மூலவர் -பக்த வத்சலப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -பத்தராவிப் பெருமாள்
தாயார் -என்னைப் பெற்றத் தாயார் / ஸூதா வல்லி –
விமானம் -உத்பல விமானம்
தீர்த்தம் -வருண புஷ்கரிணி தீர்த்தம் –
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார்
திருக் கடல் மல்லை –நின்ற வூர் நித்திலத் தொத்தினை –கண்டது நான் கடல் மல்லை தல சயனத்தே
நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை –திருக்கண்ண மங்கையில் கண்டு கொண்டேனே –தொத்து -சொத்து
இரண்டு இடத்திலும் சென்று பெற்ற பாசுரங்கள் –
திருவாகிய மஹா லஷ்மி தனி சிறப்புடன் தங்கிய வூர் –
சமுத்திர ராஜன் இடம் சீற்றம் கொண்ட மஹா லஷ்மி அங்கு இருந்து இந்த ஷேத்ரத்தில் தங்கி விட்டாள்
பிரமானால் தூண்டப்பட்ட சமுத்திர ராஜன் இங்கு வந்துத் தாயாரை -என்னைப் பெற்ற தாயே -என்று
மனம் உருகி வேண்ட தாயாரும் மனம் கனிந்து இங்கேயே தங்கி அருள் புரிகிறார் –
திருமலை திருப்பதி பெரிய ஜீயர் அதீனம் -இந்த திவ்ய தேசம் —
வருணன் சமுத்திர ராஜன் இருவருக்கும் பிரத்யக்ஷம் –
மூலவர் ஸ்ரீ பக்த வத்ஸலப் பெருமாள், ஸ்ரீ பத்த ராவிப் பெருமாள்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ பக்த வத்ஸலப் பெருமாள்
தாயார் ஸ்ரீ சுதாவல்லி, ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார்
தீர்த்தம் ஸ்ரீ வருண புஷ்கரணி
விமானம் ஸ்ரீ உத்பலா விமானம்
மண்டலம் தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் சென்னை
நாமாவளி ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் ஸமேத ஸ்ரீ பக்த வத்சலாய நமஹ
—————
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம் –
பூண்டவத்தம் பிறர்க் கடைந்து தொண்டு பட்டுப் பொய்ந் நூலை மெய்ந் நூலென் றென்றுமோதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை என் வணங்கப் படுவானை கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கரு முகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கனலெரி வாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே. –பெரிய திருமொழ -2-5-2-
ஏற்றினை இமயத்து ளெம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்தப் புறத் துய்த்திடும் ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய
கூற்றினை குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே. –பெரிய திருமொழி -7-10-5-
திருமங்கையாழ்வார். திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டே வரும் போது இத்தலத்தின் வழியாகச் சென்றும் இதனைப் பாடாது சென்றார்.
இதைக் கண்ட பிராட்டி, பெருமாளை எழுப்பி உடனே சென்று ஒரு பாசுரம் பெற்றுவருமாறு சொல்ல, பெருமாள் வருவதற்குள் திருமங்கையாழ்வார்
திருவிடந்தை வந்து விட்டு, திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்) வந்து விட்டார்.
அப்போது எம்பெருமான் பாசுரங் கேட்டுவந்து நிற்பதைக் கண்ட திருமங்கையாழ்வார்.
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மலலை தலசயனத்தே-என்று மங்களா ஸாஸனம்
கண்ணமங்கைப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை
ஓரக் கண்ணால் கண்ட திருமங்கையாழ்வார் நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை என்று பெருமாளையும் அவர் காற்றினும் கடுகி வந்த வேகத்தைக்
குறிக்கு மாற்றான் “காற்றினைப் புனலை” என்று அவரது வேகத்தையும் குறித்து கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று அவரையும் சேர்த்து
மங்களாசாசனம் செய்தார்.
திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று
ஆதிசேடனைத் தாங்கியுள்ள ஸமுத்திர ராஜனுடன் கோபம் செய்து கொண்டு இவ்விடத்து வந்து நின்றதாகவும், பிறகு
ஸமுத்திரராஜன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் வைகுண்டம் எழுந்தருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தான். எவ்வளவு கூறியும்
திருமகள் மறுத்துவிடவே ஸமுத்திர ராஜன் வைகுந்தம் வந்து எம்பெருமானிடம் முறையிட்டுத் தாங்களே என்னை ரட்சிக்க வேண்டும்
தேவியை மீண்டும் இங்கே எழுந்தருள மனங்கனிய அருள வேண்டும் என வேண்டினான். பக்தர்க்கு
இரங்கும் பண்பினான பரந்தாமன் மீண்டும் ஸமுத்திர ராஜனைப் பிராட்டியிடம் அனுப்பி நீ முன்னால் செல், நான் பின்னால் வருகிறேன் என்று
சொல்லியனுப்ப அவ்வண்ணமே ஸமுத்திரராஜன் வந்து தன்னை மீண்டும் மன்னிக்குமாறு என்னை பெற்றதாயே என்றும் பலவாறு வேண்டியும் திருமகள்
சமாதானம் அடையவில்லை. அவ்வேளையில் எம்பெருமானும் அங்கு எழுந்தருளி சமாதானஞ் சொல்ல திருமகள் மீண்டும் வைகுந்தம் எழுந்தருள
சம்மதித்தார்.
இதுவரை ஜலத்திலேயே ஸமுத்திர ராஜனுக்கு காட்சி கொடுத்த எம்பெருமானும் பிராட்டியும் இப்போது முதன்முதலாக நிலத்திலும் காட்சி
கொடுத்ததால், ஸமுத்திர ராஜனைக் நோக்கி உனக்கு என்னவேண்டும் என்று கேட்க, தாங்கள் இருவரும் இத்திருமணக் கோலத்தில் காட்சி தந்து
அதேபோல் இங்கேயே நின்றிலங்கவேண்டும்மென்று வேண்ட அவ்வண்ணமே அருள் பாலித்தனர்.
பக்தனுக்காக அவன்பால் வாத்சல்யம் (பேரன்பு) ஏற்பட்டு தன்னைவிட்டுப் பிரிந்த தேவியை அழைத்துவர பக்தனுக்காகத் தான் புறப்பட்டு வந்ததால்
பெருமாளுக்கு இங்கு பக்தவத்ஸலன் என்பது திருநாமம். இவ்வாறு பக்தர்களின் உயிருக்குயிராய் விளங்குவதால் பத்தராவிப்பெருமாள் என்ற திருநாமமுண்டு-ஸமுத்திரராஜன் பிராட்டியை வேண்டும்பொழுது என்னைப் பெற்ற தாயல்லவா என்று சொல்லி தன்பிழை பொறுத்து வைகுண்டம் ‘மீளக் கேட்டுக் கொண்டதால் என்னைப் பெற்ற தாயார் என்பதே பிராட்டியின் திருநாமம் நன்னு கன்ன தல்லி’ என்பர் தெலுங்கில்.
மூலவர்-பக்தவத்சல பெருமாள். பத்தராவிப்பெருமாள் கிழக்கு நோக்கி நின்றிருந்த திருக்கோலம்.
தாயார்- என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி
தீர்த்தம்– வருண புஷ்கரணி
விமானம்- உத்பல விமானம்
காட்சி கண்டவர்கள்- ஸமுத்திர ராஜன், வருணன்.
திருமலை பெரிய திருப்பதி பெரிய ஜீயர் சுவாமிகளின் நிர்வாகத்திற்குட்பட்டது இந்த ஸ்தலம்.
பூந்தமல்லியில் (பூவிருந்த வல்லியில்) நாசரத்பேட்டையில் அனந்த நாராயண தீட்சிதர் பூமிநாச்சியார் என்னும் தம்பதியார் வாழ்ந்து வந்தனர்.
(இந்த பூமிநாச்சியார் இராமானுஜரின் பெரிய சகோதரி) இவர்கட்கு புத்திரப்பேறு இல்லை. புத்திரப்பேறு வேண்டி திருமலையாத்திரையை
மேற்கொண்டனர்.
யாத்திரையின்போது இத்தலத்திற்கு அருகில் உள்ள வருண புஷ்கரணியின் சமீபம் உள்ள ஏரிகாத்த ராமரின் ஆலயத்தில் தங்கினர்.
மானசீகமாக இப்பெருமானை வேண்டினர். (மதுராந்தகம் போன்ற இங்கும் ஒரு ஏரிகாத்த ராமன் உள்ளன்)
அப்போது அவர்களின் கனவில் தோன்றிய ராமன் நீங்கள் புத்திரப்பேறு குறித்து திருமலை செல்லவேண்டாம். எம் அம்சமாக உங்கட்கு ஒரு புத்திரன்
பிறப்பான் என்றார். அவர்களும் அவ்வண்ணமே ஊருக்குத் திரும்ப அவர்கட்கு வைணவ சீலனாக ஒரு திருமகன் அவதரித்தான். அவர்தான்
முதலியாண்டான்.-இவருக்கு பூந்தமல்லியில் சன்னதி உண்டு.
இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே லட்சுமணன் அவதாரம் செய்தான். (ஆம் ராமானுஜராக வந்தது ஆதிசேடனன்றோ) தற்போது ராமபிரானின்
அம்சமாக முதலியாண்டார் அவதரித்தார்.
இவ்வாறு லட்சுமணன் முதலாவதாகவும் ராமன் இரண்டாவதாகவும் அவதாரம் செய்தது பகவத் அவதாரங்களிலேயே இதற்குமுன் ஒருமுறைதான்
நிகழ்ந்தது. அதுதான் ஸ்ரீகிருஷ்ணர் – பலராமர் அவதாரமாகும்.
இவர் (முதலியாண்டார்) பிற்காலத்தே இராமானுஜரின் பிரதம சீடராகத் திகழ்ந்தார். இராமானுஜருக்கு சாத்துமறை நடந்த மறுநாளில் இவருக்கு
சாத்துமறை நடக்கும். இவரது உபதேசங்களுள் மிகவும் முக்கியமானது மூன்று திவ்யங்கள் எனப்படும். அவை.
அ) எம்பெருமானின் தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போல்-ஆ) ஆழ்வார்களின் அருளிச் செயல் அம்ருத பானம் போல
இ) பிராட்டிக்கு ராவண பவனம் போல ஸ்ரீவைணவர்கட்கு ஸம்சாரம்.
சீரறிந்து தோழிமீர் சென்று கொணர்ந்தெனக்குப்
போரமுலை முகட்டிற் பூட்டுமினோ நேரவுணர்
பொன்றவூர் புட்கழுத்திற் பொன்னை மாணிக்கத்தை
நின்றவூர் நித்திலத்தை நீர்–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி
திரு நின்ற ஊர் -தலைவி தோழி யார்க்கு அறத்தொடு நிற்றல் –
சீர் அறிந்து தோழி மீர் சென்று கொணர்ந்து எனக்குப்
போர முலை முகட்டில் பூட்டுமினோ நீர் அவுணர்
பொன்ற ஊர் புட் கழுத்தில் பொன்னை மாணிக்கத்தை
நின்ற ஊர் நித்திலத்தை நீர் –89-
(இ – ள்.) தோழிமீர் – (எனது) பாங்கிமார்களே! –
நீர் – நீங்கள், –
நேர் அவுணர் பொன்ற – எதிர்த்துப்பொருத அசுரர்கள் அழியும்படி,
ஊர் – ஏறிநடத்துகின்ற,
புள் – கருடாழ்வானது,
கழுத்தில் – கழுத்திலே,
பொன்னை – பொன்போலப் பிரகாசிப்பவனும்,
மாணிக்கத்தை – (இயற்கையில்) கருமாணிக்கம்போன்ற கருநிறமுள்ளவனுமாகிய,
நின்றவூர் நித்திலத்தை – திருநின்றவூரென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய முத்துப்போன்றவனை,
சீர் அறிந்து – (அவனது) சிறப்பை யுணர்ந்து, –
சென்று – போய்க்கிட்டி,
கொணர்ந்து – கொண்டுவந்து,
எனக்கு போர – எனக்குத் திருப்தியுண்டாகும்படி
முலை முகட்டில் – (எனது) தனங்களது உச்சியின்மீது,
பூட்டுமின் – அணியுங்கள்; (எ – று.)
திருநின்றவூர்ப் பத்தராவியாகிய தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைவி
அப்பிரிவாற்றாமையாற் பலவாறு நோவுபட, அத்துயர மாத்திரத்தையே கண்ட தோழியர்
அந்நோயின்காரணமும் அதற்குப்பரிகாரமும் இன்னவென்று உணராது வேறுபலவகையாக ஆராய்ந்து
பரிகாரஞ்செய்யத் தொடங்கியபோது நோயொன்றும் மருந்தொன்று மாகையாலே அந்நோய் தீராது வளர,
அதனை ஆற்றமாட்டாத அந்தத்தலைவி நாணந்துறந்து தானே தனது நோயையும் நோயின்காரணத்தையும்
அந்நோய் தீர்க்கும் மருந்தையும் அம்மருந்தைப் பிரயோகிக்கும் விதத்தையும் உணர்த்துதல், இச்செய்யுளிற் கூறிய விஷயம்.
இங்ஙனம் களவைவெளிப்படுத்துதலின் காரணம் – தன்கருத்தைத் தோழியர்மூலமாகத் தாய்மார்க்கும் அவர்கள்
மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்கும் தெரிவித்துத் தன்னை அவனுக்கே விரைவில் வெளிப்படையாக
மணஞ்செய்துவைக்கும்படி கொள்ளும் விருப்பம்.
எம்பெருமானை – பெறுதற்கு அருமையும் ஒண்மையும் பற்றிப் பொன்னாகவும், கருநிறம்பற்றி மாணிக்கமாகவும்,
ஸ்ரமஹரமாயிருத்தல்பற்றி முத்தாகவும் கூறினள்;
“வெள்ளறையுள் கல்லறைமேற்பொன்னை மரதகத்தை,”
“நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை,”
“நின்றவூர் நித்திலத்தை” என்ற ஆன்றோர் அருளிச்செயல்கள் காண்க.
எம்பெருமானொருத்தனையே இவ்வாறு பொன்னாகவும் மாணிக்கமாகவும் நித்திலமாகவும் குணபேதத்தால் வியப்புத்தோன்றக் கூறியது –
பலபடப்புனைவணியாம். எம்பெருமானைப் பொன்மாணிக்கம் முத்து என்று உருவகத்தாற் கூறியதற்கு ஏற்ப,
“முலை முகட்டிற்பூட்டுமின்’ என்று தலைவி சமத்காரந்தோன்றக் கூறினள்;
பொன் முதலியவை முலைமுகட்டிற் பூணத்தக்க பொருள்களாதல் காண்க. ‘முலைமுகட்டிற்பூட்டுமினோ’ என்றதனால்,
“மலராள்தனத்துள்ளான்” என்றவாறு அப்பிராட்டியோடொப்ப எம்பெருமானைத் தான் அநுபவிக்கப்
பாரிக்கின்றனள் இத்தலைவி யென்பது பெறப்படும்.
சீர் அறிந்து என்பதற்கு – “மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலை யெம்மாயற்கல்லால்” என்றபடி
அவ்வெம்பெருமானுக்கன்றி மற்றொருத்தற்குப் பேச்சுப்படாதபடி அநந்யார்ஹையான எனது சிறப்பை யறிந்து என்றும் உரைக்கலாம்.
எம்பெருமான் ஒருகால் காட்சிகொடுத்து மறைய, பின்பு பிரிவாற்றாது வருந்துகின்ற ஐயங்கார் தம்பக்கல்
பரிவுடையாரை நோக்கி ‘எம்பெருமானை என்னிடத்திற்சேர்த்து என்னை ரக்ஷிக்கப் பாருங்கள்’ என்று பிரார்த்தித்தல்,
இதற்கு உள்ளுறைபொருள். விவரம் உய்த்து உணர்க.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply