மூலவர் -மாய பிரான் / நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் – பொற் கொடி நாச்சியார் –
விமானம் -புருஷோத்தம விமானம் –
தீர்த்தம் -ப்ரஜ்ஜா சரஸ் –பூஞ்சுனை தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -திருமங்கை ஆழ்வார்
வ்ருஷா தர்பி அரசவைக்கு சப்த ரிஷிகள் வந்தனர் -நாட்டில் பஞ்சம் தலை விரித்த படியால் ரிஷிகள் தானம் வாங்க மறுத்தனர்
-அரசனும் அவர்களுக்குத் தெரியாமல் வாழை பழத்தில் தங்கம் வைத்துக் கொடுத்தார் -அதனை அறிந்த ரிஷிகள் அவற்றை
ஏற்றுக் கொள்ள மறுக்க கோபம் கொண்ட அரசன் க்ருத்யை என்ற பெண் பிசாசை ஏவினான்
-இந்திரன் புலி வடத்தில் அவளைக் கொன்றான் -புலி வடத்தில் வந்த படியால் திருப் புலியூர் என்ற பெயர்
– பகவான் சப்த ரிஷிகளுக்கும் இந்திரனுக்கும் மாயப் பிரானாகக் காட்சி கொடுத்தார் –
இத்திருத் தலம் பீம சேனனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது –
நாயக லக்ஷணம் காட்டிய குணம் -மாயப்பிரான் –/ தோழி -திரு மணம் ஆனது போலே உள்ளதே –
இவள் நேர் பட்டது -அம் தண் துழாய் கமழ்கிறாள்
12 பகுதிகள் குட நாடு இத்யாதி –
மூலவர் ஸ்ரீ மாயப் பிரான்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ மாயப் பிரான்
தாயார் ஸ்ரீ பொற் கொடி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ பிரஞ்ஞா ஸரஸ்
விமானம் ஸ்ரீ புருஷோத்தம விமானம்
மண்டலம் ஸ்ரீ மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் செங்கணூர்
நாமாவளி ஸ்ரீ பொற் கொடி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மாயப் பிரான் ஸ்வாமிநே நமஹ
—————
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்
பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கண மங்கை –சிறிய திருமடல் – 71-
——————–
ஸ்ரீ நம்மாழ்வார்–11-பாசுரங்கள் மங்களாசாசனம்
கரு மாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அரு மாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-
அன்னைமீரிதற் கென் செய்கேன் அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம் பல் கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ் திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2-
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப் புலியூர் வளமே–8-9-3-
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூ வுலகு உண்டு உமிழ் தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்த தன்றிப் பேச்சு இலள் இன்று இப் புனை இழையே–8-9-4-
புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மை யதன்று இவட் கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-
மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–8-9-7-
மட வரல் அன்னை மீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வட மொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர்
பட வர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8-
பரவாள் இவள் நின்று இராப் பகல் பனி நீர் நிறக் கண்ண பிரான்
விரவா ரிசை மறை வேதிய ரொலி வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந் தொறும் தாமரைக்கயம் தீவிகை நின் றலரும்
புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-
நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-
ஒரு சமயம் மன்னன் சிபியின் மைந்தன் அரசாண்டு வரும்பொழுது அவனுக்கு கடுமையான நோயும், நாட்டில் கொடிய வறுமையும் உண்டாயிற்று.
அச்சமயம் அந்நாட்டிற்கு வருகை தந்த சப்தரிஷிகளை வேண்டிய மன்னன் தனக்கும் தன் நாட்டிற்கும் உண்டான பேராபத்தைப் போக்கினால்தான்
முனிவர்கட்குத் தானம் கொடுப்பதாகக் கூறினான். தானம் என்ற சொல்லைக்கேட்டு சினந்த ரிஷிகள் மன்னர்களிடம் முனிவர்கள் யாதொரு
தானமும் பெறக்கூடாது. அதிலும் உன் போன்ற மன்னர்களிடம் பெறுதல் பெரிய பாவமென்று சப்தரிஷிகள் மறுத்துவிட்டனர்.
இருப்பினும் சிபியின் மைந்தனான வ்ருஷாதர்பி மந்திரிகள் மூலமாக மறைமுகமாக தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைக்க அதையும்
முனிவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் வெகுண்ட மன்னன் ஒரு யாகத்தைச் செய்து அந்த யாகத்தில் தோன்றிய தேவதையை சப்தரிஷிகளைக்
கொல்வதற்காக ஏவினான்.
ரிஷிகள் மஹாவிஷ்ணுவைத் துதித்து நிற்க, அம்மாத்திரத்திலேயே மஹாவிஷ்ணு இந்திரனை அனுப்பி இந்திரன் புலியாக மாறி தேவதையைக்
கடித்துக் குதறினான். இதனால் திருப்புலியூராயிற்று என்பர்.
ரிஷிகள் திருமால் ஒருவன்தான் பரம்பொருள் என்று இவ்விடத்து நிர்ணயம் செய்ததால் திருமால் அவர்கட்கு மாயப் பிரானாகக் காட்சி
கொடுத்து மோட்சமளித்தார்.
மூலவர்– மாயப் பிரான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம்– ப்ரஞ்ஞா ஸரஸ்
விமானம்– புருஷோத்தம விமானம்
காட்சி கண்டவர்கள்– சப்த ரிஷிகள்
பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமனும் திருமாலைக்குறித்து தவம் புரிந்தான். பீமனைப்
போன்றே அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பைக் கொண்டுத் திகழ்கிறது இத்தலம். இப்பகுதியில் வாழும் சற்று விஷயமறிந்த பெரியவர்கள்
இதனை பீமஷேத்ரம் என்றே கூறுகின்றனர்.
இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள உயர்ந்த கொடிமரம் (துவஜஸ்தம்பம்) வட்டவடிவமான (மூலஸ்தானம்) கருவறை அமைப்பும் மிக்க
எழில் வாய்ந்ததாகும்.
முதல் வண்ணம் ஆமே முலை வண்ணம் முன்னை
விதி வண்ணம் நீங்கி விடுமே சதுரத்
திருப் புலியூர் நின்றான் திருத் தண் துழாயின்
மருப்புலி ஊர் தென்றல் வரின் –63-
(இ – ள்.) சதுரம் – அழகிய,
திருப்புலியூர் – திருப்புலியூரென்னுந் திவ்வியதலத்தில்,
நின்றான் – நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்றமாயப்பிரானது,
திரு தண் துழாயின் – குளிர்ந்த திருத்துழாய்மாலையினது,
மரு – நறுமணத்தை,
பு(ல்)லி – பொருந்தி,
ஊர் – தவழ்ந்துசெல்லுந்தன் மையுடைய,
தென்றல் – தென்றற்காற்றானது,
வரின் – வந்துவீசுமாயின், – (அப்பொழுது, எனக்கு),
முலை வண்ணம் – தனத்தின் நிறம், (காமவிகாரத்தால் ஏற்பட்ட பசலைநிறம் மாறி),
முதல் வண்ணம் ஆம் – முன்னைய நிறமே வந்து சேரும்;
முன்னே விதிவண்ணம் – முற்பிறப்பிற்செய்த தீவினையின் பயனாக நேர்ந்த பிரிவுத்துயர் முழுவதும்,
நீங்கிவிடும் – அடியோடு போய்விடும்; (எ – று.)
தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைமகள் அப்பிரிவுத்துயரை யாற்றியடக்கும் வல்லமை யிலளாகி,
தனது நிலைமையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாக உரைத்து,
‘இனித் தலைமகனது திருத்துழாயின்நறுமணத்தைக் கொண்டுவந்து இளங்காற்று என்மீது வீசினால்தான்
யான் உயிர்பிழைத்து முன்னையநிலையைப் பெறுதல் கூடும்’ என்று தனது வேறுபாட்டைப் போக்குதற்கு
உரிய உபாயத்தைக் கூறி, அறத்தொடுநின்றது, இது. இதனை, தோழி செவிலியர்க்கு அறத்தொடுநிற்றலாகக் கொள்வாருமுளர்.
எம்பெருமானை இடையீடின்றிச் சேரப்பெறாத நிலையில் காலவிளம்பம் பொறுக்கமாட்டாமையாற் காலம் நீட்டித்ததாகத் தோன்ற,
வருந்துகின்ற ஐயங்கார் தமது அன்பர்களைநோக்கி எம்பெருமானது திருவருளைப் பெற்ற வளவிலே
யான் உய்வுபெறுவே னென்று கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
எம்பெருமான் திருவருள்புரிந்தால், நிலைகலங்குதலில்லாது பக்தி உறுதிப்படுமென்பது, முதலடியின் உள்ளுறை.
“போயபிழையும் புகுதருவானின் றனவும், தீயினிற்றூசாகும்” என்றபடி எம்பெருமானது திருவருளைப் பெற்றார்க்கு
முன்னையவினைகள்யாவும் அகலு மாதலால், “முன்விதிவண்ணம் நீங்கிவிடும்’ என்றன ரென்க.
விவரம் உய்த்துணர்க. “முன்னை, விதி வண்ணம்’ என்றும் பாடம் வழங்கும்.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply