ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-2-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-2-

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

பண்டு உன்னைக் காண வேணும் என்று ஆசைப்பட்டுக் காணப் பெறாமையாலே நான் வியசனப்படும் அளவில்
கண்ணாரக் கண்டால் போலே விசதமாம்படி என் நெஞ்சில் யுன்னைக் காட்டி காண வேணும் என்னும் அபேக்ஷையைப் பிறப்பித்து
என்னுடைய வியசனத்தை ஸமாயநம் பண்ணினால் போலே செய்து அருள ஒண்ணாது –
இனி யுன்னைக் காட்டாதே வஞ்சித்து ஒளிக்கில் உனக்கு நிரவதிக சம்பத்தாய் நிரவதிக போக்ய பூதையாய்
உன்னாலும் பஹுமந்தவ்யையாய் உன் திருமேனிக்கு வாசம் செய்யா நின்ற அழகிய திருக் குழலை யுடையளாய்
இருந்த பெரிய பிராட்டி திருவாணை நின் திருவாணை கண்டாய் –
ஸமஸ்த ஹேயாஸ் பதமாய் இருந்த என்னை யருவாதே என் பக்கலிலே அதி ஸ்நேஹத்தைப் பண்ணி
உன்னோடே ஓன்று என்று சொல்லலாம் படி என்னோடே கலந்து அருளினாய் –
ஆதலால் அது பெறா ஆணை அன்று –
6இனிச் செய்கிறோம் என்னப் பற்றாது ஈண்டென வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-2-

தம்முடைய அபேக்ஷிதத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி எம்பெருமானுக்கு பெரிய பிராட்டியார் திரு வாணை யிடுகிறார்-

மாயம்  செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

விஷ்ணோ ஸ்ரீ என்னும் படியே உனக்கு சம்பத்தாய் உன் திரு மார்வுக்கு அலங்காரமான மாலையாய் -உன்னாலும் சிலாகிக்கப் படுவாளாய் உன் திருமேனிக்கு பரிமளத்தைப் பண்ணா நின்றுள்ள அழகிய திருக் குழலை யுடைய பெரிய பிராட்டியார் உடைய ஆணை கிடாய் -உனக்கு இட்டவடி பேராதே என் அபேக்ஷிதம் செய்து முடிக்க வேண்டும் படி இட்ட ஆணை -போக வல்லை யாகில் -போய்க் காண் என்று கருத்து -மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்னும் படியால் பெரிய பிராட்டியார் ஆணை உன் ஆணை கிடாய் என்றுமாம் –
இனி இத் திருவாய் மொழி குறையும் -நீர் பெறா ஆணை விட்டீர் -என்று எம்பெருமான் அருளிச் செய்ய அல்லாமை ஏத்துகிறார் -பெரிய பிராட்டியார் பக்கலிலும் பண்ணாத ஸ்நேஹத்தை என் பக்கலிலே பண்ணி -என் பக்கல் உள்ள அயோக்யதை பாராதே உன்னோடு ஆத்ம பேதம் இல்லாத படி என்னைப் பரிஹரித்தாய் -ஆனபின்பு ஐயோ ஈண்டு என்னை வந்து விஷயீ கரியாய் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-2-

அநந்தரம் -தம்முடைய கார்யம் செயகைக்காக மறுக்க ஒண்ணாதபடி வல்லபையான பிராட்டியுடைய திருவாணை இடுகிறார் –

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

மாயம் செய்யேல் என்னை -முன்பு ஆர்த்தனாய்க் கூப்பிட்ட தசைகள் தோறும் குண ஆவிஷ்கார மாத்திரத்தாலே ஆஸ்வசிப்பித்து
அகல நின்றால் போலே க்ஷண காலமும் உன்னைப் பிரியில் முடியும் தசையான
என்னை இனி வஞ்சியாது ஒழிய வேணும்
உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்–நான் நினைத்தபடி செய்கிறோம் என்று
ஸ்வா தந்தர்யம் கொண்டாடப் பார்த்தாய் ஆகில்
உனக்கு நிருபாதிக சம்பத் ஆகையால் சர்வாதிகமான ஸ்வரூபத்துக்கு நிரூபக பூதையாய்-தானும் -அகலகில்லேன் -என்று
விரும்பும்படியான திரு மார்புக்கு பரபாகமாம் படியாய் –
ஹிரண்மயமான மாலை போலே திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு நிருபாதிக பூதையாய்
உன்னோபாதி ஸமஸ்த கல்யாண குண பூர்ணை யாகையாலே
கண்ணாடியில் நிழல் எழுமா போலே இக் குணங்களும் நிறம் பெறும்படி பண்ணுமவளாய் –
சர்வ கந்த -என்னும்படி உனக்கும் அதி வாசகரமாய் விலக்ஷணமான திருக் குழலை யுடையளாய்க் கொண்டு –
போக்ய பூதை யாகையாலே விபூதி யபிமானியான ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டியினுடைய கௌரவ்யமான ஆணையானது –
ஸமஸ்த ஜகத்தையும் உன் ஆணையால் நிர்வஹிக்கிற உனக்கு ஆணையாக –
இப்படி ஆணை இட்டு நிர்ப்பந்திக்கிறது த்வரையாலே என்று நினைத்து
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே–நிர்ஹேதுகமாக ஸ்நேஹித்து -ஹேய ப்ரத்ய நீகனான உன்னோடே
ஹேய ஸம்ஸ்ருஷ்டனான என்னை
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -என்னும்படி ஆத்ம சேஷம் பிரவாதபடியாக –
அப்ருதக் ஸித்தியாலே ஏக பிரதிபத்தி பிறக்கும்படிக்கு ஈடாக
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –என் நிகர்ஷத்தைப் பார்த்துக் கூசாதே
அடியே பிடித்து அங்கீ கரித்து அருளினாய் –
இப்படி உன் ப்ரவ்ருத்தி அறிந்து இருக்கிற என்னை என் முன்னே வந்து
ஆழ்வீர் போதீரோ என்று திரு மிடற்று ஓசையைக் காட்டி அழைத்துக் கொண்டு அருள வேணும் –
ஐயோ நீ தானே த்வரிக்கிற இக்காரியத்துக்கு நான் ஆணை இட வேண்டி இருப்பதே

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-2-

தம்முடைய அபேக்ஷிதத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி எம்பெருமானுக்கு பெரிய பிராட்டியார் திரு வாணை யிடுகிறார்-

மாயம்  செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

மாயம் செய்யேல் என்னை–பகவத் குணங்களே போது போக்காம் படி பண்ணின வித்தை -க்ரித்திரிமம் என்று நெஞ்சோடு சொல்லக் கூடுமோ என்ன -அங்கன் அல்ல -புத்தி பூர்வகமாகச் சொல்லுகிறேன் -க்ஷண காலமும் தன்னால் அல்லது செல்லாமையை விளைவிக்கைக்காக வாய்த்து -குண அனுபவத்தோடு சம்சாரத்திலே இவரை வைத்தது -அச்செல்லாமை யுண்டானால் இது அனுவர்த்திக்கும் இ றே -இப்படி இவர் நிர்பந்தித்த இடத்திலும் உம்மை மாயம் செய்கிறிலோம் -என்று மா ஸூ ச -என்னாமையாலே-நம் கார்யம் செய்யப் பார்த்திலன் ஆகாதே என்று பார்த்து -செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பிராட்டி ஆணை இடுகிறார் –
உன் திரு –விஷ்ணோஸ் ஸ்ரீ என்கிறபடியே உனக்கு சம்பத்தாய் உள்ளவள் -எனக்கு நீ சம்பத்தாய் இருக்கிறாப் போலே உனக்கு அவள் சம்பத்தாய் இருக்கிற படி -ரத்னத்துக்கு ஒளி சேஷமாய் இருக்கச் செய்தே அத்தாலே இ றே பெரு விலையனாகிறது-இவளாலே அவனுக்கு பெருமை சொல்லா நிர்க்கச் செய்தேயும் சேஷத்வம் குறையாது இ றே இருப்பது –
மார்வத்து மாலை -தாம் விரும்புகிற மார்வுக்கு மாலை யானவள் -உன் திருமார்வுக்கு அலங்காரம் ஆனவள் என்கை –
நங்கை-அவாப்த ஸமஸ்த காமனான நீ -குறைவாளரைப் போலே சிலாகிக்கப் படுபவள் -ரூப குணத்தாலும் சீலாதிகளாலும் பூர்ணையாய் இருக்குமவள் –
வாசம் செய் பூங்குழலாள் –சர்வ கந்த என்கிற விஷயத்தையும் பரிமளிதம் ஆக்கா நின்றுள்ள குழலை யுடையவன் -/ பூங்குழலாள் -பூவை யுடைத்தான குழல் -அழகிய குழல் என்றுமாம் –
திரு ஆணை நின் ஆணை கண்டாய்–திருவினுடைய ஆணை கிடாய் -என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர இட ஒண்ணாத படி இட்ட ஆணை -போக வல்லை யாகில் போய்க் காண் என்று கருத்து -புறம்பு உள்ளார்க்கு எல்லாம் இடும் ஆணை உன் ஆணை –உனக்கு இடும் ஆணை அவள் ஆணை —
அங்கன் இன்றியே –நின் ஆணை -திரு ஆணை-என்று இருவரையும் ஓக்கச் சொல்லவுமாம் -மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்கிறபடியே –
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே--நீர் பெறா ஆணை விட்டீர் என்ற அவன் அருளிச் செய்ய அல்லாமை ஏத்துகிறார்-மேல் இத்திருவாய் மொழி குறையும் -ஆற்றாமையின் மிகுதியைச் சொல்லி பரிஹரிக்கிறார் –
நேசம் செய்து-பிராட்டி பக்கல் பண்ணாத ஸ்நே ஹத்தை என் பக்கலிலே பண்ணி -அகலகில்லேன் இறையும் என்று அவள் செல்லாமை கண்டு இ றே அவள் பக்கல் ப்ரேமத்தைப் பண்ணிற்று -உன் செல்லாமை அன்றோ என் பக்கல் ப்ரேமம் பண்ணிற்று –உன்னோடு என்னை -என்னை நித்ய சம்சாரி என்றாதல் -உன்னை நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் என்றாதல் பார்த்தோ மேல் விழுந்தது -இவன் அணு பரிமாணன்-நியாம்யன்-நாம் விபு நியாமகன் -என்று பார்த்தாயா –
உயிர் வேறின்றி ஒன்றாகவே-ஆத்ம பேதம் இல்லாத படி யன்றோ என்னைப் பரிக்ரஹித்தது -உன்னது என்னதாவியும் -என்னது உன்னதாவியும் -என்னும் படி என்னைப் பிரித்து காண ஒண்ணாத படி யன்றோ நீ தலையால் சுமந்து –
கூசம் செய்யாது கொண்டாய்-என் பக்கல் உள்ள அயோக்யதையை பாராதே பரிக்ரஹித்தாய் -முதலிலே என் பூர்வ வ்ருத்தம் பாராதே மயர்வற மதி நலம் அருளினாய் -பின்பு வளவேழ் உலகிலே நான் அயோக்கியன் என்று அகலப் புக -என் வழியே விடாதே உன் செல்லாமையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டாய் -இப்படி செய்திலை யாகில் நான் இன்று கிலேசப்படாதே போகலாய்த்தே-
என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –ஆனபின்பு என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய் -சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது -குண ஆவிஷ் காரம் மாத்ரம் போராது -உன்னை நான் கிட்டி அனுபவிக்கும் படி பண்ண வேணும் -/ அந்தோ -தன்னை ஒழியச் செல்லாமையை தானே விளைத்து -நான் கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-2-

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

மாயம் தொடர -தம்முடைய கார்யம் செய்ய மறுக்க ஒண்ணாத -பரனுக்கு அங்குசம் -நின் ஆணை திரு ஆணை
ஆண் யானை பெண் யானை பிடி களிறு -பிரணய ரோஷம் திருமால் இரும் சோலை -பிடி பிடிவாதமாக இருக்க -அழகர் பேரில் ஆணை
-இசையாமல் -திரு ஆணை தாயார் பேரில் ஆணை இட்டதும் கோபம் தணிந்ததாம் -வல்லபை மேல் ஆணை –
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை-முன்பு குண ஆவிஸ்காரம் செய்து அகன்றால் போலே
-க்ஷணம் காலம் பிரிந்தால் முடியும் தசை நினைத்தபடி செய்வோம் என்று ஸ்வ தந்திரம் கொண்டு திரு உள்ளம் ஆனால்
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்-உனக்கு திரு -உன்னுடைய திரு -நிருபாதிக சம்பத் ஆகையால்
-சம்பந்தம் நித்யம் அன்றோ -சர்வாதிகமான ஸ்வரூபம் -நிரூபக பூதை -இன்றியமையாத அடையாளம் -ஸ்ரீ யபதித்தவம்-
உன்னுடைய திரு -மார்வம் -பிராட்டி எழுந்து அருளி -மார்வத்து மாலை நங்கை-பரிபாகம் ஒத்து கரு நீலம் செக்கச் சிவந்த செய்யாள்
-கோபம் சாந்தி -சூர்யன் சந்திரன் -ஹிரண்யமயமான மாலை போலே -கண்டிகையில் பத்மாவதி தாயார்-திவ்ய மங்கள -விக்கிரகத்துக்கு
நிருபாதிக பூதை-நாச்சியார் திருமொழி திரு மஞ்சனம் பொழுது சேவை -எம்பெருமானார் ஏற்பாடு -ஸமஸ்த கல்யாண பூர்ணை நங்கை –
தர்பண இவ பிரசரம் -நம்பி -பிரதிபலிக்கும் அழகு -குணங்கள் நிறம் பெறும்படி பண்ணுமவள் –
சர்வ கந்த உனக்கும் அதி வாசகமாய் -இயற்க்கை மணமா-கந்தம் கமழும் குழலி -நறு மணம் ஊட்டும்
விலக்ஷணமான திரு குழல் -அபிமானி -உபய விபூதிக்கும் –
திருவின் ஆணையே உன் ஆணையே -அவள் விருப்பமே உன் விருப்பம் -ஸமஸ்த ஜகத்தையும் நிர்வகிக்கும் –
ஆணை இட்டு நிர்பந்திப்பது த்வரையாலே என்று நினைத்து
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே-நிர்ஹேதுகமாக -தோஷம் தீண்டாத உன்னுடன் -தோஷமே –
நிரூபகமான என்னை -உன்னது என்னதாவி -ஒன்றாகவே -என்னது உன்னதாவி ஆத்ம பேதம் பிறவாதபடி-
ஸ்வரூபம் ஐக்கியம் இல்லை ஸாம்ப்பயாத்தி-அப்ருதக் ஸ்திதி
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-தாழ்ந்தவன் என்று கூசாமல் கொண்டாய்
-அடியே பிடித்து அங்கீ கரித்து அருளினாய்
உனது பிரவ்ருத்தி அறிந்த என்னை -ஆழ்வீர் போதீரே என்று திரு மிடற்று ஓசையைக் கேட்க வேணும்
அந்தோ நீயே த்வரிக்க வேண்டிய காரியத்துக்கு நான் கூவ வேண்டி இருக்கிறதே –
எங்கோ திரிந்த என்னை வளைத்த பின்பு –

தாம் விரும்பியது-செய்து அல்லாது நிற்க ஒண்ணாதபடி-அவனுக்கு திரு ஆணை-இடுகிறார்-

மாயம் செய்யேல் –
மேல் மாயம் செய்யேல் -என்னச் செய்தே-மீண்டும் சொல்லுகிறது என்ன ஆற்றாமை தான் –
இப்படி இவர் நிர்பந்தித்த இடத்திலும் -உம்மை மாயம் செய்யோம் -துக்கப் பட வேண்டா -என்னாமையாலே-
மாயம் செய்யேல் -என்று மீண்டும் கூறுகிறார் –மா ஸூ ச சொல்ல வேண்டாமோ –

என்னை –
என் ஒருவனையும் -அடைக்கலம் புகுந்த என்னை –இதனால் உன்னுடைய லீலா விபூதி முடிந்து விடாதே காண் –
அன்றிக்கே –
தைவீஹி ஏஷா குணமயி மம மாயா துரத்யயா-மா மேவ யே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-ஸ்ரீ கீதை -7-14-
என்னையே எவர்கள் சரணமாக அடைகின்றார்களோ-அவர்களே இந்த மாயையைத் தாண்டுகிறார்கள் -என்கிற-உன்னுடைய வார்த்தையை நம்பி-
அலர் மேல் மங்கை உறை மார்பா உன் அடிக் கீழ் புகுந்தேன் -என்றுபுகல் புக்க என்னை வஞ்சியாதே கொள் -என்னுதல் –
தனியனாக என்னை -சரணாகதனான என்னை என்றபடி-

இப்படி நிர்பந்திக்கச் செய்தேயும் -துக்கப் படாதே -என்னாமையாலே -அவனுக்கும் மறுக்க ஒண்ணாத படி-
பெரிய பிராட்டியார் திரு ஆணை இடுகிறார் –
உன் திரு –
நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ-யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17
விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள் -என்கிறபடியே-
உலகத்துக்கு எல்லாம் செல்வம் அவன் -அவனுக்கும் செல்வம் இவள் –
அன்றிக்கே
விஷ்ணுவுடைய திரு -என்றபடி-உன்னுடைய செல்வம் -என்னுதல்-
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1-என்றும்-
ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்-சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
யாவர் ஒருவனுக்கு அந்த ஜனக ராஜன் குலத்தில் பிறந்த பிராட்டி மனைவியாய் இருக்கின்றாளோ-
அவருடைய ஆற்றல் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே-
ஆதாரப் பிரதானமாய் இருத்தல்-ஆதேயப் பிரதானமாய் இருத்தல் –
ஆதேயத்துக்கு ஆதாரத்தை ஒழிய உளதாம் தன்மையும் இல்லை-
நிரூப்யத்துக்கு நிரூபகத்தை ஒழிய ஸ்வரூபத்தின் நிலை இல்லை –
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூபம் நிலை பெறுதல் இல்லை –
தன் ஆகத் திரு மங்கை தங்கிய திரு மார்வன் -நாச்சியார் திருமொழி -8-4-
தான் உளன் ஆகைக்காக -தன் சத்தை பெறுகைக்காக-நித்ய யுவதியான பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யும்
வீறு உடைய திரு மார்பு –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-
பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யேன் என்கிறபடியே –
ஸ்ரத்தாயா -லஷ்மயா -தேவத்வம் ஈஸ்வரத்வம்-அடைகிறான் -ஆதார பிரதான்யம் -சர்வ ஆதாரம் ஈஸ்வரன் -பரிமளம் புஷ்ப்பம் இடமும்
– ஒளி ரத்னம் -ஆதேயம் பிரதான்யம் -இங்கு மட்டும் சமப்பிரதான்யம் -என்றவாறு –
ச குடும்ப சமேதராய் -இரண்டு சகாரம் -தன்னாகத்து திருமங்கை தங்கிய சீர் மார்பன் -இரண்டும் சொல்லி
ஆதார நிரூபக பிரதான்யம் இரண்டும் சொல்லி
ஆகத்து திருமங்கை -அவளுக்கு பிரதான்யம் -தங்கிய சீர் மார்பன் -அவனுக்கு பிரதான்யம் –

மார்வத்து மாலை –
கேவலம் செல்வமாய் இருக்கை அன்றிக்கே-திரு மார்புக்கு அலங்காரமாய் இருக்கை –
மார்புக்கு அலங்காரம் அவள்-அவளுக்கு அலங்காரம் மார்பு –
ந தே ரூபம் நா ஆகார ஆயுதானி நச ஆஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5-
அடியார்களுக்காகவே தேவரீர் உடைய ஸ்வரூபம் திரு மேனி-
அடியார்களுக்காகவே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர் -என்றபடி –

நங்கை-
வடிவு ஒழிய-மற்றை ஸ்வரூபம் குண விபூதிகளும் -அவளாலே என்கை-
பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம் –
உலகங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன் -என்கிறவனுக்கும் இவள் நினைவால்-பொரி புறம் தடவ வேண்டும்படி இருக்கை –
பிரமன் சிவன் மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு இத்தனையுமே அன்றோ-
திருவாளனுக்கு திரு இல்லாதவர் ஒப்பு ஆகார் அன்றோ –
ஜ்ஞானமே வடிவாக இருத்தலில் ஒற்றுமை-
நரநாரீ மயோ ஹரி -பெருமானும் பிராட்டியும் சேர்ந்த உருவமே ஹரி என்னும் பொழுது-
உன்னுடைய திரு -எனபது ஆதார பிரதானமாக இருத்தலால் –
வாசம் செய் பூங்குழலாள் –
நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்-
சர்வகந்த -என்பவனுக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்-
சர்வ கந்த -என்னும் ஏற்றம் அவனுக்கு இத் தலையாலே காணும் அவனுக்கு வந்தது-
இத் தலை மயிராலே ரசோக்தியாக அருளிச் செய்கிறார்-
ஸ்ரத்தாயா அதேவ அஸ்னுதே தேவன் ஆனான் என்பர் ரஸோக்தியால் –
பூங்குழல்-
பூவை உடைத்தான குழல் -என்னுதல்
அழகிய குழல் -என்னுதல்

திரு ஆணை நின் ஆணை கண்டாய் –
திருவினுடைய ஆணை காண் –
என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர ஒண்ணாதபடி உனக்கு இட்ட ஆணை –
போக வல்லை யாகில் போய்க் காண் -எனபது கருத்து –
இவளே திரு -தானே -திவ்ய பிரபந்த கோஷ்ட்டி தாண்டி போக வில்லையே இன்றும் –
வளைத்து வைத்தேன் -இனிப் போகல ஒட்டேன் உன் தன் இந்த்ர ஞாலங்களால்-
ஒளித்திடில் இன் திரு ஆணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-3-2-

எல்லார்க்கும் அறப் பெரியவன் ஆகையாலே மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை-
உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை அத்தனை அன்றோ –
அன்றிக்கே –
மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி-மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27-
ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று-அவள் இடம் கோபம் வையாதே-
மயா ச சீதாயா-என் மேலும் சீதை மேலும் ஆணை -என்ற பெருமாள் போலே-இங்கேயும்-
பெரிய பிராட்டியார் ஆணை-நின் ஆணை -காண் -என்கிறார் -என்னலுமாம் –

நீர் இட்ட ஆணை உம்முடைய ஸ்வரூபத்துக்கு மாறு பட்டது காணும் –
அடியார் ஆனால் நாம் செய்து இருக்கிறபடி கண்டு இருக்க வேண்டும் காணும்-என்ன-
மாறுபட்டது அன்று -என்கிறார் பின் இரண்டு அடிகளாலும் தாவது -ஆற்றாமையின் மிகுதியைச் சொல்லி நீக்குகிறார் -என்றபடி-
உமக்கு பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் தலைவன் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை காணும் -என்ன-
அடியவன் உளனாய் கண்டு இருக்க வேண்டுமே -உயிர் வேறு இன்றி -என்று-
தம்முடைய இல்லாமையை விவரிக்கிறது மேல் இரண்டு அடிகளாலும்-மேலில் பாட்டுக்களாலும்-
பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் வேறு நிற்றலும் வேறாகத் தோன்றலும் உண்டோ -என்கிறார்-
கண்கள் சிவந்து -2 1/2 பாட்டுக்கள் -பரமாத்மா ஸ்வரூபம் -மேலே 7 1/2 பாட்டுக்கள் ஜீவாத்மா ஸ்வரூபம் பிரித்தால் போலே
இங்கும் மேலே 8 1/2 பாசுரங்கள் -என்றவாறு –
நேசம் செய்து –
பெரிய பிராட்டியார் பக்கலிலும் செய்யாத அன்பை என் பக்கலிலே செய்து –
நான் அன்பு செலுத்த இருந்தாயோ-என் விடாய்க்கு அடி உன் விடாய் அன்றோ-ஈஸ்வரஸ்ய அஸ்ய ஸுஹார்த்தம் முதல் படி அன்றோ –
அகலகில்லேன் இறையும் -என்று அவள் செல்லாமை கண்டே அன்றோ அவள் பக்கல் அன்பு செலுத்தினாய் –
இன்னும் ஒரு மாசம் தான் இருப்பேன் -மன்னன் மேல் ஆணை -திருவடி வார்த்தை சொல்லக் கேட்டு பெருமாள் கார்யம் செய்தாரே-

உன்னோடு என்னை –
உன்னை அறிந்தாயோ-என்னை அறிந்தாயோ –
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கவி நீ -3-6-7-அதற்கு எதிர் தலை அடியேன் -நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
அன்றிக்கே
இவன் அணு அளவினன்-ஏவப்படுகின்றவன் –நாம் எங்கும் பரந்து இருப்பவன் -ஏவுகின்ற்றவன் -என்று பார்த்தாயோ -என்னுதல் –

உயிர் வேறின்றி ஒன்றாகவே –
உயிர் வேறுபாடு இல்லாதபடி அன்றோ என்னை அங்கீ கரித்தது-உன்னது என்னதாவியுமஎன்னது உன்னதாவியும் -4-3-9-
என்னும்படி
என்னைப் பிரித்துக் காண ஒண்ணாதபடி அன்றோ நீ தலையாலே சுமந்தது-
தலை தடுமாறாக செயல் புரிந்தது -கலவிக் காலத்தில் என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்காயும்
உன் ஸ்வரூபம் நான் இட்ட வழக்காயும் படி அன்றோ -நீ செய்த செயல் –
தலை தடுமாறி பரிமாற்றினாய் -தட்டு மாறின சீலம் திருக் காட்கரை அப்பன் –
சக்யா சோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண நநேனவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
சூர்யனோடு கூடிய ஒளி போன்று என்ற விளக்கம் இல்லை என்னலாம் படி செய்தான் என்றபடி –
சூரியன் பிரபை என்று பிரித்து சொல்லும் படி அங்கு -இங்கு உயிர் வேறு இன்றி -விசத தமமாகப் பண்ணி -அன்றோ கலந்து –

கூசம் செய்யாது கொண்டாய் –
சர்வஞ்ஞனான நீயும் வாசி வைத்துக் கலக்க அறிந்திலை-என் பக்கல் உள்ள தாழ்மையைப் பாராதே அங்கீ கரித்தாய் –
முதலிலே என்னுடைய முன்னைய செயல்களைப் பாராதே மதி நலம் அருளினாய்-
பின்பு -வளவேழ் உலகில் -நான் தாழ்ந்தவன் என்று அகல-என்னை என் வழியில் விடாதே-
உன் செல்லாமையும் காட்டிச் சேர்த்துக் கொண்டாய்-இப்படி அன்று நீ செய்திலை யாகில் இன்று வருந்த வேண்டா ஆயிற்று –

என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து –
ஆனபின்பு என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய்-
1-சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது-
2-குணங்களை அனுபவிக்கும் அளவாலே போராது-
3-உட் கண்ணால் காணலும் போராது –
4-உன்னைக் கிட்டி அனுபவிக்கும் படி செய்ய வேண்டும் –
வர வேண்டும் கூவ வேண்டும் -நடை அழகைக் காண வேண்டும் -மிடற்று ஓசையை கேட்க வேண்டும் -கைங்கர்யம் கொள்ள வேண்டும் –
அந்தோ –
தன்னை ஒழியச் செல்லாமையை-தானே விளைத்து-கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading