ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-6-
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-
முற்பட இவளை யணுகக் கூசி இருந்த எம்பெருமான் இப்படி இவள் தன்னைக் குறித்துச் சில வார்த்தைகளைச் சொன்னவாறே
அதுவே பற்றாசாக நிர்ப்பயனாய்ச் சென்று அணுகி இவள் பாடே இருந்த குழமணனை எடுத்து அருள
குழகி எங்கள் குழமணன் கொண்டு அடிக் கழிவு செய்தால் உனக்கு என்ன பிரயோஜனம் யுண்டு என்று இவள் சொல்ல
என்னுடைய ஆத்ம தாரணார்த்தமாக எடுத்தேன் -என்று அவன் அருளிச் செய்ய
நாங்கள் இப்பொய்களுக்குப் பழையோம் அல்லோமோ -உன்னுடைய இந்த நிரவதிகமான அபி நிவேசத்துக்கு
நாங்கள் விஷயமாகப் போதுவோமோ என்று இவள் சொல்ல
நீ யல்லது மற்று எனக்கு ஸ்ப்ருஹணீய விஷயமுண்டோ -என்று அவன் அருளிச் செய்ய
த்ரை லோக்யத்தில் உள்ளாரிலும் அழகியார் உனக்கே தேவிமைக்கு உறுப்பாய் இருப்பார் எத்தனை பேருளர்
அது நிற்க நீ முந்துற எங்கள் பரிஷத்திலே வந்து ஏறாதே கொள்-இது உனக்கும் இளையதான கன்மம் -என்கிறாள் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-2-6-
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-
முந்துற இப்பிராட்டியும் தோழிமாரும் அநபிபவநீயை களாய் இருக்கையாலே அணுக கூசியிருந்த எம்பெருமான் -தன் முக முத்ரையாலும் சவிநயமாக பாவ கர்ப்பமான பேச்சுக்களாலும் கலங்கி மருந்தீடுபட்டாரைப் போலே இவர்கள் நிஷேதிக்க மாட்டாதே இருக்க -அதுவே பற்றாசாகக் கொண்டு நிர்ப்பயனாய் சென்று அணுகி இவள் பாடே இருந்த குழமணனை எடுத்தருள -குழகி-எங்கள் குழமணன் கொண்டு அடிக்கழிவு செய்தால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு –என்ன -அவனும் எனக்கு இனி இதுவே பிரயோஜனம் -பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் உண்டோ என்ன -நாங்கள் இப் பொய்களுக்கு பழையோம் அல்லோம் -உன்னுடைய நிரவதிகமான அபி நிவேசத்துக்கு நாங்கள் விஷயமாகப் போருவுதுமோ-என்று பிராட்டி அருளிச் செய்ய -நீ யல்லது எனக்கு ஸ் ப்ருஹணீய விஷயம் உண்டோ -என்று எம்பெருமான் அருளிச் செய்ய -அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உள்ளார் -அங்கே போ என்று இவர்கள் சொல்ல -அங்கே போவோம் என்று இவர்கள் இருந்த கோஷ்ட்டிக்குள் நடுவே வந்து புகுரைப் புக-முதலிகளாய் இருக்கும் உமக்கு சிறுப் பெண்கள் கழகத்திலே புகுருகை ஈடென்னப் போராது என்ன -எனக்கு முதலித் தனம் வேண்டா -நான் பயலியாகப் போகவே அமையும் என்று அவன் அருளிச் செய்ய -தீமை செய்யும் சிரீதரனான உனக்கும் இது பாலிசப்பிரவ்ருத்தி என்கிறாள் –
————-
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-2-6-
அநந்தரம் -மேனாணித்துக் குழமணனை எடுத்த அவனைக் குறித்து உன்னுடைய ஈச்வரத்வம் எங்களோடு காட்டாதே
அதுக்குத் தகுவாரோடே காட்டு -என்கிறாள் –
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;–விளையாட்டிலே எங்கள் குழமணனை எடுத்துக் கொண்டு
கைப்பட்ட ப்ரியத்தாலே மேன்மை பாவித்தல் ஒரு கார்யம் இல்லை -உம்முடைய சரசங்களும் மேன்மையும்
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?–நாங்கள் பண்டே பழகி இருப்புதோம்-இந்த அதிசயிதமான அருள்களானவை
நாங்கள் பொறுக்க வல்லவை அல்ல
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;–அதுக்கு அநு ரூபமான அழகை யுடையராய் உம்முடைய
ஸர்வேச்வரத்வத்துக்கு விஷயமான இந்த லோக த்ரயத்துக்கும் உம்மோடு ஓக்க முடி சூடுகைக்கு தகுதியாய் இருப்பார் அநேகம் பேர் உளர்
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–பரிபூர்ணமான மேன்மையை யுடைய அவர்கள் திரள் அல்லவோ தகுவது –
எங்கள் திரளில் வந்து ஏறாதே கொள்-பிறருக்குத் தீமை செயகையே ப்ரக்ருதியான உனக்கும் இந்தச் செயல் பால்ய ஸூசகம்
கழகம்–திரள் / குழமணன்-என்று ஆஸ்ரிதருடைய லீலா பரிகரமும் அவனுக்கு அபிமதம் என்று ஸூசிப்பிக்கிறது –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-2-6-
முன்பு இப்பிராட்டியும் தோழிமாரும் அநபிபவநீயை களாய் இருக்கையாலே அணுக கூசினவன் -தன்னுடைய முக விகாரத்தாலும் ஸ்மித வீக்ஷணாதிகளாலும் பாவ கர்ப்பமான தாழ்ந்த பேச்சுக்களாலும் இவர்கள் மருந்தீடு பட்டால் போலே யாய் இவனை நிஷேதிக்க மாட்டாத தசையில் நிர்ப்பயனாய் சென்று அணுகி இவர்கள் பாடே இருந்த குழமணனை மேல் விழுந்து எடுத்துக் கொண்டான் –
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-
குழகி எங்கள் குழமணன் கொண்டு-
பாவீ இது ஆரதாக எடுத்தாய் -எங்களது காண் நீ நினைக்கிறவர்களது அன்று காண் -என்கிறாள் -எங்களது என்றவாறே பொகட்டுப் போம் என்று சொன்னாள்-அது தான் அவனுக்கு விருப்பத்துக்கு உடலாயிற்று –எங்கள் அனுமதி வேண்டாவோ உனக்கு என்ன –எனக்கு நிவாரகர் உண்டோ -நான் செய்தது செய்யலாம் அன்றோ என்ன –
கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
நிவாரகர் இல்லை என்னா -அடிக் கழிவான செயல்களை செய்தால் உனக்கு ஒரு கார்யம் இல்லை -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒன்றும் வாயாது –எங்கள் அனுமதி இல்லாமையாலும் பிரயோஜனம் இல்லை –பிரயோஜனம் இல்லை யாவது என் -இது தானே பிரயோஜனம் -பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் உண்டோ என்ன
பழகி யாம் இருப்போம்
இப் பொய்களுக்கு பழையோம் அல்லோமோ
பரமே இத் திருவருள்கள்?
உங்களுடைய லீலா உபகரணங்கள் எனக்கு போக உபகரணங்கள் அன்றோ -இது ஒழிய வேறு ஒரு பிரயோஜனம் உண்டோ -என்று நீ சொல்லுகிற அபி நிவேசம் எல்லாம் எங்கள் அளவேயோ-இதுக்கு நாங்கள் விஷயமாகப் போருமோ-போலி கண்டு பிரமிக்கும் படி உன்னைப் பண்ணினவர்கள் பக்கலிலே போ -என்ன -அவர்கள் ஆர் -அங்கனேயும் சிலர் உண்டோ என்ன -அவர்களை சொல்லித் தருகிறோம் –
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் -த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் சீதயா நாப்னுயாத் கலாம் -என்று இருக்குமவர்கள் –
தேவிமை தகுவார் பலருளர்;
உனக்கு பட்டத்துக்கு உரியவராய் இருக்குமவர்கள் -ராகவோ அர்ஹதி-என்று உனக்கு சத்ருசைகளாய் இருப்பவர்கள் -ஒருவர் இருவர் அல்லர் -ஓர் அடிபாடர் அல்லீரே -பரப்பரர் அன்றோ நீர் -அவர்கள் பக்கலிலே போம் என்ன -போவோம் என்று இவர்கள் திரளில் வந்து புகுரப் புக –
கழகம் ஏறேல்,
எங்கள் திரளில் ஏறாதே கொள் -என்ன -எனக்கு குற்றம் என் என்ன –
நம்பி!
சமதம யாதி ஆத்ம குணோபேதர் திரளில் அன்றோ நீர் புகுவது -அவர்கள் அன்றோ உம்மை கிட்ட உரியார்-சிறு பெண்கள் திரளில் புகுகை யீடன்று என்ன -ஆனால் நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ என்ன
உனக்கும் இளைதே கன்மமே.–
தீமை செய்யும் சிரீதனான உனக்கும் இது பாலிச ப்ரவ்ருத்தி என்கிறாள் -சர்வேஸ்வரனாய் அவாப்த ஸமஸ்த காமனான அவனை சில பெண்கள் எங்கள் திரளில் புகுராதே கொள் என்ன -புக மாட்டாதே பேகணித்து நின்ற இந்த ஆஸ்ரித பாரதந்த்ரத்தை உத்கர்ஷம் சொல்லப் பொறாத சம்சாரத்திலே தங்களை ஒழிய ஆர் விஸ்வசிக்க
எழுதியிட்டு வைத்தார்கள் -என்று பட்டர் அருளிச் செய்தார் –
——
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-2-6-
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-
மேனானித்து-குழமணன்-மரப்பாச்சி -எடுத்துக் கொண்ட அவன் இடன் உன் ஈஸ்வரத்வம் எம்மிடம் காட்டாதே -மின்னிடை மடவார் இடம் காட்டு
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;-பசப்பு மொழி -கைப்பட்ட பிரியத்தால் -மேன்மை பாவித்து –
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?-உன் சரசம் மேன்மை பண்டியே அறிவோம் -இத்தை நாங்கள் பொறுக்க மாட்டோம்
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;-உன் சர்வேஸ்வரத்வம்-விஷயமான ஐஸ்வர்யம் -லோக த்ரயத்துக்கும் தகுதியாய்
அநேகம் பேர் உளர் -பதினாறாயிரம் தேவி மார் உண்டே
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–பரி பூர்ணன் -அவர்கள் திறலே உனக்குத் தகுதி -எங்கள் கழகம் வராதே –
பிறருக்கு தீமை செய்வதே உனக்கு ஸ்வ பாவம் -இளையது பாலனுக்கும் சிறு பிள்ளைத் தனம் என்றவாறு –
ஆஸ்ரித லீலா பரிகரமும் அவனுக்கு உத்தேச்யம் பிரியகரம்
வசீகரித்தற்குரிய செயலைச் செய்து எங்களுடைய குழமணனை எடுத்துக்கொண்டு மேன்மை தோன்றப் பேசுவதனால் ஒரு பயனும் இல்லை;
நாங்கள் முன்னரே இவற்றில் பழகி இருக்கின்றோம்; நீ செய்கின்ற இந்தத் திருவருள்கள் எங்கள் அளவேயோ! இந்த மூன்று உலகங்கட்கும் உம்மோடு
ஒக்க முடிசூடத் தக்கவர்களாகிய அழகினையுடையவர்கள் பலர் உளர்; நம்பீ! எங்கள் கூட்டத்தில் ஏறாதே; உனக்கும் இது இளைமைப் பருவத்திற்கு உரிய செயலேயாம்.
இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் அழகியார் பலர் உளர் என்க. குழகுதல்-வசீகரித்தலுக்குரிய செயலைச் செய்தல்.
குழமணன்-மரப்பாவை. கோயின்மை – பெருமை. அல்லது, செருக்கு. கழகம் – கூட்டம். இளைது – இளமைப் பருவத்திற்குரியது.
தங்கள் மனங்களிலே ஓடுகின்றவற்றைத் தெரியாமல் மறைத்துக் கொண்டு அணுக முடியாதவர்களாயிருக்கிற
இந்தப் பிராட்டியையும் தோழிமாரையும் கண்டு, அவன் தன் முக முத்திரைகளாலும்,
(பாவ கர்ப்பமான உக்திகளாலும் )கருத்துடைய வார்த்தைகளாலும்,
அதனைத் தொடர்ந்து வருகின்ற இன்பச் செயல்களாலுமாக இவர்கள் எண்ணங்களைக் குலைத்து,
இனி இவர்கள், தான் செய்தவை எல்லாம்‘வேண்டா’ என்ன மாட்டாதவர்கள் என்னும்படி வாய் மாளப் பண்ணி
அவ் வளவிலே சென்று இவர்களுடைய விளையாட்டுக் கருவியாகிய குழமணனை எடுத்துக் கொண்டான்.
‘குழகி எங்கள் குழமணன் கொண்டு’ என்கிறார்கள். –
குழகுகையாவது,
யௌவன புருஷர்களா யிருக்குமவர்கள், பெண்கள், தங்களுக்கு வசப்பட்டவர்கள்
அல்லாதவர்களா யிருப்பார்களே யானால் அவர்களைச் சேர விட்டுக் கொள்ளுகைக்காகச் செய்யும் செயல்கள்.
மேன்மையாலே யாகவுமாம், தாழ்மையாலே யாகவுமாம்; ஏதேனுமாக இவ்வளவு கிட்டி நின்று அவர்கள் நினைவைக் குலைத்துக்
குழமணனை எடுத்துக் கொள்ளும்படியாகக் கைப் புகுந்தான் அன்றோ.
‘எங்கள் குழமணன் கொண்டு’ என்றதனால்,
அதுதான் யாருடையது என்று நீ இருக்கிறாய்? அது நீ நினைக்கிறவர்களுடையது அன்று காண்;
அது எங்களுடையது; உனக்கு இதனால் ஒருகாரியம் இல்லை என்பதனைத் தெரிவிக்கின்றார்கள்.
‘எங்களது’ என்றவாறே பொகட்டுப் போம் என்று சொன்னார்கள்; அதுதானே அவனுக்குப் பற்றுகைக்கு உடலாயிற்று.
‘எங்கள் அனுமதி வேண்டாவோ உனக்கு?’ என்ன,
‘என்னைத் தடை செய்வார் உளரோ, நான் செய்வது செய்யலா மித்தனை யன்றோ?’ என்ன,
கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை –
பெண்கள் கோஷ்டியில் பெருமை சொல்லி கார்யம் ஆகாதே –
பிரணயித்வம் தானே காட்டி கார்யம் கொள்ள வேண்டும் –
நீ செய்கிற முறை கேடான செயலால் உனக்கு ஒரு பலம் இல்லை.
‘கன்மம்’ என்றது, கர்மத்தினது பலனை.
ஆராய்ச்சி இல்லாத இடத்தே செய்யுமவற்றைச் செய்யாதே கொள்ளாய்.
அவை செய்தாலும் ஆமே அன்றோ, உனக்கு ஒரு பிரயோஜனம் உளதாகில்.
கோயின்மை செய்கையாகிறது,
இவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க இவர்கள் விளையாட்டுக் கருவிகளை எடுத்துக் கொள்வது,
அவர்கள் வேண்ட வேண்டக் கொடாதொழிவதாய் மிறுக்குப் பண்ணுகை.
நீ போகிற இடத்துக்கு இதனைக் கொண்டு போக ஒண்ணாது;
உனக்கு இது தான் வேண்டுவ தன்று; இனி எங்களுக்கோ விருப்பமில்லாத காரியம்;
ஆன பின்பு, இச் செயலால் என்ன பிரயோஜனம் உண்டு என்பார் ‘ஒன்று இல்லை’ என்கிறார்கள். என்றது,
இது கொண்டு போனால் தங்களது அல்லாமையாலே அவர்கள் முகம் பாரார்களே;
நீ ஆதரித்தவர்களுடையது அல்லாமையாலே உனக்கு வேண்டுவதன்று;
எங்கள் இசைவோடே கொடுபோகாமையாலே எங்களுக்கும் பிரியமன்றே;
ஆன பின்னர், இதனால் வருவது ஒரு பேறு இல்லை காண் என்கிறார்கள் என்றபடி.
அது கிடக்க; நான் முன்னம் உங்களோடு ஒத்த கருத்துடையன், எனக்கும் ஒரு பிரயோஜனம் இல்லை,
இதனைக் கருவியாகக் கொண்டு முடித்துக் கொள்ள வேண்டுவது ஒரு பொருளைக் கண்டு வைத்திலேன்;
இதுதானே அன்றோ எனக்குப் பிரயோஜனம்; பிரயோஜனத்துக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ?’ என்றான்.
அநந்ய பிரயோஜனர்செய்யும் கார்யம் போலே இத்தை எடுத்ததே பிரயோஜனம் என்றான் –
அங்ஙனே ஆன அன்று அநவஸ்தா தோஷம் வரத் தொடங்குமன்றோ.
யாம் பழகி இருப்போம்-
இப் பொய்களுக்குப் பழையோம் அல்லேமோ!
எங்களுக்கு அன்று காண் நீ சொல்லுவது!
நீ சொல்லும் பொய்யெல்லாம் ‘மெய்’ என்று இருப்பார்க்குச் சொல்லாய் என்றார்கள்.
அவனும், ‘இத் தலையை ஒழிய எனக்குச் செல்லாது’ என்னுமிடம்தோற்றச் சில செயல்களைச் செய்ய,
இத் திரு அருள்கள் எம் பரமே-
நீ எங்கள் அளவல்லாத ஆசையை வைத்து, குளப் படியிலே கடலை மடுத்தாற் போலே
நீ செய்கிறவை எல்லாம் எங்களால் பொறுக்கப் போமோ?
நீ செய்கிறவை எல்லாம் பொறுக்க வல்லார் வேறே சிலவர்கள் என்கிறார்கள். ‘அவர்கள் யார்?’ என்றான்.
அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும்-
“மூன்று உலகங்களையும், அவற்றோடே உலகம் என்ற சொல்லுக்குப் பொருளாகவுள்ள சர்வேஸ்வரனையும் கூட
ஒரு தட்டு ஆக்கினால், பிராட்டியினுடைய ஒரு கலா மாத்திரத்திற்கு எடை நிற்க மாட்டாது”
“ராஜ்யம் வா த்ரிஷு லோகேஷு ஸீதா வா ஜநகாத்மஜா
த்ரைலோக்யராஜ்யம் ஸகலம் ஸீதாயா நாப்நுயாத்கலாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 14. ‘
என்று கூறும்படி யுள்ளவர்கள்.
‘அவர்கள் எங்ஙனே இருப்பர்கள்?’ என்றான்
தேவிமை தகுவார் –
உனக்குப் பட்டங் கட்டப் போரும்படி யாயிருப்பார் என்ன,
ஆனால், எனக்கு உபேக்ஷிப்பதற்கும் சிலர் வேணுமே? என்றான்.
பலர் உளர் –
உனக்குப் பொகடுகைக்கும் விஷயம் அங்கே உண்டு என்கிறார்கள்.
ஒருத்தனுக்கு ஒன்று ஸ்வபாவம் ஆனால், அது வேறு ஓர் இடத்தில் போன அளவில் குலையாதே அன்றோ;
அப்படியே அங்குள்ளாரையும் பொகடுகை இவனுக்கு இயல்பு என்னுமிடம் தோற்றச் சொல்லுகிறார்கள்.
ஓர் அடிப்பாடர் அல்லீரே நீர்;பரப்பர் அல்லீரோ! அவர்கள் பக்கல் ஏறப்போம் என்ன,
ஆனால்,
அங்குப் போகும் வழியும், போனால் செய்யும் படிகளும் எல்லாம் கேட்டுப் போக வேணுமே.
இனித் தான், -அந்தே வாசிகளுக்கு -சீடர்களுக்கு அன்றோ ஒன்று சொல்லுவதும்.
“சாஷ்டாங்க நமஸ்காரத்தினாலும் செவ்விதின் கேட்பதனாலும் ஆசாரிய சேவையினாலும்
உபதேசிப்பார்கள் என்று அறிந்து கொள்”
“தத் வித்தி ப்ரணிபாதேந ப்ரச்நேந ஸேவயா
உபதேஷ்யந்தி தே ஞானம் ஞாநிந: தத்வதர்ஸித:”-என்பது, ஸ்ரீ கீதை, 4 : 34.
என்பதே அன்றோ கேட்பார்படி.
ஆன பின்பு, நாலடி கிட்ட நின்று கேட்கவேணும் என்று திரளிலே வந்து புகுரப் புக்கான்.
கழகம் ஏறேல் நம்பீ –
அவர்கள் முன்னம் ஆனார் ஆகிடுக;
ஏறிட்டுக் கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ? நீர் முன்னம் எங்கள் ஓலக்கத்தில் புகுராதே கொள்ளும்.
இவ்விடத்தே, பட்டர் அருளிச் செய்வது ஒரு வார்த்தை உண்டு.
அதாவது, “சமஸ்த கல்யாண குணத்மகனாய் உபய விபூதி யுக்தனாய் சர்வாதிகனாய் சர்வ நியந்தாவா யிருக்கிற சர்வேஸ்வரன்
நான்கு இடைப் பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்க மாட்டாத செல்லாமை விளைய,
அவர்கள் ‘நீ இங்குப் புகுராதே கொள்’ என்ன, விலங்கு இட்டாற் போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற
சௌசீல்யம் யார் அறிந்து கொண்டாட வியாசர் முதலாயினோர் எழுதியிட்டு வைத்துப் போனார்களோ?” என்பது.
‘எல்லாரையும் நியமிக்கிற சர்வேஸ்வரன் சிலரால் நியமிக்கலாம்படி எளியனானான்’ என்றால்,
‘இது மெய்’ என்று கைக் கொள்ளுவாரைக் காண முடியாதன்றோ.
சாஸ்திரங்கள் எல்லாம் நியமிக்கிறவன், நியமிக்கப்படுகிறவர்கள் என்று பாகுபடுத்தி ஒருங்க விடா நிற்க,
அத்தலை இத்தலையாகச் சொல்லுகிறதன்றோ இது.
‘சாது கோட்டியுள் கொள்ளப்படுவார்’ -பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 11.-என்று சொல்லுவது,
வைஷ்ணவர்களுடைய திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே,
நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து,
அவர்கள் இடம் கொடுத்து அவர்கள் ஏற்றுக் கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது.
இது, இவர்களுக்கே அன்றியே, அவனுக்கும் ஒத்திருக்கிறபடி;
“அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை
அடைந்தவனாய்க் குச லவர்களின் கானத்தைக் கேட்பதில் மனமுடையவனாய் இருந்தான்
“தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை: புபூஷயா ஸக்த மநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 31.
என்று, மஹரிஷி ஆச்சரியப்படுகிறார்” என்பது ஸ்ரீராமாயணம். என்றது,
பெரு மதிப்பராய்ப் பாட்டுக்களை அறிந்து கொண்டாடுகைக்குப் போரும்படி பேரறிவாளரான
புலவர்களும் தாமுமாகப் பேரோலக்கம் இருந்து, பிள்ளைகளைப் பாட விட்டுத் தாம் சிம்மாசனத்திலே இருந்தார்;
இவர்கள் தாழ இருக்கத் தாம் உயர இருந்த இடம் தமக்கு விருப்பம் இல்லாமையாலே சிம்மாசனத்தினின்றும் மெள்ள இழிந்து,
தெரியாதபடி இவர்கள் நடுவே புகுந்திருந்தார். அது என்? என்னில்,
இராஜா எழுந்திருந்தால் ஓலக்கம் எழும் அன்றோ, தாம் எழுந்தவாறே ஓலக்கம் எழும் எனக் கருதி,
மெள்ளப் புகுந்திருந்தார் என்றபடி. -இங்ஙன் வேண்டுவான் என்? என்னில்,
“அநுபுபூஷயா – அநுபவிக்கும் இச்சையால்” என்னுதல்,
“பவிது மிச்சயா – தாம் உளராவதற்கு இச்சையாலே” என்னுதல். என்றது,
‘இவர்களோடே கூடி இருந்து அநுபவிக்கைக்காக’ என்னுதல். ‘தாம் உளராகைக்காக’ என்னுதல் என்றபடி.
நம்பீ –
உமக்கும் எங்களுக்கும் உள்ள நெடுவாசி பாரீர்!
உமக்கு ஒன்று கேட்க வேண்டும்படியாய் இருந்ததோ?
அன்றிக்கே,
முதலிகளாய் இருக்கிற உமக்கு நாங்கள் இருக்கிற இடத்தே புகுருகை போருமோ! என்கிறார்கள் என்னுதல்.
அழகிது! நான் முதலியாகிலும் ஆகிறேன், பயலியாகிலும் ஆகிறேன்; என்னைத் தான் அறிகை இல்லையோ!
‘தீமை செய்யும் சிரீதரன்’ என்று அன்றோ என்னைச் சொல்லுவது?
ஆன பின்னர், நாலு பெண்கள் இருந்த இடம் எங்கும் தீங்கு செய்கை எனக்கு இயற்கை யன்றோ? என்றான்.
உனக்கும் இளைதே கன்மமே –
தீமை செய்கையில் சமைந்திருக்கிற உனக்குங்கூட இது பாலிசம்.
தீமை செய்வார்க்கும் ஒரு சம்பந்தம் வேண்டாவோ?
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply