ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு இடவெந்தை

மூலவர் -லஷ்மீ வராஹப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -நித்ய கல்யாணப் பெருமாள்
தாயார் -அகில வல்லி நாச்சியார் -கோமள வல்லித் தாயார் –
விமானம் -கல்யாண விமானம்
தீர்த்தம் -கல்யாண தீர்த்தம் -வராஹ தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை யாழ்வார் -2-7-

மேக நாதன் பிள்ளை -பலி அரசனுக்கு அருள் புரிய வராஹப் பெருமாள் பூமி பிராட்டியை இடது மடியில் இருத்திக் கொண்டு சேவை சாதித்தார் –
காலவ மகரிஷிக்கு 360 பெண்கள் பிறக்க -ரிஷி வேண்ட பகவான் தினமும் ஒவ்வொரு பெண்ணாகத் திருமணம் செய்தார்
இறுதியில் அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக அகில வல்லி நாச்சியாராக ஆக்கி அவள் உடன் சேவை சாதிக்கிறார் –
திரு வல வெந்தை -திருக் கடல் மல்லை / புருஷோத்தமன் -ஜீவாத்மா அனைவரும் அவன் இடம் சேர வேண்டுமே
–இதுவே நித்ய கல்யாண பெருமாள் காட்டி அருளுகிறார்
கன்னத்தில் மை தீட்டி சேவை
ஆதி சேஷன் -வாசுகி -திருவடியின் கீழே -சேவை –

மூலவர் ஸ்ரீ லக்ஷ்மி வராகப் பெருமாள்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள்
தாயார் ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ கல்யாண தீர்த்தம்
விமானம் ஸ்ரீ கல்யாண விமானம்
மண்டலம் தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் சென்னை
நாமாவளி ஸ்ரீ கோமள வல்லீ ஸமேத ஸ்ரீ நித்ய கல்யாணாய நமஹ

—————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -13-பாசுரங்கள் மங்களாசாசனம் –

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எங்கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய எம்பிரான்
தீர்த்த நீர்த் தடஞ்சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே! –1-8-4-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-

துளம்படு முறுவல் தோழி யார்க்கருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம்படு குவளைக் கண்ணினை எழுதாள் கோல நன் மலர் குழற்கு அணியாள்
வளம்படு முந்நீர் வையம்முன்னளந்த மால் என்னும் மாலின மொழி யாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-2-

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –2-7-3-

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் ஒண் சுடர் துயின்றதால் யென்னும்
ஆழி யும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிதாம்
தோழியோ வென்னும் துணை முலை யரக்கும்சொல்லுமின் என் செய்கேன் யென்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-4-

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-5-

தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே——2-7-6-

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே வலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-7-

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-8-

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—–2-7-9-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—2-7-10-

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை என் மனத்து மாலை இடவெந்தை யீசனை –பெரிய திருமடல் – 119-

இத்தலத்தைப்பற்றி வராஹ புராணத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர் கௌசிக ரிஷிக்கு கூறியதாக உள்ளது.

முன்னொரு யுகத்தில் (கிரேதா) மேகநாதன் என்னும் அரசன் இருந்தான். அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக செங்கோலோச்சி வந்தான்.
அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸு மாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்ய பலியின் உதவியைக் கேட்டனர் பலி மறுத்தான்.
அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர்.
அரக்கர்களின் பொருட்டு பலி தேவர்களுடன் யுத்தம் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து தேவர்கள்
தலைவன் திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து மோட்சம் நல்கி
சக்திவாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ குளத்தில் நின்றருளினார்.

இஃதிவ்வாறிருக்க சரஸ்வதி நதிக்கரையில் குனி என்னும் ஒரு ரிஷி தவஞ்செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே சுவர்க்கம்
செல்ல எண்ணி தவஞ்செய்யுங்காலை, நாரதர் வந்து, நீ மணமாகாதவள் மணஞ்செய்தாலன்றி சுவர்க்கம் சித்திக்காது என்று சொல்லி, அங்கு
தவஞ்செய்துகொண்டிருந்த மற்ற ரிஷிகளிடம் இப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நாரதர் வேண்டினார்.
அம்முனிவர்களுள் காலவரிஷி என்பார் அப்பெண்ணைத் திருமணஞ்செய்துகொண்டு ஓராண்டில் 360 கன்னிகைகளை (பெரிய
பிராட்டியார் அம்சமாக) பெற்றார். இவ்விதம் 360 கன்னிகைகள் தமக்குப் பிறந்ததை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் இது இறைவன் செயலே
என்று எண்ணி அத்தனைபேரையும் கிருஷ்ணார்ப்பணம் என்று கிருஷ்ணருக்கே அர்ப்பணித்துவிட தமக்குள் தீர்மானித்திருந்தார்.
பருவமடைந்த இவர்களை திருமணஞ்செய்து கொடுக்கத் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், சரஸ்வதியில் தீர்த்தாடனம் செய்ய வடதேச
யாத்திரை சென்ற சிலர் இவ்விபரந் தெரிந்து காலவரிஷியை அணுகி தமது நாடாகிய வாமகவிபுரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு எழுந்தருளியுள்ள
வராஹமூர்த்தி மிகப்பெரிய வரப்பிரசாதி யென்றும், தெய்வத்தால்தான் இக்காரியம் நடக்க வேண்டுமென்று சொல்ல அவரும் இசைந்து இங்குவந்த
வராஹமூர்த்தியைக் கருதி கடுந்தவஞ் செய்து வரலாயினார்.
இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் வந்து இம்முனிவரை அணுகி தான் திவ்யதேச யாத்திரையாக வந்ததாக கூற, காலவரிஷி தனது நிலையை எடுத்துரைத்து தனது பெண்களை திருமணம் செய்து தங்களின் பிரம்மச்சரிய விரதத்தை
முடித்துக்கொள்ள வேண்டும் என்று மன்றாட ஸ்ரீமந்நாராயணனும் அதற்கு ஒப்புக்கொண்டு தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் திருமணம்
செய்து கொண்டார்.
கடைசி தினத்தில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது
இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார். திருவாகிய இலக்குமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன
படியால் திரு+இட+எந்தை திருவிட வெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி திருவடந்தை ஆயிற்று.

மூலவர்–லட்சுமி வராஹப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்- நித்ய கல்யாணப் பெருமாள்
தாயார்– கோமளவல்லி நாச்சியார்
தீர்த்தம்– வராஹதீர்த்தம், கல்யாண தீர்த்தம்
விமானம்– கல்யாண விமானம்
காட்சி கண்டவர்கள்– பலி, காலவ ரிஷி

இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன் என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கி சென்று கொண்டிருந்தான்.
இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச் செல்வதைக்கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக
மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.
இக்கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையின் ஓர்பால் அமைந்துள்ளது. இப்பெருமானைக்கூட திருமங்கையாழ்வார்
மங்களாசாசனம் செய்துள்ளார்.
360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும் உண்டு.
தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்றும் ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும்
பெயராயிற்று. வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு.அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின் அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு நான்கு பெயர்கள் உண்டு.
360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர்.
இங்கு தனிக் கோயிலில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி நாச்சியார் என்பதே திருநாமம்
நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். இவ்விருவர் திருமேனியில் (முகத்தில்) தாடையில் பொட்டு இயற்கையாகவே
அமைந்திருப்பது கண்கூடு. இந்தப் பொட்டு திருமகள் திருமண வைபவத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியாகும்.

இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ள முறை மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒரு திருவடி பூமியிலும் மற்றொன்று ஆதிசேடனும் அவன் பத்தினியான
இருவர் முடியிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது தொடையில் தாங்கிக்கொண்டு, சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் வராஹ
மூர்த்தியாய் நின்றிலங்குகிறார்.

கி.பி. 1052 ஆம் ஆண்டில் விஜய ராஜேந்திர தேவ சோழனின் 35வது ஆட்சியாண்டில் இக்கிராமம் இப்பெருமாளுக்கே தேவதானமாய்த் தரப்பட்ட
செய்தியை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து கலியாண திருவிடவெந்தை தேவர்க்கு நித்திய சிறப்புக்கும்… நாம் பிறந்த பூர நாளால் திங்கள் தோறும்
திருவிழா உள்ளிட்டு வேண்டும் நிபந்தனைகளுக்கும்.. யாண்டு முப்பத்தைந்தாவது முதல் தேவதான இறையிலியாக … கொடுக்க
வென்று திருவாய் மொழிந்தருளினாரென்று திருவோலை கூறுகிறது.

யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக
இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.

இன்று சிறப்புற்றிருக்கும் கோவளம் என்பதே ஒரு காலத்தில் பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் முகத்தான் கோமளவல்லிபுரம்
என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.

எம்பெருமான் 360 கன்னிகைகளை இரண்டு கன்னிகளாக்கி ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்வர். ஒருவர் கோமளவல்லி. (தனிக் கோவில்
நாச்சியார்) இன்னொருவர் அகிலவல்லி, இத்திருநாமத்தில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி விட்டதாக ஒரு ஐதீஹம். ஒவ்வொரு தினமும் அவர்
திருமணம் கொண்டதும் ஓர் அடையாளம். அதாவது பிறக்கும் உயிர்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வினாடியிலும் ஏற்று அவைகட்கு நாயகனாக
அருள்புரிகிறார் என்பதும் ஐதீஹம். (அதாவது நாமெல்லாம் நாயகி போன்றும் எம்பெருமான் ஒருவரே நாயகன் என்றும் சொல்லும் வைணவக் கொள்கை
ஈண்டு நோக்கத்தக்கது)

நின்று திரியும் பிறவியெல்லாம் நேர்வித்துக்
கொன்று திரியும் கொடுவினையார் – இன்று
வெருவிட வெந்தைக்கே விழுமிய தொண்டானேன்
திருவிட வெந்தகைக்கே செறிந்து.-பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து
கொன்று திரியும் கொடு வினையார் இன்று
வெருவிட எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன்
திருவிட வெந்தைக்கே செறிந்து –92-

(இ – ள்.) நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து – நிலைத்திணைப் பொருளும் (ஸ்தாவரமும்) இயங்கு
திணைப்பொருளும் (ஜங்கமமும்) ஆகிய எல்லாப்பிறவிகளையும் (எனக்கு) உண்டாக்கி,
கொன்று திரியும் – (என்னை) மிகவும் வருத்திக்கொண்டு திரிகின்ற,
கொடு வினையார் – மிகக்கொடிய தீவினைகள்,
இன்று -இப்போது,
வெருவிட – அஞ்சியோடும்படியாக, (யான்),
திருவிடவெந்தைக்கே செறிந்து – திருவிடவெந்தையென்னுந் திவ்வியதலத்தில் நெருங்கி,
எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன் – (அத்தலத்தில் எழுந்தருளிய) எமது ஸ்வாமியாகிய நித்யகல்யாணப்பெருமானுக்கே சிறந்த அடியவனாயினேன்; (எ – று.)

எம்பெருமானுக்கே அடிமைப்பட்டதனால், எனக்குப் பிறவித்துன்பங்களை இதுகாறும் விளைத்து என்னை வருத்தி
வந்த பாவங்களெல்லாம் இனி என்னையணுகாது அஞ்சியோடு மென்பதாம்.
“அகஞ்சிவந்த கண்ணினராய் வல்வினையராவார்,
முகஞ்சிதைவராமன்றேமுக்கி – மிகுந்திருமால்,
சீர்க்கடலையுள் பொதிந்த சிந்தனையேன்றன்னை,
யார்க்கடலாஞ் செவ்வேயடர்த்து,”
“வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ,
கானோ வொருங்கிற்றுக் கண்டிலமால் – ஆனீன்ற,
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்றுயரையாவா மருங்கு” என்பன நம்மாழ்வார்பாசுரம்.
செறலினால், ‘கொடுவினையார்’ என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்; திணைவழுவமைதி.

இத்தலத்தி லெழுந்தருளிய வராகப்பெருமாள் தமதுதேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால்,
இத்தலத்திற்குத் திருவிடவெந்தையென்று திருநாமமாயிற்று

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading