறி கொண்ட ஒரு பெண்ணைப் போலப் பேசுகிறாய்?(75) உனது வார்த்தைகள் எந்த மதிப்புக்கும் அருகதையற்றவை.  என் முன்னே இவற்றைப் பேச உனக்கு வெட்கமாக இல்லையா? ஓ துறவி வேடத்தில் இருக்கும் தீய பெண்ணே! இங்கிருந்து செல்வாயாக.(76) அந்த முனிவர்களில் முதன்மையானவர் {விஷ்வாமித்திரர்} இப்போது எங்கே இருக்கிறார்? அப்சரஸ் மேனகை எங்கே இருக்கிறாள்? கீழ்த்தரமான நீ ஏன் துறவு வேடம் பூண்டிருக்கிறாய்?(77) உனது பிள்ளளையும் கூட நன்றாக வளர்ந்திருக்கிறான். நீ இவனைச் சிறுவன் என்கிறாய், ஆனால் அவனோ நல்ல பலசாலியாக இருக்கிறான். சால மரத்தைப் போல இவன் எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தான்?(78) உனது பிறப்பே இழிவானது. நீ காமவெறி கொண்ட பெண்போலப் பேசுகிறாய். மேனகையின் காமவெறியில் நீ ஈன்றெடுக்கப்பட்டாய்.(79) ஓ பெண்துறவி வேடம் பூண்டவளே! என்னிடம் நீ சொல்வதெல்லாம் நான் அறியாதவை. உன்னை எனக்குத் தெரியவில்லை. நீ எங்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாயோ அங்கேச் செல்வாயாக” என்றான் {துஷ்யந்தன்}.(80)

பரதனை ஏற்றான் துஷ்யந்தன்! | ஆதிபர்வம் – பகுதி 74இ-(சம்பவ பர்வம் – 10)மனைவி மற்றும் மகனின் பெருமை குறித்து விவரித்த சகுந்தலை; பரதன் என்ற பெயரைப் பெற்ற சர்வதமனன்; பரதனின் ஆற்றல்…

சகுந்தலை, “ஓ மன்னா! சிறு கடுகளவு இருக்கும் அடுத்தவர்களின் தவறுகளை மட்டும் நீர் பார்க்கிறீர். ஆனால் வில்வக் {பில்வக்} கனியைப் போன்ற உமது பெரும் தவறுகளைக் காண மறுக்கிறீர்.(82) மேனகை தேவர்களில் ஒருத்தியாவாள். நிச்சயமாக, தேவர்களில் முதன்மையானவளாக அவள் அறியப்படுகிறாள். எனவே, ஓ துஷ்யந்தரே, உமது பிறப்பைவிட எனது பிறப்பு மிக உயர்ந்ததே.(83) ஓ மன்னா! நீர் பூமியில் நடக்கிறீர், நான் வானத்தில் உலாவுகிறேன். நமக்குள், மேரு மலைக்கும், கடுகு வித்துக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பீராக. எனது சக்தியைப் பாரும். ஓ மன்னா! நான் நினைத்தால், இந்திரன், குபேரன், யமன் மற்றும் வருணனின் வசிப்பிடங்களுக்குச் செல்ல முடியும்.(84)


ஓ பாவங்களற்றவரே! நான் உம் முன்னிலையில் சொல்வது அனைத்தும் உண்மையே, எந்தத் தீய எண்ணத்தினாலும் இதைச் சொல்லவில்லை. நான் சொல்வதனைத்தையும் கேட்ட பிறகு என்னை மன்னிப்பீராக.(85) அழகற்ற ஒருவன், கண்ணாடியில் தனது முகத்தைக் காணும் வரை, தன்னை அழகானவனாகவே எண்ணிக் கொள்வான்.(86)  ஆனால் கண்ணாடியில் தனது அழகற்ற முகத்தைக் கண்ட பிறகே, அவனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அவன் காண்பான்.(87) உண்மையிலேயே அழகாக இருப்பவன், யாரையும் இகழமாட்டான். எப்போதும் தீயவற்றையே விரும்புபவன்தான் வசைபாடுபவனாக இருப்பான்.(88) அழகான பூக்கள் நிறைந்த நந்தவனம் இருந்தாலும், பன்றி அழுக்கையும் சகதியையுமே தேடும். அதைப் போல், ஒருவர் பேசும் நல்லதும் அல்லதுமான கருத்துகளில் தீயவற்றையே தீயவர்கள் எடுத்துக் கொள்வர்.(89) ஆனால் ஞானமுடையோர், நல்லதும் தீயதும் கலந்த மற்றவர் பேச்சினைக் கேட்டுப் பாலில் கலந்த நீரைத் தவிர்த்து, பாலை மட்டுமே அருந்தும் அன்னத்தைப் போல அந்தப் பேச்சில் உள்ள நல்லவற்றை மட்டுமே ஏற்பர்.(90)

நேர்மையானவர்களுக்கு, மற்றவர்களை இழித்துப் பேச வலிக்கும். ஆனால், தீயவர்களுக்கோ அப்படிப் பேசுவதில் தான் இன்பமே இருக்கும். நேர்மையானவர்கள் முதிர்ந்தவர்களுக்கு {நல்லோருக்கு} மரியாதை செலுத்துவதில் எப்போதும் மகிழ்வதைப் போலவே தீயவர்கள் நல்லோரை நிந்திப்பதிலேயே எப்போதும் மகிழ்ச்சி கொள்வர்.(92) நேர்மையானவர்கள் மற்றவர்கள் குறையைத் தேடாமல் மகிழ்வுடன் இருப்பர். ஆனால், தீயவர்கள் மற்றவர்களின் குறையைக் கண்டே மகிழ்வர். தீயவர்கள் எப்போதும் நல்லவர்களை இழித்தே பேசுவர். ஆனால், பின்னவர் (நேர்மையானவர்) முன்னவரால் (தீயவர்) தனக்குத் தீங்கேற்பட்டாலும், தீங்கைச் செய்யார்.(93)

தீயவர்கள், நேர்மையானவர்களைத் தீயவர்கள் என்று குற்றம் சாட்டுவதைவிடக் கேலிக்கிடமானது இந்த உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?(94) கொடும் விஷங்கொண்ட கோபக்காரப் பாம்புகளைப் போன்ற நாத்திகர்களேகூட, உண்மை மற்றும் அறத்தைக் கடைப்பிடிக்காதவர்களிடம் வெறுப்படையும்போது {ஆத்திக} நம்பிக்கையால் வளர்க்கப்பட்ட நான் எனக்கு என்ன சொல்லிக் கொள்வது?(95) ஒருவன் தன் வடிவத்திலேயே ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனைத் தன் மகனென்று கருதவில்லையென்றால், அவன் நினைக்கும் உலகத்தை அடைய முடியாது. தேவர்களும் அவனது நற்பேறையும், உடைமைகளையும் அழித்துவிடுவர்.(96)

ஒரு மகன் ஒரு குலத்தைத் தொடர வைப்பவனாகிறான். அது சிறந்த ஓர் அறச்செயலாகும். எனவே, ஒருவன் தனது மகனைக் கைவிடக்கூடாது என்று பித்ருக்கள் சொல்லியிருக்கின்றனர்.(97) தனது மனைவியிடம் தானே பெறும் மகன், மற்றவர்களிடம் இருந்து (பரிசாக) பெறும் மகன், விலைக்கு வாங்கப்பட்ட மகன், பாசத்தால் வளர்க்கப்படும் மகன், மனைவியைத் தவிர மற்ற பெண்டிரிடம் பெறும் மகன் என ஐந்து வகையான மகன்கள் இருப்பதாக மனு சொல்கிறார்.[4](98)(12 வகை புத்திரர்களைப் பற்றிச் சொல்கிறது, மகாபாரதம். தர்மத்தின் விதிகள் முதல் ஆறு வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு  வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

{1} தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் பெறும் மகன் முதல் வகை

{2} அன்பு நிமித்தமாக திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை,

{3} பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை,

{4} கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை,

{5} திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை,

{6} கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை,

{7} சுவீகாரமாகப் பெறப்படும் மகன் ஏழாவது வகை,

{8} சில காரணத்திற்காக பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை,

{9} தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை,

{10} கர்ப்பிணி மணமகளுடன் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை,

{11} சகோதரன் மகன் பதினோராவது வகை,

{12} தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை.

இங்கு சகுந்தலை குறிப்பிடுவது 1,2,3,5,6 ஆகிய ஐந்து வகை மகன்களைப் பற்றி. இது ஆதிபர்வம் 120 ஆம் பகுதியில் விளக்கமாகச் சொல்லப்படுகிறது.)

ஒருவனின் அறத்தையும் சாதனைகளையும் மகன்கள் தாங்கி, அவனது மகிழ்ச்சியை அதிகப்படுத்தி, நரகத்திலிருந்து மூதாதையர்களையும் மீட்கின்றனர்.(99) ஓ மன்னர்களில் புலியே! நீர் உமது மகனைக் கைவிடலாகாது. எனவே, ஓ பூமியின் தலைவரே! ஒரு மகனை மனத்தில் வைத்தால், உண்மை, அறம், ஆகியன உமது மனத்தில் தங்கும்.(100) ஓ ஏகாதிபதிகளில் சிங்கமே! நீர் இந்த வஞ்சகத்தைச் செய்வது தகாது. ஒரு தடாகத்தை {மக்களுக்கு} அர்ப்பணிப்பது என்பது நூறு கிணறுகளை அர்ப்பணிப்பதை விடத் தகுதிவாய்ந்தது {புண்ணியமானது}. ஒரு வேள்வியைச் செய்வது என்பது ஒரு தடாகத்தை அர்ப்பணிப்பதைவிடத் தகுதிவாய்ந்தது {புண்ணியமானது}. ஒரு மகன் என்பவன் ஒரு வேள்வியைச் செய்வதைவிடத் தகுதிவாய்ந்தவன். உண்மை என்பது நூறு மகன்களைவிடத் தகுதிவாய்ந்தது.(101)

ஒரு முறை, நூறு குதிரைவேள்விகள் உண்மையுடன் {சத்தியத்துடன், துலாக்கோலில்} நிறுத்திப் பார்க்கப்பட்டது.  நூறு குதிரை வேள்விகளைவிட உண்மையே கனம் மிக்கதாக இருந்தது.(102) ஓ மன்னா! {துஷ்யந்தரே}, உண்மை என்பது முழு வேதங்களுக்கும், அனைத்துப் புண்ணிய இடங்களில் நீராடியதற்கும் சமம் என்று நான் கருதுகிறேன்.(103) உண்மைக்கு நிகரான வேறு எந்த அறமும் இல்லை. உண்மையைவிட உயர்ந்தது எதுவுமில்லை.(104)  ஓ மன்னா! உண்மையே தெய்வமாகும். உண்மையே உயர்ந்த நோன்பும், தவமுமாகும். எனவே உமது உண்மையை {சத்தியத்தை} மீறாதீர், ஓ ஏகாதிபதியே! உண்மை உம்மில் ஒருங்கிணைந்திருக்கட்டும்.(105) என் வார்த்தைகளுக்கு நீர் மதிப்பளிக்கவில்லையென்றால், எனது விருப்பப்படியே நான் போவேன். நிச்சயமாக உமது துணை {எனக்குத்} தவிர்க்கப்பட வேண்டியதே.(106) இருப்பினும், ஓ துஷ்யந்தரே! நீர் சென்ற பிறகு {உமக்குப் பிறகு}, எனது மகன், மலைகளின் மன்னனால் அலங்கரிக்கப்பட்டதும், நான்கு கடல்களால் சூழப்பட்டதுமான இந்தப் பூமியை ஆளவான்” என்றாள் {சகுந்தலை}.(107)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சகுந்தலை, அந்த ஏகாதிபதியிடம் {துஷ்யந்தனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, அவனது முன்னிலையிலிருந்து அகன்றாள். அவள் {சகுந்தலை} அகன்றதும், புரோகிதர்களுடனும், குருக்களுடனும், அமைச்சர்களுடன் அமர்ந்திருந்த துஷ்யந்தனிடம், வானத்திலிருந்து காண முடியாத வடிவங்கொண்ட ஓர் அசரீரி பேசியது.(108) {அந்தக் குரல்}, “தாயென்பவள் சதையைத் தாங்கும் உறையே, தகப்பனால் உண்டான மகன், அந்தத் தகப்பனே ஆவான். எனவே, ஓ துஷ்யந்தா! உன் மகனை ஏற்றுக் கொள்வாயாக. சகுந்தலையை அவமதிக்காதே.(109) ஓ மனிதர்களில் சிறந்தவனே! தனது சொந்த வித்தில் உண்டான மகன், யமனின் இடத்திலிருந்து ஒருவனை மீட்கிறான். நீயே இந்தப் பிள்ளையைப் பெற்றவனாவாய். சகுந்தலை உண்மையையே பேசினாள்.(110) ஒரு கணவன், தனது உடலை இரண்டாகப் பிரித்து, தனது மனைவியிடம் பிள்ளையின் வடிவில் அவனே பிறக்கிறான். எனவே, ஓ துஷ்யந்தா! சகுந்தலைக்குப் பிறந்த உனது மகனை ஏற்றுக் கொள்வாயாக.(111) ஓ ஏகாதிபதியே! வாழ்ந்து கொண்டிருக்கும் மகனை ஏமாற்றி வாழ்வது என்பது பெரும் தீப்பேறாகும். எனவே, ஓ பூரு {புரூரவஸ்}  குலத்தோனே {துஷ்யந்தனே}, சகுந்தலைக்குப் பிறந்த உனது உயர் ஆன்ம மகனை ஏற்றுக் கொள்வாயாக.(112) எமது வார்த்தையால், நீ இந்தப் பிள்ளையை ஏற்றுக் கொள்வதால், இந்தப் பிள்ளை இது முதல் பரதன் (ஏற்றுக் கொள்ளப்பட்டவன்) என்று அறியப்படட்டும்” என்றது {அந்த அசரீரியின் குரல்}[5].(113)(கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, “மஹாத்மாவும், பூரு வம்சத்தவனுமாகிய சகுந்தலையின் புத்திரனை எடுத்துக் கொள். இவனை நீயாகவும், எங்கள்சொல்லுக்காகவும் தாங்கிக் கொள்ள வேண்டியிருப்பதனால், இந்த உன் புத்திரனுக்குப் பரதனென்று பெயர் இருக்கட்டும். பரதனாலுண்டான புகழ் பாரதி எனப்படும். இவனால் இந்தக் குலத்திற்கே பாரதமென்ற பெயர்வரும். இவனுக்குப் பிந்தினவரும், முந்தினவரும் பாரதர்களேயாவார்” என்று அசரீரி சொல்லி முடிப்பதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.)

தேவலோகவாசிகளின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பூரு {புரூரவஸ்} குலத்தோனுமான அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்} மிகவும் மகிழ்ந்து, தனது புரோகிதர்களிடமும், அமைச்சர்களிடமும் இவ்வாறு பேசினான், “தேவ தூதரால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டீரா? இவன் {பரதன்} எனது மகன் என்பதை நானே அறிவேன்.(115) சகுந்தலையின் சொல்வன்மையை மட்டுமே கொண்டு இவனை {பரதனை} எனது மகனாகக் கொண்டிருந்தேனானால், எனது குடிமக்கள் இது விஷயத்தில் ஐயங்கொண்டிருப்பட்டிருப்பர். எனது மகனும் {பரதனும்} {பிறப்பால்} தூய்மையானவனாகக் கருதப்பட்டிருக்க மாட்டான்” என்றான் {துஷ்யந்தன்}.(116)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ பாரதக் குலத்தோனே! {ஜனமேஜயனே}, அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, தனது மகனின் {பரதனின்} தூய்மை {புனிதம்} தேவ தூதர் மூலம் நிறுவப்பட்டதால், மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.(117) அந்த மகனை {பரதனை} மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டான். அந்த மன்னன் {துஷ்யந்தன்} தனது மகனுக்குத் {பரதனுக்குத்} தந்தையால் செய்யப்பட வேண்டிய சடங்குகளைச் செய்தான்.(118) அந்த மன்னன் {துஷ்யந்தன்} தனது மைந்தனின் {பரதனின்} தலையை முகர்ந்து பார்த்து, அவனைப் {பரதனைப்} பாசத்தோடு அணைத்துக் கொண்டான்.  பிராமணர்கள் வாழ்த்தினர். கவிஞர்களும் புகழ்ந்தனர்.(119)

அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்} தன் மகனின் {பரதனின்} தீண்டலை மகிழ்ச்சியாக உணர்ந்தான். துஷ்யந்தன் தனது மனைவியையும் {சகுந்தலையைப்} பாசத்தோடு ஏற்றுக் கொண்டான். அவளிடம் {சகுந்தலையிடம்} பாசத்தோடு இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(120) “ஓ தேவதையே! {தேவி [சகுந்தலையே]}, உன்னுடனான எனது கலவி தனிமையில் நடந்தது. எனவே, உனது தூய்மையை எவ்வாறு நிறுவுவது என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனது மக்கள், நாம் காமத்தால் இணைந்த ஜோடியாக நினைப்பார்களேயன்றி, கணவன் மனைவியாக நினைக்கமாட்டார்கள். எனவே, எனது வாரிசாக அமரப்போகும் எனது மைந்தனின் {பரதனின்} பிறப்புத் தூய்மையற்றதாகக் கருதப்படும்.(121,122) அன்பானவளே! ஓ பெரிய கண்களைக் கொண்டவளே! கோபத்தால் நீ சொன்ன கடுமையான வார்த்தைகளனைத்தையும் நான் மன்னித்தேன். நீயே எனது அன்புக்குரியவளாவாய்” என்றான் {துஷ்யந்தன்}.(123)

ஓ பாரதா {ஜனமேஜயா}, இவ்வாறு தனது அன்பு மனைவியிடம் பேசிய அந்த அரசமுனி துஷ்யந்தன், நறுமணத் திரவியங்களும், உணவும், நீரும் கொடுத்து அவளை {சகுந்தலையை} ஏற்றுக் கொண்டான்.(124) அந்த மன்னன் துஷ்யந்தன், தனது பிள்ளைக்குப் பரதன் என்று பெயரிட்டுத் தனது வாரிசாக {இளவரசனாக} நியமித்தான்.(125) பரதனின் புகழ்வாய்ந்த பிரகாசமான தேர்ச் சக்கரங்கள், தேவர்களின் தேர்ச் சக்கரங்களைப் போல வெல்ல முடியாதவையாகச் சட சட என்ற ஒலியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் எழுப்பிக் கொண்டே இருந்தன.(126) துஷ்யந்தனின் அந்த மைந்தன் {பரதன்} பூமியின் மன்னர்கள் அனைவரையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். அவன் தன் குடிகளை அறம்சார்ந்து ஆண்டுப் பெரும் புகழ் அடைந்தான்.(127)

அந்தப் பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதி, சக்கரவர்த்தி மற்றும் சர்வபௌமன் என்ற பட்டங்களாலும் {பெயர்களாலும்} அறியப்பட்டான். மருத்துகளின் தலைவனான சக்ரனைப் (இந்தினைப்) போல அவன் பல வேள்விகளைச் செய்தான்.(128) பிராமணர்களுக்குப் பெரும் கொடை அளிக்கப்பட்ட அந்த வேள்விகள் அனைத்திற்கும் கண்வர் தலைமைப் புரோகிதராக இருந்தார். அந்த அருளப்பட்ட ஏகாதிபதி மாடு மற்றும் குதிரை வேள்விகள் ஆகிய இரண்டையும் செய்தான்[6].(129) (கும்பகோணம் பதிப்பில், “ஸாதுக்களுடைய தர்மத்தை அனுஷ்டித்த பராக்கிரமசாலியான அந்த ராஜா {பரதன்}, எல்லாவற்றிற்கும் மேலான புகழையடைந்து பூமி முழுமைக்கும் ஈசுவரனாகிய சக்கரவர்த்தியாயிருந்தான். தேவர்களுக்கு ராஜாவாகிய இந்திரனைப் போலவே அனேக யாகங்களைச் செய்தான். தக்ஷருக்கொப்பான கண்ணுவமஹரிஷி மிகுந்த தக்ஷிணைகளுடன் அவனுக்கு யாகம் செய்வித்தார். கோவித்தம் {கோக்களை மிகுதியாகவுடையது} என்று சொல்லப்பட்ட சிறப்புள்ள அஸ்வமேதயாகத்தைச் செய்தான்”என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “அந்தப் பேறுபெற்றவன், எண்ணற்ற பசுக்களின் {விலங்குகளின்} பெயரால் அழைக்கப்பட்ட ஒரு குதிரை வேள்வியைச் செய்தான்” என்றிருக்கிறது.  மூலத்தில் கோவிதத்தம்  என்ற பெயருடைய வாஜிமேத யாகத்தைச் செய்தான் என்று இருக்கிறது. வாஜிமேதம் என்றால் புனிதமான விலங்குகளை பலியிடும் யாகம் என்று பொருள். இது அசுவமேத யாகம் அல்ல. அசுவமேத யாகம் குதிரையை பலியிட்டுச் செய்வதாகும்.)மேலும் பரதன் புரோகிதர் கூலியாகக் கண்வருக்கு ஆயிரம் தங்கநாணயங்களைக் கொடுத்தான். அந்தப் பரதனே பல பெரும் சாதனைகளைச் செய்தவனாவான். அது முதல், அவனது {பரதன் என்ற} பெயரைக் கொண்டே அவனது குலம் {பரத/பாரதக் குலமென்று} என்று அழைக்கப்படுகிறது.(130) அவனுக்குப் பின்பு பிறந்த மன்னர்கள் அனைவரும் அவனது பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டனர். அந்தப் பாரதக் குலத்தில் பிறந்தவர்கள், தேவர்களைப் போன்ற பெரும் சக்திகள் கொண்ட ஏகாதிபதிகளாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பிரம்மனைப் போல இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவையாகும்.(131,132) ஆனால், ஓ பாரதக் குலத்தோனே! {ஜனமேஜயனே}, அதில் பெரும் நற்பேறு பெற்று, தேவர்களைப் போல இருந்து, உண்மைக்கும் நேர்மைக்கும் தங்களை அர்ப்பணித்த முக்கியமானவர்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும்” {என்றார் வைசம்பாயனர்}.(133)

யயாதி வரலாறு! | ஆதிபர்வம் – பகுதி 75(சம்பவ பர்வம் – 11)நகுஷனைச் சுமந்த முனிவர்கள்; யயாதி வரலாற்றுச் சுருக்கம்; நகுஷனுக்குப் பிறந்த யயாதி; இளமையைப் பெற விரும்பிய யயாதி, தனக்கு அவர்களது இளமையை அளிக்கும்படி தனது மகன்களிடம் வேண்டுவது; இளையவனான பூரு இக்கோரிக்கையை ஏற்பது; பூருவை அரியணையில் அமர்த்திய யயாதி

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “படைப்புத் தலைவன் தக்ஷன், சூரியனின் மகன் மனு, பரதன், குரு, பூரு, அஜமீடன் ஆகிய அரச முனிகளின் புனிதமான, அறத்திற்குக்கட்டுப்பட்ட, பதிவு செய்யப்பட்ட பரம்பரை ஆய்வை நான் உரைக்கும்போதே கேட்பாயாக. ஓ பாவங்களற்றவனே! {ஜனமேஜயனே}, யாதவர்கள், குருக்கள் மற்றும் பாரதக் குலத்தின் பரம்பரை ஆய்வையும் நான் உனக்கு உரைக்கிறேன். இந்தப் பரம்பரை ஆய்வுகள் புனிதமானவை.  அவற்றை உரைப்பது என்பது மனத்தில் அமைதியை ஏற்படுத்தும் பெரிய செயலாகும். இதை உரைப்பது, செல்வம், புகழ் மற்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.  ஓ பாவங்களற்றவனே! {ஜனமேஜனே}, நான் பெயர் குறிப்பிட்ட அனைவரும் மிகுந்த காந்தியைக் கொண்டவர்கள், சக்தியால் பெரும் முனிவர்களுக்குச் சமமானவர்கள் ஆவர்.(1-3)

பிரசேதஸ் {ப்ராசீனபர்ஹி} பத்து மகன்களைப் பெற்றான். அவர்கள் அனைவரும் தவத்துறவுகளுக்குத் தங்களை அர்ப்பணித்து, எல்லா அறங்களையும் தங்களுக்குள் கொண்டிருந்தனர். பழங்காலத்தில் அவர்கள், தங்கள் வாயில் உண்டாகும் நெருப்பினால், விஷம் நிறைந்த செடிகள் பலவற்றையும், பூமியை போர்த்திக் கொண்டிருந்தவையும் மனிதர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தவையுமான எண்ணிலடங்காப் பெரிய மரங்கள் பலவற்றையும் எரித்தனர்.(4) இந்தப் பத்து பேருக்குப் பிறகு {பிராசேதஸர் என்று சொல்லப்படும்} தக்ஷன் என்றொருவன் பிறந்தான். இந்தத் தக்ஷனின் மூலமே பூமியில் உண்டான அனைத்து உயிர்களும் உண்டாயின. ஓ மனிதர்களில் புலியே! அதனால்தான் அவன் {தக்ஷன்} எல்லோருக்கும் முப்பாட்டன் என்று அழைக்கப்படுகிறான்.(5) பிரசேதஸுக்குப் பிறந்த தக்ஷன், வீரணியுடன்[1] கலந்து,(வீரணனுடைய மகள் என்பதால் வீரணி) தன்னைப்போன்றே கடுந்தவங்களை இயற்றும் ஆயிரம்  மகன்களைப் பெற்றான்.(6) அவர்களுக்கு நாரதர், முக்திக்கு வழிவகுக்கும் சாங்கிய தத்துவத்தைப் போதித்தார்.(7) ஓ ஜனமேஜயா, அந்தப் படைப்புத் தலைவன் தக்ஷன், உயிரினங்களை உருவாக்குவதில் ஆர்வங்கொண்டு, ஐம்பது மகள்களைப் பெற்றான். அவர்கள் அனைவரையும் தனது வாரிசாகவும் (அந்த மகள்கள் பெற்றெடுக்கும் மகன்களும் தன்சார்பாக அறச்செயல்கள் செய்வதற்காக) நியமித்தான்[2].(8) (அந்த ஐம்பது பெண்களையும் புத்ரிகைகளாக நிச்சயஞ்செய்து கொண்டான்)தர்மனுக்குப் பத்து மகள்களையும், கசியபருக்கு பதிமூன்று மகள்களையும், சந்திரனுக்கு நேரத்தைக் குறித்துக் காட்ட நியமிக்கப்பட்டிருந்த தன் மற்ற இருபத்தேழு மகள்களையும் அளித்தான்.(9)

மரீசியின் மூத்த மகனான கசியபர், அந்தப் பதிமூன்று மனைவியருள் மூத்தவளிடம் இந்திரனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட ஆதித்தியர்கள் என்ற தேவர்களையும், விவஸ்வானையும் (சூரியன்) பெற்றார். விவஸ்வானுக்கு யமன் பிறந்தான்.(10,11) அந்த மார்த்தாண்டன் (விவஸ்வான் [சூரியன்]) யமனுக்குப் பிறகு, பெரும் புத்திசாலித்தனத்தைக் கொடையாகக் கொண்ட மனுவைப் பெற்றான்.(12) மனு பெரும் ஞானம் கொண்டவராக இருந்து, அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்தார். அவரே ஒரு பரம்பரையின் உற்பத்தியாளராக இருந்தார். மனுவின் குலத்தில் பிறந்தவர்களே மனிதர்கள், அதனாலேயே அவர்கள் மானவாஸ் {மானவர்கள் [மனிதர்கள்]}[3] என்று அழைக்கப்படுகிறார்கள்.(13) இந்த மனுவின் மூலமே பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் அனைத்து மனிதர்களும் உற்பத்தியாகினர். ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயா}, அதன்பிறகு பிராமணர்கள், க்ஷத்திரியர்களுடன் சேர்ந்து ஒன்றாக இருந்தனர்.(14) மனுவின் மகன்களான பிராமணர்கள், வேதக் கல்விக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். மனு மேலும் பத்துப் பிள்ளைகளைப் பெற்றார். அவர்கள் வேனன், திருஷ்ணு, நரிஷ்யன், நாபாகன், இக்ஷ்வாகு,(15) காரூஷன், சர்யாதி, எட்டாவதாக இளை என்ற பெண், ஒன்பதாவதாகப் பிருஷத்ரன், பத்தாவதாக நாபாகரிஷ்டன் {அரிஷ்டன்} ஆகியோராவர். அவர்கள் அனைவரும் க்ஷத்திரியர்களுக்கான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.(16) இவர்களைத் தவிர்த்து மனுவுக்கு இந்தப் பூமியில் ஐம்பது மகன்கள் இருந்தனர்.(17) ஆனால், அவர்கள் அனைவரும் ஒருவருவருக்கொருவர் சண்டையிட்டு அழிந்துவிட்டதாக நாம் கேள்விப்படுகிறோம்.

கல்வியறிவுபெற்ற புரூரவஸ் {மனுவின் மகளான} இளை என்பவளுக்குப் பிறந்தவன்.(18)[3] (சந்திரனுக்கும், பிரஹஸ்பதி எனப்படும் தேவகுருவின் மனைவியான தாராவிற்கும் பிறந்தவர் புதன். மனு, புத்திரனுக்காக மித்ரா வருணயாகம் செய்ய அதில் ஏற்பட்ட பிழையின் காரணமாக இளை பெண்ணாகப் பிறந்தாள். அதன் பின்னரே ஒன்பது மகன்கள் பிறந்தனர். அவள் புதனை மணந்து புரூரவஸைப் பெற்றாள். பின்னர் யக்ஞ புருஷனைக் குறித்து யாகஞ்செய்து, அந்த யாகத்தில் தோன்றிய ஸ்ரீயக்ஞபதியினுடைய அனுக்கிரகத்தினால் இளையானவள் மீண்டும் ஆண் பிள்ளையாகி சுத்தியும்னன் என்ற பெயரைப் பெற்றான். இதனாலேயே இளாவே புரூரவஸூக்கு தாயும் தந்தையுமாக கருதப்பட்டான்(ள்). இளாவுக்கு அதன் பின் உத்கலன், கயன், விதானன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுத்தியும்னனோ, முன்பு பெண்ணாக இருந்ததனாலே ஆட்சியுரிமை பெறவில்லை. ஆயினும் வசிஷ்ட மாமுனிவரின் சொற்படி, அவனது தந்தை பிரதிஷ்டானம் என்ற நகரத்தைப் புரூரவனுக்குக் கொடுத்தான். பிரதிஷ்டானம் என்ற இந்த இடம் இன்று உத்திரப்ரதேச மாநிலம், பிராயக்ராஜ் {அலாகாபாத்} அருகில் உள்ள Jhusi ஆகும். https://en.wikipedia.org/wiki/Jhusi சில ஆய்வாளர்கள் புரூரவஸ் இருந்தது பாரசீகம் (பெர்ஷியா) என்றும் சொல்கிறார்கள்)இளையே அவனுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பெரும் புரூரவசுக்குக் கடலில் உள்ள பதிமூன்று தீவுகளில் ஆதிக்கம் இருந்தது. அவன் மனிதனாக இருந்தாலும், அவனைச் சுற்றி மனிதசக்திக்கு அப்பாற்பட்டவர்களே நட்பாக இருந்தனர்.(19) புரூரவஸ் தனது பலத்தால் போதை கொண்டு, பிராமணர்களிடம் சண்டையிட்டு, அவர்களின் கோபத்தைப் பற்றி கவலை கொள்ளாமல், அவர்களது செல்வத்தை எடுத்துக் கொண்டான்.(20) இதைக் கண்ட சனத்குமாரர்கள் பிரம்மலோகத்திலிருந்து வந்து, அவனுக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறினர். ஆனால் அவையனைத்தையும், புரூரவஸ் நிராகரித்தான்.(21) பலத்தால் போதையுண்ட அந்தக் கஞ்சத்தனமான ஏகாதிபதி {புரூரவஸ்}, காரணக் காரியங்களை அறியும் சக்தியை இழந்ததைக் கண்ட அந்த முனிவர்கள், பெரும் கோபம் கொண்டு, தங்கள் சாபத்தால் அவனை {புரூரவஸை} உடனே அழித்தனர்.(22) கந்தர்வலோகத்திலிருந்து மூன்று வகையான நெருப்பை (வேள்வி காரியங்களுக்காக) முதலில் இங்கே கொண்டு வந்தது அந்தப் புரூரவஸே. அவன் அங்கிருந்து அப்சரஸ் ஊர்வசியையும் கொண்டு வந்தான்.(23) அந்த இளையின் மகன் {புரூரவஸ்}, ஊர்வசியிடம் ஆறு மகன்களைப் பெற்றான். ஆயுஸ், தீமான், அமாவஸு, திருடாயுஸ், வனாயுஸ், சதாயுஸ் ஆகியன அவர்களது பெயர்கள்.(24) அதில் ஆயுஸ் என்பவன் சுவர்ணபானுவின் மகளிடம் {சுவர்ணபானவியிடம்}, நகுஷன், விருத்தசர்மன், ரஜிங்கயன், அநேனஸ் என்ற மகன்களைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது.(25) ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, ஆயுஸின் மகன்கள் அனைவரிலும், நகுஷன் என்பவன் பெரும் புத்திசாலித்தனத்தையும், பெரும் வீரத்தையும் கொடையாகக் கொண்டு அவனது அரசை அறத்துடன் ஆண்டு வந்தான். (26)

மன்னன் நகுஷன், பித்ருக்களையும், தேவர்கள், முனிவர்கள், பிராமணர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், ராட்சசர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களையும் சமமாகப் பாவித்துத் தாங்கினான்.(27) கள்வர்க்கூட்டங்களைத் தன் பலம் வாய்ந்த கரங்களால் ஒடுக்கினான். முனிவர்கள் தனக்குக் கப்பம் கட்டும்படியும், அவர்கள் சுமை சுமக்கும் விலங்குகளாகத் தன்னை அவர்களின் முதுகில் சுமக்கும்படியும் செய்தான்.(28) தனது அழகால், அறத்தால், வீரத்தால், சக்தியால் தேவர்களையும் வெற்றிக் கொண்டு, இந்திரனைப் போல் ஆட்சி செய்தான்.(29) நகுஷன் இனிமையான பேச்சுக் கொண்ட ஆறு மகன்களைப் பெற்றான். அவர்கள் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, மற்றும் துருவன்[4] ஆகியோராவர்.(30)(கங்குலியில் ஐவர்தான் சொல்லப்பட்டுள்ளனர். மன்மதநாததத்தரின் பதிப்பில், “யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, அயதி மற்றும் துருவன் ஆகிய ஆறுபேர் குறிப்பிடப்படுகின்றனர். கும்பகோணம் பதிப்பிலும் அவ்வாறே ஆறு பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிபேக்திப்ராயின் பதிப்பில், அவர்களது பெயர்களில் சில மாறுபடுகின்றன. “யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, பஞ்சன் மற்றும் உத்தவன்” ஆகியோரே அந்த அறுவர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூலத்தில் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, பாஞ்சம், உத்தவன் என ஆறு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. பாஞ்சம் என்பதை ஐந்தாவதாக என்று கங்கூலி மொழிபெயர்த்திருக்கக் கூடும். விஷ்ணுபுராணம், பாகவதம், பிரம்மபுராணம் போன்ற புராணங்களில் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்ற ஆறுபேர் சொல்லப்படுகிறார்கள்.)

யதி, துறவை மேற்கொண்டு முனிவராகிப் பிரம்மனுக்குச் சமமாக உயர்ந்தான். யயாதி பெரும் வீரமும், அறமும் கொண்ட ஏகாதிபதி ஆனான்.(31) அவன் இந்த முழு உலகத்தையும் ஆண்டான். பல வேள்விகளைச் செய்தான். பித்ருக்களை மிகுந்த மரியாதையுடன் வழிபட்டான். அவன் எப்போதும் தேவர்களை மதித்தான்.(32) அவன் முழு உலகத்தையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து, எதிரிகளால் அழிக்கப்பட முடியாதவனாக இருந்தான். யயாதியின் மகன்கள் அனைவரும் பெரும் வில்லாளிகளாக இருந்தனர். அவர்கள் அனைத்து அறங்களும் கொண்டு பிரகாசிப்பவர்களாகவும் இருந்தனர்.(33) ஓ மன்னா, (அவனது {யயாதியின்} இரு மனைவியரான) தேவயானி மற்றும் சர்மிஷ்டைக்குப் பிறந்தனர். தேவயானிக்கு யதுவும், துர்வசுவும் பிறந்தனர்.(34) சர்மிஷ்டைக்குத் திருஹ்யு, அநு மற்றும் பூரு ஆகியோர் பிறந்தனர். ஓ மன்னா, தனது குடிகளை அறம்சார்ந்து பல காலம் ஆண்ட யயாதி,(35) முதுமை தனது அழகை அழிப்பதைக்கண்டு கலங்கினான்.

ஓ பாரதா! {ஜனமேஜயா}, முதுமையால் தாக்குண்ட அந்த ஏகாதிபதி {யயாதி}, தனது மகன்களான யது, துர்வசு, திருஹ்யு, அநு, மற்றும் பூருவிடம் இப்படிப் பேசினான்,(36) “நீங்கள் எனது அன்புக்குரிய மகன்களாக இருக்கிறீர்கள். இளம்பெண்களிடம் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, நான் இளம் மனிதனாக இருக்க விரும்புகிறேன். எனக்கு நீங்கள் உதவுவீர்களா?” என்று கேட்டான்.

அதற்குத் தேவயானிக்குப் பிறந்த மூத்த மகன்,(37,38) “ஓ மன்னா, உமக்கு என்ன வேண்டும்? நீர் உமது இளமையைப் பெறக் கேட்கிறீரா?” என்று கேட்டான். யயாதி, “ஓ மகன்களே, எனது முதுமையை ஏற்பீராக.(39) உங்கள் இளமையைக் கொண்டு நான் இன்பமாக இருப்பேன். பெரும் வேள்வியின் போது, முனிவர் உசானஸால் (சுக்ரன்) நான் சபிக்கப்பட்டேன். ஓ மகன்களே, உங்கள் இளமையைக் கொண்டு நான் இன்பமாக இருப்பேன்.(40) உங்களில் யாராவது ஒருவன் எனது முதுமையை ஏற்றுக் கொண்டு, எனது உடலால் இந்த நாட்டை ஆண்டுக் கொள்ளுங்கள். உங்கள் இளமையால் புத்துயிர் ஊட்டப்பட்டு, நான் இன்பமாக இருப்பேன். எனவே எனது மகன்களே, எனது முதுமையை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.(41)

ஆனால் எந்த மகனும் அவனின் {யயாதியின்} முதுமையை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை. பிறகு, அவனது இளைய மகன் பூரு அவனிடம் {யயாதியிடம்} வந்து,(42) “ஓ மன்னா, நீர் மீட்டெடுக்கப்பட்ட இளமையுடனும், புத்துயிர் ஊட்டப்பட்ட உடலுடனும் மறுபடியும் இன்பமாக இருப்பீராக. நான் உமது முதுமையை ஏற்றுக் கொள்கிறேன். உமது உத்தரவின் பேரில் இந்த நாட்டை ஆள்கிறேன்” என்றான்.(43) இப்படிச் சொல்லப்பட்ட அந்த அரச முனி {யயாதி}, தனது அறத்தன்மை கொண்ட ஆன்ம பலத்தால், முதுமையைத் தனது உயர் ஆன்ம மகனுக்கும் {பூருவுக்கும்}, பூருவின் இளமையைத் தனக்கும் மாற்றிக் கொண்டு இளமையை அடைந்தான்.(44) அந்த ஏகாதிபதியின் {யயாதியின்} வயோதிகத்தை ஏற்றுக் கொண்ட பூரு, நாட்டை ஆண்டான்.(45)

அதன்பிறகு, ஆயிரம் வருடங்கள் கடந்தும், மன்னர்களில் புலியான அந்த யயாதி, ஒரு புலியைப் போன்ற பலத்துடனும், வலுவுடனும் இருந்தான்.(46) அவன் தனது இரு மனைவியரிடமும் {தேவயானி, சர்மிஷ்டையிடம்} இன்பமாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். மேலும், சித்ரரதனின் (கந்தர்வ மன்னன்) நந்தவனத்தில் அப்சரஸ் விஸ்வாசியுடனும் இன்பமாக இருந்தான்.(47) இப்படியெல்லாம் இன்பமாக இருந்தும்கூட, அந்தப் பெரும் மன்னன் மனநிறைவு அடையவில்லை. பிறகு அந்த மன்னன் {யயாதி} புராணங்களில் அடங்கிய பின்வரும் உண்மைகளை நினைவுகூர்ந்தான்.(48) {அந்த யயாதி} “உண்மையாக, ஒருவனது ஆசைகள் இன்பங்களால் நிறைவடையாது. மாறாக, நெருப்பில் வேள்வி நெய்யை விட்டால் எரிவது போல, அது சுடர்விட்டு எரியவே செய்யும்.(49) ஒருவன், இந்த முழு உலகத்தில் உள்ள செல்வங்கள், வைரம், தங்கம், மிருகங்கள், பெண்கள் என அனைத்தையும் அனுபவித்து இன்பமாக இருந்தாலும், அவனால் மனநிறைவை அடைய முடியாது.(50) ஒரு மனிதன், எந்த உயிர்வாழும் பொருளுக்கும், எண்ணத்தாலும், செயலாலும், பேச்சாலும் எந்தப் பாவமும் செய்யாமல் இருந்தால், அவன் பிரம்மனைப் போன்று தூய்மையானவனாக இருப்பான்.(51) எப்போது ஒருவன் எதற்கும் பயப்படாதவனாக இருக்கிறானோ, எப்போது எதற்கும் பயத்தை ஏற்படுத்தாமல் இருக்கிறானோ, எப்போது எதற்கும் ஆசைப்படாமல் இருக்கிறானோ, எப்போது எதற்கும் எந்தத் தீங்கையும் செய்யாமல் இருக்கிறானோ அப்போதே அவன் பிரம்மனைப் போன்ற தூய நிலையை அடைய முடியும்” {என்று புராணங்களில் உரைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை நினைத்துப் பார்த்தான்}.(52)

பெரும்ஞானியான அந்த ஏகாதிபதி {யயாதி}, இவற்றை எண்ணிப் பார்த்து ஒருவனது ஆசைகளால் என்றும் மனநிறைவு கொள்ள முடியாது என்பதில் மனநிறைவு கொண்டு, தனது மனத்தை தியானத்தின் பக்கம் திருப்பினான். தனது மகனிடம் சென்று, அவனுக்கு உரிய முதுமையை ஏற்றுக் கொண்டான்.(53) அவன், தனது ஆசைகளில் மனநிறைவுகொள்ளாத நிலையில் இருந்தாலும், இளமையைத் தன் மகனுக்குத் திருப்பிக் கொடுத்து, அவனை (பூருவை) அரியணையில் அமர்த்தி, அவனிடம்,(54) “நீயே எனது உண்மையான வாரிசு, எனது குலத்தைத் தொடர வைக்கப் போகும் நீயே எனது உண்மையான மகன். இந்த உலகத்தில் எனது குலம் உனது பெயரால் அறியப்படட்டும்” என்றான் {யயாதி}.(55)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்த மன்னர்களில் புலி{யயாதி}, தனது மகன் பூருவை அரியணையில் அமர்த்தி, தன்னை தவத்துறவுகளுக்கு அர்ப்பணித்து, பிருகு {பிருகுதுங்கம்} என்ற மலைக்குச் சென்றுவிட்டான்.(56) பெரும் தவத் தகுதிகளை அடைந்து, பல வருடங்களுக்குப் பிறகு காலத்தால் கட்டுப்படுத்த முடியாத இடத்திற்குச் சென்றான். அவன் உண்ணா நோன்பு இருந்து, தனது மனித உடலைவிட்டுத் தனது மனைவிகளுடன் தேவலோகத்திற்கு உயர்ந்தான்.”(57)

உயிர்மீட்பு ஞானத்தை அடைந்த கசன்! | ஆதிபர்வம் – பகுதி 76(சம்பவ பர்வம் – 12)பிருஹஸ்பதியின் மூத்த மகன் கசனிடம் வேண்டிக் கொண்ட தேவர்கள்; பிருஹஸ்பதியின் மகன் கசன் என்பதை அறிந்தும் சுக்கிராச்சாரியார் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டது; சுக்ராச்சாரியரின் மகள் தேவயானிக்குப் பணிவிடை செய்த கசன்; கசனைக் கொன்ற அசுரர்கள்; கசனுக்காகத் தேவயானி அழவே, அவனை உயிர்மீட்ட சுக்ராச்சாரியார்; மீண்டும் மீண்டும் கசனைக் கொன்ற அசுரர்கள்; மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்த சுக்ராச்சாரியர்; பிராமணர்கள் மதுவருந்தக்கூடாது என்ற விதிமுறையைக் கொண்டு வந்த சுக்கிராச்சாரியார்; வந்த காரியம் வெற்றியடைந்தாலும் சுக்ராச்சாரியாரிடமே பல காலம் தங்கிப் பணிவிடை செய்த கசன்..

ஜனமேஜயன், “ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! பிரஜாபதியைத் தொடர்ந்து பத்தாவது நபராக வரும் எங்கள் மூதாதையர் யயாதி, எப்படிக் கிடைக்க முடியாதவளான சுக்ரனின் மகளை மனைவியாகக் கொண்டார்.(1) இது குறித்து விவரமாக அறிய நான் விரும்புகிறேன். வம்சங்களை நிறுவிய ஒவ்வொரு ஏகாதிபதிகளைக் குறித்தும் தனித்தனியாக எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் சொன்னார், “ஏகாதிபதி யயாதி, இந்திரனுக்கு நிகரான காந்தியுடன் இருந்தான். ஓ ஜனமேஜயா, உனது கேள்விக்கான மறுமொழியாகச் சுக்ரனும், விருஷபர்வனும் எப்படி அவனுக்குத் தங்கள் மகள்களை உரிய சடங்குகளுடன் அளித்தனர் என்பதை நான் உரைக்கிறேன். குறிப்பாக அவன் எப்படித் தேவயானியுடன் கலந்தான் என்பதையும் சொல்கிறேன்.(3,4)

பழங்காலத்தில், மூன்று உலகங்களின் அரசுரிமைக்காகத் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன.(5) தேவர்கள், வெற்றியில் ஆசை கொண்டு, அங்கீரஸின் மகனைத் (பிருஹஸ்பதியைத்) தங்கள் வேள்விகளை நடத்தும் புரோகிதராக நியமித்தனர். அதே நேரத்தில், அவர்களது எதிரிகளோ {அசுரர்களோ}, கல்விமானான உசானஸை {சுக்கிராச்சாரியரை} அதே காரியத்திற்காக தங்கள் புரோகிதராக நியமித்தனர்.(6) அந்த பிராமணர்கள் இருவருக்கிடையிலும் செருக்குடன் கூடிய பகை எப்போதும் இருந்து வந்தது. போர்களில் தேவர்களால் கொல்லப்படும் தானவர்களை,(7) தனது ஞானத்தால் சுக்ரன் உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார். மறுபடியும் உயிர் கிடைத்த அவர்கள் மீண்டும் தேவர்களுடன் போர் புரிந்தனர்.(8) அசுரர்களும் போர்க்களத்தில் பல தேவர்களைக் கொன்றனர். ஆனால், பெரும் சக்தி கொண்ட காவ்யர் (சுக்ரன்) அறிந்த சஞ்சீவனி அறிவியலை, வெளிப்படையான மனம் கொண்ட பிருஹஸ்பதி அறியாததால், வீழ்ந்த தேவர்களின் உயிரை அவரால் மீட்க முடியவில்லை. அதனால், தேவர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.(9,10)

அந்தத் தேவர்கள் இதயத்தில் பெரும் துயரம் கொண்டு, கல்விமானான உசானஸைக் கண்டு பயந்து, பிருஹஸ்பதியின் மூத்த மகனான கசனிடம் சென்று பேசினார்கள். அவர்கள் அவனிடம்,(11) “நாங்கள் உன்னை வணங்குகிறோம். எங்களிடம் கருணை கொள்ளும் நீ, நாங்கள் பெரிதாக நினைக்கும் காரியத்தைச் செய்து எங்களுக்கு உதவி செய்வாயாக. அளவில்லா ஆற்றலைக் கொண்ட பிராமணர் சுக்ரன் அறிந்திருக்கும் ஞானத்தைக் கூடிய விரைவில் உனதாக்கிக் கொள்வாயாக. அந்தப் பிராமணரை நீ விருஷபர்வன் சபையில் காணலாம்.(12,13) அவர் எப்போதும் தானவர்களையே காப்பார், ஆனால் அவர்களின் எதிரிகளான நம்மைக் காக்க மாட்டார். நீ அவரை விட வயதில் இளையவன்தான். எனவே, நீ அவரை மரியாதையுடன் வழிபட முடியும்.(14) அவருக்குப் பிடித்தமான மகளான, தேவயானியையும் நீ வழிபடலாம். நிச்சயமாக உன் ஒருவனால் மட்டுமே அவர்கள் இருவரையும் வழிபட்டு அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்ய முடியும். அதைச் செய்ய வேறு ஒருவனாலும் இயலாது.(15) தேவயானியை உனது ஒழுக்கத்தாலும், சுதந்தர மனப்பான்மையாலும், இனிமையாலும், பொதுவான நடத்தையாலும் மனநிறைவு கொள்ளச் செய்து, அந்த ஞானத்தை உன்னால் நிச்சயம் அடைய முடியும்” என்றனர்.(16)

பிருஹஸ்பதியின் மகன் {கசன்}, தேவர்களால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட பிறகு, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, விருஷபர்வன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(17) இப்படித் தேவர்களால் அனுப்பப்பட்டக் கசன், விரைவாக அசுரர்களின் தலைநகர் வந்து சுக்ரனைக் கண்டான். அவரைக் கண்டு, அவரிடம்,(18) “என்னை உமது சீடனாக ஏற்றுக் கொள்வீராக. நான் அங்கீரஸ் முனிவரின் பேரன், பிருஹஸ்பதியின் மைந்தன். எனது பெயர் கசன்.(19) நீர் எனது குருவானால், நான் ஆயிரம் வருடங்களுக்குப் பிரம்மச்சரிய வாழ்வுமுறையைப் பயில்வேன். ஓ பிராமணரே! எனக்கு ஆணையிடுவீராக” என்றான்.(20) இதைக் கேட்டச் சுக்ரன், “ஓ கசா! நீ வரவேற்கப்படுகிறாய், உன் வார்த்தைகளை ஏற்றுக் கொள்கிறேன். உன்னை மரியாதையுடன் நடத்துவேன். உன்னை அப்படி நடத்துவதால், பிருஹஸ்பதியை நான் மதித்ததாக ஆகும்” என்றார்.”(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், சுக்ரன் என்றும் அழைக்கப்பட்ட காவியரால், அல்லது உசனாஸால் ஆணையிடப்பட்ட கசன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, தான் குறிப்பிட்ட அந்த உறுதியை {ஆயிரம் வருடப் பிரம்மசரியம்} அப்போதே ஏற்றான்.(22) ஓ பாரதா! {ஜனமேஜயா}, தான் குறிப்பிட்ட உறுதியை ஏற்றக் கசன், ஏற்ற சமயங்களில், தனது குருவையும், (அவரது மகளான) தேவயானியையும் மனம் நிறையச் செய்தான்.(23) உண்மையில், அவன் அவர்கள் இருவரையுமே வழிபட்டான். அவன் இளமையாக இருந்ததால், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும், பல விதமான வாத்தியங்களை வாசித்துக் கொண்டும் விரைவிலேயே தேவயானியின் மனத்தைக் கவர்ந்தான்.(24) தேவயானியும் இளமையுடனே இருந்தாள். ஓ பாரதா, அவன், அந்த இளம்பெண் தேவயானிக்கு மலர்களையும், பழங்களையும்கொடுத்தும், அந்த மங்கை எப்பணியைக் கொடுத்தாலும் உடனே நிறைவேற்ற ஆயத்தமாக இருந்தும், அவளை மனம் நிறைய வைத்தான்.(25)

தேவயானியும், விரதத்தை ஏற்றுக் கொண்டிருந்த அந்த இளைஞனுடன் தான் தனியாக இருந்த போதெல்லாம் தனது பாடல்களாலும், இனிமையான நடத்தையாலும் கவனித்துக் கொண்டாள்.(26) கசன் அவ்வுறுதியை ஏற்று ஐநூறு வருடங்கள் கடந்த பிறகு, தானவர்கள் அவனது நோக்கத்தை அறிந்து கொண்டனர்.(27) ஒரு பிராமணனைக் கொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லாத அவர்கள், அவனிடம் மிகுந்த கோபம் கொண்டனர். ஒருநாள், கானகத்தில் தனியாக மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கசனைக் கண்டனர். பிருஹஸ்பதியின் மீதிருந்த கோபத்தாலும், இறந்தோரை உயிர்ப்பிக்கும் தங்கள் ஞானம் {சஞ்சீவனி} வெளியாகாமல் இருக்கவும், அவனை அங்கேயேக் கொன்றனர்.(28) அவனைக் கொன்று, அவனது உடலை துண்டு துண்டாக்கி ஓநாய்களுக்கும், நரிகளுக்கும் இட்டனர். (மாலை சந்தியில்) பசுக்கள், தங்களைக் கவனித்துக் கொண்ட அவனில்லாமல் {கசனில்லாமல்}, தங்கள் கொட்டகைக்குத் திரும்பின.(29)  ஓ பாரதா {ஜனமேஜயா}, கசனில்லாமல் மாடுகள் திரும்பியதைக் கண்ட தேவயானி தனது தந்தையிடன் சென்று பின்வருமாறு கேட்டாள்.(30)

அவள் {தேவயானி}, “உமது மாலைநேர நெருப்பு மூட்டப்பட்டுவிட்டது. சூரியனும் மறைந்துவிட்டான். ஓ தந்தையே! மாடுகள் தங்களை மேய்த்தவர் இல்லாமல் திரும்பிவிட்டன. உண்மையில் கசனை எங்கும் காண முடியவில்லை.(31) ஒன்று கசன் தொலைந்து போயிருக்க வேண்டும். அல்லது இறந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படையானது. ஓ தந்தையே! நான் உண்மையாகச் சொல்கிறேன். அவரில்லாமல் நான் வாழமாட்டேன்” என்றாள்.(32)

இதைக்கேட்ட சுக்ரன், “நான் அவனை மீட்டெடுக்கிறேன்” என்று சொல்லி, “அவன் வரட்டும்” என்றார். இறந்தோரை மீட்கும் அறிவியலைப் பயன்படுத்திக் கசனை வரச்சொல்லிச் சுக்ரன் கட்டளையிட்டார்.(33) தன்னைத் தின்ற ஓநாய்களின் வயிறுகளைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்த கசன், இதயத்தில் மகிழ்ச்சி கொண்டு, தனது குருவின் முன் வந்து நின்றான்.(34) அவனது தாமதத்திற்கான காரணம் கேட்கப்பட்டதால், பார்கவரின் மகளிடம் {தேவயானியிடம்} அவன் பேசினான். உண்மையில், அந்த பிராமணரின் மகள் கேட்டதால், அவளிடம், “ஓ சுத்தமான நடத்தை உள்ளவளே! நான் இறந்து போனேன். குசப்புல்லாலும் {தர்ப்பை}, விறகு குச்சிகளாலும் ஆன வேள்விக்குத் தேவையான எரிபொருளை நான் சுமந்து கொண்டு,(35) இருப்பிடம் திரும்பும் போது, ஓர் ஆலமரத்தினடியில் அமர்ந்தேன். மாடுகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி, அந்த ஆலமரத்தின் நிழலில் நிறுத்தியிருந்தேன்.(36) அசுரர்கள் என்னைக் கண்டு, என்னிடம், “நீ யார்?” என்று கேட்டனர்.  நான், “பிருஹஸ்பதியின் மைந்தன்” என்றேன்.(37) இப்படித் தானவர்களிடம் நான் சொன்னவுடன், அவர்கள் என்னைக் கொன்று, எனது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, நரிகளுக்கும் ஓநாய்களுக்கும் கொடுத்தனர். பிறகு, அவர்கள் தங்கள் இதயத்தில் மகிழ்ந்து அவர்களது இல்லத்திற்குத் திரும்பினர்.(38) ஓ இனிமையானவளே! பின்னர், அந்த உயர் ஆன்ம பார்கவரின் கட்டளையால், நான் முழுவதுமாக மீட்கப்பட்டு உன் முன் நிற்கிறேன்” என்றான்.(39)

மற்றுமொரு சந்தர்ப்பத்தில், தேவயானி கேட்டதற்கிணங்க, அந்தப் பிராமணன் கசன் கானகத்திற்குள் சென்றான். அவன் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, தானவர்கள் அவனைக் கண்டனர். அவனை மறுபடியும் கொன்று, அவனது உடலை அரைத்துக் கூழாக்கி கடல் நீரில் கலந்தனர்.(40) நீண்ட நேரமாகியும் அவனைக் காணாததால், அந்த மங்கை மறுபடியும் தனது தந்தையிடம் சென்று செய்தியைச் சொன்னாள். அறிவியலின் துணை கொண்டு அந்தப் பிராமணரால் கட்டளையிடப்பட்ட கசன், தனது குரு, மற்றும் குருவின் மகள் முன்னிலையில் வந்து நின்று, நடந்தது அனைத்தையும் நடந்தபடியே சொன்னான்.(41)

பிறகு மூன்றாவது முறையாக அவனைக் கொன்ற அசுரர்கள், அவனை எரித்து, சாம்பலாக்கி, அந்தச் சாம்பலை, அவர்களின் குரு அருந்தும் மதுவில் கலந்துவிட்டனர்.(42) மறுபடியும் தேவயானி தனது தந்தையிடம் வந்து, “ஓ தந்தையே! கசன், மலர்களைச் சேகரிக்கச் சென்றார். ஆனால் இன்னும் அவரைக் காணவில்லை.(43) அவர் தொலைந்துவிட்டார் அல்லது இறந்துவிட்டார் என்பது உறுதி. நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன். அவரில்லாமல் நான் வாழமாட்டேன்” என்றாள்.(44)

இதைக் கேட்ட சுக்ரன், “ஓ மகளே! அந்தப் பிருஹஸ்பதியின் மகன், இறந்தோர் உலகம் சென்றுவிட்டான். எனது அறிவியலால் அவன் எத்தனை முறை மீட்கப்பட்டாலும், அவன் மீண்டும் மீண்டும் கொல்லப்படுவான். உண்மையில், நான் என்ன செய்ய?(45) ஓ தேவயானி, வருந்தாதே, அழாதே. ஓ மகளே! பிராமணர்களாலும், இந்திரனுடன் சேர்ந்த தேவர்களாலும், வசுக்களாலும், அசுவினிகளாலும், அசுரர்களாலும், ஏன் உண்மையில், மொத்த அண்டத்தாலும், எனது சக்திக்காக ஒரு நாளைக்கு மூன்று முறை நான் வணங்கப்படும்போது, உறுதியாக நீயும் வணங்கப்படுகிறாய். உன்னைப்போன்ற ஒருத்தி, இறந்து போவோருக்காக வருந்தக்கூடாது. நான் அவனை எத்தனை முறை மீட்டாலும் அவன் மறுபடியும் கொல்லப்படுவான். அவனை இறவாமல் வைத்திருக்க இயலாது” என்றார்.(46,47)

அதற்கு மறுமொழியாகத் தேவயானி, “ஓ தந்தையே! அவர் ஒரு முனிவரின் பேரனும், ஒரு முனிவரின் மகனுமாவார். முதுமையான அங்கீரஸின் பேரனும், கடலைப் போன்ற தகுதிவாய்ந்த பிருஹஸ்பதியின் மைந்தனுமான ஒருவருக்காக நான் ஏன் வருந்தக்கூடாது?(48) அவர் ஒரு பிரம்மச்சாரியாக வேறு இருந்தார். ஓர் துறவியாக அவர் எப்போதும் விழிப்புடனும் எல்லாவற்றிலும் திறமைவாய்ந்தவராகவும் இருந்தார். நான் உண்ணாதிருந்து, கசனின் வழியிலேயே செல்வேன். ஓ தந்தையே! அந்த அழகான கசன், எனது அன்புக்குரியவன்” என்றாள்.”(49)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தப் பெரும் முனிவர் காவியர், தேவயானி சொன்னதை நினைத்துத் துயர்கொண்டு, கோபத்தால் உரத்துப் பேசினார். “என்னுடன் இருக்கும் எனது சீடனைக் கொன்று, நிச்சயமாக இந்த அசுரர்கள் என்னைக் காயப்படுத்தவே (எனக்குத் துரோகம் செய்யவே) எண்ணுகின்றனர்.(50) இந்த ருத்ர வழிபாட்டாளர்கள், என்னை அவர்களது குற்றத்தில் பங்கெடுக்கச் செய்து, என்னைப் பிராமணத் தன்மையை இழக்கச் செய்கின்றனர். உண்மையில் இந்தக் குற்றத்திற்கு ஒரு கொடூர முடிவு இருக்கிறது. ஒரு பிராமணனைக் கொல்லும் குற்றம் என்பது இந்திரனையே எரித்துவிடக் கூடியது” என்று சொல்லிவிட்டு, தேவயானியால் அவரசப்படுத்தப்பட்டு, மரணத்தின் கோரப்பற்களுக்குள் நுழைந்த கசனுக்குச் சுக்ரன் கட்டளையிடத் தொடங்கினார். ஆனால், அந்த அறிவியலின் துணை கொண்டு கட்டளையிடப்பட்ட கசன், தனது குருவுக்கு நேரப்போகும் அபாயத்தை நினைத்து பயந்து, தளர்ந்த குரலில்,(51) அந்தக் குருவின் வயிற்றுக்குள் இருந்து, “ஓ தலைவரே! என்னிடம் கருணை கொள்ளுங்கள். நான் கசன் உம்மை வழிபடுகிறேன். என்னிடம் உமது அன்புக்குரிய மகனைப் போல் நடந்து கொள்ளுங்கள்” என்றான்.”

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சுக்ரன், “ஓ பிராமணா, நீ எந்த வழியில் எனது வயிற்றில் நுழைந்தாய்? இப்போது நீ எங்கே இருக்கிறாய்? இந்தக்கணத்தில் இந்த அசுரர்களை விட்டகன்று, தேவர்களிடம் செல்லப்போகிறேன்” என்றார்.(52)

கசன், “உமது கருணையால், நான் எனது நினைவை இழக்கவில்லை. நிச்சயமாக எனக்கு என்ன நேர்ந்தது என்று என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. எனது துறவின் அறங்கள் அழியவடையவில்லை. எனவே, எனது இந்தத் தாங்க முடியாத வலியைத் தாங்கிக் கொள்ள முடிகிறது.(53) ஓ காவியரே, அசுரர்களால் நான் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டுச் சாம்பலாகக் குறைக்கப்பட்டு, உமது மதுவில் கலக்கப்பட்டு, மதுவை நீர் அருந்தும்போது உமக்குள் வந்தேன். நீர் இருக்கும் வரை அசுரர்களின் திறமை அழியாது, குறிப்பாக அந்த பிராமண அறிவியல் {பிரம்ம மாயை} அழியாது” என்றான்.(53)

இதைக்கேட்ட சுக்ரன் தனது மகளிடம், “ஓ மகளே! உனக்கு என்ன நன்மையை நான் செய்ய முடியும்? எனது இறப்பால்தான், கசன் தனது உயிரைப் பெறுவான். ஓ தேவயானி, கசன் என்னுள் இருக்கிறான். எனது வயிற்றைக் கிழித்து வருவதைத் தவிர அவன் வெளியே வர வேறு வழி இல்லை” என்றார்.(54) அதற்குத் தேவயானி, “இரண்டு தீமையும் என்னை நெருப்பைப் போல் சுட்டெரிக்கும். கசனின் இறப்பும், உமது இறப்பும் எனக்கு ஒன்றேயாம். கசன் இறந்தாலும், நீர் இறந்தாலும் நான் எனது உயிரைத் தாங்க முடியாது” என்றாள்.(55)

பிறகு சுக்ரன் சொன்னார், “ஓ பிருஹஸ்பதியின் மகனே, தேவயானி உன்னைப் பெரிதும் மதிப்பதால், நிச்சயமாக நீ ஏற்கனவே வெற்றி மகுடம் தரித்து விட்டாய். நிச்சயமாகக் கசனின் உருவத்தில் இருக்கும் இந்திரனாக நீ இல்லாவிட்டால், நான் இன்று உனக்குச் சொல்லப்போகும் அறிவியலை ஏற்றுக் கொள்வாயாக.(56) யாராலும் உயிருடன் எனது வயிற்றைவிட்டு வெளியே வரமுடியாது. இருப்பினும், ஒரு பிராமணன் கொல்லப்படலாகாது. எனவே, உனக்கு கற்பிக்கும் அறிவியலை ஏற்றுக் கொள்வாயாக.(57) எனது மகனாக உனது வாழ்க்கையைத் தொடங்குவாயாக. என்னால் உனக்குக் கொடுக்கப்படும் ஞானத்தைப் பெற்றுக்கொண்டு, என்னை மீட்டெடுப்பாயாக. எனது உடலை விட்டு வெளியே வந்து, கருணையோடு நடந்து கொள்வதில் கவனமாக இருப்பாயாக” என்றார்.”(58)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “குருவால் அளிக்கப்பட்ட அறிவியலைப் பெற்றுக் கொண்ட அந்த அழகான கசன், அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் முளைக்கும் முழு நிலவாக வெளியே வந்தான்.(59) தனது குருவின் உடல் தவங்களின் குவியல் போல் கிடப்பதைக் கண்ட கசன், அவரைத் தான் கற்ற அந்த அறிவியலின் துணை கொண்டு மீட்டெடுத்தான். அவரை மதிப்புடன் வழிபட்ட கசன், தனது குருவிடம்,(60) “ஞானமில்லாத எனக்கு நீர் செய்தது போலவே, ஒருவனது காதுகளுக்குள், ஞானம் எனும் அமுதத்தினை ஊற்றும் ஒருவரை நான் தந்தையாகவும் தாயாகவும் மதிப்பேன். இந்தப் பெரும் சேவையை நினைவு கூரும் எவனாலும், எப்படி நன்றிகெட்டனாகி அப்படிப்பட்டவரைக் காயப்படுத்த முடியும்?(61) ஞானத்தைக் கொடுக்கும், உலகத்தின் பொருட்களனைத்திலும் பொக்கிஷமான தனது குருவால் ஞானமடைந்து, அவருக்கே காயத்தை ஏற்படுத்துபவர்கள் இந்த உலகத்தால் வெறுக்கப்பட்டு, இறுதியில் பாவங்கள் செய்தவர்கள் செல்லும் உலகத்தை அடைவர்” என்றான்.”(62)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “கல்விமானான அந்தச் சுக்ரன், மதுவின் மயக்கத்தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்தப் பானத்தால் ஏற்பட்ட பெருத்த இழப்பை எண்ணிப்பார்த்து, நினைவு மங்கிய நிலையில் கசனைத் தான் அந்த மதுவுடன் விழுங்க வேண்டி வந்ததை நினைத்துப் பார்த்து, பிராமணர்களின் நடத்தை விதிகளைச் சீர்திருத்த எண்ணம் கொண்டார். அந்த உயர் ஆன்ம உசானஸ், கோபத்துடன் தரையிலிருந்து எழுந்து,(63,64) “இந்த நாள் முதல், மயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மது அருந்தும் பிராமணன் பாவியாவான். அவன் தனது எல்லா அறங்களையும் இழந்ததாகக் கருதப்படுவான். அவன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தைத் தாங்கியவனாவான். அவன் இந்த உலகத்திலும் மற்ற உலகங்களிலும் வெறுக்கப்படுவான்.(65) இந்த நடத்தை மற்றும் கௌரவ விதியை எல்லா பிராமணர்களுக்கும் உரித்தாக்குகிறேன். நேர்மையான பிராமணர்களும், பெரியோர்களை மதிப்போரும், தேவர்களும், இந்த மூன்று உலகமும் இதைக் கேட்கட்டும்” என்று சொல்லிவிட்டு,(66) அந்த உயர் ஆன்மாவைக் கொண்டவர், விதியால் நல்ல மதியை இழந்த தானவர்களை அழைத்து, துறவிகளின் துறவியான அவர், அவர்களிடம்,(67) “மூடர்களான தானவர்களே, கசன் அவனது நோக்கத்தை அடைந்து விட்டான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் இனி என்னுடன்தான் வசிப்பான். இறந்தோரை மீட்கும் ஞானத்தை அடைந்த அவன், பிரம்மனுக்கு நிகரான பலத்துடன் இருப்பான்” என்றார்.”(68)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பார்கவர் இப்படிச் சொல்லிவிட்டுத் தனது பேச்சை நிறுத்தினார். தானவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்து, தங்கள் இல்லங்களுக்குச் சென்றனர்.(69) கசனும், முழுவதுமாக ஆயிரம் வருடங்கள் தனது குருவுடன் இருந்து, அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தனது வசிப்பிடமான தேவலோகத்திற்குத் திரும்பத் தயாரானான்” {என்றார் வைசம்பாயனர்}.(70)

தேவயானியை ஏற்க மறுத்த கசன்! – பகுதி 77-சம்பவ பர்வம் – 13)கசனை விரும்பிய தேவயானி; தேவயானிக்கும் கசனுக்கும் நடந்த உரையாடல்; தேவயானி கசனுக்கு அளித்த சாபம்

வைசம்பாயனர் சொன்னார், “கசன், தனது விரதத்தின் காலம் முடிந்தவுடன் தனது குருவிடம் அனுமதி பெற்றுத் தேவலோகத்திற்குத் திரும்ப முடிவு செய்தபோது, தேவயானி அவனிடம்,(1) “ஓ அங்கீரஸ முனிவரின் பேரனே, நடத்தையால், பிறப்பால், கல்வியால், தவத்தால், பணிவால், நீர் மிகவும் பிரகாசிக்கிறீர்.(2) எப்படி அங்கீரஸ முனிவர் மதிப்புடனும், மரியாதையுடனும் எனது தந்தையால் நினைக்கப்படுகிறாரோ, அப்படியே நானும் உமது தந்தையை மதித்து வழிபடுகிறேன்.(3) ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, இதை அறிந்து, நான் சொல்வதைக் கேளும். உமது பிரம்மச்சர்ய விரதக் காலத்தில் நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதை நினைத்துப் பாரும்.(4) இப்போது உமது விரதம் முடிந்து விட்டது. இனி உமது அன்பையும், பாசத்தையும் என்னுள் நிலைத்திருக்க வைப்பீராக. உரிய மந்திரங்களுடன் எனது கரத்தை ஏற்றுக் கொள்வீராக” என்றாள்.(5)

அதற்குக் கசன், “என் மரியாதைக்குரியவள் நீ. உனது தந்தையை வழிபடுவது போலவே உன்னையும் நான் வழிபடுகிறேன்.(6) ஓ களங்கமற்ற குணங்கள் கொண்டவளே! நீ என்னால் பெரிதும் மதிக்கப்படுபவள். நீ அந்த உயர் ஆன்ம பார்கவருக்கு (சுக்ரன்) அவரது உயிரைவிட அருமையானவள். ஓ இனிமையானவளே! நீ எனது குருவின் மகளாதலால், நீ எப்போதும் என்னால் வழிபடத்தகுந்தவள்.(7) ஓ தேவயானி! எனது குரு சுக்ரன் எப்படி எனது உயர்ந்த மரியாதைக்குரியவரோ, நீயும் அப்படியே.  எனவே, நீ என்னிடம் இவ்வாறு சொல்லக்கூடாது” என்றான்.(8)

தேவயானி, “நீர் எனது தந்தையின் குருவுடைய மகனின் மகன் {பேரன்} ஆவீர். எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, நீர் எனது மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் தகுதி வாய்ந்தவர்.(9) ஓ கசரே, நீர் அசுரர்களால் கொல்லப்பட்ட போதெல்லாம், நான் உம்மிடம் எப்படி அன்புடன் நடந்து கொண்டேன் என்று நினைத்துப் பாரும்.(10) ஓ ஒழுக்கமானவரே! எனது நட்பையும், பாசத்தையும், எனது வழிபாட்டையும் மரியாதையையும் எண்ணிப்பாரும். என்னிடம் குறை இல்லாதபோது, நீர் என்னை நிராகரிக்கக்கூடாது. நான் உம்மை உண்மையான அர்ப்பணிப்புடன் நினைக்கிறேன்” என்றாள்.(11)

இவையனைத்தையும் கேட்ட கசன், “ஓ ஒழுக்கமான விரதங்களுக்குச் சொந்தக்காரியே! இந்தப் பாவகாரியத்தைச் செய்ய என்னைத் தூண்டாதே. ஓ அழகான புருவம் கொண்டவளே! என்னிடம் கருணை கொள்வாயாக. அழகானவளே, நீ எனக்கு எனது குருவை விட மரியாதையில் உயர்ந்தவள்.(12) ஓ பெரிய கண்களுடன் நிலவைப்போல அழகாய் இருப்பவளே! நீ ஒழுக்கம் நிறைந்தவள். நீ வசித்திருந்த காவியரின் உடல் {இப்போது} எனது வசிப்பிடமாகவும் இருக்கிறது.(13) எனவே, உண்மையில் நீ எனது தங்கை முறையாவாய். இனிமையானவளே, நாம் ஒன்றாக, மகிழ்ச்சிகரமாக நமது பொழுதைக் கழித்திருக்கிறோம். நமக்குள் நல்ல புரிந்துணர்வு உண்டு.(14) நாம் பல காரியங்கள் சம்பந்தமாக உரையாடியிருக்கிறோம். அப்போதெல்லாம் எவ்வகையிலேனும் உன்னிடம் ஒழுக்கம் தவறி நடந்திருக்கிறேனா என்று நீ நினைத்துப் பார்க்க வேண்டும். தேவலோகத்திற்குச் செல்ல நான் உன்னிடம் அனுமதி கேட்டு நிற்கிறேன். எனவே, எனது பயணம் பாதுகாப்பாக அமைய என்னை வாழ்த்துவாயாக. என் குருவை கவனித்துக் கொள்ள எப்போதும் தயார் நிலையிலும், இதயத்தால் ஒருமைப்பட்டும் இருப்பாயாக” என்றான்.(15)

தேவயானி, “ஓ கசரே! உம்மிடம் வேண்டிக் கேட்ட பின்பும் என்னை நீர் மனைவியாக்கிக் கொள்ள மறுத்தால், உண்மையில், உமது இந்த ஞானம், உமக்குக் கனி கொடுக்காது போகட்டும்” என்றாள்.(16)

இதைக்கேட்ட கசன், “உன்னிடம் குறைகண்டு நான் உன்னை மறுக்கவில்லை. நீ எனது குருவின் மகளானதாலேயே மறுத்தேன். இது குறித்து எனது குருவின் கட்டளையும் எனக்கில்லை. உனக்கு மனநிறைவுண்டாகுமானால் என்னைச் சபித்துக் கொள்வாயாக.(17) ஒரு முனியின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஓ தேவயானி! உனது சாபத்திற்கு நான் தகுதியானவன் அல்லன். ஆனாலும், என்னைச் சபித்துவிட்டாய். கடமையாலன்றி உணர்ச்சிகளால் உந்தப்பட்டு நீ இந்தச் செயலைச் செய்தாய்.(18) எனவே, இந்த உனது விருப்பம் நிறைவேறாது. எந்த முனிவரின் மகனும் திருமணத்திற்காக உனது கரத்தை ஏற்க மாட்டான்.(19) இந்த ஞானம் எனக்குக் கனி கொடுக்காது என்று சொன்னாய். அப்படியே ஆகட்டும். ஆனால், நான் யாருக்கு இந்த ஞானத்தை உபதேசிக்கிறேனோ, அவனுக்கு அதன் கனி கிடைக்கட்டும்” என்றான்.(20)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “தேவயானியிடம் இப்படிச் சொன்ன அந்த பிராமணர்களில் முதன்மையான கசன், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} வசிப்பிடத்திற்குச் சென்றான்.(21) அவன் வரவை அறிந்த தேவர்கள், இந்திரனை முன் கொண்டு வந்து அவனை வழிபட்டு, அவனிடம்,(22) “நிச்சயமாக நீ எங்களுக்கு மிகுந்த பலன் தரும் காரியத்தைச் செய்திருக்கிறாய். உனது சாதனை அற்புதமானது. உனது புகழ் எப்போதும் சாகாது. வேள்விகளில் அளிக்கப்படும் கொடையை அடைவதில் நீயும் ஒரு பங்குதாரராக இருப்பாய்” என்றனர்.(23)

தேவயானியின் கோபம்! | ஆதிபர்வம் – பகுதி 78-(சம்பவ பர்வம் – 14)பெண்களின் ஆடைகளைக் கலைத்த இந்திரன்; சர்மிஷ்டைக்கும், தேவயானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; கிணற்றில் இருந்து தேவயானியைக் காத்த யயாதி; மகளுக்கு ஆறுதல் சொன்ன சுக்ராச்சாரியார்

வைசம்பாயனர் சொன்னார், “தேவலோகத்தில் வசிப்பவர்கள், அற்புதமான அறிவியலைப் பயின்று வந்த கசனை வரவேற்பதில் மிகுந்த மகிழ்வு கொண்டனர். ஓ பாரதக் குலத்தின் காளையே! கசனிடமிருந்து தேவர்கள் அந்த அறிவியலை அறிந்து கொண்டு தங்கள் குறிக்கோள் நிறைவேறியதாகக் கருதினர்.(1) எல்லோரும் ஒன்றாகக் கூடி, ஆயிரம் வேள்விகள் செய்தவனிடம் {இந்திரனிடம்}, “ஓ புரந்தரா! உனது வீரத்தைக் காட்ட நேரம் வந்துவிட்டது. உனது எதிரிகளைக் கொல்வாயாக” என்றனர்.(2) அப்போது தேவர்களுடன் இருந்த மகவத் {இந்திரன்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். ஆனால் அப்படிப் போகும் வழியில் நிறைய மங்கையரைக் கண்டான்.(3) அந்த மங்கையர் கந்தர்வ மன்னன் சித்ரரதனின் நந்தவனத்திற்கு அருகில் இருந்த தடாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவன் தன்னைக் காற்றாக மாற்றிக் கொண்டு, கரையில் இருந்த அவர்களது ஆடைகளைக் கலைத்துப் போட்டான்.(4) சிறிது நேரம் கழித்து, அந்த மங்கையர் நீரிலிருந்து எழுந்து, தங்கள் ஆடைகளை எடுக்க முற்பட்டு, அந்த ஆடைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து கலைந்திருந்ததைக் கண்டனர்.(5) அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் தேவயானியின் ஆடைகளை விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை எடுத்துக் கொண்டாள்.(6) ஓ மன்னா! அதன் பிறகு அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு சச்சரவு ஏற்பட்டது. (7)

தேவயானி, “ஓ அசுரனின் மகளே! {சர்மிஷ்டையே}, ஏன் எனது ஆடையை எடுத்தாய்? நீ எனது சிஷ்யை அல்லவா? நீ நற்குணங்களற்று இருப்பதால், எந்த நன்மையும் உனக்கு ஏற்படாது” என்றாள்.(8)

அதற்குச் சர்மிஷ்டை, “உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் எனது தந்தையின் கீழ் நோக்கிய பார்வையில் படும் தாழ்ந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, காசு வாங்கிக் கொண்டு புகழ்பவர்களில் ஒருவராக, புகழ்ந்து கொண்டே இருப்பவர்தானே உனது தந்தை.(9) மற்றவர்களைப் புகழ்ந்து, இரந்து வாழ்பவர் மகள்தானே நீ. இரப்பவர்களுக்குப் பிச்சையிட்டு, தான் பிச்சையெடுக்காமல் எல்லோராலும் புகழப்படுபவரின் மகள் நான்.(10) நீயோ பிச்சைக்காரி, உனது மார்பில் அடித்துக் கொண்டு தீய வார்த்தைகள் பேசுவதும், என்னிடம் பகை கொள்வதும், கோபப்படுவதும் உன்போன்றோருக்கு வழக்கம்தான். பிச்சையை ஏற்பவளே, கோபத்தில் அழுவதால் சிந்தும் உனது கண்ணீரெல்லாம் வீண்தான். நான் நினைத்தால், உனக்குத் துன்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அப்படிச் செய்யமாட்டேன். நீதான் சண்டையிட விரும்புகிறாய். ஆனால், நான் உன்னை எனக்குச் சமமாகக் கருதவில்லை என்பதை அறிந்து கொள்” என்று வேகமாக மறுமொழி கூறினாள்.(11)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவயானி மிகுந்த கோபம் கொண்டு அவளிடம் இருக்கும் தனது ஆடைகளைப் பிடுங்கினாள். அதனால், சர்மிஷ்டை, அவளை அங்கிருந்த ஒரு கிணற்றில் தள்ளிவிட்டு, வீடு திரும்பினாள்.(12) அந்தத் தீய சர்மிஷ்டை, நிச்சயமாகத் தேவயானி இறந்து போனாள் என்று கருதி கோபத்துடன் தனது வீடு நோக்கி நடையைக் கட்டினாள்.(13)

சர்மிஷ்டை அந்த இடத்தைவிட்டு அகன்றவுடன், அந்த இடத்திற்கு நகுஷனின் மகன் யயாதி வந்தான்.  அந்த மன்னன் அந்த இடத்திற்கு வேட்டையாடுவதற்காக வந்திருந்தான். அவனது தேருடன் கட்டப்பட்டிருந்த இரு குதிரைகளும், அவனுடன் தனியாக இருந்த ஒரு குதிரையும் மிகவும் களைத்திருந்தன. அந்த மன்னன், மிகுந்த தாகத்துடன் இருந்தான்.(14) அப்போது அந்த நகுஷனின் மகன் அங்கிருந்த கிணற்றைக் கண்டான். அது வற்றிப் போய்க் கிடந்ததைக் கண்டான். ஆனால், அதற்குள் ஆழமாகப் பார்வையைச் செலுத்துகையில், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் மங்கை ஒருத்தி அதனுள் இருப்பதைக் கண்டான்.(15)

அந்த அருளப்பட்ட மன்னன், தேவர்களைப் போன்ற நிறத்தைக் கொண்ட அவளைக் கண்டு, இனிமையான வார்த்தைகளால் அவளிடம்,(16) “ஓ அழகானவளே! பளபளப்பாக்கப்பட்ட தாமிரத்தைப் போன்ற நகங்களையும், தேவலோக ரத்தினங்கள் பொருத்திய கம்மல்களையும் கொண்டிருக்கும் நீ யார்? உன்னைக் கண்டால் மிகுந்த துன்பத்தில் இருப்பது போல் தெரிகிறது. நீ ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய்?(17) நீண்ட புற்களும், கொடிகளும் உடைய இந்தக் கிணற்றுக்குள் நீ எப்படி விழுந்தாய்? ஓ கொடியிடை மங்கையே, உண்மையாகச் சொல், நீ யாருடைய மகள்?” என்றான்.(18)

அதற்குத் தேவயானி, “தேவர்களால் கொல்லப்படும் அசுரர்களின் உயிரை மீட்டெடுக்கும் சுக்ரரின் மகள் நான். எனக்கு நேர்ந்த இந்தத் துயர் அவருக்குத் தெரியாது.(19) ஓ மன்னா, பளபளப்பாக்கப்பட்ட தாமிரத்தைப் போன்ற நகங்களை உடைய இஃது எனது வலக்கரமாகும். நீர் நல்ல பிறப்புப் பிறந்தவர்; எனது கரத்தைப் பற்றி, என்னை மேலேற்றிவிடும்படிக் கேட்கிறேன்.(20) நீர் நன்னடத்தையும், பெரும் வீரமும், பரந்த புகழையும் பெற்றவர் என்பது எனக்குத் தெரியும். எனவே என்னை இந்தக் கிணற்றில் இருந்து மேலேற்றிவிடுவீராக” என்றாள்.”(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அவள் ஒரு பிராமணரின் மகள் என்பதை அறிந்த மன்னன் யயாதி, அவளது வலக்கரத்தைப் பற்றிப் பிடித்து, அந்தக் கிணற்றைவிட்டு வெளியேற்றினான்.(22) அப்படி அந்த ஏகாதிபதி அவளைக் கிணற்றுக்குள் இருந்து வெளியேற்றி, அவளது வழவழப்பான தொடைகளை வைத்தக்கண் வாங்காமல் இனிமையுடன் கண்டுகளித்து, தனது தலைநகர் திரும்பினான்.(23) அந்த நகுஷனின் மகன் சென்றுவிட்ட பிறகு, அங்கு வந்த தனது பணிப்பெண் குர்ணிகையிடம்,(24) “ஓ குர்ணிகா, வேகமாக எனது தந்தையிடம் சென்று இங்கு நடந்ததையெல்லாம் சொல்வாயாக. விருஷபர்வனின் நகரத்திற்குள் நான் இப்போது நுழைய மாட்டேன்” என்றாள்.”(25)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிக் கட்டளையிடப்பட்ட குர்ணிகை, அசுரர் தலைவன் இருக்கும் அறைக்கு வேகமாகச் சென்று, அங்குக் காவியரைக் கண்டு கோபப் பார்வையுடன்,(26) “ஓ பெரும் பிராமணரே, ஓ நற்பேறு பெற்றவரே, கானகத்தில், விருஷபர்வனின் மகளான சர்மிஷ்டையால் தேவயானி தீங்கிழைக்கப்பட்டாள் என்பதை உமக்குத் தெரிவிக்கிறேன்” என்றாள்.(27) சர்மிஷ்டையால் தேவயானி தீங்கிழைக்கப்பட்டாள் என்பதை அறிந்த காவியர் {சுக்கிராச்சாரியார்} கனத்த இதயத்துடன் வெளியே சென்று, கானகத்தில் அவளைத் தேடினார்.(28) கானகத்தில் அவளைக் கண்டவுடன், பாசத்துடன் அவளைக் கட்டியணைத்துத் துயரால் தழுதழுத்த குரலுடன்,(29) “ஓ மகளே! ஒருவரைத் தாக்கும் துயரம், பெரும்பாலும் அவரது தவறுகளாலேயே ஏற்படும். எனவே உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது, அதுவே இந்நேரத்தில் இப்படித் தண்டித்திருக்கிறது” என்றார்.(30)

இதைக்கேட்ட தேவயானி, “இது தண்டனையாக இருக்கட்டும், அல்லாமலிருக்கட்டும்.  கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பீராக. விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை என்னிடம் சொன்னதனைத்தையும் கேட்பீராக.(31) அசுர மன்னனால், வாடகைக்கு அமர்த்தப்பட்ட புகழ்பாடியே நீர் என்று அவள் கண்கள் சிவக்கத் தீய வார்த்தைகளைச் சொன்னாள். அவள் “கூலிக்காக எப்போதும் மற்றவர்களைப் புகழ்பாடிக் கொண்டு, இரந்து பிச்சையெடுத்து வாழ்பவரின் மகள்தானே நீ; நானோ, புகழை ஏற்றுக் கொண்டு, பிச்சையிட்டு, எந்தப் பரிசையும் ஏற்றுக் கொள்ளாதவரின் மகள்” என்றாள். விருஷபர்வனின் மகளான அந்தப் பெருமை கொண்ட சர்மிஷ்டை இப்படியே பேசினாள்.(32-34) ஓ தந்தையே, உண்மையில் நான் வாடகைக்கு அமர்த்தப்பட்டுப் புகழ்பாடிப் பரிசுகளை ஏற்பவரது மகளென்பது உண்மையென்றால், நான் அவளது கருணையைப் பெற அவளைப் புகழ் பாட வேண்டும். இதை நான் அவளிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்” என்றாள்.(35)

அதற்குச் சுக்ரன், “ஓ தேவயானி, நீ வாடகைக்கமர்த்தப்பட்ட பிச்சைக்காரப் புகழ்பாடியின் மகளல்ல. யாரையும் புகழ்பாடாத, எல்லோராலும் புகழப்படுபவனின் மகளே நீ.(36) அதை விருஷபர்வனே அறிவான். இந்திரன் அறிவான். மன்னன் யயாதியும் அறிவான். தெய்வீகத்தன்மையுடன், கற்பனைக்கெட்டாத பிராமணனாக இருப்பதே எனது பலம்.(37) ஒரு முறை என்னால் வழிபடப்பட்ட சுயம்புவே {பிரம்மனே கூட}, நான் இந்தப் பூமிக்கும், தேவலோகத்துக்கும் தலைமையானவன் என்று சொல்லியிருக்கிறார்.(38) நானே நல்லுயிர்களுக்காக மழையைத் தருபவன், நானே எல்லா உயிரினங்களையும் காப்பவன்” என்றார்.”(30)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “துயரத்தாலும், கோபத்தாலும் பொருமிக்கொண்டிருந்த தனது மகளிடம், இனிமையான வார்த்தைகளை அருமையாகச் சொல்லி இவ்வாறு சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் சுக்ரன்.”(40)

சுக்ரன் தேவயானி உரையாடல்! | ஆதிபர்வம் – பகுதி 79சம்பவ பர்வம் – 15)பொறுமையின் சிறப்பு குறித்து தேவயானிக்கு எடுத்துரைத்த சுக்கிராச்சாரியார்; தவறு செய்யும் சீடனைக் குரு தண்டிக்க வேண்டும் என்று தன் தந்தையிடம் சொன்ன தேவயானி

சுக்ரன் தொடர்ந்தார், “ஓ தேவயானி! மற்றவர்களின் தீய பேச்சுகளைப் பொருட்படுத்தாதவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள்வாயாக.(1) குதிரைகளின் கடிவாளத்தை இறுகப்பற்றாமல் தளர்ந்தவாறு பற்றுபவனே உண்மையான சாரதி என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர். எனவே, தனது வளரும் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே உண்மையான மனிதன்.(2) ஓ தேவயானி! தனது வளரும் கோபத்தை அமைதியாகக் கட்டுப்படுத்தி இருப்பவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள்வாயாக.(3) மன்னிப்புக்கு அடைக்கலம் கொடுத்து தனது வளரும் கோபத்தைச் சதுப்பு நிலத்தைவிட்டு அகலும் பாம்பைப் போல அசைத்து, உண்மையான மனிதனாகிறான்.(4) தனது கோபத்தைக் கட்டுப்படுத்துபவன், மற்றவர்களின் தீய பேச்சைப் பற்றி அக்கறைகொள்ள மாட்டான். காரணமிருந்தும் கோபமடையாதவன், நாம் வாழ்வதற்கு அவசியமான நான்கு நிலைகளையும் அடைவான் (அறம், பொருள், இன்பம், வீடு).(5) சோர்வடையாமல் நூறு வருடங்களுக்கு மாதாமாதம் வேள்விகள் செய்பவனுக்கும், இவனுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. எப்போதுமே கோபமடையாதவன் உயர்ந்தவனாவான்.(6) நன்மைக்கும், தீமைக்கும் வித்தியாசம் தெரியாத ஆண்களும், பெண்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வர். ஞானமுள்ளோர் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள்” என்றார்.

தனது தந்தையிடமிருந்து இவற்றைக் கேட்ட தேவயானி, “ஓ தந்தையே! கோபத்துக்கும், மன்னிப்புக்கும் உள்ள வித்தியாசத்தையும், அதனதன் சக்திகளையும் நான் அறிவேன்.(8) ஆனால், ஒரு குரு தனது சீடனுக்கு நன்மையைச் செய்ய விரும்பினால், அந்தச் சீடன் மரியாதைக் குறைவாக நடக்கும்போது அவனை மன்னிக்கக்கூடாது. எனவே, தீய நடத்தையுள்ளோர் இருக்கும் இந்த நாட்டில் இனியும் நான் வாழ ஆசைப்படவில்லை.(9)  நன்னடத்தையுள்ள நல்லவர்களைப் பழித்துப் பேசி, பாவகரக் காரியங்கள் செய்யும் மனிதர்களுடன், நன்மை செய்வதில் விருப்பம் கொண்ட ஞானமுள்ளோர் வசிக்கக்கூடாது.(10) நல்ல நடத்தையுள்ள பிறப்பால் உயர்ந்தவர்கள், மரியாதைக்குரியவர்கள் ஆகியோர் வசிக்கும் இடமே ஒருவன் வாழத்தகுந்த இடம்.(11) விருஷபர்வனின் மகள் உச்சரித்த தீய வார்த்தைகள் காய்ந்த விறகை எரிக்கத் தூண்டிவிடப்பட்ட நெருப்பைப் போல எனது இதயத்தை எரித்துக் கொண்டிருக்கின்றன.(12) நற்பேறு பெற்ற ஓர் எதிரியைப் புகழ்பாடுவதைவிட ஒரு தீய காலம், நற்பேறற்ற ஒரு மனிதனுக்கு மூன்று உலகங்களிலும் வேறு இல்லை. அப்படிப்பட்ட மனிதனுக்கு மரணம் கூடச் சிறந்ததுதான் என்று கற்றவர்களால் சொல்லப்படுகிறது” என்றாள் {தேவயானி}.”(13)

தேவயானியின் அடிமையானாள் சர்மிஷ்டை! | ஆதிபர்வம் – பகுதி 80(சம்பவ பர்வம் – 16)விருஷபர்வனை விட்டு விலகிக் கொள்வதாக சுக்கிராச்சாரியர் சொல்வது; சுக்கிராச்சாரியாரை வேண்டிய விருஷபர்வன்; தேவயானியை வேண்டிய விருஷபர்வன்; சர்மிஷ்டையை அடிமையாகக் கொண்ட தேவயானி

வைசம்பாயனர் சொன்னார், “பிருகு குலத்தில் வந்த காவியர் மிகுந்த கோபம் கொண்டு, அவனது மண்டபத்தில் அமர்ந்திருந்த விருஷபர்வனை அணுகிக் கடினமான வார்த்தைகளால் பேசினார்.(1) அவர், “இந்தப் பூமியைப் போலவே, பாவகரக் காரியங்கள் உடனே பலனளிக்காது! ஆனால் படிப்படியாகவும், இரகசியமாகவும் அதைச் செய்தவனை அஃது அழிக்கும்.(2) அந்தக் கனி {பலன்} தன்னையோ அல்லது தனது மகனையோ அல்லது தனது பேரனையோ கண்டிப்பாக அணுகும். பாவங்கள் அதன் கனியைக் கொடுத்தே தீரும். ஆடம்பர உணவுகளைப் போல, அது செரிக்கவே செரிக்காது.(3) தனது கடமைகளில் அக்கறையோடும், அறம் சார்ந்த தனது ஆன்மிகக் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டும், எனது இல்லத்தில் தங்கியிருந்த அங்கீரஸின் பேரனைக் கொன்றீர்கள்.(4) பிராமணனான அந்தக் கசனைக் கொன்ற பாவத்தின் காரணமாகவும், எனது மகளை நீங்கள் நடத்திய விதத்தின் காரணமாகவும், என்னால் உங்களுடன் இனியும் இருக்க முடியாது.(5) ஓ அசுரர் தலைவனே! {விருஷபர்வா}, பிதற்றல் பேச்சு பேசும் பொய்யனாக என்னை நினைக்காதே? உங்களுடைய குற்றங்களையெல்லாம் திருத்திக் கொள்ளாமல் அதை நீங்கள் எளிதாகக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.(6)

அதற்கு விருஷபர்வன், “ஓ பிருகுவின் மைந்தரே! நீர் ஒழுக்கத்தில் குறைந்தவர் என்றோ, பொய்யர் என்றோ நான் ஒருபோதும் கருதியதில்லை. நிச்சயமாக அறமும், உண்மையும் உம்முள்ளேயே வசிக்கின்றன. ஓ பார்கவரே! என்னிடம் கருணையோடு இருப்பீராக.(7) எங்களைத் துறந்து நீர் செல்வதாயிருந்தால், நாங்கள் மறுபடியும் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டியதுதான். நிச்சயமாக நாங்கள் வேறு எதுவும் செய்ய முடியாது” என்றான்.(8)

சுக்ரன், “அசுரர்களே, நீங்கள் பெருங்கடலின் ஆழத்திற்குச் செல்வீர்களோ, திசைகளெங்கும் தப்பி ஓடுவீர்களோ, அது குறித்து நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. என் மகளின் துயரை தாங்கிக் கொள்ள முடியாதவனாக இருக்கிறேன்.(9) என் மகளே எனக்கு எப்போதும் அன்புக்குரியவள். என் வாழ்வு அவளைச் சார்ந்தே இருக்கிறது. நீங்கள் அவளிடம் வேண்டி கேட்பீர்களாக” என்றார்.(10)

அதற்கு விருஷபர்வன், “ஓ பார்கவரே! இவ்வுலகில் அசுரர் தலைவர்கள் கொண்டிருக்கும் யானைகள், பசுக்கள், குதிரைகள் ஆகியவற்றுக்கும், ஏன் எனக்கே கூட தாங்களே முற்றான தலைவராவீர்” என்றான்.(11)

சுக்ரன், “ஓ பெரும் அசுரனே! நானே அசுரர்களின் செல்வத்திற்குத் தலைவன் என்பது உண்மையாக இருப்பின், எனது மகள் தேவயானியிடம் சென்று அவளை மனநிறைவு கொள்ளச் செய்வாயாக” என்றார்.”(12)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “காவியர் {சுக்கிராச்சாரியார்}, விருஷபர்வனிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தேவயானியிடம் சென்று, நடந்தது அனைத்தையும் சொன்னார். அதற்குத் தேவயானி விரைவாகப் பதிலளித்தாள்,(13)

அவள், “ஓ பார்கவரே! நீரே அசுர மன்னனின் தலைவராகவும், அவனது செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகவும் இருப்பின், மன்னனே இங்கு வந்து என்னிடம் அப்படிச் சொல்லட்டுமே” என்றாள்.(14)

அதன்பிறகு விருஷபர்வன் தேவயானியிடம் வந்து, “ஓ இனிமையான புன்னகையுடைய தேவயானி! நீ எதை விரும்பினாலும், அஃது எவ்வளவு கடினமாக இருப்பினும், அதை உனக்குக் கொடுப்பேன்” என்றான்.(15)

தேவயானி, “சர்மிஷ்டையுடன் கூடிய ஆயிரம் மங்கையர் எனக்குப் பணியாட்களாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! எனது தந்தை என்னை எங்கு அளிக்கிறாரோ (திருமணம் செய்து கொடுக்கிறாரோ) அங்கும் அவள் என்னைப் பின் தொடர வேண்டும்” என்று பதிலுரைத்தாள்.(16)

விருஷபர்வன் தனது பணிப்பெண் ஒருத்தியிடம், “நீ சென்று, உடனே சர்மிஷ்டையை இங்கு அழைத்து வா. அவள் தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றட்டும்” என்று கட்டளையிட்டான்.”(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தப் பெண் பணியாள் சர்மிஷ்டையிடம் சென்று, “ஓ இனிமையான சர்மிஷ்டா! உனது உறவினர்களுக்கு நன்மையைச் செய்ய, உடனே எழுந்து என்னைத் தொடர்ந்து வருவாயாக.(18) தேவயானியின் தூண்டுதலால், அந்த பிராமணர் (சுக்ரன்) தனது சீடர்களை (அசுரர்கள்) விட்டு அகலப் போகிறார். ஓ பாவமற்றவளே! நீ தேவயானி விரும்பியதைச் செய்ய வேண்டும்” என்றாள்.(19)

சர்மிஷ்டை, “தேவயானி விரும்பியதை நான் மகிழ்வுடன் செய்வேன். தேவயானியின் தூண்டுதலாலேயே சுக்ரன் என்னை அழைக்கிறார். எனது தவறால், சுக்ரன், தேவயானி ஆகிய இருவரும் அசுரர்களை விட்டு அகலக்கூடாது” என்றாள்.”(20)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “தனது தந்தையால் கட்டளையிடப்பட்ட சர்மிஷ்டை, தனது தந்தையின் மண்டபத்தை விட்டு, ஆயிரம் மங்கையருடன் விரைவாக ஒரு பல்லக்கில் வந்தாள்.(21)

அவள் தேவயானியை அணுகி, “ஆயிரம் மங்கையருடன், நான் உனது பணியாளாக இருக்கிறேன். உன்னை உனது தந்தை எங்கு அளிக்கிறாரோ அங்கும் உன்னைப் பின்தொடர்வேன்” என்றாள்.(22)

தேவயானி, “நான், உனது தந்தையின் புகழைப் பாடிக் கொண்டு, பிச்சையெடுத்து, இரந்துண்டு வாழும் ஒருவரின் மகள் ஆயிற்றே. நீயோ புகழப்படுபவள். நீ எவ்வாறு எனக்குப் பணிப்பெண்ணாக முடியும்?” என்றாள்.(23)

சர்மிஷ்டை, “துன்பத்தில் உழலும் உறவினர்களுக்கு ஒருவன் அவனாலான எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். எனவே, நான் உனது தந்தை உன்னை எங்குக் கொடுக்கிறாரோ அங்கும் தொடர்வேன்” என்றாள்.”(24)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா, சர்மிஷ்டை இப்படித் தேவயானியிடம் பணியாளாக இருப்பதாக உறுதியளித்ததும், தேவயானி தனது தந்தையிடம்,(25) “ஓ பிராமணர்களில் சிறந்தவரே! நான் மனநிறைவடைந்தேன். இனி நான் அசுரர் தலைநகருக்குள் நுழைவேன்! உமது அறிவியலும், ஞானத்தின் சக்தியும் பலனற்றவையல்ல என்பதை நான் இப்போது உணர்ந்தேன்!” என்றாள்.”(26)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தப் பெரும் நற்பெயர் பெற்ற பிராமணர்களில் சிறந்தவர், தனது மகளால் இப்படிச் சொல்லப்பட்டதும், அசுரர் தலைநகருக்குள் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நுழைந்தார். அவரைத் தானவர்கள் பெருமதிப்புடன் வழிபட்டனர்.”(27)

யயாதியின் திருமணம்! | ஆதிபர்வம் – பகுதி 81(சம்பவ பர்வம் – 17)தேவயானியை மீண்டும் கண்ட யயாதி; அவளும், சர்மிஷ்டையும் யார் என்று கேட்ட யயாதி; தன்னை மணந்து கொள்ள வேண்டும் என யயாதியைக் கேட்ட தேவயானி; அஞ்சிய யயாதி; யயாதிக்கும், தேவயானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; தேவயானியை யயாதிக்கு மனைவியாக அளித்த சுக்கிராச்சாரியார்.

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே!, சில காலம் கழித்து, அழகான நிறம் கொண்ட தேவயானி, இன்பமாக இருக்கக் கானகத்திற்குச் சென்றாள்.(1) சர்மிஷ்டையுடனும் மற்ற பணிப்பெண்களுடனும் சென்ற தேவயானி, பழைய இடத்திலேயே திரிந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.(2) அத்தனை பணியாட்களின் சேவையையும் ஏற்றுப் பெருமகிழ்வு கொண்டாள். இதயம் இலகுவாகி விளையாடிக்கொண்டு, மலர்களிலிருக்கும் தேனையும், பலதரப்பட்ட கனிகளையும் உண்டு களித்தாள். அந்த நேரத்தில், நகுஷனின் மகன் யயாதி மிகுந்த களைப்புடனும், தாகத்துடனும் மானைத் தேடிக் கொண்டு அங்கு வந்தான். அங்கு, தேவலோக ஆபரணங்கள் பூண்டு, நறுமணத்துடன் திகழ்ந்த தேவயானி, சர்மிஷ்டை மற்றும் பல மங்கையரையும் கண்டான்.(3-5) அங்கிருந்தவர்களிலேயே இனிய புன்னகையுடைய தேவயானி, அழகிய நிறத்துடனும், இணையில்லாத அழகுடனும், இயல்பாகச் சாய்ந்திருந்தாள். அவளது கால்களைச் சர்மிஷ்டை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள்.(6)

இவை யாவையும் கண்ட யயாதி, “ஓ இனிமையானவர்களே!, உங்கள் இருவரின் பெயர்கள் என்ன? உங்கள் பெற்றோர் யார்? இந்த இரண்டாயிரம் மங்கையரும் உங்களுக்குப் பணி செய்யக் காத்திருப்பது போலத் தெரிகிறதே” என்றான்.(7)

அந்த ஏகாதிபதி சொன்னதைக் கேட்ட தேவயானி, “ஓ மனிதர்களில் சிறந்தவரே! நான் சொல்வதைக் கேட்பீராக. அசுரர்களின் ஆன்மீக வழிகாட்டியான சுக்ரனின் மகள் நான் என்பதை அறிந்து கொள்வீராக.(9) இந்த எனது தோழி, எனது பணிப்பெண்ணாவாள். நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் எனக்குப் பணி செய்வாள். இவள் அசுர மன்னன் விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டையாவாள்” என்று பதிலளித்தாள்.(10)

அதன்பிறகு யயாதி, “இந்த அழகான புருவங்களும், அழகான நிறமும் கொண்ட உனது தோழி, அசுரர் தலைவனின் மகளாக இருந்தும், ஏன் உனக்குப் பணிப்பெண்ணாக இருக்கிறாள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்” என்று கேட்டான்.(11)

அதற்குத் தேவயானி, “ஓ மன்னர்களில் சிறந்தவரே! எல்லாம் விதியின் பயனாக நிகழ்பவை. இதுவும் அப்படிப்பட்ட விதிப்பயனே, இதற்காக ஆச்சரியப்படாதீர்.(12) உமது குணங்களும், ஆடைகளும் மன்னர்களுக்குரியவை போல் தெரிகிறது. உமது பேச்சும் வேதங்களின்படி அழகாகவும், சரியாகவும் இருக்கிறது. உமது பெயர் என்ன? எங்கே இருந்து வருகிறீர்? நீர் யாருடைய மகன் என்பதை எனக்குச் சொல்லும்” என்று கேட்டாள்.(13)

அதற்கு அந்த ஏகாதிபதி, “எனது பிரம்மச்சரிய காலத்தில் முழு வேதங்களும் எனது காதுகளுக்குள் நுழைந்தன. நான் யயாதி என்று அறியப்படுகிறேன். எனது தந்தை ஒரு மன்னர், நானும் ஒரு மன்னனே” என்று பதிலுரைத்தான்.(14)

தேவயானி, “ஓ மன்னா! நீர் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்? தாமரைகளைச் சேகரிக்கவா? அல்லது மாற்றத்திற்காகவா? அல்லது வேட்டையாடவா?” என்று விசாரித்தாள்.(15)

யயாதி, “ஓ இனிமையானவளே! மானைத் தேடிவந்து தாகமடைந்தேன். இங்கே தண்ணீர் கிடைக்குமா என்றே வந்தேன். நான் மிகவும் களைத்துவிட்டேன். நான் இந்த இடத்தை விட்டகல உனது உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்” என்றான்.(16)

தேவயானி, “எனது இரண்டாயிரம் மங்கைகளுடனும், எனது பணிப்பெண் சர்மிஷ்டையுடனும், நான் உமது கட்டளைகளுக்காகக் காத்திருக்கிறேன். வளமை உமதாகட்டும். நீர் எனது நண்பராகவும், தலைவராகவும் இருப்பீராக” என்று பதிலளித்தாள்.(17)

யயாதி, “இனிமையானவளே! உன்னைப் பெற எனக்குத் தகுதி கிடையாது. என்னைவிடத் தகுதியில் வெகுவாக உயர்ந்த சுக்ரனின் மகள் நீ. உனது தந்தை, உன்னைப் பெரும் மன்னனுக்கே கூட அளிக்க முடியாது (மாட்டார்)” என்று சொன்னான்.(18)

தேவயானி, “இதற்கு முன்பு, பிராமணர்கள் க்ஷத்திரியர்களுடனும், க்ஷத்திரியர்கள் பிராமணர்களுடனும் இணைந்திருக்கிறார்கள். நீர் ஒரு முனிவரின் மைந்தன், ஏன், நீரே ஒரு முனிவர்தான். எனவே, ஓ நகுஷனின் மைந்தரே! என்னைத் திருமணம் செய்து கொள்வீராக” என்று பதிலுரைத்தாள்.(19)

யயாதி, “ஓ அழகான குணங்கள் கொண்டவளே! நான்கு வர்ணங்களும் ஒருவரின் உடலில் இருந்தே உற்பத்தியாயின. ஆனால் அவர்களது கடமைகளும், தூய்மையும் ஒன்றல்ல. ஒரு பிராமணன் எல்லோரினும் மேன்மையானவன்” என்றான்.(20)

தேவயானி, “இந்த எனது கரம், உம்மைத் தவிர இதற்கு முன் எந்த மனிதனாலும் தொடப்பட்டதில்லை. எனவே, நான் உம்மை எனது தலைவனாக ஏற்றுக் கொண்டேன். உம்மைப் போன்ற முனி ஒருவரால் தொடப்பட்ட எனது கரங்களை வேறு எவர்தான் தொடுவார்?” என்று பதிலுரைத்தாள்.(21,22)

யயாதி, “கோபத்துடன் இருக்கும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பையோ, சுடர்விட்டு எரிந்து பரவிவரும் நெருப்பின் தழல்களையோவிட, ஒரு பிராமணனே தவிர்க்கப்பட வேண்டியவன் என்பதை ஞானமுள்ளோர் அறிவர்” என்று சொன்னான்.(23)

தேவயானி அந்த ஏகாதிபதியிடம், “ஓ மனிதர்களில் காளையே! கோபத்துடன் இருக்கும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பையோ, சுடர்விட்டு எரிந்து பரவிவரும் நெருப்பின் தழல்களையோவிட, ஒரு பிராமணனே தவிர்க்கப்பட வேண்டியவன் என்று ஏன் சொல்கிறீர்?” என்று கேட்டாள்.(24)

அதற்கு அந்த ஏகாதிபதி, “பாம்பு ஒருவரைத்தான் கொல்லும், கூர்முனை ஆயுதமும் ஒருவரைத் தான் கொல்லும். ஆனால் ஒரு பிராமணன் கோபமடையும்போது, மொத்த நகரங்களையும், அரசாங்கங்களையும் கொல்கிறான்.(25) ஒ மருட்சியுடையவளே! எனவேதான் நான் மற்றவற்றைக் காட்டிலும் பிராமணன் தவிர்க்கப்பட வேண்டியன் என்று குறிப்பிட்டேன். எனவே ஓ இனிமையானவளே! உனது தந்தை உன்னை எனக்களிக்காமல், என்னால் உன்னைத் திருமணம் செய்ய முடியாது” என்று பதிலுரைத்தான்.(26)

தேவயானி, “நீர் என்னால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர் என்பதே நிச்சயம். நீராக என்னைக் கேட்கவில்லை என்பதும் நிச்சயம். ஓ மன்னா! எனது தந்தை என்னை உமக்கு அளித்தால், நீர் என்னை ஏற்றுக் கொள்வீர் என்று அறிகிறேன். நீர் எளிமையான என்னை ஏற்றுக் கொள்வதில் அஞ்ச வேண்டியதில்லை.” என்றாள்.”(27)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதன்பிறகு, தேவயானி ஒரு பணிப்பெண்ணைத் தன் தந்தையிடம் அனுப்பினாள். அந்தப் பணிப்பெண் சுக்ரனிடம் நடந்த அனைத்தையும் விவரித்தாள்.(28) அனைத்தையும் கேட்டறிந்து கொண்ட பார்கவர், யயாதியை வந்து சந்தித்தார். பார்கவர் வருவதைக் கண்ட யயாதி அவரை இருகரம் கூப்பி வணங்கி, புகழ் வார்த்தைகள் சொல்லி, அவரது உத்தரவுகளுக்காக எதிர்பார்த்திருந்தான்.(29)

தேவயானி, “ஓ தந்தையே! இவர் நகுஷனின் மைந்தர். நான் {கிணற்றில் வீசப்பட்டுத்} துயரத்தில் இருந்த போது, இவர் எனது கரத்தைப் பற்றினார். நான் உம்மை வணங்குகிறேன். என்னை அவருக்கு அளியுங்கள். இந்த உலகத்தில் வேறு எந்த மனிதரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றாள்.(30)

சுக்ரன், “ஓ அற்புதமான வீரம் மிக்கவனே! என் அன்பான மகளால் அவளது தலைவனாக நீ நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறாய். நான் அவளை உனக்கு அளிக்கிறேன். எனவே, ஓ நகுஷனின் மைந்தா! இவளை உனது மனைவியாக ஏற்றுக் கொள்வாயாக” என்றார்.(31)

யயாதி, “ஓ பிராமணரே, நான் ஒரு வரத்தைக் கேட்கிறேன். இந்தக் காரியத்தை நான் செய்வதால், வளராத கருவைப் பெறும் பாவம் என்னை அணுகாதிருக்கட்டும்” என்றான்.(32)

சுக்ரன் அவனிடம், “நான் அந்தப் பாவத்திலிருந்து உன்னைக் காக்கிறேன். நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. இவளை மணந்து கொள்ள அஞ்சாதே. நிரந்தரத்தீர்வை நான் உனக்களிக்கிறேன்.(33) உன் மனைவியான கொடியிடையாள் தேவயானியை அறத்துடன் காப்பாயாக. அவளுடைய துணையோடு நீ செய்யும் பயணங்கள் இனிமையானதாக அமையும்.(34) விருஷபர்வனின் இந்த மகள் சர்மிஷ்டை உன்னால் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். அவளை உனது படுக்கைக்கு நீ அழைக்கக்கூடாது” என்றார்.(35)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சுக்ரனால் இப்படிச் சொல்லப்பட்ட யயாதி, அந்தப் பிராமணரை வலம் வந்தான். அதன்பிறகு அந்த மன்னன் சாத்திரங்களில் சொல்லப்பட்டவாறு சடங்குகளைச் செய்து திருமணம் செய்து கொண்டான்.(36) சுக்ரனிடமிருந்து வளமான பொக்கிஷங்களான அருமையான தேவயானி, சர்மிஷ்டை மற்றும் இரண்டாயிரம் மங்கையரையும் பெற்றுக்கொண்டு,(37) சுக்ரனாலும், அசுரர்களாலும் மரியாதையாக நடத்தப்பட்ட அந்த ஏகாதிபதி, பார்கவரால் உத்தரவிடப்பட்டுத் தனது தலைநகருக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினான்.”(38)

யயாதியை ஏற்கவைத்த சர்மிஷ்டை! | ஆதிபர்வம் – பகுதி 82(சம்பவ பர்வம் – 18)சர்மிஷ்டை யயாதி சந்திப்பு; யயாதியை வேண்டிய சர்மிஷ்டை; சுக்கிராச்சாரியார் தனக்கிட்ட கட்டளையை சர்மிஷ்டையிடம் நினைவுகூர்ந்த யயாதி; சர்மிஷ்டைக்கும், யயாதிக்கும் இடையில் நடந்த உரையாடல்; சர்மிஷ்டையை ஏற்றுக் கொண்ட யயாதி; கருத்தரித்த சர்மிஷ்டை…

வைசம்பாயனர் சொன்னார், “அதன் பிறகு யயாதி, இந்திரனின் நகரத்தைப் போன்ற தனது நகரத்திற்குத் திரும்பி, தனது அந்தப்புரத்திற்குள் நுழைந்து, தனது மனைவி தேவயானியை அங்கு அமர்த்தினான்.(1) பிறகு அந்த ஏகாதிபதி, தேவயானியின் வழிகாட்டுதலின்படி செயற்கை வனமான அசோக மரங்களைக் கொண்ட நந்தவனத்திற்கு அருகில் ஒரு மாளிகையைக் கட்டி விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டையை அமர்த்தினான்.(2) ஆயிரக்கணக்கான மங்கையர்சூழ இருந்த சர்மிஷ்டைக்குத் தகுந்த மரியாதைகளைச் செய்து, அவளுக்கான உணவுக்கும், ஆபரணங்களுக்கும் ஏற்பாடு செய்தான்.(3)

அந்த நகுஷனின் மைந்தன் பல ஆண்டுகள் அருள்நிறைந்த சூழ்நிலையில் தேவயானியுடனே தேவனைப்போல இன்பமாகக் கழித்தான்.(4) அவளது கனிதரும் காலம் வந்தபோது, அந்த அழகான தேவயானி கருவுற்றாள். அவள் தனது முதல் பிள்ளையாக ஒரு அழகான ஆண்பிள்ளையை ஈன்றெடுத்தாள்.(5) அதன்பிறகு ஆயிரம் வருடம் கழிந்த பிறகு, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை பூப்பெய்தி, தனது கனி தரும் காலம் வந்ததை அறிந்து ஆவல்கொண்டு தனக்குள்ளேயே,(6) “எனது பருவகாலம் வந்துவிட்டது. ஆனால் நான் இன்னும் எனது மணாளனைத் தேர்ந்தெடுக்கவில்லை. என்ன நடந்துவிட்டது? நான் என்ன செய்ய வேண்டும்? எனது ஆசையின் கனிகளை நான் பெறுவது எப்படி?(7) தேவயானி தாயாகிவிட்டாள். எனது இளமை இப்படியே வீணாகக் கழியப்போகிறது. தேவயானி தேர்ந்தெடுத்தவரையே நானும் கணவராகத் தேர்ந்தெடுக்கலாமா?(8) நிச்சயமாக அதுதான் எனது தீர்மானம். அந்த ஏகாதிபதியே எனக்கு மகனைத் தர வேண்டும். அந்த அறம் சார்ந்தவர் என்னைத் தனிமையில் சந்திக்க மாட்டாரா?” என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.(9)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சர்மிஷ்டை இப்படித் தனது சிந்தனையில் மூழ்கியிருந்தபோது, எதிர்பாராமல் அசோகவனத்திற்கு வந்த மன்னன், சர்மிஷ்டையைக் கண்டு அமைதியாக நின்றான்.(10) எந்தச் சாட்சியும் இல்லாத இடத்தில் அந்த ஏகாதிபதியைக் கண்டவளும், இனிய புன்னகை கொண்டவளுமான சர்மிஷ்டை, அவனை அணுகித் தனது கரங்களைக் கூப்பி,(11) “ஓ நகுஷ மைந்தரே! சோமன், இந்திரன், விஷ்ணு, யமன், வருணன் மற்றும் உமது அந்தப்புரங்களில் உள்ள மகளிரை யாராலும் காண முடியாது.(12)  ஓ மன்னா! நான் அழகானவள் என்பதையும், நல்ல குலத்தில் பிறந்தவள் என்பதையும் நீர் அறிவீர். ஓ மன்னா! நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். கனிதரும் {பருவ} காலம் எனக்கு வந்துவிட்டது. அது வீணாகாமல் பார்த்துக் கொள்வீராக” என்றாள்.(13)

அதற்கு யயாதி, “நீ நல்ல குலத்தில் பிறந்தவள் என்பதை நான் நன்கறிவேன். நீ பெருமை மிக்கத் தானவர்களின் குலத்தில் பிறந்தவளாவாய். நீ அழகைக் கொடையாகக் கொண்டிருக்கிறாய். நிச்சயமாக, நான் உனது குணத்தில் எந்தக் களங்கத்தையும் காணவில்லை.(14) நான் தேவயானியுடன் இணைந்த போது, உசானஸ் {சுக்ரன்}, விருஷபர்வனின் மகளை நீ உனது படுக்கைக்கு அழைக்கக்கூடாது என்று எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று பதிலுரைத்தான்.(15)

சர்மிஷ்டை, “ஓ மன்னா! கேலிக்காவும், மாதரிடம் கலவிக்காகவும், திருமணத்திற்காகவும், தன் சொல்லால் ஒருவருக்கு மரணமேற்படக்ககூடிய நிலையிலும், தன் செல்வத்தையெல்லாம் இழக்கும்போதும் ஒருவன் பொய்யுரைப்பது பாவமன்று என்று சொல்லப்படுகிறது. பொய்யுரைப்பது இந்த ஐந்து சமயங்களில் மன்னிக்கப்படுகிறது.(16) ஓ மன்னா! கேட்கப்படும் போது, ஒருவன் உண்மையை உரைக்கவில்லை என்பதால் அவன் பாவமிழைக்கிறான் என்பது உண்மையாகாது. ஒரே காரியத்திற்குச் சேவை செய்யவே தேவயானியும், நானும் இங்குத் தோழிகளாக அனுப்பப்பட்டோம். எனவே, நீர் எங்களுள் ஒருவரின் எல்லைக்குள் மட்டும் சுருங்கி இருப்பேன் என்று சொல்வது பொய்மையே ஆகும்” என்றாள்.(17)

யயாதி, “ஒரு மன்னன் என்பவன் தனது குடிமக்களின் கண்களுக்குச் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும். பொய்மை பேசும் ஏகாதிபதி நிச்சயமாக அழிவையே சந்திப்பான். என்னைப் பொறுத்தவரை, பேரிழப்பு என்னை அச்சுறுத்தினாலும் கூட நான் பொய்யுரைக்கத் துணிய மாட்டேன்” என்றான்.(18)

சர்மிஷ்டை, “ஓ ஏகாதிபதி! ஒருத்தி தனது தோழியின் கணவரைத் தனது கணவராகவே பார்க்கலாம். ஒருத்தியுடைய தோழியின் திருமணம் என்பது தன்னுடைய திருமணமே ஆகும். நீர் எனது தோழியால் கணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர். எனவே, அதேபோல நீர் எனக்கும் கணவரே ஆவீர்” என்றாள்.(19)

யயாதி, “கேட்பவருக்குக் கேட்பதைக் கொடுப்பது நிச்சயமாக நான் நோற்கும் நோன்பாகும். நீ கேட்பது போலவே, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக” என்றான்.(20)

சர்மிஷ்டை, “ஓ மன்னா! பாவத்திலிருந்து என்னைக் காப்பீராக. எனது அறத்தைக் காப்பீராக. உம்மால் தாயாகி, என்னை உலகத்தின் சிறந்த அறத்தைப் பயிலச் செய்வீராக.(21) ஓ மன்னா! மனைவி, அடிமை, மகன் ஆகியோர் சுயமாகச் செல்வம் ஈட்டக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் ஈட்டுவது அனைத்தும் கொண்டவனுக்கே (தலைவனுக்கே) சொந்தம்.(22) உண்மையில் நான் தேவயானியின் அடிமை. நீர் தேவயானிக்கு தலைவனாகவும், குருவாகவும் இருக்கிறீர். எனவே, தேவயானிக்குப் போலவே, நீரே எனது தலைவனும், குருவும் ஆவீர். எனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றாள்.(23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிச் சர்மிஷ்டையால் சொல்லப்பட்ட யயாதி அவளது பேச்சில் இருந்த உண்மையை எண்ணிப் பார்த்தான். எனவே அவன் சர்மிஷ்டையின் அறத்தைக் காப்பாற்றி அவளைக் கௌரவப்படுத்தினான்.(24) அவர்கள் சிறிது காலத்தைச் சேர்ந்தே கழித்தனர். அதன்பிறகு ஒருவருக்கு ஒருவர் பிரியாவிடை பெற்று எங்கிருந்து வந்தனரோ அங்கேயே தனித்தனியாகப் பிரிந்து சென்றனர்.(25) சில காலம் கழிந்ததும், அந்த இனிய புன்னகைக்கும், அழகான புருவங்களுக்கும் சொந்தக்காரியான சர்மிஷ்டை, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனுடன் ஏற்பட்ட தொடர்பால் கருவுற்றாள்.(26) ஓ மன்னா! {ஜனமேஜயா}! அந்தத் தாமரைக்கண் மங்கை உரிய காலத்தில் தேவர்களைப் போன்ற காந்தியுடனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடனும் அழகான மகனைப் பெற்றெடுத்தாள்.”(27)

யயாதியைத் தாக்கிய பலவீனம்! | ஆதிபர்வம் – பகுதி 83(சம்பவ பர்வம் – 19)சர்மிஷ்டையின் மகனைக் கண்ட தேவயானி அது குறித்து அவளிடம் கேட்டது; சர்மிஷ்டைக்குப் பிறந்த மூன்று பிள்ளைகள்; தங்கள் தந்தையை அடையாளம் காட்டிய பிள்ளைகள்; சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்ட தேவயானி; யயாதியைச் சபித்த சுக்கிராச்சாரியார்; சாபவிமோசனம் கேட்ட யயாதி

வைசம்பாயனர் சொன்னார், “இனிய புன்னகையுடைய தேவயானி அந்தக் குழந்தையின் பிறப்பை கேள்விப்பட்டுப் பொறாமையடைந்தாள். ஓ பாரதா, சர்மிஷ்டை தேவயானியின் சோகச்சிந்தனைகளுக்குக் காரணமானாள். தேவயானி அவளிடம் சென்று,(1) “ஓ அழகான புருவங்கள் கொண்டவளே! காமத்தின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு, என்ன பாவத்தை இழைத்திருக்கிறாய்?” என்றாள்.(2)

சர்மிஷ்டை, “வேதங்களை அறிந்த அறம் சார்ந்த முனிவர் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் வரங்களை அருளக்கூடியவர். எனது தகுதிகளை {புண்ணியங்களைக்} கருத்தில் கொண்டு, நான் விரும்பிய வரத்தை அவர் எனக்குக் கொடுத்தார்.(3) ஓ இனிய புன்னகையுடைவளே! பாவகர வழிகளில் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நான் ஒரு போதும் முயலமாட்டேன். அந்த முனிவராலேயே நான் எனது பிள்ளையைப் பெற்றேன் என்று உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்று பதிலுரைத்தாள்.(4)

தேவயானி, “அப்படி நடந்திருந்தால் சரிதான், ஓ மருட்சியுடையவளே! அந்த பிராமணரின் குலம், பெயர், குடும்பம் பற்றிய செய்திகளை நீ அறிந்திருப்பாயே. நான் அதைக் கேட்க விரும்புகிறேன்” என்றாள்.(5)

சர்மிஷ்டை, “ஓ இனிய புன்னகையுடையவளே! துறவாலும், சக்தியாலும் அந்த முனிவர் சூரியனைப் போன்றிருந்தார். அப்படி அவரைப் பார்த்ததும், இது குறித்து நான் அவரிடம் கேட்கவில்லை” என்று பதிலுரைத்தாள்.(6)

தேவயானி, “இஃது உண்மையானால், அப்படிப்பட்ட பெரும் பிராமணரால் இந்தக் குழந்தை கிடைத்தது நிச்சயமென்றால், ஓ சர்மிஷ்டா! நான் கோபமடைய எக்காரணமும் இல்லை” என்றாள்.(7)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படி அவர்கள் ஒருவருரோடொருவர் பேசிச் சிரித்து, பிரிந்து சென்றனர். சர்மிஷ்டையால் சொல்லப்பட்ட செய்தியை அறிந்து தேவயானி தனது அரண்மனைக்குச் சென்றாள்.(8) ஓ மன்னா! இந்திரனையும் விஷ்ணுவையும் போன்ற யது, துர்வசு என்று இரு மகன்களை யயாதி, தேவயானியிடம் பெற்றான்[1].(9) விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை அந்த அரச முனியால் {யயாதியால்}, திருஹ்யூ, அனு மற்றும் பூரு என்ற மூன்று மகன்களுக்குத் தாயானாள்.(10)

[1] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில் அதிக தகவல் இருக்கிறது. அது பின்வருமாறு, “அந்தக் காலத்தில் ராஜரிஷியாகிய யயாதிராஜன் தேன்சுவையுடன் சேர்க்கப்பட்டதும், மதத்தை விருத்தி செய்வதும், சிவப்பும் மஞ்சளும் கலந்த வர்ணமுள்ளதுமான மதுவைச் சுக்கிரர் பெண்ணான தேவயானியைக் குடிக்கும்படி செய்தான். அந்த மதுவைக் குடித்துக்குடித்து அந்தத் தேவயானி மயக்கங்கொண்டாள். அடிக்கடி அழுது கொண்டும், பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மிகுதியாகப் பிதற்றிக் கொண்டுமிருந்த அந்தத் தேவயானி, ராஜாவை நோக்கி, “ஓ! பிராமணஸ்ரேஷ்டனே! உன் உருவமும், அலங்காரமும் ராஜாவுக்கிருப்பது போலிருக்கின்றன. எதற்காக நீ இங்கே வந்தாய்? ஜனங்களில்லாத கடினமான காட்டுக்கு என்ன காரியத்திற்காக வந்தாய்? யயாதியென்னும் ராஜஸ்ரேஷ்டன் கொடிய பார்வையுள்ளவன். ஆதலால், பிராமணா! நன்மையை விரும்பினாயானால் இவ்விடம்விட்டு ஓடிப்போ” என்று இவ்வாறு பிதற்றிக் கொண்டிருந்த தகாதவளும், பாபத்தை விருத்தி செய்கிறவளுமான அந்தத் தேவயானியை யயாதி வசனங்களினாற் பயமுற்றினான். பிறகு, அலிகளையும், ஊமையரையும், அங்கப்பிழையுள்ளவர்களையும், கிழவர்களையும், முடவர்களையும் தேவயானியைப் பாதுகாக்கவும், போஷிக்கவும் கட்டளையிட்டான்” என்றிருக்கிறது. அதன் பிறகு கங்குலியில் பின்வருவதைப் போலவே தொடர்கிறாது.

ஓ மன்னா! ஒரு நாள் இனிய புன்னகையுடைய தேவயானி யயாதியுடன் தனிமையில் கானகத்தில் (மன்னனின் விரிவாக்கப்பட்ட நந்தவனம்) உலவிக் கொண்டிருந்த போது,(11) தெய்வீக அழகுடன் மூன்று குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கையுடன் விளையாடிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். இதனால் ஆச்சரியமடைந்த தேவயானி,(12) “ஓ மன்னா! தேவலோகக் குழந்தைகளைப் போல அழகாக இருக்கும் இவர்கள் யாருடைய பிள்ளைகள்? காந்தியாலும், அழகாலும் இவர்கள் தங்களைப் போல் இருக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்” என்று கேட்டாள்.(13)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “தேவயானி மன்னனின் மறுமொழிக்காகக் காத்திராமல் அந்தக் குழந்தைகளிடமே,(14) “குழந்தைகளே, உங்கள் குலம் என்ன? உங்கள் தந்தை யார்? உண்மையான பதிலைச் சொல்லுங்கள். அனைத்தையும் அறிய நான் விரும்புகிறேன்” என்றாள்.(15)

அந்தக் குழந்தைகள் (தங்கள் சுட்டு விரலால்) மன்னனை காட்டினர். சர்மிஷ்டையைத் தங்கள் தாய் என்றனர்.(16) அப்படிச் சொல்லிவிட்டு அந்தக் குழந்தைகள் மன்னனின் கால் முட்டுகளைக் கட்டிக் கொண்டனர். ஆனால் மன்னன் தேவயானியின் முன்னிலையில் அக்குழந்தைகளைக் கண்டு கொள்ளவில்லை. (17) அந்தப் பிள்ளைகள் அந்த இடத்தை விட்டு அகன்று, தங்கள் தாயிடம் அழுது கொண்டே சென்றனர். மன்னன், அக்குழந்தைகளின் செயலால் மிகவும் வெட்கமடைந்தான்.(18)  ஆனால் தேவயானி, மன்னனிடம் குழந்தைகள் கொண்ட பாசத்தைக் கண்டுகொண்டு இரகசியத்தை அறிந்து சர்மிஷ்டையிடம்,(19) “நீ என்னை நம்பி இருக்கும்போது, என்னையே காயப்படுத்தும் தைரியம் உனக்கு எப்படி வந்தது? உனது அசுரவழக்கத்தால் மற்றுமொரு தீங்கைச் செய்ய நீ அஞ்சவில்லையா?” என்றாள்.(20)

சர்மிஷ்டை, “ஓ இனிய புன்னகையுடையவளே! நான் முனிவரைப் பற்றிச் சொன்னது முற்றிலும் உண்மையே.  நான் சரியாகவே நடந்து கொண்டேன். அறம் சார்ந்தே நடந்து கொண்டேன்.(21) எனவே நான் உனக்கு அஞ்சவில்லை. நீ மன்னனை உனது கணவராகத் தேர்ந்தெடுத்தது போல, நானும் அவரையே எனக்குத் தேர்ந்தெடுத்தேன். ஓ அழகானவளே! நடைமுறையில் தோழியின் கணவர், தனது கணவரும் கூட.(22) நீ ஒரு பிராமணரின் மகள் எனவே, நீ எனது வழிபாட்டிற்கும், மரியாதைக்கும் தகுதிவாய்ந்தவள். ஆனால், நான் இந்த அரசமுனியின் மேல் இன்னும் எவ்வளவு மதிப்பை வைத்திருக்கிறேன் என்பதை நீ அறியமாட்டாய்” என்றாள்.(23)

வைசம்பாயனர், “ஓ மன்னா, அவளது வார்த்தைகளைக் கேட்டத் தேவயானி பெரிதும் சத்தம் போட்டு, “ஓ ஏகாதிபதியே, நீர் எனக்குத் தீங்கிழைத்துவிட்டீர். நான் இனி இங்கு வாழ மாட்டேன்” என்றாள்.(24) இப்படிச் சொல்லிவிட்டு, வேகமாகக் கண்ணீர் நிறைந்த கண்களோடு எழுந்து, தனது தந்தையிடம் சென்றாள். மன்னன் அவளை அந்தக் கோலத்தில் கண்டு, மிகவும் துயரடைந்து, பெரிதும் அச்சமடைந்து, அவளது காலடிகளைத் தொடர்ந்து சென்று, அவளது கோபத்தைத் தணிக்க முயற்சி செய்தான். ஆனால் தேவயானி, கோபத்தால் கண்கள் சிவந்து,(25,26) மன்னனிடம் ஒரு வார்த்தையும் பேசாமல், கண்ணீரில் குளித்த கண்களோடு, விரைவாகக் கவியின் மைந்தனான தனது தந்தை உசனஸிடம் சென்றடைந்தாள்.(27) அவள் தனது தந்தையைக் கண்டு, வணங்கி, அவர் முன்பு நின்றாள். யயாதியும் விரைவாக வந்து தனது வணக்கங்களைத் தெரிவித்துப் பார்கவரை வழிபட்டான்.(28)

தேவயானி, “ஓ தந்தையே! எனது துணைவரால் நல்லொழுக்கம் கைவிடப்பட்டது. கீழ்மையானது உயர்ந்து, உயர்வானது தாழ்ந்தது. விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டையால் நான் மீண்டும் உள்ளம் புண்பட்டேன்.(29) இந்த மன்னன் யயாதி அவளிடம் மூன்று பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார். ஆனால், ஓ தந்தையே, அதிர்ஷ்டமற்றவளான நான் இரண்டு மைந்தர்களையே பெற்றிருக்கிறேன்.(30) ஓ பிருகுவின் மைந்தரே! அறக்கட்டளைகளை நன்கு அறிந்தவர் இந்த மன்னன் என்பது எல்லோராலும் அறியப்பட்டது. ஓ காவியரே, ஆனால் இவர் நேர்மையான பாதையில் இருந்து வழுவி விட்டார் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்” என்றாள்.(31)

இதையெல்லாம் கேட்ட சுக்ரன், “அன்பாக உன்னைப் பின் தொடர்ந்தவளை அறம் சார்ந்த கட்டளைகளை அறிந்தும், நீ களங்கப்படுத்தியதால், ஓ ஏகாதிபதியே, வெல்லப்படமுடியாத பலவீன நிலை (முதுமை) உடனே உன்னை நிலைகுலையச் செய்யட்டும்” என்றார்.(32)

யயாதி, “வணக்கத்திற்குரியவரே! தனது காலத்தைக் கனியுடையதாக்க, அந்த தானவ மன்னனின் மகளால் {சர்மிஷ்டையால்} தனிமையில் நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். அறம் சார்ந்தே நான் அதைச் செய்தேன். வேறு எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது.(33) ஓ பிராமணரே! ஒரு பெண்ணால் அவளுக்குரிய காலத்தில், தனிமையில் கேட்கப்பட்டு, அதை நிறைவேற்றாத ஆண், ஒரு கருவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவான் என்று வேதம் அறிந்தவர்களால் சொல்லப்படுகிறது.(34) விருப்பம் நிறைந்த மங்கையை, அவளது காலத்தில் தனிமையில் கமுக்கமாக அவளால் கேட்கப்பட்டும், அந்த ஆண் அவளுடன் செல்ல வில்லையென்றால், அவன் எல்லா அறத்தையும் இழந்து, கருவைக் கொன்றவன் என்று கற்றவர்களால் பழிக்கப்படுவான்.(35) ஓ பிருகுவின் மைந்தரே! இந்தக் காரணங்களுக்காகவே, பாவத்தை விலக்க, நான் சர்மிஷ்டையிடம் சென்றேன்” என்றான்.(36)

அதற்குச் சுக்ரன், “நீ என்னைச் சார்ந்தே இருக்கிறாய். நீ எனது கட்டளைக்காகக் காத்திருந்திருக்க வேண்டும். உனது கடமைகளில் பொய்மையைக் கடைப்பிடித்திருக்கிறாய்.  ஓ நகுஷ மைந்தா! நீ திருட்டுப் பாவத்திற்குச் சொந்தக்காரன்” என்றார். (37)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “நகுஷ மைந்தன் யயாதி, கோபமடைந்த உசனஸால் {சுக்ரனால்} சபிக்கப்பட்டு, உடனே தனது இளமை நீக்கப்பட்டுப் பலவீனத்தால் {வயோதிகத்தால்} ஆட்கொள்ளப்பட்டான்.(38)

யயாதி, “ஓ பிருகு மைந்தரே! எனது இளமையாலும், தேவயானியாலும் நான் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. எனவே, ஓ பிராமணரே! என்னிடம் கருணை கொண்டு, இந்தப் பலவீனம் என்னைத் தொடாமல் இருக்கச் செய்யும்” என்றான்.(39)

சுக்ரன், “நான் பொய்மையைப் பேசுவதே இல்லை. ஓ மன்னா! இப்பொழுது, நீ பலவீனத்தால் தாக்கப்பட்டாய். ஆனால் நீ விருப்பப்பட்டால், உனது இந்தப் பலவீனத்தை இன்னொருவருக்கு மாற்ற முடியும்” என்று பதிலுரைத்தார்.(40)

யயாதி, “ஓ பிராமணரே! நான் அறத்தையும், புகழையும் பெற தனது இளமையைத் தரும் எனது மகன் யாரோ, அவனே எனது அரசாங்கத்தை அனுபவிக்கட்டும் என்று கட்டளையிடுவீராக” என்றான்.(41)

சுக்ரன், “ஓ நகுஷ மைந்தா! என்னை நினைத்துக் கொண்டு, நீ உனது பலவீனத்தை யாரொருவருக்கும் மாற்ற முடியும்.(42) எந்த மகன் உனக்கு இளமையைக் கொடுக்கிறானோ, அவனே உனது வாரிசாகட்டும். அவன் நீண்ட ஆயுள் பெற்றுப் பெரும் புகழடைந்து, எண்ணற்ற மக்களைப் பெறுவான்” என்றார்.”(43)

யயாதியின் முதுமையை ஏற்ற பூரு! | ஆதிபர்வம் – பகுதி 84(சம்பவ பர்வம் – 20)யயாதியின் மூப்பைப் பெற்றுக் கொள்ள மறுத்த முதல் நான்கு மகன்கள்; அந்த மகன்கள் நால்வரையும் சபித்த யயாதி; முதுமையை ஏற்றுக் கொண்ட பூரு..

வைசம்பாயனர் சொன்னார், “யயாதி முதுமையால் பலவீனமடைந்து தனது தலைநகருக்குச் சென்று, தனது மூத்த மகன் யதுவை அழைத்து,(1) “அன்புக் குழந்தாய்! உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் சாபத்தால், பலவீனமடைந்து, தோல் சுருக்கம் ஏற்பட்டு, தலை மயிர் வெண்மையாகி முதுமை என்னை ஆட்கொண்டது. ஆனால், நான் இன்னும் எனது இளமையின் இனிமையில் மனநிறைவுகொள்ளவில்லை.(2) எனவே, ஓ யதுவே! எனது பலவீனத்துடன் கூடிய முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயாக. உனது இளமையைக் கொண்டு நான் இன்பம் அனுபவிப்பேன்.(3) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையை உனக்குத் திருப்பி அளித்து, எனது முதுமையையும் பலவீனத்தையும் பெற்றுக் கொள்கிறேன்” என்றான்.(4)

யது, “பலவீனம் கொள்வதால் உண்பதிலும், குடிப்பதிலும் எண்ணற்றத் தொல்லைகள் இருக்கின்றன. எனவே, ஓ மன்னா, நான் உமது பலவீனத்தை ஏற்க மாட்டேன். இஃது எனது உறுதியானத் தீர்மானம்.(5) தலையில் வெண்மயிர் தாங்கி, மகிழ்ச்சியற்று, நரம்புகள் தளர்ந்து, உடலெங்கும் தோல் சுருக்கம் ஏற்பட்டு, உருக்குலைந்து, உறுப்புகளின் வலிமை குன்றி, நலிவடைந்து, எந்த வேலையையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு, நண்பர்களிடமும், தோழர்களிடமும் தோல்வியுற்று வாழ்வதே பலவீன நிலையாகும்.(6) எனவே, ஓ மன்னா! நான் அஃதை ஏற்க விரும்பவில்லை. ஓ மன்னா! உமக்கு நிறைய மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் உமக்கு மிகவும் அன்பானவர்கள் ஆயிற்றே. நீர் அறத்தின் கட்டளைகளை அறிந்தவர். உமது மற்ற மகன்களிடம் உமது பலவீனத்தை ஏற்கச் சொல்லுங்கள்” என்றான்.(7)

யயாதி, “ஓ மகனே! நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனது மகன்கள் மன்னர்களாக இருக்க மாட்டார்கள்” என்று சொல்லி, அடுத்த மகனான துர்வசுவிடம்,(8) “ஓ துர்வசு! எனது பலவீனத்துடன் கூடிய முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயாக. உனது இளமையைக் கொண்டு நான் இன்பம் அனுபவிப்பேன்.(9) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையைத் திருப்பி அளித்து, எனது முதுமையையும் பலவீனத்தையும் பெற்றுக் கொள்கிறேன்” என்றான்.(10)

துர்வசு, “ஓ தந்தையே! நான் பலவீனத்தை விரும்பவில்லை. அது பசி, இன்பம், பலம், அழகு, அறிவு ஆகியவற்றையும், ஏன் உயிரையே கூட ஒரு மனிதனிடம் இருந்து எடுத்துவிடுகிறது” என்றான்.(11)

யயாதி அவனிடம், “நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனது குலம் அருகிப் போகும்.(12) இழிந்தவனான நீ, அரச இரத்தம் கொண்ட மங்கையரிடம் பிள்ளைகளைப் பெறும் தாழ்ந்த குருதியுடையவர்களுக்கு மத்தியில் இருப்பாயாக. தூய்மையற்ற நீதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களும், இறைச்சியில் வாழ்பவர்களும், குறுகிய புத்தி கொண்டவர்களும், தங்களுக்கு மேலானாவர்களுடைய மனைவியரை அடையத் தயங்காதவர்களும், பறவைகள் மற்றும் விலங்குகளின் நடைமுறைகளைக் கொண்டவர்களும், பாவிகளும், ஆரியரல்லாதவர்களும் {உன்னதர் அல்லாதவர்கான} ஆன மனிதர்களின் மன்னனாவாய்” என்றான்[1].(13-15)(கும்பகோணம் பதிப்பில், “துர்வஸுவே! என் ஹ்ருதயத்திலிருந்து பிறந்த நீ உன் வயஸை எனக்குக் கொடாமையால் உன் ஸந்ததி நாசத்தையடையும். மூடனே! ஆசாரங்களிலும், தர்மங்களிலும் வ்யவஸ்தை தப்பினவர்களும், சாஸ்திரத்துக்கு மாறான நடையுள்ளவர்களும், மாம்ஸம் தின்பவர்களும், எல்லா வருணங்களுக்கும் தாழ்ந்தவர்களும், குருபத்தினிகளிடம் சேருகிறவர்களும், திர்யக்ஜாதியின் நடையுள்ளவர்களும், மிருகத்தன்மையுள்ளவர்களும், பாபிஷ்டர்களுமாகிய மிலேச்சர்களுக்கு நீ ராஜாவாவாய்” என்றிருக்கிறது.)

வைசம்பாயனர் சொன்னார், “யயாதி, தனது மகன் துர்வசுவை இப்படிச் சபித்துவிட்டு, சர்மிஷ்டையின் மகன் திருஹ்யுவிடம்,(16) “ஓ திருஹ்யு! நிறத்தையும், அழகையும் அழிக்கும் எனது பலவீனத்தை ஆயிரம் வருடங்களுக்கு ஏற்றுக் கொண்டு, உனது இளமையை எனக்குத் தா.(17) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையைத் திருப்பிக் கொடுத்து எனது பலவீனத்தையும் முதுமையையும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றான்.(18)

அதற்குத் திரஹ்யு, “ஓ மன்னா! பலவீனமடைந்தவன் யானைகளில் செல்வதையும், தேர்களில் செல்வதையும், குதிரைகளில் செல்வதையும், பெண்களையும் அனுபவிக்க முடியாது. அவனது குரல் கூடக் கரகரப்பாகிவிடும். எனவே, நான் உமது பலவீனத்தை ஏற்க விரும்பவில்லை” என்றான்.(19)

யயாதி, “நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் நீ எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் விருப்பம் எதுவோ அது நிறைவேறாது.(20) குதிரைகளும், தேர்களும், யானைகளும், நல்ல வாகனங்களும், கழுதைகளும், காளைகளும், பல்லக்குகளும் செல்வதற்கான சாலைகளே இல்லாத, தெப்பங்களிலும், ஓடங்களிலும் மட்டுமே செல்லக்கூடிய களிமண்ணால் நிறைந்த தேசத்திற்கு பெயரளவுக்கே நீ மன்னனாக இருப்பாய்” என்று சபித்தான்.(21,22)

அடுத்தவனான அனுவிடம் யயாதி, “ஓ அனுவே! எனது பலவீனத்தையும், முதுமையையும் ஏற்றுக் கொள்வாயாக. நான் உனது இளமையைக் கொண்டு ஆயிரம் வருடங்களுக்கு இன்பங்களை அனுபவிக்கிறேன்” என்றான்.(23)

அதற்கு அனு, “பலவீனமானவர்கள் குழந்தைகளைப் போல உண்டு எப்போதும் அசுத்தமாக இருப்பர். அவர்களால் வேள்வித்தீயில் நெய்யைக் கூட ஊற்றமுடியாது. எனவே, நான் உமது முதுமையை ஏற்க விரும்பவில்லை” என்றான்.(24)

யயாதி அவனிடம், “நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். நீ பலவீனத்தில் பெரும் குறைகளைக் கண்டுபிடிக்கிறாய். எனவே, பலவீனம் உன்னை வந்தடையட்டும்.(25) ஓ அனுவே! உனது சந்ததியினரும் இளமையை அடையும் போது மரணத்தை அடைவர். நீ நெருப்பின் முன்பு அமர்ந்து வேள்விகளைச் செய்ய முடியாது” என்று சபித்தான்.(26)

இறுதியாக யயாதி, தனது இளைய மகன் பூருவிடம் சென்று, “ஓ பூரு! நீ எனது இளைய மகனாவாய்! ஆனால் நீ எல்லோருக்கும் முதல்வனாவாய்! உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் {சுக்ரனின்} சாபத்தால் பலவீனம், தோல் சுருக்கம், வெண் முடி ஆகியன என்னை ஆட்கொண்டன. இருப்பினும் எனது இளமையை நான் முழுமையாக அனுபவிக்கவில்லையே. ஆகவே, ஓ பூரு, எனது பலவீனத்தையும், முதுமையையும் ஏற்றுக் கொள்! உனது இந்த இளமையைக் கொண்டு நான் சில வருடங்களுக்கு இன்பத்தை அனுபவித்துக் கொள்கிறேன்.(27,28) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், நான் உனது இளமையை உனக்குத் திருப்பித் தந்து, எனது முதுமையை ஏற்றுக் கொள்கிறேன்” என்றான்.”(29)

வைசம்பாயனர் சொன்னார், “இப்படி மன்னனால் கேட்கப்பட்ட பூரு பணிவுடன், “ஓ ஏகாதிபதியே! நீர் சொல்வதை நான் செய்கிறேன். ஓ மன்னா, உமது பலவீனத்தையும், முதுமையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.(30) எனது இளமையை ஏற்றுக் கொண்டு வாழ்வின் இனிமையை அனுபவித்துக் கொள்வீராக.(31) உமது கட்டளைப்படி பலவீனத்தாலும், முதுமையாலும் ஆட்கொள்ளப்பட்டு, எனது இளமையை உமக்குக் கொடுத்து நான் வாழ்ந்து வருகிறேன்” என்றான்.(32)

யயாதி, “ஓ பூரு! உன்னிடம் நான் மனநிறைவு கொண்டேன். அப்படி நிறைவடைந்ததால் சொல்கிறேன். உனது அரசாங்கத்தில் வாழும் மக்கள் அவர்கள் விருப்பங்கள் முழுவதும் ஈடேறி மகிழ்ச்சியாக இருப்பர்” என்றான்.(33)

இப்படிச் சொன்ன அந்தப் பெரும் துறவி யயாதி, காவியரை {சுக்ராச்சாரியரை} நினைத்துத் தனது பலவீனத்தையும், முதுமையையும் அந்த உயர் ஆன்மாவான பூருவுக்கு அளித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(34)

தந்தைக்குக் கீழ்ப்படியும் மகனே வாரிசு! | ஆதிபர்வம் – பகுதி 85(சம்பவ பர்வம் – 21)பூருவிடம் இருந்து மீண்டும் முதுமையைப் பெற்றுக் கொண்ட யயாதி; பூருவை அரியணையில் அமர்த்த விரும்பிய யயாதி; பூருவின் பட்டமேற்பை ஏற்றுக் கொண்ட பிராமணர்களும் பிற வர்ணத்தாரும்..

வைசம்பாயனர் சொன்னார், “அந்தச் சிறந்த ஏகாதிபதியான நகுஷ மைந்தன் யயாதி, பூருவின் இளமையைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவு கொண்டான். அதன்பிறகு அவன் தனது சக்திக்கு உட்பட்ட இன்பங்களைக் காலத்திற்குத் தகுந்தவாறு அனுபவித்தான்.(1) எனவே, அவன் பெரும் இன்பத்தைப் பெற்றான். ஓ மன்னா {ஜனமேஜயா}! அறத்திற்கெதிரான எந்தச் செயலையும் அவன் செய்யவில்லை.(2) தேவர்களை வேள்விகளாலும், பித்ருக்களை தனது சிரார்தங்களாலும் மகிழ்வித்தான். ஏழ்மையானவர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்வித்தான், வைசியர்களைக் காத்து மகிழ்வித்தான், சூத்திரர்களை அன்பால் மகிழ்வித்தான். எல்லாக் குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனைகளைக் கொடுத்தான்.(3,4) யயாதி, குடிமக்களின் எல்லாப் பகுதிகளையும் மனநிறைவு கொள்ளச் செய்து அவர்களைக் காத்து மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தான்.(5)

சிங்கத்தின் வீரத்தைக் கொண்ட அந்த ஏகாதிபதி, தனது இளமையைக் கொண்டு தனது கட்டுக்குள் இருக்கும் எல்லா இன்பங்களையும் அனுபவித்தான், அறம் சார்ந்து எல்லையற்ற மகிழ்வை அடைந்தான்.(6) தனது விருப்பத்துக்குட்பட்ட அனைத்தையும் அவன் அனுபவித்தான். அவன் எப்போது தனது ஆயிரம் வருட நிறைவு வரப்போகிறது என்று நினைத்தானோ அப்போதே துன்பப்பட்டான்.(7) காலத்தின் மர்மங்களை அறிந்த அந்த மன்னன், தகுந்த காலங்களையும், கஷ்தங்களையும்[1] கவனித்து வைத்து,(8) (கஷ்தம் என்பது கண் சிமிட்டுவதற்கு ஆகக்கூடிய நேரமாகும். 13 கஷ்தங்கள் = 1 காலம், 30 காலங்கள் = 1 முகூர்த்தம்.  கண்சிமிட்டுவதற்கு ஆகும் காலத்தை இந்து புராணங்கள் நிமிஷங்கள் என்றன. இஷ்வாகுவின் மகன்  நிமி ஆவான். அவன் வசிஷ்டரின் கட்டளையை மீறி தகாத இடத்தில் யாகம் செய்ததால் தேகமின்றிப் போகச் சபிக்கப்பட்டான். அவன் இருக்க இடம் கேட்டபொழுது கண் இமையை இடமாக அளித்தார் வசிஷ்டர். அதனால் கண் சிமிட்டும் ஆகும் காலம் அந்த காலத்தில் நிமிஷம் ஆனது. மேற்கத்திய காலக்கணிப்பில் நிமிடம் வேறு விதமாக அளக்கப்படுகிறது. இந்த நிமி ஆகிய விதேகன் உண்டாக்கிய தேசமே விதேக தேசம். அவன் வழி வந்தவர்களே ஜனகர்கள்.கண்சிமிட்டும் நேரம் – 1 நிமிஷம்(106.7 மில்லி செகண்ட்) ; 30 நிமிஷம்  –  1 காஷ்டை (3.2 செகண்டுகள்);   30 காஷ்டை   –     1 காலம் (1.6 மினிட்டுகள்); 30 காலங்கள்  –     1 முகூர்த்தம் (48 மினிட்டுகள்))சில நேரங்களில் (தேவ நடனமாது) விஸ்வாசியுடன் இந்திரனின் அழகிய நந்தவனத்திலும், சில நேரங்களில் அளகையிலும் (குபேரனின் நகரத்திலும்), சில நேரங்களில் வடக்கே இருக்கும் மேரு மலையின் உச்சியிலும் விளையாடினான்.(9)

அந்த அறம் சார்ந்த மன்னன் எப்போது ஆயிரம் வருடங்கள் நிறைந்தது என்று நினைத்தானோ அப்போது பூருவை வரவழைத்து அவனிடம்,(10) “ஓ எதிரிகளை அடக்குபவனே! ஓ மகனே! உனது இளமையைக் கொண்டு, எனது சக்திக்குட்பட்டு, வாழ்வின் இன்பங்களை அதனதன் காலத்தில் எனது முழு விருப்பம் ஈடேற அனுபவித்தேன்.(11) இருப்பினும், நம் விருப்பங்கள் எப்போதும் அதை அனுபவித்துவிடுவதனால் நிறைவடைவதில்லை. ஆனால், அதை அனுபவிப்பதனால், நெருப்பில் நெய் ஊற்றப்பட்டால் வளர்வது போலவே அதுவும் வளர்கிறது.(12) ஒரு தனி மனிதன் நெல், கோதுமை, வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், விலங்குகள், பெண்கள் என அனைத்தும் கொண்ட இந்த முழு உலகத்துக்கே தனித் தலைவனாக இருந்தாலும், அவன் மனநிறைவு கொள்ள மாட்டான். எனவே, இன்பதாகம் என்பது கைவிடப்பட வேண்டியது.(13) உண்மையான மகிழ்ச்சி என்பது, எவரொருவர் இந்த உலகப்பொருட்களின் மீதிருக்கும் தாகத்தைக் கைவிடுகிறார்களோ அவர்களுக்கே கிடைக்கும். அந்தத் தாகம் என்பதைத் தீயவர்களாலும், பாவிகளாலும் கைவிட முடியாது.  நாம் வாழ்வில் தோல்வியுறும்போதும் அந்தத் தாகம் தோல்வியுறுவதில்லை. அந்தத் தாகம் என்பது மனிதனின் மரணத்திற்கான நோயாகும்.(14) இந்த ஆயிரம் வருடமும் எனது இதயம் எனது விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே நிலைத்திருந்தது. இருப்பினும், அவற்றின் மீது எனக்கிருந்த தாகம், ஒவ்வொரு நாளும் அதிகரித்தே வந்தது.(15) எனவே, வருங்காலங்களில் கானகத்திற்குச் சென்று அங்கு இருக்கும் மானின் மருட்சியுடன் அமைதியாக உலகப் பொருட்களின் மீது எனது இதயத்தைச் செலுத்தாமல் பிரம்மனின் மீது செலுத்தி அந்தத் தாகத்தைக் கைவிடப்போகிறேன்.(16) ஓ பூரு! உன்னிடம் நான் பெரும் மனநிறைவுகொண்டேன்! வளமை உனதாகட்டும்! இந்த உனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொள்! எனது அரசாங்கத்தையும் பெற்றுக் கொள்வாயாக. நிச்சயமாக நீயே எனக்குப் பெரும் சேவையைச் செய்த எனது மகனாவாய்” என்றான்.(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு, நகுஷ மைந்தனான யயாதி, தனது பலவீனத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். அவனது மகன் பூரு தனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.(18) யயாதி தனது இளைய மகனான பூருவை அரியணையில் அமர்த்த விருப்பங்கொண்டான். ஆனால் பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட நான்கு வகையினரும் {வர்ணத்தாரும்} மன்னனிடம்,(19) “ஓ மன்னா! தேவயானியின் மூலம் உனக்குப் பிறந்த மூத்த மகனும், பெரும் சுக்ரனின் பேரனுமான யது இருக்கும்போது, நீர் எப்படி உமது அரசாங்கத்தைப் பூருவுக்குக் கொடுப்பீர்?(20) நிச்சயமாக யதுவே உமது மூத்த மைந்தன்; அவனுக்குப் பிறகு துர்வசுவும், அதற்குப் பிறகு சர்மிஷ்டைக்குப் பிறந்த மைந்தர்கள் திருஹ்யுவும், அனுவும் இருக்கிறார்கள். அதன்பிறகே பூரு வருகிறான்.(21) மூத்தவர்கள் இருக்கும்போது இளையவன் எப்படி அரியணைக்கு அருகதையாவான்? இதை நாங்கள் உமக்குச் சொல்லிக் கொள்கிறோம். நீர் தர்மம் எதுவோ அதைச் செய்யும்” என்றனர்.(22)

யயாதி, “பிராமணர்களை முதன்மையாகக் கொண்ட நால்வகை மக்களே! நான் என் அரசாங்கத்தை எனது மூத்த மகன் யதுவுக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்பதைக் கேட்பீராக.(23) தன் தந்தைக்குக் கீழ்ப்படியாதவன் மகனாகமாட்டான் என்பது ஞானமுள்ளோர் வாக்கு.(24) தனது பெற்றோர்கள் சொல்வதை ஏற்று நடந்து, அவர்களின் நன்மையில் ஆர்வம் கொண்டு, அவர்களால் எல்லா வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே சிறந்த மைந்தர்களாவர்.(25) யதுவாலும், ஏன் துர்வசுவாலும் நான் அலட்சியம் செய்யப்பட்டேன். திருஹ்யு மற்றும் அனுவாலும் நான் அலட்சியமே செய்யப்பட்டேன்.(26) பூரு ஒருவனே எனது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். அவனாலேயே நான் பெரிதும் மதிக்கப்பட்டேன். எனவே, அனைவருக்கும் இளையவனே எனது வாரிசாவான். அவன் எனது பலவீனத்தை ஏற்றுக் கொண்டான்.(27) நிச்சயமாகப் பூருவே எனது நண்பனாவான். என்னால் பெரிதும் ஏற்றுக் கொள்ளும் செயலை அவன் செய்தான். எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் எனது மகனே எனக்கு அடுத்த மன்னனாகி, இந்த முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான் என்பது கவியின் மகனான சுக்ரனின் கட்டளையும் ஆகும்.(28) எனவே, நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம், பூரு இந்த அரியணையை அலங்கரிக்கட்டும் என்பதுதான்” என்றான்.(29)

அதன் பிறகு அந்த மக்கள், “அஃது உண்மைதான். ஓ மன்னா! பெற்றோரின் நன்மையில் விருப்பம் உள்ள மகனே, அவன் இளையவனாக இருந்தாலும் வளமாக இருக்க அருகதையுள்ளவன்.(30) எனவே, உமக்கு நன்மையைச் செய்த பூரு உமது முடியைத் தாங்கத் தகுதி வாய்ந்தவனே. சுக்ரனே இக்காரியத்தில் கட்டளையிட்டிருப்பதால், நாங்கள் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை” என்றனர்.”(31)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மக்களால் இப்படிச் சொல்லப்பட்ட நகுஷ மைந்தன் {யயாதி}, அரியணையில் பூருவை அமர்த்தினான்.(32) உரிய சடங்குகளுடன் அரசாங்கத்தைப் பூருவுக்கு அளித்த அந்த ஏகாதிபதி, தனது தலைநகரை விட்டு பிராமணர்களுடனும், துறவிகளுடனும் கானகமேகினான்.(33) யதுவின் மைந்தர்கள் யாதவர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள்; துர்வசுவின் மைந்தர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்; திருஹ்யுவின் மைந்தர்கள் போஜர்கள் என்று அழைக்கப்பட்டார்கள், அனுவின் மைந்தர்கள் மிலேச்சர்களாக இருந்தார்கள்.(34) பூருவின் வம்சம், பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}! நீ அந்த வழியிலேயே (பௌரவர்கள்) ஆயிரம் வருடங்கள் உனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து அரசாளப் பிறந்திருக்கிறாய்” என்றார்.(35)

யயாதியின் கடுந்தவம்! | ஆதிபர்வம் – பகுதி 86(சம்பவ பர்வம் – 22)அனைத்தையும் துறந்து வானப்பிரஸ்த வாழ்வு வாழ்ந்து சொர்க்கத்தை அடைந்த யயாதி…

வைசம்பாயனர் சொன்னார், “நகுஷ மைந்தன் மன்னன் யயாதி, தனது மகனை அரியணையில் அமர்த்தி மிகுந்த மகிழ்ச்சியடைந்து, துறவு வாழ்க்கை வாழக் கானகத்திற்குச் சென்றான்.(1) கடுந்தவங்கள் இயற்றும் பிராமணர்களுடன் இருந்த அந்த ஏகாதிபதி, அனைத்தையும் துறந்து, வெறும் கனிகளையும், கிழங்குகளையும் மட்டும் உண்டு சில காலம் கானகத்தில் வாழ்ந்து, தேவலோகத்திற்கு உயர்ந்தான்.(2) அப்படி தேவலோகத்துக்கு உயர்ந்து அங்கு அருளப்பட்டு இருந்தான். ஓ மன்னா! ஆனால் விரைவில் அவன் இந்திரனால் தேவலோகத்திலிருந்து கீழே பூமிக்குத் தூக்கி வீசப்பட்டு அந்தரத்தில் இருந்தான் என்று கேள்விப்பட்டேன். அதன் பிறகு, சிறிது காலம் சென்று அவன் வசுமான், அஷ்டகன், பிரதார்தனன் மற்றும் சிபியுடன் தேவர்களின் உலகை அடைந்தான் என்றும் கேள்விப்பட்டேன்” என்றார்.(3-5)

ஜனமேஜயன், “யயாதி, தேவலோகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பிறகு ஏன் தூக்கி வீசப்பட்டு, மறுபடியும் ஏன் சேர்க்கப்பட்டான் என்பதை முழுமையாகச் சொல்வீராக. அதை அறிய விரும்புகிறேன்.(6) ஓ பிராமணரே! இவையெல்லாவற்றையும் இருபிறப்பாளர்களான இந்த முனிவர்கள் மத்தியில் சொல்வீராக. பூமியின் தலைவனான யயாதி, நிச்சயமாக மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தவன்.(7) குரு பரம்பரையின் அந்த மூதாதை, சூரியனைப் போல ஒளி வீசுபவனாவான். தனது சாதனைகளுக்காக அகில உலகிலும் புகழ்வாய்ந்த அந்தச் சிறப்புவாய்ந்தவரின் கதையை முழுமையாக, அதாவது தேவலோகத்திலும், பூமியிலும் அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை முழுமையாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(8)

வைசம்பாயனர் சொன்னார், “உண்மையில், நான் யயாதியின் துணிச்சல்மிக்க பூலோக மற்றும் தேவலோக வாழ்வு அடங்கியதும், பாவங்களை விலக்கவல்லதுமான அந்தப் புனிதமானக் கதையை உரைக்கிறேன். கேட்பாயாக.(9)

நகுஷ மைந்தனான மன்னன் யயாதி, தனது மூத்த மகன் யது உட்பட அனைத்து மகன்களையும் மிலேச்சராகும்படி விட்டு, தனது இளைய மகன் பூருவை அரியணையில் அமர்த்திவிட்டு, துறவு வாழ்க்கை வாழ, கானகத்திற்குள் சென்றான்.(10) அந்த மன்னன் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு சில காலம் கானகத்தில் வாழ்ந்தான்.(11) தனது மனத்தையும், உணர்ச்சிகளையும் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த மன்னன் பித்ருக்களையும், தேவர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தான். வானப்பிரஸ்த வாழ்க்கை வாழ்பவர்கள், என்னச் சடங்கு செய்ய வேண்டுமோ அப்படி தூய்மையாக்கப்பட்ட நெய்யை நெருப்பில் விட்டுச் சடங்குகள் செய்தான்.(12)

அறுவடைக்குப் பின் சிதறிக் கிடக்கும் தானியங்களை எடுத்துத் தான் உண்டு உயிரைத் தாங்கி வந்தாலும், நாடி வரும் விருந்தினர்களுக்கும், அந்நியர்களுக்கும் கனிகளைக் கொடுத்தும், தூய்மையாக்கப்பட்ட நெய்யைக் கொடுத்தும் அந்தச் சிறப்புவாய்ந்தவன் கவனித்துக் கொண்டான்.(13) அந்த மன்னன் இதைப் போன்ற வாழ்வை ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். பேசா நோன்பிருந்து, தனது மனத்தை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு, தூங்காமல் ஒரு முழு வருடத்தைக் கடத்தினான். அடுத்த ஒரு வருடம் நான்கு புறமும் நெருப்பு வளர்த்து, மேலே கதிரவன் காயக் கடுமையான தவமியற்றினான். காற்றை மட்டுமே உண்டு, ஆறு மாதங்கள் ஒரு காலில் நின்றான். அந்த மன்னன் தனது புனிதமானக் கடமைகளின் பயனாகத் தேவலோகத்தையும், பூலோகத்தையும் தனது புகழால் மறைத்து தேவலோகத்துக்கு உயர்ந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(14-16)

இந்திரன் யயாதி பேச்சு! | ஆதிபர்வம் – பகுதி 87(சம்பவ பர்வம் – 23)தேவலோகத்தில் வெகுகாலம் வசித்த யயாதி; பூருவுக்குத் தான் சொன்ன நீதியை இந்திரனிடம் சொன்ன யயாதி

வைசம்பாயனர் சொன்னார், “அந்த மன்னர்மன்னன் தேவலோகத்தில் தேவர்களின் இல்லத்தில் வசிக்கும்போது, தேவர்களாலும், சாத்யர்களாலும், மருத்துகளாலும், வசுக்களாலும் மதித்து நடத்தப்பட்டான்.(1) புனிதமானக் கடமைகளைச் செய்து, தனது மனத்தைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அந்த ஏகாதிபதி {யயாதி} தேவலோகத்திலிருந்து, பிரம்மலோகத்திற்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தான்.  அவன் தேவலோகத்தில் வெகு காலத்திற்கு வசித்ததாக நாம் கேள்விப்படுகிறோம்.(2) ஒருநாள் அந்த மன்னர்களில் சிறந்தவன் யயாதி, இந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அந்த பூலோக அதிபதி {யயாதி}, இந்திரனால் பின்வருமாறு கேட்கப்பட்டான்.(3)

“ஓ மன்னா! பூமியில் பூரு உன்னிடம் பலவீனத்தை வாங்கிக் கொள்ளும் போதும், அவனிடம் அரசாங்கத்தை நீ ஒப்படைக்கும்போதும் என்ன சொன்னாய்?” என்று இந்திரன் கேட்டான்.(4)

யயாதி, “கங்கைக்கும் யமுனைக்கும் உட்பட்ட முழு நாடும் அவனுடையது என்று சொன்னேன். நிச்சயமாக அதுதான் பூலோகத்தின் மத்தியில் இருக்கும் இடமாகும். அதைச்சுற்றியிருக்கும் இடங்கள் உனது தமையன்களின் அரசாக இருக்கட்டும்.(5)

கோபமடைபவனை விடக் கோபமடையாதவனே உயர்வானவன், மன்னிக்காதவர்களை விட மன்னிப்பவன் உயர்வானவன். கீழ்மையான விலங்குளை விட மனிதன் உயர்வானவன் ஆவான். மனிதர்களில் கல்லாதவர்களை விடக் கற்றவர்கள் உயர்வானவர்கள்.(6)

உனக்குத் தீங்கிழைக்கப்பட்டாலும் பதிலுக்கு நீ யாருக்கும் தீங்கிழைக்காதே. ஒருவனது கோபத்திற்கு மதிப்பில்லை என்றால், அந்தக் கோபமே அவனை எரித்துவிடும். ஒருவனது கோபத்தை மதிக்காதவன், கோபப்படுபவனின் அறம்சார்ந்த புண்ணியங்களைத் தன் வசம் எடுத்துக் கொள்கிறான்.(7)

கடும் வார்த்தைகளால் நீ மற்றவர்களுக்கு வலியை உண்டாக்காதே. இழிவான முறைகளில் உனது எதிரிகளை ஒடுக்காதே. மற்றவர்களை வேதனைப்படுத்தும் வகையில் பாவம் நிறைந்த வாட்டும் சொற்களை உச்சரிக்காதே.(8)

கடுமையும், கொடுமையும் நிறைந்த வார்த்தைகளால் மனிதர்களை முள் போல குத்திக் கொண்டிருப்பவர்கள், தங்கள் நாவில் ராட்சசர்களைச் சுமந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வாயாக. வளமையும், அதிர்ஷ்டமும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பறந்து போகும்.(9)

நீ எப்போதும் அறம் சார்ந்தவர்களையே உனக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வாயாக. எப்போதும் உனது செயல்களைக் கடந்த காலப் பார்வையோடு, அறம் சார்ந்தவர்களின் செயல்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வாயாக. தீயவர்களின் தீச்சொற்களை நீ எப்போதும் மதிக்காதே. நீ அறம் சார்ந்த ஞானிகளின் நடத்தைகளை நினைத்துப் பார்த்து, அதன்படி நடந்து கொள்வாயாக. (10)

ஒருவனது உதடுகள் மூலம் உதிர்க்கப்பட்ட தீச்சொற்கள் எனும் கணைகளால் தாக்குண்ட மனிதன் இரவும், பகலும் அழுகிறான். அஃது அவனது உடலின் மைய பாகத்தையே தாக்கும். எனவே, ஞானமுள்ளோர் எப்போதும் அந்தக் கணையை அடுத்தவர் மீது பயன்படுத்தமாட்டார்கள்.(11)

அன்பு, நட்பு, கொடை, இனிமையான பேச்சு ஆகியவற்றால் கிடைப்பதைவிட, தேவர்களை வழிபட்டும், புகழ்ந்தும் மனநிறைவுப்படுத்துவதனால் கூட மூவுலகங்களிலும் எதுவும் அதிகமாகக் கிடைத்துவிடாது.(12)

எனவே, நீ எப்போதும் தணிக்கும் வார்த்தைகளை உச்சரிக்க வேண்டுமே தவிர்த்து, வாட்டும் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. உன்னால் மதிக்கப்பட வேண்டிய தகுதி வாய்ந்தவர்களை நீ மதிக்க வேண்டும். நீ எப்போதும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், எதையும் இரந்து கேட்கக் கூடாது” எனச் சொன்னேன்” என்றான் {யயாதி}.(13)-

அஷ்டகனை அடைந்த யயாதி! | ஆதிபர்வம் – பகுதி 88(சம்பவ பர்வம் – 24) இந்திரனிடம் கர்வத்துடன் பேசிய யயாதி; யயாதியைச் சபித்த இந்திரன்; சொர்க்கத்திலிருந்து கீழே விழுந்த யயாதி; யயாதியிடம் பேசிய அஷ்டகன் ..

வைசம்பாயனர் சொன்னார், “அதன்பிறகு இந்திரன் யயாதியிடம், “ஓ மன்னா! உனது கடமைகளையெல்லாம் முடித்த பிறகு, நீ கானகமேகினாய், ஓ நகுஷ மைந்தனான யயாதியே, ஆன்மீகக் கடமைகளிலும், எளிமையிலும் நீ யாருக்குச் சமமாக இருக்கிறாய் என்று நான் உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.(1)

யயாதி, “ஓ வாசவா! தவத்துறவில் மனிதர்களிலோ, தேவர்களிலோ, கந்தர்வர்களிலோ, பெரும் முனிவர்களிலோ எனக்கு இணையான ஒருவரையும் நான் காணவில்லை” என்றான்.(2)

அதற்கு இந்திரன், “ஓ ஏகாதிபதியே! உன்னைவிடப் பெரியவர்களையும், உனக்கு இணையானவர்களையும், சிறியவர்களையும், அவர்களது உண்மையான தகுதிகளை அறியாமல் நீ மதிக்கவில்லையாகையால், நீ உனது தவத் தகுதிகளை இழந்தாய். நீ தேவலோகத்திலிருந்து விழவேண்டியது தான்” என்றான்.(3)

யயாதி, “ஓ சக்ரா! {இந்திரா} நிச்சயமாக எனது தவத் தகுதிகளை நான் இழந்துவிட்டேன். அதன் காரணமாக நான் தேவலோகத்திலிருந்து விழ வேண்டியதுதான். ஓ தேவர்கள் தலைவா! அறவோர் மற்றும் நேர்மையானவர்கள் மத்தியில் நான் விழ விரும்புகிறேன்” என்றான்.(4)

இந்திரன், “ஓ மன்னா! அறவோர் மற்றும் ஞானமுள்ளோர் மத்தியிலேயே விழுந்து பெரும் புகழை அடைவாய். ஓ யயாதி! இந்த அனுபவத்தைக் கொண்டு உன்னைவிட உயர்வானவர்களையோ, உனக்கு இணையானவர்களையோ இனி நீ அலட்சியம் செய்யாதே” என்று பதிலுரைத்தான்.”(5)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதன் காரணமாக யயாதி தேவலோகத்தில் இருந்து விழுந்தான். அப்படி விழுந்து கொண்டிருக்கையில் அவன் அரசமுனியான அஷ்டகனால் பார்க்கப்பட்டான். அஷ்டகன் அவனைக் கண்டு,(6) “இந்திரனின் அழகுக்கு இணையானவரும், நெருப்பின் காந்திக்கு நிகரானவரும், உயரத்தில் இருந்து விழுபவருமான நீர் யார்? கருமேகங்களுக்குப் பின்னிருந்து வெளிவந்து விண்ணை அதிகாரம் செய்பவர்களில் முதன்மையான சூரியனா?(7) சூரியனைப் போன்று காந்தியுடன், அதிகச் சக்தியுடன் சூரியப்பாதையில் இருந்து விழும் உம்மைக் கண்டு, என்ன விழுந்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் ஆச்சர்யத்தில் மதியிழந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.(8) சக்ரனைப் {இந்திரனைப்} போன்ற, அல்லது சூரியனைப் போன்ற, அல்லது விஷ்ணுவைப் போன்ற சக்தியுடன், தேவர்களின் பாதையில் இருந்து விழும் உம்மைக் கண்டு உண்மையை அறிந்து கொள்ள அணுகினோம்.(9)  நாங்கள் யார் என்று நீர் கேட்பதற்கு முன்னர், நீர் யார் என்பதைச் சொல்வீராக. நீர் யார்? நீர் ஏன் இங்கு விழுகிறீர்?(10) உமது அச்சங்கள் அகலட்டும், உமது துன்ப துயரங்கள் மறையட்டும். நீர் இப்போது அறம்சார்ந்த ஞானியர் மத்தியில் இருக்கிறீர். {அசுரன்} பலனைக் கொன்ற சக்ரனே {இந்திரனே} கூட உம்மை இங்கு காயப்படுத்த முடியாது.(11) தேவர்களின் தலைவனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவரே! ஞானமுள்ளோரும், அறம்சார்ந்தவர்களும் துயரத்தில் இருக்கும் தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தாங்குவார்கள். இங்கே கூடியிருக்கும் எங்களில், உம்மைப் போன்ற ஞானமுள்ளோர் மற்றும் அறம்சார்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. எனவே, இங்கேயே அமைதியாகத் தங்கியிருப்பீராக.(12) நெருப்புக்கு {அக்னிக்கு} மட்டுமே வெப்பத்தைக் கொடுக்கும் சக்தி உண்டு. பூமிக்கு மட்டுமே விதைக்கு உயிர் கொடுக்கும் சக்தி உண்டு. சூரியனுக்கு மட்டுமே அனைத்தையும் ஒளிரச்செய்யும் சக்தியுண்டு. அதைப் போலவே, அறவோரையும், ஞானியரையும் கட்டளையிடும் சக்தி விருந்தினர்களுக்கு மட்டுமே உண்டு” என்றான்.(13)

யயாதி கண்ட உலகங்கள்! | ஆதிபர்வம் – பகுதி 89(சம்பவ பர்வம் – 25)அஷ்டகனுக்கும், யயாதிக்கும் இடையில் நடந்த உரையாடல்; அஷ்டகனின் தாய்வழிப் பாட்டனான யயாதி…

யயாதி, “நான் நகுஷ மைந்தனும், பூருவின் தந்தையுமான யயாதி ஆவேன். அனைத்து உயிரையும் மதிக்காததால், தேவர்கள், சித்தர்கள், மற்றும் முனிவர்களின் உலகத்திலிருந்து, எனது அறத் தகுதிகள் குன்றி நான் விழுந்து கொண்டிருக்கிறேன்.(1) வயதால் நான் உன்னை விட மூத்தவன் என்பதாலேயே நான் உன்னை முதலில் வணங்கவில்லை. நிச்சயம், வயதில் மூத்தவர்களையும், கல்வியில் உயர்வானவர்களையும், தவத் தகுதிகளில் உயர்வானவர்களையும் எப்போதும் பிராமணர்கள் மதிப்பார்கள்” என்றான்.(2)

அஷ்டகன் “ஓ ஏகாதிபதி! வயதால் மூத்தவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று நீர் சொல்கிறீர். ஆனால் கல்வியாலும், தவத் தகுதிகளாலும் உயர்ந்தவர்களே வழிபடுவதற்கு உண்மையான தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது” என்றான்.(3)

யயாதி, “பாவம் என்பது, நான்கு அறச்செயல்களின் தகுதிகளையும் அழிக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. தற்பெருமையானது ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பண்புகளில் ஒன்றாகும். அறவோர், தீயவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றமாட்டார்கள்.(4)

தங்கள் தவத் தகுதிகள் அதிகரிப்பதற்கான செயல்களையே அவர்கள் செய்வார்கள். நானும் பெரும் அறத்தகுதிகளைக் கொண்டிருந்தேன். ஆனால் அவையெல்லாம் குன்றிவிட்டன. எனது சிறந்த முயற்சிகளினால் கூட என்னால் அவற்றை மீட்டெடுக்க முடியாது. தனது நன்மையில் அக்கறையுள்ளவன், எனது விதியைக் கண்டு செருக்கற்றவனாக இருப்பானாக.(5)

அப்படிப்பட்டவன் பெரும் செல்வங்களை அடைந்து, அவனது தகுதிகளை வளர்க்கும் வேள்விகளைச் செய்வான். அவன் அனைத்தையும் கற்று, பணிவுள்ளவனாக இருப்பான். அவன் முழு வேதங்களையும் அறிந்து, இவ்வுலகம் சார்ந்த இன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துத் தேவலோகம் செல்வான்.(6)

பெரும் செல்வத்தை அடைந்தவன் எவனும் பேருவகைக் கொள்ளக்கூடாது. முழு வேதங்களையும் அறிந்தவன் எவனும் தகுதிகளற்று இருக்கக் கூடாது. மனிதர்களின் உலகத்தில் பல்வேறு இயற்கைப் பண்புகள் இருக்கின்றன. அங்கே விதியே தலைமையானது. சக்தியும், முயற்சியும் கனியற்றதாக {பயனற்றவையாக} இருக்கின்றன. விதியின் வலிமையை அறிந்த ஞானமுள்ளோர், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், பேருவகையோ {செருக்கோ}, துன்பமோ அடையக்கூடாது.(7)

செழுமையும், துக்கமும் விதியைச் சார்ந்தே இருக்கின்றன, தனது முயற்சியாலோ, சக்தியாலோ அல்ல என்பதை அறிந்தவன், விதி வலியது என்பதை உணர்ந்து துயரமோ, பேருவகையோ கொள்ள மாட்டான்.(8)

அறிவுள்ளவன் எப்போதும், துயரங்களில் துன்பப்படாமலும், செழுமையில் பேருவகை கொள்ளாமலும் மனநிறைவுடன் இருப்பான். விதியே தலைமையானது என்று உணரும்போது, துயரமும், பேருவகையும் {செருக்கும்} ஏற்படாது.(9)

ஓ அஷ்டகா, இந்த உலகத்தில் பெரும் சக்தியின் கட்டளைகளை அறிந்த நான், எப்போதும் அச்சமடைவதில்லை; துயரத்தை ஊக்குவிப்பதும் இல்லை.(10)

பூச்சிகளும், புழுக்களும், முட்டையிடும் இனங்களும், தாவர வகைகளும், ஊர்ந்து செல்லும் இனமும், மனித உடலில் வசிக்கும் புழுப் பூச்சிகளும், நீர்களில் இருக்கும் மீன்களும், கற்களும், புற்களும், கட்டைகளும் என அனைத்தும் படைக்கப்பட்டனவே. அவை தனது செயல்களுக்கான விளைவுகளிலிருந்து விலக்கப்படும்போது தலைமை ஆன்மாவோடு (பரமாத்மாவோடு) கலக்கின்றன.(11)

இன்பமும், துன்பமும் நிலையில்லாதன.  எனவே, ஓ அஷ்டகா! நான் ஏன் துயரடைய வேண்டும்? துன்பத்தை விலக்க என்ன செயல் செய்ய வேண்டும் என்பதை நாம் அறிய மாட்டோம்.  எனவே, யாரும் துன்பத்தைக் கண்டு துயருறக்கூடாது” என்றான்.(12)

அஷ்டகனின் தாய்வழிப் பாட்டனான மன்னன் யயாதி, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு அந்தரத்தில் மிதந்து கொண்டு பேசிக்கொண்டிருந்த போது, அந்தப் பேச்சின் முடிவில் அஷ்டகன் அவனைக் கேள்வி கேட்டான்.(13)

அஷ்டகன் “ஓ மன்னர் மன்னா! நீர் எந்த உலகங்களையெல்லாம் கண்டு இன்பமாக இருந்தீர்? ஒவ்வொரு உலகிலும் எவ்வளவு காலம் அப்படி இன்பமாக இருந்தீர்? பேரான்மாக்களின் செயல்களையும், கட்டளைகளையும் அறிந்த சாமர்த்தியமுள்ள குருக்களைப் போல, அறத்தின் கட்டளைகளை உரைக்கின்றீரே!” என்று கேட்டான்.(14)

யயாதி, “நான் இந்தப் பூவுலகில் பெரும் மன்னனாக இருந்தேன். முழு உலகமும் எனது ஆளுகைக்குள் இருந்தது. அதைத் துறந்து, எனது தவத் தகுதிகளை வளர்த்துக் கொண்டு மேலுலகம் அடைந்தேன். நான் அங்கே ஆயிரம் வருடங்கள் இருந்து, மிகவும் உயர்ந்த இடத்திலிருப்பதும், ஆயிரம் கதவுகளை உடையதும், நூறு யோஜனைகள் கொண்டதுமான ஓர் இடத்தில் இருக்கும் இயல்புக்குமிக்க அழகுடைய இந்திரனின் வசிப்பிடத்தை அடைந்தேன். அங்கேயும் நான் ஆயிரம் வருடங்கள் இருந்து, இன்னும் உயரமான இடத்திற்குச் சென்றேன்.(15,16)

அந்த இடத்தில் நிலைத்த மகிழ்ச்சி இருந்தது, அழிவு என்பதே இல்லாத இடமாகவும் அஃது இருந்தது. அந்த இடம் படைப்பாளனும், பூமியின் தலைவனுமானவன் இருக்கும் இடமாகும். அந்த இடத்தை அடைவது மிகவும் கடினம். அங்கேயும் நான் ஆயிரம் வருடங்கள் வசித்தேன்,(17) அதன்பிறகு அதைவிடவும் உயர்ந்த இடமான தேவர்களுக்குத் தேவன் (விஷ்ணு) வசிக்கும் இடத்திற்குச் சென்றேன். அங்கேயும் மகிழ்ச்சியுடன் இருந்தேன். தேவர்களாலேயே கொண்டாடப்படும் பல்வேறு இடங்களில் நான் வசித்தேன்(18). நினைத்த உருவத்தை அடையும் சக்தி பெற்று, நந்தனம் என்ற இடத்தில் இருக்கும் நந்தவனத்தில் அப்சரஸ்களுடன் விளையாடிக்கொண்டு, கோடி வருடங்கள் வாழ்ந்தேன். அங்கே கணக்கிலடங்கா வண்ண வண்ண மலர்களையும், நறுமணத்தை உடைய அழகான மரங்களையும் கண்டேன்.(19)

இப்படியே பல வருடங்கள் கடந்து, நித்தியமான மகிழ்ச்சியை நான் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, ஓ மன்னா, ஓ மன்னர்களில் சிம்மத்தைப் போன்றவனே, ஒரு நாள், தேவதூதன் ஒருவன் கடுமையான முகபாவத்துடனும், சத்தத்துடனும், ஆழ்ந்த பெருங்குரலுடனும், “கேடு வந்தது! கேடு வந்தது! கேடு வந்தது!” என்று மூன்று முறை சத்தமிட்டது மட்டுமே என் நினைவிலிருக்கிறது.(20) நான் எனது அறத்தகுதிகளை இழந்து நந்தனத்திலிருந்து விழுந்தேன். அப்போது வானத்திலிருந்து தேவர்கள்,(21) “அந்தோ! என்னவொரு தீயூழ் {துரதிர்ஷ்டம்}. அறம் சார்ந்தவனாக இருந்தும், புனிதமான கடமைகளைச் செய்திருந்தும், யயாதி தனது தவத் தகுதிகளை இழந்து விழுந்து கொண்டிருக்கிறானே” என்று துயருற்றுச் சொல்லினர். அப்போது நான் விழுந்து கொண்டிருந்தேன். நான் அவர்களிடம் சத்தமாக, “தேவர்களே, நான் விழப்போகும் ஞானமுள்ளோர் இருக்கும் இடம் எங்கே இருக்கிறது? என்று கேட்டேன்.(22) அவர்கள் உங்களுக்குச் சொந்தமான இந்தப் புனிதமான வேள்விகள் நடக்கும் இடத்தைக் காண்பித்தனர். வேள்விநெருப்பில் ஊற்றப்படும் நெய்யால் உருவாகும் சுற்றுப்புறத்தைக் கருமையாக்கிக் கொண்டு வரும் சுருண்ட புகையைக் கண்டேன். அதன் வழிகாட்டுதல்படி, நான் உங்கள் பகுதியை அணுகிக் கொண்டிருக்கிறேன். உங்கள் இடத்திற்கு வந்ததில் இதயத்தால் மகிழ்கிறேன்” என்றான்.(23)

மனிதன் இறந்த பிறகும், பிறக்கும் முன்பும் என்ன நடக்கிறது? | ஆதிபர்வம் – பகுதி 90சம்பவ பர்வம் – 26)புண்ணியம் குறைந்தவர்கள் பூமியில் விழுவார்கள்; பொருளில்லாதவனை உலகம் மதிக்காது; நான்கு கால் உயிரினங்கள் பிறக்கும் முறை; மனிதர்கள் பிறக்கும் முறை; இறந்த மனிதன் செல்லும் உலகங்கள்; நல்லுலகங்கள் மற்றும் தீய உலகங்களையும் மனிதன் அடையும் காரணம் ஆகியவற்றை அஷ்டகனுக்கு விளக்கிய யயாதி.

அஷ்டகன், “நினைத்த உருவை நினைத்த மாத்திரத்தில் அடைந்து, கோடி வருடங்கள் நந்தனத்தில் இருக்கும் நந்தவனத்தில் வாழ்ந்துள்ளீர். ஓ கிருத யுகத்தின் புகழ்வாய்ந்தவர்களில் முதன்மையானவரே! நீர் எப்படி அந்தப் பகுதியிலிருந்து துரத்தப்பட்டு இங்கு வந்தீர்?” என்று கேட்டான்.(1)

யயாதி, “உறவினர்களும், நண்பர்களும், சொந்தங்களும் எப்படி ஒரு மனிதனை இந்த உலகத்தில் கைவிடுகிறார்களோ, அப்படியே அவர்களது செல்வமும் கைவிட்டுப் போகும். அடுத்த உலகத்தில், இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் நாம் அறத்தை இழக்கும்போது நம்மைக் கைவிடுகிறார்கள்” என்றான்.(2)

அஷ்டகன், “எப்படி அடுத்த உலகத்தில் நாம் அறத்தை இழக்கமுடியும் என்பதை அறிய நான் ஆவலாக இருக்கிறேன். ஓ மன்னா! பேரான்மாக்களின் வார்த்தைகளையும், செயல்களையும் அறிந்தவர் நீர் என்பது எனக்குத் தெரியும். என்ன செயல்புரிந்தால், எந்த உலகத்தை அடையலாம் என்பதையும் எனக்குச் சொல்லும்” என்றான்.(3)

யயாதி, “ஓ பக்தியுள்ளவனே, தங்கள் தற்பெருமையையே பேசிக் கொண்டிருப்பவர்கள் பௌமா என்ற நரகத்தில் வீழ்ந்து தண்டிக்கப்படுவார்கள். என்னதான் மெலிந்திருந்தாலும் அவர்கள் பூமியில் வளர்ந்து (மகன்கள் மற்றும் பேரன்கள் வகையில்) கழுகுகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்கும் உணவாக மாறுவர்.(4) எனவே, ஓ மன்னா {அஷ்டகா}, பெரிதும் கண்டிக்கத்தக்க களங்கமுள்ள தீயவர்கள் அடக்கப்பட வேண்டும். ஓ மன்னா, உனக்கு அனைத்தையும் சொல்லிவிட்டேன். நான் இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்பதைச் சொல்வாயாக” என்றான்.(5)

அஷ்டகன், “வாழ்வில் முதுமை அடைந்து அழிந்துபோகும்போது, கழுகுகளும், மயில்களும், பூச்சிகளும், புழுக்களும் மனித உடலை உண்கின்றன. அப்போது அந்த உடலில் இருந்த மனிதன் எங்கிருக்கிறான் (அவை உண்ணும்போது)? அவன் எப்படி மறுபடியும் பிறக்கிறான்? பௌமா என்ற நரகைப் பற்றிப் பூமியில் நான் கேள்விப்பட்டதில்லையே!” என்றான்.(6)

யயாதி, “உடல் அழிந்த பிறகு, மனிதன், தனது செயல்களுக்கேற்ப, மறுபடியும் ஒரு தாயின் கருவறைக்குள் புகுகிறான். அவன் அங்கேயே தெளிவில்லாத உருவுடன் இருக்கிறான். தெளிவான உருவடைந்து, பின்பு காணும்படியான தோற்றத்தை அடைந்து உலகில் தோன்றி, பூமியின் பரப்பில் நடக்கிறான். அவன் எங்கே விழுகிறானோ அதுதான் பூமியில் நரகமாகும் (பௌமா). வாழ்வின் முடிவை அவன் காண்பதில்லை. அதனால் அவன் அந்த அடிமைத்தளையை அறுப்பதில்லை.(7) சிலர் தேவலோகத்தில் அறுபது ஆண்டுகள் வாழ்கின்றனர், சிலர் எண்பது ஆண்டுகள் வாழ்கின்றனர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் கீழே விழுகின்றனர். அப்படி அவர்கள் விழும்போது, ராட்சத உருவில் இருக்கும் மகன்கள், பேரன்கள், உறவினர்கள் ஆகியோரால் தாக்குண்டு தங்களது இதயத்திலிருந்து விலகி தங்கள் அடிமைத்தளைகளை அறுப்பதில்லை” என்றான்.(8)

அஷ்டகன், “என்ன பாவத்திற்காக சொர்க்கத்தில் இருந்து விழும்போது, கூர்மையான பற்கள் கொண்ட ராட்சசர்களால் தாக்கப்படுகிறார்கள்? ஏன் அவர்கள் முழுவதுமாக அழிவதில்லை? அவர்கள் எப்படி ஒரு கருவறைக்குள் புலனுணர்வுகளுடன் புகுகின்றனர்?” என்று கேட்டான்.(9)

யயாதி, “சொர்க்கத்தில் இருந்து விழுந்தவுடன், நுண்ணியப் பொருளாக நீரில் கலக்கிறான். இந்த நீரே உயிர் வித்தான விந்தணுவாகிறது. பிறகு பெண்மைக்கான காலத்தில் ஒரு தாயின் கருவறைக்குள் புகுகிறது. அங்கே அது கருவாக வளர்கிறது. பிறகு, மலரிலிருந்து கனி உருவாவது போல், காணும் தோற்றம் கொண்ட வடிவத்தைப் பெறுகிறது. மரங்கள், செடிகள், மற்ற காய்கறிவகைகள், நீர், காற்று, பூமி, ஆகாயம், ஆகியவற்றில் இதே உயிர்நீராக இருந்து, நான்கு கால் விலங்கினங்களாகவும், இரண்டு கால் விலங்கினங்களாகவும் உருவாகிறது. இதுதான் அனைத்து உயிர்களுக்கும் நேர்கிறது” என்றான்.(10,11)

அஷ்டகன், “நான் எனது சந்தேகங்களைக் கேட்கிறேன். அவற்றை எனக்குச் சொல்வீராக. கருவறை நுழைந்து, மனித வடிவை அடையும் ஓர் உயிர், எப்படி ஒரு ஒரு வடிவத்தையோ, வேறு வடிவத்தையோ அடைகிறது? தனித்தன்மை வாய்ந்த உருவமும், கண்களும், காதுகளும், நினைவும் எப்படிக் கிடைக்கிறது? ஓ தந்தையே, நீர் பேரான்மாக்களின் வார்த்தைகளையும், செயல்களையும் அறிந்தவர். எனவே, என்னால் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு முழுமையான பதிலைச் சொல்லும்” என்றான்.(12,13)

யயாதி, “ஓர் உயிரானது, ஒருவனது செயல்களின் தகுதிக்கேற்ப, உயிர்வித்துக்குள் நுண்ணிய வடிவங்கொண்டு, மறுபிறப்பின் காரணத்திற்கான சுற்றுப்புற சக்திகளால் ஈர்க்கப்பட்டு, கருவறைக்குள் விழுகிறது. அங்கே அது குறிப்பிட்ட காலத்திற்குள் வளர்கிறது.(14) முதலில் அது கருவாகிறது, பிறகு வெளிப்புற உறுப்புகள் வளர்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் அந்தக் கருவறையைவிட்டு வெளியே வந்து, மனிதனாகி, தனது காதுகளால் ஒலியை உணர்கிறது. தனது கண்களால் நிறத்தையும், வடிவத்தையும் உணர்கிறது; தனது மூக்கால் மணத்தையும், தனது நாவால் சுவையையும், தனது முழு உடலால் தொடுதல் உணர்வையும், தனது மனதால் கருத்துகளையும் உணர்கிறது. ஓ அஷ்டகா, இப்படியே நுண்ணியச் சாறு கண்கள் காணும் உடலாக வளர்கிறது” என்றான்.(15,16)

அஷ்டகன், “மரணத்திற்குப் பிறகு, உடல் எரிக்கப்படுகிறது. அல்லது அழிக்கப்படுகிறது. முழுவதுமாக அழிக்கப்பட்ட பிறகு, என்ன நியமத்தால் (கொள்கையால்) ஒருவன் புத்துயிர் பெறுகிறான்?” என்று கேட்டான்.(17)

யயாதி, “ஓ மன்னர்களில் சிங்மே! இறக்கும் மனிதன் ஒரு நுண்ணிய வடிவைக் கொள்கிறான். தனது செயல்களைக் கனவு போல் நினைவில் கொள்கிறான், பிறகு அவன் வேறு உருவத்திற்குள் காற்றைவிட வேகமாக வடிவம் மாறுகிறான்.(18) நற்குணமிக்கவர்கள் உயர்வான வடிவையும், தீயவர்கள் கீழ்மையான வடிவையும் அடைகிறார்கள். தீயவர்கள் புழுக்களாகவும், பூச்சிகளாகவும் ஆகிறார்கள். வேறேதும் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.(19) ஓ தூய பெரும் ஆன்மாவே! உயிரினங்கள் எவ்வாறு பிறக்கின்றன, கருவில் வளர்ந்து, பிறகு நான்கு கால்கள், ஆறு கால்கள் அல்லது இன்னும் அதிகமாகக் கால்களுடைய உயிரினங்களாக எப்படி ஆகின்றன என்பதைச் சொல்லிவிட்டேன். நீ என்னிடம் வேறு என்ன கேட்கப் போகிறாய்?” என்றான்.(20)

அஷ்டகன், “ஓ ஐயா! மனிதர்கள் பூமிக்குத் திரும்பாத அளவுக்கு உயர்ந்த உலகங்களை எப்படி அடைகிறார்கள்? ஆன்மிகத்தாலா அல்லது ஞானத்தாலா? ஒருவன் படிப்படியாக எப்படிப் பாராட்டப்படும் உயர்ந்த உலகங்களை அடைய முடியும்? இதற்கு முழுமையாகப் பதிலளியுங்கள்” என்றான்.(21)

யயாதி, “மனிதர்கள் சொர்க்கத்தில் நுழைவதற்கு அவர்கள் ஏழு வாயில்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஞானமுள்ளோர் சொல்கிறார்கள். துறவு (ஆன்மிகம்), தயவு, அமைதியான மனம் (மன அமைதி), சுய கட்டளை, அடக்கம், எளிமை, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு ஆகியவையே அவை. கர்வத்தால் ஒருவன் இவையனைத்தையும் இழக்கிறான் என்று ஞானமுள்ளோர் சொல்கிறார்கள்.(22) ஞானத்தைப் பெற்றுக் கொள்பவன் தன்னைத் தானே கல்விமானாக நினைத்துக் கொள்கிறான். அந்தக் கல்வியால் மற்றவர்களை மதிக்காமல் இருக்கிறான். அப்படிப்பட்டவன் போற்றப்படும் அழிவில்லாத உலகங்களை அடைய முடியாது. அந்த வகை ஞானம் உள்ள ஒருவன் பிரம்மத்தை அடைய முடியாது.(23)

கல்வி, குறைவாகப் பேசும் தன்மை, நெருப்பு முன்பு வழிபாடு, வேள்விகள் ஆகிய இந்த நான்கும் ஒருவனது அச்சத்தை விலக்கவல்லனவாகும்.  இருப்பினும், செருக்கு கலப்பின், பயம் விலகுவதற்குப் பதில், அஃது அதிகரிக்கும்.(24) ஞானமுள்ளோர் மதிக்கப்படும்போது உவகையும், அவமதிக்கப்படும்போது துன்பமும் அடையக்கூடாது. ஞானமுள்ளோர் மட்டும் மற்றுமொரு ஞானமுள்ளவரை மதிப்பார். தீயவர்களால் நல்லொழுக்கம் உள்ளவர்கள் போல நடந்து கொள்ள முடியாது. நான் நிறையக் கொடுத்திருக்கிறேன் – நான் நிறைய வேள்விகளைச் செய்திருக்கிறேன் – நான் நிறையக் கற்றிருக்கிறேன் – நான் நிறைய நோன்புகளைக் கடைப்பிடித்திருக்கிறேன் என்பன போன்ற கர்வங்களே அச்சங்களின் வேர்களாகும். எனவே, நீ அது போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகக் கூடாது.(25) உன்னைப் போன்ற நற்குணமிக்க கற்றவர்கள், மாற்றமில்லாத, பிறப்பு இறப்பற்ற பிரம்மத்தை மட்டுமே துணையாகக் கருதி; இகத்திலும் பரத்திலும் நிரந்தர அமைதியைப் பெறுகிறார்கள்” என்றான்.(26

வாழ்வின் நான்கு நிலைகள்| ஆதிபர்வம் – பகுதி 91(சம்பவ பர்வம் – 27)வாழ்வின் நான்கு நிலைகள், முனிவர்களின் வகைகள் ஆகியவற்றைப் பற்றி யயாதியிடம் கேட்டு அறிந்து கொண்ட அஷ்டகன்…

அஷ்டகன், “வாழ்வின் நான்கு நிலைகளான, கிருஹஸ்தம், பிக்ஷூ, பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் எப்படி நடந்து கொண்டு அறத்தகுதிகளை அடைய வேண்டும் என்பதில் வேதத்தை அறிந்தவர்கள் வேறு பட்டு இருக்கிறார்களே!” என்று கேட்டான்.(1)

யயாதி, “பிரம்மச்சாரிகள் பின்வருமாறு செயல்பட வேண்டும். தனது குருவின் வசிப்பிடத்தில் தங்கி, அந்தக் குருவின் கட்டளைப்படி பாடம் கற்க வேண்டும். குருவின் கட்டளைக்காகக் காத்திராமல் அவரது குறிப்புணர்ந்து சேவை செய்ய வேண்டும். குரு உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் முன்பு அவன் விழித்துவிட வேண்டும். குரு உறங்கச் சென்ற பிறகே அவன் உறங்கச் செல்ல வேண்டும். அவன் எளிமையானவனாக, தனது உணர்ச்சிகளைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, அமைதியுடனும், விழிப்புடனும் படிப்புக்காகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் அவன் வெற்றியடைய முடியும்.(2)

பழமையான உபநிஷத்தில்[1] இவையெல்லாம் சொல்லப்பட்டுள்ளன. கிருஹஸ்தன் (இல்லறவாசி), நேர்மையான, நியாயமான வழிகளில் செல்வம் ஈட்ட வேண்டும். அவன் வேள்விகள் செய்ய வேண்டும்.  அவன் எப்போதும் ஏதாவது தானம் தர வேண்டும். தனது வசிப்பிடத்திற்கு வரும் விருந்தினர்களை அன்போடு உபசரிக்க வேண்டும். எந்த ஒரு பொருளையும், அதில் சிறுபகுதியையேனும் மற்றவனுக்குக் கொடுக்காமல் தானே எடுத்துக் கொள்ளக் கூடாது.(3)

[1] கும்பகோணம் பதிப்பில், “இது க்ருஹஸ்தனைப் பற்றிய பழைமையாகிய ரஹஸ்யமான சாஸ்திரம்” என்று சொல்லப்படுகிறது.

ஒரு முனிவன், கானகங்களைத் தேடாமல், தனது சக்தியை மட்டுமே நம்பி, எல்லாத் தீய காரியங்களிலிருந்தும் விடுபட வேண்டும். அவன் ஏதாவது தானம் செய்ய வேண்டும். எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது. அப்போதுதான் அவன் தனது வழியில் வெற்றியை அடைவான்.(4)

உண்மையான பிக்ஷூ என்பவன், தனது செயல்களினால் தன்னைத் தாங்கிக் கொள்ளாமல்  எண்ணற்ற சாதனைகள் செய்திருக்க வேண்டும். அவன் தனது உணர்ச்சிகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.  உலக நிகழ்வுகளில் இருந்து அவன் தன்னைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ஓர் இல்லறவாசியின் கூரைக்குக்கீழே படுத்துறங்கக் கூடாது. அவன் மனைவியைக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு நாளும் அவன் சிறிது தூரத்தைக் கடந்து கொண்டே இருக்க வேண்டும்.(5)

நாட்டின் பெரும்பகுதிகளில் பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். உலகம் சம்பந்தமான தனது கடமைகளை முடித்த கற்றவன், வானப்பிரஸ்த வாழ்வுமுறையைத் (உலகத்தைத் துறந்து, காட்டில் வசிப்பது) தேர்ந்தெடுக்க வேண்டும். இன்பங்களுக்கான தனது பசியைக் குறைத்துக் கொண்டு, செல்வம் சேர்ப்பதில் விருப்பத்தைத் தவிர்த்து வர வேண்டும். இந்த வாழ்வுமுறையை அனுசரித்து வரும்போது இறந்து போகும் மனிதன், தனது பத்துத் தலைமுறை மூதாதையர்களையும், வழித்தோன்றல்களையும் தெய்வீகத் தன்மையடையச் செய்கிறான்” என்று பதிலுரைத்தான்.(6,7)

அஷ்டகன், “எத்தனை வகையான முனிவர்கள் (பேசாநோன்பை நோற்பவர்களாக) இருக்கிறார்கள்?” என்று கேட்டான்.(8)

யயாதி, “முனிவன் என்பவன், ஒன்று கானகத்தில் வசித்தாலும், அருகில் வாழுமிடம் {கிராமம்} இருக்க வேண்டும். அல்லது அவன் வாழுமிடத்தில் வசித்தாலும், அருகில் கானகம் இருக்க வேண்டும்” என்றான்.(9)

அஷ்டகன், “முனிவன் என்றால் என்ன? {காட்டில் வாழும்போது வாழுமிடம் சம்பந்தமானவற்றையும், வாழுமிடத்தில் இருக்கும்போதும் காடு சம்பந்தமானவற்றையும் ஒருவனால் எவ்வாறு அடைய முடியும்?}” என்று கேட்டான்.(10)

யயாதி, “ஒரு முனிவன், அனைத்து உலகப் பொருட்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, கானகத்தில் வசிக்கிறான். வாழுமிடங்களில் இருக்கும் பொருட்கள் தன்னைச் சூழாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும் முனிவன், தேவைப்படும்போதும் அவையனைத்தும் தனது தவ மகிமையால் பெறுவான்.(11)

அவன் கானகத்தில் வசித்தாலும், அருகில் வாழுமிடம் இருக்க வேண்டும். உலகப் பொருட்களையெல்லாம் துறந்த ஒரு அறிவுள்ளவன், ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு துறவியாக வாழ்கிறான். அவன் தனது குலப்பெருமையையோ, பிறப்பு அல்லது கல்வியின் பெருமையையோ காண்பித்துக் கொள்ளக்கூடாது. அவன் குறைந்த அளவு ஆடை உடுத்திக்கொண்டு, அதையே ஆடம்பரமாகக் கருத வேண்டும். அவன் தனது உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கே உண்ண வேண்டும்.(12,13)

அப்படிப்பட்ட மனிதன் வாழிடத்தில் வசித்தாலும், கானகத்தில் வசித்ததற்குச் சமமே. அப்படிப்பட்ட மனிதன், தனது உணர்ச்சிகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, பேசா நோன்பு {மௌன விரதம்} நோற்று, தன்னை எல்லாச் செயல்களிலிருந்தும் விடுவித்துக் கொண்டு, விருப்பங்களைத் துறந்து வெற்றியை அடைகிறான்.(14)

அறம் அனுமதித்த போதும், தூய்மையான உணவை மட்டுமே உண்டு, அடுத்தவர்களுக்கு எப்போதும் தீங்கிழைக்காமல், எப்போதும் சுத்தமான இதயங்கொண்டு, துறவு நிலை கொண்டு, ஆசைகளைத் துறந்து இருக்கும் மனிதனை நாம் ஏன் மதிக்கக்கூடாது?(15)

தவங்களால் மெலிந்து, சதை, எலும்பு, மஜ்ஜை, இரத்தம் ஆகியவை சுருங்கி அவன் இந்த உலகத்தையும், உயர்ந்த உலகங்களையும் வெற்றி கொள்கிறான்.(16)

ஒரு முனிவன் யோகத் தியானத்தில் அமரும்போது, மகிழ்வும், துயரமும், மதிப்பும், அவமதிப்பும் அவனுக்கு ஒன்றாகிப் போகின்றன. அப்படிப்பட்ட நிலையை அடைந்த அவன், இந்த உலகத்தை விட்டு, பிரம்மத்துடன் ஒருங்கிணைந்து இன்பமடைகிறான். (17)

ஒரு முனிவன், (தாயின் மடியில் உறங்கும் குழந்தையைப் போல) எதையும் எதிர்பார்க்காமல், எந்த மகிழ்ச்சியும் அடையாமல் பசுவைப் போலவோ, பிற விலங்குகளைப் போலோ உணவை உண்டால், அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவைப் போல அவன் மொத்த அண்டத்துடனும் அடையாளம் காணப்பட்டு, முக்தியை அடைகிறான்” என்றான் {யயாதி}.(18)

பரிசுகளை ஏன் ஏற்கக்கூடாது? | ஆதிபர்வம் – பகுதி 92(சம்பவ பர்வம் – 28)பிரம்மத்தை முதலில் அடைவது யார் என்பதை யயாதியிடம் கேட்ட அஷ்டகன்; யயாதியின் வரலாறு குறித்து வினவிய அஷ்டகன்; தன் புண்ணியத்தை யயாதிக்குக் கொடுத்த அஷ்டகன்; பரிசுகளை ஏற்க மாட்டேன் என்று அதை மறுத்த யயாதி; பிரதர்த்தனனும் தன் புண்ணியத்தை அளிக்க முன்வந்தது

பிரகாசித்துக்கொண்டு பிரம்மத்தில் முதலில் ஒருங்கிணைவது துறவியா? அல்லது ஞானமுள்ளவனா?” என்று கேட்டான்[1].(1)(கும்பகோணம் பதிப்பில், “ராஜாவே! சூரியனையும், சந்திரனையும் போல ஒடுங்குகின்ற முன்சொல்லப்பட்ட இவ்விருவருள் (கிராமத்தில் வஸிப்பவனும் வனத்தில் வசிப்பவனுமாகிய இவ்விருவருள் எவன் முதலில் தேவர்களோடு ஒப்புமையடைகிறான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.  பிபேக்திப்ராயின் பதிப்பில், “இவ்விருவரில் (துறவி மற்றும் இல்லறத்தான் ஆகியோரில்) எவர் முதலில் தேவர்களுடன் ஒன்றிணைவார்கள்?” என்றிருக்கிறது.)

யயாதி, “ஞானமுள்ளவர்கள், வேதங்கள் மற்றும் அறிவின் உதவியோடு, அண்டத்தில் காணப்படுவதெல்லாம் மாயை என்பதை உறுதி செய்து, தானாகவே நிலைத்திருக்கும் பரமாத்மாவை உடனே உணர்கிறார்கள்.(2)

மேலும் யோகத்திற்கும், தியானத்திற்கும் தன்னை அர்ப்பணித்தவன், வெற்றியை அடைவதற்காக வருத்தத்துடன் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதால், ஒரே வாழ்க்கையின் மூலம் வெற்றியை அடைய அவனுக்குப் போதிய நேரம் கிடைக்காமல், உலக ஈர்ப்புகளால் தவறாக வழிநடத்தப்பட்டு, ஏற்கனவே {இந்த வாழ்வின் மூலம்} அடைந்த முன்னேற்றத்தை அடுத்த வாழ்வில் அடைகிறான். ஆனால், அறிவுள்ளவன், அழிவில்லாத ஒருமையை உடனே கண்டு கொள்கிறான். எனவே, உலக இன்பங்களில் ஈடுபட்டாலும், அவற்றால் அவனது இதயம் எந்தப் பாதிப்பையும் அடைவதில்லை. எனவே, அவனது முக்தியைத் தாமதப்படுத்த எதுவும் இல்லை. எனினும், ஞானத்தை அடையத் தவறியவன், செயல்  (வேள்விகள்) சார்ந்த பக்தியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். ஆனால், முக்தியை விரும்பி அத்தகு பக்தியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்பவன் வெற்றியடையமாட்டான். அவனது வேள்விகள் கனியைக் கொடாமல், கொடூரத் தன்மையையே பற்றிக் கொள்ளும். கனியின் {பலனின்} மீது ஆசையில்லாமல் செய்யப்படும் பக்திச் செயல்பாடு, அத்தகு மனிதர்களுக்கு யோகத்திலேயே அமையும்” என்று பதிலுரைத்தான்[2].(3-5)(கும்பகோணம் பதிப்பில், “கிருஹஸ்தர்கள் நடுவில் வாஸஞ்செய்யாதவனாகவும், வைராக்கியமுள்ளவனாகவும் கிராமத்திலேயே வஸிக்கும் யதி, அவரிருவர்களுள் முதலில் தேவஸாம்யத்தை அடைகிறவன். எவன் நீண்ட வாழ்நாளை அடையாமல் மனத்தில் விகாரத்தை அடைந்து திரிவானோ, அவன் அவ்வாறு செய்ததனால் அனுதாபப்படுவனேயாயின், பிறகு, வேறு தவம் செய்யக் கடவன். எந்த மனிதன் எப்போதும் பாபகாரியங்களுக்குப் பயந்திருப்பானோ அவன் எப்போதும் தன் ஸுகத்தைச் செய்து கொண்டிருந்தாலும், மேலான ஸுகத்தை அடைகிறான். எது ஹிம்ஸையை உண்டு பண்ணுவதோ அதைத்தான் அஸத்தியமென்று சொல்லுகின்றன்றனர். ராஜாவே! ஒருவன் ஒன்றைத் தன் சொத்தென்றும், அதற்குத் தான் ஸ்வாமியென்றும் நினையாமலும் பலனைக் கருதாமலும் தர்மத்தைச் செய்வானாயின் அதுதான் நேர்மை; அதுதான் நிஷ்டை; அதுதான் யோக்கியம்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அறிவுடையவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனுமான மனிதன் ஒருவன், இல்லறவாசிகளுக்கு மத்தியில் பல்வேறு ஆசைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவனே முதலில் முக்தியை அடைவான்.(2) யோகத் தியானத்துக்குத் தங்களை அர்ப்பணித்திருப்போர், இருமையியல்பில் {idea of duality} இருந்து பயிற்சியின் மூலம் மட்டுமே விடுபட இயலும் என்பதால், அந்த அறிவை அடைய நெடுங்காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.(3) மேலும், யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு அவனது வாழ்நாளில் வெற்றியை அடைய போதிய நேரமில்லாமல் போனால், அவனது அடுத்த வாழ்வில் அவன் ஏற்கனவே அடைந்திருக்கும் முன்னேற்றத்தின் பலனை அடைவான். ஆனால் ஞானியான ஒருவனோ, அழிவில்லா ஒருமையை எப்போதும் காண்கிறான். எனவே, அவன் உலக இன்பங்களில் ஈடுபடுபவனாக இருப்பினும், இதயம் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான்(4,5)”என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “இல்லறத்தானாக இருப்பினும் வீடு இல்லாதவனும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனுமான ஒருவனும், கிராமத்தில் வாழும் வீடில்லா துறவியும் முதலில் தேவர்களை அடைவார்கள். முதிர்வயதை அடையாதவர்களும், அழிவடையக்கூடியவர்களும் அவர்களை அடைவார்கள். தவங்கள் செய்யப்பட்டாலும், அதைவிட அதிகமான தவங்கள் செய்யப்படும். கொடூரத்தன்மையால் உண்மையை அடைய முடியாது என்று சொல்லப்படுகிறது. ஓ மன்னா! ஒருவனிடம் எந்த செல்வமும் இல்லாவிட்டாலும், அவன் அர்ப்பணிப்புடன், ஆதாயங்களை நினைத்துப் பாராமல் தர்மத்தைச் செய்தால், அவன் அழிவற்றதன்மையுடன் ஒன்றுதலை அடைகிறான்” என்றிருக்கிறது. இப்படி நான்கு பதிப்புகளிலும், நான்கு வகைகளில் சொல்லப்பட்டுள்ளது. மூலத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை இதில் சரியாக இருக்கும். மூலம் மிகக் கடினமான வார்த்தைகளில் இருக்கிறது என்றும், மேற்கண்ட சுலோகங்களின் பொருளானது, இல்லறவாசிகள், மற்றும் கிராமத்தவரின் மத்தியில் ஆசைகளுடன் வாழும் ஞானமுள்ள யதி முதலில் முக்தி பெறுவான். யோகம் மற்றும் தவத்துறவுகளில் ஈடுபட்ட வன யதிக்கு தன்னுடைய வாழ்நாள் முக்தியை அடைய போதாமல் போகலாம். அவன். அடுத்தடுத்த பிறவிகளில் தனது கர்மங்களின் பலனைப் பெற்று அதனால் ஞானம் பெற்று  முக்திக்கு முன்னேற்றுகிறான் என்றும் தெரிவதாக சம்ஸ்க்ருதம்அறிந்தோர் சொல்கின்றனர்.  )

அஷ்டகன், “ஓ மன்னா! நீர் அழகாகவும், தெய்வீக மாலையால் அலங்கரிக்கப்பட்டும் இளமையாகத் தெரிகிறீர். உம்முடைய காந்தி பெரிதாக இருக்கிறது. நீர் எங்கிருந்து வருகிறீர், எங்குச் செல்கிறீர்? நீர் யாருடைய தூதுவன்? நீர் கீழே பூமிக்குச் செல்கிறீரா?” என்று கேட்டான்.(6)

யயாதி, “நான் எனது அறத்தகுதிகளை இழந்து சொர்க்கத்திலிருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். நான் பூமி நரகிற்குள் விழுவதற்கு விதிக்கப்பட்டிருக்கிறேன். உங்களுடனான இந்த விவாதத்தை முடித்துவிட்டு, நிச்சயம் நான் அங்குதான் செல்வேன். இப்போதுகூட, திக்பாலர்கள் என்னை அவ்விடத்திற்கு விரைவாகச் செல்லக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.(7) ஓ மன்னா! நான் இந்திரனிடம் ஒரு வரம் பெற்றிருக்கிறேன். நான் பூமியில் விழுந்தாலும், ஞானமுள்ளவர்கள் மற்றும் அறம்சார்ந்தவர்கள் மத்தியிலேயே விழுவேன். இங்கே கூடியிருக்கும் நீங்களும் அறிவும், அறமும் கொண்டவர்களே” என்றான்.(8)

அஷ்டகன், “நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர். ஓ மன்னா! நான் கேட்கிறேன். நான் மகிழ்வதற்கும் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ ஏதாவது ஒரு பகுதி இருக்கிறதா? அப்படி ஏதாவது இருந்தால், நீர் விழுந்து கொண்டிருந்தாலும், முற்றிலும் விழமாட்டீர்” என்றான்.(9)

யயாதி, “ஓ மன்னா! பூமியின் காடுகளிலும், மலைகளிலும் எத்தனை மாடுகளும், குதிரைகளும் இருக்கின்றனவோ, அப்படியே நீ மகிழ, சொர்க்கத்தில் நிறையப் பகுதிகள் இருக்கின்றன” என்றான்.(10)

அஷ்டகன், “ஓ மன்னா! சொர்க்கத்தில் அப்படி நான் மகிழ்வதற்காக உலகங்கள் இருந்தால், எனது அறத்தகுதிகளின் கனிகளைக் கொண்டு, அவை அனைத்தையும் நான் உமக்கே தந்தேன். எனவே, நீர் விழுந்து கொண்டிருந்தாலும், முற்றிலுமாக விழமாட்டீர். சொர்க்கத்திலும், அந்தரத்திலும் என்னவெல்லாம் அப்படி எனக்காக இருக்கின்றனவோ அவை அனைத்தையும் விரைவாக எடுத்துக்கொள்ளும். உமது துன்பம் விலகட்டும்” என்றான்.(11)

யயாதி, “ஓ மன்னர்களில் சிறந்தவனே! பிரம்மத்தை அறிந்த பிராமணன் மட்டுமே இப்படிப் பரிசுகளை ஏற்கலாம். ஆனால், நம்மைப் போன்றவர்கள் ஏற்கக்கூடாது. ஓ ஏகாதிபதி! ஒருவன் பரிசுகளை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படி பிராமணர்களுக்கு நானே கொடுத்திருக்கிறேன்.(12) பிராமணனல்லாதவனோ, அல்லது கல்விமானான ஒரு பிராமணனின் மனைவியோ பரிசுகளை ஏற்று கெடுபுகழ் அடையாதிருக்கட்டும். நான் பூமியில் இருந்த போது, அறச்செயல்கள் செய்வதையே விரும்பினேன். இது வரை நான் அப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. நான் எப்படி ஒரு பரிசை ஏற்க முடியும்?” என்றான்.(13)

அங்கு கூடியிருந்தவர்களில் பிரதர்த்தனன் என்பவன், “ஓ அழகான வடிவங்கொண்டவரே! எனது பெயர் பிரதர்த்தனன். உம்மைக் கேட்கிறேன். நான் மகிழ்வதற்குச் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ ஏதாவது பகுதி இருக்கிறதா? நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர். எனவே, எனக்குப் பதிலுரையும்” என்றான்.(14)

யயாதி, “ஓ மன்னா! மகிழ்ச்சி நிறைந்த கணக்கிலடங்கா உலகங்கள், சூரியத் தகட்டைப்போன்று ஒளிவீசிக்கொண்டு இருக்கும் துன்பமே அற்ற உலகங்கள் உனக்காகக் காத்திருக்கின்றன. நீ ஒவ்வொரு உலகத்திலும் ஏழுநாள் தங்கினாலும், அந்த உலகங்கள் பூர்த்தியாகாது” என்றான்.(15)

பிரதர்த்தனன், “அவற்றை நான் உமக்கு அளிக்கிறேன். எனவே, விழுந்து கொண்டிருக்கும் நீர் விழக்கூடாது. எனக்கான உலகங்கள் சொர்க்கத்திலிருந்தாலும், அந்தரத்திலிருந்தாலும் அவை உமதாகட்டும். விரைவாக நீர் அதை எடுத்துக் கொள்ளும். உமது துயரங்கள் அகலட்டும்” என்றான்.(16)

யயாதி, “ஓ ஏகாதிபதி! சக்தியில் இணையானவனான எந்த மன்னனும், வேறு மன்னனின் யோகத் தவங்களின் மூலம் பெற்ற அறத்தகுதிகளைப் பரிசாகப் பெற விரும்பக்கூடாது.  ஒரு மன்னன் விதியின் காரணமாகப் பேராபத்தில் சிக்கிக் கொண்டாலும், அவன் ஞானமுள்ளவனாக இருந்தால், கண்டிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. ஒரு மன்னன் அறத்தில் தனது பார்வையை நிலைக்க வைத்து, என்னைப் போலவே, தனது கடமைகளை அறிந்து, அறத்தின் பாதையிலேயே நடக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல நடந்து கொள்ளக்கூடாது.(17,18) அறத்தகுதிகளை அடைய விருப்பம் கொண்ட மனிதர்கள் பரிசுகளைப் பெறாதபோது, நான் எப்படி அவற்றைப் பெற முடியும்?” என்றான்.

இந்த விவாதத்தின் முடிவில் மன்னர்களில் சிறந்தவனான யயாதி, வசுமனஸ் {வஸுமான்} என்பவனால் பின்வருமாறு கேட்கப்பட்டான்.(19)

மீண்டும் சொர்க்கத்தை அடைந்தான் யயாதி! | ஆதிபர்வம் – பகுதி 93(சம்பவ பர்வம் – 29)வசுமனசும், சிபியும் கொடுத்த புண்ணியத்தை யயாதி அங்கீகரிக்காதது; விமானத்தைக் கண்ட சகோதரர்கள்; யயாதியைக் கண்ட மாதவி; பெண்வம்சத்துப் புண்ணியத்தை ஏற்கலாம் என்று சொல்வது; யயாதியுடன் சென்ற சிபி முதலானோர்; சிபியின் மகிமையை எடுத்துரைத்த யயாதி

வசுமனஸ் {வஸுமான்}, “ஓ மன்னா! நான் ஓஷதஸ்வனின் {உஷதஸ்வனின்} மகன் வசுமனஸ், எனது அறத்தகுதிகளின் கனிகளை நான் அனுபவிக்க எனக்கு ஏதாவது உலகங்கள் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ இருக்கின்றனவா என்று நான் உம்மைக் கேட்கிறேன். ஓ உயர் ஆன்மாவே! நீர் அனைத்து நல்லுலகங்களையும் அறிந்தவராயிற்றே” என்றான்.(1)

யயாதி, “அந்தரத்தில் எத்தனைப் பகுதிகள் இருக்கின்றனவோ அத்தனைப் பகுதிகளுடன் சேர்த்து, பூமி மற்றும் சூரியனால் ஒளியூட்டப்படும் அண்டத்தின் பத்துப் புள்ளிகள் அளவு உலகங்கள் உனக்குச் சொர்க்கத்தில் உள்ளன” என்றான்.(2)

வசுமனஸ், “அவற்றை நான் உமக்குத் தருகிறேன். எனக்கான அந்தப் பகுதிகள் அனைத்தும் உமதாகட்டும். எனவே, நீர் விழுந்து கொண்டிருந்தாலும், மொத்தமாக விழ மாட்டீர். ஓ ஏகாதிபதி! அவற்றைப் பரிசாகப் பெறுவது உமக்குச் சரியாகப் படவில்லையெனில், ஒரு புல்லைக் கொடுத்து (புல்லை விலையாகக் கொடுத்து) வாங்கிக் கொள்ளலாமே?” என்றான்.(3)

யயாதி, “நான் எதையும் அநியாயமாக வாங்கியதாகவோ, விற்றதாகவோ எனக்கு நினைவில்லை. இப்படி எந்த மன்னர்களாலும் செய்யப்பட்டதில்லை. எனவே, நான் எப்படி அதைச் செய்ய முடியும்?” என்றான்.(4)

வசுமனஸ், “ஓ மன்னா, நீர் அப்படி விலை கொடுத்து வாங்குவது சரியல்ல என்று கருதினால், என்னுடைய பரிசாக அஃதை ஏற்றுக் கொள்ளலாமே. நான் எக்காரணம் கொண்டும் அந்த உலகங்களுக்குச் செல்ல மாட்டேன். எனவே, அவை உமதாகட்டும்” என்றான்.(5)

அதன்பிறகு, சிபி என்பவன் மன்னனிடம் {யயாதியிடம்} பேசினான், “ஓ மன்னா! நான் உசீநரனின் மைந்தன். எனது பெயர் சிபி. ஓ ஐயா! நான் மகிழச் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ உலகங்கள் இருக்கின்றனவா? ஒருவன், தனது அறத்தகுதிகளின் கனியால் மகிழக்கூடிய அனைத்து உலகங்களையும் அறிந்தவர் நீர்” என்றான்.(6)

யயாதி, “நீ உனது பேச்சாலோ, எண்ணத்தாலோ; நேர்மையானவர்களையும், அறம்சார்ந்தவர்களையும் அவமதித்ததில்லை. நீ மகிழ்வதற்காக எண்ணற்ற மின்னல் போல ஒளிரும் உலகங்கள் சொர்க்கத்தில் காத்திருக்கின்றன” என்றான்.(7)

சிபி, “அவற்றை விலை கொடுத்து வாங்குவது தவறு என்று நீர் கருதினால், அவற்றை நானே கொடுக்கிறேன். அவற்றையெல்லாம் நீரே எடுத்துக் கொள்ளும். ஓ மன்னா! நான் அவற்றை எப்போதும் எடுத்துக் கொள்ள மாட்டேன். ஞானமுள்ளோர் அமைதியாக இருக்க முடியாத அந்த உலகங்களை நான் விரும்ப மாட்டேன்” என்றான்.(8)

யயாதி, “ஓ சிபியே! இந்திரனின் ஆற்றலைப் போன்ற ஆற்றலுடன், அந்தக் கணக்கற்ற உலகங்களை நிச்சயமாக நீயே அடைந்தாய். ஆனால், நான் மற்றவர்களால் கொடுக்கப்படும் உலகங்களை விரும்பவில்லை. எனவே, நான் பரிசுகளை ஏற்பதில்லை” என்றான்.(9)

அஷ்டகன், “ஓ மன்னா! நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் அறங்களால் அடைந்த நல்லுலகங்களை விருப்பப்பட்டு உமக்குக் கொடுக்க முன்வந்தோம். நீர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் அவற்றை உமக்கே அளித்துவிட்டு, பூமி நரகிற்குள் இறங்கப் போகிறோம்” என்றான்.(10)

யயாதி, “உண்மையை விரும்பும் ஞானிகளே, எனக்குத் தகுதியானதை எனக்குக் கொடுங்கள். நான் இதுவரை செய்யாததை என்னால் செய்ய இயலாது” என்றான்.(11)

அஷ்டகன், “நாங்கள் காணும் அந்த ஐந்து தங்கத் தேர்களும் யாருடையவை? அந்த உலகங்களுக்குச் சென்று வரும் மனிதர்கள் அதில் பயணப்படுவார்களா?” என்று கேட்டான்.(12)

யயாதி, “நெருப்பைப் போல, பளபளக்கும் புகழ்வாய்ந்த அந்த ஐந்து தங்கத் தேர்களும் உங்களை நிரந்தர அருள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றன” என்றான்.(13)

அஷ்டகன், “ஓ மன்னா! அந்தத் தங்கத் தேர்களில் நீரே ஏறி சொர்க்கத்தை அடைந்து கொள்வீராக. எங்களால் காத்திருக்க முடியாது. நாங்களும் உம்மைப் பின்தொடர்கிறோம்” என்றான்.(14)

யயாதி, “நாம் அனைவரும் இப்போது ஒன்றாகச் செல்லலாம். நிச்சயமாக நாம் அனைவரும் சொர்க்கத்தை வென்றுவிட்டோம். சொர்க்கத்திற்கான புகழ்வாய்ந்த வழி கண்ணுக்குப் புலப்படுவதைப் பாருங்கள்” என்றான்.”(15)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு அந்த ஏகாதிபதிகள் அனைவரும் அந்த தேர்களில் ஏறி சொர்க்கத்திற்குச் சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டு, முழு சொர்க்கத்தையும் தங்கள் அறத்தின் புகழால் ஒளிரச் செய்தனர்.(16)

அஷ்டகன், அமைதியைக் கலைத்து, “நான் எப்போதும் இந்திரனை எனது சிறந்த நண்பனாகக் கருதினேன். எனவே, நான் மற்றவர்களுக்கு முன் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், எப்படி உசீநரனின் மைந்தன் சிபி, நம்மைப் பின்தங்க வைத்துச் சென்றுவிட்டான்?” என்று கேட்டான்.(17)

யயாதி, “உசீநரனின் மைந்தன் அவனுக்கான அனைத்தையும் துறந்து பிரம்மனின் உலகை அடைந்துவிட்டான்.  எனவே, அவனே நம்மில் முதன்மையானவன். அதுபோக, சிபியின் ஔதாரியம், துறவு, உண்மை, அறம், அடக்கம், மன்னிக்கும் தன்மை, இனிமை, நல்லெண்ணத்துடன் செயல்படுவதில் விருப்பம் ஆகியவை எவராலும் அளக்கமுடியாத மிகப் பெரும் செயல்களாகும்” என்றான்.”(18,19)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அதன்பிறகு, அஷ்டகன், தனது ஆர்வ மேலீட்டால், மற்றுமொரு இந்திரனைப் போன்ற தனது தாய்வழிப் பாட்டனான அவனிடம் {யயாதியிடம்}, “ஓ மன்னா! நான் கேட்கிறேன். உண்மையைச் சொல்லும். எங்கிருந்து நீர் வருகிறீர்? நீர் யார்? நீர் யாருடைய மகன்? வேறு யாரேனும் பிராமணரோ, க்ஷத்திரியரோ, பூமியில் நீர் செய்ததைப் போலச் செய்திருக்கிறார்களா?” என்று கேட்டான்.(20)

யயாதி, “நான் உண்மையாகச் சொல்கிறேன். நான் நகுஷனின் மைந்தன் யயாதி. நான் பூருவின் தந்தையாவேன். முழு பூமியின் தலைவனாக {சர்வபௌமனாக} இருந்தேன். நீங்கள் என் உறவினர்களே; நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன், நான் தாய்வழியில் உங்கள் அனைவரின் பாட்டனாவேன்.(21) முழு உலகத்தையும் கைப்பற்றிய நான், உடைகளையும், வேள்விக்கான நூறு அழகான குதிரைகளையும் பிராமணர்களுக்குக் கொடுத்தேன். அவற்றைப் போன்ற அறச்செயல்களுக்காகத் தேவர்கள் மகிழ்ந்து நன்மை செய்தனர்.(22) மேலும், இந்த முழுப் பூமியையும், அதன் குதிரைகள், யானைகள், பசுக்கள், தங்கம், அனைத்து விதமான செல்வங்கள் நூறு அற்புதங்களையுடைய பசுக்கள் ஆகியவற்றை பிராமணர்களுக்குக் கொடுத்தேன்.(23) பூமியும், ஆகாயமும் எனது வாய்மை மற்றும் அறத்தாலேயே நிலைத்திருக்கின்றன. எனது வாய்மை மற்றும் அறத்தாலேயே மனிதர்களின் உலகில் இன்னும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு போதும் பொய் பேசியதில்லை. இதன் காரணமாகவே ஞானிகள் வாய்மையைப் புகழ்கின்றனர்.(24)

ஓ அஷ்டகா! நான் உனக்கும், பிரதர்த்தனனுக்கும், வசுமனஸுக்கும் சொன்னதெல்லாம் உண்மையே. தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் இந்த வாய்மையின் காரணமாகவே புகழப்படுகிறார்கள் என்பதை நிச்சயமாக அறிவேன்.(25) எவனொருவன், நல்ல பிராமணர்களிடம் நாம் சொர்க்கத்திற்கு உயர்ந்ததைப் பற்றிக் களங்கமில்லாமல் உரைக்கின்றானோ அவன் நாம் செல்லும் உலகங்களையே நம்முடன் அடைவான்” என்றான்.”(26)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படியே தனது சாதனைகளுக்காகச் சிறப்புவாய்ந்த அந்த மன்னன் யயாதி, தனது இணை வழித்தோன்றல்களால் மீட்கப்பட்டு பூமியை விட்டு, தான் செய்த செயல்களின் புகழால் மூன்று உலகங்களையும் மறைத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.”(27)

பூருவின் குல வரலாறு! – பகுதி 94-(சம்பவ பர்வம் – 30)பூருவின் குல வரலாறு; தன் வம்சத்திற்குத் தனது பெயரையே வைத்த பரதன்…

ஜனமேஜயன், “ஓ வழிபடத்தகுந்தவரே {வைசம்பாயனரே}!, பூருவின் வழித்தோன்றல்களான மன்னர்களின் வரலாறுகளைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். பெரும் வீரத்தைக் கொண்டு பெரும் சாதனைகளைச் செய்த அம்மன்னர்களை ஒவ்வொருவராக எனக்குச் சொல்வீராக.(1) பூருவின் பரம்பரையில் வந்த எந்த மன்னனும் நன்னடத்தையில்லாமலோ, வீரமற்றோ, புத்திரப்பேறு இல்லாமலோ இருந்ததாக நிச்சயமாக நான் கேள்விப்படவில்லை.(2) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! சிறந்த கல்வியும், சிறந்த சாதனைகளையும் கொண்ட அந்தப் புகழ்வாய்ந்த ஏகாதிபதிகளின் வரலாறுகளை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(3)

வைசம்பாயனர் சொன்னார், “உன்னால் கேட்கப்படுவதால், பூருவின் வம்சத்தில் வந்து, வீரத்தில் இந்திரனுக்கு நிகராகவும், தங்களது சாதனைகளால் மதிக்கப்பட்டும் இருந்த வீரர்கள் குறித்த அனைத்தையும் சொல்கிறேன்.(4) பூரு தனது மனைவி பௌஷ்டி மூலம் பிரவீரன், ஈஸ்வரன், ரௌத்ரஸ்வன் என்ற மூன்று மகன்களைப் பெற்றான். அவர்கள் அனைவரும் பெரும் தேர் வீரர்களாக இருந்தனர். அவர்களில் பிரவீரனே வம்சத்தை விளங்க வைப்பவனாக இருந்தான்.(5) பிரவீரன் தனது மனைவி சூரசேனி மூலம் மனஸ்யு என்ற மகனைப் பெற்றான். தாமரை இதழ்களைப் போன்றக் கண்களைக் கொண்ட மனஸ்யு நான்கு கடல்கள் சூழ்ந்த பூமியை முழுவதுமாக ஆண்டான்.(6) மனஸ்யு சௌவீரி என்பவளை மனைவியாகக் கொண்டான். அவள் மூலம் சக்தன், சஹனன் {ஸம்ஹனனன்}, வாக்மி என்ற மூன்று மகன்களைப் பெற்றான். அவர்கள் போர்க்களத்தில் வீரர்களாகவும் பெரும் தேர் வீரர்களாகவும் இருந்தனர்.(7)

இப்படியே தொடர்ந்த பரம்பரையில் புத்திசாலியாகவும், அறம்சார்ந்தவனாகவும் இருந்த ரௌத்ரஸ்வன், அப்சரஸ் மிஸ்ரகேசியிடம் பெரும் வில்லாளிகளான பத்து மகன்களைப் பெற்றான்.(8) அவர்கள் அனைவரும் பெரும் வீரர்களாக வளர்ந்து, தேவர்களை வழிபட்டு அவர்களை மகிழ்விக்க எண்ணற்ற வேள்விகளைச் செய்தனர். அவர்கள் அனைவரும் ஞானத்தின் எல்லாக் கிளைகளிலும் தேர்ச்சி பெற்று, எப்போதும் தங்களை அறத்திற்கே அர்ப்பணித்து இருந்தனர்.(9) ரிசேயு, கக்ஷ்ரேயு {கக்ஷேயு}, பெரும் சக்தி வாய்ந்த விருகேயு {க்ருகணேயு}, ஸ்தண்டிலேயு, வனேயு, பெரும் புகழ்வாய்ந்த ஜலேயு, பெரும் சக்தியும் புத்திக்கூர்மையும் கொண்ட தேஜேயு, இந்திரனைப் போன்ற வீரம் கொண்ட சதேயு, தர்மேயு, பத்தாவதாகத் தேவர்கள் அளவு வீரம் கொண்ட சன்னதேயு ஆகியன அவர்களது பெயர்களாகும்.(10,11)

அவர்கள் அனைவரிலும், ரிசேயுவே இந்த முழு உலகத்திற்கும் ஏகாதிபதியாகி அனாதிருஷ்டி என்ற பெயரில் அறியப்பட்டான். வீரத்தால் அவன் தேவர்களின் வாசவனை {இந்திரனைப்} போல இருந்தான்.(12) அனாதிருஷ்டியின் மகன் மதினாரன், பெரும் புகழ்வாய்ந்த அறம் சார்ந்த மன்னனாக இருந்து, ராஜசூய மற்றும் அசுவமேத வேள்விகளைச் செய்தான்.(13) மதினாரனுக்கு அளவிலா ஆற்றலைக் கொண்ட நான்கு மைந்தர்கள் இருந்தனர். அவர்கள் தன்சு {தம்சு}, மஹான், அதிரதன் மற்றும் பெரும் புகழ்வாய்ந்த துருஹ்யு ஆவர்.(14)

அவர்களில் தன்சுவே பூருவின் வம்சத்தை விளங்கச் செய்தவன் ஆவான். அவன் இந்த முழு உலகத்தையும் அடக்கி ஆண்டு, பெரும் புகழும், பெயரும் பெற்றான்.(15)  தன்சு பெரும் வீரம் கொண்ட இலினன் {இலிலன்} என்ற மகனைப் பெற்றான். அவன் வெற்றி கொள்பவர்களில் முதன்மையானவனாக இருந்து, முழு உலகத்தையும் தன் கொடையின் கீழ்க் கொண்டு வந்தான்.(16) இலினன் தனது மனைவி ரத்னதாரையின் {மதந்தரி} மூலம் துஷ்யந்தனைத் தலைமையானவனாகக் கொண்டு, ஐம்பூதங்களைப் போன்ற ஐந்து புதல்வர்களைப் பெற்றான்.(17) அவர்கள் துஷ்யந்தன், சூரன், பீமன், பிரவசு மற்றும் வசு ஆவர். ஓ ஜனமேஜயா! அவர்களில் மூத்தவனான துஷ்யந்தன் மன்னனானான்.(18) துஷ்யந்தன் தனது மனைவி சகுந்தலை மூலம் பரதன் எனும் புத்திசாலி மகனைப் பெற்றான். அவனே பின்பு மன்னன் ஆனான். பரதன் தான் நிறுவிய குலத்தின் தன் பெயரையே கொடுத்தான். அவனாலேயே அந்தக் குலத்திற்குப் பெரும் புகழ் கிடைத்தது.(19)

பரதன் தனது மூன்று மனைவியரிடம் ஒன்பது மகன்களைப் பெற்றான். ஆனால் அவர்களில் ஒருவரும் தனது தந்தையைப் போல் இல்லை. எனவே பரதன் அவர்களிடம் மனநிறைவு கொள்ளவில்லை.(20) இதனால் மிகுந்த கோபம் கொண்ட அவர்களின் தாய்மார் அவர்களைக் கொன்று போட்டனர். எனவே பரதனுக்குப் பிறந்தவர்கள் யாரும் மன்னனாக முடியவில்லை.(21) பிறகு, அந்த ஏகாதிபதி {பரதன்}, பரத்வாஜரின் அருளால் ஒரு பெரும் வேள்வியை நடத்தி ஒரு மகனைப் பெற்றான். அவனுக்குப் பூமன்யு என்று பெயரைச் சூட்டினான்.(22) பூருவின் வழி வந்த பரதன், அவனிடம் மனநிறைவு கொண்டு அவனையே தனது வாரிசாக்கினான்.(23)

பூமன்யு தனது மனைவி புஷ்கரணியிடம் சுஹோத்ரன், சுஹோத்ரி {சுஹோதா}, சுஹாவிஹ், சுஜேயன், திவிரதன், கீசிகன் என்ற ஆறு மகன்களைப் பெற்றான்[1].(மன்மதநாததத்தரின் பதிப்பில், “சுஹத்ரன், சுஹோதன், சுஹவி, சயாயு, ரிசீகன் மற்றும் திவிரதன்” ஆகிய ஆறு மகன்கள் குறிப்பிடப்படுகின்றனர்.-கும்பகோணம் பதிப்பில், “புமன்யுவுக்குப் புஷ்கரணியென்பவளிடம் ஸுஹோத்ரன், ஸுஹுதா, ஸுஹவிஸ், ஸுயஜுஸ், ரிசீகன் என்னும் புத்திரர்கள் பிறந்தார்கள்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ள பெயர்களே இருக்கின்றன. மூலத்தை ஒப்பு நோக்க வேண்டும் )அவர்களில் மூத்தவனான சுஹோத்ரன் அரியணையை அடைந்து,(24,25) பல ராஜசூய மற்றும் குதிரை வேள்விகளை நடத்தினான். கடல்களைத் தன் மேல் கச்சையாக அணிந்திருப்பவளும், யானைகளும், பசுக்களும், குதிரைகளும் நிறைந்தவளுமான பூமியை, அவளது ரத்தினங்கள் மற்றும் தங்கம் ஆகிய செல்வங்களுடன் முழுமையாகத் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தான்.(26-28) சுஹோத்ரனின் அறம்சார்ந்த ஆட்சியில் பூமி, எண்ணற்ற மனிதர்கள், யானைகள், குதிரைகள், பூனைகளுடன் மூழ்கிவிடுவது போலப் பெரும் கனம் கனத்தது. அவன் காலத்தில் நடந்த வேள்வி மேடைகளால் பூமியில் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் புள்ளிகள் தோன்றியது போல இருந்தது.(29)

பூமியின் தலைவனான சுஹோத்ரன் தனது மனைவி {இக்ஷ்வாகுவின் மகள்} அய்க்ஷாகியிடம் அஜமீடன், சுமீடன் மற்றும் புருமீடன் ஆகிய மூன்று மகன்களைப் பெற்றான்.(30) அவர்களில் மூத்தவனான அஜமீடன் அந்த அரச பரம்பரையின் தொடர்ச்சியை ஏற்றான். அவன் {அஜமீடன்} தனது மனைவி தூமினியிடம் ரிக்ஷனைப் பெற்றான். தனது மற்ற மனைவிகளான நீலியிடம் துஷ்யந்தனையும், பரமேஷ்டியையும், கேசினியிடம் ஜானு {ஜன்ஹு}, ஜலன் {ஜனன்}[2] (கேசினியிடம் பெற்ற மகன்கள் விரஜன் மற்றும் ரூபி என்பது வேறு பாடம். பாஞ்சால குலத்தில் வந்தவர்கள் அனைவரும் துஷ்யந்தன் மற்றும் பரமேஷ்டின் வழியில் வந்தவர்களாவர். குசிகர்கள் அளவற்ற வீரம் கொண்ட ஜானுவின் வழியில் வந்தவர்களாவர். ஜலன் மற்றும் ரூபினாவை விட வயதில் மூத்தவனான ரிக்ஷன் மன்னனானான்.)மற்றும் ரூபினாவையும் {ரூஷ்ணனையும்} பெற்றான்.(31,32)  ரிக்ஷன் தனது குலம் தழைக்க சம்வர்ணனைப் பெற்றான். ரிக்ஷனின் மகன் சம்வர்ணன் பூமியை ஆண்டுக் கொண்டிருந்த போது தான் பஞ்சத்தாலும், தொற்று வியாதிகளாலும், மழையின்மையாலும், நோய்களாலும் பல மக்கள் மாண்டனர் என்று கேள்விப்படுகிறோம். அந்த பாரதக் குல மன்னன் பல எதிரிகளால் தாக்கப்பட்டான்.(33-36) பின்பு பாஞ்சாலர்கள் தங்கள் நால்வகைப் படைகளைத் திரட்டிப் போர் தொடுத்து, இந்த முழு உலகையும் தம் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தங்கள் பத்து அக்ஷௌஹிணி படைகளுடன் வந்த பாஞ்சாலர்கள் பாரதவம்ச இளவரசனைத் தோற்கடித்தனர்[3].(37,38)(இது மிக முக்கியமான குறிப்பு, பாரதத்தின் முக்கிய கதையான பாண்டவர்கள் கதையில் இந்தப் பாஞ்சாலம் அவர்களுடன் சம்பந்தம் செய்து கொள்கிற நாடாகிறது)

பிறகு சம்வர்ணன், தனது மனைவி, மகன்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கானகத்திற்குள் பதுங்கி அங்கே சிந்து நதிக்கரையில் இருந்து மலையடிவாரம் வரை கோட்டை அமைத்துக் கொண்டு வாழ்ந்தான்.(39,40) முழுமையாக ஆயிரம் வருடங்களுக்கு அந்தக் கோட்டையினுள்ளேயே பாரதர்கள் வாழ்ந்தனர்.(41) ஒரு நாள் சிறப்புவாய்ந்த முனிவர் வசிஷ்டர் நாட்டைவிட்டு வெளியேறிய பாரதர்களை அணுகினார்.(42) அவர்கள் அவருக்கு ஆர்கியம் கொடுத்தனர். அவரைத் தகுந்த மரியாதைகளுடன் வரவேற்று அமர ஆசனமும் கொடுத்தனர்.(43) மன்னனே {சம்வர்ணன்} முனிவரை அணுகி, “நீர் எங்கள் புரோகிதராக இருக்க வேண்டும். ஓ சிறப்பு வாய்ந்தவரே, நாங்கள் எங்கள் அரசைப் பெற முயற்சிக்கப் போகிறோம்” என்றான்.(44)

வசிஷ்டர், “ஓம்” என்ற வார்த்தையைச் சொல்லி, அதற்கு ஆமோதித்து, பாரத இளவரசனை க்ஷத்திரியர்களுக்குத் தலைமையேற்க நியமித்து, அந்தப் பூரு வழி வந்தவர்களை காளையின் கொம்புகளைப் போலவும், யானையின் தந்தத்தைப் போலவும் உறுதியாக்கினார். அந்த மன்னன் {சம்வர்ணன்} தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட தலைநகரை மீண்டும் அடைந்து, மற்ற ஏகாதிபதிகளை அவனுக்குக் கப்பம் கட்ட வைத்தான்.(45,46) முழு உலகத்தின் அரசாட்சியை மீண்டும் பெற்ற சம்வர்ணன், பல வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகளில் பிராமணர்களுக்குப் பெரும் பரிசுகள் கொடுக்கப்பட்டன. சம்வர்ணன், சூரியனின் மகளான தபதியை மனைவியாகப் பெற்று, குரு என்ற மகனைப் பெற்றான்.(47,48)

குரு மிகுந்த நற்குணமிக்கவனாக இருந்தான். எனவே மக்களே அவனை அரியணையில் அமர்த்தினர். இவன் பெயரையுடைய குருஜாங்கலம் என்ற போர்க்களம் உலகத்தில் பெரும் புகழைப் பெற்றதாகும்.(49) துறவுக்குத் தன்னை அர்ப்பணித்து, அங்கேயே ஆன்மிகத்தைப் பயின்று அந்தக்களத்தை (குருக்ஷேத்திரம்) புனிதமாக்கினான். பெரும் புத்திசாலியான குருவின் மனைவி வாஹினி ஐந்து மகன்களைப் பெற்றாள் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் அவிக்ஷித் {அஸ்வவான்}, பவிஷ்யந்தா {அபிஷ்யந்தன்}, சைத்ரரதன், முனி மற்றும் கொண்டாடப்பட்ட ஜனமேஜயன் ஆவர்.(50,51)
அவிக்ஷித் பெரும் பலம் வாய்ந்த பரீக்ஷித்தையும், மற்றும் சவலாஸ்வன், அதிராஜன், விராஜன் மற்றும் பெரும்பலம் வாய்ந்த சால்மலி, உச்சைஸ்ரவஸ், பங்ககாரன் மற்றும் எட்டாவதாக ஜிதாரி ஆகியோரைப் பெற்றான்.(52) இந்தக் குலத்தில் பிறந்தவர்கள்தான் பெரும் தேர்வீரர்களும், நன்மக்களுமான ஜனமேஜயனைத் தலைமையாகக் கொண்ட {குருவின்} ஏழு மகன்களாவர்.(53) பரீக்ஷித்துக்குப் பிறந்தவர்கள் அனைவரும் அறம், பொருள் ஆகியவற்றை (ஆகியவற்றின் ரகசியங்களை) அறிந்தவர்களாக இருந்தனர்.(54) அவர்கள் கக்ஷசேனன், உக்ரசேனன், பெரும் சக்தி வாய்ந்த சித்ரசேனன், இந்திரசேனன், சுஷேனன் மற்றும் பீமசேனன் ஆவர்.(55)

ஜனமேஜயனுக்குப் பிறந்தவர்கள் திருதராஷ்டிரன், பாண்டு, பாஹ்லீகன், பெரும் சக்தி கொண்ட நிஷதன், பெரும் பலம் வாய்ந்த ஜம்பூநதன், குண்டோதரன், பதாதி, எட்டாவதாகப் பிறந்த வசாதி ஆகியோராவர்.(56)  அவர்கள் அனைவரும் அறம் பொருள் மற்றும் உயிரனங்கள் அனைத்தையும் குறித்து அறிந்தவர்களாக இருந்தனர்.(57) அவர்களில் திருதராஷ்டிரன் மன்னனானான். திருதராஷ்டிரனுக்கு, குண்டிகன், ஹஸ்தி, விதர்க்கன், கிராதன், ஐந்தாவதாகக் குண்டினன், ஹவிஸ்ரவஸ், இந்திராபன், பூமன்யு எட்டு மகன்கள் இருந்தனர். திருதராஷ்டிரனுக்கு நிறையப் பேரன்களும் இருந்தனர். அவர்களில் மூவர் மட்டுமே புகழ்வாய்ந்தவர்களாக இருந்தனர்.(58,59)

ஓ மன்னா! அவர்கள் பிரதீபன், தர்மனேத்ரன், சுனேத்ரன் ஆவர். இவர்களில் பிரதீபன் பூமியின் ஒப்பற்றவனாக இருந்தான்.(60) ஓ பாரதக் குலத்தின் காளேயே! பிரதீபன் மூன்று மகன்களைப் பெற்றான். அவர்கள் தேவாபி, சந்தனு மற்றும் பெரும் தேர்வீரனான பாஹ்லீகன் ஆவர்.(61) மூத்தவன் தேவாபி, தன் தம்பிகளுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் துறவு வாழ்வைத் தேர்ந்தெடுத்தான். நாட்டைச் சந்தனுவும் பாஹ்லீகனும் அடைந்தனர்.(62) ஓ ஏகாதிபதி! இவர்களைத் தவிர்த்து சிறந்த பாரதக் குல மன்னர்கள் பலர், பெரும் சக்தி மிக்கவர்களாகவும், முனிவர்களைப் போன்ற தவ வலிமை மிக்கவர்களாகவும் இருந்தார்கள்.(63) இப்படியே மனுவின் குலத்திலும் தேவர்களைப் போன்றே பல ரத வீரர்கள் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கையால் ஐலனின் குலம் அசுர பலத்துடன் வளர்ந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(64)

அறம் வளர்க்கும் குல வரலாறு! – ஆதிபர்வம் – பகுதி 95(சம்பவ பர்வம் – 31)பூருவின் குல வரலாறு நீட்சி; நாட்டை இழந்து மீண்டும் அடைந்த சம்வர்ணனின் வரலாறு; பாரதம் அறிவதால் உண்டாகும் பலன்…

ஜனமேஜயன், “ஓ பிராமணரே! நான் இதுவரை எனது மூதாதையர்களின் பெரும் வரலாறுகளைக் கேட்டறிந்தேன். இந்தக் குலத்தில் பிறந்த பெரும் ஏகாதிபதிகளைப் பற்றியும் அறிந்தேன்.(1) இருப்பினும் நான் மனநிறைவு கொள்ளவில்லை. அந்தப் பெரும் வரலாறுகள் சுருக்கமாகவே உரைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, ஓ பிராமணரே! அந்த வரலாறுகளைப் படைப்புத் தலைவனான மனுவில் தொடங்கி விரிவாகச் சொல்வீராக. இந்த வரலாறுகளை யார் தான் புனிதமாகக் கருதமாட்டார்கள்?(2,3) அவர்கள் கடைப்பிடித்த அறங்கள், சாதனைகள், உயர்ந்த பண்புகள் ஆகியவற்றால் அந்த ஏகாதிபதிகளின் புகழ் மூவுலகங்களுக்கும் பரவும்படி உயர்ந்தது.(4) அவர்களின் ஈகை, ஆற்றல், உடல் பலம், மனோ பலம், சக்தி, விடாமுயற்சி ஆகியவற்றைத் தேன் போன்ற இனிமையான உங்கள் சொற்களால் கேட்டேன். இருப்பினும் நான் மனநிறைவு கொள்ளவில்லை” என்றான்.(5)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}! உனது சொந்தக் குலத்தின் நற்பேறுள்ள வரலாறைத் துவைபாயனரிடம் {வியாசரிடம்} முன்பு நான் கேட்டவாரே உரைக்கிறேன் கேட்பாயாக.(6) தக்ஷன் அதிதியைப் பெற்றான். அதிதி விவஸ்வானைப் பெற்றாள். விவஸ்வான் மனுவைப் பெற்றான். மனு ஹா {ஐலன்} என்பவனைப் பெற்றான். ஹா {ஐலன்} புரூரவஸைப் பெற்றான். புரூரவஸ் ஆயுஸைப் பெற்றான், ஆயுஸ் நகுஷனைப் பெற்றான். நகுஷன் யயாதியைப் பெற்றான். யயாதிக்கு உசானஸின் மகள் தேவயானி மற்றும் விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை என்று இரு மனைவியர் இருந்தனர். இங்கே இது குறித்து (யயாதியின் பரம்பரை குறித்து) ஒரு சுலோகம் சொல்லப்படுகிறது.(7,8)

‘தேவயானி யது மற்றும் துர்வசு என்ற இரு மகன்களைப் பெற்றாள். விருஷபர்வனின் மகளான சர்மிஷ்டை திருஹ்யு, அனு மற்றும் பூரு என்ற மூன்று மகன்களைப் பெற்றாள். யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்களானார்கள். பூருவின் வழித்தோன்றல்கள் பௌரவர்களானார்கள்.(9) பூருவுக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்தாள். அந்த மனைவியின் மூலம் அவன் மூன்று குதிரை வேள்விகளையும், விஸ்வஜித் என்ற வேள்வியையும் செய்தவனான ஜனமேஜயன் என்ற மகனைப் பெற்றான். பிறகு அவன் {பூரு} காட்டுக்குள் நுழைந்தான்.(10) ஜனமேஜயன், மாதவனின் மகள் ஆனந்தையை மணந்து கொண்டான். அவளிடம் பிரசின்வத் {பிரசினதன்} என்ற மகனைப் பெற்றான். கிழக்கு நாடுகளில் சூரியன் உதிக்கும் தேசம் வரை சென்று அவற்றை வென்று வந்ததால் அவன் அந்தப் பெயரைப் பெற்றான்.(11)

பிரசின்வத், யாதவர்களின் மகள் அஸ்மகியை மணந்து கொண்டு, அவளிடம் சன்யாதி என்ற மகனைப் பெற்றான்.(12) சன்யாதி, திருஷத்வதனின் மகள் வாராங்கியை மணந்து அஹயந்தி என்ற மகனைப் பெற்றான்.(13)  அஹயந்தி, கிருதவீரியனின் மகள் பானுமதியை மணந்து, அவளிடம் சர்வபௌமன் என்ற மகனைப் பெற்றான். (14) சர்வபௌமன், கேகய நாட்டு இளவரசனின் மகள் சுனந்தையை அபகரித்து வந்து மணந்து கொண்டு, அவளிடம் ஜெயத்சேனன் என்ற மகனைப் பெற்றான்.(15)

ஜெயத்சேனன் விதரப்ப நாட்டு மன்னனின் மகள் சுஸ்ரவையை மணந்து அவளிடம் அவசினன் என்ற மகனைப் பெற்றான்.(16) அவசினன், மீண்டும் ஒரு விதர்ப்ப நாட்டு இளவரசியான மர்யாதையை மணந்து, அவளிடம் அரிஹன் என்ற மகனைப் பெற்றான்.(17) அரிஹன் அங்கி என்பவளை மணந்து மஹாபௌமன் என்ற மகனைப் பெற்றான்.(18) மஹாபௌமன் பிரசேனஜித்தின் மகள் சுயஜனாவை {சுயஜையை} மணந்து அவளிடம் அயுதநயி என்ற மகனைப் பெற்றான். அயுத என்றால் பத்தாயிரம் என்று பொருள். அவன் நடத்திய ஒரு வேள்விக்குப் பத்தாயிரம் ஆண் உயிரினங்களின் கொழுப்பு தேவைப்பட்டதால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது.(19) அயுதநயி பிருதுஸ்ரவஸின் மகள் காமாவை மணந்து, அவளிடம் அக்ரோதனன் என்ற மகனைப் பெற்றான்.(20) அக்ரோதனன் கலிங்க மன்னனின் மகள் கரம்பையை மணந்து, தேவதிதி என்ற மகனைப் பெற்றான்.(21)

தேவதிதி, விதேஹ நாட்டு இளவரசனின் மகள் மர்யாதையை மணந்து அவளிடம் அரிஹன் என்ற மகனைப் பெற்றான்.(22) அரிஹன் அங்கதேசத்து இளவரசனின் மகள் சுதேவாவை மணந்து, அவளிடம் ரிக்ஷன் என்ற மகனைப் பெற்றான்.(23) ரிக்ஷன், {பாம்பு மன்னன்} தக்ஷகனின் மகள் ஜ்வாலாவை மணந்து, அவளிடம் மதினாரன் என்ற மகனைப் பெற்றான்.(24) அந்த மதினாரன் சரஸ்வதி நதிக்கரையில் பனிரெண்டு வருட வேள்வியை வெற்றிகரமாகச் செய்தான். அந்த வேள்வியின் முடிவில், சரஸ்வதியே அந்த மன்னன் முன்பு வந்து, அவனைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்தாள். மதினாரன் அவளிடம் தன்சு என்ற மகனைப் பெற்றான்.(25)

இங்கே தன்சுவின் வழித்தோன்றல்கள் பற்றி ஒரு சுலோகம் வருகிறது. ‘தன்சு, மதினாரன் மூலம் சரஸ்வதியிடம் பிறந்தவன் ஆவான்.  தன்சு, காளிங்கி என்ற இளவரசியை மனைவியாக அடைந்து, அவளிடம் இலினன் {இலிலன்} என்ற மகனைப் பெற்றான்.(26) இலிலன் தனது மனைவியான ரத்னதரியிடம் ஐந்து மகன்களைப் பெற்றான். அவர்களில் துஷ்யந்தன் மூத்தவனாக இருந்தான்.(27) துஷ்யந்தன், விஸ்வாமித்திரரின் மகள் சகுந்தலையை மனைவியாக அடைந்தான். அவளிடம் பரதன் என்ற மகனைப் பெற்றான்.'(28) இங்கே (துஷ்யந்தனின்) வழித்தோன்றல்களைப் பற்றி இரு சுலோகங்கள் வருகின்றன. “ஒரு தாயென்பவள், சதையைத் தாங்கும் உறையே, அங்கேயே தந்தையென்பவன் மகனைப் பெறுகிறான். நிச்சயமாகத் தந்தையான அவனே மகனாகப் பிறக்கிறான். எனவே, துஷ்யந்தா, உனது மகனை ஆதரிப்பாயாக சகுந்தலையை அவமதிக்காதே.(29) ஓ மனிதர்களில் தேவனைப் போன்றவனே, தந்தை என்பவன் தானே மகனாகப் பிறந்து, நரகத்திலிருந்து தன்னையே காத்துக் கொள்கிறான். நீயே இந்தக் குழந்தைக்குக் காரணமானவன் என்று சகுந்தலை உண்மையையே சொல்லியிருக்கிறாள்” என்று தேவதூதன் சொன்னான்.(30)

“இதற்காகவே (தேவ தூதனின் மேற்கண்ட பேச்சைக் கேட்டே, மன்னன் தனது குழந்தையை ஆதரித்தான்) சகுந்தலையின் மகன் (ஆதரிக்கப்பட்டவன், தாங்கப்பட்டவன் என்ற பொருளில்) பரதன் என்று அழைக்கப்பட்டான். பரதன் காசி நாட்டு மன்னன் சர்வசேனனின் மகள் சுனந்தையை மணந்து அவளிடம் பூமன்யு (இவன் வேள்வியில் பிறந்தவன், {பரதனுக்கு ஏற்கனவே ஒன்பது மகன்கள் இருந்து, அவர்களை அவர்களின் தாயார்களே கொன்றுவிட்டனர்}) என்ற மகனைப் பெற்றான்.(31) பூமன்யு தசார்ஹனின் மகள் விஜயாவை மணந்து அவளிடம் சுஹோத்ரனைப் பெற்றான்.(32) சுஹோத்ரன் இக்ஷவாகுவின் மகள் சுவர்ணாவை மணந்து அவளிடம் ஹஸ்தி என்ற மகனைப் பெற்றான். ஹஸ்தி என்ற அந்த மன்னனே ஹஸ்தினாபுரம் என்ற நகரத்தை  தன் பெயரால் நிறுவினான்.(33)

ஹஸ்தி திரிகர்த்த நாட்டின் இளவரசி யசோதரையை மணந்து அவளிடம் விகுந்தனன் என்ற மகனைப் பெற்றான். (34) விகுந்தனன், தசார்ஹ நாட்டின் இளவரசியான சுதேவாவை மணந்து, அஜமீடன் என்ற மகனைப் பெற்றான்.(35)

அஜமீடன், ராய்கேயி, காந்தாரி, விசாலை மற்றும் ரிக்ஷை என்ற நான்கு மனைவியரைக் கொண்டான். அவர்களிடம் இரண்டாயிரத்து நானூறு மகன்களைப் பெற்றான். அவர்களில் சம்வர்ணனே குலத்தைத் தழைக்கச் செய்தான்.(36) சம்வர்ணன், விவஸ்வானின் மகள் தபதியை மனைவியாக அடைந்து, அவளிடம் குரு என்ற மகனைப் பெற்றான்.(37) குரு, தசார்ஹ நாட்டு இளவரசி சுபாங்கியை மணந்து விதுரதன் என்ற மகனைப் பெற்றான்.(38)  விதுரதன், மாதவர்களின் மகளான சுப்ரியையை மனைவியாக அடைந்து அவளிடம் அனஸ்வான் என்ற மகனைப் பெற்றான்.(39) அனஸ்வான் மாதவர்களின் மகளான அமிர்தாவை மணந்து, அவளிடம் பரீக்ஷித் என்ற மகனைப் பெற்றான்.(40) பரீக்ஷித், பாகுதாசின் மகள் சுவாசையை மணந்து, அவளிடம் பீமசேனன் என்ற மகனைப் பெற்றான்.(41) பீமசேனன், கேகய நாட்டு இளவரசி குமாரியை மணந்து, அவளிடம் பிருதிஸ்ரவஸ் என்ற மகனைப் பெற்றான்.(42)

பிருதிஸ்ரவஸ், பிரதீபனைப் பெற்றான். பிரதீபன், சிபியின் மகள் சுனந்தையை மணந்து, அவளிடம், தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் என்ற மூன்று மகன்களைப் பெற்றான்.(43) தேவாபி இளவயதிலேயே கானகமேகி துறவியானான். எனவே சந்தனு மன்னனானான்.(44) இங்கு சந்தனுவைக் குறித்து ஒரு சுலோகம் வருகிறது. ’இந்த ஏகாதிபதியால் தொடப்பட்ட முதியவர்கள், விவரிக்கமுடியாத பெரும் இன்பத்தை அடைந்தது மட்டுமின்றி, தங்கள் இளமையையும் திரும்பப் பெற்றனர். எனவே இந்த ஏகாதிபதி சந்தனு என்று அழைக்கப்பட்டான்’.(45) சந்தனு கங்கையை மணந்து கொண்டான், அவள் தேவவிரதனைப் பெற்றுக் கொடுத்தாள்.  தேவவிரதன் பின்பு பீஷ்மர் என்று அழைக்கப்பட்டார்.(46) பீஷ்மர், தனது தந்தைக்கு நல்லது செய்ய நினைத்து, அவனுக்குக் காந்தகாளி என்று அழைக்கப்பட்ட சத்தியவதியைத் திருமணம் செய்து வைத்தார்.(47) அவள், முன்பொரு காலத்தில், தனது மங்கைப் பருவத்தில், பராசரரால் ஒரு மகனைப் பெற்றாள். அந்த மகன் துவைபாயனர் என்று அழைக்கப்பட்டார். சந்தனு சத்தியவதியிடம் சித்ராங்கதன், விசித்திரவீரியன் என்ற இரு மகன்களைப் பெற்றான். சித்ராங்கதன் இளவயதிலேயே கந்தர்வர்களால் கொல்லப்பட்டான். எனவே விசித்திரவீரியன் மன்னனானான்.(48,49) அவன், காசி நாட்டு மன்னனின் மகள்களான அம்பிகா, அம்பாலிகா என்ற இரு மங்கையரை மணந்தான்.(50) இருப்பினும் விசித்திரவீரியன், மகன் யாரும் இல்லாமலேயே இறந்து போனான். துஷ்யந்தனின் பரம்பரைத் தொடர்ச்சி இத்துடன் நிறைவுபெறப் போகிறதே என்று சத்தியவதி நினைக்கத் துவங்கினாள்.(51)

பிறகுதான் அவள் முனிவர் துவைபாயனரை நினைவுகூர்ந்தாள். அவர், அவள் முன்னிலையில் வந்து, “உன் கட்டளைகள் என்ன?” என்று கேட்டார்.(52) அவள், “உனது தம்பி விசித்ரவீரியன் பிள்ளையில்லாமலேயே சொர்க்கம் அடைந்தான். நீ அவனுக்காக அறம்சார்ந்த குழந்தைகளைப் பெற்றெடுப்பாயாக” என்றாள்.(53) துவைபாயனர் அஃதை ஏற்று, திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றார்.(54) துவைபாயனரிடம் காந்தாரி பெற்ற வரத்தால் திருதராஷ்டிரன் அவள் மூலம் நூறு மகன்களைப் பெற்றான்.(55) திருதராஷ்டிரனின் அந்த நூறு மகன்களில் நால்வர் புகழடைந்தனர். அவர்கள் துரியோதனன், துச்சாசனன், விகர்ணன் மற்றும் சித்திரசேனன் ஆவர்.(56)

பாண்டு, ரத்தினங்களைப் போன்றவர்களான பிருதை என்று அழைக்கப்பட்ட குந்தியையும், மாத்ரியையும் மனைவியராக அடைந்தான்.(57) ஒரு நாள் பாண்டு வேட்டையாடிக் கொண்டிருக்கையில், தனது துணையை அணைத்துக் கொண்டிருந்த மானைக் கண்டான். அஃது உண்மையில் மானுருவில் இருந்த ஒரு முனிவராகும். அவன், ஆசை தணியாமல் இருந்த மானை அந்தச் சூழ்நிலையில் தனது கணையால் கொன்றான்.(58) மன்னனின் கணையால் தாக்குண்ட அந்த மான், உடனே தனது உருவைக் களைந்து முனிவர் உருக் கொண்டு, பாண்டுவிடம், “ஓ பாண்டுவே, அறவோனாகவும், ஒருவனுடைய ஆசை நிறைவேறுவதால் கிட்டும் இன்பத்தை அறிந்தவனாகவும் இருக்கிறாய். ஆசை நிறைவேறாத நிலையில் நீ என்னைக் கொன்றுவிட்டாய். எனவே, நீயும் இதே நிலையில் இருக்கும்போது, நிறைவு கொள்ளும் முன்பே இறப்பாயாக” என்று சபித்தார்.  இந்தச் சாபத்தைக் கேட்ட பாண்டு முகம் வாடினான், அதுமுதல் அவன் தனது மனைவியரிடம் நெருங்கவில்லை.(59) அவன் அவர்களிடம், “எனது குற்றத்தால், நான் சபிக்கப்பட்டிருக்கிறேன். குழந்தையில்லாதவர்களுக்கு வேறு உலகங்கள் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொல்லிக் குந்தியைத் தனக்காக வாரிசைப் பெறுமாறு கேட்டுக் கொண்டான். குந்தி, “அப்படியே ஆகட்டும்” என்றாள்.  எனவே அவள் வாரிசுகளைப் பெற்றாள். அவள் தர்மதேவன் மூலமாக, யுதிஷ்டிரனையும், மருதன் மூலமாகப் பீமனையும், சக்ரனின் {இந்திரனின்} மூலமாக அர்ஜுனனையும் பெற்றாள்.(60)

பாண்டு அவளிடம் பெரும் மனநிறைவு கொண்டு, “உனது சக்காளத்தியும் குழந்தையில்லாமல் இருக்கிறாளே. எனவே, அவளையும் பிள்ளைகள் பெற வைப்பாயாக” என்றான்.(61) குந்தி, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அவளுக்கும் வழிபாட்டு மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தாள். மாத்ரி, அஸ்வினி இரட்டையர்கள் மூலம், நகுலன் மற்றும் சகாதேவனைப் பெற்றாள்.(62) ஒரு நாள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மாத்ரியைக் கண்டு, பாண்டு ஆசையால் தூண்டப்பட்டான். அவன் அவளைத் தீண்டியதும் இறந்து போனான்.(63) குந்தியிடம் மாத்ரி, “எனது இந்த இரட்டையர்கள், உன்னால் பாசத்துடன் வளர்த்து வரப்படட்டும்” என்று சொல்லித் தனது தலைவனுடன் தகன நெருப்பில் ஏறினாள்.(64)

சில காலத்திற்குப் பிறகு அந்தப் பாண்டவர்கள் ஐவரும் கானகத்தின் துறவிகளால் ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர். பீஷ்மருக்கும், விதுரருக்கும் அவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.(65) அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, அந்தத் துறவிகள், அனைவரும் கண்டுகொண்டிருக்கும் போதே மறைந்தனர்.(66) அத்துறவிகளின் பேச்சின் முடிவில், அந்த இடத்தில் பூமழை பெய்தது. தெய்வீக பேரிகைகள் வானத்தில் முழங்கின.(66) அதன் பிறகு பாண்டவர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.  அவர்கள் தங்கள் தந்தையின் இறப்பைப் பற்றிச் சொன்னார்கள். அதன்பிறகு பாண்டுவின் இறுதிச்சடங்கு முறையாகச் செய்யப்பட்டது. பாண்டவர்கள் அங்கேயே வளர்ந்து வந்தனர். துரியோதனன் அவர்களைக் கண்டு மிகவும் பொறாமை கொண்டான்.(67)

பாவம் நிறைந்த அந்த துரியோதனன் அவர்களை விரட்ட ஒரு ராட்சசனைப் போல நடந்து கொண்டான். துரியோதனன் எவ்வளவுக்கெவ்வளவு எரிச்சலடைகிறானோ அவ்வளவுக்கவ்வளவு, அவனது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.(68) திருதராஷ்டிரன் அவர்களை ஏமாற்றி வாரணாவதம் அனுப்பினான். அவர்களும் விருப்பத்துடன் அங்குச் சென்றனர்.(69) அங்கே அவர்களை எரித்துக் கொல்வதற்கான சதி வேலை செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஞானியான விதுரனின் அறிவுறுத்தலை ஏற்று, அதிலிருந்தும் அவர்கள் தப்பினர்.(70) பிறகு பாண்டவர்கள் ஹிடிம்பனைக் {இடும்பனைக்} கொன்று, ஏகச்சக்கரம் என்ற நகருக்குச் சென்றனர்.(71) அங்கே பகன் என்ற அசுரனைக் கொன்றுவிட்டு பிறகு பாஞ்சால நகருக்குச் சென்றனர்.(72)

அங்கே திரௌபதியைத் தங்கள் மனைவியாக அடைந்து ஹஸ்தினாபுரம் திரும்பினர்.(73) அங்கேயே அவர்கள் அமைதியாக வசித்துக் குழந்தைகளைப் பெற்றனர். யுதிஷ்டிரன் பிரதிவிந்தியனைப் பெற்றான், பீமன் சூதசோமனைப் பெற்றான், அர்ஜுனன் சுரூதகீர்த்தியைப் பெற்றான், நகுலன் சதானிகனைப் பெற்றான், சகாதேவன் சுரூதகர்மனைப் பெற்றான்.(74) இடையில், சைப்பிய பழங்குடியைச் சேர்ந்த கோவசனனின் மகள் தேவிகாவை யுதிஷ்டிரன் ஒரு சுயம்வரத்தில் மணந்தான். அவளிடம் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு யௌதேயன் என்று பெயரிட்டான்.(75) பீமனும் காசி நாட்டு மன்னனின் மகள் வலந்தரையை மனைவியாகக் கொண்டு, சார்வாகன் என்ற மகனைப் பெற்றான்.(76) அர்ஜுனன் துவாரகைக்குச் சென்று இனிமையான பேச்சைக் கொண்ட வாசுதேவனின் தங்கை சுபத்திரையைத் தனது பலத்தால் அபகரித்து ஹஸ்தினாபுரம் திரும்பினான். அவன் அவளிடம் அபிமன்யு என்ற மகனைப் பெற்றான். அந்த மகன் பெரும் தகுதிகளைப் பெற்று, வாசுதேவனின் அன்புக்குப் பாத்திரனாக இருந்தான்.(77) நகுலன் சேதி நாட்டு இளவரசி கரேணுமதியை மனைவியாக அடைந்து, அவளிடம் நிராமித்ரன் என்ற மகனைப் பெற்றான்.(78) சகாதேவன், மதுரா நாட்டு மன்னன் தியுதிமத்தின் மகளான விஜயாவை ஒரு சுயம்வரத்தில் மணந்து, அவளிடம் சுஹோத்ரன் என்ற மகனைப் பெற்றான்.(79)

பீமசேனன் சில காலங்களுக்கு முன்பே ஹிடிம்பையிடம் {இடும்பியிடம்} கடோத்கசன் என்ற மகனைப் பெற்றான்.(80) இவர்களே பாண்டவர்களின் பதினோரு மகன்களாவர். அவர்களில், அபிமன்யுவே குலத்தைத் தழைக்கச் செய்பவனானான்.(81) அவன் விராட நாட்டு மன்னனின் மகளான உத்தரையை மணந்தான். அவள் இறந்த குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். குந்தியிடம் அக்குழந்தையை மடியில் எடுத்துக் கொள்ளச் சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, “இந்த ஆறுமாத குழந்தையை நான் மீட்டெடுக்கிறேன்” என்றான்.(82) குறித்த காலத்திற்கு முன்பே பிறந்திருந்தும், அஸ்வத்தாமனின் ஆயுதத்தால் எரிக்கப்பட்டிருந்தும், தனது பலம், சக்தி அனைத்தையும் அஃது இழந்திருந்தும், வாசுதேவனால் அந்தக் குழந்தை மறுபடியும் சக்தியும், பலமும் பெற்று மீண்டெழுந்தது. அப்படி அவனை மீட்டெடுத்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, “இந்தக் குழந்தை அருகிப் போன ஒரு குலத்தில் பிறந்ததால், அவன் இன்றிலிருந்து பரீக்ஷித் என்று அழைக்கப்படட்டும்” என்றான்.(83) ஓ மன்னா! பரீக்ஷித் உனது தாயான மாத்ரவதியை மணந்து, உன்னைப் பெற்றான்.(84) ஓ ஜனமேஜயா! நீயும் உனது மனைவி வபுஷ்டமையிடம் சதானீகன் மற்றும் சங்குகர்ணன் என்ற இரு மகன்களைப் பெற்றிருக்கிறாய். சதானிகனும், விதேஹ நாட்டு இளவரசியை மனைவியாக அடைந்து அசுவமேததத்தன் என்ற மகனைப் பெற்றிருக்கிறான்.(85)

ஓ மன்னா! பூருவின் வழித்தோன்றல்கள் மற்றும் பாண்டவர்களின் வரலாறுகளை இப்போது உரைத்துவிட்டேன். சிறந்ததும், அறம் வளர்ப்பதும், புனிதமானதுமான இந்த வரலாற்றை, நோன்பு நோற்கும் பிராமணர்களும், தங்கள் வகைக்கான நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், தங்கள் குடிமக்களைப் பாதுகாக்க ஆயத்தமாக இருக்கும் க்ஷத்திரியர்களும், கவனமாக இருக்கும் வைசியர்களும், மரியாதையுடன் கூடியவர்களும், மூன்று பிற வகையினரிடமும் காத்திருப்பதையே முக்கிய தொழிலாகக் கொண்டவர்களுமான சூத்திரர்களும் எப்போதும் கேட்க வேண்டும்.(86)

வேதங்களை அறிந்த பிராமணர்களும், பிற மனிதர்களும், இந்தப் புனிதமான வரலாற்றைக் கவனத்துடனும், மரியாதையுடனும் உரைத்தாலோ, உரைக்கப்படும்போது கேட்டாலோ, சொர்க்கங்களை வென்று, அருள் உலகங்களை அடைவார்கள். அவர்கள் தேவர்களாலும், பிராமணர்களாலும், பிற மனிதர்களாலும் எப்போதும் மதிக்கப்பட்டுப் புகழப்படுவார்கள்.(87)

பாரதம் என்ற இந்தப் புனித வரலாறானது, புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான வியாசரால் தொகுக்கப்பட்டதாகும். வேதம் அறிந்த பிராமணர்களும், பிற மனிதர்களும் கேடு நினைக்காமலும், மரியாதையுடனும் உரைக்கப்படுவதைக் கேட்டால், பெரும் அறத் தகுதிகளை ஈட்டி, சொர்க்கங்களை வெற்றி கொள்வர். அவர்கள் பாவிகளாக இருந்தாலும், எவராலும் அவர்கள் அவமதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள்.(88)

இங்கே ஒரு சுலோகம் சொல்லப்படுகிறது. ’இது (பாரதம்) வேதத்திற்கு நிகரானதாகும்; இது புனிதமானதும், அற்புதமானதும் ஆகும். இது செல்வம், புகழ், ஆயுள் ஆகியவற்றைக் கொடுக்கும். எனவே இது மனிதர்களால் மிகுந்த கவனத்துடன் கேட்கப்பட வேண்டியதாகும்’” {என்றார் வைசம்பாயனர்}.(89)

கங்கை மஹாபிஷன் மோகம்! – ஆதிபர்வம் பகுதி 96-(சம்பவ பர்வம் – 32)பிரம்மனால் சபிக்கப்பட்ட மஹாபிஷன்; வசுக்களுக்கு வரமளித்த கங்கை…

வைசம்பாயனர் சொன்னார், “இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் முழு உலகத்திற்கும் தலைவனாக இருந்தான். அவன் உண்மையான ஆற்றலும், உண்மை நிறைந்த பேச்சும உடையவனாக இருந்தான்.(1) அவன் ஆயிரம் குதிரை வேள்விகளையும் (அஸ்வமேத யாகங்களையும்), நூறு ராஜசூய வேள்விகளையும் செய்து தேவர்கள் தலைவனை மனநிறைவு கொள்ளச் செய்து சொர்க்கத்தை அடைந்தான்.(2)

“ஒரு நாள் தேவர்கள் ஒன்றாகக் கூடிப் பிரம்மனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். பல அரச முனிகளும் மன்னன் மஹாபிஷனும் அந்த இடத்தில் இருந்தனர்.(3) ஆறுகளின் அரசியான கங்கையும் அங்கே பெரும்பாட்டனை வழிபட வந்திருந்தாள். சந்திரனின் கதிர்களைப் போன்ற அவளது வெண்ணிற ஆடை காற்றினால் சிறிது அகன்றது.(4)

அவளது மேனி வெளிப்பட்ட போது, தேவர்கள் தங்கள் தலையைக் கவிழ்த்துக் கொண்டனர். ஆனால் அரசமுனி மஹாபிஷன் முரட்டுத்தனமாக அந்த ஆறுகளின் அரசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.(5) இதன் காரணமாக மன்னன் மஹாபிஷன் பிரம்மனால் சபிக்கப்பட்டான். அவன் {பிரம்மன்}, “பாவியே, கங்கையைப் பார்த்தவுடன் நீ தன்னிலை மறந்து போனதால், நீ மீண்டும் உலகத்தில் பிறப்பாய். ஆனால், நீ மீண்டும் மீண்டும் இந்த இடங்களுக்கு வந்து போவாயாக. அவளும் {கங்கையும்}, மனிதர்களின் உலகத்தில் பிறந்து, உனக்குத் தீங்கிழைப்பாள். ஆனால் உனக்குக் கோபம் மூண்டதும், நீ சாபத்திலிருந்து விடுபடுவாய்” என்று சபித்தான்.(6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மன்னன் மஹாபிஷன் பூமியிலுள்ள அனைத்து ஏகாதிபதிகளையும், துறவிகளையும் மனத்தில் நினைத்துப் பார்த்துப் பெரும் ஆற்றலைக் கொண்ட பிரதீபனுக்கு மகனாகப் பிறக்க விரும்பினான்.(7) ஆறுகளின் அரசியும் {கங்கையும்}, மன்னன் மஹாபிஷன் உறுதி இழப்பதைப் பார்த்து, அவனை விருப்பத்துடன் நினைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.(8) அப்படி அவள் போகும் வழியில், சொர்க்கத்தில் வசிப்பவர்களான வசுக்களும் அதே பாதையில் வருவதைக் கண்டாள். அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதைக் கண்ட அந்த ஆறுகளின் அரசி {கங்கை}, அவர்களிடம், “சொர்க்கவாசிகளே, ஏன் நீங்கள் மனத்தளர்வுற்றவர்களாகக் காணப்படுகிறீர்கள்? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டாள்.(9,10)

தேவர்களான அந்த வசுக்கள், “ஓ ஆறுகளின் அரசியே, மன்னிக்கத்தகுந்த எங்களது குற்றத்திற்காகச் சிறப்புவாய்ந்த வசிஷ்டர் கோபங்கொண்டு எங்களைச் சபித்துவிட்டார்.(11) சிறப்புவாய்ந்த முனிவர்களில் முதன்மையான வசிஷ்டர் மாலை வழிபாட்டில் {சந்தியாவந்தனம் செய்தபடி} அமர்ந்திருந்தார். அவரை எங்களால் காண முடியவில்லை. இதை அறியாமல் நாங்கள் அவரைக் கடந்து சென்றோம். எனவே, கோபத்தால் அவர் எங்களை “மனிதர்களின் மத்தியில் பிறக்கக் கடவீர்கள்” என்று சபித்துவிட்டார்.(12) பிரம்மத்தை உச்சரிப்பவரால் சொல்லப்பட்டதைத் தகர்ப்பது எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். எனவே, ஓ நதியே, நீயே மனிதப் பெண்ணாகி வசுக்களான எங்களை உனது பிள்ளைகளாக்கிக் கொள்வாயாக.(13)  ஓ இனிமையானவளே, மானிடப் பெண் எவளின் கருவுக்குள்ளும் நுழைய நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.(14)

வசுக்களால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த ஆறுகளின் அரசி {கங்கை}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி “பூமியிலுள்ள மனிதர்களில் முதன்மையானவர்களில் யாரை நீங்கள் தந்தையாகக் கொள்வீர்கள்?” என்று கேட்டாள்.(15)

வசுக்கள், “பூமியில், பிரதீபனுக்கு மகனாகச் சந்தனு என்பவன் பிறப்பான், அவன் பார் புகழும் மன்னனாக இருப்பான்” என்றனர்.(16)

கங்கை, “தேவர்களே, பாவங்களற்ற நீங்கள் தெரிவிப்பதைத் தான் நானும் விரும்பினேன். நான் நிச்சயமாக சந்தனுவிடம் செல்வேன். நீங்கள் இப்போது தெரிவிப்பது போல, இஃது உங்களின் விருப்பமுமாக இருக்கிறது” என்றாள்.(17)

வசுக்கள், “ஓ மூன்று வழிகளில் (ஆகாயம், பூமி (தரை), பாதாளம்) பயணிப்பவளே! நாங்கள் பிறந்தவுடன், எங்களை நீரில் எறிந்துவிடு, அப்படி நீ செய்தால், நாங்கள் பூமியில் வெகு காலம் வாழ வேண்டியதில்லை. எனவே வெகு விரைவாக நாங்கள் மீண்டு விடுவோம்” என்றனர்.(18)

அதற்கு கங்கை, “நீங்கள் விரும்புவதையே நான் செய்வேன். ஆனால் என்னுடனான அவரது தொடர்பு முழுவதுமாகக் கனியற்றுப் போகக்கூடாது. எனவே, ஒரு மகனாவது வாழும்படி அவருக்கு வழங்குவீராக” என்றாள்.(19)

வசுக்கள், “நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சக்திகளில் எட்டில் ஒரு பாகத்தைக் கொடுக்கிறோம். அந்த சக்தித் தொகப்பைக் கொண்டு, உனது மற்றும் அவனது விருப்பங்களுக்கு ஏற்றவாறு ஒரு மகனைப் பெறுவாயாக.(20) ஆனால், அந்த மகன், பூமியில் பிள்ளைகளைப் பெற மாட்டான். எனவே, பெரும் சக்தியைக் கொண்ட உனது மகன் பிள்ளைகளற்றவனாகவே இருப்பான் ” என்றனர்.(21)

இவ்வாறு கங்கையிடம் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்ட வசுக்கள், மேலும் காத்திராமல் தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(22)

சந்தனு கங்கையைச் சந்தித்தான்! – ஆதிபர்வம் பகுதி 97(சம்பவ பர்வம் – 33)கங்கைக்கும் பிரதீபனுக்கும் இடையில் நடந்த உரையாடல்; சந்தனுவின் பிறப்பு, சந்தனுவிடம் பழைய கதையைச் சொன்ன பிரதீபன்; தன் மனைவியாகும்படி கங்கையை வேண்டிய சந்தனு

வைசம்பாயனர் சொன்னார், “அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டுபவனாகப் பிரதீபன் என்றொரு மன்னன் இருந்தான். அவன், பல வருடங்களாகத் தனது தவத்துறவுகளைக் கங்கையின் பிறப்பிடத்தில் செய்து வந்தான்.(1) ஒரு நாள், அழகும், திறமையும் நிறைந்த கங்கை, சொக்கவைக்கும் வடிவில் பெண்ணுருக் கொண்டு, நீரிலிருந்து எழுந்து அந்த மன்னனை {பிரதீபனை} அணுகினாள்.(2) கவர்ச்சிமிக்க அழகைக் கொண்ட அந்தத் தெய்வீக மங்கை, தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனான அந்த அரசமுனியை {பிரதீபனை} அணுகி, அண்மையிலும், பலத்திலும் முழுமையான சால மரத்தைப் போன்ற அவனது வலது தொடையில் அமர்ந்தாள்.(3) அழகிய முகம் கொண்ட அந்த மங்கை தன் தொடையில் அமர்ந்ததும், அந்த ஏகாதிபதி அவளிடம், “ஓ இனிமையானவளே! நீ என்ன விரும்புகிறாய்? நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(4) அதற்கு அந்தக் காரிகை, “ஓ மன்னா! நீர் என் கணவராக வேண்டும் என விரும்புகிறேன். ஓ குருக்களில் முதன்மையானவரே! நீ என்னவராவீராக. தன்விருப்பத்துடன் வரும் ஒரு பெண்ணை மறுப்பதை  ஞானியர் ஒருபோதும் மெச்சுவதில்லை” என்று சொன்னாள்[1].(5)(மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ மன்னா, நான் உம்மை அடைய விரும்புகிறேன். {உம்மிடம்} என்னையே அளிக்கிறேன். என்னை ஏற்பீராக. ஆசையில் நிறைந்திருக்கும் ஒரு பெண்ணை மறுப்பதை நல்லது என ஞானியர் ஒருபோதும் கருதுவதில்லை” என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், “ராஜாவே! நான் உன் மீது காதல் கொண்டிருக்கிறேன். உன்னையடைகின்ற என்னை நீயும் அடையக்கடவாய்; காதல் வைத்த பெண்களை விட்டுவிடுவதை ஸாதுக்கள் நிந்திக்கின்றனர்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஓ மன்னா, ஓ குருக்களில் சிறந்தவரே! நாம் உம்மை விரும்புகிறேன். என்னை நான் அளிக்கிறேன். பதிலுக்கு என்னை ஏற்று அன்பு செலுத்துவீராக. ஆசையில் நிறைந்திருக்கும் ஒரு பெண்ணை மறுக்கும் செயலை தீமையானது என்றே எப்போதும் ஞானியர் கருதுகின்றனர்” என்றிருக்கிறது.)

பிரதீபன், “ஓ அழகிய நிறம் கொண்டவளே, காமவசப்பட்டு அடுத்தவரின் மனைவியரிடமோ, என்வகையைச் சாராத பெண்களிடமோ ஒரு போதும் நான் செல்வதில்லை. உண்மையில் இதுவே என் அறநோன்பாகும்” என்று பதிலுரைத்தான்.(6)

அதற்கு அந்தக் கன்னிகை, “நான் மங்கலமற்றவளோ, அழகற்றவளோ அல்ல. அனைத்து வழிகளிலும் நான் அனுபவிக்கத் தகுந்தவளே.  அரிய அழகுடைய தெய்வீகக் கன்னிகையான {தேவகன்னியான} நான் உம்மைக் கணவராக அடைய விரும்புகிறேன். ஓ மன்னா, என்னை மறுக்காதீர்”என்றாள்.(7)

பிரதீபன், “ஓ காரிகையே, நீ தூண்டும் வழியில் நான் செல்வதைத் தவிர்க்கிறேன். நான் எனது நோன்பை முறித்தால், பாவத்தில் மூழ்கி நான் கொல்லப்படுவேன்.(8) ஓ அழகான நிறமுடையவளே, எனது வலது தொடையில் அமர்ந்தே நீ என்னைத் தழுவினாய். ஆனால், ஓ மருட்சியுடையவளே, அஃது எனது மகள்களும், மருமகள்களும் அமரும் தொடையாகும் என்பதை அறிந்து கொள்வாயாக.(9) இடது தொடையே மனைவிக்குரியது. ஆனால் நீ அதை ஏற்கவில்லை. எனவே, ஓ மங்கையரில் சிறந்தவளே, ஆசைக்குகந்த ஒரு பொருளாக நான் உன்னை அனுபவிக்க முடியாது. நீ என் மருமகளாவாயாக. நான் உன்னை என் மகனுக்காக ஏற்கிறேன்” என்றான்.(10,11)

அதற்கு அந்த மங்கை, “ஓ அறம் சார்ந்தவரே, நீர் சொல்வது போலவே ஆகட்டும். நான் உமது மகனோடு சேர்ந்திருக்கச் செய்வீராக. உம்மீது நான் கொண்டிருக்கும் மரியாதையால், கொண்டாடப்படும் பரதக் குலத்தில் ஒரு மனைவியாக இருப்பேன்.(12) (பாரதக் குலத்தைச் சேர்ந்த) நீரே பூமியில் உள்ள ஏகாதிபதிகள் அனைவருக்கும் புகலிடமாக இருக்கிறீர். நூறு வருடங்களுக்குள் இந்தக் குலம் செய்திருக்கும் அறங்களைக் கூட எண்ண முடியாதவளாக நான் இருக்கிறேன்.(13) இந்தக் குலத்தில் உதித்த கொண்டாடப்பட்ட ஏகாதிபதிகளின் பலரின் மேன்மையும், நற்பண்புகளும் அளவில்லாதவையாகும். ஓ அனைவரின் தலைவரே {பிரதீபரே}, நான் உமது மருமகளாகும்போது, என் செயல்களின் முறைமையை உமது மகனால் புரிந்து கொள்ள இயலாது.(14) இவ்வாறு உமது மகனுடன் வாழும் நான், அவரது நன்மையையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்வேன். இறுதியாக அவர், நான் அவருக்கு ஈன்று கொடுக்கும் மகன்களின் விளைவாலும், அவரது அறங்கள் மற்றும் நற்பண்புகளாலும் சொர்க்கத்தை அடைவார்” என்றாள்.(15)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா! அப்படிச் சொன்ன அந்தத் தெய்வீகக் காரிகை, அங்கேயே, அப்போதே மறைந்தாள். மன்னனும், தன் உறுதிமொழி நிறைவேறுவதற்காக தன் மகனின் பிறப்புக்காகக் காத்திருந்தான்.(16)  குருக்கள் குலத்தின் ஒளியும், க்ஷத்திரியக் காளையுமான அந்தப் பிரதீபன் புத்திரப் பேறுக்கான விருப்பத்தால் தனது மனைவியுடன் சேர்ந்து தவத்தில் ஈடுபட்டான்.(17) அப்படியே காலம் கடந்து வயதான பிறகு, அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் மஹாபிஷனைத் தவிர வேறு எவனும் இல்லை.  தந்தை தவத்துறவுகள் மூலம் தமது ஆசைகளைக் கட்டுப்படுத்தி இருந்த போது பிறந்ததால், அந்தக் குழந்தை சந்தனு என்று அழைக்கப்பட்டான்.(18)

குருக்களில் சிறந்தவனான அந்தச் சந்தனு, அழியாத அருளுலகை ஒருவன் தனது செயல்களால் மட்டுமே அடைய முடியும் என்பதை அறிந்து, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தான்.(19) சந்தனு வளர்ந்து இளமையை அடைந்தவுடன், பிரதீபன் அவனிடம், “ஓ சந்தனு, சில காலத்திற்கு முன்பு, ஒரு தெய்வீகக் காரிகை {தேவ கன்னி}, உனது நன்மைக்காக என்னிடம் வந்தாள்.(20)  அந்த அழகிய நிறம் கொண்டவள் ரகசியமாக உன்னைச் சந்தித்து, பிள்ளைகளை வேண்டிக் கேட்டால், அவளை உன் மனைவியாக ஏற்றுக் கொள்வாயாக.(21) ஓ பாவமற்றவனே, அவளது செயல்பாடுகளின் முறைமையையும், முறையின்மையையும் தீர்மானிக்காதே. மேலும், யாரவள், அல்லது எவருடையவள், அல்லது எங்கிருப்பவள் என்பனவற்றைக் கேட்காமல், என் ஆணையின் பேரால் அவளை உன் மனைவியாக ஏற்பாயாக” என்றான் {பிரதீபன்}.(22)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிரதீபன், தனது மகன் சந்தனுவுக்கு இவ்வாறு ஆணையிட்டு, அவனை அரியணையில் அமர்த்தியும்விட்டுக் கானகமேகினான்.(23) மன்னன் சந்தனு பெரும் நுண்ணறிவையும், இந்திரனுக்கு நிகரான பிரகாசத்தையும் கொண்டிருந்தான். வேட்டைக்கு அடிமையாகிக் கானகத்திலேயே தனது பெரும்பங்குப் பொழுதைக் கழித்தான் சந்தனு.(24) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் எப்போதும் மான்களையும், எருமைகளையும் கொன்று கொண்டு இருந்தான். ஒரு நாள், அவன் கங்கைக் கரையோரமாக அலைந்து கொண்டிருக்கையில், சித்தர்களும், சாரணர்களும் நிறைந்து இருக்கும் ஒரு பகுதிக்கு வந்தான்.(25) அங்கே, ஸ்ரீயைப் போன்ற ஜொலிக்கும் அழகுடனும், வனப்புடனும் கூடிய ஒரு பெண்ணைக் கண்டான்.(26)

அவள் களங்கமற்றவளாக, முத்துப் பல் வரிசையுடன், தெய்வீக ஆபரணங்கள் பூண்டு, மிருதுவான ஆடையை அணிந்து, தாமரை இதழ்களின் இழைகளைப் போலப் பிரகாசத்துடன் இருந்தாள்.(27) அந்த ஏகாதிபதி! அந்த மங்கையைக் கண்டு ஆச்சரியமடைந்தான். ஆனந்தத்தால் அவனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது. அவனது உறுதியான பார்வை, அவளது அழகைக் குடித்துக் கொண்டிருந்தது. ஆனால் திரும்பத் திரும்பக் குடித்தும் அவனுக்குத் தாகம் அடங்கவில்லை.(28) அவளும் அந்தப் பிரகாசமிக்க ஏகாதிபதியைக் கண்டு பெரும் கிளர்ச்சியடைந்து, அவன் மீது பரிவு ஏற்பட்டு, அவன் மீது ஏற்படும் பாசத்தை உணர்ந்தாள். அவள் பார்த்தாள், பார்த்தாள் பார்த்துக் கொண்டேயிருந்து இன்னும் அதிகமாகப் பார்த்தாள்.(29)

அந்த ஏகாதிபதி அவளிடம் மெலிதான வார்த்தைகளால், “ஓ கொடியிடையாளே, நீ தேவியாக இருந்தாலும், தானவனின் மகளாக இருந்தாலும், கந்தர்வ குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், அப்ஸரசாக இருந்தாலும், யக்ஷப் பெண்ணாக இருந்தாலும், நாகப்பெண்ணாக இருந்தாலும், அல்லது மனிதப்பெண்ணாகவே இருந்தாலும், ஓ தெய்வீக அழகுடையவளே, நீ எனது மனைவியாகும்படி உன்னிடம் வேண்டுகிறேன்” என்றான்.(30,31)

குழந்தைகளைக் கொன்றாள் கங்கை! – ஆதிபர்வம் பகுதி 98(சம்பவ பர்வம் – 34)கங்கைக்கும் சந்தனுவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம்; கங்கை சந்தனுவுக்கு மனைவியானது; குழந்தைகளைக் கொன்றாள் கங்கை; சந்தனுவிடம் உண்மைகளைச் சொன்ன கங்கை..

வைசம்பாயனர் சொன்னார், “அந்த மங்கை, இனிமையான மெல்லிய வார்த்தைகளைப் பேசிப் புன்னகைத்து நிற்கும் ஏகாதிபதியைக் கண்டு, வசுக்களிடம் தான் செய்த உறுதியை நினைத்துப் பார்த்து,(1) மன்னனிடம் மறுமொழி கூறினாள். குற்றமற்ற குணம் கொண்ட அந்த மங்கை, தனது ஒவ்வொரு வார்த்தையாலும், இதயத்தை ஊடுருவும் இன்பத்தை மன்னனுக்குக் கொடுத்தாள். அவனிடம், “ஓ மன்னா! நான் உமது மனைவியாகி, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.(2) ஆனால், ஓ ஏகாதிபதியே, நான் செய்யும் எந்தச் செயலும், அவை உமக்கு ஏற்பாக இருந்தாலும், ஏற்பில்லை என்றாலும், நீர் தலையிடக்கூடாது. என்னிடம் நீர் அன்பற்ற முறையில் பேசக்கூடாது.(3) என்னிடம் நீர் அன்பாக இருக்கும் வரையில், நான் உம்முடன் வாழ்ந்து வருவேன். ஆனால் அப்படி நீர் என் காரியத்தில் தலையிடும்போதோ, அன்பற்ற வார்த்தையைப் பேசும்போதோ, அக்கணமே நான் உம்மைவிட்டு விலகிவிடுவேன்” என்றாள்.(4)

அதற்கு மன்னன், “அப்படியே ஆகட்டும்” என்றான். அதன்பிறகு அந்த மங்கை, பாரதக் குலத்தின் முன்னவனான அந்த அருமையான ஏகாதிபதியைக் கணவனாகக் கொண்டு பெரும் மனநிறைவு கொண்டாள்.(5) மன்னன் சந்தனுவும் அவளைத் தன் மனைவியாகக் கொண்டு, அவளுடன் முழு மகிழ்ச்சியுடன் இன்பம் அனுபவித்து வாழ்ந்தான். அவளிடம் அவன் செய்து கொடுத்த உறுதிக்கிணங்க, அவளிடம் ஏதும் கேட்பதைத் தவிர்த்தான்.(6) அவளது நடத்தை, அழகு, பெருந்தன்மை மற்றும் தன் செல்வங்களை அவள் கவனித்துக் கொள்ளும் பாங்கு என அனைத்திலும், இந்தப் பூமியின் தலைவனான சந்தனு தன் மனைவி மீது, பெரும் மனநிறைவு கொண்டான்.(7) மூன்று வழியில் செல்பவளான (ஆகாயம், பூமி, பாதாளம்) தெய்வீகக் கங்கை மனித உருக் கொண்டு, உயர்ந்த நிறத்தோடும், தெய்வீக அழகோடும், அவளது அறச்செயல்களின் கனிகளால், அந்த மன்னர்களில் புலியானவனை, இந்திரனைப் போன்ற பிரகாசத்தை உடைய சந்தனுவைக் கணவனாக அடைந்து, அவனது மனைவியாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள்.(8,9) தனது கவர்ச்சியாலும், பாசத்தாலும் அவனைத் தூண்டி, அன்போடு இருந்து, பாடி, ஆடித் தானும் மகிழ்ந்து, மன்னனையும் மகிழ்ச்சியடையச் செய்தாள்.(10)

மாதங்களும், காலங்களும், வருடங்களும் உருண்டோடுவது தெரியாமல் அந்த ஏகாதிபதி நினைவு மயங்கித் தனது மனைவியுடன் காமத்தில் மூழ்கியிருந்தான்.(11) அந்த மன்னன் அப்படித் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த போது, அவனுக்குத் தெய்வீக அழகுடன் தேவர்களைப் போன்று எட்டுப் பிள்ளைகள் பிறந்தனர்.(12) ஆனால் அவளோ, ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்தப் பிள்ளைககள் பிறந்ததும், ஒருவர் பின் ஒருவராக அவர்களை நதியில் தூக்கி வீசி, “இதை உமது நன்மைக்காகவே செய்கிறேன்” என்று சொன்னாள்.(13) அந்தப் பிள்ளைகள் திரும்பி வர முடியாதபடி மூழ்கிப் போயினர். அவளது இந்த நடத்தை மன்னனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், தன்னைவிட்டுப் பிரிந்து விடுவாளே என்று எண்ணித் தனது மனைவியிடம் ஒரு வார்த்தையும் பேசாதிருந்தான்.(14) ஆனால் எட்டாவது பிள்ளை பிறந்ததும், தனது மனைவி முன்பு போலவே சிரித்துக் கொண்டு நதியில் அதைத் தூக்கி வீச முற்பட்ட போது, மன்னன் மிகுந்த துக்கத்துடனும், குழந்தையை அழிவிலிருந்து மீட்கும் விருப்பத்துடனும், அவளிடம்,(15) “அதைக் கொல்லாதே! யார் நீ, நீ எங்கிருந்து வந்தாய்? ஏன் உனது சொந்தக் குழந்தைகளைக் கொல்கிறாய்? உனது குழந்தைகளைக் கொன்ற கொலைகாரியே, உனது பாவ மூட்டை மிகப் பெரியது!” என்று சொன்னான்.(16)

இப்படிச் சொல்லப்பட்ட அவன் மனைவி {கங்கை}, “ஓ வாரிசின் மீது விருப்பமுள்ளவரே {சந்தனுவே}, நீர் ஏற்கனவே, பிள்ளை பெற்றவர்களில் முதன்மையானவராகிவிட்டீர். நான் உமது இந்தக் குழந்தையை அழிக்க மாட்டேன். ஆனால் நமது ஒப்பந்தப்படி, நான் உம்முடன் தங்கி இருக்கும் காலம் முடிவுக்கு வந்தது.(17) நான் ஜானுவின் மகளான கங்கையாவேன். நான் பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவளாவேன். தேவர்களின் காரியங்களை நிறைவேற்றும் பொருட்டே நான் உம்முடன் நீண்ட காலம் வாழ்ந்து வந்தேன்.(18) சிறப்பு மிகுந்த எட்டு வசுக்கள், வசிஷ்டரின் சாபத்தால் மனித உருக் கொண்டு இங்கே வந்தனர்(19). இந்த உலகத்தில் உம்மைத்தவிர, வேறு யாருக்கும் அவர்களைப் பெற்றெடுக்கும் மகிமை இல்லை. அதே போல மனித வடிவில் வந்த தேவியான என்னைத் தவிர இவ்வுலகில் என்னைத் தவிர வேறு யாரும் அவர்களுடைய தாயாக முடியாது. அவர்களைப் பெறவே நான் மனித வடிவம் கொண்டேன்.(20)  அந்த எட்டு வசுக்களுக்குத் தகப்பனானதால், நிரந்தர அருள் இருக்கும் பல உலகங்களுக்குச் செல்லும் தகுதியை நீரும் அடைந்துவிட்டீர்.(21) வசுக்கள் பிறந்ததும், மனித உருவில் இருந்து அவர்களை விடுவிக்கிறேன் என்று நான் அவர்களுக்கு உறுதி அளித்திருந்தேன்.(22) ஆபவ முனிவரின் {வசிஷ்டரின்} சாபத்திலிருந்து நான் அவர்களை விடுவித்திருக்கிறேன். ஓ மன்னா! நீர் அருள் நிறைந்து இருப்பீர். நான் உம்மைவிட்டுச் செல்கிறேன். ஆனால் கடும் தவங்கள் செய்த இந்தக் குழந்தையை நீர் வளர்ப்பீராக.(23) நான் வசுக்களிடம் கொடுத்திருந்த உறுதியின்படியே, உம்முடன் இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்தேன். இந்தக் குழந்தை கங்காதத்தன் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கட்டும்” என்றாள் {கங்கை}.(24)

உண்மையை வெளிப்படுத்தினாள் கங்கை! – ஆதிபர்வம் பகுதி 99(சம்பவ பர்வம் – 35)வசிஷ்டிரனின் சாபத்தினால் வசுக்கள் சந்தனுவுக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததை எடுத்துரைத்த கங்கை; தியோவசுவின் மனைவி நந்தினி என்ற பசுவை விரும்புதல்; நந்தினியைக் கவர்ந்த தியோவசு; பீஷ்மனைக் கங்கை தன்னுடன் அழைத்துச் செல்வது…

சந்தனு, “வசுக்களின் குற்றம் என்ன? ஆபவர் என்பவர் யார்? யாருடைய சாபத்தால் வசுக்கள் மனிதர்கள் மத்தியில் பிறந்தனர்?(1) இந்த உனது குழந்தை கங்காதத்தன், மனிதர்களுடன் வாழும்படி என்ன செய்தான்?(2) மூவுலகங்களின் தலைவர்களான வசுக்கள் மனிதர்களுக்கு மத்தியில் பிறக்க ஏன் சபிக்கப்பட்டனர்? ஓ ஜானுவின் மகளே, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிக் கேட்கப்பட்ட ஜானுவின் தெய்வீக மகள் கங்கை, தனது கணவனும், மனிதர்களில் காளையுமான அந்த ஏகாதிபதியிடம்,(4) “ஓ பாரதக் குலத்தில் சிறந்தவரே, வருணனால் மகனாகப் பெறப்பட்டவரே வசிஷ்டர், அந்த முனிவரே பிற்காலத்தில் ஆபவர்[1] என்று அறியப்பட்டார்.(5)(ஆபம் என்பது நீர்நிலைகளைக் குறிக்கும். அவற்றுக்குத் தலைவன் வருணன் என்று அழைக்கப்படுகிறான். அதன் காரணமாவே அவனுடைய மகனாகிய வசிஷ்டருக்கு ஆபவர் என்ற பெயர் ஏற்பட்டது.)

அவரது ஆசிரமம், மலைகளின் மன்னனான மேருவின் சாரலில் இருந்தது. பல பறவைகளுனும், விலங்குகளும் நிறைந்திருந்த அந்த இடம் புனிதமானதாக இருந்தது. அங்கே எல்லாக் காலங்களிலும், அந்தந்த காலங்களுக்கு ஏற்ற வகையில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.(6) ஓ பாரதக் குலத்தில் சிறந்தவரே, அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான அந்த வருணனின் மகன் {வசிஷ்டர்}, இனிய கிழங்குகளும், நீரும் நிறைந்திருந்த அந்தக் கானகத்திலேயே தவம் செய்து வந்தார்.(7) தக்ஷனுக்குச் சுரபி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அவள் உலகத்தின் நன்மைக்காகக் கசியபருடன் கூடி பசுவின் உருவில் ஒரு மகளைப் (நந்தினி) ஈன்றாள்.(8) அந்தப் பசுக்களில் முதன்மையான நந்தினி அனைத்தும் உடைய (விரும்பிய அனைத்தையும் கொடுக்கும் திறன் கொண்டவளாக) பசுவாக இருந்தாள். வருணனின் அறம்சார்ந்த மகன் {வசிஷ்டர்}, நந்தினியைத் தனது ஹோம காரியங்களுக்காக அடைந்தார்.(9)

முனிவர்களால் வழிபடப்பட்ட அந்த ஆசிரமத்திலேயே நந்தினியும் வசித்து வந்தாள். அப்படி வசித்து வரும்போது, அச்சமற்று மகிழ்ச்சியுடன் அந்தப் புனிதமான இடத்தில் அவள் உலவிக் கொண்டிருந்தாள்.(10) ஒரு நாள், ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்தக் கானகத்திற்குத் தெய்வீக முனிவர்களாலும், தேவர்களாலும் வழிபடப்படும் வசுக்கள், பிருதுவைத் தலைமையாகக் கொண்டு அங்கு வந்தனர்.(11) அந்த மலைகளுடன் கூடிய அழகான கானகத்தில் தங்கள் மனைவியருடன் உலவித் திரிந்து அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.(12) ஓ இந்திரனின் ஆற்றலைக் கொண்டவரே! அப்படி அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில், கொடியிடை கொண்டவளான, அந்த வசுக்களின் ஒருவனுடைய மனைவி, அந்தக் கானகத்தில் உலவிக் கொண்டிருந்த எல்லாம் வல்ல நந்தினியைக் கண்டாள்.(13) அவள் {நந்தினி}, பெரிய கண்களுடன், மடி கனத்து, மெலிதான வாலுடன், அழகான கால்களுடன், அனைத்து நற்குறிகளும் நிறைந்து, பாலும், அனைத்து செல்வங்களும் கொண்டிருந்த அந்தப் பசுவைத் தனது கணவனான தியோவுக்குக் {பிரபாசனுக்குக்} காட்டினாள்.(14-16) ஓ முதன்மையான யானைகளின் ஆற்றலைக் கொண்டவனே {ஜனமேஜயா}, அந்தப் பசுவைக் கண்ட தியோ, அதன் சிறப்புகளை ஆராய்ந்து ரசித்துத் தனது மனைவியிடம்,(17) “ஓ அழகான தொடைகளையும், கருங்கண்களையும் பெண்ணே, இந்த அழகான ஆசிரமத்திற்கு உரிமையாளரான முனிவருக்குச் சொந்தமானதே இந்தப் பசு.(18) ஓ கொடியிடையாளே, சாகப் பிறந்தவன் இதன் பாலை அருந்தினால், பத்தாயிரம் வருடங்களுக்கு இளமை மாறாமல் இருப்பான்” என்றான்.(19)

ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே, இதைக்கேட்ட களங்கமற்ற குணம் கொண்ட கொடியிடை தேவி, தனது பிரகாசமிக்கத் தலைவனிடம்,(20) “இந்த உலகத்தில் ஜிதவதி என்ற பெயரில் எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவள் பேரழகும், இளமையுமுடையவளாவாள்.(21) அவள் மனிதர்களில் தேவனாக இருக்கும் அரசமுனி உசீனரனின் மகள். அவள் மிகுந்த புத்திசாலியாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவளாகவும் இருக்கிறாள்.(22) ஓ சிறப்புமிக்கவரே, அந்த எனது தோழிக்காக இந்தப் பசுவை அதன் கன்றுடன் பெற விரும்புகிறேன். எனவே, ஓ தேவர்களில் சிறந்தவரே, எனது தோழி அதன் பாலைக் குடித்து, இந்த உலகத்தில் நோய்களும், பலவீனமும் அடையாமல் இருக்க, நீர் அதை இங்கே கொண்டு வாரும்.(23,24) ஓ சிறப்புமிக்கவரே, பழியற்றவரே, எனது விருப்பத்தை நீர் நிறைவேற்ற வேண்டும். அதைத் தவிர நான் வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்றாள்.(25)

தனது மனைவியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தியோ, அவளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்க விருப்பங்கொண்டு, தனது சகோதரன் பிருது மற்றும் ஏனையோர் துணையுடன் அதைத் திருடினான்.(26) அந்தப் பசுவைக் கொண்ட முனிவரின் பெரும் ஆன்மத்தகுதிகளை மறந்த தியோ, நிச்சயமாகத் தனது தாமரைக் கண் மனைவியின் உத்தரவின் பேரிலேயே அதைச் செய்தான். அந்நேரத்தில் அவன், பசுவைத் திருடிய பாவத்திற்காக நாம் விழுந்துவிடுவோம் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.(27) மாலையில் கனிகளைச் சேகரித்துக் கொண்டு, அந்த வருணனின் மகன் தனது ஆசிரமத்திற்கு வந்த போது, பசுவையும், கன்றையும் காணவில்லை என்பதைக் கண்டார். அவர் கானகத்திற்குள் தேடத் துவங்கினார்,(28) உயர்ந்த புத்திக்கூர்மை உடைய அந்த முனிவர், தனது பசுக்களைக் காணவில்லை என்றவுடன், தனது ஆன்மிகப் பார்வையில் வசுக்கள் அவற்றைத் திருடிவிட்டனர் என்பதைக் கண்டார். அவருக்கு உடனே கோபம் மூண்டது. வசுக்களை, ” இனிமையான பால் தரும், அழகான வால் கொண்ட எனது பசுவை வசுக்கள் திருடியதால், அவர்கள் உண்மையாகப் பூமியில் பிறக்கட்டும்” என்று சபித்தார்.(29-31)

ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்தச் சிறப்புவாய்ந்த முனிவர் அபர்வர் {வசிஷ்டர்} கோபத்தால் வசுக்களை அப்படிச் சபித்தார்.(32) அப்படிச் சபித்துவிட்டு, மீண்டும் தனது தவத்தில் முழு இதயத்துடன் மூழ்கினார். ஓ மன்னா! அந்தப் பெரும் சக்திவாய்ந்த, ஆன்மச் செல்வம் கொண்ட பிரம்மரிஷி கோபங்கொண்டு தங்களைச் சபித்ததை வசுக்கள் அறிந்தனர். அவர்கள் வேகமாக அந்த ஆசிரமத்திற்கு வந்து அந்த முனிவரைக் குளிர்விக்க முயன்றனர்.(33-35) ஆனால், ஓ மனிதர்களில் புலியே, அறத்தின் எல்லா விதிகளையும் அறிந்த அந்த முனிவர் ஆபர்வரின் அருளைப் பெறுவதில் அவர்கள் தோற்றனர்.(36)

அந்த அறம்சார்ந்த ஆபர்வர், “தவனுடன் {தரனுடன்} {வசுக்களில் ஒருவனின் பெயர்} கூடிய வசுக்களே, நீங்கள் என்னால் சபிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்த ஒரு வருடத்திற்குள் உங்கள் சாபத்திலிருந்து விடுபடுவீர்கள்.(37) ஆனால் யாருடைய செயலால் நீங்கள் சபிக்கப்பட்டீர்களோ, அவன் {தியோ} அவனது பாவச் செயலிற்காக, நீண்ட காலத்திற்கு உலகத்தில் வசிப்பான்.(38) நான் கோபத்துடன் உதிர்த்த வார்த்தைகளைப் பயனற்றதாக்க மாட்டேன். தியோ பூமியில் வசித்தாலும், அவன் பிள்ளைகளைப் பெற மாட்டான்.(39) இருப்பினும், அவன் அறம் சார்ந்தவனாகவும், சாத்திர அறிவுடனும் இருப்பான். அவன் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பான். பெண் துணையின் இன்பத்திலிருந்து அவன் விலகியே இருப்பான்” என்று சொன்னார்.(40)

வசுக்களிடம் இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் பெருமுனிவர் சென்று விட்டார். பிறகு வசுக்கள் அனைவரும் கூடி என்னிடம் வந்தனர்.(41) ஓ மன்னா! அவர்கள், தாங்கள் பிறந்தவுடன், தங்களை நீரில் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்று வரம் தருமாறு என்னிடம் இரந்து கேட்டனர்.(42) ஓ மன்னர்களில் சிறந்தவரே, அவர்களை உலக வாழ்விலிருந்து விடுவிப்பதற்காக, நான் அவர்கள் விருப்பப்படியே நடந்தேன்.(43) ஓ மன்னர்களில் சிறந்தவரே, அந்த முனிவரின் {வசிஷ்டரின்} சாபப்படி, இந்தக் குழந்தையே (தியோ) பூமியில் சில காலத்திற்கு வாழ்வான்” என்றாள்.(44)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிச் சொல்லிவிட்டு, அந்த தேவி {கங்காதேவி} அங்கேயே அப்போதே மறைந்து போனாள். அவள் தன்னுடன் தனது பிள்ளையையும் கூட்டிக் கொண்டு தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டாள்.(45) அந்தச் சந்தனுவின் மகன் காங்கேயன் என்றும் தேவவிரதன் என்றும் இருவகையில் பெயர் சூட்டப்பட்டான். அவன் எல்லாச் சாதனைகளிலும் அவனது தந்தையை மிஞ்சினான்.(46) சந்தனு, தனது மனைவி மறைந்தவுடன், தன் தலைநகருக்குத் துயரம் நிறைந்த இதயத்துடன் சென்றான். இனி பாரதக் குலத்தைச் சார்ந்த அந்தச் சிறந்த மன்னன் சந்தனுவின் அறங்கள் பலவற்றையும், பெரும் நற்பேறுகளையும் விவரிக்கிறேன். உண்மையில், இந்த அற்புதமான வரலாறே மஹாபாரதம் என்று அழைக்கப்படுகிறது.(47,48)

பயங்கரமானவன்! | ஆதிபர்வம் – பகுதி 100-(சம்பவ பர்வம் – 36)சந்தனுவின் பண்புகள்; கங்கையாற்றின் ஓட்டத்தைத் தடுக்கும் பீஷ்மனைக் கண்ட சந்தனு; பீஷ்மனை சந்தனுவிடம் ஒப்படைக்கும் கங்கை; சத்தியவதியைக் கண்ட சந்தனு; சத்யவதியுடைய தந்தையின் நிபந்தனை; சந்தனுவின் சோகத்த அறிந்து சத்யவதியைப் பெண் கேட்டுச் சென்ற பீஷ்மன்; பீஷ்மர் என்ற பெயர்க்காரணம்; பீஷ்மருக்கு வரமளித்த சந்தனு..

வைசம்பாயனர் சொன்னார், “தேவர்களாலும், அரச முனிகளாலும் புகழப்பட்ட அந்த ஏகாதிபதி சந்தனு, தனது ஞானத்திற்காகவும், அறச்செயல்களுக்காகவும், உண்மை நிறைந்த பேச்சுக்காகவும் எல்லா உலகங்களிலும் அறியப்பட்டிருந்தான்.(1) தன்னடக்கம், தயாளம், மன்னிக்கும் குணம், புத்திக்கூர்மை, பணிவு, பொறுமை, அதீத சக்தி ஆகிய குணங்கள் அந்த மனிதர்களில் காளையிடம் {சந்தனுவிடம்} இருந்தன.(2) அறம், பொருள் ஆகியவற்றைக் கற்றறிந்து, பாரதக் குலத்தையும், மனித குலத்தையும் அந்த ஏகாதிபதி காத்து வந்தான்.  அவனது {சந்தனுவின்} கழுத்தில் சங்கில் {சங்கு} உள்ளது போல மூன்று கோடுகள் இருந்தன. அவனது தோள் அகலமானதாக இருந்தது. மதங்கொண்ட யானையின் ஆற்றலை அவன் {சந்தனு} பிரதிபலித்துக் கொண்டிருந்தான். அரசர்களுக்கான அனைத்து நற்குறிகளும் அவனிடம் இருந்தன. தேவலோகம் செல்வதற்கு முழுத்தகுதி வாய்ந்த பூமியின் முதல்வனாக அவன் {சந்தனு} இருந்தான்.(3,4)

பெரும் சாதனைகள் செய்த அந்த ஏகாதிபதியின் நடத்தையைக் கண்ணுற்ற மனிதர்கள், இன்பத்தையும், பொருளையும் விட அறம்தான் உயர்ந்தது என்பதை அறிய வந்தனர்.(5) இந்தக் குணங்களே, மனிதர்களில் காளையான சந்தனுவிடம் வசித்து வந்தன. உண்மையாகச் சந்தனுவைப் போன்று வேறு எந்த மன்னனும் இதுவரை இருந்ததில்லை.(6) அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அம்மன்னனைக் {சந்தனுவைக்} கண்ட பூமியின் மற்ற மன்னர்கள், அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான அவனுக்கு {சந்தனுவுக்கு} மன்னாதி மன்னன்   என்ற பட்டத்தைக் கொடுத்தனர்.(7) அந்தப் பாரதக் குலத்தைக் காக்கும் தலைவனின் {சந்தனுவின்} காலத்தில் பூமியில் இருந்த மன்னர்கள் அனைவரும் துயரில்லாமல், பயமில்லாமல், எந்தக் குறையும் இல்லாமல் இருந்தனர். அவர்கள் அனைவரும் அமைதியுடன் உறங்கி, அதிகாலையில் எழுவதற்கு முன்னர் மகிழ்வான கனவுகளைக் கண்டு எழுந்தனர்.(8)

அற்புதமான சாதனைகளைச் செய்து மற்றொரு இந்திரனைப் போல் இருந்த அந்த ஏகாதிபதியின் {சந்தனுவின்} கட்டுப்பாட்டில் இருந்த பூமியின் மன்னர்கள் அனைவரும், நன்னடத்தையுள்ளவர்களாகவும், ஈகையாளர்களாகவும், அறம் சார்ந்தவர்களாகவும், வேள்விகள் செய்து கொண்டும் இருந்தனர்.(9) சந்தனு பூமியை ஆண்டு கொண்டிருந்த போது, அவனைப் {சந்தனுவைப்} போன்ற மற்ற ஏகாதிபதிகள் அனைவரின் அறத்தகுதிகளும் பெரும் அளவில் முன்னேறின.(10) க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்குச் சேவை செய்தார்கள்; வைசியர்கள் க்ஷத்திரியர்களுக்குச் சேவை செய்தார்கள்; சூத்திரர்கள் பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் வழிபட்டு வைசியர்களுக்குச் சேவை செய்தார்கள்.(11) சந்தனு குருக்களின் தலைநகரான மகிழ்ச்சிமிகு ஹஸ்தினாபுரத்தில் வசித்து, கடல்களால் சூழப்பட்ட முழு உலகத்தையும் ஆண்டான்.(12)

அவன் உண்மையுள்ளவனாக, சூதற்றவனாக, தேவர்களின் மன்னனைப் போல அறங்களின் விதிக்குட்பட்டு வாழ்ந்து வந்தான். ஈகை, அறம், தவம் ஆகியவற்றின் கலவையோடு இருந்த அவன், பெரும் நற்பேறு பெற்றிருந்தான்.(13) அவன் {சந்தனு} கோபத்தையும், தீயவற்றையும் நீக்கி சோமனைப் போன்ற அழகுடன் இருந்தான்.  சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும், வாயுவைப்போன்ற ஆற்றலுடனும், கோபத்தில் யமனைப் போலவும், பொறுமையில் பூமியைப் போலவும் இருந்தான்.(14) ஓ மன்னா {ஜனமேஜயா}, சந்தனு இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருந்த போது, மான்களோ, பன்றிகளோ, பறவைகளோ அல்லது வேறு எந்த மிருகமோ தேவையில்லாமல் கொல்லப்பட்டதில்லை.(15) அவனது {சந்தனுவின்} ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில், அறத்தில் தலைசிறந்ததான அன்பு மேலோங்கியிருந்தது, கருணையுடன் கூடிய ஆன்மா கொண்டவனும், ஆசை மற்றும் கோபமற்றவனுமாகிய மன்னனும் {சந்தனுவும்}, அனைத்து உயிரினங்களுக்கும் {உயிரினங்களுக்குள் எந்த வேறுபாட்டையும் கருதாமல்} சமமான பாதுகாப்பை வழங்கினான்.(16)

தேவர்கள், முனிவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேள்விகள் நடத்தப்பட்டன. பாவம் வரும் வகையில் எந்த உயிரினத்தின் உயிரும் எடுக்கப்படவில்லை.(17) சந்தனு, துயரத்திலிருந்தோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும், ஏனைய உயிரனங்களுக்கும் மன்னனாக மட்டுமில்லாமல் தந்தையாகவும் இருந்தான்.(18) குரு பரம்பரையில் வந்த அந்தச் சிறந்தவனின் {சந்தனுவின்} ஆட்சியில் மக்கள் உண்மையான பேச்சுடனும், ஈகை மற்றும் அறத்தில் மனத்தை அர்ப்பணித்தவர்களாக இருந்தனர்.(19) இல்லற இன்பத்தை முப்பத்தாறு ஆண்டுகள் அனுபவித்த சந்தனு, பிறகு கானகத்திற்குச் சென்றான்[1].(20)

மன்மதநாததத்தரின் பதிப்பில், “பெண்களின் துணையை முப்பத்தாறு ஆண்டுகளுக்கு அனுபவித்த சந்தனு” என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், “அவன் பதினாறு, எட்டு, நாலு, எட்ட ஆகிய வருஷங்கள் ஸ்திரீ ஸுகத்தை அனுபவிக்காமல் காட்டிலேயே திரிந்து கொண்டிருந்தான்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “முப்பத்தாறு வருடங்கள் பெண்களுடன் இன்பமாக இருந்த அம்மன்னன் பிறகு காட்டுக்குச்ச என்றான்” என்றிருக்கிறது.

சந்தனுவின் மகனும், கங்கைக்குப் பிறந்தவனுமான அந்த வசு, தேவவிரதன் என்று அழைக்கப்பட்டான். அவன் {தேவவிரதன்}, மிகுந்த அழகாலும், அவனது பழக்க வழக்கங்களாலும், நடத்தையாலும், கல்வியாலும், சந்தனுவுக்கு ஒப்பானவனாக இருந்தான்.(21) உலகம் சார்ந்த அறிவு மற்றும் ஆன்ம அறிவு சார்ந்த அனைத்துக் கிளைகளிலும் அவன் {தேவவிரதன்} பெற்றிருந்த ஞானம் பெரியதாக இருந்தது. அவனது பலமும், சக்தியும் இயல்புக்கு மிக்கதாக இருந்தது. அவன் {தேவவிரதன்} பெரும் தேர் வீரனாகவும் ஆனான். உண்மையில் அவன் {தேவவிரதன்} பெரும் மன்னனாக இருந்தான்[2].(22)(மன்மதநாததத்தரின் பதிப்பில், “தெய்வீக மற்றும் பூலோக ஆயுதங்கள் அனைத்திலும் அவன் திறன்மிக்கவனாக இருந்தான். அவன் பெரும் பலவானாகவும், சக்திமிக்கவனாகவும் இருந்தான்; அவன் ஒரு பெரும் தேர்வீரனாக இருந்தான்; அவன் பேரழகனாகவும் இருந்தான்” என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், “சிறந்த வன்மையும், சிறந்த தீரமும், சிறந்த பராக்கிரமமுள்ள அந்த மஹாரதனான தேவவ்ரதன் பூமியிலுள்ளவையும் இல்லாதவையுமான {தெய்வீகமானவையுமான} எல்லா அஸ்திரங்களிலும் தேர்ச்சிஉள்ளவனாகி இருந்தான்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவதில் திறன்மிக்கவனாக இருந்தான். பிற மன்னர்களோடு ஒப்பிடுகையில் அவன் பலத்திலும், சக்தியிலும், வீரத்திலும், தேரோட்டியாகவும் வலிமைமிக்கவனாக இருந்தான்” என்றிருக்கிறது.)

ஒரு நாள், மன்னன் சந்தனு, தனது கணையால் அடிபட்ட மான் ஒன்றைக் கங்கைக்கரை ஓரமாகத் தேடிக்கொண்டிருந்த போது, கங்கை மிகவும் வற்றிப் போயிருப்பதைக் கண்டான்.(23) ஓ மனிதர்களில் காளையே, சந்தனு இந்தக் காட்சியைக் கண்டு வியந்து நின்றான். அவன் {சந்தனு} தனது மனதிற்குள்ளேயே, ’ஆறுகளில் முதன்மையான {கங்கை} ஆறு எப்படி இவ்வளவு வேகமாக வற்றிப் போயிற்று?’ என்று கேட்டுக் கொண்டான்.(24) அந்தச் சிறப்பு மிக்க ஏகாதிபதி {சந்தனு}, காரணத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, திடமிக்க, இனிமையான ஓர் இளைஞன் {தேவவிரதன்}, தனது கூரிய தெய்வீக ஆயுதங்களால் நதியின் ஓட்டத்தைத் தடுத்து இந்திரனைப் போல நின்று கொண்டிருப்பதைக் கண்டான். பிரம்மாண்டமான கங்கையின் நீரோட்டம், ஓர் இளைஞனால் தடுக்கப்பட்டதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தான்.(25-27) அந்த இளைஞன் {தேவவிரதன்}, சந்தனுவின் மகனைத் தவிர வேறு யாருமில்லை. சந்தனு, தனது மகனை {தேவவிரதனை}, அவன் பிறந்த போது பார்த்ததுதான். அதன் பிறகு பார்த்ததேயில்லை. எனவே அந்த இளைஞனை {தேவவிரதனை} அவனால் {சந்தனுவால்} நினைவுகூரமுடியவில்லை.(28)

அந்த இளைஞன் {தேவவிரதன்} தனது தந்தையைப் {சந்தனுவைப்} பார்த்தவுடனேயே கண்டுகொண்டான். எனினும், மன்னனை {சந்தனுவை} நெருங்காமல், தனது தெய்வீக மாய சக்திகளைப் பயன்படுத்தி, மேகம்போலப் பார்வையை மறைத்து, அவன் {சந்தனு} பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனான் {அந்த இளைஞன் தேவவிரதன்}.(29) மன்னன் சந்தனு, தான் கண்ட காட்சியை நினைத்து வியந்து, ஒரு வேளை அந்த இளைஞன் தனது மகனாக இருப்பானோ என்றெண்ணிக் கங்கையிடம், “எனது மகனைக் காட்டுவாயாக” என்றான்.(30) இப்படிக் கேட்கப்பட்ட கங்கை, அழகான வடிவங் கொண்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பிள்ளையைத் தனது வலக் கரத்தில் பற்றி வந்து, சந்தனுவிடம் காட்டினாள்.(31) சந்தனு, ஏற்கனவே அவளை {கங்கையை} அறிந்திருந்தாலும், இப்போது ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்ணிற ஆடையுடன் வந்த அந்த அழகான பெண்ணை {கங்கையை} அவனால் {சந்தனுவால்} அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.(32)

கங்கை, “ஓ மனிதர்களில் புலியே {சந்தனுவே}, சிறிது காலத்திற்கு முன், என்னால் எட்டாவதாகப் {8} பெறப்பட்ட மகன் இவன்தான் {தேவவிரதன்}. இவன் எல்லா ஆயுதங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வீராக.(33) ஓ ஏகாதிபதியே! இவனை {தேவவிரதனை} இப்போது நீர் அழைத்துச்செல்லலாம். அவனை {தேவவிரதனை} நான் கவனத்துடன் வளர்த்திருக்கிறேன். ஓ மனிதர்களில் புலியே, உமது இல்லத்திற்கு இவனையும் {தேவவிரதனையும்} அழைத்துச் செல்வீராக.(34) உயர்ந்த புத்திக்கூர்மையுள்ள இவன், வசிஷ்டரிடம் முழு வேதத்தையும், அதன் அங்கங்களையும் கற்று வந்திருக்கிறான். எல்லா ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்ற சிறந்த வில்லாளியான இவன் {தேவவிரதன்}, போர்க்களத்தில் இந்திரனைப் போன்றவனாவான்.(35) ஓ பாரதரே (பாரதக் குலத்தில் வந்தவரே), தேவர்களும், அசுரர்களும் இவனுக்கு {தேவவிரதனுக்கு} நல்லதையே செய்ய நினைப்பர். உசானஸ் (சுக்ரன்) அறிந்த ஞானத்தின் கிளைகள் அத்தனையையும் இவனும் {தேவவிரதனும்} அறிவான். தேவர்களாலும், அசுரர்களாலும் வழிபடப்பட்டும் பிருஹஸ்பதி அறிந்த எல்லாச் சாத்திரங்களிலும் இவன் நிபுணத்துவம் பெற்றிருக்கிறான். (36,37) ஜமதக்னியின் மைந்தனான ஒப்பற்ற ராமன் {பரசுராமன்}, அறிந்த எல்லாப் பலம்வாயந்த ஆயுதங்களையும், சிறப்பு வாய்ந்த, பெரும்பலம் கொண்ட உமது மகன் {தேவவிரதன்} அறிவான். ஓ மன்னா! உயர்வான ஆற்றலைக் கொண்ட இந்த வீர மைந்தனை {தேவவிரதனை} உமக்கு நான் கொடுக்கிறேன். இவன் {தேவவிரதன்} சிறந்த வில்லாளன். மன்னர்களின் கடமைகளையும், அவர்களுக்குள்ளான ஒப்பந்தங்கள் அனைத்தையும் அறிவான்” என்றாள்.(38,39)

இப்படிக் கங்கையால் சொல்லப்பட்ட சந்தனு, சூரியனைப் போன்ற தனது மைந்தனைத் {தேவவிரதனைத்} தனது தலைநகருக்கு அழைத்துச் சென்றான்.(40) தேவர்களின் தலைநகரைப் போல இருந்த தனது தலைநகரை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்ததும், அந்தப் பூருவின் வழியில் வந்த ஏகாதிபதி {சந்தனு}, தன்னைப் பெரும் அதிர்ஷ்டசாலியாக நினைத்தான்.(41) எல்லாப் பௌரவர்களையும் அழைத்து, அரசாங்கத்தைக் காக்க, தனது மகனை {தேவவிரதனை} தனது வாரிசாக அறிவித்தான்.(42) ஓ பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயனே}, தனது நடத்தையால் அந்த இளவரசன் {தேவவிரதன்} விரைவாகத் தனது தந்தையையும் {சந்தனுவையும்}, மற்ற பௌரவர்களையும் அரசாங்கத்துக்குட்பட்ட அனைத்துக் குடிகளையும் மனநிறைவு கொள்ளச் செய்தான்.(43) அதன்பிறகு, ஒப்புயர்வற்ற வீரம் கொண்ட மன்னன் {சந்தனு}, தனது மகனுடன் {தேவவிரதனுடன்} மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். இப்படியே நான்கு வருடங்கள் கழிந்தன.(44)ஒரு நாள் மன்னன் {சந்தனு} யமுனைக் கரையில் இருந்த ஒரு கானகத்திற்குச் சென்றான். அங்கே அந்த மன்னன் {சந்தனு} உலவிக் கொண்டிருந்த போது, திக்கறியா இடத்திலிருந்து நறுமணம் பரவி வருவதை உணர்ந்தான்.(45) அதன் காரணத்தை அறிந்து கொள்ள விருப்பம் கொண்டு, அந்த மன்னன் {சந்தனு} அப்படியும், இப்படியும் தேடிக் கொண்டிருந்தபோது, மீனவ மகளான தெய்வீக அழகுடன் கூடிய கருங்கண் மங்கையொருத்தியை {சத்தியவதியைக்} கண்டான்.(46) அவளிடம், “ஓ மருட்சியுடையவளே, நீ யார்? நீ யாருடைய மகள்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.(47) அவள் {சத்தியவதி}, “அருளப்பட்டு இருப்பீராக! நான் மீனவர் தலைவனின் மகளாவேன். அவரது உத்தரவின் பேரில், அறத்தகுதிகளை அடைவதற்காக, வழிப்போக்கர்கள் இந்த நதியைக் கடந்து அக்கரைக்குச் செல்ல, இந்தப் படகின் மூலம் உதவுகிறேன்” என்றாள்.(48)

தெய்வீக அழகும், இனிமையும், நறுமணமும் கூடிய அந்த மங்கையைக் கண்டு, அவளைத் {சத்தியவதியைத்} தனது மனைவியாக அடைய எண்ணினான் அந்த மன்னன்.(49) அவளது தந்தையிடம் {மீனவர் தலைவனிடம்} சென்று, தனது கோரிக்கையை வைத்தான். ஆனால் அந்த மீனவர் தலைவன், “ஓ மன்னா {சந்தனு}, உயர்ந்த நிறத்துடன் எனது மகள் {சத்தியவதி} பிறந்தவுடனேயே, அவளுக்கேற்ற கணவனை அடைய வேண்டுமே என்று உணர்ந்தேன். ஆனால், எனது இதயத்தில் குடியிருக்கும் விருப்பத்தைக் கேட்பீராக.(50,51) ஓ பாவமற்றவரே, நீர் உண்மையானவர், இந்த மங்கையை {சத்தியவதியை} என்னிடம் இருந்து பரிசாக அடைய நீர் விருப்பம் கொண்டால், எனக்கு ஓர் உறுதியை அளிப்பீராக.(52) அந்த உறுதியை நீர் ஏற்றுக் கொண்டால், உண்மையாக நான் எனது மகளை {சத்தியவதியை} உமக்கு அளிக்கிறேன். உமக்குச் சமமான வேறு கணவனை இவளுக்கு என்னால் அளிக்க முடியாது” என்றான் {மீனவர் தலைவன்}.(53)

இதைக் கேட்ட சந்தனு, “நீர் கேட்கும் உறுதி என்ன என்பதை நான் கேட்ட பிறகே, அதை என்னால் தர முடியுமா என்று சொல்ல முடியும். என்னால் தரக்கூடியது என்றால், நிச்சயம் தருவேன். இல்லையென்றால் என்னால் முடியாது” என்றான்.(54)

மீனவன், “ஓ மன்னா {சந்தனு}, நான் இதையே உம்மிடம் கேட்பேன்: இந்தக் கன்னிகையின் மூலமாகப் பிறக்கும் மகனை நீர் உமது அரியணையில் நிறுவ வேண்டும், வேறு எவரையும் உமது வழித்தோன்றலாக்கக் கூடாது” என்றான்.(55)

“வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ பாரதா, இதைக் கேட்ட சந்தனுவுக்குள், ஆசைத்தீ  பெரிதாக எரிந்து கொண்டிருந்தாலும், அத்தகு வரத்தைக் கொடுக்க விரும்பவில்லை.(56) அந்த மன்னன் இதயத்தில் துயர் கொண்டு, வழியெல்லாம் அந்த மீனவன் மகளை {சத்தியவதியை} நினைத்துக் கொண்டே ஹஸ்தினாபுரம் திரும்பினான்.(57) இல்லம் திரும்பி வேதனையில் நிறைந்த தியானத்தில் தனது நேரத்தைப் போக்கினான் அந்த ஏகாதிபதி. ஒரு நாள், துயரத்தில் இருந்த தனது தந்தையிடம் {சந்தனுவிடம்} தேவவிரதன் சென்று,(58) “உம்மிடம் செல்வங்கள் அனைத்தும் இருக்கின்றன. தலைவர்கள் அனைவரும் உமக்குக் கீழ்ப்படிகிறார்கள், பிறகு ஏன் நீர் இப்படித் துயரத்திலிருக்கிறீர்?(59) உமது சிந்தனையிலேயே லயித்துக் கொண்டு என்னிடம் ஒரு வார்த்தையும் மறுமொழி கூறாமல் இருக்கிறீர். நீர் குதிரையில் வெளியே எங்கும் செல்வதில்லை; சோகத்துடனும், மெலிந்தும் காணப்படுகிறீர்.(60) சுறுசுறுப்பையும் இழந்துவிட்டீர். ஒரு தீர்வை எட்ட {உமது நோயைத் தீர்க்க} முயற்சிப்பதற்காக, நீர் எந்நோயால் அவதியுறுகிறீர் என்பதை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன்” என்றான் {தேவவிரதன்}.

சந்தனு, தனது மகனிடம் {தேவவிரதனிடம்},(61) “நான் துயரத்திலிருக்கிறேன் என்று நீ உண்மையைச் சொல்கிறாய் மகனே. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். ஓ பாரதக் குலத்தோனே {தேவவிரதனே}, இந்தப் பெரும் பரம்பரைக்கு நீ ஒருவனே கொழுந்தாக இருக்கிறாய்.(62) நீ எப்போதும், வீர விளையாட்டுகளிலும், வீரச் சாதனைகள் செய்வதிலுமே இருக்கிறாய். ஓ மகனே {தேவவிரதனே}, ஆனால் நான், மனித வாழ்வின் நிலையின்மையை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.(63) ஓ கங்கையின் மைந்தா {தேவவிரதனே}, உனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், நான் மகனற்றவனாகிவிடுவேன். உண்மையில் நீ ஒருவனே எனக்கு நூறு மகன்களுக்குச் சமமாக இருக்கிறாய்.(64) எனவே, இனிநான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. நமது பேரரசை வழிநடத்திச் செல்லும் வளமை எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுதலும், விருப்பமும் ஆகும்.(65) ஒரே மகன் உள்ளவன் மகனற்றவனே என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர். நெருப்பின் முன்பாகச் செய்யப்படும் வேள்விகளும் {அக்னி ஹோத்ரங்களும்}, மூன்று வேதங்களின் அறிவும் அதனதன் பலனாக நிரந்தர அறத்தகுதியைத் தரும் என்பது உண்மையாக இருந்தாலும், ஒரு மகனின் பிறப்பால் ஏற்படும் அறத்தகுதியில் பதினாறில் ஒரு பகுதிக்குக் கூட அது சமமாக இருக்காது. உண்மையில் இவ்வகையில் பார்த்தால், மனிதனுக்கும், கீழ்மையான விலங்குகளுக்கும் வித்தியாசமில்லை.(66,67) ஓ ஞானியே, ஒரு மகனைப் பெறுவதால் ஒருவன் சொர்க்கத்தை அடைவான் என்பதில் நான் கொஞ்சமும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஏனெனில், தேவர்களும் ஏற்கும் புராணங்களின் வேராக இருக்கும் வேதங்களில், இதற்கு எண்ணற்ற சாட்சிகள் இருக்கின்றன.(68) ஓ பாரதக் குலத்தோனே {தேவவிரதனே}, நீயோ கோபம் தூண்டப்பட்டவனாகவும், எப்போதும் வீரவிளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வீரனாகவும் இருக்கிறாய். நீ போர்க்களங்களில் வீழக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு.(69) அப்படி நடந்தால், இந்தப் பாரதப் பேரரசின் நிலை என்ன ஆகும். அந்நினைவே என்னைத் துயரடையச் செய்கிறது. எனது துயருக்கான காரணத்தை உன்னிடம் இப்போது முழுமையாகச் சொல்லிவிட்டேன்” என்றான்.(70)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பெரும்  நுண்ணறிவு கொண்டவனான தேவவிரதன், மன்னனிடம் அனைத்தையும் கேட்டு, சிறிது நேரம் சிந்தித்தான்.(71) பிறகு, தன் தந்தையின் {சந்தனுவின்} நலனில் அக்கறையுள்ளவரும், தன தந்தையிடம்  அர்ப்பணிப்புள்ளவருமான ஒரு முதிர்ந்த அமைச்சரை அழைத்து, மன்னனின் சோகத்துக்கான காரணத்தைக் கேட்டான்[3].(72) (கும்பகோணம் பதிப்பில், “பிறகு, ராஜாவின் அந்தக் கரணத்தையெல்லாம் பூர்ணமாகத் தெரிந்து கொண்டு சிறந்த ஞானமுள்ள பீஷ்மர் தமது புத்தியினால் ஆராய்ந்தார், ஸந்தானமென்னும் பிரயோஜனத்தோடு கூடிய அந்தத் தந்தையின் சொல்லைக் கேட்டு மறுபடியும் வருத்தத்துடன் தமது பிதாவின் ஸாரதியை வருவித்தார். அவருடைய கட்டளையினால் குருஸ்ரேஷ்டனாகிய சந்தனுவின் ஸாரதி வந்தான். உயர்ந்த புத்தியுள்ள பீஷ்மர் தமது பிதாவின் அந்த ஸாரதியை நோக்கி, “ஸாரதியே! நீ என் பிதாவிற்குத் தேரின் முன்னே நிற்கு சினேகிதனாக இருக்கிறாய். ராஜாவினுடைய விருப்பம் எந்தப் பெண்ணிடம் இருக்கிறது? உனக்குத் தெரியுமா? நான் உன்னைக் கேட்கிறேன். நீ அதைச் சொல்; நான் அதைச் செய்வேன்; மாறாகச் செய்யேன்” என்று சொல்ல, ஸாரதி, “குருஸ்ரேஷ்டரே! ஒரு செம்படவப்பெண் இருக்கிறாள். உமது பிதாவின் விருப்பம் அவளிடம் சென்று இருக்கிறது. ராஜா பெண்ணைக் கேட்டதற்கு அந்தச் செம்படவன், “இவளக்குப் பிறந்த ஆண்பிள்ளை உனக்குப் பின் அரசனாக வேண்டும்” என்ற சொல்லைச் சொன்னான். அப்போது உமது பிதாய அவன் கேட்டதைக் கொடுக்க விரும்பவில்லை. அப்படியில்லாமல் பெண்ணைக் கொடுப்பதிலைலயென்பது அந்தச் செம்படவனுடைய நிச்சயம். இதை உமக்குச் சொன்னேன். மேலே  செய்வதைச் செய்யும்” என்று சொன்னான். பிறகு, அந்தப் புத்திரராகிய பீஷ்மர் தமது பிதா நினைத்ததைத் தெரிந்து கொண்டு, நன்றாக ஆராய்ந்து தந்தையின் உட்கருத்தையுமறிந்து {மோகத்தையும் அறிந்து} யமுனை நோக்கிச் சென்றார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போன்றே முதிந்த அமைச்சர் என்றே இருக்கிறது.)ஓ பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயனே}, இப்படி இளவரசனால் கேட்கப்பட்ட அமைச்சர், காந்தவதிக்காக {சத்தியவதிக்காக} மீனவன் கேட்ட வரத்தைப் பற்றிச் சொன்னார்.(73) பிறகு தேவவிரதன், வயதால் மதிக்கத்தக்க க்ஷத்திரிய தலைவர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, நேரடியாக மீனவர் தலைவனிடம் சென்று, தனது மன்னனின் {சந்தனுவின்} சார்பாக அவனது மகளைக் {சத்தியவதியைக்} கேட்டான்.(74)

மீனவர் தலைவன் அவனுக்கு {தேவவிரதனுக்கு} மரியாதைகள் செய்து அழைத்து, அந்த இளவரசன் அமர ஆசனம் கொடுத்து,(75) “ஓ பாரதக் குலத்தின் காளையே, நீ ஆயுதம் தாங்கியவர்களின் முதன்மையானவனும், சந்தனுவின் ஒரே மகனுமாவாய். உனது பலம் பெரியது. இருப்பினும் உனக்குச் சொல்வதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது.(76) மணமகளின் தகப்பனாக இந்திரனே இருந்தாலும், அவனும் {இந்திரனும்} இப்படிப்பட்ட மதிப்பான, விரும்பக்கூடிய சம்பந்தத்தை நிராகரிக்க வருத்தப்படுவான்.(77) எந்தப் பெரும் மனிதனின்  வித்தாக சத்தியவதி என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்தக் கன்னிகை பிறந்தாளோ, உண்மையில் அவர் {அந்த உபரிசரவசு} அறத்தில் உனக்கு இணையானவரே ஆவார்.(78) அவர் என்னிடம் உனது தந்தையின் அறங்களைப் பற்றிப் பல முறை பேசியுள்ளார். இந்த மன்னன் ஒருவனே சத்தியவதியின் கரத்தைப் பற்றத் தகுதி வாய்ந்தவன் என்றும் என்னிடம் அவர் {உபரிசரவசு} சொல்லியிருக்கிறார்.(79) சிறந்த பிரம்ம முனிவரான அசிதர் எனது மகள் சத்தியவதியின் கரத்தை மணத்திற்காகக் கேட்ட போதும் நான் மறுத்திருக்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.(80) இந்த மங்கையைக் குறித்துச் சொல்ல என்னிடம் மேலும் ஒரு வார்த்தைதான் உள்ளது. சக்காளத்தியின் மகன் {கங்கையின் மகன்-தேவவிரதன்} எதிரியாக இருப்பதுதான் இந்தத் திருமணத்திற்குப் பெரும் தடையாக இருக்கிறது.(81) ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, ஒருவன் அசுரனானாலும், கந்தர்வனானாலும் உன்னை எதிரியாக வைத்திருப்பவனுக்குப் பாதுகாப்பில்லை.(82) இது ஒன்றே இந்தத் திருமணத்திற்குத் தடையாக இருக்கிறது. வேறேதும் இல்லை. நீ அருளப்பட்டிருப்பாய். சத்தியவதி குறித்தும், அவளது திருமணம் குறித்தும் நான் சொல்ல வேண்டியவை இவை மட்டுமே” என்றான்.(83)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, தேவ விரதன் இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தனது தந்தைக்கு {சந்தனுவிற்கு} நன்மை செய்ய விரும்பி அங்கிருந்த தலைவர்களின் மத்தியில்,(84) “ஓ உண்மை பேசுபவர்களில் முதன்மையானவரே, நான் ஏற்கப் போகும் உறுதிமொழியைக் கேட்பீராக! இதைப் போன்ற உறுதியை ஏற்கும் துணிவு இதுவரை பிறந்த எம்மனிதரிடமும் இல்லை, இனிமேல் பிறக்கப் போகிறவர்களிடத்திலும் இருக்காது. (85) நீர் எதிர்பார்க்கும் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். இந்தக் கன்னிகையின் மூலமாகப் பிறக்கும் மைந்தனே எங்கள் மன்னனாவான்” என்றான்.(86)

இப்படிச் சொல்லப்பட்ட மீனவர் தலைவன், (தனது மகள் வயிற்றுப் பிள்ளைக்காக) அரசாட்சியில் விருப்பங்கொண்டு, கிட்டத்தட்ட அடைய முடியாத ஒன்றை அடைய எண்ணி,(87) “ஓ அற ஆன்மா கொண்டவனே, நீ அளவிலா மகிமை கொண்ட உனது தந்தை சந்தனுவின் சார்பாக வந்திருக்கிறாய். என் மகளை அளிக்கும் காரியத்தில் என் சார்பாகவும் நீயே முழு அதிகாரம் கொண்டவனாக இருப்பாயாக.(88) ஆனால், ஓ இனிமையானவனே {தேவவிரதனே}, உன்னிடம் சொல்ல வேறொன்றும் இருக்கிறது. நீ வேறு ஓர் உறுதியும் கொடுக்க வேண்டுமே. ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, மகளைப் பெற்றவர்கள் ஒவ்வொருவரும் நான் கேட்பது போலவே கேட்க வேண்டும்.(89) ஓ உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனே, சத்தியவதிக்காகச் செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தைக் கொடுக்க நீ தகுதிவாய்ந்தவன்தான்.(90) ஓ பெரும் கரங்களுக்குச் சொந்தக்காரனே, நீ உனது உறுதியை மீறுவாய் என நான் ஐயம் கொள்ளவில்லை. இருப்பினும், உன்னால் பெறப்படும் குழந்தைகள் மீது எனக்குப் பெரும் ஐயம் இருக்கிறது” என்றான்.(91)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, மீனவர் தலைவனின் சந்தேகங்களுக்கு விடையளித்திருந்தவனும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான அந்தக் கங்கையின் மைந்தன் {தேவவிரதன்}, தனது தந்தைக்கு {சந்தனுவிற்கு} நன்மையைச் செய்ய விருப்பம் கொண்டு,(92) “ஓ மீனவர்த்தலைவனே, ஓ மனிதர்களில் சிறந்தவரே, இங்கே கூடியிருக்கும் மன்னர்களின் முன்னிலையில் நான் ஏற்கும் உறுதியைக் கேட்பீராக.(93) மன்னர்களே, ஏற்கனவே நான், அரியணையில் எனக்கு இருக்கும் உரிமையைத் துறந்தேன். இப்போது எனது பிள்ளைகளின் காரியத்திற்கு ஒரு தீர்வைச் சொல்கிறேன்.(94) ஓ மீனவரே, இந்த நாள் முதல் நான் பிரம்மச்சரியத்தை மேற்கொள்கிறேன். மகனற்றவனாகவே நான் இறந்தாலும், நித்திய அருளுள்ள சொர்க்கலோக உலகங்களை அடைவேன்” என்றான்.”(95)

வைசம்பாணர் தொடர்ந்தார், “கங்கை மைந்தன் {தேவவிரதன்} உதிர்த்த வார்த்தைகளைக் கேட்ட மீனவனின் உடலில் மகிழ்ச்சியால் மயிர்க்கூச்சம் ஏற்பட்டது.  அவன், “எனது மகளைக் கொடுக்கிறேன்” என்றான்.(96) அதன்பேரில், அப்சரஸ்களும், தேவர்களும், முனிவர் குலத்தைச் சேர்ந்தவர்களும் அந்தரத்தில் இருந்து தேவ விரதனின் தலையில் பூ மழை பொழிந்து, “இவன் பீஷ்மன் (பயங்கரமானவன்)” என்றனர்.(97) பீஷ்மன் பிறகு, தனது தந்தைக்குச் சேவை செய்ய அந்த அழகானக் காரிகையிடம் {சத்தியவதியிடம்}, “தாயே, தேரில் ஏறுங்கள், நமது இல்லத்திற்குச் செல்வோம்” என்றான்.”(98)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவற்றைச் சொல்லிவிட்டுப் பீஷ்மன், அந்த அழகான மங்கை {சத்தியவதி} தேரில் ஏற உதவினான். அவளுடன் ஹஸ்தினாபுரம் வந்து, சந்தனுவிடம் நடந்தது அத்தனையும் சொன்னான்.(99) அங்கே கூடியிருந்த மன்னர்கள் தனியாகவும், கூடியும் இந்தச் செயற்கரிய செயலைப் பாராட்டி “இவன் {தேவவிரதன்} உண்மையிலேயே பீஷ்மன் (பயங்கரமானவன்) தான்!” என்றனர்.(100) சந்தனு தனது மகனின் இயல்புக்குமிக்க சாதனைகளால் பெரிதும் மகிழ்ந்து, அந்த உயர் ஆன்ம இளவரசனுக்கு அவனது விருப்பத்திற்கேற்ப இறக்கும் வரம் கொடுத்து, “நீ வாழ விரும்பும்வரை, இறப்பு உன்னை அணுகாது. ஓ பாவமற்றவனே {பீஷ்மனே}, நிச்சயமாக இறப்பு உன்னை அணுகும். ஆனால், முதலில் உன்னிடம் அனுமதி பெற்ற பிறகே அப்படி அணுகும்” என்றான் {சந்தனு}.”(101)

சந்தனுவின் மைந்தர்கள்! | ஆதிபர்வம் – பகுதி 101(சம்பவ பர்வம் – 37)சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் பிறந்த இரண்டு மகன்கள்; சித்திராங்கதனுக்கு பட்டம்சூட்டிய பீஷ்மர்; கந்தர்வனால் கொல்லப்பட்ட சித்திராங்கதன்; விசித்திரவீரியனுக்கும் பட்டம் சூட்டப்பட்டது..

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஏகாதிபதியே, திருமணச் சடங்குகள் முடிந்ததும், மன்னன் சந்தனு, அந்த அழகான மணமகளைத் தனது இல்லத்தில் அமர்த்தினான்.(1) விரைவில் சத்தியவதிக்குப் புத்திக்கூர்மையுள்ளவனாக ஒரு வீரமைந்தன் பிறந்தான். அவனுக்குச் சந்தனு, சித்திராங்கதன் என்று பெயரிட்டான். அவன் பெரும் சக்தியும் திறமையும் வாய்ந்தவனாக இருந்தான்.(2) பெரும் ஆற்றலைக்கொண்ட தலைவன் சந்தனு, சத்தியவதியிடம் மற்றொரு மகனையும் பெற்று அவனுக்கு விசித்திரவீரியன் என்று பெயரிட்டான். அவன் பெரும் வில்லாளியாக இருந்து, தனது தந்தைக்குப் பிறகு மன்னனான்.(3) விசித்திரவீரியன் பருவம் அடைவதற்கு முன்னரே, ஞானியான மன்னன் சந்தனு, தவிர்க்க முடியாத காலத்தின் தலையீடுகளை உணர்ந்தான்.(4)

சந்தனு சொர்க்கத்திற்கு உயர்ந்த பின்னர், பீஷ்மன் தன்னைச் சத்தியவதியின் ஆணையின் கீழ் நிறுத்திக் கொண்டு, எதிரிகளை ஒடுக்குபவனும், தன் ஆற்றலால் அனைத்து ஏகாதிபதிகளையும் விரைவில் வீழ்த்தித் தனக்கு நிகராக எவனும் இல்லை என்று கருதியவனுமான சித்திராங்கதனை அரியணையில் ஏற்றினான்.(5,6)  அவனால் மனிதர்களையும், அசுரர்களையும், தேவர்களையும் கூட வீழ்த்த முடியும் என்பதைக் கண்ட கந்தர்வர்களின் பலமிக்க மன்னன் {சித்திராங்கதன்}, தன் பெயரின் நிமித்தமாகவே ஒரு மோதலுக்காக அவனை அணுகினான்[1].(7)

[1] கும்பகோணம் பதிப்பில், “தேவர்களையும், மனிதர்களையும், அஸுரர்களையும் தோற்கச் செய்கிற அவனை, அதே பெயருள்ள மிகுந்த பலசாலியான கந்தர்வராஜான் எதிர்த்துச் சென்று, “ராஜகுமாரனே! நீ என் பெயருள்ளவனாயிருக்கிறாய்; எனக்கு யுத்தத்தைக் கொடு. யுத்தம் கொடுக்கமாட்டாயாயின் வேறு பெயரையாவது வைத்துக் கொள்; உன்னோடு யுத்தத்தை நான் விரும்புகிறேன்; என் பெயர் உனக்கிருப்பதனால் உன்னிடத்திற்கு வந்திருக்கிறேன்; என் பெயரைச் சொல்லி உன்னையழைப்பதனால் என் பெயர் வீணாகத்தகாது” என்று சொல்லி போருக்கழைத்தான் என்றிருக்கிறது.

பெரும் பலசாலிகளாக இருந்த அந்த கந்தர்வனுக்கும், குருக்களில் முதன்மையானவனுக்கும் இடையில் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்த கடும் மோதல் நடந்தது.(8) அடர்த்தியான ஆயுதமழையின் சிறப்பியல்புகளைக் கொண்டதும், போராளிகள் ஒருவரையொருவர் சீற்றத்துடன் வீழ்த்திக் கொண்டதுமான அந்தப் பயங்கரப் போரில் பெரும் ஆற்றல் மேன்மையையோ, வஞ்சக உத்தியையோ கொண்ட கந்தர்வன், அந்தக் குரு இளவரசனை {சித்திராங்கதனைக்} கொன்றான்.(9) மனிதர்களில் முதன்மையானவனும், எதிரிகளை ஒடுக்குபவனுமான சித்திராங்கதனைக் கொன்ற அந்த கந்தர்வன் {மீண்டும்} சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(10)

ஓ மன்னா! பெரும் ஆற்றலைக் கொண்ட அந்த மனிதர்களில் புலி {சித்திராங்கதன்} கொல்லப்பட்ட பிறகு, சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், அவனது ஈமக்கடன்களைச் செய்தான்.(11) பிறகு அவன், பெரும் சக்தி கொண்ட விசித்திரவீரியன் சிறுவனாக இருந்த போதே அவனைக் குருக்களின் {குருஜாங்கலத்தின்} அரியணையில் அமர்த்தினான்.(12) விசித்திரவீரியன், பீஷ்மனின் அதிகாரத்தின் கீழ் தன்னை நிறுத்திக் கொண்டு, பிதுர்வழி வந்த தனது நாட்டை ஆண்டான்.(13 அறத்தின் விதிகளிலிலும் அனைத்துச் சட்டங்களிலும் ஞானம் கொண்ட பீஷ்மனை அவன் வழிபட்டு நின்றான்; பீஷ்மனும் தனது கடமைகளுக்குக் கட்டுப்பட்டு அவனைக் காத்து வந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(14)

காசியில் நடந்த சுயம்வரம்! | ஆதிபர்வம் – பகுதி 102-(சம்பவ பர்வம் – 38)காசியில் நடந்த சுயம்வரம்; விசித்திரவீரியனுக்காக மூன்று பெண்களைக் கவர்ந்து வந்த பீஷ்மர்; அம்பைக்கு அனுமதி கொடுத்த பீஷ்மர்; சால்வனை நோக்கிச் சென்ற அம்பை.

வைசம்பாயனர் சொன்னார், “ஓ குரு பரம்பரையில் வந்தவனே {ஜனமேஜயா}, சித்திராங்கதன் கொல்லப்பட்டபிறகு, விசித்திரவீரியன் சிறுவனாக இருந்தாலும் அரியணை ஏறினான். பீஷ்மர் தன்னைச் சத்தியவதியின் கட்டளைக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு, அந்த அரசாங்கத்தை நடத்தினார்.(1)

புத்திசாலிகளில் முதன்மையானவனான தனது தம்பிக்குத் {விசித்திரவீரியனுக்குத்} தக்க வயது வந்ததும், பீஷ்மர் அவனுக்குத் திருமணத்தைச் செய்துவைப்பதில் இதயம் கொண்டார்.(2) அந்நேரத்தில், அழகில் அப்சரஸ்களுக்கு இணையானவர்களான காசி மன்னனின் மூன்று மகள்களும், ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு சுயம்வரத்தில் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் போகின்றனர் என்பதைக் கேள்விப்பட்டார்.(3) தேர்வீரர்களில் முதன்மையானவரும், எதிரிகளை அழிப்பவருமான அந்தப் பீஷ்மர், தனது தாயின் கட்டளையை ஏற்று, வாரணாசிக்குத் தனித்தேரில் சென்றார்.(4) அனைத்துத் திசைகளிலிருந்தும் எண்ணற்ற ஏகாதிபதிகள் அங்கே வந்திருப்பதைக் கண்டார். தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கும் மூன்று மங்கையரையும் கண்டார்[1].(5) (கும்பகோணம் பதிப்பில் இங்கே இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, “அவ்விடத்தில் சந்தனுபுத்ரரான பீஷ்மர் எல்லாத் தேசங்களினின்றும் வந்து கூடியிருக்கின்ற அரசர்களையும் அந்தப் பெண்களையும் கண்டார். அந்தப் பெண்கள் மீது ஆசையோடு கர்வித்துக் காசி தேசத்தவரும், கோசல தேசத்தவரும், வங்கதேசத்தவரும், புண்ட்ரதேசத்தவரும், கலிங்க தேசத்தவருமாகிய அரசர்கள் கூட்டமாக அந்நகரத்திற்குப் போயினர். எல்லா அரசர்களின் பெயர்களும் சொல்லப்படும்போது சந்தனு புத்திரரும் வயதில் முதிர்ந்தவருமாகிய பீஷ்மர் தனித்திருக்கக்கண்டு மிக்க அழகான அந்தக் கன்னிகைகள் அனைவரும் கிழவரென்ற எண்ணத்தினால் பயந்தவர்களைப் போல் விலகிப் போயினர். பாரதரே அங்கிருந்த அற்பர்களான அரசர்கள், “முதர்ந்தவரும், மிக்க தர்மாத்மாவும் மடிப்பையும் நரையையும் தரித்தவரும், பரதஸ்ரேஷ்டருமாகிய பீஷ்மர் லஜ்ஜையைவிட்டு இங்கு ஏன் வந்திருக்கிறார்? இந்தப்பாரதர் பிரதிஜ்ஞையைப் பொய்யாகச் செய்துவிட்டு ஜனங்களுக்கு என்ன சொல்லுவார்? இவர் பிரம்மச்சாரியென்று பூமியில் வீண்புகழ்பெற்றார்?” என்று பேசிக் கொண்டு சிரித்தனர். ஜனமேஜயராஜரே! அந்த அரசர்களின் சொல்லைக் கேட்டுப் பீஷ்மர் கோபித்தார். ஸமர்த்தரான பீஷ்மர் அப்போது அந்தக் கன்னிகைகளைத் தாமாகவே வரித்தார். ஜனமேஜய ராஜாவே! அந்தப் பெண்களைத் தமது தேரின் மேல் ஏற்றிக் கொண்டு போர் செய்கிறவரிற் சிறந்த பீஷ்மர் மேககர்ச்சனத்திற்கொப்பான குரலுடன் அவ்வரசர்களை நோக்கிச் சொல்லலானார்” என்றிருக்கிறது.)(அங்கே கூடியிருந்த) மன்னர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பீஷ்மர் (தன் தம்பியின் சார்பாக) அந்தக் கன்னிகைகளைத் தேர்ந்தெடுத்தார்.(6)

ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, போரில் தாக்குபவர்களில் முதன்மையானவரான பீஷ்மர் அவர்களைத் தேரில் ஏற்றிக் கொண்டு, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் அந்த மன்னர்களிடம்,(7) “சாதனையாளன் ஒருவனை அழைத்து, மதிப்புமிக்க பல பரிசுகளுடன் சேர்த்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கன்னிகையை அவனுக்கு அளிக்கலாம் என ஞானிகள் வழிகாட்டியிருக்கின்றனர்.(8) மேலும் சிலர் இரு பசுக்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் மகள்களை அளிக்கின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு தங்கள் மகள்களை அளிக்கின்றனர், சிலர் பலத்தைப் பயன்படுத்தி கன்னிகைகெளைக் கவர்ந்து செல்கின்றனர்.(9) சிலர் கன்னிகையரின் சம்மதம் பெற்றும், சிலர் அவர்களுக்குப் போதையூட்டி சம்மதிக்கவைத்தும், சிலர் அந்த கன்னிகையரின் பெற்றோரிடம் சென்று, அவர்களின் சம்மதம் பெற்றும் மணக்கின்றனர். சிலர் வேள்வியில் தாங்கள் துணை புரிந்ததற்கான பரிசாகத் தங்கள் மனைவிகளைப் பெறுகின்றனர்.(10)

இத்திருமணங்களில் கல்விமான்கள் எப்போதும் எட்டாவது வகையையே புகழ்கின்றனர்.  இருப்பினும் மன்னர்கள் (ஐந்தாவது வகையான) சுயம்வரத்தையே தங்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால், ஒரு சுயம்வரத்தில் கூடியிருக்கும் மன்னர்களுக்கு மத்தியில், எதிரிகளை அழித்துப் பலம் கொண்டு அபகரிக்கப்பட்ட மனைவியே ஒருவனுக்குப் பரிசைப் போன்றவள் என்று பல முனிவர்கள் சொல்கின்றனர். எனவே, ஏகாதிபதிகளே, நான் இந்த மங்கையரை பலத்தால் அபகரித்துச் செல்கிறேன். உங்களால் முடிந்தவரைச் சிறப்பாகப் போராடிப் பாருங்கள். ஒன்று என்னை அழியுங்கள் அல்லது என்னால் அழியுங்கள். (11,12) ஓ ஏகாதிபதிகளே, நான் இங்கே போருக்குத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லி அம்மங்கையரை தேரில் ஏற்றி, அங்கே கூடியிருந்து மன்னர்கள் மற்றும் காசி மன்னன் முன்னிலையில் இவ்வாறு சொன்னார் {பீஷ்மர்}.(13)

அந்தக் குருக்களின் இளவரசர் {பீஷ்மர்}, மங்கையரை அபகரித்து, மன்னர்களுக்குப் போர் அழைப்பு விடுத்துத் தனது தேரைச் செலுத்தினார்.(14) இப்படி அறைகூவியழைக்கப்பட்ட ஏகாதிபதிகள் தங்கள் தோள்களைத் தட்டிக் கொண்டு, கோபத்தால் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு எழுந்து நின்றனர்.(15)

பெரும் அவசரத்துடன் ஒவ்வொருவரும் தங்கள் ஆபரணங்களைத் துறந்து, போர் உடை தரித்தனர். அங்கே ஏற்பட்ட பெருங்கூச்சல் பேரொலியாக இருந்தது.(16) ஓ ஜனமேஜயா! அவர்கள் அப்படித் தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப் போர் உடை தரிக்கும்போது, அந்த ஆபரணங்களில் இருந்து எழுந்த ஒளி, வானத்தில் மின்னல் கீற்றுகளைப் போல இருந்தது.(17) கோபத்தால் புருவங்கள் சுருங்கி, கண்கள் சிவந்து இருந்த அந்த ஏகாதிபதிகள், பொறுமையைத் துறந்து, எழுந்து நடந்ததால் அவர்களது நடைக்கு ஏற்றாற்போல் அவர்களது ஆபரணங்களும் ஆடின.(18) அவர்கள் சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அழகான தேர்களைச் செலுத்திக் கொண்டு விரைவாக வந்தனர். அந்தச் சிறந்த போர்வீரர்கள் அனைத்து விதமான ஆயுதங்களையும் தரித்துத் தங்கள் தேர்களைச் செலுத்திக் குருக்களின் தலைவனை {பீஷ்மரை} நோக்கித் தங்கள் ஆயுதங்களை ஏந்தினர்.(19,20) ஓ பாரதா {ஜனமேஜயா}, ஒரு புறத்தில் கணக்கிலடங்காதவர்களான அந்த அற்புதமான ஏகாதிபதிகளும், மறுபுறத்தில் குருக்களின் வீரர் {பீஷ்மர்} தன்னந்தனியாகவும் அணிவகுத்தனர். அப்படிக் கூடியிருந்த அந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் எதிரியை நோக்கிப் பத்தாயிரம் கணைகளைச் செலுத்தினர்.  இருப்பினும், பீஷ்மர் கணக்கிலடங்காதவையான அக்கணைகளைத் தனது கணக்கிலடங்காக் கணைகளால் மிக விரைவாக தடுத்தார்.(21,22)

அதன்பின், அந்த மன்னர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு பெருமேகங்கள் கூடி மலையின் சாரலில் மழையைக் கொட்டுவதைப் போல, அனைத்துத் திசைகளிலிருந்தும் மழையெனத் தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(23) ஆனால், பீஷ்மர் அவர்கள் தொடுத்த அனைத்துக் கணைகளையும் தடுத்தது மட்டுமில்லாமல், ஒவ்வொரு ஏகாதிபதியையும் மும்மூன்று கணைகளால் தைத்தார்.(24) பதிலுக்கு அந்த ஏகாதிபதிகள் ஒவ்வொருவரும் ஐந்து கணைகளைத் தொடுத்தனர்.  ஆனால், அவை அனைத்தையும் பீஷமர் தடுத்து, மேலும் இரு கணைகளால் அவர்களைத் தைத்தார்.(25) போர் மிக உக்கிரமானது, அடர்த்தியான கணைகள் மழையெனப் பொழிந்தன. அந்தப் போரைப் பார்ப்பதற்குத் தேவாசுரப் போர் நடப்பது போலத் தெரிந்தது. இந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான வீரர்கள்கூட, இந்தக் காட்சியைக் கண்டு அஞ்சினர்.(26) பீஷ்மர் பலரின் விற்கள், கொடிக் கம்பங்கள், மார்புக் கவசங்கள் ஆகியவற்றையும், எதிரிகளின் தலைகளையும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அறுத்தெறிந்தார்.(27) பயங்கரமான ஆற்றலினாலும், இயல்புக்கு மிக்கத் தனது கரநளினத்தாலும் அவர் தன்னைக் காத்துக் கொண்டார். இதைக் கண்ட எதிரி வீரர்களும் அவரை வெகுவாகப் பாராட்டினர்.(28) ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களில் முதன்மையான அவர், அனைத்து ஏகாதிபதிகளையும் வீழ்த்தி, அந்த மங்கையரை அழைத்துக் கொண்டு பாரதர்களின் தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினார்.(29)

ஓ மன்னா {ஜனமேஜயா}, அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் சால்வன்[2], (கங்குலியில் பதிப்பில் இங்கே சல்லியன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இவன் சால்வராஜன் என்று குறிப்பிடப்படுகிறான். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே சல்லியன் என்றே குறிப்பிடப்படுகிறான். பிபேக்திப்ராயின் பதிப்பில் இவன் சால்வ மன்னன் என்று குறிப்பிடப்படுகிறான். கங்குலியிலும், மன்மதநாதத்ததரின் பதிப்பிலும் ஏற்பட்டிருக்கும் பிழையாக இஃது இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் Shalva என்பதற்கு Shalya என்பதற்கு ஒரெழுத்தே வேறுபாடு. இதனால் ஏற்பட்ட குழப்பமாகவே இருக்க வேண்டும். இஃது சால்வனாகவே இருக்க வேண்டும். மத்ர மன்னன் சல்லியனாக இருக்க முடியாது. எனவே நாம் இது முதல் இந்தப் பகுதியில் இம்மன்னனைச் சால்வன் என்றே வழங்குவோம்.)சந்தனுவின் மைந்தனான பீஷ்மருக்குப் பின்னாலிருந்து போருக்கு அழைப்பு விடுத்தான்.(30)  யானைக்கூட்டங்களுக்குத் தலைமையான யானை ஒன்று, பெண் யானையைக் கண்டதும், தனது தந்தங்களால் மற்ற யானைகளின் குடலைக் கிழித்தெரிய வருவது போல, அந்த மங்கையரை அடைவதில் விருப்பம் கொண்ட அவன் பீஷ்மரிடம் வேகமாக வந்தான். அப்படி வந்த சால்வன் கோபத்துடன், “நில், நிற்பாயாக” என்றான்.(31,32) எதிரிகளை அழிக்கும் மனிதர்களில் புலியான பீஷ்மர், இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டு, சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்ற கோபத்துடன், வில்லைத் தனது கையில் தாங்கிப் புருவம் சுருங்கி எதிரியின் வரவுக்காகத் தனது தேரில் காத்து நின்றார்.(33,34) அவர் நிற்பதைக் கண்ட அனைத்து ஏகாதிபதிகளும், அங்கே சல்லியனுக்குப் பீஷ்மருக்கும் இடையில் நடக்கப்போகும் பெரும்போரைக் காணும் பார்வையாளர்களாக நின்றனர்.(35)

பசுவின் பார்வையைப் பெற்ற காளைகள் போல உறுமிக் கொண்டு இருவரும் தங்கள் வீரத்தை ஒருவர் மேல் ஒருவர் காண்பிக்கத் துவங்கினர்.(36) மனிதர்களில் முதன்மையான சால்வன், இலகுவான இறகுகள் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தனது கணைகளால் சந்தனுவின் மகனான பீஷ்மரை மறைத்தான்.(37) இவ்வாறு பீஷ்மரைச் சால்வன் மறைத்ததைக் கண்ட மன்னர்கள் அனைவரும் அவனை வெகுவாகப் பாராட்டினர்.(38) அவனது கரத்தின் நளினத்தைக் கண்ட அந்தக் கூட்டம் பெரிதும் மகிழ்ந்து சல்லியனை பேரொலியெழுப்பிப் பாராட்டியது.(39) எதிரிநாட்டு நகரங்களை அடக்கும் பீஷ்மர் அந்த க்ஷத்திரியர்களின் பேரொலி கேட்டு மிகவும் கோபம் கொண்டு, “நில், நிற்பாயாக” என்று சொல்லித்(40) தனது தேரோட்டியிடம், “கருடன் பாம்பைக் கொல்வது போல, உடனே அவனைக் கொல்லும் விதத்தில் சால்வன் இருக்கும் இடத்திற்கு தேரைச் செலுத்துவாயாக” என்றார்.(41)

பிறகு, அந்தக் குருக்களின் தலைவர் {பீஷ்மர்}, வாருண ஆயுதத்தைத் தனது வில்லின் நாணில் ஏற்றி, சல்லியனின் நான்கு குதிரைகளின் மீது ஏவினார்.(42) ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, அந்தக் குருக்களின் தலைவர் {பீஷ்மர்} எதிரிகளின் கணைகளை முறித்துச் சல்லியனின் தேரோட்டியைக் கொன்றார்.(43) அந்த மங்கையருக்காகப் போரிடுபவரும், மனிதர்களில் முதன்மையானவரும் சந்தனுவின் மைந்தனுமான பீஷ்மர், ஐந்தராயுதத்தை ஏவி சல்லியனின் குதிரைகளைக் கொன்றார்.(44) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனை {சல்லியனை} வீழ்த்தினாலும், உயிருடன் மட்டுமே அவனை அங்கே விட்டுவிட்டு வந்தார். ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, சால்வன் இந்தத் தோல்விக்குப் பிறகு தனது நாட்டுக்குத் திரும்பித் தொடர்ந்து அறம்சார்ந்த நல்லாட்சி செய்தான். சுயம்வரத்திற்கு வந்த அனைத்து மன்னர்களும் தங்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்.(45,46) பீஷ்மர் அந்த ஏகாதிபதிகள் அனைவரையும் வீழ்த்திவிட்டு, அம்மங்கையரைக் கவர்ந்து கொண்டு, ஏகாதிபதிகளில் சிறந்த சந்தனுவைப் போல குருக்களின் இளவரசன் விசித்திரவீரியன் அறம் சார்ந்து ஆண்டுகொண்டிருக்கும் ஹஸ்தினாபுரம் நோக்கிச் சென்றார்.(47,48) ஓ மன்னா! வழியில் பல கானகங்களையும், நதிகளையும், மலைகளையும், மரங்கள் அடர்ந்த சோலைகளையும் கடந்து விரைவாகத் தலைநகர் வந்து சேர்ந்தார் பீஷ்மர்.(49)

போரில் அளவிலா ஆற்றல் கொண்டவரும், பெருங்கடலுக்குச் செல்பவளான கங்கையின் மைந்தனுமான அவர் {பீஷ்மர்}, தன் மேனியில் சிறு கீறலும் இன்றி போரில் எண்ணற்ற எதிரிகளைக் கொன்று, காசி மன்னனின் மகள்களை ஏதோ அவர்கள் தமது சொந்த மருமகள்கள், அல்லது தங்கைகள், அல்லது மகள்கள் என்பது போல மிக மென்மையாகக் கொண்டு வந்தார். பெரும் பலம் வாய்ந்த பீஷ்மர், தமது தம்பிக்கு நன்மை செய்ய விரும்பி, தகுதி வாய்ந்தவனான விசித்திர வீரியனுக்கு தம்மாற்றலால் கொண்டவரப்பட்ட அந்த மங்கையரைக் காணிக்கையாக அளித்தார்.(50-52)

அறத்தின் விதிகளை நன்றாக அறிந்த அந்தச் சந்தனுவின் மைந்தன் {பீஷ்மர்}, மன்னர் குலத்தின் வழக்கத்தின்படி செயற்கரிய செயல் செய்துவிட்டுத் தனது தம்பியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்தார். சத்தியவதியின் ஆலோசனையின்படித் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பீஷ்மரால் செய்யப்பட்ட பிறகு, காசி மன்னனின் மூத்த மகள் {அம்பை}, மெல்லிய புன்னகையுடன், அவரிடம் இந்த வார்த்தைகளைக் கூறினாள்,(53-55) “இதயத்தால் நான் மன்னன் சௌபரைக் {சால்வ மன்னனைக்} கணவராகத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அவரும், தனது இதயத்தால் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இஃது எனது தந்தையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.(56) அந்தச் சுயம்வரத்தில் நான் அவரையே எனது தலைவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தேன். அறத்தின் அனைத்து விதிகளையும் அறிந்தவர் நீர், இஃதையும் அறிந்து, முறையாகச் செய்ய வேண்டியதைச் செய்வீராக” என்றாள்.(57) பிராமணர்கள் முன்னிலையில் அந்த மங்கை இப்படிச் சொன்னதும், பீஷ்மர் என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்துச் சிந்தித்தார்.(58) அவர் அறத்தின் விதிகளை நன்கு அறிந்திருந்தார். வேதமறிந்த பிராமணர்களிடம் ஆலோசித்துக் காசி மன்னனின் மூத்த மகள் அம்பையை, அவள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அனுமதி கொடுத்தார்.(59) பிறகு மற்ற இரு மங்கையரான அம்பிகை மற்றும் அம்பாலிகையைத் தனது இளைய தம்பியான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.(60)

விசித்திரவீரியன் அறம்சார்ந்தவனாகவும், எதையும் அதிக அளவு உண்ணாதவனாக இருந்தாலும், தான் கொண்ட இளமையாலும், அழகாலும் பெருமிதம் கொண்டு, தனது திருமணத்திற்குப் பிறகு காமத்திற்கு அடிமையானான்.(61) அம்பிகையும், அம்பாலிகையும் நல்ல உயரமாகவும், புடம்போட்ட தங்கத்தின் நிறத்துடனும் இருந்தனர். அவர்களது சிரம் சுருள் முடியால் மறைக்கப்பட்டிருந்தது, அவர்களது விரல் நகங்கள் நீண்டு சிவப்பாக இருந்தன. அவர்களது இடுப்புகள் சதைப்பற்றுடன் உருளையாக இருந்தன. அவர்களது மார்புகள் பருத்து இருந்தன.(62) அனைத்து அதிர்ஷ்டக் குறிகளும் கொண்ட அந்த இனிமையான இளம் மங்கையர், தாங்கள் சரியான துணைக்கே மணம் செய்து கொடுக்கப்பட்டதாக நினைத்து அகம் மகிழ்ந்து விசித்திரவீரியனிடம் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர்.(63) தெய்வீக ஆற்றலையும், அசுவினி இரட்டையர்களின் அழகையும் பெற்றிருந்த விசித்திரவீரியனும் கூட, எந்த அழகான பெண்ணின் இதயத்தையும் களவாடவல்லவனாகவே இருந்தான்.(64) அந்த இளவரசன் ஏழு வருடங்கள் தடையில்லாமல் தன் மனைவியரின் நெருக்கத்தில் சுகமாக வாழ்ந்தான். ஆனால், இளமையின் தொடக்கத்திலேயே அவன் காச நோயால் தாக்கப்பட்டான்.(65) நண்பர்களும் உறவினர்களும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து இதற்கான தீர்வைக் கண்டறிய முயன்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் குருக்களின் இளவரசன் மறையும் சூரியனைப் போல இறந்து போனான்.(66) அறம் சார்ந்த பீஷ்மர் கவலையிலும் துயரத்திலும் மூழ்கிப் போனார். சத்தியவதியிடம் ஆலோசித்து குரு பரம்பரையினர் சூழ கல்விமான்களான பண்டிதர்களை வைத்துத் தனது தம்பியின் ஈமக்கடன்களைச் செய்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(67,68)

சத்தியவதி பீஷ்மருக்கிட்ட கட்டளை! | ஆதிபர்வம் – பகுதி 103-(சம்பவ பர்வம் – 39)பீஷ்மரிடம் பேசிய சத்தியவதி; தன் பிரம்மச்சர்ய விரதத்தை சத்தியவதிக்கு நினைவூட்டிய பீஷ்மர்…

வைசம்பாயனர் சொன்னார், “பேறற்றவளும், அவல நிலையில் இருந்தவளுமான சத்தியவதி தனது மகனை நினைத்துத் துக்கத்தில் ஆழ்ந்தாள். தனது மருமகள்களுடன் சேர்ந்து, இறந்து போன தனது மகனின் ஈமக்கடன்களை முடித்து, அழுது கொண்டிருக்கும் மருமகள்களையும், ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையான பீஷ்மரையும் தன்னால் இயன்ற அளவு தேற்றினாள். தனது பார்வையை அறத்தின் கண் திருப்பி, தனது தந்தை வழி மற்றும் தாய்வழிகளையும் ஆராய்ந்து பீஷ்மரிடம்,(1,2) “பிண்டதானம், சாதனைகள் மற்றும் குரு வழி வந்த சந்தனுவின் பரம்பரைத் தொடர்ச்சி ஆகியன இப்போது உன் கைகளிலேயே இருக்கின்றன.(3) நற்செயல்களும் மோட்சமும் எப்படிப் பிரியாதனவோ, அப்படி இந்த நெடும் வாழ்க்கையில் உண்மையும் நம்பிக்கையும் பிரியாதன, அறம் உன்னிடம் இருந்து பிரியாததாக இருக்கிறது.(4) ஓ அறம் சார்ந்தவனே, அறத்தின் விதிகளை அதன் சுருதிகளுடனும், வேதங்களின் கிளைகளுடனும் நன்கறிந்தவன் நீ.(5) நீ அறத்தாலும், குடும்பச் சடங்குகளின் ஞானத்தாலும் சுக்கிரனுக்கும் அங்கீரசுக்கு நிகரானவன். உன்னால் கடுமையான சூழ்நிலைகளில் புதிய விதிகளைக் கண்டெடுக்க முடியும்.(6) எனவே, ஓ அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, உன்னையே நான் பெரிதும் நம்பியிருக்கிறேன். நான் உன்னிடம் ஒரு காரியத்தைப் பற்றிச் சொல்கிறேன். அதைக் கேட்டுவிட்டு அதன்படி நடப்பதா? வேண்டாமா? என்று நீ முடிவெடுத்துக் கொள்வாயாக.(7)

ஓ மனிதர்களில் காளையே, எனது மகனும், உன் அன்புக்குரிய தம்பியாக இருந்தவனுமான அந்த பெரும் சக்திகொண்டவன் {விசித்திரவீரியன்}, இளம் வயதிலேயே  பிள்ளையில்லாதவனாக சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். காசி மன்னனின் இனிமையான மகள்களான உனது தம்பியின் மனைவிமார், அழகும் இளமையும் கொண்டு பிள்ளைப் பேறில் விருப்பம் கொண்டுள்ளனர்.(8,9) எனவே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, எனது கட்டளையின் பேரிலும், நமது குலத்தின் விருத்திக்காகவும் அவர்களிடம் நமது சந்ததியை நீ உண்டாக்குவாயாக. அறமிழக்காமல், அதைக் காப்பதே உனக்குத் தகும்.(10) நீ அரியணையில் அமர்ந்து, பாரதர்களின் அரசாங்கத்தை ஆட்சி செய்வாயாக. ஒரு மனைவியை முறையாகத் திருமணம் செய்து கொள்வாயாக. உனது மூதாதையர்களை நரகத்திற்குள் அழுத்திவிடாதே” என்றாள்.(11)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படித் தனது தாயாலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் சொல்லப்பட்ட அந்த எதிரிகளை ஒடுக்கும் அறம் சார்ந்த பீஷ்மர், அறத்தின் விதிகளுக்குட்பட்டே பதிலுரைத்தார்,(12) “ஓ தாயே, நீ சொல்வது அறத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதே. ஆனால், புத்திரப்பேறு குறித்த எனது சபதத்தையும் நீ கவனத்தில் கொள்ள வேண்டும்.(13) உன் திருமணக் காலத்தில் நடந்த அத்தனையும் உனக்குத் தெரியும். ஓ சத்தியவதி, நான் ஏற்ற உறுதிமொழியை மறுபடியும் சொல்கிறேன்.(14) நான் மூன்று உலகத்தையும், சொர்க்கத்தின் அரசாங்கத்தையும், அல்லது அதையும் விட மேன்மையானது என்று எது இருந்தாலும் அத்தனையும் துறப்பேன். ஆனால், உண்மையை {சத்தியத்தைத்} துறக்க மாட்டேன்.(15) பூமி தனது மணத்தைத் துறக்கலாம், நீர் அதன் நீர்மையைத் துறக்கலாம், ஒளி அதன் ஒளிரும் தன்மையைத் துறக்கலாம், காற்று அதன் தொடு உணர்வைத் துறக்கலாம்,(16) சூரியன் அதன் நெருப்பையும் வெப்பத்தையும் துறக்கலாம், சந்திரன் குளிர்ந்த கதிர்களைத் துறக்கலாம், வெளி {வானம்} அதன் ஒலி எழுப்பும் தன்மையைத் துறக்கலாம்,(17) இந்திரன் தனது ஆற்றலைத் துறக்கலாம், தர்மன் தர்மத்தைத் துறக்கலாம், ஆனால் என்னால் உண்மையைத் துறக்க முடியாது” என்றார்.(18)

சக்தியைச் செல்வமாகக் கொண்ட தனது மகன் இப்படிச் சொல்லவும், சத்தியவதி பீஷ்மரிடம்,(19) “ஓ உண்மையை உன் பலமாகக் கொண்டவனே, சத்தியத்தில் உனக்கு இருக்கும் அர்ப்பணிப்பை நான் அறிவேன். நீ நினைத்தால், உனது சக்திகொண்டு, புதிதாக இன்னும் மூன்று உலகங்களை உருவாக்க முடியும்.(20) எனது காரியத்தில் உனது ஆணை என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த அவசர காலத்தைக் கருத்தில் கொண்டு, உனது முன்னோர்களுக்குச் செய்யும் கடமையாக நினைத்து இந்தச் சுமையை நீ சுமக்க வேண்டும்.(21) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நண்பர்களும் உறவினர்களும் துயரடையாதிருக்க, நமது குலத் தொடர்ச்சி அறுந்துவிடாமல் இருக்க, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக” என்றாள்.(22)

பிள்ளையை இழந்ததால் அறத்திற்கு இணக்கமாகப் பேசமுடியாமல் இப்படி அழுது கொண்டு பரிதாபகரமாக இருக்கும் சத்தியவதியால் தூண்டப்பட்ட பீஷ்மர், அவளிடம்,(23) “ஓ அரசியே, அறத்திலிருந்து உனது பார்வையை விலக்காதே. ஓ! இப்படிச் சொல்லி எங்களை நீ அழித்துவிடாதே. ஒரு க்ஷத்திரியனால் உண்மை மீறப்படுவதை அறத்தின் விதிகள் ஏற்றுக் கொள்வதில்லை.(24) ஓ அரசியே, குலம் அழிந்துவிடாமல் இருக்க க்ஷத்திரியர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்.  நாம் என்ன செய்யலாம் என்று உனக்குக் கூடிய விரைவில் சொல்கிறேன்.  சந்தனுவின் குலம் பூமியில் அழிந்துவிடாமல் காக்கத் தக்க நடவடிக்கையைச் சொல்கிறேன்.(25) நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, கற்ற புரோகிதர்களிடமும், சாதாரண நேரங்களில் கைக்கொள்ளக்கூடாத சமூக நடத்தையை மீறி, ஆபத்துக் காலத்தில் மட்டும் செய்யப்படும் செயல்களில் நன்கு பரிச்சயமுள்ளவர்களிடமும் ஆலோசனை செய்து, மேற்படி நடக்க வேண்டியதைக் குறித்து முடிவெடுத்துக் கொள்” என்றார் {பீஷ்மர்}.(26)-

அங்க வங்க கலிங்க தேசங்கள் பிறந்த கதை! | ஆதிபர்வம் – பகுதி 104-(சம்பவ பர்வம் – 40)-அரசபரம்பரையின் தொடர்ச்சிக்கு பீஷ்மர் சொன்ன வழிமுறைகள்; உதத்யர், பிருஹஸ்பதி மற்றும் மமதை குறித்த கதையைச் சொன்ன பீஷ்மர்; குருடராகப் பிறந்த தீர்க்கதமஸ்; ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்ற விதியைக் கொண்டு வந்த தீர்க்கதமஸ்; மன்னன் பலியும், தீர்க்கதமஸும்..

பீஷ்மர், “பழங்காலத்தில், ஜமதக்னியின் மகன் ராமர் (பரசுராமர்) தனது தந்தை கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்து, ஹைஹய மன்னனைத் தனது கோடரியால் கொன்றார்.(1) அர்ஜுனனின் (ஹைஹய மன்னன் {கார்த்தவீரியார்ஜுனனின்}) ஆயிரம் கரங்களை வெட்டி இந்த உலகத்தில் பெரும் சாதனையைச் செய்தார்.(2) இவற்றிலெல்லாம் மனநிறைவு கொள்ளாமல், உலகத்தை வெற்றிக் கொள்ளத் தனது தேரில் ஏறி பெரும் ஆயுதங்கள் ஏந்தி க்ஷத்திரியர்களை அழித்தொழித்தார்.(3) அந்தப் பிருகு பரம்பரையின் கொழுந்து {பரசுராமர்}, தனது வேகமான கணைகள் மூலம் க்ஷத்திரியக் குலத்தை இருபத்தோரு முறை அழித்தொழித்தார்.(4) அந்தப் பெரும் முனிவரால் பூமி க்ஷத்திரியர்களற்று இருந்தபோது, பல இடங்களிலிருந்து வந்த க்ஷத்திரியப் பெண்டிர், வேதமறிந்த பிராமணர்கள் மூலம் தங்கள் வாரிசுகளைப் பெற்றனர்.(5)

இப்படிப் பெறப்பட்ட மகன்கள், அந்தத் தாய் இதற்கு முன் மணந்திருந்தவருக்குச் {அந்தத் தாயின் கணவருக்குச்} சொந்தம் என வேதங்கள் சொல்கின்றன. அந்த க்ஷத்திரியப் பெண்டிர் பிராமணர்களிடம் காமத்தாலன்றி அறம்சார்ந்த நோக்கத்திற்காக மட்டுமே சென்றனர்.(6) உண்மையில் இப்படியே க்ஷத்திரிய குலத்திற்குப் புத்துயிரூட்டப்பட்டது. பழைய வரலாற்றில் இது தொடர்பாக மற்றொரு கதை இருக்கிறது. அதையும் உனக்குச் சொல்கிறேன்.(7)

பழங்காலத்தில் உதத்யர் {உசத்யர்} என்ற பெயரில் ஞானமுள்ள ஒரு முனிவர் இருந்தார். அவரது மனைவியின் பெயர் மமதை. அவளை அவர் உயிருக்குயிராக நேசித்தார்.(8) ஒரு நாள் உதத்யரின் இளைய சகோதரனான, பெரும் சக்தி வாய்ந்த தேவ குரு பிருஹஸ்பதி, மமதையை அணுகினார்.(9) பேச்சுத் திறன் கொண்டவர்களில் முதன்மையானவரும், தனது கணவரின் இளைய சகோதரனுமான அவரிடம் {பிருஹஸ்பதியிடம்}, தான் அவரது மூத்த சகோதரன் மூலமாகக் கருவுற்றிருப்பதாகவும், அதனால், அவரது விருப்பத்தை ஈடேற்றிக் கொள்ளத் துணியக் கூடாதென்றும் அவள் தெரிவித்தாள்.(10) அவள், “ஓ சிறப்புமிக்க பிருஹஸ்பதியே, எனது கருவில் இருக்கும் குழந்தை, கருவறையில் இருந்தபடியே வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் படித்திருக்கிறான்.(11) உமது வித்தை நீர் வீணாக்கக் கூடாது.  எனது கருவறை எப்படி ஒரே நேரத்தில் இரு பிள்ளைகளைத் தாங்கும்? எனவே, இந்நேரத்தில் நீர் உமது விருப்பத்தை ஈடேற்றிக் கொள்ளத் துணியக்கூடாது” என்றாள்.(12) அவளால் இப்படிச் சொல்லப்பட்ட பிருஹஸ்பதி, என்னதான் ஞானவானாக இருந்தும், தனது ஆசையை அடக்க முடியாமல் அவளை இப்போதே அடைந்துவிடுவது என்று எண்ணி, அவளை அணுகினார்.(13)

அப்போது கருவில் இருந்த குழந்தை, “ஓ தந்தையே, உமது செயலை நிறுத்தும். இங்கே இருவருக்கு இடமில்லை. ஓ சிறப்பு வாய்ந்தவரே, இந்த அறை சிறியதாக இருக்கிறது.  நானே இதை முதலில் அடைந்தவனாவேன். உமது வித்து வீணாகக்கூடாது.  என்னைத் துன்புறுத்தாதீர்” என்றது. ஆனால், பிருஹஸ்பதியோ கருவில் இருந்த குழந்தையின் சொல்லைக் கேட்காமல் அந்த அழகிய விழிகளுக்குச் சொந்தக்காரியான மமதையை அடைந்தார். அவரது வித்து நீர்மையுடன் அவளது கருவறைக்குள் புகுவதற்குள், குழந்தை அதன் கால்களால் அந்த வித்தைத் தடுத்தது. எனவே, பெரும்பான்மையான வித்துகள் தரையில் விழுந்து அதன்காரியத்தை நிறைவேற்ற முடியாமல் போயிற்று. இதைக் கண்ட அந்தச் சிறப்புமிக்கப் பிருஹஸ்பதி, மிகுந்த அவமானத்திற்குள்ளாகி, உதத்யாவின் பிள்ளையை அவமதித்துச் சபித்தார், “எவ்வுயிரும் இன்புறுவது போல் நான் இன்புறும்போது அதைத் தடை செய்யும் விதமாக என்னிடம் நீ பேசியதால் நித்திய இருள் உன்னை ஆக்கிரமிக்கட்டும்” என்று சபித்தார்[1].(14-20)

அந்தச் சிறப்புவாய்ந்த பிருஹஸ்பதியின் சக்திக்கு சமமான சக்தியுடைய உதத்யரின் மகன் {மகனான அந்தக் குழந்தை}, பிருஹஸ்பதியின் சாபத்தால் குருடராகப் பிறந்து, தீர்க்கதமஸ் (நித்திய இருளால் சூழப்பட்டவன்) என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(21) அந்த ஞானமுள்ள தீர்க்கதமஸ் குருடாக இருப்பினும் வேத ஞானம் பெற்றுக் கல்வி அறத்தில் தேர்ந்தான். பிரத்வேஷி என்ற அழகான இளம் பிராமண மங்கையை மனைவியாக அடைந்தான்.(22) அந்த மங்கையை மணந்த சிறப்புமிக்கத் தீர்க்கதமஸ், உதத்யரின் குலத்தை விருத்தியடையச் செய்து, கௌதமரை மூத்தவனாகக் கொண்டு பல பிள்ளைகளைப் பெற்றார். இருப்பினும் அந்தப் பிள்ளைகளெல்லாம் பேராசைக்காரர்களாகவும் உண்மைக்குப் புறம்பானவர்களாகவும் ஆனார்கள்.(23)

வேதங்களை முழுமையாக அறிந்து, அதில் நிபுணத்துவம் பெற்ற அறம்சார்ந்த சிறப்புமிக்கத் தீர்க்கதமஸ், சுரபியின் மகனிடமிருந்து அவர்கள் குலப்படியான பயிற்சிகளைக் கற்றுப் பயத்தைத் துறந்து, அவற்றை மிகவும் மதித்து அந்தப் பயிற்சிகளிலேயே லயித்தார் (வெட்கமே பாவத்தை உருவாக்குகிறது. புனிதமான நோக்கம் இருக்குமிடத்தில் அஃது இருக்கவே முடியாது என்ற பயிற்சி {ஒரு வேளை நிர்வாணமாக இருக்கலாம்}).(24) அதே ஆசிரமத்தில் வசித்த முனிவர்களில் சிறந்தவர்கள், அவர் தகுதிக்கு மீறிய செயல்கள் செய்வதைக் கண்ணுற்றுப் பாவமில்லாதிருக்கும்போதே அதில் பாவத்தைக் கண்டு,(25) “ஓ, இந்த மனிதர் வரம்புக்கு மீறிய செயல்களைச் செய்கிறார். இவருக்கு நம்முடன் இருக்கத் தகுதி இல்லை. எனவே, இந்தப் பாவியை இங்கிருந்து விரட்டி விடுவோம்” என்று சொல்லி,(26) மேலும் தீர்க்கதமசைக் குறித்துப் பல செய்திகளைச் சொன்னார்கள். அவரது மனைவியும், பிள்ளைகளைப் பெற்றுவிட்டதால், அவரது செயல்களால் கோபமடைந்தாள். அந்தக் கணவர் தனது மனைவியான பிரத்வேஷியிடம், “நீ ஏன் என்னிடம் இப்படி மனநிறைவற்றவளாக இருக்கிறாய்?” என்று கேட்டார்.(27) அதற்கு அவரது மனைவி, “ஒரு கணவன் தனது மனைவியைத் தாங்குவதால் பர்த்திரி {பர்த்தா} என்று அழைக்கப்படுகிறான். அவளைக் காப்பதால் பதி என்றும் அழைக்கப்படுகிறான். நீர் எனக்கு இதில் எதையும் செய்யவில்லை! மறுபுறம் ஓ பெரும் தவத் தகுதி வாய்ந்தவரே, நீர் குருடராகவும் இருக்கிறீர். நானே உம்மையும் உமது குழந்தைகளையும் தாங்குகிறேன். இனிமேலும் என்னால் அவ்வாறு செய்ய முடியாது” என்றாள்.(28)

தனது மனைவியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முனிவர் அவமானமடைந்து கோபத்தில் அவளிடமும், அவளது பிள்ளைகளிடமும், “என்னை க்ஷத்திரயர்களிடம் அழைத்துச் செல்லுங்கள், நீங்கள் செல்வமும் வளமுமடையலாம்” என்றார்.(29) அதற்கு அவரது மனைவி {பிரத்வேஷி}, “நான் உம்மால் கிடைக்கும் செல்வத்தை விரும்பவில்லை. அதனால் எந்த மகிழ்வும் எனக்கு ஏற்படப்போவதில்லை. ஓ பிராமணர்களில் சிறந்தவரே, நீர் விருப்பப்படுவது போல ஏதேனும் செய்து கொள்ளும். இனியும் என்னால் உம்மை முன்பு போலப் பார்த்துக் கொள்ள முடியாது” என்றாள்.(30) தனது மனைவியின் இவ்வார்த்தைகளால் துயரடைந்த தீர்க்கதமஸ், “எந்தப்பெண்ணும், தன் வாழ்வில் ஒரே கணைவனையே பின்பற்ற வேண்டும் என்ற விதியை இன்று முதல் நான் விதிக்கிறேன்.(31) அந்தக் கணவன் உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு பெண் இன்னொரு ஆடவனுடன் தொடர்பு கொள்ளுதல் நீதியாகாது. எவளொருத்தி அப்படி ஒரு தொடர்பை வைத்திருக்கிறாளோ அவள் அறத்தின்கண் வீழ்ந்தவளாகக் கருதப்படுவாள். கணவரில்லாத பெண் எப்போதும் பாவம் செய்யக்கூடியவளாகவே இருப்பாள். அவள் செல்வந்தராக இருந்தாலும், தனது செல்வத்தை அவளால் உண்மையாக அனுபவிக்க முடியாது.(32) வசைமொழிகளும் தீய அறிக்கைகளும் அவளைப் பின் தொடர்ந்தே வரும்” என்று சொன்னார். தனது கணவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிரத்வேஷி மிகவும் கோபமடைந்து, தனது மகன்களிடம், “கங்கை நீரில் இவரைத் தூக்கி எறியுங்கள்” என்று கட்டளையிட்டாள்.(33)

தங்கள் தாயின் கட்டளையின் பேரில், பேராசைக்கும் பொய்ம்மைக்கும் அடிமைகளான தீய கௌதமரும் அவரது சகோதரர்களும், “நிச்சயமாகச் செய்கிறோம். நாம் ஏன் இந்த முதிர்ந்த மனிதரைத் தாங்க வேண்டும்?” என்று சொல்லி அந்த முனிவரை ஒரு கட்டையில் கட்டி, அவரிடம் கருணை காட்டாமல் {கங்கையின்} நீரோட்டத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பினர்.(34,35) அந்தக் குருட்டு முதியவர் அந்த நீரோட்டத்திலேயே மிதந்து பல மன்னர்களின் நாடுகளைக் கடந்தார்.(36) ஒரு நாள் கடமைகளில் தெளிந்த மன்னன் பலி, கங்கையில் தனது சுத்திகரிப்புச் சடங்கைச் செய்து கொண்டிருந்தான். அந்த ஏகாதிபதி சடங்கில் மும்முரமாக இருக்கும் போது, அவன் அருகில் கட்டையில் கட்டப்பட்டு முனிவர் மிதந்து வந்தார்.(37) உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த அறம்சார்ந்த பலி, அந்த மனிதர் யார் என்பதை அறிந்து அவரைக் காப்பாற்றி, வாரிசை உருவாக்க அவரைத் தேர்ந்தெடுத்தான். அவரிடம் பலி,(38) “ஓ சிறப்பு மிக்கவரே, எனது மனைவியிடம் நீர் சில அறம் சார்ந்த ஞானமுள்ள பிள்ளைகளை உருவாக்க வேண்டும்” என்றான்.(39)

இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட பெரும் சக்திவாய்ந்த முனிவர், அதற்குத் தனது ஏற்பைத் தெரிவித்தார். அதன்காரணமாக மன்னன் பலி தனது மனைவி சுதேஷ்ணையை அவரிடம் அனுப்பி வைத்தான்.(40) ஆனால் அந்த அரசி அவர் குருடர் என்பதை அறிந்து அவரிடம் செல்லாமல் ஒரு தாதியை அனுப்பி வைத்தாள்.(41) தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருந்த அந்த அறம்சார்ந்த முனிவர் அந்தச் சூத்திரப் பெண்ணிடம் கக்ஷீவத்தை {கக்ஷீவானை} மூத்தவனாகக் கொண்டு பதினோரு பிள்ளைகளைப் பெற்றார். கக்ஷீவத்தை மூத்தவனாகக் கொண்டு பதினோரு பிள்ளைகள் பிரம்மனின் பெயரை உச்சரித்துக் கொண்டு வேதம் படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட மன்னன் பலி ஒருநாள் அந்த முனிவரிடம், “அந்தப் பிள்ளைகள் என்னுடையவர்களா?” என்று கேட்டான்.(42,43) அதற்கு அந்த முனிவர், “இல்லை. அவர்கள் என்னுடையவர்கள். கக்ஷீவத்தும் மற்றவர்களும் என்னால் ஒரு சூத்திரப் பெண்ணுக்குப் பிறந்தவர்கள்.(44) பேறற்றவளான உன் அரசி சுதேஷ்ணை என்னைக் குருடனாகக் கண்டு என்னிடம் வராமல் என்னை அவமதித்து அவளது தாதியை அனுப்பி வைத்தாள்” என்றார்.(45)

அந்த மன்னன் முனிவரைச் சமாதானப்படுத்தித் தனது அரசி சுதேஷ்ணையை அனுப்பினான்.(46) அந்த முனிவர் வெறுமனே அவளது மேனியைத் தீண்டி[2], “உனக்கு அங்கன், வங்கன், கலிங்கன், புண்ட்ரன், சும்ஹன் என்ற ஐந்து பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சூரியனைப் போல இருப்பார்கள். அவர்களின் பெயரைக் கொண்டு பல நாடுகள் இந்தப் பூமியில் உண்டாகும்” என்றார்.(47,48)(கும்பகோணம் பதிப்பில், “அந்த தீர்க்கதமஸ் என்னும் ரிஷி அந்த அரசியை அங்கங்களில் தொட்டார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அவர் அவளது உடலைத் தொட்டு” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “தீர்க்கதமஸ் அந்த அரசியின் அங்கங்களை உணர்ந்து” என்றிருக்கிறது.)

அதன் பிறகு, அந்தப் பிள்ளைகள் ஆண்ட நாடுகளுக்கு அங்கம், வங்கம், கலிங்கம், புண்ட்ரம், சும்ஹம் என்ற பெயர்கள் வைக்கப்பட்டன. இப்படியே பழங்காலத்தில் பலியின் குலம் அந்த முனிவரால் தழைத்தது.(49,50) இப்படியே பல பெரும் வில்லாளிகளும், பெரும் தேர்வீரர்களும் அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்து க்ஷத்திரிய குலத்தில் பிராமணர்களின் விதையால் வந்தனர். ஓ தாயே, இதைக் கேட்டு, நீ விருப்பப்பட்டதைச் செய்வாயாக. இந்தக் காரியம் இனி உன் கையில் உள்ளது” என்றார் பீஷ்மர்.(51)

சத்தியவதி சொன்ன இரகசியம்! | ஆதிபர்வம் – பகுதி 105-(சம்பவ பர்வம் – 41) சத்யவதி தனக்கு ஏற்கனவே பிறந்த வியாசரைக் குறித்துப் பீஷ்மரிடம் சொன்னது; சத்தியவதியின் திட்டத்தை பீஷ்மர் ஏற்பது; வியாசரை நினைத்த சத்தியவதி; சத்தியவதியின் கூற்றை ஏற்ற வியாசர்; தன் மருமகளிடம் பேசிய சத்தியவதி..

பீஷ்மர் சொன்னார், “ஓ தாயே, பாரத அரசமரபின் தொடர்ச்சிக்கான வழிமுறை குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(1) ஒரு தகுதிவாய்ந்த பிராமணரை அழைத்து, அவருக்குச் செல்வத்தைக் காணிக்கையாகக் கொடுத்து, விசித்திரவீரியனின் மனைவியரிடத்தில் {அம்பிகை, அம்பாலிகையிடம்} வாரிசுகளை உண்டாக்கலாம்” என்றார்.(2)

“வைசம்பாயனர் தொடர்ந்தார், “சத்தியவதி மெல்லப் புன்னகைத்து, துக்கத்தால் உடைந்த குரலுடன் பீஷ்மரிடம்,(3) “ஓ பெருங்கரத்தையுடைய பாரதா {பீஷ்மா}, நீ சொல்வது உண்மைதான். உன் மீதிருக்கும் நம்பிக்கையில், நமது குலம் விருத்தியடையும் ஒரு வழியைச் சொல்கிறேன்.(4) துன்ப காலங்களில் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை நீ நன்கறிந்திருப்பதனால் அதை உன்னால் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். நமது குலத்தில் நீயே அறம் நிறைந்தவன், நீயே உண்மை நிறைந்தவன், நீயே எங்கள் ஒரே புகலிடம்.(5) எனவே, நான் உண்மையில் என்ன சொல்கிறேன் என்பதைக் கேட்டு, எது முறையோ அதைச் செய்வாயாக. எனது தந்தை {வளர்ப்புத் தந்தை-மீனவர்} ஓர் அறம்சார்ந்த மனிதராவார். அறத்திற்காகவே அவர் ஒரு படகை வைத்திருந்தார்.(6) ஒரு நாள், எனது இளமையின் தொடக்கத்தில், நான் அந்தப் படகில் துடுப்புப் போடச் சென்றிருந்தேன். அப்போது, அறம் சார்ந்தவர்களில் முதன்மையானவரும், பெரும் ஞானமுள்ளவருமான முனிவர் பராசரர், யமுனையைக் கடக்க எனது படகில் ஏறினார்.(7)

நான் நதியின் மீது துடுப்புப் போடும்போது, அந்த முனிவர் {பராசரர்} ஆசையால் தூண்டப்பட்டு என்னிடம் மென்மையான வார்த்தைகளில் பேசினார்.(8) எனது தந்தையைக் குறித்த பயமே எனது மனத்தில் பெரிதாக இருந்தது. ஆனால் முனிவரின் {பராசரரின்} சாபத்தைக் குறித்த பயமே இறுதியாக வென்றது. அவரிடம் ஒரு புனிதமான வரத்தையும் நான் பெற்றதால், என்னால் அவருடைய வேண்டுதலை மறுக்க முடியவில்லை.(9) பெரும் சக்தி வாய்ந்த அந்த முனிவர் {பராசரர்} முதலில் அந்த இடத்தை அடர்த்தியான மூடுபனியால் மறைத்து, அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் என்னைக் கொண்டு வந்து, தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.(10) அதற்கு முன்பு என் உடலில், முகம்சுழிக்க வைக்கும் மீன் நாற்றம் இருக்கும். ஆனால் அந்த முனிவர் அந்த நாற்றத்தை அகற்றி இப்போது என்னிடம் இருக்கும் நறுமணத்தைத் தந்தார்.(11) அந்த முனிவர் {பராசரர்} என்னிடம், அந்த {யமுனை} நதியின் தீவில் அவரது குழந்தையை {வியாசரை} ஈன்றெடுத்தாலும், நான் கன்னித் தன்மையைத் தொடர்வேன் என்றும் சொன்னார்.(12)

என்னுடைய பருவ காலத்தில் என்னிடம் பிறந்த பராசரரின் குழந்தை, பெரும் சக்திகளையுடைய பெரிய முனிவனாகி, துவைபாயனன் (தீவில் பிறந்தவர்) {வியாசர்} என்று பெயரில் அழைக்கப்பட்டான்.(13) அந்தச் சிறப்பு மிக்க முனிவன், வேதங்களை நான்காகப் பிரித்து இந்த உலகத்தில் வியாசன் (பிரிப்பவர் அல்லது ஒழுங்குசெய்பவர்) என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அவனது கரிய நிறத்திற்காகக் கிருஷ்ணன் (கருப்பன்) என்றும் அழைக்கப்பட்டான்.(14) பேச்சில் உண்மையுடன், ஆசைகளைத் துறந்த அந்தப் பெரும் துறவி, தனது பாவங்களை எரித்து, அவன் பிறந்தவுடனேயே தனது தந்தையுடன் {பராசரருடன்} சென்றுவிட்டான்.(15) உன்னாலும் என்னாலும் இப்பணிக்கு அவன் நியமிக்கப்பட்டால் அந்த ஒப்புயர்வற்ற பிரகாசமுள்ளவன், உனது தம்பியின் {விசித்திரவீரியனின்} மனைவியரிடம் {அம்பிகை, அம்பாலிகையிடம்} நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுப்பான்.(16) அவன் செல்லும்போது என்னிடம், “தாயே, நீ சிரமப்படும்போது என்னை நினைத்துக் கொள்வாயாக” என்று சொல்லிச் சென்றான். ஓ பெருங்கரமுடைய பீஷ்மா, நீ விரும்பினால், அந்தப் பெரும் துறவியை நான் இப்போது அழைப்பேன்.(17) ஓ பீஷ்மா, நீ விரும்பினால், அத்துறவி விசித்திரவீரியனின் நிலத்தில் {மனைவியரிடத்தில்} பிள்ளைகளைப் பெற்றெடுப்பான் என்பதை உறுதியாகச் சொல்வேன்” என்றாள்.(18)

வைசம்பாணர் தொடர்ந்தார், அந்தப் பெருமுனிவரைப் பற்றிய குறிப்பைச் சொல்லும்போதே பீஷ்மர் தனது கரத்தைக் குவித்துக் கொண்டு, “அந்த மனிதர் {வியாசர்} அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் நீதிகளில் தனது பார்வையைச் செலுத்தும் ஞானியாவார். அவர் பொறுமையாக இருந்து, அறம் எதிர்கால அறத்திற்கும், பொருள் எதிர்காலப் பொருளுக்கும், இன்பம் எதிர்கால இன்பத்திற்கும் இட்டுச்செல்லும் வகையில் நடந்து கொள்பவராவார்.(19,20) எனவே, உன்னால் சொல்லப்படும் காரியம் நமக்கும் நன்மையைத் தந்து, அறத்திற்கும் உட்பட்டே இருக்கும். இஃது ஒரு சிறந்த ஆலோசனை. இதில் எனக்கு முழு ஏற்பும் உண்டு” என்றார்.(21)

ஓ குரு பரம்பரையின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, இப்படிப் பீஷ்மர் சொன்னதும், காளி (சத்தியவதி) துவைபாயன {வியாச} முனிவரை மனத்தால் நினைத்தாள்.(22) வியாசர், வேதங்களை விவரித்துக் கொண்டிருக்கும்போது தனது தாயின் {சத்தியவதியின்} அழைப்பை உணர்ந்து, யாரும் அறியா வண்ணம் அவளிடம் {சத்தியவதியிடம்} வந்தார்.(23) சத்தியவதி தன் மகனை வாரியணைத்து வரவேற்றுத் தனது கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினாள்.(24) தன் மகனின் {வியாசரின்} முன்னிலையில் அந்த மீனவ மகள் {சத்தியவதி} நீண்ட நேரம் பெரிதும் அழுதாள். அவளின் {சத்தியவதியின்} முதல் மகனான பெரும் வியாசர், அவள் அழுவதைக் கண்டு, குளிர்ந்த நீரால் அவளது முகத்தைக் கழுவினார். பிறகு அவளிடம் {சத்தியவதியிடம்} பணிந்து,(25) “ஓ தாயே, உனது விருப்பத்தை நிறைவேற்றவே நான் வந்துள்ளேன். எனவே, ஓ அறம்சார்ந்தவளே கால விரயமின்றி எனக்குக் கட்டளையிடுவாயாக. நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்” என்றார்.(26)

பிறகு, பாரதர்களின் குடும்பப் புரோகிதர் வந்து அந்தப் பெரும் முனிவரை {வியாசரை} வழிபட்டார். வியாசர் அந்த வழிபாட்டுகளை ஏற்றுச் சில வழக்கமான மந்திரங்களை உச்சரித்தார்.(27) தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்து, அவர் {வியாசர்} தமது ஆசனத்தில் அமர்ந்தார். சத்தியவதி அவர் {வியாசர்} வசதியாக அமர்ந்ததை உறுதி செய்து கொண்டு, சில வழக்கமான விசாரிப்புகளை விசாரித்து, அவரிடம், “ஓ கல்விமானே, மகன்கள் தங்கள் பிறப்பை தந்தை மூலமாகவும் தாய் மூலமாகவும் அடைகின்றனர்.(28,29) எனவே, அவர்கள் இரு பெற்றோருக்கும் (தந்தை – தாய்) பொதுவான சொத்தாகும். தந்தைக்கு இருக்கும் அதே உரிமை தாய்க்கும் இருக்கிறது என்பதில் யாரும் சிறு சந்தேகமும் இருக்காது.(30)

ஓ பிரம்மமுனியே, நிச்சயமாக, விதிப்படி நீயே எனது மூத்த மகனானது போல், விசித்திரவீரியன் எனது இளைய மகன் ஆவான். பீஷ்மன் எப்படித் தந்தைவழியில் விசித்திரவீரியனின் சகோதரனோ அப்படியே நீயும் தாய்வழியில் சகோதரன். நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், மகனே {வியாசனே} இதைத் தான் நான் நினைக்கிறேன். சந்தனுவின் மகன் பீஷ்மன் உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதால், அந்த உண்மைக்காகவே, நாட்டை ஆள்வதற்குப் பிள்ளையைப் பெற விரும்பவில்லை.(31,32) எனவே, ஓ பாவங்களற்றவனே,  உனது தம்பி விசித்திரவீரியனிடம் இருக்கும் பாசத்திற்காகவும், நமது அரசகுலத்தின் பரம்பரை தொடர்ச்சிக்காகவும், பீஷமனின் வேண்டுகோளுக்காகவும் எனது கட்டளையின் பேரிலும், எல்லா உயிர்க்கும் அன்புகூர, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்க, உனது இதயத்தின் சுதந்திரத்துடன், நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். உனது இளைய சகோதரனின் {விசித்திரவீரியனிடம்} இரு விதவைகள் {அம்பிகை, அம்பாலிகை} இளமையுடனும் பெரும் அழகுடனும் தேவர்களின் மகளைப் போல உள்ளனர்.(33,34)  அறத்திற்காகவும், தர்மத்திற்காகவும், வாரிசு பெற அவர்கள் விருப்பம் கொண்டுள்ளனர். அந்தக் காரியத்திற்கு நியமிக்கப்பட நீயே தகுதிவாய்ந்தவன். எனவே, அவர்களிடம் நமது குலம் தழைக்கவும், நமது பரம்பரையின் தொடர்ச்சிக்காவும் பிள்ளைகளைப் பெறு” என்றாள் {சத்தியவதி}.(35)

இதைக் கேட்ட வியாசர், “ஓ சத்தியவதி, இவ்வாழ்விலும், மறுவாழ்விலும் உள்ள அறத்தின் தன்மைகளை நீ அறிவாய். ஓ பெரும் ஞானம் கொண்டவளே, உனது அன்பும் அறத்திலேயே நிலைத்திருக்கிறது.(36) எனவே, உனது கட்டளையின் பேரில், அறத்தை எனது நோக்கமாகக் கொண்டு, நீ விரும்பியதை நான் செய்வேன்.(37) நிச்சயமாக இந்தச் செயல் நான் அறிந்த உண்மையான மேலுலகத் தர்மத்திற்குக் கட்டுப்பட்டதே, நான் எனது தம்பிக்கு மித்ரனையும் வருணனையும் போன்ற மகன்களைக் கொடுப்பேன். அந்த மங்கையர் ஒரு முழு வருடத்திற்கு நான் சொல்லும் நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அவர்கள் தூய்மையடைவார்கள். கடும் தவம் செய்யாமல் என்னிடம் எந்தப் பெண்மணியாலும் நெருங்க முடியாது” என்றார்.(38,39)

பிறகு சத்தியவதி, “ஓ பாவங்களற்றவனே, நீ சொல்வதுபோலத் தான் இருக்க வேண்டும். ஆனால், அந்த மங்கையர் உடனே கருவுறும்படி ஏதாவது செய்வாயாக. மன்னன் இல்லாத நாட்டில் மக்கள் பாதுகாப்பின்றி அழிந்து போவர். வேள்விகளும் புனிதமான காரியங்களும் தடைப்படும். மேகங்கள் மழையைப் பொழியாது. தேவர்கள் மறைந்து போவர்.(40) மன்னன் இல்லாத நாட்டை எப்படிப் பாதுகாக்க முடியும்? எனவே, அந்த மங்கையர் கருவுற நடவடிக்கை எடுப்பாயாக. அந்தப் பிள்ளைகள் தங்கள் தாயின் கருவறையில் இருக்கும்வரை பீஷ்மன் அவர்களைக் கவனித்துக் கொள்வான்” என்று சொன்னாள்.(41)

வியாசர், “அகாலத்தில் எனது தம்பிக்கு பிள்ளைகளை நான் கொடுக்க வேண்டும் என்றால், அந்த மங்கையர் எனது கோரத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவே அவர்கள் கடினமான நோன்பு நோற்றதற்குச் சமமாகும்.(42) கோசல நாட்டு இளவரசியால் எனது கடும் நாற்றத்தையும், கொடும் தோற்றத்தையும், கோரமுகத்தையும், எனது ஆடையையும், எனது உடலையும் தாங்கிக் கொள்ள முடியுமென்றால், அவள் அருமையான பிள்ளையைச் சுமப்பாள்” என்று பதிலுரைத்தார்.(43)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சத்தியவதியிடம் இப்படிச் சொன்ன பிறகு, பெரும் சக்தி வாய்ந்த வியாசர் அவளிடம், “கோசலத்தின் இளவரசி சுத்தமான ஆடைகளும், ஆபரணங்களும் பூண்டு அவளது படுக்கையறையில் எனக்காகக் காத்திருக்கட்டும்” என்றார். இதைச் சொல்லிவிட்டு அந்த முனிவர் மறைந்து போனார். சத்தியவதி தனது மருமகளைத் தனிமையில் சந்தித்து, நன்மை பயக்கத்தக்க அறம்சார்ந்த வார்த்தைகளைப் பேசினாள், “ஓ கோசல இளவரசி, நான் சொல்வதைக் கேட்பாயாக. இஃது அறத்திற்குக் கட்டுப்பட்டது.(44-46) எனது கேடுகாலத்தால், பாரதர்களின் பரம்பரை அழியப்போகிறது. எனது துயரத்தையும், தனது தந்தையின் குலத்தொடர்ச்சி அழிவதையும் கண்ட பீஷ்மன், நமது குலம் தழைக்க விரும்பி, ஓர் ஆலோசனையை என்னிடம் கூறியிருக்கிறான். இருப்பினும் அந்த ஆலோசனை நிறைவேறுவது உன்னிடமே இருக்கிறது. ஓ மகளே, அதை நிறைவேற்றி, பாரதர்களின் இழந்த பரம்பரையை மீட்டுக் கொடுப்பாயாக.(47,48) ஓ அழகான இடையைக் கொண்டவளே, இந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் ஒரு பிள்ளையை ஈன்றெடுப்பாயாக. அவன் நமது பரம்பரை வழி வந்த இந்த நாட்டின் சுமையைத் தாங்கிக் கொள்வான்.” என்றாள்.(49) சத்தியவதி தான் பேச நினைத்ததைத் தனது அறம் சார்ந்த மருமகளிடம், அறத்திற்குக் கட்டுப்பட்டுத் தனது கோரிக்கையைச் சொல்வதில் பெரும் சிரமத்திற்கிடையில் வெற்றி கண்டாள். அந்தக் கடைசி நேரத்தில் வந்திருந்த பிராமணர்களுக்கும், முனிவர்களுக்கும், கணக்கிலடங்கா விருந்தினர்களுக்கும் உணவளித்தாள்” {என்றார் வைசம்பாயனர்}.(50)

திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு! – ஆதிபர்வம் பகுதி 106-(சம்பவ பர்வம் – 42)வியாசரின் மூலம் அம்பிகைக்குப் பிறந்த திருதராஷ்டிரன்; அம்பாலிகைக்குப் பிறந்த பாண்டு; பணிப்பெண்ணுக்குப் பிறந்த விதுரன்…

வைசம்பாயனர் சொன்னார், “கோசல இளவரசியின் மாதவிடாய் முடிந்ததும், சத்தியவதி தனது மருமகளை {அம்பிகையை} நீராட்டிச் சுத்தப்படுத்தி, படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த ஆடம்பரக் கட்டிலில் தனது மருமகளை அமரச் செய்து, அவளிடம் {அம்பிகையிடம்},(1) “ஓ கோசல இளவரசியே {அம்பிகையே}, உனது கணவனின் {விசித்திரவீரியனின்} அண்ணன் இன்று உனது கருவறைக்குள் உனது குழந்தையாக நுழைவான். இன்றிரவு அவனுக்காகத் {வியாசருக்காக} தூங்காமல் காத்திருப்பாயாக” என்றாள்.(2)  தனது மாமியாரின் {சத்தியவதியின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த இனிமையான இளவரசி {அம்பிகை}, பீஷ்மரையும், குரு குலத்தின் பிற மூத்தவர்களையும் நினைத்து அந்தக் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.(3) அந்த உண்மை நிறைந்த அம்முனிவர் (வியாசர்), தான் அம்பிகையைக் (இளவரசிகளில் மூத்தவள்) குறித்த ஒரு வாக்கை முதலில் கொடுத்திருந்ததால், அவளது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போதே நுழைந்தார்.(4) அந்த இளவரசி {அம்பிகை} அவரது {வியாசரது} கரிய நிறத்தையும், தாமிரக்கம்பிகள் போலச் சிவந்திருந்த சடா முடியையும், எரியும் தழல் போன்ற கண்களையும், கரடு முரடான தாடியையும் பார்த்துப் பயந்து தனது கண்களை மூடிக் கொண்டாள்[1].(5)( கும்பகோணம் பதிப்பில், “பிறகு, பெரும்பாலும் ஜனங்கள் தூங்கிப் போயிருக்கும் பாதி ராத்திரி வேளையில் தீபங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கையில் பகவனான வியாஸ மஹரிஷி கிருகத்தில் பிரவேசித்தார். சொல்தவறாதவரும் பெருந்தவத்திலிருப்பவருமாகிய அந்த வியாஸமஹரிஷி அம்பிகையினிடம் முதலிற்கட்டளையிடப் பட்டிருந்ததனால் அப்போது அவள் சயனத்தினிடம் போனார்.” என்றிருக்கிறது.)

எனினும், அந்த முனிவர் {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} விருப்பத்தை நிறைவேற்றும் விருப்பத்தால் அந்த இளவரசியை {அம்பிகையை} அறிந்தார். அச்சத்திலிருந்த அவள் {அம்பிகை}, கண்ணைத் திறந்து ஒரு முறையேனும் வியாசரைப் பார்க்கவில்லை.(6)  வியாசர் வெளியே வந்த போது, அவரது தாய் {சத்தியவதி} அவரைச் சந்தித்து, “இளவரசி {அம்பிகை} பிள்ளையைப் பெறுவாளா?” என்று கேட்டாள்.(7) அதைக்கேட்டு, “இளவரசி {அம்பிகை} பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரசமுனியாக இருந்து, பெரும் கல்வியும், புத்திக்கூர்மையும், சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறுவான். ஆனால் அவனது தாயின் {அம்பிகையின்} தவறால் அவன் குருடாகப் பிறப்பான்” என்று வியாசர் பதிலுரைத்தார்.(8-10)

இந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, “ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவனால் எவ்வாறு குருக்களுக்குத் தகுந்த ஏகாதிபதியாக முடியும்?(11) குருடாக இருப்பவனால் எவ்வாறு தனது உறவினர்களையும், குடும்பத்தையும், தன் தந்தையுடைய குலத்தின் மகிமையையும் பாதுகாக்க முடியும்? நீ குருக்களுக்கு இன்னும் ஒரு மன்னனைக் கொடுக்க வேண்டும்” என்றாள்.(12) வியாசர் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிச் சென்று விட்டார். மூத்த கோசல இளவரசி சரியான காலத்தில் ஒரு குருட்டு மகனைப் பெற்றெடுத்தாள்.(13) ஓ எதிரிகளை அழிப்பவனே {ஜனமேஜயனே}, விரைவில் சத்தியவதி, தனது மற்றுமொரு மருமகளிடம் {அம்பாலிகையிடம்} உறுதி பெற்று முன்பு போலவே வியாசரை வரவழைத்தாள்.(14) வியாசர் முன்பு போலவே தனது உறுதிக்கிணங்கத் தனது தம்பியின் {விசித்திரவீரியனின்} இரண்டாவது மனைவியை {அம்பாலிகையை} அணுகினார். அம்பாலிகை அந்த முனிவரைக் {வியாசரைக்} கண்ட பயத்தால் ஒளியிழந்து வெளிறிவிட்டாள். ஓ பாரதா {ஜனமேஜயா}, அவள் {அம்பாலிகை} பயத்தால் வெளிறிப்போவதைக் கண்ட வியாசர் அவளிடம் {அம்பாலிகையிடம்},”எனது கொடும் உருவத்தைக் கண்டு நீ பயத்தால் வெளிறிப் போனதால்,(15-17) ஒளியிளந்து வெளிறிய நிறத்தில் மகனைப் பெறுவாய். ஓ அழகான முகம் கொண்டவளே, உனது மகனின் பெயரும் பாண்டு (மங்கலானவன்) என்று வழங்கப்படும்” என்றார்.(18)

இதைச்சொல்லிவிட்டு அந்தச் சிறப்புமிகுந்த முனிவர் {வியாசர்} அந்த அறையில் இருந்து வெளியே வந்தார். அவர் {வியாசர்} வெளியே வந்தபோது, அவரது தாய் {சத்தியவதி} அவரைச் சந்தித்துக் குழந்தையைப் பற்றிக் கேட்டாள்.(19)  அதற்கு அந்த முனிவர் {வியாசர்} குழந்தை மங்கிய நிறத்தில் பிறந்து பாண்டு என்ற பெயரால் அழைக்கப்படும் என்றார். சத்தியவதி அந்த முனிவரிடம் {வியாசரிடம்} இன்னுமொரு குழந்தையை இரந்து கேட்டாள்.(20)

அந்த முனிவர், “அப்படியே ஆகட்டும்” என்றார். அம்பாலிகை, அவளுக்குரிய காலத்தில் மங்கிய நிறத்தில் ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(21) அந்தப் பிள்ளை மிகவும் அழகானவனாக அனைத்து அதிர்ஷ்டக்குறிகளும் பெற்றிருந்தான். அந்தப் பிள்ளையே பின்னாட்களில் பெரும் வில்லாளிகளான பாண்டவர்கள் ஐவரின் தந்தையானான்[2].(22) (கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, “பிறகு பிரஸவகாலம் வந்தபோது அம்பாலிகாதேவி ராஜலக்ஷணங்கள் நிரம்பினவனும், ஒளியினால் ஜ்வலிப்பவன் போன்றவனுமாகிய வெண்ணிறமான குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சிறந்த வில்லாளிகளாகிய பஞ்சபாண்டவர்களென்னும் புத்ரர்கள் பிறந்தனர். பீஷ்மர் அவ்விரண்டு புத்ரர்களுக்கும் முறையே வேதங்களின் கரைகண்டவர்களாகிய பிராமணர்களைக் கொண்டு ஜாதகர்மம் முதலான கிரியைகளனைத்தையும் சாஸ்திரப்படி க்ரமமாகச் செய்வித்தார். அம்பிகைக்குப் பிறந்த புத்ரன் குருடனாயிருந்ததைக் கண்டு ஸத்தியவதியானவள் தன் புத்ரராகிய வியாஸரையழைத்து, “இவன் பொட்டையன்; அம்பிகைக்கு மற்றுமொரு நல்ல பிள்ளையை நான் விரும்புகிறேன்” என்று சொல்லி அம்பிகைக்காக மற்றொரு புத்ரனை வேண்டினாள். இவ்வாறு வேண்டப்பட்ட வியாஸமஹரிஷி தமது மாதாவை நோக்கி, “அழகான கௌஸல்யை மற்றொருமுறை ஸரியாக இருப்பாளாயின், அவளுக்குத் தர்மசாஸ்திரமும் ராஜநீதிசாஸ்திரமும் தெரிந்த குமாரன் உண்டாவான்” என்று சொன்னார். ஸத்தியவதியானவள் மறுபடியும் தன் மூத்த மருமகளாகிய அம்பிகையைத் தைரியப்படுத்தி ருதுகாலத்தில் அவளை வியாஸரிடம் அனுப்பினாள்” என்றிருக்கிறது.)சிறிது காலத்திற்குப் பிறகு, விசித்திரவீரியனின் மூத்த விதவை {அம்பிகை} தனது மாதவிடாய்க்குப் பிறகு, சத்தியவதியால் வியாசரை அணுகப் பணிக்கப் பட்டாள். தேவலோகத்தைச் சேர்ந்த மங்கை போன்றவளான அழகான அந்த இளவரசி அந்த முனிவரின் {வியாசரின்} கொடும் உருவத்தையும், கடும் நாற்றத்தையும் நினைத்துத் தனது மாமியாரின் உத்தரவை ஏற்க மறுத்தாள். இருப்பினும், அப்சரஸ் போன்ற அழகுடைய தனது தாதிகளில் ஒருத்திக்குத் தனது ஆடை மற்றும் ஆபரணங்களைப் பூட்டி அவரிடம் {வியாசரிடம்} அனுப்பி வைத்தாள். வியாசர் வந்ததும் அந்த மங்கை எழுந்திருந்து அவரை {வியாசரை} வணங்கினாள்.(23-25)

அவள் அவரை {வியாசரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டு, அவர் கேட்டுக்கொண்ட போது அவரருகே அமர்ந்தாள். ஓ மன்னா {ஜனமேஜயா}, கடுந்தவம் இருந்தவரான அம்முனிவர் {வியாசர்} அவளிடம் பெரும் மனநிறைவு கொண்டு,(26) அவளிடம் இருந்து விடைபெறும் முன், “இனிமையானவளே, இனி நீ அடிமையாக {பணிப்பெண்ணாக} இருக்க மாட்டாய். உனது குழந்தை மிகவும் அதிர்ஷ்டசாலி, அவன் அறம் சார்ந்தவனாக இருந்து, இந்தப் பூமியில் புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனாக இருப்பான்” என்றார்.(27) ஓ மன்னா {ஜனமேஜயா}, கிருஷ்ண துவைபாயனருக்கு {வியாசருக்கு} அவளிடம் பிறந்த மகன் பின்னாட்களில் விதுரன் என்று அழைக்கப்பட்டான். இப்படியே அவன் {விதுரன்} திருதராஷ்டிரனுக்கும், சிறப்புமிகுந்த பாண்டுவுக்கும் சகோதரனானான்.(28) விதுரன் ஆசை மற்றும் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருந்து ஓர் அரசாங்கத்தின் சட்டங்கள் மற்றும் விதிகளைப் பயின்று அதில் நிபுணனானான். அவனே ஆணிமாண்டவ்யரின் சாபத்தால் பூமியில் பிறந்த தர்மதேவன் {யமன்} ஆவான்.(29) கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} முன்பைப் போலவே தனது தாயைச் {சத்தியவதியைச்} சந்தித்து மூத்த இளவரசியால் தாம் ஏமாற்றப்பட்டதையும், சூத்திரப் பெண்ணுக்கு மகனைக் கொடுத்ததையும் சொன்னார். அனைத்தையும் சொல்லிவிட்டுத் தனது தாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனார்.(30) இப்படியே விசித்திரவீரியனுக்கு உரிமையுள்ள நிலத்தில் {அம்பிகை, அம்பாலிகையிடத்தில்} துவைபாயனருக்கு {வியாசருக்கு}, தேவர்களைப் போன்ற அந்தப் பிரகாசமான குழந்தைகள் குரு பரம்பரையின் தழைக்கச் செய்வதற்காகப் பிறந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

ஆணி மாண்டவ்யர்! – ஆதிபர்வம் பகுதி 107-(சம்பவ பர்வம் – 43)மௌனவிரதம் இருந்த மாண்டவ்ய முனிவர்; கள்வர்கள் பதுக்கி வைத்த கொள்ளைப் பொருள்; கழுவிலேற்றப்பட்ட முனிவர் சாகாமலிருந்தது

ஜனமேஜயன் வைசம்பயானரிடம், “சபிக்கப்படும்படி தர்மதேவன் அப்படி என்ன காரியம் செய்தான்? அவனைச் சூத்திர வர்ணத்தில் பிறக்கும்படி சாபம் தந்த அந்த பிராமணத் துறவி யார்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் சொன்னார், “மாண்டவ்யர் என்ற பெயருடன் ஒரு பிராமணர் இருந்தார். அவர் அறம், உண்மை {சத்தியம்}, துறவு ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்துத் தனது கடமைகளில் தெளிவுடன் இருந்தார்.(2) அந்தப் பெரும் துறவி, தனது ஆசிரமத்திற்கு அருகில் உள்ள ஒரு மரத்தினடியில் அமர்ந்து, உள்ளங்கைகளை வானம் பார்க்கத் தனது மடியில் வைத்துப் பேசா நோன்பு (மௌன விரதம்) இருப்பது வழக்கம்.(3) இதை அவர் பல வருடங்களாகச் செய்து வந்தார். ஒரு நாள், அவரது ஆசிரமத்திற்குக் கொள்ளையடித்த பொருட்களுடன் கள்வர்கள் வந்தனர்.(4)

ஓ பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயா}, அந்தத் திருடர்களைத் தொடர்ந்து அமைதியைக் காக்கும் காவலர்களும் வந்தனர். அந்தக் காவலர்கள் வருவதற்கு முன்பே, அக்கள்வர்கள், தங்கள் கொள்ளைப் பொருளை அந்த ஆசிரமத்தில் மறைத்து வைத்துத் தாங்களும் மறைந்து கொண்டனர். அவர்கள் மறைவதற்கும் காவலர்கள் வருவதற்கும் சரியாக இருந்தது.(5,6) அக்காவலர்கள், மரத்தினடியில் அமர்ந்திருக்கும் முனிவரைக் கண்டு அவரிடம், “ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இங்கே வந்த திருடர்கள் எந்த வழியாகச் சென்றார்கள்? அதைக் குறித்துக் காட்டினீர் என்றால், நேர விரயமில்லாமல் அவர்களை நாங்கள் தொடர முடியும்” என்று கேட்டனர்.(7,8) ஓ மன்னா! அமைதியின் காவலர்களால் இப்படிக் கேட்கப்பட்ட துறவி நல்லதாகவோ, அல்லதாகவோ ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லவில்லை.(9) இருப்பினும், மன்னனின் அதிகாரிகள் ஆசிரமத்தைச் சோதனையிட்டு, அங்கே மறைந்திருந்த திருடர்களை அவர்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் கண்டுபிடித்தனர்.(10)

இதனால், அந்த முனிவரின் மேல் அவர்களுக்கு ஐயம் எழுந்தது. திருடர்களுடன் முனிவரையும் அழைத்துக் கொண்டு போய் மன்னன் முன்பு நிறுத்தினர்.(11) மன்னன், திருடர்களுடன் சேர்த்து முனிவரையும் சூலத்திலேற்ற {கழுவேற்ற} உத்தரவிட்டான். அறியாமையில் இருந்த அதிகாரிகளும் அந்தத் தீர்ப்பை அமலாக்கும் பொருட்டு அந்தக் கொண்டாடப்பட்ட முனிவரைச் சூலத்திலேற்றினர்.(12) அப்படிக் சூலத்திலேற்றிவிட்டுக் கைப்பற்றப்பட்ட கொள்ளைப் பொருட்களுடன் மன்னனைக் காணச் சென்றனர்.(13)  அந்த அறம் சார்ந்த முனிவர் சூலத்திலேற்றப்பட்ட பிறகும், நீண்ட நேரமாக உணவு இல்லாமலிருந்தும், அசைவில்லாமல் அதே நிலையில் சாகாமல் உயிருடன் இருந்தார்.(14)

அந்த முனிவர் தனது ஆன்ம சக்தியால் உயிருடன் இருந்தது மட்டுமல்லாமல் மற்ற முனிவர்களையும் அங்கு அழைத்தார்.(15) அவர்களனைவரும் இரவில் பறவை ரூபத்தில் வந்து, சூலத்திலேற்றப்பட்ட பிறகும் ஆன்மத் தவத்தில் மூழ்கியிருந்த அந்தத் துறவியைக் கண்டு மிகவும் வேதனைப்பட்டனர்.(16) அவர்கள் யார் என்பதை அந்த முனிவருக்குச் சொல்லி, அவரிடம் “ஓ பிராமணரே! சூலத்தில் ஏற்றப்பட்டுக் கொடுமைகளை அனுபவிக்கும் அளவுக்கு நீர் என்ன பாவம் செய்தீர் என்பதை அறிய விரும்புகிறோம்” என்று கேட்டனர்”.(17)

சாபம் பெற்ற தர்ம தேவன்! – ஆதிபர்வம் பகுதி 108-(சம்பவ பர்வம் – 44)பிழை செய்துவிட்டதை உணர்ந்து மாண்டவ்யரிடம் மன்னிப்பைக் கோரிய மன்னன்; ஆணிமாண்டவ்யர் என்ற பெயரின் காரணம்; தர்மதேவனைச் சபித்த ஆணிமாண்டவ்யர்…

வைசம்பயாணர் சொன்னார், “இப்படிக் கேட்கப்பட்ட அந்த முனிவர்களில் புலியானவர் தவத்தை செல்வமாகக் கொண்ட அந்த முனிவர்களிடம், “நான் யாரைப் பழிப்பது? உண்மையில், (என்னைத் தவிர) எனெக்கதிராக வேறு யாரும் எதையும் செய்யவில்லை” என்றார்.(1) ஓ ஏகாதிபதியே, அதன்பிறகு, அந்த நீதி அதிகாரிகள், அவரை உயிருடன் கண்டு, மன்னருக்குத் தெரிவித்தனர்.(2) மன்னனும் அவர்கள் சொன்னதைக் கேட்டு, அலோசகர்களுடன் ஆலோசித்து, அந்த இடத்திற்கு வந்து சூலத்தில் இருந்த முனிவரை அமைதிப்படுத்த முயன்றான்.(3)

மன்னன் அவரிடம், “ஓ முனிவர்களில் சிறந்தவரே, நான் எனது அறியாமையால் உமக்குத் தீங்கிழைத்துவிட்டேன். அதற்கான மன்னிப்பை உம்மிடம் வேண்டிக் கேட்கிறேன். நீர் என்னிடம் கோபம் கொள்ளாதிருப்பீராக” என்று கேட்டான்.(4) மன்னன் இப்படிக் கேட்டுக் கொண்டதன் பின்னர் முனிவர் அமைதியடைந்தார். கோபத்திலிருந்து விடுபட்டிருந்த அம்முனிவரைக் கண்டு, சூலத்துடன் சேர்த்து அவரைத் தூக்கி, அவரது உடலிலிருந்து அச்சூலத்தை உருவ முயன்றான் மன்னன். ஆனால் அவனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை.(5,6) எனவே அந்த முனிவரின் உடலுக்கு வெளியே இருந்த பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்தான். அதன்பின் அந்த முனிவர், கழுவின் ஒரு பகுதியை உடலில் தாங்கிக் கொண்டே நடந்தார். அந்த நிலையிலும், கடும் தவங்கள் நோற்று, எவராலும் அடைய முடியாத எண்ணற்ற உலகங்களை அடைந்தார்.(7)

அந்தச் சூலம் அவரது உடலுக்குள்ளேயே இருந்ததால், மூவுலகங்களிலும் அவர் ஆணி மாண்டவ்யர் என்ற பெயரால் அறியப்பட்டார். தர்மத்தின் உயர்ந்த உண்மையை அறிந்த அந்த பிராமணர் ஒரு நாள் தர்மதேவனின் இருப்பிடத்திற்குச் சென்றார்.(8) தர்மதேவன் தனது அரியணையில் அமர்திருப்பதைக் கண்டு, அவனை அணுகி, “நான் இந்தத் தண்டனையை ஏற்க, அறியாமல் நான் செய்த பாவம்தான் என்ன? விரைவாகச் சொல், பின்பு எனது ஆன்ம பலத்தைப் பார்” என்று கேட்டார்.(9,10)

இப்படிக் கேட்கப்பட்ட தர்மதேவன், மறுமொழியாக, “ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! ஒரு காலத்தில் நீர் புல்லைக் கொண்டு ஒரு பூச்சியைத் துளைத்தீர். அச்செயலின் காரணமாகவே நீர் இத்துன்பத்தைத் தாங்க வேண்டியதாயிற்று. ஓ முனிவரே, ஒரு பரிசு, அஃது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தர்மத்தின் அளவுக்கேற்றபடி அது பெருகும். அதே போல ஒரு பாவகாரியமும் அதன் தகுதிக்கேற்பப் பெருகி, துன்பத்தைக் கூடவே அழைத்து வரும்” என்றான்.(11)

இதைக் கேட்ட ஆணி மாண்டவ்யர், “இதை நான் எப்போது செய்தேன் என்று உண்மையைச் சொல்?” என்று கேட்டார். அவர் குழந்தையாக இருக்கும்போது அதைச் செய்ததாகத் தர்மதேவன் சொன்னான். அந்த முனிவர், “பிறந்ததிலிருந்து பனிரெண்டு வயதுக்குட்பட்ட பிள்ளை செய்யும் காரியம் பாவமாகாது. சாத்திரங்கள் அதைப் பாவம் எனக் கொள்ளாது. ஒரு சிறு குற்றத்திற்காக என்னை இப்படித் தண்டித்தது தகாது. இது கொடுமையானது. வேறு எந்த உயிரைக் கொல்வதைக் காட்டிலும் ஒரு பிராமணனைக் கொல்வது பாவகரமானது. எனவே, ஓ தர்மதேவனே, நீ மனிதர்களில் சூத்திர வகையில் பிறப்பாய். பதினான்கு வயதுக்கு முன்பு ஒரு பிள்ளையால் செய்யப்படும் எந்தக் காரியமும் பாவமாகாது என்ற விதியை நான் இது முதல் அமலுக்குக் கொண்டு வருகிறேன். அந்த வயதைக் கடந்து ஒருவர் செய்யும் தீய செயலே, பாவமாகக் கருதப்படும்” என்றார்.(12,13)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தச் சிறப்புமிக்க முனிவரால் சபிக்கப்பட்டதால், தர்ம தேவன் சூத்திர வகையில் விதுரனாகப் பிறந்தான். விதுரன் தர்மநீதி, அரசியல், உலக ஆதாயம் ஆகிய சித்தாந்தங்களில் தெளிவான அறிவுடன் இருந்தான். பேராசை மற்றும் கோபத்திலிருந்து அவன் முற்றிலும் விடுபட்டவனாக இருந்தான். எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்கும் பார்வையும், கலக்கமடையா மன அமைதியும் பெற்றிருந்த விதுரன், குருக்களின் நலன்களுக்காகவே தன்னை அர்ப்பணித்திருந்தான்” {என்றார்}.{14,15)

மன்னனானான் பாண்டு! – ஆதிபர்வம் பகுதி 109-சம்பவ பர்வம் – 45)-குருஜாங்கல நாட்டின் சிறப்பு; இளவரசர்களான திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள்; பாண்டு குருஜாங்கலத்தின் மன்னனானது..

வைசம்பயானர் சொன்னார், “அந்த மூன்று குழந்தைகளின் பிறப்பால் (திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன்) குருஜாங்கலர்களும், குருக்ஷேத்திரர்களும், குருக்களும் செழிப்படைந்தனர்.(1) பூமியில் ஏராளமாக விளைந்து அறுவடையானது. பயிர்களும் நல்ல சுவையுடன் இருந்தன. காலாகாலத்திற்கு மேகங்கள் மழையைப் பொழிந்தன. மரங்களில் பழங்களும் மலர்களும் நிறைந்திருந்தன.(2) கால்நடைகளும், பறவைகளும் மற்ற ஊனுண்ணும் பிற விலங்குகளும் மகிழ்ந்திருந்தன. மலர்கள் நறுமணத்தோடும், பழங்கள் இனிமையோடும் இருந்தன.(3) நகரங்களில் ஒவ்வொரு துறைசார்ந்த வணிகர்களும், கைவினைஞர்களும், வியாபாரிகளும், கலைஞர்களும் நிறைந்திருந்தனர். மக்கள் வீரம், கல்வி, நேர்மையோடிருந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.(4) அங்கே திருடர்களோ பாவிகளோ அங்கே யாருமில்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பொன்னுலகைப் {சத்திய யுகத்தில் இருந்ததைப்} போல இருந்தன.(5)

மக்கள் அறச்செயல்களுக்கும், வேள்விகளுக்கும், சத்தியத்துக்கும் தங்களை அர்ப்பணித்து, ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்திப் பாசத்தோடு இருந்து வளமடைந்து இருந்தனர்.(6) அவர்கள் கர்வம், கோபம், பேராசை ஆகியவற்றை ஒழித்து, நல்ல விளையாட்டுகளை விளையாடி மகிழ்ச்சியோடு இருந்தனர்.(7) குருக்களின் தலைநகரம் பெருங்கடலைப் போன்று நிறைந்திருந்தது. அது நூற்றுக்கணக்கான அரண்மனைகளையும், மாளிகைகளையும், மேகத்தைப் போன்ற கருமையான பெரும் வாயில்களையும், வளைவுகளையும் கொண்டு இன்னொரு அமராவதி போல இருந்தது. மனிதர்கள் நதிகளிலும், ஏரிகளிலும், கிணறுகளிலும், நந்தவனங்களிலும், அழகான சோலைகளிலும் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தனர்.(7,8) தெற்கு குருக்கள், வடபுல குருக்களிடம் நல்லொழுக்கப் போட்டியால், சித்தர்களுடனும், சாரணர்களுடனும், முனிவர்களுடனும் இசைந்து இருந்தனர்.(10)

அந்த மகிழ்ச்சிகரமான நாட்டில், வளமை பெருகி, எதையும் தொலைத்தவர்கள் இல்லாமலும், கைம்பெண்கள் இல்லாமலும் குரு நாட்டு மக்கள் செழிப்புடன் இருந்தனர்.(11) கிணறுகளும் ஏரிகளும் எப்போதும் நிறைந்தே இருந்தன. சோலைகள் மரங்களால் நிறைந்திருந்தன. பிராமணர்களின் இல்லங்களிலும் அவர்களது வசிப்பிடங்களிலும் செல்வம் நிறைந்திருந்தது. முழு அரசாங்கமும் விழாக்கால மகிழ்ச்சியுடன் திளைத்திருந்தது.(12) ஓ மன்னா {ஜனமேஜயா}! பீஷ்மரால் அறம் சார்ந்து ஆளப்பட்ட அந்த நாடு நூற்றுக்கணக்கான வேள்விக் கம்புகளால் {ஸ்தம்பங்களால்} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(13) அறத்தின் சக்கரம் பீஷ்மரால் இயக்கப்பட்டது. மற்ற நாடுகளிலிருந்த மக்கள் தங்கள் நாட்டைத் துறந்து, இங்கு வந்து வசித்ததால், மக்கள் நெருக்கம் மிகுந்ததாக அந்நாடு இருந்தது.(14) சிறப்பு மிகுந்த இளவரசர்களின் இளமை ததும்பிய செயல்களாலும், சாதனைகளாலும் அந்த நாட்டின் குடிமக்களும் மற்ற மக்களும் அவர்களிடம் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.(15)

ஓ மன்னா, குருக்களின் தலைவர்களின் வீட்டில் “கொடுப்பாயாக” “உண்பாயாக” போன்ற வார்த்தைகளே எப்போதும் கேட்டுக் கொண்டிருந்தன.(16) திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் பெரும் புத்திசாலியான விதுரன் ஆகியோரை பீஷ்மர் தமது பிள்ளைகள் போலவே வளர்த்தார்.(17) அந்தப் பிள்ளைகள் தங்கள் கடமைகளைத் தங்கள் வகைப்படி சரியாகச் செய்து, நோன்புகளுக்கும் கல்விக்கும் தங்களை அர்ப்பணித்தனர். பின்னர் அவர்கள் வேதங்களிலும், பல வீர விளையாட்டுகளிலும் தேர்ச்சி அடைந்து நல்ல இளம் வாலிபர்களாக வளர்ந்தனர்.(18) அவர்கள் விற்பயிற்சியிலும், குதிரையேற்றத்திலும், கதாயுத்தத்திலும், வாள் மற்றும் கேடயச் சண்டைகளிலும், போரில் யானைகளைக் கையாளும் பயிற்சியிலும், நற்பண்புகளை வளர்க்கும் அறநெறிக் கல்வியிலும் தேர்ச்சி அடைந்தனர்.(19) வரலாறுகள், புராணங்கள், மற்றும் கல்வியின் அனைத்துப் பிரிவுகள், வேதங்களிலுள்ள உண்மைகள் ஆகியவற்றில் தேர்ச்சியடைந்து ஆழ்ந்த திறமைவாய்ந்த ஞானத்தை அடைந்தனர்.(20)

பெரும் ஆற்றலைக் கொண்டவனான பாண்டு, விற்போரில் எல்லோரிலும் விஞ்சி நின்றான். திருதராஷ்டிரன் உடல் பலத்தில் எல்லோரிலும் விஞ்சி நின்றான்.(21) அறம் மற்றும் அறவிதிகளின் ஞானத்தில் மூவுலகத்திலும் விதுரனுக்கு ஈடு யாரும் இல்லை என்ற நிலை இருந்தது.(22) அருகிப் போன சந்தனுவின் பரம்பரை, தழைத்ததைக் கண்டு, ‘வீரர்களின் தாய் என்றால் காசி மன்னன் மகள்கள்தான் முதன்மையானவர்கள், நாடு என்றால் குருஜாங்கலமே முதன்மையானது, அறம்சார்ந்த மனிதர்களில் விதுரனே முதன்மையானவன். நகரங்களில் ஹஸ்தினாபுரமே முதன்மையானது’ என்ற பேச்சு அனைத்து நாடுகளிலும் பேசப்பட்டது.(23, 24) திருதராஷ்டிரன் தனது குருட்டுத்தன்மையாலும், விதுரன், சூத்திரப் பெண்ணுக்குப் பிறந்ததாலும் நாட்டை அடையவில்லை; எனவே பாண்டு மன்னனானான். (25) கடமையாற்றுவதில் சிறந்த பீஷ்மர், ஒருநாள் விதுரனை அழைத்துத் தர்மத்தின் உண்மைகள் மற்றும் அறம் குறித்து விவாதித்தார். அந்தப் பேச்சுப் பின்வருமாறு அமைந்திருந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(26)

கற்புக்கரசி காந்தாரி! – ஆதிபர்வம் பகுதி 110-சம்பவ பர்வம் – 46)-விதுரனிடம் கலந்தாலோசித்த பீஷ்மர்; சிவனிடம் வரம்பெற்ற காந்தாரி; காந்தார மன்னன் சுபலனிடம் தூதர்களை அனுப்பிய பீஷ்மர்; ஆடம்பரமாக நடந்த திருதராஷ்டிரன் காந்தாரி திருமணம்; கற்புக்கரசியான காந்தாரி.

பீஷ்மர் விதுரனிடம், “இந்த நமது கொண்டாடப்படும் குலம் {குரு குலம்}, பெரும் சாதனைகளையும் அனைத்து அறங்களையும் உள்ளடக்கி இந்தப் பூமியின் அனைத்து ஏகாதிபதிகள் மீதும் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தது.(1) பல அறம் சார்ந்த, சிறப்புமிகுந்த ஏகாதிபதிகள் இந்த {குரு} குலத்தில் தோன்றியதால் அதன் புகழ் நிலைத்திருக்கிறது. நமது {குரு}குலம் அருகிப் போவதிலிருந்து காக்கச் சிறப்பு மிகுந்த கிருஷ்ணரும் (துவைபாயனரும் {வியாசரும்}), சத்தியவதியும், நானும் உங்கள் மூவரையும் {திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன்} வளர்த்தோம்.(2,3) இந்தக் {குரு} குலத்தை மறுபடியும் கடலென விரிவடையச் செய்வது உனக்கும் எனக்கும் கடமையாகும்.(4) நமது குலத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய தகுதியுடன் மூன்று மங்கையர் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். ஒருத்தி யாதவக் குல மகள் (சூரசேனன் மகள்- {குந்தி}, இன்னொருத்தி சுபலன் மகள் {காந்தாரி}, மற்றொருத்தி மத்ர இளவரசி {மாத்ரி}.(5) ஓ மகனே {விதுரா}, இந்த மங்கையர் அனைவரும் நிச்சயமாக அரச இரத்தம் உடையவர்களே. அவர்கள் அழகும் சுத்தமான இரத்தமும் கொண்டு நமது குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளும் தகுதியுடன் உள்ளனர்.(6) ஓ புத்திசாலி மனிதர்களின் முதன்மையானவனே {விதுரனே}, நமது {குரு}குல வளர்ச்சிக்காக அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதைச் சொல்” என்றார் {பீஷ்மர்}.(7)


இப்படிக் கேட்கப்பட்ட விதுரன், “நீர் எங்கள் தந்தையும் தாயும் ஆவீர். நீரே எங்கள் ஆன்ம ஆசானுமாவீர். எனவே, உங்கள் பார்வையில் எங்களுக்கு எது சிறந்தது என்று படுகிறதோ. அதைச் செய்யும்” என்றான்.(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “விரைவில் பீஷ்மர், சுபலனின் இனிய மகள் காந்தாரி ஹரனிடம் {சிவனிடம்} இருந்து நூறு மகன்களைப் பெறுவதற்கான வரத்தைப் பெற்றாள் என்பதைப் பிராமணர்கள் மூலம் அறிந்தார். குருக்களின் பாட்டனானான பீஷ்மர் இதைக் கேட்டு, காந்தார மன்னனிடம் தனது தூதுவர்களை அனுப்பினார். முதலில் மன்னன் சுபலன் குருட்டு மாப்பிள்ளைக்குத் {திருதராஷ்டிரனுக்குத்} தன் மகளைக் {காந்தாரியைக்} கொடுக்கத் தயங்கினான். பின்பு, குருக்களின் புகழையும், நடத்தைகளையும், அவர்களது இரத்தத்தையும் உணர்ந்து, தனது அறம் சார்ந்த மகளைத் திருதராஷ்டிரனுக்குக் கொடுக்க முடிவு செய்தான்.(9-12)

அந்தக் கற்புக்கரசியான காந்தாரி, திருதராஷ்டிரன் குருடன் என்பதைக் கேள்விப்பட்டாள். தனக்கு அவனை {திருதராஷ்டிரனை} மணமுடிக்கத் தனது பெற்றோர் முடிவு செய்துள்ளனர் என்பதையறிந்து, தனது எதிர்காலக் கணவன் மீதிருந்த அன்பு மற்றும் மரியாதையால் தனது கண்களைக் கட்டிக் கொண்டாள். சுபலனின் மகன் சகுனி, இளமையுடனும் அழகுடனும் இருந்த தனது தங்கையைக் {காந்தாரியை} குருக்களிடம் அழைத்து வந்து, முறைப்படித் திருதராஷ்டிரனுக்குக் கொடுத்தான்.(13-16)

காந்தாரி பெரும் மதிப்புடன் வரவேற்கப்பட்டாள். அவர்களது திருமணம் பீஷ்மரின் வழிகாட்டுதல்படி பெரும் ஆடம்பரத்தோடு நடத்தப்பட்டது. வீரனான அந்தச் சகுனி, பல மதிப்புமிக்கப் பொருட்களுடன் தனது தங்கையை {காந்தாரியை} அளித்துப் பீஷ்மரின் வாழ்த்துகளைப் பெற்றுத் தனது நகருக்குத் திரும்பிச் சென்றான்.(17) ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, அந்த அழகான காந்தாரி தனது நடத்தையாலும், அன்பான கவனிப்பாலும் எல்லாக் குருக்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தாள்.(18) காந்தாரி, தனது கணவனுக்குத் {திருதராஷ்டிரனுக்குத்} தன்னை முழுமையாக அர்ப்பணித்து அவனைக் கவனித்துக் கொண்டு, அவளது நன்னடத்தையால் பெரியவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தாள். அவள் {காந்தாரி} கற்புக்கரசியாதலால், தனது கணவனைத் {திருதராஷ்டிரனைத்} தவிர யாதொரு ஆடவனையோ, பெரியவரையோ குறிப்பிட்டு ஒரு வார்த்தையும் பேசாதிருந்தாள்” {என்றார் வைசம்பாயனர்}[1].(19)(கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பின்னும் அதிக செய்தி சொல்லப்படுகிறது. அது பின்வருமாறு: “பீஷமரால் அப்போதே வரிக்கப்பட்டு, காந்தாரராஜனாகிய ஸுபலன், அந்தக் காந்தாரியின் ஸஹோதரிகளாகிய பத்துக் கன்னிகைகளைப் பின்னும் திருதராஷ்டிரனுக்குக் கொடுத்தான்; ஸத்யவ்ரதை, ஸத்யஸேனை, ஸுதேஷ்ணை, ஸம்ஹிதை, தேஜஸ்ரவை, ஸுஷ்ரவை, நிக்ருதி, சுபை, சம்படை, தசார்ணை என்று பெயர்பெற்ற காந்தார ராஜாவின் பெண்கள் பதின்மரையும் ஒரே தினத்தில் திருதராஷ்டிரன் பாணிக்ரகணஞ் செய்து கொண்டான். அதன்பின், சிறந்த வில்லாளியும், சந்தனுபுத்திரருமான பீஷ்மர் ஆங்காங்கிருந்து நூற்றுக்கு மேற்பட்ட ராஜபுத்திரிகளைத் தருவித்துத் திருதராஷ்டிரனுக்குக் கொடுப்பித்தார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இந்த் தகவல் சொல்லப்படவில்லை.)

பிறந்தான் கர்ணன்! – ஆதிபர்வம் பகுதி 111-(சம்பவ பர்வம் – 47)-குந்திபோஜனின் இல்லத்தில் வசித்து வந்த குந்தி; துர்வாசரை மரியாதையுடன் கவனித்துக் கொண்ட குந்தி; குந்திக்கு வரமளித்த துர்வாசர்; மந்திரத்தைச் சோதித்தப் பார்த்த குந்தி; சூரியன் வந்தான்; கர்ணன் பிறந்தான்; கர்ணனை ஆற்றில் மிதக்கவிட்ட குந்தி; ராதையிடம் வளர்ந்த கர்ணன்; இந்திரனின் சக்தி ஆயுதத்தைப் பெற்ற கர்ணன்…

வைசம்பாயனர் தொடர்ந்தார், “யாதவர்களுக்குள் அவர்களது தலைவனாகச் சூரன் {சூரசேனன்} என்று ஒருவன் இருந்தான். அவன் வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தையான வசுதேவரின்} தந்தையாவான். அவனுக்குப் {சூரசேனனுக்கு} பிருதை என்று அழைக்கப்பட்ட மகள் ஒருத்தியும் இருந்தாள். அவள் {பிருதை} இந்தப் பூமியில் உள்ளவர்களுடன் ஒப்பிடமுடியாத அளவு அழகுடையவளாக இருந்தாள்.(1) (இந்தப் பிருதை. குந்திபோஜனின் மகளாக வளர்ந்ததால் குந்தி என்றே அழைக்கப்பட்டாள்.)ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, சூரன் எப்போதும் உண்மை பேசுபவனாக இருந்தான். அவன், தான் முன்பே வாக்குக் கொடுத்திருந்தபடி, பிள்ளையற்றிருந்த தனது நண்பனும், தன் அத்தையின் மகனுமான {மைத்துனனுமான = தந்தையுடைய சகோதரியின் மகனான} குந்திபோஜனுக்குத் தனது மகளைத் தத்துக் {சுவீகாரமாகக்} கொடுத்தான்.(2,3) பிருதை {குந்தி}[1] தனது வளர்ப்புத் தந்தையின் {குந்திபோஜனின்} இல்லத்தில் தங்கியிருந்து விருந்தினர்களையும், பிராமணர்களையும் நன்கு கவனித்துக் கொண்டாள். அறத்தின் மறைந்த உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கடும் தவமிருந்த பயங்கரமான பிராமணரான துர்வாசர் ஒருமுறை அங்கு வந்திருந்தார். அப்போது அவள் {குந்தி} அவரை {துர்வாசரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டள்.(4,5)

அவளது மரியாதைமிக்கக் கவனிப்பால் மனம்நிறைந்த அம்முனிவர் {துர்வாசர்}, (தன் இணையுடன் கலந்திருக்கும் ஒரு மானைக் கொன்ற அறமற்ற செயலுக்காகப் பாண்டு சாபம் பெற்றதன் விளைவால் வரப்போகும்) எதிர்காலத் துயரங்களைத் தனது ஆன்ம பலத்தால் கண்டு, அவளுக்கு {குந்திக்கு}, அவள் விரும்பிய தேவர்களை அவளுக்குப் பிள்ளை வரம் கொடுக்க வேண்டக்கூடிய, ஓர் அழைப்புச் சூத்திரத்தை {மந்திரத்தை} உபதேசித்தார்.(6) அம்முனிவர் {துர்வாசர்}”இந்த மந்திரத்தால் நீ அழைக்கும் தேவர்கள், நிச்சயம் உன்னை அணுகி, உனக்குப் பிள்ளைகளைக் கொடுப்பார்கள்” என்றார்.(7) இப்படி அந்தப் பிராமணரால் {துர்வாசரால்} சொல்லப்பட்ட அந்த இனிமையான குந்தி (பிருதை), ஆர்வத்தால் உந்தப்பட்டு, ஆர்க்க தேவனை (சூரியனை) அழைத்தாள்.(8) அந்த மந்திரங்களை உச்சரித்தவுடனேயே, அந்தப் பிரகாசமான தேவன் தன்னை அணுகுவதை அவள் {குந்தி} கண்டாள். அந்த இயல்புக்குமீறிய காட்சியைக் கண்ட குற்றங்குறையற்ற அந்த மங்கை {குந்தி} ஆச்சரியங்கூடிய அதிர்ச்சியடைந்தாள்.(9) ஆனால் விவஸ்வான் (சூரியன்) அவளை {குந்தியை} அணுகி, “இதோ நான் இங்கிருக்கிறேன். ஓ கருங்கண் பெண்ணே, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்வாயாக” என்றான்.(10)

இதைக் கேட்ட குந்தி, “ஓ எதிரிகளை அழிப்பவனே {சூரியனே}, ஒரு பிராமணர் எனக்கு இந்த மந்திரத்தை அருளினார். ஓ தலைவா, அதன் வலிமையைச் சோதிக்கவே நான் உன்னை அழைத்தேன்.(11) உன்னிடம் இந்தக் குற்றத்திற்காக நான் தலை வணங்குகிறேன். ஒரு பெண் எக்குற்றம் செய்தாலும், அவள் மன்னிப்பைப் பெறத் தகுதியானவளே” என்றாள்.(12)

அதற்குச் சூரியன், “துர்வாசர் உனக்கு இந்த வரத்தை அளித்தார் என்பதை நான் அறிவேன். ஓ மருட்சியுடைய மங்கையே {குந்தியே}, உனது அச்சத்தை விடு, உனது அணைப்பை எனக்குக் கொடு.(13) இனிமையானவளே என் வருகை பலனற்றதாக முடியாது. அது கனி கொடுக்க வேண்டும். நீயே என்னை அழைத்தாய். அஃது ஒன்றுக்குமில்லையென்றால், உனது வரம்புமீறிய செயலாகவே அது கருதப்படும்” என்றான்.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிப் பேசிய விவஸ்வான் {சூரியன்}, அவளது {குந்தியின்} அச்சத்தை அகற்ற மேலும் பலவற்றைச் சொன்னான். ஆனால், ஓ பாரதா, அந்த இனிமையான மங்கை, பண்புடைமை மற்றும் தனது உறவினர்களிடம் உள்ள பயத்தால், அவனது கோரிக்கையை ஏற்கத் துணியவில்லை. ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயனே}, ஆர்க்கன் {சூரியன்} அவளிடம் {குந்தியிடம்} மறுபடியும்,(15,16) “ஓ இளவரசி, இந்தக் காரியம் உனக்குப் பாவத்தைக் கொடுக்காது, எனக்காக, இந்த எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக” என்றான். குந்திபோஜனின் மகளிடம் இப்படிச் சொல்லி உலகத்தை ஒளியூட்டும் அந்தச் சிறப்புமிக்கத் தபனன், அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான். இந்தத் தொடர்பால், உடனடியாக ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தை இயற்கையான கவசத்துடனும், முகத்தைப் பிரகாசிக்க வைக்கும் காது குண்டலங்களுடனும் இருந்தது. அந்த மகனே பின்னாட்களில் கர்ணன் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டான். அந்த வீரன் கர்ணன் ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையானவனாக இருந்து, நற்பேறு அருளப்பட்டு, தேவலோகக் குழந்தை போல அழகுடன் இருந்தான்.(17-19)

குழந்தை பிறந்த பிறகு, அந்தச் சிறப்பு மிகுந்த தபனன் பிருதைக்கு {குந்திக்கு} அவளது கன்னித்தன்மையைத் திரும்பக் கொடுத்து விண்ணேகினான்.(20) விருஷ்ணி குலத்தின் அந்த இளவரசி தனக்குப் பிறந்த மகனைக் கண்டு துயரடைந்து, எது சிறந்ததோ அதைச் செய்ய நினைத்தாள்.(21) தனது உறவினர்களிடம் கொண்ட பயத்தால், தனது குற்றத்திற்கான சாட்சியை மறைக்க முடிவெடுத்தாள். பெரும் பலம் கொண்ட தனது வாரிசை நீரில் விட்டாள்.(22) நீரில் விடப்பட்ட அந்தக் குழந்தையைச் சூத சாதியில் பிறந்தவனும், அனைவராலும் அறியப்பட்டவனுமான ராதையின் கணவன் {அதிரதன்}, அந்த நீரிலிருந்து எடுத்து, அவனும் அவனது மனைவியும் சேர்ந்து அக்குழந்தையைத் தங்கள் மகனாகவே வளர்த்தனர்.(23) இயற்கையான கவசமும், காது குண்டலங்களும் கொண்டிருந்ததால், ராதையும் அவளது கணவனும் {அதிரதனும்} அக்குழந்தைக்கு வசுசேனன்[2] (சம்ஸ்க்ருதத்தில் “செல்வத்துடன் பிறந்தவன்” என்று பொருள் தரும் பெயர்.)என்று பெயர் வைத்தனர்.(24) அவன் பெரும் பலத்துடன் வளர்ந்து, எல்லா ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்றான். அவன் பெரும் சக்தியைத் தன்னிடம் கொண்டு, முதுகில் வெப்பக்கதிர்கள் சுடும் வரை (அதிகாலை துவங்கி மதியம் வரை) சூரியனை வழிபட்டான்.(25)அப்படி அவன் {கர்ணன்} சூரியனை வழிபடும் நேரத்தில் யாசித்து வரும் பிராமணர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்ல அவனுக்குப் பூமியில் யாதொரு பொருளும் இருக்கவில்லை.(26)

இந்திரன் தனது மகன் அர்ஜுனனுக்கு நன்மை செய்ய விரும்பி, பிராமண உருக் கொண்டு, வசுசேனனை {கர்ணனை} அணுகி அவனது இயற்கைக் கவசத்தை யாசகமாகக் கேட்டான்.(27) இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட கர்ணன், உடனே தனது இயற்கை கவசத்தை அறுத்து, பிராமண உருவில் இருந்த இந்திரனிடம் மரியாதையுடன் கைக்கூப்பிக் கொடுத்தான்.(28) தேவர்களின் தலைவன் {இந்திரன்} அந்தப் பரிசை ஏற்றுக் கர்ணனின் ஈகையால் மனநிறைவு கொண்டான். எனவே, அவன் வசுசேனனுக்கு அருமையான கணையொன்றைக் கொடுத்து,(29) “எந்த ஒருவனை (ஒருவனை மட்டுமே), அவன் தேவனாக இருக்கட்டும், அசுரனாக இருக்கட்டும், மனிதனாக இருக்கட்டும், கந்தர்வனாக இருக்கட்டும், நாகனாக இருக்கட்டும், ராட்சதனாக இருக்கட்டும், வேறு யாராகவும் இருக்கட்டும், அவனை நீ வெற்றிக் கொள்ள நினைத்தால், அவன் இக்கணையால் நிச்சயம் அழிவான்” என்று அவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்.(30) இந்தக் காரியம் நடப்பதற்கு முன்னர் அந்தச் சூரியனின் மகன் வசுசேனன் என்ற பெயராலேயே அறியப்பட்டான். ஆனால், தனது இயற்கைக் கவசத்தை அறுத்துக் கொடுத்ததனால் அது முதல், அவன் கர்ணன்[3] என்ற பெயரால் அழைக்கப்பட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)(சம்ஸ்க்ருதத்தில் “அறுப்பவன்” என்று பொருள் தரும் பெயர்.)

பாண்டுவுக்கு மாலையிட்டாள் குந்தி! – ஆதிபர்வம் பகுதி 112-(சம்பவ பர்வம் – 48)குந்தியின் சுயம்வரத்தை அறிவித்த குந்திபோஜன்; பாண்டுவுக்கு மாலையிட்ட குந்தி; மணமகளை அழைத்துக் கொண்டு தன் தலைநகரை அடைந்த பாண்டு…

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அகன்ற விழிகளையுடைய குந்திபோஜனின் மகள் பிருதை, மிகுந்த அழகுடன் நல்லவைகள் அனைத்தும் கொண்டவளாக இருந்தாள். கடும் நோன்புகள் நோற்றுத் தன்னை அறத்திற்கு அர்ப்பணித்து எல்லா நல்ல குணங்களையும் கொண்டிருந்தாள்.(1) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே, அப்படி அவள் அழகுடனும், இளமையுடனும், பெண்மைக்கான அனைத்துக் குணநலன்களையும் பெற்றிருந்தாலும், எந்த மன்னனும் அவளது கரத்தைக்  கேட்டு {அவளைப் பெண் கேட்டு} வரவில்லை.(2) அவளது தந்தை குந்திபோஜன், இந்நிலையைக் கண்டு, தனது மகள் இளவரசர்கள் அல்லது மன்னர்களில் ஒருவரைத் தனது துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றெண்ணி, அனைத்து நாட்டு இளவரசர்களுக்கும் மன்னர்களுக்கும் தூதனுப்பி அவர்களை {சுயம்வத்திற்கு} அழைத்தான்.(3)


புத்திசாலியான குந்தி, அந்த அரங்கிற்குள் நுழைந்ததும், சிரத்தில் முடி தரித்தவர்களின் வரிசையில் நின்ற பாரதர்களில் முதன்மையானவனும், மன்னர்களில் புலியுமான பாண்டுவைக் கண்டாள்.(4) அந்த அரச அணிவகுப்பில், சிங்கத்தைப் போன்ற பெருமையுடனும், அகலமான மார்புடனும், காளையைப் போன்ற விழிகளுடனும் மற்றும் பெரும் பலத்துடனும் கூடிய அவன் {பாண்டு} அங்கிருந்த மன்னர்களிலேயே பிரகாசமானவனாக, மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தான். குந்திபோஜனின் களங்கமற்ற இனிமையான மகள், மனிதர்களில் சிறந்த பாண்டுவை அந்தக் கூட்டத்தில் கண்டு, இனிய அதிர்வுக்குள்ளானாள்.(5,6)

உணர்ச்சிகளின் தாக்கத்தால் ஏற்பட்ட நடுக்கத்துடனும், நாணத்துடனும் முன்னேறி, மணமாலையைப் பாண்டுவின் கழுத்திலிட்டாள்.(7) குந்தி, பாண்டுவைத் தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததைக் கண்ட மற்ற ஏகாதிபதிகள் தங்கள் யானைகளிலும், குதிரைகளிலும், ரதங்களிலும் வந்தது போலவே அவரவர் நாட்டிற்குத் திரும்பிச் சென்றானர்.(8)

ஓ மன்னா! பிறகு, நடக்க வேண்டிய திருமணச் சடங்குகளை மணமகளின் தந்தை சரியாகச் செய்தான். பெரும் நற்பேறு பெற்ற அந்தக் குருக்களின் இளவரசனும் {பாண்டுவும்}, குந்திபோஜனின் மகளும் {குந்தியும்} சேர்ந்து மகவத்தையும் பௌலமியையும் (தேவர்களின் அரசனையும் அரசியையும் போன்று) போன்று காட்சியளித்தனர்.(9,10) ஓ குரு பரம்பரை ஏகாதிபதிகளில் சிறந்தவனே, திருமணச் சடங்குகள் முடிந்ததும், மன்னன் குந்திபோஜன் தனது மருமகனுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்து, அவனது (பாண்டுவின்) தலைநகருக்கு அனுப்பிவைத்தான்.(11) குருக்களின் இளவரசன் பாண்டு, பதாகைகளும், கொடிகளும் கொண்ட பெரும் சேனையுடனும், பிராமணர்கள் மற்றும் முனிவர்களின் வாழ்த்துகளுடனும் தனது தலைநகரை அடைந்தான்.(12) குருவின் வழித்தோன்றலான மன்னன் பாண்டு, தனது அரண்மனையை அடைந்ததும், தனது ராணியை அங்கே அமர்த்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(13)

எட்டு திக்கும் முரசு கொட்டிய பாண்டு! – ஆதிபர்வம் பகுதி 113-(சம்பவ பர்வம் – 49)பாண்டுவுக்காக சல்லியனிடம் மாத்ரியைப் பெண் கேட்கச் சென்ற பீஷ்மர்; தங்கள் குலவழக்கத்தைச் சொன்ன சல்லியன்; பெரும் பொருளைப் பரிசாகக் கொடுத்து மாத்ரியை அழைத்து வந்த பீஷ்மர்; உலகை வெல்லப் புறப்பட்ட பாண்டு; பெரும் பொக்கிஷத்தோடு ஹத்தினாபுரம் திரும்பியது.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சிறிது காலத்திற்குப் பிறகு, சந்தனுவின் புத்திசாலி மகன் பீஷ்மர், பாண்டுவுக்கு இரண்டாவதாக ஒரு மனைவியைப் பெற மனத்தில் தீர்மானித்தார்.(1) முதிர்ந்த ஆலோசகர்கள், பிராமணர்கள், பெரும் முனிவர்கள் மற்றும் நால்வகைப் படையினருடன் மத்ர மன்னனின் {சல்லியனின்} தலைநகருக்குச் சென்றார் பீஷ்மர்.(2) பாஹ்லீகர்களில் காளையான மத்ர மன்னன் {சல்லியன்}, பீஷ்மரின் வருகையைக் கேள்விப்பட்டு, அவரை {பீஷ்மரை} வரவேற்க வெளியே வந்தான். அவரை {பீஷ்மரை} மரியாதையுடன் வரவேற்றுத் தனது அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான்.(3) மத்ர மன்னன் {சல்லியன்} பீஷ்மரை உள்ளே அழைத்து, வெண்ணிறத் ஆசனத்தில் அவரை {பீஷ்மரை} அமர வைத்து, அவரது கால்களைக் கழுவ நீர் கொடுத்து, தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான வழக்கமான பல்வேறு பொருட்களை மரியாதையின் நிமித்தமாகக் கொடுத்தான். அவர் {பீஷ்மர்} வசதியாக அமர்ந்த பிறகு, அவரின் {பீஷ்மரின்} வருகைக்கான காரணம் குறித்து மன்னன் {சல்லியன்} கேட்டான்.(4)

குருக்களின் பெருமைகளைப் பேணும் பீஷ்மர், மத்ர மன்னனிடம் {சல்லியனிடம்}, “ஓ அனைத்து எதிரிகளையும் அழிப்பவனே, நான் ஒரு கன்னிகையின் கரத்திற்காக வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வாயாக. பெரும் அழகுக்காகவும், அறத்திற்காகவும் கொண்டாடப்படும் மாத்ரி என்ற பெயர் கொண்ட ஒரு தங்கை உனக்கு உண்டு என்று கேள்விப்பட்டேன். நான் அவளை {மாத்ரியை} பாண்டுவுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.(6) ஓ மன்னா {சல்லியா}, நீ எங்களுடன் கூட்டுச் சேர அனைத்துத் தகுதிகளும் கொண்டவன். நாங்களும் உன் தகுதிக்குக் குறைந்தவர்கள் அல்லர். ஓ மத்ரவின் மன்னா {சல்லியா}, இவையெல்லாவற்றையும் மனத்தில் கொண்டு, எங்களை ஏற்றுக் கொள்வாயாக” என்றார்.(7)

இப்படிச் சொல்லப்பட்ட மத்ர ஆட்சியாளன், பீஷ்மரிடம், “என் மனத்தைப் பொறுத்தவரை, உமது குடும்பத்தைத் தவிர நான் கூட்டுச் சேர வேறு எந்தக் குடும்பமும் இல்லை.(8) ஆனால், எங்கள் குடும்பத்தில் எங்கள் மூதாதையர் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லதாகவும் இருக்கலாம், இருப்பினும் என்னால் அந்த வரம்பை மீற முடியாது.(9) இஃது அனைவராலும் அறியப்பட்டதே. நீரும் அதை அறிந்திருப்பீர். அதில் நான் ஐயம் கொள்ளவில்லை. எனவே, என் தங்கையை {மாத்ரியை} அளிக்க வேண்டும் என்று என்னிடம் நீர் இப்படிக் கேட்பது முறையல்ல.(10)  எங்கள் குடும்ப வழக்கத்தையே நான் கடைப்பிடிப்பேன். எங்களுக்கு அறம் சார்ந்ததும், கடைப்பிடிக்கத் தகுந்ததும் அதுவே. ஓ எதிரிகளை அழிப்பவரே {பீஷ்மரே}, இதன்காரணமாகவே, உமது கோரிக்கைக்கு என்னால் எந்த உறுதியான பதிலும் தர முடியவில்லை” என்றான்.(11)

இதைக்கேட்ட பீஷ்மர், மத்ர மன்னனிடம் {சல்லியனிடம்}, “ஓ மன்னா {சல்லியா}, உங்கள் வழக்கம் அறமே[1] என்பதில் ஐயமில்லை. சுயம்புவே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறார்.(12) உமது மூதாதையர்கள் இந்த வழக்கத்தையே கடைப்பிடித்தனர். இதில் குற்றங்காண ஒன்றும் இல்லை.  ஓ சல்லியா, குடும்பப் பெருமைக்கான இவ்வழக்கம் ஞானம் கொண்டவர்களாலும், நல்லவர்களாலும் ஏற்கப்பட்டு நன்கறியப்பட்டதே” என்று சொன்னார்.(13) பிறகு, அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, நாணயமாகவும், நாணயமல்லாதவையாகவும் நிறையத் தங்கத்தையும், பல நிறங்களில் ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த கற்களையும், யானைகளையும், குதிரைகளையும், ரதங்களையும், ஆடை ஆபரணங்களையும், ரத்தினங்களையும், முத்துக்களையும், பவளங்களையும் சல்லியனிடம் கொடுத்தார்.(14,15)

[1] அர்ஷம் என்ற திருமண முறைப்படி இரண்டு பசுக்களைப் பெற்றுக் கொண்டு கன்னிகாதானம் செய்வது
சல்லியன் அந்த விலையுயர்ந்த பரிசுகளை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் ஏற்றுக் கொண்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தனது தங்கையை {மாத்ரியை} அந்தக் குருக்களில் காளையிடம் {பீஷ்மரிடம்} கொடுத்தான்.(16) பெருங்கடலுக்குச் செல்லும் கங்கையின் மைந்தனும், ஞானம் கொண்டவருமான பீஷ்மர், தனது காரியம் ஈடேறியதில் மகிழ்ந்து, மாத்ரியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, யானையின் பெயர் கொண்ட குருக்களின் தலைநகரத்திற்குச் (ஹஸ்தினாபுரத்திற்குச்) சென்றார்.(17) பின்பு ஞானிகள் குறித்துக் கொடுத்த ஓர் அதிர்ஷ்டமான நாள் மற்றும் நேரத்தில் மாத்ரியுடன் மன்னன் பாண்டு இணைத்து வைக்கப்பட்டான்.(18) திருமணச் சடங்குகள் முடிந்ததும், குருக்களின் மன்னன் (பாண்டு), அந்த அழகான மணமகளை, அழகுநிறைந்த அறையில் அமர்த்தினான்.(19) ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {பாண்டு}, தனது இருமனைவியருடனும் {குந்தி மற்றும் மாத்ரியுடனும்} தான் விரும்பியபடி சிறந்தவாறு உல்லாசமாக இருந்தான்.(20)

ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, முப்பது நாட்கள் கழித்து, அந்தக் குருக்கள் மன்னன் {பாண்டு}, உலகத்தை வெல்ல எண்ணித் தனது தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} இருந்து கிளம்பினான்.(21) பீஷ்மரிடமும், மற்றக் குரு பரம்பரையின் பெரியவர்களிடமும், மரியாதையுடன் தலைவணங்கித் திருதராஷ்டிரனிடமும் குடும்பத்திலுள்ள மற்றவர்களிடமும் பிரியாவிடை பெற்றுப் பெரும் யானைப்படையுடனும், குதிரை மற்றும் தேர்ப்படைகளுடனும், தனது குடிமக்களின் வாழ்த்துகளுடனும் பயணத்தைத் தொடங்கினான்.(22-24) அவ்வளவு பலம் வாய்ந்த படையுடன் பலதரப்பட்ட எதிரிகளைச் சந்தித்தான் பாண்டு. அந்த மனிதர்களின் புலியானவன், குருக்களின் புகழைப் பரப்புபவன், முதலில் தசாஹர்களின் திருடர்க் குழுக்களை அடக்கினான்.(25) பிறகு, கணக்கிலடங்கா யானைகள், குதிரைகள், காலாட்கள், மற்றும் ரதவீரர்களைக் கொண்ட தனது படையை, சுயபலத்தில் பெருமிதம் கொண்டு பல ஏகாதிபதிகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்த மகத நாட்டு மன்னன் தீர்க்கனின் பக்கம் திருப்பினான். அவனது தலைநகரில் வைத்து அவனைத் தாக்கிய பாண்டு அங்கேயே அவனைக்கொன்று, அவனது {தீர்க்கனது} கருவூலத்திலிருந்த அனைத்துச் செல்வங்களையும், மற்றும் வாகனங்களையும், கணக்கிலடங்கா விலங்குகளையும் கவர்ந்து சென்றான். பிறகு அவன் {பாண்டு} மிதிலை {Mithila} நோக்கித் திரும்பி விதேஹர்களை வென்றான்.(26-28)

பிறகு, ஓ மனிதர்களில் காளையே, பாண்டு, தனது படையைக் காசி, சம்பா, புண்டரம் ஆகிய நாடுகளுக்கு வழி நடத்தித் தனது பலத்தாலும் வீரத்தாலும் குருக்களின் புகழைப் பரவச் செய்தான்.(29) நீண்ட தொலைவுக்குச் சென்று தாக்கும் நெருப்புச் சுடர்களைப் போன்ற கணைகளையும், பிரகாசமான ஆயுதங்களையும் கொண்டவனும், எதிரிகளை ஒடுக்கபவனுமான பாண்டு, தன்னை எதிர்த்து வரும் மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தினான்.(30) பாண்டுவைத் தலைமையாகக் கொண்ட அந்தப் படையால் வீழ்த்தப்பட்ட நாடுகள், குருக்களின் அடிமை நாடுகளாக்கினான் {கப்பம் கட்டச் செய்தான். அவன் {பாண்டு}, உலகில் உள்ள எல்லா மன்னர்களையும் வீழ்த்தி, தேவலோகத்தில் இந்திரன் மதிக்கபடுவதுபோலப் பூமியில் ஒரே வீரனாக மதிக்கப்பட்டான்.(31) பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும் அவன் {பாண்டு} முன்னால் கரங்கூப்பித் தலைவணங்கி, அவனுக்காகக் காத்திருந்து, பலதரப்பட்ட ரத்தினங்களும் செல்வங்களும், மதிப்பற்ற கற்கள், முத்துகள், பவளங்கள், பெரும் அளவில் தங்கம் மற்றும் வெள்ளி, முதல் தரம்வாய்ந்த பசுக்கள், அழகான குதிரைகள், அழகான ரதங்கள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருமைகள், ஆடுகள், பொன்னாடைகள், அழகான மிருகத் தோல்கள், விலங்குகளின்மயிர்களாலான ஆடைகள் ஆகியனவற்றை அவனுக்குக் கொடுத்தார்கள். ஹஸ்தினாபுரத்தின் மன்னன் {பாண்டு} அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு தனது குடிமக்களின் பெருமகிழ்ச்சிக்கிடையே தனது தலைநகர் திரும்பினான். அவனது நாட்டின் குடிமக்களும் மற்றவர்களும் பெரும் மகிழ்ச்சியுடனிருந்தனர்.(32-36)

மன்னர்களும் அமைச்சர்களும், “மன்னர்களில் புலியான சந்தனு மற்றும் ஞானியான பரதனின் சாதனைகளும் புகழும் சாகப் போகும் தருவாயில் (மங்கப் போகும் நேரத்தில்), அவை பாண்டுவால் மீட்டெடுக்கப்பட்டன” என்றனர்.(37) முன்பு குருக்களின் நிலத்தையும் செல்வத்தையும் திருடியவர்கள் அத்தனை பேரும் ஹஸ்தினாபுரத்தின் புலியான பாண்டுவால் வீழ்த்தப்பட்டுக் கப்பம் கட்டப் பணிக்கப்பட்டனர்.(38) குடிமக்கள் அனைவரும் சேர்ந்து பீஷ்மரைத் தலைமையாகக் கொண்டு வெற்றியடைந்து வந்த தங்கள் மன்னனை {பாண்டுவை} வரவேற்க வெளியே வந்தனர். அப்போது தங்கள் மன்னனின் {பாண்டுவின்} பணியாட்கள் கொண்டு வந்த செல்வத்தையும், யானைகள், குதிரைகள், ரதங்கள், பசுக்கள், ஒட்டகங்கள் மற்றும் மற்ற மிருகங்களையும் கண்டனர். அந்தப் பணியாட்கள் செல்வது ஒரு முடிவில்லாத பேரணியாக இருப்பதையும் கண்டனர்.(39-42)

பாண்டு தனது தந்தை {விசித்திரவீரியன்} போன்ற பீஷ்மரைக் கண்டு, அவரது பாதம் பணிந்து வணங்கிக் குடிமக்களை அவரவர் தகுதிக்கேற்ப வணங்கினான்.(43) பீஷ்மர், பல எதிரி நாடுகளை வென்று திரும்பியிருக்கும் தனது மகனான {தன் தம்பி விசித்திரவீரியனின் மகனான} பாண்டுவை ஆரத்தழுவி, மகிழ்ச்சி மிகைப்பட்டுக் கண்ணீர் சிந்தினார்.(44) பாண்டு, தனது குடிமக்களின் மகிழ்ச்சிக்கிடையேயும், துந்துபி, சங்கு மற்றும் பேரிகைகளின் ஒலிகளுக்கிடையே தனது தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(45)

விதுரன் திருமணம்! – ஆதிபர்வம் பகுதி 114-(சம்பவ பர்வம் – 50)செல்வத்தைப் பிரித்தளித்த பாண்டு, ஓய்வுக்காகத் தன் மனைவிகளோடு காட்டுக்குச் சென்றது; காட்டில் திரிந்து கொண்டிருந்த பாண்டுவுக்கு உதவிய நாட்டு மக்கள்; மன்னன் தேவகனின் மகளை விதுரனுக்குத் திருமணம் செய்துவைத்த பீஷ்மர்…

வைசம்பாயனர் சொன்னார், “பாண்டு, திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில் தன்னுடைய வீரத்தால் கைப்பற்றப்பட்ட செல்வங்களைப் பீஷ்மரிடமும், தனது பாட்டியான சத்தியவதியிடமும், தனது தாய்மார்களிடமும் கொடுத்தான்.(1) தனது செல்வத்தின் ஒரு பகுதியை விதுரனுக்கும் கொடுத்தான்.  அந்த அறம் சார்ந்த பாண்டு, தனது உறவினர்களுக்கும் இதற்கொப்பப் பரிசுகளைக் கொடுத்து மனநிறைவு கொள்ளச் செய்தான்.(2) பிறகு, பாண்டு தனது வீரத்தால் அடைந்த பரிசுகளைப் பெற்ற சத்தியவதி, பீஷ்மர் மற்றும் கோசல இளவரசிகள் {அம்பிகை, அம்பாலிகை} பெரும் நிறைவடைந்தனர்.(3) குறிப்பாக அம்பாலிகை, ஜெயந்தனை {இந்திரனின் மகன்} வாரியணைத்துக் கொள்ளும் தேவலோக அரசி {இந்திராணி} போல, ஒப்புவமையில்லாத தனது மகனை {பாண்டுவை} ஆரத்தழுவி, மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.(4) அந்த வீரன் {பாண்டு} கொண்டு வந்த செல்வங்களை வைத்து திருதராஷ்டிரன், ஆயிரம் குதிரை வேள்விகளுக்குச் (அஸ்வமேத யாகங்களுக்குச்) சமமான ஐந்து பெரும் வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகளில் பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் காணிக்கைகள் செலுத்தப்பட்டன.(5)

ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, பெரும் வெற்றி பெற்றுத் திரும்பிய பாண்டு சிறிது காலம் கழித்துக் களைப்பாலும் சோர்வாலும், தனது மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரியை அழைத்துக் கொண்டு ஓய்வுக்காகக் கானகத்திற்குள் புகுந்தான்.(6) தனது அரண்மனையில் இருக்கும் ஆடம்பரப் படுக்கையை விட்டு, கானகத்தின் நிரந்தர வசிப்பாளனாக மாறி, மான்களை விரட்டுவதிலேயே தனது காலத்தைக் கடத்தினான்.(7) பெரும் சால மரங்கள் அடர்த்தியாகப் பசேலென வளர்ந்திருக்கும் மலை சார்ந்த இமயப் பகுதியில் அவனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான். அங்கே அவன் {பாண்டு} சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தான்.(8) அந்த அழகான பாண்டு, இரு பெண் யானைகளுடன் சுற்றித்திரியும் ஐராவதம் போலத் தனது இரு மனைவியருடன் {குந்தி, மாத்ரியுடன்} அந்தக் கானகம் முழுவதும் சுற்றினான்.(9)

மனைவியருடனும், வாள், கணை மற்றும் வில்லுடனும், அழகான கவசத்துடனும் சுற்றித்திரிந்த ஆயுதப் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற பாரதக் குல இளவரசனை {பாண்டுவை}, அந்தக் கானகத்தில் வசிப்பவர்கள் கண்டு, தேவர்களில் ஒருவன் தங்களுக்கிடையே தங்கள் கானகத்தில் சுற்றிக்கொண்டிருப்பதாகக் கருதினர். திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில், நாட்டு மக்கள் பாண்டுவுக்கு, அவனது ஓய்வுக்காலத்தில், அவனது மகிழ்ச்சிக்குரிய எல்லாப் பொருட்களையும் அளித்தனர்.(10,11)

அதே சமயத்தில், ஒரு சூத்திரப் பெண்ணுக்கும் மன்னன் தேவகனுக்கும் பிறந்து, அழகும் இளமையும் கொண்ட பெண்ணொருத்தி இருப்பதாகக் கடலுக்குச் செல்பவளான கங்கையின் மைந்தன் (பீஷ்மர்) கேள்விப்பட்டார்.(12) அவளது தந்தையின் {தேவகனின்} இருப்பிடத்தில் இருந்து அவளைக் கொண்டு வந்த பீஷ்மர், அவளை, ஞானியான விதுரனுக்கு மணமுடித்தார்.(13) விதுரன் அவளிடம் தன்னைப் போலவே திறமை கொண்ட பல பிள்ளைகளைப் பெற்றெடுத்தான்” என்றார் வைசம்பாயனர்}.(14)

அரசனே! துரியோதனனைக் கைவிடு!! – ஆதிபர்வம் பகுதி 115-(சம்பவ பர்வம் – 51)காந்தாரிக்கு வரமருளிய வியாசர்; குந்தியின் மீது கொண்ட பொறாமையால் வயிற்றில் ஓங்கி அடித்துக் கொண்ட காந்தாரி; காந்தாரிக்குப் பிறந்த சதைப்பிண்டம்; அப்பிண்டத்தை நூறு பங்காகப் பிரித்து குடத்திலிட்ட வியாசர்; துரியோதனன் பிறந்ததும் தோன்றிய துர்நிமித்தங்கள்; துரியோதனனைக் கைவிடுமாறு திருதராஷ்டிரனிடம் சொன்ன விதுரன்; யுயுத்சுவின் பிறப்பு…

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஜனமேஜயா! அதே சமயத்தில் திருதராஷ்டிரன் காந்தாரியிடம் நூறு மகன்களையும், வைசிய மனைவியிடம் {சௌபலையிடம்} ஒரு மகனையும் பெற்றான்.(1) பாண்டு, தனது இரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரி மூலம் ஐந்து மகன்களைப் பெற்றான். பின்னாட்களில் பெரும் தேர்வீரர்களாக இருந்த அந்த ஐவரும், தேவர்களால் குரு பரம்பரைத் தொடர்ச்சிக்காகப் பெறப்பட்டவர்கள்” {என்றார்}.(2)

ஜனமேஜயன், “ஓ பிராமணர்களில் சிறந்தவரே, காந்தாரி அந்த நூறு மகன்களையும் எவ்வாறு பெற்றாள்? எத்தனை வருடங்களில் பெற்றாள்? அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயுள் எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது?(3) திருதராஷ்டிரன், வைசிய மனைவி மூலம் ஒரு மகனை எவ்வாறு பெற்றார்? அவர் தன்னிடம் கீழ்ப்படிந்து நடக்கும் தனது அறம்சார்ந்த மனைவி காந்தாரியிடம் எவ்வாறு நடந்து கொண்டார்?(4) பாண்டு ஒரு முனிவரைக் கொன்ற பாவத்தால் சபிக்கப்பட்டிருக்கும்போது, பெரும் தேர் வீரர்களான ஐந்து மகன்களும் அவருக்கு எவ்வாறு பிறந்தனர்?(5) இவை அனைத்தையும் குறித்து முழுமையாக எனக்குச் சொல்வீராக. எனது மூதாதையரைப் பற்றி அனைத்தும் அறிந்து கொள்ளும் தாகம் எனக்குத் தணியவில்லை” என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(6)

வைசம்பாயனர் சொன்னார், “ஒரு நாள் தனது வசிப்பிடத்திற்குப் பசியுடனும், தாகத்துடனும் களைப்பாக வந்த பெரும்  துவைபாயனரை {வியாசரை}, மிகுந்த மரியாதையுடனும் கவனத்துடனும் காந்தாரி கவனித்துக் கொண்டாள். காந்தாரியின் விருந்தோம்பலால் மகிழ்ந்த முனிவர், அவள் கேட்டவாறே அவளது தலைவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} இணையான  பலமும், சாதனைகளும் கொண்ட நூறு பிள்ளைகளைப் பெறும் ஒரு வரத்தைக் கொடுத்தார்.(7, 8) சில காலம் கழித்துக் கருவுற்ற காந்தாரி, அந்தக் கருவை இரு முழு வருடங்களுக்குத் தனது கருவறையில் தாங்கினாள். ஆனால் பிள்ளை பிறக்கவில்லை. அவள் {காந்தாரி} அதனால் பெரும் துயரத்திற்கு ஆளானாள்.(9) அப்போது, குந்தி காலைக் கதிரவனைப் போன்ற பிரகாசத்துடன் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் என்பதைக் கேள்வியுற்றாள். இவ்வளவு வருடங்கள் காத்திருந்ததால் பொறுமையிழந்தும், துயரத்தின் மிகுதியாலும், தனது கணவன் அறியாதவாறு தனது வயிற்றில் ஓங்கிப் பலமாக அடித்தாள்.(10,11) அதனால் இரு வருடங்கள் வளர்ச்சி கண்டிருந்ததும், இரும்புப் பந்து போன்றதுமான ஒரு சதைப்பிண்டம் வெளியே வந்து விழுந்தது.(12) அவள் அதை வெளியே தூக்கியெறிய முற்படும்போது, தமது ஆன்ம பலத்தால் நடப்பதை அறிந்த துவைபாயனர் {வியாசர்}, அங்கே வந்து, அந்தச் சதைப்பிண்டத்தைக் கண்டார்.(13) சுபலனின் மகளிடம் (காந்தாரியிடம்) “நீ என்ன செய்துவிட்டாய்?” என்று கேட்டார்.

காந்தாரி, தனது உணர்ச்சிகளை மறைக்க முயலாமல், அம்முனிவரிடம்,(14) “குந்தி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் மகனைப் பெற்றெடுத்தாள் என்பதைக் கேள்விப்பட்டுத் துயரத்தால் எனது வயிற்றில் ஓங்கி அடித்தேன்.(15) ஓ முனிவரே {வியாசரே}, நீர் எனக்கு நூறு மகன்கள் பிறப்பார்கள் என்று வரமளித்திருக்கிறீர். ஆனால் நூறு மகன்களுக்குப் பதில் பெரும் சதைப் பிண்டமே வந்திருக்கிறது!” என்றாள்.(16)

வியாசர், “சுபலனின் மகளே, நிலை அப்படித்தான் இருக்கிறது. ஆனால் எனது வார்த்தைகள் பொய்த்துப் போகாது. நான் கேலிக்காகக் கூடப் பொய் பேசியதில்லை. மற்ற நேரங்களிலும் அப்படிப் பேச எனக்கு அவசியமில்லை.(17) தூய்மையாக்கப்பட்ட நெய்யானது நூறு குடங்களில் ஊற்றப்பட்டு இங்கே உடனே கொண்டு வரப்படட்டும். அவை ஒரு மறைவான இடத்தில் வைக்கப்படட்டும். அதே நேரத்தில், இந்தச் சதைப் பிண்டத்தில் குளிர்ந்த நீர் தெளிக்கப்படட்டும்” என்றார்”.(18)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தச் சதைப் பிண்டத்தில் நீர் தெளிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டும் ஒரு கட்டைவிரலளவு இருக்கும்படி நூற்றொரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டன.(19,20) பிறகு அவை தூய்மையாக்கப்பட்ட நெய் இருந்த பானைகளில் இடப்பட்டு மறைவான இடத்தில் வைக்கப்பட்டுக் காத்துவரப்பட்டன.(21) அந்தச் சிறப்புமிகுந்த வியாசர், சுபலனின் மகளிடம் (காந்தாரியிடம்) இரு முழு வருடங்கள் கழிந்த பின்னர் அப்பானைகளைத் திறந்து பார்க்கச் சொன்னார்.(22) ஞானியான துவைபாயனர் (வியாசர்) இந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, ஆன்மிகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க இமயத்திலிருக்கும் மலைகளுக்குச் சென்றுவிட்டார்.(23)

துண்டுகளாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட பானையிலிருந்து குறித்த நேரத்தில், மன்னன் துரியோதனன் பிறந்தான். பிறப்பின் அடிப்படையில் மன்னன் யுதிஷ்டிரனே மூத்தவனாக இருந்தான்.(24) துரியோதனன் பிறந்த செய்தி பீஷ்மருக்கும், ஞானியான விதுரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. துரியோதனன் பிறந்த அதே நாள், பெரும் கரம் கொண்ட பெரும் வீரன் பீமனுக்கும் பிறந்த நாளாக இருந்தது.(25)

துரியோதனன் பிறந்ததும், கழுதை போல கத்த்திக் கொண்டே அழத் தொடங்கினான்.(26) அவ்வொலியைக் கேட்ட கழுதைகளும், கழுகுகளும், ஓநாய்களும், காகங்களும் தங்கள் தங்கள் அலறல்களைத் தொடர்ச்சியாக எழுப்பின. கடும் காற்று வீசத் தொடங்கியது. பல இடங்களில் தீப்பற்றி எரிந்தன.(27)

இதனால் பேரச்சம் அடைந்த மன்னன் திருதராஷ்டிரன், பீஷ்மர், விதுரன், குருக்களின் நலனை விரும்புபவர்கள் மற்றும் கணக்கிலடங்கா பிராமணர்கள் ஆகியோரையும் அழைத்து, “இந்த இளவரசர்களில் யுதிஷ்டிரனே மூத்தவனும், நமது குலத்தைத் தொடரச் செய்பவனும் ஆவான். தனது பிறப்புத் தகுதியின் அறத்தைக் கொண்டே அவன் இந்நாட்டை அடைந்துவிட்டான். அதில் நாம் கருத்து கூற எதுவுமில்லை.(28,29) ஆனால், அவனுக்குப் பிறகு, எனது இந்த மகன் மன்னனாக முடியுமா? சட்டப்படி சரியானதும், சூழ்நிலைக்குகந்ததும் எதுவோ, அஃதை எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான்.(30)

இந்த வார்த்தைகள் வெளிப்பட்டதும், ஓ பாரதா {ஜனமேஜயா}, நரிகளும் ஊனுண்ணிகளும் {மாமிசம் உண்ணும் விலங்குகளும்} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தொடர்ந்து ஊளையிடத் தொடங்கின.(31) அந்தத் தீய சகுனங்களைக் கண்ட பிராமணர்களும், ஞானியான விதுரனும்,(32) “ஓ மன்னா! ஓ மனிதர்களில் காளையே, உமது மூத்த மகனின் பிறப்பையொட்டி, அச்சத்தையேற்படுத்தும் பல தீய சகுணங்களைக் காண முடிகிறது.(33) இவன் நமது குலத்தை அழிக்கப் பிறந்தவன் என்பது இதனால் உறுதியாகிறது. இவனைக் கைவிடுவதில்தான் அனைவரின் {நமது குலத்தின்} செழிப்பு அடங்கியுள்ளது. இவனை வைத்துக் கொண்டால் பேராபத்து விளையும்.(34) ஓ மன்னா! நீர் இவனை மட்டும் கைவிட்டால் கூட, மீதம் தொண்ணூற்று ஒன்பது மகன்கள் இருக்கின்றனர். நீர் உமது குலத்திற்கு நன்மை செய்ய விரும்பினால் இவனைக் கைவிடுவீராக. ஓ பாரதா, ஓ மன்னா! இந்த உமது ஒரு குழந்தையைக் கைவிட்டு உலகத்திற்கும், உமது குலத்திற்கும் நன்மையைச் செய்வீராக.(35) ஒரு குடும்பத்திற்காக, தனி மனிதன் ஒருவன் கைவிடப்படலாம். ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பம் கைவிடப்படலாம். மொத்த நாட்டிற்காகவும் ஒரு கிராமம் கைவிடப்படலாம். தனது ஆன்ம நலத்திற்காக ஒருவன் மொத்த உலகத்தையும் கைவிடலாம் எனச் சொல்லப்படுகிறது” என்று சொன்னார்கள்.(36)

விதுரரும், பிராமணர்களும் இப்படிச் சொல்லியும், மன்னன் திருதராஷ்டிரனின் இதயம் மகனுக்கான பாசத்தினால் அந்த அறிவுரையை ஏற்கவில்லை.(37) ஓ மன்னா! அதன் பிறகு, ஒரு மாத காலத்திற்குள், மொத்தம் நூறு மகன்களும், மற்றும் ஒரு மகளும் திருதராஷ்டிரனுக்குப் பிறந்தார்கள்.(38) காந்தாரி கருவுற்று அதிக காலம் பீடிக்கப்பட்டிருந்தபோது, ஒரு வைசியப் பணிப்பெண் திருதராஷ்டிரனைக் கவனித்து வந்தாள்.(39) ஓ மன்னா! அந்த வருடத்தில், அவளிடம் (பணிப்பெண்ணிடம்) சிறப்பு மிகுந்த திருதராஷ்டிரன், பெரும் புத்திக்கூர்மையுடைய மகன் ஒருவனைப் பெற்றான். அவன் பின்னாட்களில் யுயுத்சு என்று பெயரிடப்பட்டான். ஒரு க்ஷத்திரியனால், ஒரு வைசியப் பெண்மணிக்குப் பிறந்ததனால் அவன் கர்ணன் {கரணன்} {குந்தியின் மகன் அல்லன்} என்றும் அழைக்கப்பட்டான்.(40) இவ்வாறே அந்த ஞானி திருதராஷ்டிரனுக்கு, வீரர்களாகப் பெரும் தேர்வீரர்களாக நூறு மகன்களும், ஒரு மகளும், வைசியப் பெண்மணியிடம் பெற்ற மற்றுமொரு மகனான பெரும் சக்தியும் வீரமும் கொண்ட யுயுத்சுவும் பிறந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(41)-

நூறில் ஒன்று கூடியது எவ்வாறு? – ஆதிபர்வம் பகுதி 116-(சம்பவ பர்வம் – 52)காந்தாரிக்குப் பிறந்த பிண்டத்தைப் பிரித்து குடங்களிட்ட வியாசர்; ஒரு மகளைப் பெற விரும்பிய காந்தாரி; காந்தாரியின் விருப்பத்தையறிந்த வியாசர் பிண்டத்தில் மிகுந்த துண்டை நூற்றியோராவது குடத்திலிட்டது; துச்சலையின் பிறப்பு…

ஜனமேஜயன், “ஓ பாவங்களற்றவரே, முனிவரின் வரத்தால் திருதராஷ்டிரரின் நூறு மகன்கள் பிறந்ததைப் பற்றி முதலில் இருந்து சொன்னீர்கள். ஆனால், அவருக்குப் பிறந்த மகளைப் பற்றி எந்தக் குறிப்பும் சொல்லவில்லையே.(1) வெறுமனே காந்தாரியிடம் நூறு மகன்களும், வைசியப் பெண்மணியிடம் ஒரு மகனும், பிறகு நூற்றொன்றாக ஒரு மகளும், என்று மட்டுமே சொல்லியிருக்கிறீர். அளவற்ற சக்தி கொண்ட வியாச முனிவர், காந்தார மன்னனின் மகளிடம் (காந்தாரி) நூறு மகன்களுக்குத் தாயாவாய் என்றுதானே சொல்லியிருந்தார்?(2) அப்படியிருக்கும்போது, ஓ சிறப்பு வாய்ந்தவரே, எப்படிக் காந்தாரி அந்த நூறு மகன்களுக்கு மேல் ஒரு மகளையும் பெற்றாள் என்று சொல்கிறீர்?(3) அந்தச் சதைப்பிண்டம் நூறு பங்காகப் பிரிக்கப்பட்டது எனும்போது, காந்தாரி மறுபடி கருவுறவில்லை எனும்போது,(4) எப்படித் துச்சலை பிறந்தாள்? ஓ முனிவரே, இதை எனக்குச் சொல்லுங்கள். எனக்கு ஆவல் மேலிடுகிறது” என்று கேட்டான்”.(5)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ பாண்டவர்களின் வழித்தோன்றலே, உனது கேள்வி நியாயமானதே, என்ன நடந்தது என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். அந்தச் சிறப்புவாய்ந்த பெருமுனிவர், அந்தச் சதைப்பிண்டத்தில் நீர் தெளித்து, அதைப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருந்தார். அப்படிப் பிரிக்கப்படும்போது, செவிலி தெளிந்த நெய் நிரப்பப்பட்ட ஒவ்வொரு பானையிலும் ஒரு துண்டைப் போட்டுக் கொண்டே வந்தாள்.(6,7) இந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கடும் நோன்புகள் நோற்றவளும், அழகு நிரம்பியவளும், கற்புடையவளுமான காந்தாரி, மகளால் கிடைக்கப்பெறும் அன்பை உணர்ந்து,(8) தனக்குள், ‘முனிவரே சொன்ன பிறகு, நான் நூறு மகன்களைப் பெறுவேன் என்பதில் ஐயமில்லை. அதில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.(9) ஆனால், அந்த நூறு மகன்களுக்கு மேலும் ஒரு மகள், அந்த மகன்களுக்கெல்லாம் இளையவளாகப் பிறந்தால் நான் மிகவும் மகிழ்வேன்.(10) அதனால், எனது கணவருக்கு, மகளின் பிள்ளைகளால் கிடைக்கும் நல்லுலகங்கள் கிடைக்கும். தனது மருமகனின் (மகளின் கணவன்) மீது ஒரு பெண் கொண்டிருக்கும் அன்பும்பெருமைக்குரியது.(11) எனவே, நான் எனது நூறு மகன்களுக்கு மேலும் ஒரு மகளைப் பெறுவேனேயானால், மகன்களாலும், மகளின் மகன்களாலும் சூழப்பட்டுப் பெரிதும் அருளப்பட்டவளாக இருப்பேன்.(12) நான் கடும் விரதங்கள் இருப்பது உண்மையானால், நான் இரந்தோர்க்கு ஈவது உண்மையானால், (பிராமணர்களின் மூலம்) ஹோமம் செய்வது உண்மையானால், பெரியோர்களை மரியாதையாகக் கவனித்து வணங்கி வருவது உண்மையானால், (அச்செயல்களின் கனியாக) எனக்கு ஒரு மகள் பிறக்க வேண்டும்.’ என்று நினைத்துக் கொண்டாள்.(13)

இவ்வளவு நேரமும் அந்தச் சிறப்புமிகுந்த முனிவர் கிருஷ்ண துவைபாயனர்  அந்தச் சதைப் பிண்டங்களைப் பிரித்துக் கொண்டிருந்தார். நாறு பகுதிகளையும் எண்ணி முடித்த அவர், சுபலனின் மகளிடம் (காந்தாரியிடம்),(14) “இதோ இருக்கிறார்கள் உனது நூறு மகன்களும். நான் உன்னிடம் பொய்யுரைக்கவில்லை. இருப்பினும், இங்கு நூறுக்கு மேல் ஒரு பகுதி மிகுந்து இருக்கிறது.  இஃது உனக்கு மகளின் மூலமான மகனைக் கொடுக்கும்.(15) உனது ஆசைக்கிணங்க, இந்தப் பகுதி நற்பேறு பெற்ற இனிமையான மகளாக உருவாகும்” என்று சொன்ன அந்தத் துறவி, இன்னொரு பானையில் தெளிந்த நெய்யை நிரப்பி வர வைத்து, அந்தப் பகுதியை ஒரு மகளுக்காக இட்டு வைத்தார்.(16) ஓ பாரதா, துச்சலையின் பிறப்பு குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ பாவங்களற்றவனே, நான் இன்னும் என்ன உரைக்க வேண்டும் என்பதைக் கேட்பாயாக” {என்றார் வைசம்பாயனர்}.(17)

துரியோதனாதிகள் யார்? – ஆதிபர்வம் பகுதி 117-(சம்பவ பர்வம் – 53)-திருதராஷ்டிரன் மகன்களின் பிறப்பின் வரிசையிலான பெயர்கள்; துச்சலையைச் சிந்து மன்னன் ஜெயத்ரதன் மணந்து கொண்டது…

ஜனமேஜயன், “திருதராஷ்டிரரின் மகன்கள் பெயர்களை அவர்களின் பிறப்பு வரிசையில் சொல்லுங்கள்” என்றான்.(1)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா! பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்கள், {1} துரியோதனன், {2} யுயுத்சு, {3} துட்சாசனன், {4}துட்சகன், {5} துட்சலன், {6} ஜலசந்தன், {7} சமன், {8} சகன், {9} விந்தன், {10} அனுவிந்தன், {11} துர்த்தர்ஷன், {12} சுபாகு, {13} துஷ்பிரதர்ஷனன், {14} துர்மர்ஷனன், {15} துர்முகன், {16} துஷ்கர்ணன், {17} கர்ணன் {குந்தியின் மகனல்ல}, {18} விவின்சதி, {19} விகர்ணன், {20} சலன், {21} சத்வன், {22} சுலோச்சனன், {23} சித்ரன், {24} உபசித்ரன், {25} சித்ராக்ஷன், {26} சாருசித்திரன், {27} சரசனன், {28} துர்மதன், {29} துர்விகஹன், {30} விவித்சு, {31} விகாடனானன், {32} ஊர்ணனாபன், {33} சுநாபன், {34} நந்தகன், {35} உபநந்தகன், {36} சித்ரபாணன், {37} சித்திரவர்மன், {38} சுவர்மன், {39} துர்விமோசனன், {40} அயோவாகு, {41} மஹாபாகு, {42} சித்திராங்கன், {43} சித்திரகுண்டாலன், {44} பீமவேகன், {45} பீமவளன், {46} பாலகி, {47} பாலவர்தனன், {48} உக்கிராயுதன், {49} பீமன் {குந்தியின் பீமன் அல்ல}, {50} கர்ணன் (2), {51} கனகயன், {52} திரிதாயுதன், {53} திரிதவர்மன், {54} திரிதாக்ஷத்ரன், {55} சோமகீத்ரி, {56} அனுதரன், {57} திரிதசந்தன், {58} ஜராசந்தன், {59} சத்யசந்தன், {60} சதன், {61} சுவகன், {62} உக்ரசிரவஸ், {63} உக்ரசேனன், {64} சேனானி, {65} துஷ்பாராஜெயா, {66} அபராஜிதன், {67} குண்டசாயின், {68} விசாலாக்ஷன், {69} துரதரன், {70} திரிதஹஸ்தன், {71} சுஹஸ்தன், {72} வாதவேகன், {73} சுவரசன், {74} அதியகேது, {75} வாவஷின், {76} நாகதத்தன், {77} அக்ரயாயின், {78} கவாசின், {79} கிராதனன், {80} குந்தன், {81} குந்தாதரன், {82} தனுர்தரன், வீரர்களான {83} உக்கிரன், {84} பீமரதன், {85} வீரபாகு, {86} அலோலூபன், {87} அபயன், {88} ரௌத்திரகர்மன், {89} திரிதரதன், {90} அனதிரிஷ்யா, {91} குந்தபேதின், {92} விரவி, {93} திரிகலோசன பிரமாதா, {94} பிரமாதி, {95} பலம் வாய்ந்த தீர்க்கரோமன், {96} தீர்க்கவாகு, {97} மஹாவாகு, {98} வியுதோரு, {99} கனகத்வஜன், {100} குந்தாசி, {101} விரஜசன் ஆவர்[1]. இந்த நூறு மகன்கள் போக, துச்சலை என்ற பெயரில் ஒரு மகளும் இருந்தாள்.(2-15)

கவனிக்கவும், இவை பிறப்பின் வரிசையின் அடிப்படையில் உள்ள பெயர்களாகும் என வைசம்பாயனர் சொல்கிறார். வைசியப் பெண்மணிக்குப் பிறந்த யுயுத்சு இரண்டாவது பிள்ளையாகச் சேர்க்கப்பட்டிருப்பதால் கௌரவர்கள் 101 எண்ணிக்கை வருகிறது என நினைக்கிறேன்.

வேறு ஒரு  பதிப்பில் 1 துரியோதனன், 2யுயுத்சு, 3 துச்சாசனன், 4துஸ்ஸகன், 5துச்சலன், 6துர்முகன், 7விவிம்சதி, 8விகர்ணன், 9ஜலசந்தன், 10சுலோசனன், 11விந்தன், 12அனுவிந்தன், 13துர்த்தர்ஷன், 14சுபாகு, 15துஷ்பிரதர்ஷணன், 16துர்மர்ஷணன், 17பிரமாதி, 18துஷ்கர்ணன், 19கர்ணன், 20சித்ரன், 21உபசித்ரன், 22சித்ராக்ஷன், 23சாருசித்ராங்கதன், 24துர்மதன், 25துஷ்பிரஹர்ஷன், 26விவித்சு, 27விகடன், 28சமன், 29ஊர்ணநாபன், 30பத்மநாபன், 31நந்தன், 32உபநந்தன், 33சேனாபதி, 34சுஷேணன், 35குண்டோதரன், 36மஹோதரன், 37சித்ரபாஹு, 38சித்ரவர்மா, 39சுவர்மா, 40துர்விரோசனன், 41அயோபாகு, 42மஹாபாகு, 43சித்ரசாபன், 44சுகுண்டலன், 45பீமசேவகன், 46பீமபலன், 47பலாகி, 48பீமவிக்ரமன், 49உக்ராயுதன், 50பீமசரன், 51கனகாயு, 52திருதாயுதன், 53திருதவர்மா, 54திருதக்ஷத்ரன், 55சோமகீர்த்தி, 56அனூதரன், 57 ஜராசந்தன், 58திருதசந்தன், 59சத்யசந்தன், 60சஹஸ்ரவாக், 61உக்கிரச்சிரவஸ், 62உக்கிரசேனன், 63க்ஷேமமூர்த்தி, 64அபராஜிதன், 65பண்டிதகன், 66விசாலாக்ஷன், 67துராதனன், 68திருதஹஸ்தன், 69சுஹஸ்தன், 70வாதவேகன், 71சுவர்ச்சஸ், 72ஆதித்தியகேது, 73பஹவாசி, 74நாகதத்தன், 75அனுயாயி, 76தண்டி, 77நிஷங்கி, 78கவசி, 79தண்டதாரன், 80தனுர்கிரகன், 81உக்கிரன், 82பீமரதன், 83வீரன், 84வீரபாகு, 85அலோலுபன், 86அபயன், 87ரௌத்ரகர்மா, 88திருதரதன், 89அனாத்திருஷ்யன், 90குண்டபேதி, 91விராவி, 92தீர்க்கலோசனன், 93தீர்க்கபாகு, 94தீர்க்கரோமன், 95வியூடோரு, 96கனகாங்கதன், 97குண்டஜன், 98சித்ரகன், 99பிரமதன், 100 துஷ்பராஜியன் என்றும் ஒரு பெயர்ப்பட்டியல் சொல்லப்படுகிறது.

அனைவரும் வீரர்களாகவும், அதிரதர்களாகவும், போர்க்கலை நிபுணர்களாகவும் இருந்தார்கள். அனைவரும் வேதக் கல்வியும், அனைத்து ஆயுதங்களில் பயிற்சியும் பெற்றனர்.(16) ஓ மன்னா, அவர்கள் அனைவருக்கும், குறித்த நேரத்தில், முறையான சோதனைக்குப் பிறகு, தகுதிவாய்ந்த மனைவியரை திருதராஷ்டிரன் தேர்ந்தெடுத்தான்.(17) ஓ ஏகாதிபதியே, மன்னன் திருதராஷ்டிரன், சரியான நேரத்தில், சரியான சடங்குகளுடன் துச்சலையை ஜெயத்ரதனுக்கு (சிந்து மன்னனுக்கு) அளித்தான்.(18)

கிந்தமரிடம் சாபம் பெற்ற பாண்டு! – ஆதிபர்வம் பகுதி 118-சம்பவ பர்வம் – 54)காட்டில் மான் வேட்டையாடிய பாண்டு; மானின் வடிவில் இருந்த கிந்தம முனிவர் பாண்டுவைச் சபித்தது விட்டு மாண்டது…

ஜனமேஜயன், “ஓ பிரம்மத்தை உச்சரிப்பவரே, முனிவரின் அருளால் மனிதர்களில் இயல்பற்ற முறையில் பிறந்த திருதராஷ்டிரன் மகன்களைப் பற்றி வரிசையாகச் சொல்லிவிட்டீர்.(1) பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்களையும் சொல்லிவிட்டீர். ஓ பிராமணரே! இவை அனைத்தையும் நான் உம்மிடம் இருந்து அறிந்து கொண்டேன். இப்போது பாண்டவர்களைக் குறித்துச் சொல்வீராக.(2) தேவர்கள், அசுரர்கள் மற்றும் மற்றவகையினரின் அவதாரங்களைச் சொல்லும்போது, பாண்டவர்கள் அனைவரும் தேவர்களின் ஆற்றலுடன் அவர்களது அவதாரமாகவே பிறந்தனர் என்று சொன்னீர்.(3) எனவே, இயல்புக்குமிக்க அவர்களது சாதனைகளை அவர்களது பிறப்பு முதல் கேட்க விரும்புகிறேன். ஓ வைசம்பாயனரே, அவர்களது சாதனைகளை உரைப்பீராக” என்று கேட்டான்.(4)

வைசம்பாயனர், “ஓ மன்னா! ஒரு நாள் மான்களும், காட்டு விலங்குகளும் நிறைந்த கானகத்தில் பாண்டு உலவிக் கொண்டிருக்கும்போது (இமயத்தின் தெற்குச் சாரலில்) ஒரு மான் கூட்டத்திற்குத் தலைமையான பெரிய மான் ஒன்று தனது துணையுடன் இணைந்திருப்பதை {புணர்ந்து கொண்டிருப்பதைக்} கண்டான்.(5) அந்த விலங்குங்களைக் கண்ட அந்த ஏகாதிபதி {பாண்டு}, கூர்மையானவையும், வேகமானவையும் தங்க இறகுகளைக் கொண்டவையுமான ஐந்து கணைகளால் அவ்விரு மான்களையும் துளைத்தான்.(6) ஓ ஏகாதிபதியே, அவன் அடித்தது மானையல்ல, அஃது ஒரு முனிவரின் மகன். மானின் வடிவத்தில் தனது துணையுடன் உல்லாசமாக இருக்கும்போது,(7) பாண்டுவால் துளைக்கப்பட்டுத் தரையில் விழுந்து, மனித குரலில் கதறி அழுதார் அந்த முனிவரின் மகன்.(8)

அந்த மான் பாண்டுவிடம், “ஓ மன்னா! காமத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாகி, காரணங்களை ஆராயாமல், எப்போதும் பாவம் செய்யும் மனிதர்கள்கூட இது போன்ற ஒரு கொடும் செயலைச் செய்ய மாட்டார்கள்.(9) தனிப்பட்ட நீதியால் விதியை விஞ்ச முடியாது. ஆனால் விதியாலேயே தனிப்பட்ட நீதியை விஞ்சி நிற்க முடியும். விதியுடன் முரண்பட்டு நிற்கும் எதையும் ஞானியர் ஏற்றுக் கொள்வதில்லை.(10) ஓ பாரதா, நீ அறம் சார்ந்த குலத்தில் பிறந்தவன். இருப்பினும், ஆசை மற்றும் கோபத்தால் வெல்லப்பட்டு நீ எவ்வாறு உனது மதியை இழந்தாய்?” என்று கேட்டது.(11)

பாண்டு, “ஓ மானே, மன்னர்கள் எப்போதும் உன்னைப் போன்ற விலங்குகளை எதிரிகளைக் கொல்வதைப் போலவே கொன்று வருகின்றனர். எனவே, அறியாமையால் நீ என்னை வசைபாடலாகாது.(12) உனது வகை விலங்குகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொல்லப்பட்டே வருகின்றன. இது மன்னர்களின் வழக்கமே. இருப்பினும் நீ ஏன் என்னை வசைபாடுகிறாய்?(13) முன்பொரு காலத்தில் அகத்திய முனிவர், பெரும் வேள்வியை நடத்திக் கொண்டிருக்கும்போது, மான்களைத் துரத்தி, அந்தக் கானகத்தில் இருந்த அனைத்து மான்களையும் தேவர்களுக்கு அர்ப்பணித்தார். அதைப் போன்ற முன்னோடிக் கதைகளின் ஒப்புதல்படியே நீயும் கொல்லப்பட்டாய். அப்படியிருந்தும் நீ என்னை வசைபாடுவாயா? அகத்தியர், அந்தக் குறிப்பிட்ட வேள்வியில், மான்களின் கொழுப்பை வைத்தே ஹோமத்தை நடத்தினார்” என்றான்.(14,15)

அதற்கு அந்த மான், “ஓ மன்னா! தங்கள் எதிரிகள் ஆயத்தமாக இல்லாதபோது மனிதர்கள் கணைகளைப் பறக்க விட மாட்டார்கள். அதைச் செய்ய ஒரு நேரம் இருக்கிறது (பகை முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு). இந்த மாதிரி நேரத்தில் கொல்லுவது தகாது” என்றது.(16)

பாண்டு, “ஒரு மானைக் கொல்வதற்கு முன், மனிதர்கள் அது கவனமாக இருக்கிறதா? இல்லையா என்று கருதாமல் பலதரப்பட்ட வகைகளில் அவற்றைக் கொல்வது நன்கறியப்பட்டது. எனவே, ஓ மானே, என்னை ஏன் நீ வசைபாடுகிறாய்?” என்றான்.(17)

அதற்கு அந்த மான், “ஓ மன்னா! ஒரு மானைக் கொன்று விட்டாயே என்றோ, எனக்குக் காயமேற்படுத்திவிட்டாய் என்றோ நான் உன்னைப் பழிகூறவில்லை. ஆனால், இப்படிக் கொடும் செயல் செய்வதற்குப் பதில், எனது கலவி முடியும் வரை நீ காத்திருந்திருக்க வேண்டும்.(18) ஒரு மான் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது எந்த ஞானமுள்ள அறம்சார்ந்த மனிதன்தான் அதைக் கொல்வான்? கலவியின் காலம் எல்லா உயிரனங்களுக்கும் ஏற்புடையதும், அனைவருக்கும் நன்மை செய்வதுமே ஆகும்.(19) ஓ மன்னா! இந்த எனது துணையுடன், நான் எனது காம வேட்கையைத் தணித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனது முயற்சி உன்னால் பலனற்றதாகிவிட்டது.(20) ஓ குருக்களின் மன்னா! அறம் சார்ந்த செயல்களுக்காக அறியப்பட்ட பௌரவர்களின் (பூருவின் வம்சம்) குலத்தில் பிறந்தும் நீ இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்திருக்கிறாய்.(21) ஓ பாரதா, உலகளாவிய முழு வெறுப்புக்குகந்ததும், புகழைக்கெடுக்கக்கூடியதும் பெரும்பாவகரமானதுமான இச்செயல் மிகக் கொடூரமானதாகக் கருதப்பட வேண்டும். இது நிச்சயம் நரகத்திற்கு இட்டுச் செல்லும் தன்மை கொண்டது.(22) கலவியின் இன்பத்தை நீ அறிந்திருக்கிறாய்.  அறப்படிப்பினைகள் மற்றும் கடமைகளின் விதிகளையும் நீ அறிந்திருக்கிறாய். தேவர்களைப் போன்ற நீ, இப்படி நரகத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய செயலைச் செய்திருக்கக்கூடாது.(23)

ஓ மன்னர்களில் சிறந்தவனே, கொடூரச் செயல்கள் புரிபவர்களையும், பாவகரச் செயல்கள் புரிபவர்களையும், சாத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள அறம், பொருள், இன்பம் ஆகிவற்றைக் காற்றில் தூக்கி வீசுபவர்களையும் தண்டிப்பதே உனது கடமையாகும்.(24) ஓ மனிதர்களில் சிறந்தவனே, ஆனால் உனக்கு ஒரு குற்றமும் செய்யாத என்னைக் கொன்று, நீ என்ன செயலைச் செய்திருக்கிறாய்? ஓ மன்னா! மானுருவில் இருந்தாலும், நான் பழங்களும் கிழங்குகளும் உண்டு வாழும் முனிவன் ஆவேன்.(25) நான் இந்தக் கானகத்தில் எல்லோருடனும் சமாதானமாக அமைதியுடன் வாழ்ந்து வந்தேன்.இருப்பினும் நீ என்னைக் கொன்றுவிட்டாய். ஓ மன்னா! இதற்காக உன்னை நான் நிச்சயம் சபிப்பேன்.(26) ஆண், பெண் ஜோடியான எங்களிடம் கொடுமையாக நீ நடந்து கொண்டதால், உனக்குக் காமவேட்கையின் பாதிப்பு ஏற்படும்போது மரணம் உன்னை வந்தடையும்.(27) நான் கிந்தமன் என்ற பெயர் கொண்ட தவத் தகுதியுடைய முனிவனாவேன். மனித சமூகத்தில் எனது இப்படிப் பட்ட செயலைச் செய்ய நாணியதால், நான் இந்த மானுடன் காமக்கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.(28) மானின் வடிவில் நான் பிற மான்களின் துணையுடன் ஆழ்ந்த கானகங்களில் திரிந்து கொண்டிருந்தேன். நான் பிராமணன் என்பதை அறியாமல், நீ என்னைக் கொன்றதால், உனக்கு பிராமணனைக் கொன்ற பாவம் சேராது.(29)

ஆனால் நீ உணர்விழந்த மனிதனாக, மானுருவில் இருந்த என்னை, இப்படிப்பட்ட நேரத்தில் கொன்றதால், உனது விதி நிச்சயமாக என்னைப் போலே இருக்கும்.(30) உனது மனைவியைக் காமத்துடன் நீ அணுகும்போது, நான் எனது துணையுடன் கலந்திருந்தது போலவே, நீயும் உனது மனைவியுடன் கலப்பாய். அந்த நிலையிலேயே நீ ஆவிகளின் {பித்ருக்களின்} உலகத்தை அடைவாய்.(31) உன்னுடன் கலவியில் இருந்த அந்த உனது மனைவியும், உனது இறப்பைத் தொடர்ந்து அன்பாலும், மரியாதையாலும், மரணதேவனின் இடத்திற்கு உன்னைத் தொடர்ந்து வருவாள்.(32) நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீ எனக்குத் துயரைக் கொண்டு வந்தாய். அதே போல, நீ மகிழும்போது துயர் உன்னை வந்தடையும்” என்று சபித்தது {அந்த மான் வடிவில் இருந்த கிந்தமர் சபித்தார்}.”(33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைச் சொல்லிவிட்டு, அந்த மான், துயரத்துடன் தனது ஆவியை விட்டது. அந்தக் காட்சியைக் கண்ட பாண்டு சோகத்தில் மூழ்கினான்.”(34)

வானப்பிரஸ்தம் ஏற்ற பாண்டு! – ஆதிபர்வம் பகுதி 119-(சம்பவ பர்வம் – 55)தனக்குக் கிடைத்த சாபத்தைத் தன் மனைவியரிடம் சொன்ன பாண்டு; தன் மனைவியரை நகருக்குத் திரும்புமாறு சொன்ன பாண்டு; மறுத்த அவனது மனைவியர்; வானப்பிரஸ்த வாழ்வு முறையை ஏற்றது; தன் பணியாட்களை ஹஸ்தினாபுரத்திற்குத் திருப்பியனுப்பியது; கவலையடைந்த திருதராஷ்டிரன்; சதசிருங்க மலையை அடைந்த பாண்டு

வைசம்பாயனர் சொன்னார், “மானின் இறப்புக்குப் பிறகு, மன்னன் பாண்டு தனது மனைவியரிடம் {குந்தி மற்றும் மாத்ரியிடம்} மிகவும் துயரப்பட்டுப் பெரிதும் அழுதான்.(1)

அவன் {பாண்டு}, “தீயவர்கள், அறம்சார்ந்த குடும்பங்களில் பிறந்தாலும், ஆசையினால் உந்தப்பட்டு, அவர்களின் செயல்களின் கனியாக பேரிடரை வரவழைத்துக் கொள்கின்றனர்.(2) அறம் சார்ந்த சந்தனுவுக்குப் பிறந்திருந்தாலும், எனது தந்தை {விசித்திரவீரியன்}, காமத்திற்கு அடிமையானதாலேயே இளமையிலேயே இறந்து போனதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(3) அந்தக் காமாந்தக மன்னனின் நிலத்தில் {அம்பிகை, அம்பாலிகை என்ற அவரது மனைவியரிடம்}, உண்மையையே பேச்சாகக் கொண்ட சிறப்புவாய்ந்த முனிவர் கிருஷ்ண துவைபாணர் {வியாசர்} என்னைப் பெற்றார்.(4) அப்படிப்பட்ட ஒருவரின் மகனான நான், இதயத்தில் தீய எண்ணம் கொண்டு, கானகத்தில் மான்களைத் துரத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். ஓ! தேவர்கள் என்னைக் கைவிட்டனரே!(5)

நான் இனி முக்திக்கு வழி தேட வேண்டும். பிள்ளைகள் பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றும் உலகம் சம்பந்தமான பொருட்களுமே முக்திக்கான பெரும் இடையூறு. எனது தந்தையின் அழிவற்ற உதாரணத்தால் இனி நான் பிரம்மசரிய வாழ்க்கைமுறையை ஏற்று வாழப்போகிறேன்.(6) நான் நிச்சயமாக எனது உணர்ச்சிகளை எனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கடுமையான தவங்கள் செய்யப் போகிறேன். எனது மனைவிகள் {குந்தியையும் மாத்ரியும்} மற்றும் மற்ற உறவினர்களைக் கைவிட்டு, எனது சிரத்தை மழித்து, என்னைத் தாங்கிக் கொள்ள இங்கே நின்று கொண்டிருக்கும் மரங்களிடம் இரந்து, தனியாக உலகம் முழுவதும் சுற்றப் போகிறேன்.(7) அன்பு, வெறுப்பு ஆகியவற்றைக் கைவிட்டு, புழுதியால் எனது உடலை மறைத்து, மரத்தின் கீழோ, கைவிடப்பட்ட வீடுகளையோ எனது வசிப்பிடமாக்கிக் கொண்டு வாழப் போகிறேன்.(8) இன்பம், துன்பம் ஆகியவற்றின் விளைவுகளைப்பற்றிக் கருதாமல், அவதூறையும் புகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதுவேன். நான் வாழ்த்து கூறவோ பெறவோ மாட்டேன். நான் எல்லோருடனும் அமைதியாக இருந்து, பரிசுகளை ஏற்காமல் இருப்பேன்.(9) நான் எவரையும் ஏமாற்றாமல், ஒருவரிடமும் புருவம் சுருக்காமல் இருப்பேன். ஆனால், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்து, எல்லா உயிரினத்தின் நன்மைக்கும் என்னை அர்ப்பணிப்பேன்.(10)

நான் நான்கு வகைப்பட்ட உயிரனங்களுக்கு (முட்டையிடும் இனம், முட்டையிடாமல் குஞ்சு ஈனும் இனம், புழுக்கள் மற்றும் தாவரங்கள்) எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன்.  மாறாக அனைத்து உயிர்களையும் எனது பிள்ளைகளைப் போல எண்ணி அவற்றைச் சமமாக நடந்து கொள்வேன்.(11) ஒரு நாளைக்கு ஒரு முறை ஐந்திலிருந்து பத்துக் குடும்பங்களிடம் பிச்சை கேட்பேன். அவற்றில் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால் அன்று முழுதும் உணவில்லாமல் இருப்பேன். ஒருமுறைக்கு மேல் ஒருவரிடமும் பிச்சை கேட்க மாட்டேன்.(12) நான் ஏழு அல்லது பத்து வீடுகள் வலம் வந்தும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், பேராசையினால் உந்தப்பட்டு எனது வலத்தை {பிச்சைக்கேட்டுத் திரிவதை} நீட்ட மாட்டேன். எனக்குப் பிச்சை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், சலனப்படாமல் பெருந்துறவியைப் போல இருப்பேன்.(13) ஒருவன் எனது கரத்தில் ஒன்றைக் கோடரியால் வெட்டினாலும், மற்றொருவன் எனது மற்றொரு கரத்தில் சந்தனக்குழம்பைப் பூசினாலும், நான் அவ்விருவரையும் சமமாகவே மதிப்பேன். ஒருவருக்கு வளமையையும் மற்றவருக்குப் பெருந்துன்பத்தையும் விரும்பமாட்டேன்.(14) வாழ்வில் மகிழ்வோ, மரணத்தில் துயரோ அடைய மாட்டேன். வாழ்வோ, சாவோ எதையும் நான் விரும்ப மாட்டேன்.(15)

எனது இதயத்திலிருக்கும் எனது பாவங்களைக் கழுவி, மகிழ்ச்சியைத் தரவல்ல புனிதமான கடமைகளை நல்ல நேரத்தில், நாளில், காலத்தில் அளவு கடந்து செய்வேன். மேலும் அறம், பொருள், மற்றும் புலனுணர்வுகள் ஆகியவற்றைத் தரும் அனைத்துச் செயல்களையும் துறந்திருப்பேன். உலகின் அனைத்துப் பாவங்கள் மற்றும் பழிகளிலிருந்து விடுபட்டு, காற்றைப் போல யாருக்கும் கட்டுப்படாமல் இருப்பேன்.(16-18) இவ்வழியிலேயே எப்போதும் செயல்பட்டு அச்சமற்ற பாதையில் பயணித்து, இறுதியாக எனது வாழ்வை முடித்துக் கொள்வேன்.(19) பிள்ளைகளைப் பெறும் சக்தியை இழந்த நான், துன்பம் நிறைந்த இவ்வுலகின் தீய பாதையில் செல்வதற்காக என் கடமையில் இருந்து நிச்சயம் பிறழ மாட்டேன்.(20) உலகத்தால் மதிக்கப்பட்டாலும், மதிக்கப்படாவிட்டாலும், எந்த மனிதன் பேராசையால் பிறரிடம் பிச்சையெடுப்பதைப் போலப் பார்க்கிறானோ, அவன் நிச்சயம் ஒரு நாயைப் போலவே நடந்து கொள்வான். (படைப்புசக்தியற்ற நான், பிள்ளை பெறும் விருப்பத்தால், எனக்குப் பிள்ளைகளைக் கொடுக்கும்படி பிறரிடம் நிச்சயம் வேண்டக்கூடாது)” என்றான் {பாண்டு}.”(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்த மன்னன் {பாண்டு} தனது மனைவியரான குந்தி மற்றும் மாத்ரி ஆகிய இருவரிடம் துயரத்துடன் அழுதபடியே,(22) “நம்மை நம்பி இருக்கும் கோசல இளவரசிகள் {பாண்டுவின் தாய்மாரான அம்பிகை மற்றும் அம்பாலிகை}, விதுரன், நமது நண்பர்களுடன் கூடிய மன்னர் {திருதராஷ்டிரன்}, பெரிதும் மதிக்கப்படும் சத்யவதி, பீஷ்மர், நமது குடும்பப் புரோகிதர்கள், சோம பானம் குடித்துக் கடும் தவம் இருக்கும் சிறப்புமிகு பிராமணர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்குப் பாண்டு துறவு வாழ்வு வாழக் கானகத்திற்குள் புகுந்தான் என்று தெரிவிப்பீர்களாக” என்றான்.(23,24)

துறவு வாழ்க்கை வாழ எண்ணும் தங்கள் தலைவனின் {பாண்டுவின்} வார்த்தைகளைக் கேட்ட குந்தியும், மாத்ரியும் சரியான வார்த்தைகளால் அவனை {பாண்டுவை} அணுகி,(25) “ஓ பாரதக் குலத்தின் காளையே, நீர் துறவு வாழ்க்கை வாழ, உங்களால் மணந்து கொள்ளப்பட்ட மனைவியருடன் கைக்கொள்ளக்கூடிய பல வாழ்க்கை முறைகள் இருக்கின்றன.(26) அவற்றால் உமது உடல் வீடுபேற்றை அடைந்து, நீரும் வெகுமதியாக சொர்க்கத்தை அடைவீர். (உமது செயலின்) பெருங்கனியாக நீர் நிச்சயம் சொர்க்கத்தின் தலைவராவீர்.(27) நாங்களும், எங்கள் தலைவனின் {பாண்டுவின்} துணையோடு, உணர்ச்சிகளை அடக்கி, ஆடம்பரத்தை விட்டு, கடும் நோன்புகள் இருந்து, அந்த நன்மையைப் பெறுவோம்.(28) ஓ மன்னா {பாண்டு}, ஓ பெரும் ஞானம் கொண்டவரே! நீர் எங்களைக் கைவிட்டால், நாங்கள் இந்த நாளிலேயே இந்த உலகத்தை விட்டகல்வோம்” என்றனர்.(29)

பாண்டு, “இந்த முடிவு உங்கள் அறத்தின் தன்மையால் ஏற்பட்டது. எனவே, நான் உங்கள் இருவருடனும் என் தந்தையின் அழிவற்ற பாதையில் பயணிப்பேன்.(30) நாடு நகரங்களின் ஆடம்பரங்களைக் கைவிட்டு, மரப்பட்டைகளை ஆடைகளாக {மரவுரிகளை} அணிந்து, பழங்களையும் கிழங்குகளையும் உண்டு, ஆழ்ந்த கானகத்திற்குள் தீவிரத் தவங்கள் இயற்றுவேன்.(31) காலையும் மாலையும் குளித்து ஹோமம் செய்வேன். குறைவாக உண்டு எனது உடலைக் குறைத்து, மரப்பட்டைகளையும், தோலாடைகளையும் அணிந்து, எனது தலையில் சடாமுடி தரிப்பேன்.(32) வெப்பத்திற்கும், குளிர்ச்சிக்கும் என் உடலை வெளிப்படுத்தி, பசியையும், தாகத்தையும் அலட்சியம் செய்து, எனது உடலைக் குறைத்துக் கடும் தவம் இயற்றுவேன்.(33) தனிமையில் வாழ்ந்து, தியானத்திற்கு என்னை அர்ப்பணித்துக் கனிந்த கனிகளை மட்டும் உண்டு, பித்ருகளுக்கும், தேவர்களுக்கும் வாக்காலும், நீராலும், பழங்களாலும் படையல் செய்வேன் {அவர்களை வழிபடுவேன்}.(34) எனது உடல் வீழும் வரை, நான் எனது உறவினர்களையோ அல்லது கானகத்தின் மனிதர்களையும், நகரங்களில் வசிப்பவர்களையோ சந்திக்க மாட்டேன்.(35) வானப்பிரஸ்த வாழ்வு முறையில் என்னவெல்லாம் விதிகள் உள்ளனவோ, அவை கடுமையாக இருப்பினும் அனைத்தையும் நான் கடைப்பிடிப்பேன்” என்றான் {பாண்டு}”.(36)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தக் குரு மன்னன் {பாண்டு}, தனது இரு மனைவியரிடமும் {குந்தி மற்றும் மாத்ரியிடம்} அப்படிச் சொல்லிவிட்டுத் தனது தலையில் இருந்த பெரிய ஆபரணத்தையும், விலைமதிப்பில்லா தங்கத்திலான தனது ஆரத்தையும், கைக்காப்புகளையும், காது குண்டலங்களையும், தனது மனைவிகளின் விலைமதிப்பற்ற ஆடைகளையும் ஆபரணங்களையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டான்.(37,38)

பிறகு அவர்களைக் கவனித்துக் கொண்டவர்களிடம் {பணியாட்களிடம்}, “நீங்கள் ஹஸ்தினாபுரம் திரும்பிப் பாண்டுவும் அவனது மனைவியரும் செல்வம், ஆசை, மகிழ்ச்சி மற்றும் காம இச்சை ஆகியவற்றைத் துறந்து கானகத்திற்குள் சென்றுவிட்டனர் என்று தெரிவியுங்கள்” என்றான் {பாண்டு}. அப்போது அந்தப் பணியாட்கள் இதையும் மற்றும் அந்த மன்னன் பேசிய அன்பான வார்த்தைகளையும் கேட்டு,(39,40) “ஓ! நாங்கள் தொலைந்தோம்!” என்று சொல்லி,(41) வெப்பக்கண்ணீருடன் தங்கள் ஏகாதிபதியை {பாண்டுவை} அங்கேயே விட்டுப் பாண்டு கொடுத்த செல்வங்களுடன் (அனைவருக்கும் தானத்தில் பிரித்துக் கொடுக்க) வேகமாக ஹஸ்தினாபுரம் சென்றனர்.(42)

{நகரத்திற்குச் சென்ற அவர்கள் அந்தச் சிறப்புமிக்க மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்}, நடந்ததனைத்தையும் சொல்லி, அவனிடம் செல்வமனைத்தையும் கொடுத்தனர்.}[1](43) மனிதர்களில் முதன்மையான திருதராஷ்டிரன், கானகத்தில் நடந்த அனைத்தையும் கேள்விப்பட்டுத் தனது தம்பிக்காக {பாண்டுவுக்காக) அழுதான்.(44) தனது தம்பியிடம் உள்ள அன்பால், படுக்கையின் சுகத்தையும், நல்ல ஆசனத்தையும், நல்ல உணவையும் சில நாள் தவிர்த்தான்.  தன் தம்பியின் இழப்பால் பீடிக்கப்பட்ட அவன் தொடர்ந்து அவனையே நினைத்துக் கொண்டிருந்தான்.(45)

அதே நேரத்தில், குரு இளவரசன் பாண்டு தனது இரு மனைவியருடன் {குந்தி, மாத்ரியுடன்}, பழங்களும் கிழங்குகளும் உண்டு, நாகசதம் என்ற மலைக்குச் சென்றான்.(46) பின்னர்ச் சித்ரரதம் சென்று, அங்கிருந்து காலகூடம் சென்று, அங்கிருந்து இமயத்தில் இருக்கும் கந்தமாதன மலைக்குச் சென்றான்.(47) ஓ மன்னா! பாண்டு, மஹாபூதங்களாலும், சித்தர்களாலும், பெரும் முனிவர்களாலும் காக்கப்பட்டுச் சில காலங்கள் சமவெளியிலும், சில காலங்களில் மலைச்சாரல்களிலும் வசித்தான்.(48) அதன்பிறகு இந்திரத்தியும்னம் என்ற ஏரிக்குப் பயணப்பட்டான். அதன்பிறகு, ஹம்ஸகூடம் என்ற மலையைக் கடந்து, நூறு சிகரங்களுடைய சதசிருங்கம் என்ற மலைக்குச் சென்று அங்கே கடும் தவப்பயிற்சி செய்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(49)

பாண்டு சொன்ன சுருதசேனையின் கதை! – ஆதிபர்வம் பகுதி 120-(சம்பவ பர்வம் – 56)துறவுக்குத் தன்னை அர்ப்பணித்த பாண்டு; பிரம்மனைக் காணப் புறப்பட்ட முனிவர்கள்; பாண்டு தங்களுடன் வரவேண்டாம் என்று மறுத்த முனிவர்கள்; பாண்டுவுக்கு பிள்ளைகள் பிறப்பார்கள் என்று சொன்ன முனிவர்கள்; தகுதிவாய்ந்தவர் மூலம் பிள்ளை பெற குந்திக்கு ஆணையிட்ட பாண்டு; பாண்டு சொன்ன சுருதசேனையின் கதை…

வைசம்பாயனர் சொன்னார், “பெரும் சக்தி கொண்ட பாண்டு, தன்னைத் துறவுக்கு அர்ப்பணித்தான். குறைந்த காலத்தில் அங்கு வசித்த சித்தர்கள் மற்றும் சாரணர்களிடத்தில் அவர்களுக்குப் பிடித்தமானவனாக ஆனான்.(1)

ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த ஆன்ம குருக்களுக்கு சேவை செய்து, பயனற்ற செருக்கிலிருந்து விடுபட்டு, மனத்தை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஆசைகளை அடக்கி, சொர்க்கத்திற்குள் நுழையத்தக்க பெரும் (ஆன்ம) ஆற்றலை அடைந்தான்.(2) சில முனிவர்கள் அவனைச் சகோதரா என்று அழைத்தனர், சிலர் நண்பா என்று அழைத்தனர், மற்றவர்கள் அவனைத் தனது சொந்த மகனாகவே நினைத்தனர்.(3) ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, பல காலம் கழித்துத் தனித்திருந்து பெரும் ஆன்மத் தகுதியடைந்து (பிறப்பால் க்ஷத்திரியனாக இருப்பினும்) பிரம்மமுனியைப் போன்று ஆனான் பாண்டு.(4)

ஒரு புது நிலவு {அமாவசை} நாளில், கடுந்தவங்கள் இயற்றும் முனிவர்கள் ஒன்றாகக் கூடி, பிரம்மனைக் காணும் ஆவலால் புறப்படுவதற்கு ஆயத்தமாக இருந்தனர்.(5) அவர்கள் புறப்படத் தயாராயிருப்பதைக் கண்ட பாண்டு அந்தத் துறவிகளிடம், “நா நலமிக்க மனிதர்களில் முதன்மையானவர்களே, எங்கே செல்கிறீர்கள்?” என்றான்.(6)

அதற்கு முனிவர்கள், ” இன்று பிரம்மனின் வசிப்பிடத்தில் தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோரின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அந்தத் தான்தோன்றியை {சுயம்புவான பிரம்மனைக்} காண விரும்பி இன்று நாங்கள் அனைவரும் அங்குச் செல்கிறோம்” என்றனர்.(7)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைக் கேட்ட பாண்டு, முனிவர்களுடன் சொர்க்கத்தைக் காண விருப்பம் கொண்டு உடனே எழுந்தான். தனது இரு மனைவியரையும் {குந்தி மற்றும் மாத்ரியையும்} அழைத்துக் கொண்டு, முனிவர்களைத் தொடர்ந்து அந்த ஆயிரம் சிகரங்கள் கொண்ட மலைக்கு வடக்கு நோக்கி நடக்க முற்படும்போது, அந்தத் துறவிகள்,(8) “இந்த எங்கள் வடநோக்குப் பயணத்தில், மலைகளின் அரசன் மீது மெதுவாக ஏறும்போது, தேவர்கள் செல்வதையும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் செல்வதையும், மரங்கள் அடர்ந்து இன்னிசை நிரம்பிய பெரும் மாளிகைகளையும், சமமும் சமமற்றதுமான தரையும் கொண்ட குபேரனின் நந்தவனத்தையும், பெரும் நதிகளின் கரைகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும், சாதாரண மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளையும் அந்த மலையின் சாரலில் நாங்கள் கண்டிருக்கிறோம்.(9-11) பனியால் மூடப்பட்டுக் காய்கறிகளோ, விலங்குகளோ அற்ற உயர்ந்த இடங்களும் அங்கே இருக்கின்றன. பெரும் மழை பெய்து கொண்டே இருப்பதால், முற்றிலும் அணுகப்பட முடியாதவையும் வசித்திருக்க முடியாதவையுமான சில இடங்கள் அங்கே இருக்கின்றன.(12) மற்ற விலங்குகளைப் பற்றிப் பேச வேண்டாம், இறகுகள் கொண்ட உயிரினங்களாலும் {பறவைகளாலும்} அவற்றைக் கடக்க முடியாது. காற்று மட்டுமே அங்குப் புக முடியும். அதைத் தவிர்த்து சித்தர்களும், பெரும் முனிவர்களும் மட்டுமே அங்கே நுழைய முடியும்.(13) அந்த மலைகளின் மன்னனுடைய உயரங்களில் {உயரமான இடங்களில்} இவ்விளவரசிகளால் எவ்வாறு ஏற முடியும்? வலியை அறியாதவர்களான இவர்கள், துயரத்தால் வீழ்ந்துவிட மாட்டார்களா? எனவே, ஓ பாரதக் குலத்தின் காளையே, எங்களுடன் நீ வராதே” என்றனர்.(14)

பாண்டு, “பேறு பெற்றவர்களே, மகனில்லாதவனுக்குச் சொர்க்கத்தில் அனுமதியில்லை என்று சொல்லப்படுகிறது. நான் மகனற்றவன்! அந்தத் துயரத்தால் நான் உங்களிடம் பேசுகிறேன்.(15) எனது மூதாதையருக்கு நான் கொண்ட கடனை என்னால் செலுத்த முடியவில்லை என்பதால் துயருறுகிறேன். எனது உடலின் அழிவுடன் சேர்த்து எனது மூதாதையர்களின் அழிவும் நிச்சயம்!(16) பூமியில் பிறக்கும் மனிதர்கள் நான்கு கடன்களுடன் பிறக்கின்றனர். மூதாதையர்களுக்கான கடன், தேவர்களுக்கான கடன், முனிவர்களுக்கான கடன் மற்றும் சக மனிதர்களுக்கான கடன் ஆகியவற்றுடனே மனிதர்கள் பிறக்கின்றனர்.  அறம்வழுவாமல் அக்கடன்களை அவர்கள் செலுத்த வேண்டும்.(17) சரியான நேரத்தில் இக்கடன்களைத் தீர்க்காதவர்கள் நல்லுலகம் பெற மாட்டார்கள் என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர்.(18) தேவர்கள் நாம் செய்யும் வேள்விகளால் கடன் அடைபடுகின்றனர் {நிறைவடைகின்றனர்}. முனிவர்கள் நாம் பெறும் கல்வி, தியானம் மற்றும் ஆன்ம அறிவு ஆகியவற்றால் கடன் அடைபடுகின்றனர். முன்னோர்கள் {பித்ருக்கள்}, நாம் பிள்ளைகள் பெறுவதாலும், ஈமக்கடன்கள் செய்வதாலும் கடன் அடைபடுகின்றனர். மனிதத்தன்மையுடன், யாருக்கும் எக்குற்றமும் செய்யாமல் வாழ்ந்தால் மற்ற மனிதர்களின் கடன் அடைபடுகிறது.(19) நான், அறம்சார்ந்தவனாக தேவர்கள், முனிவர்கள் மற்றும் சக மனிதர்களின் கடனை அடைத்துவிட்டேன். இந்த மூன்றைத் தவிர மற்றதெல்லாம் எனது உடலுடன் அழியப்போகின்றன.(20) துறவிகளே, நான் எனது முன்னோர்களுக்கான கடனில் இருந்து இன்னும் விடுபடவில்லை. பிள்ளைகளைப் பெற்றுக் கடன்களை அடைக்கவே மனிதர்களில் சிறந்தவர்கள் இந்த உலகத்தில் பிறக்கின்றனர்.(21) உயர்ந்த முனிவரால் {வியாசரால்} எனது தந்தையின் நிலத்தில் நான் பெறப்பட்டதைப் போலவே, எனது நிலத்தில் (என் மனைவியரிடத்தில்) பிள்ளைகள் பெறப்பட வேண்டுமா?” என்று கேட்டான்.(22)

அதற்கு முனிவர்கள், “ஓ அற ஆன்மா கொண்ட மன்னா! பாவமற்றதும், நற்பேறால் அருளப்பட்டதும், தேவர்களைப் போன்றதுமான சந்ததி உனக்கு இருக்கிறது. நாங்கள் எங்கள் ஞானப்பார்வையால் அதைக் காண்கிறோம்.(23) ஓ மனிதர்களில் புலியே {பாண்டுவே}, எனவே, விதி சுட்டிக்காட்டும்படி உன் செயல்களை நிறைவேற்றுவாயாக. நுண்ணிறவு கொண்ட மனிதர்கள், ஆழ்ந்த ஆய்வுடன் செயல்பட்டு, எப்போதும் நற்கனிகளையே {நல்ல பலன்களையே} அடைகின்றனர்;(24) எனவே, முயற்சி செய்வதே உனக்குத் தகுந்தது. நீ அடையப்போகும் கனி தெளிவாகத் தெரிகிறது. திறமைவாய்ந்த, ஏற்றுக் கொள்ளப்படும் சந்ததியை நீ நிச்சயம் அடைவாய்” என்றனர்.(25)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “துறவிகளின் வார்த்தைகளைக் கேட்ட பாண்டு, மானின் சாபத்தால், உற்பத்தி சக்தியைத் தான் இழந்ததை நினைத்துப் பார்த்து ஆழ்ந்த வருத்தம் கொண்டான்.(26) தான் மணந்த மனைவியான சிறந்த குந்தியை தன்னிடம் தனிமையில் அழைத்து, “இந்த இக்கட்டான நிலையைக் கருத்தில் கொண்டு வாரிசுகளை உருவாக்க முயற்சி செய்வாயாக.(27) ஓ குந்தி, ஒரு மகனே மூவுலகத்திலும் அறம் சார்ந்த புகழை விளைவிப்பவன் என்று அழிவற்ற அறத்தை {நித்திய தர்மத்தைப்} போதிக்கும் ஞானியர் சொல்கின்றனர்.(28) வேள்விகள், கொடைகள், தவத்துறவுகள் மற்றும் கவனமாக நோற்கப்படும் நோன்புகள் ஆகியவற்றால் மகனற்ற மனிதனுக்கு எந்த அறத்தகுதியையும் ஏற்பட்டுவிடாது என்று சொல்லப்படுகிறது.(29) ஓ இனிமையான புன்னகையுடையவளே {குந்தியே}, இவையனைத்தையும் அறிந்த நான், மகனற்றவனாக இருப்பதால், உண்மையான இன்பநிலைகளைக் கொண்ட உலகங்களை என்னால் அடைய முடியாது என்பது உறுதி.(30) ஓ மருட்சியுடையவளே, பாவச்செயல்களுக்கு அடிமையான இழிந்தவனாக நான் இருந்ததால், மாசுள்ள என் வாழ்வின் விளைவாக, மானின் சாபத்தால் என் உற்பத்திசக்தி {இனப்பெருக்கம் செய்யும் சக்தி} அழிந்தது.(31)

அறத்தின் விதிகள் ஆறு வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஓ பிருதையே {குந்தி}, தற்போதுள்ள வழக்கத்தின்படி அவற்றைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(32) அவை, தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் தானே பெறும் மகன் முதல் வகை {1.ஔரஸன்},  அன்பு நிமித்தமாகத் திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை {2.பிரனீதன்}, பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை {3.பரிக்ரிதன்}, கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை {4.பௌனர்ப்பவன் }, திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை {5.கானீனன்}, கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை {6.குந்தன்}, தத்து கொடுக்கப்பட்டு பெறப்படும் மகன் ஏழாவது வகை {7.தத்தன்}, சில காரணத்திற்காகப் பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை {8.க்ரீதன்}, தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை {9.ஸ்வயம்தத்தன்}, கருவுற்ற மணமகளிடம் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை {10.ஷாதன்}, சகோதரன் மகன் பதினோராவது வகை {11.உபக்ரீதன்}, தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை {12.ஹீனயோனித்ரிதன்}[1].(33,34)(மேலே அடைப்புக்குறிக்குள் இருக்கும் பெயர்கள் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளவை. கும்பகோணம் பதிப்பில், “தர்மசாஸ்திரத்தில் ஆறுபுத்ரர்கள் தாயபாகத்திற்குரிய சுற்றத்தவரென்றும் மற்ற ஆறு புத்ரர்கள் தாயபாகத்திற்குரியவரல்லாற சுற்றத்தவரென்றும் சொல்லப்பட்டனர். குந்தியே! அவர்களைப் பற்றி நான் சொல்லுகிறேன்; கேள். தன் தர்ம்பத்நியிடம் தனக்குப் பிறந்த ஔரஸன்{1}, அவளிடத்திலே தன் அனுமதியினால் உயர்குலத்தோனுக்குப் பிறந்த க்ஷேத்ரஜன்{2}. தாய்தந்தைகளால் விடப்பட்ட அபவித்தன்{3}, ஒரு பெண்ணிடம் இரண்டாவது விவாகம் செய்து கொண்ட புருஷனுக்குப் பிறந்த பௌனர்ப்பவன்{4}. விவாகம் செய்து கொள்ளாமல் கன்னிகையாயிருக்கும்போது பிறந்த கானீனன்{5}, இன்னானுக்கென்று தெரியாமல் பரபுருஷனுக்குப் பிறந்த கடோத்பன்னன்{6}, தத்தபுத்திரன்{7}, தாய்தகப்பனார்களுக்குக் கிரயம் கொடுத்து வாங்கப்பட்ட க்ரீத புத்ரன்{8}, புத்திரன்போல் அபிமானிக்கப்பட்ட க்ரித்ரிமபுத்திரன்{9}, தானே உனக்குப்புத்ரனாக இருக்கிறேனென்று வந்த ஸ்வயம்தத்தனென்பவன்{10}, கர்ப்பிணியாகவே விவாகம் செய்யப்பட்டவளுக்குப் பிறந்த ஸகோடன்{11}, சூத்ர ஸ்த்ரீயினிடம் தனக்குப் பிறந்தவனாகிய பாரசவன்{12} இவர்கள் பனிரெண்டு புத்ரர்கள். இவர்களில் முன்சொன்ன புத்ரர்கள் இல்லாமையைப் பார்த்துப் பின் சொன்ன புத்ரர்களை அடைய விரும்ப வேண்டும்” என்றிருக்கிறது.)

முந்தைய பிரிவில் {முதல் ஆறு பிள்ளைகளை} பிள்ளைப் பெறுவதில் தோல்வியுற்றால், ஒரு தாய் அதற்கடுத்த பிரிவில் {இறுதி ஆறு பிள்ளைகளை} பிள்ளைகளைப் பெற விரும்ப வேண்டும். சில இக்கட்டான சூழ்நிலைகளில், மனிதர்கள் திறமைவாய்ந்த தங்கள் தம்பிகள் மூலம் பிள்ளைகளைப் பெறுகின்றனர்.(35) சுயம்புவான மனு, தன்னால் சுயமாகப் பிள்ளை பெற முடியாவிட்டால், சிறந்த அறத்தைத் தரும் பிள்ளைகளைப் பெறலாம் பிறர் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.(36) எனவே, ஓ குந்தி, நான் எனது உற்பத்தித் திறனை இழந்துவிட்டதால், நீ எனக்குச் சமமான அல்லது என்னைவிட உயர்ந்த வேறு நபர் மூலம் பிள்ளை பெற நான் உனக்கு ஆணையிடுகிறேன்.(37) ஓ குந்தி, தனது தலைவனால் பிள்ளைப்பேறு பெறப் பணிக்கப்பட்டவளான சாரதண்டாயனர் மகளின் {சுருதசேனையின்} வரலாற்றைக் கேட்பாயாக.(38)

அந்த வீரமங்கை, தனது மாதவிடாய் முடிந்ததும், முறையாகக் குளித்து, நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்கு இரவில் சென்று காத்திருந்தாள். அவள் நீண்ட நேரம் அங்குக் காத்திருக்கவில்லை. அதற்குள் துறவில் வென்ற ஒரு பிராமணர் அங்கே வந்தார்.  சரதண்டாயனரின் மகள் அவரிடம் பிள்ளை கோரினாள். நெருப்பில் தெளிந்த நெய்யை விட்ட பிறகு[2] (ஆண்பிள்ளை பிறப்பதற்காகச் செய்யப்படும் வேள்வி)(பும்ஸவனம் என்ற வேள்வி செய்து) அந்தப் பிராமணரின் மூலம் அவள் துர்ஜெயனை மூத்தவனாகக் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான மூன்று மகன்களைப் பெற்றெடுத்தாள்.(39,40) ஓ நற்பேறு பெற்றவளே {குந்தியே}, நீயும் அந்த வீரமங்கையை உதாரணமாகக் கொண்டு, எனது ஆணையை ஏற்று, உயர்ந்த அறத்தகுதி வாய்ந்த பிராமணரின் வித்தைக் கொண்டு விரைவாகப் பிள்ளைகளைப் பெறுவாயாக” என்றான்[3].(41)(மன்மதநாததத்தரின் பதிப்பில் இக்கதை கங்குலியில் உள்ளதைப் போலவே “சாரதண்டாயனரின் மகள்” என்றே இருக்கிறது. ஆனால் கும்பகோணம் பதிப்பிலோ, “கற்புள்ளவளும், புகழுள்ளவளுமான சுருதஸேனையென்னும் பெயருள்ள உன் சகோதரியை உயர்ந்தவனாகிய சாரதண்டாயனியென்னும் கேகயதேசத்தரசன் விவாஹம் செய்து கொண்டான். குந்தியே வீரபத்னியாகிய அவள் தன் குருவினால் (பர்த்தாவினால்) புத்திரோத்பத்தி செய்து கொள்ளும்படி கட்டளையிடப்பட்டு, ருதுஸ்நானஞ்செய்து நியமத்துடனிருந்து ராத்திரியில் நாலு சந்து கூடுமிடத்திலிருந்த ஒரு தவஸித்தி பெற்ற பிராமணனை வரித்து பும்ஸவனம் என்னும் கிருயையில் அக்நியில் ஹோமஞ்செய்து அந்தக் கிரியை முடிந்தபின் அந்தப் பிராமணருடன் கூடவே சேர்ந்திருந்தாள். அதனால், அவள் துர்ஜயன் முதலான மூன்று மஹாரதர்களைப் பெற்றாள்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலோ, “ஓ குந்தி, ஒரு போர்வீரனின் மனைவியான சாரதண்டாயனியின் கதையைக் கேட்பாயாக. அவள் தனக்கு மூத்தவர்களால் ஒரு மகனைப் பெறுமாறு பணிக்கப்பட்டாள். ஓ குந்தி, அவளது பருவகாலம் வந்தபோது, அவள் குளித்தால். இரவில், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்குச் சென்று, நல்லசாதனை கொண்ட பிராமணர் ஒருவரை வரவேற்றாள். ஒரு மகனைப் பெறும் நிமித்தமாக அவள் நெருப்பில் ஆகுதியை ஊற்றினாள். இந்தச் சடங்கைச்செய்த பிறகு, அவருடன் வாழ்ந்த அவள், துர்ஜயனை மூத்தவனாகக் கொண்டவர்களும், மஹாரதர்களுமான மூன்று மகன்களைப் பெற்றாள்” என்றிருக்கிறது.)

குந்தி சொன்ன பத்ரை கதை! – ஆதிபர்வம் பகுதி 121-(சம்பவ பர்வம் – 57)-பழங்காலத்தில் நடந்த வியுஷிதாஸ்வன் மற்றும் பத்ரையின் கதையைப் பாண்டுவுக்குச் சொன்ன குந்தி; இறந்து போன கணவனிடம் பிள்ளைகளைப் பெற்ற பத்ரை…

வைசம்பாயனர் சொன்னார், “இப்படிச்சொல்லப்பட்ட குந்தி, குருக்களில் காளையும், தனது வீரத் தலைவனுமான மன்னன் பாண்டுவிடம்,(1) “ஓ அறம்சார்ந்தவரே, நீர் என்னிடம் இப்படிச் சொல்வது தகாது. ஓ தாமரைக் கண் கொண்டவரே! நான் எப்போதும் உம்மிடம் அர்ப்பணிப்புடன் உள்ளவளும், முறையாக மணந்து கொள்ளப்பட்டவளுமான உமது மனைவியாவேன்.(2) ஓ பெரும் கரம் கொண்ட பாரதரே, பெரும் சக்தி கொண்ட நீரே என்னிடம் பிள்ளைகளைப் பெறுவீர்.(3) அதன் பிறகு நான் சொர்க்கத்திற்கு உம்முடனே சேர்ந்தே வருகிறேன். ஓ குருகுல இளவரசரே, உம் அணைப்பில் என்னை ஏற்றுப் பிள்ளைகளைப் பெறுவீராக.(4) உமது அணைப்பைத் தவிர வேறு எந்த மனிதனின் அணைப்பையும் நான் கற்பனையில் கூட ஏற்கமாட்டேன். உம்மைவிட உயர்ந்தவனாக எந்த மனிதன் உலகத்தில் இருக்கிறான்?(5) ஓ அறம்சார்ந்தவரே, தாமரைக் கண் கொண்டவரே! நான் கேள்விப்பட்ட ஒரு புராண விவரிப்பைக் கேட்பீராக. நான் உமக்கு அதைச் சொல்கிறேன்.(6)

பழங்காலத்தில் பூருவின் குலத்தில் வியுஷிதாஸ்வன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவன் உண்மைக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்திருந்தான்.(7) அறம்சார்ந்த ஆன்மாவையும், பெரும் கரத்தையும் கொண்டிருந்த அவன் ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு வேள்வியைச் செய்து கொண்டிருக்கும்போது, அங்கே இந்திரனுடன் பெரும் முனிவர்களும் வந்தனர்.(8) இந்திரன் சோமச்சாற்றாலும், பிராமணர்கள் அவர்கள் பெற்ற பரிசுகளாலும் போதையுண்டிருந்ததால், அவ்வேள்வியில் அந்த அரசமுனி செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் அவர்களே செய்தனர்.(9)  எனவே, பனிக்காலம் முடிந்ததும், இருமடங்கு பிரகாசத்துடன் தோன்றும் சூரியனைப் போல அந்த வியுஷிதாஸ்வன், பிற மனிதர்கள் அனைத்துயிர்களையும் விட அதிகமாகப் பிரகாசித்தான்.(10)

பத்து யானைகளின் பலத்தைக் கொண்ட அந்தப் பலம் வாய்ந்த வியுஷிதாஸ்வன், பெரும் குதிரை வேள்வி ஒன்றைச் செய்து கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் தெற்கிலிருந்த அனைத்து ஏகாதிபதிகளையும் வீழ்த்தி அவர்கள் அனைவரையும் தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(11,12) புராணங்களை உரைப்பவர்கள், ஓ குருக்களில் சிறந்தவரே, இந்த மன்னனைக் குறித்துப் பதியப்படாத ஒரு சிறுகதையைப் பாடுவர்கள்.(13) கடற்கரைவரையுள்ள மொத்த பூமியையும் வென்ற வியுதாஸ்வன், தன் குடிமக்களில் அனைத்து வர்க்கங்களையும் {வர்ணங்களையும்}, ஒரு தகப்பன் பிள்ளைகளைப் பாதுகாப்பதுபோலக் காத்தான்.(14) அவன் பல பெரும் வேள்விகளைச் செய்து, பெரும் செல்வத்தை பிராமணர்களுக்குக் கொடுத்தான்.  அளவிலா நகைகளையும், விலைமதிப்பில்லாக் கற்களையும் சேகரித்தபிறகு பெரும் வேள்விகளைத் துவங்கினான்.(15)

அவன் {வியுஷிதாஸ்வன்} அக்னிஷ்டோமம் என்ற வேள்வியையும் மற்றும் பெரும் சோமச் சாற்றினைப்பிழிந்து சிறப்பான வேத வேள்விகளையும் செய்தான். ஓ மன்னரே, வியுஷிதஸ்வாவுக்கு ஓர் அன்பான மனைவி இருந்தாள். அவள் கக்ஷீவத்தின் {கக்ஷீவானின்} மகள் பத்ரை ஆவாள். அவள் பூலோகத்திலேயே மிகுந்த அழகு வாய்ந்தவளாக இருந்தாள்.(16) அந்த இணை ஆழமான காதல் கொண்டதாக இருந்தது என்று நாம் கேள்விப்படுகிறோம். மன்னன் வியுஷிதஸ்வா தனது மனைவியுடனேயே எப்போதும் பிரியாமல் இருந்தான். காமத்தின் மிகை, அவனுக்கு மூச்சு சம்பந்தமான நோயைக் கொண்டு வந்தது. மன்னன் தான் புகழோடிருக்கும்போதே, மூழ்கும் கதிரவனைப் போல சில தினங்களுக்குள் இறந்து போனான். பிறகு பத்ரை என்ற அந்த அழகிய அரசி, மகனில்லாத காரணத்தால் மிகுந்த துயர் கொண்டாள். அவள் கொண்ட பெரும் துயரால் மிகவும் அழுதாள். ஓ அறம் சார்ந்த மன்னரே, நான் சொல்வதைக் கேளும்.

பத்ரா கன்னத்தில் கண்ணீர் வழிந்தோட,(17-19) “ஓ அறம் சார்ந்தவரே, கணவன் இறந்த பிறகு பெண்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. கணவன் இறந்த பிறகு வாழ்பவள், துயர் நிறைந்த இருப்பையே வாழ்க்கையெனப் பெறுகிறாள்.(20) ஓ க்ஷத்திரிய குலத்தின் காளையே, கணவன் இல்லாத பெண்களுக்கு இறப்பே வரமாகும். நான் உமது பாதையிலேயே தொடர விரும்புகிறேன். என்னிடம் அன்புகூர்ந்து என்னையும் உம்மோடு அழைத்துச் செல்வீராக.(21) நீர் இல்லாத உலகத்தில் என்னால் ஒரு நொடியும் வாழ முடியாது. ஓ மன்னா, என்னிடம் அன்பு கொண்டு, விரைவாக என்னை அழைத்துக் கொள்வீராக.(22) ஓ மனிதர்களில் புலியே, நான் சமமான மற்றும் சமமற்ற தரைகளிலும் உம்மைத் தொடர்வேன். ஓ தலைவா, திரும்பிவராத இடத்திற்கு நீர் சென்றுவிட்டீர். நான் உம்மைத் தொடர்ந்து வருவேன்.(23) ஓ மன்னா! உமது நிழலைப் போல வருவேன். ஓ மன்னர்களில் புலியே, (உமது அடிமையைப் போல) நான் உமக்குக் கீழ்ப்படிந்து, உமக்கு ஏற்புடையதையும், உமக்கு நன்மையானதையும் எப்போதும் செய்வேன்.(24) ஓ தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரே, நீரில்லை ஆகையால், இன்றிலிருந்து மனத்துயரானது, என்னை மீறி எனது இதயத்தை உண்ணப் போகிறது.(25)

முந்தைய பிறவியில் ஏதோ அன்பான காதல் இணையரைப் பிரித்ததாலேயே இன்று நான் இந்தப் பாவகர வாழ்க்கையை வாழ நேர்ந்தது. நான் உமது பிரிவால் துயருறவே படைக்கப்பட்டிருக்கிறேன்.(26) ஓ மன்னா! தன் தலைவனிடம் இருந்து ஒரு நொடியாவது பிரிந்து வாழும் பாவியான அந்தப் பெண், துயர்வாழ்வு வாழ்ந்து, நரகத்தை இங்கேயே அனுபவிப்பாள்.(27) முந்தைய வாழ்வில் நான் நிச்சயம் ஓர் அன்பான இணையரைப் பிரித்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதன்காரணமாகவே நாம் உம்மைப் பிரிந்திருக்கும் இந்தச் சித்திரவதையை அனுபவிக்கிறேன்.(28,29) ஓ மன்னா! நான் இந்த நாளிலிருந்து, ஆடம்பரத்தை விடுத்து, உம்மை மறுபடியும் காணுவேன் என்ற நம்பிக்கையில் தரையில் குசப்புற்களை விரித்து, படுக்கப் போகிறேன். ஓ மனிதர்களில் புலியே, உம்மை என்னிடம் காட்டுவீராக. ஓ மன்னரே, ஓ தலைவரே, துயரால் அழுது கொண்டிருக்கும் பாவியான உமது மனைவிக்கு மறுபடியும் உத்தரவிடுவீராக” என்றாள் {பத்ரை}.(30)

குந்தி தொடர்ந்தாள், “ஓ மன்னா, இப்படியே அந்த அழகான பத்ரை தனது நாயகனின் மரணத்தால் துயருண்டு அழுதாள். இதயத்தின் துயரத்தால் அழுதுகொண்டிருந்த பத்ரை தனது கரத்தால் {தன் கணவனின்} சடலத்தை அணைத்துக் கொண்டாள்.(31)

அப்போது ஓர் உருவமில்லாத குரல், “ஓ பத்ரா, எழுந்து இந்த இடத்தை விட்டு அகன்று போ.  ஓ இனிய புன்னகையுடையவளே, நான் உனக்கு இந்த வரத்தை அளிக்கிறேன். நான் உன்னிடம் சந்ததியை உண்டாக்குவேன்.(32)  எட்டாவது அல்லது பதினாலாவது பிறை கொண்ட நாளில், உன் பருவகால குளியலைக் குளித்துவிட்டு, உனது படுக்கையில் என்னுடன் படுப்பாயாக” என்றது.(33)

உருவமற்ற அந்தக் குரலால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், கற்புடையவளுமான பத்ரை, பிள்ளையைப் பெறுவதற்காகத் தனக்குச் சுட்டப்பட்ட வழியின்படியே நடந்து கொண்டாள்.(34) ஓ பாரதர்களில் காளையே, அவளது {பத்ராவின்} கணவனின் {வியுஷிதாஸ்வனின்} சடலமானது, மூன்று சால்வர்கள் மற்றும் நான்கு மத்ரர்களைக் கொண்ட ஏழு பிள்ளைகளை அவளிடம் பெற்றது.(35) ஓ பாரதர்களில் காளையே, நீரும் என்னிடம் அந்தச் சிறப்பு மிகுந்த வியுஷிதாஸ்வனைப் போல, நீர் அடைந்திருக்கும் உமது ஆன்ம பலத்தால் பிள்ளைகளைப் பெறுவீராக” என்றாள் {குந்தி}.(36)

குந்தியிடம் கைக்கூப்பிய பாண்டு! – ஆதிபர்வம் பகுதி 122-உத்தாலகர் மற்றும் அவரது மகன் ஸ்வேதகேதுவின் வரலாற்றைக் குந்திக்குச் சொன்ன பாண்டு; ஒருத்திக்கு ஒருவன் என்ற நடைமுறையை ஏற்படுத்திய ஸ்வேதகேது; குந்தி தன்னிடம் இருக்கும் மந்திரங்களைப் பற்றி பாண்டுவிடம் சொன்னது; குந்தியிடம் தர்மராஜனை அழைக்கச் சொன்ன பாண்டு…

வைசம்பாயனர் சொன்னார், “தனது அன்பான மனைவியால் {குந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் பாண்டு, ஒழுக்கவிதிகளை நன்கறிந்து, அறம் சார்ந்த வார்த்தைகளில்,(1) “ஓ குந்தி, நீ சொன்னது உண்மைதான். பழங்காலத்தின் வியுஷிதாஸ்வன் நீ சொன்னதைப் போலத்தான் செய்தான். அவன் நிச்சயமாகத் தேவர்களுக்குச் சமமானவனாக இருந்தான்.(2) ஆனால், நான் இப்போது ஒழுக்கம் சார்ந்த அனைத்து விதிகளையும் அறிந்த சிறப்பு மிகுந்த முனிவர்களால் சொல்லப்பட்ட சில நடைமுறைகளைச் சொல்கிறேன்.(3) ஓ அழகான முகமும், இனிய புன்னகையும் கொண்டவளே, முன்பெல்லாம் பெண்கள் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் கணவர்களையோ அல்லது மற்ற உறவினர்களையோ நம்பி இருக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து, தாங்கள் விரும்பியவாறெல்லாம் இன்புற்றிருந்தனர்.(4) ஓ சிறந்த குணங்களைக் கொண்டவளே, அவர்கள் தங்கள் கணவர்களைப் பின்பற்றாமல் இருந்து, அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் இல்லாதிருந்தனர். இருப்பினும், ஓ அழகானவளே, அது பாவம் என்று அப்போது கருதப்படவில்லை. அஃது அந்தக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட நடத்தையாகும்.(5)

இன்றும் அந்த நடைமுறையானது எந்தப் பொறாமையுமின்றிப் பறவைகளாலும், விலங்குகளாலும் கடைப்பிடிக்கப்படுகின்றது.(6) அந்நடத்தையே மேற்கோளாக அங்கீகரிக்கப்பட்டுப் பெரும் முனிவர்களால் மெச்சப்படுகிறது. ஓ வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே, அந்நடத்தை இன்னும் வடக்கு குருக்களுக்குள் {உத்தர குருக்களுக்குள்} நடைமுறையில் இருக்கிறது.(7) பெண்களின் மீது கடுமையில்லாத அந்நடத்தை, நிச்சயமாகப் பழங்காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இன்று வழக்கிலிருக்கும் நடைமுறை, பல காலம் கடந்தே நிறுவப்பட்டது. இப்போதிருக்கும் நடத்தையை யார் நிறுவியது என்றும், அஃது எதற்காக நிறுவப்பட்டது என்பதையும் உனக்குச் சொல்கிறேன்.(8)

உத்தாலகர் என்ற பெயரில் ஒரு பெரு முனிவர் இருந்தார் என்றும், அவருக்குச் சுவேதகேது என்ற ஆன்மத் தகுதிவாய்ந்த மகன் ஒருவர் இருந்தார் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.(9) ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவளே {குந்தியே}, இன்றைய அறம் சார்ந்த நடத்தை அந்த ஸ்வேதகேதுவின் கோபத்தாலேயே நிறுவப்பட்டது. அதன் காரணத்தைக் கேட்பாயாக.(10)

ஒரு நாள், ஸ்வேதகேதுவின் முன்னிலையிலேயே ஒரு பிராமணர், ஸ்வேதகேதுவின் தாயின் கரங்களைப் பற்றி, “நாம் செல்லலாம்” என்றார்[1].(11) (கும்பகோணம் பதிப்பில், இந்தப் பிராமணர் வயது முதிர்ந்தவர் என்றும், கண் பார்வை குறைந்தவர் என்றும், பித்ரு கடன் கழிக்க பிள்ளை வேண்டும் என்று உத்தாலகரிடம் அனுமதிபெற்று அவரது மனைவியை அழைத்துச் சென்றார் என்றும் இருக்கிறது. வேறு எந்தப் பதிப்பிலும் இரண்டு பக்கங்கள் நீளும் இந்தக் குறிப்பு இல்லை.  )தனது தாயின் கரம்பற்றி, அவளை வெளிப்படையாக அழைத்துச் செல்வதைக் கண்டு பெரும் கோபத்தால் தூண்டப்பட்டார் ஸ்வேதகேது.(12) கோபத்திலிருக்கும் தனது மகனைக் கண்ட உத்தாலகர், அவனிடம் {ஸ்வேதகேதுவிடம்}, “ஓ மகனே! கோபமடையாதே. இந்த நடைமுறை பழங்காலத்தில் இருந்தே வழக்கில் உள்ளது.(13) அனைத்து வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த பெண்களும் இந்த உலகத்தில் சுதந்திரமானவர்களே. ஓ மகனே, இக்காரியத்தில், தங்கள் வகைகளைப் பொறுத்தவரை மனிதர்கள் பசுக்களை {விலங்குகளைப்} போலவே செயல்படுகின்றனர்” என்றார்.(14)

இருப்பினும் அந்த முனிவரின் {உத்தாலகரின்} மகன் ஸ்வேதகேது, இவ்வகை நடத்தையை அங்கீகரிக்க மறுத்து, இன்று நடைமுறையில் இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்குமான நடத்தை விதியை இந்த உலகத்தில் நிறுவினார்.(15) ஓ பேரறமுடையவளே, அக்காலத்திலிருந்தே தற்போது வழக்கில் உள்ள நடைமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஆனால், இந்நடைமுறை மற்ற உயிர்வகைகளில் இல்லை.(16) தற்போதைய நடைமுறை நிறுவப்பட்ட பின்பு, பெண்கள் தங்கள் கணவர்களைப் பின்பற்றாதிருப்பது பாவம் என்றானது. அதன்படி, முனிவர் {ஸ்வேதகேது} கொண்டு வந்த வரைமுறையை மீறும் பெண்டிர், கருவைக் கொன்ற குற்றவாளியாகின்றனர்.(17) கன்னிப் பருவத்திலிருந்தே புனிதமாக இருக்கும் அன்பான கற்புடைய மனைவியைக் களங்கப்படுத்துவதால் ஆண்களும் அதே குற்றவாளியாகின்றனர்.(18) ஒரு பெண், தன் கணவனால் பிள்ளை பெறப் பணிக்கப்பட்டு, அஃதை அவள் மறுத்தால், அவளும் அதே போன்ற குற்றவாளியாகிறாள்.(19)

எனவே, ஓ மருட்சியுடையவளே, பழங்காலத்தில், அதற்குப் பழங்கால நடத்தையை மீறி, உத்தாலகரின் மகன் ஸ்வேதகேதுவால் நிறுவப்பட்டதுதான் இந்த நடைமுறை.(20) ஓ வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே, சௌதாசனின் மனைவி மதயந்தி, தனது கணவனால் பிள்ளை பெறப் பணிக்கப்பட்டு விசஷ்ட முனிவரிடம் சென்றாள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(21) அவரிடம் சென்ற அந்த அழகான மதயந்தி அஸ்மகன் என்ற மகனைப் பெற்றாள். அவள் {மதயந்தி} தனது கணவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலேயே அப்படிச் செய்தாள்.(22) ஓ தாமரைக் கண்களுடையவளே {குந்தியே}, ஓ மருண்ட மங்கையே, குரு பரம்பரையின் நீட்சிக்காகக் கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} நாங்கள் எப்படிப் பெறப்பட்டோம் என்பதை நீ அறிவாய்.(23) ஓ குற்றமில்லாதவளே, இந்த மேற்கோள்களைக் கண்டு, அறத்துடன் முரண்படாத எனது ஆணையை நீ நிறைவேற்ற வேண்டும்.(24)

ஓ கணவனுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் இளவரசியே, ஒரு மனைவி, மற்ற நேரங்களில் அவளுக்குச் சுதந்திரம் தேவைப்பட்டாலும், தனது மாதவிடாய் முடிந்ததும், எப்போதும் தனது கணவனை நாட வேண்டும் என்று ஒழுக்க விதிகளை அறிந்தவர்களால் சொல்லப்பட்டுள்ளது. இக்காரியத்தை ஞானமுள்ளோர் தொன்மையான நடைமுறை என்கின்றனர்.(25,26) ஆனால், ஒரு காரியம் பாவமானதோ, பாவமற்றதோ, கணவன் பணிப்பதை மனைவியர் செய்வது அவர்களது கடமை என்று வேதங்கள் தீர்மானிக்கின்றன.(27) குறிப்பாக, ஓ களங்கமில்லாதவளே, உற்பத்தி திறனை இழந்த நான், பிள்ளைப்பேற்றைக் காண விரும்புவதால், நீ மேலும் அதிகமாக எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.(28)  ஓ இனிமையானவளே, உன்னை இக்காரியத்தை ஏற்க வைக்கச் சிவந்த விரல்களுடைய எனது கரங்களைத் தாமரையாலான குவளையாய்க் குவித்து, அவற்றை எனது தலைக்கு மேல் வைத்துக் கேட்கிறேன்.(29) ஓ ஆழ்ந்த பார்வை கொண்டவளே {குந்தியே}, எனது கட்டளையின் பேரில் நீ, உயர்ந்த ஆன்மத் தகுதியுடைய பிராமணர் மூலம் பிள்ளை பெற வேண்டும். ஓ அழகிய இடையுடையவளே, நீ செய்யும் அந்தக் காரியத்தால், நான், பிள்ளைகளால் அருளப்பட்டவர்கள் செல்லும் இடத்திற்குச் செல்வேன்” என்றான்.(30)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “எதிரி நகரங்களை அடக்கியவனான அந்தப் பாண்டு இப்படிச் சொன்னதும், தன் தலைவனால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும், தனது கணவனுக்கு நன்மை பயக்கக்கூடியதுமான எந்தச் செயலையும் கவனத்துடன் செய்யும் அவ்வழகிய குந்தி,(31) “ஓ தலைவா, எனது கன்னிப்பருவத்தில், எனது தந்தையின் {வளர்ப்புத் தந்தை குந்திபோஜனின்} வசிப்பிடத்தில் விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் கடும் விரதமிருக்கும் பெரும் ஆன்மத் தகுதியுடைய பிராமணர்களையும் மரியாதையுடன் கவனித்து வந்தேன்.(32) ஒருநாள், மனத்தைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவரும், அறத்தின் புதிர்களில் ஞானம் கொண்டவரும், துர்வாசர் என்று மக்களால் அழைக்கப்படுபவருமான ஒரு பிராமணரைப் பணிவுடன் கவனித்து அவரது அருளைப் பெற்றேன்.(33) எனது சேவையால் மனநிறைவுற்ற அந்தப் பிராமணர் {துர்வாசர்}, தேவர்களில் எவரையும் எனது இருப்புக்கு அழைக்கும் ஒரு மந்திரத்தை எனக்கு வரமாகத் தந்தார்.(34)

அந்த முனிவர், “இந்த மந்திரத்தைக் கொண்டு தேவர்களில் எவனை நீ அழைக்கிறாயோ, அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன்னை அணுகி, உனது விருப்பத்திற்குக் கீழ்ப்படிவான்.(35) ஓ இளவரசி, நீ அவனது அருளால் பிள்ளை பெறுவாய்” என்றார்.

ஓ பாரதரே, நான் எனது தந்தையின் இல்லத்தில் வாழ்ந்த போது, அந்த பிராமணர் என்னிடம் இப்படிச் சொன்னார்.(36) அந்தப் பிராமணரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் பொய்யாக முடியாது. அந்த வரத்தின் கனியை அடையத் தகுந்த காலமும் வந்துவிட்டது. ஓ அரச முனிவரே {பாண்டுவே}, நன்மக்களைப் பெற உம்மால் பணிக்கப்பட்டவளான என்னால் தேவர்களில் எவரையும் அழைக்க முடியும்.(37) ஓ உண்மை பேசும் மனிதர்களில் முதன்மையானவரே, நான் தேவர்களில் யாரை அழைப்பது என்று எனக்குச் சொல்வீராக. இக்காரியத்தில், நான் உமது ஆணைக்காகக் காத்திருக்கிறேன் என்பதையும் அறிந்து கொள்வீராக” என்றாள்.(38)

இதைக் கேட்ட பாண்டு, “ஓ அழகானவளே {குந்தியே}, நற்பேறுபெற்றவளே, நமது விருப்பத்தை இன்றே ஈடேற்றிக் கொள்ள, நீதி தேவனை {யமதர்மராஜனை} அழைப்பாயாக. அவனே தேவர்களில் அறம் மிக்கவன்.(39) தர்மதேவனாலும், அறத்தாலும் நம்மைப் பாவத்தால் ஒருபோதும் களங்கப்படுத்த முடியாது ஓ அழகிய இளவரசியே, அதனால், புனிதமற்ற எந்தக் காரியத்தையும் நாம் செய்யவில்லை என்று உலகமும் நினைக்கும்.(40) அவன் {தர்மதேவன்} மூலமாக நாம் பெறும் மகன், அறம்சார்ந்து குருக்களில் முதன்மையானவனாக இருப்பான் என்பது நிச்சயம். நீதி மற்றும் ஒழுக்கத்திற்கு அதிபதியான {தர்ம} தேவனால் பெறப்படுபவன், தனது இதயத்தைப் பாவகாரியத்திலும், புனிதமற்ற காரியத்திலும் ஈடுபடுத்த மாட்டான்.(41) எனவே, ஓ இனிய புன்னகையுடையவளே, அறத்தை உன் கண்முன் நிலையாக வைத்து, புனிதமான நோன்புகளைக் கடைப்பிடித்து, நீதிக்கும், அறத்திற்குமான தேவனை உனது மந்திரங்களின் உதவியைக் கொண்டு அழைப்பாயாக” என்றான் {பாண்டு}.(42)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு, பெண்களில் சிறந்த குந்தி, தனது தலைவனால் இப்படிச் சொல்லப்பட்டு, “அப்படியே ஆகட்டும்” என்றாள். அவனுக்குத் தலைவணங்கி, மரியாதையுடன் அவனை {பாண்டுவை} வலம் வந்து, அவன் குறித்த காரியத்தை ஏற்றுக் கொண்டாள்” {என்றார் வைசம்பாயனர்}.(43)

யுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன் பிறப்பு! – ஆதிபர்வம் பகுதி 123-(சம்பவ பர்வம் – 59)குந்தி தர்மதேவனின் மூலமாக யுதிஷ்டிரனையும், வாயு தேவனின் மூலமாக பீமனையும், இந்திரனின் மூலமாக அர்ஜுனனையும் ஈன்றெடுத்தல்; ஒவ்வொருவர் பிறக்கும் போதும் சொன்ன அசரீரியின் வாக்குகள்; நான்காவது பிள்ளை பெற்றுக் கொள்ளுமாறு குந்தியிடம் வேண்டிய பாண்டு; அதை மறுத்த குந்தி

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஜனமேஜயா! காந்தாரி கருவுற்று ஒரு முழு வருடம் முடிந்த பிறகுதான், குந்தி தர்மதேவனைப் பிள்ளைவரத்திற்காக அழைத்தாள்.(1) அவள் நேரத்தைக் கடத்தாமல், தேவர்களுக்குத் தகுந்த வேள்வி நடத்திச் சிறிது காலத்திற்கு முன் துர்வாசர் அவளுக்குக் கொடுத்திருந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னாள்.(2) தர்ம தேவன், அவளது மந்திரத்தால் கட்டுண்டு, சூரியனைப் போன்ற தனது தேரில் குந்தி இருக்கும் இடத்திற்கு வந்து,(3) புன்னகைத்து, “ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்?” என்று கேட்டான். குந்தி பதிலுக்குப் புன்னகைத்து, “நீர் எனக்குப் பிள்ளைப்பேறு தர வேண்டும்” என்றாள்.(4) அதன் பிறகு அந்த அழகான குந்தி, அந்த நீதி தேவனுடன் ஆன்ம வடிவில் கலந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும் மகனைப் பெற்றாள்.(5)

பிற்காலத்தில் பெரும் புகழை அடையப்போகும் அந்த அற்புதமான குழந்தையை, அபிஜித் என்று அழைக்கப்படும் எட்டாவது முகூர்த்தத்தில், நடுப்பகல் வேளையில், ஏழாவது {ஐப்பசி} மாதத்தின் மிகுந்த அதிர்ஷ்டமான நாளான, ஐந்தாவது வளர்பிறையில் {பஞ்சமி திதியில்}, ஜேஷ்ட (கேட்டை) நட்சத்திரம் சந்திர லக்னத்தில் கலந்திருந்தபோது {விருச்சிக ராசி} பெற்றெடுத்தாள்[1].(கும்பகோணம் பதிப்பில், “குந்தி, ஸூர்யன் துலாராசிலிருக்கும் போது, நல்ல லக்ஷணங்களோடு கூடிய பூர்ண திதியாகிய பஞ்சமியில், இந்தினைத் தேவதையாகவுடைய கேட்டை நக்ஷத்திரம், சந்திரனோடு சேர்ந்திருக்கையில், அபிஜிட் என்று சொல்லப்பட்ட எட்டாவது முகூர்த்தத்தில் நிறைந்த புகழுள்ள சிறந்த பித்திரனைப் பெற்றாள்” என்றிருக்கிறது.)

அக்குழந்தை பிறந்தவுடன், ஓர் அசரீரி,(6,7) “இக்குழந்தை மனிதர்களில் சிறந்தவனாகவும், அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனுமாகவும் இருப்பான். பெரும் ஆற்றலும், பேச்சில் உண்மையும் கொண்டு, நிச்சயமாக இவன் இந்தப் பூமியை ஆள்வான்.(8) பாண்டுவின் இந்த முதல் குழந்தை யுதிஷ்டிரன்[2] என்ற பெயரால் அறியப்படுவான்.(யுதிஷ்டிரன் என்றால் போரில் ஓடாமல் நிற்பவன் என்று பொருளாம்.) இவன், வீரமும் நேர்மையும் கொண்டு, மூவுலகத்தாலும் அறியப்பட்ட, புகழ் நிறைந்த மன்னனாக இருப்பான்” என்றது.

அறம்சார்ந்த மகனை {யுதிஷ்டிரனை} அடைந்த பாண்டு, மறுபடியும் தனது மனைவியிடம்,(9,10) “க்ஷத்திரியர்கள் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். அப்படியில்லையெனின் அவன் க்ஷத்திரியன் இல்லை என்பது ஞானமுள்ளோர் தீர்மானம். எனவே, ஒரு பெரும் பலம் நிறைந்த குழந்தையைக் கேட்பாயாக” என்றான். இப்படித் தனது தலைவனால் {பாண்டுவால்} பணிக்கப்பட்ட குந்தி வாயு தேவனை அழைத்தாள்.(11) இப்படி அழைக்கப்பட்ட அந்தப் பெரும் வலிமை கொண்ட காற்றுத் தேவன் {வாயு}, மானை வாகனமாகக் கொண்டு அவளிடம் வந்து, “ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்? உனது இதயத்தில் இருப்பதை என்னிடம் சொல்வாயாக” என்று கேட்டான்.(12) அவள் அடக்கத்துடன் புன்னகைத்து, “ஓ தேவர்களில் சிறந்தவரே, எனக்குப் பெரிய உடலுறுப்புகளும் பெரும் பலமும் கொண்டு, அனைவரின் செருக்கையும் சிறுமைப்படுத்தக்கூடிய ஒரு பிள்ளை வேண்டும்” என்று கேட்டாள்.(13)

அந்த வாயு தேவன், பிற்காலத்தில் பீமன்[3] என்று அழைக்கப்பட்டவனும், (பீமன் என்றால் அனைவருக்கும் அச்சத்தை ஊட்டுபவன் என்று பொருளாம்)வலிமையான கரங்களும், முரட்டுத்தனமான ஆற்றலை கொண்டவனுமாக ஒரு குழந்தையை அவளிடம் பெற்றான். ஓ பாரதா! அந்தக் குழந்தை பிறந்ததும், முன்பைப் போலவே ஓர் அசரீரி,(14) “இந்தக் குழந்தை பலம் நிறைந்தவர்களில் முதன்மையானவனாக, இயல்புக்குமிக்க பலம் கொண்டவனாக இருப்பான்” என்றது. ஓ பாரதா, உனக்கு நான் விருகோதரனின் {பீமனின்} பிறப்பை ஒட்டிய ஓர் அற்புதமான நிகழ்ச்சியை நிச்சயம் சொல்ல வேண்டும்.(15)

அவன் பிறந்ததும் தனது தாயின் மடியில் இருந்து மலையின் சாரலில் விழுந்தான். அவன் விழுந்த வேகத்தில் கீழே இருந்த பெரும்பாறையானது சுக்குநூறாக உடைந்து சிதறியது. ஆனால், அவனுக்கு உடலில் சிறு காயமும் ஏற்படவில்லை. ஒரு புலியைக் கண்டு பயம் கொண்ட குந்தி, தனது மடியில் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதை மறந்து எழுந்ததாலேயே அவன் கீழே விழ நேர்ந்தது. அவள் அப்படி எழுகையில், இடியைப் போன்ற உறுதியுடன் இருந்த அக்குழந்தை, மலையின் மார்பில் {சாரலில்} விழுந்து, அங்கே இருந்த கற்பரப்பை சுக்குநூறாக்கியது. இதைக் கண்ட பாண்டு பெரும் ஆச்சரியமடைந்தான்[4].(16-18)(கும்பகோணம் பதிப்பில், “விருகோதரன் பிறந்த மாத்திரத்தில் மற்றோர் அதிக ஆச்சரியமுண்டாயிற்று. அதாவது, அவன் தாயாரிடுப்பிலிருந்து விழுந்து தன் அங்கம்பட்டதினால் கருங்கல்லைப் பொடியசாகச் செய்தான். யதுபுத்திரியாகிய குந்தியோ பத்தாவது நாள் புத்திரனுடன் கூட மிக்க அழகான தடாகத்தில் போய் ஸ்நானஞ்செய்து பிள்ளையை எடுத்துக் கொண்டு, தேவதாபூஜை செய்வதற்காக ஆச்ரமத்திலிருந்து புறப்பட்டாள். பரதஸ்ரேஷ்டரே! அப்போது அவள் மலையினோரமாகப் போகையில் ஒரு பெரும்புலி அவளைக் கொல்ல எண்ணங்கொண்டு மலையின் குகையிலிருந்து புறப்பட்டது. தேவதைக்கொப்பான பராக்ரமுள்ள பாண்டு உயர்ந்த வில்லை வளைத்து மூன்று பாணங்களினால் ஓடிவரும் அந்தப் புலியைப் பிளந்தான். பேரிரைச்சலினால் அம்மலைக்குகையை நிரப்புகின்ற அந்தப் புலியைக் கண்டு பயத்தினால் குந்தி மலைமேலேற ஆரம்பித்தாள். பரதஸ்ரேஷ்டரே! அப்போது அவள் பயந்ததனால் அவள் இருப்பிலிருந்து குழந்தை விழுந்தது. அவள் பருவதத்தின் மேலிருக்கையில் குழந்தை கீழே விழுந்தது. அந்தச் சிசு இந்தினால் விடப்பட்ட வஜ்ராயுதம் போலக் கல்லைத் தூளாக்கிற்று. பிறகு, பாண்டு புத்ரனிடமுள்ள நேசத்தினால் மலையின் சரிவுக்கு ஓடினான். விழுந்த அந்தக் குழந்தையின் அங்கம்பட்டு அந்தப் பாறை நூறுசுக்காகப் பொடிக்கப்பட்டிருந்தது. பொடியாகச் செய்யப்பட்ட சிலையைக் கண்டு பாண்டு மிக்க வியப்படைந்தான். புலிக்கொப்பான பராக்ரமமுள்ள பாண்டு, பீமன் பிறந்தபோது மலைமேலிருந்து பெருங்கத்தல் கத்தின  ஒரு புலியைக் கண்டான். கௌரவபுத்ரனாகிய பாண்டு தன் மனைவியைக் காப்பதற்காகவும், மைந்தனைக் காப்பதற்காகவும் எப்போதும் கையில் அம்பும் வில்லுமாக இருந்தான். ஸிம்மத்தில் குருவும், துலாத்தில் சூர்யனும், மக நக்ஷத்திரத்தில் சந்திரனும் சேர்ந்தபோது சுபமான திரயோதசிதிதியில் பிதிர்களின் முகூர்த்ததில் அந்தக் குந்தி உறுதியான பராக்கிரமமுள்ள பீமனைப் பெற்றாள்” என்றிருக்கிறது. பீமன் பிறந்த நாள், நட்சத்திர, ராசிக் குறிப்புகள் கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, பிபேக்திப்ராயின் பதிப்பிலோ இல்லை.)

ஓ பாரதர்களில் சிறந்தவனே, முழுப் பூமியையும் ஆண்ட துரியோதனுக்கும், விருகோதரன் {பீமன்} பிறந்த அந்த நாளே, பிறந்த நாளாக அமைந்தது.(19) விருகோதரன் பிறந்த பிறகு, பாண்டு மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தான், ‘உலகப் புகழ் பெறும் மிகச் சிறந்த மகனை நான் எப்படி அடையப் போகிறேன்?(20) உலகின் அனைத்துப் பொருட்களும் விதியையும் விடாமுயற்சியையும் சார்ந்தே இருக்கின்றன. ஆனால் காலத்திற்கேற்ற முயற்சியில்லாமல் விதியால் வெற்றியடைய முடியாது.(21) இந்திரனே தேவர்களுக்குத் தலைவன் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். நிச்சயமாக, அவனே அளவிடமுடியாத பலமும், சக்தியும், அற்றலும், மகிமையும் கொண்டவனாவான்.(22) எனது துறவால் அவனை மனநிறைவு கொள்ளச் செய்து, அவனைப் போன்ற பெரும் பலம் கொண்ட மகனை நான் பெறுவேன். நிச்சயமாக அவன் தரும் மகன், எல்லோரினும் சிறந்தவனாக, எல்லா மனிதரையும், மனிதரல்லாதவரையும் போர்க்களத்தில் வெல்பவனாக இருப்பான். எனவே, நான் எனது இதயத்தாலும், செயலாலும், பேச்சாலும் கடும் துறவை மேற்கொள்ளப் போகிறேன்.’ என்ற மனதிற்குள் தீர்மானித்தான்.(23,24)

அதன்பின்பு, குருக்களின் மன்னனான பாண்டு, பெரும் முனிவர்களுடன் ஆலோசனை செய்து, குந்தியை ஒரு முழு வருடத்திற்கு நோன்பிருக்கக் கட்டளையிட்டான்.(25) ஓ பாரதா, அதே நேரத்தில் அவனும் ஒற்றைக் காலில் நின்று கடுந்தவமும், நோன்பும் செய்யத் தொடங்கினான்.(26) காலையிலிருந்து மாலை வரை மனத்தை ஒருமுகப்படுத்தித் தேவர்களின் தலைவனை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக கடும் தவத்தைச் செய்தான். நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திரன் பாண்டுவை அணுகி,(27) அவனிடம், “ஓ மன்னா! மூவுலகத்தாலும் கொண்டாடப்படும் மகனை நான் உனக்குத் தருவேன். அவன் பிராமணர்கள், பசுக்கள் மற்றும் நேர்மையான மனிதர்களின் நலனைக் காப்பான்.(28) நான் உனக்குக் கொடுக்கும் மகன், தீயவர்களை அழித்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பான். அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனாக இருந்து, எந்த எதிரிகளாலும் வென்றிட இயலாதவனாக இருப்பான்” என்றான்.(29)

வாசவனால் (தேவர்கள் மன்னனால் {இந்திரனால்}) இவ்வாறு சொல்லப்பட்ட குரு பரம்பரையின் அறம்சார்ந்த மன்னன் {பாண்டு}, அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்து, குந்தியிடம்,(30) “ஓ நற்பேறு பெற்றவளே, உனது நோன்பு வென்றது. தேவர்களின் தலைவன் மனநிறைவை அடைந்து, உனது விருப்பத்தைப்போலவே, தெய்வீக சாதனைகளையும் பெரும் புகழையும் அடையப் போகும் மகனை உனக்குக் கொடுக்க விரும்புகிறான்.(31) அந்த மகன் அனைத்து எதிரிகளையும் ஒடுக்குபவனாகவும், பெரும் ஞானமுள்ளவனாகவும் இருப்பான். பெரும் ஆன்மாவைக் கொண்டவனாகும், கதிரவனுக்கு நிகரான பிரகாசத்துடன் கூடியவனாகவும், போர்க்களத்தில் நிகரற்றவனாகவும், பெரும் சாதனைகளைச் செய்பவனாகவும் அவன் இருப்பான். அவன் பேரழகனாகவும் இருப்பான். ஓ அழகிய இடையும் இனிய புன்னகையும் கொண்டவளே, தேவர்களின் தலைவன் உன்னிடம் கருணை கொண்டிருக்கிறான். அவனை அழைத்து, க்ஷத்திரிய அறங்களுக்கு இருப்பிடமான மகனைப் பெறுவாயாக” என்றான்.(32,33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், அந்தக் கொண்டாடப்படும் குந்தி, தனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டதும், சக்ரனை (தேவர்களின் மன்னன்) அழைத்தாள். அப்படி அழைத்ததால், அவன் அவளிடம் வந்து, அர்ஜுனன் என்று பின்பு அழைக்கப்பட்டவனை அவளிடம் பெற்றான்[5].(34) (கும்பகோணம் பதிப்பில், “பூர்வபல்குனியும் {பூரம் நட்சத்திரமும்}, உத்தர பல்குனியுஞ்சேர்ந்த {உத்தர நட்சத்திரமும் சேர்ந்த} பகலில் பால்குன மாஸத்திற் {பங்குனி மாதத்தில்} பிறந்ததனால், அவன் பால்குனன் அல்லது பல்குனன் என்று பெயர் பெற்றான்” என்றிருக்கிறது.)அக்குழந்தை பிறந்தவுடன், வானத்தை அடைத்து நிற்கும் மேகங்களின் ஆழமான பேரொலியுடன் ஓர் அசரீரி குந்தியிடம் பேசியது.(35) அஃது அந்த ஆசிரமத்தில் வசிக்கும் எல்லா உயிருக்கும் கேட்டது,(36) “ஓ குந்தி, இந்த உனது குழந்தை, சக்தியால் கார்த்தவீரியனுக்கும், ஆற்றலில் சிவனுக்கும் சமமானவன். சக்ரனை {இந்திரனைப்} போல வெல்லப்பட முடியாதவனாக இருக்கும் அவன், உன் புகழை எங்கும் பரப்புவான்.(37)  அதிதியின் மகிழ்ச்சியை அதிகரித்த விஷ்ணுவைப் (அதிதியின் இளைய மகன்) போல, இந்தக் குழந்தை உனது மகிழ்ச்சியைக் கூட்டுவான்.(38) மத்ரர்களையும், குருக்களையும், சோமகர்களையும், சேதி, காசி, கரூஷ நாட்டு மக்களையும் அடக்கிக் குருக்களின் வளமையை இவன் பாதுகாப்பான்.(39) (மன்னன் ஸ்வேதகேது நடத்தும் வேள்வியின் தெய்வீக பானம் அக்னிக்குத் தெவிட்டியதால் {செரிக்காமல் இருந்ததால், அஜீரணத்தைப் போக்க}) காண்டவ வனத்தில் வசிக்கும் விலங்குகளின் கொழுப்பை, இவனுடைய கரத்தின் பலத்தால் பெற்ற அக்னி பெரும் மனநிறைவு அடைவான்.(40)

இந்தப் பலம்வாய்ந்த வீரன், உலகத்தின் பலவீனமான ஏகாதிபதிகளை அழித்து, தன் சகோதரர்களுடன் மூன்று பெரும் வேள்விகளைச் செய்வான்.(41) ஓ குந்தி, ஆற்றலில் இவன் ஜமதக்னேயனையோ {பரசுராமரையோ}, விஷ்ணுவையோ  போல இருப்பான். பெரும் பலம் மிக்க மனிதர்களில் முதன்மையான இவன், பெரும் புகழை அடைவான்.(42) போரில் இவன் தன் ஆற்றலால் தேவர்களுக்குத் தேவனான சங்கரனை (மகாதேவனை) மனநிறைவு கொள்ளச் செய்து அவனிடம் இருந்து பாசுபதம் எனும் ஆயுதத்தைப் பெறுவான்.(43) இந்தப் பலம்வாய்ந்த கரமுடையவன் இந்திரனின் கட்டளையால் தேவர்களுக்கு எதிரிகளான நிவாதகவசர்கள் எனும் தைத்தியர்களைக் கொல்வான். (44) இவன் அனைத்து வகையான தெய்வீக ஆயுதங்களையும் பெற்றுத் தனது குலத்தின் நற்பேறுகளை மீட்டெடுப்பான்” என்றது அந்த அசரீரி.(45)

குந்தி, தனது அறையில் படுத்திருக்கும்போது, இயல்புக்குமிக்க இந்த வார்த்தைகளைக் கேட்டாள். நூறு சிகரங்களைக் கொண்ட அந்த மலையில் வசித்த துறவிகளும், தத்தமது தேர்களில் அமர்ந்திருந்த இந்திரனுடன் கூடிய தேவர்களும் உரக்கச் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தனர்.(46,47) (அரூபமான) பேரிகை முழக்கங்கள் முழு ஆகாயத்தையும் நிறைத்தன. அங்கே கண்ணுக்குத்தெரியாத தூதுவர்கள் மகிழ்ச்சிக் கூச்சல்களுடன் அந்தப் பகுதி முழுவதும் மலர்மாரியைப் பொழிந்தனர்.(48) பல்வேறு தேவர் குழுக்களும் அங்கே கூடி பிருதையின் மைந்தனுக்குத் தங்கள் மரியாதையைப் செலுத்தினர். கத்ருவின் மைந்தர்களும் (நாகர்களும்), வினதையின் மைந்தனும், கந்தர்வர்களும்,(49) படைப்புத் தேவர்களும், பரத்வாஜர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர் மற்றும் சூரியன் தொலைந்த போது உலகத்துக்கு ஒளியூட்டிய அத்ரி முனிவருடன் அடங்கிய ஏழு பெருமுனிவர்களும் (சப்த ரிஷிகளும்) அங்கே வந்தனர்.(50)

மரீசி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, படைப்புத் தலைவனான தக்ஷன் மற்றும் கந்தர்வர்களும் அப்சரஸ்களும் அங்கே வந்தனர்.(51) தெய்வீக மாலைகளுடனும், அனைத்து ஆபரணங்களுடனும், அழகிய ஆடைகளுடனும் வந்த அப்சரஸ்களின் பல குழுக்கள் அங்கே வந்து மகிழ்ச்சியுடன் ஆடி, அந்தப் பீபத்சுவின் (அர்ஜுனனின்) புகழைப் பாடினர்.(52) பெரும் முனிவர்கள் வாழ்த்து மந்திரங்களை உச்சரித்தனர். கந்தர்வர்களுடன் கூடிய தும்புருவானாவன் அழகிய சந்தங்களுடன் பாடினான்.(53)

ஓ மன்னா! பீமசேனன், உக்ரசேனன், ஊர்ணாயுஸ், அனகன், கோபதி, திருதராஷ்டிரன், சூர்யவர்ச்சஸ், எட்டாவதாக யுகபன், திரணபன், கார்ஷிணி, நந்தி, சித்ரரதன், பதிமூன்றாவதாகச் சாலிசிரஸ், பதினான்காவதாகப் பர்ஜன்யன், பதினைந்தாவதாகக் கலி, பட்டியலில் பதினாறாவதாக நாரதர், பிருஹதன், விரிஹகன், பேரான்மாவானா கராளன், பிரம்மச்சாரி, பஹுகுணன், பெரும் புகழுடைய சுவணன்ணா, விஸ்வாவசு, புமன்யு, சுசந்திரன், சாம் மற்றும் அற்புதமான குரல் வளமிக்க ஹாஹா மற்றும் ஹூஹூவின் கொண்டாடப்பட்ட குழுக்களடங்கிய தெய்வீகக் கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர்.(54-58) பெரிய கண்களையுடைய பல சிறப்பான அப்சரஸ்களும், அனைத்து ஆபரணங்களுடன் வந்து அங்கே ஆடிப்பாடினர்.(59)

அநூசானை, அநவத்யை, குணமுக்யை, குணாவரை, அத்ரிகை, சோமை, மிச்ரகேசி, அலம்புஷை, மரீசி, சுசிகா, வித்யுபர்ணை, திலோத்தமை, அம்பிகை, லக்ஷ்மணை, க்ஷேமை, தேவி, ரம்பை, மனோரமை, அஸிதை, சுபாஹு, சுப்ரியை, சுவபுஸ், புண்டரீகை, சுகந்தை, சுரசை, பிரமாதினி, கம்யை, சாரத்வதி ஆகிய அனைத்து அப்சரஸ்களும் சேர்ந்து ஆடினர். மேனகை, சஹஜன்யை, கர்ணிகா, புஞ்சிகஸ்தலை,(60-63) ருதுஸ்தலை, கிருடச்சி {கிருதாசி}, விச்வாசி, பூர்வசித்தி, கொண்டாடப்படும் உம்லோசை, பத்தாவதாகப் பிரம்லோசை, பதினோராவதாக ஊர்வசி ஆகிய பெரிய கண்களையுடைய தேவலோக மங்கையர் அங்கே வந்து கூட்டமாகப் பாடினர். தாத்ரி {தாதா}, அர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பகன்,(64,65) இந்திரன், விஸ்வஸ்வத் {விவஸ்வான்}, பூஷன், துவஷ்த்ரி {துவஷ்டா}, பர்ஜன்யன் அல்லது விஷ்ணு, ஆகிய பனிரெண்டு ஆதித்யர்களும் பாண்டுவின் மகனைப் பெருமைப்படுத்த அங்கே வந்தனர். ஓ மன்னா! மிருகவியாதன், சர்ப்பன், கொண்டாடப்படும் நிருருதி,(66,67) அஜைய்கபாதன், அஹிவிரதனா, பினாகின், தஹனன், ஈஸ்வவன், கபாலின் {கபாலி}, ஸ்தாணு மற்றும் சிறப்பு மிகுந்த பகன் ஆகிய பதினோரு ருத்ரர்களும் அங்கே வந்தனர்.(68)

அஸ்வினி இரட்டையர்களும், எட்டு வசுக்களும், பெரும்பலம் வாய்ந்த மருத்துகளும், விஸ்வதேவர்களும், சத்யஸ்களும் அங்கே வந்தனர்.(69) கார்க்கோடகன், வாசுகி, கச்சபன், குண்டன் மற்றும் பெரும் நாகனான தக்ஷகன் ஆகிய பெரும் பலம்வாய்ந்த உயர்ந்த அறத்தகுதி கொண்ட கோபக்காரப் பாம்புகளும் அங்கே வந்தனர்.(70,71) தார்க்ஷ்யன், அரிஷ்டநேமி, கருடன், அசிதத்வஜன் மற்றும் பல நாகர்களும் அங்கே வந்தனர். வினதையின் குலத்தில் வந்த அருணனும் ஆருணியும் அங்கே வந்தனர்.(72) தத்தம் ரதங்களிலோ, மலைச்சிகரங்களிலோ அமர்ந்திருந்த தேவர்களையும் மற்றவர்களையும் ஆன்ம வெற்றிக் கொண்ட பெரும் முனிவர்கள் மட்டுமே கண்டனர்.(73) இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அந்தச் சிறந்த முனிவர்கள் ஆச்சரியமடைந்து, பாண்டுவின் புதல்வர்களிடம் மேலும் அன்பும் பாசமும் கொண்டனர்.(74)

அந்தக் கொண்டாடப்பட்ட பாண்டு, மேலும் பிள்ளைகள் பெற எண்ணங்கொண்டு (வேறு தேவர்களை அழைக்க) தான் மணந்து வந்த மனைவியிடம் பேச விரும்பினான்.(75) ஆனால் குந்தி அவனிடம், “துயர் நிறைந்த காலத்தில்கூட, நான்காவது பிரசவத்தை ஞானமுள்ளோர் அனுமதிக்கவில்லை. நான்கு மனிதர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண் ஸ்வாரினி (தாழ்ந்தவள்) என்று அழைக்கப்படுகிறாள். அதே சமயம் ஐவருடன் உறவு வைத்தால் அவள் விலைமகளாகிறாள்.(76) எனவே, ஓ கற்றவரே, இது சம்பந்தமான சாத்திரங்களை நீர் அறிந்தும், ஏன் பிள்ளை பெறும் விருப்பத்தால், என்னிடம் நீதியை மறந்து பேசுகிறீர்?” என்று கேட்டாள்.(77)

நான் முட்டாளா?” என்றாள் குந்தி – ஆதிபர்வம் பகுதி 124-சம்பவ பர்வம் – 60)பாண்டுவிடம் பேசிய மாத்ரி, மாத்ரிக்காகக் குந்தியிடம் பேசிய நகுலன்; நகுலன் மற்றும் சகாதேவன் பிறப்பு; பொறாமையடைந்த குந்தி; பாண்டவர்களுக்குப் பெயர் சூட்டல்; பாண்டவர்களின் வளர்ச்சி

வைசம்பாயனர் சொன்னார், “குந்தியின் மகன்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும் பிறந்த பிறகு, மத்ர மன்னனின் மகள் {மாத்ரி} பாண்டுவிடம்,(1) “ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, நீர் எனக்கு நன்மை செய்யவில்லையென்று நான் உம்மைக் குறைசொல்லவில்லை. ஓ பாவங்களற்றவரே, பிறப்பால் நான் குந்தியைவிட உயர்ந்தவளாக இருப்பினும், இருப்பு நிலவரத்தில் நான் தாழ்ந்தவளாகவே இருக்கிறேன் என்று குறைசொல்லவில்லை.(2) ஓ குரு குலத்தவரே, காந்தாரி நூறு மகன்களைப் பெற்றுவிட்டாள் என்றும் நான் கவலை கொள்ளவில்லை.(3) குந்தியும் நானும் இணையானவர்களாகவே இருந்தாலும் உமக்குக் குந்தியின் மூலமாக பிள்ளைகள் இருக்க, நான் பிள்ளையில்லாமல் இருப்பதே என் பெரும் துயராகும்.(4) குந்திபோஜனின் மகள் நான் பிள்ளைப்பேறடைய விட்டாள் என்றால், அவள், எனக்கு நன்மை செய்ததோடு மட்டுமல்லாமல் உமக்கும் நன்மை செய்ததாகவே இருக்கும்.(5) அவள் எனது சக்காளத்தியாக இருப்பதால், அவளிடம் எனது நன்மையைக் கருதச் சொல்ல என்னால் முடியவில்லை. ஓ மன்னரே, நீர் என்னிடம் அன்பாக இருப்பது உண்மையென்றால், அவளிடம் எனது விருப்பத்தை நிறைவேற்றச் சொல்வீராக” என்றாள்.(6)

இதைக் கேட்ட பாண்டு, “ஓ மாத்ரி, இந்த எண்ணம் எனது மனத்திலும் ஓடிக் கொண்டுதான் இருந்தது, ஆனால், நீ அதை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று நினைத்தே, அதை உன்னிடம் சொல்லவில்லை.(7) இப்போது உனது விருப்பதை அறிந்து கொண்டதால், நிச்சயம் முயற்சி செய்வேன். நான் கேட்டு குந்தி மறுக்க மாட்டாள் என்றே நினைக்கிறேன்” என்றான்”.(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், அதன்பிறகு பாண்டு குந்தியிடம் தனிமையில், “ஓ குந்தி, என் குல வளர்ச்சிக்காகவும், உலகத்தின் நன்மைக்காகவும் எனக்கும் மேலும் சில பிள்ளைகளைக் கொடுப்பாயாக. ஓ அருளப்பட்டவளே, நானும், என் மூதாதையர்களும், ஏன் நீயும்கூட எப்போதும் ஈமப்பிண்டம் பெற எது வழிவகுக்குமோ அஃதை அளிப்பாயாக. ஓ, எனக்கு நன்மையானதைச் செய்து, உண்மையில் நன்மைகளில் சிறந்ததை எனக்கும் இந்த உலகத்திற்கும் கொடுப்பாயாக.(9,10) ஓ, அழியா புகழை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டு, உனக்குக் கடுமையானதையும் செய்வாயாக. இந்திரன் தேவர்களின் அரசுரிமையை அடைந்துவிட்டாலும் கூட, புகழுக்காகவே வேள்விகளைச் செய்வதைப் பார்.(11) ஓ அழகியே, பிராமணர்கள் வேதங்களை நன்கறிந்து கொண்டு, உயர்ந்த தவத்தகுதியை அடைந்துவிட்டாலும் கூட, புகழுக்காகவே தங்கள் ஆன்ம ஆசான்களை மரியாதையுடன் அணுகுகின்றனர்.(12) அதே போலவே, அரச முனிகள் அனைவரும், தவத்தை செல்வமாகக் கொண்ட பிராமணர்களும் சாதித்துவிட்டாலும், புகழுக்காகவே மிகக்கடினமான தவத்தை சாதனைகளைச் செய்கின்றனர்.(13) எனவே, ஓ பழியற்றவளே, ஒரு ஓடத்தைக் கொடுத்து (சந்ததியை அடைவதற்கான வழிகளை அருளி) இந்த மாத்ரியைக் காத்து, அவளைப் பிள்ளைகளுக்குத் தாயாகச் செய்து அழிவிலா புகழை அடைவாயாக” என்றான் {பாண்டு}.(14)

தனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட குந்தி, அதற்குச் சம்மதித்து மாத்ரியிடம், “நேரத்தையிழக்காமல், தேவர்களில் எவரையாவது நினைப்பாயாக. அவர் மூலமாக, அவரையே போன்ற பிள்ளையை நீ நிச்சயம் பெறுவாய்” என்றாள்.(15) மாத்ரி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அசுவினி இரட்டையர்களை நினைத்தாள். அந்த அசுவினிகள் வேகமாக அவளிடம் வந்து, பூலோகத்தின் ஒப்பற்ற அழகர்களான நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர்களைப் பெற்றனர். அவர்கள் பிறந்த போது ஓர் அசரீரி,(16,17) “சக்தியிலும், அழகிலும் இந்த இரட்டையர்கள், அசுவினி இரட்டையர்களைக் காட்டிலும் மேலானவர்களாக இருப்பார்கள்.” என்றது. அக்குழந்தைகள் பெரும் சக்தியும், அழகும் கொண்டு, அந்த மொத்தப் பகுதியையும் பிரகாசிக்கச் செய்தனர்.(18)

ஓ மன்னா! அந்தப் பிள்ளைகள் பிறந்த பிறகு, அந்த நூறு சிகரம் கொண்ட மலையில் வசித்த முனிவர்கள் அவர்களை வாழ்த்தி, அவர்களது பிறப்பிற்கான முதல் சடங்கைச் செய்து, அவர்களுக்கான பெயர்களைச் சூட்டினர்.(19) குந்தியின் மக்களில் மூத்தவன் யுதிஷ்டிரன் என்றும், இரண்டாமவன் பீமசேனன் என்றும், மூன்றாமவன் அர்ஜுனன் என்றும்,(20) மாத்ரியின் மக்களில் முதலில் பிறந்தவன் நகுலன் என்றும் அடுத்தவன் சகாதேவன் என்றும் அழைக்கப்பட்டனர்[1]. {அந்தப் பிராமணர்கள் இவ்வாறே மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களுக்குப் பெயர்களைச் சூட்டினர்}.(21)(யுதிஷ்டிரன் என்றால் “போரில் புறமுதுகிடாமல் உறுதியாக நிற்பவன்” என்றும், பீமசேனன் என்றால், “அனைவரும் அஞ்சத்தக்க படையை {சேனையைக்} கொண்டவன்” என்றும், அர்ஜுனன் என்றால், “குற்றமில்லாதவன்” என்றும், நகுலன் என்றால்,, “பாம்புகளுக்குக் கீரியைப் போலப் பகைவர்களுக்குப் பயங்கரமானவன்” என்றும், சகாதேவன் என்றால், “அன்னையிடம் வேற்றுமையின்றி பிற சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருப்பவன்” என்றும் பொருளாம்.)

மைந்தர்களின் முதன்மையான அவர்கள், ஒருவருக்கொருவர் ஒரு வருட இடைவெளியில் பிறந்து ஐந்து வருடங்களின் முழு உருவமாகத் திகழ்ந்தனர்[2].(22) (மன்மதநாததத்தரின் பதிப்பில், “குருக்களில் சிறந்தவர்களான அந்தப் பாண்டு மகன்கள் ஒவ்வொருவரும், ஒரு வயதாக இருக்கும்போதே ஐந்து வயது சிறுவர்களைப் போலத் தெரிந்தனர்” என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், “கௌரவ சிரேஷ்டர்களாகிய பாண்டுபுத்திரர்கள் ஒவ்வொரு வருஷத்திற்குப் பின் பிறந்தவராயினும் எல்லாரும் சிறந்த சுபாவமுள்ளவர்களும், மிகுந்த சக்தியுள்ளவர்களும், சிறந்த பலமும், பராக்ரமமுமுடையவர்களுமாக ஐந்து வருஷங்களானவர்கள் போல் விளங்கினர்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.)தேவர்களைப் போன்ற அழகும், அபரிமிதமான சக்தியும், பெரும் பலமும் வீரமும் கொண்டு ஆன்மாவில் பெரியவர்களாகவும் இருந்த தன் பிள்ளைகளைக் கண்டு மன்னன் பாண்டு மிகவும் மகிழ்ந்தான். நூறு சிகரம் கொண்ட அந்த மலையில் வசித்த முனிவர்களுக்கு அந்தப் பிள்ளைகள் பிடித்தமானவர்களாகினர்.(23,24)

சில காலம் கழித்துப் பாண்டு மறுபடியும் குந்தியிடம் மாத்ரிக்காகப் பேசினான். ஓ மன்னா! தனிமையில் தனது தலைவனால் கேட்கப்பட்ட குந்தி,(25) “ஓ மன்னரே, ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொன்னதற்கே, அவள் இரு பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். நான் அவளால் ஏமாற்றப்படவில்லையா?(26) அவள் என்னைவிட அதிகம் பிள்ளைகளைப் பெற்றுவிடுவாள் என்று நான் அஞ்சுகிறேன். நிச்சயமாக இதுவே தீய பெண்களின் வழியாகும். ஒரு முறை இரட்டை தேவர்களை அழைத்தால் ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றுவிடலாம் என்பதை அறியாத அளவுக்கு முட்டாளாயிருந்திருக்கிறேன்.(27) ஓ மன்னா! நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மேலும் கட்டளையிடாதீர். இதுவே நீர் எனக்குத் தரும் வரமாக இருக்கட்டும்” என்றாள்.

ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே பாண்டுவுக்குப் பெரும் பலமுடைய ஐந்து பிள்ளைகள் தேவர்கள் மூலமாகப் பிறந்தனர். அவர்கள் அனைவரும் பெரும் புகழை அடையவும், குரு பரம்பரையை விரிவாக்கவும் செய்தனர். அனைவரும் தங்கள் மேனியில் அதிர்ஷ்டக்குறிகளைக் கொண்டு, சோமனைப் (சந்திரனைப்) போன்ற அழகுடனும்,(28,29) சிங்கத்தைப் போன்ற செருக்குடனும், சிங்கத்தைப் போன்ற நடை, மார்பு, கண்கள், கழுத்து மற்றும் வீரமும் பெற்று, வில்லைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று[3], (கும்பகோணம் பதிப்பில், பாண்டுவுக்கு மகன்கள் பிறந்ததைக் கேள்விப்பட்டு வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை},  தம் புரோகிதரை அனுப்பி, சௌளம், உபநயனம், உபாகர்மம் ஆகியவற்றைச் செய்தார் என்றும், சர்யாதியின் மூத்த மகனான சுகன் என்ற மன்னன் சதசிருங்கத்தில் அப்போது இருந்ததாகவும், அவன் மூலமாகப் பாண்டவர்கள் பெரும் வில்வீரர்களானார்கள் என்றும், அவர்களுக்கு அவன் அனைத்து ஆயுதங்களையும் கொடுத்தான் என்றும், பீமன் கதாயுத்தத்திலும், யுதிஷ்டிரன் ஈட்டிப்போரிலும், நகுலன் சகாதேவர்கள் கத்தி கேடயங்களில் தேர்ந்தார்கள் என்றும், அதில் அர்ஜுனனை மட்டும் அந்தச் சுகன் தனக்கு நிகரானவனாகக் கருதினான் என்றும் இருக்கிறது.)மனிதர்களில் முதன்மையானவர்களாக இருந்து, பலத்தில் தேவர்களைப் பிரதிபலித்து வளர்ந்தனர்.(30) பனி மூடியிருந்த அந்தப் புனிதமான மலையில் வசிக்கும் பெரும் முனிவர்கள், அக்குழந்தைகள் வளர்வது போலவே, அவர்களது அறங்களும் வளர்வதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.(31) குரு பரம்பரையை விரிவாக்கப்பிறந்த ஐந்து பாண்டவர்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும், ஏரியில் வளரும் தாமரைக்கூட்டங்களைப் போல வேகமாக வளர்ந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

பாண்டு மாத்ரி காமம்! – ஆதிபர்வம் பகுதி 125-(சம்பவ பர்வம் – 61)மாத்ரியிடம் மோகம் கொண்ட பாண்டு கலவியின் போதே இறந்தது; மாத்ரியும் அவனுடன் சிதையேறியது…

வைசம்பாயனர் சொன்னார்,[1] “மலைச்சரிவில் இருந்த கானகத்தில் தன் முன் வளர்ந்து வரும் தன் மகன்களைக் கண்ட பாண்டு, தனது பலம் மீட்டெடுக்கப்பட்டது போல உணர்ந்தான்.(1)(கும்பகோணம் பதிப்பில் இதற்கு முன்பே சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன, அவை பின்வருமாறு: “பாண்டவர்களின் ஆயுளைச் சொல்கிறேன்; கேளும். அஸ்தினாபுரம் போனபோது யுதிஷ்டிரருக்குப் பிராயம் பதினாறு; பீமசேனனுக்குப் பதினைந்து; அர்ஜுனனுக்குப் பதினான்கு; நகுலஸஹதேவர்களுக்குப் பதின்மூன்று. அந்த அஸ்தினாபுரத்தில் பதின்மூன்றுவருஷகாலம் த்ருதராஷ்டிர புத்ரர்களோடு வஸித்தனர். அரக்கு மாளிகையிலிருந்து விடப்பட்டு ஆறு மாஸமிருந்தனர். அப்போது கடோத்கசன் பிறந்தான். ஏகசக்ராநகரியில் ஆறு மாஸமிருந்தனர். பாஞ்சாலராஜன் கிருஹத்தில் ஒரு வருஷம் வஸித்தனர். பாரதரே! த்ருதராஷ்டிர புத்ரர்களுடன் கூட மறுபடியும் ஐந்து வருஷம் வாஸஞ்செய்து, பிறகு இந்திரப்பிரஸ்தத்தில் இருபத்துமூன்று வருஷம் வஸித்தனர். பிறகு, சூதாட்டத்தில் தோல்வியடைந்து பதின்மூன்று வருஷம் இருந்தனர். ராஜாவே! கிருஷ்ணயை {திரௌபதியை} ஆதாரமாகவுடைய அம்மஹாத்மாக்களனைவரும் கடல்சூழ்ந்த பூமியை முப்பத்தாறு வருஷம் ஆண்டு, அதன்பின் ஆறு மாஸங்களுக்குப் பிறகு பரிக்ஷித்துக்கு ராஜ்யபட்டாபிஷேகஞ்செய்து, தெய்வகதியையடைந்தனர். இவ்வாறு யுதிஷ்டிரருக்கு நூற்றெட்டு வருஷம் ஆயுளிருந்தது. சிறந்த மஹிமையுள்ள கிருஷ்ணபகவான் அர்ச்சுனனுக்கு மூன்று மாதம் பெரியவர். மஹாபலசாலியான பலராமர், கிருஷ்ணனுக்கு மூன்று மாதம் பெரியவர். அப்போது மிகுந்த பராக்ரமசாலியான பாண்டு சதச்ருங்க மலையில் காசியபரென்னும் புரோஹிதரோடும், தன் தேவிமார்களோடுங்கூட அந்த ஐந்து புத்ரர்களையும் பார்த்துக் கொண்டு மிகவும் மகிழ்வுற்றிருந்தான். வனங்களில் புஷ்பங்கள் மிகுதியாகவுள்ள சித்திரை வைகாசி மாதங்களாகிய வஸந்தகாலத்தின் ஆரம்பத்தில், புத்திசாலியான அர்ஜுனனுக்குப் பதினான்காவது பிராயம் நிரம்பி அவன் பிறந்த உத்தர பல்குனி நக்ஷத்திரம் வந்த தினத்தினால் ஸ்வஸ்திவாசனம் நடத்துவதிலும், பிராமணபோஜனம் செய்விப்பதிலும் பிரவிர்த்திருந்த குந்தியானவள், பாண்டு மஹாராஜாவைக் காப்பாற்றுகிற விஷயத்தில் மறந்திருந்தாள்; புரோகிதருக்கும், மற்ற ப் பிராமணர்களுக்கும் போஜனம் பரிமாரிக் கொண்டிருந்தாள். பிறகு, தன் கைவன்மையைச் சகாயமாகவுடைய பாண்டு, வனங்கள் செவ்வையாகப் புஷ்பித்து எல்லாப் பிராணிகளையும் மயங்கச் செய்வதாகிய சித்திரை வைகாசி மாதங்களாகிய வஸந்த காலத்தில் பெருங்காடடர்ந்த அழகான சதச்ருங்க மலையில் பார்ப்பதற்கினிய தன் புத்ரர்களான அந்த ஐவரையும் பார்த்துக் கொண்டே பாரியையுடன் வனத்தில் திரிந்தான்” என்றிருக்கிறது.)

ஒரு நாள், அனைத்து உயிர்களையும் கிளர்ந்தெழச் செய்யும் ஒரு வசந்த காலத்தில், ஒவ்வொரு மரமும் புதிய இலைகளால் மலர்ந்திருக்கும் அந்த வனத்தில், அந்த மன்னன் தனது மனைவியுடன் (மாத்ரியுடன்) உலவிக் கொண்டிருந்தான்.(2) அந்தக் கானகத்தில் பலாசம், திலகம், மா, சம்பகம், பரிஹத்திரகம், கர்ணிகரம், அசோகம், கேசரம், அதிமுகம், கருவாகம் ஆகிய மரங்களில் பித்தம்பிடித்த வண்டுகளின் கூட்டம் ரீங்காரமிட்டபடி இருந்தன. மலர்ந்திருந்த பாரிஜாதம், கோகிலம் ஆகிய மலர்களில் வண்டுகள் அமர்ந்து இனிமையாக ரீங்காரம் இசைத்தன. பல்வேறு மரங்கள், தங்கள் பூக்கள் மற்றும் கனிகளின் கனத்தால் தாழ்ந்து இருந்ததைக் கண்டான்.(3-5) அங்கே, நூற்றுக்கணக்கான தாமரைகளுடன் பல குளங்களும் இருந்தன. இதையெல்லாம் கண்ட பாண்டு, காமத்தின் சிறு ஆதிக்கத்தை அவனுள் உணர்ந்தான்.(6)

அந்த அற்புதக் காட்சிகளின் மத்தியில், தேவர்களில் ஒருவனைப் போலப் பாரமற்ற இதயத்துடன் உலவிக்கொண்டிருந்த பாண்டு, அரை வெளிப்படையான மெல்லிய ஆடையை அணிந்திருந்த தனது மனைவி மாத்ரியுடன் தனிமையில் இருந்தான்.(7) இளமையான மாத்ரியின் உடுப்பைக் கண்ட மன்னனின் ஆசை காட்டுத்தீயைப் போலப் பற்றிக் கொண்டது.(8) அந்தத் தனிமையான கானகத்தில் தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய தனது மனைவியைக் கண்டு ஆசையை அடக்க இயலாமல், அவன் காமத்தால் வெற்றிகொள்ளப்பட்டான்.(9) அந்த மன்னன் அவளது விருப்பத்திற்கு எதிராக அவளைப் பற்றி இழுத்தான். ஆனால், மாத்ரி பயத்தால் நடுங்கி, அவளால் முடிந்த வரை பலத்துடன் தடுத்துப் பார்த்தாள்.(10)

காமத்தால் உண்ணப்பட்ட பாண்டு, தனது துரதிர்ஷ்டத்தால் அனைத்தையும் மறந்தான். ஓ குரு பரம்பரையில் வந்தவனே, அந்த ஏகாதிபதி! விதிவசத்தால் முனிவரின் சாபத்தில் பயமற்று, ஆசையால் வெல்லப்பட்டுத் தானே தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தவன் போல, வலுக்கட்டாயமாக மாத்ரியின் அணைப்பைப் பெற முற்பட்டான். புலன்களின் உணர்வில் மயங்கி, உணர்வை இழந்து, மரண  தேவனிடம் {காலனிடம்} தானே அகப்பட்டுக் கொண்டான்.(11-13)

அற ஆன்மா கொண்டவனான அந்தக் குருக்களின் மன்னன் பாண்டு, தனது மனைவியுடன் உறவு கொண்டவாறே, தவிர்க்க முடியாத காலத்தின் செல்வாக்கால் மாண்டு போனான்.(14) பிறகு மாத்ரி தனது தலைவனின் சடலத்தை அணைத்தவாறே ஓலமிட்டுக் கதறி அழுதாள்.(15) துயரமான அந்தக் கதறலைக் கேட்ட குந்தி, தனது மகன்களுடனும், மாத்ரியின் மகன்களுடனும், மன்னன் அப்படிக் கிடந்த பகுதிக்கு வந்தாள்.(16)

பிறகு ஓ மன்னா! மாத்ரி குந்தியிடம் பரிதாபகரமான குரலில், “ஓ குந்தி, இங்கே தனியாக வா, பிள்ளைகள் அங்கேயே இருக்கட்டும்” என்றாள்.(17)  இதைக் கேட்ட குந்தி, பிள்ளைகளை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு “எனக்குக் கேடு வந்தது” என்று சொல்லி, அழுதுகொண்ட வேகமாக ஓடினாள்.(18) பாண்டுவும் மாத்ரியும் தரையில் கிடந்த கோலத்தைக் கண்ட அவள், துயரத்தாலும் வருத்தத்தாலும்,(19) “ஓ மாத்ரி, ஆசையை முழுமையாக அடக்கி, இந்த வீரரைப் பாதுகாப்பாகக் காத்து வந்தேனே. முனிவரின் சாபத்தை மறந்து, காமத்துடன் உன்னை அவர் எப்படி அணுகினார்?(20) ஓ மாத்ரி, இந்த மனிதர்களின் முதன்மையானவர் உன்னால் காக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தனிமையில் நீ ஏன் அவரை மயக்கினாய்?(21) முனிவரின் சாபத்தால் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு உன்னிடம் தனிமையில் மகிழ்வாக இருக்க எவ்வாறு முடிந்தது?(22) ஓ பாஹ்லீக இளவரசியே {மாத்ரியே}, நமது தலைவனின் முகம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்ததை நீ கண்டாய், நீ என்னைவிட நற்பேறு பெற்றவள். இதற்காகவே நீ என்னால் எதிரியாகக் கருதப்பட வேண்டியவள்” என்றாள்.(23)

மாத்ரி, “மரியாதைக்குரிய சகோதரி, எனது கண்கள் கண்ணீரால் நிரம்ப, நான் மன்னரைத் தடுத்துப் பார்த்தேன். ஆனால் அவரால் தன்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை. முனிவரின் சாபத்தை மெய்யாக்க முற்படுவது போலவே அவரது செயல்பாடு இருந்தது” என்றாள்.(24)

குந்தி, “அவர் மணந்த மனைவியருள் நானே மூத்தவள், தலைமைத் தகுதி என்னுடையதே. எனவே, ஓ மாத்ரி, நான் அடைய வேண்டியதை அடைய விடாமல் தடுக்காதே. நான் நமது தலைவரை மரணத் தேவன் வசிக்கும் பகுதிக்கும் தொடர்ந்து செல்ல வேண்டும். ஓ மாத்ரி, எழுந்து, அவரது உடலை எனக்குக் கொடுப்பாயாக. இந்தக் குழந்தைகளை நீயே வளர்ப்பாயாக” என்றாள்.(25,26)

அதற்கு மாத்ரி, “நான் இன்னும் நமது தலைவனின் கட்டுக்குள் இருந்தும், அவரிடம் இருந்தும் பிரியாமல் இணைந்திருக்கிறேன். எனவே, நானே அவரைத் தொடர்வேன். எனது பசி {ஆசை} இன்னும் தணிவடையவில்லை. நீ எனக்கு மூத்த சகோதரி, எனவே, உனது ஏற்பை எனக்குக் கொடுப்பாயாக.(27) இந்தப் பாரதக் குல இளவரசர்களின் முதன்மையானவர் உறவுக்காக என்னை அணுகினார். அவரது பசியும் தணிவையடையவில்லை. நான் யமனின் உலகத்திற்குச் சென்றாவது அவரது பசியைத் தீர்க்க வேண்டாமா?(28) ஓ மரியாதைக்குரியவளே, உனக்குப் பதில் நான் பிழைத்து இருந்தால், நிச்சயமாக உனது பிள்ளைகளை எனது பிள்ளைகள் போல் கருதி வளர்க்க முடியாது. அதனால் எனக்குப் பாவம் சம்பவிக்காதா?(29) ஆனால் நீயோ, ஓ குந்தி, எனது பிள்ளைகளையும் உனது பிள்ளைகள் போல் வளர்ப்பாய். மன்னர், என்னை விரும்பியே பிதிர்களின் உலகத்தை அடைந்தார்.(30) எனவே, எனது உடலும் அவருடன் எரிக்கப்பட வேண்டும். ஓ மரியாதைக்குரிய சகோதரி, எனக்கு ஏற்புடைய இந்த விஷயத்தை மறுக்காதே.(31) நீ இந்தப் பிள்ளைகளை நிச்சயமாகக் கவனத்துடன் வளர்ப்பாய். அதுவே நீ எனக்குச் செய்யும் பெரும் நன்மையாகும். உனக்கு வேறேதும் சொல்ல எனக்குத் தெரியவில்லை” என்றாள்.( 32)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மத்ர மன்னனின் மகளான அந்தப் பாண்டுவின் மனைவி இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, மனிதர்களில் காளையான தனது தலைவனின் ஈமச்சிதையில் ஏறினாள்” {என்றார் வைசம்பாயனர்}[2].(33)(கும்பகோணம் பதிப்பில், மாத்ரி ஈமச்சிதையேறிய நிகழ்வு விரிவாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதன்பிறகு, பாண்டு மாத்ரியின் உடல்கள் ஹஸ்தினாபுரத்திற்குக் கொண்டு செல்லும் செய்தியும் சொல்லப்படுகிறது. மாத்ரி ஈமச்சிதையேறியது இங்கே ஒரே ஸ்லோகத்தில் சொல்லப்படுகிறது. இந்த ஒரு ஸ்லோகம் ஐயத்திற்கிடமானதே.)

மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்! – ஆதிபர்வம் பகுதி 126-சம்பவ பர்வம் – 62)பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்ற முனிவர்கள்; பாண்டுவின் மரணச் செய்தியைச் சொல்லிவிட்டு, பாண்டவர்களைக் கௌரவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்ற முனிவர்கள்

வைசம்பாயனர் சொன்னார், “பாண்டுவின் இறப்பைக் கண்டவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான ஞானமுள்ள முனிவர்கள், ஒருவரோடு ஒருவர் ஆலோசனை செய்து,(1) “நன்கறியப்பட்ட அறம்சார்ந்த மன்னன் பாண்டு, ஆட்சி உரிமையையும், அரசாங்கத்தையும் துறந்து வந்து, இங்கே தவ துறவுகளைச் செய்து, இந்த மலைவாழ் துறவிகளிடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.(2) அவன் இப்போது தனது மனைவியையும், மகன்களையும் நம்பிக்கையுடன் நம் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கிறான்.(3) இப்போதே அவனது நாட்டிற்குச் சென்று, அவனது பிள்ளைகளையும், மனைவியையும் {பாண்டு மற்றும் மாத்ரியின் எரிபடாத உடற்பகுதிகளையும்} ஒப்படைப்பது நமது கடமையாகும்” என்றனர்”.(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பின்பு ஆன்ம வெற்றியடைந்தவர்களும், பரந்த இதயம் கொண்டவர்களுமான அந்தத் தெய்வீக முனிவர்கள், ஒருவரை ஒருவர் அழைத்து ஆலோசித்து, ஹஸ்தினாபுரம் செல்வதற்கு முடிவெடுத்தனர்.(5) பாண்டுவின் பிள்ளைகளை முன்னணியில் கொண்டு, பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரன் கைகளில் அவர்களை ஒப்படைக்க விரும்பினர்.(6) உடனே அந்த நொடியிலேயே அந்தத் துறவிகள் தங்களுடன் பிள்ளைகளையும் குந்தியையும் அழைத்துக் கொண்டு, இரண்டு சடலங்களையும்[1] எடுத்துக் கொண்டு (சடலங்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அஸ்தி என்றோ, சாம்பல் என்றோ அல்ல. )பயணத்தைத் தொடங்கினர்.(7) இதுவரை வாழ்வின் கடினங்களே எதையும் அனுபவித்திராதவள் என்றாலும், மிகுந்த அன்பு கொண்டவளான குந்தி, தான் மேற்கொண்டிருந்த அந்த நெடும் பயணத் தொலைவை மிகக் குறைவானதாகவே கருதினாள்.(8) குறைந்த காலத்திற்குள் குருஜாங்கலத்தை {குருஜாங்கல நாட்டிற்கு ஹஸ்தினாபுரம் தலைநகரம்} அடைந்த, அந்தச் சிறப்பு மிகுந்த குந்தி, முக்கிய வாயிலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.(9) துறவிகள் அங்கே இருந்த பணியாளர்களிடம், தங்கள் வருகையை மன்னருக்குத் தெரியப்படுத்தச் சொன்னார்கள். அந்த மனிதர்கள் அந்தச் செய்தியைச் சபைக்கு மிக விரைவாக எடுத்துச் சென்றனர்.(10)

சாரணர்களும், முனிவர்களும் ஆயிரக்கணக்கில் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட ஹஸ்தினாபுரவாசிகள் ஆச்சரியமடைந்தனர்.(11) சூரியன் உதித்த சிறிது நேரத்திற்குள் அவர்கள் தங்கள் மனைவியருடனும், பிள்ளைகளுடனும் கணக்கிலடங்காத எண்ணிக்கையில் துறவிகளைக் காண வந்தனர்.(12) எண்ணிக்கையில் அதிகமான க்ஷத்திரியர்களும், பிராமணர்களும், அனைத்துவகையான தேர்களிலும், வாகனங்களிலும் அமர்ந்து கொண்டு, தங்கள் மனைவியருடன் அங்கே வந்தனர்.(13) இந்நிகழ்ச்சியின் போது, வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் வருகையும் மிக அதிக அளவில் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு இதயமும் பக்தியில் முன்னேறியிருந்ததால் அந்தப் பெரும் கூட்டம் அமைதியாக இருந்தது.(14)

சந்தனுவின் மைந்தனான பீஷ்மர், சோமதத்தன் அல்லது பாஹ்லீகன், ஞானப் பார்வை கொண்ட அரசமுனி {திருதராஷ்டிரன்}, விதுரன்,(15) மதிப்பிற்குரிய சத்தியவதி, சிறப்பு மிகுந்த கோசல இளவரசி, காந்தாரி மற்றும் அந்த அரசகுடும்பங்களைச் சார்ந்த பல பெண்கள் அக்கூட்டத்தில் இருந்தனர் {அரசவாயிலை விட்டு வெளியே வந்தனர்}.(16) பல்வேறு ஆபரணங்களைப் பூண்டவர்களான திருதராஷ்டிரனின் நூறு மைந்தர்களும் {துரியோதனன் தலைமையில்} வெளியே வந்தனர்.(17) தங்கள் புரோகிதர்களுடன் வந்த கௌரவர்கள், தங்கள் சிரம்தாழ்த்தி அம்முனிவர்களை வணங்கி, அவர்கள் முன்னிலையில் அமர்ந்தனர்.(18) குடிமக்களும் {தங்கள் தலையால்} பூமியைத் தொட்டபடியே அந்தத் துறவிகளைச் சிரம்தாழ்த்தி வணங்கி {பூமியில்} அமர்ந்தனர்.(19)

ஓ மன்னா! பீஷ்மர் அந்தப் பெரும் கூட்டத்தை அசையாமல் இருப்பதைக் கண்டு, சம்பிரதாயச் சடங்காக ஆர்க்கியம் கொடுத்து அத்துறவிகளுக்குக் கால்களைக் கழுவ தண்ணீர் கொடுத்தார். பிறகு, அவர்களிடம் ஆட்சி குறித்தும், அரசு குறித்தும் பேசினார். தலையில் முடியை கட்டிமுடித்து, உடலை விலங்கின் தோலால் மூடியிருந்த அத்துறவிகளில் மூத்தவர் ஒருவர் மற்ற முனிவர்களின் முன்னிலையில் எழுந்து நின்று,(20,21) பிற முனிவர்களின் இசைவுடன் இவ்வாறு பேசினார், “குருக்களின் அரசுரிமைபெற்றிருந்தும், உலக இன்பங்களைத் துறந்து, நூறு சிகரங்கள் கொண்ட {சதஸ்ருங்க} மலையில் வாழ முடிவு செய்தான் மன்னன் பாண்டு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.(22) அங்கே அவன் பிரம்மச்சரிய வாழ்வு முறையை ஏற்றான். ஆனால் கடவுளின் அறிவுக்கெட்டாத சில நோக்கங்களினால், அவனது மூத்த மகனான இந்த யுதிஷ்டிரன் தர்மதேவன் மூலம் அங்கே பிறந்தான்.(23) பிறகு அந்தச் சிறப்புமிகுந்த மன்னன், வாயுவிடம் இருந்து இந்த அடுத்த மகனைப் பெற்றான். பலம் பொருந்திய மனிதர்களின் முதன்மையான இவன் பீமன் என்று அழைக்கப்படுகிறான்.(24) இந்திரனால் குந்தியிடம் பெறப்பட்ட அடுத்த மகனான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சாதனைகளால் உலகின் வில்லாளிகளையெல்லாம் அடக்கிவிடக் கூடியவனாவான்.(25) மறுபடியும் இவர்களை இங்கே பாருங்கள், வில்லைப் பயன்படுத்துவதில் பெரும் பலம் வாய்ந்த இந்த இரட்டையர்கள் மாத்ரியிடம் அசுவினி இரட்டையர்களால் பெறப்பட்டவர்கள்.(26)

வானப் பிரஸ்த வாழ்க்கை முறையைக் கானகத்தில் நேர்மையாக வாழ்ந்த சிறப்பு மிகுந்த பாண்டு, தனது பாட்டனின் அருகிப் போன பரம்பரையை இவ்வாறு மீட்டெடுத்தான்.(27) பாண்டு மைந்தர்களின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் வேத கல்வி ஆகியவை ஐயமில்லாமல் உங்களுக்குப் பெரும் மகிழ்வையே தரும்.(28) அறம் மற்றும் ஞானமுள்ளோரின் பாதையை உறுதியாகப் பற்றிக் கொண்டு, பிள்ளைகளை விட்டுவிட்டு, பதினேழு நாட்களுக்கு முன்பு பாண்டு இறந்துவிட்டான்.(29) எரியப்போகும் ஈமச்சிதையில் அவனை கண்ட அவனது மனைவி மாத்ரி, அச்சிதையில் தானே ஏறி உயிரைத் துறந்து, தனது தலைவனுடன், கற்புள்ள மனைவியர் வாழும் வானுலகப் பகுதிக்குச் சென்றுவிட்டாள். அவர்களின் நன்மைக்காகச் செய்ய வேண்டிய அனைத்துச் சடங்குகளையும் நிறைவேற்றுவீராக.(30,31) இவையே அவர்களது உடல்கள்[2] (அவர்களது உடலின் எரிக்கப்படாத பகுதிகள்).(உடல்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அஸ்தி என்றோ, சாம்பல் என்றோ அல்ல.) இதோ எதிரிகளை ஒடுக்குபவர்களான அவர்களது பிள்ளைகள் தங்கள் தாயுடன் இருக்கின்றனர். இப்போது இவர்கள் அனைவரும் தக்க மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளப்படட்டும்.(32) நீத்தார் கடனின் முதல் சடங்கு முடிந்ததும், குருக்களின் மதிப்பை என்றும் பேணிக்காத்த அறம்சார்ந்த பாண்டுவைப் பித்ருக்களின் வரிசையில் நிறுவ முதலாண்டுச் சிராத்தம் (சபிந்தகரணா) நடைபெறட்டும்” என்றார் {அந்த முதியவர்}”.(33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “குஹ்யர்களுடன் இருந்த அந்தத் துறவிகள், குருக்களிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, மக்கள் பார்த்துக் கொண்டிருந்த அந்நொடியே, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மறைந்து போனார்கள்.(34) முனிவர்களும், சித்தர்களும் இப்படித் தங்கள் பார்வையிலேயே திடீரென ஆவியாகி வானத்தில் மறைந்து போனதைக் கண்ட குடிமக்கள் அதிசயம் அடைந்து தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(35)

பாண்டுவின் இறுதிச்சடங்கு! – ஆதிபர்வம் பகுதி 127-(சம்பவ பர்வம் – 63)-பாண்டு மற்றும் மாத்ரியின் எலும்புகளைப் பல்லக்கில் கங்கைக் கரைக்குக் கொண்டுவந்து, சடங்குகள் செய்து மீண்டும் அவற்றுக்கு எரியூட்டியது…

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அப்போது திருதராஷ்டிரன் விதுரனிடம், “ஓ விதுரா, மன்னர்களில் சிங்கத்தைப் போன்றவனுக்கும் (பாண்டு), மாத்ரிக்கும் ஈமக்கடன்கள் முறையான அரசமுறையில் நடைபெறட்டும்.(1) அவர்களின் ஆன்ம நன்மைக்காகப் பசுக்களையும், ஆடைகளையும், ரத்தினங்களையும், பலவகையான செல்வங்களையும் கேட்பவர்களுக்கு வேண்டிய அளவு கொடுப்பாயாக.(2) மாத்ரியின் இறுதிச் சடங்குகளைக் குந்தி விருப்பத்திற்கேற்றவாறு செய்ய வைப்பாயாக. மாத்ரியின் உடலைச் சூரியனோ, வாயுவோ காணமுடியாதபடி கவனமாக மூட ஏற்பாடு செய்வாயாக.(3) பாவமற்றவனான பாண்டுவுக்காக வருந்தாதே. அவன் மதிப்புமிக்க மன்னனாக இருந்து, தேவர்களுக்குச் இணையான வீரமகன்கள் ஐவரை விட்டுச் சென்றிருக்கிறான்” என்றான்”.(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ பாரதா {ஜனமேஜயா}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்ன விதுரன், பீஷ்மருடன் ஆலோசனை செய்து, பாண்டுவின் ஈமச்சடங்கைச் செய்யப் புனிதமான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான்.(5) அந்தக் குடும்பத்தின் புரோகிதர்கள், தாமதம் செய்யாமல், தெளிந்த நெய்யின் மூலம் நறுமணத்துடன் சுடர்விட்டெரியும் புனிதமான நெருப்பை எடுத்துக் கொண்டு நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(6) நண்பர்களும், உறவினர்களும், ஆதரவாளர்களும் சேர்ந்து, அந்த ஏகாதிபதியின் உடலைத் துணியால் நன்றாக மூடி, அந்தப் பருவகாலத்திற்குரிய மலர்களாலும், பல்வேறு சிறந்த நறுமணத் திரவியங்களாலும் அஃதை அலங்கரித்தனர். பிறகு அதை எடுத்துச் செல்லும் பல்லக்கில் பூமாலைகளையும், ஆடம்பரத் துணிகளாலும் அலங்கரித்தனர். அந்த மன்னனின் மூடிய உடலை அரசியுடன் சேர்த்துப் பல்லக்கில் வைத்துத் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.(7-9) அந்தப் பல்லக்குக்கு மேலே வெண்குடையைப் பிடித்துக் கொண்டு சாமரம் வீசிப் பல்வேறு இசைக்கருவிகளால் இன்னிசையை எழுப்பினர். அந்தக் காட்சி தகைமையுடனும், சிறப்புடனும் பிரகாசமாக இருந்தது.(10)

நூற்றுக்கணக்கானோர், அந்த மன்னனின் ஈமச்சடங்கில் கலந்து கொண்ட கூட்டத்திற்கு மத்தியில் ரத்தினங்களை விநியோகித்தனர்.(11) அந்தப் பெரும் விழாவுக்கு நீண்ட அழகான ஆடைகளையும், வெண்குடைகளையும், சாமரங்களையும் கொண்டு வந்தனர்.(12) புரோகிதர்கள் வெள்ளுடை தரித்து அந்தப் பல்லக்கை வலம் வந்து, பாத்திரத்தில் சுடர்விட்டெரிந்த புனிதமான நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டனர்.(13) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் ஆயிரக்கணக்கில் வந்து தங்கள் மன்னனுக்காக ஓலமிட்டு அழுதனர்.(14)  “ஓ இளவரசரே {பாண்டுவே}, எங்கள் மீது நம்பிக்கையில்லாமல் பாவிகளான எங்களை விட்டுவிட்டு நிரந்தரமாக நீர் எங்குச் சென்றுவிட்டீர்?” என்று அவர்கள் கதறி அழுதனர்.(15)

பீஷ்மர், விதுரன் மற்றும் பாண்டவர்களும் கதறி அழுதனர். அப்போது, கங்கைக்கரையில் இருக்கும் ஓர் அழகான வனப்பகுதிக்கு வந்தனர்.(16) சிங்க இதயம் கொண்டவனும், உண்மையுடன் இருந்தவனுமான அந்த இளவரசன் {பாண்டு} மற்றும் அவனது துணையை {மாத்ரியை}ச் சுமந்து வந்த அந்தப் பல்லக்கை அங்கே வைத்தனர்.(17) பல தங்கப் பாத்திரங்களில் நீர் கொண்டு வந்து, பல வகை மணம் உள்ள குழம்புகளை அந்த இளவரசன் உடலில் பூசி, சந்தனக்குழம்பையும் மறுபடியும் பூசினர்.(18,19) அவர்கள் அதற்கு வெள்ளுடை உடுத்திவிட்டனர். அந்தப் புது உடையுடன் காணப்பட்ட மன்னன், உயிருடன் இருந்து விலையுயர்ந்த படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது[1].(20,21)(கும்பகோணம் பதிப்பில், “புருஷஸிம்மமும், உயர்ந்த காரியங்களைச் செய்பவனுமாகிய பாண்டுவின் சரீரத்திலும், அவன் பாரியையான மாத்ரியின் சரீரத்திலும் எல்லா வாஸனைகளையும் சேர்த்து நல்ல அகிற்சேறும், உயர்ந்த சந்தனக்குழம்பும் பூசிப் பொற்குடங்களினால் சுற்றிலும் ஜலம் கொட்டி, வெண்சந்தனத்தையும், காரகிலோடு கூடிய புன்னைரஸத்தையும் எங்கும் பூசினர். பிறகு, பல தேங்களிலுண்டான வெளுப்பு வஸ்திரங்களை அவனுக்குப் போர்த்தினர். உயர்ந்த சயனத்தில் படுப்பதற்குத் தகுதியுள்ள புருஷஸ்ரேஷ்டனான பாண்டு மஹாராஜன் வஸ்திரங்களினாற் போர்க்கப்பட்ட பின் ஜீவித்திருப்பவன் போல விளங்கினான்” என்றிருக்கிறது. முன்பே எரிக்கப்பட்ட உடல்களின் மிச்சம் எவ்வாறு உயிருள்ளத்தாக தெரிய முடியும். பாண்டு மற்றும் மாத்ரியின் உடல்கள் முன்பே {காட்டிலேயே} எரிக்கப்படவில்லை என்பதையே இஃது உறுதிப்படுத்துகிறது. எனவே மாத்ரி ஈமச்சிதையேறியிருக்கக் கூடிய வாய்ப்பும் குறைகிறது.)

புரோகிதர்களின் வழிகாட்டுதலுக்கிணங்கி ஈமச் சடங்குகள் நிறைவடைந்ததும், கௌரவர்கள், அரசன் மற்றும் அரசியின் இறந்த உடல்களில் தாமரைகளையும், சந்தனக்குழம்பையும், மற்றும் நறுமணத்தைலங்களையும் வைத்துத் தீயிட்டனர்.(22,23) உடல்கள் தீப்பற்றிக் கொண்டதும், கௌசல்யை {அம்பாலிகை}, “ஓ என் மகனே, எனது மகனே!” என்று வெடித்துக் கதறி உணர்வற்றுத் தரையில் விழுந்தாள்.(24) அவள் அப்படி விழுவதைக் கண்டு அந்நாட்டுக் குடிமக்களும், குடியேறிகளும் மன்னன் மீதிருந்த அன்பால் துயரையடைந்து கதறி அழுதனர்.(25) காற்றில் இருந்த பறவைகளும், தரையில் இருந்த விலங்குகளும் கூடக் குந்தியின் ஒப்பாரியால் துக்கமடைந்தன.(26)

அப்போது சந்தனுவின் மைந்தனான பீஷ்மரும், ஞானமுள்ள விதுரனும், மற்றவர்களும் தேற்ற முடியாதபடி துக்கத்திலிருந்தனர்.(27) அழுது கொண்டிருந்த பீஷ்மர், விதுரன், திருதராஷ்டிரன், பாண்டவர்கள் மற்றும் குரு பரம்பரையில் வந்த மகளிர் ஆகியோர் பாண்டுவுக்கு நீர்த் தர்ப்பணம் செய்தனர்.(28) இவையெல்லாம் முடிந்த பிறகு, அவர்களே துக்கத்திலிருந்தாலும், வருந்திக்கொண்டிருந்த பாண்டுவின் மகன்களை மக்கள் தேற்றவிழைந்தனர்.(29) அந்தப் பாண்டவர்கள் தங்கள் நண்பர்களுடன் வெறுந்தரையில் படுத்து உறங்கினர். இதைக்கண்ட பிராமணர்களும் மற்றும் குடிமக்களும் அவர்களது படுக்கைகளையும் துறந்தனர்.(30) குடிமக்களில் இளமையானவர்கள், முதிர்ந்தவர்கள் என்ற வித்தியாசமில்லாமல் மன்னன் பாண்டுவின் மகன்களுக்காக வருந்தி பனிரெண்டு நாட்களுக்குப் பாண்டவர்களோடு சேர்ந்து அழுது துக்கம் அனுஷ்டித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

பீமன் குடித்த ரசகுண்ட ரசம்! – ஆதிபர்வம் பகுதி 128-சம்பவ பர்வம் – 64)பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது; வியாசர் சத்தியவதியை எச்சரித்தது; சத்தியவதி தனது மருமகள்களுடன் காட்டுக்குச் சென்று, சொர்க்கத்தையடைந்தது; பாண்டவர்கள் பலத்தில் விஞ்சியிருப்பதைக் கண்டு துரியோதனன் பொறாமை கொண்டது; பீமனுக்கு விஷம் கலந்து கொடுத்து, கங்கையில் வீசியெறிந்த துரியோதனன்; நாகலோகம் அடைந்த பீமன் ரசகுண்ட ரசத்தைக் குடித்து பத்தாயிரம் யானைகளின் பலத்தை அடைந்தது.

வைசம்பாயனர் சொன்னார், “பிறகு பீஷ்மரும், குந்தியும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து, இறந்து போன ஏகாதிபதிக்கான {பாண்டுவக்கான} சிராத்தத்தைச் செய்து பிண்டம் வழங்கினர்.(1) கௌரவர்களுக்கும், ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கும் விருந்து (உணவு) படைத்து, ரத்தினங்களையும் நிலங்களையும் வழங்கினர்.(2) தங்களது தந்தையின் இறப்பினால் உண்டான தூய்மையின்மையைப் பாண்டுவின் மைந்தர்கள் அகற்றிவிட்டமையால், அவர்களை அந்நாட்டுக் குடிமக்கள் ஹஸ்தினாபுரத்துக்கு[1] அழைத்துச் சென்றனர்.(3) (பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்நகரத்தின் பெயர் வாரணாசரியம் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. வாரணம் என்ற பெயர் யானையைக் குறிக்கும் என்றும், இது ஹஸ்தினாபுரத்தின் மற்றுமொரு பெயர் என்றும் அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யானைகள் திரியும் ஆலயம் என்ற பொருளைக் கொண்ட பெயராக இருக்கலாம். ஹஸ்தினாபுரத்திற்கு நாகபுரம் என்று மற்றுமொரு பெயரும் உண்டு)ஏதோ தங்கள் பிள்ளைகளில் ஒருவர் இறந்ததைப் போலப் பிரிந்த மன்னனுக்காக அனைவரும் அழுதனர்.(4)

அந்தச் சிராத்தம் மேற்கண்ட முறையில் முடிந்த பிறகு, மதிப்புக்குரியவரான வியாசர், குடிமக்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு, ஒரு நாள், தனது தாய் சத்தியவதியிடம் சென்று,(5) “தாயே, மகிழ்ச்சியான நமது காலங்கள் முடிந்து பேரிடர்க்காலம் வந்துவிட்டது. நாளுக்கு நாள் பாவம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இவ்வுலகம் முதுமையடைந்துவிட்டது {இவ்வுலகம் தன் இளமையைத் தொலைத்துவிட்டது}.(6) குற்றங்களாலும், அடக்குமுறையினாலும் கௌரவர்களின் இந்தப் பேரரசு நெடுங்காலம் நீடித்திருக்காது. இனி, நீ கானகத்திற்குச் சென்று, யோகத்தின் மூலம் உன்னை ஆழ்ந்த விழிப்புணர்வுக்கு {தியானத்திற்கு} அர்ப்பணித்துக் கொள்வாயாக. இதுமுதல் இந்தச் சமூகம் வஞ்சகங்களாலும், குற்றங்களாலும் நிரம்பியிருக்கும். நன்மைகள் நடைபெறாது.(7,8) இந்த வயதான காலத்தில் நீ உனது குலத்தின் அழிவைக் கண்ணுறாதே” என்றார்.

வியாசரின் வார்த்தைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொண்ட சத்தியவதி உள் அறைக்குச் சென்று, தனது மருமகளிடம்,(9) “ஓ அம்பிகா, உனது பேரப்பிள்ளைகளின் செயல்களால் நமது பாரத அரச மரபும், அதன் குடிமக்களும் அழிந்து போவார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன்.(10) நீ அனுமதித்தால், மகனது இழப்பால் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கௌசல்யாவுடன் {அம்பாலிகையுடன்} நான் கானகத்திற்குச் செல்கிறேன்” என்றாள்.(11)

ஓ மன்னா! இதைச் சொன்ன அந்த அரசி {சத்யவதி}, பீஷ்மரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு கானகத்திற்குச் சென்றாள்.(12)  அங்கே தனது இரு மருமகள்களுடனும் வந்து, ஆழ்ந்த சிந்தனைக்குள் ஐக்கியமாகி, ஒரு நல்ல நேரத்தில், தனது பூத உடலை விட்டு சொர்க்கத்தை அடைந்தாள்”[2].(13)(11ம் ஸ்லோகத்தில் சத்தியவதி, தான் அம்பாலிகையுடன் காட்டுக்குச் செல்லப்போவதாக அம்பிகையிடம் அனுமதி கோருகிறாள். 13ம் ஸ்லோகத்தில் இரு மருமகள்களுடனும் காட்டுக்குச் சென்றதாக வருகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் 13ம் ஸ்லோகத்தில் இரு மருமகள்கள் என்ற சொற்கள் இல்லை. பிபேகத் திப்ராயின் பதிப்பில், அம்பிகையிடம் அனுமதி கோரும் சத்யவதி, விரும்பினால் நீயும் என்னுடன் வரலாம் என்று அம்பிகையிடம் சொல்கிறாள். அதற்கு அம்பிகையும் சம்மதிக்கிறாள். கும்பகோணம் பதிப்பில், “ஸத்தியவதி உள்ளே போய் மருமகளைப் பார்த்து, “அம்பிகையே, உன் பேரனான துரியோதனனுடைய அநீதியினால் சுற்றங்களுடன் கூடப் பரதவம்சத்தவரும் நகரத்துஜனங்களும் அழிந்துபோவார்களென்று நாம் கேட்டோம். ஆதலால், விருப்பமிருந்தால் புத்ரசோகத்தினால் வாதிக்கப்பட்டுத் துயரமுற்ற இந்த அம்பாலிகையையும் அழைத்துக் கொண்டு நாமிருவரும் வனத்திற்குப்போவோம். உனக்குச் சுகமுண்டாகும்” என்று சொன்னாள். பாரதரே, அம்பிகை, “ஆகட்டும்” என்று ஸம்மதித்தபின், ஸத்யவதி பீஷ்மரைக் கேட்டுக் கொண்டு இரண்டு மருமக்களுடன்கூடச் சிறந்த நியமமுள்ளவளாக வனம் சென்றாள். பரதச்ரேஷ்டரே! மஹாராஜரே! அப்போது அந்த ராஜஸ்திரீகள் மிக்ககடுந்தவஞ்செய்து தேகத்தைவிட்டுத் தாங்கள் விரும்பின லோகம் சென்றனர்” என்றிருக்கிறது.)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு பாண்டுவின் மைந்தர்கள், வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி தூய்மையடையும் சடங்குகளைச் செய்து, தங்கள் தந்தையின் இல்லத்தில் இளவரசர்களின் பாணியில் வளரத்தொடங்கினர்.(14) எப்போதும் திருதராஷ்டிரனின் மகன்களுடன் விளையாடும்போது, தங்கள் பலத்தின் மிகையால் அவர்கள் தனியாகத் தெரிந்தனர்.(15) வேகத்திலும், குறித்த பொருளை அடிப்பதிலும், உணவு சம்பந்தமான பொருட்களை உண்பதிலும், புழுதியை வாரி இறைப்பதிலும் பீமசேனன், திருதராஷ்டிரனின் அனைத்து மகன்களையும் வென்றான்.(16) அந்த வாயு தேவனின் மைந்தன் {பீமன்}, அவர்களின் முடியைப் பற்றி இழுத்து அவர்களுக்குள்ளேயே சண்டையிட வைத்து, எந்நேரமும் சிரித்து மகிழ்ந்தான்.(17) அந்த நூற்றொரு பிள்ளைகளையும் ஒருவராகப் பாவித்த பெரும் சக்தி படைத்த விருகோதரன் {பீமன்}, தான் ஒருவனாகவே அவர்களை வென்றான்.(18) பாண்டவர்களில் இரண்டாமவன் {பீமன்} அவர்களை {கௌரவர்களை} முடியைப் பிடித்து இழுத்துத் தூக்கி வீசி, தரையில் இழுத்துச் சென்றான். இதனால் சிலர் தங்களது முட்டியை உடைத்துக் கொண்டனர், சிலர் தங்கள் தலைகளையும், சிலர் தங்கள் தோள்களையும் உடைத்துக் கொண்டனர்.(19)

சில சமயங்களில் அந்த இளைஞன் {பீமன்}, அவர்களில் பத்துப் பேரை ஒரு பிடியில் பற்றி, அவர்கள் இறப்பின் அருகே செல்லும் வரை நீரில் அமிழ்த்தினான்.(20) திருதராஷ்டிரனின் மகன்கள் பழங்களைப் பறிக்க மரங்களில் ஏறினால், பீமன் அந்த மரத்தைத் தனது காலால் எட்டி உதைத்துக் குலுக்கி, மரத்திலிருந்த அனைவரையும், பழங்களுடன் சேர்ந்து கீழே விழுச் செய்தான்.(21,22) குத்துச்சண்டையிலும், வேகத்திலும், நிபுணத்துவத்திலும் நிச்சயம் அந்த இளவரசர்களில் யாரும் பீமனுக்குச் சமமாக இல்லை.(23)  பீமன், குழந்தைத்தனத்தால் தனது பலத்தைக் காட்டி அவர்களை இம்சித்தானே ஒழிய விரோத மனப்பான்மையால் அல்ல.(24) பீமனுடைய வலிமையின் அற்புத வெளிப்பாடுகளைக் கண்டவனும், திருதராஷ்டிரனின் மூத்த மகனுமான பலமிக்க துரியோதனன், அவனிடம் பகைமை கொள்ளத் தொடங்கினான்.(25)

நேர்மையற்றவனான அந்தத் தீயத் துரியோதனன் தனது அறியாமையாலும், ஆவலாலும், ஒரு பாவச் செயலைச் செய்யத் திட்டமிட்டான்.(26) “ஆற்றலில் பாண்டுவின் இரண்டாவது மகனான பீமனுக்கு ஒப்பாக எந்த மனிதனும் இல்லை. சூழ்ச்சியின் மூலமே நான் அவனை அழிக்க வேண்டும்.(27) பீமன் தனியொருவனாகவே நம் நூற்றொருவரையும் போருக்கு அழைக்கும் துணிவுடனிருக்கிறான்.(28) எனவே, அவன் தோட்டத்தில் துயிலும்போது, நாம் அவனைக் கங்கையின் நீரோட்டத்தில் தூக்கி எறியவேண்டும். அதன் பிறகு அவனது மூத்த சகோதரனான யுதிஷ்டிரனையும், இளையவனான அர்ஜுனனையும் சிறையில் அடைத்து, எந்தத் தொல்லையும் இல்லாமல் நாம் தனியாளாக அரசாளலாம்” என்று மனத்தில் திட்டமிட்டுக் கொண்ட அந்தத் தீய துரியோதனன், எப்போதும் பீமனைத் தாக்கவல்ல ஒரு வாய்ப்புக்காக நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.(29,30)

ஓ பாரதா {ஜனமேஜயா}, தொலைவில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பிரமாணகோடி என்ற பெயர் கொண்ட இடத்தில், ஓர் அழகான மாளிகையை எழுப்பி, அதில் அகலமான துணிகளையும், ஆடம்பரப் பொருட்களையும் தொங்கவிட்டான். அவன் அந்த மாளிகையில், நீர் விளையாட்டை நடத்த வேண்டி, எல்லாவகை உற்சாகமூட்டும் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் நிரப்பி வைத்தான். உற்சாகமூட்டும் கொடிகள் அந்த மாளிகையின் மீது பறந்தன. அந்த மாளிகையின் பெயர் “நீர்விளையாட்டு மாளிகை” என்பதாகும்.(31-33) அங்கே சமையற்கலை நிபுணர்கள் பல்வேறு வகைகளிலான உணவுப்பொருட்களைத் தயாரித்தனர்.(34) எல்லாம் தயாரான நிலையில் அதிகாரிகள் துரியோதனனுக்குச் சொல்லியனுப்பினர். அதன்பிறகு அந்தத் தீய மனத்தையுடைய இளவரசன் {துரியோதனன்} பாண்டவர்களிடம்,(35) “வாருங்கள், நாம் பூக்கள் நிறைந்த, மரங்கள் அடர்ந்த கங்கையின் கரைக்குச் சென்று நீர் விளையாடலாம்” என்று அழைத்தான்.(36)

அதனைக் கேட்ட யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதித்ததால், திருதராஷ்டிரன் மைந்தர்கள், பாண்டவர்களை அழைத்துக் கொண்டு, பெரும் வடிவங்களிலான நாட்டு யானைகளின் மேலும், நகரத்தைப் பிரதிபலிக்கும் தேர்களின் மேலும் பயணித்து அந்த நகரத்தை விட்டகன்றனர்.  குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்த இளவரசர்கள், பணியாட்களை அனுப்பிவிட்டு,(37,38) அங்கே இருந்த நந்தவனம் மற்றும் சோலைகளின் அழகை ரசித்துக் கொண்டே குகைக்குள் நுழையும் சிங்கங்கள் போல அரண்மனைக்குள் நுழைந்தனர்.(39) உள்ளே நுழைந்ததும், கட்டுமானக்கலைஞர்களின் நிபுணத்துவத்தை, அந்த மாளிகையின் அழகான சுவர்களிலும், உத்தரத்திலும் கண்டனர். அந்த மாளிகை அழகாக வண்ணம் பூசப்பட்டிருந்தது. அதில் இருந்த சாளரங்களும் {ஜன்னல்களும்}, செயற்கை நீரூற்றுகளும் அருமையாக இருந்தன. அந்த மாளிகைக்கருகில் தெளிந்த நீருடன், அடர்த்தியான தாமரைகளைக் கொண்ட குளங்களும் இருந்தன.(40,41) அதன் கரைகள், சுற்றுப்புறத்தை நறுமணத்தால் நிறைக்கும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(42) கௌரவர்களும், பாண்டவர்களும் கீழே அமர்ந்து, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்களை அனுபவிக்கத் தொடங்கினர்.(43) அவர்கள் விளையாட்டில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் உணவுக்கவளங்களைப் பரிமாரிக்கொண்டனர்.(44)

அதே வேளையில், பொல்லாதவனான துரியோதனன், பீமனைக் கொல்லும் நோக்கோடு ஒரு குறிப்பிட்ட அளவு உணவில் திறன்மிக்கக் கடும் நஞ்சை {காளகூட விஷத்தைக்} கலந்தான்[3].(45) (கும்பகோணம் பதிப்பில், “அவ்வாறே மிகப்பொறாமை கொண்ட துரியோதனன் கொல்ல எண்ணங்கொண்டு சகுனியின் அபிப்ராயத்தைக் கேட்டு, வலனன் என்னும் சமையற்காரனுடன் ஆலோசித்துப் பிறகு அவனைக் கொண்டு பீமஸேனனுடைய ஆஹாரத்தில் விஷத்தைப் போடுவித்தான். கொடியதும், மயிர்க்கூச்சமெடுக்கச் செய்வதுமாகிய காளகூட விஷம் சேர்க்கப்பட்டது” என்றிருக்கிறது. மேலும் துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோர் சேர்ந்து பீமனைக் கொல்வதற்குப் பல திட்டங்களைத் தீட்டியதாகவும், திருதராஷ்டிரனுக்கும், வைசியப்பெண்மணிக்கும் பிறந்தவனான யுயுத்சு பாண்டவர்களின் நன்மையிலுள்ள விருப்பத்தினால் அதைப் பாண்டவர்களுக்குச் சொன்னான் என்றும், பாண்டவர்களும் விதுரர் ஆலோசனையின்படி எதையும் வெளிக்காட்டாமல் இருந்தனர் என்றும் இருக்கிறது.)நாவில் அமுதத்தையும், இதயத்தில் கத்தியையும் வைத்திருந்த அந்தத் தீய இளைஞன் {துரியோதனன்}, வேகமாக எழுந்து, பீமனிடம் {சகோதரனாகவும், நண்பனாகவும்} நட்பு பாராட்டிக் கொண்டே, அவனது  {பீமனின்} முடிவை அடைய முடிந்தது நற்பேறென்றெண்ணி இதயத்தில் மகிழ்ந்து நஞ்சு கலந்த உணவை அதிகமாகக் கொடுத்தான். {அதில் எந்தக் குற்றத்தையும் காணாத பீமனும் அஃதை உண்டான்}.(46-48) பிறகு திருதராஷ்டிரன் மைந்தர்களும், பாண்டு மைந்தர்களும்  உற்சாகமாக நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டனர் {ஜலக்கிரீடை செய்தனர்}.(49) விளையாட்டு முடிந்ததும், அவர்கள் அனைவரும் வெள்ளுடை தரித்துப் பல்வேறு ஆபரணங்களை அணிந்து கொண்டனர்.(50) விளையாட்டால் களைப்படைந்த அவர்கள், மாலையில், {நதிக்கரையை ஒட்டியிருந்த} அந்த நந்தவனத்தின் இன்பமாளிகையில் ஓய்வு எடுக்க நினைத்தனர்.(51)

மற்ற இளைஞர்களை நீரில் விளையாடவிட்ட அந்த இரண்டாம் பாண்டவன் {பீமன்} மிகவும் களைப்படைந்தவனாக, நீரில் இருந்து எழுந்து, தரையில் வந்து படுத்துக் கொண்டான்.(52) நஞ்சின் ஆதிக்கத்தால் அவன் மிகவும் தளர்ந்திருந்தான். அங்கே வீசிய குளிர்ந்த காற்றானது, அந்தக் கடும் நஞ்சை வேகமகாக உடலெங்கும் பரவச் செய்ததால், உடனே அவன் {பீமன்} தன்னுணர்வை இழந்தான்.(53) இதைக் கண்ட துரியோதனன், கொடிகளாலான கயிறுகளைக் கொண்டு அவனைக் கட்டி நீருக்குள் அவனை வீசி எறிந்தான்.(54) இப்படி உணர்வை இழந்த அந்தப் பாண்டுவின் மைந்தன் {பீமன்}, நாகலோகம் வரை மூழ்கிப் போனான்.(55)

கடும் விஷப்பற்களைக் கொண்ட நாகங்கள் அவனை ஆயிரக்கணக்கில் கடித்தன.(56) அந்த வாயு தேவனுடைய மைந்தனின் உடலில் கலந்திருந்த தாவர விஷமானது {காளகூடம்}, இந்தப் பாம்பு விஷத்தால்  முறிந்தது.(57)  பாம்புகளின் விஷப்பற்கள் ஊடுருவ முடியாத அளவிற்கு அவனது மார்பு கடினமானதாக இருந்ததால், அவை அந்தப் பகுதியை {மார்பை} மட்டும் விட்டுவிட்டு அவனது உடலெங்கும் கடித்திருந்தன.(58) தன்னுணர்வு மீண்ட அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, தனது கட்டுகளை அவிழ்த்தெறிந்து, பாம்புகளைப் பிடித்துத் தரையில் அழுத்தி நசுக்கினான்.

எஞ்சியிருந்தவை {பீமனின் கரங்களில் அகப்படாத பாம்புகள்} உயிருக்காகத் தப்பி ஓடி, {இந்திரனுக்கு இணையானவனான} தங்கள் மன்னன் வாசுகியிடம் சென்று,(59,60) அவனிடம், “ஓ பாம்புகளின் மன்னா! கொடிகளால் கட்டப்பட்ட மனிதன் ஒருவன் நீரில் மூழ்கி வந்தான்; ஒருவேளை அவன் நஞ்சுண்டிருக்க வேண்டும்.(61) ஏனெனில், எங்களுக்கு மத்தியில் விழுகையில் அவன் உணர்வற்றவனாக இருந்தான். ஆனால், நாங்கள் அவனைக் கடிக்கத் தொடங்கியபோது, தன்னுணர்வு மீண்ட அவன், தனது கட்டுக்களை அறுத்தெரிந்து,(62) எங்களை நசுக்கத் தொடங்கினான். மாட்சிமை பொருந்திய நீரே, அவன் யார் என்பதை விசாரிக்க வேண்டும்” என்றன.

அப்போது வாசுகி, சக்தி குறைந்த அந்த நாகங்களின் வேண்டுகோளுக்கிணங்க, அந்த இடத்திற்குச் சென்று,(63) பீமசேனனைக் கண்டான். பாம்புகளில் ஆர்யகன் என்ற பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் குந்தியின் பாட்டனாவான்[4]. (குந்தியின் தந்தையான சூரன் என்பவன், ஆர்யகனின் பெண் வயிற்று பிள்ளையாவான்.)பாம்புகளின் தலைவன் {வாசுகி} தனது உறவினனைக் {பீமனைக்) கண்டு மகிழ்ந்து, ஆரத்தழுவிக் கொண்டான். யாவையும் கேட்டறிந்த வாசுகி, பீமனிடம் மனநிறைவு கொண்டு, ஆர்யகனிடம் பெரும் மனநிறைவுடன்,(64,65) “நாம் இவனை எவ்வாறு மனநிறைவு கொள்ளச் செய்வது? இவன் செல்வங்களையும், ரத்தினங்களையும் தாராளமாக எடுத்துக் கொள்ளட்டும்” என்றான்.(66)

வாசுகியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ஆர்யகன், “ஓ பாம்புகளின் மன்னா! மாட்சிமை பொருந்திய நீரே அவனிடம் மனநிறைவு கொண்டிருக்கும்போது, அவனுக்குச் செல்வத்தின் தேவையில்லை.(67) ரசகுண்டத்தின் (அமுத கலசங்களில் உள்ள) சாற்றை {ரசத்தைக்} குடித்து, அதன் மூலமாக அளவிலா பலத்தை அடைய அவனுக்கு அனுமதியளிப்பீராக. அந்தக் கலசங்கள் ஒவ்வொன்றிலும், ஆயிரம் யானைகளின் பலம் இருக்கிறது.(68) இந்த இளவரசன் அவனால் முடிந்த மட்டும் அதைக் குடிக்கட்டும்” என்றான்.

பாம்புகளின் மன்னனும் {வாசுகியும்} அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தான்.(69) அதன்பேரில் பாம்புகள் மங்கலச் சடங்குகளைச் செய்யத் தொடங்கின. பிறகு, மிகக்கவனமாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட பீமசேனன், கிழக்கை நோக்கி அமர்ந்து அமுதத்தைப் பருகத் தொடங்கினான்.(70) ஒரே மூச்சில் அவன், ஒரு முழு பாத்திரத்தின் உள்ளடக்கத்தையும் குடித்து, இதே வகையில், தான் நிறைவடையும்வரையில் அடுத்தடுத்து எட்டு பாத்திரங்களைக் காலி செய்தான்.(71) அதன் பிறகு, பாம்புகள் அவனுக்காக ஆயத்தம் செய்து வைத்திருந்த சிறந்த படுக்கையில் சுகமாகப் படுத்துக் கொண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(72)

இளவரசர்களின் குருவானார் கிருபர்! – ஆதிபர்வம் பகுதி 129-(சம்பவ பர்வம் – 65)பீமனைக் காணாமல் தவித்த யுதிஷ்டிரன்; குந்தி அடைந்த துயரம்; எட்டு நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பீமன்; செய்திகளனைத்தையும் அறிந்தும் அமைதிகாத்த பாண்டவர்கள்; மீண்டும் விஷம் கலந்த துரியோதனன்; விஷத்தைச் செரித்துவிட்ட பீமன்; பாண்டவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிய துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி; பிள்ளைகளின் குருவாகக் கிருபரை நியமித்த திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் சொன்னார், “அதே நேரத்தில் கௌரவர்களும், பாண்டவர்களும் விளையாடி முடித்துவிட்டு, பீமன் இல்லாமலேயே நகரம் திரும்பினர்.(1) சிலர் குதிரைகளிலும், சிலர் யானைகளிலும், சிலர் ரதங்களிலும் மற்ற வாகனங்களிலும் ஹஸ்தினாபுரம் சென்றடைந்தனர். வழியிலேயே ஒருவருக்கொருவர், “பீமன் நமக்குமுன் சென்றிருப்பான்” என்று சொல்லிக் கொண்டனர்.(2) தீய துரியோதனன் பீமன் தொலைந்ததால் இதயத்தில் மகிழ்ந்து, தனது தம்பிகளுடன் நகரத்துக்குள் நுழைந்தான்.(3) தீயவை அறியாத அறம்சார்ந்த யுதிஷ்டிரன், மற்றவர்களையும் தன்னைப் போல் நேர்மையாக நினைத்துக் கொண்டான்.(4)

அந்தப் பிருதையின் மூத்த மகன், தனது தம்பியின் மீதுள்ள அன்பால், தனது தாயிடம் சென்று, அவளை வணங்கி, “ஓ தாயே, பீமன் வந்துவிட்டானா?(5) ஓ நற்றாயே, அவனை எங்கேயும் நான் காணவில்லை. அவன் எங்கே சென்றிருக்கிறான்? அவனை நந்தவனத்திலும், அழகான சோலையிலும் நீண்ட நேரமாக நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.(6) ஆனால் அவனை எங்கும் காணவில்லை. இறுதியாக நாங்கள் அந்த வீரப்பீமன் எங்களுக்கு முன்பே இங்கே வந்திருப்பான் என்று நினைத்தோம்.(7) ஓ சிறப்புமிக்க பெருமாட்டியே, நாங்கள் இங்கே பெரும் கவலையுடன் வந்தோம். அவன் இங்கு வந்திருந்தால், இப்போது எங்குச் சென்றுவிட்டான்? அவனை நீ எங்கேயும் அனுப்பியிருக்கிறாயா?(8) பலசாலியான அந்தப் பீமனைக் குறித்து எந்தத் தெளிவும் எனக்கு இல்லை. {நிறைய சந்தேகங்களுடன் இருக்கிறேன்}.(9) அவன் தூங்கிக்கொண்டிருந்தான், இங்கும் அவன் வரவில்லை. அதனால் அவன் (உயிருடன்) இல்லை என்றே நான் நினைக்கிறேன்” என்றான்.(10)

பெரும் புத்திசாலியான யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்ட குந்தி அதிர்ச்சியால் உரக்கக்கூவியபடி, “அன்பு மகனே, நானும் பீமனைக் காணவில்லை. அவன் என்னிடம் வரவில்லை.(11) ஓ… விரைவாக உனது தம்பிகளுடன் சென்று அவனைக் கவனமாகத் தேடுவாயாக” என்றாள்.

துயரத்தால் குந்தி தனது மூத்த மகனிடம் இப்படிச் சொல்லிவிட்டு,(12) விதுரனை அழைத்து, “ஓ சிறப்புமிக்க க்ஷத்ரி {விதுரா}, பீமசேனனைக் காணவில்லை. அவன் எங்குச் சென்றுவிட்டான்?(13) அவனது மற்ற சகோதரர்கள் அனைவரும் நந்தவனத்திலிருந்து திரும்பிவிட்டனர். பெரும் கரம் கொண்ட பீமன் மட்டும் இன்னும் வீடு வரவில்லை.(14) துரியோதனன் அவனை விரும்பவில்லை. அந்தக் கௌரவன் {துரியோதனன்} கபடக்காரன், வீண் வழக்காடுபவன், தாழ்ந்த மனதுடையவன் மற்றும் விவேகமற்றவனுமாவான். அரியணையின் மீது வெளிப்படையான துராசையைக் கொண்டுள்ளான்.(15) அவன் கோபத்தால் எனது அன்புக்குரியவனைக் கொன்றுவிட்டானோ என்று அஞ்சுகிறேன். இஃது எனக்குக் கடும் துன்பத்தை விளைவிக்கிறது. நிச்சயமாக இஃது எனது இதயத்தை எரிக்கிறது” என்றாள்.(16)

விதுரன், “அருளப்பட்ட பெருமாட்டியே, அப்படிச் சொல்லாதே. உனது மற்ற மகன்களைக் கவனத்துடன் காத்துக் கொள்வாயாக. அந்தத் தீய துரியோதனனை குற்றஞ்சாட்டினால், அவன் உனது மற்ற மகன்களையும் கொன்று விடக்கூடும்.(17)அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, உனது மகன்கள் அனைவரும் நீண்டநாட்களுக்கு வாழ்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். எனவே, பீமன் கண்டிப்பாகத் திரும்பி வந்து உனது இதயத்துக்கு மகிழ்வூட்டுவான்” என்று மறுமொழி கூறினான்”.(18)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்த ஞானமுள்ள விதுரன் குந்தியிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான். குந்தி பெரும் துயரத்துடன் தனது இல்லத்திலேயே தங்கியிருந்தாள்.(19) அதேவேளையில், பீமசேனன் எட்டு நாட்களுக்குப் பிறகு, தனது துயிலிலிருந்து எழுந்து, தான் அருந்திய ரசம் முழுவதும் செரித்திருந்ததால், பெரும் பலவானாகத் தன்னை உணர்ந்தான். அவன் விழித்ததைக் கண்ட நாகர்கள் அவனுக்கு ஆறுதலளித்து உற்சாகமூட்டியபடியே,(20,21) “ஓ பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனே, பலத்தைக் கொடுக்கும் இந்த ரசத்தை நீ குடித்ததனால், அஃது உனக்குப் பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொடுத்திருக்கிறது. இப்போது உன்னை யாராலும் போரில் வெல்லமுடியாது.(22) ஓ குரு குலக் காளையே, மங்கலமானதும், புனிதமானதுமான இந்த நீரில் நீராடி வீடு திரும்புவாயாக. நீ இல்லாததால் உனது சகோதரர்கள் அமைதியை இழந்தவர்களாக இருக்கின்றனர்” என்றனர்.(23)

அதன்பிறகு பீமன் அந்த நீரில் நீராடி தன்னைத் தூய்மைப்படுத்தி, வெள்ளுடை தரித்துக் கொண்டான். வெண்மலர்களாலான பூமாலைகளைச் சூடிக் கொண்டு, நாகர்களால் கொடுக்கப்பட்ட பரமான்னத்தை (அரிசியும், சர்க்கரையும் கலந்த கூழ்) உண்டான். பிறகு அந்த எதிரிகளை அடக்குபவன், பல்வேறு தெய்வீக ஆபரணங்களையும் பூண்டு, பாம்புகளின் வாழ்த்துகளையும், துதிகளையும் பெற்றுக் கொண்டு, பதிலுக்குத் தனது மரியாதையையும் செலுத்திப் பாதாள லோகத்திலிருந்து எழுந்து வந்தான்.(24-26) நாகர்கள் அந்தத் தாமரைக் கண் கொண்ட பாண்டவனை நீரிலிருந்து தூக்கி, அவன் விளையாடிக் கொண்டிருந்த அதே நந்தவனத்தில் இறக்கிவிட்டு, அவன் கண் எதிரிலேயே மறைந்தனர்.(27,28)

பூமியின் பரப்புக்குத் திரும்பிய பலசாலியான பீமன், தனது தாயிடம் மிக வேகமாக ஓடிச் சென்றான்.(29) அவளுக்கும், தனது மூத்த சகோதரனுக்கும் தலைவணங்கி, தனது இளைய சகோதரர்களின் உச்சியை முகர்ந்து பார்த்த {தலையை மணத்திப் பார்த்து} அந்த எதிரிகளை ஒடுக்குபவன் {பீமன்},(30) அவனது தாய் மற்றும் மனிதர்களில் காளைகளைப் போன்ற தனது சகோதரர்களின் அணைப்புக்குள் சென்றான். அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரப் பாசத்துடன், திரும்பத் திரும்ப, “இன்று நக்கென்ன மகிழ்ச்சி! இஃது என்ன ஒரு மகிழ்ச்சி!” என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(31)

பிறகு, பெரும் பலமும், வீரமும் கொண்ட பீமன் நடந்தது அத்தனையும் தனது சகோதரர்களிடம் தெரிவித்தான். துரியோதனின் தீச்செயல், நாகர்களின் உலகத்தில் கிடைத்த நற்பேறு மற்றும் கெடுபேறுகளைக் {துரதிர்ஷ்டங்களைக்} கொண்ட நிகழ்வுகள் அனைத்தையும் விவரித்தான்.(32,33) அத்தனையும் கேட்ட யுதிஷ்டிரன், “இக்காரியத்தில் அனைவரும் அமைதியாக இருங்கள். இதைப் பற்றி யாரிடமும் பேசாதீர்கள்.(34) இன்றிலிருந்து, ஒருவருக்கொருவர் உங்களைக் கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னான்.   நேர்மையான யுதிஷ்டிரனால் இப்படி எச்சரிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனுடன் சேர்ந்து மிகுந்த விழிப்புணர்வு கொண்டனர். குந்தியின் மகன்களுக்கு அப்படி எந்தக் கவனக்குறைவும் ஏற்படாதவண்ணம், விதுரன் நல்ல ஆலோசனைகள் வழங்கினான்.(35,36)

சில காலம் கழித்து, மறுபடியும் துரியோதனன் பீமனின் உணவில் புத்தம்புதிய கடும் விஷத்தைக் கலந்தான்.(37) ஆனால், பாண்டவர்கள் மீது யுயுத்சு (திருதராஷ்டிரனுக்கு வைசிய மனைவியின் மூலம் பிறந்தவன்) கொண்ட நட்பினால், அந்தக் காரியத்தை அவர்களுக்குத் தெரிவித்துவிட்டான். இருப்பினும் விருகோதரன் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதை விழுங்கி, முழுவதுமாகச் செரித்தும் விட்டான்.(38) அந்தக் கடும் விஷத்தால் பீமனிடம் {அவன் அதைச் செரித்துவிட்டதால் அவனிடம்} எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை.(39) பீமனின் அழிவுக்காகக் கலக்கப்பட்ட நஞ்சு வேலை செய்யாததால், துரியோதனன், கர்ணன்[1] (கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் பதிப்புகளில் இங்கே கர்ணன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இதற்கு முன்பே கர்ணனின் பெயர் குறிப்பிடப்படுகிறது.)மற்றும் சகுனி ஆகியோர் கூடிப் பாண்டவர்களின் மரணத்திற்காக இன்னும் பல தீய திட்டங்களை வகுத்தனர்.(40) அந்தத் திட்டங்கள் அனைத்தையும் பாண்டவர்கள் அறிந்தாலும், விதுரனின் ஆலோசனைப்படித் தங்கள் கடுஞ்சீற்றத்தை அடக்கிக் கொண்டனர்[2].(41)(மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த இடத்தோடு இந்தப் பகுதி முடிந்து விடுகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே முடிகிறது. ஆனால் கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும் பின்வரும் செய்தியும் இருக்கிறது)அதே நேரத்தில் மன்னன் (திருதராஷ்டிரன்), குரு இளவரசர்கள் சோம்பலுடன், குறும்புத்தனங்கள் நிரம்பி வளர்வதைக் கண்டு, கௌதமரை அவர்களுக்குக் குருவாக நியமித்தான். அவர்களை {இளவரசர்கள்} அவரிடம் கல்வி கற்க அனுப்பினான். நாணற்புதரில் பிறந்த கௌதமர் {கௌதமரின் பேரனான கிருபர்}, வேதங்களில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். குரு இளவரசர்கள் அவரிடம் ஆயுதக் கல்வியைக் கற்கத் தொடங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(42-44)

சரத்வானை மயக்கிய ஜாலவதி! – ஆதிபர்வம் பகுதி 130-(சம்பவ பர்வம் – 66)கௌதமருக்குப் பிறந்த சரத்வான்; சரத்வானின் ஆயுத அறிவியல் நாட்டம்; ஜாலவதியைச் சரத்வானிடம் அனுப்பிய இந்திரன்; நாணற்கற்றையில் பிறந்த கிருபர் மற்றும் கிருபி; அவர்களை வளர்த்த சந்தனு; சந்தனுவிடம் அறிமுகம் செய்து கொண்டு கிருபருக்கு ஆயுத அறிவியலை அளித்த சரத்வான்; பாரத இளவரசர்களுக்குக் குருவான கிருபர்

ஜனமேஜயன், “ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, கிருபரின் பிறப்புக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. நாணல் கற்றையிலிருந்து அவர் எவ்வாறு உண்டானார்? ஆயுதங்களை எவ்வாறு அவர் அடைந்தார்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மன்னா! பெரும் முனிவர் கௌதமருக்கு சரத்வான் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தார். அந்தச் சரத்வான் பிறக்கும்போதே (கைகளில்) கணைகளுடன் {அம்புகளுடன்} பிறந்தார்.(2) ஓ எதிரிகளை அழிப்பவனே, கௌதமரின் மகன் மற்ற அறிவியல்களில் {வேத கல்வியில்} நாட்டம் கொள்ளாமல் ஆயுதங்களின் அறிவியலில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.(3) மாணவப் பருவத்தில் வேத ஞானத்தை அடையும் பிராமணர்களைப் போல, கடும் தவத்தால் அந்தச் சரத்வான் ஆயுதங்களை அடைந்தார்.(4) கௌதமர் (கௌதமரின் மகனான {சரத்வான்}, ஆயுத அறிவியலில் நாட்டம் கொண்டதாலும், தமது கடும் தவங்களாலும் இந்திரனைப் பெரிதும் அச்சமடையச் செய்தார்.(5)

ஓ குரு குலத்தோனே {ஜனமேஜயா}, அப்போது தேவர்கள் தலைவன் {இந்திரன்}, ஜனபதி {ஜாலவதி} என்ற தேவலோக மங்கையை அழைத்து, “கௌதமரின் தவத்தைக் கலைக்க உன்னால் இயன்றதில் சிறந்ததைச் செய்” என்று சொல்லிக் கௌதமரிடம் அனுப்பினான்.(6) அவள் அந்தச் சரத்வானின் அழகான ஆசிரமத்திற்குச் சென்று, வில் மற்றும் அம்புகளுடன் இருந்த அந்தத் துறவியை மயக்கினாள்.(7) உலகில் ஈடு இணை சொல்லமுடியாத வடிவழகுடன் கானகத்தில் தனிமையில் ஒற்றையாடையுடன் இருந்த அந்த அப்சரஸைக் கண்ட சரத்வானின் கண்கள் பெரு மகிழ்ச்சியால் அகல விரிந்தன.(8) அந்த மங்கையைக் கண்டதால், அவரது கைகளில் இருந்த வில்லும், கணைகளும் நழுவின, அவரது உடல் முழுவதும் உணர்ச்சியால் ஆட்டம் கண்டது.(9) இருப்பினும், அவரது உயர்ந்த தவத் திறனாலும், ஆன்ம பலத்தாலும், அத்துறவி உணர்வுகளை எதிர்த்துப் பொறுமை காத்தார்.(10) இருப்பினும் விரைவாக அவர் அடைந்த மாற்றங்களால், அவரை அறியாமல் அவரது உயிர் நீர் வெளியேறியது.(11)

அவர் தனது வில்லையும் கணைகளையும், மான் தோலையும் அங்கேயே விட்டுவிட்டு, அந்த அப்சரசை விட்டு அகன்று ஓடினார். இருப்பினும், அவரது உயிர் நீர் நாணற்கற்றையில் வீழ்ந்து, இருகூறாகப் பிரிந்து, இரட்டைப் பிள்ளைகள் அதிலிருந்து உற்பத்தியாகினர்.(12,13) அப்போது, சந்தனுவின் படையில் பணியாற்றுபவர்களில் ஒருவன் தற்செயலாக அந்த இரட்டையர்களைக் கண்டான்.(14) தரையில் வில்லும், அம்புகளும், மான் தோலும் இருப்பதைக் கண்டு, அவர்கள் யாரோ போர்க்கலையில் திறன்வாய்ந்த பிராமணரின் பிள்ளைகள் என்று நினைத்தான்.(15) இப்படித் தீர்மானித்து, அந்தப் பிள்ளைகளை வில் அம்புடன் எடுத்துக் கொண்டு சென்று காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த மன்னனிடம் காட்டினான்.

இதைக் கண்ட மன்னன் இரக்கங்கொண்டு,(16) “இவர்கள் எனது பிள்ளைகளாகட்டும்” என்று சொல்லி, அரண்மனைக்குக் கொண்டுவந்தான். மனிதர்களில் முதன்மையானவனும், பிரதீபனின் மகனுமான சந்தனு, கௌதமரின் இரட்டையர்களைத் தனது வீட்டுக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கான அறச்சடங்குகளைச் செய்வித்தான். அவர்களை வளர்க்கத் தொடங்கிய அவன், அவர்களைக் கிருபன் என்றும், கிருபி என்றும் அழைத்தான். தனது இரக்கத்தினால் (கிருபை) அவர்களை வளர்த்ததால் அவர்களுக்கு அப்பெயர்களை வைத்தான்.(17-19) கௌதமரின் மகன் {சரத்வான்}, தமது ஆசிரமத்தை விட்டகன்று, தொடர்ந்து ஆயுத அறிவியலை உறுதியுடன் பயின்றார்.பிறகு தனது தெய்வீகப் பார்வையால் தமது மகனும், மகளும் சந்தனுவின் அரண்மனையில் வளர்வதைக் கண்டார். இதன்காரணமாக அவர் அந்த ஏகாதிபதியிடம் சென்று, தனது குலம் முதல் அனைத்தையும் சொன்னார்.(20) அதன்பிறகு அவர் {சரத்வான்}, கிருபருக்கு ஆயுத அறிவியலின் நான்கு கிளைகளையும்[1], (நான்கு வகைப் போர் = 1. ப்ரயோகம் – பயன்படுத்துவது, 2. சம்ஹாரம் – அழிப்பது 3.கல்பம் – ஆயுதத்துக்கு மந்திர பலம் கொடுப்பது 4. ரஹஸ்யம் – மறைமுக வித்தை)ஞானத்தின் பல கிளைகளையும் அதன் புதிர்களையும் விவரமாக எடுத்துரைத்தார்.(21) குறுகிய காலத்திற்குள் கிருபர் அந்த அறிவியலில் நிபுணத்துவம் பெற்றார். திருதராஷ்டிரனின் நூறு மகன்களும், பாண்டவர்களும், யாதவர்களும், விருஷ்ணிகளும் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்த பல இளவரசர்களும் அவரிடம் இருந்து ஆயுத அறிவியலில் பாடங்கள் கற்க அங்கே வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(22,23)

கிரிடச்சியிடம் {கிருதாசியிடம்} மயங்கிய பரத்வாஜர் – ஆதிபர்வம் பகுதி 131-சம்பவ பர்வம் – 67)-கிரிடச்சியைக் கண்டு மயங்கிய பரத்வாஜர்; துரோணரின் பெயர்க்காரணம்; துரோணருக்கு ஆயுத கல்வி அளித்த அக்னிவேசர்; துரோணரும் துருபதனும் நண்பர்களானது; துரோணர் கிருபியை மணந்து அஸ்வத்தாமனைப் பெற்றது; பரசுராமரிடம் ஆயுத ஞானத்தைப் பெற்ற துரோணர்; துருபதனைக் காணச் சென்ற துரோணர்…

வைசம்பாயனர் சொன்னார், “மேன்மையான கல்வியைத் தனது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுக்க நினைத்த பீஷ்மர், பெரும் சக்தியும், போர் அறிவியலில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான ஓர் ஆசிரியரைத் தேடிக் கொண்டிருந்தார்.(1) ஓ பாரதர்களின் தலைவா, பெரும் புத்திசாலித்தனம் இல்லாத எவரும், ஆயுத அறிவியலின் நுட்பம் அறியாத எவரும், தேவர்களைப் போன்ற பலம் இல்லாத எவரும், குரு குலத்தவருக்குக் குருவாக இருக்கக்கூடாது என்றெண்ணிய கங்கையின் மைந்தன் {பீஷ்மர்}, ஓ மனிதர்களில் புலியே, பரத்வாஜரின் மகனும், வேதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான துரோணரின் கீழ் கல்வி பயில பாண்டவர்களையும், கௌரவர்களையும் அனுப்பினார். பீஷ்மரால் கொடுக்கப்பட்ட வரவேற்பினால் பெரிதும் மகிழ்ந்தவரும், உலகப்புகழ்பெற்றவரும், சிறப்புவாய்ந்தவருமான துரோணர் அந்த இளவரசர்களைத் தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.(2-5) துரோணர் அவர்களுக்கு ஆயுத அறிவியலையும் அதன் கிளைகள் அனைத்தையும் பயிற்றுவித்தார். ஓ ஏகாதிபதி! பெரும் பலம் வாய்ந்த கௌரவர்களும், பாண்டவர்களும் குறுகிய காலத்திற்குள் அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(6)


ஜனமேஜயன், “ஓ பிராமணரே! துரோணர் எப்படிப் பிறந்தார்? அவர் ஆயுதங்களை எங்கே, எப்படி அடைந்தார்? அவர் குரு குலத்தவரிடம் எப்படி வந்தார்? ஏன் வந்தார்? பெரும் சக்தியுடைய அவர் யாருடைய மகனாவார்?(7) ஆயுதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் முதன்மையான அவரது மைந்தன் அஸ்வத்தாமன் எப்படிப் பிறந்தான்? இவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்! அவற்றை விவரமாகச் சொல்லும்” என்று கேட்டான்.(8)
வைசம்பாயனர் சொன்னார், “பரத்வாஜர் என்ற பெயர் கொண்டவரும், கடும் நோன்புகள் நோற்பவருமான ஒரு பெரும் முனிவர், கங்கை உற்பத்தியாகும் இடத்திற்கருகே கடும் தவம் செய்து கொண்டு இருந்தார்.(9) அவர், பழங்காலத்தில் ஒரு நாள், பல பெருமுனிகளுடன் சேர்ந்து, அக்னி ஹோத்ர வேள்வி செய்வதற்காகத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக் கங்கையில் நீராடச் சென்றார்.(10) அந்த நதிக்கரைக்கு வந்ததும், சற்று நேரத்திற்கு முன் அங்கு வந்திருந்த, அழகும், இளமையும் கொண்ட கிரிடச்சி {கிருதாசி} எனும் அப்சரஸைக் கண்டார்.(11) அவள், தனது முகபாவத்தில் பெருமையும், கவர்ச்சிகரமான சோர்வும் கொண்டு, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு நீரிலிருந்து எழுந்தாள். அவள் கரையில் நடந்து வந்த போது, அவளது ஆடை மெல்ல நழுவியது. அவளது ஆடை கலைந்ததைக் கண்ட அந்த முனிவர், எரியும் காமத்தீயால் தாக்குண்டார்.(12)

அடுத்த நொடியே உணர்வுகளின் வேகத்தால் அவரது உயிர் நீர் வெளியேறியது. அந்த முனிவர் அதை உடனடியாகத் துரோணம் (குடம்) என்ற ஒரு பாத்திரத்தில் பிடித்தார்.(13) ஓ மன்னா, பரத்வாஜரால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் பாத்திரத்திலிருந்த உயிர்நீர் மூலம் துரோணர் பிறந்தார். இப்படிப் பிறந்த அந்தப் பிள்ளை வேதங்களை அதன் அதன் கிளைகளுடன் படித்தார்.(14) அதற்குச் சில காலத்திற்கு முன்பு, ஆயுத ஞானம் கொண்டவர்களில் முதன்மையான பெரும் சக்தி கொண்ட பரத்வாஜர், சிறப்பு வாய்ந்த அக்னிவேசருக்கு ஆயுத அறிவியலான ஆக்னேயத்தைப் போதித்தார்.(15) ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, நெருப்பில் இருந்து பிறந்த அந்த முனிவர் (அக்னிவேசர்), தனது குருவின் பிள்ளையான துரோணருக்கு அந்தப் பெரும் ஆயுத ஞானத்தைக் கொடுத்தார்.(16)

பரத்வாஜருக்கு {துரோணரின் தந்தைக்கு} நல்ல நண்பராக, பிருஷதன் {துருபதனின் தந்தை} என்றொரு மன்னன் இருந்தான். அந்த நேரத்தில் பிருஷதனுக்குத் துருபதன் என்றொரு மகன் பிறந்தான்.(17) பிருஷதனின் மகனும், க்ஷத்திரியர்களில் காளையுமான அந்தத் துருபதன், துரோணருடன் விளையாடுவதற்காகவும், அவருடன் கல்வி பயில்வதற்காகவும் தினசரி பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(18) ஓ ஏகாதிபதி! பிருஷதன் இறந்த போது, பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட துருபதன் வடக்குப் பாஞ்சாலத்திற்கு மன்னனானான்.(19) அந்த நேரத்தில் சிறப்புமிக்க பரத்வாஜரும் சொர்க்கத்திற்கு உயர்ந்தார். அதைத் தொடர்ந்து, துரோணர் தனது தந்தையின் ஆசிரமத்திலேயே தங்கிக் கடும் நோன்புகளை மேற்கொண்டிருந்தார்.(20)

வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கறிந்து, தனது துறவின் மூலம் தனது பாவங்களை எரித்தவரும், கொண்டாடப்படுபவருமான துரோணர், பிள்ளை பெறும் விருப்பத்தாலும், தனது தந்தையின் விருப்பத்திற்கு அடிபணிந்தும், சரத்வானின் மகள் கிருபியை மணந்து கொண்டார். அந்தப் பெண்மணி, எப்போதும் அறம் சார்ந்த செயல்களும், அக்னி ஹோத்ரம் செய்வதிலும் ஈடுபட்டுக் கடும் தவங்களை மேற்கொண்டு, அஸ்வத்தாமன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றாள். அஸ்வத்தாமன் பிறந்ததும், (தெய்வீக) குதிரை உச்சைஸ்ரவசைப் போல் கனைத்தான்.(21-23) அந்தக் கனைப்பைக் கேட்டு, வானத்திலிருந்து ஓர் அசரீரி, “இந்தக் குழந்தையின் குரல், கனைக்கும் குதிரையைப் போல எங்கும் எதிரொலிக்கிறது.(24) எனவே, இக்குழந்தை அஸ்வத்தாமன் (குதிரைக் குரலோன்) என்ற பெயரால் அழைக்கப்படட்டும்” என்றது. குழந்தையைப் பெற்றதால் பரத்வாஜரின் மைந்தன் {துரோணர்} பெரும் மகிழ்வு கொண்டார்.(25) அவர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து வசித்துத் தன்னை ஆயுத அறிவியல் ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்தார்.

ஓ மன்னா, இந்த நேரத்தில்தான், ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவரும், எதிரிகளை அழிக்கும் சிறப்பு மிகுந்தவருமான பிராமணர் ஜமதக்னேயர் {பரசுராமர்} தன்னிடம் உள்ள எல்லாச் செல்வங்களையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட விரும்புகிறார் என்று கேள்விப்பட்டார் துரோணர்.(26,27)

ராமரின் {பரசுராமரின்} ஆயுத ஞானத்தையும், அவரது தெய்வீக ஆயுதங்களைப் பற்றியும் கேள்விப்பட்ட துரோணர் தனது இதயத்தில் அவற்றையும், ராமரிடம் இருந்த நீதிகள் சார்ந்த ஞானத்தையும் பெற நினைத்தார்.(28) பெரும் அறத்தகுதிகளைக் கொண்டவரும், பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவருமான துரோணர், கடும் நோன்புகள் நோற்கும் தனது சீடர்களுடன் மகேந்திர மலைக்குப் பயணப்பட்டார்.(29) மகேந்திர மலையை அடைந்த உயர்ந்த அறத்தகுதிகள் கொண்ட பரத்வாஜரின் மைந்தன், எதிரிகளைத் துடைத்தெறிந்தவரான, பிருகுவின் மைந்தன் {பரசுராமர்} தனது மனத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துப் பெரும் அமைதியுடன் இருப்பதைக் கண்டார்.(30) பிருகுவின் குலக்கொழுந்தைத் {பரசுராமரைத்} தமது சீடர்களுடன் அணுகித் தனது பெயரையும், அங்கீரசு முனிவர் வழியில் வந்த தன் கோத்திரத்தையும் சொன்னார்.(31) தனது தலையால் தரையைத் தொட்டு, ராமரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். செல்வங்களைக் கொடுத்துவிட்டு, ஆழ்ந்த கானகத்திற்குள் செல்லத் திட்டமிட்டுள்ள ஜமதக்னியின் சிறப்புவாய்ந்த மகனைக் {பரசுராமரைக்} கண்ட துரோணர், “பெண்ணின் கருவிலில்லாமல், பரத்வாஜர் மூலம் உதித்தவன் நான் என்பதை அறிந்து கொள்வீராக!(32,33) என்னைச் சிறந்த பிராமணனாக அறிந்து கொள்வீராக. எனது பெயர் துரோணன் என்பதாகும். நான் உம்மிடம் இருந்து செல்வத்தைப் பெற விரும்பி வந்திருக்கிறேன்” என்றார்.(34)

இதைக்கேட்ட, அந்த க்ஷத்திரிய குலத்தை அழித்தவர், “நீ வரவேற்கப்படுகிறாய், ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே! நீ என்ன விரும்புகிறாய் என்பதைச் சொல்” என்று கேட்டார். பரத்வாஜரின் மைந்தன் {துரோணர்}, எல்லாச் செல்வங்களையும் கொடுத்துவிட எண்ணியிருந்த அழிப்பவர்களில் முதன்மையானவரிடம் {பரசுராமரிடம்}, “ஓ பல்வேறு வகைப்பட்ட நோன்புகள் நோற்றவரே, நான் நித்தியமான {அழிவற்ற, அளவற்ற} செல்வத்தை விரும்புகிறேன்” என்றார்.(35,36)

அதற்கு ராமர், “ஓ துறவை செல்வமாகக் கொண்டவனே, என்னிடம் இருந்த தங்கத்தையும், மற்றும் நான் என்ன செல்வமெல்லாம் வைத்திருந்தேனோ அவை அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.(37) நகரங்கள் பல கொண்ட இந்த ஆழிசூழ் {கடல் சூழ்ந்த} உலகையும் கசியபருக்குக் கொடுத்துவிட்டேன்.(38) இப்போது என்னிடம் எனது இந்த உடலும், பல மதிப்புமிக்க ஆயுதங்களும் மட்டுமே மீந்திருக்கின்றன.(39) இரண்டில் எதை வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேள். அதை உனக்கு நிச்சயம் தருவேன். விரைவாகச் சொல்!” என்றார்.(40)

துரோணர், “ஓ பிருகு மைந்தரே, உமது ஆயுதங்கள் அனைத்தையும் அவற்றை ஏவும், முற்றும் திரும்ப அழைக்கும் உகந்த புதிர்களுடன் {மந்திரங்கள்} எனக்குத் தாரும்” என்று கேட்டார்.(41)

“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பிருகுவின் மைந்தர் {பரசுராமர்} தனது அனைத்து ஆயுதங்களையும் துரோணரிடம் கொடுத்தார். அவர் மொத்த ஆயுதங்களின் அறிவியலையும் அதன் விதிகளுடனும், புதிர்களுடனும் சேர்த்துப் போதித்துக் கொடுத்தார்.(42) அவை அனைத்தையும் ஏற்றுப் போதுமான அளவு அடைந்ததாக மனநிறைவு கொண்ட அந்த பிராமணர்களில் சிறந்தவர், இதயத்தால் மகிழ்ந்து, தனது நண்பன் துருபதனின் நகரத்திற்குப் பயணப்பட்டார்” {என்றார் வைசம்பாயனர்}.(43)

துரோணரை அவமதித்த பாஞ்சாலன் – ஆதிபர்வம் பகுதி 132-(சம்பவ பர்வம் – 68)-துருபதனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட துரோணர்; துரோணரை அவமதித்த துருபதன்…

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மன்னா, பிறகு, பரத்வாஜரின் பலம் வாய்ந்த மகன் {துரோணர்}, துருபதனின் முன்பு சென்று, அந்த ஏகாதிபதியிடம், “என்னை உனது நண்பனாக அறிந்துகொள்வாயாக” என்றார்.(1) மகிழ்ச்சியான இதயத்துடன் கூடிய தனது நண்பனான அந்தப் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} பேச்சைப் பாஞ்சாலர்களின் தலைவனால் {துருபதன்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.(2) அந்த மன்னன், செல்வச் செருக்கு கொடுத்த போதையால் கோபம் கொண்டு, புருவங்களைச் சுருக்கி, கண்கள் சிவக்க துரோணரிடம்,(3) “ஓ பிராமணரே! திடீரென உம்மை எனது நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் உமது இந்தப் பேச்சு சற்றும் புத்திக்குப் பொருத்தமானதாக, உயர்ந்த வகையில் இல்லையே.(4) ஓ உணர்வு மங்கியவரே, பெரும் மன்னர்களுக்கு, நற்பேறும், பொருளும் அற்ற உம்மைப்போன்ற நண்பர்கள் இருக்க முடியாது.(5) முன்பு ஒரு சமயம் உமக்கும், எனக்கும் நட்பிருந்தது உண்மைதான், ஆனால் அப்போது நாம் சமமாக இருந்தோம். ஆனால் காலத்தின் மாற்றம் நட்பையும் பலவீனமாக்கும்.(6)

இவ்வுலகத்தில் எந்த இதயத்திலும் நட்பென்பது எப்போதும் நிலைத்திருப்பதில்லை. காலம் அஃதை அரித்து விடுகிறது. கோபம் அஃதை அழித்துவிடுகிறது.(7) எனவே, அந்தத் தேய்ந்து போன நட்பைச் சொல்லித் திரும்ப என்னிடம் ஒட்டாதீர். அதைப்பற்றி இனி நினைக்காதீர். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, நான் உம்மிடம் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே நட்பு கொண்டிருந்தேன்.(8) ஏழ்மையானவனுக்கும் செல்வந்தனுக்கும் இடையிலும், கற்றவனுக்கும் கல்லாதவனுக்கும் இடையிலும், வீரனுக்கும் கோழைக்கும் இடையிலும் நட்பு இருக்கவே முடியாது.(9)

நமது முந்தைய நட்பை நீர் ஏன் தொடர நினைக்கிறீர்? நட்பும், பகைமையும் செல்வத்தாலும், பலத்தாலும் சமமான இருவருக்குள்ளேயே இருக்க முடியும். வறுமையானவனும், செழுமையானவனும் நண்பர்களாக இருக்கவும் முடியாது, சண்டையிட்டுக் கொள்ளவும் முடியாது.(10) அசுத்த பிறவியும், சுத்தமான பிறவியும் நண்பர்களாக இருக்கவே முடியாது. தேர்வீரனாக இல்லாத ஒருவன், அப்படியிருப்பவனிடம் நட்புடன் இருக்க முடியாது. அப்படியே மன்னனாக இல்லாத ஒருவன், மன்னனுக்கு நண்பனாக இருக்க முடியாது. எனவே, நீர் ஏன் இன்னும் நமது பழைய நட்பு தொடர வேண்டும் என்று நினைக்கிறீர்?” என்று கேட்டான் {துருபதன்}.(11)வைசம்பாயனர் தொடர்ந்தார், “துருபதனால் இப்படிச் சொல்லப்பட்டவரும், பெரும் பலம் வாய்ந்தவருமான பரத்வாஜரின் மகன் {துரோணர்} கோபத்தால் நிறைந்தார். இருப்பினும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, மனத்தில் அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.(12)  பாஞ்சால மன்னனின் {துருபதனின்} ஆணவத்தைக் கண்டு, அதற்குச் சரியான பதிலடி கொடுக்க விரும்பினார். பாஞ்சாலத் தலைநகரைவிட்டு அவசரமாக அகன்ற துரோணர், தனது பாத அடிகளை யானையின் பெயர் கொண்ட குருக்களின் தலைநகரை {ஹஸ்தினாபுரம்} நோக்கி வைத்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(13)

துரோணரின் திறமை – ஆதிபர்வம் பகுதி 133-(சம்பவ பர்வம் – 69)-இளவரசர்கள் விளையாடிக் கொண்டிருக்கிம்போது கிணற்றில் விழுந்த பந்து; இளவரசர்களுக்கு அறிமுகமான துரோணர் தனது திறமையைக் காட்டியது; துரோணரை அறிந்து கொண்ட பீஷ்மர்; துரோணரைக் குறித்து அவரிடம் விசாரித்த பீஷ்மர்; தன் வரலாற்றைச் சொன்ன துரோணர்; துரோணரை இளவரசர்களின் ஆசானாக நியமித்த பீஷ்மர்.

வைசம்பாயனர் சொன்னார், “ஹஸ்தினாபுரத்துக்கு வந்த அந்த பிராமணர்களில் சிறந்த பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கௌதமரின் (கிருபரின்) இல்லத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.(1) அவரது பலம் பொருந்திய மகன் (அஸ்வத்தாமன்), கிருபர் எடுக்கும் வகுப்புகளின் இடைவெளிகளில், குந்தியின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஆயுதப் பயிற்சியைப் போதித்தான். இருப்பினும் அஸ்வத்தாமனின் ஆற்றலைக் குறித்து யாரும் அறிந்திலர்.(2)

துரோணர் இப்படியே தனிமையில் தலைமறைவாகக் கிருபரின் இல்லத்தில் வசித்து வரும்போது, ஒரு நாள், அந்த வீர இளவரசர்கள் ஒன்றுசேர்ந்து, ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியே வந்தனர்.(3) நகரத்தைவிட்டு வெளியே வந்து, ஒரு பந்தை வைத்து விளையாடிக் கொண்டும், மகிழ்ச்சியான இதயத்துடன் உலவிக் கொண்டும் இருந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அந்த இளவரசர்கள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பந்து, ஒரு கிணற்றுக்குள் விழுந்தது.(4) அந்த இளவரசர்கள் தங்களால் இயன்றவரை பந்தை கிணற்றிலிருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் அந்த இளவரசர்களின் முயற்சிகளெல்லாம் பலனற்றுப் போயின.(5) அவர்கள் பந்தை எப்படி மீட்பது என்பதை அறியாமல் வெட்கத்துடன் ஒருவர் கண்களை மற்றவர் பார்த்துக் கவலையோடிருந்தனர்.(6)


சரியாக அத்தருணத்தில் அவர்களின் அருகே, வறுமையால் தளர்ச்சியுற்று, மெலிந்து, அக்னிஹோத்ரம் செய்வதால் மேனி காய்ந்து, தனது அன்றாடச் சடங்குகளையும் வழிபாடுகளையும் முடித்து வந்திருந்த, கறுத்த நிறம் கொண்ட முதுமையான ஒரு பிராமணரைக் கண்டனர்.(7) வெற்றியில் நம்பிக்கையிழந்திருந்த அந்த இளவரசர்கள், அந்தச் சிறப்புமிகுந்த பிராமணரைக் கண்டதும், உடனடியாக அவரைச் சூழ்ந்து கொண்டனர்.(8) நம்பிக்கையிழந்த அந்த இளவரசர்களைக் கண்ட துரோணர் (அவரே அந்தப் பிராமணர்; வேறு யாரும் அல்லர்), தனது திறமையை நினைத்துப் பார்த்து புன்னகைத்து அவர்களிடம்,(9) “உங்கள் க்ஷத்திரிய பலத்திற்கு இது அவமானம். உங்கள் ஆயுத நிபுணத்துவத்திற்கு இது அவமானம்! நீங்கள் பாரதக் குலத்தில் பிறந்தவர்களாயிற்றே! உங்களால் ஏன் அந்தப் பந்தை மீட்க முடியவில்லை?(10) இன்று எனக்கு இரவு உணவைத் தர நீங்கள் வாக்களித்தால், நான் இந்தப் புற்குச்சிகளினால் பந்தையும், நான் கீழே தூக்கி எறிந்து தொலையப்போகும் இந்த மோதிரத்தையும் வெளியே எடுக்கிறேன்” என்றார்.(11)

இப்படிச் சொன்னவரான எதிரிகளை ஒடுக்கும் துரோணர், தனது மோதிரத்தை எடுத்து அந்தக் காய்ந்த {நீரில்லாத} கிணற்றுக்குள் தூக்கி எறிந்தார். அப்போது, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் துரோணரிடம்,(12) “ஓ! பிராமணரே (நீர் அற்பப் பொருளைக் கேட்கிறீர்) கிருபரின் அனுமதியுடன், எங்களிடம் இருந்து உமது காலத்திற்கும் நீர் கேட்பதை {உணவை} அடைவீராக” என்றான்.(13) இதைக்கேட்ட துரோணர் பாரத இளவரசர்களைக் கண்டு புன்னகைத்து, “இந்த எனது கையில் நிறைந்திருக்கும் புற்களை {ஈக்குகளை}, எனது மந்திரங்களின் மூலம் ஆயுதங்களின் தன்மையை அடையச் செய்யப் போகிறேன். மற்ற எந்த ஆயுதங்களுக்கும் இல்லாத தகுதியை இந்தப் புற்கள் பெறப்போவதைப் பார்ப்பீராக.(14) நான் இந்தப் புற்குச்சிகளில் ஒன்றைக் கொண்டு பந்தைத் துளைக்கப் போகிறேன். அதன்பின் அந்தக் குச்சியை மற்றொரு குச்சியால் துளைத்து, மூன்றாவது குச்சியால் இரண்டாம் குச்சியைத் துளைப்பேன். இவ்வாறே ஒரு சங்கிலியை உருவாக்கி, பந்தை வெளியே கொண்டு வரப் போகிறேன்” என்றார்”.(15)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “துரோணர் தாம் எதைச் சொன்னாரோ அஃதை அப்படியே செய்து காட்டினார். இதனால், அந்த இளவரசர்கள்  அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மகிழ்ச்சியால் அவர்களது விழிகள் அகன்றன. தாங்கள் கண்ட காட்சியை இயல்புக்குமிக்கதாகக் கருதிய அவர்கள், கல்விமானான அந்தப் பிராமணரிடம், “காலங்கடத்தாமல் மோதிரத்தையும் வெளியே கொண்டு வருவீராக” என்று சொன்னார்கள்.(16,17) சிறப்பு மிகுந்த துரோணர், ஒரு வில்லையும் அம்பையும் எடுத்து, அம்பால் மோதிரத்தைத் துளைத்து, அதை உடனே வெளியே எடுத்தார்.(18) அவர், அம்பால் துளைத்த மோதிரத்தை எடுத்து, ஆச்சரியத்தில் மூழ்கியிருந்த இளவரசர்களிடம் கொடுத்தார். அவரால் மோதிரம் மீட்கப்பட்ட விதத்தைப் பார்த்த இளவரசர்கள்,(19) “ஓ! பிராமணரே! நாங்கள் உம்மை வணங்குகிறோம். இப்படிப்பட்ட திறமை யாருக்கும் கிடையாது. நீர் யார் என்பதையும், யாருடைய மகன் என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறோம். நாங்கள் உமக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.(20)

இப்படி இளவரசர்களால் கேட்கப்பட்ட துரோணர், “நீங்கள் பீஷ்மரிடம் சென்று என்னைப் பற்றியும் {எனது உருவத்தைப் பற்றியும்}, எனது திறமை பற்றியும் விவரியுங்கள். அந்தப் பெரும் பலம் வாய்ந்தவர் என்னை அடையாளம் தெரிந்து கொள்வார்” என்றார்.(22)

அதற்கு அந்த இளவரசர்கள், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி பீஷ்மரிடம் சென்று அந்த பிராமணருடைய பேச்சின் கருப்பொருளையும், அவரது இயல்புக்குமிக்க நடத்தையையும் விவரித்தனர்.(23) இளவரசர்களிடம் இருந்து அனைத்தையும் கேட்டறிந்த பீஷ்மர், அந்தப் பிராமணர் துரோணரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை அறிந்து, இந்த இளவரசர்களுக்கு அவரே சிறந்த ஆசானாக இருக்க முடியும் என்பதையும் நினைத்து,(24) நேரடியாகச் சென்று வரவேற்று, அவரை அரண்மனைக்கு அழைத்து வந்தார். ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களில் முதன்மையான அந்த பீஷ்மர், அவர் ஹஸ்தினாபுரத்திற்கு வந்த காரணத்தைச் சாதுர்யமாகக் கேட்டார்.(25)

துரோணர் நடந்தது அனைத்தையும் நடந்தபடியே சொன்னார், “ஐயா, கடந்த காலத்தில் நான் பெரும் முனிவர் அக்னிவேசரிடம் ஆயுதங்களைப் பெறவும், ஆயுத அறிவியலைக் கற்கவும் விரும்பிச் சென்றேன்.(26) எனது குருவுக்கான சேவைக்காக என்னை அர்ப்பணித்து, அவருடன் பல வருடங்கள், தலையில் முடிந்த கூந்தலுடன் {ஜடா முடியுடன்} பிரம்மச்சாரியாக வாழ்ந்தேன்.(27) அந்த நேரத்தில், அதே காரணத்திற்காகப் பாஞ்சால இளவரசனான, பலம்வாய்ந்த யக்ஞசேனனும் {துருபதனும்} வந்து, அந்த ஆசிரமத்திலேயே தங்கினான்.(28) அவன் எனது நன்மையில் எப்போதும் விருப்பம் கொண்டு எனக்கு நண்பனானான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் இருவரும் பற்பல வருடங்களுக்கு ஒன்றாக வாழ்ந்தோம்.(29) ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நாங்கள் சிறு வயது முதல் ஒன்றாகவே கல்வி பயின்று வந்தோம். அந்தக் காலத்தில் அவன் எப்போதும் என்னிடம் இனிமையாகவே பேசுவான்.(30)

ஓ! பீஷ்மரே, அவன் என்னை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, “ஓ! துரோணா, எனது சிறப்புமிக்கத் தந்தைக்கு {பிருஷதருக்கு} நானே விருப்பமான மகனாவேன்.(31) அந்த மன்னர் என்னைப் பாஞ்சாலர்களின் ஏகாதிபதியாக நியமிக்கும்போது, அந்த நாடு உனதாகும். ஓ! நண்பா, இது சத்தியம்.(32) எனது நிலப்பகுதி, செல்வம், மகிழ்ச்சி என அனைத்தும் உனக்காகவே இருக்கும்” என்று சொன்னான்.  இறுதியாக நாங்கள் பிரிய வேண்டிய காலமும் வந்தது. கல்வி நிறைவு பெற்று, அவன் அவனது நாட்டுக்குத் திரும்ப அடியெடுத்து வைத்தான். அப்போது நான் அவனுக்கு எனது வாழ்த்துகளைச் சொன்னேன்.(33) உண்மையில், அவன் சொன்ன வார்த்தைகளையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருந்தேன்.

சில காலத்திற்குப் பிறகு, எனது தந்தையின் உத்தரவின் பேரிலும், பிள்ளைப்பேறில் எனக்கிருந்த விருப்பம் கொடுத்த மயக்கத்திலும், கடும் நோன்புகள் நோற்பவளும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவளும், எந்நேரமும் அக்னிஹோத்ரமும், மற்ற வேள்விகளும் செய்பவளும், கடும் தவமிருப்பவளும், குறுகிய கூந்தல் கொண்டவளுமான கிருபியை மணந்தேன். அந்தக் கௌதமி {கிருபி}, குறித்த காலத்தில், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவனும், பெரும் வீரனுமான அஸ்வத்தாமன் என்ற மகனை ஈன்றெடுத்தாள்.(34-36) என்னைப் பெற்ற போது எனது தந்தை எப்படி மகிழ்ந்தாரோ அப்படியே நான் அஸ்வத்தாமனைப் பெற்ற போது மகிழ்ந்தேன். ஒரு நாள், ஒரு செல்வந்தனின் மகன் பால் குடிப்பதைக் கண்ட அஸ்வத்தாமன் அழ ஆரம்பித்தான். அதைக் கண்ட எனக்குத் திசை குறித்த அறிவு மங்கிப் போனது. திசைகளை மறந்து நின்றேன். சில பசுக்களை வைத்திருப்பவரிடம் ஒரு பசுவைக் கேட்கத் துணியாமல், பல பசுக்களை வைத்திருப்பவரிடம் ஒரு பசுவைப் பெற எண்ணி, நாடு விட்டு நாடு திரிந்தேன்.(37-39) ஆனால் நான் ஒரு கறவைப் பசுவையும் அடையாததால் எனது அலைச்சல் பலனற்றதானது. எனது காரியத்தில் தோற்றுப் போய்த் திரும்பி வந்தேன்.

அப்போது எனது மகனின் நண்பர்கள் அவனுக்கு நீரில் அரிசி மாவைக் கலந்து கொடுத்தனர்.(40) அதைக் குடித்த எனது அப்பாவி மகன், தான் பால் குடித்துவிட்டதாக ஏமாந்து, “நான் பால் குடித்துவிட்டேன், நான் பால் குடித்துவிட்டேன்!” என்று சந்தோஷக் கூத்தாடினான்.(41) அவனது எளிமையைக் கண்டு புன்னகைக்கும் விளையாட்டுத் தோழர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியில் கூத்தாடும் அவனைக் கண்டு நாம் மிகவும் வருந்தினேன்.(42) “செல்வமீட்ட முயலாமல் வறியவனாக இருக்கும் துரோணனுக்கு ஐயோ. அவன் பிள்ளையோ பாலின் மேல் ஆசையினால் கரைத்த மாவைக் குடித்துவிட்டு, நானும் பால் குடித்தேனென ஆனந்தக் கூத்தாடுகிறான்” என்ற கேலிப்பேச்சுகளைக் கேட்டு நான் அமைதியாக இருந்தேன்.(43,44)

என்னையே கடிந்து கொண்ட நான், என் மனதுக்குள், “பிராமணர்களால் கைவிடப்பட்டு இகழப்பட்டாலும், செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால், நான் எவருக்கும் அடிமையாக மாட்டேன். அது எப்போதும் பாவகரமானது என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்து, ஓ! பீஷ்மரே, எனது பழைய நண்பனிடம் சென்றேன். அந்தச் சோமகர்களின் மன்னனிடம் {துருபதனிடம்}, எனது அன்பு மகனையும், மனைவியையும் அழைத்துச் சென்றேன்.(45-47) அவன் ஆட்சியில் அமர்த்தப்பட்டான் என்பதையறிந்தேன். அப்போது நான், என்னை நற்பேறு பெற்றவனாக எண்ணி மகிழ்ந்தேன்.(48)

அதே மகிழ்ச்சியுடன், அரியணையில் அமர்ந்திருந்த எனது நண்பனிடம் சென்று, “ஓ! மனிதர்களில் புலியே, என்னை உனது நண்பனாக அறிந்து கொள்வாயாக!” என்று சொல்லி, அவனை ஒரு நண்பன் எப்படி நம்பிக்கையுடன் அணுகுவானோ அப்படி அணுகினேன். ஆனால் துருபதன், என்னைக் காட்டுமிராண்டியாக நினைத்துக் கைவிட்டு, எள்ளி நகையாடினான்.
அவன் என்னிடம்,(49,50) “இப்படித் திடீரென்று என்னை நீர் அணுகுவதால், உமது புத்திக்கூர்மை உயர்ந்த வகையென கிஞ்சிற்றும் எனக்குத் தோன்றவில்லை.(51) ஓ! மங்கிய அறிவைக் கொண்டவரே, பெரும் மன்னர்களால் உம்மைப் போன்ற இத்தகு அதிர்ஷ்டமற்ற மனிதரிடம் நட்பு கொள்ள முடியாது.(52) இணையான சூழ்நிலை இருந்தபோது நமக்கிடையில் நட்பு இருந்தது. ஆனால் அனைத்தையும் வலுவிழக்கச் செய்யும் காலம், நட்பையும் வலுவிழக்கச் செய்யும் என்பதை அறிந்து கொள்வீராக.(53) நட்பானது எந்த மனிதனின் இதயத்திலும் தேயாமல் இருக்காது. காலம் அஃதை அரிக்கும், கோபமோ அஃதை அழித்துவிடும்.(54)

எனவே தேய்ந்து போன அந்த நட்புடன் மீண்டும் ஒட்ட நினைக்காதீர். இனியும் அது போல நினைக்காதீர். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, உம்முடனான எனது நட்பு ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக ஆனது.(55) ஏழைகளால் செல்வந்தர்களுடன் நண்பனாக இருக்க முடியாது; கல்வியற்றவனால் ஒரு கல்விமானோடு நண்பனாக இருக்க முடியாது; ஒரு கோழையால் துணிச்சல் மிக்க (வீரர்களுடன்) நண்பனாக இருக்க முடியாது. பிறகு எப்படி நீர் நமது பழைய நட்பைத் தொட நினைக்கிறீர்.(56) செல்வத்திலும், ஆற்றலிலும் இணையானவர்களாக இருக்கும் இருவருக்கு மத்தியிலேயே நட்போ, பகையோ இருக்க முடியும். ஏழையும், செல்வந்தனும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவோ, பகைவர்களாகவோ இருக்க முடியாது.(57)

அசுத்தமான பிறவிகள் சுத்தமான பிறவிகளுக்கு நண்பனாக இருக்க முடியாது. தேர்வீரனாக இல்லாதவன், அப்படி இருப்பவனுக்கு {தேர்வீரனுக்கு} நண்பனாக முடியாது.  மன்னனா இல்லாத ஒருவனால் ஒரு மன்னனின் நண்பனாக இருக்க முடியாது.(58) நான் உமக்கு நாட்டைக் கொடுக்கிறேன் என்று எப்போதாவது சொன்னது போலக் கூட எனக்கு நினைவில்லை. ஆனால், ஓ! பிராமணரே, இப்போது என்னால் ஓர் இரவுக்கான உணவும், தங்கும் இடத்தையும் மட்டுமே உமக்குத் தர முடியும்” என்றான்.(59)

இப்படி அவனால் சொல்லப்பட்ட பிறகு, தாமதமில்லாமல் செய்யக்கூடிய ஒரு காரியத்தை என் மனத்தில் நிச்சயித்துக் கொண்ட நான், எனது மனைவியுடன் அவனருகில் இருந்து வேகமாக வந்துவிட்டேன்.(60) ஓ! பீஷ்மரே, இப்படித் துருபதனால் அவமதிக்கப்பட்ட நான், மிகுந்த கோபம் கொண்டேன். இப்போது நான் குரு குலத்தவரிடம், புத்திக்கூர்மையுள்ள, எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய திறன்கொண்ட சீடர்களை விரும்பி எதிர்பார்த்து வந்திருக்கிறேன்.(61) நான் உமது விருப்பங்களை நிறைவேற்ற ஹஸ்தினாபுரம் வந்திருக்கிறேன். இப்போது, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டார் {துரோணர்}”.(62)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பீஷ்மர் அவரிடம்,(63) “உமது வில்லில் நாணைத் தளத்துவீராக.  ஓ! பிராமணரே! குரு {கௌரவ} இளவரசர்களை ஆயுதச் சாதனை செய்யக் கற்பிப்பீராக. குருக்களால் வழிபடப்பட்டு, உமது வசிப்பிடத்தை உமக்கு நிறைவான வகையில் அனைத்து வசதிகளாலும் நிரப்பி இதயத்தில் மகிழ்வீராக.(64) ஓ! பிராமணரே! குரு குலத்தவர் கொண்டிருக்கும் அனைத்துச் செல்வத்திற்கும், அரசுக்கும், நாட்டுக்கும் நீரே உண்மையான தலைவராவீர். (இன்றிலிருந்து) குரு குலத்தவர் உம்மவரே.(65) இஃது ஏற்கனவே சாதிக்கப்பட்டுவிட்டதாக உமது இதயத்தில் குறித்துக் கொள்ளும். ஓ! பிராமணரே! எங்கள் நற்பேறின் கனியாக உம்மை இப்போது நாங்கள் பெறுகிறோம். உண்மையில், உமது வருகையால் எங்களுக்குச் செய்திருக்கும் உதவியானது மிகப் பெரியதே ” என்றார்.(66)

ஏகலவ்யன், துரோணர், அர்ஜூனன் – ஆதிபர்வம் பகுதி 134-(சம்பவ பர்வம் – 70)-தமது மகனுக்கும், சீடர்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டிய துரோணர்; அஃதை அறிந்து கொண்ட அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு இரவில் உணவிட வேண்டாம் என்று சமயற்காரனிடம் சொன்ன துரோணர்; இரவில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜுனன்; துரோணரின் அன்பைப் பெற்ற அர்ஜுனன்; ஏகலவ்யனைச் சீடனாக ஏற்காத துரோணர்; ஏகலவ்யனின் திறமையைக் கண்ட இளவரசர்கள்; கட்டைவிரலைக் கூலியாகக் கேட்ட துரோணர்; துரோணர் தன் சீடர்களுக்கு வைத்த சோதனை.

வைசம்பாயனர் சொன்னார், “இப்படிப் பீஷ்மரால் வழிபடப்பட்டவரும், மனிதர்களில் முதன்மையானவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான துரோணர், குரு குலத்தவரின் வசிப்பிடத்திலேயே தங்கி, அங்கேயே புகழுடன் வாழ ஆரம்பித்தார்.(1) அவர் சிறிது காலத்திற்கு ஓய்வெடுத்த பின், பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளான கௌரவர்களை அழைத்து, அவருக்குச் சீடர்களாகக் கொடுத்தார். துரோணருக்குப் பல மதிப்புமிக்கப் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தார் பீஷ்மர்.(2) அந்தப் பெரும்பலசாலி (பீஷ்மர்) பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு} நெல் மற்றும் பலவித செல்வங்கள் நிறைந்ததும், அழகானதும், தூய்மையானதுமான வீடு ஒன்றையும் கொடுத்தார்.(3) அதன்பின், வில்லாளிகளில் சிறந்த துரோணர் மகிழ்ச்சியுடன், பாண்டு மற்றும் திருதராஷ்டிரனின் மைந்தர்களான அந்தக் கௌரவர்களைத் தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.(4)

அப்படி அவர்கள் அனைவரையும் சீடர்களாக ஏற்றுக் கொண்ட துரோணர், ஒரு நாள் அவர்களை அழைத்து, தனது காலில் விழுந்து வணங்கச் செய்து, கனத்த இதயத்துடன்,(5) “நான் எனது இதயத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை வைத்திருக்கிறேன். ஓ! பாவங்களற்றவர்களே, நீங்கள் ஆயுதங்களில் நிபுணத்துவம் பெற்றதும், அந்தக் காரியத்தை நிறைவேற்றித் தருவதாக எனக்கு உண்மையாக உறுதியளிப்பீர்களாக” என்று சொன்னார்”.(6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட குரு இளவரசர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் அர்ஜுனன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் காரியம் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறினான்.(7) மகிழ்ச்சியடைந்த துரோணர், அர்ஜுனனை மார்புறத் தழுவி, அவன் தலையின் நறுமணத்தை மறுபடி மறுபடி முகர்ந்து, அந்தப் பொழுது முழுவதும் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.(8)

பெரும் பலம் கொண்டவரான துரோணர், பாண்டுவின் மகன்களுக்குத் தெய்வீக மற்றும் மனித ஆயுதங்களில் பயிற்சி கொடுத்தார்.(9) ஓ! பாரதக் குலத்தில் காளையே, அந்த பிராமணர்களில் சிறந்தவரான துரோணரிடம் ஆயுதப் பயிற்சி பெற வேறு பிற நாட்டு இளவரசர்களும் அந்த இடத்தில் குழுமினர்.(10)

விருஷ்ணிகள், அந்தகர்கள், மற்றும் பல்வேறு நிலங்களில் உள்ள இளவரசர்கள், சூத குலத்தவனான ராதையின் மகன் (கர்ணன்) ஆகியோர் அனைவரும் துரோணருக்குச் சீடர்களானார்கள்.(11) ஆனால் அவர்கள் அனைவரிலும், சூதப் பிள்ளையான கர்ணன், பொறாமையால் அடிக்கடி அர்ஜுனனை எதிர்த்தும், துரியோதனனை ஆதரித்தும் பாண்டவர்களை அவமதித்து வந்தான்.(12) எனினும், ஆயுத அறிவியலில் தனக்கிருக்கும் அர்ப்பணிப்பாலும், நிபுணத்துவத்தாலும், கரங்களின் பலத்தாலும், விடாமுயற்சியாலும் எப்போதும் குருவின் அருகே இருந்து, அனைவரைக் காட்டிலும் (சக மாணவர்களுடன் ஒப்பிடுகையில்) அர்ஜுனன் மேம்பட்டு இருந்தான். குரு எடுக்கும் பாடமானது அனைவருக்கும் ஒன்றாக இருப்பினும், அர்ஜுனன், தனது கரங்களின் நளினத்தாலும், நிபுணத்துவத்தாலும் சக மாணாக்கரில் முதன்மையானவனாகத் திகழ்ந்தான். துரோணர் தனது மாணாக்கர்களில் எவரும் இந்திரனின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகராக (எக்காலத்திலும்) வர முடியாது என்ற நம்பிக்கைக்கு வந்தார்.(13-15)

இப்படியே துரோணர், ஆயுத அறிவியல் குறித்த தனது பாடங்களை இளவரசர்களுக்குப் போதித்தார். மாணவர்கள் நீர் நிரப்பும் போது, அனைவருக்கும் நேரம் அதிகமாக வேண்டும் என்று எண்ணி அவர்களுக்குக் குறுகிய வாய்க் கொண்ட பாத்திரத்தைக் {கமண்டலம்} கொடுப்பார் துரோணர்.(16) ஆனால், தனது மகனான அஸ்வத்தாமனுக்கு மட்டும், வேகமாக நீர் நிரப்பி, விரைவாகத் தன்னிடம் அவன் வர வேண்டும் என்று எண்ணி, அகன்ற வாய்க் கொண்ட பாத்திரத்தைக் {கும்பத்தைக்} கொடுத்து அனுப்புவார்.

அஸ்வத்தாமன் விரைவாக வந்து விட்டால், மற்றவர்கள் வருவதற்குள் கிடைக்கும் இடைவேளையில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் மேன்மையான, நுட்பமான முறைகளைத் தனது மகனுக்குக் கற்பித்தார். ஜிஷ்ணு (அர்ஜுனன்) இதை அறியவந்தான். எனவே, வாருணாயுதத்தைக் {வாருணாஸ்திரத்தைக்} கொண்டு அந்தக் குறுகிய வாய்க் கொண்ட பாத்திரத்தில் வேகமாக நீர் நிரப்பி, தனது குருவின் மைந்தன் செல்லும் அதே நேரத்திற்குக் குருவிடம் அவனும் சென்றான்.  ஆயுதங்களில் ஞானம் கொண்டவனும், அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனும், புத்திசாலியுமான அந்தப் பிருதையின் மைந்தன் {அர்ஜுனன்}, தனது குருவின் மைந்தனை விடச் சிறப்பில் எந்த வகையிலும் தாழ்வடையவில்லை.(17-19)

அர்ஜுனன், தான் மேற்கொண்ட ஆயுதப் பயிற்சிக்கு ஒப்பாகத் தனது குருவுக்குச் செய்த சேவையால், விரைவிலேயே அவன் குருவுக்குப் பிடித்தமான மாணவனானான். (20) துரோணர், தனது மாணவனுக்கு ஆயுதப் பயிற்சியில் இருக்கும் அர்ப்பணிப்பைக் கண்டு, தனது சமையற்காரனை அழைத்து ரகசியமாக,(21) “அர்ஜுனனுக்கு ஒருபோதும் இருளில் உணவிடாதே. இதை நானே சொன்னேன் என்றும் அவனிடம் சொல்லி விடாதே” என்றார்.(22) சில நாள் கழித்து, அர்ஜுனன் விளக்கொளியில் உணவு அருந்திக்கொண்டிருக்கும்போது, காற்றால் விளக்கு அணைந்தது.(23) ஆனால், சக்தி கொண்ட அர்ஜுனன், உணவருந்துவதைத் தொடர்ந்தான். வழக்கமான பழக்கத்தால் அவனது கை, வாய்க்கு செல்வதைக் கண்டான்.(24) பழக்கவழக்கத்தின் சக்தியை உணர்ந்தவனும், பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பாண்டு மைந்தன் {அர்ஜுனன்}, இரவில் விற்பயிற்சி செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(25) ஓ! பாரதா {ஜனமேஜயா}, இரவில் வில்லிலிருந்து புறப்படும் நாணொலியைக் கேட்ட துரோணர், அவனிடம் வந்து அவனை வாரியணைத்துக் கொண்டு,(26) “நான் உண்மையில் சொல்கிறேன். நான் உனக்குக் கற்பிக்கப் போகும் வித்தையால் உனக்கு நிகரான வில்லாளி ஒருவனும் இவ்வுலகத்தில் இருக்க மாட்டான்” என்றார்”.(27)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அதன்பிறகு துரோணர் அர்ஜுனனுக்குக் குதிரை, யானை, தேர் போன்றவற்றில் அமர்ந்தும், தரையிலும் போர் செய்யும் பயிற்சியைப் போதித்தார்.(28) பெரும்பலம் கொண்ட துரோணர், அர்ஜுனனுக்குக் கதாயுதம், வாள், வேல், ஈட்டிகள், கணைகள் கொண்டு போரிடும் பயிற்சிகளையும் போதித்தார். அவனுக்குப் பல ஆயுதங்களில் பயிற்சியும், ஒரே நேரத்தில் பல மனிதர்களிடம் போரிடும் பயிற்சியும் கொடுத்தார்.(29) அவரது நிபுணத்துவத்தைக் கேள்விப்பட்ட பல நாட்டு மன்னர்களும், இளவரசர்களும், ஆயுத அறிவியல் படிக்கும் ஆர்வத்தில், துரோணரிடம் ஆயிரக்கணக்கில் வந்து குழுமினர்.(30)

ஓ! ஏகாதிபதியே, அப்படி வந்தவர்களில், (கலப்பு வர்ணங்களில் தாழ்ந்த) நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மகனான ஏகலவ்யன் என்ற இளவரசனும் இருந்தான்.(31) எனினும், அறநெறிகளின் விதிகள் அனைத்தையும் அறிந்தவரான துரோணர், (ஒரு காலத்தில்) உயர் பிறப்பாளர்களான தன் சீடர்கள் அனைவரையும் அந்த நிஷாத இளவரசன் {ஏகலவ்யன்} விஞ்சிவிடக் கூடும் என்பதைக் கண்டு, அவனை விற்பயிற்சியில் சீடனாக ஏற்றுக் கொள்ளவில்லை.(32)

ஆனால், ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, அந்த நிஷாத இளவரசன், துரோணரின் பாதத்தைத் தனது தலையால் தொட்டு வணங்கி, வந்த வழியே கானகத்திற்குள் சென்று, அங்கே துரோணரின் களிமண் வடிவத்தைச் செய்து,(33) அதுவே தனது உண்மையான ஆசானென என்று நினைத்து மரியாதையுடன் வணங்கி, மிகக் கடுமையான ஆயுதப் பயிற்சியை அதன் {அந்தப் பதுமையின்} முன்பு செய்யத் தொடங்கினான்.(34) தன் ஆசானிடம் அவன் கொண்ட ஒப்பற்ற மதிப்பினாலும், தன் நோக்கத்தில் அவன் கொண்டிருந்த அர்ப்பணிப்பினாலும், நாண்கயிற்றில் கணைகளைப் பொருத்துவது, இலக்கு நோக்குவது, விடுப்பது ஆகிய மூன்று செயல்முறைகளும் அவனுக்கு மிக எளிதானவையாக இருந்தன.(35)

ஒரு நாள், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, கௌரவ மற்றும் பாண்டவ இளவரசர்கள், துரோணரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தங்கள் தேர்களில் ஏறி வேட்டைக்குச் சென்றனர்.(36) ஓ! மன்னா, அந்தக் குழுவினருடன் சென்ற ஒரு வேலைக்காரன், சில வழக்கமான பொருட்களுடன், தனது நாயையும் உடன் அழைத்துச் சென்றான்.(37) கானகத்திற்கு வந்த அவர்கள், தங்கள் வேட்டையைத் தேடி உலவிக் கொண்டிருந்தனர். அதே வேளையில், உடன் வந்த நாயும் தனியாகக் கானகத்தில் உலவி, நிஷாத இளவரசன் (ஏகலவ்யன்) இருக்குமிடத்திற்கு வந்தது.(38) கருப்பு நிறத் தோலுடையுடனும், உச்சந்தலையில் குடுமியுடனும், அழுக்கேறிய உடலுடனும் கருத்த நிறத்துடனும் இருந்த நிஷாதனைக் கண்ட அந்த நாய், சத்தமாகக் குரைத்தது.(39)

அதனால் அந்த நிஷாத இளவரசன், தனது கரத்தின் நளினத்தை {லாகவத்தை} வெளிக்காட்டுவதற்காக, (அந்த நாய் வாயை மூடும் முன்பே) அதன் வாய்க்குள் ஏழு கணைகளைச் செலுத்தினான்.(40) ஏழு கணைகளால் துளைக்கப்பட்ட அந்நாய், பாண்டவர்களிடம் திரும்ப வந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த வீரர்கள், ஆச்சரியத்தில் மூழ்கினர்.(41) தங்கள் திறனில் வெட்கமடைந்த அவர்கள், தாங்கள் அறியாத ஒரு மனிதனின் நளினம் கொண்ட கரத்தையும், செவித்திறன் கொண்டு குறியைத் தவறாமல் சரியாக அடிக்கும் திறனையும் புகழ ஆரம்பித்தனர்.(42) பிறகு, இப்படிப்பட்ட திறமையைக் காட்டியிருப்பவனும், தங்களால் அறியப்படாதவனுமான அந்தக் கானகவாசியைத் தேடிச் சென்றனர். ஓ! மன்னா, பாண்டவர்கள் விரைவிலேயே தாங்கள் தேடிப் போன இலக்கை அடைந்னர். வில்லிலிருந்து நிறுத்தாமல் தொடர்ச்சியாகக் கணைகளைச் சரமாக அடித்துக் கொண்டிருந்த ஏகலவ்யனைக் கண்டனர்.(43)

முழுவதும் அந்நியமானவனாக இருந்த, அந்தக் கடும் முகம் கொண்டவனிடம் {எகலவ்யனிடம்}, “நீ யார்? யாருடைய மகன் நீ?” என்று கேட்டனர்.(44)

இப்படிக் கேட்கப்பட்ட அம்மனிதன், “வீரர்களே, நான் நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மைந்தன். ஆயுதக் கலையில் நிபுணத்துவம் பெற்றவரான ஆசான் துரோணரின் மாணாக்கனாக என்னை அறிவீராக” என்றான்”.(45)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அதன்பிறகு, அந்த நிஷாதன் தொடர்பான அனைத்தையும் அறிந்து கொண்ட பாண்டவர்கள், நகரத்திற்குத் திரும்பி, துரோணரிடம் சென்று, கானகத்தில் அவர்கள் கண்ட அதிசயமான வில்வித்தைச் சாதனையைப் பற்றி அவரிடம் சொன்னார்கள்.(46) குறிப்பாக அர்ஜுனன், ஓ! மன்னா, அவ்வளவு நேரமும் ஏகலவ்யனைச் சிந்தனை செய்து கொண்டு, பிறகு துரோணரைத் தனிமையில் சந்தித்து, தனது குரு தன் மீது வைத்திருக்கும் அன்பில் நம்பிக்கை கொண்டு,(47) “நீர் என்னை அன்புடன் உமது மார்போடு அணைத்து, எனக்குச் சமமாக உமது மாணவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னீர்.(48) இப்போது உமது மாணவனான இந்த நிஷாத மன்னன் மைந்தன் {ஏகலவ்யன்} என்னைவிட மேம்பட்டவனாக இருப்பது எவ்வாறு?” என்று கேட்டான்”.(49)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணர் சிறிது நேரம் சிந்தித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து, அர்ஜுனனை அழைத்துக் கொண்டு நிஷாத இளவரசனிடம் {ஏகலவ்யனிடம்} சென்றார்.(50) அங்கே, உடலெங்கும் அழுக்கேறி, தலையில் குடுமியுடன், கந்தலாடையுடன், கையில் வில்லேந்தித் தொடர்ச்சியாகச் சரம்போலக் கணையடித்துக் கொண்டிருக்கும் ஏகலவ்யனைக் கண்டார்.(51) ஏகலவ்யன் துரோணரைக் கண்டு, சில எட்டுகள் முன் வந்து, அவரது பாதத்தைத் தொட்டு, நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்தான்.(52) இப்படித் துரோணரை வணங்கிய நிஷாத மன்னனின் மைந்தன் {ஏகலவ்யன்}, தன்னை அவரது சீடனாகத் தெரிவித்து, மரியாதையாகக் கரங்குவித்து அவர் முன் நின்றான்.(53)  ஓ! மன்னா, துரோணர் அந்த ஏகலவ்யனிடம், “ஓ! வீரனே, நீ எனது சீடனாக இருப்பின், எனக்குரிய கூலியைக் {தட்சணையைக்} கொடுப்பாயாக!” என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்ட ஏகலவ்யன் பெரும் மனநிறைவுகொண்டு,(54) “ஓ! குருவே, நான் உமக்கு என்ன தரட்டும்? எனக்குக் கட்டளையிடுவீராக. வேதமறிந்த அனைத்து மனிதர்களைக் காட்டிலும் முதன்மையானவரே {துரோணரே}, எனது குருவுக்கு நான் தரமாட்டேன் என்று சொல்வதற்கு உலகில் எந்தப் பொருளும் இல்லை” என்றான்.(55)

அதற்குத் துரோணர், “ஓ! ஏகலவ்யா, உண்மையில் எனக்குப் பரிசு {தக்ஷிணை} கொடுக்கும் நோக்கம் உனக்கு இருக்குமானால், உனது வலக்கைக் கட்டை விரலைத் தருமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன்” என்றார்”.(56)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனும், உறுதியை காக்க விரும்பியவனுமான அந்த ஏகலவ்யன், கூலியாகக் கட்டைவிரலைக் கேட்ட துரோணரின் கொடும் வார்த்தைகளைக் கேட்டும் கூட, மகிழ்ந்த முகத்துடன், இதயம் பாதிக்காமல், ஆரவாரமில்லாமல் தனது கட்டைவிரலை வெட்டியெடுத்துத் துரோணரிடம் கொடுத்தான். அதன்பிறகு, மீதம் இருந்த விரல்களுடன் கணையடித்த அந்த நிஷாத இளவரசன், ஓ! மன்னா, தனது கரநளினம் கெட்டிருந்ததை அறிந்தான்.(57,58)

இதனால் அர்ஜுனன், அவனிடம் இருந்த (பொறாமை எனும்) நோய் அகன்று மகிழ்ச்சியடைந்தான். {“அர்ஜுனனுக்கு எவனும் இணையாக முடியாது” என்ற துரோணரின் வார்த்தைகள் இப்போது உண்மையாகின}[1].(59)துரோணரின் சீடர்களில் இருவர் கதாயுதத்தைப் பயன்படுத்துவதில் திறன்வாய்ந்தவர்களாக இருந்தனர்.  அவர்கள் துரியோதனனும், பீமனும் ஆவர். அவர்களிருவரும் ஒருவரிடமொருவர் பொறாமை கொண்டிருந்தனர்.(60) அஸ்வத்தாமன் ஆயுத அறிவியலின் புதிர்களில் {மந்திர ஆயுதங்களில்} அனைவரையும் விஞ்சி நின்றான். இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்) வாட்போரில் அனைவரையும் விஞ்சி நின்றார்கள்.(61) யுதிஷ்டிரன் தேர்ப்போரில் அனைவரையும் விஞ்சி நின்றான். ஆனால் அர்ஜுனன், எல்லாவகையிலும் அனைவரையும் விஞ்சி நின்றான். புத்திக்கூர்மையில், இருப்பனவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதில், பலத்தில், விடாமுயற்சியில் என அனைத்திலும் அனைவரையும் விஞ்சி நின்றான் அர்ஜுனன். அனைத்து ஆயுதங்களிலும் தேர்ந்த அவன், தேர் வீரர்களில் முதன்மையானவர்களுக்கும் முதன்மையானவனாக இருந்தான். அவனது புகழ் கடல் நுனி வரை உலகெங்கும் பரவியது.  அனைவருக்கும் ஒரேமாதிரியான கல்வியாக இருப்பினும், அர்ஜுனன் (நளினமான கரங்களைக் கொண்ட இளவரசனாக) அனைவரையும் மிஞ்சினான். குருவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதில், அனைவரிலும் முன்னவனாக இருந்தான். எல்லா இளவரசர்களிலும், அர்ஜுனன் மட்டுமே அதிரதனானான்[2].(62-64)(அதிரதன்- தன்னந்தனி தேர்வீரனாக இருந்து, ஒரே நேரத்தில் அறுபதாயிரம்{60,000} எதிரிகளுடன் போர் புரிபவன்.)பீமசேனனின் பெரும்பலத்தையும், அர்ஜுனன் அனைத்து ஆயுதங்களிலும் தேர்ந்ததையும் கண்ட திருதராஷ்டிரனின் தீய மகன்கள், அவர்களிடம் பொறாமை கொண்டனர்.(65) ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, அவர்களது பயிற்சி முடிந்ததும், ஒருநாள், துரோணர் தனது சீடர்களின் ஆயுதப் பயன்களைச் சோதித்துப் பார்க்க விரும்பி, அவர்கள் அனைவரையும் ஒருங்கே கூட்டினார்.(66) அவர்களைத் ஒன்றாகத் திரட்டுவதற்கு முன்னர், அருகில் இருந்த ஒரு மரத்தின் உச்சியில் அவர் ஒரு செயற்கைப் பறவையை நிறுவச் செய்து, அதையே இலக்காக வைத்தார். பிறகு துரோணர் அவர்களிடம்,(67) “உங்கள் விற்களை விரைவாக எடுத்துக் கொண்டு இங்கே வந்து நின்று, விற்களில் கணையைப் பொருத்தி, அந்த மரத்தில் இருக்கும் பறவைக்குக் குறி வையுங்கள்.(68) நான் உத்தரவிட்டதும், அந்தப் பறவையின் தலையைக் கொய்யுங்கள்.  குழந்தைகளே, நான் ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பைத் தருவேன், ஒவ்வொருவராக வாருங்கள்” என்றார்”.(69)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அங்கீரஸின் மைந்தர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர், முதலில் யுதிஷ்டிரனிடம், “ஓ! வெல்லப்பட முடியாதவனே, உனது கணையால் குறி வைத்து, நான் உத்தரவிட்டதும் அடி” என்றார்.(70) ஓ! மன்னா, யுதிஷ்டிரன் தனது ஆசான் விரும்பியபடியே முதலில் வில்லை எடுத்து, பறவையைக் குறிபார்த்தபடி நின்றான்.(71) ஆனால், ஓ! பாரதக் குலத்தவரில் காளையே, துரோணர், குறி பார்த்து நிற்கும் அந்தக் குரு இளவரசனிடம்,(72) “ஓ! இளவரசனே, அந்த மரத்தின் மேல் இருக்கும் பறவையைப் பார்” என்றார். யுதிஷ்டிரன் தனது குருவிடம், “பார்க்கிறேன்” என்றான். அடுத்த நொடியில் துரோணர்,(73) “ஓ! இளவரசனே, நீ என்ன பார்க்கிறாய்? மரத்தைப் பார்க்கிறாயா, என்னைப் பார்க்கிறாயா? அல்லது உனது சகோதரர்களைப் பார்க்கிறாயா?” என்று கேட்டார்.(74) அதற்கு யுதிஷ்டிரன், “நான் மரத்தைப் பார்க்கிறேன், என்னைப் பார்க்கிறேன், எனது சகோதரர்களைப் பார்க்கிறேன். அந்தப் பறவையையும் பார்க்கிறேன்” என்றான். துரோணர் மறுபடியும் அதே கேள்வியை அவனிடம் கேட்டார், மறுபடியும் அதே பதிலே வந்தது.(75) துரோணர் யுதிஷ்டிரனிடம் எரிச்சலடைந்து, “நீ தனியாகப் பிரிந்து நிற்பாயாக. அந்தக் குறியை அடிக்கப்போவது நீயல்ல” என்று கடிந்து கொண்டார்.(76)

துரோணர் அதே தேர்வை துரியோதனனுக்கும், திருதராஷ்டிரனின் மற்ற மைந்தர்களுக்கும் ஒருவர் பின் ஒருவராக வைத்தார். மற்ற சீடர்களான பீமன் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்திருந்த ஏனையோருக்கும் அதே தேர்வையே வைத்தார். ஆனால் யுதிஷ்டிரன் சொன்னது போலவே “மரம், தாங்கள், சக மாணவர்கள், பறவை ஆகியவற்றைக் காண்கிறேன்” என்றே அனைவரும் சொன்னார்கள். குருவால் கடிந்து கொள்ளப்பட்ட அவர்கள் தனியாக நிற்க வைக்கப்பட்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(77,78)

பிரம்மாயுதத்தைப் பெற்ற அர்ஜூனன் – ஆதிபர்வம் பகுதி 135-(சம்பவ பர்வம் – 71)-மற்ற பிள்ளைகளைப் போலவே குறியை அடிக்க அர்ஜுனனையும் அழைத்த துரோணர்; அர்ஜுனனின் பதிலால் அகமகிழ்ந்தது; குறியை அடித்த அர்ஜுனன்; நீராடச் சென்ற துரோணரை பிடித்துக் கொண்ட முதலை; முதலையைக் கொன்று துரோணரை விடுவித்த அர்ஜுனன்; அர்ஜுனனுக்குப் பிரம்மாஸ்திரத்தைத் தந்த துரோணர்..

வைசம்பாயனர் சொன்னார், “அனைவரும் தோற்றதும், துரோணர் புன்னகையுடன் அர்ஜுனனை அழைத்து, “உன்னால் அக்குறி அடிக்கப்பட வேண்டும்; எனவே, உனது பார்வையை அதில் செலுத்துவாயாக.(1) நான் உத்தரவிட்டதும் நீ உனது கணையை ஏவ வேண்டும். எனவே, ஓ! மகனே, வில் மற்றும் கணையுடன் ஒரு கணம் இங்கே நிற்பாகயாக” என்றார்.(2)

இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அர்ஜுனன், குருவின் விருப்பப்படித் தனது வில்லை வளைத்து அப்பறவைக்குக் குறி வைத்து நின்றான்.(3) ஒரு நொடிக்குப் பிறகு துரோணர் மற்றவர்களிடம் கேட்டது போல, “ஓ! அர்ஜுனா, அங்கே இருக்கும் பறவையையும், மரத்தையும், என்னையும் பார்க்கிறாயா?” என்று கேட்டார்.(4)

அதற்கு அர்ஜுனன், “நான் அப்பறவையை மட்டுமே காண்கிறேன். உம்மையோ, அம்மரத்தையோ நான் காணவில்லை” என்றான்.(5)

வெல்லப்படமுடியாதவரான துரோணர், அர்ஜுனனிடம் பெரும் மனநிறைவு கொண்டு, அடுத்த நொடியில், பாண்டவர்களின் பலம் வாய்ந்த அந்தத் தேர்வீரனிடம் {அர்ஜுனனிடம்},(6) “நீ அக்கழுகைக் காண்கிறாயென்றால், அதைப் பற்றி விவரிப்பாயாக” என்று கேட்டார்.

அர்ஜுனன், “நான் அக்கழுகின் தலையை மட்டுமே காண்கிறேன், அதன் உடலைக் காணவில்லை” என்றான்.(7)

அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணருக்கு மகிழ்ச்சியால் உடலெங்கும் மயிர்ச் சிலிர்ப்பு ஏற்பட்டது. பிறகு அவர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “அடி” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், உடனே தனது கணையைப் பறக்க விட்டான்.(8) அந்தக் கூர்மையான கணையாது, வேகமாகச் சென்று, மரத்திலிருந்த கழுகின் தலையை அடித்துத் தரையில் வீழ்த்தியது.(9) அந்தக் காரியம் முடிந்ததும், துரோணர் ஓடி வந்து பல்குனனைத் {அர்ஜுனனைத்} தனது மார்புறக் கட்டித் தழுவிக் கொண்டு, துருபதனும் அவனது நண்பர்களும் ஏற்கனவே போரில் வீழ்ந்துவிட்டதாக நினைத்துக் கொண்டார்.(10)

சில காலம் கழித்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே, துரோணர் தனது சீடர்களை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு, அதன் புனிதமான நீரோட்டத்தில் நீராடச் சென்றார்.(11) துரோணர் அந்த நீரோட்டத்தில் இறங்கியதும், காலனால் அனுப்பப்பட்டது போன்ற பெரும் பலம் வாய்ந்த ஒரு முதலை அவரது தொடையைப் பற்றியது.(12) அந்த இக்கட்டிலிருந்து தன்பலத்தாலேயே அவரால் மீளமுடியும் என்றாலும், அவசரத்துடன் துரோணர், சீடர்களைத் தன்னைக் காக்கும்படி கேட்டார். அவர், “ஓ, இந்த விலங்கைக் கொன்று, என்னைக் காப்பாற்றுங்கள்” என்றார்.(13)

அவ்வார்த்தைகளைக் கேட்டதும், மற்ற சீடர்கள் திகைத்துப் போய் அவரவர் இடத்திலேயே நின்றாலும், பீபத்சு (அர்ஜுனன்), தடுக்கப்படமுடியாத தனது ஐந்து கூர்மையான கணைகளால் அந்த விலங்கை நீரிலேயே அடித்து வீழ்த்தினான். அர்ஜுனனின் தயார் நிலையைக் கண்ட துரோணர், அவனை அவரது சீடர்களிலேயே முதன்மையானவனாகக் கருதி அவனிடம் பெரும் மனநிறைவு கொண்டார். அந்த விலங்கு, அர்ஜுனனின் கணைகளால் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டதால்,(14-16) சிறப்புமிக்கத் துரோணர் ஆவியை விட்டிருந்த அம்முதலையிடமிருந்து விடுபட்டார்.

பிறகு பரத்வாஜரின் மகன் {துரோணர்} தேர்வீரனான அந்த அர்ஜுனனை அழைத்து,(17) “ஓ! பெரும் பலம்வாய்ந்தவனே, மிக மேன்மையானதும், தடுக்கப்பட முடியாததுமான இந்தப் பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} ஏவவும்,  திரும்பப் பெறவும் கூடிய முறைகளுடன் பெற்றுக் கொள்வாயாக.(18) இருப்பினும், நீ எப்போதும் இதை மனித எதிரியின் மீது பயன்படுத்தக் கூடாது. தாழ்ந்த சக்தி கொண்ட எந்த எதிரியின் மீது இஃது ஏவப்பட்டாலும், இந்த முழு அண்டத்தையே எரித்துவிடும். (19) ஓ! குழந்தாய், மூவுலகத்திலும் இதற்கு ஒப்பான ஆயுதம் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே நான் சொல்வதைக் கேட்டு, இதைக் கவனத்துடன் வைத்துக் கொள்வாயாக.(20) ஓ! வீரா, எப்போதாவது மனிதனல்லாத எதிரி உன்னுடன் போர் புரியும்போது, அவனது மரணத்திற்காக நீ இதைப் பயன்படுத்தலாம்” என்றார்.(21)

தனக்குச் சொல்லப்பட்டதை ஏற்று, உறுதிகூறிய அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, குவிந்த கரங்களுடன் அந்தப் பெரும் ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டான். குரு அவனிடம் மறுபடியும்,(22) “இவ்வுலகத்தில் உன்னை விஞ்சிய வில்லாளி இருக்க மாட்டான். நீ எந்த எதிரியாலும் வெல்லப்பட முடியாதவனாக இருப்பாய். நீ பெரும் சாதனைகளைச் செய்வாய்” என்று சொன்னார் {துரோணர்}.(23)

அரங்கேற்றக் களம் – ஆதிபர்வம் பகுதி 136-சம்பவ பர்வம் – 72)-அரங்கத்தைக் கட்டத் தேவையான நிலத்தை அளந்த துரோணர்; குறித்த நாளில் இளவரசர்களின் வீர அரங்கேற்றம் நடந்தது; தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய இளவரசர்கள்; பீமனும், துரியோதனனும் மோதிக் கொள்ள ஆயத்தமானது..

வைசம்பாயனர் சொன்னார், “ஓ! பாரதகுலத்தோனே, திருதராஷ்டிரன் மற்றும் பாண்டுவின் மகன்கள் ஆயுதத் திறமையை அடைந்து விட்டதைக் கண்ட துரோணர், ஓ! ஏகாதிபதியே, கிருபர், சோமதத்தன், பாஹ்லீகர், மற்றும் கங்கையின் புத்திசாலி மகன் (பீஷ்மர்), வியாசர், விதுரன் ஆகியோரது முன்னிலையில் மன்னன் திருதராஷ்டிரனிடம்,(1,2) “ஓ! குரு மன்னர்களில் சிறந்தவரே, உமது மகன்கள் தங்கள் கல்வியை முடித்துவிட்டனர். ஓ! மன்னா, உமது அனுமதியுடன் அவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தட்டும்” என்றார்.(3)

இதைக்கேட்ட மன்னன் இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன், “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் பெரும் செயலைச் சாதித்திருக்கிறீர். பரிசோதனை நிகழும் இடத்தையும் நேரத்தையும், அஃது எப்படி நடக்க வேண்டும் என்பதையும் எனக்குக் கட்டளையிடுவீராக.(4) என் குருட்டுத் தன்மை, எனக்கு ஏற்படுத்தியிருக்கும் துயர், எனது பிள்ளைகளின் ஆயுத வீரத்தைக் காணும் பாக்கியமுள்ளோரிடம்  என்னை பொறாமை கொள்ள வைக்கிறது.(5) ஓ! க்ஷத்ரி (விதுரா), துரோணர் சொல்வதையெல்லாம் செய்து கொடுப்பாயாக. ஓ! அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனே, இதைவிட ஏற்புடையது {இனிமையானது} எனக்கு வேறெதுவும் இல்லை என்று நினைக்கிறேன்” என்றான்.(6)

மன்னனுக்குத் தேவையான உறுதிகளைக் கொடுத்துவிட்டு, விதுரன் தனது பணியைச் செய்யப் புறப்பட்டான். பெரும் ஞானம் கொண்ட துரோணர், கிணறுகளும், நீரூற்றுகளும் கொண்ட, மரங்கள் மற்றும் அடர்த்தியான புதர்களற்ற ஒரு நிலத்தை அளந்தார். அப்படி நிலத்தை அளந்த துரோணர், நல்ல நட்சத்திரம் கொண்ட ஒரு சந்திர நாளில், நடக்கும் காரியத்திற்குச் சாட்சியாக அங்கே கூடி நிற்கும் குடிமக்களுக்கு மத்தியில் தேவர்களுக்குக் காணிக்கை கொடுத்தார்.(7-9) அதன்பிறகு, ஓ! மனிதர்களில் காளையே, மன்னனின் சிற்பிகள், அந்த இடத்தில், பல்வேறு ஆயுதங்களுடன் தரமான ஒரு பெரிய அரங்கத்தைச் சாத்திரங்களில் சொல்லியுள்ளபடி அமைத்தனர். மேலும் அவர்கள் மற்றுமொரு பெரிய அரங்கத்தைப் பெண் பார்வையாளர்களுக்காக அமைத்தனர்.(10) குடிமக்களும் அவர்களுக்குத் தகுந்தது போல மேடைகளைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டனர். செல்வந்தர்கள் அகலமாகவும், விசாலமாகவும் குடில்களைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டனர்.(11)

நிச்சயிக்கப்பட்ட அரங்கேற்ற நாள் வந்ததும், தெய்வீக அழகுடன் சுத்தமான தங்கத்தால் கட்டப்பட்டு, முத்துச் சரங்களாலும், விலைமதிப்பில்லா வைடூரியம் போன்ற கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அரங்கத்தினுள், பீஷ்மர், கிருபர், குருக்களில் முன்னவர்கள் ஆகியோரை முன் நடக்க விட்டு, மன்னன் {திருதராஷ்டிரன்} தனது அமைச்சர்களுடன் நுழைந்தான்.(12,13) ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே, நற்பேறு அருளப்பட்ட காந்தாரி, குந்தி மற்றும் அரச குடும்பத்தின் மற்ற மகளிர் ஆகியோர் பகட்டான ஆடையுடுத்தி, தெய்வீக மங்கையர் சுமேரு {மேரு} மலைமீது ஏறுவது போலப் பணிப்பெண்களுடன் இன்பமாக அம்மேடையில் ஏறினர். பிராமணர்கள், க்ஷத்திரியர்களுடன் கூடிய நால்வகை மக்களும், இளவரசர்களின் ஆயுதத் திறனைக் காணும் ஆவலில், நகரத்தை விட்டகன்று, அந்த இடத்திற்கு ஓடி வந்தனர். அந்தக் காணற்கரிய காட்சியைக் காண அனைவரும் அமைதியற்றுக் காத்திருந்தனர். ஒரு நொடிப் பொழுதில் அங்கே பெரும் கூட்டம் கூடியது.(14-16) துந்துபி மற்றும் பேரிகைகளின் ஒலியும், பல குரலொலிகளும் சேர்ந்த ஒலி, கலங்கும் சமுத்திர ஒலியைப் போலிருந்தது.(17)

இறுதியாக, துரோணர் வெண்ணிற ஆடையுடன், பூணூல் பூட்டி, வெண்ணிறத் தாடியுடன், வெள்ளை மாலை அணிந்து, வெண்ணிற சந்தனக் குழம்பை மேனியில் பூசிக் கொண்டு தனது மகனுடன் அரங்கத்தினுள் நுழைந்தார். அக் காட்சியானது, மேகமற்ற வானில் சந்திரன் செவ்வாய்க்கிரகத்துடன் காட்சியளிப்பது போல இருந்தது.(18,19) அந்தப் பரத்வாஜர் {துரோணர்} உள்ளே நுழைந்ததும், நேரத்தில் பூஜை செய்து, மந்திரங்கள் நன்கறிந்த பிராமணர்களை மங்கலச் சடங்குகளைச் செய்ய வைத்தார்.(20)

இனிமையான இசையுடன் பரிகாரச் சடங்குகள் செய்து அவை நிறைவடைந்த பிறகு, பல்வேறு ஆயுதங்களுடன் சிலர் அந்த அரங்கின் உள்ளே நுழைந்தனர்.(21) இடுப்புக் கச்சையை வாரினால் வாரிக் கட்டிக் கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான அந்தப் பாரதக் குலத்தவர் (இளவரசர்கள்), தங்கள் கைகளில் கவசக் கையுறைகளை அணிந்து, விற்களுடனும் அம்பறாத்தூணிகளுடனும் உள்ளே நுழைந்தனர்.(22) யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட அந்தத் துணிவுமிக்க இளவரசர்கள், தங்கள் வயதுக்குத் தகுந்த வரிசையில் உள்ளே நுழைந்து, ஆயுதங்களில் தங்கள் அற்புதமான திறன்களைக் காட்சிப்படுத்தினர்.(23) அப்போது, சில பார்வையாளர்கள் கீழே இறங்கும் அம்புகளுக்கேற்ப அச்சத்தால் தங்கள் தலையைக் கீழே சாய்த்தனர். சிலர் அச்சமில்லாமல் அக்காட்சியை ஆச்சரியமாகப் பார்த்தனர்.(24)

அந்த இளவரசர்கள், குதிரையை லாவகமாகச் செலுத்தித் தங்கள் பெயர் பொறித்த குறித்த இலக்குகளைத் தங்கள் கணைகளால் அடித்தனர்.(25) வில் மற்றும் கணையைப் பயன்படுத்துவதில் தங்கள் இளவரசர்களின் ஆற்றலைக் கண்ட பார்வையாளர்கள், தாங்கள் கந்தர்வர்களின் நகரத்தைக் காண்கிறோமோ என்று நினைத்து வியப்பில் ஆழ்ந்தனர்.(26) ஓ! பாரதா, திடீரெனச் சில நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் “நன்று செய்தீர்! சரியாகச் செய்தீர்!” எனத் தங்கள் கண்களை அகலவிரித்து ஆச்சரியக் கூக்குரலிட்டனர்.(27) தங்கள் திறமைகளையும், வில் மற்றும் கணையைப் பயன்படுத்துவதில் தங்கள் கைத்திறனையும், தேர்களைக் கட்டுப்படுத்தும் திறனையும், குதிரை மற்றும் யானையின் முதுகில் இருந்து போரிடும் திறனையும்(28) தொடர்ச்சியாகச் செய்து காட்டிய அந்தப் பெரும் பலம் கொண்ட வீரர்கள், தங்கள் வாட்களையும், கேடயங்களையும் எடுத்துக் கொண்டு அந்த ஆயுதங்களுடன் விளையாடத் தொடங்கினர்.(29) பார்வையாளர்கள் இளவரசர்களின் சுறுசுறுப்பையும், கட்டுடலையும், கருணையையும், அமைதியையும், வலுவான பிடியையும், வாள் மற்றும் கேடயத்தில் அவர்கள் கொண்ட திறனையும் கண்டு அதிசயித்தனர்.(30)

பிறகு, விருகோதரனும் {பீமனும்}, சுயோதனனும் {துரியோதனனும்}, (போரின் தன்மையை நினைத்து) உள்ளுக்குள் மகிழ்ந்து, கையில் கதாயுதங்களுடன் ஒற்றைச் சிகர மலைகள் இரண்டைப் போல அரங்கத்தினுள் நுழைந்தனர்.(31) அந்தப் பெரும் பலம் கொண்ட வீரர்கள் தங்கள் இடுப்புக் கச்சைகளை இறுகக் கட்டிக் கொண்டு, தங்கள் சக்தி அத்தனையையும் வரவழைத்து, இரண்டு சினம் கொண்ட யானைகள் ஒரு பெண் யானைக்காகப் போட்டியிட்டு முழங்குவதைப் போலவே முழங்கினர்.(32) சினம் கொண்ட யானைகளைப் போல இருந்த அந்தப் பலம்வாய்ந்த வீரர்கள் இருவரும், அரங்கத்தை வலமாகவும், இடமாகவும் சுற்றினர்.(33) விதுரன் இளவரசர்களின் சாதனைகளையெல்லாம் திருதராஷ்டிரனுக்கும், பாண்டவர்களின் தாய்க்கும் {குந்தி}, காந்தாரிக்கும் விவரித்துச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(34)

அர்ஜூனன் மாயாஜாலம் – ஆதிபர்வம் பகுதி 137-(சம்பவ பர்வம் – 73)-சினம் கொண்ட பார்வையாளர்கள் துரியோதனனுக்கு ஆதரவாகவும், பீமனுக்கு ஆதரவாகவும் பிரிந்து நின்றது; பீமதுரியோதன மோதலை நிறுத்திய துரோணர்; அர்ஜுனன் செய்து காட்டிய மாயாஜாலத்தில் மயங்கிய மக்கள்; வாயிலில் கரவோசையைக் கேட்டுத் திரும்பிய மக்கள்; பரபரப்புடன் எழுந்து நின்ற துரியோதனன்…

வைசம்பாயனர் சொன்னார், “பலம் பொருந்திய குரு மன்னனும், பீமனும் அரங்கத்தினுள் நுழைந்ததும், பார்வையாளர்கள் தங்கள் மனவேற்றுமையால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக இருபிரிவாகப் பிரிந்தனர்.(1) சிலர், “குருக்களின் வீர மன்னனைப் பாருங்கள்”, சிலர், “பீமனைப் பாருங்கள்!” என்றும் கூவினர். இப்படிப்பட்ட கூவல்களின் காரணமாக அங்கே திடீரெனப் பெருங்கூச்சல் எழுந்தது.(2) அந்த இடம் ஒரு கலங்கிய கடலைப் போலக் காட்சி அளித்ததைக் கண்ட புத்திசாலியான பரத்வாஜர் {துரோணர்}, தனது மகன் அஸ்வத்தாமனை அழைத்து,(3) “பயிற்சியில் தேர்ந்தவர்களும்,  பெரும்பலம் கொண்டவர்களுமான இவ்விரு வீரர்களையும் தடுத்து நிறுத்துவாயாக. பீமனுக்கும், துரியோதனனுக்குமான இந்த மோதலால் கூட்டத்தின் கோபம் தூண்டப்படக் கூடாது” என்றார்”.(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிரளயகாலத்தில் உருவாகும் காற்றினால் கொந்தளிக்கிற இரு கடல்களைப் போலத் தங்கள் கதாயுதங்களை உயர ஓங்கியபடி இருவரும் நிற்கையில், குரு மைந்தன் {அஸ்வத்தாமன்} அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.(5) அப்போது துரோணர் அரங்கத்தினுள் நுழைந்து, இசைக்கலைஞர்களைத் தங்கள் இசையை நிறுத்தச் சொல்லி, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(6) “என் மகனிடம் நான் கொண்டுள்ளதைப் போன்றே என் அன்புக்குரியவனும், அனைத்து ஆயுத திறன்மிக்கவனும், இந்திரனின் மைந்தனும், இந்திரனின் தம்பிக்கு (விஷ்ணு) ஒப்பானவனுமான இந்தப் பார்த்தனைப் {அர்ஜுனன்} அனைவரும் காண்பீராக” என்றார்.(7)

பரிகாரச் சடங்குகளை மனநிறைவாகச் செய்த அந்த இளைஞன் பல்குனன் {அர்ஜுனன்}, தனது கையுறை கவசத்தையும், தங்கத்தாலான உடற்கவசத்தையும் தரித்து, அம்பறாத்தூணியில் கணைகளை நிறைத்துக் கைகளில் வில்லேந்தி, அரங்கிலிருந்த கூட்டத்தின் முன்பு, மாலை நேர சூரியனின் கதிர்களால் வானவில்லின் நிறம்பெற்ற, மின்னலுடன் கூடிய மேகம் போலக் காட்சியளித்தான்.(8,9) மொத்தக் கூட்டமும் அர்ஜுனனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்து, தங்கள் சங்குகளை எடுத்து முழக்கினர். இன்னிசை வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.(10)

“குந்தியின் அழகிய மகன் இவன்”, “இவனே பாண்டவர்களில் நடுவன் (மூன்றாமவன்)”, “இவனே பெரும்பலம்வாய்ந்த இந்திரனின் மகன்”, “இவனே குரு குலத்தைக் காக்கப் போகிறவன்”,(11) “இவனே ஆயுதந்தரித்தவர்களில் முதன்மையானவன்”, “இவனே அறத்தைக் கடைப்பிடிப்பவர்களில் முதன்மையானவன்”, “இவனே சரியான நடத்தையுள்ளவர்களில் முதன்மையானவன்”, “இவனே ஞானக் காரியங்களின் பெரும் கொள்கலன்” என்று கூட்டத்தில் இருந்து ஆச்சரியக் கூச்சல்கள் எழுந்தன.(12)

இந்தப் பாராட்டுகளைக் கேட்டதால், குந்தி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள், அவள் மார்பில் சுரந்த பாலுடன் அக்கண்ணீர் சேர்ந்து, அவளது மார்பை நனைத்தது.(13) மனிதர்களில் முதல்வனான திருதராஷ்டிரன் இந்தக் கூச்சல்களால் காதடைத்து, மகிழ்ச்சியுடன் விதுரனிடம்,(14) “ஓ! க்ஷத்ரி {விதுரா}, கலங்கிய பெருங்கடல் போல, வானுலகிற்கே கேட்குமளவு ஏன் இப்படித் தீடீரெனக் கூச்சல் எழுகிறது?” என்று கேட்டான்.(15)

விதுரன், “ஓ! பெரும்பலம்வாய்ந்த ஏகாதிபதியே, பாண்டு மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனான பல்குனன் {அர்ஜுனன்}, தனது கவசங்களை அணிந்து கொண்டு அரங்கத்தினுள் நுழைந்திருக்கிறான். அதனால்தான் இந்தக் கூச்சல் எழுகிறது” என்றார்.(16)

திருதராஷ்டிரன், “ஓ! பெரும் ஆன்மா கொண்டவனே, புனித நெய்யைப் போன்றிருக்கும் பிருதையிடம் உதித்த இந்த மூன்று நெருப்புகளாலும், உண்மையில் அருளப்பட்டவனாகவும், கருணை செய்யப்பட்டவனாகவும், பாதுகாக்கப்பட்டவனாகவும் என்னை நான் உணர்கிறேன் ” என்றான்”.(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மகிழ்ச்சியில் திளைத்திருந்த பார்வையாளர்கள் தங்கள் சுய உணர்வு அடைந்தனர். பீபத்சு {அர்ஜுனன்}, ஆயுதங்களில் தனது கரநளினத்தைக் அரங்கத்திலுள்ளோருக்குக் காட்சிப்படுத்தினான்.(18) அவன், ஆக்னேய ஆயுதத்தால் நெருப்பை உண்டாக்கினான், வாருண ஆயுதத்தால் நீரை உண்டாக்கினான், வாயவ்யா ஆயுதத்தால் (வாயு அஸ்திரம்} காற்றை உண்டாக்கினான். பர்ஜன்ய ஆயுதத்தால் {மேகாஸ்திரம்) மேகங்களை உண்டாக்கினான்.(19) மேலும் அவன், பௌமா ஆயுதத்தால் நிலத்தை உண்டாக்கினான், பர்வதேய ஆயுதத்தால் {பர்வதாஸ்திரம்} மலைகளை உருவாக்கினான். பிறகு அவன், அந்தர்தான ஆயுதத்தால் முன்பு உண்டாக்கிய அனைத்தையும் மறையவைத்தான்.(20)

அந்தக் குருவுக்கு விருப்பமானவன் {அர்ஜுனன்} ஒரு நொடியில் உயர்ந்து காணப்பட்டான், மறுநொடியில் தாழ்ந்து {குள்ளமாகக்} காணப்பட்டான். ஒரு நொடியில் தேர்த்தட்டிலும், மறுநொடியில் தேரின் நடுவிலும், அதற்கடுத்த நொடியில் தரையிலும் அவன் காணப்பட்டான்.(21) கரங்களைத் திறமையாகப் பயன்படுத்த பயிற்சி பெற்ற அந்த வீரன், பல கணைகளைக் கொண்டு சில மென்மையான, சில கடுமையான, சில அடர்த்தியான இலக்குகளை அடித்துக் காட்டினான்.(22) நகர்ந்து கொண்டே இருக்கும் இரும்புப் பன்றியின் வாயில் ஐந்து கணைகளை ஒரே கணை போலத் தடையில்லாமல் தனது வில் நாணிலிருந்து எய்தான்.(23) கயிற்றில் தொங்கியபடி அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்கும் துளையிடப்பட்ட மாட்டின் கொம்பில் இருபத்தியொரு கணைகளைச் செலுத்தினான்.(24) ஓ! பாவங்களற்றவனே, இப்படி அர்ஜுனன், வாள், வில், கதை ஆகிய ஆயுதங்களில் தனக்கு உண்டான ஆழமான நிபுணத்துவத்தைக் காட்டி அந்த அரங்கத்தை வலம் வந்தான்.(25)

ஓ! பாரதனே, அந்தக் கண்காட்சி நல்லபடியாக முடிந்ததும், அரங்கத்திலிருந்த பார்வையாளர்களின் குதூகலம் அடங்கியது. இசைக்கருவிகளின் ஒலி நின்றது, அப்போது, வாயிலருகே கைதட்டும் ஒலி கேட்டது. அவ்வொலியானது, தட்டுபவரின் பலத்தையும், சக்தியையும் முன்னறிவிக்கும் வகையில் இடிச்சத்தம் போலக் கேட்டது.(26,27) ஓ! மன்னா, அங்கே கூடியிருந்த கூட்டமானது, அந்நொடியில் இவ்வொலியைக் கேட்டு, “பூமியின் மலைகள் பிளந்தனவா? அல்லது பூமியே பிளந்துவிட்டதா? அல்லது வானத்தில் மேகங்கள் கூடி முழங்குகின்றனவா?” என்று நினைத்த பார்வையாளர்கள் அனைவரும் வாயிலை நோக்கினர்.(29) ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமான ஹஸ்த நட்சத்திரத்துடன் கூடிய சந்திரன் போலத் துரோணர், குந்தியின் மைந்தர்களான ஐந்து சகோதரர்கள் சூழ நின்றிருந்தார்.(30)

எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனன், செருக்குள்ள தனது நூறு சகோதரர்களுடனும், அஸ்வத்தாமனுடனும் பரபரப்புடன் எழுந்து நின்றான்.(31) ஒங்கிய ஆயுதங்களுடன் கூடிய தனது நூறு சகோதரர்கள் சூழவும், கையில் கதாயுதத்துடனும் நின்றிருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தானவர்களை எதிர்த்து போரிடச் செல்கையில் தேவர்களால் சூழப்பட்ட புரந்தரன் {இந்திரன்} போல இருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

அங்க மன்னனானான் கர்ணன் – ஆதிபர்வம் பகுதி 138-(சம்பவ பர்வம் – 74)அரங்கில் நுழைந்த கர்ணன்; அர்ஜுனன் செய்து காட்டிய மாயாஜாலங்கள் அனைத்தையும் செய்து காட்டியது; அர்ஜுனனுடன் தனிப்போரை விரும்பிய கர்ணன்; மயங்கி விழுந்த குந்தி; ஆயத்தமான அர்ஜுனன்; கர்ணனின் குலத்தைக் கேட்ட கிருபர்; கர்ணனை அங்க மன்னனாக்கிய துரியோதனன்

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பார்வையாளர்கள் கண்கள் விரிய ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளின் நகரை அடக்கும் கர்ணன், இயற்கை கவசத்தாலும் காதுக்குண்டலங்களாலும் முகம் பிரகாசித்துத் தனது வில்லை எடுத்து, வாளைச் சுற்றிக் கட்டிக் கொண்டு, மலைப்பாறை நடந்து வருவது போல அந்த அகன்ற அரங்கத்திற்கு வந்தான்.(1,2) வெகு தூரத்திற்குப் புகழ் கொண்டு எதிரிகளை அழிக்கும், அகன்ற கண் கொண்ட அந்தக் கர்ணன், பிருதைக்கு {குந்திக்கு} அவளது கன்னிப்பருவத்தில் பிறந்தவனாவான். சிங்கம், காளை அல்லது யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போன்ற வீரம் கொண்ட அவன், வெப்பக்கதிர் உமிழும் சூரியனின் ஒரு பகுதியுமாவான். அவன் பிரகாசத்தில் சூரியனையும், அழகில் சந்திரனையும், சக்தியில் நெருப்பையும் போல இருந்தான்.(3,4) சூரியனால் பெறப்பட்ட அவன், தங்கப் பனை மரம் போல் நெடிதுயர்ந்து இருந்தான். சிங்கத்தைக் கொல்லும் இளமையின் வல்லமையைப் பெற்றிருந்த அவன், எண்ணிலடங்கா சாதனைகளைச் செய்து, அழகான குணநலன்களுடன் இருந்தான்.(5)

பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட அந்த வீரன், அரங்கத்தைச் சுற்றி நோட்டம் விட்டுத் துரோணருக்கும் கிருபருக்கும் {அதிகம் மதியாதவனைப் போல} அலட்சியமாக வணக்கம் செலுத்தினான்.(6) அந்த மொத்தக்கூட்டத்தினரும் நடப்பதை அசைவில்லாமல் பார்த்து, “யார் இவன்?” என்று நினைத்து, அந்த வீரனைப் பற்றி அறிந்து கொள்ளப் பேராவல் கொண்டனர்.(7) நாவன்மை மிக்க மனிதர்களில் முதன்மையான அந்தச் சூரிய மைந்தன் {கர்ணன்}, மேகங்களைப் போன்ற ஆழமான உரத்த குரலில், அசுரரை அழிக்கும் பகனின் {இந்திரனின்} மகனும், தன்னால் அறியப்படாதவனுமான தன் தம்பியிடம்,(8) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ செய்து காட்டியதை விஞ்சும் வகையில் நான் இந்தச் சபையின் முன் அருஞ்செயல்கள் செய்வேன். அவற்றை நீ கண்டால் வியப்பில் மலைத்துவிடுவாய்” என்றான்.(9)

ஓ! நாவன்மைமிக்கோரில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவன் அப்படிப் பேசி முடிப்பதற்குள், பார்வையாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு கருவியின் துணை கொண்டு மொத்தமாக எழுப்பப்பட்டவர்கள் போல எழுந்து நின்றனர்.(10) ஓ! மனிதர்களில் புலியே, அக்கணத்தில் பீபத்சு {அர்ஜுனன்} கோபமும், நாணமும் கொண்ட போது, துரியோதனன் மகிழ்ச்சியால் நிறைந்தான்.(11) கர்ணன், துரோணரின் அனுமதியுடன், பார்த்தன் முன்பு செய்து காட்டிய அனைத்து அதிசயங்களையும் செய்து காட்டினான்.(12) ஓ! பாரதா, துரியோதனன் தனது தம்பிகளுடன் சென்று கர்ணனை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி கொண்டு அவனிடம்,(13) “ஓ! பெரும்பலம் வாய்ந்த வீரனே, நீ வரவேற்கப்படுகிறாய். நான் என் நற்பேறின் நிமித்தமாகவே உன்னை அடைந்திருக்கிறேன். ஓ! பண்பட்டவனே, நீ உன் விருப்பப்பட்ட படியே, எனக்கும், எனது அரசுக்கும் ஆணையிடுவாயாக” என்றான்.(14)

அதற்குக் கர்ணன், “நீ இப்படிச் சொன்னதே போதும், நீ கூறியவற்றை அடைந்தவனாகவே என்னை நான் கருதுகிறேன். உனது நட்பையே விரும்புகிறேன். ஓ! தலைவா {துரியோதனா}, அர்ஜுனனுடன் தனிப்போரிடுவதே எனது ஆவல்” என்றான்.(15)

துரியோதனன், “என்னுடன் சேர்ந்து வாழ்வின் நன்மைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பாயாக! உனது நண்பனுக்கு நன்மை செய்வாயாக, ஓ! எதிரிகளை அடக்கி ஒடுக்குபவனே, அனைத்து எதிரிகளின் தலையிலும் உனது பாதத்தை வைப்பாயாக” என்றான்.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதன்பிறகு, அர்ஜுனன், தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதி, தன் சகோதரர்களுக்கு {துரியோதனாதிகளுக்கு} மத்தியில் மலையென நின்ற கர்ணனிடம்,(17) “அழைக்கப்படாமல் வருபவர்களும், கேட்கப்படாமல் பேசுபவர்களும் செல்லும் பாதை {உலகம்} உன்னுடையதே. என்னால் கொல்லப்பட்ட பிறகு நீ அங்கேதான் போகப் போகிறாய்” என்றான்.(18)

கர்ணன், “இந்த அரங்கம் அனைவருக்கும் பொதுவானது, ஓ! பல்குனா {அர்ஜுனா}, இஃது உனக்கு மட்டும் சொந்தமானதல்ல. பலத்தில் மேன்மையானவர்களே மன்னர்கள். க்ஷத்திரியர்கள் பலத்தை மட்டுமே மதிப்பார்கள்.(19) வாய்ச்சண்டை எதற்கு? அது பலவீனமானவர்களின் வழியாகும். ஓ! பாரதா, குருவின் முன்னிலையில் நான் இன்று உனது தலையைக் கொய்யும் வரை உனது கணைகளால் என்னிடம் பேசுவாயாக” என்றான்”.(20)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சகோதரர்களால் விரைவாகத் தழுவி அனுப்பப்பட்டவனும், எதிரிகளின் நகரங்களை அடக்குபவனுமான  பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் அனுமதியுடன் போருக்கு முன்னேறினான்.(21) மறுபுறத்தில், துரியோதனனாலும், அவனது சகோதரர்களாலும் தழுவப்பட்ட கர்ணன், தனது வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்குத் தயாராக நின்றான்.(22) அப்போது, மின்னலுடன் கூடிய மேகங்களால் வானம் மூடப்பட்டது.  இந்திரனின் வண்ணமயமான வில் {இந்திர தனுசு, வானவில்}, பிரகாசமான ஒளிக் கதிர்களைப் பொழிந்தது. அப்போது வரிசையாகச் சிறகு விரித்துப் பறந்து சென்ற வெண்ணாரைகளைப் பார்த்து, வானத்தை மறைத்துக் கொண்டிருந்த மேகங்கள் சிரிப்பது போல் இருந்தது.(23) இந்திரன், தன் மகன் மீது கொண்டிருந்த அன்பினால் அந்த அரங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சூரியனும் மேகங்களைக் கலைத்துவிட்டுத் தனது வாரிசையே பார்த்துக் கொண்டிருந்தான்.(24) பல்குனன் மேகங்களின் ஆழத்தில் {உள்ளே} மறைந்திருந்தான். கர்ணன் சூரியக் கதிர்களால் சூழப்பட்டுப் பார்வையில் தெரிந்தான்.(25)

திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} கர்ணனுக்கு அருகிலேயே நின்றிருந்தான். பரத்வாஜர் {துரோணர்}, கிருபர் மற்றும் பீஷ்மர் ஆகியோர் பார்த்தனுக்கு அருகில் நின்றனர்.(26) அங்கே கூடியிருந்த கூட்டம் இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. பெண் பார்வையாளர்களும் அப்படியே பிரிந்திருந்தனர். அப்போது, நடக்கும் காரியங்களின் நிலை தெரிந்த குந்திபோஜனின் மகளான {வளர்ப்பு மகளான} குந்தி இதைக் கண்டு மூர்ச்சையடைந்தாள்.(27) அனைத்துக் கடமைகளிலும் அறிவுடைய விதுரன், பெண் பணியாட்களின் துணையுடன் அங்கே வந்து, அவள் மீது சந்தனத்தையும், நீரையும் தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்.(28) சுயநினைவு மீண்ட குந்தி, கவசம் அணிந்த தனது இரு மகன்களையும் கண்டாள். அவளால் செய்யக்கூடியது எதுவுமில்லையாகையால் (அவர்கள் இருவரையும் காக்க வழியில்லாததால்) பயத்தால் பீடிக்கப்பட்டிருந்தாள்.(29)

இரு வீரர்களும் கரங்களில் வில் வைத்திருப்பதைக் கண்டவரும், அனைத்துக் கடமைகளை அறிந்தவரும், நேருக்கு நேராக இருவர் போரிடும் முறைகளையும் நன்கறிந்தவருமான சரத்வானின் மகன் {கிருபர்}, கர்ணனிடம்,(30) “குந்தியின் இளைய மகனான இந்தப் பாண்டவன், கௌரவக் குலத்தைச் சார்ந்தவன். அவன் உன்னுடன் தனியாகப் போர் புரிவான்.(31) ஆனால், ஓ! பெரும்பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, நீயும் உனது குலத்தைக் கூற வேண்டும். உனது தந்தை, தாய் மற்றும் எந்த அரசு வழியை அலங்கரிப்பவன் நீ என்பது போன்றவற்றைக் கூற வேண்டும்.(32) இதையெல்லாம் அறிந்த பிறகே, பார்த்தன் {அர்ஜுனன்} உன்னுடன் போரிடுவான், இல்லையென்றால் போரிடமாட்டான். மன்னர்களின் மைந்தர்கள், புகழற்ற குலத்தில் பிறந்த மனிதர்களுடன் நேருக்கு நேர் தனியாகப் போரிட மாட்டார்கள்” என்றார்”.(33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிக் கிருபரால் சொல்லப்பட்டதும், கர்ணனின் முகம், மழைக்காலத்தின், மழைநீரால் தைக்கப்பட்டுக் கசக்கிக் கிழித்தெறியப்பட்ட தாமரை போல் ஆனது.(34)

அப்போது துரியோதனன், “ஓ! குருவே, அரசகுல ரத்தம் கொண்டவர்கள், வீரர்கள் மற்றும் படைகளுக்குத் தலைமையான படைவீரர்கள் ஆகிய மூன்று வகை மனிதர்கள் அரசுரிமை கோரலாம் என்று சாத்திரங்கள் சொல்கின்றன.(35) பல்குனன் {அர்ஜுனன்} அரசனாக இல்லாத ஒருவனிடம் போர் புரிய விரும்பவில்லை என்றால், நான் கர்ணனை அங்க தேசத்தின் மன்னனாக்குகிறேன்” என்றான்”.(36)

வைசம்பாயனர் சொன்னார், “அந்நொடியிலேயே, தங்க ஆசனத்தில் அமர்த்தப்பட்டு, உலர்ந்த நெல், மலர்கள், நீர், தங்கம் ஆகியவற்றைக் குடங்களில் கொண்டு, மந்திரங்கள் அறிந்த பிராமணர்களால் கர்ணன் அங்க நாட்டு மன்னனாக நிறுவப்பட்டான். அவன் தலைக்கு மேல் அரச குடை பிடிக்கப்பட்டது.  அந்தச் சந்தேகமில்லாத வீரனுக்குச் சுற்றி நின்று சாமரம் வீசப்பட்டது.(37,38)

மகிழ்ச்சி நிறைந்த அந்த மன்னன் {கர்ணன்} கௌரவத் துரியோதனனிடம், “ஓ! ஏகாதிபதிகளில் புலியே, நாட்டைப் பரிசாகக் கொடுக்கும் உனக்கு, அதற்குச் சமமாக நான் என்ன கொடுக்கப்போகிறேன்?(39) ஓ! மன்னா, நீ சொல்வது அனைத்தையும் நான் செய்வேன்” என்றான்.

சுயோதனன் {துரியோதனன்} அவனிடம் {கர்ணனிடம்}, “நான் உனது நட்பையே விரும்புகிறேன்” என்றான்.(40)

அதற்குக் கர்ணன், “அப்படியே ஆகட்டும்” என்றான். அவ்விருவரும் மகிழ்ச்சியால் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு பெரு மகிழ்ச்சி கொண்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(41) 

பீமனின் ஏளனமும் துரியோதனனின் கோபமும் – ஆதிபர்வம் பகுதி 139-(சம்பவ பர்வம் – 75)கர்ணனின் வளர்ப்புத்தந்தையான அதிரதன் அரங்கினுள் நுழைந்தது; தேரோட்டி மகனென கர்ணனைக் கேலி பேசிய பீமன்; பீமனை அதட்டிய துரியோதனன்; கர்ணனைக் கரம்பற்றி அழைத்துச் சென்ற துரியோதனன்

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அதன்பிறகு, மேலாடை நழுவிய நிலையில், வேர்த்து விறுவிறுத்து நடுக்கத்துடன் ஒரு கோலை ஊன்றித் தன்னைத் தாங்கிக் கொண்டு ஓர் அதிரதன் {தேரோட்டி} அந்த அரங்கத்தினுள் வந்தான்.(1) அவனைக் கண்டதும், பட்டமேற்பினால் நனைந்திருந்த தலையுடன் இருந்த கர்ணன், தனது வில்லைவிட்டு, மகனுக்குரிய மரியாதையுடன் தலைவணங்கினான் {அவனது பாதங்களில் தன் தலையை வைத்தான்}.(2) அந்தத் தேரோட்டி பரபரப்புடன் தனது பாதங்களை ஆடையால் மூடிக் கொண்டு, வெற்றி மகுடம் சூடிய கர்ணனை “மகனே!” என்று அழைத்தான்.(3) மேலும் அவன் அன்பின் மிகுதியால் கர்ணனை ஆரத்தழுவிக் கொண்டு, அங்கதேசத்தின் மன்னனாக முடிசூடப்பட்டு நனைந்திருந்த அவன் தலையில், தனது கண்ணீரைப் பனித்துளியாக்கி மேலும் நனைத்தான்.(4)

அந்தத் தேரோட்டியைக் கண்ட பாண்டவ பீமன், கர்ணனை தேரோட்டியின் மகனாகக் கருதி, ஏளனமாக,(5) “ஓ! தேரோட்டி மகனே, பார்த்தனின் கைகளால் மரணத்தைப் பெறும் தகுதி உனக்கில்லை. உனது குலத்துக்கு ஏற்ற வகையில் சாட்டையை {சவுக்கை} உடனே எடுத்துக் கொள்வாயாக.(5) ஓ! மனிதர்களில் தாழ்ந்தவனே, வேள்வி நெருப்பினருகில் இருக்கும் நெய்யைப் பெற ஒரு நாய்க்கு எவ்வாறு தகுதியில்லையோ, அவ்வாறே அங்கநாட்டை ஆட்சி செய்ய உனக்கும் தகுதியில்லை” என்றான்.(6)

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், நடுங்கும் உதடுகளுடன், பெருமூச்சுவிட்டுக்கொண்டு, வானிலிருக்கும் பகலவனைக் {சூரியனைக்} கண்டான்.(8) தாமரைக்கூட்டத்திற்கு இடையிலிருந்து மதம்பிடித்த யானை எழுவது போலத் தனது சகோதரர்களுக்கு மத்தியில் இருந்து கோபத்துடன் எழுந்த துரியோதனன்,(9) பயங்கரச் செயல்களைப் புரியும் பீமசேனனிடம், “ஓ! விருகோதரா {பீமா}, இது போன்ற வார்த்தைகளைப் பேசுவது உனக்குத் தகாது.(10) பலமே க்ஷத்திரியனுக்கு இதயப்பூர்வமான அறமாகும். பிறப்பால் தாழ்மையுற்றிருப்பினும், போர்புரியத் தகுதி வாய்ந்தவன் க்ஷத்திரியனே. தெய்வீக ஆறுகளின் தோற்றுவாயும் {பிறப்பிடமும்}, பெரும் வீரர்களின் மூலமும் {பிறப்பிடமும்}, எப்போதும் அறியப்படுவதில்லை.(11) உலகத்தையே சுட்டெரிக்கும் நெருப்பு, நீரிலிருந்தே எழுகிறது. தானவர்களைக் கொல்லும் இடி {வஜ்ரம்} ததீச முனிவரின் எலும்பால் ஆனது.(12) சிறப்பு மிகுந்த குஹதேவன் {முருகன்}, பல தேவர்களின் பகுதிகளைக் கொண்டு பிறந்ததால், அவனது மூலம் யாருக்கும் தெரியாது. சிலர் அவனை அக்னியின் மகன் என்றும், சிலர் கிருத்திகையின் மகனென்றும், சிலர் ருத்திரனின் மகன் என்றும், சிலர் கங்கையின் மகனென்றும் சொல்கின்றனர்.(13)

க்ஷத்திரியர்களாகப் பிறந்தவர்கள் பிராமணர்களாக ஆனதைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். விஷ்வாமித்திரரும், மற்றவர்களும் (மற்ற க்ஷத்திரியர்களும்) நித்தியமான பிரம்மத்தை அடைந்துள்ளனர்.(14) ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையான நமது குரு துரோணர் நீர்க்குடத்தில் பிறந்தவர், கோதம {கௌதம} குலத்தில் பிறந்த கிருபர் நாணற்கட்டிலிருந்து உதித்தவர்.(15) பாண்டவர்களே, உங்கள் பிறப்பைக் குறித்தும் நான் அறிவேன். சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அனைத்து அதிர்ஷ்டக்குறிகளையும் கொண்டு, இயற்கைக் கவசமும், காதுகுண்டலங்களும் கொண்ட (கர்ணனைப் போன்ற) ஒரு புலியை ஒரு பெண்மானால் பெற முடியுமா?(16) இந்த இளவரசன், தனது கரத்தின் பலத்தாலும், அவன் செய்யும் அனைத்துச் செயல்களிலும் அவனது ஆணைக்குக் கீழ்ப்படிய நான் ஏற்றிருக்கும் உறுதியாலும், அவன் அங்கதேசத்தை மட்டுமல்ல, முழு உலகத்தின் மனிதர்களையும் ஆளும் தகுதி உடையவன்.(17) நான் கர்ணனுக்குச் செய்திருக்கும் இந்தக் காரியத்தைப் பொறுக்காத எவரும் இங்கே இருந்தால், அப்படிப்பட்டவன் தனது காலின் உதவியால் தேரில் ஏறி, வில்லை வளைக்கட்டும்” என்றான்”.(18)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “துரியோதனனின் பேச்சை அங்கீகரிப்பது போலப் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பமான முணுமுணுப்பு எழுந்தது. சரியாக அந்த நேரத்தில் கதிரவனும் மறைந்தான்.(19) அப்போது, கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்ட துரியோதனன், எண்ணற்ற விளக்குகளின் வெளிச்சத்தில் அவனை வெளியே அழைத்துச் சென்றான்.(20) ஓ! மன்னா, துரோணர், கிருபர், பீஷ்மர் ஆகியோர் புடைசூழப் பாண்டவர்களும் தங்கள் வசிப்பிடத்திற்குத் திரும்பினர்.(21)

அங்கிருந்த மக்களில் சிலர் “அர்ஜுனனே வெற்றியாளன்” என்றும், சிலர் கர்ணனே வெற்றியாளன்!” என்றும், சிலர் “துரியோதனனே வெற்றியாளன்!” என்றும் பேசிக்கொண்டு திரும்பினர்.(22) கர்ணனிடம் சில மங்கலக்குறிகளைக் கண்ட குந்தி, அவனைத் தனது மகனாக அடையாளம் கண்டுகொண்டாள். அங்கதேசத்தின் அரசுரிமையைத் தன் மகன் அடைந்ததைக் கண்டு, தாய்ப்பாசத்தால் மிகவும் மகிழ்ந்து போனாள்.(23) ஓ! ஏகாதிபதியே, கர்ணனை இவ்வழியில் அடைந்த துரியோதனன், அர்ஜுனனின் ஆயுதத்திறமை மீது கொண்டிருந்த அச்சத்திலிருந்து விடுபட்டான்.(24) ஆயுதத் திறமை கொண்ட வீரனான அந்தக் கர்ணன், தனது இனிமையான பேச்சால் துரியோதனனை மனநிறைவு கொள்ளச் செய்தான். அதேவேளையில் யுதிஷ்டிரன், கர்ணனுக்கு நிகரான போராளி இந்த உலகத்திலேயே இல்லை என்று நம்பத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(25)

துருபதன் சிறை பிடிக்கப்பட்டான் – ஆதிபர்வம் பகுதி 140-(சம்பவ பர்வம் – 76)துரோணருக்கு தக்ஷிணையாக துருபதனை சிறைபிடித்துவரச் சென்ற கௌரவர்கள்; கௌரவர்களை விரட்டிய பாஞ்சாலன்; கௌரவர்கள் திரும்பியதும், துருபதனைப் பிடிக்கச் சென்ற நான்கு பாண்டவர்கள்; துருபதனை உயிருடன் கைப்பற்றிய அர்ஜுனன்; துருபதனின் பாதி நாட்டை எடுத்துக் கொண்டு, மீதி நாட்டைக் கொடுத்த துரோணர்; துரோணரைக் கொல்லும் மகனைப் பெறுவதற்காக முயற்சி செய்த துருபதன்…

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டவர்கள் மற்றும் திருதராஷ்டிரன் மகனின் ஆயுதத் தேர்ச்சியைக் கண்ட துரோணர், தனது கூலியைக் {தக்ஷிணையைக்} கேட்கும் தருணம் வந்ததெனக் கருதினார்.(1) ஓ! மன்னா, ஆசானான துரோணர், ஒரு நாள், தனது சீடர்களை அழைத்து, அவர்கள் அனைவரிடம் இருந்தும் தன் தக்ஷிணையைப் பெறும் வகையில்,(2) “பாஞ்சால மன்னன் துருபதனிடம் போரிட்டு அவனைச் சிறைபிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். அஃதுவே உங்களிடம் எனக்குக் கிடைக்கும் மிக ஏற்புடைய கூலியாக இருக்கும்” என்று கூறினார்.(3) அந்த வீரர்களும், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, ஆசானுக்குக் தங்கள் காணிக்கையைக் கொடுக்க எண்ணி, அவரையும் அழைத்துக் கொண்டு வேகமாகத் தங்கள் தேர்களில் ஏறிப் புறப்பட்டனர்.(4) அந்த மனிதர்களில் காளைகள், போகும் வழியெங்கும் பாஞ்சாலர்களை தாக்கியபடியே சென்று, பெரும் பலம்வாய்ந்தவனான அந்தத் துருபதனின் நகரத்தை முற்றுகையிட்டுத் தாக்கினர்.(5)

துரியோதனன், கர்ணன், பெரும் பலம்வாய்ந்தவனான யுயுத்சு, துச்சாசனன், விகர்ணன், ஜலசந்தன், சுலோசனன் ஆகியோரும்,(6) பெரும் ஆற்றலைக் கொண்ட க்ஷத்திரிய இளவரசர்கள் பலரும் சேர்ந்து தாக்குதலில் முதன்மையானவனாக ஒருவருக்கொருவர் போட்டியிட்டுச் சென்றனர்.(7) முதல் தரமான தேர்களில் சென்ற அந்த இளவரசர்கள், தங்கள் குதிரைப்படையைத் தொடர்ந்து எதிரியின் தலைநகருக்குள் {காம்பில்யத்திற்குள்} நுழைந்து, அந்த நகரின் தெருக்களில் முன்னேறினர்.(8) அதே நேரத்தில், அந்தப் பாஞ்சால மன்னன் {துருபதன்}, பெரும் படையைக் கண்டும், பலத்த ஆரவாரத்தைக் கேட்டும், தனது சகோதரர்களுடன் அரண்மனையைவிட்டு வெளியே வந்தான்.(9) மன்னன் யக்ஞசேனன் {துருபதன்} நல்ல படைபலத்துடன் இருந்தாலும், போர்க்குரலை எழுப்பியபடியே தங்கள் கணைகளை மழையெனப் பொழிந்த அந்தக் குரு குலப் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டான்.(10)

எனினும், வெல்லப்பட முடியாத போர்வீரனான அந்த யக்ஞசேனன் {துருபதன்}, தனது வெண்ணிற தேரில் குரு குலத்தவரை அணுகித் தாக்கி, களத்தைச் சுற்றிலும் தனது கடும்கணைகளை மழையெனப் பொழிய ஆரம்பித்தான்.(11) அந்தப் போர் தொடங்குவதற்கு முன்னரே, தங்கள் ஆற்றலில் செருக்கு கொண்ட கௌரவ இளவரசர்களைக் கண்ட அர்ஜுனன், தனது குருவான பிராமணர்களில் சிறந்த துரோணரிடம்,(12) “இவர்கள் தங்கள் ஆற்றலைக் காட்டியபிறகு, நாங்கள் இம்முயற்சியில் இறங்குகிறோம். போரில் இவர்களில் எவராலும் பாஞ்சால மன்னனை அணுக முடியாது” என்றான்.(13) தனது சகோதரர்களால் சூழப்பட்டிருந்த பாவங்களற்ற குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இப்படிச் சொல்லிவிட்டு, நகரத்திற்கு வெளியே ஒரு மைல் தொலைவில் காத்திருந்தான்.(14) அதே நேரத்தில் துருபதன் கௌரவப் படையைக் கண்டு, அவர்களிடம் விரைந்து, சுற்றிலும் கொடும் கணைகளை மழையெனப் பொழிந்து, குரு படையணிகளைப் பயங்கரமாகப் பீடித்தான்.(15)

போர்க்களத்தில் பெரும் நளினத்தோடு அவன் {துருபதன்} நகர்ந்தான். எந்த ஆதரவுமின்றித் தனித் தேரில் அவன் போரிட்டாலும், கௌரவர்களுக்குப் பல துருபதர்கள் அவர்களை எதிர்த்து நிற்பது போலத் தோன்றிற்று.(16) பாஞ்சாலர்களின் வீடுகளிலிருந்து சங்கு, பேரிகை, துந்துபியின் அச்சமூட்டும் ஒலிகள் கேட்கும் வரை, அந்த ஏகாதிபதியின் கடுமையான கணைகள் அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்தன. அந்தப் பெரும்பலம் வாய்ந்த பாஞ்சாலன் சிங்க முழக்கம் செய்தான். அவனது வில்லின் நாணொலி வானுலகையே அடைவது போலக் கேட்டது.(17,18) பாஞ்சாலர்களுடைய வில்லின் நாணொலி ஏற்படுத்திய பெருமுழக்கம் வானத்தையே பிளப்பதைப் போலத் தெரிந்தது. அப்போது, துரியோதனன், விகர்ணன், சுபாஹூ, தீர்க்கலோசனன்,(19) துச்சாசனன் ஆகியோர் கடும் கோபம் கொண்டு, தங்கள் எதிரியின் மீது கணைகளை மழையெனப் பொழிந்தனர். ஆனால், போரில் வெல்லப்பட முடியாத அந்தப் பெரும் வில்லாளியான பிருஷதனின் மகன் {துருபதன்}, எதிரிகளின் கணைகளால் துளைக்கப்பட்டாலும்,(20) ஓ! பாரதா {ஜனமேஜயா}, எதிரிப்படையணிகளைப் பெரும் வலிமையுடன் துன்புறுத்தினான்.

நெருப்புச் சக்கரம் போல அந்தக் களத்தில் சுழன்ற துருபதன், தனது கணைகளால் துரியோதனன், விகர்ணன் மற்றும் பலம்வாய்ந்த கர்ணனையும் மற்றும் பல வீர இளவரசர்களையும், எண்ணற்ற வீரர்களையும், அடித்து, அவர்களின் போர்த் தாகத்தைத் தணித்தான்.(21-22) பிறகு அந்நாட்டுக் குடிமக்கள் அனைவரும், மேகமானது பூமியின் மீது தனது மழைத்துளிகளைப் பொழிவது போலக் கௌரவர்கள் மீது பல்வேறு ஏவுகணைகளைப் பொழிந்தனர்.(23)இளைஞர்களும், முதியவர்களும் களத்திற்குள் நுழைந்து கௌரவர்களைப் பெரும்பலத்துடன் தாக்கினர்.(24) பிறகு, ஓ! பாரதா, போர் தங்களுக்கெதிராக உக்கிரமடைவதைக் கண்டக் கௌரவர்கள், போர் செய்வதை விடுத்துப் பாண்டவர்களை நோக்கி ஓடினர். பாண்டவர்கள், தோற்றவர்களின் பயங்கரமான கதறல்களைக் கேட்டு,(25) துரோணரை வணங்கி, தங்கள் தேர்களில் ஏறினர். அர்ஜுனன் அவசரமாய் யுதிஷ்டிரனை அழைத்துப் போரில் அவன் ஈடுபட வேண்டாம் என்று சொல்லித் தடுத்துவிட்டு, விரைவாக முன்னேறினான். அவன் தனது தேர்ச்சக்கரங்களுக்குக் காவலாய் மாத்ரியின் மகன்களை (நகுலன், சகாதேவன் ஆகியோரை) நியமித்தான்.  போரில் எப்போதும் முன்னணியில் நின்று போரிடும் பீமசேனன் அந்தப் படைகளுக்கு முன்பாகக் கையில் கதையுடன் ஓடினான்.(26,27)

தனது சகோதரர்களுடன் சென்ற அந்தப் பாவங்களற்ற அர்ஜுனன், எதிரிகளின் முழக்கத்தைக் கண்டு, அவர்களை நோக்கி முன்னேறி, அந்த முழுக்களத்தையே தன் தேர்ச்சக்கரங்களின் ஒலியால் நிரப்பினான்.(28) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான பீமன், மகரம் ஒன்று கடலுக்குள் நுழைவதைப் போல, கையில் கதாயுதத்துடன் பாஞ்சாலர்களின் படைக்குள் புகுந்து, புயலால் கலங்கிய சமுத்திரமெனக் கூச்சலிட்டு, இரண்டாவது எமனாகக் காட்சியளித்தான். கையில் கதையுடனிருந்த பீமன், எதிரிகளின் யானைப்படையை நோக்கி முன்னேறினான். போர்த்திறன் வாய்ந்த அர்ஜுனன், தனது கரத்தின் பலத்தால் அந்த எதிரிப் படையைத் தீவிரமாகத் தாக்கிய அதே நேரத்தில், பீமன், பெரும் எமனைப் போலத் தனது கதையைக் கொண்டு யானைகளைக் கொல்லத் தொடங்கினான்.(29-31)  பீமன், மலையை நிகர்த்த அந்தப் பெரும் விலங்குகளைக் கதையால் அடித்து, அவற்றின் தலைகளைச் சிதறடித்தான். இரத்த ஊற்றில் நனைந்த அவை, இடியால் தகர்ந்த மலைப்பாறைகள் போலத் தரையில் விழுந்தன.(32) பாண்டவர்கள், ஆயிரக்கணக்கான யானைகளையும், குதிரைகளையும், ரதங்களையும் தரையில் விழ வைத்தனர். பல காலாட்படை வீரர்களையும், பல தேர் வீரர்களையும் கொன்றனர்.(33) உண்மையாக, கானகத்தில் ஒரு மேய்ப்பன் ஒரு தடியை வைத்துக் கொண்டு எண்ணிலடங்கா மாடுகளை எளிதாக ஓட்டுவதுபோல, விருகோதரனும் {பீமனும்}, எதிரிகளின் பல தேர்களையும், யானைகளையும் ஓட்டிச்சென்றான்.(34) அதேநேரத்தில் பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு} நன்மையை விரும்பிய பல்குனன் {அர்ஜுனன்}, பிருஷதனின் மகனை {துருபதனை} கணை மழையால் தீவிரமாகத் தாக்கி, அவன் அமர்ந்திருந்த யானையிலிருந்து அவனை விழவைத்தான்.(35)

ஓ! ஏகாதிபதியே, யுகத்தின் முடிவில் அனைத்தையும் எரிக்கும் கடும் நெருப்பைப் போல இருந்த அர்ஜுனன், குதிரைகளையும், தேர்களையும், யானைகளையும் ஆயிரக்கணக்கில் தரையில் வீழ்த்தினான்.(36) பாண்டவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், பல்வேறு வகையான ஆயுதங்களின் மழையால் அவனை எதிர்கொண்டனர்.(37)

அவர்கள் பெருங்குரலெழுப்பி அர்ஜுனனுடன் மூர்க்கமாகப் போரிட்டனர். பார்வைக்கு அந்தப் போர் கடுமையானதாகவும் பயங்கரமானதாகவும் தெரிந்தது. எதிரிகளின் குரலைக்கேட்ட இந்திரனின் மகன் {அர்ஜுனன்} பெரும் கோபம் கொண்டு,(38) எதிரிகள் மீது தனது அடர்த்தியான கணைகளை மழையெனப் பொழிந்து, புத்துயிரூட்டப்பட்ட பலத்துடன் கடுமையாகப் போரிட்டான்.(39) அவன் கணைகளைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருந்ததால், அந்த நேரத்தில் அர்ஜுனனைக் கண்டவர்கள், கணையை அவன் நாணில் பூட்டுவதற்கும், அதைத் தொடுப்பதற்கும் உள்ள இடைவெளியைக் காணவில்லை.(40) அங்கே எழுந்த குரல்கள் பேரொலி கொண்டவையாக இருந்தன.  சில குரல்கள் உற்சாக அங்கீகரிப்பாகவும் இருந்தன. அப்போது, பாஞ்சால மன்னன் தனது தளபதி சத்தியஜித்துடன், அர்ஜுனனை நோக்கி, சம்பராசுரன் {சம்பரன்} தேவர்த்தலைவனை நோக்கி வருவது போல வந்தான். அர்ஜுனன் அந்தப் பாஞ்சால மன்னனைத் தனது கணை மழையால் மறைத்தான்.(41,42)

அப்போது பாஞ்சாலர்களின் அணியில், தலைமை யானையை எதிர்த்து வரும் சிங்கத்தைக் கண்ட மற்ற யானைகளின் பிளிறல் போல ஒரு பயம் கலந்த கூச்சல் எழுந்தது.(43) பாஞ்சால மன்னனைச் சிறைப்பிடிக்க வரும் அர்ஜுனனைக்கண்ட பெரும் வீரம் கொண்ட சத்யஜித், அவனை நெருங்கிச் சென்று தாக்கினான்.(44) இந்திரனையும், அசுரன் விரோசனனின் மகனையும் {பலிச் சக்கரவர்த்தியையும்} ஒத்திருந்த அந்த இரு வீரர்களும் போருக்காக ஒருவரையொருவர் விரைவாக அணுகி ஒருவர் படையை மற்றவர் கலங்கடித்தனர்.(45) பிறகு அர்ஜுனன் பெரும் பலத்துடன் ஆற்றல்வாய்ந்த பத்து கணைகளால் சத்தியஜித்தைத் துளைத்தான். இதைக்கண்ட பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.(46) ஆனால் சத்தியஜித்தோ, நேரத்தை வீணடிக்காமல் நூறு கணைகளால் அர்ஜுனனைக் கடுமையாகத் தாக்கினான். பிறகு நகர்வதில் நளினமும், வேகமும் கொண்ட, அந்தப் பெரும் தேர்வீரனான அர்ஜுனன், இப்படிக் கணைகளின் மழையால் மறைக்கப்பட்ட போது, தனது கணைகளின் பலமும், வேகமும் கூடுவதற்காகத் தனது வில்லின் நாணை உருவித் தேய்த்தான். அப்போது எதிரியின் வில்லை இரண்டாகப் பிளந்த அர்ஜுனன், பாஞ்சால மன்னனை நோக்கி விரைந்தான்.(47,48) ஆனால் சத்தியஜித் இன்னும் விரைவாக மேலும் கடுமையான வில்லை எடுத்து, பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, அவனது தேரையும், அவனது தேரோட்டியையும், குதிரைகளையும் தனது கணைகளால் துளைத்தான்.(49)

இப்படிப் பாஞ்சால வீரனால் போரில் கடுமையாகத் தாக்கப்பட்டவனும், எதிரிகளை மன்னிக்காதவனுமான அர்ஜுனன், அவனை {சத்தியஜித்தை} விரைவாகக் கொல்ல விரும்பி, எண்ணற்ற கணைகளால் எதிரியின் குதிரையையும், கொடியையும், வில்லையும், வில்லைப் பிடித்த (இடது) கையையும், தேரோட்டியையும், தேரின் பின் இருந்த பணியாளையும் துளைத்தான். தனது விற்கள் தொடர்ந்து இரண்டாகப் பிளக்கப்படுவதையும்,(50,51) குதிரைகள் கொல்லப்படுவதையும் கண்ட சத்தியஜித், போரை நிறுத்தித் திரும்பினான். தனது தளபதி தாக்குதலில் இருந்து பின்வாங்கியதைக் கண்ட பாஞ்சால மன்னன் {துருபதன்}, அந்தப் பாண்டவ இளவரசன் {அர்ஜுனன்} மீது, தானே கணைகளின் மழையைப் பொழியத் தொடங்கினான். பிறகு, வெற்றியால் அலங்கரிக்கப்பட்ட வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனன், கடுமையாகப் போரிடத் தொடங்கி,(52,53) எதிரியின் வில்லை இரண்டாகப் பிளந்து, அவனது கொடிக்கம்பத்தை வீழ்த்தி, அவனது குதிரைகளையும், தேரோட்டியையும் ஐந்து கணைகளால் துளைத்தான்.(54) பிறகு தனது வில்லை ஒரு புறமாகத் தூக்கியெறிந்த அர்ஜுனன், அம்பறாத்தூணியை எடுத்து, அதிலிருந்த முனை அகன்ற கொடுவாளை எடுத்து, உரக்க முழங்கி,(55) திடீரெனத் தனது தேரில் இருந்து எதிரியின் தேருக்குக் குதித்தான். அங்கே அச்சமற்று நின்று, கடலின் நீரைக் கலங்கடித்து, பெரும்பாம்பைப் பிடிக்கும் கருடனைப் போல, துருபதனைச் சிறைப் பிடித்தான். இந்தக் காட்சியைக் கண்ட பாஞ்சாலப் படையினர் பல திசைகளிலும் தப்பி ஓடினர்.(56,57) பிறகு இருதரப்பு படைகளுக்கெதிரேயும் தனது கரத்தின் பெரும்பலத்தை வெளிப்படுத்தி அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உரத்த சிங்க முழக்கம் செய்து, பாஞ்சாலர்களிடமிருந்து வெளியே வந்தான்.(58) அவன் (சிறைபிடிக்கப்பட்டவனுடன்) திரும்பி வருவதைக் கண்ட இளவரசர்கள் துருபதனின் தலைநகரை நிர்மூலமாக்கத் தொடங்கினர்.(59)

அவர்களிடம் அர்ஜுனன், “ஏகாதிபதிகளில் சிறந்த இந்தத் துருபதர், குரு குல வீரர்களின் உறவினனாவார். எனவே, ஓ! பீமரே, அவரது வீரர்களைக் கொல்லாதீர். நமது குருவுக்கான காணிக்கையை மட்டும் நாம் கொடுப்போம்” என்றான்”.(60)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மன்னா, இப்படி அர்ஜுனனால் தடுக்கப்பட்ட பீமசேனன், தனது போர்ப்பயிற்சியில் {இந்தப் போரினால்} நிறைவடையவில்லை என்றாலும், எவரையும் கொல்லாமல் திரும்பினான்.(61) ஓ! பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயா}, பிறகு அந்த இளவரசர்கள் சிறைபட்ட துருபதனை அவனது நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் அழைத்துச் சென்று, துரோணரிடம் ஒப்படைத்தனர்.(62) அவமதிக்கப்பட்டு, செல்வம் பறிக்கப்பட்டு, முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட துருபதனைக் கண்ட துரோணர், அந்த ஏகாதிபதியுடனான பழைய பகையை நினைத்து, அவனிடம்,(63) “உன் அரசும், உனது தலைநகரமும் என்னால் நிர்மூலமாக்கப்பட்டன.  ஆனால் உன் உயிர் உன் எதிரியை நம்பி இப்போது இருந்தாலும், அதற்காக நீ அஞ்சாதே. இப்போது நீ (என்னுடனான) உனது நட்பை மீட்டுயிர்ப்பிக்க விரும்புகிறாயா?” என்று கேட்டார்.(64) இதைச் சொல்லிச் சிறிது புன்னகைத்து மறுபடியும், “வீர மன்னா! உனது உயிருக்கு அஞ்சாதே! பிராமணர்களாகிய நாங்கள் எப்போதும் மன்னிப்பவர்களே.(65) ஓ! க்ஷத்திரியக் காளையே {துருபதா}, குழந்தைப் பருவத்திலிருந்து உன்னுடன் ஆசிரமத்தில் விளையாடியதால், நான் உன்னிடம் கொண்ட பாசமும், அன்பும் வளர்ந்தே வந்திருக்கிறது.(66) எனவே, ஓ! மன்னா, நான் உனது நட்பை மறுபடியும் கேட்கிறேன். உனக்கு ஒரு வரமாக, (முன்பு உனதாக இருந்த) பாதி நாட்டைக் கொடுக்கிறேன்.(67) மன்னன் அல்லாதவன் ஒரு மன்னனுக்கு நண்பனாக இருக்க முடியாது என்று நீ முன்பு சொன்னாய். ஓ! யக்ஞசேனா {துருபதா}, அதனாலேயே நான் உன் நாட்டில் பாதியை நான் வைத்துக் கொள்கிறேன்.(68) பாகீரதிக்கு {கங்கை ஆறு} தெற்கேயுள்ள நாட்டுக்கு நீயே மன்னன். அதே வேளையில், அந்த நதிக்கு வடக்கே இருக்கும் நாட்டுக்கு நான் மன்னன். ஓ! பாஞ்சாலா {துருபதா}, உனக்கு விருப்பமிருந்தால், என்னை உனது நண்பனாக அறிந்து {ஏற்றுக்} கொள்வாயாக” என்றார்.(69)

இந்த வார்த்தைகளைக் கேட்ட துருபதன், “உன்னத ஆன்மாவையும், பெரும் ஆற்றலையும் கொண்டவர் நீர். எனவே, ஓ! பிராமணரே {துரோணரே}, நீர் செய்யும் இச்செயலால் நான் ஆச்சரியமடையவில்லை. நான் உம்மிடம் பெரும் மனநிறைவு கொண்டேன்.  நான் உம்மிடம் அழியா நட்பை விரும்புகிறேன்” என்றான்”.(70)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அதன்பிறகு, ஓ! பாரதா, துரோணர் பாஞ்சால மன்னனை சில வழக்கமான மரியாதைகளுடன் மகிழ்ச்சியாக விடுவித்து, பாதி நாட்டையும் அவனுக்கு அளித்தார்.(71) அன்றிலிருந்து துருபதன், கங்கைக் கரையில் பல நகரங்களுடன் கூடிய மகந்தி மாகாணத்தில் உள்ள காம்பில்யத்தில் கவலையுடனே வசித்து வந்தான்.(72) துரோணரிடம் பெற்ற தோல்விக்குப் பிறகு, துருபதன், சர்மண்வதி ஆற்றின் கரை வரை இருந்த தென் பாஞ்சால நாட்டை ஆட்சி செய்தான்.(73) பிரம்மசக்தியில் {ஆன்ம பலத்தில்} தாழ்ந்தவனாக இருக்கையில், வெறும் க்ஷத்திரிய பலத்தால் மட்டுமே துரோணரை வெல்லமுடியாது என்று நினைத்த துருபதன்,(74) (தனது பிராமண எதிரியை அடக்க) ஒரு மகனைப் பெறுவதற்காக உலகம் முழுவதும் திரிந்தான். அதே நேரத்தில், துரோணர் அஹிச்சத்திராபுரியிலேயே தொடர்ந்து வசிக்கலானார்.(75) ஓ! மன்னா, இப்படியே நகரங்களும், பட்டணங்களும் அடங்கிய அஹிச்சத்திராபுரி அர்ஜுனனால் அடையப்பட்டு, துரோணருக்கு அளிக்கப்பட்டது” {என்றார் வைசம்பாயனர்}.(76)

தூக்கமிழந்த திருதராஷ்டிரன் – ஆதிபர்வம் பகுதி 141-(சம்பவ பர்வம் – 77)-இளவரசனாகப் பட்டமேற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்; பலராமனிடம் கதாயுத்தம் பயின்ற பீமசேனன்; அர்ஜுனனுக்குப் பிரம்மசிரஸ் என்ற ஆயுதத்தைக் கொடுத்த துரோணர்; திக்விஜயம் செய்த பீமார்ஜுனர்கள்; பாண்டவர்களின் வளர்ச்சியைக் கண்டு தூக்கமிழந்த திருதராஷ்டிரன்

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு வருடம் சென்றதும், திருதராஷ்டிரன், மக்கள் மீது அன்பு கொண்டு, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனை, அவனது உறுதிக்காகவும், மேலும், மனோபலம், பொறுமை, கருணை, வெளிப்படைத்தன்மை, மற்றும் நேர்மையான இதயம் ஆகியவற்றுக்காகவும் தன் அரசின் இளவரசனாக நிறுவினான்.(1,2) குறுகிய காலத்திற்குள், அந்தக் குந்தி மைந்தன் யுதிஷ்டிரன் தனது நன்னடத்தையாலும், நல்ல குணங்களாலும், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்ததாலும், பாண்டுவின் செயற்கரிய செயல்களை மறையச் செய்தான்.(3) இரண்டாவது பாண்டவனான விருகோதரன் {பீமன்}, சங்கர்ஷனரிடம் (பலராமனிடம்) வாட்போரிலும், கதாயுத்தத்திலும், தேர்ப்போரிலும் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக் கொண்டிருந்தான்[1].(4) (பாண்டவர்களுக்கு பலராமனும், கிருஷ்ணனும் ஏற்கனேவே அறிமுகமாகிவிட்டனர் என்பது இங்கே தெரிகிறது.)பீமனின் பயிற்சிக் காலம் முடிந்ததும், தியுமத்சேனனைப் போன்ற பலம் பெற்றுத் தொடர்ந்து தனது சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து, தனது வீரத்தைப் பெருக்கத் தொடங்கினான்.(5)

அர்ஜுனன், தனது (ஆயுதங்களின் மீதான) உறுதியான பிடியாலும், நகர்வதில் உள்ள நளினத்தாலும், குறியில் கச்சிதத்தாலும், க்ஷுரம், நாராசம், பல்லம், விபாதை போன்ற நேரான, வளைந்த மற்றும் கனமான ஆயுதங்களில் திறமை பெற்றிருந்ததாலும், பெரிதும் கொண்டாடப்பட்டான். துரோணர், “அர்ஜுனனுக்கு நிகராகக் கரங்களின் நளினமும், நிபுணத்துவமும் கொண்ட ஒருவனும் உலகத்தில் இல்லை” என்று உறுதிகூறினார்.(6,7)

ஒரு நாள், துரோணர் கூடியிருந்த கௌரவ இளவரசர்களின் முன்னிலையில் அர்ஜுனனிடம், “அகஸ்தியருக்கு, அக்னிவேசர் என்ற பெயரில் ஆயுத அறிவியல் பயிலும் சீடர் ஒருவர் இருந்தார். அவர் எனக்குக் குருவாகவும், நான் அவருக்குச் சீடனாகவும் இருந்தோம்.  எனது ஆன்மத் தகுதியால், நான் அவரிடமிருந்து, இடியைப் போன்ற, முழு உலகத்தையும் உட்கொள்ளும் சக்தி கொண்ட, பொய்க்காத ஆயுதமான பிரம்மசிரஸ் என்ற ஆயுதத்தை அடைந்தேன். அந்த ஆயுதமானது, ஓ! பாரதா {அர்ஜுனா}, எனது {நான் இப்போது செய்யப்போகும்} இந்தச் செயலால், இப்போதிருந்து, சீடனுக்குச் சீடன் பெயர்ந்து கொண்டே இருக்கும்.(8-10) அதை எனக்குக் கொடுக்கும்போது எனது குரு என்னிடம், “ஓ! பரத்வாஜரின் மகனே {துரோணா}, இந்த ஆயுதத்தை எப்போதுமே நீ மனிதர்கள் மீது ஏவக்கூடாது. குறிப்பாக சக்தி குறைந்தவர்கள் மீது ஏவவே கூடாது” என்று சொன்னார்.(11) ஓ! வீரனே {அர்ஜுனா}, நீ யாரும் பெறமுடியாத இந்தத் தெய்வீக ஆயுதத்தை இப்போது அடைந்திருக்கிறாய். ஆனால் முனிவரின் (அக்னிவேசரின்) கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பாயாக.(12) இங்கே பார் அர்ஜுனா, இப்போது உனது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நீ உனது ஆசாரியனுக்குரிய கூலியைக் (தட்சணையைக்) கொடுப்பாயாக” என்றார். இதைக்கேட்ட அர்ஜுனன், தனது குரு என்ன கேட்டாலும் தருவதாக வாக்களித்தான்.(13)

அதற்குக் குரு, “ஓ! பாவங்களற்றவனே {அர்ஜுனா}, நான் உன்னுடன் போரிடும் போது, நீயும் என்னுடன் போரிட வேண்டும்” என்று கேட்டார். அந்தக் குரு இளவரசர்களில் காளை தனது வார்த்தைகளால் அதற்கு உறுதி கூறி,(14) துரோணரின் பாதத்தைத் தொட்டு, வடக்கு நோக்கிச் சென்றான். “ஆழி சூழ் உலகத்தில் அர்ஜுனனுக்கு நிகரான வில்லாளி இல்லை” என்ற சொல் உலகமெங்கும் எதிரொலித்தது {பரவியது}.(15)

நிச்சயமாகத் தனஞ்சயன் கதாயுத்தமாகட்டும், வாட்போராகட்டும், தேரிலிருந்து வில்லைப் பயன்படுத்துவதாகட்டும், எல்லாவற்றிலும் அற்புதமான திறமைபெற்றிருந்தான். சகாதேவன், கடமைகள் மற்றும் நீதிகளின் அறிவியலைத் தேவர்களின் ஆன்மிகத் தலைவனிடமிருந்து (பிருஹஸ்பதி) பெற்றுத் தொடர்ந்து தனது சகோதரர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தான். தனது சகோதரர்களுக்கு அன்பான நகுலன், துரோணரால் பயிற்சி கொடுக்கப்பட்டு, சிறந்த வீரனாகவும், பெரும் தேர்வீரனாகவும் (அதிரதனாகவும்) இருந்தான். கந்தர்வர்களால் படையெடுக்கப்பட்டும், தொடர்ந்து மூன்று வருடங்கள் வேள்வி செய்த பெரும் சௌவீரனைக் கொல்லும் அளவுக்கு, அர்ஜுனனும் மற்றவர்களும் பெரும் பலசாலிகளாகினர். பாண்டுவாலேயே அடக்கமுடியாத அந்த யவனர்களின் {சௌவீர} அரசனை, அர்ஜுனன் அடக்கினான்.(16-21)

மறுபடியும், எப்போதும் குரு குலத்தவரை அவமதித்தே வந்த சௌவீரர்களின் [2] மன்னனான பெரும் வீரம் கொண்ட விபுலனைப் புத்திசாலியான அர்ஜுனன் {தனது} பலத்தின் எல்லையை உணர வைத்தான் {அவனைக் கொன்றான்}. (சௌவீரம் என்ற பெயரில் 12 இளவரசர்களால் ஆளப்பட்ட 12 நாடுகள் சிந்து நதிக்கரையோரம் இருந்தன. சௌவீரம் என்றால் நூறு வீரர்களின் அரசு என்று பொருள். ஜெயத்ரதன் அவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தான். வனபர்வத்தின் பகுதி 263ல் ஜெயத்தரன் திரௌபதியிடம் அவர்களின் பெயர்களை வரிசையாகக் கூறுகின்றான்.)அர்ஜுனன், திடமாகப் போரிட்ட தத்தாமித்ரன் என்று அழைக்கப்பட்ட சௌவீர மன்னன் சுமித்திரனைத் (அவனது தற்பெருமையைத்) தனது கணைகளால் நொறுக்கினான். பீமனுடைய துணையைக் கொண்டு, தனித் தேரில் சென்ற அந்த மூன்றாவது பாண்டவன் {அர்ஜுனன்}, பத்தாயிரம் தேர்களுடன் இருந்த கிழக்கு நாடுகளின் மன்னர்களை அடக்கினான்.(22,23) தனஞ்சயன் {அர்ஜுனன்}, அதே போலவே தனித் தேரில் சென்று தெற்கு நாடுகளையும் குரு குலத்தவரின் அரசுக்கு பெரும் கப்பம் கட்ட வைத்தான்.(24) இப்படியே அந்த மனிதர்களில் முதன்மையானவர்களான சிறப்புமிக்கப் பாண்டவர்கள், மற்ற மன்னர்களின் பகுதிகளை வெற்றிக் கொண்டு, தங்கள் நாட்டின் {ஹஸ்தினாபுரத்தின்} எல்லைகளை விரிவுபடுத்தினர். அந்தப் பெரும்பலம்வாய்ந்த வில்லாளிகளின் பெரும் ஆற்றலையும், பலத்தையும் கண்ட மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பாண்டவர்கள் மீது வைத்திருந்த நல்லெண்ணம் விஷமாகி, அன்றிலிருந்து அவர்களைக் குறித்துக் கவலை கொண்டு, தூக்கமின்றி இருந்தான்” (என்றார் வைசம்பாயனர்}.(25-27)

கணிகர் நீதி – ஆதிபர்வம் பகுதி 142-(சம்பவ பர்வம் – 78)-திருதராஷ்டிரனுக்கு நீதியை உபதேசித்த கணிகர்;

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டுவின் வீர மைந்தர்கள், பெரும் சக்தி கொண்டு பலத்தைப் பெருக்கி வருவதைக் கேள்விப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன் கவலையில் மூழ்கி மிகவும் பரிதாபமாக இருந்தான்.(1) அவன் {திருதராஷ்டிரன்}, அரசியலின் அறிவியலை நன்கு அறிந்தவரும், மன்னனுக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணரும், அமைச்சர்களில் முதன்மையானவருமான கணிகரை அழைத்து,(2) “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {கணிகரே}, பாண்டவர்கள் தினமும் பூமியைத் தங்களது நிழலால் அதிகமாக மறைத்து வருகின்றனர். நான் அவர்களிடம் மிகுந்த பொறாமை கொண்டுள்ளேன். நான் அவர்களுடன் அமைதி காக்கவா? அல்லது போர் தொடுக்கவா? ஓ! கணிகரே, இது தொடர்பாக உமது அறிவுரை நிச்சயமாக எனக்குத் தேவை. நான் நீர் சொல்வது போல நடந்து கொள்வேன்” என்றான்”.(3)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்த பிராமணர்களில் சிறந்தவர் {கணிகர்}, மன்னனால் இப்படிக் கேட்கப்பட்டதும், அரசியலின் அறிவியல் ஏற்றுக்கொள்ளும் வகையில் கூர்மையான வார்த்தைகளால் பேசினார்.(4)

அவர் {கணிகர்}, “ஓ! பாவமற்ற மன்னா! உனக்கு விடையாக நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக. ஓ! குரு மன்னர்களில் சிறந்தவனே {திருதராஷ்டிரா}, நான் சொல்வதையெல்லாம் கேட்ட பிறகு என்னிடம் கோபம் கொள்ளாதே.(5) மன்னர்கள், (தேவைப்படும்போது தாக்குவதற்கு ஏதுவாக) உயர்த்திப்பிடிக்கப்பட்ட தண்டங்களுடனேயே  எப்போதும் {தண்டனை கொடுப்பதற்குத்} தயாராக இருக்க வேண்டும்.  அவர்கள் எப்போதும் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  கவனமாகத் தங்கள் குற்றங்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்டே, பிறரின் குற்றங்கள் இடையறாமல் அவர்கள் கவனிக்க வேண்டும்.(6)

எப்போதும் தாக்கத் தயாராக இருக்கும் மன்னனைக் கண்டு அனைவரும் அஞ்சுவர். எனவே, ஒரு மன்னன் எப்போதும், அவன் செய்யும் அனைத்தையும் விடத் தண்டனை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.(7) தனது எந்தப் பலவீனத்தையும் எதிரி அறிந்து கொள்ளாத வகையில் அவன் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.  ஆனால், தான் தனது எதிரியிடம் கண்டுபிடிக்கும் பலவீனத்தைக் கொண்டு (அவனது அழிவிற்காக) அவனைத் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அவன் {மன்னன்} எப்போதும், ஓர் ஆமை தனது உடலை மறைத்துக் கொள்வது போல, தனது செயல்களையும், அதன் முடிவுகளையும், தனது சொந்த பலவீனத்தையும் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைத்து வைக்க வேண்டும்.(8)

ஒரு குறிப்பிட்ட செயலைத் தொடங்கி விட்டால், அதை அவன் முழுமையாக முடிக்க வேண்டும். ஒரு முள்ளைப் பார், அதை முழுமையாக எடுக்காவிட்டால், அது வளரும் புண்ணை {புண்} உற்பத்தி செய்யும்.(9) உனக்குத் தீங்கு செய்யும் எதிரியைக் கொல்வது எப்போதும் பாராட்டுக்குரியதே.  எதிரி பெரும் பலவானாக இருந்தால், அவனது ஆபத்துக் {அழிவு} காலத்தை {கெட்ட நேரத்தை} எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். பிறகு, எந்த மன உறுத்தலும் இல்லாமல் அவனைக் கொல்ல வேண்டும். அவன் {எதிரி} பெரும் போர்வீரனாக இருந்தால், அவனது ஆபத்துக் காலத்தை {கெட்ட நேரத்தை} எதிர்பார்த்துக் காத்திருந்து, அவனை வானுலகிற்குப் பறக்க வைக்க வேண்டும். ஓ! ஐயா {மன்னா}, எவ்வளவு வெறுப்பூட்டும் வகையில் எதிரி இருந்தாலும் அவனை வசைபாடக் கூடாது. அருகருகே இருக்கும் பொருட்கள் ஒன்றின்மேல் ஒன்றுவிழுவதால் எளிதாகத் தீயைப் பரவ வைத்து ஒரு கானகத்தையே எரித்துவிடும் சக்தி ஒரு தீப்பொறிக்கு உண்டு.(10,11)

மன்னர்கள் சில நேரங்களில் குருடர்களாகவும், செவிடர்களாகவும் நடிக்க வேண்டும். தங்களால் தண்டிக்க இயலாவிட்டால் {தண்டிக்க முடியாத காரணம் இருக்கும்போது}, தண்டனைக்குரிய குற்றம் எதையும் தான் காணாதது போல நடிக்க வேண்டும். இது போன்ற நேரங்களில், அவர்கள் தங்கள் விற்களை {வில்} புல்லால் ஆனதாக மதிக்க வேண்டும். ஆனால், அவர்கள் எப்போதும் கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மான்கூட்டம் போல விழிப்புடன் இருக்க வேண்டும்.(12)

உன் பகைவன் உனது ஆட்சிக்குள்ளிருக்கையில், அவனை வெளிப்படையாகவோ,  கமுக்கமாகவோ {ரகசியமாகவோ} எந்தவகையிலாவது கொன்றுவிடுவாயாக. அவன் உன்னிடம் பாதுகாப்பைக் கோரினாலும், அவனிடம் நீ கருணையே காட்டாதே. (13) உனது எதிரியையோ அல்லது உன்னை ஒருமுறை காயப்படுத்தியவனையோ, {தேவைப்பட்டால்} ஏராளமாகப் பணத்தை இறைத்தாவது கொன்றுவிடு. அப்படி அவனைக் கொல்வதால் நீ நிம்மதியாக இருக்கலாம். இறந்தவர்களிடம் இருந்து எந்த அச்சமும் ஏற்படாது.(14) நீ உன் பகைவர்களின் மூன்று, ஐந்து மற்றும் ஏழு ஆகியவற்றை (ஆதாரங்களை)[1]  அழிக்க வேண்டும். நீ உனது எதிரியை வேரோடும் கிளைகளோடும் {வேரோடும், வேரடி மண்ணோடும் என்பது போல} அழிக்க வேண்டும்.(15) (மூன்று: அதிகாரம், மந்திரம், உற்சாகம். ஐந்து: மந்திரி, நாடு, அகழ், கருவூலம், படை. ஏழு: மன்னன், அமைச்சன், நண்பன், நிதி, நாடு, அகழ், நாடு
கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், மேற்கண்டவற்றைக் குறிப்பிட்டுவிட்டு அதை பழைவுரையென்றும், பிந்தையதே சரியென்றும் இருக்கிறது. அது பின்வருமாறு: “மூன்று: ராஜா, மந்திரி, மித்ரன்; ஐந்து: முன்சொன்ன மூன்றோடு, கோசாதிபதியும், ஸேனாதிபதியும்; ஏழு முன் சொன்ன ஐந்துடன் தேசரக்ஷகரும், துர்க்கரக்ஷகரமும். எழுவரையும் கொல்ல முடியாவிட்டால் ஐவரையாவது, அதுவும் முடியாவிடத்து மூவரையாவது கொல்ல வேண்டும். இதனால் ஏழும் அழியும்” என்றிருக்கிறது)அதன்பிறகு, நீ அவர்களின் கூட்டாளிகளையும், நம்பிக்கைக்குரியவர்களையும் அழிக்க வேண்டும். கருப்பொருள் அழிந்துவிட்டால், கூட்டாளிகளாலும், நம்பிக்கைக்குரியவர்களாலும் நிலைத்திருக்க முடியாது.(16) ஒரு மரத்தின் வேர் அறுக்கப்பட்டால், அதன் கிளைகளாலும், குச்சிகளாலும் முன்பு போல நிலைத்திருக்க முடியாது.

உனது தனிப்பட்ட செயல்களையும், அதன் முடிவுகளையும் கவனமாக மறைத்து, உனது எதிரிகளின் குறைகளையும், பலவீனங்களையும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஓ! மன்னா, உனது எதிரிகளை ஆவலுடன் கவனித்துக் கொண்டே(17) உனது நாட்டை நீ ஆள வேண்டும். வேள்வி நெருப்பைத் தொடர்ந்து எரியவிட்டும், பழுப்பு நிற ஆடை அணிந்தும், ஜடா முடி தரித்தும், விலங்குகளின் தோலை உனது படுக்கையாகக் கொண்டும், {நல்லவன் போல் வேடமிட்டு}(18) உனது எதிரியின் நம்பிக்கையை முதலில் நீ பெற வேண்டும். அவன் நம்பிக்கையை நீ பெற்றதும், உடனே ஓநாயாக எழுந்து அவன் மீது பாய வேண்டும். மரங்களின் கிளைகளை வளைத்துக் கனிந்த பழங்களைப் பறிப்பதற்காக, கொக்கி மாட்டப்பட்ட தடியைப் பயன்படுத்துவது போல, செல்வத்தை அடைய தெய்வீக {காவி} உடையும் அணியலாம் என்று சொல்லப்படுகிறது. எப்படியும் தேர்வுக் கொள்கையையே {பறிக்கப் போகும் கனிகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கொள்கை} நீ பின்பற்ற வேண்டும். எனவே கனியை அடைய பின்பற்றப்படும் நடைமுறையே, உனது எதிரிகளை அழிப்பதிலும் பின்பற்ற வேண்டும்.(19,20)

காலம் வரும் வரை உனது எதிரியைத் தோளில் தாங்கிக் கொள்வாயாக, அப்போதுதான், நேரம் வந்ததும், மண்பானையைக் கட்டாந்தரையில் வேகமாகத் தூக்கி வீசுவது போல, அவனைக் கீழே தூக்கி வீசித் துண்டுகளாகச் சிதறும்படி உடைக்க முடியும்.(21) ஓர் எதிரி உன்னிடம் பரிதாபகரமாகப் பேசினால், நீ அவனை விட்டுவிடக் கூடாது. அவனிடம் எந்தக் கருணையும் காட்டாமல் அவனைக் கொன்றுவிட வேண்டும்.(22) அமைதியின் கலைகளாலோ {சாமத்தினாலோ}, பணம் செலவழித்தோ {தானத்தினாலோ} ஓர் எதிரி அழிக்கப்பட வேண்டும். எதிரியின் கூட்டாளிகளிடம் ஒற்றுமையின்மையை வளர்த்தோ {பேதத்தாலோ}, படைபலத்தாலோ {தண்டத்தாலோ}, உனது பலத்துக்கு உகந்த எந்தச் செயலைச் செய்தாவது நிச்சயமாக உனது எதிரியை நீ அழிக்க வேண்டும்” என்றார் {கணிகர்}.(23)

திருதராஷ்டிரன், “அமைதியின் கலைகளாலோ {சாமத்தாலோ}, பணம் செலவழித்தோ {தானத்தாலோ}, ஒற்றுமையின்மையை ஏற்படுத்தியோ  {பேதத்தாலோ} அல்லது படைபலத்தைப் {தண்டம்} பயன்படுத்தியோ ஓர் எதிரியை எவ்வாறு அழிக்கலாம் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(24)

கணிகர் சொன்னார், “ஓ! ஏகாதிபதியே கேட்பாயாக, கானகத்தில் வசித்து வந்ததும், அரசியலின் அறிவியலை அறிந்ததுமான ஒரு நரியின் வரலாற்றைக் கேட்பாயாக.(25) தன்னத்தில் மட்டுமே அக்கறைகொண்ட புத்திசாலி நரி ஒன்று, புலி, எலி, ஓநாய் மற்றும் கீரிப்பிள்ளை ஆகிய நான்கு தோழர்களுடன் வாழ்ந்து வந்தது.(26) ஒரு நாள், கானகத்தில் ஒரு மான்கூட்டத்திற்குத் தலைமையான வலுவான மான் ஒன்றை அந்த நண்பர்கள் கண்டனர். அந்த மானின் வேகத்தாலும், பலத்தாலும் அதை அவர்களால் அடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் அனைவரும் கலந்தாலோசித்தனர்.(27)

நரி பேச்சைத் தொடங்கும் வகையில், “ஓ! புலியாரே, நீரும் இந்த மானை அடிப்பதற்குப் பெரும் முயற்சி செய்தீர். ஆனால் இளமையான இந்த மானின் வேகத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் உமது முயற்சிகள் வீணாகின.(28) இப்போது இந்த எலியார் அங்கு சென்று, தூங்கிக் கொண்டிருக்கும் அந்த மானின் காலைக் கடிக்கட்டும். அந்த வேலை முடிந்ததும், நீர் அதை அணுகி அடிப்பீராக.(29) அதன்பிறகு, நாம் அனைவரும் பெரும் மகிழ்வோடு அந்த விருந்தை உண்போம்” என்றது {அந்த நரி}.

நரியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைவரும், அந்த நரி சொன்னது போலவே விழிப்புடன் செயல்பட்டனர்.(30) எலி சென்று அந்த மானின் காலைக் கடித்தது. எதிர்பார்த்தது போலவே புலி அந்த மானைக் கொன்றது. மானின் உடல் அசைவற்றுத் தரையில் கிடப்பதைக் கண்ட நரி தனது தோழர்களிடம், “அருளப்பட்டவர்களே, உங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வாருங்கள். அதே வேளையில், நான் இந்த மானைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றது.(31)
நரி சொன்னதைக் கேட்டு அனைவரும் ஆற்றுக்குச் சென்றனர்.  நரி அங்கேயே காத்திருந்து தான் {அடுத்து} என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழ்ந்து தியானித்தது.(32) பெரும் சக்தி கொண்ட புலி, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு முதலில் திரும்பியது.

அங்கே நரி தியானத்தில் மூழ்கி இருப்பதைக் கண்ட புலி, நரியிடம்,(33) “நீ ஏன் வருத்தத்தில் இருக்கிறாய்? ஓ! ஞானமுள்ளவனே, புத்திசாலி உயிரினங்களில் நீயே முதன்மையானவன். நாம் அனைவரும் இந்த விலங்கின் உடலை உண்டு மகிழ்வோம்” என்றது.(34)

அதற்கு அந்த நரி, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, எலியான் என்ன சொன்னான் தெரியுமா? “விலங்குகளின் மன்னன் {புலியின்} பலம் கேவலமானது. இந்த மான் என்னால் கொல்லப்பட்டது.(35) எனது கரத்தின் பலத்தால், அவன் {புலி} இன்று தன் பசியைப் போக்கிக் கொள்ளப்போகிறான்” என்று அந்த எலியான் சொன்னான். அவன் {எலி} இப்படித் தற்பெருமையாகப் பேசியதால், நான் இந்த உணவைத் தொட விரும்பவில்லை” என்றது.(36)

அதற்கு அந்தப் புலி, “எலியான் அப்படிச் சொன்னது உண்மையானால், எனது உணர்வுகள் விழித்துக் கொள்ளட்டும்.  நான் இன்று முதல், இந்தக் கானகத்தில் உலவும் உயிரினங்களை எனது கரத்தின் பலத்தால் கொன்று, அதன் இறைச்சியை மட்டுமே உண்பேன்” என்று சொல்லிச் சென்றுவிட்டது.(37)

புலி சென்றதும் அந்த இடத்தில் எலி வந்தது. எலி வருவதைக் கண்ட நரி,(38) “ஓ! எலியானே, நீ அருளப்பட்டிருப்பாயாக. கீரிப்பிள்ளை என்ன சொன்னான் என்பதைக் கேட்பாயாக. “இந்த மானின் உடல் (புலியின் நகங்கள் பட்டதால்) நச்சுத்தன்மையுள்ளது. இதை நான் உண்ண மாட்டேன்.(39) ஆனால் மறுபுறம், ஓ! நரியாரே, நீர் அனுமதித்தால், அந்த எலியானைக் கொன்று, அவனை என் உணவாக்கிக் கொள்கிறேன்” என்றான்” என்றது {நரி}.

இதைக் கேட்டதும் அச்சமடைந்த எலி, விரைவாகத் தனது பொந்துக்குள் நுழைந்து கொண்டது.(40) எலி சென்றதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, ஓநாயானது தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தது.
ஓநாய் வந்ததைக் கண்ட நரி அதனிடம்,(41) “விலங்குகளின் மன்னன் {புலி} உன்னிடம் கோபமாக இருக்கிறான். உனக்கு நிச்சயமாகத் தீங்கு நேரப்போகிறது. அவன் தனது மனைவியுடன் இங்கு வருவான் என்று எதிர்பார்க்கிறேன். உனக்கு விருப்பப்பட்ட படி நீ செய்து கொள்வாயாக” என்றது.(42)

விலங்கின் இறைச்சியை விரும்பும் ஓநாயும், {பந்தியிலிருந்து} நரியால் இப்படி விலக்கப்பட்டது. அந்த ஓநாய் தனது உடலை மிகவும் சுருக்கிக் கொண்டு வேகமாக ஓடிப் போனது.(43) அதன்பிறகுதான் கீரிப்பிள்ளை வந்தது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது வருவதைக் கண்ட நரி,(44) “எனது கரத்தின் பலத்தால், நான் மற்றவர்களை வீழ்த்திவிட்டேன். அவர்கள் ஏற்கனவே ஓடிவிட்டார்கள். எனவே, முதலில் நீ என்னிடம் மோதுவாயாக. அதன்பிறகு நீ விருப்பப்பட்டபடி இந்த {மானின்} இறைச்சியை உண்பாயாக” என்றது.(45)

அதற்குக் கீரிப்பிள்ளை, “வீரர்களான புலியும், ஓநாயும், மற்றும் புத்திசாலியான எலியும் உன்னால் தோற்கடிக்கப்பட்டனர் என்றால், நிச்சயமாக நீ அவர்களைவிடபெரிய வீரனாகத்தான் இருப்பாய். நான் உன்னுடன் சண்டையிட விரும்பவில்லை” என்று சொல்லி கீரிப்பிள்ளையும் சென்றுவிட்டது”.(46)

கணிகர் தொடர்ந்தார், “அவை அனைத்தும் அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நரி தனது கொள்கை முடிவுகளின் வெற்றியால் மிகவும் மகிழ்ந்து, தனியாக அந்த மானின் இறைச்சியை உண்டது.(47) மன்னர்கள் எப்போதும் இதே போல {இந்த நரியைப் போல} நடந்து கொண்டால், அவர்கள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பர்.

அச்சங்கொண்டோரின் அச்சத்தைத் தூண்டியும் {பேதத்தாலும்}, வீரம்மிக்கவர்களை அமைதியின் கலைகளைக் கொண்டும் {சாமத்தாலும்}, பேராசைக்காரர்களுக்குச் செல்வங்களைப் பரிசளித்தும் {தானத்தாலும்}, தாழ்ந்தவர்களிடம் ஆற்றலை வெளிப்படுத்தியும் {தண்டத்தாலும்}, அவர்களை நமது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும். நான் சொன்ன இதையெல்லாம் ஒருபுறம் வைத்துக் கொண்டு, ஓ! மன்னா, நான் சொல்லப்போகும் வேறு ஒன்றையும் கேட்பாயாக”.(48,49)

கணிகர் தொடர்ந்தார், ” உனது மகனோ, நண்பனோ, சகோதரனோ, தந்தையோ, ஆன்மிகக் குருவாகவோ உனது எதிரியானால், செழிப்பை நீ விரும்பினால், எந்த மனவுறுத்தலும் இல்லாமல், அவர்களை நீ கொன்றுவிட வேண்டும். சாபங்கள் மற்றும் மந்திரம் மூலமோ, செல்வத்தைக் கொடையாகக் கொடுத்தோ, நஞ்சூட்டியோ, வஞ்சனையாலோ ஓர் எதிரி கொல்லப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அலட்சியத்தால் அவனைப் புறக்கணித்துவிடக்கூடாது. (50,51) இரு தரப்பும் சமமாக இருந்து, வெற்றியை நிர்ணயிக்க முடியாத சமயத்தில், அக்கறையுடன் விடாமுயற்சியில் ஈடுபடுபவனே வளமையில் பெருகுவான். எது செய்யப்பட வேண்டும் எது செய்யாமல் விடப்பட வேண்டும் என்பதை அறியாமல், தீய வழிகளில் செல்வது ஓர் ஆன்மிகக் குருவே ஆனாலும், அவரும் தண்டிக்கப்பட வேண்டும்.  நீ கோபத்துடன் இருந்தாலும், உனது உதட்டில் புன்னகையுடன் பேசி, கோபமில்லாமல் இருப்பதைப் போல நீ காண்பிக்க வேண்டும்.(52,53) வசை மொழி பேசி உனது கோபத்திற்கான குறிப்பைக் காட்டிவிடக்கூடாது. ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நீ தாக்குவதற்கு முன்னும், தாக்கும்போதும் கூட மென்மையாகவே பேச வேண்டும்!(54) தாக்குதல் முடிந்ததும், பாதிக்கப்பட்டவனிடம் கருணை காட்டி வருந்தி, கண்ணீரையேகூட விட்டுக் கொள்வாயாக. பொருளைக் கொடையாகக் கொடுத்தோ, மென்மையான உனது நடத்தையாலோ எதிரியை அமைதியாக இருக்கவைத்து,(55) அவன் நிலை சரியில்லாத போது அவனை அடிக்க வேண்டும்.

பெரிதும் வெறுக்கத்தக்க குற்றவாளி, அறம்சார்ந்து வாழ்வதைக்கண்டு {நடிப்பதைக் கண்டு} நீ சிரிக்கலாம், அவன் அணிந்திருக்கும் வேடம் கரு மேகங்கள் மலைகளை மறைப்பதைப் போல அவனது குற்றங்களை மறைத்துவிடும். உன்னால் மரணதண்டனை கொடுக்கப்பட்ட மனிதனின் வீட்டை நீ எரித்துவிட வேண்டும்.(56,57) பிச்சைக்காரர்கள், நாத்திகர்கள் மற்றும் கள்ளர்களை உனது நாட்டில் வசிக்க அனுமதிக்கவே கூடாது.  கேலிப் பேச்சாலோ, நஞ்சாலோ, உணர்ச்சிமிக்கப் போராலோ, கூட்டாளிகளை விலைபேசியோ, செல்வத்தைப் பரிசாகக் கொடுத்தோ, உனது பலத்துக்குகந்த எந்த வழியிலோ நீ  உனது எதிரியை அழிக்க வேண்டும். இக்காரியத்தில் நீ பெரும் கொடூரனாகச் செயல்படலாம். மரணக் கடி கடிக்க, நீ உனது பற்களைக் கூர்மையாக்க வேண்டும். நீ உனது எதிரியை அடிப்பதால் உண்டாகும் விளைவு, அந்த எதிரி மறுபடி தனது தலையைத் தூக்காதவாறு இருக்க வேண்டும்.  ஒருவன் மீது அச்சமே இல்லாவிட்டாலும், நீ எப்போதும் அவனிடமும் அச்சத்துடனேயே இருக்க வேண்டும்.(58,59) அச்சமில்லாதவனிடமே அஞ்ச வேண்டும் என்றால், ஒருவன் மீது அச்சம் இருந்தால் அதைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. முதலாமவன் பலசாலியாக இருப்பின், அவன், (நீ தயார் நிலையில் இல்லாததால்) உன்னை வேர் வரை அழித்துவிடுவான். நன்றியற்றவர்களை நீ நம்பவே கூடாது. நன்றியுள்ளவர்களையும் அதிகமாக நீ நம்பிவிடாதே.(60)

உனது நம்பிக்கைக்குரியவர்கள் உனக்கு எதிரியாக மாறினால், நீ நிச்சயமாக அழிந்துவிடுவாய். {ஒற்றர்களாக அமர்த்தப்படப் போகிறவர்களின்} நன்றி மற்றும் நம்பகத்தன்மையைச் சோதித்துப் பார்த்த பிறகே, அவர்களை உனது நாட்டிலும் மற்றவர்கள் நாட்டிலும் ஒற்றர்களாக நியமிக்க வேண்டும்.(61) அயல் {அந்நிய} நாடுகளில் இருக்கும் ஒற்றர்கள் சரியான கயவர்களாகவும் {ஏமாற்றுக்காரர்களாகவும்}, துறவி வேடம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். நந்தவனங்கள், கேளிக்கை நடக்கும் இடங்கள், கோவில்கள் மற்றும் பிற புனிதமான இடங்கள்,(62) தலைமை நீதிபதி இருக்கும் இடம், வாரிசாகும் தகுதி உள்ளவர்கள் இருக்கும் இடம், தலைமைத் தளபதி இருக்கும் இடம், {மது} குடிக்கும் அரங்கு, தெருக்கள் ஆகியவற்றிலும், (பதினெட்டு) தீர்த்தங்கள்[2], (அமைச்சர், தலைமை குரு, வாரிசாகும் தகுதி உள்ளவன், தலைமைத் தளபதி, அரசவை வாயில் காப்போர், உள் அறைகளில் இருக்கும் மனிதர்கள், சிறைக் காவலர், தலைமை நிலமளப்பவர், பொக்கிஷ அதிகாரி, கட்டளைகளை ஏற்று நடத்துபவர், நகரக் காவல்துறை அதிகாரி, தலைமைக் கட்டட வல்லுனர், நீதிபதி, சபைத் தலைவர், முதன்மை ஆபத்துதவிகள், கானகங்களைக் காப்பவர் ஆகிய பதினெட்டு தீர்த்தர்கள்.)வேள்வி நடக்கும் இடங்கள், கிணறுகளின் அருகில், மலைகள், நதிகளில், கானகங்கள்,(63) மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒற்றர்கள் இருக்க வேண்டும். அவர்கள் பேச்சில் பணிவுடனும், ஆனால் இதயம் கத்தியைப் போல் கூர்மையுடனும் இருக்க வேண்டும்.(64)  கொடுமையான, பயங்கரமான செயலைச் செய்து கொண்டிருக்கும்போதும், உதட்டில் புன்னகையோடு இனிமையாகவே பேச வேண்டும்.

வளமையில் விருப்பம் இருந்தால், நீ பணிவு, உறுதி, அமைதி ஆகியவற்றின் எல்லாக் கலைகளையும் ஏற்று அனுசரிக்க வேண்டும். உனது தலையைத் தாழ்த்தி மற்றவர்களின் கால்களை நீ வணங்கினாலும், நம்பிக்கையுடனும், விருப்பத்துடனும் இருக்க வேண்டும். கொள்கை விதிகளை நன்கு அறிந்த மனிதன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கனியில்லா மரமாகவே இருப்பான். அப்படியே கனி கொடுத்தாலும் அது தரையில் இருந்து பறிக்க முடியாத உயரத்தில் இருக்க வேண்டும். அந்தப் பழம் பழுத்திருந்தால் அது பதமில்லாததாகக் காட்சியளிக்க முயல வேண்டும். இவ்வழியில் தன்னைத் தகவமைத்துக் கொள்பவன் எக்காலத்திலும் மங்காமல் இருப்பான் {புகழுடன் இருப்பான்}. அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன நன்மையும், தீமையும் கலந்து ஒருங்கே பின்னப்பட்டவையாகும்.(65-67) அதில் நன்மைகள் மட்டுமே ஏற்கப்பட்டுத் தீமைகள் தவிர்க்கப்பட வேண்டும். (ஓயாமல்) அறத்தைப் பயில்பவர்கள், கவலையடைந்து பொருளின்மையால் இன்பத்தைப் புறக்கணிப்பார்கள். பொருளைத் தேடுவோர் மகிழ்ச்சியற்று மற்ற இரண்டையும் புறக்கணிப்பார்கள். இன்பத்தில் நாட்டம் கொண்டோர், அறத்திலும், பொருளிலும் கவனமின்மையால் துன்பத்தை அடைவார்கள். எனவே, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை எவ்வகையிலும் துன்பமேற்படாவண்ணம் நீ பயில வேண்டும்.

பணிவுடனும், கவனத்துடனும், பொறாமையில்லாமல், அக்கறையுடன் உனது காரியத்தை நிறைவேற்ற, முனைப்புடன் கூடிய பிராமணர்களை நீ கலந்தாலோசிக்க வேண்டும்.

வீழ்ந்துவிட்டால், மென்மையாகவோ, வலுவாகவோ எவ்வகையிலாவது எழுந்துவிட வேண்டும்.(68-70) அப்படி எழுந்த பின்னர் அறமே பயில வேண்டும். பேரிடர்களால் பாதிக்கப்படாதவர்கள் செழிப்பை அடையவே முடியாது.(71) பேரிடர்களிலிருந்து மீளும் மனிதனின் வாழ்க்கையில் இதை நாம் காணலாம். கவலையால் பாதிக்கப்பட்டவனுக்கு, பழங்கால மனிதர்களின் (நளன் மற்றும் ராமனின்) வரலாறுகளைச் சொல்லி தேற்றப்பட வேண்டும்.(72) துன்பத்தால் பாதிக்கப்பட்ட இதயம் கொண்டவன் {அறியாமை கொண்டவன்}, எதிர்கால செழிப்பில் நம்பிக்கையளிக்கப்பட்டுத் தேற்றப்பட வேண்டும். கல்விகற்ற அறிவுள்ளவன் தற்கால உதவிகளால் தேற்றப்பட வேண்டும். ஓர் எதிரியிடம் ஒப்பந்தமிட்டபின், இனி செய்ய எதுவும் இல்லை என்று நினைத்து வசதியாக இளைப்பாறுபவன், எழுப்பப்படும்போது, மரத்தில் உச்சியில் படுத்துறங்கியவன் விழுவதைப் போல வீழ்வான். அவதூறுகளுக்கு அஞ்சாமல் ஆலோசனைகள் மறைக்கப்பட வேண்டும்.(73,74)

ஒரு மன்னன், அனைத்தையும் தனது ஒற்றர்களின் கண்களால் கண்டு, வசைச் சொல்லுக்கு அஞ்சாமல் தனது ஆலோசகர்களை அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். அவன், தனது எதிரியின் ஒற்றர்கள் முன்பு, தனது உணர்வுகளை மறைக்க வேண்டும். ஒரு மீனவன் மீன்களைப் பிடித்துக் கொன்று செழிப்படைவதைப் போல, ஒரு மன்னன் தனது எதிரியின் உயிர் போன்ற முக்கியமானவற்றைப் பிளக்காமலும், கொடூரச் செயல்களைச் செய்யாமலும் இருந்தால் செழிப்பையடைய முடியாது.  உனது எதிரியின் பலம், அவனது படைபலத்தில் உள்ளது. அது முற்றிலும் நிர்மூலமாக்கப்பட வேண்டும்.  உழுது மேலேயெடுத்தோ {இளைக்கச் செய்தோ}, கத்தரித்துத் தள்ளியோ {வெட்டித் தள்ளியோ}, நோயால் பீடிக்கச் செய்தோ, பசியால் துன்பப்படச் செய்தோ, நீர்த்தேவையை அடையச் செய்தோ அஃது முற்றாக அழிக்கப்படலாம்[3]. (கும்பகோணம் பதிப்பில், “இளைத்ததும், நோய்ப்பிடித்ததும், நனைந்ததும், தண்ணீர்குடிக்காததும், ஆகாரமில்லாததும், நம்பிக்கையினால் சுறுசுறுப்பற்றதுமாகிய எதிரி சைனியத்தை அடிக்க வேண்டும்” என்றிருக்கிறது.)தேவையிருக்கும் ஒருவன் (அன்பால்) ஒருபோதும் செழிப்பானவனை நாடமாட்டான். ஒருவனது காரியம் நிறைவேறும்போது, இதுவரை அதன் நிறைவேற்றத்திற்கு எவன் தேவைப்பட்டானா அவனை இனி அவன் அணுகத் தேவையில்லை.(75-77) எனவே, நீ எதையாவது செய்தால், அஃதை ஒருபோதும் முழுமையாகச் செய்யாதே. (யாருடைய தேவை உனக்கு இருக்கிறதோ) அவர்கள் விரும்பும் சிலவற்றை அதில் விட்டுவிடுவாயாக[4].(மன்மதநாததத்தரின் பதிப்பில், “உன் காரியம் நிறைவேறிவிட்டால், அதன் நிறைவேற்றத்திற்கு எவன் தேவையோ அவனிடம் மீண்டும் நீ செல்ல வேண்டியதில்லை. எனவே, நீ ஒன்றைச் செய்தால், எதையும் மிச்சம் வைக்காமல் முழுமையாகச் செய்துவிடு” என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், “பொருளுள்ளவன், பொருளுள்ளவனிடம் போவதில்லை. காரியமானவனிடத்தில் சினேகமிராது. ஆதலால், எல்லாக் காரியங்களையும் பூர்த்தி செய்யாமல் மிச்சமானவையாகவே செய்ய வேண்டும்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கணிகர் நீதி சொல்லும் பகுதி இல்லை. மூன்று பதிப்புகளில் இரண்டில் “முழுமையாகச் செய்யாதே” என்று இருப்பதால், அதுவே சரியாக இருக்க வேண்டும்.)

செழிப்பில் விருப்பமுள்ள ஒருவன், எப்போதும் அக்கறையுடன் கூட்டாளிகளையும், ஆதாரங்களையும் தேடிக் கொண்டு, கவனமாகத் தனது போரைத் தொடுக்க வேண்டும். இக்காரியங்களில் அவனது உழைப்பானது, மதிநுட்பத்தால் வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மதிநுட்பம் வாய்ந்த மன்னன், தான் செய்யப்போகும் காரியங்களின் நோக்கத்தை, நண்பர்களும், எதிரிகளும் எப்போதும் அறியா வண்ணமே வைத்திருக்க வேண்டும்.(78,79) பிறகு, அந்தச் செயல் செய்யப்படும்போதோ, முடியும்போதோ, அஃதை அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும். ஆபத்து நேராத வரை மட்டுமே நீ அஞ்சுவது போல நடிக்க வேண்டும்.(80) ஆனால் ஆபத்து நெருங்கிவிட்டால், நீ துணிவுடன் அதைப் பற்றிப் பிடிக்க வேண்டும் {எதிர்கொள்ள வேண்டும்}. பலத்தால் தனது கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட எதிரியை நம்புபவன், கருவறும் நண்டைப் போலத் தன் மரணத்தைத் தானே வரவழைத்துக் கொள்கிறான்[5]. (கும்பகோணம் பதிப்பில், “தெய்வத்தினால் கெடுக்கப்பட்ட சத்ருவுக்கு எவன் உபகாரம் செய்கிறானோ அவன் கோவேறு கழுதை கர்ப்பம் தரிப்பது போல் தனக்கு ம்ருத்யுவை ஸம்பாதிக்கிறான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், “கோவேறு கழுதை கருவுறதல்” என்றே இருக்கிறது.)எதிர்காலத்தில் நீ செய்ய வேண்டிய காரியத்திற்கு {ஆபத்து கருதி} இப்போதே அவசியம் வந்துவிட்டதாக நீ உணர வேண்டும் (அதைச் சந்திக்க ஓர் ஒத்திகை பார்க்க வேண்டும்).(81,82) இல்லாவிட்டால், ஆபத்து வரும்போது, அவசரத்தால் ஏற்படும் அமைதியின்மையால், முக்கியமான நிகழ்வுகளை நீ கவனிக்கத் தவறிவிடுவாய்.

செழிப்பை விரும்பும் ஒருவன், இடம் மற்றும் நேரமறிந்து எப்போதும் மதிநுட்பத்துடன் செயல்புரிய வேண்டும்.(83) அவன் விதியைக் கட்டுப்படுத்தும் மந்திரங்கள் மீதும், வேள்விகள் மீதும், அறம், பொருள் மற்றும் இன்பத்தின் மீதும் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இடமும், நேரமும் (கருத்தில் கொள்ளப்பட்டால்) பெரும் நன்மையை விளைவிக்கும் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.(84) எதிரியானவன் முக்கியமற்றவனாக இருப்பினும், அவன் வெறுக்கப்படவே வேண்டும். விரைவில் அவன் தனது வேர்களை அகலமாக விரிக்கும் பனை மரமாகவோ, அல்லது ஆழ்ந்த கானகத்தில் எழும்பும் தீப்பொறியாகி பெரும் நெருப்பை மூட்டுபவனாகவோ மாறலாம்.(85) சிறு நெருப்பானது தொடர்ந்து விறகிடப்படுவதால் பெரும் பகுதிகளை எரிக்கும் சக்தி பெறுகிறது, அதே போல ஒரு மனிதன் கூட்டாளிகளையும், நண்பர்களையும் ஏற்படுத்திக் கொண்டால், விரைவில் வல்லமைமிக்க எதிரியைக் கூட அடக்கும் வலிமையைப் பெற்றுவிடுவான்.(86) உன் எதிரிக்கு நீ கொடுக்கும் நம்பிக்கையானது, அது நிறைவேறுவதற்கு வெகு முன்னரே மாறிவிட வேண்டும். காரியத்தை முடிக்கும் நேரம் வரும்போது, அவனிடம் பிணக்கு வர ஏதாவது சாக்கை {சாக்கு, காரணம்} நீ உற்பத்தி செய்ய வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சாக்கு கூற வேண்டும். அந்தக் காரணம், மற்றொரு காரணத்தில் இருந்து வந்ததாகவும் காட்டிக் கொள்ள வேண்டும்.(87) எதிரிகளை அழிக்கும் காரியத்தில், மன்னர்கள் அனைத்துத் தகுதிகளிலும் கூர்மையான ஒரு கத்தியைப் போல இருக்க வேண்டும். கருணையற்றுக் கூர்மையாக, தோலுறைக்குள் மறைத்து வைக்கப்பட்டு, தேவைப்படும்போது சிரத்தைச் சீவவோ, தாடையில் ஒரு மயிரில்லாமல் {தாடை மழித்தல்} மழிக்கவோ கூடிய வெகு கூர்மையான ஒரு கத்தியைப் போல் அவன் இருக்க வேண்டும்.(88)

ஓ! குரு குலத்தவரின் பெருமைகளைத் தாங்குபவனே {திருதராஷ்டிரா}, பாண்டவர்களையும், மற்றவர்களையும் கவனித்து, ஒரு கொள்கையை உருவாக்கிக் கொள்வாயாக. பின்னர் நீ துன்பத்துக்குள்ளாகாதவாறு இப்போதே செயல்படுவாயாக.(89) நீ அனைத்தும் அருளப்பட்டவன் என்பதையும், அனைத்து அதிர்ஷ்டக் குறிகளையும் பெற்றவன் என்பதையும் நான் அறிவேன். எனவே, ஓ! மன்னா, பாண்டுவின் மைந்தர்களிடம் இருந்து உன்னைக் காத்துக் கொள்வாயாக!(90) ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பாண்டுவின் மைந்தர்கள், அவர்களது சகோதரர்களை விட (உன் மகன்களை விட) பலசாலிகள்; எனவே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ என்ன செய்ய வேண்டும் என்பதை உனக்குத் தெளிவாகச் சொல்கிறேன்.(91) ஓ! மன்னா, அஃதை உனது மைந்தர்களுடன் கேட்பாயாக. அப்படிக் கேட்டுவிட்டு, செயல்படுவாயாக (தேவையானதைச் செய்து கொள்வாயாக). ஓ! மன்னா, பாண்டவர்களால் எந்த அச்சமும் ஏற்படாதவாறு நடந்து கொள்வாயாக. பின்னர் நீ துன்பத்திற்கு ஆளாகாதவாறு, நிச்சயமாக, கொள்கைகளின் அறிவியல் {நீதிசாத்திரங்கள்} ஏற்றுக் கொள்ளும் வகையில் உன் செயல்களைச் செய்வாயாக” என்றார் {கணிகர்}.(92)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படி, குரு குல மன்னனான திருதராஷ்டிரன் சிந்தனையிலாழ்ந்து துக்கத்திலிருக்கும்போது, தன்னாலான அனைத்தையும் சொல்லிவிட்டு கணிகர் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினார்”.(93)
————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading