ஸ்ரீ ஆறாயிரப்படி –1-4-1-
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-
எம்பெருமானோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி -தன் முன்னே ஸம்ஸலேஷித்து வர்த்திக்கிற நாரைகளைக் கண்டு தன் வ்யஸன அதிசயத்தாலே அறிவு இழந்து
இருக்கையாலே -தன் வார்த்தைகளை அறியா என்னும் இடத்தை விவேகிக்க மாட்டாதே அவற்றினுடைய சம்ச்லேஷ ஸ்வபாவத்தைக் காண்கையாலே தன்னோபாதி
அளவுடையவனாகக் கொண்டு அவற்றைக் குறித்து தன்னளவில் வார்த்தை சொல்லுகிற இடத்திலே சேவலைக் குறித்துச் சொல்லுகை ஈடு அல்லாமையாலே
அத்தைக் குறித்துச் சொல்லுகிற வார்த்தையும் ஓவ்சித்யத்தாலே பேடையை நோக்கி -நினைத்த இடத்திலே நினைத்த போதே செல்லுகைக்கு ஈடான
உபகரணங்களை யுடையையாய்- சம்ச்லேஷத்தையே தாரகமாக யுடையையாய்- துக்க அஸஹிஷ்ணுவுமாய் இருந்த நீ -என் பக்கலிலே கிருபை பண்ணி –
ஆஸ்ரிதருடைய ஸமஸ்த துக்க நிரசன ஸ்வ பாவனான பெரிய திருவடியை திவ்ய வாஹனமாக வுடைய எம்பெருமானுக்கு என் விடு தூதாய்ச் சென்று –
என் திறத்தைச் சொல்ல வேணும் -என்று அபேக்ஷித்து -பின்னையும் அவை போகாது இருந்தவாறே சொன்ன வார்த்தையை அவன் அங்கீ கரியாது ஒழியில்
செய்வது என்- என்று போகாது இருந்தனவாகக் கொண்டு- இப்படி ஆஸ்ரித வத்சலனானவன் அங்கீ கரியாது ஒழியுமோ -அவன் என் வார்த்தையை அங்கீ கரியாது ஒழிகை யாகிற
வன் சிறையில் அவன் உங்களை வைக்கில் -அத்தனையும் எனக்காகப் பட்டால் ஆகாதோ என்றே செய்ய வேணும் -என்று சொல்லுகிறாள் –
—————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-4-1-
முதல் பாட்டில்
இப்பிராட்டி -உத்யானத்திலே சம்ச்லேஷித்து வர்த்திக்கிறன சில நாரைகளைக் கண்டு -ஸ்த்ரீத்வத்தாலே அவற்றிலே
தன்னோடு சஜாதீயமான பேடையை நோக்கி எம்பெருமானுக்கு என் ஆர்த்தியை அறிவிக்க வேணும் என்கிறாள் –
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்று எனக்கு அருளி
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் -அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்று எனக்கு அருளி
சேவலோட்டை சம்ச்லேஷத்தாலே -செந்தலித்து நினைத்த இடத்திலே போகைக்கு ஈடான சிறகை யுடையையாய் பவ்யமான நாராய்
இத் தசையிலே உதவும்படியான தகைமையுடைய நீயும் -நீ இட்ட வழக்காய் அழகிய கமன சாதனத்தை யுடைத்தான
சேவலும் கூடி ஆர்த்தையான எனக்கு ஐயோ என்று கிருபை பண்ணி –
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு –
அங்கே போனால் அவனை அறியும் படி எங்கனே என்னில் –
பிரதிபஷத்துக்கு வெவ்விதான சிறகை யுடைத்தான பெரிய திருவடியைக் கொடியாக யுடையவன் என்று அடையாளம் சொல்லுகிறாள்
தன்னைப் பிரித்து சடக்கென கொடுபோகையாலே -அக்ரூர க்ரூர ஹ்ருதய -என்னுமா போலே
இவ்வெவ்விதான சிறகை யுடைய புள்ளாலே வஹிக்கப் பட்டவனுக்கு -என்றால் ஆகவுமாம் –
என் விடு தூதாய்ச் சென்றக்கால் –
அத்யார்த்தையான எனக்குத் தூதாகச் சென்றக்கால் –
வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ-
தான் அர்த்திக்கச் செய்தே அவை போகாது ஒழிந்த வாறே தன் பக்கல் நின்றும் சென்ற தங்கள் வார்த்தையை அவன்
அங்கீ கரியான் என்று பார்த்து அவை போகாது ஒழிந்தனவாக கொண்டு
அப்படி நீர்மையை யுடையவன் உங்களைக் கொண்டாடாமை ஆகிற வன்சிறையில் வைக்கில்
பரார்த்தமாகச் சிறை இருக்கை கிடைப்பது ஒன்றோ -என்று ஸ்வ கோஷ்டீ பிரசித்தியாலே சொல்லுகிறாள் –
———————
ஸ்ரீ பன்னீராயிரப்படி -1-4-1-
முதல் பாட்டில் தன் புறச்சோலையில் தடாகத்தில் தன் சேவலோடும் இருக்கிற நாரையைக் கண்டு கருடத்வஜனுக்குத் தூதாக அபேக்ஷிக்கிறாள் –
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-
அளியத்தாய் -எனக்கு அளிக்கத் தகுதியான ஸ்வ பாவத்தை யுடையையாய் –
அஞ்சிறைய மட நாராய்-நான் சொன்ன காரியத்தில் செல்லுகைக்கு ஈடான அழகிய சிறையையும் -சேவலோடு உண்டான சேர்த்தியாலே வந்த துவட்சியாலே
மடப்பத்தையும் யுடைய நாராய்
நீயும் நின்அஞ்சிறைய சேவலுமாய் –சேவலை ஒழியச் செல்லாத நீயும் உன்னோட்டைச் சேர்த்தியாலே புதுக் கணித்த சிறகையுடைய சேவலுமாய்
யாவா என்று எனக்கு அருளி-என் தனிமை கண்டு ஐயோ ஐயோ என்று எனக்கு கிருபையைப் பண்ணி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்-விரோதி விஷயத்தில் வெவ்விய சிறகை யுடைய பெரிய திருவடியை ரக்ஷணத்துக்கு கொடியாக
எடுத்தவனுக்கு என்னாலே விடப்பட்ட தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் –உங்கள் முகம் பார்த்து வார்த்தை கேளாமை யாகிற வலிய சிறையில் -பிரணயியான அவன் தானே வைக்கில்
வைப்புண்டால் என் செய்யுமோ –அதுக்கு இசைந்து இருந்தால் அவ்விருப்பு என்ன குற்றம் செய்யும் -ஓ என்கிற ஆசை கூடாதது கூடுமோ என்றபடி –
பிறருக்காகச் சிறை இருக்கை -பெரிய கோன்மை என்று கருத்து –
புள்ளாலே உயர்த்தப் பட்டவர் என்னவுமாம் –
இவ்விடத்தில் நாரை தொடக்கமானவற்றைத் தூதாகச் சொல்லிற்று -கடகருடைய கார்ய தேசிகத்வ ஸூ சக அர்த்தமாக –
சிறையை கொண்டாடிற்று -ஞான ப்ரேம ரூப பஷத்வ அன்வயத்தாலே –
பேடையும் சேவலுமான சேர்த்தி கடகருடைய பரஸ்பர சேஷ சேஷி பாவ ஸூசகம் –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-4-1-
முதல் பாட்டிலே
தன் கண் வட்டத்திலே சேவலோடு கலந்து இருக்கிற தொரு நாரையைப் பார்த்து
-நீ அவனுக்கு என் தசையை அறிவிக்க வேணும் -என்கிறாள்
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்று எனக்கு அருளி
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-
அஞ்சிறைய –
பிரஜைக்கு தாய் முலையிலே கண் ஓடுமா போலே தனக்கு உபகாரமான சிறகிலே யாயிற்று முற்படக் கண் வைத்தது –
ஆச்சார்யனுடைய ஞானத்தை அனுமித்து சிஷ்யன் உபசத்தி பண்ணுமா போலே கடகருடைய பரிகரவத்தையை அறிந்து பற்ற வேணும் இறே
அம் -என்று அழகு –சிறை -என்று சிறகு -அழகிய சிறகை யுடைய தன்னைப் போலே உறாவி இராதே
-சேவலோட்டை சம்ச்லேஷத்தாலே செந்தலித்து இருக்கை
ச பங்காம நலங்காராம் விபத்மாமிவ பதமி நீம் -என்று இறே தன் தசை –
மட நாராய் –
சம்ச்லேஷத்தாலே துவண்டு தூது போகைக்கு யோக்யமாய் இருக்கை
நாண் மடம் அச்சம் -என்று ஸ்த்ரீத்வமாய்-பிரியில் வியசனம் அறியும் தன் இனத்தைப் பார்த்து சொல்லுகிறாள் என்னவுமாம் –
அளியத்தாய் நீயும்
இத்தசையில் அறியும் அனுக்ரஹ சீலையான நீயும்
நின் அஞ்சிறைய சேவலுமாய்
நீ இட்ட வழக்காய் நல்ல கமனத்தை யுடைத்தான சேவலுமாய் –
சேவலைப் பற்றுவது -பேடை முன்னாக வென்றும் -ஆர்த்த ரஷணம் பண்ணுவதும் ஒரு மிதுனம் என்று இருக்கிறாள் –
ஆவா வென்று எனக்கு அருளி
என் தசையைப் பார்த்து ஐயோ ஐயோ என்று
ஏஹி பஸ்ய சரீராணி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள்
அருளி -கிருபை பண்ணி
இரப்புக்குச் செய்தாகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி –
விக்ராந்தஸ்த்வம் சமர்த்தச்வம் ப்ராஜ்ஞச்த்வம் வா நரோத்தம –
எங்களை ஸ்தோத்ரம் பண்ணுகிறது என் -அங்கே சென்றால் எல்லாரும் சாம்யாபன்னராய் இருக்கையாலே தெரிய ஒண்ணாது
அடையாளம் என் என்று இருக்கிறவனவாகக் கொண்டு சொல்லுகிறாள் –
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு –
வெவ்விய சிறகை யுடைய பெரிய திருவடியை த்வஜமாக எடுத்தவருக்கு
வரும் போது பிரத்யஷத்தை நிரசித்துக் கொண்டு வரும்படியைச் சொல்லுகிறது
சா மத்வ நித்வஸ் தசமஸ்த பாதகம் –
உயர்க்கை யாகிறது -வஹிக்கையாய்
அக்ரூர க்ரூர ஹ்ருதய -என்னுமா போலே தன்னைப் பிரித்துச் சடக்கென கொண்டு போன கொடுமையைச் சொல்லிற்று ஆகவுமாம்
என் விடு தூதாய்ச்
பெரு மிடுக்கரான பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனை தூது விட்டால் போலேயோ
அபலையாய் அத்யார்த்தை யான நான் விட வன்றோ போகிறது
பரார்த்தமாக தூது போகை கிடப்பது ஒன்றோ –
சென்றக்கால்
அவன் பக்கலில் அன்றோ செல்லுகிறது
உங்கள் வழிப் போக்குத் தானே அடிக் கழஞ்சு பெறாதோ –
வன் சிறையில்
பிரணயிநி பாடு நின்றும் வந்தவர்களை சிறையிடுவான் ஒரு மூர்க்கனும் உண்டோ
இனி சிறை யாகிறது -இவர்கள் வார்த்தையை அநாதரிக்கை
இவர்களைக் கண்ட போதே துணுக் என்று -மதுரா மதுராலாபா கிமாஹ மமபாமி நீ -என்னாமை இ றே
அவன் வைக்கில்
நைவ தம்சான் நமசகான் -என்று ஆதரியாது ஒழியுமோ
வைக்கில்
அநாதரிக்க பிரசங்கம் இல்லை -சிரஸா வஹிக்கும் என்று கருத்து –
வைப்புண்டால் என் செய்யுமோ –
அங்கனே யாகில் அது உங்கள் பேறு அன்றோ –
பரார்த்தமாகச் சிறை இருக்கை கிடப்பது ஒன்றோ -என்று இருக்கிறாள்
தேவ ஸ்த்ரீகளுக்காக தான் சிறை இருந்தவள் இறே –
—————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-4-1-
தன் பக்கத்திலே தங்கி இருப்பது ஒரு நாரையைப் பார்த்து,
என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னாகக் காரியங்கொள்ள வேண்டும்’ என்று இருக்கும்
தம் வாசனையாலே பேடையை முன்னிட்டுச் சேவலைப் பற்றி
‘நீ என் நிலையை அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும்,’ என்கிறாள்
—————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
மட நாராய் என்று பேடையை முன்னிடுகிறதுக்கு பாவம் –
இத்தால் பகவத் விஷயத்தில் போலே ஆச்சார்ய விஷயத்திலும் புருஷகாரம் வேணும் என்றபடி –
சேவல் -பும்பஷி / பேடை -ஸ்த்ரீ பஷி
—————–
அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ என்று எனக்கு அருளி
வெஞ் சிறைப் புள் உயர்த்தாற்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ–1-4-1-
அம் சிறைய-
குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாங்கிடக்க, மார்பிலே வாய் வைக்குமாறு போன்று,
பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண வைக்கிறாள்,
நீர் பாய்ந்த பயிர் போன்று, ஒன்றற்கு ஒன்று கலவியால் பிறந்த மகிழ்ச்சி வடிவிலே தொடை கொள்ளலாம்படி
இருக்கின்றதாதலின், ‘அம் சிறை’ என்கிறாள்.
ஆசாரியனுடைய ஞானத்தை -அநுமித்து -உத்தேசித்துச் சிஷ்யன-உபசத்தி – வணங்குவது போன்று,
இவளும் சிறகிலே கண் வைக்கிறாள்.
மடம்–
ஏவிக் காரியங் கொள்ளலாம்படி பணிவு தோன்ற இருந்தது.
இனி, சம்ச்லேஷத்தாலே -‘புணர்ச்சியாலே துவண்டு தூது போகைக்கு யோக்கியமாம்படி இருக்கை,’ எனலுமாம்.
இனி, ‘நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் மகளிர்க்குள்ள நான்கு குணங்களுள் ஒன்றான மடப்பத்தையே கூறுகிறாள்
என்று கொண்டு, பிரிவில் துன்பத்தை அறியும் தன் இனமான பேடையைப் பார்த்துச் சொல்லுகிறாள்,’ என்றலும் ஒன்று.
நாராய்-
‘அம்மே!’ என்னுமாறு போன்று இவளும் ‘நாராய்’ என்கிறாள்.
அளியத்தாய்-
அவன் பொகட்டுப் போன சமயத்திலே ஆற்றாமை அறிவிக்கலாம்படி வந்து முகங்காட்டின உன் அருளின் தன்மை இருந்தபடி என்!
அளி-அருள்; கிருபை -‘அருள் பண்ணத் தக்காய்’ என்றபடி.
‘இச் சமயத்தில் இவள் நாரையைப் பார்த்தது யாங்ஙனம் இருந்தது?’ எனின்,
பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமன், பம்பா தீரே ஹனுமதா சங்கதா (‘பம்பை நதிக்கரையில் அனுமானைச் சந்தித்தது போன்று இருந்தது’ )என்பதாம்.
அச் சந்திப்பு வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று இருந்தது என்றபடி.
நீயும்–
ச ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன சீதனம் உவாச (‘இளையபெருமாள், தன் தமையனுடைய இரண்டு திருவடிகளையும்
இறுகப் பிடித்தவராய், பிராட்டியை முன்னாகக் கொண்டு பேசினார்,’) என்கிறபடியே,
என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் காரியங்கொள்வது.
நின் அம் சிறைய சேவலுமாய்-
அது இட்ட வழக்கான நீயும் நீ இட்ட வழக்கான சேவலுமாகி. ‘திருமகள் கேள்வன்’ என்பது போன்று,
சேவலிடத்துத் தான் அன்பு செலுத்துவதற்குக் காரணம் பேடையே என்பாள், ‘நின் சேவல்’ என்கிறாள்.
பெண்ணை அணைந்து பெற்ற அழகு வடிவிலே தோன்றுகின்றதாதலின், அதனை‘அஞ்சிறை’ என்கிறாள்,
ஆஆ என்று-
‘ஐயோ ஐயோ!’ என்று,
இரண்டும் சேர்ந்திருப்பது தன் துன்பம் நீக்குகைக்கு என்று இருக்கிறாள் ஆதலின், ‘நீயும் நின் சேவலும்’ என்கிறாள்.
எனக்கு- ஏஹீ பஸ்யா சரீராணி (‘முனிவர்கள் இராக்கதர்களால் துன்புறுத்தப்பட்ட தங்களுடைய சரீரங்களை
ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ )போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள்.
இனி, ‘அவனோடே கலந்து பிரிந்து, ‘கண்ணாலே காணப்பெறுவது என்று காண்’ என்னும் –
அபேஷையோடே- விருப்பத்தோடே இருக்கிற எனக்கு,’ என்று பொருள் கூறலுமாம்.
அருளி –
இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி.
அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி?
இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம்.
‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க
பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.
இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது,
விக்ராந்தஸ்தம் சமாத்தஸ்த்வம் ப்ராஞ்ஞஸ்த்வம் வானர உத்தம (“வானர உத்தமனே, நீ மிக்க பலமுடையவன்;
நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” )என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது.
கேட்ட நாரை, ‘எங்களை இங்ஙனம் கொண்டாகிறது என்? உன் நிலையைக் கண்டு பொகட்டுப் போனவன்
எங்கள் வார்த்தையைக் கேட்கப் போகின்றானோ?
மேலும், நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி (“பிரகிருதி சம்பந்தம் இல்லாதவனாய்ப் பரம சாம்யத்தையடைகிறான்” )என்கிறபடியே,
பரமபதத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றாலும் இறைவனை ஒத்தவர்களாய் அன்றோ இருப்பார்கள்?
நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை அறிவது யாங்ஙனம்?’ என்று அன்றோ நாங்கள் இருக்கிறோம்
என்பது அவற்றுக்குக் கருத்தாகக் கொண்டு மேல் வார்த்தை சொல்லுகிறாள்:
வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு –
அவர்கள் -பரம சாம்யா பன்னராய் -எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும்
அறிகுறியாகப்-வ்யாவர்த்தக விசேஷணமாய் – பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான்.
விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.
அன்றி, தன்னை விட்டு-நிர்த்தயமாக – அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே,
அக்ரூர க்ரூர ஹ்ருதய ‘தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று
ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று.
புள் உயர்த்தான்-
புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;
அன்றி, புள்ளைக் கொடியிலே உயர்த்தியவன் என்னுதல்.
என் விடு தூதாய் –
அவன் ஆள் வரவிட இருக்கக்கடவ எனக்குத் தூதாகி.
இனி, ‘பெரு மிடுக்கரான பாண்டவர்களுக்குக் கிருஷ்ணன் தூது சென்றது போன்றது அன்று,
அபலையாய்-அத்யார்த்தையான – மிக்க துன்பத்தையுடையளாய் இருக்கிற எனக்குத் தூதாகச் செல்லுதல்’ என்பாள்
‘என் தூதாய்’ என்கிறாள் எனினும் அமையும்.
க்ரியதாம்- ‘இதனைச் செய் என்று நியமிக்கவேண்டும்’ -என்று இளைய பெருமாள் கூறியது போன்று,
‘நான் ஏவ அன்றே, நீங்கள் போகின்றீர்கள்?’ என்பாள் ‘விடு தூதாய்’ என்றாள்.
சென்றக்கால்
பரார்த்தமாக -‘பிறருக்காகத் தூது போகை கிடைப்பது ஒன்றோ? சென்றால், எனக்கு முன்னே உங்களுக்கு அன்றோ
பலன் சித்திக்கப் புகுகிறது? என்பாள், ‘சென்றக்கால்’ என்கிறாள்.
இனி, ‘பிறர்க்காகத் தூது போதலால் உங்கள் போக்கு அடிக் கழஞ்சு பெறாதோ?’ என்பாள், அங்ஙனம் கூறுகிறாள் எனலுமாம்.
வன் சிறையில்-
காதலி பக்கல் நின்றும் வந்தவர்களைச் சிறையிடுவான் ஒரு மூர்க்கன் உளனோ? இரான் ஆதலால்,
ஈண்டுச் சிறையாவது – இவர்களுக்கு முகங் கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடையவனாய் இருத்தல்.
‘ஆயின், இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ?’ எனின்,
அரசகுமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் வெள்ளிலை இடாதபோது அவர்கள் வருந்துவார்கள் :
அது போன்று, இவை கட்கும் முகங் கொடுத்து அவன் கேளாமையே துன்பத்தினை விளைப்பதாம்;
அதனையே ஈண்டுச் சிறை என்றாள்.
அவன் வைக்கில், வ்யாஸனேஷூ மனுஷ்யானாம் ‘மனிதர்களுக்குத் துன்பம் வந்த போது அவர்கள் அடையும் துன்பத்தைக் காட்டிலும்
இரண்டு மடங்கு அதிகத் துன்பத்தைத் தான் அடைகின்றவன், சிறையில் வைப்பானோ? வையான்’ என்பாள் ‘வைக்கில்’என்கிறாள்.
தலை மேற் கொள்ளுவான் என்பது குறிப்பு.
வைப்பு உண்டால் என் செயுமோ-
‘கிடைக்குமாகில் அது பொல்லாதோ? சிறை இருத்தல் துன்பத்தைத் தருவது ஒன்று அன்றோ?’ எனின்,
பிறருக்காகச் சிறை இருக்கை கிடைப்பது ஒன்றோ?
‘ஆயின், அவ்வாறு இருத்தல் தனக்கு உத்தேஸ்யமாமோ?’ எனின்,
இராவணன் தெய்வப் பெண்களைச் சிறையிட்டு வைக்க,
தான் அவர்கள் காலில் விலங்கைத் தன் காலிலே கோத்துச் சிறை மீட்டவள் அன்றோ?
‘என் விடுதூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில்’ என்பதற்கு,
நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகின்றீர்களோ?
சிறை கட்டுதல், சிங்க விளக்கெரித்தல் செய்யில் செய்வது என்?’ என்று கூசுகைக்கு;
எனக்காகத் தூது போனாரை பரிஷ் வங்கோ ஹனுமதா (‘அனுமானுக்கு என்னாற்செய்யப்படும் இவ்வாலிங்கனமானது’)
என்னுமாறு போன்று, மார்பிலே அணைக்கும் காணுங்கோள்.
நான் அணைய ஆசைப்படுகிற மார்பு அன்றோ உங்களுக்குப் பரிசிலாகக் கிடைக்கப் போகின்றது?’
———————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
ஆச்சார்யஸ்ய ஞானவத் தாம் அநுமாய தத் உபசத்தி க்ரியதே -ஸ்ரீ பாஷ்ய வசனம்
சிறகு -ஞான கர்மங்கள் / மட -தாயாதி குணங்கள் /நாராய் ஸூத்த ஸ்வ பாவம் /
அது மத்ஸ்யாதிகளை த்யானம் பண்ணிக்க கொண்டு இருக்குமா போலே ஆச்சார்யனுடைய பகவத் த்யான பரதை –
அலை கடல் நீர் குழம்ப அகடாடவோடி அகல் வான் உறிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு
வரு மீனை மறவாமையும் தோற்றுகிறது
மடம் -மூன்று பொருள் -பவ்யத்தை -துவட்சி-ஸ்த்ரீத்வம்
நாராய் -அம்மே -அநிதர சாதாரணமான பரிவும் பிரிய பரத்வமும் உள்ள தாய்-இடம் உள்ள
சங்க விஸ்வாசங்கள் உச்சாரணத்திலே தோற்றும்
பொகட்டுப் போன சமயத்தில் வந்து முகம் காட்டினத்துக்கு த்ருஷ்டாந்தம்
வழி பறிப்பார் -பிராட்டியுடைய கண்ணுக்கும் முகத்துக்கும் போலியான தாமரைப் பூவும் செங்கழு நீரும் –
அம் -என்றதுக்கு தாத்பர்யம் பெண் அணைந்த இத்யாதி
அது இட்ட வழக்கான -மட என்றதின் தாத்பர்யம் இட்ட வழக்கான -நின் என்றதின் தாத்பர்யம்
மிதுனமாய் -சமபி வ்யாஹார லப்யம்
ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க நிராசிகீர்ஷா தயா -இறப்புக்குச் செய்யில் ஆன்ரு சம்சயம் சித்திக்கும் இறே-
அளியத்தாய் எனக்கு -கூட்டித் தாத்பர்யம்
தயை பண்ணுகைக்கு குறை அறுகை மிதுனம் அன்றோ -மிதுனத்வேன அவஸ்தாநம்
விக்ரமம் -பராபிபாவன சாமர்த்தியம் / சாமர்த்தியம் –கார்ய கரண சக்தி
ப்ராஞ்ஞதை-இக் குணங்களை யுடையவனுக்குப் பிரிந்து நோவு படுகிற அபலையை உபேக்ஷிக்கை கொத்தை என்கிற ஞானம்
வெஞ்சிறை -புல்லை த்வஜமாக -அடையாளம் -வெம் -நிரசன உபயுக்த க்ரூர்யமும் சொல்லுகையாலே –
வெம் சிறகுக்கும் புள்ளுக்கும் விசேஷணம் -விரோதியைப் போக்குகைக்கும் ஆளுண்டு
என் வீடு-அபிமதையான தான் -அபலையான தான் -இரண்டு அர்த்தம்
சென்றக்கால் –இரண்டு அர்த்தம் -பரார்த்தமாகவும் -எனக்கு முன்னே என்றும்
சிறை கட்டுதல் -ப்ரஹ்மாஸ்திரத்தாலே கட்டுதல்
சிங்க விளக்கு எரிக்கை -வாலிலே சீலையைக் கட்டி எரிக்கை -ஸிம்ஹ ஆகாரமான ப்ரதிமையிலே விளக்கு எரிக்கை –
லோகத்தில் சிங்க விளக்காவது பத்து விரலிலும் சீரையைச் சுற்றி எண்ணெயை விட்டுக் கொளுத்துகை-
தலையிலே சாணியை வைத்து விளக்கு யேற்றுகை -சரீரம் எங்கும் பந்தம் கட்டி தஹிக்கை-
எல்லாவற்றாலும் அவமதி பண்ணுவது தாத்பர்யம்
பரிசிலாவது -சந்தோஷ அதிசயத்தால் கொடுக்கும் உசிதம்
ஸூந்தரீ ரகு நாதஸ்ய ஸூரஸ்த்ரீ துக்க சாந்தயே தசா நநஸ்யா பவநே தச மாசாநுவாச ஹா -என்பதால்
பரார்த்தமாக சிறை இருக்கை நல்லது -தன் ஸ்வ பாவத்தைக் கொண்டு அருளிச் செய்கிறாள்
————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply