ஸ்ரீ பகவத் கீதை வெண்பா பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
14 ஆம் நூற்றாண்டில் வாதிகேசரி – அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் என்பவரால் இயற்றப்பட்டது. இது வெண்பாவால் ஆன நூல்.
பாயிர வெண்பாக்கள் 223.
இந்த நூலுக்குப் பதினெட்டு ஓத்து என்னும் பெயரை நூலாசிரியர் சூட்டியுள்ளார்.
மாயனருள் கீதை மன்னு பொருடன்னைத்
தூய பெரும்பூதூர்த் தொன்முனிதன்–மேய
தகையான் மணவாள மா முனிவன் சொன்னான்
தொகையாரும் லெண்பாச் சுரந்து.
சொட்டை மணவாளத் தூ முனிவன் சொல் செறிந்த
சிட்டம் மருவும் தமிழ்ப் பாவால் – கட்டு எழில் சீர்க்
கோமான் அருள் கீதை கூறும் பொருள் உணர்வோர்
சீமான் அடி சேர்வர் சென்று.-ஆசிரியர் பெயரைக் குறிப்பிடும் பாடல்
————
1. கண்ணாநீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
திண்ணார் திறபருளுஞ் சீர்கீதை – யெண்ணாரு
நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
புன்பொருளிற் போகா புலன்.
2. மாதவன் மாமாது மாறனும்வண் பூதூர்வாழ்
போதமுனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
வுச்சிமேற் கொண்டே யுயர்கீதை மெய்ப்பொருளை
நச்சிமேற் கொண்டுரைப்பன் னான்.
3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.
4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
பொருள்விரித்த பூதூர்மன் பொன்னருளால் வந்த
தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.–இராமானுசரின் மாபாடியத்தைப் பின்பற்றிப் பாடியதாகச் சொல்லும் பாடல்
5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
லிருணூற வேற்றுகேன் யான்.–இருள் நூந -அஞ்ஞான இருள் கெட
6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.
தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
(பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பரப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.
7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
முன்னாறோத் தோதும் முயன்று.
ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.
8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
யிடையாறோத் தோது மெடுத்து.
உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.
9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
பின்னாறோத் தோதும் பெயர்ந்து.
கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.
கன்ம உயிர் உணர்வால் கட்டவரு முன்னாறு
நன்மை இறை பத்தி நடுவாறு தன்மையுடன்
காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை
யேய வமைந்தேலும் ஈறு ஆறு
13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:
ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
நன்மையுடன் சொல்லு நயந்து.
ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
சோதித்து – ஆராய்ந்து,
நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்
இந்தச் சரீர இகல் விசயா கேத்திரம் என்று
அந்தப் பரிசறிவார் ஆய்ந்து உரைப்பார் –முந்தி தனை
ஈங்கு அறிவான் கேத்திரஞ்ஞன் என்றும் உயிர் என்றவனை
யாங்கு அறிவார் சொல்வார் அமைந்து –1-
கேத்திரங்கள் எங்கும் அமர் கேத்திரஞ்ஞனாக
பார்த்து அறிவு மேவு நீ பார்த்தனே –சீர்த்த
இவை இரண்டு மற்றும் அறியும் இந்த அறிவுக்கு
நவையில் அறிவு என்று அறிவனான்–2-
அக்கேத்திரம் யாதாம் அங்கு எவ்வாறு இவ்விகற்பு
மிக்கெதிலாம் எம் மயமாய் மேவி அமரும் தக்க விவன்
தான் எவன் எத்தகையோன் சார்ந்த சுருக்கத்ததனை
யான் நேர்ந்து சொல்லக்கேள் இங்கு –3-
போத முனிவர் புகல்வர் பல வகையே
வேதம் விவிதக்கால் வேறு பட -வோதுமது
வேதாந்த ஸூத்ரங்கள் வேறுரைக்கும் ஏதுவுடன்
மீதார்ந்த நிச்சயத்தான் மிக்கு –4-
பூதங்கள் பூதாதி புத்தி ப்ரக்ருதி
யோதிந்தி யம் பதினொன்று ஒண் புலன் ஐந்து இதில் வரும்
இச்சை சினம் இன்ப துன்ப மேலும் உடல் சேதனை தாதுச்
சிருப்பிதாகும் சுருக்கு –5-
இவ்வியல்பில் கேத்திரம் தான் இன்னே சுருக்காக
வல் வினை சேர் காரியத்தோடு ஆய்ந்து உரைத்தேன் செவ்வியுடன்
ஆர் உயிரின் தன்மை அறிவாம் உபாயங்கள்
சேரு நெறி கேண்மின் சிறந்து –6-
மானமுடனே டம்பம் வன் கொலையின் மாறு நிலை
யான பொறை செவ்வை யமர் குருவின் பான் அணுகல்
சுத்தி யமர் வுற்ற துணி யுடைமை சூழ் மனத்தைச்
சித்தி யளவும் செறுப்பு –7-
இந்தியங்கள் சார் பொருளில் ஒன்றும் துறந்து இருத்தல்
வந்தியலும் ஆங்கார மற்று ஒழிதல் –புந்தியினால்
சென்ம மரண சரை நோய் சேர் துக்கமாம்
புன்மை யுணரும் புணர்ப்பு –8–
நின்ற நசை யறுதல் நேர் புதல்வர் தாரம் மனை
ஓன்று மனம் அங்கு ஒழிவித்தல் என்றுஞ்சமன்
ஆர்ந்தே இருத்தல் உகப்பு வெறுப்பாம் பொருள்கள்
சேர்ந்து வரலிற் றெளிந்து –9-
என் பால் அநநியிமாய் எய்ந்து புறம் போகாத
வன்பாரும் பத்தி யமர் யுறுத லின்பார்
தனி இடத்தில் சார்தல் சனம் குழுவு கண்டால்
நனி யுகப்புச் சேரா நலம் –10–
ஆர் உயிரின் மேல் அறிவில் ஆய்ந்து என்று நின்றமர்வு
பேர் உணர்வாந் தத்துவத்தின் பீடறிவு –சீருடைய
மெய்ஞ்ஞான மாமதென மிக்குரைத்தேன் வேறுளது
பொய்ஞ்ஞான மாகும் புறம் –11-
இவ்வறிவால் எய்தும் உயிர் தன்னை ஈங்கு உரைக்கேன்
எவ்வறிவா னல்லமுத மெய்தலாம் செவ்வை யதில்
ஆதி யில தெற் பரமா யான்ற பிரமமா
ஈதுல் அது உண்டு என்று உரைப்பதில் –12–
எங்கும் கரம் பாதம் எங்கும் கண் சென்னி முகம்
எங்கும் செவியாம் இயல்புடைத்தாய் -இங்கு வதில்
எப்பொருளும் தன் தகவால் ஏய்ந்து பரந்து நிற்கும்
அப்பொருளின் தன்மை யது –13–
எல்லாப் புலன் இயல்வும் ஏய்ந்தே விளங்குமதா
எல்லாப் புலன் இயல்வும் இல்லையா –எல்லாந்
தரிக்கும் ஒரு தத்தற்றுச் சார் குண மூன்று இன்றி
விரித்தனைக் துய்க்கும் மிக –14-
பூதங்களுக்குள் புறம்புமாய்த் தான் நின்று
மீது அங்கு இயல்வதுமாய் மேவியே –போதந்து
நுண்ணிமையினான் மிகவும் நோக்க அரியதாய் தூரத்து
மண்ணிமையினால் அருகுமாம் –15-
வேறுபாடு அற்ற வது வேற்றுமை சேர் பூதத்து
வேறுபாடு உற்றது போன் மிக்கு இருக்கும் –கூறு பாடு
உற்ற பொருள் தான் பரிக்கும் உண்ணும் உண்டாக்கும் என
மற்று அறியத் தக்கதது வாய்ந்து –16-
சோதிகளின் மிக்கது தான் சோதியாய்த் தொக்க தம
மீது பரன் என்னும் உரை மேவுமதாய்ப் -போதமெனத்
தான் அறியலா வறிவாற் சாருமதா யாவர்க்கும்
ஊன மற உள்ளிருக்கு முற்று –17-
இப்படியாற் கேத்திரமும் ஞானத்து இயல் வகையும்
மெய்ப்படியா ஜேய வியப்பதுவும் –தப்பறவே
யான் திரளச் சொன்னேன் என் பத்தனாய் ஈது அறிந்து
தான் திகழ்ந்து என் மயனாம் சார்ந்து–18–
சித்தும் அசித்தும் அநாதி எனச் சிந்தி நீ
பத்தில் விகார மணி குணங்கள் ஒத்து எழுந்து
பந்த முறு வித்தாகும் பந்த மொழி வித்தாகும்
வந்தென வெண்ணுற்று மதி–19-
கார்ய காரணங்கள் கர்த்தா வியற்றுமிடத்
தேய ப்ரக்ருதி யேதுவா –மேய சுகம்
துக்கம் புசிக்கும் தொடர்பு அதனிலேதுவா
ஓக்க வரும் புருடன் உற்று–20-
வாய்ந்த ப்ரக்ருதி நின்ற புருடன் அதில்
ஏய்ந்த குணத்தின் இயல்பு எய்தும் –தோய்ந்த குண
சங்கம் அடியான சதசத்தாம் யோனிகளில்
தங்க வவர் பிறப்பிற் சார்ந்து –21-
இவ்வுடம்பின் மேலாம் புருடன் கண் டேய்ந்திசை வான்
அவ்வுடம்பு தாங்கி யதித் துய்ப்பான் –செவ்வி யதிற்
தங்கிய பேர் ஈசனாய்த் தான் பரம வான் மாவா
யிங்கியம்பப் பட்டான் இவன்–22-
இந்தப் புருடனையும் இந்த அசித்தினையும்
அந்தக் குணங்களுடன் ஆய்ந்து அறிவான் -எந்தவவன்
எவ்வாறு மேவும் இயல்பால் திரிந்திடினும்
இவ்வாறு அவன் பிறவான் இங்கு–23-
மிக்கார் சிலர் நெஞ்சால் மெய்ப்ப ரதியானத்தாற்
றக்கார் உயிர் காண்பர் தாம் சிலர்கள் –எக்கால
சாங்கிய யோகம் தன்னால் தம் கர்ம யோகத்தால்
ஆங்கு அறிவர் வேறு சிலர் ஆய்ந்து–24-
மற்று இங்கு அவ்வாறு அறியார் மன்னறிவார் பாற் கேள்வி
யுற்று அன்புடனே யுபாசிப்பர் -நற்றமா
வந்தவரும் அரும் பவத்தைத் தாம் கடப்பர்
இந்த மிகக் கேள்வி யாய்ந்து –25-
எவ்வளவு நின்று இயலும் இந்தப் பொருள் உண்டாம்
அவ்வளவு தன்னை யடல் விசயா –விவ்வகையே
சித்தும் அசித்தும் சிறந்த புணர்ப்பதனால்
ஒத்தியல்வது என்றே யுணர் –26–
ஒத்துப் பொருள் அனைத்துள்ளே அமர விருந்
தத்துப் பரமோ னாகியே தத்துவங்கள்
மாயும் அளவதிலும் மாயா தவணைக் கண்
டாயுமவன் கண்டா னமைந்து –27-
எவ்விடத்தும் தான் இறையாய் ஏய்ந்து இருக்கும் இவ்வுயிர் தான்
எவ்விடத்தில் ஒத்தி அல்லதா வறியான் இவ்விடத்தில்
தன்னைத் தன் நெஞ்சத்தினாற் றானலியான் றானடையும்
பின்னைப் பர கதியாம் பேறு–28-
ஏய்ந்த ப்ரக்ருதி இத்தால் கருமம் எல்லாம்
வாய்ந்து இயலும் என்று அறிந்து மன்னுயிரை யாய்நது இவனைக்
கர்த்தா இவன் என்று காண்பான் எவன் அவனே
சத்தாம் உணர்வுடையான் தான் –29–
அப்போது பூதத்து இயல் வேறுபாட்டினையும்
ஒப்பொருவா ஒன்றில் உறு வகையும் தப்போடார்
பந்தப்பரப்பும் உணர் பங்கானப் போது யிரா
மந்தப் பிரமம் அடைந்ததாம்–30–
இங்கனையும் ஆதி இலானாம் குணம் இவனாம்
பங்கடலோ இந்தப் பரமான்பர் தங்கி யுடன்
நின்றிடிலும் கௌந்தேயா நேர் ஒன்றும் தான் செய்யான்
என்று மதிற்றோய் விலனா மேய்ந்து –31-
ஓங்கு விசும்பு எங்கும் உளதாய் அநுட் பத்தால்
அங்க தனிற்றோயா தது போலத் தாங்குடல
மேதிலு நின்றாலும் இலகும் உயிர் அவ்வண்ணம்
ஆதி யல்வாற் றோயானாம் அங்கு–32–
எவ்வா றிரவிதான் இந்த உலகனைத்தும்
இவ்வாறு எழில் விளக்கம் எய்துவிக்கம் அவ்வாறு
பாரதனே இவ்வுடல் எல்லாம் பரந்து உயிர் தான்
சீரதனாற் றான் விளங்கும் சேர்ந்து –33–
காயம் உயிர் இவற்றின் கண்ணார் பிரிவவ்வா
றேய வறிவாம் எழில் கண்ணான் –மேயவுடல்
வீடமர்வு தானும் மிக உணர்வார் தாம் பரமாம்
பீடமர்வர் தன்மையினைப் பெற்று –34–
இத் தன்மையால் உடலும் இவ்வுயிரும் சேர்ந்து இயலும்
அத் தன்மை யாம் அப்பவிழ் விரகு –மேய்த்தன்மை
யோர்ந்த பதின் மூன்றாம் ஓத்து இங்கு உரைந்து முடித்து
ஆய்ந்த பொருள் ஆய்ந்தோம் அறிந்து
————
14 – குண த்ரய விபாக யோகம்:
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.
மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
(தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
புரிந்து – விருப்பத்தோடு,
கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.
மற்றும் உனக்கு இன்னம் மன வறிவின் மேல் அறிவை
வுற்று உணரும் வண்ணம் உரைக்கின்றேன் -அற்ற மறை
யாது அறிந்து மா முனிவர் இப்பவம் விட்டு எய்தினார்
மீதம் அரும் தன்மையினை மிக்கு –1-
இந்த அறிவை இனிது ஆர்ந்து இங்கு என் ஒப்பாம்
அந்த உயர்வை அடைந்தவர்கள் –பந்தமுடன்
சற் கத்திலும் பிறவார் தாம் துயரம் சாரார்
ஓற்கப் ப்ரளயத்தினுள் –2–
மிக்க பிரமம் விறல் யோநி என்று உரைக்கத்
தக்க தெனத சித்திற் சார்வு பெறத் -தொக்க வுயிர்
கெற்பத்தை யான் சேர்ப்பன் கேழ் கிளரும் பூதங்கள்
உற்பத்தி சேரும் இதில் உற்று –3–
இங்கு உலகில் யோனிகளாம் எத்திறத்து மூர்த்திகளா
அங்கு உதயம் செய்யும் அவை தமக்குப் -பங்கம் இலா
விந்தப் பரமமே யோனி கருவளிக்கும்
அந்தப் பிதா யானே யாங்கு–4–
சத்துவ ரசோ தமமாய்ச் சாரும் குணம் மூன்று
மொய்த்த பிரகிருதி உள்ளவையாம் -இத்தகைய
ஆருயிரைத் தேகத்து அமரப் பிணைக்குமே
சீராய் அரும் தோளாய் செறுத்து –5-
ஆங்கு அவற்றில் சத்துவம் தான் அன்று அழுக்கு அற்றார் தலினால்
ஈங்கு ஒளி செய்தலு நோ யீடழித்துப் –பாங்கில்
வரும் சுகத்தில் மற்று அறிவின் மன்னு நசை தன்னாற்
பொருந் துயிரைக் காட்டும் பண்பு–6–
ராக மதின் தன்மை ராசதமாம் கௌந்தேயா
தாகமுடன் சங்கம் தனை விளைக்கு மாக நினை
மற்றது தான் கன்மத்தில் வன் நசையாற் றேகிதனை
யுற்ற அமரக் கட்டும் உறைத்து–7-
தம் அறிவு கேடு தரும் தான் அறி நீ மோக
மம ருயிர் கட் கு எல்லாம் அளிக்கும் -தமர் என்னாது
ஓராமை சோம்பல் உறக்கத்தால் பார்த்தனே
சோராமல் காட்டும் துணிந்து–8-
சத்துவம தின்பத் தனிற் றுவக்குந் தான் இரசத்
தொத்தியலும் கன்மம் துவக்குவிக்கு -மைத்தும்
மன்னறிவு தன்னை மறைத்திட்டு ஓர்ப்பின்மையினிற்
றுன்ன மிகத் தான் துவக்கும் சூழ்ந்து–9–
முக்குணங்கள் தம்மின் முதல் குணம் தான் மற்ற இரண்டும்
ஓக்க வமுக்கி யுற மேவா –மிக்க
விடைக்குணம் தான் பார்த்தனே மற்ற இரண்டும் இங்கே
கடைக்குணமும் அவ்வாறு காண்–10-
பொறி வாயில் எங்கும் புணரும் ஒளியாம்
அறிவானது எப்பொழுது உண்டாகும் –குறியாலே
மன்னுடம்பில் அப்பொழுது வாய்ந்து யரும் சத்துவமுமாம்
என்னுமது தான் அறிவான் இங்கு–11-
ஈயாமை வீண் உழற்றி ஏய்ந்த கருமத் தொடக்கம்
சாயா புலன் எழுச்சி தன்னாசை –ஓயாமல்
உண்டாம் இவை கண்டாய் உற்றி ரசத்து ஒங்கதனால்
வண்டாரும் தார் விசயா மற்று–12–
மன்னு உணர்வில்லாமை ஒன்றின் முயல்வறு தன்
மன்னும் உயிர் ஓர்ப்பின்மை மா மோகம் என்னும் இவை
மீதில் உயர் தமத்தின் மேவும் அவையாக நீ
கோதில் குரு முதல்வா கொள்–13–
சத்து மிக்கு ஒக்கம் தரும் பொழுதில் தான் மரணத்து
ஒத்து உடம்பு விட்ட உயிர் உடையோன்–தத்துவத்தின்
மேலறிவு சேர்ந்தார் மிக வமலமாம் குலத்துச்
சால வவன் தான் பிறக்கும் சார்ந்து–14–
கன்ம நயந்தோர் குளத்தில் காதலுடன் தான் பிறக்கும்
வன்மையிர சத்துயர்வின் மாய்ந்தவவன் நன்மை இலா
மூடர் இடைப்பிறக்கும் முழுதும் தமத் துயர்வில்
பீடை யுற மரித்தான் பின்–15–
நீதி கருமத்து நின்மலமா நற் பயனைக்
கோதின் முதற் குணத்தே கூறுவரான் மீதியலும்
துக்கம் இடைக் குணத்தில் சூழ் பயனாம் பிற் குணத்திற்
றக்க அறிவின்மை தான்–16–
முற் குணத்தில் ஆரு முழுதுணர்வு தானிடையி
லற் குணத்து லோப மதுவுண்டாம் பிற் குணத்தில்
ஓராமை மோகம் உணராமை யுண்டாரும்
சீரார் புகழ் விசயா சேர்ந்து –17–
மேலடைவர் முற் குணத்தோர் மேவு நடுக்குணத்தோர்
சால நடுவாம் உலகிற் குனிற்பர் –ஞாலத்துப்
பின்னால் குணத்தியல்வோர் பீடழிவர் கீழ்மையினை
எந்நாளும் சேர விழிந்து–18–
மிக்க குணம் அவற்றில் வேறுபட்ட கர்த்தாவைத்
தக்க வுணர்வுடையோன் தான் உணரான் –ஓக்க குணர்
தன்னில் பரம் எனவும் தன் அறிவால் சேருமே
என்னிற் பரத்தன்மை யேய்ந்து–19-
இங்கு உடல் மேவி யமர் இக் குணங்கண் மூன்றினையும்
மங்கும் வகை கடந்து மன்னினவன் –றங்கு
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி விடுத்துத் தன்னாம்
சிறப்பு அமுதம் சேரும் சிறந்து–20-
இவ்வளவில் பார்த்தன் இயம்பினான் இங்கு இறைவா
வவ்வகை சேர் முக்குணத்தை யாங்கு அன்னோன் –எவ்வகையில்
சேரும் அடையாளத் தன் செய் தொழில் ஏது எங்கனே
சீருடன் இத்தைக் கடப்பான் செப்பு–21-
ஈண்டு அவனுக்கு கண்ண வியல்பின் றக வுரைத்தான்
பாண்டவனே முந்திப் பரந்த ஒளி –மூண்டியற்றி
மோக முளவற்றை முனியான் முன் மூண்டத்து
வேக நசையிலான் மிக்கு–22-
முன்னுக்கு உதாசீனம் போல் இருக்கும் முக்குணங்கள்
தன்னுற்று அலைந்திடினும் தான் சலியான் –மன்னு குணச்
செய்தி இது என்று இருக்கும் செய் தொழிலில் சேட்டியான்
மெய்திருந்து நெஞ்சுடையான் மேல்–23–
தன் சுகத்தும் துக்கத்தும் தான் சமனாயத் தன்னமர்ந்து
பொன் கலுட னோடி தனிற் புத்தி ஓத்தோன் -அன்பர்
வெறுப்பரிடை ஒப்போன் மிகு பழி நன் கீர்த்தி
நிறுத்த சம நிற்கு நிகழ்ந்து –24-
தன்ன மரு மான மவமானஞ் சாரான் நண்பன்
என்னலர் தம் பக்கத்த மொத்தியல்வான் –மன்ன
செய்ம் முயற்றி எல்லாம் செய்யான் அவன் குணம் கண்
மெய்ம் முயற்றியால் கடந்தான் மிக்கு –25-
என்னைப் புறம் போகா யோகமாம் பத்தியினான்
மன்னப் பயின்று மருவுமவன் –றன்னமரப்
பேசு குணம் செற்றுப் பிரமமாம் தன்மையினை
மாசில் குணம் சேர்ந்திடுமே மற்று–26–
குன்றா வமுதக் குணப் பிரமமாம் உயிர்க்கு
நன்றாம் இருப்பிடம் தானானவன் நின்றாரும்
தன்மப் பயனுக்கும் தான் ஒருமை சார் சுகமா
நன்மைக்கும் என்று நயந்து –27–
கட்டுதலும் கர்த்தவாம் தன்மையும் கட்டு அவிழ்ப்பு
விட்டுத் திகழ் அமுதின் மேவுதலும் –தொட்டு வரு
முக்குணத்தின் சார்வா முயன்று பதினாலாம் ஒத்
துக்கும் உரை ஓரும் உணர்ந்து
———
15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:
மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
யோதும் பதினைந்தா மோத்து.
மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
பரித்து – அவற்றைத் தாங்கி,
இறையாய் – அவற்றை உடையவனாய்,
மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
ஓதும் – கூறும்.
மீது முதலாய் மிகு சாகை கீழாக
வோது முலகா முயராசைப் போதுந்
தளிர்கள் மறையாகத் தானுணர் வானந்த
ஒளி கொள் மறை யுணர்ந்தான் உற்று–1-
கீழ் தனிலும் மேலும் கிளைகள் அதுக்குப் பரந்து
தாழ்வில் குணத்து உயரும் சார் புலன் தன் –சூழ் தளிரா
மூலம் கீழும் பரக்கு முன்னை வினைத் தொடர்பாய்
ஞாலத்தின் மேல் அமர்ந்து நன்கு –2-
இத்தின் உருவும் இதில் முடிவும் ஆதியும் மற்று
அத்தின் இருப்பு அறிவரிதாம் -மொய்த்தமர்ந்த
மூல வர சாமி தனை முற்று மறுத்தறவாங்
கோல வலிச் சத்திரம் தான் கொண்டு –3–
ஆங்கு அதனால் இப்பதம் தான் ஆராயதற்காகுமேல்
ஈங்கு அதனில் சென்றால் இனி மீளார் -பங்காதற்குப்
பற்றுவா நாகப்பரனை எவனான் மன்னு
முற்றும் இயல்வுண்டா முயன்று–4-
மனமோ நங்களின்றி மற்று நசைக் குற்றமற்
றான உயிர்த் தன்மை யமர்ந்தாசையது தானகன்று
இன்ப மிகு துன்ப இருமை விட்டு இங்கு உணர்வோர்
மன் பதமே தாம் அடைவர் வாய்ந்து –5-
அந்த உயிர்ச் சோதியினை ஆதித்தன் சந்திரனும்
செம் தழலும் தாம் விளக்கம் செய்யார்கள் -அந்தத்
தாளடைந்தார் மீளார்கள் தாமம் அஃது எனக்கே
யான வகை நீ தான் அறி–6-
என்னாரு மாம்சமா இவ்வுலகிற் சீவனாய்
முன்னார நின்று முயலு முயர் -தன்னாரு
மைம்புலனும் நெஞ்சும் அவை யாறையும் வலிக்கும்
வெம் புலத்துச் சேர விரைந்து–7–
எந்த உடல் விட்டு எவ்வுடல் அடையும் ஈசனவன்
சந்தமுடன் அங்கு இவற்றைத் தான் வாங்கிப் -பந்தமுடன்
தானேகும் வாயுத்தன் சார் மணங்கள் வாங்கியே
பூ நேர் நின்று ஏகுமது போல் –8–
செவி கண் டுவக்குடன் சிங்கவை நாசிச் சேர்ந்
தவி மின்றி நெஞ்சோடு அமர்ந்து -நவிவில் வாய்
புன் பொருள்கள் எல்லாம் புசித்தியலும் இவ்வுயிர் தான்
இன்புறுதல் சேர் நசையால் இங்கு–9-
இந்த உடல் விட்டேக லேய்ந்து மிதிலிருந்தும்
வந்து புசித்தும் குணத்தின் மன்னினவனை –வந்தறிவின்
மூடர் உணர் முக அறியார் முற்றுணர்வர்
நாட உணர்வழியார் நன்கு –10–
மன்னு கருமத்து மருவியல் யோக்கியர்கள்
தன்னுடம்பின் மேவி அவனைச் சார்ந்து உணர்வார் –முன்னு ணரு
நெஞ்சம் இல்லாதார் நிறைவின்றித் தாம் உணரார்
எஞ்சல் அறவியன்றிம் இங்கு–11-
ஆதித்தன் பானின்று அனைத்து உலகும் தான் விளக்கும்
சோதிச் சுடர் சோமன் சூழங்கி -மீதிலகி
மன்னு மொழி தன்னின் வனப்பதவு மன்னனே
என்னதன உற்று அறி நீ ஏய்ந்து–12–
பூதலத்தின் மேவியே பூதங்கள் தான் தரிப்பன்
மீது அடர்த்து நின்று மிடுக்கால் –சீதளம் சேர்
சோமன் என நின்று அமுதம் சோர்ந்தே பயிர் எல்லா
சேம முற நிறைப்பன் சேர்ந்து–13-
நான் அமர்ந்து நின்று உலகினில் நடும் உயிர் உடலி
லூன மறக்கிளரும் ஒள் எரியாத் –தான் கலவா
வேல் வகை சேர் வாயு விரண்டால் அறப்புசிப்ப
னால் வகை சேர் அன்னத்தை நன்கு-14-
எல்லார் இதயத்து இருப்பேன் நான் என்னாலே
நல்லார் நினைவறிவு நாட்டமாம் –சொல்லார்ந்த
வேதங்கள் யானைக்கும் வேத்தியனான் மேவு பயன்
மிதந்தது அறிவேன் மிக்கு–15–
கண்ணார் உலகிற் கரனக் கரன் என்றே
எண்ணாம் புருடர் இவர் இருவர் -பண்ணாரும்
பூத யுயிர் எல்லாம் கரனாம் பொருவில் சீர்
மீத வுயிரக் கரனாம் வேறு–16-
ஆங்கு இவரில் உத்தமனே யாம் புருடன் அன்னியனாய்ப்
பாங்கிற் பரமான் மா வென்று உரைத்தான் ஓங்கியே
தாம் புகுந்து நின்றே தரித்து உலக மூன்று இறையா
யோம்பு மவன் குன்றாது மேல்–17–
எத்தகவால் யான் கரன் மீது ஏகியே யக்கரனாம்
உத்தனிலும் உத்தமனா உற்று உயர்ந்தேன் -இத்தகவால்
வேதம் உலகு இவற்றின் மேவு புருடோத்தமனா
வோத உரை சிறந்தேன் உற்று –18–
என்னை இங்கே இவ்வண்ணம் ஏய்ந்த புருடோத்தமனாம்
உன்னை யமர் ஒழித்து முற்று உணர்ந்தான் பின்னையவன்
எல்லாம் அறிந்தே எனை அடைந்து பத்தியுடன்
செல்வான் எவ்வாறும் சிறந்து –19–
இன்னே இச்சாத்திரமாய் ஏய்ந்த மறைப்பொருளை
மன்னே யுரைத்தேன் நான் மற்று இதனை நன்னெறியா
யுற்று அறிந்தான் நேரே யுணர்ந்தானாம் பார்த்தனே
மற்று அனைத்தும் செய்தவனாம் ஆய்ந்து –20–
ஏலும் புருடோத்தமனாம் ஏற்றத்தைச்
சால இறைவனே தான் உரைத்த –மேலான
கீதை பதினைந்தாம் ஒத்துக் கெழு மிகு சீர்ப்
போதப் பொருள் உரைத்தோம் பூண்டு
———-
16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:
தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.
கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.
அஞ்சாமை நெஞ்சு தெளிவாய்ந்து அறிவாம் யோக நிலை
எஞ்சாத தானம் இசைந்த தமந் -துஞ்சாத
வெச்ச மறை வேலும் தவ முயற்றி
நிச்சந்தனிற் செவ்வை நேர்ந்து –1-
கொல்லாமை மெய்ம்மை வெகுளாமை கோள் விடுத்து
றோல்வார் சமங்குறளைச் சொல்லாமை -எல்லாத்து
மேவு தயை தான் சலிப்பு மேவாமை மேன்மை நாண்
பாவு பொருள் சாபவந்தீர் பண்பு–2-
தேசு பொறை திண்மை தூய்மை சின மறு தன்
மாசு நிகழ் மிசை சேர் மான மொழி வாசலியை
தெய்வ மெனும் சம்பத்திற் சேர்ந்து பிறந்தார்க்கு உண்டோ
மெய் வகையாற் பார்த்தனே மிக்கு–3-
தன்ம மிலா டம்பம் தன் செருக்குத் துன்மானம்
வன்மை யுறு செற்றம் வளர் கொடுமை -நன்மை
அறியாமை பார்த்தனே யாசுரமாம் செல்வம்
செறிவாருக்கு உண்டாம் திறம்–4–
தெய்வம் எனும் செல்வம் திகழ் மோக்கத் தாசுரந்தா
னை வகை சார் பந்தத்து நாடுறுப்பாம் -இவ்வகையாற்
சேர்ந்து உயர்ந்த சீர்ப் பார்த்தா தெய்வமாம் சம்பத்தை
நேர்ந்துதித்தாய் சோகியே நீ–5–
பூதம் இரு வகையாப் போருமே இவ்வுலகி
லாத மரும் தெய்வமாம் அங்கு அசுரமாம் -ஈது அதனில்
தெய்வம் விரித்து உரைத்தேன் சேர்ந்து நீ யாசுரத்தை
மெய் வகை கேள் பார்த்தா விரித்து–6–
செய்கின்ற இல்லறமும் செய்யாத் துறவறமும்
நைகின்ற வாசுரர்கள் நன்கறியார் –மெய் குன்றாத்
தூய்மை யுடனா சாரம் சொல்லின் பயனாய்
வாய்மையும் மற்றில்லை யவர் மாட்டு–7–
இச்சகத்து மெய்யன் இதற்கோர் நிலையில்லை
மிச்ச விறை இல்லென்று மேல் விழுந்து -பிச்சுரைப்பார்
தன்னிற்றான் காமத்தாற் சார்ந்தே பிறக்கு மதென்
றென்னிற்றான் மற்றேது எனில் –8–
இங்கு இதுவே கண்ணாகவே வேற்றுத் தன்னறியா
தங்கியலும் புத்தி யறவறமாய்ப் பொங்கு
கொடும் தொழிலராகிக் குல வுலகைத் தீம்பால்
அடும் தொழிலராவர் அவர்–9–
கிட்டாத காமத்தை யுன்னியது கிட்டும் வினைப்
பட்டாங் கறிவின்றிப் பாவத்தாலிட்ட பொருள்
வாங்கி மத டம்பம் சேர் மானமுடன் இங்கு உழல்வார்
தீங்கியன்று மல் விரதம் சேர்ந்து–10-
துங்க வளவில்லாதே தோற்றம் சேர் சிந்தையினைத்
தம் கண் முடிவளவும் தாமருவி அங்கு அமரும்
காம போகம் பரமாக் கண்டறுதி மேவுவரே
யேமமிது வல்ல திலை என்று –11-
காமம் சேர் ஆக்கை சதங்களால் கட்டுண்டு
காமம் க்ரோதத்துக் கை வளர்ந்து -சேமமுடன்
ஆங்கு அதனைப் துய்ப்பர் அனியாய வத்தத்தை
யோங்கி மிகத் தாம் சேர்ப்பர் உற்று–12–
இது பெற்றேன் இப்போது இது யான் இணைந்தது
இது கிட்டுவன் மேலும் இன்னே இது என்ன
தாயே யுண்டாகின்றதாம் அதற் பின் இத்தனமு
மேயே யுண்டாம் எனக்கு மிக்கு–13–
இப்பகைவன் பட்டான் மற்றி யாவரையும் கொல்வேன் நான்
செப்பம் இறை நான் போகி சித்தனான் –மெய்ப்பொருளோன்
மேவு வலியோன் சுகி நான் மேற் குல நானாகின்றேன்
எவன் என்னோடு ஓப்பான் மற்று இங்கு–14–
நானே யெசிப்பேன் கொடுப்பேனனி யுகப்பேன்
றானே என மோகம் சார்ந்தவர்கள் நானா நெஞ்
சோடியே மோகித்து உறங்கா மத்தார் நரகிற்
கூடியே வீழ்வர் தொலைந்து–15–
தம்மைத் தாம் சம்மதிப்பார் தாமுயலார் தம்பித்துச்
செம்மைத் தன் மானம் சேர் செருக்கால் -இம்மைக்கே
நாம வினையால் யசிப்பர் நாட்டியலும் டம்பத்தாற்
சேம விதி சேராது சென்று–16–
ஆங்காரம் வன்மை யதன் செருக்குக் காமமுடன்
தீங்கார் க்ரோதமது சேர்ந்தவவர் –பாங்காரத்
தம் பிறர்க டேகத்துச் சார்ந்த வெனைத் தான் வெறுப்பார்
வெம்பிய சூயைச் சுடரால் வெந்து–17–
ஆங்கு என்னைத் தான் வெறுத்த வந்த நராதமரை
ஈங்கு உழலும் இப் பகத்தில் என்று நான் -ஈங்கு உழலும்
அசுரமாம் யோனி யவை தன்னிடை எய்த
மாசறவே தள்ளுவேன் மற்று–18–
உற்று நிகழ்ந்த அசுரமாம் யோனிகளில் பல் பிறப்பில்
முற்றும் அறிவின்றியே மூடராய்க் -கொற்றவனே
என்னை அடையாதே ஈங்கு அதனில் ஆழ்ந்த கதி
தன்னடைவர் என்றும் தளர்ந்து–19-
மா நரகின் வாசலாய் மன்னும் இவை மூன்று யிருக்
கீனமா நாசம் இயற்றுமவை -தான் அமரும்
காமம் குரோதம் உலோபம் கடிதிவற்றி
னாமம் செறு நீ நவிற்று–20-
இந்த அறிவு கேட்டுக்கு இம் மூன்றும் வாசல் என
அங்கு அறிந்து விட்டோன் அரசனே -சங்கை அறத்
தன்நன்மை யாசரிக்கத் தண்மை பரகதியாம்
இந்நன்மை சேரும் எழுந்து–21-
விட்டமரும் சாத்திரத்தின் மேய விதியை எவன்
இட்ட மிகத் தன்னால் இயல்கின்றான் –றட்டறு சீர்ச்
சித்தியது சேர்ந்தடையான் சேரான் சுகம் பரமா
முத்தியது சாரான் முதிர்ந்து–22-
மன்னிச் செய்யுமதுவும் மற்றதுவும் முற்றறிவு
தன்னில் பிரமாணம் சாத்திரமே -என்னுமதால்
அந்த விதானம் அறிந்தே கருமத்தை
முந்த வியனீ முயன்று–23–
இப்படியே தேவ அசுரமாம் இயல்வதனைத்
தப்பது சீர் ஞானத் தரு நிலைமைக்கு ஒப்பாப்
பகர்ந்த சீர்க் கீதை பதினாறாம் ஒத்தில்
நிகந்த பொருள் முற்றியது நேர்ந்து
———–
17–ஸ்ரத்தா த்ரய விபாக யோகம்
ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.
சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.
மேவிய சீரப் பார்த்தன் வினவ யுரைத்தான் கண்ணனே
பாவிய சீர்ச் சாத்திரத்தின் பாங்கு ஒழிந்து இங்கு ஓவா
விருப்பற்று இயல்வார்க்கு மிக்க குணம் மூன்றில்
இருப்பேது இனி உரையாய் இங்கு–1-
ஐயன் அவனுக்கு ஆங்கு அறிய உரை செய்தான்
செய்ய கருமச் சிரத்தை தான் மெய் யமரும்
தன்மையான் முக்குணத்தின் சார்வாகு மூ வகையாம்
பன்மை நீ கேளாய் பயின்று–2–
நீடுலகில் எல்லார்க்கு நெஞ்சுக்கு அநு குணமாப்
பாடு பெறும் இந்தப் பருஞ் சிரத்தை–நாடுஞ்
சிரத்தை யுருவாம் புருடன் சேர்ந்தே சிரத்தை
வுரைத்தது எவற்கு ஆங்கு அவனாம் உற்று–3-
சத்துவத்தர் சார்வமரர் தாம் இயக்கரோடு அரக்கர்
மத்தியத்தர் சேரும் வகையது தான் புத்தி செறு
புன்மைத் தமோ குணத்தர் பூதம் பிரேத கணம்
தன்னைச் சமைந்து அணைவர் தாம் –4–
கோரமாய்ச் சாத்திரத்தில் கூறாத் தவம் தன்னைச்
சேரவே யார் இயல்வால் டம்பமுடன் –ஈரமிலா
வாங்காரம் கூடி யதி காம ராகங்கள்
தீங்காகும் திண்மை செறிந்து –5-
உற்ற உடல் பூதங்கள் தன்னை ஓறா நின்றே
மற்று அதனுள் மேவு வுயிராய் மன் எனையும் -பற்று அற்று
அற வருந்து விப்பர ராசுரமாம் புத்தி
மறவர் என நினை நீ மற்று–6–
எவர்க்கும் தான் உகப்பா மூணெச்ச மேய்ந்த தவ
மேவத் தகு தானம் வேறுபடப் -பாவும்
குணம் தன்னான் மூ வகையாகக் கூறிய அப்பேதம்
உணர்ந்து இங்கே கேள் இதனை உற்று–7–
வாழ் நாள் மனம் தெளிவு மன்னு வலி நோயாமை
பூணாம் சுக முகப்பைப் பொங்குவித்து –மாணார்ந்த
தித்தித்து நெய்த்துத் திரமாய் மநோ கரமாய்
ஒத்திடுமே முற் குணத்தில் ஊண்–8-
காழ்த்துப் புளித் துப்பாய்க் கைக் கொதித்துத் தான் கடிதா
யாழ்ச்சிக் கொடிதா யழல் விளைத்து –மூழ்ச்சியினிற்
றுக்கஞ் சோகம் பிணியைச் சூழ்க்கு நடுக் குணத்தின்
ஓக்க உகந்து உண்ணும் ஊண்–9-
காலம் கழிந்து கழிந்து இரந்துற் கெந்தித்
தேல மிகப்பழகி எச்சிலாய்ச -சாலப்
படைத்த முதுக்காகத பாவச் சோறாகும்
கடைக் குணத்தால் உண்ணும் கணக்கு–10-
வேண்டாததில் பயனை வேத விதி மேவி மணம்
பூண்டார் இயல்வாகப் புந்தித்து மூண்டு ஆங்கு
தாம் இயல்வர் எச்சம் தகவான் முதற் குணத்திலாம்
எனவே கொள்க அறிந்து–11-
சேர்ந்த பயன் இனைந்தும் டம்பம் பொருட்டாயும்
சார்ந்தது எது பரதர் தம் தலைவா கூர்ந்த
மனத்தால் அவ்வெச்சத்தை வாய்ந்து அறி நீ அந்த
வினத்தால் இடைக்குணத்தது என்று–12–
விதியற் றவியற்று மந்திரமும் விட்டே
யதின் மேவு தக்கணையும் அற்றுக் கதி சேர்ந்த
வேலும் சிரத்தை இலா எச்சம் கடைக்குணத்தாற்
கோலும் என உரைப்பர் கூர்ந்து–13-
காயம் சொலவு மனம் காட்டும் தவங்களவை
மேய குணம் கண் மிகு நெறியா லாய வெனின்
மூன்று அதனின் நின்று முயலும் படி உரைக்க
வேன்றதனைக் கீழ் நீ யினி–14–
தேவர் மறையோர் குணங்கண் மிக உணர்ந்தோர்
மேவ வருச் சித்தன் மெய் தூய்மை யோவாத
செவ்வை மகளிடரைச் செல்லாமை கொல்லாமை
இவ்வகைக் காயத் தவமாம் இங்கு–15-
அஞ்சா வகை சொல் லதன் மெய் யுகப்பிதமாத்
துஞ்சா மறையின் சொலின் வலியால் எஞ்சாத
வாக்கத்தனின் நின்றும் மருவு தவம் என்பரே
யூக்க மனமுடையோர் உற்று–16-
மனம் தெளிந்தது நன்கு அறிதல் வாயுரையை மீட்ட
நினைவும் மனம் சேர நிறுத்தலினம் இயல்வு
சேராதே தூய்மையிவை சித்தத்துச் சேர் தவம் என்று
ஆராய்வர் ஞானத்தவர்–17-
முக்கரணம் செய் தவங்கள் முற்று விதம் ஆர்வம் உயர்ந்து
ஓக்க வரு பயனை யுள் ஒழித்துத் தக்கவர்கள்
செய்யும் தவத்தைச் சிறக்கின்ற முற்குணத்து என்று
உய்யுமவர் யுரைப்பர் யுற்று–18-
நாடு நல நினைந்து கொண்டாடி நன்கு இறைஞ்சத்
தேடு மனம் நினைந்து டம்பத்தாற் பீடுறவே
ஏய்ந்த தவ நில்லாது இடைக் குணத்ததாய்ச சலித்து
மாய்ந்து யறும் என்றே உரைப்பர் மற்று–19-
மூட மதியான் முயல் வுற்றுத் தம்முயிர் தான்
பீடை மருவப் பிறர் கேடு கூடவே
யுற்ற தவமானத்துடனே கடைக் குணத்தைப்
பற்ற வரும் என்பர் பயின்று–20-
வேறு உபகாரத்தை வரும் பாதியில் வென்று
கூற இடம் கால நலம் கொள் பவனைத் தேறியே
தான் கொடுக்கும் தானம் தான் சத்துவத்தின் நின்று மேல்
வான் கொடுக்கும் என்பர் மதித்து–21-
மீண்டு உபகாரம் கொளவும் வேறு பலம் இச்சித்தும்
பூண்டு மிக வருந்திப் புன் பொருள்கள் வேண்டு நெறி
இட்டு இயலும் தானம் இடைக் குணத்தின் பாங்கு அதனில்
பட்டு இயலும் என்பர் பலர்–22-
தேச காலம் சிறப்புச் சிந்தியா தேற் பவன் பால்
அசின்மை பாராது அவமதித்து நேசம் செய்யா
தரிப்பது இல்லா தவத்தானாம் பிற் குணத்தை
மீதரிப்பது என்று உரைப்பர் மிக்கு–23–
ஒந்தற் சத்து என்னும் உரை முயன்று ஒண் மறையாய்
வாய்ந்த பிரமத்தின் மண்ணியவர் ஏய்ந்து இவ்
விலக்கணத்தால் அந்தணர்கள் வேதங்கள் எச்சம்
கலக்கம் அற வுண்டான் காண்–24–
ஆதலால் ஓம் என்று அமர்ந்து உரைத்தே யந்தணர்க்கு
வேத நின்றோதும் விதி வகையே போதமுடன்
எச்சம் தானம் தவங்கள் எல்லாம் எக்காலத்தும்
இச்சந் தன்னா னடக்கு மேல்–25–
நெஞ்சால் பலத்தை நினையாது எச்சம் தானம்
துஞ்சாத் தவமுத்தி தொன்மை நினைந்து எஞ்சாமல்
ஒத்து இங்கு இயலும் உயர்ந்தது எனச் சொல்லும்
எத்து என்று உரைக்கும் தரம்–26-
உண்மையிலும் நன்றான ஒண்மையிலும் சத்து எனும்
வண்மை யுரை தன்னை மதித்து உரைப்பர் -திண்மை யுயர்ந்
தேலும் கருமத்தைச் சத் கர்மம் என்று உரைப்பர்
மாலும் புகழ் விசையா வாய்ந்து–27-
அங்கு அதனால் எச்சம் தவம் தானமாம் இவற்றில்
ஓங்கமரும் தன்னிலையும் உற்றவற்றில் பாங்கியலும்
சத்து என்று உரைக்கத் தகும் என்று வேதியர்கள்
ஒத்து என்று உரைப்பர் உகந்து–28–
தான் விருப்பம் இன்றிச் செய் தானம் தவம் ஓமம்
வான் விருப்பத் தேற வழியாகா வான் விருப்பாக
காயத்தின் நன்கு காரணத்தாற் தான் சத்தாய்
மாயத் துறுவிக்கு மற்று –29–
மேவு குணங்களினால் வேறாம் கருமங்கள்
பாவு சுருதிப் பயில் வகையே சேவையுறும்
பாங்குரைத்த கீதை பதினேழாம் ஒத்ததனை
ஈங்கு யுரைத்தோம் இப்பொருளா ஏய்ந்து
———-
18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:
செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.
செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.
ஸந்யாஸம் கன்மத்தில் சாரும் தியாகத்தில்
முன் யான் பிறிவொருமை முற்றறியேன் பின் பின் யான்
தோன்றாது நீ இதனைச் சொல் என்றான் பார்த்தன் அதற்க்கே
என்று அங்கு இறைத்தான் இறை–1-
காமக் கருமங்கள் கை விடுதல் சந்நியாஸம்
சேமத்தது என்று சிலர் உரைப்பர் -ஏமத்தால்
எக்கரும அப்பேறு மிகழ்வு தியாகம் எனச்
சிக்கனவே சொல்வர் சிலர் -2-
ஏதம் போற் கன்ம மிகழப் படும் என்று
போதர் சில யுரைப்பர் புந்தியான் -மீதென்று
மெச்சத் தவம் தான் ஈங்கு இழவு அல்லது என
நிச்சம் சிலர் யுரைப்பர் நின்று–3-
அந்தத் தியாகத்து அறுதியினை என் பால் கேள்
சந்ததிகள் பாரதர் தம் தலைவா முந்துறுவே
யான் பகர்ந்தேன் மூன்று வகை என்றே தியாகத்தைத்
தான் பயணம் சங்கம் தவிர்ந்து–4-
பாவியர் எச்சம் பயிலும் தவம் தான்
மேவி இகழாது என்று முற்றியல மேவினவை
யாவின் பால் ஆங்கு அவை தானான வறிவினர்க்கும்
பாவனமாம் என்றும் பயின்று–5-
இக்கருமமான விவை என் கருமம் என
மிக்கமருஞ் சங்க மிகு பயன்கள் ஓக்க விடுத்து
ஏய்ந்த இயல் வென்றே இயலுமது என் தனக்கு இங்கு
ஆய்ந்த வறுதி மிகமாம்–6-
என்று நியதமாய் இந்தக் கருமங்கள்
ஒன்றும் விட இவனுக்கு ஒண்ணாதான் இன்று இவற்றை
மோகத்தால் தான் விடுதன் முக்குணத்திற் பிற் குணத்தில்
வாகத்தால் வந்த அது–7-
துக்கம் எனக் கன்மத்தைத் தோன்றும் உடல் வருத்த
மிக்க பயத்தால் செய்யா விட்டவன் தான் சிக்கெனவில்
வாய்ந்த விடைக்குணத்தான் மற்றது விட்டப் பயனாம்
ஏய்ந்த அறிவு பெறான் இங்கு–8-
நின்று நியதக் கருமத்தை நேர்ந்தி அல்ல என்று
என்றும் இயன்றே யிகல் விசையா-வொன்றி யரும்
சங்கம் பயன்று றப்பார் சாரும் தியாகம் தான்
அங்கு அந்த முற் குணத்ததாம்–9-
தத்துவத்தின் நின்றும் தவிர்ந்த பயன் சார்ந்த அறிவு
சத்துவத்தில் சந்தேகம் தான் அற்றான் ஒத்து வரும்
தீ வினையில் நல் வினையில் சேர் வெருப்பு சங்கமிவை
யோவி யிருப்பு எய்தும் உகந்து–10–
காய முடையோன் கருமம் எல்லாம் கை விடுத
லாய வகை யங்கு அரிதாகு மேய
பலன் துறந்தோன் நன்றாம் படி துறந்தோன் என்று
நலம் சிறந்தோர் சொல்வர் நயந்து–11-
நன்றும் தீதும் கலந்து நண்ணும் பல மூன்றாப்
பொன்றும் துறவாதுடன் சென்றார்க்கு என்றும்
கருமத்தில் ஒன்றிற் கருது பயன் சாராது
ஒருமைப்படத் துறந்தார்க்கு உற்று–12–
செய்யும் கருமம் எல்லாம் சிந்திக்க நீ விசையா
வுய்யு மதி யறுதி யுற்று உணர்ந்தவை வகை சேர்
காரணங்கள் என் பாற் கருத்து அமர்ந்து கேட்டு அறி நீ
யாரணங்கள் சொல்லுமது–13–
நிற்க நிலை யாகும் உடன் நேர்ந்த வுயிராம் கர்த்தா
வற்க்கு நிழல் செய் கரண மற்றவை தானாற் கழிலாச்
சேட்டை பல பஞ்சமாம் தெய்வ விறை தன் மத்துக்
கூட்ட மாவதாகவே கொள்–14–
காயத்தால் வாக்கால் கருது மனம் தன்னால்
வாயத்தான் செய்ய மருவி முயல் -நேயத்தால்
நல் வினைக்கும் தீ வினைக்கு நாட்டில் இவை ஐந்தும்
செய்வினையில் ஏதுவாம் சேர்ந்து–15–
இவ்விகையால் ஈசனால் கர்த்தாவாம் இவ்வுயிரில்
செவ்வை மதியாது வெறும் சீவனை எவ்வகையில்
கர்த்தாவாம் என்னவே காண்கின்றது உன் மதி தான்
ஓத்தாரும் புத்தி யுறான்–16–
நான் செய்தேன் என்று நடக்கு மனம் இன்றித்
தான் சேர் பயன் அதனில் சார்வற்றான் -தான் சேரும்
இவ்வுலகைக் கொன்றும் இவன் கொல்லான் கட்டுண்ணான்
அவ்வினையில் சேரான் அவன்–17–
அறிவு ஆங்கு அறியப்படும் கன்ம மத்தை
யறிவான் விதி மூன்றோடு ஆகும் செறிவார்
கரணம் செய் கருமம் அதில் கர்த்தவாம் மூன்றாம்
கரணம் செய் கன்மத்து அடைவு–18–
காண் உணர்வும் கன்மமும் கர்த்தாவும் மும் மூன்றாய்ப்
பேணும் குணத்தில் பிரியுமதென் றேணுறவே
யக்குணம் சேர் தண்மை யற வுரைப்பாராம் ஆங்கு அதனை
மிக்கு உணர்ந்து மன்னா கேள் வேறு–19–
வன்னாச் சிரம வகை சேர் எஞ்ஞானத்தும்
கண்ணாருயிர் ஒருமைக் காட்சியாற் திண்ணார
வேறறவே நோக்கு மிகும் அறிவைச் சத்துவத்தில்
சேர் அறிவாம் என்றே தெளி–20–
வேறு படு பூதம் கண் மேவு உயிரும் வெவ்வேறாய்க்
கூறு படும் வகையில் கூடும் எனத் தேறும்
அறிவை இடைக்குணத்தில் ஆகி இவ்வண்ணம்
செறிவது எனவே அறி நீ தேர்ந்து –21–
ஏதேனும் ஓர் கருமுத்து எல்லாம் பெறலாம் என்
றாதே நசை பண்ணி அற்பமாய் மீதேயோர்
மெய்ம்மை யடையா வெறும் அறிவு பிற் குணத்திற்
பொய்ம்மை புனையும் புணர்ந்து–22-
உகப்பு வெறுப்பு அன்றி வுயர் நசையும் அற்றே
மிகத் தனி இயல்வாம் என்று மேவி அகப்பயனில்
ஆசை ஒழிந்து அங்கு இயலும் அக்கருமம் முக்குணத்திற்
பேச வரும் மேல் யுயர்த்தி பெற்று–23–
காம நசை தன்னால் அகங்காரக் காழ்ப்பினிற்
றாம் மருவும் ஆயாசம் தான் மிக்குச் சேமமென
நின்று இயலும் அக்கரும நேர்ந்தே இடைக்குணத்திற்
சென்று இயலும் என்று உரைப்பர் தேர்ந்து–24-
துக்கத் தொடர்ச்சி பொருள் நாசம் சூழ் பீடை
ஓக்க வியல் வலிதான் ஒன்றினையும் தக்கறியான்
மோகத்தால் செய்யும் கருமம் உண்டேற் கடைக்குணத்தின்
வேகத்தால் ஆகுமே மிக்கு–25–
ஆர்ந்த பயன் ஆசை யது விட்டு அகங்காரம்
தீர்ந்து திடனாய் முயற்றி சென்றி யன்று -சேர்ந்து வரும்
பேர் இழவில் வேறு படாப் பீடுடைய கர்த்தாவாம்
வீறு இயலும் சத்துவத்தான் மிக்கு –26–
புகழ் விரும்பிப் புன் பயனை வேண்டிப் பொருளை
மிக வவ்விப் பீடையினை மேவித் தகவு என்னும்
சுத்தி உறாது உட் களிப்புச் சோகத் துறும் கர்த்தா
மத்தியமாம் குணத்தான் மற்று–27-
நன்மைத் தகான் அறிவு நண்ணான் முயற்றி யுறான்
வன்மைச் சடன் மறத்தின் மன்னுவான் புன்மை சேர்
மந்தன் சோம் பன்நெடுக வாதை நினையும் கர்த்த
கந்தத்தாற்றா மதனாம் தான்–28-
புந்தியிலும் திண்மையிலும் பூணும் குணப்பிரிவால்
வந்திவை தான் முன்றாம் வகை யதனைச் சிந்தை திகழ்ந்து
எல்லாம் பிறிவறிய யான் இயம்பக் கேள் இதனை
நல்லாய் தனஞ்சயனே நன்கு–29-
துக்க வியல் அறமும் நல்ல அறமும் காரியமும்
மிக்க வகாரியமும் மேல் அச்சம் தக்க வரும்
அஞ்சாமை பந்தம் வீடான்றறியும் புந்தி தான்
எஞ்சா முதற் குணத்தாம் இங்கு -30-
தன்மமும் மற்று யதன்மையும் காரியமும்
புன்மைய காரியமும் போக்குத்தா நன்மை யுறக்
காணும் வகை யன்றிக் காணலுறும் புத்தி தான்
பேணும் இடைக்குணத்தைப் பேர்ந்து–31-
மேவு பொருள் எல்லாம் விபரீதமாகவே
தாவும் இருள் சேர்ந்து தனஞ்சயனே -யாவதென
வொன்று மதன்மத்தை வேறுணரும் புத்தி தான்
சென்று கடைக்குணத்தாம் சேர்ந்து–32–
உண்மையினால் நெஞ்சை உயிர் புலன்கள் உற்ற செயல்
வண்மை யறி யோகத்து மன்னி வரும் திறமையினால்
உற்றே தரிக்கும் உயர் திருதி பார்த்தனே
யற்றே முதற் குணத்ததாம்–33-
தன்ம காம அர்த்தங்கள் தன்னையே யாதினாற்
புன்மை சேர் தன் பயனாற் புந்தித்து -வன்மை சேர்
சங்கமுடனே தரிக்கின்றானத் திருதி
யங்க விடைக் குணத்ததாம்–34–
மன்னும் உறக்கம் பயம் சோகம் வாட்டம் அதந்
துன்னுமிவை இத்தனையும் துன் மதியால் மன்னி
இடைவிடாதே மருவும் இத் திருதி பார்த்தா
கடையிலாம் குணத்தின் காழ்ப்பு–35–
தான் அமர்ந்து சேர் சுகம் தான் தன் குணத்தான் மூன்று மிகை
யானபடி கேள் நீ அமர் விசயா வூன மற
மிக்கு அதனிற் சீலத்தான் மெய்யே உகப்பு எய்துத்
துக்க முடிவும் செறியும் சூழ்ந்து–36–
எது முதல் விடம் போல் இன்னாது பின்னது தான்
மீது வளர்ந்து அமுதமே ஒக்கும் ஒத்து உயிர்ப்
புந்தித் தெளிவு தகும் பொற் பார் சுகமது தான்
முந்தித் திகழ் குணத்தின் மொய்ம்பு–37–
மூளும் பொறி புலனான் முன்னமுதம் போலாகி
மீளும் பொழுதில் விடம் போலே -நாளும்
கொடு நிரையத்தே வீழ்க்கக் கூட்டும் சுகம் தான்
அடும் திகழும் அக்குணத்தின் நட்பு–38-
தோன்றுழியிற் றுய்ப்பிற் றுளங்கா வுயிர் மயக்கி
யூண் றுறக்க முண் மடிவோர்ப் பின்மையா லேன்று வரு
மோகச் சுகமது தான் முற்குணத்திற் பிற குணத்த
தாகப் புகன்றார் அறிந்து–39–
பூமி மிசை மானிடரிற் பொன்னுலகின் மன்னுவா
ராம் இமையோர் தம்மில் அமர்ந்து ஒருவர் தாம் இயலும்
முன்னைப் ப்ரக்ருதி மூளுந்த முக்குணங்கள்
தன்னைப் பிரிந்ததிலைத் தான்–40-
மா மறையோர் மன்னவர்கள் வைசியர்கள் சூத்திரர்க
ளாம் மனிசர்க்காகி யமர் தருமே தா மருவும்
தன்மை யமர் குணத்தின் சார்வுடனே வேறு படு
நன்மை யமரு நயந்து–41–
சமம் தமம் சார்ந்த தவம் தன்னமர்ந்த சுத்தி
நமர்ந்த பொறை செவ்வை ஞானம் அமர்ந்த
இறையை அறி உண்மை யுணர் விக்கரும மாகு
மறையவர் தம் தண்மை மதம்–42-
ஸுர்யமும் மிக்கு ஒளியும் தத் துணிவும் தன சமத்தும்
வைரியமர் நாணாமை வாய்ந்த கொடை சீரியனாய்
ஒக்கரிய மிக்குமதும் ஓங்கு அரசர் தம் தன்மை
தக்க கருமமாம் சார்ந்து–43–
காணி விளைப்பதுவும் காலி யாவை காப்பதுவும்
வாரியமும் வைசியர்க்கு வாய்த்த தொழில் பேணி அவர்
மூவருக்கும் ஆளாய் முயலுமதே சூத்திரர்க்கு
மேவப்படும் தொழிலாம் மிக்கு–44-
தம் தம் கருமத்துச் சார்ந்தே தரும பயன்
வந்தடைய லாகு மனிசர்க்கும் சந்தமுடன்
தன கருமம் நின்று ஒருவன் தன் சித்திக் சார் வகையை
நன்கு அமரக் கேள் நீ நயந்து –45-
எவன் பால் பூதங்கள் எல்லாம் பிறந்து இயலும்
எவன் தான் இங்களிடைப் பரம்பும் மேவியே
அங்கு அவனைத் தன் கருமத்தாலே அருச்சித்தே
ஒங்க அவன் சித்தி உறும்–46-
தன் கருமம் அல் குணத்தைச் சார்ந்திடினு மிக்கியன்ற
வன் கருமமானவது மற்று ஒன்றி -நன்கு அதுவாம்
தன்மை சேர் கன்மத்துத் தக்கியல்லால் சார் துயரப்
புன்மை சாரான் போய்ப் புறத்து–47–
கூடப் பிறந்த கருமம் குறையுறிலும்
வீடப் படாது விகல் விசையா -பீடுற்ற
எல்லா முயற்றியையும் ஏய்ந்து எரியத் தூமம் போற்
பொல்லாங்கு சூழும் புகுந்து–48–
எங்கும் துவக்கின்றி ஏலும் மனம் செயித்துப்
பொங்கு நசையில்லாப் போதத்தால் அங்குத்
தனி யமர் சந்நியாசச் சார்வதனாற் மேவும்
வினை யகன்ற மேலாம் வியப்பு–49–
செவ்வி யுறும் தியானத்தின் சித்தியினைச் சேர்ந்தவவன்
எவ்வாறு தான் பிரமம் எய்தினான் அவ்வாறு
சேர்ந்த வதில் இலையாம் சித்தியது சுருக்க
வார்ந்து எனது பால் நீ யறி–50-
கோதறு சீரப் புத்தியுடன் கூடித்தன்று இன்மையான்
மீதியாலும் நெஞ்சை மிக யடக்கித் தீத மரு
மோசை முதற் பொருள்கள் உள்ளுற விட்டு ஒன்றி வரும்
ஆசை வெறுப்பு அவையும் அற்று–51–
தக்க தணியும் இடத்துச் சார்ந்த அறிவு தான் சிறிது உண்டு
ஓக்க உரை காய நெஞ்சு உள் ஒடுக்கி மிக்கு அமர்ந்தே
என்றும் தியானமாம் யோகம் சேர்ந்து எவ்விடத்தும்
ஒன்று நசை விடுதல் உற்று –52–
ஆங்காரம் யத்தில் செருக்கும் காமமுடன்
தீங்கார் வெகுளி தான் சேர் சுற்றம் தேங்காது
நீந்து மமதை நெகிழ்ந்தே நிகழ் சாந்தின்
வாய்ந்த பிரமத்தானாம் வந்து–53–
தொண்மைப் பிரம வுயிர் தோன்ற மனதில் தெளிந்து
புன்மைப் பல சோகம் பூண் நசையின் றன்மை யவித்து
எப்பொருட்க்கும் ஒத்து என்பால் ஏய்ந்த பரபத்தியினைப்
தப்பறவே சேரும் சமைந்து–54–
எவன் நானாவேன் மற்று எவ்வளவின் உண்மையினால்
ஆவன் ஆங்கு என்னை யறிவது தான் -மேவ நிகழ்
பத்தி யான் மெய் யுணர்ந்தே பண்பால் எனைப் பின்னே
முத்தியால் வந்து அடையும் முற்று–55–
மற்று இக்கர்மங்கள் எல்லாம் மருவி எனைப்
பற்றிப் பயின்று எங்கும் பார்த்தி யல்லான் அற்ற மந
மேவும் எனது அருளால் மிக்கடையும் அற்கமற
ஓவுதல் இல்லாப் பதத்தை யுற்று–56–
நெஞ்சாற் கருமம் எல்லா நேராக என்னிடை வைத்து
எஞ்சாம் வெற் பரனாய் எந்நாளும் துஞ்சாத
புத்தி யோகத்தைப் புணர்ந்து பொருவில் என் தன்
பத்தி யோகம் பெறு நீ பார்த்து–57–
என்னை நினைந்த நீ என்றும் இத் துற்கங்கள்
தன்னிகரில்லா என் அருளால் தான் கடத்தி-பின்னை தனை
யாங்காரத்தாலே யமர்ந்து நீ கேளாய் ஏற்
றாம் காதிங்கேந சித்தி தான் –58-
ஓங்கும் அகங்காரத்தில் உற்றே வுயர் சமரம்
ஈங்கு முயலேன் என்று இருத்தியேல் ஆங்கு நிறை
மேவும் துணிவதுவும் மெய்யன்று தன்மை யுனை
ஏவும் சமயத்தில் ஏய்ந்து–59-
தன்மை யமர் தன் கருமம் தன்னால் பிணிப்புண்டு
நன்மை யமர்ந்த வமர் நாணி நீ யுன் மருவு
மோகத்தால் மீண்டிடினும் உண்டே யவசனாய்
வேகத்தாற் செய்வுதி நீ மிக்கு –60–
ஈசன் அவன் ஒருவன் எல்லார் இதயமாம்
தேசம் அதனில் நிற்கும் சீர் விசயா பாசமுடன்
எல்லா உயிர்களையும் மாயையினால் திரிக்க
வல்லான் இயந்திரத்தில் வைத்து–61-
அந்த அவன் தன்னையே யானாதவன் சரணாச்
சந்தமுடன் அடை நீ தார் விசயா முந்த வவன்
தன்னருளால் மேலான சாந்தியையும் சாயாத
வன் பதமும் நீ பெறுதி வாய்ந்து–62–
இவ்வாறு ஞானம் உனக்கு இங்கே எழில் மறையிற்
செவ்வா மறைப்பொருளைச் செப்பினேன் எவ்வாறு
தன்னியல்வை ஆராய்ந்து சாய்ந்து அதனை இச்சித்தாய்
நின்னியல்வாற் செய் நீ நிகழ்ந்து–63–
செவ்வாம் மறைட்பொருளை- செவ்வை யான ரவாஸ்யார்த்தங்களை,
செப்பினேன்…உபதேஸித்தேன,
நின் இய்ல்வால்–உன் அதிகாரத்துக்குத் தக்க படி-
இன்ன மறைப் பொருள்களுக்கு எல்லாம் மிக மேலா
மென்ன மருஞ்சொல்லின் இறுதி கேள் முன் அமரும்
இட்டன் றிடன் என்னும் இத்தால் உனக்கு இதமாய்ப்
பட்டதனைச் சொல்வன் பரிந்து–64–
இட்டன்–இஷ்டன்,
இதமாப் பட்டதனை –இதமாகவுள்ளதை.
பரிந்துசொல்வன்–பரிவாகச் சொல்லுவேன்,
என்னை மனனம் பண்ணு என் பக்தனாகியே
என்னை அருச்சி என்னை வணங்கு என்னையே
மேவுதிரி மெய் உனக்கு மிக்கறுதி சொன்னேன் நான்
ஏவு தவற்று என் உகப்பால் உற்று–65–
என் பத்தனாகியே –. என்னிடத்தில் பிரீதியைக் கொண்டு,
என்னை மனனம் பண்ணு –பிரீதி ரூப மாயிருக்கிற ஸ்மிருதி பரம்பரையைச் செய்.
வேதகம்,தியானம், உபாஸனம் முதலிய சொற்களுக்குப் பொருளாய், தரிசனத்துக்கு ஸமானமாயிருக்கும் மிகுக்த
பிரீதி ரூபமாயிருக்கும் ஸ்மிருதி பரம்பரை யென்சு,]
அருச்சி–ஆராதனஞ்செய், ஆராதனமாவது–பரிபூர்ண சேஷ விருத்தி.
என்னையே மேவுதி–என்னையே யடைவாய்.
அறுதி—நிச்சயம்,
எல்லா அறங்களையும் இங்கு அற விட்டு என்னையே
நல்லார் சரணமா எண்ணி யிடு தொல்லாரும்
பாவங்களின் நின்று வுன்னைப் பற்று விடுவிப்பன் நான்
தவம் தனை ஒழி நீ தான்–66-
எல்லா அறங்களையும் ௮றவிட்டு…சர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்கிற மோக்ஷ ஸாதனங்களான எல்லாத் தர்மங்களையும்
என்னுடைய ஆராதன ரூபமாக மிகுந்த பிரீதியோடு உன் ௮திகாரத்துக்குத் தக்கபடி செய்து கொண்டே, கீழ்ச சொன்ன படி பலனையும், கர்மத்தையும் ,கர்த்ருத்வத்தையும் விட்டு,
என்னையே சரணமாக எண்ணியிடு–ஆராத்ய ஸ்வரூபனான என்னையே பலமாகவும் உபாயமாகவும் கருதி சரணம் புகுவாய்.
பாவங்களின் நின்று வுன்னைப் பற்று விடுவிப்பன் நான்–(என்னை யடைதற்கு விரோதிகளாய்,
செய்யத் தகாவற்றைச் செய்கையும், செய்யத் தக்கனவற்றைச் செய்யாமையுமான)
ஸகல பாவங்களினின்றும நான் உன்னைப் பற்று விடுவிப்பேன்.
தவம் தனை ஒழி–(ஆகையால்)நீ சோசம் கை விடு[பக்தி யோகத்தை நாம் செய்ய வொட்டாமல் விரோதியாய் பாதிக்குமவைகளாய்
அநாதி காலமாய் ஸம்பாதிக்கப்பட்டவைகளாய் நாநாவிதங்களாய் அநேகங்களாயுள்ள பாபங்களுக்குத் தக்க
பிராயச்சித்த ரூபங்களாயும், இருச்சிரம், சாந்திராயணம், கூச்மாண்டம, வைச்சுவாரரம், வ்ராதபிவித்திரேஷ்டி, சரிவரத்நிஷ்டோமம் போலப் பலவித௩்களாயும்-௮னந்தங்களாயும் எத்தனை காலம் ஜீவித்திருந்து அனுஷ்டித்தாலும் அனுஷ்டிக்க உரியவைகளாயுமிருக்கின்ற கர்மங்களையும் விட்டு,
பக்தியோகம் ஆரம்பிப்பதற் காகப் பரம காருணிகனாய்ப் பிராணிகளிடத்தில் ஒரு விசேஷத்தையும் ஆலோசியாமல் அவைகளுக்கெல்லாம் சரண்யனாய்
ஆஸ்ரிதர்களிட த்திலுண்டான வாத்ஸல்யத்துக்குக் கடலாயிருக்கின்ற என்னையே சரணகப் பற்று,
நான் உன்னைக் கீழ்ச சொன்ன பக்தியோக ஆரம்பத்திற்கு விரோதிகளான பாபங்களினின்ரும் விடுவிக்கின்றோம்,இதற்காகச் சோகிக்க வேண்டாம் என்று உரைத்தலுமுண்டு, |
இப்பொருளை இல்லாத் தவத்தாற்கும் என்னிடையின்
மெய்ப்பொருளாம் பக்தி இலா வீணற்கும் சொப்படவே
இச்சையுடன் கேளார்க்கும் என்னைப் பொறாதற்கும்
அச்சமுற நீ யுரையேல் ஆங்கு–67–
இப்பொருளை–( இப்போது நான் உனக்குச் சொன்ன பாம ரஹஸ்யமான) இந்த அரத்தத்தை,
இல்லாத் தவத்தாற்கும்–இல்லாத தவத்தை யுடையானுக்கும் –௮தாவது தவம் புரியாதவனுக்கும்,
என்னைப் பொறாதாற்கும்–என் குணங்களைக் கேட்க ஸஹிக்காதவனுக்கும்
இத்தகையின் மேலா மறைப்பொருளை யேவன் என் தன்
பத்தரிடை நின்று பரிந்து உரைக்கும் அத்தகையோன்
அன்பால் பரமாம் பக்தி எய்தி ஐயமற
இன்பால் எனை யடையும் ஏய்ந்து–68–
மிகவும் ரஹஸ்யமான இவ் வர்ததத்தை யாவன் ஓருவன் என் பக்தரிடத்தில் பரிவோடு சொல்லுகிறானோ
௮வன் என்னிடத்தில் மிகுந்த பக்தியைச் செய்து ஸந்தேகமில்லாமல் என்னையடைவான்.
மானிடரால் ஆங்கு அவனின் மற்று ஒருவன் என் உகப்பில்
தான் இயல்வு மிக்கவவன் தான் இல்லை மேனிகழும்
எக்காலும் மேதினியில் இல்லையாம் என்னுகப்பில்
தக்கார்வம் மிக்கு இனியன் தான்–69–
௮வனின்–அவனைப்போல,
மேதினிபில்–பூமியில்,
இனியும் உண்டாகப் போவதில்லை யென்பார் எக்காலுமில்லை என்கிறார் .
(அயோக்கியர்களை முந்தி யெடுத்தது, இவ்வர்த்தததை யோக்கியர்களுக்குச சொல்லாமல் இருப்பதைப் பார்க்க அவர்களுக்குச் சொல்வது மிகவும் ௮நிஷ்டம் என்கைக்காக என்க .]
நாம் இருவர் நின்று இயம்பு நல்லறம் சேர் இக்கீதை
பா மருவி ஓதும் பரிவன் எனைத் -தூ மருவு
நெஞ்சறிவாம் எச்சத்தால் நேரே இறைஞ்சினன் என்று
எஞ்சலற யான் மதிப்பன் இங்கு–70–
செஞ்சறிவாம் எச்சம்–ஞான யோகம்,
இறைஞ்சினான் -ஆராதித்தான்.
எஞ்சலற-குறைவற,
சேர்ந்து ஸ்ரத்தையினைச் சேராத அஸூயை யினை
யார்நது இதனைக் கேட்க்கும் நரன் ஆனவனுக்கும் தீர்ந்து துயர்
அற்றே அறிவெய்தும் அன்புடையோர் தம் கூட்டம்
பெற்றே மகிழும் பெருத்து–71-
துயரற்று-பக்தி ஆரம்ப பாபக்களினின்றும் விடுபட்டு
பார்த்தனே நின் ஒருமை பற்றி யாம் சித்தத்தால்
சேர்க்க இது கேட்டுச் சிறந்தாயே பேர்த்து உன்னை
மோகத்தைச் செய் மாயம் முற்றும் கழிந்ததே
போகத்தைச் சேர்ப்பான் புணர்ந்து–72–
என்று இறையோன் சொல்ல எழில் விசயன் செப்பினான்
இன்றியலும் மோகம் போய் ஏய்ந்து மதி நின்று நான்
உன்னருளினால் மயக்கம் ஒன்றும் இன்றிச் சென்று இயல்வன்
சொன்னது எல்லாம் செய்வன் துணிந்து–73-
உன்னுடைய பிரஸாதத்தால் விபரீத ஞானம்
போய் ஞானத்தைப் பெருக்கி மயக்கத்தை யொழித்தேன், சொன்னதெல்லாஞ் செய்வேன் என்க,
[தேகாதிகளே ஆத்மாவென்கிற துரபிமானமும்,
சேதனாசேதன ரூபமான ஸகல பிரபஞ்சமும் பரம புருஷனுக்குச் சரீரமென்கிற விஷயமும் தெரியாமல்
நினைத்திருந்த துரபிமானமும்,
நித்திய நைமித்திகமான கர்மம் பரம புருஷனுடைய ஆராதன ரூபமாக அனுஷ்டிக்கப்படுமாகில்
அவனை யடைவதற்கு உபாயமாகுமென்கிற விஷயமும் தெரியாமல்
அதைச் சரீரத்துக்குடலாச நினைத்திருந்த அஞ்ஞானமும் தொலைந்தன.
ஆத்மா பிரகிருதியின் ஸ்வபாவமின்றி அறிவதே ஸ்வபாவ
மாயப் பரமபுருஷனுக்குச் சேஷப்பட்டு ௮வனால் ஆளப்
படுவதே ஸ்வரூபமாயிருக்கிறது என்ற ஞானமும்,
பரம புருஷனுடைய உண்மையை யறியும் படியான ஞானமும்,
பரமபுருஷனுக்குப் பிரீதியை வளர்ப்பதான
நித்திய நைமித்திக கர்மங்களை யனுஷ்டிப்பதாலும்,
சமம், தமம் முதலிய ஆத்ம குணங்களாலும் பெறவேண்டிய (பக்தி ரூபமாய்ப் பரிண மிக்கி இருக்கிற) பரமபுருஷோபாஸனத்தால் மாத்திரம்
அடையப்படும் பொருளும்,
வேதாந்த விழுப் பொருளும், பரம புருஷனுமான வாஸுதேவன் தேவரீரே யென்ற ஞானமும் எனக்கு உண்டாயின என்பதாம்.]
இவ்வண்ணம் மாயனுக்கும் ஏந்து உயர் சீரப் பார்த்தனுக்கு
மெய் வண்ணம் வார்த்தை விளைந்த படி செய் வண்ணம்
மீண்டே நான் கேட்டேன் இவ்வற்புதத்தை இவ்வுடலில்
பூண்டே மயிர் எறிவாம் பூண்டு –74–
இப்படி மஹாத்மாவான வாஸூ தேவனுக்கும் பார்த்தனுக்கும் உண்டான அற்புதமாய்
ரோம ஹர்ஷணமான இந்த ஸம்வாதத்தை நான் கேட்டேன் என்க
செவ்வண்ணம் என்றும் பாடம்,
சீரார் வியாதன் திருவருளால் மிக்குயர்ந்த
ஏரார் மறைப்பொருளாம் இவ் யோகத்தைப் பேர் ஆண்மைக்
கண்ணன் அவன் தானே கருத்தோடு உரைத்து அருள
வெண்ணமுடன் கேட்டேன் நான் இங்கு–75-
யோகத்தை நேரே யருளிச் செய்கிற யோகேஸ்வரனான கண்ணன் பக்கல் நின்றும்
இந்தப் பரமான குஹ்ய தமத்தை வியாஸ மகரிஷயினுடைய பிரஸாதத்தாலே கேட்டேன் என்க,
மன்னவா கேசவனும் பாண்டவனும் வார்த்தியினைச்
சொன்னவா நான் நினையும் தோறு எல்லாம் இன்னவாறு
என்ன ஒண்ணாது அற்புதமாய் இயல்கின்ற புண்ணியமாப்
பன்ன வுகப்பவன் பயின்று–76-
ராஜாவே! கேசவார்ஜுனர்களுடைய, புண்யமாய் ௮த்புதமான இந்த ஸம்வாதத்தை
நினைக்க நினைக்க எனக்கு ஸந்தோஷமுள்ளடங்காமல் வருகின்றது என்பதாம்.
அங்கு மிக அற்புதமாம் அண்ணல் வடிவினையும்
ஈங்கு நினைதோறும் எழ வியப்பாய் ஓங்கும்
உகப்பு மிகு மேன்மேலும் உற்று என்று உரைத்தான்
மிகப் புகழ் சேர் சஞ்சயன் தான் மிக்கு–77-
கிருஷ்ணனுடைய ௮த்புதமான அந்த ரூபத்தை நினைக்க நினைக்க எனக்குப் பெரிய விஸ்மயமுண்டாகா நின்றது.
பின்னையும் பின்னையும் பிரீதனாகா நின்றேன் என்க,
எவ்விடத்தான் யோகத்துக்கு ஈசனாம் கண்ணன் தான்
எவ்விடத்தான் வில்லேந்தும் எழில் விசயன் அவ்விடத்தே
வாய்ந்த திருவிசை யம் வாழ்வு வள நீதி திட
மேய்ந்தன வென்றே மதிப்பன் யான்–78–
எங்கே யோகேஸ் வரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் எழுந்தருளி யிருக்கின்றானோ,
௮வன் திருவடிகளையே நம்பிபிருக்கின்ற வில்லுங்கையுமான அர்ச்சுனன் எங்கே விளங்குகின்றானோ
அங்கு லஷ்மியும், விஜயமும், விபூதியும், நீதியும் சாஸ்வதமாய் நிலை நிற்கும் என்பது என்னுடைய ஸித்தாந்தம்,
தன்மைக் கருமம் தகு குலத்தின் தூய்மை யுடன்
நன்மை பயில் சார நன்கு அறியத் தொன்மைப்
பரமன் அருள் கீதை பதினெட்டாம் ஒத்தாம்
சாமம் உரைத்து சார்ந்தது இது தான்
————
த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:
உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து.
உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.
ஸந்யாஸம் கன்மத்தில் சாரும் தியாகத்தில்
முன் யான் பிறிவொருமை முற்று அறியேன் –பின் பின் யான்
தோன்றாது நீ இதனைச் சொல் என்றான் பார்த்தன் அதற்கு
என்று அங்கு உரைத்தான் இறை–1–
காமக் கருமங்கள் கை விடுதல் ஸந்நியாசம்
சேமத்தது என்று சிலர் உரைப்பர் -ஏமத்தால்
எக் கருமம் அப்பேறும் இகழ்வும் தியாகம் எனச்
சிக்கெனவே சொல்வர் சிலர் –2-
ஏதம் போற் கன்மம் இகழப்படும் என்று
போதர் சிலர் உரைப்பர் புந்தி யான்–மீதென்றும்
எச்சம் தவம் தானம் ஈங்கு இகழ்வது அல்லது என
நிச்சம் சிலர் உரைப்பர் நின்று–3-
அந்தத் தியாகத்து அறுதியினை என் பால் கேள்
சந்ததிகள் பாரதர்கள் தம் தலைவா -முந்துறவே
யான் பகர்ந்தேன் மூன்று வகை என்றே தியாகத்
தான் பயனச் சங்கந் தவிர்ந்து –4-
பாவிய சீர் எச்சம் பயிலும் தவம் தான்
மேவி இகழாது என்று முற்றியல மேவினவை
யாவின் பால் ஆங்கு அவை தானான அறிவினர்க்கும்
பாவனமாம் என்றும் பயின்று–5–
————-——————-
பின்னுரை
தூய கருமங்களினால் சத்வம் மிக யுண்டாக்கி
ஏய உணர்வால் உயிரின் ஈறு அறிந்து -மாயனிடை
முத்தி யுறும் சிந்தை முயலாசை முன் பணிவாள்
பத்தி யுறல் கீதைப்பயன் –1–
எவ்வறமும் சொல்லி யிறுவாம் ஸ்லோகத்தால்
செவ்வறமாம் தன் சரணாச் செப்புதலால் அவ்வறத்துத்
தான் துணையா மாயன் தனித்துத் தனை அளிக்கும்
வான் துணையாம் என்று இருத்தல் வாய்ப்பு –2-
நெஞ்சுள் கலந்து என்னை நேர் நினைத்து நூல் இட்டுச்
செஞ்சுடர் சேர் தாற்பரிய தீபத்தால் பஞ்சவர் தம் தேர்ப்பாகன் கீதைச் சிறந்த பொறுப்பில் காட்டினேன்
நேர்ப்பாகு நன்றே இனிது –3
மாயனருள் கீதை மன்னு பொருடன்னைத்
தூய பெரும்பூதூர்த் தொன்முனிதன்–மேய
தகையான் மணவாள மா முனிவன் சொன்னான்
தொகையாரும் லெண்பாச் சுரந்து.
சொட்டை மணவாளத் தூ முனிவன் சொல் செறிந்த
சிட்டம் மருவும் தமிழ்ப் பாவால் – கட்டு எழில் சீர்க்
கோமான் அருள் கீதை கூறும் பொருள் உணர்வோர்
சீமான் அடி சேர்வர் சென்று.-ஆசிரியர் பெயரைக் குறிப்பிடும் பாடல்
————–————-——————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply