காஷ்மீர் பக்தி மண்டபம் சாரதா பீடம் -வித்வான்கள் மலிந்த இடம்
காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்
முதலாம் நூற்றாண்டை சேர்ந்த குஷாணப் பேரரசு காலத்தில் சாரதாபீடம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு பெரிய பல்கலைக்கழகம் ஒன்றும் செயல்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பண்டிதர்கள் சாரதா பீடத்துக்கு சென்று பல்வேறு பண்டிதர்களுடன் விவாதம் செய்வார்கள். அதில் வெற்றி பெறுபவர் சர்வக்ஞர் (எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவர்) என்று அழைக்கப்பட்டார்.
சர்வக்ஞர் பட்டம் பெற்றவர்களே சாரதா பீடத்தின் கருவறைக்கு சென்று தேவியை வழிபட முடியும். 7-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆதி சங்கரர், சாரதா பீடம் சென்று அனைவரையும் தனது வாதத் திறமையால் வென்று பீடத்தின் உள்ளே நுழைந்தார்.
அவர் உள்ளே சென்றபோது சரஸ்வதி தேவி அவரை சோதனை செய்தார். அந்த சோதனையிலும் ஆதி சங்கரர் வெற்றி பெற்றார். அவரது அறிவு, ஞானத்தை மெச்சி, தேவி அருளாசி வழங்கினார்.
ஸ்ரீ சாரதா பீடம்-அற்புதம் வாய்ந்த இந்துக்களின் ஆன்மிக பூமியான ஜம்மு காஷ்மீர்-
ஸ்ரீ சாரதா பீடம் (Sharada Peeth), இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில், இந்து சமயக் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.
சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது.
14ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார்
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், பாரமுல்லாவிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும்,
முசாபராபாத் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும்,
எல்லைக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்தில் சாரதா பீடம், புகழ் பெற்ற வேத கல்வி மையமாக விளங்கியது.
அத்வைத தத்துவ நிறுவனர் ஆதிசங்கரர் மற்றும் விசிட்டாத்துவைத நிறுவனரும் வைணவ குருவுமான இராமானுசர்,
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக காஷ்மீரின் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்தனர்.
யுவான் சுவாங்
கி பி 632 இல் சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்து,
இரண்டு ஆண்டுகள் தங்கி, பௌத்தம் தொடர்பான கல்வியைப் பயின்றார்.[6]
சாரதா கோயில் அமைப்பு
சாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது.
மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது.
கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.
வரலாற்று குறிப்புகள்
காஷ்மீரப் பண்டிதரான மகாகவி கல்ஹானர், தான் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமஸ்கிருத நூலில்
சாரதா பீடத்தையும், அதன் நிலவியலையும் குறித்துள்ளார்.
இசுலாமிய வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பிருனி (973 – 1048), சாரதா பீடத்தின் கருவறையில்
மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரத்தின் மூல ஸ்தானம் -மருவி இந்தப்பெயர் – சூரியன் கோயில் போன்று,
சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக குறிப்பிடுகிறார்.
பதினான்காம் நூற்றாண்டில் சாரதா பீடத்தின் கோயிலை இசுலாமியர்கள் சிதைத்ததாக கருதப்படுகிறது.
காஷ்மீரம் – ஒரு ஹிந்து பூமி! ஹிந்து மதத்தின் அடித்தளம்!காஷ்யபபுரி எனும் காஷ்மீர்! வேதம் விளைந்த பூமி!
தெய்வங்கள் தேடி வந்த பூமி! ரிஷிகள், முனிவர்களின் அருந்தவ பூமி! ஆசார்யர்களின் ஆன்மீக பூமி!
காஷ்மீர்=காஷ்யபர்+ மீரா. காஷ்யப ரிஷியின் பெரிய ஏரி. பெரிய ஏரிக்கு சம்ஸ்க்ருதத்தில் ‘மீரா’என்பர்.
காஷ்யப ரிஷி இப்போதைய வைவஷ்வத மந்வந்ரத்தின் சப்த ரிஷிகளில் ஒருவர். அதாவது ஏழு ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர்.
காஷ்யப கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ரிஷியின் மரபினர்.
ப்ரஜாபதி தக்ஷர் தம் 13 குமாரத்திகளை காஷ்யபருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
தேவர்கள், கன்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள் எல்லாம் காஷ்யபரின் பிள்ளைகள்.
ஸ்ரீநகர்–குல்மார்க் பெரிதும் வற்றிப் போன ஏரியின் பெரும்பகுதியைச் சமப்படுத்தி ஊராக்கினார் அனந்த்நாக்.
அங்கு பல குருகுலங்கள், சர்வகலா சாலைகள் நிறுவி மிகப் பெரிய ஞான நகரம் ஆக்கினார்.
உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல சமயங்களைச் சார்ந்த அறிஞர்களும் ஞானிகளும் வந்து கூடி சத் சங்கம் செய்யும் இடமாகத் திகழ்ந்தது.
ஞானம் என்னும் செல்வத்தை (ஸ்ரீ) உடைய நகர் என்பதால் ‘ஸ்ரீநகர்’ ஆயிற்று.
இவற்றை எல்லாம் நிர்வாகம் செய்ய நிர்மாணித்த இடமே இன்றைய ‘அனந்த்நாக்’.
ஸ்ரீநகரின் ஞானச் செல்வத்தை அனுபவிக்க கெளிரி தேவியும், விநாயகரும் கைலாயத்தி லிருந்து அங்கு வருவார்களாம்!
அவர்கள் வரும் வழிக்கு ‘கெளரிமார்க்’ என்று பெயர். அதுவே மருவி இன்றைய ‘குல்மார்க்’ ஆயிற்று.
ஞான பூமியை ஆளும் ஞான தேவி ஸ்ரீ சரஸ்வதி:
காஷ்மீரை ஆளும் காவல் தெய்வம் சரஸ்வதி தேவி. சரஸ்வதிக்குரிய ஸ்லோகத்தில் ‘காஷ்மீர பூர வாசினி’ என்று போற்றப்படுகிறார்.
‘நமஸ்தே சாரதா தேவி!
காஷ்மீர் பூர வாசினி!
த்வமஹே ப்ரார்த்யே நித்யம்,
வித்யா தான் இஞ்சா தேஹிமே!’
காஷ்மீர மொழியின் எழுத்து வடிவங்கள் ‘சாரதா’ என்று அழைக்கப்பட்டது. கலாசாலைகள் ‘சாரதாபீடங்கள்’ஆயின.
அந்த நாடே ‘சாரதா தேசம்’ என்றும் அழைக்கப்பட்டது.
(சரஸ்வதி கோவில், சாரதா பீடம் எல்லாம் இன்றைய பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் – POK – இடிந்த நிலையில் உள்ளன!
வழிபாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன!)
ஆதிசங்கரரின் ‘செளந்தர்ய லஹரி’
ஆதிசங்கராசார்யர் எட்டாம் நூற்றாண்டில் காஷ்மீர் வந்து, பல ஆண்டுகள் தங்கியிருந்தார்.
கோபாலாத்ரி மலைமேல் அமர்ந்து தான் சிறந்த ‘செளந்தர்ய லஹரி’பாடினார். இந்த மலை சங்கராசார்ய மலை என்றும் அழைக்கப்படுகிறது.
நீலம் நதி (கிருஷ்ண கங்கா)க் கரையில் இருந்த சாரதா கோவிலுக்குச் சென்ற ஆதிசங்கரர், அந்தக் கோவிலின் அமைப்பு,
சாந்நித்யம் ஆகியவற்றைக் கண்டு மிக உகந்து அதே போல சிருங்கேரியில் துங்கபத்ரா நதி தீரத்தில் கோவில் கட்டினாராம்.
சிருங்கேரியில் உள்ள சாரதாம்பாளின் சந்தன மரத்தாலான மூல விக்ரகம் காஷ்மீரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீ ராமானுஜரின் ‘ஸ்ரீபாஷ்யம்’
ஸ்வாமி ராமாநுஜர் 11 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் வந்தார். வேத வியாசரின் பிரம்ம சூத்திரங்களுக்கு உரை எழுதுவதற்காக,
சாரதா பீடத்தில் இருந்த, வேத வியாசரின் சீடர் போதாயன மகரிஷி இயற்றிய ‘போதாயன விருத்தி கிரந்தம்’ என்னும் நூலைப் பார்க்க வந்தார்.
ஸ்ரீ ராமாநுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்யத்தை ஸ்ரீ சரஸ்வதி தேவி தம் சிரசில் சூடிப் பெருமைப் படுத்தினார்.
சில சூத்திரங்களுக்கு ஸ்ரீ ராமானுஜரின் வ்யாக்யானங்களைக் கேட்டு, அவரை உச்சி முகர்ந்தார்.
ஸ்ரீ ராமாநுஜரை ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்று போற்றினார்.
ஸ்ரீ சரஸ்வதி தேவி தாம் வணங்கி வந்த ‘ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்’ விக்ரகத்தை ஸ்ரீ ராமாநுஜருக்குத் தந்தருளினார்.
பிற மத அறிஞர்கள்:
பெளத்த, சமண மத அறிஞர்களும் இங்கு வந்து தத்துவ விசாரம் செய்தனர்.
பல பெளத்தத் துறவிகள் இங்கு பல ஆண்டு காலம் தங்கி இருந்து கற்றனர்.
யுவான் சுவாங்(சீனா) ஹேமசந்திரர்(சமண) ஆகியோர் இங்கிருந்தனர்.
இஸ்லாமிய மத அறிஞர்களும்- அல்பரூனி- இங்கு வந்து படித்துச் சென்றதாகக் குறிப்புகள் உள்ளன.
பெளத்தம் இங்கு வளர்ந்ததற்கு அடையாளமாக இன்றைய லடாக் பிரதேசம் விளங்குகிறது.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பைத் எதிர்த்து வென்ற இந்து மன்னர்கள்:
இஸ்லாமியர்கள் உலகின் பல நாடுகளிலும் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிய போதும்,
பரத கண்டத்துக்குள் அவ்வளவு சுலபமாக நுழைய முடியவில்லை.
‘லோஹனா’ வம்சத்து மன்னர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் நம் வட மேற்கு எல்லையைப் பாதுகாத்தனர்.
லோஹனா வம்சத்தின் முன்னோர் ‘லவ’ பேரரசரின் (ஆம்… ஸ்ரீராமரின் திருக்குமாரர் தான்) படையில் வாள் படைத் தளபதிகளாக இருந்தார்கள்!
ஸ்ரீராமாயண காலத்து லவ புரி தான் இன்றைய லாகூர் (பாகிஸ்தான்).
காஷ்மீரின் வரலாறு:
மகாகவி கல்ஹணர் காஷ்மீரின் வரலாற்றை ‘ராஜ தரங்கிணி’ என்னும் நூலாக எழுதியுள்ளார்.
எட்டு பகுதிகள்- தரங்கங்கள்-கொண்ட இந்நூலில் 7826 ஸ்லோகங்கள் உள்ளன.
இதையே காஷ்மீர் பற்றிய அடிப்படை ஆதார நூலாக மற்ற ஆராய்ச்சி யாளர்கள் / எழுத்தாளர்கள் கொண்டுள்ளனர்.
கல்ஹணர் காஷ்மீரை ஆண்ட பல மன்னர்களின் பெயரைப் பட்டியல் இட்டுள்ளார்.
அவர்களுள் சில பெயர்கள்:
கோநந்தா, தாமோதரா யஷோவதி, லவ, குசேஷயா, சுரேந்திரா, ஜனகா, அசோகா, ஜலோகா, அபிமன்யு… மற்றும் பலர்.
இந்த நூல் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சுருக்கமாக M.A.Stein என்பவர் ஆங்கிலத்தில் Kalhana’s Rajatarangini-A Chronicle of the Kings of Kashmir என்று
மூன்று புத்தகங்களாக எழுதியுள்ளார்.
காஷ்மீரத்தில் (பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு -காஷ்மீரில்) முஸாபராபாத் நகரிலிருந்து சுமார் 207 கி.மீ தூரத்திலும்,
பாரத -பாக் எல்லைக் கோட்டில் உள்ள குப்வாராவில் இருந்து 30 கி.மீ தூரத்திலும் சாரதா கிராமம் அமைந்துள்ளது.
மேலும் ஒரு சிறப்பு என்ன வென்றால், இந்த கிராமம் கிஷன்கங்கா (இன்னொரு பெயர் நீலம்) மதுமதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில்
நீலம் பள்ளத்தாக்கில், அழகு கொஞ்சும் பிரதேசத்தில் உள்ளது.
இந்த பகுதி பனிபடர்ந்த நங்கபர்பத் மலைத் தொடரின் சாரதா – நாரத சிகரங்களுக்கு இடையில் உள்ளது.
வரலாறு – புராதனம்
சாம்ராட் அசோகரால் பொது ஆண்டு முன் 273ல் புத்தமத கலாசாலை நிறுவப்பட்டது.
மஹாராஜா கனிஷ்கரால் பொது ஆண்டு பின் 141ல் சாரதா பீடத்தில் 4வது புத்த அறிஞர்களின் அவை சந்திப்பு நடத்தப்பட்டது.
கவி கல்ஹணர் தன்னுடைய ராஜ தரங்கிணி என்ற 11வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட காவியத்தில் சாரதா ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அல் பெரூனி என்பவர் இன்றைய தஜிகிஸ்தான் – உஸ்பெஸ்கிஸ்தான் என்றறியப்படும் பகுதிகளைச் சேர்ந்தவர்.
அல் பெரூனி வெளிநாட்டிலிருந்து (மத்திய ஆசிய) வந்த சரித்திர ஆராய்ச்சியாளர்.
இவர் சமஸ்கிருதம், பாரசீகம் என்று எழெட்டு மொழிகள் அறிந்தவர்.
அவர் பாரதத்திற்கு பொது ஆண்டு முன் 1036ல் வந்த போது காஷ்மீரத்திற்கு பயணம் செய்திருக்கிறார்.
அங்கு சாரதையின் பெரிய விக்கிரகம் இருந்ததாகவும் பெரும் எண்ணிக்கையில் யாத்ரிகர் திரண்டிருந்திருந்ததாகவும்
தன்னுடைய பயணநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் 500 வருடங் களுக்குப் பின்னர் அக்பர் காலத்தில் வாழ்ந்து அய்னி அக்பரி எழுதிய
அபுல் பஸலும் சாரதையின் கோயிலைப் பற்றி விவரித்துள்ளார்.
டோக்ரா என்ற ஜாம்வால் வம்சாவளி முதல் அரசர் மஹாராஜா குலாப்சிங். அவர் ஆட்சி புரியத் துவங்கிய ஆண்டு 1846.
அதுவரை முஸ்லிம் படையெடுப்புகளின் போது சிதைக்கப்பட்ட பல கோயில்களை புதுப்பித்துச் செப்பனிட்டார்.
அவற்றுள் முதன்மையானது சாரதா பீடம். இந்த வம்சத்தின் கடைசி அரசர் ஹரிசிங்.
ஊடாடும் ஆன்மீக இழை
ஆதிசங்கரர் பாரத நாடெங்கும் தன் சீடர்களுடன் திக்விஜயம் செய்த போது காஷ்மீரத்தில்
சைவமும் (சிவ வழிபாடு) சாக்தமும் (சக்தி வழிபாடு) புத்துயிர் பெற பெரும் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றார்.
இடைப்பட்ட காலத்தில் காஷ்மீரத்தில் புத்த மதம் ஓங்கி இருந்திருக்கிறது. அவர்களை, ஆதிசங்கரர் சமய உரையாடல்கள்
வாத பிரதிவாதம் நிகழ்த்தி சனாதன தர்மத்தின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தி,
அவர் தம் மனங்களை வென்று ஹிந்துமதத்தை ஏற்கச் செய்துள்னார்.
அவருடைய இலக்கிய நயம் மிக்க இறைவனின் தெய்வீக அழகைப் பாடும் செனந்தரிய லஹரி என்ற நூலை
காஷ்மீரில் எழுதியதாகத் தெரிகிறது. இயற்கையின் அழகு மிளிரும் காஷ்மீரையே சங்கரர் அன்னையின் வடிவமாய் கண்டிருப்பாரோ?
காஸ்யப ரிஷி ஏழு ரிஷிகளுள் ஒருவர். காஷ்மீரம் என்ற பெயர் கச்யயமிர் அதாவது,
காச்யப முனிவர் ஏற்படுத்திய ஏரி அல்லது காச்யப மேரு காச்யபமலை என்பதன் மருவிய வடிவமாக இருக்க வேண்டும்.
வரலாற்று அறிஞர்களின், புராணங்களை படித்தவர்களின் கருத்து அலெக்சாண்டரின் படைகளின் பயண வரலாற்றைக் குறிப்பிடும்
கிரேக்க புத்தகம் பண்டைய காஷ்மீரை காஸ்பேரியா என்று பதிவு செய்திருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த ராமானுஜரும் சீடர்கள் உடன் வர யாத்திரை, மேற்கொண்டு அன்னை சாரதையைத் தரிசனம் செய்தார்.
வேதாந்தத்திற்கு அவர் எழுதிய விளக்கவுரை (பாஷ்யம்) அன்னையின் சன்னதியில் சமர்ப்பித்து, அதன் ஏற்று அங்கீகரிக்குமாறு வேண்டினார்.
அன்னை மிகவும் மகிழ்ந்து இது சாதாரண விளக்கவுரை அல்ல, பாஷ்யங்களுள் உயர்வானது என்று பொருள்பட, ராமானுஜரின் படைப்பு
ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்படும் என்று அசரீரியாக ஒலித்து ஆசீர்வாதம் அளித்தாள்.
கர்நாடக சங்கீதத்தின் மூம்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் சரஸ்வதியைப் போற்றி எழுதிய பாடலில்
அன்னையை காஷ்மீரபுர வாஸினி (காஷ்மீரத்தில் வசிப்பவளே) என்று அழைக்கிறார்.
இன்றளவிலும், காஷ்மீரத்து மக்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், தங்கள் காலை பிரார்த்தனையில்
“நமஸ்தே சாரதா தேவி காஷ்மீர புரவாஸினி த்வாம் வரம் பிரார்த்தயே நித்யம் வித்யாதனம் ச தேஹிமே” என்று வேண்டுகிறார்கள்.
(பொருள் : சாரதே, தேவியே, காஷ்மீரத்தில் வாசம் செய்பவளே, யான் உன்னை தினமும் துதிக்கிறேன்,
அடியேனுக்கு ஞானச் செல்வத்தினை அளிப்பாய்)
புனித யாத்திரை
சாரதாபீடம் என்னும் இந்த சரஸ்வதி கோயிலுக்கு பாரத நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாமரர்கள் முதல் துறவிகள் வரை
பன்னெடுங்காலமாய் புனித யாத்திரை மேற்கொண்டு புண்ணியம் அடைந்துள்ளனர் என்று தெரிகிறது.
1947ல் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100 நாட்களுக்குள் பாகிஸ்தான் நயவஞ்சமாக போர்தொடுத்து
நம் ஜம்மு- காஷ்மீரின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டதால் சாரதா பீட யாத்திரை நின்று போயுள்ளது.
கோயிலும் பராமரிப்பின்றி பொலிவிழந்து உள்ளது. குறிப்பாக அக்டோபர் 2005ல் நிலநடுக்கத்தாலும் இந்த கோயில் சிதிலமடைந்தது.
சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் பிறந்த தால் வாண்டிக்கு வருடம்தோறும் புனித யாத்திரை மேற்கொள்ள பாக் அரசும்நம் அரசும்
ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.அதைப்போல சாரதா பீடத்திற்கும் யாத்ரிகர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த
சில ஆண்டுகளாகவே பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
அவர்களுள் ரவீந்திர பண்டிதர் என்பவரும் முக்கியமானவர் – அதுவும் சமீபத்தில் கர்தார்பூர் தடம் திறக்கப்பட்டு
சீக்கியர்கள் தால் வாண்டிக்கு சுலபமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டவுடன் சாரதா யாத்திரை கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது.
ராணுவ ரீதியிலும் நன்மை
சாரதா பீடம் அமைந்துள்ள பகுதி பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் இருந்தாலும், ஏற்கனவே நம்முடைய பாரத நாட்டின்
ராணுவம் இந்த பகுதியில் கவனம் செலுத்தி எப்பொழுது தேவையென்றாலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தயார் நிலையில் உள்ளது.
நாம் மலையின் மேல் பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்தி உள்ளதால் எளிதில் எதிரியை சமாளிப்பது மட்டுமல்ல
வலு விழக்கச் செய்யக் கூடிய வசதியான நிலையில் இருப்பதாகவும் அந்த பகுதியில் பணிபுரிந்த அனுபவமுள்ள
லெட் ஜெனரல் சய்யத் அல்ஹஸ்னின் கூறுகிறார். பாக். ராணுவம் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்ளாது என்றாலும்
நாம் தொடர்ந்து யாத்திரைக்கு முயல வேண்டும் – பாக் அரசு மீது நிர்ப்பந்தங்கள் கொண்டு வர வேண்டும் என்கிறார் இவர்.
சாரதா என்றால் சரஸ்வதி என்ற பொருள் உண்டு. சரஸ்வதியின் சிலை இருந்ததால் மட்டுமே அது சிறப்பு பெற்றுவிடவில்லை.
அந்த இடமே வேத பல்கலைக் கழகம் போன்று செயல்பட்டிருக்கிறது. எண்ணற்ற அறிவாளிகள் அங்கே இருந்திருக்கிறார்கள்.
அரிய பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள் அதுகுறித்து விவாதம் செய்திருக்கிறார்கள்.
அதனால்தான் அது அறிவின் தலைநகரம் என்று போற்றப்படுகிறது.
முதலில் சிறிய வழிபாட்டுத் தலமாகவும் இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரிய கோயிலாகவும் எழும்பியதாகச் சொல்லப்படும்
சாரதா பீடத்தில் வேதங்களும் 64 கலைகளும் குடிகொண்டு இருந்திருக்கிறது.
வேதமும் சங்கீதமும் கல்வியும் கற்றுத் தரப்பட்ட இந்த மையத்தில் சமஸ்கிருத மற்றும் காஷ்மீர சரஸ்வத் பண்டிதர்கள் தங்கியிருந்திருக்கிறார்கள்.
ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பகுதிக்கு வருகை தந்த சீன பௌத்த துறவியான யுவாங் சுவாங் இந்த வேத பாடசாலை பற்றி சிலாகித்து எழுதியுள்ளார்.
இந்த கோயிலுக்கு நான்கு திசைகளிலும் வாசல்கள் இருந்ததாகவும் வேதங்களை கற்று உணர்ந்தவர்கள் வந்தால் மட்டுமே
தெற்கு வாயிற் கதவுகள் திறக்கும் என்றும், ஜகத்குரு ஆதிசங்கரர் வருகை புரிந்த போது தானாக தெற்கு பக்கக் கதவு திறந்து
அவரை வரவேற்றது என்றும் சொல்லப்படுகிறது.
நமது எல்லைப் பகுதியில் இருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு முறையும் அன்னியர் படையெடுப்பின் போது இந்த ஸ்தலம் பாதிக்கப்பட்டது.
முதலில் 14ஆம் நூற்றாண்டில் அந்நிய அரசர்களால் இந்த கோயில் சிதைக்கப்பட்டது.
சுமார் 450 வருடங்களுக்கு பின் இந்த பகுதியின் முதல் இந்து மன்னரான டோக்ரா வம்சத்து குலாப் சிங் இந்தக் கோயிலின் பல பகுதிகளை சீர் செய்தார்.
ஷ்ரதா தேவியை முதன்மை தெய்வமாக வழிபடும் சரஸ்வத் பண்டிதர்களைக் கொண்டு வழிபாடுகள் நடந்தன.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டபோது போரில் மீண்டும் இந்த கோயில் சிதைக்கப்பட்டது.
பின்னர் 1948இல் போர் முடிவுக்கு வந்த பின் ஸ்தலம் இருந்தப் பகுதியானது ஆப்கன் பழங்குடியினரான பாஷ்யன்களிடம் சென்றது.
அதன்பின் ஆசாத் காஷ்மீர் பகுதிக்கு போய்விட்டது. 2005 ல் ஏற்பட்ட பூகம்பத்தில் மிச்சமிருந்த இந்த கோயிலின் பெரும்பகுதியும் சேதமடைந்து விட்டது
சாரதா எழுத்து வரி வடிவம் – கலாச்சாரம்
தேவநாகரி எழுத்து வடிவம் போல சாரதா எழுத்து வடிவம் பொது ஆண்டு முன் 8ல் இருந்து 12 நூற்றாண்டு வரை பிரபலமாக இருந்ததாய் தெரிகிறது.
பிராம்மி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்றைய பாரதத்தின் வடமேற்கு பகுதிகளில்
காஷ்மீர், பஞ்சாப், சிந்து, இன்றைய ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தாகத் தெரிகிறது.
சீக்கியர்கள் அதிகம் பயன்படுத்தும் குருமுகி சாரதா எழுத்திலிருந்ததாகத் தெரிகிறது.
சாரதா எழுத்து வடிவத்தை மீண்டும் உயிர்ப்பித்து பழைய நூல்கள் மொழி பெயர்த்து வெளி உலகிற்கு கொண்டு வந்தால்
புராதனமான சாரதா – காஷ்மீர் கலாச்சாரத்தை அதன் மாண்பை அனைவரும் போற்றுவர்.
சாரதா பீடத்தைக் காப்போம் (Save Saradha Committee) என்ற கோஷத்துடன் கர்நாடகாவில் ஒரு குழுவினர் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் 2018 செப்டம்பர் மாதம் இந்த கருத்தை வலியுறுத்தி இரண்டு நாட்கள் பெங்களூரில் மாநாடு நடத்தியுள்ளனர்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்ல காஷ்மீர் ஹிந்துவிற்கு விசா தேவையின்றி சுதந்திரமாக சென்று வர
பாக்.அரசை பாரத அரசு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.
சாரதா பீட யாத்திரை ஆண்டிற்கு ஒரு முறையாவது நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாரதா பல்கலைக்கழகத்தை ஜம்மு-காஷ்மீரில் நிறுவுவோம்.
அன்னை சாரதையின் கலாச்சாரம் புத்துயிர் பெற்றுப் ஞானத்தின் ஒளி எங்கணும் பரவ வேண்டும் என்று நாமும் பிராத்திப்போம்.
——————————–
நம்மாழ்வாரும் (800 CE) ஒரு பாசுரத்தில் பாரத நாட்டை ஆண்டு போன மன்னர்களின் எண்ணிக்கை கடல் மணல் துகள்களுக்குச் சமம் என்கிறார். பல ஆயிரம் , பல ஆயிரம் மன்னர்களைக் கண்டது பாரதம்!
நினைப்பான் புகின்கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
எனைத்தோர் உகன்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்குற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ
—————–
அமர்நாத் குகை–
இந்த புனித அமர்நாத் குகையும் அதன் பனிலிங்கமும் இந்தியர்களால் மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்ததும், இந்தியா முழுவதிலிருந்து பல நூற்றாண்டுகளாக யாத்திரீகர்களை ஈர்த்து வந்ததும் பல வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளன.
அமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸம்ஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது. மேலும், இந்தப் புனித தலத்தின் யாத்திரை வழிமுறைகளும், இந்த தலத்தின் அதிக விவரங்களும் பிருங்கி ஸம்ஹிதை, அமர்நாத மஹாத்மியம் போன்ற பிற ஸம்ஸ்கிருத நூல்களிலும் காணக்கிடைக்கின்றன. இந்நூல்கள் நீலமத புராணத்தை விட பழைமையானவை.
வரலாற்றுக் குறிப்புநூலான ராஜதரங்கிணி மற்றும் பல மேலைநாட்டு பிரயாணிகளின் குறிப்புகளில் அமர்நாத் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதனால் இந்தத் தலத்தை மக்கள் பல நூற்றாண்டுகளாக அறிந்திருந்தார்கள் என்பது விளங்குகிறது. இந்தத் தலத்தின் பழங்காலப் பெயர் அமரேஸ்வரா எனப்படும். அமர்நாத் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது.
ராஜதரங்கிணி பிரயாண வரலாற்றாளர் கல்ஹனா என்பவரால் 1148-49 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜதரங்கிணியில் ஸூஸ்ருவஸ் என்ற நாகத்தின் கதை சொல்லப்படுகிறது. அந்தண இளைஞர் ஒருவரை மணந்த தன் மகளை அபகரிக்க ராஜா முயல்கிறார். அந்த இளைஞர் ராஜாவையும் அவர் தேசத்தையும் சாம்பலாகச் சபிக்கிறார். அதிலிருந்து தப்புவதற்கு சேஷ்நாக் என்ற புனிதக் குளத்தில் (தற்போது காஷ்மீரில் சுஷ்ரம்நாக் என்று அறியப்படுகிறது) ஸூஸ்ருவஸ் அடைக்கலமானதாக அந்தக் கதை சொல்கிறது.
“பாற்கடலை ஒத்த, ஒளிரும் வெண்ணிற நீர்நிலை, நாகம் படைத்த மாயம், தூர மலையின் மட்டில் காண்போம் அமரேசர் யாத்திரையில்” – ராஜதரங்கிணி (அத். 1: பா. 267 – ஆங்கில மொழியாக்கம். M.A. Stein).
ராஜதரங்கிணியில் இன்னோர் இடத்தில் (அத். 2, பா. 138) அரசர் ஸம்திமத ஆர்யராஜா (காலம் கி.மு. 34–கி.பி. 17) “மிக இனிமையான காஷ்மீர கோடைநாட்களை” “காட்டிற்கு மேல் அமைந்த” பனிலிங்கத்தை வணங்குவதில் கழித்தார் என்று சொல்கிறது. இது அமர்நாத் கோவிலைப் பற்றிய குறிப்பே.
அந்த அரசரின் பட்டத்து ராணி, தன் கணவரின் பெயரால் அமரேஸ்வரர் கோயிலுக்கு அக்ரகாரங்களை அளித்ததும், திரிசூலம், பாணலிங்கங்கள் அளித்ததும் கலஹனரால் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பிற்காலத்தில், ஜோனராசர் என்பவர் எழுதிய ஒரு வரலாற்றுக் குறிப்பில் சுல்தான் ஜைனுல்-அபிதீன் (1420-1470) லித்தர் நதியின் அருகே ஒரு கால்வாய் அமைத்தபோது அமர்நாத் கோவிலுக்கு விஜயம் செய்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது. இக்கால்வாய் இன்று ஷாஹ் கோல் என்று அழைக்கப்படுகிறது.
பிராக்ஞபட்டர் மற்றும் சுகர் என்பவர்களால் எழுதப்பட்ட ராஜவளிபதகா என்ற இன்னொரு வடமொழிக் குறிப்பில், இந்த யாத்திரைக்கான அதிக விவரங்கள் கிடைக்கின்றன. அக்பர் ஆட்சியில் காஷமீரத்தின் கவர்னராக இருந்த காஷ்மீர்யூசுப்கான் அக்பருக்கு யாத்திரையை விளக்கிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது. அந்த விவரங்களின்படி அக்பர் காலத்தில் இந்த யாத்திரை மிக பிரசித்தமாய் இருந்ததும், இந்தப் பனிலிங்கம் தேய்ந்து பின் வளரும் சிறப்பும் தெரிந்திருக்கின்றன என்பது விளங்குகிறது (அக்பர் காஷ்மீரைக் கைப்பற்றியது 1586ல்).
முகலாய மன்னர் ஷாஜகான் காலத்திலும் அமரேஸ்வரர் (அமர்நாத்) யாத்திரை மிகவும் புகழ்பெற்றிருந்தது. ஜகன்னாத பண்டிதராஜர் என்பவர் எழுதிய ஷாஜஹானின் மாமனார் அசிஃப் கான் புகழ்பாடும் ‘அசிஃப் விலாஸம்’ என்ற வடமொழி நூலில் அசிஃப் கான் நிர்மாணித்த நிஷத் என்கிற முகலாய தோட்டத்தின் வர்ணனையும் அமரேஸ்வரர் (அமர்நாத்) சிறப்பும் பேசப்படுகிறது. “தேவர்களின் தலைவன் இந்திரனே சிவபெருமானைத் தொழ அமரேஸ்வர் வருகிறான்” என்கிறது அசிஃப் விலாஸம்.
அமர்நாத் புனிதபூமி காஷ்மீர் மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்துள்ளதை சோதா வோனி முதலான பல காஷ்மீர நாடோடிக் கதைகள் நிரூபிக்கின்றன.
ஆகவே காஷ்மீரத்து அமர்நாத் யாத்திரை பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இந்துக்களின் ஆன்மீகப் பாரம்பரியம். இது வெறும் 150 வருட காலக் கதை அல்ல.
காஷ்யப முனிவரின் பெயரால் காஷ்மீரம் என்று அழைக்கப் படும் இப் புனித பூமி
இந்தியாவின் தெற்கு பாகத்தில் ரத்னாகர் தம்பதியினர் நீண்ட நாட்களுக்கு குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அன்னை வைஷ்ணவா தேவி பிறந்தார். இக்குழந்தை பிறக்கும் முன் நாள் இரவன்று, இறைவனிடம் ரத்னாகர் ‘குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டேன்’ என்று வாக்களித்தார். குழந்தைப் பருவத்தில் அன்னை வைஷ்ணவா தேவி, ‘திரிகுட’ என அழைக்கப் பெற்றார்.
திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார். திரிகுடா இராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். இராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய திருகுடாவின் மேல் விழுந்தது.திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.
ராமர் அவரிடம் இந்த தெய்வீகப் பிறப்பில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார். இருந்தாலும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப் போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.
அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
திரிகுடா நவராத்திரியின் பொழுது இராமர் இராவணனை வெற்றி கொள்ள நோன்பு மேற்கொண்டார். இந்தத் தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சியுற்ற இராமர், அனைத்து உலகமும் திரிகுடா புகழைப் பாடுவார்கள் என வரமளித்தார். பிறகு அவர் பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என அழைக்கப்பெற்றார்.
ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். கோயில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுமதி சீட்டு இல்லாமல் கோயிலின் நுழைவு வாயிலை யாரும் கடந்து செல்ல முடியாது. கோயில் பாதையில் புகையிலையிலான பொருட்கள், தீப்பெட்டி, கத்தி, எளிதில் எரியும் வேதியியல் பொருட்கள் கொண்டு செல்வதை கோயில் நிர்வாகம் தடை செய்துள்ளது.
மேலும் இக்கோயிலுக்கு பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் மலைக்கோயில் முழுவதும் 24 மணிநேரமும் கோயில் பாதுகாப்பு படையினர், மாநில, மத்திய அரசுகளின் காவல் படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் இரும்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பு உணர்வுடன் வைஷ்ணவ தேவி மலைக்கோயிலுக்கு பயணிக்கலாம்.
இந்த பாரத மண்ணில் தோன்றிய தத்துவங்களுக்கு ஒரு பெயர் உண்டு. சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் என்று பல பெயர்களில் பரந்துவிரிந்து இருந்தது. தத்துவங்களில், வழிபடும் கடவுள்களின் உருவங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தாலும், பெரிய அளவில் பிளவுபட்டிருந்தாலும் அதையெல்லாம் தனித்தனியாக கடைபிடித்துவந்த மக்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ஒரே பண்பாட்டைக் கொண்டவர்களாக இருந்தார்கள். சைவத்தை கடைபிடிக்கிற மக்கள் வேறு இனம், வைணவத்தை கடைபிடிக்கிற மக்கள் வேறு இனம் என்ற இனவேறுபாடில்லாத மக்களாகவே இருந்தனர்.
கிறிஸ்தவம், இஸ்லாம் காஷ்மீருக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன் காஷ்மீரில் வாழ்ந்துவந்தவர்கள் இந்த தத்துவங்களை கடைபிடிக்கிறவர்கள்தான் வாழ்ந்து வந்தனர்.சிந்துசமவெளி நாகரிகத்தின் ஒரு அம்சமாக காஷ்மீரும் விளங்கி இருக்கிறது. அழகு தொட்டிலாக விளங்கும் காஷ்மீரின் இந்து வரலாறு மிகவும் பழமையானது. வேதங்களில் காஷ்மீரைப் பற்றி நிறையக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. மத்ரம், டுக்ரம் என்றெல்லாம் வேதங்கள் குறிப்பிடுவது காஷ்மீரத்தை பற்றியே. புராணங்களில் ‘த்வி கர்த்தம்’ என்ற பெயர் காஷ்மீரத்துக்கு வழங்குகிறது. இந்தச் சோல்லுக்கு ‘இரண்டு ஏரிகள் உள்ள பிரதேசம்’ என்று பொருளாம். மானசரோவரம், சரூஈசர் என்னும் இரு பெரிய ஏரிகள் இந்தப் பகுதி எல்லைக்குள் இருப்பதே இந்த பெயருக்கு காரணமாகும்.
கி.மு.500 முதற் கொண்டே கிரேக்க வரலாற்று பேரறிஞர்கள் ஹெகடாயிஸ், ஹெரடோடஸ், ப்டாலமி(Ptolomy) போன்றவர்கள் காஷ்மீரை அவர்களது குறிப்புகளில் காஸ்பாபைரல், காஸ்பத்ராஸ், காஸ்பீரியா என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள்.வியாச முனிவரின் மகாபாரதத்திலும், காஷ்மீர் பற்றிய செய்தி வருகிறது. வடமொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினி காஷ்மீரைப் பற்றி குறிப்பிடுகிறார். பாணினியின் இலக்கணத்திற்கு உரை செய்த பதஞ்சலி முனிவர் (யோகசூத்திரம் எழுதியவர்) காஷ்மீர்க்காரர் . இவர் திருமூலர், வியாக்ரபாதர் இவர்களோடு தமிழ்நாட்டுக்கு வந்து தில்லையில் பல காலம் தங்கி இருந்து, தமிழ் நாட்டில் சமாதியானதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பத்மமிஹிரர், ஹேலராஜா, சாவில்லகாரா, சங்குஹா, கே்ஷமேந்திரா, கல்ஹணர் போன்ற காஷ்மீரப் பண்டிதர்கள் காஷ்மீரின் வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். எனினும் கிறிஸ்தவம், இஸ்லாம் காஷ்மீருக்குள் நுழைவதற்கு முன் இங்கு வாழ்ந்தவர்களைப் பற்றித் தெள்ளத்தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் கி.பி.1180களில் வாழ்ந்த கல்ஹணர் என்ற காஷ்மீரத்து கவிஞர் எழுதிய ‘ராஜதரங்கிணி’ என்ற புத்தகம்தான். ராஜதரங்கிணி என்றால் அரசர்களின் ஆறு’ என்று பொருள். காஷ்மீரத்துத் தொன்மையான வரலாற்றை அறிய உதவும் பழமையான புத்தகம் இது. கி.பி.1148 முதல் 1150க்குள் எழுதப்பட்ட இந்தக் கவிதை வடிவிலான வரலாறு, காஷ்மீரைப் பற்றியும் இந்தியாவின் மற்ற பகுதிகளைப் பற்றியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல், சமூக, பிற செய்திகளைத் தெரிவிக்கிறது. ராஜதரங்கிணி புத்தகத்தைப் பற்றி எச்.ஜி,ராலின்ஸன், ‘வரலாற்றுத் துறைக்கு இந்து இந்தியா அளித்துள்ள ஒரே காணிக்கை’ என்று கூறுகிறார்.
இந்த நூல்களில் எல்லாம் காஷ்மீரத்தின் இந்து ஆன்மிகப் பண்பாட்டுத் தன்மையையும், ஆதிகாஷ்மீரில் ஆட்சி செய்த இந்து அரசர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.உண்மையில் காஷ்மீர் முழுவதும் பெரும்பான்மையாக நாகர்களே ஆட்சி செய்து வந்தனர். காரணம் காஷ்மீர தேசத்தின் ஆதிகுடிகள் நாகர்களே. இன்றளவிலும் எழுநூறுக்கும் மேற்பட்ட ”நாகம்” (Naag) என்ற சோல்லோடு முடியக் கூடிய சிறிய, பெரிய ஏரிகள் உள்ளன. உதாரணம்:அனந்தநாக், சேஷநாக், ருத்ரநாக் , கோகர் நாக், போன்றவை.
காஷ்மீரில் ஆதியில் குடியேறியவர்கள் நாகர்களே என்ற குறிப்பு ‘‘அயினி-அக்பரி’’ என்ற நூலில் காணப்படுகிறது. காஷ்யப மகரிஷி நாக வம்சத்தை சேர்ந்தவர். காஷியபரின் மகன் நீலநாகன் இந்த பகுதியை அரசாண்டு வந்ததாகவும் புராணம் பகர்கிறது. காஷ்யப முனிவரின் மகனான நீலநாகரே ‘நீலமதபுராணம்’ எழுதியவர். நாகவம்சத்தின் துவக்கம் நீலநாகரிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது.
நாக வணக்கம் மிகப் பழைமையான வழிபாடுகளின்
ஒன்று. நீலநாகன் நாகபூஜைக்கு முக்கியத்துவம் அளித்துவந்தார். நாகபூஜை காஷ்மீரக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருந்து வந்தது. நாகர்கள் நாகபூஜை செய்துவந்தாலும் நாகத்தை சிவன்-பார்வதியின் அம்சமாகவே உருவகித்து வழிபட்டு வந்தனர். சைவத்தையே கடைபிடித்து வந்தனர். சமஸ்கிருதமே ஆட்சி மொழியாக இருந்து வந்தது.இந்தியாவில் வேறெந்தப் பகுதியிலும் இதுபோன்ற ஹிந்து அரசகுலங்களைக் குறித்து எழுதப்பட்ட முழுமையான வரலாறு எதுவுமில்லை.
இனி காஷ்மீரை அரசாண்டவர்கள் பற்றி ராஜதரங்கிணியில் சொல்லப்பட்ட வரலாற்றைப் பார்ப்போம்.
காஷ்மீரின் ஆதிவரலாறு (புராணக் கதை) கி.பி.1148 வரை கல்ஹணர் நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்திருக்கிறார். அதே ராஜதரங்கிணியை கி.பி.1148 முதல் 1420 வரையிலான வரலாற்றை ஜோனராஜா என்பவர் தொகுக்க 1420 முதல் 1486 வரையிலான வரலாற்று நிகழ்ச்சிகளை அவருடைய மாணவர் ஸ்ரீவரகவி என்பார் தொகுத்திருக்கிறார். அவருக்குப் பின்னர் ஆண்ட அக்பரின் வரலாற்றினை ராஜதரங்கிணியின் நீட்சியாக பிரஜா பட்டரும், சுகாவும் எழுதினார்கள்.
கல்ஹணர் எழுதிய ராஜதரங்கிணியில் குறிப்பிட்டுள்ளபடி, முதலாம் கோநந்தன் காஷ்மீர் மன்னராக இருந்து ஆட்சி புரிந்துவந்தார். மதுரா அருகே யமுனை ஆற்றங்கரைப் பகுதியில் கிருஷ்ணருக்கும் ஜராசந்தனுக்கும் இடையே கடும்போர் நடைபெற்றபோது, ஜராசந்தனுக்கு அனுசரணையாகச் செயல்பட்டவர். போரில் முதலாம் கோநந்தன் இறந்தார்.
முதலாம் கோநந்தன் இறந்தபிறகு அவர் மகன் தாமோதர் மன்னராக பொறுப்பேற்றார். தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க, கிருஷ்ணருக்கு எதிராக போர் தொடுத்தார். அவரும் கிருஷ்ணரால் இறந்தார்.போர்க்களத்தில் இறந்த தாமோதர் மன்னனுக்கு மகன் கிடையாது. ஆகவே, கிருஷ்ணரால் கர்ப்பிணியாய் இருந்த தாமோதர் மனைவி யசோவதி அரியணையில் அமர்த்தப் பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கோநந்தன் என்று அவருடைய தாத்தா பெயர் சூட்டப்பட்டது.
பின்பு இரண்டாம் கோநந்தன் என்ற பெயருடன் இவர் ஆட்சிபுரிந்தார். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இரண்டாம் கோநந்தர் கலந்துகொள்ளவில்லை.
இரண்டாம் கோநந்தரின் ஆட்சிக்கும் அசோகரின் ஆட்சிக்கும் இடையே 35 வேந்தர்கள் காஷ்மீரை ஆண்டிருக்கின்றனர். அவர்களுள் 23 மன்னர்கள், பாண்டவர்களின் வழித்தோன்றல்கள்.அர்ஜூனனின் பேரனும், பரீட்சித்தின் மகனுமான ஹரன்தேவ், காஷ்மீருக்குச் சென்று இரண்டாம் கோநந்தன் படையில் சேர்ந்தார். அவர் தமது திறமையால் படிப்படியாய் முன்னேறி, இரண்டாம் கோநந்தனின் மரணத்திற்குப் பிறகு காஷ்மீர் மன்னரானார்.
மகத மாமன்னர் அசோகர், காஷ்மீரை 250ஆம் ஆண்டு கைப்பற்றினார். காஷ்மீரில் ‘ஸ்ரீநகரி’ என்ற நகரை அவர் நிர்மாணித்தார். இந்த ஸ்ரீநகரிதான் தற்போதைய ‘ஸ்ரீநகர்’ என்று அழைக்கப்படுகிறது. அசோகர் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
அப்போது அவர் இசோகீஸ்வரலாயம்’ என்ற சிவன் கோயிலை கட்டுவித்தார் என்று சொல்லப்படுகிறது. (ஸ்ரீ என்றால் திரு (செல்வம்) என்று பொருள். ஸ்ரீநகர் சூரியநகர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஸ்ரீநகர் இரண்டாம் ப்ரவரசேனன் என்னும் மன்னனால் கி.மு.2000 வாக்கில் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் வந்த மௌரியப் பேரரசர் அசோகர் (245 BC) ஸ்ரீநகரை மேலும் விரிவுபடுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.)அசோகர் ஆட்சிக்காலத்தில் பௌத்தம் கோலோச்சியது. அவர் ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 5000 புத்தத் துறவிகள் காஷ்மீரில் குடியேறினார்கள்.
அசோகருக்குப் பிறகு அவருடைய மகன் ஜலோக் ஆட்சி செய்தார். இவர் சைவத்தை பரப்பும் மன்னராக இருந்துள்ளார்.
மூன்று நூற்றாண்டுகள் கழித்து துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்ட குஷான வம்ச மாமன்னர் கனிஷ்கர் காஷ்மீரை கைப்பற்றினார். அவர் புத்த சமயத்தின்மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் புத்த மத த்தைப் பரப்ப ஈடுபாடு காட்டினார். புத்தமதமே அரசின் மதம் என்று பறைசாற்றப்பட்டது
இவரது ஆட்சியில்தான்.ஹூண வம்சத்தினர் 515ல் காஷ்மீரைக் கைப்பற்றினர். ஹூண வம்சத்தைச் சேர்ந்த மெஹர்குல்லை, மகத மன்னர் பாலாதித்தர் போர்க்களத்தில் தோற்கடித்தார். ஆனாலும் அவரை மன்னித்து விடுதலை செய்தார். பின்னர் காஷ்மீரை மெஹர்குல் கைப்பற்றினார். கொடூர சிந்தனையுடைவராய் விளங்கிய மெஹர்குல்லை சைவ சமயம் வெற்றிகொண்டது. அதன்காரணமாக மெஹரேஸ்வராலயத்தை மெஹர்குல் நிர்மாணித்தார். பல்ஹாமிலுள்ள இக்கோயில், தற்போது மாமலேஸ்வராலயம் என்று அழைக்கப்படுகிறது.இவருக்குப்பிறகு காஷ்மீரின் ஆட்சி இந்துக்களின் வசமே இருந்துவந்தது.
தம் அமைச்சரான பிரதாப்தித்தரை, விக்கிரமாதித்தர் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தார். காஷ்மீரின் நிர்வாகத்தை பிரதாப்தித்தர் திறமையாக நிர்வகித்து வந்தார்.அவருக்குப் பிறகு மேகவாகனன் அரியணை ஏறினார். இவர் புத்த சமயம் பரப்புவதில் அதீத ஈடுபாடு காட்டினார். ஆனால் பிற மதத்தினரை வெறுக்கவில்லை. விலங்குகளைக் கொல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். ஜீவகாருண்யத்தின் சிறப்பை தம் ஆட்சியில் பரப்பினார்.
மேகவானனின் மனைவி அமிர்தப் பிரபா, அஸ்ஸாம் மன்னரின் மகள் ஆவார். அப்போது அஸ்ஸாமிலும் வங்காளத்திலும் வைணவம் பிரபலமாக இருந்து வந்தது. அமிர்தப்பிரபாவின் முயற்சியால் காஷ்மீரில் வைணவம் பரவ ஆரம்பித்தது. ஆனாலும் அவர் புத்த சமயத்திற்கு யுகாங்விஹார் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அதற்கான கொடிமரத்தை மேகவாகனிடம் இலங்கை மன்னர் நன்கொடையாய் அளித்தார்.
மேகவாகனின் காலத்திற்குப் பிறகு கார்கோட வம்சத்தினர் 254 ஆண்டுகள் காஷ்மீரை ஆட்சி செய்தனர். கார்கோட வம்சத்தை நிறுவியவர் துர்லபவர்த்தன் என்பவர். 631ல் காஷ்மீருக்கு வந்திருந்த யுவான்சுவாங்க காஷ்மீரில் தங்கியிருந்தபோது துர்லபவர்த்தனின் ஆட்சித்திறம்பற்றி குறிப்பிட்டுள்ளார். துர்லபவர்த்தன் மாமன்னர் ஹர்ஹரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்துவந்தார்.
கார்கோட வம்சத்தின் (கார்கோட வம்சம் நாகவம்சத்தின் ஒரு பிரிவுதான்) முக்கியமான, புகழ்பெற்ற மன்னர் சந்திரபீடர். இவர் சீனாவுடன் நட்பில் இருந்துவந்தார். அப்போது படையெடுத்துவந்த அரேபியர்களை சீனாவின் உதவியோடு விரட்டியடித்தார். சந்திரபீடரின் மனைவி பிரகாஷ்தேவி. எல்லா மதத்தின்மேலும் பற்று உள்ளவர்கள் இவர்கள். இவர்களுடைய ஆட்சி எப்படி ஜனநாயகமாக இருந்தது என்பதற்கு ஒரு நிகழ்ச்சியே உதாரணம்.
1003 முதல் 1028வரை காஷ்மீரை ஆண்டார் மன்னர் சங்கிரம் ராஜ். ஈரான், துருக்கி மீது படையெடுத்து வெற்றிவாகை சூடினார். இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலில் முகமது கஜினி காஷ்மீர் மீது படையெடுத்தான். இருமுறை படையெடுத்தும் வெற்றிபெற முடியவில்லை.
சங்கிரம் ராஜுக்குப் பிறகு அவருடைய மகன் ஹர்ஷ் அரசரானார். இவர் ஒரு கவிஞர்.இவருக்குப் பிறகு 1128 முதல் 1140ஆம் ஆண்டுவரை காஷ்மீரை மன்னர் ஜெய்சிங் ஆண்டார். ஜெய்சிங்குக்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராகப் பலர் காஷ்மீரை ஆண்டபோதும் யாருடைய ஆட்சியும் நீடித்து நிலைக்கவில்லை. 1301ஆம் ஆண்டில் சக்தேவ் என்ற மன்னர் அரியணையில் ஏறினார். திபெத்திய அகதியான ரின்சானாவை ஆதரித்து முக்கியப் பதவி தந்தார். துல்சூ என்ற கொள்ளைக்காரன் காஷ்மீரைத் தாக்கியதும் சக்தேவ் தலைமறைவாகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றினார் ராமச்சந்திரா. இவர் சக்தேவ் மன்னரின் தளபதியாவார். விவேகம் இல்லாத இந்த அரசனை திபெத்திய அகதியான ரின்சானானின் ஆட்கள் சதிசெய்து கொன்றனர்.
ராமச்சந்திராவின் மகள் கோதராணியை ரின்சானா மணந்து கொண்டார். கோதராணியின் விருப்பப்படி ரின்சானா இந்து மதத்தை தழுவினார்.புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிய ரின்சானாவை பிராமணர்கள் ஏற்க மறுத்தனர். அதனால் வெறுப்புற்ற ரின்சானா, திடீரென முஸ்லீமாக மாறிவிட்டார். தமது பெயரையும் மாலிக் சத்ருதீன் என்று அவர் மாற்றிக்கொண்டார். மாலிக் சத்ருதீன்தான் காஷ்மீரின் முதல் முஸ்லீம் மன்னர் என்று வரலாறு பதிவு செய்துள்ளது.
உதயண்தேவ் உடனான போரில் படுகாயமடைந்த ரின்சானா தம் மனைவி கோதராணியையும் மகன் ஹைதரையும் மந்திரி ஷாமீரிடம் ஒப்படைத்து பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் 1320ல் மரணமடைந்தார்.படையெடுத்துவந்த உதயண்தேவை கோதராணி மணந்து கொண்டார். கோதராணியின் சொற்படியே அப்போது ஆட்சி நடைபெற்றது. இதற்கிடையில் பெர்ஷியாவைச் சேர்ந்த சர்தார் அச்லா காஷ்மீரை முற்றுகையிட்டார். உதயண்தேவ் திபெத்திற்கு ஓடிவிட்டார். இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை கோதராணி. படைபலத்தில் குறைவாக இருந்தாலும் கோதராணியின் வியூகத்தால் அச்லா தோற்கடிக்கப்பட்டார். ஆனாலும் அச்லா விடுவதாயில்லை. அதனால் கோதராணி அவரை ஆசை வார்த்தை கூறி அழைத்து தலையை வெட்டி வீழ்த்தினார்.
திபெத்திற்கு ஓடிப்போன உதயண்தேவ் மறுபடியும் வந்து சேர்ந்து கொண்டார். அவரை ஓரம் கட்டியே வைத்திருந்தார் கோதராணி.ஆட்சிக்குள்ளேயே கோதராணிக்கு துரோகிகள் முளைத்து விட்டிருந்தார்கள். சில ராணுவ அதிகாரிகள் திடீரென தாக்குதல் நடத்தி கோதராணியை கைது செய்து சிறைபடுத்தினர். சிறையிலிருந்து அமைச்சர் குமார்பத் உதவியினால் தப்பினார். மீண்டும் அரியணையேறிய கோதராணி முக்கியப் பதவிகளை குமார்பத்திடம் ஒப்படைத்தார்.
கோதராணிக்கு விசுவாசமாக இருப்பதாக நடித்துக்கொண்டிருந்த ஷாமீர், ஆட்சியைக் கைப்பற்ற சமயம் எதிர்பார்த்திருந்தார்.1338ல் உதயண்தேவ் மரணமடைந்த காரணத்தால் மூத்த மந்திரியான பிக்ஷன்பத் பிரதமரானார். லாவண்யர் என்ற தம் ஆதரவாளரை அமைச்சராக்கினார் கோதராணி. காலம் செல்லச் செல்ல ஷாமீர் ஓரங்கட்டப்பட்டார். இதனால் பிக்ஷன்பத் மேல் கடுங்கோபம் கொண்ட ஷாமீர் அவரைத் தீர்த்துக்கட்ட திட்டம்போட்டு நயவஞ்சகமாக கொன்றான். ஷாமீரின் கை ஓங்கியது. கோதராணி அவனை கொல்ல முயற்சி செய்து முடியாதபோது தம் குறுவாளால் தம்மையே மாய்த்துக் கொண்டார் கோதராணி.
——————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply