ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-–1-4-3-

ஸ்ரீ ஆறாயிரப்படி –1-4-3-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3-

பாபம் பண்ணினால் அது மாளும் தனையும் அனுபவிக்க வேண்டாவோ என்னில் என்னுடைய பாபமேயோ காலம் எல்லாம் அனுபவித்தாலும் மாளாதது -என்று
ஒருத்தி மதி எல்லாம் உள் கலங்கி அறிவு இழந்தாள் என்று தன்னுடைய திவ்ய சேஷ்டிதங்களாலே என்னைத் தோற்ப்பித்தவனுக்குச் சொல்லுங்கோள் என்று
பாக்ய அதிசயத்தாலே பரஸ்பரம் ஸம்ஸலேஷித்து வர்த்திக்கிற சில அன்னங்களைக் குறித்து சொல்லுகிறாள்-

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-4-3-

மூன்றாம் பாட்டில்
தந்தாம் பண்ணின பாபம் தம்தாமே அவசியம் அனுபவிக்க வேண்டாவோ -என்று உபேஷித்து இருக்கிறானாகக் கொண்டு
எல்லைச் சதிரியான சிந்தயந்தி பாபம் அனுபவ விநாச்யம் ஆகலாம் -நான் பண்ணின பாபமேயோ அனுபவ விநாச்யம் ஆகாது என்று
எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய வேணும் என்று சில அன்னங்களை அர்த்திக்கிறாள்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய வன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே
–1-4-3-

நான் பண்ணின பாக்யத்தால் பேடையோடே சம்ச்லேஷித்து -அந்த சம்ச்லேஷ ரசத்தால் ஆகர்ஷகமான நடையை யுடைய அன்னங்காள்
புத்தி யோகத்தாலே வாமன வேஷனனாய் குண சேஷ்டிதாதிகளால் ஈடுபடுத்தும் ஸ்வ பாவன் ஆனவனுக்கு

நலம் உடையவன் -தர்மம் தரமி சப்தங்கள் -தரமி ஸ்வரூபம் இருக்க -மீண்டும் யவன் -சப்தம் -நலங்களும் ஸ்வரூபம் ஆஸ்ரயித்து நிறம் பெறுமே –
ஒருத்தி
ஒருத்தி என்னவே தானே -இன்னாள் என்று அறிகிறான் இறே
பகவத் பிரசாதத்தால் மயர்வறும்படி பெற்ற ஜ்ஞானப் பரப்பு எல்லாம் நிச் சேஷமாகக் கலங்கி மயங்கா நின்றாள் என்று அறிவியுங்கோள்

—————

ஸ்ரீ பன்னீராயிரப்படி -1-4-3-

அநந்தரம் -அவற்றில் காட்டில் நடப் பழகையும் ஸூத்தியையும் யுடைய சில அன்னங்களைக் குறித்து –
என்னை அநன்யார்ஹை யாக்கினவர்க்குத் தூதாக வேணும் என்று அபேக்ஷிக்கிறாள் –

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே
–1-4-3-

விதியினால் பெடை மணக்கும் -பாக்யத்தாலே என்னைப் போலே தனியாகாத படியே பெடையோடும் கூட போக சக்தராய்க் கலந்து
மென்னடைய அன்னங்காள்-அத்தாலே ம்ருது கதிகளான அன்னங்காள்
மதியினால் -இந்திரனுடைய அபேக்ஷையும் மஹா பாலி யுடைய உதார குணமும் அவிருத்தமாம் படியான புத்தி சாமர்த்தியத்தால்
குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு–வாமனான ப்ரஹ்மச்சாரியாய் லோகத்தை இரந்து-சிறு காலைக் காட்டி பெரிய காலால் அளந்து கொண்ட கணக்கிலே
தாழ நின்று கலந்து எட்டாது நின்ற க்ருத்ரிமர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி–அன்றே இக்களவு அறியப் பெறாதே மதி கேடியான என்னுடைய அனுபவ விநாசியம் அல்லாத
வலிய வினையேயோ-சிந்தையந்தீ ப்ரப்ருதிகளுடைய வினைகள் முடியச் செய்தே-முடியாதது என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –-நீர் கொடுத்த மதி எல்லாம் ஆஸ்ரயத்தோடே கலங்கி மோஹியா நின்றாள் -என்னுங்கோள் –

ஒருத்தி என்றாலே -அது அவன் கை உணரும் -என்னுமா போலே தாமே அறிவர் என்று கருத்து –
விதியினால் -என்றது போக சாஸ்த்ர மர்யாதையாலே என்றும் சொல்லுவர் –
இத்தால் கடகருடைய ஆசார வைலக்ஷண்யமும் ஸ்ரைஷ்ட்யமும் தோற்றுகிறது –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-4-3-

மூன்றாம் பாட்டில்
அத்தலையில் இரக்கத்தால் என் பாபம் போகை தவிர்ந்தால் அனுபவ வி நாச்யம் அன்றோ என்று
சொல்லுங்கோள் என்று சில அன்னங்களை அர்த்திக்கிறாள்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய வன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே
–1-4-3-

விதியினால் பெடை மணக்கும் –
என் பாக்யத்தால் பேடையோடே சம்ச்லேஷிக்கும் –
பேடையின் கருத்து அறிந்து உகப்பிக்கும்
என் ஆற்றாமைக்கு மேலே -நீங்களும் பிரிந்து இருந்து -உங்களைக் கூட்டுகையிலே யத்னம் பண்ண வேண்டாது ஒழிந்தது என் பாக்யம் இறே
உங்கள் பாக்யத்தால் இ றே சம்ச்லேஷமே யாத்ரையாக பெற்றது என்னவுமாம்

மென்னடைய வன்னங்காள்-
சம்போகத்தாலே வந்த துவட்சியால் ஆகர்ஷகமான நடையை யுடையவையாகை –
தாரை யுடைய புறப்பாடு போலே இருந்ததீ உங்கள் புறப்பாடும் –

மதியினால்
ஔதார்யம் என்பதொரு குணம் உண்டாகையாலே மகாபலியை அழிக்க ஒண்ணாது –
இந்த்ரன் ராஜ்யம் பெற வேணும் என்று புத்தி யோகத்தால் தன்னை அர்த்தி ஆக்கினான் –

குறள் –
பால் செல்லச் செல்ல ரசிக்குமா போலே சிறுகின வடிவு ஆகர்ஷகம் ஆனபடி
மாணாய்
உண்டு என்ற போதோடு இல்லை என்ற போதோடு வாசி அற முக மலர்ந்து போம்படி இரப்பிலே தகண் ஏறின படி

உலகிரந்த
தன்னதான பூமியை அவனதாக்கி அவன் பக்கலிலே பெற்றானாய் இருக்கை
கள்வர்க்கு
அப்படிப்பட்ட வஞ்சகருக்கு -என்பர் ஆளவந்தார்
அன்று அச்செயல் செய்ததும் -அக்குண சேஷ்டிதங்களாலே என் நெஞ்சை அபஹரித்து ஈடு படுத்துகைக்காக இ றே -என்பர் எம்பெருமானார்

மதியிலேன்
பிரிவை பிரசங்கித்த அளவிலே போகாதே கொள்ளும் என்று ஓர் உக்தியால் விலங்கிட்டு வைக்கலாய் இருக்க
அதுவும் கலவியில் ஒரு வகையோ என்று இருந்த மதி கேடியான என்னுடைய –
வல்வினையே மாளாதோ வென்று
பாக்யவதி யாகையாலே அனுபவ விநாச்யமான பாபத்தைப் பண்ணினாள் சிந்தயந்தி –
நான் பண்ணின பாபத்துக்கேயோ முடிவு காணாது ஒழிகிறது
தத் சித்த விமலாஹ்லத-இத்யாதி -இவர் தம்மை தீர்க்க சிந்தயந்தி என்று இ றே நம் முதலிகள் சொல்வது –

ஒருத்தி
ஒருத்தி என்னவே இன்னாள் என்று தானே அறிகிறான் இறே
உபய விபூதியிலும் இப்பாடு பட்டாள் இவள் ஒருத்தியுமாயிற்று
நித்ய விபூதியில் உள்ளார் விச்லேஷம் அறியார்கள்
சம்சாரிகள் விஷய ப்ரவணராய் அறியார்கள் –

மதி எல்லாம் உள் கலங்கி-
நீர் கொடுத்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கிற்று என்று சொல்லுங்கோள் –

மயங்குமால் –
இப்போது அறிவு போயிற்று ஆகில் பின்பு அறிவு உண்டாகிறது என்று இராமே முடியும் தசை யாயிற்று என்னுங்கோள் –

என்னீரே –
உங்கள் அவயத்தை பரிஹரியுங்கோள் -அறிவித்தால் பின்பு அவத்யம் அவனது இறே

——————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-4-3-

‘அகல்வதுவோ’ என்பது போன்று சொல்லுகிற பக்தி வாதங்கள் நமக்குத் தெரியா;
அவஸ்யம் அனுபோக்தவ்யம் (‘செய்த வினைகள் அவசியம் அனுபவித்தற்கு உரியவை’ )என்கிறபடியே,
அனுபவித்தே அற வேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு,
‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

விதியினால் -அகிஞ்சனோ அநந்ய கதி -த்வத் ஏக சரணஸ் சாஹம்-போன்ற பக்தி க்ருத உபசார யுக்திகள் –
நான் பண்ணின -சிந்தையந்தி யுடைய வினை அனுபவித்தாள் மாளலாமோ என்று தாத்பர்யம் –
மதியிலேன் வல்வினையோ -என்று அன்வயத்தி வியாக்யானம்

—————–

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்!
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே
–1-4-3-

விதியினால் பெடை மணக்கும்-
‘நீங்கள் சாஸ்திரங்கள் – நூல்கள் சொல்லுகிறபடியே கலக்கையாலே பிரிவின்றி இருந்தீர்கள்;
இவன் அடைவு கெடக் கலக்கையாலே எனக்குப் பிரிவு வந்தது,’ என்கிறாள்.
இனி, விதி-புண்ணியம்;
அதாவது, ‘உங்களுடைய புண்ணியத்தால்’ என்று கூறலுமாம்;
அபிமத சம்ச்லேஷம் புண்ய பலம் -காதலர்களோடு கலந்திருத்தல் புண்ணியத்தின் பலன்; –
அபிமத விஸ்லேஷம் அவர்களைப் பிரிந்திருத்தல் பாவத்தின் பலன்; ஆதலின், ‘விதியினால் மணக்கும்’ என்கிறாள்.
இனி, ‘என்னுடைய புண்ணியத்தால்’ என்றலும் ஒன்று.
‘ஆயின், இவளுடைய புண்ணியத்தால் அவை மணத்தலாமாறு யாங்ஙனம்?’ எனின்,
பெருமாள், பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும்-அரித்திக் கொண்டு – தேடிக் கொண்டு வருகையில்,
இராச்சியம் மனைவி முதலியவைகளை இழந்த மகாராசரைக் கண்டு, அவர் குறை தீர்த்த பின்பே யன்றோ
தம் இழவில் நெஞ்சு சென்றது பெருமாளுக்கு?
ஆதலின், இவை குறைவற்று இருக்கிற இதுதான் இவள் காரியமாக இருக்கும் அன்றே?
ஆயின், மகாராசர் குறையை முற்படத் தீர்ப்பான் என்?’ என்னில்,
நீர்மையுடையார்க்குத் தத்தமது இழவிலும் பிறருடைய இழவே நெஞ்சில் முற்படப்படுவதாம்.

பெடை மணக்கும்
பெடையினுடைய கருத்து அறிந்து அதனை உகப்பிக்கின்றது’ என்பாள், ‘பெடை மணக்கும்’ என்கிறாள்.

மென்னடைய அன்னங்காள்
இவ் வன்ன நடை கொண்டோ என் காரியம் செய்யப்போகிறது!’ என்பதாம்.
இனி, இளைய பெருமாளுடைய வில்லின் நாண் ஒலி செவிப்பட்ட பின்னர்,
மது அருந்தியதால் உண்டான கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப் போகட்டு,
‘இச் சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட,
அவள்,சா ப்ர்ஸ்க்கலந்தீ –கலவியால் உண்டான பரவசத் தன்மை யடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற் போன்று
இரா நின்றது இவற்றின் நடையழகும் என்பாள்,–பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் எனினும், அமையும்.
ஆயின், பட்டத்துத் தேவியை முன்னிடலாமோ?’ எனின்,
இளைய பெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்ற வேண்டிற்றுக் காணும் இருந்தது.
சா -ஒரு கலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகை யுடையவள்
ப்ர்ஸ்க்கலந்தீ-சம்ச்லேஷத்தால் உண்டான துவட்சியாலே தடுமாறி அடிமேல் அடியாக இட்டு வந்தாள்
மதவிஹ்வலாஷி -மதுபானாதிகளால் தழு தழுத்த நோக்கை யுடையவளாய் இருந்தாள்
ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா-அரைநூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையில் கிடந்தபடியே பேணாதே வந்தாள்
ச லக்ஷணா -சம்போக சிஹ்னங்கள் காணலாம் படி வந்தாள்
லஷ்மண ஸந்நிதானம் ஜகாம-தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்
தாரா -தாரையானவள்
நமிதாங்கயஷ்ட்டி -உருகு பதத்தில் வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதது போலே
இத் துவட்சி இவளுக்கு நிரூபகம் என்று தோற்றும்படி இருந்தாள்

மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு –
இராவணனைப் போலே தலை அறுத்து விட ஒண்ணாதபடி கொடை என்ற ஒரு குணத்தை
ஏறிட்டுக் கொண்டிருந்தான் மாவலி.
இந்திரன் அரசை யிழந்து நின்றான்; இரண்டிற்கும்-அவிருத்தமாக – மாறு இல்லாமல் செய்யலாவது என்?’ என்று,
கோ சஹஸ்ர ப்ரதாதாரம் -‘ஆயிரம் பசுக்களைக் கொடுத்த கைகள்’ என்கிறபடியே,
கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு.
இதனால், தலைவர் சால தூர தர்சி என்பதனைத் தெரிவிக்கிறாள்.
குறள்-
கோடியைக் காணி யாக்கினாற் போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி
சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.
மாணாய்-
‘உண்டு’ என்று இட்ட போதொடு‘இல்லை’ என்று தள்ளிக் கதவு அடைத்த போதோடு வேற்றுமை அற முக மலர்ந்து போம்படி
இரப்பிலே தழும்பு ஏறின வடிவை யுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள்.
உலகு இரந்த கள்வர் என்பதற்குத்
தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் ‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று
பொருள் அருளிச் செய்வர் ஸ்ரீ திருமாலை யாண்டான்.
ஸ்ரீ எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச் செய்வர்.
அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி,

ஆயின், இவள் அச் செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின்,
‘பெருநிலம் கடந்த நல் அடிப் போது’ என்று அன்றோ இவள் ஆசைப் பட்டாள்?
மேலும்,‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒரு கால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது?
ஸ்ரீ திருமங்கையாழ்வாரும், ‘முன்னங் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார்.
ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச் செயலுக்கேயாம்.

மதியிலேன்-
‘பிரிகிற சமயத்திலே, ‘போகாதே கொள்’ என்றேனாகில் இப்பாடு படாது ஒழியலாம் அன்றோ?
அது செய்திலேன்; ஆதலால், அறிவுகேடி யானேன்,’ என்கிறாள்.

வல்வினையே மாளாதோ-
இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தி யாவள்.
மதியிலேன் வல்வினையே மாளாதோ’ என்றதனால் மதியினை யுடைய ஒருத்தியின் வல்வினை மாண்டது என்பது உட்கோள்.
அதாவது, சிந்தயந்தி என்பாள்-எல்லைக் சதிரியாய் குரு தர்சனத்திலே முடியும்படி
அதாவது – சதுரப்பாட்டினை யுடையளாய் மாமியார் முதலானாருடைய முன்னிலையிலேயே இரு ஸ்ரீவினைகளையும் நீக்கி
மோக்ஷத்தினை அடைந்தாள் என்னும் சரிதம் ஈண்டு நினைத்தல் தகும்.
ஆயின், அவள் இருவினைகளையும் நீக்கியவாறு யாங்ஙனம்?’ எனின்,
தத் சித்த விமலாஹ்லாத இத்யாதி -ஸ்ரீ கிருஷ்ணன் பக்கலில் நெஞ்சை வைக்கையாலே புண்ணியத்தின் பலம் அனுபவித்தாள்;
அந்நினைவின் படி அனுபவிக்கப் பெறாமையால் பாப பலம் அனுபவித்தாள்;
ஆகையாலே, நல்வினை தீவினைகள் இரண்டனையும் அரைக்கணத்தில் அனுபவித்தால்,’ என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது.
ஒருத்தி-
‘ஒருத்தி எனப் பொதுவிற்கூறின், அறியுமாறு யாங்ஙனம்’ எனின் எய்தவன் கை உணராதோ?
அதாவது,’ இன்ன காட்டிலே மான் பேடை ஏவுடனே கிடந்து உழையா நின்றது’ என்று ஊரில்
வார்த்தை யானால் எய்தவன் கை உணராதோ?
‘நீயன்றோ எய்தாய்?’ என்று சொல்ல வேண்டா அன்றே?
அவ்வாறே ஒருத்தி என்ற அளவில் பிரிந்த தலைவன் உணர்வான் என்பது
மேலும் சம்சார விபூதியிலுள்ளாள் இவள் ஒருத்தியுமே யாவள். ‘ஏன்?
அவனுடைய பிரிவால் வருந்துமவர் வேறு ஒருவர் இலரோ?’ எனின்,
சம்சாரிகள் -புறம்பே அந்ய பரர் -புறப்பொருள்களில் நோக்குள்ளவர்கள்;
நித்திய சூரிகளுக்குப் பிரிவு-விஸ்லேஷம் – இல்லை;
மற்றைய ஆழ்வார்கள் இவளுக்கு-அவயவமாய் – உறுப்புகளாய் இருப்பவர்கள்.

மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே-
மதி கலங்கி,
அறிவு அழிந்தாள் என்மின்.
தன் அறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்;
அதாவது, நாம் கொடுத்த அறிவு கொண்டு தத் தஸ்ய சத்ருசம் பவேத் ‘
என்னை அழைத்துக்கொண்டு செல்லும் அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று பிராட்டி இருந்தது போன்று இருப்பாள் என்றபடி.
மதி எல்லாங் கலங்கி-
தாம் மயர்வு அறுத்துத் தந்த ஞானப் பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்மின்;
அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவிப்பீர்’ என்றபடி.
மேல் எழச் சிறிது கலங்கிற்றாகிலும் பின்பும் நாம் கொடுத்த அறிவு அன்றோ?அப்படிக் கலங்குமோ!’ என்பார்;
மதி எல்லாம் உள் கலங்கி-
தாம் தந்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கின என்மின்;
அத்தனையோ! நாம் இருந்தோமே! பின்பு நாம் போனவாறே அறிவு கொடுத்துக் கொள்ளுகிறோம்’ என்று இராமல்,

மயங்குமால் –
முடியுந் தசையாயிற்று என்மின். ‘மயங்கினாள்’ என்னில், ‘இனிப் போனால் செய்வது என்?’ என்று இருப்பர்;
ஆதலால், ‘மயங்குமால் என்மின்’ என்கிறாள்.
என்னீரே
‘உங்கள் தலையில் பழியைத் துடைக்கப் பார்மின்;
அறிவித்த பின்பு வாராது ஒழியின், அவனது அன்றோ பழிச்சொல்!’ என்பாள், ‘என்னீரே’ என்கிறாள்,
இனி, ‘துன்பக் குரல் கேட்பின். பொறுக்க மாட்டான், அறிவிப்பீர்,’ என்பாள், ‘என்னீர்’ என்கிறாள் எனலுமாம்.
அருளாழி அம்மான் ஆகையாலே வருவர் என்றபடி.
இனி, உங்களுக்கு ஸ்வரூபம், அவனுக்குக் குணம், எனக்குச் சத்தை, உங்களுக்கு யுக்தி – ஒரு வார்த்தை என்பாள்,
‘என்னீரே’ என்கிறாள்-

—————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ப்ராஹ்மணாதிகளுக்கு நியமங்கள் வேணும் -திர்யக்க்காதி களுக்கு அவை வேண்டா என்று ஸாஸ்த்ர தாத்பர்யம்
பெடை மணக்கும் -மணம் -சம்ச்லேஷம் -தன் அபிநிவேச அனுகுணமாகக் கலக்கை அன்றிக்கே
அதனுடைய அபிநிவேசம் அறிந்து தத் அனுகுணமாகப் பரிமாறும்-
அரை நூல் வடம் -காஞ்சீ குணம் –
கொள்வன் நான் -முக்த ஜலப்பிதங்களாலே அவனை வாய் மாளப் பண்ணுகையும் –
சிற்றடியைக் காட்டிப் பேர் அடியைக் கொண்டு அளக்கையும்-வஞ்சனை ஆகுமே –
லோகம் அடங்க தன்னதே யாம்படி எதிர்த்தலைக்கு ஒன்றும் எட்டாமல் அநந்யார்ஹமாக்கிக் காற்கடைக் கொள்ளும் வஞ்சகனாய் –
ஸ்வச்சன் க்ருத்ரிமன் என்று விவேகிக்க அரிதாம் படி அழகாலே மயக்கும் ஆச்சர்யத்தை யுடையவன் யாகிலும்
லோக மரியாதை யான்றியே குற்றம் சொல்லி மீட்க அரிதாம்படி கொடிய என் நெஞ்சானது
கீழ்ச் சொன்ன ஸ்வ பாவ விசேஷங்களை யுடையவன் தஞ்சம் என்று கிடவா நிற்கும்
முன்னம் -கால விப்கர்ஷம் போக்கி தேச விப்கர்ஷம் இல்லை கிடீர் இழக்கைக்கு-
எல்லைச் சதுரி -சாதுர்ய சீமா பூமி
மதி கலங்கி –எல்லாம் கலங்கி -உள் கலங்கி என்று விவஷித்து அருளிச் செய்கிறார் –
எல்லாம் என்றது ஸ்வரூப குண விக்ரஹ விபூதி விஷயமாக
மயங்கும் -மயங்கா நிற்கும் –வர்த்தமானம் -முடியும் தசை –

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading