ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது–பாபாநாம் வா ஶுபா4நாம் வா–யுத்த காண்டம் ஸர்க்கம்-116; ஶ்லோகம்-44-

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

பாபாநாம் வா ஸூபாநாம் வா -பாபிகள்  விஷயத்திலும் புண்ணியவான்கள் விஷயத்திலும்
வதார்ஹாணாம் -கொல்லத் தக்கவர் விஷயத்திலும்
பிலவங்கம-வானரனே
கார்யம் கருண கார்யேண-நல்லோனாலே கருணை யானது செய்யத் தக்கது
ந கச்சின் நாபராத்யதி-எவனும்  குற்றம் செய்ய வில்லை எனபது இல்லையே –

அவதாரிகை –
ராவணனும் பட்டுப் பெருமாளும் விஜயிகளானார்என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாய் இருக்க
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம் போலே
கிந்நு சிந்தயசே தேவி கிம் தவம் மாம் நாபி பாஷசே -116-16- என்று
பெரிய பிரியத்தை விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாதே தேவர் எழுந்து அருளி இருக்கிற இருப்பு என் தான் -என்று திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் உனக்கு சத்ருசமாகத் தரலாவது ஓன்று இல்லாமை காண்நான் பேசாது இருந்தது என்ன
இவனும் இவ்வளவில் நம் அபேஷிதத்தை விண்ணப்பம் செய்து கொள்வோம் என்று பார்த்து
தேவரை சுற்று முற்றும் நலிந்த ராஷசிகள் ஆகிறார்-க்ரூரைகளாய் தத் அநு குண பாவைகளாய் ஆயிற்று –
ராவணனுக்கு முன்னே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளை யாயிற்று –
அவனும் இவர்களோபாதி கேடன் அல்லன் –
இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினால் போலே இருக்கிறார்கள் அத்தனை ஆயிற்று
இவர்களை பஹூ பிரகாரமாக ஹிம்சிக்கப் பாரா நின்றேன் –
முஷ்டிபி பாணிபிஸ் சைவ -116-33- என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சேதித்தும் பற்களாலே கடித்தும் துடித்தும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -94-22-என்று பெருமாள் திருச் சரங்கள் செய்தது எல்லாம் நானே பண்ணப் பாரா நின்றேன்
முன்பு வந்த போது இடம் இல்லாமல் விட்டுப் போனேன் இத்தனை
இப்போது எனக்கு எல்லா பிரத்யுபகாரங்களும் பண்ணி அருளிற்று ஆகலாம் -இத்தனையும் திரு உள்ளமாக வேணும் -என்ன -பாபா நாம் வா -என்று அருளிச் செய்கிறாள் –

பாபாநாம் வா ஸூபாநாம் வா –
இவர்கள் நீ நினைத்து இருக்கிறபடியே பாபைகள் ஆக வுமாம் –
நான் நினைத்து இருக்கிறபடியே ஸூபைகள் ஆக வுமாம் –
அது தானே யன்றே உத்தேச்யம் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றால் போலே அழுக்கு உடையவன் அன்றோ குளிக்க ப்ராப்தி யுடையான்
அவர்கள் பாபைகள் ஆகில் அன்றோ நாம் முகம் கொடுக்க வேண்டுவது
சுபைகள் ஆகில் உன் வால் வேணுமோ –அவர்கள் புண்யங்களே கை கொடுக்குமே –
கை முதல் இல்லார்தார்க்கு அன்றோ கை முதலாக வேண்டுவது -என்றாள்-

வதார்ஹாணாம்
தண்ட்யனை தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்ம சாஸ்திரம் தேவரீரைத் தோற்றி கிழுத்துப்  பொகடக் கடவதோ -என்கிறாள் –

ப்லவங்கம்-
பின்னையும் அவன் புத்தி திரிய விடாமையாலே -ஹரி ஹரி -என்கிறாள் –
அன்றிக்கே -ப்லவங்கம் -என்று
நச்சினத்தை நச்சும் ஜாதி யானமை கண்டோம் -என்கிறாள் –
வசிஷ்ட ப்ரப்ருதிகள் மந்த்ரிக்கும் படியான இஷ்வாகு வம்சத்தில் பிறந்தாய் அல்லை –
யோகிகளாய் ஜனக குலத்திலே பிறந்தாய் அல்லை –
காட்டிலே பணை யோடு பணை தாவித் திரிகிற ஜாதியிலே இ றே பிறந்தது –
அங்கன் ஒத்தாருக்கு சரணாகதியோட்டையது தெரியாது -என்கிறாள் –
வா நரோத்தம -16-18-என்றவள் தானே இ றே ப்லவங்கம் -என்றாள்
ராஜாக்க்களுமாய் மூலையடியெ நடக்க யுரியருமாய் இருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்
நீ வா நர ஜாதியாய் இருந்து வைத்து இங்கனே கோபிக்கக் கடவையோ –

கார்யம் கருண கார்யேண –
இவர்கள் புண்ய பாபம் கிடக்க இப்போது ஓடுகிற தய நீய தசையைப் பாராய் –
இவர்களுக்கு ஒரு ரஷகன் அல்லையே
இப்போது இவ்வளவிலே நாம் இரங்க வேணும் காண் –
ஆர்யேண-நல்லோனாலே –
இவை எல்லாம் இப்போது நான்  கற்பிக்க வேண்டும்படி யாவதே உனக்கு –
ஆர்யேண-
ஐந்த்ரவ்யாகரண  பண்டிதன் என்கிறது பொய்யோ –
அவையும் எல்லாம் கற்றுக் கேட்டு இருக்கச் செய்தேயும் இப்போது ராம கோஷ்டியில் பரிசயமான படி யாகாதே
அந்த கோஷ்டியில் பரிசயம் பழக்கம் இ றே நீ இங்கனே சொல்ல வல்லை யாயிற்று
நான் பிரிந்த பின்பு அக் கோஷ்டி இங்கனே நீர்த்தது ஆகாதே -நீர் விடப் பட்ட பால் போலே -என்று கருத்து –
ந கச்சின் நாபராத்யதி -குற்றம் செய்யாதவன் ஒருத்தனும் இல்லை –
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார் –
திரை நீக்கிக் கடலாடப் போமோ
நல குதிரையாக பாவித்து இருக்கிற பெருமாள் தான் குற்றவாளர் அல்லரோ
நான் தான் குற்றப்பட்டவள் அல்லேனோ-
பெருமாள் குற்றவாளர் ஆனபடி என் என்னில்  -தாம் காடேறப் போனார் -அவர் பின்னே மடலூருவாரைப் போலே இளைய பெருமாளும் போந்தார்
தம்மோடு ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்-
என்னைப் பிரிந்து பத்து மாசம் இருந்தார்
நான் வராவிட்டால் தன்னதோரம்பு இயங்க மாட்டாமை இல்லை இ றே
இவ்வழி இத்தனை நாள் பிரிந்து இருக்க வல்லரான போதுபெருமாள் பக்கலிலே யல்லவே குற்றம்
பார தந்த்ர்யத்துக்கு அநுகுணமாக பேசாது இராதே அது தன்னைச் சொன்ன என் பக்கலில் அன்றோ குற்றம்
இந் நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரை தண்டிக்கப் பார்த்த அன்று பெருமாள் அருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்பட தண்டித்து கொண்டு அன்றோ
ராவணன் சொன்ன கார்யம் செய்த இவர்களை தண்டிப்பது
ஆகையால் நீ அல்லையோ குற்றவாளன்
எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி யோடு போக வேண்டி இருந்த அன்று எனக்கு நீ யுண்டு -என்று இருந்தேன்
நீயும் இங்கனே யானால் அபராதம் செய்வார்க்குப் புகலாவார் உண்டோ -என்கிறாள் –

அஜ்ஞாத நிக்ரஹ -கோபம் என்பதையே அறியாதவள் -நம் போல்வாருக்கு தஞ்சம் ஆவது பெருமாள் உடைய சரம ஸ்லோகம் அன்று
பிராட்டி யுடைய இந்த சரம ஸ்லோகமே நமக்கு தஞ்சமாகக் கடவது –

மாதர் மைதிலி  ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்தி ஷமௌ ரஷத
ஸா ந சாந்திர மஹாக ஸ ஸூ காது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ-ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

—————————————

பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாநாம் ப்லவங்க3|

கார்யம் கருணமார்யேண   கஶ்சிந் நாபராத்4யதி ||

பொழிப்புரை:
வானரனே! பாபிகள் விஷயத்திலும், புண்ணியவான்கள் விஷயத்திலும்,கொல்லத்தக்கவர் விஷயத்திலும்
நல்லோனாலே கருணையானது செய்யத்தக்கது. எவனும் குற்றம் செய்யவில்லை என்பது இல்லையே.

இராவணன் அழிந்து, இராமபிரான் போரில் ஜயித்தார் என்னும் இனிய செய்தியை ஸீதா பிராட்டியிடம் அநுமன் விண்ணப்பம் செய்ய,
பிராட்டியும் உகப்பின் மிகுதியாலே, விம்மல், பொருமல்கள் ஏற்பட்டு செயலற்றவளாயிருக்க, ‘தேவி! என்ன நினைக்கிறீர்? தேவரீர் எதனால் என்னோடு பேசவில்லை?’
[கிந்நு சிந்தயஸே தே3வி, கிம் த்வம் மாம் நாபி4பா4ஷஸே; யுத்.கா. 116-16 ] என்று வினவினான்.
தேவியும் பதிலிறுத்தாள்
‘நீ செய்த பேருபகாரத்துக்குத் தக்கபடி தரக்கூடியதொன்றில்லையே என்று நினைத்தே பேசாமலிருந்தேன்’ என்று கூற
அநுமனும், ‘தேவரீரைச் சூழ்ந்திருந்து துன்புறுத்திய இந்த அரக்கிகள் ராவணனைக் காட்டிலும் கொடியவர்கள்,
ராவணனுக்கு முன்னமேயே இவர்களைக் கொன்றிருக்க வேண்டும். ராவணன் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதனால் அடங்கி இருக்கிறார்கள்.
இவர்களை என் கையால் துன்புறுத்திக் கொல்வதற்கு தேவரீர் அநுமதி தரவேண்டும்
பகவானிடம் அபசாரம் செய்தவர்களையும், பாகவதாபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் ரீதியிலே தண்டிக்க முயற்சிக்கிறேன்.
முன்பு வந்தபோது அவகாஶமின்மையாலே விட்டுப்போனேன்.
இபோது இந்த வரத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்.
இதைக் கேட்ட பிராட்டி பதிலிறுக்கும் வண்ணம் இந்த ஶ்லோகத்தை அருளிச் செய்கிறார்.

பாபிகளானும், பரிஶுத்தர்களானாலும்
(பாபாநாம் வா ஶுபா4நாம் வா) நீ நினைக்கிறபடி பாபமே செய்தவர்களாக இருப்பினும் சரி,
நான் நினைத்தபடி பரிஶுத்தர்களாக இருப்பினும் சரி, எப்படியிருந்தாலும் கருணை காட்டவேண்டியதே.
பரிஶுத்தர்களாகில் கருணை காட்டவேண்டும் என்பதை நீயே அறிவாய்.
பாபிகள் பக்ஷத்திலும் கருணையே காட்டப்படவேண்டும் என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டுகிறேன்.
‘கருணை காட்டுவதற்கு மஹாபாபிகள் கிடைக்கமாட்டார்களா?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நல்லோர்கள்.
‘குற்றமுளதாகில் மிகவும் நன்று’ [ தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்; யுத்.கா.18-3] என்ற இராமபிரானைப் போலே,
அழுக்குடையவனைத்தானே குளிப்பாட்ட வேண்டும்.  அதுபோலவே பாபமாகிற அழுக்குடையவர்கள் அகப்பட்டால்,
கருணையான குளிர்நீராலே அவர்களைக் குளிப்பாட்ட வேண்டியிருக்கும்.
ஆகையால் ராக்ஷஸிகள் பாபம் செய்திருப்பதால்தான் அவர்களுக்குக் கருணை முகம் காட்டவேண்டும்.
பாபமற்றவராகில் அவர்கள் தாமாகவே கடைத்தேறிவிடுவார்கள்.
தங்களைக் கடைத்தேற்றிக் கொள்ளத் தம் கையில் ஒன்றும் இல்லாதவர்களையன்றோ நல்லோர்கள்  கைதூக்கி விடவேண்டும்.
இதைக்கேட்ட அநுமன், ‘அப்படியென்றால் தர்ம ஶாஸ்திரங்களைத் தூக்கி எறிய வேண்டுமோ?’ என வினவ,
அதற்கு பிராட்டி சொன்னாள், ‘கொல்லத்தக்கவரானாலும் (வதா4ர்ஹாணாம்) நீ சொன்னது ஸாமாந்ய ஶாஸ்திரம்’.
ஆகையால், கொல்லத்தக்கவனாயினும் ஶரணமடைந்தவனைக் கைவிடுவதில்லை’
[தஸ்மாத3பி வத்3யம் ப்ரபந்நம் ப்ரதிப்ரயச்சந்தி; யஜு.ஸம்.6-5-20] என்கிற விஶேஷ ஶாஸ்திரத்தைக் கிழித்துப் போடவேண்டுமே’.
ஸாமாந்ய ஶாஸ்திரத்துக்கும், விஶேஷ ஶாஸ்திரத்துக்கும் விரோதம் வந்தால், ஸாமாந்ய ஶாஸ்திரத்தைத் தள்ளி
விஶேஷ ஶாஸ்திரத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்கிறாள் பிராட்டி.
இதைக் கேட்டும் அநுமன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமையாலே, பிராட்டி, ‘ஹரி, ஹரி’ என்கிறாள்.
பிடித்த பிடியை விடாத உன் குரங்கு புத்தியைத்தான் உன் செயலில் காண்கிறேன்.
வஸிஷ்டர், வாமதேவர் முதலானோர் மந்த்ராலோசனை வழங்கக்கூடிய இக்ஷ்வாகு வம்ஶத்தில் பிறந்தவன் அல்லையே நீ.
கர்மயோகியான ஜனகரின் வம்ஶமுமன்று.
காட்டில் கிளைக்குக் கிளை தாவித்திரியும் ஜாதியிலன்றோ நீ பிறந்தது!
அப்பேர்பட்ட உனக்கு ஶரணாகதியின் பெருமை எப்படித் தெரியும்?
பேருபகாரம் செய்த அநுமனை இப்படிப் பிராட்டி நிந்திக்கலாமோவெனில்,
அன்று அவன் செய்த பேருபகாரத்துக்குத் தோற்று ‘வானரோத்தம’ என்றவள்,
இன்று அவன் அடாத செயல் புரிவதில் பிடிவாதமாய் இருப்பதைக் காண்கையாலே, அவனைத் திருத்துமுகமாக
‘குரங்கே’ என்று நிந்திக்கிறாள் என்று கொண்டால் குற்றமில்லை.
ராஜாவாய், இஷ்டப்படி நடக்கத்தக்க ஸ்வாதந்த்ரியமுடைய இராமபிரானும் எங்கள்முன் இத்தனை கோபமாகப் பேசியறியார்.
நீ கேவலம் ஒரு குரங்காயிருந்து என்முன்னம் இத்தனை கோபமாய்ப் பேசலாமோ?

நல்லோனால் கருணை காட்டப்படவேண்டும் (கார்யம் கருணமார்யேண).
இவர்களுடைய புண்ணிய பாபத்தைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு? அது நிற்க.
இப்போது இவர்களுடைய வருந்தத்தக்க நிலையைப் பார். உன்னைப்போல் ஒருவன் இவர்களைத் துன்புறுத்தினால், ரக்ஷிப்பதற்கு இங்கு ஒருவருமில்லை.
இப்படிப்பட்ட ஸமயத்தில் இவர்களுக்காகவன்றோ நாம் இரங்க வேண்டும்.
நல்லோனன உனக்கு நான் இப்போது இவையெல்லாம் சொல்லித்தரவேண்டியுள்ளதே!
நீ ஐந்திர வியாகரணம் கற்றிலையோ? இப்படி எல்லா ஶாஸ்திரமும் கற்றிருந்தும், ராம கோஷ்டியில் பழகின பின்னர் இத்தன்மையுடையனானாய் போலும்!
நான் பிரிந்த பின்னர் பெருமாளுடைய கோஷ்டி நீர் விடப்பட்ட  பால்போலே தரம் குறைந்து போயிற்று போலும்!

குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே (ந கஶ்சிந் நாபராத்4யதி)
இந்த உலக வாழ்க்கையில் குற்றமில்லாதவர் யார்?
அலைபோனபின்பு கடலில் குளிக்கலாம் என்று சொல்லமுடியுமோ?
அதுபோலவே, குற்றமில்லாதாரைப் பார்த்து கருணை காட்டுவேன் என்று சொன்னால்,
கருணை காட்டுவதற்கு ஒருவருமே அகப்படமாட்டார்களன்றோ?
குதிரைகளில் சிறந்த குதிரை ‘நற்குதிரை’ என்பதுபோலே, ‘நன்மனிதர்’ என்று மனிதரில் சிறந்தவராகத் வேஷமிட்டுக்
கொண்டிருக்கும் இராமபிரான் மட்டும் குற்றம் செய்யாதவரா?
நான்தான் குற்றம் செய்யாதவளா?
நீதான் குற்றம் செய்யாதவனோ?

ராமபிரான் என்ன குற்றம் செய்தார்-எனில்,
அவர் காடு சென்றார். மடலூருவாரைபோலே இலக்ஷ்மணனும் இவர் சென்றவிடமெல்லாம் சென்றார்.
இராமபிரானோடு காட்டில் இஷ்டப்படியெல்லாம் திரிந்து விளையாடலாம் என்று நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.
இப்படிப்பட்ட என்னைப் பிரிந்து பத்து மாஸம் இருந்தார்.
ஓர் அம்பைவிட்டு ராவணனை நினைத்த மாத்திரத்தில் ஏன் மாய்க்கவில்லை?
இதைச் செய்ய வல்லவராயிருந்தும் என்னைப்பிரிந்தே இருக்க வல்லவரானபோதே பெருமாள் குற்றம் செய்தவர் என்பது தெரியவில்லையா?

என்னுடைய பாரதந்திரியத்துக்குத் தக்கவாறு அவர் என்ன செய்தபோதிலும் நான் பேசாமலிராமல்,
அவர் குற்றத்தை உன்னிடம் சொன்னபோதே, நானும் குற்றவாளியாகிறேன்.

தன் தலைவனான ராவணன் கட்டளையை நிறைவேற்ற இந்த அரக்கிகளை நீ தண்டிக்க நினைத்தால்,
முதலில் நீ உன் தலைவனான ராமனின் கட்டளையைச் செய்வதால் உன்னையன்றோ முதலில் தண்டிக்க வேண்டும்!

ஆகையால், நீ சொல்லுகின்ற காரணத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் நீயும் குற்றம் செய்தவனாகிறாய்.

ஆகவிப்படி, ராமபிரானும், நானும், நீயும் குற்றவாளிகள் ஆனபடியால், உலகில் குற்றம் செய்யாதவர்கள் யார்?
அதாவது, எல்லாவிதத்திலும் ஒரு சேதனனைப் பெருமாள் கோபித்தபோது, அந்தக் கோபத்தை ஆற்றிவிடுவதற்காக (புருஷகார பூ4தையான) நான் உண்டு.
நானும் அவர் வழியிலே சென்று ஒரு சேதனனைக் கைவிடுமேயானால் ஆசார்யனான நீ உண்டு
அச்சேதனனையும் எங்களையும் திருத்திச் சேர்ப்பிப்பதற்கு என்று நினைத்திருந்தேன்.
நீயும் இப்படிக் கருணையற்றவனானால் குற்றம் செய்தவற்கு யார் புகல்? என்கிறாள்
கோபம் என்பதையே அறியாதவள் (அஜ்ஞாத நிக்3ரஹா), கருணையே வடிவெடுத்தவள் (கருணா) என்று ஶாஸ்திரங்களில் பேசப்படும் பிராட்டி.

அரக்கிகளிலும் கொடிய நம்மைப் போன்ற மஹாபாபிகளுக்குத் தஞ்சமாவது பெருமாளுடைய சரமஶ்லோகங்களல்ல; பிராட்டியினுடைய இந்தச் சரமஶ்லோகமே நமக்கு எப்போதும் தஞ்சமாகக் கடவது.

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ சீதா ராம ஜெயம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading