ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு வாட்டாறு

மூலவர் -ஆதி கேசவப் பெருமாள் -புஜங்க சயனம் -மேற்கே திரு முக மண்டலம் –
தாயார் -மரகத வல்லி நாச்சியார்
விமானம் -அஷ்டாங்க -அஷ்டாக்ஷர விமானம்
தீர்த்தம் -கடல் வாய் தீர்த்தம் -வாட்டாறு –

திரு வனந்த புரம் போலே இவருடைய திருவடி திரு நாபி திரு முக மண்டலம் -மூன்று வாசல்களில் சேவிக்க வேண்டும் –
கேசி அசுரனை வாதம் செய்து துறையில் தள்ளி பெருமாள் அவன் மேல் படுத்துக்க கொள்ள கணவனைக் காப்பதற்கு கேசியின் மனைவி
நதி வடிவத்தில் ஓடி வந்து பகவானை தள்ள முற்பட்டாள்-பெருமானைக் காக்க பூமா தேவி அவர் சயனித்து இருந்த பூமியை உயர்த்த
ஆறு வட்ட வடிவமாக ஓடி திரு வாட்டாற்று ஆனது –
இது ஒரு மலை மடக் கோயில் -16008 சாளக்ராம மூர்த்திகள் சேர்த்து உருவாக்கப் பட்ட மூலவர் திரு மேனி –
பரலி கோதா இரண்டு ஆறு வட்டமாக ஓட
10-6 – அருள் தருவான் அமைகுன்றான் –வாட்டாற்றான் அடி வணங்கி
பிரணத பாரதந்தர்யம் -அதுவும் நம் விதி வகையே –
22 அடி நீளம் -நாபியில் நான் முகன் இல்லை -இங்கே -ஆதி கேசவ பெருமாள் -செண்பக வானம்
16008 சாளக்கிராமம் -கொண்டே திருமேனி
சாஹோதா மகரிஹிக்கு பிரத்யக்ஷம்
திரு விதாங்கூர் ராஜா தொடர்பு –
ஓண வில் சமர்ப்பிப்பார்கள் –

மூலவர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் மேற்கு
உற்சவர் ஸ்ரீ ஆதி கேசவன்
தாயார் ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ கடல்வாய் தீர்த்தம்,ஸ்ரீ வாட்டாறு, ஸ்ரீ ராம தீர்த்தம்
விமானம் ஸ்ரீ அஷ்டாஷர விமானம்
மண்டலம் ஸ்ரீ மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ நாகர்கோயில்
நாமாவளி ஸ்ரீ மரகத வல்லீ ஸமேத ஸ்ரீ ஆதி கேசவாய நமஹ

—————–

ஸ்ரீ நம்மாழ்வார்-11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே–10-6-5-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ் நின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே–10-6-10-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் தொடுவெட்டி என்ற ஊரில் இறங்கி இங்கிருந்து 6 மைல் தூரம் சென்றும்
இத்தலத்தை அடையலாம்.  இத்தலத்தைப் பற்றி பிர்ம்மாண்ட புராணம், கருட புராணம் போன்றவற்றால் அறிய முடிகிறது.

ஆதிதாமஸ்தலம் என்று இத்தலத்திற்குப் பெயர்.

கலியுகத்தில் 950 வது நாளில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி சன்னதி தோற்றுவிக்கப்பட்டது. இதைவிட திருவட்டாறு 1284ஆம் ஆண்டுகள்
முற்பட்டது என்று மதிலக கிரந்தம் என்ற நூலில் சொல்லப் பட்டுள்ளது.
திருவட்டாறு தேவஸ்தானத்தில் கிடைத்த வட்டெழுத்துக்களாலான ஓலைச்சுவடியில் இத்தலம் திரேதா யுகத்தில் தோற்றுவிக்கப்பட்டது எனக்
கூறப்பட்டுள்ளது.
பிள்ளைப் பெருமாளையங்காரின் விபவனாலங்காரம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய கவிதை ஒன்று உள்ளது.

மாலைமுடிநீத்து மலர்ச்செம்பொன்னடி நோவ
பாலைவனம் நீபுகுந்தாய் …. கேசவனே
பாம்பனை மேல் வாட்டாற்றில் துயில்கொள்பவனே

திருக்குருகைப் பிரான் எழுதிய மாறன லங்காரம் (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு) இத்தலம் பற்றி புகழ்ந்துள்ளது.

கேரளாவின் மிகப்பெரும் கவிஞரான கவிகுல திலகம் களக்கூத்து குஞ்சன் நம்பியார் இத்தலம் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்.
எட்டெழுத்து மந்திரத்தின் பொருளான ஆதிகேசவனே என்னை ஒருவட்டமாவது உன் திருக்கண்களால் நோக்காயோ

வேனாடு என்பது திருவிதாங்கூர் பகுதி. இப்பகுதியில் இசைச் சக்கரவர்த்தி ஸ்வாதித் திருநாள் இப்பெருமாள் மீது கீர்த்தனங்கள்
இயற்றியுள்ளார். ஸ்ரீலஸ்ரீ மதுராந்தஜி மகாராஜா,

ஆறாய் கவிகள் பொழிந்து ஆழ்வார் பரவிப் போற்றும்
மாறாப் பேரன் புருவாம் பண்புடை சைதன்யர் வாழ்த்தும்
ஆறார் திருவாட் டாற்றின் ஆதிகேசவப் பெருமாள்
மாறாய் என் உள்ளத்தென்றும் மலரடி வணங்கி னேனே’– என்று கூறுகிறார்.

‘வாழி திருவட்டாறு வாழி திருமாயவன்
வாழியடியார்கள் வளமையுடன் வாழி
திருமாலடி சேர்ந்தார் தெய்வபலம் சேர்ப்பார்
கருமால் அறுப்பர் அணிந்து’– என்கிறார் கிருபானந்த வாரியார்

‘சேத்ரா நாம பரசுராம ஷேத்ரா தீர்த்த நாம சக்ர தீர்த்த– என்று அத்யயன ராமாயணம் கூறுகிறது

வேதவியாசரின் பாத்ம புராணம் வசிஷ்ட மஹரிஷி இங்கு வந்து இப்பெருமானை தரிசித்துவிட்டு நெடுங்காலம் இங்கேயே தங்கியிருந்து 5
மடங்களை உருவாக்கினார் என்று தெரிவிக்கிறது. இம்மடங்கள் இவருக்குப்பின் இவரது சீடர்களால் நிர்வாகிக்கப்பட்டன. அவைகள் 1. முனிகள் மடம் 2.
மார்த்தாண்ட மடம் 3. ராமனா மடம் 4. பஞ்சாண்ட மடம் 5. காஞ்சி மடம்.
கலியுகத்தின் தொடக்கம் வரை மேற்சொன்ன மடங்களின் நிர்வாகத்தின் கீழ் இத்தலம் இருந்து வந்தது. (கி.மு. 3102 பெப்ரவரி 13 கலியுகம் தொடங்கிய
நாளாகும்) இவர்களின் காலத்திற்குப் பிறகு திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆனவாரி பிள்ளைமார்கள் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இத்தலம்
இருந்தது.

பிரம்மன் ஒரு யாகம் செய்ய யாக வேள்வியில் தோன்றிய கேசன், கேசி என்னும் இரு அரக்கர்கள் யாகத்திற்கு இடையூறு விளைவித்ததோடு
தேவர்களையும் விண்ணுலகையும் அச்சுறுத்தினர். அனைவரும் சென்று திருமாலிடம் முறையிட திருமால் கேசனைக் கொன்று கேசியை கீழே தள்ளி
கேசியின் மீது படுத்துக் கொண்டார். கேசியின் மனைவி கங்கையையும் தாமிரபரணியையும் துணைக்கழைக்க அவ்விருவரும் வேகமாக ஓடிவர
அந்நிலையில் பூமாதேவி திருமால் சயனித்திருந்த இடத்தை பெரிய மேடாக ஆக்க இது திருமகளின் செயல் என்பதை உணர்ந்த இரண்டு நதி
தேவதைகளும் அவ்விடத்தைச் சுற்றி இரண்டு மாலைகள் போல் வட்டவடிவில் வந்தபடியால் இவ்விடம் வட்டாறு என வழங்கப்பட்டு வட்டாறு ஆயிற்று.
இவ்விடம் மேடாக இருப்பதை,-மாலை மாடத் தரவணைமேல் வாட்டாற்றான்’  என்கிறார் நம்மாழ்வார்.

கேசியை அழித்தால் பகவான் ஆதிகேசவர் என்று வழங்கப்படுகிறார். இங்கு கங்கையும் தாமிரபரணியும் மாலை போல் பிரியுமிடத்தில் ஒன்றுக்கு
கோதையென்றும் ஒன்றுக்கு பரளி என்றும் பெயருண்டாயிற்று. நதிகள் பிரியும் இவ்விடத்திற்கு மூவாத்து முகம் என மலையாளத்தில் குறிப்பிடுகின்றனர்.

மூலவர்-ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம் மேற்கு நோக்கிய திருக்கோலம்.-இடது கை தொங்கவிட்ட நிலையிலும் வலது கை யோக முத்திரை காட்டி
தெற்கே சிரசும் வடக்கே திருவடியும் ஸ்ரீசேஷ சயனமாக மேற்கு நோக்கிய திருக்கோலம். நாபித் தாமரையோ பிரம்மாவோ இல்லை 23 அடி நீளமான
திருக்கோலம். இவரின் சிரசருகே ஹாதலேயே மஹரிஷி உள்ளார்.
தாயார்– மரகதவல்லி நாச்சியார்
தீர்த்தம்– கடல்வாய் தீர்த்தம், வாட்டாறு ராமதீர்த்தம்
விமானம்–  அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்–   பரசுராமன், சந்திரன்.

வளமிக்க வாட்டாறு என்பது நம்மாழ்வார் திருவாக்கு, திருவனந்தபுரம் போலவே இங்கு மூன்று வாசல். 20 படிகள் ஏறிச்சென்று இச்சன்னதியை
அடையவேண்டும். சுற்றுப் பிரகாரத்தில் 224 தூண்கள் உண்டு. கேரளத்துப் பாணியில் ஒவ்வொன்றும் ஒரு பாவை விளக்கேந்திய பெண்.

இங்கு மூலவர் சன்னதிக்கு முன்புறம் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் உள்ளது.
இங்கு ஆதிசேடன் ஐந்து தலை நாகமாய் குடை விரித்திருக்கிறார். இதில் ஒரு தலையைத்தான் காணமுடியும். பெருமாளின் கீரிடமும் பாதிதான் தெரியும். பாதி உள்ளே மறைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நாபியில் கமலம் பிரம்மர் இல்லை. அங்கே பெருமாளின் வலது கை சிவலிங்கத்தை தொட்டுக்கொண்டிருக்கும். இங்கே திருப்பாதங்கட்கு அருகில் சிவலிங்கம் உள்ளது. அங்கே கிழக்கு நோக்கிய சன்னதி. இங்கே மேற்கு நோக்கிய சன்னதி. ஸ்ரீஆதி அனந்தபுரம் என்றும் சேரநாட்டு ஸ்ரீரங்கம் என்றும் இதற்குப் பெயர்.

நம்மாழ்வாரும்,-திரைகுழவு கடல்புடை சூழ் தென்னாட்டுத் திலதமன்ன  வரைகுழவு மணிமாட வாட்டாற்றான் மலரடியே’-என்று மங்களா ஸாஸனம்

சந்திரனும், பரசுராமனும் இத்தலத்து எம்பெருமானை வழிபட்டு இங்கு தவமியற்றினர். திரேதா யுகத்தில் பரசுராமன் சந்திரத் தீர்த்தத்தில்
இப்பெருமாளை பூஜித்தார் என்று புராணம் கூறுகிறது.

கி.பி. 510 இல் சைதன்யர் இங்கு வந்திருந்தார். இவருக்கு பிரம்ம ஸம்ஹிதை இங்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. உள்ளூர் வாசியான
பரமேஸ்வரன் பிள்ளை தம் நூலில் இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். இது 100 அத்தியாயம் கொண்டது. 5 அத்தியாயங்கள் வங்கமொழியில் வெளிவந்துள்ளது. தற்போது ஹரேராமா, ஹரேகிருஷ்ணா இயக்கத்தினர் இந்நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளனர்.

சங்க காலத்தே சிறப்பாகப் பேசப்படும் எழினி ஆதன் பிறந்த ஊர் இந்த திருவாட்டாறுதான். புறநானூறு புரந்த எழினி ஆதன் ஊர் என்று
மாங்குடி கிழார் கூறுகிறார்.

துவாபார யுகத்தில் சோமயாசி என்னும் ரிஷி இவ்விடம் தனது மனைவியுடன் தங்கி ஒரு பர்ணகசாலை அமைத்து புத்திர பாக்கியம் வேண்டி
யாகம் செய்தார். யாக குண்டலியில் ஒரு புத்திரன் உண்டாக அப்புத்திரனை சப்தரிஷிகள் வளர்த்து வரலாயினர். சுசிவ்ருதன் என்னும் தேவகுமாரன்
ஹாதலேகன் எனப் பெயர் பூண்ட இப்பையனை பார்த்து உன் அப்பா, அம்மா யார் எனக் கேட்க இவன் பக்கத்திலிருந்த கதலியை (வாழைமரம்) காட்டி
இவர்களே என்று சொல்ல தேவகுமாரன் நகைக்க பெருமாளும் பிராட்டியும் வாழைமரத்திலிருந்து வந்து ஹாதலேய முனிவரை அழைத்து அஷ்டாச்சர மந்திரம் சொல்லி தமது சிரசருகில் அமர வைத்தார்.

ஆற்காடு நவாப் (கி.பி.1740) தமது இரண்டு மருமகன்களான சந்தா சாகிப், படாசாகிப் ஆகியோருக்கு அதிக அளவில் பொன் கொடுக்க நினைத்து
தெட்சிண திருவிதாங்கூரில் உள்ள சுசீந்திரம், கோட்டாறு, வாழ்வச்ச கோட்டம் திருவட்டாறு போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களில்
கொள்ளையடித்தான். திருவாட்டாற்றில் உள்ள அர்ச்சனா விக்ரகத்தைத் தங்க விக்ரகம் என நினைத்து பாளையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து வைத்தான். அன்று முதல் நவாபின் அரண்மனையில் பல துர்நிமித்தங்கள்
தோன்ற ஆரம்பித்தன.

இந்நிலையில் இப்பெருமான் மீது ஆராக்காதல் கொண்ட பக்தன்ஒருவரின் கனவில் வந்து பெருமாள்தான் இருக்கும் இடத்தை தெரிவிக்க
இவர் பரிவாரத்துடன் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார். இவர் வருவதற்குள் திருவட்டாற்றில் இருந்த மக்கள் அதேபோல் விக்ரகத்தை
செய்து சன்னதியில் வைத்து பூஜைகள் ஆரம்பித்துவிட்டனர்.
நவாபிடமிருந்து கொண்டு வரப்பட்ட விக்கிரகத்தை ஒரு இடத்திலவைத்து சுத்தப்படுத்தி நீராட்டி அதை எடுக்க முயற்சிக்கையில் எடுக்க
முடியாமல் போகவே அவ்விடத்திலேயே விட்டுவிட்டனர்.

பிறகு அந்த இடத்திலேயே அதேபோன்று விக்ரகத்தை செய்து திருவட்டாறு கொண்டுவர இங்கே ஒரு விக்ரகம் இருப்பதைக் கண்டு
பேராச்சர்யமுற்று கொண்டு வந்த விக்ரகத்தை மாத்தூர் கொண்டு சென்று வைத்தனர். இந்த விக்ரகத்தைச் செய்தவர் கற்பக மங்கள் தந்திரிகள் என்றும்
கூறப்படுகிறது.
தாங்க வொண்ணாத் துன்பங்கட்கு ஆட்பட்ட நவாப் தனது தவறுகளை உணர்ந்து அதற்குப் பிராயச்சித்தமாக திருவட்டாறின் சன்னதியில் உட்புறத்தே
ஒரு மண்டபம் கட்டிகொடுத்தான். அதற்கு அல்லா பூஜை மண்டபம் என்று  பெயர். 388 தோலான் எடையுள்ள தங்கத் தொப்பியும் தங்கத் தகடும்
இப்பெருமானுக்கு நாவாபு கொடுத்தான்.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் (கொல்லம் 855-57) உமயம்ம ராணி என்பாரின் ஆட்சிக்காலத்தில் முகில்கான் என்னும் பட்டாணி இந்து
ஆலயங்களில் கொள்ளையிட்டான். அவன் மணக்காடு என்னும் ஊரில் தங்கி இருந்து திருவனந்தபுரம் கோவிலைக் கொள்ளையிட முயன்றான். இதையறிந்த திருவனந்தபுரம் முஸ்லீம்களே அவனை எதிர்த்து தாக்கி விரட்டினார்கள்.
காடுகளில் ஒளிந்து தப்பித்து முகில்கான் திருவட்டாறு கோவிலைக் கொள்ளையிட திட்டம் போட்டான். இதையறிந்த ராணி தனது நாட்டின்
மருங்கிருந்த குறுநில மன்னர்களின் உதவியை நாடினாள். இவ்விருவரின் படைகளும் இணைந்து வருவதற்குள் முகில்கான் சாஹெப் திருவட்டாறு
அருகில் உள்ள ஒரு குன்றுக்கு வந்து சேர்ந்து படைகளை எதிர்க்க பலமான வ்யூகம் அமைத்திருந்தான். வ்யூகத்தின் தன்மை அறிந்த சிற்றரசுகள் தம்மிடம்
இருக்கும் படைகளைக் கொண்டு இவனை எதிர்ப்பது முடியாத காரியம் என்ற முடிவுக்கு வந்தனர்.

அவர்கள் மிகுந்த பயப்பக்தியோடு திருவட்டாறு எம்பெருமானிடம் சரண்புகுந்து அற்புதமான கீர்த்தனங்கள் இயற்றி பிரார்த்தித்தனர். இந்த
கீர்த்தனங்கள் ஆதி கேஸ்வ ஸ்தவம் என்று அழைக்கப்பட்டன. இதற்குப் பட சங்கீர்த்தனம் என்னும் பெயருமுண்டு.

இவர்களின் பக்தியை மெச்சிய எம்பெருமான் கதண்டு வண்டு வடிவமெடுத்து எண்ணற்ற கதண்டுகளாக பிரிந்தார். இந்தக் கதண்டுகள்
முகில்கானின் படைகளைக் கொத்திச் சின்னாபின்னப்படுத்தின.

இந்த வண்டுகளின் வடிவத்தை மலையாள மொழியில் கடந்தல் என்று குறிப்பர். முகில்கான் கொடுரமான ரண காயங்களுடன் மரணமடைந்தான்.
அவனது வ்யூகம் சிதறியது. எண்ணற்ற படைவீரர்கள் மாண்டனர். முகில்கான் படையில் இருந்த குதிரைகளை ‘உரளி பஞ்சஸ் திதன்’ என்ற குறுநில மன்னன் கவர்ந்து சென்றான்.
முகில்கானை அடக்கம் செய்த கல்லறை இன்று முகில்கான் குன்று என்று அழைக்கப்படுகிறது. இது மலையாளத்தில் முகில்கான் கரா
எனவழங்கப்பட்டு தற்போது காங்கரா என வழங்குகிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் முகத்தான் முகில்கான் படைகள் வீழ்ச்சி அடைந்த நாளில் எம்பெருமானுக்கு விசேச பூஜையும் வீரகேரள
பாயாசம் வழங்கப்படும் நிவேதனமும் தினத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதை ஏற்படுத்திய குறுநிலமன்னன் ஆண்ட ஊர்
இரண்யசிம்ஹ நல்லூர் என்பதாகும். இவ்வூர்தான் தற்போது இரண்யல் என்றழைக்கப்படுகிறது.

இங்கு நடைபெறும் திருவிழாக்களும் உற்சவங்களும் மிகச் சிறப்பானவைகளாகும். அவைகள் மீன உற்சவம். துலா உற்சவம் என
அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு திருவிழாக்களும் 10 நாட்கள் நடைபெறும்.
இதில் 9வது திருநாள் யானை குதிரையில் பெருமாள் புறப்பாடாகி தாரை தப்பட்டைகள் முழங்க கோலாகலமாய் நடைபெறும். இதற்கு பள்ளிவேட்டை
என்றும் பெயருண்டு.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், தினத்தில் சொர்க்கவாசல் திறப்பதும், முலைப்பாரி உற்சவமும் இங்கு மிகச் சிறப்பானதாகும்.

இத்தலத்தில் எண்ணற்ற கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள வட்டெழுத்துக்களாலான கல்வெட்டில் கீழ்க்கண்டவர்களின்
ஆட்சிக்காலம் குறிக்கப்பட்டுள்ளது.

1. குலசேகரப்பெருமாள்    – கி.பி. 644-659
2. வீரமார்த்தாண்டவர்மா  – 510-519
3. வீரகேரளவர்மா        – 519-550
4. செம்பலாதித்த வர்மா   – 612-645
5. உன்னி கேரள வர்மா   – 734-753

மேற்சொன்னவர்களுக்கு இத்தலத்தில் சிற்பங்கள் உண்டு

இங்குள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளது. இதில் 9 கைவிளக்குகள் உள்ளன.

இங்குள்ள 2 1/2 அடி உயரமுள்ள முரளி வேணுகான கிருஷ்ண சிற்பமும், இவர் எழுந்தருளியுள்ள மண்டபமும் மிக நேர்த்தியான தாகும்.

இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தின் 3வது தூணிலும் பிற தூண்களிலும் பலவிதமான சிற்பங்கள் உண்டு. ஒரு கையில் திரிசூலம் ஏந்திய ஒரு பெண்,
மற்றொரு தேவதை தன்கையில் திரிசூலம், கேடயம் வாள் ஏந்திய தோற்றத்துடன் கூடிய சிற்பம்,
நாய் சங்கு ஊதும் சிற்பம், பெண் ஒருத்தி குடைபிடித்து நடனம் ஆடும்
சிற்பம், வைரவரின் சிற்பம், இத்துடன் தமிழ் எழுத்துக்களாலான கல்வெட்டும்
சேர்ந்து வெளிப்பிரகாரம் ஒரு கலைக்களஞ்சியம் போல் தென்படுகிறது.

குலசேகர ரவி வர்மாவால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று இங்குள்ளது. மூலஸ்தானத்தில் 5 தங்க கலசங்கள், (பொன் முலாம்
பூசியதுண்டு) கருவறைக்கு மேல் உள்ள அஷ்டாங்க விமானம் செம்பாலானது. தாரு மரத்தாலான சிற்பங்களும் இம்மன்னன் செய்வித்தான்.

கலி 4705இல் இத்தலம் புதுப்பிக்கப்பட்டதாக இங்குள்ள தமிழ்க் கல்வெட்டால் அறியமுடிகிறது. இங்கு ஒரே கல்லினாலான ஒற்றைக்கல்
மண்டபம் உள்ளது. இது 25 அடி நீளம் 171 அடி அகலம் 3 அடி உயரம் இம்மண்டபம் கொல்லம் ஆண்டு 778 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் கலி 4556 ஆம் ஆண்டில் தமிழ்க்கல்வெட்டும் வடக்குப் பக்கத்தில் உள்ள சமஸ்கிருத கிரந்த
எழுத்துக்களாலான கல்வெட்டும் இங்கு சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
13ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்துக் கல்வெட்டும் இங்குண்டு. ஆங்கிலக் கல்வெட்டுக்களும் உண்டு. கி.பி. 1937இல் மகாத்மா காந்தி இங்கு வந்ததை
ஆங்கிலக் கல்வெட்டு கூறுகிறது.

மார்த்தாண்ட வர்மா (கி.பி. 1749) குளச்சல் யுத்தத்திற்குச் செல்லும் போது 908 பொற்காசு, பட்டு, உடைவாள், போன்றவற்றை இப்பெருமாள்
திருவடியில் வைத்து வேண்டி போரில் வெற்றி பெற்றார் என்ற செய்தியைக் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

மாலை முடி நீத்து மலர்ப்பொன் அடி நோவப்
பாலை வனம் புகுந்தாய் பண்டு என்று -சாலவும் நான்
கேட்டால் துயிலேன் காண் கேசவனே பாம்பணை மேல்
வாட்டாற்றுக் கண் துயில் கொள்வாய் –68-

(இ – ள்.) கேசவனே – கேசவனென்னுந் திருநாமத்தையுடையவனே! –
‘மாலை முடி நீத்து – (அரசர்க்குஉரிய அடையாளப்பூ) மாலையையும் கிரீடத்தையும் (கைகேயியின்சொற்படியே பித்ருவாக்யபரிபாலநஞ் செய்யுமாறு) பூணாமல் துறந்து,
மலர்பொன் அடி நோவ – தாமரைமலர்போன்ற அழகிய (உனது) திருவடிகள் வருந்தும்படி,
பாலை வனம் – (தண்டகாரணியம் முதலிய) கொடுங்காட்டில்,
பண்டு – முற்காலத்தில் (ஸ்ரீராமாவதாரத்தில்), நீ -,
புகுந்தாய் – நடந்து சென்றாய்,’
என்று கேட்டால் – என்று (இதிஹாஸம் வல்லோர் சொல்லக்) கேட்டால்,
நான் -, சாலவும் துயிலேன் காண் – அடியோடு கண்டுயில்கொள்ளேன்; (அவ்வாறு இருக்க, நீயோ),
வாட்டாறு – திருவாட்டாறென்னுந் திவ்வியதலத்தில்,
பாம்பு அணைமேல் – ஆதிசேஷ சயனத்தின்மீது,
கண்துயில் கொள்வாய் – (கவலையின்றிக்) கண்ணுறங்குகின்றாய்; (எ – று.) – காண் – அசை.

நெடுநாள்முன்பு நடந்த ராமாவதாரத்தில் நீ காலினால்வருந்திக் கானகத்திற்சென்ற செய்தியை இப்போது
பிறர்சொல்லக்கேட்டாலும், கல்நெஞ்சனாகிய எனதுமனமும் நெகிழ்ந்து நெகிழ்ந்து கரைந்து உருக எனக்குத் தூக்கம் பிடிப்பதில்லை;
பதினான்கு வருடம் காலினாற் பாலைவனங்களிலெல்லாம் அலைந்து திரிந்து வருந்திய நீயோ சிறிதுங் கவலையின்றித்
திருவாட்டாற்றில் நெடுநாளாகக் கண்ணுறங்குகின்றாயே? இது என்ன வியப்பு? என்று எம்பெருமான் திறத்து ஈடுபட்டு
ஐயங்கார் கூறுகின்றன ரென்க. துயரமனுபவித்தவன் யாதொருகவலையுமின்றி நிச்சிந்தையாகத் துயிலத் துயரமனுபவியாதவன்
கவலையினாற் கண்ணுறங்குவதில்லை யென்று, காரணமில்லாத விடத்துக் காரியம் நிகழ்ந்ததாகக் கூறினமையால்,
இச்செய்யுள் – விபாவனையணியின் பாற்படும். கேசவன் என்பது – அத்தலத்து எம்பெருமான் திருநாமமென்பர். இத்தலம் – நதியாற் பெயர்பெற்றது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading