ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள் –ஆறாம் பத்து –

கழகம் ஏறேல் நம்பீ – அவர்கள் முன்னம் ஆனார் ஆகிடுக; 3ஏறிட்டுக் கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ? (இதற்கு முன்பு  இல்லாத ஆசார்ய பதத்தை ஏறிட்டுக்கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ  என்னுதல். அன்றிக்கே, போம் வழியும் போனால் செய்யும்படிகளும்  சொல்லுமதனை ஏறிட்டுக்கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ என்னுதல்.)நீர் முன்னம் எங்கள் ஓலக்கத்தில் புகுராதே கொள்ளும்.–இவ்விடத்தே பட்டர் அருளிச்செய்வது ஒருவார்த்தை உண்டு. அதாவது, “சமஸ்த கல்யாண குணாத்மகனாய் உபய விபூதியுக்தனாய் ஸர்வாதிகனாய் ஸர்வநியந்தாவாயிருக்கிற சர்வேசுவரன் நான்கு இடைப்பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்கமாட்டாத செல்லாமை விளைய, அவர்கள் ‘நீ இங்குப் புகுராதே கொள்’ என்ன, விலங்கு இட்டாற்போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற சௌசீல்யம் யார் அறிந்து கொண்டாட வியாசர் முதலாயினோர் எழுதியிட்டு வைத்துப்போனார்களோ?” என்பது.

(உணக்கி நீ வளைத்தால்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி, இவன்  அவர்களை வளைத்துக் கிடக்கும்போது, இவன் மிறுக்குக் காரணமாக  அவர்கள் போகப் புக்கார்களாக வேண்டும் என்கிறார்-)-கிட்டுநின்று இவர்களைச் சிலமிறுக்குக்களைச் செய்யப் புக்கான்; ‘இங்கே இருக்கில் அன்றோ இவைஎல்லாம் செய்வது’ என்று பார்த்து, ஒருவர் ஒருவராகப் போகப் புக்கார்கள். ‘இதுவோ பார்த்தபடி!’ என்று வழியைப்பற்றி இருவிலங்காகக் கிடந்தான். பூஞ்சோலையாகையாலே வழி ஓர் அடிப்பாடாய் இருக்குமன்றோ-இப்பாசுரத்தைச் சீயர் அருளிச்செய்யாநிற்கச்செய்தே அங்கே இருந்தவரான ஆப்பான் ‘இவர்கள் இவனைக் கடந்து போனார்களாகிற் செய்வது என்?’ என்று கேட்க, ‘அது யார் காரியம்? பின்னை இரண்டத்தில் ஒன்று சித்திக்கும் என்றன்றோ அவன்தான் கிடந்தது!’ என்று அருளிச்செய்தார்.(இரண்டத்தில் ஒன்று’ என்றது, தகைவுபட்டு நிற்கையாதல், கடந்து  போகும்போது தீண்டுதலாதல். கிடக்கின்றவனைத் தீண்டாமல் தாண்ட  முடியாதே.)

ஞானிகட்கு எல்லாம் பரம்பொருள் மயமாகவே தோற்றும் என்பதற்கு  ஐதிஹ்யம் காட்டுகிறார்-நல்லாரும் நம்பி சேநாபதி தாசரும் கூடத் திருமலைக்குப் போகா நிற்க, ஸ்ரீ நம்பிசேநாபதிதாசர் ஒரு கோலை இட்டுத் தூற்றை அடிக்க, நல்லார், அர்த்தகாம நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கே இருக்க, ஒரு காரணமும் இல்லாமல் ஈசுவரனுடைய விபூதியை நலிவதே? என்ற வார்த்தையை நினைப்பது.

சீயர், இத் திருப்பாசுரத்தை அருளிச்செய்யப் புக்கால் “நோவ” என்று அருளிச்செய்யும் அழகு காணும். ‘நோவ’ என்கிறார் காணும் ஆழ்வார், தம் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே.ஒரு துவேஷம் உண்டாய்க் கட்டுகிறாள் அல்லளே, சிநேக காரியமான கோபமாகையாலே சிநேகமுள்ள அளவும் இடைநிற்கும் அன்றோ கோபமும். தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து ஓடியன்றோ, விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்; வாய்விட்டு அழமாட்டாதது அன்றோ இவரை வருத்துகிறது.

விண்மிசைத் தன தாமமே புக்கான். உத்தமம் – -கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம் இன்றியே, தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி-ஒரு தீர்த்தத்தினன்று ஞாயிறுபோது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து, ‘யான் எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப்பட்டவராய் இருப்பார் பத்துக்கோடிபேர் நடுவே, அதி சுகுமாரமான திருமேனியைக் கொண்டு பத்துநாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே! என்று ஒருவரை ஒருவர் தண்டனிட்டுத் தழுவிக் கொள்ளா நிற்கக் கண்டேன்’ என்று சீயர் அருளிச்செய்வர்.

ஆளவந்தார், மணக்கால் நம்பி பக்கல் எம்பெருமானைக் கேட்டவுடனே, ‘உபாயம் இதற்குமேல் இல்லை; இவ்விஷயத்தை இப்போதே நேரே காண்டற்கு விரகு இல்லையோ?’ என்றாராம்.அப்படிக் கண்டவுடனே கண்ணநீர் வெள்ளமிடப்புகுந்த தத்தனை.

மரங்களும் இரங்கும் வகை – 3(மரங்களும்” என்ற உம்மை, மக்களைத்  தழுவுகிறது.)சேதனம் என்றும், அசேதனம் என்றும் வேறுபாடு அற அழியும்படி காணும், இவள் வாய்விட்டுக் கூப்பிடும் படி-எம்பாரை ‘மரங்களும் இரங்கக்கூடுமோ?’ என்று கேட்க, ‘இது அருளிச்செய்த அன்று தொடங்கி எத்தனை பாவசுத்தி இல்லாதார் வாயிலே புக்கது என்று தெரியாது; இங்ஙனே இருக்கச் செய்தே, இயமம் நியமம் முதலிய யோக உறுப்புக்களாலே பதம் செய்யப் பார்த்தாலும் சுக்கான்பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி கண்டால் சமகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ?’ என்று அருளிச்செய்தார்–மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்” (பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 4)என்று அவதாரத்தில் திருக்குழல் ஓசையில் பட்ட எல்லாம் இத் துன்ப ஒலியிலே படுமாயின; “அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:”“(ஸ்ரீராமா. அயோத். 59 : 10.)மரங்களும் வாடி நின்றன” என்று, இராமனைப்பிரிந்த பிரிவில் பட்ட எல்லாம் இவள்பேச்சிலே படாநின்றன-

அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ’ என்று சேதனராகில் மங்களாசாசனம் செய்யக்கடவது.–நஞ்சீயர், ‘பிள்ளை திருநறையூர் அரையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன், அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது; ஒரு திருவாய்மொழியைச் சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ணநீருமாய் இருக்கும் இருப்பை நினைத்திருப்பன்’ என்று அருளிச்செய்வர்.-ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:-விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக்கண்ணீர் போலன்றிக்கே, பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாவது புளகீக்ருத காத்ரவாந் – உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது. பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப்போலே. அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும் பார்க்கத் தகுந்தவன். சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கையாயிற்று. ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும் காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ? ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்  ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”  (ஸ்ரீவிஷ்ணுதத்வம்)

ஈசுவரனே தாரக போஷக போக்யங்கள் எல்லாமாக இருப்பான் என்பதற்கு  ஐதிஸ்யம் காட்டுகிறார் ‘-‘அளந்தாழ்வான் சோழ குலாந்தகனிலே பயிர்த்தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு ஸ்ரீவைஷ்ணவனைக் கண்டு, உம்முடைய ஊர் எது’ என்று கேட்க, ‘என்னுடைய ஊர் திருக்கோளூர்’ என்ன, ‘அங்கு நின்றும் போந்தது என்?’ என்ன, ‘தேகயாத்திரை நடவாமே போந்தேன்’ என்ன, அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்றிலையோ? நிலை நின்ற ஜீவனத்தை விட்டுப் போந்தாயே யன்றோ! என்றானாம்.

புகுமூர் – 3காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறு போலே, சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலே அன்றோ. புகும் ஊர் என்கையாலே, புக்கார் போகும் ஊர் அன்று என்கை.-எம்பெருமானார் தெற்கே எழுந்தருளாநிற்க, எதிரே வருகின்றாள் ஒரு பெண்பிள்ளையைக் கண்டு ‘எங்கு நின்றும்!’ என்ன, ‘திருக்கோளூரில் நின்றும்’ என்ன, ‘அவ்வூரில் புக்க பெண்களும் போகக் கடவர்களாயிருப்பர்களோ?’ என்று அருளிச்செய்தார்.என் இளமான் மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே, இது திண்ணம் – இவள் போய்ப் புகும் ஊர் திருக்கோளூரே, இது நிச்சயம். 5இவ்வூரில் பிள்ளைகளைக் காணாவிட்டால், கோவிலுக்குள் தேடுமத்தனை அன்றோ.

இங்கே இருந்து மானச அநுபவமாத்திரமேயாய்க் கிலேசப் பட்டவள் கண்ணாரக் கண்டு–(அவன் கோயிலைக் கண்களாலே காண்கையே புருஷார்த்தம் என்பதற்கு  இரண்டு ஐதிஹ்யங்கள் காட்டுகிறார்)-பிள்ளை திருநறையூர் அரையரும் பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யாநிற்க, இட்டஅடி மாறி இடமாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்துகொண்டு போகிறபடியைப் பின்னே நின்றுகொண்டு அநுபவித்தேன் என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

ஆச்சானும் ஆண்டானுமாகக் கிழக்கே நடக்கிறபோது, திருப்பேர் நகருக்குக் கிழக்குப் போகவும் மாட்டாதே, ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே, திருப்பேர் நகரான் கோயிலைப்பார்த்துக் கொண்டு இருந்தார்களாம்.

ஆவி உள்குளிர – இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்கச்செய்தே மேல்எழ அருளிச்செய்தாராய், அங்கே இருந்தவரான  கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச்செய்தார். கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறுநனையும்படியா யிருக்கை.

நேர் இழை நடந்தாள் – 1கடைப் பணிக்கூட்டம் (கடைப் பணிக்கூட்டம்  -ஆபரணங்களினுடைய நுனி கூடின இடம்.)கண்டு கொண்டு பின்னே போகவன்றோ இவள் ஆசைப்படுகிறது. நடந்தாள் -(போனாள்’ என்னாமல், “நடந்தாள்” என்று கௌரவமாகச் சொல்லுவான்  என்? என்ன) 2தன் பெண்பிள்ளையே யாகிலும், ‘திருக்கோளூரிலே போக’ என்று நாலடி புறப்பட்ட இவளை இங்ஙனல்லது சொல்ல ஒண்ணாதே அன்றோ. தன் மகளை எங்ஙனே கனக்க நினைத்திருக்கிறாள் தான்! வயிற்றிற் பிறக்கவுமாம், சிஷ்யர்களாகவுமாம்: பகவத் விஷயத்தில் தொடர்புடையவர்கள் உத்தேசியராமித்தனை-ஒருநாள் நம்பிள்ளையை, சீயர், கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடியருளி, ‘தன் சிஷ்யனைத் தான் கொண்டாடாநின்றான்’ என்றிராதே கொண்மின்; “கணபுரம் கைதொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” (பெரிய திருமொழி, 8. 2 : 9.) என்று பண்டு சொன்னாரும் உளர் காணுங்கோள் என்று அருளிச்செய்தார்.

அம்முணி ஆழ்வான், தன் சிஷ்யனைத் தான் தண்டன் இடாநிற்குமாம்; ‘இது என்?’ என்று கேட்க, ‘அல்லாத வைஷ்ணவர்களை ஒழுக்கத்தாலே அறியவேணும்; இவர் நான் அறிய வைஷ்ணவர் என்று ஆதரிப்பன்’ என்றான்.

கலக்கும் காலத்தில் சொன்னதைக் கொண்டு கொடுக்கலாமோ? என்ன,தன்னையும் தன்னுடைமையையும் இவர் இட்ட வழக்கு ஆக்கி இவர்க்கு
அவன் பரதந்திரனாயிருக்கையாலே, இவர் கொடுக்கலாம் என்னுமதனை  ஓர் ஐதிஹ்யமுகத்தால் விளக்குகிறார் –அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நோவிலே, பிள்ளையுறங்காவில்லி தாசரைக் கொண்டு ஆழ்வான் புக, ‘ஆழ்வான் செய்த நெஞ்சாறல் ஆறுவது(ஆழ்வான் செய்த செஞ்சாறல்’ என்றது,  கூரத்தாழ்வார்க்குப் பரமபதத்தைக் கொடுக்கும் சக்தி இருந்தும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார்க்கு  அதனைக் கொடாமல், அவர் படும் துன்பத்தை அவர் கண்டுகொண்டிருந்தமையால் வந்த மனோதுக்கம் என்றபடி) ஆளவந்தார் ஸ்ரீபாதத்து ஏறப்போனால் அன்றோ’ என்ற வார்த்தையை நினைப்பது.

சுக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத் தன்னைக்கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக்கொள்ளவேணும் என்பது சொல்லவும் வேணுமோ?” என்ற இடத்தில் சொல்லுவது ஒருவார்த்தை உண்டு. அது-அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்திலே ஓடுகிறது என்?’ என்ன, ‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என்? என்று கிடந்தேன்’ என்றார்.இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச்செய்யும் வார்த்தை: 2‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது; இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது.

வட தேசத்தினின்றும் போரப் பாடவல்லராயிருப்பார் ஒருத்தர் பெருமாளைத் திருவடி தொழவேணும் என்று வர–நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடிதொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது; இவனை அழைத்துக்கொண்டு சம்பாவனை பண்ணி யருளவேணும்” என்ன, அவரைப் பெருமாள் அருளப்பாடிட்டு, திருப்புன்னைக்கீழ் நின்றும் அவர் நின்றவிடத்தே திருக்கைத்தலத்தே எழுந்தருளி, விண்ணப்பஞ்செய்வார்களை அருளப்பாடிட்டு, “வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்; 1அப்படியே அன்றோ நம் இழவுகளும் திருவுள்ளத்தேபட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.

இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது. இதனால் பிராப்யம் சொல்லுகிறது. ‘கூவிக்கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது. ‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது. 1இதர விஷயங்களின் கான்சி முடியும்படியாய், உன் திருவடிகளின் இனிமை அறிந்து விடமாட்டாத அளவு பிறந்து பின்பு இன்னம் தாழ்க்குமத்தனையோ?–பிள்ளானுடைய அந்திமதசையிலே நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க, “கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”! என்று பலகால் சொல்ல, இதனைக் கேட்டுச் சீயர் அழ, ‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்? அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

பொருந்துமாறு புணராயே” என்றதிலே நோக்காக அவதாரிகை  அருளிச்செய்கிறார்-உன்னை அடைவதற்கு உறுப்பாக நீ கண்டு வைத்த சாதனங்கள் எனக்கு ஒன்றும் உடல் ஆகின்றன இல்லை; ஆன பின்பு, தேவரை நான் அடைவதற்கு எனக்கு என்னத் தனியே ஒரு சாதனம் கண்டுதரவேணும் என்கிறார்.- நஞ்சீயரை, நம்பிள்ளை ஒருநாள் பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லுகின்றார்கள்; நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ? என்று கேட்டருள, நான் அறிகிலேன்; இனி நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப் போலே, (தத்ராபிதஹரம்”  என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி, “தஸ்மின் யதந்த:”
என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று  சொல்லுவாரைப்போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.)அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு என்கை அன்றோ, அது நான் கேட்டறியேன் என்று அருளிச்செய்தார்.

ஸாஹம் கேஸக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவித்யபி ப்ரபோ – நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி நான் மானபங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு? ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே; நீ பரிபவத்தைப் போக்கக்கூடியவனாய் இருக்கச்செய்தே நான் நோவுபடுவதே என்றாளன்றோ

ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா
   பஸ்யதாம் பாண்டுபுத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”  என்பது, மஹாபாரதம்.

கற்றைத் துகில்பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்தோன்
  பற்றித் துகிலுரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்
  கொற்றத் தனித்திகிரிக் கோவிந்தா! நீ அன்றி
  அற்றைக்கும் என்மானம் ஆர்வேறு காத்தாரே. என்பது, வில்லிபாரதம்.

பிரபத்தியினால்  காரியம் இல்லையோ? என்கிற சங்கையைப் போக்குவதற்காக ஓர்  ஐதிஹ்யம் காட்டுகிறார் –நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன், ‘எம்பெருமானே உபாயமாகில் சரணாகதிகொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன, செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து, ஓரான்வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹாபாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக்கொண்டு திருப்பள்ளி அறையிலே புக்கருளினார்.

ஆ ஆ என்னாது – 2ஈசுவரனுக்குப் பிரியம் செய்கையாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ-நஞ்சீயர், ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில் ‘நமக்குப் பகவத்சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில் ‘நமக்குப் பகவத்சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கைவாங்க அமையும் என்றருளிச் செய்தார்.பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர். ஆனால், பிரதிகூலர்பக்கலிலும் கிருபையைச் செய்யவோ? என்னில், அப்படியே யன்றோ இவர்களுக்கு மதம். 4‘கெட்ட வாசனை கழிந்து அநுகூலராகப் பெற்றிலோம்’ என்று இருக்க அன்றோ அடுப்பது-அவன் “இராவணனே யானாலும்” என்றால், அவன் உலகத்திலேயுள்ள இவனுக்கு இத்தனையும் வேண்டாவோ? ஆனால், 1“நண்ணா அசுரர் நலிவெய்த” (திருவாய். 10. 7 : 5.)என்ற இடத்தில், அது எங்ஙனே பொருந்தும்படி? என்னில், அதற்கு என்? நண்ணாமை நிலை நின்ற அன்று கொல்லத் தக்கவனாகிறான். 2யாக காரியங்களில் செய்கிற கொலையைப் போன்று அதுதானே நன்மை ஆகக் கடவது அன்றோ

விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”  என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 35.  இங்கே, “யச்சீல: ஸ்வாமீ தச்சீலோதாஸ:” என்றது, அநுசந்தேயம்.

இமையோர் அதிபதியாய், கொடியா அடுபுள் உடையானாய், செடியார் வினைகள் தீர்மருந்தாய், திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனிவாய்ப் பெருமானாய், அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்–பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும்போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’ என்று இருக்கிறதே, என்ன தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன, “‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சைமாமலைபோல்மேனி’ என்பன போலே இருக்கும் திருப்பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்றருளிச் செய்தார்.

பிராட்டியினுடைய புருஷகாரம் அவசியம் வேண்டும் என்கைக்கு  ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘-ஒருநாள் பட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச்செய்கைக்காக எல்லாரும் செல்லுங்கோள் என்ன, நஞ்சீயரும் எழுந்து சென்று போய் நம்மை ‘இராய்’ என்றருளிச் செய்திலர் என்று வெறுத்திருக்க, அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக்கொண்டிருந்து துவயத்தை அருளிச்செய்த வார்த்தை என்று சீயர் அருளிச்செய்வர்.

“இந்த ஆத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி சம்பந்தத்தால் செய்கிறது என்?” என்று கேட்க, “அது இருக்கிறபடி கேளீர், இராவணனுக்கும் காகத்துக்கும் சம்பந்தமும் செயலும் ஒத்திருக்க, இனி, இராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே இருப்பது ஒன்று உண்டே அன்றோ; அங்ஙன் அன்றிக்கே, தாய் பக்கல் குற்றத்தில் கைதொடனாயிருக்கத் தலைகொண்டு தப்பினான் அன்றோ, அவள் சந்நிதி உண்டாகையாலே. அவள் கடக்க இருக்கையாலே இராவணன் தலை அறுப்புண்டான்.” போக்கு அற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை அவனுக்கும் ஒக்கும் அன்றோ; இங்ஙனே இருக்கச்செய்தேயும் காரியகரமாயிற்றது இல்லை அன்றோ, அவனுக்குப் பிராட்டி சந்நிதி இல்லாமையாலே. இனித்தான், தாயும் தந்தையுமானால் தந்தையைப்போல் அன்றே, மக்கள் பக்கல் தாய் இருக்கும்படி; இவன் செய்த குறைகளைத் தான் காணாக்கண் இட்டிருக்கை அன்றிக்கே, தந்தையிடத்தும் மறைத்துக் காட்டுவாள் ஒருத்தி அன்றோ. ஆகையால் அன்றோ துவயத்தில் பின்பகுதியில் அவனோடு ஒப்புச்சொல்லி, முன்பகுதியில், புருஷகாரமாகையாகிற நீர்மையில் ஏற்றம் சொல்லுகிறது. தொட்டாரைத்தொட்டு(நகஸ்சிந் ந அபராத்யதி” -, ஸ்ரீராமா. யுத். 116 : 44.) 1“குற்றம் செய்யாதார் யாவர்” என்னக்கடவ இவள், ‘நம்மை ஒரு காரியத்தில் ஏவுவது காண்’ என்று காலத்தை எதிர்நோக்கி இருக்குமவனைப் பெற்றால் விடாளே அன்றோ. தன் வார்த்தை கேளாதார்க்கும் கூட (மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா   வதம்ச அநிச்சதா கோரம் த்வயாஅஸௌ புருஷர்ஷப:”ஸ்ரீராமா. சுந். 21 : 19.)2“ஆடவர்களுள் ஏறு போன்றவரான இந்த இராமபிரான், இராச்சியத்தை விரும்புகிறவனாயிருக்கிற உன்னால் சிநேகிதராகச் செய்து கோடற்குத் தக்கவர்” என்னக்கடவ இவள், தன் முகம் பார்த்து வார்த்தை கேட்குமவனைப் பெற்றால் விடாளே அன்றோ.(தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”  , ஸ்ரீரா. யுத். 116 : 40.) 3“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்” என்றாளே அன்றோ. என்றது, திருவடி, ‘அரக்கியர்களை என்கையில் காட்டித்தரவேணும்’ என்ன, ‘பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ என்றபடி. ஈண்டு, “துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில், திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின், பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading